ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1  பிற்காலச் சோழர் சரித்திரம் - 3 (கி. பி. 1070 - 1279) ஆசிரியர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. - 4 நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 5 ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 16+ 144 = 160 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11, குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அணிந்துரை ã.ïuhkehj‹ f.K., r.ï., இந்திய வரலாற்றிலேயே நெடுங்காலம் (ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு மேலாக) தொடர்ந்து ஆட்சி செய்து வந்த ஓரிரு அரச பரம்பரையினருள் சோழரும் ஒருவர். சில நூற்றாண்டுகள் ( கி.பி.300 - கி.பி. 850) சோழர் சிற்றரசர்களாகவோ, மிகச்சிறு நிலப் பகுதிகளை ஆண்டவர்களாகவோ ஒடுங்கியிருந்தனர். அவற்றையும் சேர்த்துத்தான் இந்தக் கணக்கு. இன்றையத் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வந்த கி.பி.1800க்கு முன்னர், எப்பொழுதாவது இந்தநிலை இருந்தது என்றால் அது பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் அடங்கிய கி.பி. 900-1200 ஆகிய முந்நூறு ஆண்டுகளில்தான் (அந்த முந்நூறு ஆண்டுகளில் சேர நாட்டுப் பகுதியும் கூடச் சோழரின் கீழ்த்தான் இருந்தது). பிற்காலச் சோழர் (விசயாலயன் பரம்பரை ) ஆண்ட கி.பி. 846-1279 கால அளவின் உச்சகட்டத்தில் சோழப் பேரரசர் ஆட்சி வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகள் வரை நடந்தது; 11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பெரும்பகுதியும் அவ்வாட்சியின் கீழ் இருந்தது. மொழிபெயர் தேயத்தின் வடக்கே சங்ககாலத் தமிழ் வேந்தர் ஒரோவழி படையெடுத்து வென்றதாகக் கூறப்படுகிறதேயொழிய, நிலையான ஆட்சி நடத்தியதாகவோ தொடர்ந்து பிற அரசுகளிடம் கப்பம் பெற்று வந்ததாகவோ கூறப்படவில்லை. தமிழ் நாட்டிற்குள்ளும், பிற்காலச் சோழர் ஆட்சிக்கு முன்னர், பாண்டியர் - சோழரிடையே போர்கள் நடந்தன; ஆயினும் வென்ற நாட்டைத்தாமே (பரம்பரை அரசரை நீக்கிவிட்டு) தமது அரசப்பிரதிநிதி மூலம் ஆண்டதாகத் தெரியவில்லை. பிற்காலச்சோழர் அகலக்கால் வைத்து தமிழகத்துக்குள்ளும் வெளியிலும் நிகழ்த்திய போர் நடவடிக்கைகளும் ஓரளவுக்கு தமிழகமும் தென்னிந்தியாவும் 1300க்குப் பிறகு வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தனவோ என்பதும் ஆய்வதற்குரியது. 2. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிய கல்வெட்டுச் சான்றுகள் மிகப் பலவாகும். 1887 முதல் இன்று வரைத் தென்னாட்டில் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஏறத்தாழ 50000க்கும் மேற்பட்டவை (சுமார் 2000 செப்பேடுகள்; 3000 நாணயங்கள், முத்திரைகள் உட்பட) இந்தக் கல்வெட்டுக்களில் 26000 கல்வெட்டுக்கள் இன்றையத் தமிழகப் பகுதியில் கண்டவை; ஏறத்தாழ அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுக்கள். இந்த 26000இல் 35 விழுக்காடு ஆகிய 9000 கல்வெட்டுக்கள் பிற்காலச் சோழரைச் (கி.பி.850- 1250 கால அளவு) சார்ந்தவை என்பார் சுப்பராயலு. (தமிழ்க் கல்வெட்டுகளில் பாண்டியருடையவை 18%. விசய நகர மன்னருடையவை 16%) ஏராளமான இக் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு சமுதாய, வணிக, பண்பாட்டு வரலாறு களுக்கு உதவுவனவாயினும் அரசியல் வரலாற்றை அறிய உதவுவன சிலவே. இக்கல்வெட்டுச் சான்றுகளையும், இலக்கியச் சான்றுகள், அயல் நாட்டார் குறிப்புகள், அகழ்வாய்விற் கண்ட எச்சங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி முதன்முதலில் ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் விரிவாக சிறப்பாகப் பிற்காலச்சோழர் வரலாற்றை ஆங்கிலத்தில் 850 பக்கங்களில் 1935-37ல் வெளியிட்டவர் வரலாற்றறிஞர் க.அ. நீலகண்ட சாத்திரியார்; திருத்திய இரண்டாம் பதிப்பு 1955இல் வெளிவந்தது. 3. வரலாற்றுத் துறையில் தடம்பதித்த தமிழறிஞர்களுள் தலைசிறந்த சிலருள் ஒருவர் சதாசிவப் பண்டாரத்தார். (1892 - 1961) தமிழில் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற பெயரில் அவர் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்ட காலம் வருமாறு: முதற் 2-ஆம்,3ஆம்பதிப்புகள் பதிப்பு பண்டாரத்தாரே திருத்தியது பகுதி I கி.பி.846 - 1070; 1949 2ஆம் 1954; 3ஆம் 1958 பகுதி II 1070 - 1279; 1951 2ஆம் 1957 பகுதி III சோழர் அரசியல் 1961 பண்டாரத்தார் பகுதி I முன்னுரையில் 1949இல் குறித்துள்ளது போல் அவர் தமது நூலை கல்வெட்டுப் புத்தகங்கள், அறிக்கைகள்; சாத்திரியார் ஆங்கில நூல், சில தமிழ் நூல்கள், சில ஊர்களுக்கு பண்டாரத்தாரே நேரில் சென்று படித்து அறிந்து வந்த புதிய செய்திகள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வரலாற்றை எழுதியுள்ளார். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தமது 1949 முன்னுரையில் குறிப்பிடுவது போல (அதுவரைத் தமிழில் வெளிவந்த வரலாற்று நூல்கள் போல் பாடபுத்தகமாக இல்லாமல்) சிந்தித்து ஆய்வு செய்து தமிழில் மூலநூலாக எழுதிய முதல் வரலாற்று நூல் இதுவாகும்: the first original work of this kind in Tamil, distinguished from mere text books” 4(i) வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் எண்ணமே அது. எழுதுபவனுடைய அறிவுநிலை, மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குக் கிட்டும் ஆதாரங்கள் ஆகியவற்றுக்கேற்பவே ஒரு காலத்தைப் பற்றி அல்லது ஒரு பொருளைப் பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலத்தையும் பொருளையும் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியனவே. வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றை எழுதுகிறான் என்பதைநிர்ணயிக்கிறது; விருப்பு வெறுப்பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வரலாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணி விடக்கூடாது. - காரி பெக்மான். வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக் கூறத் தேவையான அறிவை விட பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது - அனதோல் பிரான்சு. வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ, உள்ள குறிக்கோள்களுடன் தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக்கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்குவித்தல்; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சியூட்டுதல்; அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகாரமில்லாதவர் களிடையேயும், ஒடுக்கப்பட்டவரிடையேயும் இப்பொழுதுள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம். - ஜே.எச்.பிளம்ப் வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று - வில் & ஏரியல் டுரான்ட் வரலாறு எழுதும் நாம் நம்காலத்தவர் சார்பில் மாந்த இனத்தின் முந்தைய நடவடிக்கைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். வரலாற்றாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு பொழுது போக்குபவர் முந்தை வரலாற்று நடவடிக்கைகளைக் குறித்து இது அறிவுடையது, அது மூடத்தனமானது; இது மதுகையுடையது, அது கோழைத்தனம்; இச்செயல் நன்று, அச்செயல் தீது; என்றவாறு மதிப்பிட்டுக் கூறும் பொறுப்பைத் தட்டிக் கழித்தல் ஒல்லாது. காயடித்த வரலாற்றாசிரியன் நமக்குத் தேவையில்லை. - ஆர்.ஜி.காலிங்வுட் ii) மேற்கண்டவற்றின் ஆங்கில மூலங்கள் வரலாற்று மாணவர் வசதிக்காகக் கீழே தரப்படுகின்றன. History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation... In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it. Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view the unbiased hstorian is an unattainable idea. By the very nature of the historical discourse there can be no final truth - Gary Bechman “The Limits of Credulity” Journal of the Amercian Oriental Society 125.3 It needs rarer genius to restore the past than to foretell the future - Anatole France ( History) is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes .. to strengthan the purpose of those who possessed power... and reconcile those who lacked it. - J.H. Plumb ( 1969 ) The death of the past (quoted by Beckman). “Most History is guessing and the rest is prejudice - Will and Ariel Durant “We are the present of man, passing judgement on his own corporate past. What we cannot do, is to continue playing with historical research and yet shirk the responsibility of judging the actions we narrate: saying this wise, that foolish; this courageous, that cowardly; this well done, that ill’’ -R.G.Colingwood ( 1999 Posthumous: Ed by W.H. Dray and another) The Principles of history and other writings in philosopy of History. Oxford; OUP Those who disregard the past are bound to repeat it. - George Santayana. 5. முன்பத்தியிற் கண்டவற்றைக் கருதும் பொழுது சாத்திரியாரும் பண்டாரத்தாரும் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் இத்துறையில் ஆய்வு செய்த பல அறிஞர்கள் உழைப்பால் சிலபல விஷயங்களில் புதிய கருத்தோட்டங்கள் உருவாகியுள்ளன என்பதை வரலாற்று மாணவரும் இந்நூலைப் பயிலும் ஏனையோரும் உணர்தல் வேண்டும். அப்புதிய கருத்தோட்டங்களைத் தரும் நூல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது (வசதி கருதி 1960க்கு முன்னர் வெளிவந்தாலும், என்றும் இத்துறையில் அறிய வேண்டிய நூல்களாக உள்ள, நூல்களும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன) அண்மைக்கால ஆய்வாளர் களின் சிலபுதிய பார்வைகளும் அவற்றை மேற்கொண்டவர்களும் வருமாறு: (i) பர்டன் டெய்ன்: நீலகண்ட சாத்திரியார் சொன்னபடி பிற்காலச் சோழர் ஆட்சிமுறை, பைசாந்தியப் பேரரசு Byzantine Emire போல சர்வ வல்லமை பெற்ற ஆட்சியன்று. பல்கூறுகளாக அதிகாரம் பிளவுண்டு நிலவிய அரசு segmentary state தான் அது. தென்னிந்தியாவில் இடைக்கால அரசுகள் - பிற்காலச் சோழர் உட்பட - தம் கீழ் உள்ள பகுதிகளைக் கண்காணித்து தம் கட்டுக்குள் வைத்திருந்தவையே; அப்பகுதிகளை நேரடியாக நிருவகித்தவை அல்ல. அவை கப்பம் பெற்று வந்தவை; வரி வசூலைக் கொண்டு நடந்தவை அல்ல; பேரரசில் அடங்கிய பல்வேறு வகைச் சமூகங்களும் பெருமளவுக்கு ஊரார், நாட்டார், பிரமதேயத்தார், கோயில் நிருவாகத்தார், வணிகர் அமைப்புகள் போன்ற தனித்தனி அமைப்புகளாகவே செயல்பட்டன. “The South Indian medieval states were custodial rather than managerial, tribute - receiving, rather than tax-based; and the society itself was organised into relatively isolated, locally oriented networks of relations among corporate groups and associations. (ii) நொபுரு கராசிமா, ஒய்.