16 பரிபாடல் உரை முகவுரை பரிபாடல் 1எட்டுத் தொகையுள் ஐந்தாவதாக உள்ளது. பரிபாடலென்பது செய்யுள் வகையாற் பெற்ற பெயர். சங்ககாலத்து வழங்கிய செய்யுட்கள் 2வெண்பா அகவல் வஞ்சி கலி என்னும் நாலு பாக்களுமே. 3பரிபாடலென்பது வெண்பா உறுப்பாகி இன்னபா வென்று உணராமற் பொதுப்பட நிற்கும் இயல்புடைய ஒருவகை இசைப்பா. 4இப்பாடலுக்குச் சிறுமை இருபத்தைந்து அடியும் பெருமை நானூறு அடியுமாகும். இந்நூலிற் கடவுள் வாழ்த்து என வரும் பாடல்கள் கடவுளை வாழ்த்திப் பாடப்பட்டனவேயன்றி நூலுக்குக் காப்பாக பாடப்பட்டன வல்ல. 5சங்க நூல்கள் தொகுத்த காலத்து அவற்றுக்குக் காப்பு எவராலும் பாடப்பட வில்லை. பிற்காலத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் விளங்கிய பெருந் தேவனாரே எட்டுத்தொகை நூல்களுள் ஆறுக்குப் காப்புப் பாடியிருக்கின்றனர். இந்நூலுக்கும் அவர் காப்புச் செய்திருப்பா ரென்றும் அது இறந்து பட்டதென்றும் கருத இடமுண்டு. பரிபாடற் செய்யுட்களின் தொகை எழுபது. அவற்றுள் திருமாலுக்கு எட்டும் முருகவேளுக்கு முப்பத்தொன்றும் காடுகிழாளுக்கு ஒன்றும் வையை யாற்றுக்கு இருபத்தாறும் மதுரைக்கு நாலும் உரியன. இப்பொழுது கிடைத்துள்ளன திருமாலுக்குரிய பாடல்கள் ஏழு, முருகக் கடவுளுக்குரியவை எட்டு. வையைக் குரியவை ஒன்பது, மதுரைக் குரியது ஒன்றுமாக இருபத்தைந்து பாடல்கள். இவை மொத்தம் 2034 அடிகளை உடையன. திருமாலுக்குரிய எட்டுப்பாடல்களுள் ஏழு பாடல்கள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்நூலில் சங்கு, சமம், சந்தனம், சமழ்ப்பு , சனம், சரணம், சகடம், சலம் முதலிய எட்டுச்சகர முதற் சொற்கள் வந்திருக்கின்றன. பழந்தமிழரின் பழக்கவழக்கம். கடவுட் கொள்கை, நீர் விளை யாட்டு முதலியவற்றை இந்நூல் சிறப்பாகக் கூறுகின்றது. தமிழ் நிலையம் நவாலியூர் 13.5.1938 ந.சி.கந்தையா PENANG HOUSE Jaffna, 8th January 1938 Mr.N.S.Kandiah of Navaly is a very agreeable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learing by his proserending in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His Tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias. (Sd.) T.ISSAC THAMBYAH, D. Th President, Jaffina Association பரிபாடல் வசனம் 1 திருமால் கடவுள் வாழ்த்து ஆயிரந்தலையுடைய பாம்பு தீயைக் கக்குவது போன்ற தன்மை யோடு (கவிந்து) மேல் நோக்கியிருக்கும் முடியும் கரிய உடையும், பரந்த மார்பும், குற்றந்தீர்ந்த 1சங்கு போன்ற வெண்ணிறமுடைய மேனியும், (மலையிடத்து) உயர்ந்த மூங்கிற் காட்டில் திரியும் பெரிய யானையின் ஏந்திய வாய் போன்று வளைந்த கலப்பைப் படையும், ஒரு காதிற் குண்டலமும் உடையவனே! தாமரை மலர் போன்ற கண்ணை உடையை! காயாவின் விரிந்த மலரை ஒத்த மேனியை! இலக்குமி பொருந்தியிருக்கும் மார்பினை! ஆராய்ந்தெடுத்த மணிகள் மார்பிடத்து விளங்குகின்ற பூணினை! நெருப்புச் சூழ்ந்த பெரிய மலைபோன்று உடுத்த பீதாம்பர உடையை! அழகிய கெருடக்கொடி உடையோய்! ஆணைவழி நிறுத்த லாகிய நின் காத்தற் றொழிலுள் உலகம் அடங்கி இருப்பதைப் புகழ்ந்து துதிக்கும் நாவலந்தீவின் அந்தணரது அரிய வேதங்களின் பொருளா யுள்ளவனே! நின்னை எதிர்த்துப் போர் செய்வேம் என்றெழுந்தவரின் வலியை அழித்துப் போரில் மேம்பட்ட குற்றந் தீர்ந்த தலைவ! முனிவர்களது தந்தை! இலங்குகின்ற பூணணிந்த திருமால்! நின் வரலாற்றைத் தெளிவாக அறிதல், தெளிந்த உள்ளத்தினையுடைய முனிவர்க்கு மரிது; அவ்வியல் பினதாகிய பழைமையை யுடையோய்! இவ்வியல்பினை என்றுரைத்தல் நமக்கு எவ்வாறு எளிதாகும்; தாமரை மலரில் எழுந்தருளும் இலக்குமி யாகிய மறுவடைந்த மார்பனே! நின் பெருமைகளை அறிந்து உரைக்க மாட்டாமையை நன்குணரினும், பெருமையற்ற யாம் நின்னிடத்திற் கொண்ட பக்தியினாலே கூறும் இத்துதிகளைச் சிறியன வென்றிகழாது ஏற்றுக்கொண்டு அருள் செய்தல் வேண்டும். மிகுந்த புகழினையும் பெருஞ் சிறப்பினையுமுடைய அந்தணர் காக்கின்ற அறனும், அடியார்க்கு அருளும் நீ; ஒழுக்க மில்லோரின் ஒழுக்கத்தைத் திருத்திய குற்றந்தீர்ந்த சிறப்புடைய மறனும் பகைவர்க்கு அச்சமும் நீ; உயர்ந்து அகன்ற அழகிய வானத்தில் குளிர்ந்த நிலாவைப் பரப்பும் திங்களும், சுடுகின்ற கிரணங்களையுடைய ஞாயிறும் நீ; ஐந்து சிரங்களைப் பொருந்திய அஞ்சத்தக்க அரிய பெரிய வலிய சதாசிவனும் அவனாலாகின்ற உலகுயிர்களின் ஒடுக்கமும் நீ; இன்னாரை ஒப்பை, இவ்வியல்பினை என்பதற்கு அன்னோரை இவ்வுலகில் யாம் காணேம்; பொன்மயமாகிய அழகிய சக்கரத்தை ஏந்தியவனும், நிலைபெற்ற உயிர்களுக்குத் தலைவனும் நீ ஆதலின், இப்புகழொடு பொலிந்து நீயே நினக்கு ஒப்பாவை. நின்னை ஒத்த புகழாகிய நிழலுடையை; பொன்னை ஒத்த உடையினை உடையை; கருடக் கொடியை; (வலம்) புரியுடைய சங்குடையை; இகழ்ந்தோரை வென்று அழிக்கும் சக்கரப்படை உடையை; கழுவின நீல மணி பரந்தா லன்ன வடிவினை! எண்ணிறந்த புகழினை! அழகிய மார்பினை! யாம் இம்மைக்கண் விருப்பமமைந்த சுற்றத்தாரோடு மகிழ்ச்சியுற்ற நெஞ்சத்தேமாய் உனது பதங்களில் தாழ்ந்து எப்போதும் பொலிவேமாக வென்று நினது தாள் நிழலைத் தொழுது தினமும் வணங்குகின்றேம். 2 திருமால் கடவுள் வாழ்த்து மண்ணுலகும் விண்ணுலகும் அழிதலால், ஒன்று மறையுமிடத்து ஒன்று வெளிப்படுகின்ற ஞாயிறும் திங்களும் இன்றாய், விசும்பு அழிந்த ஊழிகள் பல தோன்றும். தோன்றியபின் தன் குணமாகிய ஒலியோடு தோன்றி (காற்று முதலிய பூதங்களின் பரமாணுக்கள் வளர்கின்ற) வான மாகிய முதற் பூதத்தின் ஊழிகள் பல கழியும்; கழிந்த பின் வானத்தி னின்று எல்லாப் பொருள்களையும் அசைவிக்கும் காற்றுத் தோன்றிய ஊழிகள் தோன்றும்; அதன்மேல் அக்காற்றினின்றும் நெருப்புத் தோன்றிய ஊழிகளும், அத்தீயினின்றும் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும் தோன்றும்; பின் அந்நீரினின்றுந் தோன்றுதலால் மீண்டும் அவ் வெள்ளத்தினுட்கிடந்து (நான்கு பூதங்களின் உள்ளீடாக வுள்ள) பெரிய நிலத்தின் ஊழி தோன்றும். இவ்வூழிகளால், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் என்னும் எண் குறிக்கப்பட்ட அளவில் லாத காலத்தொகுதி கழியும். அதன் பின் உயிர்கள் உளவாதற் பொருட்டு அந்நிலத்தினை உயர்த்தியவராக அவ தாரத்தால் பெயர் பெற்றவராக கற்பந்தோன்றும். இக்கற்பம் நின் செயல்களுள் ஒன்று. அச் செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின் பெருமைக்கு உள்ள கற்பங்களை யாவரும் உணரமுடியாத முதல்வ! நீ வாழ்க! சங்குபோன்ற பால்நிற மேனியுடைய பலதேவற்கு இளையை. எல்லாப் பொருள்களையும் மறைக்கும் இருள் போன்ற உடையையும் பனைக்கொடியையுமுடைய பலதேவற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்ற விளங்குவை; தவறில்லாத விரதங்க ளுடைய ஞானிகள் ஆராயும் வேதங்களால் தெரிந்து உணரின் உயிர்கள் தோறும் அந்தரியாமியாய் நிற்பை; இந்நிலைமைகளும் நின்கட்தோன் றும் தொன்மை நிலைபோல நினக்கே உள்ள விசேடங்களாம். வான வில்லை ஒத்த ஆபரணங்களின் அகத்து முத்துப் பதக்கமாகிய மதிக்கு மறுவெனும்படி விளங்கும் இலக்குமியை மார்பில் உடையை. உயர்ந்த திரையுடைய கடலுள் மூழ்கி விளங்குகின்றதும், இடையே புகர் நிற முடையதுமாகிய மருப்பினால் பூமியை எடுத்தாய்; எடுத்து மணனயர் தலின் புள்ளி வடிவினதாய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றிலது. வெகுண்டு வீரத்தோடு ஒலிக்கின்ற காற்றுப் போல் திரண்டெழுந்த அவுணர் கொடிகள் அறுந்து வீழவும், செவிகள் செவிடுபட்டு முடிகள் அதிரவும், உலகங்கள் நிலை தளரவும், நின் சங்கு (பாஞ்சசன்னியம்) இடியை ஒப்ப முழங்கிற்று. நீ ஏந்திய ஆழிப்படை, வேரும் மடலும் குருத்தும் பறியாத நீண்ட பனை நின்ற நிலையில் விழ அதன் மீதிருந்த பல பதினாயிரங்குலைகள் அதன் தலையினின்றும் நீங்கித் தரைக்கண் உதிர்வன போலத், தலைகள் வலியழிந்து சாய்ந்து ஒன்றும் உடன்மிசை நில்லாமற் கொத்தாக இற்றுத், தரித்த தாரோடு புரளும் படி ஒரு காலத்தே கொய்தது. அதனால் அவையுருண்டு பிளந்து நெரிந்து பின் வேறு வேறாயுருண்டு சிதறி மூளை சொரிந்து நிலத்தின் கண் சோர அவுணர் மாய்ந்தனர். இவ்வாறு கொடிய போரைச் செய்யுந் தலைவ! நீ தரித்த சக்கரப்படை பகைவரின் உயிரை உடனே உண்ணும். கூற்றின் உடலை ஒக்கும். அதன் நிறம் உருக்கிய பொன் போன்று எழுந்து அசைகின்ற நெருப்பின் வடிவினது. நின் நிறைந்த வாய்மை, தப்பாமல் வருகின்ற நாள்களை ஒத்தது. உனது பொறை, நிலத்தை ஒத்தது. யாவர்க்கு மொத்த நின் அருள் நீர் நிறைந்த மேகத்தை ஒக்கும். நாவலந்தீவிலுள்ள அந்தண ரது அரிய வேதங்களின் பொருளாயுள்ளவனே! இவ்வாறெல்லாம் உணர்ந்து, யாம் சொல்லிய அப் பொருள்களையும், சொல்லாத பிற வற்றையும் பண்புகளானும் தொழில்களானும் ஒத்தனை! ஒத்தும், ஒப்பின்றி எப்பொருள் அகத்தும் இருப்பவன் நீ. சிவந்த வாயுடைய கருடக் கொடியோய்! வேதத்துட் சொல்லப் பட்ட வேள்வி ஆசானின் சொல்லும், உயர்ந்த வேள்வி யூபத்திற் கட்டிய பசுவும், தீயை உண்டாக்கும்போது சொல்லும் மந்திரங்களைக் கூறி உயர்ந்த எரியை முறையாகத் தீக்கடை கோலிற் கடைந்து தீயை வளர்த்துக் கொள்ளுதலுமாகிய இவை முறையே நின் வடிவும், உண்டி யும், கடவுள் இல்லை என்பார் உண்டு எனும்படி நின் பெருமைக்குத்தக அந்தணர் காண்கின்ற நின் வெளிப் பாடுமாகும். தேவர்க் குணவாகிய அமிர்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின் மனத்தின்கண் நினைந்த அளவானே அவர்க்கு அதன் பயனாகிய மூப்பின் மையாகிய தன்மையும். ஒழியாத வலியும், தம் சாவா மரபு போல உரியவாயின. ஆகவே நின் பல்புகழ் பரந்தன. அதனால் அத்தன்மைத் தாகிய அரிய மரபினோய்! நின் அடியை யாமும் அசைவில்லாத நெஞ்சி னேமாய் வணங்கிப் பலகாலும் ஏத்தி வாழ்த்தி வேண்டிக்கொள்வேம். எம்மறிவு, கொடுமையை அறியாதிருப்பதாகுக. - கீரைந்தையார் 3 திருமால் கடவுள் வாழ்த்து மாயோனே! மாயோனே! மறு பிறப்பை அறுக்கும் மாசில்லாத சிவந்த பாதங்களுடைய நீலமேனி போன்று விளங்குந் தோற்றமுடைய மாயோனே! நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்னும் ஐந்து பூதங்களும், இவற்றோடு ஞாயிறு, திங்கள்,வேள்வி முதல்வன் என்னும் மூவர் சேர்ந்த அட்ட மூர்த்தங்களும் திதியின் சிறுவராகிய அசுரரும், காசிபன் மக்க ளாகிய ஆதித்தர் பன்னிருவரும், குற்றமற்ற எட்டு வசுக்களும். பதினொரு உருத்திரரும், தாவிச் செல்லும் குதிரை வயிற்றிற் பிறந்த அசுவினி தேவர் இருவரும், இயமனும், அவன் ஏவல் கேட்கின்ற கூற்றுவரும், ஒவ்வொன்று ஏழுவகைப்பட்ட மூவகை உலகமும், உலகின் உயிர்களும் நின்கட்டோன்றிப் பரந்தனர் என்று அழியாத மெய்ம்மையுடைய வேத முரைத்தது. அவற்றை யெல்லாம் கூறுவதற்கு உரிய மல்லே மாயினும் ஈண்டு சிலவற்றைப் பிறழ உரைக்கின்றேம், வேதமாகிய தடாகத்துள் மலர்ந்த பிரமனும். அவன் தாதையும் நீ என்று நாவலந் தீவின் அந்தணர் அருமறை புகலும். காவல் காத்து நின்ற விளங்குகின்ற அழகிய ஆபரண மணிந்த அமரரை ஓட்டிக், கவர்ந்து வந்த அமிர்தத்தால் ஈன்றாளது துன்பத்தைக் களைந்த புள்ளினை ஊர்தியாகவுடையோய்! அன்னையின் துயர்களைந்த கருடனை எழுதப் பெற்ற கொடியோய்! உனது சிவந்த பாதங்களைத் தொழாதவர்களுமுளரோ? குறள் வடிவாக உலகை அளக்கின்ற காலத்து கீழேழுலகத்தையும் எஞ்சாமல் அளந்த அடியினை யுடையை! எல்லாவற்றையும் எரிக்கின்ற நெருப்பு, கூற்றுவர், ஞமன், குற்றமில்லாத ஆயிரங்கதிருடைய பன்னிரண்டு ஆதித்தர் என இவரெல் லாம் ஒன்று கூடும் உக இறுதிக்கண் பூமி தீயிடை அமிழ்ந்திற்று. அக் காலத்தும், பன்றியாகி அதனை மருப்பாற் பெயர்த் தெடுத்தாயென்றும், விசும்பினின்றும் ஒழுகும் புனலை வெள்ளை அன்னச் சேவலாய்ச் சிறகினாற் புலர்த்தினா யென்றும், பூமியிலுள்ளவற்றையும் தேவராகிய முனிவரும் வானத்து உறையும் முப்பத்து மூவரும் விசும்பினின்றும் நின்னைத் துதித்துப் பாடுவர். அன்னோர் பாடுவது தமக்கு முன்னோ ராகிய பாடுவோரின் முறையே. எம்பாடல்கள் தாமும் எமக்கு முன்னோர் பாடும் முறையினவே. நின் தொன்மையையும், பெருமையையும் அறிய முடியாத தன்மையில் எமக்கும் அவர்கட்கும் வேற்றுமையின்று. கூந்தல் மாவென்று கண்டோர் சொல்லும் வடிவோடு வந்த கேசி என்னும் அசுரனது கனல்கின்ற சினத்தை அழித்தோய்; எண்ணிறந்த நின் கைகள் நின் புகழை ஒத்தன. மோகினியாகிய நின் வடிவினைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவுணர்க்கு அச்சமாய் முடிய இருதிறத்தாரும் கடைந்த நல்ல அமிர்தத்தை அமரராகிய ஒருவர்க்கே பகுந் தளித்தலால் நடுவு நிலைமை திறம்பின நலனில்லாத ஒரு கையினை யுடையை, இரண்டு கையுடைய மாலே! (அன்பர் தியானிக்கின்றபடி தோன்றும்) முக்கை முனிவ! நாற்கை அண்ணல்! ஐங்கை மைந்த! அறுகை நெடுவேள்! ஏழுகை ஆள! எண்கை ஏந்தல்! ஒன்பது விசாலித்த கையும் பெரும்புகழு முடையோய்! பத்துக் கையுடைய மதவலியோய்! நூறு கையுடைய ஆற்ற லோய்! ஆயிரம் விரிந்தகையும் மாயமும் உடையமள்ள! பதினாயிரங்கை யுடைய வேத முதல்வ! நூறாயிரங்கையுடைய ஆறறிகடவுள்! இவை மாத்திரமல்ல; பல ஆம்பல் என்னும் எண்ணாலும், இனைத்தென எல்லை அறியப்படாத வடிவினை! நின்னை உயர்வு கூறக் கருதின், அவ்வுயர்வை நீயே அறிவை யல்லது, பிறரால் உணரப்படுதியோ? அநாதி யாய் வரும் வேதங்களுக்கு முதல்வ! விரிந்த ஆகமங்கள் அனைத்தானும், அகங்காரத்தானும், மனத்தானும். உணர்வினானும், மற்றும் எல்லாவற் றானும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப்படாத மரபினோய். அழகும் தன்மையும் விளக்கமாகிய ஒளியு முடைய பிறையாய் வளர்கின்ற பதினாறுகலையுடைய பூரண சந்திரனின் ஒளியை உணவாக உடையவ ரும், அழகிய இரத்தினங்கள் பதித்த பசிய பூணுடையவருமாகிய அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர் மயக்கத்தால் நினக்குப் பிழை செய்த னர். அணுத் திணிந்த நிலவுலகத்தை நீ அளக்க அப் பெருமையைக் கண்டு, முறுக்கவிழ்ந்த தண்ணிய மாலையுடைய அவுணர் அஞ்சி அகன்று போய்க் கடலிடத்தே பாய்ந்தனர். அப்பிழை செய்த அவுணர்க்கும் பிழை செய்யாத அவுணர்க்கும் தலைவன் நீ. நின் இயல்பினை அறிவோர்க்கு இவர் பகைவர், இவர் நட்டார் என்றுங் கூறுபாடுண்டோ? விளங்குகின்ற ஆயிரந்தலையுடைய அரவை வாயிடத்தே கொண்ட நின் ஊர்தியாகிய சேவலும் நொந்து செங்கண்மாலே! ஓ! என்று அலறும் காலமுதல்வன் நீ. நீ இத்தன்மையை என்று சாமவேதஞ் சொல்லுதலின் இத்தன்மையை விளக்க அறிந்தனம். தீயினுள் வெப்பம் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணி நீ; சொல்லினுள் வாய்மை நீ; பூதத்துக்கு முதல் நீ; ஞாயிற்றின் ஒளி நீ; திங்களின் தட்பம் நீ; இன்னும் கூறாத எப்பொருளும் நீ; அவற்றின் உட்பொருளும் நீ; ஆதலால் நீ தங்குதலுமில்லை; தங்குமிடமுமில்லை; மறதியில்லாத சிறப்பினால் மாயத்தையுடையவர் அனையை. உலகின் முதலினும், இடையினும், இறுதியினும், படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றிப் பிறவாப் பிறப்புடையை அல்லை; அங்ஙனம் பிறந்தும் பிறப்பித்தோரையுடையை அல்லை. காயாம் பூ நிறத்தினை. அருளே கொற்றக் குடையாகவும் அறமே செங்கோலாகவும் வேறு நிழல் படாமல் மூவேழுலகும் ஒரு நிழலாக்கிய காவலுடையை! பூதங்களைந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், புலன்களைந்தும், மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்; புருடனு மெனப்பட்ட தத்துவம் இருபத்தைந்தானும் நால்வகைப்பட்ட உகங்களினும் ஆராயப்படும் பெருமையுடையை. வாசுதேவனே! பலதேவனே! பொன்னிற மேனி யுடைய காமனே! பச்சுடம்புடைய மாலே! ஆய்ச்சியரோடு கைகோத்து ஆடுதலின் அவர் குலமும் இடமும் ஆயினோய்! அறியப்படாத மரபினோய்! அன்பரது விடாத நினைவின் கண்ணோய்! மாயாத நிலை பேற்றை யுடையவனே! பழைய முறையில் வந்த புதல்வா! நல்ல யாழுடைய பாண! வனமாலை யணிந்த செல்வ! வெற்றிச் சங்குடையவனே! பொன்னிறத்தால் மிக்க ஆடையை யுடையோய்! வலம்புரிச் சங்கைத் தாங்கிய அண்ணலே! மற்போரில் வல்லவ! இலக்குமியின் நாயக! பெருவலியுடைய மள்ள! பெரிய உலகந் தோன்றாத காலத்து, நிறைந்த வெள்ளத்தின் நடுவே பிரமனைக் கொண்ட உந்திக்கமலமாகிய பொருட்டுத் தாமரையை யுடையை! நின் சக்கரமே உலகுக்கு நிழலாவது. - கடுவனிள வெயினனார் 4 திருமால் கடவுள் வாழ்த்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் மயக்க மற நீக்கி, நட்பு, கருணை, பெரியோர் பற்று, (தீயவற்றில்) இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்து, சமாதி என்னும் ஒரு நிறைக்கண்ணே தம்மை நிறுத்திய அன்பர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்; அப்புகழ் எல்லாம் நினக்கு இயல்பாவதல்லது வியக்கப் படுவன வல்ல; இத்தன்மையை அறிந்தேமாயினும், யாங்கள் அவற்றுட் சிலவற்றை அங்குமிங்குமாகப் பிறழக் கூறக்கேட்டு நீங்குதலும் எங்கட்குப் பெருமையாகும்; ஆதலால் நாம் நின் புகழை நீங்கேம். நின் திருமேனி நீலமணியையும், கடல்நீரையும் சூல் முதிர்ந்த கால முகிலுமாகிய இம் மூன்றையும் ஒக்கும். நின் கரிய நிறத்தோடு மாறுபட்ட பொன் நிறமுடையை! பகைத்தவர் உயிரைக் கொள்ளும் சக்கரத்தை யுடையை! கோபத்தாலன்றி இயல்பாகச் சிவந்த கண்ணுடையை! பிருங்கலாதன் நின்னைப் புகழ்ந்தான். அதனைக் கண்டு பொறாத இரணியன் சினத்தீ யால் புகைந்தான். புகைந்து பிருங்கலாதனைப் பலப்படப் பிணித்தான். அதனாலுண்டான நடுக்கமுடைய அப்பிருங்கலாதன், தாதை யாதலின் அவ்விகழப் படுவானை இகழாதிருந்தான். நீ அவ்விரணியனை இகழ்ந்து, நின்னை நட்ட அப் பிரகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந் தினாய். நின்னோடு ஒன்றாகும்படி வரம்பெற்ற இரணியனது வரை போன்ற மார்பின் வலிகெட தூணினின்றும் புறப்பட்டாய். அப்போது துன்பத்தைக் காட்டும் உற்பாதங்களோடு பொருந்தி அவனது இடி போன்ற முரசு ஒலித்தது. நீ பலபடியாக, உகிரினால் அவனது ஊனை வகிர்ந்தாய். பூமி வெள்ளத்து அழுந்திய கழுத்தால் தாங்கி அதனை வெள்ளத்தினின்றும் எடுத்தாய். அத்தொழில் பலர் புகழும் மேருவின் தொழிலோ டொக்கும். நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படா நின்றன. நின் தண்மையும் தண்ணளியும் திங்களின் கண்ணே உள; கொடுக்கக் கொடுக்கக் குறையாத நின் தன்மையும், கொடையும் மாரியிடத்துள; நின் தாங்குகின்ற தன்மையும் பொறையும் பூமியிடத்துள; நின் வெளிப்படுந் தன்மையும் பெருமையும் நீரிடத்தே உள; நின் வடிவும் சொல்லும் ஆகாயத்துள; நின் வருகையும் ஒடுக்கமும் காற்றிலுள; அதனால் இவையும் உவையும், அவையும் பிறவுமாய் நின்னிடத்தினின்றும் பிரிந்து நின்னால் காக்கப்பட்டன வெல்லாம் பின்னும் நின்னோடு மேவலமைந்தன. கருடன் தங்கியிருக்கும் உயர்ந்த கொடியோய்! கருடன் ஓங்கிய கொடியுடைய நின் ஒரு கொடி பனை; மற்றொன்று கலப்பை; இன் னொன்று யானை; நினது ஒப்பில்லாத கொடியோடு ஒப்ப எழுங்கொடி வேறின்று. விடப் பாம்பின் உயிரை உண்ணும் கருடன் தனது வயிற்றில் உதர பந்தமாகக் கட்டியிருப்பது பாம்பு. அவனது வளை பாம்பு; முடிமேல் இருப்பன பாம்பு; ஆபரணங்கள் பாம்பு; தலைமேல் இருப்பன பாம்பு; பகைவர் மதத்தைக் கெடுத்தோய்! கருடன் பொன்னிறமாகிய கொடி மேலிருந்து பாய்ந்தெடுக்கின்ற இரை பாம்பு. கடிய குற்றம் உண்டாக வருத்தும் வெகுளியும். அருளும் கொடுமையும் செப்பமும் ஆகிய இவற்றை மறமும் அறமும் உடையா ரிடத்து உடையை; இல்லா ரிடத்து இல்லையாயிருப்பை. நினக்கு மாற்றாரும் கேளிரும் இல்லாராத லான். அன்பராயுள்ளார் உயிரிடத்தும் அதனை மாற்றுந் தொழிலும் பாதுகாப்புச் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்களது இயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது, நின் இயல்பால் அவை உளவல்ல. அன்பர் மனத்திற் கொண்டனவன்றி நினக் கென வேறு வடிவு இல்லாதோய்! கண்ணைப் பறிக்கின்ற இருண்ட நீல மணி போலும் மேனிக்கண் மலர்ந்த துளசியின் நாறுகின்ற பூங்கொத் தாற் றொடுத்த கண்ணியையுடையோய்! புகழ் பொருந்திய பொன்னிற மாகிய சீதேவி உறைதலின் மறுவேறின மார்புடையோய்! நின் உந்தியிற் தோன்றிய தாமரை போலும் கண்ணுடைய அளப்பரியோய்! வீடளிக்கு மிடத்து நின்னினுஞ் சிறந்த தாருடையோய்! நின்மாட்டுச் சிறந்த கடவுட்டன்மையுடையை அத்தன்மையல்லாத இயல்புகள் நினக்கு வேறுமுள. அவை நின்னை ஒத்த தெய்வ முனிவர்களுணரும் உபநிடதப் பொருள். அழலை ஒத்த இலையும், நிழல்தரும் கிளைகளுமுடைய ஆலும், கடம்பும், ஆற்றிடைக் குறையும், காற்று வழங்காத நிலையான குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடை யோய்! எங்கும் நிறைந்தவன் நீயே; நின் அன்பர்கள் தொழுதகையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்டோய் நீ; அவர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல் செய்வானும் நீ, அவரவர்கள் செய்த பொருள்களுக்குக் காவலும் நீ. - கடுவனிள வெயினனார் 5 செவ்வேள் கடவுள் வாழ்த்து மிகவுயர்ந்த பிணி முகமென்னும் யானையை ஊர்ந்து சமர்புரிந்த ஞான்று சூரபன்மா கடலிடத்தே சென்று மாவடிவாக நின்றானாக, நீ, தீ எழும் படி சுழற்றி எறிந்த வேல், பெரிய இருண்ட கடலிடத்துள்ள கற்பாறைகள் பொடி படும்படி புகுந்து, நடுங்குகின்ற சூர்மாவை அறுத்தது; கொன்றுண்ணலால் வரும் பாவத்துக்கு அஞ்சாத பாவசனம் புண்ணியசனம் என்னும் மாயத்தையுடைய அவுணரைக் கொன்றது. அவ்வேலினால் நாவலந்த தீவினுள் வடபகுதியிற் கிரவுஞ்ச மென்னும் பெரிய மலையைத் துளைத்து வழியை உண்டாக்கிய ஆறுமென் றலையை உடையாய்! ஆறு மென்றலைகளுடனும் பன்னிரண்டு தோள்க ளுடனும் ஞாயிற்றின் தோற்றம் போலும் நிறவழகுடனும் தாமரைப் பூவின் கட்பிறந்த பிறப்பை யுடையை! உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே! அமைதியினை யுடையாய்! நீ வெளிப்படுதலின் கண்டார்க்கு அச்சந்தரும் வெறியாட்டு விழவினுள் வேலன் கண்டு இவ்வாறெல்லாம் நின்னைச் சொல்லி ஏத்தும் வெறிப்பாடு முள. இவ்வுலகிற்கெல்லாம் தலைவன் நீயே யாகலான் அவ்விடத்து அவன் கண்டு ஏத்துகின்ற அப் பாட்டுக்கள் மெய்யுமல்ல; அவற்றுள் ஒன்றாய வழி அத்தலைமைச் சிறப் பினையுடைய நீ அச்சிறப்பின்றி ஒழிகுவை! நின்னை ஒழிந்தார் நல்வினை யாற் சிறப்புடைய உயர் பிறப்பினராதலும் தீவினையால் வழி பிறப்பின ராதலுமாகிய இது நின் ஆணைக்கண்ணது; ஆதலின் அச்சிறப்பு நினக்கு ஒரு காலும் ஒழியாது. வேதங்களாகிய குதிரை பூண்ட பூமியாகிய தேரை நான்முக னாகிய பாகன் செலுத்துமாறறிந்து செலுத்தினான். அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண் அவிர்ப்பாகத்தை உண்டவரும், கோபத்தாற் பசிய கண்களையுடைய வருமாகிய ஈசன் தேர்மீது ஏறினான்; ஏறி, வெள்ளி பொன் இரும்பு என்னும் அரிய மூன்று மதில்கள் ஒரு தீயாகிய அம்பால் வேகும்படி வாசுகியை நாணாகவுடைய மேருவாகிய வில்லை வளைத் துத் திசைகள் வெதும்ப எய்தான்; எய்தபின் உடையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற வதுவை நாளில் அமையாத கலவியை ஒருகாலத்து அமைத்தான். நெற்றிக்கண்ணும் இமையாத நாட்டமும் உடைய அவ் விறைவனிடத்து ஒரு வரத்தைப் பெற்ற இந்திரன் இந்தக் கலவியாற் றோன்றிய கருவை அழிப்பாயாக எனத் தனது வச்சிரப்படையை ஏவினான். மழுப்படையைத் தாங்கிய இறைவன் வாய்மையன் ஆதலின் இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் அரிதென்று உலகேழும் அவன் மெய்ம்மையை வியக்கும்படி அதனை மாற்றானாயினான். அதனால் இந்திரன் அதனைப் பலகண்டங்களாகச் சேதித்தான். சேதித்தலால் சிவந்த உடம்பு அதற்குரிய கருவை “இது அமரர் சேனைக்குத் தலைவ னாம்” எனத் தெய்வ முனிவர்கள் ஞான திருட்டியால் நன்றா யறிந்தனர். அறிந்து இந்திரனுடைய கோபம் அணுகாதிருக்கும்படி மறைமொழி கூறி அவன் பக்கலினின்றும் அக்கருவினை எடுத்துச் சென்றனர்; சென்ற தெய்வ முனிவர்கள் எழுவரும், “துண்டங்களாக்கப்பட்ட இக்கருவை நம் மனைவியர் உட்கொண்டு சூல் நிறையப் பெறுவராயின் அவர் கற்பில் நிரம்பார்” என நினைந்தனர்; நினைந்து அங்கியங் கடவுள் தானே தரிப்ப தாக என எண்ணினர்; எண்ணி அழல் வேட்டு அதன் கண் கருவினை அவியுடனே பெய்தார்; அவியோடு குண்டங்களில் எழுந்த முத்தீக் கொள்ளுதலால் பரிசுத்த மடைந்த அதனை வானத்து வடபால் உறை கின்ற அம் முனிவர்களின் மனைவியர் எழுவருள் கடவுட் கற்பினை யுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய விளங்குகின்ற கார்த்திகையாகிய அறுவறும் அப்பொழுதே அயின்றனர். தம் கணவர் வேண்ட அயின்ற கருவாதலின் மறுவற்ற கற்பினையுடைய அம்மாதவர் மனைவியர் நிறை யுடைமை நீங்காதே நின்னைச் சூற் கொண்டார்; கொண்டு, இமயத்துச் சரவண மென்னுஞ்சுனையிற் தாமரைப் பூவாகிய பாயற் கண்ணே ஒருங்குபெற்றாரென்று பௌராணிகர் சொல்லுவர். 1முருகா உன்னைப் பெற்ற அன்றே இந்திரன் தான் கொடுத்த வரத்தைப் பகைமிகுதியால் மீறித் தீயைக் கக்குகின்ற வச்சிரத்தைக் கொண்டெறிந்தான். அப்போது ஆறுருவாயிருந்த நீ ஓருருவாயினை. வெற்றி ஓங்கிய சேயே! வாழ்க! குழந்தைப் பருவத்தினையுடைய நீ விளையாட்டாகச் செய்த போருக்கு இந்திரன் தோற்றான். அதனைக் கண்ட அங்கி இனி இவனே நம் சேனைக்குத் தலைவன் எனக்கூறித் தன் அழகிய கோழியைக் கொடுத் தான். வானின் வளம் பொருந்திய செல்வனாகிய இந்திரன், தன்னிடத் துள்ள விளங்குகின்ற நீலமணி போன்ற இறகுடைய அழகிய மயிலைக் கொடுத்தான். இவரும் பிறரும் அளித்த மறியும், மயிலும் கோழிச் சேவலும், பொறியும், வரியு முடைய வில்லும், மரமும், வாளும், செறிந்த இலைவடிவினதாகிய வேலும், குடாரியும் கணிச்சியும் தெறுகின்ற கதிருடைய நெருப்பும் பாசமும் மணியு மாகிய வெவ்வேறு உருவின வாகிய இவற்றைப் பன்னிரண்டு கரங்களிடத்துக் கொண்டாய்; கொண்டு தேவர் சேனாதிபதியாய் அவர்க் கரசனாகிய இந்திர னது புகழ்வரம்பைக் கடந்தோய்! நினது குணத்தை ஏற்றுக்கொண்டோ ராகிய அறவோரும் வீடு பெறுங்குணமுடையோருமாகிய முனிவோரு மல்லது, உயிர்களைக் கொல்கின்ற தீய நெஞ்சமும் சினமும் உடையோரும் அறத்தின் கட் சேராத புகழில்லோரும் கூடாவொழுக்கத் தாலாழிந்து தவ விரதத்தை யுடையோரும், இப்பிறப்பினுகர்ச்சியேயுள்ளது மறுபிறப்பில்லை என்னும் மடவோரும் ஆகிய இவர்கள் நின் தாள் நிழலை அடையார். வட்டமாகிய பூங்கொத்தாற் றொடுத்த மாலையுடையோய்! நின்னை யாம் இரப்பவை, நுகரப்படும் பொருட்களும், அவற்றை உளவாக்கும் பொன்னும், அவ்விரண்டாலும் நுகரும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும், அவ்விரண்டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே. - கடுவணிள வெயினனார் 6 வையை (இது, வையை நீர் விழா விளையாட்டிற் காதற்பரத்தை, இற்பரத் தையுடன் நீராடினான் எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தா னெனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு ஆங்கு நிகழ்ந்த செய்தியுங் கூறி வாயின் மறுத்தது) முகிற் கூட்டங்கள் கடலிடத்தே தாழ்ந்து நிறைய நீரை உண்டு எழுந்து ஆகாயத்தே பறந்தன; பரந்து ததும்புகின்ற பாரத்தை இறக்கி இளைப் பாறுதற்கு மழையைப் பொழிந்தன; அப்போது மலைகளிற் சஞ்சரிக்கும் மான் கூட்டங்கள் கலங்கி ஓடின; மயில்கள் தோகை விரித் தாடின; மலையிடத்துள்ள மாசு கழுவுண்ணும்படி நீர் நிறைந்து தங்கி வாரடித்தோடிற்று; மலையின் சாரல்களின் பல வழிகளால் நீர் ஓடிற்று; புலவர்கள் புனைந்து பாடிய நல்ல பாடல்கள் பொய்யா வண்ணம் உழவுத் தொழில் தழைக்கும்படி வெள்ளம் எவ்விடத்தும் பரந்தது. ஈரம் புலரப் புகைத்தற்கு அகில் முதலியனவும், அழலும், சூடுதற்குப் பூவும், வைகைக்கு ஆராதனைக்கு வேண்டிய பொருள்களும், பொன் பூ முதலிய பலவு மேந்திய பரத்தையர், தம் மகிழ்ச்சி மிகுந்த காதலரைக் காண அலங்காரத்தோடு வையைப் புதுப் புனலிடத்தே கூடினர். இவ்வகைப் புனலிடத்து வந்த மட நல்லாரின் கைகள் பூரித்தலால் தொடிகள் அழுந்தின; தோள் வளைகள் கழன்று முன்கையிடத்தே அலைந்தன; எழுதிய தொய்யிற் கொடிகள் ஒன்றோடொன்று கலந்து அழிந்தன: 1மேகலை வடங்கள் அற்று மணிகள் உதிர்ந்து நூல்கள் தோன்றின; ஆணி முத்துக் கோத்தமாலை, சாந்து முதலியன படுதலால் நிறம் மழுங்கின; நகத்திலும் கன்னத்திலும் எழுதிய செம்பஞ்சு அழிந்தது; தனங்களிடத்து அப்பிய குங்குமக்குழம்பு வட்டலிட்டது; இலைகளாற் தொடுத்த மாலை யும், குலைந்த மயிரும், பூசிய சந்தனக்குழம்பை அழித்தன; தனங்களிடத் தனவும், மார்பிடத்தவுமாகிய ஆடவர் மகளிர் என்னும் இருபாலாரின் ஆபரணங்களும் ஒன்றோடொன்று கலந்தன; அன்பு ஒத்த அவர் உள்ளம் நிறையாகிய வெள்ளத்தை உடைத்தது; வையை ஆற்றின் நிறைந்த வெள்ளம், மலையை ஒத்த அணைகளை உடைத்தது; காவல் புரிகின்ற கரைகாப்பாளர், அவ்வுடைப்பினை அடைத்தற்கு ஆட்கள் வரும் பொருட்டு பறை அறையும்படி பறைகொட்டு வோர்க்குப் பணித்தனர்; பறை ஒலி எழுதலின் அவற்றைக் கேட்டு ஊர் எழுந்தது. இவ்வாறு ஊர் எழுந்த அன்று, போர்க்கணியும் அணையினை யுடைய யானையின் கூட்டம் அழகு பெறச் சென்றாற்போல, அலங்காரஞ் செய்த மகளிரும், மைந்தரும், ஆரோகணித்திருக்கும் பிடிகளும், குதிரைகளும் நிரைநிரை யாகச் சென்றன. அம்மகளிரும் மைந்தரும் அணிகளைக் களைந்து வைத்துப் புனலாடுதற்குரிய உடைகளை அணிந்து விளையாட்டை விரும்பினர்; புனலாடுதற்குரிய நீர்ப்பரப்பைப் போர்க்களமாகக் கொண்டனர்; முன்னணியிற் செல்வோர் 1தூசிப் படை போன்றனர்; புனுகுநெய்பூசிய நீர் சிந்தும் துருத்திகளாலும் பன்னீர் நிறைந்த நீர் விசிறும் கொம்புகளினாலும் நீரை ஒருவர் மேலொருவர் இறைத்துப் போர் செய்தனர். வெண்கிடையாற் செய்த தெப்பங்கள் குதிரையாகவும். நிறம் பிடித்த கிடையாற் செய்த தேர்களை யானையாகவும் கொண்டு ஊர்ந்து திரிந்தனர்; காதலாற் சென்று நீராடும் புறச்சேரி இளையரைத் தாண்டி உட்புகுந்து செல்ல மாட்டாத மெலியோர் துறைகள் தோறும், நின்று நீராடினர்; வலியோர் உட்புகுந்து புதுப்புனலாடினர். அதனால் வாச நீரும். சந்தனம் முதலியவற்றது குழம்பும், வாச எண்ணெயும் சூடிய பூக்களும் நாறும்படி ஒழுகின; நாற்றத்தோடு ஓடுகின்ற ஆற்றை, மறையை விரும்பும் அந்தணர் கண்டனர்; மகளிரும் மைந்தரும் பூசிய விரைகளைக் கழுவின கலங்கல் நீராதலின் தூய்தாய நிலைமை யழிந்து வேறுபட்ட புனலென மருண்டு நீராடுதல் வாய் பூசுதல் முதலிய தந்தொழில் செய்யாது நீங்கினர். சூடிக்கழித்த மென்மலரும்,மைந்தர் தாரும், மகளிர் கோதையும் கரையிடத்துள்ள மரங்களதும் கொடிகளது மாகிய வேரும், காயும், கிழங்கும் மேலே பரந்து வர, அவற்றின் மீது கீழாய மக்கள், உண்டு மிகுந்த கள்ளை ஊற்றுதலால் அந்த அகன்ற வையைப் புனலின் நலனழிந்து வேறுபட்ட தென்று பிறரும் நீங்கினர். அந்தச் சேறாடிய புனலின் செலவு இவ்வகைத்து. எல்லையின்றி இழியும் வெள்ளிய நீரின் நாற்றத்திற் படிந்த தடையின்றிச் செல்லும் உருவிலதாகிய நல்ல காற்று இரவுக் குறிக்கண் மணந்த தலைவரைத் தாலாட்டிற்று. இவ்வாறு மகளிரின் ஆகத்தே கிடந்து துயில் கூடுவது முருகனது பரங்குன்றின் கண்ணதேயாம். அவ்விடத்தே செல்லாதார்க்கு அங்கு நிகழ்பவற்றைச் சொல்லுதல் காரணமாக மதுரைத் தெருவின் கண் ஓடி வஞ்சனை செய்யுங்காமன் இரவிற் செய்த வெல்லாம் ஊரைக் காக்கும் காவலர்க்குப் புலப்பட நின்ற தெரு வைகறைக் கண் வெறு நிலமாக விளங்கிற்று. தமிழையுடைய வையைப் புனல் இவ்வாறு எங்கும் பரந்தது. இவ்வாறு மகளிரும் மைந்தரும் நீராடிய தன்மையைக் கூறித் தலைமகன் காதற் பரத்தைக்குக் கையுறை காட்டினான். அக்கூற்றினால் அவன் இற் பரத்தை யோடு நீராடினா னென்று உட் கொண்ட காதற் பரத்தை, “ பழையே னாதலான், நீ இகழ்கின்ற எனக்கு அன்று, நீ எப்பொழுதும் புதிதாக விரும்பும் மகளிர்க்குக் கொய்தாய்” என்றாள். தலைவன்:- நீ அறிந்திலை, இத்தளிர்கள் அத்தன்மையின வல்ல. காதற் பரத்தை- யான் பணியா நிற்பவும் அன்பின்றி முறிந்த பண்பினை யுடையாய்! இப்பொழுது களவு வெளிப்படா நின்றது, பண்டு எனக்கு நீ கொய்த தெல்லாம் விரைவாக வருதலால் தளிர் உருவத்தில் வாடுதல் உண்டோ? இஃது அவட்குக் கொய்து சென்று அவளால் மறுக்கப் பட்டமையால் துவண்டவாறு பாராய். காதற்பரத்தை:- நின் மார்பிடத்துள்ள தார் வாடும்படி நின்று, நீ கொய்த வருத்தத்தை நினைந்து, ஏற்றிலளோ? கொய்த இத்தழையைக் கையிற் கொண்டு நீ செய்த தாழ்ச்சிக்காகவாவது அவள் ஏற்றிலளோ சொல். தலைவன்:- புனைந்த தெப்பத்தில் ஏறிவர வேண்டியிருந்தமை யால் பொழுது தாழ்ந்தது; அதனால் இத்தளிர்கள் வையை நீர் காரண மாகத் துவண்டன; முருகன் குன்றத்தின் மீது ஆணை இது மெய்யாகும். காதற்பரத்தை- வையை யாற்றின் வரவு அழகிய பெருக்கன்றோ! அவ்இற்பரத்தையின் காமப் பெருக்கம் வையை வரவோடொக்கும்; ஆமாம்; நீ சொல்லுகின்ற தொக்கும்; காதலையுடைய காமம் எப்பொழு தும் ஒரு தன்மையின் நிற்குமோ? சிலர்பால் விரையச் சுருங்குதலாலும், சிலர்பால் விரையப் பெருகுதலாலும் அக்காதல் வையைப் பெருக்குத் தானன்றோ? வேண்டாது சூளுற்றுப் பிழை அடைந்தனை; இனிச் சூளுறல்; வளம் பெய்கின்ற கார்காலத்து எம்பதி நின்பதிக்கு அருகி லிருக்க இளவேனிற் காலத்துக் குருவிகள் இரைதேடும் தன்மைத் தன்றோ புணை காரணமாக நின்னைத் தாழ்ப்பிக்கும் வையை. ஆதலால் நின் காமத்தையும் வையை போலக் கருது. ஆற்றின்கட் செல்கின்ற புனல் வழியே செல்லும் மரம்போல, வெளவிக் கொள்ளுதல் வல்ல மகளிர்க்கும் புனலாடுதற்குத் தெப்பமாகிய மார்பினையுடையாய்! சிறிதும் அஞ்சாது இரவெல்லாம் அவளோடு தங்கினாய்; அவ்வையைக்கண் உடைந்த மடையை அடைத்த விடத்தும் பின்னும் ஒழுகும் ஊற்று நீர் போல, முன் வருத்திய துன்பங்கெட நீ சோர்ந்த விடத்தும் பின்னும் நீர்வாரும் கண்ணுடைய மகளிர் நெஞ் சத்தை இன்னும் வருத்தா நின்று வருத்தலை ஒழி. தலைவன்:- கரையிடத்து நின்ற ஒருத்தி தனது பேதைத் தன்மை யால் கரையில் நில்லாது, நான் குளித்த குளத்திற் புகுந்து திரையின் கண் மூழ்கினாள்; பின் எழுந்து என்மேல் வருந்தி வீழ்ந்தாள்; குளித்த யான் எழுந்து அணுகி எடுத்தலும் அவள் எழுந்தாள்; அவள் காமநுகர்ச்சி அறியும் பருவத்தளல்லள்; அவளை அன்றி மாலைபோல் அழுத்தப் பட்டவள் யாவளோ? அவளோடு யான் ஆடிய ஆறுயாது? காதற்பரத்தை:- அதனை யான் சொல்ல அறிந்து நீயே தெளி; அத்தன்மைய ஆறு உண்டோ? அதுவே இவ்வையை யாறு. தலைவன்:- யான் குளத்திற் குளிக்க நீ இவ்வையை யாறு என்ற மாறுபாடு என்னை? முன் 1சூளுற்றது போலல்லாது யான் பிறள் ஒருத்தியைச் சேர்ந்திலேன் என்று தண் பரங்குன்றைக் கையாற்றொட்டு இப்பொழுது சத்தியஞ் செய்கின்றேன். இவ்வாறு இற் பரத்தையும் தலைவனும் ஊடிப் புலந்து நின்றா ராக. அதனைக் கண்ட முதுபெண்டிர்:- “நின் கண்ணின் சிவப்பிற்குத் தலைவன் அஞ்சு வான்; துனி நீங்கி நீ அவனோடு விளையாடுதலைத் தொடங்கு; இவ்வாறு துனியின் கண் புகுவாயாயிற் காம இன்பங் கெடும்; அக்காம இன்பத்துக் குக் காரண மாகிய நீ, அவனைக் காய்ந்து காய்ந்து சுழற்சியை நெஞ்சிற் பூட்டுதலால் நீ இராக்காலத்து நீங்கற் பாலை யல்லை; நீங்கின் இடன றிந்தூடி இனிதின் ஊடும் ஒழுக்கத்திற் பிழையாகும்” எனப் புலவி தணியு மாறு இற் பரத்தையை வேண்டினாள். இவ்வாறு ஊடல் உணர்த்தவல்ல வாயில்கள் இரந்தும் பரந்தும் வருந்தி யுணர்ந்த அவ்விருவருங் கூடி மது உண்டு களித்தனர்; களித்து வையைக்கட் புனலாடினர்; ஆடிக்காம மிகுதியாற் கலந்தனர்; கலந்தபின் இன்பமுண்டாகப் புலந்தனர்; பின் அவ்வவ் விடங்கடோறும் சென்று விளையாடா நின்றனர். இவ்வாறெல்லாம் தலைவன் காதற் பரத்தையோடு இன்பம் நுகர்ந்தானென்று தலைவி, ஊடல் தீர்க்கும் வாயிலாகப் புகுந்த விறலிக் குக் கூறினாள். பின் வையைப் பார்த்து, “வையாய்! நின்கட் புனலாடுவோர் நெஞ்சத்து, மிக்குப் பொருந்திய இக்காமத்தை உண்டாக்குந் தன்மை நினக்கு எஞ்ஞான்றுங் குறையா தொழிக” என்று வாழ்த்தினாள். வாழ்த்தித் தலைமகன் செய்தியை வற்புறுத்தி வாயின் மறுத்தாள். - ஆசிரியனல்லந்துவனார் 7 வையை (இது தலைமகன் தலைமகளோடு புனலாடினெனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை நீங்களாடிய புனல் விளையாட்டு இன்பங் கூறு என, அப்புனல் ஆட்டின் இன்பமும் பலவேறு வகைப் பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையுங் கூறி என்றும் இந்த நீராட்டின்பம் யாம் பெறுக என்றது) முகிலின் கூட்டங்கள், திரையும் குளிர்ச்சியுமுடைய கரிய கடல் வற்றும்படி நீரை உண்டன; உண்டு வலிய இடி வெகுண்டு ஆர்ப்ப, தம்மீது ஏறிய பாரத்தைத் தாங்கமாட்டாது, கரை உடைந்த குளத்து நீர் பெருகுமாறு போல, தமது பாரம் சுழலும்படி மழையைப் பொழிந்தன; மலை உச்சிகளினின்றும் அருவிகள் நிரம்பி இழிந்தன; இழியும் அருவிகள் மற்றிடங்களி னின்றும் வரும் பலபுனல் ஓட்டங்களோடு சென்று பெருகின; வெற்றி யுண்டாக ஒலிக்கின்ற முரசினையுடைய பாண்டியர், கொள்ளக் கருதிய நாட்டைச் சேர நிமிர்ந்து செல்லும் அவர்தானையின் நீண்ட தலையின் நிமிர்ச்சி போல, யாம் செல்லுமிடம் அரிதென்னாது இருளுடைய இரவும் பகலுமாக வந்தது; இவ்வாறு வந்த வையைப் புனல் உயிர்கட்கு நன்மை மிகவும், மெல்லிய புலங்கள் அழகு பெறவும் பெருகி நரந்தம் புல்மீது பரந்தது; வேங்கையின் பூங்கொத்தி னின்று முதிர்ந்த பூவோடு கூடி, கிட்டுதற்கரிய மலை உச்சிகள் தோறும் நின்ற மழையால் வருந்திக் காற்றால் அலையும் கிளைகளுடைய பெரிய மரங்களின் வேரை அகழ்ந்து உயரத்தே யுள்ள பள்ளங்களை நிரப்பிற்று. உழவர் மகிழ்ச்சியால் ஆடினர்; சிவந்த பூக்கள் அணிந்த முழாக் களும் பெரும் பறைகளும் ஒலிக்க ஆடும் ஆடலியல்பு அறியாத மகளிர் போலத் தான் வேண்டிய இடங்களிற் புனல் சென்றது; ஊடல் இயற்கை அறியாத ஊடல் உவகையாள் கணவனைக் கடந்து நிற்குமாறு போலக் கட்டிய அணைகளை முறித்தது; விதிமுறையோடு செய்த மெய்யிடத்தே பூசும் கலவை நாற்றம் போல் நறிய பல நாற்றத்தை உள்ளே அடக்கி மேலே புதிய நாற்றத்தைச் செய்தது. வெள்ளம் பாய்ந்து வரப்புகுந்த நீரால் நீர் நிலைகளில் மலர்கள் மேலே மிதந்தன என்று ஒரு பால் ஆரவாரம் எழுந்தது; விளையாட்டு மகளிர், தாம் மணலிலே இழைத்த பாவை சிதைந்த தென்று ஒருபால் நின்றழுதனர்; அகன்ற வயலிடத்துள்ள இளம் நெல்லின் கண்ணும், அரிந்தடுக்கிய நெற்சூட்டின் கண்ணும், நீர் சூழ்ந்த தென்று ஒரு பக்கத்தே ஒரு பால் துடி கறங்கின; ஊரைக் கடல் சூழ்கின்றதென்று ஒரு பக்கத்தே ஆரவாரமெழுந்தது, வானிடத்தே மழை பெய்த லொழிந்ததென்று ஒரு பக்கத்தே ஆரவார மெழுந்தது; பாடுவார் இருந்த பக்கத்தை நீர் கொண்ட தென்றும், ஆடுவார் சேரியை வெள்ளம் அடைந்த தென்றும், வெள்ளம் ஓடும் வாய்க்கால்கள் கழனியை நீரினால் தொடுத்தனவென்றும், தெங்கு, கமுகுகளின் கழுத்தை நீர் முட்டுதலால் வாளைமீன் அவற்றை உண்டன வென்றும் நாற்றங்கால்கள் வண்டல் ஏறுண்டு மேடாயினவென்றும், ஒவ்வொர் பக்கங்களினும் ஆரவார மெழும்படி, ஊடலைத் தானுணர்த்த உணராத மாதரைக் கூட்டுவித்தற்கு முயலும் கணவனது ஆசை வெள்ளம் போல் புனல் விசையோடு சென்றது; சென்று சினைமுதிர்ந்த வாளை மீன் கூட்டம்போல விலாப்புடைக்கும்படி கள்ளுண்டு நிற்கும் உழவர் கூட்டம் நிற்கும் இடத்தே சென்று பரந்தது; பரந்து இடிந்த மலைபோலக் குத்துண்டு நிற்கும் இருகரையாகிய காவலுட்பட்டு நின்றது. (அவ்வையை நீர்) அது நுரை சுமந்து பூவான் மூடுண்டு பொழிலின்கட் பரந்து தன் னிடத்தே விரைந்து நீராடுபவராகிய மகளிர் காதின்கண் தளிரைச் செருகி, மைந்தர் கண்ணியைப் பறித்தது; பின் மகளிர் தலைக் கோலம், உடுத்த துகில், இருவடமாய்த் துகிற்குள் அணியும் மேகலை, எண்வட மாய் அதன் புறத்தணியும் காஞ்சி, மைந்தர் ஆழி, மோதிரம், வாகுவலயம் என்று இவை எல்லாவற்றையுங் கொண்டது; அத்தன்மை பாண்டியன், பகைவர் நாட்டிற் புகுந்த தன்மையை யுடைய தாயிருந்தது. மிக்க தகைமையுடைய அவன் ஆடுகின்ற ஆய மகளிரெல்லாம் ஒரு வரை ஒருவர் துரந்து புனலை ஏற்றினர்; அவர்கள் கண்கள் அப் புனலை ஏற்று அமைந்தன; அவருள் ஒருத்தி அதற்குத் தோற்றுக் கண்களைக் கையால் மறைத்தாள்; வெற்றியால் இறுமாந்த ஒருத்தி தான் கழுத்திலணிந்திருந்த பொன்னாணினால் தொய்யிற் குழம்பாலெழுதிய கரும்பினையுடைய அணை போலும் அவள் மென் தோள்களைக் கட்டிச் சிறையாகப் பிடித்தாள்; அச்சிறைப்படுத்தப்பட்டவட்கு பரிந்து கைப்பிணிப்பினின்று நீக்குதற்குப் பாய்ந்த ஒருத்தியின் கூரிய வேல் போன்ற கரிய கண்ணொளியால் சிவந்த புதுப்புனல் இருள் நிறமாயிற்று; வையைப் பெருக்கின் வடிவு இதுவாகும். புனலை விரும்பி ஆடிய உடம்பு, ஈரந்தீர்ந்து வெம்மை உண்டா தற்குக் காரமுள்ள கள்ளைக் குடித்தற்கு ஏந்திய போது, அவள் கண் நெய்தற் பூவை ஒத்தன. அந்நறவை அருந்தினபொழுது அவள் கண்கள் கண்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் பெரிய நறவம் பூவை ஒத்தன. தலைவன் அக் கண்ணியல்பைக் கண்டு புகழ்ந்து அவற்றின் பெண்ணின் அழகுத் தன்மையுடைய நோக்கினை விரும்பிப் பாண்சாதி போலப் பலவகையாற் பாடினான்; அப்பாட்டைத் தன் காதலியைப் பாடுகின்ற தறியாது; வேறொருத்தி கேட்டு அவனோடு கூடுதற்கு வருத்த முற்றாள்; அவ்விடத்து அதனைக் கண்டு இனி எனக்கு என்ன சம்பவிக் குமோ என்று அஞ்சித் தலைவியைச் சேர்ந்து நடுக்கமுற்றான்; நறவுண்ட தினால் சிவப்பேறிய தலைவியின் சிவந்த கண்முன் குறைகிடந்த ஊட லின் மேல் விளைந்த இதனாலும் சிவப்பேறியது; பல தொகுதியாக நீராடற்கு வந்த மகளிர் காண அவளோடு பகை மிகுந்து தன் மாலையைப் பிடுங்கி மிக வெகுண்டாள்; ஆறாடும் அவள் மேனியின் அழகை உட்கொண்டு பாராட்டிய காதலன், தன் சந்தனச் சேறாடிய மேனி நிலத்தைத் தீண்டும்படி விழுந்து வணங்கினான்; அவன் சிரத்தை மிதித்துப் பின்னும் வெகுளி தீராமையால் ஊடினாள்; சிவந்த புனலாடு கின்ற நேரத்து இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது. பாலை ஏழினையுமுடைய புரி நரம்பின் கண் இனிய இசையைத் தருகின்ற யாழும் மிடற்றுப் பாடலுங் கூட, குழல் அவற்றின் சுருதியை அளந்து நிற்ப, முழவு எழுந்து ஆர்ப்ப அரங்கேறிய தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்கினர்; அவ்வாரவாரத்தோடு சேர்ந்த கரையைப் பொருது இழியும் பெரிய நீரின் ஒலி அஞ்சத் தக்க இடியோடு கூடிய மழை முழக்கத்தை ஒக்கும் திருமருத முன்றுறைக் கண் சேரும்; அந்நீரிடத்து மகளிரும் மைந்தரும் இன்பம் நுகர்வர்; அவர்கள் மாலைகளை வாங்கி நின் தலைக்கண் புனையும் வையாய்! இன்று நின்னிடத்து ஆடி நீங்காத இப் பயனைப் பெற்றார்போல என்றும் நின்னால் யாம் பெறும் பயனைப் பாராட்டி விடிகின்ற பொழுதின் தன்மையை அடைந்து மகிழுவோமாக. - மையோடக் கோவனார் 8 செவ்வேள் கடவுள் வாழ்த்து பூமியிடத்துள்ள துளசியின் மலர்ந்த மலரினாற்றொடுத்த மாலை யையும், அளவற்ற செல்வத்தினையுமுடைய கருடனை மேலே எழுதிய கொடியையுமுடைய திருமாலும், இடப ஊர்தியுடைய சிவபெருமானும் உந்தியங் கமலத்திற்றோன்றிய பிரமனும், அவனிடத்தினின்றும் தோன்றி, உலகின் இருளை அகற்றும் ஆதித்தர் பன்னிருவரும், மருத்துவராகிய அசுவினி தேவர் இருவரும், சிவபெருமான் பெயரால் அறியப்படும் உருத் திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காக்கின்ற திக்குப் பாலகர் எண் மரும், இவரும் இவரொழிந்த பிறருமாகிய அமரரும், அவுணரும், தெய்வ முனிவரும் நின்னைக் காண்பது காரணமாக மண்மிசை வந்து உறையும் இடம் திருப்பரங்குன்றாம். இவ்வியல்பினால் பரங்குன்று நினது பழைய இட மாகிய இமயக் குன்றத்தை ஒக்கும். அவ்விமயக் குன்றின் கண் சிறப்பெய்தி நின்னை ஈன்ற நிரைத்த இதழுடைய தாமரையினது மின் போலும் பூங்கொத்துக்கள் உதிராததும் வற்றாததுமாகிய பொய்கை ஒக்கும். நினது குன்றின் அருவி தங்கும் ஓழுங்குபட்ட சுனை. முதல்வ! நின் குன்றிடத்து முகிலின் முழக்கம் நின் யானை முழங்கும் ஓசையை ஒக்கும். முகிலின் முழக்கத்தைக் கேட்ட கோழி அஞ்சிக் குன்று எதிரொலிக்கும்படி கூவும். மதமிக்க யானை அக்குரற்கு மாறுமாறாகப் பிளிறும். அவை மலைக்குகைகளிடத்து எதிரொலிக்கும். ஐந்து துளையான வங்கியத்தும். யாழிடத்தும் பிறந்த இசைச் சுருதியை ஒப்ப ஒரே நிறமுடைய கூட்டாகச் செல்லும் விருப்புடைய வண்டுகள் ஆர்த்தன. கொன்றை, சரம் போன்ற பூங்கொத்துக்களை மலர்ந்தன. மணமுடைய மலர்ந்த காந்தட் பூ, இடமெல்லாம் நாறின. நன்றாக மலர்ந்த பன்மலர்கள் தேன் ஒழுக அந்நாற்றங் களோடு தென்றல் வீசும் தலைமையுடையவாய் இருந்தன. மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடையேயுள்ள வழி இவ்வாறிருந்தது. குன்றைப் பிளந்து விளங்குகின்ற வேலோய்! கூடலிடத்து மன்ற லில் கொட்டப்படும் முரசின் ஆரவாரம். காற்றால் ஏறுண்ட கடலின் கொந் தளிப்புப் போலவும். இந்திரனது இடி எனவும் அதிர்ந்தது. நின் குன்றிடத்து முழக்கம் அவ்வொலிக்கு மாறாக ஒலிக்கும். தலைவியரால் தூதாக ஏவப்பட்டுத் தலைவரோடு மீண்ட வண் டின் கூட்டத்தின் ஒலி, அத் தலைவியர் காதலை மதுரை மூதூர்க்கண் அரவமாக்கிற்று. மாவடுவின் வகிரை வென்ற கண்ணும் மாந்தளிர் போன்ற மேனி யும், நீண்ட மூங்கில் போன்ற பணைத்த மிருதுவாகிய தோளும். வளை அணிந்தவருமாகிய இளம் மகளிரின் வரைகடந்த காம இன்பத்தைத் தலைவரோடு பெரிய பொழிலாகிய பாயலின் கண் கூடிப் பெறுவர். இக்களவியற் புணர்ச்சியையும், காதலையுமுடைய 1அடியுறை மகளிர், மைந்தர் அகலத்தை அகலாத நல்ல புணர்ச்சியையும் பூவின் கட் திரியும் அகன்றில் போல் அகலாது அவர் விரும்பியவாறு பெறுவர். இவ்வாறு தருஞ்சிறப்புடையது தண்பரங்குன்று. (தலைமகள் இவ்வாறு மகளிர்மேல் வைத்து இன்ப மிகுதி கூறியதைப் பொறாத தலைமகள் புலந்து கூறுகின்றாள்) தலைவி:- இப்பொழுது நீ மிகவும் அயலார் நாற்றத்தை நாறா நின்றாய்; அவரோடு கூடுதற்கு அவ்விடத்தே நீ காலை போய் மாலை வருதல் அடிக்கடி நிகழா நின்றது; இனி பழைய சத்தியத்தைத் தவிர். தலைவன்:- இனிய மணலையுடைய வையைக் கரைக் கண்ணுள்ள பொழிலாணை, குன்றத்துச் சாரலாணை, பார்ப்பாராணை, முனியாதே. மலரை உண்ட கண்ணாய். நீ கூறியது எனக்கு இயைவதன்று இந்நாற்றம் பரங்குன்றத்துக் கனியினும் மலரினும் பயின்ற காற்றுச் சீத்தடித்து வந்தது; ஆதலால் மிகவும் துனியாய் ஆகுக. தலைவி:- நீ உன் சூளை விடு. தோழி:- 2ஏடா! யானொன்று சொல்லு மளவும் நில்லு நில்லு. நின் சூளைப் பின்னை கூறு. அமைதியுடையோர் பெற்ற மிகத் தகுதியில்லாத மகனே! இவள் தாய்க்கு ஒரு பெண், (இச் சத்தியத்தால் உனக்குத் தீமை வரின் இவள் இறந்து படுவள்) தலைவன்:- மை உண்ட கண்ணும் விளங்குகின்ற ஆபரணங் களுடையவளும் ஈன்றாட்கு அரியளோ? அரியளாவது நீ சொல்லுதற்கு முன் யான் அறிந்திலேன்; இதனைப் பார்; புனல் வாரடிக்கின்ற வையை யின் மணலைத் தொட்டேன். தோழி:- மணத்தைத் தருகின்ற செவ்வேளின் தண்ணிய பரங் குன்றத்தின் அடியைத் தொட்டேன் என்றாய்; கேளிரை ஒத்த மணலோடு நட்பும் இத்தன்மைத்தோ? அது கிடக்க, ஏழுலகையும் ஆளுகின்ற திருவரைமேல் அன்பு அருளைச் செய்யத்தக்கது; நீ தலைவியிடத்து அருள் செய்யாது செய்ததாக, அருளுடைய முருகன் மீது ஆணை செய்யின் நின்னை அருளில்லாத வருத்தத்துடன் அவ்வேல் மெய்யாக வருத்தும்; அதுவேயன்றிப் பார்ப்பார் அடியைத் தொடினும், வெற்றி வேலோன் ஊர்ந்து செல்லும் மயிலையும் அவன் நிழலையும் நோக்கி அவை மீது சூளுறற்க; குறவன் மகள் மீது ஆணை கூறுகின்ற ஏடா! அதனையும் கூறல்; ஐயனே! சூளுறல் வேண்டின் வணங்கப்படும் குன்றோடு வையைக் கேற்ற அழகிய மணலைச் சூளுறா தொழி. தலைவன்:- நேரிழாய்! யார் பிரிய, யார் வர, யார் வினவ, யாரது விடை உண்டாகின்றது? அது கருதாது நீருரைக்கும் சூளின் தன்மை கடிது என்றாய்; தடாகத்தின் கண்ணுள்ள நெய்தற்பூவையும், கமழ்கின்ற (சிவந்த) நறவம் பூவின் இதழை ஒத்த கண்ணையும், ஒள்ளிய நுதலையும், முல்லை முகையை வென்று முத்தை ஒத்திருக்கும் வெள்ளிய பற்களையு முடைய எனது தலைவி கூறிய குற்றம் நனவு மன்று கனவுமன்று; (நகையாகக் கூறுகின்றான்) என் மாட்டுக் குற்றத்துக்குரியது ஒன்றும் இல்லாதிருக்கவும் அவள் துனிக்குக் காரணம் என் ஒழுக்க நெறியாக நீ ஓர்தலால் யான் செய்தது பொய்ச் சூள் என்று கருதி முருகன் என்னைத் துயர்மிகும்படி வருத்தஞ் செய்வான்; அவன் அவ்வாறு செய்யாமல் நீ சென்று அவள் அடியிற் பணிந்து ஆற்றுவிப்பாயாக; (பின் தன் ஏவல் இளைஞரை நோக்கி) இவ்வுரையை எல்லார்க்கும் அறிவிம்மின்; முருகன் தாளை யாவரும் தொழும் பரங்குன்றத்தின்கட் சென்று மலர் தூவி ஏற்றுதும்; அவியை ஊட்டுதும்; பாணித்தாளத்தையுடைய பாட்டைப் பாடுவேம்; 1கிணை ஒலியை எழுவிப்போம். தோழி: ஏடா என்னைச் சமாதானஞ் செய்க என்றாய்; அதனாலே நின் பொய் ஆணையாகிய குற்றம் நின்னைப் பற்றுதலை யாம் அறிந்தேம்; யமனது வலிமையும் இகழும் ஆற்றலுமுடைய முருகன் நின்னை மாறுபடுத்தற்கு முன்னே, யான் வளை சோரும்படி கையை விட்டுப் பேசாது நிற்பேன்; தலைவி நாவைக் கை விரலினாற் தொட்டு முகத்தைக் கவிழ்த்துப் பெரிய சூளுறுதலால் வரும் தீமையை அஞ்சி அருளினால் ஆற்றியிருப்பாள்; அயல் மகளிர்பால் நீ பலகாலும் செல்லும்போது அதனைப் பலகாலும் காண்பாள். இவ்வாறு கூறிப் பின்னும் தலைமகளிர் யாவரும் இவ்வாறே செய்வரென அவரது செய்தி கூறுகின்றாள். மதுரைக்கும் திருப்பரங் குன்றத்துக்கும் இடையே உள்ள வழி காற்று மோதுதலால் உயர்ந்த மலையிடத்திற் பெய்து ஓடும் மழை நீராற் செழித்து வளர்ந்த இளமரச் சோலைகளை யுடையது; மரங்களில் பறிக்கப் பறிக்கத் தொலையாத மலர்கள் விரிந்திருக்கும்; பொய்கைகள் நீர் நிறைந்திருக்கும்; பொழில்களிடத்துக் குளிர்ந்த மணல் பரந்திருக்கும்; முருகனைப் பூசைபுரிந்து வழிபடுதற்கு இத்தண்ணிய நிழலுடைய வழியால் மகளிர் கூட்டமாகச் செல்வர்; சந்தனமும், புகைப்பனவும், காற்றால் அவியாத விளக்கிற்கு வேண்டிய நெய்யும், நாறுகின்ற பூவும், இசையுடைய முழவும், மணியும், பாசமும், அயிலும், குடாரியும், மயிற் கொடியும் பிறவும் ஏந்திச் சென்று திருப்பரங்குன்றிலுறையும் முருகனது அடிகளைத் தொழுவர். தொழுது சிலர், யாம் கனவில் எங்காதலரைத் தொட்டது பொய்யாகாமல் நனவின்கண் தலைவரை எய்தி வையைப் புதுப்புனல் ஆடுதல் வேண்டுமென வரம் வேண்டுவர்; சிலர், எம் வயிறு கருவுற வேண்டுமெனப் பொருள்களை நேர்ந்தனர்; சிலர் எங்கணவர் வியக்கத்தக்க அமரை வெல்ல வேண்டுமென அருச்சித்தனர். இவ்வா றெல்லாம் பாடுவார் ஆடுவோரின் தாளங்களும், மலையிடத்து எழும் எதிரொலியுமாகிய இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒலித்தன. கூரிய எயிறுடைய பாவையர் சுனையிடத்தே பாய்ந்தாடினர். அவர்களது கண்ணும், முகமும், பாதமும் தாமரைப் பூப்போன்றன; அவர்கள் தோள் மீது பொருந்திய சேடியரது கரங்களும் கயத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போன்றன; தனங்களும் தாமரை முகையை ஒத்தன; இளமயிலனையார் பொய்கையிடத்துப் பாய்ந்தாடுதலின் அங்கு மலர்ந்த தாமரை மலர்களுக்கும் இவர்கள் உறுப்புகளாகிய தாமரை மலர்களுக்கும் வேற்றுமை தோன்றாதாயிற்று. அம்மடவார் முலைப் பூணோடு கணவர் தம் மார்பணிகள் மயங்கின. சிவந்த தளிர்போன்ற மேனியுடைய அம்மடவார் அரிவையர் செய்த அமிர்தத்தை ஒத்த காமத்தை உண்டாக்கும் கள்ளுடனே மடையர் சமைத்த மகிழ்ச்சி தரும் கள்ளையும் உண்டு தங்கணவர் மார்பிடத்துத் தோன்றிய வருத்தத்தைத் தீர்த்தனர். பரங்குன்றமே! தம்முட்பிரியாத மகளிரும், மைந்தரும், பிறரும், வரம் வேண்டுவோரும் கூடி நின்று, மணிமிடற்றண்ணற்கு மாசில்லாத உமையம்மை தந்த கடம்பின் கீழ் அமரும் முருகனது அழகிய கோயிலை வழிபட, செல்வத்துடன் மண் வருத்த மழை வறண்டதாயினும் அருவி பெருகி மிகும் செல்வம் நினக்கு நிலை பெறுவதாக. - ஆசிரியர் நல்லந்துவனார் 9 செவ்வேள் கடவுள் வாழ்த்து வடதிசைக்கண் உயர்ந்து பெரிய நிலம் அசையாதபடி நிற்கும் பெரிய சிகரத்தையுடைய இமையமலை, அழகு மிகுந்த தெய்வச் சாதிக்குத் தலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும். அம்மலையிடத்தே, அமரருலகினின்றும் அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையின் வேகத்தை மலர்ந்து விழுகின்ற பூவைப் போல சடாபாரத்திலே தாங்கிய சிவபெருமானுக்கு, தெய்வ முனிவர்கள் உடன்படக் கார்த்திகைப் பெண்களிடத்திற் பிறந்தோய்! இமைக்கின்ற கரிய கண்களையுடைய வள்ளியின் தோளை நீ களவின் கண் மணந்தாய். மணந்த அன்று, ஆயிரங் கண்களையுடைய இந்திரன் மகளாகிய தேவ சேனையின் கண், முதுவேனில் கார்காலமாகி மழை பெய்தா லொப்பப், பரங்குன்றின் கண் நீராகிய மழையைப் பெய்தது. நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்ல புகழை விளக்கும் புலவீர்! சிறந்ததொரு பொருளைக் கேண்மின். காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது: மெய்யுற்றறியாதா ரிருவர் அன்பொத்து ஊழ் வயத்தராய்த் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி. இனி அன்பு ஒவ்வாத கற்புப் புலத்தலாற் சிறந்தது. அப்புலவிதான் 1வாயில் வேண்டி நிற்றல், வாயில் பெறுதல் முதலியன. அவை தலைவனது பரத்தைமையான் வருவன. வாயில் பெற்றுப் புணரும் புணர்ச்சி, தலைவிக்குப் பாங்காயினார் கேட்டு வருத்தமுறப் பரத்தையால் தன் மனைக்கண் அலர் தூற்றப்படுவதாகும். அப்புணர்ச்சி இன்ப இயல்பா னன்றி ஊடலால் உண்டாவது. கற்பொழுக்கம் போலத் தலைவர் பிரித லறியாத களவிற் புணர்ச்சியுடைய மகளிர் தலைவரோடு மாறு கொண்டு துனிக்கும் குற்றமுடையாரன்று. இப் புணர்ச்சியை வேண்டுகின்ற பொரு ளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத் தைக் கொள்ள மாட்டார். இனி அக்களவிற் புணர்ச்சியுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். சந்தன மரங்களுடைய பழைய கரையைப் பெயர்த்து வையைப் புனல் கொண்டு வந்த வயிரிய சந்தனக் கட்டையின் புகை சூழ்ந்த மாலையுடைய மார்பின் கண், விளங்குகின்ற முத்துமாலை அழகு பெறத் தன்னோடு கலத்தற்கு வரும் முருகவேளை தேவசேனை தொழுதாள்; தொழுது, “வஞ்சகனே! வாழ்க. நின்னை அறியாது அகப்பட்ட மகளிர் தன்மை இனி மழையை வேண்டி வருந்தும் காவை ஒக்கும்; ஆதலால் அம்மகளிரே தவறுடையரா வரல்லது நீ தவறுடையை அல்லை; நின்னை எய்தும் திருவுடையார் மென்றோள் மேற் பொருந்தி அருளலும் நினக்கின்று; ஆதலால் நின் சிறந்த நலத்தை உண்ணக் கடவனோ” என்று முருகக் கடவுளைக் கையாற் சுட்டிச் சொன்னாள்; சொல்லிய பின் வள்ளி காரணமாக உண்டான புலவியால் நீங்கினாள். முருகவேள் தேவசேனையைக் சென்றணுகி, தன் தலைமாலை அவள் அழகிய பாதங்களிற் தோயும்படி வணங்கினார். அதனால் புலவி தீர்த்த தேவசேனை ‘வருந்தல்’ என்று சொல்லித் தன் மார்பை அளித்தாள். அப்போது வள்ளி ‘இனி அவளைக் குறுகாதே’ என்று அவன் கையை மிக இறுகப் பிடித்தாள்; பிடித்துத் தானணிந்த மாலையைக் கோலாகக் கொண்டு அடித்தாள். அதனைக் கண்டு ஒருவர் மயில் ஒருவர் மயிலோடு உறவாடிற்று; இருவர் கிளிகளும் தம்முள் மழலை வார்த்தைகளை மிழற்றின. வெறியாட்டை விரும்பும் முருகனது குன்றிடத்துள்ள வள்ளியின் வண்டு தேவசேனை கொண்டை மீது இருந்த வண்டை மேற்சென்று பாய்ந்தது. அதனைக் கண்டு தேவசேனை யின் பாங்கியர் வள்ளி பாங்கியரோடு மாறுபட்டனர்; மாறுபட்டு மாலை களை வீசி அடித்தனர்; கண்ணிகளை ஓங்கித் தடுமாறினர்; மார்பை அழகு செய்யும் கொங்கையின் கச்சுகளை, அடிக்கும் கருவிகளாகக் கொண்டு அடித்தனர்; மாலைகளையும் வரிப்பந்தையும் கொண் டெறிந்தனர். பேதமையுடைய மெல்லிய நோக்கம் வெகுளியால் வேறு பட்டோரும் ஊதவளையும் இடையுடை யோருமாகிய, தேவசேனையின் தோழியர் நெருங்கிய போரைச் செய்தனர். அதனைக் கண்டு வள்ளியின் பாங்கியராகிய மெல்லிய மயிலின் சாயலையுடையோர், தோட்டிப் புண்ணால் மென்மை அடைந்த தலையுடைய மதம் நாறுகின்ற களிற்றின் இயல்பை அடைந்தனர்; வேகமுடைய குதிரைகளின் கதியைத் தம்மிடத்தே கொண்டனர்; தேர் நிரைகள் போல வடிகயிற்றைத் தெரிந்து கொண்டு வந்தனர்; மார்பிலே பொருந்தும்படி வில்லை வளைத்து அம்பைச் செலுத்தும் வில் வீரரதும் வாள் வீரரதும் நிலைமையையும் அடைந்தனர். இந்திரன் மகளுடைய பாங்கியர் அதற்கு அஞ்சி வாட் டழும்பு நெருங்கியிருக்கும் மார்புடைய முருகனைச் சூழ்ந்துகொண்டு சுனையிடத்தே மூழ்கி ஆடினர். அப்பாறையிடத்துத் தேனையுண்ட வண்டாய் நின்று யாழ் போன்ற இனிய பாடலைப் பாடினர்; கொண்டை யுடைய மயிலாய்த் தோகை விரித்தாடினர்; குயில்களாய் நின்று கூவினர்; வருத்த மடைந்தனர்; குறிஞ்சி நில மக்களாகிய குறவர் பெற்ற வீரம் பொருந்திய கொடிச்சியர் திருந்திய போரைச் செய்தவிடம் பரங்குன்று ஆதலின் அவ்விடம் வெற்றி வேலுடைய முருகனுக்கு ஒத்தது. கொடிய சூரபன்மாவாகிய மாமரத்தை அறுத்து அழித்து வேலாற் பொரும் போரையுடையாய்! நின் குன்றின் மிசை ஆடல் பயின்றாரை ஆடல் பயின்றார் வெல்வர்; பாடல் பயின்றாரைப் பாணர் வெல்வர்; வலிய போரில் வல்லாரைப் போர் வல்லார் வெல்வர்; ஒழிந்த கல்வி யுடையாரைக் கல்வியுடையார் வெல்வர். வெவ்விய புதுப்புனலை ஏற்ற தடாகம் போலும், சுனைப்பக்கத்து வெற்றிக்கொடி உயர்ந்து நின்றது. நினக்கு ஏற்ற வேலினை! வென்றுயர்ந்த கொடியால் வெற்றியமைந்தனை கற்பு நெறியுடைய தேவியரது அன்பு பொருந்திய ஊடலுரிமையை விரும்பும் பண்புடைய குமர! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றேம். - மருத்துவ னல்லச்சுதனார் 10 வையை (இது பருவங்கண்டு, வருவேனென்று வற்புறத்திச் சென்ற தலைவர் வார்த்தைக்கு மாறாக வருந்திய தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடச் சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும் வையை நீர் விழவணியும் ஆங்குப்பட்ட செய்தியும் கூறியது) மாலைக் காலத்தே மலையிடத்துப் பெய்த மழையின் மிகுந்த வெள்ளத்தால் நிரம்பிய வையைப் புதுப்புனல், எல்லை காணமுடியாத கடலைக் கூடுவதற்கு வேகத்தோடு சென்றது. செல்லுமிடத்து, நிலவுல கில் பசி முதலிய துன்பங்கள் சுருங்கும்படி விரிந்த பல பூக்கள் நெருங்கின போர்வையுடன் பெரிய மணலை மூடிப் பாய்ந்தது; வரியுடைய வண்டு விரும்புகின்றதும், மொட்டு விரிகின்ற கிளைகளுடைய மாந்தளிர்க ளுடன் வாழை யிலைகளும் தோயும்படி சென்றது. இவ்வாறு பல ஆரவாரத்தோடு கரையைக் காக்கின்ற காவலரை அழைத்தற்குப் பறை கொட்டும்படி சென்றது. அப்புனலிடத்தே நெருங்கி ஆடுதலை விரும்பிய மக்கள், கூட்ட மாகச் சென்றனர். நூல் போன்ற நொய்த இடையும், மயில் போன்ற சாயலுமுடைய மாதர், இரண்டு முதல் முப்பத்திருக்கோவை யீறாகவுள்ள வடங்களை இறுக்கிக் கட்டினர். அரக்கு நீரை உள்இழுத்து வீசும் துருத்திகள் எல்லாவற்றையும், முத்துப் போலும் பனி நீரோடு அளவிய சந்தனத்துடனே பெட்டியில் வைத்து மூடிச் சென்றனர்; பொங்குகின்ற 1பிடரி மயிருடையவும் தத்துதலால் மேலிருத்தற் கரியவுமாகிய பரிவும் மிக உயர்ந்தவாயினும் மேலிருத்தற்கு இனிய பிடியும், பெயர் சொல்லி அழைக்கப்படும் எருது பூண்ட அழகிய வண்டியும் கோவேறு கழுதை யும், ஆராய்ந்து குதிரை பூட்டிய சகடமும், தண்டார்ந்த சிவிகையும் ஆகிய இவற்றில் அவர்கள் வந்து மொய்த்து விரைந்தேறிச் சென்றனர். முகைபோன்ற பருவத்தோரும், மணந் தங்கிய புதுமலர் விரிந்தா லென்ன பருவத்தாருமாகிய இளையரும், விரவிய நரையுடையோரும், வெகு நரையோருமாகிய முதியவரும் என்ற இவ்விருதிற மாந்தரும், கற்புடைய மகளிரும், பரத்தையரும், இம் மாந்தர்க்கும் மகளிர்க்கும் பாங்காயினாரும் ஆகிய இவர்களெல்லாம், தாளத்துக்கு ஒலிக்கின்ற வாத்தியங்களது மெல்லிய நடையைப் போலப் பிற பகுதியிலுள்ளா ரோடு ஆற்றெதிரே நடந்து சென்று அதன் உயர்ந்த கரையைச் சேர்ந்தனர். அலர் வாயவிழ்ந்தன்ன பருவத்தினர் நீரின் அழகைக் கண்டு நின்றனர்; நிரைத்த மாடங்களிற் சென்று தங்கினர்; மைந்தரோடு பொரும் விளையாட்டுப் போருக்கு ஆயத்தமாக நிரையாக நின்றனர், முன்னே செல்லும் காலாட்படைகள் போற் சென்று தாக்கினர்; நறு நாற்றத்தையுடைய பூ மிகுந்த ஆற்றிடைக் குறையைக் குறுகிக் காதலர் ஆகத்தைத் தழுவினர்; யாமத்து ஊடற்குறையாகிய இனிய கலவி விருப்பந் தரும் ஊடற்றேனை நுகர்ந்தனர்; அவ்வூடலைக் காமமாகிய குந்தாலி உடைத் தலால் ஊடலைத் துறந்து அமளி சேர்ந்தனர். ஏனைய முகைப் பருவத்து மகளிர் பூவின் மேம்பாட்டை நாடிவந்து விழும் வண்டு போலக் காதற்கணவர் தம்மை வந்து எதிர்ப்பட்டுப் புணர்தற் பொருட்டு, நீராடல் குறித்துத் தமக்குக் காவலாகிய பாட்டியரைத் தப்பி அவர் தடுத்தலையுங் கடந்துபோய், நாவாயது வரவை எதிர் கொள்வார் போல விருப்பமுற்று நிற்பர்; யான் விரும்பும் வையைப் புனலை ஆடுமிடத்துக் கூடலின் கண் இவ்வாறெல்லாம் நிகழும். ஒரு வீரமுடைய களிறு தனக்குப் பாங்காகிய பிடியைக் கண்டு காமத் தால் மயங்கி மெலிந்தது; மைந்தர் நடத்தவும் நடவாது அழகிய நிலையுடைய மாடத்தை அணைந்து நின்றது; அப்பிடியும் களிற்றின் மேற்சென்ற விருப்பால் மயங்கி மேலிருக்கும் மகளிரோடு நடத்தல் சுருங்கி அம்மாடத்தயலே சென்றது; அவ் அம்புலிமாடத்துப் பண்ணி வைத்த புலியைக் கண்டதும் அதனை மெய் வேங்கை யென்றும் அது களிற்றைப் பாயுமென்றும் கருதி அஞ்சிற்று. அஞ்சிய மேகத்தை ஒத்த அப்பிடி, பாகர் செய்யும் தொழிலைக் கேளாது மீதிருக்கும் மகளிர் நடுங்கும்படி வெருண்டது. அதனைக் கண்டு ஆற்றாது பிளிறுகின்ற களிறு, தோட்டியைக் கடந்து சிதைந்தது. உடனே அம்மைந்தர் அது இடி போன்ற முழக்கத்தை ஒழியுமாறு அதனைப் புலிமுக மாடத்தினின்றும் பெயர்த்துப் பிடி சிதையாமல் அணைவித்து அம்மகளிர் நடுக்கத்தைக் களைந்தனர். அத்தோற்றம் பாயும் கயிறும் மரக்கூட்டங்களும் முறிந்து சிதையப் புகாநின்ற மரக்கலத்தைத் திசையறிந்து கலங்களை ஓட்டும் மாலுமி திருத்தி அகத்தே இருந்தோரின் நடுக்கங் களைந்த தொக்கும். வையை நீர் விழவின் கண் மைந்தரும், மகளிரும், விலங்குகளும் ஒத்த அன்பின வாயின. ஐயனே! அது நின்மாட்டில்லையாயிற்று. பெரிய கோடுடைய யாழின் கூறு, மிடற்றுப் பாடல் ஆடல் முதலி யன திண்மையை அழிக்க அழிந்த துனியுடைய மகளிரும் மைந்தரும் கூடுதற்குச் செல்லுகின்ற காதல் இருவரிடத்தும் ஒத்திருப்பவும் வெற்றி காரணமாக ஒருவரின் ஒருவர் முற்படுதலை நாணிக்கூடாது மெலிவுற்ற னர். அவ்வியல்பு, மாறுபாடுடைய மன்னர் சேனை இரண்டும் தம்முட் கண்ணுற்றுப் பொருது நொந்து சமாதானப்படுதற்கு மனத்தான் இயைந்து வைத்தும் முன்னாக யார் உடம்பட்ட தென்னும் வார்த்தை பிறக்குமென்று அஞ்சிப் பின்னும் நோவோடு நின்ற ஒழுக்கத்தை ஒக்கும். காமமிக் கெழ அதனாலாகிய கண்ணின் களிப்புப் புலப்படா நிற்கவும் ஊரிலுள்ளாரை மிகவுமஞ்சி அதனை ஒளிப்பாரது நிலைமை, கள்ளை மறைத்துண்டார் அதனாலுண்டாகிய நடுக்கத்தைப் பிறர் கண்டு அலர் தூற்றுவரென்னும் அச்சத்தால் மறைத்த தன்மையை ஒத்தது. இவ்வாறு கள்ளையும் காமத்தையும் பொருந்துதலால் இவ் வையைப் புனல் கரையற்ற இன்பத்தைத் தருமியல் பிற்றாய் நின்றது. புனலாடி இளைத்த மகளிர் தெப்பங்களை விட்டுக் கரை அடைந்து. ஈரம் புலர்த்தற்குப் பொழில்களில் அகிற்கட்டைகளை எரித்தனர். அவ்வகிற் புகை அவர் முலை முகடுகளில் மெழுகிய கலவைக் குழம்பு பெருகினாற் போலப் பரந்து திசை எங்கும் பரந்தது. தலைக்கோலம் புனைந்து அழகு விளங்கும் நெற்றியுடைய சிலர், முகிற்படலத்தினின்றும் விளங்கும் பூரண சந்திரன் போன்ற பாத்தி ரத்தை உறையினின்றும் எடுத்துக் கள்ளை நிறைய ஊற்றிச் சர்ப்பமுறை கின்ற நிறை மதிபோற் கரத்திற்றாங்கிக் சந்திரனின் நிறைந்த கலையை உண்ணும் தெய்வ மகளிர் போன்றனர்; சிலர், தம்மை வெண்பட்டாற் போர்ப்பர்; சிலர், பூத்தொழி லுடைய வெண்பட்டைக் கூந்தல் மேற்சுற்றி முறுக்குவர்; சிலர், குங்குமச் சேறு, சேறாகச் செய்த அகிற் சாந்து, பலவகைக் கற்பூரம் முதலிய இவற்றின் உட்புறம் சேர்ந்து கலக்கும்படி அழுக்கில்லாத குழவியால் அவியுடைய குண்டத்தின் கண் அழல் போன்று நிறம் பேர அரைப்பர்; சிலர் பொன்னாற் செய்த 1நந்து நண்டு இறவு வாளை முதலியவற்றை நீரின் கண் விடுவர். சிலர், இரப்போர் ‘ஈ’ என்று சொல்வதற்கு முன்பே அறத்தை விரும்பி அவர் விரும்பும் தானங்களைப் பண்ணினர்; கழுவிய நீல மணி போன்ற சுருண்டு நெளிந்த மயிரிடத்தே வண்டு ஒலிக்க வாச நீரூட்டி நீராடுவர்; எண்ணெய் போகும்படி விரும்பப்படும் வாசப் பொடிகளைப் பிசைவர்; மாலையும் சாந்தும் கத்தூரியும் அழகு பெறும்படி நீருக்கு ஊட்டுவர். இத் தன்மையராகிய ஒண்டொடியார்க்குப் புனலாடலால் நிறம் ஒளிபெற்று நீரால் ஏறுண்ட முகமும் முலைக்கண்ணும் மிகச் சிவந்தன; காதலரோடு அன்ன வாகிய விளையாட்டை அயர்ந்திருக்கவும் பின்னும் புனலின் மேற்செல்கின்ற அவர் கண்கள் வண்டு மொய்க்கின்ற 2ஐந்து மணத்தினால் மாட்சிமைப்பட்ட காமபாணத்தினது அரத்தாற் கூர்மையிடப்பட்டவாய் போன்றன. புனல் ஆடி மெலியாத மைந்தர் வாழைத்தண்டைப்பிடித்து மிதந்து சென்றனர்; திரையினும் நுரையினும் தாழம்பூவின் தாதைத் தூவினர்; விசை யுடைய ஓடத்தின் கண் ஏறி அதனை விரைந்து செல்லும் புனல்வழியே செலுத்தினர்; புனல் விளையாடி உண்டான மெய்வருத்தத் தால், பெண்கள் இழைத்த சிற்றிலில் அட்ட சிறு சோற்றைத் தாம் உண்டற்கு ஏற்றனர்; முன் இடுவாராய்ப் பின் மறுப்பாராகிய மகளிருடைய பந்தும் கழங்கும் பிறவுமாகியவற்றைக் கொண்டோடினர்; ஓடி அவரறிந்து வாங்கச் சென்றுழி எட்டாமல் நீருட் பாய்ந் தனர்; பின் அவர் தம்முள் மாறுபட்டு வேலானும் வாளானும் பொய்ப் போரிழைத்தனர். அதனால் யானைகள் போர் செய்து உழக்கிய களம் போல் இனிய தன்மையுடைய புனல் தெளிவின்றாயிற்று. மாலைக்காலத்தே சந்திரன் பெரிய இருளைப் போக்கிற்று. நீராடச் சென்றோர் வீடு திரும்புவாராயினர்; மகளிர் புதிய இயல்பினை யுடைய அணிகளை நீக்கி மலர்ந்த பூக்களைச் சூடினர்; தோளணி, தோடு, மற்றுமுள்ள ஒளிவிடும் ஆபரணங்கள், முத்து வடம் ஆகிய இவற்றை அணிந்து பாடுதற்குரிய பாடல், பல்லாண்டு முதலாகிய பரவுதலும் பாடினர். ஆடுதற்குரியாரது ஆடலும் அதற்குப் பொருந்தின 1சீருடன் கூடிய தாளமும், அவர் கூந்தலின் மீது வந்து ஊதும் தேனீக்களது செறிந்த பாடலுமாகிய ஓசை எல்லாவற்றோடும் எழுகின்ற பண்ணொலி யைக் கேட்ட ஊரிடத்துள்ள வண்டுகள் தம் மினத்தின் ஆர்ப்பு என்று கருதி அவ்விடத்தே வரும்; வந்து மலர்ந்த மாலை வேய்ந்த அம்மகளிரின் மயிர்க் கற்றைக் கண் உள்ள தேனைக் கொள்ளை கொண்டு ஊத எல்லோரும் தென் திசையை நோக்கி மீள்வர். அப்போது ஊரிடத்தே மாடங்களின்றும் தெறித்த பன்னீர் மணத்தோடு கூடிக் காற்றுத் திரிய அதனோடு மாடத்துள் நின்று புறப்பட்டுப் பரக்கும் அகிற்புகை மலை யிற் பூங்கொடிகளிடத்துத் தங்கிப் பின் மேல் மண்டி ஏறும் வளர் பனி ஆவி போன்றது. துன்பமறியாது தானே வருகின்ற புனற்கு விருந்து செய்யும் கூடற்கண் குற்றமின்றி இசைக்கின்ற இசைக்குரிமை யுடைய ராகிய பாணரும் கூத்தரும் மேவிய கூட்டத்தோடு ஒருங்கே ஏத்தித் தொழுதற்பொருட்டு, இன்மையாற் பற்றப்பட்ட புலவரது ஏற்ற கை நிறையப் பொன்னைச் சொரியும் வழுதியைப் போல வையை, வயலி டத்தே பொன்னைப் பரப்புந் தொழிலை மாறாதொழிக. - கரும்பிள்ளைப் பூதனார் 11 வையை (இது, வரைவு நெருங்குதலை வேண்டிய தோழி கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டே மென வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது) 1இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என வீதிகள் மூன்று. ஒவ்வொரு வீதிக்கும் ஒன்பது நாள்களுண்டு. வெள்ளி இடபத்தைச் சேரும். செவ்வாய் மேடத்தைச் சேரும். புதன் மிதுனத்தைச் சேரும். கார்த்திகை உச்சமாக விடிதல் உண்டாகும். வியாழம் சனியின் இரண்டு வீடுகளாகிய மகர கும்பங்களுக்கு அப்பா லுள்ள மீனத்தைச் சேரும். இயமனைத் தமையனாக வுடைய சனி தனுவுக்குப் பின்னுள்ள மகரத்தைச் சேரும். அக் காலத்து இராகு மதியை மறைக்கும். இவ்வாறு கோள்கள் நிலை பெறுகின்ற ஆவணி மாதத்து நிறையு வாக் காலமாகிய அவிட்டத்தில் அகத்தியன் என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தும். முறுகின வெயிலுடைய வேனிலுக்குப் பின் வருகின்ற அக் கார்கலத்து உயர்ந்த சைல மலைக்கண் மழை பொழியும். அந் நீர் வரவால் நிறைந்து ஓடுகின்ற வையைப் புனல், வரை ஒத்த புன்னாகத்தினதும். கரையிடத் தோங்கிய சுர புன்னையின தும், வண்டுகள் ஒலிக்கின்ற சண்பக நிரைகளினதும், செவ்வலரியினதும், கூவிளையினதும், கிளையுடைய வேங்கை மரத்தினதும் மலர்களையும் சுனையிடத்துள்ள காற்று முறுக்கவிழ்க்கும் நீலம், மூங்கில் வளரும் சோலையிடத்துள்ள மலர் ஆகிய இவற்றையும், சாரலிற் சோலைக் கண்ணே கொண்டு வந்து சொரியும். அவற்றைத் திரைகள் தள்ளிக் கொண்டு வந்து மருதத் துறைக் கண்ணே தரும். அத்துறை, பூவினை ஆராய்ந்து பறிக்கும் கோலினையுடைய வலிய குடிகள், நிறமுடைய பூக்களைக் கொண்டு வந்து குவிக்கும் பூ மண்டலமோ? அரிய மலர்ப் போர்வையும், முத்துக்களை அணிந்த மலையாகிய தனங்களும், திரையும் நுரையும் குமிழியும் இனிய மணமுமுடைய நிலமாதின் அல்குற்கு அணி யும் சீலையோ? கள்ளை வாய் கொண்டு பருகும் அவள் மிடறோ? என்று சொல்லும்படி யிருந்தது. (வரைவு மலிந்த தோழி வையையின் சிறப்பை இதுவரையுங் கூறி, இனி அதனைக் கண்டார் கூறியதாகக் கூறுகின்றாள்.) வையைப் புனல், பிறைதோன்றிய நாள் தொடங்கி நாடோறும் ஒரு கலை வளர்கின்ற முற்பக்கம் போல, நாளுக்கு நாள் பெருகும்; நிலவு எங்கும் பரந்தாற்போல மலைச்சாரல் தொடங்கியுள்ள நிலத்தில் நீரைப் பரப்பி உலகுக்குப் பயனளிக்கும். அமரர்க்குப் உணவாகிய அம்மதி நிறைவு சுருங்கினாற்போல நீர் வரவு சுருங்குமிடத்தும், எட்டாம் பக்கத்து மதியளவு ஆதலன்றி, இருள் உவாவினைப் போல நீர் நேராகக் குறைதலையுடைய நாளைக் காண்கின்றாரில்லை. “நெடுந்தூரத்தைக் கடந்து வந்த வையாய்! பெருகின காலத்துப் புதிய அழகையன்றி வற்றின நாளையின் நின் அழகையும் உலகம் பெற இந்நீர் மிகுதியைத் தணிந்து ஏகுக. “வையாய்! மறையிற் புணர்ந்த மைந்தரும் மாமயி லன்னாரும் காமத் தாற் சிறப்புடைய அக்களவொழுக்கத்தை விட்டு, இனிவந்த கற்பொழுக்கத்தை யுற்றாற்போல, நீ பிறந்த இடமாகிய மலையை விட்டு இருத்தற்குரிய கடற்றலைவன் இல்லத்து நீ தனியே சேறல் இளிவரவாகும்; ஆதலால் ஆண்டு செல்லற்பாலையல்லை,” எனக் கண்டோர் கூறினர். எல்லை அற நீண்டு அகன்ற கண்ணுடையாளை, உடன்கொண்டு வேல் துணையாகச் சென்ற தலைவனை, அவள் சுற்றத்தினர் இடைச் சுரத்துச் சென்று பொருதாற்போல, வெற்றியுடைய மதுரையார் இடையே புகுந்து நீராடுதற்கு ஏற்ற ஆறு இதுவாகும். கிடை முதலியவற் றாற் செய்த வாள் குந்தம் முதலிய படைகளைத் தாங்கிய நீராடு மகளிர தும் மைந்தரதும் தேர்களை மைந்தரும் மகளிருமாகிய பாகர்கள் ஆழ்ந்த வெள்ளத்துள் ஊர்ந்து சென்றனர். கணுக்களுடைய அழகிய மூங்கிற் தண்டால் தெப்பங்களை நீரிடத்து ஓட்டுவோரை அரக்கு நீர் நிரப்பிய வட்டால் எறிவோரும், கழற்றிய மாலையினால் எறிவோரை அழுத்த மான கொம்பு நீரால் தெறிப்போருமாகிய காதலர், இவ்வையைப் புனலிடத்து நாளுந்திளைப்பர். (இனி வேனிற்காலத்தில் நீராடற் சிறப்பினைக் கூறுகின்றார்) மைந்தர், நீராடற்கமைந்த அழகிய அகலத்து, அலங்காரத்துக் கேற்ற ஆபரணங்களையும் தண்ணிய மாலையையு முடையராயிருப்பர். அவர்களோடு, நல்ல வளர்கின்ற புண்ணியத்தைச் செய்த நாகரைப் போல இடைவிடாது இறுகப் புணர்தற்கு மகளிர் இனிய இளமதுவை