ஐம்பெருங் காப்பியங்கள் 1 சிலப்பதிகாரம் உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இளங்கணி பதிப்பகம் சென்னை- 600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : ஐம்பெருங் காப்பியங்கள் - 1 சிலப்பதிகாரம் 1 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாளர் : இ. இனியன் முதற்பதிப்பு : 2009 தாள் : 16கி. வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 784 = 816 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 510/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும். பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம்பெற்றிருந் தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும் நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர். தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம் பண்பாட்டுச் செழுமையை, நாகரிக மேன்மையை, கலையின் பெருமையை இசையின் தொன்iமயை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந்தமிழ்ச் செம்மொழிச் செல்வங்களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம். இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெருமகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு. தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம். அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங்களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம். - பதிப்பாளர் சிலப்பதிகாரம் சேரன் இளவல் இளங்கோவடிகளால் கி.பி 2 ஆம் நூற்றாண்டு இறுதியில் எழுதப்பட்டது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் எனும் முப்பெரும் உண்மைகளை உலகுக்கு உணர்த்த எழுந்த நூல். கண்ணகி எனும் தமிழ்க் குலமகளின் பெருமையை முன்நிறுத்தி எழுதப்பட்ட செந்தமிழ்க் காப்பியம். தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டி எழுப்பிய முதல் தமிழ்க் காப்பியம். தமிழ் பண்பாட்டின் சுரங்கம். தமிழ் கலை களின் இருப்பிடம். உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய குடிமக்கள் காப்பியம். புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கி மூவேந்தர்களின் நாட்டையும், ஆட்சியையும், அதன் உயர்வையும் - தாழ்வையும் ஒப்பக் கருதி தம் புலமை அறிவால் எழுதப்பட்ட நூல். நுண்கலைகளின் களஞ்சியம். அருங்கலைகளின் உறைவிடம். இயல் - இசை - நாடகம் எனும் முத்தமிழ் வளம் நிரம்பிய முத்தமிழ்க் காப்பியம். பண்டைத் தமிழின் சிறப்புகளை தமிழரின் உயர்வை நன்கு அறிவதற்கு தலை வாயிலாய் அமைந்த நூல். இசை இலக்கணம், இசை இலக்கியம், நாட்டியக் இலக்கணம் நாடக அரங்கமைதி, ஆகியன பற்றி தெளிவுற அறிவதற்குச் சான்றாக அமைந்த நூல். செவிநுகர் கனிகள் “காதைகள் சொரியன செவிநுகர் கனிகள்” என்பது கம்பர் வழங்கிய தொடர்! காலமெல்லாம் செவி வாயாக நெஞ்சுகளனாகத் துய்க்கும் செவ்விலக்கியச் செழுங் காப்பியங்கள் ஐந்து! அவற்றுள் முழுமையாக வாய்த்தவை மூன்று; மற்றை இரண்டோ தமிழர் பேணிக் காவாப் பேதைமையால் ஒழிந்தவை! எனினும், உரையாசிரியர்களால் ஒரு சில ஒளிமணிகள் எய்தப் பெற்றவை. சிலப்பதிகாரம் உருவாகிய மண் சேரலம்! கண்ணகி கோயில் கொண்ட மண் சேரலம்! சிலப்பதிகாரம் இல்லையேல் சேரல மண்ணை இழந்தமைபோல் செங்குட்டுவன் ஆட்சியோ கண்ணகி கோட்டம் உருவாகிய மாட்சியோ உருத்தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கும். நெஞ்சையள்ளும் சிலம்பு நமக்கு வாய்த்தமையால் முத்தமிழ்க் காவியமாம் மூத்த தமிழ்க் காவியம் பெற்றோம்! அதனைத் தொடுத்த கதையாம் மேகலை என்னும் காவியமும் பெற்றோம்! நெட்ட நெடிய காலத்தின் பின்னர்ச் சீவக சிந்தாமணியாம் காவியம் உற்றோம்! முன்னவை இரண்டும் தமிழ்ண்ணின் கொடை வளமாகத் திகழ, இம் மூன்றாம் காவியம் மொழிபெயர்ப்புக் காவியமாகக் கிட்டியது; மற்றவை இரண்டும் வளையாபதி, குண்டலகேசி என்பவை. அவ்வக் காவிய நிலைகளை அவ்வந் நூல்களில் காண்க. மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தெரியாவகையில் பெருங்காப்பியப் பேறெல்லாம் ஒருங்கமைந்த பெருங்கதை எண்ணத்தக்கது; அரிய கலைக்கருவூலக் காப்பியமாம் அது, காப்பிய வகையில் எண்ணப்படாமல் நின்றது ஏன் எனப் புலப்படவில்லை! காப்பிய வகையுள் வைக்கத்தக்க அருங்கலப் பேழை அஃதாம்! ‘காப்பியம்’ என்பதுதான் என்ன? தண்டியலங்காரம் என்னும் அணிநூல் காப்பிய இலக்கணத்தைக் கைம்மேல் கனியாக வழங்குகிறது. அவ்விலக்கணத்தைக் கற்போர் சிலம்பு முதலாம் காப்பியங்களை முழுதுற ஆய்ந்து அமைந்த கட்டளை அஃது என்பதை அறிவர்: பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன் றேற் புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்என் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனர்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியில் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவு இகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” என்றும் “ கூறிய உறுப்பில் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர்” என்றும் பெருங்காப்பிய இலக்கணம் பேசுகிறது தண்டியலங்காரம் (8,9) அது காப்பிய இலக்கணம் என, “ அற முதல் நான்கினும் குறைபா டுடையது காப்பியம் என்று கருதப் படுமே” என்றும், அவைதாம், “ ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே” என்றும் கூறுகின்றது. (10,11) ஐம் பெருங்காப்பியங்கள் என எண்ணப்பட்டமை போல, ஐஞ்சிறு காப்பியங்கள் என எண்ணப்பட்டனவும் உள. “அறம் பொருள், இன்பம்” என்னும் முப்பொருள் முறையும், அகம் புறம் என்னும் இரு பொருள் முறையும் அகன்று, “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” எனவும், “அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும் எனவும் அயல்நெறி பற்றிக் கொண்ட வகையால், “அறமுதல் நான்கு உடையது” எனவும், “அறமுதல் நான்கினும் குறைபாடுடையது” எனவும் சுட்டப்பட்டன. முதற்காப்பியமாம் சிலம்பு, முத்தமிழ்க் காவியமாய், வரிப்பாடல் வைப்பகமாய் அமைந்தமை இளங்கோவடிகள்தெரிமாண் தமிழ்க் கலைவளம் காட்டுவதாம்! சாத்தனார் நூலோ, கதையால் தழுவப் பட்டதெனினும் காப்பியப் போக்காலும் யாப்பியல் வளத்தாலும் சிலம்பை நெருங்க முடியவில்லை! சமயச் செறிவும் தருக்கமும் அடிகளார் சால்புப் பார்வையோடு சாராமல் ஒருசார் ஒதுங்கி நிற்கிறது! சிந்தாமணி கலைமலி காப்பியமாகக் கமழ்ந்தாலும் வரிப்பாடல்களோ அவர் காலத்துக் கிளர்ந்து விட்ட வாரப்பாடல்களோ இல்லாமல் நடையிடவே செய்கின்றது! வளையாபதி வரிப்பாடல்களைக் கொண்டமையும் நடைநயம் மல்கி நின்றமையும் கிடைத்த பாடல்களாலும், “வாக்குத் தடையுற்ற ஒட்டக்கூத்தர் வளையாபதியாரை நினைந்தார்” என்னும் உரைக் குறிப்பாலும் புலப்படுகின்றது. குண்டலகேசியின் கதையோ நீலகேசி உரைவழியே அறியக் கிடந்ததாம். அக்கதை நாடகமாய், திரைப்படமாய், அகவலாய், புதுக் காப்பியமாய்ப் பின்னே வடிவெடுக்கத் தூண்டியது. அதன் கதைத்தலைவன் தானே தேடிக்கொணட் தீச்சொல்லின் தீயவிளைவாலேயே யாம்! அதனால், “சொற்பகை காட்டும் கேசி காதை” எனப்படுதலாயிற்று. ஐம்பெருங்காப்பியங்களுள் சிலம்பு பெற்றது அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையுமாம்! முற்றாக வாய்க்க வில்லை எனினும் வாய்த்த அளவில் அவ்வுரைகள் முடிமேல் கொள்ளத் தக்க கலைவளமும் நயமும் உடையவையாம்! சிந்தாமணி பெற்றபேறு நச்சினார்க்கினியர் உரைபெற்ற பெருமையதாம்! மணிமேகலையோ மூலத்தளவே முற்றக்கிடைத்த அமைவினது. உரையாசிரியர் திருக்கண் பார்வை ஏனோ படவில்லை! அதற்குக் குறிப்புரை - கதைச் சுருக்கம் ஆகியவை வரைந்தமை தென்கலைச் செல்வர் உ.வே.சாமிநாதையரையே சாரும். அன்றியும் இம்முப்பெருங் காப்பிய முதற்பதிப்புகளையும் அரும்பாடுபட்டுத் தமிழ உலகக் கொடையாக வழங்கிய பெருமையும் அவரையே சாரும்! முதலிரு பெருங்காப்பியங் களுக்கும் பழைய உரை, குறிப்புரை ஆயவற்றைத் தழுவிய நல்லுரை வழங்கிய பெருமையர் நாவலர் ந.மு.வே. அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களுமே ஆவர். வளையாபதி, குண்டலகேசிப் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்து குறிப்புரை வழங்கிய பெருமையர் பேரறிஞர்கள் இரா.இராகவ ஐயங்கார், மு.இராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமியார் ஆவர்! ஐம்பெருங்காப்பியம் என்பதன் அடையாளம் காட்டுவது போல வளையாபதியும் குண்டலகேசியும் குறிப்புரையோடும் பொழிப்புரையோடும் வெளிவந்துள்ளன. கடலாக விரிந்து கிடக்கும் காப்பியங்களோடு, மணற்கேணி ஊற்றுப்போலவேனும் இணைத்துப் பார்க்க உதவுகின்றன பின்னிருகாப்பியங்கள். இவற்றைப் பற்றிய தனித் தனித் தகவுகளை ஆங்காங்குக் கண்டு மகிழ்க! ஐம்பெருங் காப்பியத் தொகுதிகள் இவை எனவும் எங்கள் முந்தையர் தந்த வளம் இவை எனவும் உவப்போடு தமிழ் உலகம் கொள்ள ஒருங்கே தருபவர் குவை குவையாய்த் தமிழ்க்கொடை தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்ப் போராளி கோ.இளவழகனார் ஆவர்! எல்லார்க்கும் ஒவ்வோர் இயற்கை! ஒவ்வோர் திறம்! அவற்றைத்தாம் பிறந்த மண்ணுக்கும் பேசும் மொழிக்கும் குiறவற வழங்கும் கொடையாளர் புகழ், அக்கொiடயோடு என்றும் குன்றாமணம் பரப்பும்! வாழிய நிலனே! வாழிய நிலனே! இரா.இளங்குமரன் அணிந்துரை தமிழர்க்கு வாய்த்துள்ள முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கணநூல், ‘காப்பியநூல்’ அமைதியை அருமையாகக் கூறுகிறது. “பெருங்காப்பிய நிலையே பேசுங்காலை, வாழ்த்து வணக்கம் வருபொருள் என்றிவற்றின் ஒன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று” என்று தொடங்கி விரித்துக் கூறும் காப்பிய இலக்கணம், முற்றாகத் தன் அமைதியால் தந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்பதை மேலோட்டமாகக் காண்பாரும் அறியக்கூடும். “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” என்னும் நெறிக்கு ஒப்பிலாச் சான்றாக அமைந்தது, சிலப்பதிகாரமே என்றும், அதனை வடித்து இலக்கண வார்ப்படமாக்கியது தண்டியலங்காரமே என்றும் கொள்ளலாம். ‘சிலம்பு’ - அணிகலப் பெயர். அப்பெயர் ஒலியால் பெற்றது.. சிலம்புதல் - ஒலித்தல். சிலம்பு, மலையின் பெயர்களுள் ஒன்று; பல்வகை ஒலி களைத் தன்னகத் துடைமையை அன்றித் தன் எதிரொலியால் பெற்ற பெயரதும் அது. சிலம்பு, தமிழரின் வீரப் போர் விளையாடல்களுள் ஒன்று. கம்பும் கம்பும் மோதுதலால் பெற்ற ஒலிப் பெயர் அது. சிலம்பு என்னும் ஒலியை ஓயாது உடைமையால் சிலம்பி (சிலந்தி) என ஓர் உயிரியும், சிலம்பிக்கூடு ( சிலந்திக்கூடு) என அதன் பன்மாண் பின்னல் வலையும் பெயர் பெற்றன. “ வான்குருவியின் கூடு வல்லரக்குத்தொல் கறையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்” என்பது ஒளவையார் தனிப்பாடல்களுள் ஒன்று. தினைக்கதிர் மல்கு கொல்லையில், தீஞ்சொல் இளங்கிளி சிலம்பும்; பூம்புனல் வளாகத்தில் புள்ளினம் சிலம்பும்; நல்ல அரும்பு தேன்வழியும் காலையில் வண்டு சிலம்பும்; மனைகள் தோறும் மகளிர்தம் வள்ளைப்பாட்டின் (உலக்கைப்பாட்டின்) மங்கலம் சிலம்பும்; என்பது கம்பர் காட்டும் சிலம்புச் சீர்மை. “தினைச் சிலம்புவ தீஞ்சொல் இளங்கிளி” என்னும் பாடற்செய்தி இது. சிலம்பரசன், சிலம்பரசி, சிலம்பாயி இன்னவை சிலம்பொடு கூடிய பெறலரும் பெயர்கள்! “ அம் பொற்சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு” என்பதும் புகழ்வாய்ந்த தனிப்பாடலின் பின்னிரண்டடிகள். அழகர் மலையில் வீழ்ந்ததோர் ஆறு - அருவியும் ஆயது. அது, “ நிலம்பக வீழ்ந்த சிலம்பாறு” எனப்பட்டது. ‘சிலம்பு’ என்பது ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரை அன்றி, வேறு எவ்விடத்தும், ‘சிலப்பு’ என வல்லெழுத்து( ம் > ப்) மாற்றம் பெற்றது இல்லை. வரம்பு - வரப்பு, பரம்பு - பரப்பு, குரங்கு - குரக்கு என ‘வலிக்கும் வழி வலித்தல்’ என்னும் இலக்கணம் பெற்று வந்தது இல்லை அது. இரும்பு - இருப்பு, செம்பு - செப்பு என மக்கள் வழக்கில் வருவது போலச் சிலம்பு, சிலப்பு ஆனதும் இல்லை. ‘வலியா வழி வலித்தல்’ என ஆக்கவா, அடிகள் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டார்? அல்லது, “சிலம்பு > சிலப்பு’ என வலித்தல் விகாரம் பெற்றது” என்று, இலக்கணவாணர் சொல்லிக் கொள்வதற்காகவோ பெயரிட்டார்? ஏதோ ஒரு பாரிய நோக்கு இருந்தால் அன்றிச், சிலம்பைச் சிலப்பு ஆக்கி நெற்றிச் சூடு போட்டிருக்கமாட்டார்? மென்மையான ஒலியினது சிலம்பு; மெல்லியலார் அணிவது சிலம்பு; மணநாளுக்கு முற்படச் செய்யும் ‘சிலம்பு கழி நோன்பு’ வழியாகக் கன்னிமை நீங்கித் தாய்மைத் தெய்வக் கோலம் காட்டுவதற்காகத், தான் ஒதுங்கிக் கொள்வது சிலம்பு. ஒதுங்கிய சான்றாம் விழாக் கொண்டு, மங்கல விழாக்கண்டு, ஒலியும் தலையும் காட்டா வகையில் பொதியுள் ( பையுள்) அடங்கிக் கிடந்தும், அடங்கா வன் கொடுஞ்செயல்கள் எத்தனை எத்தனை செய்கின்றது? சிலம்பு திருடியவன் என்று திருட்டறியா ஒருவன் கொல்லப்பட்டானே! அவனை இழந்தாள் அவல அரற்றால், அரசனும் அரசியும் அவலப்பட்டனரே! அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மக்காள் என மாதரி எரிபாய்ந்து இறந்தனளே! மதுரைக்குத் தாயாய்த் தாங்கி வந்த காவுந்தி ஐயை உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தனரே! அவலச் செய்தி, மாடலன் வழியே அறிந்த கோவலன் தாயும், கண்ணகி தாயும் பெரும் பிறிது உற்றனரே! கோவலன் தந்தையும், கண்ணகி தந்தையும் துறவு பூண்டனரே! ‘ஆடல் பாடல் அழகு’ என்னும் மூன்றன் கொள்கலமாகத் திகழ்ந்த மாதவியார், தாம் அறவணவடிகள் அடியடைந்து துறவு கொள்ளும் அளவில் ஒழியாமல், “ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?” என்னும் அழகுப் பிழம்பு மணிமேகலையாரைக், “கோதைத்தாமம் குழலொடு களைந்து போதித் தானம்” புகுவித்ததே! இன்றும் என்ன! ஆயிரம் பொற் கொல்லர் கண்ணகியார் அமைதியுற வேண்டி, ஆடு மாடு கோழி என உயிர்ப்பலி ஊட்டினரே! (ஆயிரம் பொற்கொல்லரை உயிர்ப்பலி ஊட்டினர் என்பது உரையாளர் செய்த பிழை; ஆயிரம் பொற்கொல்லர் உயிர்ப்பலி ஊட்டினர் என்பதே அடிகள் வாக்கு! இரண்டன் உருபு (ஐ) விரிக்க என்ற பிழையால், தீராக் கறையாக இன்றும் நிலைபெறுகின்றது) இவ்வன் கண்மைகளையெல்லாம் கண்ணராவிகளையெல்லாம் முகத்தில் முத்திரையிட்டுக் காட்டுவதே சிலப்பதிகாரப் பெயரீடு! ஏன், இவ்விளக்கம்? நூலாசிரியன் நுண்ணோக்கு அறிந்தார் - அறிந்து உரை காண வல்லார் - அருமை சுட்டுதற்கேயாம்! எவ்வளவு பேரும் பெருமையும் மிக்காரையும் மயக்கவல்லது நூல் நுட்பம் என்பதை நோக்கிச், சிலம்பு முதலிய வற்றைக் கற்றல் கடனெனக் கூறுதற்கே இப்பெயரீட்டு விளக்கமாம் என்க. தமிழ்வள உரைப்பரப்பில் மூவர்க்குத் தனிச்சிறப்பாம் இடம் உண்டு. அம்மூவர் அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தியார், நச்சினார்க்கினியர் என்பார். முக்கடல் அன்ன முத்தமிழ் விளக்கப் பேருரைஞர் இம்மூவர். இவர்தம் உரைவிளக்கம் நமக்கு வாயாக்கால் நம் முந்தையர் முழுவளம் அறிதற்குத் தானும் கருவி இல்லாமல் சுருக்க முற்றிருக்கும் என்பது வெள்ளிடை மலையாம். இச் சிலப்பதிகாரத்திற்கு முதற்கண் நமக்கு வாய்த்தது அரும்பொருள் உரையாம். அவ்வுரையை முழுதுற ஏற்று நடையிடுவது அடியார்க்கு நல்லார் உரை. அவ்வடியார்க்கு நல்லாரின் பாரித்த உரைதானும் நமக்கு முழுவதாகக் கிடைத்திலது. கிடைத்த அளவானே நலம் கொள்ளும் நலப் பாட்டின் அளவு - சிறப்பு என்பதை இந்நூல் இப்பதிப்பில் முகவுரைக் கண், கண்டு கொள்க. அடியார்க்கு நல்லார் உரைவளம் நலம் பெறுதற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர் பொப்பண்ண காங்கேயர் என்பார். இதனை உரைச் சிறப்புப் பாயிரம் சுட்டுகின்றது. “காற்றைப் பிடித்து” என்னும் பாட்டு அது. இக் காங்கேயன், ஈழத்துக் காங்கேயன் துறையினர் என்பதை விளக்கும் நூல், ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் அரிய ஆய்வு நூலாகும். “ தமிழருடைய பழைய கலைநாகரிகத்தை இறவாமல் பாதுகாத்த பெருமை இளங்கோவடிகட்குரியது” “ நுட்பமாகிய இசை நாடகப் பகுதிகளை விளக்கு வதற்கு முயன்ற வகைமையால் அரும்பத உரையா சிரியர்க்கே அனைவரும் கடப்பாடு உடையர் ஆவர்” “ இதன் கண்ணுள்ள இசை நாடகப் பகுதிகள் யாவும் நன்கு விளக்கப் பட்டன என்றல் சாலாது. அவற்றை அறிதற்குக் கருவியாகிய நூல்கள் இறந்தொழிந்தமையின் உரையாசிரியர்களே பலவற்றை விளக்காது சென்றனர்“ - என்பன முகவுரைக் கண் நாவலர் வழங்கும் அரிய குறிப்பு களுள் சில. “இந்நூலின் மூலமும் உரைகளும் ஐயரவர்களால் பதிப்புத்தோறும் திருத்தம் பெற்றுளவேனும், அவை பின்னும் திருந்த வேண்டிய நிலையில் இருந்தன” என்று சுட்டுதல், நாவலர் தம் உரையால் நலம் பெற்ற சில திருத்தங்களைச் சுட்டுவதாம். இப்புத்துரைப் பதிப்பில் தானும் திருந்த வேண்டும் இடங்களும் உண்டு என்பதற்கு, ஒரு சான்று காட்டுவோம். முன்னைப் பதிப்பொன்று மீண்டும் பதிப்பிக்கப்படுங்கால் அதுகாறும் வந்துள்ள அந்நூல் பற்றிய ஆய்வாளர் கருத்துக்களில் தக்கவை உண்டாயின் அவற்றைப் பொன்னேபோல் போற்றுதல் கடன் என்பதைச் சுட்டுதல் சாலும். வாழ்த்துக் காதையில் வள்ளைப் பாட்டு மூன்றுள. அவற்றுள் இரண்டாம் பாடல் பாண்டியன் மாலையாம் வேப்பந்தாரும், மூன்றாம் பாடல் சேரன் மாலையாம் பனந்தோடும் சுட்டப்படுகின்றன. முதற்பாடல் சோழனைப் பற்றியது. அதில் முறைப்படி சோழன் மாலையாம் ஆர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆர் = ஆத்தி. “ போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்பது தொல்காப்பியம். ‘ஆர்’ இருந்தும் ஏடுபெயர்த்தவர் சீருற எண்ணாமல் எடுத்த படியால், ‘ஆர் இரக்கும்’ என வரவேண்டியது ‘ஆரிக்கும்’ என்று வந்து ‘ஒலிக்கும்’ என்னும் பொருளும் கொண்டது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும் அச்சொல் அப்பொருள் காட்டுவதாயிற்று. இதனை, ‘அகராதி நினைவுகள்’ என்னும் தம் சுவடியில், வையாபுரியார் சுட்டிக் காட்டினார். ஆயினும், உ.வே.சா. அவர்களின் பதிப்புகளிலும், புதுப்பதிப்பாம் இப்பதிப்பிலும் ஏறிற்றில்லை. எம் கைவயம் இருந்து இதுகால் திராவிடப் பல்கலைக் கழக ஆய்வுச் சுவடியாக உள்ள எ.ஆ. கிருட்டிண பிள்ளை அவர்கள் எழுத்துப்படியில் ‘ஆர் இரக்கும்’ என்றே உள்ளமை சுட்டத்தக்கதாம். ‘சுவடிக்கலை’ என்னும் எம் நூலில் இது விளக்கம் பெற்றது. அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் உரைகளைத் தக்காங்கு அவ்வவ் விடத்து ஏற்றுப் போற்றுவதுடன், விளக்கங்களும் நாவலர் வரைகிறார்.அவர்தம் உரை பொருந்தா இடம் காணின், அதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டிப் பொருந்தும் வகையும் தெளிவாக்குகிறார். வடசொற்களை முன்னை ஆசிரியர் ஆண்டிருப்பின் தமிழாக்கச் சொல்லைச் சுட்டிச் செல்லுதல் இவ்வுரைச் சிறப்பாம். முந்தையர் உரைவாய்க்காத பன்னிரு பகுதிகளுக்கும் புத்துரைகண்டு பொலிவுறுத்துகிறார் நாவலர். அவர்தம் உரைநடை ஆற்றொழுக்கென அமைந்து தூய ஆழ்ந்த நீருள் மின்னும் பொன்னெனப் பொலிகின்றது. நாவலர்தம் பேரருள் உள்ளம் ஓரிடத்து அவர் செய்யும் விளக்கக் குறிப்பால் புலப்படும். எடுத்துக் காட்டாம் எழிலினது அது. ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றமை, உரைபெறு கட்டுரையாலும், உரையாசிரியர்களாலும் சுட்டப்படுகின்றது. அதனைக் கூற வரும் நாவலர், அக் கொலையை உளங்கொளாமல் “மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச் செய்து பலியிட்டனன் போலும்” என்று விளக்கம் வரைகின்றார். உரையாசிரியர் ‘இரண்டன் உருபு விரிக்க’ என்றது பிழை என உணராமல், உயிர்ப்பலி ஊட்டினான் எனக் கொண்டும், அதனை ஒப்புதல் இல்லாமல் உருகிய எழுத்து “மாவினால் உருச் செய்து” என்பது. தம் உரைப்பதிப்பிற்கு முன்னர் எவரெவர் இந்நூற் பதிப்புச் செய்தார் என்பது காட்டலும், நூல் நிறைவில் அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை அமைத்தலும், அவ்வரிசையில் வேண்டும் இடங்களில் தக்க விளக்கம் தருதலும், பதிப்பாளர் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல் செவ்வியதாம். தலைக்கோல் என்பது தலைக்கோலி என்னும் பட்டம் என்பதை விளக்கும் நாவலர், பழைய கல்வெட்டுகள் வழியாக அறியப் பெறும் தலைக் கோலியர் சிலரைக் கல்வெட்டுச் சான்றால் மெய்ப்பிக்கிறார். காப்பியம் குறிப்பிடும் செய்தியைச் சங்கநூல் பரப்பை அன்றி பின்னூல்கள் கொண்டும் தெளிவிக்கிறார். சொல் விளக்க நுணுக்கங்களைத் தெள்ளத் தெளியவும் சுருங்கவும் அமைக்கிறார். அகவை = உட்பட்டது; “பிறர் நெஞ்சு புகுதல்” - புகுதல் = ஆளக் கருதுதல்; உரிமை = இல்லக்கிழத்தி; ஒட்டுப்புதகம் = இரட்டைக்கதவு; கயிற்கடை = கொக்குவாய் (கொக்கி). ஒவ்வொரு பகுதிச் செய்தியையும் திரட்டி முகப்பில் வைத்துள்ள திறம், அம் முப்பதையும் திரட்டி நூல் திரட்டாகக் ‘குறுஞ்சுவடி’ ஒன்று ஆக்கிப் பயன் கொள்ளச் செய்யும் நெறியதாம். நாவலர் பெருமகனார் உரைத் திறநயம் குறித்து, முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள் தனி ஒருநூல் யாத்துளார். .அதனைக் கற்றல் நலமிகச் செய்வதாம். ஆழ்ந்த புலமை, அகன்ற கல்வி, அயரா உழைப்பு, ஆராக் காதல், பிறவிப் பெருநோக்கு என்பவை ஒருங்கே கொண்ட பெருந்தக்கார் தமக்கே சிலப்பதிகாரம் முதலாம் காப்பிய உரை காண்டலும், பாட்டு தொகை தொல்காப்பியம் அன்ன நூல் விளக்கம் காணலும் வாய்வதாம்! அவ் வாய்திறம் மல்கிய நாவலர் உரை, காலத்திற்கு வேண்டும், மாரியெனப், பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசி விசுவநாதன் செட்டியார் தூண்டலாலும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைத் திரு. வ.சுப்பையா பிள்ளை பேருதவியாலும் வெளிப்பட்டுப், பல்வேறு பதிப்புகளைக் கண்டது. இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 சிலப்பதிகாரம் பதிப்பு வரலாறு சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்-1876 ஐம்பெருங் காவியங்களுள் முன்னதாகிய சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டம் 1876 இல் வெளிவந்தது. இது மூலம் மட்டுமே அமைந்த வெளியீடாகும். இதனை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரி முதன்மைத் தமிழ்ப் பேராசிரியர் தி.ஈ.சீனிவாச ராகவாசாரியார். இந்நூல் ஊ.புஷ்பரத செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பெற்றது. சிலப்பதிகாரம் இளங்கோ வடிகளாரால் செய்யப் பெற்றது என்பதை எவரும் அறிவர். ஆனால் அந்நூல் நிலைமை அஃதன்று. “சேரமான் பெருமாணாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்” என அச்சிடப் பெற்றது. ஆசிரியர் இயற்பெயர் முதலாகிய சரித்திரம் ஒன்றும் தெரியவில்லை. இவருடைய தமயன் பெயர் செங்குட்டுவன் என்பது மாத்திரம் தெரிகிறது” என முகவுரையில் பதிப்பாசிரியர் எழுதினார். “ கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பவிழ்தார்ச் சேரமான் செய்த சிலப்பதிகா ரக் கதையைச் சாரமாய் நாவே தரி” என்னும் காப்புப் பாடலைக் கொண்டு இம்முடிவுக்கு அவர் வந்திருக்க வேண்டும். சேரமான் என்றதும் பதிப்பாசிரியர் எண்ணம் சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்தது. பின்னர்த் தவறென உணர்ந்தது. இதனை “இந்தச் சேரமான் அறுபத்து மூவருள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாராய் இருக்கலாம் என்று முன் முகவுரையில் ஒருவாறு எழுதினேன். ஆயினும் நன்றாய் நோக்கு மளவில் அது தவறாய் முடிகின்றது” என்று எழுதுகின்றார். காதைப் பெயர்களுள் அரங்கேற்று காதை ‘அரங்கேற்றுக் காதை’ என்றும், இந்திரவிழவூர் எடுத்த காதை ‘இந்திரன் விழவூர் எடுத்த காதை’ என்றும் கடலாடு காதை ‘கடலாட்டுக் காதை’ என்றும் அச்சிடப் பெற்றுள்ளன. “தகுந்த பிரதிகள் கிடைக்காமையால் சிறிது பிழை இருக்கக்கூடும்” என்கிறார். பாடவேறுபாடுகள் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியால் கானல்வரியில் ஒன்றும், கனாத்திறத்தில் ஒன்றும் ஆக இரண்டு பாடவேறுகளே காட்டப் பெற்றுள்ளன. ஆதலால் ஒத்துப் பார்ப்பதற்கு ஒரு பிரதியேனும் கிடைத்திருக்கிறது என்பது புலப்படுகின்றது. ஆய்வுக்குக் கிடைத்த சுவடிக் குறிப்பு ஒன்றும் இல்லை. சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - உரையுடன் 1880 இதனை வெளிப்படுத்தியவர் பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர் தி.க.சுப்பராய செட்டியார். இவர் கானல்வரிக்கு எழுதிய உரையுடன் இப்பதிப்பு வெளிவந்தது. மற்றைப் பகுதிக்கு, அடியார்க்கு நல்லாருரையை அடிப்படையாக வைத்துக் கொண்டு இவரே உரை வரைந்துள்ளார். “இந்நூலுக்கு உரை பல உளவேனும் அவற்றுள் அடியார்க்கு நல்லார் உரையே பெரும்பாலும் வழி வகுக்கின்றது. அவ்வுரை பரந்தவுரையாய்க் கடினமான நடையாய் இருந்ததுமன்றி உரையின் தொடக்கம் இஃது, இறுதி இஃது எனவுணர்தல் அரிதாதலால் யாவரும் எளிதினுணரத் தொடக்கம் இறுதிகளைப் புலப்படுத்தியும், கடின நடையில் உள்ளவற்றை எளிய நடைகளாற் செய்தும் வேண்டிய இடங்களில் விரித்தும் சுருக்கியும் கரலிகிதங்களால் வந்து பொருந்தாதனவற்றை விலக்கியும், கானல் வரிக்கு உரையின்மையால் உரை எழுதியும் அரங்கேற்றுகாதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பலவிடங்களினும் வருதலால் ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும் இவ்வாறு புகார்க் காண்டமும் மதுரைக் காண்டமும் தனித்தனியாய் அச்சிற் பதிப்பிக்கத் தொடங்கிப் புகார்க்காண்டம் உரையோடு அச்சிட்டிருக்கின்றேன்.” என்று எழுதும் முகவுரைப் பகுதியால் இனிது விளங்கும். இவருக்குக் கிடைத்த சுவடிகளில் வஞ்சிக் காண்டம் இல்லை. அதனை உரையோடு வைத்திருப்பவர்கள் தந்து உதவுமாறு வேண்டினார். அவ்வாறு உதவினால் “இந்நூல் நிலை பெறுமளவும் அவர் பெயரும் நிலைபெறும்படி அச்சிற் பதிப்பிப்பேன்” என்றார், அவருக்குக் கிடைத்த பிரதிகளுடன் திருமயிலை அண்ணாசாமி உபாத்தியாயர் ஒரு பிரதி தந்த உதவியைக் குறிப்பிடுகிறார். நூல் வெளியிடுதற்குள்ள அருமையையும், அதற்கு அறிவாளர் செய்யவேண்டிய உதவியையும் உருக்கமாகக் குறிப்பிடுகிறார். “பழங்காலத்தில் அச்சில் பதிப்பிக்கும் வழக்கம் இன்மையால் தமிழிலுள்ள பெருநூல்களை உரைகளோடு பல இறந்தன; எஞ்சியிருக்கின்ற சில நூல்கள் சிலரிடத்து அருகி வழங்குதலால் அவற்றுளொன்றை அவரிடத்து அலைந்து; திரிந்து பெறலரிது. பெறினும் எழுதுவோர் கிடைப்பது அரிது; கிடைப்பினும் கூலி பெரிதாகலிற் கொடுத்து எழுதுவித்தலரிது; எழுதுவித்துக் கற்கப்புகின்கரலிகிதங்களால் பொதிந்த வழுக்களை நீக்கிப் பொருள் கொள்ளல் அரிது என்பது தெரிந்த தமிழ் நூலில் விருப்பமுடையோர் பலரும் பொருளுதவி செய்வராயின் மதுரைக் காண்டமும் உரையோடு விரைவில் அச்சிட்டு முடியும். இதுபோல இன்னும் சில நூல்கள் அச்சிடக் கருதியிருக்கின்றேன்.” பதினாறு வகை அவதானங்களில் தேர்ந்தவர் சுப்பராய செட்டியார். ஆதலால் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் எனப்பெற்றார். இவர் சென்னை அரசினர் நார்மல் பள்ளியின் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இவரே பதினோராந்திருமுறை நூல்களைச் சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து முதற்கண் (1869) அச்சிட்டவர். மாயூரப் புராணம், நாகைக் காரோணப்புராணம், காஞ்சிப் புராணம், புலியூர் வெண்பா, காங்கேயன் உரிச்சொல் நிகண்டு, திருப்போரூர் சந்நிதிமுறை ஆகிய நூல்களையும் அச்சிட்டார். இவர் குறித்துவாறு, மதுரைக் காண்டம்; வெளிப்படவில்லை. இப்புகார்க்காண்டம் சென்னை மெமோரியல் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றது. பதிப்பிக்கப் பெற்ற காலம் “விக்கிரம சித்திரை மீ.” (கி.பி.1880) சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லாருரை - அரும்பதவுரை ஆகியவற்றுடன் 1892 சிலப்பதிகார முதற்பதிப்பு வெளிப்பட்டுப் பதினாறு ஆண்டுகளின் பின்னே வெளிவந்த பதிப்பு இது. இதனைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர். ஒன்றிரண்டு சுவடிகளையே கொண்டு ஆராய்ந்து மற்றவர்கள் பதிப்பித்தனர். இவர்தம் முதற்பதிப்புக்குப் பதினான்கு உரைச் சுவடிகளும், எட்டு மூலச்சுவடிகளும், இரண்டாம் பதிப்புக்கு மூன்று கையெழுத்துப் படிகளும் கிடைத்தன. இதற்காகப் பட்டபாடுகள் இவ்வளவு என்று கூறமுடியாது. சிலப்பதிகார அரும்பத உரைச் சுவடி ஒன்றே ஒன்று கிடைத்தது. அதுவும் சிதைவு உடையது. வேறொரு பிரதியைக் கண்டு ஒப்பிட்டு ஆராயலாம் என்று போற்றி வைத்தற்கும் தாங்காத அவ்வளவு சிதைவு உடையது.அதனை வழங்கியவர் தேரழுந்தூர் சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியார் என்பவர். அதனைக் குறித்துப் பதிப்பாசிரியர் எழுதுகின்றார்: “அது மிகவும் பழுதுபட்டு ஏடுகள் குறைந்தும் உள்ள ஏடுகள் தேய்ந்தும் முன்னுள்ளவைகள் பின்னும் பின்னுள்ளவைகள் முன்னுமாக மாறி எழுதப்பட்டும் அதிகமாகப் பிழைகள் விரவியும் இருந்தது. அதனோடு ஒப்புநோக்கிப் பொருளை ஒழுங்கு படுத்துவதற்கு இன்னும் கையெழுத்துப் பிரதிகள் கிடைத்தால் அனுகூலமாக இருக்கும் என்று பலவிடங்களிலே தேடிப் பார்த்தும் வேறுபிரதி அகப்படவில்லை. அந்த ஒரு பிரதியை மட்டும் சோதித்துப் பதிப்பித்தற்கு எனக்கு சிறிதும் மனமில்லை யாயினும் அவ்வொரு பிரதியும் சிலநாளில் இறந்துவிடின் அதனோடு இவ்வுரை இறந்துவிடும் ஆகையால் இதனைச் சோதித்துப் பதிப்பிக்கவேண்டும் என்று சில அன்பர்கள் கூறியமையால் துணிந்து பரிசோதித்து வெளிப்படுத்தலானேன்.” சிலப்பதிகாரம் ஏழாவது பகுதியாகிய கானல் வரிக்கும், இருபதாவது வழக்குரைகாதை முதலாகிய பிற்பகுதிக்கும் அடியார்க்கு நல்லார் உரை கிடைத்திலது. முழுவதும் பெற வேண்டுமென்று பெரிதும் முயன்றார். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், செங்கோல் மடம் முதலிய ஆதீன மடங்களிலும், சென்னையிலும் தஞ்சையிலுள்ள கையெழுத்துச் சுவடிநூல் நிலையங்களிலும், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், வெள்ளூர், திருச்செந்தூர், ஆறுமுக மங்கலம், ஊர்க்காடு, ஊற்றுமலை, கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், பூழியன்குடி, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், களக்காடு, மேலகரம், செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, கும்பகோணம், கொட்டையூர், சீகாழி, சிதம்பரம், சேலம், பாகற்பட்டி, தஞ்சை, திரிசிரபுரம், திருப்பாதிரிப்புலியூர், துழாவூர், மதுரை, மிதிலைப்பட்டி, செவ்வூர், சென்னை, திருமயிலை முதலிய பலவூர் களிலுமுள்ள பரம்பரைத் தமிழ்ப்புலவர் வீடுகளிலும் சென்று தேடினார். தாம் செல்லக் கூடாத இடங்களிலும் இங்கிலாந்து பாரிசு நகரம் இவற்றிலுள்ள கையெழுத்து நூல் நிலையங்களிலும் ஆங்காங்குள்ள அன்பர்களைக் கொண்டு தேடச் செய்தார். அவ்வுரை முற்றும் கிடையாமையால் கிடைத்த அளவில் பதிப்பித்தார். அரிதின் முயன்று அகப்படுத்திய சுவடிகளுள் பல இனி வழுப்பட வேண்டும் என்பதற்கு இடமில்லாமல் பிழை பொதிந்து, பல்லாண்டுகளாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப் போரும் இல்லை என்பதையும், நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே நோன்பாகக் கொண்ட அறவோர் களாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. “இவற்றை ஆராய்ந்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ளம் உருகும்” என்று உரைக்கின்றார் ஐயர். சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பதிப்பு 1920 ஆண்டு வெளியாயிற்று. முதற்பதிப்பில் நூலின் இறுதியில் தனியே அச்சிடப் பெற்றிருந்த அரும்பதவுரை அவ்வப்பக்கத்திலேயே அச்சிடப் பெற்றது. ‘என’ என்று முடிந்த அகவற்பாவின் ஈறுகள் ‘என்’ என, மாற்றப் பெற்றன. மேற்கோள் பகுதியும் அவ்வப்பக்கத்திலேயே அச்சிடப் பெற்றது. முகவுரையை அடுத்து இருந்த தொகையகராதி முதலியன ‘அரும்பத முதலியவற்றின் அகராதி’ என நூலின் இறுதியில் இணைக்கப்பெற்றது. இவ்வாறே பல செப்பங்களை இரண்டாம் பதிப்புப் பெற்றது. பிற்பதிப்புகளிலும் இவ்வாறே சிலச்சில திருத்தங்கள் பெற்றன. ஐந்தாம் பதிப்பு 1950-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்பொழுது ஐயர் தம் நூற்பதிப்பை மேற்கொண்டிருந்தவர்அவர் திருமகனார் கலியாண சுந்தரையர். அவர்க்குச் சென்னை அரசினர் கையெழுத்துச் சுவடி நூல் நிலையத்தில் அரும்பத உரைப் பிரதி ஒன்று இருப்பது அறியவந்தது. ஆங்குச் சென்று அதனைப் படியெடுத்துப் பதிப்பிட்ட அரும்பதவுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அதில் கண்ட வேறுபாடுகளை அப்பதிப்பிலே பின்னிணைப்பாக இணைத்தார். 1891-ஆம் ஆண்டு சூன் மீ சிலப்பதிகார முதற்பதிப்பு அச்சிடத் தொடங்கப்பெற்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளைய நாடார் வெள்ளிவிழா (ஜூபிலி) அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றது. திருவாவடுதுறை, குன்றக்குடி, திருப்பனந்தாள் மடங்களின் தலைவர்களும், கொழும்பு பொ.குமாரசாமி முதலியாரும், கும்பகோணம் சாது சேசையர் முதலிய சிலரும் பொருளுதவி புரிந்தனர். சிலப்பதிகாரம் வெளியிடப் பெற்றது. பலர் உதவி இருந்ததெனினும் கடனும் இருந்தது. அந்நிலையில் இராமநாதபுரம் அரசர் பாற்கர சேதுபதி நவராத்திரி விழாவுக்கு ஐயரை வரச் செய்து இரண்டு பட்டுத் துப்பட்டிகளைப் பரிசாக வழங்கினார். போக்கு வரவுக்கென ரூ.100 வழங்கினார். துப்பட்டிகளைக் கொண்டு சென்ற ஐயருக்குக் கடன் பற்றிய கவலை எழுந்தது. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரைக் கண்டு சேதுபதி செய்த சிறப்பினை உரைத்தார்! அவர் வியந்து பாராட்டினார். துப்பட்டியின் சிறப்பினையும் உரைத்தார். ‘இவை என்ன விலை பெறும்?’ என வினாவினார் ஐயர். இரண்டும் முந்நூறு ரூபா பெறும் என்றார் தேசிகர்; ‘சிலப்பதிகாரம் அச்சிட்ட கடன் இருக்கிறது. அதனைத் தீர்க்க வழியில்லை; இவற்றை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். தமிழ்த்தாயின் திருப்பணியால் வந்த பெருமை இது. இதனை மீண்டும் அப்பணிக்குப் பயன்படுத்துவதே முறை’ என்றார் ஐயரின் எண்ணத்தை அறிந்துகொண்ட தேசிகர் ரூ.300 தந்து துப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்! சிலப்பதிகாரப் பதிப்பால் நேர்ந்திருந்த கடன் நீங்கிப் பிற நூல்களின் பதிப்பிலே ஊன்றினார். தாம் நூலாடையாகிய மேலாடை போர்த்தி மகிழ்வதினும், தமிழன்னைக்குத் தாம் நூலாடையாகிய மேலாடை போர்த்தி மகிழ்வதிலேயே ஐயர் உள்ளம் நிலைத்திருந்தமை இதனால் புலப்படும். சிலப்பதிகாரப் பதிப்புக்குக் கிடைத்த சுவடிகளை உதவியவர்கள் பெயர்களும் சுவடி எண்ணிக்கையும் வருமாறு: திருவாவடுதுறை ஆதீனம் சுவடி 1 திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சுவடி 2 திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் சுவடி 1 திருநெல்வேலி சாலிவாடீசுவர ஓதுவார் சுவடி 2 சேலம் இராமசாமி முதலியார் சுவடி 1 சிதம்பரம் சாமி ஐயங்கார் சுவடி 1 சென்னை தொ.வேலாயுத முதலியார் சுவடி 1 சென்னை சூ.அப்பன் செட்டியார் சுவடி 1 சென்னை குருசாமி அய்யர் சுவடி 2 திருயிலை அண்ணாசாமி உபாத்தியாயர் சுவடி 2 யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை சுவடி 1 யாழ்ப்பாணம் தி.குமாரசாமி செட்டியார் சுவடி 3 யாழ்ப்பாணம் வி.கனகசபைப் பிள்ளை சுவடி 2 ஆறுமுகமங்கலம் குமாரசாமி பிள்ளை சுவடி 1 திரிசிரபுரம் அண்ணாசாமி பிள்ளை சுவடி 1 மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் சுவடி 1 கொழும்புத்துறை குமாரசாமி செட்டியார் சுவடி 1 ஆழ்வார் திருநகரி பெரிய திருவடிக் கவிராயர் சுவடி 1 ஆகச் சுவடிகள் சுவடிகள் 25 சிலப்பதிகாரம் முழுமை பெற்ற உரைப்பதிப்பாகப் பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாக வந்தது. அவ்வுரை பற்றி உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள், “இஞ்ஞான்று நடுக்காவேரி பண்டித ந.மு.வே.நாட்டார் அவர்கள் நன்கு ஆராய்ந்து நூல் முழுமைக்கும் எழுதிய நல்லுரை தமிழ்மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கிறது. இப்பெருமகனின் உரை நலத்தைப் படித்து இன்புற வேண்டும் என்றும் அது சர்க்கரைக் கட்டியால் இயன்ற ஓவியம் எப்பாலும் தித்திப்பதைப் போல அவர்தம் உரையில் எப்பகுதியும் இன்பம் தருகிறது. அவர்களது இவ்வரிய உதவிக்குத் தமிழ் மக்கள் என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையர்” என்று பாராட்டு அருமையது நாவலர் சிலப்பதிகார உரை. இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் நுழையுமுன் சிலப்பதிகாரம் ஆசிரியர் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் எழுதியதென வழங்குகிறது. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனது தம்பியாரென்று சிலப்பதிகாரமும் கூறுகிறது. சிறப்பு இந்த நூலின் தலைவனான கோவலன் ஒரு வணிகன். இந்த நூலின் தலைவி கண்ணகி ஒரு வணிகப் பெண். இப்போது இருக்கின்ற தமிழ்க் காப்பியங்களில் மிகப் பழமை யானதான இச் சிலப்பதிகாரம் அரசர் முதலியோரைக் காப்பியத் தலைவராகக் கொள்ளாமல் பொது மக்களையே தலைவராகக் கொள்ளும் குடி மக்கட் காப்பயிமாக விளங்குவது இதன் சிறப்பாம். இது வணிக மக்கள் சிறப்படைந்த காலத்துக் காப்பியம் ஆகலாம். சிலப்பதிகாரம் என்ற பெயர் பெண்ணொருத்தி, அனைத்தையும் பொறுக்கும் நோன்புத் தீயில் குறைகளையெல்லாம் எரித்துப் பொன்னே போலத் தூயவளாய்த் தெய்வமாகின்ற கதையே சிலப்பதிகாரக் கதை. அவளது திருமணத்தின் போது காலில் சிலம்பணிகிறாள் கண்ணகி.கோவலன் பிரிந்த பொழுது சிலம்பு பேழைக்குள் புகுகிறது. அவன் மாதவியைப் பிரிந்து வந்ததும் விற்பதற்கு அதைக் கையில் எடுக்கின்றான். அவளன்றிப் பிறர் அதனால் வாழார் போலும். அதனை எடுத்து விற்கச் சென்ற கோவலன் மதுரையில் கொலையுண்கிறான். பாண்டிமாதேவியின் சிலம்பென அதனைக் கைப்பற்றிய பாண்டியன் உண்மை உணர்ந்து உயிர் துறக்கின்றான். அணிவாரின்றிச் சிலம்பு சிதைந்து கிடக்கிறது. பாண்டியன் மேலெழுந்த வெறுப்பெல்லாம்மாறி, அன்புருவாய்க் கண்ணகி செங்குட்டுவனெதிலே கடவுளாய்க் காட்சியளிக்கும் பொழுது பழையபடி காலில் பொற்சிலம்பு பொலிந்து விளங்குகிறது. இவ்வாறு சிலம்பொடு சேர்ந்து இந்தக் கதை ஓங்கியும் தாழ்ந்தும் வீறு பெற்றும் வருவதால், சிலப்பதிகாரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது பொருத்தமேயாம். சிலப்பதிகாரம் அறிந்தார் பதினேழாம் நூற்றாண்டில்தான் கோவலன் கதை எளிய நடையில் அமைந்த அகவலில் வேறொரு நூலாக வழங்கி வந்திருக்கிறது. அதற்கு முன் வழங்கியது சிலப்பதிகாரம் ஒன்றே ஆம். பரிமேலழகர், மயிலைநாதர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், இளம்பூரணர் முதலியோரால் சிலப்பதிகாரம் காட்டப் பெற்றுள்ளது. இந்த உரைகளுக்கு முந்திய களவியல் உரையிலும் சிலப்பதிகார எடுத்துக் காட்டுகள் பல உள்ளன இவ்வுரை ஏழாம் நூற்றாண்டயதென்று கூறப்பெறும் பிற உரையாசிரியர்கள் இதனைச் சுட்டுதலின் இவ்வுரை 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் பிந்தியதெனக் கூறுவதற்கு இல்லை. வரலாறு சிலப்பதிகாரத்தில் காணும் குறிப்புகளைக் கொண்டு இந்திய நாட்டின் வரலாற்றினை ஆராய்ந்து கி.பி. 2 - ஆம் நூற்றாண்டே இக்குறிப்புகள் இந்திய நாட்டில் விளங்கிய கால மாகும் என்று இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் கூறியுள்ளார். - “தமிழ் இலக்கிய வரலாறு” தெ.பொ.மீ. காவ்யா வெளியீடு. பொருளடக்கம் பதிப்புரை iii செவிநுகர் vi அணிந்துரை xi சிலப்பதிகாரம் பதிப்பு வரலாறு xix நுழையுமுன் xxvi முகவுரை 1 இளங்கோவடிகள் வரலாறு 11 அரும்பதவுரையாசிரியர் வரலாறு 15 அடியார்க்கு நல்லார் வரலாறு 17 பதிகம் 21 உரை பெறு கட்டுரை 40 புகார்க் காண்டம் 1. மங்கல வாழ்த்துப் பாடல் 43 2. மனையறம் படுத்த காதை 54 3 அரங்கேற்று காதை 69 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை 121 5. இந்திர விழவூரெடுத்த காதை 134 6 கடலாடு காதை 168 7 கானல் வரி 196 8. வேனிற் காதை 236 9 கனாத்திற முரைத்த காதை 256 10 நாடு காண் காதை 269 கட்டுரை 303 மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை 305 12. வேட்டுவ வரி 331 13 புறஞ்சேரியிறுத்த காதை 355 14. ஊர்காண் காதை 381 15. அடைக்கலக் காதை 414 16 கொலைக்களக் காதை 441 17 ஆய்ச்சியர் குரவை 467 18. துன்ப மாலை 490 19 ஊர்சூழ் வரி 496 20 வழக்குரை காதை 509 21 வஞ்சின மாலை 522 22 அழற்படு காதை 533 23 கட்டுரை காதை 549 வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை 577 25. காட்சிக் கோதை 595 26 கால்கோட் காதை 621 27. நீர்ப்படைக் காதை 650 28. நடுகற் காதை 681 29 வாழ்த்துக் காதை 711 30 வரந்தரு காதை 735 நூற் கட்டுரை 759 அருஞ்சொல் முதலியவற்றின் அகரவரிசை 761 சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் முகவுரை " உழவ ரோதை மதகோதை யுடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தவெல்லாம் வாய்காவா மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி." சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஜம்பெருங்காப்பியங்களி லொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபி லுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமை யும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடி களால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற் சுவை பொருட்சுவை சான்றது; ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ எனப்படும் தமிழகத்தின் பகுதிகளாகிய சோணாடு பாண்டிநாடு சேரநாடு என்பவற்றின் இயல்புகளையும், முறையே அவற் றின் தலைமைப் பதிகளாகிய புகார் மதுரை வஞ்சி என்ப வற்றின் பெருமைகளையும், அவற்றிடையிருந்து செங்கோலோச்சிய சோழ பாண்டிய சேர மன்னர்களின் அறன் மறன் ஆற்றல் ஆணை முறைமை என்பவற்றையும், அவர்களாற் புரக்கப்பெற்ற குடிகளின் ஒழுக்கம் ஊக்கம் ஒப்புரவாண்மை முதலியவற்றையும் நன்கு புலப் படுப்பது; மற்றும், அக்காலத்திய உழவு வாணிகங்களின் மேம்பாடு, தொழிற் பெருக்கம், மன்பதைகளின் கூட்டுறவியல், அரசியல், கல்விநிலை, சமய நிலை என்பவற்றை அறிதற்குக் கருவியாவது; திணை வளங்களை நனி விளக்குவது; அணியும் விரையும் விழவும் கூத்தும் பாட்டும் முதலிய இன்ப நுகர்ச்சித் திறங்களை இனிதியம்புவது. அரசியலின் வழுவிய வேந்தரை அறக்கடவுள் கூற்றாய் நின்று கொல்லு மென்பதும், புகழமைந்த பத்தினியை வானோரும் ஏத்துவரென்பதும், இருவினையும் செய்தோனை நாடிவந்து தம் பயனை நுகர்விக்குமென்பதும் ஆகிய மூன்று உண்மைகளும் சிலம்பு காரணமாகத் தோன்றினமையின் அவற்றை முதன்மையான உள்ளுறையாகக் கொண்டு இக்காப்பியம் ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரால் இயற்றி நிறுவப்பெற்றது. காப்பியம் என்பது தமிழிலே செய்யுள் எனவும், தொடர் நிலைச் செய்யுள் எனவும் கூறப்பெறும், சிலப்பதிகாரம் முத்தமிழும் விரவப்பெற்றதும் பொருள் தொடர்ந்து செல்வதுமாகலின் இய லிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள் எனவும், ‘உரைச் செய்யுளும் இசைப்பாட்டும் இடையிடை விரவப்பெற்றதாகலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும், பல கூத்துக் களும் அவற்றிற்குரிய பாட்டுக்களும் இடையிடை அமைந்திருத்த லின் நாடகக் காப்பியம்’ எனவும் கூறப்பெறும். சிலப்பதிகாரத்தில் வந்துள்ள உரைச்செய்யுள்களைத் தொல்காப்பியர் கூறிய உரைவகை நான்கனுள் (தொல், செய், 173) பாவின்றெழுந்த கிளவி என்பதில் அடக்குவர் இளம்பூரணர்; பாட்டிடைவைத்த குறிப்பு என்பதில் அடக்குவர் நச்சினார்க்கினியர். பின்னவர், எண்வகை வனப்பினுள் தொன்மை என்பதற்குப் பெருந்தேவனார் செய்த பாரதம், தகடூர் யாத்திரை என்பவற்றோடு சிலப்பதிகாரத்தையும் (தொல், செய், 237.) எடுத்துக் காட்டியிருப்பது கருதற்பாலது. இயற்றமிழ் போலவே இசை நாடகங்களும் தமிழின்கண் பண்டு பெருக்கமடைந்திருந்தன; சிறப்பியல்புகள் உடையனவாயு மிருந்தன. அவ்வியல்பு பற்றியே முத்தமிழ் என்ற வழக்கு உளதா யிற்று. அடியார்க்குநல்லார் உரைப்பாயிரத்தில் "இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும், தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன; நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாவுள்ள தொன் னூல்களுமிறந்தன; பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்" எனவும், "தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி...செய்த இசை நுணுக்கமும். பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும். ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயமும், கடைச்சங்க மிரீஇய பாண்டியருட் கவியரங் கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் என இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும் ஒருபுடை யொப்புமை கொண்டு முடித் தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க" எனவும் உரைத்தவை அறியற்பாலன. அடியார்க்கு நல்லார் தாம் உரை யெழுதுதற்குக் கருவியாகக் கொண்ட நூல்களுள் இசை நுணுக்கத்தை அகத்தியர் மாணாக்கராகிய சிகண்டியார் இயற்றியதென்றும், மதிவாணர் நாடகத் தமிழ்நூலைக் கடைச்சங்கத்துட் கவியரங்கேறிய பாண்டியனான மதிவாணனார் இயற்றியதென்றும் கூறிவைத்து, அந்நூல்கள் இந்நாடகக்காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றென வுரைப்பது தகுதியெனத் தோன்றவில்லை. அவை கடைச்சங்க காலத்தின் பின்பு தோன்றிய நூல்களாயின் பொருந்தும். அந்நூல்கள் தாமும் பின் னர் என்னாயினவோ அறியோம். பழைய நாளில் இசைத்தமிழும் நாடகத்தமிழும் மிக உயரிய நிலையில் இருந்தமைக்குச் சிலப்பதி காரமே இப்பொழுது சான்றாகவுள்ளது. அக்காலத்து வழங்கிய இசைநாடகப் பகுதிகளை யெல்லாம் துறைபோகக்கற்று, அவற்றைத் தம் காப்பியத்தில் ஏற்றபெற்றி யமைத்துத் தமிழருடைய பழைய கலை நாகரிகத்தை இறவாமற் பாதுகாத்த பெருமை இளங்கோவடிகட்குரியது. இச்சிலப்பதிகாரம், இதனை இளங்கோவடிகள் இயற்றியதற் குரிய காரணத்தைப் புலப்படுத்திக் கதையைத் தொகுத்துரைப்ப தாகிய பதிகச்செய்யுளை முதலிற்கொண்டு, மங்கல வாழ்த்துப்பாடல் முதலிய பத்துறுப்புக்களையுடைய புகார்க் காண்டமும், காடுகாண் காதை முதலிய பதின்மூன்று உறுப்புக்களையுடைய மதுரைக் காண்டமும், குன்றக்குரவை முதலிய ஏழுறுப்புக்களையுடைய வஞ்சிக் காண்டமுமாகப் பகுக்கப்பெற்றுள்ளது. இயற்றமிழ்ப் பகுதியவாகிய ஆசிரியப்பா, கலிப்பா என்பவற்றாலும், இசைத் தமிழின் பாற்படும் ஆற்று வரி, ஊசல் வரி, கந்துக வரி முதலிய வற்றாலும், நாடகத்திற்குரிய கட்டுரை உரைப்பாட்டுக்களாலும் இவ்வுறுப்புக் கள் அமைந்துள்ளன. கந்துக வரி முதலியன நாடகத்திற்கு முரிமை யுள்ளனவாம். இயற்றமிழ்ப்பாவாகிய வெண்பா சில கலிப்பாக்கட்கு உறுப்பாகவே வந்துள்ளன. காதை அல்லது பாட்டுக்களின் இறுதியில் தனித்து நிற்கும் வெண்பாக்களும் சிலவுள்ளன. புகார்க் காண்டத்திலே அரங்கேற்று காதையில் ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் என்போர் இயல்புகளும், அரங்கின் அமைதி, அரங்கிற் புகுந்து ஆடுமியல்பு என்பனவும் கூறும் வாயிலாக இசை நாடகங்களின் இலக்கணங்கள் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள்ளும் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்துத் தமிழுக்குரிய ஏழ் பெரும்பாலைப்பண்கள் தோன்றும் முறைமையும், அவற்றைத் தோற்றுவிக்கும் ஏழ்நரம்பு (ஸ்வரங்)களின் தமிழ்ப் பெயர்களும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. மற்றும் கானல்வரியில் "சித்திரப் படத்துட்புக்கு......செவியினோர்த்து" என்னும் பகுதியிலும், "ஆங்ஙனம் பாடிய," "நுளையர் விளரி" என்னும் பாக்களிலும். வேனிற்காதையில் "அதிரா மரபின் யாழ்கை வாங்கி...... முறையுளிக் கழிப்பி" (23-42) என்னும் பகுதியிலும், மதுரைக் காண்டத்திலே புறஞ்சேரியிறுத்த காதையில் "செந்திறம் புரிந்த செங்கோட்டி யாழில்......பாடற் பாணியளைஇ" (106-13) என்னும் பகுதியிலும், ஆய்ச்சியர் குரவையில் "குடமுதலிட முறையா......பின்றையைப் பாட்டெடுப்பாள்" என்னும் பகுதியிலும், வஞ்சிக் காண்டத் திலே நடுகற்காதையில் "வணர்கோட்டுச் சீறியாழ்.........வருவிருந்தயர்ந்து" (31-6) என்னும் பகுதியிலும் யாழ்வாசிக்கு முறைமையும் பண்கள் தோன்றும் முறைமையும் முதலியன கூறப்பெற்றுள்ளன. பழந் தமிழிசை மரபை அறிதற்குக் கருவியாகிய இவற்றைத் தமிழ் மக்கள் ஆராயுங் கடப்பாடுடையராவர். இனி, கூத்தின் பகுதியை நோக்குழி மேலே கூறியதன்றி, கடலாடுகாதையில் (39-7) கொடுகொட்டி முதலிய பதினேராடலும், வேனிற்காதை யில் (74-108) கண்கூடுவரி முதலிய எண்வகை வரியும், அரங்கேற்று காதையிலும் (1-11) ஊர்காண் காதையிலும் (148-60) கூத்தியரமைதியும் கூறப்பட்டுள்ளன. இந்திர விழவூரெடுத்த காதை, கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகளில் முறையே மருதம், நெய்தல், பாலை, முல்லை, குறிஞ்சி என்னும் திணைகட்குரிய விழா, பாட்டு, கூத்து என்பவற்றில் ஒன்றும் பலவும் வந்துள்ளன. கானல் வரியில் உள்ள பாட்டுக்களெல்லாம் அகப்பொருட் டுறை யமைந்தவை; மிக்க இனிமை வாய்ந்தவை; குன்றக் குரவை யிலும் சில பாட்டுக்கள் இப்பெற்றியன. வேட்டுவ வரியிலும், காட்சிக் காதையிலும் வெட்சி, வஞ்சி, காஞ்சி என்னும் புறத்திணை கட்குரிய துறைகள் பல வந்துள்ளன. அவற்றிற் சில தொல்காப்பி யத்தையும், சில பன்னிருபடலத்தையும் பின்பற்றியுள்ளமை கருதற் பாலது. இந்திரவிழவூரெடுத்த காதையாலும், ஊர்காண் காதையாலும் முறையே புகார், மதுரை என்னும் நகரங்களின் அமைப்பும் வாணி கப் பெருக்கமும் செல்வச் சிறப்பும் புலனாகின்றன. பின்னதன்கண் நவமணியிலக்கணம் விரித்துரைக்கப்பெற்றுள்ளது; அப்பகுதிக்கு உரையெழுது மிடத்து அடியார்க்கு நல்லார் பழைய நூற்பாக்களை மேற்கோள் காட்டிச் செல்லுதலின் அக்காலத்தே தமிழின்கண் பல கலைகளும் பல்கியிருந்தமை பெற்றாம். வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று ஆரியமன்னர்களை வென்று கண்ணகிக்குச் சிலை கொணர்ந்த செய்தி மிக்க பெருமித முடையது. இவ்வாற்றான், இச்சிலப்பதிகாரமானது ஒன்பான் சுவையும் ஒருங்கமைந்த சிறந்த காப்பியமாதலன்றி, தமிழக வரலாற்று நூல் எனவும், தமிழ்மொழி வரலாற்று நூல் எனவும், கவின் கலை நூல் எனவும் மதிக்கத் தக்க சிறப்புடையதாகவும், எல்லா வகையானும் தமிழுக்கே உரிமையுடையதாகவும், தமிழர் ஆண்மையை விளக்கு வதாகவும் உள்ளது. இந்நூலில் வந்துள்ள இலங்கை யரசனாகிய கயவாகு என்பவனைப்பற்றிய குறிப்புக்கள் இந்நூலின் காலத்தையும் கடைச்சங்க காலத்தையும் துணிதற்குக் கருவியாக உள்ளன. இந்நூற்கு அரும்பதவுரை யென்பதொன்றும் அடியார்க்கு நல்லாருரை யென்பதொன்றுமாக இரண்டு பழைய உரைகள் உள்ளன. அவற்றுள் அரும்பத உரையே முந்திய தென்பது இந்திர விழவூரெடுத்த காதையில் "ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்" என்பதனுரையில் "இனி.........எனக் காட்டுவர். அரும்பதவுரை யாசிரியர்" என அடியார்க்கு நல்லார் எழுதியிருத்தலால் அறியப் படும். அரும்பதவுரை அருஞ்சொற்களின் பொருளைமட்டும் புலப் படுத்தி. ஒரோவழி முடிபும் மேற்கோளும் காட்டிச் செல்வது: நூல் முழுதுக்கும் அமைந்துள்ளது. அடியார்க்கு நல்லாருரை முற்கூறிய அரும்பதவுரையைப் பெரும்பாலும் தழுவிச் சிலவிடத்துப் பதவுரை யும் சிலவிடத்துப் பொழிப்புரையுமாக இயன்று, சொன்னயம் பொருணயங்களையும் அணிகளையும் இனிது புலப்படுத்தி, இலக்கணமும் மேற்கோளும் காட்டி விரிவாக அமைந்துள்ளது. இவ்வுரை யானது சிறுபான்மை அரும்பதவுரையை மறுத்தும் வேறுபாடங் கொண்டும் இயன்றுளதேனும் இசை நாடகப் பகுதிகளில் அரும்பத வுரையையே பிரமாணமாகக் கொண்டுள தென்பது தெளிவு; அரங்கேற்று காதையில் குழலாசிரியன் அமைதியும் யாழாசிரியன் அமைதியும் கூறுதற்கெழுந்த இன்றியமையாத இசையிலக்கணப் பகுதிகளில் அரும்பதவுரையில் உள்ளவற்றினும் வேறாக ஒரு சொற்றானும் எழுதப்படாமை அறியற்பாலது. அடியார்க்கு நல்லார் இவ்விடங்களில் அரும்பதவுரையைப் பட்டாங்கு பெயர்த்தெழுதி, சொன்முடி புதானும் காட்டாது விட்டிருப்பது வியப்பிற் குரியதே. இவ்வாற் றால், அரும்பதவுரை யாசிரியர் விரியாது விடுத்த விலக்குறுப்பு முதலியவற்றை அடியார்க்கு நல்லார் பிறநூன் மேற்கோள் கொண்டு விரித்துக் காட்டியிருப்பினும், நுட்பமாகிய இசை நாடகப் பகுதிகளை விளக்குதற்கு முயன்ற வகைமையால் அரும்பதவுரை யாசிரியர்க்கே அனைவரும் கடமைப் பாடுடையராவர். அடியார்க்கு நல்லார் உரை புகார்க் காண்டத்திலுள்ள கானல் வரிக்கும், மதுரைக் காண்டத்திலுள்ள வழக்குரைகாதை முதலிய நான்குறுப்புக்கட்கும், வஞ்சிக்காண்டம் முழுதிற்கும் கிடைக்க வில்லை; முப்பது உறுப்புக்களில் பதினெட்டினுக்கே கிடைத்துள. இந்நூலின் புகார்க் காண்டம் மூலம் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக விருந்த ஸ்ரீநிவாச ராகவாசாரியார் அவர்களாலும், புகார்க் காண்டம் மூலமும் உரையும் சோடசாவ தானம் சுப்பராய செட்டியாரவர்களாலும் நெடுநாட்களின் முன்பே பதிப்பிக்கப் பெற்றனவேனும் நூன் முழுதும் திருந்திய முறையில் பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் மகா மகோபாத்தியாய, டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களாலேயே பதிப்பிக்கப்பெற்றது. ஜயரவர்கள் மூன்று முறை இந்நூலை உரையுடன் அச்சியற்றி வெளியிட்டுள்ளார்கள். இந்நூலைப் பதிப்பித்தற்கு அவர்கள் மேற் கொண்ட உழைப்பின் பெருமையானது அவர்கள் எழுதிய முகவுரை களாலும், வாழ்க்கை வரலாற்றாலும் நன்கு புலப்படும். எத்தனையோ பல அரிய நூல்களை இங்ஙனம் ஆராய்ந்து வெளியிட்ட அப்பெரியார்க்குத் தமிழுலகம் எஞ்ஞான்றும் கடமைப்பாடுடைய தாகும். இங்ஙனம் ஐயரவர்கள் அச்சிட்ட பின்பும் சென்னைப் பல்கலைக் கழகத்தார் இந்நூலின் பகுதிகள் பலவற்றைப் பீ. ஏ. வகுப்பிற்குப் பாடமாகத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குறிப்புரை யுடன் வெளியிட்டுள்ளனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரும் புகார்க் காண்ட மூலத்தைப் பதிப்பித்துள்ளனர். இந்நூலின் மூலமும் உரைகளும் ஐயரவர்களால் பதிப்புத் தோறும் திருத்தம் பெற்றுளவேனும், அவை பின்னும் திருந்தவேண் டிய நிலையில் இருந்தன வென்பது இப்புத்தகத்தின் 79, 200-ஆம் பக்கங்களிலுள்ள குறிப்புக்களால் அறியத்தகும். பாகனேரியிலுள்ள தன வணிகர் குலமணியும் அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையாருமாகிய திருவாளர் வெ, பெரி, பழ. மு. காசி விசுவநாதன் செட்டியாரவர்கள் சிலப்பதிகாரத்தில் பன்னிரண்டு உறுப்புக்கட்கு அடியார்க்கு நல்லார் உரை இன்மையானும், அரும் பதவுரை கொண்டு நூற்பொருளை முற்றவுணர்தல் கற்பார் யாவர்க் கும் எளிதன்றாகலானும் நூன் முழுதுக்கும் ஒரு தன்மையாகத் தெளிந்த முறையில் ஓர் உரையெழுதுவித்து வெளியிடுதல் நல மெனக் கருதி, உரையெழுதும் அப்பணியினை எனக்கு அளித்தனர். சிறந்த நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டுப் பரப்ப வேண்டு மென்னும் பெருநோக்கங் கொண்டு சில் யாண்டின்முன் அவர்கள் கலித்தொகையை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டதனை அனை வரும் அறிவர். தமிழ் வளர்த்தலைக் கடனாகக் கொண்டுள்ள அப் பெருந்தகையின் விருப்பத்தை நிறைவேற்றுங் கருத்தாலும், சில நூல்கட்கு உரையெழுதுதலை மேற்கொள்ளின் அது தலைக்கீடாகத் தமிழ் நூல்களை நன்கு பயிலலாமென்னும் எண்ணத்தாலும் நூலின் பெருமையையும் என் சிறுமையையும் அறிந்துவைத்தும் இதற்கு உரையெழுதுதலை மேற் கொள்வேனாயினேன். " எழுத்தின் றிறனறிந்தோ வின்சொற் பொருளின் அழுத்தந் தனிலொன் றறிந்தோ-முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் றெழுதத் துணிவதே யான்" என அடியார்க்கு நல்லார் கூறியிருப்பரேல், யான் இன்னும் எத் துணை அஞ்சுதல் வேண்டும்! எனினும், "பேர்யாற்று, நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர், முறைவழிப் படூஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற், பெரியோரை வியத்தலு மிலமே, சிறியோரை யிகழ்த லதனினு மிலமே" என்னும் சான்றோர் நெறியினைப் பின்பற்றும் அறிஞர்கள் என் சிறுமை நோக்கி யிகழாரென்பது தேற்றம். இவ்வுரையின்கண், மூலத்தின் இன்ன பகுதிக்கு இது பொருள் என்று தேடி இடர்ப்படாவண்ணம் சொற்களைக் கிடந்தவாறே கொண்டுகூட்டின்றித் தனி மொழியாகவும் தொடர் மொழியாக வும் ஏற்ற பெற்றி எடுத்தமைத்துப் பொருள் கூறப் பெற்றுளது; அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் வேறுபடக் கொண்ட பாடங்களையும், பொருள்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பன கொள்ளப்பெற்றுள; ஒரோ வழி அவ்வேறுபாடுகளையும், உரையின் சிறந்த பகுதிகளையும் எடுத்துக் காட்டுதலும், பொருந்தா தனவெனத் தோன்றிய வைகளைக் காரணங் காட்டி மறுத் தலும் செய்யப்பெற்றுள; அவ்வுரைகளால் விளக்கம் பெறாதன விளக்கவும் பெற்றுள; இன்றியமையாத இலக்கணங்களும் மேற்கோள்களும் ஆண்டாண்டுக் காட்டப்பெற்றுள. இவ்வுரையின் போக்கினை ஒருவாறு தெரிவித்தல் கருதி இக் குறிப்புக்கள் ஈண்டுத் தரலாயின. இவ்வுரையிலே பதிகச் செய்யுளும் காட்சிக் காதையும் வரலாற்று முறையில் மாறுபடா வண்ணம் அடியார்க்கு நல்லா ருரைக்கு மாறாக அரும்பதவுரையின் கருத்தைத் தழுவிப் பொருள் எழுதப் பட்டிருத்தலையும், கடலாடு காதையில் பதினோராடல் கூறு மிடத்து அவ்வுரைகளால் விளக்கப்படாத இன்றியமையாத பொருள்கள் சில (பக். 142-6) விளக்கப்பட்டிருத்தலையும், அரங் கேற்று காதையில் யாழாசிரியன் அமைதிகூறுமிடத்து அப்பகுதியின் பொருளுணர்ச்சிக்கு இன்றியமையாத தமிழிசை பற்றிய விளக்கம் (பக். 74-81) எழுதப்பட் டிருத்தலையும் எடுத்துக் காட்டாகக் கொண்டு, பிறவற்றையும் அறிவுடையோர் ஆராய்ந்து காண்பாராக. ஆயின், இதன்கணுள்ள இசை நாடகப் பகுதிகள் யாவும் நன்கு விளக்கப்பட்டன வென்றல் சாலாது. அவற்றை அறிதற்குக் கருவியாகிய நூல்கள் இறந்தொழிந்தமையின் பழைய உரை யாசிரியர்களே பலவற்றை விளக்காது சென்றனர். அரங்கேற்று காதையில் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து "வன்மையிற் கிடந்த.........வயிற் சேர" (72 - 8) என்பதற்கு உரை கூறு மிடத்தே, "தார பாகமுங் குரலின் பாகமும், நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப, முன்னர்ப் பாகமும் பின்னர்ப் பாகமும், விளரி குரலாகு மென்மனார் புலவர்' என்னுஞ் சூத்திரத்தின் விதிபற்றி வட்டப் பாலையின் முடிவு தானமாய் வலிந்த நிலைமையினையுடைய தாரம் பெற்ற இரண்டலகில் ஓரலகையும், இப் பாலையின் முதல் தானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்பு பெற்ற நாலலகில் இரண்டலகையும் தார நரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளை ஆயிற்று. அந்த நரம்பில் ஒழிந்த ஓரலகையும் பண்டை விளரியிலே கூட்ட அவ்விளரி துத்த நரம் பாயிற்று. இப்படிப் பன்னிருகாற் றிரிக்கப் பன்னிருபாலையும் பிறக்கும். பன்னிரு பாலையினுரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக் காரணமாமெனக் கொள்க" என்றுரைத்தனர் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும். ஆயின் அவர்கள் பன்னிருபாலையாவன இவையெனப் பெயர் கூறிற்றிலர்; பண்கள் நூற்றுமூன்றாதலை விளக்கிற்றுமிலர். அடியார்க்கு நல்லார் வேனிற் காதையில் "குரல்வாயிளிவாய்க் கேட்ட னள்" (35) என்பதே பற்றுக்கோடாகச் செம்பாலை முதலிய ஏழ் பெரும் பாலையும் பிறக்குமாறு கூறி, 'இவ்வேழு பெரும் பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்' என்றார். மற்றும் அவர், புறஞ்சேரியிறுத்த காதையில், "பாய்கலைப் பாவை பாடற் பாணி, ஆசான் றிறத்தி னமைவரக் கேட்டு" (111-2) என்பதற்கு, 'சதிபாய்ந்து செல்லும் கலையையுடைய பாவைபோல் வாளது பாடற் பண்ணை ஆசானென்னும் பண்ணியலாகிய நால்வகைச் சாதி யினும் பொருந்துதல் வரச் செவிப்புலத்தானறிந்து' எனப் பொருள் கூறி, "ஆசான் சாதி நால்வகையாவன: ஆசானுக்கு அகச்சாதி காந்தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்த காந்தாரமெனக் கொள்க. பண் நூற்றுமூன்று அவை நால்வகைப் படும். பண், பண்ணியல், திறம், திறத்திறமென; அவற்றுள் இது திறங்கூறிற்று' என விளக்கமுரைத்தனர். இவ்வீரிடத்தும் பண் நூற்று மூன்றாதலை விளக்கிற்றிலரேனும் இவ்விடங்களிற் காட்டிய குறிப்புக்கள் திவாகரம் முதலிய நிகண்டுகளிற் போந்தவற்றோடு பெரிதும் ஒத்துள்ளன. முதற்கண் உரைத்தவையே பழைய நிகண்டுகளாலும் அறியலாகாதவை. மேலே கூறிப்போந்த பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்பன வடமொழியில் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்னும் பெயர்களால் வழங்கப்படுவனவாம். இவை யாவும் தமிழிலே பண்ணென வழங்கப்பெறு மென்பது, " நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும் பாற்படு திறனும் பண்ணெனப் படுமே" என்னும் பழைய நூற்பாவால் அறியப்படும். திவாகரம், பிங்கலம் என்னும் பழைய நிகண்டுகளும், இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இசைபற்றிய பல கருத்துக் களை அருமுயற்சியுடன் ஆராய்ந்து திரட்டி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் நூலும், உயர்திரு. விபுலானந்தவடிகள் அரிதின் ஆராய்ந்து தமிழ்ப் பொழிலில் வெளியிட்டுவரும் தமிழிசை பற்றிய கட்டுரைகளிற் சிலவும் இந்நூலிலும், இதன் பழைய உரைகளிலு முள்ள இசைப்பகுதியை ஆராய்தற்குத் துணையாய்இருந்தன. ஆயின், பண்களின் அலகுநிலை பற்றிய ஆராய்ச்சி இதன் கண் செய்யப்பட்டிலது. அது தனியாக விரித்தெழுதற் பாலதன்றி இவ்வுரையின் கண் விரித்தற் கேற்றதன்று. அதனை ஆராய்ந்தறிய விரும்புவோர் தமிழ்ப்பொழிலிலுள்ள கட்டுரைகளிற் கருத்தினைச் செலுத்துதல் நன்று. யான் இவ்வுரையினை எழுதுதற்கு உறு துணையாயிருந்து உதவி புரிந்தோர் நன்னிலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராயிருப்பவரும், திட்பமுள்ள தமிழ்ப் புலமையுடன் நுட்பவறிவுடையாருமாகிய என் இனிய நண்பர், வித்துவான் திரு. செ. சிங்காரவேற் சேதிராயரவர்களாவர், அவர் களுதவியின்றேல் இவ்வளவு விரைவில் இவ்வுரை நிறைவெய்தல் அரிது. தஞ்சை கல்யாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக விருப்பவரும், நாடோறும் தமிழ்ப் பாட்டுக்களை இசையுடன் பாடி என் உள்ளத்தைக் கனிவிப்பவருமாகிய திருவளர்செல்வன் ம. அரங்கநாதன் சிலப்பதிகார மூலம் முழுவதையும் வனப்புற எழுதியுதவினர். தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் (சென்னைக் கிளை) பொறுப்பாளரும், என் அன்பருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் அடிக்கடி தூண்டி இத்தகைய பணியில் எனக்கு மேன்மேல் ஊக்கத்தை யுண்டாக்கி வருவதுடன் இப்பதிப்பு மிகச் செவ்விய முறையில் வெளி வருமாறுஞ் செய்துள்ளனர். இங்ஙனம் உதவிபுரிந்த கடப்பாட்டாளர் அனைவரும் மற்றும் பலவகையாலும் தமிழ்ப் பணி புரிந்து நீடிய நல் வாழ்வு பெற வேண்டுமெனச் செந்தமிழ்த் தெய்வத்தின் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றேன். எத்துணையும் இழிந்த துரும்பனைய சிறியேனையும் கருவியாகக் கொண்டு இத்தகைய பணிகளை நிறைவேற்றியருளும் திருவருளின் பெருமையை எங்ஙனம் அறிந்து போற்றவல்லேன்! ந. மு. வேங்கடசாமி. இளங்கோவடிகள் வரலாறு இந்நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சேரநாட்டிலே வஞ்சி நகரத்திருந்து அரசுபுரிந்த சேரலாதன் என்னும் வேந்தற்கு மைந்தரும் சேரன் செங்குட்டுவற்குத் தம்பியுமாவர். இளங்கோவாகிய இவர் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பெற்றார். இவர் வஞ்சிமூதூர் மணி மண்டபத்திலே தந்தையுடன் இருக்கும் போது ஆண்டுப்போந்த நிமித்திக னொருவன் இவரை நோக்கி அரசு வீற்றிருக்கும் இலக்கண முண்டென்று சொல்ல, தமையனாகிய செங்குட்டு வனிருக்க இவ்வாறு முறைமை கெடச் சொன்னா யென்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, செங்குட்டுவற்குத் துன்பமுண்டா காதபடி குணவாயிற் கோட்டத்திலே துறவுபூண்டு பேரின்பவீடாகிய அரசினை ஆளுதற்குரியவரா யிருந்தனர். இவ்வரலாறு பத்தினிக் கடவுள் தேவந்திமேற் றோன்றித் தம்மை நோக்கி யுரைத்ததாக அடிகள் தாமே வரந்தருகாதையில் (170-83) அருளிச் செய்தமையால் அறியப்படும். செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் தந்தை சேரலாதன் என்பதும், தாய் சோழன் மகள் என்பதும் "குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மக ளீன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்" (வாழ்த்துக்காதை: உரைப்பாட்டு மடை) என்பதனாற் பெற்றாம். செங்குட்டுவன் தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனப்படுவன் என்பதும், தாய் சோழன் மணக்கிள்ளி யெனப்படுவள் என்பதும் "குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி............கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்னும் பதிற்றுப்பத்தின் (5) பதிகத்தாற் போதரும். அடியார்க்கு நல்லார் "சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள்" (சிலப்-பதிகவுரை) என்கின்றனர். நற்சோணை யென்னும் பெயர் திரிபுடைத்துப் போலும். இவர் இந்நூல் இயற்றுதற்குக் காரணம் இதன் பதிகத்து முற் பகுதியால் விளங்கும். துறவு பூண்ட பின்னரே இஃது இவரால் இயற்றப்பட்டது. இவர் இவ்வரலாறு நிகழ்ந்த காலத்திருந்த வராதலால் காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும் நிகழ்ந்த வற்றை அறிந்தோர்வாய்க் கேட்டும், வஞ்சி நகரத்திலும் வட நாட்டிலும் நிகழ்ந்தவற்றை நேரிற் கண்டும் கேட்டும் இதனை இயற்றினாராவர். அடிகள் இதனோடு தொடர்புள்ளதாகிய மணிமேகலை துறவை இறுதியிற் பாடியமைத்து இக்காப்பியத்தை முடிக்கக் கருதியிருந்தாரெனவும், கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலை என்ற பெயரால் அதனைச் செய்து முடித்தனரெனக் கேட்டு அவ்வாறு செய்யாது விடுத்தன ரெனவும் அடியார்க்கு நல்லார் நலிந்துரை கூறுவது பொருந்துவதன்று. இந்நூலிறுதியிற் காணப்படும் ‘நூற்கட்டுரை’ யென்பது பின்னுளோர் யாரோ எழுதிச்சேர்த்ததாகுமாதலின், அதில் வந்துள்ள "மணிமேகலை மேலுரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்னுந் தொடர் கொண்டு அங்ஙனங் கூறுதல் சாலாதென்க. அங்ஙனம் மணிமேகலை வரலாற்றை இறுதியில் விரித்துரைப்பின் இக்காப்பிய வமைதி சிதைதல் ஒருதலை. சமயம் :- "செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" (26: 98-9) எனவும், "ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்" (30:141-2) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவனுடைய பெற்றோர் சிவனருளாலே அவனை மகனாகப்பெற்றன ரென்பதும், "நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு" (26: 54-7) எனவும், "ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கின னாகி" (24 : 62-7) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவன் சிவபிரானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் முடியால் வணங்காத சிவபத்தி மாண்புடையனென்பதும் பெறப்படுதலின் அவனுக்குத் தம்பியாகிய இவரது சமயமும் சைவமே யாதல்வேண்டும். "குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த" (சிலப்.பதி) என்புழி, அடியார்க்கு நல்லார் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் கூறியது அடிகள் என்னும் பெயர் சைன சமயத் துறவிகட் குரியதென்னும் கருத்தினாற் போலும்? அடிகள் என்பது இறைவனுக்கும் அவனடி யார்க்கும் வழங்கும் பொதுப் பெயராவதன்றி, அருக சமயத் துறவிகளையே குறிப்பதொன்றன்றாகலானும், இளங்கோவடிகள் "பிறவா யாக்கைப் பெரியோன்" (5:169) எனவும், "உலகுபொதி யுருவத் துயர்ந்தோன்" (26:55) எனவும் கவியின் கூற்றிலேயே சிவபிரானை முழுமுதற் பொருளாகப் பாராட்டுதலானும் அவர் சைவ சமயத்தினரென்பதே துணிபு. சைன சமயக்கொள்கை சிலவும், அருகதேவன்.வாழ்த்தும் கவுந்தியடிகளின் சார்புபற்றியே இதன்கண் இடம்பெற்றுள்ளமை காண்க. அடிகள் சைவ சமயத் தினராயினும், அருகன், கொற்றவை, திருமால், செவ்வேள் என்னும் தெய்வங்களை அவ்வத் தெய்வங்களைப் பரவும் அடியார்களின் உணர்ச்சியோடு கலந்து நின்று பாடியுள்ளமை பெரிதும் பாராட்டற்குரியது. அங்ஙனம் யாதொரு சமயத்திலும் வெறுப்பின்றி எல்லாச் சம யங்களையும் மதித்துப் பாடியிருப்பதும், தமது சேரர் குடியினராகிய வேந்தர்களின் உயர்ச்சியைப் போலவே ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்களின் உயர்ச்சியையும் ஒரு பெற்றியே பாராட்டியிருப்பதும் இவருடைய நடுவுநிலையையும் மனத்தூய்மையையும் நன்கு புலப் படுத்துகின்றன. அடிகள் இக் காப்பியத்தை முடிக்குமிடத்து, இதனைத் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என உலகமாந்தரை விளித்து, ‘பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்’ என்பது முதலாக, ‘செல்லுந் தே எத்துக்கு உறுதுணை தேடுமின்’ என்பது ஈறாக உரைத்துள்ள அறங்கள் மன்பதையெல்லாம் அறநெறியிலொழுகித் துன்பத்தி னீங்கி இன்பமெய்த வேண்டுமென்னும் இவரது ஆர்வத்தையும் இரக்கத்தையும் புலப்படுத்துகின்றன. காலம் ;- இதன் பதிகத்திறுதியில், "உரையிடை யிட்ட பாட்டு டைச் செய்யு, ளுரைசா லடிக ளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன், கேட்டனன்" எனவும், மணிமேகலையின் பதிகத் திறுதியில் "இளங்கோ வேந்த னருளிக் கேட்ப, வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் டமிழ்த்திற மணிமேகலை துறவு, ஆறைம் பாட்டினு ளறிய வைத்தனனென்" எனவும் கூறப்பட்டிருத் தலானும், கடைச் சங்கப் புலவராகிய சீத்தலைச் சாத்தனாரே மணிமேகலை யாசிரியரென்பது பேராசிரியர் முதலியோர் கருத்தாகலானும், சேரன் செங்குட்டு வனைச் சங்கப் புலவராகிய பரணர் பதிற்றுப்பத்திற் பாடியிருத்தலா னும் இளங்கோவடிகள் காலம் கடைச் சங்கப் புலவர் காலமெனத் துணியப்படுகின்றது. செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் இயற்றிக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடிய காலத்து இலங்கை யரசனாகிய கயவாகு வென்பவன் உடனிருந்தானென்று வரந்தரு காதையாலும், அக் கய வாகுவும் இலங்கையிற் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து விழாக் கொண்டாடினா னென்று இந்நூலின் முன்னுள்ள உரைபெறு கட் டுரையாலும் தெரிதலானும், இலங்கையிற் கயவாகு வென்னும் அர சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தானென இலங்கைச் சரிதத்தால் அறியப்படுதலானும் அதனையடுத்த காலமே இளங்கோவடிகள் இந்நூலை யியற்றிய காலமாகும். இலங்கை வரலாற்றில் மற்றொரு கயவாகு கூறப்படினும் அவன் மிகவும் பிற்காலத்தின னாதலின், கண்ணகிக்கு விழாக் கொண்டாடியவன் முதற் கயவாகுவேயா மென்க. அரும்பதவுரையாசிரியர் வரலாறு இவருடைய ஊர், பெயர், குலம், காலம் முதலியன புலப்பட வில்லை. இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் வெளியிட் டுள்ள ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் புத்தகத்திற் பலவிடத்தில் செயங்கொண்டார் என்னும் பெயரால் இவர் குறிக்கப்பட்டுளர். செயங்கொண்டாரென அன்னார் கொண்டமைக்கு ஆதாரம் யாதெனத் தெரியவில்லை. இவரது காலம் நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் என்பவர்களின் காலத்திற்கு முந்தியதென்று மட்டும் தெரிகிறது. இவர், " கரும்பு மிளநீருங் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பவிழ்தார்ச் சேரமான் செய்த சிலப்பதி காரத்தைச் சாரமாய் நாவே தரி" எனத் தொடக்கத்தில் மூத்த பிள்ளையார்க்கு வாழ்த்துக் கூறியிருப் பதும், "பிறவா யாக்கைப் பெரியோன்" (5; 169) என்புழி, ‘பெரி யோன் - மகாதேவன்’ என்றும், "மறைமுது முதல்வன்" (வேட்டு வரி. இறுதி.) என்புழி 'மறைமுது முதல்வன் - மாதேவன்' என்றும் உரைத்திருப்பதும் போல்வனவற்றால் இவரது சமயம் சைவமாம் என்பதும், சைவநூல்களின் துணிபொருளையும் மரபினையும் இவர் நன்கறிந்தவராவ ரென்பதும் புலனாகின்றன. ஆயின், ‘அறிவனென்றது உறையூர் ஸ்ரீகோயில் நாயனாரை' (11 ; 4. உரை) எனவும், 'திருமால் குன்றம் - அழகர் திருமலை' (11 ; 91. உரை) எனவும் இவர் கூறியிருப்பன போல்வன இவர் ஏனைச் சமயத்தார்களின் கொள்கைகளையும் மதித்து மரபு பிறழாமலே உரைக்கு மியல்பின ரென்பதனைப் புலப்படுத்துகின்றன. அடியார்க்கு நல்லார் உரை யெழுதுதற்கும் பெரிதும் துணையா யிருந்தது இவ்வரும்பதவுரையே. இவர், "என்பாரு முளர்" என்றாங்கு ஒரோ வழிக் கூறுதலால் இவருக்கு முன்பும் ஓருரை இருந் திருக்கலாமெனத் தோன்றுகிறது; ஆனால் அவ்வுரை இப்பொழுது கிடைக்கவில்லை. அருஞ் சொற்களை யெடுத்துக் காட்டிப் பொருள் கூறுதலும் ஒரோவழித் தொடர்களின் முதல் இறுதிகளையேனும், முதலை மட்டு மேனும் காட்டிப் பொருளுரைத்தலும், இன்றியமையா இலக்கணங் களைக் குறித்தலும். சொற்பொருண் முடிபு காட்டுதலும், சிறு பான்மை, நீண்ட தொடர்கட்குப் பொழிப்புரை கூறிவிட்டுப் பின்பு அவற்றின் பகுதிகளைத் தனித்தனி யெடுத்து விளக்குதலும் முதலாயின இவருரையின் இயல்புகளாம். இசை நாடகப் பகுதிகட்கு உரை கூறிய வகையில் அடியார்க்கு நல்லாரும் இவருக்குக்கடன் பட்டவராவ ரென்பதனை முகவுரையில் விளக்கினமை கொண்டு அறியலாம். வேனிற் காதையில் அகநிலை மருதம் புறநிலை மருதம், அருகியன் மருதம், பெருகியன் மருதம் (8 ; 39-40) என்பவற்றிற்கு இவர் இலக்கணமும் பாட்டும் மாத்திரையும் காட்டியிருப்பதும், அடியார்க்கு நல்லார் அவற்றை வாளா விட்டிருப்பதும் அறியற்பாலன. இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப் படுகின்றது. சிற்சில விடத்து இரண்டு உரையாசிரியரும் கொண்ட பாடங்கள் வேறுபட்டுள்ளன. சிலப்பதிகாரம் முழுதுக்கும் ஒரு வாறு பொருள் தெரிந்துகொள்ள இவ்வரும்பதவுரையே கருவியா யிருந்தது. அடியார்க்கு நல்லார் வரலாறு இவருடைய குலம், சமயம், காலம் என்பன இன்னவெனப் புலப்படவில்லை. எனினும் இவரது காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முந்தியதாகும் என்று மட்டும் கருதப்படுகிறது. இவருரைக்குச் சிறப்புப்பாயிரமாகக் காணப்படும் செய்யுட்களால் இவருக்கு நிரம்பையர் காவலரென ஓர் பெயருண்டென்பதும், அக்காலத் திருந்த பொப்பண்ண காங்கெயர்கோன் என்னுந் தோன்றல் இவருக்கு உதவிசெய்து இவ்வுரையைச் செய்வித்தா னென்பதும் விளங்கு கின்றன. "இவருக்கு நிரம்பையர் காவலரென்னும் பெயர் ஊரால் வந்ததென்றும், நிரம்பை யென்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் குறும்பு நாட்டில் பெருங்கதையின் ஆசிரியராகிய கொங்குவேளிர் பிறந்த விசயமங்கலத்தின் பக்கத்திலுள்ளதென்றும் கொங்கு மண்டல சதகம் தெரிவிக்கின்றது." (மகாமகோபாத்தியாய, டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், சிலப், 3-ம் பதிப்பு, முகவுரை, பக்.11 பார்க்க.) இவர், பதிகத்தின் முதல் இரண்டடிகட்கு உரை கூறுமிடத்து அவற்றிலுள்ள புணர்ச்சி முடிபு சொன் முடிபுகளை இலக்கணங் காட்டி விளக்கியிருப்பதும், பொருளாராய்ச்சியை மேற்கொண்டு ஐந்திணைக்கு முரிய முதல் கரு உரிப்பொருள்களின் வகைகள் பலவற் றிற்கும் இந்நூலிலிருந்தே மேற்கோள் காட்டியிருப்பதும் இவரது இலக்கண வறிவின் சிறப்பையும் இந்நூலின்கண் இவருக்குள்ள அழுந்திய பயிற்சியையும் புலப்படுத்துவனவாம். பொருண் முடி புக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகத் தொடர்களை யெடுத்தமைத்து உரைகூறி, ஆண்டாண்டு இன்றியமையா இலக்கணம் முதலியவற் றை விளக்கிச்செல்லுதல் இவருரையின் இயல்பு. சிற்சில இடங் களில் அணிகள், மெய்ப்பாடுகள் முதலியன இவராற் குறிக்கப்பட் டுள்ளன. சில விடங்களில் இவர் நுண்ணிதின் உணர்ந்து காட்டி யிருக்கும் சொல்லமைப்புக்களின் பயன் கற்றோர்க்கு இன்பம் விளைப் பனவாகும். ஆயின், ஒரோவழி இவர் நயம்பட வுரைப்பனவும் அனுமானத்தால் விரித்துரைப்பனவும் நூலின் கருத்துக்கு மாறுபட் டனவாகவும் உள்ளன. இந்திர விழவூரெடுத்த காதையில் "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" (5;64) என்றும், கட்டுரை காதையில் "ஆடித்திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண" (23;133-5) என்றும் கூறப் பட்டுள்ள காலவரையறைகளையும் ஒரு சார் நிகழ்ச்சிகளையும் பற்றுக் கோடாகக் கொண்டு, கோவலனும் கண்ணகியும் இன்ன காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டன ரென்றும், இன்ன இன்ன காலத்து இன்னது இன்னது செய்தனரென்றும் இவர் கூறிச் செல்கின்றனர். அவை இவருக்குக் கணிதப் பயிற்சியும் சோதிடப் பயிற்சியும் உளவெனப் புலப்படுத்தினும் ஒரோவழி இவர் கூறுவன வழுவுடையவெனத் தோன்றுகின்றது. கட்டுரை காதையிற் கூறப்பட்டுள்ளபடி ஆடித்திங்களும் இருட்பக்கத்து அட் டமியும் வெள்ளிகக் கிழமையும் அழற்குட்டமும் ஒத்து வருங்காலம் யாதெனக் கணித்தறியின் இக் கதை நிகழ்ச்சியின் காலத்தை உள்ள படி அறிந்தவாறாகும். இவர், அரங்கேற்று காதையில் (3; 13) விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய வரி என்பதனை விளக்குழி "அவற்றின் பகுதியெல்லாம் கானல் வரியிற் கூறுதும்" என்றும், (3;26) யாழுக்கு இலக்கணங் கூறுமிடத்து, "கானல் வரியில், 'குற்ற நீங்கிய யாழ்' என்பதன்கண் விரியக் கூறுதும்" என்றும், வேனிற்காதையில், (8; 28) "மாட கம் - வீக்குங் கருவி; அது முன்னர் ஆணியென்பதனுட் கூறினாம்" என்றும் உரைத்திருத்தலின் இவர் கானல் வரிக்கு உரை செய்திருந் தன ரென்பதும், அரங்கேற்று காதையில் (3; 107) 'பூதரை யெழுதி என்பதனை விளக்குமிடத்து " அழற்படு காதைக்கண்ணே விரித்துக் கூறுதும்" என்றும் வேனிற் காதையில் (58-9) 'அந்திப்போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வன்' என்பதனை விளக்கு மிடத்துக் "கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்" என்றும் உரைத் திருத்தலின் அழற்படுகாதை முதலியவற்றிற்கும் உரை யியற்றக் கருதியிருந்தா ரென்பதும் புலனாகின்றன. மதுரைக்காண்டத்தின் இறுதி நான்குறுப்புக் களுக்கும், வஞ்சிக்காண்டத்திற்கும் இவரால் உரை யியற்றப்படவில்லையோ, அன்றி இயற்றியவுரை இறந்து பட்டதோ என்பது தெரியவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்குச் சிறப்புப் பாயிரமாகக் காணப் படும் பழைய செய்யுட்கள் பின்வருவன; 1. பருந்து நிழலுமெனப் பாவு முரையும் பொருந்துநெறி யெல்லாப் பொருளுந் - தெரிந்திப் படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தா னன்னூல் அடியார்க்கு நல்லானென் பான். 2. ஓருந் தழிழொரு மூன்று முலகின் புறவகுத்துச் சேரன் றெரித்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொருள் ஆருந் தெரிய விரித்துரைத் தானடி யார்க்குநல்லான் காருந் தருவு மனையான் நிரம்பையர் காவலனே. 3. காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்தக் கடியபெருங் காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமற் காலமெனுங் கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கெயர் கோனளித்த சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே. நூற் சிறப்புப்பாயிரம்போற் காணப்படும் பழைய செய்யுள் பின் வருவது ; 1. நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக் கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே-கூடலார் கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன் தண்டா வுரைமுத் தழிழ். உ சிலப்பதிகாரம் பதிகம் (மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில் வேங்கை மரத்தின் நிழலில் நின்ற கண்ணகிக்கு வானவர் வந்து கோவலனைக் காண்பித்து இருவரையும் வானுலகிற்கு அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக்குறவர், அச்செய்தியை மலைவளங் காண வேண்டி வந்திருந்த செங்குட்டுவற்கு அறிவித்து, அதன்பின் இளங் கோவடிகட்கும் சென்று அறிவித்தனர். அப்பொழுது செங்குட்டுவ னைக் கண்டு அடிகளிடம் வந்திருந்த சாத்தனார், புகார் நகரத்து வணி கனாகிய கோவலன் நாடகக் கணிகையின் சேர்க்கையால் பொருளனைத் தையும் இழந்து, பத்தினியாகிய கண்ணகியின் காற்சிலம்பை விற் றற்பொருட்டு மதுரைக்கு வந்து, பொற்கொல்லனது பொல்லாத சூழ்ச்சியாற் கொலைக்களப்பட்டதனையும், கண்ணகி பாண்டியன் பால் வழக்குரைத்து, அவன் துஞ்சியபின், கூடற்பதியை எரியூட்டிய தனையும், மதுரைமா தெய்வம் வீரபத்தினி முன் வந்து தோன்றி அவர்கட்குப் பழம் பிறப்பில் உண்டாய சாப வரலாற்றையும், பதினாலாம் நாள் அவள் கோவலனை வானோர் வடிவிற் காண்பள் என்பதனையும் கூறத் தாம் கேட்டதனையும் அடிகட்கு உரைத்தனர். அடிகள் ‘அவ் வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியமாக நாம் இயற்றுவோம்.’ என்ன, ‘மூவேந்தர்க்கு முரிய அதனை நீரே இயற்றுவீர்’ என்று சாத்தனார் கூறினர். இளங்கோவடிகள் அதற் கிசைந்து மங்கலவாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக வுள்ள முப்பது பகுதியையும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யு ளாக இயற்றிக் கூற, சாத்தனார் அதனைக் கேட்டனர்.) குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக் குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப் பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் 5. ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங் கட்புலங் காண விட்புலம் போயது இறும்பூது போலும்ஃ தறிந்தருள் நீயென 10 அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் யானறி குவன்அது பட்டதென் றுரைப்போன் ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக் கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர் 15 நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக் கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் 20 மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப் 25 பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் கண்டனன் பிறனோர் கள்வன் கையென வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரா னாகிக் கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக் 30 கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப் பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகந் திருகி 35 நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய பலர்புகழ் பத்தினி யாகும் இவளென வினைவிளை கால மென்றீர் யாதவர் வினைவிளை வென்ன விறலோய் கேட்டி அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் 40 கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் 1ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய் 45 முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச் சங்கம னென்னும் வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டிய தாகலின் 50 2 வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்லெனக் கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென 55 அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் 60 நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுகென் றாற்கவர் மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர் மனையறம் படுத்த காதையும் நடம்நவில் 65 மங்கை மாதவி அரங்கேற்று காதையும் அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும் இந்திர விழவூ ரெடுத்த காதையும் கடலாடு காதையும் மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென 70 மாதவி இரங்கிய காதையும் தீதுடைக் கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை 75 ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும் ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு 80 வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக் கட்டுரை காதையும் மட்டலர் கோதையர் குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் 85 வாழ்த்து வரந்தரு காதையொடு இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் 90 இது, பல்வாகை தெரிந்த பதிகத்தின் மரபென். சிலப்பதிகாரம் -சிலம்பு காரணமாக வளர்ந்த வரலாற்றினை உரைப்பது, 1"வன்றொடர் மொழியும்" என்னுஞ் சூத்திரத்தான், சிலம்பு என்னும் மென்றொடர்க் குற்றியலுகர மொழியின் மெல்லொற்று வல்லொற்றாயது; ஆசிரியர் நச்சினார்க்கினியர் அச் சூத்திரவுரையில், இயல்பு கணம் வருமிடத்தும் மெல்லொற்றுத் திரிதற்குச் சிலப்பதிகாரம் என்னுந் தொடரை எடுத்துக் காட்டியிருப்பது அறிந்தின்புறற்பாலது. பதிகம் - நூலின் பொருளைத் தொகுத்துரைப்பது; என்னை? 2" பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுத றானே." என்பவாகலின். பதிகம் என்னும் இப்பெயர் இப்பாட்டின் இறுதியடியிற் குறிக்கப்பெற்றுள்ளது. உரை 1 - 9. குணவாயில் கோட்டத்து - திருக்குணவாயில் என்னும் ஊரிலுள்ள கோயிற்கண்ணே, அரசு துறந்து இருந்த - அரச போகத்தைத் துறந்து தவவுருத் தாங்கியிருந்த, குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு - குடதிசைக் கோவாகிய செங் குட்டுவன் என்னுஞ் சேரற்கு இளங்கோவாகிய அடிகட்கு, குன்றக் குறவர் ஒருங்கு உடன் கூடி - மலையில் வாழும் குறவ, ரெல்லாரும் திரண்டு சென்று, பொலம்பூ வேங்கை நலம் கிளர் கொழுநிழல் - பொன் போலும் பூவினையுடைய வேங்கைமரத் தின் நன்மை மிக்க கொழுவிய நிழற்கண்ணே, ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு - ஒரு முலையினை இழந்து வந்து நின்றவளாகிய அழகிய பெருமையுடைய ஒருபத்தினியின் பொருட்டு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி - தேவர்க்கரச னாகிய இந்திரன் றமர் நெருங்கி வந்து, அவள் காதல் கொழு நனைக் காட்டி - அவளுடைய காதலையுடைய கணவனை அவட் குக் காட்டி, அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போயது - அவளோடும் அவர் எம் கண்ணாகிய புலம் காண விண்ணினிடத்திலே சென்றது, இறும்பூது போலும் - ஓர் அதி சயமாயிருந்தது, அஃது அறிந்தருள் நீ என - அதனை நீ அறிந் தருள்வாயாக என்றவளவிலே, (அடியார்க்கு நல்லார்; குணவாயில் - திருக்குணவாயிலென்பதோரூர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்க ணுள்ளது; அஃது ஆகுபெயர். கோட்டம் - அருகன் கோயில். இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தல் அருமையால், துறந்து என்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்தவிடத்தே மீட்டும் தவவுருத் தாங்கியிருத்த லருமையான் இருந்து என்றும் கூறினார். குன்றக்குறவர் - ஏழுனுருபுத் தொகை; குன்றம் - கொடுங் கோளூர்க்கு அயல தாகிய செங்குன்றென்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின், அவரறி யார்; என்னை? அத் திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக் கண்ணதாய் அறுபதின் காத ஆறுண்டாகலானும், அரசனும் உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க.) கோட்டம் என்பது பல கடவுளர் உறையு மிடங்களுக்கும் பெயராகக் கனாத்திறமுரைத்த காதையில் வழங்கி யிருத்தலானும், கோயில் என்பதன் பரியாயமாகக் கொண்டு ஊர்காண் காதையிலும் முருகன் கோயிலைக் கோட்டம் என்று கூறியிருத்தலானும் குமர கோட்டம் முதலிய பெயர் வழக்கினும் இருத்தலானும் ஈண்டுக் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் துணிதல் சாலாது. அடிகள் என்னும் பெயர் பெரும்பாலும் அருக சமயத் துறவிகட்கு வழங்கியதாகு மென்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் அருகன் கோயில் என்று கூறினார் போலும்! செங்குன்று என்பது கொடுங்கோளூர்க்கு அயலதாகிய மலை யென்றும், திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசையில் அறுபதின் காத வழியில் உள்ளதென்றும் கொங்கு நாட்டினராகிய அப் புலவர் பெருமான் துணிந்து கூறுதலின் கொடுங்கோளூராகிய வஞ்சியையும் செங்குன்றையும் அவர் நன்கறிந்து கூறியுள்ளா ரென்பது பெறப்படும். அரசாட்சி இன்பம் பயப்பதென்பதனை, 1" தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே" என்னும் திருக்குறுந்தொகையானும் அறிக. பொலம் - பொன் என் பதன் திரிபு; 2" பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான." என்பது காண்க. ‘திருமா பத்தினி இழந்து வந்து நின்றாள்; அவள் பொருட்டு’ என விகுதி பிரித்து விரித்துரைக்க. தமராவார் தேவர். கட்புலம்- கண்ணினது அறிவு என்றுமாம். போயது - போய அது என்பதன் விகாரமுமாம். போலும், 3ஒப்பில் போலி. குறவர் கூடிச் சென்று விட்புலம் போயது இறும்பூது என இளங்கோவடி கட்குக் கூறினாராக என்க. இது புதுமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு. 10 - 11 அவன் உழை இருந்த தண்டமிழ்ச் சாத்தன் - அப் பொழுது அவன்பால் வந்திருந்த தண்டமிழ்ப் புலவனாகிய சாத்தன், யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் - அது விளைந்ததனை யான் அறிகுவன் என்று உரைக்கின்றவன். செங்குட்டுவனைக் கண்டு இளங்கோவடிகள்பால் வந்திருந்த சாத்தன் என்க. சாத்தன் - மதுரைக் கூலவாணிகன் சாத்தனா ரென் னும் நல்லிசைப் புலவர் என்பது பின்னர்ப் பெறப்படும். சீத்தலைச் சாத்தனார் என்று கூறப்படுபவரும் இவரே யென்பது, 4தொல்காப் பியச் செய்யுளியல் உரையில் ‘சீத்தலைச் சாத்தனாராற் செய்யப் பட்ட மணிமேகலை’ எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைத்தலால் அறியப்படும். காட்சிக்காதையுள்ளும் "தண்டமிழாசான் சாத்தன்" எனவும், "நன்னூற் புலவன்" எனவும் இவரைப் பாராட்டி யுரைத்தலானும், இக் காப்பியத்தை இவர்முன் கூறிக் கேட்பித்தலானும் இளங்கோவடிகள் இவர்பால் வைத்த பெருமதிப்புப் புலனாகும். ‘அறிகுவன்’ என அன் விகுதி தன்மைக்கண் வந்தது ; மேலும் இங்ஙனம் வருமிடனறிந்து கடைப்பிடிக்க. அது என்றது ஒரு முலை யிழந்ததனை. இவ்வடிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரை பதிக இறுதிக் கண் ஆராயப்படும். 12 - 20 ஆரங் கண்ணி - ஆத்தி மாலையை யுடைய, சோழன் - செம்பியனது, மூதூர் - பழைய நகரங்களுள்ளே, பேராச் சிறப்பின் - நீங்காத சிறப்பினையுடைய, புகார் நகரத்து - புகார் என்னும் நகரத்திடத்து, கோவலன் என்பான் ஓர் வாணிகன் - கோவலன் என்று பெயர் கூறப்படுவானாகிய ஒரு வாணிகன், அவ்வூர் - அப் பதியின்கண், நாடகம் ஏத்தும் - நாடகத்தின் பொருட்டு யாவரும் கொண்டாடும், நாடகக் கணிகையொடு- நாடகப் பொதுமகளாகிய மாதவி யென்பாளோடு, ஆடிய கொள்கையின் - கூடி யொழுகிய ஒழுக்கத்தால், அரும் பொருள் கேடு உற - பெறுதற்கரிய பொருள் தொலைதலின், கண்ணகி என்பாள் மனைவி - கண்ணகி யென்று பெயர் கூறப்படும் அவன் மனைவியோடும், அவள் கால் பண் அமை சிலம்பு - அவளது காலணியாகிய ஓசை யமைந்த சிலம்பினை, பகர்தல் வேண்டி - விற்றலைக் கருதி, பாடல் சால் சிறப்பின் - பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய, பாண்டியன் பெருஞ்சீர் மாட மதுரை - பாண்டியனது மிக்க புகழையுடைய மாட மதுரைக் கண்ணே, புகுந்தனன் - சென்று புக்கான்; ‘ஆரங்கண்ணி’ என்பதில் ஆர் அம்முச்சாரியை பெற்றது; இதனை, 1" ஆரும் வெதிரும் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்." என்னும் சூத்திரத்து 'மெய்பெற' என்னும் இலேசான் அமைத்தார் நச்சினார்க்கினியர். 2"ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர்" என்பதுங் காண்க. மூதூராகிய புகார் என்னலுமாம். புகார் - ஆற்று முகம்; 1 "புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்" என்பதன் உரை காண்க. காவிரி கடலொடு கலக்கு மிடத்துள்ள தாகலின் காவிரிப்பூம்பட்டினம் புகார் எனப்பட்டது. அரும் பொருள் - அளத்தற்கரிய பொருள் என்றும், அறனும் இன்பமும் பயக்கும் பொருள் என்றும் கூறுதலுமாம். சிறப்பினையுடைய மதுரை யென்க; பாண்டியற்கு அடையாக்கலுமாம். மாடம் என் னும் அடையடுத்து ‘மாடமதுரை' எனப் பலவிடத்தும் வழங்குவது காணப்படும். நாடகம், மனைவி என்பவற்றில் முறையே குவ்வுருபும், ஒடுவுருபும் தொக்கன. நகரத்து வாணிகன் ஆடிய கொள்கையாற் கேடுறுதலின் சிலம்பு பகர்தல் வேண்டி மனைவியொடு மதுரை புகுந்தனன் என்க. (அடி. நாடகமேத்து மென்றது நாடகந்தான் இவளாற் சிறப் பெய்து தலின் ஏத்திற்றென்றவாறு. காற்சிலம்பு பகர்தல் வேண்டி யெனவே தலைக்கோலம் முதலியஅணிகளனைத்தும் முன்னமே தொலைந்தது விளங்கிநின்றது. சிறப்பிற் பாண்டியன் என்றும், பெருஞ்சீர் மாட மதுரை யென்றும் அடிகள் புகழ்ந்தார்; இவையும் பழவினையாள் அழிந்த வென்னும் இரக்கந் தோன்ற. மாட மதுரை புகுந்தனன் என்பது, காட்டினன்றி ஓரூரின்கண் உயிரும் பொருளும் இழந்தா னென்பது மேல் விளையத் தோன்றி நின்றது.) 20 - 22 அதுகொண்டு - அங்ஙனம் புகுந்தவன் பிற்றை ஞான்று சிலம்பினை யெடுத்துக் கொண்டு, மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் - அதனை விற்பதற்காக மிக்க பெருமையினை யுடைய வணிகர் தெருவிற் செல்கின்றவன், பொன் செய் கொல்ல ன்தன் கை காட்ட - எதிரே வந்த பொற்கொல்லனைக் கண்டு அதனை அவன் கையிற் காட்ட மன் - மிகுதிப் பொருட்டு 2"மன்னு மாதர் பெருங் கற்பு" என்புழிப்போல. ‘மன் கழிவின்கண் வந்தது' என அடியார்க்கு நல்லார் கூறியது ஈண்டைக்குப் பொருந்துவதன்று. பொன் செய் - பொற் பணி செய்யும். தன், சாரியை. கண்டு என ஒரு சொல் வருவிக்க. (அடி அதுகொண்டு என்றார் அச் சிலம்பால் மேல் விளைவன தோன்ற; அது, அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற்போன் றிருந்தது. ) 23 - 26 கோப்பெருந் தேவிக்கு அல்லதை - கோப்பெருந் தேவிக்கே யன்றி, இச் சிலம்பு - இப் பெரு விலைச் சிலம்பு, யாப்புறவு இல்லை - ஏனோர் அணிதற்குப் பொருத்தமில்லை யாகலான் யான் இதனை அரசற்கு உணர்த்திவருந் துணையும், ஈங்கு இருக்க என்று ஏகி - இக் கோட்டத்தில் இருக்கவெனச் சொல்லிப் போய் பண்டு தான் கொண்ட - தான் முன்பு கள விற் கொண்ட, சில் அரிச் சிலம்பினை - சிலவாகிய அரியினை யுடைய சிலம்பினை, கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என - வேற்று நாட்டவனாகிய ஒரு கள்வன் கையிற் கண்டேன் என்று அரசற்கு உரைப்ப, அல்லதை, வினைத் திரிசொல்; ஐ சாரியை எனலுமாம். சுட்டு அதன் பெருமையை உணர்த்திற்று. இருக்கென்று, அகரந் தொக் கது. ‘பண்டு தான் கொண்ட’ என்றதுகவி கூறியது. அரி - பரல்;; மேல் வழக்குரை காதையில் 'என் காற் பொற்சிலம்பு மணியுடை யரியே என்றலின், சிலவாகிய அரியெனல் கூடாமையின் சாதிபற் றிக் கூறியதெனக் கொள்க; அன்றி, அரி என்பதற்கு வினைத்திறம் என்றும், ஓசை யென்றும் கூறுதலுமாம். அதனைக் காட்டக் கண்ட பொற் கொல்லன் ஏகி உரைப்ப வென்க. (அடி தான் கொண்ட வென்றார் தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினானென்பது தோன்ற. பிறனோர் கள்வன் கையிற் கண்டன னென் றார், தன்னையுங் கள்வனென்றமை தோன்ற.) 27 - 30 வினை விளை காலம் ஆதலின் - தான் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலம் ஆதலாலே, யாவதும் - யாதொன்றையும், சினைஅலர் வேம்பன் - முகை விரிந்த வேப்பம்பூ மாலையையுடைய பாண்டியன், தேரான் ஆகி - ஆராயாதவனாகி, கன்றிய காவலர்க் கூஉய் - அடிப்பட்ட காவலாளரை அழைத்து, அக் கள்வனைக் கொன்று - இவன் சொன்ன அக் கள்வனைக் கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு என - அச் சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற, யாவதும் தேரானாகி என இயையும், கூஉய் - கூவி என்பதன் விகாரம். ஈங்கு - இப்பொழுதே யெனப் பொழுதினை யுணர்த் திற்று. உரைப்பக் கேட்ட வேம்பன் கொணர்க வென்று கூற என்க. அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய் சோர்ந்து, கொன்று அச் சிலம்பைக் கொண்டு வருக வென்று கூறினானென அடியார்க்கு நல்லார் கருதியது ஏற்புடைத்தன்று; என்னை? வினை விளை கால மாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச் சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரைகாதை யுள்ளும் "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்றிறுத்தமை யானும் என்க. (அடி இதனை ஆராயு நெறி பலவுளவாகவும், அவற்றில் ஒன்றையும் தேர்ந்தில னென்பார், யாவதும் தேரானாகி என்றார்; முன்னர்க் கை குறைத்தன் முதலிய முறை செய்தோன் இதனைத் தேர்ந்தில னென்று அடிகள் இரங்கிக் கூறினார். கன்றிய காவலர் என்றார், அவரும் முன்னர்த் தீது செய்யா ரென்பது தோன்ற. 31 - 36 கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - அங்ஙனம் அரசன் கூறக் கேட்ட காவலாளரும், வினை விளை கால மாதலின் அவனைக் கொல்லுதல்செய்யக் கொலை யிடத்தே பட்ட கோவலன் மனைவி, நிலைக்களம் காணாள் - தனக்கு நிலை யிடம் காணாளாய், நெடு கண் நீர் உகுத்து - நெடிய கண்ணின் நீரைச் சொரிந்து, பத்தினி ஆகலின் - ஆக்கவும் அழிக்கவும் வல்லள் ஆதலின், பாண்டியன் கேடு உற - பாண்டியன் உயிர் கெடுமாறு செய்து, முத்து ஆரம் மார்பின் முலை முகம் திருகி - முத்தாரம் அணிந்த மார்பினகத்து முலையின்முகத்தைத் திருகி யெறிந்து, நிலைகெழு கூடல் நீள் எரி ஊட்டிய - அதினின் றும் உண்டாகிய நெடிய தீயால் நிலைபெற்ற மதுரையாகிய அவனூரையும் உண்ணப் பண்ணிய, பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என - பலரும் புகழும் பத்தினியாகும் இக் குறவராற் சொல்லப்பெற்றவளென்று சாத்தன் கூற, நிலைக்களம் காணாள் - ஓரிடத்து நிற்றலாற்றாளாய் என்க. கேடுறச் செய்து என ஒரு சொல் விரித்துரைக்க; கேடுற உகுத்து என்றியைத்தலுமாம். எரியை உண்பித்த என விரித்தலும் பொருந்தும். கண்ணின் நீராற் பாண்டியனை அடுதலும், முலையின் தீயாற் கூடலைச் சுடுதலுஞ் செய்தா ளென்க. " தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்" என வாழ்த்துக் காதையுள் உரைத்தலும் ஈண்டு அறியற்பாலது. 37 - 38 வினை விளை காலம் என்றீர் - நீர் வினை விளை காலம் என்று கூறிப் போந்தீர், யாது அவர் வினை விளைவு என்ன - அவர்க்கு வினையின் விளைவாவது என்னையென்று அடிகள் வினவ, . 38 - 54 விறலோய் கேட்டி - மேலோய் கேட்பாயாக; அதி ராச் சிறப்பின் மதுரை மூதூர்-நடுக்கமில்லாத சிறப்பினையுடைய மதுரையாகிய மூதூரிடத்துள்ள, கொன்றை அம் சடை முடி மன்றப் பொதியிலில் வெள்ளி அம்பலத்து - மன்றமாகிய பொதி யில்களில் கொன்றைமாலை யணிந்த சடை முடியையுடைய இறைவனுறையும் வெள்ளியம்பலத்துள், நள் இருள் கிடந் தேன் - செறிந்த இருளையுடைய அரை யிரவில் துயின்றேனாக, ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - அப்பொழுது அரிய துன் பத்தை யுற்ற வீரபத்தினியின்முன், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி - அந்நகர்க்குக் காவற்றெய்வமாகிய மதுரைமா தெய் வம் வந்து வெளிப்பட்டு, கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் - நினது மிக்க சினத்தால் வெவ்விய அழலை நின் கொங்கை யிடத்தே விளைவித்தோய், முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் - நுங்கட்கு முற்பட்ட நல்வினை தீர்ந்தது ஆகலான், முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு - பசிய தொடியினை யுடையாய் முற்பிறப்பில் நின் கணவனோடு நினக்கு, சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து - கெடாத நல்ல புகழையுடைய கலிங்க நாட்டுச் சிங்கபுரம் என்னும் பதியின்கண், சங்கமன் என்னும் வாணிகன் மனைவி - சங்கமனென்னும் வணிகனுடைய மனைவியானவள், இட்ட சாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபம் இப்பிறப்பில் வந்து மூண்டதாகலின், வார் ஒலி கூந்தல்- நீண்டு தழைத்த கூந்தலையுடையாய், நின் மணமகன் தன்னை- நின் கணவனை, ஈரேழ்நாள் அகத்து எல்லை நீங்கி - இன்றைக் குப் பதினாலாம் நாளில் பகற்பொழுது நீங்கியபின் காண்பை; வானோர் தங்கள் வடிவின் அல்லதை - காணுங்கால் வானோர் வடிவிற் காண்பதல்லது, ஈனோர் வடிவின் காண்டல் இல் என- மக்கள் வடிவிற் காண்பதில்லை யென்று கூற, கோட்டம் இல் கட்டுரை - வஞ்சமற்ற அக்கட்டுரையினை, கேட்டனன், யான் என - யான் கேட்டேனென்று சாத்தன் கூற, விறல் - பெருமை, கேட்டி, முன்னிலை யொருமை வினை எதிர் காலம் பற்றியது, அதிர்வு - நடுக்கம்; 1"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்" என்றாராகலின். பகைவரால் நடுங்காத வென்க; அது, 1 "நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்' என்பதனான் அறியப்படும். சடைமுடி - இறைவனுக்கு ஆகுபெயர். பொது இல்-பொதியில் என மரீஇயிற்று; இது 2"கிளந்தவல்ல" என் னும் அதிகாரப் புறனடையான் அமைக்கப்படும். கொன்றையஞ் சடைமுடி, 3"புன்னையங்கானல்" என்புழிப்போல அம் சாரியை பெற்றது. 4பொதியில் என்பது பாடமாயின் பொதியிலாகிய வெள்ளியம்பலம் என்க. நள் - நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நளி - செறிவு. நள்ளென்னும் ஓசையுமாம். முதிர்வினை - தீவினை யெனக்கொண்டு, அதனால் இங்ஙனம் முடிந்ததாகலின் என் றுரைத்தலுமாம். பைந்தொடியும் கூந்தலும் அண்மைவிளி. எல்லை - பகற்பொழுது. ஈனோர் - இவ்வுலகத்தோர்; ஈன் - இவ்விடம் என்னும் பொருட்டு. (அடி வீரபத்தினி - மறக்கற்புடையாள். கோப்பெருந்தேவி அறக்கற்புடை யாள்; ஆக ஆறிய கற்பும் சீறிய கற்பும் எனக் கற்பு இருவகை. கட்டுரை - பொருள் பொதிந்த சொல்; உறுதியுடைய சொல்லுமாம்.) 55 - 60 அரைசு இயல் பிழைத்தோர்க்கு - அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு, அறம் கூற்று ஆவதூஉம் - அறக் கடவுளே கூற்றமாகும் என்பதுவும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் - புகழமைந்த கற்புடை மகளை மக்களே யன்றித் தேவர் முனிவர் முதலாயினாரும் ஏத்து தல் இயல்பு என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என் பதூஉம் - முன் செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆக - சிற்ப வினை பொருந்திய சிலம்பு காரணமாகத் தோன் றினவாதலின், சிலப்பதிகாரம் என்னும் பெயரால் - சிலப்பதி காரமென்னும் பெயருடன், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என - ஒரு காப்பியமாக நாம் அம் மூன்றுண்மை களையும் நிறுத்துதும் என்று அடிகள் சொல்ல, அரைசு, போலி, கூற்றாவது - கொல்வ தென்றபடி. அறம் கொல்லுமாறு, 5"என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம்" என்பதனானறியப்படும், பத்தினிக்கு, வேற்றுமை மயக்கம். உருத்து - வெகுண்டு என்றுமாம். இரு வினையும் செய்த முறையே வந்து ஊட்டுமென்பாரு முளர். தோன்றினமையின் எனவும் அவற்றை எனவும் விரித்துரைக்க. பாட்டு உடைச் செய்யுள் - இசைப்பாட்டுக்களை இடையே உடைய தொடர்நிலைச் செய்யுள் என்க. உரைப் பாட்டையும் இசைப் பாட்டையு முடைய என ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறியது மிகை, மேல் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பராகலின். 61 - 62 முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது - இவ்வரலாறு தமிழ் நாட்டு முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியதாகலின், அடிகள் நீரே அருளுக என்றாற்கு - அடிகள் நீரே அருளிச் செய்க என்று கூறிய சாத்தற்கு, கெழு வென்னுஞ் சாரியை 1"லனவென வரூஉம் புள்ளி யிறுதி முன்' என்னுஞ் சூத்திரத்து 'அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி' என்பதனால் இகர வீற்றின் முன்னும் வந்தது. புகாரினும் மதுரையினும் வஞ்சியினும் நிகழ்ந்ததாகலின், மூவர்க்கு முரியது என்றார். அடிகள், அண்மைவிளி. அருளுக என்பதன் அகரந் தொக்கது. என்றாற்கு அடிகள் அருள என மேல் வந்தியையும். (அடி. ‘நீரே’ என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருட்டாகக் கொண்டு, 'இச் செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரிய தென்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்து ரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவே மென்பது கருதி, நீரே அருளு கென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன் னாற்கு, அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம் பட்டா ரென்ப தாயிற்று' என்றுரைப்பது சிறப்புடைத்தன்று; என்னை? அடிகளின் மனத்தூய்மையைச் சாத்தனாரும், சாத்தனார் கருத்தை அடிகளும் அறிந்திலர் என்னும் குற்றம் பொருந்து மாகலின். ‘மூவேந்தர் நாட்டினும் நிகழ்ந்த கதையாகலான் ஏனை இரு வேந்தரியல்பும், வேத்தியலும், பொதுவியலும் எல்லா முணர்ந்த நீரே அருள வேண்டும் என்று சாத்தன் சொல்ல’ என்னும் அரும்பத வுரைகாரர் கருத்தே திட்ப முடைத்தாகும் என்க.) இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார். 62 - 63 அவர் மங்கல வாழ்த்துப் பாடலும் - அவர் மனத் தில் மகளிர் வாழ்த்துதலை யுடைய பாடலும், மங்கலம் - கலியாணம். கூறுதற்கு எடுத்துக் கொண்டது கோவலன், கண்ணகி யென்பார் வரலாறாகலின், அவரெனச் சுட்டி யொழிந்தார். (அடி. இதனை மங்கலவாழ்த்துக் காதையு மென்னாது பாடலு மென்றது என்னையோ வெனின்,- இஃது ஆசிரியப் பாவால் வாராது கொச்சகக் கலியால் வருதலானும், கதையையுடையது காதையா மாதலானும், அவ்வாறு இதிற் கதை நிகழ்ச்சி யின்மையானும், வாழ்த்தும் உரையும் பாடலுமாய் வருதலானும் இங்ஙனம் பெயர் கொடுத்தாரென வுணர்க. அஃது அற்றாக; மேலும் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ்வரி, வஞ்சின மாலை, குன்றக் குரவை இவையிற்றையும் காதை யென்றிலரா லெனின், - அவற்றைக் கூறாததும் சில வேறுபாடு கருதிப் போலும்; என்னை வேறுபாடெனின், அவை தத்த முடிவிற் கூறுதும்.) ஆசிரியப் பாவால் வாராதது கதை யன்றென்னில், வாழ்த்துக் காதை என்னும் பெயர் பொருந்துவதன்று; அஃது ஆசிரியப் பாவால் இயலாமையின்; ஆகலின், பெரும்பாலும் கதைத் தொடர் புடையது காதை என்பதே அடிகள் கருத்துப் போலும். 63 - 64 குரவர் மனையறம் படுத்த காதையும் - இரு முதுகுரவரும் இவரை இல்லறத்தில் அடிப்படுத்த வேண்டி வேறுபட இருத்திய காதையும் 64 - 65 நடம் நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - ஐயாண்டில் தண்டியம் பிடித்து ஏழாண்டு நடம் பயின்ற மாதவி மங்கைப் பருவத்தே அரங்கேற்றின காதையும், தண்டியும் - தண்டு; கோல். 66. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும் - அந்திப்பொழு தாகிய மாலையைச் சிறப்புச் செய்த காதையும், சிறப்புச் செய்தல் - புனைந்துரைத்தல் 67. இந்திர விழவு ஊர் எடுத்த காதையும் - அப் பதியின் கண் இந்திரனுக்கு விழாச் செய்த காதையும், 68. கடல் ஆடு காதையும் - விழாவின் முடிவிற் கடலாடின காதையும், 69. மடல் அவிழ் கானல் வரியும் - கடலாடிய கோவலனும் மாதவியும் பூக்களின் இதழ்விரித்த கழிக்கானவிடத்து யாழ் கொண்டு பாடியகானல் வரியும், மடல் - பூ என்ப அரும்பதவுரை. கானல் - கடற்கரைச் சோலை. இஃது இசைப் பாவாற் பெற்ற பெயர். இதனுட் பெரிதும் கதை நிகழாமை உணர்தற்பாற்று. 69 - 70 வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதை யும் - இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும், 70 - 71 தீது உடைக் கனாத்திறம் உரைத்த காதையும் - கண் ணகி தான் கண்ட தீங்கையுடைய கனாவின் திறத்தைத் தேவந் திக்கு உரைத்த காதையும், கனா நிலை யுரைத்தற் பொருண் முடிபினைக் கூறுதலின் இது காதையாயிற் றென்பர் அடியார்க்கு நல்லார். 71 - 72 வினாத்திறத்து நாடுகாண் காதையும் - கவுந்தியடிகள் வினாவின திறத்தையுடைய சோணாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும், கண்ணகி மதுரை மூதூர் யாதென வினாவின திறம் எனலும் பொருந்தும். நாடு - மருத வளஞ் சான்றது. 72. காடுகாண் காதையும் - அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும், காடு - பாலை நிலமாயது. 73. வேட்டுவ வரியும் - வேட்டுவ மகளாகிய சாலினி கொற் றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியும், இது கூத்தாற் பெற்ற பெயர். வரி - வரிக்கூத்து. 73 - 74 தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும் - இதழ் விரிந்த மாலையை யுடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரியிற் சென்று தங்கிய காதையும், தோடு, தோட்டு என விகாரமாயிற்று. கோதை, ஆகுபெயர். 74 - 75 கறங்கு இசை ஊர்காண் காதையும் - முழங்கா நின்ற முரசொலியையுடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் 75 - 76 சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும் - புகழ் மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரிபாற் கவுந்தியடிகள் அடைக் கலங் கொடுத்த காதையும், கொலைக்களக் காதையும் - கோவலன் கொலைக்களப் பட்ட காதையும், 77. ஆய்ச்சியர் குரவையும் - தம் சேரிக்கு உற்பாத சாந்தி யாக மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறை மையும், இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். 77 - 78 தீத்திறம் கேட்ட துன்ப மாலையும் - கோவலன் கொலை யுண்ட தீய செய்தியைக் கண்ணகி கேட்டு அவலித்து அரற்றிக் கவன்று கையாறுற்ற துன்ப வியல்பும், மாலை - தொடர்ச்சியுமாம். 78 - 79 நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும் - நண்பகற் பொழுதில் எல்லாருங் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரினைச் சூழவந்த ஊர் சூழ் வரியும், நடுங்கிய, செய்யிய வென்னும் எச்சம்; கண்ணகி நடுங்கிய என்று மாம். கண்ணகி நாணிறந்து வெளிப்பட்டு ஊர் சூழ வருவதனைப் பத்தினிப் பெண்டிர் கண்கூடாகக் காண்டலின் இஃது ஊர் சூழ் வரியாயிற்று. இதுவும் கூத்தாற் பெற்ற பெயரென்பர் 79 - 80 சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும் - புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும், உரை காதை - வினைத்தொகை ; இறந்த காலம். 80. வஞ்சின மாலையும் - தானுரைத்த வழக்குந் தோற்று உயிருந்தோற்ற நெடுஞ்செழியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய இயல்பும், மாலை - இயல்பு. 81. அழற்படு காதையும் - கண்ணகியின் முலைமுகத் தெழுந்த தீ அவளேவிய இடமெங்கும் தாவி எரித்த காதையும், 81 - 82 அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும் - மதுரைமா தெய்வம் வெளிப்பட்டு அவளது பாவத் தொடர்பினைக் கட்டுரைத்த காதையும், கட்டுரை - விளங்கச் சொல்லுதல் என்பது அரும்பதவுரை. 82 - 83 மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும் - மது வொழுக மலர்ந்த மாலையினையுடைய குறத்தியர் வேங்கை நிழற் கண் அவளைக் கண்டதற்கு உற்பாத சாந்தியாக முருக வேளை நோக்கி அக் குன்றின்கண் ஆடிய குரவையும், இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். 'கோதை யென்று பாடங் கூறிக் கோதைக்கு அவர்களெடுத்த குரவை யெனினும் அமையும்' என்பர் அடியார்க்கு நல்லார். என்று இவை அனைத்துடன் - என்று சொல்லப்பட்ட இவ்விருபத்து நான்குடனே, 84. காட்சி - காட்சிக் காதையும், காட்சி - கல்லினைக் காண்டற்கு மனத்தாற் றுணிதல். குறவர் கையுறையுடன் செங்குட்டுவனைக் கண்டனராயினும் அது பொருளன்றாம். கால்கோள் - கல்லிலே கடவுளின் வடிவெழுதத் தொடங் கிய காதை, கால்கோள் - தொடங்குகை. அடியார்க்கு நல்லார் கற்கொண்ட காதையும் எனப் பொருள் கூறிக், கற்கோள் கால்கோளென விகா ரம் என்றனர் ; 1"கற்கால் கொண்டனன்" என்பராகலின் அது பொருந்துவதன்று. நீர்ப்படை - அங்ஙனம் எழுதின பத்தினிக் கடவுள் வடி வைக் கங்கை யாற்றில் நீர்ப்படுத்தின காதையும், நடுகல் - பத்தினிக் கோட்டத்துத் தெய்வப் படிமத்திலே நங்கையைப் பிரதிட்டை செய்வித்த காதையும், 85. வாழ்த்து - பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்தின காதையும், வரம் தரு காதையொடு - அங்ஙனம் வாழ்த்திய கடவுள் செங்குட்டுவற்கும் அங்கு வந்திருந்த மன்ன ரனைவர்க்கும் வரங் கொடுத்த காதையும், ஒடு, அசை ; எண்ணொடுவுமாம். தருதல் - கொடை ; இடவழு வமைதி. 2" காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு." என்பதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் ஈண்டு அறியற்பாலன. 86. இவ்வாறைந்தும் - என்னும் இம் முப்பதுமாகிய, 87. உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - இடையிட்ட உரையும் பாட்டுமுடைய காப்பியத்தை, உரை - உரைச்செய்யுள். பாட்டு - இசைப்பாட்டு. செய்யுள் பொருட்டொடர்நிலைச் செய்யுள் ; ஆவது பெருங்காப்பியம். 88. உரைசால் அடிகள் அருள : புகழமைந்த இளங்கோவடி கள் அருளிச்செய்ய, 88-89 மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரையின் கட் கூலவாணிகனான சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன் கேட்டனன் ; கூலம் எண் வகைத்து ; அவை - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பன. பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலார் ; 1"பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக' என்பது காண்க. 90. இது - இங்ஙனங் கூறியவிது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென் - இச்செய்யு ளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிதற்குக் கருவியாகிய முறைமையுடைய பதிகம் என்க. தெரிந்த - தெரிதற்குக் கருவியாகிய என்க. பதிகம் எனினும் பாயிரம் எனினும் ஒக்கும். மரபிற் பதிகம் என மாறுக. என், அசை ; இச்சொல் ஆசிரியப்பாவிற்கு முடிபு சிறப்புடைத்தென்பர். இனி, குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருளென்ற வளவிலே செங்குட்டுவன் அதிசயித்து முகநோக்கப் பரிசில் காரண மாக வந்து அவனுழையிருந்த சாத்தன் அதனைக் குறிப்பானறிந்து அது விளைந்ததெல்லாம் யானறிவேன் என்றுரைத்தனன் என்றும், அங்ஙனம் அரசனோடு சாத்தன் கூறக் கேட்ட அடிகள் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென்றார் என்றும் அடியார்க்கு நல் லார் உரை கூறியுள்ளார். காட்சிக்காதையில் மலைவளங் காணச் சென்று பேரியாற்றங்கரையில் தங்கிய செங்குட்டுவனோடு இளங்கோவடிகளும் சென்றிருந்தனர் என்பதற்கு யாதொரு குறிப்பும் இன்றாகலானும், குறவர்கள் செங்குட்டுவனிடம் உரைத்தனரெனவே ஆண்டுக் கூறியிருத்தலானும், வஞ்சிநகரத்தில் வெள்ளி மாடத்தில் ‘இளங்கோ வேண்மாளுடனிருந்தருளி'னன் என்புழி, இளங்கோ என் பதனை வேறு பிரித்து அடிகள் எனக் கூறினும், அவர் உடன் சென் றார் என்பது பெறப்படாமையானும், உடன் சென்றிருப்பினும் குறவர் அவரிடம் கூற அதனைச் செங்குட்டுவன் கேட்டு அதிசயித்த னன் என்பது கூடாமையானும் அவ் வுரை பொருந்தாமையின், அரும் பதவுரையாசிரியர் ஆய்ந்து கூறிய, ‘குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக் குரைத்த குறவர் வந்து, எல்லா மறிந்தோய்! இதனை அறிந்தருள் என்று கூறிப்போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்த சாத்தன் அது பட்டவாறெல்லாங் கூற’ என்னும் உரையினை மேற்கொண்டு, யாமும் இங்ஙனம் உரை கூறினாம் என்க. இதில் (68) ‘கடலாடு காதையும்’ எனக் குறளடியும், (85) ‘வாழ்த்து வரந்தரு காதையொடு’ எனச் சிந்தடியும், (86) 'இவ் வாறைந்தும்' எனக் குறளடியும் வந்து, ஏனையன நேரடியாயின மையின் இது குட்டச் செந்தூக்கு ஆகும் ; இணைக் குறளாசிரி யப்பா எனக் கூறலுமாம். பதிகம் முற்றிற்று. உரைபெறு கட்டுரை 1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியது. 2. அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று. 3. அதுகேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்க ளகவையினாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று. 4. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத் தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே. உரை 1. அன்று தொட்டுப் பாண்டியன் நாடு - பாண்டியனது நாடா னது அன்று தொடங்கி, மழைவறம் கூர்ந்து வறுமை எய்தி - மழை வறத்தல் மிக்கு அதனால் வறுமையுற்று,வெப்பு நோயும் குருவும் தொடர - வெப்பு நோயும் கொப்புளமும் இடை விடாது நலிதலின், கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழி யன் - கொற்கைப் பதியில் இருந்த வெற்றி பொருந்திய வேலை யுடைய வழுதியானவன், நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிர வரைக் கொன்று - பத்தினி தேவிக்கு ஆயிரம் பொற்கொல்ல ரைப் பலியிட்டு, கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய - கள வேள்வியாற் சாந்தி செய்து விழவெடுத்தலானே, நாடு மலிய மழை பெய்து - அவன் நாடு மிகவும் மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது - முற்கூறிய நோயும் வறுமைத் துன்பமும் நீங்கிற்று. அன்று என்றது கதையை உட்கொண்டு நின்றது; காவலன் செங்கோல் வளையக் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்த அன்றுதொட்டு என்றபடி. கூர்தல் - மிகுதல். வெப்பு - தொழுநோய் என்பர் அடியார்க்கு நல்லார். குரு - கொப்புளம்; வெம்மையான் உண்டாவது. வெற்றிவேற் செழியன் - பெயருமாம். மாவினால் ஆயிரம் பொற்தகால்லர் உருச் செய்து பலியிட்டனன்போலும். இவனே நெடுஞ் செழியனுக்குப் பின் அரசுகட்டி லேறி ஆட்சி யெய்தினான் என்பது பின் 1நீர்ப்படைக் காதையால் அறியப்படும். சாத்தனாராற் புறத்திலே பாடப் பெற்ற நன்மாறன் என்பான் இவனேபோலும். சாந்தி - ஊர்ச்சாந்தி. சாந்தி செய்து விழவெடுத்தலால் என மாறுக. இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன. 2. அது கேட்டு - அதனைக் கேட்டு, கொங்கு இளங் கோசர் - கொங்கு மண்டிலத்து இளங்கோக்களாகிய கோசர், தங்கள் நாட்டகத்து - தங்களது நாட்டின்கண், நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய - நங்கைக்குச் சாந்தியும் விழவுஞ் செய்தலான், மழை - தொழில் என்றும் மாறாதாயிற்று - பெய்தற் றொழில் பெய்யும் பருவ நாளெல்லாம் வழுவாதாயிற்று. அது என்பது செழியன் நன்மை செய்து தீமை நீங்கியதனை. முடிவேந்த ரன்மையின் இளங்கோசர் எனப்பட்டனர். எனவே, கோசரென்பார் சிலர் அந் நாட்டினை ஆட்சி புரிந்தா ரென்பது போதரும். 3. அது கேட்டு - அதனைக் கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலை அகழாகவுடைய இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், நங்கைக்கு நாட் பலி பீடிகை கோட்டம் முந்துறுத்து ஆங்கு - அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, அரந்தை கெடுத்து வரம் தரும் இவள் என - துன்பங் களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித்திங்கள் அகவையின் - ஆடித் திங்களிலே, ஆங்கு ஓர் பாடி விழாக்கோள் - தனது நகரின்கண் விழாச் செய்தலை, பன்முறை எடுப்ப - ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை வீற்றிருந்து - மழை குறை வின்றி நிலைபெறுதலானே, வளம் பல பெருகி - பல வளங்களும் நிறைந்து, பிழையா விளையுள் நாடு ஆயிற்று - பொய்யாத விளை வினையுடைய நாடாயிற்று அவனது நாடு. ஈண்டு அது கேட்டு என்றது பாண்டியன் செய்து பெற்றதனைக் கேட்டு என்றபடி. மேல் வருவதுமது. முந்து உறுத்து - முற்படச் செய்து. கோவலன் கொலையுண்டதும் கண்ணகியால் மதுரை எரியுண்டதும் ஆடித் திங்களிலாதலின் அத் திங்களிலே விழாச் செய்தன னென்க. அவை ஆடித் திங்களில் நிகழ்ந்தன வென்பது, 1 “ ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும் உரையு முண்டே” என்பதனாற் பெறப்படும். ஆடித் திங்களில் என்றமையின் ஆட்டை விழா வெனக் கொள்க. அகவை - ஏழனுருபு; அகவயின் என் பதன் போலியுமாம். ஆங்கு, ஓர் - அசைகள். பாடி - நகரி. 4. அது கேட்டு - அதனைக் கேட்டு, சோழன் பெருங்கிள்ளி - பெருங்கிள்ளி யென்னுஞ் சோழன், கோழியகத்து - உறை யூரிடத்தே, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என - இவள் ஓர் பத்தினிக் கடவுளாதலின் எத்திறத்தானும் நமக்கு வரந்தருமெனக் கருதி, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து - நங்கைக்குக் கோயிலும் எடுப்பித்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோன் - நித்தமாகிய அணி விழாவும் நிகழ்வித்தனன். பெருங்கிள்ளி - இவள் பெருநற்கிள்ளி யெனவும் படுவன். கோழி - உறையூர்;’ இதனை, 2"முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம்" என்பதனானறிக. 'எத்திறத்தானு மென்றார்; இவன் பிறந்த உரி மைபற்றி' என்பர் அடியார்க்குநல்லார். உரைபெறு கட்டுரை - உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்பர் அரும்பதவுரையாசிரியர். உரைபெறு கட்டுரை முற்றிற்று. முதலாவது புகார்க் காண்டம் 1. மங்கலவாழ்த்துப் பாடல் (பொதுவற்ற சிறப்பினையுடைய புகார் நகரிலே வண்மையிற் சிறந்த மாநாய்கன் குலக்கொம்பரும், திருமகள்போலும் அழகும் அருந்ததி போலும் கற்பும் உடையவளுமாகிய கண்ணகிக்கும், ஒப்பற்ற செல்வமும் வண்மையுமுடைய மாசாத்துவான் மகனும், மடவார்களாற் செவ்வேள் என்று பாராட்டப்படுஞ் சிறப்பினை உடைய வனுமாகிய கோவலற்கும் மணவணி காண விரும்பிய குரவர்கள் ஒரு பெருநாளில் யானை யெருத்தத்தின்மீது அணியிழையாரை இருத்தி மாநகர்க்கு மணத்தை அறிவித்தனர். பலவகை இயங்களும் ஒலித்தன. திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் நீல விதானத்து நித்திலப் பந்தர்க் கீழ்க் கோவலன் கண்ணகியை மறைவழி மணந்து தீவலஞ் செய்தனன். பொற் பூங் கொடி போன்ற மாதர்கள் மலரும் சாந்தும் சுண்ணமும் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் முதலாய மங்கலப் பொருள்களோடு வந்து, 'காதலனைப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் வாழ்க' என வாழ்த்தி, மலர் தூவி, அருந்ததியன்னாளை அமளியின்கண் ஏற்றினார்கள்.) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 5 காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான். 10 பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான் ஆங்கு, பொதியி லாயினும் இமய மாயினும். 15 பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே. 20 அதனால், நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்; 25 அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ; 30 ஆங்கு, பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு யர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்; 35 அவனுந்தான், மண்தேய்த்த புகழினாள் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக் கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ; 40 அவரை, இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம். 45 அவ்வழி, (வெண்குடை) முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்தது மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து (யெழுந்தது) நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் 50 வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் தகையாளக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பென்னை விரையினர் மலரினர் விளங்கு மேனியர் 55 உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர் 60 போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னாள் காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவி அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி யேற்றினார்; தங்கிய 65 இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒருதனி ஆழி உருட்டுவோ னெனவே. உரை 1-3. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் - யாம் திங்களைப் போற்றுவேம்; திங்களைப் போற்றுவேம்; கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று - தாது பரந்த மாலையையுடைய சோழனது குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இ - இந்த, அம் கண் உலகு - அழகிய இடத்தையுடைய உலகிற்கு, அளித்தலால் - பொதுவற அளி செய்தலால். அடுக்கு, சிறப்பின்கண் வந்தது; மேல்வரும் மூன்றடுக்குகளும் அன்ன. இது, 1" விரவியும் வரூஉ மரபின வென்ப" என்பதனால், பண்பும் பயனும் விரவிவந்த உவமம், உலகை அளித்தலான் என விரித்தலுமாம். இது பாடாண்டிணைக்கண் 2'நடைமிகுத் தேத்திய குடை நிழன் மரபு' என்னுந் துறையாகும். ‘இத்தொடர் நிலைச் செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முற்கூறினார்' என்பர் அடியார்க்கு நல்லார். மங்கல வாழ்த்து என்பதற்கு இரட்டுற மொழிதலால் நூன்முகத் துரைக்கப்படும் மங்கலமாகிய வாழ்த்து என்றலும் பொருந்தும். 3"முந்நீர் நாப்பண்" என்னும் புறப்பாட்டில், ‘உவவுமதி கண்டு விறலியும் யானும் வளவன் வெண்குடையை யொக்குமெனத் தொழுதனம்’ என்பதன் கருத்து இதனுடன் ஒத்திருப்பது காண்க. 4 - 6 ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - யாம் ஞாயிற்றைப் போற்றுவேம்; ஞாயிற்றைப் போற்றுவேம்; காவிரி நாடன் திகிரிபோல் - பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழிபோல், பொற்கோட்டு மேருவலம் திரிதலான் - பொன்னாலாய கொடுமுடியை யுடைய மேருவை வலமாகத் திரிதருதலால். திகிரி - ஆக்கினாசக்கரம். பொன் - பொலிவுமாம். இது தொழில் பற்றிய உவமம். நச்சினார்க்கினியர் புறத்திணையியலுரையில், ‘குடை நிழல் மரபு'’ என்புழி, ‘மரபு என்றதனாற் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க’ என்று உரை கூறி, திகிரியைப் புனைந்துரைத்தற்கு இதனையே எடுத்துக் காட்டியுள்ளார். 7 - 9 மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் - யாம் பெரிய மழையைப் போற்றுவேம்; பெரிய மழையைப் போற்று வேம்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு, அவன் அளிபோல் - அவன் அளி செய்யு மாறுபோல, மேல் நின்று தான் சுரத்தலான் - மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால். நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. வேலி - சூழ்தல். அளி- ஈகை. தான், அசை. மேலே பெயர் கூறினமையின் அவன் எனச் சுட்டி யொழிந்தார். 10 - 12 பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் - யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம்; அழகிய புகாரினைப் போற்றுவேம்; வீங்கு நீர் வேலி உலகிற்கு - கடலை வேலியாக வுடைய உலகின்கண், அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுக லான் - தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து பரந்து நடத்தலால். பூ - அழகு, பொலிவு. பூம்புகார், மெலித்தல் விகாரம். வீங்கு நீர் - மிக்க நீர் ; ஆவது கடல். அவன் குலத்தினைப் புகழ்வார் இதனையும் புகழ்வரென்பது கொள்க. (அடி. இறப்பப் புனைந்துரைத்தற்குக் குடை நிழன் மரபு என்றதனால் திகிரியும் கொடையும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று.) (அரும். இவை நான்கு சிந்தியல் வெண்பாவும் செம்பியனையும் புகாரினையும் சிறப்பித்தன.) 13 - 19 ஆங்கு - ஆதலால், பொதியில் ஆயினும் - பொதியிலும், இமயம் ஆயினும் - இமயமும், பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் - பதியினின்றும் பெயர்தலை யறியாத பழைய குடிகள் பொருந்தின பொதுமை நீங்கிய சிறப்பினையுடைய புகாரும், நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை - ஆதியிற்றோன்றிச் சலிப்பின்றி நிலை பெற்றனவென்று கூறினல்லது, ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் - அவற்றின்கண் உயர்ந்தோர் இருத்த லான் அவற்றிற்கு முடிபுண்டென்று கூறார், முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே - முற்றிய கேள்வியால் அனைத்து முணர்ந்த பெரியோர். அவை அத்தன்மையவாதலானும், உயர்ந் தோருண்மையானும் முழுதுணர்ந்தோர் ஒடுக்கங் கூறார் என்க. ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச் சொல்; 1" கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே" என்னும் புறனடையாற் கொள்ளப்படும். பதியெழு வறியாமைக்குக் காரணம் செல்வ மிகுதியும், பகையின்மையும் ஆம். பொதுவறு சிறப்பு - தனக்கே யுரிய சிறப்பு. நிலீஇயர் என்று பாடங் கொண்டு, நிற்பதாகவென் றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். முடித்த கேள்வி - புலத்துறை முற்றிய கேள்வி; கரை கண்ட கேள்வி. (அடி. உயர்ந்தோர் - முனிவனும், இறைவனும், அரசனும்; இனி, உயர்ந்தோர் - அகத்தியனும், இருடிகளும், பழங்குடியினுள்ளாரும் என்றுமாம்; என்றது இமயத்தோடும் பொதியிலோடுமுள்ள இருடிகளையும் புகாரிலுள்ள வணிகரையும் உவமித்த வாறாம்.) 20. அதனால் - அங்ஙனம் நிலைபேறுடையதாதலால். 21 - 22 நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு - நெடிய சுவர்க்கத்துடனும் நாகருலகத்துடனும் பொருந்திய, போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில் - நீண்ட புகழும் போகமும் நிலைபெற்ற புகார் என்னும் அந்நகரின்கண், அவற்றொடும் ஒக்க மன்னும் புகார் எனலுமாம். எதிர் நிரனிறை. 23 - 24 மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகை வான் கொடி அன்னாள் - விசும்பிடத்து மழையை நிகர்த்த வண்ணம் பொருந்திய கையையுடைய மாநாய்கனது குலத்திற் றோன்றிய பூங்கொம்பும் மேலான பொற்கொடியும் போல் வாள், ஈராறு ஆண்டு அகவையாள் - பன்னீராண்டிற்கு உட்பட்ட பிராயத்தினளாயினள். மாநாய்கன் - சிறப்புப் பெயர் போலும். ஈகை - பொன். மேல் 'பொன்னங் கொடிபோலப் போதந்தாள்' என்பது காண்க. வான் கொடி - வான வல்லியுமாம். அகவை - உட்பட்டது. 25 அவளும் தான் - அவள் தான், உம்மை, இசை நிறை. தான், கட்டுரைச் சுவைபட நின்றது. 26 - 29 போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும் - தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு இவள் வடிவை யொக்குமென்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் - குற்றமில்லாத அருந்ததியின் கற்பு இவள் கற்பை யொக்கு மென்றும், மாதரார் தொழுது ஏத்த - உலகின் மாதரார் தன்னைத் தொழுது ஏத்தும்படி, வயங்கிய பெருங் குணத்துக் காதலாள் - விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி யென்று பெயர் கூறப்படுவாள். திருவினாள், ஒரு சொல். இவள் வடிவு என்று வருவித்துரைக்க. தீது - பிறர்நெஞ்சு புகுதல்; 1" மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர்" என்பது காண்க. திறம் - கற்பு. பெருங் குணத்தாற் காதலிக்கப்படுபவள் என்றுமாம். மன்னும், மன், ஓ என்பன அசைநிலை இடைச்சொற்கள். 30 - 34 ஆங்கு - அப் புகாரினிடத்து, பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த - நெடுநிலம் முழுவதையும் தனியே ஆளும் சோழ மன்னனை முதற் குடியாக வைத்து எண்ணுதலை யுடைய, ஒரு தனிக் குடிகளோடு - ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி, உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - மிக்கோங்கிய செல்வத்தை யுடையான், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் - அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் - அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன். பெருமகன் - கரிகால னென்பர் அடியார்க்கு நல்லார்; அங்ஙனந் துணிதல் சாலாதென்பது பின்னர் விளக்கப்படும். ஒப்பின்மையின் மிகுதி கூறுவார் ஒரு தனிக் குடிகள் என்றார். உயர்ந்தோங்கு, ஒருபொரு ளிருசொல். வருநிதி - கலத்தினுங் காலினும் வருநிதி யென்றுமாம். பலர்க்கு என்னும் பாடத்திற்கு இல்லார் பலர்க்கும் என்றுரைக்க. ஆர்த்தும் - நிறைவிக்கும் என்றுமாம். மாசாத்துவான் - இயற்பெயர். இருநிதிக் கிழவன் - சிறப்புப்பெயர். மாசாத்துவான் குடிப்பெயர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இருநிதி - பெரிய நிதி; சங்கநிதி, பதுமநிதி யிரண்டும் என்றுமாம். தலைவன் பதினையாண்டும் பத்துத் திங்களும் புக்கவனும் தலைவி பதினோராண்டும் பத்துத்திங்களும் புக்கவளும் ஆகல் வேண்டும் என்பராகலின், அகவையான், அகவையாள் என்றார். இதனை, 2" களவினுள் தவிர்ச்சி வரைவின் ஈட்டம் திங்க ளிரண்டின் அகமென மொழிப" என்னும் களவியற் சூத்திர உரையானறிக. 35 அவனுந்தான் - அவன்றான் ஈண்டும் ‘அவளுந்தான்’ என்புழி உரைத்தாங் குரைக்க. 36 - 39 மண் தேய்த்த புகழினான் - பூமி சிறுகும்படி வளர்ந்த புகழையுடையான்; மதிமுக மடவார்தம் பண் தேய்த்த மொழியினார் ஆயத்து - பண்ணை வென்ற மொழியாராகிய மதிபோலும் முகத்தையுடைய மடவார் தமது ஆயத்தின்கண், பாராட்டிக் கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி - உலகிலே கண்டு ஏத்தப்படும் செவ்வேள் என்று பாராட்டி அவன் இசையைப் பரப்பி, காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் - காமக்குறிப்பின் உட்கொண்டு ஏத்துதற் குரியான்; கோவலன் என்பான் மன்னோ - அவன் கோவலனென்று பெயர் கூறப்படுவான். மொழியினாராகிய மடவார் தம் ஆயத்துச் செவ்வேள் என்று பாராட்டி எனக் கொண்டு கூட்டுக. கண்டேத்தும் என்றது வேற்றுமை. செவ்வேளைக் கூறினமையின் கோவலனும் நிறஞ் செய்யனாதல் வேண்டும். போக்கி என்னும் எச்சத்தைத் திரித்து, மடவார் இசை பரப்ப அது கண்ட ஏனோரும் காதன்மையாற் கொண்டு ஏத்தப் படும் கிழமையான் எனலுமாம். கிழமையான் - கொடை, வீரம், அழகு என்றிவற்றிற்குரியான். மொழியினால் என்பது பாடமாயின் மடவார் மொழியினாற் பாராட்டி யென்க. பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற் கூறினார் என்க. (அடி. இனி மடவார் என்பதற்குப் பூமாதும், கலைமாதும், சயமாதும், புகழ்மாதும், புவிமாதும் என்று கூறி, இவர், அழகிற்கும் அறிவுக்கும் ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென் றுட்கொண்டு ஏத்துங் கிழமையான் எனினும் அமையும்.) 40 - 42 அவரை - அத்தன்மையார் இருவரையும், இருபெருங் குரவரும் - பெருமையுடைய இருவர் குரவர்களும், ஒரு பெரு நாளால் - ஒரு பெருநாளிலே, மண அணி காண மகிழ்ந்தனர்- மணக்கோலங் காண விரும்பினர்; மகிழ்ந்துழி - விரும்பியவளவிலே, குரவர் - தந்தையும் தாயும். மணவணி காண என்பது ஒரு சொல்லாய் அவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. நாளால் - நாளில்; வேற்றுமை மயக்கம். மகிழ்தல் - விரும்புதல், உழி - அளவு. 43 - 44 யானை எருத்தத்து அணியிழையார் மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம் - அவர் யானையின் எருத்தத்தின் மேல் மங்கல மகளிரை இருத்தி அம் மாநகர்க்கு இவர் மண மென்னும் மகிழ்ச்சியை ஈந்தார். எருத்தம் - புறக்கழுத்து. ஈந்தார் - அறிவித்தாரென்றபடி; சில மகளிரை அணிந்து யானையேற்றி அறிவித்தல் மரபென்க. 45 - 47 அவ்வழி - அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின; முருடு அதிர்ந்தன - மத்தளம் முதலியன அதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம் - சங்கம் முதலியன முறையே முழங்குத லெழுந்தன; வெண்குடை அரசு எழுந்த தொர் படி எழுந்தன - வெண்குடைகள் அரசன் உலா வெழுந்த படியாக எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது - ஊரிலே மங்கல நாண் வலஞ் செய்தது. முருடு - பத்தலுமாம். ஓர், விகாரம். அகலுள் - தெருவுமாம். எழுந்தது - எழுந்து வலஞ் செய்த தென்றபடி. ‘மங்கலவணி எங்கும் எழுந்தது’ என்ற அடியார்க்குநல்லார் கருத்து விளங்குமாறின்று. 48 - 49 மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணத்து - மாலைகள் பொருந்திய சென்னியையுடைய வயிரமணித் தூண்களை யுடைய மண்டபத்தில், நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ் - நீலப் பட்டினாலாகிய மேற்கட்டியின் கீழ் அமைத்த அழகிய முத்துப் பந்தரிடத்தே, தாழ்தல் - தாங்குதல்; தொங்குதலுமாம். தூண் - மண்டபத்திற்கு ஆகுபெயர். அத்து, சாரியை. பூ - பொலிவு. முத்து, ஒளி பெறுதல் நோக்கி நீல விதானங் கூறினார். அக்காலத்து முத்து நோக்குவார் ஒப்புக்கு நீலப்பட்டினை விரித்து நோக்குவர் என்ப. 50 - 53 வான் ஊர் மதியம் சகடு அணைய - வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போலும் கற்புடையாளை, கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட - பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட் டக் கோவலன் கலியாணஞ் செய்ய, தீவலம் செய்வது - அவ்விருவரும் தீயை வலஞ் செய்யு மிதனை, காண்பார் கண் நோன்பு என்னை - காண்கின்றவர் கண்கள் முன்பு செய்த தவம் யாது காண் என்பாராய், சகடு - உரோகிணி; பண்டைத் தமிழ்மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்தநாளாகக் கொண்டிருந்தனர்; உரோகிணியைக் கூடின நாளில் சந்திரன் உச்சனாகலின் எவ்வகைத் தீங்கும் நீங்கு மென்னும் கருத்தினர் போலும்; 1 "அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய" என்பதுங் காண்க. கலியாணஞ் செய்ய எனவும், அவர் எனவும் சொற்கள் விரித்துரைக்க. மாமுது பார்ப்பான் - பிரமன்; ஈண்டு இருவரையும் இடைநின்று பொருத்துவிக்கும் பார்ப்பானாவன்; 2 பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப என்னுஞ் சூத்திரவுரையில், 'எண் வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திர முதலியனவும் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்த மாதலின் அவை அவன் கண்ண வெனப்படும். ‘இவனைப் பிரசாபதி யென்ப,’ என நச்சினார்க் கினியர் கூறினமை காண்க. பிரசாபதி பிரமன். காண்பார்கள் நோன்பு எனப் பிரித்துரைத் தலுமாம். இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்குநல்லார்; அது தமிழில் ஒப்பு என்று கூறப்படும்; ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது என்பர். 54 - 59 விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் - விளங்குகின்ற மேனியையுடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினராயும், சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் - அண்ணாந்துயர்ந்த இளைய முலையினையுடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப் பெற்ற சுண்ணத் தினராயும், விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர் - அரும்பிய புன்முறுவலையுடைய மகளிர் விளக்கின ராயும் கலத்தினராயும் விரிந்த முளைப் பாலிகை யினராயும் நிறை குடத்தினராயும் வந்து திரண்டனர். விரை - கோட்டம் முதலாயின. உரை - பாராட்டுரை. புகை - அகில் முதலியவற்றானாய நறும்புகை. சுண்ணம் - பூசுகின்ற பொற் பொடி. கலம் - அணிகலன். குடம் - நிறை குடம். நிரையினர் - கூடினர். மேனியரும் முலையினரும் மூரலருமாகிய மகளிர் விரை முதலியன வுடையராய் வந்து கூடினரென்க. விரையினர் மலரினராகிய விளங்கு மேனியர் என்றிங்ஙனம் கூட்டி, இக்கொடியன்னார் என முடிப்பர் அரும்பதவுரையாசிரியர். 60. போதொடு விரிகூந்தல் பொலன் நறுங்கொடி அன்னார் - அப்பொழுது மலரணிந்த தழைத்த கூந்தலையுடைய அழகிய பொற்கொடி போலும் மடந்தையர், 61 - 62 காதலற் பிரியாமல் - இவள் தன் காதலனைக் கண்ணினும் மனத்தினும் பிரியாதிருக்க, கவவுக்கை ஞெகிழாமல் - இவள் காதலனும் இவளை அகத்திட்ட கை நெகிழாதிருக்க, தீது அறுக என ஏத்தி - இருவரும் தம் கூட்டத்திற்கு இடையூறின்றி நெடிது வாழ்வாராக என வாழ்த்தி, சின்மலர் கொடு தூவி - சில மலரைத்தூவி, கவவு - அகத்தீடு; உரிச்சொல். ஏத்தி என்பதற்குத் தம் வழி படு தெய்வத்தை நினைந்து துதித்து என்னலுமாம். மலர்கொடு - மலரை. 63 - 68 அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடத்தையுடைய புவியின் அருந்ததி போல்வாளை. மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய - பொருந்திய நல்ல மங்கல அமளி யிடத்தே ஏற்றினார்; இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை - இவ்விடத்து நின்றும் இமயத்தில் இருத்திய புலி யானது, உப்பாலைப் பொற்கோட்டு உழையதா - அதனது உப்பாலிடத்தாயே நிற்பதாக; எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே - எப்பக்கத் தும் தன் போர் மேம்பட்ட சினம்பொருந்திய வேலையுடைய வளவன் மாறில்லாத தன் திகிரியை உருட்டுவோனாக எனச் சொல்லி யென்க. உலகினருந்ததி, இல்பொருளுவமம். அமளி - பள்ளி; படுக்கை. வேங்கை - புலிக்கொடி. வாள் - கொடுமை; புலிக்கு அடை. பொற்கோடு - பொன்மலை; இமயம்; ஈண்டுச் சுட்டுமாத்திரை. சினவேல், இலக்கணை வழக்கு. உருட்டுவோனாக என விவரிக்க. கொடியன்னார் ஏத்தித் தூவி, வேங்கை உழையதாகச் செம்பியன் உருட்டுவோனாக எனச் சொல்லி, அருந்ததியன்னாளை அமளியேற்றினார் என்க. மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று 2. மனையறம் படுத்த காதை (அரிய தவத்தினைச் செய்தோர் அதன் பயனாய இன்பத்தை நுகர்தற்கு உத்தர குருவில் தோன்றுவது போலப் புகார் நகரிலே கொழுங்குடிச் செல்வர்க்குத் தோன்றிய கண்ணகியும் கோவலனும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் இருந்தபொழுது பலவகைப் பூக்களின் மணத்துடன் கூடித் தென்றல் வந்துற, இருவரும் மகிழ்ச்சி மிக்கு நிலாமுற்றத்தை அடைந்தனர். இருவருடைய தாரும் மாலையும் ஒன்றோடொன்று மயங்கின. கோவலன் தீராக்காதலுடன் கண்ணகியின் முகத்தை நோக்கி, அவளுடைய நுதல், புருவம், கண், இடை, நடை, சொல் முதலியவற்றைப் பொருந்திய உவமைகளாற் புனைந்துரைத்து, மற்றும் "மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே' நின்னை, 'மலையிடைப் பிறவா மணியே யென்கோ? அலை யிடைப் பிறவா அமிழ்தே யென்கோ? யாழிடைப் பிறவா இசையே யென்கோ?" என்று பலபடப் பாராட்டி, அவளுடன் களிப்புற்று ஒழுகுங்கால், கண்ணகி விருந்து புறந்தருதல் முதலிய இல்லறவாழ்க்கையில் மேம்படுதலைக் காண விரும்பிய கோவலன் தாய் பலவகைச் செல்வங்களோடும், உரிமைச் சுற்றமோடும் அவர்களைத் தனியே இருக்கச்செய்ய, வியத்தகு சிறப்புடன் இல்லறம் நடாத்துவதிற் கண்ணகிக்குச் சில யாண்டுகள் கழிந்தன.) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி. 5 அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம் ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக் குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர். 