சுப்பராயலு, பி.சண்முகம் இவர்கள் ஆய்வின் முடிவு டெய்ன் கருத்து ஆதாரமற்றது என்பதாகும். பிற்காலச் சோழச் சோழர் ஆட்சியில் (குறிப்பாக சோழர் பூர்வீக ஆட்சிப்பகுதியிலும் அதையொட்டிய பகுதிகளிலும்) பல துறைகளிலும் நேரடியாக முழு அதிகாரம் செலுத்திய ஆட்சிமுறை (Centralized Administration) இருந்திருக்கத்தான் வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சி முழு அதிகார அரசின் தொடக்கநிலை Early State என்பார். (பிற்காலச் சோழர் ஆட்சிமுறையைப் பற்றிய பல்வேறு கருத்தோட்டங்களைச் சுருக்கமாக, தெளிவாக பி.சண்முகம், தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு 1998இல் வெளியிட்ட நூலின் முதல் தொகுதி பக்கங்கள் 405-475இல் தந்துள்ளார்) (iii) கைலாசபதி, கேசவன், எம்.ஜி.எ. நாராயணன் இவர்கள் பிற்காலச் சோழ அரசு நிலமானிய அரசு (Feudal State) என்பர். (iv)bf‹d¤ ஆர் ஹால் (2001) அக்காலத் தென்னிந்திய அரசுகளை நிலமானிய அரசு என்று முத்திரை குத்துவது; அல்லது வேறுநாட்டு வரலாறுகள் சார்ந்து உருவாகிய கோட்பாடு களின் பெயரை தென்னிந்திய அரசுகளின் நெற்றியில் ஒட்டுவது; இரண்டுமே எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. டெய்ன் கருத்துக்கும், கரோசிமா கருத்துக்கும் இடைப்பட்ட நிலையே என்னுடையது ஆகும். I am less than comfortable in applying the “feudal” label or other externally - derived vocabulary to early South India and find myself somewhere between Karoshima’s “Unitary State”and Steins ‘Segmentary state’ in my sense of early South Indian History 6. ஆக பிற்காலச் சோழர் வரலாற்றை அன்று சாத்திரியாரும் பண்டாரத்தாரும் செய்தது போல வரலாற்றறிஞர் ஒருவரே அண்மைக் கால ஆய்வுகளையும் தமிழக அரசு வரலாற்றுக் குழு 1998 நூலில் உள்ள16 அறிஞர் வெவ்வேறு கூறுகள் பற்றி தனித்தனியாக எழுதிய கட்டுரை களையும் கருத்திற்கொண்டு ஏறத்தாழ ஐநூறு பக்கங்களில் ஒரு மடலமாக எழுதுவது தமிழுலகுக்குப் பயன்தருவதாகும்.. இணைப்பு பிற்காலச் சோழர் வரலாறு பற்றிய அண்மைக்கால நூல்கள், கட்டுரைகளை உள்ளடக்கிய நூற்பட்டியல்: 1. m¥gh¤Jiu fh.(1971): தென்னாட்டுப் போர்க்களங்கள் 2. ghyR¥ãukÂa« kh.(1979): சோழர்களின் அரசியல் வரலாறு 3. Ali, Daud(2007): The Service retinues of the Chola Court: a study of the term velam in Tamil inscriptions; BSOAS 70:3 pp 487-509 4. Champakalakshmi R.(1993) : State and Economy: South India circa AD 400-1300 pp 266-308 of Thapar:1993 5. Gough, Cathleen (1980)Modes of production in southern India Ecnonomic and Political Weekly Annual Number 6. Govindasamy M.S(1979) Trade and State Craft in the Age of the Cholas; New Delhi. 7. Hall, Kenneth R (2001) “Introductory essay” at 1-27;and “Merchants, rulers and priests in an early South Indian sacred Centre: Chidambaram” at pp 85-116 of his Structure and Society in early South India. - Essays in Honour of Noboru Karashima; OUP New Delhi. Heitzman, James (2001) Urbanization and Political Economy in earlySouth India. see PP 117-156 of K.R.Hall:2001. This is based on 584 inscriptions of AD 900-1300 (1997) Gifts of power-Lordship in an Early Indian State: OUP pp 277 கைலாசபதி, க (1966) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பார்க்க. (பக்.145-197 பேரரசும் பெருந் தத்துவமும்.) Karashima,Noboru (1984) South Indian History and Society:Study from Inscriptions AD 850-1800;OUP p 217. (2001) Whispering of Inscriptions. see pp 45-58 of K.R.Hall 2001 Karashima N and Y.Subbarayalu (1978) A concordance of thenames in the Cola Inscriptions (Three vols); Sarvodaya Ilakkiya Pannai;Madurai Kesavan, Veluthat (1993) The Political Structure of early medveral South India; New Delhi. Narayanan, M.G.S (1994) History and Society in South India pp271-91 of Foundations of South Indian History and Culture ; Bharathiya Book Corporation, Delhi. Nilakanta Sastri K.A.(1935/37) (1955 Revised II Edn.) The Colas; University of Madras 1955;IV Edn.1976: A History of South India Orr, Leslie C (2001) Women in the temple, the palace and the family:the construction of women’s identities in Precolonial TamilNadu. see pp 198-234 of K.R.Hall:2001 Pillai K.K.(1969) A Social History of the Tamils (1975) South India and Sri Lanka. இராசமாணிக்கனார் மா(1947) சோழர் வரலாறு; சைசிநூபக Ramaswamy, Vijaya (1985) Textiles and weavers in medieval south India. Richards J.F. (1998) Kingship and authority in South Asia.OUP, Delhi. சதாசிவப் பண்டாரத்தார் டி.வி. (1949 ; III 1958) பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி I (846-1070) (1951; II 1954) பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி II (1070-1279) (1961) பகுதி III சோழர் அரசியல் Seshadri, A.K. (1999) Sri Brihadesvara: The great temple of Thanjavur; Nile Books Shanmugam P(1987) The Revenue systems of the Cholas 850 - 1279 Madras Spencer, George W (2001) In search of change: reflections on the scholarship of N.Karashima see pp 28-43 of K.R.Hall :2001 Stein, Burton (1980) Peasant state and society in medieval south India ;oup;p533 (1998) All the King’s mana : Prespectives on Kingship in medieual south India (pp.133-188 of T.F Richards 1998 originally published in 1978) Subbarayalu (1973) political geography of the chola country. Subrahmanian, N (1999) Tamil Social History Vol II:AD600-1800 Thapar, Romila (1993) Recent perspectives of early Indian History; Bombay தமிழக அரசு வரலாற்றுக் குழு (1998) சோழப் பெருவேந்தர் காலம் கி.பி.900-1300; முதல் தொகுதி- அரசியல் (பக்.500); இரண்டாம் பகுதி (சமுதாயம் பொருளியல் சமயம், இலக்கியம், கலைகள்) பக் 810 âUehî¡fuR f.j.(1977) முதலாம் இராசராசன் Vanamamalai N(1974) The accumulation of gold in Thanjavur Temple- an into its sources JOURNAL OF TAMIL STUDIES : 6(Dec. 1974) nt§flrhÄ eh£lh®,e.K.(1928)nrhH® சரித்திரம் Yasushi, Ogura (1998) The Changing concept of Kingship in the chola period;Royal temple construction circa AD 850-1279 ACTA ASIATICA (Tokyo) 74: March 1998 (see pp.39-58) பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960 ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும் கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும், அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமை யில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர் களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம்.தமிழர் இல்லந் தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் பிற்காலச் சோழர் சரித்திரம் - 3 1. சோழர் அரசியல் 3 2. கிராம ஆட்சி 20 3. அரசிறையும் பிற வரிகளும் 53 4. நில அளவு 68 5. நிலவுரிமை 74 6. நீர்வளமும் நீர்பாசனமும் 84 7. பொது மக்களும் சமூக வாழ்க்கையும் 92 8. வாணிகமும் கைத்தொழிலும் 106 9. நாணயங்களும் அளவைகளும் 124 பிற்சேர்க்கை 132 பிற்காலச் சோழர் சரித்திரம் - 3 1. சோழர் அரசியல் சோழர்களின் அரசியல் முறைகளையும் அக்கால நாகரிகங்களையும் விளக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், நம் தமிழகத்திலும் இதற்கப்பாலுள்ள ஆந்திர நாட்டிலும் கன்னட தேயத்திலும் உள்ளன. இப்பெரு நிலப்பரப்பு, ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு மேல் சோழர்களின் பேரரசிற்கு உட்பட்டிருந்த செய்தி ஆராய்ச்சியால் நன்கு புலனாகின்றது. தம் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் அவ்வேந்தர்களும் அவர்களுடைய அரசியல் அதிகாரிகளும் பிற அன்பர்களும் எடுப்பித்த சைவ வைணவக் கோயில்களும் பௌத்த சைனப் பள்ளிகளும் பலவாகும். அவற்றின் நாள் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்கும் பிறவற்றிற்கும் அவர்கள் வழங்கிய நிவந்தங்களும் மற்றும் பல வரலாற்றுண்மைகளும் அக்கோயில்களின் கருங்கற் சுவர்களில் வரையப்பட்டிருத்தலை இன்றும் பார்க்கலாம். அக்கல்வெட்டுக்கள் எல்லாம் சோழ மன்னர்களுடைய அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் அந்நாட்களில் பொறிக்கப்பெற்றவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றி யமையாத கல்வெட்டுக்களின் படிகளும் அதே காலத்தில் செப்பேடுகளிலும் எழுதப்பட்டுக் கோயில் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருந்தன என்று தெரிகிறது. இதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளச் சொன்னோம் என்று கல்வெட்டுக்களின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள வேந்தர்களின் ஆணையால் இவ்வுண்மையை நன்கறியலாம். நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியர்களால் கோயில்களி லிருந்த மூல ஆதரவுகளாகிய பல செப்பேடுகள் கவர்ந்து கொள்ளப்பட்டும் அழிக்கப்பட்டும் போயின. எஞ்சி யிருந்த செப்பேடுகளும் அவற்றின் அருமையறியாத கோயிலதி காரிகளின் கையில் அகப்பட்டுப் பற்பல பண்டங்களாக மாறி அழிந்தொழிந்தன. அன்னியரான புறச் சமயத்தரசர்களது ஆட்சிக்கு நம் நாடு உட்பட்டிருந்த காலத்தில் இடிபட்டுப் போன கோயில்கள் பல என்பது பலரும் அறிந்ததேயாம். அக்கோயில்களிலிருந்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுக்களும் சிதைந்தழிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இடிபடாமல் நன்னிலையிலுள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காலப்போக்கில் உதிர்ந்து போன பகுதிகளும் உண்டு; பிற்காலங்களில் அமைக்கப்பட்ட புதிய சுவர்களால் மறைக்கப் பெற்றொழிந்த பகுதிகளும் உண்டு. மாயூரத்திற்கு அண்மையிலுள்ள பல்லவராயன் பேட்டையிற் காணப்படும் உதிர்ந்த கல்வெட்டொன்றால், எத்தனை வரலாற்றுண்மைகள் பின்னுள்ளோர் அறிந்துகொள்ள முடியாதவாறு மறைந்து போயின என்பதை சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் பலரும் நன்குணர்வர். ஆங்கிலேயர் சோழர்களின் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தை இடித்துக் கொணர்ந்து திருப்பனந்தாளுக்கு வடக்கே மூன்று மைலில் கொள்ளிடப் பேராற்றிற்கு அணையும் பாலமும் அமைத்த ஞான்று உபயோகித்த கருங்கற்களில் அகப்பட்டுக் கொண்டு பயனின்றிக் கழிந்த கல்வெட்டுக்கள் எத்தனையோ பல. கொள்ளிடத்திற்கு அமைக்கப் பெற்றுள்ள அப்பெரும் பாலத்தின் கீழே சில கருங்கற்களில் கல்வெட்டுக்கள் சிறு சிறு துணுக்குகளாக இருத்தலை இன்றும் காணலாம். செப்பேடு களுக்கும் கல்வெட்டுக்களுக்கும் இத்துணை இன்னல்கள் நேர்ந்தும் சோழர் வரலாற்றையும் அவர்களுடைய அரசியல் முறைகளையும் உணர்த்த வல்ல கல்வெட்டுக்கள் பல்லாயிரக் கணக்கில் நம் நாட்டில் இக்காலத்தும் இருத்தல் மகிழ்தற்குரியது. இமயம் முதல் குமரிமுனை வரையில் பரவிக் கிடக்கும் இப்பெருநில வரைப்பில் அமைந்துள்ள நாடுகள் எல்லாவற்றிலும் பேரரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் வீற்றிருந்து முற்காலத்தில் ஆட்சி புரிந்த வேறு எந்த அரச குடும்பத்தினருக்கும் அத்தனை கல்வெட்டுக்கள் இல்லை என்று ஐயமின்றிக் கூறலாம். அரசாங்கத்தினரால் இன்னும் படியெடுக்கப் படாமலிருக்கும் சோழர்களின் கல்வெட்டுக்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. படியெடுக்கப்பட்டவற்றுள் அச்சிட்டு வெளியிடப்படாமல் இருப்பனவும் ஆயிரக்கணக்கில் இருக் கின்றன. இந்நிலையில், இதுகாறும் அச்சிட்டு வெளி வந்துள்ள சோழர்களின் கல்வெட்டுக்களையும், யான் நேரிற் சென்று படியெடுத்து வந்த கல்வெட்டுக்களையும் கல்வெட்டு இலாகாவின் ஆண்டறிக்கைகளையும், பண்டைத் தமிழ் நூல் களையும் வரலாற்றுப் பேராசிரியர்களின் நூல்களையும் நன்கு ஆராய்ந்து சோழர்களின் அரசியல் முறைகளும் அக்கால நாகரிக நிலை முதலான பிறவும் இப்பகுதியில் இயன்றவரையில் விளக்கப்படும். சோழ மண்டலம் தொன்றுதொட்டுச் சோழர் மன்னர்களின் ஆட்சிக் குரியதாய் அன்னோரால் அரசாளப்பட்டு வந்த தமிழகப் பகுதி, சோழ மண்டலம் என்று வழங்கப்பெற்றது என்பதும், அது தமிழகத்துள் கிழக்குப் பகுதியாக அமைந்துள்ள காரணம்பற்றிக் குணபுலம் என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. அஃது இக்காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவையும், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு ஜில்லாக்களில் சில பகுதிகளையும், புதுக்கோட்டை நாட்டில் ஒரு பகுதியையும் தன்னகத்துக்கொண்டு நிலவும் பெருநிலப்பரப் பாகும்; சுருங்கக் கூறுமிடத்து, சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள பரங்கிப்பேட்டைக்கு அண்மையில் கடலொடு கலக்கும் வெள்ளாறு அதன் வட எல்லையாகவும், அறந்தாங்கித் தாலுகாவில் ஆளுடையார் கோயிலுக்கு வடபுறமாக ஓடி மணமேற்குடிக்கருகில் கடலில் கலக்கும் வெள்ளாறு அதன் தென்னெல்லை யாகவும் இருந்தன எனலாம். அதன் மேல் எல்லை, திருச்சிராப் பள்ளி ஜில்லாவிலுள்ள குளித்தலைக்கு மேற்கே மதுக்கரையைச் சார்ந்துள்ள கோட்டைக் கரையாகும். அதன் கீழெல்லையாக மாபெருங் கடல் அமைந்திருந்தது. அக்கடற்கரையும் சோழமண்டலக் கரை என்று வழங்கி வந்தமை அறியத் தக்கது. இப்பேரெல்லைகட்கு உட்பட்டிருந்த சோழ மண்டலத்தை முற்காலத்தில் அரசாண்ட சோழ மன்னர்கள், தென்கரை நாடு, வடகரை நாடு என்ற இருபெரும் பகுதிகளாகப் பிரித்துத் தம் ஆட்சியை இனிது நடத்தி வந்தனர் என்பது பழைய கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. இவற்றுள் தென்கரை நாடு என்பது வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவேரியாற்றிற்குத் தெற்கேயிருந்த சோழ மண்டலத்தின் தென்பகுதியாகும்; வடகரை நாடு என்பது அப்பேராற்றிற்கு வடக்கேயிருந்த அதன் வடபகுதியாகும். இவற்றுள் ஒவ்வொன்றும் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. முற்காலத்தில் சோழ மண்டலத்திலிருந்த நாடுகள் எல்லாம் முதல் இராசராச சோழனது ஆட்சிக் காலம் வரையில் எத்தகைய மாறுதல்களுக்கும் உள்ளாகாமல் இருந்து வந்தமை உணரற்பாலதாகும். சோழ இராச்சியமும் அதன் உட்பிரிவுகளும் சோழ மன்னர்கள் தம் ஆற்றலாலும் படை வலிமையாலும் பிற நாடுகளை வென்று தம் ஆட்சிக்குட்படுத்திப் பேரரசு நிறுவிச் சக்கரவர்த்தி களாக வீற்றிருந்து அரசாண்ட காலத்தில் அவர்களது ஆளூகையின் கீழ் அமைந்திருந்த நாடுகளெல்லாம் ஒருங்கே சோழ இராச்சியம் என்ற பெயர் உடையதாயிருந்தமை அறியத்தக்கது. இந்த இராச்சியம் முதல் இராசராச சோழனது 17 - ஆம் ஆட்சியாண்டில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை சோழ மண்டலம், இராசராசப் பாண்டி மண்டலம், சயங்கொண்ட சோழ மண்டலம், மும்முடிச் சோழமண்டலம், முடிகொண்டசோழ மண்டலம், நிகரிலி சோழ மண்டலம், அதிராச ராச சோழ மண்டலம், மலை மண்டலம், வேங்கை மண்டலம் என்பனவாம். இவற்றுள் சோழ மண்டலம் யாண்டையது என்பது முன்னர் விளக்கப்பட்டது. இராசராசப் பாண்டி மண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்ட பாண்டி நாடேயாம். சயங்கொண்ட சோழ மண்டலம் என்பது, தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும் பகுதியும் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக் கொண்ட தொண்டை நாடாகும். மும்முடி சோழ மண்டலம் என்பது, இலங்கையாகிய ஈழ நாடாகும், முடிகொண்ட சோழ மண்டலம் என்பது, மைசூர் நாட்டின் தென்பகுதியையும் சேலம் ஜில்லாவின் வட பகுதியையும் தன்னகத்துக் கொண்ட கங்கபாடி நாடாகும். நிகரிலி சோழ மண்டலம் என்பது, மைசூர் நாட்டின் கீழ்ப் பகுதியையும் பல்லாரி ஜில்லாவையும் தன்னகத்துக் கொண்ட நுளம்பபாடி நாடாகும். அதிராசராச மண்டலம் என்பது, சேலம் ஜில்லாவின் தென் பகுதியையும் கோயம்புத்தூர் ஜில்லாவையும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் மேற்பகுதியையும் தன்னகத்துக் கொண்ட கொங்கு நாடாகும். மலை மண்டலம் என்பது திருவாங்கூர் கொச்சி நாடுகளையும் மலையாளம் ஜில்லாவையும் தன்னகத்துக் கொண்டதாய் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு மேற்கே கடற்கரையோரமாக நீண்ட மைந்திருந்த சேர நாடாகும்; வேங்கை மண்டலம் என்பது, கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த கீழைச் சளுக்கிய நாடாகும். இவற்றுள் சோழ மண்டலம், மலை மண்டலம், வேங்கை மண்டலம் என்பன தொன்று தொட்டுவழங்கி வந்த பழைய பெயர்களேயாம். மற்ற ஆறு மண்டலங்களும் புதிய பெயர்களை உடையனவா யிருத்தல் குறிப்பிடத்தக்கது. மண்டலங்களுக்கு இடப்பெற்ற புதிய பெயர்கள் எல்லாம் சோழ மன்னர்களின் இயற் பெயர்களும் பட்டப் பெயர்களுமேயாம். ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும் ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகளுள் சில கூற்றங்கள் எனவும் வழங்கி வந்தன. ஒவ்வொரு நாடும் பல சதுர்வேதி மங்கலங்களையும் சில தனி ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு நிலவியது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டிருந்தது என்று தெரிகிறது. தம் நாட்டில் யாண்டும் நல்லாட்சி நடைபெற வேண்டுமென்னும் கருத்தினையுளத்திற்கொண்டுதான் சோழ மன்னர்கள் தம் ஆளுகைக்குட்பட்ட மண்டலங்களை இவ்வாறு பிரித்துள்ளனர் என்று தெரிகிறது. முதல் இராசராச சோழன் தன் ஆட்சிக் காலத்தில் சோழ மண்டலத்தை ஒன்பது வளநாடுகளாகப் பிரித்திருந்தான். அவை இராசேந்திரச் சிங்க வளநாடு, இராசாசிரய வளநாடு, கேரளாந்தக வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு, நித்த விநோத வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, அருமொழி தேவ வளநாடு, இராசராச வளநாடு என்பனவாம். பெரும்பான்மையாக நோக்கு மிடத்து, ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு நடுவில் அமைந்திருந்த நிலப்பரப்பேயாம் என்பது தெள்ளிதிற் புலனாகும். எடுத்துக் காட்டாக ஒரு வளநாட்டை ஈண்டு விளக்குவாம். சோழ மண்டலத்தில் அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு முதல் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாடு என்று வழங்கி வந்தது என்பது அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம் என்னும் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுப் பகுதியொன்றால் நன்கறியக்கிடத்தல் காண்க. சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் முதல் இராசராச சோழனுடைய இயற்பெயரும் சிறப்புப் பெயர்களுமாயிருத்தல் உணரற்பாலது. எனவே, அவ்வரசர் பெருமான் ஆட்சிக்காலத்திற்கு முன் சோழ மண்டலத்தில் வளநாடு என்ற உட்பிரிவு இருந்திலது என்பதும் அப்பெரு வேந்தனே அதனை முதலில் அமைத்தவன் என்பதும் நன்கு தெளியப்படும். அவனுக்குப் பிறகு அரசாண்ட சில சோழ மன்னர்கள், அவ்வள நாடுகளுள் சிலவற்றின் பெயர்களை நீக்கித் தம் இயற்பெயர்களையும் சிறப்புப் பெயர்களையும் அவற்றிற்கு இட்டு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் குலோத்துங்க சோழ வளநாடு