நுகர்வர்; நுகர்தலால் களிமிகுந்து, தாள மமைந்த பாடலின்பத்தால் தஞ்செவியை நிறைப்பர்; அவர்களின் (ஆடவரும் மகளிரும்) அழகாகிய மதுவை ஒருவரின் ஒருவர் கண் உண்ணும். இவ்வாறு மகளிரும் மைந்த ரும் நீராடிக் களிக்கும் வையை ஆறு, உம்பர் உறையும் ஒளியுடைய வானத்தின் கண் அவர் ஊர்ந்து திரியும் விமானங்களைக் காட்டும் நீரோட்டத்தையுடையது. வையாய்! இவ்வாறு கார் காலத்திற் கலங்கி வேனிற் காலத்துத் தெளித லான இத்தன்மை எக்காலத்தும் ஒத்திருப்பதில்லை. கார் காலத்து அதிர்கின்ற இடி நீங்கப் பனி மிகுதலால் நடுங்குதலுடைய முன்பனிப் பருவம் வந்தது. ஞாயிறு வெம்மையைச் செய்யாத கடை மாரியுடையது மார்கழி மாதம்; அம் மாதத்துத் திங்கள் மறுவோடு நிறைந்த திருவாதிரை நாளில் ஆகமங்களை உணர்ந்த பூசகர் திருவாவதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழா எடுப்பர்; அவர்கள் எடுக்கும் விழா நடைபெறவும், புரிநூலையுடைய அந்தணர் பொன்னைத் தானமாகப் பெறவும் நிலம் மழையாற் குளிர்வதாக. வையாய்! சடங்கறிந்த முது பார்ப்பனிமார் நோற்கு முறைமை காட்டக் கன்னியர் அம்பாவாயாடுவர். பனியுடைய வைகறைக் கண் குளிர்ந்த வாடை வீசுதலால் அம்மகளிர் நின்கண் உறையும் அந்தணரது வேதநெறியால் வளர்ந்து ஆடி எரிகின்ற அனலைப் பேணுவர்; அதனிடத் துத் தம் ஈர உடையைப் புலர்த்துவர். வையாய்! அவ்வந்தணர் அவ்வழற் கட் கொடுக்கும் மடை நினக்கு வாய்ப்புடைத்தாயிருந்தது. ஒலை பிடித்த இளம் புலவரது வருணனை போல, எழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்ற மகளிர், அக்கினி மத்தியில் புலனை அடக்கிச் செய்யுந் தவத்தை முன் அடுத்தடுத்துச் செய்தத னாலோ? தாயருகாக நின்று தவமாகிய தைந் நீராடலை நின்கட் பெற்றது. மகளிர் ஆடுமிடத்தே ஒருத்தி, மூங்கிலின் அழகை வென்ற தோளையும் நீலத்தைச் செவித்தாராகவுமுடைய ஒரு மாதைப் பார்த்தாள்; அவள் குறிப்பறிந்த அம்மாது அப்பொழுது குளிர்ந்த அசோகினது சாய்ந்த தளிரைத் தன்காதில் அணிந்தாள். பரந்த குழலையுடைய அவள் அணிந்த நீலம் அசோகந்தளிரின் செம்மையால் இளவெயில் போல் விளங்கிற்று. குழையணிந்த தன் அழகிய காதிடத்தே குவளையைச் செருகி நான்கு விழி படைத்தாள் ஒருத்தியைக் கண்டு மற்றொருத்தி நெற்றியில் சிவந்த திலகமிட்டுக் கொற்றவையின் கோலங்கொண்டாள். பவழ வளையைக் கையிற் செறித்தாளொருத்தியைக் கண்ட ஒருத்தி குவளைப் பூவின் மரகதம் போன்ற பச்சைத் தண்டைக்கொணடு தன் கையை அலங்கரித்தாள். குளிரிப் பூவால் மாலை தொடுத்தாளை நில்லென்பாள் போல வேறொருத்தி மல்லிகை மாலைக் கண் நெய்தலை விரவித் தொடுத்தாள். (இனி அவர் கருத்தும் அவர் வேண்டிக் கோடலும் கூறுகின்றார்) முன் வையையுள் வாழைத் தண்டைத் தழுவி ஆடி நின்றவன் ஒருத்தியைக் கண்டான். கண்ட பொழுதில் அவன் நெஞ்சு அழிந்தது. அதனால் புனல் அவன் கையை வலித்தது. நெடுந்தூரம் வலித்து அவன் விரும்பின அவளிடத்துக் கொண்டு செல்லாது வேறிடத்துக் கொண்டு சென்றது. அதனைக் கண்டு அவள் ஆயத்துடன் நில்லாது அவனைத் தொடர்ந்தாள். அவள் அன்புடைமையை அறியாத தாய் மகளைத் தனியே செல்லாது ஆயத்தோடு சேர்ந்து நிற்கும்படி சத்தமிட்டாள். கரையைப் பொருது வரும் சிவந்த கார்காலத்து நீர் வரவு இவ்வாறு ஆரவார முறும்படியிருந்தது. அந்நீர் போலாது யாம் தைந்நீராடுதற்கு நிறந்தெளிந்தாய்; ஆதலால் நீ தக்காய், எனக் கண்டோர் கூறினர். கழுத்திலே இட்ட கையை எடாத காதலரைத் தழுவிப் பெருமை பெறும்படி வரம் வேண்டுதும் என்பாரும், பூவில் வீழ்கின்ற வண்டு போலப் புலம்பிப் பிரியாது கணவரும் யாமும் பொருந்தியிருப்போமென வேண்டி நிற்பாரும், எம் கணவரும் யாமும் கிழவர் கிழவியர் எனப்படா மல் நிலை யுடைய இளமையை இத் தவந்தரச் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலை பெறவேண்டும் என வேண்டி நிற்பாருமாக மகளிர் பலவாறு வரம் வேண்டி நின்றனர். (இனி ஒருவன் உவந்தவற்றைக் கூறுகின்றாள்) இக்காரிகை வருத்துகின்ற தெய்வம் இவளைக் காண்மின். உவள் காமப் பண்டாரமும் காமன் படையுமாயிருந்ததலைப் பார்மின்; நெய் பூசிய நீலமணி போன்ற கூந்தலையுடைய மகளிர் விலக்க நில்லாது அவர் கூந்தலிடத்துள்ள பூவை ஊதும் வண்டினங்களின் யாழை ஒத்த ஓசை யுடைய பாட்டைக் கேண்மின். அப்பாட்டின் பொருள் விளங்காதிருக்க இனிதாகப் பாடுகின்ற சுரும்பினது இசையைக் கேண்மின். தான் வீழ்ந்த பூவின் ஒடுங்கிய தாளை முனிந்த நெஞ்சுடனே முன்னே எறிந்து பின்னும் எறிதற்கு ஒலித்துவரும் ஒரு தும்பியின் காய்சினத்தின் இயல்பைக் காண்மின் என்று ஒருவன் காட்டா நின்றான். (இங்ஙனம் தை நீராடல் கூறி மேல் தலைமகள் கேட்ப வையையை நோக்கிக் கூறுகின்றாள்) இனிய இயல்பால் மாட்சிமைப்பட்ட தேர்ச்சி பொருந்திப் பரிபாடலாற் சிறப்பிக்கப்பட்ட நறுநீர் வையாய்! மின்னிழையையும் நறுநுதலையுமுடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னிமை முதிராத கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற நின்னிடத்து இத்தைந் நீராடலை முற்பிறப்பிற் செய்த தவத்தாலே இப்பிறப்பிற் பெற்றேம்; அதனை யாவரும் நயக்கத்தக்க நின்னீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பினும் பெறுவோமாக. - ஆசிரியர் நல்லந்துவனார் 12 வையை (இது கார்ப்பருவத்து வையை விழாச் சிறப்பின் பல்வேறு வகைப் பட்ட இன்பங்கூறி, இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்தில ரென வையையை நோக்கித் தலைமகன் கேட்பத்தோழி இயற்பழித்தது) காற்று வானிடத்தே மோதி அடித்தது. வானம் மின்னலையும் இடியை யும் மாறிமாறிப் பரப்பாநின்றது. சைலமலையிடத்தும் அதன் கிளைகளிடத்தும் இடைவிடாது மழை பெய்தது. அதன் சாரலிடத்தே உதிர்ந்த மலர்கள் நீர்மேல் மிதந்தன. கரைக்கண் நின்ற நாகம், அகில், வாழை, ஞெமை சந்தனம் முதலியன வருந்தத் தகரத்தையும் ஞாழலையும் தேவதாரத்தையும் ஏந்திக் கொண்டு வருகின்ற வையையின் காற்றுப் போன்ற வரவு, ஒரு கடல் உயர்ந்து வருவது போன்றது. தன்மேல் மலரைப் பரப்பிக்கொண்டு வரும் வையை யாறு மதுரை யின் மதிலைப் பொருமெனக் கேட்ட பெண்கள்,புதுப்புனல் ஆடுதற்கு மின்போல் விளங்கும் ஆபரணங்களை அணிந்தனர்; பொற்றகட்டாற் செய்த பூவைச் சூடினர்; சந்தனச் சாந்தை மாற்றி அகிற்புகையினாலாகிய சாந்தைப் பூசினர். கரிய கூந்தலை வாரிமுடிந்தனர்; வெட்டிவேராற் கட்டிய பலவகை மலரைச் சூடினர்; நீராடுதற்குரிய புடைவைகளை அலங்கரித்துடுத்தனர். கட்டிய கொக்கி அழகு செய்யும் வடங்களைப் பூண்டனர்; வாச எண்ணெய் பூசி வெண்கற்பொடியாற் குற்றந் தீரும்படி கண்ணின் அடியை விளக்கினர்; இயற்கை அழகையும் செயற்கை அழகை யும் கலவியால் வந்த நிறத்தையும் (ஆடியில்) விளங்க நோக்கி, (தக்கோலம் இலவங்கம் கப்பூரஞ் சாதிக்காய் முதலிய) பஞ்சவாசத்தோடிடித்த பாக்கை வாய்க்கண் இட்டனர்; இரண்டு அந்தலையும் மூட்டுவாய் தெரியாது இருக்கும்படி செய்த 1ஆணியிடும் வளையுடன் செறிக்கும் தோள்வளையுடையராயும், கட்டுவடத்தோடு கால் மோதிரம் உடையரா யும், தேனொழுகும் மாலையணிந்தவராயும், ஒரு யோசனை நாறும் வாசனை தடவியவர்களாயும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் இவர்ந்து அன்னப் பேடைகள் போற் சென்றனர்; ஒலிக்கின்ற மணிகள் பூண்ட தேர்களிற் பூட்டிய குதிரைகளை முட்கோலால் உறுத்தி ஓட்டி னர். இவ்வாறு மகளிர் விரைந்து விரைந்து சென்று கூடவும் கூடலா ரெல்லோரும் புகழவும் வையை நீர் வந்தது. அதனைக் காண்பவரீட்டம் அதன் கரையை ஒப்பவந்தது. வெள்ளம் கரைக்கு மேல் ஏறிக் காண்பவர் களின் காதல் வெள்ளத்தை யெல்லாம் பருகியது போலப் பெருகிற்று. (இவ்வளவும் பாணன் தலைமகனுக்குப் பருவ வரவும் வையை நீர் வரவும் கூறியது.) இனி வையையின் வரவைக் காண வருவார்க்கு, முன் வந்து கண்டவர் தாம் கேட்டவற்றைக் கூறுகின்ற தன்மையானும் காட்டுகின்ற வாற்றானும் விழா வணியின்பம் கூறப்படுகின்றது. துறைமுன் நெருங்கி அணியாக நின்றவர் மொழிகின்ற மொழி ஒன்றையொன்று ஒவ்வாது பல பல வாய் ஒரே நேரத்தெழுந்தது. அவற்றை எல்லாம் தெரியக் கேட்க வல்லார் யார்? அவை கேட்டல் கூடா; அவற்றுள் யாம் கேட்டன சிற்சில. வங்கியத்தின் இசை எழுந்தது; முழவு மத்தரி தடாரி தண்ணுமை முதலிய ஓசையுடைய தாளத்தை அளந்து ஆடும் அரிவையர் தமது நேரிய இறையுடைய முன் கைகளைத் தூக்கித் தாளத்தை அளத்தலைக் காண்மின். ஒருத்தி நாணுக் குறையில்லாத குலமகளாக யிருக்கச் சிறந்த கணவன் தன் தோள் நலத்தை யுண்டு பரத்தையிற் பிரிந்தான். அது கண்டு அவள் அவனோடு புலந்து இப்போது புனல் வெள்ளத்திலே அவனோடு பிடியின் முதுகில் ஏறினாள். தோழீ! அந்நங்கை நாணுடையளல்லளோ? என்று சிலர் கூறினர். பூங்கொம்பை ஒப்பாளது குவிந்த முலையை, அரங்கின் கண் நின்று நோக்கி நின்றவன் ஓட்டை மனத்தன்; திண்மை யில்லாதான் என வேறு சிலர் கூறினர். சொறிந்ததூஉம் சொன்னதூஉம் அறியாது நிறை அழிந்து நிறம் மாறுபட்டு. வழியே செல்லும் ஒருவன் பின் இவள் நெஞ்சைப் போக்கினாள்; அன்பு மிகுந்தால் நிறையழிதற்கு அஞ்சி, அதன் மிகுதியை (மிகுந்த அன்பை) விடக்கடவேம் என்பர் சிலர். இக்காரிகை பூண்ட முத்தாரத்தினது அழகை உவன் நோக்கி இம் மாலைகளுக்கேற்றன இவை என நெருங்கிய முலை களைப் பார்த்தான். அதற்கு அவள் நாணினாளல்லள் என்றனர் சிலர். அணங்கை ஒப்பான ஒருத்தி அமிர்தத்தை ஒத்த நோக்கால் ஒருத்தி யின் கணவனைப் பார்த்தாள். அது பொறாத அவன் மனைவி அவனைத் தன் மாலையைக் கோலாகக் கொண்டு அடித்துத் தன் மார்பின் வடத்தை வாங்கி அவன் கையை இறுகக் கட்டினாள். கட்டி நீ பிழையையுடையை என்றனள். அது கண்ட அவன் தொழுது தான் செய்த பிழையாதெனக் கேட்கும் தூயவனைக் காண்மின். ஒருத்தி நின்னைப் பார்த்தாளென்று ஒருத்தி தன் கணவனை நோக்கிக் கூறினாள். அவன் அவளைப் பார்த்து நீ இவளை யானறியே னென்று இரந்து மெய்யாகிய சத்தியஞ் செய்தான்; அதனை அவள் பொய்ச்சூளென்று சொன்னாள். அஞ்ஞான்று அவள் ஊடல் தீர்க்கும் அவனைக் கூடாது, அச்சூள் காரணமாக மிக்கும் வெகுண்டும் புலந்தாள்; புலந்து பூ நாற்றத்தையும் அழகையுமுடைய அரக்கு நீர் நிரப்பிய வட்டை அவன் வலிய மார்பில் எறிந்தாள். வேல் போன்ற கண்பட்ட புண்ணில் இரத்தம் சொரிவது போல அரக்கு நீர் சொரியப் பகையின்றி உள்ளஞ்சோர்ந்து ஆற்றானாய் நேர் நில்லாது நீங்கி அவளை வணங்கினான்; தான் அவன் வலிய மார்பில் எறிந்ததால் விழுந்தா னென்றஞ்சி மயங்கினாள்; உடன் முன்னுள்ள துனி நீங்கித் தன் கணவன் ஆகத்தைச் சேர்ந்தாள்; இவ்வாறு சேர்வித்தலை வையைப் புனல் இன்றே யன்றி என்றும் செய்திடும்; இதனைக் காண்மின், என்று சிலர் காட்டுவராயினர். மல்லிகை, முல்லை, மணங்கமழுஞ் சண்பகம், அல்லி, செங்கழுநீர், தாமரை , ஆம்பல், குல்லை, மகிழ், குருக்கத்தி, பாதிரி, நல்ல பூங்கொத் துடைய நாகம், நறவு, சுரபுன்னை முதலியவற்றின் பூக்கள் கமழும் இருகரைகளிலும் கலங்கிய நீர் ஏறித் தெளிந்து செறிந்த இருண்ட கரிய பாறைமீது தங்கி நின்று மேலுலகத்தின் அழகைப் பிரதிபலித்துக் காட்டும். இருள் நீங்கும் வைகறைக் காலையில் வையை நீர் கலங்கி இரத்தத்தின் தன்மையுடையதாயிருக்கும். போரை வெல்லும் பாண்டிய னது இவ்வகையான ஆற்றிடத்தே ஒருத்தி. மாட்சிமைப்பட்ட காதணி போலத் தூங்கும்படி சிவந்த அசோகின் புது மலரைக் காதிடத்தே செருகினாள். செருகி முறுக்குவிட்ட மலரைத் தாங்கும் பூங்கொடி போல வளைந்து அடிமேல் அடிவைத்து நடந்து வளையணிந்த முன்கையாலே தன் கூந்தலிற் கண்ணியை அழகுண்டாகும்படி திருத்தினாள். அந் நல்லவள் செய்த குறிப்புகளால் இவ்விடத்து நிற்பவன் அவள் கணவனா யிருந்தான்; அதனைக் காண்மின் என்று சிலர் காட்டினர். துகிலின் கட் சேர்ந்த பூத்தொழில் போலப் புனலின் கண் நீரினை யுடைய 1மணி நிறைந்தது. புனலாடுவோர் வார்த்தையின் ஆரவாரம் அப் புனலைப் போன்ற மதுரையிடத்து மிகுந்தது. அவர்களின் அழகு அவர்கள் உரைகளிடத்தே மிகுந்தது. அவ்வழகு மிகுந்து பிற அழகோடு மாறுகொண் டது. அவர் மார்பினின்று அழிந்து வீழ்ந்த தகரச் சாந்தால் மணல் சேறாந் தன்மைப்பட்டது. துகிலினின்று பொசியும் நீரினால் கரைகள் மழை பெய்தது போன்றன. புனல் விழாவால் வானுலகம் சிறப் பொழிந்தது. வையாய்! நின்னால் ஆரவாரமுடைய மூதூரின் வாழ்வார்க்கு இன்பமும் கவினும் நல்ல பலவகைப்பட்டன வாயின; அதனால், இவ் வுலகு அகன்ற இடத்தை யுடைத்தாயினும் நின்புகழை அடக்க மாட்டாது. - நல்வழுதியார் 13 திருமால் கடவுள் வாழ்த்து நின் பூத் தொழிலுடைய பீதாம்பர உடை, நீலவரைக் கட்பரந்த இருளைக் கெடுக்கும் இள ஞாயிற்றினது அழகமைந்தது. அழகு செய்யப் பட்ட முடி நீலவரையை ஊரும் அஞ் ஞாயிற்றின் எழில் போன்றது. அந் நீலவரையினின்று இழியும் பொன்னையும் மணிகளையுமுடைய அருவி யின் நிறத்தை ஒத்தது நின் தார். நின் அழகிய கொடி கருடனை எழுதப் பெற்றது. விண்ணின் கண் நின்று அருளுகின்ற நிறைமதியை ஒக்கக் குளிர்ந்த காத்தற் றொழிலைக் கொண்டவரும், அசுரரை வருத்தும் சக்கரப் படையைத் தரித்த வருமாகிய மாலே1 கார்கால மேகத்தின் இருபாலும் விளங்குகின்ற சந்திர சூரியரைப் போல நின் கைகளிடத்தே சக்கரமும், சங்கும் ஒளிரும். மின்னற் கூட்டம் போல் ஒளி விடுகின்ற பொன்னாரத்தோடு, அருவி பாய்வது போன்ற முத்தார மணிந்த நின் திருமார்பைத் தொழுவோர்க்கு நீ உறையும் வைகுண்டமும் உரிமையாதல் உடைத்து. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் முதலிய புலன்களும் நீ; அவற்றை நுகரும் பொறிகளும் நீ; புலன்களுள் ஓசை அறியப்படும் விசும்பு நீ; ஓசையும் ஊறும் அறியப்படும் காற்று நீ; ஓசையும் ஊறும் ஒளியும் அறியப்படும் நெருப்பு நீ; இவற்றோடு சுவையும் அறியப்படும் நீரும் நீ; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தும் அறியப்படும் நிலனும் நீ. ஆதலால் 1மூலப் பகுதியும் அறனும் அநாதியான காலமும் ஆகாயமும் காற்றோடு கனலுங் கூடிய இம்மூவேழு உலகத்து உயிர்களெல்லாம் நின்னிடத்த வாயின. தன் நீல நிறத்தோடு மாறுபடும் வெண்மை நிறத்தினையுடைய பாற்கடல் நடுவே மின்னலை ஒத்து விளங்குகின்ற, சுடர்விடும் மணி யோடு விரிந்த ஆயிரந் தலையுடைய படுக்கையிற் துயிலும் துளவஞ்சூடிய அறிதுயிலோன் எனவும், மிக்க ஆரவாரமும் வீரமும் பொருகின்ற மிக்க படை யுடனே, ஒழுக்கத்தைக் கடந்து வரும் பகைவருயிரைப் போக்கும் வெற்றி மிகுந்த வலியும், ஓசை மிகுந்து நிலத்தை உழும் வளைந்த வாயுடைய கலப்பைப் படையுமுடைய பல தேவனெனவும், பூமி அசையும்படி எடுத்தற்கு முற்றாகச் சாய்த்த பொன் இதழுடைய அழகிய கிம்புரி பூண்ட மருப் பினையுடைய பன்றி எனவும் மூன்றுருவாகப் பிரிந்து ஒன்றாய் விளங்கும் ஒருவன் நீ. பரந்த சிறகும் பல நிறமுமுடைய கருடனைக் கொடியாகக் கொண்ட சலியாத செல்வன் நீ. ஓதுதற் கினிய வேதம் துதிக்கின்ற புள் உயர்ந்த கொடியுடைய செல்வ! நல்ல புகழுடைய மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்தையும் ஒப்ப விளங்கும் அழகிய மேனியுடையை. நின் அருளுடைய மொழி வலம்புரி முழக்கையும் வேத முழக்கை யும் ஒக்கும்; நின் முனிவிடத்து எழும் மொழி வான்முழக்கை ஒக்கும். நின்தாள் நிழல் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று காலக் கூறுபாடு களையுங் கடந்தன. நின்னை ஏத்துமன்பர் இருவினையு முடையரல்லர். காத்தலாகிய ஒரு வினைக்கண் மேவுகின்ற உள்ளத்தினை! இலையின் மேல் உயர்ந்து மலர்ந்த பெரிய இதழ் உடைய தாமரை மலர், நின் அடியும், கையும், கண்ணும், வாயும், தொடியும், உந்தியும், தோளணி வலயமும், தாளும், தோளும் கழுத்து மாகும் பெருமை யுடையை; மார்பும் அல்குலும் மனமும் பெரியை; அன்பர் குறையைக் கேட்டு அறியும் அறிவும், அறிந்து அருள்புரியும் நுண்மையு முடையை; வேள்வியை விரும்புதலோடு போரிடத்துக் கொடுமையை; நீங்காத வலியினையும், பொராதிருக்கவே சிவந்த கண்ணையும், சக்கரப் படை யாற் செய்யும் வெல்லும் போரையுமுடைய செல்வ! நிறத்தால் நெருப்பை ஒத்த வெட்சிமலரை இடையே வைத்துக் கட்டின நறிய துளப மாலையை அணிந்த மார்புடையோய்! பண்டும் பண்டும் யாம் செய்த தவப்பயனால் இத்தன்மையை என நினைந்து நின்னடியைக் கையாற் றொழுது பலகாலும் அடுத்து இறைஞ்சி வாழ்த்துகின்றேம்; யாம் மென்மேலும் ஆசைப்படுகின்ற பொருள் இதுவேயாம். - நல்லெழுநியார் 14 செவ்வேள் கடவுள்வாழ்த்து (பருவங்கண்டழிந்த தலைமகள் கேட்பச் செவ்வேளைப் பரவுவா ளாய், இப்பருவத்தே தலைமகள் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தி யது) மேகம் பெரிய மழை பொழிந்தது. அம்மிகுந்த நீரான் நிறைந்த சுனைகளிடத்துள்ள பூமலர்ந்தன. தண்ணிய நறிய கடப்ப மலரின் தாதை அழகிய வண்டுகள் பண் போன்ற ஒலியுடன் ஊதின. நெடிய மலையிடத் துள்ள மூங்கில்கள் வழிபடுகின்ற மகளிரின் அசைகின்ற தோள்களை ஒத்தன. வாகையின் ஒள்ளிய பூப்போன்ற சூட்டையுடைய மயில்களது குரல் மணந்து பிரிந்தோரைப் பிரிந்து நீடி யாது வாருமென்பவர் சொற்கள் போன்று ஒலித்தது. கொன்றையின் புதிய மலர்கள் பொன் தார் போன்று விளங்கின. அழுகையுடைய மகளிர்க்கு அது தீர்த்தற் பொருட்டுத் தாயர் புலி புலி என்று சொல்லுமாறு வேங்கையின் மலர்கள் பெரிய பாறையிடத்தே பரந்தன. நீரின் அயலே செருக்கி வளர்ந்த நெருங்கிய முகையுடைய காந்தளின் நீண்ட கொத்தின் அலர்ந்த பெரிய இதழ் நிரையாகத் தோன்றும். கொடிகளிடத்து மலர்ந்த பவளம் போற் சிவந்த பூக்கள் பரந்து கிடத்தலால் நின் குன்று கார் காலத்தன்மை மிக்கது. மிகுந்த போரிடத்துக் சூரபன்மாவைக் கிளையோடு அழித்த சுடர்விடு கின்ற படையுடையோய்! கறையில்லாத கார் காலத்து வெண் மேகம் எழுந் தாலன்ன நறிய அகில் முதலியவற்றின் புகையை விரும்பி னோய்! ஆறு முகத்தையும் பன்னிரண்டு தோள்களையு முடையாய்! அழகாற் பிறமகளிரை வென்ற வெற்றியுடைய வள்ளியது நலத்தை நயந்தோய்! பிரிந்த கணவர் மீண்டு வந்து புணர்ந்து பின் நீங்கா துறைதற் பொருட்டு வரம் வேண்டி மகளிர் யாழை மீட்டு நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்! பிறந்த ஞான்றே நின்னை எதிர்த்து இந்திரன் முதலாகிய தேவர்கள் அஞ்சிய சிறப்புடையோய்! இருபிறப்பினையும் அப்பிறப்பான் வந்த இரண்டு நாமத் தினையும் இளகிய நெஞ்சத்தினை யும் ஒப்பில்லாத புகழினையு முடைய அந்தணரது வைதிக ஒழுக்கத் தினைப் பொருந்தினோய்! நின்னை யாங்கள் மேவி அடுத்தடுத்து வழிப்படுவதன் பயன், அவ்வழிபாடுகள் மென்மேலும் நின் புகழினும் பல வாகுதலே யாகும். - கேசவனார் 15 திருமால் கடவுள் வாழ்த்து அறிவின் எல்லையால் அறியப்படாத புகழுடனே நில எல்லை யைக் காட்டுகின்ற தன்மை நீங்காததும், கெடாததுமாயுள்ளது சக்கர வாள மலை, இம் மலை முதலாகப், பழைய புகழுடைய புலவர் ஆராய்ந்து பாடிக்கொண்டாடிய நெடிய குன்றுகளைச் சிறப்பு வகையாற் கூறாது, பொது வகையாற் பல வென்றுரைக்கின், அப் பலவற்றுள்ளும், நிலத்துள் ளோரைப் பசிவெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படு குன்றுகள் சிலவாகும். அச்சில வற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற நீர் நிலைகளுடனே மேகங்கள் படியும் சிகரமுடைய சிறந்த மலைக் கூட்டங்கள் சில. அக்குல வரைகள் சிலவற்றினும் கல்லென அறையும் கடலும் கானலும் போல் வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் அவன் தமையனாகிய பல தேவனையும் தாங்கும் நீண்ட நிலையினையுடைய புகழாலமைந்த1 பெரிய குன்றம் சிறந்தது. அரவு மெல்லிய தலையாற் கவிக்கின்ற தம் முன்னோன் மார் பிடத்து வெண்கடப்பமலர்த்தாரின் பெரிய அழகு தோன்றும். அசை கின்ற அருவி மிக ஆர்த்து இழிதலால், சிலம்பாறு அழகு செய்யும் இவ் வியக்கத்தக்க திருமாலிருஞ் சோலை என்னும் பெயருக்கு ஏற்ப அதன் பெருமை பூமியின்கண் நன்றாகப் பரக்கும். மகளிரும் மைந்தரும் தாம் விரும்புங் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தின் இயல்புடையது அக்குன்றம். அதனிடத்து அந்நிலைபெற்ற குளிர்ச்சியுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலை ஒப்பப் பீதாம்பரத்தையுடை யோன் தம்முன்னோனாகிய பல தேவனோடு அமர்ந்திருப்பன். மாந்தரே! அத்தோற்றத்தை நினைமின். இனி அம்மலையது சிறப்பைக் கேண்மின்! சுனைகள் தோறும் நீலம் மலர்ந்திருக்கும். 2சுனை சூழ்ந்த அசோகின் கிளைகளெல்லாம் மலர்கள் விரிந்திருக்கும். காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை பூங்கொத்துகளை மலர்த்தும். இவ்வியல்புகளால் அம்மலை மாயோனை ஒத்த இனிய நிலைமையுடையது. பெரிய ஆரவாரமுடைய உலகில் பெரிய குன்று என்றும் புகழ்பரந்த அவ்வளவு பழைதாய் இயல்கின்ற புகழையுடையது. அது, காண்போரின் பாவத்தை அறுக்கும் வழிபடு தெய்வம். ஆதலின், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின். அங்கு மகவைத் தழுவியிருக்கும் மந்தி ஒரு சிகரத்தி னின்று ஒரு சிகரத்திற்குப் பாயும்; முகைகள் நெருங்கிய முல்லை, மகளிர் கற்பு ஒழுக்கத்தைக் காட்டும். தேன்பொருந்திய துளசியுடைய கரிய குன்றம் அனையை! ஒளிபோன்ற ஒரு குழை உடையை! கருடன் இருக் கின்ற அழகிய கொடியுடையோய்! கோபமிக்க தண்டேந்தினை; வலம் புரியோடு வெற்றிநேமியுடையை; வரிசிலையோடு வெற்றி அம்பினை யுடையை; புகர் நிறமுடைய சுழல் படையுடையை. இவ் இருங்குன்றத் தின் அடியில் உறைதல் எய்துக என்று எமக்கு, அழகிய சீரையும் புனிதத்தையு முடைய வேதம் அவர் பெருமையை இத்தன்மையவென்று கூறிற்று. ஆதலால் யாம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தே மாய்ப் பெரும் புகழுடைய இருவரையுந் தொழுது வேண்டு தும். - இளம்பெரு வழுதியார் 16 வையை (இது, காதற் பரத்தையுடன் புனலாடிய தலைமகன்; தோழியை வாயில் வேண்ட அவள் புனலாடியவாறு கூறி வாயின் மறுத்தது) கொடையுடைய பாண்டியனது ஈகைபோலுமென்று கண்டார் கூறக் கரிய மலையிடத்துள்ள மிளகுக் கொடிகளோடும் சந்தனத்தோடும், வெண்ணெய் கடையும் தயிர்போன்ற நுரையோடும் பிறவற்றோடும் கரை யின் எவ்விடத்தும் நீர் மேலும் மேலும் பெருகா நின்றது. துறையிடத்து, ஒத்த முத்துகளைக் கோத்த வடம், தலையில் அணியும் முத்து, பொன் னால் ஆய ஆபரணம். வலமாகச் சுழிக்கின்ற ஆற்றுநீர் கொண்டு வந்த மணிகள், நீராடு கின்ற புதல்வர் சிறிய தலையிற் சூடிய முஞ்சமென்னும் மணி ஆகிய இவற்றை அணிந்து தத்தம் கணவரோடு நீராடும் தத்துகின்ற வரியுடைய கண்ணார் நிற்கும் இடந்தோறும் நீர்வாரா நிற்கும். வயல்களிடத்தில் ஐதாகிய மலர்களைச் சுமந்து, பூவையுடைய நீர்நிறைதல், பாடுகின்ற இயங்களின் கண்ணொலியையும் பாட்டினையும் பயின்ற மகளிர் ஆடுகின்ற அரங்கினது அலங்கரித்த அழகை ஒக்கும். தமக்கு (சோலைகளுக்கு) விருந்தயர்வது போல் ஒலித்தொழுகும் தீம்புனலுக்கு எதிர்த்து விருந்தயர்வன போல், கா, மென்மேலும் நெருங்கும் கரும்புகள் ஒலிக்கும் மகரந்தத்துடனே நரந்தம் போன்ற நறிய மலர்களை அளிக்கும் மணமுடைய காவினும், கயங்களிலும், ஆற்றிடைக் குறையினும் மதுவையுண்டு தேன்கள் பாடப் பூக்களினாலுண்டாகிய அழகுவையை வரவின்கண் திசைதோறும் பொலிந்தது. நீர் விசிறும் கருவிகளால் ஆயத்தார் சுற்றி நின்றெறியத் தன் குரும்பை முலைக்கட்பட்ட அரக்கு நீரைத் துடையாளாய் துகிலின் முன்புறத் தால் ஒற்றி நின்றாள். அவள் பாற் கணவன் வந்தான். அதனைத் தோழியர் கண்டு ‘அவள் பூத்தனள்; அவளைப் பொருந்தாதே, நீங்கு’ என்று பொய்யாகக் கூறினர். அப்பூப்பின் தோற்றத்தை ஒரு தலையாக ஒத்த செஞ்சாந்தின் நாற்றத்தால், அப்பூப்பின்மையை அறிந்து வைத்தும் சனத்திடையனாதலால் அவன் ஆண்டு நின்றும் நகையோடும், கடலை நோக்கி மலையினின்றும் பரந்து வரும் ஆற்றை ஒப்ப விரைந்து வீடு போந்தான். போந்து மகிழுமாறு பழத்தினாற் சமைத்த களிப்பு மிக்க தேறலை நுகராது, அவளது குருதி போலும் நீரைத் துடைத்து மருவி னான். மருவி அவ்வில்லத்தார் கேட்கும்படி நங்கை பூத்தனள் என்று சொல்ல அதற்கு அவள் நாணினாள். வையையின் வரவு இத்தன்மை யுடைதாயிருந்தது. (இதுவும், வருவனவும் காதற் பரத்தையைக் குறித்துக் கூறியன) மலையினின்றும் இழிந்து செல்லும் அருவி கரையிடத்தே உள்ள பூக்கள் செறிந்த மரங்களைச் சேரும்; சேர்ந்து அம்மரங்களின் பூவால் அழகு பெற்று, மடவார் கூந்தலிற் சூடிய தேன் பொருந்திய தண்ணிய பூக்களும், மைந்தர் மார்பிடத்தே சூடிய மலரின் இதழ்களும் பரக்கும்படி செல்லும். மீனாகிய முத்துப் பூத்து விளங்கும் வானத்தின் கண் பெரிய கங்கையாறு வருகின்ற தன்மையை ஒத்திருக்கும். இவ்வாறு ஒத்திருத்தல் தேன் வண்டு ஊதுகின்ற வையைக்கு இயல்பு. விளங்குகின்ற ஒளியை உண்ட (மங்கையரின்) கண்ணாகிய கெண்டை மீனுக்கு, மதுபானம், புனலாட்டு, புலவி என்னும் இம்மூன்றினாலும் ஒள்ளிய நிறம் சிவக்கும். பல வரிகளையுடைய வண்டின் கூட்டம் தமது அழகிய வாய்களால், கூந்தலின்றும் நீங்கும் இயல்பினை யுடைய பூக்களின்றும் தேனொழுக மிக்க நீரின் கண் ஆடும் பரத்தையரை அடுத்தடுத்துப் புல்லும்; புல்லுத லால் நெகிழ்ந்து அழிந்ததும் அழியாதது மாகிய கத்தூரிக் குழம்பு மார்பினின்றும் ஒழுகும். அம்மார்பு, பனியால் வளைந்த மூங்கில் அப்பனி நீங்க மேலே எழுந்து சென்று தாக்குதலால் தேன் சோர்ந்து விழும் வரையை ஒத்த தோற்றமுடையதாயிருக்கும். கொடி அணிந்த தேருடைய பாண்டியனது வையை ஆற்றின் இயல்பு இவ்வகை யினது. மேகம் வரையிடத்து ஆரவாரித்து நிற்கும் அவ்வளவிற்கு, இவ்வியல் பினதாகிய வையைத் தீம்புனற்றிரை ஆரவாரிக்கும். (இவ்வளவும் தோழி தன்னுள்ளே கூறுவாளாய்ப் புனலாடிய வரலாறு கூறி, மேல் வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயின் மறுக் கின்றாள்) வையாய்!கண்ணியரும் தாரருமாகிய மைந்தரும், நறுங்கோதை யின ராகிய மகளிரும், முன் பொருள்களைத் தானம் பண்ணி, அதன் பயனாகிய போகத்தை நுகரவேண்டி நாடோறும் ஆடுதலான், அவர் கையுறையாகிய பொன்மீன் முதலியவும், அவரணிந்த சாந்தும். மாலை யும் ஈரம் புலர்த்தும் பொலிந்த புகையும் நினக்குத் தரும் உண்டியும் இடையறாதிருக்கும் பொருட்டு மழை மறா தொழிக. அம்மழையாகிய வெள்ளம் பெருகி நின் பெருக்கு வற்றா தொழிக. - நல்லழுசியார் 17 செவ்வேள் கடவுள் வாழ்த்து ஆராதிப்போர், தீபங்களும், இசையுடைய வாத்தியங்களும், சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களும். அகிற்புகையும், கொடி களும் ஆகிய இவற்றை, ஒருங்கே ஏந்தித் தேன் பொருந்திய மலர்களை யும், தழைகளையும், பூத்தொழில்களுடைய துகில்களையும், மணிகளை யும், இலைபோன்ற உயர்ந்த வேலையும் சுமந்து செல்வர்; சென்று சந்தனத்தைத் தெளித்து அறையிடத்தே படிமத்தான் கட்டின கிடாய் நிற்கும் முருகனது கடம்பை ஏத்துவர். ஆலாபனஞ்செய்து பாடல்களைப் பாடுகின்றவர்களாய், விரிந்த மலர்களினின்றும் சொட்டும் தேன் மரங் களை நனைக்கும் குன்றின் தாழ்வாரத்தில் மாலைக் காலத்தே கூடுவார்கள். இவருள் தேவருலகத்து உறைதலை வேண்டுவார் யார்? (வேண்டார் என்றவாறு.) ஒரு பக்கத்தே பாணர் மீட்கும்யாழின் இனிய ஓசை எழுந்தது. ஒரு பால் பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டு ஊதுகின்ற இனிய இசை எழுந்தது. ஒருபக்கத்தே துளைகளுடைய குழலின் ஓசை எழ, ஒருபக்கத்தே வண்டுகள் பரந்து பண் போன்ற இசையினை ஊதின. ஒருபக்கத்தே ஓசையுடைய முழலின் ஒலி எழ, ஒருபக்கத்தே மலையி னின்று இழியும் அருவிநீர் ததும்பி ஒலித்தது. ஒருபக்கத்தே பாடவல்ல விறலியர் வளைந்து ஆட, ஒரு பக்கத்தே வாடைக் காற்றுக்கு அசைந்து பூங்கொடி ஆடிற்று. ஒருபக்கத்தே பாடினியின் பாலைப் பண்ணாகிய மிடற்றுப் பாடல் எழ, ஒருபக்கத்தே தாளத்துக்கு ஆடுகின்ற மயிலின் குரலெழுந்தது. இவ்வாறு கல்விகளால் மாறுபடும் தன்மை உற்றன போல ஒன்றுக்கு மாறாக ஒன்று மாறுகொள்ளுந் தன்மை பகையை வென்ற முருகன் குன்றிடத்துண்டு. பாடல்களாற் சிறந்து பலபுகழும் முற்றுப் பெற்ற கூடற்கும் பரங் குன்றுக்கும் இடையே உள்ள நிலம் மிக அணித்தாயினும், மைந்தரும் மகளிரும் நெருங்கிவிளையாடுதலால் மிகத் தூரத்தே நின்றது. அழகு மிக்க அவர் கூந்தலில் நின்றும், 1குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலையால் செல்லும் வழி தடுக்கப்பட்டு வழி இல்லை ஆயிற்று. குற்றந்தீர்ந்த வேதத்தாலும், அது கூறும் வேள்வியாலும் புகழ் திசை எங்கும் பரந்த குன்றிடத்தே, உலகத்தார் பலவிடத்தும் இருந்து செய்கின்ற பூசைக்கண் முருகன் அகிற்புகையை அவியாகக் கொள்வான். அப்புகை இடந்தோறும் மேலே போதலான் சூரிய மண்டலம் மறையும்; தேவர்கள் இமையாது நின்று நீங்குவர். குளிர்ந்த மாலையை அழகு பெற அணிந்தோரும், வளைஅணிந்த முன்கையினரும், வளைந்த இறை உடையருமாகிய இளம் மகளிர், அன்பு ஒத்தாரும் தாரணிந்த மார்பினையுடையருமாகிய மைந்தரின் அணை யாகிய மென்தோளிற் தங்கி மனமகிழ்ந்து சுனையிடத்தே பாய்ந்தாடுவர். அதற்கு வெருண்ட வண்டுகள் வெருவிச்சுனையிடத்துள்ள மலர்களின் மகரந்தத்தை ஊதாது நீங்கும். பரங்குன்றினது அலங்காரம் இத்தன்மை யது. மலையினின்றும் இழிகின்ற நீண்ட வெள்ளிய அருவி மிகவும் பரந்து உழவரது வயலிடத்தே செல்லும். மேலே விளையாடு மகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த நீலமணி உழுகின்ற நிலத்தைச் சிதைக்கும். தம்மைப்பிரிந்து சென்ற தலைவர் வினைமுடித்துக்கொண்டு விரைவில் வந்து கூடுதற்குத், தலைவியர், வெள்ளிய அருவி அழகு செய்யும் பரங்குன்றின் கண் தெய்வவிழா எடுப்பர். பிரிந்தவர் கூடிய வழிக் கெடாத பெரிய புகழையுடைய செழுமை பொருந்திய வையையிடத்துப் புனலாடுவர். ஏனையோர், பிடரிமயிர் கொய்த குதிரை பூண்ட, கொடி யணிந்த தேருடைய பாண்டியனது கூடற்கண் புதுப்புனலாடுவர். கற்புடைய மகளிரும் தலைவரது அறம் நிமித்தமாகப் பூசை செய்து அப்பயன் நுகர்தலின் அது அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று. நீலமணியின் நிறமுடைய மயிலினையும் உயர்ந்த கோழிக் கொடி யினையும் பிணிமுகமென்னும் யானையையும் ஊர்ந்து செய்யும் வெல் லும் போரையுமுடைய தலைவரின் துன்பஞ்சாராத அருளைப் பெறு வேமாக வென்று மக்கண் மாட்டுப்பணிந்த மொழியை ஒழித்து, நின் புகழை ஏத்தி யாமும் எம் சுற்றமும் வேண்டிக்கொள்ளா நின்றேம். - நல்லழுசியார் 18 செவ்வேள் கடவுள்வாழ்த்து திரண்டு வந்து பொருத அவுணரது வலியாகிய செருக்கு ஒழிய, விசும்பிடத்தே பரந்து நிறைந்த சூலுடைய கார்கால மேகம் போல நீர் பரந்ததும் நிலந்தாங்குவதுமாகிய கடலுள், மாவடிவாய்ப் பரந்து நின்ற சூரபன்மாவின் வலியைக் கெடுத்தோய்! நின்னை ஈன்ற புகழைத் தன்னிடத்தே கொண்ட இமயத்தோடு ஒப்பநேர்நின்று மாறுபட்டு ஏற்கும் புகழுடையது இப்பரங்குன்று. (இனி முருகவேளைப் படர்க்கையாக்கி இம்மலைச் சிறப்புக் கூறுகின்றார்) ஆடுகின்ற ஒள்ளிய மணிபோலும் அழகிய பொறியினையுடைய மயிலை நோக்கிய முருகக் கடவுள் அதன் அழகையும் களிப்பினையும் உள்ளத்தாற் குறிக்கொண்டார். அதனை வள்ளி கண்டாள்; கண்டு, நீ நினைத்த தறிந்தேன்; இனி அதனை எமக்கு உரை; எம்மை நோக்காது இகழ்தலை மறத்தல் ஒழி, என்று சொல்லி ஊடினாள். அவர் அவ்வூடலை மாற்றி, எனது காதலுக்குரியாய்! அம்மயிலாற் களவுகொள்ள அரிய நின் சாயலை, மிகுந்த மகிழ்ச்சியாற் களவுகொள்ள எண்ணிய அம்மயில், அதனைப் பெறமாட்டாது வருத்தமுற்றது. அதனைக் கண்டு யான் நின் சாயலின் அருமையை நினைத்தேன். நீ, உன்னை இகழ்ந்தேமாகி நின்றேன் என்றாய்,” என இவ்வாறு கூறி அவ்வூடலை உடனே தீர்த்தார். முருகனது குன்றின் இயல்பு இவ் வகையினது. (இது, பாணனுக்குத் தலைவன் பரத்தைமையைக் கூறுகின்ற ஒரு தலைவியின் கூற்று) மெய்யில் அழகு பொலிதற்கு ஏதுவாகிய விரும்பத்தக்க பொன்னா பரணங்களையுடைய பாணா! 1ஐந்து வளம் பொலிந்த பரங்குன்றின் மேல் வாழும் பூவின் அழகுடைய குளிர்ந்த கண்ணுடையாரது இறுகுதல் மிகுதியுடைய முயக்கத்தே அம்மகளிர் நகஞ்செய்த வடுக்களால் நந்தலை வரின் பரத்தைமையை நீ காணாய். நின் யாழ் நரம்பிற்கு ஏற்ப நட்ட பாடை என்னும் பண்ணைப் பாடும் நின் பழைய பாட்டுப் பொய்த்தது. வேலை ஏந்தியவேளே! விரைந்த செலவினையுடைய மயிலின் மீது வரும் ஞாயிறே! மழை முழங்குகின்ற நின்குன்றின் சிகரமும், அதன்கண் இருளைக் கிழிக்கும் கொடி போன்ற மின்னும், நெற்றிப்பட்ட மணிந்த நின் களிற்றை ஒக்கும். நின்குன்றின் கண் சித்திரங்கள் தீட்டிய அழகிய அம்பலம், காமவேள் அம்புப்பயிற்சி செய்யும் 1சிரமச்சாலையை ஒக்கும். தெய்வம் உறைகின்ற வரையிடத்துள்ள சோலைகளிற் றங்குகின்ற முகிலால் நீர் நிறைந்த சுனைகளில் அழகுமிகுந்து விளங்குகின்ற மலர் களின் செறிவு காமனின் கூரிய அம்பு நிறைந்த அம்பறாத் தூணியை ஒக்கும். கார்காலத்து மலர்கின்ற காந்தட் பூங்கொத்துகளின் நெருங்கிய அழகு, போரில்தோற்றுக் கட்டுண்டவரின் கையை ஒக்கும். முன்பனிக் காலத்து அழகிய மேகம் வானவில்லை வளைத்தது. சூதாடு கருவியை ஒத்த நினது மலைமேன்மரங்கள் அவ்வில்லுச் சொரிகின்ற கணைகளை ஒப்ப மெல்லிய மலரைப் பரப்பின. 2சூதாடுங்காய்களை உருட்டுதல் வல்ல நின் மலைக்கண் உள்ள கோயிலிற் போரிடத்து மிகும் அரவம் போலத் திரளாகிய தாள மொலிக்கும் ஒலியோடு சிறந்து மேகக் கூட்டங்கள் ஒலித்தன. அருவி ஓடுதலால் மலையின் சிகரங்கள் முத்தணிந்தாலொத்தன. குருவிகள் ஆரவாரிக்குமாறு தினைக்கதிர்கள் விளைந்தன. கரையினின் றும் சாய்ந்த யானையை முட்டுகின்ற வண்டூதும் சுனையிடத்துள்ள பல நிறமலர்கள் வளைந்து, வளைந்த வானவில்லை ஒப்ப அழகோடு விளங்கின. (இவ்வளவும் மலைச் சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்) பொருகின்ற வேலையுடைய செல்வ! நின் பூசைக்கண் மீட்கும் நரம்பின தொலியும், புலவர் பாடிய அழகிய பாடல்களும் பொருந்தி, வேத ஒலியும், உபசாரமாகிய பூவும் தீபமுங்கூடி எரியின் கண் உருகும் அகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழ்கின்ற நின் அடியின் கண் உறைதலை, எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்போமாக. - குன்றம் பூதனார் 19 செவ்வேள் கடவுள் வாழ்த்து வானின்கண் உறைதலாகிய விருப்பை நீ இப்பூமியிடத்துங் கொண்டாய்; கொண்டு அறிவின் எல்லையால் அறியப்படாத புகழினை யுடைய கடம்பை மேவினாய்; மேவிப் பெறுதற்கரிய தலைமையை யுடைய தேவரெய்தும் நுகர்ச்சியை இவ்வுலகத்து மக்களும் எய்துக என்று நின்னுடைய பரங்குன்றத்து, மயில் போன்ற சாயலுடைய வள்ளியை அலங்காரத்தோடு கூடிய வதுவை கொண்டாய். அது தேவ ருலகத்துத் தெய்வயானையது மணவிழாவோடு மாறுகொள்ளுந் தன்மை யுடையது. புணர்ச்சியோடு வந்த இரவு நீங்கி வைகறை வந்தது. இவ்வுலகத்து அறத்தைப் பெரிதாகச் செய்து அதன் பயனை நுகரவேண்டித் தேவ ருலகத்துச் செல்வாரைப்போல, அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடலிடத்து மகளிரும் மைந்தரும் தமக்கேற்ற மாட்சி யுடைய அணியும் ஆபரணங்களையும் நல்ல பட்டாடைகளையும் அணிந்தனர்; விருப்பமிகுந்த குதிரை மீதினராயும், ஓடுகின்ற தேரராயும் தெரிந்த மலராற் தொடுத்த தாரராயும் தெருவின் இருள் அகலும்படி சென்றனர். நின் குன்றிற்கும் கூடற்கும் இடையே உள்ள இடம் எல்லாம் நெருங்கி அவர் யாத்திரை செய்கின்ற வழி குளிர்ந்த மணல் பரந்த சோலை போன்றது. அவர்களின் மாலையணிந்த தலைகள் இடைவெளி யற நிறைதலால் அவை ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டிப் பெரிய நிலத்துக்கு அணிந்த மாலை போன்றன. ஒலிக்கின்ற மணி கட்டிய யானையையுடைய பெரியோய்! அறிவு திருந்திய வழுதி மடமயிலனைய மகளிரோடும் காரியக் கடனறிந்த தன் கண்ணாகிய அமைச்சரோடும் கூடி நாட்டிலுலள்ளவரும் நகரிலுள்ள வரும் ஆலவட்டங்களைத் தோளிற் தாங்கியும், நாவினால் ஏத்தியும், சூழவந்து நின் விசாலித்த மலைமீது ஏறி நீ வீற்றிருக்கும் அழகிய ஆலயம் பெருமை உண்டாக வலம் வருவர். அத்தோற்றம் உடுக்கணங்கள் புடைசூழச் சந்திரன் மேருவின் பக்கத்தே வந்தது போன்றது. வண்டுகள் தொடர்கின்ற மதம் சொரியும் கன்னமுடைய யானை களைப் பாகர் அவற்றின் கழுத்திற்கட்டியுள்ள அழகிய கயிறுகளால் மரங்களிற் கட்டித் துண்டு துண்டாகத் துணித்த கரும்பை ஊட்டுவர். மாலையணிந்த குதிரைகளை வழியிலே இளைப்பாறும் பொருட்டு நிறுத்துவோர் திண்ணிய தேர்களை வழியிடத்தே நிறுத்துவர். அவை பரத்தலால் நின் குன்றத்தின் கீழ் நின்ற 1இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையை உடையதாயிருக்கும். (இனி, வழுதியுடன் குன்றின்மீது ஏறியோரது விநோதங் கூறுவா ராய் மலைச்சிறப்புக் கூறுகின்றார்) குன்றிடத்துள்ள குரங்குகள் அருந்தும்படி, சிலர் தின்பண்டங் களைக் கொடுப்பர். சிலர், கருங்குரங்குகளுக்குக் கரும்பைக் கொடுப்பர். சிலர், தெய்வத் தன்மையுடைய பிரமவீணையை மீட்பர். சிலர் குழ லிடத்துக் கையை வைத்து ஊதுவர். சிலர் இளி, குரல் என்னும் இசை களைச் சமமாக யாழிற் பாடி இன்பங் கொள்வர். சிலர், பூசையின் அழகை எடுத்தியம்புவர்; சிலர், யாழ் நரம்பின் இசை கொம்மென ஒலித்த அளவில் அத்தாளத்துக்கு ஏற்ப முரசொலியை எழுப்புவர். சிலர், நாள் மீன்களையும் தாரகைகளையும் உடைய துருவசக்கரத்தைப் பொருந்திய ஆதித்தன் முதலாக வரும் கோட்களது நிலையைத் தீட்டிய சித்திரங்களை நோக்கியறிந்தனர்; விரகியர் வினாவ, இவன் காமன் இவள் இரதி என்று சிலர் விடை இறுத்தனர். இப்பூனை இந்திரன், அவ்விடத்திற் சென்ற கௌதமமுனிவன் இவன்; சினமிகுதலால் இவள் கல்லுரு எய்தியவாறிது, என்று கணவனைப் பிழைத்தாரின் தண்டங்களைக் கூறினர் சிலர். துதிக்கப்படும் பரங்குன்றத்துத் 2திருமால் மருகனது சித்திர மண்டபத்தின் பக்கம், சென்றவர்கையாற் சுட்டிக் காட்டிக் கேட்கவும், கேட்டவற்றை அயலே நின்றவர் அறிவிக்கவும் பற்பல சித்திரங்களை யுடையதாயிருக்கும். அம்மண்டபம் மூங்கில்களையும் விரிந்த பாறை களையுமுடைய அகன்ற இடத்தே செய்யப்பட்டிருந்தமையால் விளக்க மான நிலைமையை உடைத்து. பேதைப்பருவத்தாள் ஒரு பெண் பிறந்த தமரினின்றும் நீங்கி அவ் விடத்துள்ளவற்றைக் காண்டல் விருப்பால் உயர்ந்த கற்களின் இடையே புகுந்து ‘வந்த வழியை மறந்தேன்’ என்று திகைத்து நின்றாள். நின்று ‘சிறந்தவரே! சிறந்தவரோ! என்று தமரைக் கூவி அழைத்தாள். அவள் அழைக்கின்ற குரலை மலைக் குகைகள் தாமும் எதிரொலி செய்து அழைத்தன. அதை அறியாத அவள், தமர்தம்மை அழைக்கின்றாராகக் கருதி அவ்வழைத்த விடத்துச்சென்றாள். அவ்விடத்துத் தமரைக் காணாது மீளுமிடத்து அவள் தமரைக் கூவிக் கூவி அழைத்தாள். அன்பரது துதியை உவக்கும் முருகனது குன்றின் இட வேறுபாடு சிறார்க்கு இவ்வாறு மயக்கந்தருதலையுடையது. மிகவும் அழகிய நுனி சாய்ந்த கொம்பைப் பிளந்து புறப்பட்ட தளிர்களை இளம் மகளிர் விளையாட்டாக இனிய சுனையிடத்து உதிர்ப்பர். அத் தளிர்கள் சுனையிடத்தே தலையை உயர்த்தினவாய் அலரோடும் முகையோடும் பொருந்திக் கிடக்கும். அவற்றுள் அலரோடு கிடந்தவற்றை இது விரிந்த ஐந்து தலையினையும் விளங்குகின்ற பொறி யினையுமுடைய அரவென்றும், அதன்அருகே முதிர்ந்த முகையோடு கிடந்த ஒருதளிரை அதன்மைந்தனென்றும் இளமுகையோடு கிடந்த மற்றொன்றை அதன்குட்டி என்றும் அம்மகளிர் மருண்டனர். பச்சிலை இளங்கொழுந்துகளை நீட்டின. ஆம்பல் மகளிர் வாய்போல் விரிந்தன. காந்தள் நாறுகின்ற குலைகளைக் கைபோற் பூத்தன. எருவை நறிய பூங்கொத்துகளை ஈன்றன. வேங்கை நெருப்புப் போன்ற பூங்கொத்து களைப் பரப்பின. இன்னும் நிறம் மிகுந்த தோன்றி, அலர்ந்த கொத்து களையுடைய நறவம், காலங்குறியாது பூக்கும் கோங்கு கோங்கின் போதோடு நிறத்தாற்பகைத்த மலருடைய இலவம் ஆகிய இவை யெல்லாம் தெற்றின மாலைகள் போல மலரால் நிறைந்தன. அம் மலர்கள் கோத்தமாலைகள் போல நிறம் மாறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடைஇட்டும் தூக்கிக் கட்டிய மாலைகள் போல நெருங்கியும் பூத்தலால் ஒன்றோடு ஒன்று மயங்கின. அதனால் நின்குன்றின் உச்சி, விடியற் காலத்துப் பலநிறமேகம் பரந்தவானம் போன்ற காட்சி அளிக்கும். குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்தோய்! எமது வாழ்த்தினை நின் செவிக்குச் சிறந்த உணவாகக் கொள்ள வேண்டும். கடப்ப மாலையையும் சிவந்த உடையையும் உடையை! நின்வேலும் அவ்வாறே பவழக்கொடியின் நிறங்கொள்ளும். நீ நிறத்தால் எரிகின்ற தீயை ஒப்பை; முகங்களால் நீ ஆதித்த மண்டலத்தை ஒப்பை. உலகிற்கு வருத்தஞ்செய்தலான் நீதியிற் தப்பிய சூரபன்மாவாகிய மாவைத் தடிந்து, வலியகிரௌஞ்சமலையிற் திருந்திய வேலைவிட்டு அதனை உடைத்தோய்! எமது சுற்றமும் நாமும் உன்னை ஏந்திப் பரங்குன் றிடத்துக் கடம்பின் கண் அமர்ந்த நல்ல நின் நிலையை வாழ்த்தினேம்; எமது வாழ்த்து இது. - நப்பண்ணணார் 20 வையை (இது, பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூதாகச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை நீர் விழாச் சிறப்பும் கூறியது) மலைஇடத்துள்ள கல்நொறுங்கும்படி இடி இடித்தது. கடல் வற்றும்படி நீரைக்குடித்துச் சூல் முதிர்ந்த முகில் மலையைச் சூழ்ந்து மழை பொழிந்தது. அம்மழை நீர், எதிர்த்துப் பொருபுலியைப் போழ்ந்த புகர் நெற்றியுடைய யானையின் இரத்தமளைந்த கோட்டின் கண் உள்ள கறை போகும்படி கழுவும். முகிற் கூட்டங்கள் காலை பொழுதிற் கடலை முகந்து மாலைப் பொழுதிற் சூரியன் படுகின்ற திசையிடத்துள்ள மலையைச் சேர்ந்து இராக் காலத்தே மழையைப் பெய்யும்., மரங்கள் தருகின்ற மலர்களின் நாற்றமும், தேன்தருகின்ற மலர் நாற்றமும் காய் கின்ற வெயிலையும் மிக்க காற்றையு முடைய காடுகள் தரும் நாற்றமும் மரக்கோடுகளுதிர்த்த கனிகளது நாற்றமு மாகிய இவற்றை உடன்கலந்து கொண்டு வந்து வையை பிறர்க்குக் கொடுக்கும். கரையிடத்துள்ள விசாலித்த சோலையின் நாற்றத்தின் மேலே ஆற்றினது வெம்மையாற் தோன்றும் நாற்றத்தை நுகர்ந்து ஊரார் ஆசை யோடு நீராடும்படி பறை ஒலித்தது, மதிலின் மதகுகளில் நீர் ஓடுகின்ற ஓசையினால் கூடலிலுள்ளார் துயிலெழுந்தனர். எழுந்து நித்திரை மயக்கத்தால் தேர்களில் வண்டிகளிற்பூட்டும் எருதுகளையும், வண்டி களிற் தேரிற்பூட்டும் குதிரைகளையும் பூட்டி ஊர்ந்தனர்; குதிரைகளுக் கிடும் மெத்தையை யானைக் கிட்டனர்; மறதியால் யானைகளை அலங்கரியாது நடத்திச் சென்றனர். மகளிர் மாலையை மைந்தர் புனைந்தனர். மைந்தர் அணியும் குளிர்ச்சி பொருந்திய தாரை மகளிர் அணிந்தனர். தாந்தாம் முந்திச் செல்லுதல் வேண்டுமென்னும் விருப்பி னால் அணியும் முறைமையை மறந்து மாறி அணிந்தவரெல்லாம் விளை யாட்டு மகளிர் இழைத்த சிற்றிலை அழகு செய்யும் வண்டு பாடுகின்ற மணலுடைய கரையின் உயர்ந்த மேட்டை வந்து பொரும் புனலைச் சென்று குறுகினர். அணியாதவர்கள் இல்லினின்றும் புறப்பட்டு மாடங் களுடைய வீதிகளிற் செல்லுதற்கு வருத்த முற்றனர். இவ்வாறெல்லாம் கூடலிலுள்ளார் விரும்புந்தன்மையுடையது வையைப் புனல். பூங்கொத்துகளைச் சந்தனப் புகையூட்டி அணிந்தோரும், தாரை நெருக்கி அணிந்தோரும் கண்ணியும் வலயமும் அணிந்தோருமாகிய திரள் வந்தேறி வையைக் கரைப் பரப்பின் கண்ணே நின்றனர். அயலே நிற்பவர், அயலார் அணிந்த அணிகளைப் பார்த்தனர். அவ்விடத்து நின்றோரில், தன் தலைவி அணியும் வளையையும் முத்து மாலையையும் பரத்தைக்குக் கொடுத்த தலைவன் ஒருவனாகும். அவன் தலைவியோடு உடன் நின்றான். காணாது போன வளைகள் பரத்தையின் கையில் இருப்பதைக் கண்ட ஆயத்தார் வருந்தி அவட்கு இவள் மாற்றாள் என்று தம்முள் எண்ணிப் பார்த்தனர். அவற்றை அவட்குக் கொடுத்த அக் கள்வன் அப்பார்வையைக் கண்டு நாணினான். அதனைக் கண்டோர் அவன் முகத்தைப் பார்மின் என்று ஒருவரோடு ஒருவர் கூறினர். கோபித்துப் போர் செய்யும் அம்புகளை ஒத்தனவும், அழகிய மலரின் அழகைக் உண்டனவுமாகிய கண்ணையுடைய பரத்தை, அவ்வாயம் தான் அணிந்திருக்கும் வளைகளைக் காணாமல் கூட்டத்துள் ஓடி ஒளித்து மறையலானாள். இச்செயலை ஒருவர் ஒருவருக்குக் காட்டி நின்றனர். வையை நீர் கடலுட் புகுந்து மறைந்தாற் போன்று தப்பிப் போகின்றவளைத் தலைவியும் ஆயத்தாரும் கண்டு, மாற்றாள் என்று தெளிந்து மணலுடைய கரையிடத்தே தேடிச்சென்று அவளை நிற்கும் படி கூவினர். பெண்கள் நிரைத்து நிற்கும். கூட்டத்தின்கண் நீயிர் என்னைத் தொடர்தற்குக் காரணம் யாதெனச் சொல்லி அப்பரத்தை எதிர்த்தாள். எதிர்த்தலும் அத் தலைவி சித்தந் திகைத்து ஒன்றும் சொல்லாது நின்றாள். (அவள் அங்ஙனம் நிற்ப ஆயத் தொருத்தி பரத்தையை நோக்கிச் சொல்லுகின்றாள்) விரும்பப்படும் காமத்தை வஞ்சனையுடைய பொய்யோடுங் கூட்டிக் கொள்வாரை மயக்கும் விலைத் தொழிலையுடைய கணிகாய்! நின்பெண்மை யது பொதுமையால் ஒருவராற் பேணப்படுதலில்லாதாய்! ஐம்புலன்களால் நுகரப்படுவனவற்றை நுகர்கின்ற காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு இதழ் பொருந்திய தொட்டி! பெண் தன்மையுடைய வனப்பாகிய வயலிலே இனிய கள்ளாகிய புனலை விட்டுக் காமமாகிய களிப்புள்ள கலப்பையால் எமது எருது வலி கெடாமல் உழும் பழைய உழவுசாலே! பொருளிட்டாரைப் போகாமற் றடுத்து, அழகியமதர்த்த கண்ணைக் கயிறாகக் கொண்டு தோளாகிய தறியோடு பிணித்துக் காமம் மிகுதற் பொருட்டு யாழிசையை ஆர்த்து, அளவில்லாத இவற்றையன்றி எமது ஆபரணங்களை அணிந்து வளையைப் பூண்டு இன்பத்துறைபோலப் பொதுவாயுள்ளாய். முன்னே காணாமற்போன எம் எருதையாம் தேடித்திரிந்து இவ்விளையாட்டு மகளிர் காண இவ்விடத்து வணங்கச் செய்தேம்! செய்து இவ்வையை யாகிய தொழுவத்துப் புகவிட்டு, வசமாக்கி உரப்பி மாலையை அடிக் குங்கோலாகக் கொண்டு அடித்தேம்; அடித்து இவ்வழக்கு உரைக்கும் அவையத்தில் எம்எருதாதல் யாவரும் அறியத் தொடர்ந்தேம். தம் எருதை உழுதற்றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமை வேளாளர்க்கின்று. தனக்குரிய தலைவன் மார்பை நினக்குத் தண்டமாகத் தரும் ஆரத்தையுடையாள் மார்பும், அவ்வாரத்தைக் களவுகொண்டு பூண்ட நின்மார்பும் ஒத்த தன்மையவாய் விட்டனவே என்று ஆயத்தினர் வைது சொல்லினர். அவர்களாற் தேடப்பட்ட அப்பரத்தை தலைவியைச் சிலசுடு சொற்களாலேசினள். அதனைக்கேட்ட வையை யகத்தே நின்ற முதுமகளிர் வெறுத்தனர்; வெறுத்து,‘கற்புடைமையாற் சிந்தித்த அளவிலே பாவம் நீங்கும் தன்மையாளை வையாதொழிக. நீ வெஞ்சொற் சொல்லி அறியாமையுற்றாய். அது நீங்க இவ்வழகிய மயிலின் சாயலை உடையவளை வந்து வழிபடுக’ என்று கூறினர். அதனைக் கேட்ட அப் பரத்தை இது மனத்துட் பெரிய துன்ப மாயிருக்கின்றது என்று தனக் குள்ளே சொன்னாள். பின் அம்முதுமகளிரில் ஒருத்தியை மணலிடத்து நோக்கி அன்னாய்! பகைவரைப் பகைவர் தொழுதல் இளிவரவு; அதனை நீ அறிந்திலை; பெரியோய்! அவ்வாறே மாற்றாளை மாற்றாள் வணங்கு தலும் பெருமையின்று. தலைவி:- நல்ல மெல்லிய இனிய சொற்களை நாணாமற் பல அவைக் கண்ணுஞ் சொல்லி ஆடுதற்கு முழவுடனே வருவாய். நின் பெருமை கூற வேண்டியதில்லை. எந்தை எனக்கிட்டவளையும் முத்து மாலையுமாகிய பூண் நின்பால் வந்த வழி, மாயத்தையுடைய களவன் றாயின், நினக்கு அவை தந்தவனைக் காட்டித் தந்து பின்னை மேன்மை யுள்ளவளாகு. பரத்தை:- மோசி மல்லிகையைச் சூடினோய்! நீ சால அன்பு பூண்டவன் என் மாட்டு அன்புடையவனாதலால் இவ்வளையையும், ஆரத்தையும், புணர்தற்கு விலையாகத் தந்தான். அவன் இவற்றையன்றி நாளை நின் காலிடத்துள்ள சிலம்புகளையும் கழற்றுந் தன்மையான்; ஆதலின் யான் கள்வியல்லேன். அவன் கள்வன்; அவனைப் பற்றுவாயாக. இவ்வாறு அவள் கூறுதலும் அவ்விடத்து நின்றோர் அவளை நோக்கி வசீகரித்தலையுடைய மானே! மாறுபடுதலை ஒழி; நும்மை விரும்பின காமுகர் நுமக்குத் தரும் பொருள் நாடறிய நும்மனவே எனக் கூறித் தணிவுபடுத்தினர். பின் அவர் தலைவியை நோக்கிப், புணர்ச்சி இனிய பரத்தையர்பாற் சென்று அமர்வானை மனையாளாற் செல்லாமற் காத்தலும் சென்றானென்று நீக்கி ஒழுகலும் கூடுமோ? அவை கூடா. சால்புடைமை மிக்காராகிய கற்புடை மங்கையர் தம்மைக் கணவர் இகழினும் அவரை எய்தா நிற்பர். பரத்தைய ரிடத்து மயங்கி விரும்பி அவரைச் சேர்ந்த மைந்தர் மார்பை இனித்தோயோ மென்றிருத்தல் மங்கையர்க்கு முடிவு போவதன்று. முனியாதே; கொடியை ஒத்தவளே! காமம் தகுந்த வழியில் நிற்குமோ? என இவ்வாறு கூறினர். பாண்டியனது வையையின் சிறப்பு இத்தன்மையவாகிய துனியையும் புலவியையும் ஏற்கப் பண்ணும். குவிந்த காந்தள் முகையும், அரவு வெகுண்டு படம் விரித்தாற் போல விரிந்த காந்தட்குலைகளும், அக்காந்தளாற் கோலப்பட்டுக் சுனையினின்றும் கழிந்து வீழும் சுனை மலர்களும், புதரிடத்துச் சொரிந்த பூக்களுமாகி அருவி சொரிந்தவற்றைத் திரையாற் தள்ளிக்கொண்டு நெடிய பெரிய மதகின் நடுவாகிய வழியைப் போந்து புனல் சொரியும் அத்தோற்றம் களிறு நீரை உறிஞ்சிக் கைவழியாகச் சொறிவதை ஒக்கும். இவ்வாற்றால் புணர்தலும் பிரிதலுமாக இக்காமத்தையும் இதற்குச் செருக்கினைவிளைக்கும் கள்ளையும் உடன் விரவி மகளிர் யாவரும் பாராட்டத் தாம் விரும்பின காதலரோடு புனலாடுமாறு முன் பிரிந்தவரைக் கொண்டு கூட்டுதல் வையைக்குண்டு. - ஆசிரியர் நல்லந்துவனார் 21 செவ்வேள் கடவுள் வாழ்த்து நீ ஊர்வது, விளக்கத்தால் எரியை ஒத்த நெற்றிப்பட்டத்தின் நடுவே கிடந்து விளங்கும் சென்னியையுடைத்தாய வேழம். காலிடத்தே தரித்திருப்பது, பவழம் போலும் துவர்நீர்த்துறையிலே மறைய மூழ்கிய இலையினால், தாமரை மலர்போன்ற தாளிற்கு இயையத்தைத்த, பாம்பின் முதுகிற் தோலுடனே அதன் மயிர் நெருங்கிய தோலைக் கீறினவாரை ஒத்த, மயிலிறகால் அழகு செய்த இலைச் செருப்பாகும். கையிடத்துள்ளது, நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த மாவை வெட்டிக் கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல் பூண் டிருப்பது சுருண்ட வள்ளிப் பூவை இடையே வைத்துத் தொடுத்த வட்டமாகிய கடப்ப மலர்த்தார். அமர்ந்திருப்பது, குற்றந் தீர்ந்த அன்பர் போற்றித் துதிக்கின்ற 1ஏழிலைப் பாலையும் அதனையுடைய சிறிய வரையாகிய தவிசும், அருவியாகிய முகபடாமும் உடையதாய்த் தரையின் கண் நின்று விசும்புற ஓங்கிய யானையாகிய பரங்குன்றம். வெற்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ! நின்னைத் தொழுது இக்குன்றின் அடியில் உறைதல் எமக்கு மறு பிறப்பினும் இயைகவென வேண்டுவேம். நின் குன்றிடத்தே, ஒருத்தி, ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பின் முத்தாகிய உள்ளிடுமணி எங்குங் கேட்க ஆர்ப்பத் துடியின் தாளத்துக்கு இயைய அடி எடுத்து வைத்துத் தோளசைத்துக் கள்ளுண்ட மகிழ்ச்சி தடுப்ப அழகு காரணமாகக் கூர்விளங்குகின்ற வேலெனச் சிவந்த நோக்கத்தோடு, துணையாக அணைகின்ற தலைவனைத் துனித்து நின்றாள். அழல்போன்று விளங்கும் ஆபரணமுடையாளொருத்தி, இவளி லும் எனக்கு அழகுண்டாய வழி அவளை நோக்கானென்று கருதிக் கண்ணாடியை நோக்கி நின்றாள். இன்னொருத்தி பொங்கிய முலை யிடத்தே சந்தனத்தைப் பூசி உதிர்த்து நாற்றம் நிலைபெற்ற வழி அவன் தன்னைத் தழுவுவானென்று கருதி அதனைப் பின்னும் பின்னும் ஊட்டி நின்றாள். இத் தன்மையவாகிய பலவற்றைப் புரிகின்ற மகளிர் தொழில் களை நினைப்பின் கைவல்லான் எழுதிய ஓவியத்தழகு போலாகும். மாவை வெட்டியோய்! நின் குன்றின் மீது எடுக்கப்பட்ட சிற்றால வட்டம்போல மேகம் முழங்குகின்ற இடத்தே இரண்டு இறகையும் விரித்து விளங்கும் பொறிகளையுடைய மயில்கள் எழுந்தாடும். விரலாற் செறித்து ஊதுகின்ற வங்கியத்தின் இசைக்கு ஏற்ப ஊதுகின்ற குர லுடைய தும்பி விரிந்த மலர்களை ஊதும். அழகிய வண்டின் கூட்டம் யாழின் இசையை மேலும் மேலும் எழுப்பும் பாணி என்னும் தாளத்தை யுடைய முழவின் இசை போல அருவி நீர் ததும்பி ஒலிக்கும். இவ்வாறு தம்முள் மாறுபட்ட பலவும் முரசுடையவன் குன்றிடத்தொருங்கே ஒலிக்கும். ஆபரணங்களை அணிந்த ஒருத்தி, ஒலிக்கின்ற ஆழ்ந்த சுனை நடுவே மூழ்கி அவ்விடத்தே நீர்மேல் எழுந்தாள். கரையினின்ற கணவனைத் தெப்பமாகிய மூங்கிற் கழியை நீரில் அழுந்துகின்ற தன்கை யிடத்தே தரும்படி வேண்டினாள். அவன் அதனைக் கொடாது அரக்கு நீர் கரந்தவட்டை எறிதலாற் புணை பெறாது ஆழ்ந்த நீரில் அவள்படு கின்ற துயரைக்கண்டு இன்புற்றான். பின் அந்நீரின் கண்வீழ்ந்து அவளைத் தழுவினான். இவ்வியல் பினது தண்ணிய தண்பரங்குன்றம். வண்டார்க்கின்ற மலையிடத்தே மைந்தர் பூசிய சந்தனத்தைப் புலர்த்தும் காற்றும், கயலை ஒத்த கண்ணுடையார் கமழ்கின்ற தாதை உதிர்த்த மேகத்தை ஒத்த கூந்தலின் அகத்தே ஊடு புகுந்து அசைத்த காற்றும், வட்டமாகிய பூங்கொத்துடைய கடம்பின் கண் மேவிய நினக்குப் பூசைக் கட்பாத்திரத் தெடுத்த கமழ்கின்ற புகையூடு எழுந்த காற்றும், குகைகளிற் பரந்து இடையறா தொழுகும் அருவியும் நின்குன்ற முடைத்து. சுடர்பரந்த கொடியின் மின்னுப் போலக் கண்ணிற்கு ஒளிர்ந்து திகழ்கின்ற பொற்றகட்டால் விளக்கமும் அழகும் நெறிப்பும் இடை யிடையே பெறப்புனைந்த அழகிய மாலை கூந்தலோடு அசைய மாணிக் கத்தை ஒக்கச் சிவந்த, தேனாற் சமைத்த கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பவும் பச்சை நிறப் பட்டாடை நெகிழவும், கண்சிவப்பேறவும் கணவன் எழுப்புகின்ற துடியின் தாளத்தால் அறுதியை அளப்பது போல முலைக்கண் அணிந்த முத்தாரம் அசைய ஆடுவாள். காற்றினால் ஆடை அசையவும், அணி அசையவும் அசையும் கொம்பருண்டாயின் அவள் அழகை ஒக்கும். துடியின் தாளத்துக்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வது போலும். (இவ்வளவும் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்) பகைவரை அமரிடத்துத் தொலைத்த வேலையுடையை! உயர்ந்த பன்னிரண்டு தோள்களுடையை! எம் விரும்பப் படும் சுற்றத்தோடு கூடி நின் அடிக்கண் உறைதல் இன்று போல என்றும் இயைக என்று நின்னைப் பரவுகின்றேம். - நல்லச்சுதனார் 22 வையை விளங்குகின்ற வாளுடைய வேந்தன் போர்க்களத்தே வெட்டி வீழ்த்திய யானைப் பிணங்கள் போல முகிற் கூட்டங்கள் நெருங்கின. அரசனைக் கொன்று போரை வென்ற பெரிய வேந்தனது வெற்றி முரசு அதிர்வது போல முழக்கத்தோடு இடி இடித்தது. பகைவரை வருத்து கின்ற அவன் படை வில்லை வளைத்து விசையோடு சொரியும் அம்பு போல துமிகள் நெருங்கிச் சிதறின. கண்ணைப் பகட்டுகின்ற வேகத்தை உடைய மின்னல் மின்னிற்று. அவன் கொடை போல வானம் மழையைப் பொழிந்தது. மழையால் எழுந்த வெள்ளம் நிலத்தில் வந்து கூடி அரசனின் படை போற்பரந்தது; ஊக்கத்தோடு எவ்விடங்களிலும் பரந்து வைக்கோற் போருடைய வயல்களிற் புகுந்தது. வையை வரவின் கண் கூடலிலுள்ளார் புதுப் புனலாடுதற்கு எழுந் தனர். மணமுரசு ஒலித்தது. அழகிய பெண்கள் பாக்கு, புகை, சாந்து எறிவன, எக்குவன முதலிய நீர் விளையாட்டுக்குரியவற்றையும், அழகிய ஆபரணங்கள், பூத்தொழிலுடைய ஆடை முதலியவற்றையும் ஏந்தி ஆயத்தார் பின் தொடரக் கூட்டங் கூட்டமாக முற்பட்டுச் சென்றனர். செறிந்த வினை பொலிந்த பூங்கண்ணி சூடியோரும், குளிர்ச்சி யுடைய வெட்சியின் இதழ் புனைந்த கோதையரும், தாரணிந்த முடியின ரும், அழகிய மார்பினரும், ஊர்ந்து வந்த குதிரையும், யானையும், மணி கட்டிய கோவேறு கழுதைகளும் காவின் கண் நிறைந்தன. வேற் போரைச் செய்யும் வலியினையுடை முருகனைப் போல ஆற்றலோடு கூடிய வலியினையும், புனைந்த கழலினையுமுடைய மைந்தர் நாற்ற முடைய மலர் அம்பினோனாகிய காமனைப் போலத் தாரையும் அழகையு முடையராயிருந்தனர். அவர்களைக் கண்டோர் இவர் தவப்பயன் மிகப் பெரிதென்று கூறினர். இளம் மங்கையர், முகில் போன்று அழகிய கூந்தலும், கயல் போன்ற கண்ணும், முருக்கின் பூவை ஒத்த இதழும், கச்சணிந்த இள முலையும், வகைவகையாகக் கோத்த எண் கோவை மணி முதலியவும், அழகிய இலங்குகின்ற பற்கள் தோன்றச் சிரிக்கின்ற இனிய நகையும் உடையராயிருந்தனர். இவ்விருதிறத்தாரையும் கரையையும் வையையையும் நோக்கு கின்ற அழகு காண்டற்கு இனிது. ஓசையுடைய முழவின் இனிய கண்ணின் ஒலிக்கு எதிரே விண்ணின் கண் இடியேறு மாறி மாறி முழங்கிற்று. விரும்பப்படும் பாலையாழின் ஒலிக்கு மாறாகப் புகர் நிறமும், வரியுமுடைய வண்டினம் பூங்கொம்பர்களினிடையே பாடின. ஊதுகின்ற நல்ல இனிய குழலுக்கு மாறாக மலரிடத்திற் தாதூதும் உயர்ந்த சாதி வண்டினங்கள் பாடின. தாள அறுதிக்கு ஆடுகின்ற விறலி யரின் ஆடலை ஒப்ப பூங்கொத்துக்களுடைய மெல்லிய கொடிகள் காற்றுக்கு அசைந்தன. இனிய புனல் உடைய அழகிய மருத முன்றுறை யிடத்து இவ்வாறு ஒன்றோடு ஒன்றுமாறு கொள்ளும். பூங்கொத்துகள் பொலிந்த தழைத்து அசைகின்ற கரிய கூந்தலை யுடைய மகளிர் தங்கள் கணவரின் தோளிற் சாய்ந்து தழையும் மலரும் துவளுகின்ற கொடிகள் போலாயினர். திருமால் வானிடத்து ஆர்க்கின்ற முகில் மழை வளம் பெருகும்படி தேன் கூடு பொருந்திய மலையிடத்தே படியும். அம்மழைநீர் நான்மாடக் கூடலிலுள்ளார் எதிர்கொண்டு ஆடித் தம் வினையைப் போக்குவதற்கு மருந்தாகத் துறையிடத்தே பொலியும். இவ்வகையான துறையுடைய இருந்தை யூரிடத்து அமர்ந்த செல்வ! அடியேங்களது தலைமீது நின் பாதங்கள் பொருந்தும்படி வணங்குகின்றேம். ஒருபக்கத்தே அழகிய மலருடைய வேங்கையும், கடம்பும் மகிழும் முறுக்கவிழ்ந்த மலருடைய அசோகும் உலர்ந்து செறிந்து பொங்குதலால் நீல நிறங்கொண்ட மலை விளங்கும். ஒரு பக்கத்தே, தண்ணிய நறிய தாமரைப் பூவின் அழகிய நிரையாகிய இதழ்களிடத்து வண்டுகள் ஊதுதலின் விண்ணில் வான்மீன் பரந்த தோற்றமுடைய தடாகம் அழகு செய்யும். ஒரு பக்கத்தே விழா எடுக்கும் ஓசைக்கு மாறாக, எழும் உழவர் உழும் ஓசையைக் கேட்டு செவிடு பட்டுத் திரிந்து நாற்று நடுவோர் கூட்டமாக நிற்கும் செல்வம் மிகுந்த வயல்கள் பரந்து கிடக்கும். ஒரு பக்கத்தே, அறம்புரிதலோடு வேதம் ஓதும் தவம் முதிர்ந்து உயர்ந்த புகழுடையராயும், தெளிந்த அறிவுடையராயும் ஒழுக்கத்திற் குறைவில் லாதவருமாயுள்ள அந்தணர் கூட்டமாக வாழும் மனைகள் பொலியும். ஒருபக்கத்தே, உண்பனவும், பூசுவனவும் அணிவனவும், உடுப் பனவும் அலங்கரிக்கும் மணியும் பொன்னும் மலைபடு கடல்படு திரவிய மும் ஆகிய பண்டங்களையும் - குற்றந் தீர்ந்த பயனைத் தருகின்ற நெசவுப் பொருட்களையும் வைத்து வியாபாரஞ் செய்யும் கடைவீதிகள் விளங்கும். ஒரு பக்கத்தே வன்புல மென்புலன்களை விளைவிக்கின்ற உழவரும், அவர் கீழ்க் குடிகளாகிய களமர்வாழும் வீதிகளிருக்கும், பிறபக்கங்களில் இவை போன்றனவும் காட்சிக்கு இன்பம் அளிக்கும் நல்ல அழகிய வீதிகளும் விளங்கும். கைவளை ஒலிக்க வண்டு பொரேரென்று எழுகின்ற மிகுந்த தேன் வடியும் பூக்களை வேய்ந்த கூந்தலும், குழை அணிந்த காதும், குண்டலத் தின் ஒளிபட்டு விளங்குகின்ற நெற்றியும் ஊருகின்றதும் தோட்டியால் அடக்கப்படுவதுமாகிய யானையை ஒத்த மைந்தரும், பின்னி முடித்த கூந்தலும் வரிந்து கட்டிய வில்போன்ற புருவமும் விளங்குகின்ற ஆபரண மும் ஒடுங்கி விளங்குகின்ற நெற்றியும் அழகும் நாணும் உடையோரு மாகிய அழகிய மகளிரும் நின்கோயிலிடத்தே கூடுவர். இன்னும் இடபத்தை ஒத்த நடையுடையோரும் மிருதுவான நடையுடையோரும் கடலின் நிரைத்த திரையும் நுரையும் போன்று கருநரையினரும் விளங்கு கின்ற சந்திரனின் கதிர்போன்று அறநரைத்தோரும் சமைத்தற்குரியனவும் குடையும் புகையும் பூவும் ஏந்தி இடையே ஈவு இன்றி நின் பாதங்களை வணங்குதற்கு நெருங்கிக் கூடுவர். அவ்விடத்திற் கூடுதலாகிய வினையின் விளைவைப் பெற்றவர் வினையின் பெரிய பயன் நுகரும் அசைவில்லாத பெரிய சிறப்புடைய சுவர்க்கத்தை ஒத்தது, விளங்குகின்ற பெரிய சிகரமுடைய மலையிடத்து வீற்றிருக்கும் திருமாலின் கோயில். வண்டும் தும்பியும் இனிய நரம்புடைய யாழோடு ஆர்த்தன. உயர்ந்த மதமுடைய யானைகள் மேகத்தோடு ஆர்த்தன. நிறைந்த அருவிகளோடு பெரிய முழவுகள் ஆர்த்தன. செவ்வரி பரந்த கண் ணுடைய மகளிரோடு ஆடவர் கூடி விருப்ப மிகுந்த பாடலும் ஆடலும் புரிந்தனர். காம பானத்தோடு காம மகிழ்ச்சி மலர்ந்தது. சிவந்த நறவமல ரோடு கண்கள் சிவந்து காம விருப்பம் மிகுந்தது. நின்னுடைய மலை யிடத்தே ஆபரணங்களணிந் தோரும் பூச்சூடிய முடியுடையோருமாகிய நாகரது நகர் போல இவையும் இவை போன்றன பிறவும் பொருந்தும். நீலமணி போன்ற தன்மையைப் பெற்றுச் சுருண்டு தழைத்து நீண்டு விளங்குகின்ற புகழப்படும் கூந்தலிடத்துச் சூடிய முறுக்கவிழ்ந்த மலர்களின் தெளிந்த விளக்கமும், விளக்கமுடைய வண்டுகள் தேனை நுகரும் மலரின் அழகை உண்ட கண்ணும் ஒள்ளிய நெற்றியுமுடைய மகளிர், நீல மயிலின் நடையோடு மாறுபட்ட கடிய ஆண்யானையின் நடையுடைய மைந்தரோடு எல்லா அழகும் பொருந்திய பழைய புகழ் பொருந்திய மலையிடத்தே அதற்கேற்ப அமர்ந்தவனது கோயிலிடத்து வந்து விரைவிற் றமது துன்பம் நீங்க வழிபடுவர். விளங்குகின்ற பாற்கடலைக் கடைந்த காலத்து சேடன் மாமேரு மலை விளங்க அதனைப் பிடுங்கி அழகிய சிரசில் வைத்து மீன் துள்ளு கின்ற கடலிடத்தே நாட்டினான். நாட்டித் தான்-தேவர் அசுரர் என்னும் இருதிறத்தோர்க்கும் அமுதுகடைய இரண்டு பக்கத்துக்கும் கடைக யிறாயினான். கடைகயிறாகிய பெரிய வடத்தைத் திருமால் கடைய ஒரு தோழங்காலம் வலி குன்றாது கிடந்தான். அவன் இயமனின் பெரிய வலியை ஒத்தவலிமையைப் பூண் டோன்; அழகிய பணிவில்லாத வலிய இடப வாகனன் முப்புரத்தை எரித்தபோது உயர்ந்த இமய வில்லுக்கு நாணாகிப் பழைய புகழைப் பூண்டான். இத்துணைய புகழமைந்த சேடன் ஆயிரந்தலையை விரித்து இருக்கும் பாம்புகளாகிய சுற்றத்தை யுடைய கடவுளைத் துதித்து யாமும் எம் சுற்றமும் நின்னைப் பிரியா திருக்க வேண்டுமென்று வணங்குகின்றேம். வையை பெரிய நிலந்தோன்றாது மிகுந்த மழை பெய்தது. உயர்ந்த வானம் மயங்கி மிகுந்த மழை பெய்தலும், உயர்ந்த கரிய நாக மலையிடத்துள்ள நறியமலர் பலவற்றின் வாசனையோடு வையை கூடலிடத்தே வேகமாக வந்தது. கூடலிலுள்ளார் வையைப் புதுப்புனலால் அழகு பெற்றதென்ற ஆட விரும்பினர். மாலை அணிந்து மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் ஒன்று சேர்ந்தனர். ஊரிடத்துள்ளோர் ஒருவரைப்போல் ஒருவர் தம்மை அலங் கரித்தனர்; கடைவீதி, நிறமொன்றுபட்ட வெவ்வேறு நீர் விளை யாட்டுக்குரிய மக்களால் நிறைந்தது. கையினாற் தொடுத்த மாலையும் கண்ணியும் சூடியோரும், அழகிய நறும்புகை ஊட்டியோரும் அழகிய ஆடை உடுத்து நெய் பூசிய கூந்தலரும் ஆகிய தளிரின் இயல்பையுடைய மகளிர் யானை மிசையராய் விரைந்து சென்றனர். செருக்குடைய குதிரைகளின் மீதும், அழகிய வண்டியும் தேரு மாகியவற்றை ஊர்ந்தும் மகளிர் எவ்விடத்தும் கூட்டங் கூட்டமாக நெருங்கிச் சென்றனர். வண்டியிடத்தே உடம்பைச் சட்டை யால் மறைத்துச் செல்வோராயும், கூடுவாராயும் ஊடலொழிப்போரா யும், ஊடுவாராயும், ஆடுவாராயும், பாடுவாராயும், ஆரவாரஞ்செய்வாரா யும், நகை ஆடுவோராயும், நகையாடி ஓடுவோராயும், ஓடித் தளர்வோ ராயும், உறவினரைத் தேடுவாராயும், தேடி ஊரிடத்தே திரிவோராயும், அவரைக் காணாது கற்றாரும் கல்லாதவரும் கீழ் மக்களும், பெற்றாரும், கணவரைப் பிழையாத பெண்டிரும் பொன் தேருடைய பாண்டியனது கூடலிடத்தும் வையைத் துறையிடத்தும் அளவிடற்கரியர். துறையாடுகின்ற தங்கணவரின் தோள் புணையாக ஆடுகின்ற பரத்தையரை, அவர் மனைவியர் மயக்கத்தால் அறியார். என்னே இந்நிகழ்ச்சி எம் முன்னே நிகழா நின்றது என பிறை ஒத்த நெற்றியுடைய அவர் மனைவியர் எல்லோரும் தங்கணவரோடு ஊடி அப்பரத்தையரைக் கண்டிப்பர். அகன்ற வையைத் துறையிடத்து ஆடும் தன் கணவனின் மாலையை நீர் கவர்ந்து அயலே நின்றாள் ஒருத்தியின் கூந்தலிற் சூடிற்று. அதனைக் கண்டு தாவென்று அவனது காதலி கேட்டாள். புனல் வலியத் தந்து என் கூந்தலை வேய்ந்தது. வருந்துகின்ற, ஆபரமணிந்தவளே அதற்கு வருந்தத் தக்கதைத் செய்யேன். இவ்வழகு போதல் உண்டு என்று அறிந்து புனல் செய்ததோ! இது பெரும் வியப்பாக யிருந்தது, என்று கூறினாள். அது கேட்ட தலைவி, மிருதுவாகிய பூத்தந்த காதற் கிழமையால், விரும்பத்தக்க நல்லவளின் அழகிடத்தே முயங்கிக் கூடும் கூட்டம் உண்டாகும். இப்புனலும் அவளுக்குத் துணையாய் நின்றது. மாலையை நீரிடத்து விட்டோய்! நீ அவட்குத் துணையாயிரு, உயர்ந்த சிறப்புடைய பாண்டியன் அணியும் மாணிக்கம் போன்று அழகிய மேனியும், முத்துப் போன்ற எயிறும், அழகிய பவழம் போற் சிவந்த வாயும், அறக் கற்பு முடைய பெண்டிர் நவரத்தின மாலை யணிந்த தமது கணவரோடு ஆடுதல் வையைப் புனலிடத்து ஒழிவின்றாகும். புனலின் ஊடே போகின்ற ஓர் பூ மாலைகொண்டை யிடத்த தாதல் ஊழ் வகையினால் ஆயிற்றென்று ஏற்றுக்கொள்ளும் இயல் புடைய புனலிடத்தே, பரத்தையர்க்கு நாட்டார் அறியும்படி பூமாலை யைச் சூட்டி நினைவாரின் நெஞ்சை வருத்தும் கொடுமையோடு, கூடுதலின் முன் நிகழும் ஊடல் கூடித் தீர்ந்த விடத்து, ஊர் அவரைக் கேட்டு மறுபடியும் ஊடாளோ எனும்படி வண்டுகள் மொய்க்கும்படி கள்ளு நிறைந்தது. வண்டு மொய்க்கின்ற கள்ளையுடையது இவ்வாறெனப் பார்ப் பார் அதிற் படியாது சென்றனர். மைந்தரும் மகளிரும் மணமுடைய பொடிகளைத் தூவினரென்று அந்தணர் தோயா தொழிந்தனர்; தேன் பொருந்தியமையால் வையை நீர் வழுவழுப்புற்றதென ஐயர் ஆற்றில் வாய்பூசாதொழிந்தனர். வாசனை கலந்த ஒலிக்கின்ற நுரையோடு கரைவழியே ஊர்ந்து செல்லும் புனலும், ஊரிடத்தே வருகின்ற புனலும், மலைகளினின்று கடலுள் ஓடுகின்ற புனலும், நுரையோடு மதகுதோறும் ஓடுகின்ற புனலும் கரைபுரண்டு கடலிடத்தே செல்லும். இவ்வாறு செல்கின்ற வெள்ளத்தின் மிகுதி ஓய்வின்றாகும். மணி அணிந்த யானை மீது மைந்த ரும் மகளிரும் ஒருமித்து நிரை நிரையாகச் சென்று கூடினர். உயர்ந்த மணிகட்டி யானையுடைய நூல்வல்ல பாணன் மருதமுன்துறையின் முன்புறத்தை அடைந்து பாணரோடு பிணித்த யாழிடத்தே தெளிந்த மருதப் பண்பாடுவன். பாடிப் பாடிப் பாய்கின்ற புனலிடத்தே நீராடுவன். கணவரோடு தலைவியர் ஊடுவர்; பின் ஊடல் தீர்க்கத் தீர்ந்து கூடி மகிழ்வர்; மகிழ்ந்து ஒருவரை ஒருவர் தேடி இளைப்பர்; ஒருவரை ஒருவர் தொழுது மகிழ்வர். நீர் நிறைந்த வைகை யித்தன்மையின தாயிருந்தது. கிழக்கேயுள்ள அறிவுடையீர்! மிகுந்த அழகுடைய மங்கையரும் மைந்தரும் ஆடி ஒலித்த இந்நீர் முழுவதும் எச்சிலாகிச் சாந்தும் கமழ்கின்ற மாலையும் சுண்ணமும் பெண்களின் கூந்தலும் ஆண்களின் பித்தையும் வாடிய பூவும் அல்லாது இவ் வையையாறு நீர் நிறந் தோன்றாது. மழை நீர் வற்றிய குளத்து வாயலம்பி ஆடிய குங்கும நிறமுடைய அழுக்கடைந்த கலங்கல் நீர் போன்றது வையை. அச்சந்தரும் கொல்லும் யானையும் உயர்ந்த தோளுமுடைய பாண்டியன் அழகிய கூடலிடத்தவரோடு வையையின் வருகின்ற புதுப் புன லாடிய தன்மை, இப்பெரிய லோகத்தில் உவமிக்கும் பொருளில்லாத பெருமையுடைய ஆகாய கங்கையிடத்து ஆயிரங்கண்ணுடைய இந்திரன் ஆடியது போலாகும். மதுரை புலவர்களது புலமையாகிய தராசின் ஒரு தட்டில் இவ்வுலகத்தை வைத்து, மற்றொரு தட்டிற் தன்னை வைத்து நிறுக்க உலகமுழுவதும் மிதக்கத்தான் பாரத்தினாற் தாழுந்தன்மையுடையது நான்மாடக் கூடல். திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும் அழகிய கூடல்! அப்பூவின் இதழை ஒத்தன வீதிகள். இதழகத்தே இருக்கும் காய் போன்றது பாண்டியனது அரண்மனை. தண்ணிய தமிழ்க் குடிகள் அதன் தாதை ஒப்பர். தாதை ஊதும் வண்டை ஒப்பர் பரிசில் பெறும் புலவர். எமது ஊர், பிரமாவின் நாவிற் பிறந்த வேதங்களை ஓதும் குரலைக் கேட்டு எழுவதல்லது, சேரரது உறையூரையும், சோழரது வஞ்சியையும் போல கோழியின் குரலைக் கேட்டு எழாது. தண்ணிய தமிழை வேலியாகவுடைய தமிழ்நாட்டின் இடமெல் லாம், நின்று நிலைபெற்றுப் புகழ் பெருகுதலல்லது, மதுரையிடத்துக் கொடி கட்டிய தேரையுடைய பாண்டியனது பரங்குன்று நிலைபெறு மட்டும் குறைவு படுதலுண்டோ? திருமகளுக்கிட்ட திலகம் போல உலகம் விளங்கும்படி புகழ் பூத்தலல்லது, மதுரையிடத்து அலங்கரித்த தேரையுடைய பாண்டியனது வையை உண்டாமளவும் பொய்யாதலுண்டோ? கார்த்திகைப் பெண்களின் காதிற்றூங்கும் கனமுடைய மகரக் குழைகளைப் போல் அழகாக விளங்கிச் செல்வம் மிகுதலல்லது மதுரை யிற் கொடி கட்டிய தேருடைய பாண்டியனது சொல் உள்ளளவும் வறுமை உண்டாகுமோ? ஈவாரைப் புகழ்ந்து ஏற்பாரைப் பார்த்து மகிழும் அழகிய மாடங் களையுடைய கூடலும் செவ்வேள் பரங்குன்றுமாகிய இடங்களில் வாழ்வாரே புத்தேள் உலகு போவார். உரைச் சிறப்புப்பாயிரம் 1சிவபெருமான், தலைமையுடைய அகத்தியன். கூரிய வேலுடைய குமரன் முதலிய திருந்திய தமிழ்ப் புலமையுடையார் அரிய தமிழ் நூல்களை ஆராய்ந்த சங்கம் என்னும் உயர்ந்த கடலுள் பரிபாடலாகிய அமுதம் அரிதாக எழுந்தது. தமிழ் அரசர்களின் தடுமாற்றத்தால் குற்ற மில்லாத தமிழ் நூல்கள் நெடுங்காலங் கற்பாரின்றிக் கிடந்தன. அந்நூல் களின் பெருமையை அறிவுடையோர் நண்குணரவும் கந்தி என்பவர் நூல்களின் இடைஇடையே பாடிச் சேர்த்த பிழையும், ஏடெழுதுவோர் பொருள் தெரியாமல் எழுதிய பிழையும் பாடகர்களால் நேர்ந்த பிழை யும் ஆகிய இவை திருந்திய அறி வுடையோரின் செவியை வெதுப்பலின்., சிறிது கற்றோர்க்கும் தெள்ளிதிற் பொருள் தோன்ற, அறிவின் தகைமை யை விதி முறையே பெருக்கியவரும், திருமால் மரபில் வந்தாருமாகிய பரிமேலழகர், அளவிடப் படாத சிறப்பொடு முன்னோர் பாடிய பாடலின் பொருளைச் சுருங்கிய பொருளில் விளக்கிக் காட்டினர். வண்டு பாடுகின்ற துளப மாலையணிந்த உயர்ந்த தோளாய்! பரிபாடலின் பயன் அழகிய நீலமலை இமயக் குன்றின் மீது வந்தாற் போல கருடன் மீது செல்லும் திருமாலே.  