10 உத்தர குருவி னொப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக் கழுவி ராம்பல் முழுநெறிக் குவளை 15 அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப் 20 புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத் திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் 25 கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத் தரமிய மேறிச் சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக் கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி 30 முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும் கதிரொருங் கிருந்த காட்சி போல வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் 35 தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலின் திருமுக நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை குழவித் திங்கள் இமையவ ரேத்த அழகொடு முடித்த அருமைத் தாயினும் 40 உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையிற் பெரியோன் தருக திருநுத லாகென அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப் படைவழங் குவதோர் பண்புண் டாகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் 45 இருகரும் புருவ மாக வீக்க மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலில் தேவர் கோமான் தெய்வக் காவற் படைநினக் களிக்கவத னிடைநினக் கிடையென அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும் 50 இறுமுறை காணும் இயல்பினின் அன்றே அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற் கிடைந்து தண்கான் அடையவும் 55 அன்னநன்னுதல் மென்னடைக் கழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும் அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் 60 மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்காது உடனுறைவு மரீஇ ஒருவா வாயின நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர் மறுவின் மங்கல வணியே யன்றியும் பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல் 65 பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும் எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல் நானம் நல்லகில் நறும்புகை யன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல் திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும் 70 ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல் திங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவும் இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல் மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! 75 அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே யென்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ! யாழிடைப் பிறவா இசையே யென்கோ! 80 தாழிருங் கூந்தல் தையால்! நின்னையென்று உலவாக் கட்டுரை பலபா ராட்டித் தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி 85 மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற் 90 காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென. வெண்பா தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார் காமர் மனைவியெனக் கைகலந்து ? நாமந் தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று. உரை 1 - 7 (உரைசால் .... தருவனரீட்ட) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - கலத்தானும் காலா னும் தந்து ஈட்டுதலால், அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம் - பெறுதற்கரிய பொருளைத் தரும் புதுமையுடைய தேயங்கள் ஒருங்கு கூடியிருந்தாற் போலும் பெருமையுடைய பண்டங்கள், முழங்கு கடல் ஞாலம் முழு வதும் வரினும் - ஆர்கலி சூழ்ந்த ஞாலமுழுதும் ஒருசேர வரினும், வழங்கத் தவாஅ வளத்தது ஆகி - வழங்கத் தொலையாத வளத்தினை யுடையதாகி, உரைசால் சிறப்பின் அரைசு விழை திருவின் பரதர் மலிந்த பயம் கெழு மாநகர் - புகழமைந்த சிறப்பினையுடைய அரசரும் விரும்பும் செல்வத்தையுடைய பரதர் மிக்க பயன் பொருந்திய பெரிய புகார் நகரின்கண், பரதர் - வணிகர் ; கடலோடிகள் என்பது அரும்பதவுரை பரதரால் மேன்மையுற்ற என்றுமாம். ஞாலம், ஆகுபெயர். தேஎம் - தேயம். புகாரின்கண் பிறநாட்டு அரும்பொருள்கள் வந்து தொகுதலை, 1" நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த வாரமு மகிலும் தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும் கங்கை வாரியுங் காவிரிப் பயனும் ஈழத் துணவுங் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெளிய வீண்டி" என்பதனானறிக. கலம் - மரக்கலம். கால் - வட்டை ; சாகாடு. தருவனர், எச்சமுற்று. ஈட்டுதலால் தொக்கன்ன பண்டம் வழங்கத் தவா வளத்ததாகி அரசு விழை திருவினையுடைய பரதர் மலிந்த நகர் என்க. 8 - 11 குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் - குல வொழுக்கத்திற் குன்றாத நற்குடியினராகிய செல்வர்கட்கு, அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப் பத்தோன்றிய - அங்ஙனம் அறத்தின் ஈட்டிய பொருளாலே தலைப்படுதானத்தைச் செய்தோர் எய்தும் உத்தரகுருவை அந் நகர்ஒக்கும்படி தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் - பெரிய மலர்போலும் கண்ணினையுடை யாளும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும், குலவொழுக்கமாவன : 1"நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவு மொப்ப நாடிக், கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது" வாணிகஞ் செய்தல் முதலியன. செல்வர் என்றது இருவர் தந்தையையும். அருந்தவம் - ஈண்டுத் தலைப்படு தானத்தின் மேற்று. முடித்தோர் எய்தும் என ஒரு சொல் வருவிக்க. உத்தர குரு: - போக பூமி யாறனுள் ஒன்று. தலைப்படுதானம் இன்னதென்ப தனை, 2" அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப் புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக் கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின் உள்ளமுவந் தீவ துத்தம தானம்" என்பதனானும், போக பூமியின் இயல்பினை, 3“ பதினா றாட்டைக் குமரனுஞ் சிறந்த பன்னீ ராட்டைக் குமரியு மாகி ஒத்த மரபினு மொத்த வன்பினும் கற்பக நன்மரம் நற்பய னுதவ ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப் போகம் நுகர்வது போக பூமி” என்பதனானும், போக பூமியின் வகையா றணையும், 1" ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம் ஏமத வஞ்சம் இரண வஞ்சம் தேவ குருவம் உத்தர குருவமெனப் போக பூமி யறுவகைப் படுமே" என்பதனானும் அறிக. கய - பெருமை ; 2" தடவும் கயவும் நளியும் பெருமை" என்பது தொல்காப்பியம். கயமலர் - நீர்ப்பூ என்னலுமாம். இவர்கள் தோன்றிப் போகம் நுகர்தலால் புகார் உத்தர குருவை யொத்த தென்க. மாநகர்க்கண் அந்நகர் உத்தர குருவை யொக்கும்படி செல் வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் என்றுரைக்க. 12 - 13 மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி-- எழுநிலை மாடத்து இடை நிலைக்கண்ணே - மயன் நிருமித்து வைத்தாலொத்த அழகிய கால்களையுடைய கட்டிலின்மீது இருந்தவளவில், மயன் - தெய்வத் தச்சன் விதித்தல் - மனத்தால் நிருமித்தல், மணி - பவழம் முதலியவுமாம், நெடுநிலை - எழுநிலை. இடைநிலம் - நான்காம் நிலம். 14 - 25 (கழுநீராம்பல் ........ காதலிற் சிறந்து) கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் சேதாம்பலும் முழுநெறியாகிய செங்கழுநீரும், அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - அரும்பு கட்டவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரையும் ஆகிய, வயற் பூ வாசம் அளைஇ - நீர்ப்பூக்களின் மணத்தினைக் கலந்துண்டு, அயற் பூ - அவற்றின் வேறாய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெண்தோட்டு - மேன்மை பொருந்திய தாழையின் விரிந்த வெள்ளிய தோட்ட கத்தும், கோதை மாதவி சண்பகப் பொதும்பர் - சண்பகக் காவிலுள்ள மாலைபோலும் மாதவிப் பூவினிடத்தும், தாது தேர்ந்து உண்டு - தாதினை ஆராய்ந்து உண்டு போந்து, மாதர் வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் திரிதரு சுரும் பொடு - ஒள்ளிய முகத்தினையுடைய மாதருடைய புரிந்த குழற்சியையுடைய கூந்தலில் உண்டாகிய கலவை மணம் பெறுதற்கு ஏக்கற்றுப் புகுதற்கு வழிகாணாமற் சுழலு கின்ற சுரும் போடும், செவ்வி பார்த்து - செவ்வியறிந்து, மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து - மணிக் கோவையாலே ஒழுங்குபட நிரைத்து வகுத்த அழகினை யுடைய சாளரத்தின் குறிய புழைகளால் நுழைந்து, வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு - வண்டோடும் புகுந்த மணத்தினையுடைய தென்றலைக் கண்டு, மகிழ்வு எய்திக் காதலிற் சிறந்து - மகிழ்ச்சியுற்றுக் கலவியை விரும்பிக் காதல் மிகுதலால், முழுநெறி - இதழொடியாத முழுப் பூ. குவளை-ஈண்டுச் செங் கழுநீர் ; 1குவளைக் கூம்பவிழ் முழுநெறி" என்பதும், அதனுரையும் நோக்குக. சேதாம்பல் ஏனைய போன்று பகலில் மலரும் பூவன்றாயினும் அவை விரியுங் காலத்து இது குவிதலின்மையின் ஒருங்கு கூறினார். பொதும்பர் - மரச் செறிவு. உண்டு என்பதனை முன்னுங் கூட்டி, அளைஇ உண்டு, தேர்ந்துண்டு என்க. மாதவி - குருக்கத்தி. சண்பகத்தோடு மலர்தலின் தேர்ந்துண்டு என்றார், சண்பகம் வண்டுணா மலர் மரமாகலின் வாண்முகத்து மாதர் எனவும், அளகத்து ஏக்கற்று எனவும், புகற்குத் திரிதரு எனவும், மணித்தாமத்து எனவும், மாலை நிரைத்து எனவும் மாறுக. செவ்வி - இவர் மகிழுஞ் செவ்வி. மாலை - ஒழுங்கு. சுரும்போடும் வண்டோடும் புக்க வென்க. மணவாய்த் தென்றல் - மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்; வாய் - இடம். அளைஇ உண்டு தேர்ந்துண்டு ஏக்கற்றுத் திரிதரு சுரும்போடும் வண்டோடும் புக்க தென்றல் என்க. 26 - 27 விரைமலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி - அங்ஙனம் காதல் மிகுதலால் அவர்கள் நிரைத்த நிலைகளையுடைய மாடத்தின் இடை நிலத்து நின்றும் மணத்தினையுடைய மலர்க்கணையோடே காமன் வீற்றிருக்கும் மேனிலமாகிய நிலா முற்றத்தின் மேல் ஏறி, வேனில் - காமன் : ஆகுபெயர். அரமியம் - நிலா முற்றம். 28 - 31 (சுரும்புணக் கிடந்த ..... காட்சி போல) சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை - சுரும்புகள் உண்ணும் படி பரப்பிய நறிய பூக்களை யுடைய சேக்கைக்கண்ணே, முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல - முற்றிய கடலையுடைய ஞாலம் முழுவதையும் விளக்கும் ஞாயிறும் திங்களும் சேர இருந்த காட்சிபோல இருந்து, கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி - கரும்பு வல்லி என் பனவற்றைப் பெரிய தோளிலே யெழுதி, சுரும்புகளுண்டற்குப் பரப்பி வைத்தாற்போலக் கிடந்த நறும் பூஞ் சேக்கை யெனலுமாம், முதிர்தல் - சூழ்தலுமாம். கதிர் - வெங்கதிராகிய ஞாயிறும் தண்கதிராகிய திங்களும். ஒருங்கிருத்தல், இல்பொருளுவமம். போல இருந்து என ஒரு சொல் வருவிக்க. கரும்பும் வல்லியும் சந்தனக் குழம்பால் எழுதப்படுவன. (அடி. கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமே லெழுதி என்பதாயிற்று.) 32 - 37 வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு - வண்டுகள் புரியை நெகிழ்க்க நெடிய நிலவைப்போல விரிந்த வெள்ளிய இதழையுடைய மல்லிகையின் மலர்ச்சியையுடைய மாலையோடே, கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ - இதழொடியாது கட்டின கழுநீர்ப் பிணையலும் குலைந்து அலைய, தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - மார்பிலிட்ட இவ்விரு வகை மாலையும் மயங்கப் பட்டு இருவரும் செயலற்ற புணர்ச்சி யிறுதிக்கண், தீராக் காதல் திருமுகம் நோக்கி-நீங்காத காதலையுடைய திருமகளைப் போல்வாளுடைய முகத்தை நோக்கி, கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை - முன்னர்க் கருதாத பொருள் பொதிந்த உரையைக் கோவலன் கூறாநிற்பன்: நிலா - ஒளியுமாம். தாரும் மாலையும் மயங்கி என்பதனாற் புணர்ச்சி கூறிற்று ; இடக்கரடக்கு. கையறுதல் - கலவியால் அவசமுறுதல். காதலால் என விரித்தலுமாம். திரு - திருப்போல் வாள். ஓர், அசை. குறியா - தன் அறிவு முதலியவற்றைக் கருதாத என்றுமாம். கட்டுரை - நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரை. 38 - 41 குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்-பிறைமதியானது இமையவர் ஏத்தா நிற்க இறைவன் தன் முடிக்கு அழகு செய்தல் காரணத்தாற் சூடிய அருமை யுடையதாயினும், உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகென - அது நின்னோடு உடன்பிறப்பாகலின் நினக்கு உரித் தாதலால் அப்பெரியோன் அதனை நினக்குத் திருநுதலாகத் தரக் கடவன்; திங்கட் குழவியென்றது 1"சொல்லிய வல்ல பிற வவண் வரினும்" என்னும் மரபியற் புறனடையான் முடியுமென்பர் அடியார்க்கு நல்லார் ; 1" பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே " என்னுஞ் சூத்திரத்து, ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையு மென்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும் என முடிப்பர் பேராசிரியர். இமையவ ரேத்தல் 2"அப்பிறை பதினெண் கணனு மேத்தவும் படுமே என்பதனானுமறிக. உரிது - உரித்து. பெரியோன் - மாதேவன்; இறைவன். திருநுதலாக வென்று தருக என்க. பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் திருமகளாக மதித்து இங்ஙனங் கூறினான். (அடி. தருக வென்றது சூடின பிறை இரண்டு கலையாதலின், அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருகவென்பது கருத்து; என்னை ? 3‘மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப், பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக், கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்’ என்றாராகலின். இதனான் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ் வுறுப்புக்கட் கேற்பத் திருத்தி ஈக்க அளிக்க என்பதாயிற்று ; என்றது, கரும்பிற்கு நிறனும், வச்சிரத்திற்கு நேர்மையும் உண்டாக்கி யென்றவாறு. 42 - 45 அடையார் முனையகத்து அமர் மேம்படுநர்க்குப் படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்குவ தோர் முறைமை அரசர்க் குண்டாதலின், உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவமாக ஈக்க - அனங்கன் போர் செய்தற்கு எடுத்த பெரிய கரும்புவில் ஒன்றையும் நினக்குக் கரிய இரு புருவமாகத் திருத்தித் தரக்கடவன்; ‘ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் என்றது சேம வில்லையுங் கூட்டி’ என அடியார்க்கு நல்லார் கூறினர் ; பின், வேலொன்று கண்ணிரண்டா ஈத்தது என வருதலின், இதனையும் அவ்வாறு கோடல் பொருந்தும். மற்றும் அவர், ‘முனிவராகிய முரட் பகையை அழித்தற்கு வல்வில்லே வேண்டுதலின், ஒரு பெருங் கருப்புவில் லென்றார்’ என்று கூறியதும் ஈண்டைக்குப் பொருந்துவ தன்று ; காமவேள் தன்னுடன் செய்யும் போரில் அவற்கு வென்றி தருவாளாகக் கொண்டு இங்ஙனங் கூறினானென்க. 46 - 48 மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் - மூவாமைக்கு ஏதுவாகிய அமிழ்திற்கு நீ முற்பிறத்தலால், தேவர் கோமான் - தேவர்க்கரசனாகிய இந்திரன், தெய்வக் காவற் படை - அசுரரை யழித்துச் சுரரைக் காத்தற்கெடுத்த வச்சிரப் படையை, நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடையென - அதன் இடை நினக்கு இடையாகவெனத் திருத்தித் தரக் கடவன் ; மூவா என மூப்பினை யொழித்தல் கூறவே இறப்பினை யொழித்தலும் கூறிற்றாம். நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினுமமையும். வச்சிரம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியா யிருத்தலின் அதன் இடையை மகளிர் இடைக்கு உவமங் கூறுவர். ஆக வென ஒரு சொல் வருவிக்க. 49 - 52 அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும் - ஆறு திருமுகத்தையுடைய ஒப்பில்லானாகிய முருகன் இவ்வாறு ஓர் உரிமையின்றியும், இறுமுறை காணும் இயல்பினின் அன்றே - யான் துன்புறு முறைமையைத் தன் கண்ணாற் காண்டல் கார ணத்தானன்றே, அம் சுடர் நெடுவேல் ஒன்று - தன் கையிலுள்ள அழகிய சுடரையுடைய நெடிய வேலொன்றையும், நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது - நின் முகத்திலே சிவந்த கடையையுடைய குளிர்ச்சி பொருந்திய கண் இரண்டுமாம்படி ஈத்தது ; பெறுமுறையின்றியும் - உரிமையின்றியும் ; தனக்குப் பெறுங் கூறு ஒன்றில்லை யாகவும் எனினு மமையும். இறுமுறை - வருந்து முறைமை ; சாக்காடுமாம் ; இது, 1" கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின் " என்றாற் போல்வது. இரண்டா ஈத்தது - இரண்டாக நிருமித்துத் தந்தது ; 2" ஓக்கிய முருகன் வைவே லோரிரண் டனைய கண்ணாள் " என்பது காண்க. ஈத்தது, தொழிற் பெயர். ஒருவன் ஈத்தது காணும் இயல்பினின் என முடிக்க. இவற்றுட் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி, இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழு தப்படாதனபாராட்டுவான். 53 - 61 (மாயிரும் பீலி .... ஒருவாவாயின) மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கான் அடை யவும் - கரிய பெரிய பீலியையுடைய நீல மணி போலும் நிறத்தையுடைய மயில்கள் நின் சாயற்குத் தோற்றுத் தண்ணிய காட்டிடத்தே போய் ஒடுங்காநிற்கவும், அன்னம் நன்னுதல் மென்னடைக்கு அழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும் - நல்ல நெற்றியை யுடையாய், அன்னங்கள் நின் மென்மை யுடைய நடைக்குத் தோற்று நல்ல நீரையுடைய வயல்களிற் செறிந்த மலரிடையே புக்கு மறையவும், அளிய தாமே சிறு பசுங்கிளியே - சிறிய பசிய கிளிகள் தாம் அளிக்கத்தக்கன ; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் - அவை குழலினிசையையும் யாழினிசையையும் அமிழ்தத்தையும் கலந்து குழைத்தாலொத்த நினது முதிராத மழலைச் சொற்குத் தோற்றனவாகியும், மட நடை மாது நின் மலர்க் கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா வாயின- மடப்பத்தையுடைய நடையினையுடைய மாதே, நின்னை வழிபட்டு அச் சொல்லினைக் கற்கக் கருதி நினது மலர் போலுங் கையினின்றும் நீங்காவாய் நின்னுடனே வெறுப்புத் தோன்றாமல் உறைதலையும் பொருந்திப் பிரியாவாயின ஆகலான். மாயிரு என யகர உடம்படு மெய் பெற்றது. 1"கிளந்தவல்ல" என்னும் புறனடையான் அமையும். மணி - நீல மணி. தண் கான் - இழிந்தகாடு. நளி - செறிவு. செறிதல் - ஒடுங்குதல், குழைத்த - குழைத்தா லொத்த ; இல்பொருளுவமம்; குழைவித்த எனினுமமையும் ; வருத்திய என்றபடி. நன்னுதல், மாது, மஞ்ஞை அடையவும் அன்னம் செறியவும், கிளி வருந்தினவாகியும் நீங்காது மரீஇ ஒருவாவாயின ; ஆகலின் அவை அளிக்கத்தக்கன ; என வினை முடிபு கொள்க. 62 - 64 நறுமலர்க் கோதை - நறிய மலரை யணிந்த கோதையே, நின் நலம் பாராட்டுநர் - நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், மறுஇல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நினது புனையாத அழகிருக்கவும் அஃதன்றி, பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல் - வேறு சில அணிகளை அணிந்த தனாற் பெற்றது யாதோ ; நலம் பாராட்டுநர் - ஒப்பனை செய்வார், மங்கலவணி - இயற் கையழகு; மாங்கலிய மென்பாருமுளர். அணிய - அணிதலால். 2" உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்" என்பது ஒப்பு நோக்கற்பாலது. 65 - 66 பல் இருங் கூந்தற் சின்மலர் அன்றியும் - பலவகைத்தாகிய கரிய கூந்தலில் மங்கலமாகச் சில மலரைப் பெய்த லன்றியும், எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல் - ஒளியுடைய அவிழ்கின்ற மாலையைப் புனைதற்கு அம் மாலையோடு அவர்கள் என்ன உறவுடையார்களோ ; 67 - 68 நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவர், கூந்தற்கு நாற்றமுடைய நல்ல அகிற்புகையை ஊட்டுதலன்றியும், மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - மான்மதச் சாந்தை அணிதற்கு அதனோடு தமக்குளதாகிய கண்ணோட்டம் யாதோ ; நானம் - நெய்யுமாம். மான்மதம் - கத்தூரி, வந்ததை - பொருந்திய கண்ணோட்டம் ; வந்த உறவு எனலுமாம். 69 - 70 திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர், முலைத்தடத்தின்மேல் தொய்யி லெழுதுத லன்றியும், ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் - தனி முத்து வடத் தைப் பூட்டுவதற்கு அதனோடு அவர்க்குண்டான உரிமை யாதோ ; திரு - முலைமேற் றோன்றும் வீற்றுத் தெய்வம் என்பர்; 1"ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே" என்றார் சிந்தா மணியிலும். தடம் - பரப்பு. காழ் - வடம். முத்தக் காழ் என மாறுக. 71 - 72 திங்கள் முத்து அரும்பவும் - மதிபோலும் முகத்தில் முத்துப் போலும் வியர் தோன்றவும், சிறுகு இடை வருந்தவும்- நுண்ணிய இடை ஒசியவும், இங்கு இவை அணிந்தனர் - இவ் வுழி இவற்றை அணிந்தாராகலின், என் உற்றனர்கொல் - அவர்கள் என்ன பித்தேறினார்களோ ; திங்கள் முத்து என்பன காதலும் நலனும் நிலைக்களனாகத் தோன்றிய 2பண்புவமத் தொகை ; குறிப்பினாற் பொருள் உணர நின்றன ; ஆகுபெய ரென்பாருமுளர். மங்கலவணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலுமே பாரமாய் அரும்பவும் வருந்தவும், பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தார் என முற்கூறியவற்றைக் கருதிக் கூறியவாறு. 73 - 74 மாசு அறு பொன்னே - கட்கு இனிமையாற் குற்ற மற்ற பொன்னை யொப்பாய், வலம்புரி முத்தே - ஊற்றின் இன் பத்தால் வலம்புரி யீன்ற முத்தை யொப்பாய், காசு அறு விரையே - உயிர்ப்பின் இனிமையாற் குற்றமற்ற விரையை யொப்பாய், கரும்பே - சுவையினிமையிற் கரும்பையொப்பாய், தேனே - இனிய மொழியையுடைமையால் தேனை யொப்பாய், வலம்புரிமுத் தென்றதனால் மரபின் தூய்மையுங் கூறினான் : 1"வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்" என்பது காண்க. தேன் - யாழின் நரம்பிற்கு ஆகுபெய ரென்னலுமாம். 2"நரம்பார்த்தன்ன இன்குரற் றொகுதி" என்றார் நக்கீரனாரும். ஒளியும் ஊறும் நாற்ற மும் சுவையும் ஓசையுமாகிய ஐம்புலனுங் கூறி நலம் பாராட்டினான் ; 3“ கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள” என்னும் வள்ளுவர் வாய்மொழியுங் காண்க. 75 - 76 அரும்பெறல் பாவாய் - பெறுதற்கரிய பாவையே, ஆர் உயிர் மருந்தே - அரிய உயிரை நிலைபெறச் செய்யும் மருந்தே, பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - பெருங் குடிப் பிறந்த வணிகனுடைய பெருமை பொருந்திய மடப்பத்தை யுடைய புதல்வியே, காட்சியின் உயிர் மயக்குறுதலிற் கொல்லியிற் பாவாய் என்றும், அவ்வாறு அழியுமுயிரை இமைப்பிற் றருதலின் ஆருயிர் மருந்தே என்றுங் கூறினான். உயிர் மருந்து - மிருத சஞ்சீவினி என்பர். 77 - 81 மலையிடைப் பிறவா மணியே என்கோ - மலையிற் பிறவாத மணியே என்பேனோ, அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - கடலிற் பிறவாத அமிழ்தே என்பேனோ, யாழிடைப் பிறவா இசையே என்கோ - யாழிற் பிறவாத இசையே என் பேனோ, தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை என்று - நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை என்று, உலவாக் கட் டுரை பல பாராட்டி - தொலையாத கட்டுரை பலவற்றால் நலம் பாராட்டி, அலை, ஆகுபெயர். தையால் நின்னை என்கோ என்கோ என்கோ என்று பாராட்டி யென்க. (அடி.. மலையிடைப் பிறக்கு மணி குழையாமையின் அதிற் பிறவா மணியே யென்பேனோ, அலையிடைப் பிறக்கும் அமிர்திற்கு இவ்வடிவின்மையின் அதனிற் பிறவாத அமுதே யென்பேனோ, யாழ் கட்கின்னா தாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனோ வெனத் தெரிதரு தேற்றவுவமை யென்னும் அலங்காரமும், மலை கடல் என விரோதமும், பின்வருநிலை யென்னும் அலங்காரமும் புலப்படுத்தினா ரென வுணர்க.) 82 - 83 தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி - விளங்குகின்ற பூங் கொத்துக்களாலாகிய கோதையை யுடையாளோடும் இன்பத்தில் மிக்கு, வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல் வுழி நாள் - விளங்குகின்ற இணர்த் தாரினை யுடையோன் மகிழ்ந்து செல்லா நின்ற நாட்களில் ஒருநாள், தயங்கல், வயங்கல் இரண்டும் விளக்கமென்னும் பொருளன; இங்ஙனம் வருவனவற்றைப் பரியாயவலங்கார மென்பர் அடியார்க்கு நல்லார். 84 - 90 வார் ஒலி கூந்தற் பேரியற் கிழத்தி - நீண்ட தழைத்த கூந்தலையுடைய இருநிதிக் கிழவன் மனைக்கிழத்தி, மறப்பருங் கேண்மையோடு - மறத்தலரிய சுற்றந்தழாலோடே, அறப் பரிசாரமும் - அறநெறியாளரை ஓம்பலும், விருந்து புறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கை - விருந்தினரைப் பேணுதலு மாகிய இவற்றுடன் கூடிய பெருமையுடைய இல்வாழ்க்கையை, வேறுபடுதிருவின் வீறுபெறக் காண - நானாவிதமான செல்வத் தோடே நடத்திக் கைவந்து உயர்ச்சி பெறுதலைக் காண வேண்டி, உரிமைச் சுற்றமோடு ஒரு தனி புணர்க்க - அடிமைத் திர ளோடே வேறாக இருக்கச் செய்ய, யாண்டு சில கழிந்தன இற் பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென் - காணத்தக்க சிறப்பினையுடைய கண்ணகிக்குப் பெருமையுடைய இல்லறத்தை நடத்தும் உரிமைப்பாட்டுடன் சில ஆண்டுகள் கழிந்தன. வாரொலி கூந்தல் - கண்ணகியை என்றுமாம். ‘கூந்தலை யுடைய பேரியற்கிழத்தியெனினு மமையும்’ என அடியார்க்கு நல் லார் கூறுதலின், ‘கூந்தலைப் பேரியற் கிழத்தி’ எனப் பிறர் பாடங் கொண்டமை பொருந்துவதன்று. ‘பேரிற் கிழத்தி’ என்பதும், ‘அறப்பரிகாரம்’ என்பதும் அரும் பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். அறப்பரிகாரம் - துறந் தாரைப் பூசித்து அறத்தைப் பரிகரித்தல் என்பர். மறப்பரிய என்ற அடையைப் பிறவற்றோடுங் கூட்டுக. அறப்பரிகாரம் என்பதில் அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கெதிர்த லும் அடங்கும்; பின், 1கொலைக்களக் காதையிற் கண்ணகி கூறுமாறு அறிக. புறந்தரூஉம் - புறந்தரலும் என்க; புறந்தரல் - பேணுதல். ஏனை மூன்று நிலையினரையும் வறியர் முதலானாரையும் வேண்டுவன தந்து புரக்கும் அன்பும் அருளுமுடைமையால் பெருந்தண் வாழ்க்கை யென்று பெயர் கூறினார். என், அசை. செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்ந்து சிறந்து ஏறிக் காட்சிபோலச் சேக்கையிலிருந்து எழுதி மயங்கிக் கையற்று முகநோக்கிக் கட்டுரை கூறுகின்றவன் பல பாராட்டி மகிழ்ந்து செல்வுழி ஒருநாள் பேரியற் கிழத்தி ஒரு தனி புணர்க்கக் கண்ணகிதனக்குப் பெருங் கிழமையோடு ஆண்டு சில கழிந்தன எனக் கூட்டுக. எல்லாவடியும் நேரடியால் வந்து முடிதலின், இது நிலைமண்டில வாசிரியப்பா. வெண்பாவுரை (தூம ........... போனின்று.) மண்மேல் நிலையாமை கண்ட வர்போல் நின்று - புவியின்கண் பொருள் முதலியவற்றின் நிலை யாமையைக் கண்டு அவை உள்ளபொழுதே அனைத்தின்பமும் துய்த் தற்கு விரைதல் போல் நின்று, காமர் மனைவியெனக் கைகலந்து - காமனும் இரதியும்போலக் காதலால் ஒருவர் ஒருவரிற் கலந்து, தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார் - சினத்தை யுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்கா ராய், நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் - அழகு கெடாத இன்பத்தை யெல்லாம் துய்த்தனர் (கோவலனும் கண்ணகி யும்) என்க. மனையறம்படுத்த காதை முற்றிற்று. 3. அரங்கேற்று காதை (காவிரிப்பூம் பட்டினத்திலே கணிகையர் குலத்திற் றோன்றிய மாதவி யென்பாள் ஆடல் பாடல் அழகு என்னும் மூன்றிலும் சிறந்து விளங்குதற்கேற்றவளாய் இருந்தமையின், அவளை ஐந்தாம் ஆண்டில் தண்டியம் பிடிப்பித்து, ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீ ராண்டெய்தியபின் அரசற்கு அவை யரங்கேறிக் காட்டலை விரும்பி, ஆடலாசான், இசையாசிரியன், இயற்றமிழ்ப் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழாசிரியன் என்போர் ஒருங்கு கூடி, தக்க நிலத்திலே சிற்பநூன் முறைப்படி இயற்றப் பட்டதும், விளக்குகள் ஏற்றியும் எழினிகள் வகுத்தும் விதானம் கட்டியும் முத்துமாலை நாற்றியும் புனையப்பட்டதுமாகிய அரங்கின் கண், மாற்றரசரின் குடைக்காம்பு கொண்டு நவமணி பதித்தியற்றியதும், அரசன் கோயிலில் வழிபாடு செய்து இருத்தப்பெற்றதுமாகிய தலைக் கோலினை நல்ல நாளிலே பொற்குடத்தேந்தி வந்த புண்ணிய நன் னீரால் மண்ணிய பின்பு மாலை யணிந்து அரச யானையின் கையிற் கொடுத்தனர். பின்பு அவர்கள் அவ்வியானையுடன் அரசனும் ஐம் பெருங்குழுவும் உடன்வர வலமாக வந்து வீதியிலே தேரின்மிசை நின்ற பாடுவான் கையில் அதனைக் கொடுப்பித்து, நகரியை வலம் வந்து அரங்கிற் புகுந்து எதிர்முகமாக அதனை வைத்தனர். வைக்க, மாதவியானவள் அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி, வலத் தூணைப் பொருந்தி, அரசன் முதலாயினார் அவையில் அமர்ந்த பின் குயிலுவக் கருவிகளெல்லாம் கூடி நின்றிசைக்க மங்கலமாகிய பாலைப் பண்ணைப் பாடி, தேசியும் வடுகுமாகிய அகக்கூத்து புறக்கூத்துக்களை நூன்முறை வழுவாது பொன்னா னியன்ற பூங்கொடி நடிப்பதுபோல் அவினயந் தோன்ற ஆடிக் காட்டினாள். அதனால் அவள் அரசனது பச்சைமாலையும் தலைக்கோற் பட்டமும் பெற்றதுடன், தலைவரிசை யாக ஆயிரத்தெண்கழஞ்சு பொன் பரியம் பெற்றாள். அம் மாலையை ஓர் கூனி கையிற்கொடுத்து ‘இம் மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது ; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்’ எனக் கூறி, நகர நம்பியர் உலா வரும் வீதி யில் நிற்கச் செய்ய, கோவலன் அம் மாலையை வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்து அவளை அணைந்த அன்றே மயங்கி, தன் மனைவியையும் மனையையும் மறந்து, மாதவியை ஒருபொழுதும் விட்டு நீங்கா விருப்புடையனாயினன். (இக்காதையில் இசை நாடகங் களின் இயல்புகளும், அவற்றிற்கு அங்கமானவைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன) தெய்வ மால்வரைத் திருமுனி யருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் 5 சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல் 10 ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும் 15 விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு ஆடலும் பாடலும் பாணியுந் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங் காலைப் பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங் கொண்ட வகையிந்து கூத்துவரு காலைக் 20 கூடை செய்தகை வாரத்துக் களைதலும் வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும் பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி 25 ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும் யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந் தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித் 30 தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் தேசிகத் திருவின் ஓசை யெல்லாம் ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக் கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை 35 வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையொன் றானும் இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் 40 நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு அசையா மரபி னதுபட வைத்து மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும் 45 ஆடல் பாடல் இசையே தமிழே பண்ணே பாணி தூக்கே முடமே தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்தாங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி 50 வாங்கிய வாரத்து யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக் கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச் சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும் 55 அத்தகு தண்ணுமை அருந்தொழின் முதல்வனுஞ் சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின் 60 ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப் பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு இசையோன் பாடிய இசையி னியற்கை 65 வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி இசைபட வைத்து வார நிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக வழுவின்று இசைக்குங் குழலோன் றானும் 70 ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஒரேழ் பாலை நிறுத்தல் வேண்டி வண்மையிற் கிடந்த தார பாகமும் மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் 75 கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத் தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந் தன்கிளை அழிவுகண் டவள்வயிற் சேர ஏனை மகளிருங் கிளைவழிச் சேர 80 மேலது உழையிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை யாயது இறுதி யாதி யாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக் 85 குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின் முன்னதன் வகைய முறைமையில் திரிந்தாங்கு இளிமுத லாகிய எதிர்படு கிழமையுங் கோடி விளரி மேற்செம் பாலையென நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின் 90 இணைநரம் புடையன அணைவுறக் கொண்டாங்கு யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் குழன்மேற் கோடி வலமுறை மெலிய வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன் 95 எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழிவகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக் கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு நூனெறி மரபின் அரங்கம் அளக்குங் 100 கோலள விருபத்து நால்விர லாக எழுகோ லகலத் தெண்கோல் நீளத் தொருகோல் உயரத் துறப்பின தாகி உத்தரப் பலகையோ டாங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோ லாக 105 ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்துத் தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங் 110 கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப் பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த 115 சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கி காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்த னாகென 120 வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணிய பின்னர் மாலை யணிந்து நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு 125 முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுங் தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் 130 குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும் 135 சீரியல் பொலிய நீரல நீங்க வாரம் இரண்டும் வரிசையிற் பாடப் பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங் கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங் குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் 140 தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை ஆமந் திரிகையோ டந்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக் 145 கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி வந்த முறையின் வழிமுறை வழாமல் அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பணமேல் 150 நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து மூன்றளந் தொன்று கொட்டி அதனை ஐதுமண் டிலத்தாற் கூடை போக்கி வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை ஆறும் நாலும் அம்முறை போக்கிக் 155 கூறிய ஐந்தின் கொள்கை போலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றைப் பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக் காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன் 160 இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த 165 வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து நகர நம்பியர் திரிதரு மறுகிற் பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த 170 மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமனை புக்கு மாதவிதன்னொடு அணைவுறு வைகலின் அயந்தனன் மயங்கி விடுத லறியா விருப்பின் னாயினன் 175 வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென். வெண்பா எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும் பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் மண்ணின்மேற் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கின் வந்து. உரை கூத்தியது அமைதி 1 - 7 தெய்வ மால்வரைத் திருமுனி அருள - தெய்வத் தன்மை யுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் உள்ள அகத்திய முனிவன் அருள் செய்தலால், எய்திய சாபத்து இந்திர சிறுவ னொடு - முன்பு அவனால் எய்திய சாபத்தையுடைய இந்திரன் குமாரனாகிய சயந்தனோடும், தலைக்கோல் தானத்துச் சாபம் நீங் கிய - நாடக அரங்கின் கண்ணே சாபம் நீங்கப் பெற்ற, மலைப் பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கை யொடு பொருந்திய - மாறுபடுத்தலரிய சிறப்பினை யுடைய அரம் பையரில் வரிசையிற் குன்றாத நாடகத் தொழி லொடு பொருந் திய உருப்பசியாகிய அம் மாதவி மரபில் வந்த, பிறப்பிற் குன் றாப் பெருந்தோள் மடந்தை - பிறப்பிற் குன்றுத லில்லாத பெரிய தோளையுடைய மடந்தையாகிய, தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை - தாதுவிரியும் பூக்களை யணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவியை, முனிவருட் சிறந்தோனாகலின் அகத்தியனைத் திருமுனி என்றார். அருள - சாபமிட்டருள வென்றுமாம். தலைக்கோற்றானம் - நாடக வரங்கு. இந்திர சிறுவனொடு சாபம் நீங்கிய உருப்பசி யென்க. ‘செய்கையொடு பொருந்திய’ என்பதன்பின், உருப்பசியாகிய அம் மாதவி மரபில்வந்த என விரித்துரைக்க. ‘சாப நீங்கிய’ என்பதன் பின் அங்ஙனம் விரித்துரைத்து, வானவர் மகளிர் என்பதற்குத் தளியிலார் என்று பொருள் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். சயந்தனும், உருப்பசியும் சாபம் பெற்றதும், அதினீங்கியதுமாகிய வரலாறு பின்னர்க் 1கடலாடு காதையானும், அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய பழைய மேற்கோளானும், விளக்க முறும்; ஆண்டுக் காண்க. அருளால் என்பதூஉம் பாடம். 8 - 9 ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் - கூத்தும் பாட்டும் அழகுமென்று சொல்லப்பட்ட இம் மூன்றினுள் ஒன்றும் குறைவுபடாமல், இவை குறைவு படாமைக்குக் காரணமுடையளாகலின் என்க.. 10 - 11 ஏழாண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - ஐயாண்டில் தண்டியம் பிடிப் பித்து ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண்டில் வீரக்கழல் சூழ்ந்த காலினையுடைய அரசற்கு அவனது அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, தண்டியம் - கோல். மன்னன் - சோழன் கரிகாற்பெருவளத் தான் என்பர் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும். ஈண்டுக் கரிகாலன் என்று பெயர் கூறப்படாமையானும், 2" செருவெங் காதலின் திருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்" என இந்திரவிழவூரெடுத்த காதையினும், 3" மன்னன் கரிகால் வளவன்நீங் கியநாள் இந்நகர் போல்வதோர் இயல்பின தாகி" என மணிமேகலை யுள்ளும் கரிகாலன் வடதிசைக்கட் படையெடுத்துச் சென்றமை கூறப்பட் டிருத்தலன்றி, நிகழ்காலத்தில் வைத்து அவன் யாண்டுங் கூறப்படாமையானும், மதுரைக் காண்டத் திறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும், வஞ்சிக் காண்டத் திறுதிக் கட்டுரையில் சேரன் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க் காண்டத் திறுதிக் கட்டுரையில் சோழனொருவனையும் பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்பொழுதிருந்தா னென்று துணிதல் சாலாதென்க. பரதசேனாபதியார் கூறிய, பின்வரும் வெண்பாக்கள் ஈண்டு அறியற்பாலன : " பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட் புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே வண்டிருக்குங் கூந்தன் மடவரலை ஐயாண்டில் தண்டியஞ்சேர் விப்பதே சால்பு" " வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்-கட்டளைய கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச் சோதித் தரங்கேறச் சூழ்" " நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள் சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப்-பன்னிரண்டாண் டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும் வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு." (ஆடலாசிரியன் அமைதி) 12 - 25 இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து - அகக்கூத்தும் புறக்கூத்துமாகிய இருவகைக் கூத்தினிலக் கணங்களையும் அறிந்து, பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து - அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துக்களையும் விலக்குறுப்புக் களுடன் புணர்க்க வல்லனாய், பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் - அல்லியம் முதற் கொடுகொட்டி யீறாய்க் கிடந்த தெய்வ விருத்தி யாகிய பதினொரு கூத்துக்களையும் அக்கூத்துக் களுக்குரிய பாட்டுக்களையும் அக்கூத்துக்களின் விகற்பங்களுக் கெல்லாம் அமைந்த வாக்கியங்களின் கூறுகளையும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு - விதித்தல் மாட்சிமைப் பட்ட நூலின்வழியே விளங்க வறிந்து, ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத் துங்காலை - ஆடலும் பாடலும் தாளங்களும் தாளங்களின் வழி வரும் தூக்குக்களும் தம்மிற் கூடிய நெறியினவாக நிகழ்த்துமிடத்து, பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்டவகை அறிந்து - பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கினையும் கொள்ளுதற்குரிய வகையினை அறிந்து, கூத்து வருகாலை - இருவகைக் கூத்துக்களும் நிகழு மிடத்து, கூடை செய்த கை வாரத்துக் களைதலும் வாரம் செய்த கை கூடையிற் களைதலும்-கூடைக் கதியாகச் செய்த கை வாரக் கதியுட் புகாமலும் வாரக் கதியாகச் செய்த கை கூடைக் கதியுட் புகாமலும் களைதலும், பிண்டி செய்த கை ஆடலிற் களைதலும் ஆடல் செய்த கை பிண்டியிற் களைதலும் - ஆடல் நிகழுங்கால் அவிநயம் நிகழாமலும் அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் களைதலும் பேணி, குரவையும் வரியும் விரவல செலுத்தி, குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் விரவாதபடி செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும் - இவ்வாறு ஆடவும் ஆட்டுவிக்கவும் வல்ல ஆடலாசிரியனோடும்; அரும்பத வுரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் இருவகைக் கூத்து என்பதற்கு இருவகைப்பட்ட அகக்கூத்து என்றும், பலவகைக் கூத்து என்பதற்குப் பலவகைப்பட்ட புற நடங்கள் என்றும் பொருள் கூறினர். அவருள் முன்னவர், “இருவகைக் கூத்தாவன; தேசி, மார்க்கம் என விவை; ‘மார்க்கமென்பது, வடுகின் பெயரே’ ‘என்றும், பின்னவர், ''இவ்வகைக் கூத்தாவன; வசைக் கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து; வரிச் சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து, விநோதக் கூத்து; ஆரியம், தமிழ்; இயல்புக் கூத்து, தேசிக் கூத்து; எனப் பலவகைய" என்றும், "ஈண்டு இருவகைக் கூத்தாவன; சாந்தியும், விநோதமும்" என்றும் விளக்கம் கூறினர். அகக்கூத்தெல்லாம் தேசி, மார்க்கம் என அடங்காமையானும், வசை, வரி, விநோதம் முதலியன அகக்கூத்துள் அடங்காமையானும், இருவகைக் கூத்து என்பதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் கூத்து என்றலே பொருத்தமாகும். இரண்டிரண்டாக எடுத்துக் காட்டியவை யெல்லாம் வெவ்வேறியல்பு பற்றி வேறு வேறு பெயரான் வழங்கப்படுவன வன்றி, வெவ்வேறு கூத்துக்களல்ல. இவ்வாற்றால் அவையெல்லாவற்றையும் அகம், புறம் என்றாதல், வேத்தியல், பொதுவியல் என்றாதல், சாந்தி, விநோதம் என்றாதல் பாகுபடுத்தல் பொருந்தும். வேத்தியல் - அரசர்க் காடுவது. பொதுவியல்-ஏனையோர்க் காடுவது. வேத்தியலை அகமென்றும், பொதுவியலைப் புறமென்றும் கூறுவாருமுளர். " சாந்திக் கூத்தே தலைவ னின்பம் ஏந்திநின் றாடிய வீரிரு நடமவை சொக்க மெய்யே யவிநய நாடகம் என்றிப் பாற்படூஉ மென்மனார் புலவர்"; என்பதனால், சாந்திக்கூத்து நால்வகைப்படும்; அவற்றுள், சொக்கம் என்பது சுத்த நிருத்தம்; ஆவது தாள லயத்தை ஆதாரமாக வுடையது. மெய்க்கூத்து என்பது மெய்த்தொழிற் கூத்து என்றும், அது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும் என்றும் கூறுவர். இஃது உள்ளக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டது போலும். அவிநயக் கூத்து என்பது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கை காட்டி வல்லபஞ் செய்யுங் கூத்து. நாடகம் என்பது கதை தழுவி வருங்கூத்து. இந் நான்கினும் இறுதிக்கண் நின்ற நாடகம் சிறந்ததாதல் ஓர்ந்துணர்க. இவை யாவும் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாகலின் சாந்திக் கூத்தெனப்படும் என்பர். விநோதக் கூத்து என்பதில் குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பன அடங்குமென்பர். அவற்றுள், குரவை யென்பது காமமும் வென்றியும் பொருளாக குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின் மரேனும் கைபிணைந்தாடுவது. கலிநடம் என்பது கழாய்க் கூத்து. குடக்கூத் தென்பது பதினோராடலுள் ஒன்று. கரணமாவது படிந்தவாடல். நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமும் முதலாயின வற்றையுடையது. தோற்பாவை யென்பது தோலாற்பாவை செய்து ஆட்டுவிப்பது, இன்னும் நகைத்திறச் சுவையுடைய விதூடகக் கூத்தினோடு ஏழென்பாரும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுங் கூத்தினைக் கூட்டி ஏழென்பாரு முளர். விதூடகக் கூத்து - வசைக் கூத்து; அது வேத்தியல், பொதுவியல் என இரண்டு வகைப்படு மென்பர். 12. இருவகைக் கூத்தின் இலக்கணங்களாவன; "அறுவகை நிலையும் ஐவகைப் பாதமும், ஈரெண் வகைய அங்கக் கிரியையும் வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும், அத்தகு தொழில வாகு மென்ப" என்றோதப்பட்டன. 13. பலவகைக் கூத்தும் என்றது மேலே கூறப்பட்ட அகக்கூத்து முதலியவற்றுடன் வென்றிக் கூத்தும், வசைக்கூத்து மாகும். "பல்வகை யென்பது பகருங்காலை, வென்றி வசையே விநோத மாகும்" என்பதொரு சூத்திரங்காட்டுவர். அவற்றுள், "மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும். மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே" எனவும், "பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட, வல்ல னாதல் வசையெனப் படுமே" எனவும் வென்றி, வசைக் கூத்துகட்கு இலக்கணங் கூறுவர். விலக்கினின் - விலக்குறுப்போடு; வேற்றுமை மயக்கம். விலக்குறுப்பு என்ற சொற்குப் பொருள், வேந்து விலக்கு, படை விலக்கு, ஊர்விலக்கு என்னும் விலக்குக்களாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாய் வருவது என்றும், தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும் அக் கதையை நடாத்தியும் முன்பு செய்த கதைக்கே உறுப்பாகுவது என்றும் கூறுவர்; “ விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப் பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும் சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமும் அவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும் வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ இசைய வெண்ணி னீரே ழுறுப்பே" என்னுஞ் சூத்திரத்தால், விலக்குறுப்புக்கள் பதினான்கு வகையின வாதல் பெறப்படும். இப்பதினான்கனுள் பொருள், சாதி, யோனி, விருத்தி என்னும் நான்கும் ஒருவகையும், சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் ஒருவகையும், சொல், சொல்வகை, வண்ணம், வரி என்னும் நான்கும் ஒருவகையும், சந்தி. சேதம் என்னும் இரண்டும் ஒருவகையுமாகப் பாகுபடும். அவற்றுள், பொருள் நான்கு வகைப்படும்; அவை - அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவை நாடகத்திற் கூடியும் குறைந்தும் வருமிடத்து நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கம் எனப் பெயர் வேறுபடும். அறமுதல் நான்கும் அமைந்தது முதலதும், அறம் பொருள் இன்பம் அமைந்தது இரண்டாவதும், அறம் பொருள் அமைந்தது மூன்றாவதும், அறமொன்றும் அமைந்தது நான்காவதும் ஆம்; இவை நான்கும் நாடகமே.இவைதாம் முறையே அந்தணர் முதலிய சாதிகளாகவும் கூறப்படும். யோனியாவது பொருள் தோன்றுமிடம். உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும். இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும் என அது நான்கு வகைப் படும்; என்னை? உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும் உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும் எள்ளா துரைத்தல் யோனி யாகும், என்றாராகலின். விருத்தியாவது நாடகத்தின் இயல்பு அல்லது தன்மை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என விருத்தி நால்வகைப்படும். அவற்றுள், சாத்துவதி யென்பது அறம் பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவது. ஆரபடி யென்பது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி யென்பது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதியாவது கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது. சுவை ஒன்பது வகைப்படும்; அவை - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சமனிலை என்பன. வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியும் கூடியவழி நாவால் உணரப்படும் கைப்புச் சுவை போலச் சுவைக்கப்படும் பொருளும் அதனைச் சுவைக்கும் பொறியுங் கூடியவழிப் பிறக்கும் பொறியுணர்வு சுவையெனப்படும். குறிப்பாவது அச் சுவை யுணர்வு மனத்துப் பட்டவழி உள்ளத்தே நிகழும் குறிப்பாகும். சத்துவமாவது உள்ளத்து நிகழுங் குறிப்பினுக் கேற்ப உடம் பின்கண் நிகழும் வேறுபாடு. இது விறல் எனவும் படும். மெய்ம் மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், 1நடுக்கமடுத்தல், வியர்த்தல். தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனச் சத்துவம் பத்து வகைப்படும் என்பர். வடநூலார் சத்துவத்தை எண்வகைப்படுத்துச் சிறிது வேறுபட வுரைப்பர். சுவைப் பொருள், பொறியுணர்வு, குறிப்பு, விறல் என்னும் நான்குங் கூடியபொழுது சுவை யென்னும் மெய்ப்பாடு தோன்றும். ஒன்பான் சுவைகட்குரிய விறல்கள் அவ்வச் சுவை யவிநயங்கள் எனவும் படும். அவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களால் அறிக. "வீரச்சுவை யவிநயம் விளம்புங்காலை, முரிந்தபுருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளுங் கடித்த வெயிறும், மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும். நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே." அச்ச வவிநயம் ஆயுங் காலை, ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும், மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபண் பினவே." “இழிப்பி னவிநயம் இயம்புங் காலை, இடுங்கிய கண்ணு மெயிறுபுறம் போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும், சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந்தோரே." அற்புத வவிநயம் அறிவரக் கிளப்பின், சொற்சோர் வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடையது, எய்திய திமைத்தலும் விழித்தலு மிகவாதென், றையமில் புலவ ரறைந்தன ரென்ப." ''காம வவிநயங் கருதுங் காலைத், தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு, மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலும், மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும், கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே" "அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின், கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும், பீடழியிடும்பையும் பிதற்றிய சொல்லும், நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும், பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்." வெகுளிச்சுவை யவிநய" த்தை உணர்த்துஞ் சூத்திரம் சிதைந்து விட்டது. ''கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா, மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்" என்னும் தண்டியலங் கார மேற்கோளால் அதனையறிக. நகையி னவிநயம் நாட்டுங் காலை, மிகைபடு நகையது பிறர்நகையுடையது, கோட்டிய முகத்தது..... விட்டுமுரி புருவமொடு விலாவுறுப்புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென், றையமில் புலவரறைந்தன ரென்ப. "நாட்டுங் காலை நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியும், அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும், பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத், தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும், விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்." அவிநயம் என்பது பாவகம். முற்குறித்த சுவைநிலை யவிநயங்க ளன்றி வேறு இருபத்து நான்கு அவிநயங்கள் உள. அவை; வெகுண்டோன் அவிநயம், ஐயமுற்றோன் அவிநயம், சோம்பினோன் அவிநயம், களித்தோன் அவிநயம், உவந்தோன் அவிநயம், அழுக்கா றுடையோன் அவிநயம், இன்பமுற்றோன் அவிநயம், தெய்வ முற்றோன் அவிநயம், ஞஞ்ஞையுற்றோன் அவிநயம், உடன் பட்டோன் அவிநயம், உறங்கினோன் அவிநயம், துயிலுணர்ந் தோன் அவிநயம், செத்தோன் அவிநயம், மழை பெய்யப்பட்டோன் அவிநயம், பனித் தலைப்பட்டோன் அவிநயம் வெயிற்றலைப் பட்டோன் அவிநயம், நாணமுற்றோன் அவிநயம், வருத்த முற்றோன் அவிநயம், கண்ணோ வுற்றோன் அவிநயம், தலை நோவுற்றோன் அவிநயம், அழற்றிறம்பட்டோன் அவிநயம், சீதமுற்றோன் அவிநயம், வெப்பமுற்றோன். அவிநயம், நஞ்சுண்டோன் அவிநயம் என்பன. இவை யனைத்திற்கும் அடியார்க்கு நல்லார் காட்டிய நூற்பாக்கள் வருமாறு; ''வெகுண்டோன் அவிநயம் விளம்புங் காலை, மடித்த வாயு மலர்ந்த மார்புந், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின உள்ளமொடு கைபுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே"; "பொய்யில் காட்சிப் புலவோர் ஆய்ந்த, ஐய முற்றோன் அவிநயம் உரைப்பின், வாடிய உறுப்பும் மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவும் அறிந்திசி னோரே." ; "மடியின் அவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட் டாவிமிக வுடைமையும், மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்தலுங், காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ, டணிதரு புலவர் ஆய்ந்தன ரென்ப"; "களித்தோன் அவிநயம் கழறுங் காலை, ஒளித்தவை ஒளியான் உரைத்த லின்மையும், கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும், வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர்கொளலே" ; "உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மல ருடைமையும், இனிதி னியன்ற உள்ள முடைமையும் முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும், ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே" ; "அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின், இழுக்கொடு புணர்ந்த இசைப்பொரு ளுடைமையுங், கூம்பிய வாயுங் கோடிய உரையும், ஓம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும், ஆரணங்காகிய வெகுளி உடைமையுங், காரண மின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த இடும்பையு மேவரப், பொலியு மென்ப பொருந்து மொழிப் புலவர்" ; "இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின், துன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையுந், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும், மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும், எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையும், கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையும், நலங்கெழு புலவர் நாடின ரென்ப" ; 1"தெய்வ முற்றோன் அவிநயம் செப்பிற், கைவிட். டெறிந்த கலக்க முடைமையும், மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப இயல்புணர்ந் தோரே"; 2"ஞஞ்ஞை யுற்றோ னவிநயம் நாடில், பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும், நுரை சேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க், குரைப்போன் போல உணர்வி லாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும் வயங்கிய திருமுகம் அழுங்கலும் பிறவும், மேவிய தென்ப விளங்கு மொழிப் புலவர்" ; "சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின், முந்தை யாயினும் உணரா நிலைமையும், பிடித்த கைமேல் அடைத்த கவினும், முடித்த லுறாத கரும நிலைமையுஞ், சொல்வது யாதும் உணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்துமொழிப் புலவர்"; "துஞ்சா நின்றோன் அவிநயம் துணியின், எஞ்சுதலின்றி இரு புடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு, மலர்ந்துயிர்ப் புடைய ஆற்றலு மாகும்" ; "இன்னுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின், ஒன்றிய குறுங் கொட்டாவியும் உயிர்ப்புந், தூங்கிய முகமுந் துளங்கிய உடம்பும், ஓங்கிய திரிபும் ஒழிந்தவுங் கொளலே" ; "செத்தோன் அவிநயம் செப்புங் காலை, அத்தக அச்சமும் அழிப்பும் ஆக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப், போந்ததுணி வுடைமையும் வலித்த உறுப்பும், மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும், வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே"; "மழை பெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின், இழிதக வுடைய இயல்புநனி யுடைமையும், மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை, மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும், ஒளிப்படு மன்னி லுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்த செவி யுடைமையுங், கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே" ; "பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின், நடுக்க முடைமையும் நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், 1நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவும் இசைந்தனர் கொளலே" ; "உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம், எச்ச மின்றி இயம்புங்காலைச், சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்ற உடம் பெரி யென்னச், சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும், பயந்த தென்ப பண்புணர்ந் தோரே" ; "நாண முற்றோன் அவிநயம் நாடின், இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும், வாடிய முகமுங் கோடிய உடம்புங், கெட்ட வொளியுங் கீழ்க்கண் ணோக்கமும், ஓட்டின ரென்ப உணர்ந்திசி னோரே"; "விருத்த முற்றோன் அவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ், சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங் கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும், வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும், உற்ற தென்ப உணர்ந்திசி னோரே" ; "கண்ணோ வுற்றோன் அவிநயம் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரல் தெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே" ; "தலைநோ வுற்றோன் அவிநயம் சாற்றின், நிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவுந், திருந்து மென்ப செந்நெறிப் புலவர்" ; "அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின், நிழற்றிறம் வேண்டும் நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ் சுடரும் அஞ்சலும், நிழலும் நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்போடு புலர்ந்த யாக்கையுந், தொக்க தென்ப துணிவறிந் தோரே" ; "சீத முற்றோன் அவிநயம் செப்பின், ஓதிய பருவர லுள்ளமோ டுழத்தலு, மீர மாகிய போர்வை யுறுத்தலு, மார வெயிலுழந் தழலும் வேண்டலு, முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்" ; "வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப் பிடித் தன்மையுந் தாகமும், எரியினன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும், நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஓருங் காலை உணர்ந்தனர் கொளலே" ; "கொஞ்சிய மொழியிற் வாயிற் பனிநுரை கூம்பலுந், தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொ லியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்றன் அவிநயம் என்ப" ; "சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப." இனி, சொல் என்னும் உறுப்பு மூன்று வகைப்படும். அவை; உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என்பன. நெஞ்சொடு கூறல் உட்சொல்லும், கேட்போர்க் குரைத்தல் புறச்சொல்லும், தானே கூறல் ஆகாயச்சொல்லும் ஆம். சொல்வகை நான்கு வகைப்படும். அவை; சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்பன. அவற்றுள், சுண்ணம் நான்கடியான் வருவது; சுரிதகம் எட்டடியான் வருவது; வண்ணம் பதினாறடியான் வருவது; வரிதகம் முப்பத்திரண்டடியான் வருவது. வண்ணமானது ஒரு வகையான் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணமென மூன்று வகைப்படுமென்றும், அவற்றுள், பெருவண்ணம் ஆறாயும், இடைவண்ணம் இருபத் தொன்றாயும், வனப்புவண்ணம் நாற்பத்தொன்றாயும் வருமென்றுங் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனார்1 இருபது வண்ணங் கூறினர். நூறுவண்ணங் கூறினாருமுளர். வரியாவது; வரிக்கூத்துக்குரிய பாடல். "வரிப்பாடலாவது; பண்ணும், திறமும், செயலும், பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும், ஆறனியல்பும் பெற்றுத், தன் முதலும் இறுதியுங் கெட்டு, இயல்பும் முடமுமாக முடிந்து, கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும்" என்றும், "அதுதான், தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்" என்றும் கூறுவர் அரும்பத உரையாசிரியர், வரிப்பாட்டுக்கள் திணைநிலை வரி, கிணைநிலை வரி எனவும், முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி எனவும், அவை பலவாகவும் பாகு பாடெய்தும். அவற்றினியல்பெல்லாம், பின்னர், கானல்வரி யுள்ளும், வேனிற்காதையுள்ளும் விளங்கலுறும். இனி, சந்தி யென்பது நாட்டியக் கட்டுரையின் பிரிவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்கும் நிலை. அது, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என ஐவகைப்படும். அவற்றுள் முகமா வது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது; பிரதி முகமாவது அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய் முடிவது போல்வது; கருப்பமாவது அந் நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்வது; விளைவாவது கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது; துய்த்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. வித்து, நாற்று, கரு, விளைவு, துய்த்தல் என்பன ஒன்றினொன்று தொடர்ந்து முடிதல்போல நாடகத்திற் குரிய கதை ஐந்து பகுதியாய் ஒன்றினொன்று தொடர்ந்து முடிய வேண்டும் என்றபடி. இவ்வுறுப்பு நாடகத்திற் கின்றியமையாத தொன்றென்க. சேதம் என்பது ஆதிக் கதையை ஆரியம், தமிழ் என்னும் இருவகைக் கூத்திற்கேற்பச் சேதித்திடுவது என்பர்; ‘ ஆரியத் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும் ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச் சேதித் திடுவது சேதமென் றாகும்.' என்பது காண்க. 'விலக்கினிற் புணர்த்து' என்பதனாற் குறிக்கப் பட்ட விலக்குறுப்புக்கள் இதுகாறும் உணர்த்தப்பட்டன 14. பதினோராடலாவன; அசுரரைக் கொல்ல அமரராடிய பதி னொரு கூத்துக்கள். அவற்றை. "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன் குடைதுடிமா லல்லியமற் கும்பம் - சுடர்விழியாற் பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்பதனாலறிக. இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகையின; "அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம் மல்லுட னின்றாட லாறு" " துடிகடையம் பேடு மரக்காலே பாவை வடிவுடன் வீழ்ந்தாட லைந்து" இக்கூத்து ஒவ்வொன்றும் எவ்வெக் காரணம்பற்றி எவ்வெவ் விடத்து நிகழ்த்தப்பட்டனவென்பது பின்னர்க் 1கடலாடு காதையால் விளக்கமாம். 14. பாட்டு என்றது அக நாடகங்களுக்கும், புறநாடகங் களுக்கு முரிய உருக்களை. அக நாடகங்களுக்குரிய உருவாவன; கந்த முதல் பிரபந்தவுரு வீறாக இருபத்தெட்டும். இவற்றுள், கந்த மென்பது அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது; பிரபந்த மென்பது அடிவரையறை யின்றிப் பல தாளத் தாற் புணர்ப்பது. புறநாடகங்களுக்குரிய உருவாவன; தேவ பாணி முதலாக அரங்கொழி செய்யு ளீறாகச் செந்துறை விகற் பங்க ளெல்லாமென்க. 14. கொட்டு - கொட்டப்படும் வாச்சியங்கள். அவை கீதாங் கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என்பன. அவற்றுள், கீதாங்கம் கீதத்திற்கு வாசிப்பது; நிருத்தாங்கம் நிருத்தத்திற்கு வாசிப்பது; உபயாங்கம் இரண்டிற்கும் வாசிப்பது. 15. கொள்கை - நூல், ஆங்கு, அசை.. 16. ஆடல் - முற்கூறிய அகக்கூத்தினும் புறக்கூத்தினுமுள்ள ஆடல். கீற்று, கடிசரி முதலாகிய தேசிக்குரிய கால்கள் இரு பத்து நான்கும், சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கும், உடற்றூக்கு முதலாகிய உடலவர்த் தனை ஒன்பதும் அகக்கூத்துக் குரியன. "சிங்களம் இருவகை நிலையினும் எய்தும்" என்பாரும், உடலவர்த் தனையைச் சிங்கள மென்பாருமுளர். எனவே, தமிழ், வடுகு, சிங்களம் என ஆடல் மூவகைப்படும் என்க. பாடல் - இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகைப் பயனுமுடைய பாடல் . பாணி - தாளம் ; அது கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு நிலையினையுடையது ; கொட்டாவது அமுக்குதல்; அசையாவது தாக்கி யெழுதல் ; தூக்காவது தாக்கித் தூக்குதல் ; அளவாவது தாக்கின வோசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். கொட்டு அரை மாத்திரை ; அதற்கு வடிவு, க ; அசை ஒரு மாத்திரை ; அதற்கு வடிவு, எ ; தூக்கு இரண்டு மாத்திரை ; அதற்கு வடிவு, உ ; அளவு மூன்று மாத்திரை ; அதற்கு வடிவு, ஃ எனக் கொள்க. கொட்டு முதலிய வற்றின் வடிவைக் குறிக்க, 'க' முதலிய இடுகுறியாக நிறுத்தப் பெற்றன வென்க; " கொட்டும் அசையுந் தூக்கும் அளவும் ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்" " ககரங் கொட்டே எகரம் அசையே உகரந் தூக்கே அளவே யாய்தம்" என்பன காண்க. அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதலாகப் பதினாறு மாத் திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளம் புறக்கூத்துக்குரிய வெனவும், ஆறன் மட்டம் என்பனவும், எட்டன் மட்டம் என்பனவும், தாளவொரியல் என்பனவும், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண்கூத்துப் பாணி யீறாகக் கிடந்த பதினொரு பாணி விகற்பங் களும், முதல்நடை, வாரம் முதலாயினவும் அகக்கூத்திற்குரிய வெனவும் கூறுவர். 16. தூக்கு - இத்தாளங்களின் வழிவரும் எழுவகைப்பட்ட தூக்குக்கள் ; அவை செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றூக்கு, நெடுந் தூக்கு என்பன ; என்னை? "ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்" என்றா ராகலின். 17. கொளுத்துதல் - ஆட்டுவித்தல். 18. பிண்டி - ஒன்று ; ஈண்டு ஒற்றைக் கைக்கு ஆகுபெயர். பிணையல் - இணைதல் ; ஈண்டு இரட்டைக்கை. பிண்டி, ஒற்றைக்கை, இணையா வினைக்கை என்பன ஒரு பொருளன; பிணையல், இணைக்கை, இரட்டைக்கை என்பன ஒரு பொருளன. அவிநயக்கை இங்ஙனம் இருவகைப்படும். பிண்டி - பொருட்கை யாம் ; பிணையல் - தொழிற்கையாம் என்க. அவற்றுள் ஒற் றைக்கை முப்பத்து மூன்று வகைப்படும். அவை: பதாகை-1, திரிபதாகை-2, கத்தரிகை-3, தூபம்-4, அராளம்-5, இளம்பிறை-6, சுகதுண்டம்-7, முட்டி-8, கடகம்-9, சூசி-10, கமல கோசிகம்-11, காங்கூலம்-12, கபித்தம்- 13, விற்படி-14, குடங்கை-15, அலாபத்திரம்-16, பிர மரம்-17, தாம்பிர சூடம்-18, பசாசம்-19, முகுளம்-20, பிண்டி-21, தெரிநிலை-22, மெய்ந்நிலை-23, உன்னம்- 24, மண்டலம்-25, சதுரம்-26, மான்றலை-27, சங்கு -28, வண்டு-29, இலதை-30, கபோதம்-31, மகர முகம்-32, வலம்புரி-33 என்பன. இவற்றுள், பதாகையாவது நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெரு விரல் குஞ்சித்து நிற்பது. திரிபதாகையாவது பதாகைக்கையின் அணிவிரல் முடக்குவது. கத்தரிகையாவது திரிபதாகையின் முடங்கிய அணிவிரற் புறத்த தாகிய நடுவிரலைச் சுட்டு விரலோடு பொருந்த நிமிர்ப்பது. தூபமாவது நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளைய நிற்பது. அராளமாவது பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன் முடக்கி ஒழிந்த விரன் மூன்றும் நிமிர்ந்து வளைவது. இளம்பிறையாவது சுட்டுவிரலும் நடுவிரலும் அணிவிரலையும் சிறுவிரலையும் ஒட்டி அகம் வளைய, வளைத்த பெருவிரல் அவற்றை விட்டு நீங்குவது ; "சுட்டும் பேடும் அநாமிகை சிறுவிரல், ஒட்டி யகம் வளைய வொசித்த பெருவிரல், விட்டு நீங்கும் விதியிற் றென்ப." சுகதுண்டம்: "சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப் பின், சுட்டு விரலும் பெருவிரல் தானும், ஒட்டி யுகிர்நுனை கவ்வி முன்வளைந், தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிரல், தான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப." அநாமிகை - அணிவிரல்; பவுத்திரவிரல். பேடு - நடுவிரல். முட்டி : "முட்டி யென்பது மொழியுங் காலைச், சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல், இறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரல், முறுகப் பிடித்த முறைமைத் தென்ப." கடகம் : "கடக முகமே கருதுங் காலைப், பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு, மருவ வளைந்தவ் வுகிர் நுனி கௌவி, யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர, மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே." சூசி : "சூசி யென்பது துணியுங் காலை, நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி, லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர, வொழிந்தன வழிவழி முடங்கி நிற்ப, மொழிந்தனர் மாதோ முடிபறிந்தோரே." பதுமகோசிகம் : "பதும கோசிகம் பகருங் காலை, யொப்பக் கைவளைத் தைந்து விரலு, மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும்." காங்கூலமாவது : "காங்கூ லம்மே கருதுங் காலைச், சுட்டும் பேடும் பெருவிரன் மூன்று, மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச், சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும்," "முகிழ்காங் கூல முந்துற மொழிந்த, குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே," "மலர்காங் கூல மதுமலர்ந் ததுவே." கபித்தமாவது : சுட்டுவிரனுனியும் பெருவிரனுனியும் உகிர் நுனை கௌவிப்பிடித்த ஒழிந்த மூன்றுவிரலும் மெல்லெனப் பிடிப்பது. விற்பிடி : "விற்பிடி யென்பது விரிக்குங் காலைச், சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர, லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல், விட்டு நிமிரும் விதியிற் றாகும்." குடங்கையாவது எல்லா விரலுங் கூட்டி உட்குழிப்பது. அலாபத்திரமாவது சிறுவிரன் முதலாகிய வைந்தும் வளைந்து மறிவது. பிரமரமாவது அநாமிகை விரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலஞ்சாயப் பெருவிரல் நடுவிரலி னுள்ளே சேரச் சுட்டு விரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்பது. தாம்பிரசூடமாவது நடுவிரலும் சுட்டுவிரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிர்வது. பசாசமாவது பெருவிரலும் சுட்டுவிரலுமன்றி ஒழிந்த மூன்று விரலும் தம்மிற் பொலிந்து நிற்பதெனக்கொள்க. அப் பசாசந்தான் மூன்று வகைப்படும் : அகநிலைப்பசாசம்-சுட்டுவிர னுனியில் பெருவிர லகப்படுவது. முகநிலைப்பசாசம்-அவ்விரன் முகங்கூடி உகிர்விட்டு நிற்பது. உகிர்நிலைப்பசாசம்-சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர்நுனை கௌவி நிற்பது. முகுளமாவது ஐந்துவிரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்பது. பிண்டியென்றது சுட்டுவிரல் பேடிவிரல் அநாமிகை சிறுவிரல் ஒட்டி நெகிழ முடங்க அவற்றின்மேலே குறுக்கிடம் பெருவிரல் கட்டி விலங்கி விரல்வழி முறையொற்றல். தெரிநிலையாவது எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்பது. மெய்ந்நிலையாவது சிறுவிரலும் அணிவிரலும் நடு விரலும் சுட்டு விரலும் விட்டுநிமிரச் சுட்டுவிரன்மேற் பெருவிரல் சேரவைப்பது. உன்னமாவது சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட ஒழிந்த மூன்று விரலும் விட்டுநிமிர்வது. மண்டலம் : "மண்டலமென்பது மாசறக் கிளப்பிற், பேடு நுனியும் பெருவிர னுனியுங், கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி, யொழிந்த மூன்று மொக்க வளைவதென, மொழிந்தன ரென்ப முழு துணர்ந் தோரே." சதுரமாவது சுட்டு விரலும் நடுவிரலும் அணிவிரலும் தம்முட் சேர்ந்து இறைஞ்சப் பெருவிரல் அகம் வர வைத்துச் சிறுவிரல் பின்பே நிமிர்ந்து நிற்பது. மான்றலையாவது பெருவிரலுஞ் சிறுவிரலு மொழிந்த மூன்றுந் தம்மில் ஒத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்பது. சங்கமாவது பெருவிரல் நிமிர ஒழிந்த நான்குவிரலும் வளைந்து நிற்பது. வண்டாவது பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனி யொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டு விரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்பது. இலதையாவது நடுவிரலும் சுட்டுவிரலும் கூடிநிமிரப் பெருவிரல் அவற்றின் கீழ்வரை சேர ஒழிந்த இரண்டு விரலும் வழிமுறை பின்னே நிமிர்ந்து நிற்பது. கபோதமென்றது பதாகைக் கையிற் பெருவிரல் விட்டு நிமிர்வது. மகரமுகமாவது பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலுந் தம்முளொன்றி அதற்கு வேறாய் நிற்பது. வலம்புரியாவது சிறுவிரலும் பெருவிரலு நிமிர்ந்து சுட்டு விரலின் அகம் வளைந்து ஒழிந்த விரண்டும் நிமிர்ந்து இறைஞ்சி நிற்பது. இனி, இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். அவை : அஞ்சலி -1, புட்பாஞ்சலி-2, பதுமாஞ்சலி-3, கபோதம்-4, கற் கடகம்-5, சுவத்திகம்-6, கடகாவருத்தம்-7, நிடதம்-8, தோரம்-9, உற்சங்கம்-10, புட்பபுடம்-11, மகரம்-12, சயந்தம்-13, அபயவத்தம்-14, வருத்தமானம்-15. இவற்றுள், அஞ்சலியாவது : இரண்டு கையும் பதாகையாய் அகமொன்றுவது. புட்பாஞ்சலியாவது இரண்டு கையும் குடங்கையாய் வந்து ஒன்றுவது. கபோதமென்றது இரண்டு கையும் கபோதமாகக் கூட்டுவது. கற்கடக மென்றது தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்து வருவது. கவத்திக மென்றது மணிக்கட்டிற் பொருந்திய பதாகையிரண்டையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது. கடகாவருத்தமாவது இரண்டு கையும் கடகமாய் மணிக் கட்டுக்கு ஏற இயைந்து நிற்பது. நிடதமாவது முட்டியாக இரண்டு கையும் சமஞ்செய்வது. தோரமாவது இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புற மொன்றி முன்தாழ்ந்து நிற்பது. உற்சங்கமாவது ஒருகை பிறைக்கையாகக் கொண்டு ஒருகை அராளமாக்கி இரண்டு கையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது. புட்பபுடமாவது குடங்கையிரண்டும் தம்மிற் பக்கங் காட்டி நிற்பது. மகரமென்றது கபோத மிரண்டு கையும் அகம்புற மொன்ற வைப்பது. சயந்தம் : (விடுபட்டது) அபயவத்தமாவது இருகையும் சுகதுண்டமாக நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது. வருத்தமானமாவது முகுளக் கையிற் கபோதக் கையை எதிரிட்டுச் சேர்ப்பது. 18. எழிற்கை - அழகுபெறக் காட்டுங்கை. தொழிற்கை - தொழில் பெறக் காட்டுங் கை. பொருட்கை யென்பதும் வருவிக்கப்படும் ; ஆவது, பொருளுறக் காட்டுங்கை. 19. கொண்டவகை யறிதலாவது - பிண்டியும் பிணையலும் புறக்கூத்துக்குரிய கை யென்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கை யென்றும் அறிதல். 20 - 21 கூடை, வாரம் என்பன சில தாளவிகற்பங்களுக்கும், இசைப் பாட்டுக்களின் இயக்கங்களுக்கும், அவிநயக் கை கட்கும், பிற சிலவற்றிற்கும் பெயர் ; ஈண்டு அவிநயக் கைகளை யுணர்த்தி நின்றன. கூடை - ஒற்றைக்கை ; இரட்டை யொற்றைக் கையாகிய குவித்த கையையும் இது குறிக்கும். வாரம் - இரட்டைக்கை. அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத்தொழில் இரட்டையிற் புகாமலும், இரட்டையிற் செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும், தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும், மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதலென்றுமாம் ; ஒற்றையும், இரட்டையும் தேசிக்கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானுமென்க. 22 - 23 பிண்டி - பொருட்கை. ஆடல் - பிணையல் ; தொழிற்கை. புறக்கூத்தில் ஆடல் நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுமிடத்து ஆடல் நிகழாமலும் களைதல். 24. குரவை - குரவைக்கூத்து ; அது, காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைத்தாடுவது ; அதன் இயல்பினை, "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" என்பதனானறிக. வரி - வரிக்கூத்து ; அஃது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்ற நடித்தல். இதற்கு வரிச்செய்யுள் பாட்டாகும். இதன் இயல்பினை, "வரியெனப் படுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும், அறியக் கூறி யாற்றுழி வழங்கல்" என்பதனானறிக. வரிக்கூத்து ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது. இத் தொடர்நிலைச் செய்யுளின்கண், முல்லை சார்ந்து ஆய்ச்சியர் குரவையும், குறிஞ்சி சார்ந்து குன்றக் குரவையும், நெய்தல் சார்ந்து கானல்வரியும், பாலை சார்ந்து வேட்டுவ வரியும், மருதஞ் சார்ந்து ஊர் சூழ்வரியும் நிகழ்ந்தனவாக அமைந்திருத்தல் அறியற்பாற்று. வரிக்கூத்தானது கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எண் வகைப்படும். இவற்றினியல்பெல்லாம் வேனிற்காதையால் விளக்கமாம். இனி, "இவ் வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாரு முளர்" என்று கூறி, அடியார்க்கு நல்லார் அதற்கெடுத்துக் காட்டிய கலிவெண் பாட்டொன்றால் தமிழகத்தே பண்டைநாளில் வழங்கிய எத்தனையோ வகையான கூத்துக்களும் பாட்டுக்களும் புலனா கின்றன; அச்செய்யுள் பின்வருவது : " சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை கொந்தி கவுசி குடப்பிழுக்கை-கந்தன்பாட் டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி சூலந் தருநட்டந் தூண்டிலுடன்-சீலமிகும் ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி-மீண்ட கடவுட் சடைவீர மாகேசங் காமன் மகிழ்சிந்து வாமன ரூபம்-விகடநெடும் பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண் தத்தசம் பாரம் தகுணிச்சங்-கத்து முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப் பறைபண் டிதன்புட்ப பாணம்-இறைபரவு பத்தன் குரவையே பப்பறை காவதன் பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை-எத்துறையும் ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக் கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து-மூத்த கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி அழகுடைய பண்ணிவிக டாங்கந்-திகழ்செம்பொன் அம்மனை பந்து கழங்காட லாலிக்கும் விண்ணகக் காளி விறற்கொந்தி-அல்லாத வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன் சாந்த முடைய சடாதாரி-ஏய்ந்தவிடை தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந் தொக்க தொழில்புனைந்த சோணாண்டு-மிக்க மலையாளி வேதாளி வாணி குதிரை சிலையாடு வேடு சிவப்புத்-தலையில் திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண் டிருண்முகத்துப் பேதை யிருளன்-பொருமுகத்துப் பல்லாங் குழியே பகடி பகவதியாள் நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல்-அல்லாத உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி குந்திவரும் பாரன் குணலைக்கூத்-தந்தியம்போ தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப் பாடும்பாட் டாடும் படுபள்ளி-நாடறியுங் கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே துஞ்சாத சும்மைப்பூச் சோனக-மஞ்சரி ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக் கோத்தவரிக் கூத்தின் குலம்." இ-irயாசிரியன் அமைதி 26 -36 யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு - யாழ்ப்பாடலும் வங்கியப் பாடலும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத் தினையுடைய தண்ணுமையும் கூத்துக்களும் வல்லனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து - இவற்றுடனே சேரச் செய்த உருக்களை இசை கொள்ளும்படியும் சுவை பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய், வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - செந்துறை வெண்டுறை என்னும் இருவகைப்பட்ட பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான்கினையும் அமைத்து, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து - அழகுடைய தேசாந்தரங்களின் பாடை களையும் அறிந்து, தேசிகத் திருவின் ஓசை யெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - அந்தப் பாடைகள் இசைபூணும் படியையும் அறிந்து. கவியது குறிப்பும் ஆடற்றொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை - இயற்புலவன் கருத்தும் நாடகப் புலவன் ஈடுவரவுகளும் அவற்றுக் கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்து, வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந் தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனாயுள்ள, அசையா மரபின் இசையோன்தானும் - தளராத இயல்பினையுடைய இசைப்புலவனும் ; 26. யாழ் - பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டி யாழ் என யாழ் நால்வகைப்படும். அவற்றுக்கு நரம்பு முறையே இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதினான்கும், ஏழும் ஆகும். என்னை? " ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே நின்ற பதினான்கும் பின்னேழும்-குன்றாத நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி" என்பவாகலின். ஓரேழ்மேற்பத்துடனே என்பது பாடமாயின் மகர யாழிற்கு நரம்பு பதினேழாகும். இந்நால்வகையன்றிச் சிறுபான்மையான் வரும் யாழ் பிறவு முள என்பர். யாழின் பிற விலக்கணங்கள் பின் கானல்வரி யுரையிற் கூறப்படும். யாழ்- யாழ்ப்பாடல் என்க. குழல் - குழலின்பாடல் என்க. குழல் - வங்கியம் ; அது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி யென்னும் ஐந்தானும் இயற்றப்படும். இவற்றுள் மூங்கிலே முதன்மையானது ; அது பற்றியே புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு என்னும் பெயர்கள் குழலுக்கு வழங்குவ வாயின. மூங்கில் உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர். இக்காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும் எனவும், இவை கொள்ளு மிடத்து, உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்றும் மயங்கின் நாத மில்லையாதலால், மயங்கா நிலத்திலே இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப் புக்க பெரிய மரத்தை வெட்டி, ஒரு புருடாகாரமாகச் செய்து, அதனை நிழலிலே யிட்டு ஆற வைத்து, திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் இன்மை யறிந்து, ஓர் யாண்டு சென்றபின் வங்கியம் செய்யப்படும் எனவும், இதன் நீளம் இருபது விரலளவும், சுற்று நாலரை விரலளவுமாம் எனவும், இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இட முகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும் எனவும், இதிலே தூபமுகத்தின் இரண்டு விரல்நீக்கி முதல்வாய்விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம்விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும் எனவும், துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும் எனவும் கூறுவர். இதனை வாசிக்குமிடத்து, வளைவாய் சேர்ந்த துளையை முத்திரை யென்று நீக்கி, முன்னின்ற ஏழு துளையினும் இடக்கையின் இடை மூன்றுவிரலும், வலக்கையின் பெருவிர லொழிந்த நான்கு விரலும் பற்றி வாசிக்கப்படும். இவ் வங்கியத்தின் ஏழு துளைகளிலும் சரிகமபதநி என்னும் ஏழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும் ; இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும்; " சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம் வரிபரந்த கண்ணிணாய் வைத்துத்-தெரிவரிய ஏழிசையுந் தோன்று மிவற்றுளே பண்பிறக்கும் சூழ்முதலாஞ் சுத்தத் துளை" என்பது காண்க. சீர் - அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கு முரிய இருவகைத் தாளக் கூறுபாடுகள். மிடறு - மிடற்றுப்பாடல். இதனைச் சாரீரவீணை யென்பர். புற்கலம் எனப்படும் உடம்பு ஐம்பூதங்களின் பரிணாமத்தால் ஆகுமுறைமை அடியார்க்கு நல்லாரால் விரித்துரைக்கப் பட்டுளது; அஃது ஈண்டைக்கு வேண்டப்படுவதின்று. உடம்பினளவு தன்கையால் தொண்ணூற்றாறு அங்குலம் எனவும், அவற்றுள் மேலே நாற்பத்தேழரை யங்குலமும் கீழே நாற்பத்தேழரை யங்குலமும் விட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் எனவும், மூலாதாரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும், நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் என்னும் பெருந்தானம் எட்டினும் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னுங் கிரியைக ளெட்டானும் பண்ணிப் படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று எனவும் கூறுவர். ஆளத்தி யென்பது இக்காலத்து ஆலாபனம் என வழங்கப் பெறும். அது மகர ஒற்றுடன் கூடிய குற்றெழுத்தாலும், நெட்டெழுத் தாலும் தென்னா, தெனா, தென்னா தெனா என்னும் அசைகள் கூட்டியும் செய்யப்படும் எனவும், மற்றும், ம, ந, த என்னும் மூன்று ஒற்றுக்களுடன் கூடிய அ இ உ எ ஒ என்னுங் குற்றெழுத் தைந்தானும், ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் நெட்டெ.ழுத் தைந்தானும் செய்யப்படும் எனவும், இவ்வாளத்திதான் அச்சு, பாரணை யென்றும், காட்டாளத்தி, பண்ணாளத்தி யென்றும் எழுத்து வேற்றுமை யாற் பெயரெய்தும் எனவும், பிறவாறும் கூறுப. 27. தண்ணுமை - பிறகருவிகட்கும் உபலக்கணம். 28, ஆடல் - அகக்கூத்து, புறக்கூத்து, பதினோராடல் என்பன. 29. உரிப் பொருள் - இயக்கம் ; பாட்டின் நடை. அது முதனடை, வாரம், கூடை, திரள் என நால்வகைப்படும். அவற்றுள், முதனடை மிகத் தாழ்ந்த செலவினை யுடையது ; வாரம் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் உடையது ; கூடை சொற் செறிவும் இசைச் செறிவும் உடையது ; திரள் மிக முடுகிய நடையினை யுடையது. இசையுடன் படுத்து இயக்கிக் கடைப் பிடித்து உணர்ந்த அறி வினனாகி விரிக்கும் இசையோன் என்க. கவிஞன் அமைதி 37 - 44 இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின்கண்ணே தமிழ் நாட்டினர் அறிய, தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - முத்தமிழும் துறைபோகக் கற்றுணர்ந்த தன்மையை யுடையனாகி, வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தின் - வேத்திய லென்றும் பொதுவிய லென்றும் கூறப்படும் இரண்டு கூறுபாட்டினை யுடைய, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த - நாடக நூலை நன்றாகப் பற்றிக்கொண்டு, இசையோன் வக்கிரித் திட்டதைத் உணர்ந்து - இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர் மையை அறிந்து, ஆங்கு - அறிந்த வண்ணம், அசையா மரபின் - தளராத முறைமையாலே, அது படவைத்து - அவன் தாளநிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியிலே தோன்ற வைக்க வல்லனாய், மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலைவு இல்லா - முன்பகைவர் செய்த வசை மொழிகளை யறிந்து அவை தோற்றாதபடி வசை யில்லாத மொழிகளால் நாடகக் கவி செய்யவல்ல கெடாத நாவினையுடைய, நன்னூற் புலவனும் - நல்ல நூலை வல்ல புலவனும் ; 37. தமிழகம் - வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்பன வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் எல்லையாகவுடைய வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு. 41. வக்கிரித்தல் - ஆளத்தி செய்தல். உணர்ந்து என்பதற்கு, முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து என்பர். தன்மையனாகிக் கடைப்பிடித்து உணர்ந்து வைத்து அறிந்து தொலைவில்லாத புலவனும் என்க. தண்ணுமை யாசிரியன் அமைதி 45 - 55 ஆடல் பாடல் இசையே தமிழே - எல்லாக் கூத்துக்களும் எல்லாப் பாட்டுக்களும் எல்லா இசைகளும் இயல் இசை நாடக மென்னும் மூவகைத் தமிழ்களும், பண்ணே பாணி தூக்கே முடமே - எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும், தேசிகம் - இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல் வழக்குக்களும், என்றிவை ஆசின் உணர்ந்து - என்று சொல்லப்பட்ட இவற்றை நுண்ணிதின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவின்றி மிகுத்து - ஓருருவை இரட்டிக்கிரட்டி சேர்த்த விடத்து நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும், ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்துப் பெறும் இரட்டியைப் பாகவுருவானவழி நிற்குமானம் நிறுத்திக் கழியுமானங் கழிக்கவும் வல்லனாய், வாங்கிய வாரத்து யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப - இப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப் பாடலும் குழலின் பாடலும் கண்டப் பாடலும் இசைந்து நடக்கின்றபடி கேட்போர் செவிக் கொள்ளுமாறு, கூர் உகிர்க்கரணம் குறி அறிந்து சேர்த்தி - தண்ணுமையை விரலின் செய்கையாலே குறியறிந்து சேரவாசிக்க வல்லனாய், ஆக்கலும் அடக்கலும் - மற்றைக் கருவி களின் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும், மீத் திறம் படாமை - ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையில் இந்திரந் தோன்றாமற் செய்தலும், சித்திரக் கரணம் சிதை வின்று செலுத்தும் - இவ்வனைத்தும் செய்யுமிடத்துக் கைத் தொழில் அழகு பெறச் செய்து காட்டலும் வல்லனாய், அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் - அத்தன்மை யுடைய தண்ணுமைக் கருவியின் அரிய தொழிலையுடைய ஆசிரியனும்; 45. இசை - நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்பர். இதற்குப் பிரமாணமாக எடுத்துக் காட்டப் பெற்றதோர் சூத்திரம் அடியில் வருமாறு சிதைந்து காணப் படுகின்றது; " உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினும் உடறமி ழியலிசை யேழுடன் பகுத்து மூவேழ் பெய்தந்........................ தொண்டு மீண்ட பன்னீ ராயிரங் கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே" 45. தமிழ் என்பதற்கு, வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து காட்டப்பட்ட வாக்கியக் கூறுகள் என்றும் உரைப்பர். 46. பண் - நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப் படாநின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும், திறத்திறமு மாம். 47. முடம் - குற்றம். 47. ஆசு - நுண்மை. ஆசின் றுணர்ந்து என்னும் பாடத் திற்குக் குற்றமின்றி யுணர்ந்தென்பது பொருளாகும்.; 51. ஏங்கிய - ஒலித்தலையுடைய. 52. கூர்உகிர் - கூரிய நகம்; விரலுக்கு ஆகுபெயர். கரணம்-செய்கை. 53. தண்ணுமை என்றது ஏனைத்தோற் கருவிகளையும் அடக்கி நின்றது. அவற்றை, " பேரிகை படகம் இடக்கை உடுக்கை சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தாவில் தடாரி அந்தரி முழவொடு சந்திர வளையம் மொந்தை முரசே கண்விடு தூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம் தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென மிக்க நூலோர் விரித்துரைத் தனரே" என்னுஞ் சூத்திரத் தாலறிக. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், முன் சொன்ன உத்தமமான மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பன அகமுழவும், மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலியன அகப்புறமுழவும், அதமக் கருவியான கணப்பறை முத லியன புறமுழவும், முன் கூறப்படாத நெய்தற் பறை முதலியன புறப்புற முழவும், முரசு நிசாளம் துடுமை திமிலை யென்னும் வீரமுழவு நான்கும் பண்ணமை முழவும், நாழிகைப் பறையானது நாண்முழவும், துடி என்பது காலை முழவும் ஆகுமென்றும் கூறுவர். அடிகள் தண்ணுமை யொன்றனையே விதந்தோதுதலின் அதுவே ஏனைக் கருவிகட் கெல்லாம் முதலாமென்பது பெற்றாம். குழலாசிரியன் அமைதி 56 - 69 சொல்லிய இயல்பின் - நூல்களிற் சொன்ன முறைமையாலே, சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்னும் இரு கூற்றினையும் அறிந்து, புணர்ப் போன் பண்பின் - புணர்க்கவல்ல பாடலாசிரியனை யொத்த அறிவினை யுடையனாகி, வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து - ஆரோகண அவரோகணங்களில் விரல்களை விட்டுப் பிடிக்கும் வர்த்தனை நான்கினாலும் நூற்று மூன்று பண்ணீர்மை களையும் தந்நிலை குலையாமற் காட்டவல்லனாய், ஆங்கு - அவ்விடத்து, ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் - பதினாற் கோவையினிடத்துக் குரல் நரம்பு இரட்டிக்கவரும் அரும் பாலையையும், இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற்செம் பாலையையும், இவைபோல அல்லாத பாலைகளையும், ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி - இசை நூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையுமுடையனாய், பண் அமை முழவின் கண்ணெறி அறிந்து - பண்ணுதலமைந்த முழவின் கண்ணெறியினை அறிந்து, தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி - தண்ணுமை முதல்வனோடும் பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு - நிறத் தினையுடைய இளியென்னும் நரம்பினை யாழ்மேல் வைத்து, இசையோன் பாடிய இசையின் இயற்கை - அதன்வழியே இசைக்காரன் பாடிய பாட்டினியல்பை, வந்தது வளர்த்து - பாடுகின்ற பண் வரவுகளுக்குச் சுரம் குறைவு படாமை நிறுத்தி, வருவது ஒற்றி - அந்தப் பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி இன்புற இயக்கி - வண்ண முதலாகக் காட்டப்பட்ட பாடலியல் வழக்கெல்லாம் சுவை பொருந்த நிரம்பக் காட்டி, இசை பட வைத்து - முற்கூறிய முதலும் முறையும் முதலான பண்ணிலக்கணம் பதினொன்றினையும் நிரம்ப வைத்து, வார நிலத்தைக் கேடின்று பார்த்து - வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய், ஆங்கு - பாடலிடத்து, ஈரநிலத்தின் எழுத்து எழுத்தாக - சொன்னீர்மைகளின் எழுத்துக்கள் சிதையாமலே எழுத்தெழுத்தாக இசைக்கும், வழுவின்று குழலோன் தானும் - இச்சொல்லப்பட்ட இயல்புகளை இலக்கணப்படி வழுவாமல் வாசித்துக்காட்ட வல்ல குழலாசிரியனும்; 56. சித்திரப் புணர்ப்பாவது இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். வஞ்சனைப் புணர்ப்பாவது இசை கொள்ளா வெழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் புணர்த்தல். 58. வர்த்தனை - குழலில் விரலுளர்ந்தூதுந் துளைகள் சுட்டுவிரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம்; சிறு விரல் முதலாக விட்டுப்பிடிப்பது அவரோகணம்; இங்ஙனம் ஏற்றியிறக்கலும், இறக்கியேற்றலும் வர்த்தனை யெனப்படும். 59. ‘ஏற்றிய குரலிளி............உணர்வினனாகி' என்பதன் பொருள் பின்னர் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து உரைக்கு முறையால் விளக்கமாம். 63. பட்டடை - அடிமணை; எல்லாப் பண்ணிற்கும் அடி மணையாதலின் இளியென்னும் நரம்பு, பட்டடை யெனப் பட்டது. யாழின் மேற்பண்களை இளி முறையாலே வைத்து என்க. இளி முறையாவது சட்சக் கிரமம். ஆங்கு;அசை. 65. ஒற்றி - நினைந்து. 67. வார நிலத்தைக் கேடின்று பார்த்து என்பது - முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட இயக்கம் நான்கினும் முதல் நடை மிகவும் தாழ்ந்த செலவினை யுடைத்தாகலானும், திரள்மிகமுடுகிய நடையினை யுடைத்தாகலானும் இவை தவிர்ந்தும், இடைப்பட்ட வாரப் பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைத்தாகலானும், கூடைப்பாடல் சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாகலானும் சிறப்புநோக்கி, அவ்விரண்டினுள்ளும் வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய் என்க. எனவே, கூடைப்பாடலும் அமைவதாயிற்று. 69. இசைக்கும் என்பதை எழுத்தெழுத்தாக இசைக்கும் என்றும், சொல்லப்பட்ட யாவற்றையும் வழுவின்றிசைக்கும் என்றும் பிரித்துக் கூட்டுக. அறிந்து மயலறப்பெய்து உணர்வினனாகி அறிந்து பொருந்தி வைத்து வளர்த்து ஒற்றி இயக்கி வைத்துப் பார்த்து இசைக்குங் குழ லோன் என்க. யாழாசிரியன் அமைதி இப்பகுதியின் உரை நன்கு விளங்குதற் பொருட்டு இசையைப் பற்றிய சில கொள்கைகளை முதற்கண் விளக்குதும்;- தமிழில் இசை என்பது சுரம், இராகம் என்னும் இரு பொருளிலும் வழங்கும். இராகத்திற்கு இசையென்னும் பெயரன்றிப் பண் என்ற பெயரும் உண்டு. வடமொழியில் சுருதியென்று சொல்லப் படுவது தமிழில் அலகு என்றும், மாத்திரை யென்றும் வழங்கும். மற்றும், சுரம் என்பதற்கு நரம்பு என்ற பெயரும், பண் என்பதற்கு யாழ் என்ற பெயரும் தமிழில் வழங்கும். ஏழிசைகட்கும் தமிழிலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன பெயர்களாம். ஏழு சுரங்கட்கும் வடமொழியிலே சட்சம், ரிடபம் காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பன பெயர்களாம். தமிழில் ஏழிசைகட்கும் இருபத்திரண்டு அலகுகள் கூறப்பட்டுள்ளன; அவை குரல் முதலியவற்றிற்கு முறையே 4, 4, 3, 2, 4, 3, 2 ஆகும்; இதனை, " குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்" என்பதனானறிக. வடமொழியிலும் ஏழு சுரங்கட்கும் இருபத்திரண்டு சுருதிகளே கூறப்பட்டுள்ளன; அவை சட்சம் முதலியவற்றிற்கு முறையே 4, 3, 2, 4, 4, 3, 2 ஆகும். இந்த இசை அல்லது சுரங்களின் வரிசைக்குத் தமிழில் கோவை யென்றும் பெயருண்டு. இவ்வரிசை யமைப்புக்கள் ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை என நால்வகைப் படுகின்றன, இவற்றினின்றும் உண்டாவது இராகம் அல்லது பண் ஆகும். ஏழிசை யெனப்படும் சுரங்கள் ஏழினையும் மாறுந்திறத் தினாலேயே பலவகைப் பண்கள் அல்லது இராகங்கள் உண்டா கின்றன; ஆகலின் சுரங்களைப்பற்றிய செய்திகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். குரல் முதலாய ஏழனுள், தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலில் இளியும், இளியில் துத்தமும், துத்தத்தில் விளரியும், விளரியிற் கைக்கிளையும் பிறக்கும்; இவற்றுள் முதலிற் றோன்றியது தாரம். " தாரத்துட் டோன்றும் உழையுழை யுட்டோன்றும் ஓருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு" என்பது காண்க. தாரத்துள் அதற் கைந்தாவதாகிய உழையும், உழையுள் அதற் கைந்தாவதாகிய குரலும், இம்முறையே ஏனையவும் தோன்றின வென்பது அறியற்பாலது. இவ்வேழிசைகளும் வட்டப் பாலை முறையில் ஓர் இராசி மண்டலத்தின் பன்னிரண்டு இருக்கை களையும் இடமாகக் கொள்ளும் என்பது பின்னர் ஆய்ச்சியர் குரவையுள் விளக்கப்படும். ஓர் இராகம் அல்லது பண்ணினை உண்டாக்குதற் பொருட்டு முதலிலே தொடங்கப்பெறும் சுரம் குரல் என்பதாகும். ஏழு சுரங்களில் எதனையும் குரலாக நிறுத்துதல் உண்டு; அஃதாவது குரலே குரலாகவும், துத்தம் குரலாகவும், கைக்கிளை குரலாகவும் இங்ஙனம் தொடங்கப் பெறும் என்பதாம். சுரங்களைக் கொண்டு இசையை எழுப்புதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்ட எழுத்துக்கள் சரிகமபதநி என்னும் ஏழுமாம். இவ்வெழுத்துக்கள் சட்சம் முதலிய பெயர்களின் முதலெழுத்துக்கள் என்று கொள்வன பொருந்தாமையால், இவை குறியீடாக அமைத்துக் கொள்ளப் பெற்றனவாதல் வேண்டும். வட நூற்றுறைபோயசிலரும் இங்ஙனம் கருதுவர். " ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள வெனும் இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய" எனத் திவாகரம் கூறுதலின், ஆ முதலிய நெட்டுயிர் ஏழனையும் கருவியாகக் கொண்டு பண்டைத் தமிழ் மக்கள் இசை பாடின ராதலும் வேண்டும். தமிழிலே இராகங்கள் பண் எனவும், திறம் எனவும் இரு வகைப் படும். "நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்," "குறைநரம் பிற்றே திறமெனப் படுமே" என்னும் திவாகர நூற்பாக்களால் ஏழுநரம்பானும் இயன்றது பண்ணாம் என்பதும், ஆறு ஐந்து நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றன திறமாம் என்பதும் பெறப் படும். திறத்தை மூன்று வகைப்படுத்துப் பண்ணியற்றிறம், திறம், திறத்திறம் என வழங்குதலு முண்டு. பண்ணும், திறமூன்றும் ஆகிய இந் நால்வகை இராகங்களையும் குறிக்கும் வடமொழிப் பெயர்கள் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்பன. இந்நான்கும் தமிழில் பண், திறம் என இரண்டாகக் கூறப்படுத லோடு, யாவும் பண்ணென்றே கூறப்படுதலும் உண்டு. தமிழில் ஐந்திணைக்குமுரிய பண்கள் குறிஞ்சியாழ், பாலை யாழ், முல்லையாழ், நெய்தல்யாழ், மருதயாழ் என்பன, இவற்றுள் நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். இது திறனில் யாழ் எனப் படுதலின், திறங்களுடைய ஏனை நான்குமே பெரும்பண்கள் எனப்படும்; "யாம யாழ்ப்பெயர் குறிஞ்சி யாழும், செவ்வழி யாழ்ப் பெயர் முல்லை யாழும், பாலை யாழும் மருத யாழுமென, நால்வகை யாழும் நாற்பெரும் பண்ணே" என்பது திவாகரம்; இதிலிருந்து குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற பெயரும் உண்டென்பது புலனாம். இந் நாற் பெரும் பண்ணும் பிறக்குமாறு "தாரத் துழைதோன்றப் பாலை யாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே, இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்கநெய்த லியாழ்" எனக்கூறப்பட்டுளது. இதில் நெய்தல் யாழ் என்றது செவ்வழி யாதல் வேண்டும். எனவே தாரம் குரலாக உழை அதற்குக் கிளையாகத் தோன்றுவது பாலையாழ் எனவும், உழைகுரலாகக் குரல் அதற்குக் கிளையாகத் தோன்றுவது குறிஞ்சியாழ் எனவும் குரல் குரலாக இளி அதற்குக் கிளையாகத் தோன்றுவது மருதயாழ் எனவும், இளி குரலாகத் துத்தம் அதற்குக் கிளையாகத் தோன்றுவது செவ்வழி யாழ் எனவும் கூறப்படும் என்க. கிளையாவது நின்ற நரம்பினின்றும் தோன்றும் நரம்பு; நின்ற நரம்பிற்கு ஐந்தாவது நரம்பு. இவ்வாறே நின்ற நரம்பிற்கு நான்காவது நட்பு நரம்பென்றும், மூன் றாவதும் ஆறாவதும் பகை நரம்பென்றும், இரண்டாவதும் ஏழாவதும் இணை நரம்பென்றும் அறிக. இனி. முற்குறித்த நான்கு பண்களுள் பாலையாழிலிருந்து செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்னும் ஏழு பாலை யிசைகள் பிறக்கும்; இவை பிறக்குமாறு மேல் இக் காதை யுள்ளும், ஆய்ச்சியர் குரவையுள்ளும் விளக்கமாம். இனி, பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நாற் பெரும்பண்களில் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறு பாட்டால் நந்நான்கு ஆகப் பெரும்பண்கள் பதினாறாகும். நாற்பெரும் பண்களுள்ளே பாலை யாழுக்கு ஐந்தும், குறிஞ்சி யாழுக்கு எட்டும், மருத யாழுக்கு நான்கும், செவ்வழி யாழுக்கு நான்கும் ஆக இருபத்தொரு திறங்கள் உள்ளன. "ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலம். திறம் இருபத் தொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறு பாட்டால் எண்பத்து நான்கு ஆகும். எனவே, பண் பதினாறும், திறம் எண்பத்து நான்கும் சேர்ந்து நூறு என்னும் தொகையினவாகின்றன. பிங்கல நிகண்டிலே திறங்களின் வகை யாவற்றிற்கும் பெயர் கூறி முடித்த பின், "தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி, படுமலை யிவை நூற்று மூன்று திறத்தன" என்று கூறப் பட்டிருத்தலின், தாரப் பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை என்னும் மூன்று திறங்களும் முற்கூறிய நூற்றுடன் சேரப் பண்கள் நூற்று மூன்று என்னும் தொகைபெறும். பண் நூற்றுமூன்றென்றல் பெரு வழக்கு. பெரும் பண்களின் வகை பதினாறனுட் பன்னிரண்டுக்கும், திறங்களும், அவற்றின் வகையுமாகிய எண்பத்து நான்கிற்கும் பெயர் பிங்கல நிகண்டிற் காண்க. இனி, தமிழிலே குரல் முதலாகவும், வடமொழியிலே சட்சம் முதலாகவும் ஏழுசுரங்களும் பெயர் கூறப்படுதலின், குரலும் சட்சமும் ஒன்றெனவும், துத்தமும் ரிடபமும் ஒன்றெனவும், இவ்வாறே ஏனையவும் முறையே ஒவ்வொன்றா மெனவும் கருதுதல் கூடும். ஆயின், இவற்றுக்குக் கூறப்படும் அலகும் ஒலியும் பிறப்பிடமும் வேறுபடுதலின், அம்முறையே இவ்விரண்டும் ஒன்றெனல் அமையாமை பெற்றாம். ஈண்டு அலகினை நோக்குதும் :- குரல்- 4, துத்தம்- 4, கைக்கிளை- 3, உழை- 2, இளி-4, விளரி-3, தாரம் - 2. சட்சம் - 4, ரிடபம் - 3, காந்தாரம் - 2, மத்திமம் - 4, பஞ்சமம் - 4, தைவதம் - 3, நிடாதம் - 2. இவற்றுள் இரண்டாவதும் மூன்றாவதும் நான்காவதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க. சட்சம் முதலியவற்றிற்கு இங்கே காட்டிய சுருதிகளின் அளவே சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்னாகரம் முதலிய நூற்கள் பலவற்றிலும் காணப் படுதலின், அம்முறையே தமிழுக்கும் பொருத்தமாதல் வேண்டும். குரல் என்பதனைச் சட்சம் என்று கொள்ளாது மத்திமம் எனக் கொள்ளின் இரண்டிலும் சுருதியளவுகள் ஒத்து விடுகின்றன. குரல் - 4, துத்தம் - 4, கைக்கிளை -3, உழை - 2, இளி-4, விளரி - 3, தாரம் - 2. ம - 4, ப - 4, த - 3, நி - 2, ச - 4, ரி - 3, க - 2. சுருக்கங்கருதி மத்திமம் முதலிய பெயர்கள் ம முதலிய எழுத்துக் களாற் குறிக்கப்பட்டன. மேலே காட்டியவற்றில் இரு திறத்தும் அலகு ஒத்திருத்தல் காண்க. இவ்வாற்றால் பண்டைத் தமிழ் இசை நூலோர் வடநூன் முறையிலமைந்த மத்திமத்தை ஆரம்ப சுரமாகக் கொண்டன ரென்பது போதரும். எனவே, தாரத்து உழை தோன்றும் என்ற முறைப்படி காந்தாரத்தில் நிடாதமும், நிடாதத்தில் மத்திமமும், மத்திமத்தில் சட்சமும், சட்சத்தில் பஞ்சமமும், பஞ்சமத்தில் ரிடபமும், ரிடபத்தில் தைவதமும் பிறக்கும் எனக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளின், பின் கூறப்படும் இசையியல்புகள் பெரும்பாலும் மயக்கற விளங்கும். மிக நுட்பமான இசையியல்புகளை அறிய விழைவோர் இசை நூற்களைக் கற்றும், இசைப்பயிற்சி செய்தும் அறிதல் வேண்டும். 70 -94 (ஈரேழ்தொடுத்த............புலமை யோனுடன்) 70. ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் - செவ்விய முறையே இரண்டேழாகத் தொடுக்கப்பட்ட ஆயப் பாலையாய் நின்ற பதினாற்கோவையில், 71. ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி - செம்பாலை படுமலைப் பாலை செவ்வழிப்பாலை அரும்பாலை கோடிப்பாலை விளரிப் பாலை மேற்செம்பாலை யெனப்பட்ட ஏழு பாலையினையும் இணைநரம்பு தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக, 72. வண்மையிற் கிடந்த தாரபாகமும் - இப்பாலையின் முடிவுத் தானமாய் வலிந்த நிலைமையினையுடைய தாரம் பெற்ற இரண்டலகில் ஓரலகையும், 73. மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் - முதற்றானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்புபெற்ற நாலலகில் இரண்டலகையும், 74. தாரத்திற்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தாவதாகலின் கிளை நரம்பென்றார். கிளை - ஐந்தாவது நரம்பு. 74 - 75 மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை - தாரநரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளையாயிற்று; 75 - 77 ஒழிந்த பாகமும் பொற்புடைத் தளராத்தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டனள் - தளராத அழகுடைய தார நரம்பில் ஒழிந்த ஓரலகையும் விளரிக்குத்தர அவ்விளரி துத்த நரம்பாயிற்று; 77 - 78 ஆங்கே கிளையும் தன் கிளை அழிவு கண்டு அவள் வயிற் சேர - அம்முறையே இளியும் தன் கிளையாகிய குரலின் அழிவினைக் கண்டு அதன்பாற் சேரவும், 79. ஏனை மகளிரும் கிளைவழிச் சேர - ஏனைய உழை முதலாயினவும் தத்தமக்குக் கிளையாயினவற்றிற் சேரவும் இவ்வாறாய பதினாற் கோவையிலே, 80 - 81 மேலது உழை யிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை ஆயது - உழைமுதலாகக் கைக்கிளை யிறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் புதுமையுற்ற முறையாலே உழை குரலாகச் செம்பாலையாயது; 82 - 83 இறுதி ஆதியாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது - இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாகவுள்ள கைக்கிளை துத்தம் குரல் என்னுமவை தாம் தோன்றிய இட முறையான இயல்பின் நீங்காது, 84 - 85 படுமலை செவ்வழி அரும்பாலை எனக் குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும் துத்தம்குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும் என முறையே திரிந்தபின், 86. முன்னதன் வகையே முறைமையில் திரிந்து ஆங்கு - முன் பிற்படியே முறைமையின் வேறுபட்டு, 87. இளி முதலாகிய எதிர்படு கிழமையும் - தாரம் விளரி இளி என்பனவும், 88. கோடி விளரி மேற்செம்பாலை என - தாரம்குரலாகக் கோடிப்பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளி குரலாக மேற்செம்பாலையும் எனத் திரிய, 89. நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் - நெடிதாய்க் கிடந்த சுரங்களின் இடத்தே, 90. இணை நரம்புடையன அணைவுறக் கொண்டு ஆங்கு - முதலும் இறுதியுமாக வுள்ள நரம்புகளைப் பொருந்தக் கொண்டு, 91. யாழ் மேற்பாலை இடமுறை மெலிய - யாழினிடத்து அரும்பாலை முதலாயின இடமுறை மெலியவும், 92. குழல்மேற் கோடி வலமுறை மெலிய - குழலினிடத்துக் கோடிப்பாலை முதலாயின வலமுறை மெலியவும், 93-94 வலிவும் மெலிவுஞ் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமையோனுடன் - வலிவும் மெலிவும் சமனும் விளங்கவும் நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின குன்றா மலும் எழுத்துக்களால் இசை செய்ய வல்ல யாழாசிரியனும்; 95. கேள்வி - நரம்பு; சுரம் குரல் முதலாய ஏழு நரம்பினையும் இரட்டித்த பதினாற்கோவை யென்க. 96. தாரத்திற்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தா வதாகலின் கிளை நரம்பென்றார். கிளை - ஐந்தாவது நரம்பு. 97. விளரிக்குத் துத்தம் அம்முறையே ஐந்தாவதாகலின் கிளை வழிப்பட்டனள் என்றார். கிளையும் - இளியும்; குரலுக்கு இளி ஐந்தாவதாகலின் அதனைக் கிளையென்னும் பெயராற் கூறினார்; அன்றி, இளி யென்பதே எழுதுவோராற் கிளையெனத்திரிபுற்ற தெனலுமாம். அரும்பத வுரையாசிரியர் சொற்களை எஞ்சா தெடுத்துப் பொருள்கூறி முடிக்குங் கடப்பாடுடையரல்லர்; மற்று, அடியார்க்கு நல்லாரே அங்ஙனம் உரைக்குங் கடப்பாட்டினர். ஆயின், அவர் எக்காரணத்தானோ இசைப்பகுதியில் முன்னவருரைத்த வற்றையே தாமும் உரைத்து, மூலத்திலுள்ள சொற்கள் பல வற்றிற்குப் பொருளும் முடிபும் தெரிக்காது போயினர். அதனால், இஞ்ஞான்று அவற்றின் பொருள் அறிதல் அரிதாயினமையின் எழுதுவோராலும், பதிப்பிப்போராலும் வழுக்கள் நிகழ்தல் இயல்பேயாகும். அரும்பதவுரையிலும், அடியார்க்கு நல்லாருரையிலும் முறையே `இக்கிரமத்தினாலே,' `இளிக் கிரமத்தாலே' (சிலப். அரங். அடி. 63-4) எனவும், `பதினாற்கோவை பொலிந்து,' `பதினாற் கோவை கோலினிது' (மேற்படி அடி. 70) எனவும் `வரப்பட்ட பாலை,' `வட்டப் பாலை' (மேற்படி அடி. 72 - 3) எனவும் இங்ஙனம் எண்ணிறந்தன திரிந்து, திருத்தம் பெறாமலே முந்திய பதிப்புக்கள் பலவற்றிலும் காணப்படுதலை நோக்கின் மூலபாடம் உருச்சி தைந்து வழுப்பட்டிருத்தல் அரிதன் றென்பது புலனாம். 77-79 நரம்புகளை மகளிராக உருவகப்படுத்தி, 'வழிப்பட்டனள்' எனவும், `அவள் வயின்' எனவும், `ஏனை மகளிரும்' எனவுங் கூறினார். இதனை அறியமாட்டாது, உரையிலே `பெண்டிர்க் குரியதான முடைய' என வந்திருப்பது கொண்டு, இது பெண்டிர்கள் இனிது பாடுதற்கேற்றது என்று கூறினாருமுளர். கிளைவழிச்சேர நீடிக்கிடந்த கேள்விக்கிடக்கையின் இணைநரம்புடையன அணைவுறக் கொண்டு என இயைக்க. செம்முறைக் கேள்வியாகும் பதினாற்கோவை வருமாறு: (1) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; (2) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; இதினின்றும் உண்டாய கேள்விக் கிடக்கையாகும் பதினாற் கோவை வருமாறு: (1) உழை, இளி, விளரி, தாரம்,குரல், துத்தம், கைக்கிளை, (2) உழை, இளி, விளரி, தாரம்,குரல், துத்தம், கைக்கிளை, இவை முறையே, ம ப த நி சரி க - ம ப த நி ச ரி க எனவும் நி ச ரி க ம ப த - நி ச ரி க ம ப த எனவும்கூறிக் கொள்க. 80. செம்முறை மாறிவந்த பதினாற் கோவையில் உழை முதலும் கைக்கிளை இறுதியுமாய் நிற்றல் காண்க. 'உழையிளி' என்னும் பாடம் வழுப்பட்டதாகல் வேண்டும்; ஈண்டு இளி என்பதற்குப் பொருளொன்று மின்மையும், பழைய உரைகளில் இச்சொல் வறிதே விடப்பட்டிருந்தலுங் காண்க. 82. இறுதி ஆதியாக - இறுதியாகவுள்ள கைக்கிளை முதலாக. கைக்கிளை இறுதியில் நிற்றல் காண்க. 85. குரல் குரலாக என்பது ஒன்றொன்றாக என்பதுபோல் நின்ற அடுக்கு. தற்கிழமை - முறை நிரனிறை. 87. எதிர்படுகிழமை - எதிர் நிரனிறை. 90. இணைநரம்பு - முதலும் இறுதியுமாகவுள்ள நரம்பு; உழை முதற் கைக்கிளை யிறுதியும், கைக்கிளை முதல் துத்தம் இறுதியும், இவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியுமாகி யென்க; இரட்டித்த நரம்பு என்றலுமாம். உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளியென இடமுறையால் ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றினமை அறியற்பாற்று. இவ்வேழு பண்களும் பிற முறையால் உண்டாவன வேனிற் காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அறியப்படும். 91-2. குழல்மேற் கோடி என்றதனால் யாழ்மேல் அரும்பாலை யென வருவிக்கப்பட்டது. மெலிதல் - இறங்குதல்; அவரோகணம். 93. வலிவு - மேல் ; உச்சம் ; தாரம். மெலிவு - கீழ் ; மந்தம். சமம் - மத்திமம். இவை ஓசையின் மூவகை இயக்கம். ஆங்கவை, திரிந்தாங்கு, கொண்டாங்கு என்பவற்றில் ஆங்கு அசை. நிறுத்தல் வேண்டிப் பொலியக் கோத்த புலமையோன் என முடிக்க. அரங்கின் அமைதி 95-113. (எண்ணிய......அரங்கத்து) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர்கொண்டு - எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத் திலே நிலம் வகுத்துக்கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு - பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின் - நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன் பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில் - செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல்நிலை வைத்து - நால் வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு - தூண்களின் நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு - இடத்தூண் நிலை யிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டுவலத் தூணிடத்தும் உருவு திரைவாகப் பொருமுக வெழினியும் மேற் கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து - சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாம முமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து - புதுமை யுடைத்தாகப் பொருந்திய அரியதொழிலை யுடைய அரங்கின்கண்; 95 - 99 நூலோர் - நாடக நூலோர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இவ்வுலகில் நூல்வழி அரங்கு செய்யுமிடத்துத் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கிணறும் குளனும் காவும் முதலாயின அழியாத இயல்பினையுடைத் தாய், நிறுக் கப்பட்ட குழிப்புழுதி குழிக்கொத்து, கல்லப்பட்ட மண் இனிய நாற்றமும் இனிய சுவையும் உடையதாய், தானும் திண்ணி தாய், என்பும் உமியும் பரலுஞ் சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பற்றரை, பொடித் தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவணதாகி யுள்ள நிலத்திலே தேரோடும் வீதிகள் எதிர்முகமாகக் கொள்ளப்படும் என்பர். நிலம் வன்பால், மென்பால், இடைப்பாலென்று மூவகைப் படும் ; அவற்றுள் வன்பாலாவது தோண்டப்பட்ட குழியில் அம் மண்ணினைப் பெய்யின் குழியின்மண் மிகுவது ; மென்பாலாவது குறைவது ; இடைப்பாலாவது ஒத்திருப்பது. இடைப்பாலே வேண்டப்படுவதாம். மண்ணின் சுவைகளுள் துவர்ப்பு அச்சமும், புளிப்பு நோயும், காழ்ப்புப் பசிநீடுதலும், கைப்புக் கேடும், உவர்ப்புக் கலக்கமும், தித்திப்பு அன்பும் விளைக்குமாகலின் தித்திப்பே கொள்ளத் தகுவதாம். 97. போகிய - நீண்ட. 100. உத்தமராவார் : மிக்க நெடுமையும் மிக்க குறுமையுமில் லோர். அணு எட்டுக் கொண்டது தேர்த் துகள் ; தேர்த் துகள் எட்டுக்கொண்டது இம்மி ; இம்மி எட்டுக்கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரலாம். 105. வாயில் இரண்டாவன : உட்புகவும் புறஞ்செல்லவும் சமைத்தவை. மற்றும், கரந்து போக்கிடனும், கூத்தர் குடிஞைப் பள்ளியும், அரங்கமும், அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயின கொள்ளப்படும். 107. பூதர் - வருணப் பூதர் ; இவர் வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன் என்னும் நால்வருமாம். நால் வகை வருணத்தாரின் உருவம் தொழில் முதலியன விளங்க இங்ஙனம் வருணப்பூதம் நான்கும் வகுப்பட்டனவாகும். இவற்றினியல்பு பின்னர் அழற்படு காதையுள் விரித்துரைக்கப் படும். 111. உரை - புகழ். மேல் ஊர்காண் காதையில் 1"சந்திர குருவே யங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்" எனப் பாகுபடுத்துரைக்கப்படும் புகழ் என்க. வகுத்தனர் கொண்டுவைத்து எடுத்து வகுத்து நாற்றிக்கிடந்த அரங்கத்தென்க. தலைக்கோல் அமைதி 114 - 128 (பேரிசை மன்னர் ... வைத்தாங்கு) பேர்இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த - பெரிய புகழையுடைய பகையரசர் போர்செய்து புறங்கொடுத்தவழிப் பறிக்கப்பட்ட, சீர் இயல் வெண் குடைக் காம்பு நனி கொண்டு - அழகு பொருந்திய வெண்கொற்றக் குடையின் காம்பை நன்கு எடுத்து கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய - கணுக்கள் தோறும் கழுவிய நவ மணிகளாற் கட்டி, நாவல்அம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - சாம்பூநதம் என்னும் பொன்னின் தகட்டாலே கணுக் கட்கு நடுவாகிய இடங்களைக் கட்டி, காவல் வெண்குடை மன்னவன் கோயில் - உலகினைப் புரக்கும் வெண்குடையை யுடைய அரசன் கோயிலில், இந்திர சிறுவன் சயந்தன் ஆகென - தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, வந்தனை செய்து வழி படு தலைக்கோல் - மந்திர விதியாலே பூசித்து வழிபட்டுக் காப்பமைத்து இருத்திய தலைக்கோலை, புண்ணிய நன்னீர் பொற் குடத்து ஏந்தி மண்ணிய பின்னர் மாலை அணிந்து - முன்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் புண்ணிய நதிகளின் நல்ல நீரைப் பொற் குடத்திலே முகந்து வந்து நீராட்டிய பின்பு மாலைகளுஞ் சூட்டி, நலம் தரு நாளால் - இதற்குப் பொருந்திய நல்ல நாளிலே, பொலம் பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு - பொன்னாலாகிய பூணினையும் பட்டத்தினையு முடைய பட்ட வருத்தனத்தின் பெரிய கையில் வாழ்த்துடன் கொடுத்து அதனை உடன்கொண்டு, முரசு எழுந்து இயம்ப - மும்முரசும் எழுந்து முழங்கவும், பல் இயம் ஆர்ப்ப - அவை யன்றிப் பல வாச்சியங்களும் ஒலிக்கவும், அரசொடு பட்ட ஐம் பெருங் குழுவும் - அரசனும் அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் என்னும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர, தேர் வலம் செய்து கவி கைக்கொடுப்ப - வீதியின் கண் நின்ற தேருடன் வலஞ்செய்து தேர்மிசை நின்ற பாடுவோன் கையிலே இத் தலைக்கோலைக் கொடுத்து, ஊர்வலஞ் செய்து புகுந்து முன் வைத்தாங்கு - நகரியை வலமாகவந்து அரங்கின் கட்புகுந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்; 114 - 115 தலைக்கோல் கொள்ளுமிடத்து மாற்றரசர் குடைக் காம்பும், பகை வேந்தரது எயிற்புறத்து வெட்டின மூங்கிலும், புண்ணிய வரையின் மூங்கிலும் ஆம் என்பர் ; இவற்றுள் முன்னைய இரண்டும் வேத்தியற்கும், பின்னையது பொது வியற்கு மாம். 116 மண்ணிய-கழுவிய ;மண்ணிய மணி யென்க. 117. நாவலம் பொலம் - சாம்பூநதம் என்னும் பொன். நாவல்- சம்பு; அம் சாரியை.. 1"நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும். 118 - 120 மன்னவன் கோயிலில் காப்பமைத்து இருத்திய வென விரித்துரைக்க. ஆகென - ஆக. சயந்தன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாய்ப் பிறந்து தலைக்கோற் றானத்துச் சாபம் நீங்கினா னாகலின் தலைக்கோலைச் சயந்தனாக நினைத்து என்றார். 123. நாளால், வேற்றுமை மயக்கம். பூண் - கிம்புரி ; அணி கலமுமாம். " பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலம் சீரா திரையவிட்டஞ் சித்திரையோ-டாருமுறம் மாசி யிடபம் அரிதுலை வான்கடகம் பேசிய தேள் மிதுனம் பேசுது" என்னும் மதிவாணனார் கூற்றால் நன்மையாகிய நாள் பத்தும் இராசி ஆறும் அறிக. 124. அரசுவா - பட்டவருத்தனம் ; பட்டத்தியானை. ஆடலாசிரியன் முதலானோர் தலைக்கோலை யானை கையிற் கொடுத்துத் தேருடன் வலஞ் செய்து, பின் கவியின் கையிற் கொடுத்து ஊர்வலஞ் செய்து புகுந்து வைத்தபின் என்க. மாதவி அரங்கிற் புகுந்து ஆடுகின்ற வியல்பு 129 - 159 (இயல்பினின்......காட்டின ளாதலின்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் - அரசன் முதலிய யாவரும் தகுதிக் கேற்ற இருக்கைகளில் முறையே இருந்தபின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப - இடக்கை முதலிய குயிலுவக் கருவியாளர் தாம் நிற்க வேண்டிய முறைப்படி நிற்க, வலக்கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து - அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி, வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத் தூணைச் சேர்தல் முறை யென்று அவ்விடத்தைச் சேர்ந்து, இந்நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி வந்தேறி நின்றவாறே ஒருமுக வெழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணினைச் சேர்ந்து நின்ற பழைய நெறியியற் கையை யுடைய தோரிய மடந்தையரும் தானும், சீர்இயல் பொலிய நீர் அல நீங்க - நன்மை மிகவும் தீமை நீங்கவும் வேண்டி, வாரம் இரண்டும் வரிசையிற் பாட-ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் என்னும் தெய்வப் பாடல் இரண்டினையும் முறையாலே பாட, பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - பாடிய தெய்வப் பாடலின் இறுதியிலே நின்று கூடி இசையா நிற்கும் கருவி களெல்லாம், குழல் வழி நின்றது யாழே - வங்கியத்தின் வழி யாழ்ப் பாடல் நின்றதாக, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே - யாழ்ப் பாடலின் வழியே மத்தளம் தகவுற நின்றதாக, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே - மத்தளத்தின் வழியே குடமுழா நின்றதாக, முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை - முழவுடன் கூடிநின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது இடக்கையின் ஓசையாக, ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி - இடக்கையோடு முன் சொன்ன குயிலுவக் கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும்போல ஒன்றாய் நிற்ப, கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக - ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகப் கட்டப்பட்ட தேசி யொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடி முடித்து, வந்த முறையின் வழிமுறை வழாமல் - இப்படிச் செய்கை நாடக நூல்களில் அமைந்த முறையாகலான் அம்முறை வழுவாமல், அந்தரக் கொட்டு உடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டு என்றும் முகம் என்றும் கூறப்படும் இவ்வொத்து ஆடிமுடிந்த பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் பகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப் பண்ணாய் நரப்படையவும் உடைத்தா யிருக்கின்ற பாலைப்பண்ணை அளவு கோடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேலே, நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து - மங்கலச் சொல்லினை யுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடில்லாத உருவுக்குச் சொற் படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி, மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து, ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டில நிலையாலே, கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித் தொத்தலும் இரட்டித் தொத்தலுமே யாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடி முடித்து. இனி மார்க்கங் கூறுகின்றது. ஆறும் நாலும் அம்முறை போக்கி - பஞ்சதாளப் பிரபந்த மாகக் கட்டப்பட்ட வடுகிலொத்தையும் தேசியிலொத்தைக் காட்டினாற் போல இரட்டிக் கிரட்டியாக ஆடி, கூறிய ஐந்தின் கொள்கை போலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை - முன் சொல்லிப் போந்த தேசியைப்போல வடுகும் மட்டத்தாளம் முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னர், பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்தென - பொன்னால் இயன்றதோர் பூங்கொடியானது கூத்து நடித்தாற் போல, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறு பாட்டினும் நாட்டியமென்னும் புற நடத்தை நூல்களிற் சொன்ன முறைமை தவறாமல் அவிநயித்துப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினான்கின் நெறிவழுவாமல் ஆடிக்காட்டினள் ஆதலால்; 129. அரசன் முதலியோர் இருந்த பின்னர் என விரித்துரைக்க 134. தோரிய மகளிராவர் ஆடி முதிர்ந்தவர், “ இந்நெறி வகையா லிடத்தூண் சேர்வோள் தொன்னெறி மரபிற் றோரிய மகளே” எனவும் “ தலைக்கோ லரிவை குணத்தொடு பொருந்தி நலத்தகு பாடலு மாடலு மிக்கோள் இயற்படு கோதைத் தோரிய மகளே எனவும் கூறுவர். தோரிய மகளிரும் என்னும் உம்மையால், தானும் என்பது விரித்துரைக்க. 135. சீரியல் பொலிய என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெற என்றும், நீரல நீங்க என்பதற்கு அவதாளம் நீங்க என்றும் உரைத்தலுமாம். 137 - 143 நின்றது நின்றது நின்றது நின்றிசைத்தது என்பவற்றுடன் ஆக என்னும் சொற் கூட்டி எச்சப்படுத்து, ஆமந்திரிகை இசைத்ததாக, இங்ஙனம் வாரத்து ஈற்றிலே நின்று கூடி யிசையாநிற்கும் குயிலுவக் கருவிகளெல்லாம் அந்தர மின்றி ஒன்றாய் நிற்ப எனச் சொன் முடிபு கொள்க. ஆமந்திரிகை - இடக்கை யென்னும் வாச்சியம். வாரப் பாடல் பாடிய பின் என்றமையால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று. யாழ் குழல்வழி நின்றாற்போல மிடற்றுப்பாடலின் வழியும் நின்ற தென்க. 147. இதனை அந்தரக்கொட்டு என்றும், முகம் என்றும், ஒத்து என்றும் பெயர் கூறுப. இந்த ஒத்து ஆடிய பின்னல்லது நாடக மகள் உருக்காட்டுதல் வழக்கல்ல என்பர். 148 - 149 பாலைப் பண்ணை மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து அதன்மேல் என்றியைக்க. வக்காணம் - ஆளத்தி. 150. ‘நாலுறுப்புங் குறைபாடில்லாத' என்னும் இருவருரைக்கும் 'நான்கின் ஒரீஇய' என்னும் மூலம் பொருத்தமாதல் இன்று; ஒருவா, ஒருவில என்றிங்ஙனம் பாடமிருந்திருக்கும் போலும். `நாலுறுப்பாவன: உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை என்பன. ஈண்டு நாலுறுப்புக்களும் குறைபாடில்லாத உருவென வேண்டியது, மூன்றுறுப்பாலே வருவனவும் உளவாதலின். அவை இரண்டாமடியே ஈற்றடியாகப் பாடி முடிவன. அவை மங்கலத்துக்குப் பொருந்தாவெனக்கொள்க' என்பர். 152 - 154 இக்காதையின் 20-21 அடிகளின் பொருள் நோக்குக. மார்க்கம் எனினும் வடுகு எனினும் ஒக்கும். 155. ஐந்து என்பது பஞ்சதாளம் என்னும் பொருட்டாக. கூறிய என்னும் அடையால் அது தேசியைக் குறிப்பதாயிற்று. 158-159. ‘இக்காதையிற் கூறிய முத்தமிழ் வகையும் காட்டினளா தலின் என்றுமாம்' என்பர் தொல்லை யுரையாசிரியர் இருவரும். மாதவி சிறப்புப் பெற்றதும் கோவலன் அவளை யுற்றதும் காவல் வேந்தன் ...................................... மறந்தென். 159 - 175 காவல் வேந்தன் இலைப் பூங்கோதை இயல்பினின் வழாமை -மாதவி தன் கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல் (காட்டினளாதலின்) காவலை யுடைய அரசனது பச்சை மாலையுடன், தலைக் கோல் எய்தி - தலைக்கோற் பெயர் பெற்று, தலை அரங்கு ஏறி-எல்லா முதன்மையும் பெறுதற்குக் காரணமாகிய முன்னரங் கேறப் பெற்று, விதிமுறை கொள்கையின் - இந்நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசையென நூல்கள் விதித்த முறைப்படி, ஆயிரத்து எண்கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள் - ஆயிரத்தெண் கழஞ்சு பொன் ஒரு முறையாகப் பரிசம் பெற்றாள் : அதுவே - அன்று தொடங்கி அதுவே நாடோறும் பரிசமாக, `நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த - நூற்றைப் பதின் மடங்காக அடுக்கி அதன் கடைக்கண்ணே எட்டை நிறுத்தின (ஆயிரத்தெட்டு என்ற படி), வீறு உயர் பசும்பொன் பெறுவது இம் மாலை - வீறு பெற்றுயர்ந்த பசும்பொன்னை விலையாகப் பெறுவது இம் மாலை, இம்மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என - இவ்வளவு பொன் தந்து இம் மாலையை வாங்கிச் சூடுவார் மாதவிக்கு மணமகனாதல் அமையும்' என்று சொல்லி, மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக்கொடுத்து - மான் போன்ற நோக்கினை யுடையவளாகிய ஓர் கூனிகையிற் கொடுத்து, நகர நம்பியர் திரிதரு மறுகில் - நகரத்து ஆண்டகைச் செல்வர்கள் உலா வரும் பெருந் தெருவில், பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த - விலைக்கு விற்பாரைப் போல்வதோர் பண்பினால் நிறுத்த, மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி - சிறந்த தாமரை மலர் போன்ற கண்ணையுடைய மாதவியின் பரிச மாலையைக் கோவலன் வாங்கி, கூனி தன்னொடும் மணமனைபுக்கு - கூனியுடனே மாதவியின் மணமனையிலே புகுந்து, மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் - அவளுடன் அணைந்த அன்றே, அயர்ந்தனன் மயங்கி - அயர்ந்து மயங்கி, விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் - நீங்க முடியாத விருப்பத்தை உடையனாயினான் ; வடு நீங்கு சிறப்பின் - குற்றமற்ற சிறப்பினையுடைய, தன் மனை அகம் மறந்து என் - தன் மனைவியையும் மனையையும் மறந்து என்க. 160. இலைப் பூங்கோதை - மாதவி யென்றுரைப்பாருமுளர். 161. தலைக்கோற் பெயர் பெறுதலாவது தலைக்கோலி என்னும் பட்டம் பெறுதல் ; தென்னாட்டுப் பழைய கல்வெட்டுக்களில் 1"திருநெல்வேலி உடையார் கோயில் பதியிலாரில் நக்கன் உரிமை அழகிய பெருமாளான உரிமை அழகிய பெருமாள் தலைக்கோலி" எனவும், "பதியிலான் நக்கன் அரங்கமான ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலியும், நக்கன் பூமியான பரமாக்கவிடங்கத் தலைக்கோலியும், நக்கன் சோழ விச்சாதரியான ஒலோக மாதேவி தலைக்கோலியும், நக்கன் பவழக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும்" எனவும் தலைக்கோலி என்னும் பட்டமும், அதனைப்பெற்ற பதியிலார் பலர் பெயரும் வருதல் ஈண்டு அறியத்தக்கன. 162. நாடகக் கணிகையர் தலைவரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பெறுதல் நூல் வழக்காகும்; " முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப" என்பர். 165. பசும்பொன் - கிளிச்சிறை யென்னும் பொன். பெறுவது - விலை மதிக்கப் பெறுவது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னுக்கு மாலை படிக்கட்டளை யாயிற்று. 166. கொடி என்பது மாதவி யென்னும் பெயருக்குப் பொருந்திய தோர் நயமுடைத்து. 170. மாமலர் - திருமகள் வாழும் மலர் என்றுமாம். 173. அணைவுறு வைகல் - அணைந்த அப்பொழுதே என்ற படி. அயர்த்தல் - அதுவேயாதல். மயங்குதல் - அறிவு திரிதல். 174. வடுநீங்கு சிறப்பு - மனையாட்குக் கற்பின் சிறப்பும், மனைக்குச் செல்வச் சிறப்புமாம். வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து என்றது நாடகக் கணிகையைப் பற்றி அவள் மனையையே வாழுமிடமாகக் கொண்டது அவனுக்கு நீங்காத வடுவா மெனக் குறிப்பினுணர்த்தியவாறாம். மறந்து ஆயினன் என்றியையும். என், அசை. மாதவியின் ஆடன் முதலியவற்றை மன்னற்குக் காட்டல் வேண்டி ஆடலாசிரியன் முதலாயினார் ஒருங்குகூடி, அரங்கத்து, வந்தனைசெய்து வழிபடு தலைக்கோலை மண்ணிய பின்னர் ஊர்வலஞ் செய்து புகுந்து முன்வைக்க, மாதவி வலக்கால் முன்மிதித் தேறி ஆடிக் காட்டினளாதலின் வேந்தனது இலைப் பூங்கோதையும் தலைக் கோற்பெயரும் பெற்றனள் ; பெற்றபின் மாலையைக் கூனி கைக்கொடுத்து நிறுத்த, அதனைக் கோவலன், வாங்கி, மனைபுக்கு, அயர்ந்து, மயங்கி, மறந்து விருப்பினனாயினன்ச் என்க. இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின் நிலைமண்டிலவாசிரியப்பா. வெண்பாவுரை எண்ணும் எழுத்தும் ............ வந்து பூம்புகார்ப் பொற்றொடி மாதவி - அழகிய புகார்நகரிற் பிறந்த பொன்வளை யணிந்த மாதவி யென்னும் கணிகை, ஆடு அரங்கின் வந்து - நடிக்கும் அரங்கத்திலே வந்து, எண்ணும் எழுத்தும் - எல்லாக் கலைகட்கும் கருவியாகிய கணிதம் இலக்கணம் என்ப வற்றையும், இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும், பண் நான்கும் - இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும், பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும், தன் வாக்கினால்-தன்வாக்கினாலும் கூத்தினாலும், மண்ணின்மேல் போக்கினாள்-புவிமுழுதும் அறிந்து புகழும்படி செய்தாள். கூத்தினாலும் என விரித்துரைத்துக்கொள்க. அரங்கேற்று காதை முற்றிற்று. 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை (கடலாடை நிலமடந்தையானவள் 'உலக முழுதாண்ட ஒரு தனித்திகிரியை உடைய உரவோனைக் காண்கின்றிலேன்' என்று திசைமுகம் பசந்து, தன் கணவனாகிய பரிதியைக் கெடுத்து வருந்துங் காலை, முடியுடைப் பேரரசர் நீங்கிய அற்றம் பார்த்துக் குடிகள் வருந்துமாறு வந்து புகுந்த குறுநில மன்னர்போல மாலைப் பொழுது வந்தது. பின்னர், இளையராயினும் பகையரசுகடியும் பாண்டியர் குல முதலாகிய வெண்பிறை தோன்றி, மாலையாகிய குறும்பினையோட்டி மீனரசினை ஆளாநின்றது. அப்பொழுது மாதவியானவள் நிலாமுற்றத்திலே மலரமளியில் ஊடலும் கூடலும் கோவலற் களித்து இன்புறுகின்றாள்; அவளைப்போன்றே கணவரோடு கூடிய மகளிர் பலரும் பூஞ்சேக்கையில் ஆவிபோலும் கொழுநர்மார்பில் ஒடுங்கிக் காவிமலர்போலும் கண்ணாற் களித்துயில் எய்துகின்றனர். கண்ணகியோ காதலனைப் பிரிந்தமையால் மங்கலவணியன்றிப் பிறிதணி அணியாமலும், வேறு ஒப்பனை யொன்றுமின்றியும், நுதல் திலகம் இழக்கவும், கண் அஞ்சனம் மறக்கவும், கூந்தல் நெய்யணி துறக்கவும் கையற்ற நெஞ்சுடன் கலங்குகின்றனள். அவள் போன்றே காதலர்ப் பிரிந்த மாதர் பலரும் ஊதுலைக் குருகுபோல் வெய்துயிர்த்துக் கண்கள் முத்தினை உதிர்க்க வருந்துகின்றனர். இவர்கள் இவ்வாறாக, இரவு நீங்கும் வைகறைகாறும் மகரக்கொடியையுடைய மன்மதன் நடுயாமத்தும் துயிலாது திரிதலால் நகர்காவல் நனிசிறப்பதாயிற்று) விரிகதிர் பரப்பி உலகமுழு தாண்ட ஒருதனித் திகிரி உரவோற் காணேன் அங்கண் வானத் தணிநிலா விரிக்குந் திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத் 5 திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத் திரைநீ ராடை யிருநில மடந்தை அரைசுகெடுத்தலம்வரும் அல்லற் காலைக் கறைகெழு குடிகள் கைதலை வைப்ப 10 அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி வலம்படு தானை மன்ன ரில்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக் 15 குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத அறுகாற் குறும்பெறிந் தரும்புபொதி வாசஞ் சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப 20 மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தென இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின் அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப் 25 பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல் 30 அந்துகின் மேகலை யசைந்தன வருந்த நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக் கோலங் கொண்ட மாதவி யன்றியும் 35 குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கிற் காரகில் துறந்து வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தன மறுகத் தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க் 40 காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப் பைந்தளிர்ப் படலை பரூஉக்கா ழாரம் சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்தாங்கு 45 ஆவியங் கொழுந ரகலத் தொடுங்கிக் காவியங் கண்ணார் களித்துயி லெய்த அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் 50 மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் 55 தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும் காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊதுலைக் குருகின் உயிர்த்தன ரொடுங்கி 60 வேனிற் பள்ளி மேவாது கழிந்து கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து மலையத்து ஆரமு மணிமுத் தாரமும் அலர்முலை யாகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர் 65 வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத் திடைக்குமி ழெறிந்து கடைக்குழை யோட்டிக் 70 கலங்கா வுள்ளங் கலங்கக் கடைசிவந்து விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை ஆம்பல் நாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல் 75 பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப் புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயி லெடுப்பி 80 இரவுத்தலைப் பெயரும் வைகறை காறும் அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான் விரைமலர் வாளியொடு கருப்புவில் லேந்தி மகர வெல்கொடி மைந்தன் திரிதர நகரங் காவல் நனிசிறந் ததுவென். வெண்பா கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க் காவலன் 1வெண்குடைபோற் காட்டிற்றே - கூடிய மாதவிக்குங் கண்ணகிக்கும் வரனூர் மதிவிரிந்து போதவிழ்க்குங் கங்குற் பொழுது. உரை 1 - 8 விரிகதிர் பரப்பி - விரிந்த கதிர்களைப் பரப்பி, உலகம் முழுது ஆண்ட - உலக மனைத்தையும் ஆண்ட, ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற தனியாழியை யுடைய, உரவோற் காணேன் - திண்மை யுடையோனைக் காண்கின்றிலேன்; அங்கண் வானத்து - அழகிய இடத்தையுடைய வானின்கண், அணிநிலா விரிக்கும் - அழகிய நிலாவை விரிக்கும், திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல் - திங்களாகிய செல்வன் எவ்விடத் துள்ளானோ ; என - என்று, திசை முகம் பசந்து - திசையாகிய தன்முகம் பசப்பூரப் பட்டு, செம்மலர்க் கண்கள் முழுநீர் வார - செவ்விய மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, முழுமெயும் பனித்து - மெய்ம் முழு தும் பனித்து, திரைநீர் ஆடை இருநில மடந்தை - கடலைஆடை யாக வுடைய பெரிய நில மடந்தை. அரசு கெடுத்து அலம் வரும் அல்லற்காலை - தன் கணவனைக் காணாது நெஞ்சு கலங்கு கின்ற இடுக்கட் பொழுதிலே. ஞாயிற்றைப் பேரரசாகவும், புவியைக் கோத்தேவியாகவும் சிலேடை வகையால் உருவகஞ் செய்கின்றார். கதிர் - கிரணம், ஒளி. ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற ஒற்றைத் தேராழி, ஆக்கினா சக்கரம் செல்வன் - மைந்தன். திசை முகம் - திசையினிடம் ; திசையாகிய முகம். திசை என்றமையால் முகம் நான்கு கொள்க. பசந்து - பசு வெயிலாற் பசுமையுற்று, பசப்புற்று. மலர்க்கண்கள் முழுநீர் வார-மலரினிட மெல்லாம் கள்ளாகிய நீர் ஒழுக, மலராகிய கண்கள் முழு தும் நீர்வார. பனித்து - பனிகொண்டு, நடுக்குற்று. அரசு -கணவன். 2"காலமுலகம்" என்னுஞ் சூத்திரத்தால், ஞாயிறு திங்கள் என்பன உயர்திணையாய் இசையா எனக் கூறிய ஆசிரியர் 1"நின்றாங் கிசைத்தால் இவணியல் பின்றே" 2"இசைத்தலு முரியள வேறிடத்தான" என்று கூறினமையின், ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டுத் திங்களஞ் செல்வன் என்றாயிற்று. மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இதுவே விதியாமென்க. கொல், ஐயப்பொருட்டு. கெடுத்து - மறைய விடுத்து; காணப்பெறாது; 3"எற்கெடுத் திரங்கி" என் புழிப்போல. 9 - 12 கறை கெழு குடிகள் கைதலை வைப்ப - இறை செலுத் துதற்குப் பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி - அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும் குடிகளை ஒரு தலையாகப் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி - வெற்றி பொருந்திய சேனையையுடைய வேந்தர் இல்லாத இடமறிந்து, புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னர்போல, கறை - கடமை ; வரி. துயருற என்பதனைக் கைதலை வைப்ப என்பதனாற் குறிப்பிட்டார். விருந்தின் மன்னர் குடிகொன்றிறை கொள்வாராகலின் வரி செலுத்துங் குடிகள் துயருறுவாரென்க. அறை போதல் - கீழறுத்தல் ; உட்பகையாய்ப் பகைவர்க்கு உதவி செய்தல். ஒடு - ஐ. இல்வழி - இல்லாதவிடம் ; ஈண்டுக் காலத்தை உணர்த்தி நின்றது. குறுநில மன்னரை விருந்தின் மன்னர் என்ற மையால் தானை மன்னர் தொன்றுதொட்டு வருவோர் என்பதா யிற்று. 13 - 20 தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த - தம் மனத் திலே தங்கிய கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் ஒப்பற்ற துயரினை யெய்தவும், காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்த- தம் காதலரைக் கூடியிருக்கும் மகளிர் மிக்க மகிழ்ச்சியை அடையவும் ,குழல் வளர் முல்லையில் - வேய்ங் குழலிலும்ச் வளர் கின்ற முல்லையின் மலரிலும், கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய் வைத்து ஊத - கோவலரும் இளமையுடைய வண்டு களும் முறையே வாயை வைத்து ஊதவும், அறுகாற் குறும்பு எறிந்து - வண்டுகளாகிய குறும்பினை யோட்டி, அரும்பு பொதி வாசம் - அரும்புகள் உள்ளடக்கிய மணத்தினை, சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற - இளந்தென்றலாகிய செல்வன் தெருவெல்லாம் தூற்றவும், எல்வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப - ஒளி பொருந்திய வளையையுடைய மகளிர் அழகிய விளக்கினை யேற்றவும், மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - வளம் பொருந்திய மூதூரின்கண்ணே மாலைப் பொழுது வந்து விட்டதாக ; தாழ்தல் - தங்குதல் ; இவர் இடைவிடாது நினைத்தலை அவர் மனத்திற் றங்குதலாகக் கூறினார். தனித்துயர் - தனிமையாலாகிய துயருமாம். குழலிலும் முல்லையிலும் கோவலரும் தும்பியும் ஊத என்றது நிரனிறை. இனி, `குழல்வளர் முல்லையில்' என்பதனைச் சிலேடையாக்கி, வேய்ங் குழலில் வளர்கின்ற முல்லை யென்னும் பண்ணைக் கோவலரும், கூந்தலில் வளர்கின்ற முல்லை மலரில் வண்டுகளும் ஊத என்றுமாம். குழல் - ஊதுங் குழலும், கூந்தலும். முல்லை- முல்லைப் பண்ணும், முல்லை மலரும். வளர்தல் - பொருந்துதல் தென்றல் தளிர்ப்பித்தலும் பூப்பித்தலுஞ் செய்யத் தான் இடைப் புகுந்துண்டலின் வண்டினைக் குறும்பென்றார். மணி விளக்கு - மாணிக்க விளக்குமாம். கறைகெழு குடிகள் போல் தணந்தோர் துயரெய்தவும், அறைபோகு குடிகள் போல் புணர்ந் தோர் மகிழ்வெய்தவும், விருந்தின் மன்னர் போல மாலை வந்ததென உவமங் கொள்க. இப் பதியின்கண் மாலைப்பொழுது வந்ததனைச் சாத்தனார் கூறுமிடத்தும், 1"பைந்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப" எனவும். 