என்னும் பெயர் எய்தியது. காவிரி யாற்றிற்கு வடக்கேயிருந்த இராசேந்திரசிங்க வளநாடு அவ்வேந்தன் காலத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டதோடு அவற்றுள், மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன. உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன் என்பன முதற் குலோத்துங்கச் சோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது கலிங்கத்துப் பரணியால் அறியப்படுகின்றது. முதற் குலோத்துங்க சோழனுடைய புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் உலகுய்யவந்த சோழ வளநாடு என்பது விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியமை உணரற்பாலது. இங்ஙனமே பிற்காலத்தில் பெயர் மாற்றப்பெற்ற வளநாடுகள் பல உள்ளன. வளநாடுகளுக்குத் தலைநகரங்கள் இருந்திருப்பின் அந்நகரங்களின் பெயர்களாலேயே அவை வழங்கப் பெற்றிருக்கும். அவற்றிற்கு யாண்டும் தலைநகரங்கள் அமைக்கப் படாமையால், அரசர்களின் இயற்பெயர்களும் சிறப்புப் பெயர்களுமே அவற்றின் பெயர்களாக அமைந்தன எனலாம். சோழர்களின் ஆட்சிக்குட்பட்டனவாய்ச் சோழ இராச்சியத்திலிருந்த இராசராசப் பாண்டிமண்டலம், அதிராசராச மண்டலம் முதலான பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலம் மாத்திரம் இருபத்துநான்கு கோட்டங்களைத் தன்னகத்துக் கொண்டு பழைய நிலையினின்றும் மாறுபடாமல் இருந்தது. எனினும் புலியூர்க்கோட்டமான குலோத்துங்க சோழ வளநாடு என்னுங் கல்வெட்டுத் தொடரால் அக்காலத்தில் ஒவ்வொரு கோட்டமும் ஒவ்வொரு வளநாட்டிற்குச் சமமானது என்று கருதப்பட்டிருந்தது என்பதை நன்கறியலாம். அன்றியும் கோட்டத்தின் பெயரும் வளநாட்டின் பெயரும் இணைந்தே வழங்கப்பெற்று வந்தமை இக்கல்வெட்டுத் தொடரால் தெள்ளிதிற் புலனாதல் காணலாம். வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில கூற்றங்கள் என்று வழங்கிவந்தன என்பது முன்னர்க் கூறப்பட்டது. நாடுகளும் கூற்றங்களும் அவ்வவற்றிலுள்ள பேரூர் ஒன்றைத் தலைநகரமாகக் கொண்டிருந்த காரணம் பற்றி, அவை, அப்பேரூர்களின் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்டு நிலவி வந்தன என்பது அறியத்தக்கது. இவ்வுண்மையை நல்லூர் நாடு, திரு நறையூர் நாடு, இன்னம்பர் நாடு, திருவழுந்தூர் நாடு, திருவிந்தளூர் நாடு, நாங்கூர் நாடு, ஆக்கூர் நாடு, அம்பர் நாடு , மருகல் நாடு, திருக்கழுமல நாடு, திருவாலி நாடு, வெண்ணையூர் நாடு, குறுக்கை நாடு, நல்லாற்றூர் நாடு, மிழலை நாடு, உறையூர்க் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், ஆவூர்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம் திருவாரூர்க் கூற்றம், பட்டினக் கூற்றம், வலிவலக் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம் என்ற நாடுகளின் பெயர்களும் கூற்றங்களின் பெயர்களும் நன்குணர்த்துவனவாகும். இனி, நாடுகளும் கூற்றங்களும் இக்காலத்திலுள்ள தாலுக்காக்கள் போன்றவை என்றும், வளநாடுகள் ஜில்லாக்களுக்கு ஒப்பானவை என்றும், மண்டலங்கள் மாகாணங்களுக்குச் சமமானவை என்றும் கூறலாம். அரசனும் இளவரசனும் இவ்வாறு அமைந்திருந்த சோழ இராச்சியத்திற்குத் தலைமை பூண்டு அதனை ஆட்சிபுரிந்து வந்தவர்கள் முடிவேந்தர்களாகிய சோழர்களே யாவர். அத்தகைய ஆட்சியுரிமையை அன்னோர் எக்காலத்தில் எய்தினர் என்று ஆராய்ந்து காண இயலாதவாறு அஃது அத்துணைத் தொன்மை வாய்ந்ததாக உளது. இந்நாளிலுள்ள பழந்தமிழ் நூல்களுள் காலத்தால் எல்லாவற்றிற்கும் முந்தியதும் தமிழ் மக்களின் பண்டை நாகரிகத்தை எடுத்துரைப்பதில் இணையற்றதுமாகிய தொல்காப்பியத்தில், சேர பாண்டிய சோழர் ஆகிய மூவேந்தருமே தமிழகத்தை முற்காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால்1 சோழர்களின் ஆட்சியுரிமை எத்துணைப் பழமை வாய்ந்தது என்பது நன்கு தெளியப்படும். எனவே, சரிதகாலத்திற்கு முன்னரே அன்னோர் சோழமண்டலத்தின் ஆட்சியுரிமையை எய்தியவராதல் வேண்டும் அவ்வுரிமையும் தந்தை மகற்களிக்க, வழிவழித் தொடர்ந்து வந்துள்ளது எனலாம். மக்கட்பேறின்றி இறந்த மன்னர்களும் அரசாளுவதற்கேற்ற புதல்வர் இல்லாதவரும் அவ்வாட்சி யுரிமையைத் தம் உடன்பிறந்தார்க்கு அளித்துச் சென்ற வரலாறுகளும் உண்டு. சோழ மன்னர்கள் தம் மூத்த புதல்வருக்கே அரசுரிமை வழங்கி யுள்ளனர் என்பது பல நிகழ்ச்சிகளால் நன்கறியக் கிடக்கின்றது. அன்னோர்தம் ஆட்சிக்காலத்திலேயே அரசுப் பேற்றிற்குரிய முதல் மகனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி, அரசியல் முறைகளில் சிறந்த பயிற்சி பெறுமாறு செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை முதற் பராந்தக சோழன் இராசாதித்தனுக்கும், சுந்தர சோழன் ஆதித்த கரிகாலனுக்கும், முதல் இராசராச சோழன் முதல் இராசேந்திரனுக்கும், முதல் இராசேந்திர சோழன் முதல் இராசாதிராசனுக்கும், முதல் குலோத்துங்க சோழன் விக்கிரமனுக்கும் இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் நிகழ்ச்சிகளில் அன்னோரை ஈடுபடுத்திப் பல துறைகளிலும் வல்லுநராக்கியுள்ளமையால் தெள்ளிதின் உணரலாம். இளவரசுப்பட்டம் பெற்ற அரசிளங்குமரன் இறந்து விட்டால் அப்பட்டத்தை அவன் தம்பிக்குக் கட்டுவது வழக்கம். இனி, சோழர்களின் ஆட்சியை ஒரு தனி அரசனது செங்கோல் ஆட்சியாகக் கூறலாம். அவர்கள் அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடைவர்களாய் நீதி தவறாமல் ஆட்சி புரிவதையே தம் முதற் கடமையாகக் கருதி ஒழுகி வந்தவர்கள் என்பது புனைந்துரையன்று. அவ்வேந்தர்கள் தாம் விரும்பியவாறு எதனையும் செய்யும் ஆற்றலும் திறமையும் உடையவர்களெனினும், அமைச்சர் முதலானவர்களுடன் நன்கு ஆராய்ந்துதான் எக்கருமத்தையும் நிறைவேற்றுவது வழக்கம். அன்னோர்க்கு அரசியல் நிர்வாகங்களில் உசாத்துணையா யிருந்து வேண்டுவன கூறி உதவி புரிந்து வந்தவர்கள் உடன் கூட்டத்ததிகாரிகள் ஆவர். அன்னோர் அரசர்களோடு யாண்டும் உடன் செல்லும் உரிமை படைத்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அரசியற் பிரிவிற்குத் தலைமை வகித்த அரசியல் அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. ஒருகால் அமைச்சர் குழுவினரே உடன் கூட்டத்ததிகாரிகளாகவும் இருந்திருத்தல் கூடும். இவ்வதிகாரிகள் அரசனால் அளிக்கப் பட்ட பலவகைச் சிறப்புக்களையும் பெற்ற பெருமை யுடையவர் ஆவர். இனி, சோழ மன்னர்கள் முடிசூட்டப் பெறும் நன்னாளில் உடையார், சக்கரவர்த்திகள், திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டு அரசாண்டனர் என்பது பல கல்வெட்டுக் களால் அறியப்படுகிறது; அன்றியும் கோஇராசகேசரிவர்மன் கோப்பரகேசரிவர்மன் என்ற பட்டங்களையும் ஒருவர்பின் ஒருவராகமாறி மாறிப் புனைந்து வந்தனர் என்பது கல்வெட்டுக் களால் உணரக் கிடக்கின்றது. பண்டைக்காலத் தமிழ்மக்கள் அரசர்களைக் காத்தற் கடவு ளாகிய திருமாலின் அவதாரமாகக் கருதிப் போற்றி வந்தனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அங்ஙனமே சோழ மன்னர்களையும் அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சோழ இராச்சியத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தனர் என்று தெரிகிறது. சோழர்களும் தம் நலத்தைக் காட்டிலும் தம் ஆளுமையின் கீழ் அமைந்த நாட்டிலுள்ள பொதுமக்களின் நலத்தையே பெரிதாகக் கருதி ஆட்சி புரிந்து வந்தனர். அரசியல் அதிகாரிகள் அரசியலை நடத்துவதற்கு அக்காலத்தில் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒழுக்கம், அறிவு, ஆற்றல், குடிப்பிறப்பு இவைபற்றிச் சோழ மன்னர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நல்லறிஞர் ஆவர். அரசியல் அதிகாரிகளில் பெருந்தரம் சிறுதரம்1 என்ற இருவகையினர் இருந்தனர். சில கல்வெட்டுக்களில் இவ்விரு வகையினரும் பெருந்தனம் சிறுதனம் என்றும் கூறப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வகையிலும் அதிகாரிகள் பலர் இருந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. இக்காலத்தில் அரசாங்க அலுவல் பார்ப்போர்க்குத் திங்கள் தோறும் சம்பளம் கொடுப்பது வழக்கமாக உளது. சோழர்களின் ஆட்சியில் அரசியல் அலுவலர்க்குத் திங்கள் தோறும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அரசியல் அதிகாரிகளுள் ஒவ்வொருவரும் தம்தம் தகுதிக்கேற்ப அரசனிட மிருந்து நிலம் பெற்று அதனை அனுபவித்து வந்தனர். அவ்வாறு அரசனால் கொடுக்கப்பட்ட நிலத்தை அவ்வதிகாரிகள் தம் வாழ்நாள் முழுமையும் அனுபவிக்கலாம். அன்னோரின் வழித்தோன்றல்களுக்கு அந்நிலத்தில் சிறிதும் உரிமையில்லை. அக்காரணம் பற்றியேதான் அரசியல் அதிகாரி களுக்குச் சோழ மன்னர்கள் அளித்த நிலம் சீவிதம் என்னும் பெயர் பெறுவ தாயிற்று. அதிகாரிகள் சிலர் நாட்டிற்குப் புரிந்த அருந்தொண்டுகள் பற்றி அன்னோர்க்குச் சோழ அரசர்கள் இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளனர். அத்தகைய நிலங்களை அரசிறையின்றி அவர்கள் வழியினரும் என்றும் அனுபவித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். பொதுவாகச் சோழர்களின் அரசியல் அமைப்பை நோக்குங்கால் பெரும் பொருட் செலவின்றியே அவ்வேந்தர்களது ஆட்சி நடைபெற்று வந்தது என்று கூறலாம். அவ்வுண்மை ஊராட்சி என்ற பகுதியில் பின்னர் விளக்கப்படும். அமைச்சர் குழு தலைநகரில் அரசனோடு உடனிருந்து நாட்டை ஆட்சி புரிவதில் துணைபுரிந்தவர்கள் அமைச்சர்களேயாவர். அவ்வமைச்சர்களுள் தலைவனா யிருந்தவன் முதல் மந்திரி என்று வழங்கப்பெற்றான். பலர் முடிமேல் - ஆர்க்குங் கழற்கால் அனகன் தனதவையுள் - பார்க்கும் மதி மந்த்ர பாலகரில் என்ற விக்கிரம சோழனுலா வடிகளாலும், அவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே என்ற கலிங்கத்துப்பரணியாலும் சோழர் ஆட்சியில் அமைச்சர் குழுவும் முதல்மந்திரியும் இருந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. அவ்வமைச்சர் குழுவில் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. சௌஜூகுவா என்ற சீன ஆசிரியன் ஒருவன் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதியுள்ள நூலில் சோழ மன்னன் தன் அவைக்களத்தில் நான்கு அமைச்சர்களோடு வீற்றிருந்ததைத் தான் நேரில் பார்த்ததாகக் குறித்துள்ளனன். வெளி நாட்டானாகிய