கலித்தொகை உரை முகவுரை சங்க காலப் புலவர்கள் பாடிய பாடல்கள் பாட்டானும் அளவா னும் வகையானும் வெவ்வேறு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அந்நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும். எட்டுத் தொகை நூல்களாவன: “நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியே யகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை” என்பனவாகும். தொகை நூல்கள் தமிழ்ச்சங்கத்தின் இறுதிக் காலத்திற் றொகுக்கப் பட்டன வென்பது ஐதீகம். இந்நூல்களிற் சிலவற்றைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர்களின் பெயர்களும் கூறப்படுகின்றன. 1கலித்தொகை நூலைத் தொகுத்தவர் ஆசிரியர் நல்லந்துவனார் என்று நச்சினார்க்கினியர் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையிற் குறிப்பிட்டிருக் கின்றார். இன்னும் இவ்வாசிரியர் நெய்தற் கவி 25ஆம் பாடல் உரையில் “தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார்” எனக் கூறி யிருக்கின்றார். இவ்வுரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் முழுவதையும் ஆசிரியர் நல்லந்துவனார் ஒருவரே செய்தார் என ஒரு சாரார் கூறுவர். இன்னொரு சாரார் அற்றன்று நல்லந்துவனார் கடவுள் வாழ்த்தும் நெய்தற் கலியுமே செய்தார்; ஏனைய பாடல்களைப் பிறர் செய்தனர் என மொழிவர். கலித்தொகை முதற்பதிப்பு இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் 1887ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அக் காலத்து இந்நூற் பதிப்பாசிரியர் ஒப்பு நோக்கிய ஏட்டுப் பிரதிகள் பலவற் றுள் ஒன்றிலேனும் இந்நூலை ஆக்கிய புலவர்களின் பெயர்களைக் குறிக்கும் செய்யுளோ உரையோ காணப்படவில்லை. பிற்காலத்தில், “பெருங் கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்- அருஞ்சோழன் நல்லுத் தீரன்முல்லை நல்லந்துவ னெய்தல் கல்விவலார் கண்ட கலி” என்னும் வெண்பா ஒன்று வெளிப்பட்டது. இவ்வெண்பாவை ஆதார மாகக் கொண்டு, பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிள நாகனார், சோழன் நல்லுத்திரன், நல்லந்துவனார், ஆகியோர் கலித்தொகையின் ஒவ்வோர் பகுதியைச் செய்தனர் என்று வழங்குகின்றது. இச் செய்யுளை ஆதாரமாகக் கொள்வது தவறென்றும் அது பெயரறியப்படாத எவராலோ அண்மையில் எழுதப்பட்டதாகும் என்றும் ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். கலித்தொகைப் பாடல்களிற் பல, ஒன்றை ஒன்று பார்த்துச் செய்யப்பட்டன போலவும் சொன்னதையே திரும்பச் சொல்வனவாகவும் காணப்படுதலின் அவற்றை எல்லாம் ஒரு புலவரே செய்தாரெனல் பொருந்தாது. கலித்தொகை என்பது பல வேறு காலங்களிற் பலராற் பாடப் பட்ட செய்யுட்களின் தொகுப்பாகும். பரிபாடலொழிந்த ஏனைய சங்க நூல்களைப் பயில்வார்க்குக் கலித்தொகை பிற்பட்ட நூலாதல் தெற் றென விளங்கும். இறையனார் அகப்பொருள் உரையில் கலித்தொகை, தொகை நூல்களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இறையனார் அகப் பொருள் உரை கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகாது. இந்நூலின் காலத்தைச் சிலப்பதிகார காலத்தது என்று கூறுதல் பிழையாகாது. சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் புராணக் கதைகள் வர ஆரம் பித்திருத்தலைக் காணலாம். சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புராண மதம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையில் தலையெடுத்ததென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமன் கிரேக்க தெய்வமென்றும் அத்தெய்வத்தைப் பற்றி உரோம ரும் இந்திய ஆரியரும் கிரேக்கரிடமிருந்தும் தமிழர் ஆரியரிடமிருந்தும் அறிந்தன ரென்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர்.1 கலித்தொகை, காமனைப் பற்றியும் அவன் தம்பி சாமனைப் பற்றி யும் அவன் கொடி, கணை, ஊர்திகளைப் பற்றியும் பல் லிடங்களிற் கூறு கின்றது. காமன் திருமாலின் மகனென்றும் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலுள்ள செய்யுட்களை நோக்குமிடத்து இந்நூலிலுள்ள பாட்டுகளை 150 ஆக்குவதற்காகத் தொகுப்பாசிரியர் பலவகைக் கிளை பெருந்திணைச் செய்யுட்களை வலிந்து இந்நூலிற் சேர்த்திருக்கின்றா ரென்று விளங்கும். இதற்கு உதாரணம் நெய்தற்கலியின் ஈற்றில் வந்துள்ள சில செய்யுட்களாகும். இந்நூல் ஏனைய சங்க நூல்களைவிடக் காலத்திற் பிற்பட்டதாயி னும் பல்லிடங்களிற் பொருள் விளங்கிக் கோடற் கருமையுடையது. “இம் மகான் இதற்கு உரை எழுதிவையாதொழியின் இந்நூலைப் படித் துணர்தல் இக் காலத்தார்க்கு இசையாது. ஆகவே இத்தமிழ் நமக்கு நச்சினார்க்கினியர் இட்டதோர் பிச்சையென்றுணர்க” என்று இந் நூலின் முதற் பதிப்பாசிரியர் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் இந்நூலுக்குச் சொல்லுக்குச் சொல் உரை எழுதாது பொருளைத் திரட்டி விரித்துக் கூறி விளங்க வைத்திருக் கின்றனர். நச்சினார்க்கினியரின் உரையைப் பின்பற்றிக் கலித்தொகையிற் கூறப்பட்ட பொருள்களைத் தொடர்பாக விளங்கிக்கொள்வது எல் லார்க்கும் எளிதன்று. யாம் முன் எழுதியுள்ள சங்கநூல் வசனங்களைக் கற்றோர், எல்லாச் சங்க இலக்கியங்களையும் இலகுவான வசன நடைப் படுத்தித் தனியாகச் சங்க நூலாராய்ச்சி என ஒன்றும் வெளியிட வேண்டுமெனத் தூண்டி வருகின்றனர். அவற்றை எல்லாம் ஓர் ஆண்டிற் றானே முடிக்கும் வல்லமையை அளிக்குமாறு எல்லாம் வல்லஇறைவன் றிருவருளை வேண்டுகின்றேன். நவாலியூர் இங்ஙனம் 1.4.1941 ந.சி.கந்தையா நச்சினார்க்கினியர் “பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற வெச்சினாற் றிசையு முண்ணு மமிழ்தென வெழுதா வெச்சின் மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போத னச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் ” புலவர் உச்சிமேற்கொள்ளும் நச்சினார்க்கினியர் பாண்டிவள நாட்டிலே மதுராபுரியிற் பிறந்தவர்; அந்தண மரபினர்; பாரத்துவாச கோத்திரத்தினர்; சைவ மதத்தினர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், ஆளவந்தபிள்ளை ஆசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவர் உரையில் எடுத்துக் கூறப் படுகின்றமையின் , இவர் அவர்கள் காலத்தவர் அல்லது பிற்பட்டவர் ஆதல் வேண்டும். பரிமேலழகரும் இவரும் ஒரே காலத்தவர்களென்றும் கருதப்படுகின்றனர். பரிமேலழகர் கொள்கையை இவர் திருமுருகாற்றுப் படை உரையில் மறுத்திருக்கின்றார். திருமுருகாற்றுப்படை பதினோராந் திருமுறையின் ஒரு பகுதியா யுள்ளது. திருமுறை நம்பியாண்டார் நம்பியாரால் வகுக்கப்பெற்றது. நம்பி யாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டென்பர். திருமுரு காற்றுப் படை பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதை அவர் கூறவில்லை. ஆகவே, நச்சினார்க்கினியர் திருமுறை வகுப்பதற்கு முன் னிருந்தவராதல் வேண்டும். இன்றேல் திருமுருகாற்றுப்படை திருமுறை யுட் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டதாதல் வேண்டும். உரை ஆசிரியர்களின் காலம் பன்னி ரண்டாம் நூற்றாண்டுக்கும் பதினான்காம் நூற்றாண்டுக் கும் இடையிலென இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். பத்துப்பாட்டு, தொல்காப்பியம், கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகையிற் பேராசிரியர் பொருளெழுதாதொழிந்த இருபது செய்யுள் முதலிய நூல்களுக்கு இவர் உரை செய்தனர். இதனைக் கீழ்வரும் வெண்பா விளக்குகின்றது. “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு மாரக் குறுந்தொகையு னைஞ்ஞான்றுஞ் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே” இவர் சீவகசிந்தாமணிக்கு முதன் முறை ஓர் உரை எழுதினார். அக்காலத்துப் புகழ் பெற்றிருந்த சைன வித்துவான்கள் அவ்வுரையை அங்கீகரித்திலர். அதுகண்டு இவர் அருகத நூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டாவது ஓர் உரை எழுதி அவர்களுக்குக் காட்ட அவர்கள் உற்று நோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக் கொண்ட னர் என்று சைனர் கூறுவர். இவர் தொல்காப்பிய உரை முதலியவற்றில் வேதம் வேதாங்கம் முதலிய நூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும் பற்பல பொருள் களை எடுத்து ஆங்காங்கு நன்கு காட்டிப் போகின்றனர். அதனால் இவர் வடமொழியிலும் மிக்க பயிற்சி யுடையவரென்று சொல்லுவதுடன் பலவகையான கலைகளிலும் வல்லுநரென்று சொல்ல இடமுண்டு. இவர் காலத்தில் பரிமேலழகர் உடனிருந்தாரெனக் கூறுவோர் “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே-உடம்போ டுயிரிடை நட்பு” என்னும் குறளில் ‘குடம்பை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் கூடு எனவும், பரிமேலழகர் முட்டை எனவும், பொருள் கூறினர் எனவும் நச்சினார்க் கினியர், பரிமேலழகர் உரையைப் புகழ்ந்தனரெனவுங் கூறுவர். 1பாற்கடல்போற் பரந்த நல்ல நூல்களின் உயர்ந்த பொருள்களை நுண்ணிதாகக் கற்றுணர்ந்த குற்றந்தீர்ந்த கேள்வியுடைய புலவர்கள் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பொதிந்த நூல் களைச் செய்தனர். நச்சினார்க்கினியர் அந்நூல்களை யெல்லாம் துறை போகக் கற்றறிந்த சிந்தையுடையவர். எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன்றும் இழுக்கின்றி அமைந்த திருந்திய பழைய புகழுடைய தொல்காப்பியம் என்னும் ஆழ்ந்த கடற்பரப்பை நாவாய் கொண்டு கடந்து பெரிய கரையை அடைதலரிது. அதனைக் கற்றுக் கரைகாண மாட்டாத கல்லா மாந்தர் கற்றுக் கரை யேறுதல் வேண்டியும். நல்ல அறிஞர் விரும்புதல் வேண்டியும், மறுவுங் குறையுமின்றிக் கதிருடைய கலை நிறைந்த முழுமதி போல, இவர் காண்டிகை உரை செய்தார்; பண்டையோர் புகழ்ந்த நூல்களை ஆராய்ந்து சான்றோர் பாடிய தண்ணிய தமிழின் சுவையைக் கற்போர் விளங்குமாறு பத்துப்பாட்டுக்குத் தெள்ளிய உரை எழுதினார். கடல் சூழ்ந்த உலகில் அறிவுடையோர் பயிலுங் கலித்தொகைக் கருத்தினை விளக்கியும், உள்ளுறை உவமம் ஏனையுவமம் உரிப்பொருள் மெய்ப்பாடு வினை முடிவு முதலியவற்றைக் காட்டியும் யாவரும் போற்ற இனிய உரை எழுதினார். இவர் உலகம் புகழ்ந்து கொண்டாடும் சிந்தாமணிக்குத் திருத்தக்க தேவரின் கருத்து இதுவென நுண்ணுரை செய்த புலமையுடைய ஆசிரியர்; பேராசிரியர் உரை எழுதாதொழிந்த குறுந்தொகையின் இருபது பாடல்களுக்கும் உரை செய்த புகழமைந்த மறையோர்; எட்டுத் திசைகளிலும் புகழ் விளங்க, வண்டு ஒலிக்கும் சோலையுடைய மதுரா புரியிற் றோன்றிய ஆசிரியர். பாரத்துவாசி கோத்திரத்திற் தோன்றியவ ரும், நான்மறை துணிந்து கூறும் நற்பொருளாகிய ஞானம் நிறைந்தவரு மாகிய சிவச்சுடர்; தனக்குத் தானே ஒப்பாகிய தன்மையும் மெய்ம்மையு முடைய நச்சினார்க்கினியன் என்னும் பெயரோர். இருவினைகளையும் போக்கும் அருவியுடைய பொதிய மலையிலிருக்கும் குறுமுனிவர் ஆராய்ந்த தமிழ் விளங்கத் தோன்றிய அவர் புகழ் இவ்வுலகில் ஊழி காலம் விளங்குவதாக. “எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன் பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன் எவன்பரம உபகாரி யெவ னச்சி னார்க்கினிய னெனும் பேராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ” (இ-ள்) எவன் மதுரையிற் பிறந்து அமுதவாயன் என்று சொல்லப் பெற்றோன்? எவன் பழைய நூல்கள் இறந்து போகாது நிலவ உரை யெழுதி அளித்தோன்? எவன் பெரிய உபகாரி? எவன் நச்சினார்க்கினியன் எனும் பெயருடையோன்? அவனது பாதங்களாகிய இருமலர்களும் என்னகத்து எப்பேதும் மலர்வனவாக. கலித்தொகை வசனம் 1கடவுள் வாழ்த்து ஆறு அங்கங்களையும் அறியும் அந்தணருக்கு அரிய வேதங்கள் பலவற்றை அருளிச் செய்தவரும், தெளிந்த கங்கையின் நீரைச் சடையிலே அடக்கியவரும், முப்புரங்களில் தீயைச் செலுத்தியவரும், வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாமல் நிற்கின்றவரும், வேகமுடைய காளியின் பிறங்கிடாத போரினையும், நீலமணி போலும் கழுத்தினையும் 2எட்டுக் கைகளையும் உடையவருமான கடவுளே! இப்பொழுது யான் கூறுவதைக் கேட்டருள்க. உமது கையிடத்துள்ள ஒலிக்கின்ற பறை பல வாத்தியங்களின் ஒலியையும் ஒலிக்கும். அப்பொழுது பல வடிவங்களையும் உன்னிடத்தே ஒடுக்கிக்கொண்டு மற்றவர்கள் காணுமாறு தோன்றி கொடு கொட்டி என்னும் ஆடலைப் புரிவாய். அப்போது பக்கம் உயர்ந்த அல்குலும் கொடி போன்ற இடையும் உடைய உமாதேவியாரோ கால அறுதி உடைய சீர் என்னும் தாளத்தைக் கொட்டுவாள். (கடவுளாகிய நீர்) மிகுந்த போரில் முப்புரங்களை வென்றீர். அவ் வலிமையினால் முப்புரத்தவர் வெந்து வீழ்ந்த சாம்பலைப் பூசினீர்; பூசிப் பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடுமிடத்து மூங்கில் போன்றதும் அழகியதும் அணைபோன்றதுமாகிய மெல்லிய தோளும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடையவளோ அக்கூத்துக்குரிய தூக்கு என்னும் தாளத்தைத் தருவாள்? கொலைத் தொழிலுடைய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்து, கொன்றைமாலை தோளிற் கிடந்து அசைய பிரமனின் தலையை உள்ளங் கையில் ஏந்தி கபாலம் என்னும் கூத்தை நீர் ஆடும்போது முல்லை முகை போன்ற பற்களுடைய உமாதேவியாரோ தாளத்தை ஆரம்பிக்கும் பாணியைத் தருவாள். அழித்தற் றொழிலைச் செய்கின்ற காலத்துப் பாணி தூக்கு சீர் என்று சொல்லப்படுகின்ற இவற்றை, பெருமை தங்கிய ஆபரணங்களை அணிந்த உமாதேவியார் தந்து காக்க ஆடுவீர். அவ்வாறு ஆடுகின்ற உருவம் இல்லாத பொருளாகிய நீர் எமக்கு ஒரு வடிவைக்கொண்டு இருப்பீர். சீர் தூக்கு பாணி என்பன தாளத்தின் உறுப்புகள். பாலைக்கலி தொல்காப்பியர் பாலைக்கு நிலம் கூறிற்றிலர். “முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து - நல்லியல் பழிந்து நடுங்கு துயருறுத் துப் - பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” என இளங்கோவடிகள் கூறினர். அரேபியா, ஆபிரிக்கா, வடஆசியா முதலிய தேசங்களிற் காணப் படுவன போன்ற பாலைவெளிகள் தென்னிந்தியாவில் இருக்கவில்லை. ஆகவே முதுவேனில் வெப்பத்தினால் கூவலுங் குளமும் வற்றி புல் பூண்டுகளும் மரஞ் செடிகளும் கரிந்து கிடக்கும் முல்லை குறிஞ்சி நிலங்கள் பாலை எனப்பட்டன. பிற தேசங்களிற் பாலைவன வாசிகள் இன்றும் கூடாரங்களுடன் இடம்விட்டு இடம் பெயர்ந்து வாழ்கின்ற னர். தென்னிந்தியாவில் பாலை நிலங்களில் வாழ்ந்தோர் வில்லம்புடைய ராய் மிருகங்களை வேட்டையாடி அவற்றின் ஊனை உண்டும், வழிச் செல்வோரிடம் கொள்ளையடித்தவற்றைக் கொண்டும் நிலையில்லாத வாழ்க்கை நடத்தினர். இது பற்றிப் போலும் பாலைக்குப் பிரிதலாகிய உரிப்பொருள் உரிமையாக்கப்பட்டது. காதலரின் பிரிவைப் பொரு ளாகக் கொண்டு பாடப்படும் அகப்பொருட் பாடல்கள் பாலைத் திணை யின் பாற்படும். அப்பாடல்களில் பாலை நிலத்தின் இயல்பு நன்றாக வருணிக்கப்பட்டிருத்தல் காணலாம். பிரிதலில் மூன்று வகை உண்டு. (1) தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்துமிடத்து பொருள் தேடுதல், அரசர் கருமம் கல்வி என்னும் யாதானும் ஓர் கருமம் பற்றிப் பிரிதல் (2) ஒரு தலைவியிடத்து இரகசியக் காதல் ஒழுக்கங்கொண்ட தலைவன் அவளை வரைந்து கொள்வதன் முன் பொருள் தேடும் பொருட்டுப் பிரிதல். இது வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் எனப்படும். (3) களவொழுக்கத் தின் பாற்பட்ட தலைவன் பாங்கியின் உதவிபெற்று யாரும் அறியாமல் தலைவியைக் கூட்டிக்கொண்டு தன் ஊருக்கு ஏகுதல். இது உடன்போக்கு எனப்படும். அகப்பொருட் செய்யுட்களில் கூறப்படும் பொருள்கள் உண்மையாக நடந்தனவல்ல வாயினும் உலக வழக்கில் நடக்கக்கூடியன. ஒவ்வொரு செய்யுளும் அதனைப் பாடிய புலவரின் கற்பனா சக்தியைக் காட்டுகின்றது. 2 தலைவன் பொருள் தேடுதல் காரணமாகப் பிரிய எண்ணினான். அதனை அறிந்த தோழி தலைவியின் இயல்பை அவனுக்கு எடுத்துக் கூறி இவ்வியல் புடையவளைப் பிரியாதிருப்பதே பொருள் ஆகும் எனக் கூறி அவனது செலவைத் தடுத்தாள். இச்செய்யுள் இப்பொருள் பற்றியது. ஐயனே! இறைவன் ஆதியில் உலகங்களைப் படைக்கக் கருதினான். அப்பொழுது படைத்தற் றொழிலுக்கு உரியனாய் பழைய பிரமன் தோன்றினான். அவ்வயனும் மற்றும் தேவரும் (அவுணரால் நேரும் கொடுமையைப் போக்கும்படி) மூன்று கண்ணுடைய இறைவனை வந்து இரந்தனர். எல்லை யில்லாத வலியும். கோபித்துக் கூற்றுவனைப்போல் செய்யும் வஞ்சனையும் உடைய அவுணரை அழிக்கும் பொருட்டு இறைவன் திருவுள்ளங் கொண்டான். அவன், வஞ்சியாது எதிர்நின்று பொருதுகின்ற வலிமையோடு அவுணரது மூன்று மதில்களையும் பார்த்தான். அவன் கோபித்துப் பார்த்த கண்கள் போன்று சூரியன் விளங்குகின்ற மலையிடத்தே எரிக்கும். அது சுடுகையினால் மலை பிளக்கும். பிளப்புண்ட மலை பிறரால் கோபித்தற்கரிய மழுவையுடைய இறைவன் கோபிக்கையால் மூன்று மதில்கள் அழிந்து உதிர்வன போல் வீழ்ந்து போவார்க்கு வழி இல்லையாம்படி குறுக்கிட்டுக் கிடக்கும். நின்னை மறக்கமாட்டாத விருப்பமுடைய உன் காதலியை இவ் விடத்தே இறக்கும்படிவிட்டு இவ்வாறான வெப்பமுடைய தொலையாத வழி யிடையே பொருள் தேடும் பொருட்டுச் செல்ல நினைந்தீர். அவ்வாறு துணிந்த நீர் யான் கூறவதைக் கேட்பீராக. “முன் உண்டான பொருள் எல்லாம் கொடுத்துத் தொலைத்தேன். இனிப் பொருள் இல்லாதிருத்தல் இழிவாகும்” என்று கூறி மலையைக் கடந்து சென்று பொருள் தேடக் கருதினீர். அவ்வாறு தேடும் பொருள் நன்கு மதிக்கத் தக்கதாயினும், “யான் வருந் துணையும் நீ ஆற்றியிரு” என்று கூறி நீர் ஆற்றுவித்த நின்காதலி இளமை நிரம்பி யிருத்தலால் உம்மைப் பிரிந்து உயிர் வாழ மாட்டாள். நீ நிரம்பிய முயக்கத்தை விரும்புகின்ற தனங்களையுடைய இவளது மார்பைப் பிரியாதிருத்தல் நின்மனத்துக்குப் பொருளாய் இருக்குமாயின் அதுவே பொருளாகு மல்லது வேறு பொருளாகுமோ? “எம்மிடத்தில் பொருள் இல்லை. இரந்தவர்க்குச் சிறிதும் கொடாதிருத்தல் இழிவு” என்று இவ்வாறு கூறுகின்றீர். நீர் மலையைக் கடந்து போய் தேடக் கருதின பொருள் நன்கு மதிக்கப்படத் தக்க பொருள் ஆகும். ஆயினும். எங்கள் பழைய உழுவல் அன்பு வழுவாமல் வரும்” என்று நீர் கூறியதைக் கேட்டமையால் பிரியீர் என்று நினைந்து கூடினாள். தழுவு தலையே விரும்பின இளமைத் தன்மையுடைய அவளுடைய மார்பைவிட்டுப் பிரியாதிருத்தல் நினக்குப் பொருளா யிருக்குமாயின் அதுவே பொருளாகுமல்லது பிரிந்து செல்வது பொரு ளாகுமோ? “எமது இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் இல்லை” என்று சொல்லிக்கொண்டு வந்து பலர் இரப்பர்; அவர்களுக்குக் கொடுக்கா திருத்தல் இழிவாகும் என்று சொல்லிக் காட்டைக் கடந்து போய்த் தேடும் பொருள் நன்கு மதிக்கப்படும் பொருள் ஆகும். ஆயினும் அருந்ததிபோல் எல்லாரும் தொழுது வாழ்த்தும்படியான கற்பின் பெருமையும் காமச் செவ்வியும் உடைய அவளது தோள்களைப் பிரிந் திருத்தல் நின் மனத்துக்குப் பொருளாகுமோ? அவள் தோள்கள் பொருளாவதல்லது பிரிதல் பொருளாகுமோ? தோழீ! “யான் இவற்றை எல்லாம் உமக்குக் கூறும்படி அவள் அழகு அழிந்து வருந்த நீர் பொருள் தேடப் பிரிதல் அன்பன்று” எனக் கூறினேன். அச்சொல்லைக் கேட்டு நின் காதலர் அஞ்சினார்; பரிக் கோலாற் குத்தவும் நில்லாத யானை, யாழோசையைக் கேட்டு நின்றாற் போல அன்புற்றுத் தாழ்ந்து குற்றேவல் மகளாகிய என் வார்த்தையால் தடையுண்டு பிரிதல் தவிர்ந்தார். 3 தலைவன் தனது பிரிவைத் தோழிக் குணர்த்தினான். அவள் இதனை தலை மகளுக்கு உரைத்தாள். தலைவி மிகவும் ஆற்றாளாயினாள். தோழி அவளது ஆற்றாமையைத் தலைவனுக்கு உரைத்தாள். அவள் தலைவனை நோக்கி, “நீர் செல்லும் கானமே இடித்துரைக்கும் நண்பரைப்போல உம்மை விலக்கும்” என்று கூறி அவன் செலவினைத் தடுத்தாள். இப்பொருள் பற்றியது இப்பாட்டு. யான் உமது பிரிவைத் தலைவிக்கு உணர்த்தினேன். அதனால் அவளது முன் கையிற் கிடந்த வளைகள் கழன்றன. கண்களினின்றும் கண்ணீர் பெருகி வீழ்ந்து இமை நிறையும்படி கிடந்தது. பொறுக்கும் அளவினதல்லாத காம நோயினால் அவள் பொலிவு அழிந்தாள்; நெற்றியும் அழகழிந்தது; பக்கத்தே உள்ளவர்கள் அறமின்றி பழி வார்த்தைகளைக் கூறுவார்களென்று நினைந்து கூசினாள். நீர் செல்ல நினைந்த நீண்ட வழியின் வற்கட காலத்தை நினைந்தாள். இவள் தனது அழகு இழக்கும்படி பிரிய நினைந்த தலைவ! யான் கூறுவதைக் கேட்டருளும். “நீர் பிரியாதொழிதல் வேண்டும்; பிரியின் உம்மையே உயிராக வுடைய இவள் உயிர் வைத்திராள்.” என்று இவ்வாறு நாங்கள் பலவற்றைச் சொல்லி இரந்து வேண்டுகின்றோம். அவ்வாறாகவும் எமது வார்த்தைகளைப் பொருளாகக் கருதீராயின் இனி உம்மைச் செல்லாமற் றடுப்பன வழியிடத்துள்ள நீர் வற்றிய சுனையிடத்துக் கிடக்கும் இலைக ளோடு கூடிய வாடிய அழகிய மலர்களாகும். “நீர் விரைவிற் பிரிவீராயின் இவள் உறுப்புகள் மெலிந்து கெடும்” என்று உமக்கு ஏற்ற முறையில் நாங்கள் இரந்து வேண்டுகின்றோம். இவ்வாறாகவும் இவள் வருத்தத்தை அறிகின்றிலீர். இனி உம்மைப் பிரியாமற் றடுப்பன, நீர் செல்லும் நீண்ட வழியிடத்தில், தமக்கு ஆதாரம் என்று சேர்ந்து படரப்பட்ட மரம்வாட, அதனைச் சேருதல் கைவிட்டு வீழ்ந்து கிடந்த பூங்கொடிகளே. “நீர் சிலநாள் உடன் உறைந்து பின்னர் கை விடுதலை நினைந்தீ ராயின் இவள் இறந்து படுவள்” என்று கூறித் தாழ்ந்து வந்து இரந்து கொள்கின்றோம். அவ்வாறாகவும் பிரியுமாறு முயல்கின்றீர். இனி உம்மைத் தடுப்பன, நீர் போகத் துணிந்த வழியிடத்தின் மரங்களின் அழகு போக வாடிக் கிடந்த அழகிய தளிர் ஆகும். நாம் உமக்கு இவற்றைச் சொல்லவும் எமது வார்த்தைகளைக் கேளீராயினீர். இனி இவளைப் போல கண்டாருக்கு அருள் பிறத்தற்குக் காரணமானவற்றை மேலும் மேலும் காட்டி உமக்கு மேலாய் நின்று உண்மை கூறி இடித்துரைக்கும் நண்பரைப் போல நின் போக்கைத் தடுப்பன நீர் செல்லும் காடுகளாகும். 4 தலைவன் பொருள் வயிற் பிரிய எண்ணினான். அஞ்ஞான்று தோழி தலைவி செலவுக் குறிப்பு அறிந்தவாறும் அவளது ஆற்றாமையும் தலை வற்கு உணர்த்திச் செலவு தவிர்க்கும்படி வேண்டினாள். இச்செய்யுள் இப் பொருள் பற்றியது. நீர் பிரிந்து செல்லக்கருதிய காட்டுவழி கொடுமையுடையது. அவ்விடத்தில் ஆறலை கள்வர் சஞ்சரிப்பர். அவர்கள் வரிந்து கட்டிய வில் உடையர். சுருண்ட மயிரினர். பிறரை வருத்தத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் வலிய உடம்பினர்; புலிபோன்ற பார்வையினர். வழிச் செல்வோரிடத்திற் பெறும்பொருள் இல்லையாயினும் அவர் தமது அம்பு ஏறுண்டு துடித்து இறத்தலைக் கண்டு களிக்கப் பின்தொடரும் இயல்பினர். இக்கொடியவர்கள் சஞ்சரித்தலின் பறவைகளும் அக் காட்டிற் பறவா. இவ்வியல்பினதாகிய நீ அரிய வழியே வெள்ளிய வேலைக் கையிற் பிடித்துச் சென்று பொருள் தேட நினைந்தீர் என்று என் தோழி அறிந்தாள். அவள், “என் காதலர் முத்துவடங்கள் கிடந்து புரளும் எனது தனங்களை எப்பொழுதும் தழுவி அதனாலும் ஆசை தணியாராய், என்னுடன் கூடுதலின் (குழம்பிய) எனது நீண்ட மயிரை (ஒழுங்குபடுத்தி) அழகு செய்வர். இப்பொழுது இவர் நினைக்கின்ற காரியம் எத்தன்மை யது? அதை யான் அறியேன்” என்று கூறினாள். “என் காதலர், முள்ளை ஒத்த நாணல் முளை போன்ற எனது பற்களிடத்து ஓயாமல் ஊறும் அமிழ்துபோன்ற இனிய நீரைக் கள்ளிற் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினார். அவர் அதனாலும் ஆசை தணியாராய் புணர்ச்சிக் காலத்து நிலைகுலைந்த என்னுடைய விளங்கும் ஆபரணங்களைப் பழைய இடங்களிற் கிடக்கும்படி திருத்துவர். இப்பொழுது அவர் நினைக்கின்ற காரியம் என்னவோ? அதை யான் அறியேன்” என்று அவள் கூறினாள். “புணர்ச்சிக் காலத்தின் பின் நீர் நிகழ்த்தின மிகப்பெரிய அன்புக்கு ஒரு பிரிவு இருக்கிறதோ” என்று கூறி என் தலைவி வருந்துகின்றாள். இத்தன்மையள் நீர் விட்டுப் பிரிந்தால் உயிர் தரித்திருப்பளோ? இராள். ஆதலால், பெரும! பொருள் விருப்பால் செல்லும் செலவைத் தவிர்க. 5 தலைவன் “பொருள் வயிற்பிரிவல்” என்று சொல்லக் கேட்ட தோழி வருந்தினாள்; வருந்தி “நீர் தேடும் பொருளிலும் நாம் உமக்குச் சிறந்தோம் என்பது உமது உள்ளத்தில் உள்ளது எனில் உம்மைப் புட்களும் விலக்கும். பிரிந்திருப்பார் இருக்குமாறு இவள் இருப்பாளல்லள். பிரிந்த அன்றே இறப்பாள்” என்று கூறிச் செலவைத் தடுத்தாள். இச் செய்யுள் இப்பொருள் பற்றியது. நீர் செல்ல நினைந்த காட்டு வழி மிகவும் கொடியது. அவ்விடத்தே அழகிய செவியும் பெரிய பாதங்களும் உடைய மதயானைக் கூட்டங் களும், பிற விலங்கின் கூட்டங்களும் வேடரும் கலந்து உலாவுதலால் காடுகள் எல்லாம் புதிய வழிகள் தோன்றியிருக்கும். அதனால் பழைய வழிகளைப் புதிய வழிகளினின்றும் பிரித்தறியமுடியாமல் இருக்கும். இவ்வகையான காட்டைக் கடந்து தேடும் பொருளிலும் நாம் உமக்குச் சிறந்தோம் இல்லையோ? பெரிய கடலிலே காற்று மரக்கலத்தைச் சிதற அடித்துவிடுகையால் அதனிடத்திருந்தோர் ஊக்கமின்றி நெஞ்சழிவர். அதுபோல நாமும் இனி மனமழிந்திருப்பதல்லால் உம்மோடு எவ்வாறு பல வார்த்தைகளைப் பேசுவோம். யாம் அப்படி இருப்பினும் நட்சத்திரங் களும் புட்பங்களும் உம்மைத் தடுக்கும். இன்னும் யாம் கூறுவதைக் கேட்பீராக. பெரும் ஆரவாரத்தோடு கூடிய விழாவின் மற்றை நாள் ஆரவாரம் அடங்கிப் புல் என்று இருக்கும் அழகிய இடம்போல ஆற்றியிருக்கும் ஒருத்தியோ இவள்? ஆளும் அரசர் கலக்கக் கலக்குண்ட நாடு பாழ்பட்டாற் போல அழகு கெட்ட முகத்தோடு ஆற்றியிருக்கும் ஒருத்தியோ இவள்? ஓர் இராக்காலத்தில் தாமரைப் பொய்கையில் நீர் இன்றிக் கிடந்த மலர் அவ்விராக்காலம் முழுதும் வாடாமற் கிடந்தாற்போல, நீர் பிரிவீராயின் ஓர் இராப்பொழுதேனும் உயிர்கொண்டு வாழும் ஒருத்தியோ இவள்? பெருந்தகாய்! இவ்வாறெல்லாம் யான் உமக்குக் கூறவும் நீர் இவளைப் பாதுகாத்தலைவிட்டுப் பொய் புரிந்தாய். நீ அச்சுரத்திலே செல்வது எந்நாள்; அந்நாள், இவளுடைய பெறுதற்கரிய உயிரைக் கொண்டுபோகும். 6 இது, தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து நீர் செல்லும் கடுஞ் சுரத்துத் துன்பத்துக்குத் துணையாக எம்மையும் உடன் கொண்டு செல்லும் எனத் தலைவி கூறியது. பெருந்தகாய்! நீர் செல்ல நினைந்த காடோ பல இடையூறுகளை உடையது. காட்டு வழியிலே, மறவர் 1மூட்டுவாயுடைய அம்புகளோடு திரிவர். மலை வளர்ந்து போதற்கு அரிய வழியே போவார் மீது அவர்கள் அவ்வம்புகளை எய்வர். அவ்விடத்தே திரியும் உடல் சுருங்கி உள்நீர் வற்றிய மரையா நாவறட்சி தீர்க்கும்பொருட்டு மரலைத் தின்னும். இவ்வாறு காட்டிடத்தே மாரி வறண்டிருக்கும். அம்மரையாவின் தண்ணீர் பெறுந் தடுமாற்றத்தை அதன் கண்ணீர் விழுந்து நாவினை நனைத்துப் போக்கும். இவ்வகையான காட்டு வழியே யானும் உடன் வருதல் அரிது என்று நீர் மறுத்துக் கூறினீர். உம்மைப் பிரிந்து யான் உயிர் தரித்து இருத்தல் ஆற்றாது இறந்து ஒழிவேன் என்பதை அறியாதீர்போல யான் உடன் வருதலை மறுத்துக் கூறினீர். இம்மொழிகளைக் கூறுவதால் யாது பயன். இக்கூற்று உமக்கு நல்ல நீர்மையதன்று. இனி நீர் எம்மிடத்து அன்பு நீங்கப் பிரிதலைக் கருதாதீர். அவ்வழியிடத்தே நேரும் துன்பத் துக்கு எம்மையும் துணையாகக் கொண்டு உம்மோடு போதலை ஆராயின் அதுவல்லது எமக்கு வேறு இன்பமும் உண்டோ? 7 இது, பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்கு, நீர் பிரிகின்றீர் என்று யான் கூற தலைவி கேட்பின். அவட்கு அப்போது நிகழ்வனவற்றை நும்மோடு ஆராய்வதுடையேள். நீர் செய்யும் பொருள் இவள் உயிரையும் தருகிற்குமோ எனக்கூறிச் செலவைத் தடுத்தது. நீர் கொடிய காட்டுவழியே செல்லத் துணிந்தீர். அக்காட்டில் முதுவேனிற் காலத்து வருந்தி உடல் மெலிந்து இளைத்த யானைகள் மழை பெய்யப் பெறாத ஊர்களிலே தண்ணீர் உண்ண விரும்பி கானல் நீரைத் தண்ணீர் எனக் கருதிச் செல்லும். இவ்வகையான காட்டுவழியே நீர் செல்வீரென்று யான் கூறுதலை நின் காதலி கேட்பாளாயின். நீர் பிரியுமிடத்து அவளுக்கு நேர்வதை உம்மோடு கேட்கலாமா? ஐயனே! நீர் செல்லும் காரியத்தை மனத்தில் கொண்டமையால், உமது கையினாற் கட்டிய வில் நாணை தடவா நின்றீர். இவளுக்கோ மறுவற்ற சந்திரனை மேகம் மறைப்பது போல மறுவில்லாத ஒளியுடைய முகத்தைப் பசப்புப் பரவா நிற்கும். நீர் வேலைப்பாடுடைய கைச் சரட்டை இறுகக் கட்டி அம்பு களைத் தெரியா நின்றீர். ஆனால் இப்பொழுது சுனையிடத்து வளர்ந்த நீலம் மழையை எதிர்கொண்டு நீர் சொரிவது போல இவள் கண்களில் நீர் பெருகா நிற்கும். நீர் பிரிகின்றோம் என்ற தனிமையை உணராத நெஞ்சுடன் பொருள் தேடற்குப் போக, வெற்றிதரும் சக்கரத்தினது வாயைத் துகள் போகத் துடைக்கின்றீர். ஆனால் இவளுக்கோ காந்தட் பூ வாடி விழுவது போல அழகிய விளங்குகின்றவளை இறையினின்றும் சுழலும். நீர் ஆரவாரத்துடன் செல்கின்றது நமக்குக் குற்றத்தைச் செய்யும். நீர் பிரிவீராயின் இவள் தன் அழகு அழிந்து இறந்துபடுவாள். உம்மை யான் ஒன்று வினாவுகின்றேன். நீர் கருதிய தேயத்துச் சென்று முயன்று தேடும் பொருள் இன்பந்தருதலேயன்றி இவள் இனிய உயிரையும் தருதல் செய்யுமோ? 8 இது, சொல்லாது பிரியலுற்ற தலைவன் குறிப்பறிந்து, தோழி பொருளது நிலையாமை கூறி அவளோடு கூடிச் செல்கின்ற இல்வாழ்க்கைச் செலவே பொருள் என்று செலவைத் தடுத்தது. அருள் இல்லாத மந்திரி நடுவு நிலைமையைக் கைவிட்டு நீங்கி தனது மனத்திற் கிடந்த காரியத்தைச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொடுந்தொழில் புரிந்த அரசனுடைய ஆளுகை சுடும். அவ்வெப்பத்தைப் போல சூரியன் வெய்யகிரணங்களைச் செலுத்தி மலை இடங்களைக் காய்வான். அதனால் வண்டு மொய்க்கும் மதம் ஒழுகும் யானைகள் அழகழிந்தனவாய், ஈரமற்ற நிலத்தை உழுகின்ற கலப்பைகள் போலக் கொம்புகளை ஊன்றிக் கைகளை நிமிர்த்தி நிலத்தே கிடக்கும். இவ்வகை நிகழுமாறு மலைகள் வெம்புகின்ற போதற்கரிய கொடிய காட்டை எங்களுக்குச் சொல்லாதே போகத்துணிந்த உமக்கு ஒரு காரியம் கூறுகின்றேன் அதனைக் கேட்பீராக. ஐயனே! ஏழு நரம்புகளும் விரும்புவார்க்கு உள்ளவாய் விரலால் தடவி வாசிக்கப்படும். தானக் கோலின் இடையே அகப்பட்டு நின்ற நரம்பு, ஏழு நரம்புகளின் பயன் இன்றாம்படி அறுந்துபோம். இவ்வியல்பி னதாகிய யாழினும் நிலையில்லாத பொருளை அறிவுடையோர் விரும்பு வரோ? திருமகள் தம்மை மனத்தால் விரும்பிப் பெற்றவர்களிடத்தில் அவர்கள் விரும்பிய காலம் வரையும் இருக்கமாட்டாள். பிரியுமிடத்துப் பிறர் இகழும்படி அவர்களுக்கு ஒரு வலியும் இன்று ஆகும்படி மனம் மாறுவாள். இவ்வகையான திருமகளிலும் நிலையில்லாத பொருளை அறிவுடையோர்கள் விரும்புவரோ? அமைச்சர் தமக்கு உயர்ச்சி மிகும்படி தாம் பெறும் பயனைப் பாராது அரசர் ஆக்கம் கருதி முயல்வர். அரசன் அவர்களைக் கோபிக் கும் பொழுது தம் (அரசனது) காரியத்தை முயன்றவனென்று நினை யாதும் பழமை கருதாதும் பொருள் முதலியவற்றை அல்லாமல் உயிரை யும் கொள்வர். அவ் வகையான 1அரசினும் காட்டில் நிலையில்லாத பொருளையும் அறிவுடையோர் விரும்புவரோ? இவ்வாறெல்லாம் யான் சொல்லா நிற்கின்றேன். ஆதலின், பெரும! பொருளை விரும்பாதிருத்தல் நினக்குப் பொருந்தாது; ஆராயிற் பழியுமின்று. ஆகவே இப்பிரிவை நீர் தவிர்தலை யான் விரும்புகின்றேன். அரசன் பலரைக் காக்க வருகின்ற விருந்தை எதிர்கொண்டு தன் மனைவி விரும்பும் படி அவருடன் இருத்தலாகிய அதுவே பொருளாகும். 9 இஃது, உடன்போய தலைவியின்பின் சென்ற செவிலி, இடைச் சுரத்தே முக்கோற் பகவரைக் கண்டு இவ்வகைப்பட்டாரை அவ்விடத்திற் கண்டீரோ, என வினவியபோது, அவரைக் கண்டு அஃது அறம் எனவே கருதிப் போந்தேம். நீர் அவர்களுக்காக வருந்த வேண்டா, என எடுத்துக்காட்டி அவர் (முக்கோற்பகவர்) தேற்றியது. உறியிலே வைத்த தண்ணீர்க் கரகத்தையும், முக்கோலையும் தோளில் வைத்துக்கொண்டும், வெயிலைத் தாங்குதற்குக் குடையைப் பிடித்துக் கொண்டும், அதன் நிழலிலே வெப்பமான காட்டுவழியே சோர்ந்து செல்லும் ஒழுக்கமுடைய அந்தணர்களே! என் மகள் ஒருத்தியும் வேறொருத்தி யினுடைய மகனும் பிறர் அறியாத காதலர்களா யிருந்து இப்பொழுது பிறர் அறிந்த கூட்டம் உடையவர்கள் ஆயினர். இவ்வகையான இருவரை வழியிடத்திற் கண்டதுண்டோ? அது கேட்ட அந்தணர், அவ்வகையினரைக் காட்டிடத்தே காணா திருந்தோம் அல்லேம். கண்டு அது முறைமையானது என்று எண்ணி வந்தோம். ஆண் மக்கட்குச் சொல்லப்படும் அழகையுடைய தலைவ னோடு இவ்வரிய வழியை கடந்து செல்லப்போகும் ஆபரணமணிந்த இளமை யுடையவளுக்கு நீர் தாய்போலக் காணப்படுகின்றீர். வாசமுள்ள சந்தனமரம் சந்தனத்தை உடம்பில் பூசுகின்றவர்க ளுக்குப் பயன்படுதல் அல்லாமல், மலையிடத்துப் பிறந்ததாயினும் அம்மலைக்கு ஒரு பயனுங் கொடுக்க மாட்டாது. அதுபோலவே உமது மகளும் பயன்படும் பருவத்து நுமக்கும் பயன்படாள். தலைமையான முத்து, அணிபவர்க்குப் பயன்படுவதல்லது, கடலிடத்துப பிறந்தனவாயினும் அக்கடலுக்கு என்ன பயனைக் கொடுக் கும்? ஆராயுமிடத்து உமது மகளும் பயன்படும் பருவத்து நுமக்குப் பயன்படாள். ஏழுநரம்பாற் கூட்டிய இனிய ஓசைகள் பாடுவார்க்குப் பயன் கொடுத்தல் அல்லது, யாழிடத்துப பிறந்தவாயினும் அந்த யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆனால் மிக்க கற்பினையுடைய அவளுக்காக வருத்தமுறன்மின், இருமுதுகுர வரினுஞ் சிறந்த கணவனை வழிபட்டு அவன் பின்னே போனாள். இம்மையில் இங்ஙனம் கற்புப்பூண்டு நிகழ்த்தும் இவ் வில்லறமே அறங்களில் தலைமையான அறம். மறுமையில் இவ்விருவரும் நீங்காமல் சுவர்க்கத்திலே செல்லும் வழியும் அவ்வழிபாடே. 10 இது, தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, இவ்வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீர் எனக் கேட்பின் தலைவி இவ்வகை ஆகற்பாலள் எனச் சொல்லி செலவழங்குவித்தமை. நீர் செல்லத் துணிந்த காட்டிடத்துள்ள மரங்களின் கிளைகளி லுள்ள தளிர்கள் வறியவன் இளமைபோல் வாடியிருக்கும். கொடுத்தற்கு மனம் சிறியவனாகிய செல்வன் சேர்ந்தவர்களைப் பாதுகாவாதாவாறு போல மரங்கள், சேர்ந்தவர்களுக்கு நிழல் இன்றி நிற்கும். உலக ஒழுக் கத்தைக் கடந்து யாவர்க்கும் தீங்கு செய்து பின்பு புகழ் இல்லை ஆனவனுடைய முடிவுக் காலத்து அவன் கிளையே அன்றி அவனும் கெடும். அதுபோல மரங்கள் கிளைகளே அன்றி வேருடனே நின்று வெதும்பும்; வெம்பி சூரியனுடைய கதிர்கள் சுடுகையினாலே வருந்தி, கொலைத் தொழிலுக்கு அஞ்சாத அமைச்சராலே குடிசனங்கள் அலறும் படி முறையின்றி பொருளை வாங்கிக் கொண்டு செங்கோல் வளைந்த குடைநிழலில் தங்கிய உலகம்போல உலறும். மெத்தை விரிக்கப்பட்ட படுக்கையிடத்தே துயிலும் போது நீ அவளது வருத்தம் அறியாது, அவள் தழுவிய கையைவிட்டு நீங்குவா யாயினும், தனிமைகொண்டு வருந்துவாள். அவள் கூட்டத்தைவிட்டு நிலையில்லாத பொருள் காரணமாக வேற்று நாட்டிடத்தே நீ போவை என்று யான் கூறக் கேட்பின் அவள் நெஞ்சழிந்து ஒளி கெடுவாளோ? இறந்துபடுவாளோ? (இறந்துபடுவாள் என்றவாறு). நீ விளையாட்டாகப் பிரிந்து சிறிதுபொழுது நீடித்திருப்பினும் மேன்மையுடைய இவள் அத்துணைப் பிரிவுக்கு அஞ்சிக் கலங்குவாள். இவளைப் பிரிகின்றோம் என்னும் கவற்சியின்றி, முயன்று தேடும் பொருள் காரணமாக நீ போவை என்று யான் கூறக் கேட்பின், கண்கள் உறங்காவாய் கவலை கொள்வாளோ? இறந்துபடுவாளோ? நீ இடைவிடாமல் அருளோடு, பார்க்கின்ற பார்வை அவளிடத் திற் படாது ஒரு சிறிது நீங்கினும் வருத்தங்கொண்டு நெஞ்சழிபவள், நீ பொருளை நன்றென்று கருதித் தன்னைப் பிரிந்து அவ்விடத்தே போவை என்று யான் கூறின் கண்டார் மருளும் அழகு கெட்டு மிகவும் மயக்கம் மிகுவாளோ? இறந்து படுவாளோ? “புனைந்த பூணினையுடையாய்! நீ பொருளைத் தேடுதலை விரும்பிப் போகில் இவளுடைய உயிர் தாமும் போம்” என்று உனது பிரிவாற்றாமையை யான் நின் தலைவனிடம் கூறினேன். புகழப்படும் வேலையுடைய பெருந்தன்மை யுடையவன் நீண்ட வழியிடத்திற் செல்லும் போக்கைத் தவிர்த்தனன். இனி நின் வளைகள் கழலாது இருப்பனவாக. 11 இது, அறத்தினாற் பொருளாக்கி அதனாற் காமம் நுகர்வேன் எனக் கூறிப் பொருள்வயிற் பிரிந்த காலத்து, தலைவி “காடு கொடியதாயினும் இவ்வகைப்பட்டதும் உள்ளது என்று கூறினார். அவை இப்பொழுது காணப் படுதலின் வருவர்” எனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது. நமது காதலர், விளங்குகின்ற ஆபரண மணிந்தவளே! (அறத்தான் ஈட்டிய பொருள்) தமக்கு அருள் செய்துவந்த அந்தணருக்கும் தவத்தர் களுக்கும் வேண்டுவன கொடுத்துத் தருமஞ் செய்தலும் பெரிய பகை களை வென்ற செருக்கினால் தம்மை வழிபடாதாரை அழித்தலும், முற்பிறப்பில் உண்டான காதலினாலே இப்பிறப்பில் மனம் பொருந்திய காமத்தைத் தருதலும் செய்யும் என்று நமக்குக் கூறிப் பொருள் வயிற் பிரிவல் நன்று என்று எண்ணிப் போனார். அவர் இப்பொழுது வருவார் போல் தோன்றுகின்றது. யான் அவர் வருவார் என்று துணிந்து சொல்லு கின்றேன். இப்பொழுது அதற்குக் காரணங் கேள். பொன்னாற் செய்த கனத்த காதணியை உடையவளே! அவர், நெருப்புப் போன்ற வெம்மையால் அடி தாங்க முடியாத சூடாகக் காடு இருக்குமென்று சொன்னார். அக்காட்டிலுள்ள ஆண் யானை, துடி போன்ற அடிகளுடைய யானைக் கன்றுகள் நீர்நிலையில் இறங்கி தாயும் தந்தையும் உண்ண வேண்டுமென்று கருதாது கலக்கிய சிறிய நீரை முதற் பிடிக்கு ஊட்டிப் பின்பு தானும் உண்ணுமென்றும் அவர் கூறினார். இலை பசுமை அற்றுக் காய்ந்த மரக்கொம்பர்கள் இன்பத்தி னின்றும் நீங்கிச் சென்றாரைத் துன்பம் உறுத்தும் தன்மையின என்றும் சொன்னார். அவர் சொன்ன காட்டிடத்தே ஆண் புறாக்கள் தாம் அன்பு கொண்ட இளைய பெண் புறாக்கள் வெம்மையால் இளைத்த வருத்தத்தை சிறகு விரித்து நிழலாலே தீர்க்கும் என்று சொன்னார். காடுகள், ஞாயிற்றின் வெவ்விய கதிர் படுகையினால் மலையின் மேல் நின்ற மூங்கில்கள் வாடிச் செல்வர்களுக்குச் செல்லுதற்கு அருமை யுடைய தாயிருக்குமென்றுஞ் சொன்னார். அக்காட்டிடத்தே நிழல் இல்லாமையினால் ஆண் மான், வருந்திய இளைய பெண் மானுக்குத் தான் நின்று நிழலைக் கொடுத்து உயிர் அழியாது நிற்குமென்றும் சொன்னார். இவ்வியல்பினதாகிய காட்டு வழியே சென்றவர் எமது அலங் கரிக்கப்பட்ட அழகைக் கெடுப்பவராகார். அதற்குக் காரணம் என்னெ னில் நம் மனையிடத்துப் பல்லியும் நல்ல இடத்தில்அவர் வரவுக்கு ஏற்பக் கூறினது. எனது இடக்கண்ணும் துடியா நின்றது. “பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே” (கலி 11) 12 இது தலைவனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி காட்டது கடுமையும் தலைவியது மென்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவு தவிர்த்தது. ஐயா! நீர் செல்ல நினைந்த காட்டிடத்தே, முள்ளைக் கட்டிட்ட நீண்ட வேலியைப் போல, கொலைத் தொழிலுடைய வேடரது வில்லாலே கொல்லப்பட்டவர்களது உடலை மூடிய இலைக்கும்பங்கள் நிரையாகக் கிடக்கும். தீமை நிறைந்த வழியில் நீர்வற்றும் சுனையிடத்து தண்ணீர் உண்ண விரும்பிய உடம்பு வாடிய யானைகள் சூழ்ந்து படியும். படியுமிடத்து கை சுடுகையினாலே யானைக் கூட்டம் வெவ்வேறாகப் பிரிந்து மலையிடத்தே ஓடும். அதனால் பழைய வழிகள் தெரியாது மறையும். நீர் முன் துயில் கொள்ளும் காலத்து மிகச் சிறிய பொழுது தாழ்த்து துயில்கொண்டு எழும்பினும் இது என்னோ என்று நின்காதலி அஞ்சுவாள். இவ்வியல்பினாளைக் கைவிட்டு பொருள் விருப்பால் பிரிந்து செல்கின்ற வரே! நீர் மிகவும் வலிய நெஞ்சுடையராய் தேடத்தக்க பொருளைத் தேடி முடித்த செல்வத்தால் உண்டாகும் பொருள் இவ் வின்பம் என்று கூறுகின்றீர். நீர் அப்பொருளைத் தேடி வரும் குறித்த காலத்தளவும் இளமையும் காமமும் நின்னிடத்து நில்லாவாய் நாள் தோறும் கழியும். அது வல்லாமல் இறக்கும் நாள் இது என்று உலகத்தில் அறிந்தவர்களும் இல்லை. முலை இடத்துள்ள பூமாலை கசங்கும்படி முயங்கும் நாள்கள் இன்னும் கழியாமையைக் கருதுவாய். காமம் குற்றப்பட அதனோடு மாறுபாடுகொண்டு பொருளிடத்தே விருப்பம் நிகழ்ந்து போகின்றவனே! தமக்கு வருகின்ற மரணத்தையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாரைப் போல நில்லாது, அவற்றை நினைந் திருக்கும் என்மக்கள் நிற்கின்ற வழியே நில். 13 இது, தலைவனால் பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவி, “யான் உம்மோடு வருவேன்” என்றாளாக, தலைவன் அவளது மென்மையும் காட்டின் கடுமையும் கூறி உடம்படானாக ஆற்றாளாகிய தலைவியைத் தோழி, “ அவர் நம்மோடு நகையாடிச் சொன்னார் பிரிவரல்ல” ரென வற்புறுத்தியது. மிகுந்த போர்த் தொழிலுடைய அரசன் கோபித்துப் படை எடுத்துச் சென்ற பகைவர் நாட்டை நெருப்பு உண்ணும். நெருப்புத் தின்ற கரியுடைய வறந்த நிலத்தே மலர்ந்த பொரிகளைப் போன்ற நிறத்தை யுடையன இளைய புள்ளி மான்கள், உணவு கிடையாது வருந்திய பெண் மான்கள் முறுகிய கொம்புடைய ஆண் மான்களுடன் பேய்த்தேரை நீரென்று கருதிப் பருகுதற்கு ஓடும். மரல் வாடும்படி மலைகள் கொதிக் கும். மந்திகள் உணவின்றி வருந்தும். உடல் வாடிய உரல் பேன்ற அடிகளையுடைய யானைகள் நீரூற்றுகள் வற்றுதலால் நீர் உண்பதற்கு நீர் நிலை காணாமல் சேற்றின் ஈரத்தை நுகரும். இவ்வகையினது யாம் செல்லக் கருதிய அரிய வழி. விளங்குகின்ற வளையினையுடையாய்! நீ எம்மோடு வருவை யாயின் நின்னுடைய மலர்மேல் நடக்கின்ற மெல்லிய அடிகள் கல்லைத் தீண்டும்; தீண்டுமாயின் தாமரைப் பூவின் அல்லியைச் சேர்ந்த இதழ்கள் சாதிலிங்கம் சேர்ந்தன போலக் கறுப்பன அல்லவோ? அழகிய ஒளியுடைய நெற்றி யுடைவயளே! சிங்கக் கால்மேல் தைத்த தூங்கு கட்டிலில் அன்னத் தூவியாற் செய்த மெல்லிய இடத்தே உறங்கும் நீ எம்மோடு கூடவரின், அக்காட்டில் பொய்யான சிங்கம் இல்லையாக. விலங்காகிய சிங்கத்தின் குரலைக் கேட்டு அஞ்சுவை அல்லையோ? கிளிமொழியாய்! நீ எம்மோடு வருவாயானால் மழைக்கு நீட்டிய தளிரை ஒத்த அழகினையுடைய மேனி, உலர்ந்த சிறிய பற்றைகளை மறைத்து முழங்குகின்ற நெருப்பின் நடுவை ஊடறுத்துவந்த காற்றுத் தீண்டில் அழகு கெடும் அன்றோ? நினது அழகு கெடும் என்று அச்சமான தன்மையுடையவற்றை நின்காதலர் கூறுகையினாலே யாம் பிரியின் இவள் இறப்பள் என்று பிரியார். ஆதலான் மனம் மாறுபட்டு வினையிடத்துப் பிரிகுவரென மனம் அழியாதே. வளைந்த மகரக்குழை உடையாய்! காடு கடுமை யுடையது செல்லற்கு அருமையுடையது என்று அவர் சொல்லுவா ராயின் நினது மெய் நடுக்கத்தைக் காண்டற்கு ஒரு விளையாட்டைக் குறித்துக் கூறினாரென்பதல்லது பிறிது கருதிச் சொன்னாரல்லர். 14 இது, தலைமகனால் பிரிவு அறிவிக்கப்பட்ட தோழி; தலைவனுக்கு. முன்னையிலும் சிறப்பாக இனிது பாராட்டியதெல்லாம் எம்மிடத்திற் பிறந்த வெறுப்பு என்பது இப்பொழுது அறிந்தேன். இவ்வகைப்பட்ட செலவு நினக்கு என்ன காரணத்தால் வந்தது” எனக் கூறி அவனது போக்கைத் தடுத்தது. “என் காதலி துயில் செய்கின்ற அணைபோன்று மிருதுவானதும் அழகினையுடைய மூங்கில் போன்றதுமான தோளினையுடையள். நிமிர்ந்த நீலமலர் போன்ற அழகினையுடைய இரண்டு கண்களுடையள்; வண்டுகள் விரும்பும் முல்லை முகைபோன்ற நேரிய ஒழுங்காகிய பற்களையுடையள்; வாசம் பொருந்திய நெற்றியுடையள்; மேகம் போன்று கரிய கூந்தலுடையள்; மார்பிடத்தே அழகிய தேமலையும் பருத்த முலையினையும் உடையள். கையிடத்தே நிரையாகிய வெள்ளிய வளைகளையும் உடையள்” என்று பலவாகிய புனைந்துரைகளால் பண்டையிற் காட்டில் கொண்டாடி இவ்வாறு இனிய மொழிகளைக் கூறினீர். இப்பொழுது என்னை வருத்தத்தே செலுத்துகின்ற தன்மையால் நீர் எம்மிடத்து வெறுப்பாகுதலை இப்பொழுது அறிந்தேன். மயக்கந்தருகின்ற நின் அழகிய பார்வையே பொருளல்லது நன்கு மதிக்கப்படும் பொருள் வேறுண்டோ என்று கூறிய நீர் மயக்கத்தினால் அவ் வன்பை மறந்தீரோ? நல்ல வழியின்றிப் பொருள் தேடுவார்க்கு அப்பொருளே அவரை நீங்கி இம்மையிலும் மறுமையிலும பகையாவதை அறியீரோ? பொருள் இத்தன்மையதாதலால் அப்பொருளையன்றி எம்மை யும் பொருளாக மதிப்பாய். எங்களுக்குள் முயங்கிய முயக்கத்தை கைவிட்டு நீ போகையினாலே பெறுகின்ற பொருளிடத்து அவாவைக் கைவிடுவாயாக. அது நிலை பெறும் பொருள். 15 இது, பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி தலைவியின் ஆற்றாமையும் இளமைய தருமையும் கூறி, நீர் பிரிந்து செய்யக் கருதியவை எக்காலத்தும் செய்யலாம். கழிந்த இளமையைப் பொருளாய் மீட்கலாமோ எனக் கூறியது. அன்பும் அருளுமின்றி நீர் செல்ல நினைந்த காட்டு வழியிடத்தே சினத்தினையுடைய மறவர் திரிவர். அவர்கள் படைக்கலங்களுடைய சேனையோடு அரசர் வந்து போர் செய்யினும் அழகிய சிலை மரத்தாற் செய்த வில்லின் முறுக்கிய நாணில் எழுந்த சிங்கம் கர்ச்சித்தாற் போன்ற சிறு நாணொலியாலே அவரைப் புறங்காண்பர். அவ்வாறு செய்யின் அன்றி அவர்கள் அம்பை வில்லிலே தொடுத்தலை நாணுவர். அச்சம் தரும் துடியினது ஓசையையும் வலிய பார்வைவையும். வலிய கழுத் துடைய மானின் கொம்புபோல திருகி முறுக்குண்ட தாழ்ந்த தாடியினை யும் உடைய அம்மறவர் வழிப்போக்கரின் பொருளைக் கொள்ளை அடிப்பர்; பொருளைப் பறித்துக்கொண்டு அவர்களுக்குக் காயம் விளைப்பர். நீ அகப்பொருளைக் கைவிட்டுப் புறப்பொருளை எண்ணிப் போக விழைந்தாய். இவளுடைய நிறம் அசோகின் அழகிய தளிரை ஒக்கும். நீ பிரியின் அந்நிறம் மாறிப் பசலை நிறம் கொள்ளும். இவ்வாறு அவளது பழைய அழகு கெட்டால் அதனை புதிதாகத் தேடும் பொருளினால் பெறலாமோ? இவளுடைய திருமுகம் இனிய கிரணங்களுடைய திங்களை ஒக்கும். அந்த முகம் பாம்பு சேர்ந்த திங்களைப் போல பசப்புப் பரந்து (கெட்டக்கால்) மெய்ப்பொருளை நினைந்து நீ சென்று, அவரிடத்துக் கற்ற பொய்யற்ற நூற் கேள்விகளாலும் முன் மனத்திற் றங்கிய மாசற்ற விரதங்களாலும் மீட்கலாமோ? முறுக்கவிழ்ந்த கரிய நீலமலரை ஒத்த இவளுடைய கரிய கண்கள் அழுது. எரிகின்ற திரி கக்கிய நெய்போலச் சுடும்படி தெளிந்த கண்ணீரைச் சிந்தும். இவ்வாறு கெட்ட அழகை, பிறநாட்டிற் போய்ப் பெற்ற பற்றை அறுத்த ஞானத்தினால் மீட்க முடியுமோ? இவளின் உறுப்புகள் அழகு கெடாமல் பாதுகாத்துப் பின்னர் நீ நினைந்தவற்றை ஆராய்ந்து பார். அக்கல்வியினால் உண்டாகும் பெருமையோ இவ்விடத்திருந்து நாடோறும் செய்து கொள்ளும் செயலாயிருக்கும். முளை போன்ற நிரையான பற்களுடையாளுடைய ஆராயப்பட்ட இளமை போனபின்பு அக் கல்வி அவ்விளமையைத் தருமோ? 16 இது தலைவன் பொருள் வயிற் பிரிந்தவிடத்து அவன் போகிய காட்டது கடுமை நினைந்து ஆற்றாள் ஆகிய தலைமகள், அவர் இப்பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைந்ததோ என . அது கேட்ட தோழி “அவர் திரும்பினார், நீ கவலவேண்டா” எனக் கூறியது. துயிலில்லாமல் பசந்த எனது கண்கள் வருந்தி கண்ணீர் சொரிந்து நிறம் வாடி அழகு கெட்டன. தாழ்ந்த முன்கையினின்றும் வளையல்கள் கழல்கின்றன. இவ்வழகின் அழிவுக்கு அஞ்சினேன் அல்லன். பிரிந்து சென்ற தலைவர் பொருட்டு யான் ஒரு காரியஞ் செய்ய நினைந்தேன். அதனாலும் பெறப்படுவது என்? அக்காரியம் தானும் ஆராயுமிடத்து நம் கற்புக்குப் பொருந்துவதன்றாய் இராநின்றது. நங் காதலர், யாம் இயற்கை நலம் கெட்டு இவ்விடத்திருந்து வருந்திப் புலம்பும்படி நம்மைக் கைவிட்டுப் பிரிந்தார்; பின்னர் என்னை நினையாராயினார். பொருள்மேல் அன்பு மிகுந்து நம்மேல் அன்பைத் துறந்து அவர் செல்லும் அரிய வழியிடத்தே பாறைகள் மீது வெப்பம் உண்டாகும். அவ்வெப்பம் நீங்கும்படி மிகுந்த மழைத்துளிகளைச் சிதறுவாயாக என்று இனிய ஓசையுடைய மேகத்துக்குரிய ஞாயிற்றைத் துதித்து இரக்க நினைந்தேன். இக்கருமம் கற்பிற்கு இயைவதாகுமோ? அல்லவே. அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களை உடையாய்! இவ்விடத்தே யிருந்து நாம் தனிமையுறும்படி பொருளை விரும்பிச் செல்லுமிடம் பகைவர் நாடு என்றும் கருதாராய் நங் காதலர் பிரிந்தார். அவர் செல்லும் வழியில் மரக்கொம்புகள் வாடும்படியாக எரிக்கும் உன் சினம் தணிவாயாகவென்று நெருங்கிய கதிருடைய ஞாயிற்றைத் தொழுது நாம் வேண்டிக்கொள்ளுதல் கற்பிற்கு இயைவதொரு காரியமோ? ஒள்ளிய பூணினையுடையாய்! நம் காதலர், இவ்விடத்தேயிருந்து நாம் வருந்த நம்மிடத்தில் அருள் இல்லாராகி பொருளிடத்தே விருப்ப முடையராய் அகன்று சென்றார். அவர் செல்லும் அரிய வழியிடத்து, சிறிய உயர்ந்த பற்றைகளிலே தங்கி, வந்த வெப்பம் ஆறி அவர் மீது படுவாயாக என்று தொழுது காற்றைத் தருகின்ற ஞாயிற்றினை வாழ்த் தின் நம் கற்புக்கு ஏற்குமோ? அல்லவே. தேன்போன்ற வார்த்தையுடையவளே! இவ்வியல்பினராகிய மற்றத் தெய்வங்களையும் மனத்தில் வேண்டுதல் செய்யக்கருதி, தேடு கின்ற பொருளால் உண்டாகும் சிறப்பை நினைத்துச் செல்கின்றவ ரிடத்து மனம் சுழலாதே. வற்கடகாலத்திலே உலகம் கெட்டதாயின் உலகில் மழையைப் பெய்விக்கும் கற்பினை யுடையவள் நிறம் கெட்டு பசப்புப் பரத்தல் உண்டாம் என்று கருதி. அவருடைய முயற்சியிடத்தே அறக்கடவுள் சென்று விலக்கிற்று. இனி வருந்தல். வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினா(ள்) (கலி-16) 17 இது, பகைவர் திறைதந்த நாடு காத்தற்குப் பிரிகின்றமை யுணர்ந்த தலைவி வேறுபட்டமைகண்டு தோழி அவனை எதிர்ப்பட்டு அவளது ஆற்றாமையும் இளமைய தருமையும் கூறிச் செல வழுங்குவித்தது. வாசம் பொருந்திய நெற்றியுடையவளே! “ என் தலைவர் (போர் புரியும்) படைக்கலங்களைப் புதிதாகச் செய்து தாம் மேற்செய்யும் கருமத்தின் நினைவினால் என்னை முயங்காது மெத்தைகள் பரப்பப் பட்ட படுக்கையிற் கிடந்தார். முயங்குதலைப் பெறாத யான் அவர் புறத்தைத் தழுவினேன். அப்போது அவர் யான் பிரிந்தால் இவள் எவ்வாறு ஆற்றுவாள் என்று பெரு மூச்செறிந்தார். இப்பொழுது இவர் கருதிய காரியம் எவ்வகையினது” என்று நினைந்து உனது கூட்டத்துக்கு இடையூறு வருமென்று கருதினவரிடத்து நீ ஒழுகாது மிகவும் ஏங்கி நடுங்காதே. இவள் அழகுகெட்டு வருந்த நீ பிரிந்து வலிய காவலாலே பகைவர் தந்த நாட்டை விளக்க மிகவும் துணிவை. அவ்வாறு துணியுமிடத்து பூரணைக் காலத்துக்குப் பின் சந்திரன் தேயுமாறுபோல நாடோறும் நிலை குலைந்து கெடும் அழகு இவளுடன் நிலைபெறுமோ? இவள் வலிய காமநோய் வருத்துகையால் அழகு அழிவாள். நீ அவளைப் பிரிந்து பகைவர் தந்த நாட்டைக் காத்து திரண்ட பொருளைப் பெறுவதற்கு முயல்வை. அங்ஙனம் முயலுமளவில் தாமரை முகைக்குக் கூற்றமாகிய அலர்ச்சி அதன் குறைவிற்குக் காரணமானாற் போல, இவளுக்கு விதித்த வாழ்நாளும் இவளுடன் நிலைபெறுமோ? இவளது உறுப்பழகும் தோற்றப் பொலிவும் கெடும். நீ மலைந்து பகை கெடுத்து. நாடாகிய பயனைத் தரும் காவற்பிரிவை நினைந்து முயல்வை. அவ்வாறாயின் வண்டுகள் நுகர்தற்கு தாது அலர்ந்த பூவையும் முகையையும் உடைய தடாகம் நாள்தோறும் குறையுமாறு போல, நாள்தோறும் குறையும். இவளுடன் நிலைபெறுமோ? பெரிய புகழுடைய தலைவனை அடைந்து அறன் உண்டாக நினைந்து யான் கூறிய சொற்கள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல நல் மருந்தாயின. அவன் மனம் மகிழ்ந்து போக்கைத் தவிர்ந்தான். 18 இது, பொருள் வயிற் பிரிய நினைந்த தலைவனை நாளது சின்மை இளமையது அருமை முதலியவற்றைக் கூறிச் செலவு தவிர்த்தது. ஐய! அரிய பொருளிடத்திற் செல்கின்ற ஆசை தூண்டுதலால் பிரிந்து போயிருத்தலை நினையாதே. நீ தலைவி தோளில் விரும்பி எழுதிய தொய்யில் தருகின்ற அழகினையும், நின்னை வலியாகவுடைய இவள் மார்பிற் சுணங்கின் அழகையும் கைவிட முடியுமாயின் நினைந்து பார். நீ நன்கு மதித்த பொருளும் சென்றவர்கள் தத்தம் நிலைமைக் கேற்பக் காலம் நீட்டி நின்று தேடுவதன்றி இப்பொழுதே அள்ளிக் கொள்ள ஓர் இடத்திற் கிடவாது. பொருள் தேடப் போகாதிருந்தவர்கள் எல்லாரும் உண்ணாது இருந்தாருமல்லர். இளமையும் இருவரும் ஒத்த காமமும் சேரப் பெற்றவர்கள். விரும்பத்தக்க தொரு நன்மை அச்செல்வத் துக்கு இல்லை. இல்வாழ்க்கை யானது தமது நாளெல்லாம் 1உள்ளே ஒரோ ஒருபுறத்தில் ஒரோ ஒரு கைகளாலே தழுவி, ஒன்றன் பகுதியாய ஆடையை உடுத்திருப்பவராயினும் பிரியாதிருப்பவர்களுடைய வாழ்க் கையே. வாழ்க்கை கழிந்த இளமை மீண்டு தருதற்கு அரிது. 19 இது, பிரிவு உணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும் பிரிவின் மேல் சென்ற உள்ளத்தினனாயினானை நீ பிரியின் இவள் இறத்துபடும் எனக் கூறிச் செலவு மறுத்தது. ஐய! வஞ்சனையிலவாய் இனிய சொற்களை மெல்லச் சொல்லித் தழுவின அக் களவொழுக்கம் நிகழ்ந்த நாளிற் கூறியவை எல்லாம் பொய்யாயிருத்தலை அறிவில்லாத யான் எங்ஙனம் அறிவேன்? அகன்ற மனையில் உள்ளாரால் அடக்கவொண்ணாத அலரை எம்மிடத்தே தந்து ஞாயிறு கோபிக்கும் வெப்பமான காட்டே போக நினைத்தலை இப்பொழுது அறிந்தேன். இனி நீர் நல்ல தன்மை உடையை அல்லை. நீர் நினைந்த காரியத்தே செல்வீராக. சென்று அவ்விடத்துச் செய்யும் காரியத்தை முடித்தபின் இவ்விடத்தினின்றும் வருவாரை, “நாம் வருந்தும்படி விட்டுவந்தவராகிய எனது தலைவியின் செய்தி அறிவீரோ” என்று வினவாதீர். வினவின் அவள் இறந்துபட்டிருக்கவும் கூடும். அது கேட்பின் உமது தலைமை அழியும்படியாக அவ்விடத்தில் நீர் புரியும் காரியம் முடியாமல் அவ்விடத்தல் அவலம் பிறத்தலும் உண்டு. 20 இது, பிரிவுணர்த்திய தலைவர்க்குத் தலைவி எம்மையும் உடன் கொண்டு செல்மின் என்றாட்கு, தலைவன்கானின் கடுமையும் தலைவியின் மென்மை யும் கூறுவது கேட்ட தலைவி நாளது சின்மையும் இளமைய தருமையும் கூறி எம்மையும் உடன்கொண்டு செல்மின் என்றது. யான் செல்லத் துணிந்த காட்டில், பல உணவுகளையும் விளைந்து கொடுத்து எல்லாரையும் நுகர்விக்கும் பயனையுடைய நிலத்தில் ஞாயிறு கோபத்தோடு தனது கதிர்களைச் சொரியும். அதனால் குளிர்ச்சியை விரும்பிக் கூடும், பசியால் மெலிந்த யானைகளைத் தாங்கும் மலை வெம்ப மண் பிளக்கும். தெளிந்த நீர் நிலைகளும் வற்றிப் புழுதி எழும். “கிளிமொழியாய்! அழல்போன்று வெய்ய சுரம் மழை பெய்தலைக் கண்டறியாது. ஆதலின் அக்காடு நின் அடிக்குப் போதற்கு எளியதா யிருக்குமோ ” வென்று கூறுகின்றவரே! உமது மார்பிடத்தில் முயக்கத்தை, கண்டார், காற்றினும் காட்டில் ஒர் எல்லையில் அகப்பட்டு நில்லாதவளுடைய வாழ்நாள் என்று கூறும்படியாக யான் அதனை (முயக்கத்தை) வாழ்நாளாகவுடையேன். ஆதலால் அவலத்தைக்கொண்டு இவ்விடத்திலிருந்து நெஞ்சழிவேனோ? இறந்துபடுவேன். “தன்னிடத்து ஊறுகின்ற நீர், அமிழ்தத்தை ஒத்தற்குக் காரணமா கின்ற எயிற்றையுடையாய்! வெஞ்சுரத்து வழி, தண்ணீருண்டலை விரும்பின் நீர் இன்று” என அறத்தைக் கூறுகின்றவரே! நீர் நீங்கினால் எனது அழகு நீண்ட நிழலில் நின்ற தளிர்போல வெளுத்தலை அறிந் திருப்பேன். ஆதலால் யான் உமது திருவடியில் அருளைக் கைவிட்டு இங்கே இருத்தலைச் சூழ்வேனோ? இறந்து படுவேன். அவ்விடத்துக் காடு நீ அடைதற்கரிய வெம்மையுடையது என்று பின்னும் கூறுகின்றவரே! கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெரிய கழுத்தினையும் அழகையுமுடைய ஆண் மான் பின் நீங்காமல் திரியும் பெண் மானையும் காணாதிருக்கின்றீரோ? அவை நீர் அறியப் பிரியாவே. ஆதலால் எம்மையும் உடன்கொண்டே சென்மின். 21 இது, தலைவனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, அவனை நெருங்கிக் களவு காலத் தொழுக்கம் எடுத்துக் காட்டலாற் றெளிவு பட மொழிந்து பொருளது நிலையின்மையும் அவளது ஆற்றாமையுங் கூறிச் செலவு மறுத்தது. காட்டிடத்தே பால்போன்ற மருப்பும் உரலை ஒத்த அடியையும் மணங்கமழும் மதத்தையும் உடைய இனத்தைப் பிரிந்த யானை வழியைக் காவல்காத்து நிற்கும் இவ்வகையான வழியே சென்று பொருள் தேடுகின்ற இடத்தே இவளைப் பிரிந்திருந்தால் நெஞ்சு விரும்பும் என்று அருளில்லாத சொல்லை நீ சொன்னாய். எம்மை விரும்பி நல்ல நறிய நெற்றியைத் தடவி நின்னிடத்தினின்றும் பிரியேன். நீ அஞ்சுதலைத் தவிர் என்னும் நன்மையுடைய சொல்லையும் நீ சொன்னாய். அவ்விரண்டி னுள் உண்மையுடையது யாது என்று அறிகிலேன். நீதேடுகின்ற பொருள் இத்தன்மையோர் நமக்கு உரியவர் என்று கருதாது பிறரிடத்து நின்ற நல்வினையால் மீண்டும் மீண்டும் சென்று தங்கும். உன்னையின்றி இமைப்பொழுதும் உயிர் வாழாத இளமையையுடையவளது மூங்கில் போன்ற இரண்டு தோள்களையும் மறந்து பிரிந்திருப்பாயோ? 22 இது, பிரிவு உணர்த்தப்பட்ட தோழி அதற்கு உடம்படாது தலைவனை நெருங்கிக் களவுக் காலத்து ஒழுக்கம் காட்டி மறுத்தது. அறிவுடைய மாந்தீர்! தாம் வாங்கி உண்ணும் கடனை வழிபட்டு இரந்து வாங்கும் போது முகமலர்ந்திருத்தலும், வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும்போது முகம் வேறுபட்டிருத்தலும் முன்பும் இவ் வுலகத்துள்ளார் இயல்பாகும். அஃது இன்றும் புதியது ஒன்று அன்று. இது போலவே நீர் மகளிருடைய நலத்தை அவர்களை இரந்து தாதைத் தேடி உண்ணும் வண்டுபோல நுகர்ந்து, அதனை அவர் வேண்டின காலத்து அவர்க்குக் கொடாது கேட்டினைக் கொடா நின்றீர். அங்ஙனம் கேட்டினைக் கொடுக்கு மிடத்து உதவி யற்றவர் கூறுவது யாதோ? நல்ல குணமுடையவர்கள் சித்திரம் எழுதியவன் உயிர் கொடுத்த பாவை அழியுமளவும் அக்குறிப்பு நிற்குமாறு போல தாம் கூறிய மொழியிடத்து உண்மை கெடார், உமது பொருள் வேட்கையிடத்து உனக்கு ஏதில ளாகிய யான் கூறுவது எத்தன்மையது; பயன்படாதே. ஐய! எமது பல்லு விழுந்து முளைத்த இளமைப் பருவத்தைப் பாராட்டி விட்டீர். அப்பருவம் ஒழிந்து முல்லை முகை ஒத்த நிரைத்த நெருங்கிய பற்களுடைய நுகர்ச்சிக்குரிய இளமைப்பருவம் எல்லாம் முன் பாராட்டி விட்டீரோ? செய்திலையே. ஐய! நீலமணி போன்ற எமது கூந்தலிற் புழுகு பூசித்தாயர் ஐந்து வகையாக முடிந்த இளமைப்பருவத்தை இதற்கு முன்பு பாராட்டி விட்டீர். அப்பருவம் ஒழிந்து நீர்தான் அதனிடத்துச் செய்யும் தொழில் களை முற்றாகச் செய்து பாராட்டிவிட்டீரோ? அது செய்திலையே. ஐய! குளத்தை அழகு செய்யும் தாமரையின் பசிய அரும்பு ஒக்கும் ஊற்றின்பம் மிகவும் இல்லாத எம்முடைய இளமுலையை இதற்குமுன் பாராட்டிவிட்டீர். அப்பருவம் மாறி ஊற்றின்பத்தை மிகவும் உடைய இடையே நீக்கம் இல்லாத ஏந்திச் சிறிது சாய்ந்த முலையினையுடைய மிக்க இளமைப்பருவம் எல்லாம் முற்றப் பாராட்டிவிட்டீரோ? அது செய்திலையே. நும்மோடு இவட்குப் பற்று மிகும்படி நல்வினை வந்து நெகிழ் கின்ற காலத்து. அதனை நுகராமையாகிய தீவினை வந்து புகுந்தது. ஆகவே அவளது பொன் தகடு போன்று விளங்கும். 1சுணங்கின் அழகு கெடும்படி வெயில் கொளுத்துகின்ற சுரத்தே போகும் நும்மை யாங்கள் எமது வருத்தத்தைச் சொல்லி விலக்க எம்மிடத்து நல்வினை உண்டோ? இல்லையோ யாம் கூறுவதென்? 23 இது, பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி என்னையும் உடன்கொண்டு செல்மின் என்றாளாக அவன் உடன்படானாக அவள் அவன் பிரியின் தனது இறந்துபாடு தோன்றக் கூறியது. ஐயனே, நீர் போக நினைந்த காடோ கொடியது. ஒள்ளிய கொம்புடைய யானையை ஓட்டுவார் அதனை ஓட்டும் கவணால் மரக் கொம்பர்களிலுள்ள பூக்களை உதிர்ப்பர். இவ்வியல்பினதாகிய மலைகள் வெம்பும் போதற்கரிய சுரத்தே நீர் தனித்துப் போக யான் உம்மைக் கைவிட்டிருத்தல் இந்த இரக்கமுடைய ஊரவர்களுக்குச் சிரிக்கத்தக்க காரியமாகும். நீர் பிரிவீராயின் யான் உண்ணவும் மாட்டேன், உயிர் வாழவும் மாட்டேன். தோளின் நலத்தை நுகர்ந்த கணவரால் பிரியப்பட்ட மகளிர் தண்ணீர்த் தாகத்தால், கோலித் தண்ணீர் குடிக்கப்பட்ட எச்சிலாற் பயன்படாத குடையோலையை ஒப்பர். அந்நிலையை ஆராய்ந்து பார்ப்பீராக. மனம் விரும்பிய கணவர். நலத்தை நுகர்ந்துவிடப்பட்ட மகளிர் குடியிருப்பார் போகிய பாழுரை ஒப்பர். அந்நிலையை ஆராய்ந்து பார்ப்பீராக. மனம் விரும்பிக் கூடின கணவரால், தம் நலத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர் சூடுவார் சூடிப்போட்ட பூவை ஒப்பர். அந்நிலையை அறிந்து பார்ப்பீராக. நின்னிடத்து யானும் பயன்படாத தன்மையுடையேன். கொலைத் தொழிலுடைய நாய் தனக்கு உரித்தென்று அகப்படுத்திக்கொண்ட மான் அதற்கு உரித்தாகாது வலைக்காரருக்கு உரித்தானாற்போல, எனக் குரித்தாக யான் அகப்படுத்திய என் நெஞ்சு என்னிடத்தில் வராது உன்னிடத்தில் வரும் என்னைப் பாதுகாத்துக்கொள். 24 இது தலைமகன் குறிப்புக் கண்டு. பிரிவன் என ஐயுற்றுச் செல்கின்ற தலைவி, அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டுப் பொருள் வயிற் பிரிகின்றானெனத் துணிந்து ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. இனிய வார்த்தையுடையவளே! நங் காதலர் பிரிவார் என்று நெஞ்சு திடுக்கிடும்படி கேட்டேன்; கேட்டு அதனை உண்டோ இல்லையோ என ஐயுற்றேன். தாம் அஞ்சியிருந்த பொருளைத் தாம் பிறர் சொல்லக்கேட்டால் உண்மையாக வருத்தம் உண்டாகும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. அது எவ்வாறெனில், எனது ஆருயிர்க் காதலர், பல நாளும் புதிய தன்மையாக என்னைப் பாராட்டினார். யானும் இப்பாராட்டுதல் ஒரு பிரிவைக் குறிக்கும் என்று கருதி அதனை ஆராயா நின்றேன். அவர் ஒரு நாள் தூய அழகிய படுக்கையில் என்னைக் கூடித் தோள்மீது துயில் கொண்டு கனாக் கண்டார். அவர் “ஆராய்ந்த அழகிய இறுகிய வளையல் அணிந்த முன்கையுடைய என் காதலி கவலை யடையாதிருப்பாளாக. குத்தும் கொம்பினையுடைய யானை நீர் வேட்கையினாலே பேய்த் தேரின் பொருட்டு ஓடும் நெடு மலையில் வெப்பமான காட்டு வழியைக் கடந்து சென்று இருவேந்தருக்கு நடுவாக நின்று அவரைச் சமாதானப்படுத்துவேன்.பின்பு அவர்கள் எமக்குப் பூசனையாகத் தரும் பொருள் தந்து முடியுமளவும் இவள் இல்லறத்தை யும் காத்துச் செந்தீயையும் ஓம்ப வல்லளோ” என்று அரற்றினார். ஆய்ந்த ஆபரணங்களை உடையவளே! தலைவரின் கூட்டத்துக்கு இடையே நிற்பது பொருள் வயிற் பிரிவாயினும், யாம் அவரைப் பிரிந்து உயிர் வாழும் வலியில் லேம் ஆயினும், “இவள் மார்பிற் 1றொய்யிலை நீங்காதார் இப்பொழுது இவளைத் துறந்தா”ரென்று சிறு மகளிர் அற்பமாகக் கூறும் பழி அவரிடத்தே நிற்கும். என்னுயிர் அவரோடு கூடச்சென்றது என்று சொல். 25 இது, பிரிவு உணர்த்தப்பட்ட தோழி நீ பிரிந்தால் பெருமையில்லாதவர் தொடர்புபோல நும்மை அவர் தூற்றுவன இவ்வகைப்பட்டன சிலவுள வெனத் தலைவி ஆற்றாமை கூறிச் செல வழுங்கியது. திருதராட்டிரனது மக்களுள் மூத்த துரியோதனனது சூட்சியாலே ஐவரென்று உலகத்தாரால் புகழப்படும் தரும புத்திரர் முதலியோர் உள்ளேயாக கையினால் செய்யப்பட்ட அரக்கு மாளிகையை விரைவாக நெருப்புச் சூழ்ந்தது. அது போல மத யானைகள் உள்ளேயாக உயர்ந்த மூங்கிலுடைய மலையைச் சூழ்ந்து அழல் முழங்கும். மதிற் கதவைத் தாழிடும் (கணைய) மரம்போன்ற கையுடையதும் தன் இனத்தைக் காக்கின்றதுமாகிய வேழம், அரக்கு மாளிகையை வீமசேனன் அழித்து தனது சுற்றத்தோடே பிழைக்கப் போகின்றவனைப் போலக் குழி உண்டாகும்படி மிதித்துத் தனது கூட்டத்துடன் செல்லும். இவ் வியல் பினதாகிய காட்டுப் பரப்புச் சூழ்ந்த குன்றுகள் அழன்று கொண்டிருக் கும் சூடான சுரத்தைக் கடப்பீராயின். ஐயனே! பின்னை இவளுடைய நிலைமையைக் கேட்பீராக. புறங்கூறுவார், தம்மிடத்து இருந்தவர்களுக்குச் சிறப்புகள் செய்து புகழ்ந்து வாழ்த்துவர். அவர் எழுந்து சென்ற அளவிலே அவர்களுக் குள்ள பழிகளைப் பலர்க்கும் கூறுவர். அவர்களின் உறவு போல நாம் நீர் கூடி யிருக்கும் காலத்து செவ்வியைத் தோற்றுவித்த மலரை ஒத்த தன்மை யினை உடையேம். ஆயினும் நீர்சிறுபொழுது பிரியுங்காலத்து நும் பழியைத் தூற்றி அழுதல் மாறாத கண்களாயின என்று சொல்லும் சில பழியும் உளவன்றோ? அறிவில்லாதவர், ஒருவர்க்குச் செல்வம் உண்டான விடத்து நீங்கா திருந்து அவருடைய செல்வத்தை நுகர்ந்து பின்னை அவர் வறுமையுற்ற காலத்து அவர்க்கு ஒன்றையும் உதவார். அவ்வியல்பினர் உறவுபோல் நீர் இவ்விடத்தே கூடியிருந்து அருள் செய்யுங்காலத்து இவட்கு உண்டாகிய அழகை வளையல் தானும் பெற்று இறையிற் கிடந்து சிறந்து காட்டிற்று. நீர் பிரியும் காலத்து தோள் மெலிகையாலே அவ்வளை உதவி செய்யாது கழன்றுபோம். இவ்வாறு சில பகை உளவன்றோ? பெருமையில்லாதவன். இருவர் பூண்ட நட்பினால் ஒருவன் கூறிய இரகசியத்தை அறிந்தபின், அவன் சென்றவிடத்து பிறர்க்கிருந்து சொல்லும். அப்பெருமையில்லாத எனது உறவு போல இவள் நெற்றி நீர் அருள்செய்யும் காலத்து உமது அருளுக்குத் தானும் விளங்கினாற்போல ஒளி மிகுந்தது. இனி ஒரு நாள் நீர் அருள் செய்யாக் காலத்து நுதல் நும்முடைய குணத்தைப் பிறர்க்கு அறிவிப்பது போல் பசந்து காட்டும். இதுபோன்ற ஒரு பகை உண்டன்றோ? யான் நினக்குக் கூறுகின்ற வார்த்தையால் என்ன பயன் உண்டு? அப்பகை யுண்மையை எம்மினுங் காட்டில் நீ நன்றாக அறிந்தாய். அதுவுமில்லாமல், நெடுந்தகாய்! இந்த ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களை யுடையவளது அழகு நீ அருள் செய்தலை நீங்கும் காலத்து இவ்விடத்து வானம் துளி மாறும்பொழுது இவ்வுலகம் கெடுமாறு போலக் கெடுங்காண். அதனை உட்கொள்ளாய். 26 இது - பகைமேற் சென்ற அரசன் திறை பெற்ற நாட்டைக் காத்து அதன்கண் தன் நெறி முறைமையைத் தாபிப்பதற்குப் பிரிவன் என்றலின், பிரிவின்கட் தலைவன் பிரிய, இளவேனிற் காலவரவின்கண் தலைவி ஆற்றாளாய் அவர் நமக்கு அருளுங் காலையில் அருளார் காண் என்றாட்குத் தோழி, அவர் வரவிற்கு இக்காலம் தூதாய் வந்தது அன்றோ? நீ ஆற்றுவாயென வற்புறுத்தியது. நீர் பெருகுகின்ற கரையில் நிற்கும் வெண் கடம்புகள் ஒரு அழகிய காதணியை உடைய பல தேவனைப் போலப் பூங்கொத்துகளைப் பூத்தன. செருந்தி சூரியனைப் போல் அரும்புகளை அலர்த்தின. காஞ்சியும் மீனக் கொடியுடைய காமனைப்போல் வண்டுகள் ஆரவாரித்தற் கிடமாயின. ஞாழலும் அவன் தம்பி சாமனைப்போல் நிறம் விளங்கிய பூக்கள் நெருங்கின. இலவமும் இடபக் கொடியுடைய இறைவனைப் போல பூக்கள் பொருந்தின. ஐவர்களுடைய நிறத்தின் தன்மைபோலப் பூக்கள் விரிந்த அக்கரையிடத்துப் பிறமரங்களோடே முன் கூறிய மரங்கள் அழகு பெற்றன. பிரிந்தார்க்கு வருத்தம் உண்டாகவும் கூடினார்க்குப் பெருமை பொருந்தவும் இளவேனில் வந்துற்றது. முன்னர் ஆள்பவர் கலக்கக் கலக்கமுற்றுப் பின் தன்னை நிழலாக அடைந்த குடிசனங்கள் வருந்தாதபடி, முன்பு ஆண்ட பகைவரை வென்று அவர்களினின்றும் காத்த புகழை உலகத்தார் புகழும்படி நங் காதலர் நாட்டிலே இருக்கின்றார். அவர் இயற்கை அழகு கெட்ட எனது பெரிய மிருதுவான தோளை புதிய தேனைக் கூட்டமாகிய வண்டுகள் நுகரும் இளவேனிற் காலத்தே கூட நினைப்பார். நம்மைக் காத்தற்கு உரியான் இவனென்று விரும்பி தம்மை நிழ லாக வந்தடைந்த குடிசனங்களைத் தமக்குப் பாரமென்று பொறுத்துத் தம் புகழ் உலகெங்கும் பரக்கையினால் அவ்வுலகத்தார் புகழத் தமக்கய லாகிய நாட்டிலே நங் காதலர் இருக்கின்றார். அவர் குற்றமில்லாத என் அழகு கெடுதற்குத் தேனினம் திசைதோறும் திசைதோறும் ஆரவாரிக்கும் திருமருதந் துறையிலே அருளுதல் செய்வார் (திருமருதந் துறையில் என்னுடன் துறைபடிந்தாடி அருளுதலைச் செய்வார் என்றவாறு). முன்பு நாடாண்ட அரசர் செய்த வருத்தத்துக்கு அஞ்சி நிழலாக வந்தடைந்தவர்களுக்கு நெஞ்சு வருந்தாதபடி பகைவர் அணுகாதபடி காத்து. அவ்வரசர் தருமம் அல்லாத பொருளை விரும்புகையினாலே அவரை நீங்கின நாட்டிலே இருக்கின்றார். அவர் எம்முடைய அழகிய நெற்றி பசந்து நாமும் வலிய பெரிய அழகை இழப்பதற்கு நீரற்று ஓடுதல் சுருங்கின இளவேனிற் காலத்தே அருளுதலைச் செய்வார். இவ்வாறெல்லாம் கூறி மனம் சுழலாதொழி. அதற்குக் காரணம் நங் காதலர் போர் யானையை யுடையராய்ப் போர் செய்தற்கு எதிர்த்து வந்தவர்களுடைய போரிடத்தே நீ கூறியவாறே மேலான நாடுகளைப் பெற்ற வெற்றியையுடையர். ஆகவே, அவர் வருவர் என்று சொல்லி அவருடைய மெய்மொழியாகிய தூது வந்தது இனி தோழி ! நீ இனிது வாழ்க. 27 இது, தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனிற்கண் “எம்மையோ மறப்பது. இக்காலத்து இவ்வூரின்கட்தாம் விளையாடும் விளையாட்டையும் மறந்தாரோ” எனச் சொல்லி ஆற்றாளாய் தலைவிக்குத் தோழி தலைவன் வரவு உணர்ந்து கழி உவகையாற் கூறியது. கொடுப்பதில் குறைகாட்டாமல் கொடுத்து இல்லறம் நடத்தும் முறையை அறிந்து நடத்திய தீவினையல்லாதவனுடைய செல்வம் மிகும். அதுபோல நீர் மிகும் ஆற்றங்கரையில் மரங்கள் தழைத்தன. கேட்டார் மயக்கம் உறுதற்குக் காரணமான மடமொழியினையும் மான்பிணையின் நோக்கினையும் உடைய காதலுடைய மகளிரின் பற்கள் போல மண முடைய மல்லிகையின் முகைகள் அலர்ந்தன. குளிர்ச்சியுடைய மணல் உதிர்ந்த பூந்தாதுகளாலும் தளிராலும் காதலரைக் கூடினவருடைய மயிர் போல அழகு பெற்றது. இவ்வாறு இளவேனிற் காலம் அறிவில்லாத அமைச்சன் காரியத்தைப் புலப்படுத்தப் படைவலியில்லாத அரசனது நாட்டிலே பகையரசன் படை வந்துவிடுமாறு போலத் தங்குதலைச் செய்தது. குயில்கள் நிலம் அழகு பெறுதற்கு ஏதுவாகிய மரங்கள் மீது இருந்து இளவேனிலைக் கண்டு காவில் ஆரவாரஞ் செய்யும். அக் குயில்கள் நம்மை இகழும்படி நல்ல அழகிய நமது நிறம் கெடும்படி தாம் விரும்பாத நம்மை அவர் மறப்பாராக. தாம் அணிந்த ஆபரணங்கள் அழகு பெறுதற்குக் காரணமான அழகுடைய பரத்தையருடைய அழகு தமது மனத்தே மகிழ்ச்சியைச் செய்கையாலே தமது அறிவு பூரிக்கப் பெற்றவரைப் புகழ்தல் மாட்டாத கூடலை அவர் நினையாரோ? நினைக்கில் வருவரன்றோ? நமது அழகு கெட்டமை கண்டு மலைமேலே மயில்கள் ஆர வாரித்து ஆடும்படியும், ஊரிலுள்ளார் ஆரவாரித்து அவர் தூற்றும்படி யும் நமது இயற்கை அழகு மிகக் கெடும்படி, தாம் விரும்பாத நம்மை அவர் மறப்பாராக. பகைவரை வஞ்சனையாற் கொல்லாது வென்று கொல்லும், பரந்த கடலிடத்து முளைத்து நின்ற மாமரத்தைப் பிளந்த வெல்லும் வேலை யுடைய முருகனது திருப்பரங்குன்றின் மேல் பரத்தையருடன் விளை யாடும் விளையாட்டையும் விரும்பாரோ? விரும்புவரன்றோ? என்னை மையலாக்கி நீல மலர் போன்ற கரிய எனது கண்கள் மகிழும்படி தன்னோடே மருவுதல் செய்து. தான் செய்த பொய்யாலே மனம் தன்னிடத்திலே பொருந்திய., விரும்பாத நம்மை மறப்பாராக. கோலஞ்செய்த பரத்தையர் கூட்டத்தோடு மனம் விரும்பி விளையாடும் வையை யாற்றிடத்து நீண்டு உயர்ந்த மணலிடத்து நுகர்ச்சியையும் நினையாரோ? நினைக்கில் வருவரன்றோ? தோழி! நோய் மிக்க நெஞ்சோடு வருந்தா தொழி. நமது காதலர் தனியராயிருப்பின் அது நாம் இல்லாத தனிமையாகும். காலமோ பிரிந்தார்க்கு நடுக்கஞ் செய்யும் இளவேனிற்காலமா யிருந்தது. ஊரிலுள் ளார் கொண்டாடும் விழாவோ காமவேளுக்குச் செய்யும் விழாவா யிருந்தது. ஆதலால் நம் காதலி மிகவும் கலங்குவாளென்று கருதி வலிய வேகமுடைய தேரை விரைந்து செலுத்தித் தாம் எமக்குத் துணையா யிருக்குந் தன்மையை எமக்குந் தந்தார். 28 இஃது இளவேனில் வரவின்கண் ஆற்றாத தலைவி தூது விடக் கருதத் தோழி, அவர் பிரிந்திருத்தலை நம்மினுந் தாம் வல்லரல்லரெனச் சொல்லி வற்புறுத்தியது. பூக்களைப் பறிப்போர் சுனையிடத்துள்ள பூக்களைப் பறிக்க வேண்டா. நாங்களே தருகின்றோம் என்று சொல்வது போல மரங்கள் தமது கிளைகளில் வண்டுகள் பாடுகின்ற மலர்களைத் தாங்கி அவற்றைக் கொடுப்பன போல இதழ் விரிகின்ற கண்ணிகளை மகளிர் சுட்டிச் சூடும்படி தாழ்ந்து கொடுத்தன. இவ்வாறு துறைதோறும் மரங்கள் அழகு பெறும்படி நின்றன. மகளிரின் சிவந்த தலைக்கோலம் தங்கின மயிர் போல் வையை யாற்றின் சிலவிடங்கள் சிவப்பு மணல் உடையனவாயிருந் தன. அவ்வாற்றில் வாரடித்து ஓடும் கருமணல் திருமகளுடைய மார்பிடத்தே கிடக்கும் முத்தாரம் போலவே ஊடாகச் செல்லும். வளைந்த இறையை உடையவளே! மலர்கள் மலர்ந்து முடிவடை யாவாயினும், குயில்கள் தம் பேடையை அழைத்துக் கூவுமாயினும், நமது தலைவர் நம்மைப் பிரிந்து பின் நினையாராயினும், அரிய துயரைச் செய்யும் காம நோய்க்கு இவள் தாங்கி இருப்பாள் என்று கருதாது இவள் இறந்துபடுவள் என்று நீ வருந்தும்படி எனக்குக் காமநோய் மிகுமாயி னும், அவர் நம்மாட்டுச் செய்யும் அருள் என்ன பயனைத் தரும்? சிறிய பற்றைகளில் மலர்கள் இருப்பனவாயினும், வண்டுகள் சோலையிடத்தனவாயினும் அயலார் அலர் தூற்றுவராயினும், நம் தலைவர் நம்மைப்பிரிந்து பின் நினையாராயினும், பசப்பு நெற்றியில் படருமாயினும், அசைகின்ற வளையுடையவளே! நம்மாட்டு அவர் செய்யும் அன்பு என்ன பயன் தரும்? வருகின்ற நீர் மணலிடத்தே சுவறினதாயினும், கொம்பர்களிடத் துள்ள பூக்களில் வண்டு ஆரவாரிக்குமாயினும் மாவிடத்துத் தளிர் உள்ளன வாயினும், நந்தலைவர் நம்மை மறந்து நினையாராயினும், அழகை இழந்த கண்கள் உறக்கத்தைக்கொண்டு ஆற்றியிராமல் தனிமை யால் உண்டான நோய் மிகுமாயினும். பசிய வளையல் அணிந்தவளே! நம்மிடத்து அவர் செய்யும் அன்பு என்ன பயனைத் தரும். ஆயிழாய்! இவ்வாறு பயனில்லாது கூறுதலை ஒழி. தொலைவான நாட்டில் உறைகின்றவருக்கு எமது வருத்தத்தைச் சொல்லி நாம் தூது போகவிடவேண்டா. இக்காலத்து நம்மினும் தாம் பிரிந்திருத்தலைத் தாங்கமாட்டாதவராய் விரைந்து வருவர். ஆதலால் வருந்தி என்ன காரியஞ் செய்கின்றாய். 