2''கோவலர் முல்லைக் குழன்மேற் கொள்ள" எனவும் வந்துள் ளமை காண்க. 21 - 26 இளையர் ஆயினும் பகை அரசு கடியும் - தாம் நனி இளம்பிராயத்தினராயினும் பகையரசரை யோட்டவல்ல, செருமாண் தென்னர் குல முதல் ஆகலின் - போரில் மாட்சி யுற்ற பாண்டியர் குலத்திற்கு முதல்வனாகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி - அந்திப் பொழுதிலே செவ்வானத்தின் கண் வெள்ளிய பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி - வருத்தத்தைத் தரும் மாலையாகிய குறும்பினை எறிந்து ஓட்டி, பான்மையில் திரியாது - முறைமையில் வழு வாது, பாற்கதிர் பரப்பி - தனது பால்போலும் வெள்ளிய ஒளியை விரித்து, மீன் அரசு ஆண்ட - மீனிராச்சியத்தை ஆண்ட, வெள்ளி விளக்கத்து - வெண்மையையுடைய விளக் கத்திலே. பாண்டியர் இளையராயினும் பகைவர்க் கடிதலை 3இளைய தாயினுங் கிளையரா வெறியும்,'4 `கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு" என்னும் புறப்பாட்டுக்களாலறிக. வெண்பிறை எனப் பண்படுத்தமையால் எடுத்த மொழி இனஞ் செப்பிச் செவ்வானத்து வெண்பிறை தோன்றி யென்பதாயிற்று. புன்கண் - துன்பம். இடை நின்ற காலத்துப் புகுந்து வருத்துதலின் மாலையைக் குறும்பு என்றார். பான்மை - முறைமை ; அரசியல். சந்திரன் உடுபதியாகலின் அவன் ஆள்வதனை மீனரசு என்றார்; மீனரசு என்பதற்குச் சந்திரன் என்று பொருள் கொள்ளின், மீனரசாகிய பிறை எனக் கூட்டுதல் வேண்டும். விளக்கம் - புகழென்னும் பொருளும் தோன்றும். 27 - 34 இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து - மனையிடத்தே வளரும் முல்லையும் மல்லிகையும் மற்றும் பலவுமாகிய பூக்கள் அவிழ்ந்து பரந்த படுக்கையாகிய சேக்கையின்கண் பொலிவு பெற்று, செந்துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல் அம்துகில் மேகலை அசைந்தன வருந்த - பரந்து உயர்ந்த அல்குலினிடத்தே அழகிய புடவையின்மேற் சூழ்ந்த பவள வடமாகிய மேகலை அசைந்தன வாய் இரங்க, நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து - நிலவின் பயனைக் கொள்ளுதற்குக் காரணமாகிய உயர்ந்த நிலா முற்றத்திலே, கலவியும் புலவியும் காதலற்கு அளித்து - தன் காதலனுக்கு ஒருகாற் கூடுதலையும் ஒருகால் ஊடுதலையும் மாறி யளித்து, ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி - அவ்விடத்து விருப்பமிக்க நெஞ்சத்துடன் கோவலனை எதிரேற்று முயங்கி, கோலம் கொண்ட மாதவி அன்றியும் - அம்முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும் வேட்கை விளைக்குங் கோலமாகத் திருந்தச் செய்த மாதவியும் அவளன்றியும், ஒடு, எண்ணின்கண் வந்தது, சேக்கைப்பள்ளி - ஒரு பொருளிரு சொல். சென்று - பரந்து. துகில் செல்லப்பட்டுக் கோவையாகிய மேகலை அசைந்து வருந்த எனச் சொல்நிலை மாற்றி யுரைத் தலுமாம். மேகலை - பவளக்கோவை எட்டினாற் செய்தது. 'அசைந்தன வருந்த நிலவுப் பயன் கொள்ளும்' என்றது இடக்கரடக்கு. எதிரி - எதிரேற்று ; முயங்கி யென்றபடி. கோவலற்கு, உருபு மயக்கம். 1'' உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றால் நீள விடல்" என்பவாகலின் கலவியும் புலவியும் அளித்தென்றார். மாதவியும் அன்றியும் என விரிக்க. 35 - 36 குடதிசை மருங்கின் வெள் அயிர் தன்னொடு குண திசை மருங்கிற் கார் அகில் துறந்து - மேற்றிசையிடத் துண் டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத் துண்டான கரிய அகில் முதலியவற்றாற் புகைக்கும் புகையைத் துறந்து, குடதிசை அயிர் - யவன தேசத்து அயிர் என்பர். அயிர் - கண்டு சருக்கரை ; நறும்புகைக்குரிய பொருள். இவற்றைப் புகைத்தல் மரபாதலை, 1இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப" என் பதனாலுமறிக. அகில் - பிறவற்றிற்கும் உபலக்கணம். தட்பத்தை விரும்புங் காலமாதலின் புகையைத் துறத்தல் கூறினார், குடதிசை, குணதிசை ; வெள்ளயிர், காரகில் என்பன முரண் என்னும் அணியாகும். 37 - 38 வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக - வடக்கின் கண்ணதாகிய இமயமலையில் உண்டான மிக்க ஒளியையுடைய வட்டக் கல்லில் தென் றிசைக் கண்ணதாகிய பொதியின் மலையிற் பிறந்த சந்தனம் சுழல, கேழ் - நிறம், ஒளி. வட்டம் - சந்தனம் உரைக்கும் வட்டக்கல். சந்தனம் - சந்தனக் குறடு. மறுக - சுழல ; அரைக்க வென்றபடி. மறுக என்றது பூசுதலாகிய காரியந் தோன்றநின்றது. 2"வடவர் தந்த வான்கேழ் வட்டம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப" என்பதுங் காண்க. கூதிர்க் காலத்துச் சந்தனத்தைத் துறந்து புகையை விரும்புதலும், வேனிற் காலத்துப் புகையைத் துறந்து சந்தனத்தை விரும்புதலும், ஈரிடத்தும் கூறப்பட்டன. மக்கள் வாழ்க்கைக்கு மேற்றிசைப் பொருளும் கீழத்திசைப் பொருளும் ஒன்று சேர்ச்தலும், வடதிசைப் பொருளும் தென்றிசைப் பொருளும் ஒன்று சேர்ச்தலும் வேண்டு மென்பது இவற்றாற் பெறப்படுதலின் பல தேயத்தாரும் ஒற்றுமையுடன் வாணிகம் நடாத்துதலின் இன்றியமையாமை புலனாம். 39 . 46 தாமரைக் கொழு முறி - தாமரையின் இளந்தளி ரினையும் தாதுபடு செழுமலர் - மகரந்தம் பொருந்திய அதன் செழுமை யுடைய மலரினையும், காமரு குவளை - கண்டார்க்கு விருப்ப முண்டாகும் குவளை மலரினையும், கழுநீர் மாமலர் - கழு நீரின் சிறந்த மலரினையும், பைந்தளிர் - பச்சிலையுடன் கலந்து தொடுத்த, படலை - படலை மாலையும் பரூஉக்காழ் ஆரம் - பரிய முத்தின் கோவையும், சுந்தரச் சுண்ணத் துகளொடும் - அழகிய சுண்ணமாகிய பொடியுடன், அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை - சிந்திக் கலந்து கிடந்த வளவிய பூஞ் சேக்கை யிடத்து, மந்த மாருதத்து மயங்கினர் மலிந்து - இளந் தென்றலால் மயங்கிக் காதல் மிக்கு, ஆங்கு ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி - அவ்விடத்து உயிர்போலும் கொழுநர் மார் பிடத்தே பொருந்தி, காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த - நீலோற்பல மலர்போன்ற அழகிய கண்களையுடைய மகளிரும் இன்பக் களியான துயில்கூட, நீலோற்பலம் - கருங்குவளை) காமம் மரு என்பது காமரு எனத் திரிந்து. காமம் வரு என்பது திரிந்த தென்பாருமுளர். படலை - இலைத் தொடை ; மலர்களும் இலையும் விரவித் தொடுத்த மாலை. காழ் - சரம் ; கோவை, ஆரம் - முத்து. ஆரக்காழ் எனவும், சிந்துபு அளைஇ எனவும் மாறுக. மயங்கினர், எச்ச முற்று. மலிந்து - மிக்கு ; காதன்மிக்கு என்க. ஆங்கு- அசையுமாம். ஆம் என்பதூஉம் அசை. மாதவியும் அவளன்றிக் கண்ணாரும் களித் துயிலெய்த வென்க. கண்ணால் என்று பாடமோதி, மார்பிடத்தே கண்களைப் பொருந்த வைத்து என்றுரைப்பர் அடியார்க்குநல்லார். களித் துயில் - கலவியாலுண்டான அவசமாகிய துயில். 47 . 57 (அஞ்செஞ் சீறடி ......... கண்ணகியன்றியும்) அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய - அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மென்றுகில் அல்குல் மேகலை நீங்க - மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை நீங்கவும், திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரிய - மதிபோலும் ஒள்ளிய முகத்திலே சிறு வியர்வு நீங்கவும், செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப - சிவந்த கயல்போலும் நெடியகண் தீட்டும் மையினை மறக்கவும், பவள வாள் நுதல் திலகம் இழப்ப - பவளம் போற் சிவந்த ஒள்ளிய நெற்றி திலகத்தை இழக்கவும், தவள வாள் நகை கோவலன் இழப்ப - வெள்ளிய ஒளிபொருந்திய முறுவலைக் கோவலன் இழக்கவும், மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப - கருமையுடைய நீண்ட கூந்தல் புழுகு நெய் அணிதலை மறக்கவும், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் - கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், மங்கல அணியிற் பிறிது அணி அணியாள் - மங்கலவணியின் வேறான அணியை விரும்பாளாய், கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் - வளைவாகிய குண்டலத்தைத் துறந்து வடிந்து தாழ்ந்த காதினை யுடையளாய், கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - செயலற்ற நெஞ்சத்தையுடைய கண்ணகியும், அவளன்றியும், கோவலன் தன்னைப் பிரிந்தமையின் யாதும் ஒப்பனை செய்திலள் என்பார் சிலம்பொழிய மேகலைநீங்க என்றிங்ஙனங் கூறினார். மங்கலவணி - இயற்கை யழகுமாம். வடிந்து - அழுகு வடிந்து ; 1அணிபறித் தழகு செய்யும்" என்றாற்போலக் 'குழை துறந்து வடிந்து வீழ் காதினள்' என்றார். வியர் பிரிய எனப் பிரித்து, விகா ரத்தால் ஒற்று மிக்க தென்பாருமுளர். சிறு வியர் கூட்டத்தாற் றோன்றுவது. முன் கலவியாற் சிவந்த கண் என்க. பவளம்போற் சிவந்த திலகம் என்றுமாம். கண்ணகியின் முறுவல் கண்டு இன் புறாமை கோவலற்குப் பெரியதோ ரிழப்பென்பார் 'தவள வாணகை கோவலனிழப்ப' என்றார். எழுதாள் மகிழாள் காதினள் என்பன எதிர்மறையும் உடன்பாடுமாகிய குறிப்பெச்ச முற்றுக்கள். இனி, அடி, அல்குல், முகம், கண், நுதல், கூந்தல் என்பன தம்மை யணியுஞ் சிறப்பை முறையே சிலம்பு, மேகலை, வியர், அஞ்சனம், திலகம், நெய் என்பன இழக்கவென்றலுமாம். செயவெனெச்சங் களை எழு தாள் முதலிய எச்சங்களால் முடித்து. அவற்றைக் கையற்ற என்னும் பெயரெச்ச வினையான் முடிக்க, கண்ணகியும் அன்றியும் என விரித்துரைக்க, 58 - 71 (காதலர்ப் பிரிந்த ........ புலம்புமுத் துறைப்ப) காதலர்ப் பிரிந்த மாதர் - தம் காதலரைப் பிரிந்த மாதர்கள், நோதக - கண்டார்க்கு வருத்தமுண்டாகும்படி, ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி - உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப்போல அழலெழ உயிர்த்தனராய் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து - இவ் விளவேனிற் காலத்திற் கமைந்த நிலா முற்றத்தில் மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளி - கூதிர்க்காலத்திற் கமைந்த இடை நிலத்திலே, குறுங்கண் அடைத்து - தென்றலும் நிலவும் புகாமற் குறிய சாளரக் கண் களை யடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த - பொதியிலில் உண்டாகிய சந்தனமும் அழகிய முத்தின் கோவையும் பரந்த முலையினை யுடைய மார்பில் அடையப் பெறாது வருந்தவும், தாழிக் குவளை யொடு தண் செங்கழுநீர் வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய - தாழியில் மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூஞ்சேக்கையில் மேவப் பெறாது வருந்தவும், துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது - தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப் புணர்ச்சியான் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரைத் திணித்த இணைத்தல் பொருந்திய அணையின் மீதே திருந்திய துயிலைப் பெறாமல், உடைப்பெருங் கொழுந ரோடு ஊடற் காலத்து - தம்மையுடைய கணவரோடு முன்பு ஊடிய காலத்து, இடைக்குமிழ் எறிந்து - இடைநின்ற குமி ழினை யெறிந்து, கடைக்குழை ஓட்டி - கடை நின்ற குழையைத் துறந்து, கலங்கா உள்ளம் கலங்கக் கடை சிவந்து - அவரது கலங்காத நெஞ்சமும் கலங்கும்படி கடை சிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண் - குறுக்கிட்டுப் பிறழும் நெடிய கண்கள், புலம்பு முத்து உறைப்ப - தனிமையாலே கண்ணீர்த் துளியைச் சிந்த. கண்ணகியும் ஏனைக் காதலர்ப் பிரிந்த மாதரு மென்க. குருகு - துருத்தி ; ஊதுலைக் குருகு என்றது வெளிப்படை. முத்தாகிய ஆர மும் எனலுமாம். ஆகத்து முலையென மாறினும் அமையும். தாழி யுள்ளே குவளையை வைத்து வளர்ப்பர் ; 1"தாழியுண் மலர்ந்த தண் செங் குவளை" என்பது காண்க. வீழ்தல் - விரும்புதல், மேவாது - பள்ளித்தாமமாய் மேவப்பெறாமல் என்றுமாம். கழிய - வருந்த வென்னும்பொருட்டு. தூவி - அடிவயிற்றின் மயிர். இணையணை- இணைதலையுடைய பலவாகிய அணை ; 2" இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட் டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணையசை" என்றார் பிறரும். திருந்து துயில் - கணவர் மார்பிலே துயிலும் களித்துயில். கலங்காவுள்ளம் என்றார், 3பெருமையும் உரனும் ஆடூஉ மேன "என்பவாகலின். புலம்பு முத்துறைப்ப - உவகைக் கண்ணீர் சிந்தாது துன்பக் கண்ணீர் சிந்த என்றுமாம். குமிழம் பூவும் முத்தும் மூக்கிற்கும் நீர்த்துளிக்கும் உவமை. உறைப்ப - உகுப்ப. 72 - 76 (அன்ன மென்னடை ......... கண்மலர் விழிப்ப) அன்னம்; மெல்நடை - அன்னமாகிய மென்மையுடைய நடை யினையும் ஆம்பல் நாறும் -ஆம்பலின் மணம் நாறும், தேம் பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் - தேன்மிக்க நறு மணத்தை யுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும், தண் அறற் கூந்தல் - தண்ணிய அறலாகிய கூந்தலினையும் உடைய, நன்னீர்ப் பொய்கை - நல்ல நீரையுடைய பொய்கையாகிய மடவாள், பாண் வாய் வண்டு நேர்திறம் பாட - பாண்டன்மையைத் தம்மிடத்தேயுடைய வண்டு களாகிய பள்ளியுணர்த்துவார் புறநீர்மை யென்னும் பண்ணாற் பள்ளியெழுச்சி பாட, காண் வரு குவளைக் கண்மலர் விழிப்ப - அழகுபொருந்திய குவளை யாகிய கண்மலர் விழிப்ப, ஆம்பல் நாறும் செவ்வாய் என இயையும். நடையினையும் வாயினையும் கூந்தலினையுமுடைய பொய்கையாகிய பெண் கண் விழிப்ப வென்க. பாண் -பாண் சாதி, நேர்திறம் - புறநீர்மை எனவும் பெயர்பெறும். அது, பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்றென்க ; என்னை? '' தக்கராக நேர்திறங் காந்தார பஞ்சமமே துக்கங் கழிசோம ராகமே - மிக்கதிறற் காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார் பூந்தா ரகத்தியனார் போந்து" என்பவாகலின். நேர்திறம் என்னின், அது முல்லைப்பண்ணின் திறங் களி லொன்றாம், பாட, காரணப்பொருட்டு ; உடனிகழ்ச்சியுமாம். இனி, ஆம்பல் என்னும் பண் தோற்றும் வாய் என்றும், பாட்டினை யுடைய வாயையுடைய வண்டு என்றும் கூறுதலுமாம். தேம் - இனிமை, தேன். குவளைக் கண்மலர் - குவளையாகிய கள்ளையுடைய மலர், குவளையாகிய கண்மலர். விழிப்ப - மலர, கண்விழிக்க, இஃது உருவக வணி. 77 - 84 (புள்வாய் முரசமொடு ......... நனிசிறந்ததுவென்.) புள்வாய் முரசமொடு - பறவைகளின் ஒலியாகிய முரசுடனே, பொறிமயிர் வாரணத்து - புள்ளிகள்பொருந்திய சிறகினை யுடைய கோழிச்சேவலும் முள்வாய்ச் சங்கம் - கூர்த்த வாயையுடைய சங்கமும், முறைமுறை ஆர்ப்ப - தத்தம் முறைமைக்கேற்ப ஒலிக்கவும், உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி - கடல் போலும் பரப்பையும் ஒலியையுமுடைய ஊரைத் துயிலெழுப்பி, இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் - இருள் நீங்குதலுறும் வைகறை யளவும், அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - இருள் மிக்க நள்ளிரவிலும் ஒரு மாத்திரைப் பொழுதும் துயிலானாய், விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி - மணம்பொருந்திய மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி, மகர வெல் கொடி மைந்தன் திரிதர - மகரமாகிய வெற்றிக்கொடியையுடைய காமதேவன் திரிந்து கொண்டிருத்தலால், நகரம் காவல் நனி சிறந்தது என் - நகரம் மிகவும் காவல் சிறந்ததென்க. புள்வாய் - வாய் என்பது ஒலிக்காயிற்று. வாரணத்து என் பதில் அத்துச்சாரியை தவிர்வழி வந்தது. உரவு நீர்ப் பரப்பு - கடல் ; இன், உவமப் பொருட்டு. ஊர், ஆகுபெயர். எடுப்பி - எழுப்பி ; 1சூத ரேத்திய துயிலெடை நிலையும்" என்பது காண்க. இரவுத் தலைப் பெயரும் எனத் தகரவொற்று மிக்கது விகாரம். தலைப் பெயர்தல், ஒரு சொல் ; அவ்விடத்தினின்றும் நீங்கும் என்றுமாம். இருளை யுடைய அரையாமம் என இயைக்க. அடியார்க்கு நல்லார் அரையிருளும் யாமமும் என விரித்து, ‘அரையிருள் - இரண்டாம் யாமம் ; யாமம் - ஓர் யாமம் ; பகல் - அரையாமம்' என்பர் ; பொருந்துமேற் கொள்க. பகல் - ஒரு மாத்திரைப் பொழுதென்க. 1'கைச்சிலை கணையோ டேந்திக் காமனிக் கடையைக் காப்பான்" என்றார் திருத்தக்க தேவரும். துஞ்சார் என்று பாடமோதித் துஞ் சாராம்படி என்றுரைப்பார் அடியார்க்கு நல்லார், என், அசை. மாதவியும் கண்ணாரும் களித்துயிலெய்தவும், கண்ணகியும் பிரிந்த மாதரும் துயில்பெறாது கண் முத்துறைப்பவும், பாட, விழிப்ப, ஆர்ப்ப, வைகறைகாறும் யாமத்தும் பகலுந் துஞ்சா னாகி மைந்தன் ஏந்தித் திரிதலால், நகரங்காவல் சிறந்த தென்க. இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின் நிலைமண்டில ஆசிரியப்பா. வெண்பாவுரை கூடினார்......கங்குற் பொழுது கூடினார்பால் நிழலாய் நட்பாய்ச் சேர்ந்தவர்பால் நிழலாகியும், கூடார்பால் வெய்யதாய் - பகையாய்ச் சேராதவர்பால் வெய்ய தாகியுமுள்ள, காவலன் வெண்குடைபோல் - சோழ மன்ன னுடைய வெண்கொற்றக் குடையைப்போல், போது அவிழ்க்கும் கங்குற்பொழுது - பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப் பொழுதில், வான் ஊர் மதி விரிந்து - வானிலே ஒளிவிரிந்து செல்லும் திங்கள், கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனைக் கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும், காட்டிற்று - முறையே தண்ணிதாயும் வெவ்விதாயும் தன்னைக் காட்டிற்று. உவமைக்கண், கூடினார், கூடார் என்பன முறையே நண்பர், பகைவர் என்னும் பொருளன. கூடிய மாதவி யென்றமையால், பிரிந்த கண்ணகி யென்பது பெற்றாம். ஏ, அசை, அந்திமாலைச் சிறப்புச் செய் காதை முற்றிற்று. 5. இந்திரவிழவூரெடுத்த காதை (உலகை மூடிய இருள் அகன்றிட ஞாயிறு தோன்றிக் கதிர் களைப் பரப்பியது. அன்று சித்திரைத் திங்களில் சித்திரையும் நிறைமதியும் கூடிய நாளாக விருந்தது. புகார் நகரிலுள்ளார் இந்திர விழாச் செய்யத் தொடங்கினர். மருவூர்ப்பாக்கம், பட்டினப் பாக்கம் என இரு பகுதியையுடையது புகார் நகரம். மருவூர்ப் பாக்கத்திற் கடற்கரையை யொட்டிக் கண்ணைக் கவரும் அழகுடைய யவனர் இருப்பிடங்களும், மற்றும் வாணிகத்தின் பொருட்டுப் பல நாடுகளிலிருந்தும் வந்தோர் கலந்துறையும் இருப்பிடங்களும் விளங்குவன. வண்ணம், சுண்ணம், சாந்தம், பூ முதலியன விற்போர் திரியும் நகர வீதியும், பட்டுச் சாலியர் இருக்கு மிடங்களும், நவமணிகளும் பொன்னும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், கூலக் கடைத் தெருவும், வெண்கலக் கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், கொல்லர், தட்டார் முதலியவர்களும், குழலினும் யாழினும் ஏழிசைகளையும் வழுவின்றிசைக்கும் பாணர்களும், ஏனோரும் உறையுமிடங்களும் ஆண்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், கொடித் தேர் வீதியும், பீடிகைத் தெருவும், வாணிகர் மறுகும், மறையோர் இருக்கையும், வேளாளர் வீதியும் மற்றும் மருத்துவர், சோதிடர், சூதர், மாகதர், கூத்தர், நாழிகைக் கணக்கர், கணிகையர் முதலாயினார் இருக்கைகளும், யானை தேர் குதிரைகளைச் செலுத்துவோரும் கடுங்கண் மறவரும் புறஞ் சூழ்ந்திருக்கும் இருக்கைகளும் திகழ்வன. அவ்விரு பாக்கங்கட்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட நாளங்காடி யென்னும் கடைத்தெரு உளது. அதன்கண் உள்ள நாளங்காடிப் பூதத்திற்கு மறக்குடிப் பெண்டிர் பூவும் பொங்கலும் முதலியன சொரிந்து குரவை யாடி அரசனை வாழ்த்திச் செல்கின்றனர். பின்னர், மருவூர் மருங்கின் மறங்கெழு வீரரும், பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று ‘வேந்தன் கொற்றங் கொள்க' எனக் கூறி முரசு முழங்க உயிர்ப் பலி யூட்டுகின்றனர். அதன்பின், திருமாவளவன் முன்பு வடதிசைச் சென்று இமையத்தின் சிமையத்தில் புலியைப் பொறித்து மீண்ட காலை வடநாட் டரசர்கள்பாற் பெற்றுக் கொணர்ந்த முத்துப் பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில் என்பன ஒருங்குடன் கூடிய அரும்பெறல் மண்டபத்திலும், பல திறப்பட்ட வியத்தகு செய்கைகளை யுடையனவாகிய வெள்ளிடை மன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என்னும் ஐவகை மன்றங்களிலும் பலிகள் கொடுக்கப்படு கின்றன. பின்பு, வச்சிரக் கோட்டத்திருந்த முரசை வெள்யானைக் கோட்டத்திற் கொணர்ந்து யானையின் பிடரில் ஏற்றி விழாவின் முதலும் முடிவும் தெரிவித்து, தருநிலைக் கோட்டத்திலுள்ள கொடியை நிமிர்த்துகின்றனர். நகர வீதிகளெல்லாம் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு முதலியவற்றால் அணி செய்யப் படுகின்றன. ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும் களிறு தேர் புரவிகளை ஊர்ந்து வந்து திரண்டு அரசனை வாழ்த்தி, காவிரியின் புண்ணிய நன்னீரைப் பொற் குடங்களிற் கொணர்ந்து இந்திரனை நீராட்டுகின்றனர். பின்னர்ப் 'பிறவா யாக்கைப் பெரியோன்' ஆகிய சிவபிரான் முதலாகவுள்ள எல்லாத் தேவர்களின் கோயில்களிலும் ஓமம் முதலியன செய்யப் படுகின்றன. அறவோர் பள்ளி முதலிய இடங்களிற் பெரியோர்கள் அறநெறிச் சொற்பொழிவுகள் செய்கின்றனர். யாழ்ப் புலவர், பாடற் பாணர் முதலாயினாரது இசை ஒரு பக்கம் சிறந்து திகழ்கின்றது. இவ்வாறாக இந்திர விழாவின் களிப்பு மிக்க நகர வீதியில் விழா வினிடையே, மாதவியுடன் கூடிக் களிப்புறும் கோவலன்போலப் பரத்தையரைப் பலபடப் பாராட்டிக் கூடி, அவர் பூசிய சாந்து முதலியன தம் மெய் முழுதும் பொருந்த வந்த கொழு நரை நோக்கி அவர்தம் கற்புடை மனைவியர் கடைக்கண் சிவப்புறலால், கணவர்கள் விருந்தொடு புகுந்து அச் சிவப்பினை மாற்றிக் கூடுகின்றனர், அக்காலத்தே கண்ணகியின் கருங் கண்ணும் மாதவியின் செங்கண்ணும் நீரினை உகுத்து முறையே இடத்தினும் வலத்தினும் துடித்தன.) அலைநீ ராடை மலைமுலை யாகத்து ஆரப்பே ரியாற்று மாரிக் கூந்தற் கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை புதையிருட் படாஅம் போக நீக்கி 5 உதய மால்வரை உச்சித் தோன்றி உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கபட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் 10 பயனற வறியா யவன ரிருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும் வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும். 15 பகர்வனர் திரிதரு நகர வீதியும் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் தூசுந் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும். 20 அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும் பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் 25 மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோ டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும் கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சருங் கருங்கைக் கொல்லருங் 30 கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னருங் கிழியினுங் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங் 35 குழலினும் யாழினுங் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் 40 கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாடமறுகும் மறையோ ரிருக்கையும் வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதருங் காலக் கணிதரும் 45 பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் சூதர் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர். 50 காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர். 55 நெடுந்தே ரூருநர் கடுங்கண் மறவர் இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும் இருபெரு வேந்தர் முனையிடம் போல 60 இருபாற் பகுதியி னிடைநில மாகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென 65 வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து 70 துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப் பெருநில மன்னன் இருநில மடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும். 75 மூதிற் பெண்டி ரோதையிற் பெயர மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப் 80 பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகென கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை 85 வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங் குயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் 90 செருவெங் காதலின் திருமா வளவன் வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் 95 அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் 100 கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும் 105 பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோர் ரேத்தும் 110 அரும்பெறன் மரபின் மண்டப மன்றியும் வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் 115 கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகின ராடிப் 120 பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் வஞ்ச முண்டு மயற்பகை யுற்றோர் நஞ்ச முண்டு நடுங்குதுய ருற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் 125 கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் 130 அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் 135 அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப் பாவைநின் றழுஉம் பாவை மன்றமும் மெய்வகை யுணர்ந்த விழுமியோ ரேத்தும் 140 ஐவகை மன்றத்தும் அரும்பலி யுறீஇ வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் 145 தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து மரகத மணியொடு வயிரங் குயிற்றிப் பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத் தியாங்கணுங் 150 கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரண நிலைஇய தோமறு பசும்பொற் பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொற் படாகை 155 தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் 160 இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட 165 தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணக மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் 170 அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ 175 நான்மறை மரபின் தீமுறை யொருபால் நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் அறவோர் பள்ளியும் அறனோம் படையும் 180 புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் திறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால் கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால் கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர் 185 பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரொடு எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால் முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலு ளாங்கண் காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா 190 மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து காமக் களிமகிழ் வெய்திக் காமர் 195 பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து நாண்மகி ழிருக்கை நாளங் காடியிற் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து நகையா டாயத்து நன்மொழி திளைத்துக் 200 குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு மலய மாருதந் திரிதரு மறுகிற் கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்தாங்கு 205 இருகருங் கயலே டிடைக்குமிழ் எழுதி அங்கண் வானத் தரவுப்பகை யஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல் நீர்வாய் திங்கள் நீள்நிலத் தமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி 210 மீனேற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல் இருநில மன்னற்குப் பெருவளங் காட்டத் திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாமென எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியும் 221 கருநெடுங் குவளையுங் குமிழும் பூத்தாங்கு உள்வரிக் கோலத் துறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் 220 ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென உருவி லாளன் ஒருபெருஞ் சேனை 225 இகலம ராட்டி யெதிர்நின்று விளக்கியவர் எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் 230 மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும் மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்பெனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் 235 உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன 240 விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென். உரை 1 - 6 அலைநீர் ஆடை - கடலாகிய ஆடையினையும், மலை முலை - மலையாகிய முலையினையும், ஆகத்து ஆரப் பேர் யாற்று - அம் முலையையுடைய மார்பினிடத்துப் பெரிய யாறாகிய முத்து வடத்தினையும், மாரிக் கூந்தல் - மேகமாகிய கூந்தலினையும் உடைய, கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை - இடமகன்ற பரப்பினையுடைய நிலமகளின், புதை இருட் படாஅம் போக நீக்கி - உடம்பை மறைத்த இருளாகிய போர்வையைப் போகு மாறு நீக்கி, உதய மால் வரை உச்சித் தோன்றி - பெரிதாகிய உதய கிரியின் உச்சியிலே உதித்து, உலகு விளங்கு அவிர் ஒளி - உலகம் விளங்குதற்குக் காரணமாகிய ஆதித்தன், மலர்கதிர் பரப்பி - விரிந்த கிரணங்களைப் பரப்ப ; பேரியாற்று ஆரம் என மாறுக. விளங்கு என்பது ஏதுப்பெயர் கொண்டது. அவிர்ஒளி - விளங்கும் ஒளி ; ஆதித்தன். பரப்பி என்பதனைப் பரப்ப வெனத் திரிக்க. அரசு கெடுத் தலம்வரும் மண் மடந்தை போர்த்த இருளாகிய படாத்தைத் தன் கதிர்க்கைகளால் நீக்கி எனல் முற்காதையுடன் தொடர்பு படுத்துரைக்க. 1"மணி மலைப் பணைத்தோண் மாநில மடந்தை, அணிமுலைத் துயல் வரூஉ மாரம் போலச், செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்று" என்றார் பிறரும். (அடி: மலை - பொதியிலும், இமயமும்; இவற்றைச் சாதி யொருமையாற் கூறினார்; `பொதியிலு மிமயமும் புணர் முலையாக' என்றார் கதையினும். புதைத்தல் - போர்த்தல்; மலை நாட்டு வழக்கு. வாளாது மண்மடந்தை யென்னாது கண்ணகன் பரப்பின் மண்மடந்தை யென்று மிகுத்துக் கூறினார், அத்தன்மையாளைப் போர்த்த நீலப்படாத்தைத் தன் றேசினால் நீக்கிய ஒளி யெனற்கு; எனவே செம்பியன் மரபுயர்ச்சி கூறியவா றாயிற்று.) 7- 39. வேயா மாடமும் - நிலா முற்றமும், வியன்கல இருக்கையும் - பெரிய அணிகலம் பெய்த அறைகளும், மான்கண் - மானின் கண் போலக் கோணஞ் செய்த, கால் அதர் - காற்றியங்கும் நெறியாகிய சாளரங்களையுடைய, மாளிகை இடங்களும் - மாளிகைகளும், கயவாய் மருங்கில் - புகார்முகப் பக்கங்களில், காண்போர்த் தடுக்கும் - தம்மைக் காண்போர் கண்களை மேற்போக விடாமற் றடுக்கும், பயன் அறவு அறியா - பயன் தொலைதலறியாத, யவனர் இருக்கையும் - சோனகர் இருப்பிடங்களும்; கலம் தரு திருவின் - மரக்கலந்தரும் செல்வப் பொருட்டால், புலம் பெயர் மாக்கள் - தாம்பிறந்த நிலத்தைக் கைவிட்டுப் போந்த பரதேசத்தார் பலரும், கலந்து இருந்து உறையும் - ஒரு தேசத்தாரைப் போலக் கலந்து உறைந் திருக்கும்; இலங்கு நீர் வரைப்பும் - விளங்குகின்ற அலைவாய்க் கரை யிருப்பும், வண்ணமும் - தொய்யிற் குழம்பும், சுண்ணமும் - பூசு சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும் - குளிர்ந்த நறிய கலவைச் சந்தனமும், பூவும் - விடுபூத் தொடுத்தபூ முதலிய பூக்களும், புகையும் - புகைக்கு உறுப்பாகிய அகில் முதலி யனவும், மேவிய விரையும்- பொருந்திய நறுமணப் பொருளாகிய சந்தனம் முதலியனவும், பகர்வனர் திரிதரும் நகரவீதியும் - விற்பராய்த் திரியும் நகரத் தெருக்களும், பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் - பட்டு நூலானும் உரோமத்தானும் பருத்தி நூலானும், கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும் - நுண்ணிய தொழில்களை ஊசியாற் பிணிக்கும் பட்டுச் சாலியர் இருக்குமிடங்களும், தூசும் துகிரும் ஆரமும் அகிலும் - பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும், மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் - குற்றமற்ற முத்தும் ஒழிந்த மணிகளும் பொன்னும் ஆகிய இவைகள், அளந்து கடை அறியா - இவ்வளவினவென அளந்து முடிவறியப்படாத, வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும் - பல வளங்களும் தலை மயங்கிய அகன்ற இடத்தை யுடைய மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு- பகுதி வேறுபாடு தெரிந்த முதிரை முதலிய பண்டத்தோடு, கூலம் குவித்த கூல வீதியும் - எண்வகைக் கூலமும், குவித்து விற்கும் கூலக் கடைத்தெருவும், காழியர் - பிட்டு வாணிகரும், கூவியர் - அப்பம் சுடுவாரும், கள் நொடையாட்டியர் - கள்விற்கும் வலைச்சியரும், மீன் விலைப் பரதவர் - மீன் விற்கும் பரதவரும், வெள் உப்புப் பகருநர் - வெள்ளிய உப்பு விற்கும் உமணரும்,பாசவர் - வெற்றிலை விற்பாரும், வாசவர் - பஞ்ச வாசம் விற்பாரும், பல்நினை விலைஞரோடு - பல்வகை ஆட்டின் தசைகளை விற்பாருடன், ஒசுநர் - எண்ணெய் வாணிகரும், செறிந்த - நெருங்கியிருக்கும், ஊன்மலி இருக்கையும், - ஊன் நிறைந்த இருப்பிடங்களும், கஞ்சகாரரும் - வெண்கலக்கன்னாரும், செம்பு செய்குநரும் - செப்புப் பாத்திரம் செய்வாரும், மரம் கொல் தச்சரும்- மரத்தை அறுத்துத் தொழில் செய்யும் தச்சரும், கருங்கைக் கொல்லரும் - வலிய கையையுடைய கொல்லரும், கண்ணுள் வினைஞரும் - சித்திரகாரிகளும், மண் ஈட்டு ஆளரும் - சுதையாற் பாவையுள்ளிட்டன செய்வாரும், பொன்செய் கொல்லரும் -பொற்பணி செய்யும் உருக்குத் தட்டாரும், நன்கலம் தருநரும் - இரத்தினப்பணித் தட்டாரும், துன்னகாரரும் - தையற்காரரும், தோலின் துன்னரும் - தோலின் தையல் வேலை செய்யும் செம்மாரும், கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி - துணியாலும் நெட்டியாலும் பலவகை உருக்கள் செய்யும் தொழில்களை மிகுத்துக் காட்டி, பழுது இல் செய்வினைப் பால் கெழுமாக்களும் - குற்றமற்ற கைத்தொழிலால் வேறு பட்ட இயல்புடையாரும், குழலினும் யாழினும் - வங்கியத் தாலும் யாழாலும், குரல் முதல் எழும் வழுவின்றி இசைத்து - குரல் முதலாய ஏழிசையினையும் குற்றமின்றாக அமைத்து, வழித்திறம் காட்டும் - பண்களையும் அவற்றின் வழிப் பிறக்கும் திறங்களையும் பாடவல்ல, அரும்பெறல் மரபின் - பெறற்கரிய இசைமரபினை யறிந்த, பெரும்பாண் - பெரும் பாணர்கள், இருக்கையும் - இருக்குமிடங்களும், சிறுகுறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு - மற்றும் சிறிய கைத் தொழில் செய்வாரும் பிறர் குற்றேவல் செய்வாரும் உறையும் இடங்களும், மறுஇன்றி விளங்கும் மருவூர்ப்பாக்கமும் - குற்றமின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும். 7 - 10 வேயாமாடம் முதலியன காண்போர்த் தடுக்கும் யவனரிருக்கை என்க. எகிப்து, கிரீசு முதலிய பிறநாடு களிலிருந்து வந்த வாணிகர், தொழிலாளர் முதலாயினார் யவனர் எனப்படுவர் ; இன்னோரைச் சோனகர் என்றும் மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள். 14. புகைக் குறுப்பாவன இவை யென்பதனை, "அஞ்சனக் கட்டி யரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ ரைந்து" என்பதனாலும், விரை இவை யென்பதனை, "கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை" என்பதனாலும் அறிக. 16. மயிர் - எலி மயிர் என்பர் அடியார்க்கு நல்லார். திருத்தக்க தேவரும் பலவிடத்து 'எலிமயிர்ப் போர்வை' குறித் திருப்பதுடன், 1"செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயிர், அந்நெருப்பள வாய்பொற் கம்பலம்" என அவ்வெலியினியல் பினையும், கம்பலத்தினியல்பினையும் கூறியுள்ளார். இஃது ஆராய்தற்குரித்து. 17. காருகர் - நெய்வோர் என்றுமாம். 23. எண்வகைக் கூலமாவன: "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என இவை. கூலம் பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலாசிரியர். கூலம், கருஞ்சரக்கு என்பது அரும்பதவுரை. 24. காழியர் - பிட்டுவாணிகர். கூவியர் - அப்ப வாணிகர் ; கடலாடு காதையுள், 2"காழியர் மோதகத் தூழுறு விளக்கமும், கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்" எனக் கூறுதல் காண்க. காழியர் - வண்ணார் என்பாருமுளர். நொடை - விலை. 25. உப்புப் பகருநர் - உமணரும் உமட்டியரும் ; அளவருமாம் 26. பாசவர் - கயிறுதிரித்து விற்பாருமாம். பஞ்சவாசமாவன: "தக்கோலந் தீம்புத் தகைசா லிலவங்கம், கப்பூரஞ் சாதி யோடைந்து" என விவை. 29. கருங் கை - வலிய கை ; வன்பணித் தொழிலாற் கன்றிய கை. 30. மண்ணீட்டாளர் - சிற்பிகள் என்றும், குயவர் என்றும் கூறலுமாம். 33. கிழியாற் படிமை, படம் முதலியனவும், கிடையால் விலங்கு, பறவை, பூ, பூங்கொத்து முதலியனவும் அமைப்போர் என்க. 37-38. பெரும்பாண் - பாணரில் ஒரு பிரிவினர் ; பெரிய இசை காரர் என்பாருமுளர். பிறர்வினையாளரொடு பெரும்பாணரும் என்க. யவனரிருக்கையும், இலங்குநீர் வரைப்பும், நகரவீதியும், காருகரிருக்கையும், நனந்தலை மறுகும், கூலவீதியும், காழியர் முதல் ஓசுநர் ஈறாகச் செறிந்த இருக்கையும், கஞ்சகாரர் முதலாகப் பெரும்பாணர் ஈறாக இருக்குமிடங்களும் விளங்கும் மருவூர்ப் பாக்கம் என்க. 40-58. கோவியன் வீதியும் - பெரிய இராச வீதியும், கொடித் தேர் வீதியும் - கொடியணிந்த தேரோடும் வீதியும், பீடிகைத் தெருவும் - கடைத்தெருவும், பெருங்குடி வாணிகர் - பெரிய குடிப்பிறப்பையுடைய வாணிகரது, மாட மறுகும் - மாடங் களையுடைய தெருவும், மறையோர் இருக்கையும் - வேதியர் இருக்குமிடங்களும், வீழ்குடி உழவரொடு - யாவரும் விரும்புங் குடியினராகிய உழவரோடும், விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் - சிறந்த கொள்கையையுடைய மருத்துவ நூலோரும், காலக் கணிதரும் - சோதிடரும், பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும் - வேற்றுமை தெரிந்த பல முறைமை யோடிருக்கும் இருப்பிடங்களும், திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன் பெரு வீதியும்- வேகடி வேலை செய்வாரும் சிறந்த கொள்கையோடு அணியப்படும் வளையை அறுத்தியற்றுவாரும் வாழும் அகன்ற பெரிய வீதியும், சூதர் மாகதர் வேதாளிகரொடு - நின்றேத்துஞ் சூதர், இருந்தேத்தும் மாகதர், வைதாளியாடுவார் என்று சொல்லப்பட்ட இவரோடே, நாழிகைக் கணக்கர் - கடிகையாரும், நலம்பெறு கண்ணுளர் - கோலத்தானும் கூத்தானும் அழகு பெறும் சாந்திக் கூத்தரும், காவற் கணிகையர் - காமக்கிழத்தியராகும் பரத்தையரும், ஆடற் கூத்தியர் - அகக் கூத்தாடும் பதியிலாரும், பூ விலை மடந்தையர் - அவற்றைப் பரிசம் கொள்வாரும், ஏவற் சிலதியர் - ஏவற்றொழில் செய்து உள்வீடு காப்பவரும், பயில் தொழிற் குயிலுவர் - தமக்குரிய தொழிலிற் பயின்ற குயிலுவக் கருவியாளரும், பன்முறைக் கருவியர் - படைக்கும் விழவுக்கும் கொட்டும் பல முறையான வாச்சியக்காரரும், நகை வேழம்பரொடு - விதூடகருடன் இருக்கும், வகைதெரி இருக்கையும் - இனத்தின் வகைதெரிந்த இருப்பிடங்களும், கடும்பரி கடவுநர் - விரைந்த செலவினை யுடைய புரவிகளைச் செலுத்துவாரும், களிற்றின் பாகர் -யானைப் பாகரும், நெடுந் தேர் ஊருநர் - நெடிய தேரினைச் செலுத்தும் தேர்ப்பாகரும், கடுங்கண் மறவர் - தறுகண்மையையுடைய காலாட் படைத் தலைவரும், இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் - அரசன் கோயிலைப் புறத்தே சூழ்ந்திருக்கும் பெரிய பரந்த இருப்புக்களும் என்னும் இவற்றையுடைய, பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய - பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர் நிறைந்த, பாடல்சால் சிறப்பிற் பட்டினப்பாக்கமும் - பாடலமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கமும்; 42. மறையோர் - பஞ்சக்கிராமிகள் என்பது பழையவுரை. 43. வீழ்குடியோடும் உழவரோடும் எனக் கொண்டு, வீழ்குடியைக் காணியாளர் என்னலுமாம். வீழ்குடி - உழவை விரும்புங் குடி யென்றுமாம். 46. திருமணி குயிற்றுநர் - முத்துக் கோப்பாருமாம். 46-47. கொள்கையோடு அணியப்படும் வளை என்க. தமக்குரிய சிறந்த கொள்கையோடு அழகிய சங்கினை யறுப்பார் என்னினும் இழுக்கின்று. 49. நாழிகைக் கணக்கர் - அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார் ; இதனை, " பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு காமன் றிரியுங் கருவூரா--யாமங்கள் ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும் ஒன்றுபோ யொன்றுபோ யொன்று" என்பதனாலறிக. 51. பூவிலை - பூவிற்கு விலை ; பரிசம் என்க. 52. குயிலுவர் - தோற்கருவி துளைக்கருவி நரம்புக் கருவி உருக்குக் கருவியாளர்கள். வீதியும், வீதியும், தெருவும், மறுகும், இருக்கையும், இருக்கையும், வீதியும், இருக்கையும், இருக்கையும் என்னுமி வற்றையுடைய, மல்கிய, சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்க. ‘ஈண்டு ஐம்பத்திரண்டு அடிகளால் இளங்கோவடிகள் கூறியிருக்கும் புகார்நகரின் இயல்புகளோடு 1மணிமேகலையுள் நாற்பத்து மூன்று அடிகளால் சாத்தனார் கூறியிருக்கும் வஞ்சி நகரின் இயல்புகள் பெரும்பாலும் ஒத்திருத்தல் அறியற்பாலது. 59-63. இருபெரு வேந்தர் முனையிடம் போல - பெருவேந்தர் இருவர் போர் குறித்து வந்து தங்கிய பாசறையிருப்புக்கு இடைநிலமாகிய போர்க்களம்போல, இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய - இரண்டு பக்கத்தினவாகிய மருவூர்ப் பாக்கம் பட்டினப்பாக்கம் என்னும் இருபகுதிகட்கும் இடை நிலமாகிய, கடைகால் யாத்த மிடைமரச் சோலை - நிரைபட நெருங்கிய சோலைமரங்களின் அடிகளே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய, கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாள் அங்காடியில் - பண்டங்களை விற்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் இடையறாது நிலை பெற்ற நாளங்காடியில்; 60. இரண்டிடத்தார்க்கும் பொதுவாதலும் ஆரவாரமும் கருதி முனையிடத்தை உவமை கூறினார். 61. மிடை சோலை மரக்கால் யாத்த கடை எனச் சொற்களை மாறுக. சோலையுள்ளே கடைகளை ஒழுங்காகக் கட்டிய என்றுமாம். 62. நாளங்காடி - காலைக் கடைத் தெரு, மாலைக் கடைத்தெரு அல்லங்காடி யெனப்படும். 63. சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென (அந்நாள்) - சித்திரை மாதத்துச் சித்திரைநாளிலே நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே ; 64. சித்திரைத் திங்கள் - சித்திரை மாதம் என்றுமாம். சிறந்தென என்று பாடங்கொண்டு, `சித்திரை மாதத்துச் சித்திரைநாள் சிறந்த தென்கையால், சித்திராபூரணை யென்க' என்பர் அரும்பதவுரையாசிரியர். அந்நாளிலே 2 அவிரொளி கதிர் பரப்ப என்றியைக்க. 65-67. வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென - வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தன் என்னும் வேந்தனுக்கு வரும் இடையூற்றை ஒழிப்பாயென, தேவர் கோமான் ஏவலின் - தேவர்க்கரசனாகிய இந்திரன் ஏவுதலானே, போந்த- அத் தேவருலகினின்றும் போந்து தங்கி அந்நாள் முதலாகப் பலி கொள்ளுதலையுடைய, காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை - காவலாகிய பூதத்தின் வாசலிற் பொருந்திய பலிபீடிகையில் ; உற்றதை - உறுவதை. ஒழிக்கென, விகாரம். தேவர் கோமான் ஏவிய வரலாறு, மேல், 1கடலாடு காதையில் விரித்துரைக்கப்படும். நாளங்காடியிற் போந்து தங்கிப் பலிகொள்ளும் பூதம் என்க. காவற்பூதம் - புகாருக்கும் அரசற்கும் காவலாகிய பூதம். 68-75. புழுக்கலும் - அவரை துவரை முதலிய முதிரைப் பண்டங்களை வேகவைத்த புழுக்கலையும், நோவலையும் எள்ளுருண்டையினையும் விழுக்கு உடை மடை - நிணத்துடன் கூடின சோற்றையும், பூவும் - பூவினையும், புகையும் - புகையினையும், பொங்கலும் - பொங்கற்சோற்றினையும், சொரிந்து - பெய்து, துணங்கையர் குரவையர் - துணங்கைக் கூத்தினராயும் குரவைக் கூத்தினராயும், அணங்கு எழுந்து ஆடி - தெய்வ மேறி ஆடி, பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் - எம் வேந்தனுடைய பெரிய நிலம் முழுவதும், பசியும் பிணியும் பகையும் நீங்கி - பசி பிணி பகை யென்பன நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி - மழையும் வளமும் சுரக்கவென வாழ்த்தி, மாதர்க்கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர் - வல்லமையால் உரைக்கும் அழகிய கோலத்தையுடைய மறக் குடிப்பெண்டிர், ஓதையிற் பெயர - ஆரவாரத்துடனே பலியிட்டுப்போன வளவிலே; பொங்கல் - கள்ளென்பாரு முளர். பூவைச் சிதறிப் புகையை யெடுத்துப் புழுக்கல் முதலியவற்றைப் படைத்து என ஏற்ற வினைகள் விரித்துக்கொள்க. துணங்கை - சிங்கிக் கூத்து; "பழுப்புடையிருகை முடக்கி யடிக்கத், தொடக்கிய நடையது துணங்கை யாகும்" என்பதனால் துணங்கையின் இயல்பறிக. குரவை - கைகோத் தாடுதல். பெருநில மன்னன் - அவனிபன் என்றபடி. வசி - மழை ; 2"வசித்தொழி லுதவ மாநிலங் கொழுப்ப" என்றார் பிறரும். வசீகரம் என்பது அரும்பதவுரை. சுரக்கென, அகரந்தொகுத்தல். வலவை என்பதற்கு நாணிலி யெனப் பொருள் கொண்டு, நாணிலிகள் போலவாய் சோர்ந்துரைக்கு மியல்புடைய மூதிற் பெண்டிர் என்றலுமாம். மாதர்க் கோலம் - கண்டார் காதலிக்கும் ஒப்பனை. உரைக்கும் கோலத்து மூதிற் பெண்டிர் சொரிந்து ஆடி வாழ்த்தி ஓதையிற் பெயர என்க. 79-88. மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் - மருவூர்ப் பாக்கத் திலுள்ள மறத்தினைக் கொண்ட வீரரும், பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் - பட்டினப் பாக்கத்திலுள்ள படைக் கலமுடைய வீரரும், முந்தச் சென்று - முற்படச் சென்று, முழுப்பலி பீடிகை - பெரிய பலி பீடத்தில், வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப் பலிக் கொடை புரிந்தோர் - வெவ்விய திறலையுடைய எம் அரசற்கு உறும் இடையூற்றை யொழித்து வெற்றி தருகவெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தவர், வலிக்கு வரம்பு ஆகென - வலிமைக்கு எல்லையாகக் கடவரென வஞ்சினங் கூறி, கல் உமிழ் கவணினர் - கல்லினை வீசுங் கவணினை யுடையராய் கழிப்பிணிக் கறைத் தோல் - ஊன் பொருந்திய கரிய தோலால் இயற்றப்பட்ட பரிசையுடன், பல் வேற் பரப்பினர் - பல வேலின் மிகுதியை யுடையராய், மெய் உறத் தீண்டி ஆர்த்து - தோள் தட்டி ஆரவாரஞ் செய்து, களம் கொண்டோர் - போர்க்களத்தைத் தம தாக்கிக் கொண்டோர், ஆர் அமர் அழுவத்து - அரிய அமர்க்களப் பரப்பிலே, சூர்த்து - அச்சத்தைச் செய்து, கடை சிவந்த சுடுநோக்கு - சுடுங் கொள்ளிபோலும் கடை சிவந்த பார்வையையுடைய, கருந்தலை - தமது பசுந் தலையை, வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென - வேந்தன் வெற்றி கொள்க வென்று, நற் பலி பீடிகை நலம் கொள வைத்து - நன்றாகிய பலி பீடத்திலே நன்மை பொருந்த வைத்து, ஆங்கு - அப்பொழுதே, உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு - உயிர்ப்பலி யுண்ணும் இடியின் குரல் போலும் முழக்கத்தை யுடைய மயிர் சீவாத தோலாற் போர்த்த வீரமுரசத்தால், வான் பலி ஊட்டி - உயிராகிய சிறந்த பலியை உண்பிக்க; வீரரும் மாக்களுமாகிய களங்கொண்டோர் என்க. "வலிக்கு வரம்பாகென" என்பதற்கு வலிக்கு வரம்பாகக் கடவ ரென முசுகுந்த மன்னனுடைய குழுவும் ஆயத்தாரும் அக்காலத்தே நியமித்தலாலே என்பர் அடியார்க்கு நல்லார். மற்றும் அவர், `கருந்தலை... கொற்றங் கொள்கென' என்பதற்குப் பசுந்தலை வேந்தன் கொற்றங் கொள் கெனப் பேசும்படி என்றும், `நலங் கொள வைத்து' என்பதற்கு அரிந்த தலையிற் குலைந்த மயிரையுங் கோதி முடித்துக் குருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்து என்றும், `முரசொடு வான்பலி யூட்டி' என்பதற்கு அக் குறை யுடல்கள் தமக்கு வாயின்மையின் தத்தம் தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலி யூட்டி என்றும் உரைப்பர். இவற்றிற்கு அவர் ஆதாரமாகக் கொண்டவை; 1 "அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ" 2 "மோடி முன்றலையை வைப்ப ரேமுடி குலைந்த குஞ்சியை முடிப்பரே ஆடி நின்றுகுரு திப்பு துத்திலத மம்மு கத்தினி லமைப்பரே" என்பன. கழி - ஊன். பிணி - பிணித்தல். கறை - கறுப்பு. உயிர்ப் பலி யுண்ணும் என்றது முரசிற்கு அடை. 3"மறியருந்தும் திண்பிணி முரசம்" என்றார் பிறரும். மயிர்க்கண் முரசு - புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டு மண்கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு ; என்ன? 4 " கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த மயிர்க்கண் முரச மோவில கறங்க" எனவும், 5 "புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த துனைகுரன் முரசத் தானைத் தோன்றலைத் தம்மி னென்றான் நனைமயி ரலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்" எனவும் கூறினாராகலின். ஊட்டி - ஊட்டவெனத் திரிக்க. இஃது அவிப்பலியின் பாற்படும். 89-94. இருநில மருங்கிற் பொருநரைப் பெறா அ . தமிழகத்திலே தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை மேற்கும் தெற்கு மாகிய இரு திசையினும் பெறாத, செருவெங் காதலிற் றிருமா வளவன் - கரிகாற்பெருவளத்தான் போரில் மிக்க விருப்ப முடையனாதலின் (வடதிசையிலாயினும் பகை பெறலா மெனக் கருதி), வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து - வாள் குடை முரசு என்பவற்றை நல்ல நாளிலே புறப்படச் செய்து, நண்ணார்ப் பெறுக இம்மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என - என் வலி பொருந்திய தோள்கள் இத்திசையி லாயினும் பகைவரைப் பெறவேண்டு மென்று தான் வழிபடு தெய்வத்தை மனத்தால் வணங்கி, புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் - அவ் வடதிசையிடத்தே சென்ற அந்நாளில்; இருநிலம் - இரு திசை; சேர பாண்டியர் தன் ஆணைக்கு அடங்கினர் என்றவாறாயிற்று. வெங்காதல் - மிக்க விருப்பம். நாளொடு பெயர்த்தல் - நாட்கோள்; வாணாட்கோள், குடை நாட்கோள், முரசுநாட்கோள் என்க. 1"நாட்கொள்ளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக்கொண்டு செல்வழி அக்காலத்திற்கு ஒர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத் திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல்" என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனார் 2"குடையும் வாளும் நாள்கோள்" என உழிஞைத்திணையுட் கூறியுள்ளார். வெண்பாமாலை யுடையார் வஞ்சித்திணைக்கும் உழிஞைத் திணைக்கும் இவ்விரு நாட்கோளும் கூறியுள்ளார். கரிகாலன் மேற்சென்றது வஞ்சியாகலின் இளங்கோவடிகள் பன்னிரு படலத்தையும் தழுவி இச்செய்யுளை இயற்றியுள்ளாரென்று கொள்ளுதல் வேண்டும். பன்னிரு படலக் கருத்தைத் தழுவியன பின்னரும் ஆண்டாண்டுக் காட்டப்பெறும். முரசு நாட்கோள் என்பது இனம்பற்றி அடிகள் தாமாக அமைத்துக்கொண்டது போலும். புண்ணியத் திசை - வடதிசைக்கொரு பெயர். முகம் - இடம். 95-98. அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய - (இமய மலை குறுக்கிட்டு விலக்கிற்று ஆதலால்) மடிதல் இல்லாத மன வெழுச்சியாலே மேலுஞ் செல்ல விரும்பும் என் விருப்பம் பின்னிட்டு ஒழியும்படி, பகை விலக்கியது இப் பயம் கெழு மலை என - இம் மலை பகையாகக் குறுக்கிட்டுத் தடுத்தது என முனிந்து. இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை - தேவர் உறையும் அதன் சிமையத்தின் பிடரில், கொடுவரி ஒற்றி - தனது புலியைப் பொறித்து, கொள்கையிற் பெயர்வோற்கு - அப்பாற் செல்லும் கொள்கையைக் கைவிட்டு மீள் கின்றவனுக்கு; பயங் கெழு மலை - பயன் பொருந்திய மலையென மலையின் இயற்கை கூறியபடி. இமையமலையிற் றேவர் உறைவ ரென்பது புராணக் கொள்கை. கரிகாலன் இமையத்தைச் செண்டு என்னும் படைக் கலத்தால் அடித்துத் திரித்து மீள அதனைப் பண்டுபோல் நிறுத்திப் புலியைப் பொறித்தனன் என்றும், அச் செண்டு கச்சியிலுள்ள சாத்தன் என்னும் தெய்வத்தால் கரிகாலற்கு அளிக்கப்பட்டதாகும் என்றும் கூறப்படுதலுமுண்டு. இவற்றை முறையே, 1"செண்டு கொண்டு கரிகாலனொரு காலிலிமையச் சிமையமால்வரை திரித்தருளிமீள வதனைப், பண்டுநின்றபடி நிற்கவிதுவென்று முதுகிற் பாய்புலிப் பொறி குறித்தது மறித்த பொழுதே" எனவும், "கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினி திருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு, கம்பக்களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற்கிரிதிரித்த செண்டு" எனவும் வருவனவற்றால் முறையே அறிக. 99-100 மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோன் - கடலை அரணாக வுடைய நல்ல வச்சிரநாட்டரசன், இறை கொடுத்த கொற்றப் பந்தரும் - திறையாகக் கொடுத்த முத்தின்பந்தரும், வச்சிரநாடு சோணையாற்றங் கரையிலுள்ள தென்ப. கொற்றப் பந்தர் - அவன்றனக்குக் கொற்றத்தான் வந்த பந்தர். இவன் பகையும் நட்புமில்லா அயலான்.மகத நல் நாட்டு வாள்வாய் வேந்தன்- வாட்போரில் வாய்ப்புடையனாகிய நல்ல 101-102. மகத நாட்டரசன், பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் - பகையிடத்துத் தந்த வித்தியா மண்டபமும், பகைப்புறம் என்பது விகாரமாயிற்று. புறம் - இடம். முன் பகையாய்ப் பொருது தோற்றுப் பின் திறையிட்டானென்க. பட்டி மண்டபம் - வித்தியாமண்டப மாதலை 2"ஒட்டிய சமயத் துறு பொருள் வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் 3"பன்னருங் கலைதெரி பட்டிமண்டபம்" என்பவற்றா லறிக. இதனை ஓலக்க மண்டபம் என்பாருமுளர். இவன் பகைவன். 103-104. அவந்திவேந்தன் - அவந்திநாட் டரசன், உவந்தனன் கொடுத்த - மகிழ்ந்து கொடுத்த, நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் - மிகவுயர்ந்த தொழின் முறைமையுடைய வாயிற்றோரணமும், அவந்தி - உஞ்சை. நிவந்தோங்கு - ஒருபொரு ளிருசொல், இவன் நண்பன். 105-110. பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் - பொன்னாலும் மணியாலும் புனையப்பட்டனவாயினும், நுண்வினைக் கம்மியர் காணா மரபின - நுண்ணிய தொழிலை வல்ல கம்மியராற் செய்யப்படாதன ; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு - பிறர் துயர் நீங்குதற்கு ஏதுவாகிய சிறப்பினையுடைய அம் மூவருடைய தொல்லோர் ஓரோர் காலத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மயன்விதித்துக் கொடுத்த மரபின - மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட இயல்பையுடையன; இவைதாம் ஒருங்கு உடன் புணர்ந்து ஆங்கு - ஒன்றற்கொன்று சேய் நாட்டனவாகிய இவைதாம் ஒரு நாட் டோரூரின்கண் ஒருங்கு சேரப்பட்டு, உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம் - பெரியோரால் ஏத்தப்படும் பெறுதற்கரிய தன்மையை யுடைய மண்டபத்தும்; காண்டல் - செய்தல். தொல்லோர் வானோர்க்குச் செய்தவுதவிக்கு என்றுமாம். மயன் - தெய்வத் தச்சன். விதித்தல் - மனத்தால் நிருமித்தல், தாம் ஆங்கு என்பன அசை. காணா மரபினவும் கொடுத்த மரபினவு மாகிய பந்தர் மண்டபம் தோரணவாயில் என்னுமிவை புணர்ந்து ஏத்தும் மண்டபம் என்க. இம் மூன்றும் ஒருங்கு கூடி ஒரு மண்டபமாதலை, மேல் நடுகற் காதையில், 1"வச்சிர மவந்தி மகத மொடு குழீஇய, சித்திர மண்டபத் திருக்க வேந்தன்" என்றுரைத் தலானு மறிக. 110. அன்றியும் -அது வொழிந்தும், 111-117. வம்பமாக்கள் - புதியோர், தம்பெயர் பொறித்த - தம் பெயரெழுதிய, கண்ணெழுத்துப் படுத்த - அடையாள வெழுத் தினை இலச்சினையாக அமைத்த, எண்ணுப் பல பொதி - பலவாகிய எண்களையுடைய பொதிகள், கடைமுகவாயிலும் - பண்டசாலை வாயிலையும், கருந்தாழ்க் காவலும் - வலிய தாழையுடைய அரணாகிய காவலையும், உடையோர் காவலும் - உடையோர் காத்திருக்குங் காவலையும், ஒரீஇயவாகி - நீங்கினவா கலான், கட்போர் உளர் எனின் - அவற்றைக் களவு செய்வோர் உளராயின், கடுப்பத் தலை யேற்றி - அவர் கழுத்துக் கடுக்கப் பொதியைத் தலையில் வைத்து, கொட்பின் அல்லது - ஊரைச் சூழ்விப்பினல்லது, கொடுத்தலீயாது - அவர்க்கே அவற்றைக் கொடுத்துவிடாதாதலால், உள்ளுநர்ப் பனிக்கும் - களவென் பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்கு விக்கும், வெள்இடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும்; வம்ப மாக்களாகிய உடையோர் என்க. வம்ப மாக்களாகிய கட்போர் என்றுமாம். கண்ணெழுத்து- குறியீட்டெழுத்து, கடை முகவாயில் - ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வந்து குவிந்திருக்கும் பண்டசாலை வாயில், பண்டசாலையின் புறத்தே கொண்டு போகப் பட்டு, வேறு அரணும் காவலும் இல்லாதிருக்கவும் என்க. உள ரெனின் என்றது பெரும்பாலும் இலரென்பதனை விளக்கிற்று. கொட்பின், பனிக்கும் என்பன பிறவினையாக நின்றன. கட்போர் தமது தலையிற் சுமந்து சுழன்று திரியினல்லது என்றுரைத் தலுமாம். 118-121. கூனும் குறளும் ஊமும் செவிடும் - கூனரும் குறளரும் ஊமரும் செவிடரும், அழுகு மெய்யாளரும் - தொழு நோயால் அழுகிய உடம்பினை யுடையோரும், முழுகினர் ஆடி - முழுகி நீராடிய வளவில், பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - பழுதில்லாத தோற்றத்தையுடைய நல்ல உருவத்தைப்பெற்று, வலம் செயாக் கழியும் - வலஞ்செய்து தொழுது நீங்கும், இலஞ்சி மன்றமும் - பொய்கையையுடைய மன்றமும்; 122-127. வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர் - வஞ்சனையாற் சிலர் மருந்தூட்ட உண்டு பித்தேறினாரும், நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நஞ்சை உண்டு நடுங்கும்படியான துன்பமுற்றோரும், அழல்வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் - அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய எயிறு அழுந்தக் கடியுண்டாரும், கழல் கண் கூளிக் கடுநவைப்பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய பேயினாற் கடுந்துன்ப முண்டாகப் பற்றப்பட்டோரும், சுழலவந்து தொழ - ஒருகாற் சூழ வந்து தொழுத வளவிலே, துயர் நீங்கும் - அத் துயர்கள் நீங்குதற்குக் காரணமாகிய, நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றமும் - ஒளியைச் சொரியும் நெடிய கல்நாட்டி நிற்கும் மன்றமும் ; வஞ்சமுண்டு - வஞ்சனைப்பட்டு என்றுமாம். மயல் - மருள்; பித்து. மயலாகிய பகை யென்க. அழல் - அழல் போலும் நஞ்சு. ஆர் - கூர்மை. கழற்கண் என்பதன் விகாரமாகக் கொண்டு பச்சைக் கழல் போலும் கண் என்றலுமாம். நவை - துன்பம். சுழல - சூழ. 128-134. தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்-தவ வேடத்தில் மறைந்து நின்று கூடாவொழுக்கத்தில் ஒழுகும் தவத்தன்மை யில்லாதவரும், அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர் - மறைந்து தீநெறியில் ஒழுகும் அலவற் பெண்டிரும், அறை போகு அமைச்சர் - கீழறுக்கும் அமைச்சரும், பிறர்மனை நயப்போர் - பிறர் மனைவியை விரும்புவோரும், பொய்க் கரியாளர் - பொய்ச் சான்று பகர்வோரும், புறங்கூற்றாளர் - புறங் கூறுவாறும் ஆகிய இவர்கள், என் கைக்கொள் பாசத்துக் கைப் படுவோர் என - என் கையிற் கொண்ட பாசத்திடத்து அகப்படு வோராவர் என்று, காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி - அவ் வூர் நாற்காத வட்டகையும் கேட்கும்படி தனது கடிய குரலை யெழுப்பி, பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் - பின் அங்ஙனஞ் செய்வோரைப் பாசத்தாற் கட்டி நிலத்திற் புடைத்து உண்ணும் பூத நிற்கும் பூத சதுக்கமும் ; தவவேடம் மறைதற்கே இடமாயிற் றென்பார் தவ மறைந்து என்றார். தன்மை - தவத்திற்குரிய இயல்பு ; நற்பண்புமாம். ஒழுகும் என்னும் பெயரெச்சம் இலாளர் என்பதன் விகுதியோடு முடி யும். அவம் ஒழுகுமென்க. அலவல் - அலவலை யென்பதன் விகா ரம். அலவை யெனப் பாடங் கொள்வாருமுளர். ஆராயாது செய் யும் பெண்டிரென்க. பாசத்துக் கை - பாசத்திடத்து. பூதம் நிற்ற லாற் பூத சதுக்கமெனப் பெயரெய்திற்று. சதுக்கம் - நாற்சந்தி 135-138. அரைசு கோல் கோடினும் - அரசனது செங்கோல் சிறிது வளைந்ததாயினும், அறம்கூறு அவையத்து உரை - தரு மாசனத் தார் வழக்குரைக்கும் அவையத்தில் அவர் உரைக்கு முரை, நூல்கோடி ஒரு திறம்பற்றினும் - நேர்மை திரிந்து ஒரு பக்கம் பற்றினும், நாவொடு நவிலாது - நாவாற் கூறாமல், நவை நீர் உகுத்துப் பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் - துன்பக் கண்ணீர் சொரிந்து அழுதலையுடைய பாவை நிற்கும் பாவை மன்றமும்; (ஆகிய), நூல் - ஒழுங்கு. ஒரு திறம் பற்றல் - வாரம் பற்றல். நாவொடு- நாவால். நவைநீர் - குற்றத்துக்காகச் சொரியும் நீருமாம். பாவை நிற்றலாற் பாவை மன்றமெனப் பெயரெய்திற்று. 139-140. மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் - உண் மைத் திறத்தை யுணர்ந்த சீரியோரால் ஏத்தப்படும், ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ - ஐவகைப்பட்ட மன்றத்திடத் தும் அரிய பலியையிட்டு; அரும்பெறல் மண்டபத்தும், அன்றியும், வெள்ளிடை மன்றம் முதலிய ஐவகை மன்றத்தும் பலியிட்டு என்க. பீடிகையிற் பலி யூட்ட மண்டபத்தும் மன்றத்தும் பலியிட்டு என்றியையும். 141-144. வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் மங்கல முரசை, கச்சை யானைப் பிடர்த் தலை ஏற்றி - கச்சையை அணிந்த யானையின் பிடரிடத்தே ஏற்றி, வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - மிக்க வெண்மை யுடைய அயிராவதம் நிற்கும் கோயிலில் சென்று, கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி - விழாவின் தொடக்கமும் முடிவும் சாற்றி; பண்டு தேவர்களின் படைக்கலம், ஊர்தி முதலியவற்றுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன வென்க. மணங்கெழு முரசு - விழா முரசு. கச்சை - கீழ் வயிற்றிற் கச்சை. தலை - இடம். வால் - இளமையுமாம். களிற்றரசு - அயிராவதம். கால்கோள் - தொடக்கம். விழவின் கால்கோளும் கடை நிலையும் என்க. களிற்றரசிற்குச் சாற்றினர் அஃது இந்திரனைக் கொணர்தற்கு. 1" வச்சிரக் கோட்டத்து மணமுழா வாங்கிக் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி” என்றார் மணிமேகலையுள்ளும். 145 -146 தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - பூமியிற் றங்கிய முறையையுடைய கற்பகம் நிற்குங் கோயின் முன்னர் மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து - அட்டமங்கலத்தோடு நெடிய கொடியை வானிலே செல்ல எடுத்து ; இந்திரன் தனது நிழலிற் றங்கிய செருக்கை யுடைய தரு வென்றுமாம். தரு - கற்பகத் தரு. கொடி - அயிராவதம் எழுதிய கொடி. 147-156. மரகதமணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயிரம் என்னுமிவற்றை விளிம்பிலே ஆயப் பலகையாகப் படுத்து, பவளத் திரள் கால் - அதன்மீதே செம்பவளத் தூண்களை நிறைத்த, பைம்பொன் வேதிகை - பசும்பொன்னா லாகிய திண்ணைகளையுடைய, நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங் கணும் - நெடிய நிலைகளையுடைய மாளிகைகளின் வாயிலிடம் தோறும், கிம்புரி - கிம்புரி செறித்த கொம் பினையும், பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து - அங்காந்த வாயாற் கான்ற பருமுத் தொழுங்கினையுமுடைய, மங்கலம் பொறித்த - அட்டமங்கலங் களையும் பொறித்த, மகர வாசிகைத் தோரணம் - வாசிகை வடிவாக வளையச் செய்த மகர தோரணங்கள், நிலைஇய - நிலை பெற்ற, தோம்அறு பசும்பொற் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாற் செய்த நிறை குடமும், பொலிந்த பாலிகை - பொலிவுபெற்ற முளைப்பாலிகையும், பாவை விளக்கு - பாவை விளக்கும், பசும்பொற் படாகை - பசும் பொன்னாலாய கொடி யும், தூமயிர்க் கவரி - வெள்ளிய மயிரையுடைய சாமரையும், சுந்தரச் சுண்ணத்து - அழகிய பொற்சுண்ணத்துடனே, மேவிய கொள்கை வீதியில் - பொருந்திய இயல்பினையுடைய வீதியிலே, செறிந்து ஆங்கு - நெருங்கி. குயிற்றிய என்னும் பாடத்திற்கு வயிரங் குயிற்றிய காலையுடைய வேதிகை என்க. கிம்புரி - கொம்பிலணியும் பூண். வாசிகை - வளைத்த மாலை; திருவாசியுமாம். கிம்புரியையும் முத்தொழுக்கத்தையு முடைய மகர தோரணம் நிலைபெற்ற வீதியெனவும், பூரண கும் பம் முதலியன மேவிய வீதி யெனவும் தனித்தனி கூட்டுக. கிம்புரிப் பகுவாய் - மகரவாய் என்பது அரும்பதவுரை. பாவை விளக்கு - பாவை நின்று ஏந்திய விளக்கு. பாலிகை, பாவை விளக்கு என்ப வற்றோடும் பசும்பொன் என்பதனைக் கூட்டுக. படாகை - கொடி. ஆங்கு , அசை. 157-160. ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் -, அரச கும ரரும் பரத குமரரும் - அரச குமரரும் வணிக குமரரும், கவர் பரிப் புரவியர் - பகுத்து விரையும் குதிரையினராய், களிற்றின் தொகுதியர் - யானையின் திரட்சியினராய், இவர் பரித் தேரினர்- மேலே பாயும் குதிரை பூட்டிய தேரினராய், இயைந்து ஒருங்கு ஈண்டி - தம்மிற் பொருந்தி ஒன்றுபடத் திரண்டு; ஐம்பெருங் குழுவாவன: "அமைச்சர் புரோகிதர் சேனாபதி யர், தவாத்தொழிற் றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே" எனுமிவர். இவ் வைந்து கூட்டமே பஞ்சாயம் எனப்படும். எண்பேராயமாவன : "கரணத்திய லவர் கருமகாரர், கனகச் சுற்றங் கடைகாப் பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" எனுமிவர். இனி, "சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய், ஆய்ந்த விவ ரெண்ம ராயத்தோர் - வேந்தர்க்கு, மாசனம்பார்ப் பார்மருத்தர் வாழ்நிமித்த ரோடமைச்சர், ஆசி லவைக்களத்தா ரைந்து" எனக் காட்டுவர் அரும்பதவுரை யாசிரியர். இவர்தல் - தேரைக்கொண் டெழுதல். குழுவும் ஆயமும் வீதியிற் செறிந்து, குமரரும் குமரரும் ஈண்டி என்றியைக்க. பரதர் - வணிகர். புரவியர் களிற்றினர் தேரினரான அரசகுமரரும் என்றியைத்தலுமாம். 161-168. அரைசு மேம்படீஇய - தம் அரசனை மேம்படுத்தற்கு, அகனிலை மருங்கில் - அப் பதியின்கண்ணே, உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென - புகழமைந்த வேந்தன் கொற்றம் கொள்வானாக என வாழ்த்தி, மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் - மிகப் பெரிய புவியின்கண்ணே மிக்க உயிர் களைப் புரக்கும், ஆயிரத்து ஓர் எட்டு அரசுதலைக்கொண்ட - ஆயிரத் தெட்டு அரசு தலையிற்கொண்ட, தண்நறுங் காவிரி - குளிர்ந்த நறிய காவிரியின், தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நல்நீர் - பூந்தாது நிறைந்த பெரிய சங்கமத் துறையில் நன்றாகிய தீர்த்த நீரை, பொற்குடத்து ஏந்தி - பொற்குடத்தால் ஏந்தி, மண்ண கம் மருள - மண்ணிலுள்ளோர் மருட்சியுறவும், வானகம் வியப்ப - விண்ணிலுள்ளோர் வியக்கவும், விண்ணவர் தலைவனை - வானோர்க் கரசனாய இந்திரனை, விழுநீர் ஆட்டி-மஞ்சனமாட்ட; அகனிலை - ஊர். ஆயிரத்தெட்டுக் கலசநீர் கொண்டு மஞ்சன மாட்டுதல் மரபு. பொற்குடத்து நீரை ஏந்தி யென்றுமாம். ஆட்டி- ஆட்டவெனத் திரிக்க. அரச குமரரும் பரத குமரரும் மஞ்சன மாட்ட வென்க. (அடி: மண்ணக மருள - மண்ணகம் விண்ணகமாய் மாறாட. அன்றி மண்ணிலுள்ளோர் இப்படியே அவ் விண்ணகமிருப்ப தென ஒப்புக் காணவென்க. வானகம் வியப்ப - வானகத் துள்ளோர் தம் தூறக்கத்தினும் ஈது சிறப்புடைத் தென்று வியக்க. விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம்.) 169-175. பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - தாய் வயிற்றுப் பிறவாத திருமேனியை யுடைய மாதேவனாகிய இறைவன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் - ஆறுமுகத்தையும் செய்ய நிறத்தையுமுடைய முருக வேளின் அழகு விளங்குகின்ற கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும் - வெள்ளிய சங்கு போலும் நிறத்தை யுடைய பலதேவன் கோயிலும் , நீல மேனி நெடியோன் கோயிலும் - நீலமணி போலும் நிறத்தையுடைய நெடிய மால் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் - முத்துமாலை யணிந்த வெண் கொற்றக் குடையையுடைய இந்திரன் கோயி லும் ஆகிய இவற்றில், மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ- மிக்க முதுமையையுடைய இறைவனது வாய்மையிற் றப்பாத, நான்மறை மரபின் தீமுறை ஒருபால் - நாலாகிய வேதங்கள் சொல்லிய நெறியே ஒரு பக்கம் ஓமங்கள் நடக்க; பிறவா யாக்கை என விசேடித்தமையால் உயிரியல்பாகிய பிறப் பிறப்பில்லாதவன் இறைவன் ஒருவனே யென்பது பெற்றாம். அவன் யாவர்க்கும் தாயும் தந்தையு மாதலன்றி அவனுக்கோர் தாய் தந்தை யின்மையைத் 1"தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி" என்பதனானுமறிக. யாக்கை - அருளாற் கொள்ளுந் திருமேனி ; யாக்கையிற் பிறவாத பெரியோன் எனினுமமையும். வாலியோன் வெண்ணிறமுடையோன் : ஈண்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது. மாமுது முதல்வன் - சிவபிரான் ; 2 "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள்" ஆதலின் மாமுது முதல்வன் என்றார். வாய்மையின் வழா என்ப தற்கு வாயினின்றும் நீங்காத என்றுரைத்தலுமாம். 3"நன்றாய்ந்த நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய் போகா, தொன்று புரிந்த வீரிரண்டின், ஆறுணர்ந்த வொருமுது நூல்" என்பதுங் காண்க. முது முதல்வன் - பிரமன் என்பாருமுளர் 176-178. நால்வகைத் தேவரும் - நால்வகைப்பட்ட தேவரும், மூவறு கணங்களும் - பதினெண் வகைப்பட்ட கணங் களும் என, பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து - வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட இனமாகிய தோற்றத்தை யுடைய, வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - வெவ்வேறு கடவுளரது விழா ஒரு பக்கம் சிறக்க: நால்வகைத் தேவராவார்: வசுக்கள் எண்மரும். ஆதித்தர் பன் னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால்வகைப்பட்ட முப்பத்து மூவர். மூவறு கணங்களாவார்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர்; இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர் என்னு மிவர்; பிறவாறு முரைப்பர். 179-181 அறவோர் பள்ளியும் - அருகர் புத்தர் பள்ளிகளிலும், அறன் ஓம்படையும் - அறத்தினைப் புரக்கும் சாலைகளி லும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் - மதிற் புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், திறவோர் உரைக் கும் செயல் சிறந்து ஒருபால் - அறத்தின் கூறுபாடுகளை யுணர்ந் தோர் தருமம் போதிக்கும் செயல் ஒருபக்கம் சிறக்க ; ஓம்படை - பாதுகாவல் ; ஈண்டு அவ்விடத்தை யுணர்த்திற்று. கோட்டம் - ஈண்டு மதில். புண்ணியத்தானம் - பொதியின் முதலாயின. மணிமேகலையுள், 1"நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக, வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை, ஆறறி மரபி னறிந்தோர் செய்யுமின், தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும், புண்ணிய நல்லுரை யறிவீர் பொருந்துமின்" என வருதல் ஈண்டு அறியற்பாலது. 182-183. கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் - கொடியணிந்த தேரையுடைய அரசனோடு பகையாய்ச் சிறைப்படுத்தப் பட்ட மன்னர்களின், அடித்தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் - அடியிற் பிணித்த தளையை நீக்கிச் சிறைவீடு செய்தற்கு ஒரு பக்கம் அருள் சிறக்க ; வேந்தனொடு என்பதில் ஒடு அசையுமாம். 184-186. கண்ணுளாளர் - கூத்தரும், கருவிக் குயிலுவர் - குயிலுவக் கருவியாளரும், பண்யாழ்ப் புலவர் - பண்ணப்பட்ட யாழ் வாசிக்கவல்ல புலவரும், பாடற் பாணரொடு - கண்டத்தாற் பாடும் பாணரும் என்னும் இவர்களுடைய, எண் அருஞ் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் - அளந்தறிதற்கரிய சிறப்பினையுடைய இசைகள் ஒருபக்கம் சிறக்க; கருவிக் குயிலுவர் - குழலரும், தோற்கருவியாளரும் ஆம். 187- 188 முழவுக்கண் துயிலாது - கங்குலும் பகலும் இங்ஙனம் நடத்தலால் முழவின் கண்கள் அடங்குதலின்றி, முடுக்க ரும் வீதியும் - குறுந்தெருக்களும் பெருவீதிகளும், விழவுக்களி சிறந்த - விழவாற் களிப்புமிக்க, வியலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்து; ஓமமும், சாறும், செயலும், அருளும், இசையும் ஒவ்வொருபாற் சிறக்க, நீராட்டக் களிசிறந்த ஊர் என்க. 186-203. காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா - தன்னாற் காதலிக்கப்பட்ட கொழுநனைப் பிரிந்து மெய் வேறுபாட்டால் அலரெய்தாத, மாதர் கொடுங்குழை மாதவி தன்னோடு - அழகிய வளைந்த மகரக்குழையையுடைய மாதவியோடு, இல்வளர் முல்லை மல்லிகை மயிலை - இல்லிலே வளராநின்ற முல்லையும் மல்லிகையும் இருவாட்சியும், தாழிக் குவளை சூழ்செங்கழு நீர் - தாழியுள் மலர்ந்த குவளையும் வண்டு சூழும் செங்கழுநீரும் ஆகிய, பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து - பூக்கள் நெருங்கிய கோதையாகிய பிணையலால் விளக்கமுற்று, காமக் களி மகிழ்வு எய்தி - காமமாகிய கள்ளுண்டு களித்து, காமர் பூம்பொதி நறுவிரைப் பொழில் ஆட்டு அமர்ந்து - அழகிய நறிய மணம் பொதிந்த பூம்பொழிலில் விளையாட்டை விரும்பி, நாள் மகிழ் இருக்கை நாளங் காடியில் - நாடோறும் மகிழ்ந் திருக்கும் இருப்பையுடைய நாளங்காடியில், பூமலி கானத்துப் புதுமணம் புக்கு - பூ விற்குமிடங்களிற் பல பூக்களின் மணமாகிய புதிய மணத்தின் உள்புக்கு, புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சாந்தென்னும் இவற்றின் செவ்வி வாய்ப்பு மிக்கு, நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத் தோடே காமக் குறிப்பாகிய மகிழ்ச்சி மொழியிலே இடை விடாது பயின்று, குரல்வாய்ப் பாணரொடு - குரலென்னும் இசையைப் பாடும் வாயையுடைய பாணரோடும், நகரப் பரத்த ரொடு - நகரத்திலுள்ள தூர்த்தரோடும், திரிதரு மரபிற் கோவலன்போல - உலாத்துந் தன்மையையுடைய கோவலனைப் போல, இளிவாய் வண்டினொடு - இளியென்னும் இசையைப் பாடும் வண்டினோடும், இன்இள வேனிலொடு -இனிய இளவேனிலோடும், மலயமாருதம்-பொதியிற் காற்றாகிய இளந்தென்றல், திரிதரு மறுகில் - உலாவுதலைச் செய்யும் வீதி யிடத்தே ; ஊரிலே கோவலன்போல மாருதம் திரிதரு மறுகில் என்க. காதற் கொழுநனை என்பது முதல் நன்மொழி திளைத்து என்பது காறும் கோவலற்கும் மாருதத்திற்கும் ஒத்த பண்பு. கண்ணகி பிரிந்து அலரெய்தலால் அலரெய்தாத மாதவி என்றார். மாருதத் திற்கேற்ப உரைக்குமிடத்து மாதவி குருக்கத்தியாம். இப்பொருட்கு: கொழுநனைப் பிரிந்து - கொழுவிய அரும்பாந்தன்மையை விட்டு, அலர் எய்தா - முதிர்ந்து அலராகாத, கொடுங்குழை - வளைந்த தளிரையுடைய என்றுரைத்துக் கொள்க. இல்வளர் என் னும் அடையை முல்லை முதலிய மூன்றற்கும், சூழ் என்னும் அடையை எல்லாப் பூக்கட்கும் கூட்டுக. சூழ்தல் வினைக்கு வண்டு என்னும் எழுவாய் வருவிக்க. கோதை - ஒழுங்காகிய என்றுமாம். ஆட்டு - விளையாட்டு ; புணர்ச்சி. பூ விற்குமிடத்தைக் கானம் என் றது பூக்களின் மிகுதிபற்றி. குரலுக்கு இளி கிளையாதலின் குரல் வாய், இளிவாய் என்றார். பரத்தர் - பழிகாமுகர்; தூர்த்தர், மாருதத்திற்குக் கோவலனும், வண்டிற்குப் பாணரும், வேனிற்குப் பரத்தரும் உவமம். அடிகள் இவ் வுவம வாயிலாகக் காமத்தாற் கோவல னெய்திய சிறுமையை அங்கை நெல்லியென விளக்கியுள் ளார். பாணர் முதலிய மூவரோடும் வண்டு முதலிய மூன்றற்கும் உள்ள ஒத்த பண்புகளை யறிந்து உவமங்கூறிய திறப்பாடு பெரிதும் பாராட்டற் குரியதாகும். பாடுதலும் கள்ளுண்டலும் பாணர்க்கும் வண்டுக்கும் ஒத்த பண்பு ; கோவலன் பரத்தர் பற்றுக்கோடாகப் பாணரொடுந் திரிதல்போல மாருதம் இளவேனில் பற்றுக் கோடாக வண்டோடும் திரியா நின்றது; என்றின்னோரன்ன நயங்களை ஒர்ந் துணர்க. இனி, அவ் வீதி வருணனை கூறப்படுகின்றது. 204-207. கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு - கரிய மேகத்தைச் சுமந்து சிறிய முயற்கறையை யொழித்து, இரு கருங்கயலோடு இடைக் குமிழ் எழுதி - இருமருங்கினும் இரண்டு கரிய கயலினையும் இடையே ஒரு குமிழ மலரையும் எழுதி, அங்கண்வானத்து அரவுப்பகை அஞ்சி - அழகிய வானத் திடத்தே அரவாகிய பகை செறுமென்று அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல் - திங்களும் இந்நிலத்தே இங்ஙனம் உள்வரிக் கோலங்கொண்டு திரிகின்றது கொல்லோ எனவும், திங்கள் அரவுப் பகை யஞ்சிச் சுமந்து ஒழித்து எழுதி ஈண்டுத் திரிதலுண்டோ என்க. ஆங்கு, அசை. திங்களும் என்னும் உம்மை சிறப்பு. திரிதலும் என்பதில் எச்சம் ; அசையுமாம். குறுமுய லொழித்த திங்கள் முகமும், கருமுகில் கூந்தலும், இரு கருங் கயல் கண்களும், குமிழ் மூக்குமாம். இதன்கண், அற்புத வுவமை, தற்குறிப் பேற்ற வுவமை, ஐயவுவமை என்னும் அணிகள் அமைந்து இன்பம் விளைக்கின்றன. பின்வருவனவற்றிலும் இன்ன அணிகள் பொருந்தியுள்ளமை காண்க. 208-211. நீர் வாய் திங்கள் நீள்நிலத்து - ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தே, அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி - அமுத கலையின் சீர்மை பொருந்திய துவலையையுடைய அழகிய நீரைப் பருகி, மீன் ஏற்றுக் கொடி யோன் மெய்பெற வளர்த்த - வடிவுபெற மகரக் கொடியை யுடைய காமனானவன் வளர்த்த, வானவல்லி வருதலும் உண்டு கொல் - மின்னுக்கொடியானது இந்நிலத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும், அமுதின் நீர் எனவும், மாந்தி மெய்பெற எனவும், கொடியோன் வளர்த்த எனவும் கூட்டுக. இனி, மெய்பெற என்பதற்குக் காமன்றான் முன்பு இறைவனது நுதல்விழியானிழந்த தன் மெய்பெறுதற்காக என்று கூறி, வளர என ஒரு சொல் வருவித்து, மாந்திவளர வளர்த்த என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். 212-217. இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட - பெரிய நிலத் தினையுடைய அரசற்குத் தனது பெரிய வளத்தினைக் காட்ட வேண்டி, திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என - இலக்குமி வந்து புகுந்திருப்பது இந்தச் செழுமையுடைய நகராகு மெனக் கருதி, எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் - எரிபோலும் நிறத்தையுடையதோர் இலவ மலரும் பல முல்லையரும்புகளும் அன்றியும், கருநெடுங் குவளையும் குமிழும் பூத்து - இரண்டு பெரிய நீலோற்பல மலரும் ஒரு குமிழ மலரும் ஆகிய இவற்றைப் பூத்து, ஆங்கு - பூத்த அப்பொழுதே, உள்வரிக் கோலத்து உறுதுணை தேடி - உள்வரிக் கோலத்தோடு தனக்குப் பொருந்திய துணையாகிய திருமகளைத் தேடி, கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் - கள்ளத்தையுடைய தாமரை திரிதலும் உண்டாயிற்றோ எனவும், திருமகள் புகுந்தது இச் செழும்பதி என்றிருப்பினும், பதிக்கண் புகுந்துளாள் என்பது கருத்தாகக் கொள்க. தனது வளம் - தன்னா லாகும் வளம் ச்; செல்வமும் அழகும். இலவம் வாயும், முல்லை பல் லும், குவளை கண்ணும், குமிழ் மூக்கும், கமலம் முகமும் ஆம். நீர்ப் பூவாகிய கமலம் கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ ஆகியவற்றைத் தன்னகத்தே பூத்த தென்றார். உள்வரிக் கோலம் - கிருத்திரிம வேடம் ; பொய்யுரு. என்றும் தன்னகத் திருப்பாளாகலின் திருமகளைத் தாமரைக்குத் துணை யென்றார். கள்ளக் கமலம் - கள்ளையுடைய அக் கமலம் என்பது இயல்பாய பொருள். தாமரை மலரே இலவம் முதலியவற்றைப் பூத்துக் கொண்டு உருத்திரிந்து முகம் என்ற பெயருடன் திரியா நிற்கின்றது என அற்புதம் தோன்றக் கூறினார். ஆங்கு, அசையுமாம். 218-223. மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - அரசனது செங்கோலை மறுத்ததாகுமென்றஞ்சி, பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - பல வுயிரையும் பருகும் திறந்த வாயை யுடைய கூற்றம், ஆண்மையில் திரிந்து - ஆணியல்பு திரிந்து, அருந்தொழில் திரியாது - தனது கொலைத் தொழிலின் வேறு படாது, நாண் உடைக் கோலத்து நகைமுகம் கோட்டி - நாணி னையுடைய கோலத்தையும் நகை பொருந்திய முகத்தையும் உண்டாக்கிக் கொண்டு, பண்மொழி நரம்பின் திவவு யாழ்மிழற்றி - திவவினையுடைய யாழின் நரம்புபோலப் பண்ணாகிய மொழியைப் பேசி, பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என - பெண்ணுருவோடு இங்கே திரியுந் தன்மையும் உண்டா யிற்றோ எனவும், கூற்றம் ஆணுருவோடு திரிந்து உயிர் பருகில் செங்கோலை மறுத்ததாகு மென்றஞ்சி ஆணுரு வொழிந்து பெண்ணுருவோடு தொழில் வேறுபடாது திரியும் பெற்றி யென்க. ஆண்மை - கடுத்த முகமும் இடித்த குரலும் முதலியவற்றோடு கூடிய ஆண் வடிவு. கோட்டி - வளைத்து என்றுமாம் . திவவு - யாழின் கோட்டிலுள்ள நரம்புக் கட்டு. யாழ் நரம்பின் மொழி மிழற்றி என மாறுக. பெண்மை - நாணுடைக் கோலமும் நகைமுகமும் பண்மொழி மிழற்றலுமுடைய பெண் வடிவு. உண்டுகொல் என இடைச்சொல் விரித்துரைக்க. கூற்றமே பெண்ணுருக் கொண்டு திரிந்த தென்றார். 1"பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு" என்பது காண்க. 224-234. உருவிலாளன் ஒரு பெருஞ்சேனை அநங்க னுடைய ஒப்பற்ற பெரிய சேனையாகிய பரத்தையரது, இகல் அமர் ஆட்டி - ஊடலாகிய மாறுபட்ட போரை இங்ஙனம் புகழ்ந்து சொல்லி வென்று, எதிர்நின்று விலக்கி - அவர் போகாமல் எதிர் நின்று தடுத்துப் புணர்தலின், அவர் எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ - அவருடைய மார்பிலும் தோளிலு மெழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்றுத் தமது மார்பமுழுதும் உறுதலானே, விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு - விருந்தொடு புகுந்த பெரிய தோளையுடைய கணவரோடு, உடன் உறைவு மரீஇ - உடன் உறைதலைப் பொருத்தி, ஒழுக்கொடு புணர்ந்த - வழிபாட்டுடன் கூடிப் புணர்ந்த, வடமீன் கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததிபோலும் கற்பையுடைய இல்லற மகளிரை, (அக் கணவரே), மாதர் வாள் முகத்து - இம் மாதருடைய ஒளி பொருந்திய முகத்து, மணித்தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை - நீலமணிபோலும் இதழையுடைய குவளைப் பூக்கள் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமாகிய கரிய கண்களின் கடைச் சிவப்பு, விருந்தின் தீர்ந்திலது ஆயின் - அவ் விருந்தால் நீங்கியதில்லையாயின், யாவதும் மருந்தும் தருங்கொல் இம் மாநில வரைப்பு என - இப் பெரிய நிலவெல்லை இதற்கு ஒரு மருந்தையும் தரவல்லதோ எனத் தமது நெஞ்சொடு கூறி, கையற்று நடுங்கும் - செயலற்று நடுங்காநிற்கும், நல்வினை நடுநாள் -விழா நடு நாளில் ; ஆட்டி - வென்று. புலவியாற் கூடாத மகளிரை உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல் என்று புகழ்ந்து புலவி தீர்த்து என்றபடி. வரிகோலம், வினைத்தொகை. இனி, வீதியிற் கண்டோர்கள் அங்ஙனம் புகழ்ந்து கூறக் காமன் சேனையாகிய மகளிர் தம் உறுப்புக்களால் அமர்செய்வித்துப் போவாரைப் போகாமற் றடுத்தலின் அவருடைய தொய்யில் முதலியன உறுதலால் விருந்தொடு புக்க கணவர் என்றுமாம். பரத்தையரது எழுதுவரி கோலத்தைத் தம் உடம்பிலே கொண்டு வருதலாற் பரத்தையர் கூட்ட முண்மை யுணர்ந்து உள்ளங் கொதிக்கும் மனைவியரின் சிவப்பினை மாற்றுதற்கு விருந்தொடு புக்காரென்க. எனவே, விருந்தினரைக் கண்டுழி ஊடலைக் கைவிடுத்துக் கணவரையும் விருந்தினரையும் எதிரேற்று மகிழ்தல் கற்புடை மகளிரின் கடப் பாடாதல் பெற்றாம். ஒழுக்கொடு புணர்ந்து உடனுறைவு மரீஇய என்று மாறுதலுமாம். மகளிரைக் கணவர் நெஞ்சொடு புகழ்ந்து கூறி நடுங்கும் என்க. மனைவியர் ஊடல் தீர்ந்திலதாயிற் செய் வதொன்றின்மையை நினைந்து நடுங்குவர். நிலவரைப்பு - நிலவெல்லையிலுள்ளோர்; அன்றி, மிருத சஞ்சீவினி யிறுதியாகவுள்ள மருந்துகளைத் தரும் நிலம் இதற்கோர் மருந்து தரமாட்டா தென்றுமாம். நல்வினை - நன்றாகிய வினை ; விழா. 235-240. உள் அகம் நறுந் தாது உறைப்ப - உள்ளேயுள்ள நறிய தாதுகள் ஊறிப் பிலிற்றுதலால், மீது அழிந்து கள் உக நடுங்கும் கழுநீர்போல - தேன் அகம் நிறைந்து மீது அழியு மாறு பொழிய நின்று நடுங்கும் கழுநீர் மலரைப் போல, கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் - கண்ணகியின் கரிய கண்ணும் மாதவியின் சிவந்த கண்ணும், உள்நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன - உள்ளத்துள்ள பிரிவுத் துன்பத்தைக் கற்பால் மறைத்து அகத்தே ஒளிக்கவும் நீரைச் சொரிந்தனவாய், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன - முன் எண்ணிய முறையே இடப் பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன, விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து என் - இந்திரனுடைய விழாநாளகத்து என்க. உறைத்தல் - துளித்தல். தேன் மல்கி நின்று அலைத்தலின் நடுங்கும் கழுநீர் போல நீர் நிறைந்து நின்று அலைக்குங் கண் என்க. புணர்ச்சி யின்மையும் உண்மையும் உணர்த்தற்குக் கருங்கணும் செங்கணும் என்றார். உண்ணிறை கரந்தகத் தொளித்தலைக் கண்ண கிக்கும், நீருகுத்தலை இருவர் கண்ணுக்கும் கொள்க. ஒளித்தல் மாதவிக்கும் பொருந்துமாயின் உரைத்துக் கொள்க. கண்கள் அழுகையும் உவகையும் பற்றி முறையே நீருகுத்தன வென்க. மகளிர்க்குக் கண் முதலியன இடந்துடித்தல் நன்றும் வலந்துடித்தல் தீதுமாம். பின்னர்க் கண்ணகிக்குக் கூட்டமுண்மையின் இடமும், மாதவிக்குப் பிரிவுண்மையின் வலமும் துடித்தன. நல்வினை நடுநாள் நீருகுத்தனவாகிய கருங்கணும் செங்கணும் விழவு நாளகத்து இடத்தினும் வலத்தினும் துடித்தன. விழவுநா ளகத்து - விழவு முடிந்து நீராடுதற்கு முன்னாளில் என்றபடி. என், அசை. இருட் படாம் போக நீக்கி ஒளிக் கதிர் பரப்பச் சொரிந்து ஆடிப்பெயர வான்பலி யூட்ட மண்டபமன்றியும் மன்றத்தும் பலியுறீஇ ஏற்றிச் சாற்றி எடுத்து ஈண்டிக் கொள்கென ஆட்டக் களிசிறந்த வியலுளாங்கண் திரிதருமறுகில் உண்டுகொல் என்று ஆட்டி விலக்கி உறீஇப் புக்க கணவர் நடுங்குநாள் உகுத்தனவாகிய கருங்கண்ணும் செங்கண்ணும் விழாநாளகத்து இடத்தினும் வலத்தினும் துடித்தன வென வினைமுடிக்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா. இந்திரவிழவூரெடுத்த காதை முற்றிற்று. 6. கடலாடு காதை (வெள்ளிமலையின் வடசேடியில் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் ஓர் விஞ்சைவீரன், புகார் நகரில் இந்திரவிழாக் கொண் டாடப்படுவதைத் தன் காதலிக் குரைத்து, அதனைக் காண்டற் பொருட்டாக அவளுடன் புறப்பட்டு இமயமலை, கங்கையாறு, உஞ்சைப்பதி, விந்தமலைக் காடு, வேங்கடமலை, காவிரிநாடு என்ப வற்றை முறையே காட்டி வந்து புகாரினை யடைந்து, நாளங்காடிப் பூதம் பலியுண்ணும் இடம், ஐவகை மன்றங்கள் முதலியவற்றைக் கண்டு காட்டி, பின்பு மாதவியானவள் சிவபிரான் ஆடிய கொடு கொட்டி முதலாகவுள்ள பதினோராடல் களையும் அவரவர் அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய கூத்தினையும் பாட்டினையும் காணாய் என வுரைத்துக் கண்டு மகிழ்வானாயினன். அவன்போலவே வானோர் பலரும் மக்கள் காணா முறைமையால் வந்து காண்பாராயினர். இவ்வாறு இந்திர விழா நடந்து முடியுங்கால் மாதவியின் ஆடலும் கோலமும் முடிவுற்றன. அப்பொழுது வெறுப்புற்ற உள்ளத்தோ டிருந்த கோவலன் உவக்குமாறு மாதவி பலவகை நறுவிரைகளாலும் அணிகளாலும் ஒப்பனை செய்துகொண்டு பள்ளியிடத்தே அவனோ டிருப்புழி, உவா வந்துற்றமையால் நகரிலுள்ளார் பலரும் கடலாடச் செல்லாநின்றனர். மாதவி கடல் விளையாட்டைக் காண விரும்பி னமையின் கோவலனும் அவளும் ஊர்திகளிலேறி வைகறைப் பொழுதிலே வீதிகளைக் கடந்துசென்று கடற்கரை மணற்பரப் பிலே வண்ணம் சாந்து முதலியனவும், அப்பம் மோதகம் முதலி யனவும், கள் மீன் முதலியனவும் விற்போர்கள் தனித்தனி யெடுத்த விளக்கங்களும், கலங்கரை விளக்கம், மீன்றிமில் விளக்கம் முதலி யனவும் வரம்பின்றி நெருங்கினமையால் நுண்மணற் பரப்பில் விழுந்த வெண் சிறு கடுகையும் புலப்படக் காணும் ஒளியை யுடைய தாகி, தாமரை மிக்க மருதவேலி போலத் தோன்றும் நெய்தலங் கானலில் தாழைகள் வேலியாகச் சூழ்ந்த புன்னை மரத்தின் நீழலில் புதுமணற் பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து விதானித்து அமைத்த வெண்காற் கட்டிலில் ஏறியபின், வசந்த மாலையின் கையிலிருந்த யாழை வாங்கி மாதவி கோவலனோ டிருந் தனள். (மாதவி தன்னை ஒப்பனை செய்தல் கூறுமிடத்தில் அற்றை நாளில் அணியப்படுவனவா யிருந்த அணிகல வகைகள் பலவும் அறியப்படுகின்றன.) வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக் கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக் கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன் 5 தென்றிசை மருங்கினோர் செழும்பதி தன்னுள் இந்திர விழவுகொண்டு எடுக்குநாள் இதுவெனக் கடுவிசை அவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழன் மன்னற்குத் தொலைந்தன ராகி 10 நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவே லண்ணற்குத் தேவ னேவ இருந்துபலி யுண்ணும் இடனும் காண்கும் அமரா பதிகாத் தமரனிற் பெற்றுத் 15 தமரிற் றந்து தகைசால் சிறப்பிற் பொய்வகை யின்றிப் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியுங் காண்குதும் நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் 20 ஆயிரங் கண்ணோன் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்கா ளாகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய 25 அங்கரவு அல்குல் ஆடலுங் காண்குதும் துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே அமரர் தலைவனை வணங்குதும் யாமெனச் சிமையத் திமையமுஞ் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் 30 வேங்கட மலையும் தாங்கா விளையுட் காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன் 35 மாயோன் பாணியும் வருணப் பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச் சீரியல் பொலிய நீரல நீங்கப் பாரதி யாடிய பாரதி அரங்கத்துத் 40 திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப உமையவ ளொருதிற னாக வோங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் தேர்முன் நின்ற திசைமுகன் காணப் 45 பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும் கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண் 50 நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும் படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக் குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் வாணன் பேரூர் மறுகிடை நடந்து 55 நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி யாடலும் காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் 60 செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் வயலுழை நின்று வடக்கு வாயிலுள் அயிராணி மடந்தை ஆடிய கடையமும் அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் 65 நிலையும் படிதமும் நீங்கா மரபிற் பதினோ ராடலும் பாட்டின் பகுதியும் விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய் தாதவிழ் பூம்பொழிலிருந்தியான் கூறிய மாதவி மரபின் மாதவி இவளெனக் 70 காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் அந்தரத் துள்ளோர் அறியா மரபின் வந்து காண்குறூஉம் வானவன் விழவும் ஆடலுங் கோலமும் அணியுங் கடைக்கொள 75 ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்பப் பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையினும் ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் 80 புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி அலத்தக மூட்டிய அஞ்செஞ் சீறடி அலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியக நூபுரம் பாடகம் சதங்கை 85 அரியகம் காலுக் கமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய 90 தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து 95 வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை 100 அங்கழுத்து அகவயின் ஆரமோ டணிந்து கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை 105 அங்காது அகவயின் அழகுற அணிந்து தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கோவலற் களித்துப் 110 பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள் உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப் பெருநீர் போகும் இரியன் மாக்களொடு மடவிழ் கானற் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டின ளாகிப் 115 பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப வைகறை யாமம் வாரணங் காட்ட வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத் தாரணி மார்பனொடு பேரணி அணிந்து வான வண்கையன் அத்திரி ஏற 120 மானமர் நோக்கியும் வைய மேறிக் கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின் மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி 125 மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப இருபுடை மருங்கினும் திரிவனர் பெயருந் திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து மகர வாரி வளந்தந் தோங்கிய நகர வீதி நடுவண் போகிக் 130 கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் வேலைவா வூகத்து விரிதிரைப் பரப்பிற் கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும் மாலைச் சேரி மருங்குசென் றெய்தி வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் 135 பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும் நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும் 140 இடையிடை மீன்விலைப் பகர்வோர் விளக்கமும் இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும் மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் 145 எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கீண்டி இடிக்கலப் பன்ன ஈரயிர் மருங்கிற் கடிப்பகை காணுங் காட்சிய தாகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றுங் 150 கைதை வேலி நெய்தலங் கானற் பொய்த லாயமொடு பூங்கொடி பொருந்தி நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய மலைப்பஃ றாரமுங் கடற்பஃ றாரமும் வளந்தலை மயங்கிய துளங்குகல விருக்கை 155 அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் பரத குமரரும் பல்வே றாயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும் விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் 160 தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக் கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து 165 அடங்காக் கம்பலை உடங்கியைந் தொலிப்பக் கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவயி னாங்கோர் புன்னை நீழற் புதுமணற் பரப்பில் ஓவிய எழினி சூழவுடன் போக்கி 170 விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை வருந்துபு நின்ற வசந்த மாலைகைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன் தன்னொடுங் கொள்கையி னிருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென். வெண்பா வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்தோட்டு மாலைத்துயின்ற மணிவண்டு - காலைக் களிநறவந் தாதூதத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெங்கதிரோன் தேர். உரை 1 - 4 வெள்ளிமால் வரை - பெரிய வெள்ளி மலையிலே, வியன் பெருஞ் சேடி - அகன்ற பெரிய வட சேடிக் கண்ணே, கள் அவிழ் பூம் பொழில் - தேன் ஒழுக மலரும் பூக்களையுடைய தோர் சோலையிடத்தே, காமக் கடவுட்கு - காம தேவனுக்கு, கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு - கரிய கயல்போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடனே யிருந்து, விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் - விழாக் கொண்டாடும் ஓர் விச்சா தர வீரன்; சேடி - வித்தியாதரர் நகரம். பொழிலிலே காதலியோடு கடவுட்கு விருந்தாட்டயரும் என்க. விருந்தாட்டு - ஆண்டுதொறுஞ் செய்யும் விழா. 5 - 6 தென்றிசை மருங்கின் ஓர் செழும்பதி தன்னுள் - தென்றிசைப் பக்கத்து ஓர் வளவிய நகரிடத்து, இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என - இந்திர விழாவிற்குக் கால் கொண்டு செய்யும் நாள் இதுவெனக் கூறி, செழும்பதி - காவிரிப்பூம் பட்டினம். இதற்கு அடியார்க்கு நல்லார் வலிந்துரைக்கும் பொருள் மெய்யெனத் தெளியற் பாலதன்றாயினும், அவர் கருத்தினை அறிந்துகோடல் கருதி, ஈண்டுக் காட்டப்படும். (அடி: வீரன் பங்குனித்திங்கள் இருபத்தொன்பதிற் சித்திரை நாளிலே அவ் விழா முடிதலின்,......கொடி யெடுக்கு நாள் மேலை மாதத்து இந்தச் சித்திரை காணெனச் சொல்லி யென்க. இதுவெனச் சுட்டினான் ; அன்றும் சித்திரை யாகலின். ஈண்டுத் திங்களும் திதியுங் கூறியது என்னை யெனின், கோவலனும் மனைவியும் ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச் செலவும் ஒழிவும், மதுரையிற் சென்று புக்கு அவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறு கொள்ளாது முடிதற்கெனக் கொள்க. அது யாண்டுமோ வெனின், வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை கட்டுரை காதை யென்னும் இவற்றுள்ளுமெனக் கொள்க.) 7 - 13 கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டி - மிக்க வேகத் தினையுடைய அவுணர்கள் கூட்டமாக நெருங்கிவந் தெதிர்த்து, கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி - இந்திரனது நகரைக் காத்த புலி போலும் வலியையுடைய வீரக்கழலணிந்த முசுகுந்தனுக்குத் தோற்று, நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல் விட்ட - பின்பு தம்மில் ஒத்துக்கூடி அம் முசுகுந்தனது நெஞ்சம் இருள் மிகும் படி விடுத்த, வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் - இருளம் பினைப் போக்கிய மிக்க பெரிய பூதமானது, திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ - திருந்திய வேலையுடைய அம் முசுகுந்தன் பொருட்டு இந்திரன் ஏவுதலினாற் போந்து, இருந்து பலி உண் ணும் இடனும் காண்கும் - புகாரிலிருந்து பலியுண்ணும் இடமாகிய நாளங்காடியையும் காண்போம்; ஊக்கம் - வலி, ஊக்கத்து மன்னன் என்க. நெஞ்சும் என உம்மை விரித்துப் புறக்கண்ணன்றி அகக்கண்ணாகிய நெஞ்சமும் இருள் கூர வென்க. நிகர்த்து - ஒத்துக் கூடி. வஞ்சம் என்றது வஞ்சத்தால் விட்ட இருட்கணையை. ஒரு காலத்தில் விண்ணுலகிலே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்றனன் என்பதும், அதனை மீட்கக் கருதிய இந்திரன், யான் சென்று வருங்காறும் இந்நகரினைக் காப்போர் யார் எனச் சிந்தித்த பொழுது முசுகுந்தன் ‘யான் பாதுகாப்பேன்' என மொழிந்தான் என்பதும், அது கேட்டு இந்திரன் மகிழ்ந்து, ‘இது நின்வழி நிற்பதாக' என ஒரு பூதத்தை நிறுத்திச் சென்றனன் என்பதும், அக்காலை அவுணர்கள் பெருந்திரளாக வந்து பொருது தோற் றோடியவர்கள் பின்பு ஒருங்குகூடிச் சூழ்ச்சி செய்து பேரிருட்கணை யொன்றை விடுத்தனர் என்பதும், அதனால் எங்கணும் இருள் சூழலும் முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி, அப்பூதம் அவ்விருளைப் போக்க, அவன் மீட்டும் அவுணர் படையை வென்றான் என்பதும், மீண்டுவந்த இந்திரன் நிகழ்ந்தவற்றை அறிந்து அப்பூதத்தை அம் மன்னனுக்கே மெய்காவலாகுமாறு பணிக்க, அஃது ஆங்கு நின்றும் போந்து புகார்நகரில் நாளங்காடியில் இருந்து பலியேற்று வருவதாயிற்று என்பதும் ஈண்டுக் கூறிய வாற்றானும், இதனுரையில் அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய மேற்கோட் செய்யுளொன்றானும் அறியப்படுகின்றன. அச்செய்யுள் : ''முன்னாளிந்திரன்........., காவலழித்துச் சேவல்கொண் டெழுந்த, வேட்கை யமுத மீட்க வெழுவோன், இந்நகர் காப்போர் யாரென நினைதலும், நேரிய னெழுந்து நீவரு காறும், தார்கெழு மார்ப தாங்கலென் கடனென, உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம், நின்வழி யாகென நிறீஇப் பெயர்வுழிக், கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிப், பொருதுபோர் தொலைந்தன ராகிப் பெரிதழிந், தாழ்ந்த நெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து, வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது, வேற லரிதெனத் தேறினர் தேறி, வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின், அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன், இருகணும் புதையப் பாய்தலி னொருகணும், நெஞ்சங் காணா நிற்ப நின்ற, வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்" என்பது. முசுகுந்தன் பரிதி மரபினனாய சோழர்குல முன்னோ னாதலின் அவன் பதியாகிய புகாரின்கண் பூதம் வந்து தங்குவ தாயிற்று. 14 - 17 அமராபதி காத்து - முன்பு அவுணரால் வந்த இடர் கெடப் பொன்னகராய அமராபதியைக் காத்தமையால், அமரனிற் பெற்று - அதற்குக் கைம்மாறாக இந்திரனால் அளிக்கப் பெற்று, தமரிற்றந்து - சோழன் மரபினுள்ளாரால் கொண்டு வரப்பட்டு, தகைசால் சிறப்பின் - அழகு மிக்க சிறப்பினையுடைய, பொய்வகை இன்றிப் பூமியிற் புணர்த்த - பொய்த்த லின்றிப் புவியிலே புகார் நகரில் வைக்கப்பட்ட, ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் - ஐவகைப்பட்ட மன்றங்களின் பெருமையையும் காண்பேம் ; தமர் - சோழன் முன்னோர். சிறப்பினையுடைய மன்றம் எனக் கூட்டுக. ஐவகை மன்றம் - வெள்ளிடை மன்றம் முதலாக முன் இந்திர விழவூரெடுத்த காதையிற் கூறப்பட்டவை. 18 - 25 நாரதன் வீணை நயம்தெரி பாடலும் - யாழாசிரியனாகிய நாரத முனிவன் இசையின்பம் விளங்கப் பாடும் பாடலும், தோரிய மடந்தை வாரம் பாடலும் - தோரிய மடந்தை பாடும் வாரப் பாடலும், ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய - இந்திரனுடைய செவியிடம் நிறையும்படி, நாடகம் உருப்பசி நல்காள் ஆகி - உருப்பசி நாடகம் நடத்திலள் ஆதலால், மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவள் எனச் சாபம் பெற்ற - வீணை மங்கல மிழக்க மண்மிசைத் தங்குக ; இவள் மண்ணிடைப் பிறக்க ; எனச் சபித்தலின் அதனைப் பெற்று வந்து பிறந்த, மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய - மங்கையாகிய மாதவியின் வழியிலே பிறந்த, அங்கு அரவு அல்குல் ஆடலும் காண்குதும் - அரவு போலும் அல்குலையுடைய மாதவியின் ஆடலையும் அவ்விடத்துக் காண்பேம் ; இவளது ஆடல் நெகிழ்ந்தமையால் அப் பாடல்களும் சிதைந்தன வென்றார். ஆகி - ஆயினமையால். மண்மிசைத் தங்குக என்றதனை வீணைக்கும் உருப்பசிக்கும் ஏற்றுக. அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. இவ் வரலாற்றை விளக்குதற்கு அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோட் செய்யுள் : "வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய வவையினிமையோர் வணங்க, இருந்த விந்திரன் றிருந்திழை யுருப்பசி, ஆடனிகழ்க பாடலோ டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமுங் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு மிசையத் திருத்திக், கரந்து வர லெழினியொடு புகுந்தவன் பாடலிற், பொருமுக வெழினியிற் புறந்திகழ் தோற்றம், யாவரும் விழையும் பாவனை யாகலின், நயந்த காதற் சயந்தன் முகத்தின், நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையி னாட னெகிழப், பாடன் முதலிய பல்வகைக் கருவிகள், எல்லாம் நெகிழ்தலி னொல்லா முனிவரன், ஒரு தலை யின்றி யிருவர் நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை, மாணா விறலோய் வேணு வாகென, இட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென, மேவினன் பணிந்து மேதக வுரைப்ப, ஓடிய சாபத் துருப்பசி தலைக்கட்டுங், காலைக் கழையும் நீயே யாகி, மலைய மால் வரையின் வந்துகண் ணுற்றுத், தலையரங் கேறிச் சார்தி யென்றவன், கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பண மாகெனச் சபித்துத், தந்திரி யுவப்பத் தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண் மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக் குறுமுனி யாங்கே, விட்டன னென்ப வேந்தவை யகத்தென்" என்பது. இவற்றானும், முன் அரங்கேற்று காதையில் ''தெய்வ மால் வரைத் திருமுனி யருள, எய்திய சாபத் திந்திர சிறுவனொடு, தலைக் கோற் றானத்துச் சாப நீங்கிய, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்" என்றுரைத்தது முதலியவற்றானும் அறியப்படும் வரலாறாவது : ஒருகாலத்துப் பொதியின் முனிவனாகிய அகத்தியன் இந்திரனது அவைக்கு வர, அப்பொழுது இந்திரன் பாடலோடு உருப்பசியின் ஆடல் நிகழ்கவெனப் பணித்தனன் ; ஆண்டு இந்திரன் மகனாகிய சித்திரசேனன் கரந்து வர லெழினியுடன் புகுந்துபாட, உருப்பசியும் அவனும் ஒருவரையொருவர் கண்டு காமுற்றமையின் அவளது ஆடல் நெகிழ்ந்தது; அதனால் ஏனைக் கருவிக ளெல்லாம் நெகிழ்ந்தன; நாரதன் இதனை அறிவித்தல் கருதித் தனது யாழிற் பகை நரம்பு படப் பாடினன் ; இவற்றை யெல்லா முணர்ந்த குறுமுனிவன் நாரதனது வீணை மங்கலமிழப்ப மண்ணிலே மணையாய்க் கிடக்குமாறும், உருப்பசி புவியிலே பிறக்குமாறும், சயந்தன் பூமியில் மூங்கிலாய்த் தோன்றுமாறும் சபித்து, அவர்கள் வேண்டுதலாற் பின் சாபவிடை தந்தனன்; என்பது. 26 - 27 துவர் இதழ்ச் செவ்வாய்த் துடி இடையோயே - செந் நிறமுடைய உதட்டினையும் சிவந்த வாயையுமுடைய உடுக்கையின் நடுப்போலும் இடையை உடையோய், அமரர் தலைவனை வணங்குதும் யாம் என - அங்குப் பூசைகொள்ளும் இந்திரனை யாமும் வணங்குவேம் என்று சொல்லி அவளுடன் போந்து, ஏகாரம் இசைநிறை, யாமும் என்னும் உம்மை தொக்கது; என்று சொல்லிப் போந்து என விரித்துரைக்க. 28-34. சிமையத்து இமையமும் - கொடுமுடியையுடைய இமயமலையையும், செழுநீர்க் கங்கையும்-வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும், உஞ்சையம்பதியும் - அழகிய உஞ்சைப் பதியையும், விந்தத்து அடவியும் - விந்தமலை சூழ்ந்த காட்டினையும், வேங்கடமலையும் - வேங்கடமென்னும் மலையினையும், தாங்கா விளையுட் காவிரிநாடும் - நிலம்பொறாத விளையுளையுடைய காவிரி பாயும் சோணாட்டினையும், காட்டி - தன் காதலிக்குக் காட்டி, பின்னர் - அதன் பின்பு, பூவிரி படப்பைப் புகார் மருங்கு எய்தி - பூக்கள் விரிந்த தோட்டங் களையுடைய புகாரின் இடத்தை அடைந்து, சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி - இந்திரனைத் தொழுது முன்சொன்ன முறையே காட்டி, மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் - வளம் பொருந்திய அம் மூதூரில் நடக்கின்ற தேவரும் மகிழும் விழாவைத் தானும் காண்கின்றவன் ; உஞ்சை - உச்சயினி ; அவந்திநாட்டின் தலைமைப் பதி. இமயம் முதலியன முறையே ஒன்றினொன்று தெற்கின்கண் உள்ளன வாதலால் இடைப்பட்ட அவற்றை அம்முறையே காட்டிப் புகாரினை எய்தினன். விளைவின் மிகுதி கூறுவார் 'தாங்கா விளையுள்' என்றார். 1"வேலியாயிரம் விளையுட்டாக" எனப் பிறரும் சோணாட்டின் விளைவு மிகுதி கூறினமை காண்க. விளையுள், உள் தொழிற்பெயர் விகுதி. மணிவிழா என்பது பாடமாயின் அழகிய விழாவென்க. 35-37. மாயோன் பாணியும் - திருமாலைப் பரவும் தேவ பாணியும், வருணப் பூதர் நால்வகைப் பாணியும் - வருணப்பூதர் நால்வரையும் பரவும் நால்வகைத் தேவ பாணியும், நலம் பெறு கொள்கை வான்ஊர் மதியமும் - பல்லுயிர்களும் தன் கலையால் நன்மை பெறுந் தன்மையுடைய வானில் ஊர்ந்து செல்லும் திங்களைப் பாடுந் தேவ பாணியும், பாடி - பாடுதல் செய்து, பின்னர் - பின்பு. மாதவி யாடிய பதினோராடல் கூறத் தொடங்கி, முதற்கண் அவற்றிற்கு முன் பாடப்படும் தேவபாணி கூறுகின்றார். பாணி - இசையையுடையது ; பாட்டு. பாண் - இசை. தெய்வத்தைப் பரவும் பாட்டுத் தேவபாணி எனப்படும், 1ஏனையொன்றே, தேவர்ப் பராவுதன் முன்னிலைக் கண்ணே" என்பது காண்க. அஃது இயற்றமிழில் வருங்காற் கொச்சக வொருபோகாயும், பெருந் தேவபாணி, சிறுதேவபாணி என இருவகைத்தாயும் வரும் என்பதும், அங்ஙனம் வரும் தரவினை நிலையென அடக்கி, முகத்திற் படுந்தரவினை முகநிலை யெனவும், இடை நிற்பனவற்றை இடைநிலை யெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலை யெனவும் பெயர் கூறுவர் என்பதும், அவை இசைத்தமிழின் கண்ணும் முகநிலை, கொச்சகம், முரி எனப்படும் என்பதும், மற்று, இசைப்பாவானது செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலை போகு மண்டிலம் எனப் பத்துவகைப்படு மென்பதும், இன்னும், சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என ஒன்பது வகைப்படும் என்பதும், நாடகத் தமிழில் தேவபாணி வருங்காற் பல தேவரும், வருணப் பூதரும் அவரணியும் தாரும் ஆடையும் நிறனும் கொடி யும், அவராற் பெற வேண்டு வனவும் கூறி மூவடி முக்கால் வெண்பாவால் துதிக்கப்படுவர் என்பதும் முறையே செய்யுளியலுடையார் இசை நுணுக்க முடைய சிகண்டியார், பஞ்ச மரபுடைய அறிவனார், மதிவாணனார் முதலிய தொல்லாசிரியர்களின் கொள்கைகளாம். இனி, பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி யென்ப. அது, "மலர்மிசைத் திருவினை வலத்தினி லமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன், இலகொளித் தடவரை கரத்தினி லெடுத்தவன் இன நிரைத் தொகைகளை யிசைத்தலி லழைத்தவன், முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத் தினையறுத்தவன், உலகனைத் தையுமொரு பதத்தினி லொடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே" என்பது. இஃது எண்சீரான் வந்த கொச்சக வொருபோகு. பண் - கௌசிகம். தாளம் - இரண்டொத்துடைத் தடாரம். நால்வகை வருணப்பூதர் பாணி வந்துழிக் காண்க. சந்திரனைப் பாடும் தேவபாணி : "குரைகடன் மதிக்கு மதலையை குறுமுய லொளிக்கு மரணினை, இரவிரு ளகற்று நிலவினை யிறைவன் முடித்த வணியினை, கரியவன் மனத்தி னுதித்தனை கயிரவ மலர்த்து மகிழ்நனை, பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே" என்பது. 38. சீர்இயல் பொலிய நீர் அல நீங்க - அவதாளம் நீங்கத் தாளவியல்பு பொலிவு பெற ; நீங்கப் பொலிய என மாறுக. நீங்குதலாற் பொலிவுற எனினு மமையும். இவற்றை மேல் மாதவிக்கு அடையாக்குக. 39-43. பாரதி ஆடிய பாரதி அரங்கத்து - பாரதியாடினமை யாற் பாரதியரங்கமெனப் பெயர்பெற்ற சுடுகாட்டிலே, திரிபுரம் எரியத் தேவர் வேண்ட - தேவர் திரிபுரத்தை எரியச் செய்ய வேண்டுதலால், எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப - வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட வளவிலே, உமையவள் ஒருதிறன் ஆக - உமையவள் ஒரு பக்கமாக, ஓங்கிய இமையவன் - தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன், ஆடிய கொடு கொட்டி ஆடலும் - வெற்றிக் களிப்பாற் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி யென்னும் ஆடலும் ; பாரதி - பைரவி. அவளாடுதலாற் சுடுகாடு பாரதி யரங்கம் எனப்படுவதாயிற்று. எரிய - எரிவிக்க ; அம்பு ஏவல்கேட்பப் புரம் எரிய என மாறுதலுமாம். பேரம்பு - திருமாலாகிய அம்பு ; அதற்கு முனை அங்கியங் கடவுள் என்க. ஏவல் கேட்டலாவது புரஞ்சுடுதல். அப் புரத்தில் அவுணர் வெந்துவிழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதி யரங்கம் என்றவாறு, உமையவள் ஒருபால் நின்று பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என விரித்தலுமாம். திரிபுரம் தீமடுத் தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி யாடுதலிற் கொடுமை யுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி யெனப் பெயர் கூறப்பட்டது. கொடுங்கொட்டி யெனற்பாலது விகாரமாயிற்று. 44-45. தேர்முன் நின்ற திசைமுகன் காண - தேரின் முன்னிடத்து நின்ற நான்முகன் காணும்படி, பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் - பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை யணிந்து ஆடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும்; வானோராகிய தேரில் நான்மறைப் புரவி பூட்டிக் கூர்முட் பிடித்துப் பாகனாய் நின்ற திசைமுகன் என்க. இறைவன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். பாண்டரங்கம் நிறம் பற்றிய பெயர். நின்று என்பது பாடமாயின், காண நின்று ஆடிய வென்க. 46-48. கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ; அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாருமுளர். 48-49. அவுணற் கடந்த - மாயோன் மல்லனாய் அவுணனைக் கொன்ற, மல்லின் ஆடலும் - மற் கூத்தும் ; அவுணன் - வாணாசுரன். அவுணற்கடந்த என்பதற்கு அவுணன் எண்ணத்தைக் கடந்தவென்றுரைப்பாரு முளர். மாயோன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். 49-51. மாக்கடல் நடுவண் - கரிய கடலின் நடுவே, நீர்த்திரை அரங்கத்து - நீரின் அலையே அரங்கமாக நின்று, நிகர்த்து முன் நின்ற சூர்த்திறம் கடந்தோன் - எதிர்த்து முன்னின்ற சூரனது வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன், ஆடிய துடியும் - துடி கொட்டி யாடிய துடிக் கூத்தும் ; கடல் நடுவண் சூர்த்திறங் கடந்தோன் அரங்கத்து ஆடிய துடியென்க. திறம் - வேற்றுருவாகிய வஞ்சம். 52-53 படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த-அவுணர்கள் தாம் போர் செய்தற் கெடுத்த படைக்கலங்களைப் போரிற் காற்றாது போகட்டு வருத்தமுற்ற வளவிலே, குடை வீழ்த்து அவர்முன் ஆடிய குடையும் - அவர் முன்னே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்று ஆடிய குடைக்கூத்தும் ; வீழ்த்தல் இரண்டனுள் முன்னது போகடுதல் ; பின்னது சாய்த்தல். முருகன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். 54-55. வாணன் பேரூர் மறுகிடை நடந்து - வாணாசுரனது சோ என்னும் நகர வீதியிற் சென்று, நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும் - நெடிய பூமியைத் தாவியளந்த மாயோன் குடங் கொண்டு ஆடிய குடக்கூத்தும் ; வாணன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகன் அநிருத் தனைச் சிறை வைத்தலின் அவனை மீட்டற்பொருட்டு உலோகங் களாலும் மண்ணாலும் இயற்றிய குடங்களைக் கொண்டு மாயோன் ஆடின னென்க. இது விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று. 56-57. ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து - ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக் கோலத்தோடு, காமன் ஆடிய பேடி ஆடலும் - காமன் ஆடிய பேடென்னுங் கூத்தும்: ஆண்மைத் தன்மையிற் றிரிதலாவது விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவுமின்றாதல் எனவும், ஆண்மை திரிந்த வென்பதனால் தாடியும், பெண்மைக் கோலத்தென்பதனால் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவும் உடைய பேடி எனவும் கொள்க. இவ்வியல்பு, 1'சுரியற்றாடி மருள்படு பூங்குழற், பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை, ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் தோட்டுக், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற், காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை, அகன்ற வல்குந்நுண் மருங்குல், இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து, வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோன் மகன்முன் னாடிய, பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்' என மணிமேகலையுள் விரித்துரைத்த வாற்றால் அறியப்படும். அடியார்க்குநல்லா ருரையில் ‘இது ஆண்பேடென்று பெயர் பெறும்' எனக் காணப்படுவது ஆராய்தற்குரித்து. இது, தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் ‘சோ’ நகரத் தாடியது. 58-59. காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் - காயுஞ் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யும் கொடுந் தொழிலைப் பொறாதவளாய், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் - துர்க்கை மரக்கால் கொண்டு ஆடிய மரக்காற் கூத்தும் ; மாயவள் - துர்க்கை. மரக்கால் - மரத்தாலாகிய கால். அவுணர் உண்மைப் போரால் வெல்லுத லாற்றாது வஞ்சப் போரால் வெல்லுதல் கருதி, பாம்பு தேள் முதலியனவாய்ப் புகுதலை யுணர்ந்து, அவள் அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடினள் என்க. 60-61. செருவெங்கோலம் அவுணர் நீங்க - அவுணர் வெவ்விய போர்க்கோலம் ஒழிய, திருவின் செய்யோள் ஆடிய பாவையும் - செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய் ஆடிய பாவைக் கூத்தும் ; அவுணர் போர்க்கோலத்தோ டிருந்தும் போர் செய்யாது மோகித்து வீழ்தலின் கோலம் நீங்க என்றார். திருவின் செய்யோள்- திருவாகிய செய்யோள் ; இன் சாரியை அல்வழிக்கண் வந்தது. 62-63. வயல் உழை நின்று வடக்கு வாயிலுள் - வாணபுரமாகிய சோநகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும் - இந்திராணி யென்னும் மடந்தை கடைசியர் வடிவுகொண்டு ஆடிய கடையக் கூத்தும் என்னும் இவற்றை. வடக்கு வாயில் என்றமையால் வாணபுரம் வருவிக்கப்பட்டது. வயலுழை நின்று என்றமையால் கடையம் கடைசியர் வடிவு கொண்டு ஆடியது என்க. கடைசியர் - உழத்தியர்; 1"வயன் மாதர" என்றார் சேக்கிழாரும். இக் கூத்துக்கள் முறையே இன்னின்னாரால் நிகழ்த்தப்பெற்றன வென்பதும், இவற்றிற்குரிய உறுப்புக்கள் இத் துணைய வென்பதும் பின்வருஞ் சூத்திரங்களால் அறியப்படும் : " கொட்டி கொடுவிடையோ னாடிற் றதற்குறுப் பொட்டிய நான்கா மெனல்." (1) " பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப் பாய்ந்தன வாறா மெனல்." (2) " அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச் சொல்லுப வாறா மெனல்." (3) " நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற் கொடியா வுறுப்போரைந் தாம்." (4) " துடியாடல் வேன்முருக னாட லதனுக் கொடியா வுறுப்போரைந் தாம்." (5) " அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப் பெறுமுறுப்பு நான்கா மெனல்." (6) " குடத்தாடல் குன்றெடுத்தோ னாட லதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து." (7) " காமன தாடல்பே டாட லதற்குறுப்பு வாய்மையி னாராயி னான்கு." (8) " மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு நாமவகை யிற்சொலுங்கா னான்கு." (9) " பாவை திருமக ளாடிற் றதற்குறுப் போவாம லொன்றுடனே யொன்று." (10) " கடைய மயிராணி யாடிற் றதனுக்ச் கடைய வுறுப்புக்க ளாறு." (11) பதினோராடலுள் இறைவனாடிய இரண்டினை முன் வைத்தும், மாயோனாடிய இரண்டினையும், முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வென்றி பற்றி நிகழ்ந்த இக் கூத்துக்களின்பின், காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் அவன் மகனாகிய காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், பின்னர்ப், பெண் தெய்வங்களுள்ளே முறையே மாயவளும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்தும் அவரவர் தகுதிக்கும், ஆண்மை பெண்மைகட்கும், கூத்துக்களின் இயல்புகட்கும் பொருந்த முறைப்படுத்தியுள்ள இளங்கோவடி களின் திப்பியப் புலமை மாண்பு செப்புதற்கரிய தொன்றாம். 64-67. அவரவர் அணியுடன் - அங்ஙனம் கூறப்பட்ட அவரவருடைய அணிகளுடனும், அவரவர் கொள்கையின் - அவரவர் கொள்கை யுடனும் ஆடிய, நிலையும் படிதமும் - நின்றாடலும் வீழ்ந்தாடலு மாகிய, நீங்கா மரபின் - அவரவரை நீங்காத மரபினையுடைய, பதினோராடலும் - பதினொரு வகைப்பட்ட ஆடல்களையும், பாட்டின் பகுதியும் - அவ்வாடல்களுக் கேற்ற பாடல்களின் வேறுபாட்டையும், விதி மாண் கொள்கையின் - அவற்றிற்கு விதித்த சிறந்த கொள்கையோடு, விளங்கக் காணாய் - புலப் படக் காண்பாயாக; நிலை - நின்றாடல், படிதம் - படிந்தாடல் ; வீழ்ந்தாடல். பதினோராடலுள் நின்றாடல் ஆறு ; வீழ்ந்தாடல் ஐந்து. அவற்றை, "அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம், மல்லுட னின்றாடலாறு" "துடிகடையம் பேடு மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந்தாட லைந்து" என்பவற்றான் அறிக. கொடுகொட்டி முதல் கடையம் ஈறாக வுள்ள இவற்றைச் சீரியல் பொலிய அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய பதினோராடல் என்க. 68-71. தாது அவிழ் பூம்பொழில் இருந்து - அன்று மதுவொழுகும் பூம்பொழிற் கண்ணே யிருந்து, யான் கூறிய - என்னாற் கூறப்பட்ட, மாதவி மரபின் மாதவி இவள் எனக் காதலிக்கு உரைத்து - உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த மாதவி இவள் காணென்று தன் காதலிக்குக் கூறி, கண்டு மகிழ்வு எய்திய - தானும் கண்டு மகிழ்ச்சி யுற்ற, மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் - மேன்மை பொருந்திய சிறப்பினையுடைய விஞ்சையனும், அவனன்றியும் ; பதினோராடலும் ஆடிக் காட்டிய மாதவியைச் சுட்டி, மாதவி யிவளெனக் கூறினனென்க. 72-75. அந்தரத்து உள்ளோர் - விண்ணுலகிலுள்ள தேவர்களும், அறியா மரபின் வந்து காண்குறூஉம் - பிறர் அறியாதபடி உள்வரி கொண்டுவந்து காணும், வானவன் விழவும் - இந்திர விழவும், ஆடலும் கோலமும் அணியும் கடைக் கொள - மாதவியாடலும் அவ்வாடற்குச் சமைந்த கோலமும் ஆடுதலாற் பிறந்த அழகும் முடிந்தமையால், ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப - வெறுப்போ டிருந்த கோவலன் மகிழும்படி ; ஆடற்கோலம் என்று பாடங்கொண்டு, மாதவி பதினோ ராடலுக்கும் கொண்ட கோலம் என்பர் அரும்பதவுரையாசிரியர். அணி - பாவ ரசம் ; மெய்ப்பாடு. ஊடல் - வெறுப்பு; அகத்து நிகழ்ந்த வெறுப்பை முகம் தோற்றுவித்தலின் "ஊடற் கோல மோடு" என்றார். வெறுப்பிற்குக் காரணம் திருநாள் முடிந்தமை. அன்றி, மாதவியின் ஆடல் முதலியன தனது அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடிகளைக் கவர்ந்தமையின் பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் வெறுப்பு என்றும், பலரும் இவளைப் பற்றிப் பார்த்தலிற் பொறாமையால் வந்த வெறுப்பு என்றும் கொள்ளலுமாம். 76-79. பத்துத் துவரினும் - பத்து வகைப்பட்ட துவரினானும், ஐந்து விரையினும் - ஐந்து வகைப்பட்ட விரையினானும், முப்பத்திரு வகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டு வகைப் பட்ட ஓமாலிகையானும், ஊறின நல் நீர் - ஊறிக் காயப்பட்ட நல்ல நீராலே, உரைத்த நெய் வாசம் - வாசநெய் தேய்த்த, நாறு இருங் கூந்தல் - மணங்கமழும் கரிய கூந்தலை, நலம் பெற ஆட்டி - நன்மை பெற ஆட்டி ; துவர் முதலியன அவற்றை யுடைய பொருளுக்காயின. வாச நெய் உரைத்த என மாறுக. இருமை - கருமை. துவர் முதலிய வற்றைப் பின்வரும் மேற்கொள்களான் அறிக ; "பூவந்தி திரிபலை புணர்கருங் காலி, நாவ லோடு நாற்பான் மரமே." "கொட்டந் துருக்கந் தகர மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை." "இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவி நாகணங் கொட்டம் - நிலவிய, நாக மதாவரிசி தக்கோல நன்னாரி வேகமில் வெண்கோட்ட மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி யுயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி, கதிர்நகையா யோமாலி கை" பிறவா றுரைப்பாரு முளர்.. 80-1. புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை - அங்ஙனம் நீராட்டிப் பொலிவினையுடைய புகையால் ஈரம் புலர்த்திய கூந்தலை, வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி - ஐந்து வகையாக வகுத்த வகைதோறும் கொழுவிய கத்தூரிக் குழம்பு ஊட்டி ; பூ ; பொலிவு ; அதனையுடைய அகிற்புகை யென்க ; 82-83. அலத்தகம் ஊட்டிய அம்செம் சீறடி - செம்பஞ்சிக் குழம்பூட்டிய அழகிய சிவந்த சிறிய அடியின், நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ- நன்மை தக்க மெல்லிய விரலிடத்தே நன்றாகிய அணிகளைச் செறித்து; அணி - மகரவாய் மோதிரம், பீலி, காலாழி முதலியன. 84-5. பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் - பாத சாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னுமி வற்றை, காலுக்கு அமைவு உற அணிந்து - காலுக்குப் பொருத்தமுறும்படி அணிந்து ; பரியகமாவது "பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம், பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரம், தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின், புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே" என்பர். பரியகம் - காற்சவடி யென்றும், அரியகம் - பாதசாலம் என்றும் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். 86. குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து - குறங்கு செறியென்னும் அணியைத் திரண்ட குறங்கிடத்தே செறித்து ; குறங்கு - கவான் ; துடை. குறங்கு செறியணி என்பதும் பாடம். 87- 8 பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் - பருமுத்தின் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை யென்னும் அணியை, நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ - நீல நிறம் விளங்கும் பூத்தொழிலையுடைய நீலச் சாத ருடையின்மீதே உடுத்து ; பிறங்கிய முத்து - பருமுத்து. காழ் - கோவை. முத்தரை - அரையின் முத்துவடம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். முத்தரை யென்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு முத்து எனப் பொருள் கோடல் பொருந்தும்; என்னை? ஈண்டு அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோள் ஒன்றிலும் "பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்" என்றே காணப்படுதலின் ; பெரு முத்தரையர் என்பதும் பெரு முத்துடையார் என்னும் பொருளினதாகும் ; பெருமுத்தரை - பெரு முத்து, நிறம் கிளர் - முத்தின் நிறம் விளங்குதற்கு ஏதுவாகிய என்றுமாம். விரிசிகை விரிந்து கலைபோன்றிருத்தலின் உடீஇ என்றார். விரிசிகையுடன் துகிலை யுடுத்து என்றுமாம். 89-90. காமர் கண்டிகை தன்னொடு பின்னிய - அழகிய கண்டிகை யென்னும் அணியுடன் சேர்த்துக் காட்டிய, தூமணித் தோள் வளை தோளுக்கு அணிந்து - முத்த வளையைத் தோளுக்கு அணிந்து ; தூமணி - முத்து, கண்டிகை - கண்டசரம் ; கழுத்திலணியும் ஓர் அணி. "மாணிக்க வளையுடன் நீங்காமற் பொற்றொடராற் பிணித்த முத்துவளை" என்பது அடியார்க்குநல்லாருரை. 91-94. மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங் களழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும், செம் பொற் கைவளை - செம்பொன்னாற் செய்த வளையும், பரியகம் - நவமணி வளையும், வால்வளை - சங்கவளையும் பவழப் பல்வளை - பலவாகிய பவழ வளைகளும் என்னும் இவற்றை, அரிமயிர் முன் கைக்கு அமைவுற அணிந்து - மெல்லிய மயிரையுடைய முன் கைக்குப் பொருத்தமுற அணிந்து ; சூடகம் - கடகமும், பரியகம் - கைச்சரியும், வால்வளை - வெள்ளி வளையும் என்னலுமாம். 95-98. வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனின் அங்காந்த வாயை யொக்கும் முடக்கு மோதிரமும், கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளிமிக்க செந்நிறம் விளங்கு கின்ற மாணிக்கம் பதித்த மோதிரமும், வாங்கு வில் வயிரத்து மர கதத் தாள்செறி - பக்கத்தே வளைந்து திரையும் ஒளியையுடைய வயிரம் சூழ்ந்த மரகதமணித் தாள்செறியும் என்னும் இவற்றை, காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - காந்தள் மலர்போலும் மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து ; வாளையின் அங்காந்த வாயை வணங்குதலுறுவிக்கும் நெளியென்றுமாம். கேழ் - முன்னது ஒளியும், பின்னது நிறமுமாம். கிளர் மணி மோதிரம் - இரத்தினங் கட்டின அடுக்காழியென்பது அரும்பதவுரை. வாங்கு வில் - வளைந்த விற்போல் வளைந்து செல்லும் ஒளி. வாள்போன்ற ஒளி வாள் எனவும், விற்போன்ற ஒளி வில் எனவும் பெயர் கூறப்படும் என்க. தாள் செறி - விரலடியிற் செறிப்பது. 99-100. சங்கிலி - வீரசங்கிலியும், நுண்தொடர் - நுண்ணிய சங்கிலியும், பூண்ஞாண் - பூணப்படும் சரடும், புனைவினை - புனையப்பட்ட தொழில்களையுடைய சவடி சரப்பளி முதலா யினவும் என்னும் இவற்றை, அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து - அழகிய கழுத்திடத்தே முத்தாரத்தோடு அணிந்து ; நுழைவினை நுண்ஞாண் என்று பாடங்கொண்டு, நுண்ணிய தொழிலையுடைய ஞாண் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர். கழுத்தின் முன்னிடத்தே தாழ அணிந்தென்க. 101-102. கயிற்கடை ஒழுகிய - முற்கூறிய சங்கிலி முதலியவற்றை ஒன்றாய் இணைத்திருக்கும் கொக்குவாயினின்றும் பின் புறம் தாழ்ந்த, காமர் தூமணி செயத்தகு கோவையின் - விருப்பஞ்செய்யும் தூய முத்தினாற் செய்யப்பட்ட கோவையாகிய பின்றாலியால், சிறுபுறம் மறைத்து ஆங்கு - பிடரினை மறைத்து ; கயிற்கடை - கொக்குவாய் ; கொக்கியென வழங்குவது. சிறு புறம் - பிடர் ; முதுகுமாம். ஆங்கு, அசை. 103-105. இந்திர நீலத்து இடையிடை திரண்ட சந்திரபாணித் தகைபெறு கடிப்பிணை - இந்திர நீலத்துடன் இடையிடையே திரண்ட வயிரத்தாற் கட்டப்பட்டு அழகு பெற்ற குதம்பை யென்னும் அணியை, அம் காது அகவயின் அழகுற அணிந்து - வடிந்த காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்து; முகப்பிற் கட்டின இந்திர நீலத்தின் இடையிடை வயிரங் கட்டின நீலக் குதம்பையை அணிந்தென்று அடியார்க்கு நல்லாரும், நீலக் குதம்பை, வயிரக் குதம்பையாகிய இரண்டையும் இரு காதிலும் அணிந்தென்று அரும்பதவுரையாசிரியரும் கருதுவர். சந்திரபாணி - சந்திரபாணியென்னும் பெயருடைய வயிரம். 106-108. தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி - சீதேவி யென்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும் தொய்யகம் புல்லகம் என்பனவும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை, மை ஈர் ஓதிக்கு மாண்பு உற அணிந்து - கரிய பெரிய கூந்தலுக்கு அழகுறும்படி அணிந்து ; செழுநீர் - வலம்புரிக்கு அடை. வலம்புரிச் சங்குபோலும் அணி வலம்புரியெனப்பட்டது. தொய்யகம் - பூரப்பாளை என்றும், புல்லகம் - தென்பல்லி வடபல்லி என்றும் கூறுவர். இருமை ஓதி ஈரோதியென்றாயிற்று; ஈர் - ஈரிய என்றுமாம். 109-110 கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - கூடுதலையும் பின்னர் ஊடுதலையும் கோவலற்கு அளித்து, பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் - படுத்தலமைந்த சேக்கையாகிய பள்ளியிடத்தே இருந்தவள் ; ஊடல் - பெண்மையும் நாணும் அழிந்து வந்து வலிதிற் குறையுற்றுக் கூடுந் துணையும் பிரிவாற்றியிருந்தீராகலின் நீர் அன்பிலீர் என ஊடுவது. ஊடலையளித்தல் - அதனால் வருந் துன்பத்தையளித்தல். பாடு ஒன்றின்மே லொன்றாகப் படுத்தல். சேக்கை - சேருமிடம். ஊடற்கோலமோ டிருந்தோன் உவப்பக் கூந்தலை நீராட்டி மான்மதச் சேறூட்டிக் கால்விரல் முதல் ஓதி ஈறாக அணியத் தகுவன அணிந்து அளித்து இருந்தோள் என்க. 111-114 உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தெனப் பெருநீர் போகும் இரியல் மாக்களொடு - உவாநாள் தலைவந்ததாக உட்குப் பொருந்திய மூதூரினின்றும் கடலாடுதற்கு விரைந்து செல்லும் மாக்களோடு, மடல் அவிழ் கானற் கடல் விளையாட்டு - தாழை புன்னை முதலியவற்றின் இதழ்கள் விரியும் சோலையையுடைய கடல்விளையாட்டை, காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி - தானும் காண்டலை விருப்பத்தோடே வேண்டினளாகி ; தலைவருதல், ஒருசொல். தலைவந்தென மூதூரினின்றும் போகும் மாக்கள் என மாறுக. உரு - உட்கு ; அச்சம். பகைவர்க்கு அச்சத்தை விளைக்குமென்க. உவா - நிறைமதிநாள். இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறங்கி விழாவாற்றுப்படுத்த பின்னாளிலே உவா வந்ததாகலின் கடலின்கண் நீராடச் செல்வா ராயினர். கடற்கரைக்கண் இடம்பிடிக்க விரைந்து செல் கின்றாராகலின். 'இரியன் மாக்கள்' என்றார் ; இரியல் - விரைவு. காண்டல் - நீர்ப் போரில் வெற்றி தோல்வி காண்டல். வேண்டினள் - காண்டற்குத் தானும் போகக் கோவலனை வேண்டிக் கொண்டாள்; எனவே அவனும் உடன்பட்டமை பெற்றாம். 115-120. பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப - பொய் கைகளில் தாமரைப் பூஞ்சேக்கையில் துயின்ற புட்கள் வாய் விட்டுப் புலம்ப, வைகறை யாமம் வாரணம் காட்ட - வைகறைப் பொழு தென்பதனை வாரணங்கள் அறிவிக்க, வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - வெள்ளியெழுந்த விளக்கம் செறிந்த இருளை நீக்க, தார் அணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய கோவலனோடு, பேர் அணி அணிந்து - மதாணி முதலிய பேரணி கலங்களை அணிந்து, வான வண் கையன் அத்திரி ஏற - மேகம் போலும் வண்மையையுடைய கையினனாகிய அவன் அரச வாகனமாகிய அத்திரியில் ஏற, மான் அமர் நோக்கியும் வையம் ஏறி - மானின் பார்வை பொருந்திய நோக்கினையுடைய மாதவியும் கொல்லாப் பண்டியில் ஏறி ; வைகறையாகிய யாமம் என்க. வாரணம் - கோழி, சங்கு; கோழியின் குரலும் சங்கின் முழக்கமும் வைகறையில் எழுவன. அத்திரி- கோவேறு கழுதை; இதனைக் குதிரையில் ஒரு சாதியென் பாருமுளர். வையம் - கொல்லாப் பண்டி ; இது கோவாலவண்டி என்ற உருவுடனும் காணப்படுகின்றது. வையம் - தேர் என்றும், கூடாரப்பண்டி யென்றும் கூறலுமாம். அவனும் உடன் செல்ல உடம்பட்ட வளவிலே பேரணியணிந்து, வண் கையன் அத்திரி யேற, நோக்கியும் மார்பனொடு செல்ல வையமேறியென்க. 121 -127. கொடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை - கோடி யென்னும் எண்ணைப் பலவாக அடுக்கப்பட்ட வளவிய பொருட்குவியலையுடைய, மாடம் மலி மறுகிற் பீடிகைத் தெருவின் - மாடங்கள் நிறைந்த குறுந்தெருக்களையுடைய ஆவண வீதியின் கண், மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்து ஆங்கு-மலர் அணியும் விளக்கோடே மாணிக்க விளக்குக்களையும் எடுத்து அவ்விடத்தே, அலர் கொடி அறுகும் நெல்லும் வீசி - மலரையும் அறுகையும் நெல்லையும் தூவி, மங்கலத் தாசியர் - சுமங்கலி களான ஏவற் பெண்டிர், தம் கலன் ஒலிப்ப - தம் அணிகலன் ஒலிக்க, இருபடை மருங்கினும் திரிவனர் பெயரும் - இருமருங்கினிடத்தும் திரிந்து பெயர்தலைச் செய்யும், திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து - திருமகளுக்கு இருப்பிடமாகிய அவ் விடத்தை வேறாகக் கழிந்து ; மாடம் - சரக்கறைகள். மறுகு - குறுந்தெரு ; 1"குறுந்தெரு மறுகே" என்பது திவாகரம். பீடிகைத் தெரு - பெரிய கடைத் தெரு. அலரும் என எண்ணும்மை விரிக்க. மங்கலத் தொழில் செய்யும் தாசியர் என்றுமாம். தாசியர் - சிலதியர் ; ஏவன் மகளிர். மங்கலமாக வீசி யென்றும் உரைத்துக் கொள்க. அங்காடியின் செல்வமிகுதி கூறுவார் திருமகளிருக்கையென்று பெயர் கூறினார் ; இது பட்டினப் பாக்கத்தது. செவ்வனம் - முற்ற. எடுத்து-எடுப்ப என்றுமாம். 128-129. மகர வாரி வளம் தந்து ஓங்கிய - கடலின் வளத்தைக் கொணர்தலால் உயர்ச்சி பெற்ற, நகரவீதி நடுவண் போகி - நகர வீதியினூடே சென்று ; தந்து - தருதலால். நகரவீதி - மருவூர்ப்பாக்க வீதி. 130-133. கலம் தரு திருவின் - மரக்கலங்கள் தந்த செல்வத்தை யுடைய, புலம் பெயர் மாக்கள் - தம் தேயங்களை விட்டுப் போந்த பரதேயத்தினர், வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில் கூல மறுகில் - கடலின் அலைவா யிருப்பில் வெண்மணலையுடைய கூல வீதியில், கொடி எடுத்து நுவலும் மாலைச்சேரி மருங்கு சென்று எய்தி - இன்ன சரக்கு ஈண்டுளதென்று கொடி களெடுத்து அறிவிக்கும் ஒழுங்குபட்ட சேரிகளைக் கடந்து நெய்தலங்கானலை எய்தி ; வாலுகம் - வெண்மணல். வேலை விரிதிரைப் பரப்பில் வாலுகத்து மறுகு என்றியைக்க. எடுத்து - எடுத்தலால் என்க. நுவலுதல் - ஈண்டு அறிவித்தல். சரக்குக்களின் நன்மையை அறிவித்தலுமாம். 134-45. வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் - எழுது வண்ணமும் சாந்தும் மலரும் பூசு சுண்ணமும் பண்ணிகார வகைகளும் விற்போர்கள் வைத்த விளக்குக்களும், செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் - செய்யுந் தொழில்களை வல்ல பணித்தட்டார் அணிகலஞ் செய்யுமிடங்களில் வைத்த விளக்குக்களும், காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் - பிட்டு வாணிகர் பிட்டு விற்றற்கு முறைமுறையாக வைத்த விளக்குக்களும், கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் - கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடத்தண்டில் வைத்த விளக்குக்களும், நொடை நவில் மகடூக் கடை கெழு விளக்கமும் - பல பண்டமும் விற்கும் மகளிர் தம் கடைகளில் வைத்த விளக்குக்களும், இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் - இடையிடையே மீன் விற்போர் விளக்குக்களும், இலங்குநீர் வரைப்பிற் கலம் கரை விளக்கமும் - கடலிடத்தே துறையறியாது ஓடும் மரக்கலங் களைக் குறி காட்டி அழைத்தற்கிட்ட விளக்குக்களும், விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும் - மீன்களைக் குறுக் கிட்டுத் தடுத்து அகப் படுக்கும் வலையையுடைய பரதவர் திமிலில்வைத்த விளக்குக்களும், மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் - மொழி வேறுபட்ட தேயத்தினர் வைத்துள்ள விடிவிளக்குக்களும், கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் - மிக்க பெரிய பண்டங்களையுடைய பண்டசாலை காப்போர் இட்ட விளக்குக்களும், எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - அளவறியப் படாதனவாய் எங்கணும் பொருந்தி மிகுதலாலே ; மோதகம் - ஈண்டுப் பிட்டு, காரகல் - அப்பஞ் சுடும் அகல் குடைகால் விளக்கு எனப் பாடங் கொண்டு, காரகல் ஒன்றைத் தண்டைக் கடைந்திட்ட விளக்கு என்பர் அரும்பதவுரையாசிரியர். நொடை நவில் - விலையைக் கூறும் ; விற்கும் என்றபடி. கலம் - கப்பல் ; கரைதல் - அழைத்தல் ; 1" வான மூன்றிய மதலை போல ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத் திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும், துறை " என்றார் பிறரும், மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம் என்பதற்குப், பாடை வேறுபட்ட தேயத்து மிலேச்சர் பிற துறைகளிற் போகாமற் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீதே மண்ணிட் டெரிக்கும் தீநா வென்னும் விளக்குக்கள் என்பர் அடியார்க்கு நல்லார். ஈண்டுதல் - மிகுதல்; ஈண்டி - மிகுதலால் என்க. 146-150. இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் - மாவின் கலப்பினையொத்த மிக நுண்ணிய மணலின்மீது இட்ட, கடிப்பகை காணும் காட்சியது ஆகிய - வெண்சிறு கடுகும் புலப்படக் காணும் காட்சியை யுடையதாகிய, விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் - மிக்க நீர்ப் பரப்பிலே மணம் பொருந்திய மலரையுடைய தாமரையை வேலியாகவுடைய மருதநிலம்போல, மாண்பு உறத் தோன்றும் - அழகுறத் தோன்றும், கைதை வேலி நெய்தல் அம் கானல் - தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்திற் கழிக்கானற் கண்ணே ; இடி - இடிக்கப்பட்டது ; மா. இடிக் கலப்பு - தெள்ளாத மா. ஈர் அயிர் - மிக நுண்ணிய மணல். வேலியின் என்னும் இன்னுருபை மருதத்தொடு கூட்டி, நீர்ப் பரப்பில் தாமரை வேலியையுடைய மருதத்தின் தோன்றும் என்க. மருதத்தினும் என உறழ்ச்சியாக்கினும் அமையும். ஆகிய, தோன்றும் என்னும் பெயரெச்சங்கள் நெய்தலென்னும் பெயர்கொண்டு முடியும். அம், சாரியை. 151. பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி - தனது விளையாட்டின் மகளிருடனே பூங்கொடி போல்வாள் விளையாடச் சென்று பொருந்தி; பொய்தல் - மகளிர் விளையாட்டு. 152-154. நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சி - நிரை நிரை யாகக் குவித்த குற்றமற்ற காட்சியையுடைய, மலைப் பஃறாரமும் கடற் பஃறாரமும் வளம் தலை மயங்கிய - மலைதரும் பல பண்டமும் கடல்தரும் பல பண்டமும் ஆகிய வளம் கலந்து கிடக்கும், துளங்கு கல இருக்கை - மரக்கலங்கள் அசைகின்ற துறைமுகங்களிற் சோலை சூழ்ந்த இருப்பிடத்தே ; பல்தாரம் - பஃறாரம் என்றாயிற்று. தாரம் - பலபண்டம் ; பல் என்னும் அடையடுத்தமையால் ஈண்டு வாளா பண்டம் என்னும் பொருட்டு. தலைமயங்கிய - கலந்த ; ஒரு சொல். இடந்தோறும் மயங்கிய என்றுரைப்பாரு முளர். 155-158. அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் - அரச குமாரரும் அவருடைய உரிமைச் சுற்றமும், பரத குமரரும் பல்வேறு ஆயமும் - வணிக குமாரரும் அவருடைய பல்வேறு வகைப் பட்ட ஆய மகளிரும், ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் - ஆடல் மகளிரும் பாடல் மகளிரும், தோடுகொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் - தொகுதிகொண்ட இடந்தோறும் அத் தொகுதியும் சூழ்ந்துள்ள திரைச் சீலையும் என்னுமிவற்றின்; உரிமைச் சுற்றமும் என்பதனைப் பரத குமரர்க்கும், பல்வேறாயமும் என்பதனை அரச குமரர்க்கும் கூட்டிக் கொள்க. வணிகருடைய உரிமை மகளிர் புனலாடல் மரபன்மையிற் கூறாராயினார் என்றுமாம். பல்வேறு ஆயம் - பரிசன மகளிரும் சிலதியர் முதலாயினாரும். ஆடுகளம் - அரங்கு. பாடுகளம் - கண்டம். களம் இரண்டும் அடை, தோடு - தொகுதி. அத் தொகுதியும் என விரித்துக் கொள்க. 159-62. விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் - விண்ணிலே சென்று பொருந்தும் பெரிய புகழையுடைய கரிகாற் சோழன், தண்பதம் கொள்ளும் தலைநாட்போல - புதுப் புனல் விழவு கொண்டாடும் தலைநாளிற்போல, வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை - வேறு வேறு கோலமும் வேறு வேறு ஆரவாரமும், சாறு அயர்களத்தின் வீறுபெறத் தோன்றி- விழாச் செய்யும் களத்திற்போல வீறுபெறத் தோன்றாநிற்க ; பொரு - பொருந்தும். தண்பதங் கொள்ளும் - புதுப்புனலாடும். தொகுதியின் கம்பலையும் எழினியின் கோலமும் தோன்ற வென எதிர்நிரனிறை. தலைநாட்போல, களத்தின் என்னும் உவம மிரண்டும் முறையே காலம் பற்றியும் இடம் பற்றியும் வந்தன. தோன்றி - தோன்றவெனத் திரிக்க. 163-165. கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று - கடலினது கரையைக் குத்தி யிடிக்கும் காவிரியின் புகார் முகம் எங்கும், இடம் கெட ஈண்டிய - வறிதிடம் இன்றாகத் திரண்ட, நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை - நால்வகை வருணத்தாரின் அடக்கப்படாத ஆரவாரமெல்லாம், உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்குகூடி ஓரோசையாய் நின்றொலிப்ப ; மெலிக்கும் - மெலிவிக்கும். காவிரியாகிய பேர் யாறு. 