அவ்வாசிரியன் எழுதியுள்ள ஒரு குறிப்பை ஆதாரமாகக் கொண்டு சோழமன்னர் எல்லோருடைய ஆட்சியிலும் அமைச்சர் குழுவில் நால்வரே இருந்தனர் என்று ஒருதலையாகத் துணிவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று. அச்சீன ஆசிரியன் சோணாட்டிற்கு வந்து அரசனைக் கண்டு பேசிய நாளில் சோழ அரசனது அவைக்களத்தில் இருந்த அமைச்சர்கள் நால்வராதல் வேண்டும் என்று கொள்வதே சாலப் பொருந்தும். அதிகாரிகளும் அவர்களுடைய கடமைகளும் சோழ மன்னனது தலைநகரில் அமைச்சர் குழுவினரேயன்றி நால் வகைப் படைகளுக்கும் தனித்தனியே தலைவர்களாகவுள்ள படைத்தலைவர் களும், அவர்களுக்குத் தலைவராகவுள்ள மாசாமந்தரும் இருந்தனர். அரசனிடத்தில் அண்மையிலிருந்த அரசாங்க அதிகாரிகள், திருமந்திர ஓலை, திருமந்திர ஓலைநாயகம், விடையில் அதிகாரி, அரசியற் கருமங்களை ஆராயும் அதிகாரிகள் என்போர் ஒவ்வோர் உள்நாட்டின் தலைநகரிலும் நாடு காவல் அதிகாரி ஒருவன் இருந்தனன். இனி, திருமந்திர ஓலை என்பான், அரசன் திருவாய் மொழிந்தருளிய உத்தரவுகளையும் செய்திகளையும் நேரில் கேட்டு வந்து அவ்வப்போது ஓலையில் எழுதும் ஓர் அதிகாரியாவான். திருமந்திர திரு ஓலை வாய்க் கேள்வியா லுணர்ந்து ஓலையில் எழுதியுள்ளவற்றை மேற்பார்த்துக் கையொப்பம் இடும் அதிகாரியாவான். அரசன் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கருமங்கள் நிகழ்த்தல் வேண்டும் என்ற நிகழ்ச்சிக் குறிப்பினை நினைவூட்டி அவற்றைத் தவறாமல் நிறைவேற்றி வைப்பவனும் இவனே. விடையில் அதிகாரி என்பான் அரசனுடைய திருமுகங்களை உரியவர் களுக்குப் பணிமக்கள் மூலம் சேர்ப்பித்தலும் விடையிறுத்தலும் ஆகிய கடமைகளை மேற்கொண்டவன் ஆவன். அரசாங்கத்தில் அமைந்த பல துறைகளிலும் நிகழும் நிகழ்ச்சிகளை அரசனது ஆணையின்படி ஆங்காங்குச் சென்று ஆராயும் அலுவல்களை மேற்கொண்டவர்களே கருமம் ஆராயும் அதிகாரிகள் ஆவர். நாடு காவல் அதிகாரி என்போன் தன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீயசெயல்கள் நிகழாமல் காத்து உள்நாட்டில் அமைதி நிலவுமாறு கண்காணித்து வந்த ஒரு தலைவன் ஆவன். அச்செயலுக்காகப் பொதுமக்களிடம் நாடு காவல் அல்லது பாடி காவல் என்ற வரி ஒன்று நெல்லாக வாங்கப்பட்டு வந்தது. நாடு காவல் தலைவனை இக்காலத்தில் ஒவ்வொரு ஜில்லாவிலுள்ள போலீ சூப்பரிண் டெண்டுக்குச் சமமானவன் என்று கூறலாம். பிற்காலத்தில் சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்றமைக்குரிய காரணங்களுள் நாடு காவல் அதிகாரிகளின் படைவலிமையும் துரோகச் செயல்களும் குறிப்பிடத்தக்கவை எனலாம். புரவுவரித்திணைக்களத்தார் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தலைமை அரசாங்கத்திற்குக் கிடைத்து வந்த வருவாய்களுள் பெரும் பகுதி நிலவரியால் வந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். ஆகவே விளைநிலங்களை நன்கு அளந்து தரமிட்டு அவற்றிற்குரிய வரிகளை முறைப்படி விதித்து ஆண்டுதோறும் குடிகளிடம் அவற்றை வாங்குவது அரசாங்கத்தின் இன்றியமையாக் கடமையாயிற்று. அதன் பொருட்டு அதிகாரிகள் பலரை உறுப்பினர்களாகக் கொண்ட நிலவரிக் கழகம் ஒன்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப் பெற்றிருந்தது. அக்கழகம் புரவு வரித்திணைக்களம் என்ற பெயருடையது. அஃது, இக்காலத்தரசாங்கத்தில் சென்னை மாகாணத்திலுள்ள ரெவின்யூ போர்டு (Revenue Board)-¡F¢ சமமாகச் சொல்லத்தக்க ஒரு கழகம் என்று கூறலாம். புரவுவரித்திணைக்களத்தின் உறுப்பினர் புரவுவரித் திணைக்களம் எனவும், புரவுவரித் திணைக்களக்கூறு எனவும், அந்நாளில் வழங்கப் பெற்றனர். புரவுவரித்திணைக்களத்திலிருந்து பல அலுவல்களைப் பார்த்து வந்தோர், புரவுவரித்திணைக்கள நாயகம், புரவுவரித் திணைக்களத்துக் கண்காணி, வரிப்பொத்தகம், வரிப்பொத்தகக் கணக்கு, வரியிலிடு,முகவெட்டி, கீழ்முகவெட்டி, பட்டோலை ஆகியோர் ஆவர். இவர்களுள், புரவுவரித் திணைக் கள நாயகம் என்போர் புரவுவரித்திணைக்களம் என்னும் நிலவரிக் கழகத்தின் தலைவர் ஆவர். புரவுவரித்திணைக்களத்துக் கண்காணி எனப்படுவோன் ஊர்தோறும் சென்று நிலவரிக்கணக்குகள் ஒழுங்காக எழுதப் பெற்று கிராமசபைகளில் வைக்கப் பெற்றுள்ளனவா என்பதை மேற்பார்த்து வரும் ஓர் அதிகாரியாவன். இந்நாளில் அரசாங்க அலுவலகங்களிலுள்ள தாசில்தார் முதலான ரெவினியூ உத்தியோகதர்கள் போன்றவன் இவ்வதிகாரி என்று சொல்லலாம். வரிப்பொத்தகம் என்பது அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஊரினின்றும் வருவதற்குரிய காணிக் கடனாகிய அரசிறை எவ்வளவு என்பதை உணர்த்தும் புத்தகம் ஆகும். இஃது இந்நாளிலுள்ள டைகலட் ரிஜிடர் போன்றது எனலாம். இதில் இன்ன ஊரிலுள்ள இன்னான் வெள்ளான் வகையில் அனுபவித்து வரும் இத்துணை நிலங்களுக்கு எவ்வளவு நிலவரி செலுத்தும் கடமையுடையவன் என்பது தெளிவாகக் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். அன்றியும், ஒவ்வொரு ஊரிலும் சீவிதமாகவும் இறையிலி யாகவும் அரசன் நிலங்கள் வழங்க நேர்ந்தால் அவற்றைப் பற்றிய விளக்கமும் நிலவுரிமை பற்றிக் காலந்தோறும் ஏற்படும் மாறுதல்களும் இவ்வரிப் பொத்தகத்தில் அவ்வப்போது தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். இப்புத்தகம் வைத்திருக்கும் அதிகாரிகளும் வரிப்பொத்தகம் என்று அந்நாளில் வழங்கப் பெற்றனர். இவர்களுக்குத் தலைவன் வரிப்பொத்தக நாயகம் என்று கூறப் பட்டுள்ளனன். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ஊரும் நிலவுரிமை யாளர்களாகவுள்ள காணியாளரிடம் வாங்க வேண்டிய நிலவரியும், பிறவரியும் இவ்வளவு என்பதும், அவற்றுள் அரசாங்கத்திற்குச் செலுத்தி யுள்ள நிலவரி இவ்வளவு என்பதும் செலுத்தாமல் எஞ்சி நிற்கும் தொகை இவ்வளவு என்பதும் வரையப் பெற்றுள்ள கணக்குப் புத்தகம் வரிப் பொத்தகக் கணக்கு எனப்படும். அக்கணக்கினை வைத்திருக்கும் அதிகாரியும் வரிப் பொத்தகக் கணக்கு என்று வழங்கப் பெற்றனன். வரியிலிடு என்ற அதிகாரி வரிப் புத்தகத்தில் நிலவுரிமைபற்றி அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களைச் சில தலைவர் முன்னிலையில் குறிப்பவன் ஆவன். முகவெட்டி, கீழ்முக வெட்டி, பட்டோலை என்போர் புரவுவரித்திணைக் களத்தில் அலுவல் பார்த்து வந்த அலுவலாளர் ஆவர். அவர்களுள் முகவெட்டி என்பான் ஊர்களின் பெயர்கள் முதலான எல்லாவற்றிற்கும் அட்டவணை தயாரித்து அவற்றை வரிப் புத்தகம் முதலியவற்றில் எளிதில் தேடிக் காண்பதற்குத் துணை புரிந்து வருபவன் எனலாம். அவனுக்கு உதவியாயிருப்போனைக் கீழ்முக வெட்டி என்று கூறுவது வழக்கம். பட்டோலை என்பான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்பவன் ஆவன் . இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக இருந்த புரவுவரித் திணைக்களம் ஒவ்வொன்றிலும் இருந்தனர் என்பது தேற்றம். இவர்களே யன்றி நாடுகளைக் கூறுபட அளப்பவர்களும் விளை நிலங்களுக்குத் தரங்கண்டு வரி விதிக்கும் அதிகாரிகளும் இருந்தனர். அன்னோர் முறையே நாடு கூறு செய்வார் எனவும் நாடு வகை செய்வார் எனவும் வழங்கப் பட்டனர். அவர்கள் இக்காலத்துள்ள சர்வே ஆபீசர்களுக்கும் செட்டில்மெண்டு ஆபீசர்களுக்கும் ஒப்பானவர்கள் என்று கூறலாம். அரசன் குடிகள் குறைகளைக் கேட்டு நீக்கும் முறை அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்கள் நலங்களைப் பெருக்குவதற்கு இன்றியமையாத செயல்களை மேற்கொள்வது அக்கால வழக்கமாகும். அங்ஙனம் சுற்றிப்பார்த்து வருங்கால் அரசன் தன் பரிவாரங்களோடு தங்குவதற்கு முக்கியமான ஊர்களில் அரண்மனைகள் இருந்தன; பிற ஊர்களில் கோயில் மண்டபங்களிலும் தனியாக அமைக்கப் பெற்ற விடுதிகளிலும் அரசன் தங்குவது வழக்கம். அவ்வாறு அரசன் நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று பார்க்குங் காலங்களில் குடிகள் தம்தம் குறைகளைத் தெரிவித்து அவற்றைப் போக்கிக் கொள்வதற்கு முயலுவது உண்டு. அம்முயற்சியும் எளிதில் நிறைவேறி வந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். அரசனிடம் தம்குறைகளை விண்ணப் பிக்க விரும்பிய குடிமக்கள் முதலில் அவற்றை உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவனிடமாதல் அல்லது வேறு ஓர் அதிகாரியிடமாதல் தெரிவித்தல் வேண்டும். அவ்வதிகாரி அவற்றை அப்படியே அரசனிடம் விண்ணப்பம் செய்வான். அரசன் உடனேயாவது அக்குடிகளை நேரில் வருவித்துக் கேட்டாவது, அவர்களுடைய வேண்டுகோளை நன்காராய்ந்து, அதனை நிறைவேற்றக் கட்டளையிடுமாறு உடனே ஓர் அதிகாரியை நியமனஞ் செய்வான்; சிக்கலான செய்திகளாயிருப்பின் பிறகு அமைச்சர்கள் உடன் கூட்டத்ததிகாரிகள் முதலானவர்களோடு கலந்துகொண்டு ஒரு முடிவிற்கு வருவது அவ்வேந்தர்கள் கையாண்டு வந்த முறையாகும். எவ்வாறாயினும் குடிகளின் வேண்டுகோள் விரைவில் ஆராயப்பெற்று ஏற்ற முறையில் எளிதில் நிறைவேற்றப் பட்டு வந்தது என்பது தேற்றம். இந்நிகழ்ச்சிகள் எல்லாம் குடிகட்கு எத்தகைய பொருட் செலவுமின்றி நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. புரவுவரித்திணைக்களத்து உறுப்பினர்களும் பிற அதிகாரிகளும் அரசனைப் போல நாட்டைச் சுற்றிப் பார்த்துக் குடிகளின் நலங்களைக் கவனித்து வந்தனர். அன்றியும் அவ்வதிகாரிகள் கிராம சபை, நிகழ்ச்சிகள், அற நிலையங்கள் கோயில்களின் வரவுசெலவுகள் முதலானவற்றையுந் தாம் செல்லுங் காலங்களில் கண்காணித்து வருவது வழக்கம். அரசன் அரசியல்அதிகாரிகளுக்கு வழங்கும் பட்டங்கள் ஆங்கிலேயர், தம் ஆட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்கள் ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, ராவ் பகதூர் திவான் பகதூர் சர் முதலான பட்டங்கள் வழங்கியமை போல, சோழ மன்னர்களும் தம் அரசியல் அதிகாரிகளுக்குச் சிறந்த பல பட்டங்கள் வழங்கி அவர்களைச் சிறப்பித்துள்ளனர் என்பது பல கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்றது. தொல்காப்பியம் புறத்திணையி யலில் காணப்படும் மாராயம்பெற்ற நெடுமொழி என்னும் வஞ்சித்திணைக்குரிய துறை யொன்றால் பண்டைத் தமிழ் வேந்தர்கள் தம் அதிகாரிகளுள் தக்கோர்க்குப் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளனர் என்பது நன்கு புலனாகின்றது. அப்பழைய வழக்கத்தைப் பின்பற்றிச் சோழ மன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்கு வழங்கிய பட்டங்கள், மாராயன், பேரரையன், அரையன், மூவேந்தவேளான், தொண்டைமான், பல்லவராயன், காலிங்கராயன், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், வாணகோவரையன், மாவலிவாண ராயன், கேரளராசன், விழுப்பரையன், மழவராயன், நாடாள்வான், பிரமாதிராசன், பிரமமாராயன், சோழகோன் முதலியனவாம். இப்பட்டங் களைப் பெரும்பாலும் தம் இயற்பெயர் அல்லது சிறப்புப் பெயர்களோடு இணைத்தே சோழ மன்னர்கள் தம் அரசியல் தலைவர்க்கு அளித்து வந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இவ்வுண்மையை இராசராச மாராயன், விக்கிரமசோழ மாராயன், இராசேந்திர சோழ மூவேந்த வேளான், வீரசோழப் பல்லவராயன், விருதராச பயங்கர வாணகோவரையன், சனநாதக் கச்சிராயன், வீரராசேந்திர மழவராயன், குலோத்துங்க சோழ கேரளராசன், இராசராசக் காடவராயன், வீரராசேந்திர பிரமாதிராசன் என்று வழங்கப் பெற்றுள்ள பட்டங்களால் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். இப்பட்டங்கள் நீண்ட தொடர்களாயிருப்பினும் இவை இன்ன இன்ன சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் அரசியல் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன என்பதை எடுத்துணர்த்துவனவாயிருத்தல் அறியற்பாலது. மேலே குறிப்பிட்ட பட்டங்களுள் மாராயன், பேரரையன் ஆகிய இரண்டும், அரசாங்க அலுவலாளர்களேயன்றி வேறு துறைகளிலும் மேம்பட்டவர்களுக்குச் சோழஅரசர்களால் அளிக்கப் பெற்றுள்ளன என்று தெரிகிறது. இதனை வாச்சியமாராயன், கடிகைமாராயன், நாடகப் பேரரையன், நிருத்தப் பேரரையன் என்ற பட்டங்களால் நன்கறியலாம், அக்காலத்தில் மாராயன் என்னும் பட்டம் பெற்றவனுடைய மனைவி மாராசி என்று வழங்கப் பெற்றுள்ளனள். அங்ஙனமே, அரசியல் அதிகாரியின் மனைவி அதிகாரிச்சி என்று கூறப் பெற்றுள்ளனள். அன்றியும், சோழ மன்னரின் தேவிமார்களிடம் அலுவல் பார்த்து வந்த பெண்டிர்களுள் சிலர்க்கும் அதிகாரிச்சி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட பட்டங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று உயர்ந்தவை யாகவோ தாழ்ந்தவையாகவோ கருதப்படாமல் சமமாக மதிக்கப்பெற்று வந்தவை என்று தெரிகிறது. அவற்றுள், பிரமமாராயன், பிரமாதிராசன் என்ற பட்டங்கள் பிராமண குலத்தினராகிய சில அதிகாரிகளுக்கு மாத்திரம் கொடுக்கப் பட்டுள்ளன என்பது அறியத்தக்கது.  2. கிராம ஆட்சி சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்புற்றிருந்தமைக்கும் நாட்டு மக்கள் பன்னலங்களும் எய்தி அமைதியாக வாழ்ந்து வந்தமைக்கும் முதற்காரணம் அக்காலத்தில் ஊர்தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றிருந்த அந்த ஊர்ச் சபைகள் எல்லாம் பொறுப்புணர்ச்சி யுடையனவாய் அறநெறி பிறழாமலும் நடுவு நிலைமை குன்றாமலும் ஒழுங்காகத் தம் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு வந்தமையால், பொதுமக்கள் அச்சபைகள் பால் பெருமதிப்பும் நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து நடந்து வந்தனர். அத்தகைய ஊர்ச்சபையின் நேரான ஆளுகையின் கீழ்க் கிராமங்கள் அமைந்திருந்த படியால்தான் அந்நாட்களில் பொது மக்களுடைய வாழ்க்கை அமைதியாக இனிது நடைபெற்று வந்தது என்பது உணரற்பாலதாம். நன்மக்கள் தீயோரால் நலிவுறாமல் நல்வாழ் வெய்தவும், தீயோர்கள் அடங்கி யொழுகவும் எந்நிலையினரும் பொருட் செலவின்றி விரைவில் நீதி பெறவும், அறநிலையங்கள் தமக்குரிய கடமைகளை ஆற்றிவரவும், அறப்புறங்கள் நன்கு பரிபாலிக்கப் படவும், ஊர்க்காரியங்கள் ஒழுங்காக நடந்து பொதுமக்கள் வாழ்வு வளம்பெற்றுத் திகழவும் கிராம சபைகள் செய்துவந்த அரும் பெருந் தொண்டுகள் அளவிலடங்கா என்பதை ஆங்காங்குக் காணப்படும் ஆயிரக் கணக்கான கல்வெட்டுக்கள் நன்கு அறிவிக்கின்றன. அச்சபைகள் எல்லாம் சோழ அரசர்களும் அன்னோரின் அரசியல் அதிகாரிகளுக்கும் கீழ்ப்பட்டு அவர் களுடைய கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்தன என்பது தேற்றம். இனி, சோழ மன்னர்களின் ஆளுகையில் ஊராட்சி நடத்தி வந்த சபைகளைக் கூர்ந்து நோக்குங்கால், நன்கு வைக்கப்பட்ட சபைகள் அந்நாட் களில் இருந்தன என்று தெரிகிறது. அவை பிராமணர்கள் பிரமதேயவுரிமை யுடன் வசித்து வந்த சதுர்வேதி மங்கலங்களில் இருந்த சபை, திருக்கோயிலுக்குரிய தேவதானங் களில் இருந்த சபை, பிராமணரல்லாத பிற வகுப்பினர் வசித்த ஊர்களில் இருந்த சபை, வணிகர்கள் வசித்த நகரங்களில் இருந்த சபை ஆகிய நான்குமேயாம். அவற்றை முறையே, கிராம சபை, தேவதானத்துச்சபை, ஊர்ச்சபை, நகரசபை என்று கூறுவது மிகப்பொருந்தும். அத்தகைய சபைகள் சோழ மன்னர்கட்கு முன்னர் ஆட்சிபுரிந்த பல்லவ அரசர்கள் காலத்திலும் சோழ மண்டலத்தில் இருந்துள்ளன என்று கல்வெட்டுகளாலும் தமிழ் நூல்களாலும் தெரிகிறது. இருக்கு வேதத்தில் அச்சபைகள் சொல்லப்பட்டிருப்பதால் அவை வட நாட்டார் தொடர்பால் தமிழ்நாட்டில் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது சிலர் கொள்கை. அஃது எவ்வாற்றானும் ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று. எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்ற தொல்காப்பியச் சூத்திரப் பகுதியினால் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் அறங்கூறவைகள் யாண்டும் நிலைபெற்றிருந்தன என்பது பெறப்படும். மறங்கெழு சோழர் உறந்தை யவையத் - தறம் நின்று நிலையிற்றாகலின் (புறம். 39) எனவும், ஆரங்கண்ணி யடுபோர்ச் சோழர் - அறங்கெழுநல்லவை யுறந்தை (அகம்.93) எனவும், மறங்கெழு சோழர் உறந்தையவையத் - தறங்கெட வறியா தாங்கு (நற். 400) எனவும் போதரும் கடைச்சங்கப் புலவர்களின் பாடல்களால் உறையூரின்கண் சோழர்களின் அறங் கூறவையம் ஒன்று இருந்ததென்பதும், அது நடுவு நிலைமை குன்றாமலும் அறங்கெடாமலும் எல்லோர்க்கும் நீதி வழங்கி வந்தது என்பதும் நன்கறியக்கிடக்கின்றன. அத்துணைப் பெருமை வாய்ந்த மன்றங்கள் கடைச்சங்க காலத்தில் பல ஊர்களில் இருந்தன என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் புலப்படுகின்றது. அம்மன்றங்களின் உறுப்பினர்கள் ஊர்ப் பொதுமக்களடங்கிய மாசபையால் குடவோலை வாயிலாக அந்நாட்களில் தெரிந்தெடுக்கப் பெற்றனர் என்பது அகநானூற்றிலுள்ள கயிறுபிணிக் குழிசியோலை கொண்மார் - பொறிகண்டழிக்குங் ஆவணமாக்களின் என்ற 77 -ஆம் பாடற் பகுதியால் நன்கு வெளியாகின்றது. அம்மன்றங்கள் எல்லாம் நீதிவழங்கும் அறங்கூறவை களாகவே அக்காலத்தில் இருந்தன. பல்லவர் ஆட்சிக்காலங்களில் கிராம சபைகள் தோன்றுவதற்கு முதற்காரணமாக அவை இருந்தன என்பது திண்ணம். எனவே, வடநாட்டார் தொடர்பால் தமிழ்நாட்டில் கிராமசபைகள் தோன்றின என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. ஆனால் பல்லவர் காலத்தில் கிராமசபைகள் நீதி வழங்குவதோடு அமையாமல் ஏரி, குளம் முதலியவற்றையும் தோட்டங்களையும் பாதுகாத்தல் பெருவழிகளை அமைத்தல் அறப்புறங்களை ஏற்று நடத்தல், அறநிலையங்களை ஏற்று நடத்தல், அவற்றைக் கண்காணித்தல், அரசிறை வசூலித்தல் ஆகிய வற்றையும் தம் கடமைகளாகக்கொண்டிருந்தன என்று தெரிகிறது. ஆகவே, அவற்றின் கடமைகள் வரவரப் பெருகிக் கொண்டே வந்தன என்று கூறலாம். கடமைகள் பெருகவே, அவற்றை நிறைவேற்றுவதற்குச் சில உட்கழகங்கள் அமைப்பது இன்றியமையாததாயிற்று. ஆகவே, ஏரிவாரியம், ஆட்டை வாரியம் முதலான உட்கழகங்கள் பல்லவர் ஆட்சிக் காலங்களிலேயே தோன்றிவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வளர்ச்சியுற்று ஊராட்சி நடத்தி வந்த ஊர்ச் சபைகளும், கிராம சபைகளும், நகரசபைகளும் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தேதான் மிகச் சிறந்த நிலையில் அமைந்து தம் கடமைகளை நன்கு நிறைவேற்றிப் பேரும் புகழும் எய்தின என்று ஐயமின்றிக் கூறலாம். சோழர்களது ஆட்சி மாறிய பிறகு நம்நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டு எத்தனையோ துன்பங்களுக்குள்ளாகிய காலங்களிலும் கிராம சபைகள் தம் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிப் பொதுமக்கள் வாழ்வு குலையாமல் பணிபுரிந்து வந்தமை வரலாற்றா ராய்ச்சியாளர் களின் குறிப்புக்களால் தெள்ளிதிற் புலனாகின்றது. கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நாட்டிற்கு வந்து இதன் ஆளுகையைக் கைப்பற்றிய ஐரோப்பிய அதிகாரிகள் கூட அச்சபைகளைப் பெரிதும் புகழ்ந்துள்ளனரெனின் அவற்றின் பெருமைக்கு வேறு சான்று கூறவேண்டுமோ, இனி அச்சபைகளைப் பற்றிய செய்திகளை ஆராய்வாம். ஊரிலுள்ள ஆண்மக்கள் எல்லோரும் கிராம சபையின் உறுப்பினரா யிருந்தனர். அவர்கள் திருவடியார் எனப்படுவர். அச்சபைகள் குறி எனவும் பெருங்குறி எனவும் மகாசபை எனவும் வழங்கப்பட்டன. கிராம சபையால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் களைத் தம்மகத்துக் கொண்ட நிறைவேற்றுக் கழகங்களே கிராம காரியங்கள் முழுவதையும் நடத்தி வந்தன. இக்கழகங்கள் வாரியங்கள் என்று அக்காலங் களில் வழங்கிவந்தன. இங்ஙனமே ஊர்ச்சபையாலும் நகர சபையாலும் தெரிந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட கழகங்களே ஊர்க்காரியங்களையும் நகர காரியங் களையும் நடத்தி வந்தன என்பது அறியற்பாலதாம். சோழ மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற கிராம சபை களைப் பற்றிய செய்திகளையுணர்த்தும் கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவைகள் எல்லாம் கிராமசபைகள் செய்த முடிவுகளை உணர்த்துகின்றன. அவற்றுள் சில கல்வெட்டுக்களே நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களின் அமைப்பு முறைகளைக் கூறுகின்றன. இத்தகைய கல்வெட்டுக்களுள், முதற்பராந்தக சோழனது ஆட்சியில் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூரில் வரையப் பெற்றுள்ள இரு கல்வெட்டுக்கள்1 கிராம சபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றுக்கழகங்களின் உறுப்பினர்களின் தகுதி அன்னோரைத் தேர்ந்தெடுத்த முறை, நிறைவேற்றுக் கழகங்களின் அமைப்பு முதலான பலவற்றை நன்கு விளக்குகின்றன. I (1) வதிஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது உத்திரமேரூச் சதுர்வேதி மங்கலத்து சபையோம் இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீ முகப்படி ஆஞ்ஞை. (2) யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் சம்வத்ஸர வாரிமுந் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதுக்கு வியவதை செய் (3) தபரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ்குடும்பிலாரே கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன்மனையிலே அ (4) கம் எடுத்துக்கொண்டு இருப்பானையே அறுபதுபிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாதிரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி (5) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாதார் வாரியஞ்செய் தொழிந்த பெருமக்களுக்கு (6)அணியபந்துக்கள் அல்லாதாரைக் குடவோலைக்குப் பேர் தீட்டிச் சேரிவழியே திரட்டி பன்னிரன்டு சேரியிலும் சேரியான் ஒரு பேராமாறு ஏதுமுருவறியாதானொரு (7) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்துப் பன்னிருவரும் சம்வத்சரவாரிய மாவதாகவும் அதின்பின்போய் தோட்ட வாரியத்துக்கு மேற்படி குடவோலை (8) வாங்கிய பன்னிருவரும் தோட்டவாரியமாவதாகவும், நின்ற அறுகுடவோலையும் ஏரிவாரியமா (9) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியஞ் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முன்னூற்றறுபது நாளும் நிரம்பவாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வியவதை யோலைப் படியேய் குடும்புக்குக் குடவோலை யிட்டுக் குடவோலை பறிச்சுக் கொண்டே வாரியம் இடுவதாகவும் வாரியஞ் செய்தார்க்குப் பந்துக்களும் சேரிகளில் அந்யோந்யம்மே...... (10) ம் குட வோலையில் பேர் எழுதி இடப்படாதாராகவும், பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியத்துக்கும் முப்பது குடும்பினும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரைக் குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவாரவாரியமாவதாகவும் அறுவர் பொன் வாரிய மாவதாகவும் || சம்வத்சரவாரியம் அல்லாத (11) வாரியங்கள் ஒருக்கால் செய்தாரை பின்னே அவ்வாரியத்துக்குக் குடவோலை இடப் பெறாததாகவும் இப்பரிசேயிவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்த்ரன் சக்கரவர்த்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேசரி வர்மன் ஸ்ரீ முகம் அருளிச்செய்து வரக்காட்ட (12) ஸ்ரீ ஆஞ்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளானுடனிருக்க நம் கிராமத்துஷ்டர் கெட்டு சிஷ்டர் வர்த்தித்திடுவாராக வியவதை செய்தோம் உத்ரமேரு சதுர்வேதிமங்கலத்து சபையோம் ||” II (1) “ஸ்வஸ்திஸ்ரீ ஞுஞு மதுரை கொண்ட கோப்பரகேசரிவன் மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு ஞுஞு காலியூர் ஞுஞு கோட்டத்து தன் கூற்று உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம் இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தகதேவன் ஸ்ரீ பரகேசரிவன்மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முகப்படி ஆ (2) ஞ்ஞையினால் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க்கரஞ்செய்கை கொண்ட யக்ரமவித்தபட்டனாகிய சோமாசி பெருமான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் சம்வத்சரவாரியமும் தோட்டவாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்(த) பரிசாவது ஞுஞு குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா (3) ரே கூடிக் கா னிலத்துக்குமேல் இறை நிலமுடையான் தன்மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபதுபிராயத்தின்கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஓதுவித் தறிவானைக் குடவோலை இடுவதாகவும் ஞுஞு அரைக்கா நிலமேயுடையானாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும் ஒருபா (4) ஷ்யம் வக்காணித்தறிவான் அவனையுங் குடவோலை எழுதிப்புக இடுவதாகவும் ஞுஞு அவர் களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆசாரமுடைய ரானாரையேய் கொள்வதாகவும் ஞுஞு அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்திலாதாரை கொள்வதாகவும் ஞுஞு எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேரவ்வைம (5) க்களையும் அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப்பிறந்தானையும் இவர்கள் தகப்பனோடுடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறந்தாளை வேட்டானையும் உடப்பிறந்தாள் மக்களையும் தன்மகளை வேட்ட மருகனையும் தன் தமப்பனையும் (6)தன் மகனையும் ஆக இச்சுட்ட............ பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதாராகவும் ஞுஞு அகமியாகமனத்திலும் மகாபாதகங் களில் முன்படைந்த நாலுமகாபாத கத்திலு மெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பட்ட இத்தனைப் பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப் பெறாதாராகவும் ஞுஞு சம்சர்க்கப்பதிதரை ப்ராயஸ்சித்தஞ் செய்யு மளவு (7) குடவோலை இடாததாகவும் ........தியும் சாகசியரா யிருப்பரை யும் குடவோலை எழுதிப்புகவிடப் பெறாதவராகவும் ஞுஞு பரத்ரவியம் அபகரித்தானையும் குடவோலை எழுதிப்புகவிடப் பெறாதாராகவும் ஞுஞு எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ருதப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம் (8) வாரியத்துக்குக்குடவோலை யெழுதிப்புகவிட பெறாததாகவும்....... பாதகஞ்செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயசித்தஞ்செய்து சுத்தரானாரையும் அகமியாகமனஞ்செய்து ப்ராயசித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டபட்ட அனைவரையும் ப்ராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதிப்புகவிடம் பெறாததாக (9) வும் ஞுஞு ஆக இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம் முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர்தீட்டி இப்பன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம்புக இடுவதாகவும் ஞுஞு குடவோலை பறிக்கும் போது மகாசபைத் திருவடியாரை சபாலவிருத்தம் நிரம்பக்கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா (10) மே மகாசபையிலேயுளும் மண்டகத்திலே யிருத்திக்கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பி மாரில் வ்ருத்தராய் இருபாரொரு நம்பிமேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்றா லெடுத்துக்கொண்டு நிற்க பகலே யந்தர மறியாதா னொருபாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துக்கே புகவிட்டுக் குலைத்து அக்குடத்தி லோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே (11) குடுப்பதாகவும் ஞுஞு அக்குடுத்தவோலை மத்தியஸ்தன் வாங்கும் போது அஞ்சு விரலும் அகலவைத்து உள்ளங்கையிலே ஏற்றுக்கொள்வானாகவும் ஞுஞு அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத் திருந்த நம்பிமார் எல்லாரும் வாசிப்பாராகவும் ஞுஞு வாசித்த அப்பேர் தீட்டுவதாகவும் ஞுஞு இப் பரிசே முப்பது குடும்பிலும் ஓரோ(ர்) பேர் கொள்வதாகவும் இக் ஞுஞு கொண்ட முப்பது பேரிலுந் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் செய்தாரையும் விச்சையா வ்ருத்தரையும் (12) வயோவ்ருத்தர் களையும் சம்வத்ஸர வாரியராக கொள் வதாகவும் ஞுஞு மிக்குநின்றாருட் பன்னிருவரைத் தோட்டவாரியங் கொள்வதாகவும் ஞுஞு நின்ற அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்விரண்டு திறத்து வாரியமும் கரைகாட்டி கொள்வதாகவும் ஞுஞு இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப்பெருமக்களும் முன்னூற்றறுபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் ஞுஞு வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங் (13) கண்டபோது அவனையொழித்து (விடு) வதாகவும் ஞுஞு இவர்கள் ஒழிந்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன் மக்ருத்யங்கடைக் காணும் வாரியரே மத்தியஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் கொடுப்பாராகவும் / இவ்வியவஸ்தை யோலைப்படியே....க்குக் குடவோலை பறித்துக் கொண்டே வாரியம் இடுவதாகவும் ஞுஞு பஞ்சவார வாரியத் துக்கும் பொன்வாரியத்து (14) க்கு முப்பது குடும்பிலும் குட வோலைக்குப் பேர்தீட்டி முப்பது வாயோலைகட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டிலும் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்சவார வாரியமும் ஆவனவாகவும் ஞுஞு பிற்றை ஆண்டும் இவ்வாரியங்கள் குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செய் (15)த் குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வ தாகவும் ஞுஞு கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப் புக இடப்பெறாததாகவும் ஞுஞு மத்யஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுதுவ னாகவும் கணக் கெழுதினான். கணக்குப் பெருங்குறிப் பெருமக் களோடுகூடக் கணக்குக்காட்டி சுத்தன் ஆச்சிதின்பின்னன்றி மற்றுக் கண (16)க்குப் புகப் பெறாதானாகவும் ஞுஞு தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் ஞுஞு மற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெறாதாராகவும் ஞுஞு இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்த்ரன் சக்கரவர்த்தி பண்டிதவத்சலன் குஞ்சர மல்லன் சூர சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரி பன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆஞையா (17) ல் சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் கரஞ்சை கொண்டயக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்துக்கு அப்யுதமாக துஷ்டர் கெட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதிமங்கலத்துச் சபையோம் ஞுஞு இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்க வியவஸ்தை எழுதினேன் மத்யஸ்தன் (18) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்ரியனேன்” ஞுஞு என்பனவாம். உத்தரமேரூரில் காணப்படும் இவ்விரண்டு கல்வெட்டுக் களும் முறையே கி. பி. 