29 இது, பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுத்த, அதனை எதிர் மொழிந்தாளுக்கு, தோழி அவன் வரவு உணர்ந்து கழியுவகையாற் கூறியது. கருப்பந் தங்கிய காலத்துப் பெண்ணுக்குத் தோன்றும் வயாநோய் அவளது இளமைக் காலத்து அழகைக் கெடுக்கும். அதுவல்லாமல் அவள் மிக வருந்துகையால் அதைக் கண்ட சுற்றத்தாரும் வருந்துவர். பின்னர் அவளின் மெய்நோக்காடு கண்டு சுற்றத்தார் வருத்தமுறும்படி அவள் புதல்வனை ஈன்றெடுப்பாள். பின் அப்புதல்வனைக் கொண்டு தனது குடி எல்லாம் பாதுகாத்திருப்பாள். இதுபோல உழவர் உலகில் பயிரை உண்டாக் குவர். இடையில் வந்த நோய்க்கு வருந்திய வருத்தம் நீங்கும்படி உலகம் தானீன்ற உணவுகளைக் கொண்டு குடிமக்களை எல்லாம் பாது காக்கும். அவள் தனது ஈன்ற அணிமை தீர்ந்து புதிய அழகு பெற்றாற் போல, இளையோர் இழைத்த வண்டற்பாவையும் பூவும் கலந்து கிடப்பன போல, வார்ந்த மணலில் பூக்கள் உதிர்ந்து கிடத்தலினால்தான் (உலகம்) ஈன்ற பசுமை தீர்ந்த அழகு தோன்றும். ஆறிடு மணலை ஊடறுத்துச் செல்லும் நீர் ஒழுங்கு அவ்விளைய மகளிருடைய மயிர் போல விருக்கும். மாமை நிறத்தையுடைய வளின் மார்பில் படர்ந்த சுணங்கு போல மாவின் சிறிது முற்றின தளிர் மேலுள்ள பூவின் தாது உதிரும். இவ்வாறு இளவேனிற்காலம் வந்தது. சில சொற்களைப் பேசுகின்றவளே! தூரத்தே பிரிந்தாரிடத்திற் சென்ற என் நெஞ்சினை ஆற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்று நீ சொல்லும் அளவுக்கு அதிகம் ஆற்றி நிற்பேன். அதனாற் பெற்றதென்? யான் ஆற்றி யிருத்தலை மீறும்படி, வாடைக்காற்று, விரிந்து பனி ஏற்று நின்ற விரவிய பல மலர்களை அளைந்து வந்து பிரிந்தோர்க்கு நோய் செய்தற்குக் காரணமான இளவேனிலின் கண் வருத்தத்தைத் தரும். விளங்குகின்ற ஆபரணங்களையுடையாய்! இளவேனிற் காலத்து நம்மை நினையாராய் மறந்தவரிடத்தில் மனம் செல்லுதலால் என் மேனி வாடும். அதனைப் பிறர் அறிதல் கூடாதென்று கருதி அப்பொழுதே மறைப்பேன். அதனால் பெற்றதென்? யான் அவ்வாறு மறைப்பதைக் கைக் கடங்கும்படியாக படுகின்ற ஞாயிறு அலர்த்தின பூவின் தேனை உண்ணும் தும்பியின் யாழோசை ஒத்த முழங்குகின்ற ஓசையுடைய மாலைக்காலம் வந்து வருத்தத்தைத் தரும். குற்றம் நீங்கிய சொல்லுடையாய்! வளையல்களை நிற்கின்ற நிலையினின்று நெகிழப் பண்ணினவரிடத்து நின்று தோய்கின்ற என்னுடைய அரிய உயிரை அவரிடத்துச் சென்று நெருங்காமல் காக்கத் துணிவேன். அதனால் பெற்றதென்? யான் அங்ஙனம் துணியவும், வண்டுகள் திறந்து உண்ணும் படியாக நிரையாக இதழ்கள் விரிந்த மணமுடைய மலர்கள் நாறும் நாற்றம், நிலாவுடைய இராக்காலத்தே வந்து வருத்தத்தைத் தரும். என்று இவ்வாறு சொல்லி வருந்தியிருந்தாய். உன் வளைகள் கழலும்படியாகச் செய்த தலைவன் பொருள் தேடுதற்குத் தொலை விடத்தே சென்றிருந்து, நின் பற்கள் தோன்றக் கூறும் உனது தேன் போலும் மொழியை நினைந்து நம் அரிய துயர் களையவந்தார். இனி நீ வருந்தாதிருப்பாயாக. 30 இது, பருவ வரவின்கண் ஆற்றாத தலைவி கழிந்தது நினைந்து, “அவர் நம்மாட்டு அன்பிலராயினும் சொல்லுவார் உளராயின் இக்காலத்து இவ்வூரின்கட் பண்டு தாம் விளையாடியவாறு நினைந்து வருவர்” எனக் கேட்ட பாணன் பாசறைக்கட் சென்று தலைவனைக் கண்டு கூறியது. செய்தற்கு அரும் தவங்களைச் செய்தவர்கள் குறைவற்ற போகங் களை நுகர்வர். அதுபோல அரும்புகள் விரிந்து ஒழியாத கிளைகள் தோறும், தான் விரும்பிய தாதை உண்டு ஒலிக்கும் வண்டோடு கருந் தும்பிகளும் வருத்தம் தீர்ந்து மரங்களின் எவ்விடங்களிலும் தங்கும். இவ்வாறு இளவேனில் வந்தது. இக்காலம் வெயிலின் ஒளியைக்கண்டு அறியாத விரிந்த மல ருடைய குளிர்ந்த சோலைகளில் குயில் கூவுங் காலமென்று நங் காதலருக் குக் கூறுவார் இலர். கூறுவார் சிலர் உளராயின் யாம் துயிலின்றி யாமக் கடலை நீந்த தான் மயிலின் சாயலுடைய பரத்தையரை மருவியும் அவருடன் மடுக்களில் ஆடியும் நம்மை மறந்து அவரிடத்தே தங்கி யிருப்பாரோ? இக்காலம் அடங்காத புகழுடைய மதுரையில் அரும்புகள் அவிழ்ந்த நறிய முல்லையிலே தேனினம் ஆரவாரிக்கும் காலம் என்று அவருக்கு அறிவிப்பார் இலர். கூறுவார் உளராயின் நடுயாமத்தே யான் மிகுந்த வருத்தமுற தான் மூங்கிலின் அழகையும் அணையின் மென்மை யையுமுடைய தோளையும், மானின் நோக்கத்தையுமுடைய பரத்தைய ருடன் கூடி நம்மை மறந்து அவர்களிடத்தில் தங்கியிருப்பரோ? இக்காலம் பெறுதற்கரிய இளவேனிற் காலத்துடனே, பெரிய பூங்கொத்துகளுடைய ஆற்றிடைக் குறையைப் பக்கங்களில் வையை ஆறு சூழ்ந்து அறலுண்டாகும்படி பாயும் என்று அவருக்குச் சொல்லு வாரிலர். சொல்லுவார் உளரேல், தம்மை அடைதற்குரிய யாம் ஒளி கெடும்படி காமனுக்கு எடுத்த திருநாட்காலத்து ஆபரணமணிந்த பரத்தையருடன் விளையாடுவரோ? இது பாணன் கூற்று:- காமநோயினால் வருந்தி ஆற்றாத பெருமை யுடைய நின் காதலி, உனது அடியைப் பணிந்து சேராத பகைவரைப் போலப் பெரிதும் நடுங்குகின்றாள். அவள் அழகைப் பெறும்படி அழகு விளங்கின நெடிய திண்ணிய தேரைச் செலுத்துவாயாக. 31 இஃது இளவேனிற் காலத்து வருவல், அத்துணையும் ஆற்றியிரு வென்று நாடு பெறும் ஆசையால் அரசன் சென்றவழி முன்பனிக்காலமும் பின்பனிக் காலமும் வருதலின் ஆற்றாத தலைவியை தோழி, வருவாரென வற்புறுத்தவும். அதனை எதிர் மறுத்துக் கூறிய வழி. தலைவன் யாங் குறித்த பருவம் வருந்த துணையும் ஆற்றியிராளெனப் பின்பனிக் காலத்து வருகின்ற வரவு உணர்ந்து தோழி கழி உவகையாற் கூறியது. ஆறு கூதிர்காலத்திற் பெருகியது போலல்லாமல் வேகங் குறைந்து வற்றி வாய்க்கால்களாக ஓடித் தெளிந்து அழகு பெறும். பெரிய குளங் களின் பக்கங்களில் நுண்ணிய மணல் தோன்றும். அம்மணல்மீதுள்ள கருமணல் மறையும்படி அழகு செய்தது போல ஈர்ங்கையின் வாடிய பூ காம்பு கழன்று விழுந்திருக்கும். கணவரைப் பிரிந்த மகளிரின் நெற்றி போல முன் பூத்த பீர்க்கு இப்பொழுது பூவின்றாய்க் கிடக்கும். தாம் காதலித்த தலைவரைக் கூடிய மகளிர் முகம் போல் தாமரைப் பூவைப் பொய்கை பூக்கும். இவ்வாறாக முன்பனிக் காலத்துக்கும் பின்பனிக் காலத்துக்கும் இடையாய் நின்ற இளவேனிற் காலம் வரும். ஆயிழாய்! நம்மைக் கூடினவர் தப்பாமல் வருவேன் என்று கூறின காலம் அதுவா கும். அக்காலம் வரும் துணையும் ஆற்றியிராது முன்பனிக் காலத்து வராமையாலும், மெய் வளைதற்குக் காரணமான பின்பனியாலும் உண்டாகிய சோர்வு இறந்து பாட்டை நமக்குத் தருதலால் நெஞ்சு கலங்குகின்றது. யான் எங்ஙனம் ஆற்றுவேன்? இந்த அசைதலையுடைய வாடைக்காற்று, உலகுக்கு உணவை விளைவிக்கும் சந்திரனின் கிரணங்கள் பால்போல் விளங்கும் இராக் காலத்து, விளங்குகின்ற ஆபரணங்கள் குளிரும்படி வந்தது. இரண்டு படைகளும் கலந்து செய்யும் போரிலே பகை அரசனைக் கொன்று அவன் நாட்டைக் கொண்டு யானைமீது வரும் அவருடைய வீரத்தால் பிறந்த அழகை நாம் கண்டு நுகரும்படியாக அவ்வாடைக் காற்று நம் உயிரைக் கொள்ளாது விடுவதொன்றாய் நின்றதோ? இம்மழை நீண்ட கரும்பில் உயர்ந்த பூவை நிறம் கெடும்படி காற்றால் தூற்றி தோள்கள் குளிரால் வருந்தி நம் மார்பைச் சேரும்படி தூறுகின்றது. வாளாலே வென்று நல்ல குதிரையை ஏறி அவருடைய வீரத்தாற் பிறந்த அழகை நாம் கண்டு அனுபவிக்கும்படி அம்மழை நம் உயிரைக் கொள்ளாது விடுவது ஒன்றாய் நின்றதோ? புகைபோலச் சிறிய பற்றைகளைச் சூழ்ந்துகொண்டு பூவாக மலர்ந்து தேன் பொருந்தாத அரும்பு போன்ற பல்லின் முனைகள் கொட்டும்படி பனி மிகுந்திருக்கும். பகையை வென்று திறையை வாங்கிப் பாய்ந்து செல்கின்ற குதிரை பூட்டிய தேரில் வரும் அவரின் வீரத்தாற் பிறந்த அழகை நாம் கண்டுநுகரும்படி அப்பனி நம் உயிரைக் கொள்ளாது விடுத்தது ஒன்றாய் நின்றதோ? விளங்குகின்ற ஆபரணங்களையுடையவளே! பயனில்லாதவற் றைக் கூறாதே. கூற்றுவனை ஒத்தவேற் படையையுடையவர் தான் சொல்லிச் சென்ற நாளெல்லையில் வருதற்கு இன்னுஞ் சிறிது நாட் செல்லும் என்று இவள் ஆற்றாமையால் வருந்துவள் என்று கருதி கூடலிலே நெடிய வெற்றிக்கொடி கட்டும்படியாகப் புகுந்தான். 32 இது, தலைவி கால வரவு கண்டு ஆற்றாளாய விடத்து, தோழி காலத்தை நோக்கி “ வந்து அழகிதாகச் செய்தாய்” எனச் சொல்லி தலைவிக்கு, “நங் காதலர் வருகின்றாரெனச் சொல்லி வந்த தூது இது காண். நாம் விருந்தயர் வோம்” எனச் சொல்லியது. மேகம் மழை பெய்யாமையால் புலர்ந்த கருமணல் கத்திரிகை கொண்டு இடையே நறுக்கப்பட்டிருக்கும் மேகம் போன்ற கரிய ஐந்து பகுதியுடைய மயிர் போன்றது. நறுக்கி ஐதாக்கப்பட்ட ஐம்பாவில், விளங்குகின்ற ஆபரணங்களுக்கு இடையே செருகிவைத்த பொன்னாற் செய்த மாலைபோல அந்த மணலிலே முறுக்கவிழ்ந்த பல பூக்களும் வேங்கையின் விரிந்த பூக்களும் ஒழுங்காகக் கிடக்கும். தெளிந்த நீராலும் நல்ல நிலவுடைய நாளாலும், புதல்வனை ஈன்றவளுடைய வயிற்றிலுள்ள தேமல்போல நெய்ப்பினை உண்டாக்கும் மாந்தளிராலும், அறிவாற் பெரியவர் தங்காரியம் முடிதற்குரிய காலம் வருந்துணையும் அடங்கியிருக்குமாறு போல காலம் வருந்துணையும் மலராத அரும்புகளையுடைய கொம்புகளாலும், வாசித்தவரது யாழோசை போல வண்டுகள் ஆரவாரிக்கும் சிறிய பற்றைகளாலும், நல்ல மகளிருடைய கூத்துக் கண்டார்க்கு விருப்பஞ் செய்யுமாறு போல விருப்பம் வந்த பூங்கொம்புகளாலும், நிலையாமையை உணர்ந்தவ ருடைய கொடை போல பூங்கொத்துகள் அலர்ந்து எல்லார்க்கும் பயன்படும் மரத்தாலும், அன்பாற் கூடினவருடைய புல்லுதலைப் போலப் பின்னுதலுற்ற கொடியாலும் பொழில்கள் அழகைப் பெறவந்த இளவேனிலே! அழகுபெற எப்பொழுதும் வருவை என்று நம்பியிருந் தார்க்கு நீ மிகவும் நல்லையோ? இளவேனிலை நோக்கிக் கூறியபின் தோழி தலைவியை நோக்கிக் கூறுகின்றாள், “ இவ்விளவேனில், குளிர்ந்த அருவியின்அருகே நின்ற நறிய முல்லையின் மகளிர் பற்களை ஒக்கும் பூக்களை வாசம் கமழ்கின்ற திரண்ட மயிருக்கு நிறையக் கொய்து கொள்மின் என்று கூறா நிற்கும். அதுவுமல்லாமல் உலகில் பசந்து வருந்தும் காம நோயைத் தனக்குப் பகை என்று கருதி ஒட்டி, சிறப்பாக நமது இனிய உயிர் உண்டாக்கும் மருந்துமாய், நாம் துயர் தீர்தற்குக் காரணமான வார்த்தையோடே நாம் முயங்கிய காதலருடைய தூதாய் இவ்விளவேனில் வந்தது. ஆதலால் அக்காலத்துக்கு விருந்தானவற்றை நாம் செய்வோம் ” என்றாள். 33 இது, பருவ வரவின்கண் தோழி வலியுறுத்திக் கூறியதற்கு எதிர்மறுத்து ஆற்றாளாயினாளை அவள் தலைவனது வரவு உணர்ந்து ஆற்றுவித்தது. தான் விளைவித்தலின் பெருமை அடைந்த ஆறு, உலகின் பெரிய அழகைக் காணவேண்டிக் கண் விழித்துப் பார்த்ததுபோலப் பக்கத்தே கிடந்த நீர் நிறைந்த குளங்கள் பூக்களால் அழகு பெறும். பளிங்கு மணியை ஒக்கும் கண்ணாடிக்குள் பவளங்கள் அழுத்தப்பட்டுத் தோன்றி னாற் போல அரும்பவிழும் முருக்கின் இதழ்கள் குளங்களிலே காம்பி னின்றும் கழன்று விழும். தெளிந்த குளங்களிலே தம்மையும் தாம் ஊதும் பூவையும் கண்டு அவ்விடத்தே வண்டுகள் சேர்ந்து ஆரவாரிக்கும். இவ்வாறாக கரையினின்ற மரங்கள் எல்லாம் அரும்புகள் அலர்ந்து பல மலர்களைச் சூடினாற்போலப் பூக்களைச் சூடும். எம்மைப்போலன்றிக் கணவரைக் கூடினவர் தழுவிய கையை நெகிழாது பூந்தாதை உதிர்க்கும் இளவேனில் வந்தது. பூப்போன்று அழகிய எமது கரிய கண்கள் வருந்த நம்மைக் கைவிட்டவர் வாராராயினார். இளவேனிற் காலத்தே நெருப்பின் உருவை ஒப்ப இலவம் பூக்கும். பொரியின் ‘உருவை ஒப்பப் புன்குகள் பூ உதிர்க்கும். புதிய மலர்களை யுடைய கோங்குபொன் எனும்படி தாதை அலர்த்தும். அது தனித்திருப் பாரை இவ்வூர் இகழ்ந்து அலர் தூற்றும் கொடுமையை ஒக்கும். அது, பசப்பு எனது அழகை மறைப்பது போன்றிருந்தது. பிரிந்த மகளிரை நகைப்பதற்கு நம் காலம் வரவில்லையே என்று வருந்தியிருந்து, அது வந்தபின் எமது வருத்தங் கண்டு சிரிப்பனபோல கொம்புகள் மிகுந்த பூவைப் பூத்தன. அதனைக் கண்டு எனது நெஞ்சு வருந்தித் தலைவரை நினைந்து அழிவது போல இராநிற்கும். மயில்கள் நம்மை இகழ்ந்து திரண்டு ஆடுவன போலே இராநிற்கும். நம் கைவளைகள் நாம் காப்பவும் கழல்வனபோலவும் இராநிற்கும். என் கண் போலே நீர் ஒழுகும் இளவேனிற் காலத்திலும் வாரார். ஆதலால் இந்நோய் இனி இந்நிலையினும் மிகுவது போல இராநிற்கும். நரம்பின் இசையை தானத்திலே நிறுத்தும் வங்கியம் என்னும் குழல்போல ஒலிக்கும் வண்டோடு தும்பி தாதை ஊதா நின்றது. நமக்கு வருத்தம் தரும்படி இனிய குயில் கூவாநிற்கும். இவ்வளவிலும் தலைவர் ஒரு தூதாயினும் வரவிட்டாரல்லர். அவர் நம்மைத் துறப்பாரோ, துறவாரோ? அது கேட்ட தோழி, நீலப் பூப்போலும் கரிய கண்ணினை யுடையாய்! நீ மனம் வேறுபட்டு நம்மை இகழும் குயிலையும் தலைவரை யும் புலவாதேகொள். தாம்வரும் நாளின் எல்லையை நம் நெஞ்சிலே நிறுத்திச் சொல்லிய கூற்றுக்கள் பொய்யாகா. மாலை அணிந்த அகன்ற மார்பை யுடையவர் காற்றுக்கும் வேகமான தேரை விரைவாகச் செலுத்தி நமது நெளிந்த கூந்தலைப் பின்னின பின்னல் விடும்படி விரைவாக வந்தார்காண் என்றாள். 34 இது, பருவங்கண்டு தோழி வருவர் என்று வலியுறுத்தியதை எதிர்மொழிந்து ஆற்றாளாய தலைவிக்கு அவன் வரவு உணர்ந்து கழிஉவகையாற் கூறியது. அகன்ற ஆறுகளின் நீர் பெரிய உலகில் உயிர்கள் எல்லாம் நிலை பெறும்படி பல வாய்க்கால்களால் சென்று பரக்கும். பரந்து மன்னுயிர் களை ஊட்டிப் பாதுகாக்கும். ஆற்று நீர் வற்றியபின்பு வாய்க்கால்களால் சிறிது நீரோடு மணல் செல்லும். தமக்கு முன்பு ஓர் உதவியைச் செய்தவர் கெட்ட விடத்து பெரியவர்கள் மறுபடியும் ஓர் உதவியைச் செய்வர். அதுபோல் அவ்வாறுகள் அழகு பெறும்படி, அந்நீரை உண்ட கொம்பு களினின்றும் வண்டுகள் ஊதும் பல மலர்கள் ஆற்றில் சொரியும்படி இனிய இளவேனிற் காலம் வந்தது. அலர்ந்த காஞ்சிப் பூவின் தாதை அளைந்து கரிய குயில்கள் கூவா நிற்கவும், இக்காலத்தே பிரிந்துறைதற்கு அஞ்சாதவருடைய கொடு மையை யான் மறையா நிற்பேன். அதனாற் பெற்றதென்? பொய்ச்சாட்சி சொன்னவன் நிழலுக்கிருந்த மரம்போல யான் அழகு கெடும்படி என் நெஞ்சு காமத்தீ கொளுத்தி என்னைச் சுடுமாயின் யான் அதற்கு என் செய்வேன்? (பொய்ச்சாட்சி சொன்னவன் பாவத்துக் கஞ்சி மரம் அழகுகெடும் என்றவாறு) பூவின் பாரத்தால் தளர்ந்த கொம்பின்மேலே வண்டின் கூட்டம் தங்கவும் நிறை என்னும் குணம் தளராதவருடைய கொடுமையை யான் மறையா நிற்பேன்.அதனாற் பெற்றதென்? மறைப்பினும் நாடாளும் முறைமை தளர்ந்த அரசன்கீழ் இருந்த குடிமக்களைப் போலக் கண்கள் கலங்கிப் பொறுத்தல் ஆற்றாது நீர் ஒழுகுமாயின் அதற்கு என் செய்வேன். முறுக்கவிழ்ந்த பூக்களையுடைய கொம்பரிடத்தே வண்டுகள் யாழ்போல ஒலிக்கவும் கொண்ட கோட்பாட்டினைக் குலையாதவ ருடைய தீமையை மறையா நிற்பேன். அதனாற் பெற்றதென்? மறைப்பி னும் சுற்றம் கெட வாழ்பவன் செல்வம் கெடுமாறு போல் தோள்கள் அழகழிந்து வளைகள் தங்கப் பெறாவாய் நெகிழ்ந்து கழலுமாயின் யான் அதற்கு என்ன செய்வேன்? நின் நெஞ்சின் நோய் கூறி நீ சுழலாதே. ஏடி! நாம் வருவலென எண்ணியிருந்த நாளெல்லை கடவாமல் கண் தருகின்ற வருத்தத்தைக் கைநீக்கினாற்போல் வந்தார். 35 இது, வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி இக்காலம் அல்லவோ அவர் வரு மெனச் சொன்ன காலம் என வன்புறை எதிர் அழிந்தாளை நீ துனி கொள் ளேல், அவர் வந்தாரென தலைவன் வரவு உணர்ந்து தோழி ஆற்றியது. உள்ளம் சோம்புதலில்லாதவன் செல்வம் பெருகுமாறு மரங்க ளிடத்தே பூக்கள் மிகும். அவன் முயன்று வருந்திப் பெற்ற செல்வத்தை வருந்தாமற் பெற்று உண்பவர்களது நுகர்ச்சி போல அம்மரக் கொம்பர் களிலே வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கும் கரிய நிறமுடையவளின் மேனி போலத் தாளி பூக்கும். அந்நிறத்திற் பரந்த சுணங்குபோல அத் தளிர்மீது தாது விழும். அம் மலர் பரந்த சோலையை அடுத்து பளிங்கு போலும் நீரையுடைய குளங்கள் வற்றாது நிற்கும். பூப்பரந்த துறைகளை அணுகி அம்மணலை அலங்கரித்து நீர் பாயும். இவற்றின் மேலே இருந்து பகையாற் பிரிந்திருந்தாரை மிக இகழும் குயிலைப் பார்த்து வருந்திய நெஞ்சத்தோடு அவர் நம்மைப் பிரிந்து இனி நினையார் என்று கருதி நீ வெறுப்புக் கொள்ளாதே. விளங்குகின்ற நெற்றியையுடையாய்! நாம் நிறுத்த நில்லாவாய் கண்கள் நீர் வடிக்க, முயங்கி அதனை நிற்பாட்ட அவர் இன்ன காலத்தில் வருவோமென்று சொன்னார். அக்காலம்தான் வண்டு ஆரவாரித்து, இன்பம் அளவிட முடியாதனவாய் ஆற்றின் உயர்ந்த இடுமணலிடத்துக் குளிர்ந்த அருவி நீராலே வளர்ந்த நறிய முல்லைப் பூவிற் றாதையுண்ணும் இவ்விள வேனிற் கால மல்லவோ? ஒள்ளிய ஆபரண மணிந்தவளே! “நீ எடுத்துக்கொண்ட காரியம் வெற்றியுண்டாவதாக” வென்று கூறித் தொழுது நாம் வழியனுப்ப அவர் நமக்கு வருவோமென்று உரைத்த காலம், பெருகிய காலத்து நீர் நிறைந்த ஆற்றிடைக்குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக் கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழவிடத்தே அவருடனே விளையாடும் இவ்விளவேனிற்கால மல்லவோ? விளங்குகின்ற ஆபரணங்களையுடையவளே! இறந்து படுவோ மோ ஆற்றியிருப்போமோ என்று பலவற்றை ஆராயும் நெஞ்சினை யுடையோமாய் நாம் வருந்தி வழியனுப்ப அவர் நமக்கு வருவோமென்று உரைத்த காலம், நிலத்திலுள்ளார் புகழும் நீண்ட மாடங்களையுடைய மதுரையிலுள்ளாராகிய சான்றோர் நாவிற் பிறந்த கவிகளின் புதுமை யைக் கொண்டாடும் இவ்விளவேனிற்கால மல்லவோ? தம்மை நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சழியும் நினது வருத்தத்தையுடைய காம நோய்க்கு இளைப்பாறுதல் அளிக்க நின் தலைவர் நினைந்தார். பறவைபோற் பறக்கும் தேரையும் பொதிய மலையையுமுடைய பாண்டியனது தப்பாத மொழியைப் போன்ற எல்லை தப்பாத நாளோடு, நம்மை விட்டு நீங்கிச் சென்ற காதலர் நம்மைக் கூட வந்தார். 36 இது, காலங்கண்டு ஆற்றாத தலைவியது நிலைமை கண்டு ஆற்றாத தோழி, தான் ஆற்றாளாய் அவட்குக் கூறியது. தோழி! காமனுக்கு எடுக்கும் விழாவை எதிர்கொள்ளும் இளவேனிற் பருவம் வந்தது. கலப்பைப் படையினை யுடைய பலதேவ னுடைய துளபமாலைபோல உயர்ந்த வெண்கடம்பின் மீது மயில்கள் இருக்கும். அதில் வண்டுகள் யாழ் நரம்பு ஒலிப்பதுபோல ஒலிக்கும். வளையல் அணிந்த விறலி பாட்டுப்போலத் தும்பிகள் ஒலிக்கும். தடாகங்கள் சூழ்ந்த இளமரக்காவில் பல மணங்கள் மிகுந்த பூக்களை றீம் என்னும் ஓசை பிறக்கும்படி ஊதும். மலர் சூட உரியாரை ஆராய்ந்து மணத்தால் தம்மிடத்தே அழைப்பன போல் மலர்கள் அலரும். கரிய குயில்கள் கூவும். பெரிய நீர்த் துறைகள் பூவால் அழகு பெறும். இவ்வாறு இளவேனிற் காலம் வந்ததும் நம் காதலரோ வாரார். ஆதலால் எனது நெற்றி பசப்புப் பரந்து பரந்து வந்து பின்பு முழுக்கப் பசந்தே விட்டது. என் தோள்கள் மெலிந்து மெலிந்து வந்து பின்னர் மிகவும் மெலிந்தே விட்டன. இப்போது மிகவும் நீர் ஒழுகும் என்று கருதி என்கண்கள் வெய்ய கண்ணீரை ஒழுகா நிற்கும். என் நெஞ்சு மலையிடத்தே போனவருடைய வார்த்தையை விரும்புகையினாலே தோன்றிய காமத் தீயாலே என்னுடைய முலை யெல்லாம் காந்தா நிற்கும். காதலர் நம்மிடத்தில் நிகழ்த்தும் காதலையும் நாம் இறந்துபடா திருந்து காண்பேமோ? நம்மைப் பிரிந்தவர் அவ்வவ்விடங்களிலே இருந்து விடுவரோ? நம்மேற் கொண்ட காதலினின்றும் நீங்கிவிட்டாரோ? இவற்றுண் முடியும் காரியம் எதுவென்று தலைவி கூற அது கேட்ட தோழி கூறுகின்றாள், “கத்திரிகை இடையிட்ட விளங்குகின்ற கூந்த லுடையாய்! புணர்ந்தவர் தொலைவிடத்தே பிரிந்திருத்தலும் உலகத் துக்கும் பொருந்தும். அவர் வருவதற்கு முன்பே என் நெஞ்சு அவர் குறித்த நாள் வந்து நின் அழகைக் கெடுத்தலும் உண்டென்று கருதி, அந்தணர் யாகத் திடத்துப் புகைபோல நெட்டுயிர்ப்புக் கொள்ள நின்றேன். இதுகாண் யானுறுகின்ற வருத்தம்” என்று தானும் ஆற்றாளாய்த் கூறி ஆற்றுவித்தாள். சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ செய்த பாலைக்கலி முற்றும். குறிப்பு:- இப்பாலைக் கலியில் வரும் பொருள்களை நோக்குமிடத்து இது மற்றைச் சங்க நூல்களிலும் பிற்பட்டதாதல் தெள்ளிதில் விளங்குகின்றது. கலித்தொகையில் வரும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வோர் காலத்திற் செய்யப்பட்டிருக்கலாம். குறிஞ்சிக்கலி குறிஞ்சித்திணை மலையும் மலை சார்ந்த இடத்தும் வாழும் மக்களின் காதல் ஒழுக்கத்தைக் கூறும் பகுதி குறிஞ்சித்திணை எனப்படும். மக்கள் ஆதியில் வேடராய் அலைந்து திரிந்தபின் சிறிது முன்னேற்ற மெய்தி மலைகளில் தங்கி வாழ்க்கை நடத்தினர். இக்காலத்தில் அவர்கள் மலையிற் கிடைக்கும் தேன் கிழங்கு காய்கனி முதலிய பயன்களையும், வேட்டை யாடிப் பெறும் விலங்குகளின் இறைச்சியையும், மலை நெல் தினை முதலிய புன்செய்களையும் கொண்டு வாழ்ந்தனர். மலைகளிலே சிறிய இல்லங்களமைத்து வாழ்ந்த கானவரின் மைந்தரும் மகளிரும் மரஞ் செறிந்த மலை ஒதுக்குப்புறங்களில் ஒருவரை ஒருவர் தனியே எதிர்ப் பட்டுப் பிறரறியாவகை மறைவிற் காதலித் தொழுகிப் பின்பு பலர் அறியக் கிழவர் கிழத்தியராயினர். காதல் ஒழுக்கக் காலங்களில் நிகழக் கூடியவற்றை நாடக முறையாகச் சிறப்பித்துப் பாடப் பட்டனவே அகப் பொருட்பாடல்களாகும். களவொழுக்கம் பற்றிப் புலவர்கள் மனோ கற்பனையாற் கூறியிருக்கும் பொருள்கள் மிகவும் சுவையுடையன. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ஒழுக்கத்துக்கு உரிய பொருள்களாம். 1 தோழி தலைவியிடத்தே சில புதிய மாறுதல்களைக் கண்டாள். அவற்றால் அவள் தோழியின் ஒழுக்கத்தை அறிந்தாள்; அறிந்து, தலைவி தன்னிடத்து அவளது ஒழுக்கத்தை மறையாதிருக்கும்படி மெய்யோடு பொய்யும் கலந்த சிலவற்றைக் கூறுகின்றாள்: தடாகத்திலே பூத்த நீல மலரின் நிறத்தை உண்ட கண்களை யுடையவளே! யான் கூறும் அவற்றை நின் மனத்தால் ஆராய்ந்து பார்ப்பாயாக. தனக்குப் பிறர் இணையில்லாத ஒருவன் அழகாகக் கட்டப் பட்ட (விரியாத) மலர் மாலையைக் குறிஞ்சியிடத்தே சூடியிருப்பான். அவன் வில்லுடையவனாய் யானை முதலிய விலங்குகளின் அடியைத் தேடுபவன் போல் எனக்கு முன்வருவான். வந்து என்னை நோக்கித் தானுற்ற நோயைக் குறிப்பான். யான் அறியும்படி காட்டுவான். ஆனால் வாய் விட்டு யாதுங்கூறான். இவ்வாறு அவன் பலநாளும் வந்து போவான். அவனிடத்து மிகுந்த பழக்கமில்லாத யான், அதனைக் கண்டு அவன் இவ்வாறு வருந்துகின்றானே என்று நினைந்து இரவில் நித்திரை பெறாது வருந்துவேன். அவனும் அங்குநின்று தன் குறை.. இஃதென்று கூறுகின்றானில்லை. அவனை நோக்கி, “உனது வருத்தத்தைக்கண்டு யானும் வருந்துகின்றேன்” என்று கூறுதல் எனது பெண் தன்மைக்கு ஏற்றதுமன்று. இவ்வாறு யான் யாதும் பேசாதிருத்தலைக் கண்டு அவன் ஆராய்ந்து பாராது இறந்து விடுதலும் கூடும் எனக் கருதினேன். இவ்வாறு நினைந்து வருந்தியமையால் எனது தோள்கள் மெலியும்படி வருந்தினேன். அவ்வருத்தம் காரணமாக யான் துணியாத தொன்றைத் துணிந்து நாணமில்லாத தொன்றைச் செய்தேன். வாசங்கமழும் நெற்றியுடையவளே! அதனைக் கூறுகின்றேன் கேட்பாயாக. தினைப்புனத்தில் கூட்டமாகிய கிளிகள் விழாமல் நாம் அவற்றை ஒட்டிப் பாதுகாப்பேமன்றோ. அப்புனத்தின் அயலே கட்டப்பட்டிருந்த ஊசலின் மீது யான் ஒரு நாள் ஏறி ஆடினேன். அப்பொழுது அவன் அடவ்விடத்தே வந்தான். யானும், ஐயனே! சிறிது நேரம் இவ்வூசலை ஆட்டுவாயாக என்று கூறினேன். அவனும் அதற்கு உடன்பட்டுத் தையால்! “நீ கூறியது நன்று” என்று ஊசல் ஆட்டா நின்றான். அப் பொழுது யான் கை நழுவி அவனது மார்பில் விழுந்தேன். அதனை அவன் உண்மையாகக் கருதி அப்பொழுதே விரைந்து என்னை எடுத்து அணைத்துக்கொண்டான். யான் மயக்கந்தெளிந்து எழுந்துணையும் யான் அவன் மார்பிடத்தே இருப்பின் பிறர் அறிவார் என்று அஞ்சினான் அவன். “விளங்கும் ஆபரணமணிந்தவளே! நீ செல்வாயாக” என்று கூறி விட்டு என்மீது ஒரு பார்வையுடையவனாயிருந்தான். அதனால் யான் அறிவு மயங்கியவள்போற் கிடந்தேன். இதுவே அங்கு நிகழ்ந்ததாகும். 2 இரவுக் குறிவந்து ஏகும் தலைவனைத் தோழி அத்தலைவியின் வருத்தங்கூறி வரைவு கடாவினாள். விரைவில் வரைந்தேகுமாறு தலைவனுக்கு உரைத்தமையைத் தோழி தலைவியிடம் கூறுகின்றாள்; கங்கை நீரால் ஈரமடைந்த சடையுடைய இறைவன் இமயமலை யிடத்திற் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தான். அவன் இறைவி யோடு பொருந்தி உயர்ந்த கைலை மலையிலிருந்தான். அப்போது அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலைகளையுடைய இராவணண் அம்மலையை எடுத்தற்குக் கைகைளக் கீழே கொடுத்தான். கங்கணங்கள் அணியப் பெற்ற விசாலித்த கைகளினால் அம்மலையை எடுத்தல் ஆற்றாது அவன் வருந்தினான். அவன் வருந்தியதை ஒப்ப மதமுடைய ஆண் யானை புலியின் வடிவை மிகவும் ஒப்பப் பூத்த வேங்கை மரத்தைப் புலியெனக் கறுவி அதன் அடியை மருப்புகளாற் குத்தும். குத்தியபின் தனது கொம்பை இழுக்க லாற்றாது, பெரிய மலை வெடிப்புகளில் எதிரொலி எழும்படி கூச்சலிடும். இவ்வியல்பினதாகிய மலைநாட்டையுடைய ஐயனே! யான் கூறுவதைச் சிறிது கேட்டருள்க. நின் காதலி, நீரற்ற நிலத்தே வளர்ந்த பயிர்போல், நின் அருளைப் பெறாது அழகழிந்தாள். வருதற் கருமையுடைய இடமென்று கருதாம லும் பாம்பை அஞ்சாமலும் நீர் வந்தமையால் விடியற்காலத்தே. மழை பெய்யப்பெற்ற நிலத்திற் பயிர் போல் அழகு பெற்றாள். அவள் பெற்ற அழகு இவளை விட்டு நீங்காமல் நிலைபெற்று நிற்கும்படி காக்கும் ஒரு தன்மை உண்டாகிய அதனை எங்களுக்குக் கூறுவாய். கைப்பொருள் இல்லாதவன் இளமை போல நின் அவளைப் பெறாமல் இவள் அழகழிந்திருந்தாள். இராக்காலத்தில் இருள் என்று கருதாமலும், வழியிடத்துள்ள இடையூறுகளை செல்வம் போல், விடியற்காலத்தே அழகு பெற்றாள். அவ்வாறு பெற்ற அழகு பிறரால் வந்த அழகு என்று பிறர் புறஞ் சொல்லுவதாகிய ஒருபொருள் உண்டாகில், அதனை எங்களுக்குக் கூறுவாயாக. தருமநெறியிற் செல்லாமல் வறிதே முதுமை எய்தியவன் மறுமையிற் கிடைக்கும் செல்வத்தை இழப்பான். அதுபோல அவள் நின் அருளைப் பெறாமல் அழகழிந்திருந்தாள். மலைச்சாரலிடத்துள்ள வழிகளிடத்துக் கொலைத் தொழிலிற் குறைவில்லாத கானவர் திரிவ ரென்று கருதாது நீ இவ்விடத்து வருதலினால் தழுவுதலாகிய இன்பத் தைப் பெற்றாள். அதனால் செல்வப் பொலிவுடையவனது செல்வம் போல் விடியற்காலையில் அழகு பெற்றாள். அவ்வழகைக் கண்டு அயலவர் கூறத்தக்க புறங்கூற்றுரையை மாற்றத்தக்க பொருளுண்டாகில் அதனை எங்களுக்குக் கூறுக. தோழி! யான்இவ்வாறு மலைநாடனிடத்துக் கூறினேன். அதனைக் கேட்ட அவன் “வேங்கை அலர்கின்ற காலத்தைப் பார்த்துப பெருத்த இறையினையுடைய பணைத்த தோள்களை வரித்துக்கொணடு செல்ல வருவேன்” என்று கூறினான். (வேங்கை மலர் அலர்த்துங்காலம் தினை கொய்யுங் காலமாகும்.) 3 தலைவன் பெண் கேட்டவிடத்து அவளின் சுற்றத்தினர் மறுத்துக் கூறினர். அஞ்ஞான்று தோழி தாய்க்கு அறத்தோடு நின்றாள். தாய் தந்தைக்கும் தமையன்மார்க்கும் அறத்தொடு நின்றாள். அதுகேட்ட அவர்கள் பெண் கொடுக்க இசைந்தனர். இந்நிகழ்ச்சியைத் தோழி தலைவிக்குக் கூறினள். விரைவில் மன்றல் முடியுமாறு தலைவியும் தோழியும் வரையுறை தெய்வம் உவப்பக் குரவையாடின் போது அக்காலத்துத் தலைவன் மலை அருகில் இருந்தமையைத் தோழி தலைவிக்குக் கூறுகின்றாள். அன்னையே! கேட்பாயாக; ஒருநாள் என் தோழி வேகமாக ஓடும் அருவி நீரில் என்னோடு உடன் நின்று ஆடினாள். அப்போது அவள் கால்கள் தள்ளாடி விழுந்தாள். அவள் அச்சத்தினால் தாமரை மலர் போன்ற கண்களைப் பொத்திக்கொண்டு நீரோட்டத்திற் சென்றாள். அப்போது சுரபுன்னை மலராற் கட்டிய மாலை அணிந்த ஒருவன், அவ்வாசமிக்க தொடையல் அசையும்படி நீரிற் குதித்துப் பூணினை யுடைய இவள் மார்பு தன் மார்போடு பொருந்தும்படி எடுத்தணைத் தான். அணைத்துக் கரையை அடைந்து இவளைச் செல்லும்படி விட்டான். அவனுடைய அகன்ற மார்பை இவளுடைய எழுகின்ற முலைகள் கூடினவென்று பிறர் கூறுவர். அதனால் இவள் நமக்கு மழையைப் பெய்விக்கத்தக்க கற்பின் பெருமை யுடைய வளாயினாள். அப்பாற்றெரிகின்ற மலை நாட்டிடத்தே தினைப் புனத்திலிடப் பட்ட பரண் மீது அகிற்கட்டைகள் எரியும். வானிடத்தே திரியும் சந்திரன் அப்புகையினால் ஒளி மழுங்கி அம்மலைத்தலையிற்றங்கும். அதனை அம் மலையில் வைத்ததேன் கூடு என்று நினைந்து அதனை அழித்தற்குக் கானவர் மூங்கில் ஏணி கட்டுவார்கள். அம்மலையிடத்துள்ள காடகன்ற நாட்டையுடையவனது புதல்வனே இவளைச் சுனையினின்றும் எடுத்த அத்தோன்றலாவன். சிறு குடிலிலுள்ளீரே! சிறு குடிலிலுள்ளீரே! இம்மலையில் வாழ்வார் இவ்வாறு உதவி ஆற்றியவர்க்கு இவளைக் கொடுக்க நினை யாது தரும மல்லாதவழியிற் செல்கின்றனர். இனி இவ்விடத்தில் வள்ளிக் கிழங்கும் விழ்த்தாது; மலையிடத்திற் றேனீக்கள் தேன்கூடுகளையும் வையால்லை யிற்றினைகளும் கதிர்கள் ஈனா. காந்தட்பூ நாறும் இக்கரிய மலையிடத்தே வாழும் குறவரின் இளையமகளிர் வரையிடத்து வளதும் மூங்கில் போன்று அழகிய தோளும் பார்த்தவர்கள் கண்களைத் தன் னிடத்தே வாங்கிக் கொள்ளும் அழகுமுடையர். அவர்கள் தம் கணவரைப் பிழைத்தொழுகாராய் அவரே தெய்வமென்று வணங்கி எழுந்திருப்பர். அதனால் அவர்களின் தந்தையர் எய்யும் கணைகள் இலக்குத் தப்பாதன வாகும். தோழி! நின் தந்தையும் தமையன்மாரும் கலியாணத்தை மறுத்த விடத்து யான் என் அன்னைக்கு இவ்வாறு கூறி அறத்தொடு நின்றேன். அவள் அதனை நற்றாய்க் கெடுத்துக் கூறினாள். அவன் நின் தந்தையும் தமையன்மாரும் அறியும்படி எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட அவர்கள் சிறிது நேரம் நெஞ்சு கொதித்துக் கண்சிவந்து தெரிந்த அம்புகளையும் வில்லையும் பார்த்தார்கள்; எழுந்து மனஞ்சுழன்றார்கள்; பின்பு இருவரிடத்தும் குற்றம் இல்லை என்று கூறிச் சினம் ஆறித் தலைசாய்த்திருந்தார்கள். (அறத்தோடு நிற்றலாவது, அறத்துக்கு மாறுபடா வகை தலைவி யின் களவொழுக்கத்தைக் குறிப்பால் வெளிப்படுத்துதல்) தெரிந்தெடுத்த ஆபரணங்களை அணிந்தவளே! நீ நின் கணவனைச் சேருமாறு இவ்வரையிலுறையும் தெய்வம் மகிழ்ச்சி கூர ஆயத்தாரும் யாமும் மனம் மகிழ்ந்து குரவையாடுவேம். அக்குரவைக் கூத்துக்கு நீ பாடலைப் பாடுவாயாக. அது கேட்ட தலைவி, நல்லாய்! “ நம்மை வரைந்து கொள்ளும் நல்லான் நம்மிடத்தே வருவதற்கு நஞ்சுற்றத்தினர் என்ன நல்வினையைச் செய்தார்கள்? புனத்தே நின்ற வேங்கைப் பூவின் தாது முற்றத்தின் வெளியே உள்ள பாறைமேல் உதிரும். அப்பாறைமீது நாம் இணையில்லாத கூட்டத்தைப் பொருந்தினேம். அக் கூட்டத்தைக் கனவிடத்தே காணின் மெய்யாகிய கூட்டத்தை விட்டு விடுவேமல்லவோ?” அது கேட்ட தோழி, வானை முட்டும் மலை நாட்டையுடைய வனும் நீயும் அக்கலியாணத்தே பண்டறியாதார் போல நடப்பீரோ? பண்டறியாதீர் போல நடக்கும் நும் பழைய உறவை யான் கண்டறி யாதேன் போல மிகவும் மறைப்பேனோ? மேகந் தவழும் மலை நாடனுடைய மணக்கோலங் காணாமல் கையால் மறைக்கப் பெறுகின்ற கண்களுங் கண்களென்று கூறப்படுமோ? என்றாள். அது கேட்ட தலைவி நின் கண்ணாலே யான் மிகவும் காண்பே னென்றாள். அது கேட்ட தோழி நெய்தலிதழ் போலும் மையுண்ட கண்ணா கிய நின் கண்கள் மிக என் கண்ணாவதாக என்றாள். இருவருங் கூடுதற்கு ஏதுவாகிய முகூர்த்தம் வைத்தற்கு நேரத்தைக் கணக்கிட்டுக் கூறுவதிற் பிழையாத சோதிடருடன் மலைநாடன் மலைச் சார லிடத்தே வருகின்றான். இனி மூங்கிலையொக்கும் உன்னுடைய மெத்தென்ற தோளிற் பசலையும் ஊரிற் கூறும் பழி வார்த்தையும் பொய்யாகிய கனவிற் கூட்டமும் நீங்குவனவாக. 4 தோழியும் தலைவியும் தலைவனது மலையை வாழ்த்திப் பாடுகின்றனர். தோழி தலைவர் அன்புடையர் எனப் பாடுகின்றாள். தலைவி அதனை மறுத்து அவர் அன்புடையரல்லர் என்று பாடுகின்றாள். இதனைத் தலைவன் மறைவிடத்தினின்றும் கேட்கின்றான்; கேட்ட தலைவன் தலைவியை வரைந்து கொள்ள வருகின்றான். அதனைத் தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்; “தோழியே! நமது விருப்பத்துக் குரியவற்றை யெல்லாம் பாடுவேம் வா” என்றாள் தலைவி. “அழகிய தினைப் புனத்தில், முகத்திற்கேற்ற கண்ணும் மகிழ்ச்சியைத் தரும் சொல்லுமுடைய நல்ல மகளிர் நாணி இறைஞ்சும் நிலைபோல முற்றிவிளைந்த தினைக் கதிர்கள் வளைந்திருக் கும். அக்கதிர்களை உருவிச் சந்தன உரல்களில் இடுவேம். முத்து நிறைந்த யானைக்கொம்பு உலக்கையால் இருவேமும் குத்துவேம். மருந்தில்லாத நோயைச் செய்தவனுடைய பயன் தருகின்ற மலையை வாழ்த்தி நம் கருத்துக்கு வேண்டியவற்றை யெல்லாம் கூறிப் பாடுவேம்” என்று உடன்பட்டாள். தோழி:- அழகிய நெற்றியையும், அழகிய கூந்தலையும், மூங்கில் போலும் விசாலித்த மெல்லிய தோளையும் பூமணம் நாறும் கன்னத்தை யும் உடையவளே! மூங்கில் ஒலிக்கின்ற வெடிப்புகளுடைய மலைமீது நீ இனி ஒன்றைப் பாடு. பின்னர் யானும் ஒன்று பாடுவேன். தலைவி:- கொடிச்சியர் கையிரண்டையுங் குவித்துத் தங்குறை தீர முருகனுறையும் மலையைத் தொழுவர். தன்னை அடைந்தாருடைய வருத்தத்தைப் போக்கும் அவனது மலை அவர்களது கைபோல உயர்ந் திருக்கும். அம்மலையினிடத்தே பூங்கொத்துகள் அசைகின்ற காந்தள் மீது வைத்த தேன் ஒழுகும்படி அது (காந்தள்) அசையா நிற்கும். தான் கூடின மகளிருடைய இயற்கை அழகு கெடின் அம்மகளிரி னும் அவன் வருத்த முறுவான். கடுவன் தனது களவொழுக்கத்தை விட்டுத்தான் காதலித்த மந்தியை வரைந்து கொள்ளும். இதனை அக் கடுவனிடத்தினின்றுங் கற்றவர்கள் திரண்ட சுற்றத்தோடு சென்று மகட் பேசுவர். அதுபோல அவனது மலை, மெல்லிய விரலுடைய மந்தியைத் தனக்குத் தரவேண்டு மென்று தன் குறையைச் சொல்லும் தலைமையை உடையது. கொம்பு மறையும்படி முறுக்கவிழ்ந்த நெருங்கிய பூவுடைய தாழ்ந்த கொம்பின் தளிர்போன்றது என் மேனி, அது அழகு பெறும்படி நமக்கு நோய் செய்தவனுடைய பெறுதற்கரிய உச்சி மலைகளையுடைய பக்கவரைகளை இனி நாம் பாடுவேம். பாடுமிடத்து அவனது அன்பில் லாமையாகிய இன்னொன்றையும் பாடுவேம். தண்ணிய மலைச்சாரலிடத்துத் தாதை உண்ணும் வண்டு அப் பூவைத் துறக்கும். பெண்டிருடைய நலத்தை நுகர்ந்து பின் அவரைத் துறக்கின்றவன் மலையாயிருந்த போதும் விண்ணைத் தீண்டும் அம் மலையிடத்தே தெய்வ மகளிர் பந்தடித்த இளைப்புப் போகத் தண்ணிய தாழ்ந்த அருவியிலே ஆடுவர். தோழி:- தன்னைச் சேர்ந்தாரிடத்து நின்று நீங்கேம் என்றிருப் பானுடைய மலையிடத்தே, அழகிய யானை தான் விரும்பிய பிடிக்கு முதற் சூலினால் ஏற்பட்ட வயாநோய்க்கு நெடிய கிளைகளையுடைய கருப்பங் கோலை முறிக்கும். இவ்வாறு நாம் அம்மலை நாடனைப் பாடினோம். அதனால் அம்மலைக்குரியவன் விருப்பத்தோடு கேட்டு மெய்நிறைந்த உவகைய னாய் முயங்கிய முடி வெய்தாத மெல்லிய முலையினையுடைய ஆகம் அழகெய்தவும், நீ தலைமை அடைய வேண்டியும் வரைவோடு புகுந்தான். 5 தலைவியும் தோழியும் வள்ளைப் பாட்டுப் பாடினர். அதனை மறைவில் நின்றும் கேட்ட தலைவன் வரைவு வேண்டி வரத் தமர் வரைவுடம் பட்டமையைத் தோழி தலைவிக்குக் கூறுகின்றாள். தோழி ! பாடுவேம் வா. அசைகின்ற மூங்கிலின் நெல்லைப் பாறை உரலில் இடுவேம். அதனை வலிய யானைத் தந்த உலக்கையாற் குற்று வேம். சேம்பின் இலையாகிய சுளகாற் புடைத்துப் பாடுவேம். தோழி! இடி, இடித்து நெருப்பை உமிழும். எவ்விடத்தும் மழை ஒலியோடு பெய்யும். மழைக்கால இருட்டிலே மின்னல் ஒளியில் யானைகள் பிடிகளுடன் வந்து புன் செய்யாகிய தினையை மேயும். யானைகள் நடக்கின்ற ஓசையைக் கேட்ட கானவன் உயர்ந்த மலையிலே ஆசினிப்பலா மீது கட்டிய பரணில் ஏறிக் கடும் விசையுடைய கவணிற் கல்லை வைத்துஎறிவான். அக்கல்லு முறிந்தவரையிடத்து நின்ற வேங்கை யினது ஒள்ளிய பூக்களைச் சிதறும். ஆசினிப்பலாக்களின் பழங்களை உதிர்க்கும்; தேன் கூடுகளைத் துளைக்கும்; மாம்பூக்களைச் சிதறும்; குலையீன்ற வாழையின் மடலைக் கிழிக்கும்; பலாப்பழத்தினுள் தங்கும். இவ்வியல்புடைய மலை நாட்டுக்குரிய வனைப் பாடுவேமாக. தலைவி:- தோழி! வாழ்க. தான் செய்த சத்தியத்தைப் பாதுகாவாது பொய்த்தவனுடைய மலையாயினும் அது மழை பெய்தலால் வீழ்ந்து விளங்கும் அருவியையுடையது. தோழி:- அவ்வாறு கூறா தொழி. அவன் தன் சத்தியத்திற் பொய்ப் பானோ? தான் சத்தியங் கூறிய மகளிரைப் பாதுகாவாது விடுவானோ? நீ அஞ்சாதொழி. மலை அகன்ற நல்ல நாட்டையுடையவன் கூறிய மெய்யிலே பொய் தோன்றுமாயின் திங்களிடத்தே தீ தோன்றிய தன்மைத்து. தலைவி:- என் முன் கையில் வளை கழலுமாறு என்னிடத்து வாராதவன் மலையாயிருந்தும் இளமழை உலாவாநிற்கும்; அது ஒரு காலத்து உலாவுதலன்றி நாள்தோறும் உலாவா நிற்கும். தோழி:- நீ அங்ஙனம் கூறா தொழி. உன்னிடத்து வாராது ஆற்றி யிருப்பானோ? இருத்தல் மாத்திரமல்லாமல் அம்மலை நாடனுடைய அருளிடத்தே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றுவனவாயின் நிழலையுடைய குளத்துள் நீரின் நின்ற குவளை வெந்ததன்மைத்து. தலைவி:- என் மேனியைச் சேர்ந்து துறந்தவனுடைய மலையா யிருந்தும் அது கழுவாத நீலமணி போலத் தோன்றும். தோழி:- நீ அங்ஙனம் கூறா தொழி. அவன் நம்மைக் கை விடுவா னல்லன். அவனோடு கொண்ட உறவின் கண்ணே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றுவனவாயின் ஆகாயத்திற்றிரியும் ஞாயிற்றுள்ளே இருள் தோன்றிய தன்மைத்து. தோழி:- நம் வள்ளைப் பாட்டிடத்தே நாம் பொருந்திப் பாட நம்மென்றோட்கு உரிமையுடையவனும், மறைந்து நின்று கேட்டு அருள் செய்ய வேண்டி வந்தான். உன் தந்தை வாசமிக்க வேங்கையின் கீழ் இருந்து அம்மலை கிழவோனுக்கு மணஞ் செய்தலை விரும்பிக் கூறினான். ஆதலால் நமக்கு நன்றாய் உண்டாகா நின்றது. இனி நீ வருந்தாதொழி. 6 தலைவி தலைவனின் அருள் தோன்றப் பாடினாள். அதனை மறைவில் நின்று கேட்ட தலைவன் அவளின் புறத்தே அடைய அவள் ஆற்றாமை தணியப்பெற்றாள், பின் ஒருமுறை அவள் அவ்வாறு பாடியபோது அவன் வாராமை கண்டு கலங்கித் தன் நெஞ்சுக்குக் கூறுகின்றாள்: தோழி:- முறம்போலும் செவியுடைய யானை வீரமுடைய பெரிய புலியின் பழைய பகையைக் கெடுக்கும்; தனக்கு முன்னால் கிடக்கும் இலைகளைத் தின்று அருவி நீரைப் பருகும். பின்பு அவ்வருவி நீரின் ஓசையில் உறங்கும். இவ்வகையான சோலையுடைய மலை நாடன் நாம் வருந்த நம்மை மறந்திருந்தான். இனி அவன் மறந்திருப்பானாக. இகுளையே! அவன் நமக்குச் சிறந்தவனாதலை மறுபடியும் அறிந்தேம். யானைத் தந்த உலக்கையினால் மூங்கில் நெல்லைக் குற்ற வருவாயாக. நாம் அவன் செய்த கொடுமைகளை வள்ளைப் பாட்டாகப் பாடுவேம். இவ்வாறு தலைவனது அன்பின்மையைக் கேட்ட தோழிதான் அவனது அன்பு தோன்றக் கூறக் கருதி, ஏடி! நீ கூறியவாறன்றி அவன் திறத்தை நாம் வள்ளைப் பாட்டாகப் பாடுவேமாக என்றாள். தோழி:- தலைவி வாழ்க. நம்மை அருளாத கொடுமைக்கு நாணா திருக்கின்றவனுடைய நாட்டின் மலையாயிருந்தும் பக்கமலையிலே ஒள்ளிய நிறமுடைய அருவி ஓடா நின்றது. இதற்குக் காரணத்தை நம் மனத்தால் ஆராய்வேம், வா. தலைவி:- ஒரு பக்கஞ்சாயாத நா நிற்கும் துலாக்கோல் போல அறிந்து அறத்தையே விரும்பும் நெஞ்சுடையவன் தன்னால் நுகரப் பட்டார் நெஞ்சை அழியும்படி விடுவானோ? தோழி:- நமக்கு அருளி இல்லறப்பயனை ஆளாமல் பயன் இன்மையை ஆளுகின்றவன் நாட்டு மலையாயிருந்தும், தண்ணிய நறிய கோங்கு பூத்த பக்க மலையெல்லாம் பொன்னாபரணமணிந்த யானைகள் போன்று பொலிந்து தோன்றும் இதற்குக் காரணம் யாது? தலைவி:- தன் கொடையை விரும்பி வந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் கொடையை யுடையவன், நம்மாட்டுத் தன் மலையின் நீரினும் மென்மையுடையவன் ஆதலால் வரையாமல் நமக்கு மிகுகின்ற நோய் நம்மைப் பொருந்த விடுவானோ? விடான். தோழி:- பூண் நெகிழ்ந்து விழும்படி நம்மை வருத்த முறுத்தி னோன் குன்றாயிருந்தும், பக்க மலைகளின் மேலே வைத்த தேன்கூடு முகிலில் மறைகின்ற சந்திரனைப் போலத் தோன்றா நிற்கும். இதற்குக் காரணம் யாது? (இதைக் கேட்டுப் பொறாத) தலைவி; ஏடி! ஓயாமல் அவன் கொடுமையைக் கூறா தொழி. என் நெஞ்சைத் தன் அன்பாற் பிணித்தவன் பிறர் அஞ்சும் கொடுந் தொழிற்கு அஞ்சாத அறன் இல்லாதவனல்லன். இவ்வாறு நாங்கள் பாட இனிய மார்புடையவன் மறைந்து நின்று கேட்டான். தாழ்ந்த இருண்ட கூந்தலுடைய என் தோழியைக் கை கவித்து எனது முதுகுப் பக்கஞ் சார்ந்து தடவினான். அதனால் எனது ஆபரணங்களை அணிந்த மேனியின் பசப்பு ஞாயிறு முன் நின்ற பனிபோற் கெட்டது என்று பாடினேம். அவன் பிரிந்த வழி மேனியிற் பசப்பு மாயாமல் நின்றது. இவ்வாறு தலைவி தனது நெஞ்சொடு கூறினாள். 7 வரைவு நீடித்த விடத்துத் தலைவி ஆற்றாளாயினாள். தானும் தலைவியும் வள்ளைப் பாடலுள் முருகனைப் பாடுதல் போலத் தலைவனைப் பாடுதலைக் கேட்ட அவள் (தலைவி) ஆற்றியிருந்தாள் என்று தோழி தன்னுள்ளே கூறுவாள் போல மறைவில் நின்ற தலைவனுக்குக் கூறுகின்றாள்: தையலாய்! நாம் இருவேமும் ஐவன நெல்லைப் பாறை உரலிற் சொரிவேம்; புலியைக் கொன்ற யானையின் கொம்பாலும், வண்டு ஒலித்துத் தாதை அளiயும் சந்தன மரத்தினாலும் செய்த உலக்கைகளாற் குற்றுவேம். குற்றுமிடத்து முருகனைப் புகழ்வதுபோல, மழைபொழி தலின் மிகுந்த பயன் தருகின்ற மலை நாடனைப் பாடுவேம். மலைநாடன் மீது ஒருவர் பகை என்று கூறின கூற்றுவன்வரினும் கெடுதலை அடையான்; தன்னை உறவு கொண்டார்க்குத் தோற்றலை நாணான். அம்மலையிடத்துள்ள தும்பி மகளிர் கையிலிடும் “ நீலக் கடைச் செறி” போலக் காந்தளின் முகை மீது இருந்து (அது) அலருங் காலத்தைப் பார்க்கும். தெரிந்தெடுத்த ஆபரணங்களை யுடையாய்! வருடைமானின் குட்டிகள் பாறையிடத்துள்ள குரங்கைப் பார்த்து வெருளும். அம்மலை நாட்டவன் புகழ் விளங்க நீ ஒன்று பாடுவாயாக. தலைவி:- அவர் பிறரது பெருமைகளைப் பொறாதிருப்பரென்று பலர் கூறினும் அவர் பிறர் குற்றங் கூறுதல் அறியார். அவரது குன்றி டத்தே புள்ளிமானின் செவி போல மூங்கில் முளையினது கண்ணைப் பொதிந்த பாளை கழன்று விழும் பண்பினையுடையது. தோழி:- பிடியோடு கூடி நிற்கும் யானை வளகு என்னும் புல்லின் தழையை விரும்பியுண்ணும். அவ்வியானை நடத்தல் இரண்டு கொம் புள்ள வரை நடத்தலை ஒக்கும். மணம் நாறும் கூந்தலையுடையாய்! இம்மலை நாடனை அன்புடையன் என்று பாடினாய் இனி அவன் அன்பில்லாதவன் என்று பாடுவாயாக. தலைவி:- வறுமையினால் தம்மிடத்தில் பொருளின்மையைச் சொன்னார்க்கு அப்பொருளை அவர்க்குக் கொடுத்தலாற்றாத அவர் தன் உடம்பைத் துறக்கும் இயல்புடையர் அவர் மலையிடத்துப் புலியின் அடியை ஒத்த வாளையின் வளைந்த காய் குலைகடோறும் தூங்கும். இவ்வாறு யானும் தலைவியுந் கூடித் தலைவன், திறத்தையும் முருகன் திறத்தையும் பாடினேமாக. என்னுடைய தோழிக்கு அசைகின்ற மூங்கிலையுடைய மலை நாட்டவன் அருள்செய்தாற் போல் தோள்கள் அழகு பெற்றன. 8 வரையாது வந்தொழுகுகின்ற தலைவனிடத்துத் தோழி தலைவியது கற்புமிகுதியும் இவ்வொழுக்கம் அலராகின்றமையும் அவளது ஆற்றாமையும் கூறி வரைவு கடாவுகிறாள்: எதிர் எதிரே பெரிய மலைகள் ஓங்கி நிற்கும். அவைகளில் உதய வெய்யில் படுகின்ற அகன்ற சாரலிடத்து அருவிகள் ஆரவாரத்துடன் ஓடும். அருவிகளின் தண்ணிய நீர் மேளம் போன்ற தாள் உடைய வேங்கையின் கொம்பர்களில் விழுதலால் பூங்கொத்துகள் அலர்ந்து நெருப்புப் போல் தோன்றும். அத்தோற்றம், புகர் மத்தகமுடைய அழகிய யானைகள் பூவோடு கூடிய நீரை மேலே சொரிய முறுக்கவிழ்ந்த தாமரை மலரின் அழகிய அல்லி யிலே விரும்பியிருக்கும் இலக்குமியின் தோற்றம் போன்றது. இவ்வாறு அழகிய வெற்பையுடையவனே! என்னுடைய தோழி, தனது வருத்தம் மிகா நிற்கவும் நீ செய்த அருள் இல்லாமையை எனக்கும் மறைத்தாள். அவள் அவ்வாறு மறைத்ததற்குக் காரணம் அவ்வருளின்மையைக் கேட்டு யான் நின்னைப் பிறர் முன்னே பழி கூறுதலைத் தான் நாணினமையினாலாகும். எனது தோழி, காம நோய் மிகுந்த விடத்தும் நீ செய்த அருளின் மையைச் சேரியிலுள்ளார் தானும் அறியாதபடி மறைத்தாள். அவள் அங்ஙனம் மறைத்தது அவ்வருளின்மையைக் கேட்டு நீ நிலையான தன்மை உடையையல்லை என்று யான் பிறர்க்குத் கூறுதலை நாணினமை யினாலாகும். என் தோழி காம நோய் வருத்துகையினாலே வருந்தியும் நீ செய்த அருளின்மையை ஆயத்தாருக்கும் மறைத்தாள். அவள் இங்ஙனம் மறைத்தது அவ்வருளின்மையைக் கேட்டு மாயத்தில்வல்ல நினது பண் பில்லாமையைப் பிறர் கூறுதலைத் தான் நாணினமையினாலாகும். நினது தீமையால் உண்டாகிய அருந்துயரத்தை, அத்தன்மைத் தாகிய அரிய நற்குணத்தினானே பிறர் அறியாதபடி நின்னைக்காத்தான் அவ்வாறு காத்தவனுடைய பெரிய துயரைத் தீர்க்கும் மருந்தாகிப் பெரும்! நாம் விரைந்து செல்வேம். 9 தலைவி வரைவு தாமதிதமையின் ஆற்றாளாயினாள். அப்போது தோழிதான் தலைவனை நெருங்கி வரைந்தேகுமாறு கூறினதும், தலைவன் வரைந்து கொள்வதற்குச் செய்யும் ஏற்பாடுகளினால் வருகை தாமதித்தமை யும், சுற்றத்தினர் வரைவினை ஏற்றுக் கொண்டமையுமாகிய வற்றைக் கூறித் தலைவியை ஆற்றுவிக்கின்றாள். மூங்கில் நெருங்கி வளர்கின்ற மாணிக்கப்பாறை விடியற்காலத்தே ஞாயிற்றின் ஒளியைக் கெடுக்கும். அப்பாறையின் மீதுள்ள சுனையிடத்து அழகு பெற்று வளர்ந்த காந்தளின் பூங்கொத்துக் கிடக்கும். அப்பூங் கொத்துக் களைத் தலையில் இரத்தினமுடைய பாம்புகள் நீர் குடிக் கின்றனவென்று கருதிய இடியேறு மலையைக் கீழ் மேலாக்குதல் போலச் செறிந்த மழையில் இடி இடிக்கும். அவ்விடி பூக்களுடைய மலைச்சார லில் ஒலிக்கும். அதனால் சிறு குடியிலுள்ளார் விரைந்து துயிலெழுவர். இவ்வாறான மிக உயர்ந்த கொடுமுடியையுடைய மலைநாடனே! முயங்குகின்ற கூட்டத்தினைப் பெறாமல் வருந்தின என் தோழி யின் பல இதழுடைய மலர் போன்ற கண்கள் பசக்கும்படி நீ கெடுத்தாய். காற்றடிக்கவும் அசையாமல் ஒலிக்கின்ற அருவிகளை யுடைய நின் மலைச்சுனை யிடத்து நிற்கும் மலரை ஒத்தன இவள் கண்கள், என்னும் பொறாமையி னாலோ நீ இவ்வாறன்பில்லாமல் இருப்பது. உயிர்போம் பருவம் என்று கூறும்படி கலங்குதற்கு ஏதுவாகிய காம நோயைக் கடக்கும்படி பெருத்த என் தோழியின் தோள்களை அழகு கெடும்படி கெடுத்தாய். அவ்வாறு நீ கெடுத்தது, புகர் முகமுடைய களிற்றோடு புலி பொருது பகைத்துத் திரியும் நின்னுடைய அகன்ற மலையில் மூங்கிலை ஒக்கும் அவள் தோள்கள் என்னும் பொறாமையி னாலோ? அது காரணமாக அருளில்லை ஆயினையோ? நடுயாமத்துந் துயில் கொள்ளுதலிலளாய் மனந்தடுமாறும் என் தோழியுடைய விருப்பம் பொருந்திய நல்ல அழகு வாடும்படி நீ கெடுத்தாய். அவ்வாறு நீ செய்தற்குக் காரணம் ஞாயிற்றைத் தீண்டும்படி நீண்ட மலையின் முழைஞ்சுகளுடைய சாரலில் வண்டுகள் ஒலிக்கின்ற எரி போலும் வேங்கையினது பூங்கொத்தை ஒக்கும் அவள் அழகு என்னும் பொறாமையினாலோ? அது காரணமாக அருளில்லை ஆயினையோ? இவ்வாறு அவர் பொல்லாங்குகள் பலவற்றையுஞ் சொல்லியான் கழறினேன், அவர் என் கூற்றினை மெய்யென்று தெளிந்தார்; கள வொழுக்கத்தின்கண் அவர் நெருங்கி வருகின்ற உறவு வரைவு முயற்சி யால் நீடியது. பிறை ஒத்த நுதலினையுடையாய்! இக்களவொழுக்கத்தில் வேட்கை நீங்கி நாம் அவரைப் பேணி அவரிடத்தே தங்குதலை அவர் விரும்பினார். அவர் அவ்வாறு விரும்பிவரையும் நாளில் நஞ்சுற்றத்தாரும் அவருக்கே நின்னைக் கொடுப்பதாக உடம்பட்டனர். இதுவே நமக் குண்டாகிய நன்மையாகும். 10 இரவுக்குறியிடத்தே வந்த தலைவன் அல்ல குறிப்பட்டுத் தலைவியை எதிர்ப்பட முடியாமையால் மீண்டான். தலைவி, அதனைத் தன் பிழை யெனக் கருதித் தலைவன் வருந்துவான் எனக்கவன்று ஆற்றாளாயினாள். அப்போது தோழி தலைவனை அது தோழியின் பிழை என்று கூறி, ஆற்று என்கின்றாள். தும்பி அழகிய சிறகினையும் நீலமணி போன்ற நிறத்தினையும் உடையது. அது தான் நுகர்கின்ற பூ தன்னையின்றித் தனித்திருக்கத் தான் விரும்பிய பூவின் மேற்செல்லும். பெருகி வாயிடத்தே வீழ்கின்ற மதமும் வெள்ளியமருப்புமுடைய யானைத்தலைவனோடு அழகிய வரியுடைய புலி வந்து போர் செய்யும். (முன்கூறிய) தும்பி அழகிய பூங்கொம்பென்று கருதி வலிய புலியைச் சூழும்; வேங்கைச் சினை என்று கருதிப் புள்ளியுடைய யானை யின் புகர் முகத்தை அணுகும்; வலி மிகுந்த கோபத்தாலே ‘வாட்போரைச் செய்யத் தொடங்கிய மன்னரை நட்பாக்கும் உபாயத்தை ஆராய்ந்து நட்பாக்குஞ் சந்து செய்வாரைப் போலப் பலகாலுந் திரியும். அருவி பாயும் இவ்வியல்பின் மலைகளை யுடையவனே! “யான் பகற்குறியை விலக்கி இரவுக்குறியில் வருக வென்றேன். யான் அவனைக் கூடுதல் விருப்பால் அவன் செய்யும் ஓசையை எதிர் பார்த்திருந்தேன். நொச்சிப்பூ விழுதலும் அதனை அவன் செய்த குறி என்று எண்ணி அவரைக் காணாது வந்தேன். அதனால் அவர் இரவுக் குறி பிழைத்தார். இடி இடிக்கின்ற நடு இராப்பொழுதிலும் அவர் கூட்டம் பெறாராய்ப் பகற் பொழுதையும் யான் மாற்றினேன்” என என் தலைவி கூறி வருந்துவாள். தமது நிலைமை உயர்தற்குக் காரணமான கடவுளுக்குத் (தமது) வரைவுமுடியின் செய்யும் பரவுக்கடன்களை நினைந்து வந்தார். குறி பெறாமையின் அவர் அதனை நினைந்து வருந்துவர். அவர் நம்மை அருள் செய்தற் பொருட்டு அரிய வழிநடந்து வந்து நம்மை எய்தப் பெறாராய்ப் ‘பகற்குறியும் பெறாமல் வருந்தினனே’ எனப் பல சொல் கூறாநிற்பர். மழை தன்னைப் (வானம்பாடியைப்) பாதுகாக்க வேண்டுமென் னும் வேட்கையால் வானம்பாடி வானத்தைப் பாடும். அவன் அளிக்கின்ற அளியை விரும்புதலான அவர் மேல் நிறைவுற்ற அன்பினையுடையே னாய் நிற்பேன். அவர் இரவுக் குறியையும் பகற் குறியையும் பெறாது வருந்துவார். ஆபரணங்களை அணிந்தவளே! என்னிடத்துண்டான பழியை அவர் உனக்குச் சொல்லா நிற்பர். இவளிடத்து நீர் கொண்ட உறவு இவளை மிகத் துன்புறுத்தலால் அதனைக் கண்டு யான் துயில் கொள்ளேன். நின்மலையின் பக்கமலை, கூறியவற்றை எதிர்ஒலிப்பது போல, நீ கூறுகின்றவற்றையே கூறும், இலங்குகின்ற வளையணிந்த இவளுடைய நோயை இவள் ஆற்றும்படி, ‘இது தோழியின் பிழை’ யென்று ஒரு பொய்ம்மொழி கூறியாயினும் வெல்வாய். நீ உரைத்ததே இவட்கு உரையாம். 11 தலைவனது குறையைத் தீர்க்க நேர்ந்த தோழி அவனது தன்மையும், அவன் தனக்குக் கூறுவனவும், அக்கூற்றுத் தன்னாற் பொறுக்க வொண்ணாத வாறும் அவன் கருத்தும் தலைவியிடங் கூறுகின்றாள்: விளங்குகின்ற ஆபரணங்களையுடையவளே! ஒரு தலைவனா வான் என்னிடம் ஒரு காரியத்தை இரந்து நிற்பான் போலத், தான் பிறரால் இகழப்பட்டு எளியராந் தன்மை தோன்றவும் சில மொழிகளைக் கூறுவான்; அங்ஙனம் குறையிரந்து நிற்பினும் அவன் உலகத்தை எல்லாம் பாதுகாப்பான் போலே இருப்பதொரு வலியுமுடையன். மெய்ப் பொருள் கூறும் நூல் களைக் கற்று வல்லவர்களை வழிபட்டு நின்று அப்பொருளை அறிந்தான் போலே நன்மக்களைக் கண்டாற்றோன்றும் மன அடக்கமுமுடையன். வறியோர் வறுமையைக் கொடையினாற் போக்கவல்லான்போலே இருப்ப தொரு வலியுமுடையன். அவன் தனக்குரிய ஆளுந்தன்மையைக் கைவிட்டு என்னை நோக்கிக் கூறும் பல காரியங்களும் பெருமையடையும் சொல்லைக் கேட்பாயாக. நறிய நுதலினையுடையாய்! அவன் நின்னையின்றி உயிர் வாழேன் என்று கூறுகின்றான். இங்ஙனம் இறந்துபடும் தன்மையையுடையவன் கூற்றை யாரும் நம்பமாட்டார். அவ்வாறாயின் நின் நிலைமைக்கண் யான் அடையும் வருத்தம் பிறர்க்கும் உண்டோ? இல்லையன்றே! அவன், ‘யான் வருந்துவல் நீ யறியாயோ’ என்று கூறி நிற்பான். அவ் வாறாயின், தமக்கு உயிர்போலச் சிறந்த தோழியரோடு உசாவித் துணியாமல் தமியராயிருந்து துணிதல் மகளிர்க்கு அரிதாயிருக்கும். இந்நிலைமையில் அவன் வலையிலே அகப்பட்டார் எம்போற் சிலர் அவனுக்கு அளிக்கத் தக்காராயிருப்பரோ? அளியாதிருப்பரன்றோ (தலைமகள் கூற்று) தோழி:- அவன் நீ அருளா தொழியின் யான் உயிர் வாழேன் என்பான். அவ்வாறாயின் அவர் குடிப்பிறந்தாருள் பேதையாயிருப்ப ரென்று நன்மக்கள் அவரைச் சிறப்பித்துச் சொல்வர். அது நினக்குப் பழியாயிருக்கும் இந்நிலைமைக்குச் செய்யலாவதோர் காரியத்தை ஆராயுங்கால் ஒன்றையும் நினைக்க மாட்டாதவளாய் வருந்துகின்றேன். நறிய நுதலினையுடையாய்! இந் நிலைமையை நம்முள்ளே ஆராய்ந்து பார்ப்போம். நம்மை நாணம் வருத்துகின்றது. அவன் இறந்து படும் நிலைமை யில் இருப்பதால் அவனைப் போகும்படி செய்தல் தகாது. இறந்துபடு கின்ற வனைக் காப்பாற்றினாள் என்று நன்மக்களாற் புகழ்ந்து கூறப் படுதல் பெண் தன்மையுமன்றாய் நின்றது. இவ்வாறாகவும் அவன் நின்னைத் தழுவும் அளவுக்குத் தன் நெஞ்சிலே எண்ணிவிட்டான். அதற்கு நீ இசைகின்றிலை. இதற்கு இனியான் கூறத்தக்கது ஒன்றும் இல்லை. இவ்வாறு தோழி தலைவிக்குக் கூறியபின் அவள் தன் நெஞ்சிற்குக் கூறுவது போலத் தலைவி கேட்கும்படி கூறுகின்றாள். நெஞ்சே! குறியிடத்தே வாவென்று கூறுவாள் போல அவனுக்கு ஒரு பொய்க் குறியைக் காட்டி அவன் சென்ற வழியிலே செல்வாயாக. 12 வரையாது வந்து ஒழுகுந் தலைவற்குத் தோழி தலைவியின் ஆற்றாமையும், இவ்வொழுக்கம் புறத்தார் அறியப்படுகின்றமையும் கூறி வரைவு கடாவுகின்றாள்: மலையிடத்தே தன் கூட்டத்தைக் காக்கும் யானை பகைத்தவை எதிர் நிற்க மாட்டாத வலியுடையது; அதன் கன்னங்கள் மதநீரால் நனைந்திருக்கும். அதன் புகரினையுடைய முகம் நீர் வீழ்கின்ற அழகிய மலையிடத்துத் தேனினம் மொய்க்கும் பூக்களையுடைய வேங்கையினது அழகு போல வண்டுகள் மொய்க்கப் பெற்றது. மழை பெய்யும் பெரிய பக்க மலையிடத்தும், பெரிய மரங்கள் உடைய ஆற்றிடைக் குறை யிடத்ததுமாகிய அக் குஞ்சரம் யானைத் திரள்களோடு பெரிய கழுத் தினையுடைய வலிய புலியை எதிர்த்துப் போர் செய்யும். இவ்வகையான மலை நாடனே! தாழிட்டுக் கதவடைத்தாற்போன்ற கடிய காவலைத் தாய் செய்வாள். அதனால் நின் மலையிடத்துள்ள முதிர்ந்த வெண்காந்தள் உதிர்வது போல விளங்குகின்ற வளைகள் கழலா நின்றன. இராக் காலத்தே ஓய்வின்றி மழை பெய்யும். அப்போது நீ குறி செய்து அழைக்கும் அழைப்பினைக் கேட்கும் மன ஒடுக்கத்தோடு இருக்கும் அவளது வருந்துகின்ற தோள்கள் நினக்குச் செய்த தீமையுண்டோ? இவள் இன்னவாறு ஒழுக்கம் உடையள் என்று அயலார் எடுத்துச் சொல்வர். அதனால் அவளது கண்கள் நின்னுடைய சுனையிடத்து நெருங்கி வளரும் மழையேற்ற நீலோற்பலம் போல நீரைச் சொரியும். இது யாம் வருந்துதற்கு ஏதுவாகிய இருள் என்று நின் வரவை விரும்பி நினைத்தலால் உண்டான வருத்தத்தினாலே கண்ணீர் விட்டு வருந்தும் துயில் இல்லாதவளது கண்கள் நினக்குச் செய்த பழிகள் உண்டோ? இளவேனிற் காலத்து நுரைகளையுடைய இனிய நீரூற்று ஓடி ஆரவாரிக்கும். அப்போது உனது சோலையில் ஒளி கெட்ட தளிர்களைப் போன்ற நிறக்கேடு வந்து அவளது நோயைப் பலருக்கும் கூறுவதா யிருக்கும். பல நாளும் நினைவு வருத்துகையினாலே பசலையுண்ணப் பட்டவளுடைய பொன்னை உரைத்த மணிபோன்ற பசலை பரந்த மாமை நிறஞ் செய்த பழியுண்டோ? இல்லையே! அவள் இவ்வாறாகிய விடத்து அவள் படுத்துறங்குவதையும் யான் அஞ்சுவேன். அதற்குக் காரணம் அந்நித்திரையில் நினைந்து வருந்தத் தக்கன வாற்றான் உற்ற கேட்டைத் தூக்கிப் பார்க்கில் அது எல்லையறிய வொண்ணாத மலையிலும் பெரியதாயிருந்தது. இனி இவ்வருத்தம் அவள் உறாதபடி, நீ வரையாமற் பிரிந்திருப்பவளோடு கொண்ட உறவு கூடுதலைக் கொடுத்தல் வேண்டும். 13 நீ இவ்வாறு வருகின்ற வரவு எமக்குத் துன்பத்துக்குக் காரணமாய் நின்றது. எனத்தோழி கூறி இரவு வருவானைப் பகல் வருக வென்றது. யானை, வளைந்த வரியுடைய புலி வந்து போர் செய்கையால் அதனை வென்ற வருத்தத்தோடு நெடிய மலையிடத்தே துயில் கொள்ளும். அது தான் நனவிற் புலியைக் கொன்ற செய்கையைக் கனவிற் கண்டு விரைவாக அஞ்சி எழும். எழுந்து மலர் பரப்பி நிற்கின்ற வேங்கை மரத்தைப் புலி யென்று கருதித் தன் வலியினாலே அதன் அழகைச் சிதைக்கும்; அடங்காக் கோபம் ஆறியபின் அது அவ்வேங்கை மரத்தைக் காணுமிடத்து அதனைப் பாராது நாணித் தலை குனிந்து செல்லும். அலரும் பருவமுடைய மலர் போலும் அழகிய மையுண்ட கரிய கண்களையுடையவளாகிய இவளிடத்து இன்றியமையாத காதலுடை யேன் என்று நீ கூறுகின்ற சொல்லோ இனிது. மின்னலைக் கண்ணாகக் கொண்டு வழியைப் பார்த்து, மழையென்றும் இடியென்றும் கருதாது நீ இவ்வரிய வழியைக் கடந்து வருதல் எமக்குத் துன்பத்தைத் தரும். இவள் இன்புறும்படி அருள் செய்தாயாதலின் இவளிடத்து நீ இன்றியமையாத அன்புடையை எனப்படும் சொல் இனிது. மணம் நாறும் மார்பினையுடையாய்! முகில் பரக்கின்ற பக்கமலையைத் கடந்து தெய்வ மகளிர் திரியும் அரியவழியைக் கடந்து இவ்விடத்தே நீ வருகின்ற நிலை எமக்கு இன்னாது. இருளை ஒத்த கரிய கூந்தலை யுடைய இவளிடத்து நீ இன்றியமை யாத அருளினையுடையை என்று கூறுகின்ற வார்த்தையோ இனிது. விளங்குகின்ற வேலை வலக்கையில் ஏந்தி நீ ஒருவனென்று கருதாது யானை உலாவுகின்ற அரிய வழியால் இவ்விடம் வருதல் எமக்கு இன்னாது. அவ்வின்னாமையினால் எமக்குத் துன்பம் வருதலின், ஐய! இனி இராக்காலத்து வராதீர். இவளுடைய மிருதுவான தோள்களைப் பூக்கள் விரவிய அகன்ற பாறையிலே, அழகு செய்யும் மலைச்சாரலிடத்தே, பகற் காலத்துப பெறுவை. 14 தோழியிற் கூட்டம் நிகழ்ந்த பின், முற்காலத்திற் பணிந்து பின் நின்றோனைத் தோழி தானே பணிந்து கூறுகின்றாள். கரியபிடி முழந்தாளில் நின்றுதானே வளைகின்ற மூங்கிலின் கோலை நெல்லுடனே வளைத்துத் தின்னும். தின்ற பின் அம்மலையில் நெருங்கி வளரும் வாழைகளுட் புகும். புகுந்து வருடை மானின் இளம்மறிகள் பரந்து திரியும் அவ்விடத்தே துயில் கொள்ளும். இருள் செறியும் சோலையினையும் விளங்குகின்ற நீரினையுமுடைய மலைநாட! பகைவரை வருத்தும் வலியினையுடையதும், பாம்பின் பொறிபோலும் புள்ளிகளுடையதுமாகிய வில்லிடத்தே வைத்த கையுடையையாய் நின்றாய்; நின்று நிரைத்தவளையணிந்த முன்கையுடைய என் தோழியை நோக்கி அவட்குக் காமக்குறிப்புத் தோற்றுவித்தாய்; அவள், பசிய புனத்திற் படிகின்ற கிளிகளை ஒட்டுவதைப் படிப்படியாக மறப்பித்தாய். இவளை நின்வயத்தளாக்கி விட்டாயாதலின் அவள் உன்னை இடை விடாது நினைத்தலை விரும்புவாள். இம்மலையிடத்தே பாறை மீது பலாப்பழங்கள் விழும். அப்பழங் களைக் குன்றிடத்து வாழும் கானவர் எடுத்து உண்பர். அங்குப் பலாப் பழமும் பெரிய சோற்றுத் திரளுமுடைய, பிள்ளையால் வறுமைப்பட்ட சிறுகுடிலில் இருக்கும் செல்வமுடையவன் ஒருவன் உளன். அவனது செல்வப்புதல்வியே இவள். ஆதலால் அவள் நின்னைப் பிரிந்து வருந்துதல் ஆற்றாள். நீயோ காற்றிலும் பார்க்க வேகமாகச் செல்லும் தேரையும், களிற்றை யும் நின்பால் வந்த புலவர்களுக்குக் கொடுத்தலால் கை ஓய்ந்து இராது மழையினும் பார்க்கக் கொடுத்தலிற் சிறப்படைந்தாய். முன்னர், நீ , சுரபுன்னை வளரும் மலைச் சாரலிற் றிரியும் வருடைமான் மறியை வளர்ப்பவர் போல நீங்காமல் இவளைப் பாராட்டித்திரிந்தாய். இப்பொழுது பிரிவையானால் ஆபரணமணிந்த மார்பையுடைய என் தோழியது அழகு நீங்கும். குதிரையை மிகக் கடுமையாகச் செலுத்தும் முட்கோல்போல நீ கொடுமையுடையை யல்லை யாதலை யான் அறிவேன். ஆதலின் யான் அவளை நின்னிடத்திற் சேர்ப்பேன். 15 தலைவன் விருந்தாகச் சென்றவிடத்து நிகழ்ந்ததைத் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள். ஒள்ளிய வளையினையுடையாய்! இங்கு நிகழ்ந்தது ஒன்றைக் கேட்பாயாக. நாம் தெருவிடத்து மணலாற் சிறு வீடு கட்டி விளையாடும் போது சிற்றிலைக் காலால் அழித்துக் கூந்தலிற் சூடிய மாலையை அறுத்து, வரியினையுடைய பந்தை எடுத்துக்கொண்டு ஓடி நமக்கு வருத்தத்தை உண்டு பண்ணும் காவலில்லாதவனை நீ யறிவாயன்றோ? ஒரு நாள் யானும் அன்னையும் இல்லிடத்திருந்தோம். அஞ்ஞான்று, அவன் வந்து “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீர் விடாய்த்து வந்தேன்” என்றான். அன்னை என்னை நோக்கி, விளங்குகின்ற பூணினை யுடையாய்! பொற்கரத்தால் நீர் ஊற்றி உண்ணச் செய்துவா வென்று சொன்னாள். யான் அக்கள்வன் என்று அறியாது சென்றேன். தண்ணீர் வார்த்தலும் அவன் எனது வளையணிந்த முன் கையைப் பிடித் திழுத்தான். யானும் கலங்கி, அன்னாய்! இவன் செய்த காரியத்தைப் பார் என்றேன். அன்னையும் சத்தமிட்டு ஓடி வந்தாள். வருதலும் யான் அதனை மறைத்து இவன் தண்ணீர் குடித்து விக்கினான் என்று ஒரு பொய் கூறினேன். அன்னையும் அவன் முதுகைத் திரும்பத் திரும்பத் தடவினாள். அவனும் என்னைக் கொல்லுவான் போலப் பார்த்துச் சிரித்தான். இதுவே நிகழ்ந்ததாகும். 16 இரவுக்குறி வந்த தலைவனிடத்துத் தோழி, இரவுக்குறியது ஏதமும். ஏதத்தால் வருந்துன்பமும் தன்னுள்ளத்து விருப்பமும் கூறி வரைவு கடாவுகின்றாள். புலி, யானையின் முறம்போன்ற செவி மறைப்பிடமாக வந்து அதன் மீது பாயும். யானை கோபித்துத் தனது நீண்ட கோட்டின் கூரிய முனையினாற் குத்திப் புலியினது மார்பைத் திறந்து தன் கோபத்தைத் தணிக்கும். பின்பு அது மல்லரின் வீரத்தைக் கெடுத்த திருமால்போல உயர்ந்த பாறையுடைய மலைச் சாரலிற்றன் சுற்றத்தோடு திரியும். யானை புலியைக் கொல்லும் தோற்றம், துரியோதனனைப் பீமசேனன் தொடை யில் அடித்து உயிரைப் போக்கியது போல் இருக்கும். இவ்வகையான மலைநாட்டையுடையவனே! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக. நீ தாமரைப் பூவாகிய கண்ணியைச் சூடிச் சந்தனத்தைப் பூசி மாலையணிந்தவள் செய்த குறியிடத்தே வருவாயாயின், மணம் நாறு கின்ற மலைக்கண்ணே நின்று பலியைக் கொள்ளும் தெய்வங்களில் ஒரு தெய்வம் என்று கருதிச் சிறுகுடியிலுள்ளோர் அஞ்சுவர். குளிர்ந்த ஆடையை உடையையாய்! இராக்காலத்தே சோர்ந்து விழும் கூந்தலையுடையவள் செய்த குறியிடத்தே நீ வரின் தினைப் புனங்களைக் காவல் செய்யும் குறைக்கொள்ளியும் கவணில் வைத்தெ றியும் கல்லும் வில்லுமுடைய கானவர் யானை வருகின்றதென்று கருதி ஆரவாரிப்பார்கள். முத்துமாலையணிந்த மார்புடையாய்! ஒடுங்கிய இடையுடை யவள் செய்த குறியிடத்து இராக்காலத்து நீ வருவாயாயின், நின்னைக் கண்டு விலங்கு முதலியன அஞ்சு ஓடுகின்ற ஓசையினாலே, மிளகு படர்ந்த இம்மலையிலே உலாவுகின்ற புலியென்று இந்தச் செருக்குப் பொருந்திய ஊர் நினைக்கும். யாவராலும் புகழப்படுகின்ற ஒப்பில்லாதவனே! அவர்கள் (விலங்கென்று அறியாது) நின்னை உண்மையாக அறிவார்களாயின் இக்களவொழுக்கம் அறிந்தாரென்று இவள் உயிர் வைத்திராள். இவளின்றி யான் உயிர் வாழேன். ஆகவே நீ நின் காரியத்தைத் தமர்க்குக் கூறி அவர் உடன் பட்ட பின்பு பூக்கள் அலர்கின்ற விடியற்காலையில் வந்து இவளை வதுவை கொள்ளுதலை விரும்பா நின்றேன். அதற்குக் காரணம், அப்பொழுது நீ புதியாய் போல் வரும் வரையும் இவள் கலியாணத்திற் றோன்றிய நாணால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும், யான் கண்டு மகிழ விரும்புவதாகும். 17 தாமதித்து வந்த தலைவற்குத் தோழி தலைவி ஆற்றாமையும் ஆற்று வித்தலது அருமையும் கூறி வரைவு கடாவுகின்றாள்: வறட்சி என்பதை அறியாத புன்னை பக்கமலையிடத்தே நெருங்கி வளரும். உயர்ந்த மலையின் பாறையிடத்தே ஆண்யானை உறையும். அது தான் விரும்பின பிடி தன்னிடத்து நிற்கையினால் தனக்கு மாறான யானையைத் தனது நெஞ்சிடத்தில் கொண்ட வலியினால் அதன் புகர் முகத்தைக் குத்திப் புண்ணாக்கும். அவ்வீரம் மிக்க வேழம் குத்தி வாங்கிய கொம்புபோல நறிய காந்தளின் உயர்ந்த முகை பள்ளங்கள் எல்லாம் நிமிர்ந்து நிற்கும். அப்பள்ளங்கள் நிறையும்படி அருவிகள் ஆரவாரித்து ஓடுமாறு மழை பெய்யும். இவ்வியல்புடைய மலைநாட்டையுடைய வனே! அயலார் அலர் தூற்றுகையினால் என் தோழியின் கண்கள் தம் அழகை இழந்தன. அக் கண்கள் கயல் மீன் உமிழ்கின்ற நீர்போல நீரைச் சொரியாத காலத்துக் களவொழுக்கத்திற் கூடினாய். நீ மறந்தபின் இறை யிடத்துக் கிடந்த வளைகள் நெகிழ்ந்து கழலா நின்றன. அவ்வருத்தத்தைப் பெற்றுக்கொண்டு இருக்கவும் கூடும். ஆனால் அக் கண்கள் அதற்கு இயைகின்றனவல்ல. ஊரார் அலர் தூற்றுகையினால் நறிய நுதல் ஒளி கெட்டுப் பீர்க்கம் பூவினது அழகைத்தான் கொண்டது. அந்நுதல் பிறையின் அழகை இழவாத காலத்து இயற்கைப் புணர்ச்சி நேர்ந்தது. அதன்பின் துன்பஞ் செய்யும்படி பிரிந்தாய். அதனால் உண்டாகிய பசப்பைத் தெய்வத்தினால் நேர்ந்த குறை என்று ஆய் பரவுக்கடன் செய்யவும் கூடும். அதனால் எய்தும் பயன்யாது? அவ்வழகிய நெற்றி அதற்கு இயைகின்ற தில்லையே. நனவுக்காலத்தே அழகு கெடும்படி வருத்தஞ் செய்த (பிரிதலாகிய) நடுங்கத்தக்க துன்பம் கனவின் கண்ணும் வந்து வாட்டுதலால் இவள் வருத்தமுற்று ஆற்றாளாவள். இவள் நெஞ்சழிதற்குக் காரணமான வருத்தம், இறந்துபாடு எய்து வியாநிற்கவும் உயிரைப் போக்காமல் நிறுத்தவுங் கூடும். அக்கனவின் ஆற்றல் அதற்கு உடன்படுகின்றதில்லை. கெடாத நோயாலே வருந்தி அமையாத என் தோழி மலையிடத்து இறக்கும்படி வருந்திய தினையின் முளை மழையைப் பெற்று அழகு பெற்றாற்போல இவள் நெற்றியின் அழகு நின் அளியைப் பெற்ற வடிவினைப் பெறும். 18 “யான் கொண்டு கலங்கிய வருத்தத்தைத் களைந்தேன்” எனக்கூறி அறத்தொடுநில் எனத் தலைவி தோழியிடம் கூறுகின்றாள்: கொடி யிடத்தவும் கொம்பிடத்தவும் பூக்களைப் போலப் பொன்னாற் செய்த மாலையும், நெருங்கியவளையணிந்த கையும், அணைபோல் மெத்தென்ற மெல்லிய தோளும் உடையவளே! நினது அடிகளில் நான் தங்குதற்கு நீ அருளாதிருத்தல் நினக்கும் பொருந்தி னதோ என்று கூறினான். பொன்னாற் செய்த மகரவாய் போன்ற தலைக்கோலம் மறைந்த நரந்தப் பூ நாறும் கரிய கூந்தலின் முடியை ஓயாமற்றடவினான். அது அழகு பெறும்படி கட்டிய ஒரு மாலையை விரலாலே சுற்றி மோந்து பார்த்தான். அதுவல்லாமல் நறவம் பூ அலர்ந்தது போன்ற எனது மெல்லிய விரலுடைய கையைத் தூக்கி அருளுடைய தனது சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொல்லன் உலை மூக்குச் சூடுடையதாய்க் காற்று ஊதுவது போலப் பெருமூச்சும் விட்டான். அது வல்லாமல் தொய்யில் எழுதின இளைய முலைகளை இனியவாகத் தடவினான். தொய்யில் எழுதும் குழம்பைக் கொண்டு வந்த கையினாலே, தான் விரும்பின பிடியை அருள் செய்யும் மயக்கமுடைய யானைபோல மெய் முழுவதையும் தடவுதலையும் செய்தான். தோழி! அச்செயலால் யான் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைப் போக்கினேன். இனி நீயும் யான் விரும்பிய விருப்பத்தில் மனம் வைத்து “நின் மகள் நங்குடிக்கு வடுவாகாமல் கற்புப் பூண்டாள்” என்று கூறி, நம்முடைய மனைக்கண் நிகழ்கின்ற அரிய மணம் அவனைவிட்டு நீங்காமல் ஆய்க்கு அறத்தொடு நில். அது நமக்கு நல்ல தொன்றென்று கருதி நின்னோடு உசாவுவேன்; நீ இங்ஙனம் கூறின் நிலையில்லாத உலகத்திலே நிலையில்லாதோர் புகழ் நமக்குப் பொருந்தும். 19 “தலைவன் பொய் பாராட்டிப் புகழ்ந்தான் எனது மடனும் நாணும் நிற்காமல் நின்றேன் எனத் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள். மேகத்தை மின்னாகிய கோடுகள் பிளந்தோடும். அது போல ஐந்து வகையாகப் பிரித்துக் கோதி முடிந்த கூந்தலிடத்தே பொன்னா பரணங்கள் விளங்கும். பின் புறத்தே, தாழம்பூவை இடையிடையே வைத்துப் பின்னிய கூந்தல் தூங்கும். இவ்வாறு அழகிய கரிய கூந்தலும் மணம் வீசும் பூமாலையும், இனி நகைப்பும், இலங்குகின்ற பல்லும், இனிய மொழியும் , செவ்வாயும். நல்ல நெற்றியும் உடையவளே! உனக்கு ஒரு வார்த்தை கூறுகின்றேன் அதனைக் கேட்குதி. அவன் போகாதே நில் என்று என்னை நிறுத்தினான். நிறுத்தி அணுக வந்தான். வந்து, நுதலையும் முகத்தையும் தோளையும் கண்ணை யும் சொல்லையும் நோக்கி நின்று உவமை கூற நினைந்தான். நுதல் வியர்வை உடையதாய்த் தேய்ந்ததாயினும் பிறையுமன்று; முகம் மறுவற்ற தாயினும் மதியுமன்று, தோள்கள் மூங்கிலின் தன்மையுடையனவாயினும் அவை மலையிடத்துப் பிறந்தனவல்ல. கண்கள் பூவின் தன்மையுடையன, ஆனால் அவை சுனையிடத்துப் பிறந்தனவல்ல. சாயல் மயில் போன்றது, ஆனால் அது மெத்தென நடக்கும் மயிலுமன்று. சொல்லுச் சொல்லத் தளருமாயினும் கிளியுமன்று, என்று உறுப்புக்களைப் பொய் பாராட்டிப் புகழ்ந்தான். வலையர் விலங்குகளின் சோர்வைப் பார்ப்பது போல என் நெஞ்சழிந்த செவ்வியைப் பார்த்தான். தீண்டுதலையுஞ் செய்தான். மதத்தால் அறிவிழந்து குத்துக்கோல் எல்லையில் நில்லாத களிறு போன்று பலமுறையும் தொழுதான்; தீண்டினான்; ஆதலால் அவன் குணத்தில் அறியாமையே இல்லை. 20 காம விருப்பு இல்லாத ஒருத்தியிடத்து ஒருவன் தனது காமவேட்கை தோன்றக் கூறி எதிர்விடை பெறாது இன்புறுகின்றான்: எதிரே அழகின் மிக்காள் ஒருத்தி வருகின்றாள். அவள் ஊரிடத்தே யுள்ள பூஞ்சோலையில் நீர் ஓடும் வாய்க்காலில் நிற்கும் ஞாழல் மரத்தின் பூங்கொத்துக்களைப் பறித்துப் பூவும் மயிரும் சேரும்படி வைத்து முடிந்திருக் கின்றாள். தலையின் அடிமயிர் தோள்களிடத்தே சிறிது குலைந்து வீழ்ந்திருக் கின்றது. அதனால் அவள் முகம் பூரண சந்திரன் நிறைந்த நிலாவொளியை வீசியதுபோல் இருக்கின்றது. இவள் யாரோ? இம்மலையிலே வல்லவனாலே பண்ணப்பட்ட ஒப்பில்லாத பாவையோ? அன்றிப் பிரமாவினாலே நல்ல மகளிருடைய உறுப்புக்கள் எல்லாவற்றை யும் ஒருங்குகொண்டு ஒருவடிவாகப் பண்ணப்பட்டாளொருத்தியோ? அன்றி ஆடவர் மேலுள்ள வெறுப் பாலே தன்னைக் கூற்ற மென்று அறியாதபடி மறைத்துப் பெண் வடிவு கொண்டு வந்ததோர் கூற்றமோ? கொடி போன்ற நுடக்கமும், எண் கோவையாகிய மேகலையும், சில பூத்தொழிலுடைய ஆடையையும் உடையளாய் இருத்தலின் இவள் இவ்வூரிடத்துப் பிள்ளையால் மிடிப்பட்டாருடைய செல்வத்தையுடைய மகள் காண்; இவளைக் காத்துவந்தவர்கள் இப்பொழுது காவாராய்ப் புறப்பட விடுதல் கொடிது. இனி இவளை, நல்லாய்! யான் கூறுகின்றதைக் கேள் என்று போகாமற் றடுத்து வார்த்தை சொல்லிப் பார்ப்பேன். கண்டார் காதல் கொள்ளுதற்குக் காரணமாகிய மான் போலும் நோக்கத்தினையும் மடப்பத்தினையும் உடைய நல்லாளே! சூட்டு மயிரினையுடைய அன்னமன்ன நடையும் அழகிய விரும்பத் தக்க மயில் போன்ற சாயலும், கல்லையுண்ணும் அழகிய புறாப்போன்ற மடப்பமு மாகிய நல்ல தன்மைகள் அமைந்த உனது இவ்வழகு உன்னைக் கண்ட வர்களை மயக்க முறுத்தும் என்னும் நிலைமையை நீ தான் அறிவையோ? அறியாயோ? வளைந்த முன் கையினையும் வெள்ளிய எயிற்றினையுமுடைய அழகிய நல்லாளே! நிறத்தாலும் திரட்சியாலும் வளைகின்ற மூங்கிற் கூட்டத்தைப் போன்றதும், மென்மையால் நுண்ணிய துகிலினையுடைய மெத்தை போன்றதுமாகிய நின் விசாலித்த தோள்கள் காமக்கடலை நீந்து தற்குத் தெப்பமாகும். மூங்கிற் கோல்களாற் செய்தனபோன்ற உன் தோள்களைக் காண்பவர்களுக்கு வருத்தமாகும் என்பதை நீ யறிய மாட்டாயோ? மயிர் நேரிதான வரிகளையுடைய முன்கையினையும் மடப்பத் தினை யுமுடைய நல்லாளே! முற்றின கோங்கமரத்தின் இளையமுகை போன்றதும், மழைத் துளியாலுண்டான மொக்குள் போன்றதுமாகிய உனது தனங்கள் நின்னைக் கண்டவர்களின் உயிரை வாங்கிக் கொள்ளுமென்னும் நிலைமையை நீ தான் அறிவையோ? அறியாயோ? இவ்வாறு யான் கூறவும், மயக்க முற்றாய் போலப் பிறருடைய வருத்தத்தை நீ அறியாயாது கேட்டார்க்கு யாதொன்றுஞ் சொல்லா யாய்க் கழிந்து போகின்றவளே! இப்பொழுது யான் கூறுகின்றதனைக் கேள்; நீயுங் குற்றமுடையையல்லை. உன்னை வீட்டின் புறத்தே புறப்பட விட்ட உன் னுடைய சுற்றத்தாருங் குற்றமுடையரல்லர்; குற்றமுடையான் யாவனெனில், நிறையழிந்து கொல்கின்ற யானையை நீர்க்கு விட்டால் பறையடித்துச் செல்லுமாறு போலப் பறைசாற்றிச் செல்வதல்லது, பறை சாற்றாமற் செல்லாதொழிக வென்று சொல்லாத இறைவனே யென்க. 21 இதுவும் கைக்கிளை; கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம் “காமஞ்சாலா இடும்பை யோள்வயி -னேமஞ்சாலா விடும்பை யெய்தி - நன்மையுந் தீமையுமென்றிரு திறத்தாற் -றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் -சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின்புறல் - புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே” (தொல் -பொருள்- அகத்திணையியல் - சூத் 50.) மூங்கில் போற்றிரண்ட தோளும், மணம் நாறுங் கடை சுருண்ட ஐந்து வகையாய்ப் பின்னிமுடிந்த கூந்தலும், மானின் பார்வையை வென்ற மடநோக்கும், மயில்போன்ற சாயலுமுடையாய்! அழகிய சிலம்பின் உள்ளிடு மணி ஆரவாரிக்கவும், ஒளியினையுடைய ஆபர ணங்கள் விளங்கவும், செல்பவளே! ஒடுக்கத்தாற் கொடியும் விளக்கத் தால் மின்னலும், கண்ணுக்குத் தெரியாமையின் வருத்தம் போன்று யாதொன்றுந் தெரியாததுமாகிய இடையிடத்தே கண்கள் விரும்பிச் செல்கின்றன. நின்னுடைய இளமைப் பருவத்திலே, செல்வமும் தலைமையுமுடைய உன் தந்தையின் பழைய அகன்ற வீட்டில் நின்றும் அடிக்கின்ற பந்தோடே தளர்ந்து ஒதுங்கிப் புறப்படுகின்றவளே! இப்பொழுது யான் கூறுதலைக் கேள். சில வார்த்தைகளை யுடையவளே! பாண்டியன் குளிர்ந்த பூ மாலையைச் சூடிச் சந்தனத்தைப் பூசியிருப்பான். அவனது உயர்ந்த மதுரை யிடத்துத் தேன் பரக்கும்படி நீலம் முறுக் கவிழ்ந்திருக்கும் ஏந்திய அழகிய மருப்புடைய யானையை வைத்திருக்கும் பகைவரைப் பாண்டியனதுவேல் வருத்துதல் போல் நீலமலர் போன்ற நின்கண்கள் கோபித்து என்னை வருத்தா நின்றன, நீ இவ்வாறிருத்தல் உன் இளமைக்கு ஏற்றதோ? பொன்னாற் செய்த குழையினையுடையாய்! உன் நிறமோ மழை போற் கொடையுடைய பாண்டியனது அசோக மரச்சோலையின் நடுவே நின்ற மாவின் தளிரை ஒத்தது. பந்தியிலே நிற்கும் பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேருடைய பாண்டியனாற் கோபிக்கப்பட்டவர் களது மார்பில் தைத்த அம்பிலும் காட்டில் உனது நிறம் எனக்கு நோயைத் தருதல் உலகிற் கொடுமைகளில் மிக்க கொடுமையன்றோ? பலவகைப்படத் தொடுத்த குளிர்ந்த மாலை அணிந்த பாண்டிய னது, உயர்ந்த சிகரமுடைய பொதிய மலையிடத்து அழகிய இளம் பூங்கொத்துக்கள் போன்ற சுணங்கினையுடையவளே! முத்து வடத்தைத் தன்னிடத்தே கொண்ட நின்னுடைய இளைய தனங்கள் இப்பருவத்தி லும், அப்பாண்டியனுடைய மிகுந்த வலியும் மதமுமுடைய யானையின் கொம்புகளிலும் கோபமுடையனவாயிருக்கின்றன. இக்கொடுமை இப்பருவத்திற் றக்கதோ? இவ்வகையான பலவற்றை யான் நீள நினைந்து கூறினேன். அவற்றிற்கு விடையாக யாதொன்றுங் கூறாது. கவிழ்ந்து நிலத்தைப் பார்த்துப் பின்னை, அவ்விடத்தே தோழியரை நினைவாள் போல, துணையாயமைந்த தோழியர்க்குப் பொருந்தின கண்ணையுடையளாய் என்னறிவைத் தன்னிடத்தே அகப்படுத்திக்கொண்டு தன் மனையிடத்தே மீண்டு போனாள். 22 இதுவுங்கைக்கிளை வாரிய கடை சுருண்ட ஐம்பாலும், வளைந்த இறையுடைய மெல்லிய தோளும், பெரிய அழகிய மலர் போலும் கண்ணும் மான்பிணையின் வெருவிய நோக்கும், மழைபெற்ற தளிர் போலும் நிறமும், பிறைபோல் நெற்றியும், முகைபோலும் கூரிய பல்லும், கொடிபோல் இடையும் உடையவளே! காலுக்கு ஏற்ற சிலம்பின் உள்ளிடுமணி ஆரவாரிப்ப, நிறைத்த வளையுடைய கையை வீசினவளாய் என் அரிய உயிரைப் பற்றிக் கொண்டு அதனைத் திருப்பிக் கொடாது போகின்றவளே! யான் கூறுகின்ற தனைக் கேள். வருத்தந்தரும் காமநோய் அளவுகடந்து யான், சிறிது உயிருடன் இருக்கும்படி என் உயிரை வாங்கிக் கொண்டு இளமைப்பருவத்தாலே அறியாமற் போகின்றவளே! நின்னிடத்திற் றவறில்லை. ஆயினும் நின்னை யல்லாமல் அந்நோயைப் போக்குவார் பிறரில்லை. அழகிய இவள் இவ்வகை நோய் செய்யும் என அறிந்தும் தஞ்செல்வச் செருக்காற் புறப்படவிட்டலு முடைய சுற்றத்தாரைத் தவறுடையர் அல்லரென்று கூறலாமாகிற் கூறு. (அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி) என்னும் ஒழுக்கங்கள் தேய்ந்து யான் மறந்திருக்கும்படி என்னைச் செய்து, தினமும் என்னை வருத்து தற்குக் காரணமான நீ செய்த நோயை நினது இளமையால் அறியாமற் போகின்றவளே! நின்னிடத்திற் பிழையில்லை. ஆயினும் உண்டென்று காட்டாது வருத்தும் இடையுடைய நின்வடிவை அறிந்திருத்தும் தஞ்செல்வச் செருக் கால் உன்னைப் புறப்படவிட்ட உன் சுற்றத்தாரைத் தவறுடையர் அல்லர் என்று கூறலாமாகிற் கூறு. வருத்தமிகுந்து நெஞ்சழியுமாறு மென்மேலும் நெருங்கி வருகின்ற காமநோயைக் குறிப்பால் அறிதலின்றிச் சொல்லிக் காட்டினும் அறியாத வளே! நின்னிடத்து அப்பிழையில்லையாயினும், பைய உயிரை வாங்காது விரைய உயிரை வாங்கும் நின் வடிவை அறிந்து வைத்தும், தஞ்செல்வச் செருக்காற் புறப்படவிட்ட நும்முடைய சுற்றத்தாரைத் தவறுடையர் அல்ல ரென்று கூறலாமாகிற் கூறு. யான் குற்றங் கூறில் கூறுவது புறத்தே செல்லவிட்ட நும்முடைய சுற்றத்தாரையாகும்; நின்னையன்று. பின்னை இக்காமநோய் பொறுக்கத் தக்க அளவையன்றி மிகுதியாயிற்று. பொற் குழையாய்! யான் இங்ஙனம் வருந்தி நிற்கின்ற நிலைமையை விட்டு இவ்வூரின் மன்றத்தே மடலை யேறி நீ எய்தும் பழியை யான் நிறுத்துவேன் என்று இருக்கின்றேன். 23 குறையுற்று இரந்து பின்னின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி இங்ஙனம் வருத்து வையாயின் நீ செய்யும் தவத்தினால் பயன்யாது மில்லை எனக் கூறுகின்றான்; முறுக்கு அவிழ்ந்ததும் அரும்புகள் நீருக்கு மேலே ஓங்கினது மாகிய இலையுடையதாய்த் தாமரை இருக்கும். அத்தாமரையின் வளையத்தில் முத்தை அழுத்திச் செய்தது போன்ற வளை கையிடத்தே விளங்கும். அக்கைகள் துடுப்புப் போன்ற காந்தள் மலர்களை ஒத்தன. திரட்சி மிக்க அம்மெல்லிய முன் கைகளினாலே, சாதிலிங்கம் பூசிய ஒளிவிடும் வேலைப்பாடமைந்த வாய்களையுடைய, மரத்தாற் செய்த சிறு பானையாலும் பாவையாலும் விளையாடுதற்குச் செல்வாய். செல்லுமிடத்து அழகிய சிலம்புகள் மிக ஆரவாரிக்கும் படி சில அடிகளை எடுத்து வைத்து மெத்தென நடப்பாய். உன்னுடைய இளமை நீங்குதலால் பின்னாதுவிட்ட ஐம்பாலைக் கண்டு என்னிடத்துண்டான வெல்லாம் என்னை விட்டுப் போயின. இவ்வாறு எனக்கு நேருமாறு செல்கின்றவளே! யான் கூறுகின்றதனை இப்பொழுது கேள்: யான் மயக்க முறுகையினாலே அதுகண்டு தானும் மருண்டு இவனுற்ற நோய் யாதென்று கேட்கும் அருள் இவட்கில்லையென்று யான் கூறுவேன். அது கேட்டு அயலார் நின்னைப் பழிக்கும். அதனால் கூரிய எயிற்றினையுடைய இளையமகளிர்க்கு நடுவே பலவகைக் கோலத் தாலே பொலிவு பெற்று, நீ, தைத்திங்களில் நீராடிய நோன்பின் பயனைப் பெறுவையோ? பெறாய் காண்: தலையிற் கிடந்து அசையும் தலைப்பாளை யென்னும் ஆபரண முடையவளே! ஒளி கெடும்படி இவன் மனத்தில் உண்டாகிய நோய் யாதென்று கேட்கும் அருள் இவட்கில்லை யென்று யான் கூறுவேன். அதனைக் கேட்டு அயலார் பழிப்பர். அப்போது நோன்பாகிய விளை யாட்டைக் கொள்ளும் மகளாய், நீ, பிறர் மனைக்கண்ணே ஐயமேற் றுப்பாடி நீ அவ்விடத்துப் பெற்றவைகளைப் பிறர்க்குக் கொடுத்தத னாலுள்ள பயன் நினக்குப் பயன்தருவதொன்றோ? தாராதுகாண்: ஆராய்ந்திட்ட வளையினையுடையாய்! நீதான் இடையிடையே பெருமூச்செறிந்து ‘இவன் மனத்திலுண்டாகிய நோய்’ யாது என்று கேட்கும் நோய் இவட்கு இல்லையென்று யான் கூறுவேன். அது கேட்டு அயலார் நின்னைப் பழிப்பர். அப்போது, சிறுவனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியினுடைய பெண்ணின் மனையைக் கோடற்குச் சிறு சோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறியறு தலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ பொருந்தாது. நீ நெஞ்சு வருந்துபடி யான் இவற்றைக் கூறினேன். அழகிய ஆபரணமணிந்தவளே! நின்னை விரும்பினார் வருந்தும்படி நீ செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவி செய்யாயாயின் நீ செய்த அத்தீங்கினாலுள்ள பயன் நின்னைப் பற்றாது விடாது. அதுவல்லாமல் நீ அருளை வெறுப்பை யாயின் நினக்கு அவை பயன் தருமாறில்லை. 24 தலைமகனின் குறை முடிக்க எண்ணிய தோழி தலைமகளோடு மாறுபட்டு அவனது குறை முடிக்குமாறு கூறுகின்றாள்: கண் சென்று நுழைந்து பார்க்கும் நுண்ணிய இடையும், வளைந்த இறையும், வளை யணிந்த முன் கையும் மயில் போன்ற சாயலுமுடைய மடப்பத்தை யுடையவளே! அழகுத்தேமல் படர்ந்த உன் அழகிய முலை களையும், பிறை போன்ற நெற்றியையும் நறிய மாலை சூடிய கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அழகுத் தேமலையும் பார்த்தார். இனிய நகையினையுடையாய்! நின்னை நோக்கித் தொழுதபின், தெரியிழாய்! என்னை நோக்கி, “உலகத்திற் கண்ணுக்கு நிறைந்த அழகினை யுடைய மகளிரைக் கண்டவர்களுக்கு, உள்ளே நின்ற காம நோய் மிகும்படி விரைய உயிர் போகும்படி துயர் செய்தல் அவர்க்குப் பெண்டன்மையன்று” என்று கூறிக் கண்ணும் உருக நின்று நடுங்கினான். நடுங்கி, இவ்வாறொருத்தன் தன்னிடத்துப் பொருகின்ற களிற்றை யொத்த தன்மை கெட்டு மனமுடைந்து உள்ளே உருகுவான் போல இரா நின்றான். இவன் இவ்விடத்து வந்து என்ன காரியஞ் செய்தான்! என்றாள். அதுகேட்ட தலைவி, ‘நம்மாற் பிறர்க்கு நேர்ந்த தீங்கில்லையாகப் தெருவினின்று கலங்குவாரைக் கண்டு, நீ அத்துன்பமாகக் காண்பன வற்றை நின் தலையிற் கொள்கின்றாய். இது வாரணவாசியிலுள்ளார் பெறும் அருளாகிய பதவியை நீ ஏற்றுக்கொண்டது போலாகும். அது கேட்ட தோழி, அடிபரந்த முலையினையும் ஆராய்ந்த பூணினையு முடைய நல்லாய்! பெரியபோர் செய்யும் கண்ணையுடைய என் தோழி செய்த பொறுத்தற்கரிய வருத்தம் விரைவில் உயிரையும் வாங்கும். ஒண்டொடீ! அஃது உயிரை வாங்காதபடி இந்நோய் தீர்த்தற்குக் காரணமான மருந்தை அருளாய்; அம்மருந்துதான் மிகவும் அரிதன்று; நின்முகங் காண்டல் காரணமாகப் பிறந்த அருளே மருந்தாகும் தன்கை யாக உடைய னென்று கூறா நின்றான்; ஆதலால் அவன்றான் நின் முகத்தை இக்காலத்தே பெறின் அது மருந்தாவதல்லது வேறு சிறிதும் மருந்தில்லையா யிருக்கு மாயின், திருந்திழாய்! இனி நாம் என் செய்யக் கடவேம், என்றார், அது கேட்ட தலைவி, ‘பொன்செய்வாம்’ என்று கூறி நகைத்து, உலகவொழுக்கத்தைத் தப்பி ஒருவன் தெருவின்கண் நின்று கூறுங் கூற்றை உண்மையென்று கொண்டு அதன் உண்மையை உணரே மாய் நாம் அதனைத் தெளிதல் எளிதென்று சொல்லக் கடவேமென்றாள். அதுகேட்ட தோழி பின்னை நின் கருத்து இதுவாயின், ஒருவன் சாந்தன்மை எளிதன்று எனக் கூறக் கடவேமென்றாள். அதுகேட்ட தலைவி மாட்சிமைப் படாத இவ்வூரில் அம்பல் அலராக மலரட்டும் என்று கருதி நாணையும் நிறையையும் விரும்பாத குடிப்பிறப்புக்கு உரிய ஒழுக்க நெஞ்சு இல்லாதவனாயினான். அவனுக்குத் தான் இறந்துபடும் எனக் கூறும் அத்தன்மை இல்லையாகும். அதுகேட்ட தோழி நின் பூணாகத்திற் புணர்ச்சியை மனத்தாற் கருதி இரவுந்துயில் கொள்ளானாய் நங்கேண்மையை விருப்புற்றவனை நாணம் கொல்கின்றமையான், எதிரே நின்று மீட்ட நன்மை நமக்கு வருதலின் அதற்குத் தக்கது அறிந்து செய்வாயாக என்றாள். 25 தலைமகற்குக் குறை முடிக்க எண்ணிய தோழி அவனோடு மாறுபடக் கூறி அவன் நீங்கிய விடத்து அவன் குறை மறாதிருத்தற்கு ஏற்பன சொல்லித் தலைவியைக் குறைமுடிப்பிக்கின்றாள். ஏடீ! இவன் ஒருத்தன் என்ன குறையைப் பெறாதிருக்கின்றான்? இவனது கேட்டைப் பார்ப்பாயாக; அறிவுடையோர் தம்முடைய செல்வம் முடிவடைகையினால் வறுமை அடைவர். அடைந்து தமது வருத்தங் களைய வேண்டித் தக்க உறவினரிடஞ் சென்று தங்குறையை அவர்க்கு வாய் விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னை அதனை முடியச் சொல்லமாட்டாதிருப்பர். அதுபோலத்தான் கூறக்கருதியதனைக் கைவிட்டு என்னைப் பலமுறையாகப் பார்ப்பான்; பின் யான் தன்னை நோக்கின் தான் மெல்லத் தலையை இறைஞ்சி நிற்பான். (தலைவன் தம்மிடத்து வருகின்றதைக் கண்டு தலைவிக்குக் கூறிப், பின்னர் அவனெதிர் சென்று அவனை நோக்கிக் கூறுகின்றாள்.) ஏடா! நின்னைவிட்டு நீங்காத நிழல்போல் என்னை விட்டு நீங்கா மற்றிரிகின்றவனே! நீ எம்மோடு ஒரு நட்புச் செய்யக் குறித்தாய் போலக் குறிப்பாலே எமக்கு அறிவித்தாய். அதனை இதுவென்று கூறு. (தலைவன் தன் நெஞ்சொடு கூறுகின்றான்.) யான் என்குறையைச் சொல்லின் இவள் மறுக்க மாட்டாளா? இவ்வாறு ஆராய்ந்து தம்மிடத்து இரந்தவர்களுக்கு யாதும் ஒன்றை முகம்மறாது கொடாது உயிர் வாழ்தலிற் சாதல் நல்லது என்றான். அதுகேட்ட தோழி, இவள் தந்தை இரப்பார் மேலுள்ள காதலி னால் யார்க்குஞ் சிறந்த பொருள் கொடுப்பன். நீ வேண்டிய பொருள் தான் யாது, என்றாள். அதுகேட்ட தலைவன், கூற்றின் குறிப்பறியாதவளே! என்னிடத் துப் பொருளை இரக்கும் மிடி இல்லை. மருண்டு மடநோக்கஞ் செய்யும் நின்தலைவி என்னை அருளுதலை யான் இரக்கின்றேன், என்றான். (அதுகேட்ட தோழி இவனிடத்துக் களவொழுக்கம் அறியாள் போன்று கூறுகின்றாள்) கடும்போரிற் பகைவரைக் கொன்றகளிறு போன்றவனை ஒரு மகள் அருளும்படி இருந்த குறை என்னவோ? (தலைவன் நீங்கிய பின் தோழி தலைவியிடங் கூறுகின்றாள்:) ஒண்டொடீ! இவன் எங்கள் தந்தையின் உள்ளம் குன்றாதபடி வேண்டுவன கொடுத்துத் தான் குறித்ததொன்று கைப்பற்றாமல் போகா திருக்கும் குணமுடையன். அதனால் நீ அருளினுந் தாழ்வில்லை. அவன் குறையுற்று நிற்கின்ற காலத்து யான் தன்னை இகழ்ந்து சிரித்தாலும் பலகாலும் வருவான். கள்வர் தாங்குறித்த பொருளை நோக்காது நோக்கு மாறு போல அக்குறைவுக்கு நடுவே நினை மனம் நோக்காது நோக்கும். அதனால் இவன் முற்றாக நாணமிலன். நாணமின்மையான் இவன் போகின்ற போக்குப் பலராலுஞ் சிரித்து இகழப்படும்! யான் மடன்மா ஏறும்படி, நறிய நுதலினை டையவள் அருளாளாய் அருளை மாறி விடின், அவளோடு என்னிடை நிகழ்ந்தது ஊரிடத்தே அலரா மெனக் கருதிச் செல்வான் போல விருந்தது. 26 இது அடியோர் தலைவராய பெருந்திணை. தலைவனுந் தலைவியும் மாறுபட்டுக் கூறித்தலைவி கூடக் கருதிக் கூறுகின்றாள். இவனொருத்தன் தன்னோடு புணர்ச்சிக் குறிப்பின்றி நிற்பாரை யும் தான் புணர்ச்சிக் குறிப்புடையனாய்க் கையாலே வலிதிற் பிடித்துக் கொள்ளுவான். ஆதலால் இவன் நாணிலன் எனத் தலைவி கூறினாள். அதுகேட்ட தலைவன், “ அப்புணர்ச்சிக் குறிப்பினது பகுதியாகிய மெய்ப் பாடெல்லாம் நின்னிடத்து பொருந்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ள நன்மை தீமைகளை நீ யறிவாய். யான் புணர்ச்சிக் குறிப்பை அறியேன்; பூங் கொத்து நெருங்கினகொடியை ஒப்பாய்! நின் மேனி தழுவுவதற்கு இனிதா யிருக்கையினாலே நின்னை யான் புல்லினேன்” என்றான். அது கேட்ட தலைவி, ‘ஏடா’ தனக்கு இனிதாயிருக்கு மென்று கருதிப் பிறர்க் கின்னாதனவற்றை வலிதிற் செய்வது இன்பத்தைத் தருமோ என்றாள். அதுகேட்ட தலைவன், சுடர்த்தொடீ! உனது முதுமையிடத்தே நிகழ் கின்றவற்றை இப்பொழுது கைவிடு. யான் கூறுகின்றபடி ஒழுகு. நீர் உண்பார் அது இனிதாயின் உண்பரல்லது அந்நீர்க்கு இனிதாயிருக்கு மென்று கருதி அதனை உண்பரோ? ஐந்து வாயுடைய பாம்பின் வாயிலே அகப்பட்டு வருந்திச் செய்யுங்காரியம் அறிகிலேன். இனி யாது செய்வேன். மறுவில்லாத மதி போல விளங்கும் முகத்தினை யுடைய மகளிரை வலிதிற் புணர்தலும் ஒரு மண மென நூலிற் கண்டது என்று கூறினான். அதுகேட்ட தலைவி, “ நூல்களால் உயர்ந்த மணம் கூறப்பட்டு, உலக ஒழுக்கமும் அவ்வாறு இருக்குமாயின், அவனும் யான் மறுத்துக் கூறுஞ் சொல்லைக் கொள்ளாது வலியின்றி வருந்துவானாயின், அவன் மனத்தில் முற்பிறப்பில் யானும் அவளும் வேறல்லம் என்பதொன்று அவனிடத் துண்டாகுமாயின். நெஞ்சே அவனோடு நமக்கு இனி மாறுபாடுண்டோ எனப்புணர்ச்சிக்கு உடன்பட்டுக் கூறினாள். 27 தோழி தலைவனது குறையை முடிக்கக் கருதினாள். கருதி அவன் நிலைமையைத் தலைவிக்குக் கூறினாள். தலைவி உரைத்த மறுமொழியால் அவள் குறிப்பறிந்து, ‘இவ்வகையான தலைவனுக்குச் சொல்லு’ என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மையைத் தான் அறிந்ததை அவளுக்குக் கூறுகின்றாள்; அவன்தான் தொழுகின்றமையைப் பிறர் காண்பர் என்பதையும் கவனிக்க மாட்டான். நாம் நோக்குங்கால் அவன் எம்மை நோக்கித் தொழுது நிற்பான். அவன் இவ்வாறு நம்மைத் தொழுதல் பழியாகு மென்று தொழுதலை விலக்கி அவனைப் போக விடுவேன். யான் அப்படிச் செய்தல் அவனுக்கு வருத்தஞ் செய்தலின் அவன் செல்லாது நிற்பன். ஆதலால் நாம் இனி அவனை இவ்விடத்தே வராமற் செய்தல் இயலாது. ஏடி! இங்ஙனம் காத்தற்கு அரிதான நிலைமை கண்டு மேல் என் செய்யக் கடவேம்? அழகிய தோடணிந்தவளே! வருத்தத்தையுடைய அவனிடத்து நீ கூடுங் கூட்டத்தை யான் விரும்பி நின்னைப் பல முறையும் அழைத்துக் கொண்டு போய் விட்டேன் போலவும் இருப்பேன். அவன் இதை அறியாத படி, நீ என் தோள் மேல் கரும்பாக எழுதும் குழம்பிற் கென்று யான் அவனிடத்தில் செல்வேன். அவ்விடத்தே நீ வந்து ‘இவ்விடத்தை நினக்கு இருப்பிடமாகக் கருதி வந்தாயோ’ என்று என்னைத் தேடி வந்தாய் என்று சொல்லி அவ்விடத்தினின்றும் குறியிடத்தே செல். அவன் நோய் தீர்க்கும் மருந்து நீ யாதலின் அவன் உனது நல்ல பாதங்கள் மீது வீழ்ந்து உன்னை இரப்பான். அதுகேட்ட தலைவி, நீ வாராய்; இன்னும் ஒரு முறை அவனி டத்தே சென்று, “உன் குறை முடித்தலைக் தனக்குக் கடனாக அவள் ஏற்றுக்கொண்டு கூட்டத்திற்கு உடம்பட்டாள்” என்று அவனுக்குக் கூறமாட்டேனென்று என்னுடம்பைத் தொட்டுச் சத்தியஞ் செய்வாயாக. அதுகேட்ட தோழி, யான் கூறிய குற்றம் இதுவோ ? இனி இது செய்யும் வகையைச் சுருக்கமாகக் கேள்; நின்னோடு யான் இதனை ஆராய்ந்த போது, நீயும் நாணத்தால் நிலத்தைக் கீறி என்னிடத்தே வேறுபட்டு நின்றாய். இந்நிலை என்னுடன் செய்தற்கு எளிது. இதனை நீ அவனுடன் நின்று பார்த்துச் செய்தல் அரிதன்றோ? 28 முன்னெல்லாம் இடைவிடாது அருமை பாராட்டி ஓய்ந்த தலைவன் வந்து தலைவியைப் புகழ்ந்துரைத்தான். தலைவி (பரிகாசமாக) இகழ்தலும் தலைவன் அவளோடு மாறுபடக் கூறி நகையாடிக் கூட்டத்துக்கு உடம்படு விக்கிறான். உனது அழகிய முகம் மதிபோன்றது. பின்னிவிடப் பட்டதும் இரத்தினம் விளங்குவதுமாகிய கூந்தல் மதியைச் சூழ்ந்த மேகம் போன் றது. பின்னிவிட்ட மயிரிடத்தே நுண்ணிய நூலாற் றொடுக்கப்பட்ட மலர்கள் மலர்ந்து தேனால் ஈரமான இதழ்களுடையனவாயிருக்கும். அவை (மதியை விழுங்கிய) கரும்பாம்பினிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடும் கார்த்திகை நட்சத்திரம் போன்றன. இவ்வாறு பொருந்திய அழகால், கண்டார் மனத்தை வருத்திச் செல்கின்றவளும் அழகிய கூந்தலுடையவளுமாகிய அணங்கே! நீ என்னை இகழாது யான் கூறுகின்றதை ஆராய்ந்து பார். பண்டு நீ எனக்குப் பெரிய பொன் குவியல் போன்றிருப்பாய். தலைவி:- இவள் யான் தன்னால் அழகு பெற்றேன் என்று கூறுவதைப் பாராய். நீ எழுதுதலால் அழகு பெற்ற எமது முலையாலும் மார்பிடத்தே இடைவிடாது உழுத நல்வினையுடையேமோ? அஃதின்றே. தலைவன்:- வண்டுகள் ஒலிக்கின்ற பூவாற் செய்த மாலையணிந்த அழகுடையாய்! நீ உழுதாய்; திருந்திய ஆபரணமணிந்த மெல்லிய தோளில் யான் தீட்டிய கரும்பு அழகு பெற்றது. நின் முலைகள் இடை விடாமல் என் மார்பைப் புணர்ந்ததன் பயனாலன்றோ? நின் குற்றந்தீர்ந்த முகம் போலக் குவளை மலர் மலர்ந்திருக்கும். அக்குவளை மலர் போன்ற கண்கள் அழகு பெறுவதும் நீ இடைவிடாது புணர்ந்ததன் பயனா லன்றோ முல்லை முகை ஒத்த எயிற்றினையுடையாய். இவ்வழகுகளன்றி வேறு அழகு உண்டாக நீ புணர்வாயாக (இனி யான் வரைந்து கொள்வேனென்றவாறு) அதுகேட்ட தலைவி; ஏடா! நீ எனது தோளிடத்து எழுதிய கரும்புக்கு நீ கூறிய அழகை ஏற்றுக்கொண்டேன். நீல மலர் போன்றதும் வேல் போன்றதுமாகிய கண்களுக்கும் மற்றுமுள்ள உறுப்புகளுக்கும் பெரிய பசப்பு உண்டென்று கூறுவாய். அதுகேட்ட தலைவன்; நல்லாய்! இகுளையே! யான் கூறுவதைக் கேள். அரசனைச் சார்ந்து அவன் செல்வத்தைப் பெற்று ஒருவன் உயர்வடைவானாயின், அவனாலுள்ள பலனை வேந்தன் கொள்வன். இவ்வாறு இவ்விடத்தே யான் எய்துவேன். (கூட்டத்தால் செயற்கை அழகு பெற்ற உன்னை மணந்து கொண்டு இன்றே பெறும் பயன் எல்லாங் கொள்வேன் என்றவாறு) தலைவி:- அவ்வாறே ஆவதாக. தலைவன்:- முத்தை ஒக்கும் முறுவல் உடையாய்! நீ அவ்வாறு வெறுப்போடிருந்து கூறினாயாயின், நீ முன்பு அடைந்த பசப்பு எல்லாம் இனி ஒரு காலமும் அடையாதபடி ஒழித்து விடுதற்கு. வேங்கைப் பூபோன்று மிக்க அழகு தேமலுடையதும் பூணையணிந்ததுமாகிய நெஞ்சினாலே பொய்யாகவாயினும் என்னை ஒருமுறை தழுவுவாயாக. 29 இரவுக் குறியிடத்துத் தலைவன் வருதல் அலராகும் என்று தோழி அஞ்சினாள். அவள் தலைவன் வருதலை நிறுத்தக் கருதி, அவன் இராக் காலத்தே செய்த குறியை அறிவதற்குத்தான் வெளியே சென்றவிடத்து நிகழ்ந்த செய்தியாக ஒரு பொய்யை நாடக வழக்கும் உலகியல் வழக்குமாகப் படைத்துக்கொண்டு தலைவன் மறைவிடத்தே வந்தபோது தலைவிக்குக் கூறுவது போல அவன் கேட்கும்படி கூறுகின்றாள்: திருந்திய ஆபரணங்களை அணிந்தவளே! இவ்வூரிடத்தே நரைத்த தலையனும், போர்வையுடையவனும் கருங்குட்டத்தால் காலுங்கையும் முடமாகியவனுமாகிய ஒரு முதிய பார்ப்பான், நமது தெருவில் வந்து போகாமல் ஒளித்துத் திரிவான். அவனை நீ அறிவையல்லையோ! அவனினின்றும் உன்னைப் பாதுகாத்து நடப்பாய் என்றும் நீ என்னிடம் கூறுவாயல்லையோ? அதனை யான் கவனியாது உயிர்கள் எல்லாம் உறங்கும் இராக்காலத்தே எமது மார்பைச் சேரும் தலைவன் செய்யும் குறியை அறிதற்கு வந்து நின்றேன். அந்தப் பார்ப்பானாலே இராக் காலத்து நகைக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதனை ஊரவர்கள் கேட்பின் சிரித்து மகிழ்வர். அது நிகழ்ந்த படியைக் கேட்டருள்., அவன் யான் நின்ற இடத்தே குனிந்து பார்த்தான். பார்த்து பெண்கள் இவ் விடத்தில் நிற்கும் காலமல்லவாதலின் இவ்விடத்தில் நிற்கும் நீ யார். நீ என்னிடத்தில் அகப்பட்டுக் கொண்டாய்” என்று மெல்லென்று வணங்கி வைக்கோலைக் கண்ட முதிய எருதுபோல என் பக்கத்தி னின்றும் போகாது நின்றான். நின்று, பெண்ணே! வெற்றிலை போட்டுக் கொள் என்று கூறித் தனது வெற்றிலைப் பையைக் குலைத்து நீ எடுத்துக்கொள் என்று தந்தான். யான் யாதும் மறுமொழி கூறாது நின்றேன். அவன் அஞ்சித் தனது எண்ணத்தைக் கைவிட்டு விரைவாகச் சென்றான். யான், “ யான் பெண் பிசாசு; எனக்கு அருள்செய்; எனக்கு அருளாது வருத்துவாயாயின் இவ்வூரில் நீ பெறும் பலியை நீ பெறாமல் யான் எடுத்துக் கொள்வேன்.” என்று பல வார்த் தைகளைச் சொன்னேன். முதிய பார்ப்பான் என்னைப் பெண் பிசாசென்று கருதி அஞ்சினா னென்று யான் அறிந்தேன்; ஒரு கையால் மணலை அள்ளிக்கொண்டு ஓயாது அவன் மேலே தூவினேன். அவன் அவ்விடத்தில் நின்று பயத்தி னால் ஊரெல்லாங் கேட்கும்படி குழறத் தொடங்கினான். இவ்வாறு தனியே நிற்கும் மகளிரைக் கண்டால் தன் காமவேட்கையால் மேல் விழுதலாகிய விருப்பமுள்ள முதிய பார்ப்பானுடைய நாடகம். நங்காத லர் நம்மைக் குறியிடத்து வந்து காணுங்காட்சி கெடும்படி நமக்கு வருத்தமாய் விளைந்தது. இது நிகழ்ந்தது எப்படியிருக்கிறதென்றால்; கொடிய புலியைப் பிடிக்கும்படி கட்டிய வலையில் அத்தன்மையில்லாத ஒரு குள்ளநரி அகப்பட்டது போலாகும். ஆதலால் இனி இரவுக்குறி நிகழ்ச்சி இன்றாகும் போலும். குறிஞ்சிக்கலி முற்றும். மருதக்கலி மருதம் மருதம் என்பது வயலும் வயல் சூழ்ந்த நிலமும். மனிதன் வேடனாயும் (வேடனுக்கும் இடையனுக்கும் இடையிலுள்ள) குறவனா யும், இடையனாயும் வாழ்ந்து இறுதியில் உழவனாக வாழ ஆரம்பித்தான். மருத நிலத்தில் மக்கள் உணவுக்கு வேண்டிய தானியங்கள் விளைந்தன; ஆடு மாடுகள் பெருகின. ஆடு மாடுகளும் உணவுப் பொருள்களுமே மனிதனின் செல்வமாகக் கருதப்பட்டன. கைத்தொழில்கள் வளர்ச்சி யடைந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து தொழில் புரியும் நிலைமை ஏற்பட்டது. இதனால் சாதிகள் ஏற்பட்டன. மருத நிலத்தில் அரசனுடைய இராசதானியிருந்தது. மக்களின் பொழுது போக்குக்குரிய பல வசதிகளும் அங்கு இருந்தன. அங்கு பரத்தையர் சேரிகளும் இருந்தன. ஒவ்வொரு தேசத்தும் நகரங்களில் இன்றும் பரத்தையர் காணப்படு கின்றனர். இல்வாழ்க்கையில் ஒழுகும் ஆடவர் சில சமயங்களில் பரத்தையர் உறவு கொண்டு அவர் இல்லங்களில் தங்கியும், அவர்களுடன் நீர்த்துறைகளுக்குச் சென்று நீராடியும், அவர்களின் ஆடல் பாடல் களைக் கண்டு கேட்டுக் களித்தும் இருப்பர். இக் காரணங்களால் தலைவன் தலைவியருக்கிடையில் சிறு சண்டைகள் நேரும். இவ்வாறு நேரும் சிறு பிணக்குகள் ஊடல் எனப்படும். இவ்வூடல் நீடித்து நிற்குமா றில்லை. தளர் நடைப் புதல்வன் ஏதுவாகவும் பிற காரணங்களாலும் இவ்வூடல் தீரும். ஊடலும் ஊடல் நிமித்தமுமாகிய பொருள்க ளமைத்துப் பாடப்பட்டனவே மருதத்திணையிற் காணப்படும் பாடல்க ளாகும். 1 தலைவன் பரத்தையரிடத்துச் சென்றிருந்துபின் வீடு திரும்பினான். அப்போது தலைவி அவன் பரத்தையை மணந்ததும் புனலாடினதும், துணங்கையாடினது மாகியவற்றைக் கூறிப் புலந்தாள். அவள் ஊடலைக் கண்டு சார்ந்த தலைவனுடன் ஊடல் தீர்ந்து கூறுகின்றாள் தலைவி: பெருகுகின்ற நீரிடத்தே குவளை பூக்கும். குவளை மலர்களை விற்பார் வயலிடத்தே சென்று அவற்றைப் பறிப்பர்; அவற்றைத் தலையில் வைத்துச் சுமந்து ஊரின்கட்செல்வர். அம்மலரைச் சூழ்ந்து வண்டுகள் செல்லும். உயரமும் அழகுமுடைய யானையின் நாறுகின்ற மதத்தை வண்டுகள் படிந்திருந்து உண்ணும். இவ்வண்டுகள் குவளை மலர்க ளுடன் புதிதாக வந்த வண்டுகளுக்கு யானையின் மதத்தை விருந்தளிக் கும். விருந்துண்ட புதிய வண்டுகள் பகற்காலத்து அவ்விடத்திற்றங்கும். பெரிய இறையிடத்திற் கிடந்தவளை யழுத்துதலால் தழும்பு உண்டாகும் படி பெண்கள் தம் கணவரைச் சேர்வர். அவர்களின் தேன் நாறும் மயிரினுள்ளே கிடந்து முல்லை அரும்புகள் முற்றி மலர்ந்து வாசங் கமழும். அப்புதிய வண்டுகள் அம்மலர்களைப் பாய்ந்து ஊதி இராக் காலத்தில் தம் துயரைப் போக்கும். துயரைப் போக்கியபின் தாம் விரும்பியிருந்த பூக்களையுடைய தடாகத்தை மறந்து, அதனைப்பின்பு ஒருபோதும் நினையாதனவாகும். இவ்வாறு நல்ல நீர்வளம் பொருந்திய ஊரனே! ஆரவாரமுடைய சிறப்பில்லாத பொதுமகளிரை பூ வணிந்து கலியாணங் கொண்டாய். அக்கலியாணத்தில் உண்டான உனது அழகிய நாற்றத்தை விடியற் காலத்து நாங்கள் பெற்றேம். எங்கள் மெத்தை போன்ற மிருதுவான தோள்கள் மெலியும்படி, நீ, விரும்பிய பரத்தயரைக் கூடி மண வீட்டிடத்தே யிருந்தாய் என்று பிறர் சொல்ல நினக் குண்டாகிய அழகிலும் அது (நாற்றம்) சிறப்புடையதல்லவோ? உன்னுடைய மார்பிடத்துள்ள மாலையை வாங்கிக் கொண்டவ ளது. நெற்றிக் கட்டாகிய பூமாலையைத் தடுமாறி அணிந்து (ஆண் அணியும் பெண்ணணியும்) கெடாமல் இவ்விடத்தே வந்து நின்றாய். அது நீ பொன் மகரக் குழையை யுடைய பரத்தையுடனே புனல் விளையாடு கின்றாயென்று பிறர் சொல்ல நினக்குண்டான ஆரவாரத்திற் பெரிதாக வும், எம் மேனி கனலுதற்குக் காரணமான காம நோய்க்கு மேலாகவும் இருந்ததன்றோ? பரத்தையர் ஒளிபொருந்திய நெற்றியுடையர். அவர்களைக் கூடுத லால் அவர்கள் அணி நின் மார்பிடத்தழுந்தும். அவ்வடுக்கள். நீயும் பரத்தை யருக்குரிய அணிகளை அணிந்தாய் போன்று அழகு செய்யும். ஓர் அணியே அவர்க்கும் உனக்கும் அணியாகப் பொலிவு பெற்ற அழகை யாம் காணும்படி வந்தாய். அவ்வழகு நின்னைப் பிரிந்த விடத்து வாடியிருக்கும் இயல்புடைய பரத்தையரோடு நீ துணங்கையாடினா யென்று பிறர் கூறும் ஆரவாரத்திலும் பெரியதாயிருந்தது. இவ்வாறு யாம் கூறுதற்கேதுவாக நீ வருதலின் யாம் நின்ன ருளைப் பெற்றேம். நீயும் எம்மை அருள் செய்தாய். நீ விரும்பிய பரத்தைய ரிடத்துத் தேரைச் செலுத்தும் விருப்புடைய பாகன், தேரை வேகமாகச் செலுத்தி அவர்கள் சேரிக்குச் செல்வான். அதற்குமுன் அப்பரத்தையர் அன்பு கெடாதபடி நீ அவ்விடஞ் சென்று அவ்வன்பை நிலைக்கச் செய்வாயாக. 2 தலைவி வாயில் மறுத்தாள். தலைவன் ஆற்றாமை வாயிலாகச் சென்று அவளைக் கூடினான். அவன் நீங்கிய பின் வந்த தோழிக்குத் தலைவி சொல்லுகின்றாள்: முதிர்ந்த கார்காலத்தே, வையையாறு அலர்ந்து கமழ்கின்ற இதழ்க ளுடைய பூக்களைச் சூடி மேன்மை பெற்றுப் புலவர்கள் பாடும் கவிகளைப் பெறும். அது மதுரை ஊரைச் சூழ்ந்து வருதலின் நில மடந்தை அணிந்துள்ள பூமாலை போல அழகுபெறும். வையை நீர் சூழ்ந்து மதிலைப் பொரும் பகையன்றிப் பகைவர் போரால் வளைத் தலைச் சிறிதும் அறியாத, நீர்சூழ்ந்த மதிலை உடையன் பாண்டியன். ஏடீ! அழகிய கரிய கண்ணுடைய பரத்தையர் தமது மாலைகளால் அவனை அடிப்பர். அதனால் நேர்ந்த புண்களாகிய தழும்புகளைக் காட்டி அவன் என்னிடம் அன்பின்றி வருவானாயின் யான் புலப்பேன் என்று சொல்லியிருப்பேன். அதனாற் பெற்ற பயன் யாது? அவனைக் காணில் இச்செயலற்ற நெஞ்சு யான் அவனைக் கூடுவேனென்று கூறாநிற்கும். வளைந்த அழகிய பிறைபோல் நெற்றியுடையோரும் கொடி போன்றோருமாகிய பரத்தையரின் முலைகளிடத்தே முழுகி (அவர்கள் அழுத்திப் பூசின) அழகழிந்த சந்தனமுடையனாய் வருவானாயின் யான் புலப்பேன் என்று கூறியிருப்பேன். காணில் அவனைக் கூடுவேன் என்னும், யான் கூறியதைக் கேளாத எனது நெஞ்சு. ஏடீ! தான் புணர்ந்த அழகிய பரத்தையரின் விளங்குகின்ற பற்கள் அழுத்துகையினால் மிகச் சிவந்த தழும்புகளைக் காட்டி வருவானாயின் புலந்திருப்பேனென்று கூறியிருப்பேன். அவனைக் காணில் தனிமையான நெஞ்சு அவனிடத்தே பணியும். பிறை ஒத்த நெற்றியை யுடையவளே! தம்மிடத்தில் வலியில்லாது அவனிடத்தே கீழ் உற்றுச் செல்லும் நெஞ்சுடைய மகளிர்க்குத் தாம் நினைத்தனவெல்லாம் முடித்தல் ஆகுமோ? 3 பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனோடு காமக்கிழத்தி ஊடினாள். அது கண்டு சென்று சார்ந்த தலைவனுடன் ஊடல் தீர்ப்பாள் அவள் கூறுகின்றாள்: இவ்வுலகம் பிறர்க்கும் பொது என்னும் மொழியின்றி உலகம் முழுவதையும் ஆளும் அரசருக்கு அமைச்சர் அறிவாகிய சொல்லைச் சொல்வர். அவ்வமைச்சர் போன்ற சான்றோரின் தீமையில்லாத சொற் களைக் கேட்கும் செவி வயலாகவும், சான்றோரின் பாடல்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு, அறிவுடைய நாவாகிய ஏராலே புலவர் உழுது உண்பர். அப்புலவரின் புதிய கவிகளைக் கொள்ளை கொண்டுண்ணும் மதில் சூழ்ந்த புனலுடைய நாட்டை யுடையவனே! நின் பரத்தையர், “இவ்வூரன் நமக்கு உறுதியானவனல்லன்” எனக் கூறிப் பின் ஒருவர் கூறியவாறு ஒருவர் கூறாது ஒரு ஊரிற் சென்று குடியே றும் தொகையினராய் (பலராய் ) திரண்டிருப்பர். “நமக்கு இவன் உறவல்லன்; அவனை முயங்காதேயுங்கள்” எனத் தோள்கள் சொல்லவும் முயங்கக் கருதி அத்தோள்களோடு மாறு கொண்டு நின் பரத்தையரை ஒத்த நெஞ்சினையுடைய யாங்கள் ஆயினேம். நீ சொன்ன குறியிடத்தே வந்து பார்த்து நின்னைக் காணாமையின் எம்மிடத்தே வந்தாயென்று கருதி எமது கதவை அடைந்து தட்டிக் கையின் வளைகளால் தம் வரவினை அறிவிக்கும் இயல்புடைய பரத்தை யரை யாம் நோவேமோ? முகை போன்ற தனங்கள் அணைகையினாலே அழகிழந்த நின் மாலைகள் எம்மை இகழும். வடிவுடைய செப்பினுள் வைத்த மாலையை யாம் ஒத்தேம். ஊடியவர்களது அழகுகெடும்படி அவரை இடையன் கொன்றை மரமாக்கிப் பரத்தையரின் மயக்கத்தைத் தீர்க்கும் அவனது மார்பு என்று எழும் சொல்லை நாம் நோவேமோ? உனது மிகுந்த ஆரவாரத்தைக் கேட்டு இது மணமனை எனக் கருதிப் பொலிக, பொலிக, என்று கூறிப் (பரத்தை இல்லிற்) புகுந்த பாணனை யாம் கண்டேம். கண்ட யாம், சேரியிடத்தே சென்று நீ தங்கிய வீட்டை வினாவினவனாய்த் தேரோடு திரியும் பாகனைக் குறை கூறுவேமோ? எம் மனைக் கண்ணே நீ ஒரு காலத்து வந்தாயாயின் நின்னைப் பெற்று மகிழ்ந்து நீ நீங்கிய பின் என் தோள்கள் மெலியும். அதனை அறிந்தார் இவளும் இவரும் இத்தன்மையர் என்று புறங்கூறுவர். அதனை ஏற்றுக்கொண்டு பழைய நிலைமையைப் பெறுதற்கு முயங்கு வேம். நீ விரும்பாத நின்மார்பின் முயக்கம் கனவிற் கிடைத்த செல்வத்தை ஒக்கும். 4 இதுவும் அது: மெல்லிய சூட்டு மயிரினையுடைய அன்னம் தனது அழகிய நடையுடைய பேட்டோடு அலர்ந்த பூக்களுடைய குளிர்ந்த தடாகத்தே நின்ற தாமரையின் புதிதாக முறுக்கவிழ்ந்த தாது சூழ்ந்த தனி மலர்ப் புறத்தே சுற்றித் திரியும். அத்தோற்றம். காதலைத் தருகின்ற கலியாண நாளில் ஆடையுள் ஒடுங்கியிருக்கும் அழகிய மானின் நோக்கம் போன்ற பார்வையுடைய மணப்பெண்ணுக்குத் துணையாக, வேதமுணர்ந்த பார்ப்பான் எரியை வலஞ் செய்வதுபோல் இருக்கும். தெளிந்த ஓசை செய்யும் உள்ளிடு மணியுடைய சிலம்பு ஒலிக்கத் தெருவின் கண் வந்து தாக்கி ஒருத்தி உனது மனத்தைக் கவர்ந்து பின்பு கை விட்டாள். நீ அதனால் உண்டான வருத்தத்தைக் கூறி அவளை அழைத்துக் கொள்ள நின்றாய். அவ்வகையான நீ கருதி வந்த காரியம் வேறொன்றாக இவள் அறுதியுடைய எண்ணம் (உறுதியான எண்ணம்) உடையள் அல்லள் என்று கருதி இவ்விடத்தே வந்து பயனில்லாத சொற்களைச் சொல்வாயோ? நீ சென்ற விடம் அறியாது, பாகனைத் தேரோடு விட்ட பரத்தை யின் வரவை ஏற்றுக்கொள்ள நின்றாய். இவ்வியல்புடைய நீ நெஞ்சிடத்து எண்ணி வந்தது இன்னொன்றாக இவள் நிறையிலள் என்று கருதி நின் பொய்யாகிய வலிமையால் என்னை அலைப்பாயோ? பூங்கொத்து நெருங்கின குளிர்ந்த சோலையிலே நீ செய்த குறியிடத்து வந்த வளைப்புணர்ச்சியிடத்தே கொண்டாடிக் கூடப் புனலாடும்படி செய்தாய். நின் நெஞ்சிடத்தே வேறொன்று கிடக்க இவள் தனக்கென ஒரு நெஞ் சிலள் என்று, செருக்கினால் இங்கு வந்து வார்த்தைகளைக் கூறுவையோ? பெரும! நின் அருளால் நாம் மனஞ் செருக்க மாட்டேம். எம்மை விரும்பிப் பணிந்தாய் போல வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாது, நீ விரும்பியவற்றைச் செய்து முடித்து அவ்விருப்பம் ஒழிந்தபின் எம்மை நினைப்பாய் ( என்று கூறி ஊடல் தீர்ந்தாள்) 5 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியை, வாயில் வேண்டி னான். அவள் வாயில் விடும் நிமித்தமாக நெருங்கிக் கூறுகின்றாள்: பலமணிகள் போன்ற நிறப்பூக்களுடைய தடாகத்தே அன்னம் மகிழ்ச்சியோடு நீந்தும். அதன் சேவலை, அகன்ற தாமரை இலை மறைத் தலும் அதனைச் சடுதியிற் காணப்பெறாத அன்னப் பேடு கலக்கமடை யும். அது நிலா வெளிச்சத்தில் தனது நிழலை நீரிடத்தே கண்டு, அதனைத் தனது சேவல் என்று எண்ணிச் சேர ஓடும். அப்போது எதிரே வரும் சேவலைக் கண்டு நாணிப் பலமலர்களிடையே புகுந்து மறையும். இவ் வகையான வயல் சூழ்ந்த ஊரனே! யாம் துயரினால் அழகு கெடும்படி எம்மை அருளாது நீங்கினாய். அதனாற் பல நாள்கள் கண்கள் உறங்காவாயின. ஒரு நாட் படுத்த விடத்து அக்கண்கள் உறங்கவும் பெறும். இரட்டையாக மலர்களை வைத்து முடிந்த மாலையணிந்த பரத்தையர் தினமும் நின்னைப் பாராட்டும் (உன்) மணவினை யிடத்து ஒலிக்கின்ற மணமுழவின் ஓசை வந்து அத்துயிலை எழுப்பும். நீ எம்மைத் துறந்து அகலச் செல்லுதலால் இடையறாது அழுது ஆறாத மையுண்ட எமது கண்கள், எமது உடம்பு புதல்வனைத் தீண்டுத லால் உறங்குதலும் கூடும். பரத்தையர்க்கென்று கட்டிய உனக்கேற்ற உயர்ந்த மனை யிடத்தே கொண்டு வரப்பட்ட நின் சுற்றமாகிய அப்பரத்தையர் பாடும் துணங்கைக் கூத்தின் ஆரவாரம் அவ்வுறக்கத்தை எழுப்பும். நீ வராது எம்மைத் துறத்தலினாலே கண்ணீர் மாறாத கண்கள் உறங்க வும் பெறும். அழகிய ஆபரண மணிந்த பரத்தையரை அவருக் கமைத்த வீட்டிற் கொண்டு வரும் நின் தேரிற் பூட்டிய உயர்ந்த நல்ல குதிரைகளிற் கட்டிய தெளிந்த ஓசையுடைய மணி ஓசை வந்து அத் துயிலை எழுப்பும். படை எடுத்து வரப்பட்ட மெலியவன் செவியிடத்துப் படை யெடுத்து வந்த வலியவனது பள்ளி எழுச்சி முரசு கேட்டது போல், மேற் கூறியவை எல்லாவற்றாலும் அரிதிற்றுயில் பெற்ற நின் பெண்டிரின் துயிலைப் பரத்தையர் இல்லில் வாசித்தயாழைப்பிடித்துப் பாணன் நம்மில்லிற் புகாதவிடத்து நீயே எழுப்புக. 6 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவுகண்டு காமக்கிழத்தி ஊடினாள். அதனைக் கண்டு அவளைச் சென்று சார்ந்த கணவனுடன் அவள் ஊடல் தீர்க்கின்றாள் கூறுகின்றாள்: மேலே விரியும் கதிருடைய ஞாயிறு அகன்ற ஆகாயத்தில் எழும். அப்போது பூக்கள் முறுக்கவிழ்ந்து விரியும். வரியுடைய வண்டுகள் சூழ்ந்திருந்து மலர்களின் அழகிய தேனை நுகரும். பின்னும் தேன் நுகர்தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியும். இவ்வாறு தடாகங்கள் வளம் மிகுந்திருக்கும். மனைவியின் ஊடல் மிகுதியாற் பெருகி வீழ்கின்ற கண்ணீரைக் காமத்தீ சுவறச் செய்யும். அவ்வருத்தத்தைக் கண்டு இனிதாக அமர்ந்த கணவன் அவள் அடியைச் சேர்ந்து இறைஞ்சி மிக விரைந்து அருள் செய்வான். அதனால் அவள் சிறிது மகிழ்வாள். பசிய தாமரைக் குள்ளே நின்ற (தாமரையின்) தனிமலர் தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு பக்கத்தில் வடிய, அவளது முகம் போலச் சிறிது மலரும். இவ்வாறு குளிர்மையுடைய நல்ல துறையுடைய ஊரனே! “அவனுக்குப் பிற பெண்டிர் இல்லை. அதனை ஆராய்ந்து பார்” என்று கூறித் தனக்குத் தெய்வமாகிய தேரைத் தொட்டுச் சத்தியஞ் செய்த பாகன் வாரானோ? அவன் ஏற்றிக்கொண்டு வரும் பரத்தையர் எல்லாம் தங்குவதற்குக் கட்டிய வீட்டிலே விடப்பட்ட பரத்தையர் புலவியாற் செய்த புண் மறைக்கப்படாமற் கிடக்கும் வடுவால் நின் பரத்தைமை ஒழுக்கத்தைக் காண்பதற்கு. “அவன் தானே (பரத்தையரிடம்) சென்றால் யான் உனக்கு மறை யேன் என்று யாழைத் தொட்டும் வேறு பலவற்றின் மீதும் சத்தியங் களைச் செய்த பாணன் வரமாட்டானோ? அவன் மறைத்துப் பொய் கூறிய பரத்தையர்களை அடைந்து கூடின நின் கழுத்தில் எடுக்கலாம் போலும் காணப்படும் வளைகள் அழுத்திய தழும்பைக் காண்பதற்கு. பிரிந்தாய் என்று பிறர் சொல்லக் கேட்டு உன் தவறான குணங் களை நாம் அறியாதபடி எமக்கு உன் நற்குணங்களைப் பாராட்டிக் கூறிய தோழன் வரமாட்டானோ? திரண்ட காதணி யணிந்த பரத்தையரின் கருமணல் போன்ற கூந்தலாகிய அணையிடத்தே துயின்றதனால் தெய்வமணம் போற் கமழும் நின் பரந்த மார்பைக் காண்பதற்கு. இங்ஙனம் நின் அன்பு நீங்காத முயக்கத்தை என்றும் பெறுகின்ற பரத்தையரை வெறுப்பார் யார்? வருடத்தில் ஒரு முறை வரும் உமது வரவு எமக்கு மழைக்கு அவாவுற்று நிற்கும், கதிர் உலரும் நெல்லிற்கு அப்பருவத்து நிறையப் பெய்யாது சிறிது துவலையாகப் பெய்த மழைபோல வருத்தத்தைத் தரும். ஆதலால் நீ வருநாட்போல யாம் ஆற்றியிருப்பேம். அவர்கள் வருந்தாமல் நீ அவர்கள் மனைக்கட் செல்வாயாக. 7 இதுவும் அது. ஒன்றோடு ஒன்று இணையும்படி (ஐவகைப்பஞ்சு அணையும்) ஒரு சேர உயர்ந்த மிருதுவான படுக்கையிடத்து, துணையோடு கூடிய அன்னத் தின் மெல்லிய தூவி பரப்பப்பட்டிருக்கும். அம்மெத்தையிற் சாய்ந்திருப் பவள் வெள்ளிக்கிண்ணத்தில் வார்த்த பாலைச் சிறிது காட்டி உண்ணாது வெறுத்திருந்த கிளியை உண்ணப்பண்ணி அதனை முத்தங் கொள்வள். புது நீரிடத்தே நின்ற புதர்கள் மீது இடைவிடாது வருகின்ற திரைகள் மோதுகை யால் துவலைமிகா நிற்க, இடைநின்ற கமழ்கின்ற தாமரை (தனக்குரிய வண்டு நுகரமலராமல்) நின்று, கரை யிடத்து நின்ற மாவின் பிஞ்சு, மதியை நோக்கி மலர்ந்த ஆம்பலின் வெள்ளிய மலரை முதற்றீண்டிப் பின்னர்த் தன்னைத் தீண்ட மலரும். இத்தோற்றம் அப்பெண், பாலை உண்ணாது வெறுத்திருந்த கிளியை உண்ணச் செய்து அதனை முத்தங் கொள்வதை ஒக்கும். இவ்வகையான வயல்களால் அழகு பெற்ற ஊரனே! “நம்மைப் பேணுகின்றிலன்” என்று கோபித்துப் பரத்தையர் தம்மைப் பேணுதற்காக நகத்தால் வடுச் செய்தனர். அவர் இவ்வாறு செய்தபின் நின் தோளைச் சேர்ந்த பரத்தையரின் எயிறு நின் இதழ்களில் அழுந்தின. அக் கூட்டத்திற் பிறந்த இன்பத்தைக் கருதி நீ அப்பரத்தை யரை நெருங்குந் தோறும் யாழ் ஒலித்துப் பண்ணினால் களிப்பிக்கும் பாணன் (அவ்வடுக்களை) எங்களுக்குக் காட்டு என்றானோ? உன்னைக் கூடின பரத்தையர் புனல் ஆடுதற்குத் தெப்பமாகிய நின் மார்பிடத்தே, பரத்தையர், ஊடுகையினால் சாதிலிங்கத்தால் எறிந்தனர். நினக்குக் கூடுதற்கேற்ற பரத்தையைத் தேடித் திரிந்து துறையிற் செல்லாளாய் ஊரிலுள்ள ஆடைகளை இடுவித்துக்கொண்டு ஒலியாமல் (வெளாமல்) திரியும் உன்னுடைய புலத்தி (வண்ணாத்தி) அச்சாதிலிங்கச் சிவப்பினை எனக்குக் காட்டென்றாளோ? புலத்தி = புலைத்தி = ஆடை ஒலிப்பவள். உன் கூட்டத்தினாற் களித்தவர்களது மாலையிடத்து முயக்கத்தி னால் நின் அழகு மேம்பட்டது. அதன் மேல் குறியிடத்தே இடம் பெற்றவர்களுடைய கற்றையாகிய கூந்தலை வகிர்ந்து வகை செய்து முடித்தலினால் பூந்துகள்களை நின்னிடத்திற் பெற்றாய். யாது பயனு மின்றி நின் புகழைக் கேட்க வேண்டாத எங்கள் இல்லிலே ஒரு பயனு மின்றி நின் புகழைக் கூறிவரும் அந்தணன் அவளை எங்கட்குக் காட்டு என்று சொன்னானோ? முன்பு எம்மை நீ நெருங்கியிருத்தலினாலே யாமும் நின்னோடு செறிதல் உற்றேம்: இக்காலத்து நீ செய்யும் குறைகளை அறிந்து அதனால் அழிந்து கெடுகின்ற நெஞ்சையுடையேம். நீ செய்து கழித்த இக்குறை களைக் குறையென்று கருதாது நின்னைக் கண்டவிடத்து நெஞ்சழிந்து நின்னைப் பேணிக் கொள்ளுதலின் இக்காம நோயிற்றங்குதல் எமக்குத் தாழ்ந்த தொழிலோ? தாழ்ந்ததன்று. 8 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவiன்ப பார்த்து எமது பெண்களுக் குரையெனக் கூறுகின்றாள்: சிறு பற்றையோடு வந்து பதிந்து கிடந்த பகன்றையின் பூவைச் சேர்ந்து, அகன்ற துறை, அழகு பெறும்படி தாமரை முகை வளர்ந் திருக்கும். வெள்ளிய வள்ளத்தாலே குளிர்ந்த நறியகள்ளை உண்பவர் முகம்போல அம்முகைகள் வளம் பொருந்திய வயலை அழகு செய்யும். இவ்வாறு அழகிய ஊரை யுடையவனே! நீ நீங்குதலால் நின் பரத்தையரின் கை வளைகள் கழலும். முலைகளின் இடையே கிடந்த பூந்தாது உதிரும். அவர்கள் அப்பூவின் அழகை இழந்த கண்ணுடையராவர். அவர்கள் வந்து என்னிடம் நின் பரத்தைமையை உரையாதவிடத்து, நீ, நாம் வெறுக்கத் தக்க பரத்தை யரிடத்திற் செல்பவன் என்று உன்னை ஒரு காலத்தும் வெறுக்க மாட்டேம். அக்காலத்து, “ யான் தீதிலேன் என்று” தேற்றுதற்கு வருவாய். சுழலுகின்ற (மை) உண்ட கண்ணுடையாரின் அழகிய மாலைகள் முயக்கத்தால் குழைந்தன, அவ்வாறாதலின் நின் மார்பிடத்துச் சந்தனம் அழிந்து மறுப்பட்டிருக்கும். அச்சந்தனம் வந்து உன் பரத்தைமையை எனக்கு உரையாத விடத்தும், நெஞ்சைச் சுடப்பண்ணி நீ செய்யும் பரத்தைமையை யாம் வெறாதவிடத்தும், ‘யான் தீதுடையனல்லேன்’ என்று எங்கள் மனத்தே ஊடல் உணர்த்த வருவாய். நிரைத்த வளையணிந்த பரத்தையருடன் நீயாடும் துணங்கைக் கூத்தில் நீ சென்று முன்கை கோத்தாடுதலின், அவர்களின் காற்சிலம்பு கொளுவிக்கரையிடத்தே கிழிந்த நின் நீல ஆடை வந்து நின் பரத்தை மையை எனக்குக் கூறாதவிடத்தும், நீ என்ன குறைகளைச் செய்யினும் ‘இக் குறைகளைச் செய்தாய்’ என்று கூறுவார் இல்லாதவிடத்தும் பாதங்களின் முன் வணங்கி எம் ஊடல் தீர்க்க வருவாய். ஆற்றினின்று சென்று மிக வீழ்கின்ற நீரால் நிறையாத பெரிய கடல்போல உனது அடங்காத பரத்தைமை மேலிடும். தினமும் உன்னோடு புலக்கும் தகுதியுடைய பெண்டிரைத் தெளிவிப்பாய். நாம் உன் பொய்யை மெய்யாக நினைந்து நினக்குத் தோலாதிருப்பேமோ? தோற்போமோ? என்று எமது பெண்களுக்குக் கூறு என்றாள். 9 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு ஊடிய காமக் கிழத்தியை அவன், இவ்வகையன கூற நீ பித்தேறினாயோ என்றவிடத்து அவள் கூறுகின்றாள்: பொய்கையிடத்துப் பூவின் தேனையுண்ட வரியினையுடைய வண்டு கழியிடத்தே பூத்த நெய்தற் பூவின் தாதை விரும்பி நுகரும். நுகர்ந்து, வயலிடத்துப் பூத்த தாமரையில், கரிய இலையாகிய செப்பி னுள் செய்து வைத்தது போன்ற விளங்குகின்ற (தாமரைக்) காயில் மீண்டுவரும். இவ்வகை அழகினையும் மகளிர் கொய்யும் தளிர்க்கின்ற காஞ்சி மரத்தினையுமுடைய துறையுடைய நல்ல ஊரனே! அன்புடையனல்லனென்றும் அறனுடையனல்லனென்றும் சொல்லப்படானென்று நின்புகழ் பலவற்றைப் புகழ்ந்து காட்டும் பாணனும் பித்தேறி னான். நஞ்சு, உண்டவரின் உயிரைப் போக்குதலை அறிந்திருந்தும் அதனை உண்டாற்போல , நின் மனக்கருத்து அருளின்றி வருந்துதலைக் கண்டு பின்னும் நின் பொய் மொழியை மெய்மொழியாகத் தெளியும் பரத்தையரும் பித்தேறினர். விடியற் காலமெல்லாம் ஒருத்தியைக் கூடியிருந்து, உச்சிக் கால மெல்லாம் அவளைக் கைவிட்டுப் பலவிடத்தே சென்று அந்திக் காலத்திற் கூடுதற்கு வேறுசிலரை ஆராயும் நின் நெஞ்சும் பித்தேறிற்று. சதங்கைகளும் தண்டைகளும் சிறு மணிகள் கோத்த மாலை யோடு ஆரவாரிக்கும்படி, விளங்கும் வளையும் பெருத்து அமர்ந்த கண்ணும் உடைய பரத்தையர்க்கு அவர்கள் அகப்படுததற்குக் காரண மான வலை இது வென்று சொல்லி ஊரிலுள்ளார் சேர்ந்து நின்று சிரிக்கும்படி திரியும் தேர் நின்னிலும் பெரிதாகப் பித்தேறிற்று; யான் பித்தேறிலேன் (என்று கூறி ஊடினாள்) 10 தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வருதலால் யான் அதற்குப் பொறேன். அவ்வாறாக நீ அவன் வரும் பொழுதே எதிர் கொள்கின்றாய் என்ற தோழிக்குத் தலைவி காரணங் கூறுகின்றாள்: நீர் நிறைந்த வயலிடத்தே ஒத்த இதழுடைய நெய்தற் பூவோடு நீர் நிறைந்த இதழுடைய ஆம்பல் வளர்ந்திருக்கும். அப்பூக்களைப் பறிக்கச் சிவந்த சிலம்பு ஒலிக்க விளையாட்டு மகளிர் ஓடுவர். அவ்வார வாரத்துக்கு வெருண்டெழுந்த, ஆரல் மீன்களை உண்ணும் அழகிய சிறகுடைய பறவைக் கூட்டம் உயர்ந்த மரக்கொம்பிலே தங்கியிருக்கும். இருந்து போர் செய்யும் கண்ணுடைய மகளிரை வருத்தும் (காதல்) நோயை அம்மகளிரின் சுற்றத்தார்க்குக் கூறுவன போலப் பல முறை சத்தமிடும். இவற்றோடு உயர்ந்த நெற் போர்களிடத்து உண்டாகும் ஆரவாரமுமுடைய நல்ல ஊரை உடையவன், புதிய பரத்தையரை மணஞ் செய்ய எக்காலமும் விரும்புவன். அவ்வாறு விரும்புகின்றவனுக்கு அதற்கேற்ப நாள்களும் வதுவைக் கேற்றனவாயிருக்கும். தோழி! அவ்வொழுக்கத்துக்கு யான் வருந்துவேன். நீ “வருந்தாதிரு” எனச் சொல்லி என்னைப் பார்த்து வருந்துகின்றவளே! இனி அவன் சொன்னவற்றை நீ அறியும்படி கேட்பாயாக. “ வதுவையயர்ந்த பின் விளக்கத்தினையுடையையாய் வந்தாய். என்னை எத்தன்மையாகக் கருதினாய்” என்று யான் கூறுவேனாயின், பரந்த கழுத்தின் மயிரையும் மனச் செருக்கினையுமுடைய குதிரை பூண்ட தேரிலே ஆரவாரிப்பக் கொண்டு வந்த விருந்தினரை எதிர் கொள்ளுகை யினாலே எந்நாளும் புலவியை மறப்பேன். முயக்கத்தால் வாடிய பூவோடு என் மனைக்கு வாராதே யென்று யான் ஊடியிருப்பேனாயின், அவ்வூடல் நீடியாதபடி, அவன், செய்யும் பொய்ச் சத்தியத்துக்கு நாம் அஞ்சும் அச்சமே, தன் ஊடல் தீர்க்கும் வழியாக வருபவனின் பொய்ச் சத்தியத்துக் கஞ்சிப் புலவேனாவேன். பரத்தைமையுடையவனே! பகற் பொழுதெல்லாம் பரத்தையர் மனையிலே தங்கினாயென்று கூறி யான் அவனுடன் மாறுபட்டிருப்பே னாயின்; அவன் தன் தந்தையின் பெயரைப் பெற்ற புதல்வனைத் தழுவிப் பொய்யாகிய துயிலைக் கொள்வான். தோழி! பூப்போலும் கண்ணுடைய மகளிர் செய்யும், எனது அழகைக் கெடுக்கும் மாயத்தைச் செய்யும் மகிழ்நரது பரத்தைமையால் நோகுங்கடன் என்று நினைந்து வருந்தியிருப்பேன். ஆனால் விருந் தினரை எதிர் கொள்ளுதலாலும், பொய்ச் சத்தியத்தால் நமக்கு வருத்தம் வருமென அஞ்சுதலாலும், புதல்வனைத் தழுவிக் கொள்ளும் வருத்தத் தைக் காண்கையாலும் நெஞ்சு புலவியை முழுதும் தாங்க மாட்டாது. அதனால் புலவி கெட்டுப் போகா நிற்கும். இதுவே யான் கூறுகின்ற துன்பமாகும். 11 இது, கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற் கஞ்சிய அச்சம் நீடித்த தலைவி கூறியது (திணை மயங்குறுலும் கடிநிலையிலவே) என்னும் சூத்திர விதியால் மருதத்துக்குறிஞ்சி வந்தது. அணிந்திருக்கும் ஆபரணங்கள் ஒழுங்காகக் கிடக்கும்படி திருத்தி யும். நாம் புனலாட நமக்கு ஒரு தீங்கும் வராது நமது பக்கத்தே சூழ்ந்து திரிந்தும், அழகிய தொய்யில் எழுதியும், நம்முடைய சிற்றில்லிலே வந்து ஏவற் றொழிலைச் செய்தும் இத்தகுதிப்பாட்டை யுடையவன் கூட்டத்தை நினைந்து வருந்துவான். அவனிடத்துக் கூட்டம் உடையை என்று இவ்வூரிலுள்ளார் பலகாலுங் கூறுவர். அங்ஙனம் அவர்கள் கூறுதற்கு நீ கூட்டம் உடையையோ என்று கேட்கின்றாய். அவ்வாறாயின் விளங்குகின்ற ஆபரண மணிந்தவளே! இப்பொழுது யான் கூறுகின் றதைக் கேள். அலர் தூற்றும் பெண்டிர் அலர் தூற்றாத விடத்து வருத்தமுற் றிருப்பர். அவர்கள் இது தகாது என்று ஆராயாது ஐயுற்றுக் கூறிய சொல் இவளுக்குப் பொருந்தாதென்று அறிய மாட்டாதவளாய் நீயும் அவர்கள் சொன்ன நிலையிலேயே சொன்னாய். யான் கடல் நீர் வந்தேறின கழியிடத்துத் தண்டாங் கோரையை இழுத்துப் பிடுங்க முயன்றேன். அப்போது அவன் வந்து, “சிவந்த விரல்கள் இன்னும் சிவக்கும்படி நெடு நேரம் நின்று பிடுங்கினாய் என்று சொல்லித் தண்டாங்கோரையைப் பறித்துக் கிழித்துப் பாவையாக்கி தந்தான். அவன் செய்த சிறிய உபகாரத்துக்காகவோ நீ அவ்வாறு சொன்னாய்? தீயவரென்று எல்லாராலும் கைவிடப்பட்ட (அலர் தூற்றும்) பெண்டிர் அங்ஙனம் கூறுதல் தீதென்று உணரவல்ல புத்தியில்லாத வளாய், அவர்கள் பலமுறையும் கூறிய சொற்கள் பொய்யெனத் தள்ளின தும் இல்லையானாய் யான் தாமரை மலரைப் பறிக்கத் தடாகத்துள் செல்லக் கூசினே னாய் மீண்டேன். அவன் அதனைக் கண்டு மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்த சிறிய உபகாரத்துக்காகவோ நீ என்னைக் கோபிக்க வந்தாய்? காவல் புரிந்து காக்கின்ற நம் ஆயத்தார் காவல் பொய்யாகும்படி இவ்வூரார் பலகாற் கூறிய கூற்றை நீ பொய்யென்றுணராயாய், அது இவளுக்கரியதென்று மயங்கினாய். யான் ஒரு நாள் தோளிடத்தே தொய்யில் எழுதினேனாக அவன் வந்து நீ தொய்யில் எழுத அறியாய் என்று கூறி வளைந்த முன் கையைப் பிடித்து மூங்கில் போலும் தோளிலே கரும்பெழுதித் தொய்யிற் குழம்பால் மற்றும் எழுதுதற் குரியனவற்றை எழுதினான். நீ இவ்வாறு மயங்கிக் கூறியது அச்சிறு உபாகாரத்துக்கோ? ஆயிழாய்! இவ்வாறு யான் கூறி நின் நெஞ்சிடத்து நிகழ்ந்த இக்காரியத்தை இனித் தெளிவித்தலரிது. இனி நம்முடைய கலியாணத்து நஞ்சுற்றத்தார் ஒருமித்து விரும்பி அன்று செய்யும் காரியத்தை, இன்று இவ்விடத்து இவ்வூர் விரும்பியிருந்ததாயின், அதற்கு யாம் செய்யத் தகுதியுடைய காரியம் எக்காரியம்? 12 பரத்தையர் சேரியிற் சென்று திரும்பிய தலைவனோடு ஊடிய தலைவி ஊடல் தீர்க்குமிடத்துக் கூறுகின்றாள்: வயலிடத்தே, எல்லா வகையாலும் ஒத்த இரண்டு தாமரை மொட்டுகள் தமக்கிடையே வேறு பூக்கள் சேர்தல் இன்றி நின்று முறுக் கவிழ்ந்திருக்கும். தன்னால் விரும்பப்பட்டவனுக்கு அழகிய முகங் கவிழ்ந்து அழுகின்றவளுடைய செவ்வரியினையுஞ் செருக்கினையும் குளிர்ச்சியினையுமுடைய கண்ணின் நீர் அடிக்கொண்ட முலையின் மேல்விழும். அதுபோல அழகிய மலர்களுடைய வயலிடத்துள்ள பறவைகள் வந்து தாக்க மிகவுஞ் சாய்ந்து அணைந்த அம்முகைகளின் மேலே தம்முடைய உள்ளிதழில் நின்ற நீரைத் துளிக்கும். இவ்வகையான ஊரனே! கேள். உண்டென்று கூறுதல் இல்லாத என்னுயிர் (அந்நிலையினும் நில்லாமற்) சாதலை அறிந்தும் பிறர் கூறும் பழி நீங்க உனது பெண்டு என்னும் பெயர் பெறுவேனாயினேன். அதனால், குளிர்ந்த தளிரிடத்தே வீழ்ந்து அழகு பொலிவு பெற்ற தாதுபோலும் அழகிய மாமை நிறத்தை யும் சுணங்கையும் எம்மிடத்தினின்றும் வாங்கிக் கொண்டு நீ பின்பு ஒரு காலும் தாராதுவிட்ட அழகை யான் பெறுதலை விரும்பேன். பூவின் அழகு கெடும்படி கண்கள் பொன் போலப் பசந்தன; நின்னால் வருத்தமுற்ற பரத்தையர் நீ செய்யும் கொடுமைகளை என் னிடத்தில் வந்து சொல்லாமையை யான் பெறின் இயற்கை அழகிழந்து கண்துயில் பெறுதலை விரும்பேன். உனது பாணன் வருத்தம் தரும் பண் பாடி நீ சென்று சேர்ந்த பரத்தையர் மனையைக் கேட்டு என் மனையிடத்தே வருதலைப் பெறுவே னாயின். மாசறக் கழுவிய நீலமணியைப் பழிக்கும் கரிய கூந்தல் பூ வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுதலை யான் விரும்பேன். எனது நெஞ்சு, உன்னைக் காணின் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும் உன்னிடத்தே தங்கியிருக்கும். இந்நெஞ்சோடு வாழ்கின்ற உட்பகை யுடையார்க்கு, முன்னர் எம்மை நின்மேல் வீழ்வித்த மார்பைக் கூடக்கட வேமல்லே மென்று கருதும் நிறையென்னும் குணத்தைப் பெறுதல் எளிதோ? அஃது அரிதன்றோ? எனக்கூறி ஊடல் தீர்ந்தாள். 13 பரத்தையர் சேரியிற் சென்று வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாள் கூறுகின்றாள்: தன் துணையைச் சேர்ந்த கரியதும்பி மருதநிலத்தே கிடந்த பசிய இலையுடைய தாமரை மலரை ஊதும். நீர் உண்ணும் துறையிடத்து மலர்ந்த பூவைப் பெருகி வந்த நீர் சாய்க்கையினால் தும்பி அப்பூவில் இருத்தலை வெறுத்து அப்புனலுடனே ஊடும். ஊடி தாம் வாழும் நல்ல நாட்டின் மீது வந்த பகை தம்மிடத்து வந்த விடத்து அந்நாட்டை விட்டு நீங்கிப் போய்த், தன் நாட்டைக் காக்கின்றவனுடைய குடைநிழலின் கீழுள்ள ஊர்களில் தங்கும் குடிமக்களைப் போல வேறுமொரு பொய்கையைத் தமக்கிருப்பாக ஆராய்ந்திருக்கும். இருந்து சுழல்கின்ற காலத்து, அரசன் வந்தபகையின் வலியைக் கெடுத்துப் போக்க அக்குடி மக்கள் தம்பதியிடத்தே மீண்டுஞ் சென்றாற்போல, அப்பெரும்புனல் நீங்குகையினாலே அத்தும்பி மீண்டும் வந்து அத்தாமரைப் பூவிலே இருந்து பறவாது இளைப்பாறும். இவ்வாறு நல்ல புனலையுடைய நல்ல ஊரனே! நெருப்புப்போன்ற பூ இதழ்கள் சோர்ந்து உதிரும்படி பரத்தை யரைப் புல்லினமைக்குச் சாட்சி பகரும் கண்ணியை அணிந்தவனாய் இவ்விடத்தே எமது இல்லில் வந்தாய். இவ்வாறு நீ வருதல், “ யான் நீங்குமிடத்து இவள் அழகின்றிறங் கெட்டும் சேருமிடத்துப் பிறர் புகழுமாறு பொலிவு பெற்றும் யான் மணஞ் செய்யுங்காலை இவள் அழகு இருக்கும்” என நீ கொண்ட எண்ணத்தினாலோ? நாம் பிறர் கூறுகின்ற அலருக்கு நாணி மறைத்த காமநோய் எல்லை கடந்தது. நீ பரத்தையர் கூந்தலின் மணம் நாறுகின்ற மார்புடையவனாய் இவ்விடத்தே எமது இல்லில் வருகின்றாய். நீ வந்தது, “ இவள் அழகு, சூரியனைக் கண்டு மலர்ந்த தாமரைப்பூ அச்சூரியன் அடங்குமளவிற் குவிந்தாற்போல நின்று தொடர்ச்சி நீங்கி வறிதுபட்டிருக்கும்” என்னும் தண்மையுடையதோ? முடியில் அணிந்த மாலை போல யாம் வாட நின் பரத்தையரது வளையினால் உண்டான வடுவைக் காட்டி எம் இல்லில் வந்தாய். நீ வந்தது மழை பெய்யில் செருக்கியும் வறப்பில் காய்ந்தும் இருக்கும் நிலம்போல, யான் செல்லின் இவள் தழைத்தும் செல்லாவிடில் வருந்தியும் கெடுமென்னும் தன்மை நோக்கியோ? உமது பரத்தையால் பலரும் வியக்கத் தக்கனவெல்லாம் உமக்குப் பொருந்திற்று. உம்மை விரும்புவாரும், உம்மால் விரும்பப்படுவாரு மாகிய பரத்தையரும் உமக்கு வேறுபடும்படியாக ஈண்டு நில்லாது அவர் மனைக்கண்ணே செல்வீராக. பருவத்தால் மலராது கையினால் அலர்த்துதலின் முகை மலர்ந்தாற் போல இனிதல்லாத முயக்கத்தில் எமக்குக் குளிர்ந்த பனிக்காலம் அப்படிக் கொடிதாயிருக்க உம்மை யின்றித் தங்குதல் தகைமையில்லையோ? உண்டோ? (இவ்வாறு கூறி ஊடல் தீர்த்தாள்.) 14 தலைவன் பரத்தையரிடத்தினின்றும் வந்த விடத்து தலைவி அவனை ஊடல் உள்ளத்தாற் கூடப்பெறாது, ‘செல்’ எனக்கூறி விடுத்து ஆற்றுகின் றாள்: ஒலிக்கின்ற செந்நெல்லுடைய வயலிடத்தே புட்கள் ஒலிக்கும். நெல்லினிடையே பூத்த அரையிலே முள்ளுடைய தாமரை ஒன்றின் பெரிய இதழை அப்பூவிலே கிடந்து நெற்கதிர் காய்க்கும். தாமரை மலரோடு சேர்ந்த நெற்கதிர், அவையோராற் புகழப்படும் அரங்கின் மேல் ஆடும் மகளின் தலைக்கோலத்தினின்று நெற்றியிலே தூங்கும்படி ஒரு மாலைபோற் செருகி வைக்கப்பட்டிருக்கும் வயந்தகம் என்னும் அணி போலத் தோன்றும். இவ்வாறு அழகு பெறும் குளிர்ந்த துறையுடைய ஊரனே! பரத்தையர் அணிந்த அணியுடனே இவ்விடத்து வந்து எம் புதல் வனை எடாதிருப்பாயாக; அவனுடைய சிவந்த வாயின் படிகம் போன்ற நீர் நின்மார்பின் இடமெல்லாம் நனைக்கும்படியாக நின்றது. அஃது அங்ஙனம் நனைத்தால் யான் நின்மார்பின் முயங்கினாரை அறியும்படி சந்தனங்கமழும். பிறரின் முயக்கத்தைச் சந்தனத்தால் அறியும் பரத்தை அதனால் வருந்துவளல்லவோ? (சந்தனங்கமழின் நீ பிறரோடு முயங்கி னாய் என்று நினைந்து வருந்துவள் என்றவாறு) புதல்வனை நீ தழுவாதொழி; அவன் உன் மார்பிற் கிடக்கும் பல முத்து மாலைகளையும் பிடித்திழுத்து அறுப்பான்; அவன் அறுத்தால் மாட்சிமைப்பட்ட ஆபரணமும் மடப்பமுமுடைய மகளிர் நின் மார் பிடத்து முயங்கினார்களெனன்று கருதி நீ விரும்பிய பரத்தை புலப்பா ளல்லளோ? என் புதல்வனை நீ தேடி எடுத்துக்கொள்ளாமல் நிற்கவும் அவன் தானே வருகின்றான். அவனை எடாதிருப்பாயாக; எடுத்தால் அவன் உனது தலையில் வண்டுகள் ஒலிக்கின்ற கூறுபாடுடைய பூங்கொத்திற் பூக்களை வாங்கி அம்மாலையை அறுப்பான். அதனால் நின்னை முயங்கினவர்களை இக்கண்ணி அறிவிக்குமென்று கூறி, மணக்கின்ற நின் கண்ணியாலே பிறரை நீ முயங்கினாயென்று உன் பரத்தை கருதிக் கோபிப்பாளல்லளோ? பூப்போலும் கண்ணினையுடைய புதல்வனைப் பல பொய்களைச் சொல்லிப் பாராட்டி அவனை விட்டுப் போகாதவனாயும் பரத்தை யரைக் கைவிடாதவனாயும் பெரிய வாயிலிடத்தே நில்லாது செல்வா யாக அவன் உனது அலங்காரங்களைச் சிதைப்பான். புதல்வனை இங்கே தந்து பரத்தையரிடத்திற் செல்வாயாக. 15 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வேலிப்புறத்தே வருமிடத்துத் தலைவி மகனுக்குச் சொல்லுகின்றாள்; நின்னிடத்து அன்பு ஒழிந்த அவர் ஒழிந்து போகட்டும், உன்னைப் பெற்ற எம்முடைய கண்நிறையும்படி யான் அன்புமாறேனாயினேன். மேன்மையுடைய தலையிடத்தே கிடந்து மின்னும் மூன்று மாலையை உடைய மகனே! பவளத்தாற் செய்த வட்டப் பலகையின் விளிம்பில் ஒளியுடைய முத்து அழுத்தப்பட்டிருக்கும். அப்பலகையில் நிற்கும் கவளம் கொள்ளும் (விளையாட்டு) யானை நிற்கும். நீ அவ் யானையின் பாகனாக உனது கையினாலே முப்புரியாக முறுக்கின கயிற்றாற் கட்டி அதனை ஈர்ப்பாய். ஈர்த்து யான் காணும்படி காலிற் கட்டிய கெச்சை ஒலிக்கும்படி வருவாயாக. விளங்குகின்ற மணிகள் ஆரவாரிப்ப அசைந் தசைந்து நடக்கும் உன் தளர்ந்த நடையைக் கண்டு மகிழ்ந்திருத்தல் எமக்கு இனிது அஃதொழிந்து உன் தந்தை யிடத்து எங்கள் விருப்பம் என்று கூறி வளை நெகிழ்ந்து வருந்தியிருக்கும் பரத்தையரை யாம் காணும் காட்சி எமக்குத் துன்பத்தைத் தரும். ஐயனே! விரும்பத்தக்க அழகினையுடையையாய், அத்தா அத்தா என்று கூறும் நின் இனிய மொழியைக் கேட்டு மகிழ்தல் இனிது. ஆனால் உன் தந்தை, மகளிர் அழகு கெடுதற்கு அவர் நலத்தை உன் கையினாலே உய்வின்றிச் சாய்ந்து உற்ற வருத்தத்தைத் தரும் நோயைக் காணுமிடத்து அக்காட்சி இன்னாது. 16 தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தான். தலைவி தன் மகனைத் தழுவி விளையாடி நின்றாள். அப்பொழுது தனது வரவை அவள் அறியாதபடி தலைவன் சென்று நின்றான். அப்பொழுது அவள் ஊடல் தீர்க்கும் தலைவ னது சொற்களோடு மாறுபடக்கூறி மகன் வாயிலாக ஊடல் தீர்க்கின்றாள். சிறுவனது வாய் மாசற விளங்கும் மணி போல் அழகுடையது. நிரம்பாத மழலைச் சொற்களைக் கூறுதலின் வாயிடத்து நீர் ஊறும். மார்பிடத்துப பிரகாசிக்கின்ற ஆபரணங்களை அந்நீர் நனைக்கும். அவனது தலையிடத்தே பொன்னாற் செய்யப்பட்ட பிறை வைக்கப்பட் டிருக்கும். பிறையினுள் சேர்க்கப்பட்ட முத்து வடமும், நெற்றியிடத் துள்ள நீண்டதும் வேலைப்பாடுடையதுமாகிய (நெற்றிச்) சுட்டி விளக்கத்தோடு அசையும். நிறத்தை உடைய உடுத்துக் கழன்ற அழகிய துகில் உள்ளிடுமணி உடைய சதங்கை ஒலியாமல் அடியைத் தடுக்கும். இவ்வாறாகப், பாலாலே விம்மின முலையை மறந்து முற்றத்தே உருட்டி விளையாடுந் தேரைக் கையினால் இழுத்து நடத்தலைக் கற்று ஆலின் கீழமர்ந்த இறைவனுடைய அழகமைந்த முருகனைப்போல் வரும் என் உயிரே:! பெருந்தகாய்! பெருமானே! உன் மழலைச் சொல்லைக்கேட்டு அவ்வினிமை மாறாத மனமுடையேனாயினேன். விருந்தினர் வருதலின் கை ஒழிவில்லாத என்னையும் நினையாயாய் நீ பெரிய தெருவிடத்தே சென்றாய். அப்பொழுது தாய்மார் (பரத்தைமார்) நின்னைக் கொண் டாடிக் கற்பிக்கக் கற்பிக்க நீ அவர் பாற் கற்ற திருந்திய சொற்களை யான் அமிழ்தத்தை உண்டாற் போல இன்னும் இனிதாகக் கேட்கச் சிலவற்றைக் கூறுக. (புதல்வனை நோக்கிக் கூறியபின் தோழியை நோக்கிக் கூறுகின் றாள்.) விளங்குகின்ற ஆபரணமணிந்தவளே! நாம் பழகியுள்ள பாணன் வந்தானாக நீ இப்பொழுது எவ்விடத்தாய் என்று வினாவினேன். அவன் நமக்குச் சேயனாய் நின்று 1ஏனாதிப்பாடியிடத்தேம் என்று கூறினான். நம் புதல்வன் நம்முடைய நோயைத் தணித்தற்குக் காரணமாகிய மருந்தென்று கருதி நாம் பாராட்டா நின்றேம். அப்பொழுது அவன் அத்தா அத்தா என்று அடுத்தடுத்துக் கூறினான். அவ்வாறு அவன் கூறும் தவறுதலைப் பாராது, நமது மூங்கில் போன்ற தோள் மீது அவனைத் தூக்கி வைத்திருந்தேன். பின்னையும் அவன் அத்தா அத்தா என்று கூப்பிட்டான் இதற்குக் காரணமென்ன? அங்ஙனம் வினாவின தலைவி தோழி குறிப்பினாலும் புதல்வன் அத்தா அத்தா என்றதனாலும் தலைவன் வந்திருப்பதைக் கண்டாள். கண்டு பகைவரை நினைந்து அவரிடத்தே படைக்கலங்களை விடுத் தற்குக் கள்வர் வருவது போல இவ்விடத்தே தாம் எம்மை இகழ்வதற்கே வந்தார். நம்மேல் அன்பால் வந்தாரல்லரெனத் தலைவன் கேட்ப அவள் (தோழியை நோக்கிக்) கூறினாள். அது கேட்ட தலைவன் மதிலையுடைய ஊரில், காவலாளர் கள்வரைக் கண்ணாற் காணாதிருக்கவும் அவரால் வருங்குற்றத்தைக் கருதி இங்கே கள்வரைக் கண்டேமென்று கூறுவர். அதுபோல முன்னில் லாது ஒரு பக்கத்திற்போய் நின்று யான் செய்யாத குறைகளைக் கூறிச் சினவா தொழி. உன் ஆணை வழி ஒழுகுவதன்றி ஈண்டு நின் ஆணையைத் தப்புவார் யார்? அதுகேட்ட தலைவி, நடுக்கமில்லாத வஞ்சனையினால், என்னை வருத்தி என் புதல்வன் மீது ஆசையில்லையாயினாய், இவ்வாறு வந்த நீ, பரத்தையருடைய முதிர்ந்த முலைகள் நின் மார்பில் அழுந்துதலால் அவள் முடியினின்றும் வீழ்ந்த பூந்தாதுகள் பறக்கும்படி காற்றின் எதிரே நின்றாய். இங்ஙனம் நில்லாது போ. அது கேட்ட தலைவன், ஏடீ! யாம் தீங்குடையே மல்லேமென்று சத்தியஞ் செய்தேம். அச்சத்தியத்தையும் கடந்து எம்மிடத்து ஊடலை ஒழிக் கின்றாயில்லை. அப்படியானால், யான், கன்றைக் கட்டின இடத்தே அதனைத் தேடி விரும்பிச் செல்லும்பசுப்போல நம்மிடத்தே செல்லும் படி என் தந்தையின் பெயருடையவனை (புதல்வனை) எடுத்துக் கொள்வேன். 17 தேவாலயத்தை வலஞ்செய்துகொண்டு வருதற்குச் சேடியருடன் மகனைப் போகவிட்ட தலைவி, அவன் வரக்காலம் நீடித்ததாக, மறைவில் நிற்கும் தலைவன் கேட்கும்படி கூறுகின்றாள்: உலகம் வறட்சி நீங்கும்படி பெய்தற்குக், கூதிர் காலத்தே மேகம் கிழக்கே எழுந்து தோன்றும். அம்மேகம் போல எம்முடைய முலைகள் பாலால் விம்மும்படி நீ போன காலம் மிகவும் நீடித்தது. இவ்வாறு யான் கூறிவருந்தும்படி தேவர் கோயிலை வலம் வந்து, பின்னர் இவனோடே நீ (தோழி) சென்ற இடங்களெல்லாம் எமக்குச் சொல் என்றாள். அதுகேட்ட தோழி, யான் கூறுகின்றேன்; யான் கூறுவது பொருத்த முடையதாதலைக் கேட்டு நீ என்னைக் கோபியாதிருக்கும்படி வேண்டுகின்றேன். அதுகேட்ட தலைவி, யான் நின்னைக் கோபியேன். நீ கூறுகின்ற வற்றை யெல்லாங் கூறு என்றாள். அதுகேட்ட சேடி, மடப்பத்தையுடைய அறி வில்லாத மகளிர் பஞ்சாங்கோரைப் பாவையைக் கொண்டு விளையாடுவர். அக்காலத்தில் இவன் தந்தை அப்பரத்தையருள் ஒருத்தி யுடன் பரத்தைமை யுடையன். அத்தாயிடத்தே இவன் சென்றான். அவள் இடபம் பொறித்த ஆபரணத்தை இவன் கைக்கு அணியாக இட்டாள். பெரியோனே! நினது நகை தவழும் முகத்தை யான் முத்தங் கொடுத் தற்குக் காட்டென்று கூறினாள். இவ்வாறு கூறுகின்றவளுடைய சொரி கின்ற கண்ணீர் கனமுத்து வடங்களின் முத்துகள் கழன்று விழுவது போலிருந்தது. அதன்மேல் அவட்குப் பின் வந்தாளாகிய இன்னொருத்தி யிடத்திற் சென்றான். அவளும் மனம் மயங்குதற்குக் காரணமான காமநோயைப் பொறுத்துத் தன் மகனை எதிர் சென்று தழுவினாள். தழுவிக்கொண்டு முத்தங் கொடுத்தாள். இவனைப் பார்த்துத் தலைவன் தன்னைக் கைவிட்ட தன்மையை நினைந்து, நினக்கு யாங்கள் தாயாகின்ற முறைமை எம்மிடத்தில் நீங்கினது; ஆனமையில் இனி யாம் உனக்கு எம்முறையாவேம் என்று கூறினாள். இவன் அழகு பெறும்படியான பிள்ளைப் பணிகளை ஆராய்ந்து அணிந்தாள். அப்பொழுது “மகளிரின், செவ்வரி பரந்த செருக்கினையுடைய கரிய கண்கள் பசக்கும்படி அவர்க்கு நோயைக் கொடுக்கும் நின் தந்தையுடைய பரத்தைமைக் குணமொன்றையும் கொள்ளாதே” என்றாள். அங்ஙனம் கூறியவளுக்கு இனிதாயிருக்கும் சில மறுமொழிகளைக் கூறிப்போனான். பின்பு நம்மை ஒப்பாளாய்ச் சிறப்புப் பெற்று நம்மைக் கோபித்திருக்கும் புலக்கும் தலைமையுடையவள் இல்லிற் சென்றான் என்றாள். அது கேட்ட தலைவி, ஏடா! யான் வருந்தி நோய்மிகும்படி உன் தந்தையை, அவன் நினைத்த தொன்றைப் பருந்தெடுத்துச் சென்றதுபோல, நினைவு நீங்கும்படி பரத்தை கைக்கொள்வள். கொண்ட அப்பொழுதே வளையும் நகமும் அவை போல்வன பிறவும் படைக்கலமாகக்கொண்டு நகத்தாலே உன் தந்தையின் புதுமையுடைய மார்பிடத்தும் ஒழிந்த சிறிய இடங்களிலும் தான் நினைந்தபடி அஞ்சாது வடுக்களைச் செய்வாள். ஆதலால் அவள் உனக்கு என்ன உறவுடையள்? இவனை அடித்தற்கு ஒரு கோல் தருவாயாக என்றாள். அதற்கு அஞ்சிப் புதல்வன் அழுதான். அது கண்டு இனி அழுகையை விடு வாயாக என்று கூறினாள். கூறி உன் தந்தையின் காதற் பரத்தையிடத்து நீ சேராதே. இனி அவர்களின் வீட்டைநீங்கி, அவன் நீங்குவானோ நீங்கானோ என ஆராய்ந்து அவன் நீங்கான் என உறுதி கொண்டிருக்கும் வீட்டிற் செல்லாது எம்போலக் கையாறுடைய வர் வீட்டில் செல். நீ இனி வெளியே செல்லும் தொழில்தான் முடிந்தது என்றாள். 18 விளையாட்டிக்கொண்டு வரும்படி சேடியரோடு மகனைப் போக்கிய தலைவி, அவன் நீடித்து வந்த விடத்துப், பரத்தையிற் பிரிந்த தலைவன் மறைவிடத்தே வந்தானாக அவன் கேட்கும்படி கூறுகின்றாள்; பெரிய செல்வம் நிலை பெற்றதும் மிகுந்த சோற்றையுடையது மாகிய அகன்ற மனையிடத்து, இரண்டு சிறகாகப் பொருந்துகின்ற கதவைப் பிடித்துப்பிள்ளையைக் கைவிட்டுத் தனியே நின்று வருந்து கின்றேம். பிள்ளைகள் கூடி விளையாடும் மணலிடப்பட்ட அகன்ற தெருவில் பிள்ளைகளோடு விளையாடுவித்துக் கொண்டு வருவதற் கென்று நீ போனாய். இனிய பாலை யான் பிள்ளைக்கு ஊட்டாது, அது பெருகும்படி சுரக்கும் அவ்வளவு நேரம் பிள்ளை உண்ணாதிருத்தற்கு, நின் மனத்தில் வருத்தமில்லாது தாமதித்த காரணம் யாது? அதனைக் கூறு. தோழி: அதனைக் கேட்பாயாக: பெரிய கங்குடைய பனையின், குடம் போற்றிரண்டதும் அழுத்தமில்லாத முகிழையுடையதுமாகிய பசிய குரும்பையைக் கொடியிற் கட்டிப் பின்னிய பின்னலைச் சிறிய பிள்ளைகள் இழுப்பார்கள். அப்பிள்ளைகளுக்கு நடுவே பெரிய மணி பதித்த தேரிலிருந்து இவன் எமது பெரிய மனைக்கு மீண்டு கொண் டிருந்தான். அப்போது முறுக்கவிழ்ந்த நீலமலர்கள் காற்றுக்கு அசைவன போன்ற கண்களையுடைய பரத்தையர் சாளரங்களில் ஒதுங்கி நின்று பார்த்தனர். அவர்கள் ஆலில் கீழ் இருக்கும் இறைவனுடைய மகனாகிய முருகக் கடவுளின் திருநாளுக்கு ஆரம்பமாகும் நாளென்று கருதி வாயிலிலே வந்து நின்று பார்த்தனர். இவனாதலை அறிந்து அவளுள் ஒருத்தி அழகிய பாதத்தில் சிலம்பு ஒலிக்கும்படி அணுகினாள். அவள், “கண்ணாலும் நெற்றியாலும் கூந்தலாலும் உன்னைத் தழுவிய தாயர்க்குக் கையினால் மகிழ்ச்சியைக் கொடுப்பாய்! நின் தந்தைக்கு நீ தண்ணெனச் செய்யும் சிறப்புப் போல் எமக்குஞ் சிறப்புக்கள் செய்து இவ் விராக் காலத்தே எம்மோடு தங்கிப் போகவேண்டும். அவ்வாறு தங்குதலால், எங்கள் அழகின் புதுமையை நுகர்ந்து பின்னர் எம்மை நினையாத நாணில்லாதவன் தந்த தனிமையெல்லாம் மிகவும் போக்குவேம்” என்று கூறினாள். இவனிடத்தில் விருப்பத்தால் அளவிட முடியாத வேற்றுத் தாயர் எதிர்கொள்ள, அதனை மாற்றாத இக்கள்வனாலே அவ் விடத்திற் றாமதித்தல்லாமல் யான் வேறொர் தீமையும் உடையேனல்லேன். ஒள்ளிய ஆபரண மணிந்தவளே! என்னைக் கோபியாதே. அதுகேட்ட தாய் புதல்வனை நோக்கி ஏடா! மெத்தென்ற தோளு டைய உன் தாய்மார் சூடின கண்ணியோட எம்முடைய இல்லிலே வருவையோ வாராயோ?என வெறுத்துக் கூறினாள். அப்பொழுது தலைவன் வந்தான். அது கண்டு, “முன்னேயிருந்து மகன் நமக்குச் செய்த நோய்க்கு மேலே, எம்மை மனத்தால் இகழ்ந்திருத்தலால், தமது மெய் யிடத்துக் கிடந்த , அழகிய இனிய சொல்லையுடைய நல்ல மகளிர் அணிந்த ஆபரணங்களின் வடுவைக் காட்டி, ஏனைவடுக்களோடு தந்தை யும் வந்து நிற்றல்,வெந்ததொரு புண்ணிலே வேலால் எறிந்த தன்மைத்தாயிருந்தது. 19 தலைவி கடவுள் ஆலயம்தோறும் வலஞ்செய்வித்துவரற்குச் சேடியரோடு மகனைப் போக்கினாள். அவன் நீடித்து வந்தவிடத்துத் தந்தையின் தொடியை மகன் கைக் கண்டு அவள் புலந்து கூறுகின்றாள்: ஏடா! நீ எமது வீட்டின் நல்ல வாயிலினின்றும் சென்றாய். பல தேவாலயங்களை வலஞ் செய்வித்து வாவென்று யான் கூறினேன். நீ சென்று அக்கூற்றினைத் தப்பினாய். மாவின் உயர்ந்த கொம்புகளினின்ற, மிக்க காற்று அசைக்கும் நறிய பிஞ்சுகள் காம்பு முறிந்து பால் ஒழுகும். அத்தன்மைபோல எனது முலைகளினின்று பால் மிகக் குதிக்கையி னாலே அதனை மறைத்து யான் உள்ளங்கையால் அமுக்கித் தேய்த்தேன். முலைகள் அக்கையின் அளவில் நில்லாதனவாய் விம்மிப் பால் சுரந்தன. பிள்ளை உண்ணாது பால் அவமே போம்படி, அருளில்லாத இவன் தந்தையுடைய பரத்தையருள் யாருடை இல்லிற்றங்கினாய் சொல். நீரிடத்தே இலையின் கீழே மறைந்து நின்ற அழகிய இதழை யுடைய தாமரைப்பூப்போல எடுத்த பச்சைக் குடையின் நிழலிலே நின்பிள்ளை நின்றான். அவனைத் தாய்மார் கண்டனர். கண்டு, “யாம் நோம்படி மனத்தைக் கைக்கொண்டு பின்னர்எம்மை நினையாதவன் பெற்ற மகன் இவன் ” என்று கருதி அகன்ற மனையின் வாயிலின் எல்லை யைக் கைவிட்டுப் புறப்பட்டுத் தெருவிலே வந்து தடுத்தனர்; தடுப்ப அவரிடத்தே தங்கினேன். பின்னை அவர்கள் தம்முடைய, அணிகளில் இவன் வடிவுக்கு ஒத்தவற்றை ஆராய்ந்து கைக்கணி என்று அணிந்தனர் (என்றாள் சேடி.) அதுகேட்ட தலைவி, தனக்கு அயலாயிருக்கின்ற தந்தையுடைய பரத்தையர் கொடுத்தவற்றை இவன் வாங்குவானாம். இவன் இனிக் கைவிடப்படுவன். இவன் மிகவும் நம்மாற் கோபிக்கத் தக்கான் என நெஞ்சொடு கூறினாள். காவலின்றி வேண்டியபடி நடப்பவனே! நீ எம்மை இகழ்ந்து இட்ட பரத்தையர் கையின் மோதிரங்களெவை? யான் அவற்றைக் காண்பேன். அம்மோதிரங்களுள், நறவம் பூவைக் கண்டாற் போற் சிவந்த விரலுக்கு ஏற்ப, ஆண் சுறாவைப் பொறித்த மோதிரத்தை இட்டவ ளுடைய மனக்கருத்தை அறிந்தேன்; காமன் கொடியாகிய மகரத்தை மோதிரத்தே குழித்தாற்போல வேறொன்றிலே அழுத்தி அதனை எந்நாளும் அடங்காத பரத்தைமைக் குணமுடைய இவன் தந்தை மார்பிலே பொறியாக ஒற்றி அடிமை கொண்டாளுவேன் என்று சொல்லுகின்ற வார்த்தையை எனக்கு அறிவித்ததற்குச்செய்ததொரு தொழிலாகும். புதல்வனாகிய நீயும் என்னை இகழுந் தன்மையையோ? இவ் விகழ்ச்சியும் நாமே செய்துகொண்டதொன்று. முன் நடந்தனவற்றைக் கண்டு தலைஎடுக்கமாட்டாது என்முன்னே, வெந்த புண்ணிலே வேலெறிந்தாற் போல் இன்னொன்றிருக்கின்றது. இவன் தந்தையின் முன்கை வளையை இவன் கையிடத்தே இட்டவர் யார் கூறு. அவன் கூறாமையின், அவள் “ ஏடா என்னை அல்லாத பிறரும் இத்தலைவன் அழகைக் காண்பார்களாக என்று கூறும் தனது அழகை மிகவும் புகழ்கின்ற அவள் உன்னை இதை அணிந்து கொள் என்று சொன்னவளாவள். அவள் யார்? அஞ்சாதே, நீயும் தவறுடையையல்லை. இதனை உனக்குத் தந்த பூவின் அழகும் மையுண்ட கண்ணுமுடையவளும் தவறில்லாதவளாவள். வேனிற் காலத்துப் பலரும் ஆடும்புனல் போன்ற உன் தந்தையை ஈண்டு நோவாரில்லை. தனது அழகைப் புகழ்ந்து எனது அழகை இகழ்ந்து இதனை உன் கையில் தந்தவள் யாரோ என்று வினாவிய வருத்தமுடைய யானே தவறுடையேன். 20 தலைவி, மகனைப் பாராட்டி பால் ஊட்டுகின்றபோது அதனை மறைவிடத்தினின்றும் கண்டு புகுந்த தலைவனை அவள் தன்னுள்ளே புலந்து பின்னும் பாராட்டுகின்றாள். செல்வமே! உன்காலிற் கிடப்பவை, இரண்டாக அமைந்தனவும் பொன்னாற் செய்யப்பட்டனவும் பொன்பொடி மூடுதலால் நிறம் பெற்றனவுமாகிய சதங்கைகள் அரையில் அணியப்பட்டன. கைத்தொழி லால் அழகு பெற்ற மணிகளை இடையிடையே அமைத்த பொன் மணிகளையுடைய வடம்; அதன் மேலே அழுக்கில்லாத சிவந்த பவள வடம். அவற்றின் மேலே உடுத்தப்பட்டது ஐதாய்க் கழல்கின்ற திரைத்த ஒரு பூத்தொழிலுடைய பட்டாடை கையிடத்தே அணியப்பட்டன நண்டின் கண்போன்ற நெருங்கிய அரும்புத் தொழிலாற் சூழப்பட்டனவும். வேலைப்பாடு விளங்குகின்றன வுமாகிய இரண்டாகச் சேரும் காப்புகள். மார்பிடத்தே பூணப்பட்டவை வெட்டாத வாளும் வெட்டாத மழுவும் நெருங்கக் கட்டி இரண்டு புறத்தும் மழை பெய்த புலத்துத் தம்பலப்பூச்சி யினது நிறமுடைய பவளத்தினாற் செய்த அழுக்கற்று விளங்கும் இடபம் உடைய விளங்குகின்ற பூண்கள். முடியிலே சூடப்பட்டன, கரிய கடலிற் குளிக்கப்படும் முத்தோடு பல மணிகளைச் சேர்த்துக்கோத்த திரண்ட மூன்று மாலைகள், அவை மீது அணியப்பட்டது நூலாற் கட்டியதும் வண்டுகள் ஒலிக்கும் கண்ணிக்குப் பொருத்தமாகும்படி நடுவே கிடக்க, அரும்புகள் அலர்ந்த நீலமலர்களின் இதழ் நாணும்படி நீலமணியாற் பண்ணினதும் வண்டுகள் ஒலியாததுமாகிய மாலை. (நீல மணிமாலை) இவையும் பிறவும் நின் அழகுக்கு மேல் அழகாகக் கிடக்கும். நீ உருட்டுகின்ற வலிய தேரின் வளைந்த தாமரை முகையினைக் கையாலே பிடித்து மெல்லிய விரலுடைய நின் அடிகள் நோவ மெத்தென மெத் தென அசைந்து இவ்விடத்து நினக்கு வைத்த பாலையுண்டற்கு என் கையிடத்தே வருவாய். பொய்யை மறைத்துப், பாண்தொழில் வல்லபாணனைத் தூண்டி லாக விட்டுப் பரத்தையருடைய நெஞ்சைத் தன் வயமாக்குதலைத் தொழிலாகக் கொண்டு திரியும் உன் தந்தைக்கு வைத்த பாலின் பகுதியை உண்பாய். உன் தந்தையின் வாயிடத்தினின்றும் வந்த பொய்ச் சத்தியத்தை மெய்யாகத் தெளிந்து பூவின் அழகுடைய கண்களில் நீர் பரக்கும்படி மயங்குகின்ற நோய் கை கடத்தலால் கண்கள் துயிலாத உன் தாய் வைத்த பாலை உண்பாய். வாராத தலைவன் வந்தானென்று யாம் பாராட்டும்படி யாம் எனது மகனைப் பாராட்டா நிற்கப், பாணன் முதலியோருடன் விரைவில் வந்தார். அம்மையோ! அவரை இவ்விடத்து வருக என்று கூறினார் யார்தான். (அன்னையோ -வியப்பு)எம் குடியிடத்தல்லாத பாராட்டைக் கேட்டு மகிழ்ந்தோனே இதனைப் பருகுவாயாக. கோபித்தாரை மகிழ்ச்சியாகிய கூத்தாட்டுவிக்கும் உன்னை, யான் பாராட்டும் பெரிய பாட்டுக்களோடே நின் தாய்மார் தரும் பாலைப் பருகுவாய். இப்பாலை யான் ஊட்டுவேன். 21 தலைவி, மகனைத் தந்தையின் குணம் ஒத்தவனாகவும் ஒவ்வாதவனாகவும் கூறினாள். அப்பொழுது மறைந்து வந்த தலைவன் ஊடல் தீர்வன சொல்லி மகன் வாயிலாக ஊடல் தீர்த்தலும் அவள் தன்னுள்ளே கூறுகின்றாள்; கரிய தலையுடைய யானைக் கன்றின் நெற்றிப்பட்டம் போலக் கையினாற் புனையப்பட்ட மூன்று முத்து வடம் மென்மையுடைய தலை யிடத்தே தூங்கும். பொன்னாற் செய்த மழுவோடு வாளையும், அணியப் பட்ட விளங்குகின்ற ஆபரணங்களையும் வாயின் நீர் நனைக்கும். யான் அதன் அழகைப் பார்த்து அனுபவிப்பேன். அழகிய பவளப் பலகை மேல் சிவந்த பாதி வடிவு வேறோர் யானையை மடியும்படி குத்துகின்ற கோலமாகச் செய்யப்பட்ட (காவலையுடைய மதிலைப் பாயாத) உனது யானையோடு, நின் பாதத்தி லணிந்த தேரையின் வாயுடைய சதங்கை ஒலிக்க, வளையணிந்த மகளிர் செய்த மணலில் உழக்கி நடக்கும் போர்த் தொழிலுடைய யானை இவ்விடத்தே வருக. பெருமா! நீ உன் தந்தையின் அழகெல்லாம் ஒத்திருக்கின்றாய். உன் தந்தை நிற்கின்ற நிலைகளின் உனக்கொத்த குறிக்கப்படுகின்ற குணங்களை யான் கூறக் கேட்பாய். “யாம் அவனோடு ஒரு மனமாயினேம். என்றுணர்ந்திருந்த மகளிரை உன் தந்தை, மெல்லிய தோள் மெலிய விடுமாறு போல நீயும் அவர் மெல்லிய தோள்கள் மெலியும்படி விடுதலாகிய பரத்தைமையை ஒவ்வாதே. பெரும! நுகத்திற் பகலாணிபோல முறைமை செய்தற்குச் சாயாத கோல் போலிருத்தலின் நீ அவனை ஒப்பாய் அவன் நம்மைத் தப்பா னென்று ஆராய்ந்து மகளிரைக் காற்று மோதுகின்ற பூப்போல அழகு கெடும்படி உன் தந்தை சாய விடுதலாகிய பரத்தைமையை ஒவ்வாதே. பெரும! கெடுதலறியாத நல்ல பொருளை விரும்பினவர்களுக்குக் கொடுக்குந் தன்மையில் அவனை ஒப்பாய். காதலையும் மெல்லிய நோக்கினையுமுடைய மகளிரை உன் தந்தை மிக நொந்திருக்க விடுமாறு போல நீயும் அவர்களை நோய் மிக நிற்கப் பாராது விடுதலாகிய பரத்தை மையை ஒவ்வாதே. (தலைவி பின்னால் வந்து நின்ற தலைவனைக் கண்டு) “இந்த மகனல்லாதவன் பெற்ற மகன் நற்குணங்களல்லாதவற்றை நீ ஒவ்வாதே” என்றுயான் கோபிக்க நீ யாரை நோக்கிச் சிரிக்கின்றனை. (அவள் பின்னே நின்ற தலைவனைக் கண்டு) வராதவர் நம்பின்னே மறைய நின்று பின்னர் நாந்தெளியும்படி முன்னே வந்தார். அதுகேட்ட தலைவன், இங்ஙனங் கொடுமை கூறுகின்றாயாயின், அழகிய ஆபரணங் களையுடையாய்! உனக்கு வருத்தஞ் செய்யாத எனக்கும் ஒரு தப்புண்டோ? இவனை யாம் எடுத்தற்கு உன்னிடத்தே வைத்துக்கொள்ளாது என்னிடத்தே தருவாய். அது கேட்ட புதல்வன் அவன் மேலே வீழ்ந்தான். அவனைத் தலைவி நோக்கிக் கைவிடப்பட்டவனாகிய அன்பில்லாதவன் பெற்ற பிள்ளை அவன் மேலே விழுதலை யாம் மனம் வருந்தி விலக்கவும் கை கடந்து மலை யடிவாரத்தில் செல்கின்ற சிங்கம் பாய்ந்தாற்போல அறனில்லாத தந்தை யுடைய அகன்ற மார்பிலே பாய்ந்தான். 22 பரத்தையர் சேரியை அறியேன் என்று தலைவன் தலைவியிடம் சென்றான். அவனோடு இவள் ஊடி ஊடல் தீர்க்கின்றாள். தலைவி:- உன்னைக் காணும்போது அஞ்சுவேமாதலின் எம் கூந்தலைத் தீண்டாதொழி. தலைவன்:- தெரிந்த ஆபரணத்தையுடையாய். யான் பரத்தைய ரிடத்துப்பிரிந்து தவறு செய்திலேன். அவ்வாறாக நீ எங்ஙனம் சினப்பாய்? தலைவி:- ஏடா (இமை) கொட்டில் இதழ் மறைக்கின்ற கண் போலத் தெரியாமற் போவாய். ஆதலால் நீ எம்மைக் கைவிட்டாய். அத்தன்மையை அறிந்திருந்தும் அறியாதார் போல நின்னை நொந்து புலக்கின்றவர் தவறுடையர். உனக்கு ஒரு தவறுண்டோ? தலைவன்:- அணைபோன்ற தோளினையுடையாய் ! தீயவர்களை வருத்துமாறு வருத்தினாய். யான் அவ்வாறு வருத்துதற்கேற்ற தவறுடையே னல்லேன். தோழி:- மான்போலும் நோக்கினையுடையாய்! நீ அழும்படி நின்னைக் கைவிட்டவன் மிகவும் நாணமிலானாயின் அவனிடத்தில் ஊடியிருத்தல் என்ன பயனைத் தருமோ? தலைவி:- நெஞ்சே! கண்ணீர் மிகுந்து உறக்கமில்லாத கண்கள் உறங்கும்படி இனி யாம் மேலாகக் கூறும் கூற்றை உடையேமல்லேம்; என இவள் கூறும் தகுதிப்பாடுடைய வார்த்தையைச் சீர்தூக்கிப் பார்ப்பாய். (இவ்வாறு கூறி ஊடல் தீர்ந்தாள்.) 23 பரத்தையர் இல்லினின்று வந்த தலைவனுடன் தலைவி ஊடியும் மாறுபட்டும் சொல்லிப் (பொய்ச்) சத்தியத்திற்கு அஞ்சி ஊடல் தீர்க்கின் றாள். பரத்தையர் கொடியின் இயல்புடையர். அப்பரத்தையரின் புழுகு முதலியன பூசிய மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுகள் நின்தோட் கட்டிலேகிடக்கின்றன. இந்நிலைமையில் நீ என்னைத் தீண்டுதற்கு யார் ஆகுவை? என்னை விட்டு நீ நீங்குவாயாக. பிரிவாற்றாதவர், பிரியவல்ல பெரியோர்க்கு அடியரோ? தலைவன்: கடுமையுடையவராயிருக்கும் உமக்கு யார் மறுமொழி அளிக்கத்தக்கவர்? தலைவி:- நீ போகின்ற தொழிலை விட்டு வினைக்கெட்டு நின்று உண்மையல்லாத வெள்ளை வார்த்தைகளைக் கூறாது நின் பொய்யை மெய்யென்று மயங்குவாரிடத்திற் செல். தலைவன்:- ஆராய்ந்தெடுத்த ஆபரண முடையாய்! நின்னுடைய அருள் நோக்கினைப் பெறிலன்றி இனிய உயிர் வாழமாட்டாத என்னிடத்துத் தப்பு யாது? தலைவி:- நீ என்ன ஆச்சரியமுற்றுக் கூறினாய். புள்ளியுடைய நண்டுகளின் நடையாலுண்டான வடு நீரருகிற் கிடக்குமாறு போல, பெரிய நகங்களாற் பிளந்த வடுக்களும் ஒளியுடைய பற்களால் அழுத்தின வடுக்களும், பிரகாசிக்கின்ற இதழ்கள் வாடின உன் மாலையும் பரத்தையர் நின்னோடு ஊடி அடிக்கச் சிவந்த நின்னுடைய மார்பும் தப்பாதலுக்குப் பொருந்தாதோ? பொருந்தாதாயிற் கூறு. தலைவன்:- நீ கூறுகின்ற மெய் வேறுபாடு என்னிடத்திருப்பதைக் கவனியாதொழி. அவ்வாறிருத்தல் நினக்குத்தக்கது. அதற்குக் காரணம் என்ன எனில், அக்குற்றங்கள் என்னிடத்தில் இல்லாமையை யான் உனக்குத் தெளிவிக்க நீ காணாயாயின், இனித் தெளிவிப்பேன். தலைவி:- இக் கற்புக் காலத்து நீ சத்தியஞ் செய்வதைக் கொண்டு யாம் என் நெஞ்சைத் தெளிவியேம். அதற்குக் காரணங் கேள். நீ தேரேறி வருகின்ற சிறப்பில் மயங்கி நின் தீங்கைக் கருதாது பரத்தையர் வருவர். அவர்களின் பூமாலையை நின் மாலை யென்று அணிந்து வந்தாய். அத்தப்பிற்கு அஞ்சி யாம் ஊடியவிடத்து நீ செய்யும் பொய்ச் சத்தியம் எம்மை வருத்துமாயின் அவ்வருத்தம் எங்கள் மேலன்றி வேறு யார் மீது செல்லற்பாலது? (இவ்வாறு கூறி ஊடல் தீர்ந்தாள்) 24 தலைவன் வந்தவிடத்து அவனுடன் ஊடிச் சில சொல்லி, அவன் ஆற்றாமை கூறுவது கேட்டு ஊடல் தீர்க்கின்றாள்: தலைவி:- எமது கூந்தலைத் தொடுவதற்கு இவன் யார்? உனது செயல், நீ எம்மைப் பாதுகாவாது விட்டுப் பொருந்தின கொடுமை யுடையதாகும். வந்தவாறு மீண்டு செல்லுதி. தலைவன்:- உடலும் உயிரும் ஒன்றாய்த் தலையிரண்டாகிய புள்ளின் தலையில் ஒன்று மற்றத் தலையோடு போர் செய்த தன்மை போல நீ இக் கொடுமைகளைக் கூறிப் புலந்தாற் பயனென்ன? இனி எனது அரிய உயிர் நிற்கும் வகையை அறிந்து கூறு. ஏடா! பெரிய காட்டிடத்தில் எல்லாம் அறிந்திருக்கும் கொற்றவைக்கு, அவள் அறியாதன, உண் டென்று கருதிப் பேய் நொடி சொன்னாற் போல நின்பொய்களை எனக்குச் சொல்லி வருந்தாதே. யாம் முன்பே நின் வஞ்சனைகளைத் தெளிந்து விட்டேம். தலைவன்:- இனிய நகையினையுடையாய்! நீ கூறிய குற்றங்களோ யான் உடையேனல்லேன். அரசனாற் கோபிக்கப்படுவானிடத்தில் தவறுண்டோ. (தவறில்லையாயினும் கோபிப்பன் என்றவாறு) அங்ஙனம் நீ கூறுமிடத்து அதற்கொரு பரிகாரம் இல்லையாகும். தலைவி:- நெஞ்சே! இவனைப் பொய் சொல்லவிடேன் மாறு பட்டுக் கோபிக்கிற் பிழை செய்தேன் என்று பாதங்களை வணங்குத லாகிய பரிகாரத்தையுஞ் செய்வான். நம்மை மறந்துயான் ஒரு போதும் மாட்சிமைப்பட்டிருக்க நினையாத நாணமில்லாதவனுக்கு இவ்வூடற் போரிற்றோர்த்து அவனாலுள்ள பயன் கொள்வாய்( என்று கூறி ஊடல் தீர்ந்தாள்) 25 தலைவன் பரத்தையரிடத்து ஒழுகி வந்து நின்ற விடத்துக் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி அவன் ஆற்றாமை கண்டு தன் ஆற்றாமையுஞ் சொல்லி ஊடல் தீர்க்கின்றாள்: தலைவி:- பரத்தையரிடத்து உன் கள வொழுக்கத்தை யான் கண்டேன். ஆதலின் பொய்யாகச் சிரித்து யான் விரும்பாதவற்றைக் கூறி என்னைத் தீண்டாதே. நீ தீண்டுதற்கு இவ்விடத்து நினக்குப் பெண்டிரா யிருப்பாருளரோ? தலைவன்: ஒள்ளிய வளையினையுடையாய் நீ என்னுடைய குற்றமாகக் கண்டது எது? தலைவி: யான் கண்டது ஒருத்தி தானுற்ற காமநோயையும் அதனாற் பிறந்த அலரையும் பிறர் அறியாமல் மறைத்து மகிழ்ச்சி யின்றியிருந்தாள். அப்பொழுது மழை பெய்தது. இவ்வாறு மழை பெய்து நின்ற ஒரு நாள் பாதி இரவில் இராப்பொழுதிலே, கூந்தலால் அழகு பெற்ற தோளும், முலையும், மகரக் குழையும் ஏனைய ஆபரணங்களும் தனக்குச் சுமையாக முறிவதொரு வஞ்சிக்கொடி போன்றவள் இடையைத் தாங்கிக்கொண்டு, அடங்காத முயக்கத்தாலே அடி தளர்ந்து அழகிய சிலம்பு ஒலிப்பக் கோபித்து வந்து கதவைப் பாய்ந்தாள். அது தவறாகுமோ? அந்த ஆராய்ந்த இழையினையுடையவளின் ஆரவாரத் தைக் கேட்டுக் காலம் நீடியாது எழுந்து சென்றாய். அது தவறாமோ? அவள் கோபம் மாறாளாய்ச் சினந்து நின் மார்பிற் கிடந்த நாறுகின்ற இதழுடைய அழகிய மாலையை அறுத்தாள். அது தவறாகுமோ? அவளுடைய சிறிய அடியை அடைந்து யான் தீமையுடையேன். அதனை நீ தெளியென்று கூறி அவளிடத்தே தங்கினாய். அது தவறாகுமோ? யாம் நின்னைக் கோபியேமோ? இனிச் சொல்வாயாக. தலைவன்:- யான் சொல்லத் தெளியாயாயின் நீ கூறும் தவறை யான் உடையேனல்லேன். நீ கண்டது இராக்காலத்துக் கனவு போலி ருக்கின்றது. தலைவி:- இராக்காலத்தே மழை மிகவும் பெய்தது. அப்போது குறியிடத்தே வந்தவளை நீ கண்டதனால் நீ கண்ட கனவு இது என்று சொல்லி நீ செய்ததை நினையாது அச் செய்தியை மாற்றிக் கூறி நின்றாய். நீ செய்யும் சத்தியங்கள் முன்போல் உண்மையானவையல்ல. அதனால் ஏடா1 நினக்குப் புகும் இல்லும் பல விருத்தலின் நீ அங்குச் செல். தலைவன்:- மெல்லிய தோளினையுடையாய்! இனி யான் செய்த குறையைக் கைவிட்டு நினக்கு நன்றாகிய அழகை எனக்கு அருள். அதனையான் நுகர்வேன். தலைவி:- ஏடா! குறை அடைந்து நீ எம்முன் இவற்றை உரையாதே. உரைப்பின் அதனைக்கேட்டு உன் குறையை பொறுப்போமோ? ஆதலால் இக்காரியத்தில் தலையிட்டு நீ குறையடையாதே (என்று கூறி ஊடல் தீர்ந்தாள்) 26 இதுவும் அது. தலைவி:- நறவம் பூ நீரில் அலர்ந்த நீலப்பூ அனிச்சம் பூ, முறுக்க விழ்ந்த முல்லைப்பூ முதலியவற்றாற் றொடுக்கப் பட்ட உன் கண்ணியை யும் மார்பிடத்து அணியும் மாலையையும் பரத்தையர் விரும்புவர். அவர் கோபித்து ஊடினமையால் நிறம் கெட்ட உன்னுடைய ஒப்பனை நேற்றையில் நன்றாயிருந்தது. தலைவன்:- அணைபோலும் மெத்தென்ற தோளுடையாய்! இவன் செல்லிற் பரத்தையரிடத்திற் செல்வன், அன்றேல் நீங்க மாட் டான். என்று கருதி அந்த ஐயத்தாலே யான் செய்யாத காரியங்களைச் சொல்லி என்னைக் கோபிப்பது யாது காரணத்தினாலோ? என்னிடத் தில் தீமையில்லாமையைத் தெய்வத்தின் மீது சூள் செய்து உன்னைத் தெளிவிப்பேன். அதனைக் கண்டு இனிக் கோபியாதிருப்பாயாக. தலைவி:- என்னை நீங்கிய பின்னர் நீ செய்த காரியம் அறிவேன். உன் சத்தியம் பொய்யாவதையும் அறிவேன். உன்பரத்தையின் நெருங்கிய வளைகள் அழுத்திய வடுக்களையும் அவர் முயக்கத்தால் கசங்கிய உன் பூ மாலையையும் கண்டேன். குறியிடத்தே நின்னைப் பெறாத அவர் கோபித்துக் கூரிய நகங்களால் தாம் விரும்பியவாறு செய்த வடுவினையுங் கண்டேன். சேரியிலுள்ள, செவ்வரி பரந்த மதர்த்த கரிய கண்ணையுடைய பரத்தையர் அடங்காத முயக்கத்தினாலே அழிந்து சிதறுண்ட சந்தன முடைய நின் வடிவைக் கண்டு யானும் நின்னோடு ஊடுதலைத் தவிர்த்தேன்; இனி அப் பரத்தையரிடத்தே செல்வாய். தலைவன்:- தெரிந்த ஆபரணங்களையுடையாய்! யான் தெளிவித் தவைகளைக் கொண்டு நின் நெஞ்சைத் தெளிவியாயாய்க் கோபித்தாய். யான் தீமையுடையேன் அல்லேன் ஆதலைப்பணிந்து உன் நெஞ்சிடத்தே நிறுத்துவேன். அதனைக் காண்பாயாக. தலைவி:- இவன் தீமையில்லாதவன் என்று யான் நினைக்கும்படி செய்தல் இவன் கருத்தாகும். நெஞ்சே இவன் வலிமையைக் காண். யான் வேறுபடின் நீ நெஞ்சு கலங்குவாயென்று நின்னை வேறுபடாமல் உன்னோடு இணங்குவேனாயின், அப்பொழுதே மாறுபட்டு என்னை இகழ்ந்து பரத்தையர் பாற்செல்லுதற்கு மனம் மயங்குவாய். ஆதலால் நீ எதையாவது கூறி எனது ஊடலைத் தீர்ப்பது உனக்கு வேண்டப்படாத காரியமாகும். பரத்தையரிடத்துச் செல்லும் குறையல்லாத வேறெக் குறையைச் செய்யினும் அவற்றைக் கருதாது என் நெஞ்சு நெகிழ்ந்து நின்னிடத்தே வரும். என் நெஞ்சின் தன்மையை அறியாது நீ யான் விரும்பும்படி என் நெஞ்சைத் தெளிவிக்குஞ் செயல்களை என்ன காரியத்திற்குச் செய்தாய்? (எனக் கூறி ஊடல் தீர்ந்தாள்) 27 பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தலைவியை மகிழ்விப்பது காரண மாகத் தெய்வமகளிர் விளையாடுவதோர் கனவு கண்டேன். அது மெய்யாகச் சம்பவித்தது காண்பாய், என ஊடல் தீர்க்கும் பொருட்டுத் தலைவிக்குக் கூறுகின்றான். புனத்தே வளர்ந்த பூங்கொடி போன்றவளே, பொருள் தேடுதற்குப் பிரிந்து செல்லாது வருந்தியிருப்போருக்கு அவர்கள் இருக்கும் இடங் களிலே பொருள் தானே செல்லுதல் அரிதாகும். ஆகவே உலகம் தமக்கு உரிமையாகும்படி இருக்கும் தருமத்தைச் செய்தல் கனவிடத்து இல்லையாகும். ஆயினும் இன்பத்தை விரும்புகின்ற கணவரை மகளிர் ஊடலாற் பிரிதலும் ஊடல் தீர்ந்து புணர்தலுமாகிய மாறுபட்ட இன்பத்தை அக்கனவு தராமற் போகவில்லை. யான் கண்ட காதலையுடைய கனவு காரிகைபோல் இன்பந்தருவது ஒன்றாயிருந்தது. தலைவன்:- நறிய நெற்றியையுடையாய்! ஆரவாரம் பொருந்திய மதுரையை மலைபோன்ற மதில் சூழ்ந்திருக்கும் அம்மதிலைச் சூழ்ந்த வையையாற்றங்கரையை அழகுபடுத்துகின்ற சோலையிடத்தே சென்றது போலக் கனவிடத்தே சென்றேன். தலைவி:- பெரிய இனிய மென்மையினையுடைய நெடுந்தகாய்! பின்னை நீ அவ்விடத்துக் கண்டது எத்தன்மைத்து அதனை இனிச் சொல் என்றாள். தலைவன்:- யான் கண்டது கேள், அன்னங்கள் விட்டு நீங்காத இமயமலையின் ஒரு பக்கத்தே அன்னக் கூட்டங்கள் ஆகாயத்தில் இரையைக் கவர்ந்த இளைப்பால் ஓய்ந்து தங்கியிருக்கும். அதுபோல வையைத் துறையிடத்தே உயர்ந்த மணற்குன்றிடத்தே பெண்கள் ஆயத்தாரோடு சேர்ந்து நிறைந்திருப்பதைக் கண்டேன். தலைவி:- பறைகொட்டுகின்றவன் நினைகின்ற ஓசையைப் பறை யும் ஒலிக்கும். அதுபோல நின் நெஞ்சிடத்து விரும்பின இன்பத்தையே கனாவாகக் கண்டாய். தலைவன்:- நீ அவசரப்படாதே; பின்பு கோபிப்பாய்; இனிய நகையினையுடையாய்! அவ்விடத்து நிகழ்ந்தது இதுவாகும். அதனைக் கேள். அழகிய அப்பெண்கள் எல்லோரும் அச்சோலையிடத்து உயர்ந்து நின்ற ஒரு பூங்கொடியை வளைத்து அதிற் பூங்கொத்துகளைப் பறித்தனர். அலர்ந்த வேப்பந்தாரினையும், பொதிய மாலையையுமுடைய பாண்டியன் பொருத பகைவரின் காவற் கூட்டம் போல வரியினை யுடைய வண்டின் கூட்டம் சிதைந்தது. பூங்கொத்துகளிலிருந்து கலைந்த வண்டுகளெல்லாம் அவ்விடத் தில் நின்ற அழகிய பெண்களில் அழகைப் பற்றி நுகர்வன போல அவர்களிடத்தே மொய்த்தன. அம்மகளிர் வண்டுகளை ஓட்டிச் செய்த போரிடத்தே ஒருத்தி யின் பூமாலையும் அழகிய முத்து மாலையும் வேறொருத்தியின் அசைகின்ற வனையிற் கொளுவிக் கொண்டன. ஓருத்தியின் பொட்டிட்ட நெற்றியோடு பொருந்திய தலையிற் கிடந்த முத்து வடத்தை இன்னொருத்தியின் அழகிய காதிற் கிடந்த அழகாற் சிறந்து விளங்கும் மகரக்குழை கொளுவிக் கொண்டது. ஒருத்தியின் திதலை நிறைந்த அரையிற் கட்டிய பட்டாடையை வேறொருத்தியின் உள்ளிடுமணியுடைய சிலம்பிற் கிடந்த சுறாவடிவாகிய மூட்டுவா யிரும்புகள் பிடித்துக்கொண்டன. புலவியாலே கணவனைத் தழுவாமல் இருந்த ஒருத்தி வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கையாலே புலவியை நடுவே கைவிட்டுக் கணவன் வணங்கு கையால் அவனுடைய குளிர்ந்த மாலையுடைய மார்பிடத்தே முயங்குவாள். ஒருத்தி பாதத்தில் தாழ்ந்த ஆடையை ஒரு கையால் எடுத்துக் கொண்டும் மற்றக் கையால் முடித்த முடி குலைந்த கரிய கூந்தலைப் பிடித்துக் கொண்டும் மிகுந்த பூக்களால் மூடியிருக்கும் குளத்திலே பாய்வள். ஒருத்தி கூட்டமாகிய வண்டுகள் மொய்க்கையினாலே கையால் அவற்றை ஓட்டமாட்டாளாய் மணம் நாறும் மாலையை அறுத்துக் கொண்டு ஓட்டி அதற்கு அவை போகாமை கண்டு, வளைந்த தண்டுக ளுடைய ஓடத்தே பாய்வாள். ஒருத்தி அறிவு மயங்கற்குக் காரணமான கள்ளின் களிப்பால் இமைகள் கூடுகையினாலே பார்வை மறைந்த கண்ணுடையளா யிருப்பள். மொய்க்கும் வண்டுகளை ஒட்டுகின்ற அவள் தன் களிப்பாலே அவற்றை ஓட்டும் இடம் அறியாளாய்க் கைசோர்வாள். பல மகளிர் விளையாடும் சோலையிலே காற்றடிக்க ஒதுங்கி வளைந்த கொடிகள் தம்மிற் பின்னியிருப்பது போலத் தெரிந்த ஆபரணங்கள் ஆரவாரிப்ப ஒருவரோடு ஒருவர் கலந்து பெண்கள் வண்டுகளை ஓட்டினர். அவ்வகையினரை யான் கண்டேன். தலைவி:- நின்னுடைய பெண்டிர் புலந்தனவற்றையும், நீ அவ ருடைய அடி முன்னே வணங்கிப் புலவி தீர்த்தவற்றையும் பலவாறாகக் கனவின் மேல் வைத்துக் கூறுதல்யான் கோபித்துச் செய்யும் குற்றம் இன்று என்பதை உட்கொண்டோ? சொல். தலைவன்:- நறிய நுதலினையுடையாய்! யான் பொய் சொல்லேன். இளவேனிற் காலத்துக் கரிய குயில்கள் அரும்பவிழ்ந்த பூக்களுடைய கொம்புகடோறும் இருந்து ஓயாது பெடையை அழைக்கும். அது பலமாட்சிமைப்படப் புணர்ந்தீர் பிரியாதிருமின்: புணர்ச்சி நீடி இடையே பிரிந்தீர் கூடுமின் என்று கூறுதல் போல் இருக்கும். இவ்வகை யான இளவேனிற் காலத்துக் காமனுக்கு விருந்திடும் பொருட்டு, எதிர்கொண்ட மதுரையின் மகளிரும் அவர் கணவரும் தேனினம் ஒலிக்கும் காவிலே கூடியிருந்து அடங்காத விருப்பத்தோடே அணி களைக் களைவர். ஆதலால் பிரிதலும் புணர்தலும் ஆகிய கூற்றாலே யான் கண்ட கனவு நல்ல உண்மையாகும்படி நினைவாயாக. 28 யான் அவ்விடத்துக் கடவுளரைக் கண்டு தங்கினேன் எனக் கூறிய தலைவற்கு நீ கண்ட கடவுளர் எனத் தலைவி கூறிப் புலக்கின்றாள். தலைவி: மிகுந்த இனிய மென்மையினையும் பரத்தைமைக் குணத் தினையுமுடைய அகன்ற மார்பிடத்தே வண்டுகள் ஊதும் சந்தனத்தைக் கைவடுக்கொள்ளப் பூசியவனே! முன்பு இத்தன்மையுடையை யல்லை. அத்தன்மை போயிற்று; இவ்விடத்து இராக்காலத்தே வரும்படியாக நீ வெளியே சென்று கண்ட விநோதம் யாது? அதனைக் கூறுவாய். தலைவன்:- பெரிதும் பெருத்த மெல்லிய தோளினை யுடையாய்! யான் கூறுகின்றவற்றைக் கேட்பாயானாற் கேள். யாம் இருவேமும் உடனே மோட்சத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவு ளரைக் கண்டு அவ்விடத்தே தங்கினேம். தலைவி:- கடவுட்டன்மை உண்மையாகக் கொண்டு நடத்துவாள். சோலையின் மலரைச் சூடின மான் பிணை போலும் நோக்கினையுடைய பலருளர். அப்பரத்தையருள் நீ கூறிவந்த கடவுள் எந்தக் கடவுள்? தலைவன்:- முத்தை ஒக்கும் முறுவலுடையாய்! நாம் மணஞ் செய்ய வாய்ப்பச் சொல்லிய அந்தக் கடவுளே யான் கூறிய கடவுளாகும். தலைவி: நீ கூறியது எனக்கும் ஒக்கும் (என ஒவ்வாமை கூறினாள்) நாக்கை உள்ளே இழுத்துக் தலையைச் சாய்த்து நீ கூறியது பொய்; ஆகையினாலே நீ எம்மிடத்து அகப்பட்டுக்கொண்டாய். நீ கண்ட கடவுளரை உண்மையாக யாங்கள் சொல்லக் கேட்க விரும்பியவனே! இனி யாங்கள் கூறக்கேள். உன்னைப் பெற விரும்பிய விருப்பால் நீ செய்த குறியிடத்தே தவறாமல் வந்து கடவுள் கண்டவளுக்குச் சாகிறவன் போல விழுந் தெழுந்து காட்டும் பலவினையுடையாய், உன் மனையிடத்தே சேரும் முறைமையோடு வந்த கடவுளரை நீ கண்டாயோ? பார்வையாலே பிணிக்கும் கண் வருத்துதலால், நறிய தேனும் குளிர்ந்த மயிர்ச்சாந்தும், புழுகும் நாறும் இருண்டு கிளைத்த மயிர்க்குக் காலையில் அணியும் அணிக்கு ஏற்ப நீ முதல் நாள் பூவைப் பலியாகப் போட்ட கடவுளரைக் காண்பாயோ? அழியாத விரதத்தாலே முகம் குதிரை முகமும் உடலம் மக்களு டலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மாவைக் கொன்ற சிவந்த வேலையுடைய முருகனைப் புகழ்ந்து, அடங்காத மிகுந்த காமவேட்கை யாலே திருப்பரங்குன்றில் நின்னோடே மாரிகாலத்தே பலநாளுந் தங்கின கடவுளரைக் கண்டாயோ? உனது மணமிக்க மார்பைப் பிறர் தழுவாதபடி அடையாளமாக வடுப் படுத்தினார் நீ கண்ட கடவுளரில் யார் சொல்லு. எம்மாற் கோபிக் கத்தக்க வனே! நீ சிறுபொழுது இவ்விடத்திற் தங்கினும் பரத்தையர் கோபிப்பர். உனது பொய்மை எல்லாம் யான் அறிந்துகொண்டேன். இனி அவரிடத்திற் செல்லாதொழியின் உனது பூமாலையணிந்த மார்புக்கோர் முட்டுப்பாடுண்டாம். அதனால் நின்னைத் தழுவிய, நீண்ட கரிய கூந்தலையுடையார் எல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாகும். ஆதலின் அவ்விடத்தே செல் (எனப்புலந்து கூறினாள்). 29 அடியோராகிய கூனுங்குறளும் மாறுபட்டுக் கூடிக் கூறுகின்றார்கள். குறளன்:- நீருள் தெரிகின்ற நிழல்போல் கூனிய மெல்லிய சாயலோடு இவ்விடத்தே நடக்கின்றவளே! உன்னோடு ஒரு காரியத்தை வினாவுவேன். அவ்வாறு யான் உசாவுவதற்கு நீ என்ன நல்வினையைப் பெற்றாய். சற்றே நில். கூனி:- அம்மையோ! ஆண்தலைப் புள்ளின் குஞ்சு போலக் கண்ணி னாற் பார்க்கத் தெரியாத குறளாய்ப் பிறந்தவனே! என்னை விரும்புகின்றேன் என்று சொல்லி என்னைப் போகாமற்றடுத்தாய். உன்னைப் போற் குறளாயிருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவார் களோ? குறளன்:- கலப்பையின் படைவாள் போல ஓரிடங் கூனாய்ப் புறப் பட்டு ஓரிடம் முன்னே வளைந்து நிற்க முறித்துவிட்டாற்போன்ற நிறைந்த அழகாலே பொறுக்க மாட்டாத நோய் செய்தாய். யான் அதனைத் தாங்கி நிற்க மாட்டேன். நீ அருள்வாயாயின் என் உயிர் உண்டு இனிநினைவைக் கூறு. கூனி:- இவன் மனக் குறிப்பைக் பாராய். மகளிரைக் கூடும் முறையைக் கல்லாத, சூதாடும் பலகையை எடுத்து நிறுத்தினாற் போன்ற குறளனே! மக்கள் திரியாத உச்சிப் பொழுதிலே வந்து என்னைக் கையைப் பிடித்து நின் இல்லத்தே வாவென்று சொல்லுதற்கு ஏடா! மிகவும் நின்னுடைய பெண்டிராயிருப்பார் சிலருளரோ? சொல்வாய். குறளன்: நல்லவளே! தலைக்குமேலும் நடு இல்லையாய். வாள் போன்ற வாயையுடைய கொக்கை உரித்தாற் போன்ற வளைந்த மடக்கையுடையாய்! யான் கூறுகின்றதைக் கேள்; உன்னை மார்பிடத்தே அணைத்துத் தழுவுவேனாயின் என்னுடைய நெஞ்சிலே அக்கூன் ஊன்றும்; முதுகைத் தழுவுவேனாயின் முதுகிடத்துள்ள கூன் அக்குளுக் (கூச்சம்) காட்டும். ஆதலால் உன்னைக் கூடுதலன்றித் தழுவிக் கொள்ள மாட்டேன். இனிப் பக்கத்தே சிறிது முயங்கும்படி வருவாய். கூனி:- சீ கெட்ட தன்மையுடையவனே! மக்களிற் பாதியானவனே! நீ என்னிடத்தினின்றும் போ. இனி இந்நிலையைக் கைவிடு. மரத்தின் வளைவான இடத்தைப் பிடித்துப் படர்ந்த பூங்கொடிபோல (எமது கூனால்) வடிவு நிரம்பாத மேனியைத் தழுவிப் பாதுகாப்பாரென்பார் பலர் இருக்கின்றனர். இப்பரத்தைமையுடையவன், புல்லுதற்குப் பக்கத்தைத் தாராய் என்று கூறுகின்றான். இங்ஙனம் இவன் கூற நமக்குற்ற குறைதான் யாது. (இவ்வாறு அவன் கேட்ப நெஞ்சொடு கூறினாள்) குறிய வட்டா! பலவுங் கூடின உழுத்தம் பணியாரத்தினுங் காட்டில் அனுபவிக் கப்படுகின்ற கூன் சாதியினுடைய பிறப்பு, உன்னிலும் இழிந்ததோ? குறளன்:- யான் உன்னை விரும்புகின்றேன் என்று கூறி இவள் பின்னே சென்றவிடத்தும் இக் கூனி மனம் இயையாது நம் அருகி னின்றும் விலகிப்போய் ஒடுங்கும் ஒடுக்கத்தை நெஞ்சே பாராய். கூனி:- ஊருகின்ற ஆமையை எடுத்து நேரே நிறுத்தினாற்போல நெடியனாய்த் தோளிரண்டையும் விலாவுக்குள் வீசி, ‘ யாம் நின்னை விரும்பேம்’ என்று கூறி விலக்கா நிற்கவும் எம்மை விரும்பி நடந்து வருகின்ற காமனார் நடையை நெஞ்சே காணாய். குறளன்:- ஒருவரை ஒருவர் முயங்குதற்குக் காரணமான கணை யினையுடைய சாமனார் தமையனாகிய காமனார் நடையை நீ காணாய் (என்று கூறி நடந்து காட்டினான்) கூனி:- ஓ ஓ! இவன் நடையைப் பாராய். குறளன்:- நம்முள்ளே நாம் கூடி மகிழ்தற்கும் யான் நின் மெய்யைத் தீண்டுதற்கும் குறியிடம் யாது என்று நாம் ஆராய்வோம். இனி உன்னை இகழ்ந்துரையேன். (இவ்வாறு கூறி அரசன் அடியைத் தொட்டுச் சத்தியஞ் செய்தான்) கூனி:- அப்படியே யாகுக. மென்மையால் இனிய மார்பனே! யானும் இகழ்ந்து கூறுதலைத் தவிர்த்தேன். இக்கூனுங் குறளுங் களித்து மகிழ்தல் பேயும் பேயும் துள்ளி விளையாடுவதை ஒக்கும் என இக் கோயிலிலுள்ளார் கூறிச் சிரியாதிருப்பதை யான் விரும்புகின்றேன். பொன் தகடுபோலும் உருவமுடையவனே! கோயிலை விட்டுச் சோலை யின் கீழ்ச் செல்வாயாக. குற்றமில்லாத அறிவினையுடைய சபையார் ஓலையின் தலைகளைப் பிடியாகக் கட்டி அப்பிடியின் தலையில் அரக்கு இலச்சினையை இட்டுவிட்டாற் போல நிரம்பாத உடலி னுள்ள முயக்கம் நிறையும்படி இறுகத் தழுவிக் கூடக் கடவேம். 30 தலைவி பரத்தையரைக் காடையாகக் கூறுகின்றாள்: ஏடா! வாசம் கமழ்கின்ற கூந்தலுடைய பரத்தையர் வீட்டே செல்கின்ற வழி தப்பி வந்தவன்போல இங்கு வந்தாய். இவ்விடத்துப் பரந்து பாராதொழி. அவ்விடத்தே நில். உனது சிவந்த அடிகள் சிவக்கும்படி வந்ததுபோல நின்பரத்தையர் மனைக் கண் செல். தலைவன்:- நெருங்கி விளங்குகின்ற பல்லினையுடையாய்! யான் புதிதாக வந்து ஒதுங்கிய காடையின் போரைக் கண்டேன். இதல்லாமல் நீ எனக்குத் தீங்காகக் கருதும் ஒழுக்கத்தை யான் சிறிதும் அறியேன். தலைவி:- நீ எப்பொழுதும் காடைப்போரைக் கண்டதைப் பற்றி யான் கேள்விப்பட்டேன். அதனை யான் கூறக்கேள். எப்போதும் போலல்லாத உனது புதிய கொடையைப் பாடிக் கவிந்த கையுடைய பாணன் வந்தான். அவன் யாழோசையைக் கேட்டுச் செவி சாய்த்துப புதிதாக அகப்பட்ட காடைகளின் போரைக் கண்டாய்போல இருந்தாய். பரத்தையர் செய்த வடுக்களாகிய புலராத புண்கள் பல உன் மேனியிற் கிடக்கின்றன. ஊரிலுள்ளார் கூறும் அலருக்கு வருந்தாது பரத்தையர் இல்லில் தங்குவாய். அவ்வியல்புள்ள உன் மார்பிற் கிடக்கும் மாலையைக் கையாற்றழுவிக்கொண்டு அவர்கள் உன்னை அகப்படுத்துவர். பின்னும் வேறு சிலரை அகப்படுத்துவதற்குப் பார்வையாக மகளிரைப் போக விடுவர். இவ்வியல்புள்ள பரத்தையரின் ஊடற்போரால் ஊடிப்போகாத உன்னைக் கைக்கொண்டு அவர் நுகரும் கலவிப்போரைக் கண்டாயும் போல இருந்தாய். உன் தோளிடத்து அவர் செய்த வடுக்களாகிய புண்கள் ஈரமாயிருக்கின்றன. ‘இவளுக்கு (பரத்தைக்கு) வருத்தமாகவும் கூடும்’ என்று கருதிப் புணர்ச்சிக் காலத்தில் கன்னத்தில் (சொக்கையில்) செய்யும் வடுக்களை யும் செய்யாது மெய்ம் முழுவதையும் எப்பொழுதுந் தடவி விரும்பி யிருப்பாய். நீ தன்னை வெல்லாமற் கொண்டு புணரும் பந்தயம் போடு பவளது கலவிப் போரைக் கண்டாய் போலே இருந்தாய் உன் மனக் குறிப்பை நின் முகந்தானே காட்டா நிற்கும். தலைவன்: ஆயிழாய்! நீ கூறுகின்ற அத்தன்மையான குறிகளை யான் அவ்விடங்களிற் செய்யவில்லை யென்று உனது திருமேனியைத் தொட்டுச் சத்தியஞ் செய்கின்றேன். தலைவி: அம்மையோ! (அம்மாவடி) தலைவன்: யான் கூறுகின்ற மெய்யைப் பொய்யென்று மயங்கி நீ உலக ஒழுக்கம் ஒன்றும் அறியாய் போல இருந்தாய். நல்லவளே! யான் செய்த தவறுகளை என் தலையிலேயே சுமத்தி, என் பொய்களை எனக்குத் தெளிவித்து என் களவைக் கையோடே பிடித்துக்கொண்டாய். யானும் நின்னைப் பிழைத்தேன் இனி எனக்கு அருள் செய்வாய். தலைவி: ஏடா! யான் நீ கூறியவாறே அருளுவேன். அவ்வாறு செய்தற்கு யாம் நினக்கு யார் ஆவேம்? விடலாய்! உன் காடைகள் எல்லாவற்றையும் முன்னே நீ அருள் செய்து பின்னே கைவிடுதலின் உன் நடிப்பிலே அகப்பட்டு அவை வருந்தும். அவை வருந்தாதபடி நீ வய மாக்கிய காடைகளை எல்லாம், இன்னும் நின் பாணனாலே அழைத்து அவற்றின் மனந்தெளியும்படி அருள் செய்வாய். 31 தலைவி பரத்தையரைக் குதிரையாக்கிக் கூறுகின்றாள்: உயர்ந்த அழகினையுடைய மார்பனே! நின் வாயிற்சொல் நினக்கு மாறன்று: உன் தன்மையைக் கண்டு வினாவுகின்றேன்: நீ மடிப்புக் குலைந்து கரைகிழிந்து கசங்கிய ஆடையையும், மிகுந்த வலியமார்பிற் சந்தனம் அழிதற்குக் காரணமான வியர்வையையுமுடையை! தோட் கட்டிலே கிடந்து நிறங்குறைந்த சால்வையையுடையை; அவ்விடத்தே சென்று இவ்விடத்தே வந்தாய். தலைவன்:- யான் கூறுகின்றதைக்கேள், இரண்டு நீலப்பூவைக் கட்டினாற்போன்ற கண்ணியினையுடையாய்! குதிரை ஏறி வருகின்றேன். தலைவி:- நீ ஏறிய குதிரையை யான் அறிவேன். அக்குதிரை ஐந்து வகையாக வகிர்ந்து முடிந்த கூந்தைலையுடையது. அக்கூந்தல் கத்தரிக்கப் படும் கேதாரி மயிரினை வைத்து முடியப்பட்டது. அது குஞ்சியாகி சிவந்த தலையாட்டத்தையுடையது; நீலமணியைத் தோலில் வைத்துச் செய்த கட்டுவடமாகிய கழுத்திற் கட்டும் வல்லிகையையுடையது; புல்லிகை என்னும் பூணாகிய கீழே தூங்கும் கன்ன சாமரையினை யுடையது; தெய்வ வுத்தி என்னும் பூணினருகே துவக்கி ஒரு வடமாக நாலும் கட்டியாகிய (குதிரை) கண்ணாற் கண்டு அஞ்சும்படி விட்டு வைத்த அழகிய சம்மட்டியினை உடையது. நூலினாற் செய்த உத்தரிய மாகிய வலிய குசையினை யுடையது. இனமொத்தமணிகளாற் செய்த தம்மிலொத்த முக்கண்டன் கட்டுவடமாகிய பலபல நிறமுடைய கண்டிகையினையுடைய பொன்னாற் செய்த மேகலையாகிய, கழுத்திலே கட்டின சதங்கைத் தணடையினை யுடையது. அடியிடத்தே, கட்டின பொன்சதங்கையுடையது. அடியிலே கட்டின சிலம்பாகிய கெச்சை யினையுடையது. அக்குதிரையைச் செண்டு வெளியில் அல்லாது வெண் சாந்தடித்த நிலாமுற்றத்தே கலைத்து வேகமாகச் செலுத்தாதே. நீ நல்ல குதிரைச் சாரதியாகுவை. ஞாயிறு தோன்றும் காலத்து, கூட்டுமாறு பிடித்து அலகிடப் பட்ட மதுரை வீதியைப்போல, உனது மேனியிற் கீறியது குதிரையோ? அக்குதிரை கூரிய நகமுடையதாய் மிகவும் கொடியதோ? அதனை ஏறுகின்ற நீ தப்பின்றி வாழ்வாயாக. மூங்கிற்றடிகளால் நிறந்தோய்த்துக் குதிரையின் உடலிற் குத்தினை பக்கரை போலே உனது உடம்பிற் கவ்வியது குதிரையோ? சீ! கெட்டது தனக்கொரு பயனின்றாக இக்குதிரை இவ்விடத்தே வடுப்படுத்திற்று. இக்குதிரை பெரிதும் வியமம் உடையது. இக்குதிரையை ஏறிய நீ தீங்கின்றி வாழ்வாயாக. இன்று நீ ஏறிய குதிரை மிகவும் நன்றாயிருந்தது. அதை இப்பொழுது அறிந்தேன். அதுதான் நூல் கூறிய முறைப்படி மணஞ் செய்து கொண்ட மேகலையுடைய காமக் கிழத்தியாகிய குதிரையோ, அல்லது பெருமா! பாணன் தூதாகச் சென்றவிடத்து அவ்விடத்துப் பரத்தையருடன் உண்டான மாறுபாட்டால் காற்றுப் போற் கடிய குதிரை வந்தது. உன் பழைய உருவை அது இனிக் கெடுக்குமாதலால் அதனை இனி ஏறாதொழி. அல்லாவிடின் பரத்தை குதிரையாகவும் நீ சவாரி செய்பவனாகவும் இவ்விடத்தே வராது திரி. இனி இவ்விடத்து நில்லாது அக்குதிரையை ஏறுதற்குச் செல். 32 தலைவி பரத்தையரை யானையாகக் கூறிப் புலக்கின்றாள்: நீ சிறப்பாகக் கொண்டு ஒழுகுகின்ற பரத்தை, “யான் புணர்தற்கு நீ குறித்த இடத்தில் எந்நாளும் காணேனாய்த் திரியும்படி நீ எவ்விடத்தே போனாய்” என்று விடியற்காலத்தே எம்முடைய மனையின் வாசலிலே வந்து கடுஞ் சொற் சொல்லி உன்னைப் புலப்பாள். அதனை நீ யறியாய் போல இப்பொழுதே நீ எம்மை இவ்வாறு வந்து எள்ளுகின்றாய். தலைவன்:- முத்தை ஒத்த முறுவலுடையாய்! நாம் விரும்பிய ஒரு புது யானை வந்தது. அதனை ஏறிப் பார்ப்பதற்கு யான் தங்கினேன். தலைவி:- நீ கூறினது ஒக்கும். அந்தப் புதிய யானை விளங்குகின்ற நெற்றியில் இட்ட பொட்டாகிய விளங்கும் பட்டமுடையது. தொய்யில் எழுதிய அழகிய முலையாகிய வெள்ளிய கொம்புடையது. தொய்யகம் என்னும் தலைக்கோலமாகிய தோட்டியினையுடையது. தூங்கும் மகரக்குழையாகிய தெளிந்த ஓசையுடைய மணியுடையது; இலக்கு மியைப் பொறித்து வைத்த தலையணியாகிய கழுத்து மெத்தையினையு முடையது என்று பிறர் கூறக்கேட்டேன். அந்த யானை சுண்ணமாகிய நீற்றையணிந்து, கள்ளாகிய நீரையுண்டு வாயிற் கதவாகிய கம்பத்தைச் சேர்ந்து அதனோடு நிற்கும் நிலையையே தனக்குச் சங்கிலியாகக் கொண்டு தன்னழகைக் காட்டி அவ்வழகாலே ஒருவரும் போகாதபடி காலைத் தடுக்கி வீழ்த்தும் தன்னைக் கண்டாரைத் தனது மெல்லிய தோள்களால் அணைத்துக் கொண்டு அவர்களின் அழகாகிய கவ ளத்தை, விளங்கும் முத்துப்போன்ற பல்லைத் திறந்து சிரித்துக்கொள் ளும், அவ்யானையை இன்று நீ கண்டாய். எம்மை நீ பொய்யாக்குதல் என்ன பயனைத் தரும்? ஏடா! தொடி அணிந்த தோளையுடைய மார்பைத் தழுவிக் கொண்டு பின்னர்த் தத்தி ஏறினவனும் நீ; நின்மேல் ஆசையால் எதிர் கொண்டு வந்து கூடிப்பின்னர் வருந்துகின்ற பரத்தையர் மனையின் வழியாக வேழத்தைக் கொண்டு சென்று ஏறினவனும் நீ யாவாய். நின்னை மிஞ்சாது அழகாக அனுபவித்த சிறிய களிப்புடைய அழகிய கரிய கண்கள் அழும்படி சில நாள் விட்டுப் பின்னர்க் கூடினா யும் நீ. நீ சென்ற சென்ற இடங்களிலுள்ள கருமணல்போன்ற கூந்த லுடைய நின்பரத்தையரெல்லாரும் உன்னைக் கோபியாதபடி என் னுடைய இல்லில் வந்தாய் அதனால் அப்புதிய யானைநீ ஏறமாட்டாத பாகனாகும்படி நின்னை மிஞ்சி மதம்படும்; அதனை விடாதே பாதுகாப்பாய். 33 பரத்தையிற் பிரிந்த தலைவன் சென்று வரத் தாழ்ந்தவிடத்துத் தலைவி காரணம் வினாவினளாக, ‘யான் புதுப்புனலாடத் தாழ்ந்தேன்’ என்றான். அவள் இவ்வகையான புதுப்புனலே நீ யாடினாய் என நெருங்கிக் கூறுகின்றாள்: புதிய மலர்களை ஆராய்ந்து உருசி பார்க்கும் வண்டு போல நீ புதிய பரத்தையரை அனுபவித்தற்கு விரும்புகின்றாய். அதனால் அவரைக் கொண்டு வருதற்கு அவர் இருக்கின்ற இடந்தோறும் ஓடிச்சென்று அவரைக் கொண்டு வருவாய். அதனால் எப்பொழுதும் உனது தேர் குதிரை பூட்டப் பட்டிருக்கும். தேர் சென்ற தெருவெல்லாம் நின் பரத்தைமை யாவருக்குந் தெரியும்படி யிருக்கும் நின் பரத்தைமைக் குணத்தை யான் முன்பு கேட்டறிந்துள்ளேன். நீ தினமும் கொள்ளும் கலியாணமாகிய விழாவிற்குச் செய்த அலங்காரத்தை, என்னை அல்லாத வர்களுக்குக் காட்டுதற்கு நீ இப்படி வருவாயென நெஞ்சிலே தெளிந்து விட்டேன். எனது வீட்டிற் புகுதற்கு நீ யார்? தலைவன்:- தெரிந்த மாலையும் அழகுமுடைய நல்லாய்! யான் செய்யாதவற்றைச் செய்தனவாகச் சொல்வது என்ன பயனைத் தரும்? பூக்கள் சூழ்ந்ததும் மிக்க நீர் பெருகும் கரையுடையதுமாகிய வையை யாற்றில் வருகின்ற நீரை யாடுதற்குத் தங்கினேன்: அதனை நின் நெஞ்சால் துணிதல் வேண்டும். தலைவி:- ஓ ஓ! நீ அவ்விடத்தே புனலாடினாய் என்றும் கேட் டேன். நீ ஆடிய புனல் கருமணல்போல் நீண்ட நெளிந்த மயிருடையது. கயல் மீனாகிய கண்ணையுடையது. கமழ்கின்ற பூக்களுடைய இருண்ட சோலை யிடத்தே நாணாகிய வரம்பையுடைத்து. இவ்வாறு பலருங் காணும்படி வந்த புதுப்புனலைப் பாணன் வாயிலாக ஊடல் தீர்த்து மாலைக் காலத்துக்கு முன்னே சென்று ஆடினாய். மென்மேலும் அருள் செய்து அமர்ந்த காதலோடே அப்புனலை ஆடினாய். அதனால் வெளிப்படும் அலரை யான் அறிதலை அஞ்சி மறைந்து வந்தாய். அதனைப் பிறர் சொல்லக்கேட்டேன். நீ செய்ததைப் பொறாத புதுப்புனல் உடம்பு முழுதும் கோபித்தது. புருவமாகிய திரையை இட்டது. சிலம்பொலிக்கும் அப்புதுப்புனல் நீ குளித்த விடத்தே உன்னைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றதையும் கண்டார்உளர். இங்ஙனம் இழுத்த நீர் உனது நல்ல தன்மையுடைய நெஞ்சை வாங்கிக்கொண்டது. அதனால் நீ அப்புதுப் புனலினின்றும் கரையேறு தற்கு இன்னும் கரையைக் காணாயாயினாய். தலைவன்:- நிரைத்த வளையணிந்தவளே! தப்பா வாட்படை யினையும் அழகிய வீரக் கழலணிந்த காலினையுமுடைய பாண்டியனது வையை யாற்றில் வந்த புதிய புனலை ஆடுதற்குத் தங்கியதை வார்த்தை யால் தெளிவித்தேன். இனித் தெய்வத்தாலுந் தெளிவிப்பேன். உனக்கு யான் செய்யாதவற்றைப் பெரிதாகச் சொல்லுகின்றது என்ன பயனைத் தரும்? பெரிய மலரைச் சூடின பொய்யுடைய புதுப்புனலை ஆடு மிடத்துத் தேருடன் சென்றாய். அப்போது முள்ளொத்த முறுவலுடைய பரத்தையர்க்கு மகிழ்ச்சியை உண்டாக்கி அகப்பட்டிருப்பாய் . உன்னைப் பிடித்துக் கரையேற விடுவாரில்வழி மணலுள்ள நீர் நிலையுள் அகப் படாதபடி உன்னைப் பாதுகாப்பாய். 34 அரசன் தலைவியை நீங்கி இருந்த விடத்துத் தலைவிபுலவி நீடித்து ஆற்றாளானால் அவ்விடத்து அவட்கு நிகழ்ந்த காமமிகுதியை அவ் வரசனை நோக்கிக் சான்றோர் கூறுகின்றனர். கள்ளை உண்டல் ஆகாதென நீக்கிய அசுரர்க்கும், அதனை உண்டலை நீக்காத சுரர்க்கும் விதித்தனவும் விதியாதனவுமாகிய இரண்டையுங் கொண்டு வியாழம் வெள்ளி என்னும் குரு இருவரும் நீதி வகுத்தனர். அவ்விதிகளை யுடைய அரசியலைக் கூறும் நூல்வழி பிழை யாது அரசர் ஆட்சிபுரிவர். அதனால் குழவியைப் பார்த்து இன்புறும் தாய் அதற்கு முலை சுரந்து பால் கொடுக்குமாறு போல, மழை தன்னை வேண்டின காலத்தே பெய்து உலகைக் காக்கும். இவ்வாறு எல்லாரையும் நடுவு நிலை திறம்பாது ஆளும் ஆட்சியையும், கொடி கட்டியதும் மணியணிந்ததுமாகிய தேரினையுமுடையாய்! நின் அழகிய குடையின் நிழல் அறம் செய்யுமென்று அதனை எடுத்தாய். அக்குடை நிழலின் புறத்தே இவள் அகப்பட்டாளோ? இங்ஙனம் பிறைபோலும் நெற்றிப் பசப்புப் பரப்பப் பெரிய நடுக்கமுற்ற இவளை இவ்விடத்தே அருளிப் பார்ப்பாயாக. உன் செங்கோலையுடைய உயர்ந்த நடுவு நிலைமையை உலகம் புகழ்ந்து கூறும். அச்செங்கோலின் இனிய செய்தொழிலுக்குக் கீழாகிய கொடுந்தொழிலின் கண் இவள் அகப்பட்டாளோ? இங்ஙனங் காமநோய் இறந்துபாட்டைச் செய்கையினால் உயிர் வாழ்தலை வெறுத்த இவளை இவ்விடத்தே அருளிப் பாராய். உனது கொட்டப்படுகின்ற முரசம் இவ்வுலகத்திற்குக் காவ லென்று கூறும்படி ஒலிக்கும். அம்முரசினது காவலினின்றும் இவள் நீங்கினாளோ? மூங்கில் போன்று அழகிய தோள்கள் அழகு கெடும்படி வருந்துகின்ற இவளை அருளிப் பார்ப்பாயாக. தூரத்தே இருக்கும் பொருள்களைக் காணும் கண்கள் தம்மிடத் துள்ள வடுவைக் காணமாட்டா. எனதுதோழியின் கை வளைகள் கழலும்படி நீ துறந்த கொடுமையானது சான்றோரால் கடியப்பட்ட வற்றுள் ஒன்றோ? 35 இதுவுமது நீ குற்றந் தீர்ந்த மாட்சிமைப்பட்ட ஒழுக்கமுடையை. ஞாயிறு கடலிடத்தே தோன்றி இருளைக் கெடுக்கும். அஞ்ஞாயிறு போலப் பகைவர் அஞ்சும்படி அச்சத்தைக் கொடுக்கும் நெஞ்சுடையை. உனது உயர்ந்த குடையைத் தமக்கு நிழல் எனக் கருதிச் சேர்ந்தவர்களுக்கு குளிர்ந்த கதிர்களை வீசும் சந்திரனை ஒப்பை. அகன்ற உலகில் உள்ளார் வணங்கிப் புகழும் ஒலிக்கின்ற முரசினையுடையாய்! அன்புற்று நீ உன்னைப் பிரியேன் என்று கூறினாய். அதனை விரும்பப்படும் வார்த்தையென உன் தலைவி தெளிந்தாள். அவள் நின் பிரி வினால் பல இதழ்களுடைய மலர் போன்ற கண்களில் நீர் நிரம்பும் நிலையளானாள். அரிய தவம் செய்வாரைப் போல யாவரிடமும் பொய்கூறாயென்று ஐயமற்று உலகம் உன்னைப் புகழ்கின்ற தன்மை உனக்குக் கெடாதோ? உன்னுடைய வாசமுள்ள மார்பை விரும்பினவள் மனவருத்த முற்றாள். அதனால் அவளுடைய அழகிய வளைகள் இறையினின்றும், கழல்கின்றன. மேகம் நீர் சொரிந்தது போல நின்னை இரந்தவர்க்கு அவரிரந்த பொருளை மாறாது அளிப்பாய் என்று உலகங் கூறும் வார்த்தை நினக்குக் கெடாதோ? நெஞ்சை வருத்தும் நினைவு வாட்டுகையால் நின் கருணையை விரும்பிக் கலங்கினாள். அவளது ஒளியுடைய முகம் பசப்பூரப் பெற்றது. அதைக் காணுமிடத்து, கூற்றுவனைப் போல எவரையும் உலகமுறையில் நிறுத்தின கோலாலே முறை செய்வையென்று உலகம் நின்னைக் கூறும் வார்த்தை நினக்குக் கெடாதோ? எவர்களுடைய வருத்தமும் களைகின்றமையால் இனிய முயக்கத்தை யுடைய பெரிய மார்பனே! நீ புணரும் துணை என்று கருதிச் சேர்ந்தவள் தனது இயற்கை அழகையும் இழந்தாள்; நீ இத்தன்மையாய் இரா நின்றாய்; இது நினக்குக் கொடியது என்று யான் நின்னைக் கோபித்தல் வேண்டுமோ? நீயே அளிப்பாயாக என்றாள். மருதக்கலி முற்றும். முல்லைக்கலி முல்லைத்திணை காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை. இந்நிலத்தவர்களின் குல தெய்வம் திருமால். முல்லைத் திணைக்கு உரிப்பொருள் (இருத்தல்) கலித் தொகையில் ஆயர் மைந்தர் ஏறு தழுவி இடைச் சிறுமியரை வரிக்கும் முறைமை கூறப்படுகின்றது. மற்றை அகப்பொருள் நூல்களில் இவ்வழக்குக் கூறப்படவில்லை. மனிதன் வேடனாயும் கானவனாயும் (குறவன்) வாழ்ந்த பின் காட்டிடத்தே குடியேறி மந்தைகளை மேய்த்துச் சீவனம் நடத்தும் வாழ்க் கையை ஆரம்பிக்கலாயினான். இடையர் உலகத்திலே இடம்விட்டு இடம் அலைந்து திரியும் கூடாரவாசிகளாயிருந்தனர். தென்னிந்தியாவில் ஆடுமாடுகள் மேய்வதற்கேற்ற புற்றரைகள் பெரிதும் இருந்தமையின் முல்லை நில மக்கள் வீடு வாயில்களமைத்து நிலையான வாழ்க்கை நடத்தினர். மனிதன் வேடனாயலைந்து திரிந்த காலத்தில் நிலையான மணங்கள் ஏற்படவில்லை. அக்காலத்தில் ஒரு பெண் பல புருடரை மணக்கும் ஒழுக்கம் உலகில் நிலவியது. இவ்வகையான ஒழுக்கம் திபெத் மலையாளம் இலங்கை முதலிய தேசங்களில்இன்றும் அருகி வழங்கு கின்றது. மனிதன் குன்றுகளில் வாழ ஆரம்பித்த காலத்தில் காதலர் மறைவிற் கூடிப்பின் மணந்து கொள்வதாகிய களவொழுக்கம் ஏற்பட் டது. காதல் மணங்கள், பிற்காலத்திற் பொய்யும் புரளியுமாக மாறின. ஆடவர் தாம் காதலித்துக் கூடிய மகளிரை வரைந்து ஓம்பாது கைவிட்ட னர். இத்தீமையை ஒழிக்கப் பெரியோர், காதலித்துக் கூடுவதன் முன்பே மணவினை ஆற்றிக் கொள்வதாகிய கலியாண ஏற்படுத்தினர். தலைவனும் தலைவியும் கலியாணம் ஆற்றி வீட்டின் கண் ணிருந்து இல்லறம் நடத்துதலாகிய ஒழுக்கம் முல்லை எனப்படும். முல்லைநிலத்தில், பெண்களுக்குச் சொத்து உரிமையாகும் வழக்கு மாறி ஆண்களுக்காகும் வழக்கு ஏற்பட்டது. முல்லை நிலத்தில் மக்கள் குடும்பங்களாக வாழ்ந்தனர். நிலங்களைச் சிறு சிறு கூறுகளாகப் பிரிப்பதால் ஆடுமாடுகளை மேய்த்தல் வில்லங்கமாயிருந்தது. ஆகவே அவர்கள் குடும்பங்களாக வாழலாயினர். பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு கிராமமாகும். செல்வமும் அதிகாரமுமுள்ள ஒரு குடும்பத்தின் முதியவன் அக் கிராமத்துக்குத் தலைவனானான். ஒவ்வொரு குடும்பத்துக்குரிய தலைவர்களும் இக்குடும்பங்களுக்கெல்லாம் மேலான ஒரு தலைவனும் சேர்ந்து கிராமத்தின் ஒழுங்கைப் பாதுகாத்தனர். இடையன் எப்பொழுதும் கையில் தடியை வைத்திருந்தான். அத் தடியே அதிகாரத்தைக் குறிக்கும் செங்கோலாகவும், இடையவனைக் குறிக் கும் கோன் என்னும் பெயரே அரசனைக் குறிக்கும் பெயராகவும் மாறின. அரசரைச் சந்து செய்வித்தற்கோ, பிறதேயத்திற்றன் கல்வியை மேம்படுத்தற்கோ, வேறெக் காரணமாகவோ பிரிந்து தலைவன், தான் வருவே னென்று தலைவிக்குச் சொல்லிச் சென்ற பருவகாலத்தே திரும்பி வருவதாகவும் தலைவன் கூறிச் சென்ற பருவகாலங் கண்டு இன்னும் தலைவன் வர வில்லையே எனத் தலைவி ஆற்றாமை மிகுவதாகவும், அவர் இப்பொழுதே வருவார் என்று தோழி கூறித் தலைவியை ஆற்றுவிப்பதாகவும் வரும் பாடல்கள் முல்லைத் திணையின் பாற்படும். வருவதாகப் புனையப்படும் பாடல்கள் எல்லாம் முல்லையும், செல்வ தாகப் புனையப்படுவன பாலையுமாகும். தலைவன் பாசறையிடத் திருந்து, தலைவி தனது வரவைக் காணாது எவ்வாறு வருந்துவளோ என்று நினைந்து புலம்புவதாக வரும் ‘பாசறைப் புலம்பலும் முல்லைத் திணைக்குரியது. முல்லைத் திணைக்குரிய பாடல்களில் இடையர் இடைச்சியரின் பழக்கவழக்கங்கள் நடைஉடை பாவனைகள் தெள்ளிதிற் கூறப்படு கின்றன. தமிழரின் சரித்திரத்தை அறிய வேண்டுமாயின் நாம் பழந்தமிழ் நூல்களைக் கற்கவேண்டும். 1 ஆயர் ஏறு தழுவினர். அதனைத் தோழி தலைவிக்குக் காட்டினாள். தலைவி அதுகண்டு வருந்தாதிருக்கும்படி அங்கு நேர்ந்த நன்னிமித்தத்தை அவளுக்குக் கூறித் தெளிவித்தாள். இந்நிமித்தத்தின் பயனைத் தலை வனுக்குந் தெரிவித்த தோழி பின்பு தலைவிக்குத், தஞ்சுற்றத்தினர் கூறி யிருக்குங் கூற்றினைக் கூறி, அவன் ஏறு தழுவி ஒருநாள் உன்னை வரைந்து கொள்வானெனக் கூறுகின்றாள்: மழையைப் பெற்ற குளிர்ந்த நிலத்தே முதல் மழை பெய்தது. முன் காய்ந்திருந்த பிடவம் அரும்பீன்றது. செங்காந்தள் ஈன்ற அகப்பை போன்று வளைந்த முகை நெருப்பை நிரையாக வைத்தது போல மலர்ந்தன. காயா நீலமணி போன்ற மலரை அலர்த்தி நின்றது. இப் பூக்களையும் பிற பூக்களையும் விரவத் தொடுத்த மாலைகளை முல்லை நிலக் காளையர் கழுத்திடத்தே அணிந்தனர். வலிய இடபங்களைப் பிடித் தடக்கினவருக்குத் தமது மகளிரைக் கொடுத்தற்கு ஆயர் எருதுகளின் கொம்பைச் சிவபெருமா னுடைய குந்தாலிப்படை போலக் கூராகச் சீவி வட்டமாக அடைக்கப்பட்ட தொழுவிடத்தே விட்டார்கள். அவ்விடத்தே, ஏறுகளைத் தழுவினார்க்குக் கொடுத்தற்கு நல்ல மகளிர் திரண்டு நின்றனர். ஏறுதழுவுதற்குத் துணிந்த ஆடவர், நீர்த்துறை யிலும் ஆலமரத்தின் கீழும் மராமரத்தின் கீழும் உறையும் தெய்வங்களைத் தொழுதனர்; தொழுது முழக்கம் போலவும் இடியைப் போலவும் ஆரவாரமுண்டாகவும், புகையொடு புழுதி எழவும் தழுவுதற்கு, எருதுகள் விடப்பட்டுள்ள தொழுவிற் பாய்ந்தனர். இவ்வாறு அவர்கள் தொழுவிற் பாய்தலும் தோழி தலைவியை அழைத்துக் காட்டிக் கூறுகின்றாள்; உயர்ந்த கரிய கொம்பை ஒத்த வண்டின் நிறமுடைய கரிய எருதின் பார்வையை அஞ்சானாய் ஆயன் அதன் மேற் பாய்ந்தான். அவனை எருது கொம்பாற் குத்தி எடுத்து உடலைக் குலைத்தலைப் பாராய். அத்தோற்றம் துரோபதையின் கூந்தலைக் கைநீட்டிப் பிடித்த துச்சாதனனது நெஞ்சைப் பிளந்து, சபையின் நடுவே தான் சொன்ன சபதத்தை வீமசேனன் முடித்தது போன்றிருக்கின்றது. சந்திரனைப்போன்ற சுட்டியை நெற்றியிலுடைய காரிமலையிடத் துள்ள பூவாற் கட்டிய மாலையை யணிந்த இடையனை எதிர்த்துக் குடர் விழும்படி குத்தி அலைக்கும் தோற்றம், உலக முடிவில், பசிய கண்ணை யுடைய உருத்திரன், வருத்தத்தைச் செய்யும் எருமைக் கடாவை ஏறும் யமனின் நெஞ்சைப் பிளந்து குடரைக் காளிக்கு உணவளித்தல் போன்றது. ஆயர் நேர்ந்துவிட்ட செவி மறுவாயிருக்கின்ற விளங்கும் நுண்ணிய சிவந்த பொறிகளையுடைய வெள்ளை எருதினது கோபத்தை அஞ்சானாய் அதன்மேல் பொதுவன் பாய்ந்தான். அவனை அவ்வெருது நெருக்கி முள்ளினது நுனிபோலும் முனையினையுடைய கொம்பா லெடுத்துக் குலைப் பதன் தோற்றத்தைக் காணாய். அத்தோற்றம் செல்லு தற்கரிய இருட்டில் அரிய இருள் என்று கருதானாய் வந்து துரோணா சாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலே வென்று கொன்று தன் தோளால் அவன் தலையைத் திருகும் அச்சுவத்தா மாவைப் போலும். (இங்ஙனம் தோழி காட்டக்கண்டு நம் கணவற்கும் இங்ஙனமா குமோ வென்று அஞ்சின தலைவியது அச்சத்தை, அவ்விடத்து நேர்ந்த நன்னிமித்தங்கண்டு போக்குவாளாகத் தோழி மேலும் கூறுகின்றாள்.) ஆயர் இவ்விடத்து ஊதுகின்ற குழல் நீலமணி போலும் காயாம்பூவாற் செய்த மாலையினை அணியும் இயல்பினையுடைய கணவரை நமக்குத் தருதற்கு நல்ல நிமித்தமாக இசைத்தது; நீ அஞ்சாதிருப்பாயாக. (தோழி தலைவனிடத்தே சென்று) “இவ்விடத்துக் கண்ட நிமித் தத்தை ஆராய்ந்து பார்க்கில் மதயானையிலும் பார்க்கப் பொல்லாத இடபத்தை நீ கை நெகிழ விடாது தழுவுவாய்; இப்பொழுது இவ்விடை மகளின் தோள் வீரமகளின் தோளிலும் பார்க்க வெற்றிக் கொடியை உண்டாக்கினவாம்” என்றாள்) (பின்னர் அவள் தலைவியிடத்துச் சென்று) ‘எம்முடைய செறிந்த கரிய கூந்தலையுடையவளைக் கொலை செய்யும் ஏற்றைத் தழுவினவர்க்குக் கூடுதற்குக் கொடுப்பேம்’ என்று நமர் கூடிக் கூறியிருப்பர். அப்பொழுது அலர்ந்த கண்ணியுடைய நின்காதலன் தோளிலோ கோல்வைத்த கையுடையனாய் ஏறு தழுவினவர்க்குப் பக்கத்தே நிற்பான். யான் முற்கூறிய நிமித்தமேயன்றித் தலைவனைக் கண்டு என் கண்கள் துடிக்கையினாலே “ ஏறு தழுவ வல்லார் என்னை ஒப்பார் பிறர் இல்லை யென்று நம்முடைய பசுத்திரளில்லை யென்று தலைவன் தனது வீரத்தைக் கூறுவன். பின்பு அவன் ஒருநாளில் ஆயினும் ஏறு தழுவி நம்மைத் தனக்கு உறவாக ஆளுந்தன்மை உடையன் ஆகாமை இல்லை. அவ்விடத்து ஏறுகளும் வருந்தின; தழுவிய இடையரும் புண்மிகுந் தார். தம்மைக் கொள்ளுதற்கு நின்ற இடையரோடு தாம் புணர்தற்கு வேண்டும் நிமித்தங்களைப் பெற்றுக் கரிய கூந்தலுடைய இடைமகளிர் முல்லையுடைய குளிர்ந்த பொழிலிடத்தே விளையாடுதற்குப் புக்கார். யாமும் பொழிலிடத்தே விளையாடுவேம்: வருவாயாக. 2 இது, ஆயன் தலைவனாய் ஏறு தழுவினமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது. தலைவன்:- பெரிய ஆகாயத்தினின்றும் பெரிய மழை பெய்யும். அம் மழை படுதலினால் குளிர்ந்த வாசமுள்ள பிடவமும், படர்கின்ற முல்லையும், நிறமுடைய அழகிய தோன்றியும், பிரகாசிக்கும் கொத் துடைய கொன்றையும் இவைபோல்வன பலவும் பூக்கும். இப்பூக்களை யும் தழைகளையும் வைத்து கட்டின மாலைகளை அணிந்து அழகிய மொழியினையுடைய ஆயத்தார் விளையாடுவர். அவ்வாயத்தாருள் நின்று, உடம்புடன் என் உயிருக்குள்ளே புகுந்தவள் யாராய் இருத்தல் கூடும்? பாங்கன்;- ஓ ஓ! இவளுடைய சுற்றத்தவர் பொருகின்ற நல்ல ஏற்றைத் தழுவுகின்றவர்கள் அல்லார். இவள் மாந்தளிர் போலும் மேனியைச் சேரமாட்டார்கள். என்று பலரும் கேட்கும்படி பல முறையும் கூறிக்கொண்டு வரப்பட்டவளாவள். தலைவன்:- அவ்வாறாயின் நீ அச்சுற்றத்தாரை நோக்கி இவன் ஏறு தழுவி இவளைக் கொள்வனென்று கூறுக. பாங்கன்; அவள் சுற்றத்தாரிடம் சென்று ஏறு தழுவுதற்கு நாங்கள் தாமதித்திரேம் என்றான். அதுகேட்டு அவள் சுற்றத்தார் அழகிய ஆபரணங்களை உடையவள் பொருட்டு ஏறு விடுகின்ற விழாவுக்கு இவனேயன்றி மற்றும் ஏறு தழுவுவார் உளராயினும் வருகவென்று பறையறைமின் என்றார். பெடையை ஒத்த பெண்கள் தங்கள் கண்கள் நிறையும்படி இவ் விழாவினழகை நின்று பார்க்க எல்லா இடமும் பார்க்கும் பரணைப் பெறு வார்களாகில் அது தகுதிப் பாட்டையுடைய தென்றார் (கண்ட சுற்றத்தார்). அழகிய பலவகையான அவ்வேறுகளின் மேலே பாய்தற்கு ஒருமித்து ஆரவாரஞ் செய்து ஏறுகளின் எதிரே எதிரே பலருஞ் சென்றார். அப்பொழுது அவ்வேறுகள், கொலைத் தொழிலுடைய வில்லு களைப் போன்ற கொலையைச் செய்யும் சினம் மிகுந்து அவர் மேலே ஓடின. அப்போது புழுதி எழுந்தது. அவர்களும் மார்புகளை எதிரே கொடுத்தார். அவற்றின் கொம்பு களும் கவிழ்ந்து குத்தின. அதனால் தழுவினவர் பலரும் கலங்கிப் போனார்கள். ஏறு தழுவ வந்தவருள் பூமாலை அணிந்தவனும் நீலமணி போன்ற நிறத்தையுடையவனுமாகிய பெருமையுடைய ஒருவன், தோள்களாலே ஏற்றின் கழுத்தை இறுகத் தழுவி அதன் ஏரியிடத்தே தோன்றினான். அவன் அங்ஙனம் தோன்றி அவ்வேற்றினை முற்றாக வருத்தினான். ஏற்றையுடைய நல்லவர்கள் ஏற்றின் வருத்தத்தைக் கண்டு எழுந் திருந்தார்; அவன் தழுவினதற்கு மகிழ்வதன்றிப் பகையாதல் என்ன பயன் தருமென்றார். முதல்நாள், கொல்லும் ஏற்றின் கழுத்திலே தங்கினவர்களைக் கண்டும், மீண்டும் வருத்துகின்ற ஏற்றைத் தழுவும்படி விளம்பரம் செய்து (சாற்றும்) யாம் மக்களின் தன்மையை அறியாதவர்களே. இப்பொழுது அவ்விடத்துச் சிறுகுடியின் மன்றத்தில் குரவைக் கூத்து ஆடப்பட்டது. அக்கூத்தினுள், விளங்கும் கண்ணியும், வலிய தோளும், வலியும் மாயமும் உடைய போர்த்தொழிலும், கரிய மேனியும், அழகிய துவர் ஊட்டின ஆடையுமுடைய பொதுவன் தோளையும் ஆராய்ந்த முறுவலையும் கொண்டாடி ஏறுதழுவின புகழ் பரந்தது; இனிய மணஞ் செய்தற்கு மத்தளத்தில் தாளந் தளராமல் எழுப்புவார் களாக (எனக் கண்ட சுற்றத்தார் கூறினார்) ஏறு தழுவுதல், திரிபன்றி எய்தல் முதலியன அசுர விவாகத்தின் பாற்படும். 3 ஆயர் ஏறு தழுவுகின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனி காட்டிப் பின்னர் ஏறு தழுவுகின்றமையையுங் கூறினாள்; கூறி ஆண்டு யாமுஞ் சென்று நின்னை ஏறு தழுவிக் கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு ஏறு தழுவிக் கொள்ளுமாறு, நமது சுற்றத்தார் கூறுகின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப்பாடிக் குரவை யாடி வழுதி வாழ்கவென்று தெய்வம் பராவுதும்; நீயும் அங்ஙனம் பாடுதற்கு வருவாயாக எனக் கூறுகின்றாள்; மலையிடத்தும் காட்டிடத்தும் கொன்றை காயா சிறிய இலை யுடைய வெட்சி பிடவம் முல்லை. கஞ்சம் குல்லை குருந்து கோடல் பாங்கர் முதலிய மரங்களும் செடி கொடிகளும் பூத்திருக்கும். இவற்றின் முகைகளாற் கட்டிய மாலைகளைக் கொண்டையிற் சூடினவர்களும், முல்லை முகையும் மயிலிறகின் அடியும் நிரைத்தால் ஒத்த பல்லினை யுடையவர்களும் மடப்பமுடைய சொல்லினை யுடையவர்களும் பொன்னாற் செய்த மகரக் குழையை யணிந்த காதினருமாகிய ஆயர் மகளிர் வந்து பரண் (மேடை) மீது நின்றார். இவ்வாறு ஆயர் மகளிர் பரணிடத்தே நின்றனர். வெள்ளைக் கால்களையுடைய அழகிய கரிய ஏற்றையும், அந்திவானத்தில் வெள்ளி பூத்தாற்போன்று சிவந்த புள்ளியுடைய ஏற்றையும், சிவபெருமான் சூடிய பிறைபோன்று வளைந்த கொம்புடைய சிவந்த ஏற்றையும், போர் செய்யும் வலிமையினையுடையவும் புகழப்படுகின்றனவுமாகிய பிற ஏறுகளையும் ஆயர் தொழுவினுள் விட்டனர். அவ்வேறுகள் வளைத் தடைக்கப்பட்ட தொழுவிலே விடப்பட்டமை. சிங்கமும், குதிரையும் களிறும் முதலையும் மழை முகில்கள் திரியும் மலைச் சிகரத்திலுள்ள குகையில் திரண்டு நின்றதை ஒத்தது. அத்தொழுவினுள்ளே அவ்வேறுகளைத் தழுவுதற்கு விரும்பிக் குதித்த பொதுவரைத் தெரிந்து தெரிந்து அவ்வேறுகள் குத்தின. அவை குத்தின போது பகை எருதுகளுடன் பொரும் இரத்தந் தோய்ந்த கொம்புகளில் குடர்கள் சுற்றிப்பிணித்தன. அத்தோற்றம் நெருப்புச் சுற்றி விளங்குகின்ற குந்தாலிப்படையையுடைய சிவபெரு மான் சூடிய பிறை யிடத்து கிடந்த சிவந்த நிறமுடைய மாலைபோன்றது. அங்ஙனம் கொம்புகளோடே சுற்றிக் குடர்கள் கொளுவுண்ட ஏற்றின் முன்னே நின்று ஆடி அக்குடரை இரண்டு கையாலும் வாங்கி ஒருவன் வயிற்றிலே இடுகின்றான். அத்தோற்றம் சிவந்த நூற்கழியை ஒருவன் இரண்டு கையினாலுங் கோத்துப்பிடித்திருக்க அந்நூலை மூன்று நூலாகக் கொள்ளு கின்றவனை ஒக்கும். (இவனுடைய பெருமையைப் பாராயென்று தோழி தலைவிக்குக் காட்டினாள்.) போரை விரும்புகின்ற ஏற்றின் முரடான கழுத்திலே பாய்ந்து அதற்கு இட்ட மாலைபோல அதனைத் தழுவினவன் எருமைத்திரளை யுடைய ஆயர் மகனல்லவோ? ஆதலான் இனி அது தன் வலியை மீளப்பெறவிடான், இளையோளே! இஃதொருவலியைப் பாராய் ( என்று காட்டினாள்.) மறுவினையுடைய ஏற்றின்மீது இருந்து அதனை ஆட்டி விட்டுப் பின்னர், நீர்த்துறையிடத்துத் தெப்பத்தின் மேற் கிடந்து அதனைத் தள்ளு கின்றவனைப் போலே தோன்றுகின்றவன் பசுத்திரளையுடைய ஆயர் மகனல்லவோ? ஆதலால் இவன் இங்ஙனம் செலுத்தும் தொழிலை ஒழியான்; இளையோளே! இவ்வலிமையைப் பாராய்! இவனும் ஒருத்தன் காணாய், ( என்று காட்டினாள்) எருமை ஏற்றை ஏறுகின்ற இயமனுடைய நெஞ்சை வேலாற் பிளந்து சினத்தோடு அவன் உயிரை வாங்கினபோது சிவபெருமான் இவ்வாறிருந்தார் என்று கூறும்படி காற்றுப்போல விசையாகக் கரிய ஏறு ஓடிவந்தது. அதனைப் பலரும் வந்து சேர்ந்த களத்தே வலியடங்கத் தழுவி அதன் மேலே ஏறி இருக்கும் பொதுவனுடைய அழகைப் பாராய். அதைக்கண்டு என் நெஞ்சு திடுக்கிட்டது (என்றாள்). மற்றைப் புள்ளிகள் நெருங்கிய வலியவெள்ளை எருதின் அழகிய பக்கத்தே, சந்திரனிற் கிடக்கின்ற மறுப்போலக் கிடந்தவன் ஆட்டி னத்தை யுடைய ஆயர் மகனல்லவோ? இவ்வொப்பில்லாதவனது வலிமையைப் பாராய். கஞ்சன் முதலியோர் வரவிட்ட கழுத்தின் மயிரினையுடைய குதிரையை, வாயைப் பிளந்து போகவிட்டுக் கையால் அடித்தபோது கண்ணன் இத்தன்மையாக இருந்தான் என்று கூறுவதுபோல நீங்காத கோபத்தோடு சினந்து தன் மேற்சென்ற சிவந்த ஏற்றைச் செவியடியிற் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு அதன் வலியைத்தான் பெற்றுத் தழுவும், காயாம் பூக்கண்ணியையுடைய பொதுவன் அழகைப் பாராய். அவனைக் கண்டு என் நெஞ்சு திடுக்கிட்டது. ஆயர் சூடிய மயிலின் கழுத்துப்போன்ற காயாம்பூவால் செய்த கண்ணிகள் பவளம் போல் நிறமுடைய செம்பாட்டு நிலத்தே விழுந்து கிடக்கும். ஆயர், பெரிய புலிக்கூட்டமும் யானைக் கூட்டமும் தம்மில் மாறு மாறாய் பொருதாற் போலப் பொருது ஏற்றைத் தழுவிக்கொண்டு ஒருமித்துத் தொழுவை விட்டுப் போனார்., அவர் போன போதே நெருங்கிய இதழ்களை யுடைய மலர்போன்ற கண்களையுடைய காதலை யுடைய மகளிரும் அவர் கணவரும் பூந்தாதாகிய எருவையுடைய மன்றத்தே குரவைக் கூத்தாடு வார்கள். அப்போது யாமும் சென்று அக்குரவைக் கூத்திற் சேர்ந்து கொள்வேம். சேர்ந்து கொல்லும் கொம் பிற்கு அஞ்சும் பொதுவனை மறுபிறப்பிலும் ஆயர் மகள் தழுவாள். ஆயர் மகள் தோள்கள், உயிரைத் துறக்க அஞ்சாராய் ஏற்றைக் கொள் பவரைச் சேர்வனவாகும். ஏறுதழுவுதற்கு அஞ்சினவர்கள் அவற்றை அடைதல் அரிது. உயிரை ஒரு காற்று என்று உணராது அதனைக் காத்துக் கொண்டு ஏற்றின் மருப்புக்கு அஞ்சும் நெஞ்சுடையவர்கள் சேர்தற்கு ஆயர் மகளிரின் தோள்கள் எளியனவாயிருக்குமோ? கொல்லும் ஏற்றின் கொம்பினிடையே தாம் விரும்பும் மகளிருடைய மார்பின் முலையிடை யிலே விழுமாறு போல, வீழில் எம்முடைய இனத்தில் ஆயர் தத்தம் மகளிர்க்கு முலை விலை வேண்டார். இவ்வாறெல்லாம் நம் சுற்றத்தார் கூறும் முறைமையைப் பாடிக் குரவைக் கூத்தாடுவேம். குற்றமில்லாத அழகை யுடைய கடலிடத்தே பரந்துகிடக்கின்ற பழைய நிலத்தையாளும் உரிமை யோடு பொருந்தின எம்முடைய பாண்டியன் இந்த அகன்ற உலகின் கண்ணே வாழ்வானாக என்று அவ்விடத்துப் புகழுடைய தெய்வத்தை வாழ்த்துவேம். நீயும் அங்ஙனம் பாடுதற்கு வருவாயாக. 4 தோழி, ஏறு தழுவியதைத் தலைவிக்குக் காட்டி இக்குரவையுள் அவனைப் பாடுவோம் வாவென்றாள். அதற்கு உடன்பட்ட தலைவிக்குத் தமர் நின்னை அவற்குக் கொடுக்க எண்ணியிருக்கிறார்களென அவள் கூறுகின்றாள்: பாண்டியனது நாட்டைக் கடல் கொண்டது. அவன் இழந்ததனது நாட்டுக்குப் பதிலாக சேரர் மீதும் சோழர் மீதும் படை எடுத்துச் சென்று அவர்களது விற்பொறியையும் புலிப்பொறியையும் அவர் நாட்டினின் றும் போக்கி மீன் பொறியை அவ்விடங்களிற் பொறித்தான். அப்பாண்டி யனது பழைய புகழை நிலை நிறுத்தின குடியோடு ஒக்கத் தோன்றிய பசுக்கூட்டத்தையுடைய ஆயரெல்லாம் ஒரு மிக்கத் திரண்டனர். உயர்ந்த பனைக் கொடியுடைய பல தேவன் போல வெள்ளை நிறமுடைய ஏற்றையும், பொற்சக்கரப்படையையும், திரு ஆகிய மறுவையுமுடைய திருமாலைப் போன்ற கரிய ஏற்றையும், விளங்குகின்ற நீண்டசடையை யும், ஒரு பாகத்தே பிறைபோன்ற நெற்றியுடைய உமாதேவியாரையும் மூன்று கண்களையுமுடைய கடவுள் போன்ற கபில நிறமுள்ள ஏற்றையும், பெரிய கடல் கலங்கும்படி உள்ளே சென்று மாமரத்தை வெட்டின வேலையுடைய முருகனது நிறம் போலச் சிவந்த ஏற்றையும், இவை போன்ற பிற ஏறுகளையும், மேகங்கள் திரண்டு முழங்குவது போல முழங்கும்படி தொழுவிலே புகுத்திவிட்டார். இணையில்லாத வெள்ளை ஏற்றின் கழுத்திலே கிடக்கும் அவன் கூரிய எயிற்றினையும் அழகினையுமுடைய இவளைக் கூடும். கூரிய கொம்புடைய கரிய ஏற்றின் கோபத்தை அஞ்சாது அதனைத் தழுவுமவன், இந்த ஒள்ளிய ஆபரணங்களை யுடையவ ளுடைய வாரிய கூந்தலிலே துயிலப் பெறுவன் கபில நிறக் கண்ணுடைய கொல் ஏற்றைத் தழுவுமவன் அஞ்சுகின்ற மானின் நோக்குப் போலும் நோக்கினையுடைய இந்த நல்லாளைக் கூடும். கொடிய வலிய சிவந்த ஏற்றின் கோபத்தை அஞ்சாது அதனைத் தழுவுமவன் அரும்புடைய காதணி பூண்டவளது மூங்கிலொத்த மிருதுவான தோளிலே துயிலுதலைப் பெறும். இவ்வாறு கூறி நல்ல ஆயர், அச்சுவினி முதலிய மீன்களாற் சூழப் பட்ட சந்திரனைப் போலத் தம்மகளிரை அவ்விடத்திலிட்ட பரண்களின் மீது திரளாக நிறுத்தினார். (மீன்-சேடியருக்கும், மதி-மகளிர்க்கும் உவமை) (புகை) வலம் வரும்படி புகைகாட்டி விடப்பட்ட ஏறுகள் பறை மிக ஒலிக்கையினாலும், பலர் ஆரவாரிக்கை யினாலும் வலிகுறையாத ஆயர் தழுவுதற்கு எதிரே ஏற்று நின்றன. ஆயன் ஒருவன் ஏறு தழுவவேண்டி மேடையினின்றும் இறங்கி அதனைவிட்டுச் சென்று வேலின் முனைபோன்ற கூர் உடைய கொம் பிற்கு அஞ்சாதவனாய் பால் போன்ற வெள்ளை ஏற்றின் கழுத்துமீது பாய்ந்தான். அவனைச் சென்று குத்தும் ஏற்றின் தோற்றம் பால்போலும் மதியையும் அதனைச் சேர்ந்து மறைத்த பாம்பினை விடுவிக்கும் நீலவண்ணனையும் (திருமாலை) ஒக்கும். (அதனைப்பாராய் என்றாள்) ஒரு ஏறு, பலரும் எழுந்து சிதறி அவ்விடத்தை விட்டு ஒருமித்து ஓடும்படி தழுவியவனை எலும்பு முறிந்து குடர்கள் அற்றுச் சாயும்படி குத்தும். குத்தியபின் தன் கொம்பின் வலிமை கெடும்படி அவனை ஆட்டிக் கொண்டு திரியும்; திரிந்து துகைக்கும். இவ்வாறு குறையாத கோபத் தினையுடைய ஏறு, அச்சம் உண்டாக்குதற்கு ஏதுவான மருந்தைப் புகைக்க அதற்கு வெகுண்டு திரிகின்ற களிற்றை ஒக்கும். இதனைப் பாராய். தோள் வலியாலே ஏற்றைத் தழுவச் சென்று அதனைத் தழுவித் தவறி அதன் முன்னே வீழ்ந்தவன் முன் செல்லாமல் திரும்புகின்ற ஏறு, போரிற்றன் கையில் வாளோடே அகப்பட்டவனைத் தனக்கு ஒவ்வா னென்று வெட்டாமல் மீளும் போர் வீரனை ஒக்கும்; இதனைப் பாராய். கொம்பை மார்பிற் கொடுத்து ஏற்றுக்கொள்வார் சிலர். சிலர் மேலே பாய்ந்து ஏறுவர். சிலர் கொம்புகளின் இடையே புகுந்து புகுவர். ஏறுகள், தழுவுவாரை விலகிக் கோபித்து எதிரே நிற்கும். அதனை பொறாத ஆயர் விலக்கும் ஏறுகளைத் திரும்பத் திரும்பச் சென்று தழுவுவர். அதனாலே எலும்புகள் முறிந்து முறிந்து தசைகளற்றுக் கிடக்கும். இடியை ஒத்த ஏற்றின் முழக்கோடு வாச்சியங்கள் மிக்கு ஆரவாரிக்கும். இவ்வாறுள்ள அத்தொழு, போரை விரும்பி மேலே சென்ற துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன் முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தை ஒக்கும். அத்தொழுவிடத்துத் தழுவிக் கொண்ட ஏறுகள் எல்லாம் மேயும் நிலத்தே போகும். மிக்க அழகினைக் கண்டவரின் கண்களை கவரும் அழகினையுடைய ஆய்ச்சியரும் ஆயரும் வளப்பமுடைய ஊரிடத்தே குரவையாடுவர். ஆயருடைய கொல்லேற்றின் கொம்புகள் தழும்பு படுத்திய மார்பைப் பாடுவேம். வாருங்கள் எனத் தோழி தலைவியையும் ஆயத்தையும் நோக்கிக் கூறினாள். தலைவி:- நெற்றியிலே சிவந்த சுட்டியுடைய ஏற்றின் வெற்றியைத் கெடுத்தவனது நீண்ட மார்பிலே, பகைத்து அலர் தூற்றுகின்ற மகளிர் நம்மை இகழ்ந்து பார்க்குங் கண்கள் இகழ்ந்து பாராது இருக்கும்படியாக யான் சாராமல் இரேன் (மார்பைச் சாராமல் இரேன் என்றவாறு) இனி யான் பசுவை யுடைய ஆய்ச்சியர் அலர் கூறுவதற்குப் பெரிதும் வருத்த முறேன். ஆயத்தோடே நாம் ஆடும் குரவைக் கூத்திலே ஆயர் மகன் நம்மை அருமை செய்தான் போலே நோக்கி நமக்கு வருத்தத்தைத் தரும் நோய் செய்தல், தான் கொல் ஏற்றைத் தழுவினான் என்னும் செருக்கினால் அல்லவோ? அது வேறொன்றன்று. தோழி:- அழகிய ஆபரணங்களையுடையவளே! தழுவுதற்கரிதாக நம் சுற்றத்தார் நிறுத்தின கரிய கொல் ஏற்றின் கோபத்தை அஞ்சானாய்த் தழுவின பொதுவனுக்கே, எமது சுற்றத்தார் மகிழ்ந்து, மிகவும் அலர் கூறும் ஊரிலுள்ளர் வெட்கும்படி, நின்னைக் கொடுக்க இயைந்தார். இனி வருந்தாதொழி. இடியேற்றை ஒத்த முரசுடைய பாண்டியனுக்கு இவ்வுலகு ஒருமிக்கச் சொற் கேட்பதாக என்று கூறி, அவ்விடத்தே, ஒள்ளிய சக்கரப்படையுடை யானை வாழ்த்துவதற்கு நீயும் வருக. 5 தலைவன் ஏறு தழுவும் தன்மையைத் தோழி, தலைவிக்குக் காட்டி, அவள் தலைவனை விருப்போடு நோக்கியதைத் தன்னுள்ளே கூறினாள். கூறி முன்னர்க் களவின்கண்தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந் ததையும் எடுத்துரைத்தாள். தலைவியும் அவர் அலர் கூறியது நன்றென்று கூறி, இன்றே என் நெஞ்சு கலந்து விட்டது. இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளிற் செய்வதென்ன? என மகிழ்ந்து கூறினாள். அது கேட்ட தோழி யாம் கூடி இனிதிருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடுவாழுமாறு தெய்வத்தை வாழ்த்துவேம் வா என்று கூறுகின்றாள்: அரசன் போர்க்களத்தே படும்படியாகவென்று முறைமையாற் கொண்டுவந்த செல்வத்தையுடையது பாண்டியனுடைய பழையகுடி. அக் குடிக்குரிய பாண்டிமண்டலம் பயந்த விளைவுகளும், கடலில் விளைந்த முத்தும், மற்றும் பயந்த பொருள்களும், மூன்று முரசமும் உடைய முதிய குடியிற் பிறந்த அச்செல்வனுக்குத் தீதின்றி மங்கள முண்டாவதாக. இவ்வாறு நினைந்து தெய்வத்திற்குச் சிறப்புக்களைச் செய்தற்கு அவனுடைய கேடில்லாத குடிக்குப்பின் தோன்றிய பெரிய குடியிற்பிறந்த ஆயரும், உவகை யுடையராய் ஒருங்கே கூடினர். கூடி ஏறு தழுவுமிடத்துப் பிறர்க்குத் துன்பம் நிகழும் என்னும் வருத்தமில்லாத உள்ளத்தாராயினர். அவர்கள் ஏறுகளை ஆராய்ந்து, பெரிய சக்கரப் படையையுடையவன் ஊதிய சங்குபோலத் தெளிவாக விளங்கும் நெற்றிச் சுட்டியையுடைய கரிய ஏற்றையும், பலதேவனின் மார்பில் விளங்கும் சிவந்த மாலை போல ஒளி விடும்படி நீண்டு பொருந்திய சிவந்த மறுவினையுடைய வெள்ளிய ஏற்றையும் பெரும்புகழுடைய குந்தாலிப்படையுடையவனது நீல மணிபோல திருமிடற்றின் அழகு போலக் கரிய கழுத்தினையும் உயர்ந்த ஏரியையும் உடைய கபிலநிற ஏற்றையும், முருகனுடைய தாழ்ந்த உடைபோல விளங்கும் வெள்ளிய கால்களுடைய சிவந்த ஏற்றையும், காலனது வலியை ஒத்த வலியுடைய பிற ஏறுகளையும் தொழுவிடத்தே விட்டனர். அவை, பல்லுயிர்களை உண்ண வேண்டி அவற்றை விடாமல் ஊழி முடிவிற்றிரியும் ஊழித்தீயும் குந்தாலியும் காலனும் கூற்றுவனும் போலச் சுழன்று திரிந்தன. காலன் - கூற்றுவன் ஏவலாளன் அவர்கள் புகவிட்டபோது கார்கால இடிபோல வாச்சியங்கள் ஒலித்தன. ஏறுகள் அசைந்தெழுகின்ற மேகம் போலப் புகை மூச்செழா நின்றன. புற விதழ் ஒடிந்த மணமுடைய ஒத்த இதழாற்கட்டின மாலை யணிந்த மகளிர் நிரை நிரையாக நின்றனர். கோபத்தொனி செய்யும் பொதுவர் கண்ணை மறைக்கின்ற புழுதி வானத்தே சென்று சேரும்படி தொழுவிற் பாய்ந்தனர். அங்ஙனம் பாய்ந்த ஆயர் கொம்பைப் பிடித்துக் கொண்டும், மார்பு பொருந்தும்படி தழுவிக்கொண்டும் கழுத்திலே அடங்கிக் கிடந்து ஏரி முறியும்படி தழுவியும், தோளுக்கு நடுவே கழுத்தைப் புகுதவிட்டுப் பிடித்தும், கொம்புகள் தம்மேலே படுதலை ஏற்றுக்கொண்டும் நிரைத்துச் சென்றனர். அவ்வேறுகள் பின்னர் ஆயரைக் கீழே வீழ்த்தி நீண்ட மருப்புத் தைக்கும்படி குத்திஅவர்கள் தழுவுகின்ற கழுத்தைத் தழுவக்கொடாதே அவற்றை நீக்கி நின்றன. அவ்வாறு நிறுத்திய பின்னுஞ், சென்று சென்று தழுவுவாரைக் கேட்டாற் சாவும்படி குத்திப் பின்பு தழுவுவாரைப் பெறாமல் நின்ற சிவந்த ஏறு உயிர்களைப் பின் சென்று உண்ணும் கூற்றுவனைப் போலும். (அதனைப் பாராய் என்றாள்.) சிவந்த ஏற்றினுடைய கரிய கொம்புகள் படுதலை மார்பிலே ஏற்றவர்களைக் கொம்புகளாற் குத்தி, மேலே தூக்குதலால் குருதி ஒழுகும், அதனால் நனைந்து அசையும் பல திரண்ட சிறிய மணிகள், ஒளியமைந்த நறாம்பூவின் முகை விரியும் பருவம் பார்த்து அதனைச் சூழ்ந்து திரியும் தும்பிபோலும். (அதனைப் பாராய் என்றாள்) நடுவே பாய்ந்து சென்று கழுத்தைத் தழுவிக்கொண்டு கிடந்தவ னோடு ஒரு வெள்ளை ஏறு பரணிற் தாவிப் பாயும், அது, பாம்பாற் சிறிது விழுங்கப் பட்ட மதி பாம்புடன் ஒளியுடைய விசும்பில் செல்கின்றது போலும். (இதனைப் பாராய்) கழுத்தை மறைக்கும் ஏரியினையுடைய ஏற்றைத் தழுவின பொதுவன் முகத்தை நோக்கி ஆய்ச்சாதியிற் பிறந்தவளுடைய கண்கள் இமையா திருந்தன. நறிய நுதலினையுடையாய்! நீ ஐவகைப்பட்ட கூந்தலை ஆற்றினாய். அது வெண்ணெயின் நாற்றம் நீங்கிச் சிறிய முல்லைப் பூவின் நாற்றம் மிக நாறிற்று. அதற்கு நம்முடைய சுற்றத்தார் விரும்பாது மனஞ்சுழன்று அவன் தழுவின கொல்லேறுபோற் கோபித்தனர். அன்று அவர் கோபித்ததால் என்ன பயன் உண்டாயிற்று? நெடிய கரிய கூந்தலையுடையாய்! இன்னும் யான் கூறுகின்ற ஒரு வார்த்தையை ஆராய்ந்து பார். கொம்புடைய எருமைகளை வைத்திருக் கும் ஆயர் மகனோடே யாங் கூடியதற்கு எம்முடைய சுற்றத்தார் இன்னும் பொறுப்பர். அதனைப் பொறாத அயலாருடைய கண்கள் எங்கள் கண்களை நோக்கித் தீந்துபோயினது என்ன பயனுடையது? தலைவி:- ஒள்ளிய நெற்றியுடையாய்! ஆய் தன் கண்களால் கோபித்துப் பார்த்து என்னை வருத்தினாள். அதற்கு இவ்வூர், என்னை மலர் அணிந்த கண்ணியையுடைய பொதுவனோடே கூட்டமென் றெண்ணி அலரை உண்டாக்கி விட்டது. இவ்வகையான மகிழ்ச்சி நமக்கு வேறு யாதுதான் இருக்கின்றது? ஒள்ளிய ஆபரணமுடையாய்! தன்மேல் மிகச் சென்ற சிவந்த கரிய ஏற்றினுடைய கொம்பிடையே இன்று இவன் செல்ல என் நெஞ்சம் உடன் சென்றது. இனி நஞ்சுற்றத்தாரெல்லாரும் பொருந்திப் பசுத்திர ளுடைய ஆயர் மகனுக்கு என்னைக் கொடுப்பதாக முடிவு செய்த அந்நாளிற் கொடுக்கின்றது என்ன பயனுடையது? தோழி:- யாம் இல்லறம் நடத்தி இனித்திருக்குமாறு பாண்டியன் காப்பான். பிறநாடுகளை வென்று வெற்றி முரசினையுடைய அவன் அருவி ஆரவாரிக்கும் இமயத்திற்கு வடக்கிலேயும் சென்று விளங்குவா னாக என்று நினைந்து, கடலிடத்துப் பாம்பணைமேற் பள்ளிகொண்ட வெற்றிச் சக்கரத்தை யுடையோனை வாழ்த்துவேம். 