166-174. கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழை - கடலினது புலால் நாற்றத்தைக் கெடுத்த மடலவிழும் பூவையுடைய தாழையால், சிறை செய் வேலி அகவயின் - காவல் செய்யும் வேலியாகச் சூழப்பட்ட உள்ளிடத்தே, ஆங்கு ஓர் புன்னை நீழல் - ஒப்பற்ற புன்னை மரத்தின் நீழலில், புதுமணற் பரப்பின் - அழுக்கற்ற மணல் பரந்த நிலத்தே, ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சித்திரத் திரையைச் சுற்றிலும் சேர வளைத்து, விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை - மேற்கட்டும் கட்டியிடப் பட்ட யானைக் கொம்பாற் செய்த கால்களையுடைய கட்டிலின் மேலே, வருந்துபு நின்ற வசந்தமாலை கைத் திருந்துகோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி - வருந்திநின்ற வயந்த மாலையின் கையதாகிய திருந்திய நரம்பினையுடைய நல்ல யாழைச் செவ்வனே வாங்கி, கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவிதான் என் - பெரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி கோவலனோடும் சேர விருந்தாள். யானைத் தந்தத்தாற் செய்யப்பட்டதாகலின் வெண்கால் என்றார். வசந்தமாலை - மாதவியின் சேடி. அவள் வழிவந்ததனால் வருந்தி நின்றாள் என்க. கோல் - நரம்பு. கொள்கை - என்றும் இருக்கு முறைமை. ஆங்கு, தன்,தான், என் என்பன அசைகள். நெய்தலங் கானலில் ஆயமொடு பொருந்தி விளையாடி அதன்பின் அமளிமிசைக் கோவலனோடும் இருந்தனள் என்க. தோன்ற, ஒலிப்ப என்பன நிகழ்கால முணர்த்தின. மானமர் நோக்கி, பூங்கொடி, மாதவி என்னும் மூன்றையும் சேரவைத்து ஓர் எழுவாயாக்குக. பள்ளியுள் இருந்தோள் உவவுத் தலைவந்ததாகக் கடல் விளையாட்டுக் காண்டல் வேண்டி அணிந்து வையமேறித் தெருவினைக் கழிந்து நடுவட்போகி எய்திக் கானலில் ஆயமொடு பொருந்திப் பின் மணற் பரப்பிலே அமளிமீதே யாழ்வாங்கிக் கோவலன் றன்னோடிருந்தாள் என முடிக்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. வெண்பாவுரை வேலை மடற்றாழை ...................... தேர். வேலை - கடற்கரையிலுள்ள, மடற்றாழை - மடல் விரிந்த தாழையின், உட்பொதிந்த வெண்தோட்டு - உள்ளே செறிந்த வெள்ளிய இதழின்கண், மாலைத் துயின்ற மணிவண்டு - மாலைப் பொழுதிலே துயின்ற நீலநிறமுடைய வண்டு, காலை - காலைப் பொழுதில், களி நறவம் தாது ஊத - களிப்பைச் செய்யும் தேனினையும் தாதினையும் ஊதும்படி, காமர் தெளிநிற வெங் கதிரோன் தேர் - அழகிய தெளிந்த நிறத்தினையுடைய வெய்ய சுடரினனாகிய பரிதியின் தேர், தோன்றிற்று - கீழ்த்திசையில் உதித்தது. கடலாடு காதை முற்றிற்று. 7. கானல் வரி (யாழினைத் தொழுது வாங்கிய மாதவி பண்ணல் முதலிய எண் வகையாலும் இசையை எழுப்பி, வார்தல் முதலிய எட்டுவகை இசைக் கரணத்தாலும் ஆராய்ந்து செவியால் ஓர்த்து, பாணி யாதெனக் கூறிக் கோவலன் கையில் யாழினை நீட்ட, அவன் வாங்கி, ஆற்று வரியும் கானல் வரியுமாகிய இசைப்பாட்டுக்கள் பலவற்றை யாழிலிட்டுப் பாடினான். அவன் பாடிய பாட்டுக்கள் அகப்பொருட்டுறை யமைந்தன வாகலின், அவற்றைக் கேட்ட மாதவி, 'இவற்றுள் ஓர் குறிப்பு உண்டு ; இவன் தன்னிலை மயங்கினான்' எனக் கருதி, யாழினை வாங்கித் தானும் ஓர் குறிப்புடையாள் போல வரிப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடினாள். யாழிசைமேல் வைத்து ஊழ்வினை வந்து உருத்ததாகலின், கோவலன் அவள் பாடியவற்றைக் கேட்டு, 'யான் கானல்வரி பாட, இவள் மிக்க மாயமுடையளாகலின் வேறொன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள்' என உட்கொண்டு, அவளை அணைத்த கை நெகிழ்ந்தவனாய் எழுந்து ஏவலாளர் சூழ்தரப் போயினான் ; போக, மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்ளே புக்குக் காதலனுடனன்றியே தன் மனையை அடைந்தாள். (இதிலுள்ள பாட்டுக்கள் பலவும் கற்போரை இன்பத்திலே திளைக்க வைக்கும் சொற்பொருள் நயங்கள் வாய்ந்தவை.) கட்டுரை 1 சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிப் பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசையெழீ இப் பண்வகையாற் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியினோர்த்து ஏவலன்பின் பாணியாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன். வேறு 2 திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி. 3 மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய் மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி. 4 உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் வாய்காவா மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி. வேறு 5 கரிய மலர்நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர். 6 காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர். 7 மோது முதுதிரையான் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதழிப்ப மாழ்கி யைய கோதை பரிந்தசைய மெல்விரலாற் கொண்டோச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர். வேறு 8 துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்ற மாய்வான் பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது போக்குங் கானல் நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும். 9 நிணங்கொள் புலால் உணங்கல் நின்றுபுள் ளோப்புதல் தலைக்கீ டாகக் கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையி லேந்தி மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர் அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. 10 மலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின் மலர்கை யேந்தி விலைமீன் உணங்கற் பொருட்டாக வேண்டுருவங் கொண்டு வேறோர் கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. வேறு 11 கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கண்ஏர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. 12 எறிவளைக ளார்ப்ப இருமருங்கு மோடுங் கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றங் காணீர் கடுங்கூற்றங் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே. 13 புலவுமீன் வெள்உணங்கற் புள்ளோப்பிக் கண்டாக்கு அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர் அணங்கிதுவே காணீர் அடும்பமர்தண் கானற் பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண் டதுவே. வேறு 14 பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில் இணையே எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே. 15 திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே. 16 வளைவள தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே. வேறு 17 கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய். 18 கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும் வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய். 19 ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்ஐயர் கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும் பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய். வேறு 20 பவள உலக்கை கையாற் பற்றித் தவள முத்தங் குறுவாள் செங்கண் தவள முத்தங் குறுவாள் செங்கண் குவளை யல்ல கொடிய கொடிய. 21 புன்னை நீழற் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம். 22 கள்வாய் நீலங் கையி னேந்திப் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய. வேறு 23 சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய் சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய் ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின் சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய். கட்டுரை 24 ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலை மயங்கினானெனக் கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்த மைந்த கண்டத்தாற் பாடத் தொடங்குமன். வேறு 25 மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடைஅதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. 26 பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. 27 வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும் ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. வேறு 28 தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய வீங்கோதந் தந்து வியங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். 29 மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங் கறிகோம் ஐய நிறைமதியு மீனும்என அன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்ப லூதும் புகாரே எம்மூர். 30 உண்டாரை வெல்நறா ஊணொளியாப் பாக்கத்துள் உறையொன் றின்றித் தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங் கறிகோம் ஐய வண்டால் திரையழிப்பக் கையான் மணல்முகந்து மதிமேல் நீண்ட புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர். வேறு 31 புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால். 32 தம்முடை தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால். 33 புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ. 34 புள்ளியன்மான் தேர்ஆழி போன வழியெல்லாநி தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்ததாய்மற் றென்செய்கோ தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்ததாய்மற் றெம்மோடீங்கு உள்ளாரோ டுள்ளாய் உணராய்மற் றென்செய்கோ. 35 நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே. 36 நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம். வேறு 37 நன்னித் திலத்தின் பூண் அணிந்து நலஞ்சார் பவளக் களையுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறுந் திரையு லாவு கடற்சேர்ப்ப புன்னைப் பொதும்பர் மகரத்திண்கொடியோன் எய்த புதுப்புண்கள் என்னைக் காணா வகைமறைத்தால் அன்னை காணின் என்செய்கோ. 38 வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில் திரையு லாவு கடற்சேர்ப்ப மாரிப் பீரத் தலர்வண்ண மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து ஆர்இக் கொடுமை செய்தாரென் றன்னை அறியின் என்செய்கோ. 39 புலவுற் றிரங்கி அதுநீங்கப் பொழிற்றண் டலையிற் புகுந்துதிர்ந்த கலவைச் செம்மல் மணங்கமழத் திரையு லாவு கடற்சேர்ப்ப பலவுற் றொருநோய் துணியாத படர்நோய் மடவாள் தணியுழப்ப அலவுற் றிரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ. வேறு 40 இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டுளதாங்கொல் வளைநெகி எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை. 41 கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீ ருகுத்தனவே புதுமதிபுரைமுகத்தாய் போனார்நாட்டுளதாங்கொல் மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை. 42 பறவைபாட் டடங்கினவே பகல் செய்வான் மறைந்தனனே நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல் மறவையாய் என்னுயிர்மேல் வந்தஇம் மருள்மாலை. வேறு 43 கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனா ரொருவர் பொய்தல் அழித்துப் போனா ரவர்நம் மையல் மனம்விட்ட டகல்வா ரல்லர். 44 கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்றா ரொருவர் நீநல் கென்றே நின்றா ரவர்நம் மானேர் நோக்க மறப்பா ரல்லர். 45 அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்நம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர். வேறு 46 அடையல் குருகே அடையலெங் கானல் அடையல் குருகே அடையலெங் கானல் உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய் அடையல் குருகே அடையலெங் கானல். வேறு 47 ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் காந்தள் மெல்விரற் கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலைஇசை எழீஇப் பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள். வேறு 48 நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல் கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை. 49 பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை. 50 பையுள் நோய்கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை மாலைநீ யாயின் மணந்தார் அவராயின் ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. வேறு 51 தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும். 52 எனக்கேட்டு, கானல்வரி யான்பாடத் தானொன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின் உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கைஞெகிழ்ந்தனனாய்ப் பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்றுடனெழாது ஏவலாள ருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாயத்து ஒலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக் காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள். ஆங்கு, மாயிரு ஞாலத் தரசு தலைவணக்குஞ் சூழி யானைச் சுடர்வாட் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப ஆழி மால்வரை அகவையா வெனவே. உரை கட்டுரை 1. சித்திரப் படத்துள் புக்கு - சித்திரத் தொழிலமைந்த ஆடையுட் புகுந்து, செழுங்கோட்டில் மலர் புனைந்து - அழகிய கோட்டிலே மலர் சூடி, மைத்தடங்கண் மண மகளிர் கோலம்போல் வனப்பு எய்தி - மை தீற்றிய பெரிய கண்களை யுடைய மண மகளின் ஒப்பனைக் கோலம்போல் அழகினைப் பொருந்தி, பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத்திறத்துக்குற்றம் நீங்கிய - பத்தர் கோடு ஆணி நரம்பு என்ற இவ்வகை உறுப்புக்களின் குற்றம் ஒழிந்த, யாழ் - யாழினை, கையில் தொழுது வாங்கி - கும்பிட்டுக் கையில் வாங்கி, பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் (கண்ணிய) செலவு விளையாட்டுக் கையூழ் (நண்ணிய) குறும்போக்கு என்று நாட்டிய எண் வகையால் இசை எழீஇ - பண்ணல் முதலாக நிறுத்தப்பட்ட எட்டுவகைக் கலைத் தொழிலானும் இசையை எழுப்பி, பண் வகையாற் பரிவு தீர்ந்து - பண் வகையிற் குற்றம் நீங்கி, மரகத மணித்தாள் செறிந்த மணிக் காந்தள் மெல்விரல்கள் - மரகதமணி மோதிரங்கள் செறிந்த அழகிய காந்தளிதழ் போலும் மெல்லிய விரல்கள், பயிர் வண்டின் கிளைபோலப் பல் நரம்பின் மிசைப் படர - பாடு கின்ற வண்டின் இனம் போலப் பலவாகிய நரம்பின்மீதே செல்ல, வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் (சீருடன்) உருட்டல் தெருட்டல் அள்ளல் (ஏருடைப்) பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்து - வார்தல் முதலாக இசை நூலோரால் வகுக்கப்பட்ட எட்டு வகை இசைக் கரணத் தாலும், பட்ட வகை தன் செவியின் ஓர்த்து - உண்டாகிய இசையின் கூறுபாட்டைத் தன் செவியாலே சீர்தூக்கி யறிந்து, ஏவலன் பின் பணி யாது எனக் கோவலன் கை யாழ் நீட்ட - ஏவினபடி செய்தற்குரியேன் மேல் நுமது பணி யாதென்று கூறிக் கோவலன் கையிலே அவ்வியாழை நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடற் கானல் வரிப் பாணியும் மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன் - அவன் காவிரியைக் கருதியனவும் கடற்கானலைக் கருதி யனவுமாகிய வரிப்பாட்டுக்களை மாதவியின் மனம் மகிழும்படி வாசிக்கத் தொடங்கினான் ; படம் - ஆடை, அதனாலாய உறை. சித்திரப் படத்துட் புக்கமையாலும் மலர் புனைந்தமையாலும் மணமகள் போன்றது. 1"மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன" என்றார் பிறரும். கோடு - யாழின் தண்டு. பத்தர் முதலிய நான்கும் யாழின் உறுப்புக்கள். இவையன்றி மாடகம் எனப்படும் முறுக்காணியும், திவவு எனப்படும் வார்க்கட்டும் யாழுறுப்புக்களாம். குற்றமற்ற மரத்தாற் செய்த பத்தர் முதலாயினவும், கொடும்புரி, மயிர், தும்பு, முறுக்கு என்பன இல்லாத நரம்பும் உடைய யாழென்பார் 'இத்திறத்துக் குற்ற நீங்கிய யாழ்' என்றார். மரத்தின் குற்றமாவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல். திருத்தக்கதேவர் 1"நோய் நான்கு நீங்கி" என்றருளியதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் நோக்குக. மற்றும் அவர், பொருநராற்றுப்படை யுரையில் "கொன்றை கருங்காலி குமிழ் முருக்குத் தணக்கே' என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம் ; பத்தர்க்குக் குமிழும் முருக்கும் தணக்குமாம்" என்றெழுதியதும் ஈண்டு அறியற்பாலது. "கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான்கும், நடுங்கா மரபிற் பகையென மொழிப" என்றதனால் நரம்பின் குற்றம் அறிக. யாழினிடத்தே தெய்வம் உறைதலின் அதனைத் தொழுது வாங்கினாள்;2"அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி" என்பது காண்க. 3"பண்ணல் - பாட நினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல் ; பரிவட்டணை - அவ் வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல் ; ஆராய்தல் - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது ; அநுசுருதி யேற்றுதல், தைவரல் ; ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல், செலவு ; பாட நினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுதல், விளையாட்டு; வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல், கையூழ்; குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல், குறும்போக்கு" என்பது சிந்தாமணி நச்சினார்க்கினியம். இவற்றிற்கு அரும்பதவுரை யாசிரியர் காட்டிய சூத்திரங்கள் பின் வருவன: 1. "வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றிளிவழி கேட்டும் ... இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ண லாகும்." 2. " பரிவட் டணையி னிலக்கணந் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇச் இடக்கை விரலி னியைவ தாகத் தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும்." 3. " ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற் குரன்முத லாக விணைவழி கேட்டும் இணையி லாவழிப் பயனொடு கேட்டும் தாரமு முழையுந் தம்மிற் கேட்டும் குரலு மிளியுந் தம்மிற் கேட்டும் துத்தமும் விளரியுந் துன்னுறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும் தளரா தாகிய தன்மைத் தாகும்." 4 "தைவர லென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும் நீர வாகு நிறைய தென்ப." 5 "செலவெனப் படுவதன் செய்கை தானே பாலை பண்ணே திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப் பதினோ ராடலும் பாணியு மியல்பும் விதிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே." 6 "விளையாட் டென்பது விரிக்குங் காலைக் கிளவிய வகையி னெழுவகை யெழாலும் அளவிய தகைய தாகு மென்ப." 7 "கையூ ழென்பது கருதுங் காலை எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும் செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்." 8 "துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்." இனி, வார்தல் முதலியவற்றிற்கு அவரெழுதிய விளக்கங்கள் பின்வருவன: "வார்தல் - சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல் - சுட்டு விரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல் - நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழிபட்டதுமென் றறிதல்; உறழ்தல் - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்; உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் தானேயுருட்டலும் சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும் இரு பெருவிரலும் இயைந்துட னுருட்டலும் என வரும். " தெருட்ட லென்பது செப்புங் காiந உருட்டி வருவ தொன்றே மற்றவ் ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின் வல்லோ ராய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி" எனவரும்......இவை இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க." 1"வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்" என்பது ஈண்டு அறியற்பாற்று. அள்ளல், பட்டடை என்பவற்றின் இயல்பு வந்துழிக் காண்க. கண்ணிய, நண்ணிய, சீருடன், ஏருடை என்பன அடைகள். பண்வகையால், உருபு மயக்கம். பயிர் - ஒலி. இசைக்கரணம் - யாழின் பாடற்குரிய செய்கைகள். ஏவலன், தன்மை யொருமை. அரும்பதவுரை யாசிரியர், 'பாணி யாதென' என்று பாடங் கொண்டு, 'இப்பொழுது இதனை வாசி யென்று விதிக்கின்றே னல்லேன் ; வாசிக்குந் தாளம் யாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக் கொடுத்தாளென்க' என்று பொருள் கூறினர். கானலை நோக்கினவும் என விரித்து, ஆற்று வரியும் கானல் வரியும் என்க. மன் - மிகுதி ; அசையுமாம். (படாத்துள், கோட்டுமலர், இத்திறத்த, பாணி யாதென, பாணியாகென என்பன பாடவேற்றுமை.) 2. திங்கள் மாலை வெண்குடையான் சென்னி - மாலை யணிந்த நிறைமதி போலும் வெண் குடையை உடைய வனாகிய சோழன், செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக ; கங்கை தன்னைப் புணர்ந் தாலும் புலவாது ஒழிதல் - அங்ஙனம் வெறா தொழிந்தது, கயல் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய், மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி - காதலை யுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன் ; வாழ்வாயாக ; அது, பகுதிப்பொருள் விகுதி. தன், அசை. வாழி - அசையுமாம். கங்கையைப் புணர்தலாவது வடக்கே கங்கையும் அகப்பட ஆணை செல்ல நிற்றல். புலத்தல் - ஊடுதல்; வெறுத்தல். கயற்கண் - மகளிர்க்குக் கயல்போலுங் கண் ; ஈண்டுக் கயலாகிய கண். மாதர் - காதல் ; மங்கையாகிய மாதர் என்றுமாம். ஈண்டு முன்னிலைக்கண் வந்தது ; நினது கற்பு என்றபடி. பெருங் கற்பு என்றமையால், காவேரி பிறர் நெஞ்சு புகாதவளென்பதும் பெற்றாம்; புகுதல் - ஆளக் கருதுதல். காவேரி - காவேரன் புதல்வி என்ப ; 1" தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை கவேரனாங் கிருந்த கவேர வனமும்" என்பது காண்க. 3. மன்னும் மாலை வெண்குடையான் - பெருமை பொருந்திய மாலை யணிந்த வெண்குடையை உடையவனாகிய சோழன், வளையாச் செங்கோல் அது ஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந் தாலும் - என்றும் வளைதல் இல்லாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக ; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் - அங்ஙனம் வெறா தொழிந்தது, கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய், மன்னும் மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி- மாதரது நிலை பெற்ற பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன் ; வாழ்வாயாக ; அதிகாரத்தானும், காவேரி கூறினமையானும் வெண் குடையான் சோழனாயிற்று. வளையா என அடையடுத்தமையால் செங்கோல் கோலென்னு மாத்திரையாயிற்று எனலுமாம்; 2"கோடாத செங்கோல்" என்பதன் உரை நோக்குக. கன்னி - குமரியாறு. கன்னியைப் புணர்தலாவது குமரியும் உட்படத் தெற்கே தன் ஆணை செல்ல நிற்றல். மேலிற் செய்யுளுரையில் உரைத்தன பிறவும் ஈண்டுத் தந்துரைக்க. 4. உழவர் ஓதை - புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை - நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடை நீர் ஓதை - கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை - புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பல்வகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி - மிக்கொலிக்கச் சென்றாய் ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செய லெல்லாம், வாய் காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி - அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ் வாயாக ; வாய் - இடம். மழவரோதையாற் பகைவர் அஞ்சுந் திறத்த தாகலின் இடம் காக்க வேண்டாதாயிற்று; 1" வாய்காவாது பரந்துபட்ட வியன்பாசறைக் காப்பாள" என்பதன் உரை நோக்குக. அன்றி, நாவினைக் காவாது வஞ்சினங் கூறும் வீரர் என்றுமாம்; என்னை? 2" புட்பகைக், கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" என்றாராகலின். நடந்தவெல்லாம் வளனே என்றியையும். இவை மூன்றும் ஆற்றுவரி ; கந்தருவ மார்க்கத்தால் இடைமடக்கி வந்தன. பின் இடைமடக்கி வருவனவும் இன்ன, வரிப் பாட்டுக்கள் தெய்வஞ் சுட்டுவனவும், மக்களைச் சுட்டுவனவும் என இருவகைய; அவற்றுள், இவை மக்களைச் சுட்டுவன. மற்றும், முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி யென்னும் மூன்றனுள்ளே 'திங்கண் மாலை' முதலிய மூன்றும் முகமுடை வரி யென்றும் கூறப்படும். 5. கரிய மலர் நெடுங்கட் காரிகை முன் - கருங் குவளை மலர் போலும் நீண்ட கண்களையுடைய தலைவியின்முன், கடற்றெய்வம் காட்டி - கடலின் தெய்வமாகிய வருணனைப் பல்காலும் சுட்டிக் கூறிய, அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று - கைவிடுதற்கரிய சூளை அறனிலராய்த் தப்பினாரென்று, ஏழையம் யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாம் எவ்வண்ணம் அறிவோம்; விரிகதிர் வெண்மதியும் மீன் கணமும் ஆம் என்றே - விரிந்த கிரணங்களையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன் கூட்டமும் ஆமென்று மயங்கி, விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு - விளங்குகின்ற வெண்ணிறமுடைய சுரிந்த சங்கினையும் முத்தினையும் கண்டு, ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் - ஆம்பற்போது மலரா நிற்கும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்; அடுக்கு - பன்மை குறித்தது. கூறி யென ஒருசொல் வருவிக்க. நின்னை வரைந்துகொண்டு இல்லறம் புரிவேம் எனக்கூறித் தெய்வஞ் சான்றாகச் சூளுரைத்தவர் என்க. சூள் - சபதம். அறனில்லாத தலைவர் பொய்த்தாரென்றுமாம். நீர் பொய்த்தீர் என்பதனை அறனிலர் பொய்த்தார் எனக் கூறினமையின் முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏழையமாதலின் எங்ஙனம் அறிவோமென்றாள். ஏழையம் - மாதரேம் ; அறிவில்லேம். தோழி தலைவியையும் உளப்படுத்தி ஏழையம் என்றாள். அறிவிலேமாகிய யாம் பெரியீராகிய நும்மை அங்ஙனம் கூறுதல் தகாதென்பாள்போலத் தலைவனிழுக்கினை யெடுத்துக் காட்டிய திறம் நயப்பாடுடையது. ஐய, அண்மை விளி. இங்ஙனம் பன்மையும் ஒருமையும் விரவி வருதல் புலனெறி வழக்கிற் பலவிடத்தும் காணப்படும். பொதி யவிழ்த்தல் - மலர்தல். ஆம்பல் வளையும் முத்தும் கண்டு மதியும் மீன் கணமுமாமென்று மலரும் என்றியைக்க; நிரனிறை. புரி - இடமாகவும் வலமாகவும் வளைந்திருப்பது. நெய்தலின் வளமிகுதி கூறியபடி. 6. காதலர் ஆகிக் கழிக்கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் - காதலை யுடையராகிக் கடற்கரைச் சோலையிடத்தே அன்று கையுறைகொண்டு எமது பின்னே வந்தவர், ஏதிலர் தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை - இன்று தாம் நொதுமலராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார் ; அங்ஙனம் நிற்றலை, யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாம் எங்ஙனம் அறிவோம்; மாதரார் கண்ணும் - மகளிருடைய முகத்திலுள்ள கண்ணையும், மதிநிழல் நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் - நீரிலே தோன்றும் மதியினது சாயலில் இணையாக மலர்ந்த நீல மலரையும், அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் - அறியமாட்டாது வண்டுகள் ஊசலாடும் காவிரிப் பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்; கையுறை - காணிக்கை. பின்பு யாம் இரப்ப என்பதனால் முன்பு தாம் இரந்தவர் என்று கொள்க. நிற்கின்றார் ; அங்ஙனம் நிற்றலை என அறுத்துரைக்க. அன்று காதலராகிக் கையுறை கொண்டு எமது பின்னே தொடர்ந்து வந்து இரந்தவர் இன்று யாம் இரக்கும் வண்ணம் ஏதிலராகி நிற்கின்றார் ; இஃதென்னே! என்ற படி. ஈண்டும் முன்னிலைப் படர்க்கை. ஏழையம் என்பதனை ஈண்டும் கூட்டுக. மதிநிழல் என்றதற்கேற்ப முகம் என்பது வருவிக்கப் பட்டது. தேன் உண்ண வந்த வண்டு இது நீலமலர், இது கண் என அறியமாட்டாது மயங்கித் திரியும் என்றார். ஊசலாடுதல் - அங்கு மிங்கும் அலைதல்; இலக்கணப் பொருள். 7. மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல்வாய்ச் சங்கம் - மோதுகின்ற பெரிய அலையாலே தாக்குண்டு அசைந்து போந்த ஒலிக்கின்ற வாயையுடைய சங்கம், மாதர் வரிமணல் மேல் வண்டல் உழுது அழிப்ப - சிறுமியர் மணலின் மீது இயற்றிய சிற்றில் முதலியவற்றை உழுது அழித்தலால், மாழ்கி ஐய - ஐயனே அவர்கள் மயங்கி, கோதை பரிந்து - தாம் அணிந்திருந்த மாலையை அறுத்து, அசைய மெல்விரலாற் கொண்டு ஓச்சும் குவளை - அசைந்து செல்லும்படி மெல்லிய விரல்களால் வீசி யெறிந்ததிற் சிதறிய நீலமலர்கள், மாலைப் போது சிறங்கணிப்ப - மாலைப் பொழுதிலே கடைக் கணித்தாற் போற் கிடப்ப, போவார் கண் போகாப் புகாரே எம் ஊர் - ஆண்டுச் செல்வோர் கண்கள் அவற்றைக் கண்களென ஐயுற்று அப்பாற் செல்லாத காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்; அசைந்து போந்தவென மாறுக, முரல் வாய் - ஒலிக்கும் வாய். மாதர் - ஈண்டுச் சிறுமியர். வரி - கீற்று. வண்டல் - மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகுபெயரால் சிற்றில் முதலியவற்றைக் குறித்தது. உழுதல் - கீழ்ந்து செல்லுதல். சிந்திய குவளை மலர்கள் மாலைப்பொழுதில் சிறிதே குவிந்து மகளிர் கடைக்கணித்தாற்போன் றிருந்தமையின், சிறங்கணிப்ப என்றார். சிறங்கணித்தல் - கடைக்கணித்தல். இவை இங்கு வாழ்வாரைக் கடைக்கணித்த கண்களென்று தம் பேதைமையாற் பார்த்து நிற்கும் எனக்கொண்டு, ஆகலின் யாங்களும் பேதையம் எனக் குறிப்பெச்சமாக்கி உரைத்தலுமாம். இனி, கோதையைக் கூந்தலெனக் கொண்டு, கூந்தல் அவிழ்ந்தசைய விரலால் ஓச்சும் குவளை மாலையினின்றும் சிதறிய பூக்கள் என்றுரைத்தலுமாம். ‘கரியமலர்" முதலிய மூன்றும் தோழி தலைமகன் முன்னின்று வரைவு கடாயவை. கையுறைமறை எனினும் அமையுமென்றார் அரும்பதவுரை யாசிரியர். இதற்கு, நீர் கொண்டு வந்த பூக்கள் எம் மூரின் கண்ணும் உளவாகலின் அவை வேண்டா என மறுத்த வாறாம் என்பது கருத்தாகும். ஆயின், "கையுறை கொண்டெம் பின் வந்தார்" என்பது, இன்று அவ்வாறு வந்திலரெனப் பொருள் தருதலின் அதனோடு மாறுபடுவதாகும். இவை பாட்டுடைத் தலைவன் பதியொடு சார்த்திப் பாடிய வரிப்பாட்டாதலின் சார்த்துவரி யாகும். பாட்டுடைத் தலைவன் - சோழன் ; பதி - புகார். "பாட்டுடைத் தலைவன் பதியொடும் பெயரொடும், சார்த்திப் பாடலிற் சார்த்தெனப் படுமே" என்றார். அது முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைப்படும்; அவற்றுள் இம் மூன்றும் முகச்சார்த்து. (இம் மூன்றும் ''மோது முதுதிரை," காதலராகி," "கரியமலர்" என்ற முறையிலும் காணப்படுகின்றன.) 8. துறைமேய் வலம்புரி - கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள், தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய் வான் - மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி, பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து - அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து, நுண் தாது போர்க்கும் கானல் - அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே, நிறைமதி வாண்முகத்து நேர் கயற் கண் செய்த - இவளது நிறைமதி போலும் ஒள்ளிய முகத்திலுள்ள கயலை யொத்த கண்கள் செய்த, உறை மலி உய்யா நோய் - மருந்தாற் போக்க முடியாத நிறைந்த நோயினை, ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் - சுணங்கு பரந்த மெல்லிய முலைகளே போக்கும் போலும்; மாய்வான் - மறைய; வினையெச்சம், மாய்வான் தாது போர்க்குங் கானல் என்றியையும். கயல் நேர் கண், சுணங்கு ஊர் முலை, உறை உய்யா மலி நோய் என மாறுக. உறை - மருந்து. உய்யா - போக்க முடியாத. மலி உறை என்னலுமாம். போலும் - ஒப்பில் போலி. இது, குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதன் மிகுதி குறிப்பினானறிந்து கூறியது. 9. நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக் கீடுஆக - நிணம் பொருந்திய புலால் வற்றல் புலர்வதன் பாங்கர் நின்று புள்ளினை ஓட்டுதல் காரணமாக, கணம் கொள்வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமாகிய வண்டுகள் முரன்று திரியும் கன்னியாகிய நறிய ஞாழலின் பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் கமழ் பூங்கானல் மன்னி - மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி, மற்று ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன் - ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ - அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன்; புள் - உணங்கலைக் கவர வரும் பறவை. தலைக்கீடு - போலிக் காரணம் ; இதனை வியாசம் என்ப. கன்னி - இளமை ; உயர்திணைக் குரிய கன்னியென்னுஞ்சொல் அஃறிணை யடுத்துவருவதனை 1"ஒரு வரைக் கூறும் பன்மைக் கிளவியும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி, இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்னுஞ் சூத்திரத்து, ஒன்றென முடித்தல் என்பதனால் அமைப்பர். ஞாழல் - புலிநகக்கொன்றை. அணங்கு - வருத்துந் தெய்வம். கானலில் உறையுமென்பதறியேன் என்றும், அறிவேனேல் ஆண்டு அடையேன் என்றும் கொண்டு கூட்டுக. மற்று, மன், ஓ - அசைகள். மன் - கழிவுமாம். இது கழற்றெதிர்மறை; இயலிடங்கூறலுமாம். 10. வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் - வலை வளத்தால் வாழ்பவருடைய சேரியில் வலை உலரும் முற்றத்திலே, மலர் கை ஏந்தி - பூங்கொம்பைக் கையில் ஏந்தி, விலை மீன் உணங்கற் பொருட்டாக - விற்றற்குரிய மீன் வற்றல் புலர்வதனைக் காத்தற் பொருட்டாக, வேண்டுருவம் கொண்டு - தான் வேண்டிய வடிவங் கொண்டு, வேறு ஓர் கொலை வேல் நெடுங் கட் கொடுங் கூற்றம் வாழ்வது - கொலைத் தொழில் பொருந்திய வேல் போலும் நீண்ட கண்களையுடைய வேறொரு கொடிய கூற்றம் வாழ்வதனை, அலைநீர்த் தண் கானல் அறியேன் - அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலிடத்தே அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ - அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன் ; உணங்கலைக் காத்தற் பொருட்டாக வென்க. உலகத் துயிர் களைக் கொள்ளும் கூற்றமன்றி, என்னுயிரைக் கவர்தற்கு நிற்கும் வேறோர் கூற்றமென்றானென்க. வேறோர் கூற்றம் நெடுங்கண்ணையுடைய வேண்டுருவங் கொண்டு வாழ்வது என்றியைத்தலுமாம். கூற்றம் வேண்டுருவங் கொண்டு கானலிடத்து வாழ்வதனை அறியேன், அறிவேனேல் ஆண்டு அடையேன் என்க. இதன் துறையும் மேற் கூறியதே. இம் மூன்றும் 11. கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர் - கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி அவற்றுடன் பிறரை வருத்துந் தொழிலையும் எழுதிப் பணிக்குறை யற்ற முகம் திங்களோ காணீர், திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே அங்கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே-அழகிய இடத்தையுடைய வானத்திருப்பின் அரவு கவருமென்று அஞ்சித் திமிலால் வாழ்பவருடைய சீறூரின்கண் வந்து உறையும் அழகிய திங்களோ காணீர் ; காமன் செயல் - பிறரை வருத்துந் தொழில். தீர்ந்த - குறையற்ற; முற்றுப் பெற்ற. திங்களோ, ஓ - வியப்பு, திமில் - மீன் படகு. சீறூர்க்கு, வேற்றுமை மயக்கம். அரவு - இராகு கேது. திங்களோ என வியந்தவன், அது நிலத்தின்கண் வருதற்குக் காரணங் கற்பித்து வானத்தரவஞ்சிச் சீறூரில் வாழ்வதாகிய திங்களோ என்றானென்க. எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஒடும் - கரையிலே அலைகள் எறியும் வளைகள் முழங்க அதற்கஞ்சி இரண்டு பக்கத்தும் ஒடும், கறை கெழு வேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் - குருதிக் கறை பொருந்திய வேல்போன்ற கண்ணையுடையாள் கடிய கூற்றமோ பாரீர், கடுங்கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே மடம் கெழு மென் சாயல் மகளாயது - கடல் வளத்தால் வாழ்பவருடைய சிறிய ஊரிலே மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய மகளாகியதான கடிய கூற்றமோ பாரீர் ; வேற் கண்-வேற் கண்ணையுடையாள்; ஆகுபெயரென்பர் அரும் பதவுரையாசிரியர். கூற்றமோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. சாயல் - மென்மை. 13. புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி - புலால் நாறும் மீனின் வெளிய வற்றலைக் கவரும் பறவையை ஓட்டி, கண்டார்க்கு அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் - நோக்கினார்க்கு அலந்தலைப்பட வருத்தத்தைச் செய்யும் அணங்கோ இது காணீர், அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண்கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே - அடும்பின் மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஓர் பெண் வடிவு கொண்டதாகிய அணங்கோ இது காணீர் ; அலவ - அலந்தலைப்பட; மனந்தடுமாற. கண்டார்க்கு நோய் செய்யும் அணங்கோ இது வென்க. அடும்பு - நெய்தற் கருப் பொருளாய பூ ; இஃது அடம்பு எனவும் வழங்கும். பிணங்குதல் - செறிதல். நேர் - மென்மை. பெண் கொண்டது - பெண்வடிவு கொண்டது, இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை. இவை நிலைவரி; அதன் இலக்கணத்தை ''முகமு முரியுந் தன்னொடு முடியும், நிலையை யுடையது நிலையெனப் படுமே" என்னுஞ் சூத்திரத்தானறிக. 14. பொழில் தரு நறுமலரே - பொழிலால் தரப்படும் நறிய மலரும், புதுமணம் விரி மணலே - அம் மலர்களின் புதிய மணம் பரந்த மணலும், பழுதறு திரு மொழியே - அதில் நின்றவளுடைய குற்ற மற்ற இனிய மொழியும், பணை இள வனமுலையே - பருத்த இளமையாகிய அழகிய முலையும், முழுமதி புரை முகமே - நிறைமதி போலும் முகமும், முரி புரு வில் இணையே - வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும், எழுதரும் மின் இடையே - எழுதற்கரிய மின் போன்ற இடையும், எனை இடர் செய்தவையே - என்னைத் துன்புறுத்தியவை யாகும்; முரி - வளைவு. புரு - புருவம். மலர், மணல் என்பன தலைவியைக் கண்ட இடத்தையும், மொழி முதலியன தலைவியின் இயலையும் அறிவிப்பன. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பின்வருவனவும் இன்ன. 15. திரை விரிதரு துறையே - அலைகள் பரந்த நீர்த் துறையும், திரு மணல் விரி இடமே - அழகிய மணல் பரந்த இடமும், விரை விரி நறுமலரே - மணம் விரிந்த நறிய மலரும், மிடைதரு பொழில் இடமே - தருக்கள் நெருங்கிய சோலையினிடமும், மரு விரி புரிகுழலே - மணம் பரந்த சுருண்ட கூந்தலும், மதி புரை திருமுகமே - மதியை யொக்கும் அழகிய முகமும், இரு கயல் இணைவிழியே - இரண்டு கயல்போலும் இருவிழியும், எனை இடர் செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவை யாகும்; விரிதரு, மிடைதரு என்பவற்றில் தரு துணைவினை. 16. வளை வளர்தரு துறையே - சங்குகள் வளரும் துறையும், மணம் விரிதரு பொழிலே - மணம் பரந்த சோலையும், தளை அவிழ் நறுமலரே - முறுக்கு விரித்த நறிய மலரும், தனி அவள் திரிஇடமே - அவள் தனியே உலாவிய இடமும், முளை வளர் இளநகையே - முளை போல் வளரும் இளைய பல்லும், முழுமதி புரை முகமே - நிறைமதி ஒக்கும் முகமும், இளையவள் இணை முலையே - இளமைப் பருவமுடையவளது இணைந்த முலையும், எனை இடர் செய்தவை - என்னைத் துன்புறுத்தியவை யாகும்; தரு என்பதற்கு மேல் உரைத்தமை கொள்க. தனியவள் - ஒப்பற்றவளுமாம். முளை - முளைத்த என்றலுமாம். இணை -ஒன்றோடொன்று நெருங்கிய; இரண்டுமாம். இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்ற துரைத்தவை. இவை முரிவரி; அதன் இலக்கணத்தை ''எடுத்த வியலு மிசையுந் தம்மின், முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே" என்னுஞ் சூத்திரத்தானறிக. 17. கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் - நின் மூத்தோர் கடலிற் புகுந்து உயிர்களைக் கொன்று வாழா நிற்பர்; உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை மன் நீயும் - நீயும் உடலிற் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றனை ; மிடல் புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் - வலியிலே புகுந்து நின்று அடங்காத வெவ்விய முலைகளோ பாரமாகவுள்ளன; இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் - இடரிலே கிடந்து மெலியும் இடையை இழந்துவிடாதே; ஐயர் - மூத்தோர் ; தந்தை, தமையன்மார். என்னுயிரைக் கொன்றென்க. நின்னையர் உயிர் கொன்று வாழ்வரென்றது, உயிர் கொல்வது நின் குல தருமமாக வுள்ளது என்று காட்டுதற்கு. நீ புரியும் இக் கொடுவினையால் நின் இடை முரியவுங் கூடும்; அன்றியும் நின் முலைகளோ பாரமாகவுள்ளன ; ஆதலின் உயிர் கொல்லுந் தீமையைக் கைவிட்டு, அப் பாரத்தை என் தோளி லேற்றி, நின் இடையைப் பாதுகாப்பாயாக ; என்று தலைவன் கூறினானென்க. எனது ஆற்றாமையைத் தீர் என்பது கருத்து. மன் - அசை ; மிகவும் என்றுமாம். கண்டாய், முன்னிலையசை. பின்னிரண்டு கவிகட்கும் இங்ஙனமே பொருள்கொள்க. இடர்புக்குகு மின்னிடை எனவும் பாடம். 18. கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை - வளைந்த கண்களையுடைய வலையால் உயிர்களைக் கொல்வான் நின் தந்தை ; நெடுங்கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும் - நீயும் நெடிய கண்ணாகிய வலையால் உயிரைக் கொல்லா நிற்பை ; வடம் கொள் முலையால் - முத்து வடத்தைத் தாங்கியுள்ள முலைகளால், மழை மின்னுப் போல நுடங்கி உகும் மெல் நுசுப்பு இழவல் கண்டாய் - மேகத்தின் மின்னினைப் போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை இழந்து விடாதே; கொடுங்கண் - கண்போன்றிருக்கும் வலையின் இடைவெளிகள். நெடுங்கண் வலை, உருவகம். வடமும் ஒரு பாரமென்றபடி. முலையால் இழவல் என்றியைக்க. நுடங்குமிளமென்னுசுப்பு எனவும் பாடம். 19. ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர் - உன்னுடைய மூத்தோர் கடலில் ஓடும் படகினைக் கொண்டு உயிர்களைக் கொல்வர் ; கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும் - நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்பை ; பீடும் பிறர் எவ்வம் பாராய் - நினது பெருமையினையும் பிறர் படுந் துன்பத்தையும் நீ பார்த்தல் செய்யாய் ; முலை சுமந்து - முலைகளைச் சுமத்தலால், வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் - வாடுகின்ற சிறிய மெல்லிய இடையை இழந்துவிடாதே; எவ்வமும் என்னும் உம்மை தொக்கது. பீடும் எவ்வமும் என்னும் உம்மைகள் எண்ணும்மையும் சிறப்பும்மையு மாகும். 'பாரா' என்னும் பாடத்திற்குத் தம் பெருமையும் பிறர் எவ்வமும் பாராத முலை என்று பொருள் கொள்க. சுமத்தலால் இழவல் என்க. இழவல், அல் எதிர்மறை ; 1"மகனெனல்" என்புழிப்போல. இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்த லுறுவான் ஆற்றாமை கூறியவை. 2தொல்காப்பிய வுரையில் "கடல் புக் குயிர் கொன்று" என்பதனைப் பொய்பாராட்டல் என்னுந் துறைக்கு உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர். 20. பவள உலக்கை கையாற் பற்றி - பவளத்தாலாகிய உலக் கையைக் கையாற் பற்றி, தவள முத்தம் குறுவாள் செங்கண் - வெண்மையாகிய முத்துக்களைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், தவள முத்தம் குறுவாள் செங்கண் -, குவளை அல்ல கொடிய கொடிய - குவளை மலர்களல்ல ; அவை கொடியன கொடியன ; குறுதல் - இக் காலத்தே குற்றுதல் என வழங்குகிறது, முத்தை அரிசியாகப் பெய்து பவள உலக்கையாற் குறுவரெனச் செல்வச் சிறப்புக் கூறியவாறு. நிறம் பற்றிக் குவளை யென்ன வேண்டா, அவை கொடியன வென்க. 21. புன்னை நீழல் - புன்னை மரத்தின் நீழலில், புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - புலால் நாறும் அலையின்மீதே அன்னப் பறவை நடக்கும்படி நடப்ப வளுடைய சிவந்த கண்கள், அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் -, கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் - மிகவும் கொடியன ; ஆதலால் அவை கூற்றமே யாகும் ; அன்னம் இந் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பா ளென்க; அன்றி, நடைக்கு அஞ்சி யோட என்றுமாம். நீழலில் நடப்பாள் என வியையும். கொன் - மிகுதி. 22. கள் வாய் நீலம் கையின் ஏந்தி - தேனை வாயினிடத் துடைய நீலப் பூவைக் கையிலே ஏந்திக்கொண்டு, புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் - உணங்கலிடத்துப் பறவையை ஓட்டுபவளுடைய சிவந்த கண்கள், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் -, வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய - வெள்ளிய வேல்கள் அல்ல ; மிகவும் கொடியனவே யாகும்; உணங்கல்வாய்ப் புள் என மாறுக. உணங்கல் - மீன் வற்றல். வெள்வேல்- மாற்றாரை யெறிந்து குருதிக் கறை பற்றாத வேல், வடிவு பற்றி வெள் வேல் என்ன வேண்டா ; இவை மிகக் கொடியன என்க. இப் பாட்டுகளில் நெய்தற் கருப்பொருளே வந்திருத்தல் காண்க. இவை கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. இவை மூன்றும் குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியவை; புணர்ந்து நீங்குவான் விடுத்தலருமையால் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியவையுமாம். 23. சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - மடப்பத்தையுடைய அன்னமே (விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு இவள் நடை உனது நடை போலும் என்று புலவர் சொல்வாரா யினும், இவள் விளையாட்டொழிந்து இயல்பாக நடக்கு மிடத்து) இவள் நடையை உனது நடை ஒவ்வாது, ஆதலால் இவள் பின்னே செல்லாதிருக்கக் கடவை ; செல்லா திருக்கக் கடவை; ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்பரக்கின்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்திலுள்ளாரை வென்று திரிபவள் பின்னே, சேரல் ..... ஒவ்வாய் - நடை யொவ்வாயாதலால் அன்னமே செல்லாதிருக்கக் கடவை; நீர்வேலி - நெய்தனிலமுமாம். ஊர்திரை நீரோத முழக்கி என்பது பாடமாயின், கழியின் நீரைக் கலக்கி யென்க. இதுவும் கந்தருவமார்க்கத்தால் அடிமடக்கி வந்தது. இது, காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது. "கடல்புக் குயிர்கொன்று" என்பது முதலிய ஏழும் திணை நிலைவரி. 24. ஆங்கு - அவ்விடத்து, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங்கண் மாதவியும் - கோவலன் யாழில் வாசித்த கானல் வரிப் பாட்டுக்களைக் கேட்ட மான் போன்ற நெடிய கண்களை யுடைய மாதவியும், மன்னும் ஒர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என - (அப் பாட்டுக்கள் களவுப் புணர்ச்சியில் தலைமகன் கூறிய கூற்றாயிருத்தலின்) இவன் உள்ளத்து நிலை பெற்ற வேறோர் குறிப்புளது, இவன் தன்றன்மை வேறு பட்டான், எனப் புலந்து, கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ் வாங்கி - அப் புலவியால் அவன் கையினின்றும் யாழை வாங்குபவள் அதனைப் புலப்படுத் தாமல் கலவியால் மன மகிழ்ந்தவள்போல வாங்கி, தானும் ஒர் குறிப்பினள் போல் - தான் வேறு குறிப்பு இலளாயினும் அவன் வேறு குறிப்பினனாகப் பாடினமையின் தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்ற, கானல் வரிப் பாடற் பாணி - கானல் வரிப் பாடலாகிய உருக்களை, நிலத் தெய்வம் வியப்பு எய்த நீள்நிலத்தோர் மனம் மகிழ - அந் நிலத்திற்குரிய தெய்வமாகிய வருணன் வியப்புறவும் நெடிய புவியிலுள்ளோர் மன மகிழவும், கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டதால் பாடத் தொடங்கும் மன் - யாழின் இசையோடு கலந்து ஒன்றுபட்ட கண்டத்தினாலே பாடத் தொடங்கினாள் ; மன்னும் ஓர் குறிப்பு - வேறு மகளிர்பாற் சென்ற வேட்கை. தானும் ஓர் குறிப்பினள்போல் - தானும் வேறு ஆடவன்பால் விருப்பம் வைத்தாள் போல. மயங்கினானெனப் புலந்து அப் புலவியால் யாழ் வாங்கி யென்க. கலம் - யாழ் ; அதன் எழாலுக் காயிற்று. பருந்தும் அதன் நிழலும் போல யாழ்ப் பாடலும் மிடற்றுப் பாடலும் ஒன்றுபட் டியங்க என்க. மன், அசை. 25. மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப - இருபக்கத்தும் வண்டுகள் மிக்கொலிக்க, மணிப் பூ ஆடை அது போர்த்து - அழகிய பூவாடையைப் போர்த்து, கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் - கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தா யாகலால், வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக ; கருங்கயற் கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் - அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே; அதனை அறிந்தேன் ; வாழ்வாயாக ; மருங்கு - ஆற்றின் இருபக்கம், இருபக்கத்தும் தொங்குகின்ற கை. வண்டு - வண்டு, வளையல். பூ ஆடை - பூவாகிய ஆடை, பூத்தொழிலமைந்த ஆடை. கயற்கண் - கயலாகிய கண், கயல் போலுங் கண். காவேரியை ஒரு பெண்ணாகக் கொண்டு, அதற் கேற்பச் சிலேடை வகையாற் கூறினார். கணவன் என்றது சோழனை. வளையாமையே என்னும் தேற்றேகாரம் தொக்கது. யான் அதனை அறிந்தேன் என முடிக்க. பூ ஆர் சோலை மயில் ஆல - பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், புரிந்து குயில்கள் இசை பாட - குயில்கள் விரும்பி இசை பாடவும், காமர் மாலை அருகு அசைய - விருப்பம் பொருந்திய மாலைகள் அருகில் அசையவும், நடந்தாய் வாழி காவேரி - நடந்தாயாகலாற் காவேரி நீ வாழ்வாயாகண; காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் நாம வேலின் திறம் கண்டே - நின் கணவனது அச்சத்தைச் செய்யும் வேலின் றன்மையைக் கண்டே; அறிந்தேன் வாழி காவேரி - யான் அதனை அறிந்தேன் ; வாழ்வாயாக; பூவர், ஆர்நெடில் குறுகியது. மாலை - புதுப்புனலாடுவார் அணிந்தவை. நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது ; நாமம் - புகழ் என்று முரைப்பர். வேலின் றிறங் கண்டே என்றது பிறரால் வருத்தமில்லை யென்றபடி. 27. வாழி அவன்றன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி - நின் கணவனது வள நாடு மகவாக நீ அதனை வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி - ஊழி தோறும் நடத்தும் பேருதவி நீங்காயாகலால் காவேரி நீ வாழ்வாயாக ; ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் - நீ அங்ஙனம் நீங்காது ஒழுகுதல். உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி - உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவர்த்தியாகிய நடுவுநிலைமை யுடையவனது அருளே ; வாழ்வாயாக; முதற்கண் வாழி - அசை. வளநாடு - சோழநாடு. மகவாக வெனத் திரிக்க. ஊழி உய்க்கும் - முறையில் நடத்தும் என்றுமாம். ஆழி ஆள்வான் - ஆழியை ஆள்பவன் ; ஆழியால் ஆள்பவன் என்றுமாம். ஆழி - ஆக்கினைச் சக்கரம். பகல் - நடுவுநிலை. வெய்யோன் - விரும்புபவன். மூன்று பாட்டிலும் நடந்தாய் முதலியவற்றை ஏதுவாக்காமல் முற்றாக்கி, வாழி - அசையென்றலுமாய். வளையாமை, அருளே என்பன காரணம் காரியமான உபசார வழக்கு. இவை மூன்றும் ஆற்று வரி. 28. தீங்கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும் - இனிய கதிர்களையுடைய திங்கள் போலும் ஒள்ளிய முகத்தினையுடையாளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒவ்வாவாயினும், வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால் மகன் போல் வருதிர் ஐய - நீவிர் இந்த முத்துக்களை வாங்குமின் என்று கூறி, ஐயனே, நாடொறும் மயங்கின மகன் போல வாரா நிற்பீர் ; வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண்முத்தம் - ஒலி மிக்க கடலானது விளங்கும் ஒளியினையுடைய வெள்ளிய முத்துக்களைத் தந்து, விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு- மணம் பொருந்திய கானலிடத்துப் பூமாலைகளைப் பெற்று, விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் - விற்பார் போல் மீளா நிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ; தீங்கதிர் - திங்கள் ; ஆகுபெயர். வாங்கும் எனச் செய்யு மென்னுஞ் சொல் முன்னிலைப்பன்மை யேவலில் வந்தது. மால் மகன் - உன் மத்தன் ; திருமாலின் மகனாகிய காமன் என்றுமாம். வருதிர் ஐய - பன்மை யொருமை மயக்கம். ஓதம் முத்தம் தந்து கோதை கொண்டு, பண்டமாற்றுச் செய்யும் விலைஞர்போல் மீளும் புகார் என்க. கோதை - வண்டல் மகளிர் களைந்திட்டன. தலைமகன் கையுறையாக முத்துக்களை நல்கினானாக, எம் மூரின்கண் கடல்தரும் முத்துக்கள் மிகுதியாக வுள்ளனவாதலின் இவை வேண்டாவெனத் தலைவி மறுத்தாளென்க. இது, கையுறைமறை. 29. மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து - வன்மை யுடைய பரதர்களின் பாக்கத்தில் களவிற் கூடிய மகளிரை, மடவார் செங்கை இறை வளைகள் தூற்றுவதை - அம் மகளிரது சிவந்த கையின் இறையிலுள்ள வளைகள் கழன்று தூற்றுவதை, ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாங்கள் எங்ஙனம் அறியாநிற்பேம் ; நிறை மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த பொறை மலி பூங்கொம்பு ஏற - அன்ன மானது நீண்ட புன்னையினது அரும்பிப் பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பினிடத்தில் ஏறியிருப்ப அவ் வன்னத்தையும் பூக்களையும் நிறைமதியும் மீன் கணமுமெனக் கருதி, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம்மூர் - வண்டு ஆம்பல் மலரை ஊதாநிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ; அம் மடவார் எனச் சுட்டு வருவிக்க. களவிற் புணர்ச்சி நிகழ்த்திப் பிரிந்து சென்ற தலைவர் வரவு நீட்டித்தலின் தலைமகள் கை வளைகள் கழன்று களவினை வெளிப்படுத்தலாயின வென்க. மணந்த தலைவரைத் தூற்றுவதை யென்றுமாம். தூற்றுதல் - பலருமறியப் பரப்புதல். யாங்கு, ஆங்கு என்பதுபோல் அசை. அன்னம் கொம்பு ஏற அதனையும் பூக்களையும் மதியும் மீனுமாகக் கருதி என இயைக்க ; நிரனிறை. வண்டூதும் என்றமையால் ஆம்பல் மலர்தல் பெற்றாம். மதியும் மீனுமென ஆம்பல் மலர அதன்கண் வண் டூதும் என்க. 30. உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள் - உண்டவர்களைத் தன் கடுமையால் வெல்லும் கள்ளாகிய ஊண் மறையாது வெளிப்படும் பாக்கத்திலே, உறை ஒன்று இன்றி - மருந்தொன்றின்றியே, தண்டா நோய்-அமையாத காமநோயை, மாதர்தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய - மாதரிடத்துத் தருகின்றாய் என்பதனை ஐயனே யாங்கள் எங்ஙனம் அறியா நிற்பேம் ; வண்டால் திரை அழிப்ப - தம்முடைய வண்டலாகிய சிற்றில் முதலியவற்றைக் கடலின் அலைகள் ஊர்ந்து வந்து அழிக்க, கையால் மணல் முகந்து - கையினால் மணலை வாரி யிறைத்து, மதிமேல் நீண்ட புண் தோய் வேல் நீர் மல்க - மதிபோலும் முகத்தின்மேல் நீண்ட பகைவர் புண்ணிற்றோய்ந்த வேல் போலும் கண்களில் நீர் பெருக, மாதர் கடல் தூர்க்கும் புகாரே எம்மூர் - சிறுமியர் கடலைத் தூர்க்கும் புகாரே எம்முடைய ஊராகும் ; வெல்லுதல் - தம் வய மிழப்பித்தல். கள்ளுண்டவர் அதனை மறைப்பினும் மறையாது வெளிப்படுமென்பது 1"களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத், தொளித்ததூஉ மாங்கே மிகும்" என்பதனானறிக. இவ் வியல்பினதாய பாக்கத்துள் என்றமையால், தமது காமநோயும் மறையாது வெளிப்படு மென்பது குறிப்பித் தவாறாயிற்று. காம நோய் வெளிப்படுதல் 2"மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க், கூற்றுநீர் போல மிகும்" என் பதனானறியப்படும். பிறிதொரு மருந்தில்லா திருக்கச்செய்தே நோயைத் தந்தொழிகின்றாய் என்க. வண்டால் - நீட்டல் விகாரம். முகத்தையும் கண்களையும் உவமப் பொருளாற் கூறினார். கண்கள் வெகுளியாற் சிவந்தமையின் புண்டோய் வேல் என்றார். மணல் முகந்து தூர்க்கும் என்க. ஈண்டு மாதர் என்றது சிறுமியரை. "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக, அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேரும், தன்மை மடவார்" என்னுஞ் செய்யுளில் 'அன்னைக் குரைப்பன்' என்பதுபோல இச் செய்யுள் சிறுமியரது பேதைத் தன்மையைப் புலப்படுத்தி இன்பஞ் செய்கின்றது. இவை யிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாரா வரைவலென்றாற்குத் தோழி கூறியவை. இவை மூன்றும் சார்த்துவரி. 31. புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி - துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிகளையுடைய ஞெண்டினை நோக்கி, இணர் ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி - பூங்கொத்துக்கள் செறிந்த சோலையிடத்து என்னையும் நோக்கி, உணர்வு ஒழியப் போன ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் - உணர்வு தன்னை நீங்கச் சென்ற ஒலிக்கும் அலையையுடைய கடற் சேர்ப்பனது, (வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்) வண்ணம் - இயல்பினை, வணர் சுரி ஐம்பாலோய் - வளைந்த கடைகுழன்ற கூந்தலையுடையாய், உணரேன் - அறிகின்றிலேன். இது தோழி கூற்று. அலவன் துணையோடு ஆடுதல் போல யானும் தலைவியோடாடி இன்புறுமாறு நீயே கூட்டுவித்தல் வேண்டும் என்னுங் குறிப்பினன் என்பாள், 'அலவனோக்கி என்னையும் நோக்கிப் போன' என்றாளென்க. இது குறிப்பு நுட்பம் என்னும் அணியாகும். உணர்வொழியப் போன என்றமையால் அத்தகையாற்கு அருள் செய்யாதிருத்தல் தகவன்றென்பது புலப்படுத்தாளாயிற்று. சேர்ப்பன் வண்ணம் என இயையும். வண்ணம் - கருதிய தன்மை. உணரேன் என்றமையால் வலிதாகச் சொல்லினாளாம். ஆல், அசை. இது, தோழி வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது. 32. தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் றேரும்- தம்முடைய அருளும் தாமும் தமது குதிரை பூட்டிய தேரும், எம்மை நினையாது விட்டாரோ - எம்மை நினையாமற் கைவிட்டாரோ, விட்டு அகல்க - அவர் அங்ஙனம் விட்டொழிக ; அம் மென் இணர அடும்புகாள் - அழகிய மென்மையாகிய கொத்துக்களை யுடைய அடும்புகளே, அன்னங்காள் - அன்னங்களே, நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேம் ஆல் - நம்மை அவர் மறந்தனராயினும் நாம் அவரை மறப்பேமல்லேம்; உயர்திணையும் அஃறிணையும் விரவி உயர்திணையான் முடிந்தன; "தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்" என்பதிற் போல. இதனைத், 1`தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவதோர் முறை பற்றி வந்தது' என்பர் சேனாவரையர். முன்பு தண்ணளியுடன் எம்மை நினைந்து தேரிற் போந்து அருள் செய்தவரென்பாள், அளியும் தாமும் தேரும் எம்மை நினையாது விட்டாரோ என்றா ளென்க. `தண்ணளியும் தாமும் தேருமெனப் பின்பு சில சொல்லப் புக்கு அதனைக் காதன் மிகுதியாற் கலங்கி விட்டா ரென்றாள்' என நுட்பவுரை கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். தன்னையே யன்றித் தன்னுடன் இன்பந் துய்த்த இடத்தையும், அவ் வின்பத்தை மிகுவிப்பனவாய் அங்குள்ள அடும்பு அன்னம் முதலியவற்றையும் அவர் மறந்தமை என்னோவென்பாள், அடும்பையும் அன்னத்தையும் விளித்து உளப்படுத்தி, ‘நம்மை மறந்தாரை' என்றாள். காம மிகுதியாலாய மிக்க வருத்தத்தால் இங்ஙனம் கேளாதவற்றையும் கேட்பன போலக் கருதிக் கூறினாளென்க ; 1"ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, அவையல பிறவும் நுதலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவும், சொல்லியாங்கமையு மென்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். பின் இவ்வாறு வருவன வற்றிற்கும் இது விதியாகும். மறக்கமாட்டேம் என்றது ஒரு சொல். விட்டாரோ, ஓ - ஒழியிசை. ஆல், அசை. 33. புன்கண் கூர் மாலை - வருத்தத்தை மிகுவிக்கும் மாலைப் பொழுதில், புலம்பும் என் கண்ணேபோல் - தனிமையால் வருந்தும் என் கண்ணினைப் போல, துன்பம் உழவாய் - துன்பத்தால் வருந்தாமல், துயிலப் பெறுதியால் - இனிது துயிலாநிற்கின்றாய், இன் கள் வாய் நெய்தால் - இனிய கள் திளைக்கும் வாயையுடைய நெய்தலே, நீ எய்தும் கனவினுள் - நீ எய்தா நிற்கும் கனவு நிலையில், வன்கணார் கானல் வரக் கண்டு அறிதியோ - கொடியராய தலைவர் கானலிடத்தே வராநிற்க நீ கண்டறிவாயோ ; நிறத்தால் என் கண்ணை யொத்திருந்தும் செய்கையால் அதனோடு மாறுபடுகின்றாய் என்றாள். துயிலல் - மொட்டித்தல். மாலைப் பொழுதில் நெய்தல் இதழ் குவியுமாதலின், அதனைத் துயிறலாகக் கருதி, என் கண் துயிலின்றி வருந்தவும் நீ துயில் கின்றாய் என்றாள் கள்ளுண்பார்க்கு இஃது இயல்பே யென்பாள் `இன் கள் வாய் நெய்தால்' என்றாளென்க. உறங்குவார்க்குக் கனவு முண்டென்று கருதி, `எய்துங் கனவினுள்' என்றாள். என் கண் துயிலாமையால் யான் கனவினுங் காணப் பெற்றிலேன் ; நீ கனவிலே காண்டலுண்டாயிற் கூறுக என்றபடி. இதனைக் காப்புச் சிறைமிக்க கையறு கிளவி என 2இறையனார் களவியலுரை யாசிரியரும், குறிபிழைத்துழித் தன்னுட் கையாறெய்திடு கிளவி என 3நச்சினார்க்கினியரும் கூறுவர். 34. புள் இயல் மான் தேர் ஆழி போன வழி எல்லாம் - பறவையின் இயல்பையுடைய குதிரை பூட்டிய தேரின் உருளை சென்ற வழி முழுதையும், தெள்ளு நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே, சிதைத்தாய் மற்று என் செய்கோ - அழித்தாய்; யான் என்செய்வேன், தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று - அங்ஙனம் சிதைத்த நீ, எம்மொடு ஈங்கு உள்ளாரோடு உள்ளாய் - எம்மொடு இங்கிருந்து அலர் தூற்றும் அயலாரோடு உள்ளாயாதலால், உணராய் - எனது நோயினை அறியாய், மற்று என் செய்கோ - யான் என் செய்வேன் ; புள்ளினைப்போற் பறக்கு மியல்பினதென அதன் கடுமை கூறுவார், புள்ளியல்மான் என்றார்; 1"புள்ளியற் கலிமா வுடைமை யான" என்றார் தொல்காப்பியனாரும். தெள்ளு நீர் - கொழிக் கின்ற நீருமாம். ஓதம் - வெள்ளமும் அலையுமாம் ; அண்மைவிளி. எம்மொடீங்குள்ளார் - எம் மனம் விட்டு நீங்காத தலைவ ரென்றுமாம். என் செய்கு - என் செய்வேன் ; தனித்தன்மை. மற்றும், ஓவும் அசைகள். 35. நேர்ந்த நம் காதலர் - நம்மொடு பொருந்திய காதலரது, நேமி நெடுந் திண்டேர் - உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே - சென்ற வழி சிதையும்படி பரக்கின்ற வெள்ளமே, பூந் தண் பொழிலே - குளிர்ச்சி பொருந்திய பூக்களையுடைய சோலையே, புணர்ந்து ஆடும் அன்னமே - துணையுடன் கூடி விளையாடும் அன்னமே, ஈர்ந் தண் துறையே-ஈரமாகிய குளிர்ந்த நீர்த் துறையே, இது தகாது என்னீரே - இங்ஙனம் பிரிவது தகாது என்று தலைவர்க்குக் கூறுகின்றீ ரில்லை ; நேர்ந்த - பிரியேனென்று சூளுரைத்த எனலுமாம். பிரிவென்று சொல்லவும் அஞ்சி, இதுவெனச் சுட்டி யொழிந்தார். இனி, ஊர்கின்ற என்பதை முற்றாக்கி, ஓதம் ஊர்கின்றன இது தகா தென்னீர் எனப் பொழில் முதலியவற்றிற் குரைத்ததூஉமாம். 36. நேர்ந்த நங் காதலர் நேமி நெடுந்திண் தேர் - நம்மோடு பொருந்தின காதலரது உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் - சென்ற வழி மறையும்படி பரந்தாய், வாழி கடல் ஓதம் - கடலின் வெள்ளமே நீ வாழ் வாயாக, ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று - அங்ஙனம் பரந்தா யாகலால் நீ, எம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் - எம்முடன் உறவுபோலிருந்து உறவாயிற்றிலை, வாழி கடல் ஓதம் - கடலோதமே வாழ்வாயாக: வாழி யென்றது குறிப்புமொழி; அசையுமாம். தீர்ந்தவர் - தெளியப்பட்ட உறவினர். இவ் வைந்தும் காம மிக்க கழிபடர் கிளவி. இவை திணை நிலைவரி. 37. நல் நித்திலத்தின் பூண் அணிந்து - நல்ல முத்தாகிய பூணினை யணிந்து, நலம் சார் பவளக் கலை உடுத்து - நன்மை பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து, செந்நெற் பழனக் கழனிதொறும் - செந்நெற் பயிர்களையுடைய மருத நிலத்துக் கழனிதொறும், திரை உலாவு கடற் சேர்ப்ப - அலைகள் உலாவுகின்ற கடலின் கரையையுடைய தலைவனே, புன்னைப் பொதும்பர் - புன்னை மரம் அடர்ந்த சோலையிலே, மகரத் திண் கொடி யோன் எய்த புதுப் புண்கள் - வலிய மகரக் கொடியையுடைய மன்மதன் அம்பெய்தமையாலான புதிய புண்கள், என்னைக் காணா வகை மறைத்தால் - என்னுரு வினைக் காணாதபடி மறைப்பின், அன்னை காணின் என் செய்கோ - அதனைத் தாய் அறியின் என் செய்வேன்; நித்திலத்தின் பூண், பவளக்கலை என்பன வேற்றுமைத் தொகையும் பண்புத்தொகையுமாம். பழனம் - மருதம், நீர்நிலை. பொதும்பர் - மரச்செறிவு. புதுப்புண் என்றது தலைவி மேன் மேல் வருந்துகின்ற வருத்தத்தை. பொதும்பர் தாதினை யுதிர்த்துப் புண்களை மறைத்தால் என்றுரைப்பாருமுளர். 38. வாரித் தரள நகை செய்து - கடல் முத்தாகிய நகையினைத் தோற்றி, வண் செம்பவள வாய் மலர்ந்து - அழகிய சிவந்த பவளமாகிய வாய் திறந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு கடற் சேர்ப்ப - பரதர் சேரியில் வலை உணங்கும் மனை முற்றத்தே அலைகள் உலாவும் கடலின் கரையையுடைய தலைவனே, மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள - தலைவியானவள் மாரிக்காலத்து மலரும் பீர்க்கின் மலர் போலும் நிறத்தைக் கொள்வாளாயின், கடவுள் வரைந்து - தெய்வத்தை வழிபட்டு, ஆர் இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் - இக் கொடுமை செய்தவர் யாரென்று அன்னை ஆராய்ந்தறியின், என் செய்கோ - என்ன செய்வேன்; பீரத்து - பீர் அத்துச் சாரியை பெற்றது ; இதனை 1"ஆரும் வெதிரும்" என்னுஞ் சூத்திரத்து, மெய் பெற என்றதனான் முடிப்பர். வண்ணம் - பொன்னிறம் ; பசலை. வரைந்து - வழிபட்டு, அறியின்- ஆராய்ந்தறியினென்க. 39. புலவுற்று இரங்கி - புலால் நாற்றம் பொருந்தி முழங்கி, அது நீங்க - அப் புலால் நீங்க, பொழிற் றண்டலையில் புகுந்து - பொழிலாகிய சோலையிலே புகுந்து, உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழ - ஆண்டு உதிர்ந்த பலவுங் கலந்த பழம்பூக்களின் மணம் கமழ, திரை உலாவு கடற் சேர்ப்ப - அலையுலாவுகின்ற கடற் கரையை யுடையவனே, பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் - பல துன்பங்களும் உறுதலால் இன்னதொரு நோயெனத் துணியலாகாத படர் நோயை, மடவாள் தனி உழப்ப - தலைவி தானே யறிந்து அநுபவிக்க, அலவுற்று இரங்கி அறியா நோய் - மெலிதலும் இரங்கலும் புலப்படாமையின் ஒருவராலும் அறியப்படாத அந் நோயை, அன்னை அறியின் என் செய்கோ - தாய் அறிந்தால் யாது செய்வேன் ; புலவுற்றிரங்கி - புலத்தலுற்று வருந்தி என்ற பொருளும் தோன்ற நின்றது. நீங்க மணங் கமழப் புகுந்து உலாவு கடல் என்க. கலவை - பலவகையும் கலந்தது. செம்மல் - பழம்பூ. இவை மூன்றும் அலர் அறிவுறீஇ வரைவு கடாவியவை. 40. இளை இருள் பரந்ததுவே - இளைய இருள் விரிந்தது, எல் செய்வான் மறைந்தனனே - பகலினைச் செய்யும் ஆதித்தன் மறைந்தனன், களைவு அரும் புலம்பு நீர் கண்பொழீஇ உகுத்தன - களைதற்கரிய தனிமை வருத்தத்தாலாய நீரினைக் கண்கள் மிகுதியாகச் சொரிந்தன, தளை அவிழ் மலர்க் குழலாய் - முறுக்கு விரிந்த மலரணிந்த கூந்தலையுடையாய், தணந்தார் நாட்டு உளதாங் கொல் - நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டிலும் இருக்குமோ, வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை - நம்முடைய வளை கழல நெருப்பினைச் சிந்தி வந்த இந்த மயக்கத்தையுடைய மாலைப்பொழுது; இளை - இளைய ; விகாரம். ஏகாரங்கள் ஈண்டு இரங்கல் குறித்தன. புலம்பு - தனிமை ; வருத்தம். மருள் மாலை - மயங்கிய மாலை; மயக்கத்தைச் செய்யும் மாலையுமாம். மாலை உளதாங் கொல் என வியையும். கொல் - ஐயம். தலைவர்நாட் டிருக்குமாயின் அவர் இங்ஙனம் பிரிந்திரார் என்பது குறிப்பு. 41. கதிரவன் மறைந்தனன் - சூரியன் மறைந்தான், கார் இருள் பரந்ததுவே - கரிய இருள் பரந்தது, எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே - செவ்வி மலரை யொக்கும் மையுண்ட கண்கள் துன்பத்தாலாய நீரைச் சொரிந்தன, புது மதி புரை முகத்தாய் - புதிய மதியை யொக்கும் முகத்தினையுடையாய், போனார் நாட்டு உளதாங் கொல் - நம்மை விட்டுப் போன தலைவரது நாட்டிலும் உண்டாகுமோ, மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள் மாலை - திங்களை உமிழ்ந்து ஞாயிற்றை விழுங்கி வந்த இந்த மயங்கிய மாலைப் பொழுது ; எதிர்மலர் - தோற்றுகின்ற மலரென்றும், எதிர்த்துப் பிணைத்த மலரென்றுமாம். புது மதி - மாலையிற் றோற்றிய நிறைமதி. கதிர் விழுங்கி மதி யுமிழ்ந்து என மாறுதலுமாம். மாலையிலே கதிர் மறைந்ததனையும், மதி தோன்றியதனையும் இங்ஙனங் கூறினார். ஒன்றை விழுங்கி, ஒன்றை உமிழ்ந்ததென்பது ஓர் நயம். 42. பறவை பாட்டு அடங்கினவே - பறவைகள் ஒலித்தலடங்கின, பகல் செய்வான் மறைந்தனனே - சூரியன் மறைந்தான், நிறை நிலா நோய் கூர நெடுங்கண் நீர் உகுத்தன - நிறுத்த நில்லாவாய் நோய்கள் மிகாநிற்க நெடிய கண்கள் நீரைச் சொரிந்தன, துறுமலர் அவிழ் குழலாய் - அவிழ்ந்த மலர்கள் நெருங்கிய கூந்தலையுடையாய், துறந்தார் நாட்டு உளதாங்கொல் - நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் உண்டாகா நிற்குமோ, மறவையாய் என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை - மறத்தினையுடையதாய் என் உயிரின்மேல் வந்த இந்த மயங்கிய மாலைப் பொழுது; பாட்டு - பாடுதல்; ஒலித்தல். நிறை - நிறுத்தல். நிலா - நில்லா வாய்; எச்சமுற்று. துறு - நெருங்கிய. மறவை - மறத்தை யுடையது. உயிர்மேற் பாய்ந்து வந்த மாலையாகிய புலியென்க. இவை மூன்றும் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குரைத்தன. இவை ஆறும் மயங்கு திணை நிலைவரி. இவற்றுள் திணை மயங்கியுள்ளமை காண்க. 43. கைதை வேலிக் கழிவாய் வந்து - தாழையை வேலியாக வுடைய இக் கழியின்பால் வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் - நம்முடைய விளையாட்டை மறப்பித்துச் சென்றார் ஒருவர், பொய்தல் அழித்துப் போனார் அவர் - அங்ஙனம் விளையாட்டை மறப்பித்துச் சென்ற அவர், நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - நமது மயக்கத்தை யுடைய மனத்தை விட்டு நீங்குவாரல்லர்; கழி - கடல் சார்ந்த நிலமும் நீரோடையும். பொய்தல் - மகளிர் விளையாட்டு. அழித்தல் - ஈண்டு மறப்பித்தல்; 1"சேர்ப்பே ரீரளை யலவற் பார்க்குஞ், சிறுவிளை யாடலு மழுங்க, நினைக்குறு பெருந்துயர மாகிய நோயே" என்பதிற்போல. 44. கானல் வேலிக் கழிவாய் வந்து - சோலை சூழ்ந்த கழியினிடத்து வந்து, நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் - நீ அருள் செய்வாய் என்று சொல்லியே நின்றார் ஒருவர், நீ நல்கென்றே நின்றார் அவர் - அங்ஙனம் நின்ற அவர், நம் மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் - நமது மானை யொத்த பார்வையை மறப்பாரல்லர்; மான் ஏர் நோக்கம் எனப் பிரித்தலுமாம். 45. அன்னம் துணையோடு ஆடக் கண்டு - அன்னப் பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு, நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் - நேற்று அதனையே நோக்கி நின்றார் ஒருவர், நென்னல் நோக்கி நின்றார் அவர் - அங்ஙனம் நோக்கி நின்ற அவர், நம் பொன் நேர் சுணங்கிற் போவார் அல்லர் - நமது பொன்னை யொத்த சுணங்கு போல நம்மை விட்டு நீங்கு வாரல்லர்; நென்னல் - நெருநல் என்பதன் மரூஉ. நோக்கி - என்னை நோக்கி யென்றுமாம். சுணங்கு - தேமல். அழகிய சுணங்குமாம். இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற் பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம். இவை சாயல்வரி என்பர். 46. அடையல் குருகே அடையல் எம் கானல் - குருகே எம் கானலிடத்து அடையாதே, அடையல் குருகே அடையல் எம் கானல் -, உடை திரை நீர்ச் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்- உடைகின்ற அலையையுடைய கடற் சேர்ப்பனுக்கு எமது மிக்க நோயை உரையாய் ; ஆதலால், அடையல் குருகே அடையல் எம் கானல்-; குருகு - நாரை; வேறு பறவையுமாம். உரையாய் ஆதலால் அடையாதே என்றாள். இது, காம மிக்க கழிபடர் கிளவி. 47. ஆங்கனம் பாடிய ஆயிழை - அங்ஙனம் கோவலன் பாடினாற் போலப் பாடிய மாதவி, பின்னரும், - பின்பும், காந்தள் மெல்விரல் - காந்தள் மலர் போலும் மெல்லிய விரலால், கைக் கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழீஇ- கைக்கிளை குரலாகிய இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யெழுப்பி, பாங்கினிற் பாடி - அதனை முறைமையிற் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த் தாள்-பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள்; 47. அங்ஙனம் என்னுஞ் சுட்டு நீண்டு ஆங்ஙனம் என்றாகி, எதுகை நோக்கி ஆங்கனம் என்றாயிற்று. ஆங்ஙனமென்றே கூறினும் இழுக்கின்று. விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலை யிசையை எழுப்பியென்க. தீந்தொடை - ஈண்டு இன்னிசை. பண்ணு - பண்ணை. 48. நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை - நுளையரது விளரிப் பாலையாகிய பண்ணினைப் பாடுங்கால், இளி கிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை-மாலைப் பொழுதே, இளி யென்னும் நரம்பு கைக்கிளை யென்னும் நரம்பிற் சென்று மயங்க வந்து தங்கினாய், இளி கிளையிற் கொள்ள இறுத்தாய் மன் நீயேல் - அங்ஙனம் தங்கினாய் நீ யாயின், கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை - கொள்ளுதலில் வல்லாயாகிய மாலையே நீ என் உயிரைக் கொள்வாயாக ; விளரிப்பாலை - இரங்கற்பண் ; நெய்தற்குரியதாகலின் நுளையர் விளரி யென்றார். நொடிதருதல் - சொல்லுதல். நின்ற நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை ; அது கூடம் என்னுங் குற்றம் ; இளி முதலாகக் கைக்கிளை ஆறாவதாகலின் இளிக்குக் கைக்கிளை பகை. மயக்கத்தாலே பகை நரம்பிலே கை சென்று தடவவென்க. கொளை வல்லாய் - உயிரைக் கொள்ளுதலை வல்லாய். வாழியென்றது குறிப்பு. 49. பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருளின் நீழல் - பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று உரைத்த பெரிய தண்ணளியாகிய நிழலிலே, இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப் புறத்தாய் மாலை - தனித்திருந்து இரங்கி வாழ்பவருடைய உயிரைச் சூழ்ந் துள்ளாய் மாலையே, உயிர்ப் புறத்தாய் நீ ஆகில்-உயிரைச் சூழ்ந்துள்ளாய் நீயாயின், உள் ஆற்றா வேந்தன் எயிற் புறத்து வேந்தனோடு - உள்ளிருக்கும் வலியில்லாத வேந்தனது மதிலின் புறத்துள்ள வேந்தற்கு, என் ஆதி மாலை - மாலையே நீ என்ன உறவுடையை ஆவாய்; உரைத்த உரையாகிய அருளென்க. உரை - பிரியேம் என்று கூறியது. உயிர்ப் புறத்தாய் - உயிரைக் கவர்தற்கு அதனை முற்றியுள்ளாய். உள்ளாற்றா வேந்தன் - நொச்சியான் ; ஆற்றா என்றமையால் அமர் புரியும் வலியில்லாத என்றாயிற்று. எயிற் புறத்து வேந்தன் - உழிஞையான். அவனும் நீயும் புறத்தே முற்றி உயிர்கொள்வதில் ஒரு தன்மையீர் என்றபடி. வேந்தனோடு - வேந்தற்கு. 50. பையுள் நோய் கூர - துன்பமாகிய நோய் மிக, பகல் செய்வான் போய் வீழ - ஆதித்தன் மேல்கடலிற் சென்று வீழ, வையமோ கண் புதைப்ப - வையத்துள்ளார் கண்ணினை மூட, வந்தாய் மருள் மாலை - மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலை நீ ஆயின் - மாலைப் பொழுது நீயேயாயின், மணந்தார் அவர் ஆயின் - முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை - மாலையே இவ்வுலகந்தான் மிடியுற்றது, வாழ்வாயாக ; வையம் - வையத்துள்ளார் ; ஆகுபெயர். நீயாயின் என்றதும் அவராயின் என்றதும் கொடுமை குறித்தென்க. ஓகாரங்கள் சிறப்பு. நல்கூர்தல் - ஈண்டுத் துன்புறுதல். ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கு முளதெனத் தனக்குத் தோற்றுதலால்; "தான் சாவ உலகு கவிழும்" என்னும் பழமொழியுங் காண்க. வாழி- குறிப்பு. 51. தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை - தீயைப் பரப்பி வந்த வருத்தத்தைச் செய்யும் இம் மயங்கிய மாலைப் பொழுது, தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால் - நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி யுரைத்த இந் நன்மொழியோடே, பூக் கமழ் கானலிற் பொய்ச் சூள் பொறுக்கென்று - பூ நாறுஞ் சோலையிடத்தே கூறிய பொய்யாகிய சூளுரையைப் பொறுப்பாயாக வென்று, மாக் கடற்றெய்வம் - பெரிய கடற் றெய்வமே, நின் மலர் அடி வணங்கு தும் - நினது மலர் போலும் அடியை வணங்குவேம்; துயரெஞ்சு கிளவி - துயரில்லாத மொழி ; நன்மொழி ; ஆவது நின்னிற் பிரியேனென்றல். கிளவியோடே கானலிற் கூறிய பொய்ச் சூளென்க. பொய்ச் சூளால் அவரைத் தெய்வம் ஒறுக்குமென அஞ்சிப் பொறுக்கென்று வணங்குதும் என்றாள். பொறுக்கென்று- அகரந் தொக்கது. இது, வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகன் சிறைப்புறத் தானாகக் கூறியது. இவை முகமில் வரி என்பர். 52. எனக் கேட்டு - என்று மாதவி பாடக் கேட்டு, கானல் வரியான் பாட - நான் கானல் வரியினைப் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து - அவள் அப்படிப் பாடாமல் என்னை யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என - வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூட்டும் மாயத்தாளாகிப் பாடினாளென்று கோவலன் எண்ணி, யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் - யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து கோபித்ததாகலின், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய் - உவாநாளிற் பொருந்திய திங்கள் போலும் முகத்தினையுடைய மாதவியை அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று - பொழுது கழிந்ததாகலின் இங்கிருந்தும் எழுவே மென்று, உடன் எழாது ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர் - அவள் உடன் எழாதிருக்க ஏவலாளர் தன்னைச் சூழ்ந்து உடன்வரக் கோவலன் போயினான் ; அவ்வாறு போன பின்பு, தாது அவிழ் மலர்ச் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து - தாது விரிந்த பூக்களையுடைய சோலையில் ஆரவாரத்தையுடைய ஆயத்தின் ஒலி அடங்க, கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு - செயலற்ற மனத்தினளாய் வண்டியினுள்ளே அமர்ந்து, காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள் - காதலனுடன் செல்லாது மாதவி தனியே தன் மனையை அடைந்தாள் ; ஆங்கு மாயிருஞாலத்து அரசு தலை வணக்கும் - அகற்சியுடைய பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும், சூழி யானைச் சுடர் வாட் செம்பியன் - முகபடாம் அணிந்த யானையையும் ஒளிபொருந்திய வாளையுமுடைய சோழனது, மாலை வெண்குடை - மாலை யணிந்த வெண்கொற்றக் குடையானது, கவிப்ப ஆழி மால் வரை அகவையா எனவே - பெரிய சக்கரவாள கிரி உள்ளகப்படும்படி கவிக்க என்று ; மாயத்தாளாகலின் மனம் வைத்துப் பாடினாள் என்றுமாம். யாழிசைமேல் வைத்து - யாழிசையால் நிகழ்ந்ததென்று கருதும்படி செய்து. ஓரை யாயத்து என்று பாடமிருப்பினும் பொருந்தும். காதலனுடனன்றியே என மேற்போந்த பொருளை மீட்டும் கூறியது அவள் யாண்டும் அவ்வாறு சென்றதிலள் என்பதை யுணர்த்தற்கு. கவிப்பவெனக் கூறி மனை புக்காளென்க; அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. ஆங்கு, அசை. மாதவி குற்ற நீங்கிய யாழினைத் தொழுது வாங்கி இசை யெழுப்பிச் செவியாலோர்த்துப் 'பணி யாது' எனக் கோவலன் கையில் நீட்ட, அவன் அதனை வாங்கி அகப்பொருட் கருத்துக் களமைந்த ஆற்றுவரி முதலாய பாடல்களைப் பாடினான்; அவ்வாறு பாடக் கேட்ட மாதவி அவன் தன்னிலை மயங்கினானெனக் கருதிப் புலவியால் யாழ் வாங்கித் தானும் வேறு குறிப்பினள்போற் பாடத் தொடங்கி, அகப்பொருட் கருத்துடைய வரிப் பாடல்கலைப் பாடினாள் ; அதனைக் கேட்டுக் கோவலன் இவள் என்போலன்றி வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாளெனத் துணிந்து, யாழிசை மேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின் அவளை யணைத்த கையை நெகிழ்ந்து ஏவலாளர் சூழப் புறப்பட்டுச் சென்றான் ; மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வண்டியேறித் தனியே மனை புக்காள்; என முடிக்க. இதில் ஆற்றுவரி முதலிய பலவகைப் பாடல்கள் இருப்பினும், யாவும் கானலிடத்தனவாகலின, கானல்வரி யெனப்பட்டன. இதிலுள்ளன இசைத் தமிழ்ப் பாட்டுக்களும், கட்டுரைகளும் ஆம். கானல் வரி முற்றிற்று 8. வேனிற் காதை (இளவேனிற் பருவம் வந்ததனை இளந் தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன. கோவலன் ஊடிச் சென்றமையால் தனித் தேகிய மாதவியானவள் மேன்மாடத்து நிலா முற்றத்தில் ஏறி யிருந்து, யாழினைக் கையிலெடுத்து, மேற்செம்பாலை யென்னும் பண்ணை முந்துறக் கண்டத்தாற் பாடி, அது மயங்கினமையின், அதனையே கருவியாலும் பாடத் தொடங்கிப் பதினாற் கோவை யாகிய சகோட யாழை உழைகுரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி, இசை பொருந்து நிலையை நோக்கி, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் சாதிப் பெரும் பண்களை நலம் பெற நோக்கிப் பாடுமிடத்துப் புறமாகியதோர் பண்ணிலே மயங்கினள். மயங்கினவள், காமதேவனாணையால் உலகு தொழுதிறைஞ்சும் திருமுகம் விடுப்பேமென்னும் எண்ணத்தாற் பிறந்த செவ்வியளாய்ச், சண்பக முதலியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையின் இடையேயுள்ள தொரு தாழை வெண்டோட்டில் அதற்கு அயலதாகிய பித்திகை யரும்பை எழுத்தாணியாகக் கொண்டு செம்பஞ்சியிலே தோய்த்து எழுதுகின்றவள், 'இளவேனிலென்பான் முறை செய்ய வறியாத இளவரசன் ; திங்கட் செல்வனும் செவ்வியனல்லன் ; ஆதலால் புணர்ந்தோர் பொழுதிடைப் படுப்பினும், தணந்தோர் துணையை மறப்பினும் பூவாளியால் உயிர் கொள்ளுதல் அவற்குப் புதிதன்று ; இதனை அறிந்தருள்வீராக' எனத் தன் முற்றாத மழலை மொழியாற் சொல்லிச் சொல்லி எழுதி, வசந்த மாலையை அழைத்து, 'இதன் பொருளையெல்லாம் கோவலற்கு ஏற்பச் சொல்லி, அவனைக் கொண்டுவருக' என விடுத்தனள். மாலை பெற்ற வசந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுப்ப, அவன்' நாடகமகளாதலின் பலவகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு' என்று கூறி, ஓலையை மறுத்திட, அவள் சென்று அதனை மாதவிக் குரைப்ப, 'மாலை வாராராயினும் காலை காண்குவம்' என்று, கையற்ற நெஞ்சமுடன் மலரமளியில் கண் பொருந்தாது கிடந்தனள், (இதன்கண் சில இசை யிலக்கணங்களும், கண்கூடு வரி முதலிய எண்வகை வரிகளும் கூறப்பட்டுள்ளன.) நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடா ருறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும் 5 அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இன்னிள வேனில் வந்தனன் இவணென வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தன னாதலின் 10 மகர வெல்கொடி மைந்தன் சேனை புகரறு கோலங் கொள்ளுமென் பதுபோற் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள் 15 கோவலன் ஊடக் கூடா தேகிய மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளி ஏறி மாணிழை தென்கடல் முத்துந் தென்மலைச் சந்தும் 20 தன்கடன் இறுக்குந் தன்மைய வாதலின் கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து மையறு சிறப்பின் கையுறை யேந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி 25 ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி நன்பால் அமைந்த இருக்கைய ளாகி வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகந் தழீஇச் செம்பகை யார்ப்பே கூடம் அதிர்வே 30 வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து பிழையா மரபின் ஈரேழ் கோவையை உழைமுதற் கைக்கிளை இறுவாய்க் கட்டி இணைகிளை பகைநட் பென்றிந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் 35 குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுத லாகவும் உழையீ றாகவும் குரல்முத லாகவுங் குரலீ றாகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் 40 அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉந் தெள்ளிசைக் கரணத்து புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச் 45 சண்பக மாதவி தமரலங் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அஞ்செங் கழுநீர் ஆயிதழ்க் கத்திகை எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு 50 விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுக மன்றி உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது 55 பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன் 60 புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்றிஃ தறிந்தீ மின்னென எண்ணென் கலையும் இசைந்துடன் போகப் 65 பண்ணுந் திறனும் புறங்கூறு நாவின் தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்துரை எழுதிப் பசந்த மேனியள் படருறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்த் 70 தூமலர் மாலையில் துணிபொரு ளெல்லாங் கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென மாலை வாங்கிய வேலரி நெடுங்கண் கூல மறுகிற் கோவலற் களிப்பத் திலகமும் அளகமுஞ் சிறுகருஞ் சிலையுங் 75 குவளையுங் குமிழுங் கொவ்வையுங் கொண்ட மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும் புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயலுலாய்த் திரிதருங் காமர் செவ்வியிற் 80 பாகுபொதி பவளந் திறந்துநிலா உதவிய நாகிள முத்தின் நகைநலங் காட்டி வருகென வந்து போகெனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும் அந்தி மாலை வந்ததற் கிரங்கிச் 85 சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக் கிளிபுரை கிளவியும் மடவன நடையுங் களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச் செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி யாடலும் 90 சிலம்புவாய் புலம்பவும் மேகலை யார் ப்பவுங் கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும் புறத்துநின் றாடிய புன்புறவரியும் கோதையுங் குழலுந் தாதுசேர் அளகமும் 95 ஒருகாழ் முத்தமுந் திருமுலைத் தடமும் மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின் இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித் 100 தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் கிளர்ந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும் பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும் 105 வண்டலர் கோதை மாலையுள் மயங்கிக் கண்டவர்க் குரைத்த காட்சி வரியும் அடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்கம் எடுத்தவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் ஆடல் மகளே ஆதலின் ஆயிழை 110 பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற் கிரங்கி வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடலர் கோதைக்குத் துனைந்துசென் றுரைப்ப 115 மாலை வாரா ராயினும் மாணிழை காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென். வெண்பா 1 செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக மைந்தார் அசோகம் மடலவிழக் ? கொந்தார் இளவேனல் வந்ததால் என்னாங்கொல் இன்று வளவேனற் கண்ணி மனம். 2 ஊடினீர் எல்லாம் உருவிலான் றன்ஆணை கூடுமின் என்று குயில்சாற்ற ? நீடிய வேன்றபா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்கலந்தாய் காண். உரை 1-2. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு-வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரிக் கடலும் எல்லையாக வரையறுக் கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய நீரையுடைய மூவேந்தருடைய உயர்ந்த தமிழ்நாட்டிடத்தே ; நெடியோன் - திருமால். தொடியோள் - குமரி. குமரியாறென்னாது குமரிப் பௌவம் என்றது குமரியாறு முன்னிகழ்ந்ததோர் கடல் கோளால் வௌவப்பெற்று அதனுட் கரந்தமையின் என்க. கிழக்கின் கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களும் எல்லையாகவென விரித்துரைக்க, ஈண்டு அடியார்க்கு நல்லார் விரித்துரைத்த வரலாறு அறியற்பாலது. (அடி. நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பௌவ மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர் ; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமா றெனின் 1"வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம் பூரணவடிகள் முகவுரை யானும், பிறவாற்றானும், பெறுதும்.) 3-7. மாட மதுரையும் - சிறந்த மாடங்களையுடைய மதுரையும், பீடுஆர் உறந்தையும் - பெருமை பொருந்திய உறையூரும், கலிகெழு வஞ்சியும் - ஆரவாரம் பொருந்திய வஞ்சி நகரும், ஒலி புனற் புகாரும் - ஒலிக்கின்ற நீரையுடைய காவிரிப் பூம்பட்டினமும் என்னும் நான்கிடத்தும், அரசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் - அரசு வீற்றிருந்த புகழமைந்த சிறப்பினையுடைய மாரனாகிய மன்னனுக்கு, மகிழ் துணையாகிய- மகிழும் துணைவனாகிய, இன் இளவேனில் வந்தது இவண் என - இன்பத்தைத் தரும் இளவேனில் என்பான் இங்கே வந்து விட்டான் என்று ; இளவேனிலாகிய இளவரசன் என்க. வேனில் என்றதற்கேற்ப வந்தது என்றார். வந்தது - வரும் என்னும் எதிர்காலம் இறந்த காலத்தாற் கூறப்பட்டது ; விரைவு பற்றி. இவண் - இங்கே ; புகாரிலே. 8-13. வளம் கெழு பொதியில் மாமுனி பயந்த - வளம் பொருந்திய பொதியின்மலையிடத்துச் சிறந்த முனிவன் பெற்ற, இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின் - தென்றலாகிய தூதன் குயிலோனுக் குரைத்தனன் ஆதலானே, மகர வெல் கொடி மைந்தன் சேனை - வெற்றி பொருந்திய மகரக் கொடியை யுடைய காமன் சேனையாயுள்ளா ரெல்லாரும், புகர் அறு கோலம் கொள்ளும் என்பதுபோல் - குற்றமற்ற கோலத்தைக் கொண்மின் என்னும் பொருள் பயப்ப, கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் - கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக் குயிலோன் என்னும் சின்னம் ஊதி, பணிமொழி கூற - காற்றூதன் தனக்குப் பணித்த மொழியைச் சேனைக்குக் கூற; அந்தணன் தூதிற்குரியனாகலின் மாமுனி பயந்த என்றார். இளங்காற்றூதன் - இளங்காலாகிய தூதன், இளைய காற்றூதன் ; காற்றூதன் - ஒட்டன். சேனை - மகளிர். புகரறு கோலம் -அக்காலத்துக் கேற்ப உடுத்து முடித்துப் பூசி பூணுதல் ; போர்க் கோலமென்று மாயிற்று. கொள்ளும் - கொண்மின். என்பது போல் - என்ன. படையுள் படுவோன் - படைச்சிறுக்கன் ; காளம் ஊதி . 14-18. மடல் அவிழ் கானற் கடல் விளையாட்டினுள் - கடல் விளையாட்டின்கண்ணே பூக்கள் இதழ் விரியுங் கானலிடத்து, கோவலன் ஊடக் கூடாது ஏகிய-கோவலன் ஊடிச் சென்ற மையால் அவனுடன் கூடாது தமியளாய்த் தன் மனையிற் புக்க, மா மலர் நெடுங்கண் மாதவி - கரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி, விரும்பி - அதற்கு விரும்பி, வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் - வானிலே பொருந்த வுயர்ந்த மேனிலையின் ஒரு பக்கத்தே, வேனிற் பள்ளி ஏறி -இளவேனிற் குரிய நிலா முற்றமாகிய இடத்திலே ஏறி ; ஊடல் - ஈண்டு வெறுத்தல். மா - கருமை. கோலங் கொண்மி னென்று படையுள் படுவோன் கூறிய அதற்கு விரும்பியென்க. பள்ளி - இடம். 18-22. மாண் இழை - அந்த மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாள், தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் - தென் கடலின் முத்தும் பொதியின் மலைச் சந்தனமும், தன் கடன் இறுக்கும் தன்மைய ஆகலின் - அக்காலத்திற்கு எப்பொழுதும் தான் கடனாக இடக்கடவ திறையாகலான், கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து-பின்பனிக் காலத்திற் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட முலைமுற்றமாகிய பரப்பிலே, மைஅறு சிறப்பிற் கையுறை ஏந்தி - குற்றமற்ற சிறப்பினையுடைய அம் முத்தையும் சந்தனத்தையும் கையுறையாக ஏந்தி: தன் என்றது மாதவியை. வளாகம் - பரப்பு. கையுறை- காணிக்கை; பாகுடம். ஏந்தி யெனவே பூண்டும் பூசியுமென்ப தாயிற்று. காணிக்கை காட்டுவார் காண்பார் முன்றிலிற் கொணர்ந்து காட்டுவாராகலிற் கொங்கை முன்றிலில் ஏந்தி என்றார். ஈண்டு முற்றமாவது மார்பு. 23-29. (அதிராமரபின்............இருக்கையாளாகி) ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற்கண்ணதாகிய, நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - பதுமாசனம் என்னும் நன்மை யமைந்த இருப்பினை யுடையளாய், அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையில் வாங்கி, மதுர கீதம் பாடினள் மயங்கி - மிடற்றாலே முற்பட மதுர கீதமாகப் பாடி அது மயங்கிக் கலத்தாற் பாடத் தொடங்கினவள்; இருக்கையளாகி வாங்கிப் பாடினள் மயங்கி என மாறுக. விருத்தி - இருப்பு. நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்ப வற்றுள் இருத்தலின் பிரிவாகிய திரிதர வில்லா விருக்கை ஒன்பது வகைப்படும். அவை: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி இருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. இவற்றுள் முதற்கண்ணதாகிய பதுமுகம் என்பதே தலைக்கண் விருத்தி யெனப்பட்டது. பதுமுகம் - பதுமாசனம். மேல் யாழாற் பாடுதல் கூறப்படுதலின் ஈண்டுப் பாடியது கண்டத்தா லென்பது பெற்றாம். 27-28. வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி - வலக்கையைப் பதாகையாக் கோட்டின் மிசையே வைத்து, இடக்கை நால் விரல் மாடகம் தழீஇ - இடக்கை நால்விரலால் மாடகத்தைத் தழுவி; பதாகைக் கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரலெல்லாம் நிமிர்த்தல். மாடகம் - நரம்பினை வீக்குங் கருவி. 29-30. செம்பகை ஆர்ப்பே அதிர்வே கூடம் வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து - செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் இப் பகை நரம்பு நான்கும் புகாமல் நீக்கும் விரகைக் கடைப் பிடித் தறிந்து ; செம்பகை முதலிய குற்றங்களினியல்பை, "செம்பகை யென்பது பண்ணோ டுளரா, இன்பமி லோசை யென்மனார் புலவர்" "ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்" "அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச், சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே" "கூட மென்பது குறி யுற விளம்பின், வாய்வதின் வராது மழுங்கியிசைப் பதுவே" என்பவற்றானறிக. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும்: என்னை? "நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்குப், பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோள், நேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல், சேரினேர் பண்க ணிறமயக் குப்படுஞ் சிற்றிடையே" என்றாராகலின். 31.-32. பிழையா மரபின் ஈரேழ்கோவையை - மயங்கா மர பினையுடைய பதினாற்கோவையாகிய சகோட யாழை, உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி-உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி ; 33-34. இணை கிளை பகை நட்பு என்று இந் நான்கின் - இணையும் கிளையும் பகையும் நட்புமாகிய இந்நான்கினுள், இசை புணர் குறி நிலை எய்த நோக்கி - இசை புணருங் குறிநிலையைப் பொருந்த நோக்கி; இணை - இரண்டு நரம்பு, கிளை ஐந்து நரம்பு, என்பர். பகை ஆறும் மூன்றும். நட்பு - நாலாம் நரம்பு. "இணையெனப் படுவ கீழு. மேலும், அணையத் தோன்று மளவின வென்ப" "கிளையெனப் படுவ கிளக்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யென வைந் தாகு மென்ப" "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்றுபெற நிற்பது கூட மாகும்" என்பன காண்க. கிளை - ஐந்தாம் நரம்பென்றலும், இணை - இரண்டாம் நரம்பும் ஏழாம்நரம்பும் என்றலும் பொருத்தமாம். 35. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - குரலிடத்தும் அதற்கு ஐந்தாம் நரம்பாகிய இளியிடத்தும் இசை ஒத்திருத்தலைத் தன் செவியால் அளந்தறிந்தனள்; குரல் முதலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள் என்பர் பழைய உரையாள ரிருவரும். இளி, வட்டப்பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் எனத் தொடங்கி, உழை குரலாய்க் கோடிப் பாலையும் குரல் குரலாய்ச் செம்பாலையும், 1விளரி குரலாய்ப் படுமலைப்பாலையும், துத்தம் குரலாய்ச் செவ்வழிப்பாலையும், இளி குரலாய் அரும்பாலையும் கைக்கிளை குரலாய் மேற் செம்பாலையும், தாரம் குரலாய் விளரிப்பாலையும் பிறக்கு மென்றார் அடியார்க்கு நல்லார். இவ்வுழி இப் பொருள் கொள்ளுதற்குச் செய்யுளில் யாதுஞ் சொல்லில்லை. மற்றும், குரல்முத லேழும் முறையே குரலாய் நிற்கச் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழ் பெரும்பாலையும் பிறக்குமென ஆய்ச்சியர் குரவையுள்ளும், திவாகரம் முதலிய நிகண்டுகளினுள்ளும், கூறப்பட்டுளது. அரங்கேற்றுகாதையுள்ளே உழை குரலாகச் செம்பாலையும், கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும், துத்தம் குரலாகச் செவ்வழிப்பாலையும், குரல் குரலாக அரும் பாலையும், தாரம் குரலாகக் கோடிப்பாலையும், விளரி குரலாக விளரிப்பாலையும், இளி குரலாக மேற்செம்பாலையும் பிறக்கு மெனக் கூறப்பட்டுளது. இவ்விருவகையினும் வேறுபடப் பாலையேழும் பிறக்குமென ஈண்டு அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். 35-36. அன்றியும் - அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்தறிந்த தன்றியும், வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் - வரன் முறையாலே இளி முறையாற் பாடப்படும் ஏழு நரம்பு களினுள்ளே; 37-41. உழை முதலாகவும் உழை ஈறாகவும் குரல் முதலாகவும் குரல் ஈறாகவும் - உழைமுதல் உழையீறு குரல் முதல் குரலீறு ஆகவும், அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் - அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் எனப்படும் மருதத்தின், நால்வகைச் சாதி நலம் பெற நோக்கி - நால்வகைச் சாதிப் பண்களையும் நலம்பெற நோக்கி; ஐந்து - இளி ; ஆவது சட்சம் ; சப முறையாலென்க. உழை முதலாக அகநிலை மருதம், உழை யீறாகப் புறநிலை மருதம், குரல் முதலாக அருகியல் மருதம், குரலீறாகப் பெருகியல் மருதம் என நிரனிறையாகக் கொள்க. தமிழிலே பாலையாழ் குறிஞ்சி யாழ், மருதயாழ், செவ்வழியாழ் எனப் பெரும்பண் நான்கு வகைப்படும். இவை ஒவ்வொன்றும் நந்நான்கு வகையினை யுடையன. இவற்றுள் பாலையாழுக்குத் திறன் ஐந்தும், குறிஞ்சி யாழுக்குத் திறன் எட்டும், மருதயாழுக்குத் திறன் நான்கும், செவ்வழி யாழுக்குத் திறன் நான்கும் ஆகும். மற்றும் திறத்தின் வகை யாகப் பாலையாழுக்குப் பதினைந்தும், குறிஞ்சி யாழுக்கு இருபத்து நான்கும், மருதயாழுக்குப் பன்னிரண்டும், செவ்வழியாழுக்குப் பன்னிரண்டும் உள்ளன. இவை யாவும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நான்கு சாதிகளாகப் பாகுபாடெய்தும், பெரும் பண்களில் ஒன்றாகிய மருதயாழுக்கு அகநிலை - மருதயாழ், புறநிலை - ஆகரி, அருகியல்- சாயவேளர் கொல்லி, பெருகியல்- கின்னரம் என்னும் பண்களாம். இங்கே இளங்கோவடிகள் அருளிச் செய்த அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்பன இவையேபோலும் ; பெரும்பண் பதினாறும் திறன் எண்பத்து நான்கும், இவற்றுளடங்காத தாரப்பண் டிறம், பையுள்காஞ்சி, படுமலை யென்னும் மூன்றும் ஆகப் பண்கள் நூற்று மூன்றாயினவாறு காண்க. இனி, உழை குரலாய கோடிப்பாலை அகநிலை மருதமும், கைக்கிளை குரலாய மேற்செம்பாலை புறநிலை மருதமும், குரல் குரலாய செம்பாலை அருகியன் மருதமும், தாரம் குரலாய விளரிப் பாலை பெருகியன் மருதமும் ஆமென்பர் அடியார்க்குநல்லார். இனி, அரும்பதவுரை யாசிரியர் இந் நான்கினையும் குறித்துக் கூறுவன வருமாறு:- 1. அகநிலைமருதமாவது 1"ஒத்த கிழமை யுழைகுரன் மருதம், துத்தமும் விளரியும் குறைபிற நிறையே." இதன் பாட்டு:- ஊர்க திண்டேர் ஊர்தற் கின்னே, நேர்க பாக நீயா வண்ணம்" நரம்பு பதினாறு. 2. "புறநிலை மருதங் குரலுழை கிழமை, துத்தங் கைக்கிளை குறையா மேனைத், தாரம் விளரி யிளிநிறை யாகும்." இதன் பாட்டு :- அங்கட் பொய்கை யூரன் கேண்மை, திங்க ளோர்நாளாகுந் தோழி." நரம்பு பதினாறு. 3. "அருகியன் மருதங் குரல்கிளை கிழமை, விளரி யிளிகுறை யாகு மேனைத் துத்தந் தார முழையிவை நிறையே." இதன் பாட்டு:- "வந்தா னூரன் மென்றோள் வளைய, கன்றாய் போது காணாய் தோழி." நரம்பு பதினாறு. (கிளை - கைக்கிளை.) 4. "பெருகியன் மருதம் பேணுங் காலை, அகநிலைக் குரிய நரம்பின திரட்டி, நிறைகுறை கிழமை பெறுமென மொழிப." இதன் பாட்டு:-"மல்லூர்.........நோவ வெம்முன், சொல்லற் பாண சொல்லுங் காலை, எல்லி வந்த நங்கைக் கெல்லாம், சொல்லுங்காலைச் சொல்லு நீயே". நரம்பு முப்பத்திரண்டு. பரிபாடல் 17-ஆம் செய்யுளில், "ஒருதிறனம், பாடினி முரலும் பாலையங் குரலின், நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற" என்பதற்கு, ‘பாலையையுடைய அழகிய மிடற்றுப் பாடற்கண் நாலு தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய.................குறையும் தோன்ற' எனப் பரிமேலழகர் உரை கூறியிருத்தலின், கிழமை நான்கு தாக்கும், நிறை இரண்டு தாக்கும், குறை ஒரு தாக்கும் பெறுமெனக் கோடல் வேண்டும். மேலே காட்டிய பாட்டுக்களில் அகநிலை முதலிய மூன்றும் ஒற்று நீக்கிப் பதினாறெழுத்துக்களும் பெருகியல் ஒன்றும் முப்பத்திரண்டெழுத்துக்களும் பெற்று வருதலின், ஒரெழுத்து ஒருநரம்பாகவும், ஒரு மாத்திரையாகவும் கொள்ளப் பட்டதென்பது புலனாகின்றது. ஆனால், "அகநிலை மருதத்துக்கு நரம்பணியும் படி :- உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழைகுரல் தாரம் இளிதாரம் துத்தம் இளி உழை. இவை உரைப்பிற்பெருகும்." என்றுள்ள அரும்பதவுரையிற் பதினான்கு நரம்புகளே காணப் படுதல் முரணாகின்றது. இரண்டு விடுபட்டிருக்கும் போலும். 42. மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி - வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை யியக்கத்தாலும் முறையாலே பாடிக் கழித்து; நால்வகைச் சாதிப் பண்களையும் மூவகையியக்கத்தாலும் பாடிக் கழித்தென்க. 43-44. திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்து - அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுதல் செய்யுமிடத்து, புறத்து ஒரு பாணியிற் பூங்கொடி மயங்கி - நெஞ்சு கலங்கினா ளாதலின் எடுத்த பண்ணுக்குப் புறமாகியதோ ரிசையிலே அவள் மயங்கி; வழிப்படூஉந் திறத்தென மாறுக. தெள்ளிசைக் கரணம் யாழினும் மிடற்றினும் பாடுஞ் செய்கை. புறத்தொரு பாணியில் என்பதற்குப் புறநிலை மருதப் பண்ணில் என்றும், புறநீர்மை யென்னுந் திறத்தில் என்றும் உரைப்பாருமுளர். 45-55. (சண்பக மாதவி.........கைக்கொண்டு) விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட - மணம் பொருந்திய மலராகிய சிறிய வாளியாலே பெரிய நிலமுழுதையும் ஆண்ட, ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின் - ஒப்பற்ற தனிச் செங்கோலையுடைய ஒருவனாகிய காமராசன் ஆணையாலே, ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் - ஒரு திசை யன்றி உலகமெல்லாம் தொழுது வணங்கப்படும் அவன் றிரு முகத்தை, போக்கும் செவ்வியள் ஆகி - கோவலற்கு விடுப்பே மென்னும் நினைவாற் பிறந்த செவ்வியை யுடையளாகி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம் செங்கழுநீர் ஆயிதழ் - சண்பகம் மாதவி பச்சிலை பித்திகை வெள்ளிய பூவாகிய மல்லிகை என்னும் மலர்களாலும் வெட்டி வேராலும் அழகிய செங்கழுநீரின் நெருங்கிய மெல்லிய இதழ் களாலும் தொடுக்கப்பெற்ற, கத்திகை எதிர் பூஞ் செவ்வி - பூக்களின் மணம் மாறுபடும் செவ்வியையுடைய மாலையின், இடைநிலத்து யாத்த - நடுவிடத்தே தொடுத்த, முதிர்பூந்தாழை முடங்கல் வெண் தோட்டு - முதிர்ந்த தாழம் பூவினது முடக்கத்தையுடைய வெள்ளிய தோட்டிலே, அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக் கொண்டு - அதற்கு அய லிடத்தமைந்ததாகிய பித்திகையின் கொழுவிய முகையாகிய எழுத்தாணியைக் கையிற்கொண்டு, அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ - அதனைச் செம்பஞ்சின் குழம்பிற் றோய்த்து உதறி எழுதுகின்றவள்; செவ்வியளாகி வெண்டோட்டில் ஆணி கைக் கொண்டு அளைஇ எழுதுகின்றவள் என மாறிக் கூட்டுக. தமாலம் - பச்சிலை. கரு முகை - பித்திகை. வேர் - குறுவேர்; வெட்டிவேர். கத்திகை - மாலை. எதிர்தல் - மாறுபடுதல். நிலம் - இடம். ஒரு முகம் - ஒரு திசை; ஓரிடம். திருமுகம் - அரசர்கள் விடுக்குஞ் செய்தி வரைந்த ஏடு; மங்கல வழக்கு. அத் திருமுகங் கண்டுழி அதற்கஞ்சித் தணந்தார் கூடுதல் ஒருதலை யென்னுங் கருத்தால் அதனைக் காமராசனது திருமுக மென்றாளென்க. 56-67. மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் - உலகில் நிலைபெற்ற உயிர்கள் யாவற்றையும் தாம் மகிழுந் துணையோடு புணர்விக்கும், இன் இளவேனில் இளவரசாளன் - இனிய இளவேனிலென்பான் இளவரசன் ஆதலின் நெறிப்படச் செய்யான், அந்திப்போதகத்து அரும்பிடர்த் தோன்றிய- அந்திப் பொழுதாகிய யானையின் அரிய பிடரிலே தோன்றிய, திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன் - திங்களாகிய செல்வனும் கோட்டமுடையன் ஆதலால். புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் - புணர்ந்தோர் சிறிது பொழுதை இடையே பயமின்றாகக் கழிப்பினும், தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் - பிரிந்து சென்றோர் தம் துணையை மறந்து வாராதொழியினும், நறும்பூ வாளி நல்லுயிர் கோடல் இறும்பூது அன்று - நறிய பூவாகிய அம்பு இன்பநுகரும் உயிரைக்கொண்டு விடுதல் புதுமை யன்று, இஃது அறிந்தீமின் என - இதனை அறி மின் என்று, எண்ணெண் கலையும் இசைந்து உடன்போக - அறுபத்து நால்வகைக் கலைகளும் வழிபட்டுப் புகழ்ந்தொழுக, பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் - அவற்றுட் பண்களும் திறங்களும் புறங்கூறும் நாவில், தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து - தளை கட்டவிழ்ந்து குலைந்த தனிப்பட்ட காமத்தையுடைய, விளையா மழலையின் விரித்து உரை எழுதி - முற்றாத மழலையோடே பேசிப் பேசி யெழுதி; அந்திப் போதகத்து அரும்பு இடர்த் தோன்றிய எனப் பிரித்து, அந்திப் பொழுதின்கண்ணே அரும்புகின்ற விரகவிதனத்தின் மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வன் என்று பொருளுரைப்பர் அடியார்க்குநல்லார். இவர், அந்தியாகிய யானையின் புறக்கழுத்திற் றோன்றிய திங்களெனிற் பிறையாமாதலின், அது நாடுகாண் காதையுள் “வைகறை யாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடைநாட் கங்குல்" என்பதனோடும், கட்டுரை காதையுள் ''ஆடித் திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண" என்பதனோடும், பிறவற்றோடும் மாறுகொள்ளுமாதலின் அவ் வுரை பொருந்தாதென மறுப்பர். ஆயின் இவர் கருத்துப்படியும் அந்தியோடு திங்களுக்குத் தொடர்பில்லா தொழியவில்லை என்பது கருதற்பாற்று. பொழுதிடைப் படுத்தல் - ஊடல் முதலிய வற்றால் விட்டிருத்தல். தணத்தல் - ஓதல் முதலிய ஏதுவாகக் காடிடையிட்டும் நாடிடை யிட்டும் பிரிந்திருத்தல். துணை மறத்தல் - குறித்த பருவத்து வாராது பொய்த்தல். வாளியின் எனப் பாடங் கொண்டு, வாளியால் உயிர் கோடல் அவற்குப் புதிதன்றென வுரைப்பர் அடியார்க்குநல்லார். புறங்கூறும் நா - புறங்கூறுதற்குக் காரணமான நா. புறங் கூற்று - நிகரல்லார் தம் பொறாமையால் அவரில்வழி இகழ்ந்துரைப்பது. பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நா வென்றுரைப்பாருமுளர். தனிப்படு காமம் - சிறந்தார்க்கும் உரைக்கலாவ தன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம். 68-71. பசந்த மேனியள் - பசப்புற்ற மேனியை யுடையளாய், படர் உறு மாலையின் - நினைவு மிகும் மாலைக் காலத்தே, வசந்தமாலையை வருகெனக் கூஉய் - வசந்தமாலையை வருக வென அழைத்து, தூமலர் மாலையில் துணி பொருள் எல்லாம் - இத் தூய மலர்மாலையில் எழுதிய தீர்ந்த பொருளை எல்லாம், கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு என - கோவலற்கு ஏற்பச் சொல்லி இப்பொழுதே இங்கே கொணர்வாயாக என்றுரைக்க; வசந்தமாலை - மாதவியின் சேடி. மாலையினிடையதோர் தோட்டில் எழுதப்பெற்றதாகலின், அதனை மாலையிற் றுணி பொருள் என்றாள்; அன்றி அம் மாலை முழுதுமே காமன் றிருமுகமென்பது கருதியுமாம். அளிக்கவென்னாது அளித்துக் கொணர்க வென்றது இது காமன் திருமுகமாதலானும், முன் இவன் பிரிந்தது அறியாமையானாதலானும் என்க. இளவேனில் வந்தது கோலங் கொண்மி னென்று குயிலிசைக்க மாதவி விரும்பி ஏறிக் கையுறை யேந்தி மயங்கி இருக்கையளாகிக் கேட்டனள்; அன்றியும் நலம்பெற நோக்கிக் கழிப்பிப் பாணியில் மயங்கிச் செவ்வியளாகிக் கைக்கொண்டு அளைஇ எழுதிக் கூய் அளித்துக் கொணர்க ஈங்கென்றாள் என வினை முடிக்க. 72-73. மாலை வாங்கிய வேல் அரி நெடுங்கண் - அங்ஙனம் மாதவி ஈந்த மாலையை வாங்கிய வேல் போலும் அரி பரந்த நெடிய கண்களையுடைய வசந்தமாலை போய், கூலமறுகிற் கோவலற்கு அளிப்ப - கூலங்கள் செறிந்த மறுகினையுடைய கோவலனைக் கண்டு அவனுக்கு அம் மாலையை நல்க; போய் எனவும், கண்டு எனவும் வருவிக்க. நெடுங்கண், ஆகு பெயர். இனி, அம் மாலையைப் பெற்ற கோவலன் மாதவி பண்டு ஊடியும் கூடியும் சென்ற காலத்து அவள்பால் நிகழ்ந்த செய்கை களையெல்லாம் நாடகவுறுப்புக்களாகிய எண்வகை வரிக்கூத்தாகக் கொண்டு வெறுத்துரைத்தல் கூறுகின்றார். குரவை, வரி என்னும் இரண்டனுள் வரியாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற் கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல். அவ் வரி எட்டு வகைப்படும். அவை - கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என்பன. இவற்றினிலக்கணங்களை, "கண்கூ டென்பது கருதுங்காலை, இசைப்ப வாராது தானே வந்து, தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப" '"காண்வரி யென்பது காணுங் காலை, வந்த பின்னர் மன மகிழ் வுறுவன, தந்து நீங்குந் தன்மைய தாகும்" "உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவங், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே" "புறவரி யென்பது புணர்க்குங் காலை, இசைப்ப வந்து தலைவன்முற் படாது, புறத்துநின் றாடி விடைபெறு வதுவே" ''கிளர்வரி யென்பது கிளக்குங் காலை, ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய், இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற்பதுவே" ''தேர்ச்சி யென்பது தெரியுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன், பட்டது முற்றது நினைஇ யிருந்து, தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்" ''காட்சிவரி யென்பது கருதுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப், பட்டது கூறிப் பரிந்துநிற் பதுவே" ''எடுத்துக் கோளை யிசைக்குங் காலை, அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர், எடுத்துக்கோள் புரிந்த தெடுத்துக் கோளே" என்பவற்றான் முறையே அறிக. இனி மாதவியின் செய்கையை இவற்றொடு பொருத்திக் கூறுமாறு காண்க. 74-77. திலகமும் அளகமும் - திலகத்தையும் கூந்தலையு முடைய, சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட - சிறிய கரிய வில்லையும் நீலமலரையும் குமிழம் பூவையும் கொவ்வைக் கனியையும் உறுப்பாகக் கொண்ட, மாதர் வாண் முகத்தின் - காதலையுடைய ஒள்ளிய முகத்தின், மதைஇய நோக்கமொடு - மதர்த்த நோக்கத்தோடே, காதலிற் றோன் றிய கண்கூடு வரியும் - என்மேற் காதலுடையாள்போற் றோன்றி முதற்கண் எதிர்முகமாக நின்று நடித்த நடிப்பும்; புருவம் முதலியன சிலை முதலிய உவமங்களாற் குறிக்கப் பட்டன. கண்கூடு - எதிர்முகமாதல். 78-83. புயல் சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்து - முகிலைச் சுமந்து வருந்திக் கதிரைப் பொழியும் மதியிடத்தே, கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் - கயல்கள் உலாவித் திரிகின்ற விருப்பம் பொருந்திய செவ்வியோடே, பாகு பொதி பவளம் திறந்து - பாகைப் பொதிந்த பவளத்தைத் திறந்து, நிலா உதவிய நாகு இள முத்தின் நகை நலம் காட்டி - ஒளியைத் தருகின்ற மிக்க இளமையுடைய முத்தின் நகை நலத்தைக் காட்டி, வருகென வந்து போகெனப் போகிய -, கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும் - கரிய நெடிய கண்ணாளுடைய காண்வரி யென்னுங் கோலமும்; ஈண்டும் குழல் முகம் விழி வாய் பல் என்பன முறையே புயல் மதி கயல் பவளம் முத்து என்னும் உவமங்களால் கற்போர் நெஞ்சம் காமுறுமாறு எழில்பெறக் கூறப்பட்டுள்ளன. அமிழ்தும் இன் சொல்லு முடைமையால் வாயினைப் பாகு பொதி பவளம் என்றார். நாகிள, ஒருபொருளிருசொல். நகை நலம் - ஒளிநலமும் பல்நலமுமாம். 84-89. அந்தி மாலை வந்ததற்கு இரங்கி - யான் ஊடிப் பிரிந்த காலத்து அந்தி மாலை வந்ததாகப் பிரிவாற்றாமையால் இரங்கி, சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி - சிந்தையில் நோய் மிகும் என் வருத்தத்தை நோக்கி, கிளி புரை கிளவியும் - கிள்ளையை யொத்த சொல்லையும், மட அன நடையும் - மடப்பத்தை யுடைய அன்னமன்ன நடையினையும், களிமயிற் சாயலும் - களிப்பையுடைய மயில்போலுஞ் சாயலினையும், கரந்தனள் ஆகி - மறைத்தவளாகி, செருவேல் நெடுங்கட் சிலதியர் கோலத்து - போர்புரியும் வேல்போன்ற நெடிய கண்ணை யுடைய சிலதியர் கோலத்தைக் கொண்டு, ஒரு தனி வந்த உள்வரி ஆடலும் - தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி யென்னும் நடிப்பும்; சிலதியர் - ஏவற்பெண்டிர்; சிறு குறுந்தொழிலியர். உள்வரி - வேற்றுருக்கொள்ளுதல். 90-93. சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - சிலம்பு வாய்விட்டுப் புலம்பவும் மேகலை வாய்விட்டு ஆர்ப்பவும், கலம் பெறா நுசுப்பினள் - கலங்களைப் புனையவும் பெறாத இடையினை யுடையாள், காதல் நோக்கமொடு - காதலை யுடையாள்போல் நோக்கிய நோக்கோடே, திறத்து வேறாய என் சிறுமை நோக்கி யும் - தன்னைப் பிரிதலால் இயல்பு திரிந்த என் வருத்தத்தை யறிந்தும், புறத்து நின்று ஆடிய புன் புற வரியும் - என்னுடன் அணையாது புறம்பே நின்று நடித்த புல்லிய புற நடிப்பும்; நுசுப்பினள் புலம்பவும் ஆர்ப்பவும் நோக்கமொடு நோக்கியும் ஆடிய வரியுமென்க. கலம் பொறா என்பது பாடமாயின் கலத்தினைச் சுமக்கலாற்றாத என்க. 94-101. கோதையும் குழலும் தாது சேர் அளகமும் - பூந்துகள் பொருந்திய மாலையும் குழலும் அளகமும், ஒரு காழ் முத்தமும் திருமுலைத் தடமும் - ஒரு வடமாகிய முத்தமும் அழகிய முலையிடமும், மின் இடை வருத்த - மின்போலும் இடை யினை வருத்தும்படி, நன்னுதல் தோன்றி - நல்ல நெற்றியை யுடையாள் அணுக வாராதே புறவாயிலில் வந்து நின்று, சிறு குறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்ப - சிலதியர் எனது மறு மாற்றத்தைச் சொல்ல, புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் - புணர்ச்சியை உட்பொதிந்திருக்கிற எனது புலவிச் சொல்லைக் கேட்டு, இருபுற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி - அதனை இருபுற மொழிப் பொருளாகக் கொண்டு, தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் - தளர்ந்த மேனியினையும் அழகிய மெல்லிய கூந்தலினையு முடையாள், கிளர்ந்து வேறாகிய கிளர்வரிக் கோலமும் - புலவியால் வேறுபட்டுப் போகின்றாள் போல நடித்துப் போன நடிப்பும்; தாது சேர் கோதை யெனக் கூட்டுக. குழல், அளகம் என்பன கூந்தலின் இருவகை முடிகள்; ஐம்பாலில் இரண்டு, இருபுற மொழிப் பொருள் - இரண்டு வகையாகப் பொருள் பயக்குஞ் சொல். யான் புணர்ச்சி நிமித்தமாகப் புலந்து சொல்லிவிட்ட மொழியைக் கேட்டு அவ்வாறன்றிப் புலந்து சொன்னேனாகக் கொண்டு நடந்தாள் என்றான். நன்னுதல் கூந்தல் வருத்தத் தோன்றி உய்ப்பக் கேட்டு வேறாகிய என்க. 102-104. பிரிந்து உறை காலத்துப் பரிந்தனள் ஆகி - நான் பிரிந்துறையும் பொழுதில் தான் பிரிவாற்றாது வருந்தினளாகப் பாவித்து, என் உறு கிளைகட்கு - எனது மிக்க கிளைக ளாயினார்க்கு, தன் உறு துயரம் - தனது மிக்க துயரத்தை, தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் - தேர்ந்து தேர்ந்து உரைக்கின்றாளாக நடித்த நடிப்பும், அதுவன்றியும்; 105-106. வண்டு அலர்கோதை - வண்டுகளால் அலர்த்தப்படும் பூங்கோதையினை யுடையாள், மாலையுள் மயங்கி - மாலைப் பொழுதிலே மயங்கி, கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் - காணப்பட்ட கிளைகள் யாவர்க்கும் தன் பிரிவுத் துன்பத்தைச் சொல்லி நடித்த நடிப்பும்; 107-108 அடுத்தடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் - பல்காலும் அவர் முன்புதான் மயங்கிய மயக்கத்தை, எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் - அவர் எடுத்துத் தீர்த்த எடுத்துக்கோள் வரி யென்னும் நடிப்பும்; 109-110. ஆடல் மகளே ஆதலின் ஆயிழை - ஆயிழாய், நாடக மகளே யாதலால், பாடு பெற்றன அப் பைந்தொடி தனக்கு என - இங்ஙனம் நடித்த நடிப்புக்கள் அப் பைந்தொடிக்குப் பெருமையாவனவே என்று கூற; ஆயிழை-வசந்தமாலை; விளி. பைந்தொடி ஆடன் மகளாதலின் நடிப்புக்கள் அவட்கு இயல்பாவனவே என்று கூறி ஓலையை மறுத்தானென்க. மாதவியின் செய்கையில் வைத்து எண்வகை வரியையும் விளக்கிய திறப்பாடு வியத்தற்குரியது. 111-114. அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய - அழகிய பொற்றோடு அணிந்த திருமுகத்தையுடைய மாதவி யெழுதிய, மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி - அழகிய தாழந்தோட்டுத் திருமுகத்தைக் கோவலன் மறுப்பத் தான் அதற்கு வருந்தி, வாடிய உள்ளத்து வசந்தமாலை - வாட்டமுற்ற உள்ளத்தையுடைய வசந்தமாலை, தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப - இதழ் விரிந்த மாலையையுடைய மாதவிக்கு விரைந்து சென்று உரைக்க; அணியும் மணியும் அழகு. தோடு-பொற்றோடும் தாழந்தோடும். 115-118. மாலை வாரார் ஆயினும் - இன்னும் மாலைப் பொழுதினுள் வருவார்; அங்ஙனம் வாராராயினும், மாண் இழை - மாட்சிமைப்பட்ட அணியினையுடையாய், காலை காண்குவம் என - காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போ மெனச் சொல்லி, கையறு நெஞ்சமொடு - செயலற்ற மனத்தோடு, பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த அழகிய மலரமளியின்மீதே வீழ்ந்து இமை பொருந்தாமற் கிடந்தனள், மா மலர் நெடுங்கண் மாதவி தான் என் - கரிய மலர்போலும் நெடிய கண்ணையுடைய மாதவிதான் என்க. வாராராயினும் என்றது வருவாரென்னும் பொருளை அடக்கி நின்றது. காலையில் ஒருதலையாக வருவாரென்பாள் காண்குவம் என்றாள். தான், என் - அசைகள். இது நிலைமண்டில வாசிரியப்பா. வெண்பாவுரை 1. (செந்தாமரை.......கண்ணிமனம்) செந்தாமரை விரிய - செந்தாமரை மலர் விரியவும், தேமாங் கொழுந்து ஒழுக-தேமாவின் கொழுந்து ஒழுகுவது போலும் வனப்புடன் தளிர்க்கவும், மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ - அழகு பொருந்திய அசோகம் இதழ் விரியவும், கொந்து ஆர் - பூங்கொத்துக்கள் நிறைதற்கேதுவாய, இளவேனல் வந்தது ஆல் - இளவேனிற் பொழுது வந்தது; என்னாங்கொல் இன்று வள வேல் நற் கண்ணி மனம் - கூரிய வேல்போலும் நல்ல கண்ணினை யுடையாள் மனம் இன்று என்ன துன்பமுறுமோ; மைந்து - அழகு. கொந்து - கொத்து; மெலித்தல். வேனல் - வேனில். வேலுக்கு வளமாவது கூர்மை. ஆல், அசை. இது வசந்த மாலை யென்னும் கூனி ஓலை கொண்டு செல்கின்ற காலத்துத் தன்னுள்ளே சொல்லியது. 2. (ஊடினீரெல்லாம்.........காண்) ஊடினீர் எல்லாம் - உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரின் ஊடினவர்களே நீயிரெல்லாம், உருவிலான்றன் ஆணை - அநங்கன் ஆணை, கூடு மின் என்று குயில் சாற்ற - கூடுவீராக வென்று குயிற்குலங்கள் சாற்ற, நீடிய வேனற் பாணிக் கலந்தாள் - இளவேனிற் பொழுதில் நின்னோடு என்றும் கலந்தவளுடைய, மென் பூந் திரு முகத்தை - மெல்லிய பூவிலெழுதிய திருமுகத்தை, கானற் பாணிக்கு அலந்தாய் காண் - கானலிடத்து அவள் பாடிய பாட்டிற்கு வருந்தினவனே காண்பாயாக; நீடிய கானற்பாணி என்றுமாம். பாணி இரண்டனுள் முன்னது பொழுது; பின்னது பாட்டு. இதனைக் காணென்று ஓலையை நீட்டினாள் என்க. வேனிற் காதை முற்றிற்று. 9. கனாத்திற முரைத்த காதை (ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதிலே புகார் நகரில் உள்ள பூங்கொடியனைய மகளிர்கள் முல்லை மலரும் நெல்லும் தூவி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டு, இரவிற் கேற்ற வேறு கோலத்தினைக் கொள்ளா நிற்க, சாத்தன் கோயிலில் நாடோறும் வழிபாடு செய்யும் நியமம் பூண்டிருந்த, கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி யென்பாள் கண்ணகிக்கு உற்றதொரு குறை யுண்டென எண்ணிய மனத்தினளாய்க் கோயிலை யடைந்து, இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் அறுகு முதலியவற்றை தூவி வழிபட்டுக் கண்ணகிபாற் போய், 'கணவனைப் பெறுக' என வாழ்த்தினாள். அதுகேட்ட கண்ணகி 'நீ இங்ஙனங் கூறுதலாற் பெறுவேனாயினும் யான் கண்ட கனவினால் எனது நெஞ்சு ஐயுறா நின்றது' என்று கூறித் தான் கண்ட கனவினை எடுத்தியம்பி, அதற்கு விடையாக, “நீ நின் கணவனால் வெறுக்கப் பட்டாயல்லை; முற்பிறப்பிலே கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய்; அத் தீங்கு கெடுவதாக; காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவருடன் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர்; ஆதலின் நாமும் ஒரு நாள் நீராடுவேமாக" என்றுரைத்த தேவந்திக்கு, `அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று' என்று கூறி இருந்தாள். இருந்த அப்பொழுது கோவலன் அங்கு வந்து கண்ணகியோடு பள்ளியறையிற் புகுந்து, அவளது வாடிய மேனி கண்டு வருந்தி, `கரவொழுக்கமுடைய பரத்தையொடு மருவி, என் முன்னோர் தேடித் தந்த பொருட் குவியலையெல்லாம் இழந்து வறுமை யுற்றேன்; இது எனக்கு மிக்க நாணினைத் தருகின்றது' என்று கூறினான். கூறலும், மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமையால் இங்ஙனம் கூறுகின்றான் எனக் கண்ணகி நினைந்து, நகைமுகங் காட்டி, `என்னிடம் இரண்டு சிலம்புகள் உள்ளன; கொண்மின்' என எடுத்தளிப்ப, அவற்றை வாங்கிய கோவலன் `இச் சிலம்பினை முதலாகக் கொண்டு யான் மதுரையை அடைந்து வாணிகஞ் செய்து இழந்த பொருளை ஈட்டத் துணிந்துளேன்; நீயும் என்னுடன் எழுக; என் றுரைத்து, பழவினையானது நெஞ்சை ஒருப்படுத்தலால், ஞாயிறு தோன்றுதற்குமுன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். (இக் காதையின் முதற் பகுதியில் தேவந்தியின் வரலாறு கூறுமிடத்தே, புகாரில் இருந்த கோட்டங்கள் பலவற்றின் பெயரும் கூறப் பட்டுள்ளன..) அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர் கோலங் கொடியிடையார் தாங்கொள் மேலோர்நாள் 5 மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்டு அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் 10 புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந் தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர் 15 பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக் கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய் செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற் படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு 20 சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங் கிடுபிணந் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன் அஞ்ஞைநீ யேங்கி யழலென்று முன்னை 25 உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர் குயிற்பொதும்பர் நீழற் குறுக அயிர்ப்பின்றி மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் 30 துறைபோஏ யவர் முடிந்த பின்னர் இறையோனும் தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் 35 மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து நீவா வெனவுரைத்து நீங்குதலுந் தூமொழி ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும் தீர்த்தத் துறைபடியே னென்றவனைப் பேர்த்திங்கன் மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக் 40 கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென் றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடுதூஉய்ச் சென்று பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன் 45 கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம் பட்ட பதியிற் படாத தொருவார்த்தை இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்றன்மேற் கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக் 50 காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன் தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம் உற்றேனொடு டுற்ற உறுவனோ டியானுற்ற நற்றிறங் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ 55 கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக் கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக் 60 காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகசெய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள் ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள் பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய 65 காவலன் போலங் கடைத்தலையான் வந்துநம் கோவல னென்றாளோர் குற்றிளையாள் கோவலனும் பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ் சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் 70 குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச் சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச் சிலம்பு முதலாகச் சென்ற கலனோ 75 டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர் மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங் கேடலர் கோதா யெழுகென்று நீடி வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனைசுடர் கால்சீயா முன். வெண்பா காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க ? மூதை வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனைசுடர் கால்சீயா முன். உரை 1-4. அகல் நகர் எல்லாம் - அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ் - அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர் - முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய் - நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை - பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி - அழகிய விளக்கையேற்றி, இரவிற்கு ஓர் கோலம் - இராப் பொழுதிற் கேற்றதோர் கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள - கொடி போலும் இடையையுடைய மகளிர் கொள்ளாநிற்க; நிகர் - ஒளி. மாய்தல் - மறைதல். தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி யென விரித்துரைத்துக் கொள்க. 1"நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது, மல்ல லாவண மாலை யயர" என்றார் நக்கீரனாரும். மணி விளக்கம் என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு மாணிக்க விளக்கை மைவிளக்கோடே யெடுத்து என்றுரைப் பாருமுளர். இரவிற்கோர் கோலம் - கொழுநர் மார்பை அணைதற் கேற்ற நொய்தானவை உடுத்தும் புனைந்தும் ஒப்பனை செய்த கோலம். கொடியிடையார் மாலையின்கண் தூவிக் காட்டிக் கோலங் கொள்ள என்றியைக்க. தாம், அசை. 4-8. மேல் ஓர் நாள் - முன்னொரு நாளிலே, மாலதி - மாலதி யென்னும் பெயருடைய ஓர் பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால் ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர - அப் பால் விக்குதலாலே அக் குழவி மரிக்க; மேலோர் நாள் என்பது தொடங்கிக் கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் வரலாறு கூறுகின்றார். மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி ; சக்களத்தி. மாற்றாள் இல்லாத பொழுது குழவி யழுதமையாற் பாலளித்தாளென்க. பால்-ஆன் பாலுமாம். பாலகன் என்பது காலவழக்கு. சோர்தல் - ஈண்டு மரித்தல். மேலை நாள் என்றும் பாடம். 6-8. மாலதியும்-, பார்ப்பானொடு மனையாள் - பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு - என்மேல் அடாப்பழி கூறுத லொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி - ஏற்பன கூறாராதலால் இதற் கென்செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு - அம் மகவை யெடுத்துக்கொண்டு ; பார்ப்பான் - கணவன். ஒடு - எண்ணொடு. படாதன - இல்லாதன; அடாதன. கூறுதலென ஒரு சொல் விரிக்க. படாதன இட்டு எனப் பிரித்து, அடாதவற்றைச் சுமத்தி யென்றுரைத்தலுமாம். 9-13. அமரர் தருக் கோட்டம் - தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள்யானைக் கோட்டம் - ஐராவதம் நிற்குங் கோயில், புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் - அழகினையுடைய பலதேவர் கோயில், பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் - கீழ்த்திசையிற் றோற்றுகின்ற சூரியன் கோயில், ஊர்க் கோட்டம் - இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில், வேற்கோட்டம் - முருகவேள் கோயில், வச்சிரக்கோட்டம் - வச்சிரப் படை நிற்குங் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் - சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன் கோட்டம் - அருகன் கோயில், நிலாக்கோட்டம் - சந்திரன் கோயில், புக்கு எங்கும் - இக் கூறிய கோயில்கள் எங்கும் புக்கு ; புகர் - அழகு. நாகர் - தேவர். பகல் வாயில் - பகற்றோற்று கிறவாயில்; கீழ்த்திசை. உச்சிக்கிழான் - பகற்பொழுதிற் குரியோன். இனி, பகற்பொழுதிற்கு வழியான சூரியன் என்றுமாம். வேல் - ஆகுபெயர் ; வேற்படை நிற்குங் கோயில் என்றுமாம். புறம்பு அணைந்த விடம் புறம்பணையாயிற்று என்பர். சாதவாகனன் - ஐயனார். கோட்டம் யாவும் செவ்வெண். 14-15. தேவிர்காள் - தெய்வங்களே, எம் உறுநோய் - எம்மையுற்ற இத்துன்பத்தை, தீர்ம் என்று - தீர்ப்பீராகவென்று கூறிக் கொண்டு சென்று, மேவி ஓர் பாசண்டச் சாத்தற்கு - ஓர் பாசண்டச் சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால். பாடுகிடந்தாளுக்கு - வரங்கிடந்தாளுக்கு ; தேவு - தெய்வம் ; இர் - முன்னிலைப் பன்மைவிகுதி. உறு - மிக்க என்றுமாம். தீர்ம் - தீரும் என்பதன் ஈற்று மிசை யுகரம் கெட்டது. தீர்மினென்று இரப்பவும் ஒருவரும் தீராமையின் அவ்விடங்களி னீங்கிச் சாத்தன் கோயில் மேவியென்று விரித்துரைத்தலுமாம். பாசண்டம் - தொண்ணூற்றறுவகைச் சமய சாத்திரத்தருக்கக் கோவை என்பர். "பாசண்டத் துறையு மிவற்றுட் பலவாம், பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே" என்பது திவாகரம். இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாகலின் மகா சாத்திரன் என்பது இவற்குப் பெயராயிற்று என்பர். கிடந்தாளுக்கு - கிடந்தாளை ; உருபு மயக்கம். 16-22. ஏசும்படி ஓர் இளங் கொடியாய் - பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய் - குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார், பொய் உரை அன்று பொருள் உரையே - இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி, கையிற் படுபிணம் தா என்று - கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, பறித்து அவள் கைக்கொண்டு - அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து - சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று - செறிந்த இருளிற் போய், ஆங்கு இடுபிணம் தின்னும் - அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடா கினிப் பேய் - இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை - அக் குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள் ; படி - வடிவு. இளங்கொடி - பெண். ஏசும்படி - இகழும்படி என்றுமாம். பொருள் - மெய்ம்மை. சுடுகாட்டுக் கோட்டம் - சக்கர வாளக் கோட்டம் ; இதன் வரலாறு மணிமேகலையிற் சக்கரவாளக் கோட்ட முரைத்த காதையாலறியப்படும். தூங்கு இருள் - யாவரும் துயிலுமிருளுமாம். மடி வயிறு என்னும் பொருட்டாதலை, 1"படியை மடியகத்திட்டான்" என்பதனானும் அறிக. மடியகத் திட்டாள் - விழுங்கினாள் என்றபடி. கோட்டத்து இருளிற் சென்று தின்னும் பேய் இளங்கொடியாய்த் தோன்றி, வரங்கொடார் பொருளுரையே எனச் சொல்லி, தாவென்று பறித்து வாங்கி அம் மகவை மடியகத்திட்டாள் என்க. பேய் இளங்கொடியாய் இருளிற் சென்று என்றுரைத்தலுமாம். பறித்தாள் கைக்கொண்டு என்பதும் பாடம். 22-28. இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு - அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கி யழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன் - அந்தச் சாத்தன் என்னுந் தெய்வம், அஞ்ஞை - அன்னாய், நீ ஏங்கி அழல் என்று- நீ ஏங்கி அழாதொழி யென்று கூறி, முன்னை உயிர்க் குழவி காணாய் என்று அக் குழவியாய் ஓர் குயிற் பொதும்பர் நீழல் குறுக - நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஓர் மரச்செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக் குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித் திரைத்து- ஐயமின்றி அவ் வஞ்சக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடு போய், தாய் கைக்கொடுத்தாள் அத் தையலாள் - அவள் தாயின் கையிற் கொடுத்தாள்; அஞ்ஞை - அன்னை; அண்மைவிளி. அழல் - அழாதே. முன்னை- வழி முன்னர்; பழைய குழவியென்றுமாம். அச் சாத்தன் அக் குழவியாய்க் குறுக அத் தையலாள் எடுத்துக் கொடுத்தாள் என்க. 28-32. தூய மறையோன் பின் மாணியாய் - இருமரபுந் தூய மறையோனுக்குப்பின் செல்லும் பிரமசாரியாய், வான் பொருட் கேள்வித் துறை போய் - சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி, அவர் முடிந்த பின்னர் - தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும் - குழவியாய் வந்த சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து - தன் ஞாதிகளோடும் வெல்வழக் குரைத்து, தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து - தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள் - தன் மனைவியோடே கூடி வாழ்ந்தபின் ஒருநாளில்; வான்பொருள் - கல்வி. அவர் - தந்தையும் தாயரும். தாயர் என்றார் மாலதியையுங் கூட்டி. வழக்குரைத்து எனவே, தன் மனைவிக்குப் பொருட்குறைபாடில்லாமற் செய்து என்பதாயிற்று. இறையோனும் மாணியாய்த் துறைபோய் அவர் முடிந்த பின்னர்க் கடன் கழித்து வழக்குரைத்து மேவிய பின் ஓர் நாள் என்க. மேவினாள் என்று பாடங் கொண்டு தன்னை மேவினவள் என்றுரைப்பர் அரும் பதவுரை யாசிரியர். 33-36. தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு - தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு, பூ வந்த உண்கண் பொறுக்கென்று - பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக என்று நிருமித்து, மேவி - பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி - தனது என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து நீங்குதலும் - நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக ; மக்கள் கண் தெய்வ யாக்கையைக் காணப்பொறாதாகலின் இவள் கண் பொறுக்க வென்று விதித்தனன். தன் மூவா இளநலம் - தனது தெய்வ யாக்கையின் நலம் ; 1"மணங்கமழ் தெய்வத் திள நலங் காட்டி" என்றார் திருமுருகாற்றுப்படையினும். சாத்தன் தேவந்தியுடன் எட்டியாண்டு வாழ்ந்து, பின்பு இங்ஙனம் நீங்கினன் என மேல் 2வரந்தரு காதையுட் கூறப்பட்டுளது. 36-40. தூமொழி - தூய மொழியினை யுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன் - எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று - தீர்த்தத் துறைகளெங்கும் போய்த் தீர்த்த மாடுவேன் என்று என்னை விட்டு நீங்கினன் ; அவனைப் பேர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய் என - அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல் இட்டு - ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - அவன் கோயிலை நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள் ; 40-4. வாட்டருஞ் சீர் - குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு - கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று - கணவன் பிரிதலால் உற்றதோர் துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இனையளாய் - நினைந்த நெஞ்சின் வருத்தத்தை யுடையளாய், நண்ணி - கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் - அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று - கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள்- கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள்; வாடு வாட்டென விகாரமாயிற்று. வாடுதல் - குறைதல். பிறராற் கெடுத்தற்கரிய என்றுமாம். இனைதல் - வருந்துதல் ; இனைதல் இனையென்றாயிற்று ; விகாரம். கணவனோடு - வேற்றுமை மயக்கம். கண்ணகிபாற் சென்று நண்ணித் தூவிப் பெறுக வென்றாள் எனினு மமையும். 44-54. பெறுகேன் - நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் - யான் உற்றதோர் கனவினால் என் னெஞ்சம் ஐயுறுகின்றது ; அக் கனவு என்னையெனின், என் கை பிடித்தனன் போய் - என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட் பட்டேம் - யாங்கள் ஓர் பெரிய பதியின்கட் புக்கேம்; பட்ட பதியில் - அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல் - எங்கட்கு ஏலாததோர் பழிச் சொல்லை அவ் வூரார் இடுதேளிடுமாறுபோல என்மேற் போட்டனர் ; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு - அப் பழிமொழியால் கோவலற்கு ஓர் துன்ப முண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் - அவ் வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால் - அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு ; உரையாடேன் - அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன் ; தீக்குற்றம் போலும் செறி தொடீஇ - செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று ; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற - அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும் - நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும்; (என - என்று சொல்ல), கடுக்கும் - ஐயுறும் ; கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது. கனவில் என் கைப் பிடித்தனன் போக எனலுமாம். இடு தேளிடுதல் - தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல். என்றன், தன் - அசை. கோவலன் சிலம்பு கவர்ந்தான் என்ற பழிச் சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு என்றன் மேல் இட்டனர் என்றாள். என்று - என்று சொல்ல; சொல்ல என ஒரு சொல் வருவிக்க. அரசன் முன் செல்லாதேன் சென்று வழக்குரையாதேன் வழக்குரைத்தேன் என்றாளென்க. காவலனோடு, ஒடு - எண்ணொடு ; வேறு வினை ஒடுவுமாம். தீங்கு- அரசன் இறத்தலும் ஊர் எரியுண்ணலும். 1"உரையார், இழிதக்க காணிற் கனா" என்பராகலின், உரையாடேன் என்றாள். தீக்குற்றம்- முலை திருகி யெறிதல். உறுவன் - மிக்கோன்; கோவலன். நற்றிறம் - இருவரும் துறக்கம் புகுதல். இது கிட்டாததென்று நகையாகும் என்றாள். என வென ஒரு சொல் வருவித்து நகையாகுமென என்றுரைக்க. 54-64. பொற்றொடீஇ - பொன்னாலாய தொடியினையுடையாய், கைத்தாயும் அல்லை - நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமல்லை; கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்- முற்பிறப்பிலே நின்கணவன் பொருட்டுக் காக்கவேண்டிய தொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக - அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக ; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் - காவிரி தன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்க முகத்தயல தாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல் - பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம் உள சோமகுண்டம் சூரிய குண்டம் - சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன ; துறை மூழ்கி - அவற்றின் துறைகளில் மூழ்கி, காம வேள் கோட்டம் தொழுதார் - மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் - மகளிர் இவ் வுலகத்திலே தம் கணவரோடும் பிரியாதிருந்து இன்பமுறுவர் ; போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் - மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர் ; யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற அணியிழைக்கு - அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடக் கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே ; பொய்த்தாயாகலின் தீங்குமிக்கது, அதுவுங் கெடுக என்றும், போய்ப் பிறந்து கணவரொடும் இன்புறுவர் ஆதலால் என்றும் விரித் துரைக்க. இவ் வுலகத்து இன்புறலையும் போக பூமியிற் போய்ப் பிறத் தலையும் குண்டமிரண்டிற்கும் நிரனிறை யாக்கலுமாம். பட்டினப் பாலையிலும் இவை 1"இருகாமத் திணையேரி" எனக் கூறப்பட்டன. கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்குதல் இயல்பன்றென்பது, 2 " தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை." 3" சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார்." என்பவற்றானறியப்படும். 64-66. நீடிய காவலன் போலும் - பெருமையுடைய நம் அரசன் போலும், சடைத்தலையான் வந்து - வந்து நம் வாயிலிடத் தானாயினான்; நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் - அவன் நம் கோவலனே என்றாள் ஓர் குறுந்தொழில் செய்யும் இளையவள் ; தூரத்தே பார்த்துக் காவலன் போலுமென ஐயுற்று அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள். காவலன் போலும் கோவலன் வந்து நீடிய கடைத்தலையான் என்றுரைத் தலுமாம். குற்றிளையாள் என்றாளென்க. 66-71. கோவலனும் - அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு - பெருமையமைந்த படுக்கை யிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன் காதலியின் வாட்ட முற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும் - எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி - வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தி யோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த - நம் குலத்திலுள்ளார் தேடித் தந்த மலை போலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு - வறுமை, நாணுத் தரும் எனக்கு என்ன - எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற ; "மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள" அக் காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத் துரைக்க. சலம் - வஞ்சம், பொய். இலம்பாடு - இல்லாமையுண்டாதல்; வறுமை. கெட்டால் மதிதோன்றும் என்றதற்கேற்ப இன்று நாணுத் தருமென்றான். 72-73. நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி - (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட் குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென - இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன; அவற்றைக் கொண்மினென்றுரைக்க ; சிலம்புள என்றாள்; இவை யொழிந்த கலனெல்லாம் தொலைதலால். கொண்ம் - கொள்ளும் என்பதன் ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட ளகரம் திரிந்தது. 73-79. சேயிழை கேள் - சேயிழையே இதனைக் கேள், இச்சிலம்பு முதலாக - நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன் - முன்பு நான் வாங்கியழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று - பரந்த புகழையுடைய மாடங்களை யுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று ; என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று - இதழ்கள் விரிந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினை கடைக் கூட்ட - முற்பிறப்பிற் றான்செய்த தீவினை நெடுங் காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் -அவ்வினையினது ஏவலைக் கொண்டான் ; கங்குல் - இருளை, கனை சுடர் - ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன் - அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க. நீடி - நெடுங்காலம் நின்று. வியம் - ஏவல். கால் - இடம். சீத்தல் - போக்குதல். மதுரையகத்துச் சென்று ஈட்டுதலுற்றே னென்றானென்க. இது கலிவெண்பா. வெண்பாவுரை (காதலி கண்ட ...... சீயாமுன்.) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவு, கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறி தாக்க - கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க, மூதை வினை கடைக் கூட்ட - பழவினை நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன் - கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல் - வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல். கனாத்திற முரைத்த காதை முற்றிற்று. 10. நாடுகாண் காதை (கோவலனும் கண்ணகியும் வைகறை யாமத்தே பிறரறியாத படி புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின் சங்கமுகத் துறையையும் கழிந்து, வடகரை வழியாகச் சோலைகளினூடே மேற்றிசை நோக்கிச் சென்று ஒருகாத தூரங் கடந்து, கவுந்தியடி களின் தவப் பள்ளியிருக்கும் சோலையை அடைந்தனர். அப்பொழுது மெல்லியலாகிய கண்ணகி இடையும் அடியும் வருந்திக் குறுக வுயிர்த்து, 'மதுரை மூதூர் யாதோ' என வினாவ, 'நம் நாட்டிற்கு அப்பால் ஆறைங்காதமே ; அணியதுதான்' என்று கூறிக் கோவலன் நகுதல் செய்து, சிறையகத்திருந்த ஆருகத சமயத் தவ முதியாளாகிய கவுந்தியைக் கண்டு அடிதொழுது, தாங்கள் மதுரைக்குச் செல்வதனைக் கூற, அவளும் மதுரையிலுள்ள பெரியோர்பால் அறவுரை கேட்டற்கும் அறிவனை ஏத்தற்கும் ஒன்றிய உள்ளமுடையேன் ஆதலின் யானும் போதுவல் என்று கூறி உடன்வர, மூவரும் குடதிசையில் வழிக்கொண்டு பலவகை வளங்களையும் ஒலிகளையும் கண்டும் கேட்டும் அவலந் தோன்றாது ஆர்வ நெஞ்சமுடன் நாடோறும் காவதமல்லது கடவாராகி இடையிடையே பலநாள் தங்கிச் செல்வுழி ஒருநாள் ஆற்றிடைக் குறையாகிய சீரங்கத்தை அடைந்தனர். அடைந்தவர், அங்குள்ளதோர் சோலைக் கண் வந்தெய்திய சாரணரைத் தொழுது, அவர் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டுக் கவுந்தியடிகள் அருகதேவனை ஏத்திய பின்னர், மூவரும் ஓடத்திலேறிக் காவிரியின் தென்கரையை அடைந்து ஓர் பூம்பொழிலில் இருந்துழி, அவ்வழிப் போந்த ஓர் பரத்தையும் தூர்த்தனும் கண்ணகியையும் கோவலனையும் நோக்கி அடாத சொற் கூறி இகழ்ந்தனராகலின் கவுந்தியடிகள் அவர்களை நரிகளாகு மாறு சபித்துக், கோவலனும் கண்ணகியும் அவர்கட்கிரங்கி வேண்ட, அவர்களெய்திய சாபம் ஓராண்டில் நீங்குமாறு அருள் செய்தனர். பின்பு மூவரும் உறையூரை அடைந்தனர். (இக்காதையில் கோவலன் கண்ணகியை நோக்கிக் கவுந்தியடிகள் வழி கூறும் வாயிலாகச் சோணாட்டின் மருதவளமாண்பனைத்தும் அழகு பெறக் கூறப்பட்டுள்ளன. சாரணரும் கவுந்தியடிகளும் அருகதேவனையேத்தும் உரைகளும் அறிந்து இன்புறற்பாலன.) வான்கண் விழியா வைகறை யாமத்து மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாட் கங்குல் ஊழ்வினை கடைஇ உள்ளந் துரப்ப 5 ஏழகத் தகரும் எகினக் கவரியும் தூமயி ரன்னமும் துணையெனத் திரியும் தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு அணிகிளர் அரவின் அறிதுயி லமர்ந்த 10 மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து பணையைந் தோங்கிய பாசிலைந் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும் இந்திர விகார மேழுடன் போகிப் 15 புலவூண் துறந்து பொய்யா விரதத் தவல நீத்தறிந் தடங்கிய கொள்கை மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி யைந்துந் தம்முடன் கூடி 20 வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினுஞ் சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென உலக நோன்பிக ளொருங்குட னிட்ட 25 இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக விடைகழி யொருங்குட னீங்கிக் கலையி லாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற் கிறுக்கும் 30 பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையி னெயிற்புறம் போகித் தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகங் கழிந்து குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி 35 வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண் இறுங்கொடி நுசுப்போ டினைந்தடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்து 40 முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க மதுரை மூதூர் யாதென வினவ ஆறைங் காதநம் மகனாட் டும்பர் நாறைங் கூந்தல் நணித்தென நக்குத் தேமொழி தன்னொடுஞ் சிறையகத் திருந்த 45 காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் உருவுங் குலனு முயர்பே ரொழுக்கமும் பெருமகன் றிருமொழி பிறழா நோன்பும் உடையி ரென்னோ வுறுக ணாளரிற் கடைகழிந் திங்ஙனங் கருதிய வாறென 50 உரையாட் டில்லை யுறுதவத் தீர்யான் மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் பாடகச் சீறடி பரற்பகை யுழவா காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ 55 உரிய தன்றீங் கொழிகென வொழியீர் மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டாங் கறிவனை யேத்தத் தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக் கொன்றிய வுள்ள முடையே னாகலின் 60 போதுவல் யானும் போதுமி னென்ற காவுந்தி யையையைக் கைதொழு தேத்தி அடிக ணீரே யருளுதி ராயினித் தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேனெனக் கோவலன் காணாய் கொண்ட விந்நெறிக் 65 கேதந் தருவன யாங்கும்பல கேண்மோ வெயினிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர் 70 பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் கையறு துன்பங் காட்டினுங் காட்டும் உதிர்பூஞ் செம்மலி னொதுங்கினர் கழிவோர் முதிர்தேம் பழம்பகை முட்டினு முட்டும் மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச் 75 செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும் கயனெடுங் கண்ணி காதற் கேள்வ வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப் பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை 80 மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற் கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண் கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் அடங்கா வேட்கையின் அறிவஞ ரெய்திக் 85 குடங்கையி னொண்டு கொள்ளவும் கூடும் குறுந ரிட்ட குவளையம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி அறியா தடியாங் கிடுதலுங் கூடும் 90 எறிநீ ரடைகரை இயக்கந் தன்னிற் பொறிமா ணலவனு நந்தும் போற்றாது ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில் தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா வயலுஞ் சோலையு மல்ல தியாங்கணும் 95 அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு குறியறிந் தவையவை குறுகா தோம்பெனத் தோமறு கடிஞையும் சுவன்மே லறுவையும் காவுந்தி யையைகைப் பீலியுங் கொண்டு 100 மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப் பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ் 105 சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக் குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கு மொலியே யல்லது 110 ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும் ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக் கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ் 115 செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும் 120 உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய கழாஅமயிர் யாக்கைச் செங்கட் காரான் சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக் 125 கருங்கை வினைஞருங் களமருங் கூடி ஒருங்குநின் றார்க்கு மொலியே யன்றியும் கடிமலர் களைந்து முடிநா றழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமுந் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் 130 செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர் வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும் கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ 135 ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும் அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும் தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த மண்கணை முழவின் மகிழிசை யோதையும் 140 பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங் கார்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார் உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு வுயிர்க்கும் அழற்றிக ழட்டில் மறையோ ராக்கிய ஆவுதி நறும்புகை 145 இறையுயர் மாட மெங்கணும் போர்த்து மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கை யன்றியும் பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் 150 உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும் பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து மங்குல் வானத்து மலையிற் றோன்றும் ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு காவத மல்லது கடவா ராகிப் 155 பன்னாட் டங்கிச் சென்னா ளொருநாள் ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக் குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து வானவ ருறையும் பூநா றொருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப் 160 பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப் பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப் பண்டைத் தொல்வினை பாறுக வென்றே 165 கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர் வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும் ஆர்வமுஞ் செற்றமு மகல நீக்கிய வீர னாகலின் விழுமம் கொள்ளான் 170 கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை இட்ட வித்தி னெதிர்ந்துவந் தெய்தி ஒட்டுங் காலை யொழிக்கவு மொண்ணா கடுங்கால் நெடுவெளி யிடுஞ்சுட ரென்ன 175 ஒருங்குட னில்லா உடம்பிடை உயிர்கள் அறிவ னறவோ னறிவுவரம் பிகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் 180 சினவரன் தேவன் சிவகதி நாயகன் பரமன் குணவதன் பரத்தி லொளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன் 185 குறைவில் புகழேன் குணப்பெருங் கோமான் சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி 190 ஓதிய வேதத் தொளியுறி னல்லது போதார் பிறவிப் பொதியறை யோரெனச் சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற் காவுந்தி யுந்தன் கைதலை மேற்கொண் டொருமூன் றவித்தோ னோதிய ஞானத் 195 திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா காமனை வென்றோ னாயிரத் தெட்டு நாம மல்லது நவிலா தென்னா ஐவரை வென்றோ னடியிணை யல்லது கைவரைக் காணினுங் காணா வென்கண் 200 அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது அருக ரறவ னறிவோற் கல்லதென் இருகையுங் கூடி யொருவழிக் குவியா மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென் 205 தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது இறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது மறுதர வோதியென் மனம்புடை பெயராது என்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற்கு ஒன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி 210 நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப் பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து காரணி பூம்பொழிற் காவிரிப் பேர்யாற்று 215 நீரணி மாடத்து நெடுந்துறை போகி மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும் தீதுதீர் நியமத் தென்கரை யெய்திப் போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு 220 கொங்கலர் பூம்பொழிற் குறுகினர் சென்றோர் காமனுந் தேவியும் போலும் ஈங்கிவர் ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன் ஆற்றுவழிப் பட்டோர் ஆரென வினவவென் 225 மக்கள் காணீர் மானிட யாக்கையர் பக்கம் நீங்குமின் பரிபுலம் பினரென உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ கற்றறிந் தீரெனத் தீமொழிகேட்டுச் செவியகம் புதைத்துக் 230 காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க எள்ளுநர் போலுமிவர் என்பூங் கோதையை முள்ளுடைக் காட்டின் முதுநரி யாகெனக் கவுந்தி யிட்ட தவந்தரு சாபம் கட்டிய தாகலின் பட்டதை யறியார் 235 குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியா மையென் றறியல் வேண்டும் செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க் 240 குய்திக் காலம் உரையீ ரோவென அறியா மையினின் றிழிபிறப் புற்றோர் உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்கிப் பன்னிரு மதியம் படர்நோ யுழந்தபின் முன்னை யுருவம் பெறுகவீங் கிவரெனச் 245 சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின் காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும் முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென். கட்டுரை முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் தொடிவிளங்கு தடக்கைச் சோழர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5 விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் 10 அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் பரந்திசை யெய்திய பாரதி விருத்தியும் திணைநிலை வரியும் இணைநிலை வரியும் அணைவுறக் கிடந்த யாழின் றொகுதியும் ஈரேழ் சகோடமும் இடநிலைப் பாலையும் 15 தாரத் தாக்கமும் தான்தெரி பண்ணும் ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும் என்றிவை யனைத்தும் பிறபொருள் வைப்போ டொன்றித் தோன்றுந் தனிக்கோள் நிலைமையும் ஒருபரிசா நோக்கிக் கிடந்த 20 புகார்க் காண்டம் முற்றிற்று. வெண்பா காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ ? வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். உரை 1-3. வான்கண் விழியா வைகறை யாமத்து - உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய யாமத்தின் கண், மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்க - மீன் விளங்கும் வானத்தினின்றும் வெள்ளிய திங்கள் நீங்கிற்றாக, கார் இருள் நின்ற கடை நாட் கங்குல் - கரிய இருள் இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில்; வான்கண் - சிறந்தகண் ; காண்டற்குக் கருவியாகிய கண்ணொளி யினும் காணப்படும் பொருளினும் ஞாயிற்றினொளி கலப்பினன்றி ஒன்றையும் காணலாகாமையின், அதனைச் சிறந்த கண் என்றார். இனி, வான்கண் - விசும்பின் கண்ணாகிய ஞாயிறு என்றுமாம் ; 1"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக, இயங்கிய விருசுடர் கண்ணென" என்றார் பிறரும். இறைவன் கண்ணென்பாருமுளர். தோன்றாத என்பதனைக் கண் என்றதற்கேற்ப விழியா என்றார். இருள் கடைநின்ற என மாறுக. இதனால் பூருவபக்கமென்ப தாயிற்று. ஈண்டு அடியார்க்கு நல்லார், அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாம் பக்கமும் சோதியுமாம் என்றும், அத் திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற் கொடி யேற்றி இருபத்தெட்டு நாளும் விழா நடந்த தென்றும், வைகாசி இருபத்தெட்டிலே முற்பக்கத்தின் பதின்மூன்றாந் திதியும் திங்கட்கிழமையும் கூடிய அனுடத்தில் கடலாடினரென்றும், வைகாசி இருபத்தொன்பதில் முற்பக்கத்தின் பதினாலாந் திதியில் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்தில் வைகறைப் பொழுதினிடத்து நிலவு பட்ட அந்தரத் திருளிலே கோவலன் மதுரைக்குப் புறப்படலாயினன் என்றும் கூறுகின்றார். அவர், 2"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என முன்னரும், 3"ஆடித் திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண, உரைகால் மதுரையோ டரசுகேடுறுமெனும், உரையு முண்டே" எனப் பின்னரும் போந்த குறிப்புக்களையும், மணிமேகலையில் 4"மேலோர் விழைய விழாக்கோளெடுத்த, நாலேழ் நாளினும்" 5"தேவரு மக்களு மொத்துடன் றிரிதரும், நாலேழ் நாளினும்" எனக் கூறப்பட்டிருப்பவற்றையும் பற்றுக் கோடாகக் கொண்டும், கோவலன் புறப்பட்ட நாள் தீயதாகல் வேண்டுமென்னும் கருத்துடனும் இவ்வாறு ஊகித்தெழுதினாராவர். ஆயின், இவையெல்லாம் கணிதமுறையுடன் கூடிய உண்மைகளெனத் துணிதல் சாலாது. வைகாசித் திங்களில் முற்பக்கத்தின் பதின்மூன்றாந் திதியும் அனுடமும் கூடுதலென்பதே இயற்கையன்றாகும். இவையெல்லாம் ஆராய்ந்து துணிதற்குரியன. 4. ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப - முன்னைத் தீவினை யானது கடாவுதலால் உள்ளம் தன்னைச் செலுத்துதலான் ; 5-8 ஏழகத் தகரும் - ஆட்டுக் கிடாயும், எகினக் கவரியும்- கவரியாகிய மானும், தூ மயிர் அன்னமும் - தூய சிறகினையுடைய அன்னமும் ஆகிய இவை, துணை எனத் திரியும் - தம்முள் இனமல்லவாயினும் இனம்போல ஒருங்கு கூடித் திரியும், தாழொடு குயின்ற தகைசால் சிறப்பின் - தாழொடு பண்ணப் பெற்ற பெருமை பொருந்திய சிறப்பினையுடைய, நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து - மிகப் பெரிய கதவினையுடைய நெடிய இடைகழியைக் கடந்து, ஆங்கு - அப்பொழுதே ; ஏழகத் தகர், எகினக் கவரி யென்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை. எகினம் - ஈண்டு மான். 1"நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை, குறுங்கா லன்னமொ டுகளு முன்கடை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும். குயின்ற வாயில் என்க. ஈண்டு வாயில் என்றது கதவினை ; ஆகுபெயர். தாழொடு குயின்ற என்றது போர்க் கதவாகலின் பின்பு நெகிழாவண்ணம், பண்ணுகின்ற போதே உடன்பண்ணிய என்றபடி. 9-10. அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த - அழகு விளங்கும் அரவணையின்மீது அறிதுயிலைப் பொருந்திய, மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - நீலமணிபோலும் நிறமுடை யோனாகிய திருமாலின் கோயிலை வலம் செய்து நீங்கி; மணிவண்ணன் என்பது பெயருமாம். அறி துயில்-யாவற்றையும் அறிந்துகொண்டே துயிலுதல் ; துயிலுதல் - பதைப்பின்றி யிருத்தல் ; இதனை யோக நித்திரை என்பர். 11-14. பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி - உயர்ந்த ஐந்து பரிய கிளையினையும் பசிய இலையினையுமுடைய மாபோதியின், அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - எழில் விளங்கும் நிழலி லெழுந்தருளிய புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை, அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் - விசும்பியங்குவோராகிய சாரணர் மறைய இருந்து ஓதி யாவர்க்கும் பொருள் விளங்கக் கூறப்படும், இந்திர விகாரம் ஏழ் உடன் போகி - இந்திரன் ஆக்கிய விகாரங்களேழினையும் முறையே கண்டு அவற்றைக் கழிந்து போய் ; போதி - போதத்தையுடையது ; அரசு. போதம் - ஞானம். அரசு என்னும் பெயரும் அதன் தலைமையை யுணர்த்தும். புத்தன் அரச மரத்தடியில் ஞானம் பெற்றதும், யான் தருக்களில் அரசாகின்றேன் எனக் கண்ணன் பகவற்கீதையிற் கூறியதும், பிறவும் இதன் பெருமைக்குச் சான்றாம். திருமொழி - ஆகமம் ; ஆகுபெயர். அறைந்தனர் சாற்றுதல் - மூலங் கூறிப் பொருளுரைத்தல். அறைந்தனர் - முற்றெச்சம். விகாரம் - நினைவினானாக்குதல். 15-25. புலவூண் துறந்து - புலாலாகிய ஊண் உண்ணுதலை விலக்கி, பொய்யா விரதத்து - பொய் கூறாமையாகிய விரதத் தொடு பொருந்தி, அவலம் நீத்து - அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு, அறிந்து - பொருணூல்களை உணர்ந்து, அடங்கிய கொள்கை - ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையினை உடையராய், மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய - உண்மைத்திறனை அறிந்த சீரியோர் கூடிய, அருகத்தானத்து - ஸ்ரீகோயிலில், ஐவகை நின்ற சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்து - பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்தியும் தம்முட் கூடி வந்து கலந்த சிறந்த பெரிய மன்றத்தின்கண், பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் - பொற் பூவினையுடைய அசோகின் எழில் விளங்கும் கொழுவிய நிழலின் கண், நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என - திரு அபிடேக விழா நாளினும் தேர்த் திருநாளினும் சாரணர் வரத்தகுமென்று, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச்சிலாதலம் தொழுது வலம்கொண்டு - சாவகர் யாவரும் கூடியிடப்பெற்ற விளங்காநின்ற ஒளியினையுடைய சிலாவட்டத்தை வணங்கி வலம் செய்து ; புலவு ஊண் - புலாலோடே உண்ணும் உணவுமாம். அவலம் - அழுக்காறு அவாமுதலியன. ஐவகை என்றது பஞ்சபரமேட்டி களை; அவர்களாவார்: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என இவர். பொலம் - பொன். உலக நோன்பிகள் - உலக வழக்கொடு பொருந்தின விரதிகள் ; அவர் இல்லறத்தினையுடைய சாவகர். விழுமியோர் குழீஇய அருகத் தானத்து மன்று எனவும், ‘ஐவகை நின்ற சந்தி எனவும் மாறுக. 'நீரணி விழவு' என்பதற்கு, விழு அயனாதிகள்' என்பர் அடியார்க்குநல்லார். மன்றிற் பிண்டி நீழலில் இட்ட சிலாதலமெனச் சேர்க்க. 26-27. மலை தலைக் கொண்ட பேர் யாறு போலும் உலக இடை கழி ஒருங்குடன் நீங்கி - மலையிடத்துத் தலைப்பினை உடையவோர் பெரிய யாறு போன்ற உலகின்கண்ணுள்ளோர் போக்கு வரவு செய்தற்கமைந்த ஊர்வாயிலை அக்காலத்துச் செல்வாரொடு கலந்து சென்று அதனை விட்டு நீங்கி; உலகின்கண்ணுள்ளோர் பலரும் புகார்க்கண் வாணிகத்தின் பொருட்டு வந்து சேர்வாராகலானும், எத்துணையும் பெரியதோர் நகரமாகலானும் புகார் நகரினை உலகமே போலக் கொண்டு அதன் வாயிலை உலக இடைகழியென்பர் ; இவ்வாறே அதிலுள்ள அம்பலத்தை உலக அறவியென்று கூறுவர். இனி, 1"மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்" என்பதனால் உலகின் ஒரு பகுதியை உலகமென்னலும் பொருந்தும். தெரு வொழுங்கிற்கு இடையே கழிதலின் இடைகழி எனப்பட்டது. மலையும் யாறும் முறையே கோபுர வாயிலுக்கும் தெருவிற்கும் உவமங்களாம். 28-31. கலையிலாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் - சோழ அரசனுக்குக் காமன் அழகிய வேனிலொடு பொதியிற் றென்றலையும் திறையிடுகின்ற, பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற் புறம் போகி - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய இல வந்திகையினது மதிலின்புறத்தே சென்று : கலையிலாளன் - அநங்கன் ; மன்மதன். பந்தர் - நிழல். இலவந்திகை - நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை ; அஃது அரசனும் உரிமையு மாடுங் காவற் சோலை. இதனை நீராவி என்பாருமுளர். மன்னவற்கு வேனிலொடு மாருதத்தினை இறுக்கும் இலவந்திகை எனக் கூட்டுக. இனிப் பந்தர் என்பதற்குச் சோலை எனப் பொருள் கொண்டு, சோலையினையும் நீராவியினையுமுடைய எயில் எனலுமாம். 32-33. தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடை முகம் கழிந்து - தாழ்ந்த சோலை இருமருங்கிலும் சூழ்ந்த புனலாட்டிற்குச் செல்லும் பெரிய நெறியினையுடைய காவிரிக் கரையிடத்துச் சங்கமுகத்துறை வாயிலையும் நீங்கி ; காலையில் நாணீராடுவோர் பிறர்முகம் நோக்காது போதற்கு மறைந்து செல்வர் ; இவரும் அங்ஙனமே சென்றனர் என்பதற்குக் கடைமுகங் கழிந்தென்றார். 34. குடதிசைக் கொண்டு - மேற்கு நோக்கி ; 34-35. கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ; நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம். 36-41. காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக் கண் பொருந்த அப்பொழுது, இறுங்கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து - நறிய பலவான கூந்தலையுடைய கண்ணகி இற்றுவிடும் எனத்தக்க கொடிபோன்ற இடையும் அடியும் மிகவருந்தி இளைப்பானே பலவாகக் குறுக மூச்செறிந்து, முதிராக் கிளவியின் முள் எயிறு இலங்க மதுரை மூதூர் யாதென வினவ - முற்றாத மழலைச் சொற்களானே கூரிய பற்கள் விளங்க மதுரை என்னும் பழைய வூர் எதுவோ தான் என்று கோவலனைக் கேட்ப; பொருந்தி என்பதனைப் பொருந்த எனத் திரிக்க. நின்றாங்கே பொருள் கூறலுமாம். காவதம் - காதம் ; பகுதிப்பொருள் விகுதி, கண்ணகி வெயினிறம் பொறா மெல்லியலாகலின் தான் சிறிது நெறியே சென்றிருப்பினும் பெரிது சென்றனளாக எண்ணுதலின் மதுரை மூதூர் யாதென வினவினளென்க. இராமனுடன் வனத் திற்கேக லுற்ற சீதை அயோத்தியின் மதில் வாயிலைக் கடக்குமுன் காடு எவ்விடத்தது என்று வினாவினாளாகக் கம்பர் கூறிய, 1" நீண்டமுடி வேந்தனரு ளெய்திநிறை செல்வம் பூண்டதனை நீங்கிநெறி போதலுறு நாளின் ஆண்டநக ராரையொடு வாயிலக லாமுன் யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்" என்னுஞ் செய்யுள் இதனோடு ஒத்து நோக்கி இன்புறற்பாலது. 42-43 ஆறைங் காதம் நம் அகல்நாட் டும்பர் நாறு ஐங் கூந்தல் நணித்து என நக்கு - கோவலன் நீ வினவிய மதுரை நமது அகன்ற நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதத்துள்ளது இனி அண்ணிது என்று கூறி நகைத்து; முப்பது காதமென்னும் பொருள் மறைந்து, ஆறு அல்லது ஐந்து காதம் என்னும் பொருள் தோன்ற `ஆறைங்காத' மென்றான். நகை - துன்ப நகை ; பிறர்கட் டோன்றிய பேதைமை காரணமாகத் தோன்றிய நகையுமாம். கூந்தல், விளி. 44-45. தே மொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழலும் -தேனை யொத்த மொழியினையுடைய கண்ணகியொடும் சென்று பள்ளியகத் திருந்த கவுந்தி யடிகளைக் கண்டு அடிவணங்குதலும்; சிறை - தவவேலி என்பர் அடியார்க்கு நல்லார், ஐயை - ஐயன் என்பதன் பெண்பால். கழிந்து கழிந்து போகிக் கொண்டு நீங்கிப் போகிக் கழிந்து நுழைந்து நடந்து பொருந்த நறும்பல் கூந்தல் இனைந்து வருந்தி உயிர்த்து வினவ நணித்தென நக்குக் கண்டு அடி தொழலுமென்க. 46-49. உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் - அழகும் உயர் குடிப் பிறப்பும் உயர்விற்குக் காரணமாய பெருமை பொருந்திய ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் - அருக தேவனின் ஆகமக் கூற்றினின்றும் தப்பாத விரதமும் ஆகிய இவற்றை உடைய நீங்கள், என்னோ உறுகணாளரிற் கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறு என - தீவினையாளரைப் போல நும்மிடத்தை விட்டு நீங்கி இவ்வாறு வருதற்குக் கருதிய தென்னோ எனக் கேட்ப ; உறுகணாளர் - மிடியாளர் எனலுமாம். கடைகழிதல் இவர்க்கு முறையன்றாகலான் கடைகழிந்தென்றார். உம்மைகள் சிறப்பும்மை. உடையீர் இங்ஙனங் கருதியவாறு என்னோ என்க. 50-51. .உரையாட்டு இல்லை உறுதவத்தீர் யான் மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் - மிக்க தவத்தினை யுடையீர் இவ் வினாவிற்கு யான் சொல்லத்தக்க தொன்றில்லை ஆயினும் மதுரை மூதூரிற் சென்று பொருளீட்டும் வேட்கையை உடை யேனாயினேன் என்று கூற ; 1"சென்ற கலனோடு உலந்த பொருளீட்டுதலுற்றேன்" என இவன் முன்னர்க் காதையில் கூறியவதனால் 'வரை பொருள்' என் பதற்குத் தான் தேடுவதாக அறுதி செய்து கொண்ட பொருள் என்க. எனவென ஒரு சொல் வருவிக்க. இனிக் கவுந்தியடிகள் கூறுவார். 52-54. பாடகச் சீறடி பரற்பகை உழவா -மதுரை செல்வது நும் கருத்தாயின் இவளது பாடக மணிந்த சிறிய வடிகள் பருக்கை யாகிய பகையை வெல்ல மாட்டா, காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ - ஆதலால் நீர் காடும் நாடுமாகிய இவ்வழியைக் கடத்தற்கு இவள் தன்மை ஏற்ற தன்று இனி ஊழ் என் செய்யுமோ அதனை அறிவார் யார்; காடு இடையிட்ட நாடு - காடும் நாடும். அறிகுநர் யாரோ என்றது இரக்கம் தோற்றி நின்றது. 55. உரியதன்று ஈங்கு ஒழிகென ஒழியீர் - இவை அன்றியும் இவளை உடன்கொண்டு சேறல் ஏற்புடைத்தன்று ஆகலின் இனிச் செலவை ஒழிமின் என யான் ஒழிப்பவும் ஒழிகின்றி லீர் ; இவர்க்கு மேல் நிகழ்வதறிந்து ஒழிகெனக் கூறினாரெனின், அடைக்கலக் காதையுள் ஒரு பொழுதிற்கு ஓம்படை பல கூற வேண்டாமையின் இவர்க்குத் தவத்தினாலே சபித்தலன்றிக் காலவுணர்ச்சியின்மை உணர்க வென்பர் அடியார்க்கு நல்லார். 56-63 மற உரை நீத்த மாசறு கேள்வியர் - மற வுரைகளை நீக்கிய குற்றமற்ற கேள்விப் பயனை உடையவர்தம், அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அறவுரைகளைக் கேட்டு அக் கேட்டவாறே அருக தேவனை யேத்துதற்கு, தென்றமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரைக்கு - தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்குச் செல்வதற்கு, ஒன்றிய உள்ள முடையேன் ஆகலின் - ஒருப்பட்ட உள்ள முடையேனாகலின், போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி - யான் செல்வேன் நீவிரும் வம்மின் என்று கூறிய கவுந்தி யடிகளைக் கையான் வணங்கி நாவாற் போற்றி, அடிகள் நீரே அருளுதிராயின் இத்தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன் என - அடிகளே நீரே இன்னணம் அருள் செய்வீராயின் இவ் வளைந்த வளையை அணிந்த தோளினையுடையாளது துன்பமெல்லாம் போக்கினேனாவேனென்று சொல்ல ; மதுரைக்குச் செல்லவென ஒருசொல் விரித்துரைக்க. தொடி - வளைவு. 1"தொடிக்கட் பூவை" என்பது காண்க. தீர்த்தேனென இறந்த காலத்தாற் கூறினான், கவுந்தியடிகளின் அருள் உண்டென்னும் தெளிவு பற்றி.. 64-65. கோவலன் காணாய் - கோவலனே நீ இதனை யறியாய், கொண்ட இந் நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல - நாம் செல்ல நினைந்த இவ் வழியின் கண் எவ்விடத்தும் துன்பம் தருவன பலவாகும், கேண்மோ - அவற்றைக் கேட்பாயாக ; காணாய் என்றது இவ்வாற்றின் ஏதந் தருவனவற்றை அறியாய் என்றவாறு. இந் நெறிக்கு என்பது உருபு மயக்கம். மோ - முன்னிலையசை. 66-71. வெயில் நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு - வெயிலின் தன்மையைப் பொறாத மெல்லிய இயல்பினையுடைய இவளைக் கொண்டு, பயில்பூந் தண்டலை படர்குவம் எனினே - மிக்க மலர்களையுடைய சோலையின்கண் செல்வோமாயின், மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை - நிலம் பிளக்க இறங்கிய வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்ததனாலாய குழிகளை, சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - சண்பக மரங்கள் நிரப்பிய பூந்துகள் சோர்ந்த பழம் பூக்கள், பொய்யறைப் படுத்து - பொய்க் குழிப் படுத்தி, போற்றா மாக்கட்கு - பாது காத்துச் செல்லாத மக்களுக்கு, கையறு துன்பம் காட்டினும் காட்டும் - செயலறவாகிய துன்பத்தைக் காட்டுதலையும் செய்யும் ; நிறம் - தன்மை ; நிறமெனவே கொண்டு, அதனைக் கண்ணாற் பார்க்கவும் பொறாத எனலுமாம். பொங்கர் - பழம் பூ. கையறு துன்பம் - மீளாத் துன்ப மெனலுமாம். சண்பகம் நிறைத்த பொங்கர் பொய்யறைப் படுத்துக் காட்டும் என்க. 72-73. உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் - உதிர்ந்த பொலிவினையடைய பழம்பூக்களினின்றும் ஒதுங்கிச் செல்வோரை, முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும் - முற்றிய தேனொழுகும் பலாப்பழங்கள் பகை போலாகி மோதுதலையும் செய்யும் ; தேம்பழம் - இனிய தெங்கம்பழம் எனலுமாம். முட்டினு முட்டுவர் என்பது பாடமாயின் கழிவோர் பழமாகிய பகையினால் தடைப்படினும் படுவர் என்க. இப் பொருட்குப் பழப்பகை என்பது பாடமாதல் தகும். அரும்பதவுரைகாரர் இப் பாடமே கொண்டுளார். உம்மை ஐய வும்மை. மேலே மெல்லியற் கொண்டு படர்குவம் எனினே எனக் கூறி வைத்துப் பின் போற்றா மாக்கட்கு எனவும், ஒதுங்கினர் கழிவோர் எனவும் உலகியலாற் கூறினார். 74-75. மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - மஞ்சளும் இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும் - பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள விதையாகிய பருக்கைகள் பகையாய் உறுத்தலைச் செய்யும் ; வலயம் - பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ் மஞ்சள் முதலியன பயிரிடல், 1"பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை" என வருதல்கொண் டுணர்க. உறுக்கும் - உறுத்தும். 76-77. கயல் நெடுங் கண்ணி காதற் கேள்வ - சேலை யொத்த நீண்ட கண்களையுடைய கண்ணகிக்கு அன்பு நிறைந்த கணவனே, வயலுழைப் படர்குவம் எனினே - வயல் நெறியே செல்வேமாயின் ; முன்னர்க் கோவலன் என விளித்து மீட்டும் ஈண்டு "கயனெடுங் கண்ணிகாதற் கேள்வ" என விளித்தது, முன்னர்க் கூறியன நினக்கும் ஏதம் தருவன ; பின்னர்க் கூறுவன நினக்கு எத்தகைய அச்சத்தையும் செய்யாவிடினும், கடைகழிந்தறியா இக் காரிகைக்கு அச்சம் விளைக்கும் ; அது நினைக்குப் பொறுத்தற்கரிதாகும் என்பதறி வித்தற் கென்க.. 77-81. ஆங்கு - அவ்விடங்களில், பூ நாறு இலஞ்சி - மலர்கள் மணங்கமழும் குளங்களில், பொருகயல் ஓட்டி - தம்முப் பொருகின்ற கயல் மீன்களைத் துரந்து, நீர் நாய் கௌவிய நெடும் புற வாளை - நீர்நாய் பற்றிய நீண்ட முதுகினையுடைய வாளை, மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின் - மலங்குகள் பிறழ்கின்ற வயற்கண் குறுக்காகப் பாயுமாயின், கலங்கலும் உண்டு இக் காரிகை - இந் நங்கை அஞ்சுதலு முண்டாம் ; கயலோட்டுதலை வாளையின் தொழிலாகக் கொள்ளுதலு மமையும். மிளிர்தல் - பிறழ்தல் ; நெளிதல். 81-85. ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து - கரும்பின்கண் வைத்த மிகுந்த தேன்கூ டழியப்பெற் றொழுகி, சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் - வண்டுகள் சூழ்ந்த வாவிகளின் தூய நீரொடு கலந்துவிடும் ; அடங்கா வேட்கையின் - தணியாத நீர் வேட்கையானே, அறிவு அஞர் எய்தி - அறிவு சோர்ந்து, குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் - அத்தகைய நீரை இவள் தன் அகங்கையான் முகந்து உட் கொள்ளவுந் தகும் ; குடங்கையாவது ஐந்து விரலுங் கூட்டி உட்குழிப்பது. இதனால் நமது அற நூலிற் கடியப் பெற்ற தேனுண்டலை ஒழிக வென்ற வாறாயிற்று. நொண்டு - முகந்து என்னுஞ் சொல் மொண்டெனத் திரிந்து, பின் நொண்டு என்றாயிற்று ; இக் காலத்தில் இஃது இழி சினர் வழக்கிலுள்ளது. 86-89 குறுநர் இட்ட குவளையம் போதொடு - களைபறிப்பார் பறித்து வரப்புகளில் போகட்ட குவளைப் பூவுடனே, பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை - புள்ளிகளையும் கீற்று களையுமுடைய வண்டின் கூட்டங்கள் உள்ளொடுங்கிக் கிடக்கும் இடங்களை, நெறிசெல் வருத்தத்து - வழி நடந்த துன்பத்தினால், நீர் அஞர் எய்தி - நீவிர் சோர்வுற்று, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் - உணராது அவ்விடத்து அடியிட்டு நடத்தலுங் கூடும் ; 86-89. குறுதல் - பறித்தல், இதனால் உயிர்க்கொலை போற்றுக எனக் கூறியவாறாயிற்று. 90-93. எறிநீர் அடை கரை இயக்கந்தன்னில் - எறியும் நீரையுடைய வாய்க்காலின் கரையாகிய வழிக்கண், பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது - புள்ளிகளின் அழகினை யுடைய நண்டினையும் நந்தினையும் பாதுகாவாது, ஊழ் அடி ஒதுக்கத்து- முறையான் அடியிட்டுச் செல்லும் செலவினால், உறுநோய் காணின் - அவற்றுக்கு மிக்க நோயுண்டாயின், தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா - நமக்கு வரும் துன்பம் நம்மால் பொறுக்கவும் முடியாது; இயக்கம் - இயங்குதலையுடையது ; வழி. நந்து - நத்தை. கொலையென்று வாக்காற் கூறவுமாகாமையின் நோய் என்றார். துன்பம் - கொலைப் பாவம். இம்மைக்கண் அன்றி மறுமையில் நர கத்திலுறுந் துன்பமும் தாங்கவொண்ணா எனப் பொருள் தருதலின் தாங்கவும் என்னுமும்மை எச்சவும்மை, அருக சமயத்தாரின் கள்ளுண்ணாமை, கொல்லாமை யென்னும் அறங்கள் மறந்தும் வழுவ லாகாவென்பதனை இங்ஙனம் அழகுறக் கூறிப் போந்தனர். 94-97. வயலும் சோலையும் அல்லது யாங்கணும் - எவ்விடத்தும் வயல்களுஞ் சோலைகளுமல்லாது, அயல்படக் கிடந்த நெறி ஆங்கில்லை - வேறுபடக் கிடந்தவழி அவ்விடத்திலில்லை ஆகலான், நெறி இருங் குஞ்சி நீ வெய்யோளொடு - நெளிந்த கரிய குஞ்சியினையுடையாய் நீ நின்னை விரும்பிய இவளுடன், குறி அறிந்து அவையவை குறுகாது ஓம்பு என - அவ்வவ் விடங்களைக் குறிப்பானே யுணர்ந்து அவற்றைச் சாராது பாதுகாப்பா யாகவென்று சொல்லி; முன்னர், முதற்கண் சோலையையும் பின்னர் வயலையும் கூறி வைத்து, ஈண்டு வயலுஞ் சோலையுமல்லது என்றது எதிர் நிரனிறை. இத்துணையும் கவுந்தியடிகள் கூற்றில் வைத்துக் கண்ணகியின் மென்மைத் தன்மை கூறுவாராய்ச் சோணாட்டின் வளமிகுதியை எழில்பெற உடன் கூறினார் என்க. 98-101. தோம் அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி யையை கைப் பீலியும் கொண்டு - கவுந்தியடிகள் குற்ற மற்ற பிச்சைப் பாத்திரத்தையும் தோளிலிடும் உறியையும் மயிற்றோகையையும் கொண்டு, மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆகென - பொருண் மொழியாகிய தெய்வம் யாம் செல்லும் நெறிக்கண் துணையாகவென்று, பழிப்பரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - பழிப்பில்லாத பெருமையினையுடைய ஒழுக்கத்தொடு வழிச் செலவைப் புரிந்தோராகிய அவர்கள் ; தோம் - குற்றம். பொருண்மொழியென மாறுக. தெய்வ மாவது பஞ்சமந்திரம் ; அ சி ஆ உ சா என்பன. கொண்டு என்பதனைக் கொள்ளவெனத் திரித்துத் துணையாக வென்ற தனைக் கோவலன் கண்ணகி கூற்றாக்கலுமாம். படர் - செல்கை; முதனிலைத் தொழிற் பெயர். புரிந்தோர் - வினைப்பெயர். 102-111. கரியவன் புகையினும் - சனி புகைந்தாலும், புகைக் கொடி தோன்றினும் - தூமகேது தோன்றினாலும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - விரிந்த கதிரினையுடைய சுக்கிரன் தென்றிசைக்கண் செல்லினும், கால்பொரு நிவப்பின் - காற்று மோதும் குடகின் உச்சியின்கண், கடுங்குரல் ஏற்றொடு சூல் முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப - கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய கார் பெயலாகிய வளத்தைச் சுரத்தலான், குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது - அக்குட வரைக்கண் தோன்றிய கொழுவிய பல பண்டங் களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தி யிடிக்கும் கடுகி வருதலையுடைய காவிரியின் புதுநீர் வாய்த்தலைக்கண் கதவின் மீதெழுந்து விழும் ஒலியல்லாது, ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் ஓங்கு நீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லா - பன்றிப்பத்தரும் பூட்டைப்பொறியும் ஒலி மிகுந்த ஏற்றமும் நீர்மிகும் இறைகூடையுமென இவை ஒலித்தல் இல்லாத; தாரமொடு வளனெதிர நெரிக்குங் கடுவரற் காவிரிப் புது நீர் என்க. புகைதல் - பகைவீடுகளிற் சென்று மாறுபடுதல். புகைக் கொடி - தூமகேது ; வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கரந்துறை கோட்கள் நான்கினுள் தூமம் எனப்படுவது. 1"மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்" என்றார் பிறரும். இன்னோரன்ன குறிப்புக்களினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோட்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற் புலமை யுடையராயிருந்தன ரென்பது பெறப்படும். கோட்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழையில்லையாயினும் குடகமலையில் மழை பெய்வதும், காவிரியில் நீர்பெருக்கெடுத்து வருவதும் தப்பாவெனக் காவிரியின் சிறப்புக் கூறியவாறாயிற்று. ஒலித்தல் செல்லாவென்றது பிற நாடுகளிலாயின் இவ் வொலியே மிகும் என அவற்றின் சிறுமை தோன்ற நின்றது. ஓ - வாய்த்தலைக்கிட்ட கதவு ; இனி ஓவிறந்து - ஒழிவின்றி யென்றுமாம். உம்மைகள் சிறப்பும்மை. 112-113. கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - வயற் கண் செந்நெலும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தினையுடைய, பழனத் தாமரைப் பைம்பூங் கானத்து - நீர்நிலைச் செறுவின்க ணுண்டான பசிய பொலிவினையுடைய தாமரைக் காட்டின்கண் ; 114-119. கம்புட் கோழியும் - சம்பங் கோழியும், கனைகுரல் நாரையும் - ஒலிக்கும் குரலினையுடைய நாரையும், செங்கால் அன்னமும் - சிவந்த காலினையுடைய அன்னப்புள்ளும், பைங் காற்கொக்கும் - பசிய காலினையுடைய கொக்கும், கானக் கோழியும் - கானாங் கோழியும், நீர்நிறக் காக்கையும் - நீரில் நீந்துமியல்புள்ள நீர்க்காக்கையும், உள்ளும் - உள்ளானும், ஊரலும் - குளுவையும், புள்ளும் - கணந்துட்பறவையும், புதாவும் - பெருநாரையும், வெல்போர் வேந்தர் முனையிடம் போல - வென்றி காணும் போரை வல்ல அரசரிருவர் பொருமிடம் போல, பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும் - பலவாக வேறுபட்ட திறத்தான் ஒலிக்கும் மிக்க ஓசையும்; கானக்கோழி - காட்டுக்கோழி என்பாருமுளர். நிறம் - தன்மை. ஊரல் - நீர்மேலூர்வது ஆகலின் ஆகுபெயர் என்பர் அடியார்க்கு நல்லார். புதா - போதா என்பதன் விகாரம். வெல்போர், முனையிடம், வினைத்தொகை. குழூஉக்குரல் பரந்த ஓசை - பல்வேறு கூட்டங்களின் குரல் பரந்து ஒன்றான ஓசையெனலுமாம். 120-124. உழாஅ நுண் தொளி உள் புக்கு அழுந்திய - உழப்படாத நுண்ணிய சேற்றுட் புக்கு ஆழ்ந்த, கழாஅ மயிர் யாக்கைச் செங்கட் காரான்-கழுவப் பெறாத மயிரினையுடைய உடலையும் சிவந்த கண்ணினையுமுடைய எருமை, சொரி புறம் உரிஞ்ச-தினவையுடைய முதுகினை உராய்தலானே, புரி ஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் - புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள, கொழும் பல் உணவு - கொழுவிய பலவாகிய பண்டங்கள், கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரிய - கவரி போன்ற செந்நெல்லின் கதிரினிடத்துச் சிந்த ; தொளி - சேறு. உழாஅ நுண்டொளி - தானே பட்ட சேறு; என்றது வயல் வளங் கருதிற்று. காரான் - எருமை. குமரி- அழியாமை. சோணாட்டின் விளைவு மிகுதி கூறியபடி. 125-126. கருங்கை வினைஞரும் களமரும் - வலிய கையினை யுடைய வினையாளரும் களமர்களும், கூடி ஒருங்கு நின்றார்க்கும் ஒலியே அன்றியும் - கூடிநின்று ஒன்று பட்டொலிக்கும் ஓதையன்றியும்; கருங்கை - வலிய கை. வினைஞர் - பள்ளர், பறையர் முதலாயினோர். களமர் - உழுகுடி வேளாளர். கருங்கைவினைஞர், கருங்கைக்களமர் என்க. 127-131 கடிமலர் களைந்து - மணமுள்ள மலர்களையுடைய ஆம்பல் முதலியவற்றைப் பறித்தெறிந்து, முடிநாறு அழுத்தி - அங்ஙனம் பறித்தவிடத்தே முடியின் நாற்றைப் பகிர்ந்து நட்டு, தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து - வளைந்த வளையலணிந்த தோளின்கண்ணும் மார்பின்கண்ணும் படிந்து, சேறாடு கோலமொடு வீறு பெறத் தோன்றி - சேறாடுகின்ற கோலத்தோடு அழகு பெறத் தோன்றி, செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர் - சிவந்த கெண்டையை ஒத்த நெடிய கண்களையும், சிலவாகிய மொழியினையு முடைய கடைசியரது, வெங் கள் தொலைச்சிய விருந்திற் பாணியும் - மிகுந்த மயக்கந்தருங் கள்ளை உண்டு தொலைத்ததனா லுண்டான இசையொடு பழகிப்போதாத பாடலும் ; கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தி என்பதற்குக் காலையின் முடித்த பூக் களைந்து முடித்த முடியிலே முடியினாற்றை நறுக்கிச் சூடிக்கொண்டு எனவும், தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடல் என்பதற்கு ஒருவர்மே லொருவர் சேற்றை இறைத்துக் கோடல் எனவும் கூறுவார் அடியார்க்கு நல்லார். சின்மொழி - இழிந்த மொழி எனவுமாம். 132-135. கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து - கொழுவிய கொடியாக நீண்ட அறுகையும் குவளையையும் சேர்த்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி - விளங்கும் நெற்கதிரோடே தொடுத்த மாலையை ஏரிலே அணிந்து, பார் உடைப்பனர் போல் - நிலத்தைப் பிளப்பவரைப் போல, பழிச்சினர் கைதொழ - போற்றுவார் வணங்க, ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் - ஏரைப் பூட்டி நின்றோர் பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டும்; அறுகையும் குவளையையும் கதிரோடு தொடுத்த விரியல் என்க. இது பொன்னேர் எனவும், சில விடங்களில் நல்லேர் எனவும் கூறப்படும். 136-137. அரிந்து கால் குவித்தோர் - நெல்லினை அரிந்து ஓரிடத்துக் குவித்தோராய நெல்லரிநர், அரி கடாவுறுத்த பெருஞ் செந் நெல்லின் முகவைப் பாட்டும்-சூட்டினைக் கடாவிடுதலாலுண்டான மிக்க செந்நெல்லினை முகந்து தரும் முகவைப் பாட்டும்; கடாவுறுத்த செந்நெல் என்க. அரி - அறுத்துப் போகட்ட நெற்சூடு. முகவை பாடுதல் - பொலி பாடுதல். நெல் முகந்து கொடுக்கப் படுதலான் முகவையாயிற்று. தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த - தெளிந்த ஓசையினையுடைய தடாரியினை உடைய கிணைப்பொருநர் செருக்குதலோடெடுத்த, மண்கணை முழவின் மகிழ் இசை ஓதையும் - மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும் ; இது களவழி வாழ்த்து ; என்னை? 1"தண்பணை வயலுழ வனைத், தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று" என்றா ராகலின். 140-141. பேர் யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு - ஆகிய இவ்வோசைகளைப் பெரிய யாற்றங்கரையில் முறைமையிற் கேட்டு, ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார் - விருப்பங் கொண்ட உள்ளத்தொடு வருத்தத்தினைக் கொள்ளாராய் ; பரந்த வோதையும் (119), ஆர்க்கு மொலியும் (126), விருந்திற் பாணியும் (131), ஏர் மங்கலமும் (135), முகவைப் பாட்டும் (137), மகிழிசை ஓதையும் (139) என்னு மிவற்றை அடைகரைக்கண் கேட்டு என்க, இவ்வியற்கை வளங்களின் காட்சியின்பத்தால் அவலங் கொள்ளாராயின ரென்க. 142-147. உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு - புலியைத் தன்னிடத்துடைய கொடியையுயர்த்தின தேரை யுடைய வலியோனாகிய வளவனது வெற்றியோடு, மழைக்கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் - மழைக்குக் கருப் பத்தினைத் தோற்றுவிக்கின்ற அழலை விளக்குகின்ற வேள்விச் சாலையின் கண், மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை - வேதியர் ஆக்கிய ஓமத்தின்கண் நல்ல புகை, இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து - இறப்பினையுடைய ஓங்கிய மாடங்களின் எவ்விடங் களிலும் போர்த்தலான், மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும் - மேகஞ் சூழ்ந்த மலைபோல மாட்சிமைப்படக் காணப்படும், மங்கலம் மறையோர் இருக்கை அன்றியும் - மங்கலம் பொருந்திய அந்தணர்களது இருப்பிடங்களும், அவையேயன்றியும்; அட்டில் - ஈண்டு வேள்விச்சாலை. இறை - இறப்பு. மழைக் கருப்பம் ஆவது புகை. 148-155. பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் - நீர் பரந்த காவிரிப்பாவையின் புதல்வரும், இரப்போர் சுற்றமும் - இரப்போரது சுற்றத்தையும், புரப்போர் கொற்றமும் - அரசரது வெற்றியையும், உழவிடை விளைப்போர் - தம் உழுதொழிலின் கண்ணே தோற்றுவிப்போருமாகிய வேளாளருடைய, பொங்கழி ஆலைப் புகையொடு பரந்து - தூற்றாப்பொலி கரும் பாலைப் புகையினால் பரக்கப்பெற்று, மங்குல் வானத்து மலையின் தோன்றும் - இருண்ட மேகம் சூழ்ந்த உயர்ந்த மலைபோலக் காணப்பெறும், பழவிறல் ஊர்களும் - பழைய சிறப்பினையுடைய ஊர்களும் ஆகிய, ஊர் இடை இட்ட நாடு உடன் கண்டு- இவ்விருவகையூர்களும் இடையிடையேயுள்ள நாடெல்லா வற்றையும் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி - ஒருநாளில் ஒரு காத தூரமல்லது நடக்க முடியாத வராய், பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் - பல நாட்கள் தங்கிச் செல்லுகின்ற நாளில் ஒருநாள்; விளைப்போருடைய மலையிற்றோன்றும் பழவிறலூர்களும் என்றியைக்க, பொங்கழி - தூற்றாத நெற்பொலி. பரந்து - பரக்க எனத் திரித்தலும் அமையும். கொற்றத்தையும் கருவையும் அட்டிலின் விளைப்போர் இருக்கையும், சுற்றமும் கொற்றமும் உழவிடை விளைப் போர் ஊர்களுமாகிய ஊர் என்க. காவிரிப்பாவை புதல்வர் என்றதனை, 1"வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி" என வருதல் கொண்டுணர்க. உடன்கழிந்தென்றார் இந் நாட்டின் சிறப்புக்களைக் கண்டு கழிதல் அருமையால். புரப்போர் கொற்றத்தை உழவிடை விளைப்போர் என்பதனை, 2"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்" 3"பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை, ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே" என்பவற்றானுமறிக. 156-163. ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகி - ஆற்றை மறைக்கும் அரங்கத்தின்கண் வேறிடத்தில்லாத தன்மைத்தாய், குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து - வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப் பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண்,வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-விண்ணவர் உறைதற்கொத்த மலர்கள் மிக்குத் தோன்றும் ஒரு பக்கத்தே, பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா - பட்டினப் பாக்கத்தை விட்டு நீங்கி, பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட - பெரும் புகழினையுடைய உலக நோன்பிகள் ஒருங்கு கூடி அப்பட்டினப்பாக்கத்தி லிட்ட, இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி - விளங்கும் ஒளியினையுடைய சிலா வட்டத்தின்கண் எழுந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை தருமம் சாற்றும் சாரணர் தோன்ற - அருகதேவனாற் செய்யப்பட்ட அதிசயங்கள் மூன்றுந் தப்பாத உண்மை யினையுடைய அறவொழுக்கங்களை அருளிச்செய்யும் சாரணர் வந்து தோன்ற ; வீ - மறைவு. அரங்கம் - ஆற்றிடைக்குறை ; ஈண்டுச் சீரங்கம். குரங்கு - வளைவு. பட்டினப்பாக்கத்திலிட்ட சிலாதலமேலிருந்து தருமஞ் சாற்றுஞ் சாரணர் அப் பட்டினப்பாக்கம் விட்டு நீங்கிப் பூநாறொரு சிறைத் தோன்ற வென்க. பூநாறு என்பதற்கு மலர்கள் மணங் கமழும் எனலுமாம். அதிசயங்கள் மூன்றாவன : சகசாதிசயம், கர்மக்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம் என்பன. 164-169. பண்டைத் தொல்வினை பாறுக என்றே - முன் செய்த பழவினைகள் யாவும் கெட்டொழிக என்றுட்கொண்டு, கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் - அச் சாரணர் வந்தமையைக் கண்டுணர்ந்த கவுந்தியடிகளுடன் அவர்கள் திரு வடியிற் பொருந்த வீழ்ந்து வணங்கியோர், வந்த காரணம் - ஈண்டு வந்ததன் காரணத்தை, வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும் - விளங்கிய கோட் பாட்டினையுடைய தன் உள்ளமெனும் விளக்கினான் அறிந்தோனாயினும், ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய - விருப்பினையும் வெறுப்பினையும் தன்னை விட்டு அகலும் படி போக்கிய, வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் - வீரனா கலாலே இவர்க்கு வருந் துன்பத்திற்கு வருத்தங் கொள் ளானாகி ; தொல்வினை யென்றார் ; முன்னர்த் தோற்றத்துப் பல்வகைப் பிறவியினும் தொடர்ந்து வருதல் கருதி. கண்டறி கவுந்தி யென்றமை யாலும் அவருக்குக் காலவுணர்ச்சியின்மை அறிக. ஒடு - ஒரு வினையொடு. வீழ்ந்தோர் - வினைப்பெயர். சிந்தை விளக்கு - அவதி ஞானம் ; என்றது முக்காலமு முணரும் உணர்வினை. செற்றம் - வெகுளி ; ஈண்டு வெறுப்பின்மேற்று. வந்த சாரணருள் உபதேசிப் போர் மூத்தோரே யாகலின், வீரனென ஒருமையாற் கூறினார். 170-171. கழி பெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை - மிக்க பெருஞ் சிறப் பினையுடைய கவுந்தி ! யாவரானும் ஒழிக்க வொழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும் தீவினையைக் காண்பாயாக ; `ஒழிகென வொழியாது ஊட்டும் வல்வினை' என்பதற்கு நீ "உரிய தன்றீங் கொழிக" என்று கூறவும், ஒழியாவாறு நுகர்விக்கும் தீவினையை என்றலும் பொருந்தும். 172-173. இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா - விளைநிலத்திட்ட வித்துப்போல பயன் எதிர நல்வினை வந்தடைந்து நற்பயனை நுகர்விக்குங் காலத்து அதனை ஒழிக்கவும் கூடாது ; அதுபோல இதுவும் ஒழிக்க வொழியாதென்றார் ; 1"உறற் பால நீக்க லுறுவார்க்கு மாகா, பெறற்பா லனையவும் அன்னவாம்" என்றாராகலான் இங்ஙனங் கூறினார். வல்வினையை ஒழித்தல் தன் றொழிலாகவும் நல்வினையை ஒழித்தல் பிறர்வினையாகவுங் கொள்க. 174-175. கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன - கடிய காற்றையுடைய நெடிய வெளியிடத் திடப்பெற்ற விளக் கென்னும்படி அழியினல்லது, ஒருங்குடன் நில்லா உடம் பிடை உயிர்கள் - உடலிடை நின்ற வுயிர்கள் அவ் வுடம்பொடு கூடி உடனில்லா; தீவினைப் பயனாய துன்பமும், யாக்கை நிலையாமையும் இவர் பால் உறுவது கண்டு சாரணர் கவுந்தியடிகட்கு இங்ஙனங் கூறினார் என்க. விளக்கினை உவமித்தார் : சுடரொழிதற் குரிய வளி நேர்ந்த வழி அச் சுடர் ஒழிதல்போல உலத்தற்குரிய வினை நேர்ந்தவழி உயிரொழிதலும், சுடரொழிந்தவழி அச் சுடர் யாண்டுச் சென்றுற்றதென அறிதற்கியலாவாறு போல உயிரொழிந்த வழி அவ் வுயிர் யாண்டுச் சென்றுற்றதென அறிய முடியாமையுமாய இவ் வொப்புமை கருதி என்க. அழிதல் ஒருதலை யென்பது புலப்படக் கடுங்கால் எனவும் நெடுவெளி யெனவும் அடை கொடுத்தார். 176. அறிவன் - எல்லாவற்றையும் அறியும் அறிவுடையோன், அறவோன் - அறஞ் செய்தலையே தன் தொழிலாக வுடையோன், அறிவு வரம்பு இகந்தோன் - மக்கள் அறிவின் எல்லையைக் கடந்து நின்றோன் ; மக்கள் தம் அறிவினால் அறியவொண்ணாதவன் என்றபடி. 177. செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இதனாயுள்ளவன் ; சலியாதவன் என்றுமாம். சினேந்திரன் - எண்வகை வினைகளையும் வென்றோன்; எண்வகை வினைகளாவன : ஞானாவரணீயம், தரிசனா வரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென இவை. சித்தன் - செயத் தகுவனவற்றைச் செய்து முடித்தோன் ; கன்மங்களைக் கழுவினோன் என உரைப்பாருமுளர். பகவன் - முக்கால வுணர்ச்சியுடையோன்; 178. தரும முதல்வன் - அறங்களுக்கு மூலமாயுள்ளோன் ; தலைவன்-எவ்வகைத் தேவர்க்கும் தலைவனாயுள்ளான் ; தருமன் - தானே அறமாயவன்; 179. பொருளன் - உண்மைப் பொருளாயுள்ளவன்; புனிதன் - தூய்மையுடையோன்; புராணன்-பழைமையானவன்; புலவன் - யாவர்க்கும் அறிவாயுள்ளோன்; 180. சினவரன் - சினத்தைக் கீழ்ப்படுத்தினவன் ; என்றது சினத்தை வென்றோன் என்றபடி. தேவன் - தேவர்க் கெல்லாம் முதல்வனாய தேவன்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனானோன் ; வீடு சிவகதி யென்னும் பெயரால் சமணர்களாலும் வழங்கப் பட்டிருப்பது சிந்திக்கற்பாலது. 181. பரமன் - மேலானவன்; குணவதன் - குணத்தையுடையோன்; 181. குணவதன் என்பதற்குக் குணவிரதன் எனப் பொருள் கோடலுமாம். குணவிரதம் - திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம் என மூன்று வகைப்படும். பரத்தில் ஒளியோன் - மேலாய உலகிற்கு விளக்கமாய் உள்ளோன்; 182. தத்துவன் - தத்துவங்களையுடையோன்; சாதுவன் - அடங்கியோன் ; சாரணன் - விசும்பியங்குவோன் ; காரணன் - எல்லாவற்றிற்கு முதலாயுள்ளோன்; 183. சித்தன் - எண்வகைச் சித்திகளையு முண்டாக் கினவன்; பெரியவன் - எல்லாவற்றானும் பெரியோன் ; செம்மல்- தலைமையிற் சிறந்தோன்: திகழ் ஒளி - விளங்கும் ஒளியாயுள்ளோன்; 184. இறைவன் - எல்லாவற்றினும் தங்குவோன் ; குரவன் - ஆசிரியனாகவுள்ளோன் ; இயல்குணன் - இயல்பாகவே தோன்றின குணங்களையுடையோன்; எங்கோன் - எங்கள் தலைவன்; குறைவில் புகழோன் - நிறைந்த கீர்த்தியை யுடையோன்; குணப் பெருங் கோமான் - நற்குணங்கள் யாவும் நிறைந்த சிறந்த தலைவன்; 186. சங்கரன் - நன்மை புரிவோன், ஈசன் - எவ்வகைச் செல்வங் களையு முடையோன்; சுயம்பு - தானே தோன்றினவன்; சதுமுகன் - நான்முகன்; 187. அங்கம் பயந்தோன் - அங்காகமத்தை அருளினவன்; அருகன் - போற்றத்தக்கான்; அருள்முனி - எல்லா வுயிரிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன் ; அங்காகமம் பன்னிரண்டு வகையினை யுடைத்து எனவும், அவை, ஆசாராங்கம், சூத்திர கிருதாங்கம், ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப் பிரஜ்ஞப்த்யங்கம், ஞாத்ருகதாங்கம், உபாஸ காத்தியயனாங்கம், அந்தக் கிருத தசாங்கம், அநுத்த ரோபபாதிக தசாங்கம், பிரச்சிநவியாகர ணாங்கம், விபாக சூத்திராங்கம், திருஷ்டிவாதாங்கம் என்பன வெனவும் கூறுவர். 188. பண்ணவன் - கடவுள் ; எண்குணன் - எட்டுக் குணங் களுடையோன் ; பாத்தில் பழம்பொருள் - பகுத்தற்கரிய பழம் பொருளா யுள்ளோன் ; ஓட்டற்ற பொன்னை யொப்பான் என்றுமாம். 189. விண்ணவன் - மேலுலகத்துள்ளான் ; வேத முதல்வன் - ஆகமம் மூன்றிற்கு முதலா யுள்ளான் ; விளங்கு ஒளி - அறியாமை யென்னும் இருள் நீங்க விளங்கும் ஒளியா யுள்ளவன்; 190-191. ஓதிய வேதத்து ஒளியுறின் அல்லது போதார் பிறவிப் பொதி அறையோர் என - மேற்கூறிய பெயர்களையுடைய ஆகமத்தின்கண் விளங்கும் ஒளியாகிய அருகதேவனைச் சார்ந்தாலல்லது பிறவியாகிய மூடப் பெற்ற அறையினுள்ளார் வெளி வாரார் என்று சாரணர் தலைவன் கூற; பொதி யறையோர் ஒளியுறி னல்லது போதார் என்க. பிறவியை இருளறையாகவும் அருகதேவனை அவ் விருளறையினின்று வெளி வருதற்குத் துணையாய விளக்காகவுங் கூறினார். ஓதிய ஆகமமாகிய ஒளியைப் பெற்றாலல்லது போதாரென்றுமாம். பொதியறை - சிறு துவாரமுமின்றி மூடப் பெற்ற கீழ் அறை. 1''புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது" என்றார் பிறரும். ஒருநாள் ஒரு சிறைச் சாரணர் தோன்ற, வீழ்ந்தோர் வந்த காரணம் தெரிந்தோனாயினும் விழுமங் கொள்ளான் காணாய் ஊட்டும் ஒண்ணாது நில்லா ஒளியுறி னல்லது போதார் என என்று முடிக்க. 192-193. சாரணர் வாய்மொழி கேட்டுத் தவ முதற் காவுந்தியும் தன் கை தலைமேற் கொண்டு - தவத்திற்கு முதல்வியாகிய கவுந்தியடி களும் சாரணர் அருளிச் செய்த பொருண் மொழியைக் கேட்டுத் தமது கைகளைத் தலையின்மீது வைத்துக் கொண்டு; 194-195. ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திரு மொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - எனது செவிகள் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையுங் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறவா ; அவித்தல் - அடக்கலுமாம். 195-197. காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலாது என் நா - எனது நாவானது காமன் செயலை வென்றோனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைப் பயில் வதல்லது வேறொரு நாமத்தினைக் கூறாது ; 198-199. ஐவரை வென்றோன் அடி இணை அல்லது கைவரைக் காணினும் காணா என் கண் - எனது கண்கள் ஐம்புலன் களையும் வென்றோனுடைய இரண்டு திருவடிகளைக் காண்பதல்லது மற்றைக் கடவுளர் அடிகளைக் கையகத்தே காணினும் காணா; ஐவர் - செறலின் வந்த திணை மயக்கம். 200-201. அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் பொருள் இல் யாக்கை பூமியிற் பொருந்தாது - எனது பயனில்லா இவ் வுடல் அருளையும் அறத்தினையும் மேற் கொண் டோனுடைய திருவுடலத்திற்கல்லது பிறிதொன்றற்குப் பூமியிற் பொருந்தாது; அருளறம் பூண்டோன் என்பதற்கு அருளினால் அறம் பூண்டோன் எனலு மமையும். பூமியிற் பொருந்தலாவது நிலத்து வீழ்ந்திறைஞ்சுதல். 202-203. அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் இரு கையும் கூடி ஒருவழிக் குவியா - என் இரு கைகளும் அருகர்க்கு அறங் கூறுவோனாகிய அறிவன்பொருட்டுச் சேர்ந்து குவிதலல்லது ஏனைத் தேவர் பொருட்டுக் குவியா; அருகர் - சமண இருடிகள். குவிதல் - வணங்குதல். 204-205. மலர்மிசை நடந்த மலர் அடி அல்லது என் தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது - எனது தலையினுச்சியும் பூவின் மீது நடந்த தாமரைபோன்ற அடிகளை அணியப் பொறுக்கு மல்லது பிறிதொன்றனையும் அணியப் பொறாது; 206-207. இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது மறு தர ஓதி என் மனம் புடைபெயராது - எனதுள்ளமும் முடிவிலா இன்பத்தினையுடைய இறைவன் அருளிச் செய்த ஆகமத்தை உருவேற ஓதிப் புடைபெயர்தலல்லது பிறிதொரு மொழியை ஓதிப் புடைபெயராது ; மொழி - ஆகமம்; ஆகுபெயர். மறுதர ஓதுதல் - மீட்டும் மீட்டும் ஓதுதல். 208-213. என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு - என்று கூறி அவ் வருகதேவனது புகழ் மொழிகளைப் போற்றக் கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர் - அக் கூற்றுக்கு உளம் ஒருப்பட்ட சாரணர், உயர்மிசை ஓங்கி நிவந்து ஆங்கு ஒரு முழம் நீணிலம் நீங்கி - சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை விட்டு நீங்கி அந் நிலத்தினும் ஒரு முழம் உயர்ந்து நின்று, பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று - பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்குக் கெடுவதாகவென்று கூறி, அந்தரம் ஆறுஆப் படர்வோர்த் தொழுது - விசும்பின் வழியே செல்லும் அச் சாரணரைத் தொழுது, பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து - பாசம் ஒழிகவென்று வணங்கி வந்து ; கவுந்தி கெடுக என்றது கவுந்திக்குக் கெடுக என்றவாறு. படர்வோர், வினைப்பெயர், பணிந்தனர், முற்றெச்சம். 214-218. கார் அணி பூம்பொழிற் காவிரிப் பேர் யாற்று-முகிலை யணிந்த மலர் நிறைந்த சோலைகளையுடைய காவிரியாகிய பெரியயாற்றின், நீர் அணி மாடத்து நெடுந்துறை போகி - நெடுந்துறையைப் பள்ளியோடத்தானே போந்து, மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் தீது தீர் நியமத் தென்கரை எய்தி - கண்ணகியும் அவள் கணவன் கோவலனும் கவுந்தியடிகளும் குற்றம் தீர்ந்த கோயிலையுடைய தென்கரையை அடைந்து, போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி - மலர் சூழ்ந்து கிடக்கின்ற ஓர் பொலிவு பெற்ற சோலைக்கண் சென்றிருந்தபொழுது; நீரணிமாடம் - பள்ளியோடம். மாதருங் கணவனும் மாதவத் தாட்டியும் போகி என்க. காவுந்தி கேட்டு மேற்கொண்டு திறவா நவிலாது காணா பொருந்தாது குவியா பொறாது புடைபெயராது என்று ஏத்தஅதற்கு ஒன்றிய மாதவர் ஓங்கி நிவந்து நீங்கி கெடுகென்று படர்வோர்த் தொழுது பணிந்தனர் போந்து போகி எய்தி இருந்துழி என்க. 219-220. வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு - புதிய பரத்தைத் தன்மை யுடையாளொருத்தியும் பயனில சொல்லும் விடனொருவனும், கொங்கலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் - மணம் பரந்த பொலிவினையுடைய சோலைக் கண் அணுகினராய்ச் சென்றவர் ; வம்பு - புதுமை, வம்பப் பரத்தை என்பதற்குத் தன் மனவெழுச்சியால் தோன்றினபடி சொல்லித் திரியும் பரத்தை எனலுமாம். வறு மொழியாளன் - விடன். சென்றோர் - வினைப்பெயர். 221-222. காமனும் தேவியும் போலும் ஈங்கிவர் - இவ்விடத்துக் காமனும் அவன் தேவியுமாகக் காணப்படுகின்ற இவர், ஆரெனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே - யாரென்று கேட்டு இப்பொழுது அறிவோம் என்று சொல்லி; போலும் - ஒப்பில்போலி. இனி, இப் போலும் என்பதனை உவம வுருபாக்கிப் பொருள் கூறலு மமையும். 223-224. நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர் - விரதத்தினை மேற்கொண்டு பட்டினி கிடந்துண்ணுதலான் இளைத்த யாக்கையினையும் நுண்ணிய தவத்தினையுமுடையீர், உடன் ஆற்று வழிப்பட்டோர் ஆரென வினவ - நும்மொடு வழிவந்த இவர் யாரென்று வினவ ; நொசி - நுண்மை ; நொசி யாக்கை யெனலுமாம். ஆற்று வழிப்பட்டோர் - வழியிற் கூடி வந்தோர். நோற்றுணல் - பட்டினி கிடந்துண்ணல். 224-226. என் மக்கள் காணீர் மானிட யாக்கையர் - இவர் என்னுடைய மக்களாவார், நீர் கூறிய காமனும் தேவியுமல்லர், மானிட யாக்கையுடையார் காணும் ; பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர் என - வழிச்செலவின் வருத்தத்தினால் மிகவும் வருந்தினர் அவரிடைச் செல்லாதே விலகிச் செல்லுமின் என்றுரைக்க; பரி - மிகுதி. பரி புலம்பினர் என்பதற்குச் செலவினால் வருந்தினர் எனக் கூறலுமாம். பரி - செலவு. 227-228. உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக் கடவதுமுண்டோ கற்றறிந்தீர் என - நூல்களைக் கற்று அவற்றின் பயனை யுணர்ந்த பெரியீர், ஒரு வயிற்றிற் பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்க்கை நடாத்தல் என்பது நீர் கற்ற நூல்களிற் கூறப்படுதலுமுண்டோ எனக் கேட்ப; கற்றறிந்தீர் என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது. 229-240. தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க - இன்னணம் இவரிகழ்ந்த கொடு மொழியினைக் கேட்டு இரு செவிகளையும் பொத்தித் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்ப, எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை - எனது பூங்கோதை போல்வாளை இவர் இகழ்ந்தனர் ஆயினார், முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகென - ஆகலான், முட்கள் நிறைந்த காட்டின்கண் இவர் ஓரியாகவென்று உள்ளத்து எண்ணி, கவுந்தி இட்ட தவந்தரு சாபம் - கவுந்தியடி களிட்ட தவத்தினான் விளைந்த சாபம், கட்டியது ஆதலின் - இவரைப் பூண்டதாகலான், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி - நறுவிய மலரணிந்த கண்ணகியும் கோவலனும் விளைந்ததனை அறியாராய்க் குறிய நரியினது நெடிய குரலாகக் கூவும் விளியைக் கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும் - நல்லொழுக்க நெறியினின்றும் விலகிய அறிவிலார் நீர்மை அல்லாதன வற்றைச் சொல்லினும் அஃதறியாமையாற் கூறியதாகும் எனப் பெரியோர் உணர்தல் வேண்டும், செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீரோ என - செய்த தவத்தினையுடையீர், உம்முடைய திரு முன்பு தவறு செய்த இவர்க்கு உய்தலுடைத்தாங் காலத்தை மொழிந்தருளுவீர் என்று கூற; போலும், ஒப்பில்போலி. நடுங்குதல் தம் பொருட்டால் விளைந்தமையான் என்க. பரத்தையும் விடனும் கண்ணகி கோவலன் இவ்விருவரையுமே இகழ்ந்தனராகவும், "எள்ளுநர் போலுமிவ ரென்பூங் கோதையை" எனக் கண்ணகியையே இகழ்ந்ததாகக் கவுந்தியடிகள் கூறியது ஆண் மக்களை இழித்துக் கூறினும் பெண் மக்களை இகழ்தல் தகாது என்னும் உலக வழக்குப் பற்றிப் போலும். பட்டதை அறியார் ஆயினார்; 'முதுநரி யாகென' உள்ளத்தே நினைந்து சபித்தலின். பின்னர் அறிந்த தெவ்வாறெனின்? அவர் கண்முன் நரியாயினவாற்றானும், பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்தே இவரல்லது வேறு சாபமிட வல்லாரில்லை யாகலானும் இச் சாபம் இவரானே விளைந்ததெனக் கண்டனர் என்க. அறியல் வேண்டும் என்றது அவருட்கோள்; உரையீரோ வென்றது கவுந்தியை நோக்கிக் கூறியது. இதனானே கண்ணகியும் கோவலனும் பிழைத்தோர்ப் பொறுக்கும் பெருமையினை யுடையார் என்பதும், பிறர் இன்னல் கண்டு பொறார் என்பதும் அறியக் கிடக்கின்றன. 241-245. அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் - தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள், உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி - உறையூர் மதிற் புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து, பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் - பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க துன்பத்தினான் வருந்திய பின்னர், முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் எனச் சாபவிடை செய்து - முன்னை வடிவத்தினை இவர் பெறு வாராக என்று சாபவிடை செய்து; நெடுங்காலம் தவஞ்செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு மொழியான் இழந்தனர் என்பது தோன்ற இழிபிறப்பு உற்றோர் என்றார். இதனானே யா காவா ராயினும் நா காத்தல் இன்றியமையாதது என்பது பெறப்படும். 245-248. தவப் பெருஞ் சிறப்பிற் காவுந்தியையையும் தேவியும் கணவனும் - தவத்தானே மிக்க சிறப்பினையுடைய கவுந்தியடி களும் கண்ணகியும் கோவலனும், முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய - முறம் போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென் - புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின் கண் விரும்பிப் புக்கார் என்க. முற்காலத்து ஓர் கோழி யானையைப் போர் தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரை யாசிரியர். புறம் சிறை வாரணம் - புறத்தே இறகினையுடைய கோழி, புறத்தே சேரிகளையுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்கு நல்லார். சென்றோர் அறிகுவமென்று வினவ புலம்பினரென கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரியாகென அறியார் கேட்டு நடுங்கி உரையீரோவென ஒதுங்கி உழந்த பின் பெறுக எனச் செய்து புரிந்து புக்கனர் என்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. நாடுகாண் காதை முற்றிற்று. கட்டுரை முடியுடைவேந்தர்............................முற்றிற்று. முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்...... என்றிவை அனைத்தும் - அறன் முதலாகப் பாணியீறாகவுள்ள அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டுச் சொல்லாத பிறபொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று - ஒரு படியாக நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றியது. அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள் இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள், அறன் - அறனோம்படை (5 : 179.) மறன் - இமயத்துப் புலி பொறித்தது. (5 : 97-8.) ஆற்றல் - அமராபதி காத்தது. (6 : 14.) மூதூர்ப் பண்பு மேம்படுதல் - ஒடுக்கங் கூறாமை. (1: 18.) விழவு மலி சிறப்பு - இந்திர விழவு (5.), விண்ணவர் வரவு (6 : 72-3.) குடி - உழவிடை விளைப்போர். (10 ; 150.) கூழின் பெருக்கம் - செந்நெற் காய்த்தலையில் கூட்டின் நெற் சொரிதல். (10 : 123-4.) காவிரிச் சிறப்பு - "கரியவன் புகையினும்.........ஒலிக்கும்" (10 : 102-9) பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல் - மழைக்கரு வுயிர்த்தல். (10 : 143.) அரங்கும் ஆடலும் தூக்கும். (3). வரி - கண்கூடுவரி முதலிய எட்டுவரியும். (8 : 74-108) பாரதி விருத்தி - பதினோராடல் (6 : 39-63.) திணைநிலைவரி (7 : 17-23.) இணைநிலைவரி (7.) யாழின் றொகுதி - "சித்திரப்படம்" முதல் ''பட்டடை" ஈறாகவுள்ளன. (7 : 1) "உழைமுதற் கைக்கிளை" முதலாயினவுமாம் (8 : 32.) ஈரேழ் சகோடம் - "ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி" (3 : 70.) இடநிலைப் பாலை - ''கோடி விளரிமேற் செம்பாலை" முதலாயின (3 : 88.) தாரத் தாக்கம் (8 : 38.) தான்றெரி பண் - அகநிலை மருதம் முதலாயின. (8:3940) ஊரகத்து ஏர் - ஊரின் வண்ணம் (5.) ஒளியுடைப் பாணி - "வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி" முதலாயின. (10 : 131.) வெண்பாவுரை காலையரும்பி...............புகார். காலை அரும்பி மலரும் கதிரவனும் - காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல் - மாலையில் உதிக்கும் வளருமியல் புடைய திங்களும் போல, வாழியரோ - வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார் - மாலை யெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம் பட்டினம். ஆல்-ஒடு. புகார் வாழியரோ என்க. புகார்க் காண்டம் முற்றிற்று சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இரண்டாவது மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (உறையூரை அடைந்த கோவலன், கண்ணகி, கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கே தங்கி, வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றவர் ஓர் இளமரக்காவுட் புக்கனர். அப்பொழுது பாண்டியனது பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்தி லிருந்த மறையோனை `நும்மூர் யாது? இவ்விடத்து வந்த காரணம் என்னை? என்று கோவலன் கேட்க, மறையோன், ‘திருவரங்கத்தில் திருவமர் மார்பன் கிடந்த வண்ணத்தையும், திரு வேங்கட மலையின்மிசைச் செங்கணெடியோன் நின்ற வண்ணத்தையும் காணும் வேட்கையால் வந்தேன்; குடமலை நாட்டு மாங்காடென்னும் ஊரிலுள்ளேன்; பாண்டியனாட்டுச் சிறப்பினைக் கண் குளிரக் கண்டேனாகலின் வாழ்த்தி வந்திருந்தேன்' என்று கூறினன். பின்பு, `மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறி கூறுக' வெனக் கோவலன் கேட்ப, உரைக்கின்ற மறையோன், `நீவிர் இந் நெடிய காட்டு வழியைக் கடந்து சென்று கொடும்பாளூர் நெடுங்குளக் கரையை அடைந்தால், அங்கிருந்து சிவபிரான் சூலப்படைபோல் மூன்று நெறிகள் கவர்த்துச் செல்லும்; அவற்றுள் வலப் பக்கத்து வழியிற் சென்றால் தென்னவன் சிறு மலை தோன்றும் ; அதனை வலத்திட்டுச் சென்மின்; இடப் பக்கத்து நெறியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர் ; அதில் மயக்கமறுக்கும் பிலம் ஒன்றுண்டு; அதன்கண் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் மூன்று பொய்கைகள் உள; அவற்றிற் படிவீராயின் முறையே ஐந்திர நூலும், பழம்பிறப்புணர்ச்சியும், இட்ட சித்தியும் எய்துவீர்' என்றியம்பி, மற்றும் அப் பிலத்து நெறியில் நிகழும் வியத்தக்க நிகழ்ச்சிகளையும் கூறி, `அவ் வழியே மதுரைக் கேகுமின் ; அந் நெறிச் செல்லாவிடின், இடையிலுள்ளது செந்நெறியாகும் ; அந் நெறியில் ஊர்கள் இடையிட்ட காடு பல கடந்து சென்றால் ஓர் தெய்வம் தோன்றி இடுக்கண் செய்யாது நயமுடன் போக்கினைத் தடுக்கும்; அதனை யடுத்து மதுரைக்குச் செல்லும் பெருவழி உளது' என்று கூறிச் சென்றனன். மூவரும் சென்று மறையோன் கூறிய இடைநெறியிற் போகும் பொழுது, கோவலன் நீர் வேட்கையால் ஓர் பொய்கைக் கரையை அடைந்து நிற்புழி, அக் கானுறை தெய்வம் வயந்தமாலை வடிவுடன் சென்று பல பணிமொழி கூறி மயக்காநிற்க, கோவலன், மயக்குந் தெய்வம் உளதென்று மறையோன் கூறக் கேட்டுளனாதலின், வஞ்ச வுருவை மாற்றும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறினன். கூற, அத் தெய்வம் தன்னியல்பினை யுரைத்து வணங்கிச் சென்றது. மூவருஞ் சென்று ஐயை கோட்டம் ஒன்றினை அடைந்தனர்.) திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக் 5 கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித் 10 தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று வைகறை யாமத்து வாரணங் கழிந்து வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத் திருக்கை புக்குழி 15 வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் 20 குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் 25 பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் 30 தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் 35 நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து 45 மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போல பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு 50 பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் 55 கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயெனக் கோவலற் குரைக்கும் 60 கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 65 நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை தன்னுடன் அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் 70 நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் 75 அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும் நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமுங் கடந்தால் 80 ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் கொய்பூந் தினையுங் கொழும்புன வரகும் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய 85 தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின் அவ்வழிப் படரீ ராயி னிடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு 90 கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு 95 இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் 100 பவகா ரணிபடிந் தாடுவி ராயிற் பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர் இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின் 105 ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப் பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற் 110 கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ் 115 வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின் திருத்தக் கீர்க்குத்திறந்தேன் கதவெனும் கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள போகிடை கழியன 120 ஒட்டுப் புதவமொன் றுண்டத னும்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும் உரையீ ராயினும் உறுகண் செய்யேன் 125 நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும் 130 ஒருமுறை யாக உளங்கொண் டோதி வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற் காண்டகு மரபின வல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் 135 உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் 140 காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு அந்நெறிப் படரீ ராயின் இடையது செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால் ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம் 145 நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும் மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென 150 மாமறை யோன்வாய் வழித்திறங் கேட்ட காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும் நலம்புரி கொள்கை நான்மறை யாள பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை கப்பத் திந்திரன் காட்டிய நூலின் 155 மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோநீ வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள் 160 காமுறு தெய்வங் கண்டடி பணிய நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும் என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப் 165 பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று 170 நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவில் தோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் 175 அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று 180 மேலோ ராயினும் நூலோ ராயினும் பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் 185 வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் 190 சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென வியத்தகு மறையோன் விளம்பின னாதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் 195 ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின் வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் 200 என்திறம் உரையா தேகென் றேகத் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவரி தென்று 205 கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது 210 மாரி வளம்பெறா வில்லேர் உழவர் கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக் கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும் விழிநுதற் குமரி விண்ணோர் பாவை 215 மையறு சிறப்பின் வான நாடி ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென். உரை 1-4. திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக்கீழ் - மூன்று திங்களை அடுக்கி வைத்தாற் போலும் அழகிய முக்குடையின் கீழ், செங்கதிர் ஞாயிற்றுத் திகழ்ஒளி சிறந்து - சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் ஒளியினும் விளங்கும் ஒளி மிக, கோதை தாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த - மாலையாக மலர்ந்து தொங்கும் அசோகின் கொழுவிய நிழற்கண் எழுந்தருளிய, ஆதிஇல் தோற்றத்து அறிவனை வணங்கி - தன்னினும் ஒன்று முதற்கண் இல்லாத தோற்றத்தினையுடைய அருகதேவனைத் தொழுது; திங்கள் மூன்றடுக்கிய என்பதற்குத் திங்கள் முதலிய மூன்றடுக் கிய எனலுமாம். முக்குடை - சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம். சிறந்து - சிறப்ப எனத் திரிக்க. கடவுட்டன்மை யால் அப் பிண்டி எஞ்ஞான்றும் மாலையாகப் பூத்தலின் கோதை தாழ் பிண்டி என்றார் என்க. ஆதியில் தோற்றத்து அறிவனென்றது தனக்கொரு முதல்வன் இல்லாதவன் என்றவாறு. இனி, தோற்றத் தின்கண் முதல் இல்லாதவ னெனலுமாம்; பிறப்பிலான் என்றபடி. அறிவன் - உறையூரிலருகன். 5-8. கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - நிக்கந்தனுடை பள்ளியிடத்துள்ள முனிவர் யாவர்க்கும், அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின் - ஆற்றிடைக் குறையாகிய அவ்விடத்துப் பரந்த சோலையினிடத்து, சாரணர் கூறிய தகை சால் நன்மொழி - சாரணர் அருளிய தகுதி யமைந்த அறவுரையை, மாதவத்தாட்டியும் மாண்பு உற மொழிந்து - கவுந்தியடிகளும் இனிமையுற மொழிந்து; நிக்கந்தன் - அருகன் ; நிக்கந்தனைக் கந்தன் என்றார். ஈண்டுக் கடவுளர் என்றது முனிவரை. இதனை, 1"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின், தொன்முது கடவுள்" எனவும், 2"முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, லிப்போழ்து போழ்தென் றது வாய்ப்பக் கூறிய, எக்கடவுண் மற்றக் கடவுள்" எனவும் வருவன வற்றானறிக. அரங்கம் - திருவரங்கமுமாம். சாரணர் கூறிய மொழி யாவது ‘ஒளியுறி னல்லது போதார் பிறவிப் பொதியறையோர்' என்றதனை. அந்தில் -அசைநிலையுமாம். 8-9. ஆங்கு அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி - அன்று அக் கடவுளர் உறைவிடத்தின்கண் தங்கி உறைந்து; அவர் என்றது முன்னர்க் கூறிய கந்தன் பள்ளிக் கடவுளரை. இனி, அடியார்க்கு நல்லார் அன்று என்பதற்கு வழி நாள் எனவும், அவர் உறைவிடம் என்பதற்குச் சாவகருறைவிடம் எனவும் பொருள் கூறுவர். ஆங்கு - அசை 10-14. தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - தென்றிசைக் கண்ணே செல்லுதலை விரும்பி, வைகறை யாமத்து வாரணம் கழிந்து - உறையூரை வைகறையாகிய யாமத்தில் விட்டு நீங்கி, வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற - ஞாயிறு கீழ்த்திசைக் கண்ணே விளக்கமுற்றுத் தோன்ற, வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த - வளவிய நீர் நிறைந்த வயல்களும் குளங்களும் பொலிவு பெற்ற, இளமரக் கானத்து இருக்கை புக்குழி - இளமரக் காவின்கண் மண்டபத்துப் புக்க காலை; வணங்கி மொழிந்து அடங்கி விருப்புற்றுக் கழிந்து புக்குழி என்க. 15-16. வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - மன்னர் யாரினும் பெரிய தகையை யுடையோனாகிய எம் மன்னன் வாழ்வானாக, ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க - பல்லூழி இவ் வுலகினை அவனே காப்பானாக; தொறும் என்பது தொறுவென நின்றது. 17-22. அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி - தன் பெருமையின் அளவினை உலகத்து மன்னர்களுக்குக் காலான் மிதித்து உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது - வடித்த வேலானும் எறிந்த அப் பெரிய பகையினைப் பொறுக்காது, பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்ட வதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு - வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ; தன்னளவு என்பதற்குக் கடலினதளவு எனலுமாம். அடியால் உணர்த்தலாவது கடல் தன் அடியைக் கழுவுமாறு நின்றமை. இது செய்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்படுவன். அடியின் உணர்த்தி வேலால் எறிந்த பழம்பகை யென்க. குலத்து முன்னோன் செய்தியைப் பின்னோனுக்கு ஏற்றியுரைத்தபடி. பின்வருவனவும் இன்ன. "தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" என்பதற்கு, அடியார்க்கு நல்லார் `அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் வாழ்வானாக'. என உரைப்பர்' 1"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலி யொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" என்பது கொண்டு அவர் அங்ஙனங் கூறினார் போலும்! கோடு என்பதற்குக் கரையெனப் பொருள் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லாரும் வேனிற் காதை முதற்கண் `தொடியோள் பௌவம்' என்பதற் குரை விரித்த விடத்துத் ‘தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும்' கடல் கொண்ட தென்றே கூறினார். பஃறுளியாறு 2"முந்நீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" எனப் புறநானூற்றிற் சிறப்பிக்கப்பெற்றமை அறியற்பாலது. 23-25. திங்கட் செல்வன் திருக்குலம் விளங்க - திங்களாகிய செல்வனுடைய மரபு விளக்கமுற, செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் - ஆயிரங்கண்களையுடைய இந்திரன் பூட்டிய வலி விளங்கிய ஆரத்தை, பொங்கு ஒளி மார்பிற் பூண்டோன் வாழி - பொலிவுற்ற விளக்கத்தினையுடைய மார்பின் கண் பூண்ட பாண்டியன் வாழ்வானாக ; விளங்கப் பூண்டோன் என இயைக்க. இங்ஙனம் ஆரம் பூண்டதனால் பாண்டியனைத் ‘தேவரார மார்பன்' என வாழ்த்துக் காதையுள் வழங்குவர். 26-31. முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று - இவன் நம் முதல்வனது சென்னி முடியிலே வளையை உடைத் தோன் என்று, இடி உடைப் பெருமழை எய்தாது ஏக - இடியினையுடைய பெரிய மழை பெய்தல் எய்தாது ஏகிற்றாக, பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப - தப்பாத விளையுளாகிய மிக்க வளஞ்சுரக்கும் வண்ணம், மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்கென - அம் மழையினை விலங்கிட்டு ஆண்ட மன்னவன் வாழ்வானாக என, தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி - குற்றம் நீங்கிய பெருமையினையுடைய பாண்டியன் வாழ்த்தி, மாமுது மறையோன் வந்திருந்தோனை - வந்து தங்கியிருந்த சிறந்த முதிய அந்தணனை; முடியில் வளையை உடைத்தென்றது முடியின் ஐந்துறுப்புக் களுள் ஒன்றாய கிம்புரியை உடைத்து என்றவாறு. முடியின் ஐந்துறுப் புக்களை 1"தாம முகுடம் பதுமங் கோடகம், கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" என்பதனானறிக. இனி, முதல்வன் முடியை வளை யாலுடைத்தோனெனலுமாம் ; இதனை 2"காய்சின மடங்கலன்னான் ... வீரன்" எனவும், 3"இன்னன பேசி ... அடித்தான்" எனவும் வரூஉம் இரு திருவிளையாடற் புராணச் செய்யுளானும் உணர்க. 4"வச்சிரத் தடக்கை யமரர் கோமான், உச்சிப் பொன் முடி யொளிவளை யுடைத்தகை" என்பர் பின்னும். பிழையா விளையுள் - வளந்தருதல் தப்பாத விளைநிலமுமாம். வந்திருந்தோன் - வினைப்பெயர். வேல்விடுத்துக் கடலை வற்றச் செய்ததும், இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டதும், இந்திரன் முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத் தளையிட்டதும் உக்கிரவன்மன் (உக்கிர குமார பாண்டியன்) செயல்களாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். 32-33. யாது நும் ஊர் ஈங்கு என் வரவு எனக் கோவலன் கேட்ப-நும் ஊர்யாது இங்கு நீரவருவதற்குக் காரணம் என்னை எனக் கோவலன் கேட்க; வாழ்க காக்க தென்னவன் வாழி பூண்டோன் வாழி மன்னவன் வாழ்கென வாழ்த்தி வந்திருந்தோனைக் கோவலன் கேட்ப என்க. 33-34. குன்றாச் சிறப்பின் மா மறையாளன் வருபொருள் உரைப்போன் - மிக்க சிறப்பினையுடைய அம் மறையோன் தன் வரவின் பொருளை யுரைப்போன் ; 35-40. நீல மேகம் நெடும் பொற் குன்றத்து - கரிய மேகம் உயர்ந்த பொன்மலையினிடத்து, பால் விரிந்து அகலாது படிந்தது போல - பக்கங்களில் விரிந்து மிகாமல் படிந்த தன்மையை ஒப்ப, ஆயிரம் விரிந்து எழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளி - பரப்பி எழுந்த ஆயிரந்தலையினையுடைய அரிய வலி பெற்ற பாம்பணையாகிய பள்ளிமீது, பலர் தொழுது ஏத்த - பலரும் வணங்கிப் போற்ற, விரிதிரைக் காவிரி வியன் பெருந் துருத்தி - விரிந்த அலைகளையுடைய மிகப் பெரிய காவிரியாற்றிடைக்குறையில், திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பி யுறையும் மார்பையுடையோன் கிடந்த கோலத்தினையும் ; நீல மேகம் படிந்ததுபோல வென்க. நீல மேகமும் பொற் குன்றமும் திருமாலுக்கும் அனந்தனுக்கும் உவமை. 1"மின்னவிர் சுடர்மணி யாயிரம் விரித்த, கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கை" என்பது பரிபாடல். 41-51. வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் - மிக்க அருவி நீரினையுடைய வேங்கட மெனப்படும், ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவுயர்ந்த மலையின் உச்சி மீதே, விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடை நிலைத் தானத்து - இருமருங்கினும் விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் திங்களும் விளங்கி உயர்ந்த இடைப்பட்ட நிலத்தே, மின்னுக் கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல - நல்ல நீல நிறத்தினையுடைய மேகம் மின்னாகிய புது ஆடையை உடுத்து விளங்குகின்ற இந்திரவில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல, பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும். - பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால்போலும் வெளிய சங்கத்தினையும், தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி- அழகிய தாமரை போன்ற கையினிடத்து ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு-அழகு விளங்கும் ஆரத்தை மார்பின்கண் பூண்டு, பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய - பொன்னினானாய பூப்பொறித்த ஆடையொடு விளங்கித் தோன்றிய, செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக் கண்களையுடைய நெடியோன் நின்ற கோலத்தினையும்; ஞாயிறும் திங்களும் சக்கரத்திற்கும் சங்கிற்கு முவமை அவற் றிடை நின்ற மேகம் ஆழிசங்கேந்திய நெடியோற்குவமை; மின்னும் வில்லும் பொலம்பூவாடைக்கும் ஆரத்திற்குமுவமை. மின், வில் ; ஆரம், பூவாடை - எதிர்நிரனிறை. மீமிசை - ஒரு பொருட் பன் மொழி . 1"பருவம் வாயத்தலி னிருவிசும் பணிந்த, இருவேறு மண்டிலத் திலக்கம் போல, நேமியும் வளையு மேந்திய கையாற், கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண், அருவி யுருவி னாரமொ டணிந்தநின், திருவரை யகலம்" என்னும் பரிபாடற் பகுதியோடு இஃது ஒத்து நோக்கி மகிழற்குரியது. 52-53. என்கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன் - காட்டுவாயாகவென என் கண்கள் எனது உள்ளத்தைக் கவலை செய்தலான் ஈண்டு வந்தேன் ; குடமலை மாங்காட்டு உள்ளேன் - குடகமலைப் பக்கத்துள்ள மாங்காடு என்னும் ஊரிலுள்ளேன்; என்கண் காட்டென்று கவற்ற வந்தேன் என்க. என்கண், எழுவாய். இனி, எனக்குக் காட்டுகவென்று உள்ளம் கவற்றுதலால் வந்தேன் என உள்ளத்தை எழுவாயாக்கி யுரைத்தலுமாம் ; இதற்கு என்கட் காட்டெனத் திரிதற்பாலது திரியாது நின்றதெனல் வேண்டும். 54-57. தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் - பாண்டியனுடைய நாட்டின் சிறப்பினையும் அவன் கொடை முதலிய செய்கையினையும், கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின் வாழ்த்தி வந்திருந்தேன் - கண்கள் குளிரும் வண்ணம் கண்டேன் ஆகலான் அவனை நாவால் வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு என - இதுவே எனது வருகையின் காரணமாகும் என்று, தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு - முத்தீயின் திறத்தில் உள்ளம் விரும்பியோனாகிய அம் மறையோன் கூறக் கேட்டு; 58-59. மா மறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீ என - கோவலன் அவனை நோக்கிப் பெரிய வேத முதல்வனே மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறியினை நீ கூறுவாயாக என்று கேட்க, கோவலற்கு உரைக்கும் - அம்மறையோன் அவற்கு இதனைக் கூறுவான் ; மறையோன் பாண்டி நாட்டினைக் கண்டு ஆண்டு நின்றும் போந்தன னென்பதறிந்தமையால் அவனை மதுரைக்கேகும் நெறி கேட்டனனென்க. 60-67. கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி - அரசியற்றொழி லினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் கோல் கோடலானே, வேத்தியல் இழந்த வியனிலம் போல - அரசியல் இழந்த அகன்ற நிலத்தைப் போல, வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் - வேனிலாகிய அமைச்சனொடு வெவ்விய கதிர்ச்களையுடைய ஞாயிறாகிய அரசன், தான் நலம்திருக - நலம் வேறுபடுதலான், தன்மையிற் குன்றி - தமது இயற்கை கெட்டு , முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து - முல்லை குறிஞ்சி என்னும் இருதிணையும் முறைமை திரிந்து, நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து - தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோரை நடுங்கும் வண்ணம் துன்பத்தினை யுறுவித்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும் இக் காலத்து , எய்தினிர் காரிகை தன்னுடன் - இக்காரிகையோடு அடைந்தீர்; 1"கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள், நீல வாட் படைநீலிகோட்டங்களும்நிரந்து, கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப், பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு." என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் ஈண்டு அறியற்பாலது. நலந்திருகல்-வெம்மை மிகுதல். கோடி இழந்த நிலம்போலக் கிழவனொடு வேந்தன் றிருகக் குன்றித் திரிந்து இழந்து உறுத்துக் கொள்ளுங் காலையெனக் கூட்டுக. காரிகை தன்னுடன் காலை யெய்தினிரென மாறுக. காலை - காலம். தான் - அசை. 68-73. அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த - கற்பாறையும் சிறுமலையும் அரிய வழிகளின் கலப்பும் நிறைந்த நீர்க்கு வேலியாகிய ஏரிக் கரையும் ஆய இவை அடைவுபடக் கிடந்த, இந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று - இந்த மிக நீண்ட சுர நெறியைக் கடந்து சென்று, கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் - கொடும்பாளூரின்கண் நெடுங்குளக் கரைக்கு உள்ளாகப் புக்கால், பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய - முடியிடத்துப் பிறையாகிய கண்ணியைச் சூடிய பெரியோனாகிய இறைவன் ஏந்திய, அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும் - முக்கூறாக அறுக்கப்பெற்ற சூலம்போல மூன்று வழிகள் பிரியும்; பொறை - துறுகல் எனினுமாம். ஆரிடையாவது ஆறலைப் போரும் ஊறுசெய் விலங்குமுடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின் னெறியுமாயிருப்பது. நிறை நீர்வேலி - பேய்த்தேர் என்றும், கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் - கொடும்பாளுர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்க்கும் பொதுவாகிய ஏரிக்கரை என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார். நீந்திப் புகவரிது என்பது தோன்றப் புக்கால் என்றார். அறைவாய்ச் சூலம் என்பதற்குக் கண்ணோட்டமற்ற வாயினையுடைய சூலம் எனலுமாம். 74. வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் - அங்ஙனம் கவர்த்த நெறியினுள் வலப்பக்கத்துக் கிடந்த வழியில் நீர் செல்லத் துணிவீராயின்; 75-86. அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் - விரிந்த தலையினையுடைய வெண்கடம்பும் காய்ந்த தலையினையுடைய ஓமையும், பொரி அரை உழிஞ்சிலும் புல்முளி மூங்கிலும் - பொரிந்த தாளினையுடைய வாகையும் தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கிலும், வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும் - வரிகளையுடைய மரல் நீரின்மையாற் சுருங்கிய கரிந்து கிடக்குமிடங்களும், நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் கானமும் - நீருண்டலை விரும்பி அவ் வேட்கையானே மான்கள் நின்று உளைக்கும் காடும், எயினர் கடமும் கடந்தால் - எயினர் ஊரை யடுத்த வழியுமாய இவை உள ; இவற்றைக் கடந்து செல்லின், ஐவன வெண்ணெலும் அறைக் கண் கரும்பும் - மலைச் சாரலில் விளையும் ஐவனமாகிய நெற்பயிரும் இலை அற்ற கணுக்களையுடைய கரும்பும், கொய் பூந் தினையும் கொழும் புனவரகும்- கொய்யும் பருவத்தினையுடைய பொலிவு பெற்ற தினையும் கொழுவிய புனத்தின் கண் விளைந்த வரகும், காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் - வெள்ளுள்ளியும் மஞ்சளும் அழகிய கொடியினையுடைய கவலையும் , வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் - தாழ்ந்த குலையினையுடைய வாழையும் கமுகும் தெங்கும், மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய - மாவும் பலாவும் ஆய இவை ஒன்றனை ஒன்று அடுத்துச் சூழப் பெற்று உயர்ந்த , தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுடைய சிறுமலை என்னும் பெயரினையுடைய மலை விளங்கித் தோன்றும் , அம் மலை வலங்கொண்டு அகன்பதிச் செல்லுமின் - அம் மலையை வலத்திட்டு இடப்பக்கத்து நெறியானே மதுரைக் கண் செல்வீராக.; உழிஞ்சில் - உன்னமெனலுமாம். புல் - புறக்காழுடையன. வரி மரற்றிரங்கிய - விலங்கு சுவைத்தலால் திரங்கிய எனலுமாம். திரங்கிய கிடக்கை., கரிபுறக்கிடக்கை யெனத் தனித்தனிக் கூட்டுக. எயினர் - மறவர். கரும்பு முதிர்தலான் இலையற்றதென்க. இனி, முறிக்கும் பருவத்தைத் தன்கட்கொண்ட கரும்பெனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். சிறுமலை - பெயர். 87-92. அவ்வழிப் படரீராயின் - அவ் வலப்பக்கத்து நெறியிற் செல்லீராயின், இடத்து - இடப்பக்கத்தே, செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும் - சிறகினையுடைய வண்டுகள் செவ்வழிப் பண்ணைப்போல் பாடுகின்ற, தடம் தாழ் வயலொடு தண் பூங்காவொடு - குளங்களோடும் தாழ்ந்த வயல்களோடும் குளிர்ந்த பூஞ்சோலையோடும், கடம் பல கிடந்த காடு உடன் கழிந்து - அருஞ்சுரங்கள் பலவும் இடைக்கிடந்த காட்டு நெறியையுங் கடந்து, திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்- அழகர் திருமலைக்கண் செல்குவீராயின், பெருமால் கெடுக்கும் பிலம் உண்டு - அங்கே மிக்க மயக்கத்தினைக் கெடுக்கும் பிலத்து நெறி ஒன்று உண்டு; 92. ஆங்கு - அப் பிலத்தினுள்ளே; செவ்வழி - செவ்வழியாழ் ; முல்லை நிலத்திற்குரிய பண். கடம்- பாலை நிலவழி. திருமால் குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை. 93-97. விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் - தேவர்களால் ஏத்தப்படும் வியக்கத்தக்க முறைமையினையுடைய, புண்ணிய சரவணம் பவகாரணியோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி- புண்ணியசரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் பெயர் யாண்டும் பரக்கப்பெற்று, விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்று உள - இடையறாத சிறப்பினை யுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற விளக்கம் அமைந்த மூன்று பொய்கைகள் உள்ளன; 97. ஆங்கு - அவற்றுள்; 98-99. புண்ணிய சரவணம் பொருந்துவிர் ஆயின் - புண்ணிய சரவணம் என்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - விண்ணவர் தலைவனாகிய இந்திரனாற் செய்யப்பெற்ற சிறந்த ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிவீர் ; பொருந்துதல் - ஆடுதல். எய்துதல் - உணர்தல். விண்ணவர் கோமான் விழுநூல் - ஐந்திரம். ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்டது என்னும்பொருட்டு. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்பது தொல்காப்பியப் பாயிரம். 100-101. பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் - பவகாரணி என்னும் பொய்கைக்கண் மூழ்கி ஆடுவீராயின், பவகாரணத்திற் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகவுள்ள முற்பிறவியினை உணர்வீர் ; பவம் - பிறப்பு. 102-103. இட்ட சித்தி எய்துவிர் ஆயின் - இட்ட சித்தி எனப்படும் பொய்கைக்கண் மூழ்குவீராயின், இட்ட சித்தி எய்துவிர் நீரே - நீவிர் உள்ளத்து எண்ணியவெல்லாம் அடைவீர்; இனி, இட்டசித்தி எய்துவிர் என்பதற்கு எண்வகைச் சித்திகளையும் அடைவீர் எனலும் பொருந்தும். 104. ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின் - அவ்விடத்து அப்பிலத்தின்கண் நுழைய விரும்புவீராயின்; 105-107. ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோற் றொழுது - மிகவுயர்ந்த அம் மலைக்கண் எழுந்தருளிய மேலோனை வணங்கி, சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து - உள்ளத்தின்கண் அவனுடைய சிவந்த திருவடிகளை எண்ணி, வந்தனை - துதித்தலோடு, மும்முறை மலைவலஞ் செய்தால் - அம் மலையை மூன்று முறை வலம் வந்தால்; அத்து - சாரியை. உயர்ந்தோன் - திருமால். வைத்தல் - எண்ணுதல். வந்தனை - ஈண்டுப் போற்றல். 108-111. நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை - நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரைக் கண், பொலங்கொடி மின்னின் புயல் ஐங்கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - விளக்கத்தையுடைய மலர்கள் விரிந்த கோங்கினடிக்கீழ்ப் பொற்கொடி போன்ற ஒளியினையும் மேகம்போலும் ஐங்கூந்தலினையும் உடைய, தொடி வளைத்தோளி ஒருத்தி தோன்றி - வளைந்த வளையல் அணிந்த தோளினையுடைய ஓர் இயக்கமாது வெளிப்பட்டு; சிலம்பாறு - பெயர். கன்னிகாரம் - கோங்கு. கன்னிகாரத்து மின்னினையும் கூந்தலினையு முடைய தோளி ஒருத்தி தோன்றி என்க. தொடி - வளைவு. 112-117. இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டு மின்றி ஓர் செம்மையில் நிற்பதும் செப்பு மின்நீயிர் - இம்மை யின்பமும் மறுமை யின்பமுமாய இரண்டு மின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தூயதாய் அழிவில்லாது நிற்கும் இன்பமுமாகிய பொருள்களை நீவிர் கூறுமின், இவ் வரைத்தாள் வாழ்வேன், - இம் மலையடிக்கண் வாழ்வேன், வரோத்தமை என்பேன் - வரோத்தமை யெனப் பெயர் கூறப் படுவேன், உரைத்தார்க்கு உரியேன்-அம்மூன்று உண்மையினையும் உரைத்தார்க்குயான் எத் தொழிற்கும் உரியேனாவேன், உரைத்தீர் ஆயின் திருத்தக்கீர்க்குத் திறந்தேன் கதவு எனும் - ஆகலின், நீவிர் அவற்றைக் கூறுவிராயின் அழகிய தகுதியையுடைய நுமக்கு இப் பிலவாயிற் கதவினைத் திறப்பேன் என்று கூறும். இம்மை இன்பம் - புகழ் ; பொருள் எனவுங் கூறுப. மறுமை இன்பம் - அறம். இன்பந் தருவனவற்றை இன்பமெனக் கூறினார். செம்மை - தூய்மை; நிற்பது - நிலை பெறுவது ; ஈண்டு வீடு 1"பிறப் பென்னும் பேதைமை" என்னுங் குறளிற் செம்பொருள் என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நோக்குக. திறந்தேன், விரை பொருள் பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. 118-123. கதவம் திறந்து அவள் காட்டிய நன்னெறி - உரைப் பின் அவள் கதவினைத் திறந்து காட்டிய நல்ல வழிக்கண், புதவம் பல உள போகு இடை கழியன - நீண்ட இடைகழியிடத்தன வாகிய வாயில்கள் பல வுள்ளன ; ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு- அவற்றைக் கழிந்து செல்லின் இரட்டைக் கதவினையுடைய வாயில் ஒன்றுளது, அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அதற்குமேல் வட்டிகையாக எழுதிய பொலிவுற்ற கொடிபோல்வாள் வந்து எதிர்ப்பட்டு, இறுதிஇல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் - முடிவிலா இன்பம் யாது அதனை எனக்கு இவ் விடத்து உரைப்பீராயின், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் - நீவிர் இம் முப்பொருளினும் விரும்பிய பொருளினைப் பெறுகுவீர் என்று கூறுவாள்; புதவம் - கதவு; ஈண்டு வாயில். போகு - நெடுமை. பூங்கொடி - பூங்கொடி போல்வாள். வட்டிகை - சித்திரம். இனி வட்டிகை என்பதற்கு எழுதுகோல் எனப் பொருள் கொண்டு எழுதுகோலால் எழுதிய எனலுமாம். இறுதியில் இன்பம் உரைத்தலாவது இறுதி யில்லா இன்பம் யாதென வுரைத்தல். இறுதி இல் இன்பம்-வீடு. போலும் - ஒப்பில் போலி. பேணிய பொருள் என்பதற்குப் புகழ், அறம், வீடு என்னும் மூன்றனுள் விரும்பிய பொருள் என்க. 124-125. உரையீராயினும் உறுகண் செய்யேன் - யான் வினாயதற்கு நீர் விடைகூறீராயினும் நுமக்குத் துன்பம் செய்யேன், நெடு வழிப் புறத்து நீக்குவல் நும் எனும் - நும்மை நீர் செல்லக் கடவ நெடிய நெறிக்கண் செலுத்துவல் என்று கூறும்; புறம் - இடம். 126-127. உரைத்தார் உளர் எனின் - இங்ஙனம் கேட்டதனைக் கூறினார் உளராயின், உரைத்த மூன்றின் கரைப்படுத்து ஆங்குக்காட்டினள் பெயரும் - மேற்கூறிய மூன்று பொய்கைகளின் கரைக்கண் செலுத்தி அவற்றைக் காட்டி மீளும்; ஆங்கு, அசை. 128-32. அருமறை மருங்கின் - அரிய வேதத்தின் கண்ணவாய, ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும் - ஐந்தானும் எட்டானும் வந்த முறையினையுடைய எழுத்துக் களையுடைய இரண்டு மந்திரங்களையும், ஒரு முறையாக உளங்கொண்டு ஓதி - ஒரு வழிப்பட்ட முறையானே மனத்துட் கொண்டு வாக்காற் றுதித்து, வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆயின் - அம் மூன்றனுள் நீவிர் வேண்டிய தொரு பொய்கைக் கண் விரும்பி மூழ்குவிராயின், காண்டகு மரபின அல்ல மற்றவை - அம் மூழ்குதலானாய பயன் தவஞ் செய் தார்க்கும் காணத்தகும் முறையினையுடையனவல்ல ; எழுத்தின் என்னும் இன் அசையெனக் கொண்டு, ஐந்தெழுத்தினும் எட்டெழுத்தினும் வருமுறை மந்திரம் என விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம். 133-138. மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - நீவிர் அப் பொய்கைகளின் பயனை விரும்பீராயின் அவற்றை யெண்ணாது அம் மலை மீது நின்றோனுடைய அழகிய தாமரை மலரை ஒத்த திருவடிகளை நினைமின், உள்ளம் பொருந்துவிராயின் மற்றவன் புள் அணி நீள்கொடிப் புணர்நிலை தோன்றும் - அங்ஙனம் நினைப்பீராயின் அத் திருமாலின் கலுழன் எழுதிய அழகிய நீண்ட கொடிமரம் பொருந்தி நிற்கும் இடம் காணப்படும், தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் - காணப்பட்ட அளவில் அத் தேவனுடைய இணைத்த மலர் போலும் இரண்டு திருவடிகளும் நும்மை ஏற்றுக்கொண்டு நும் பிறவித் துன்பத்தினைக் கெடுக்கும் ; கொடி புணர்நிலை என்றது கொடிமரம் நிற்குமிடம் என்றவாறு. நீவிர் அவ்விடைச் சென்று அதனைக் காண்பீர் என்பான் தோன்றும் என்றான். கெடுக்கும், முற்று, அவ்வழிப் படரீராயின், குன்றத்துச் செல்குவீராயின், பிலமுண்டு; ஆங்குப் பொய்கை மூன்றுள; பொருந்துவிராயின், ஆடுவிராயின், எய்துவிராயின் எய்துவிர்; வேண்டுதிராயின்; வலம் செய்தால், தோன்றி. என்பேன் செப்புமின் திறந்தேன் எனும்; உம்பர்த் தோன்றி உரைத்தால் பெறுதிர் எனும்; நீக்குவல் எனும்; காட்டினள் பெயரும்; மந்திரம் இரண்டும் ஓதி ஆடில் அவை காண்டகு மரபினவல்ல; பொருந்துமின்; தோன்றும்; கெடுக்கும்; என முடிக்க. 138-139. இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக்கு ஏகுமின்- அங்ஙனம் துன்பத்தைக் கெடுத்தலால் இன்பமுற்று மாட்சியுடைய மரபினையுடைய மதுரை நகர்க்குச் செல்லுமின்; இன்பமெய்தி என்பதற்கு ஏது விரித்துரைக்க. 140. காண்டகு பிலத்தின் காட்சி ஈது - கண்கூடாகக் காணும் பிலத்தின் தன்மை இதுவாகும்; காட்சி - ஈண்டுத் தன்மை. 140-149. ஆங்கு அந் நெறிப் படரீர் ஆயின் - அவ்விருவகைப் பட்ட வழிக்கண் செல்லீராயின், இடையது செந்நெறி ஆகும் - அவ் விரண்டன் இடைப்பட்ட வழி செவ்விய வழியாகும்; தேம் பொழில் உடுத்த ஊர் இடை இட்டகாடு பல கடந்தால் - அவ் வழியிலே தேன் ஒழுகும் சோலை சூழ்ந்த ஊர்கள் இடை யிடையேயுள்ள காடுகள் பலவற்றைக் கடந்துசெல்லின், ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர்த் தெய்வம் - அரிய வழியிடத்து மிக்க துன்பந்தரும் தெய்வம் ஒன்று உளது; நடுக்கம் சாலா நயத்தில் தோன்றி - அத் தெய்வம் நடுங்குதல் அமையாத இனிய வடிவோடு தோன்றி, இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும் - துன்பம் செய்யாது வழிப்போவாரைத் தடுக்கும்; மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி - அதனைத் தப்பின் அம்மதுரை செல்லும் வழி மூன்றும் ஒருங்கு சேர்ந்து கிடக்கும், ஆதலால் நீயிரும் சென்மின் ; நீள்நிலங் கடந்த நெடுமுடியண்ணல் தாள் தொழு தகையேன் போகுவல் யான் என - யானும் நெடிய உலகத்தினைத் தாவியளந்த நெடுமுடியண்ணலின் திருவடிகளை வணங்கும் தன்மையுடையேனாகலிற் செல்குவல் என்று கூற; தாங்கும் - தடுக்கும், அதனைப் தப்பின் எனவும், நீயிர் சென்மின், எனவும் விரித்துரைக்க, மறையோன் வாய்மொழிகளிலிருந்து, தீர விசாரித்தல், கட்டுரைவன்மை, சமயப்பற்று என்னும் பண்புகள் அவன்பால் மிக்குள்ளமை புலனாம். 150-151. மா மறையோன் வாய் வழித்திறம் கேட்ட காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் - பெருமையுடைய அம் மறை யோன் வாயால் நெறியின் இயல்பு கேட்ட கவுந்தியடிகள் ஓர் பொருள் பொதிந்த உரையை உரைப்பாராயினார் ; 152-164. நலம் புரி கொள்கை நான்மறையாள-நல்லொழுக்கத்தினை விரும்பிய கொள்கையினையுடைய நான்மறை வல்லோனே, பிலம் புகவேண்டும் பெற்றி ஈங்கு இல்லை - நீ கூறிய பிலத்தின்கண் புகுதற்குரிய தன்மை எம்மிடத்து இல்லை; ஏன் எனின்?, கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் - ஆயுக் கற்பத்தினையுடைய இந்திரன் செய்த வியாகரணத்தினை, மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்-அருகதேவன் அருளிய பரமாகமத்தின்கண் தோன்றக் காண்பாய், ஆகலாற் புண்ணிய சரவணம் பொருந்துதல் வேண்டா ; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ - நீ முற்பிறப்பிற் செய்தன யாவும் இப் பிறப்பிலே காண்கின்றிலையோ, (காண்பாய் என்றபடி) ஆகலான் யாம் பவகாரணி படிதல் வேண்டா ; வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் - உண்மைநெறியிற் பிறழாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத அரிய பொருள் சிறிதேனும் உண்டா, (இல்லை என்றபடி) ஆகலான் இட்ட சித்தியினை எய்த வேண்டுவதில்லை ; காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ - நீ விரும்பிய திருமாலாகிய கடவுளைக் கண்டு அவன் திருவடிகளைத் தொழ நீ செல்வாய் ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும் - நாங்களும் நீண்ட வழிக்கண் செல்லுவோம் ; என்று அம் மறையோற்கு இசைமொழி உணர்த்தி - என அவ் வந்தணனுக்குப் பொருந்தும் மொழிகளை அறிவித்து, குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி - உயர்ந்த கோட்பாட்டினை யுடைய கோவலனோடு அற்றைப் பகலில் ஓர் அரிய ஊரின்கண் தங்கி, நலம்புரி கொள்கை நான்மறையாள என்றது இகழ்ச்சி. கற்பம் எனற்பாலது கப்பம் என்றாயிற்று. இந்திரன் காட்டிய நூல் - ஐந்திரம். நூலினை யென்னும் உருபு தொக்கது. மெய்ப் பாட்டியற்கை - பரமாகமம். இறந்த பிறப்பின் எய்தியதனைப் பிறந்த பிறப்பின் அறிதல் என்பதனை, 1"இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையைப், பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து, செய்யும் வினையாலறிக இனிப்பிறந், தெய்தும் வினையின் பயன்" என்பதனா லறிக. வாய்மையும் கொல்லாமையுமே தலையாய அறங்கள் என்பதனைப் பொதுமறையானறிக. பொய்கை மூன்றினும் படிதலாலெய்தும் பயனெல்லாம் எங்கள் சமயநெறி நிற்றலால் எய்தற்பால மாகலின் அவற்றிற் படிதல் வேண்டாவென்பார் 'பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை' என்றார். அன்றைப் பகல் என மென்றொடர்க் குற்றுகரம் திரியாது ஐகாரம் பெற்று முடிதலை 2"அல்லது கிளப்பினெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும்" என்னுஞ் சூத்திரத்து இலேசான் முடிப்பர். 165-170. பின்றையும் அவ்வழிப் பெயர்ந்து செல் வழிநாள் - பின்னரும் தங்கி அந் நெறியிலே மீண்டும் செல்கின்ற பின்னாளில், கருந்தடங்கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப - கரிய பெரிய கண்ணினையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளும் வழிச் சென்ற வருத்தத்தினால் வழியின் பக்கத்து இருக்க, இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் - முன்னர்க் கூறிய இடைவழியிற் கிடந்த செலவினைக் கொண்ட இடத்திலே, புடைநெறிப் போய் ஓர் பொய்கையிற் சென்று நீர் நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்ப - பக்க வழியிலே சென்று ஓர் பொய்கைக் கரைக்கண் போய் நீரை உண்ணுதலை விரும்பி அவ் விருப்பத்தானே பெரிய துறையிடத்துக் கோவலன் நிற்க. ; பின்றை - பின்னை. வழிநாள் - மறுநாள். வழி. இடை நெறி என்பதனை நெறியிடை என்னலும் பொருந்தும். 171-175. கான் உறை தெய்வம் காதலிற் சென்று - முன் அம் மறையோன் கூறிய காட்டின்கண் உறையும் அவ் வாரஞர்த் தெய்வம் காதலுடன் சென்று, நயந்த காதலின் நல்குவன் இவன் என - மாதவியிடத்து விரும்பிய காதலினால் இவன் அன்பு கொள்வான் என்று கருதி , வயந்தமாலை வடிவில் தோன்றி - அவள் தோழியாகிய வசந்தமாலையின் வடிவோடு தோன்றி, கொடி நடுக்கு உற்றது போல - பூங்கொடி நடுக்க முற்றது போல, ஆங்கு அவன் அடி முதல் வீழ்ந்து ஆங்கு அருங் கணீர் உகுத்து - அவ்விடத்து அக் கோவலனுடைய அடிக்கண் விழுந்து அரிய கண்ணீரைச் சிந்தி; வயந்தமாலையின் வடிவு கொள்ளின் நல்குவனெனக் கருதி அவள் வடிவுடன் தோன்றி யென்க. அடிமுதல் - அடியிடம். பின் வரும் ஆங்கு, அசை, அருங்கணீர் என்றது பொய்க் கண்ணீர் தானும் சிறிது வருகின்றதென்பது தோன்ற நின்றது. சென்று தோன்றி வீழ்ந்து உகுத்து என்க. 176-179. வாசமாலையின் எழுதிய மாற்றம் தீது இலேன் - மணம் பொருந்திய மாலையின்கண் எழுதிய மொழியில் தவறுதலுடையேன் அல்லேன், பிழை மொழி செப்பினை - நீ தவறுடைய மொழிகளைக் கூறினை போலும், ஆதலிற் கோவலன் செய்தான் கொடுமை என்று - அதனானன்றே கோவலன் எனக்குக் கொடுமை செய்தான் என்று கூறி, என்முன் மாதவி மயங்கி வான் துயர் உற்று - மாதவி என் முன்பு மயங்கி வீழ்ந்து மிக்க துயரத்தை அடைந்து; இங்குக் கூறிய வரலாற்றினை வேனிற் காதையிற் காண்க. கோவலன் கொடுமை செய்தான் என்றது தன்னை விட்டுப் பிரிந்தமையை. 180-191. மேலோர் ஆயினும் - இருந்தவமுடையோரும், நூலோர் ஆயினும் - கற்றறிந்தோரும், பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் - நன்மை தீமைகளின் கூறுபாடுணர்ந்தோரும், பிணி எனக்கொண்டு பிறக்கிட்டு ஒழியும் - உள்ளங்கவற்றும் நோய் என்று கருதி முகம் பாராது விட்டுவிலகுகின்ற,. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என - வரைவின் மகளிருடைய வாழ்வு மிக இழிந்தது என்று சொல்லி, செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் - சிவந்த அரி படர்ந்த வளவிய கடையினையுடைய குளிர்ந்த கண்களால், வெண்முத்து உதிர்த்து - வெள்ளிய முத்துப் போலும் நீரைச் சிந்தி, வெண்ணிலாத் திகழும் தண்முத்து ஒருகாழ் தன் கையாற் பரிந்து - வெள்ளிய நிலாப்போல் விளங்கும் குளிர்ந்த தனி முத்து வடத்தினையும் பூட்டிய தனது கையினாலேயே அறுத்து வீசி, துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் - வெகுண்டு என்னையும் துறந்தாள் ஆகையால், மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - நீங்கள் மதுரை என்னும் பழம்பதியாகிய பெரிய நகரத்திற்கு வந்ததனை, எதிர்வழிப்பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப - வழிக்கண் எதிர்ப்பட்டோர் எனக்குக் கூறுதலான், சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் - வாணிகச் சாத்தொடு போந்து தனிமையால் துன்புற்று வருந்தினேன், பாத்தரும் பண்ப நின் பணி மொழி யாது என - பகுத்தல் அரிய பண்பினையுடையாய் அதற்கு நீ பணித்திடும் மாற்றம் யாதென்று கேட்ப; பால்வகை தெரிந்த பகுதியோர் - ஓதாது நன்மை தீமைகளை அறிவோர் என்றும், மதி நுட்பமுடையோர் என்றும் கூறுவர் பழைய உரையாளர்கள். பிறப்பு வீடு என்பவற்றின் துன்ப வின்பக் கூறு பாடுகளை யறிந்த மெய்யுணர்வினர் எனலுமாம். ஆயினும் என்பது விகற்பமுணர்த்தும். பிறக்கிடுதல் - பின்னிடல்; அஃதாவது முகம் பாராமை. ஏகாரம், தேற்றம். போலும் என்பது போன்ம் என்றாயது. என்னையும் - துறவா என்னையும்; உம்மை - சிறப்பு, சாத்து - வணிகர் கூட்டம். பாத்தல் - பகுத்தல் ; ஈண்டுப் பிரித்தல். இனி, பாத்தரும் பண்பு - பிறர்க்கில்லாத குணம் என்றுமாம். 192-200. மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு என - அறிவினை மயக்கும் தெய்வம் இவ் வலிய காட்டின்கண் உண்டென்று, வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் - வியக்கத்தக்க அவ் வேதியன் கூறினன் ஆகலான், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - வஞ்சத்தைப் போக்கும் மந்திரத்தினால், இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவென் யான் என - இந்த ஐவகைப்பட்ட சிலவாகிய கூந்தலையுடையாளின் உண்மையை யான் அறிகுவேன் என்று கருதி, கோவலன் நாவிற் கூறிய மந்திரம் - கோவலன் தனது நாவினாற் சொல்லிய மந்திரம், பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின் - பாய்ந்து செல்லும் கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் மந்திரம் ஆகலான் அஞ்சி, வனசாரிணியான் மயக்கம் செய்தேன் - யான் இவ் வனத்தின்கண் திரியும் இயக்கி, நினக்கு மயக்கம் செய்ய எண்ணினேன், புனமயிற்சாயற்கும் - கானமயில் போலும் மென்மையை உடைய நின் மனைவிக்கும், புண்ணிய முதல்விக்கும் - தவநெறி நிற்கும் கவுந்தியடிகட்கும், என் திறம் உரையாது ஏகு என்று ஏக - யான் செய்த இப் பிழையினைக் கூறாது செல்கவென்று சொல்லித்தானுஞ் செல்ல; மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டுண்டென என்றது, 1"ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்" என முன் கூறியதனை. வியத்தகு மறையோன் என்றது பலவற்றையும் அறிந்து கூறிய சதுரப் பாட்டினால். வஞ்சம் - வஞ்சவுரு. ஓதியை - ஓதியை உடையாள் யாவளென்பதனை. கூறினன் ; அங்ஙனங் கூறிய மந்திரம் என்க. வனசாரிணி- வனத்திற் சரிப்பவள். தவத்தினும் கற்புச் சிறந்ததாகலான் கண்ணகியை முற்கூறினார். இவ் விருவரும் சாயலும் அறனும் உடையாரேனும் தவறு கண்ட வழி வெகுண்டு சபிப்பர் என்று கருதி அவர்க்கு உரையற்கவென இரந்தாள். 201-202. தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து ஆங்கு அயா உறு மடந்தை அருந்துயர் தீர்த்து - பசிய தாமரை யிலைக் கண் தண்ணீரைக் கொண்டு வந்து அவ்விடத்துச் சோர்வுற்றிருந்த கண்ணகியின் அரிய துன்பத்தினை நீக்கி; அடை - இலை. அயா - தளர்ச்சி. அருந்துயர் - வழிச்செலவானும் நீர் வேட்கையானும் ஆயது. 203-206. மீதுசெல் வெம்கதிர் வெம்மையில் தொடங்க - வானிலெழுந்து செல்லும் ஞாயிறு வெம்மை செய்தலைத் தொடங்கலான், தீது இயல் கானம் செல அரிது என்று - தீமை மிக்கு நிகழ்கின்ற இக் காடு இனி வழிச் சேறற்கு அரிது என்று கருதி, கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து - கோவலனுடனும் வளைந்த காதணியினையுடைய கண்ணகியுடனும் கவுந்தியடி களும் வழிமயக்கத்தினையுடைய நிலப் பரப்பின்கண்; தீதுஇயல் கானம் - பாலைத் தன்மை நிகழ்கின்ற கானம். 207-216. குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் தம்மிற் கலந்துள்ள, பூம்பொழில் விளங்கிய இருக்கை - பொலி வினையுடைய சோலை சூழ்ந்து விளங்கிய இருப்பிடத்து, ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - அரிய இடங்களையுடைய வழிகளிற் செல்வோரது வளத்தினைப் பெறுவதல்லது, மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் - மழையினானாகும் வளத்தினைப் பெறுதலில்லாத வில்லாகிய ஏரினையுடைய மறவர், கூற்று உறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி - கூற்றத்தினை ஒத்த வலியுடனே வளைந்த வில்லைக் கையிலேந்தி, வேற்றுப் புலம் போகி - பகைவர் முனையிடத்துச் செல்ல, நல் வெற்றம் கொடுத்துக் கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும் - அவர்க்கு நல்ல வென்றியைக் கொடுத்து அதற்கு விலையாக மிக்க ஆண்மைத் தன்மையை உடைய அவிப்பலியாகிய கடனை எதிர்நோக்கும், விழி நுதற் குமரி - நெற்றியிற் கண்ணையுடைய குமரியும், விண்ணோர் பாவை - தேவர் போற்றும் பாவையும், மை யறு சிறப்பின் வான நாடி - குற்ற மற்ற சிறப்பினையுடைய வானநாட்டை யுடையவளுமாகிய, ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் - கொற்றவையின் கோயிலைச் சென்றடைந்தனர் அப்பொழுது; பெறா - பெறுதலை விரும்பாத. 'ஆரிடை யத்தத் தியங்குநரல்லது, மாரி வளம்பெறா வில்லே ருழவர்' என்ற கருத்து 1"வானம் வேண்டா வறனில் வாழ்க்கை, நோன்ஞாண் வினைஞர்" எனவும், 2"கானுயர் மருங்கிற் கவலை யல்லது, வானம் வேண்டா வில்லே ருழவர்" எனவும் அகப்பாட்டில் வந்திருத்தல் காண்க. போகி என்பதனைப் போகவெனத் திரிக்க. உழவர் ஏந்திப் போகக் கொடுத்துப் பார்த்திருக்கும் ஐயை என்க. இனித் திரியாது உழவர்க்கு ஏந்திப் போகிக் கொடுத்துப் பார்த்திருக்கும் என முடிப்பினும் அமையும். கழி பேராண்மைக் கடன் - தன்னைத்தான் இடும் பலிக்கடன். மயங்கதரழுவத்து விளங்கிய இருக்கைக்கட் கோட்டம் என்க. விழிநுதல் - நுதல்விழி என்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. காடுகாண் காதை முற்றிற்று. 12. வேட்டுவ வரி (மூவரும் ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று, 'எயினர் மன்றுகள் பாழ்பட்டன; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள்; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும் கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக் கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த கண்ணகியை நோக்கி, `இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, ....’ என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி `மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார் சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, `விறல் வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர் கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.) கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்தாங்கு ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை 5 வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப 10 இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது 15 அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு 20 இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து 25 வளைவெண் கோடு பறித்து மற்றது முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பால் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து 30 உரிவை மேகலை உடீஇப் பரிவொடு கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் 35 பந்துங் கழங்குந் தந்தனர் பரசி வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர 40 ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி 45 இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய 50 திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி 55 நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி 60 வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை 65 இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் பலர்தொழும் அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் 70 பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமரிளங் குமரியும் அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே; - உரைப்பாட்டுமடை - வேறு 1 நாகம் நாறு நரந்தம் நிரந்தன ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே; 2 செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே; 3 மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே; வேறு 4 கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும். 5 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும். 6 பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் வாய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும்; வேறு 7 ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; 8 வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; 9 சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்; வேறு 10 ஆங்குக், கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு அசுரர் வாட அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே; வேறு 11 ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும் மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடு மாயின் காயா மலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்; 12 உட்குடைச் சீறூ ரொருமகன் ஆ னிரைகொள்ள உற்ற காலை வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்; 13 கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிபடரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிபடரப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்; வேறு 14 இளமா எயிற்றி இவைகாண்நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன; 15 முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன; 16 கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன; - துறைப்பாட்டுமடை.- வேறு 17 சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே; 18 அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணியுரு வினைநின் மலரடி தொழுதேம் கணநிறை பெருவிறல் எயினிடு கடனிது நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே; 19 துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள் அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே; வேறு 20 வம்பலர் பல்கி வழியும் வளம்பட அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய் சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்; 21 துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்; 22 பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் அருளில் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்; வேறு 23 மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியுங் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே. உரை 1-5. கடுங்கதிர் திருகலின் - அங்ஙனம் அடைந்தவர், ஞாயிற்றின் வெவ்விய கதிர்கள் முறுகுதலால், நடுங்கு அஞர் எய்தி ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும் பல வுயிர்த்து ஆங்கு - மணமுள்ள பலவாக முடிக்கப்படும் கூந்தலையுடைய கண்ணகி வழிச்செல் வருத்தத்தினால் மிக்க துன்பத்தினை அடைந்து சிறிய அடிகள் சிவத்தலினால் வல்லா நடையோடும் குறுகப் பலவாக மூச்செறிதலின், ஐயை கோட்டத்து எய்யா ஒருசிறை வருந்து நோய் தணிய இருந்தனர் - அத்துன்பந் தணியும் வண்ணம் கொற்றவையின் கோயிலில் யாவரும் அறியாத ஒரு பக்கத்து இருந்தனர்; நடுங்கு அஞர் - நடுங்குதற்கேதுவாகிய துன்பம் ; மிக்க துன்பம். வருந்துநோய் என்பதும் அது. உயிர்த்து - உயிர்த்தலின் என்க. ஆங்கு - அசை; அப்பொழுதென்றுமாம். கூந்தல் திருகலின் வருத்தத்து அஞர் எய்திச் சிவப்ப உயிர்த்தலின் அடைந்தவர் நோய் தணியக் கோட்டத்து ஒரு சிறை இருந்தனர் என்க. 5. உப்பால் - மேலே; 6-7. வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்து - அம்பினை வழங்கும் வில்லை யேந்திய பெரிய கையையுடைய மறவர் குடியிற் பிறந்த உரிமையை உடைய, பழங்கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி - முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப் போந்த ஒலிக்கும் வாயினையுடைய தேவராட்டி; வழங்கும் வில் - அம்பை வழங்கும் வில் என்க. தாயும் - உரிமை. முழங்கு வாய் - கொக்கரிப்பினையுடைய வாய். சாலினி - தேவராட்டி. பழங்கடன் - ஊரார் நேர்ந்த கடன். 8-11. தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப - மறவர் வியக்கும் வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி - முள்வேலி இடப் பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடி; கானவர் வியப்ப ஆடி என்க. வேலியை உடைய ஊர் எயினர் கூட்டுண்ணுமூர் என இயைக்க. கூட்டுண்டல் - கவர்ந்த பொருளைச் சேர்ந்துண்டல். நடுவூர் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. 12-13. கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன - பழங்கடன் கொடாமையின் ஒலியினையுடைய பகைவரது பெரிய ஊர்க் கண்ணே திரண்ட ஆனிரைகள் மிக்கன, வல்வில் எயினர் மன்று பாழ் பட்டன - பகைவரை அழிக்கும் வலிய வில்லினைக் கொண்ட மறவருடைய மன்றுகள் பாழ்பட்டன ; கல் - ஒலிக் குறிப்பு. சிறத்தல் - மிகுதல். பட்டது என்பதும் பாடம். 14-15. மறக் குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் - மறக்குடியிற் பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர் குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர்; வழிவளம் - வழிப்போவாரைப் பறிக்கும் வளம். மறக்குடித் தாயத்து எயினர் அடங்கினர் என்க. இனி, தாயத்து வழிவளம் என்பதற்குத் தாயமாகிய வழிவளம் எனலுமாம்; ஈண்டு அத்து அல்வழிக்கண் வந்ததென்க. இது முன்னிலைப் புறமொழி. 16-17. கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது - கலையாகிய ஊர்தியினையுடைய கொற்றவை தான் கொடுத்த வெற்றியின் விலையாகிய உயிர்ப்பலியை உண்டாலல்லது, சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நும் வில்லிற்குப் பொருந்திய வெற்றியைக் கொடாள்; சிலை அமர்வென்றி என்பதற்கு வில் விரும்பும் வென்றி எனப் பொருள்கொண்டு, உடையான் தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டது எனக் கூறினும் பொருந்தும். 18-19. மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் கட்டு உண் மாக்கள் கடந்தரும் என ஆங்கு - வழிப்போவார் வளனைப் பறித்து உண்ணும் மறவர்காள் நீவிர் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்ந்த கடனைத் தம்மின் என்று சொல்ல; கட்டல் - பறித்தல். மாக்கள் - விளி. தாருமென்பது தருமெனக் குறுகிற்று. ஆங்கு - அசை. இனி, எயினர் குடிப் பெண் ஒருத்தியைக் கொற்றவை கோலங் கொள்வித்தல் கூறுகின்றார். 20-21. இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத் தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் கருதிய பகைஞர் தலையைத் தாம் அறுத்திட்டு எண்ணுவதல்லது பகைவர் கருதுவது முடிவு போகாமைக்குக் காரணமாகிய மறவரது பழைய குடிக்கண் பிறந்த குமரியை; தம் வன்மையாற் பிறரை அழித்தற் குரியரே யன்றிப் பிறர் தம்மை அழித்தற் குரியர் அல்லர் என்பதாம். சுட்டு - கருத்து. இனி, தலைகள் அரிந்து வைக்கப் பிறரால் எண்ணப்படுமதல்லது நோயாற் செத்துச் சுடப்பட்டுப் போகாத குடி எனலுமாம். 22-26. சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி - சிறிய வெள்ளிய பாம்பின் குட்டியாகப் பண்ணிய பொன் நாணால் குறுகிய நெளிந்த கூந்தலை நீண்ட சடையாகச் சுற்றிக் கட்டி, இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து - கட்டு வேலி சூழ்ந்த தோட்டப் பயிரை அழித்த பன்றியின், வளை வெண் கோடு பறித்து - வளைந்த வெள்ளிய கொம்பினைப் பிடுங்கி, மற்று அது முளை வெண்டிங்கள் என்னச் சாத்தி - அதனை இளைய வெள்ளிய பிறை என்னும்படி சாத்தி ; குமரியைக் கூந்தலைக் கட்டி என்றது, 1"முதன்முன் ஐவரிற் கண்ணென் வேற்றுமை, சினைமுன் வருத றெள்ளி தென்ப" என்னுஞ் சூத்திரத்துத் ‘தெள்ளிது' என்பதனாற் கொள்க. 'அரவின் குருளை' என்றதனை, 2"நாயே பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை என்ப" என்னும் சூத்திரத்து 'ஆயுங்காலை' என்பதனாற் கொள்க. சுற்றிக் கட்டி யென்க. இனி, கூந்தலைச் சடையாகக் கட்டி நாணினைக் குருளையாகச் சுற்றி என்னலுமாம். படப்பை ஆகுபெயர். இனி, படப்பை இழுக்கிய ஏனம் என்பதற்குப் படப்பைக்கண் பட்ட ஏனம் என்றுமாம். 27-30. மறங் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற - தறு கண்மையை உடைய வலிய புலியினை வாயைப் பிளந்து கொண்ட, மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி - ஒழுங்காகக் கோத்த வெள்ளிய பல்லினாலாகிய தாலியை வரிசைப்படக் கட்டி, வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - கோடுகளும் புள்ளிகளும் கலக்கப் பெற்ற தூய புறத்தினையுடைய தோலினை மேகலையாக உடுத்து ; பல்லொழுங்கை நிரைத் தாலியாகப் பூட்டி யெனலுமாம். உரிவை - உரி. 30-31. பரிவொடு கரு வில் வாங்கிக் கையகத்துக் கொடுத்து - வருத்தத்துடன் வயிர வில்லை வளைத்து அவள் கைக்கண் கொடுத்து; பரிவு - அன்புமாம். வில் வாங்கி என்பதற்கு வில்லை எடுத்து எனலும் அமையும். வாங்குதல் - எடுத்தல். 32. திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்குண்ட கொம் பினையுடைய கலையின்மீது இருக்கச் செய்து ; திரிதல் - முறுக்குதல். 1"திரிமருப்பிரலை" என்பது காண்க. ஊரில் திரிதரும் எனலும் ஆம். 33-35. பாவையும் - மதனப்பாவை முதலியனவும், கிளியும் தூவி அம் சிறைக் கானக் கோழியும் நீல் நிற மஞ்ஞையும் - கிளியும் சிறு மயிரினையுடைய அழகிய சிறகினையுடைய காட்டுக் கோழியும் நீலநிறம் பொருந்திய மயிலும், பந்தும் கழங்கும் தந்தனர் பரசி - பந்தும் கழங்கும் ஆகிய இவற்றைக் கொடுத்துத் துதித்து; தூவி - சிறகின் மயிர் ; சூட்டும் ஆம். தந்தனர் - முற்றெச்சம். 36-39. வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தமும் - வண்ணக் குழம்பும் பொற்பொடியும் குளிர்ந்த மணமுள்ள சந்தனமும், புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், பூவும் புகையும் மேவிய விரையும் - மலர்களும் புகையும் விரும்பிய மணப்பொருள்களும் ஆய இவற்றை, ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - பணி செய்யும் மறப்பெண்கள் தாங்கினராய்ப் பின்னே செல்ல; வண்ணம் - தோள் முதலியவற்றில் நிறமெழுதுங் குழம்பு. புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு. ஏந்தினர், முற்றெச்சம். 40-42. ஆறு எறி பறையும் சூறைச் சின்னமும் - வழிபறிக்குங் கால் கொட்டும் பறையும் சூறைகொள்ளுங்கால் ஊதும் சின்னமும், கோடும் குழலும் பீடு கெழு மணியும் - கொம்பும் புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணியும் ஆய இவை, கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் நிறீஇ - தம்மிற் கூடி ஒலிப்ப இவற்றை அவ் வணங்கின் முன்னே நிறுத்த; கோடு - துத்தரிக்கொம்பு என்ப; சங்குமாம். நிறீஇ என்பதனை நிறுத்தவெனத் திரிக்க. ‘அணங்கு மெய்ந்நிறீஇ' எனப் பாடங்கொண்டு, அக் குமரிமேல் அணங்கை யேற்றி என்றுரைப்பர் அரும் பதவுரையாசிரியர். 43-44. விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை - தான் தந்த வெற்றியின் விலையாகிய பலியினை யுண்ணுகின்ற விரிந்த பலி பீடத்தை முதலிற் றொழுது, கலைப்பரி ஊர்தியைக் கை தொழுது ஏத்தி - பின்னர் விரைந்த செலவினையுடைய கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையைக் கையால் வணங்கி நாவாற் போற்றி; பலியுண்ணும் பீடிகை ; பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது ; உண்ணும் ஊர்தியை எனலுமாம். மலர்ப்பலி பீடிகை எனப் பாடங்கொண்டு, மலர்ப்பலி பீடிகை என்றது கோட்டத்தை எனவுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். ஏத்துதல் சாலினியின் தொழில். பீடிகைக்கு அருகே உள்ள தலைஊர்தியைத் தொழுது எனலுமாம். கலைப் பரியூர்தி - தெய்வ வுருக்கொண்ட குமரி. 45-50. இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - தம்முள் ஒத்த மலர்போலும் சிறிய அடிகள் வருந்தினவளாய்த் துன்புற்றுத் தன் கணவனொடு தங்கி யிருந்த மணம் நிறைந்த கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டி, இவளோ - இப் பெண், கொங்கச் செல்வி - கொங்கு நாட்டிற்குச் செல்வமாயுள்ளவள், குடமலை யாட்டி - குடமலை நாட்டினையாளும் செல்வி, தென்தமிழ்ப் பாவை - தென்றமிழ் நாட்டின் பாவை, செய்த தவக் கொழுந்து - உலகோர் செய்த தவத்தின் கொழுந்து போல்வாள், ஒரு மா மணியாய் உலகிற்கு ஓங்கிய திரு மா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப - இவ்வுலகிற்கு ஒப்பற்ற முழு மாணிக்கம் போன்று உயர்ந்த அழகிய பெண்மணி என்று சாலினி தெய்வத்தன்மை அடைந்து இவளை மிகுத்துக் கூற; சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா னறிக. 51-53. பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று - அது கேட்ட கண்ணகி இம் மூதறிவுடையாள் மயக்கத்தாற் கூறினாள் என்று, அரும்பெறற் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப - பெறுதற்கரிய கணவனது பெரிய புறத்தே மறைந்து புதிய புன்முறுவல் தோற்றினவளாய் நிற்க; தமது பெருமையினைப் பிறர் கூறுங்கால் நாணுதல் பெரியோர் இயல்பு. ‘விருந்தின் மூரல்' என்றார், இவள் நெடுநாள் முறுவல் ஒழிந்திருந்தாள் என்பது தோன்ற. நாணினால் மறைந்தாள் என்க. 54-55. மதியின் வெண்தோடு சூடும் சென்னி - பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து - நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடைய; மதி - ஈண்டுப் பிறை; இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. 56-57. பவள வாய்ச்சி - பவளம் போன்ற வாயினையுடையாள், தவள வாள் நகைச்சி - வெள்ளிய ஒளி பொருந்திய நகையினையுடையாள், நஞ்சு உண்டு கறுத்த கண்டி - நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள்; 57-58. வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப் பூட்டி நெடிய மேருவாகிய வில்லை வளைத்தவள்; அரவு நாண் என்பதற்கேற்ப மலை வில் என உரைக்கப்பட்டது. வில்லை வளைத்து நாண் பூட்டியவள் எனப் பிரித்துக் கூட்டுக. 59. துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள் ; 60. வளையுடைக் கையில் சூலம் ஏந்தி - வளையல் அணிந்த கையில் சூலத்தை ஏந்தினவள்; ஏந்தி - வினைமுதற்பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. 61-62. கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி - யானையின் தோலைப் போர்த்து வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள்; அணங்கு - வருத்தம். 63-64. சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை - மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை; இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம் சிவபெருமானும் ஆய உருவமாகலான் `சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி' என்றார். வலம்-மேன்மை. 65-66. இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் - தலையும் உடலும் இருவேறு வடிவினையுடைய திரண்ட தோளினையுடைய அவுணனது, தலைமிசை நின்ற தையல் - தலையின் மீது நின்றவள்; இரண்டு வேறு உருவு - உடலின் வேறுபட்ட கடாவின் தலையுடைய வடிவு. அவுணன் - மகிடாசுரன். விக்கிரமாசுரன் என்பாரு முளர். 66-68. பலர் தொழும் அமரி - யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள், குமரி - இளமை பொருந்தியவள், கவுரி - கௌர நிறத்தையுடையவள், சமரி - போரில் வல்லவள், சூலி - சூலம் ஏந்தியவள், நீலி - நீலநிறமுடையோள், மால் அவற்கு இளங்கிளை- திருமாலுக்கு இளையவள் ; இளங்கிளை - இளையவுறவினர்; இச் சொல், தம்பி, தங்கை, மைத்துனர், தோழர் முதலிய இளைய முறையினர் பலரையுங் குறிக்க வழங்கும். அமரி - அலங்கரித்தலில்லாதவள்; குமரி - அழிவில்லாதவள்; கிளை - கிளி போல்வாள் எனலுமாம். கிளை - கிள்ளை. 69-71. ஐயை - தலைவி, செய்யவள் - திருமகள், வெய்ய வாள் தடக்கைப் பாய்கலைப் பாவை - கொடிய வாளினைப் பெரிய கையின்கண் தாங்கிய தாவும் கலையை ஊர்தியாகவுடைய பெண், பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை - ஆராயும் கலைகளை உணர்ந்த பாவை, பசிய வீரவளையை அணிந்தவள், அரிய அணிகலங்களை அணிந்த பாவை போல்வாள்; ஐயை என்பதற்கு வென்றி மகள் எனவும், அருங்கலப் பாவை என்பதற்கு இரத்தினப் பாவை எனவும் கூறுவாரு முளர். 72-74. தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் இளங் குமரியும் - திருமாலும் நான்முகனும் முதலியோர் வணங்கத் தோன்றிய கன்னியின் கோலத்தினையுடைய யாவரும் விரும்பும் அக் குமரியும், அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே-இவள் கொண்ட வரிக்கோலம் வாய்ப்புடையது என்று கண்டோர் கூற அருளினாள். தொழ வந்த குமரி - கொற்றவை. இளங்குமரி - எயினர் குலக் கன்னி. தமர் தொழ வந்த குமரியும் என இயைத்து, மறவர் தொழவந்த என்றுரைத்தலுமாம். சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று அருளினாள் என்பர் அடியார்க்கு நல்லார். சாலினி உற்று நிறுத்து ஓச்சி வியப்ப ஆடிக் கடன் தாரும் என, குமரியைக் காட்டிச் சுற்றிச் சாத்திப் பூட்டி உடீஇக் கொடுத்து ஏற்றிப் பரசிப் பின்வரத் துவைப்ப நிறுத்த, ஏத்திக் கூந்தலை, செல்வி, ஆட்டி, பாவை, கொழுந்து, மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப, கண்ணகி ஒடுங்கி நிற்ப, சென்னியையும் நாட்டத்தையுமுடைய வாய்ச்சி, நகைச்சி, கண்டி, வளைத்தோள், முலைச்சி, ஏந்தி, மேகலையாட்டி, கொற்றவை, தையல் ஆகிய குமரிக் கோலத்துக் குமரியும் அருளினள் என முடிக்க. உரைப்பாட்டுமடை - உரைப்பாட்டை நடுவே மடுத்தல். 1. "நாகநாறு ....... முன்றிலே" நாகம் நாறு நரந்தம் நிரந்தன - மணம் நாறும் சுரபுன்னையும் நாரத்தையும் ஒழுங்கு படவுள்ளன; ஆவும் ஆரமும் ஓங்கின - ஆச்சாவும் சந்தனமும் உயர்ந்து வளர்ந்தன; எங்கணும் சேவும் மாவும் செறிந்தன - எவ்விடத்தும் சேமரமும் மாமரமும் நெருங்கின; கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே - நெற்றியிற் கண்ணினையுடைய சிவபெருமானது இடப் பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பலிகொள்ளும் முன்றிலின்கண்; பலிமுன்றிலின்கண் நிரந்தன, ஓங்கின, செறிந்தன எனக் கூட்டுக. பின்வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 'எங்கணும்' என்பதனை எங்கணும் கூட்டுக. ஆரம் - ஆத்தி எனலும், சே - உழிஞ்சில் எனலும் ஆம். "ஐயுங் கண்ணு மல்லாப் பொருள் வயின், மெய்யுருபு தொகா விறுதி யான" என்ற விதியால் கண்ணுருபு இறுதியிற் றொக்கது. 