6 தத்தம் பசு நிரை இனத்தைத் தத்தம் மேய்ச்சல் நிலத்துக்குப் பிரித்துச் செல்லச் சென்றவர் ஏறுகளைக் கொண்டமை கண்ட ஆய்ச்சியர். தங்காதன் மிகுதியால் தங்காதலரைக் கைபிணைத்துக் குரவையாடித் தென்னன் வாழ்க என்று பாட்டுப் பாடுகின்றனர்: ஆயர் பால் கறத்தற்கு இடும் சீவிச் செய்த கழுவோடு கறவைக் கலங்களை உறியிடத்தே வைத்தும், தோற்பையிடத்தே சூட்டுக்கோல் களையும் இட்டுச் சுருக்கிச் செல்வர். செல்லும்போது நீளமான கொன்றைக் காயைப் பிளந்து செய்த குழலை இனிமையாக ஊதுவர். திருந்தாத சொல்லினையுடைய அவர்கள் தத்தம் பசுக்கூட்டங்களைக் கார்கால மழையால் நனைந்த அகன்ற மேய்ச்சல் இடத்தே கொண்டு சென்றனர். (கழுவாது கறத்தற்கரிய பசுக்களைக் கறத்தற்கு இரண்டு தலையுஞ் சீவி மாலையாகக் கட்டிக் கழுத்தில் இடுவது.) அவ்விடத்தே முன்பு காலால் வெட்டிப் புழுதியை எழுப்புவன வும், இப்பொழுது மழை பெய்தமையால் கொம்பால் மண்ணை உழுகின்றனவுமாகிய விளங்குகின்ற ஏரியையுடைய ஏறுகள் ஒன்றை ஒன்று பகைத்து முழங்கிக் கொண்டும் மிகப் பாய்ந்து கொண்டும் போர்க்களத்திற் செல்லும் வீரரை ஒத்தன. அவ்வேறுகள் ஒன்றை ஒன்று தாக்கிப் பின் வாங்கிப் பின் சேர்ந்து கொம்பாலே எல்லா விடத்தும் குத்துகையினால் மெய்யினின்றும் வடிகின்ற இரத்தமுடைய ஏறெல்லாம் விடியற்காலையில் பெய்கின்ற மேகக் கூட்டங்களை ஒத்தன. பசுக் கூட்டங்களை ஓட்டிச் சென்ற இடையர் அவ்வேறுகள் போர் செய்யாமற் பிரிதலை விரும்பினர். அவர் அவை இரண்டு கூறாகும்படி நடுவே சில ஏறுகளைச் செலுத்தி விலக்கினர்; பின்னர் பசுக் கூட்டங்களை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென்று, தத்தம் இனங்களைப் பிரித்தனர். அவ்விடையர், பெரிய நிலத்தைப் படைத்தற்கு அந்நிலத்தை மறைத்துக் கிடந்த அகன்ற கடலைப் போக்கும் கருத்தினையுடைய நான்முகனை ஒத்தார். அவ்வாறு செல்கின்றவர்களை அவ்வேறுகள் ஓடும்படி மிதித்தன; ஓடாமல் நின்றவர்களை எதிரே சென்று பெரிய கொம்பாலே குத்திச் சருவித் துளைக்கும் அலகு இறுக்கிய மரம்போலத் (துறப்பணம்) துளைத்தன. பொதுவர் அங்ஙனம் துளைத்த தம்முடைய புண்களினின்றுஞ் சொரிகின்ற இரத்தம் வழுக்குதலால் மணலை அள்ளிக் கையைப் பிசைந் தனர். உடம்பு திமிர்கொண்டு பொறுத்து நில்லாதவர்களாய்க், கடலுள்ளே பரதவர் சிறிய தெப்பத்தை ஏறினாற்போல ஏற்றைத் தழுவினார்கள். அவ்வேறுகள் தமது அழகிய கொம்பாலே வரிகளையுடைய குடரைத் தோண்டின. அக்குடர்கள் நீண்டு விழும்படி எடுத்துக்கொண்டு உயர்ந்து போம் பருந்தின் வாயினின்றும் தப்பிக் கொம்புகள் தோறும் தூங்கும். அக் காட்சி ஆலமரத்திலும் கடம்பமரத்திலும் உறையும் தெய்வங்கட்கு மகிழ்ச்சி யுண்டாக வேண்டித் தூக்கப்பட்ட அசையும் மாலைபோன்றது. அப்போது ஆய்ச்சியர், மேயும் நிலத்தே ஏறு பரக்கும்படி செலுத்தின தம்முடைய காதலருடைய கையைக் கோத்து இன்பமுற்றுக் குரவையாடுவர். குரவைப் பாட்டு! எம்முடைய தோழி! கொலைத்தொழிலுடைய ஏறுகள் சாடின புண்களைத், தழுவிக்கொண்டு பொதிந்து விடக்கட வேம்: முலையின் வெம்மையால் ஆறும்படி ஒற்றித் தழுவிக்கொண்டு பொதிந்து விடக்கடவேம். எம்முடைய தோழீ! பலமுறை தயிர்கடைதலினால் பாய்ந்த புள்ளி களின் மேல் கொல்லேற்றைத் தழுவினவனுடைய இரத்தம்படும்படி தழுவுதல் எமது தோளிற்கு அழகு மாத்திரையோ? அதிலுஞ் சிறந்த தொன்றன்றோ? எம்முடைய தோழீ! ஆயர்போர் செய்கின்ற ஏற்றின் கிட்டுதற்கரிய தலையை அஞ்சுதலும், ஆய்ச்சியர் ஏறுதழுவாதவருடைய அழகிய தோளை விரும்புதலும் இவ்விரண்டு நிலையும் இக்குடிப்பிறந்தவர்க்கு உளவாகச் சொல்லப்படுதல் இல்லையோ? எம்முடைய தோழீ! இவளுடைய கணவன் கொல்லேற்றைத் தழுவினானென்று ஊர் புகழ்ந்து சொல்லுகின்ற அச்சொல்லைக் கேட்டு, மோரை விற்று யாம் பெறுஞ் செல்வத்தை எம் கணவர் தருமோ? இவ்வாறு பாடிய ஆய்ச்சியர், “அரிய தலைமையுடைய ஏற்றையும் நம் காதலரையும் பாதுகாத்தற்கு வண்டுகளின் ஒலிபோன்ற இனிய கானத்தைத் திருமாலின் மீது பாடுவேம் அதனால் வீரம் பொருந்திய பாண்டியன், பகைவர் நிலமென்னும் பெயர் பொய்த்துத் தன் நிலமென் னும் பெயர் பெறும்படி பகைவர் நாட்டை வென்று திறை கொள்வா னாக.” என்று பாடினர். 7 தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றாள். தோழி அவட்குத் தமர் வரைவு உடன்பட்டமை சொல்லுகின்றாள்: குறுங்காட்டில் பரந்து வாழ்கின்ற ஆட்டிடையர்க்கும், மாட்டிடை யர்க்குமாக நம் சுற்றத்தார், கொல்லேறு தழுவுதல் காரண மாக ஏறுகளைத் தொழுவிலே புகுத விட்டார் சில ஐதாகிய செவிமறையினையுடைய ஏற்றை ஒருவன் தழுவி னான். அவனுடைய சென்னியிற்கிடைந்த முல்லை மொட்டினாற் கட்டின வளைந்த கண்ணியைக் கொம்பிலே எடுத்துக்கொண்டு அப்புகர் ஏறு துள்ளிற்று. அப்பூ வந்து என் மயிருக்குள்ளே மிகவும் வீழ்ந்தது. போக்கடித்ததொன்றை மீண்டும் பெற்றவர்களைப் போல அக் கண்ணியையான் முடிந்ததை, ஆய் கேள்விப்பட்டாள் என்று சொல்லு வார்களோ? இவ்வார்த்தையை எனக்கு விளங்கக் கூறுவாய். தோழீ! அக்கண்ணி வரைந்து கொள்வதிற் றாமதி யாதவனுடைய கண்ணியன்றோ? பின்னை ஆய் கேள்விப் பட்டால் என்ன பரிகாரம் யாம் செய்யவேண்டும்? அதற்கு யாது பரிகாரமும் வேண்டா. தலைவி:- இன்னபூவை முடியலாம் என்று அறியாது அயலவன் ஒருவன் கையாற் கட்டிய பூவை முடிந்தாளென்று தாய் கேட்கில், அதற்கு அவள் வெகுளாமற்செய்யும் பரிகாரம் இல்லையாயிருக்குமோ தோழீ:- இனி எல்லாத் தவறுகளும் நீங்கும் தலைவி:- அத்தவறு நீங்குமா றெவ்வாறு? தோழீ:- அவன் ஆயருடைய மகனாயிருப்பினும், நீ ஆய்ச் சாதியிற் பிறந்த மகளாயிருப்பினும், இவன் உன்னை விரும்பினாலும், நீ அவனை விரும்பினாலும், தாய் மிகவும் வருந்தத்தக்கதோர் காரியம் இல்லை யாகும். தலைவி:- அன்னையுடைய விருப்பமும் எனது விருப்பமாகப் பெறின் அவள் நோக்கத்தக்கது இல்லையாகும். தோழீ:- யான் இவ்வளவு கூறவும் அறியமாட்டாத தன்மை யையோ? ஆயர்மகனை மிகவும் காதலித்து ஆயையும் அஞ்சியிருப்பா யாயின் இனி நீ உற்ற காம நோய்க்கு மருந்து அரிதாகும். தலைவி:- ஏடீ! யானுற்ற வருத்தத்துக்கு மருந்தில்லையாயின் இனி வருந்தியே விடுவேனல்லனோ? தோழீ:- இனி வருந்தாதொழி. கழுவி அழுக்கற்ற நின்னுடைய மயிரிடத்தே சூட அவன் கண்ணியைத் தந்தானென்று பிறர் சொல்ல உன் தந்தையும் தமையன்மாரும் கேட்டனர். அவர்கள் கூடியிருந்து திருமா லாகிய தெய்வம் இவனுக்கு இவளைக் கொண்டு வந்து காட்டிற்றென்று கூறி மகிழ்ந்தனர். நின்னை அந்தக் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் ஒழுகவல்ல பொதுவனுக்குக் கொடுத்தலைத் தீர்மானித்தனர். 8 பிறர் ஏவிய தொழிலைச் செய்யும் தலைவனுந் தலைவியும் முன்னொருகாற் கூடிப் பின்னர் அவன் அதிர்ப்பட்டவிடத்து, அதனிடத்திற் பரத்தைமையால் ஊடிக்குறி நேர்கின்றாள். உனது முலை தோள் கண் என்று சொல்லப்பட்ட மூன்றிடங் களும் பெருத்தன. நுதல் அடி இடை என்னும் மூன்றிடமுஞ் சிறுத்தன. உனது அழகு காமனும் பிறர்க்கு மனக்கவலை செய்து தனது அம்பை விடுதற்குக் காரணமாயுள்ளது. இவ்வகையான அழகொடு நீ ஊரிற் றிரிந்து மோரை விற்று மீண்டாய். ‘யான் சிரிக்கவல்லேன்’ என்று சிரித்தாய். பாண்டியனது சேனை பகைவரின் உயிரோடு செல்லுமாறு படை தொடுத்துவிட்டதுபோல என்னை வருத்தினாய், ஏடீ யான் உனக்கு என்ன பிழை செய்தேன் சொல்லுவாய். தலைவி:- இடம்மாறித் திரிகின்றது எங்குலத்திற்குத் தீதன்று. நஞ்சுற்றத்தார் ஆயரானால் நாம் ஆய்ச்சியராவேம். நஞ்சுற்றத்தார் ஆய ரானால் நாம் ஆய்ச்சியராவேம். அது கிடக்க, நீ காயாம்பூக் கண்ணி யையும் துவரூட்டிய கரிய ஆடையையும் உடையையாய், மேய்கின்ற நிரைகளும் முன்னே ஒரு கோலை யூன்றி அதனை மேய்க்கும் நீ, இடைய னுடைய தன்மையுடையையல்லை; நீ தேவர்களுள் சூரியனாகிய தெய்வத்தின் மகனோ? (கன்னனோ? என்றவாறு) தலைவன்:- நீ இங்ஙனம் மகிழ்ந்து கூறுதலால் நின்னொடு ஒன்றுங் கூறேன்; முல்லை முகையையும் மயிலிறகின் அடியையும் நிரைத்தாலொத்த பல்லும், மூங்கில்போலும் தோளும், போர் செய்யும் பெரிய கண்ணும் உடையையாய், உன்னுடைய அழகை நீயே விரும்பியிருக்கும் சொல்லை யுடையவளே! நின்னொடு மறு வார்த்தை யார் பேசுவார்? தலைவி:- அவ்வாறாயின் யாதும் சொல்லாதிருப்பாயாக. தலைவன்:- நின்னைப் போகாமற்றடுத்தேன். தலைவி:- இவன் எமக்குச் செய்கின்ற வருத்தத்தைப் பாராய். யான் கண்டார் மயங்கும் குழந்தைப் பருவமுடையளாய் நின்றேன். மனம் விரும்பிச் சொல்லாத சொற்களைச் சொல்லுகின்றாய். சொல்லி என்னைக் கண்ட பொழுதே கடன் கொடுப்போர் கடன் வாங்குவா ரிடத்திலுள்ள பண்டங்களை ஆராயுமாறுபோல என்னிடத்துள்ள பண்டங்கள் யாவை என்று வஞ்சனையாக உசாவுகின்றாய். ஏடா! நின் வட்டியைப் பிடித்தற்கு நின்னிடத்து யாம் வாங்கிக்கொண்ட பொருள் எப்பொருள்! தலைவன்:- நீ என்னிடத்தில் வாங்கிக்கொண்ட பொருள் கூறக் கேள்: நீ மோர் விற்று மீள்கின்ற நாளிலே செம்முல்லை நெருங்கின காட்டில் சிற்றாற்றின் பக்கத்தே, மாம்பிஞ்சைப் பிளந்தாலொத்த கண்ணாலே எனது நெஞ்சை உன்னிடத்தில் வாங்கிக் கொண்டு என்னை அடிமைத் தொழில் கொண்டாய். நீ ஒரு கள்ளியல்லவோ? அது நீ யறியாயோ? தலைவி:- நின் நெஞ்சை எனக்கு இருப்பிடமாக வாங்கிக் கொண்டு யாம் அடிமைத் தொழில் கொள்ளுதல் எங்ஙனம் எளிதா யிருக்கும்? உன் நெஞ்சு புனத்திலேயிருக்கும் என் தமையனுக்கு உணவைக் கொண்டு சென்று கொடுக்குமோ? பசுக் கூட்டங்களை மேய்க்கும் என் தந்தைக்குக் கறவைப் பாத்திரங்களைக் கொண்டுபோய்க் கொடுக்குமோ? தினை அரிந்த தாளிடத்தே ஆய்மேயவிட்ட கன்றை மேய்க்குமோ? இல்லையே! ஆதலால் நீ சொல்வது பொய்யாகும். தலைவன்:- இனி நீ ஏவின தொழில்களை என் நெஞ்சு புரியும். கடைந்த மோரைக் கையாற் கலக்கும் ஓசை கேட்கும் அண்மையி லுள்ளது உனது ஊர் ஆயினும், உச்சிப் பொழுதாயினும் யான் கூறுவதைக் கேள். கண் வேறொரு வடிவைப் பாராது தடுக்கும் அழகும் மயிலின் கழுத்துப்போன்ற நிறமுமுடைய மாயஞ் செய்பவளே! இப்படி வெயிலாகிய பொழுதோடே விரைந்து செல்கின்றாய். இதனாற் பெறும் பயன் யாது? காயாம் பூவையுடைய குளிர்ந்த சோலையை அவ்விடத்தே பாராய். அவ்விடத்திற் பிடியை ஒத்த பாறை கிடக்கின்றது. அதனிடத்து, விழுந்த நுங்கை வெட்டின கண்போன்று நீர் நிறைந்த சுனைகள் இருக்கின்றன. அச்சுனைகளில் ஆடிக் குளிர்ந்த பூக்களையுடைய செம் முல்லை மலரோடு முல்லை மலரையும் பறித்துத் தனியே அப்பொழி லிடத்து எம்முடனே தங்குவாய். வெய்யிற்றாழ்ந்து குளிர்ச்சியுண்டாக நும் மூர்க்குச் செல்வாயாக. தலைவி:- ‘நீ போகவேண்டா’ என்கின்றா யாதலின் யாம் போவேம். மான்மருண்டு நோக்கினாலொத்த குளிர்ந்த கண்ணுடையவ ரும், நீ கூறுஞ் சொல்லில் மயங்குவாருமாகிய சிறிய ஆய் மகளிரிடத்து நீ இவற்றைக் கூறு. யான் அதற்கு மருளேன். நீ, பல பசுக்களை வெறுக்காது கூடும் ஏறுபோல நாள்தோறும் பதின்மரை ஒருவரைப்போல விருப்ப முற்று அவர்மேற் செல்வாய். நீ ஓர் கண்ணைக் குத்திக் கள்வனா யிருக்கும்போது மற்றவருக்கு என்ன நன்மையைச் செய்வாய். இவ்வா றாகிய உனக்கு நாம் என்ன நன்மையைச் செய்வேம்? தலைவன்:- கொலைத் தொழிலுடைய கண்ணும், கூரிய எயிறும், தளிர்போலும் நிறமும், கண்டார் வருந்தும் அழகுமுடைய மாயோளே! யான் விரும்புதற்குரியர், உன்னைக் காட்டிற் சிறந்த மகளிர் மண் ணுலகத்தில் இல்லாமையை நீ தானே அறிவாய். இனி நீ நினைத்த தவறுகள் இன்றென்று யான் தெளிவித்தற்குக் கிட்ட வருவாய். மலையோ டொத்த மார்புடைய திருமாலைத் தலையினால் வணங்கிச் சத்தியஞ் செய்தேன். தலைவி:- நீ சொல்வதை மெய்யென்று நம்பும் அறியாத மகளிர்; கூட்டத்துக்கு உடன்படுவர். பொய்ச் சத்தியஞ் செய்பவன் நீ: உன் வருத் தத்தைப் பார்க்குமிடத்து அதற்கு உடன்படுதல் வேண்டுதலின் எம் முடைய வாயிலிடத்து (புழைக்கடை) உள்ள காஞ்சி மரத்தின் கீழே குறியிடஞ் செய்தேம். தேனைத் தன்னிடத்தே கொண்ட பொதியின் மலையுடைய பாண்டியனது சிறு குடியில் வாழும் எம் ஆயர் அவன் இனிதிருந்து வாழ்தற்கு அந் நிலத்திற் றெய்வத்திற்கு மடைகொடுத்து ஆரவாரஞ் செய்வர். அவ்வாரவாரத்துக்கு வந்த நின் பெண்டிர் நின்னைக் காணாமலும், காஞ்சிப் பூவின் உதிர்ந்த தாகிய எருவையுடைய மன்றத்து வந்த நின்னுடைய பெண்டிர் கேளாமலும், நீ செய்யும் குறியை ஆம்பல் என்னும் பண்ணையுடைய குழலாலே குறித்து வருவாயாக. 9 காமக் குறிப்பில்லாத ஒருத்தியை ஒருவன் பார்த்துக் கூறுகின்றான்: மழை நிறையப்பெய்த அகன்ற நிலத்தே அறுகம்புல் வளர்ந் திருக்கும். அவ்வறுகினைமேய்ந்த நிழலிற் றங்கும் நாகு போர்த்தொழிலில் அடங்காத ஏற்றினுக்கு ஈன்ற இளைய எருது, தேரை இழுக்கும்போது இளமையால் இறுமாக்கும். அவ்விறுமாப்புப்போலத் தலையில் மோர்ப் பானையுடனே அழகாலும் இளைமையாலும் மிகுந்தவளாய்ப் பெரிய ஊர்களையும் சிறிய ஊர்களையும் ஆரவாரத்தை உண்டாக்குவாள் போல மோரோடே வந்தவள் அழகை நெஞ்சே காண்பாயாக. இவள் தான் மிக்க வனப்புடைய மகளிர் எல்லாரோடுந் தன் அழகு ஒவ்வாமை சொல்லப்பட்டவள். பக்கமேந்தின அகன்ற அல்குலையுடைய இவ்வாயர் மகள், சுற்றத்தார் தொடுத்து வந்து மயிர் முடியின் ஒரு புறத்தே செருகிவைத்த கண்ணியைச் சுமக்கமாட்டாதவளாவள். அவள், மனத்தில் காமவேட்கை யில்லாத (இருடிகளுக்கும்) புண்பட்டு நெஞ்சு வருந்தும்படி பார்ப்பள். அது வல்லாது மெய் முழுவதும் கண்ணுடையவளாவள். (கண் செய்யும் வருத்தம்போல மெய்முழு வதும் வருத்தஞ் செய்தலின் இவ்வாறு கூறப்பட்டது) இவள் பல நிற நெல்லுடைய கூடையை ஒரு கையால் அணைப் பாள்; அணைத்து மற்றத் தோளை இளமைச் செருக்குத் தோன்றத், தன் அழகுக் கேற்றதல்லாத சுமையையுடையளாய் நடப்பாள். கழுத்திற் பூண்ட வற்றாலும் மகரக் குழை ஆடுதலாலும் உண்டான அழகை யுடையவள். (முலையும் தோளும் சுமந்து இளைத்த) இடை நுண் ணியதாய் நன்றாய்த் தோன்றும். இடை தெரியாத உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய அழகை எல்லாம் இவட்குக் கொடுத்தார்களோ? அவள் தெய்வத்திற்குப் பலியாகச் சமைக்கும் பாலோடு காமன் கோயிலிலே செல்லின் அக்காம னும் நெஞ்சழிந்து தன் கையிற் படையைப் போடுவான். இவ்வூரிற் பெண்டிரெல்லாம் இவள் நோக்கினார் எல்லோருக்கும் வருத்தம் செய்வள் என்று கருதுவர். கருதி “மோருக்குப் பதில் மாங்காயை நல்ல ஊறுகாயாகக் கூட்ட உண்பேம். நீ, எவ்விடத்தும்போய் அம்மோர் முதலியன விற்றுத் திரியும் நின் சுற்றத்தாருடனே போவாயாக” என்று கூறித் தம்முடைய கணவரை வெளியே போகாமற் காப்பர். காத்து இவள் வரும் நேரமே யல்லாமல் ஒரு நாள் முழுதும் வாயிலை அடைத்திருப்பர். இவள் மனம் வருந்தும்படி நோய் செய்து போவதன்றி அந்நோய் தீர்க்கும் மருந்தல்லள். 10 வெண்ணெய் விற்கச் சென்ற தலைவியைத் தலைவன் கண்டு மெய் தொட்டுத் தனது ஆற்றாமையை அறிவித்தவிடத்து ஈண்டு பிறர் அறிவர் நாளை கன்றோடு வருவேன் என இடங் கூறுகின்றாள்: ஏடா! வேலியுடைய பெரிய குறுங்காட்டிடத்தே இருக்கின்ற ஆட்டிடையருடைய குடிதோறுமுள்ள மகளிரை விரும்பா நின்றாய். நினது காமவேட்கை தேள் கொட்டிய கருப்பாற உடனே இட்டுத் தீர்க்கும் மருந்து போல, வேட்கை தோன்றியபோதே கூடித் தீர்க்க வேண்டியதொன்றோ? அல்லவே! யான் நின்னோடு ஓர் நகை செய்தலின் நீ என் மெய்யைத் தீண்டினாய். அவ்வாறு நகை செய்தலின் நீ என் மெய்யைத் தந்தமையின், அப்பொழுதே யாம் புணர்ச்சிக்கு எளியே மென்று மனத்தாற் கருதினாய். அங்ஙனங்கண்டது, மோரை எளியளான வள், வெண்ணெயை வேண்டினார்க்கு வெண்ணெயை இட்டு எளிய வளாயிருப்பள் என்று நெஞ்சாலே கருதினாற்போல் இருந்தது. (வெண் ணெயை வேண்டினார்க்குக் கொடார் என்றவாறு) தலைவன்:- ஒள்ளிய நெற்றியையுடையாய்! அங்ஙனம் கூட்டத்தை மறுத்துக் கூறுவையாயின் அக்கூட்டம் இல்லையாவதாக; விட்டு நீங்கு வாயாக. மெல்லிய இயல்புடைய ஆய்ச்சாதியிற் பிறந்தவள் மத்தைச் சுற்றிய கயிறுபோல. என்னுடைய நெஞ்சு நின்னுடைய நலத்தைச் சூழ்ந்து கொண்டு சுழன்று திரிகின்றது. நீ கூறிய கூற்றினால் எனது மனம் அஞ்சும். அதனால் உன்னிடத்தினின்றும் திரும்பித் தான் நிற்கமாட்டாமல் அசைந்து என்னிடத் தினின்றும் புறப்பட்டு நாள்தோறும் தடுமாறா நிற்கும். முதல் ஈற்று ஈன்றபசு, இல்லத்திற்குச் சமீபத்தில் இடப்பட்ட வளைந்த தொழுவிற் கட்டிவைத்த கன்றை நினைந்து விடியற்காலத்தும் மேயப் போகாது சூழ்ந்து திரியும். அந்நாகுபோல் உன்னைக் கண்டு என் நெஞ்சு நாள்தோறும் நடுங்குகின்ற வருத்தத்தை, உற்று அறிவாயாக. என்னிடத்து எந்நாளும் வருத்தம் மிகும். அதனால் இரங்கத்தக்க எனது உயிர், மருந்தைப்போட்டு நெய்யைக் கடைந்து வாங்கின பால் நுகர்வார்க்குப் பயன்படாதது போலாகிவிட்டது. இதைவிட வேறொன் றையும் செய்ய அறியேன். தலைவி:- நீ அத்தன்மையை யுடையையோ? பலருந் திரிகின்ற மன்றத்தே எதிர்ப்பட்டாய். அப்போதே சான்றோர் மகளிராகிய உன்னை யன்றி இவ்விடத்திற் புணர்ச்சியின்றாயின் உயிர்வாழேன் என்று கூறினாய். இவ்விடத்து நின்றால் எம்முடைய சுற்றத்தார் காண்பர். இனி இன்று மாத்திரமல்ல நாளையும் புலத்திலே கன்று மேய்த்தற்குப் போவேம். ஆண்டு வந்து இத்தன்மையனவற்றை மேலும் சொல்லுவாய். (நீ இவ்விடத்து நில்லாமற் போ.) 11 தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூடியவாறும் கூறித் தோழியைத் தலைவனை வரைவு கடாவி ஆய்க்கு அறத்தொடு நிற்கவேண்டுமெனக் கூறுகின்றாள்: தோழி! இனிய பாலைக் கறந்த கலங்களை அவ்விடத்தினின்றும் எடுத்து வைத்தேன்; கன்றுகளை எல்லாம் தாம்பாற் கட்டி மனையிடத்து நிறுத்தினேன். ஆய்தந்த பூத் தொழிலும் கரையுமுடைய நீல ஆடை பக்கத்தே தாழ்ந்து நிற்க மெய்யை அசைத்துப் பாங்கர்க் கொடியும் முல்லைக் கொடியும் படர்ந்த தோட்டத்தே சென்றேன். அவ்விடத்தே ஆட்டினத்தையுடைய ஆயர் மகளிரோடு விளையாடா நின்றேன். அவ்விடத்தே குருந்தம் பூவாற்கட்டிய கண்ணியையுடைய ஒரு பொதுவன் வந்தான். அவன் என்னை நோக்கி. அணிகலன்களையும் அழகினையும் மடப்பத்தினையுமுடைய நல்லாய்! நீ கட்டிய சிற்றிலை யானும் சிறிது அலங்கரிப்பேனோ என்றான். யான், ஏடா! வரைந்து கொண்டு நமக்கு ஒரு இல்லை அமைத்தல் அறியாய். தன் சுற்றத்தார் கட்டிய இல்லில் இவள் இருக்க யாம் பெற்றே மென்று நினைந்திருக்குமவன் நீ. ஆதலால் நீ, உறுதியாக உலகியலிற் கற்ற தொன்றும் இல்லைக்காணென்றேன். அதன் பின்பு அவன், கட்டின மாலையை, நினக்கு, முற்றின தாது சூழ்ந்த கூந்தலிலே அழகு பெறப்புனை வேனோ என்றான். யான் அதற்கு ஏடா! நீ வரைந்து கொண்டு விடாமற் கோதை புனைதல் அறியாய், எஞ் சுற்றத்தார் கொண்டு வந்து சூட்டின பூவைப் பூவென்றும் கொள்ளுமவன் நீ. ஆதலால் உறுதியாகப் பெரிதும் பேதைத் தன்மையுடையை யென்றேன்; அதன் பின்பு, ஆயிழாய்! அழகுதேமல் படர்ந்து மெல்லிய முலை மேலே தொய்யில் எழுதுங் குழம்பால் எழுது வேனோ என்றான். யான் அதற்கு, நீ வரைந்து கொண்டு வெளியாக எழுதுதல் நின் மனத்து இல்லை. யாம் எப்பொழுதும் எம் சுற்றத்தார் கோலஞ்செய்து எழுதுங்காலம் பொறுத் திருப்பேமோ? இனி இங்ஙனம் இருத்தல் ஆற்றேம். இங்ஙனங் கூறுதலின் நீ பெரிதும் மயக்கத்தை யுடையை. இங்ஙனம் அன்புள்ளோர் போலக் கூறுகின்றாய். அவற்றைத் தவிர். என்று கூறினேன். தையலாய்! இன்னும் பின்னர் அவன் சொன்ன வற்றையெல்லாம் இங்ஙனம் மாறாய்மாறாய்யான் மறுத்தேன். அவன் இனிக் களவு நிகழாதென்று வருந்தினான் போல மீண்டு போயினான். அவனுக்கு நீ, ஆயர்மகளிரைவரைந்து கொள்ளும் இலக்க ணத்தை அறிவி. பின்னர் என்னுடைய தந்தையும் தாயும் இக்கள வொழுக்கம் அறியும்படி அறத்தொடு நிற்கும் முறைமையால் உரைப் பாய். அதனால் அவன் உற்ற நோயன்றி யானுற்ற நோயையும் மிகப் போக்குவை. 12 தலைவியை வழியிடத்துக் கண்டு தலைவன் தடுத்து நகையாடினான். இருவரும் சில மொழிகூறிய விடத்து அவள் கூட்டத்திற்கு உடன்படுகின் றாள்: என்னைத் தடுப்பவனாகிய இவன் எமக்கு என்ன உறவுடையன். நீரில் அசைகின்ற அழகிய தாமரைப் பூவை எமக்கு விளையாடத் தந்தவனே! பல மலர்களைக் கலந்து கட்டிய மாலையணிந்த உனது வடிவு தமது தொழிலை யன்றிக் கல்லாத இடையர் வடிவோடு மாறுபட்டது. எம்முடைய சுற்றத்தார் இவ்வொழுக்கம் அறிந்தாரைப் போல நின்னோடு சில சொல்லுதலைப் பாதுகாத்துக் கொள். ஆதலால் நீ இங்கு நில்லாது போ. தலைவன்:- ஏடீ! செலுத்திய கண்ணால் மனத்தைக் கலக்கின, காம நோயை உண்டாக்கும் கரும்பு எழுதின தோளினையுடைய மகளிரைக் கண்டாயாயிற் போக விடாதே; அவர் செய்த நோயை அவரைக் கொண்டே பரிகரித்துக் கொள் என்று எம்முடைய சுற்றத்தார் கூறினர். தலைவி:- அங்ஙனம் பரிகரித்துக் கொள்ளென்று கூறினவர்கள், அதுவல்லாமல் நல்ல மகளிரைக் கண்டாயாயிற் போகாமற்றடுத்து, விரும்பி அவருடைய பூப்போன்ற கண்ணையும், புகழப்படும் தோளை யும் பாடும்படி நல்லதொரு தொழில் கற்பித்தார்! எமது சுற்றத்தார் வரைவு நேர்தற்கு நும் சுற்றத்தார் செய்த செயல் மிகவும் வல்லமை யுடையதாயிருந்தது. தலைவன்:- ஓ ஓ! வெயில் வெம்மையால் ஒருவரும் திரியாத உச்சிக் காலத்தே நீ, கன்று மேய்ப்பார் போலப் பிறர்க்கு நோய் செய்து திரிகின் றாய். இத்தன்மையை அறிந்திருக்கின்ற என் சுற்றத்தவர்கள் இப்படித் திரிகின்றாளென்று எனக்கு உரையாதிருப்பாராயின் அவர் எம்மை இகழ்ந்தவர்களாவர். தலைவி:- ஏடா! நீ கூறியது ஒக்கும். இனி இக் கூற்றைக் கை விடு. தலைவன்:- யான் நின்னை விடேன்! கரிய கூந்தலை யுடையாய்! யான் கூறிய கூற்றை நீ பொய்யாகக் கொண்டதென்ன? யான் பொய் கூறிற்றிலேன். நின் சுற்றத்தார் நின்னை என் முன்னே நின்று சில சொல்லு தலைப்பாது காத்துக் கொள்ளெனச் சொன்னமையன்றி அவனை நீ புல்லுதலைப் பாதுகாத்துக்கொள் என்ற வார்த்தையை அவர் உடை யரோ? இல்லையன்றே! ஆதலால் நீ மெத்தென முயங்குவாய். அப்பொழுது யான் நின் கூரிய எயிற்றை உண்பேன். தலைவி:- இவன் கூறியது எத்தன்மையதோ? பொய் யன்று; பொதுவன் கூறிய கூற்றெல்லாம் மெய்யாயிருப்பதோர் வார்த்தையாயின் அவனிடத்து மனை வாழ்க்கையிலே பட்டேமாகின்றேம். அன்றி அது பொய்யாயிற்றேல் இனிய மார்பிற் கமழ்கின்றமாலை வருத்தின நின் அழகிய இதழ்போலுங் கண்கள் பசலை நிறங்கொள்ளும். பெரிய தோள்கள் பின்னர் மெலியும். ஆயினும் நின் மேனி இப்பொழுது பெறுகின்ற அழகை உடைய தாயிருக்கும். (மாலையாற் கண்ணைக் கசக்குதலின் மாலை வருத்திய கண் என்று கூறினார்) 13 தலைவியை வழியிடத்திற் கண்டு தலைவன் தடுத்து அவளோடு சிறிது கூறியவிடத்து அவள் உடன்பட்டுக் கூறுகின்றாள்: பெரிய மிருதுவான தோளும் சுழலுகின்ற கண்ணுமுடைய அழகிய நல்லளே! நீ எதிர்ப்பட்டதனால் வருத்துகின்ற நோய்க்கு உய்யும் வழியைக் கூறிப் பின்பு போ. தலைவி:- ஏடா! உன்னை முன்பு கண்டு அறிந்ததுமில்லாத என் னிடத்துப் பெரிய பித்தேறினாய்போல முன்னே நின்று தடுக்கின்ற நீ யார்? தலைவன்:- மனந்தளர்கின்ற இயல்பினையுடையாய்! நீ என்னை அறிய விரும்பினால், யான் ஆட்டினத்தையுடைய பகைக்கு அஞ்சாத ஆயரானவருக்கு ஒரு மகனாயுள்ளேன். தலைவி:- அது மிகவும் ஒக்கும். நீ ஆட்டினத்தையுடைய ஆயனா யின், எம்முடைய சுற்றத்தார் பசுவினத்தையுடைய ஆயராவர். தலைவன்:- ஏடீ! இவ்வாறு சிறந்த நின்னோடு சில வார்த்தை கூறின் மிகக் குற்றமாமோ? தலைவி:- இருவருக்கும் ஒத்த குடியாயிற் பின்னைச் சில வார்த்தைகள் கூறிற் குற்றமென்? யான் நாளை வருதற்கு இப்பொழுது போகவிடு. தலைவன்:- யான் விடேன். எனது வார்த்தையைக் கேட்டு என் நெஞ்சு எனக்கு ஏவல் செய்யுமாயின் உனது வார்த்தையைக் கேட்டு யான் விட மாட்டேன். மெல்லிய தன்மையுடையவளே! ஒரு காரியத்தின் நிமித்தம் உடன்பட்டு மனத்தால் உடன்படாதார் கூற்றுச் செவிக்கு மெத்தென்றிருத்தலை அறிவேன். தலைவி:- உன்னைக் கைகடந்து காதலைக்கொண்ட காமம் கலக்குதலால் என் நெஞ்சு எனக்கு ஏவல் செய்யாது எனச் சொல்லி நிற்கின்றாய். அயலவர் கூறிய பொய் வார்த்தையைத் தெளியும் தன்மை உனக்கு எங்ஙனம் உண்டாயிற்று? தலைவன்:- தெரிந்த ஆபரணங்களையுடையாய்! நீ இப்போது கூறியதால் நீ முன்னர் ‘விடு வருவேன்’ என்றது உண்மை யென்று யான் தெளிந்தேன்! யாம் முல்லைப் பூவைக் குருந்தம் பூவோடே முடியிற் சூடிக் காட்டாற்றில் விளங்குகின்ற மணலுடைய குளிர்ந்த சோலையில் அகன்ற பாறையில் தோழரோடு பலமுறையும் விளையாடினேம். இவ்வாறு விளையாடுதலாற் பகற்பொழுது போய் இராப்பொழுது வந்தது. அது வருதற்குமுன் போகாமற் றாமதித்ததால் நம்மைக் கோபித்தார்கள். அதனை அறியாது நீ இவ்வாறு காலங் கழிக்கின்றாய். பாம்பு சேர்கை யினால் இடிக்கும் இடியின் குரல்போல அதிரும் பொருகின்ற ஏறு, பல பசுவின் திரளுள்ளே நாகுடன் கூடி நின்றது. அதுபோல நாமும் கூடிச் சேரப்போதற்குக் கூட்டத்துக்கு உடன்படுவாயாக. 14 பிறர் வரைவு மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்: தோழி! புதிய மலர்களைச் சூடி என்பெயரைக் கூறிப்பெண் பிள்ளைக் கலியாணஞ் செய்வாரைக் கண்டு என் சுற்றத்தார், (எனது காதலனை) பின்னி முதுகிலே தூங்கும்படி விடப்பட்ட மயிரையுடைய சிறிய புதல்வன் அழுதனன் என்று எண்ணுவரோ? அப்படி அவர்கள் கூறுவார்களாயின் நீ அவனிடத்தே சென்று அக்கலியாணம் உன்னை விட்டு நீங்காதாக, அது நின்னிடத்தே ஆம்படி வரைந்து கொள்ளும் மதியை அறியாத ஏழைத் தன்மையுடையை, என்று கூறிக் கைத்துவார். (அழுதல் தான் வரைய வில்லையே என்று) தோழி:- அவனிடத்துச் சென்று அவன் நிலையை அறிவேன். அவனுக்குக் கூறவேண்டியவற்றை இனிச் சொல்லுவாயாக. தலைவி:- மடவாய்! அவனிடத்தே சென்று ஏடா! (நின்குரவரை நோக்கி இவ்வதுவை எனக்காக வேண்டுமென்று) சொல்லும் சொல் லறியாப் பேதையாயினை. அதனால் இவ்வதுவை நினக்குரித்தன்றி அகலினும் அகலும். அவ்வாறாமாறு தானும் நீட்டியாது. ஆதலால் அவ்வதுவை நினக்கு வருவதாகக் காண்பாய். இவ்வாறு வரையும்படி கூறும் சொல்லையும் அவன் மனம் கொள்ளும்படி சொல்லு. அறல் ஒழுகும் மணலுடைய துறையின் முன்னே சிற்றில் இழைத்து விளையாடிய அழகிய நெற்றியுடைய ஆயத்தார் நடுவில் நின்று யான் தனியே நீங்கினேனாக, அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சுதான் அறியும். அங்ஙனம் அறிந்திருக்கவும், கொண்டு வந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் செம்மண்ணைப் பூசித், தெய்வமாக வைத்த எருமையாகிய நாகின் கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண் பிள்ளைக் கலியாணம் அவனையன்றி வேறு சிலரிடத்தே தங்கும். அதனால் இருமணம் உண்டாகா நின்றது. பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும், அறிய நெறியுடைய ஆயர் மகளிர்க்கு இவ்விரு மணம் உண்டாதல் குடிப்பிறப்புக்கு இயல்பன்று என்று யான் வருந்துவதைக் கைவிட்டிருக்கவோ? (கைவிட்டிருக்கிற் குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமென்றவாறு) 15 தலைவி களவு வெளிப்பட்டதென்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள் எம் சுற்றத்தவர் நின்னை அவர்க்கே கொடுக்க எண்ணினார் எனச் சொல்லி அச்சம் நீக்குகின்றாள்: மெல்லிய இயல்பினையுடையாய்! ஆட்டினத்தையுடைய எமது ஆயர் மகன் சூடி வந்த ஒரு முல்லைமாலையையும் அதனாற் செய்த கண்ணியையும் கூந்தலில் வைத்து முடிந்ததேன்? தந்தை முதலியோர் இல்லிலே இருக்கச் செவிலித்தாய் வெண்ணெய் தேய்க்க எனது கூந்தலை விரித்தாள். எனது நற்றாயும் நாணும்படி அப்பூ அவள் முன்பு விழுந்தது. பிறர் காணாமற் கள்ளுண்பார், களிப்பு மெய்யிடத்துத் தோன்றி மிகுதலால் பின்பு நாணாது சென்று அக் கடுங்கள்ளை உண்பர். அது போல நாம் கரந்த களவொழுக்கமுங் கையோடே பிடித்துக் கொள்ளப் பட்டேம். பின்னர் அப்பூவை இது எப்படி? என்ன? என்று கேளாமலும் கோபியாதும், நெருப்பைத் தொட்டவர்கள் தம் கையை உதறுவதுபோல் கையை உதறி வெளியே சென்றாள். அவள் போனபின்பு யான் என் னுடைய மயிர்ச் சந்தனம் பூசி உலர்த்தின மயிரை முடிந்தேன். நிலத்திலே தாழ்ந்த பூத்தொழிலுடைய கரையினையுடைய நீல ஆடையைக் கையினாலே சிறிது ஏறத் தழுவிக்கொண்டு, அச்சத்தால் தளர்ந்து நடந்து பக்கத்தே கிடந்த செல்லுதற்கரிய காட்டிலே சென்று ஒளித்தேன். தோழி:- ஏடி! அப் பூ வீழ்ந்ததற்கு நீ ஏன் அஞ்சினாய்? நின் தலைவன் கண்ணியை நீ சூடினாயாயின் அதற்கேற்ப நம்முடைய சுற்றத்தாரும் நின்னை அவனுக்குக் கொடுக்க எண்ணினார். அதுவல் லாமல் பெரிய முற்றத்தே மணலைப் பரப்பித் திரையிட்டுக் கலியாணமும் இப்பொழுதே செய்வார்கள். பகலேயன்றி இரவிலும் தமர் ஆராய்ந்த காரியம் அதுவேயாம். நீ அஞ்சாதே. 16 தலைவியை வழியிடத்தே கண்டு தடுத்த தலைவனோடு அவள் சில மொழி கூறிக் குறியிடங் கூறுகின்றாள்: மனைப் பக்கத்திலுள்ளதும், பிறர் சேருதற்கரியதும் நாம் பயிர் செய்வதுமாகிய தோட்டத்தே கன்றோடு போகா நின்றேம். அவ்வாறு போகின்ற எமது கையிற் கயிற்றின் ஒரு தலைப்பைப் பிடித்து, முன்னால் ஒருவர் நின்று மறித்தது போல விலக்கினாய். ஏடா! இவ்வாறு செய்தற்கு நீ என்ன பித்தேறினாயோ? நீ என்னைப் போகவிடு. தலைவன்:- நான் நின்னைப் போகவிடேன். தன்னைத் தொடு தற்குச் செல்வோரை இடையே தடுத்து எதிரே விரைந்து செல்லும் வலிய நாகு போலப் பார்த்துச் சினக்கின்றாய். தலைவி:- நீ இவ்விடத்தினின்றும் போ. தன்கன்றின் கிட்டச் சென்றவர்கள் மீது கோபங்கொள்ளும் ஈன்றணிமையுடைய பசுப்போல், நீ என்மேல் வந்ததைக் காணில் தறுகண்மையையுடைய ஆய்வந்து சீறுதலுமுண்டு. (அவ் வரவைப் பாதுகாத்துக்கொள்) தலைவன்:- நீ அருள் செய்து என்னைக் கூடுவாயானால், அவ்விடத்தே ஆய்வருகினும் வரட்டும், அயலார் வருகினும் வரட்டும், நின் தந்தை வருகினும் வரட்டும்; எதற்கும் யான் அஞ்சேன். தலைவி:- உனக்கு யான் இவ்வகையாகச் சொன்ன வார்த்தை களைப் பேணாது, கூட்டத்தை நினைந்து, மிக்க மழையில் நனைந்த ஏறுபோல் தலையைச் சாய்த்து யான் கூறியதற்கு எதிர் வார்த்தை கூறி மயக்கமுறுகின்றவனே! நாணமில்லாதவனே! கறவைக் கலத்தோடே யாம் செல்லும் பசு மேய்க்கின்ற இடத்தையும் நாடி என் தமையன்மார் நிற்கும் புலத்தினும் வந்தாய். (ஆண்டுக் கூடுதும் எனக்குறியிடங் கூறினாள்) 17 வழியிடத்தே தலைவன் தலைவியை நின் கையிடத் திருப்பது யாது என வினாவிச் சேருகின்றான்: உருக்கி ஓட வைத்த பொன்னில் நீல மணியை அழுத்தி ஒப்ப மிட்டாற்போன்ற கரிய நிறமுடையவளே! முதிராத கோங்கினது இளைய முகை ஒப்பத் தோன்றின தொய்யிலெழுதின வனமுலையுடையாய்! உன் கையிடத்திருப்பது யாது? தலைவி:- யான் இச்சேரியிலிருக்கும் இடையர் மகள். என் கையில் இருப்பது காதலை யுடைய புலைத்தி விற்பதற்கு முடைந்த பெட்டி. அது பனங்குருத்தை வார்ந்து இழைக்கப்பட்டது. தலைவன்:- காட்சிக்கினியவளே! இப்பெட்டிக்குள் என்ன பண்டங்களுள? அவற்றை எனக்குக் காட்டு. தலைவி:- பூவிதழ் நிறைந்த கூந்தலையுடைய என் தோழி ஆயத் தாருடன் காட்டிற் பறித்த சிறு முல்லை இவை. தலைவன்:- முடிகூடி மயிரினையுடையாய்! நான் தனியே இவ் விடத்தே கண்ட இவை முல்லைப் பூவாயின், இவற்றைத் தொடுத்து முடிந்து நாம் கூடுதற்குப் பொழுதாயின், உன் நினைவு செல்வதில் ஆயின, யான் போவென்று விடுவேன். என்னைப் போகவிடாது எனது அறிவு இளைத் திருக்கின்றது. (இனிக் கூட்டத்துக்கு உடன்பட நில் என்றவாறு). குறிப்பு:- இங்கு முல்லைத் திணைக்குரியனவாக வந்துள்ள செய்யுட்கள் பதினேழும் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய உரிப் பொருள் பெற்றுள்ளன. இவற்றை முல்லையிற் குறிஞ்சி வருதற்குரிய செய்யுட்களாகக் கொள்ளலாம். ஒரு காலத்தில் ஒவ்வொரு திணைக்கென்று பாடல்கள் செய்யப் படாமல் ஒவ்வொரு நிலத்துக்கும் எல்லா உரிப்பொருகள் வரவும் செய்யுட்கள் புனையப்பட்டன போலும். முல்லைக்கலி முற்றும் நெய்தற்கலி நெய்தற்றிணை கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும். மக்கள் கடல் ஓரங்களில் வாழத் தொடங்கிய காலத்திற் கட்டு மரங்களிற் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டனர். கட்டுமரங்களுக்குத் திமில் என்று பெயர். ஆகவே கட்டு மரங்களிற் செல்லும் கடற்கரை மக்கள் திமிலர் எனப் பட்டனர். பரவை (கடலிற் செல்லுதலின் அவர்கள் பரவர் எனவும் படுவர். நூல்களிற் பரதவர் என்னும் பெயரே பயின்றிருக் கின்றது) பரதவர் மீன் பிடித்தும் உப்பு விளைவித்தும், கருவாடு உப்பு முதலியவற்றைப் பிறநில மக்களுக்குக் கொடுத்துப் பிற நிலங்களிற் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பண்டமாற்றுச் செய்தும் வாழ்ந்தனர். உள் நாட்டுப் பண்டங்கள் கடலுக்கப்பாலுள்ள நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டமையாலும், கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளின் பண்டங்கள் கடற்கரையிற் கொண்டு வந்து இறக்கப்பட்டமையாலும் கடற்கரைகளிற் பெரிய துறைமுகப் பட்டினங்கள் ஏற்பட்டன. அங்கு அரசாங்கத்துக்குரிய பண்டக சாலைகள் இருந்தன. பண்டங்களை வண்டிகளிலேற்றி உள்நாடுகளுக்குக் கொண்டு போவதற்கும், உள்நாட்டுப் பண்டங்களைத் துறைமுகங் களுக்குக் கொண்டு போதற்கும் ஏற்ற தெருக்கள் திறக்கப்பட்டிருந்தன. புன்னைமர நிழலில் மீன்காய விட்டுக்கொண்டிருக்கும் நெய்தல் நில மகளிருக்கும் மைந்தருக்கும் இடையில் நேரும் காதல் ஒழுக்கங் களைக் கூறுவதே இத்திணைக்குரிய பாடலாகும். நெய்தற்றிணைக்கு உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் பிரிந்த கணவர் பொழுது படும் நேரத்தில் வரப்பெறாத மகளிர், காதல் மிகுதியால் கடலையும். கடற்கரையையும் பொழுதையும் நோக்கிப் புலம்புவதாக இத்திணைக்குரிய பாடல்கள் பெரும்பாலும் வந்துள்ளன. குறிஞ்சித் திணைக் குரியனபோல புணர்தல் நிமித்தங்களுக்குரியன வாகவும் செய்யுள்கள் வந்திருக்கின்றன. நெய்தலுக்குச் சிறுபொழுது எற்பாடு. எற்பாடு என்பது பொழுது படும் நேரம். எற்பாடு என்பதற்குப் வெயில் படுகின்ற நேரமாகிய காலை எனச் சிவஞான முனிவர் பொருள் கொண்டார். அவர் யோகியராதலின் அகப் பொருட்பகுதிகளை ஆராய்ந்திலர் போலும்! அவர் கூற்றுப் பொருளன்று. நெய்தலுக்கு எற்பாடு சிறுபொழுதெனப்பட்டாலும் எற்பாட்டுக்குப் பின் வரும் மாலையும் உரித்தாக வைத்துச் செய்யுட்கள் புனையப்பட்டிருக்கின்றன. 1 பிரிவிடை யாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு அதனோடு புலம்பித், தோழி கேட்பப் புலக்கின்றாள்: விளங்குகின்ற ஒழுக்கத்தால் வெற்றிப் புகழையுடைய அரசன், நீதி முறையில் பல்லுயிர்களைக் காப்பன். காத்துத் தீவினையால் உள்ள நடுக்கம் மனத்தில் இல்லையாம்படி. தான் செய்த பழவினையின் பயனை நுகர்தற்குச் சுவர்க்கத்தை விரும்பிப் போவன். அதுபோல பல கதிர்களை யுடைய சூரியன், தனக்குப் பகையாகிய இருளைக் கெடுக்கும்; கெடுத்துப் பகலை உண்டாக்கி அத்தகிரியில் மறையும். அரசன் மறைதலின் அடங் காத கலக்கங்கொண்ட உலகத்தில் பின்பு அவ்வரசனுக்குப் பகைவனான அரசன் வந்து சிறிது அருள் செய்தல் போல சந்திரன் இருளைப் போக்கும். குடை நிழலின் கீழ் ஆண்ட அரசனுக்கும், இனி ஆளவரும் அரசனுக்கு மிடையில் நின்ற காலம்போல வந்துவிட்ட மாலாய்! நாம் வலிமை கெடும்படி நம்மைத் துறந்தவரை நினைக்கையில், நீர்நிலைகளிற் பூத்த பூக்கள் போல நின்னைக் கண்டு என் மனங் குவிந்தது. இவ்வகையான எனது அழகினை யுடைய நலத்தை இகழ்கின்ற நீ, அழகிய சிறகுடைய வண்டு ஒலிப்ப முறுக்கு நெகிழ்ந்த கோட்டுப் பூப்போல மனம் நெகிழ்ந்து காதலரைக் கூடியிருக்கின்ற மகளிருடைய அழகைப் போக்கமாட்டாய். கோவலருடைய தனித்த குழலோசை தை என்னும் ஓசைபட ஒலிக்கும். அதைக்கேட்டுச் சோர்ந்த நெஞ்சுடையேமாகின்ற எமது பக்கத்தே நின்று நீ உயிரைக் கொள்ளாய். விநோதித்துப் பாராட்டுவாய். செவ்வழி என்னும் பண்ணுடைய யாழின் நரம்போசைபோலத் தங் கணவர் பிரியின் வருந்திக் கூறும் மொழியினையுடைய மகளிர் அக் கணவர் வருந்தின கனவிலல்லாது நனவிற் புணர்ச்சியாற் பெற்ற புதிய அழகை நீ கடிய மாட்டாய். அழகுமிக்க தாழ்ந்த கொம்பர்களாகிய தமது இருப்பிடத்தே பேடுஞ் சேவலுமாகிய பறவைகள் சேர்ந்து ஆரவாரியா நிற்கும். இதனா லும் மற்றுமுள்ள பகைகளாலும் யாம் வருத்தம் மிக்க நெஞ்சத் தினை யுடையேம் ஆவேம். இச்சிறுமைகளால் நாங்கள் இறந்து போகாதபடி பண்ணி நீ விநோதித்துப் பாராட்டுகின்றாய். நீ, அழகு மிக்க கூட்டத்தை யுடைய மகளிரது, தாழ்ந்த நறிய முல்லைக்கொடியின் முகத்தை வண்டுகள் திறந்தாற்போல, ஆடவரால் திறக்கப்படும் முறுவலையும் கடியமாட்டாய். (மகளிரது ஆடவரால் திறக்கப்படும் முறுவல் எனச் சேர்த்துக் கொள்க) நம்மைப் பிரிந்து நினையாத உள்ளத்தாலே மறந்திருந்தாரை உள்ளே உள்ளே உவந்து உள்ளும் நம்முடைய நெஞ்சமும், இம்மாலை யையும் ஊரார் கூறும் அலரையும் பொறாதே நம்மை விட்டுப் போகா நின்றது. 2 பிரிவிடை, மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, தோழிக்கு உரைக்கின்றாள்: சூரியன் தன்னுடைய பல கிரணங்களைத் தனக்கு வாயாகக் கொண்டு அகன்ற உலகத்தை எவ்வுயிர்க்குந் தோற்றுவிக்கும்; அவ்வாறு தோற்றுவித்த பகற் காலத்தை மீண்டும் அவ்வாயாலே விழுங்கினாற் போல அவற்றைச் சுருக்கிக் கொண்டு அத்தகிரியைச் சேரும். அதனால் போரின்கண் மிகுகின்ற சக்கரப்படையையுடைய திருமாலின் நிறம் போல இயல்பாகவுள்ள இருள் பரந்து வரா நின்றது. அதனைப் பொறாது தன் நிலவால் ஓட்டிப் புறங்காண் பாரைப் போலே அழகிய மதி தோன்றிற்று. அதனைக் கண்டு, கணவரைத் கூடித் துயிலைப் பெற்ற கண்கள் போலே திரண்ட தண்டுகளையுடைய தாமரை முதலியன குவிந்தன. தம் புகழ்களைக் கேட்ட சான்றோரைப் போலே மரங்கள் தலையைச் சாய்த்துத் துயின்றன. சிறிய புதர்கள் கணவரைப் பிரிந்திருக் கும் மகளிரை இகழ்ந்து சிரிப்பது போல முகைகளை அவிழ்த்து விளங்கின. சிறிய மூங்கிற் குழல்கள் போல வண்டுகள் ஆரவாரஞ் செய்து பாடின. புட்கள் தம் குஞ்சுகளை நினைத்துக் கூடுகளைச் சேர்ந்தன. பசுக்கள் தாந் தங்கும் ஊர்களிடத்திற் கன்றின் மேல் அமர்ந்த விருப்பத் தோடே தொழு நிறையும்படி புகுந்தன. மாக்கள் தாந் தங்குமிடத்தே சென்று தங்கின. அந்தணர் தாஞ் செய்யுந் தொழில்களைச் செய்து அந்திக் காலத்தை எதிர்கொண்டனர். மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்கினர். இவ்வாறு விளக்கங்கொள்ளும் படி மாலை வந்தது. அதனை அறிவு கெட்டோர், அழகிய ஆபரண மணிந்த மகளிர் உயிரை, அதனைப் பொதிந்து நின்ற உடலினின்றும் போக்கும் காலத்தினது இயல்பாவதறியாராய் மாலைக் காலம் என்று அதுவுமொரு காலமாகக் கூறாநிற்பர். (இவ்வாறு ஆற்றாளாய் அவள் தோழிக்குக் கூறினாள்) 3 பிரிவிடை யாற்றாத தலைவி, மாலைப்பொழுது கண்டு கழிய ஆற்றா ளாயின விடத்துத் தலைவன் வரவும், அவளது அகமலர்ச்சியைக் கண்டார் கூறுகின்றனர்: அருள் இல்லாத அறிவுடையவன் அறஞ்செய்தல் இருமைக்கும் பயன் தரும் என்று கருதான், நல்லவற்றைச் செய்யான். எல்லாரும் அஞ்சும் படி தன்னுடைய நாளைப் பயன்படாமற் கழித்து மயங்கிய நெஞ்சுடையனாவன். அவன் நெஞ்சுபோல இருளாலே உலகம் நிறைந் தது. கணவரைப் பிரிந்தோர்க்குத் தனிமையாலுள்ள கவலை மேலிடும்படி செறிந்த சுடருடைய ஞாயிறு அத்தகிரியைச் சேர்ந்தது. இரத்தற் கஞ்சின வன் வலிமை கெட்டு ஒருவனை வேண்டியது போல மரமெல்லாம் பொலி வழிந்தன. இரப்பாரைக் கண்டு இருந்த விடத்தினின்றும் எழுந் திருந்து போய் மறைகின்றவன் நெஞ்சு பாராது குவியுமாறு போல இலைகள் எல்லாம் குவிந்தன. இவ்வாறு வருகின்ற மாலாய்! நாலு திக்குஞ் சேர நடுக்கமுறும் ஊழி முடிவாகிய காலத்தே கூற்றுவன், விளக்கமமைந்த செக்கர் வானத்தே தோன்றின பிறையைத் தனக்கு எயிறாகக் கொள்வன். கொண்டு பல்லுயிரையுங் ஒருங்கே கொள்ளற்குச் சிரிப்பான். அது போல நீ தான் அச்சத்தைத் தரும் மாலையாயிருந்தாய். என் நெஞ்சைக் தம்மிடத்தே கொண்டு நீங்கினவர் எமக்குத் துணை யில்லாதவராயினார். அக்காலத்திலே வெள்ளத்திலே அகப் பட்டுக் கரையேற மாட்டாத மானின் நெஞ்சைப் பார்த்து அம்பெய்யும் கொடியவனைப் போல அல்லலிலே அழுந்தியிருக்கும் என்னை வருத் தஞ் செய்யும்படி நீ வந்தாயோ? நீ, அருளில்லாத காதலர் விட்டு நீங்கி அருளாதிருந்த காலத்தைப் பார்த்தும், போரிலே தோற்றவர்களை, அவர்கள் தோல்வியை இகழ்ந்து சிரிப்பாரைப் போலப் பொறுத்தற்கரிய வருத்தமுற்ற என்னை வருத்து விக்க வந்தாயோ? நீ, எனக்கு ஆதரவாயுள்ளவர் என் வருத்தத்தைப் போக்காத காலத்தே, முன்பே வெந்ததொரு புண்ணிலே, பின்பு ஒரு வேலைக் கொண்டு செருகுவாரைப் போலே, மெய்வெதும்புதற்குக் காரணமான காம நோயிலே அழுந்துகின்ற என்னை நினைந்து உள்ள அறிவையுங் கலங்குவிக்க வந்தாயோ? இவ்வாறு இவள் கூறும்படி ஆற்றுதற்கரிய கவலையைச் செய்யும் மாலைக் காலத்தில் வெறுப்புக்கொண்ட வருத்தந் தீரும்படி காதலர் விரைந்து வந்தார். அம்மாலை இராக்காலத்திற் சென்றொளித்தது. வருந்திய மெலிய அரசன் மீது வந்த பகை, விரைவில் நீங்கிச் செல்லாது காத்து நடத்தும் நல்ல அரசன் வந்த விடத்துக் கெட்டுப் போனது போல இல்லையாக நின்றது (என்று கண்டார் கூறினார்). 4 இது, தலைவன் ஒரு வழிப் பிரிந்த விடத்துத் தலைவி ஆற்றாமை கூறி வரையக் கருதினாயாயின் இஃது இடமெனச் சொல்லியது. ஒள்ளிய ஞாயிறு அத்தகிரியைச் சேர்ந்தாலும் சந்திரன் தன் ஒளியால் உலகெல்லாம் ஒளிபரப்பும் தன்மையது. அது கடற்பரப்பிற் றிரையை நீக்கித் தோன்றும் நுண்ணிய கதிரையுடையது. சந்திரனது அழகிய நிலா மிகுதலைச் செய்யும். பறவைகள் இரையை நிறையத் தின்று தாந்தங்கும் இடங்களைச் சேரும். நீலமணி போன்ற பெரிய கழி தன்னி டத்து ஆரவாரமடங்கிப் பூக்களும் குவிந்து துயில் கொள்வதைப் போல் இருக்கும். இவ்வகையான கழியுடைய கடலையுடைய சேர்ப்பனே! நீ நின் நெஞ்சிற்றாங்குதற்கரிதா யிருந்த காமத்தை என்னிடத்தில் இட்டு வைத்துப் பிரிந்து, அதனைக் கைவிட்டாய். அதனால், துளியோடு தங்கின பூ நிற்கமாட்டாது நீருள் விழுந்து நீந்துவதுபோல், கண்ணீரில் கிடந்து நீந்தும் கண்ணையுடையவளுக்கு, அசைகின்ற கடலிலே எழுந்து முழங்கு கின்ற திரை துணையாக நின்று ஆரவாரிக்கும். நீ ஈண்டு வாராமையால் அழகிய மேனியையுடையாள் இருந்து வருந்தினாள். நீ அவளிடத்து வைத்த வேட்கையைக் கைவிடுதலால் அவள், உதிர்ந்து சிந்தும்படி இதழ்கள் உதிரும் வெண்காந்தள் போல இறையினின்றும் கழலும் வளையுடையளானாள். அவளுக்கு இராக் காலத்தே அசைந்து வருகின்ற காற்றுத் தான் துணையாகி நின்று வருத்தா நிற்கும். இனிய துணையாகிய இவளைக் கைவிட்டு இருப்பாய். ஆதலால், ஒள்ளிய கதிருடைய சூரியனின் மிகுந்த ஒளியாலே தன் ஒளி கெடுகின்ற உச்சிக்காலத்து மதிபோல அழகுகெட்ட முகத்தினை உடையவளுக்கு இராக்காலத்தே தன் சேவலைப் பிரிந்து வருந்தும் தனித்த கொக்குத்தான் துணையாக உசாவும். இனிய துறையிடத்தே எறிகின்ற திரை ஏறக்கொண்டு வந்து போடுகையினால் எக்கரிலே கிடந்த மீனை வருந்தாதபடி, மீள்கின்ற திரை அடித்துக்கொண்டுபோம். அத்தன்மைபோல நீ முன்பு நடத்தின ஒழுக்கத்தில் தாமதிப்பதினால் இவள் வருந்துகின்றவளானாள். பாய் கின்ற பரிபூட்டிய தேரோடு வந்து மணந்து கொள்ளின் துன்பம் நீங்குவ தாகும். 5 தலைவன் பிரிந்து தொன்முறை மனைவியரோடு புணர்ச்சி எய்தியிருந் தானாகத் தலைவியின் ஆற்றாமை கண்டு வினாவிய தோழிக்கு அவள் கூறுகின்றாள்: தலைவி:- பூங்கோதை போல நிரையாய் நின்று விளையாடும் ஆயத்தாரும் தாயும் அறியும்படி பூப்போன்ற கண்கள் அழகிழக்கும்படி, முன்னர் நம்மிடத்து மிக்க காதல் நிகழ்த்திப், பின்னர் ஒரு காரணமு மின்றி நம்மைத் துறந்தாரைச் சிறிது வெறுத்திருந்தனை, பின்னர் அவர் செய்த குறைகளை நூறு நூறாக அடுக்கிக் கூறினாய். அதுவுமில்லாமல் வருந்தி அழுதலையும் செய்தாய். ஆதலால் வருந்தியிருந்தாய் என்று சொல்லா நின்றாய்; தோழி! எனது வருத்தத்தைக் கேட்பாயாக. மிக அழகினையும் காதலையுமுடைய மனைவியரோடு அவன் பொருந்தி நம் வருத்தத்தைப் பார்க்கும் குணம் இல்லாதவனாயிருப்பதை யான் அறிவேன். அறிந்திருப்பினும் அவன் வந்து என்னை விரும்பிச் சிறிது அருள் செய்ய என்னுடைய நாணமில்லாத நெஞ்சம் என் வயத்தன்றி அவனிடத்தே நெகிழ்ந்து செல்லுதலையுங் கண்டிருப்பேன். இருள் போன்ற கரிய கூந்தலுடைய தொன்முறை மனைவியரோடு அவன் பொருந்தி நம் வருத்தத்தை தெளியும் குணமிலனாயிருப்பதை யான் அறிவேன். அறிந்திருப்பினும் அவன் ஒரு கால் அருள் செய்து சிறிதாக அளிக்க என்னுடைய மருளாகிய நெஞ்சம் அதற்கு மகிழ்தலை யுங் கண்டிருப்பேன். ஒள்ளிய ஆபரணங்களையும் காதலையுமுடைய தொன்முறை மனைவியரோடு அவன் பொருந்தி அவன் நம்மை நினைக்கும் குணம் இலனாயிருத்தலை மிகவும் அறிவேன். அறிந்திருப்பினும் அவன் சிறிது புல்லி அளிக்க என்னுடைய வருத்தமுடைய நெஞ்சு வருத்தம் மீறாதா தலுங் கண்டிருப்பேன். ஆகையினாலே காம நோய் மிகுந்த நெஞ்சம், நடுயாமத்தில் நாம் கொள்ளும் துயிலை வாங்கிக்கொண்டு, பிரிந்தவர் இடத்திற் சென்று விட்டது. அவ்வாறாதலின் உயிர் வாழ்க்கையோ பிறர் மிகச் சிரித்தலை யுடையது. (தோழி வரைவு கடாவுமாறு, தலைவி இவ்வாறு கூறினாள்.) 6 காப்பு மிகுதிக்கண் ஆற்றாத தலைவி தலைவன் பாற்சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறுகின்றாள்: கரிய கொம்பினையுடைய புன்னையின் சிறிய கொம்பரில் நறிய மலர்கள் விரியும் தருணம் பார்த்து நுகர்தற்கு வண்டினம் ஆரவாரிக்கும். இவ்வோசையோடே கரிய தும்பிகளும் ஒருங்கு இயைந்து ஊதும். இவ்விரு ஓசைகளுஞ் சேர்ந்து இம்மென இசைக்கும். யாராலும் பெறுதற் கரிய பொருளாகிய முறைமையினையுடைய திருமால், பாட்டோடு யாழையுங் கேட்டுப் பள்ளி கொள்வது போல இவ்வோசையைக் கேட்டுப் பெரிய கடலும் ஒலியவிந்து உறங்கும், இவ்வாறு வண்டு ஒலிக் கின்ற சோலையிடத்தே, நெஞ்சே! சென்றாய். அறியாமையுடைய நெஞ்சே! சோலையிடத்தே பொருள்களைக் கண்கள் காணாதபடி இருளைப் பரப்பி உயிர்கள் எல்லாம் ஓய்ந்திருக்கும் இருளிடத்தே ஒரு மருந்தாலும் ஆறாத காம நோயைச் செய்தவனிடத்தே போனாய். போன நீ அவனைக் கண்ணாற் கண்டாயோ? காணா திருந்தாயோ? கூறு. மடநெஞ்சே! கொல்கின்ற ஆண்சுறாக்கூட்டம் சோலையிடத்திற் போகாமற்றடுக்கின்ற மயக்கத்தைத் தரும் மாலைக் காலத்தே வருத்தத் தைத் தரும் காம நோயைச் செய்தவனிடத்தே போனாய். போன நீ அவனை அணைய என்கின்ற அவ்வளவு தானும் பெற்றாயோ? புல்லா திருந்தாயோ? கூறு. மட நெஞ்சே! கடற்கரைச் சோலையிடத்தே பறவைத் திரள் தாந் தங்குமிடத்தே சென்று சேரும் மாலைக் காலத்தே முன்பு இறுகியிருந்த வளையலைத் கழலப் பண்ணினவனிடத்தே போனாய். போன நீ அவன் மனக்கருத்தை அறியும் அவ்வளவு தானும் பெற்றாயோ அதுதானும் அறியாதிருந்தாயோ? இரங்கத்தக்க என் நெஞ்சே! பொறுத்தற்கரிய வருத்தஞ்செய்யும் காம நோயைத் தந்தவனிடத்தே துயிலைக் கைவிட்டுப் பகலுமிரவும் கழியில் திரை போவதும் வருவதும் போல் நீயும் பல முறையாகச் சென்றும் வந்தும் தடுமாறி அவனைப் பெறவிரும்பி வருந்தினாய். 7 களவு வெளிப்பட்ட பின் வரையாது பொருள் வயிற் பிரிந்தவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று தலைவியது ஆற்றாமை கூறி வரைவு கடாவுகின்றாள்: எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவன் உலகம் மூன்றையும் தன்னடியால் அளந்தான். அவனது தமையனாகிய பல தேவன் நீல ஆடையை அழகு பெற உடுத்திருப்பான் அந்நீல உடைபோன்ற கடலின் வெள்ளியதிரை இடுமணலிடத்தே வந்து சூழ்ந்து விளங்கும். இவ்வகை யான கடற்கரையை உடையவனே! காரிகை மனங்கலங்குதலால் அவளது பிறைபோன்ற நெற்றி பீர்க்கம் பூவின் நிறங்கொண்டது. இவ்வூரிலுள்ளார் அலரை ஆரவாரித் துக் கூறும்படி நீ இவளைக் கைவிடுதலால் மிகுந்த வருத்தமுடைய காமநோயை எனக்குந் தெரியாமல் மறைத்தாள். ஆயினும் அவள் நுதல் அதைப் புலப்படுத்திற்று. தோழியர் தோள்களிலும் அழகுபெற்ற இவள் தோள்கள் தம் இயற்கை அழகை இழந்தன. அவை நீ அணிதலாற் பெறுகின்ற செயற்கை அழகையும் இழந்தன. இவ்வூரிலுள்ளார் தம்மிற் றம்மிற் கூடி அலர் தூற்றும்படி இவள் வருத்தத்தை நீ அறியாயாய் விட்டுப் பிரிந்தாய். அதனால் உவமை கூற முடியாத வருத்தந்தரும் காமநோயை எனக்கும் மறைத்தாள். ஆனால் தோள்கள் அதனைப் புலப்படுத்தாநின்றன. வெற்றிவேலின் முனையை ஒத்த வெற்றியையுடைய அழகை இப்பொழுது நினைந்து கண்ணீர் உகும்படி நின்று அழுதாள். இன்று இவ்வூரிலுள்ளார் அலர் தூற்றும்படி இவள் வருத்தத்தை அறியாயாய் நீ விட்டுப் பிரிதலால் அவள் தன்னிடத்திற்றோன்றிய மிக்க நோயை எனக்கும் மறைத்தாள். ஆனால் கண்கள் புலப்படுத்தி விட்டன. அலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த அகன்ற மார்பனே! இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தெய்வத்தாலே பிரியேனென்று தெளிவித்தாய். அவளும் அதனை உண்மையென்று துணிந்தாள். நீ பிரிதலின் கெட்ட நலம் பண்டு போல நன்றாம்படி நின் நெஞ்சிலே புரி. புரிந்து பிடரி மயிருடைய குதிரை பூட்டிய தேரைச் செலுத்தி எம்மனையிடத்து வந்து அவளை வரைந்து கொள். 8 வரைவு நீட ஆற்றாத தலைவியின் நிலைமையைத் தோழி கூறித் தலைவனை நெருங்கி வரைவு கடாவுகின்றாள்: அறிவில்லாதவர்கள் இது செய்யலாகாதென்று தமது மனத்தைத் திருப்ப மாட்டார்கள். தாம் செய்வனவற்றை விலக்குவாரும், உலகத்திற் கண்டவர்களும் இல்லை என்று கருதித் தீவினைகளைச் செய்வர். தாஞ் செய்த தீவினைகளைப் பிறர் அறியாது மறைத்தார்களாயினும் தாம் புரிந்த தீவினைக்கு அவர் நெஞ்சே சாட்சியாகும். ஆகையினாலே நல்ல குதிரையை யுடைய செல்வனே! நின்னை யான் கடிந்துரைக்க வேண்டுவ தில்லை. கடிந்துரைக்க வேண்டியதில்லை என்று நன்றாயறிந்தேனா யினும் உன்னிடத்திலுள்ளதாக நான் ஆராய்ந்து கண்டவற்றால் நீ என் தலைவி மாட்டு அன்புடையையல்லை என்று சொல்லி வந்து நின்னைக் கடிந்துரைப்பேன். ஐயனே! அதனைக் கேள். மகிழ்ச்சி தரும் இனியமொழியுடையவளுக்கு தொய்யில் எழுதிய இளைய முலைகள் தோன்றுகின்ற இளமைப் பருவத்தே நீ இவளைக் கூடினாய். அத்தொடர்ச்சியை இவள் கண்கள் தோற்றுவிக்கும் நீர்த் துளிகள் விழுந்து அறிவிக்கும். அக்கண்ணீர்த் துளிகளைக் கண்டும் அருள் செய்யாது விடுகின்றவனே! ஒலிக்கின்ற கடற்கரையையுடைய தலைவனே! நீ மிகக் கொடியை காண். விளங்குகின்ற வளையுடையாள் அழகிய தழையை உடுத்த இளமைப் பருவமுடையளாய் விளங்கினாள். அப்பொழுது நீ வந்து இவளது உயர்ந்த அழகு மென்மேல் வளர்ந்து செல்லும்படி அருளினாய். அத்தொடர்ச்சியை அவள் மேனி வாடி நின்னை வெறுத்து அழா நின்றது. அதனைக் கண்டும் சேராது கைவிடுகின்றவனே! நீ மிகக் கொடியை. இனிய ஓசை செய்யும் உள்ளிடுமணியுடைய சிலம்பணிந்தவளும் சிறு வார்த்தைகளையுடையவளுமாகிய என் தோழியின் மயிரைப் பின்னிமுடிக்கின்ற இளமைப் பருவத்தே வந்து அவளை உறவு கொண்டாய். அவ்வுறவு நீங்கும் படியும் அவள் மேனியின் நுண்ணிய அழகு வாடும்படியும், அவள் இடம் வாராமல் அவளைக் கை விடுகின்றவனே! தண்ணிய துறையை உடையவனே நீ இனித்தகுதிப் பாடுண்டாக நடப்பாயாக. பெருமா! யான் கூறிய அத்தன்மைகள் உடையவள் என்று கருதி அவளை அருள் செய்வாய். நீ இவளை மணந்துவிடின். நின்னை இல்லாமல் முன் கையில் நில்லாமற் கழன்றவளையினையுடைய இவட்குய் பிறையை ஒத்த நெற்றியிற் தோன்றிய பசலை இனி ஒரு காலமும் வாராமல் மறையும். 9 தலைவியது ஆற்றாமை கூறித் தோழி தலைவனை வரைவு கடாவுகின்றாள்: சூரியன் பொன்னையுடைய அத்தகிரியிலே சென்று சேர்ந்து மறையும். அப்போது ஞாயிறின்றி வருந்தின உலகை நோக்கி உலகங் கொண் டாடும்படி பெருமையுடைய சந்திரன் தோன்றும். செக்கர்வானமுடைய அந்திக் காலத்தே முக்கோலையுடைய அந்தணர் இருந்து மந்திரங் களை நினைத்தல் போல, நாரைக் கூட்டங்கள் ஆரவாரமின்றி இடு மண்மேல் இருக்கும். இவ்வாறு இலங்குகின்ற நீரையுடைய தலைவனே! (அந்தணர் நிலத்தில் முக்கோலூன்றிக் காவி வேட்டி யுடுத்தவர்க ளாயிருப்பார். நாரையின் சிறகு சிவந்திருத்தலாலும் மூக்கு நிலத்திற் சென்று குத்துதலாலும், நாரை அந்தணருக்குவமிக்கப் பட்டிருக்கின்றது) அழகிய சிறகுடைய கொக்குகள் இராக்காலத்து ஒலிக்குமிடத்து அதனை நினது தேர் மணியின் ஓசை என்று இவள் துணிவாள். துணியும் போது அப்பறவைகள் ஓசை செய்யாதிருக்கும். பின்பு அதனைத் தேர் மணியின் ஓசை அன்று என்று காண்பள். அது கடற்கரைச் சோலை யிடத்துப் பறவைகளின் ஓசை என உணர்ந்து தனிமையால் வருந்துவள். நீருக்குமேல் உயர்ந்து நெருங்கின பூக்கள் நாறும். அதனை நின்மார்பிற் கிடந்த மாலையின் நாற்றமென்று இவள் துணிவள். துணிந்த அப்பொழுதே அப்பூக்கள் அலரும் சமயத்து அவற்றை அசைத்த காற்று வந்து அவள் மேற்படும். அதனால் அது கழியிடத்துப் பூத்த பூவின் மணமென்று உணர்ந்து பின்பு மயங்கி வருந்தா நிற்கும். உயர்ந்த மனையிடத்தே மனத்தை நிறுத்தமாட்டாளாய் நின்னை நினைந்து சிறிது துயின்றாள். அப்போது நீ தன் தோள்மேற் கிடந்தா யாகத் துணிந்தாள். துணிந்து மெய்யென்று கருதித் தழுவுமிடத்து உன் வடிவைக் காணாளாய் தான் கண்டது கனவென்று அறிந்து பின்பு கலங்கா நிற்பள். என் தோழி பலவற்றை நினைந்து நொந்த நெஞ்சாலே சுழன்று காம நோயில் அழுந்துவாள். அவளது மதியென்று மருளும் முகம் விளங்கும்படி நின் தேர் குதிரையைப் பூண்டு வருவதாக. 10 இதுவும் அது: போரில் மிகுகின்ற சக்கரத்தையுடைய திருமாலின் தோளில் மாலை கிடக்கும். அம்மாலை போலக் கடற்கரையிற் கருமணலுடைய எக்கர் மீது விளங்குகின்ற கொத்தினையுடைய ஞாழற்பூவும், தேன் நாறுகின்ற புன்னைப் பூவும், தளை அவிழ்ந்த பூக்களையுடைய தாழம் பூவும், முறுக்கவிழ்ந்த செருந்திப் பூவும் விளங்கித் தோன்றும். வண்டுகள் சிறிது ஒலித்து ஆரவாரிக்கும். கரிய தும்பிகள் தேனை ஊதச் சூழ்ந்து கிடக்கும். இவ்வாறு விளங்குகின்ற நீரையுடைய தலைவனே! கடிய பனி நீர் விழுவதுபோலக் கயல்போன்ற கண்களில் நீர் நிறைந்து வடியும்படி வருந்தி அழும்படி இவளை நீ துறந்தாய். அவ்வாறு துறத்தற்குக் காரணம், நின் மனம் நடுங்குதற்குக் காரணமான காம நோய் தீரும்படி (சுறவு முதலியன உடைமையால்) கொடிய கழி சூழ்ந்த குன்றுபோல் உயர்ந்த வெள்ளிய இடுமணலிடத்து நீ செய்த குறியிடத்தே தப்பாமல் வந்தா ளென்பதோ? அறிவு வருத்தத்தில் அழுந்தினமையால் அவள் அழகு சிதைந்தது. அதனால் முன்பு இறுகியிருந்த வளை தோளினின்றும் கழன்று விழும். இவ்வாறாகும்படி நீ அவளைத் துறந்தாய். நீ அவ்வாறு செய்தது, திரை ஒலிக் கின்ற கடற்கரையிலே உனது வேகமாய்ச் செல்லும் தேர், இன்ன காலத்தில் வரும் என்பதை அறியும் குறிப்பில்லாதவிடத்தும், அது வருங் காலத்தைப் பல நாளும் மனத்தால் நோக்கி எதிர் கொண்டாள் என்பதோ? மூங்கிலிலும் அழகிய இவளது தோள்களிற் கிடந்து விளங்குகின்ற பூண்களை அத்தோள்கள் பொறுக்க மாட்டாது மெலியவும், நெற்றி பசப்பூரவும் நீ இவளைத் துறந்தாய். நீ இவ்வாறு செய்தது, காண்டற் கினிதாகிய இக்குளிர்ந்த துறையிடத்து, நடுயாமத்தே நீ வந்து செய்த நின் வரவுணர்த்திய குறியிலே தப்பாமல் வந்தாளென்பதோ? வலிய நீரையுடைய கடற்கரைத் தலைவனே! உனக்குச் செய்ந் நன்றிக்கேடு உண்டாகும்; ஆகையினாலே அது தீர வலிய ஞாயிறு சுடுமென்று கருதி உயர்ந்த திரை தன் கரையில் நெருங்கி வளரும் கடும்பை விரைந்து அருள் செய்தாய் போல, இவளுடைய முன் கையில் வளை கழன்று வருதற்குக் காரணமான வருத்தந்தரும் நோய் தீரும்படி அருள் செய்து வரைந்து கொள். 11 வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியின் அழகு கெடுதலைக் கண்டு வினாவிய தோழிக்கு அவள், தான் கண்ட கனவு நிலை கூறு கின்றாள்: வளைந்த தாழையின் அசைகின்ற கொம்பை வாடைக் காற்று அசைக்கும். அதன் மேல் அசைகின்ற நடையுடைய நாரை இருக்கும். இருந்து இராக்காலத்து நமது துயரை அறியாமல் நம் தோளைத் துறந்து நமக்கு அருளாதவரைப் போல நின்று (காம நோயாலே) வருத்த மின்றாய்ச் சத்தமிடும். இவ்வகையினதாகிய சோலையையுடைய கடற் கரைத் தலைவனைக் கண்டு கூடினாய் போலப் புதிய ஓர் அழகினை உடையையானாயென்று கூறுகின்றாய். வெளியாய் வாராத உறவில்லாத வனை கனவிடத்தே கண்டு அவன் செய்த காரியத்தை இப்பொழுது கேள்: அக் கனவிடத்தே, நின்னைப் பிரிந்த இடத்து வருந்தி உயிர்வாழே னென்று கூறினவனைப் பிடித்துக்கொண்டு நீ கொண்ட எனது நலத்தை இனித்தருவாய் என்று வளைத்துக் கொள்வேன் போல இருந்தது; அவ் விடத்தே என்னுடைய கழிந்த அழகை யான் பெறும்படி தழுவிக் கூடி இனி வருந்தாதே யென்று கூறி என்னையும் அருள் செய்வான் போலவும் இருந்தது. என்னை மறத்தல் மாத்திரமல்லாமல் பின்னர் முலையிடத்திற் றுயிலும் துயிலையும் மறந்தாயென்று கூறிப் பழைய தன்மை கெட்ட நெஞ்சுடையேன் போலவும் இருந்தது; அது கண்டு வலையிலே அகப் பட்ட மயில் போலக் கவலையிலே அகப்பட்டுப் பெரிதும் வருந்தினாயே யென்று கூறி, அடிமுன்னே தன்றலை யுறும்படி வணங்குவான் போலே யும் இருந்தது. அங்ஙனம் வணங்கி நின்ற குளிர் காற்றுடைய கடற்கரையூரனை, மாலையைக் கோலாய்க் கொண்டு அடிப்பேன் போலவும், அவ்விடத்தே யான் செய்த தப்பு யாதென்று கூறி நடுங்கி நீ பெரிதும் அறியாமை யுடையை என்று தெளிவிப்பான் போலேயும் இருந்தது. தோழி! இவ்வாறு கனவிடத்தே கண்டேன். அதனாலே என் னுடைய பெறுதற்கரிய உயிரை எனக்குத் தரும்படி அழகிய சோலையை யுடைய தலைவன் கனவிலே வந்தான் போல மெய்யாக வந்து கூடுதலும் உண்டென்று கருதி, அவன் அருளும் காலத்தை நோக்கி விரும்பி என் நெஞ்சு நின்றது. 12 தலைவி ஆற்றாளாயினவாறு தோழி தலைவற்குக் கூறுகின்றாள்: பல உலகங்களில் உயிர்கள் எல்லாம் பழைய ஊழிக் காலத்தே பிறந்திறந்து தடுமாறித் திரியும்படி முதல்வன் படைப்பான். அவன் ஊழி முடிவில் அவ்வுயிர்களை எல்லாம் தன்னிடத்தே ஒடுக்கிக் கொள்வான். அதுபோல ஞாயிறு பகற்பொழுதைத் தோற்றுவிக்கும் வெவ்விய கிரணங்களைத் தன்னிடத்தே மீட்டுக்கொண்டு மறையும். நீதிமுறையே உலகை ஆண்ட அரசன் போக அநீதியை மேற்கொண்டிருந்து நீதியை உலகத்துக்கு நிறுத்த மாட்டாத குறுநில மன்னன் காலம் போல மயக்கமுடைய இருள் தோன்றும் பகலுக்கு எல்லையாயுள்ளதும் வருத்தம் மிகுதற்குக் காரணமானதும் மயக்கத்தையுடையதுமாகிய மாலை தோன்றா நின்றது. இம்மாலையம்பொழுதில், பரந்த திரை ஒலித்தல் மாறாத பரந்த நீரையுடைய பனிக்கடலே! எம் வலி கெடும்படி தலைவன் துறந்தானென்று கூறி, அவனால் உண் டான காம நோய்ச் சுட அதனிடத்து அழுந்துவாரை வருத்த வேண்டி ஆரவாரிக் கின்றனையோ? அன்றி, முன்பு இனிய துணையாய்ப் பின்பு பிரிந்தாரை உடைய எம்மைப் போல நீயும் உடையையாய் வருந்து கின்றாயோ? மன்றத்தில் நின்ற கரிய பனையின் மடலைச் சேர்ந்திருக்கும் அன்றிலே! நந்தலைவர் செய்த நன்மைகளை யான் இருந்து சொல் லுதலை அவர் கெடுத்துவிட்டாரென்று கலங்கிய என் வருத்தத்தை அறிந்தனையாய் மிகவும் வருந்த வேண்டி ஆரவாரிக்கின்றனையோ? அன்றி முன்பு இனிய துணையாய்ப் பின் பிரிந்தாரை எம்மைப் போல நீயும் உடையையாய் வருந்துகின்றனையோ? வருத்தத்தைத் தரும் அழகிய சிறு குழலே! இக்காலத்து வருவா ராயின் அவர் செய்த பழி மிகவும் போகுமென்று கருதிப் பனியோடு கூடிய இருள் சூழ்தலாற், கலங்கியத் தனித்தவளுடைய வருத்தத்தைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ? அல்லது இனியவற்றைச் செய்து பின்பு நீங்கியவரை நீயும் உடையையோ? என்று இவ்வாறு சொல்லி நெஞ்சழிந்து, அயலார் அறிந்த வருத்தம் மேலிடுதலால் பெரிய பித்தேறிய தன்மையைப் பெற்றாள். பெரும! ஆதலின் அவளை வரைந்து கொண்டுபோவாய். அங்ஙனஞ் சொல்லுங்கால் உன்னை நுகர்ந்தவருடைய நெஞ்சம் அழியும்படி அவரைக் கைவிடாதிரு. விடுவாயாயின் வருத்தத்தைப் போக்கும் மருந்தின் திறமையை அறிந்த ஒருவன் அம்மருந்தை அறியேன் என்று கூறி அம்மருந்தின் காரியத்தைக் கெடுக்கும் அதிலும் கொடியதாகும். என்று அவள் ஆற்றாமை கூறித் தோழி வரைவு கடாவினாள். 13 பிரிவிடை ஆற்றாத தலைவியது ஆற்றாமை தலைவன் வந்து சார்தலின் நீங்கியது. அது கண்டு வாயில்கள் தம்முள்ளே கூறுகின்றன: இவனாட்சியிற் றோன்றிய உறவும் உண்மை கூறலும் நன்மை யாகிய நடுவு நிலைமையும் ஆகிய இவை இவனுக்குப் பின் இல்லாமற் போயின என்று மக்கள் இரங்கும்படி பொய்யைக் கெடுத்து நன்மை உண்டாக ஓர் அரசன் நன்றாக ஆள்வன். அவனிடத்தே நல்லூழால் உண்டான செல்வம் அவனோடு கெட்டது போல நிரைத்த கதிருடைய ஞாயிறு படுதலால் பகற்காலம் மறைந்தது. பின்பு வருத்தங் கொள்ளு தற்குக் காரணமான மருட்சியுடைய மாலைக் காலம் வந்தது. ஒன்றையும் கல்லாமல் மூத்தவனது ஞானக் கண்ணில்லாத நெஞ்சு போலப் புல்லென்று இருள் பரக்கும். இம் மாலைக் காலத்து இருடிகள் (ஐயர்) விளங்குகின்ற அழலை ஆகுதி பண்ணி எழுப்புவர். எனது செயலற்ற நெஞ்சந்தானும் கொதித்து எனக்குக் காமத் தீயைக் கொளுத்தும். இம் மாலைக் கண்ணே, கரிய கழிகளிற் பெரிய மலர்கள் குவிய, என் நெஞ்சம் அவனை நினைந்து அழிந்து கூம்பும். இம் மாலைக் கண்ணே கோவலருடைய இனிய குழலாலே நெஞ்சு வருந்தும்; எனது பூவின் அழகுடைய கண்கள் தனிமையைக் கொண்டு வருந்தும் என்று சொல்லி, பொழுது படுகின்ற மாலையில் இவள் வருத்துகின்ற காமநோயில் அமிழ்ந்திருப்பாள். அவளைப் பிரிந்தவர் வந்து தீண்டப் பசப்பு நீங்கிற்று. அத்தன்மை, குடிமக்களைப் பாது காத்துப் பின்னர் தன்னைக் காக்கின்ற பாண்டியனது அகன்ற படை செல்லச் செல்லப் பகைவர் நீங்கினார் போலிருந்தது. 14 வரைவு நீடத் தோழி ஆற்றாளாயினாள். “அவன் முன் அருமை செய்து அயர்த்த காலத்து அவன் வரவினை யானறிந்து உன்னைக் கொண்டு சென்று ஊசல் ஆடா நின்றேன். அப்பொழுது யான் தலைவனின் அன்பின்மையைக் கூற நீ அவன் அன்புடையன் என்று கூறினாய். அதனைக் கேட்டிருந்த தலைவன் வந்த ஊசலை ஆட்டினான். அத்தன்மையுடையவன் இப்போது உன்னை வருந்தவிடாது வருத்தமறிந்து வரைந்து கொள்வன்” எனத் தோழி கூறித் தலைவியை ஆற்றுகின்றாள்: பார்க்கும்போது அப்பார்வையாற் பிறர்க்கு வருத்த முண்டாக்கு வதும், இணையாக மலர்ந்த பூவின் அழகு போன்றதும், புகழத்தக்க அழகினை யுடையதுமாகிய கண்ணினையுடையாய்! கொல்லுகின்ற சினமுடைய சுறா, மீன் கூட்டங்களின் பகை போகும் படி அவற்றைத் தாக்கிக் கொல்லும். யாழ் அழகு பெறும்படி அச்சுறாவின் கொம்பாற் செய்த பலகையைக் கோத்தும் புறவிதழ் ஒடித்த நெய்தற்பூவை நெடிய நாரிலே தொடுத்தும் கட்டப்பெற்றிருக்கும். கையினாலே தடவி வாசிக்கும் அவ்வியாழின் ஓசைபோல வண்டின் கூட்டங்கள் ஆரவாரஞ் செய்து பாட, அதனைத் தாங்க மாட்டாது தாழையினது பூக்கள் தேன் துளிகளைச் சொட்டும். அத்தாழையின் விழுதைத் திரித்துக்கட்டிய ஊசலை நீ ஆடுவாய். அவ்வாறு ஆடின், நீரையுடைய பெரிய கடற்றெய்வத்தை நோக்கி உன்னைப் பிரியேன் என்று தெளிவித்து, உன்னுடைய அழகிய ஆபரண மணிந்த மிருதுவான தோளைக் கூடினவன் அருமை செய்து மறந்ததால் நினக்குண்டாகிய அரிய வருத்தத்தை, யான் அவனை எதிர்ப்பட்டுத் தீர்ப்பேன் போல இருக்கின்றது. அதுகேட்டு ஊசலிடத்தே சென்ற தலைவியை அவள் நோக்கி, இளைய மடமான் பிணையின் நோக்கினையுடையவளே! உன் விசாலித்த மிருதுவான தோளைக் கைவிட்டவனுடைய கொடுமைகளின் பகுதி களைச் சொல்லிப் பாடி நீ ஏறின ஊசலை உயரச் செலுத்தி ஆட்ட நீ நெடுநேரம் ஆடுவாய். தலைவி அங்ஙனம் பாடாமையில் தோழி தலைவியை விளித்துத் தோழி! கடற்கரைச் சோலையிடத்துக் கமழ்கின்ற ஞாழற் பூவின் நிறத்தை ஒப்ப நின்மேனி பசப்படைந்தது. அவ்வாறு பசப்படையச் செய்தவ னுடைய துறையிடத்து ஒளியுடைய நிலாவைப் போல விளங்குகின்ற இடுமணலிருக்கும். அம்மணல் மீது ஓயாது ஓடும் நண்டுகள் இப்பொழுது நம்மைக் கண்டு தம் வளையிலே புகுந்தன. அத்துறைவன் நமக்குச் செய்த கொடுமையை நினைந்து நம் முன் தாம் நிற்க நாணி அவை அவ்வாறு புகுந்தனவோ? அவ்வாறு நாணினவாயின் இராக்கால மெல்லாம் அவை நாணியிருக்கும். மழைபோல் நீண்ட கூந்தலையும், மதர்த்த அழகிய கண்ணையும், ஆழ்ந்த கடலிற் பிறந்த முத்தின் அழகை ஒத்த முறுவலினையும் உடையாய்! மாயாத நோயைச் செய்தவனது கொடுமையின் பகுதிகளைச் சொல்லி நாம் பாடும் மிக உயர்ந்த ஊசற் பாட்டில் ஒன்றை நீ பாடுவாய். துறைவன், நம்மேல் அன்புற்றுப் புணர்ந்த அன்று தானெழுதிய கரும்பின் அழகு கெடும்படி மென்றோளை மெலிவித்தான். அவனது துறையிடத்து இனிய துணையோடு கூடிய அன்றில், தன் துணைவனை நீங்கினவள் வருந்தினாளோ என்று கருதி இராக்காலத்தில் அழைக்க வில்லை. ஆகையினாலே தோழி! அவை நம் வருத்தத்தைப் பார்த்துத் தாமும் வருத்தமுற்றனபோல விருந்தன. ஆதலால் அவை இரவெல்லாம் நம் வருத்தத்தைப் பார்த்துத் தாமும் வருத்தமுற்றன. தலைவி:- கரையை இடித்துத் தனக்காக்கிக் கொள்ளும் கொடிய கழியிடத்து நோக்கினார் கண்களைக் கவரும் பறவைகள் கூட்டமாக இருக்கும். அவை, திரை மோதுகையால் இறந்த புலால் நாற்றமுடைய மீனை இரையாகத் தின்னுமல்லாமல், தாம் ஒன்றன் உயிரைப் போக்கி உண்ணா, இவ்வகையான அருளுடைய துறைவனை நாம் பாடுகின்ற ஊசற்பாட்டால் நீ அவரின் அன்பைப் பழித்துப் பாடினாய். இனி அவர் அன்பு தோன்ற ஒன்று பாடுவாய். அவன் துறை, மணம் நாறுகின்ற ஐம்பாலாய் முடிந்த கூந்தலை யுடையாரிடத்து உண்டாகிய ஊடலைக் கண்ட பொழுதே வளைந்து தீர்க்கும். திரண்ட இடுமணலாலே காவிச் செடிகள் வருந்தும். பெரிய திரைகள் வந்து அம்மணலைக் கரைத்து அக்காவிச் செடிகளை அருள் செய்யும். ஆகவே அத்திரைகள் அருள்செய்தனவோ? செய்யாதனவோ. இரவெல்லாம் அருள் செய்தன. (என அருள் தோன்றக் கூறினாள்.) இவ்வாறு அன்பைப் பழித்தும். அன்பு தோன்றவும் நீயும் யானும் பாடச் சேர்ப்பன் பாட்டை மறைய நின்று கேட்டான். நீடிய வெண்i மயுடைய கடற்கரையுடையவனையான் ஊசலை ஆட்டு என்றேனென்று அவன் கருதினான். கருதிப் பின்பு யான் என்று நீ மருளும்படி அவன் தேன்வண்டு ஒலிக்கும் புன்னையைப் பொருந்தி நின்றான். பின்பு வந்து அவ்வூசலை ஆட்டினான். (ஆதலின் உன் மிகுந்த வருத்தத்தை அறிந்து வந்து வரைந்து கொள்வனெனக் கூறி அவளை ஆற்றுவித்தாள்) 15 வரைவு நீடித்த விடத்துப் பகற் குறி வந்து நீங்குந் தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு, அவளை நாணம் நெஞ்சை அலைக்கும்படி வரைவு கடாவு கின்றாள்: பாண்டியர், வீரமுரைசு கொடைமுரைசு, நியாய முரைசு என மூன்று முரைசுடையர். அவரது படையின் நடுவே யானைகள் வரிசை யாகக் கம்பங்களிற் கட்டி நிற்கும். அப்படையின் தோற்றம் போலப் பல வடிவினையுடைய புள்ளினங்கள் இரை தேடித் தின்று இருந்து இளைப்பாறும். அவை, கடலின் திரை வந்து பொரும்படி உயர்ந்த இடுமணலிடத்திற்றங்கும். இவ்வகையான இடுமணலுடையதும், தாஞ் சென்றவிடத்துத் தாம் போன காரியம் முடித்து வந்த மரக்கலங்கள் நிற்பது மாகிய கடலையுடைய துறைவனே! இவள் பரந்த பசலை நிறத்தாற் பகற்பொழுதே எடுத்த விளக்குப் போல ஒளி கெட்டாள். அவளின் மேனி மாந்தளிரை ஒக்கும் அழகை இழந்தது. நறிய புன்னைச் சோலையிடத்தே இவளைப் புணர்ந்தபோது “நன்னுதால்! நீ, யான் பிரிவேனென்று அஞ்சாதே” என்று நீ தெளிவித்த தனால் உள்ள பயனல்லவோ? நெடுங்காலம் கழுவி மினுக்காத மணியை ஒத்த இவளது திரண்ட தோள்கள் அழகுவாடிக் கெட்டன. அத்தோள்களின் நிரைத்த வளை கழன்றன. இது நீ நறிய சோலையிடத்தே அவளைக் கூடிய விடத்துச் “சில மொழியினையுடையாய்! நின்னை யான் பிரியேன்” என்று கூறியதன் பயனன்றோ? அணிகலன்களைப் பொறுக்க மாட்டாத இடையின் தன்மை யால், இவள் அணிகலன்களை அணியாது பூ மாறின கொடியை ஒத்தாள். அவள், மருந்தாற்றீராத காம நோயிலே அழுந்தியிருக்கின்றாள். அவளை நீ அடம்பங்கொடி பரந்த இடுமணலிலே கூடி விளையாடிப் புணர்ந்த பொழுது, “வளைந்த காதணியுடையவளே! யான் பிரியேன்” என நீ கூறியதை மெய்யென்று அவள் கொண்டதன் பயனன்றோ? தனக்குத் துணை செய்யும் என்று கருதித் தான் வழிபட்ட தெய்வம் தன்னை வழிபட்டவருக்கு நெஞ்சழியும் நோய் செய்தது போலத் தனக்கு வலி என்று வழிபட்ட என்றோழியை நீ செய்த பழி எங்குஞ் சென்று அலர் தூற்றும். அதனால் உண்டான மிகுந்த நினைவால் அவளது கொடிய வருத்தம் நீங்குவது அரிதாகும். (என்று தோழி வரைவு கடாவினாள்) 16 தோழி தெருளாத தலைவனைத் தெருட்டி வரைவு கடாயது: பெரிய மலரையுடைய தாழை கரிய மலருடைய கழி முள்ளியா லும் தில்லையாலும் சூழப்பட்டுக் கடற்கரையிடத்துள்ள உயர்ந்த மணல் மேட்டின் மேல் நிற்கும். அம்முடத் தாழையில், மிகுந்த சிறப்புடைய தக்கணாமூர்த்தித் தேவர் தாமிருந்த ஆலமரத்தே, இருப்பதற்கு முன் தூக்கி வைத்த குண்டிகை போலப் பழந்தூங்கும். அத்தாழையின் அலர்ந்த பூக்களைப் போலக் கொக்குகள் அதன் மேற்றங்கும். இவ்வகையான துறையை யுடையவனே! யான் கூறுகின்றதைக் கேள்: இல்வாழ்க்கை நடத்துதல் என்று சொல்வது வறுமைப்பட்டவர்க ளுக்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தலையாகும். ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்லுவது கூடினாரைப் பிரியாதிருத்தலை: அன்பு என்று சொல்லப்படுவது தன் சுற்றத்தைக் கெடாதிருத்தலை. அறிவு என்று சொல்லப்படுவது அறியாதார் தன்னைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தலை; ஒருவரோடு ஒருவர் உறவு என்று கூறப் படுவது கூறியதொன்றைத் தாம் மாறாதிருத்தலை; நிறை என்று சொல்லப்படுவது மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதலை; முறை என்று சொல்லப்படுவது நம்மவரென்று பாராது அவர் செய்த குறைக்கேற்ப அவர் உயிரைக் கொள்ளுதலை; பொறை என்பது பகைவரைக்காலம் வருமளவும் பொறுத்திருத்தலை. அப்படியே அவ்வொழுக்கத்தை நீரே அறிந்து ஒழுகுவீராயின் அவ்வொழுக்கத்துக்கு ஏற்பது கூறுவேன்; கொண்க! என் தோழியது நெற்றியின் அழகை நுகர்ந்து அவளைக் கைவிட்டாய். அஃது இனிய பாலையுண்பவர்கள் பாலையுண்டு அதனைக் கொண்டிருக்கும் கலத்தைக் கவிழ்த்து விடுவது போல்வது. நின்னால் வருந்துகின்ற வளின் துயரத்தை வரைந்து சென்று களைவாய். அங்ஙனங்களைதற்கு நின் தேர் குதிரையைப் பூண்பதாக. 17 பிரிவிடை மாலைப்பொழுது கண்டு இவ்வகைப்பட்டனவும் நமது இடுக்கண் கண்டு வருந்தின போன்றன; அவர் நமக்கு அருள்வாரோ? என்று தலைவி சொல்லிய போது தலைவன் புகுந்தான். அவ்வளவில் அவள் துன்பம் நீங்கினமை கண்டு வாயில்கள் தம்முள்ளே கூறுகின்றன; அலர்ந்த மாலை அணிந்த அகன்ற மார்பையுடையவன் பகைத்து வந்த மல்லரின் வீரத்தைக் கெடுத்தான். அவன் பகைவர் எல்லாரும் ஒருமித்து வந்து கோபித்துத் தன்னை எதிர்த்ததனால், அவரை வருந்தி அவர் ஓடும்படி அவர்களின் கொல்லும் யானையின் அழகிய மத்தகத் திலே சக்கரப்படையை அழுத்தினான். அத்தன்மைபோல ஞாயிறு தன்கதிர்களை வாங்கிக்கொண்டு அத்தகிரியைச் சேர்ந்து மறைந்தது. பெரிய கடலில் திரை ஏறுகின்ற நீர் மிக்குக் கரையைச் சேரா நின்றது. கழியிடத்துப் பூக்களினின்றும் போன வண்டுகளாலே அழகழிந்த துறை, துயில் கொள்வது போன்றது. நீரில் உள்ள மலர்க ளெல்லாம் கூம்பின. இவ்வுலகம் எல்லாம் அஞ்சும்படி தான் தோற்றுவித்த பெரிய நிலத்தைத் தன்னிடத்தே ஒடுக்கிக் கொள்ளும் தன்மை போலப் பெரிய கடல் ஒலித்தது. இவ்வகையானதும், பிரிந்தோர்க்கு வருத்தம் மிகுதற்குக் காரணமான மயக்கத்தைத் தருவதுமாகிய மாலை நேரத்தில். எனக்கு நீங்காத காமநோயைச் செய்தவரைக் கண்ணாற் காணாமல் என் நெஞ்சு அவரையே நினைக்கும்; மாறுபாடுகளைத் தனக்கு இடமாகக் கொண்டு கொடுக்கும் பனிக்காலம் அறிவைத் தின்று விடும். அப்பொழுது பல நினைவு கொள்ளும் நெஞ்சுடையயான், கவலை கொண்ட நெஞ்சினேனாவேன். கடல் அதனைக் கண்டு என்னுடைய இவ்வருத்தம் தனது மெய்யிடத்திற் கொண்டது போலக் கூப்பிடுதற்குக் காரணம் என்னவோ? எனக்கு நடுங்குகின்ற காமநோயைச் செய்தவர் என்னை அருளாத படியால் என் நெஞ்சு அவரை நினைக்கும். அதைக் கண்டு கடும் பனிக் காலம் மிகுந்து வரும். அதனையறிந்து யான் செய்தற்கரிய துன்பத்திலே அழுந்துவேன். அதனை மணற் குன்று நோக்கும்; நோக்கி நடுங்கும் துயரில் வருந்தும் என் அழகை இழந்த எனது நோய்க்குத் தான் கரைந்து தாழ்வதுபோல இரா நிற்கும். அதற்குக் காரணமென்னோ? என்னை இறக்கச் செய்து என் துன்பத்தைப் போக்காமல் என்னை வைத்து எனது நலத்தை உண்டவர் ஈண்டு வராமையினால் என் நெஞ்சு அவரை நினைக்கும். அது கண்டு பனிக்காலம் வருத்தும். அதனைக் கண்ட பொழுதே செய்வது அறியாத வருத்தமுடையேனாய்க் கலக்கத் தில் அழுந்துவேன். அதனை நோக்கிய மரம் வருத்தத்தாற் செய்வது போல மயக்கங் கொண்ட நெஞ்சோடு இலைகளைக் குவித்ததற்கு காரண மென்னோ? கரை காணாத நடுக்கடலிலே மரக்கலங்கெட்டு அழுந்தினவன் திரை கொண்டு வந்து தர ஒரு தெப்பத்தைப் பெற்றுத் தீதில்லையாய்ப் பிழைப்பன். அதுபோல இவள் காதலர் விரைந்து புகுதத் துன்பம் யாவும் விரைந்து போயிற்று. அதனைக் காணீர் (என வாயில்கள் தம்முள்ளே கூறினர்) 18 வரையாது வந்தொழுகுந் தலைவனைத் தோழி நெருங்கி வரைவு கடாவுகின்றாள்.; கோட்டை மதிலின் வேல் நெருங்கத் தைத்த கதவை மத்தியானத் திற் குத்தும் யானையைப் போல, இடு மணலின் சிகரத்தைத் தொடும்படி வீசும்திரை, வீசுகின்ற காற்றுப் பாகனாகத், துணையைக் கூடி எழுகின்ற வலம்புரிச் சங்கு திரண்ட இரண்டு மருப்பாக மோதும்; இவ்வாறான துறையை யுடையவனே! கேள். வாசங் கமழும் மலருடைய புன்னையின் கீழ் நின்னைப் புணர்ந்ததனால் இவள் தன்னழகைத் தோற்றாள். அவளை வளை கழல்கின்ற தோள் உடையளாய் விடா நின்றாய். அது உனது ஒழுக்கத்திற் பெரிய குற்றமாய்த் தங்காதோ? மலருடைய புன்னையின் கீழ் நின்னைப் புணர்ந்ததனால் தன் அழகிய நலத்தைத் தோற்றவளைக், காமநோய் மிகுந்த நிலையுடை யளாகக் கைவிட்டாய்; அது நின் மெய் கூறுதற்கண் பெரிய பொய்யாய்த் தங்காதோ? விளங்கும் மலருடைய புன்னையின் கீழ் நின்னைப் புணர்ந்தத னால் இவள் திருவின் நலம்போன்ற அழகைத் தோற்றாள். முன்பு இவள் கண்ணுக்குத் தோற்ற மலர்கள், இப்பொழுது இவள் கண்ணை இகழும் படி இவளைக் கைவிட்டாய். இது நின்னைப் புகழ்ந்து கூறுந்தன்மை யிடத்துப் பெரிய குற்றமாயிராதோ? இவ்வாறு யான் சொல்வதைக் கேட்டு உட்கொண்டாயின், அழகிய நெடிய மாலையை வருத்தும் நின் மாணிக்கம் விளங்கும் முத்துவடத்தை பூமாலையோடு அசையும்படி அணிவாய். அணிந்து வந்து பெரு மூச்சுக் கொள்ளும் என் தோழி பொருட்டு ஓடுகின்ற ஒலியினையுடைய உயர்ந்த தேரை விரைந்து செலுத்துவாய். ( என வரைவு கடாவினாள்) 19 பிரிவிடை வைத்துப் பிரியக் கருதிய தலைவனைத் தோழி, தலைவி ஆற்றாமை கூறிச் செலவு தடுத்து வரைவு கடாவுகின்றாள்: ஊறுகின்ற நீரையுடைய இடுமணலிடத்து மீன் பிடிக்குந் திமிலை யுடைய எறியும் திரைகள் திரண்டு வந்து அலைக்கும். அவ்விடுமண லிடத்து அலையினின்றும் புள்ளிகளுடைய நண்டு வெளியே வந்து விளையாடித் திரியும். அந் நண்டுகள் சூதாடுமிடத்தே வேட்கை தவிராது உருட்டும் சூதாடு காயை ஒக்கும். இவ்வாறு விரும்பத்தக்க அழகிய கடற்கரையை உடையவனே! முத்தை ஒக்கும் மணலிடத்தே நீ கூடியபோது அவள் தாயக்காயை உருட்டி ஈரைந்தைப் பெற்றவனுடைய மனம் போல் மகிழ்ச்சி யுற்றிருந் தாள். நீ பிரிந்தபின் அவள் அழகு வாடிச் சூதிற் பொருளை இழந்த வனைப் போலக் கொடிய துயர் எய்தி வருந்தவோ? முடத்தாழையுடைய தாழை முடுக்குக்குள்ளே நீ கூடியபோது (சிறுதாயம் வேண்டியபோது) சிறுதாயம் விழக்கண்டவன் உள்ளம் போல் ஆக்கம் பெருகினாள். சுற்றத்தார்க்குப் பொருளைக் கொடுத்து வரைந்து கொள்ளத் தக்கவனே! நீ முன்னே பொருளைத் தேடாது இப்பொழுது பொருள் வயிற் பிரிய ஆராய்ந்து பார்க்கின்றாய். அவ்வா றாயின் சிறுதாயம் இடவேண்டுமளவில் இடாமல் பெருக இட்டு (முறை கேடாகச் சூதாடி) அதற்கென்று கட்டி வைத்த தன்னுடைய பொருளை இழந்தவனைப்போல மிக்க துயரில் அழுந்தவோ? நறிய பூவுடைய புன்னைக் கீழ் நீ விரும்பிக்கூட இருகாற் சிறு தாயமிட வேண்டியவன் அவ்வாறு இட்டான் போல் மனத்தில் ஆக்கம் பெருகியவளானாள். நீ பிரிந்து வந்து வரைவேனென்று அறிவித்துப் பிரியக் கருதினாய். நின் பொருட்டு அவள், இருகாற் சிறுதாயம் இட வேண்டியவன் ஒரு காற் சிறுதாயம் இட்டான்போல நெருங்கிய துயரில் அழுந்தவோ? நீ பலரும் தூற்றும் அலருக்கு அஞ்சாய்; பிரிதலைக் கைவிட்டு இவளை வரைந்து கொண்டு கூடுதற்கு அருள் செய்; அதற்காம் திறத்தை அறிந்து எழுந்திருந்து தேரை ஏறுவாயாக; அங்ஙனம் வரைந்தால் இவள் நலமும் வாடினவளாயிருப்பாள்; இருவரிடத்தும் சேரும் பொருள் இனிப் பெருகுவதாக ( என்று கூறி வரைவு கடாவினாள்) 20 வரைவு நீடித்தது. அதற்குத் தலைவி ஆற்றாளாயினாள். அவள் ஆற்றாமையை அவள் மூலம் தோழி தலைவற்கு அறிவித்தாள். தலைவன் மறைவிடத்தே நிற்கத் தோழி, அவன் வரைவா னாதலை வலியுறுத்திக் கூறினாள் அதற்கு அவள் அவ்வலியுறுத்தலுக்கு மாறாகக் கூறுகின்றாள்; தோழி! நம்முடைய நாணை நம்மிடத்து நிறுத்துவேமென்று உணர்ந்திருத்தல் அரிது; அதற்குக் காரணம் வேட்கை பெரிதாயிருப்பது. அதனால் உயிர் தேய்ந்து சிறிதாய் நிற்கின்றது. நமக்கு வருத்தத்தைத் தரும் யாமங்களும் பலவாயிருந்தன. அவ்வியாமங்களிற் றுயிலாதபடி துணையைப் பிரிந்து வருந்தி நம்மோடு உசாவும் அன்றில்களும் சில உளவாயிருந்தன; ஆதலால் உயிர் தாங்குதலரிது. முடிவில் அவர் நம்மோடு கூடப் பெற்றதால் பெற்ற பயன்யாது? பீலியுதிர்ந்த மயில் போல அழகழிந்த நாணத்தால் நாம் நடுங்கப் படுக்கையிலே கிடந்து உடம்பு, நெருப்பிலே ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பு முதலியன ஒலிக்கும்படி நடுங்க நமக்குக் காமத்தீ உண்டாகியது ஒன்றுமே. நம்முடைய நெஞ்சு அவர் நெஞ்சு போல வலியுடைய தன்று. வலி யில்லாத அந்நெஞ்சு வருத்தம் மிகும்படி நான் பிரியேன் என்று சொல்லால் வருத்தினார். அவர் நம்மை செய்ய வல்லவனாற் பண்ணப் பட்ட அழகிய விசையுடைய வில்லினால் எய்தாரல்லர். ஆயினும் ஆயிழாய்! அவர் தெளிவித்த சொல்லாற் பிறந்த நோய் மிகவும் வில்லி னும் கொடிதாயிருந்தது. நகுதல் முதலிய மெய்ப்பாடு காரணமாக நாங் கொண்ட நட்பிலே தோன்றிய தமது தகுதிப்பாடுகளால் அவர் நம்மை வருத்தினார். அவ்வா றல்லாமல் வேறு காரணமாகத் தோன்றிய பகையினால் வருத்துவா ரல்லர். ஆயினும் ஆயிழாய்! அவர் தமது தகைமையினால் வருத்தும் நோய் பகைமையினால் வருத்தும் நோயிற் பெரிதாயிருக்கின்றது. ஆயிழாய்! நம்முடைய நெஞ்சு அவர் நெஞ்சுபோல் வலியுடைய தன்று. எனது வலியில்லாத நெஞ்சு வருத்தம் மிகும்படி அவர் ‘உன்னைப் பிரியேன்’ என்னும் சொல்லைக் கூறி என்னை வருத்தினார். அவர் வில்லைச் செய்ய வல்லவன் செய்த விசையுடைய வில்லினால் எய்து என்னை வருத்தினரல்லர்; ஆயினும் அவர் சொல்லாற் பிறந்த நோய் வில்லினாற் செய்யும் நோயினும் மிகக் கடியதாயிருந்தது. ஆயிழாய்! நகை முதலியன காரணமாக நாங் கொண்ட நட்பாகிய பெருந்தன்மைகளால் என்னை அவர் வருத்துவதல்லது, பல காரணங்க ளால் எழுந்த பழைய பகை காரணமாக என்னை வருத்தினரல்லர். அவர் தகுதிப் பாட்டால் வருத்தும் நோய் பகையினாற் செய்யும் நோயிற் பெரிதாகின்றது. ஆயிழாய்! ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லி என்னைத் தனக்குண்டாகிய அன்பினாலே வயப்படுத்தினார். அவர் நம்மைத் தமது மென்மையாற் சுடுதலல்லாமல்பரந்த இருளை அகற்றும் நெடிய நெருப்பி னாற் சுட்டாரல்லர். ஆனால் அவர் தனது மென்மையாற் சுடும் நோய் தீயினும் கடிதாகும். தோழீ1 நெஞ்சிற் தன்மையுடையவர் இயற்கைப் புணர்ச்சிக் காலத்தே நம்மிடத்திற் காதலுடையராய் விரும்பி நீங்குதல் அருமை யுடையராயிருந்தார் அவர் அன்று நம்மிடத்து நிறுத்தின நோயை யான் பொறுக்கத் துணிந்த துணிவை ஆராய்ந்து பார்க்கில், அத்துணிவு எப்படியும் என் உயிரைப் போக்கும்; அவர் நமக்கு உயிரைப் போக்காமல் திரும்பவும் மருத்துவராய் இருப்பாராயின் அந்நிலை எக்காலத்தே உண்டாவது? (இவ்வாறு தலைவி, வலியுறுத்திக் கூறிய தோழியின் கூற்றை அழித்து மொழிந்தாள்) 21 மடலூர்ந்து தலைவியை எய்திய தலைவன் தான் மடலூர்ந்தவாறும் அவளை எய்தியவாறும் தனக்குப் பாங்காயினார்க்குக் கூறுகின்றான். ஒருத்தி மின்னல் விளக்கத்தின் அசைவும் கனவும் போலத் தன் வடிவைக் காட்டி என்னை முன்பு கூடினாள்; பின்னர் பிறர் என்னை இகழ்ந்து சிரிப்பனவற்றையும் எனக்குக் காட்டினாள். அதனால் எனது நெஞ்சம் என்னோடு கூடி நில்லாதாயிற்று. அழகிய மருப்புடைய யானை மதஞ்சொரிதலால் பாகனுக்குச் செய்யும் தொழிலைச் செய்யாது; தன்னை நினைத்தபடி செல்லவிடாது தடுக்கும் அங்குசத்தையும் மீறும். அதுபோல என் மனமும் தான் கொண்ட வேட்கை மிகுதியால் என் ஏவலைக் கேட்கத் தவிர்ந்தது. மனம், தான் வேண்டியவாறு ஒழுகாதபடி தன்னைக் காத்து நிற்கும் அறிவும், அறிவு ஆராய்ந்த அடக்கமும், இயல்பாகத் தோன்றிய நாணமும் இல்லை யாகும்படி,. கைகடக்கும்படி அவள் அதனைக் கைக்கொண்டாள்; கைக்கொண்டு தனது நலத்தைத் தான் காணாதபடி மறைத்தாள். அவளைக் கூடும் வழியாது என்று ஆராய்ந்து இனி மடலேறுதலே கூடும் வழி என்று கருதினேன். பனைமட்டையாற் செய்த குதிரைக்குச் சூட்ட வேண்டி நீலமணி போன்ற நிறமுடைய மயிலிறகையும் அழகிய பூளைப் பூவையும் ஆவிரம்பூவை யும் எருக்கம்பூவோடே நூலாற் றொடுத்து அம்மடன் மாவிலே கட்டினேன். இவளைப்பாடும் பாட்டை எல்லீருங் கேட்பீராக என்று சொல்லிப் பாடத் தொடங்கி னேன். அப்பாட்டாவது: யான் காதலிக்கும் விளங்குகின்ற வளையுடையவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும், வருத்தத்தால் உண்டான பனையீன்ற மடலாற் செய்த குதிரையுமாகும். அழகிய நெற்றியுடையவள் எனது உயிர் பொறுக்கும் எல்லை யைக் கடக்கும்படி நிறை என்னுங் குணம் அழிதற்குக் காரணமான இவள் தந்த காம நோயை என் உயிர் நீந்தி, உப்புப்பாத்தியிற் கிடந்த உப்பாற் செய்த பாவை மழைத்துளிபட்டதுபோலக் கரைந்துவிட்டது. மூங்கிலை வென்ற தோளையுடையவள் எனக்குத் தந்த பூக்கள் பூளைப்பூவும் பொன்போன்ற ஆவிரம் பூவுமாகும். ஒள்ளிய ஆபரணமணிந்தவள் என்னாற் பொறுக்கும் அளவில் லாத வருத்தத்தையுடைய காமநோயை எனக்குத் தந்தாள். என்னியல்பு அழிதற்குக் காரணமான அந்நோயில் என்னுயிர் அழுந்திக் கிடக்கின்றது. கொதி நெய்யுள்ளே கிடந்த மெழுகு மெத்தென உருகித் தேயுமாறு போல என்னுயிர் மெல்ல மெல்லத் தேயா நின்றது. யானுற்ற காமநோய்க்கு, யான் வருந்தும்படி உசாவுந் துணையா யுள்ளார் இளைய பிள்ளைகளும் அயலாருமே. இப்படி இப்படி எல்லாம் யான் பாடினேன். அதனைக் கேட்டு முன் அன்பில்லாத வார்த்தையுடைய என்னாற் காதலிக்கப்பட்டவள் வந்து என்னை அளித்தாள். அவள் அருள் செய்தமையால் அரிய வேட்கை அடங்கினேன்; விளக்கமுடைய செய்தற்கரிய தவத்தை முயன் றோர் தம்முடலை இவ்வுலகிற் போட்டுக் சுவர்க்கத்தை இனிதாகப் பெற்றாற்போலிருந்தது. துன்பத்துக்குத் துணையாய் நின்ற மடல் இனி இவளைப் பெறும் படி இன்பத்துக்கு இடம் பெறக் கடவது, என்று அவள் கூறினாள். (என்றான்.) 22 மடலேறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறுகின்றான்; நற்குணங்கள் எல்லாம் அமைந்தீர்! நற்குணங்களெல்லாம் அமைந்தீர்! பிறர் நோயும் தன்நோய் போல எந்நாளும் எண்ணி, அதனாற் பெறும் அறனை அறிதல் உலகிலுள்ள சான்றோர்க்கெல்லாம் முறைமை யாகும். நுமக்கும் அது முறைமை என்று கருதி நுமக்கு ஒரு காரியங் கூறு வேன் அஃது யாதெனில், ஒருத்தி இருண்ட மழைக்கு நடுவில் மின்னல் போல் வந்து தோன்றினாள். தோன்றித் தன்னொளியோடு தன்னுருவை யும் என்னைக் காணப்பண்ணி என்னை அளிக்குந் தன்மையளாய் அளித்தாள்; பின்னர் என் நெஞ்சைத் தான் வரும் வழியாகக் கொண்டு விட்டாள். அது முதற்றுயில் கொள்ளேனாயினேன். அசைகின்ற அழகிய ஆவிரம்பூவோடு எருக்கம்பூவையும் வைத்துக் கட்டிய கண்ணியைச் சூடினேன். கரிய பனை மடலாற் செய்த குதிரையை மணிகள் ஆரவாரிப்ப ஏறினேன்; ஏறிஇருந்து வருத்தத்தைத் தரும் என் காமநோயைத் தாங்க மாட்டாமையால் உண்டான மனவருத்தத்துக்கு இளைப்பாறுதலாக, இறுகின ஆபரணமணிந்த மாதர் என்னை வருத்தின தன்மைகளுள் ஒன்றைப் பாடுவேன். அதனை இவ்விடத்துள்ள சான்றீர்! கேண்மின். தேன்போலும் மொழியுடைய மாதர் தாங்காமுறாது என்னைக் காமுறுத்தின காமமாகிய கடலில் அகப்பட்டேன். அகப்பட்டு உசாவுந் துணையில்லாத நடுயாமத்தும் உசாவுந்துணையுள்ள பகலிலும் மனவருத்தமாகிய திரை வந்து அலைக்கையினால் குதிரையின் மேல் இருக்கின்றேன். இருந்து அம்மடன்மா ஒரு தெப்பமாக அக்கடலை நீந்துவேன்? அஃது என் நிலையாகும். என்னை மயக்க முறுத்தினவள் அதற்கு மருந்தாகத் தந்த இம் மடன்மா யான் பிழைக்காமைக்குக் காரணமான காம நோய்க்குப் பிழைக்கச் செய்வது ஒன்றாய் இராநின்றது. சிறந்த ஆபரணமுடையவளது அழகால் வந்த வருத்தமென்று யான் கூறும்படி, காமனுடைய ஏவலாலே வந்த காமநோயாகிய படை, யான் கண்டார் இகழும்படி வருந்த என்னிடத்தே வந்தது. வந்து என்னுடைய ஆண்டன்மையின் அழகாகிய மதிலைச் சூழ்ந்திருந்து புறத்தை எல்லாம் உடைத்துப் பின்னர் உள்வாயை அழியா நிற்கும். காமமாகிய கடிய பகை ஆண்மையை உள்ளும் புறம்பும் அழித்த லாலே இங்ஙனம் வடிவுகொண்டு தோன்றின எனக்கு அழகிய நுதலினை யுடையவள் தந்த இம்மடன்மாப் பரிகாரமாயிற்று. முல்லை முகையை ஒக்கும் இலங்குகின்ற எயிற்றையும், இனிய மகிழ்ச்சியையுமுடைய அழகால் அவள் என் நெஞ்சு பற்றிக்கொண்டது. அந் நெஞ்சின் உள்ளத்தைச் சுட்டு எரிகின்ற காமத்தீ என்னரிய உயிர் போம் அளவுக்குப் பெரிதும் நின்று சுடும். ஐயோ! யான் எங்ஙனம் ஆற்றுவேன். அழகிய ஆபரணமுடையவள் நெருப்பொத்த காமமாகிய பொறுத்தற்கரிய நோய்க்குப் பரிகாரமாகத் தந்த இம்மடன்மா, அதற்கோர் நிழலாய் இருந்தது. சான்றீர்! சான்றோர் உள்ளாக வைக்கப்பட்ட அரசன் பெரிய தவத்தினின்றும் தவறியவிடத்து அச்சான்றோர் மறுபடியும் அவனைத் தவம் முயல்வித்து உயர்ந்த நிலையுடைய சுவர்க்கத்தே போகவிட்டுத் துயர் தீர்த்தாற் போல, எனது துயரைப் போக்குதலும் உமது கடனாகும். 23 மடலேறுவேனென்ற தலைவன் கண்டார்க்குக் கூறுகின்றான்; என்னைக் கண்ட நீங்களெல்லாம் விரைவாக வந்து இவ்வூரிடத்து என்னைப் பண்டு அறியாதீர் போலப் பார்க்கின்றீர். நாவுடைய மணியைக் கையிலே கட்டிக் கையாற் பிடிக்கும் வாய்க் கயிற்றோடு யான் கையிற் கொண்டது மடலன்று, குதிரையே. தலையினும் மார்பினும் கிடக்கின்ற இவை, தகட்டுப் பொன்போல் விளங்கும் ஆவிரம் பூவாற் செய்த கண்ணியும், உழிஞைப் பூவோடே பூளைப்பூவும் புனமுடைய மலையில் மயில் உதிர்த்த பீலியும். இவை விளங்குகின்ற பொன்னல்ல, யான் நன்றென்று கருதிக் கட்டின பூமாலை என்று அறிவீராக. திருமாலின் மகனாகிய காமன் என் தலைமையை அழிக்க விரும்பினான். விரும்பி அவன் ஒருத்திக்கு எல்லா வனப்பையும் கொடுத்தான். அவள் தன் வனப்பாலும் சாயலாலும் மாம்பிஞ்சின் பிளவு போன்ற கண்க ளாலும் என் காவலாகிய அரண் இடிந்து போம்படி நடுவே வந்து என்னைக் கவரும் ஒப்பில்லாதவளானாள். அவளுக்கு யான் வழிபட்டு உறைதலை உலகத்தார்க்குக் காட்ட வேண்டிச் செல்லா நின்றேன். இதனைக் கண்டு வெறுத்துக் கூம்பியிராதீர். யான் அத்தன்மையுடைய ஒருவனாவேன். ஏதாவது ஒன்று பாடென்று கூறுவீராயின் சிறிது பாடவும் வல்லேன். அம்மடன்மாமீதிருந்து அது இடத்தும் வலத்தும் செல்லும்படி உன் மெய்யை அசைப்பாயென்பீராயின் அத்தொழிலை யான் செய்யவும் வல்லேன். இப்பொழுது, என் நெஞ்சிடத்துக் காம நோயை யான் ஆற்றும் மருந்தாக, நல்ல நெற்றியையுடையவள் தந்த இக்குதிரையை யான் பாடுவேனோ? சான்றோர், திங்களைப் பாம்பு சென்று மறைத்தால் அதன் வருத்தத்தைத் தீர்க்கமாட்டாராயினும் அதன்மேற்ற மக்குள்ள அன்பைக் காட்டித் துன்புறுவர். அதுபோல, இனிய மிருதுவான ஒண்டொடியது வருத்தும் பார்வையில் அகப்பட்ட என் நெஞ்சிடத்துக் காம நோயைக் கண்ணாற் கண்டும், இவ்வூரார், அதனைத் தீர்க்க மாட்டாராயினும் பார்த்தலும் செய்திலர். பிறராற் றாங்கவொண்ணாத சினத்தோடு தன் வடிவைக் காட்டி அவருயிரைப் போக்கும் பாம்பும் பலரிடைப்பட்டாற் சாவாதென்னும் உலக வழக்கிற் கேற்பச் சான்றோர் அவைப்படிற் பிழைக்கவுங் கூடும்; அத்தன்மையேனல்லாத எனக்கும் பூப்போற் கண்ணையும். கடை சுருண்ட தழைத்த ஐம்பாலாய் முடியும், கூந்தலையும் உடையாள் செய்த இக் காமநோயின் வருத்தத்தை அறிந்தும் இவ்வூரிலுள்ளார் அதனைத் தீர்க்கும் உபாயம் அறிகின்றிலர். கொடிய நீர்ச்சுழியில் அகப்பட்ட ஒருவனுக்குக் கரையில் நின்றோர் சென்று எடாமல் “பயப்படாதே” என்று கரையிலே நின்று கூறினாலும் அச்சந் தீருவதாகும். அதுபோல இவ்வழகிய முறுவலுடை யாள் செய்த இக்காம நோயை அறிந்திருந்தும் இவ்வூரிலுள்ளார் அதனைத் தீர்க்கவாற்றாராயினும், ஒரு அன்பு செய்தலையும் அறிகின்றிலர். என்னிடத்து நிகழ்கின்ற வருத்தத்தை யான் அறிந்தேன். இனி இதனை நும்மிடத்தே தெளியும்படி பார்மின். இத்தன்மைய மயக்கமுறும் காம நோயாலுண்டாகிய என் மயக்கம் நீங்கும்படி இருண்ட கூந்தலை யுடையாள் என்னை அருளும்படி பண்ணுவீராயின் அது நுமக்கு அறனும் புகழுமாகும். 24 இரந்து பின்னின்ற தலைவன் மடலேறிய வழி அவன் தமர் அஞ்சித் தலைவியைக் கொண்டு வந்து கொடுத்தலைக் கண்டோர் கூறுகின்றனர்; மக்கள் யாக்கை பெறுதற்கரியது. அதனைப் பெற்றார் சிலர் தாம் விரும்பியவற்றைச் செய்து தீவினையை ஈட்டுவர். அதனால் அறம் பொருள் இன்பம் என்று சொல்லப்படும் ஒன்றின் பகுதியையும் சேரார்கள். அவர்கள் செய்து திரியும் தொழில் ஒன்றாக, அழகு பெற்று நிற்கும் பனையின் மடலை ஏறி அவ்வூரிடத்தே எல்லார்க்குங் காட்டி ஒருத்தியின் அழகிய நலத்தைப் பாடி வரும்படி நூல்கள் கூறின. ஆதலால் யானும் அதுவே துணிந்து மடலேறிப் பாடுவேன். சான்றீர் வாழ்வீராக! யான் போரிடத்து வெற்றியினையுடைய குதிரையின் மேலிருந்து போர்த் தொழிலை நடத்தும் ஆண்மை யுடையேன். ஒருத்தி என்னை மாவல்லாத மடன்மாவில் ஏறி அக்களத்தே தோன்றி மன்றின் கண்ணே தன்னை நினையும்படி செய்தாள். அவள் என் மனத் துள்ளே இருந்து பின் நீருட்டோன்றி நின்ற மதியினுடைய நிழல் பெயர்த்துக் கொள்ளுதற்கு அரியவாறு போலப் பெற்றுக் கொள்ளற்கு அரியளாய் இரா நின்றாள். கேளீர் சான்றீர்! யான் உலகத்தை எல்லாம் பாதுகாக்க முயலும் உள்ளமுடையவன். என்னை ஒருவரிடம் ஒன்றை இரக்க முயலும் இன்னா தாகிய வருத்தத்தை ஒருத்தி செய்தாள். அவள், கிழக்கில் தோன்றுவதும் பொய்யில்லாத உலகத்தவராற் புகழப்படுவதுமாகிய குற்றமில்லாத சூரியனை யான் பிடிக்க விரும்பின் அத்தன்மை யளாயிருக்கின்றாள். பரந்த சுணங்கினையும் பெரிய தோளையுமுடையவள் தான் மறைந்தபொழுதே பொறுத்தற்கரிய நோய் செய்யாநிற்பள். அவள் குணம் என்றும் இத்தன்மைத்தோ? சான்றீர் வாழ்வீராக! சான்றீர்! தெளிந்த நாவினால் வார்த்தை சொல்ல வல்லார்முன் சொல்ல வல்லவன் யான். அவள் என்னைப் பிறர் முன்னே ஒன்றையும் கல்லாத தன்மையள் ஆகக் காட்டினாள். அவள் இராக்காலத்து இடியை உமிழ்கின்ற மேகத்தின் இருளைக் கிழிக்கும் மின்னலைப் பிடிப்பே னென்று ஒருவன் கருதிய தன்மையளாய் இரா நின்றாள். இவ்வாறு சொல்லி அவ்வூரிடத்துத் தெருவிடத்துக் கண்டார் வருந்த மடன்மாவை ஏறிப் பாடினான். அழகிய ஆபரணமணிந்தவளைத் தான் பெறக்கருதி அவன் பொருத்தமான வார்த்தைகளாற் பாடக்கேட்ட தமர், குடிப் பழுதாமென்று அஞ்சி அவளை அவ்விடத்தே கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் அவளைக் கொடுத்தது. போர்த்தொழில் வல்ல பாண்டியனுக்கு அஞ்சிப் பகைவர் அரிய திறை கொடுத்தது போன்றது. ஈது ஒரு மகட்கொடை இருந்தவாறென்னே! (என்று கண்டார் கூறி அதிசயித்தனர்.) 25 இது தலைவன் வரை விடைவைத்துப் பிரிவிடை நீடித்த வழி, தலைவி, பிரிவாற்றாது நாணம் எல்லை கடந்து கலங்கிமொழிந்து அறிவழிந்த விடத்து அவன் வந்து சேரத் தெளிந்தமையைக் கண்டார் கூறியது: கேட்பீராக! இவள், தன்னுடன் சேர்ந்து விளையாடும் ஒள்ளிய நெற்றியுடைய ஆயத்தாரோடு கூடி விளையாடுமிடத்தும், முட்போன்ற தனது பல்லின் நுனி தோன்றாமற் சிரிக்கும் இயல்புடையவள்; அவள் சிரிப்பை உள் அடக்கிக் கொண்டு முகத்தாலும் கண்ணாலும் சிரிப்பவள். அவள் இப்பொழுது பெண் தன்மையின்றிப் பிறர் கேளாமற் கூற வேண்டிய மொழிகளை எல்லாருங் கேட்கும்படி கூறுவாள்; நிரைத்த பற்களின் மேற் பக்கம் தெரியும்படி பலத்துச் சிரிப்பாள். சிரிக்கும் பொழுதே பூ மலர்ந்தாற் போல அழகுடைய கண்கள் இமை நீர் நிறையும்படி அழும். இவள் இங்ஙனம் அழுதற்குக் காரணம் ஒருவரை ஒருவர் காதலித்துப் புணர்ந்தபின் ஒருவர் மற்றவர்க்கரியராம்படி பிரிவு நிகழ்ந்ததனாலாகும். இந்நிலைமை, யாழை மீட்டுப் பாடும் இனிய ஓசையைக் கேட்பவர்கள் இன்புறுதற்கு முன் நரம்பு அறுந்த தன்மை யுடையது. இக்கனத்த குழை அணிந்தவளது துயர் தரும் குணம் எம்மை வருத்துமென்று கருதாது இவ்விடம் வந்தேம். குறுகின யாம் இதனை முற்றாகக் காண்பேம், என்று குறுகின நீவிர் எல்லாரும் யாது காரியஞ் செய்தீர்? இங்ஙனம் வந்த நீர்தான் என்னை இகழ்கின்றீரோ? யானுற்ற வருத்தத்தை எனக்குத் தந்தவனுடைய மாயத்தைச் செய்த பரந்த மார்பை யான் தழுவி அவனைக் கூடப் பெறினும் அஃது இகழ்ச்சி இன்றாம். இங்ஙனம் என்னைச் சிதைத்தவன் இவனென்று யான்முன் கூறினேன். அதனைக் கேட்ட நீர் அவனாலுற்றது எத்தன்மைத்து என்று கேட்பிர். அவ்வாறாயின் யானுற்றது இதுவென எழுவகையாகிய அறத்தொடு நிலைகளுள் ஒன்றை உம்மனத்துக்குப் பொருந்தக் கூறும் அறிவுடை யேன் ஆயின் யான் இங்ஙனம் வருந்துவேனோ? அவ்வறிவு கெட்டமை யால் யானுற்ற வருத்தம் இத்துணை வருத்தமென யான் உமக்குக் கூறுவன்; அதனைக் கூறக் கேண்மின்; சான்றீர்! எனது சிற்றிலுள் அவன் கூடம் இழைத்தான். அவனை யான் கூடுவேனோ என்று ஆராய்ந்தேன். அக்கூடத்தில் ஒரு பாகத்தை யான் இழைத்த அளவில் முழுதும் வளைவில்லாத இளம்பிறையைக் கண்டேன். கண்டு இது வானத்திலே பின்பு நிறைமதியாய் வருத்துமெனக் கருதி யானுடுத்த ஆடைத்தலைப்பால் அதனைமூடி அகப்படுத்திக் கொள்ளப் போனேன். யான் அதை அகப்படுத்தினால் நீலமணி போன்ற திருமிடற்றையுடைய கொன்றைமாலை சூடிய கடவுள் அம்மாலை யோடு சூடுதற்கு அதனைத் தேடித் திரிவர் என்று எண்ணினேன். எண்ணி! நெஞ்சே! இது பின்பு வருத்துமென்பதை நினையாது இதனை அவற்குக் கொடுத்து ஒருவகைப்பட்ட உபகாரியாவாய்; யாம் அறிவுடையேம்! என்று நெஞ்சைத் தேற்றி அதனைக் கைவிட்டேன். பின்னர் அவர் வருவாரோ? வந்தால் யான் உடன் படாதவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணினேன். கவிந்த செறிந்த இருளுடைய இரவைக் காவலர் காவல் புரியும் இரவில் கனவில் யான் நினைந்தவாறே அவன் வந்து தோன்றினான். யான் அவனை வளைந்து பிடித்துக்கொண்டேன். அதனாற் பெற்றதென்? அங்ஙனம் பிடித்துக் காண்பேனாகப் பையென விழித்தேன். யான் பிடித்த கைக்குள்ளே மறைந்து அவன் தோன்றானா யினான். இனி யான் ஞாயிற்றைக் கொண்டே அவனைக் காண்பேன் என்று கருதினேன். கருதியிருந்து மற்றை நாள் அந்தியிலே ஞாயிற்றை நோக்கிக் கிரணங்களைப் பிறர்க்குப் பகுத்துக் கொடாத ஞாயிறே? கதிர்களோடு நீ அத்தகிரியை அடைகின்றாயாயின், அவரை நினைத்துத் தேடிப் பிடித்துக் கொண்டு என் முன்னே நிறுத்தி ‘என் கையிலே உன் கையை நீட்டித் தப்பாமற் றருவாயாயின் உயிர் திரியாக என் நெஞ்சாகிய அகலிலே கொளுத்திய காமத்தீ அவியும் ’ என்றேன். அதற்கு மறுமொழி கொடாது அது அத்தகிரியிற் சென்றது. அதனை யான் நோக்கி ‘ மறுவில்லாத சுடரே’ அத்தகிரியைச் சேர்கின்றாயாயின், நீ கடல் நீரிடத்தே மீண்டு வந்து தோன்றிப் பகற் பொழுதை உண்டாக்கு மளவுந் தொய்யிலை எழுதாமற் கெடுத்தவனை யான் தேடுவேன். யான் தேடும்படி எனக்குக் கை விளக்காகச் சில கிரணங்களைப் பகுத்துத் தாராய்’ என்று கூறினேன். அச்சுடரும் யாம் அதனைக் கெடுத்தால் அவனைக் கண்டு வெறுப்பேன் என்று நினைத்து அதனைத் தராது போயிற்று. போகவே யான், ‘அவன் எம்மை முன்னர் விரும்பி நலத்தைச் சிதைத்தான். இங்ஙனஞ் சிதைத்தவனை எதிர்ப்பட்டால் யான் கூடாமல் வேறு யாது’ என்று கருதி, “அத்தகிரியில் மறையும் போது மன்றத்தில் நிற்கும் மூங்கில் மேலே தோன்றும் மலையிடத்து மாந்தளிர் போலும் நிறமுடைய வெயிலே! என் மிருதுவான தோளை மெலிவித்தானது வடிவழகின் தன்மையை யான் விரும்பிக் காண்பதல்லது அவன் செய்தது தீதென்பவற்றைக் காணேன். யான் மாத்திரமல்லாமல் பழைய இவ் வுலகத்து மகளிரும் தங்கணவரைக் கண்டாற் கூடுவதல்லாமல் புகுந்து இருந்தார் என்று கேட்டும் அறிவையோ” என்று கூறினேன். இவ்வாறு கூறிக் காமநோய் என் மனத்தைச் சுழலப்பண்ணி நெருப்பாக நின்று சுட்டதாயினும் அதனை மறைத்தது போல அழகிய பூப் போலும், கண்களிடத்துத் தோன்றி நின்ற வெம்மையான நீரையும் மறைப்பேன். அதற்குக் காரணம் அந்நீரைத் தெளிப்பின் அன்புடைய இவ்வுலகு வேம் தன்மையா யிருந்ததென்று யான் ஆற்றிய அருமையும் கூறினேன். யானுற்ற வருத்தம் இதுதானென்று சான்றோரை நோக்கிக் கூறி, பின்னர், ‘சான்றீர்! வருத்துங் காமமும் முதிர்ந்த அலரும் என்னும் இரண்டு துயரம் உயிரின் இரண்டு புறத்தும் தூங்கி என்னை வருத்தும். இதனை உயிர் வருந்துமட்டும் வலிதிற் பொறுத்தேன். இனி இறந்துபோவதற்கு முன்னே இதனைக் களைவீராக’ என்று கூறினாள். பகலும் இரவும் கூட்டமின்றிக் கழிந்தன என்று எண்ணி வருந்தி அழுதனள்.; அழுது நீள நினைந்து வருந்திப் பெருமூச்செறிந்தாள். அதன் பின்பு விளக்கமுடைய இராக் காலத்தே காதலன் வந்து வரைந்து கொண்டான். அவள் கணவனது அழகிய மார்பைப் புணர்ந்து தேற்றாவிரை கலங்கல் நீரைத் தெளிவித்தது போலத் தெளிந்து அவள் பழைய நலத்தைப் பெற்றாள். ஆதலால், யாமும் இவர்களை உண்மையாக மணியும், அதனிற் பிறந்த நீரும்போல வேறல்ல ரெனத் துணியக் கடவேம்’ எனக் கண்டார் கூறினர். 26 இதுவும் அது: அகன்ற ஊரிடத்திருந்து கனவின் கண் அவனோடு கூடி இன்புற் றாள். இருளை நீக்கும் நிலவுடைய சந்திரன் போன்றவன் நீங்கினான். அப்போது பகற்காலத்து ஒளி கெட்ட மதி போல அவள் ஒளி கெட்டது. நெற்றியினின்றும் திலகம் போனது. நீலமணியின் ஒளியைத் தன்னொளி விட்டு மாறுபடுத்தும் பொன்னின் ஒளியோ? மாந்தளிரின் மீது கோங்கம் பூவின்றாது பரந்த ஒளியோ? என்று கண்டார் கூறும்படி தன் மேனியை மறைக்கும் பசலையளானாள். தன் நெஞ்சம் மிகுந்த இன்பத்தோடு பொருந்தி இருந்ததையும் அது கழிந்ததையும் நினைந்து நாணாற், பிறர் முகம் நோக்காள். நிலத்தை நோக்குவாள். அஞ்சி அழுது பலவுஞ் சொல்லி நிற்பாள்; என்று கூறி இவள் ஒருத்தி இவ்வாறு வருத்தமுற்றாள் என்று கூறுகின்றவர்களே! யான் பொன் செய்தேன். எனக்குற்றதைக் கேட்பீராக என்று கூறினாள். வஞ்சனையாகத் தான் வாசித்த யாழோசையைக் கேட்ட அசுணமாவின் இன்பம் போம்படி கெடுத்து அதன் உயிர் போம்படி ஒரு பறையைத் தட்டினாற்போல, ஒருவன் முன்னர் வஞ்சித்து இன்பத்தை உண்டாக்கிப் பின்னர் அவ்வின்பம் போம்படி கைவிட்டான். அக் கள வொழுக்கத்தால் என் மெல்லிய தோளை மெலிவித்தவனை நினைந்து அவனுறைகின்ற இடத்தே சென்று வருதற்கு நெடுங்கால மாயிற்று’ என்று கூறினாள். இவ்வாறு கூறியவள் அவனைக் கொண்டு வருதலுங்கூடும். ‘நீரும் கூடி நவகண்டம் ’ எனக் கூறும் உலகத்தில் அவனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து எனக்குத் தரப்பெறின் யானும் பிறமகளிரைப் போல நிறை என்னும் குணமுடையேனாவேன்’ என்றும் கூறுகின்றாள். ‘இவள் ஒரு நாளாயினும் அவனைக் கூடி முயங்குவள், என்று கருதி என் பின்னே பின்னே வரா நின்றீர்; இவள் முன்னிலும் அதிகம் வருந்தினாள் என்று கருதி அவ்விடத்தே நின்று அவனுக்கோர் தீங்கு வந்ததோவென்றும் சொல்லா நின்றீர்; இன்னும் ஐயோ! இவள் வருத்தம் எய்தினாள் என்று மயங்கா நின்றீர்; இவ்வாறு உண்மையுணராது மயங்காதீர். என் இனிய உயிரை ஒத்தவனுக்கு யாதும் தீமை நேரவில்லை என்பதை அவனுயிரோடு ஒன்றாகிய என்னுயிர் காட்டா நிற்கும். அது கேட்டு அவர்கள் நின்னை இவ்வாறு வருத்தினவனை ஞாயிறு வருத்தும்’ என்றார். அதுகேட்டு ‘நடுவு நிலைமை செய்யாமல் பழி நீக்கும் ஞாயிறே! உலகியல் அறியாதாரிடத்து மிகவும் கோபித்தற்கு நீ விரைந்து செல்வாயென அவர்கள் கூறக் கேட்டு, ‘ நின்னை வழிபட்டு நீ அவரை மிகச் சீறாதபடி இரந்து கொள்ள வந்தேன். நீ, என் நெஞ்சு வருந்தும்படி கைவிட்டவனைக் கண்டு சீறுமிடத்து என்னையும் சீறுவாய் . நீ அவனை மிகச் சீறில் யான் இறக்கும்படி நேரும்’ என்றாள். இங்ஙனம் கூறும்போது ‘ஞாயிறு படும் நேராமாயிற்று. பிரிந்தார்க்கு வருத்தந் தரும்படி மாந் தளிர்போல் நிறம் கொண்ட மாலைக்கு முன்னாகிய இக் காலத்தில், இவ்வூரின் மகளிர் தாம் தளிர் விரவின மாலைகளைக் சூடி ஆடவர் மேற் றாம் வைத்த நலத்தைப் பாடி இன்புறுவார்கள். ஆச்சாமரந் தளிர்க்குங் காட்டிடைச் சென்றவர் மீண்டு வரின் அவர்களைப் போல யாம் மனம் மகிழுவேம். ஆனால் அவர் வரக் கண்டிலேம்’ என்று கூறினாள். கூறி யான் தளிர்க்குமாறு எங்ஙனம் என்பீராகில், ‘என் தோளைச் சேர்கின்றவன் நெய்தற் பூவைப் புறவித ழொடித்து மாலை கட்டிச் சூடவும் வல்லன். நெடிய மிருதுவாய தோளிலே காமன் சிலையாகிய எழுதுகரும்பை எழுதவும் வல்லன், இளமுலைமேற் றொய்யிற் குழம்பாற் கொடி எழுதவும் வல்லன். தன் கையின் வில்லைத் தொழில் கொள்ளவல்ல காமனை அவன் ஒப்பன். கூடுங் காலத்து நிகழ்த்தும் தொழில் பலவும் செய்யவும் வல்லன். இவ்வாற்றான் என் மனந் தளிர்க்கும் ’ என்று கூறினாள். இங்ஙனம் கூறும்போது மாலைக்காலம் வந்தது. அதனைக் கண்டு, என்னுள்ளங் குவியுமாறு போல நெடிய கழியின் மலர்கள் குவியும். இரங்கும் என் நெஞ்சம் போல கோவலர் குழலோசை தோன்றும். அலையும் என் மொழிகள் போல வண்டுகளின் செவ்வழிப் பாட்டு அடங்கும். கெட்டுப் போன என் அழகுபோலப் பகற்காலத்தின் ஒளி மழுங்கும். கலக்கத்தோடே வந்த காலனைப் போல என்மேல் மாலைக் காலமும் வந்தது. இனி எங்ஙனம் ஆற்றுவேன் என்று கூறினாள். கூறி அம்மாலையை வரவிட்ட ஞாயிற்றை நோக்கிச் ‘ சுடரே! யான் செயலழிந்து இராக்காலத்தே வருந்தும்படி நீ போனாய். அருள் இல்லாதிருந்தாய். நீ வாழ்வாயாக’ என்று கூறினாள். கூறி, ‘இரவில் இறந்தேனாயினும் தீதில்லையாகும். தங்கணவர் இறக்கப் பெற்றவர், அக்கணவர்மீதுள்ள விருப்பத்தோடு இறப்பாராயின் சுவர்க்கத்திற் சென்று அவர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே பெறுதல் மெய் என்று நூல்கள் கூறும். யானும் அவன்மேலே விருப்பத் துடன் உயிர் விட்டு அவ்விடத்து அவனைப் பெற்று எவ்விடத்தும் புகழுடையனாவேன் இனி வருத்தம் ஏன்?” என்றும் கூறினாள். கூறி,‘முற்பகல் செய்தான். பிறன்கேடு தன்கேடு பிற்பகற் கண்டு விடும். என்னும் பழமொழி உள்ளது. அவ்வாறு, நீரில் அலர்ந்த நிலமென அவர் புகழும்படி அந்நாளிற் பெரிய வருத்தஞ்செய்த என் கண்கள் இப்பொழுது பீர்க்கம் பூப்போல் பெரிதும் பசந்தன. இதனையும் என் வருத்தத்தையும் கண்டும் அருளின்மையில் அவனை எனக்குக் காட்டாது இவ்வூர் ‘நின்று அலர் தூற்றும். உயிர்களைப் பாதுகாக்கும் அரசனும், எனக்கினிய உயிரை ஒப்பானைக் காட்டி என்னுயிரைக் காவாது இருத்தல் என்ன பயனைக் கருதியோ’ என்றுங் கூறினாள். இவ்வாறு கூறும்படியான காம நோயாகவே மயக்கங் கொண்ட வள் , பல மலைகளைக் கடந்து போனவன் வரைவோடு வந்து சேரப் பெற்றாள். அதனால் பாண்டியனை உறவாடி அவன் மனத்தை மகிழ் வித்த தேயத்தவர்கள் இன்பமுற்று வாழ்வதுபோல அவனால் இழந்த நலத்தை இனிய மகிழ்ச்சியோடு எய்தினாள். (இஃது என்ன வியப்பா யிருந்தது எனக் கண்டார் கூறினர்) 27 இதுவும் அது ‘நல்ல நெற்றியையுடையாய்! இவள் ஒருத்தி தனக்குரிய நாணினைக் கைவிட்டுத் தன் மனத்தே ஒன்றை நினைத்துப் பெருமூச் செறிகின்றாள். வீழ்கின்ற கண்ணீரைத் துடைத்துப் பிறரை நோக்காது நிலத்தை நோக்கு கின்றாள். தன்னை ‘நீ உற்றது என்ன? என்பார்க்குக் கனவின்கண்வாய்’ வருவிக் கூறுவாரைப் போல உத்தரமல்லாத சில சொல்லிச் சிரிக்கின்றாள். இங்ஙனம் தெளிவும் மயக்கமுமாய் மயங்கி, வேறும் அத்தன்மையவாகிய துன்பங்கள் தன்னிடத்தே கொண்டு நின்று வருந்துகின்றாள். இவள் யாது துன்பம் உற்றாளோ? இவளைக் காண்பா யாக; யாஞ்சென்று இவர் கூறும் வார்த்தைகளைக் கேட்போம் என்றார்கள்’ என்று கூறினாள். அங்ஙனங் கூறியவள், இவள் கூறுவதைக் கேட்போமென்று நும்மிலே கூறிவந்து, ‘ஏடீ! நீ என்ன வருத்தமுற்றாய்? யார் நினக்கு வருத்தஞ் செய்தார்? நினக்கு உற்ற வருத்தத்தை எங்கட்கு உரை’ என்று சொல்லி என்னைக் கேட்கின்றவர்களே! அது வந்த வகையை என்னிடத் திற்றெரியக் கேண்மின்! ஒருவன் என்னை நோக்கி, ‘ கொத்தான கூந்தலுடையாய்! எனக்கு உற்ற வருத்தத்தை யான் நினக்கு வந்து உரைக்குமளவும் என்னுயிர் போகா மற்றங்கிற்று என்று கூறித் தன்னோடு யான் மருவுதலைச் செய்தான். அவன் பிரிந்துபோன அக்காலந் தொடங்கி என் நெஞ்சு என்னை அவன் மருவின இடத்தே அகப்பட்டு நின்று விட்டது. இனி அவனுள்ள இடமெல்லாம் தேடித் திரிந்து என் நெஞ்சினைக் கூட்டிக் கொள்வேன்’ என்றாள். அவள் அந்திக்காலத்தே துயருற்றுக் கூறினாள்: இனி மாலைக் காலத்துத் தன்னாற் றேடுதல் அரிதென்று கருதினாள். மதியைக் கண்டு அதனோடு சேர்ந்த முயல் தேடிக் தருமெனக் கருதினாள். கடல் சூழ்ந்த உலகமெல்லாம் பார்த்துத் திங்களுள் இருக்கும் முயலே! இவ்வுலகத்தில் என் கணவன் இருக்கின்ற இடத்தைக் காட்டுவாய். அவனிருக்கின்ற இடத்தைக் காட்டாயாயின் நினக்குப் பகையாகிய நாயை நின்னிடத்தே ஏவுவேன். அதுவன்றி, வேட்டுவருள்ள இடத்தே சென்று ஒரு முயல் உண்டென்று கூறுவேன். நீ அரணாக உறைகின்ற திங்களோடே நின்னை அலைத்து விழுங்கும்படி மதிக்குப் பகையாகிய பாம்பைச் செலுத்து வேன்’ என்று அவ் வந்திக் காலத்தே நின்று தன் நெஞ்சிலுள்ள வருத்தத்தைச் சொன்னாள். அது வெள்ளிய மேகத்தில் மறைந்ததைக் கண்டு, ‘நீ மதியோடே வெண்மேகத்தே ஓடிச்சென்று புகா நின்றாய். ஆதலால், சிறிது என்னைப் பார்த்து நீ எனக்காகத் தேடிப் போகின்றாய் போலே இரா நின்றாய்’ என்று கூறினாள். ‘மதி கரிய மேகத்திற் சென்று மறைந்தது. அதனை நோக்கித் தேடுமாறு அதற்குக் கூறக் கருதினாள். அக்கள்வனால் மறைந்திருக்க முடியுமோ என்று காட்டும்படி தாழை நிற்கும் செம்மணலுடைய கடற்கரைச் சோலைகடோறும் ஓடிச் சென்று பார்ப்பேன். அங்ஙனஞ் சென்று காணேனாயின் ஓடிச் சென்று அவனை ஒளித்திருந்து காணக் கடவேன்’ என்று கருதினாள். பின்பு அவள் ‘அவனிருக்கும் இடங்களும் கூறக் கருதினாள். அடம்பின் மலரைப் பறித்து, எமக்குத் தரும் மாலையைக் கட்டின இடத்தே பாராய்; யாம் வைத்து விளையாடும் பாவையையும் மலர்களை யும் கொண்டுவந்து நமக்குக் காட்டி யான் தனக்குப் பின்னே செல்லும் படி அவன் அவற்றைக் கொண்டோடிய இடத்தே பாராய். எமக்குத் தான் தொய்யிலை எழுதிய அவ்விடத்தே பாராய். மனத்தில் அன்பில்லாதவன் ‘தையால்! நின்னைப் பிரியேன் நீ தெளி’ என்று தெளிவித்துப் பின்னர் மெல்லப் பிரிந்த அவ்விடத்தே பாராய்’ என்று கூறினாள். அவ்வாறு கூறுதலும் அம்முயல் கருமேகத்தில் மறைந்து போயிற்று. அதனைக் கைவிட்டு இடையே தன் மேல் வந்து வீசிய காற்றை நோக்கினாள். ‘காற்றாகிய தெய்வமே! நீ திங்களின் ஒளிபோலன்றி ஆகாயத்தும், உலகத்தும் பரக்கும் கதிர்களுடைய ஞாயிற்றின் ஒளியுள்ள இடமெல்லாஞ் சென்று தேடுதற்கு உரியை; ஒருவன் உயர்ந்த தேரை ஏறிவந்து தன்னால் அருளத் தக்கதும் என்னுள்ளத்தே கெடாததுமாகிய காம நோயைச் செய்தான். நோய் செய்து கைவிட்டுப் போன அன்பில்லா தவனை, அந்நோய் தீர்ந்து யான் தெளியும்படி எதிர்ப்படுவாய். ஆசை மிகுதியால் எனது இயற்கை நலத்தை நுகர்ந்து பின்பு எம்மை ஒரு காரணமுமின்றி வெறுத்து, அவ் வியற்கை நலத்தைக் கொண்டு இம் மண்ணகத்தே ஒளித்தவனைக் கொண்டு வந்து காட்டாய். காட்டாயா யின் என் கண்ணீரைத் தெளித்து அக்கண் அழு கின்ற அழலாலே நின் மேனியெல்லாம் சேரச் சுடுவேன்’ என்று கூறினாள். அதனைப் பின்னர்க் காணாமையின் தான் அதனைத் தேடக் கருதினாள். கடலை நோக்கினாள். ‘வருகின்ற கடற்றெய்வமே! என்னைப் பாதுகாவாமல் நீங்கினவனை யான் தேடிக் காணும் இடத்தை நீ விட்டுப் போவாய்; போகாது அவ்விடத்தே ஏறுவாயாயின் நின் இடமெல்லாம் வெறுமணலாம்படி என் காற்புறத்தாலே நின்னுடைய நீரெல்லாம் போம்படி இறைப்பேன். அது முடியுமோவெனில் அதற்குக் கடவுள் உதவியும் உண்டாயிருக்கும் ’ என்றுங் கூறினாள். பின் கடற்றிரை ஓடிவந்ததனைக் கண்டாள்; கண்டு, ‘என்னைக் கைவிட்டுப் போனவனை நீ தேடிக்கொண்டு வந்து தருவையாயின் அதற்குக் கைம்மாறாக என்னோயைச் சொல்லி நினக்கொரு பாட் டினைப் பாடுவேன் என்றுங் கூறினாள். அங்ஙனம் கூறிப் பாடுகின்றாள்: ‘என்னைக் கூடின அன்பர் வந்து கூடுகின்ற காலம் இரவோ பகலோ என்று அறியேன்; ஆதலால் என்னை வருத்தும் பகற்பொழுது போய் இராப்பொழுதாவதாக என்று கருதிப் பகற் பொழுதை வெறுப்பேன். பகல் போய் இரவான காலத்து அவ் விராக் காலத்தை அப்பொழுதே வெறுப்பேன். கடலே!யான் உற்ற வருத்தத்தை நின்னை ஒழியப் போக்குவாரைக் காணேன்’ என்றுங் கூறினாள். ‘கடலே! அறனில்லாதவன் என் கண்ணுள் வந்து தோன்று கையினால் மூடிய இமையை விழித்துப் பிடித்துக் கொள்ளுவேனென்று கருதி யான் விழிப்பேன். பின்னை அவன் ஓடிப்போய் என்னெஞ்சுள் மறைந்து நின்று அப்பொழுது யான் துயிலாத காம நோயைத் தாரா நிற்கும். கடலே! ஊரை எல்லாம் எரிக்கும். கடிய நெருப்புத் தன்னை நூர்க்கும். நீரைச் சொரியச் சினம் ஆறும். அதுபோலன்றி அருளில்லாத என் அன்பர் எனக்குச் செய்த இந்தக் காமமாகிய நெருப்புத் தனக்குப் பகையாகிய நீருள் புகினும் வேகும்படிச் சுடும். கடலே! தன் மனத்து ஒரு துணிவில்லாதாள் என்ன பித்தேறினாளென்று கூறி இக்காம நோயைப் பெற்று அறியாதவர்கள் என்னை இகழ்ந்து சிரிக்கின்றனர். இக்காம நோய்க்குத் துணையாவதோர் முடிவை அறியாதபடி என்னைவிட்டு என் வலியை அறுத்தவன் மார்பினை, இத்தன்மையாக வருமென்றறியின் விரும்பின அக்காலத்தே முயங்கேன்’ என்றுங் கூறினாள். கடலோடு வருந்தி இவ்வாறு கூறினவளுடைய மனங்கலங்கும் வருத்தம் தீரும்படி அவள் காதலர் விரைந்து வந்தார். அவளது மாற்று தற்கரிய காமநோய் தீர்ந்து நுதலிற் பசப்பும் மாறினது. அது அறநெறி யறிந்து நடக்கும் பார்வை யுடைவனை அத்திறமில்லாதார் உண்டாக்கிச் சொன்ன தீய மொழியெல்லாம் நல்ல அவையுள் ஆராயப் பட்ட விடத்துக் கெட்டதுபோல் இருந்தது. இது என்ன வியப்போ! 28 இதுவும் அது மக்கள் விரைந்து விரும்பும் சிறந்த காமம் இரவிற் கண்ட கனவு போல், நிலைபெறுதல் இல்லாதிருந்தது. தழைத்த பல கூந்தலுடைய ளாகிய ஒருத்தி,தன் நலங்களையெல்லாம் நுகர்ந்து கைவிட்டவனை நினைந்து பெருமூச்செறிவள்; அவனோடு கூடுமாற்றைப் பிறரோடு வினாவுவள்; நெஞ்சு சுழல்வள்; பெய்கின்ற மழையைச் சேர்ந்த மதிபோல் தன் முகம் தோன்றும்படி தன் கயலை ஒத்த கண்களினின்றும் நீர் அற்று வடியும்படி ஓயாது அழுவள். அவனை மறந்தாளைப் போல ஆரவாரித்து இடையே சிரித்தலையும் செய்வாள். ஆதலினால் தனக்குச் சிறந்த நாணையும் மற்றும் நற்குணங்களையும் நிலை நிறுத்த நினையாது காமம் ஒன்றையுமே நினைந்து அவள் சுழன்றாள் என்று இங்ஙனம் இகழ்ந்து கூறி எல்லாருங் காண என்னைச் சிரியாதிருப்பீர்களாக. ஐயறிவினை யுடையவர்களே! சுருக்கமாக யான் அதன் தன்மை கூறுவேன் கேளுங்கள் என்று இவ்வாறெல்லாம் கூறினாள். மகளிர் தோள்களைச் சேர்ந்த ஆடவர் அவர்கள் வருத்தம் மிகும்படி பிரிவர். நீண்ட சுரத்தைக் கடந்து சென்றவர் விரைந்து வந்து அருள் செய்வர். இவ்விரண்டும் பகலும் இரவும் போல ஒருவரை ஒருவர் விரும்புவாரிடத்திற் றோன்றும், இவ்வாறு இன்பம், நிலையில்லாத தடுமாற்றமாகத் தோன்றும். இவள் தனக்கேயன்றி உலகத்துக் கூடியிருந்து வாழ்வார்களுக்கெல்லாம் அது வருமென்னும் தன்மையும் கூறினாள். அவர் சிரித்ததினால் யாம் இங்ஙனமாயினேம் என்று அழுகின்ற வள், அங்கு எழுந்த வெண்மேகத்தை நோக்கி ‘வானமே! நீ பெய்யாதே வந்து என்ன காரியஞ் செய்தாய்? நின் இனத்தோடே கூடுவாய். என் கண்ணீராற் சிறப்படைந்த கடலிலே நீரை முகந்து முழங்கி முன்னர் என்னிடத்தே தாழ்ந்தாய். பின்னர், என்னைத் துறந்து நெருங்கிய வளையை நெகிழப் பண்ணியவன் போகிய கானத்தே நெருப்புச் சுடாமற் றுளியை வீசுவாய்’ என்றாள். மீண்டும் அவள் உள்ளூரிலுள்ளாரை நோக்கி, ‘ஊரிலுள்ளீர்! இக்கடும் பகல், எமக்கு . எம் கண்ணுறக்கத்தைக் கைக்கொண்டு, பின் என்னை நினையாக் காதலன் செய்த குணங்களால் வந்த என் இடையறா நோயால் வருங் குளிரை வேதுக்கொள்வதுபோல் இழிந்தது. இது நுமக்கு யாது போல் இருக்கின்றது கூறுமின் என்றாள். அங்ஙனங் கூறி இங்ஙனம் வேதுக்கொண்டு என்னைக் காக்கும் கடும் பகல் ஞாயிறே! நீ எல்லாக் கதிர்களையும் பரப்பி இப் பகற்பொழுதோடு போகாது நிற்றலை விரும்பினேன். நீ போகில் மயக்கந் தரும் மாலைக்காலம் இன்று வந் தென்னைக் கொல்லாமற் போதல் அரிது, அவள் பின்னும் ஞாயிறே! நீ என் காதலரை விரைவாகக் கொண்டு வந்து கடல்மேலே தோன்றி விடியற் காலையில் வருவாயாக. யான் என் நோயின் நடுக்கத்தையும். மாலையாகிய பகையையும் பொறுத்து. உன்னிடத்து. அவன் இனியன், அவனிடத்து நீ துனித்திராதே, என்று நெஞ்சினைப் பாதுகாப்பேன். பின்னர் அவனைக் காண்பேன்’ என்று கூறினாள். அங்ஙனம் ஞாயிற்று நோக்கிக் கூறினவுடன் மாலைக் காலமும் திங்களும் வந்தன. அவற்றால் வருத்தம் தாங்க மாட்டாத நெஞ்சு, முன் வளை கழலும்படி என்னைக் கைவிட்டு வருத்திய கள்வனை நினைந்து என்னை ஒளித்துப் போய் அவனிடம் சென்றது. பெருங்கடல் தன்னிறம் தோன்றாமல், கானல் பறவைகளின்றியும். நெய்தல் இதழ் குவிந்தும் தோன்ற மாலைவந்தது. பின்னர் விளங்கும் நிலாப் பரக்கும் பொழுதில் ஞாயிறு விசும்பையும் நிலத்தையும் திசைகளையும் அவனைத் தேடித் துழாவா நிற்கும். இவ்வாறு என்னை வருத்தியவனும் தான் விரும்பாமல் என்னால் விரும்பப்பட்டவனும். என்னோடே துயிலாது தனியே துயில் கொள்வானோ? கொள்ளானோ? என்று கூறினாள். அங்ஙனங் கூறி, எழுந்த திங்களை நோக்கி, ‘நிலவைக் கான்ற திங்களே! தோள் மெலிந்த காலத்தில் இறுக்கிச் செருகலாம் என்று எடுத்து வைத்தவளை தானும் கழலும்படி, அவன் அருள் செய்யாது பிரிந்தான். எமக்கருளாது கைவிட்ட காதலன் செய்த மனக் கலக்கந் தரும் காம நோய்க்கு, நின்னை ஒழிய அயலார் எல்லாரும் ஒரு மருந்தைத் தெளிவித்துக் கூறார். ஆதலால் ஊரவர்க்கெல்லாம் பெரிய இகழ்ச்சி உண்டாம்படி என்னுயிர் போகா நிற்கும். இதனை நோக்கித் திங்களாகிய தெய்வமே! நீ அவர் பாற்சென்று என் குறை முடிப்பாயாக’ என்று கூறினாள். திங்கள் மறைந்தது. அதனைக் கைவிட்டு ஊரவரை நோக்கி,‘நம் வருத்தம் உணர்ந்து உதவின ஊரிலுள்ளாரே! அவனே, தம் வருத்தம் தீர்த்தற் குரியானென்று கருதினீர். நீர் இகழ்ந்திருப்பினும் என் கேள்வன் சிறிதும் என்னை இகழ்ந்திரான். துயர் கொண்டேனது காமநோயை நீக்குதற்கு இவ்வூரிலுள்ளார் யாதும் பரிகாரம் தேடார்’ என்றாள். ‘செறிந்த இருளுடைய மேகமே! நீ அவன் இந்நோயை நீக்கும்படி அவனைத் தருமளவும், வளைகழலப் பண்ணினவனது வருத்தத்தாலே எனக்குச் சந்து தோறும் சந்துதோறும் காமத்தீ மூண்டது. இதன் வெம்மை ஆறுதற்கு நீ கடல்நீரை முகந்து இடைவிடாது என்மீது துளியைப் பெய்தல் வேண்டும்’ என்றுங் கூறினாள். அங்ஙனங் கூறிக் காமநோயுடைய நெஞ்சிலே அடித்துக்கொண்டு வருந்தி அழுதாள். அழுது, ‘நீங்கள் எல்லாரும் தேடிச் சென்றும் என் கணவரைக் காணப் பெறீரோ’ வென்று கூறினாள். அவட்கு உற்ற வருத்தம் தமது நித்திரையை வாங்கிக்கொண்டு தன்னை நினையாதவர் தன்னிடத்தே வரக்கண்டு அவர் மார்பிடத்து, மாயவன் மார்பிடத்துத் திருச் சேர்ந்தாற் போலே, அவள் சேர, ஞாயிற்றின் முன் இருள் கெட்டது போற் கெட்டது. ஆதலால், இவ்வாராய்ந் தெடுத்த ஆபரண முடையவள் பசப்புற்ற வருத்தத்திற் கடவுள் உதவித் தீர்த்தாற் போல் அவரும் உதவித் தீர்த்தார் ’ என்று கண்டார் வியந்து தம்மிற் கொண்டாடிக் கூறினார். 29 இதுவும் அது கொடுங்கோல் அரசன், தன் புகழ் மிகும்படி சேர்ந்த அமைச்சரை முன்னர் நடுக்கமான மொழிகளைக் கூறிப் பின்னர் எல்லையில்லாத துன்பத்தை விளைவித்துக் கொல்லும் இயல்புடையன். காட்டில் அக் கொடுமையிலும் கணவற்கு மகளிர்க் குண்டாகிய காமத்தை நோக்கியும் அவர்மேல் அன்பில்லையாயிருந்தது. அவ்வாறாயின் தலைவன் இராக்காலத்தே வந்து அன்னத் தூவியாற் செய்த மிருதுவான படுக்கையிலே கூடி நெருங்கிய எயிற்றின் நீரை நுகர்ந்து அருள் செய்து நீங்கினான். அதனால் நிறையாது தன்னணி கலன்கள் சிதைந்தவளாயினாள். தனக்கியல்பாகிய நாணையும் நிறையென்னும் குணத்தையும் தாங்குதல் வேண்டுமென்று அறியா யாயினாள். தன் தோள் மெலிந்து பெரிய கண் நீர் நிறைகையால் அந்நீர் தன் குவிந்த முலைமேல் வடியும்படி அவனைத் தேடுந்தன்மையில் மனஞ் சுழலாநின்றாள். இனி யாம் இவளிடத்தே சென்று இவள் கூறுவன வற்றைக் கேளாதிருப்பேமோ?’ என்று கூறி எம்மிடத்தே வருவீர். வந்து ‘எல்லிழாய்! பிரியேன் என்று கூடியவன் பிரிதலின் நாளையும் மறந்தாள்’ என்று கூறி எனக்கு அன்புற்றீர்போல ‘நீ என்னுற்றனை,’ என்று வினாவுவீர்! என் வருத்தத்தை எல்லீரும் கேட்பீர் களாக . எனக்குச் சிறந்தவன் என் வலியழியும்படி கைவிட்டான். பெருகிவந்து என்மேல் நிலைபெற்ற காம நோய், உலகத்தைக் கோடை சுடும்படியாகப் பெய்யாமற் போன மேகம் வருத்துவது போலும்; வெள்ளம் பெருகி என்னுயிரை வருத்துமாற்றைப் போலும். ‘அவன் அன்பிலனாதலை அறியாதே அவனோடு புணர்ந்து தன் அழகினையும் நாணையும் உள்ளத்தையும் இவள் இழந்தாள் என்று எண்ணியிருந்தீர். அவன் அன்பிலனல்லன். சிவந்த நிறமும் புள்ளியு முடைய தேருருள் போன்ற ஆண் நண்டு பெண் நண்டுக்குச் செய்யும் சிறப்புகளை யான் நின்னிடத்தே நிகழ்த்தும்படி நினைந்து, அவை நிகழ்த்துகின்ற வற்றையும் பாராய் என்று, இந்த உடம்பினின்று போகின்ற உயிர்க்கு உறுதியாகும்படி கூறினான். அதனால் அவனது அன்புடைமை அறிந்தே யான் அவனோடு சிரித்தேன். அக்காலத்து என்னாணும், என்னலமும், என்னுள்ளமும் புணர்ச்சியால் மிகுதியைப் பெற்றன. அவை, அவன் நீங்கிய அப்பொழுதே அவனிடத்து நின்று விட்டன. ஆதலால் நோயும் மிக உறும். அதனைக் கடக்கும் தன்மை உடையேனல்லேன்’ என்று கூறினாள். என்னைப் போல எல்லை காணத காம நோயில் மூழ்காதவன், பெருமை அழியும்படி பிரிந்து நாணம் முதலியவற்றைத் தராத கொடு மையை நாடி அவன் வந்த காலத்தன்றே ‘நீ இவை பெறுவது என்று கூறுகின்றவர்களே! யான் நிறைந்த கதிருடைய ஞாயிற்றை நோக்கித் திரையைத் தருகின்ற கடல் சூழ்ந்த உலகமெல்லாந் தேடி அவனைக் கொண்டுவா என்றுஞ் சொல்லிவிட்டேன். அதுவேயன்றி யானும் அவன் இவ்விடத்துளன் என்று சொல்லப்படும் இடமெல்லாஞ் சென்று தேடுவேன். இங்ஙனம் தேடுமளவில் உயர்ச்சி தீர்ந்தவன் பின்னை எவ்விடத்தே ஒளித்திருப்பான்? அவனை அகப்படுத்திக்கொண்டு அந் நாணம் முதலியவற்றை வாங்கியே விடுவேன். என்னை வரைந்திருக் கின்றவன் என்னிடத்தினின்று நெஞ்சால் நீங்கான் ’ என்றுங் கூறினாள். இவ்வாறு கூறியபொழுது மாலையும் இரவும் வருகின்றதனை உணர்ந்தாள். ‘மயக்கம் மிக்க மான்பிணைப் போல் யான் மயங்கும்படி வெவ்விய காம நோயை உண்டாக்கும் மாலைக் காலமும் வந்தது. அதனோடே, எரியின் கொழுந்து போற் கொடிய இராக்காலமும் வரும். வருமாயின் அதனிடத்தே யான் பட்ட வருத்தத்தை, என்னைப் போல வருந்தும் பல மகளிருக்குள்ளே சென்று கூறுவேன். பலரையும் துயிலப் பண்ணும் இராக்காலமே! என்னோயை நினக்குக் குறைப்பட்டுக் கூறின் நீயும் வருந்தித் துயில்கொள்ளாயாவாய். ஆதலால் நினக்குச் சொல்லேன்’ என்றும் கூறினாள். ‘திங்கள் வருத்தும் என்றுணர்ந்தாள். திங்கள் பிறையான பருவத்து உலகத்துள்ளாரால் எதிர்கொள்ளப்படும். அது முதிர்ந்து, யான் துயில் கொள்ளாமல் என்மேல் வந்து வளைத்தது. யானுற்ற நோயைக் கூறி முறைப் படுமிடத்துத் தன் கதிர்கள் ஒளி மழுங்கி நடுங்வதுபோல அது ஓடி மிகவுஞ் சுழன்று திரியும். ஆதலால் நுமக்கன்றி (கேட்கும்) சான்றோருக்கு, என்னோயைக் கூறேன்’ என்றும் கூறினாள். இவ்வாறு கூறிப் பெரிய ஊரிற் றெருவிலே யான் உறுகின்ற வருத்தத்திற்குப் பரிகாரஞ் செய்யாமற் பெரிய உறக்கங் கொள்ளக் கருதிய சான்றீரே! ‘மழையெல்லாம் நின்று என்னிடத்தே பெய்யினும் என் மெய் யிடத்து நின்றெரியும் காம நோய் ஆறுமாறில்லை. இது தணியும்படி உலகிலுள்ள நீரை என்னிடத்தே நிறையும்படி அடைத்து வைத்து என்னுயிரைப் பாதுகாப்பீராக’ என்றுங் கூறினாள். ‘அவன் என் நெஞ்சிடத்தே விடாமலிருப்பினும் அவனாலும் அடங்காது நோய் காந்தும். நெஞ்சில் நிற்கும் அவன் ஒருபொழுது நீங்கில் அதற்கு நெஞ்சு வருந்தும். இவ்வாறு என்னெஞ்சு வருந்துதலைத் தாங்க மாட்டேன். தாங்கமாட்டாது, பல உறுப்புகளையுங் கூட்டி இயங்குவதோர் பொறியாகச் செய்த அழகிய பாவை போலத் துன்பத்தில் அழுந்தித் தடுமாறும் யாக்கையோடு சிறிது செல்வேன். அதனாற் றணியாத எனது நோய் பிறரால் அழித்தற்கரிய அரணின் தன்மை யுடையது. இவ்வரணை அழிக்கத் தக்க ஓர் உபாயம் நாடுவீராக’ என்றும் கூறினாள். இவ்வாறு அவள் சொல்லுதலும், கோடை காலத்தில் வானத்தே மேகத்தின் துளியைப் பெறுதற்குச் சுழன்று திரியும் வானம்பாடிக்கு அம்மேகம் பெய்யும். அதுபோலத் தன்னுடைய நல்ல அழகையுடைய மார்பன் வந்து அருள் செய்து முயங்கினான். அதனால் ஆயிழையின் அல்லலாகிய குணம் போயிற்றென்று கண்டார் வியந்து தம்மிற் கூறினார். 30 இதுவும் அது ‘தோழீ! தெளிந்த கள்ளையும் தேனையும் உண்டவர்களிடத்தில் அறத்தொழில்கள் தோற்றாமல் விடும்படி அறமில்லாத தீயமொழிகள் தோன்றும். அவர்களின் மயக்கம் போல நன்மக்கள் ஆற்றுகின்ற காமம் உலகியல் திறம்பி வேறோர் பகுதியாய் விட்டதோ? இவள் தன் கணவனில் லாத தனிமையினால் அழகழிந்தாள். வேலின் நுதிபோலக் கொடுமை யினால் கணவனை இழந்தவள் போலத் தெருவிலே புறப்பட்டு வெயில் தன்மேற் படும்படி தன் சிறிய அடியிற் சிலம்பு ஒலிப்ப, எங்கும் திரியும் நிலைமையளாயினாள். அதுவுமின்றி, ஊண் சிறிது மிலளாய் மேனி மெலிந்து உயிரினுஞ் சிறந்த நாணுஞ் சிறிது மிலளாய் நகுதலையுஞ் செய்யா நின்றாள். அப்பொழுதே பெண்டன்மையு மிலளாய் அழுவாள். இதனை நெஞ்சால் நினைந்து பார்மின். அங்ஙனம் நினைந்து பார்த்து இவளுற்ற வருத்தத்தை யாம் இவ்விடத்தே சென்று கேளாமோ? இவ்வாறு கூறிவந்து என்னை மொய்த்துப் பாராதீர். நுமக்கு முன்னே வந்து சூழ்ந்து நின்ற இவரைக் கண்டீரோ? இவர்களே சூழ்ந்து நிற்கத் தக்கவர்கள். எனக்குற்ற கெடுதிபோல இதற்கு முன்பு நீர் கூற வில்லைபோல் இருந்தது. அக்கெடுதி நுமக்கும் ஒரு காலத்துண்டாம். இனி யான் கூறுவதைக் கேட்பீராக. தேறாது நீங்கிய காமத்தின் மிகுந்த பகுதியும் ஒரு காமம் என்று நூல்களிற் கூறுவர். ஆதலால் அதனை உற்று நின்ற என்னை இகழாதீர்கள். இவ்விடத்து வருந்துகின்றவர் யார் என்று பிறர் கேட்டு வருந்தும் நிலைமையேன்? தாம் விரும்பிய ஆடவர் தம் மதிமயங்கும்படி கைவிட்டவிடத்து அவர் பெற்ற அழகு கெடுகின்ற தன்மை, வண்டு நுகர்ந்த பூ தன் புதியநலம் சிறிது கெட்ட நிலைமைத்துக் காண்பீர்களாக என்றாள். அவனோடே கலந்த கண், புருவம், தோள், இடை, மழைபோல் நீண்ட கூந்தல் முதலியவற்றின் அழகின் பெருமையை அறிந்து விலை கொடுக்கத் தக்கவனிடத்தில் அவற்றைக் கொடாது, ஒருவன் கூறிய பொய்யாகிய வலையால் என் நெஞ்சு அகப்பட்டுவிட்டது. இன்னுங் கேளீர்’ வாழ்வீராக! அவன் இயற்கைப் புணர்ச்சிக் காலத்தும் பல சத்தியங்களால் என் மனத்தைத் தேற்றி அணைந்து முலையிடத்தே முயங்கினான். அங்ஙனம் தேற்றி முயங்கிப் பின் கைவிட்ட கொலைத்தொழில் வல்லவனை யான் முயங்கேனோ? அவன் என்னைக் கண்டானாயினும் அவனால் யான் பெறும் பொலிவை அறியமாட்டீர்’ என்று அவரை நோக்கிக் கூறினாள். அவர்கள் யாதும் மறுமொழி கூறாமையின் ஞாயிற்றை நோக்கி, ‘ஞாயிறே! போக்கற்கரிய இருளைப் போக்கும் விசும்பிடத்து மதி தோன்று மாறு போல நீயும் நீருள்ளே தோன்றுவை. அங்ஙனம் தோன்றியவிடத்து அத்தேரை (மீன் முதலியன) இரையென்று தின்னப்படுதலைப் பரி கரித்துக்கொள். வானிடத்தே இருந்து எவ்விடமுங் காண்கின்ற நீ எனக் கென்ன காரியஞ் செய்வை? ஒன்றுஞ் செய்யாயாயினும், இப்பொழுது என் கணவர் எங்கிருந்தாராயினும் அவரை எனக்குக் கொண்டு வந்து காட்டுவாய். நீ காட்டாயாயின், யான் நின் கதிர்களைப் பிடித்துக் கொண்டு அவ்விசும்பிலே ஏறி அவனைப் பார்ப்பேன். அதற்கு நீ செய்யுங் காரியம் எனக்கு அருளாத இணையில்லாதவனைத் தேடியான் பிடித்துக் கொள்ளுமளவும், நீ நின் பல கதிர்களை இவ்விடத்தே நிற்க விட்டுச் சில கதிரோடே படுவாயாக. உலகத்தார் வேண்டிக்கொள்ளும் காரியங்களை மறாத ஞாயிறே! ஐதுமயிருடைய என் முன்கையிற் கிடக்கும் வளையைப் பிடித்துத் தெளி வித்துக் கூடினவன், பால் கறக்கப்படாத காட்டெருமைகள் நிற்கும் காட்டைக் கடந்து போயினானோ? அல்லது என்னோடு அன்புறாது இவ்வூரிடத்தே இருந்தானோ? இரண்டும் அறிகின்றிலேன். அவனைக் கூடப்பெறாது வருந்தா நின்றேன். அதற்கு மேல் நீ உண்டாக்கும் மாலைக் காலமும் வந்தது. இனி இந்நோய் என்னிடத்தினின்று நீங்காது. அவன் இவ்விடத்துள்ளா னாயின் அவனை எனக்குக் காட்டுவாய். காட்டினால் கோபியாது மனத்தினாற் கைக்கொள்வேன். ஞாயிறு அவனைக் காட் டாமற்பட்டது; படுதலின் அதனைக் கைவிட்டு, நடுவுநிலை செய்தலன்றி ஒருபாற் பாராத கூற்றமே! சுறாக் கொடியையுடைய இக்காமன் செய் கின்ற கொடுமைகளையும் நின் ஓலையிடத்தே எழுதி வைத்துக் கொண்டு தண்டிப்பை அவன் நமக்கு வழிபடு தெய்வமாதலின் அவனைத் தண்டியாமற்றணிவாயாக. காம! நின்னுடைய அம்புகள் ஒருத்தியின் நெஞ்சைத் தன் மேல் அன்பில்லாத ஒருவன் பொருட்டு வருத்துவிக்கும். இவ்வாறு செய்தல் சிலர்க்கு மாத்திரமன்றி எல்லார்க்கும் ஆமோ? இனி வருகின்ற இராக்காலத்து நின் அம்புகள் யான் இறவாது உயிரோடிருக்குமாறு அருளுவனவாக. அவை அவ்வாறு செய்யின், துன்பத்தினால் சிறிது துயில் பெற்றுக் கலங்கிய கண்ணால், எனக்கு வருத்தஞ் செய்தவனைக் கனவிற் கண்டேனாயின் கண்களை விழித்துக் கடிந்து பாராது மெத்தெனப் பார்ப்பேன். பார்த்தபின் தப்பிப் போகாதபடி தாழ்ந்து கிடக்கும் துகிலைப் பிடித்துக்கொள்வேன். என் மேனி வேறுபாட்டைக் கண்டு இவள் நந்தலைவியோ அல்லளோ என்று ஐயங்கொண்டு என்னை அறியமாட்டாது கைவிடுவனாயின், என் நாண் முதலிய குணங்களையும், மேனி நலத்தினையும் மெய்யாகக் கைக் கொண்டு போன கள்வனிவனென்று எல்லாருங் கேட்கும்படி விரை வாகக் கூப்பிடுவேன்’ என்றாள். ‘ஊரிலுள்ளீர்! எங்களை நோக்கிக் கூறுகின்ற நீவிர் ஞாயிற்றையும் காமனையும் நோக்கிக் கூறியதற்கு அவை என் செய்யுமென என்னைக் கேளன்மின். எப்பொழுதும் எனக்கு உறங்காமையைச் செய்தவன் தந்த நட்பினால் உண்டான நோய், குடிக்கும் கள்ளை உண்டாரைப்போல் மயங்கும்படி, உயிரைப் போக்குந் தன்மையோடு கூடிவிட்டது. இனி இவ்வுயிரைக் காக்கும் வழி உண்டாயிற் காப்பீராக’ என்றுங் கூறினாள். வருகின்ற இராக்காலத்துக் கனவில் அவனைக் கண்டு ஆற்று தற்குக் காமன் கணை செய்கின்ற கொடுமையாலே கண் துயிலாவாயின், ஞாயிறே! ‘நீ கனவில் வந்தாயினும் அவனைக் காட்டுவாய். காட்டா யாயின் யான் இவ்வாறு வருத்தமுற்றுப் பனை மடற் குதிரையேறி அவன் என்னிடத்தே வலிய வரும்படியாக, அக்காமன் காலைக் கட்டிக் கொண்டு நின் அம்புகளை எனக்குத் தரவேண்டும்’ என்று அவனை இன்னும் இரந்துகொள்வேன் என்றும் கூறினாள். இவ்வொண்ணுதல் அன்னையோ! என்று இனைந்து கலங்கி அழுதாள். தோள் மெலிந்து வளை நெகிழ்ந்தாள்; இப்பேதை அழகிய மெல்லிய நடையுடைய அன்னப்பேடு விரைந்து செல்ல, அதனைச் சேர்ந்த அன்னச் சேவலின் கூட்டம் போலத், தன் காதலன் வர அங்கே அவனைக் கண்டு தான் வருந்திய துயரம் முழுதும் மறந்தாள். இத்தைய லாள் பின்னர் ஊரிலுள்ளார் நகைத்த நகையையும் போக்கினாள். போன நாணம் தன் மெய்யிடத்தே அழகுண்டாக-மனத்திடத்தே நகையுண்டாக அந் நல் எழில் மார்பனிடத்தே சேர்ந்தாள். இம் மகிழ்ச்சியையும் எல்லீருங் காண்பீராக எனக் கண்டார் வியந்து தம்மிற் கொண்டு கூறினார். 31 அரசன் மண் கோடற்கு ஏவுதலின், வாளான் நேரும் பிரிவின்கண் தலைவன் வரைவிடை வைத்து வேந்தற் குற்றுழிப் பிரிந்தவிடத்து அவள் வருத்தம் மிகுதி கண்டார் கூறுகின்றனர். ஞாயிறு விளக்கத்தைச் செய்து பழமைபோல உலகத்தை நடத்தும்; பின்னர்க் காமன், தனக்கு யான் பிரிந்தாரை வருத்துதற்கு நீ போவாயாக என்று கூறிய காரியத்தினைச் தலைமேல் ஏற்றுக் கொண்டவனைப் போல அத்தகிரியைச் சேரும். பல உயிர்களும் தங்களாற் கொள்ளும் பயன் கெடும்படி சூரியன் மறையத் தீவினையைப் போக்குகின்றவனுடைய அருள்கொண்ட முகம்போலத் திங்கள் பெரிய கடலிற் றிரைமேற் றோன்றி மயக்கத்தைத் தரும் இருளைப் போக்கும். பொருளில்லாதார் நடத்தும் இல்லறம் போலக் கழியின் மலர்கள் குவியும். இவ்வாறு என்னுயிரின் புறத்தே வந்துவிட்ட மாலாய்! ‘நீ அறிவு மயங்கின மாலையாயிருந்தாய்’ என்றும் கூறினாள். கூடி இன்புற்றவர்களுக்கு உறவாய் அவர்கள் கூடும் நிலைமையை முன்பு செய்தாய்; இப்பொழுது ஆடவர், தம்மீது அன்புற்ற மகளிர் அழும்படி கைவிட்டதனால் உண்டான வருத்தத்தாற்கலங்கிய மகளிரை வருத்துதல் உனக்குத் தக்கதன்று. மகளிரைக் கூடிய கணவருடைய மன வேட்கையை அம்மக ளிர்க்குத் துணையாய் நின்று அவர் மனத்தினின்றும் நீங்கா தெரியும். தன்மையை முன்பு மிகவுஞ் செய்தாய். இப்பொழுது அம்மகளிர் நலத்தைக் கைக்கொண்டு பின்பு அதனை அவர்க்குக் கொடாத ஆடவ ரால் தமது நலம்போன தனிமையால் வருந்தும் மகளிர்க்குத் துணை யாகாது வருத்துதல் நினக்குத் தக்கதன்று. எம்முடைய கணவரை முன்போல மனத்தைச் சுடச் செய்து என்னிடத்திற் றருதலும் செய்தில்லை. ஆதலால் நீ எனக்குத் துணை யல்லை. நீதான் பிரிந்த மகளிர்க்குப் பிரிவாற்றோன்றிய நோயின் வடிவு ஆவை; கூடிய மகளிர்க்கு அவர் பெறும் இன்பத்தின் தெப்பமாவை. இங்ஙனம் நன்மையாகாத காரியங்களை நீ செய்வதல்லாமல், நன்மை யாகச் செய்யும் காரியம் நினக்கிலையோ? திருந்திய ஆபரணமும் மடப்பமும் உடையவள் வருந்தியவிடத்தே தூரத்தில் உறைகின்ற காதலர் பகைவரிடத்திற் செய்கின்ற போர்த் தொழில்களைப் போய் முடித்து அவர் மண்ணைக் கைக்கொண்டு, பரந்த இருளை ஞாயிறு போக்கினாற் போல அவள் வருத்தம் நீங்க வந்தார். இஃது என்ன வியப்போ? எனக் கண்டார் கூறினர். 32 வரைவு நீடித்தவிடத்துத் தோழி, தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு கடாவுகின்றாள்: நிரைத்த திமில்கள் களிறாகத் திரை யொலிக்கின்ற ஓசை பறை யாகக் கூட்டமாகிய அழகிய தானையுடையவர் மேற் படையெடுத்துச் சென்றாலொத்த செலவினையுடைய கடல் சேர்ந்த நிலமுடையவனே! யான் கூறுகின்றதைக் கேள்: தனக்கு வருத்தம் உற்றவிடத்து உதவினவர்கட்கு ஓர் வருத்தம் வந்தால் உதவாதவன் தானே தானாகத் தேயா நிற்பன். அது. தன்னை நூல் முதலியன கற்பித்த ஆசிரியன் தன்னிடத்து ஒன்றும் இயலாது வருந்தத் தன் கைப்பொருளை அக்கல்விப் பொருட்குக் கைம்மாறாகக் கொடுத் துண்ணானாய், தான் கற்ற வித்தையிடத்தே தப்புப் பண்ணிக் கொண்டவ னுடைய கல்விப்பொருள் நாள்தோறும் தேயுமாறு போன்றது. அந்நன்றியின்மை உயிர்போன விடத்தும் அத்தீமையை நுகர்விக்கும். தான்புரியும் சத்தியைத்தைக் காண்கின்றவன் நம்பும்படி சத்தியஞ் செய்தவன், தான் செய்த சத்தியத்தை முடிக்காது பொய்த்து விடுவா னாயின், நாள்தோறும் தானாகத் தேயா நிற்பன். அது, தன்னைச் சேர்ந்து வாழுஞ் சுற்றத்தார் நெஞ்சு வருந்தும்படி மறைத்து வைத்துப் பெருக்காத வனுடைய பொருள் நாளுக்கு நாள் தேய்வது போலாகும். அவ்வாறு சத்தியஞ்செய்தவன் இறப்பின் அத்தீவினை வாளின் வாய்போற் கூரியதாய்ச் சென்று மறுமைக் கண்ணும் அத்தீவினையை நுகர்விக்கும். பெருமா! செய்ந்நன்றிக்கேடு பொய்ச் சத்தியம் என்னும் தீவினை யின் தன்மைகள் யாம் கூறிய அத்தன்மையன. இனி நீதான் அத்தன்மை யனாய் இருத்தலை நினைந்து பார். இவள் நெஞ்சு அரசன் படை எடுத்துப் பகைவன் மதிலகத்தே இருக்க உள் இருந்தவரின் நெஞ்சு அஞ்சியதுபோல, வரைவு விரைவில் முடியவேண்டுமென்று விரும்பும் நெஞ்சால் மிகவும் வருந்தினாள். இனி அவ்வருத்தம் கடிதில் நீங்கும்படி கடிதில் வரைவாயாக. 33 பொருள் வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியைத் தோழி ஆற்றுவிக்கின்றாள்: நீர் நிலைக்கருகே கொன்றை சரமாகப் பூத்திருக்கும். அக்கொன் றைப் பூவாற் கட்டிய மாலையை இறைவன் சூடியிருப்பான். அவன் திரிபுரத்தை எய்கையினால் வெம்மையுடைய நெருப்பு எழுந்தது. அந்நெருப்பு வானமளாவி எழுந்து எரியுமாறு போலச் சூரியன் எவ் விடங்களிலும் பரந்துசுடும். ஒன்றோடு ஒன்று பின்னிய காய்ந்த மூங்கிலி னிடையே எழுந்த காட்டுத்தீ விசும்புற ஓங்க வெப்பஞ் செய்யும். இவ்வகையான காட்டிடத்தே விலங்குகள் பல காலுந் திரிதலால் வழிகள் மயக்கந் தருவனவாயிருக்கும். மலைகள் வழிகளின் எதிரே குறுக்கிட்டுப் போதற்கரியனவாயிருக்கும். ஆயிழாய்! அவர் தாம் எண்ணிய காரியங்களைப் பெறுதலா லுள்ள விருப்பத்தாலே அறத்தினைக் கைவிட்டார்; வெவ்விய அரு வழியைக் கடந்து விளங்கும் நீரைச் சடையிலே மறைத்த இறைவனை ஒத்த பொருளைத் தேடுதற்குப் பிரிந்தார். அவர் அழகினையுடைய நின் மேனி பசந்து நீ இத்தன்மையாக நின்னைக் கைவிடுதலுஞ் செய்வரோ? அவர் சென்ற நெறியோ வெந்த கரியினையும், பல வழிகளையும், காய்ந்த கற்களையும் உடைய காட்டகத்தது. அவ்விடத்தே செல்வதற்கு அஞ்சாதவராய் அவர், அழகிய ஏற்று ஊர்தியையுடைய இறைவனை ஒத்த பெரிய பொருள் தேடுதற்கு அகன்றார். அவர் ஒலிக்கும் விளங்கும் வளையுடைய நின் அழகை இழந்து நீ இத்தன்மையாக அப்பொருளை நினைத்தலையுஞ் செய்வரோ? ஞாயிறு கீழ்த்திசையினிடத்து உதயகிரியிலே வந்து தோன்றும்; பின்பு கொதித்துப் பரந்து கோடையைச் செய்யும். இக்காலத்தே செல்லற் கரிய வழியென்று கருதாராய்ப் புதிய திங்களைக் கண்ணியாக முடிந்த இறைவனை ஒத்த ஒள்ளிய பொருட்கு அகன்றார். அவர், பொற்றலைக் கோலம் தாழ்ந்து விளங்கின நின் கூந்தல் அவ்வாறன்றிக் காய்கின்ற அழகை நீ யுடையையாக, அப்பொருள் வேட்கையை மனத்தாற் காணுதலையுஞ் செய்வரோ? கருமையினையும் நெய்ப்பினையும் உடைய கூந்தலும், இனிய மொழியினையுமுடையாய்! பெறுதற்கரிய ஆதிரை நாளையுடைய இறைவன் திருமேனியின் அழகைப் பெறும்படி இச்சண்பகம் மலர்ந்த பருவம் பொய்யாது. அதுபோல அவர் கூறிய பருவத்தைப் பொய்யாராய் வருதலை அவர் கூறிய கூற்றால் நீயும் யானும் ஒருங்கு தெளிந்தேம். அங்ஙனந் தெளிந்த பருவங்கழிவதற்கு முன்னே வருவர் எனக்கூறி ஆற்றுவித்தாள். நெய்தற்கலி முற்றும். எஎஎஎ 1. பல தேவனும், திருமாலும் ஒருவராக வழுத்தப்படுகின்றனர். 1. “இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடன்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கல் நின்று வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையி னாலே இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததி ஒழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கச் சூல் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பயந்தாராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகட்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிராயுதத்தை எறிய அவ்வாறு வடிவு மொன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று புராணம் கூறிற்று.” (திருமுருகாற்றுப்படை உரை. நச்சினார்க்கினியர்) “சிவன் ஆறுமுக வடிவங்கொண்டு அவற்றின் நெற்றிக்கண்களாறினும் ஆறு அக்கினிப் பொறிகளைப் பிறப்பிக்க அவை உலக மெங்கும் பரந்தன. தேவியார் அவற்றின் வெம்மையாற்றாது ஓடிப்போய்த் தமது கோயிலடைந்தனர். தேவரும் பிறரும் கலங்கினர். சிவபிரான் அதுகண்டு அபயங்கொடுத்து முன்போலாறு பொறியாக்கி தம்முன் வருவித்துக் கங்கா நதியிற் சேர்க்குமாறு வாயுவுக்கும் அக்கினிக்கும் கட்டளையிட்டு “இப்பொறிகளைக் கங்கா நதியிலுள்ள சரவணத் தடாகத்திற் சேர்த்த வுடன் புத்திரன் தோன்றுவ”னென்று அருளிச் செய்து தேவர் முதலானோர்க்கு விடை கொடுத்தனர். உடனே வாயுதேவரனைவருஞ் சூழ்ந்து வர அப்பொறிகளைச் சிறிது தூரஞ் சுமந்து சென்று மேற் சுமக்கலாற்றாது அக்கினி தேவனிடம் ஒப்பிக்க அவன் அரிதிற் கொண்டு சென்று கங்கையிற் சேர்த்தான். கங்கை சரவணத்துட் சேர்த்தது. அப்பொழுது ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய ஒரு குமாரர் தோன்றி ஓர் தாமரை மலர்மேல் வீற்றிருந்தார். அதன்பின் அவர்க்குப் பாலூட்டி வளர்க்கு மாறு கார்த்திகைப் பெண்களறுவர்க்குத் தேவர் பணிக்க அக்குமார ரொருவரே ஆறு குமாரராகத் தோன்றி முலைப் பாலைப் பருகி வளர்ந்தனர். (கந்த புராணம்) சிவவழிபாட்டோடு வேறல்லாத முருக வழிபாடு அக்காலத்து வடதேயத்தில் முதன்மை பெற்றிருந்த இந்திர வழிபாட்டால் எதிர்க்கப்பட்ட வரலாற்றையே இச்செய்திகள் குறிப்பனவாகும். புராணீகர் புனைந்துரையாகக் கூறும் பொருள்களுக்கு நேரான கருத்தமைத்துக் கூறுதல் ஆகாது. “சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மாரறுவர் திருமுலைப்பாலுண்டான் திருக்கைவேல்” (சிலப்) 1. ஆடையை உடுத்து உள்ளே இரண்டு வடமாகிய மேகலையைக் கட்டி அதன் மேலே எண் கோவை முதலிய வடங்களைப் புனைவது முறை. இரண்டு வடமாய்க் கட்டுவதே பின் ஒட்டியாணம் என்று ஆயிற்றுப் போலும். 1. முன்னே செல்லும் காலாட்படை 1. சத்தியஞ் செய்தது. 1. நின்தொழுபராகிய மகளிர் 2. ஏடா வென்பது தோழன் முன்னிலைப் பெயர் (திவாகரம்) 1. உடுக்கை 1. தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தானாக. தலைவி அவனை உள்ளேவிடாது மறுக்க அவன் பலவாறு இரந்து வேண்டுவான் பின் ஒருவாறு இரங்கிய தலைவி அவனை உள்ளே விடுவாள். 1. பரிசுகளையும் பிடிகளையும் ஊர்தல் பரத்தையர்க்கே இயல்பு 1. சங்கு 2. முல்லை, அசோகு, நீலம், மா, தாமரை. 1. சீர் = தாளவறுதி 1. இடபவீதி- கன்னி, துலாம், மீனம். மேட மென்பன மிதுன வீதி - தேள், வில், மகரம் கும்பம் என்பன. மேடவீதி- இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம் என்பன. ஒரு இராசி என்பது இரண்டே கால் நாளாதலின் (நன்நான்கு இராசியாகிய) ஒரு வீதிக்கு ஒன்பது நாளாயின. 1. ஓடாணி 1. நீராடினார் ஆபரணங்களினின்றும் உதிர்ந்த மணி 1. சாத்துவீகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது. 1. திருமாலிருஞ்சோலை 2. நீலமலரைச் சூழ்ந்த அசோகமலர் அவன் பொன்புனை உடைக்கு ஒப்பு; குன்றத்துக் காய் கனியோடு மாறுபட மலர்ந்த வேங்கை அவன் மணிமுடிக்கு ஒப்பு. 1. உச்சிக்குடுமி 1. அரக்கு, கற்பூரம், செந்தேன், மயிலிறகு, நாவி 1. ஆயுதப் பயிற்சி செய்யுமிடம் 2. மலைசூதாடு கருவியையும், மரங்கள் சொரியும் காய்கள் சூதாடுங்காய்களையும் ஒக்கும் என்றவாறு. 1. கூடலினின்றும் போந்து குன்றில் ஏறமாட்டாது நின்ற இடை நிலம். 2. திருமாலின் குமாரிகளாகிய அமுதவல்லி சுந்தரி என்னும் இருவரும் முருகக்கடவுளின் ஆணையின்படி முறையே இந்திரன் மகள் தேவசேனையாகவும், சிவமுனிவரிடத்து மான் வயிற்றில் வள்ளியாகவும் பிறந்தனர். இவர்களை முருகக் கடவுள் மணந்தமை யான் மால்மருகன் எனப்படுவர். “அநுதினம் விழி துயில்பவர் தங்கச்சிக்கொரு புதல்வோனே” எனத் திருமாலின் தங்கச்சியாகிய உமாதேவியாரின் புதல்வனென்று அருணகிரி நாதர் கூறுவர். 1. எழிலைப் பாலை மதநாற்றத்துக்கு உவமை 1. சங்கமாரம்பித்த காலத்துப் புலவர்களும் அரசனும் தமது வழிபடு கடவுள்களாகிய முருகவேள் சிவபெருமான் முதலியோரின் திருவுருவங்களைத் தம்மெதிரில் வைத்து அவர்களே கழகத்துக்குத் தலைவர் எனக் கூறினராதல் வேண்டும். இவ்வுபசார வழக்கே பின் மெய்க் கதை போல் வழங்குவதாயிற்றுப் போலும். 1 2 1. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டும் எட்டுத்தொகை எனப்படும். 2. “ஆசிரியம் வஞ்சி வெண்பாக்கலியே நாலியற்றென்ப பாவகை விரியே” 3. பரிபாடல்லே தொகைநிலை விரியி னிதுபா வென்னு மிய னெறியின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப (தொல்.செய். 432) 4. பரிபாட்டெல்லை நாலீ ரைம்ப துயர்படியாக வையைந் தாகுமிழிபடிக் கெல்லை (தொல்.செய். 474) 5. காப்புப்பாடிநூல் தொடங்குவது சங்க காலத்து மரபல்ல வென்பது தொல்காப்பியத் தாலும் தொகை நூல்களாலும் விளங்கும். 1. “பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார்” 1. “மீனேற்றுக் கொடியோன்” (பாலை. 26) “காமன்கொடி” (மருதம். 19) “காமனார்தம் செலவு” (மரு. 29) “காமனும் படையிடுவனப்பு” (முல். 8) “காமன் தனையால் வந்த படை” (முல் 22) “நெடியோன் மகன்” (முல். 23) “சுறாக்கொடியோன் கொடுமை” “காமன் கணை” (நெய். 30) “கிரேக்கர் இரோஸ்” என்றும் உரோமர் ‘கியூபிட்’ என்றும் ஆரியர் மன்மதனென்றும் தமிழர் காமன் என்றும் இத் தெய்வத்தை அழைத்தனர். 1. இதன்பொருள்: பச்சைமால் போன்ற மேகம் கடல்நீரைப் பருகி உமிழ்ந்த எச்சிலாகிய மழை நீரை நாற்றிசைகளிலுமுள்ள உயிர்கள் அமிழ்து எனும்படி விரும்பி யுண்ணும்; தீயின் எச்சிலாகிய ஆவுதியைத் தேவர்கள் விரும்பித் தினந்தினம் நுகர்வர்; அறிவுடை யோர் அந்தணராகிய நச்சினார்க்கினியரின் எச்சிலாகிய நறிய தமிழை நுகர்வர். 1. இது நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் என்னும் செய்யுளின் வசன நடை. 1. சங்க காலத்தில் கடவுள் வாழ்த்துக் கூறி நூல் ஆரம்பிக்கும் மரபு இருக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துச் செய்திருக்கின்றார். மற்றத் தொகை நூல்களுக்குக் காப்புச் செய்யப்பட்ட காலத்திலேயே கலித்தொகைக்கும் கடவுள் வாழ்த்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இச்செய்யுளைச் செய்தவர் பெருந்தேவனாராய் இருத்தலும் கூடும். நல்லந்துவனா ராயின் நெய்தறக்லி செய்தவரல்லாத பிறிதோர் நல்லந்துவனாராதல் வேண்டும். இன்றேல் கலித்தொகையின் காலம் பிற்பட்டதாதல் வேண்டும். நல்லந்துவனாரை சிலர் நவ்வந்துவனார் எனப் பிறழ எழுதுவர். நல்லச்சுதன் நல்லந் துவன் நற்றத்தன் முதலிய பெயர்களைச் சங்க நூல்களிற் காண்பார் நல்லந்துவனாரே திருத்தமான பெயர் எனக் கொள்வர். 2. சிவபெருமானுக்கு எட்டுக் கரங்கள் என்பதன் காரணம் விளங்கவில்லை. மூலத்தி லுள்ள எண் கை என்பதற்குப் எண்ணப் படுகின்ற (புகழப்படுகின்ற) கை எனப் பொருள் கூறினும் ஆம். 1. அம்பின் அலகைக் காம்பில் வைத்து இறுக்கிய பொருத்து. 1. அரசன் உயிர் வாங்கினவன்றே கெடுவன் என நச்சினார்க்கினியர் உரைப்பர். 1. பொருள் இன்மையால் உள்ளே ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு வெளியே ஒரு ஆடையை உடுப்பராயினும் என்பது இன்மையது இழிவு. 1. அழகுதேமல் 1. தோளினும் முலையினும் எழுதும் கோலம். 1. (ஏனாதிப் பட்டங் கட்டினானொருவன் ஏற்றிய பரத்தைச் சேரி) xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் கலித்தொகை ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன். எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : கலித்தொகை ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 236 = 256 படிகள் : 1000 விலை : உரு. 110 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி. கந்தையா . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. பரிபாடல் உரை . . . 1 2. கலித்தொகை உரை . . . 69 xvii xviii xix