2. "செம்பொன் ...... முன்றிலே" செம்பொன் வேங்கை சொரிந்தன - வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற பூக்களைச் சிந்தின; சேயிதழ் கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன - நல்ல இலவமரங்கள் தம் கொம்புகளிலுள்ள சிவந்த பூவிதழ்களை உதிர்த்துக் குவித்தன; பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு - புன்க மரங்கள் பழம் பூக்களாகிய வெள்ளிய பொரியைச் சிந்தின; இளந்திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே - பிறைதங்கிய சடையை உடையாளது அழகிய முன்றிலின்கண்; பொன் - பொன்போன்ற பூ. குவிந்தன - குவித்தன; விகாரம். பொங்கர் - பழம்பூ; கொம்பு, பொதுளல் எனலுமாம். 3. "மரவம் ...... முன்றிலே" மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன - வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன; கொம்பர்மேல் அரவ வண்டு இனம் ஆர்த்து உடன்யாழ் செயும் - அவற்றின் கொம்புகளில் ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணைபோலப் பாடும்; திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே-திருமாலுக்கு இளையாளுடைய முன்றிலின் கண்; யாழ்செயும் - யாழின் இசைபோலப் பாடும். திருவ என்பதன் கண் அ அசை. இவை முன்றிலின்சிறப்பு. 4. "கொற்றவை ....... குலனும்" கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்ற இப் பொற் றொடி மாதர் தவம் என்னை கொல்லோ - துர்க்கை தனக்கு அணியாகக் கொண்டவற்றைத் தான் அணியும் அணியாகக் கொண்டு நின்ற இந்தப் பொன்னாலாய தொடியினையுடைய குமரி முன் செய்த தவம் யாதோ; பொற்றொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் - பொன் வளையலணிந்த இக் குமரி பிறந்த குடியின்கண் தோன்றிய விற்றொழிலில் வல்ல மறவர் குலமே சிறந்த குலம்; கொற்றவை அணிகொண்டு நின்ற மாதர் - மறவர் தொல்குடிக் குமரி. இதனை, "தொல்குடிக் குமரியைச், சிறுவெள்ளரவின் குருளை நாண் சுற்றி" என்பது முதலாகத் தொடங்கும் அடிகளானுணர்க. சாலினி யென்பர் அடியார்க்கு நல்லார். கொல், ஓ - அசைகள். 5. "ஐயை திருவின்............குலனும்" ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப் பையரவு அல்குல் தவம் என்னை கொல்லோ - கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற இந்த அரவின் படம் போன்ற அல்குலினையுடையாள் செய்த தவம் யாதோ, பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி பிறந்த குடிக்கண் தோன்றிய அம்பினை எய்யும் வில்லினையுடைய வேடர் குலமே சிறந்த குலம்; திரு - அழகு. பை - படம். அரவுப்பை என மாறுக. 6. "பாய்கலைப் பாவை.......குலனும்" பாய்கலைப்பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ - தாவும் கலையை ஊர்தியாக வுடைய கொற்றவையின் அழகினைக் கொண்டு நின்ற இந்த அழகிய வளையலையுடைய பெண்ணின் தவம் எத்தகையதோ; ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி தோன்றிய குடியிற் பிறந்த மூங்கில் வில்லினையுடைய மறவர்களது குலமே சிறந்த குலம் ; இவை மூன்றும் 1"வெறியறி சிறப்பின்" என்னும் சூத்திரத்து `வாடாவள்ளி' என்பதனான், வள்ளிக் கூத்து எனப்படும்; என்னை? `மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக், கண்ட முருகனுங் கண் களித்தான் - கண்டே, குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப், பிறமக ணோற்றாள் பெரிது' என்பது வள்ளி, 'ஏவில் எயினர்' எனப் பாடங்கொள்வர் அரும்பதவுரை யாசிரியர். 7. "ஆனைத்தோல்........நிற்பாய்" ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து - யானையின் தோலை மேலே போர்த்துப் புலியின் தோலை அரைக்கண் உடுத்து, கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் - காட்டின்கண் எருமைக் கடாவினது கரிய தலையின் மீது நின்றாய்; வானோர் வணங்க மறைமேல் மறையாகி - தேவர் யாவரும் வணங்க வேதங்களுக்கு அப்பாற்பட்ட மறைந்த பொருளாய், ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அறிவின் கொழுந்தாகிச் சலித்தல் இன்றி யாண்டும் நிலைத்து நிற்பவளே இஃது என்ன மாயமோ ; வணங்க மறையாகிக் கொழுந்தாய் நிற்பாய் போர்த்து உடுத்து நின்றாய் இஃதென்ன மாயமோ என்க. பின் வருவனவற்றையும் இவ்வாறே மாறுக. கானம் என்பதனை எருமைக்கு அடையாக்கினு மமையும். எருமை - சாதிப்பெயர். 8. "வரிவளைக்கை...........................நிற்பாய்" வரிவளைக்கை வாள் ஏந்தி மா மயிடற் செற்று - வரிகள் பொருந்திய வளையணிந்த கையில் வாளைத் தாங்கிப் பெரிய மகிடாசுரனை அழித்து, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் - கரிய முறுக்குண்ட கொம்பினையுடைய கலைமான் மீது நின்றாய்; அரி அரன் பூமே லோன் அகமலர்மேல் மன்னும் - திருமாலும் சிவபிரானும் நான் முகனும் ஆகிய இவர்களுடைய உள்ளத் தாமரையில் நிலைபெற்றிருக்கும், விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய் - விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளிவிடும் விளக்கமாகி நிற்பவளே, இஃதென்ன மாயமோ; அகமலர்மேல் மன்னும் விளக்காகி நிற்பாய் என்க. 9. "சங்கமும்.....நிற்பாய்" சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி - சங்கினையும் சக்கரத்தினையும் தாமரை போன்ற கைகளில் தாங்கி, செங்கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால் - சிவந்த கண்களையுடைய சிங்கமாகிய சினம் பொருந்திய விடைமீது நின்றாய், கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து - கங்கையினைச் சடைமுடியின்கண் அணிந்த நெற்றிக் கண்ணையுடையோனது இடப் பாகத்து, மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் - பெண்ணுருவாகி வேதங்கள் போற்ற நிற்பாய் இஃதென்ன மாயமோ ; அரிமான் ஊர்தியென்பார் விடையென்றார் ; விடையும் ஊர்தி யாகலின். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். 10. ஆங்கு ................. கூத்துள் படுமே ஆங்கு - அவ்விடத்து ; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த - கொன்றை மலரும் துளபமும் சேரக் கட்டிய, துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு - மலர் செறிந்த மாலையைத் தோளின்மீது சூடி, ஆங்கு அசுரர் வாட அமரர்க்கு ஆடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே - குமரியின் கோலத்தொடு அசுரர் வாடும் வண்ணம் தேவர்க்கு வெற்றியுண்டாக ஆடிய மரக்காற் கூத்து ஆடுதற்கு உள்படும்; உள்படும் - ஒருப்படும் ; ஆடும் என்றுமாம். இது வென்றிக் கூத்து. 11. "ஆய்பொன் ...... காட்டும் போலும்" ஆய்பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப - அழகிய பொன்னாற் செய்த பருக்கையினையுடைய சிலம்பும் வளையும் மேகலையும் ஒலிப்ப, மாயஞ்செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால்மேல் வாள் அமலை ஆடும் போலும் - வஞ்சம் புரிகின்ற வாட்டொழிலிற் சிறந்த அசுரர்கள் அழியுமாறு கொற்றவை மரக்காலின்மீது நின்று வாட்கூத்தினை ஆடா நிற்கும் ; மாயஞ் செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் ஆயின் - வஞ்சம் செய்யும் வாளினையுடைய அசுரர் ஒழிய இவள் மரக்காலின்மீது நின்று வாள் அமலை ஆடுவாளாயின், காயாமலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர் மாரி காட்டும் போலும் - இவளுடைய காயாம் பூப் போலும் மேனியைப் போற்றித் தேவர்கள் தம் கைகளாற் சொரியும் மலர்கள் மழையைக் காட்டாநிற்கும்; இது கூத்துள் படுதல். மாயஞ்செய் வாளவுணர் என்றது உண்மை யுருவோடு எதிர்நின்று வெல்ல நினையாது, பாம்பு, தேள் முதலிய வஞ்ச உருக்கொடு வந்ததனால் என்க. இதனை, "காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்" என்பதனானுணர்க. இனி, அவரது இயற்கைத் தன்மை கூறியவாறு எனலும் அமையும். பகைவர் ஒழிந்த பின் வாள்வீரர் ஆடுங் கூத்தினை வாள் அமலை யென்பர் தொல்காப்பியர். 1"தானை யானை" என்னும் சூத்திரத்துப் "பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோராடும் அமலையும்" என்பது காண்க. இத் துறையினை `ஒள்வாளமலை' என்பர் வெண்பாமாலையுடையார். கூத்து மலர் மாரியைக் காட்டும் என்றுமாம். போலும் - ஒப்பில் போலி. பின் இரு செய்யுட்களில் வருவனவும் இன்ன. 12. "உட்குடை............காட்டும் போலும்" உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆனிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சம் விளைத்தலையுடைய சீறூரிடத்துள்ள ஒப்பற்ற வீரன் ஆனிரையைக் கொள்ளத் தொடங்கும்பொழுது, வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - நிரை கவரும் போர்ப் பூவாகிய வெட்சி மலர் மாலையைத் தான் சூட வெள்ளிய வாளையுடைய கொற்றவையும் விரும்பும், வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - வெட்சி மாலையைச் சூடக் கொற்றவை விரும்பின், வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்த காட்டிடத்துக் கரிக் குருவி தனது கொடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினைக் கூறி உணர்த்தும் ; வெள்வாளுழத்தியும் வேண்டுமென்றது அவள் உடன் செல்வ ளென்றபடி. இச் செய்யுளும் அடுத்த செய்யுளும் நிரைகவர்தற்கண் ‘கொற்றவை நிலை' கூறலின் வெட்சிப் புறனடை எனப்படும் ; என்னை? 1"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த, கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" என்றாராகலான். இனி, வெண்பா மாலை இலக்கணம் நோக்கின் இவை வெட்சித்திணைக் கொற்றவைநிலையின்பாற்படும் ; என்னை? 2"ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக், கூளி மலிபடைக் கொற்றவை - மீளி, அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார், முரண்முருங்கத் தான்முந் துறும்" என்றாராகலான். 13. "கள்விலை............செல்லும் போலும்" கள் விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்தி - கள்ளினை விற்பாள் இவன் பழங்கடன் கொடாமையான் கள் கொடாது மறுக்க அதனைப் பொறாத வீரன் கைக்கண் வில்லினைத் தாங்கி, புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும் - பறவைகள் தன் பின்னே தொடர்ந்து வரப் பகைவரது ஆனிரையைக் கொள்ளக் கருதிப் போவான், புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும் காலை - அங்ஙனம் போகுங்கால், கொள்ளுங் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் - தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்துக் கொற்றவையும் வில்லின் முன்னே செல்வாள் ; புள் வழிப்படர்தல் அம் மறவன் அழிக்கும் பகைவர் ஊனை உண்பதற்கென்க. இனி, `புள்ளும் வழிப்படர' என்பதற்குப் புள் நிமித்தம் தன் கருத்திற்கு ஒத்துச் செல்ல எனலும் பொருந்தும். கொடு மரம் முன்செல்லும் என்றது வில் ஏந்திய அவ் வீரன்முன் செல்லும் என்றவாறு. இனி, கொடியையும் கொடுமரத்தையும் எடுத்து அவ் வீரன்முன் செல்லும் எனினும் பொருந்தும். இது தன்னுறு தொழில். 14. "இளமாவெயிற்றி ..... நிறைந்தன" இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய இளமை பொருந்திய வேட்டுவ மகளே, இவை காண் நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் - இவற்றைக் காண்பாய் நினது தந்தை முதலியோர் முன்னாளில் வேட்டையிற் கவர்ந்த நல்ல பசுக் கூட்டங்கள் ; கொல்லன் துடியன் கொளைபுணர் சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர் தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துத் தரும் கொல்லனும் துடி கொட்டும் துடியனும் பாட்டுக்களைத் தாளத்துடன் புணர்க்கவல்ல நல்ல யாழினையுடைய பாணரும் எனப்பட்ட இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன ; நின் ஐயர் தந்த நிரைகள் முன்றிலில் நிறைந்தன இவைகாண் என முடிக்க. இது, 1"படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துக் 'கொடை' என்னுந் துறைப்பாற்படும். 15. "முருந்தேரிளநகை ....... நிறைந்தன" முருந்து ஏர் இளநகை காணாய் - மயிலிறகின் அடியை ஒத்த அழகிய முற்றாத நகையினையுடையாய் காண்பாய், நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - உனது ஐயன்மார் கரந்தையார் அலறும் வண்ணம் கவர்ந்துகொண்டு வந்த பசுக் கூட்டங்கள், கள்விலையாட்டி. நல் வேய் தெரி கானவன் புள்வாய்ப்பச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்பவளும் நல்ல உளவறிந்து கூறும் ஒற்றனும் புள் நிமித்தப் பொருத்தம் கூறிய நிமித்திகனும் ஆகிய இவர்களது முன்றிலின்கண் நிறைந்தன ; கரந்தையார் - ஆனிரை மீட்போர். வேய் - ஒற்று. புள் - நிமித்தம். கணி - நிமித்திகன் ; சோதிடன். 16. "கயமலர் ...... நிறைந்தன" கயமலர் உண் கண்ணாய் காணாய் - குளத்துக்கண் தாமரை மலர்போலும் மையுண்ட கண்களையுடையாய் நீ காண்பாய், நின் ஐயர் அயலூர் அலற எறிந்த நல் ஆனிரைகள் - நினது ஐயன்மார் பகைவர் ஊர் வருந்திக் கூவும் வண்ணம் அவர்களை எறிந்து கொண்டு வந்த பசுக்கூட்டங்கள், நயன்இல் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - கொடுஞ் சொல்லினையும் நரைத்த தாடியினையும் உடைய முதிர்ந்த மறவரும் மறத்தியருமாகிய இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன; கயமலர் - பெரியமலர் எனலுமாம் ;2"தடவும் கயவும் நளியும் பெருமை" என்பவாகலான். நயன் இல்மொழி - இனிமையில்லாத சொல். நயனில் மொழியை எயினர் எயிற்றியர்க்கும், நரைத் தாடியை எயினர்க்கும் இயைக்க. இதுவும் மேற்கூறிய செய்யுளும் ஆகிய இரண்டும் "படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துப் "பாதீடு" என்னும் துறையின்பாற் படும். இம் மூன்றினையுமே ‘கொடை' என்னுந் துறைப்பாற் படுத்துவர் அடியார்க்கு நல்லார். இம் மூன்றும் கண்டார் கூற்று. துறைப்பாட்டு மடை - துறைப்பாட்டுக்களை இடையே மடுத்தல், 17. "சுடரொடு.........விலையே" சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் - ஞாயிற்றுடனே சுழன்று திரிதலைச் செய்யும் இருடிகளும் தேவர்களும் ஆகிய இவர்களுடைய, இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - துன்பம் ஒழியும் வண்ணம் அருள் செய்கின்ற நினது இரண்டு திருவடிகளையும் வணங்கினேம் ; அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன்இது மிடறு உகு குருதிகொள் விறல் தரு விலையே - பகைவரை அடுதலையுடைய வலி மிக்க மறவர் நின் அடியினைத் தொட்டுச் சூளுற்ற வெற்றிக்கு விலையாகத் தரும் கடன் மிடற்றினின்றும் சிந்துகின்ற உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக; ஞாயிற்றின் வெம்மை உயிர்களை வருத்தா வண்ணம் அதனைத் தாம் ஏற்று இம் முனிவர் சுடரொடு திரிகின்றனர் என்க. இதனை, 1"நிலமிசை வாழ்நர் அமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மைதாங்கிக், காலுண வாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முனிவரும்" என்பதனானும், 2"விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை" என்ற அடியின் விரிவுரையானும் உணர்க. விறல் தருவிலை - நீ தந்த வெற்றிக்கு விலையாகத் தரும் என்க. வேற்றுப்புலம் போகி நல்வெற்றங் கொடுத்துக், கழிபேராண்மைக் கடன் பார்த்திருப்பவளாகலான், விறல்தரு விலைக்கடன் கொள் என்றார் என்க. கடனாகும் குருதியாகிய இதனைக் கொள் எனலுமாம். எயினர் - தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி. பின்வருவனவும் இவ்வாறே கொள்க. 18. "அணிமுடி.....அடுவிலையே" அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரும் - அழகிய முடிசூடிய தேவர்கள் தம் அரசனாகிய இந்திரனொடு வந்து வணங்குகின்ற, மணி உருவினை நின் மலர் அடிதொழுதேம் - நீலமணி போலும் நிறத்தினையுடையாய் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை வணங்கினேம்; கண நிரை பெறு விறல் எயின் இடுகடன் இது நிணன் உகு குருதி கொள் நிகர் அடுவிலையே - திரண்ட ஆனிரையைப் பெறும் வெற்றியினையுடைய மறவர்கள் பகைவரை அடுதற்குக் காரணமாகிய விலையாக இடுங்கடன் நிணத்தொடு சிந்தும் உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக; நின என்பதன்கண் ‘அ' ஆறாம் வேற்றுமையுருபு. எயின் - எயினர். எயின் அடுவிலை இடுகடன் குருதி என இயைக்க. 19. "துடியொடு..........மடையே" துடியொடு சிறுபறை வயிரொடு துவை செய வெடிபட - துடியுடனே சிறுபறையும் கொம்பும் மிக முழங்க, வருபவர் எயினர்கள் அரையிருள். அடுபுலி அனையவர் - நள்ளிரவில் வருபவர்களாகிய கொல்லும் புலியை யொத்த மறவர்கள், குமரி நின் அடிதொடு படுகடன் - குமரியாகிய நினது அடியினைத் தொட்டுச் சூளுற்ற கடன், இது உகு பலி முக மடையே - மிடற்றினின்றுஞ் சிந்தும் குருதியாகும்; இக் கடனை நீ கொள்வாயாக; நிலம் வெடிக்கும்படி வருபவரென்றுமாம். படு - பொருந்திய; மிக்க எனினும் அமையும். முகமடை - மிடறு. இதுபலி - இக்கடன்; கொள்கவென்பது சொல்லெச்சம். இவை மூன்றும் அவிப்பலியென்னும் துறையின்பாற் படும்; குருதிப் பலி யென்பாரு முளர். 20. "வம்பலர் பல்கி.....சேர்த்துவாய்" வம்பலர் பல்கி வழியும் வளம்பட - வழிகளும் ஆறு செல்வோர் நிறையப் பெறுதலான் அவர்தம் பொருளாகிய வளம் உண்டாம் வண்ணம், அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய்- அம்பு பொருந்திய வலிய வில் ஏந்திய மறவரது பலிக் கடனை உண்பாயாக ; சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்து வாய் - சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிக்கண் சிவந்த கண்களையுடைய பாம்பினை இளம் பிறையோடு சேர்த்துச் சூடுபவளே; சேர்த்துவாய் வழிவளம்பட எயின் கடன் உண்குவாய் என்க. முன்னர்க் கொற்றவை கடன் கொள்ளாமையான், "மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது" என்றாராகலான், ஈண்டு வழிவளம் படக் கடன் உண்குவாய் என்றார். வம்பலர் - புதியராய் வருபவர். சடாமுடி - வடசொன் முடிபு. 21. "துண்ணென்.....செய்குவாய்" துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு - கேட்டார் துண்ணென நடுங்குமாறு ஒலி செய்யும் துடியுடனே பகைவர் உறங்குங் காலத்து ஊர்க் கொலை செய்யும், கண்இல் எயினர் இடுகடன் உண்குவாய் - கண்ணோட்ட மில்லாத மறவர் இடும் பலிக்கடனை நீ உண்பாயாக ; விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - விண்ணவர் சாவா மருந்தாகிய அமுதமுண்டும் இறப்பவும் எத்தகையோரும் உண்ணவொண்ணாத நஞ்சினை உண்டும் இறவாதே இருந்தருள்வாய் ; இருந்து அருள் செய்குவாய் கடன் உண்குவாய் என்க. துஞ்சூர் எறிதலை 1"ஊர் கொலை" என்னும் வெட்சித்திணைத் துறையானறிக. 22. "பொருள் கொண்டு....செய்குவாய்" பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும் அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய் - வழிப்போவார் பொருளைப் பறித்துக்கொண்டு அவர்க்குத் துன்பம் செய்தல் அல்லது எவரிடத்தும் கருணை இல்லாத வேட்டுவர் இடும் பலிக்கடனை உண்பாயாக ; மருதின் நடந்து - இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து, நின் மாமன் செய் வஞ்ச உருளும் சகடம் உதைத் தருள் செய்குவாய் - நின் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டுவரும் சகடத்தை உதைத் தருளினாய் ; அல்லதை - ஐ சாரியை. "சுடரொடு திரிதரும்" என்பது முதல் ஆறுதாழிசைகளும் கொற்றவையைப் பரவுவார் வார்த்தை என்பர் அரும்பதவுரையாசிரியர். 2"மறவர், பொருள்கொண்டு புண்செயினல்லதை யன்போ, டருள்புற மாறிய வாரிடை யத்தம்" என்பது பாலைக் கலி. 23. "மறைமுது முதல்வன்....வெய்யோனே" மறைமுது முதல்வன் பின்னர் மேய - வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய சிவபெருமானுக்குப் பின்னோன் ஆகிய அகத்தியன் எழுந்தருளிய, பொறை உயர் பொதியிற் பொருப்பன் - பொறைகளையுடைய உயர்ந்த பொதிய மலையை உடைய பாண்டியன், பிறர் நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே - பகைவருடைய முனையிடமும் அவர் நிரை மீட்கும் தொழிலும் பாழ்படும் வண்ணம் வெற்றியை விரும்புவோனாகிய அவன் வெட்சி மாலையைச் சூடுவானாக ; பொருப்பனாகிய விறல் வெய்யோன் பாழ்பட வெட்சி சூடுக எனக் கூட்டுக. மறை சிவபிரான் வாய்மொழி யென்பது 3"நன்றாய் நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த வீரிரண்டின்" என்பதனாலும் அறியப்படும். மறைமுது முதல்வன் - பிரமன் என்பாருமுளர். அகத்தியன் இறைவனோடு ஒப்பத் தென்றிசை தாழ இருந்ததனால், "மறைமுது முதல்வன் பின்னர்" என்றார். `பின்னர்' என்றது ஈண்டுத் தம்பி என்னும் பொருட்டன்று; ஒப்ப அடுத்த நிலையில் உள்ளோன் என்னும் பொருட்டு, இதனை, 1"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று" என வருவது கொண்டு உணர்க. 2"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" என்பதும் ஈண்டும் அறியற்பாலது. இதிலுள்ள ‘தொன்முது கடவுள்' என்பதற்கு அகத்தியனார் என்று பொருள் கூறுவது சிறப்புடைத்தன்று. பொறை - குன்று, பொற்றை ; சந்தனம் அகில் முதலிய மரங்களாற் சுமைமிக்க என்றுமாம். கட்சி - காடு; போர்முனை. இத் தாழிசையாறும் கொற்றவையைப் பரவுவார் கூற்று. கொற்றவை இறைவனுக்குக் கிரியாசக்தி யாகலின் நுதல்விழி, கறைமிடறு, புலியுரி, சூலம் முதலிய கோலங்களும், நஞ்சுண்டல் முதலிய செயல்களும் கூறப்பட்டன. மாயோனுக்குத் தங்கை யாகலின் அவன் செய்கையாகிய மருதினடந்ததும், சகடமுதைத்ததும் சார்த்தி உரைக்கப்பட்டன ; மாயோனும் இறைவற்கு ஓர் சக்தியாதல் உணரற்பாற்று. இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. வேட்டுவ வரி முற்றிற்று. 13. புறஞ்சேரியிறுத்த காதை (குமரியின் கோலம் நீங்கிய பின்பு, பாண்டியர் காக்கும் நாட்டிலே புலி முதலிய கொடிய உயிர்களும் சார்ந்தவர்க்கு இடுக்கண் செய்யாவாகலின், பகல் வெயிலிற் செல்லாது இரவு நிலவொளியிற் செல்வேம்' எனத் துணிந்து, மூவரும் இரவின் வருகையை எதிர் பார்த்திருக்க, `மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு வானிலா வெண்கதிர் பாவைமேற் சொரி'ந்தன. கோவலன் கண்ணகி தன் தோளில் சேர்த்திச் செல்ல, மூவரும் வைகறைப் பொழுதிலே, தமக்குரிய ஒழுக்கத்தின் வழுவிய பார்ப்பன ருறையும் ஒரு பகுதியைச் சேர்ந்தனர். முள்வேலி சூழ்ந்த காவலிடத்தே கவுந்தியையும், கண்ணகியையும் இருக்கச் செய்து, கோவலன் காலைக்கடன் கழித்தற் பொருட்டு ஓர் நீர் நிலையை அடைந்தனன். மாதவியால் விடுக்கப்பட்டு வந்த கௌசிகன் என்னும் அந்தணன் அவ் விடத்துக் கோவலனைக் கண்டு, அவன் பிரிவால் அவனுடைய தாய் தந்தையர் எய்திய அளவற்ற துன்பத்தையும் வசந்தமாலை கூறிய சொற்கேட்டதும் மாதவி பள்ளியில் மயங்கி வீழ்ந்ததனையும், மாதவியால் அனுப்பப்பட்டுத் தான் தேடி வந்ததையும் கூறி, மாதவியின் ஓலையை அவன் கையில் நீட்டினன். கோவலன் அதன் பொருளை உணர்ந்து, மாதவி தீதிலளெனத் தெளிந்து தளர்ச்சி நீங்கி, அவ் வோலையின் வாசகம் தம் பெற்றோருக்கும் பொருந்தி யிருந்தமையின், எம் குரவர் மலரடியைத் திசை நோக்கித் தொழுதேன் எனச் சொல்லி இவ் வோலையைக் காட்டு' என அதனைக் கௌசிகன் கையிற் கொடுத்து விடுத்து, கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்தை யெய்தி, அங்குள்ள பாணர்களுடன் தானும் சேர்ந்து யாழ் வாசித்து, `மதுரை இன்னும் எத்துணைக் காவதம் உள்ளது கூறுமின்' என்ன, அவர்கள் `மதுரைத் தென்றல் வந்தது காணீர்; பாண்டியன் மூதூர் அண்மைக் கண்ணதே' என்று கூறவும், கூடலின்கண் எழும் பலவகை ஒலியும் கடலொலிபோல் எதிர் கொள்ளத் துன்பம் நீங்கிச் சென்று, வையை யாற்றை மரப்புணை யாற் கடந்து தென் கரையை யெய்தி, மதுரையின் மதிற்புறத்ததாகிய புறஞ்சேரியிற் புக்கனர். (இதன்கண் வையைக் கரையின் இயற்கை வனப்பு முதலியன கற்போர்க்கு இன்பம் விளைப்பன.) பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள் படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் 5 கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென 10 எங்கணும் போகிய இசையோ பெரிதே பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேத மில்லெனக் குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து 15 கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப் பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித் தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையுஞ் சந்தின் குழம்பும் 20 சீரிள வனமுலை சேரா தொழியவும் தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும் பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் 25 மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய வேனில் திங்களும் வேண்டுதி யென்றே பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர் 30 ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும் இனையா தேகெனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி மறவுரை நீத்த மாசறு கேள்வி 35 அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து வேனல்வீற் றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர்வர வியம்ப வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து 40 மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் தீதுதீர் சிறப்பின் சிறையத் திருத்தி இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர் நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன் காதலி தன்னொடு கானகம் போந்ததற் 45 கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உட்புலம் புறுதலின் உருவந் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ் 50 அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே வருந்தினை போலுநீ மாதவி யென்றோர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக் கோசிக மாணி கூறக்கேட்டே யாதுநீ கூறிய உரையீ திங்கெனத் 55 தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத் 60 துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும் ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும் பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த 65 அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோ யுற்று நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர் 70 படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும் இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக் 75 கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன்சென்ற தேயமும் வழிமருங் கிருந்து மாசற வுரைத்தாங்கு 80 அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட உடனுறை காலத் துரைத்தநெய் வாசம் குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் 85 காட்டிய தாதலிற் கைவிட லீயான் ஏட்டகம் விரித்தாங் கெய்திய துணர்வோன் அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ 90 டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி 95 என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங் கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல் பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது மாசில் குரவர் மலரடி தொழுதேன் கோசிக மாணி காட்டெனக் கொடுத்து 100 நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு ஆடியல் கொள்கை அந்தரி கோலம் 105 பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில் தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி 110 வரன்முறை வந்த மூவகைத் தானத்துப் பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற் பாணி அளைஇ அவரொடு கூடற் காவதங் கூறுமின் நீரெனக் 115 காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத் தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு 120 மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி அட்டிற் புகையும் அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த 125 அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார் பிற் பாண்டியன் கோயிலின் அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் 130 புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர் தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென 135 முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த 140 காலை முரசக் கனைகுரல் ஓதையும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் மாதவ ரோதி மலிந்த ஓதையும் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் 145 போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் 150 ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து 155 குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் 160 மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை கரைநின் றுதிர்த்த கவரிதழ்ச் செவ்வாய் 165 அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி 170 வையை என்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென 175 அனநடை மாதரும் ஐயனுந் தொழுது பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் 180 தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி வானவர் உறையும் மதுரை வலங்கொளத் தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக் கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் 185 தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப் போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 190 வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப் புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை 195 அறம்புரி மாந்த ரன்றிச் சேராப் புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். உரை 1. பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு - முன்னர்க் கூறிய வேட்டுக் குமரி யணிந்த கொற்றவை கோலம் நீங்கிய பின்னர்; பிற்பாடு - ஒரு சொல். கோலம் நீங்கியதெனவே கூத்து நீங்கியதும் பெற்றாம். 2. புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி - அறநெறி நிற்றலான் முதன்மை பெற்ற கவுந்தியடிகளின் திருந்திய அடிகளைச் சேர்ந்து; புண்ணியம் - தவமுமாம். அடி பொருந்தி - அடியின்கண் வணங்கி. பொருந்தினான் கோவலன். 3-4. கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்-இவ் வழக்கினையுடைய கண்ணகி கடிய ஞாயிற்றின் வெம்மையைப் பொறுக்கலாற்றாள், படிந்தில சீறடி பரல் வெங் கானத்து - பருக்கைக் கற்களையுடைய கொடிய காட்டு வழியில் இவள் சிறிய அடிகளும் படிந்தில; சீறடி படிந்தில என்றது கால் கொப்புளங் கோடலின். அடி நன்கு மிதித்து நடவாமை கூறியவாறு. ‘பரல்வெங் கானம்' என்பதனைப் பின் வரும் அடிகளொடும் கூட்டுக. 5-10. கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா - எதிர்ப் பட்டதனைக் கொள்ளுதல் வல்ல கரடியும் வளைந்த புற்றினைத் தோண்டா, வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா - ஒளி பொருந்திய கோடுகள் பொருந்திய புலியும் மானினத்தொடு மாறுபடா, அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் - பாம்பும் சூர்த் தெய்வமும் இரை தேடித் திரியும் முதலையும் இடியும் ஆய இக் கொடியவை, சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா - தம்மை உற்றார்க்குத் துன்பம் செய்யா, செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என-செங்கோலையுடைய பாண்டியர் ஆளும் நாடென்று, எங்கணும் போகிய இசையோ பெரிதே - எவ்விடங்களிலும் சென்ற புகழ் பெரிது ஆகலான்; பாம்பு உறைதலான் கொடிய புற்று எனலுமாம். கரடி தான் அகழ்தற்குரிய புற்றினையும் அகழா எனவும், புலி தாம் மாறுபடுதற்குரிய மானினத்தோடும் மாறுபடா எனவும் கூறின மையின் அவை மக்கட்கு ஊறு செய்யா என்பது தானே போதரும். அரவு முதலியன உறுகண் செய்யத் தகுவனவாயினும் செய்யா என்றார். இவ்வாற்றால் இவனது நாட்டு இக் காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று. நாடு அகழா மறலா செய்யா என இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன. (அடி. இவற்றான், இவனாணையும் ஐவகை நிலத்திற்குரிமையுங் கூறினார் ; ஐவகை நில னென்பது எவற்றாற் பெறுதுமெனின், கான மென்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றாற் குறிஞ்சியும், வேங்கை யென்பதனாற் பாலையும், உருமு வென்பதனால் மருதமும், முதலை என்பதனால் நெய்தலும் பெறுதும்.) 1"உருமு முரறா தரவுந் தப்பா, காட்டு மாவு முறுகண் செய்யா" என்பதும் அறியற்பாலது. 11-14. பகல் ஒளி தன்னினும் - ஞாயிற்றின் விளக்கத்தினும், பல் உயிர் ஓம்பும் நில வொளி விளக்கின் - பல உயிர்களையும் காக்கின்ற திங்களின் ஒளியாகிய விளக்கொடு. நீள் இடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - இரவின் கண் நீண்ட நெறிக்கண்ணே செல்வதற்கு உண்டாம் குற்றம் ஒன்றுமில்லை யென்று கோவலன் கூற, குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - கவுந்தியடிகளும் அதற்கு உடன் பட்டமையால் அக் கோட்பாட்டோடே மேவி ; வழிச் சேறற்கு ஒளி வேண்டுதலானும், பகலொளி வருத்துதலானும் அதனிற் செல்லாது நிலவொளியிற் செல்கை நன்றென்றான். ஏதமின்மை மேலே கூறப்பட்டது. 15-16. கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல - கொடுங் கோன்மையையுடைய மன்னன் குடிகள் அம் மன்னன் ஒழியுங் காலத்தைப் பார்த்திருத்தல் போல, படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு - ஞாயிறு படுகின்ற செவ்வியைப் பார்த்திருந்த இவர் கட்கு; பார்த்திருந்தோர் - வினைப்பெயர் ; செங்கோல் வேந்தன் வரவு பார்த்தலை உவமைக்கண்ணும், தண் கதிர் வரவு பார்த்தலைப் பொருளின்கண்ணும் விரித்துரைக்க. 17-18. பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பி - பலவகைப் பட்ட மீனாகிய சேனையொடு வெள்ளிய கதிர்களை விரித்து, தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றி - பாண்டியன் குலத்திற்கு முதல்வனாகிய திங்களஞ் செல்வன் தோன்ற; தோன்றி - தோன்ற எனத் திரிக்க. மீன் தானை என்பதற்கு மீனக் கொடியையுடைய தானை யென்னும் பொருளும் தோன்றும். 19-29 தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் - மீனொழுங்கு போன்ற முத்து வடமும் சந்தனக் குழம்பும், சீர் இள வன முலை சேராது ஒழியவும் - சீர்த்த இளமை பொருந்திய அழகிய முலைகளைச் சேரப் பெறாது நீங்கவும், தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல் - பூம் பொடி பொருந்திய குளிர்ந்த குவளை மலர் மாலை, போது சேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும் - முல்லை மலர் சேர்ந்த பொலிவு பெற்ற கூந்தற்கண் சேராது நீங்கவும், பைந்தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி - சந்தனத் தளிருடனே வேறுபல அழகிய சிறிய தளிர்கள், செந்தளிர் மேனி சேராது ஒழியவும் - சிவந்த மாந்தளிர் போலும் மேனிக்கண் சேராது நீங்கவும், மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு - பொதியத்தில் தோன்றி மதுரை நகர்க்கண் வளர்ந்து கல்வி யறிவாளர் நாவின்கண் பொருந்திய தென்றற் காற்றுடன், பால் நிலா வெண்கதிர் பாவைமேல் சொரிய - மிக வெள்ளிய நிலவின் கதிர்கள் நின்மீது சொரிய, வேனில் திங்களும் வேண்டுதி என்றே - பாவையே இவ்வேனிற் காலத்துத் திங்களினையும் வேண்டுகின்றனைபோலும் என்று, பார்மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் - நிலமகள் பெரு மூச்செறிந்து அடங்கிய பிறகு; போது - முல்லைப்பூ ; கற்பிற்கு அணிவது. ஆரத்தின் பைந்தளிர் என்க. 1"வெள்ளிற் குறுமுறி" 2"பொறிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி" என்பவாகலின் ' பல்பூங் குறுமுறி ' என்றார். மேனி - மார்பகம். தென்றலொடு ; வேறு வினையொடு, வேனில் - முதுவேனில். நின் கணவன் நின்னைப் பிரிந்த இளவேனிற் காலத்து ஒழியவும் ஒழியவும் ஒழியவும் விரும்பி இருந்த நீ இம் முது வேனிலில் சொரிதலையும் விரும்பி யிருப்பாய் போலும் என விரித்துரைத்தலுமாம். வேண்டுதியே என்று எனப் பிரித்துக் கூட்டி ஏகாரத்தை எதிர்மறையாக்குக. கண்ணகிக்குக் கலவியின்மையின் இங்ஙனம் கூறினார். அடங்குதல் - துயிலுதல்; உயிர்கள் துயிலுதலைப் பார்மகள் துயிலுதலாகக் கூறினார். இனி, இவை இவ்வாறொழியவும் வேனிற்றிங்களும் வெண்கதிரைச் சொரிதற்கு விரும்புவதாயிற்றோ என்று அயாவுயிர்த்து என்னலுமாம். 30-32. ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - கோவலன், வழி நடத்தலால் துன்பமுற்ற கண்ணகியை நோக்கி, கொடுவரி மறுகும் - இந் நெறிக்கண் புலிகள் சுழன்று திரியும், குடிஞை கூப்பிடும் - பேராந்தை குழறும், இடிதரும் உளியமும் - கரடியும் முழங்கும், இனையாது ஏகு என - இவற்றிற்கு நடுங்காது செல்வாயாகவென்று கூறி; கொடுவரி - புலி ; வளைந்த வரிகளையுடையது. குடிஞை - கோட்டான். மறுகும் - வாய்விடும் என்பாருமுளர். இடித்தல் - பற்பறை கொட்டலுமாம். 33-35. தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி - வளைந்த வளையலை அணிந்த கண்ணகியின் சிவந்த கையினைத் தன் தோளின்மீது சார்த்தி, மற உரை நீத்த மாசு அறு கேள்வி-பாவ மொழிகளின் நீங்கிய குற்றமற்ற கேள்வியினையுடைய கவுந்தியடிகளின், அறவுரை கேட்டு ஆங்கு ஆர்இடை கழிந்து-அறவுரைகளைக் கேட்டு அதனாலே கடத்தற் கரிய வழியைக் கடந்து; தொடி - வளைவு. தோளிற் காட்டி - தோளிலே தோன்றச் செய்து. கேள்வி - கேள்வியை உடைய கவுந்தியடிகள்; ஆகு பெயர். ஆங்கு - அவ்வாறு ; அசையுமாம். 36-37. வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்து - வெம்மை நிலைபெற்ற மூங்கில் வெந்து கரிந்து கிடக்கும் காட்டினிடத்து, கான வாரணம் கதிர் வரவு இயம்ப - காட்டுக் கோழிகள் ஞாயிற்றின் வருகையை அறிவிக்க; வீற்றிருந்த கானம் என்க. 38-39. வரி நவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து - வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய, புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து - முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து ; வரி - ஈண்டுக் காமங் கண்ணிய இசைப் பாட்டு. மறைநூல் - வேத வொழுக்கம். புரிநூல் மார்பர் என்றது அவர் பிறப்பினாற் பார்ப்பன ரென்பதை அறிவியாநிற்பது அஃதொன்றுமே யென்ற படி. (அடி. புக்கென்னாது சேர்ந்தென்றதனால், அந்தப் பார்ப்பார் இழுக்கிய வொழுக்க முடைமை தமது சாவக நோன்புக் கேலாமையின், ஊர்க்கயலதோர் நகரிற் கோயிற்பக்கத்திற் சேர்ந்தா ரென்க.) 40-43. மாதவத்தாட்டியொடு காதலி தன்னை ஓர் தீது தீர்சிறப்பின் சிறை அகத்து இருத்தி-கவுந்தியடிகளுடனே கண்ணகியையும் குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய ஓர் அடைப்புள்ள இடத்தே இருக்கச் செய்து, இடு முள்வேலி நீங்கி - முள்ளிட்டுக் கட்டப் பெற்ற வேலியைக் கடந்து, ஆங்கு ஓர் நெடுநெறிமருங்கின் நீர் தலைப்படுவோன் - அவ்விடத்து நீண்ட வழிக்கண் உள்ளதோர் நீர்நிலைக்கண் சார்ந்தவன்; சிறையகம் - சுற்றும் வேலியிட்ட காவலான இடம். நெடு நெறி- பெருவழி. நீர்தலைப்படுதல் - சந்தி பண்ணுதல் என்பர் அரும்பத உரையாசிரியர் 44-47. காதலி தன்னொடு கானகம் போந்ததற்கு-தன்காதலி யோடு காட்டின்கண் போந்த அதனுக்கு, ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவம் திரிய - கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலப் பெருமூச்சு எறிந்து உள்ளம் கலங்கித் தனிமையுற்று நிறம் வேறுபடலான், கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் - கௌசிகன் தன் கண்பார்வையின் மயக்கத்தால் தெளியானாய்; போந்ததற்கு - போந்தமை நிமித்தமாக. உள் கலங்கியென மாறுக. உருவம் திரிந்தமைக்குக் காதலியொடு கானகம் போந்தமையும் உள்ளங் கலங்கியமையும் காரணங்களாம். உலைக் குருகு - வெளிப்படை. உயிர்த்தனன் - முற்றெச்சம். கௌசிகன் - பெயர்; குடிப்பெயருமாம். 48-53. தெளிதற்பொருட்டுக் கூறுகின்றான் : - கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய - கோவலன் தன்னை விட்டுப் பிரிதலானே மிக்க துன்பத்தினை அடைந்த, மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - கரிய நெய்தல் மலர் போலும் நெடிய கண்களை யுடைய மாதவியைப் போல, இவ்வருந்திறல் வேனிற்கு அலர் களைந்து - இப் பொறுத்தற்கரிய வெம்மையினையுடைய வேனிற் காலத்து வெயிலால் அலரைப் பொறாது, உடனே-அப்பொழுதே, வருந்தினை போலும் மாதவி- மாதவியே நீ துன்பமுற்றனையோ, என்று ஓர் பாசிலைக்குருகின் பந்தரில் பொருந்தி - என ஓர் பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த நிழலினையுடைய இடத்தில் சேர்ந்து, கோசிக மாணி கூறக் கேட்டே - பிரமச்சாரியாகிய கௌசிகனென்ற மறையவன் சொல்லக் கோவலன் கேட்டு ; அலர் களைதலை முன்னர் மாதவிக்குங் கூட்டுக. அலர்களைதல் - பழிச்சொல் பொறாமை, மலர்களை நீக்குதல். பந்தர் - நிழல். வேனிற்கு - வேனிலான்; உருபுமயக்கம். பந்தரில் பொருந்தி வருந்தினை போலும் என்று கூறக் கேட்டு என்க. 54-55. யாது நீ கூறிய உரை ஈது இங்கு என - நீ இவ்விடத்துக் கூறிய இவ் வுரையின் பொருள் யாது என்று கேட்ப, தீது இலன் கண்டேன் எனச் சென்று எய்தி - கோவலன் தீங்கின்றியுளன் அவனை யறிந்தேன் எனக் கருதி அவனைச் சென்று அடைந்து ஈது உரை என்க. தீது இலன் - ஐயமுடையேன் அல்லேன் என்பாருமுளர். 56. கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் - கௌசிகன் தான் வந்த கோட்பாட்டினைக் கூறுகின்றவன் ; கொள்கையின் : சாரியை நிற்க உருபு தொக்கது. 57-58. இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் - பெருஞ் செல்வத்திற் குரியோனாகிய மாசாத்துவானும் அவன்றன் இல் லக்கிழத்தியும், அருமணி இழந்த நாகம் போன்றதும் - பெறற் கரிய மணியை இழந்த நாகம்போல் ஒடுங்கியதும்; பெருஞ் செல்வமுடையனாகலின் இருநிதிக் கிழவன் என்றார். மணி இழந்த நாகம் வருந்துமென்பதனை, 1"அருமணி இழந்தோர் நாக மலமரு கின்ற தொத்தாள்" என்பதனானறிக. 59-60. இன் உயிர் இழந்த யாக்கை என்ன - இனிய உயிரினை இழந்த உடம்புபோல, துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தார் துன்பக்கடலில் ஆழ்ந்ததும்; உயிரிழந்த யாக்கை செயலறுதலோடு ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறுபோல இச் சுற்றமும் செயலறுதலோடு துன்பமீக் கூர்தலின் தம் உடல் இயல்பு அழியப்பெற்றனர் என்க. 2"இன்னுயிரிழந்த யாக்கையி னிருந்தனள்" என்பதுங் காண்க. 61-62. ஏவலாளர் யாங்கணும் சென்று - பணியாளர் எத் திசைக்கண்ணும் சென்று, கோவலன் தேடிக்கொணர்கெனப் பெயர்ந்ததும் - கோவலனைத் தேடிக் கொண்டு வருவீராக என்று மாசாத்துவான் கூற அவர்கள் சென்றதும் ; ஏவலாளர் - விளி. 3"மெல்லெழுத்து மிகுவழி" என்ற சூத்திரத்து ‘அன்ன பிறவும்' என்பதனால், கோவலற் றேடி என உயர் திணைப்பெயர் இரண்டாம் வேற்றுமைக்கண் திரிந்து முடிந்தது. "கொணர்கெனப் போந்ததும்" என்பதும் பாடம். 63-66. பெருமகன் ஏவல் - தலைவன் ஏவிய பணிவிடையைச் செய்தலே உயர்ந்த பொருளாகும், அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று - யாண்டும் அங்ஙனமன்றாகிய அரசாட்சியும் எண்மைப் பொருட்டாம் என்று கருதி, அருங் கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல - கடத்தற்கரிய காட்டினை அடைந்த இராமன் பிரியலுற்ற அயோத்தியைப் போல, பெரும் பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும் - பெரிய புகழினையுடைய பழமையாகிய காவிரிப்பூம்பட்டினத்துள்ளார் மிகவும் அறிவு மயங்கியதும்; பெருமகன் - தயரதன். தஞ்சம் - எண்மை. அருந்திறல் - அரிய திறலுடைய இராமன் ; ஆகுபெயர். பேதுறவு - அறிவின் றிரிவு. 67-70. வசந்தமாலைவாய் மாதவி கேட்டு - தன் திருமுகத்தை மறுத்துக் கூறியதனை மாதவி வசந்தமாலையினிடத்துக் கேள்வி யுற்று, பசந்த மேனியள் படர்நோய் உற்று - பசப்புற்ற மேனியை உடையளாய் நினைவென்னும் பிணியுற்று, நெடுநிலை மாடத்து இடைநிலத்து - உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடத்தில், ஆங்கு ஒர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - ஓர் பள்ளியறையில் உறங்கற்கமைந்த சேக்கைக்கண் வீழ்ந்த செய்தியும்; வசந்த மாலைவாய் மாதவி கேட்டு' என்பதற்குக் கோவலன் கண்ணகியுடன் சென்றதனை மாதவி கேட்டு என உரைப்பர் அரும்பத வுரையாசிரியர். மேனியள், முற்றெச்சம். படை - உறக்கம்; படுத்தலுமாம். ஆங்கு, அசை. சேக்கைப் பள்ளி - சேக்கையிடம் எனவும் ஆம். 71-72. வீழ்துயர் உற்றோள் விழுமம் கேட்டு - அங்ஙனம் வீழ்ந்த துன்பமுற்றோளாகிய மாதவியின் இடும்பையைக் கேட்டு, தாழ்துயர் எய்தித் தான்சென்று இருந்ததும் - ஆழ்ந்த துயர முற்றுத் தான் அங்குச் சென்றிருந்த செய்தியும், வீழ்துயர் - விருப்பத்தான் வருந்துயர் என்றுமாம். துயர் உற்றோள், வினைப்பெயர். தாழ்தல் - ஆழ்தல். தாழ் துயர் - மிக்க துயரம். தான் - கோசிகன். 73-76. இருந்துயர் உற்றோள் - மிக்க துன்பமுற்றவளாகிய மாதவி, இணை அடி தொழுதேன் வருந்த துயர் நீக்கு என - நினது இரண்டு அடிகளையும் வணங்கினேன் எனக்கு வந்த துன்பத்தினைப் போக்குவாய் என்று சொல்லி, மலர்க்கையின் எழுதி - மலர்போன்ற தன் கைகளால் எழுதி, கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே - என் கண்ணின் கருமணி போல்வானுக்குக் காட்டுக என்று சொல்லி, மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - இலாஞ்சனை யையுடைய திருமுகத்தை அவள் தந்ததும் ; ‘இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென' என்றது, கொண்டு கூறல். திருமுகம் எழுதிச் சுருட்டி அதன்மீது மண் இலாஞ்சனை இடுதல் மரபாகலான் `மண்ணுடை முடங்கல்' என்றார். உற்றோள் மாதவி எழுதி ஈத்ததும் என்க. 77-78. ஈத்த ஓலை கொண்டு இடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும் - அங்ஙனம் அவள் தந்த திருமுகத்தைக் கொண்டு பல வழியிடங்களில் அலைந்து தான் சென்ற நாடுகளும்; தீத்திறம் புரிந்தோன் - முத் தீத்தொழிலை விரும்பினவன் ; தன் மையிற் படர்க்கை வந்த வழுவமைதி.வழி 79-82. வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து - நெறியின் பக்கத்தே தங்கிக் குற்றமறச் சொல்லி, ஆங்கு அழிவு உடை உள்ளத்து ஆர் அஞராட்டி - அவ்விடத்து அழிந்த உள்ளத்தையும் மிக்க காம நோயையும் உடையளாகிய, போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - மலர் விரிந்த புரிந்த கூந்தலையுடைய பூங்கொடி போன்ற நங்கையாகிய மாதவி தந்த ஓலையைக் கோவலன் கையிலே கொடுக்க; மாசு அற உரைத்து என்றது நிகழ்ந்த நிகழ்ச்சியினை உள்ளவாறே உரைத்து என்றவாறு. ஆர் அஞராட்டியாகிய மாதவி என்க. 83-86. உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் - தான் அவளொடு கூடி உறைந்த காலத்தில் பூசிய புழுகு நெய்யின் மணத்தினை, குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆகலின் - செறிந்த நெறிப்பையுடைய கூந்தலாலிட்ட மண் இலச்சினை அறிவித்துக் காட்டியது ஆதலால், கைவிடலீயான் - அம் முடங்கலைக் கையினின்றும் விடுவிக்க எண்ணாதவனாய், ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர் வோன் - பின்னர் ஏட்டினை விரித்து அவ்வோலைக்கண் அடங்கிய பொருளை அறிகின்றவன்; கூந்தல் மண் பொறி - மண்ணின்மீது கூந்தலா லொற்றிய பொறி. வாசனையின் செவ்வி இன்மையைப் பொறி காட்டிற்று எனலுமாம். கைவிடலீயான் - மண் பொறியைக் கடிதின் விடுவியானாய்ப் பின்னர் விடுவித்து எனலுமாம்; வினைத்திரிசொல். 87. அடிகள் முன்னர் யான் அடிவீழ்ந்தேன் - அடிகாள் யான் நும் திருவடிகளைத் திசை நோக்கி வணங்கினேன்; அடிகள் - விளி. அடி வீழ்தல் - வணங்கல். 88. வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் - தெளிவில்லாத எனது புன்மொழிகளை உள்ளத்தில் அடைத்தல் வேண்டும். மனக்கொளல் வேண்டுமென்ற கருத்து. பெண்டிர் பிழைபட மொழிதல் இயல்பு என்றுணர்ந்து அதனைப் பொருட்படுத்தாது கொள்ளல் வேண்டும் என்பதாம். இவை திருமுகத்தில் முதற்கண் எழுதப்படும் பணிமொழி. 89-92. குரவர் பணி அன்றியும் - இருமுது குரவர்க்கும் பணி செய்தல் ஒழிந்ததன்றியும், குலப்பிறப்பாட்டியோடு இர விடைக் கழிதற்கு - உயர்குடிப் பிறந்த கண்ணகியோடு இர வின்கண் நீர் செல்வதற்கு, என் பிழைப்பு அறியாது கையறும் நெஞ்சம் - யான் செய்த குற்றம் யாதென்று உணராது என் உள்ளம் செயலறுகின்றது, கடியல் வேண்டும் - அதனைப் போக்கல் வேண்டும், பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி- குற்றம் நீங்கிய அறிவினையுடைய மேலோய் போற்றுக; என் பிழைப்பு அறியாது என்றது யான் பிழையொன்றும் செய்திலேன், செய்தேனாயினும் அதன் பொருட்டு நீர் நும் இருமுது குரவரையும் பேணுதலை ஒழிந்து கற்புடை மனைவியோடு இரவின் கண் வேற்று நாட்டிற்குச் சேறல் தகுதியன்று என்று கூறிய வாறாயிற்று. போற்றி என்றது குரவர்பணி பிழைத்தலானும், கற் புடையாளொடு இரவிடை வேற்று நாட்டிற்குச் சேறலானும், யான் இறந்துபடுதலானும் நின்புகழ்க்குக் குறையுண்டாகாமற் காக்க என்றபடி. 93-95 என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - இவ்வாறு அவள் எழுதிய வாசகத்தின் பொருளை அறிந்து, தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே - தன்னாற் செய்யப்பட்ட குற்றமுடையவ ளல்லள் அவள், என் குற்றமே யாம் என்று தெளிந்து சோர்வு நீங்கி ; என் தீது - எனது தீவினை. தளர்ச்சி நீங்கினான் பொய் தீர் காட்சியோ னாகலான் ஊழ்வினையின்படி யாவும் நடக்குமென் றுணர்ந்து. 95-97. எய்தியது உணர்ந்து ஆங்கு - அவ் வோலையிற் பொருந்திய வாசகத்தை அறிந்து, எற் பயந்தோற்கு இம் மண் ணுடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருள் உரை பொருந்தியது - என்னை ஈன்ற தந்தைக்கும் இந்த இலச் சினையையுடைய ஓலை தானே பொலிவுடைத்தாம்படி பொருளும் உரையும் பொருந்தின ; என்னை பொருந்தியவாறெனின்? குரவீர் நும் திருவடியை வணங்கினேன், தெளிவில்லாத என் புன்சொற்களை ஏற்றருள வேண்டும் ; நுமக்குச் செய்யும் பணிவிடையை ஒழித்ததன்றி, இக் கற்புடையாளொடு நும்மை விட்டு நீங்கி இரவின்கண் கழிதல் காரணமாக உண்டாய என் பிழையினை உணராது, அப் பிரிவான் ஏற்படும் நும் உள்ளத் தளர்ச்சியினைப் போக்குதல் வேண்டும்; குற்றம் தீர்ந்த அறிவினையுடைய பெரியோய் போற்றி ;' எனப் பொருந்தியவா றுணர்க. பெரியோர்க்குக் காப்புக் குறித்துப் போற்றி யென்றல் மரபாகலின் புரையோய் போற்றி' என்றான். எய்தியதுரைத்து என்று பாடங்கொண்டு தான் போந்த காரணம் சொல்லி என்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 98-101. மாசு இல் குரவர் மலர்அடி தொழுதேன் கோசிக மாணி காட்டு எனக் கொடுத்து - கோசிகனே குற்றமில்லாத என் இருமுது குரவரது மலர் போன்ற திருவடிகளை வணங்கினேன் எனச் சொல்லி இம் முடங்கலை அவரிடம் காட்டுவாயாக வென அவனிடம் கொடுத்து, நடுக்கம் களைந்து - என் பிரிவால் அவர்க்குண்டான நடுக்கத்தினைப் போக்கி, அவர் நல் அகம் பொருந்திய-அவரது நல்ல உள்ளத்திற் பொருந்திய, இடுக்கண் களைதற்கு ஈண்டு எனப் போக்கி - துன்பத்தினை ஒழிப்பதற்கு விரைந்து செல்வாயாக என்று அவனைப்போகவிட்டு; ஈண்டுதல் - விரைதல் எனச்சொல்லி' என ஒரு சொல் வருவிக்க. ‘மாசில் குரவர்' எனவும் ‘அவர் நல்லகம்' எனவும் கூறியது என் தீவினைப் பொருட்டால் அவர் துன்பம் நுகர நேர்ந்ததன்றி அவர் தீவினையாளர் அல்லர் என்பது குறித்தற்கென்க. ‘நடுக்கம் களைந்து' என்பதற்கு நீ நடுங்கும் நடுக்கத்தை போக்கி என உரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 102-103. மாசு இல் கற்பின் மனையொடு இருந்த - குற்றமிலாக் கற்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு இருந்த, ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - தவறில்லாக் கோட் பாட்டினையுடைய கவுந்தி யடிகளிடம் சென்று சேர்ந்து ; 103-105. ஆங்கு - அவ்விடத்து, ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றி பொருந்திய கொள்கையை யுடைய துர்க்கையது போர்க்கோலத்தைப் பாடும் பாணருடன், பாங்குறச் சேர்ந்து - உரிமையுறக் கலந்து ; 1"பாண ரொக்கல்" என்பவாகலின், பாணரிற் பாங்குறச் சேர்ந்தென்றார். ஆடு - வெற்றி. 106. செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில் - செவ்விதின் இயற்றப்பட்ட செங்கோட்டி யாழில் ; செங்கோட்டி யாழ் - நால்வகை யாழிலொன்று ; ஏழு நரம்பினை யுடையது. இது பாணரது யாழ் என்க. 107. தந்திரி கரத்தொடு திவவு உறுத்து யாத்து - தந்திரிகரம் திவவு என்னும் இரண்டினையும் உறுதிபெறக் கட்டி ; தந்திரிகரமாவது நரம்பு துவக்குதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தும் ஐம்பத்தோருறுப்பு என்பர். இக் காலத்து இது மெட்டு என வழங்கும். திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு. 108. ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி-செங்கோட்டி யாழ் ஒற்று, பற்று என்னும் உறுப்புக்களையுடைத் தாகலான் ஒற்றினைப் பற்றிடத்திற் சேர்த்தி ; செங்கோட்டி யாழின் உறுப்புக்கள் ஆறு ; இதனை, "செங்கோட்டி யாழே செவ்விதிற் றெரியின், அறுவகை யுறுப்பிற் றாகுமென்ப" "அவைதாம், கோடே திவவே யொற்றே....... தந்திரிகரமே நரம்போ டாறே" என்பவற்றானறிக. ஒற்றுறுப்பு - நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி யென்பர். செங்கோட்டி யாழின் பண் மொழி நரம்பு நான்கொழிய ஏனை மூன்றும் தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின், அவையே ஒற்றும், பற்றும் எனலாயின; ஒற்றொன்றே கொள்ளலுமாம். 109. உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நரம்புகளை நிறுத்தி ; எழுவகைப் பாலையுள் அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்றவாறு. உழை குரலாயது அரும்பாலை யென்பதனை ஆய்ச்சியர், குரவையுள் "குடமுத லிடமுறை...வேண்டிய பெயரே" என்பதன் உரையாலறிக. இது குடமுதற் பாலைத் திரிவு. 110-112. வரன்முறை வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறைமையால் வந்த மூவகைத் தானத்தாலும், பாய்கலைப் பாவை பாடற் பாணி - பாய்ந்து செல்லும் கலை யூர்தியை யுடைய கொற்றவையின் பாடலாகிய பண்ணை, ஆசான் திறத்தின் அமைவரக்கேட்டு - ஆசான் என்னும் பண்ணியலின் நால்வகைச் சாதியாகிய திறங்களுடன் பொருந்துதல்வரச் செவிப் புலத்தானறிந்து; மூவகைத்தானம் - வலிவு மெலிவு சமன் என்னும் மூவகை இயக்கிற்குரிய இடம்; எழுத்து அசை சீர் என்பாருமுளர். பண், பண்ணியற் றிறம், திறம், திறத்திறம் எனப் பண்கள் நான்கு கூறுபடும்; இவற்றுள் பண் என்பது ஏழு சுரமும் அமையப் பெறுவது; ஏனையன முறையே ஒவ்வொரு சுரம் குறைந்து வருவன; இவற்றைக் குறிக்கும் வடமொழிப் பெயர்கள் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்பன. பண் முதலிய நான்கும் பண், திறம் என இரண்டாகவும் அடக்கிக் கூறப்படும். பாலையாழ் என்னும் பெரும் பண்ணின் திறம் அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்னும் ஐந்துமாம். இவற்றுள் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல் என்னும் நால்வகைச் சாதிபற்றி நந்நான்கு ஆகும். ஆசான் என்னுந் திறத்தின் அகநிலை காந்தாரமும், புறநிலை சிகண்டியும், அருகியல் தேசாக்கிரியும், பெருகியல் சுருதிகாந்தாரமும் ஆம் ; இறுதிக் கண்ணது சுத்த காந்தாரம் எனவும் கூறப்படும். இவ் விராகங்களைச் செவியால் ஓர்த்தென்க. 113. பாடற் பாணி அளைஇ அவரொடு - இங்ஙனமாகிய பண்களை அவரோடு கலந்து வாசித்து; 114. கூடற் காவதம் கூறுமின் நீர் என - இவ்விடத்தினின்று மதுரை எத்துணைக் காவத தூரத்திலுள்ளது; அதனைக் கூறுமின் நீரென்று கோவலன் கேட்ப; 115-118. காழ் அகில் சாந்தம் கமழ் பூங் குங்குமம் நாவிக் குழம்பு - வயிரம் பற்றிய அகிலின் சாந்தும் மணங் கமழும் குங்குமப் பூங் குழம்பும் புழுகுக் குழம்பும், நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் - மணமாகிய நன்மை அமைந்த சந்தனச் சாந்தும் கத்தூரிச் சாந்துமாகிய, மணம் கமழ் தெய்வத் தேம்மென் கொழுஞ் சேறு ஆடி - இத் தெய்வ மணம் வீசும் இனிய மெல்லிய வளவிய சேற்றை யளைந்து; குழம்பு என்பதனைக் குங்குமத்தோடுங் கூட்டுக. நாவி - புழுகு. தேம் - இனிமை. 118-121. ஆங்குத் தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு - பூம் பொடி பொருந்திய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றானாய மாலையொடு, மாதவி மல்லிகை மனை வளர் முல்லைப் போது விரிதொடையல் பூ அணை பொருந்தி - குருக்கத்தியும் மல்லிகையும் மனைக்கண் வளர்க்கப் பெற்ற முல்லையுமென்ற இவற்றின் விரிந்த மலர்களால் தொடுத்த மாலையையும் உடைய மலர் அணைக்கண் பொருந்தி ; ஆங்கு - ஆசை ; அப்பொழுது என்றலுமாம். பூ அணை - பொலிவினையுடைய அணை யென்றுமாம். முல்லை மனையில் வளர்வதனை 1"இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கி" என்பதனாலும் அறிக. 122-126. அட்டில் புகையும் - அடுக்களைகளில் தோன்றும் தாளிப்பு முதலிய புகையும், அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற கடைவீதிக்கண் தம் வாணிபம் முட்டுப் பெறாத அப்ப வாணிகர் அப்பம் சுடுகின்றமையான் உண்டாகும் புகையும், மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த அந்தீம் புகையும் - ஆடவரும் மகளிரும் மேல் மாடத்து உண்டாக்கிய அழகிய இனிய அகிற் புகையும், ஆகுதிப் புகையும் - வேள்விச் சாலைகளில் ஓமம் பண்ணுதலால் எழும் புகையும் ஆகிய, பல்வேறு பூம் புகை அளைஇ - பலவாக வேறுபட்ட பொலிவினையுடைய புகையை அளாவி ; அங்காடி - கடைவீதி. கூவியர் - அப்ப வாணிகர். முட்டா மோதகம் என இயைத்து முட்டாமற் சுடுகின்ற மோதகம் எனலு மாம். மைந்தரும் மகளிரும் புகை எடுத்தல் மயிர், துகில், மாலை முதலியவற்றிற்கு மணமூட்டற்கென்க. ; 126-129. வெல்போர் விளங்கு பூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் - வென்றி காணும் போரினையும் கலன் விளங்கும் மார்பினையும் உடைய பாண்டியனது கோயிலின்கண் தோன்றும், அளந்து உணர்வு அறியா - அறிவான் அளவிட்டறிய வொண்ணாத, ஆர் உயிர் பிணிக்கும் - அரிய உள்ளத்தைத் தகைக்கும், கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி - நறுமணக் கலவையின் தொகுதி வெளிப்படத் தோன்றி ; விளங்கு பூண் - இந்திரனாற் பூட்டப்பட்ட ஆரமுமாம். கோயிலிற் கலவை, அறியாக் கலவை, பிணிக்கும் கலவை என்க. தம்மை ஒருகால் நுகர்ந்த உள்ளம் பின்னர் வேறொன்றினை நுகர விரும்பாது தம்மையே விரும்பி நிற்குமாறு செய்யும் கலவைக் கூட்டம் என்பார் ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் என்றார். 130-132. புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் - புலவர்களது செவ்விய நாவால் புகழப்பட்ட சிறப்பினையுடைய, பொதியில் தென்றல் போலாது - பொதியின் மலையில் தோன்றும் தென்றல் தன்னை ஒவ்வா வண்ணம், ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இந்த மதுரையின் தென்றலானது வந்தது இதனைக் காண்பீர்; செந்நா - பொய் கூறா நா. நிவப்பு - உயர்வு ; சிறப்பு ; சிறப்பினையுடைய மதுரைத் தென்றல் என்க. பொதியிற்கண் அமையாத மணம் பலவற்றையும் இத் தென்றல் மதுரைக்கண் அளைந்து வருதலின் இதற்கு அப் பொதியிற் றென்றல் ஒவ்வாதாயிற்று. ஆடி, பொருந்தி, அளைஇ, தோன்றித் தென்றல் வந்தது என்க. 133-134. நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் - அதனால் அப் பாண்டியனது செல்வ மிக்க மதுரை மிகச் சேய்மையிலுள்ளதன்று; தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என - மேலும் தனித்த நீர்மையிற் செல்லினும் வழிக்கண் தடுப்பார் ஒருவரும் இல்லை என்று சொல்ல; தனி நீர்கழியினும் என்பதற்கு நீவிர் தனியே செல்லினும் என்றலும் பொருந்தும். தகைக்குநர் - தடுத்து நிறுத்தி ஆறலைப்பார். 135-136. முன்னாள் முறைமையின் இருந் தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் - பெரிய தவத்தினைஉடைய கவுந்தியடிகளுடனே முதனாளிற் சென்ற முறைமை போலப் பிற்றை ஞான்றும் இரவின்கண் சென்றனர், பெயர்ந் தாங்கு - செல்ல, 137-140. அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும் - பிறர்க்கு அரிய அழித்தற்றொழிலை வல்ல இறைவனது அகன்ற பெரிய கோயிலினிடத்தும், பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் - பெரிய புகழ் வாய்ந்த பாண்டியனது மிக்க புகழ் அமைந்த கோயிலினிடத்தும், பால் கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் - பகுதிப்பட்ட சிறப்பினையுடைய காலை முரசமாகிய சிறந்த பல்லியத்தின் செறிந்த முழக்கொலியும் ; பெயர்ந்து - பெயரவெனத் திரிக்க. தெறற் கடவுள் - ஆலவாய் இறைவன். பெயர்ந்து என்பதனைப் பல்லியம் என்பதனோடு இயைத்துப் பல்லியம் பெயர்ந்து ஒலிக்கும் ஒலி எனப்பொருள் கொண்டு, பெயர்தல் - தாளமறுத எனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். காலைமுரசம் - பள்ளியெழுச்சி முரசம். காலை முரசப் பல்லிய வோதையும் என்க. 141. நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - பார்ப்பார் நான்கு மறைகளையும் பயின்றோதும் ஓசையும் ; 142. மாதவர் ஓதி மலிந்த ஓதையும் - இருடிகள் காலையில் மந்திரம் ஓதுதலான் நிறைந்த ஓசையும் ; 143-144. மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு - வெற்றி தன்னினின்றும் மீளப் பெறாத அரசனாற் பெற்ற சிறப்புடனே, வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் - வாள்வீரர் தத்தம் வீரத்திற்கு நாட் காலையில் எடுத்த முரசு முதலியவற்றின் அழகிய ஓசையும்; சிறப்பொடு எடுத்த முழவம் என்றது அரசன்பால் வரிசையாகப் பெற்ற முழவம் என்றபடி. நாள் - காலை. நாள் - குடை நாட்கோள் முதலியவுமாம். 145. போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - போரிலே பகைவரை வென்று கொண்டுவந்த போர் யானையின் முழக்கமும்; 146. வாரிக்கொண்ட வயக்கரி முழக்கமும் - காட்டிற் பிடித்துக் கொண்டுவந்த வலிய யானையின் முழக்கமும். 147. பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் - பந்திகளில் நிற்கும் குதிரைகள் ஆலிக்கும் ஓசையும்; 148. கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - கிணைப் பறையையுடைய மள்ளர் மருத நிலத்து வைகறைக்கண் கொட்டும் ஒலியும் ஆகிய ; கிணை - மருதப்பறை. பொருநர் - கூத்தருமாம். பாணி - பாட்டி னொலியுமாம். 146-150. கார்க்கடல் ஒலியில் கலி கெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - மகிழ்ச்சி மிக்க கூடற்கண் ஆர்க்கும் ஒலிகள் கரிய கடல் ஒலி போன்று மிக்கு ஒலித்து எதிர் கொள்ளுதலான் முன்னைத் துன்பங்களெல்லாம் நீங்கி; எதிர்கொள - எதிரே வர ; எதிர்கொண்டழைப்பது போலாக. பல்வகை ஒலிகளைக் கேட்டலானும், பதியை யடைந்தோ மென்னும் மகிழ்ச்சியானும் அஞர் நீங்கினாரென்க. 151-154. குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - குராவும் மகிழும் கோங்கும் வேங்கையும், மரவமும் நாகமும் திலகமும் மருதமும் - வெண்கடம்பும் சுரபுன்னையும் மஞ்சாடியும் மருதமரமும், சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - உச்சிச் செலுந்திலும் செருந்தியும் செண்பகமரமும், பாடலம் தன்னொடு பன் மலர் விரிந்து - ஆகிய இவை பாதிரியுடனே பல வகை மலர்களும் விரிந்து; குரவமலர் முதலியனவும் பன்மலரும் விரிந்து என்க. சேடல் - உச்சிச் செலுந்தில் என்னும் மரமென்பர். ஓங்கல் - மரம்; ஆகுபெயர். 155-160. குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்- குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியினையுடைய முசுட்டையும், விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும் - விரிந்த பூக்களையுடைய மோசி மல்லிகையும் வெள்ளை நறுந் தாளியும், குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - வெட்பாலையும் மூங்கிலும் கொழுவிய கொடியாகப் பொருந்திய சிவதையும், பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த - குட்டிப் பிடவமும் இருவாட்சியுமாய இவை பின்னிய பிணக்கத்துடன் கலக்கப் பெற்ற, கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் - கோவையாகிய மேகலை எவ்விடத்தும் செறிந்து சுற்றிய அகன்று உயர்ந்த கரையாகிய அல்குலினையும்; வெதிரம் - அம் சாரியை. பகன்றை - சீந்திலுமாம்; பெருங்கையால் என்றுமுரைப்பர். மயிலை - கொடிமல்லிகை யென்பாருமுளர். கொடுமை கூறினார் அல்குல் என்பதற்குப் பொருந்த. விரிமலர், கொழுங்கொடி இவற்றை ஏற்புழிக் கூட்டுக. பன்மலர் விரிந்து மணந்த மேகலைக்கோவை யாங்கணும் சூழ் போகிய அகன்றேந்திய கொடுங்கரையாகிய அல்குல் எனக் கூட்டுக. கரையின் புறவாயெங்கும் குரவ முதலாகப் பன்மலர் விரிந்தவை மீதுடுத்த பூந்துகிலாகவும், அகவாயெங்கும் குருகு முதலாகப் பிணங்கரில் மணந்தவை மேகலையாகவும் உடைய கரையாகிய வல்குல் என்பர் அடியார்க்கு நல்லார். 161-163. வாலுகம் குவைஇய மலர்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பல்மலர் ஓங்கி எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை - விரிந்த பொலிவினையுடைய ஆற்றிடைக் குறையின்கண் அடிப்பக்கம் அகன்று பல மலர்களால் உயர்ச்சி பெற்று ஒன்றற்கொன்று ஒத்து விளங்கிய குவிதலையுடைய மணற்குன்றாகிய விளக்கம் பொருந்திய இளைய அழகிய முலையினையும்; துருத்திக்கண் புடைக்கொண்டு ஓங்கி விளங்கிய வாலுக முலை என்க. எதிர் - ஒப்பு; மாறுபடலுமாம். பால்புடைக் கொள்ளலும் பன்மலரோங்கலும் எதிரெதிர் விளங்கலும் முலைக்கும் பொருந்துமாறுணர்க. விலங்கிய எனப் பாடங்கொண்டு, ஒன்றையொன்று நெருங்கிய வென்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். 164. கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய் - கரைக் கண் நின்று உதிர்த்த முருக்கமலரின் இதழாகிய சிவந்த வாயினையும்; 165. அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரொடு வந்த முல்லை மலராகிய அழகிய நகையினையு முடையாள்; 166. விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற பெரிய கயல் ஆகிய நீண்ட கண்களையும்; விலங்கு நிமிர்தலும் ஒழுகலும் கண்ணுக்கும் பொருந்துமா றுணர்க. 167. விரை மலர் நீங்கா அவிர் அறற் கூந்தல் - மணம் பொருந் திய மலர்கள் நீங்கப் பெறாது விளங்குகின்ற அறலாகிய கூந்த லினையும்; 168-170. உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகினைப் பல பொருளையும் விளைத்து உண்பித்துக் காக்கின்ற உயர்ந்த பெரிய ஒழுக்கத்தினையுடைய, புலவர் நாவில் பொருந் திய பூங்கொடி - புலவர்களுடைய நாவின்கண் பொருந்திய திருமகளை ஒப்பாள், வையை என்ற பொய்யாக் குலக்கொடி - வையை என்று சொல்லப்படுகின்ற பருவம் பொய்யாத பாண்டியர் குலக்கொடியாயுள்ளாள்; கொடுங்கரையாகிய அல்குலையும் வாலுகமாகிய முலையினையும் இதழாகிய சிவந்த வாயினையும் கயலாகிய கண்ணினையும் அறலாகிய கூந்தலினையும் முல்லையாகிய நகையினையுமுடையாள் பூங்கொடி குலக்கொடி என்க. ஒழுக்கத்துப் பொருந்திய பூங்கொடி என்க. புரந்து ஊட்டும் என்ற எச்சங்களுள் விகுதி பிரித்துக் கூட்டுக. இரு பத்தாறு பரிபாட்டுக் களாலும் பிறவற்றானும் சிறப்பிக்கப் பெற்ற மையின் புலவர் நாவிற் பொருந்திய என்றும், செல்வமளித்தலின் பூங் கொடி என்றும், எஞ்ஞான்றும் பாண்டியர்க்குரியதாகலின் பொய் யாக் குலக்கொடி என்றும் கூறினார். 171-173. தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்-கண்ண கிக்கு மேல்வரும் துன்பத்தினைத் தான் முன்னரே அறிந்தாள் போல, புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தூய்மையுடைய நறிய பூக்களாகிய ஆடையால் தன் மெய்ம்முழுதும் போர்த்து, கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - தன்கண் நிறைந்த மிக்க நீரினை மறைத்து உள்ளடக்க; புண்ணிய நறுமலர் - தன்னைக்கொண்டு அருச்சிப்பார்க்குப் புண்ணியங்களைக் கொடுக்கும் நறிய பூ என்றுரைப்பாருமுளர். கண்ணிறை நெடுநீர் என்பதற்குத் தன்னிடத்து நிறைந்த நீர் எனவும் கண்களில் நிறைந்த நீர் எனவும் பொருள் கொள்க. அடக்கி - அடக்க வெனத் திரிக்க. கரந்தனள் அடக்குதல் இவர் நீர் மிகுதி கண்டு வெருவாதிருத்தற்பொருட்டென்க. 174-175. புனல் யாறு அன்று இது பூம்புனல் யாறு என - இவ் வியாறு நீர் ஆறு அன்று பூவாறு என்று புகழ்ந்து, அன நடை மாதரும் ஐயனும் தொழுது - அன்னம் போன்ற நடையினை யுடைய கண்ணகியும் கோவலனும் வணங்கி; 176-180. பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பி யும் அருந்துறை இயக்கும் - அரிய துறையிலே செலுத்தும் குதிரைமுக ஓடமும் யானைமுக ஓடமும் சிங்கமுக ஓடமுமாகிய இவற்றினேறி, பெருந்துறை மருங்கின் பெயராது - பலரும் செல்லும் பெரிய துறைப்பக்கத்தே செல்லாது, ஆங்கண் மாத வத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலிலுள்ள சிறிய துறையில் கவுந்தியடிகளுடனே மரப்புணையில் சென்று, தே மலர் நறும்பொழில் தென்கரை எய்தி - தேன் பொருந்திய மலர்களையுடைய நல்ல சோலை நிறைந்த தெற்குக் கரையினை அடைந்து; அருந்துறை - ஓடக்கோல் நிலைத்தலரிய துறை. ஓடத்தில் பல ரும் ஏறுவாராகலான் தாங்கள் மூவரும் தனியே கட்டுமரப் புணையில் சேர்ந்தனர் என்க; என்னை? முன்னர், "வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு" சாப முறுதலின். 181-183. வானவர் உறையும் மதுரை வலங் கொள - தேவர்கள் உறையும் மதுரை நகரத்தினை வலங் கொண்டால், தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று - மிகவும் அறமுண்டாம் என்று கருதி, ஆங்கு அருமிளை உடுத்த அகழி சூழ்போகி - அவ் விடத்தே, அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப் போய்; நனி பெரிது, ஒருபொருட் பன்மொழி, தான், அசை, மிளை - கட்டுவேலியுமாம். 184-188. கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் - கரிய நெடிய குவளையும் அல்லியும் தாமரையும், தையலும் கணவனும் தனித்து உறுதுயரம் - கண்ணகியும் அவள் கணவன் கோவல னும் பிரிந்து அடையும் துன்பத்தினை, ஐயம் இன்றி அறிந்தன போல - ஐயப்பாடு சிறிதும் இன்றி உணர்ந்தன போல, பண்நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி - வண்டுகள் பாடும் பண்ணீர் மையால் வருந்தி ஏக்கமுற்று அழுது, கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க - கண்ணீரைக்கொண்டு கால் பொருந்த நடுங்க; குவளை முதலியவற்றில் வண்டுகள் ஒலித்தல் இவர்க்குறு துயரங் கண்டு அக் குவளை முதலியன அழுதல்போன்றிருந்தன என்க. கண்ணீர் - கண்ணின்நீர், கள்ளாகிய நீர் எனவும், கால் உற நடுங்க - கால்கள் மிக நடுங்க, காற்றால் மிக அசைய எனவும் இரு பொருள் படுமாறறிக. 189-190. போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி - பகைவர் வருந்தப் போர் தேய்த்தெடுத்த அரிய மதிலின்கண் நெடிய கொடிகள், வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட- இம் மதுரைக்கண் வாராதொழிவா யென்பன போலத் தம் கையின் மறித்துக் காட்ட ; ஆரெயில் நெடுங்கொடி மேல்காற்றடிக்க அசைகின்றவை கோவலனை இங்கு வாராதே போ என்று கை காட்டினாற் போன் றன ; தற்குறிப்பேற்றம். 1 " ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன் பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான் மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும் காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற" என்னுஞ் செய்யுள் இக் கருத்தைப் பின்பற்றியதாதல் காண்க. 191-196. புள்அணி கழனியும் பொழிலும் பொருந்தி - பறவை கள் அழகு செய்யும் வயல்களும் சோலைகளும் பொருந்தப் பெற்று, வௌச்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் - மிக்க நீரினையுடைய பண்ணைகளும் பரந்த நீரினையுடைய ஏரிகளும், காய்க் குலைத் தெங்கும் வாழையும் கமுகும் - குலையாகப் பொருந் திய காய்களையுடைய தெங்கும் கமுகும் வாழையும், வேய்த்திரள் பந்தரும் - திரண்ட மூங்கிலால் இடப்பட்ட பந்தலும் ஆகிய இவை, விளங்கிய இருக்கை - விளங்கிய இருப்பினையுடைய, அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - அறத்தினையே விரும்பும் முனிவர்கள் அன்றிப் பிறர் சேராத, புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்-மூதூரின் புறஞ்சேரிக்கண் விரும்பிப் புக்கார் என்க. பண்ணை - தோட்டமும், ஓடையும். காய்க்குலை என்பதனை வாழை, கமுகு என்பவற்றொடுங் கூட்டுக. இருக்கையினையுடைய புறஞ்சிறை என்க. அறம்புரி மாந்தர் சேர்ந்த இருக்கையாகலான் இவர் புரிந்து புக்கார் என்க. புறஞ்சேரி - இது கீழ்த்திசை வாயிற்கு அயலதோர் முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு நல்லார். தொழுது போகி எய்திச் சூழ்போகிப் புக்கனர் என்க. 'அறம் புரி மாந்த ரன்றிச் சேராப், புறஞ்சிறை மூதூர்' என்ற கருத்துப் பின் 2அடைக்கலக் காதையுள் வருதலுங் காண்க. இது நிலைமண்டிலவாசிரியப்பா புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று. 14. ஊர்காண் காதை (பொழிலும் கழனியும் புட்கள் எழுந்தொலிக்க ஞாயிறு கீழ்த் திசைத் தோன்றியது. இறைவன் கோயில் முதலியவற்றில் வலம் புரிச் சங்கும் காலை முரசும் ஒலித்தன. கோவலன் கவுந்தி யடிகளை வணங்கித் தான் உற்ற இடும்பையை உரைத்து, யான் இந் நகர் வணிகர்க்கு எனது நிலையை உணர்த்தி வருகாறும், இப் பைந்தொடி நுமது பாதக் காப்பினள்' என்று கூறினன்; கூறக், கவுந்தி யடிகள் உலகிலே மக்களெய்தும் இன்ப துன்பங்களின் காரணங்களை எடுத் துரைத்து, முன்னரும் துன்பமுற்றோர் பலர் என்பதற்கு இராமனை யும் நளனையும் எடுத்துக் காட்டி, நீ அவர்கள்போல்வாயு மல்லை; மனைவியுடன் பிரியா வாழ்க்கை பெற்றனை; ஆகலின் வருந்தாது ஏகிப் பொருந்துமிடம் அறிந்து வருக' என்றனர்; என்றலும், கோவலன் மதிலக வரைப்பிற் சென்று, கடைகழி மகளிர் காதலஞ் செல்வருடன் காலையிற் புனல் விளையாடியும், நண்பகலிற் பொழில் விளையாட்டயர்ந்தும், எற்படுபொழுதில் நிலா முற்றத்திற் சேக்கை மீதிருந்தும், முன்பு தமக்கின்பம் விளைத்த கார் முதலிய பருவங் களின் வரவை எண்ணி இன்புறும் முதுவேனிற் கடைநாளில் அரசன்பாற் சிறப்புப் பெற்ற பொற்றொடி மடந்தையருடன் புது மணம் புணர்ந்து செழுங்குடிச் செல்வரும் வையங் காவலரும் மகிழா நிற்கும் வீதியும், எண்ணெண் கலையு முணர்ந்த பரத்தையரின் இரு பெருவீதியும், அரசனும் விரும்பும் செல்வத்தையுடைய அங்காடி வீதியும், பயன் மிக்க இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதி யும், அறுவை வீதியும், கூல வீதியும், நால்வேறு தெருவும், சந்தி யும், சதுக்கமும், மன்றமும், கவலையும், மறுகும் திரிந்து காவலன் பேரூரைக் கண்டு மகிழ்ந்து புறஞ்சேரிக்கண் மீண்டனன். (இதில் இரத்தினக் கடைத்தெரு கூறுமிடத்தே 180-200 அடிகளில் நவ மணிகளின் இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.) புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் 5 வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் 10 கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்பக் 15 கோவலன் சென்று கொள்கையி னிருந்த காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து 20 சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏத முண்டோ அடிகளீங் கென்றலும் 25 கவுந்தி கூறுங் காதலி தன்னொடு தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய் மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென் றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும் 30 யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் தீதுடை வெவ்வினை யுருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர் ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் 35 பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகிற் 40 கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே யல்லால் இறந்தோர் பலரால் 45 தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோ னென்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ 50 வல்லா டாயத்து மண்ணர சிழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன் காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள் அடவிக் கானகத் தாயிழை தன்னை 55 இடையிருள் யாமத் திட்டு நீக்கியது வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச் சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே 60 வருந்தா தேகி மன்னவன் கூடல் பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில் பெருங்கை யானை இனநிரை பெயரும் 65 சுருங்கை வீதி மருங்கிற் போகிக் கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில் 70 குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின் கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப் 75 பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர் தாதுவிரி பிணையல் 80 கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு எற்படு பொழுதின் இளநில முன்றில் தாழ்தரு கோலந் தகைபா ரட்ட 85 வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து 90 குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக் 95 கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் காரர சாளன் வாடையொடு வரூஉம் கால மன்றியும் நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து 100 நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும் வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை 105 அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த 110 கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமல ரேந்தத் 115 தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு பருவ மெண்ணும் படர்தீர் காலைக் 120 கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக் காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக் கோடையொடு புகுந்து கூட லாண்ட வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர 125 ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் 130 பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் 135 நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப் புலவிக் காலத்துப் போற்றா துரைத்த காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும் 140 அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும் செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு 145 வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து மாத்திரை யறிந்து மயங்கா மரபின் 150 ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும் கூடிய குயிவக் கருவியும் உணர்ந்து நால்வகை மரபின் அவினயக் களத்திலும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும் 155 வாரம் பாடுந் தோரிய மடந்தையும் தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் நால்வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் 160 தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத் தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும் காம விருந்தின் மடவோ ராயினும் 165 ஏம வைகல் இன்றுயில் வதியும் பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும் 170 அதள்புனை அரணமும் அரியா யோகமும் வளைதரு குழியமும் வால்வெண் கவரியும் ஏனப் படமும் கிடுகின் படமும் கானப் படமும் காழூன்று கடிகையும் செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும் 175 வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும் புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும் வகைதெரி வரியா வளந்தலை மயங்கிய அரசுவிழை திருவின் அங்காடி வீதியும் 180 காக பாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த 185 பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் பூச உருவின் பொலந்தெளித் தனையவும் தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் 190 இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும் ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும் 195 சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும் வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப் 200 பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும் சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும் 205 நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர் அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக் 210 காலமன் றியுங் கருங்கறி மூடையொடு கூலங் குவித்த கூல வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து 215 விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக் கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென். உரை 1-2. புறஞ்சிறைப் பொழிலும் - அங்ஙனம் புக்க புறஞ்சேரியிடத்துள்ள சோலையின் கண்ணும், பிறங்கு நீர்ப் பண்ணையும் - விளங்குகின்ற நீர் பொருந்திய பண்ணை களிடத்தும், இறங்கு கதிர்க் கழனியும் - வளைந்த கதிர்களையுடைய வயல்களிலும், புள் எழுந்து ஆர்ப்ப - பறவைகள் துயிலெழுந்து ஒலி செய்ய ; பண்ணை - ஓடையும் தோட்டமும். இறங்குதல் - வளைதல் ; தாழ்தல் எனலும் பொருந்தும். பிறங்கல் - மிகுதலுமாம். 1"புள்ளணி கழனியும் .....வெள்ளநீர்ப் பண்ணையும்" என்றார் முன்னும். 3-6. புலரி வைகறை - புலர்கின்றதாகிய வைகறைப் பொழுதின் கண், பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் - குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார் யாவரும் வணங்கும் ஞாயிறு, வேந்து தலை பனிப்ப - பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம், ஏந்து வாட் செழியன் - வாளினை ஏந்திய பாண்டியனது, ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப; பொதில் - குவிதல். ஓங்கு உயர் - ஒரு பொருட் பன்மொழியுமாம். கூடல் ஊர் - கூடலாகிய ஊர் ; ஆகு பெயர். எடுப்ப - எழுப்ப. 2'ஊர் துயில் எடுப்ப' என்றார் பிறரும். ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் ஊர் துயில் எடுப்ப வென்க. 7. நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - நெற்றியினிடத்து விழித்த கண்ணினையுடைய இறைவனது கோயிலும்; விழித்தல் - ஈண்டுத் தோன்றுதல். 3'நுதல்விழி நாட்டத் திறையோன்' எனப் பிறரும் கூறுவர். விழிநாட்டம் - வினைத்தொகை. நுதலில் இமையா நாட்டம் என்றுமாம். 8. உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - கருடச் சேவலைக் கொடியாக உயர்த்த திருமாலின் கோயிலும் ; 9. மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - வெற்றி தரும் கலப்பைப் படையினை ஏந்திய பலராமனுடைய கோயிலும்; மேழி - ஆகுபெயரான் கலப்பையை உணர்த்திற்று. வலன் மேழி என்க. வெள்ளை - வெண்ணிறமுடைய பலராமன். வலன் உயர்த்த - வலமாக ஏந்திய எனலும் ஆம். 10. கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் - கோழியின் சேவலாகிய கொடியையுடைய முருகனது கோயிலும்; 11. அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறநெறிக் கண்ணே நின்று விளக்கமுற்ற முனிவர்களுடைய பள்ளிகளும்; இனி, இவ்வடிக்கு அடியார்க்கு நல்லார் விரித்துரைக்கும் பொருள் வருமாறு:- "அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறமும் அதன்றுறைகளும் விளங்குவதற்குக் காரணமாகிய அறவோர்களுடைய இருப்பிடங்களும் ; ஈண்டுப் பள்ளி என்றது, அவ்விடங்களை. அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து; இல்லறமும் துறவறமும் என. அவற்றுள் இல்லற மென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கணிருந்து செய்யும் அறம். அதன் றுறையாவன: தன்னை யொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலங்காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையனாதலும், பிறவும். இனித் துறவறமாவது. நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும் புறப்பற்றும் அற்று இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல். அதன் துறையாவன:- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவற்றுள், சரியை அலகிடல் முதலியன ; கிரியை பூசை முதலியன; யோகம் எண்வகைய; அவை:- இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி, என்பன; அவற்றுள், "பொய்கொலை களவே காமம் பொருணசை, இவ்வகை யைந்து மடக்கிய தியமம்" எனவும், "பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல், கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை, பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு, பயனுடை மரபினி னியமமைந்தே" எனவும், "நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென், றொத்த நான்கி னொல்கா நிலைமையொ, டின்பம் பயக்குஞ் சமய முதலிய, வந்தமில் சிறப்பி னாசன மாகும்" எனவும், "உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந், தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை" எனவும், "பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமை, ஒருநிலைப்படுப்பது தொகைநிலை யாமே" எனவும், "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை" எனவும், "நிறுத்திய அம்மன நிலைதெரியாமற், குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே" எனவும், "ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு, தான்பிற னாகாத் தகையது சமாதி" எனவும் வருவனவற்றானறிக." 12. மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - வலிமை அமைந்த போர்த்துறைக்கண்ணே சேறலான் விளக்கமுற்ற அரசனது கோயிலும் ஆகிய இவ்விடங்களில்; இனி, மறத்துறை விளங்குதற்குக் காரணமாகிய மன்னவன் எனலும் பொருந்தும். மறத்துறையாவன வெட்சி முதலிய திணைகளும் அவற்றின் துறைகளுமாம். ஒரு பொருட்குக் கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி எனப் பல பெயர் வந்தது ஓர் அணியாகும். இதனைப் பரியாயம் என்பர். 13-14. வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கினோடும், வகைபெற்று ஓங்கிய காலை முரசம் கனை குரல் இயம்ப-மூன்று வகைப்பட்டு உயர்ந்த செறிந்த குரலினையுடைய காலை முரசம் ஒலிப்ப; வால் - தூய்மை. முரசவகையாவன : கொடை முரசு, வெற்றி முரசு, நியாய முரசு என்பனவாம். 15-16. கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கை தொழுது ஏத்தி - கோவலன் சென்று தவ வொழுக்கத்தில் இருந்த கவுந்தியடிகளைக் கையால் தொழுது நாவாற் போற்றி; கொள்கை - தவம் ; ஆவது தியானம். சென்று என்பதனாற் கவுந்தியடிகள் வேறிடத்திருந்தார் என்பதும் கொள்கையின் இருந்த என்பதனால் அவர் தவநிலையில் இருந்தார் என்பதும் பெறப்படும். இனி, கொள்கையின் இருந்த என்பதற்கு இவர்களடையும் துன்பம் அடையாதிருந்த எனலும் பொருந்தும். 17-20. நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - நல்லொழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தோரது தன்மையை உடையேனாய், நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மேனியையுடைய இவள் நடுங்குதற்குக் காரணமாய துயரத்தினை அடைய, அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் உணராத நாட்டின்கண் அரிய வழியிடத்து அலைந்து வருந்தி, சிறுமை உற்றேன் செய்தவத்தீர் யான் - செய்த தவத் தினையுடையீர் யான் இழிவுற்றேன்; இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையொடு பொருந் தினமையானும், விழுக்குடிப் பிறந்தும் தன் கற்புடை மனைவியோடு நீணெறிச் சென்றமையானும் "நெறியி னீங்கியோர் நீர்மையே னாகி............சிறுமை யுற்றேன்" என்றான் என்க. நறுமலர் மேனி - ஆகுபெயர். செய்தவத்தீர் யான் நீர்மையேனாகி ஆரிடை யுழந்து சிறுமையுற்றேன் என மாறுக. 21-24. தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு - பழமையான இந் நகரத்திடத்துள்ள வணிக மாக்களுக்கு, என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் - எனது நிலைமையை அறிவித்து யான் வருந்துணையும், பாதக் காப்பினள் பைந்தொடியாகலின் ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் - அடிகாள் இப் பசிய தொடியினையுடையாள் நும் திருவடிகளாகிய காவலை யுடையாளாகலான் இவ்விடத்து இவளுக்கு ஓர் தீங்கு உண்டாமோ என்று கூறலும் ; மன்னர் பின்னோர் - நாற்பாலுள்ளே மன்னர்க்குப் பின்னாக வுள்ளோர்; வணிகர். என்னிலை என்றது முன்பு தானிருந்த நிலைமையும் இப்போது அடைந்த நிலைமையும் என்க. பாதக்காப்பு - பாதமாகிய காப்பு. பைந்தொடி - அன்மொழித்தொகை. முன்னர், 1"அடிக ணீரே யருளிதி ராயினித், தொடிவளைத் தோளி துயர்தீர்த்தேன்" என இவன் கூறியது பெரியோரைச் சார்ந்தோர்க்கு யாதும் தீங்கு நேராதென்பதனை உட்கொண்டதாகலான், ஈண்டும் அக்கொள்கையை உட்கொண்டே ஏதம் உண்டோ' என்றான் என்க. 25-26. கவுந்தி கூறும் : கவுந்தியடிகள் கூறுவார் : காதலி தன்னொடு தவந் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - காதலை யுடைய மனைவியோடு அறவினை ஒழிந்த பக்கத்தானே தனித்துத் துயரினை உழந்தோய் ; தீர்தல் - ஒழிதல். 1"தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தேன்" என்றார் பிறரும். தவந்தீர் மருங்கில் என்றது முன்பு நல்வினை செய்த நீ சிறிது தீவினையும் செய்தமையானே என்றபடி. தனித் துயர் - ஒப்பற்ற துயருமாம். உழத்தல் - நுகர்தல். 27-32. மறத்துறை நீங்குமின் - பாவ நெறியினின்றும் விலகு மின், வல் வினை ஊட்டும் என்று - நீங்கீராயின் அப் பாவச்செயல் தன் பயனாகிய துன்பத்தினை நுகர்விக்கும் என, அறத்துறை மாக்கள் - அறத்துறையில் நின்ற அறவோர், திறத்திற் சாற்றி நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் - அவரவர்க்கு ஏற்ற வகையான் நாவாகிய குறுந்தடியான் வாயாகிய பறையை அறைந்து கூறினும், யாப்பு அறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் - அறிவென்னும் உறுதியற்ற மாக்கள் அதனை நன்மைத் தன்மையின் ஏற்றுக்கொள்ளாராகி, தீது உடை வெவ்வினை உருத்த காலை - பின்னர்த் தீப்பயனையுடைய கொடிய வினை யானது தோன்றித் தன் துன்பப் பயனை ஊட்டுங்காலத்து, பேதைமை கந்துஆப் பெரும் பேதுறுவர் - தம் அறியாமை காரணமாக மிகவும் மயக்கமுறுவர் ; திறம் - நன்மை தீமை என்னும் வகை எனினும் பொருந்தும். சாற்றி அறையினும் என்பவற்றுள் விகுதி பிரித்துக் கூட்டி அறைந்து சாற்றினும் என மாறுக. உருத்தல் - தோன்றிப் பயனளித்தல்; 2"உம்மை வினைவந் துருத்த லொழியாது" என வருதல் காண்க. 33-34. ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை - போக்கவொண்ணாத தீவினையின் பயனாகிய துன்பத்தினை நுகருங்காலத்து, கை யாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் - அறநூல்களைக் கற்றுணர்ந்த அறிஞர் செயலறவினைக் கொள்ளார்; ஒய்யாமை - போக்கவொண்ணாமை. தாமே முன் செய்து கொண்டமையானும் ஊட்டாது கழியாமையானும் இயைந்து நுகர்தற்பால தெனக் கொள்ளுவரென்றதாம். இனி, முன்னர் ‘வல்வினை யூட்டும்' எனக் கூறியதனை மேற்கோள் காட்டி வலியுறுத்துகின்றார். 35-45. பிரிதல் துன்பமும் - மகளிரைப் பிரிதலான் வரும் துன்பமும், புணர்தல் துன்பமும் - அவரைப் புணர்தல் காரணமாக உண்டாம் துன்பமும், உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்- இவ் விருகாலத்தும் காமன் ஒறுக்கும் துன்பமும், புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது - புரிந்த கூந்தலையுடைய பெண்டிரைப் புணர்ந்து மயங்கினார்க்கல்லது, ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை - ஒப்பற்ற தனித்த வாழ்க்கை யினையுடைய அறிஞரிடத்து இல்லை ; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகிற் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் - இவ்வுலகத்து மகளிரும் உணவுமே இன்பம் தரத் தக்க பொருளாம் என்று கொண்ட அறிவிலார் அடையும் இடங் கொள்ளாத் துன்பத்தினை, கண்டனர் ஆகிக் கடவுளர் வரைந்த - உணர்ந்தனராய் முனிவர்கள் நீக்கிய, காமம் சார்பு ஆ - காமம் பற்றுக்கோடாக, காதலின் உழந்து - அன்பு கொண்டு வருந்தி, ஆங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் - கரை காணப்படாத துன்பத்தினை உற்றோர், இன்றே அல்லால் இறந்தோர் பலரால் - இந் நிகழ்காலத்துள்ளோ ரல்லாமலும் முற்காலத்துக் கழிந்தோரும் பலராவர், தொன்றுபட வரூஉம் தொன்மைத்து - இந் நிகழ்ச்சி அடிப்பற்றி வருகின்ற பழைமையினை உடைத்து ; புணர்தற் றுன்பத்தினும் பிரிதற் றுன்பம் பெரிது ஆகலான் பிரிதற் றுன்பம் முற்கூறப்பட்டது. உருவிலாளன் - அநங்கன். உர வோர் - முனிவர். 1"பெண்டிரு முண்டியு மின்றெனின் மாக்கட், குண்டோ ஞாலத் துறுபயன்" என வருதலான், பெண்டிரும் உண்டி யுமே இன்பமெனக் கொண்டாரு முளரென்பதறிக. இன்பம் தருவன வற்றை இன்பமென்றார். கொள்ளாத் துன்பம் - தம்மளவல்லாத துன்பமெனலுமாம். இனி, அடியார்க்கு நல்லார், பெண்டிரும் உண்டியும் என்பவற்றை ஆகுபெயரான் இன்பமும் பொருளுமெனக்கொண்டு அதற்கேற்பப் பிரிதல் புணர்தல் என்பவற்றை இரண்டுக்கும் ஏற்றிப் பொருள் கூறிச் செல்வர் ; அவர் உருவிலாளன் என்பதற்குப் பொருளுக் கேற்ப `வறுமை' என்றுரைப்பர். ஏமம் - காவல் ; கரை. ஆல், அசை. 45-49. ஆதலின் - ஆகையான், தாதை ஏவலின் - தந்தையின் ஏவலால், மாதுடன் போகி - தன் மனைவியோடும் கானம் சென்று, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் - அம் மனைவி பிரிதலானே மிக்க துயரத்தினை நுகர்ந்தோன், வேத முதல்வற் பயந்தோன் என்பது - வேதத்தை அருளிய நான்முகனைப் பெற்ற திருமால் என்பதனை, நீ அறிந்திலையோ - நீ அறியாயோ, நெடு மொழி அன்றோ - அது யாவரும் அறியும் வண்ணம் பரந்து பட்ட சொல்லன்றோ ; தாதை - தயரதன். `நீ அறிந்திலையோ' என்றது அறிந்து வைத்தும் இரங்குதல் அறிவுடைமையாகாது என்பதாம். 50-57. வல் ஆடு ஆயத்து - புட்கரனோடு சூதாடும் தாயத்தான், மண் அரசு இழந்து - நிலத்தினையும் அரசாட்சியையும் இழந்து, மெல் இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - மென்மைத் தன்மையுடைய தமயந்தியுடன் வெவ்விய காட்டை அடைந்தோனாகிய நளன், காதலிற் பிரிந்தோன் அல்லன் - பொருள்மீது கொண்ட அன்பு காரணமாக அவளைப் பிரிந்தோ னுமல்லன், காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் - அவள் குற்றத்தின்கண் படுகின்ற இழிவினை உறுவாளுமல்லள், அடவிக் கானகத்து ஆயிழை தன்னை - அங்ஙனமாகவும் அவளை அடவியாகிய காட்டினிடத்து, இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது - இருள் நிறைந்த நடு யாமத்தின்கண் உறக்கிடைப் போகட்டு நீங்கச் செய்தது, வல்வினை அன்றோ - அவர் முன் செய்த தீவினை அன்றோ, மடந்தைதன் பிழை எனச் சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ - அத் தமயந்தியின் பிழையே காரணமாம் என்று சொல்லுதற்கு வேறு உண்டாயின் நீ அதனைச் சொல்வாய்; ஆயம் - தாயம். மண்ணும் அரசும் என்க. அடைந்தோன் - வினைப்பெயர். காதலிற் பிரிந்தோ னல்லன் என்பதற்குத் தன் விருப்பம் காரணமாகவும் அவள் விருப்பம் காரணமாகவும் பிரிந்தோ னல்லன் என்றும், காதலினின்றும், நீங்கினோ னல்லன் என்றும் உரைத்தலுமாம். தீது - பிறர் நெஞ்சு புகுதல். தேவருள் மிக்கா னொருவனையும், மக்களுள் மிக்கா னொருவனையும் முறையே எடுத்துக் காட்டியவாறு காண்க. 58-59. அனையையும் அல்லை - நீ அவர்களைப் போன்றாயுமல்லை, ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே - என்னையெனின்? நீ நின் மனைவியினின்றும் பிரியாத வாழ்க்கையினைப் பெற்றாயன்றே; உம்மை - சிறப்பு. தீவினை காரணமாகத் துயருழத்தலின் முற்கூறிய இருவரோடு நீ ஒப்பாய் எனினும், நீ அவரினும் ஒரு நன்மையை உடையை ; அஃதென்னை யெனின்? மனைவியைப் பிரியாது வாழ்தலாம் என்று கூறினாரென்க. 60-61. வருந்தாது ஏகி மன்னவன் கூடல் - இம் மன்னவனது கூடற்கண்ணே அறியாத் தேயத்து ஆரிடை யுழந்ததனை நினைந்து வருந்தாது சென்று, பொருந்துழி அறிந்து போது ஈங்கு என்றலும் - விருந்தெதிர் கொள்வாரிடத்தை அறிந்துகொண்டு ஈங்குப் போதுவாயாக என்று சொல்லலும் ; முன்னர், 1"மன்னர் பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி யான் வருங் காறும்" எனவும், பின்னர். 2"தங்குல வாணர்.......கடி மனைப் படுத்துவர்" எனவும் வருவனவற்றை உட்கொண்டது பொருந்துழி யறிந்தென்றது என்க. தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமை காண்க. 62-65. இளை சூழ் மிளையொடு - கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டொடு பொருந்தி, வளைவுடன் கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் - வளைவு பட்டுக் கிடந்த விளங்குகின்ற நீர்ப் பரப்பினையுடைய வெற்றி பொருந்திய அகழிக்கண், பெருங்கை யானை இனநிரை பெயரும் - பெரிய கையினை யுடைய யானையின் நிரைத்த இனங்கள் போக்கு வரவு செய்தற்கு அமைந்த, சுருங்கை வீதி மருங்கிற் போகி - சுருங்கையை உடைய வீதியினிடத்தைக் கழிந்து போய்; இளை - காவல் அரணுமாம். சுருங்கை - புகுந்து செல்லுதலை ஒருவரு மறியாதபடி நிலத்தின்கீழ் மறைத்துப் படுத்த வழி; இதனைக் கரந்துறை எனவும், கரந்துபடை எனவும் கூறுவர். 66-67. கடி மதில் வாயில் காவலிற் சிறந்த - அச்சத்தை விளைக்கும் மதிலின் வாயிலைக் காத்தற்றொழிலாற் சிறப்புப்பெற்ற, அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லுதலையுடைய வாளினை ஏந்திய யவனர்க்கு ஐயமுண்டாகா வண்ணம் புகுந்து; கடி - அச்சம்; மிகுதியுமாம். யவனர் - துலுக்கர் என்பர் அடியார்க்கு நல்லார். அயிராது - புதியரென ஐயுறாதபடி. 67. ஆங்கு - அவ்விடத்து ; 68-69. ஆயிரங் கண்ணோன் அருங்கலச்செப்பு - ஆயிரங் கண் களையுடைய இந்திரனது பெறுதற்கரிய அணிகலங்களைப் பெய்த பணிப்பேழையின், வாய்திறந்தன்ன மதிலக வரைப்பில்- வாயைத் திறந்து வைத்தாற்போன்ற மதிலினுள்ளிடத்த தாகிய அந் நகர் எல்லைக்கண்ணே; கலச்செப்பு - அணிகலப்பெட்டி. அகநகர்ச் சிறப்புக் கூறுதலான், `மதிலக வரைப்பு' என்றார். 70-75. குடகாற்று எறிந்து - மேல்காற்று விசைத்து வீசுத லான், கொடி நுடங்கு மறுகின் - கொடிகள் அசைகின்ற மறு கின்கண் உள்ள, கடை கழிமகளிர் - பெண்டிர்க்கமைந்த எல்லையினைக் கழிந்த பொது மகளிர், காதலம் செல்வரொடு - தம் பாற் காதல் கொண்ட செல்வ இளைஞருடன், வருபுனல் வையை மருது ஓங்கு முன்துறை - இடையறாது நீரொழுகும் வையை யாற்றின் ஓங்கிய திருமருதத்துறை முன்னர், விரிபூந்துருத்தி வெண்மணல் அடைகரை - பரந்த பொலிவுபெற்ற ஆற்றிடைக் குறையின் வெள்ளிய மணலையுடைய அடைகரைக்கண், ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி - உயர்ந்த பள்ளியோடத் தோடு தோணிகளை ஏறிச் செலுத்தியும், பூம் புணை தழீஇ - பொலிவு பெற்ற தெப்பத்தினைத் தழுவி நீந்தியும், புனல் ஆட்டு அமர்ந்து - இங்ஙனம் நீராடுதலை விரும்பி; ஆடித்திங்களாதலின் குடகாற்றெறிந்த தென்க. பொது மகளிர் வரம்பினில்லாதவராகலான் கடைகழி மகளிர் எனப்பட்டனர். கடை - எல்லை, வரம்பு. இனி, நாணும் மடனும் பெண்மையவாக லான், இவற்றைக் கழிந்தே கடைகழிய வேண்டுதலின் கடைகழி மகளிர் எனப் பொதுமகளிர்க்குப் பெயர் கூறினார் எனலுமாம். பொதுமகளிர்க்குக் காதல் பொருளின்கண்ண தாகலான், காதலம் செல்வர் என்பதற்குத் தாம் காதலிக்கும் செல்வத்தினையுடைய காமுகர் எனக் கோடலும் அமையும். மருதமரம் ஓங்கியுள்ளமையால் திருமருதந் துறையெனப் பெயர் பெற்ற நீர்த்துறையென்க. இத்துறை சங்கச் செய்யுள் பலவற்றாற் சிறப்பிக்கப்படுவது; 1"திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை," 2"வருபுனல் வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்," 3"தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையால் என்பன காண்க. இது சிறுபொழுதாறினும் காலைப்பொழுது கழிக்குமாறு கூறியது. 79-82. தண் நறு முல்லையும் - குளிர்ந்த நறிய முல்லை மலரும், தாழ்நீர்க் குவளையும் - ஆழ்ந்த நீரிற் பூத்த செங்குவளை மலரும் கண் அவிழ் நெய்தல் - கண்போல் மலர்ந்த நெய்தல் மலரும், ஆகிய இவற்றை, கதுப்பு உற அடைச்சி - கூந்தலிற் பொருந்தச் சூடி, வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த - மல்லிகையின் வெள்ளிய பூக்களாலாகிய மாலையுடன் இணைந்த, தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல் - குளிர்ந்த செங்கழுநீரின் தாது விரிந்த இதழ்களாற் கட்டிய பிணையலை, கொற்கையம் பெருந் துறை முத்தொடு பூண்டு - கொற்கைத் துறையில் உண்டாய பெரிய முத்தாற் செய்த வடத்துடன் பூண்டு, தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தென்றிசைக்கண்ணதாகிய பொதியிலிற் பிறந்த சந்தனத்தின் குழம்பை உடல் முழுதும் பூசி, பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்தாங்கு - அழகிய கொடி களையுடைய மூதூர்க்கு அயலதாகிய சோலையிடத்து விளையாடும் விளையாட்டை விரும்பி ; தாணீர்க்குவளை என்பது பாடமாயின், தாளையுடைய நீர்மை யதாகிய குவளை யென்க. விரியல் - மாலை; விரிந்த பூ என்று கொண்டு அதனுடன் செங்கழுநீரிதழைச் சேர்த்துக் கட்டிய பிணையல் என்றுமாம். பிணையல் - மார்பிலிடுவது. தெக்கணம்; வடசொற்றிரிபு. ஆங்கு; அசை. அடைச்சிப் பூண்டு ஆடி அமர்ந்து என்க. இது நண்பகற் பொழுது கழிக்குமாறு கூறியது. 83-85. ஏற்படு பொழுதின் - ஏற்பாடாகிய பொழுதிலே, இள நிலா முன்றில் - இளநிலாவின் பயனை நுகர்தற்குரிய முற்றத்தில், தாழ்தருகோலம் தகை பாராட்ட - தம்மனத்திற் றங்கிய கோலத்தைப் புனைந்து கொழுநர் பாராட்ட, வீழ்பூஞ் சேக்கைமேல் இனிது இருந்தாங்கு - விரும்பப்படும் மலரமளி மேல் இனிமையுடனிருந்து; எற்படுபொழுது - ஞாயிறு மறையும் பொழுது. தாழ்தரு கோலம் தகை பாராட்ட என்பதற்கு முன்னர்ப் புனலினும் பொழிலினும் ஆடி இளைத்த கோலத்தைத் தங்கொழுநர் பாராட்டித் தீர்க்க என்றுரைப்பாருமுளர். காதலஞ் செல்வர் பாராட்ட அவருடன் இருந்தென்க. கோலத்தகை யென்பது மெலிந்து நின்றது. ஆங்கு, அசை. இஃது ஏற்பாடு கழிக்குமாறு கூறியது. 86-97. அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - அங்ஙனம் சேக்கைமேலிருந்து பூத்தொழிலையுடைய செம்பட்டை அரை யின்மீதே உடுத்தி, குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி - தலையிடத்துக் கொத்தாகவுள்ள கூந்தலில் வெட்பாலைப் பூவை முடித்து, சிறுமலைச் சிலம்பிற் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலையெனப் பெயரிய மலையிற் பூத்த செந்நறுந்தாளிப் பூவுடனே நறிய மலரையுடைய குறிஞ்சியின் புதிய பூவைச் சூடி, குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - குங்குமம் போலும் நிறத்தையுடைய செஞ் சந்தனத்தைக் கொங்கையில் எழுதி, செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல் - செங்கொடு வேரியின் வளவிய பூவாற் கட்டப்பட்ட பிணையலை, சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த சுண்ணம் அப்பிய மார்பிலே, அம் துகிர்க்கோவை அணியொடு பூண்டு - அழகிய பவள வடமாகிய அணியுடன் பூண்டு, மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - மலைகளின் சிறகை யரிந்த வச்சிரப் படையினையுடைய இந்திரனுக்கு, கலி கெழு கூடற் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய கூடலிடத்தே தம் செவ்வணியைக் காட்டுமாறு, கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - காரை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் காலமும், அக் கால மன்றியும்; அரை - ஆகுபெயரான் மேகலையுமாம். குரல் - பூங்கொத்துமாம். குடசம் - செங்குடசம். நாண்மலர் எனப் பின் வருதலின், நறுமலர்க் குறிஞ்சி என்பதில் முதற்கேற்ற அடையடுத்தது. இழைத்துச் சேர்ந்த மேனியில் பிணையலை அணியொடு பூண்டு என்றியைக்க. செவ்வணி காட்ட என்பதற்குக் கடை கழி மகளிர் எழு வாய்; குடசம், குறிஞ்சி, கொடுவேரி யென்னுமிவை கார் காலத்துப் பூவாதல்கொண்டு காரரசாளனை எழுவாயாக்குவர் அடியார்க்கு நல்லார்; செய்தெ னெச்சங்கள் முடிவு பெறாமையின் அது பொருளன்மையோர்க. கார் - முகில்; காரரசாளன் - கார் காலம்; 1"இசைத்தலு முரிய வேறிடத் தான" என்பதனால் உயர்திணையாற் கூறினார்; இவ் விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க. செவ்வணி காட்டத் துணையாக வருங் கால மென்க. வச்சிர வேந்தன் முகிலுக்குத் தலைவனாகலின் அவற்குச் செவ்வணி காட்டினரென்க. அவர் அரமகளி ரொப்பா ரென்பதுமாம். கூடற் செவ்வணி ; வேறு பொருளுந் தோன்ற நின்றது. காலமும் அஃதன்றியும் எனப் பிரிக்க. 97-101. நூலோர் சிறப்பின் - சிற்ப நூல் வல்லோராற் சிறப்புறச் செய்யப்பட்ட, முகில் தோய் மாடத்து - மேகம் தவழும்படி உயர்ந்த மாடங்களிலே, அகில் தரு விறகின் - கொண்டுவந்த அகிலாகிய விறகாலே, மடவரல் மகளிர் - மடப்பம் பொருந்துதலையுடைய மகளிர், தடவு நெருப்பு அமர்ந்து - இந்தளத்தில் இட்ட தீயினைக் காய்தலை விரும்பி, நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு - நறிய சாந்து பூசிய மார்பினையுடைய மைந்தரோடு கூடி, குறுங்கண் அடைக்கும் கூதிர்க்காலையும் - குறிய கண்களையுடைய சாளரங்களை அடைக்கும் கூதிராகிய காலமும்; நம்பியர் - காதலஞ் செல்வர். குறுங்கண்; ஆகுபெயர். தடவு - இந்தளம்; தூபமுட்டி. 102-105. வள மனை மகளிரும் மைந்தரும் - செல்வ மிக்க மனையிடத்து மகளிரும் மைந்தரும், விரும்பி இள நிலா முன்றிலின் இளவெயில் நுகர - இளநிலாவை நுகர்தற்குரிய முற்றத்தி லிருந்து இளவெயிலை விரும்பி நுகரும்படி, விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - விரிந்த கதிரையுடைய ஞாயிற்று மண்டிலம் தெற்கே எழுந்து இயங்குதலானே, வெண் மழை அரிதில் தோன்றும் அச்சிரக்காலையும் - வெண்முகில் அரிதாகத் தோன்றும் முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன; வளமனை நிலா முன்றில் என்றியைத்தலுமாம். இளநிலா - மாலைப் பொழுதின் நிலா; சுதைநிலா என முன்றிற்கு அடையாக் கலுமாம். தெற்கு - மிதுனவீதி ; வானிலே கோட்கள் இயங்கும் நெறிகள் மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி, என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன; பதினொன்றாம் பரிபாட்டுள் 1"எரிசடை யெழில் வேழம் தலையெனக் கீழிருந்து, தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்" என வருதல் காண்க. ஏர்பு - எழுதலான் எனத் திரிக்க. எவ்விடத்துள்ளன என்று ஒரு சொல் வருவிக்க. 106. ஆங்கது அன்றியும் - அம் முன்பனிக்கால மன்றியும்; 106-112. ஓங்கு இரும்பரப்பின் - மிகப் பெரிய கடலின் கணுள்ள, வங்க ஈட்டத்து - நாவாயின் திரளாலே, தொண்டியோர் இட்ட - தொண்டி யென்னும் பதியிலுள்ள அரசர் திறையாக விட்ட, அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன்வந்த - அகில் பட்டுசந்தனம் வாசம் கருப்பூரம் என்னும் இவற்றின் மணத்தினை ஒருங்கு சுமந்து வந்த, கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் - கீழ் காற்றோடு அரசனது கூடற்கட் புகுந்து, வெங்கண் நெடுவேள் வில் விழாக் காணும் - காமனது கொடிய வில் வெற்றி பொருந்திய விழாவினைக் காணும், பங்குனி முயக்கத்துப் பனியரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய அரசன் எவ்விடத்துள்ளான்; பரப்பு - பரவை; கடல். தொண்டி - சோணாட்டுக் கடற்கரைக் கண்ணதோர் பதி யென்பது கொண்டலொடு புகுந்து என்பதனாற் பெறப்படும்; சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப்படும் சேரர் கடற்றுறைப் பட்டினமாகிய தொண்டி வேறு, இது வேறு என்பதறிக. தொண்டியோர் - சோழ குலத்தோர். கொண்டல் - கீழ்க் காற்று. கொண்டலொடு புகுந்து காணும் பனியரசென்க. துகில் - பட்டுவர்க்கம்; வாசமூட்டப் பெற்றமையால் இவற்றுடன் ஓதப் பட்டது. (அடி. இனி, தொகு என்பதனை இறுதி விளக்காகக் கொண்டு பொருளுரைக்க. உரைக்குமாறு;- அகில்; அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும், துகில்; கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பாடகம் பரியட்டக்காசு வேதங்கம் புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி பணிப்பொத்தி யென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் ; மலையாரம் தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சைவெட்டை அரிசந்தனம்; வேரச்சுக்கொடி யென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் ; அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம் பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாகி நிரியாசம் தைலம் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம்: மலைச்சரக்கு கலை அடைவுசரக்கு மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மாரப்பற்று வராசான் குமடெறிவான் உருக்குருக்கு வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும் விரித்தும் பொருளுரைக்க.) 113-117. கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலையை யுடைய குருக்கத்தி அழகிய கொடியை யெடுக்கவும், காவும் கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தவனமும் நறிய மலர்களை ஏந்தவும், தென்னவன் பொதியில் தென்ற லொடு புகுந்து மன்னவன் கூடல் - பாண்டியனது பொதியின் மலைத் தென்றலோடு அம் மன்னவனது கூடலின்கட் புகுந்து, மகிழ்துணை தழூஉம் - தாம் விரும்பும் துணைகளைத் தழுவுவிக்கும், இன் இளவேனில் யாண்டுளன்கொல் என்று - இனிய இள வேனிலென்னும் அரசன் எவ்விடத்துள்ளான் என்று; கோதை மாதவி - மாலைபோலப் பூக்கும் குருக்கத்தி. கொடி யெடுப்ப - கொடி வளரப்பெற; துகிற்கொடி யேந்திவர என்னும் பொருளும் தோன்ற நின்றது. கூடலிற் புகுந்தென மாறுக, தழூஉம் - தழுவுவிக்கும் ; பிறவினை. 118-119. உருவக் கொடியோர் - பூங்கொடி போலும் உருவினையுடைய மகளிர், உடைப்பெருங் கொழுநரொடு - தம்மை யுடைய பெரிய கொழுநரோடிருந்து, பருவம் எண்ணும் - அப் பருவங்களின் வரவை யெண்ணுகின்ற, படர் தீர் காலை - வருத்தம் நீங்கிய காலத்தே; உருவக் கொடியோர் - உருவிலே யெழுதிய கொடியினையுடயோர் என்றுமாம் ; இவர் முற்கூறிய கடைகழி மகளிர். பருவம் எண்ணும் - முன்பு தமக் கின்பம் விளைத்த கார் முதலிய பருவங்கள் மீட்டும் வருதலை யெண்ணும். கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு சேக்கைமேலிருந்து பருவ மெண்ணும் முதுவேனிற் காலத்தென்க. வேனில் நீங்கிக் கார் தொடங்கும்பொழுது அணித்தாதலின் 'படர்தீர் காலை' என்றார். 120-125. கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க - கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைப் புரக்கும் களிற்றினமும் நடுங்கும்படி, என்றூழ் நின்ற குன்று கெழு நன் னாட்டு - வெயில் நிலைபெற்ற நல்ல மலைசார்ந்த நாட்டின், காடு தீப்பிறப்பக் கனை எரி பொத்தி - காடுமுழுதும் தீயுண்டாக முழங்கும் அழலை மூட்டி, கோடையொடு புகுந்து - மேல் காற்றோடு வந்து புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய அரசன், வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற - வேற்றுப் புலங்கட்குச் செல்லுமாறு முயல் கின்ற, உறுவெயில் கடைநாள் - மிக்க வெயிலையுடைய வேனிலின் கடை நாளில்; என்றூழ் நீடிய என்பதும், பொத்திய என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். கனை - செறிவுமாம். பொத்தி - மூட்டி. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல்; 1"உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்" என்பது காண்க. அவ்விடத்திருந்தும் அகல வென்பார் 'வேற்றுப் புலம்படர' என்றார்; "ஓரோர் தேயங்கட்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம் படர வென்றார்" என்னும் அடியார்க்கு நல்லாருரை தமிழ் கூறு நல்லுலகத்திற்குப் பொருந்துவதன்று. 126-131. வையமும்-கூடாரப் பண்டியும், சிவிகையும்-பல்லக்கும், மணிக்கால் அமளியும், மணிகளிழைத்த கால்களையுடைய சேக்கையும், உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - நீராவிச் சோலையிலே சேவிப்பாருடனிருந்து புதுமை காண்டலும், சாமரைக் கவரியும் - சாமரையாகிய கவரியும், தமனிய அடைப்பையும் - பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டியும், கூர் நுனைவாளும் - கூரிய முனையையுடைய வாளும், தம் கோமகன் கொடுப்ப - தம் அரசன் கொடுக்க, பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை - அங்ஙனம் பெற்ற வரிசையாகிய செல்வம் எக்காலத்தும் மாறாத. பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து - பொன்வளை யணிந்த மகளிர் புதிய மணத்தினைப் பொருந்தி; உய்யானம் - அரசர் விளையாடும் காவற் சோலை. உறுதுணை மகிழ்ச்சி என்பதற்கு உற்ற துணைவனாகிய அரசனோடு மேவி மெய் தொட்டு விளையாடு மகிழ்ச்சி யென்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். சாமரைக் கவரி - இருபெயரொட்டு. அடைப்பை - வெற்றிலைப்பை (பெட்டி) ; அடை - வெற்றிலை. வையம் முதலியன ஏறிச் செல்லுதலும், உய்யானத்தில் விளையாடுதலும், சாமரை வீசப் பெறுதலும், அடைப்பை பிடித்து இடப் பெறுதலும், வாள் ஏந்தப் பெறுதலும் அரசன்பால் வரிசையாகப் பெற்றவ ரென்க. கொழுநரொடு புது மணம் புணர்ந்தென்று கூட்டுக. புதுமணம் புணர்ந்தென்பதற்கு நாடோறும் புதியாரோடு மணம் புணர்ந்தென்றுரைப்பாருமுளர். 132-133. செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய - ஏவற் பெண்டிர் பொன் வள்ளத்தில் ஏந்திய, அம் தீந்தேறல் மாந்தினர் மயங்கி - அழகிய இனிய கள்ளின் தெளிவைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி; புணர்ச்சியானுண்டாய சோர்வினைப் போக்கிக் களிப்பு விளைத் தற்குத் தேறன் மாந்தின ரென்க. 134-145. பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் - வரி பாடும் பொறியையுடைய வண்டினத்தை அவை பொருந்து மிடத்தினன்றியும், நறுமலர் மாலையின் வறிதிடம் கடிந்தாங்கு - நறிய பூமாலையாலே அவை பொருந்தாத இடத்திற் கடிந்து இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்ப - இலவிதழ் போ லும் சிவந்த வாயின் மீதே இளமுத்துப் போலும் பற்கள் தோன்ற முறுவலித்து, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த- ஊடற் காலத்துப் பாதுகாவாது கூறிய, காவியங் கண்ணார் கட்டுரை - நீலோற்பலம் போன்ற கண்ணினையுடையாரது புலவிப் பொருள் பொதிந்த உரையாகிய, எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் - எண்வகை யிடத்திற் பொருந்தி நாவால் நவிலப்படாத நகை தோன்றுங் கிளவியும், அம் செங்கழு நீர் அரும்பு அவிழ்த்தன்ன - அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த, செங்கயல் நெடுங்கண் செழுங் கடைப் பூசலும் - சிவந்த கயலினை யொத்த நீண்ட கண்ணின் கடைச்சிவப்பாற் செய்த பூசலும், கொலை விற் புருவத்துக் கொழுங்கடை சுருள - கொலைத்தொழில் புரியும் வில்லை யொத்த புருவத்தின் அழகிய கோடிகள் உள் வளைய, திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - திலகமணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியரும், செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வ ரொடு - தீருஞ் செவ்வி பார்த்து வருந்தும் வளமிக்க குடிப் பிறந்த செல்வரோடே, வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - நிலத்தினைப் புரக்கும் அரசரும் விரும்பும் வீதியும்; வண்டினம் புல்லுதல் - இதழில் மறையும் விழியைப் பூவிதழில் மறையும் தமதினமெனக் கருதிச் சேர்தல். மாலை - புணர்ச்சியாற் பரிந்த மாலை. மதுவுண்ட மயக்கத்தால் வண்டு மொய்க்காத இடத் தையும் மாலையாற் கடிந்தாரென்க. எட்டு - நெஞ்சு முதலாய எண் வகையிடம். கட்டுரை யெடுக்குநர் என்று பாடங்கொண்டு, வார்த்தை சொல்லப்புகுகின்றவர் என்றுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். காவியங்கண்ணார் உரைத்த கட்டுரையாகிய கிளவியும் எனக் கூட்டுக. கிளவியும் பூசலும் வியரும் புலவியா லுண்டாயவை. தீருஞ் செவ்வியென ஒரு சொல் வருவித்துரைக்க, செழுங்குடிச் செல்வர் - அரசரல்லா ஏனையோர். வண்டு மூசுதலும் மாலை கொண்டு மயக்கத்தாற் பிறிதிடங் கடிதலும் 1"ஒருத்தி, கணங் கொண்டவை மூசக் கையாற்றான் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி" எனவும், "ஒருத்தி, யிறந்த களியானிதழ்மறைந்த கண்ணள், பறந்தவை மூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள் கை" எனவும் கலித்தொகையுட் கூறப்படுதல் ஈண்டறிந் தின் புறற்பாலது. 146-147. சுடுமண் ஏறா - செங்கல் தலையில் ஏறப்படாத, வடு நீங்கு சிறப்பின் - குடிப்பழி நீங்கிய சிறப்பினையுடைய, முடி அரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை - முடிசூடிய அரசரும் பிற ரறியாது தங்கியிருத்தற்கேற்ற விளக்கமுற்ற மனையில் வாழ் தலையுடைய; பதியிலாரிற் குடிக்குற்றப்பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்து புறத்து விடுதல் மரபாகலின், அங்ஙனம் குற்றப்படாதவ ரென்பார் "சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்றார் ; இதனை, 1"மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" என, மணிமேகலையிற் சித்திராபதி வஞ் சினங் கூறுதலானு மறிக; இனி, ஓடுவேயாது பொற்றகடு வேய்ந்த மனை யென்றலுமாம். முடியர சொடுங்கும் என்றது மனையின் பெருமை கூறியபடி. 148-151. வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து மாத் திரை அறிந்து - வேத்தியலும் பொதுவியலுமாகிய இருவகைக் கூத்தின் இயல்பினையறிந்து, மயங்கா மரபின் ஆடலும்-அவை மயங்காத முறைமையானே ஆடும் ஆடலும், வரியும்-பாடலும், பாணியும் - தாளங்களும், தூக்கும் - இத் தாளங்களின் வழி வரும் எழுவகைத் தூக்குக்களும், கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து- இவற்றுடன் கூடியிசைக்கும் குயிலுவக் கருவிகளும் உணர்ந்து; வேத்தியல் - அரசர்க்காடுவது ; பொதுவியல் - ஏனோர்க்காடுவது: இவை வசைக்கூத்தின் வகையென்ப. ஆடல் முதலியவற்றினியல்பினை அரங்கேற்று காதையில் "ஆடலும் பாடலும் பாணியுந் தூக்கும், கூடிய நெறியின கொளுத்துங் காலை" என வருவதன் உரை முதலியவற்றானறிக. குயிலுவக் கருவி - தோற்கருவி துளைக் கருவி நரப்புக் கருவி யென்பன ; மத்தளம் தண்ணுமை இடக்கை சல்லிகை யென்னும் உத்தமத் தோற்கருவி நான்கு மென்பாருமுளர். 152-154. நால்வகை மரபின் அவினயக் களத்தினும்-நால்வகை முறைமையினையுடைய அவினய நிலத்தினும், எழுவகை நிலத்தினும் - குரல் முதலாய ஏழ் நிலத்தினும், எய்திய விரிக்கும் பொருந்திய ஆடல் பாடல்களைப் பரப்பும், மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - மாறுபடுத்தற்கரிய சிறப்பினையுடைய தலைக்கோற் பட்ட மெய்திய அரிவையும்; அவினய நிலம் நான்காவன ; நிற்றல் இயங்கல் இருத்தல் கிடத்தல் என்பன. தலைக்கோல் இயல்பினை 2அரங்கேற்று காதையானறிக. 155. வாரம் பாடும் தோரிய மடந்தையும் - வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும் ; தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த பின்பு பாடன் மகளாய் ஆடன் மகளிர் காலுக்கு ஒற்றறுத்துப் பாடுங்கால் இடத்தூண் சேர்ந்தியலுமவள்; 1"இந்நெறி வகையா லிடத்தூண் சேர்ந்த. தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும்" என்பதன் உரை காண்க. 156. தலைப் பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடுங் கூத்தியும், இடைப் பாட்டுக் கூத்தியும் - இடைப்பாட்டைப் பாடுங் கூத்தியும் என்னும்; தலைப்பாட்டு உகம் எனவும், இடைப்பாட்டு ஒளகம் எனவும் படுமென்பர். 157-160. நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகை யோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால், எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை, முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத, தாக்கணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்கு போல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு; எட்டினைக் கடையில் நிறுத்த ஆயிரம் - ஆயிரத்தெட்டு; ஆயிரத்து எண் கழஞ்சு ; ஆயிரமாகிய எண்ணினையுடைய கழஞ்சு; ஆயிரக் கழஞ்சு என்பதூஉம் பாடம் ; ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுதலை, 2"விதிமுறைக் கொள்கையி னாயிரத் தெண் கழஞ் சொருமுறையாகப் பெற்றனள்" என்பதனானும் அறிக. ஆங்கு, அசை; பட்ட அப்பொழுதே யென்றுமாம். 161-167. அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - பெறுதற் கரிய தமதறிவும் கெட்டொழிய, தவத்தோர் ஆயினும் - தவ நெறியில் முயல்வோராயினும், தகைமலர் வண்டின் - அழகிய மலர்தோறுஞ் சென்று அவற்றின் தேனைப் பருகும் வண்டு போல, நகைப்பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அவர் காமக் குறிப்பு நிகழ நகைக்கும் நகையின் செவ்வி பார்த்துப் புதுவோரைப் புணரும் காமுகராயினும், காமவிருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்தை முன்பு நுகர்ந்தறியாத புதியராயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் - நாடோறும் புணர்ச்சியில் மயங்கி இனிய துயிலிலே கிடக்கும், பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் - பண்ணினையும் கிளியினையும் பழித்த இனிய சொல்லையுடைய. எண்ணெண் கலையோர் இரு பெரு வீதியும் - தமக்கு வகுக்கப்பட்ட அறுபத்து நான்கு கலைகளை வல்ல பதியிலாருடைய இருவகைப்பட்ட வீதிகளும்; பெரும் பிறிதாதல் - செயலற்றொழிதல். வண்டாகிய உவமத் தால் அது முன் நுகர்ந்த மலரைத் துறந்து செல்லுதல் போல் இளையோர் முன்பு நுகர்ந்த மகளிரைத் துறந்து செல்லுதலுங் கொள்க. ஏமம் - மயக்கம், கிளை - கிள்ளை. எண்ணெண் கலை - யாழ்வாசினை முதலிய அறுபத்து நான்கு கலைகள் ; நாடகக் கணிகையர்க்கு இவை உரிய வென்பது, 1"எண்ணாண் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர் பயங்கெழு வீதி" எனப் பின்னரும் கூறப்படுகின் றது; 2"யாழ்முத லாக அறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி" என்றார் பிறரும் இருபெருவீதி - சிறுதனம் பெருந்தனம் பெறுவார் வீதி யென்பார். இனி, பண்ணும் கிளையும் பழித்த என்பதற்குப் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த என்றலுமாம். 168-179. வையமும் - கொல்லாப் பண்டியும், பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும், மணித் தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும், மெய் புகு கவசமும் - மெய்புகுதற் கிடமாகிய கவசமும், வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும், அதள் புனை அரணமும். - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும், அரியா யோகமும் - அரைப்பட்டி கையும், வளைதரு குழியமும் - வளைதடியும், வால் வெண்கவரியும் - மிகவெள்ளிய சாமரையும், ஏனப் படமும் - பன்றிமுகக் கடகும், கிடுகின்படமும் - சிறுகடகும், கானப்படமும் - காடெழுதின கடகும், காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும், செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும், கஞ்சத் தொழி லவும் - வெண்கலத்தாற் செய்தனவும், வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும், மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும், வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும், கோடு கடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலை யுடையவைகளும், புகையவும் - வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும், சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும், பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலை களும் ஆகிய, வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய, வளம் தலைமயங்கிய - இவ் வளங்கள் கலந்து கிடக்கின்ற, அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும் ; அரியா யோகம் - பிணியைக் கெடுக்கும் மருந்து என்றும், குழியம் - வாசவுருண்டை யென்றும், கிடுகின்படம் - தோற்கடகு என்றும், கோடுகடைதொழில் - ஆனைக்கோடு முதலியவற்றைக் கடை யும் தொழிற்குரிய கருவிகள் என்றும் கூறுவாருமுளர். வால்வெண்: ஒரு பொருட் பன்மொழி. ஏனப்படம் முதலிய மூன்றும் கேடக வகைகள். வம்பின் முடிந - கயிற்றினாற் புதுமையுற முடியப்படுவன ; அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன. வேதினம்-ஈர்வாள். துப்பு - கருவி. புகைய - நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் என்னும் புகையுறுப்புக்கள், சாந்த - மெய்யிற்பூசும் சாந்தின் உறுப்புக்களுமாம். 180-183. காகபாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - குற்றம் பன்னிரண்டனுள் மிகவும் தீயனவாகிய காகபாதம் களங்கம் விந்து இரேகை யென்னும் நான்கும் நீங்கி, இயல்பிற் குன்றா - குணங்களிற் குன்றாதனவாகி, நூலவர் நொடிந்த - நூலோராற் கூறப்பட்ட, நுழை நுண்கோடி - மிக்க நுண்மையுடைய கோடியினையும், நால்வகை வருணத்து - நால்வகை நிறத்தினையும், நலம் கேழ் ஒளியவும் - நன்மை பொருந்திய ஒளியையும் உடைய வயிரச் சாதியும் ; விந்து- புள்ளி. ஏகை - இரேகை யென்பதன் சிதைவு. நூலவர் நொடிந்த என்பதனை எல்லாவற்றொடுங் கூட்டுக. நுழைநுண் - மிகக்கூர்த்த ; ஒரு பொருளிரு சொல். ஒளி - இந்திரவிற் போலும் ஒளியென்பர். குற்றம் முதலியவற்றைப் பின்வரும் பழைய நூற்பாக்களானறிக. "சரைமலங் கீற்றுச் சப்படி பிளத்தல், துளைகரி விந்து காக பாதம், இருத்துக் கோடிக ளிலாதன முரிதல், தாரை மழுங்கல் தன்னோடு, ஈராறும் வயிரத் திழிபென மொழிப," "பலகை யெட்டுங் கோண மாறும், இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி பெறினே," "காக பாதம் நாகங் கொல்லும்," "மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும்," "விந்து சிந்தையிற் சந்தா பந்தரும்," "கீற்று வரலினை யேற்றவர் மாய்வர்." 184-185. ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - கீற்றும் தாருமாகிய குற்றங்களை இருளென்னும் குற்றத்தோடு நீக்கின, பாசார் மேனி - பசுமை நிறைந்த மெய்யையுடைய, பசுங் கதிர் ஒளியவும் - இளங்கதிரொளி பரந்த மரகதச் சாதியும் : 184-185. ஏகை - இரேகை ; கீற்று. இருள் - கருகல். மரகதக் குற்றம் எட்டனுள் இவை மூன்றும் மிக்க குற்றமென்க. குற்றம் எட்டினையும், "கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகு தன் மரகதத், தெண்ணிய குற்ற மிவையென மொழிப" என்பதனானறிக. இனி, மரகதத்தின் குணமும் எட்டென்ப; அவற்றை, "நெய்த்தல்கிளி மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின் வயி, றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே" என்பதனானறிக. 186-187. பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் - நூல்களில் விதித்த முறையிற் பிறழாமல் விளங்கிய பதுமம் நீலம் விந்தம் படிதம் என்னும் நால்வகைச் சாதி மாணிக்க வருக்கமும்; விதிமுறை பிழையா எனவே, பிறப்பிடம், வருணம், பெயர் குணம், குற்றம், நிறம், விலை, பத்தி என்னுமிவையும், பிறவும் அடங்கின; என்னை? "மாணிக்கத்தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத் தெண்வகை இலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே" என்றாராகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம் எனவும் சாதுரங்கம் எனவும் படும். நீலம் - நீல கந்தி எனவும் சௌகந்தி எனவும் படும். விந்தம் - குருவிந்தம் எனவும் இரத்தவிந்து எனவும் படும். படிதம் - கோவாங்கு எனப்படும். இவற்றின் நிறங்களை, "தாமரை கழுநீர் சாதகப் புட்கண், கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு, மாதுளைப் பூவிதை வன்னி யீரைந்தும், ஓதுசா துரங்க வொளியா கும்மே," திலக முலோத்தி ரஞ் செம்பருத் திப்பூக், கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே," "கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சௌகந் திக்குச் சாற்றிய நிறனே," "கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே" என்பவற்றானறிக. 188. பூச உருவின் பொலம் தெளித்தனையவும் - பூசமீனின் உருவினையுடைய பொன்னைக் களங்கமறத் தெளிவித்தாலொத்த புருடராக வருக்கமும்; பூசையுருவிற் பொலந்தேய்த்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பத வுரையாசியர். 189. தீது அறு கதிர் ஒளித் தெண்மட்டு உருவவும் - குற்ற மற்ற பரிதியினொளியும் தெளிந்த தேன்றுளியின் நிறமும் உடைய வயிடூரிய வருக்கமும் ; இதனைக் கோமேதகம் என்பர் அரும்பத வுரையாசிரியர். 190. இருள் தெளித்தனையவும் - இருளைத் தெளியவைத்தா லொத்த நீலமணி வருக்கமும்; "நீலத் தியல்பு நிறுக்குங் காலை, நால்வகை வருணமும் நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றும் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே" என்பதனால், நீலத்திற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க. 190. இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் கலந்தா லொத்த கோமேதக வருக்கமும் ; இருவேறுரு வினையுடையன வயிடூரியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். 191-192. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒன்று பட்ட பிறப்பினையும் வேறுபட்ட ஐந்து வனப்பினையுமுடைய. இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்கும் ஒளிவிடா நின்ற நன்மை பொருந்திய மாணிக்கம் புருடராகம் வயிடூரியம் நீலம் கோமேதகம் என்னும் மணிகளும் ; சாதியும் அனையவும் உருவமும் அனையவும் இருவேறுருவமும் ஆகிய ஐவேறுவனப்பின் மணிகளும் என்க. 193-196. காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும் - காற்று மண் கல் நீர் என்பவற்றாலுண்டாய குற்றம் சிறிதும் இன்மையாலே தெளிந்த ஒளியுடையனவும், சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல வெண்ணீர்மை செந்நீர்மையுடையனவும் திரட்சியுடை யனவுமாகிய முத்து வருக்கமும் ; காற்றேறு மண்ணேறு கல்லேறு நீர்நிலையென்பன குற்றங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவும், வெள்ளி செவ்வாய் நீர்மை குணங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவுங் கொள்க. சந்திரகுரு - வெள்ளி ; வியாழன் என்றல் புராணத்திற்கொத்தது. அங்காரகன் செவ்வாய். வட்டத்தொகுதி - ஆணிமுத்தென்பர் அரும்பத வுரையாசிரியர். 197-198. கருப்பத் துளையவும் - நடுவே துளைபட்டனவும், கல்லிடை முடங்கலும் - கல்லிடுக்கிற் புக்கு வளைவுற்றனவும், திருக்கும் நீங்கிய - திருகுதலுற்றனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய, செங்கொடி வல்லியும் -சிவந்த கொடிப்பவள வருக்கமும்; கல்லுடை முடங்கல் எனப் பாடங்கொண்டு, கல்லை உள்ளே யுடைய வளைவு என்பர் அரும்பத வுரையாசிரியர். பிறவும் குற்ற முளவாயினும் இவை மிக்க குற்ற மென்க. இனி, குணம் மிக்குக் குற்றங்கள் நீங்கியன சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போன்ற நிறமும் உருட்சியும் உடையன வென்பர். இனி, முற்கூறியவற்றுள் மாணிக்கத்தின் இயல்பனைத்தும், 1"கதிர்நிறை" என்னும் கல்லாடச் செய்யுளில். "குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த, நிறைதரு நான்கி னிகழ்ந்தன குறியும், குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு, சாதுரங் கம்மெனுஞ் சாதிக ணான்கும், தேக்கி னெருப்பிற் சேர்க்கினங் கையில், தூக்கினற் றகட்டிற் சுடர் வாய் வெயிலில், குச்சையின் மத்தகக் குறியினோ ரத்தில், நெய்த்துப் பார்வையி னேர்ந்துசிவந் தாங்கு, ஒத்த நற்குண முடையபன் னிரண்டும், கருகிநொய் தாதல் காற்று வெகுளி, திருகன் முரணே செம்ம ணிறுகல், மத்தகக் குழிவு காச மிலைச்சுமி, வெச்சம் பொரிவு புகைதல் புடாயம், சந்தைநெய்ப் பிலியெனத் தகுபதி னாறு, முந்திய நூலின் மொழிந்தன குற்றமும், சாதகப் புட்கண் டாமரை கழுநீர், கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு, வன்னி மாதுளம் பூவிதை யென்னப், பன்னுசா துரங்க வொளிக்குணம் பத்தும், செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம், முயலின் சோரி சிந்துரங் குன்றி, கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும், குருவிந் தத்திற் குறித்தன நிறமும், அசோகப் பல்லவ மலரிசெம் பஞ்சு, கோகிலக் கண்ணீ ளிலவலர் செம் பெனத், தருசௌ கந்தி தன்னிற மாறும், செங்கல் குராமலர் மஞ்சள் கோவை, குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும், திட்டை யேறு சிவந்த விதாயம், ஒக்கல் புற்றாங் குருதி தொழுதினை, மணிகோ கனகங்கற்பம் பாடி, மாங்கிச கந்தி வளர்காஞ் சுண்டையென், றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமும், இவையெனக் கூறிய நிறையருட்கடவுள்" எனக் கூறப்பட்டுள்ளமை காண்க. இனி, வலன் என்னும் அவுணன் வேள்விப் பசுவாக இந்திரன் அதனைச் செகுத்து வேள்வி செய்த பொழுது அதன் குருதி முதலியவற்றினின்று மாணிக்கம் முதலிய நவமணிகள் பிறந்தனவென்று புராணங் கூறும்; 1" அத்தகை யாவின் சோரி மாணிக்க மாம்பல் முத்தம் பித்தைவை டூய மென்பு வச்சிரம் பித்தம் பச்சை நெய்த்தவெண் ணிணங்கோ மேதந் தசைதுகிர் நெடுங்க ணீலம் எய்த்தவை புருட ராக மிவைநவ மணியின் றோற்றம்" என்பது காண்க. மற்றும் நவமணிகளின் இயல்பனைத்தும் திரு வாலவா யுடையார் திருவிளையாடற் புராணத்து மாணிக்கம் விற்ற திருவிளையாடலிலும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்து மாணிக்கம் விற்ற படலத்திலும் விரிவாகப் கூறப்பட்டுள்ளன; ஆண்டு காண்க. 199-200. வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - இவ் வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாய இயல்பனைத்தும் தெரியவல்ல வணிகர் தொகுதலால் உயர்ச்சியுற்று, பகை தெறல் அறியாப் பயங்கெழு வீதியும் - பகைவர் வருத்துதலை யறியாத பயன் மிக்க இரத்தினக் கடைத் தெருவும்; 201-204. சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் பொலம் தெரிமாக்கள் -சாதரூபமும் கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்னும் நான்கு சாதியாக ஓங்கிய இயல்பினையுடைய பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன் வாணிகர், கலங்கு, அஞர் ஒழித்து - கொள்வோர் எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுறுந் துன்பத்தை ஒழிப்ப, ஆங்கு - அவ்விடங்களில், இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - இவ்விடத்து இப் பொன் உளதென விளக்கக் கொடி யெடுக்கும் நன்மை மிக்க பொற்கடைத் தெருவும்; ஒழித்து- ஒழிப்பவெனத் திரிக்க. நால்வகைப் பொன்னுள் இறுதிக் கண்ணது 2"பொன்னுக்குச் சாம்புனதம்" என உயர்த்துக் கூறப்படும். 205-207. நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால் வகை தெரியா - நுண்ணிய பருத்தி நூலானும் எலிமயிரானும் பட்டு நூலானும் தத்தம் பகுதி தோன்ற நெய்யப்பட்டு, பன்னூறு அடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் - ஒவ்வொன்று நூறாக அடுக்கப்பட்ட பல நூறு அடுக்குகளை யுடைய நறிய புடவைகள் நெருங்கியுள்ள புடவைக் கடைத் தெருவும் ; நூற்பட்டு - பட்டுநூல். மேல், 1''பட்டினு மயிரினும், பருத்தி நூலினும், கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்" என்புழி உரைத்தமை காண்க. மணமூட்டுதலின், நறுமடி யென்றார். 208-211. நிறைக்கோல் துலாத்தர் - நிறுக்கும் துலாக்கோலை யுடையராயும், பறைக்கண் பராரையர் - பரிய அரையையும் இரும்பால் வாய் மாட்டாகக் கட்டின கண்ணையுமுடைய பறையினையுடையராயும், அம்பண அளவையர் - அளக்கும் மரக்காலையுடையராயும், எங்கணும் திரிதர - தரகு செய்வார் நின்றுழி நில்லாது எவ்விடத்தும் திரியும்படி, காலம் அன்றியும் - எக்காலமும், கருங்கறி மூடையொடு - பெரிய மிளகு பொதியுடனே, கூலம் குவித்த கூல வீதியும் - கூலங்களும் குவித்த கூலக் கடைத்தெருவும்; துலாக்கோல் எனவும், பராரைக்கட் பறை எனவும் மாறுக. பறை - தலை மட்டமாக அளக்கும் ஓர் முகத்தலளவைக் கருவி. அம் பணம் - மரக்கால். மூடையொடு என்னும் உடனிகழ்ச்சியால் பாக்கு முதலிய பொதிகள் கொள்ளலுமாம். கூலமாவன; "நெல்லுப் புல்லு வரகுதினை சாமை, இறுங்கு தோரை யிராகியெண் கூலம்" எனவும், "எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்தவரை, கடலை துவரை மொச்சை யென்றாங், குடனிவை முதிரைக் கூலத் துணவே" எனவும் ஓதப்பட்ட ஈரெண் வகைப்பொருள்கள். 212-218. பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேறு தெரிந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்பார் இருக்கும் நால் வேறாகிய தெருக்களும், அந்தியும் - முச்சந்தியும், சதுக்கமும் - நாற்சந்தியும், ஆவண வீதியும் - கோயிற் கடைத் தெருவும், மன்றமும் - மன்றுகளும், கவலையும் - பல நெறிகள் கூடின முடுக்குகளும், மறுகும் - குறுந்தெருக்களும், திரிந்து - உலாவி, விசும்பு அகடு திருகிய வெங்கதிர் நுழையா - வானின் நடுவிலே வெம்மை முறுகியோடும் ஞாயிற்றின் கதிர்கள் நுழையப்படாத, பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல் - புதிய சிறு கொடியும் பெருங்கொடியுமென்னும் இவற்றின் பந்தர் நிழலிலே, காவலன் பேரூர் கண்டு மகிழ்வு எய்தி - பாண்டி மன்னனது பெரிய நகரினைக் கண்டு மகிழ்ச்சியுற்று, கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென் - கோவலன் கொடிகளை யுடைய மதிற்புறத்து மீண்டு போந்தான் என்க. கண்டு பந்தர் நீழற் றிரிந்து மகிழ்வெய்தி எனக் கூட்டுக. மகிழ்ச்சியெய்துதலாலே தான் கருதிவந்த பொருந்துழியறிதலை மறந்துபெயர்ந்தனன் என்க. புள்ளெழுந்தார்ப்ப மண்டிலம் துயிலெடுப்ப இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேன் என்றலும், கவுந்தியடிகள், அனையையு மல்லை ; பிரியா வாழ்க்கை பெற்றனையன்றே ; வருந்தாதேகிப் போதீங் கென்றலும் மருங்கிற்போகி அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இரு பெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும் நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவணவீதியும் மன்றமும் கவலையும் மறுகும் ஆகிய இவ்விடங்களில் பந்தர் நீழலில் திரிந்து காவலன் பேரூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தான் என வினைமுடிக்க. இது நிலைமண்டில வாசிரியப்பா. ஊர்காண் காதை முற்றிற்று. 15. அடைக்கலக் காதை (புறஞ்சேரியிற் புக்க கோவலன் கவுந்தியடிகட்கு மதுரையின் சிறப்பையும் பாண்டியன் கொற்றத்தையும் கூறும்பொழுது, தலைச் செங்கானத்து மறையவனாகிய மாடலனென்போன் குமரியாடி மீண்டு வருபவன் வழிநடை வருத்தம் நீங்கக் கவுந்தியிருக்குமிடத்தை அடைந்தான். கோவலன் அவனைக் கண்டு வணங்க, அவன் கோவலனை நோக்கி, மாதவி மகட்கு மணிமேகலை யென்று பெயரிட்டு வாழ்த்தித் தானம் கொடுக்கும்பொழுது தானம் பெறுதற்கு வந்த முதுமறையோனை மதயானை பற்ற அதன் கையினின்றும் அவனை விடுவித்து, அதன் கையகத்தே புக்குக் கோட்டிடையொடுங்கிப் பிடரில் ஏறி அதனை அடக்கிய கருணை மறவனே! தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ உணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்த செல்லாச் செல்வனே! பத்தினி ஒருத்தி அடாப்பழி யெய்தப் பொய்க்கரி கூறிச் சதுக்கப் பூதத்தாற் கொல்லப்பட்டவனுடைய தாயின் துயர் நீங்க அவன் சுற்றத்தார்க்கும் கிளைகட்கும் பொருளீந்து பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மலே! யானறிய நீ இம்மையிற் செய்தன வெல்லாம் நல்வினையாகவும் இம் மாணிக்கக் கொழுந்துடன் `நீ இங்ஙனம் போந்தது உம்மைப் பயனோ?' என வினவ, கோவலன் தான் கண்ட தீக்கனாவைக் கூறி, அதன் பயனாய துன்பம் விரைவில் உண்டாகுமென்றுரைக்க, மறையவனும் கவுந்தியும் இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையிற் புகுக' என்று கூறினர். அப்பொழுது அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதிரி கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். கொடுமையில்லாத வாழ்க்கையையுடைய கோவலர் குடியின் முதுமகளும் செவ்வியளுமாகிய இவளிடத்துக் கண்ணகியை இருத்துதல் குற்றமின்றென எண்ணி, கண்ணகியின் உயர்வையும் கற்பின் சிறப்பையுங் கூறி, தவத்தினரது அடைக்கலத்தைப் பாதுகாத்தலால் எய்தும் பெரும்பயனுக்கு ஓர் வரலாற்றையும் காட்டி, அவளை மாதரிபால் ஒப்புவிக்க, அவள் கவுந்தியை ஏத்தி நங்கையுடன் தன் மனையை அடைந்தாள்.) நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டுங் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் 5 பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் 10 மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு 15 குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண் வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க 20 நாவ லந்தணன் தானவின் றுரைப்போன் வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் 25 மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுது மென்று தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங்கு இடையிருள் யாமத் தெறி திரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் 30 புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது 35 துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலையென வாழ்த்திய ஞான்று 40 மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி 45 வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் 50 பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி றடக்கிய கருணை மறவ பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக 55 எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல வடதிசைப் பெயரு மாமறை யாளன் கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப் 60 பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறு மறுகிக் கருமக் கழிபலங் கொண்மி னோவெனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉய் யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென 65 மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு 70 ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து 75 நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும் 80 பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென நன்னெடும் பூதம் நல்கா தாகி நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு 85 பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் 90 பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்தகோ பால நீயென வினவக் 95 கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும் 100 பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும் மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து காமக் கடவுள் கையற் றேங்க அணிதிகழ் போதி அறவோன் றன்முன் மணிமே கலையை மாதவி யளிப்பவும் 105 நனவு போல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதீங் குறுமென அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் 110 உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன் மாட மதுரை மாநகர் புகுகென மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை 115 அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் 120 ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி 125 மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும் 130 இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித் தேமென் கூந்தற் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் 135 ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே யாகித் தாங்கிங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு 140 நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் 145 வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் 150 மிகப்பே ரின்பம் தருமது கேளாய் காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல் உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் 155 தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப் 160 பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு யாதிவன் வரவென இறையோன் கூறும் எட்டி சாயலன் இருந்தோன் றனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் 165 மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப் பாற்படு மாதவன் பாதம் பொருந்தி உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் 170 தண்டா வேட்கையின் தான்சிறி தருந்தி எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின் மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக் 175 காதற் குரங்கு கடைநா ளெய்தவும் தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின் மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி 180 உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப் பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின் பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம் 185 தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச் 190 சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் தேவ குமரன் தோன்றினன் என்றலும் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆரணங் காக அறந்தலைப் பட்டோர் அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் 195 தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் இட்ட தானத் தெட்டியும் மனைவியும் முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர் கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது நீபோ கென்றே 200 கவுந்தி கூற உவந்தன ளேத்தி வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள் முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப 205 மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் 210 காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் 215 எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். உரை 1-8. நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி - நிலத்திற்குப் பல செல்வத்தினையும் தருகின்ற அருள் வாய்ந்த ஆணையை, கடம் பூண்டு உருட்டும் கௌரியர் - முறைமையை மேற்கொண்டு செலுத்தும் பாண்டியர்களுடைய, பெரும் சீர்க் கோலின் செம்மையும் - பெரிய சிறப்பினையுடைய செங்கோலும், குடையின் தண்மையும் - குடையினது தண்மையும், வேலின் கொற்றமும் - வேலினுடைய வெற்றியும், விளங்கிய கொள்கை - விளங்குதற்கு இடமாகிய கோட்பாட்டினையுடைய, பதி எழுவு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மா நகர் கண்டு-ஆண்டு வாழ்வோர் அவ்விடத்தினின்றும் பெயர்தலை அறியாத முறைமை மேம்பட்ட பழைய ஊராகிய மதுரை மா நகரத்தினைக் கண்டு, ஆங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழில் இடம் புகுந்து - அவ்விடத்து அறத்தினைப் பிறர்க்கறிவுறுத்தும் உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த புறமதிற்கண் உள்ள மூதூர்ச் சோலையிடத்துப் புகுந்து ; மன்னன் குடிகளிடத்து அருளுடையன் ஆயவழி நிலத்துப் பல் வளமும் பெருகுமாகலின் ''நிலம்தரு திருவின் நிழல்" என்றார் ; நிழல் - அருள். மாற்றாரது நிலத்தைத் தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளி பொருந்திய நேமி யென்றும் உரைத்தலுமாம். பதி எழுவறியாமை ஆண்டுப் பல்வளமும் பெருகலான் என்க. பதி என்பது ஆகுபெயராய் ஆண்டுள்ளாரைக் குறித்து நின்றதெனலும் பொருந்தும். 9-10. தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - குற்றம் நீங்கிய மதுரையின் சிறப்பினையும் பாண்டியனது கொற்றத்தையும், மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - கவுந்தியடிகளுக்குக் கோவலன் கூறிய காலை ; தீது - பசி, பிணி, பகை; இம் மூன்றும் அருள்வாய்த்த கோலின் செம்மையானும் வேலின் கொற்றத்தானும் இலவாயின என்க. 11-13. தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து - தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச் செங்காடு என்னும் ஊரிடத்துள்ள, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை-நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்த நன்மையை விரும்பிய கோட்பாட்டினையுடைய, மாமறை முதல்வன் மாடலன் என்போன் - மறையவர் தலைவனாகிய மாடலன் எனப்படுவோன்; தாழ்தல் - ஆழமாதல்; தங்குதல் என்றுமாம். தாழ்நீர் - கடல்; கிடங்குமாம். 14-19. மாதவ முனிவன் மலை வலங்கொண்டு-மிக்க தவத்தினை யுடைய அகத்திய முனிவனுடைய பொதிய மலையை வலங் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து - குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி, தமர்முதற் பெயர்வோன் - தம் கிளைஞர் இருக்குமிடத்திற்கு மீண்டு வருவோன், தாழ் பொழில் ஆங்கண் வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை - வழிச் சென்ற வருத்தத்தான் உண்டாய மிக்க துயரம் ஒழிய நிழல் படிந்த சோலையுள்ள அவ்விடத்துக் கவுந்தியடிகளிருந்த பள்ளியிடத்துப் புக்கவனை, கோவலன் சென்று சேவடி வணங்க - கோவலன் சென்று சேவடிக்கண் தொழ; குமரி - யாறு, கடலுமாம்; 1''தொடியோள் பௌவம்" என்றாராகலின். முதல் - இடம். வகுந்து - வழி. இடவயின் - இடத்தில். துயர் நீங்கப் பொழிலாங்கண் இடவயிற் புகுந்தோன் என்க. புகுந்தான் ; புகுந்தவனை என அறுத்துரைக்க. நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - நாவில் வல்ல அம் மாடலன் அவனை வினவித் தான் உரைக்கின்றவன் ; 20. நாவல் என்பதனைப் பிரிக்காது, நாவலந் தீவு என்றும், வெற்றி என்றும் கூறுதலுமாம். 2''நாவ லந்தண ரருமறைப் பொருளே" என்பது காண்க. தானவின்று - வினவியென்னும் பொருட்டு ; நீர் இங்ஙனம் வந்த காரணம் யாதென வினவி யென்க. 21-27. வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய - அரசன் அளித்த மிக்க தலைவரிசையால் சிறந்த புகழினைப் பெற்ற, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை - மாந்தளிர் போலும் மேனியையுடைய மாதவியாகிய மடந்தை, பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து- நற்பகுதி வாய்த்தலையுடைய பெண் குழந்தையினைப் பெற்றெடுத்து, வாலாமை நாள் நீங்கிய பின்னர் - தூய்மையின்மையாகிய நாட்கள் கழிந்த பின்னர், மா முது கணிகையர் - ஆண்டில் முதிர்ந்த கணிகை மகளிர், மாதவி மகட்கு நாம நல் உரை நாட்டுதும் என்று - மாதவியின் புதல்விக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம் என்று, தாம் இன்பு உறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு - தாங்கள் மகிழ்ச்சியுறுதற்குக் காரணமாகிய தகுதி அமைந்த சொல்லினைக்கூறக் கேட்டு அப்பொழுது; ‘வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய' என்றது அரசனால் தலைக்கோல் பெற்று ஆயிரத்து எண்கழஞ்சு பொன் பெற்றதனை. பெரும்புலவோர் ஒரு நிகழ்ச்சியினைக் கூறுங்கால், அந் நிகழ்ச்சியின் மேல் விளைவினையும் ஆண்டே புலப்படுத்தல் இயல்பாகலான், `பால் வாய்க்குழவி' என்றார்; பால் - பகுதி ; நல்லூழ்; பால்வாய் என்பது குழவிக்கு இயற்கையடை என்றலுமாம். வாலாமை - புனிறு தீராமை. முதுகணிகையர் - சித்திராபதி முதலியோர். முன்னர்க் குழவி என்ற பொதுமை நீங்க மகட்கு என்றார். நல்லுரை நாமம் என்க. கேட்டான் கோவலன். 28-37. (முன்நாள்) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங் கடல் - முன்னாளில் இருள் நிறைந்த நடுயாமத்தில் அலை மோதும் பெரிய கடலினிடத்து, உடைகலப்பட்ட எங்கோன்- மரக்கலம் உடையப்பட்ட எம் முன்னோன், முன்நாள் புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் - முற்பிறப்பில் அறத்தினையும் தானத்தினையும் செய்தோனாகலான், நண்ணுவழி இன்றி நாள் சில நீந்த கரையைக் கிட்டும் இடமின்றியே சின்னாட்கள் நீந்திச் செல்ல, இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் - ஓர் தெய்வம் தோன்றி, யான் மணிமேகலை எனப்படுவேன் இத் தீவினுள்ளாரை அசுரர் நலியாதிருத்தற் பொருட்டு இந்திரன் ஏவலால் ஈங்கு வாழுவேன் அவ் விந்திரன் ஏவலான் நின் துயர் ஒழிக்க இவண் வந்தேன் அஞ்சற்க, உன் பெருந் தானத்து உறுதி ஒழியாது - நினது பெரிய தானத்தின் பயன் நின்னைவிட்டு நீங்காது, துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - ஆகலான் கடலில் நீந்திய இத்துன் பத்தினின்றும் நீங்கித் துயர்க்கடலை ஒழிவாயாகவென்று கூறி, விஞ்சையில் பெயர்த்து விழுமம் தீர்த்த - மந்திரத்தினால் கரையை மீண்டும் அடையச் செய்து துன்பம் ஒழித்த, எம் குலதெய்வப்பெயர் ஈங்கு இடுகென - எமது குலதெய்வத்தின் பெயரை இங்கு நீவிர் இடுமின் என்று நீ சொல்ல; யாமம் - இரவு; 1'யாமமும் பகலு மறியா மையால்' என்றார் பிறரும். முன்னாள் என்பதனை உடைகலப்பட்ட என்பதனொடும், புண்ணியதானம் என்பதனொடும் கூட்டுக. புண்ணியதானம் - புண்ணியமும் தானமும். நண்ணுவழி இன்றி என்பதற்குத் தன்னை அணுகும் இடையூறு ஓரிடத்துமின்றி எனலுமாம். நாள் சில நீந்த-ஏழு நாட்கள் நீந்த ; (மணி 29 : 18-9. வரி காண்க.) இந்திரன் ஏவலின் வாழ்வேன் இந்திரன் ஏவலின் வந்தேன் என்க. உறுதி - பயன். பெயர்த்து - ஒரு திடரிற் பெயர்த்து எனவு முரைப்பர். வாழ்வேன் வந்தேன் அஞ்சல் உறுதி ஒழியாது நீங்கி ஒழிகெனப் பெயர்த்துத் தீர்த்த குலதெய்வம் என்க. 38-41. அணிமேகலையார் ஆயிரங் கணிகையர் - அழகு செய்யும் மேகலையை அணிந்த ஆயிரங் கணிகையர் கூடி, மணிமேகலை என வாழ்த்திய ஞான்று - மணிமேகலை எனப் பெயர் இட்டு அக் குழவியை வாழ்த்திய அற்றை நாள், மங்கல மடந்தை மாதவி தன்னோடு - அழகினை யுடைய மடந்தையாகிய மாதவியோடு, செம்பொன் மாரி செங்கையில் பொழிய - சிவந்த பொன்னாகிய மழையினைச் சிவந்த கையாலே நீ பொழிய; ஆயிரம் - எண்ணின் மிகுதி குறிப்பது. வாழ்த்திய - அரசனையும் நகரினையும் வாழ்த்திய என்றுமாம். 42-47. ஞான நல்நெறி நல் வரம்பு ஆயோன் - வீடு சேறற்கு நல்ல நெறியாகிய ஞானத்திற்குச் சிறந்த எல்லையாயுள்ளோன், தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் தளர்ந்தநடையில் தண்டுகால் ஊன்றி - தானத்தைப் பெறும் தகுதியோடு தளர்ந்த நடையுடன் ஊன்றுகோலையே காலாக ஊன்றி வருவோனாகிய, வளைந்த யாக்கை மறையோன் தன்னை - கூனிய உடம்பினை யுடைய அந்தணனை, பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் வேக யானை - பாகர் செயலைக் கடந்து எவ்விடத்தும் பறை கொட்ட வருகின்ற மதவேகத்தினையுடைய யானை, வெம்மை யில் கைக்கொள - சினத்தால் பற்றிக்கொண்டதாக ; 2"தளர்ந்த நடையிற் றண்டுகால் ஊன்றி, வளைந்த யாக் கையோர் மறையோன்" என்பர் மணிமேகலையினும், பாகு - பாகர். கழிந்து என்றது அவர்க்கு அடங்காமை கூறிற்று. பறைபடுதல் மக்கள் அறிந்து காத்தற்கு. பொழியக் கொள்ளும் தகைமையின் வருவோனாகிய மறை யோன் தன்னை யானை கைக்கொள என்க. 48-53. ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனை - அப்பொழுது விரைவில் உரப்பி அம் மறையோனை, கை அகத்து ஒழித்து - யானையின் கையினின்றும் விடுவித்து, கை அகம் புக் குப் பொய் பொரு முடங்கு கை வெண்கோட்டு அடங்கி - தான் அவ் வியானையின் புரை பொருந்திய கையினிடத்துப் புகுந்து போர் செய்யும் வளைதலையுடைய வெள்ளிய கோட்டின்கண் அடங்கி, மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய குன்றின்கண் இருந்த வித்தியாதரனைப் போல அதன் பிடரினிடத்திருந்து, பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணை மறவ - மிக்க சினம் நீங்காத களிற்றின் மதத்தினை யடக்கிய அருள்வீரனே; ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழியுமாம். பொய்க் கையகம் எனவும் பொருவெண்கோடு எனவும் இயைக்க. இனி, பொய்பொரு முடங்குகை என்பதற்குப் புரை பொருந்திய வளைந்த கை என்பதும் பொருந்தும். பிறழ்தல் - நீங்குதல் ; 1"மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்து" என்றார் பிறரும். கடக் களிறு அடக்கிய - மதத்தையுடைய யானையை அடக்கிய எனலுமாம். மறையோற் கெய்தும் துயரினைப் பொறாமையானும், தன்னுயிர்க் கஞ்சாது பாய்ந்து அடக்குதலானும் கருணை மறவன் என்றான். 54-75. பிள்ளை நகுலம் பெரும் பிறிது ஆக - தம் பிள்ளையைக் காத்த கீரி தன் மனைவி அடித்தமை காரணமாக இறந்தமையான், எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல வடதிசைப் பெயரும் மா மறையாளன் - வடக்கண் கங்கையாடச் செல்லும் மறையோன் அக் கோறல் காரணமாக இகழ்ந்து ஒதுக்கிய மனைவி வருந்தித் தன் பின்னே வரலான், கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை - நினது கையிடத்ததாகிய உணவை உண்டு வாழும் வாழ்க்கை இனி முறைமையுடையது அன்று, வடமொழி வாசகம் செய்த நல் ஏடு - ஆகலான் வடமொழி வாசகம் எழுதிய நல்ல இவ்வேட்டினை, கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்கென - உணரத்தகு பொருளை யுணரும் மக்கள் கையகத்து நீ கொடுக்கவெனச் சொல்லிப் போக, பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனை தொறும் மறுகி - கடைவீதியினும் பெருங்குடி வணிகர் வாழும் மாடங்கள் நிறைந்த மறுகிலும் ஏனையோர் இல்லங்களிலும் சுழன்று திரிந்து, கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அரு மறையாட்டியை - பாவத்தினைப் போக்கும் பயனைக் கொள்ளுங் கள் என்று கூறிச் செல்லும் பார்ப்பனியை, அணுகக் கூய் - அண்மையில் வரும் வண்ணம் அழைத்து, யாது நீ உற்ற இடர் ஈது என் என - நீ யடைந்த துன்பம் யாது இக் கையின்கண் ஏடு யாது என்று கேட்ப, மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி - அம் மாது தான் அடைந்த மிக்க துன்பத்தினைக் கூறி, இப் பொருள் எழுதிய இதழ் இது வாங்கி - இச் செய்யுள் எழுதிய இவ் வேட் டினைப் பெற்று, கைப்பொருள் தந்து என் கடுந்துயர் களை கென - கைப்பொருளைக் கொடுத்து எனது கொடிய துயரத் தினை ஒழிப்பாயாக வென்று கூற, அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் - அஞ்சற்க உனது பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் போக்குவேன், நெஞ்சுறு துயரம் நீங்குக என்று - உன் உள்ளத்துப் பொருந்தும் இடும்பையை நீக்குக என்று சொல்லி, ஆங்கு ஓத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் - அப்பொழுதே வேதத்தினையுடைய முனிவர்கள் கூறிய அறநூன் முறையானே, தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்க - கொலைத் தொழில் புரிந்தவளாகிய அப் பார்ப்பனி செய்த பாவம் ஒழியும் வண்ணம், தானம் செய்து அவள்தன் துயர் நீக்கி - தானத்தைச் செய்து அவளுடைய துன்பத்தினைப் போக்கி, கானம் போன கணவனைக் கூட்டி - காட்டு நெறிக்கண் சென்ற அவள் கணவனையும் சேர்த்து, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து - தளராத செல்வமுடைமையான் மிக்க பொருளினைத் தந்து, நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ - நன்னெறிப் படுத்திய தொலையாத செல்வமுடையானே; பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. `பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக' என்றது பார்ப்பனியின் பிள்ளையைக் காத்திருந்த கீரி அவண் பாம் பொன்று வர அதனைக் கொன்று உதிரம் படிந்த வாயுடனே எதிர்வந்த தனைக் கண்ட அப் பார்ப்பனி அக் கீரி தன் குழந்தையைக் கொன்ற தெனக் கருதி அதனைக் கொன்றனள் என்னுங் கதை குறித்து நின்றது. பெரும்பிறிது - இறத்தல். கைத்தூண் வாழ்க்கை - ஒழுக்கத்தின் உண்டு வாழும் வாழ்க்கை எனலுமாம். வாசகம் - செய்யுள் : அதா வது :-"அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம்யதா" என்பதாகும், கட னறிமாந்தர் என்றது மக்கட் பிறப்பின் முறைமையை உணரும் மக்கள் என்றவாறு. கொடுக்கென என்பதன் பின்னர்ப் போகவென ஒரு சொல்வருவிக்க. தெருவினும் மறுகினும் உள்ள மனை எனலும் பொருந்தும். கருமக் கழிபலங் கொண்மின் என்றது கொலைப் பாவம் ஒழியப் பிரிந்த கணவன் வரும் வண்ணம் தானம் செய்தற்குப் பொருள் அளித்தலை ஏற்றுக் கொண்மின் என்றவாறு. `இப் பொருள்' என்றது பொருட்கிடமாகிய செய்யுளை. ஓத்துடை அந்தணர் - தருமாசனத்தோர் என்க. ‘துயர் நீங்க' என்றது துயரத்திற்குக் காரணமாய பாவம் நீங்க என்றபடி. 76-90. பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த - ஓர் கற்புடை மகள் பொய்ப் பழியினை எய்துதற்கு, மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரி பொய்த்து - அவளுடைய கணவனுக்கு அறிவிலான் ஒருவன் கண்டு தெளியாத சான்று கூறிப் பொய்த்தலான், அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - தவ மறைந்து ஒழுகுவோர் முதலிய அறுவகையோரையும் புடைத்துண்ணும் பூதத்தினுடைய கரிய பாசத்தினிடத்து அகப்பட, பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் படும் துன்பத்தினை நோக்கி, கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி - அவனைக் கட்டிய பாசத்தினுள் தான் விரைந்து சென்று அடைந்து, என் உயிர்கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - இப்பொழுது என்னுடைய உயிரை நீ பெற்றுக்கொண்டு இவனுடைய உயிரைத் தந்திடுவாய் என்று கேட்ப, நல் நெடும் பூதம் நல்காது ஆகி - நல்ல பெரிய பூதம் அவனுயிரைக் கொடாதாய், நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை - கீழோனுடைய உயிரின் பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்குந் தன்மை என்னிடத்து இல்லை, ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப - ஆதலால் நின் எண்ணத்தினை ஒழிப்பாயாக என்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்ண, அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து - வருந்திய உள்ளத்தினையுடைய அவளொடும் மீண்டு சென்று, அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் - அவனுடைய சுற்றத்தார்க்கும் தொடர்பு கொண்ட கிளைஞர்க்கும், பற்றிய கிளைஞரில் பசிப்பிணி அறுத்து-அன்பாற் பிணித்த நினது சுற்றத்தாரைப் போலக் கருதிப் பசியாகிய நோயைக் கெடுத்து, பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் - பல யாண்டுகள் காத்த வறியோர் தலைவனே; படிறு - பொய், வறியான் - பொருளிலான் எனக் கொண்டு பொருள் பெறுகைக்காகப் பொய்க்கரி கூறினான் என்றலும் அமை யும். கண்டு தெளிந்த கூறலே உண்மைக்கரியாகலான், அறியாக் கரி பொய்க்கரியாயிற்று. நல்லோர்க்குத் தீங்கு செய்யாமையான், `நன்னெடும் பூதம்' எனப்பட்டது. தவமறைந் தொழுகுவோர் முதலியோரைப் பூதம் புடைத்துண்ணுதலை, 1"தவமறைந் தொழு கும்.........கைப்படுவோர்" என வருதலானறிக. உயிர் - உடல் ; ஆகுபெயர். இல்லோர் செம்மல் - இல்லறத்தோர் தலைவன் என லுமாம். நரகன் - நரகமடைதற்குரியான் ; பாவி. கோவலன் வணங்க வணங்கியோனைக் கருணைமறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல் என நாவலந்தணன் புகழ்ந்தனன் என்க. 91-94. விருத்த கோபால - அறிவால் முதிர்ந்த கோபாலனே, நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை - யான் அறிய இப் பிறப்பின்கண் நீ செய்தன யாவும் நல்வினையே யாகவும், உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது - ஒப்பற்ற தனிமையான் வருந்தி இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் இவண் புகுந்தது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனேயோ, என வினவ - என்று மாடலன் கேட்க ; ஒருதனி உழத்தல் - உசாவின்றி வருந்துதல். மாமணி - முழு மாணிக்கம். கண்ணகியின் இளமை கருதிக் கொழுந்து என்றார். விருத்தன் - ஞான விருத்தன் எனல் மரபு. கோபால - கோவல. கொல் - ஐயம். கோபால நீ இம்மைச் செய்தன நல்வினை உழந்து போந்தது உம்மைப் பயன்கொல் என மாறுக. 95-106. கோவலன் கூறும் - கோவலன் கூறுவான் : ஓர் குறு மகன் தன்னால் - ஒரு கீழோனால், காவல் வேந்தன் கடிநகர் தன்னில் - புரத்தலில் வல்ல பாண்டிய மன்னனுடைய காவலையுடைய இம் மதுரை நகரத்தின்கண், நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த - மணநாறும் ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தலை யுடைய இவள் கண்டார் நடுங்கத்தக்க துன்பத்தினை அடைய, கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும் - உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டு யான் பன்றிமீது ஏறிச் செலுத்தவும், அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் - அழகு தக்க கடை குழன்ற கூந்தலினையும் ஆராய்ந்த இழையினையும் உடைய இவளோடு, பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும் - பற்றினை யறுத்த சான்றோர் பெறும் பேற்றினை யான் பெறவும், மா மலர் வாளி வறுநிலத்து எறிந்து - மலர் அம்புகளை வெறுநிலத்தில் வீசி, காமக் கடவுள் கையற்று ஏங்க - மன்மதன் செயலற்று ஏக்கங் கொள்ளும் வண்ணம், அணிதிகழ் போதி அறவோன் தன்முன் - அழகு விளங்கும் போதிக்கண் அறவோனாகிய புத்தனிடத்து, மணிமேகலையை மாதவி அளிப்பவும் - மணிமேகலையை மாதவி கொடுக்கவும், நனவு போல நள் இருள் யாமத்து - நனவினிற் போலச் செறிந்த இருளினையுடைய கடை யாமத்தின்கண், கனவு கண்டேன் - கனாக் கண்டேன், கடிது ஈங்கு உறும் என - ஆக லான் பொல்லாங்கு ஒன்று இப்பொழுதே வந்து சேரும் என்று சொல்ல; குறுமை - கீழ்மை யென்னும்பொருட்டு. காவல் வேந்தன் என வும் கடிநகர் எனவும் கூறியது துயரெய்தலாகாவிடத்திலே துய ரெய்த என்னும் பொருள் தோன்ற. கோட்டு மா - எருமைக்கடாவு மாம். பிணிப்பறுத்தோர் பெற்றியாவது துறக்கமடைதல். நனவு - விழிப்பு. நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. கடிது உறும் - கடையாமத்துக் கனவாதலின் கடிதில் உறும் என்னலுமாம். கடி தீங்கு எனப் பிரித்து மிக்க தீங்கு, அச்சத்தையுடைய தீங்கு எனவுமாம். பன்றியையும் எருமைக்கடாவையும் ஊர்தல் காணின் தீங்குண் டாம் என்பதும் கடையாமத்திற் காணின் விரைவில் உறும் என்பதும், 1" களிறுமேல் கொள்ளவும் கனவி னரியன காணா" 2"சொல்லத் தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார் இல்லத் தெருமை கழுதைக ளென்றிவை யேறிநின்றே மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல் கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே" 3"படைத்தமுற் சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்கு மென்றும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால் கடைப்பட்ட சாமமு நாள்பத்து ளேபலங் கைபெறுமே" என்பவற்றான் அறியப்படும். 107-114. அறத்துறை மாக்கட்கு அல்லது - துறவறத்துறை யின்கண் நிற்கு முனிவர்களுக்கல்லது, இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் - இவ் வெயிற்புறத்துப் பள்ளி யில் இருக்கும் இருக்கை ஒவ்வாது ஆகலானும், அரைசர் பின் னோர் அகநகர் மருங்கின் நின் உரையிற் கொள்வர் - இவ் வக நகரிடத்து உள்ள வணிகர் நினது புகழால் நின்னை அறிந்து எதிரேற்றுக்கொள்வர் ஆகலானும், இங்கு ஒழிக நின் இருப்பு - இவ்விடத்து நினது இருக்கையை ஒழிவாயாக, காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாட மதுரை மா நகர் புகுகென - ஞாயிறு மேற்றிசை சென்று வீழ்வதன் முன்னர் நின் மனைவி யோடு மடாங்களையுடைய மதுரை நகரத்தில் புகுகவென்று, மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மறையோனாகிய மாடலனும் கோவலனுக்குக் கூறும்போது; அறத்துறை - அறத்தின்கண் உறையும் எனலுமாம். புறச்சிறை இருக்கை - எயிற்புறத்துப் பள்ளி. அரைசர் பின்னோர் - நால்வகைக் குலத்து அரசர்க்குப்பின் எண்ணப்படுபவராகிய வணிகர். அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர் என்க. கோவலன் 1'மண்தேய்த்த புகழினான்' ஆகலான் `நின் உரையிற் கொள்வர்' என்றார். இனி, நின் உரையிற் கொள்வர் என்பதற்கு, மாசாத்துவான் மகன் என்னும் புகழாற் கொள்வர் எனலுமாம். 115-119. அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய - அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, புறஞ் சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்கு - எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் - முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, ஆயர் முதுமகள் மாதரி என்போள் - இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியையையைக் கண்டு அடி தொழலும் - கவுந்தியடி களைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்; அறவோர் பல்கிய மூதூர்க்கண் இயக்கி என்க. இயக்கி - ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்கும்; ஆரியாங்கனை யெனவும் கூறுவர்; ஆரியாங்கனை - கணவனிருக்கும் பொழுதே துறவு பூண்ட தவப்பெண். பண்பிற் பால் மடை கொடுத்து என மாறுக. இனி, புறஞ்சிறை மூதூர்க்கண் காவுந்தியையை எனவும் இயைப்பர். 120-124. ஆ காத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் - பசுக்களைப் பிணி முதலியவற்றினின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப் பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற, கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை - இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிதும் தீமை இல்லை, தீது இலள் - ஆகலின் குற்றமில்லாதவள், முதுமகள் செவ்வியள் அளியள் - மேலும் இவள் முதியோளும் உட்கோட்ட மில்லாதவளும் தண்ணளியுடையாளுமாவள், மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி - ஆகலான் இம் மாதரி யிடத்துக் கண்ணகியை வைப்பதனால் குற்றம் ஒன்றும் இன்றாம் எனக் கருதியவளாய்; பிணி முதலிய உண்டாயவழி அவற்றை நீக்குதலைக் காத்து எனவும், புல் அருத்தல் முதலியவற்றை ஓம்பி எனவும் கூறினார். ஆப் பயன் - பால் முதலியன. அளியள் - அளிக்கத்தக்காள் எனலும் பொருந்தும் கொடும்பாடு - கொடுமை. 125-130. மாதரி கேள் - மாதரியே கேட்பாயாக, இம்மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் தன் குலவாணர் - இப் பெண்ணின் கணவனுடைய தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்துப் பிறந்த இந் நகரத்து வாழ்வோர், அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர் கொண்டு - பெறுதற்கரிய செல்வத்தினைப் பெற்றார் போன்று தமது விருந்தினராக எதிர் கொண்டு அழைத்து, கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் - இக் கரிய பெரிய கண்களையுடையாளொடு தமது காவலையுடைய இல்லத்தின்கண் வைத்துக் கொள்வர், உடைப் பெருஞ் செல்வ மனைப்புகும் அளவும் - அங்ஙனம் அப் பெருஞ் செல்வ முடையார் இல்லத்தின்கண் புகும் வரையும், இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் - இடையர்குலப் பெண்ணாகிய நினக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன்; தாதையை - தந்தையின் பெயரை ; என்றது மாசாத்துவான் மகன் இவன் என்பதனைக் கேட்கின் என்றவாறு. உடைப்பெருஞ் செல்வர் - பெருஞ் செல்வமுடையார்; உடைய பெரிய செல்வர் எனலுமாம். 1"உடைப் பெருஞ் செல்வரும்" என்றார் பிறரும். இடைக்குல மடந்தை - முன்னிலையிற் படர்க்கை வந்த வழுவமைதி. 131-136. மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி - அழகிய இக் கண்ணகியைத் தூய நீராற் குளிப்பாட்டி, செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி - சிவந்த கயல் போலும் நெடிய கண் களில் மை எழுதி, தே மென் கூந்தல் சில் மலர் பெய்து - தேன் பொருந்திய மெல்லிய கூந்தற்கண் சிலவாகிய மலர்களைச் சூடி, தூ மடி உடீஇ - தூய புடைவையை உடுத்து, தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு - ஆராய்ந்த கலன் அணிந்த இவளுக்கு முன்னோர் கூறிய சிறப்பினை யுடைய தோழிமாரும் காவற் பெண்டும் நற்றாயும் நீயேயாகிக் காப்பாற்றுவாயாக ; மங்கல நன்னீர் என இயைப்பினு மமையும். தொல்லோர் சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்துக் கூறப்பட்ட ஆயம் எனலுமாம். காவல் - செவிலித் தாயர். மடந்தையை ஆட்டித் தீட்டிப் பெய்து உடீஇத் தாங்கு என்க. 136-138. இங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் - இவ்விடத்து என்னோடு கூடி வந்த இளங்கொடி போலும் இக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகளை முன்னர் நிலமகளும் கண்டறியாள். அடியை மண் மகள் அறிந்திலள் என்றது இவள் அகம் விட்டுப் புறம்போகாமையான் என்க, இனி, இவளுடைய அடியின் மென்மையை உணர்ந்து அதற்கேற்ப மண்மகள் தானும் மென்மையை அடைந்தாளிலள் எனவும், கால்கள் கொப்புளங்கொண்டு நிலத்திற் பாவாமையின் அவற்றைக் கண்டிலள் எனவும் பொருள் கொள்ளக் கிடந்தமையும் காண்க. 139-148. கடுங் கதிர் வெம்மையின் காதலன் தனக்கு - ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்பமுற்ற தன் கணவன் பொருட்டு, நடுங்கு துயர் எய்தி நாப் புலர வாடி - கண்டார் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் புலர வாட்டமுற்று, தன் துயர் காணாத் தகை சால் பூங்கொடி - தனது வழி நடைத் துன்பத்தினைச் சிறிதும் உணராத தகுதி மிக்க பூங்கொடிபோல் வாளாகிய, இன் துணை மகளிர்க்கு இன்றியமையா - தம் கணவர்க்கு இனிய துணையாகப் பொருந்திய பெண்களுக்கு இன்றியமையாத, கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது - கற்பாகிய கடனை மேற்கொண்ட இத் தெய்வமே யல்லாது, பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால் - வேறு பொலி வினையுடைய தெய்வம் ஒன்றினை யாம் காணேம், வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது - பருவ மழை பெய்தலினும் தவறாது நில வளமும் பிழையாது, நீள் நில வேந்தர் கொற்றம் சிதை யாது - பெரிய நிலப் பரப்பினை ஆளும் மன்னரது வெற்றியும் அழிவுறாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு - கற்புடை மகளிர் வாழும் நாட்டின்கண், என்னும் அத் தகு நல் உரை அறியாயோ நீ - என்று பெரியோர் கூறும் அத் தகுதி வாய்ந்த நல்ல மொழியை நீ உணராயோ ; வெம்மையினால் துன்புற்ற என ஒரு சொல் வருவிக்க. காதலன் துயர்கண்டு தன் துயர் காணாளாயினாள், கற்புக் கடம் பூண்டோளாகலான் ; என்னை? 1"ஓங்கல் வெற்ப, ஒருநாள் விழும முறினும் வழிநாள், வாழ்குவ ளல்ல ளென்றோழி" எனவும் கூறுவராகலான். பூங்கொடியாகிய தெய்வம் கற்புக் கடம் பூண்ட தெய்வம் என்க. கற்புக் கடம் பூண்ட பூங்கொடியாகிய தெய்வம் எனினும் அமையும். இருந்த நாட்டின்கண் பொய்யாது அறியாது சிதையாது என்க. இனி, நாடு பொய்யாது, அறியாது, சிதையாது என முடித்தலுமாம். 149-150. தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் - தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருளைக் காக்கும் காவல் எளிதாயினும், மிகப் பேர் இன்பம் தரும் அது கேளாய் - மிகப் பெரிய இன்பத்தினை அளிக்கும் அதனை நீ'a6 கேட்பாயாக ; அடைக்கலம் - அடைக்கலப் பொருளைப் பேணல். சிறிது - ஈண்டு எண்மைப் பொருட்டு. 151-155. காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள் - தோட்டக் கூறுகளையுடைய காவிரிப்பூம்பட்டினத்துள், பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல் - மலர் விரிந்த அசோகின் பொதுமை நீங்கிய அழகிய நிழற்கண்ணே, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - சாவகர் பல்லோர் ஒன்று சேர்ந்து இட்ட, இலகு ஒளிச் சிலாதலம்மேல் இருந்தருளி - விளங்குகின்ற ஒளியினையுடைய சிலாவட்டத்தின்மேல் எழுந்தருளி, தருமம் சாற்றும் சாரணர் தம்முன் - அறவுரை கூறுகின்ற சாரணர் முன்பாக ; படப்பைக் காவிரிப்பட்டினம் என்க. 2"காவிரிப்பட்டினம் கடல்கொளும்" என்றார் பிறரும். இனி, காவிரியைத் தோட்டக் கூற்றிற்கு எல்லையாகவுடைய பட்டினம் என்றலும் பொருந்தும். நிழலின் பொதுமை நீங்கலாவது ஏனையவற்றின் நிழல் சாயவும் தான் ஒன்றே சாயாது நிற்றலாம். 3"உலக நோன்பிக ளொருங்குடனிட்ட, விலகொளிச் சிலாதலம்" என்றார் முன்னும். உலக நோன்பி கள் - இல்லறத்திலிருந்து விரதங் காப்போர். 156-160. திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் - வான வில்லைப் போன்று ஒளிவிட்டு விளங்குகின்ற மேனியை யுடையனாய், தாரன் - பூமாலையை உடையனாய், மாலையன் - மணி மாலையை உடையனாய், தமனியப் பூணினன் பொன்னாற் செய்த அணி கலங்களை அணிந்தவனாய், பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - இவ்வுலக மக்கள் காணவொண்ணாத தேவர் பலரும் வணங்கும் தெய்வ வடிவத்தினை யுடையவனாகிய, கருவிரல் குரங்கின் கை ஒரு பாகத்து - ஒரு பாகத்துக் கை கரியவிரலையுடைய குரங்கின் கையாகவுடைய, பெருவிறல் வானவன் வந்து நின்றோனை - பெரிய வெற்றியினை யுடைய தேவனொருவன் ஆங்கண் வந்து நின்றவனை ; திருவில் - வானவில். வானவில் இன்ன காலத்து இவ்வாறு தோன்றும் என்பது அறியப்படாதவாறு போலத் தேவனுடைய வரவும் அறியப்படாமையான் "திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என்றார் எனலுமாம் ; என்னை? 1"வானிடு வில்லின் வரவறியா வாய்மையான்" என்றார் பிறருமாகலான். காணா - முன் கண்டறியாத என்றலுமாம். 2"தாரன் மாலையன் தமனியப் பூணினன், பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்" என்றார் மணிமேகலையினும். தாரன் மாலையன் என்பதனைத் தாரமாலையன் எனப் பாடமோதி, மந்தார மாலையையுடையவன் எனினும் பொருந்தும், படிமை - தெய்வ வடிவு. விறல் - வெற்றி ; ஆவது தேவனாயது. நின்றோன் - வினைப்பெயர். 161-162. சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - உலக நோன்பிகள் யாவரும் சாரணரை வணங்கி, ஈங்கு யாது இவன் வரவு என - இவ்விடத்து இத் தேவனுடைய வருகை யாதனைக் கருதியதாகும் என்று கேட்க, இறையோன் கூறும் - சாரணர் தலைவன் கூறுவானாயினன், (கூறுபவன்) ; முன்னர்ச் சாரணர் எனப் பன்மை கூறிப் பின்னர் இறையோன் என ஒருமை கூறியது அவர்களுள் தலைவனே மக்களுக்கு அறிவுறுத்துவன அறிவுறுத்துவானாகலின் என்க. முன்னரும், 3"தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற............சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்" எனக் கூறினமை காண்க. 163-191. எட்டி சாயலன் இருந்தோன் தனது -எட்டிப்பட்டத் தினையுடைய இல்லறத்திருந்தோனாகிய சாயலன் என்ற பெயரை யுடையானது, பட்டினி நோன்பிகள் பலர் புகும் மனையில் - பட்டினி விட்டுண்ணும் விரதிகள் பலரும் வந்து சேர்கின்ற இல்லத்தின்கண், ஓர் மா தவ முதல்வனை - பெரிய தவத்தான் மேம்பட்ட ஒருவனை, மனைப் பெருங் கிழத்தி - இல்லறத்திற்குத் துணையாகிய அச் சாயலனுடைய மனைவி, ஏதம் நீங்க எதிர் கொள் அமயத்து - தம் தீவினை ஒழிய எதிர்கொண்டு அழைத்த சமயத்து. ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு - அவ்வூர்க் கணுள்ள சிறியதோர் குரங்கு அச்சத்தான் ஒதுங்கி அம் மனையினுள்ளே நுழைந்து, பாற்படு மாதவன் பாதம் பொருந்தி - அருளறத்தின் பாற் பட்ட அம் மாதவனுடைய திருவடிகளை வணங்கி, உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் - அவன் உண்டு ஒழித்த சோற்றினையும் ஊற்றிய நீரையும், தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி - நீங்காத விருப்பினால் சிறிதளவு உண்டு பசி ஒழிந்து. எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை - இன்பத்தோடு எதிராக இருந்து தன் முகத்தை நோக்கிய தன்மையை, அதிராக் கொள்கை அறிவனும் நயந்து - நடுக்கமில்லாக் கோட் பாட்டினையுடைய மாதவனும் விரும்பி, நின் மக்களின் ஓம்பு மனைக்கிழத்தீ என - இல்லறத்திற்கு உரியவளே இக் குரங்கினை நின் மக்களை ஓம்புதல் போலக் காப்பாயாக என்றுரைக்க, மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி - அம் மேலோன் கூறிய உண்மை மொழியினைக் காத்து, காதற் குரங்கு கடை நாள் எய்தவும் - அன்பு நிறைந்த அக் குரங்கு இறந்த பின்னரும், தானம் செய்வுழி - தானம் செய்யும்போது, அதற்கு ஒரு கூறு தீது அறுகென்றே செய்தனள் ஆதலின் - அக் குரங்கிற்கு ஒரு பகுதித் தானத்தை அதன் தீய பிறவி ஒழிகவென்று கருதிச் செய்து வந்தாள் ஆகலான், மத்திம நல் நாட்டு வாரணம் தன்னுள் - நல்ல மத்தி மதேசத்துள்ள வாரணவாசி என்னும் நகரத்து, உத்தர கௌதற்கு ஒரு மகன் ஆகி - உத்தர கௌத்தன் என்னும் ஒருவனுக்கு ஒப்பற்ற புதல்வனாய், உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி - அழகினானும் செல்வத்தானும் அறிவானும் மேம்பட்டு விளங்கி, பெருவிறல் தானம் பலவும் செய்து- பெரிய வென்றியோடு தானங்கள் பலவற்றையும் செய்து, ஆங்கு எண்ணால் ஆண்டின் இறந்த பிற்பாடு - அப் பிறவியிலே முப்பத்திரண்டாவது ஆண்டில் இறந்த பின்னர், விண்ணோர் வடிவம் பெற்றனன் - தேவர் வடிவத்தினை அடைந்தனன், ஆதலின் - ஆகையால், பெற்ற செல்வப் பெரும்பயன் எல்லாம் - அங்ஙனமாய செல்வத்தினைப் பெற்ற பெரிய பயன் யாவும், தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு என - தன்னைக் காத்து அளிசெய்தவள் செய்த தானத்தின் மிகுதியான் ஆம் என்று உட்கொண்டு, பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டு ஒரு பாகத்து - முன்னைப் பிறவியில் பொருந்திய கருங் குரங்கின் கை வடிவான சிறிய கையை ஒரு பாகத்தே கொண்டு, கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ் வடிவு - தானம் செய்யும் கோட்பாட்டிலே கூடிய சாயலனுடைய மனைவி முன்னாளிற் செய்த தானத்தின் பயனால் இவ் வடிவத்தைப் பெற்றேன், அறிமினோ என - நீவிர் இதனை அறியுங்கள் என்று, சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட - உலக நோன்பிகள் யாவர்க்கும் காட்டி அறிவுறுத்த, தேவ குமரன் தோன்றினன் எனலும் - இத் தெய்வ குமாரன் இங்ஙனம் தோன்றினான் என்று கூறவும் ; எட்டி - வணிகர்க்கு அரசரளிக்கும் சிறப்புப்பெயர். இருந் தோன் என்றது இக் கூறிய இடத்திருந்தோன் எனலுமாம். இருந்தோன் தனது மனை பலர் புகு மனை என்க. பாற்படு மாதவன் என்பதற்குத் தன்பாற்பட்ட தவத்தையுடையான். எனலும் பொருந்தும். மிச்சில் - எச்சில், எச்சில் உணவு. தண்டா வேட்கை-பசி என்ப. முகம் நோக்கிய செவ்வி, மெய்ம்மொழியை ஓம்புதலாவது அவர் மொழிந்ததற்குப் புறம்பாக நடவாது அதற்கு அடங்கி அக் குரங்கினைப் போற்றலாம். இனி, மெய்ம்மொழி ஓம்பி என்பதற்கு மெய்ம் மொழியின் படியே அக் குரங்கினைக் காத்து என்றலும் பொருந்தும். 'மக்களின் ஓம்பு' என்றதனால் தானம் செய்வுழி அதற்குரிய ஒரு பகுதியைச் செய்தனள் என்க. தீது - தீவினையுமாம். கடைநாள் - இறப்பு. உத்தரன் கவிப்பன் எனப் பாடமோதிக் கவிப்பன் என்னும் வணிகனுக்கு உத்தரன் என்னும் பெயரோடு ஒரு மகனாகி எனவும், கவிப்பன் - பசு மறையத் தேடின பொருளுடையவன் எனவும் உரைப்பாருமுளர். மக்களிடத்து அழகும் அறிவும் ஆக்கமும் மூன்றும் ஒருங்கே தோன்றுதல் அரிதாகலான், "உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி" என்றார். தானம் பல செய்தற்குப் பலருடைய உள்ளம் ஒருப்படாவாகலான் அங்ஙனமின்றி ஒருப்பட்டுச் செய்யும் தானத்தினைப் "பெருவிறற் றானம்" என்றார். உடையான் தொழில் உடைமை மேல் ஏற்றப்பட்டது. பிற்பாடு - பின்னர். 1"பெண்ணணி கோலம் பெயர்ந்த பிற்பாடு" என்றார் முன்னும். தானச் சிறப்பு - தானத்தாற் பெற்ற சிறப்பு என்றலும் அமையும். 192-197. சாரணர் கூறிய தகைசால் நன்மொழி - சாரணர் மொழிந்த தகுதி யமைந்த நல்ல அறவுரையை, அன்று - அந் நாளில், ஆர் அணங்கு ஆக அறந்தலைப்பட்டோர் - மறை மொழியாகக் கொண்டு அறத்துவழி நின்றோராகிய, அப் பதியுள் அருந்தவ மாக்களும் - அந் நகரத்துக்கண் அரிய தவமுடையோரும். தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் - தனக்கென வாழாத வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும், இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும், முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர் - குறைவிலா இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்; ஆரணங்காக என்பதற்குத் தெய்வத் தன்மையோடு கூடியதாக எனலுமாம் . தன் தெறல் வாழ்க்கை - தான் என்னுந் தன்மையைக் கெடுத்த வாழ்க்கை ; தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை, இட்ட தானம் - குரங்கின் பொருட்டுச் செய்த தானம். முட்டா இன்பம் - தடையிலா இன்பம், நிறைந்த இன்பம். வீட்டுலகினும் முடிவான வேறு உலகம் இன்மையான் அவ்வுலகு முடிவுலகு எனப்பட்டது. இது தானத்தின் சிறப்பிற்கு மேற்கோளாகும். 198-200. கேட்டனை ஆயின் - தானத்தின் சிறப்பினை உணர்ந்து அதனை உடன்பட்டாயாயின் இத் தோட்டார் குழலி யொடு - இந்தத் தொகுதி கொண்ட கூந்தலை யுடையாளொடு, நீட்டித்து இராது - தாழ்க்காது, நீ போகென்றே கவுந்தி கூற - நீ செல்வாயாக என்று கவுந்தியடிகள் சொல்ல, உவந்தனள் ஏத்தி - தான் பெற்ற அடைக்கலத்தின் பொருட்டு மகிழ்ந்து கவுந்தியடிகளைப் போற்றி; தோடார் எனற்பாலது தோட்டார் என விகாரமாயிற்று. தோடு - மலர் எனினும் அமையும். 201-206. வளர் இள வனமுலை - வளர்கின்ற இளமை பொருந்திய அழகிய முலையினையும், வாங்கு அமை பணைத்தோள் - மூங்கிலின் அழகைக் கவரும் பெரிய தோளினையும், முளை இள வெண்பல் - இளைய நாணல் முளை போலும் வெள்ளிய பற்களையும், முதுக்குறை நங்கையொடு - பேரறிவினையு முடைய கண்ணகியோடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து - மேல் கடலிற் சென்று சேர்ந்த ஞாயிற்றின் ஒளி சென்று ஒடுங்கும் பொழுதில், கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப - கன்றினை நினைந்து வரும் பசுக்களின் முழங்கும் குரல் ஒலிப்ப, மறித்தோள் நவியத்து உறிக்காவாளரொடு - ஆட்டுக் குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறியைக் காவிய இடையர்களோடு, செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ - நிறைந்த வளையலை அணிந்த இடைச்சியர் சிலர் இவள் புதியளாய் இருத்தலின் புறத்தே சூழ்ந்துவரா நிற்ப; வாங்கு அமை - வளைந்த மூங்கிலுமாம். முளை - நாணல் முளை. முதுக்குறை - பேரறிவு. செல்சுடர் - சுடர் செல் என்க. மறி நவியத்தோள் என மாறுக. காவுதல் - தோளிற் சுமத்தல்; உறி கட்டின காவையுடைய எனலுமாம். இவள் அழகு கண்டு புறத்தே சூழ்ந்தார் என்றலும் பொருந்தும். 207-217. மிளையும் - காவற்காடும், கிடங்கும் - அகழியும், வளைவிற் பொறியும் - வளைந்து தானே எய்யும் இயந்திர வில்லும், கருவிரல் ஊகமும் - கரியவிரலினையுடைய கருங்குரங்கு போன்ற பொறியும், கல் உமிழ் கவணும் - கல்லினை வீசுகின்ற கவணும், பரிவு உறு வெந்நெயும் - சேர்ந்தாரைத் துன்புறுத்துகின்ற வெம்மை மிக்க நெய்யும், பாகு அடு குழிசியும் - செம்பினை உருக்குகின்ற குழிசிகளும், காய்பொன் உலையும் - இரும்பு காய்ந்து உருகற்கு வைத்த உலைகளும், கல் இடு கூடையும் - கல் நிறைய இடப் பெற்ற கூடைகளும், தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிய கருவிகளும், தொடக்கும் - கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்தலை அடுப்பும் - ஆண்டலைப் புள் வடிவாகச் செய்த அடுப்புகளும், கவையும் - அகழியினின்று ஏறின் தள்ளுகின்ற இருப்புக் கவைகளும், கழுவும் - கழுக் கோலும், புதையும் - அம்புக் கட்டுகளும், புழையும் - ஏவறை களும், ஐயவித் துலாமும் - தன்னை நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், கை பெயர் ஊசியும் - மதிலின் தலையைப் பற்றுவார் கையை நடுங்கச்செய்யும் ஊசிப் பொறிகளும், சென்று எறி சிரலும் - பகைவர்மேற் சென்று தாக்கும் சிச்சிலிப் பொறியும், பன்றியும் - மதிற்கண் ஏறினாரைக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப் பொறியும், பணையும் - மூங்கில் வடிவாகப் பண்ணி அடித்தற்கு வைத்த பொறிகளும், எழுவும் சீப்பும் - கதவிற்கு வலியாக உள்வாயிற்படியிலே நிலத்திலே வீழ விடுமரங்களும், முழு விறற் கணையமும் - மிக்க வலிபொருந்திய கணைய மரங்களும், கோலும் -எறிகோலும், குந்தமும் - சிறுகவளமும், வேலும் - ஈட்டி முதலியனவும், ஞாயிலும் - குருவித் தலைகளும், பிறவும் - மதிற்குரிய ஏனைய பொறி முதலியனவும், சிறந்து - மிகுந்து; வெந்நெய் - கொதிக்க வைத்த நெய், பாகு அடு குழிசி - சாணகங் கரைத்துக் காய்கிற மிடா எனவும் செம்புருக்கு எனவும் கூறுப. வெந்நெய் முதலிய மூன்றும் மதிலைப் பற்றுவார்மீது இறைத்தற் கமைந்தன. கல்லிடு கூடை என்பதற்கு இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை எனவும், தொடக்கு எனபதற்குக் கயிற்றுத் தொடக்கு எனவும். ஆண்டலை அடுப்பு என்பதற்கு ஆண்தலைப் புள் வடிவாகச் செய்யப்பட்ட பொறி நிரைகள் எனவும் கூறுவர். ஐயவித்துலாம் தலையை நெருக்கித் திருகும் என்பதனை, 1"விற்பொறிகள் .........மரநிலையே" என்னும் சிந்தாமணிச் செய்யுளின் நச்சினார்க்கினியர் உரையானுணர்க. இனி, இதற்கு, கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே கற்கவி தொடங்கித் தூக்கப்படும் மரம் எனவும், பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமெனவும், சாணம்புக் கூடு எனவும், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்ச்திரம் எனவும் பொருள் கூறுப. கை பெயர் ஊசி - கையைக் கெடுக்கும். ஊசி; கையை அப்புறப்படுத்தும் ஊசி; நிரைக்கழு எனலும் பொருந்தும். கதவு திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ் சீப்பும் என்றார். கணையம் - சீப்பு அகப்படக் குறுக்கே போடப்படும் மரமுமாம். ஞாயில் - ஏப் புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு என்பர் நச்சினார்க்கினியர். (சீவக, 105. செய்யுள் உரை நோக்குக). பிற என்றது களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலியனவாம். 217-219. நாள் கொடி நுடங்கும் - நாள்தோறும் பகைவரை வென்று வென்று உயர்த்திய கொடிகள் அசையும், வாயில் கழிந்து - மதில் வாயிலைக் கடந்து, தன் மனை புக்கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென் - இடையர் குலத்தாளாகிய மாதரி அடைக்கலம் பெற்ற கொள்கையொடு பொருந்தித் தன் மனைக்கண் புக்காள் ; நாள் கொடி - நல்ல நாளில் எடுத்த கொடியுமாம். ஆல்-அசை. சிறந்து நுடங்கும் வாயில் என்க. மா நகர் கண்டு பொழிலிடம் புகுந்து கோவலன் கூறுழி மாடலன் என்போன் புகுந்தோன்றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன் கருணை மறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன்கொல் போந்தது நீயென வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மா நகர் புகுக என மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை, மாதரி என்போள் ஐயையைக் கண்டு அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித் தாங்கு, அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந்தன்னுள் சாரணர் தம்முன் குரங்கின் கையொருபாகத்து வானவன் வந்து நின்றோனை யாது இவன் வரவு என, இறையோன் தேவகுமரன் தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர் ; கேட்டனையாயின் நீ போகென்று கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து மனைபுக்கனள் என முடிக்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா. அடைக்கலக் காதை முற்றிற்று. 16. கொலைக்களக் காதை (மாதரி கண்ணகியையும் கோவலனையும் புதிய மனை யொன்றில் இருத்தித் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாக வைத்து அடிசிலாக்குதற்கு வேண்டும் பொருள்களை அளிக்க, கண்ணகி நன்கு சமைத்துக் கணவனை முறைப்படி உண்பித்து அவற்கு வெற்றிலை பாக்கு அளித்து நின்றனள்ச். அப்பொழுது கோவலன் கண்ணகியை அருகணைத்து 'நீ'a6 வெவ்விய காட்டிலே போந்ததற்கு என் தாய் தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ' என்று கூறி, தான் முன் நெறி தவறி நடந்தமைக்கு இரங்கி, `ஈங்கு என்னொடு போந்து என் துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற் பின் செல்வி! நான் நின் சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டுபோய் விற்று வருவேன்; மயங்காதிரு' எனத் தேற்றி, அரிதின் நீங்கிச் செல்வானாயினன். செல்பவன் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின்வர முன்வந்த ஒரு பொற்கொல்லனைக் கண்டு, விற்பதற்குத் தான் கொணர்ந்த சிலம்பினைக் காட்ட, அப் பொற்கொல்லன் அரசன் மனைவியின் சிலம்பொன்றைக் கவர்ந்தவனாதலால் தனது களவு வெளிப்படு முன் இச் சிலம்பால் தன்மீது உண்டாகும் ஐயத்தைத் தவிர்க்கலாமெனத் துணிந்து `கோப்பெருந்தேவி அணிதற்கேற்ற இச் சிலம்பினை நான் அரசனுக் கறிவித்து வருங்காறும் இவ்விடத்திருப்பீர்' எனத் தன் மனையின் பக்கத்திலுள்ள கோயிலில் இருத்திச் சென்றனன். சென்றவன், தன் தேவியின் ஊடல் தணித்தற் பொருட்டு அவள் கோயிலை நோக்கிச் சென்றுகொண் டிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு, `கோயிலில் இருந்த சிலம்பினைத் திருடிய கள்வன் அச் சிலம்புடன் அடியேன் குடிலில் வந்துளான்' என்று கூற, அரசன், `அவனைக் கொன்று அச் சிலம்பினைக் கொணர்வீர்; எனக் காவலாளர்க் குரைத்தனன். பொற் கொல்லன் மகிழ்ந்து அக் காவலாளருடன் சென்று கோவலனை அணுகி, `அரசன் ஏவலாற் சிலம்பு காண வந்தோர் இவர்' எனக் கூறி, அச் சிலம்பினைக் காட்டுவித்து, ‘முகக்குறி முதலியவற்றால் இவன் கள்வனல்லன்' என்று கூறியவர்களை இகழ்ந்துரைத்து, களவு நூல் கூறும் ஏதுக்களை யெல்லாம் எடுத்துக் காட்டி அவனைக் கள்வனென்று வற்புறுத்தினன் ; அப்பொழுது அறிவற்ற தறுகணனொருவன் தன் கை வாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன். (இதில், கண்ணகி கோவலனை உண்பித்ததும், கோவலன் கூற்றுக்கு மறு மொழி கூறியதும் அவளது உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன.) அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் 5 பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் 10 ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது 15 மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் சாவக நோன்பிக ளடிக ளாதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் 20 அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் நெடியா தளிமின் நீரெனக் கூற இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் 25 வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் 30 கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித் 35 தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி 40 மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் 45 உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் 50 தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளற்கு 55 அம்மென் திரையலோ டடைக்கா யீத்த மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி 60 எம்முது குரவர் என்னுற் றனர்கொல் மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வருமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் 65 பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு 70 எழுகென எழுந்தாய் என்செய் தனையென அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் 75 மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலுமென் 80 வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் 85 அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் 90 நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை 95 ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் பல்லான் கோவல ரில்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் 100 இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் 105 கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற 110 பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் 115 கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் 120 பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக் 125 கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப் புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் 130 கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத் 135 தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் 140 காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் வீழ்ந்தனள் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக் கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும் துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் 145 கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைவிளை கால மாதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகி 150 ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் 155 ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச் 160 செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்று கூறும் அருந்திறன் மாக்களை அகநகைத் துரைத்துக் 165 கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது 170 மருந்திற் பட்டீ ராயின் யாவரும் பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின் 175 கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும் 180 தந்திர கரணம் எண்ணுவ ராயின் இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யார்காண் கிற்பார் காலங் கருதி அவர்பொருள் கையுறின் 185 மேலோ ராயினும் விலக்கலு முண்டோ கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்காண் கிற்பார் இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை 190 தூதர்கோ லத்து வாயிலின் இருந்து மாதர்கோ லத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் 195 துயில்கண் விழித்தோன் தாளிற் காணான் உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக் 200 கண்டோ ருளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் குண்டோ வுலகத் தொப்போ ரென்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் 205 கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவஎன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் 210 அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் உரியதொன் றுரைமின் உறுபடை யீரெனக் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப 215 மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை யுருத்தென். நேரிசை வெண்பா நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தான் - மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. உரை 1-2. அரும் பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற - பெறுதற்கு அரிய பாவை போல்வாளாய கண்ணகியை அடைக்கல மாகப் பெற்ற, இரும் பேர் உவகையின் இடைக்குல மடந்தை - மிக்க பெரிய மகிழ்ச்சியினையுடைய இடைக்குலத்துத் தோன்றிய மாதரி; அரும் பெறல் - பெறலரும் என மாறுக. மடந்தை - ஈண்டுப் பருவங் குறியாது பெண்பாலை உணர்த்தி நின்றது. தான் அடைக்கலங்காக்கப் பெற்றமையால் இரும்பேருவகை எய்தினாள் என்க. 3-6. அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு - மோரினை விற்றுப் பெறும் பொருளால் உண்டு வாழும் வாழ்க்கையினையுடைய இடைச்சியரோடு, மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி - கட்டு வேலி சூழ்ந்த இடையர்களது இருக்கைக்கண் அன்றி, பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க் காவற் சிற்றில் கடி மனைப் படுத்து - அழகு மாட்சிமைப்பட்ட பந்தரினையும் காவலினையுமுடைய செம்மண் பூசிய சிறு வீடாகிய விளக்க மமைந்த மனைக்கண் சேர்த்து; மிளை கோவலரிருக்கைக்கும், காவல் மனைக்கும் கொள்க, பூவல்- செம்மண்; 1"இல்பூவலூட்டி" என்றார் பிறரும். கடி-விளக்கம். 7-8. செறி விளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி - செறிந்த வளை யினை அணிந்த இடைச்சியர் சிலருடன் சேர்ந்து, நறுமலர்க் கோதையை நாள் நீர் ஆட்டி - மணமுள்ள மலர் மாலையை அணிந்த கண்ணகியைப் புது நீரானே குளிப்பாட்டி ; நாள் நீர் - புதிய நீர். 9-14. கூடல் மகளிர் கோலங் கொள்ளும் - கூடல் நகரிடத்து மகளிர் அழகின் பொருட்டுக் கொள்ளுகின்ற, ஆடகப் பைம் பூண் அருவிலை அழிப்ப - பொன்னாற் செய்த பசிய பூணின் அரிய உயர்ச்சியைக் கெடுத்தற்கு, செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இயற்கை யழகுடன் வந்த நுமக்கு, என் மகள் ஐயைகாணீர் அடித்தொழிலாட்டி - எனக்கு மகளாய ஐயை குற்றேவல் மகளாவாள், பொன்னிற் பொதிந்தேன் - பொன்னைப் போல் அரிதாகப் போற்றுவேன், புனை பூங் கோதை என்னுடன் நங்கை ஈங்கு இருக்கெனத் தொழுது - அழகிய பூங்கோதையினை யுடைய நங்காய் என்னுடன் இவ்விடத்திருப்பா யாகவென வணங்கி ; கூடல் மகளிர் என்றாள், தானறியுமூர் அதுவாகலான். பூண்விலையை அழித்தலாவது, இவளது இயற்கை அழகு கண்டார் பூணின் நலனை இகழ்தலாம். செய்யாக் கோலம் - புனையா அழகு; ஆவது இயற்கை அழகு. இனி, கூடல் மகளிர் கொள்ளுகின்ற அரிய விலையை யுடைய ஆடகப் பைம்பூணாற் செய்த கோலம் அழித்தற்கு எனவுமுரைப்ப. நங்கை - விளி. நங்கை - மகன் மனைவியைக் குறிக்கும் முறைப் பெயரென்பர் அடியார்க்கு நல்லார். 15-17. மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி - கவுந்தியடிகள் வழிச் சேறற்கண் உளவாம் துன்பங்களை விலக்கிக் காத்து, ஏதம் இல்லா இடந்தலைப்படுத்தினள் - குற்றம் சிறிதுமில்லா விடத்துக் கூட்டினாள், நோதகவு உண்டோ நும் மகனார்க்கு இனி- ஆகலான் நும் கணவனுக்கு இனி இவ்விடத்து உளக் கவலை யுறுதல் உண்டோ என்று சொல்லி ; தலைப்படுத்தல் - கூட்டுதல். நோவு தகவு, நோதகவு ஆயிற்று என்ப. மகன் - கணவன்; 1"நினக்கிவன் மகனாய்த் தோன்றிய தூஉம்" என்றார் மணிமேகலையினும். உண்டோ - ஒ, எதிர்மறை. என்று சொல்லி என வருவித்துரைக்க. 18-21. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ; சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்தில் ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீடித்தல் இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது அளிமின் எனக் கூற என்க. 22-28. இடைக்குல மடந்தையர் - ஆயர் குலத்து மகளிர். இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு - மாதரி கூறிய தன்மை யிற் குறையாத சமைத்தற் குரிய கலங்களுடனே, மாண்புடை மரபிற்கோளிப் பாகற் கொழுங் கனித் திரள்காய் - மாட்சிமை யுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும், வாள்வரிக்கொடுங்காய் - வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக் காயும், மாதுளம் பசுங்காய் - கொம்மட்டி மாதுளையின் இளங்காயும், மாவின் கனியொடு வாழைத் தீங்கனி - மாம்பழமும் இனிய வாழைப்பழமும், சாலி அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை, தம்பாற் பயனொடு - தம்குலத்திற்குரிய பாலுடனும் நெய்யுடனும், கோல் வளை மாதே கொள்கெனக் கொடுப்ப - திரண்ட வளையலை யணிந்த மாதே கொள்வாயாக வென்று சொல்லிக் கொடுக்க ; பெரியோர் சொல்லாமலே செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப்பாகல் எனப்பட்டது. 1"சொல்லாம லேபெரியர் சொல்லிச் சிறியர்செய்வர், சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல, குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற், பலாமாவைப் பாதிரியைப் பார்" என்பது அறியற்பாலது. கோளி - பூவாது காய்க்கும் மரம். பாகல் - பலா. கோளிப்பாகல் : வெளிப்படை. கனிக்காய் - கனிக்கு ஆன காய், முதிர்ந்த காய் : இதனை இக்காலத்துச் செங்காய் என்ப. வால் வரிக் கொடுங்காய் எனப் பாடங் கொண்டு, வெள்வரிக்காய் என்பர் அரும்பத உரை யாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய் புளித்த கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும். 29-34. மெல் விரல் சேப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய - அங்ஙனம் அவர் கொடுத்த பலவேறு வகைப்பட்ட பசிய காய்களைத் தனது மெல்லிய விரல்கள் சிவக்கும் வண்ணம்வளைந்த வாயினையுடைய அரிவாளால் அரிதலைச் செய்ய, திருமுகம் வியர்த்தது - அழகிய முகம் வியர்த்தது, செங்கண் சேந்தன - செவ்வரி பொருந்திய கண்கள் சிவந்தன, கரிபுற அட்டில் கண்டனள் பெயர - கரிந்த இடத்தையுடைய அட்டிலைக் கண்டனளாய் முகம் மாறி? வை எரிமூட்டிய ஐயை தன்னொடு - வைக்கோலால் தீ மூட்டிய ஐயையுடன் கை அறிமடைமையிற் காதலற்கு ஆக்கி - தன் கை வல்ல அளவாலே கணவனுக்குச் சமைத்து; கொடுவாய்க்குயம் - வளைந்த வாயினையுடைய அரிவாள். 1"கூனிக்குயம்" என்றார் பிறரும். விடுவாய் செய்தல் - அரிதல். முகம் வியர்த்தது பசுங்காய் அரிந்தமையானும், செங்கண் சேந்தமை அட்டில் கண்டமையானும் என்க. கண்டனள்; முற்றெச்சம். தீ மூட்டுவார் முதலில் வைக்கோலால் மூட்டுவர். மடைமை - அடிசில் அடுதற்றன்மை. 35-43. தாலப் புல்லின் வால்வெண் தோட்டு - பனையாகிய புல்லினது மிக வெள்ளிய ஓலையினால், கைவல் மகடூஉ கவின் பெறப் புனைந்த - கைத்தொழில் வல்ல மகள் அழகு பெறச் செய்த, செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின் - தொழிற் பாடமைந்த தவிசின்கண் கோவலன் அமர்ந்த பின்னர், கடி மலர் அங்கையிற் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி - சுட்ட மண்கலங் கொண்டு காதலன் அடிகளைக் கழுவிய நீரை விளக்கமமைந்த மலர் போலும் அகங்கையால் வணங்கி மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப் பனள்போல் - நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி - தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து ஈங்கு அமுதம் உண்க அடிகள் ஈங்கு என - ஈனாத வாழையின் குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல; பனை புறக்காழ்த்து ஆகலான் புல் எனப்பட்டது. தவிசு - தடுக்கு எனப்படும். அகம்+கை - அங்கை. அடிநீர் - அடியைக் கழுவியநீர். சுடுமண் மண்டை என்ற குறிப்பு இவள் முன்பெல்லாம் பொன், வெள்ளி முதலியவற்றானாய கலங்களை வழங்கினாள் என்பதுணர்த்தி நின்றது. தொழுதனள் - முற்றெச்சம். மண்ணக மடந்தைக்கு மயக்கம் இவர்க்கு மேல் வரும் தீங்கு நோக்கி உண்டாயது என்க. இனி மயக்கம் - அனந்தல் எனவுமாம். குமரி வாழை - ஈனாத தலை வாழை. ஈங்கு இரண்டனுள் ஒன்று அசை. ஆக்கி, இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்கவென என்க. 44-53. அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் உரியவெல் லாம் ஒருமுறை கழித்து - அரிய மறையினிடத்து அரசர் பின்னோராய வணிகர்க்கு உரியனவாகக் கூறிய பலியிடல் முதலிய வற்றை ஒரு முறையாற் கழித்து, ஆங்கு ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு - இம் மதுரைக்கண் ஆயர் பாடியில் நல்ல அமுதினை யுண்ணும் நம்பியாகிய கோவலன் அம் மதுரைக்கண் ஆயர்பாடியில் அசோதை என் பாள் பெற்றெடுத்த அந்த நல்லமுதமுண்ணும் புதிய காயாம் பூப்போலும் நிறத்தினையுடைய கண்ணனோதான், பல்வளைத் தோளியும் - இவன் துயர் தீர்த்த இப் பலவாகிய வளையலை அணிந்த தோளினையுடையாளும், பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணிவண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - முன்னர் நம் குலத்துத் தோன்றிய தூய நீலமணி போலும் நிறமுடைய மாயோனைக் காளிந்தி யாற்றின்கண் துயர் தீர்த்த நப்பின்னை என்னும் விளக்கோதான் என்று, ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி- ஐயையும் அவள் தாய் மாதரி யும் வியப் புற்று, கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என - இவருடைய அழகு நம் கண்களின் அடங்காவென்று புகழ்ந்து கூற; அரசர் பின்னோர் - வணிகர், தன்னூரிற் செய்வன வெல்லாம் செய்யப் பெறாமையான் ஒருமுறை கழித்து என்றார். ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி ஆங்கு அசோதை பெற்றெடுத்த மலர் வண்ணன் கொல்லோ என மாறுக. நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க. 54-56. உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு - இனிதே உணவுண்டு தங்கிய உயர்ந்த பெருமையுடையோனாகிய கோவலனுக்கு, அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த - அழகிய மெல்லிய வெற்றிலையோடு பாக்கினையும் தந்த, மையீர் ஓதியை வருகெனப் பொருந்தி - கரிய குளிர்ந்த கூந்தலையுடை யாளை வருகவென்று அருகணைத்து ; ஒருமுறை கழித்து உண்டினிதிருந்த பேராளன் என முடிக்க. திரையல் - வெற்றிலைச் சுருள். ஓதி - ஆகுபெயர். 57-62. கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தை மெல்லடி என - மடந்தையின் மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த நெறியாகிய அருவழியைக் கடப்ப தற்குச் சிறிதாவது வன்மையையுடையனவோ என்று நினைந்து, வெம்முனை அருஞ்சுரம் போந்ததற்கு இரங்கி - வெம்மையையுடைய மறவர் ஆறலைக்கும் முனைகளையுடைய அரிய சுரத்து நெறியிற் போந்தமைக்கு இரக்கங்கொண்டு, எம் முது குரவர் என் உற்றனர் கொல் - எம்முடைய இரு முதுகுரவரும் எந் நிலையை அடைந்தனரோ, மாயங் கொல்லோ - யான் இங்ஙன முற்றது கனவோ, வல்வினை கொல்லோ - நனவாயின் முன்செய்த தீவினையின் பயனோ, யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் - இப்பொழுது என்னுள்ளங் கலக்கமுறலான் யான் இவற்றினொன்றினையும் உணர்கின்றிலேன் ; முனை - மறவர் இருப்புக்கள்; குறும்புகள். யாவதும் வல்லுநகொல்லோ என்றது வல்லா என்றவாறு. என்னுற்றனர் கொல் - என்ன துன்பமுற்றாரோ; இறந்தனரோ. மாயம் - கனவு. யாவதும் - யாதும்; சிறிதும். 63-70. வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு - பயனிலசொல்வாரோடும் புதிய பரத்தமையை யுடையாரோடுங் கூடி, குறுமொழிக் கோட்டி நெடு நகை புக்கு - சிறு சொற் சொல்லும் இழிந்தோர் கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, பொச்சாப்பு உண்டு - மறவியிற் பொருந்தி, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு - பொருள் பொதிந்த உரை யினையுடைய பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, நன்னெறி உண்டோ - இனித் தீக் கதியன்றி நற்கதி உண்டாமோ, இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் - தாய்தந்தையர்க்கு ஏவல் செய்தலினும் வழுவினேன், சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - சிறு பருவத்தில் பெரிய அறிவினையுடையளாய நினக்கும் தீமை செய்தேன், வழு வெனும் பாரேன் - இங்ஙனம் நம் நகர் விட்டு இங்கு வருதல் குற்றமுடைத்தாம் என்பதனைச் சிறிதும் நோக்கேனாய், மா நகர் மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - நமது பெரிய நகரத் திடத்தினின்றும் இவ்விடத்து எழுக வென்று யான் கூற உடனே ஒருப்பட்டு எழுந்தனை, என் செய்தனை என - என்ன அரிய காரியஞ் செய்தனையென்று கோவலன் இரங்கிக் கூற; வறுமொழி - பொருளில் மொழி, வம்பப் பரத்தர் - புதிய காம நுகர்ச்சி விரும்புங் காமுகர். கோட்டி - கூட்டம் பொச்சாப்பு - மறதி. நச்சு - நச்சப்படும் பொருள். கொல்லல் - ஈண்டு மேற் கொள்ளாமை. ஏவல் பிழைத்தல் - தாய் தந்தையர்க்குச் செய்வன தவிர்தல்; இனி, மாதவியின் நட்பை அவர்கள் ஒழித்திடுக என்னவும் ஒழியாமையுமாம். எனும் - சிறிதும். ஈண்டு என்றது மதுரையை. இத்துணையும் தனது ஒழுக்கத்தினை வெறுத்துக் கூறி இவ் வரவிற்கு நீயும் உடன் பட்டனையே என இரங்கிக் கூறினான். 71-83. அறவோர்க்கு அளித்தலும் - சாவகர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் - பார்ப்பனரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் - துறவிகளை எதிர்க்கொள்ளுதலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினையுடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலுமாய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள் தன்னொடும் - நுமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் - பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும் உடைய மாசாத்துவான் கண்டு, முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக, அற்பு உளம் சிறந்து அருள்மொழி அளைஇ என் பாராட்ட - அதனை உணர்ந்த அவர்கள் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட, யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் - நான் என்னுள்ளத்து மறைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - எனது உண்மையல்லாப் புன்சிரிப்பிற்கு அவர்கள் உள்ளம் வருந்தும் வண்ணம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும் தீய வொழுக்கத்தினை விரும்பினீர் ஆகவும், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் - உம்முடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாத உள்ளத்து வாழ்க்கையை உடையேனாகலான், ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற; தாள் - முயற்சி. மன்பெரும் சிறப்பு - அரசனாற் பெறும் பெரிய சிறப்பு. இகத்தல் - நீங்குதல். நீர் நில்லா முனிவு என ஒரு சொல் வருவிக்க. நொடிதல் - சொல்லுதல். வாய் - உண்மை. 84-93. குடிமுதற் சுற்றமும் - குடிக்கண் முதற் சுற்றமாய் தாய் தந்தை முதலியோரையும், குற்றிளையோரும் - குற்றேவல் புரியும் மகளிரையும், அடியோர் பாங்கும் - அடியார் பகுதியையும், ஆயமும் நீங்கி - சேவிக்கும் தோழிமாரையும் விட்டு விலகி, நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக - நாணினையும் மடனையும் நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பினையும் பெருமை மிக்க துணையாகக் கொண்டு, என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த - இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த, பொன்னே கொடியே புனை பூங் கோதாய் - பொன்னையொப்பாய் கொடிபோல்வாய் அழகிய மலர்மாலையை அனையாய், நாணின்பாவாய் நீள் நில விளக்கே-நாணினையுடைய பாவையை நிகர்ப்பாய் பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தாய், கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - கற்புக்குக் கொழுந்து போல்வாய் அழகின் செல்வியே, சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன் மயங்காது ஒழிகென - நின் சிறிய அடிக்கு அணியாகிய சிலம்புகளுள் ஒன்றனை யான் கொண்டு சென்று விற்று வருவேன் ; வருந்துணையும் நீ மயங்கா திருப்பாயாகவென்று சொல்லி : அடியோர் பகுதியராவார் - செவிலித்தாய் முதலிய ஐவர் : ஆவார், ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனப்படுவார். இனி இதற்குச் சேவிக்கும் பெயர் எனவும் கூறுப. மடன் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. பேணிய கற்பு என்றது கற்புத்தான் இவளை விரும்பி வந்தடைந்தது என்ற படி. நீணில விளக்கு என்பதனை உவமை யாக்கி நிலத்தின் விளக்காகிய ஞாயிற்றினையும் திங்களினையும் விளக்கத்தால் ஒப்பாய் எனலும் அமையும். யான் போய் மாறி வருவன் என்றது மேல் நிகழும் நிகழ்ச்சியைக் குறிப்பிற் புலப்படுத்தும் மொழியாகவுளது 94-99. கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை - கரிய கயல் போலும் நெடிய கண்களையுடைய தன் காதலியை, ஒருங்குடன் தழீஇ - மெய்ம்முழுதும் தழுவி, உழையோர் இல்லாத ஒரு தனி கண்டு தன் உள்ளகம் வெதும்பி - அவளருகிலிருக்கும் தோழி முதலியோர் ஒருவரும் இல்லாத அவளது தனிமையை நோக்கித் தன் உள்ளம் கொதித்தலான், வரு பனி கரந்த கண்ணன் ஆகி - நிறைந்த நீரை மறைத்த கண்களையுடையனாய், பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி - பல பசுக்களையும் எருமைகளையும் உடைய இடையர் வீட்டினை விட்டு நீங்கி, வல்லா நடையின் மறுகிற் செல்வோன் - தளர்வுற்ற நடையோடு அவ் வீதியிற் செல்கின்றவன்; உழையோரில்லா ஒரு தனி கண்டு என்றது முன்னர் இவள் ஆயத்தார் பலரோடு கூடியிருக்கும் நிலைமையை நோக்கிக் கூறியதாகக் கொள்க. இனி, ஈண்டு ஆய்ச்சியரெல்லாம் குரவையாடப் போயினமையான் ஆண்டு ஒருவரு மில்லாமை நோக்கிக் கூறியதாக் கலுமமையும். கண்ணீரைக் கரந்தான், காதலி அது காணின் வருந்துமென்று கொண்டு. வல்லா நடை - மாட்டாத நடை. 100-101. இமில் ஏறு எதிர்ந்தது. இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன்; அது தனது குலம் உணரும் தகுதியினை உடைத் தன்று ஆகலான்; எதிர்தல் - எதிர்ப்படலுமாம். தகுதியன்று ஆகலின் அறியான் என்க. அறியான் - முற்றெச்சம். 102-104. தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து - தாதாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து, மாதர் வீதி மறுகிடை நடந்து - தளிப் பெண்டுகள் தெருவின் நடுவே நடந்து சென்று, பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் - கடைவீதியிற் செல்கின்றவன் அவ்விடத்தே; தாதெருமன்றம் - எருக்கள் துகளாகிக் கிடப்பதும், மரத்தடியு மாகிய இடம். தளிப்பெண்கள் - கோயிற்பணி செய்யும் மகளிர். வீதி மறுகு - ஒருபொருட் பன்மொழி. 105-112. கண்ணுள் வினைஞர் - உருக்குத் தட்டாரும், கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர - கைத்தொழிலில் தேர்ந்த நுட்ப வினைத்திறமுடைய பணித் தட்டாரும் நூறு பெயர் தன் பின்னே வர, மெய்ப்பை புக்கு - சட்டை அணிந்து, விலங்கு நடைச்செலவின் - விலகி நடக்கும் செலவினையுடைய, கைக்கோல் - கையின்கண் கொடிற்றினையுடைய, கொல்லனைக் கண்டனன் ஆகி - பொற்கொல்லனைக் கண்டு, தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி - பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற்றொழிலில் தேர்ந்த கொல்லனாவான் இவன் எனக் கருதி அவனை அண்மி, காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி நீ விலையிடுதற்கு ஆதியோ என - அரசன் பெருந்தேவிக்கு அணியலாவதொரு காற்சிலம்பினை நீ விலை மதிப்பிடுதற்கு வல்லையோ என்று கேட்ப; மெய்ப்பை - சட்டை. விலங்கு நடை - உயர்ந்தோரைக் காணின் விலகி நடத்தல். கைக்கோல் - கொடிறு. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற கொல்லன் எனக் கண்டான், நூற்றுவர் பின்வரலான். காற்கு அணி - காலில் அணியும் சிலம்பு. ஆதியோ - ஆவாயோ; தன் சிலம்பின் அருவிலை கருதி ஆதியோ வென்றான். பின்வரச் செல்லுதலையுடைய கொல்லன் என்க. ஒழிகெனத் தழீஇக் கண்டு வெதும்பிக் கண்ணனாகி நீங்கிச் செல்வோன் அறியான் கழிந்து நடந்து பெயர்வோன் கண்டனனாகிப் பொருந்தி ஆதியோவென என்க. இனிப் பொற்கொல்லன் கூறுவான் : 113-116. அடியேன் அறியேன் ஆயினும் - அடியேன் மகளிர் காலணியின் விலைமதித்தற்கு அறியேன் எனினும், வேந்தர் முடி முதற் கலன்கள் சமைப்பேன் யான் என - அரசர்களுக்கு முடி முதலிய அணிகலன்களை நன்கு சமைப்பேன் யான் என்று சொல்லி, கூற்றத் தூதன் கை தொழுது ஏத்த - கூற்றுவனின் தூதனாக வந்த பொற்கொல்லன் கையான் வணங்கிப் புகழ, போற்றரும் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன் - புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியின் கட்டினைக் கோவலன் அவிழ்த்தனனாக; சமைத்தல் - நன்கு அமைத்தல். பொதிவாய் - கட்டுவாய். 117-120. மத்தக மணியொடு வயிரம் கட்டிய பத்திக்கேவணம் - தலையாய மாணிக்கத்தோடு வயிரமும் அழுத்திய பத்தி பட்ட கேவணத்தையுடைய, பசும்பொன் குடைச் சூல் சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - பசிய பொன்னாற் செய்த புடை பட்டு உட்கருவையுடைய சித்திரத் தொழிலமைந்த சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம், பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கி-பொய் கூறும் தொழிலினையுடைய பொற் கொல்லன் விலையை நோக்காது கோவலன் மீது குற்றங் கூறுதற்குத் தான் கவர்ந்த சிலம்போடு ஒக்கும் படியை நோக்கி; பத்தி - வரிசை. கேவணம் - கல்லழுத்துங் குழி. குடைச்சூல் - புடைபடுதலுமாம்; குடச்சூல் எனப் பாடங் கொள்ளலுமாம்; 1"குடச்சூல், அஞ்சிலம் பொடுக்கி" என்பது காண்க. குற்றமிலான் மேற் குற்றங் கூறுதற்கு இடுவந்தி கூறுதல் என்ப. 121-126. கோப்பெருந்தேவிக்கு அல்லதை - அரசனுடைய மாதேவிக்கு அல்லாது, இச் சிலம்பு யாப்புறவு இல்லை என முன் போந்து - இச் சிலம்பு பிறர்க்குப் பொருந்துமாறு இல்லை என்று கூறி முன்னின்றும் போய், விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர - வெற்றி மிக்க அரசனுக்கு யான் இதனை அறிவித்து வருந்துணையும், என் சிறு குடில் அங்கண் இருமின் நீர் என - எனது சிறிய குடிலாகிய அவ்விடத்தே நீர் இருப்பீராக என்று சொல்ல, கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கை யோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் - கோவலனும் போய் அக் கீழோனுடைய இருக்கைக்கு அயலதாகியதோர் தேவகோட்டத்தின் மதிலுக்குள் புகுந்த பின்; அரச பத்தினியைத் தேவியென்றல் மரபு ; பெருந்தேவி - பட்டத்து மனைவி. அல்லதை - ஐ இடைச்சொல். சிறுகுடிலங்கண் - சிறு குடிலுக்கு அருகான அவ்விடம் எனலுமாம். குறு மகன் - கீழோன். சிறை - மதில். 127-130. கரந்து யான் கொண்ட கால் அணி - யான் வஞ்சித்துக் கொண்ட சிலம்பு, ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு - என்னிடத்ததே யென்று யாவரும் அறிய அரசனுக்கு வெளிப்படுதற்கு முன்னரே, புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யான் என - வேறு நாட்டினின்றும் போந்த இப் புதியோனால் என் கள்ளத்தினை யான் மறைப்பேனென்று, கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் - துணிந்த உள்ளத் தினைக் கரந்து செல்கின்றவன்; புதுவனிற் போக்குதல் - அவன் வாயிலாகத் தன் வஞ்சத்தை மறைத்தல். போக்குதல் - மறைத்தல். 131-141. கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - கூடலிடத்து நாடக மகளிருடைய ஆடலிற் றோன்றும் தோற்றமும், பாடற் பகுதியும் - அவ்வாடலுக் கேற்ற பாடலின் வேறுபாடும், பண்ணின் பயங்களும் - யாழிசையின் பயன்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - அரசனுடைய நெஞ்சினை ஈர்த்தனவென்று கருதி, தன் ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து - தனது ஊடு தலையுடைய உள்ளத்தை உள்ளே மறைத்து ஒடுக்கி, தலை நோய் வருத்தம் தன்மேல் இட்டு - தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மேல் ஏறட்டுக் கொண்டு, குலமுதல் தேவி கூடாது ஏக - உயர் குடிப் பிறப்பினையுடைய பெருந்தேவி தன்னொடு மேவாதே தனது கோயிற்கண் அந்தப்புரம் சென்றுவிடலான், மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் - அரசன் காம மிக்கவனாய் அமைச்சர் திரளினை விட்டு நீங்கி, சிந்து அரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு - அரி சிதறிய நெடிய கண்களையுடைய பணிப்பெண்டிருடனே, கோப்பெருந்தேவி கோயில் நோக்கி - கோப்பெருந்தேவியினுடைய கோயிலை நோக்கிச் செல்வோனை, காப்பு உடை வாயிற் கடைகாண் அகவையின் - காவலையுடைய வாயிற் கடையிடத்துக் காணுமுன்பே, வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி - வணங்கிக் கீழே விழுந்து கிடந்து பலவாக ஏத்தி ; ஆடற்றோற்றம் என்பதற்கு இரட்டுற மொழிதலால் ஆடலிடத்துத் தோன்றும் முகத் தோற்றமும் ஆடல் வேறுபாடும் என்றுரைத்தலுமாம். தலைநோய் வருத்தம் - வருத்தத்தைச் செய்யும் தலைநோய் எனலுமாம். நோக்கிச் செல்வோனை என ஒரு சொல் வருவித் துரைக்க. கடைகாண் அகவை என்பதற்கு, நோக்கிச் சென்று கடையைக் காணுமுன் எனக் கூறிக் கடைகாணுதலை அரசன் தொழிலாக்கினுமமையும். செல்வோன் வீழ்ந்து கிடந்து தாழ்ந்து ஏத்தி என்க. 142-147. கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் - கன்னக்கோலும் கொடிற்றுக் கோலும் இன்றாகவும், துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு - தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தினையே களவிற்குத் துணையாகக் கொண்டு, வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - வாயில் காப்போரை மயக்கத் தினை உண்டுபண்ணும் உறக்கத்தின்கண் பொருந்துவித்து, கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் - கோயிற்கண் இருந்த சிலம்பினைக் கவர்ந்துகொண்ட கள்வன், கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்து - ஒலியினையுடைய பெரிய ஊர்க்குக் காவலரானோர் கண்களை மறைத்து, என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என - என்னுடைய இழிந்த சிறிய குடிலின்கண் வந்திருக்கின்றான் என்று கூற; கன்னகம் - அகழுங் கருவி. கவைக்கோல் - இட்டிகை முதலியவற்றைப் பறிக்குங் கருவி. மந்திரம் - துயிலுறுக்கும் மந்திரம். முன்னாள் கோயிற் சிலம்பு தன்னிடத்தில்லையென்று சாதித்தானாகலின், ஈண்டுக் 'கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்' என்றான். சில்லை - இழிவு. 148-153. வினை விளை காலம் ஆதலின் - வினை தோன்றிப் பயனைத் தரும் காலம் எய்திற்றாகலான், யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி - கொம்புகளையுடைய வேம்பின் மலர் மாலையைச் சூடிய பாண்டியன் சிறிதும் ஆராய்தலிலனாய், ஊர் காப்பாளரைக் கூவி - ஊர் காவலரை அழைத்து, ஈங்கு என் தாழ் பூங்கோதை தன் காற் சிலம்பு - எனது தாழ்ந்த பூங்கோதையை யுடையாளது காலின்கண் அணியும் சிலம்பு, கன்றிய கள்வன் கையது ஆகின் - அடிப்பட்ட அக் கள்வனுடைய கையகத்ததாயின், கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு என - அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை இங்குக் கொண்டு வருகவென்று சொல்ல; அலர் வேம்பன் - வேம்பலரோன் ; அலர் ஆகுபெயரான் மாலையை யுணர்த்திற்று. தாழ்தல் - நீடல். கன்றிய கள்வன் - களவில் தழும்பினவன். தேர்ந்து முறைசெய்தற் குரிய காவலன் தேராது இங்ஙனம் கூறியது வினையின் பயனென்பார் `வினை விளை காலமாதலின்' என்றார். முறை செய்யும் அரசன் ஆராயவேண்டிய நெறியொன்றையும் கைக்கொண்டில னென்பார் `யாவதும் தேரானாகி' என்றார். எனினும் என் கோதையின் காற்சிலம்பு கள்வன் கையதாகின் கொன்று கொணர்க வென்றமையான் அம் மன்னனிடத்துக் கொடுங்கோன்மை யின்மை உணரப்படும். கொல்லல் - வருத்துதலுமாம். தன் தேவியின் ஊடல் தீர்க்கும் மருந்தாய் அஃது உதவு மென்னுங் கருத்தால் கொணர்க ஈங்கு என்றானென்க. அவனைக் கொல்ல அச்சிலம்போடு ஈங்குக் கொணர்கவெனக் கருதியவன், வினை விளை காலமாதலின் கொன்று அச் சிலம்பு கொணர்க வென்றான் என்பர் அடியார்க்கு நல்லார். 154-157. காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்-அங்ஙனம் அரசன் ஊர் காப்பாளரைத் தன்னோடு ஏவுதலானே கொலைத் தொழிலையுடைய கொல்லனும், ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என - ஏவப்பட்ட உள்ளத்தோடே யான் கருதியதனை முடித்தேன் என்று கருதி, தீவினை முதிர்வலைச் சென்றுபட்டு இருந்த - தீயவினையாகிய சூழ்ந்த வலைக்கண்ணே சென்று அகப் பட்டிருந்த, கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி - கோவலனை அணுகியவனாய் ; கருந்தொழில் - கொலைத்தொழில். ஏவல் உள்ளம் - ஏவிய உள்ளம்; துரந்த உள்ளம். முடித்து - முடித்தேன் ; விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகக் கூறப்பட்டது. இனி முடிந்தது எனற் பாலது முடித்து என விகாரமாயிற்று எனவுங் கூறுப. முதிர்தல் - சூழ்தல். தீ வினை முதிர்வலை என்பதனை முதிர் தீவினை வலை என மாற்றி, முற்றிய தீவினையாகிய வலை எனலுமமையும். குறுகுதல் - அணுகுதல். 158-161. வலம் படு தானை மன்னவன் ஏவ - வென்றி காணும் சேனையினையுடைய அரசன் ஏவுதலானே, சிலம்பு காணிய வந்தோர் இவர் என - இவர்கள் சிலம்பினைக் காண்பதற்கு வந்தனர் ; அதனைக் காட்டுமின் எனச் சொல்லி, செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்து உடன் காட்ட - பொய்த்தொழில் சார்ந்த பொற்கொல்லன் அவரை வேறாக அழைத்துத் தொழிலமைந்த சிலம்பின் அருமையெல்லாம் விரும்பிச் சொல்லிக் கோயிற் சிலம்புடன் இஃது ஒக்குந் தன்மையையும் உடன் காட்ட ; காணிய, செய்யியவென்னும் வினையெச்சம், காட்டுமின், சொல்லெச்சம். செய்தி - தொழில் நுட்பம்; அருமை. உடன் காட்ட - கோயிற்சிலம்புடன் ஒக்குந் தன்மையைக் காட்ட ; என்பதனால் அவர்களை வேறாக அழைத்துச் சென்று கூறினமை பெறப்படும். 162-165. இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் - இவ்விடத்திருந்தோனாகிய இவன் மெய்ப்பொறியானும் இருக்கின்ற முறைமையானும், கொலைப்படு மகன் அலன் என்று கூறும் - கொலை செய்தற்குரிய கள்வன் அல்லன் என்று கூறுகின்ற, அருந்திறல் மாக்களை அக நகைத்து உரைத்து - அரிய திறலையுடைய வேற்காரரை எள்ளல் நகை நகைத்து இகழ்ந்து கூறி, கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன் - கொலைத் தொழிலை விரும்பிய கொல்லன் களவு நூலிலுள்ள ஏதுக்களைக் காட்டி உரைப்பவன்: இலக்கண முறைமை - இலக்கணமும் முறைமையும் ; உம்மைத் தொகை. அக நகை - இகழ்ச்சி நகை. இனி, அக நக என்று பாடங் கொண்டு வேற்காரர் உளம் பிரியமாம்படி எனவும் கூறுப. 166-169. மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் - மந்திரமும் தெய்வமும் மருந்தும் நிமித்தமும், தந்திரம் இடனே காலம் கருவி என்று எட்டுடன் அன்றே - தந்திரமும் இடனும் காலமும் கருவியும் எனப்படுகின்ற எட்டனையுமன்றோ, இழுக்கு உடை மரபிற் கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது- குற்றம் பொருந்திய முறைமையினையுடைய களவு கண்டு உண்ணும் வாழ்க்கையினையுடைய கள்வர் துணையாகக் கொண்டு திரிவது; மருந்தே இடனே இவற்று ஏகாரம் எண்; 1"எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" என்பவாகலான் ஏனையவற்றெண்ணேகாரம் தொக்கன. இழுக்குடை மரபிற் கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவது என மாறுக. உடன் : முற்றும்மைப் பொருட்டு. 170-171. மருந்திற் பட்டீர் ஆயின் யாவரும் பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப் பட்டீர் - இவன் மருந்தின்கண் அகப் பட்டீராயின் நீவிர் யாவிரும் பெரிய புகழையுடைய அரசனால் கடுந்தண்டத்தினை அடைந்தீர் ; மருந்திற் பட்டீராயின் என்றது, முன்னர் இலக்கணமுறைமையின் கொலைப்படுமகனலன் எனக் கூறியதனை உட்கொண்டது. நவை - துன்பம் ; தண்டம். நவைப் பட்டீர்; துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினான். இனி, மந்திர முதலிய எட்டன் விளைவு கூறுவான்:- 172-173. மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின் - கள்வர் மந்திரத்தினை நாவினிடத்து உச்சரிப்பாராயின், இந்திர குமரரின் யாம் காண்குவமோ - தேவ குமாரரைப் போல அவரையும் நாம் காணமாட்டோம்; இந்திரர் - தேவர்; 2"இந்திரர் அமுத மியைவ தாயினும்" என்றார் பிறரும். இந்திர குமரர் - தேவகுமாரர் ; தேவர். ஓகாரம் எதிர் மறை 174-175. தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - அவர் தம் தெய்வத்தின் வடிவினை உள்ளத்தே தெளிந்து நினைப்பாராயின், கையகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் - தம் கையிலகப்பட்ட மிக்க பொருளினை நமக்குக் காட்டியும் தப்புவார்; 176-177. தோற்றம் - வடிவு. மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின் - அவர் மருந்தினாலே நம்மிடத்து மயக்கஞ் செய்வாராயின், இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ - இருந்த நாம் எழுந்து போகலாம் இடமும் உண்டாமோ; மார், அசை. உண்டோ - இல்லை; ஓ, எதிர்மறை. 178-179. நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றா லல்லது, யாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்து கைப் புகுதினும் - பெறுதற்கரிய மிக்க பொருள் தானே வந்து கிடைப்பினும் எளியவிடத்தும் புகார் ; யாவதும் - எத்துணை எளியவிடத்தும் ; யாவதும் புகற்கிலர் - சிறிதும் விரும்பார் என்றுமாம். 180-181. தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - களவு நூலிற் சொல்லு கின்ற தொழில்களை எண்ணிச் செய்வாராயின், இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - இந்திரன் மார்பிலணிந்த ஆரத்தினையும் அடைகுவர் ; தந்திரம் - நூல், களவுநூல், கரணம் - தொழில். எண்ணுதல் - ஆய்ந்து செய்தல். 182-183. இவ்விடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின் - இப் பொருளினை யாம் கொள்ளுதற்கு இவ்விடமே ஏற்ற இடமாகும் என்று எண்ணுவாராயின், அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்து அவரைக் காண வல்லார் யார் ; 184-185. காலம் கருதி அவர் பொருள் கையுறின் - அவர் களவு கொள்ளுங் காலம் இதுவே என்று கருதிப் பொருளைக் கைப்பற்றுவாராயின், மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - தேவ ராயினும் அதனை விலக்குதல் கூடுமோ; மேலோர் - தேவர். 186-187. கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் - அவர் கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு பெறுதற்கரிய பொருள்களைக் கைப்பற்றினால், இருநிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - இப் பெரிய வுலகத்து அவரைக் காண வல்லார் யார்? ஆகலான்; ஆகலான் என ஒரு சொல் வருவிக்க. 188-189. இரவே பகலே என்று இரண்டு இல்லை - அவர்க்கு இரவும் பகலும் என்னும் இரண்டு பகுதி இல்லை, கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்பின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லை; எல்லாக் காலமும், எல்லா இடமும் அவர் களவு செய்தற்குப் பொருந்தியனவே என்றவாறாயிற்று. இங்ஙனம் களவு நூற்றுறை கூறியோன், கள்வருடைய வன்மையை அவர்க்குணர்த்துவான் பொய்க் கரி ஒன்று கூறுகின்றான்; 190-202. தூதர் கோலத்து வாயிலின் இருந்து - முன்னொரு நாளில் ஒரு கள்வன் தூதருடைய உருவத்துடன் பகற் காலத்து அரசன் வாயிலின்கணிருந்து, மாதர் கோலத்து வல் இருள் புக்கு - மிக்க இருளையுடைய இராக்காலத்துப் பெண்ணுருக்கொண்டு உள்ளே நுழைந்து, விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று விளக்கின் நிழலிலே பள்ளியறையினுள் நடுக்கமின்றிப் புக்கு, ஆங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்க - அவ்விடத்து இந் நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய வேந்தன் துயில்கின்றவனுடைய வெயிலிடுகின்ற வயிரத்தையுடைய அசையும் ஒளி பொருந்திய ஆரத்தை விரைவில் வாங்கினானாக, துயில் கண்விழித்தோன் தோளிற் காணான் உடைவாள் உருவ - தூக்கத்தினின்றும் எழுந்த அவ் விளவரசன் ஆரத்தைத் தோளிற் காணானாய்த் தன் உடைவாளை உருவ, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளிலே உறையைச் செறித்த அத் தன்மைக்கு ஆற்றானாய், மல்லிற் காண - மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே, மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னை - அவ்விடத்து நின்றதோர் மணித் தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற்பயிற்சியினால் மறைந்த கள்வனை, கண்டோர் உளர் எனில் காட்டும் - பார்த்தோருளராயின் அவர்களைக் காட்டுமின், ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ் வுலகத்து ஒருவருண்டோ என அக் கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற ; வல் இருள் - மிக்க இருள். வல்லிருட்புக்கு என்றதனால், வாயிலினிருந்தமை பகற் காலமாயிற்று. துளக்கம் - நடுக்கம், அச்சம். மின்னின் வாங்க - மின்னலின் வழியே வாங்க எனலுமாம். மின் - ஒளி. வேந்தன் விழித்தோன் காணான் உருவ வாங்கிச் செறித்த இயல்பிற்கு ஆற்றான் காணக் காட்டிப் பெயர்ந்த கள்வன் என்க. 202-203. ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் கூறும் - அப்பொழுது திருந்திய வேலேந்திய பெரிய கையினையுடைய ஓர் இளைஞன் கூறுவான் ; கூறுவதி யாதெனின் :- 204-211. நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் - முன்னர் நிலத்தினை அகழும் உளியை யுடையனாய் நீல நிறம் பொருந்திய கச்சினையுடையவனாய், கலன் நசை வேட்கையிற் கடும்புலி போன்று - கலன்களை மிக விரும்பிய விருப்பத் தானே பசியால் தான் உண்டற்கு விலங்கினைத் தேடி யலையும் புலியைப் போன்று, மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து ஊர் மடிகங்குல் ஒருவன் தோன்ற - மழைக்காலத்து இடையாமமாகிய மிக்க இருள் கலந்த ஊராரெல்லாம் உறங்கிய இராக் காலத்தே ஒரு கள்வன் வந்து தோன்ற, கை வாள் உருவ என் கை வாள் வாங்க - யான் என் கைவாளினை உறையி னின்றும் உருவினேனாக அவன் எனது அக் கைவாளினைப் பற்ற, எவ் வாய் மருங்கினும் யான் அவற் கண்டிலேன் - அதன் பின்னர் அவனை யான் எவ்விடத்தும் காணகில்லேன், அரிது இவர் செய்தி - ஆகலான் இவருடைய செய்கை யாவராலும் அறிதற்கரிது, அலைக்கும் வேந்தனும் - இவனை நாம் கொல்லாது விடின் நம்மை அரசன் வருத்துவான், உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என - ஆகலான் மிக்க படைக்கலத்தினை உடையீர் இனிச் செய்தற்குரியது ஒன்றனை ஆராய்ந்து கூறுமின் என்று சொல்ல ; 1"நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங், கண்மா றாடவ ரொடுக்க மொற்றி" என்றார் பிறரும். கோவலனையும் கள்வனாகக் கொண்டு 'இவர் செய்கை ' என்றான். உளியன் தானையன் புலிபோன்று ஒருவன் தோன்ற என்க. 212-217. கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் - கல்வியின்மையாற் கொலையஞ்சானாய களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளாலே வெட்டினான், விலங்கு ஊடு அறுத்தது - அவ் வெட்டானது குறுக்காகத் துணித்தது, புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப - துணிபட்ட புண்ணின் வழியே கொப்புளிக்கின்ற உதிரம் குதித்து எங்கும் பரக்க, மண்ணக மடந்தை வான் துயர் கூர - நில மடந்தை மிக்க துயரத்தினை அடைய, காவலன் செங்கோல் வளைஇய - அக் காவலனுடைய செங்கோல் வளையும் வண்ணம், வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென் - முன்னைத் தீவினை முதிர்தலான் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தனன் என்க. வெள்வாள் - பகைவரோடு பொருது குருதி படியாத வாள். மண்ணக மடந்தை துயர் கூர்ந்தது இவன் வெட்டுண்டமைக்கும் அதனாற் கண்ணகி துயருறுதற்கு மென்க. முன்னரும், 1"மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்" என்றார். இனி, மண்ணக மடந்தை - மதுரை யெனக் கொண்டு மேல் தனக்கு ஆவதுணர்ந்து துயர் கூர என்றுரைத்தலுமாம். இது நிலைமண்டில வாசிரியப்பா. வெண்பாவுரை "நண்ணு மிருவினையு ..... வந்த வினை." பண்டை விளைவாகி வந்த வினை - பாண்டியன் முன் செய்த தீங்கின் பயனாகி வந்த தீவினையால், மண்ணில் வளையாத செங்கோல் - இவ் வுலகத்து வளை யாத அவனுடைய செங்கோல், கண்ணகி தன் கேள்வன் காரணத் தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாய கோவலன் முன்னிலை யாக வளைவுற்றது, நண்ணும் இருவினையும் - ஆகலான், நீவிர் செய்த இரு வினைப் பயனும் நும்மை வந்து பொருந்தும் என்பதனை அறிந்து, நண்ணுமின்கள் நல்லறமே - உலகத்தீர் நல்வினையைச் செய்யுங்கள். பாண்டியன் கோல் வளைதற்கு பழவினை காரணமும், கோவலன் வாயிலு மென்றார். கொலைக்களக் காதை முற்றிற்று. 17. ஆய்ச்சியர் குரவை (ஆயர் சேரியில் பலவகை உற்பாதங்கள் நிகழ்ந்தன. மாதரி தன் மகள் ஐயையை நோக்கி, முன்பு ஆயர்பாடியில் கண்ணனும் பலராமனும் பின்னையுடன் ஆடிய குரவையை நாம் இப்பொழுது கறவை கன்று துயர் நீங்குகவென ஆடுவேம் எனக் கூறி, எழுவர் கன்னியரை நிறுத்தி ஏழிசைகளின் பெயர்களாகிய குரல் முதலிய வற்றை அவர்கட்குப் பெயர்களாக இட்டு, அவருள் குரலாகியவளைக் கண்ணன் என்றும், இளியாகியவளைப் பலராமன் என்றும், துத்தம் ஆகியவளைப் பின்னை என்றும், ஏனை நரம்புகளாகியோரை மற்றை நால்வர் என்றும் படைத்துக்கோட் பெயரிட, அவர்கள் கற்கடகக் கை கோத்து நின்று மாயோனைப் பாடிக் குரவை யாடினர். (இதிலே, முன்னிலைப் பரவலும் படர்க்கைப் பரவலுமாகத் திருமாலைப் பாடிய பாட்டுக்கள் மிகவும் அருமையானவை.) கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும்வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பாரர சாண்ட 5 மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசங் கனைகுர லியம்பு மாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங்கொண்டு 10 இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; உரைப்பாட்டு மடை 1 குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; 2 உறுநறு வெண்ணெய் உருகா உருகும்; மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; 3 நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு; கருப்பம் குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக் கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறிமுடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியுந்தான்காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே; கொளு 1 காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள்; சுட்டு 2 நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்; 3 மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் முல்லையம் பூங்குழல் தான்; 4 நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் பெண்கொடி மாதர்தன் தோள்; 5 பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிந் நற்கொடி மென்முலை தான்; 6 வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் கொன்றையம் பூங்குழ லாள்; 7 தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் பூவைப் புதுமல ராள்; எடுத்துக் காட்டு ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழைஇளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே; மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை - ஆயமகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை; மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள் - கொண்டசீர் வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றா ளாயர் மகள்; கூத்துள் படுதல் அவர்தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார் - முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென் றாள்; எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா - உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்; பாட்டு 1 கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; 2 பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; 3 கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ; தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்; 1 இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் ஈறுமென் சாயல் முகமென் கோயாம்; 2 வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; 3 தையல் கலையும் வளையும் இழந்தே கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம்; ஒன்றன்பகுதி 1 கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; 2 மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்; ஆடுநர்ப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதே தேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று; உள்வரி வாழ்த்து 1 கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; 2 பொன்னிமயக்கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்; 3 முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில்தோ ளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்; முன்னிலைப் பரவல் 1 வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; 2 அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; 3 திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே; படர்க்கைப் பரவல் 1 மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே; 2 பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்னே; கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே 3 மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாரய ணாவென்னா நாவென்ன நாவே; என்றியாம்.... கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே. உரை 1-10. கயல் எழுதிய இமய நெற்றியின் - இமயத்துச்சியில் தான் எழுதிய கயல்மீனிற்கு, அயல் எழுதிய புலியும் வில்லும் - பக்கத்தே எழுதிய புலியினையும் வில்லினையுமுடைய சோழனும் சேரனும், நாவலந் தண் பொழில் மன்னர் - நாவலந்தீவிலுள்ள ஏனைய அரசர்களும், ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட - தன் ஏவல் கேட்டு ஒழுக நிலவுலக முழுதையும் அரசாண்ட, மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - முத்த மாலை பொருந்திய வெண்கொற்றக் குடையினையுடைய பாண்டியனது கோயிற்கண்ணே, காலை முரசம் கனை குரல் இயம்பும் - பள்ளி யெழுச்சி முரசு மிக்க குரலோடு முழங்கும், ஆகலின் நெய்ம்முறை நமக்கு இன்று ஆம் என்று - ஆதலான் நமக்கு இன்று கோயிற்கு நெய்யளக்கும் முறையாம் என எண்ணி, ஐயை தன் மகளைக் கூய்க் கடைகயிறும் மத்தும் கொண்டு இடைமுதுமகள் வந்து தோன்றுமன் - இடைக்குலத்து முதியளாகிய மாதரி ஐயையாகிய தன் மகளை அழைத்துக் கடைகயிற்றினையும் மத்தினையும் எடுத்துக்கொண்டு தயிர்த் தாழியிடத்து வந்து தோன்றினாள்; கயல் முதலியன இலச்சினை. இமயநெற்றியின் எழுதிய கயல் அயல் எழுதிய புலியும் வில்லுமெனக் கூட்டுக. கயலை வணங்குதற்கு அதன் அயலில் புலியும் வில்லும் எழுதப்பட்டனவன்றி ஒப்பாக எழுதப்பட்டில வென்க. என்னை? இவ் வாசிரியர் அவ்வக்காண் டத்து அவ்வந்நாட்டு மன்னரை உயர்த்துக் கூறுதல் முறையாகலான் என்க. புலியும் வில்லும் என்றது, அவற்றினையுடைய மன்னரை. மன்னரும் என்னும் உம்மை தொக்கது. இயம்பும், முற்று. மன், அசை. உரைப்பாட்டு மடை - உரையாகிய பாட்டை இடையே மடுத்தது. 1. "குடப்பால் உறையா................ஒன்றுண்டு" குடப்பால் உறையா - நாம் உறையிட்ட தாழிகளிற் பாலும் தோய்ந்தில, குவி இமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் - திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் அழகிய கண்களினின்றும் நீர் உகும் ; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உறைதல் - தோய்தல். குவிதல் - திரளுதல். மடம் - ஈண்டு அழகு. 2. "உறிநறு வெண்ணெய்.........ஒன்றுண்டு" உறிநறு வெண்ணெய் உருகா - உறிக்கண் வைத்த முதல் நாளை வெண்ணெய் உருக வைத்தன உருகுகின்றில, உருகும் மறி தெறித்து ஆடா - ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடாமற் குழைந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உருகுதல் - ஒன்று நெகிழ்தல், மற்றொன்று குழைந்துகிடத்தல். இனி. உருகும் என்ற பாடத்தினை உருகி எனக்கொண்டு உருகி ஆடா எனவும் முடிப்ப. உருகி - மெலிந்து. 3. "நான்முலை.........ஒன்றுண்டு" நான் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் - நான்கு முலைகளையுடைய பசு நிரை மெய் நடுங்கி நின்று அரற்றும், மான் மணி வீழும் - அப் பசுக்களின் கழத்திற்கட்டிய மணிகளும் அற்று நிலத்தில் விழும் ; வருவது ஒன்று உண்டு - ஆகலான் நமக்கு வரும் தீங்கு ஒன்று உண்டு; ஆயம் - ஆனிரை. நடுங்குபு - நடுங்கி. மால் மணி - பெரிய மணி யென்றுமாம். கருப்பம் - இவை கேட்டிற்குக் கருப்பம் ; மேலே கூறுவன வற்றிற்குக் காரணம் என்றுமாம். "குடத்துப்பால் உறையாமையும்.....நீங்குகவெனவே" தாழிக்கண் பால் உறையாமையானும், திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் கண்களிலிருந்து நீர் உகுதலானும் , உறிக் கண் வெண்ணெய் உருகாமையானும், ஆட்டு மறிகள் துள்ளி விளையாடாமையானும், பசுக்களின் கழுத்து மணிகள் அற்று நிலத்து வீழ்தலானும் வருவதோர் துன்பம் உண்டென்று சொல்லி, மகளை நோக்கி, `உள்ளங் கவலற்க ; இந் நிலத்து மாதர்க்கு அணியாக விளங்கும் கண்ணகியும் காணும் வண்ணம் முன்னர் ஆயர்பாடியில் எருமன்றத்தின்கண் கண்ணன் தம் முனாகிய பலராமனுடன் விளையாடிய பால சரித நாடகங்களுள் வேல் போலும் நெடிய கண்களையுடைய நப்பின்னையோடாடிய குரவைக் கூத்தினை, பசுக்களும் கன்றுகளும் துன்பம் ஒழி வனவாக வென்று கூறி யாம் ஆடுவோம்' என்றாள்; உறையாமையும் முதலிய எண்ணும்மைகளில் மூன்றனுருபு விரித்துரைக்க. மாயவனுடன் என்னும் மூன்றன் சொல்லுருபினைத் தம்முன் என்பதனோடு இயைக்க. கண்ணகியும் காண ஆடுதும் என்றாளென்க. தான், அசை. குரவையாவது எழுவரேனும். ஒன் பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து. கொளு - குரவைக் கூத்திற்குக் கருத்து. 1. "காரிகதன்.........கோதையாள்" காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள் - இக் காரி எருத்தின் சீற்றத்தினை அஞ்சானாய்ப் பாய்ந்து தழுவியோனை இத் தேனிறைந்த மலர்மாலையையுடையாள் விரும்புவாள்; காரி - கருமையுடையது. கதன் - சீற்றம். கோதையாள் காமுறும் என்க. சுட்டு - இது முதற்சுட்டு. 2. "நெற்றிச் செகிலை..........மாதராடோள்" நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப் பொன் தொடி மாதராள் தோள் - நெற்றிக்கண் சிவந்த சுட்டியினையுடைய ஏற்றினை வலி தொலைத் தானுக்கே இப் பொன்னாலாய வளையினையணிந்த மாதருடைய தோள்கள் உரியனவாகும்; செகில் - சிவப்பு; ஆகுபெயர். 3. "மல்லல்.........பூங்குழறான்" மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான் - வலி மிக்க இவ் விளைய ஏற்றினை எறிச் செலுத்தினானுக்கே இம் முல்லை மலரினைச் சூடிய அழகிய கூந்தலுடையாள் உரியளாவாள்; மல்லல் - வளம் எனினும் அமையும். தான், அசை. 4. "நுண்பொறி ..... தோள்" நுண்பொறி வெள்ளை அடர்த் தாற்கே ஆகும் இப் பெண் கொடி மாதர்தன் தோள் - நுண்ணிய புள்ளிகளையுடைய இவ் வெள்ளேற்றினை வலிதொலைத் தானுக்கே இக் கொடிபோன்ற பெண்ணின் காதலிக்கப்படும் தோள்கள் உரியனவாம்; வெள்ளை - ஆகுபெயர். பொறி வெள்ளை - மறை எனலுமாகும். மாதர் - காதல். பெண் கொடியாகிய மாதர் என்றலுமாம். தன், சாரியை. 5. "பொற்பொறி ......... மென்முலைதான்" பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந் நற்கொடி மென்முலை தான் - அழகிய இம் மறையேற்றினை அடக்கியோனுக்கே இவ் வழகிய கொடிபோன்றாளுடைய மெல்லிய முலைகள் உரியன வாகும்; தான், அசை. 6. "வென்றி.........பூங்குழலாள்" வென்றி மழவிடை ஊர்ந் தாற்கு உரியள் இக் கொன்றையம் பூங்குழலாள் - வென்றி யினையுடைய இவ்விளைய ஏற்றினை அடக்கிச் செலுத்தினானுக்கு இக் கொன்றைப் பழம் போலும் பொலிவு பெற்ற கூந்தலினை யுடையாள் உரியளாவாள்; 1"கொன்றைப் பழக்குழற் கோதையர்" என்றார் பிறரும். 7. "தூ நிற வெள்ளை ......... மலராள்" தூ நிற வெள்ளை அடர்த் தாற்கு உரியள் இப் பூவைப் புதுமலராள் - தூய வெள்ளை நிற முடைய இவ் வேற்றின் சீற்றத்தினைக் கெடுத்தவனுக்கு இக் காயாம் பூப் போலும் நிறத்தினையுடையாள் மனைவி ஆவாள் ; -_?ீ72"காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே" 3"நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவன்" 4"செம்மறு வெள்ளையும்" 5"பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும்" என்றற்றொடக்கத்தனவாக முல்லைக் கலியில் வரும் எருத்து வேறுபாடு களும் ஏறுகோள் இயல்பும் ஈண்டு அறியற்பாலன. எடுத்துக்காட்டு இவ்வேறு கொண்டானுக்கு இவள் உரியன் என்றல். இனி, இங்ஙனம் சுட்டிக் காட்டுதல் எனலுமாம். ஆங்கு - அப்படியே தொழுவிடை .................................... கோதையார் தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதை யார் - இங்ஙனமாகத் தொழுவிடத் துண்டாகிய ஏழுவகை ஏற்றினை இக் கோதையையுடைய ஏழு கன்னியர் தன் மணங்குறித்து வளர்த்தனர். குறித்து வளர்த்தல் - இதனை அடக்கியோனையே மணப்பேம் என்று கருதி வளர்த்தல். "என்றுதன் மகளை ......... பெயரிடுவாள்" என்று தன் மகளை நோக்கி - என்று இங்ஙனம் கூறித் தன் மகளாகிய ஐயையை நோக்கி, தொன்று படு முறையான் நிறுத்தி இடைமுதுமகள் இவர்க்குப் படைத்துக் கோள் பெயர் இடுவாள் - இம் மகளி ரைப் பழைய நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்; இடைமுதுமகள் - மாதரி. படைத்துக்கோட் பெயர் இடுதல் - ஒரு பொருளுக்கு ஒருபெயர் இருப்பவும் ஒரு காரணத்தால் வேறொரு பெயரை இட்டு வழங்குதல் "குடமுதல் .... பெயரே" குடமுதல் இட முறையா - குட திசையில் குரல் நரம்பு முதல் இடமுறையாக, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே - குரலும் துத்தமும் கைக்கிளையும் உழையும் இளியும் விளரியும் தாரமும் என இவர்க்கு முறையே இட்ட பெயரே மாதரி விரும்பிய பெயர்களாம்; தாரமென என்பதன் பின் சில சொல் வருவித்துரைக்க. விரிதரு பூங்குழல் - மாதரி, குடமுதல் - மேற்கு எதிர்முகமாக என்றபடி. பன்னிரண்டு இராசிகளுள்ளே இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய ஏழும் முறையே நிற்பது ஓர் முறை. துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம், சிங்கம் என்னும் ஏழினும் குரல் முதலாய ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை. இவற்றை, " ஏத்து மிடப மலவனுடன் சீயம் கோற்றனுக் கும்பமொடு மீனமிவை-பார்த்துக் குரல்முதற் றார மிறுவாய்க் கிடந்த நிரலேழுஞ் செம்பாலை நேர்." " துலைநிலைக் குரலுந் தனுநிலைத் துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும் மீனத் துழையும் விடைநிலத் திளியும் மானக் கடகத்து மன்னிய விளரியும் அரியிடைத் தாரமும் அணைவுறக் கொளலே" என்பவற்றானறிக. குரவையில் இவ்விரு முறையானும் எழு வரும் நின்று கைகோத்துப் பாடுகின்றன ராகலின் ஒருகால் இடத்தில் நின்றவர் மற்றொருகால் வலத்திலும், வலத்தில் நின்றவர் இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு. பின்வரும் சக்கரங்களில் இது தோன்றும். ஏழ் நரம்புகளில் முதலிற் றோன்றியது தாரம், ; தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலுள் இளியும், இளியுள் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் பிறக்கும். இவற்றாற் பெரும் பண்கள் பிறக்குமாறு. " தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல் ஒருமுழைத் தோன்றக் குறிஞ்சியாழ்-நேரே இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம் இளியிற் பிறக்கநெய்த லியாழ்" என்பதனாற் புலனாம். தாரம் குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய உழை குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் பாலை யாழும், உழை குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய குரல் குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் குறிஞ்சி யாழும், குரல் குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய இளி குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் மருத யாழும், இளி குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய துத்தம் குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் செவ்வழி யாழும் பிறக்கு மென்க. ஏழு பாலையிசை பிறத்தல் முதலியனபற்றிய குறிப்புக்கள் ஈண்டு மூலத்தில் இல்லையேனும், அடியார்க்குநல்லார் அவற்றைத் தந்துரைத்துள்ளார். (அடி. இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும். இவற்றுட் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோவொன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ் வேழு பெரும் பாலைகளும். பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரலேழும் முதலாகப் பிறக்கும். அவை பிறக்குமாறு :-குரல் குரலாயது செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும்பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை ; தாரம் குரலாயது மேற் செம்பாலை என வரன்முறையே ஏழு பாலையும் கண்டுகொள்க.) அரங்கேற்று காதையிலும், வேனிற்காதையுரையிலும் கூறப் பட்டவை இதனின் வேறுபட்ட முறையினவாதல் காண்க. இனிப் படைத்துக்கோட் பெயரிடுவாள் :- "மாயவன் என்றாள். . . . . முறை" மாயவன் என்றாள் குரலை - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள், விறல் வெள்ளை ஆயவன் என்றாள் இளி தன்னை - இளி நரம்பினை வென்றி மிக்க பலராமன் என்றாள், ஆய் மகள் பின்னையாம் என்றாள் ஓர் துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள், மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே மற்றையார் ஆம் என்றாள்; முன்னை முறை ஆம் என மாறுக. முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது துத்தமும் போல் ஐந்தாவதான முறை. ஆய் மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றொடும் கூட்டுக. "மாயவன் சீர் ..... விளரிதான்" மாயவன் சீர் உளார் பின்னையும் தாரமும் - மாயவன் எனப் பெயர் கூறப்பட்ட குரல் நரம்பினை அடுத்துப் பின்னையெனப்பட்ட துத்தமும் தாரமும் நின்றன. வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் - பலதேவரெனப்பட்ட இளி நரம்பினைச் சேர உழையும் விளரியும் நின்றன, கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் - கைக்கிளை என்னும் நரம்பு பின்னைக்கு இடப்பக்கத்தே நின்றது, வலத்து உளாள் முத்தைக்கு நல் விளரிதான் - முந்தை யென்னும் தார நரம்பிற்கு வலப்பக்கத் துள்ளது நல்ல விளரி என்னும் நரம்பு; முந்தை என்பது முத்தை என விகாரமாயிற்று. எல்லா நரம்பினும் முன் தோன்றியதாகலின் தாரத்தை முந்தை என்றார். மகளிராதலின் உயர்திணை கூறினார். "அவருள் ..... ஆயர்மகள்" அவருள் - அவ் வெழுவர் மகளிருள், வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு - வளவிய துளப மாலையினை மாயவனாகிய கண்ணன் தோளின்மீது சாத்தி, தண்டாக் குரவைதான் உள்படுவாள் - கூத்த நூலியல்பினின்றும் நீங்காத குரவையாடத் தொடங்குவாள், கொண்ட சீர் - சிறப்பினைக் கொண்ட, வைய மளந்தான் தன் மார்பில் திரு நோக்கா - உலகினை யளந்த திருமால் தன் மார்பினிடத்துத் திருவை விரும்பி நோக்காமைக்குக் காரணமாகிய, பெய்வளைக் கையாள் நம் பின்னைதான் ஆம் என்றே ஐ என்றாள் ஆயர் மகள் - வளை பெய்த கையினை யுடையாள் நம் பின்னைதானே யாமென்று மாதரி வியந்தாள் ; தண்டாமை - நீங்காமை. நோக்காப் பின்னை என்க. நம் பின்னை இதனை நப்பின்னை எனவும் வழங்குப. 1சீவக சிந்தாமணிஉரையில் "நப்பின்னை அவள் பெயர் ; நகரம் சிறப்புப் பொருளுணர்த்துவ தோரிடைச் சொல்" என்றார் நச்சினார்க்கினியர். நம் பின்னை - நமது பின்னை யெனினும் அமையும். ஐ, வியப்பு. ஆயர் மகள் - மாதரி. "அவர்தாம் ..... என்றாள்" அவர் தாம் செந்நிலை மண்டிலத்தார் கற்கடகக் கை கோத்து அந் நிலையே ஆடற்சீர் ஆய்ந்துளார் - சம நிலையாக நின்று மண்டிலத்தோடு நண்டுக் கரத்தைக் கோத்து அப்பொழுதே ஆடுதற்குத் தாளவுறுப்பை ஆராய்ந்த அவர்களுள், முன்னைக் குரல் கொடி - முதல் வைத்து எண்ணிய குரலிடத்து நின்ற மாயவனாகிய அவள், தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய இளியிடத்து நின்ற பலதேவனாகிய அவளை நோக்கி, பரப்பு உற்ற கொல்லைப் புனத்து - அகன்ற கொல்லையாகிய புனத்தின்கண், குருந்து ஒசித்தான் பாடுதும் முல்லைத் தீம் பாணி என்றாள் - வஞ்சத்தால் வந்து நின்ற குருந்த மரத்தினை முறித்த மாயவனை முல்லையாகிய இனிய பண்ணினால் பாடுவோம் என்றாள்; செந்நிலை - சமநிலை. மண்டிலம் - வட்டம். கற்கடகக்கையாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலும் கோத்தல். அந்நிலையே - அப்பொழுதே. சீர் - தாளவறுதி. தன் கிளையை நோக்கி என்பதற்குத் ‘தனது கிளையாகிய துத்த நரம்பாகிய பின்னையை நோக்கி' என அடியார்க்குநல்லார் உரை காணப்படு கின்றது; குரலுக்குத் துத்தம் இணையும், இளி கிளையுமாகலின் துத்தத்தைக் கிளையென்றல் பாடப் பிறழ்ச்சி போலும். முல்லைப்பாணி - செவ்வழி யாழின் திறமாகிய முல்லைப் பண். எனா - என்று கூறி ; "குரல் மந்தமாக ... பாட்டெடுப்பாள்" குரல் மந்தம் ஆக- பாடத் தொடங்குகின்றவள் குரல் என்னும் நரம்பு மந்தசுரமாக, இளி சமன் ஆக - இளி யென்னும் நரம்பு சம சுரமாக, வரன்முறையே துத்தம் வலியா - வந்த முறையானே துத்த நரம்பு வலி சுரமாக, உரன் இலா மந்தம் விளரி பிடிப்பாள் - விளரி நரம்பினையும் வலியில்லாத மந்த சுரமாகப் பிடிக்கின்றவள், அவள் நட்பின் பின்றையைப் பாட்டு எடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்த நரம்பாயவட்குப் பற்றுப் பாடுகின்றாள்; விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் என்க. மந்தம் முதலியன முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனவும், மந்தம், சமம், உச்சம் எனவும் கூறப்படும். மந்திரத்திற்கு ஐந்தாவது சமமும், அதற்கைந்தாவது வலியும், பின்னும் அதற்கைந்தாவது மந்தமுமாக வருதல் காண்க. நட்பு - நாலாம் நரம்பு ; விளரிக்குத் துத்தம் நட்பு. பாட்டு -அவள் பாடும் பாட்டு; 1. "கன்று குணிலா ......... தோழீ" கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் - வஞ்சத்தால் வந்துநின்ற ஆவின் கன்றினைக் குணிலாகக் கொண்டு அங்ஙனமே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன், இன்று நம் ஆனுள் வருமேல் - இற்றைப் பொழுது நம் வழிபாட்டால் நம் பசு நிரை யிடத்து வருவானாயின், அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி - அவன் வாயினால் ஊதுகின்ற கொன்றைக் குழலின் இனிய இசையைக் கேட்போம் தோழீ ; குணில் - குறுந்தடி. ஆனுள் : உள் ஏழுனுருபு ; மேல்வருவனவும் இன்ன. தோழீ கேளாமோ என்க. கேளாமோ. ஈரெதிர்மறை ஓருடன்பாடு; பின்வருவனவும் இன்ன. 2. "பாம்புகயிறாக் . . . . . . . . . தோழீ" பாம்பு கயிறு ஆ கடல் கடைந்த மாயவன் - மேருவாகிய மத்தத்தில் வாசுகி என்னும் பாம்பு கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த மாயவன், ஈங்கு நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் இவ்விடத்து நம் ஆனிரையுள் வருவானாகில், அவன் வாயில் ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதும் இனிய ஆம்பற் குழலோசையைக் கேட்போம் தோழீ ; 3. "கொல்லையஞ்சாரல் ............ தோழீ" கொல்லையஞ் சாரல் குருந்து ஒசித்த மாயவன் - நம் கொல்லையைச் சார்ந்த விடத்து வஞ்சத்தால் வந்து நின்ற குருந்தமரத்தினை முறித்த மாயவன், எல்லை நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் பகலே நம் ஆனிரையுள் வருவானாயின், அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதுகின்ற இனிய முல்லைக் குழலோசையைத் தோழீ கேட்போம் ; ஆம்பல், முல்லை என்பன பண்ணின் பெயராயினும், கொன்றையென ஒரு பண் இன்மையானும், இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கிய ஒத்தாழிசையாகலின் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறுதல் பொருந்தாமையானும் மூன்றையும் கருவி விசேட மாகக் கொள்ளுதல் வேண்டும். 1"ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர்" எனக் கலியுள்ளும், " கொன்றைப் பழக்குழற் கோவலராம்பலும்" என வளையாபதியுள்ளும் கொன்றைக் குழல் கூறப்படுதலின் கோவலர் கொன்றைப் பழத்தைத் துருவிக் குழல் செய்து ஊதுவரென்க. "கஞ்சத்தாற் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்தலின் ஆம்பற் குழலாயிற்றெனவும், கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்றெனவும், முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட் செறிந்து ஊதுதலின் முல்லைக்குழலாயிற் றெனவும் கொள்க" என அடியார்க்குநல்லார் இவை காரணப்பெய ராதலை விளக்குவர். குழலின் இலக்கணம் மேல் அரங்கேற்று காதையில் குழலோன் அமைதி கூறியவிடத்து உரைக்கப்பட்டமை காண்க. "தொழுனைத்துறைவ . . . . . யாம்" தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை அணி நிறம் பாடுகேம் யாம் - தொழுனைத் துறைவனுடையவும் அவனோடு ஆடிய பின்னையினுடையவும் நிற அழகினை யாம் பாடுவேம்; தொழுனை - யமுனை. தொழுனைத்துறைவன்-மாயவன் துறைவனுடையவும் துறைவனோடாடிய பின்னையினுடையவும் என்க. தொழுனைக் கணவனோடு எனவும் பாடம். இச் செய்யுள் இடையிற் சேர்க்கப்பெற்றதென்பர் அரும்பதவுரையாசிரியர். 1. "இறுமென்சாயல் . . . . . என்கோயாம்" இறுமென்சாயல் நுடங்க நுடங்கி - கண்டார் மென்மையால் இற்றுவிடும் எனத் தக்க இடை துவளும் வண்ணம் அசைபவளது, அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - புடவையை ஒளித்த மாயவனது வடிவின் அழகினையே யாம் புகழ்ந்து சொல்லுவேமோ, அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகம் என்கோ யாம் - அன்றி, அறுவையை ஒளித்தவன் அவள் துகிலின்மை கண்டு தளர்வுற அதனைக் கண்டு சோர்கின்ற நறிய மெல்லிய சாயலையுடையாளது காமக்குறிப்புடைய முகத்தினழகையே யாம் புகழக் கடவேமோ; சாயல் - மென்மை; இறுமென்னும் என்றமையால் அஃது இடையைக் குறித்தது. நுடங்கி - பெயர். என்குமோ என்னும் பன்மை என்கோ எனத் திரிந்து வந்தது ; பன்மை யொருமை மயக்கம் எனினுமாம். வடிவு சிறந்ததென்பேமோ ? முகம் சிறந்த தென்பேமோ? எதனைச் சிறந்ததென்று புகழ்ந்துரைப்பேம் என்றபடி. பின்வருவனவும் இன்ன. 2. "வஞ்சஞ்செய்தான் . . . . யாம்" வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென்கோ யாம் - காளிந்தி யாற்றினுள் தன்னை வஞ்சித்தானுடைய உள்ளத்தினைக் கவர்ந்தாளது அழகினையே புகழக் கடவேமோ. நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோயாம் - அன்றி, அங்ஙனம் தன் உள்ளத்தினைக் கவர்ந்தாளுடைய அழகினையும் வளையினையும் வௌவிக்கொண்டானுடைய வடிவழகையே புகழ்ந்து கூறுவேமோ; நிறை - ஈண்டு அழகு. 3. "தையல் கலையும் . . . . யாம்" தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் - கலையையும் வளையையும் இழந்து நாணினாலே தன் கையில் மறைந்தாளாகிய தையலின் முகத்தினழகையே யாம் புகழ்ந்து கூறுவேமோ, கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் - அன்றி, அவ்வாறு கையிலே மறைந்தாளுடைய முகத்தின் தன்மை கண்டு இரங்கி மயக்க முழந்தாளினது வடிவழகினையே புகழ்ந்து கூறுவேமோ ; கலை - ஆடை. இனி, கையிலொளித்தாள் என்பதற்குக் கலையை இழந்தமையால் கையால் மறைத்தாள் எனினுமமையும்; இதற்கு இல் மூன்றனுருபாகும். இவை குரவை மகளிர் கூற்று. ஒன்றன் பகுதி - ஒற்றைத் தாளத்தின் கூறு. 1. "கதிர்திகிரி . . . . நரம்புளர்வார்" கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் மதி புரையும் நறுமேனித் தம்முனோன் வலத்து உளாள் பொதி அவிழ் மலர்க் கூந்தற் பிஞ்ஞை - கட்டவிழ்ந்த மலரினைச் சூடிய கூந்தலையுடைய பின்னைதான் ஞாயிற்றைத் தன் கையிலுள்ள சக்கரப் படையான் மறைத்த கடல்போலும் நிறமுடைய கண்ணனுக்கு இடப் பக்கத்தும் திங்களை ஒத்த நறிய மேனியையுடைய அக் கடல் வண்ணன் முன்னோனாகிய பலதேவற்கு வலப் பக்கத்துமாக உள்ளாள் ; சீர் புறங் காப்பார் முதுமறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் - அவளது தாள வொற்றறுப்பைக் காப்பார் முதிய வேதத்தினை ஆராய்ந்த பழைய முறையானே நரம் பினைத் தடவி வாசிக்கும் நாரதனார் ; பிஞ்ஞை இடத்துளாள் வலத்துளாள் எனவும், நரம்புளர்வார் நாரதனார் புறங்காப்பார் எனவும் மாறுக. மறை - வேதத்தின் அங்கமாகிய சிக்கை ; இதனை நாரத சிக்கை என்பர். சிக்கை - இசைநூல். 2. "மயிலெருத் . . . . . . நரம்புளர்வார்" மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் பயில் இதழ் மலர் மேனித் தம் முனோன் இடத்து உளாள் கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை- சிறுபுறமாகிய பிடரை வளைத்து நின்ற நப்பின்னை ஆண்மயிலின் புறக் கழுத்தினை ஒத்த மேனியையுடைய மாயவன் வலப்பக்கத்துள்ளாள் ; மிக்க வெள்ளிய மலர்போலும் மேனியையுடைய அம் மாயவன் தமையனாகிய பலதேவன் இடப்பக்கத்துள்ளாள்; சீர் புறங் காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் - அவளுடைய தாளவறுதியைப் புறங்காக்கின்றவர் குயிலுவருள் இசை புணர்ந்திருக்கும் தாளவறுதியையுடைய நரம்பினை உருவி வாசிக்கும் நாரதனார் ; கயிலாகிய எருத்தென்க; கயில் - பிடர். குயிலுவர் - தோற் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, உருக்குக் கருவி இவற்றையுடையார். கொளை - இசை ; ஒற்றறுப்பு என்றுமாம். "மாயவன்றம் . . . . . . . . . தகவுடைத்தே" மாயவன் தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணன் தம்முனாகிய பலதேவருடனும் அழகிய வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னையோடும், கோவலர் தம் சிறுமியர்கள் குழற் கோதை புறஞ் சோர - இடையர் சிறுமியர்களுடைய கூந்தற்கண் சூடிய மாலைகள் எருத்தத்தே வீழ்ந்து அசைய, ஆய் வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு - கோத்த கைகளிலணிந்த அழகிய வளையல்கள் ஒலிக்கின்ற தாளத்திற்கு ஒக்க அடியைப் பெயர்த்து, அசோதையார் தொழுது ஏத்த - அசோதைப் பிராட்டியார் வணங்கிப் பரவ, தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே - துவராபதியில் தாதாகிய எருப் பொருந்திய மன்றத்தில் ஆடிய குரவைக்கூத்து மிகவும் தகுதியை உடைத்தாயிருந்தது; ஒடு இரண்டும் எண்ணிடைச்சொல். சிறுமியர் என்பது குட நாட்டு வழக்கென்பர். அசோதை - ஆயர் பாடியில் கண்ணனை வளர்த்த தாய். குரவையோ-ஓ, வியப்பு. மாயவன் தம் முன்னினோடும் பின்னையோடும் அடிபெயர்த்திட்டு ஆடும் குரவை யென்க. மாயவன் அன்றாடிய குரவையாகவே இதனைக் கருதி மாதர் வியந்தாள். 1"மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்" என்றார் பிறரும். எல்லா நாம் - நாமெல்லாம் ; தோழீநாம் எனலுமாம். "புள்ளூர் ......... ஒன்றுற்று" புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணி ஒன்று உற்று - கருடப் பறவையை ஊர்கின்ற கடவுளை இக் குரவையுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால் மிகவும் போற்றுவேம். அடுக்குப் பன்மை பற்றி நின்றது. பாணி - பாட்டு. உள்வரி - வேற்றுருக்கொண்டு நடிப்பது; திருமால் பாண்டியன் முதலியோராக உருக்கொண்டமை கூறுதலின் உள்வரிப் பாணியாம் என்க. 1. "கோவாமலை.........என்பரால்" கோவாமலை ஆரம் கோத்த கடல் ஆரம் தேவர் கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார் பினவே - கோக்கப்படாத பொதியமலையின் ஆரமும் கோக்கப்பட்ட கொற்கைக்கடலின் ஆரமும் இந்திரன் வெகுண்டு இட்ட பூணாகிய ஆரமும், ஆகிய இவை பாண்டியர் தலைவனது மார் பிடத்தன, தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் - அங்ஙனம் தேவர்கோன் பூணாரம் இறுதியாக வுள்ளனவற்றைப் பூண்டவன் யாவனென்னின், செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால் - வள மிக்க துவராபதிக்கண் ஆனிரையை மேய்த்துக் குருந்த மரத்தினை முறித்த கண்ணனென்று கூறுவர்; கோவா ஆரம் - சந்தனம்; கோத்த ஆரம் - முத்து; இவை இரண்டும் வெளிப்படை. 2. "பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ; பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம். 3. "முந்நீரினுள் . . . . என்பரால்" முந்நீரின் உள் புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - கடலினுள்ளேபுக்கு மூத்தலின்றி ஒருபெற்றியே நிற்கும் கடம்பை வெட்டினவன் வள மிக்க வஞ்சி நகரத்து வாழும் மன்னர் பிரானாகிய சேர வேந்தனாவான், மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், கல் நவில் தோள் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால் - மலையை ஒத்த தன் தோள்களைச் செலுத்திப் பாற்கடலைக் கடைந்த திருமால் என்று கூறுவர்; கடம்பெறிந்த செய்தியை, 1"மாநீர் வேலிக் கடம்பெறிந் திமயத்து, வானவர்மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்" எனவும், 2"வலம்படு முரசிற் சேர லாதன், முந்நீ ரோட்டிக் கடம் பறுத்து" எனவும் வருவனவற்றா னறிக. முந்நீர் - கடல்; ஆகு பெயர்; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தன்மையினை யுடையது என்பது பொருள். இது குறித்து அடியார்க்குநல்லார் எழுதிய வுரை வருமாறு:- "முந்நீர் - கடல் ; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும் இவற்றை முந் நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச் செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச் செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்" மூவாக்கடம்பு - வஞ்சத்தால் நிற்கின்றதாகலான் மூப்பின்றி என்றும் ஒருபெற்றியே நிற்கும் கடம்பு. இவை மூன்றும் பூவைநிலை. இந் நிகழ்ச்சி மதுரைக்கண்ண தாகலின் விருப்பு வெறுப்பற்ற சேர முனியாகிய இளங்கோவடிகள் சேரனை முற்கூறாது ஈண்டுப் பாண்டியனை முற்கூறினாரென்க. முன்னிலைப் பரவல் - முன்னிலையாக்கிப் பராவுதல். 1. "வடவரையை............மருட்கைத்தே" வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கிக் கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே - கண்ணனே நீ முன்பு ஒரு நாள் மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பினைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கினாய், கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றாற் கட்டுண்கை- அங்ஙனங் கலக்கிய நின்கை அசோதைப் பிராட்டியின் கடை கயிற்றினால் கட்டுண்ட கை, மலர்க் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே - தாமரை மலர் போலும் உந்தியினையுடையாய் இஃது ஒரு மாயமோ; மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது; வடவரை - இமயமலை எனினுமாம்; மலையென்னும் ஒப்புமை பற்றி; இங்ஙனம் ஒன்றன் வினையைச் சாதி ஒப்புமை பற்றிப் பிறி தொன்றின்மேல் ஏற்றிக் கூறல் முறை. கடல்வண்ணன் - கடல் போலும் கரியநிறமுடையன் ; கண்ணன் ; அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுண்டல் என்றுமாம். 2. "அறுபொருள்...........மருட்கைத்தே" அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே - தீர்ந்த பொருள் இவனே எனக் கொண்டு தேவர் கூட்டம் வணங்கிப் போற்ற நீ மிக்க பசி ஒன்று இல்லாது எல்லா உலகங்களையும் உண்டாய், உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகமுண்ட வாய் களவின்கண் உறிக்கண் உள்ள வெண்ணெயை உண்ட வாயாகும், வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - வளவிய துழாய் மாலையை உடையாய் இஃது ஒரு மாயமோ மிகவும் மருட்கையினை யுடைத்தாயிருந்தது; வண்டுழாய் மாலையாய் என்பதனை முதற்கண் உரைக்க. அறு பொருள் - தீர்ந்தபொருள்; அறுதியிடப்பட்ட பொருள்; இனி, இதற்கு ஐயமற்ற பொருள் என்றும், அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள் என்றும் கூறுவாருமுளர். உறுபசி - உற்ற பசியுமாம். அடைய - முழுவதும். 3. "திரண்டமரர்...மருட்கைத்தே" திரண்டு அமர் தொழுது ஏத்தும் திருமால் நின் செங்கமல இரண்டு அடியான் மூவுலகும் இருள் தீர நடந்தனையே - அமரர் கூடி வணங்கிப் போற்றுகின்ற திருமாலே நினது சிவந்த தாமரை மலர் போலும் இரண்டு அடிகளான் மூன்று உலகங்களும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாய், நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி - அங்ஙனம் நடந்த அடிகள் பாண்டவர் பொருட்டுப் பின்பு தூதாக நடந்த அடிகளாம், மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே - நரசிங்கமாகிப் பகையை அழித்தோய் இஃது ஓர் மாயமோ எங்கட்கு மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது; அமரர் தொழுதேத்தலை அடிக்குக் கூட்டினுமமையும். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். படர்க்கைப் பரவல்-தாம் பரவும் பொருளைப் படர்க்கையிடத்து வைத்துப் பராவுதல். 1. "மூவுலகும்...செவியே" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்; ஈரடியான் - ஈரடிக்கு. நிரம்பாமை - குறைவுபடுதல். சோ என்பது ஓர் அரண்; அன்றி ஒரு நகர் எனவும் உரைப்ப. அரண் மடியவே அரணத்துள்ளார் மடிந்தமையும் உணரப்படும். கான் போந்து இலங்கை கட்டழித்த வென்க. கட்டழித்தல் - நிலை குலை வித்தலுமாம். செவி என்ன செவி என்றது தான் கேட்டற்குரியன கேட்டுப் பயன் பெறாத செவி என்றவாறாம் ; பின்வருங் கண் முதலிய வற்றிற்கும் இங்ஙனமே கொள்க. இனி, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே என்பதற்குச் சேவகன் சிறப்பினைக் கேளாத செவியும் சில செவியே எனவுரைத்து, மண்ணினும் மரத்தினும் கல்லினும் செவியுண்டாகலான் இங்ஙனங் கூறினார் என்பர் அடியார்க்குநல்லார். பின்வருங் கண் முதலியவற்றிற்கும் இங்ஙனமே உரைப்பர். உலகமளந்தானும் சோவரணை மடித்தானும் இலங்கை கட்டழித்தானும் திருமாலே யென்றார் . 2. "பெரியவனை ... கண்ணே" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ; விரிகமல உந்தி - உலகமெல்லாம் தோன்றும் உந்திக் கமலம் என்றுமாம். செய்ய கரியவன் என்றது விரோதம் என்னும் அணி குறித்து நின்றது. கண்ணிமைத்துக் காண்பார் - இமைத்து ஏனைப் பொருளைக் காண்பவர். எனவே திருமாலை இமையாமற் காணவேண்டு மென்றாயிற்று. 3. "மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாதநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்; தாழ்தல் - தங்கல். கஞ்சனார் - செறலின்கண் பால் மயக்கம். நாற்றிசை, ஆகுபெயர். படர்தல் -செல்லுதல். இவை மூன்றும் படர்க்கைப் பரவல். 4. "என்றியாம் ...... முரசே" என்று யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் - என்று கூறி நாம் தொடுத்த குரவைக் கூத்தினுள் போற்றிய கடவுள், நம் ஆத்தலைப்பட்ட துயர் தீர்க்க - நமது பசுவினிடத்துப் பட்ட துன்பங்களை நீக்கிடுக ; வேத்தர் மருள வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே - வெற்றி தரும் இடியைப் படையாகவுடைய இந்திரனது முடி இடத்தை உடைத்த தொடி பொருந்திய தோளையுடைய பாண்டியனது குணிலால் எறியப்படும் முரசமானது பகையரசர் மயங்கும் வண்ணம் நாடோறும் பகைவர்களைக் கொன்று வெற்றியை அத் தென்னற்கு அளித்து முழங்குவதாக. வேத்தர் - வேந்தர்; வலித்தல். அடுக்கு, பன்மைப்பொருட்டு. (அரும்பத, `காலைவாய்த் தழுவினாள், மாலைவாய்க் கண்டாள்' என்கையால் குரவை யாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க.) இது கொச்சக வொருபோகு உரைவிரவி வந்தது. ஆய்ச்சியர் குரவை முற்றிற்று. 18. துன்ப மாலை (குரவை முடிவில் மாதரி வையையில் நீராடச் சென்றாள். அப்பொழுது மதுரையிலிருந்து வந்த ஒருத்தி, கோவலனைச் சிலம்பு திருடியவனென்று அரசன் ஏவலாளர் கொலை செய்தனர் என்று கூறக் கேட்டுக் கண்ணகி பதைபதைத்து மயங்கிப் பலவாறு புலம்பி அழுது, தானும் உயிர்விடத் துணிந்து, ஆதித்தனை நோக்கிக் 'காய் கதிர்ச் செல்வனே, நீ யறிய என் கணவன் கள்வனோ' என்ன, 'நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வனென்று கொலை செய்த இவ் வூரை எரியுண்ணும்' என ஓர் குரல் எழுந்தது. (இஃது அவலச்சுவை மிக்கது.) ஆங்கு; ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத் 5 தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள்; அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந்நங்கைக்குச் 10 சொல்லாடும் சொல்லாடுந் தான்; எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் 15 ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ; 20 தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; சொன்னது: 25 அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே எனக் கேட்டு, 30 பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்; இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் 35 துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்டழிவலோ; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் 40 மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனென்னும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ; தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப 45 இம்மையும்இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆயமடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க 50 பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். உரை 1. ஆங்கு - அவ்விடத்து; 2-7. ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் - அசைந்த சாயலையுடைய ஆய்க்குலத்து முதியாளாகிய மாதரி, பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் நீடு நீர் வையை நெடுமால் அடி ஏத்தத் தூவித் துறை படியப் போயினாள் மேவிக் குரவை முடிவில் - தாம் ஆடிய குரவைக் கூத்தின் முடிவின்கண் மலரும் புகையும் புனையுஞ் சந்தனமும் மாலையு மென்னும் இவற்றைத் தூவி இடையறா தொழுகும் நீரினையுடைய வையைக் கரைக் கண் திருமால் திருவடிகளைப் போற்றுதற்கு விரும்பி நீராடப் போயினாளாக, ஓர் ஊர் அரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள் - அப்பொழுது வேறொருத்தி உண்ணகரத்துப் பிறந்ததொரு சொற்கேட்டு அதனைக் கூறுதற்கு விரைவில் வந்தாள் உளள்; ஆயர்முதுமகள் போயினாள் ஆடிய சாயலாள் வந்தாளுளள் என்றியைத்தலுமாம். சாயலாள் - ஐயை யென்றலுமாம். நீடுநீர் - இடையறாது ஒழுகும் நீர். நெடுமால் இருந்த வளமுடை யாரெனவும் சுந்தர வானத் தெம்பெருமான் எனவும் கூறுப. துறைபடிதல் - நீராடுதல் ; அக் கால வழக்கு என்ப. தூவி ஏத்தத் துறைபடியப் போயினாள் என்க. தூவுதல் - வழங்குதல். 8. அவள்தான் - அங்ஙனம் வந்து நின்றவள்தான்; 9-10. சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந் நங்கைக்கு - அத் துயர் மொழியினைக் கண்ணகிக்குக் கூறாதே நின்றாள்; சொல்லாடும் சொல்லாடும் தான் - அக் காலைக் கண்ணகி அவட்குக் கூறுகின்றாள்; அந் நங்கை - கண்ணகி ; கேட்டு வந்தாள் எனலுமாம். தான் - கண்ணகி. 11. எல்லாவோ - தோழீ ; ஏடீ எனலுமாம். ஓ, இரக்கம். 12-15. காதலற் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு அன்றே - என் காதலனை யான் காண்கின்றிலேன் ஆகலான் என்னுள்ளம் கலங்கத் துன்பம் மிகாநின்றது அதுவேயுமன்றி மூச்சும் கொல்லனூதும் துருத்தியும் தோல்வியுற அழல் எழ உயிர்க்கின்றன, ஊது உலை தோற்க உயிர்க்கும் என்னெஞ்சு ஆயின் - இவை இங்ஙனமாதலால், ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழி யாதோ ; கலங்கி - கலங்கவெனத் திரிக்க. நெஞ்சு கலங்கி என்க. விரைவொடு வந்தாள் உரையாடாதிருக்கின்ற நிலைமையானும் தன்னெஞ்சு கலங்கலானும் நிகழ்ந்த தொன்றுண்டெனவுட் கொண்டு அந் நிகழ்ச்சி தானும் இவள் நேரே யறியாது நகரத்துப் பிறர் வாய்க்கேட்டு அறிந்திருத்தல் கூடுமெனக் கருதி ஏதிலார் சொன்னதெவன் என்றாள் என்க. இனி, ஏதிலார் என்றது சொன்னவளையும் கேட்கின்றாரையும் எனவுங் கூறுவர். அன்றே,அசை, ஓ, இரக்கம், வாழி, முன்னிலையசை. பின் வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 16-19. நண்பகற் போதே நடுக்கு நோய் கைம்மிகும் - நல்ல பகற் பொழுதிலேயே நடுக்கம் செய்கின்ற துன்பம் மிகாநின்றது, அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு அன்றே - அதுவுமன்றி என் காதலனைக் காணப் பெறாமையான் என் உள்ளம் வருந்துகின்றது, அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் என்னுள்ளம் வருந்துமாதலான், மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழிதான் யாதோ; கோவலன் பிரிந்த போதே இவளுள்ளம் கலங்கலான் நண்பகற்போதே நோய் கைம்மிகும் என்றாள். அன்றியும் இக் காலம் பகற்கால மாகலான் இங்ஙனங் கூறினாள் எனலுமாம். நடுக்கு நோய்- நடுக்கஞ் செய்யும் நோய். அலவும் - சுழலும், வருந்தும் மன்பகை - மக்கட் கூட்டம், ஈண்டு ஏதிலார். 20-23. தஞ்சமோ தோழீ தலைவன் வரக் காணேன் - என் நாயகன் வரக் காண்கின்றிலேன் ஆதலான் தோழீ இனி எனக்கொரு அடைக்கலமுண்டோ, வஞ்சமோ உண்டு - என் தலைவனை வஞ்சகப்படுத்திய செயலொன்றுளது, மயங்கும் என் நெஞ்சு அன்றே.ஆகலான் என்னுள்ளம் மயங்காநின்றது, வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் வஞ்சச் செயல் நிகழ்ச்சியும் என் நெஞ்சு கலங்கலும் உண்டா மாகலான், எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழி யாதோ ; தஞ்சமோ என்பதற்கு நிகழ்ந்த செயல் எளிதன்று எனக் கூறினுமமையும், வஞ்சம் - வஞ்சச் செயல். எஞ்சலார் - அயலார்; இனி, நெஞ்சலார் எனப் பிரித்து நெஞ்சம் கலத்தலில்லாதவர் எனக்கொண்டு அப்பொருட்டாக்கினும் அமையும். தாழிசை மூன்றனுள்ளும் வந்த தோழீ என்றது ஐயையை என்க. 24. சொன்னது - அவள் கூறியது ; அவர்கள் கூறியது எனவும் உரைப்ப. 25-28. அரசு உறை கோயில் அணியார் ஞெகிழம் - அரசன் விரும்பித் தங்கும் கோயிற்கணிருந்த அழகு மிக்க சிலம்பினை, கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே - சிறிது அரவமும் இன்றிக் கவர்ந்த கள்வன் இவனேயாமென்று கூறி, குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த ஊர்காவலர் இவனைக் கொலை செய்தலைக் கருதினர்; அரசு உறை கோயில் என்றது ஈண்டு அந்தப்புரத்தை என்ப. ஞெகிழம் - சிலம்பு. கரைதல் - ஒளித்தல் ; வருந்துதல் எனலும் ஆம். கொலை செய்தனர் எனக் கூறின் இவள் இறந்துபடுவாள் எனக் கருதிக் கொலை குறித்தனர் என்றாள் என்க. 29. எனக்கேட்டு - என்று அவ் வையை சொல்லக் கேட்டு; 30-33. பொங்கி எழுந்தாள் - சீறி எழுந்தாள், விழுந்தாள் பொழி கதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங்கொண்டென - நிலவினைப் பொழியும் திங்கள் கரிய முகிலோடும் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்தது போல வீழ்ந்தாள், செங்கண் சிவப்ப அழுதாள் - தன் சிவந்த அரி பரந்த கண்கள் சிவக்கும்படி அழுதாள், தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் கணவனை எவ்விடத்தாய் என்று கூவி வருந்தி ஏக்கமுற்று மயங்குவாள்; சேணிலங்கொண்டென விழுந்தாள் என்க. எழுந்தாள் மாழ்குவாளாய் விழுந்தவளாய் அழுதாள் என்க. தன் தலைவனைக் கொலை குறித்தனர் எனக் கேட்டவுடன் வெகுளியும் பின்னர் அவலமும் தோன்றிய வென்க. திங்களும் முகிலும் அவள் முகத்திற்கும் குலைந்த குழலுக்கும் உவமை. ஆ, இரக்கக் குறிப்பு. எங்கணாய் என்று பாடங் கொள்ளுதலுமாம். 34-37. இன்பு உறு தம் கணவர் இடர் எரியகம் மூழ்க -தம்மோடு இன்புற்ற தன் கணவன்மார் இடர் செய்யும் தீயிடத்து மூழ்கவும், துன்புறுவன நோற்றுத் துயர்உறு மகளிரைப்போல் - அவரோடு தாமும் தீயின் மூழ்காது துன்பமுறுந் தன்மையவாகிய கைம்மை நோன்பினை நோற்றுத் துயரடையும் பெண்டிரைப்போல, மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப அன்பனை இழந்தேன் யான் அவலங்கொண்டு அழிவலோ - மக்கட் கூட்டமெல்லாம் என்னைப் பழி தூற்றப் பாண்டியன் தவற்றினைச் செய்தலாற் காதலனை இழந்தேனாகிய யான் அழுகையைக்கொண்டு உள்ளமகிழ்கின்றா ளொருத்தியோ; துன்புறுவன நோற்றல் - 1வெளிளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதிதல் ஆம். மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன் யான் மகளிரைப்போல் அலர்தூற்ற அவலங்கொண் டழிவலோ என்க. 38-41. நறை மலி வியன் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி - மணம் மிக்க அகன்ற மார்பினையுடைய தங் கணவனை இழந்ததனால் ஏக்கமுற்று, துறை பல திறம் மூழ்கித் துயர்உறு மகளிரைப்போல் - திறப்பட்ட பல நீர்த்துறைகளிலும் சென்று நீராடி இடர் மிக்கு அழுகின்ற பெண்டிரைப் போல, மறனொடு திரியுங் கோல் மன்னவன் தவறு இழைப்ப அறன் எனு மடவோய் யான் அவலங்கொண்டு அழிவலோ - அறக் கடவுளெனப்படும் அறிவற்றோய் பாவத்தினைப் பின்பற்றிச் செல்லும் கொடுங்கோன்மையை யுடைய பாண்டியன் தவற்றினைச் செய்தலான் யான் அவலத்தினை மேற்கொண்டு உள்ளமழிவேனோ; மூழ்குதல் - அழுக்கறக் குளிரக் குளித்தல். அல்லவை செய்யாத் தன்கணவனைக் காவாதிருந்ததற் பொருட்டும் மன்னவன் மறனொடு திரியக்கண்டும் அவனிடத்தே நின்றதுபற்றியும் புலந்து ‘அறனெனுமடவோய்' என்றாள். முன்னர், நண்பன் என ஒருமை கூறிப் பின்னர் மகளிர் எனப் பன்மை கூறியவதனால் கணவன் என்பதனை மகளிர்க்குத் தனித்தனியே கூட்டுக. "ஏவ லிளையர் தாய் வயிறு கறிப்ப" என்பதுபோல. பின்வருவதனையும் இவ்வாறே கொள்க. 42-45. தம்முறு பெருங்கணவன் தழல் எரியகம் மூழ்க - தம்மோடுற்ற பெருமை மிக்க கணவன் சுடுகின்ற தீயிடத்தே மூழ்கவும், கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப்போல் - தாமும் அத் தீயிடத்தே மூழ்காது பல நீர்த்துறைகளில் படிகின்ற கைம்மை நோன்பு மிக்க வருந்துதலையுடைய மகளிரைப் போன்று, செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ - செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவற்றைச் செய்தலான் இப் பிறவியிலும் புகழை விட்டு நீங்கி வருந்தி ஏக்கமுற்று உள்ளமழிவேனோ; கைம்மை கூர் மகளிர் என்க. கவலையமகளிர்-உயவற் பெண்டிர். செம்மை - வளையாமை. இம்மையும் - உம், எச்சவும்மை; என்னை? மறுமையிலும் புண்ணியத்தை ஒரீஇ எனப் பொருள் படலான். 46. காணிகா - காண்பாயாக; இகவென்னும் முன்னிலையசை இகாவெனத் திரிந்தது. காணிகா காணிகாவெனப் பாடங்கொண்டு, இரண்டும் விரைவின்கண் வந்தன என்பர் அரும்பதவுரையாசிரியர். 47-53. வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க - மேல்வருந் தீமை நீங்குதல் வாய்த்தற் பொருட்டான் எடுத்த குரவைக்கூத்தினுள் வந்து திரண்ட இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேண்மின் இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேட்க, பாய் திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய் கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் - காய்கின்ற கதிர்களையுடைய செல்வனே பரந்த அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ் வுலகத்துத் தோன்றும் பொருள்கள் யாவற்றையும் நீ அறிவாய் ஆகலான் நீயறிய என் கணவன் கள்வனோ சொல்லென்றாள், கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் - என்றவட்கு ஓர் அசரீரி கரிய கயல்போலுங் கண்களையுடைய மாதே நின் கணவன் கள்வனல்லன் அவனைக் கள்வனென்ற இவ்வூரினை விளக்கம் பொருந்திய தீ உண்ணும் என்று கூறிற்று என்க. கேட்டீமின் - கேண்மின் ; வினைத்திரிசொல், கேட்டை என்னும் வினையசைச்சொல் ஈற்றுவியங்கோள் விகுதி பெற்றுக் கேட்க வென்னும் பொருட்டாயிற்று. கேட்டீமின் கேட்டைக்க என இரட்டித்தது யாவருங் கேட்டற்பொருட்டாம். பாய்தல் - பரத்தல். முதற்கண் கள்வனோ என்றதன்கண் ஓ வினாப்பொருட்டு; பின்னதன் ஓ பிரிநிலை. உண்ணும், முற்று. இவ்வூர் - கள்வனென்று கூறிய இவ்வூர். இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. துன்ப மாலை முற்றிற்று 19. ஊர்சூழ் வரி (கதிரோன் கூறியதைக் கேட்ட கண்ணகி, மிக்க சினங்கொண்டு, தன்பால் இருந்த மற்றொரு சிலம்புடன் புறப்பட்டு மதுரையின் வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, ‘என் கணவனை முன்போலக் கண்டு அவன் கூறும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின் என்னை இகழுமின்' என்று சூள் கூறிச் சென்று, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக் கண்டு அளவிலாத் துயரெய்தி, அவனை முன்னிலையாக்கிப் பலவாறு புலம்பி அவன் உடம்பைத் தழுவிக் கொள்ள, அவ்வளவில் அவன் எழுந்து நின்று `மதிபோன்ற நின் முகம் வாடியதே' என்று சொல்லிக் கையாள் அவள் கண்ணீரை மாற்ற, அவள் கணவனுடைய அடிகளை இரண்டு கையாலும் பற்றி வணங்கினாள் ; அப்பொழுது அவன் `நீ இங்கிருக்க' என்று சொல்லி, அவ் வுடம்பை யொழித்து, அமரர் குழாத்துடன் துறக்கம் புகுதற்குச் சென்றான். கண்ணகி `என் சினந் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்; தீமையுடைய அரசனைக் கண்டு இதனை உசாவுவேன்' என்று அரசன் கோயில் வாயிலை அடைந்தாள். (இதன் அவலச்சுவை கன்னெஞ்சையும் கரைக்க வல்லது). என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று 5 பட்டேன் படாத துயரம் படுகாலை உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே 10 காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று காதற் கணவனைக் கண்டா லவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று 15 அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் 20 தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் 25 ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும் மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் 30 செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச்செங்கதிரோன் சென்றொளிப்பப் புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல்லென் ஒலிபடைத்த தூர்; 35 வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம் என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர் 40 பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ 45 பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப 50 உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் 55 ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் 60 என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் 65 தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் பழுதொழிந்தெழுந்திருந்தான்பல்லமரர்குழாத்துளான் மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று 70 காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் 75 சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன். உரை 1-4. என்றனன் வெய்யோன் - காய்கதிர்ச் செல்வன் நின் கணவன் கள்வனல்லன் என்றனனாக, இலங்கு ஈர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி - அறுக்கப்பெற்று விளங்குகின்ற வளையலை அணிந்த தோள்களை யுடைய கண்ணகி மற்றைச் சிலம்பினைக் கையின்கண் ஏந்தி அவ்விடத்து நில்லா ளாய், முறை இல் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று - நீதி யில்லாத அரச னுடைய ஊரின்கணிருந்து வாழ்கின்ற கற்புடைய பத்தினிப் பெண்டீர் இச் சிலம்பு அச் சிலம்பின் மற்றொன்று, அதனைக் காண்மின்; இலங்கு ஈர் என்பதனை ஈர்ந்திலங்கு என மாறுக. நின்றிலள் - அவ்வாயர் பாடியினில்லாது நகரத்துச் சென்றாள். நின்ற சிலம்பு - ஒழிந்த சிலம்பு; மற்றைச் சிலம்பு. பத்தினிப் பெண்டிர்காள் என் றது இகழ்ச்சி; என்னை இகழ்ச்சி எனின்? 1அருந்திற லரசர் முறை செயி னல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது." எனவும், 2"மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி னின்றால்" எனவும் வருவனவற்றான் இகழ்ந்தாள் என்க. அவன் நாட்டு மகளிர்க்கும் கற்பின்றாம் ஆகலின், அவனிருக்கும் ஊரின்கண் வாழும் நுமக்கும் கற்பு இன்றாம் என இகழ்ந்தாள். 5-8. பட்டேன் படாத துயரம் படுகாலை - இம் மாலைக் காலத்து உலகத்து மற்றெவரும் படாத துயரம் பட்டேன், உற் றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று - பிறர் உறாத துன்பத் தினை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யானுறக்கட வேனோ இஃதோர் வினைப்பயன், கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன் எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒருபெயரிட்டு அவனைக் கொன்றார்களே இஃ தோரநியாயம்; படுகாலை - ஞாயிறு மறையும் காலம் ; மாலை, இனி, படுகாலை என்பதற்கு இறப்பு நெருங்கிய காலம் எனவும் உரைப்ப, உறுவன் - அன் விகுதி தன்மைக்கண் வந்தது, பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க. என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டால் என் றது தான் ஓர் அரசனாக இருந்தும் எனது சிலம்பிற்குரிய விலையைத் தருவதற்கு ஒருப்படானாயினனே என்று வியந்து கூறியவாறாம். கொன் றாரே என்ற பன்மை அமைச்சரையும் கருதி நின்றது. உறுவனே - ஏ. வினாவாகி எதிர்மறையை யுணர்த்தி நின்றது. கள்வனோ - ஓ, பிரிநிலை. 9-10. மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தம் கணவர் காதலிக்குந் தகுதியினையுடைய மகளிர் கண் முன்னரேயே, காதற் கணவனைக் காண்பனே ஈது ஒன்று - அன்பு நிறைந்த என் கணவனை உயிருடையவனாகக் காண்பேன். அங்ஙனங் காணும் இஃதோர் புதுமையன்றோ; மாதர் - காதல். தகை - ஈண்டுக் கற்பு. கணவனைக் காண் பேன் என்றது கணவனைப் பண்டுபோல உயிருடையவனாக் காண் பேன் என்றவாறு. 11-12. காதற் கணவனைக் கண்டால் அவன் வாயின் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று - அங்ஙனம் என் கணவனைப் பண்டு போலக் காண்பேனாயின் அவன் வாயினாற் கூறும் குற்ற மற்ற இனிய மொழியைக் கேட்பேன் இஃதோர் சூளாகும்; 13-14. தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனேல் - அங்ஙனம் அவன் கூறும் நல்லுரையைக் கேளாதொழிவேனாயின், நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று - இவள் நமக்கு வருந் தத் தக்கன செய்தாளென்று என்னை இகழுக. இது நுங்கட்கோர் வாய்ப்பிடம்; நோதக்க செய்தது, 1"நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்" என்று இகழ்ந்து கூறியது. எள்ளல் என்றது இவள் கள்வன் மனைவியே என்று இகழுமின் என்றவாறு. எள்ளல் - அல்லீற்று வியங்கோள் ; 2"மக்கட்பதடி எனல்" என்பதுபோல. 14-18. என்று அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - என்று கூறி வருத்தமுற்றுப் பொறாது அழுகின்றாளை வளமிக்க மதுரை நகரத்தார் யாவரும் கண்டு ஏக்கமுற்றுக் கலங்கி, களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இது என் கொல் - நீக்க வொண்ணாத துன்பத்தினை இக் காரிகைக்குச் செய்து எஞ்ஞான்றும் கோடாத செங்கோல் கோடிற்று இது யாது காரணத்தால் நிகழ்ந்ததோ ; அயல் நாடு போந்து தீதிலாக் கணவனை இழந்து தனித் துயருழத் தல் பற்றி மதுரையாரெல்லாரும் மயங்கினார் என்க, 3"அல்லற் பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை" என்னும் குறளின் கருத்து ஈண்டு அறிதற் குரியது. 4"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்" ஆகலான், களையாத் துன்பம் என்றார். 19-20. மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என் கொல் - அரசர்க் கரசனும் திங்களை ஒத்த குடையினையும் வாளினையும் உடைய வேந்தனும் ஆகிய பாண்டியனது அரசியல் அழிவுற்றது இது யாது காரணத்தானிகழ்ந்ததோ : குடையையும் வாளையுமுடைய வேந்தன் என்க. குடையும் வாளுங் கூறவே அளியுந் தெறலும் பெறப்பட்டன. கொற்றம் - அரசியல். 21-22. மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை தண் குடை வெம்மை விளைத்தது இது ‘என்கொல் - நிலவுலகினைக் குளிரச் செய்யும் மறம் பொருந்திய வேலையுடைய சிறந்த தகுதியை யுடையானது தண் குடை வெம்மையை உண்டாக்கிற்று. இது யாது காரணத்தானிகழ்ந்ததோ; மண்குளிரச் செய்தலாவது மன்பதை துன்புறாமற் காத்தல். மண் குளிரச் செய்யும் தண்குடை யென்க. 1"மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள், விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற், கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடி கயத் தடமுங் காவும், தண்குளிர் கொள்ளு மேனுந் தான்மிக வெதும்பு மன்றே" என்னுஞ் செய்யுள் ஈண்டு ஒத்து நோக்கற் குரியது. 23-24. செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம் பொருட் டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது இது என் கொல் - செம் பொன்னாலாகிய ஓர் சிலம்பினைத் தனது கையின்கண் ஏந்தி நம்மைக் கெடுத்தற்பொருட்டுப் புதிய பெரிய தெய்வம் வந்துற்றது இதனால் மேல் விளைவது யாதோ; நம்பொருட்டு - நம்மை நன்னெறிப்படுத்தும் பொருட்டு எனலு மாம். பெருந்தெய்வம் என்றது, முன்னர், 2"கற்புக் கடம் பூண்ட இத்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டில மால்" எனக் கூறினமையானென்க. 25-26. ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வ முற்றாள் போலுந் தகையள் இதுவென் கொல் - புலம்பி ஏக் குற்று அரற்றுவாளாய அழகிய அரி பரந்தமை பூசிய கண்ணினை யுடையாள் தெய்வத் தன்மையுற்றாள் போலுந் தகுதியை யுடையளாயினாள். இதனால் மேல் விளைவது யாதோ; ஐ - வியப்புமாம். உண்கண் - மை பூசிய கண். அரற்றுவாள் உண்கண் என மாறுக. தெய்வமுற்றாள் - தெய்வமேறினாள் எனலு மாம். 27-32. என்பன சொல்லி இனைந்து ஏங்கி - என்றின்னவற் றைச் சொல்லி வருந்தி ஏங்க, ஆற்றவும் மன்பழி தூற்றுங் குடி யதே மா மதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட - அரசன் கோல் கோடினமையான் அவனை மிகவும் பழிதூற்று கின்ற குடியினை யுடைத்தாகிய மதுரைக்கண் உள்ள கம்பலை மாக்கள் சிலர் அவள் கணவனை அவட்குக் காட்ட, செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் - அவனைக் கண்ட சிவந்த பொன்னாலாய கொடி போன்றவளைத் தான் காணப் பொறானாய், மல்லல் மா ஞாலம் இருளூட்டி மா மலைமேல் செவ் வென் கதிர் சுருங்கிச் செங்கதிரோன் சென்று ஒளிப்ப - வளம் நிறைந்த பெரிய உலகிற்கு இருளை ஊட்டிக் கரிய மேற்கு மலை யின்கண் தனது சிவந்த கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஞாயிறு சென்று மறைய ; என்பன சொல்லி என்றது களையாத துன்பம் என்பது முதலாகச் சொல்லியவற்றை. ஏங்கி - ஏங்கவெனத் திரிக்க. மதுரையா ரெல்லாரும் சொல்லி இனைந்து ஏங்க என்க. பழி தூற்றல் குடியின் தொழில். ('வன்பழி' என்ற பாடத்திலும் 'மன்பழி' என்ற பாடமே சிறந்ததாகத் தோன்றுகிறது) கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு திரியுமவர் என்ப ; கம்பலை - ஒலி. தான் என்றது செங்கதி ரோனை ; அவன், தன் இறந்த கணவனை நோக்கி வருந்தும் கண்ணகி யைக் காணப் பொறாது மலையில் மறைந்தான் என்றார். இனி, தான் காணான் என்றதற்குக் கோவலன் இறந்தமையான் அவளைக் காணா னாயினான் எனவும் உரைப்ப; அது பின்னர் வருகின்றது. சுருக்கி எனற்பாலது சுருங்கி என்றாயிற்று. 33-34. புல்லென் மருள் மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல் லென் ஒலி படைத்தது ஊர் - அங்ஙனம் அவன் மறைதலானே புல்லென்ற மருட்சியையுடைய மாலைக் காலத்தே பூத்து உதிர்த்த கொடிபோன்ற கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது அரற்றலான் அவ்வூர் ஒல்லென்னும் ஒலியினைப் படைத்தது ; சிறிது காலமே நிற்றலான் புன்மை உடைத்தாயிற்று ; புற் கென்ற நிறமுமாம். இரவென்றும் பகலென்றும் துணியலாகாது மயங்குதற்கேதுவாகிய மாலையென்க. ஒல்லென், ஒலிக்குறிப்பு. 35-38. வண்டு ஆர் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய் - காலைப் போழ்தில் தன் கணவனைத் தழுவி அவனிடத்து வண்டுகள் நிறைந்த கரிய அவன் குஞ்சியிற் சூடிய மாலையை வாங்கித் தனது நீண்ட குழலினிடத்துச் சூடிக் கொண்டவள். புண் தாழ் குருதி புறஞ் சோர மாலைவாய்க் கண்டாள். அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் - மாலைப் போழ்தில் அவன் மெய்யிற் புண்ணினின்றும் குதிக்கின்ற குருதி உடலிடமெல்லாம் நனைக்க அக் கோவலன் தன்னைக் காண வொண்ணாத மிக்க துயரத்தினைக் கண்டாள் ; வண்டுஆர் - வண்டொலிக்கின்ற எனலுமாம். குஞ்சி - ஆண் பால் முடி. அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் என்றது அவனது இறப்பினை என்க. காலைவாய்த் தழீஇக் குஞ்சி மாலை குழன்மேற் கொண்டாள் மாலைவாய்க் குருதி புறஞ்சோரக் காணாக் கடுந்துயரங் கண்டாள் என மாறுக. மாலையில் உண்டாகிய துன்பத்தின் வரம்பின்மையும் விரைவுந் தோன்றக் காலையில் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சியை உடன் கூறினார். 39-42. என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்- என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும் நம் காதலி யாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப் பட்ட நுமது பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மிக்க துயரத்துக் குக் காரணமாய அரசன் செய்த இக் கொலைத் தொழில் எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணா எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ - இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண் என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ; நறுமேனி - மணந்தருவன பூசிய மேனி, ஓகாரம் - இரக்கம். உறுதுயர் மன் செய்த மறவினை எனக் கூட்டுக. இனி, உறுதுயர் செய்த மன் மறவினை எனலுமமையும். மறவினை - கொலைத் தொழில், என்னுறு வினை காணா இது என்பதற்கு, இக் கொலை நிகழ்ச்சி என்னை யுற்ற தீவினையின் பயனேகாண் எனவுரைத்தலும் அமையும்; ஆ, அசை, தான் அயல்நாட்டினளாகலான் இந் நாட்டில் எனக்குச் சொல்லார்களோ என்றாள். இஃது அழுகையைச் சார்ந்த வெகுளி; மேல்வருவனவும் இன்ன.. 43-46. யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் - எனக்குத் துணையாக ஒருவருமில்லாத மயக்கத்தினைச் செய்யும் இம் மாலைக் காலத்தே துயருறுகின்ற தனியேன் கண்முன்னரேயே, தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ - நிறைந்த மலர்மாலைக்குள் முழுகும் நுமது அழகிய மார்பு வெறு நிலத்தே படிந்து கிடக்கத் தக்க தொன்றோ, பார் மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப ஈர்வதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - உலகத்தார் மிக்க பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இந் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டுவிப்பதோர் நின் தீவினையின் பயன்காண் என ஒருவரும் சொல்லாரோ ; பாண்டியன் தவறிழைப்ப என்றது ஆராயாமல் கோவலனைக் கொலை செய்யக் கூறியதனை என்க. ஈர்வது - வெட்டுவது. 47-50. கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையேன் முன் - கண்கள் பொழிகின்ற நீர் சோராநிற்கும் தீவினையுடை யேன் கண் முன்னரேயே, புண்பொழி குருதியிராய்ப் பொடி யாடிக் கிடப்பதோ - நீவிர் புண்ணினின்றும் ஒழுகுகின்ற செந் நீரை உடையீராய்ப் புழுதி படிந்து கிடத்தல் தகுவதொன்றோ, மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப உண்பதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - மக்கள் பலரும் தன் பழியினைக் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இது நிகழ்ந்தது நீ நுகர்வதோர் தீவினையின் பயன்காண் என ஒருவரும் கூறாரோ; குருதியிர் - முன்னிலையில் உயர்வுப்பன்மை, தவறிழைப்ப என் பதற்கு முன்னுரைத்தாங் குரைக்க. உண்பதோர் வினை என்பதற்கு உயிரினை உண்பதோர் வினை எனலும் அமையும். மேற்கூறிய மூன்றும் முதுபாலை ; என்னை? 1"நனிமிகு சுரத் திடைக் கணவனை யிழந்து, தனிமகள் புலம்பிய முதுபாலையும்" என் பதனான் என்க. . 51-53. பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கோல் கோடிய மன்னனையுடைய இக் கூடல் நகரிடத்துக் கற் புடை மகளிரும் உளர்கொல்லோ, கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - தாம் உள்ளத்துக் கொண்ட கணவருடைய மிக்க குறையினைப் பொறுக்கின்ற கற்புடைய மகளிரும் உளர் கொல்லோ; கொண்ட கொழுநர் என்பதற்குத் தம்மை மணந்துகொண்ட எனவும், தம்மை உள்ளத்துக்கொண்ட எனவும் கூறினும் அமையும், உறுகுறை - கணவர் உற்ற நோய் முதலியன; குற்றங்களைக் குறை யுறப் பொறுத்தலுமாம். உண்டு, பொதுவினை. 54-56. சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல் - இக் கூடல் நகரிடத்துப் பெரியோரும் உளரோ, ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தாங்கி வளர்க்கின்ற பெரியோரும் உளரோ; பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தம் குழவிபோற் பேணி வளர்க்குஞ் சான்றோரென்க. 57-59. தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல் - என் கணவனைக் கூரிய வாளால் வெட்டியதனால் கோல் கோடிய பாண்டியன் கூடல் நகரிடத்துத் தெய்வமும் உளதோ; தப்புதல் - வெட்டுதல்; 1"வாளிற் றப்பிய வண்ணமும்" என்றார் பிறரும், கற்புடை மகளிரும் சான்றோரும் தெய்வமும் உண்டாயின் இக் கொடுஞ்செயல் நிகழாது ; இது நிகழ்ந்தமையால் அவரும் அதுவும் இந் நகரிடத்து இல்லை என்றாள் என்க. 60-67. என்று இவை சொல்லி அழுவாள் கணவன்றன் பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள - என்று இவற் றைச் சொல்லி அழுகின்றவள் தன் கொழுநனுடைய திருத் தங் கிய மார்பினைத் தன் மார்போடு பொருந்தும் வண்ணம் தழுவிக் கொண்டாளாக, நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றி யது என்று அவள் கண்ணீர் கையால் மாற்ற - உயிர் பெற் றெழுந்து நின்ற கோவலன் கண்ணகியை நோக்கி நினது நிறை மதிபோலும் ஒள்ளிய முகம் கன்றியதே என்று வாயாற் கூறி அவள் கண்ணீரைத் தன் கையால் துடைக்க, அழுது ஏங்கி நிலத் தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன் தொழுதகைய திருந்து அடியைத் துணைவளைக் கையாற் பற்ற - கண்ணகி புலம்பி ஏக்கமுற்று நிலத்தின்கண் விழுந்து தன் காதலனுடைய தொழத் தக்க திருந்திய அடிகளைத் தனது வளையணிந்த இரு கைகளாலும் பூண்டுகொண்டாளாக, பழுது ஒழிந்து எழுந்திருந் தான் பல்லமரர் குழாத்து உளான் எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்கவெனப் போனான் - இவ் வுடலைவிட்டு நீங்கித் துறக் கம் புக எழுந்தவன் எழுதிய அழகிய மலர்போலும் மை பூசிய கண்களையுடையாய் நீ இங்கிருக்கவெனச் சொல்லிப் பல தேவர் கூட்டத்துள்ளானாய் வானுலகு புக்கான் ; என்றிவை சொல்லி என்றது, "என்னுறுதுயர்" முதல், "தெய்வமு முண்டுகொல்" வரை கூறியன. அழுவாள், வினைப்பெயர் எழுந்து நின்றான் என மாறுக. நின்றான், பெயர். மாற்றல் - துடைத்தல். பழுது - உடல்; 1"திருந்திய நின்மகன் தீது நீங்கினான்" என்ற விடத் துப் பழுதென்னும் சொல்லின் மறு பெயராகிய தீது என்னும் சொல் உடல் என்னும் பொருட்டாதல் காண்க. இனி, முன்னரே பழுதொழிந் திருந்தான் பல்லமரர் குழாத்துள்ளவன், தழீஇக் கொள்ள, எழுந்து நின்றான் மாற்ற, பின் வளைக்கையாற் பற்ற, உண்கண் இருந்தைக்க வெனப் போனான் எனக் கூட்டலும் அமையும். இருந்தைக்க - இருக்க ; வினைத்திரிசொல். 68-71. மாயம் கொல் மற்று என் கொல் மருட்டியது ஓர் தெய்வம் கொல் - இங்ஙனம் எழுந்து உரையாடியது வஞ்சங் கொல்லோ அன்றி என்னுள்ளத்தை மயக்கியதோர் தெய்வமோ தான் மற்று வேறு யாதோ, போய் எங்கு நாடுகேன் - இனி யாண்டுச் சென்று என் கணவனைத் தேடுவேன், - பொருள் உரையோ இது வன்று - இக் கூறிய உரை மெய்யுரை யன்று, காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் - என் கண வனைக் கூடுதல் எனக்கு எளிதாயினும் எனது மிக்க வெகுளி தணிந்தாலன்றி அவனைக் கூடேன், தீ வேந்தன் தன்னைக் கண்டு இத் திறம் கேட்பல் யான் என்றாள் - அச் சினந் தணிதற்கு யான் கொடிய பாண்டிய மன்னனைக் கண்டு இக் கொலைத் திறத்திற் குரிய காரணந்தான் யாதென்று கேட்பேன் என்றாள் ; தெய்வங்கொல் என்றாள் ; வெட்டுண்டு இரு துணியாகிய உடல் கூடி உயிர் பெற்று நின்றமையான். மாயங்கொல் என்றாள் ; எழுந்து உரையாடி மறைந்தமையான். போயெங்கு நாடுகேன் என்பதற்கு யாண்டும் சென்று என் கணவனைத் தேடுவேன் எனலுமாம். கணவனைக் கைகூடலாவது, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா தின்னுயிரீந்தும், நன்னீர்ப் பொய்கையின் நளி யெரி புக்கும் மறுமைக் கண் கணவனைக் கூடுதல். இத் திறம் என்றது தன் கணவனைக் கொலை செய்த இவ்வகை. யான் நாடுகேன் கைகூடேன் கேட்பல் என்றாள் என்க. 72-75. என்றாள் எழுந்தாள் - என்றிங்ஙனங் கூறியவள் ஆண்டுப் போதற்கு எழுந்தாள், இடர் உற்ற தீக் கனா நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர் சோர - எழுந்தவள் தன்னூரிற் கண்ட துன்ப மிக்க தீய கனாவினை நீண்ட கயல்போலும் கண் களினின்றும் நீரொழுக நின்று எண்ணினாள், நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயின்முன் - அங்ஙனம் நின்று நினைந்தவள் நெறி யறிதற்பொருட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துப் பாண்டிய மன்னனது வளம் மிக்க கோயிலின் வாயிலிடத்தை அடைந்தாள்; தீக்கனாவென்றது முன்னர்த் தான் கண்டு தேவந்தியிடம், 1"கடுக்குமென் நெஞ்சம்" என்பது முதலாகச் சொல்லியவதனை என்க. என்றாள் - எழுவாய் ; சென்றாள் - பயனிலை. இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. ஊர்சூழ் வரி முற்றிற்று. 20. வழக்குரை காதை (கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள்; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் வீழ்ந்தனள்.) ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் 5 கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா விடுங்கொடி வில்லிர வெம்பகல்வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா கருப்பம் செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்து வீழ்தரும் 10 நங்கோன்றன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்ன வர்க்கியாம் உரைத்துமென ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் 15 வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனுங்குறளும் ஊமுங்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென 20 ஆயமுங்காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால் வாயி லோயே வாயி லோயே 25 அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே, என 30 வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் 35 பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் 40 பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என 45 வருக மற்றவள் தருக ஈங்கென வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோய்எனத் 50 தேரா மன்னா செப்புவ துடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் 55 அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழதல் வேண்டி ஊழ்வினை துரப்பச் 60 சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று 65 வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே 70 தருகெனத் தந்து தான்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணிகண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட 75 யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் 80 கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. வெண்பா 1 அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே ? பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 2 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் ? பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 3 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் ? வையைக்கோன் கண்டளவேதோற்றான் அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். உரை 1. ஆங்கு - அங்ஙனம் அவள் வாயில்முன் சென்றகாலை; பெருந்தேவி தன் கனவினிலை யுரைத்தலைக் கூறுகின்றார்:- 2-3. குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண் எல்லா - தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை யான் கனவிலே காண்பேன்; ஒடு: எண்ணொடு. வீழ என்னுமெச்சம் இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டு. கடை - வாயிற்கடை. காண் - அசை. பின்வருவனவும் இன்ன. 4-5. திசை இரு நான்கும் அதிர்ந்திடும் - எண் திசையும் அதிர்ச்சியுறும்; அதனைக் காண்பேன், அன்றிக் கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா - தோழீ அதுவேயு மன்றி ஞாயிற்றினை இருளானது விழுங்க அதனை யான் காண்பேன்; விழுங்கல் - மறைத்தல் ; இலக்கணை. 6-7. விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன் இவை காண்பென் காண் எல்லா - இரா ஒழுங்குபட்ட வான வில்லினைத் தோற்றுவிக்கும்; காயும் பகற்பொழுதில் மிக்க ஒளியினையுடைய மீன்கள் எரிந்து கீழே விழும் ; தோழீ யான் இவற்றைக் காண்பேன்; இடும் எனப் பிரித்தலுமாம். கொடி - ஒழுங்கு. இர - இரா; 1குறியதன் இறுதிச் சினை கெட்டது. இர வில் விடும், பகல் மீன் விழும் என்க. 8. கருப்பம் - கேட்டிற்குக் கருப்பம். 9-12. செங்கோலும் வெண் குடையும் செறி நிலத்து மறிந்து வீழ்தரும் - அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அணுச் செறிந்த நிலத்தின்கண் மடங்கி வீழும், நங்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க நடுங்கும் உள்ளம் - நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும், இரவு வில்லிடும் - இராக்காலமானது வான வில்லைத் தோற்றுவிக்கும், பகல் மீன் விழும் - பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திக்கும் அதிரும், வருவது ஓர் துன்பம் உண்டு - ஆகலான் வரக்கடவதாகிய துன்பம் ஒன்றுளது, மன்னவற்கு யாம் உரைத்தும் என - யாம் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுதும் என்று கூற; செறிநிலம் - அணுச் செறிந்த நிலம். உள்ளம் நடுங்க மணி நடுங்கும் என்க. நடுங்கல் - அசைதல், ஒலித்தல். தான் பெருந்தேவி யாகலான், அப் பெருமிதந் தோன்ற, யாம் உரைத்தும் என்றாள். பெருந்தேவியைத் தம் பிராட்டி எனவும் வழங்குவர். முன்னர்க் கூறியவற்றையே மீட்டுங் கூறினாள், அவற்றாற் றுன்பம் வருமென்பதனை உணர்த்துதற் பொருட்டு ; என்னை? "கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளக்கு மாயின்" என்பவாகலான். 13-17. ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் - ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை அணிந்தவர்களாய்க் கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தினராய், கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் - புதிய நூலாடை யையும் பட்டாடையையும் தாங்கினராய், கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் - கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தினராய், வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வகை நிறங்களையும் பொற் பொடி முதலிய பொடிகளையும் கத்தூரிக் குழம்பினையும் சுமந்தனராய், கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - தொடையினையும் மாலை யினையும் கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ; ஆடி - கண்ணாடி. கோடி - புதிய ஆடை. திரையல் - வெற்றிலை. சுண்ணம் - பொடி . 1"வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்" என்றார் முன்னும். மான்மதத்தின் சாந்து ஏந்தினர் என்பதற்கு மான்மதங் கலந்த சந்தனத்தை ஏந்தினராய் எனப் பொருள் கோடலுமாம். அணியிழையினராகிய குறுந்தொழி லிளைஞர் என்றுமாம். குறுந்தொழிலிளைஞர் ஏந்தினராய்ச் செறிந்து சூழ்தர வென மாறுக. 18-21. நரை விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர் பலர் கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச் சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல; பின்னர்க் கூறிய விரைஇய, பலவின்பாற் பெயர் ; மூன்றனுருபு விரிக்க. ஈண்டு நீர் - கடல். கோப்பெருந்தேவி - பெயர். திறம் - வகையுமாம். நறுங்கூந்தலர் பலர் தேவி வாழ்கென வாழ்த்திட ஆயமுங் காவலும் ஏத்தச் சென்று உரைப்ப என மாறியுரைக்க. 22-23. அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான்; "திருவீழ் மார்பிற் றென்னவன்" என்றார் பிறரும் ; திருவீழ் மார்பு என்பதற்கு ஈண்டுத் திருமகள் கழியும் மார்பு எனக் கோடலும் அமையும். 23-29. இப் பால் - இங்ஙனமுரைத்து நின்றதற் பின்னர் ; வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே - அறிவு கீழற்றுப் போகிய அற நினைவு அற்ற உள்ளத்தினையுடைய அரச நீதியற்ற வறியோனது கோயில் வாயில் காப்போய், இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள்-தன் கணவனை இழந்தாளொருத்தி பரலினையுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனை ஏந்திய கையினையுடையளாய், கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே என - நம் கோயில் வாயி லிடத்தாள் என்று அவ்வரசற்கு அறிவிப்பாய் என்று கண்ணகி கூற; அறைபோதல் - கீழறுத்தல். பொறி - அறம். பிழைத்தோன் : வினைப்பெயர். இணையரிச்சிலம்பு என்பது நீ கோவலனிடைக் கொண்ட சிலம்பினை ஒத்த சிலம்பு எனவும் பொருள் கொள்ள அமைந்துளது. வாயிலோயே வாயிலோயே எனவும் அறிவிப்பாயே அறிவிப்பாயே எனவும் வந்த அடுக்குகள் விரைவும் வெகுளியும் பற்றியன. 30-44. வாயிலோன் - வாயில்காப்போன், வாழி எம் கொற்கை வேந்தே வாழி - எமது கொற்கை நகரத்து, அரசே வாழ்வாயாக, தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தெற்கின்கட் பொதியின் மலையையுடைய தலைவனே வாழி, செழிய வாழி - செழியனே வாழி, தென்னவ வாழி - பாண்டியனே வாழி, பழி யொடு படராப் பஞ்சவ வாழி - மறநெறிக்கண் செல்லாத பஞ்சவனே நீ வாழ்வாயாக, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணி - வெட்டுவாயினின்றும் செறிந்தெழுந்து ஒழுகும் குருதி நீங்காத பசிய துண்டமாகிய, பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - பிடரொடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தின்கண் ஏறி நின்ற இளங்கொடியாகிய வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், அறுவர்க்கு இளைய நங்கை - கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும் , இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும், சூர் உடைக் கானகம் உகந்த காளி - அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும், தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள், செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் - தன் உள்ளத்துக் கறுவுகொண்டாள் போலவும் மிக்க சினமுற்றாள் போலவும், பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - தொழிற் றிறம் அமைந்த ஓர் பொற் சிலம்பினை ஏந்திய கையினை உடையளாய், கணவனை யிழந்தாள் கடையகத்தாளே கணவனை யிழந்தாள் கடையகத்தாளே என - தன் கணவனை யிழந்தவள் வாயிலின் முன்னிடத்தாள் என்று கூற; மன்னனை வணங்கும் ஒவ்வொரு முறையுங் கூறலின் வாழ்த்துப் பலவாயின. முதற்கண் வாழி முன்னிலையசையுமாம். படர்தல் என வந்தமையான் பழிநெறி என உரைக்கப்பட்டது. அடங்காத துணி, துணியாகிய தலைப்பீடம் என்க. மடக்கொடியாகிய கொற்றவை. எண்ணும்மையும் அல்லள் என்னும் வினையும் நங்கை முதலியவற்றோடும் கூட்டுக. செற்றம் - கறுவு ; செயிர்ப்பு - வெகுளி; 1"செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும்" என்றார் பிறரும். கண்ணகி கூறியதனைக் கொண்டு `கணவனை யிழந்தா'ளெனக் கூறினான் வாயிலோன். கொற்றவை முதலியோர் போல்வளாயினும் அவர்களல்லள் என்றமையின் இஃது உண்மையுவமை என்னும் அணியாகும். கடிய தோற்றம் பற்றிக் கொற்றவை முதலியவாகக் கருதினான். 45. வருக மற்று அவள் தருக ஈங்கு என-அத் தகையாள் வருவா ளாகவெனச் சொல்லி அவளை இவ்விடத்து அழைத்து வருவாய் என்று வாயிலோனிடத்து அரசன் கூற ; வருக என்றது அவள் வருகைக்கு உடன்பட்டவாறு. 46-49. வாயில் வந்து கோயில் காட்ட-வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண் மன்னனைக் காட்ட, கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - கோயிற்கண் அரசனை அணுகிச் சென்று நின்றவிடத்து, நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய் என - அரசன், நீரொழுகும் கண்களையுடையையாய் எம் முன்னர் வந்து நின்றோய் இளங்கொடி போல்வாய் நீ யார் என்று கேட்ப; வாயில் - ஆகுபெயர். குறுகினள், முற்றெச்சம். உழி, காலப்பொருள் தந்து நின்றது. யாரை - ஐ, இடைச்சொல். 50. தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான்; அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள். அதனைச் செப்புகின்றாள்;- 51-63. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடை மணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர், அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி - அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை யுடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து - வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி - இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம் பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலை யுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என - என் பெயர் கண்ணகி எனப்படும் என்று கூற; புள் - புறா. பருந்தொன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்களித்தான் சிபி. இதனைக் 1"கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" என்பதனா னுணர்க. தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன். இதனை, 2"சாலமறைத்தோம்பி ............முறைமைக்கு மூப்பிளமையில்" என வருஞ் செய்யுளானறிக. ஆழி - தேர்க்கால். பெரும் பெயர் - மிக்க புகழ். பெருங்குடி என்பது வணிகர் பிரிவு மூன்றனுள் ஒன்று. மகனை - ஐ, இடைச்சொல். சூழ்கழன் மன்னா என்றது கழற்சூழ்வு நின்மாட்டமைந்ததன்றி அறிவுச் சூழ்வு அமைந்திலது என்பதனைப் புலப்படுத்தி நின்றது. பெரும்பெயர்ப் புகார் என் பதி என்றது நின் பதியிற்போற் கொடுமை சிறிதும் நிகழாத பதி என்றவாறு. பாண்டியனது முறை வழுவை வலியுறுத்த நின்பதி எனவும், நின்பால் எனவும் கூறினாள். 63-65. பெண்ணணங்கே - அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற; கொற்றம் - அரச நீதி. காண், முன்னிலையசை. 65-67. ஒள்ளிழை - ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி அவனை நோக்கி, நல் திறம் படராக் கொற்கை வேந்தே - அறநெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காற் பொற் சிலம்பு மணியுடை அரியே என - என் காற்கு அணியாம் பொன்னாலாய சிலம்பினுடைய பரல் மாணிக்கமே என்று கூற; நற்றிறம் - அறத்தின் கூறுபாடு. சிலம்புடை அரி மணியே என மாறுக. 68-72. தே மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - இக் கண்ணகி கூறியது செவ்விதாய நல்ல மொழியே யாகும், யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே என - எம்முடைச் சிலம்பினது பரல் முத்தே எனத் தம்முட் கருதி, தருகெனத் தந்து தான் முன் வைப்ப-அச் சிலம்பினைக் கொண்டு வருகவென ஏவலரிடைக் கூறி வருவித்துத் தானே அதனைக் கண்ணகியின் முன்பு வைத்த னனாக, கண்ணகி அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப - கண்ணகி தான் அணியும் அழகிய அச் சிலம்பினை உடைத்த காலை, மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே - அதனினின்றும் எழுந்த மாணிக்கப் பரல் பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது; தேமொழி - தேன் போலும் மொழியினையுடையாள் ; அன் மொழித்தொகை. செவ்வைமொழி - நீதிமொழி. சிலம்புடை அரி முத்தென்க. தருகென வென்றது முன்னர்க் கோவல னிடத்துப் பெற்ற சிலம்பினைக் கொண்டு வருக என்று கூறி என்றவாறு. முன் வைப்ப - கண்ணகி முன் அரசன் வைக்க. வாய் - முகம். முதல், ஏழனுருபு. 72-78. மணி கண்டு - அங்ஙனந் தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தாழ்வுற்ற குடையனாய்ச் சோர்வுற்ற செங்கோலனாய், பொன் செய் கொல்லன்தன் சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் கொல்லனுடைய பொய்யுரை கேட்டு முறை பிழைத்த யான் ஓர் அரசனா வேனோ, ஆகேன், கள்வனென்று யான் துணிந்த அக் கோவலன் கள்வனல்லன் யானே கள்வன் , மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதற் பிழைத்தது - மக்கட் கூட்டத்தினைப் புரக்கின்ற பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறுற்றது, கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே - என் வாழ்நாள் அழிவுறுவதாகவெனச் சொல்லி அரசன் மயக்கமுற்று வீழ்ந்தான்; அமைச்சரொடு சூழ்ந்து அவர் கூறியது நோக்கி முறைசெயற் குரியான் கொல்லன் சொற்கேட்டுக் கொடுமை செய்தான் ஆகலான் "யானோ அரசன்" எனவும், கோவலன் சிலம்பினைத் தம்முடையதாகக் கொண்டமையான் "யானே கள்வன்" எனவும் கூறினான் ; முன்னர், 1"தேரா மன்னா' என்றதும், 2"என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே" என்றதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவே. தமக்கு முன்னர் இந் நில மாண்ட தம் முன்னோர் இங்ஙனம் கோல் கோடிற்றிலர் ஆகலானும், இவ்வாறு தான் கோல் கோடிய குற்றம் தன் வழி வருவார்க்கும் எய்தும் ஆகலானும் "தென் புலங் காவல் என்முதற் பிழைத்தது" என்றான். தென் புலங் காவலர் கோல் கோடாமையைக் கட்டுரை காதைக்கண் மதுரைமா தெய்வம் உரைத்தது கொண்டு உணர்க. வீழ்ந்தான் - துஞ்சினான். 78-81. தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி - பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று - தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும் ; ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனஞ் சொல்லிக் காட்டலாவ தொன்றில்லை என்று கருதி, இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி - அவள் தன் கணவனுடைய இரண்டு அடிகளையும் தொட்டு வணங்கி நிலத்து வீழ்ந்தாள் என்க. கோப்பெருந்தேவி - பெயர். குலைந்தனள் - முற்றெச்சம். வீழ்ந்தனள் - துஞ்சினாள். குலைந்து நடுங்கி இல்லென்று தொழுது வீழ்ந்தனள் என்க. கோப்பெருந்தேவி, மடமொழி தொழுது வீழ்ந்தனள் என மாறுக. இது, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வெண்பாவுரை 1. அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின் கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வய வேந்தன் தேவி - கொடிய தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய். 1"அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்" 2"அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்" என்பன ஈண்டு அறியற்பாலன. இது கண்ணகி கூற்றாக அமைந்துள்ளது. 2. காவி உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச் சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் - உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல் விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான் - கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய யான் இதனைக் காண்பேனாயினேன். கூடாயினான் - உயிர்நீத்தான் என்றபடி, பாவியேன் என்ப தன் பின் ஒரு சொல் வருவித்து முடிக்க. இதுவும் வருஞ் செய்யுளும் கண்டாரொருவர் கூற்றாக அமைந்துள்ளன. 3. மெய்யிற் பொடியும் - கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும், விரித்த கருங்குழலும் - விரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், கையில் தனிச்சிலம்பும் - கையிலுள்ள ஒற்றைச் சிலம்பினையும், கண்ணீரும் - கண்ணீரையும், வையைக் கோன் - வையைக்கிறைவனாகிய பாண்டியன், கண்டளவே தோற்றான் - பார்த்த வளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அக் காரிகை தன் சொல் செவியில் உண்டளவே - அந் நங்கையின் சொல்லினைச் செவியில் உட்கொண்டவளவிலே, தோற்றான் உயிர் - உயிரை இழந்தான். கண்ட, உண்ட என்னும் பெயரெச்சத் தகரங்கள் விகாரத்தாற் றொக்கன. வழக்குரை காதை முற்றிற்று. 21. வஞ்சினமாலை (கண்ணகி நடுங்கி வீழ்ந்த கோப் பெருந்தேவியை விளித்து, ‘யான் ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த பதியின்கட் பிறந்தேன் ; யானும் ஓர் பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்' என்று கூறி, அவ்விடம் விட்டு நீங்கி, ‘மதுரையிலுள்ள மகளிர் மைந்தர் கடவுளர் மாதவர் அனைவீரும் கேண்மின்; என் காதலனைக் கொன்ற அரசன் நகரினைச் சீறினேன் ஆகலின் யான் குற்றமிலேன்' என்றுரைத்து, தனது இடக் கொங்கையைக் கையாலே திருகி, மதுரையை மும்முறை வலம் வந்து, சுழற்றி எறிந்தாள் ; அப்பொழுது அங்கியங்கடவுள் வெளிப்பட்டு, `பத்தினியே, நினக்குப் பிழை செய்த நாளில் இந் நகரினை எரியூட்ட முன்பே ஓர் ஏவல் பெற்றுளேன் ; இதன் கண் பிழைத்தற்குரியார் எவ்வெவர்' என்று உசாவ, ‘பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கம் சேர்க' என்று கண்ணகி ஏவக் கூடல் நகரிலே அழல் மண்டிற்று. (இதன்கண் புகார் நகரிலிருந்த பத்தினிப் பெண்டிர் எழுவர் வரலாறு கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது.) கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவுந் தேரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே 5 வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற 10 வரிய ரகலல்குல் மாதர் உரைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு 15 பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக்கொண்டெடுத்தவேற் கண்ணாள்வேற்றொருவன் 20 நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய பெண்ணறி வென்பதும் பேதைமைத்தே என்றுரைத்த 25 நுண்ணறிவு னோர்நோக்கம் நோக்காதேஎண்ணிலேன் வண்டல் அயர்விடத் தியானோர் மகட்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் 30 சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய 35 மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும் 40 வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின் யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து 45 மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி 50 மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் 55 தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். வெண்பா பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங் ? கற்புண்ணத் தீத்தர வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான்மறைந்தார் மற்று. உரை 1-4. கோ வேந்தன் தேவி - பேரரசனாய பாண்டியன் பெருந் தேவியே, கொடுவினையாட்டியேன் யாவும் தெரியா இயல்பி னேன் ஆயினும் - கணவனை இழந்த தீவினையுடையேனாகிய யான் ஒன்றுமறியாத தன்மையேன் ஆயினும், முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய காண் - பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தானொருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணலுறுந் தன்மையையுடையன வினைகள்; கோ வேந்தன் - மன்னர் மன்னன் என்றுமாம்; 1"மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன்" என்றார் முன்னும். கோவேந்தன் தேவி: விளி. பிறனுக்குக் கேடு செய்தானொருவனுக்குச் செய்த அன்றே கேடு எய்தும் என்பது தோன்ற, முற்பகல் கேடு செய்தான் பிற்பகல் கேடு காண்குறூஉம் என்றாள் ; முற்பகல் பிற்பகல் என்பன ஒரு பகலின் முற்கூறும் பிற்கூறுமாம். 2"பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" என்றார் வள்ளுவரும். பிறன்கேடு - பிறனுக்குக் கேடு ; நான்கனுருபு தொக்கது. தன்கேடு என்பதற்குத் தான் பிறனுக்குச் செய் அக்கேடு என்று பொருள் கூறி, அதுவே தனக்கு வருதலைக் காண்பான் என்றுரைத்தலுமாம். பெற்றிய என்பதற்கு வினைகள் என எழுவாய் வருவிக்க, காண், அசை. இனி, கண்ணகி தான் பிறந்த பதிப்பெருமை கூறுகின்றாள்: 4 - 6 நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியுஞ் சான்று ஆக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள் - நல்ல பகற்காலத்து வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குக் கரி உரைக்கும் பொருளாகப் பலரும் அறிய அவற்றை அவரெதிரில் நிறுத்திக் காட்டிய மொய்த்த கூந்தலையுடையாளும் ; நற்பகல் - விளக்கமமைந்த பகல். சோணாட்டின் ஓர் பட்டினத் திலிருந்து மதுரைக்கு வழிக்கொண்டு சென்ற வணிகனொருவனும், அவன் மாமன் மகளாகிய கன்னியும் திருப்புறம்பயத்தில் வந்து இரவு தங்கிய பொழுது வணிகன் அரவு தீண்டி இறந்தமையின் அக் கன்னி புலம்பி அழுதலை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப்பிரான் கேட்டு இரங்கித் தமது அருணோக் கத்தால் அவனை உயிர்ப்பித்து, அங்கிருந்த வன்னிமரம் கிணறு சிவலிங்கம் என்னும் மூன்றனையும் சான்றாக வைத்து அவர்கள் மணம் பொருந்தும்படி செய்தனரெனவும், அம் மாது மதுரையிலே மாற்றாளால் இகழப் பட்டபொழுது அவள் வேண்டியபடி அம் மூன்றும் அங்கே தோன்றிச் சான்றாயின எனவும் இரண்டு திருவிளையாடற் புராணத்தும் கூறப்பட்டுளது. வைப்பூரிலுள்ள தாமன் என்னும் வணிகன் மகளிர் எழுவரில் இளையவளாகிய கன்னியும், அவள் அத்தை மகனும் வழிக்கொண்டு வந்து திருமருகல் என்னும் பதியில் தங்கியகாலை அவன் அரவு கடித் திறந்தமைக்காற்றாது அக் கன்னி புலம்பியழுததனை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப் பெருமான் கேட்டு நிகழ்ந்தவற்றையு ணர்ந்து, "சடையா யெனுமால்" என்னும் பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்து, அவர்கள் மணஞ் செய்து கொள்ளும்படி கட்டளையிட்டனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படுகின்றது. சான்று வைத்தது முதலியன இதில் கூறப்படவில்லை ; மற்றும் இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன ; திருப்புறம்பய நிகழ்ச்சியிலேயே சான்று வைத்தமை கூறப்படுதலாலும், சான்றாவனவற்றுள் வன்னிமரம் ஒன்றாதலாலும் ஈண்டுக் கூறிய "வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக" என்பதனோடு ஒற்றுமையுறுகின்றது. ஆயின் பெரிய புராணத்தில் திருப்புறம்பய நிகழ்ச்சி கூறப்படாமையானும், சிலப்பதிகாரம் சம்பந்தர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்பு தோன்றியதாகலானும் சம்பந்தப் பிள்ளையார் திருமருகலில் விடந்தீர்த்த நிகழ்ச்சியை வடமொழியிற் புராணம் வகுத்தோர் திருப்புறம் பயத்தில் அதற்கு முன்னிகழ்ந்ததொரு வரலாற்றுடன் பொருத்திவிட்டனர் போலுமெனக் கருதப்படுகின்றது. வணிகனும் மாதும் ஓரிடத்தில் அடிசிலமைத்துண்டு தங்கியிருந்த பொழுது நிகழ்ந்தமையின் ஆண்டுள்ள கிணறும் சிவலிங்கமும் மடைப்பள்ளி என்பதில் அடங்காநிற்கும் என்க. திருப்புறம்பயத்திலுள்ள சிவபிரான் திருப்பெயர் சாட்சிநாதர் என வழங்குவதும் அறியற்பாலது. 9-10. பொன்னிக் கரையின் மணற்பாவை நின் கணவன் ஆமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் - கரையினையுடைய காவிரிக்கண் ஒருத்தி தான் விளையாடற்கமைத்த மணற்பாவையினை, இப் பாவை நினக்குக் கணவனாகும் என்று கூறிய அவளோடும் ஆடப் போந்த ஏனை மகளிரோடும் வீடு செல்லாளாய்,திரை வந்து அழியாது சூழ் போக ஆங்கு உந்தி நின்ற வரியார் அகல் அல்குல் மாதர் - அலைகள் நெருங்கி அப் பாவையினை அழியாதே சுற்றிப் போதலான் ஆற்றிடைக்குறையாகிய விடத்தில் நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய ஓர் நங்கையும் ; கரையின் பொன்னி என மாறுக. மேல், திரை அழியாது சூழ் போக அம் மாதர் உந்தி நின்றமைபெறப்படலான் மணற்பாவை வைத்தாடிய இடம் பொன்னிக்கரை அன்று என்க. சூழ்போக என்பதற்குச் சுற்றிப் போகும் வண்ணம் எனவும், ஆங்குந்தி நின்ற என்பதற்கு ஆற்றின் நடுவு குறையாம்படி நின்ற எனவும் உரைத்தலுமாம். உந்தி - ஆற்றிடைக்குறை. போகாள் நின்ற என்க. 10-15. உரை சான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனுடைய மகளாகிய ஆதிமந்தி, வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ள - தான் காதலித்த வஞ்சி நகரத் தலைவனாய ஆட்டனத்தி யென்பவனைக் காவிரி நீர் அடித்துச் செல்லலான், தான் புனலின் பின் சென்று கல் நவில் தோளாயோ என்ன - அவ் ஆதிமந்தி தான் காவிரி நீர் செல்லும் வழியே சென்று கடற் கரையில் நின்று கல்லினையொத்த தோள்களை யுடையாய் நீ யாண்டுள்ளாய் என்று அரற்ற, கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட - கடல் அவனைக் கொடுவந்து அவள் முன்னிலைப்படுத்திக் காட்டலான், அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் - அக் காதலனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போல வந்தாளும் ; சோழ அரசருட் சிறந்தோனாகாலன் உரை சான்ற மன்னன் என்றாள். வளவன் மகள் - ஆதிமந்தியார் ; புலமை வாய்ந்தோர். வஞ்சிக்கோன் - சேர மன்னனாகிய ஆட்டன் அத்தியென்போன் ; ஆடுதல் வன்மையால் ஆட்டன் என்பது பெயராயிற்றுப் போலும். ஆதிமந்தியார் கழார் என்னும் பதியைச் சார்ந்த காவிரித்துறையில் காதலனாகிய ஆட்டனத்தியுடன் நீர் விழாக் கொண்டாடிய பொழுது, அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்து கொள்ள, இவர் அவனைக் காணாது நீரின் பின்னே சென்று கடற்கரையில் கூவி அரற்றினாராக, இவரது கற்பின் மாண்பினால் கடல் அவனைக் கரைக்கு அணிமையிற் கொணர்ந்து நிறுத்திக் காட்ட, இவர் அவனைத் தழுவிக் கொண்டு மீண்டார் என்பது வரலாறு; கடல் கொணர்ந்து நிறுத்திய காதலனை அங்கே நீராடிய மருதி யென்பவள் இவர்பாற் சேர்த்துப் புகழ்பெற்றன ளென்பதோர் செய்தியும் அறியப்படுகின்றது. இவற்றை, 1"ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத், தண்பதங் கொண்டு தவிர்ந்த வின்னிசை, ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக், கருங்கச்சு யாத்த காண்பினவ்வயிற், றரும்பொலம் பாண்டியன் மணியொடு தெளிப்பப், புன்யந் தாடும் அத்தியணி நயந்து, காவிரி கொண்டொளித் தாங்கு" 2"மந்தி, பனிவார் கண்ணள் பலபுலந் துறையக், கடுந்திற லத்தி யாடணி நசைஇ, நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு" 3"கழாஅர்ப் பெருந்துறை விழவி னாடும், ஈட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பின், ஆட்ட னத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த, ஆதி மந்தி காதலற் காட்டிப், படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின், மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்" என்பன முதலிய வற்றானறிக. 15-17. மன்னி மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி - மணல் நிறைந்த பொலிவு பெற்ற கடற்கரைச் சோலையிடத்தே தங்கிக் கடலினின்றும் கரைக்கு வரும் மரக்கலங்களை நோக்கி இருந்து, கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் தன் கணவன் கலத்தினின்றும் வந்த அளவில் தன் கல் வடிவத்தினை ஒழித்தாளும்; பூங்கானல் மன்னி என்க. கானல் - கடற்கரைச் சோலை. கடல் கடந்து பொருளீட்டற் பொருட்டுப் போயின தன் கணவன் வரும் வரை ஒருத்தி கல்வடிவா யிருந்தனள் என்க. 17-19. இணையாய மாற்றாள் குழவி விழத் தன் குழவியும் கிணற்று வீழ்த்து ஏற்றுக் கொண்டு எடுத்த வேற் கண்ணாள் - தன்னோடொத்த மாற்றாளுடைய குழவி கிணற்றின்கண் வீழ்ந்ததனால் அது குறித்து உலகோர் தன்மீது பழி சுமத்தாமைப் பொருட்டுத் தன்னுடைய குழவியையும் கிணற்றின்கண் தள்ளி அவ்விரு குழந்தை களையும் அக் கிணற்றினின்றும் எடுத்த வேல் போலுங் கண்களையுடையாளும் ; மாற்றாள் - தன் கணவனுக்கு வாய்த்த மற்றொரு மனைவி; கற்பின் பெருமையால் இரு குழவியையும் ஊறின்றி யெடுத்தாளென்க. 19-23. வேற்றொருவன் நீள் நோக்கங் கண்டு - அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையினை அறிந்து, நிறைமதி வாண் முகத்தைத் தான் ஓர் குரக்கு முகம் ஆகென்று - தனது கலை நிறைந்த திங்கள்போலும் ஒள்ளிய முகத்தினை ஓர் குரங்கின் முகமாகக் கடவதென்று அங்ஙனமாக்கியிருந்து, போன கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த பழுமணி அல்குற் பூம் பாவை - வெளியே சென்றிருந்த தன் கணவன் வந்தவளவிலே அக் குரங்கின் முகத்தினை ஒழித்த சிவந்த மணிகள் பதித்த மேகலை அணிந்த அல்குலினையுடைய பொலிவுற்ற பாவைபோல்வாளும் ; நீள்நோக்கம் - விடாமற் பார்த்தல். பழுமணி - பழுத்த மணி; சிவந்த மணி. 23-34. விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே - மகளிர் அறிவெனப்படுவது அறியாமையை உடைத்து என்று கூறிய சிறந்த நுண்ணிய அறிவினையுடைய மேலோரது கருத்தினை உணராதே, எண்ணிலேன் வண்டல் அயர்விடத்து - ஆராய்ச்சிஇல்லாத யான் இளமையில் வண்டலாட்டினைச் செய்யுமிடத்து என் தோழியை நோக்கி, யான் ஓர் மகள் பெற்றால், ஒண்டொடி நீ ஓர் மகன் பெறில் - ஒள்ளிய தொடியினைஉடையாய் நீ ஓர் மகனைப் பெற்றால் யான் ஓர் மகளைப் பெற்றால், கொண்ட கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் - அம் மகளுக்கு நின்மகன் கணவனாவான் என்று விளையாட்டாக யான் கூறிய மொழியினை, கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால் - எனக்குத் தோழியாகப் பொருந்திய அப் பிள்ளையின் தாய் உண்மையாகக் கொண்டு கூற அதனைக் கேட்ட துன்பத்தானே, சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு - திருவில்லா எனக்கு உள்ளம் இடர்மிகும், என்று எடுத்துத் தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் - என்று முன்னர் நிகழ்ந்ததனைத் தன் தந்தைக்குத் தாய் எடுத்துக் கூற அதனைக் கேட்டனளாய், முந்தி ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - முற்பட்டு ஓர் புதுப் புடைவையை உடுத்து, குழல் கட்டி - கூந்தலை வாரி முடித்து, நீடித் தலையை வணங்கி - நெடிதாகத் தலையை வணங்கி, தலை சுமந்த ஆடகப் பூம்பாவை அவள் போல்வார் - தன் தாய் இளமையிற் குறித்த கொழுநனைத் தலைக்கண் சுமந்த பொலிவு பெற்ற பொற்பாவையும், மற்றும் அவர் போன்றவருமாகிய, நீடிய மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன் - நீண்ட தேனிறைந்த கூந்தலையுடைய கற்புடை மகளிர் பிறந்த புகார் நகரத்தின்கண் தோன்றினேன்; விழுமிய நுண்ணறிவினோர் எனக் கூட்டுக. "நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே" என வருவ தூஉங் காண்க. வண்டல் - சிறுமியர் மணலிற் சிற்றிலமைத்தல் முதலிய விளையாட்டு. யான் உரைத்த மாற்றம் - யான் விளையாட்டாகக் கூறிய உரை. கெழுமியவள் - தோழியாகப் பொருந்தியவள். கூறும், முற்று. முந்தி - கொடுப்பாரும் அடுப்பாருமின்றித்,தானே முற்பட்டு எனலுமாம். நீடிய குழல் என்க. பாவையாகிய அவளும் போல்வாருமாகிய குழலார் என்க. கூறியவாறே அவளுக்கு மகனும் எனக்கு மகளும் பிறந்த பின் அவளுரைப்ப என விரித்துரைக்க. ஈண்டுக் கூறிய கற்புடைமகளிர் எழுவர் வரலாறும் பட்டினத்துப் பிள்ளையார் புராணத்தின் பூம்புகார்ச் சருக்கத்திலுள்ள பின்வருஞ் செய்யுட்களிற் கூறப்பட்டிருத்தல் காண்க : கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான் திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள் வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள் புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 1 வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள் பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன் கேள்வனெனும் கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள் பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 2 கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள் பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 3 முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப் பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம் சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள் பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 4 35-38. பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் - அங்ஙனம் அப் பதியிற் றோன்றிய யானும் ஓர் கற்புடை மகள் என்பது உண்மை யாயின், ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் - நீ இனிதிருக்க ஒருப்படேன் மன்னனோடு மதுரை நகரினையும் அழிப்பேன், என் பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா - என் படிற்றினையும் நீ இப்பொழுதே காண்பாயாகவென்று கூறிக் கோயிலை விட்டு நீங்கி; பட்டாங்கு - உண்மை ; பட்டாங்கு ஆமாகில் எனக் கூட்டுக. பட்டிமை - வஞ்சத் தன்மை; மீச்செலவுமாம். பெருந்தேவி கணவனொடு வீழ்ந் திறந்ததனை நோக்காதே இங்ஙனங் கூறினாள் என்க. 39-40. நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் - மதுரை நகரத்துள்ள பெண்டிரும் ஆடவரும் தேவர்களும் மிக்க தவமுடைய முனிவர்களும் யான் கூறுவதனைக் கேண்மின் ; நான்கு மாடங்கள் கூடினமையால் மதுரை நான் மாடக் கூடலாயிற்று. நான்கு மாடங்களாவன : திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர். வானக் கடவுளர் என்பதற்குச் சுடரொடு திரிதரும் தேவ முனிவர்கள் எனக் கூறலும் அமையும். கேட்டீமின் :வினைத்திரிசொல். 41-46. யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த - யான் விரும்பிய என் காதலனைக் கொலை செய்த, கோ நகர் சீறினேன் குற்றமிலேன் யான் என்று - மன்னனது நகரத்தினை வெகுண்டேன் அச் சீற்றத்தால் யான் குற்றமுடையே னல்லேன் என்று கூறி, இட முலை கையால் திருகி - இடப் பக்கத்து முலையினை வலக்கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து - மதுரை நகரத்தினை வலமாக மூன்று முறை வந்து மயங்கி, மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் - விளங்கிய அணி யினையுடையாள் தன் அழகிய அம் முலையினைச் சூளுற்றுத் தேன் நிறைந்த மறுகின்கண் விட்டெறிந்தாள் ; தவறு - கொலை. கோ நகர் - அரசன் தலைநகர். அலமந்து - சுழன்று, மயங்கி. வட்டித்தல் - பிரதிக்கினை செய்தல்; சுழற்றுதல் எனலுமாம். விட்டாள் ; முற்றெச்சம். விளங்கிழையாள் குற்ற மிலேன் யானென்று திருகி வாரா அலமந்து வட்டித்து எறிந்தாள் என்க. 46-52. வட்டித்த நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடை - அங்ஙனம் அவள் எறிந்த அளவிலே எழுதினாலொத்த நீல நிறத்தினையும் புரிந்த செந்நிறமுடைய நீண்ட சடையினையும், பால் புரை வெளிஎயிற்றுப் பார்ப்பனக் கோலத்து - பாலை ஒத்த வெளிளிய எயிற்றினையும் உடைய பார்ப்பன வடிவத்தோடு, மாலை எரி அங்கி வானவன் தான் தோன்றி - ஒழுங்குபட்ட யாவற்றையும் எரித்தலையுடைய தீக்கடவுள் வெளிப்பட்டு, மா பத்தினி நின்னை மாணப் பிழைத்த நாள் - சிறந்த கற்புடையாய் இந்நகர் நினக்கு மிகவும் தவறிழைத்த அந்நாளே, பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர் ஏவல் உடையேனால் - இந்நகரினைப் பரந்த எரிக்கு ஊட்டுவதற்கு முன்னரே யான் ஓர் ஏவல் பெற்றுளேன், யார் பிழைப்பார் ஈங்கு என்ன - இவ்விடத்துப் பிழைத்தற்குரியோர் யாரென்று கண்ணகியைக் கேட்க; வட்டித்த - சூளுற்றதனால் வந்த என வுரைத்தலுமாம். மாண - மிக; 1"ஞாலத்தின் மாணப் பெரிது" என்புழி மாணவென்பது அப் பொருட்டாதல் காண்க. மாண - திண்ணிதாக என்பர் அரும்பத வுரையாசிரியர். நிறத்தினையும் சடையினையும் எயிற்றினையும் கோலத்தினையும் உடைய வானவன் என்க. பாய் எரி - பரந்த எரி. ஆல்: அசை. வானவன் தோன்றி என்ன என்க. 53-57. பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - அந்தணரும் அறவோரும் ஆவும் கற்புடை மகளிரும் முதியோரும் குழந்தைகளும் எனப்படும் இவர்களை ஒழித்து, தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று - தீய தன்மையுடையாரிடத்தே சென்று அழிப்பா யாகவென்று, காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நல் தேரான் கூடல் நகர் - கண்ணகி ஏவலான் அத் தீயோரைச் சுடுதற் பொருட்டு நல்ல தேரினையுடைய பாண்டியன் கூடல் நகரிடத்துப் புகையொடு கூடிய தீ முடுகிற்று என்க. சேர்கென்று பொற்றொடி ஏவ எனவும், காய்த்திய புகையழல் மண்டிற்று எனவும் கூட்டுக ; காய்த்திய, செய்யிய வென்னும் வினையெச்சம். "பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி எனுமிவரை" என்பது திணை விராய் உயர்திணை முடிபு பெற்றது. இறுதி வெண்பா, இளம்புலவர் யாராலோ எழுதிச் சேர்க்கப்பட்டது; பொருட் சிறப்பில்லாதது. கோவேந்தன் றேவி இயல்பினேனாயினும் பெற்றிய காண்; மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் ; ஆமாகில் ஒட்டேன் ; ஒழிப்பேன் ; காண்குறுவாய் என்னா அகலாத் திருகி எறிந்தாள் ; வானவன் தோன்றி யார் பிழைப்பார் ஈங்கென்ன, கைவிட்டுச் சேர்கென்று பொற்றொடி ஏவ. நகர் அழல் மண்டிற்று என வினை முடிக்க. வஞ்சின மாலை முற்றிற்று. 22. அழற்படு காதை (அரசர் பெருமானாகிய நெடுஞ்செழியன் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சியதை அறியாது ஆசான் முதலாயினார் ஓவியத்திரள் போல் உரை அவிந்திருந்தனர்; காழோர் முதலாயினார் கோயில் வாயிலில் வந்து நெருங்கினர்; நால் வகை வருணப் பூதங்களாகிய தெய்வங்களும் அந் நகரை விட்டு நீங்கின; அறவோர்கள் உள்ள இடங்களை விடுத்து, மறவோர் சேரிகளில் எரி மண்டியது; அந்தி விழவும் ஆரண வோதையும் முதலியவை நீங்கின; நகரின் கண் காதலனை இழந்த துன்பத்துடன் உள்ளம் கொதித்து வீரபத்தினி மறுகு முதலியவற்றிற் சுழன்று திரிந்தனள்; அப்பொழுது அவள்முன் எரியின் வெம்மையைப் பொறாத மதுராபதி யென்னும் தெய்வம் வந்து தோன்றினள். (வருணப் பூதர் நால்வருடைய இயல்புகளும் இதன்கண் கூறப்பட்டுள்ளன.) ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு 5 இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு 10 கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் 15 தீமுகங் கண்டு தாமிடை கொள்ள நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் (தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று 20 இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் 25 தேனும் பாலும் கட்டியும் பெட்பச் சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் 30 நன்பகல் வரவடி யூன்றிய காலினன் விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்) மூத்தீ வாழ்க்கைமுறைமையின் வழாஅ 35 வேத முதல்வன் வேள்விக் கருவியோடு ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் (வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு 40 சண்பகம் கருவிளை செங்கூ தாளம் தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த 45 குங்கும வருணங் கொண்ட மார்பினன் பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து 50 வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு 55 எனவிவை பிடித்த கையின னாகி எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் 60 உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் 65 வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் (உரைசால் பொன்னிறங் கொண்ட இடையினன் வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் 70 கூட முடித்த சென்னியன் நீடொளிப் பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடும் புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக் 75 கொள்ளெனக் கொள்ளு மடையினன் புடைதரு நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப் பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே 80 நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் சூழொளித் தாலு மியாழு மேந்தி விளைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவு மரும்பம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு) 85 உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் (கருவிளை புரையு மேனிய னரியொடு 90 வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் காழகம் செறிந்த உடையினன் காழகில் சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் 95 கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி) மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் 100 பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கோமுறை பிழைத்த நாளி லிந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப 105 தாமுறையாக அறிந்தன மாதலின் யாமுறை போவ தியல்பன் றோவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் 110 பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்) காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் 115 கறவையும் கன்றும் கனலெரி சேரா அறவை யாயர் அகன்றெரு அடைந்தன மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை 120 மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கைமுன்றில் 125 பைங்கா ழாரம் பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு 130 பஞ்சியா ரமளியில் துஞ்சுயில் எடுப்பி வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத வருவிருந் தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து 135 சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் 140 தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட்டி டிவ்வூர் இறைவனை யிழந்து 145 தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் வூர்தீ யூட்டிய ஒருமக ளென்ன அந்தி விழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் 150 வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் 155 ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுரா பதியென். வெண்பா மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் ? நாம 160 முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் மதுரா பதியென்னு மாது. உரை 1-2. ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது, காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன - நகர் காக்குந் தெய் வங்கள் கோட்டை வாயில்களைக் காவாதொழிந்தன ; "பண்டேயோர் ஏவலுடையேன்" என வஞ்சின மாலையுள் அங்கி வானவன் கூறுதலின் ஈண்டு ஏவல் என்றது அதனையும் குறிக்கும். காவற்றெய்வம் - இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம் ; இதனை, 1"நாற்பெருந் தெய்வத்து நன்னகர்" என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானறிக ; வருணப் பூதங்கள் பின் கூறப்படுதலின் ஈண்டுக் கூறியன அவை அல்லன என்க. வாயிலை யடைத்தனவெனவே தமது காவற்றொழிலை விடுத்துப்போயின வென்பதாயிற்று. 3-7. அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் தலைவனாய வெல்லும் போரினையுடைய நெடுஞ்செழியன், வளைகோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட - தான் தவறுதலானே வளைந்த கோலைத் தன் உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து அப்பொழுதே பெரிய நிலமங்கைக்குத் தனது செங்கோலை உணர்த்துதற் பொருட்டு, புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலின் துஞ்சியது அறியாது - குற்றந் தீர்ந்த கற் பினையுடைய தன் பெருந்தேவி யுடனே அரியணையில் இறந்த தனை உணராதே; இழுக்கத்து வளை கோல் என்க. இனிக் கோல் வளைதலாகிய இழுக்கத்தையுற்ற வளவிலே என்றுமாம். ஆணி - ஆதாரம்; அச் சாணிபோல்வது ; உரையாணி யென்றுமாம். தான் ஒரு மங்கைக்குச் செய்த பழியினைத் தான் உயிர் விட்டுத் தீர்த்ததனை ஓர் மங்கையிடத்துக் காட்டினான் என்றார். புரைதீர் கற்பு - பிறர் நெஞ்சு புகாமை. 8-11. ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - குரவன் கணிவன் அறங்கூறு அவையத்தார் காவிதி மந்திரவோலை எழுதுவார் என்னும் இவரோடு, கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் - அரண் மனையிலுள்ளாரும் வளை யணிந்த பணிப்பெண்டிரும், ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - சித்திரத்தொகுதி போன்று உரையாட்டு அடங்கியிருந்த வளவிலே ; ஆசான் - புரோகிதன். பெருங்கணி - தலைமை நிமித்திகன். அறக்களத்தந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள் என்ப. பின்னர், 1"அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி" எனக் கூறுதலும் நோக்கத்தக்கது. காவிதி - வரியிலார் ; அரசிறை வாங்குவோர் ; காவிதி என்பது அரசனாற் கொடுக்கப்படும் ஓர் சிறப்புப் பெயராகலின் அதனைப் பெற்றோரென்க. மந்திரக் கணக்கர் - அமைச்சர் குழுவி னுள் முடியும் முடிபுகளை ஓலையில் எழுதுவார். 12-15. காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினை உடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ; காழ் - குத்துக்கோல். வாதுவர் - வாசிவாரியர். பகை மன்னர் பணிந்து திறை கொணர்ந்து காத்திருக்கும் வாயிலாகலின், 'கொற்ற வாயில்' என்றார். நெருப்பவித்தற்கு வந்து மிடைந்தன ரென்க ; தாம் விடைகொள்ள எனப் பாடங்கொண்டு அரசனை உட்கொண்டு இவர்கள் நீங்க எனவும் உரைப்ப. 16-36. நித்திலப் பைம் பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - பசுமை யான முத்து வட மணிந்த நிலவுபோல் விளங்கும் மிக்க ஒளியினையுடைய, முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் - நான்முகன் யாகத்திற்கெனவுரைத்த உறுப்புக்களோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப்பூதமாகிய கடவுளும், ஒளியினையுடைய ஆதிப்பூதம், வேள்விக் கருவியோடு முறைமையின் வழுவா ஆதிப்பூதம் என்க. கருவி - சமிதை முதலாயின. முத்தீ வாழ்க்கை - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்றெரியையும் பேணும் வாழ்க்கை. "நித்திலப் பைம்பூண்" முதலாகப் 'பூதத்ததிபதிக் கடவுள்' ஈறாகப் பிராமண பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. இக்காதையுள் [ ] இக்குறியீட்டினுட்பட்ட பகுதிகள் கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப்பட்டன வாகலின் அவற்றிற்கு உரையெழுதப்படவில்லை. அப் பகுதிகள் சில சுவடிகளிற் காணப்படாமையானும், அரசு பூதங் கூறுமிடத்து - "வென்றி வெங்கதிர் புரையு மேனியன்," "குங்கும வருணங் கொண்ட மார்பினன்" எனவும், வேளாண்பூதங் கூறுமிடத்து - "கருவிளை புரையு மேனியன்," "மண்ணுறு திருமணி புரையு மேனியன்" எனவும், "காழகஞ் செறிந்த வுடையினன்," "காழகஞ் சேர்ந்த வுடையினன்" எனவும் இங்ஙனம் கூறியது கூறலாகவும் வேண்டா கூறலாகவும் பல இருத்த லானும், அரும்பதவுரையாசிரியர் இது முதலாக இஃதீறாக இப்பூதங் கூறிற்றென நான்கு பூதமும் பற்றிக் குறிக்கும் வழி, அரச பூதத்திற்கு முன்னுள்ள பதினான்கு அடிகளை நீக்கிப் 'பவளச் செஞ் சுடர் முதலாக' எனவும், வேளாண் பூதத்திற்கு முன்னுள்ள எட்டு அடிகளை நீக்கி 'மண்ணுறு திருமணி முதலாக' எனவும் குறித் திருத்தலானும், மற்றும் குறியீட்டுக் குட்பட்ட பகுதிகளில் ஒரு சொற்கேனும் அவரெழுதிய பொருள் காணப்படாமையானும் அவை இளங்கோவடிகள் இயற்றியன அல்ல வென்பதும், பின்னுள்ள யாரோ ஒருவரால் இயற்றிப் புகுத்தப்பட்டன ஆகுமென்பதும் நன்கு துணியப்படும். 37-51-61. பவளச் செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - செவ்விய ஒளியினையுடைய பவளம்போலத் திகழ்கின்ற ஒளி பொருந்திய மேனியையுடையோனாய், ஆழ்கடல் ஞாலம் ஆள் வோன் தன்னின் - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ் வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரைசொடு வெண்குடை கவரி நெடுங் கொடி உரை சால் அங்குசம் வடிவேல் வடி கயிறு என இவை பிடித்த கையினன் ஆகி - முரசமும் வெண் கொற்றக் குடையும் கவரியும் நெடிய கொடியும் புகழமைந்த தோட்டியும் வடித்த வேலும் வடிகயிறும் எனப்படும் இவற்றைக் கொண்ட கையினை யுடையனாய், எண் அருஞ் சிறப்பின் மன்னரை ஓட்டி - அளவிடற்கரிய சிறப்பினையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து, மண் அகங் கொண்டு செங்கோல் ஓச்சி - இந் நிலத்தினைத் தனதாகக் கொண்டு செங்கோல் செலுத்தி, கொடுந்தொழில் கடிந்து - கொடிய செயல்களை விலக்கி, கொற்றங் கொண்டு - நீதியினை மேற்கொண்டு, நடும் புகழ் வளர்த்து நால் நிலம் புரக்கும் - தன் பெயரை நிறுத்தற் குரிய புகழினை மிகுந்து உலகினைக் காக்கின்ற, உரை சால் சிறப்பின் நெடி யோன் அன்ன - உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் என்னும் பாண்டியனை ஒத்த, அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் - அரிய வலியினையுடைய அரசபூதமாகிய கடவுளும்; வடிகயிறு - புரவியை வசமாக்கும் கயிறு. முரசு குடை முதலியன அரசற்குரியன வென்பது, 1"படையுங் கொடியுங் குடையு முரசும், நடைநவில் புரவியுங் களிறுந் தேரும், தாரு முடியு நேர்வன பிறவும், தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய" என்னுஞ் சூத்தி ரத்து எடுத்தோத்தானும், பிறவு மென்னும் இலேசானும் பெறப்படும். கொடுந்தொழில் என்பதற்குத் தன்கட் கொடிய தொழில் எனவும் குடிகளிடத்துக் கொடிய தொழில் எனவுங் கோடல் அமையும். நடும்புகழ் - அழியாப்புகழ். நெடியோன் - வடிம்பலம்ப நின்ற பாண்டியன்; 2"பொலந்தார் மார்பின் நெடியோன்," 3"முந்நீர் விழவி னெடியோன்" என்பனவும், அவற்றின் உரையும் காண்க. மேனியனாய்க் கையினனாகி நெடியோனையொத்த கடவுளும் என்க. இனி, ஞாலமாள்வோன் என்பதற்கு அருச்சுனன் எனவும் மன்னர் என்பதற்குத் துரியோதனாதியர் எனவும், நெடியோன் என்பதற்குக் கண்ணன் எனவும் அரும்பதவுரையாசிரியர் நலிந்து பொருள் உரைப்பர் "பவளச் செஞ்சுடர்" முதலாக "அருந்திறற் கடவுள்" ஈறாக அரச பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 62-88. செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் - சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் - நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி - வாணிகஞ் செய்யு முறையானே பெரிய உலகினைக் காத்து, நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப் பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினை யுடையனாய், உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவன் என் போன் - உழவுத் தொழிலானே உலகினர்க்கு உதவும் குற்ற மற்ற வாழ்க்கைக்குரியோன் எனப்படுவோனாகிய, கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் ஓர் விளங்கு ஒளிப் பூத வியன் பெருங் கடவுளும் - விளங்கும் ஒளி யினையுடைய தலை மீது குழவித் திங்களை அணிந்த இறைவனது வடிவுபோலும் ஒளி மிளிரும் மிகப் பெரிய வணிகப் பூதமாகிய கடவுளும் ; முடியொழிந்தன வணிகர்க்குள வென்பது 1"வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந், தாரு மாலையுந் தேரும் வாளும், மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய" என்பதனானும், அவர்க்கு உழவும் உரித்தென் பது 2"மெய்தெரி வகையி னெண்வகை யுணவின், செய்தியும் வரையா ரப்பா லான" என்பதனானும் பெறப்படும். மேனியனாய்ப் பூணின னாய்க் கையினனாய் வாழ்க்கைக் கிழவனென்போனாகிய பூதக் கடவுளும் என்க. "'செந்நிறப் பசும்பொன்' முதலாக ‘வியன்பெருங் கடவுள்' ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 97-102. மண்ணுறு திருமணி புரையும் மேனியன் – கழுவப்பட்ட நீல மணிபோலும் மேனியனாய், ஒளி நிறக் காழகம் சேர்ந்த உடையினன் - ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்த உடையினனாய், ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி - உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்தி, பாடற்கு அமைந்த பல துறை போகி - புலவர் பாடுதற்கேற்ற ஈகைத் துறை பலவற்றிலும் முடியச் சென்று, கலி கெழு கூடல் பலிபெறு பூதத் தலைவன் என்போன் தானும் - ஆரவாரம் மிக்க கூடற்கண் பலியினைப் பெறும் பூதத் தலைவனென்னும் வேளாண் பூதமும், தோன்றி - வெளிப்பட்டு ; காழகம் - கருமை, உடை ; இரட்டுற மொழிதலாகக் கொள்க. வேளாண் மாந்தர் உலகினை ஆளுதலாவது தமது உழவுத் தொழிலால் ஏனோரை யெல்லாம் தாங்குதலும், தம்மரசர்க்கு வெற்றியை உண்டாக்குதலுமாம்; 3"உழுவா ருலகத்தார்க் காணியஃதாற்றா, தெழு வாரை யெல்லாம் பொறுத்து," 4"பலகுடை நீழலுந் தங்குடைக் கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்" என்பன காண்க. ஆடுதற்கமைந்த வாச்சியங்கள் எனவும், பாட்டின் துறைகள் எனவும் அரும்பதவுரையாசிரியர் கொண்ட கருத்துக்கள் வேளாண் பூத மாதற்குப் பொருந்துவன அல்ல ; அப் பொருள் அடிகள் கருத்தாயின் கூத்தர் முதலாயினாரை அகப்படுத்திக் கூறினாரெனல் வேண்டும். ‘மண்ணுறு திருமணி' முதலாகப் 'பலிபெறு பூதத்தலைவன்' ஈறாக வேளாண் பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை. 103-108. கோ முறை பிழைத்த நாளில் இந் நகர் தீமுறை உண்பதோர் திறன் உண்டு என்பது - பாண்டியன் நீதி தவறிய காலத்து இம் மதுரை நகரை எரி முறைமையால் உண்பதாகிய ஓர் செய்கை உண்டு என்பதனை, ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - மேல் வரக்கடவதொரு தன்மையென முன்னரே உணர்ந்தோம் ஆகலான், யாம் முறை போவது இயல்பு அன்றோ என - நாம் இவ் வியல்பானே இவ்விடம் விட்டுப் பெயர்தல் இயற்கையாம் எனக் கூறி, கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நால் பால் பூதமும் பால் பால் பெயர - தன் முலையானே வெற்றி கருதிய கண்ணகியின் எதிரே அந்நான்கு பகுதிப்பட்ட பூதங்களும் வெவ்வேறிடங்களிற் செல்ல; மன்னவன் தவறிழைத்தமையான் எரி மண்டிற்று ; ஆகலின் தீமுறை யுண்பது என்றார். திறன் - செய்கை. ஆமுறையாக - ஆவதொரு தகுதியாக எனலுமாம். கொங்கை குறித்த கொற்றம், மதுரையை எரியூட்டியது. 109-112. கூல மறுகும்கொடித் தேர் வீதியும் - கூலம் விற்குங் கடைவீதியும் கொடி கட்டிய தேர் செல்லும் வீதியும், பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேற்றுமை, உணரப்பட்ட நான்கு வேறுவகையான தெருக்களும், உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன் கா எரி ஊட்டிய நாள்போல் கலங்க - வலிய குரங்கினைக் கொடிக்கண் உயர்த்திய வில் வல்லானாகிய அருச்சுனன் காண்டாவனத்தைத் தீயினுக்கு அளித்த நாளிற்போலக் கலக்கம் அடைய; கூலம் எண்வகைத்து ; அவை - "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என்பனவாம். இனிப் பதினெண்வகைத் தென்பாரும், பதினாறுவகைத் தென்பாரும் உளர். நால்வேறு தெரு - நால்வகை வருணத்தார் தெரு. எரியூட் டிய நாளில் அவ் வனம் கலக்கமுற்றாற்போல வென்க. அருச்சுனன் காவெரித்ததனைப் பாரதத்துட் காண்க. "உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன்" என்னும் அடி இடைச்செருகல் போலும். அதனை நீக்கின் 'காவெரி யுண்ட' என்னும் பாடம் கொள்ளத்தக்கது. மறுகும் வீதியும் தெருவும் கலங்க வென்க. 113-114. அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - அருள் நிறைந்த சான்றோர் பக்கலில் தீக்கொழுந்தினை விடாதாய், மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - வன்கண்மை நிறைந்த தீயோரது சேரிக்கண்ணே கண்டார் கலக்கங் கொள்ளுதற்குக் காரணமான நெருப்பு மிக்குச் செல்ல; 1"அறவோர்....இவரைக் கைவிட்டுத், தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்றதனால், எரி அறவோர் மருங்கின் அணுகாது மறவோர் சேரி மண்டிற்று என்க. 115-16. கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கொளுத்துகின்ற தீயின் கட்படாவாய் அறத்தினையுடைய இடையரது அகன்ற தெருக்கண் சேர்ந்தன; 2"ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்குங், கோவலர் வாழ்க்கை யோர் கொடும்பா டில்லை" ஆகலான், அறவையாயர் என்றார். 117-118. மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் - வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன - விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ; 119-127. வெங்களிறு - மதயானை. பரி - செலவு. சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை மைத் தடங்கண்ணார் மைந்தர் தம்முடன் - சாந்து படிந்த நிமிர்ந்த இளமையும் அழகுமுடைய கொங்கையினையும் மை பூசிய பெரிய கண் களையும் உடைய மகளிர் இளையரோடு, செப்பு வாய் அவிழ்ந்ததேம் பொதி நறுவிரை நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித் துறுமலர்ப்பிணையல் சொரிந்த பூந்துகள் - செப்பின்கண் வாய் விரிந்த தேன் மிக்க நன்மணமுடைய அழகிய மலர்கள் விரிந்த மணங் கமழும் கரிய முடியின்கண் செறிந்த மலர் மாலை சிந்திய பூந்தாதும், குங்குமம் எழுதிய கொங்கைமுன்றில் பைங்காழ் ஆரம் பரிந்தன பரந்த தூ மென் சேக்கை - குங்குமம் பூசிய முலை முற்றத்திடத்துப் பசிய முத்து வடமும் செயலற்றுப் பரந்த தூய மெல்லிய படுக்கை யிடத்து, துனிப்பதம் பாராக் காமக் கள் ளாட்டு அடங்கினர் மயங்க - துனியின் செவ்வி நோக்கவேண்டாத காமமாகிய கள்ளுண்டு விளையாடும் விளையாட்டினின்றும் அடங்கினராய்க் கலக்கங் கொள்ளவும்; செப்பு - மலரும் அரும்புகள் வைக்கும் பூஞ்செப்பு. இதனை, 3"முதிரா வேனி லெதிரிய வதிரல், பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொ டுடனெறிந் தடைச்சிய, செப்பிடந் தன்ன நாற்றந் தொக்கு" என்பதனானறிக. வாயவிழ்தல் - மலர்தல். வாயவிழ்ந்த மலர்ப்பிணையல் நறுவிரை மலர்ப்பிணையல் எனக் கூட்டுக. நறுமலர் அவிழ்தல் முச்சிக்கு அடை. இனி, செப்புவா யவிழ்ந்த நறுவிரை என்பதற்குச் செப்பினது வாய் திறந்து சொரிந்த சாந்து முதலிய வெனலுமாம். காழ் - முத்து வடம். பூந்துகளும் பைங்காழாரமும் பரிந்தன பரந்த சேக்கை என முடிக்க. பரிந்தன - சிந்தினவாய் எனலுமாம். துனிப்பதம் பாராமை - புலவி நீட்டிக்க விட்டிராமை. களிப்பினைச் செய்தலொப்புமையால் காமத்தைக் கள் என்றார். ஈண்டுக் கூறிய இவர் மக்களைப் பெறாதவர். 128-131. திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் - திதலை பொருந்திய அல்குலினையும் மணங் கமழுங் கூந்தலினையு முடைய மகளிர், குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைச் சொல் பொருந்திய செவ்வாயினையும் குறுக நடக்கும் நடையினையும் உடைய புதல்வர்களை, பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சணை பொருந்திய படுக்கைக்கண் உறங்கும் உறக்கத்தினின்றும் எழுப்பி, வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெண்மையாக நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிரோடு செல்லவும் ; புதல்வரொடு - புதல்வரை ; உருபு மயக்கம். வால் நரைக் கூந்தல் - மிக நரைத்த கூந்தல் எனலுமாம். குழலியர் புதல்வரைத் துயிலெடுப்பிக் கூந்தல் மகளிரொடு போத என்க. 132-137. வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி - தம் இல்லத்து வரும் விருந்தின ரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து - விளங்கும் பூணணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங் களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத் தினர் - மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர்; 1"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு" ஆகலான் வருவிருந்தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் என்றார். கொடிதன்று - முறையே யென்றபடி. மைத்தடங் கண்ணார் மயங்கக் குழலியர் மகளிரொடு போத மனைக் கிழத்தியர் ஏத்தினர் என்க; ஏத்தினராக வும் என விரித்து எச்சப்படுத்தலுமாம். 138-146. எண்ணான்கு இரட்டி இருங்கலை பயின்ற பண்ணி யல் மடந்தையர் பயங்கெழு வீதி - பரந்த அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்த இசையின் இயலறிந்த மகளிரது பயன் மிக்க தெருவின் கண்ணே, தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக் கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - நாடக மகளிர் பண்ணின் வகைகளை இசைக்கும் பண்ணுத லமைந்த யாழிசை யோடு மத்தளம் குடமுழா தாழ்ந்த செலவினை யுடைய இனிய குழல் என்பவற்றையும் ஆடும் அரங்கினையும் இழந்து, ஆங்கு எந் நாட்டாள்கொல் யார் மகள்கொல்லோ - எந் நாட்டினளோ யார் புதல்வியோ, இந் நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந் நாட்டில் இம் மதுரை நகரிடத்துத் தன் கணவனை இழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்று இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள் என்ன - ஆராய்வு இல்லா அரசனைத் தன் சிலம்பானே வென்று இந் நகரினை எரி யூட்டிய ஒரு மங்கை என்னவும்; கணிகையர்க்கு அறுபத்து நான்கு கலைகளுண் டென்பதனை, 1"எண்ணெண் கலையோர்" என முன்னர் இந் நூலுள்ளும் 2"யாழ் முதலாக அறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கை" எனப் பெருங்கதை யுள்ளும் கூறினமையானும் அறிக. பண்ணியல் மடந் தையர் - இசை யறிவார். தாழ்தரு தீங்குழல் - இனிமை தங்கிய குழல் எனினுமமையும். பண்ணுக்கிளை - பண்ணும் திறமுமாம். பயிர்தல்- இசைத்தல். நாடக மடந்தையர், பயங்கெழு வீதியிடத்து யாழ்ப் பாணியொடு தண்ணுமை முதலியவற்றை இழந்து, இறை வனை இழந்து மன்னனை வென்று தீ யூட்டிய ஒரு மகள் எந் நாட்டாள் யார் மகள் என்ன என முடிக்க. முன்னவற்றுடன் கூட்டி என்னவும் என உம்மை விரித்தலுமாம். நாடக மடந்தையர் - தளியிலார் ; கோயிற் பெண்டிர். 147-150. அந்தி விழவும் ஆரண ஓதையும் - மாலைக் காலத் தயரும் சீபலியும் மறை முழக்கமும், செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் - சிவந்த தீயில் ஓமஞ் செய்தலும் கடவுட் பூச னையும், மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மாலை யில் மனைக்கண் விளக்கேற்றலும் இல் உறை தெய்வத்தைப் பரவுதலும், வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர்-ஒலிதரும் குரலையுடைய முரசு முழங்குதலும் ஒழிந்த பெரிய நகரத்தில்; அந்தி விழவு - சீபலி ; கோயிலில் நித்தலும் நடைபெறும் விழா. வேட்டல் - ஓமஞ்செய்தல். நாடக மடந்தையர் ஒரு மகள் என்ன அந்தி விழவு முதலிய மடிந்த மா நகர் என்க. 151-157. காதலற் கெடுத்த நோயொடு உளம் கனன்று - தன் கணவனைக் காணப் பெறாத துன்பத்தோடே உள்ளங்கொதித்து, ஊது உலைக் குருகின் உயிர்த்தனள் - கொல்லன் உலைக் களத்து ஊதும் துருத்தி போலச் சுடுமூச்செறிந்தனள், உயிர்த்து மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் - அங்ஙனம் வெய் துயிர்த்து வீதியிற் சுழன்று திரியும், குறுந்தெருக்களிற் கவலை யுடன், நிற்கும், இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பல வழியும் இயங்குதலுஞ் செய்யும், மயங்கி நிற்றலுஞ் செய்யும், ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - இங்ஙனம் பொறுத் தற்கரிய துன்பமுற்ற சீறிய கற்புடையாள் முன்னர், கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென் - திரண்ட அழலாகிய வெம்மை மிக்க எரி யினைப் பொறாளாய் மதுராபதி என்னும் தேவதை வந்து தோன்றினாள் என்க. உள்ளுடல் கொதித்து வெவ்விதாக வரும் பெருமூச்சுக்கு ஊது லைக் குருகின் காற்று உவமம்; 1"ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங் காது" என்பது காண்க. மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் என்று கூறியதனையே பின்னர்க் கூறி அங்ஙனஞ் செய்யும் வீரபத் தினிமுன் மதுராபதி தோன்றினள் என்றார். இயங்கும் மயங்கும் என்பன முற்று ; பெயரெச்ச அடுக்காக்கி வீரபத்தினி என்பதுடன் முடித்தலுமாம். இயங்கலு மியங்கும், மயங்கலு மயங்கும் என்பன, 2'சுழலலுஞ் சுழலும்' என்பதுபோல் நின்றன. அரசன் தேவி தன் னுடன் துஞ்சியதறியாது உரை அவிந்திருப்ப, மிடைகொள்ள நாற்பாற் பூதமும் பெயர எரி மண்ட அடைந்தன ; பெயர்ந்தன ; மயங்க, போத, ஏத்தினர்; நாடக மடந்தையர் இழந்து என்ன, மடிந்த மா நகர்க்கண் கனன்று உயிர்த்து மறுகும் ; கவலும்; இயங்கும்; மயங்கும்; அங்ஙனம் அஞருற்ற வீரபத்தினிமுன் மதுராபதி வந்து தோன்றினள் என வினை முடிக்க. வெண்பாவுரை மாமகளு.....................மாது. மாமகளும் இலக்குமியும், நாமகளும் - கலைமகளும்- மாமகளும் மா மயிடன் செற்று உகந்த கோமகளும்தாம் -பெரிய மயிடன் என்னும் அவுணனைக் கொன்று மகிழ்ந்த கொற்றவை யும் ஆகிய மூவரும், படைத்த கொற்றத்தாள்-படைத்த வெற்றியினை யுடையாளும், நாம முதிரா முலை குறைத்தாள் - முன்னரே அச்சத்தைச் செய்யும் இளைய முலையைப் பறித்தாளுமாகிய வீரபத்தினியின் எதிரே, வந்தாள் மதுராபதி என்னும் மாது - மதுராபதி என்னுந் தேவதை வந்து தோன்றினாள். மகிஷன் என்னும் வடசொல் மயிடன் எனத் திரிந்தது; எருமை உருவினன் என்பது பொருள். கொற்றமாவன நல்லோரைக் காத்தலும், அரசனை வழக்கில் வேறலும், தீயோரை அழித்தலும் என முறையே கொள்க. அழற்படு காதை முற்றிற்று. 23. கட்டுரை காதை (கண்ணகிபால் வந்து தோன்றிய மதுராபதி அவளை நோக்கி `யான் மதுரையின் அதி தெய்வம் ; நின் கணவற் குண்டாகிய துன் பத்தால் எய்திய கவற்சியுடையேன் ; இந் நகரத்திருந்த பாண்டி மன்னர்களில் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை யுடையரல்லர்; இந் நெடுஞ் செழியனும் `மறை நாவோசையல்லது யாவதும் மணி நா வோசை கேட்ட' றியாத செங்கோன்மை யுடையனே ; இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் ஊழ்வினையே யாகும் ; அதன் வரலாற்றைக் கூறுவேன் கேள் ; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தினும் கபிலபுரத்தினு மிருந்த தாய வேந்தராகிய வசு என்பவனும் குமரன் என்பவனும் தம்முள் பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லு தற்கு முயன்றுகொண்டிருந்தனர் ; அதனால் இருவரூர்க்கும் இடைப் பட்ட ஆறு காத எல்லையில் யாரும் இயங்காதிருக்கவும், சங்கமன் என்னும் வணிகன் பொருளீட்டும் வேட்கையால் தன் மனைவியோடு காவிற் சென்று சிங்கபுரத்தின் கடை வீதியில் அரிய கலன்களை விற்றுக்கொண்டிருந்தனன் ; அப்பொழுது அரசனிடத்துத் தொழில் செய்துகொண்டிருந்த பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றனென்று பற்றிச் சென்று அரசனுக்குக் காட்டிக் கொன்றுவிட்டனன் ; கொல்லப்பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரத்துடன் முறையிட்டுக்கொண்டு எங்கணும் திரிந்து பதினான்கு நாள் சென்றபின் ஓர் மலையின் உச்சியை அடைந்து கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன் உயிரைவிடத் துணிந்தவள் `எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில் இத் துன்பத்தை யடைவாராக' எனச் சாபமிட்டிறந்தனள் ; அப் பரதன் நின் கோவலனாகப் பிறந்தான் ; ஆதலால் நீங்கள் இத் துன்பத்தை அடைந்தீர்கள் ; நீ இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்றபின் நின் கணவனைக் கண்டு சேர்வாய்' எனச் சொல்லிச் சென்றது சென்றபின், கண்ணகி `கீழ்த்திசைவாயிற் கணவனொடு புகுந்தேன், மேற்றிசைவாயில் வறியேன் பெயர்வேன்' எனக் கையற்று ஏங்கி மதுரையை நீங்கி, வையைக்கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன் றென் னும் மலை மீதேறி ஒரு வேங்கை மரத்தின்கீழ் நின்று, பதினாலாம் நாட் பகற்பொழுது சென்றபின் அங்கே தெய்வ வடிவுடன் போந்த கோவலனைக் கண்டு அவனுடன் வானவூர்தியிலேறித் தேவர்கள் போற்றத் துறக்கம் அடைந்தனள். (இதில் பாண்டியர்களுடைய நீதியை உணர்த்துதற்குப் பொற்கை வழுதியின் வரலாறும், சேரன் பாற் பரிசில் பெற்றுவந்த சோணாட்டுப் பார்ப்பானாகிய பராசரன் என்பானுக்குத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களை அளித்த மற்றொரு பாண்டியன் வரலாறும் கூறப்பட்டுள்ளன. மதுரை இன்ன நாளில் எரியுண்ணும் என்பதோர் உரையுண்டென்பதும் கூறப்பட்டுளது.) சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி 5 இடமருங் கிருண்ட நீல மாயினும் வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் 10 தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி 15 அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை 20 ஆரஞர் எவ்வம் அறிதி யோவென ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணியிழாஅய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி 25 பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் தோழிநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் 30 தீதுற வந்தவினை; காதின் மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் 35 இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் 40 ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் 45 புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று 50 வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் 55 பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் 60 தங்கா விளையுள் நன்னா டதனுள் வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் 65 காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் 70 அறுதொழில் லந்தணர் பெறுமுறை வகுக்க நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் 75 தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதிமன் றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை 80 விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் 85 குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தர குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச் 90 சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது உளமலி உவகையோ டொப்ப வோதத் 95 தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுற ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி 100 வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிக் கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் 105 அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் 110 மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப 115 நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் 120 கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் 125 கலையமர் செல்வி கதவந் திறந்தது சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீ செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென 130 யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று 135 வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் 140 தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற 145 இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் 150 அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரத னென்னும் பெயரனக் கோவலன் 155 விரத நீங்கிய வெறுப்பின் னாதலின் ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங் காணாள் நீலி என்போள் 160 அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி 165 மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோ ரியாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோ ளிட்ட வழுவில் சாபம் 170 பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ உம்மை வினைவந் துருத்த காலை செம்மையினோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி 175 வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது 180 இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலு மயங்கினள் கையற்று 185 பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ 190 உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலித் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் 195 நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கிழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் 200 கானமர் புரிகுழற் கண்ணகி தானென். வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால் ? தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து கட்டுரை முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5 விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் 10 ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியுங் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடவாரியர் படைகடந்து 15 தென்றமிழ்நா டொருங்குகாணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த 20 மதுரைக் காண்டம் முற்றிற்று. உரை 1-13. சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவள வாள் முகத்தி - சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையு முடையாள், கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி - கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி - தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள், இடமருங்கு இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் - இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள், இடக்கை பொலம் பூந் தாமரை ஏந்தி னும் வலக்கை அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் - இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள், வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் - வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்), கொற்கைக் கொண்கன் - கொற்கை நகரத் தலைவனும், குமரித் துறைவன் - குமரியாற்றுத் துறையை யுடையோனும், பொற்கோட்டு வரம்பன் - இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியிற் பொருப்பன் - பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய, குலமுதற் கிழத்தியாதலின் - குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ; சடையும் பிறையும் என்பவற்றில் உம்மை அசைநிலை; சடையும், சடையிடத்தே பிறையுந் தங்கிய எனலும் அமையும். கடை எயிறு - பன்றிக் கொம்புபோலப் புறப்பட்ட எயிறு என்பர் அரும்பத உரையாசிரியர். முகத்தி என்பது முதலியனவும், கொண்கண் என்பது முதலியனவும் ஒரு பொருண்மேல் வந்த பல பெயர்கள். குலமுதற் கிழத்தி - மதுரையின் அதி தெய்வம்; அத் தெய்வத்தின் வடிவு வலப்பாகத்து இறைவனையுடைய இறைவியின் வடிவாகக் கூறப் பெற்றது. `இடக்காற் றனிச்சிலம் பரற்றினும் வலக்காற், புனைகழல் கட்டுந் தகைமையள்' என்பதும் பாடம். 13-17. அலமந்து - மயங்கி, ஒரு முலை குறைத்த திருமா பத்தினி - இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய, அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன் முன்னிலைஈயாள் பின்னிலைத் தோன்றி - துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று, கேட்டிசின் வாழி நங்கை என் குறை என - நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற; பத்தினியாகிய நங்கை என்க. கற்புடைத் தெய்வமாகலானும் வெகுளியோடிருந்தன ளாகலானும், அவள் முன்னர்த் தோன்றாது பின்னர்த் தோன்றினாள். நிலையீயாள் - நில்லாள்; வினைத்திரி சொல். சின், இடைச்சொல். வாழி யென்றது ஓம்படை கூறியது; அசையுமாம். 18-20. வாட்டிய திருமுகம் வல வயின் கோட்டி - தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி, யாரை நீ என் பின் வருவோய் - என் பின்னர் வருகின்றோய் நீ யார், என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என - என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப; 18-20. வாடிய என்பது வாட்டிய என விகாரமாயிற்று. யாரை என்பதன் கண் ஐ அசைநிலை இடைச்சொல். 21-24. ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய் - அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன், மா பெருங் கூடல் மதுராபதி என்பேன் - மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன், கட்டுரை யாட்டியேன்- நினக்குச் சில சொல்லுதலுடையேன், யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், பைந்தொடி கேட்டி - ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக; அணியிழை என்பது ஓர் நங்கை யென்னுந் துணையே குறித்து நின்றது; மேல்வரும் பெயர்களும் இத் தன்மையன. கட்டுரை - பொருள் பொதிந்த சொல். பைந்தொடி, விளி. 25-26. பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் - பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக; நோயால் வருந்திப் புலம்புறும் ஒன்றென்க ; புலம்புறுதற் கேதுவாகிய நோய் ஒன்று எனலுமாம். 27-28. தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக; ஈது, சுட்டு நீண்டது. "எங்கோமகற், கூழ்வினை வந்தக் கடை" என்பதனை, 1"வினைவிளை கால மாதலின் யாவதுஞ், சினையலர் வேம்பன் தேரா னாகி" என முன்னர் வந்தமையானும் அறிக. வந்தக்கடை - வந்தபடி; ககரம் விரித்தல் விகாரம் ; வினையெச்சமாகக் கொண்டு, வந்தவிடத்து அதனாலெய்திய துன்பமாகிய ஈதொன்றை என்றுரைத்தலுமாம். 29. மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை - நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக; தீது - கொலை. இனிப் பாண்டியர் கோலின் செம்மை கூறுவாள்: 30-34. காதின் மறை நா ஓசையல்லது - தன் காதுகளால், அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற வேதவொலியினைக் கேட்டறிந்த தல்லது. யாவதும் மணி நா ஓசை கேட்டதும் இலனே-ஒரு பொழுதும் மணியின் நாவோசையைக் கேட்டறியான், அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - அவன் தன்னடிகளைக் கையாற்றொழுது தலை வணங்காத பகையரசர் பழி கூறித் தூற்றப்பெறினல்லது, குடி பழி தூற்றுங் கோலனும் அல்லன்-குடிகள் பழி கூறித் தூற்றப்பெறும் கொடுங்கோலுடையனுமல்லன்; மதுரையில் மறையொலி மிக்குள்ளமை 1"நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப, ஏமவின்றுயி லெழுத லல்லதை,.... கோழியினெழாதெம் பேரூர் துயிலே" என்பதனானும் அறியப்படும். தம் குடிகளில் குறையுற்றார் அறிவிக்கவென அரசன் கட்டிய மணியினை ஆண்டுக் குறையுற்று அடிப்பார் ஒருவரும் இலர் ஆகலான் "மணிநாவோசை கேட்டது மிலனே" என்றார். எனவே அவனாட்டு அவனாட்சியில் குறையுற்றார் இதுவரை ஒருவருமிலர் என்பதாயிற்று. இறைஞ்சா மன்னர் - பகை அரசர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினத்தில் 2"குடிபழி தூற்றுங்கோலே னாகுக" என்றது ஈண்டு அறியத்தகுவது. 35 இன்னும் கேட்டி - மேலும் அவர் உயர்குணத்தைக் கேட்பாயாக; 35-41. நல் நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில் பொருந்திய பார்வையானே, மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு, இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய யானை, கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் - கல்வியாகிய பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும், ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது - நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண் தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது; மதம் - இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை; கழி காமமுமாம்; 1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன் உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி. 2"இடங்கழி காமமொடடங்கா னாகி," 3"கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி" என்பன ஈண்டு அறியற்பாலன. 41. இதுவுங்கேட்டி - இதனையும் கேட்பாய்; உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத் தனன் ஒருநாள் - ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கொண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவி, அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி - நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லை யென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர், இன்று அவ் வேலி காவாதோ என-இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த; உதவா வாழ்க்கை - உதவுவதற்கொண்ணாத வாழ்க்கை. கீரந்தை - ஓரந்தணன். புதவம் - வாயில் ; புதவக்கதவம் - கதவில்லா வீடு என்பாருமுளர். வேலி - காவல். மன்றம் - அரணில்லா இல்லம். மிடி வாழ்க்கையையுடைய கீரந்தை யென்னும் பார்ப்பனன் ‘அரசனது காவலுளதாகலின் நீ அஞ்சாதே' என்று கூறித் தன் மனைவியைத் தனியே இல்லின்கண் இருக்கச் செய்து யாத்திரை சென்றிருந்த காலை, இரவில் நகரி சோதனைக்கு வந்த பாண்டியன் அவ் வில்லின் கதவைத் தட்ட, அவ்வொலி கேட்ட பார்ப்பனி இங்ஙனம் கூறினாளென்க ; பார்ப்பனன் மீண்டு வந்து இரவில் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது அரசன் கதவைத் தட்டினான் என்றும், பிறவாறும் உரைப்பாருமுளர். 48-53. செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் - அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானே, அஞ்சி நடுக்குற்று - அச்சமும் நடுக்கமு மடைந்து, வச்சிரத் தடக்கை அமரர் கோமான் - வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடைய, உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைத்த கை குறைத்த செங்கோல் - தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும், குறையாக் கொற்றத்து - அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய, இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும்; சுடுதலுள்ள இறைச்சி சூட்டிறைச்சியானாற் போலச் சுடுதலுடைய ஆணி சூட்டாணியாயிற்று. அமரர் கோமான் முடிவளை யுடைத்தமை 1"முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி" என்பதனானும் அறியப்படும்; வளை முடியின் ஓர் உறுப்பு; வளையென்னும் படையால் முடியை உடைத்தானாகப் புராணங் கூறும். குறைத்த என்னும் பெயரெச்சம் செங்கோல் என்னும் ஏதுப்பெயர் கொண்டது. செங்கோல் வெற்றிக்குக் காரணமாதலை 2"வேலன்று வென்றி தருவது மன்னவன், கோலதூஉங் கோடா தெனின்" என்பதனானறிக. இழுக்க மின்மையாகிய இதுவும் கேட்டி என முடித்தலுமாம். பாண்டியன் கை குறைத்தமை, 3"எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத்தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச்செய்யார் மாணா வினை," 4"நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன், ஆடுமழைத் தடக்கை யறுத்து முறைசெய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்" என்பவற்றானும் அறியப்படும். கை குறைத்தவழிப் பொன்னாற் கை செய்து வைத்தமையின் `பொற்கைப் பாண்டியன்' எனப் பெயரெய்தினன் போலும்! 54. இன்னும் கேட்டி நன்வாய் ஆகுதல் - இது நன்றாகிய மெய்யாதலை இன்னும் கேட்பாயாக ; 55-66. அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறநூலினை அறிந்து அதற்கேற்ப நிற்கும் செங்கோலையும் வீரவழியிலே ஒழுகிய நெடிய வாளினையும் உடைய, புறவு நிறை புக்கோன் - புறாவின் பொருட்டுத் துலாம் புக்கோனும், கறவை முறை செய்தோன் - ஆவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டு முறை செய்தோனும் ஆய, பூம்புனற் பழனப் புகார் நகர் வேந்தன் - பொலிவுற்ற நீரினையுடைய வயல்கள் நிறைந்த புகார் நகரத்தையுடைய சோழனது, தாங்கா விளையுள் நன்னாடதனுள்- நிலம் பொறாத விளைவினையுடைய நல்ல சோணாட்டின்கண், வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - அறிவில் வல்ல பரா சரனென்னும் அந்தணன், பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை - பாரதப்போரில் பெருஞ் சோறளித்த திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திரு நிலைபெற்ற பெருநாளிருக்கை - செல்வம் நிலைபெற்ற பெருமை மிக்க காலையோலக்கத் தினையுமுடைய, குலவு வேற் சேரன் கொடைத் திறங்கேட்டு - விளங்கும் வேலினையுடைய சேரனது கொடையின் இயல்பினைக் கேள்வியுற்று, வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடுவேல் சேரலன் காண்கு என - வளவிய தமிழுணர்ந்த அந்தணனுக்குத் துறக்கத்துறைதலைத் தந்த உறுதியான வலி மிக்க நீண்ட வேலினையுடைய சேரனைக் காண்பேன் என்று கருதி, காடும் நாடும் ஊரும் போகி - காடு நாடு ஊர் இவைகளைக் கடந்து, நீடு நிலை மலையம் பிற்படச் சென்று - உயர்ந்த நிலையினையுடைய பொதியின்மலை பிற்படும்படி போய்; தடக்கையினையும் இருக்கையினையுமுடைய சேரன் என்றியைக்க. பெருஞ்சோறு பயந்தவென அக் குலத்து முன்னோன் செய்கை அவன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. உதியஞ் சேரலாதன் பாரதப்போரில் இரு திறப் படைக்கும் சோறளித்தனனென்பது, 1"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" எனப் புறத்தினும். 2"ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ் சோறு போற்றாது தானளித்த, சேரன்" என மேல் இந் நூலுள்ளும் வருதலானும், பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் பெயரானும் அறியப்படும். பிற சான்றோரும் சேரனது நாளோலக்கத்தைத் "தண்கட னாட னொண்பூங் கோதை, பெருநா ளிருக்கை" எனக் கூறியுள்ளமை காண்க. புறவுநிறை புக்கமையும் கறவைமுறை செய்தமையும் ஆகிய வரலாறுகளை 3வழக்குரை காதையானும், அதன் உரையானும் அறிக. மறையோன் - பாலைக் கௌதமனார் என்னும் புலவர். உறை, முதனிலைத் தொழிற் பெயர். சேரலன் - இமைய வரம்பனின் றம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன். பதிற்றுப் பத்தின் மூன்றாம் பத்தினால் தன்னைப் பாடிய பாலைக் கௌதம னாருக்குத் குட்டுவன் துறக்கமளித்த வரலாறு, அதன் பதிகத்தில், 1"பாடிப் பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின் என, கணவனுடன் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமென, பார்ப் பான் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணா பெற்றுளது. இக் காப்பியத்துள்ளும் 2"நான் மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் வேந்தன் குறிக்கப்படுதல் அறியற்பாற்று 66-70. ஆங்கு - அவ்விடத்தே, ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் வீடுபேற்றினை விரும்பும் கொள்கையினையும் இரண்டு பிறப்பினையும் உடையாராகிய, முத்தீச் செல்வத்து - மூன்று வகைப்பட்ட தீயை வளர்க்குஞ் செல்வத்தோடே, நான் மறை முற்றி - நான்கு மறைகளையும் முற்ற அறிந்து, ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்தாகிய பெருமையுடைய வேள்விகளைச் செய்தலாகிய தொழிலையும் பேணும், அறு தொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - ஆறு தொழிலினை யுடைய அந்தணர் பெறுகின்ற முறையை அப் பராசரனுக்கு வகைப்படுத்திக் கூற; ஒன்று - வீடு. இரு பிறப்பு - உபநயனத்திற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்பும். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. ஐம்பெரு வேள்வி - கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல். வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. 71-73. நா வலங்கொண்டு - நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு, நண்ணார் ஓட்டி - பகைவர்களை ஓடச் செய்து, பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகையைச் சூடி, ஏற்புற நன்கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன் - பொருத்தமுற நல்ல அணிகலங்களைப் பெற்றுத் தன் ஊர்க்கு மீண்டு செல்வோன்; நாவலம் - நாவான் வரும் வெற்றி. நண்ணார் என்றது கல்வி அறிவுடையராய்த் தன்னொடு வாது செய்ய வந்தாரை. பார்ப்பன வாகையாவது 1"கேள்வியாற் சிறப்பெய்தியானை, வேள்வியான் விறல்மிகுத்தன்று." பெயர்தல் - மீளல். சேரலற் காண்கெனப் போகிச் சென்று வலங்கொண்டு ஓட்டிச் சூடிக் கலங்கொண்டு பெயர்வோன் என முடிக்க. 74-79. செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்பது ஊரே - செங்கோலினையுடைய பாண்டியனுடைய திருந்திய செயலினையுடைய அந்தணர்களது ஊர் திருத்தங்கால் என்பது, அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து - அவ்வூரின்கண் பசிய இலை தழைந்த அரசு நிற்கும் மன்றத்தின் கண், தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் - தண்டினையும் கமண்டலத்தினையும் வெள்ளிய குடையினையும் சமித்தையும், பண்டச் சிறு பொதி பாதக் காப்பொடு - பண்டங்களையுடைய சிறிய மூட்டையினையும் மிதியடியுடன், களைந்தனன் இருப்போன் - கீழே வைத்திருப் போனாகிய அவன்; மறையவர் - பஞ்சக்கிராமிகள் என்ப. தண்டே - ஏ, எண்ணிடைச் சொல், 79-84. காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - குடிகளைக் காக்கும் வெண்கொற்றக் குடையினையும் அறநெறியால் உண்டாகி முதிர்ந்த வெற்றியையு முடைய மேலோன் வாழ்வானாக, கடற் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலின்கண்ணே பகைவர் கடம்பினைத் தடிந்த மன்னவன் வாழ்வானாக, விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலைக்கண் வில்லெழுதிய காவலன் வாழ்வானாக, பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - பொலிவு பெற்ற தண்ணிய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்வானாக, மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலாகிய அரசன் வாழ்வானாக வெனச் சொல்ல; விளைந்து முதிர் கொற்றம் - மிகப் பெருகிய வெற்றியுமாம். விறல் - மேம்பாடு. கடற்கடம்பு எறிந்தமையாவது கடல் நடுவண் ஓர் தீவிலிருந்து பகைவரை வென்று அவரது காவல் மரமாகிய கடம்பினைத் துணித்தமை. விடர் - மலை முழைஞ்சு ; மலைக்கு ஆகு பெயர் ; மலை ஈண்டு இமையம். கடம்பெறிந்ததனை 1"இருமுந்நீர்த் துருத்தியுண், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேர லாதன்" என்னும் பதிற்றுப் பத்தானறிக. கடம்பெறிந்தமையும் சிலை பொறித்தமையும் 1இந்நூலுள்ளும்பின்னர்க் கூறப்படுதல் அறியத்தகும். பொறையன் - மலைநாட்டையுடையன்; பொறை - மலை. மாந்தரஞ் சேரல் - 2சிறப்புப் பெயரென்பர் பரிமேலழகர். 85-87. தமர் முதல் நீங்கி - தம் சுற்றத்தாரினின்றும் நீங்கி, குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலினையும் குடுமியினையும் நிரம்பாத சொல்லையுடைய சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடைய கூட்டத்துடன், விளையாடு சிறாஅர் எல்லாஞ் சூழ்தர - விளையாடுகின்ற சிறுவர் யாவரும் அவ் வந்தணனைச் சூழ்ந்துகொள்ள ; குழல், குடுமி என்பதனானே சிறுவரும் சிறுமியரும் என்பது பெறப்படும்; குழல் - சுருண்ட மயிர் எனவும், குடுமி - உச்சியில் வைத்த சிகை யெனவும் கொள்ளலுமாம். முதல் - இடம். எல்லாரும் எனற்பாலது வழக்குப் பற்றி எல்லா மென்றாயது. பராசரன் கூறுவான் :- 88-89. குண்டப் பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே, என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு போமின் என - என்னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர் பெற்றுச் சென்மின் என்று அவன் கூற; குண்டப் பார்ப்பீர் என்பதற்குப் பிழுக்கை மாணிகாள் எனவும் சிறுமாணிகாள், சிறுபிள்ளைகாள் எனினுமாம் எனவும் உரைப்பர் அரும்பதவுரையாசிரியர். மாணி - பிரமசாரி. 90-94. சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் - பெருமையமைந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்பான் புதல்வனாகிய, ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவன், பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால் தோன்றும் சிவந்த வாயினையுடைய தன்னையொத்த இளையோர் முன்பு, தளர்நா ஆயினும் மறை விளி வழாஅது உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத - தளர்வுறும் நாவினையுடையனாயினும் மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளத்து நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனோடு ஒருபடித்தாக ஓதுதலைச் செய்ய; வார்த்திகன் - ஓரந்தணன், புதல்வனாகிய வளர்ந்தோனென்க. ஆலமலர் செல்வன் - கல்லாலின் புடையமர்ந்த இறைவன் ; தக்கிணாமூர்த்தி. `பானாறு செவ்வாய்ப் படியோர்' என்றது மிக்க இளஞ்சிறார் என்பதுணர்த்திற்று. படியோர் - ஒத்தவர். இனி, இதற்குப் பிரமசாரிகள் எனக் கூறிப் படிமம் படி என்றாயிற்று என்பாருமுளர். 95-98. தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி, முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும், அத் தகு புனைகலம் - அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும், கடகம் தோட்டொடு கையுறை ஈத்து - கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து, தன் பதிப்பெயர்ந்தனன் ஆக - தன்னகரத்து மீண்டானாக; வலவைப் பார்ப்பானாகலான் மிக்கோன் என்றார். முத்தப் பூணூல் - முத்துவடமாகிய பூணூல் எனவும், அத்தகு - அழகு பொருந்திய எனவும் கூறலுமாம். கையுறை - காணிக்கை ; ஈண்டுப் பரிசில். 98-103. நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி - அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும் பூண்பவற்றையும் பொறாதவர்களாய், வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத் தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவனென்று கூறி, இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக் கண்ணே இவனை இட்டு அடைத்தனராக; புனைபவும் பூண்பவும் வெவ்வேறு வகையின. கோத்தொழி லிளையவர் பொறாராகிக் காத்தனரோம்பி இட்டனராக வெனக் கூட்டுக. கோமுறையன்றி வௌவிய பார்ப்பான் என்க. படு பொருள் - களவுப் பொருள் எனலுமாம். 1"உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன் பொருள்" ஆகலான் படுபொருள் வௌவுதல் குற்றமாயிற்று. 104-108. வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் - அங்ஙனம் சிறையிடப் பெற்ற வார்த்திகனுடைய மனைவியாகிய கார்த்திகை என்னும் பெயருடையாள், அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்திற் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் - மயங்கி ஏக்கம் கொண்டு நிலத்தில் வீழ்ந்தழுது கடவுளை வெறுத்துப் பூமியிற் புரண்டு வெகுண்டனள், அது கண்டு - அதனை யுணர்ந்து, மை அறு சிறப்பின் ஐயை கோயிற் செய் வினைக் கதவம் திறவாது - குற்றமற்ற சிறப்பினையுடைய துர்க்கையின் கோயிற்கண் செயற்குரிய தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற கதவம் திறவாதாயிற்று ; அலந்தனள், அழுதனள், புலந்தனள், புரண்டனள் முற்றெச்சம். ஐயை கோயில் - மதுரைக்கண் உள்ள துர்க்கை கோயில். 108-112. ஆகலின் - ஆகையால், திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த நிலையினையுடைய கதவினை, மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய பாண்டியன் கேட்டு மயக் குற்று, கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ, கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்னென - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின் எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ; அடைத்த திண்ணிலைக் கதவம் கேட்டனன் என்றாராயினும் கதவம் அடைத்ததனைக் கேட்டனன் என்பது கருத்தாகக் கொள்க. கொல், ஐயம். யாவதும் - சிறிதாயினும் எனலுமாம். அறிந்தீமின், வினைத்திரிசொல். 113-114. ஏவலிளையவர் காவலற் றொழுது - அரசனேவல் செய்யுங் காவலர் மன்னனை வணங்கி, வார்த்திகற் கொணர்ந்த வாய் மொழியுரைப்ப - வார்த்திகனைக் கொண்டு வந்து சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் கூற; மொழி - ஈண்டுச் செயல் மேற்று. 115-122. நீர்த்து அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப் புகழ்ந்து கூறி, அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட, என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி தவறுற்றது, பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி, தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே, மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும் கொடுத்து, கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத் தனது அழகிய மார்பினை அளித்து, அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந் நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ; நீர்த்தன்றிதுவென வென்றது தன் உட்கோளாகக் கொள்க. இனி, இளையவர், வார்த்திகன் ஆகிய இவரிடைக் கூறினானெனக் கோடலு மிழுக்காது. நெடுமொழி - புகழ்மொழி. வயலூர் என்பது பெயர். அவனைப் பணிந்தென்பார் இருநில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி என்றார் ; இது பரியாயவணி. அரசனை நில மடந்தை கேள்வனாகிய திருமாலெனக் கொண்டு திருமார்பு நல்கி என்றார். அவன் பிறரைப் பணியாமையின் அவன் மார்பு எஞ்ஞான்றும் நிலத்திற் பொருந்தியதின் றென்பதனை அவள் தணியா வேட்கை என்பதனாற் பெற வைத்தார். 123-125. நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் - நிலைத்தல் பொருந்திய கூடல் நகரத்து மிக நீண்ட தெருக்களில் உள்ள, மலை புரை மாடம் எங்கணுங் கேட்ப-மலையினையொத்து உயர்ந்த மாளிகைகள் எவ்விடத்தும் கேட்கும் வண்ணம், கலை அமர் செல்வி கதவம் திறந்தது - கலையை ஊர்தியாக விரும்பிய கொற்றவை கோயிலின் கதவு திறந்தது; நிலைகெழு கூடல் என்றது என்றும் அழியாத கூடல் என்றவாறு. கூடல் மாடம் மறுகின் மாடம் என்க. 126-132. சிறைப்படு கோட்டம் சீமின் - குற்றஞ் செய்தோரையும் பகைஞராய்ப் பற்றப்பட்டோரையும் காவற் படுத்தியிருக்கும் சிறைக்கோட்டத்தினைத் திறந்திடுமின், யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்மின் - எத்துணையாயினும் இறை இறுத்தற்குரிய மக்களது இறையினை விடுதலை செய்யுமின், இடுபொருளாயினும் படுபொருளாயினும் உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என - பிறர் வரவிட்ட பொருளாயினும் புதையற் பொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையுடையனவாம் என்று, யானை, எருத்தத்து அணிமுரசு இரீஇக் கோல் முறை அறைந்த கொற்ற வேந்தன் - யானையின் பிடரில் அழகிய முரசினை இருத்தி அரச நீதியாகக் கூறிய வெற்றியினையுடைய மன்னன், தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ - நீதி தவறிய தகுதிப்பாட்டையும் நீ கேட்பாயாக ; சிறைப்படு கோட்டஞ் சீமின் என்றது சிறையிலுள்ளாரை வீடு செய்ம்மின் என்றவாறு ; சிறைக் கோட்டத்தை இடித்துத் தூய்மை செய்ம்மின் என்றலுமாம் ; 1"சேராமன்னர் சினமழுங்க, உறையுங்கோட்ட முடன்சீமின்" என்புழி நச்சினார்க்கினியர் இவ்வாறுரைத் தமை காண்க. அறைந்த - அறைவித்த. அறைந்தனன் ; அங்ஙனம் அறைந்த கொற்றவேந்தன் என அறுத்துரைக்க. கறை - கடமை; வரி, இடுபொருள் - மறைத்து வைத்திட்ட பொருள், புதையல்; படுபொருள் - மிக்க பொருள் எனலுமாம். உற்றவர்க்குப் பெற்றவர்க்கு உறுதியாமென்க. 133-137. ஆடித் திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து - ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து அட்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே, உரை சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ; அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. 2"ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று. ஈண்டு அதன்முதற் காலையோ அன்றி ஒழிந்த மூன்று காலையுமோ உணர்த்தியதாகல் வேண்டும். அதனால் திங்கள் மேடம் அல்லது இடபத்தில் இருத்தல் பெற்றாம். உரை - அறிவர் மொழி; சோதிடச் சொல்லுமாம். நிரை தொடியோயே உரையுமுண்டே என்க. 138-146. கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழ்ந்த கலிங்கநாட்டின்கண், தீம் புனற் பழனச் சிங்கபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர் நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்தின்கண்ணும், அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர், தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள் பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட நிலத்து எவ்விடத்தும், செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர் வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான்; கலிங்க நன்னாட்டுச் சிங்கபுரத்தினுங் கபிலபுரத்தினும் அரை சாள் செல்வத்து வேந்தர் வசுவுங் குமரனும் எனக்கூட்டுக. வசு சிங்க புரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் ஆண்டான் என்க. தாயம் - உரிமை. 147-151. அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே சிறந்த அணிகலங்களைச் சுமந்து, கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப் போந்து, காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு - தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள் புக்கு, அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகலளை விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ; கரந்துறைமாக்கள் - ஒற்றர் முதலாயினார்; 1"துறந்தார் படிவத்தாராகி" என்பது காண்க. மாக்களிற் போந்து என ஒரு சொல் வருவித்துரைக்க. சிங்காமை - அழியாமை. 152-157. முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் - பசிய தொடியினையுடையாய் முற்பிறவியில் நின் கணவன், வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன் - வெவ்விய வலியமைந்த வசுவென்னு மரசனுக்கு அரச வினை செய்பவன், பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் - கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன், விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - கொல்லா விரதத்தினின்றும் விலகிய வெறுக்கப்படுவோனாதலான், ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - இவன் பகை மன்னன் ஒற்றனாவான் எனப் பிடித்துச் சென்று வெற்றி தரும் வேலினையுடைய தன் அரசனிடத்து காட்டிக் கொலை செய்த போது; பைந்தொடி - விளி. வேந்தன் - வசு. செய்வோன், வினைப் பெயர். கோவலன் முற்பிறப்பின் பெயர் பரதன். கோவலனாகிய அவன் என்க. பற்றினன், முற்றெச்சம். 158-166. கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் நீலி என்போள் - கொலைக்களத்துப் பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் நிலையிடத்தைக் காணாளாய்., அரசர் முறையோ பரதர் முறையோ - அரசர்காள் வணிகர்காள் இது நீதியோ, ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - ஊரிலும் சேரியிலும் உள்ளீர் இது நீதியோ, என்று கூறி, மன்றினும் மறுகினும் சென்றனள் பூசல் இட்டு - மன்றத்திலும் வீதியிலும் சென்று யாவருமறிய வெளியிட்டு, எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - பதினான்கு நாள் சென்றபின் கணவனை வணங்கற்குரிய நாள் இதுவென்று கருதி மிகுதியாகப் போற்றி, மலைத்தலை ஏறி -மலை யுச்சியிடத்து ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியிற் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - ஒப்பற்ற பெரிய வானெல்லையில் கொலையிடத்துப்பட்ட தன் கணவனைக் கூடுவதாக நின்றவள் ; நீலி நிலைக்களம் காணாள் என்க. காணாள், முற்றெச்சம், சேரி - பல குடிகள் சேர்ந்திருப்பது ; ஊரின் பகுதி, ஏணி - எல்லை; 1"நளியிரு முந்நீரேணி யாக" என்பது காண்க. கூடுபு - கூடவெனத் திரிக்க. நின்றோள், வினைப்பெயர். 167-70. எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக என்று, விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள்; செய்தோர் என்ற எழுவாய்க்குப் பயனிலையாகப் படுவாராக என ஒருசொல் வருவிக்க. இச் சாப வரலாறு மணிமேகலைக்குக் கண்ணகி கூறியதாகச் 2சாத்தனாராலும் கூறப்பெற்றுள்ளது. நீலியென்போள் முறையோவெனப் பூசலிட்டு வாழ்த்திக் கூடுபு நின்றோள் ஆகுகவென்றே விழுவோள் என்க,. 170. ஆதலிற் கட்டுரை கேள் நீ - ஆதலால் யான் கூறும் பொருள் பொதிந்த உரையினை நீ கேட்பாயாக ; 171-172. உம்மை வினை வந்து உருத்தகாலை செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிற் செய்த தீவினை பயனளிக்க நேர்ந்த பொழுது அக் காலத்துச் செவ்விய உள்ளமிலராயினார்க்கு முன்செய்த நல்வினை சிறிதும் உதவாது; உம்மைவினை என்றதனான், தவமுதவாதது இப் பிறப்பால் என்க. உம்மை என்பதனை வினையொடும் செம்மையொடுங் கூட்டுக. தவம் உதவாது என்றதனால் உம்மை வினையென்றது தீவினையை என்க. ஒருவன் செய்த நல்வினை தீவினைகள் தம் பயனை நுகர்விக்குங்கால், தம்முள் ஒன்று நிற்கும்போது மற்றொன்று நில்லாது ; தனித்தனியே நின்று நுகர்விக்கும் என்பது கருத்து; 173-178. வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக் கொண்ட பின்னர் ; அல்லதை, ஐ இடைச்சொல், ஈனோர் - இவ்வுலகோர் ; ஈன் - இவ்விடம். அழல் வீடாவது தீ யெரித்தலை நிறுத்தல். "வாரொலி... லில்லென" என்னும் நான்கடியும் இந் நூற் பதிகத்துள் (50-3) வந்துள்ளமையுங் காண்க. 179-183. கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - என்னுள்ளத்துப் பொருந்திய கணவனைக் காணாததன் முன்னர் இருத்தலையுஞ் செய்யேன் நிற்றலையுஞ் செய்யேன் என்று கூறி, கொற்றவை வாயிற் பொன் தொடி தகர்த்து - துர்க்கையின் கோயில் வாயிலில் பொலிவு பெற்ற தன் சங்கவளையலை உடைத்து, கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு என - நகரத்துக் கீழ்த்திசைக்கண் வாயிலில் கணவனொடு புக்க யான் மேல்திசையிலுள்ள வாயிலில் தனியேனாய்ச் செல்கின்றேன் என்று சொல்லி; இருத்தல் - அமர்தல், பெயர்தல் - செல்லுதல்; 1"பெருமால் களிற்றுப் பெயர்வோன்" என்பது காண்க. பொன் - பொலிவு. ‘கீழ்த்திசை வாயிற் கணவனோடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு' என்றது அவல மிகுதியைப் புலப்படுத்துகின்றது. 184-190. இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில் செல்லலுற்று, ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற் பள்ளங்கள் என்று பாராள், மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள், கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப் பிளந்து, ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய, நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று; அவல, மிசைய பலவின்பாற் பெயர் ; பள்ளமும் மேடுமாய நெறிகள். என்னாள் என்ற இரண்டும் முற்றெச்சம். வயிறு - நடுவிடம்; 1"கடல்வண்ணன் பண்டொருநாட் கடல்வயிறு கலக்கினையே" என்பதூஉம் காண்க. நெடுவேள் குன்ற மென்பதற்கு அரும்பதவுரை யாசிரியர் திருச் செங்கோடு எனவுரைப்பர். அடியார்க்கு நல்லார் இதனை மறுத்து, திருச்செங்குன்று எனவுரைத்தார்; பதிகத்துக் 2'குன்றக் குறவர்' என்பதன் உரை காண்க. அடி வைத்து ஏறி என்றார், அதற்கு முன்பு வருத்தத்தாற் கால் நிலத்துப் பாவாமையால். 191-200. பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ் ஓர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளையுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று யான் ஒப்பற்ற தீவினையை யுடையேன் என்று சொல்லி, எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி - தான் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் இதுவாகுமென்று அவனை மிகவும் வாழ்த்தி, பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி - பெருமை மிக்க கண்ணகியின் பெரும் புகழைச் சொல்லி, வாடா மா மலர் மாரி பெய்து - வாடாத பெரிய பூ மழையைச் சொரிந்து, ஆங்கு அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்த - இந்திரன் தமராய வானோர் ஆங்கு வந்து துதிக்க, கான் அமர் புரி குழற் கண்ணகி தான் - மணந் தங்கிய புரிந்த கூந்தலையுடைய கண்ணகி, கோ நகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் - மதுரையார் கொலை செய்த தன் கணவனாகிய கோவலனோடு தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புக்கனள் என்க. பொங்கர் - மரக்கொம்பு. குன்றத்துக் குறத்தியர் கேட்கத் தீவினையாட்டியேன் யான் என்றாள். ஏங்கி என்பது ஈண்டுச் சொல்லி என்னும் பொருட்டு ; சொல்லி ஏக்கமுற்று எனலுமாம். பதினாலாம் நாட் பகற்பொழுது சென்ற பின் என்பர் அரும்பதவுரை யாசிரியர். பெயர் - புகழ் ; பெயரை மந்திரமாகச் சொல்லி என்றுமாம். நகர், ஆகுபெயர். அமரர்க் கரசன் தமர் என்றமையால் இந்திரனுக்கு விருந்தாயின ரென்பது பெற்றாம். கோவலன் தன்னொடு என்றமையால் அவனும் அவருடன் போந்தமை பெறப்படும். இக் காதையுள் முன் நீலியின் செய்கை கூறிய விடத்தும் "எழு நாளிரட்டி.........வாழ்த்தி" என்னும் இரண்டடியும் வந்துள்ளமை காண்க. அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்திப் பெய்து ஏத்த எனவும், கண்ணகி தோன்ற வாழ்த்திக் கோவலன்தன்னொடு வானவூர்தி ஏறினள் எனவும் இயையும். மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி பால் வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துப் பாண்டியனுடைய செங்கோன்மையை விரித்துரைத்துக் கோவலன் கொலையுண்டமைக் கேதுவாகிய பழவினையின் உண்மையைத் தெரிவித்து, `இற்றைக்குப் பதினாலாம் நாள் பகல் சென்றபின் தேவ வடிவிற் கணவனைக் காண்பாய்' என்று கூறிச் செல்ல, கண்ணகி வையைக்கரையின் வழியே சென்று திருச்செங்குன்றென்னும் மலையை அடைந்து வேங்கைமரத்தின்கீழே நின்று பதினாலாம் நாளெல்லை கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க. வெண்பாவுரை "தெய்வந் தொழாஅள்.......விருந்து" மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி - இவ் வுலகத்துக் கற்புடை மகளிர்க்கு அழகு செய்வாளாய கண்ணகி, தெய்வமாய் விண்ணக மாதர்க்கு விருந்து - தெய்வமாகி வானின்கண் அரமகளிர்க்கு விருந்தாயினாள், தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - ஆகலான் வேறு தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனை வணங்குவாளைத் தெய்வமும் வணங்குந் தன்மை உறுதி யுடைத்தாம். விருந்தாயினாள் என விரிக்க. 1"தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்" என்னும் குறளின் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க. ஆல், அசை. கட்டுரை காதை முற்றிற்று. கட்டுரையுரை (முடிகெழு வேந்தர்........முற்றிற்று.) முடிகெழு வேந்தர் மூவருள்ளும் - முடி பொருந்திய சோழ பாண்டிய சேரராகிய மூவேந்தருள்ளும், படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - வேற்படை விளங்கும் பெரிய கையையுடைய பாண்டியர் மரபினோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவருடைய பழைய பெருமையையுடைய மூதூராகிய மதுரையின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவு மலி சிறப்பும் - அப் பதியின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - தேவர் வருகையும், ஒடியா இன்பத்து அவருடைய நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவர் நாட்டின் குடிகளும் உணவின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேர் யாறு வளம் சுரந்து ஊட்டலும் - அவருடைய வையையாகிய பெரிய யாறு வளத்தினைச் சுரந்து உண்பித்தலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் - காலந் தப்பாத மேகம் புதிய மழையைச் சொரிதலும், ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் - ஆரபடி சாத்துவதி யென்னும் இரண்டியல்புகளும் முறையே பொருந்தத் தோன்றும் வரி குரவை என்னுங் கூத்துக்களும், என்றிவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - என்று கூறப்பட்ட இவை அனைத்தும் கூறாதொழிந்த பிற பொருள்களின் அமைப்போடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமை நிலைபெறலும், வட ஆரியர் படை கடந்து - வடக்கிலுள்ள ஆரிய மன்னர்களின் படையை வென்று, தென் தமிழ்நாடு ஒருங்கு காண - தெற்கிலுள்ள தமிழ்நாடு முழுதுங்காண, புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு, குற்றமற்ற கற்பினையுடைய கோப்பெருந் தேவியுடன் அரியணையில் அமர்ந்தவாறே துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு, ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று- ஒருவாறாக நோக்கும்படி அமைந்த மதுரைக் காண்டம் என்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின் இரண்டாம் பகுதி முற்றியது என்க. இளங்கோவடிகள் மூவேந்தரையும் ஒரு பெற்றியே புகழ்வது போன்றே மூன்று காண்டத்தின் இறுதிக் கட்டுரைகளையும் ஒரே முறையில் அமைத்துள்ளார். மூன்றினையும் ஒத்துநோக்கின் ஒரு கட்டுரையிற் காணப்படும் பொருள் பெரும்பாலனவும் ஏனைக் கட்டுரைகளிலும் இருத்தல் புலனாம். மூவரையும் சமனுறக்கொண்ட தன் உட்கோள் புலப்படும்பொருட்டே போலும் இக் காண்டத்தின் துன்ப நிகழ்ச்சிகளைக் கட்டுரையிற் சுட்டாது விடுத்துள்ளார். புகார்க் காண்டத்தின் இறுதிக் கட்டுரைக்கு பொருளெழுதிய இருவரில் அடியார்க்குநல்லாரேயன்றி அரும்பதவுரையாசிரியர் தாமும் பின் இரு காண்டங்களின் கட்டுரைகட்குப் பொருள் குறியாதுவிட்டமை முதலில் காட்டிய முறை பற்றிக் கற்பார் அறிதல் சாலுமென்னும் கருத்தினாற்போலும். அறன் மறன் ஆற்றல் என்பன மழை பிணித்தாண்டமை வடிவே லெறிந்தமை ஆரம் பூண்டமை முதலியவற்றிலும், மூதூர்ப் பண்பு மேம்படுதல் குடி கூழின்பெருக்கம் என்பன ஊர்காண் காதை முதலியவற்றிலும், யாறு வளஞ் சுரத்தல் புறஞ்சேரியிறுத்த காதையிலும், விண்ணவர் வரவு வஞ்சினமாலை முதலிய மூன்று காதையிலும், வரி வேட்டுவவரியிலும், குரவை ஆய்ச்சியர் குரவையிலும் ஒன்றித் தோன்றுவனவாம். ஆரபடி சாத்துவதி என்பன நாடகத்தின் விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய விருத்தியன் வகை நான்கனுள் இரண்டாம். ஆரபடி பொருள் பொருளாகவும், சாத்துவதி அறம் பொருளாகவும் வருவனவாகலின் அவற்றுடன் பொருந்திய ஆடல்கள் முறையே வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையுமாதல் வேண்டும். கட்டுரை காதை முற்றிற்று. மதுரைக் காண்டம் முற்றிற்று.