919, 921 -ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்றனவாகும். இவற்றுள் முதல் கல்வெட்டு அவ்வூர்ச் சபையார், சம்வத்சரவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்சவார வாரியம் பொன்வாரியம் ஆகிய நிறைவேற்றுக் கழகங்களை நிறுவுதற்குரிய விதிகளையும் முறைகளையும் எடுத்துணர்த்துகின்றது. இதிற்கண்டவை முதல் பராந்தக சோழனது ஆணையின்படி அக்கூட்டத்திற்கு வந்திருந்த தத்தனூர் மூவேந்த வேளான் என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தாமே அமைத்துக் கொண்ட விதிகளாகும். பிறகு இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தால் அவ்விதிகளைத் திருத்தியும் விளக்கியும் அமைப்பது இன்றியமையாததாயிற்று. ஆகவே முதற் பராந்தக சோழனது பதினான் காம் ஆட்சியாண்டாகிய கி. பி. 921 -ல் அவ்வேந்தனது ஆணையின் படி அங்கு வந்திருந்த சோமாசிப் பெருமான் முன்னிலையில் உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களை அமைத்தற்குரிய விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் வரையறையுடன் ஏற்படுத்திக் கொண்டனர். இச்செய்திகளையே இரண்டாங் கல்வெட்டுக் கூறுகின்றது. எனவே, இதன் துணைகொண்டு நிறைவேற்றுக் கழக அமைப்பிற்குரிய விதிகளை ஆராய்வாம்.உத்தரமேரூரில் காணப்படும் இவ்விரண்டு கல்வெட்டுக் களும் முறையே கி. பி. 919, 921 -ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்றனவாகும். இவற்றுள் முதல் கல்வெட்டு அவ்வூர்ச் சபையார், சம்வத்சரவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்சவார வாரியம் பொன்வாரியம் ஆகிய நிறைவேற்றுக் கழகங்களை நிறுவுதற்குரிய விதிகளையும் முறைகளையும் எடுத்துணர்த்துகின்றது. இதிற்கண்டவை முதல் பராந்தக சோழனது ஆணையின்படி அக்கூட்டத்திற்கு வந்திருந்த தத்தனூர் மூவேந்த வேளான் என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தாமே அமைத்துக்கொண்ட விதிகளாகும். பிறகு இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தால் அவ்விதிகளைத் திருத்தியும் விளக்கியும் அமைப்பது இன்றியமையாததாயிற்று. ஆகவே முதற் பராந்தக சோழனது பதினான்காம் ஆட்சியாண்டாகிய கி. பி. 921 -ல் அவ்வேந்தனது ஆணையின் படி அங்கு வந்திருந்த சோமாசிப்பெருமான் முன்னிலையில் உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களை அமைத்தற்குரிய விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் வரையறையுடன் ஏற்படுத்திக் கொண்டனர். இச்செய்தி களையே இரண்டாங் கல்வெட்டுக் கூறுகின்றது. எனவே, இதன் துணை கொண்டு நிறைவேற்றுக் கழக அமைப்பிற்குரிய விதிகளை ஆராய்வாம். உறுப்பினராதற் குரிமையுடையோர் கிராம சபையால் வாரியப் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் உரிமையுடையவர்கள், தம் சொந்த மனையில் வீடு கட்டிக் குடியிருப்பவர் களாகவும் காணிக்கடன் செலுத்தற்குரிய கால் வேலி நிலமுடையவர் களாகவும் சிறந்த கல்வியறியுடையவர்களாய் அறநெறி பிழையாமல் நடப்பவர் களாகவும் தூயவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவர் களாகவும், காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவர்களாகவும், முப்பத்தைந்துக்குமேல் எழுபதுக்கு உட்பட்ட வயதினர் களாகவும் மூவாண்டிற்குள் எந்த வாரியத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப் பெறாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். பெருங் கல்விமான் களாயிருப்போர் அரைக்கால் வேலி நிலமுடையவர்களாயிருப்பினும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறும் உரிமை யுடையவராவர். உரிமை இழந்தவர்கள் நிறைவேற்றுக் கழகத்தில் உறுப்பினராயிருந்து இறுதியில் கணக்குக் காட்டாமல் இருந்தவர்களும், இவர்களுடைய நெருங்கிய உறவினர்களும்1 கூடத்தகாதவர்களோடு கூடியவர் களும், ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கும் புரிந்தவர்களும், இவ்விரு வகையாருடைய நெருங்கிய சுற்றத்தினர் களும், தீயோர்கள் கூட்டுறவினால் கெட்டுப் போனவர்களும், கொண்டது விடாத கொடியோர்களும், பிறர்பொருளைக் கவர்ந்தவர்களும் எத்தகைய கையூட்டும் (இலஞ்சம்) வாங்கிப் பிறகு பிராயச்சித்தம் செய்து தூய்மை அடைந்தவர்களும்; மாபாதகஞ் செய்து பிராயச்சித்தம் புரிந்தவர்களும். ஊர்க்குத் துரோகஞ்செய்து பிராயச்சித்தம் செய்தவர்களும், கூடத் தகாதவர்களோடு கூடிப் பிராயச்சித்தஞ் செய்தவர்களும், குற்றம் காரணமாகக் கழுதைமேல் ஏற்றப்பட்டவர்களும், கள்ளக் கையெழுத்திட லாகிய கூடலேகை செய்தவர்களும் ஆகிய இன்னோர் கிராம காரியஞ் செய்யும் வாரியப் பெருமக்களாகத் தெரிந்தெடுக்கப் பெறும் உரிமையினைத் தம் வாழ்நாள் முழுவதும் இழந்தவராவர், தீயோர்களின் கூட்டுறவால் கெட்டுப்போனவர்கள் மாத்திரம் பிராயச்சித்தஞ் செய்த பின்னர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையை மீண்டும் பெறுவர். உறுப்பினரைத் தெரிந்தெடுக்குமுறை ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும், ஊரும், நகரமும் அக்காலத்தில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வொரு உறுப்பினரே தெரிந்தெடுக்கப்பட்டனர். குடும்புகளின் எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு மிகுந்தும் குறைந்தும் இருந்தன. செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளை யுடையதாகவும், தஞ்சாவூர் ஜில்லாவில் திருக்காட்டுப்பள்ளிக் கண்மை யிலுள்ள செந்தலை அறுபது குடும்புகளை யுடையதாகவும் இருந்தமை இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பிலுள்ளவர்களும் தாமே கூட்டம் நடத்தி நிறைவேற்றுக் கழகத்தில் உறுப்பினராக இருத்தற்குரிய தகுதியும் உரிமையும் உடைய எல்லோருடைய பெயர்களையும் தனித்தனி ஓலைத் துண்டுகளில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்கு சேர்த்து, அவை எக்குடும்பிற் குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப்பெற்ற வாயோலை யொன்றைச் சேர்த்துக் கட்டி அவ்வோலைக் கட்டை ஒரு குடத்திலிட்டு வைப்பர். இங்ஙனமே எல்லாக் குடும்புகட்கும் செய்து வெவ்வேறு வாயோலையுடன் தனித்தனியாகக் கட்டிக் குடத்திலிடுவர். பிறகு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தற்குக் குறிக்கப்பட்ட நாளிலே அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரும் ஓர் இடத்தில் கூட்டப்பெறுவர். அக்கூட்டத்திற்கு அரசர் பெருமானது ஆணையின்படி அரசாங்க அதிகாரி ஒருவர் வந்திருந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கவனிப்பது வழக்கம். அன்றியும், அவ்வூர் நம்பிமார் அனைவரும் தவறாமல் அக்கூட்டத்திற்கு வந்து மகாசபை மண்டபத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தோர் ஒருவர், குடும்புகளின் ஓலைக்கட்டுக்கள் போடப்பெற்றிருந்த குடத்தை மேல் நோக்கி எல்லோருங்காணுமாறு எடுத்துக் கொண்டு அக்கூட்டத்தின் நடுவில் நிற்றல் வேண்டும். பிறகு, ஒன்றும் உணராத இளைஞன் ஒருவனைக்கொண்டு அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குரிய ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அக்குடத்தி லுள்ள ஓலைத் துண்டுகளுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுக்கச் செய்து, அதனை மத்தியதன் கையில் கொடுப்பித்தல் வேண்டும். அவன் தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து அவ்வோலைத் துண்டை உள்ளங்கையில் ஏற்று, அதில் எழுதப்பெற்றுள்ள பெயரைச் சபையிலுள்ளோர் யாவரும் தெரிந்துகொள்ளுமாறு படிப்பான். பின்னர், அங்குள்ள நம்பிமார் எல்லோரும் ஒவ்வொருவராக அதனை வாசிப்பார்கள். அதன் பிறகு அப்பெயர் ஓலையில் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலையில் குறிக்கப்பெற்றவரே அக்குடும்பிற்குரிய நிறைவேற்றுக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவராவர். இங்ஙனமே மற்றைக் குடும்புகளுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்கள் அமைக்கப் பெறும். இவ்வாரியங்கள் சம்வற்சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம், கழனிவாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், குடும்புவாரியம் என்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலில் குறிப்பிடப்பெற்ற ஐந்து வாரியங்களே உத்தரமேரூர்ச் சபையால் அமைக்கப்பட்டிருந்தன என்பது இரண்டாங் கல்வெட்டால் நன்கறியக் கிடக்கின்றது. பிற வாரியங்கள் இருந்தமை வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருப்பாற் கடலில் காணப்படும் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. வாரியங்கள் எல்லாம் நிறைவேற்றுக் கழகங்களாதலின் ஒவ்வொரு கிராம சபையும் அவ்வவ்வூர்க்கும் சூழ்நிலைக்கும் இன்றியமையாத சில வாரியங் களை மாத்திரம் அமைத்துக்கொண்டனவேயன்றி எல்லா வாரியங்களையும் அமைத்துக் கொள்ளவில்லை என்பது அறியற்பாலதாகும். எனவே, எல்லா ஊர்ச் சபைகளாலும் எல்லா வாரியங்களும் அமைக்கப்படவில்லை என்பது தேற்றம். சம்வற்சரவாரியம் எல்லா ஊர்களிலும் இருந்தது. இதனை ஆட்டை வாரியம் என்றும் கூறுவர். உத்தரமேரூரிலிருந்து முப்பது குடும்புகளிலுமிருந்து தேர்ந்தெடுக்கப் படும் முப்பது உறுப்பினருள் பன்னிருவர் சம்வற்சரவாரியராகத் தெரிந் தெடுக்கப் பெறுவர். மற்றை யோருள், பன்னிருவர் தோட்டவாரியராகவும் எஞ்சி நின்ற அறுவர் ஏரிவாரியராகவும் இருப்பார்கள். மேற்குறித்த முப்பது குடும்புகளிலுமிருந்து குடவோலைவாயிலாக மீண்டும் பன்னிரண்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்; அவர்களுள் அறுவர் பஞ்சவார வாரிய ராகவும் எஞ்சியுள்ள அறுவரும் பொன்வாரியராகவும் இருப்பர். ஈண்டுக் குறிக்கப் பெற்ற வாரியங்களுள், சம்வற்சர வாரியத்திற்கு உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்படுவோர், முன்னர் ஏரிவாரியத்திலும் தோட்டவாரியத்திலும் உறுப்பினராயிருந்து அனுபவம் பெற்றவர் களாகவும் கல்வியிலும் வயதிலும் முதிர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். கிராம சபையால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று இவ்வாரியங்களில் உறுப்பினராயமர்ந் துள்ளோர் எல்லோரும் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப்பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் கிராம வாரியங்களைச் செய்வதற்கு உரிமையுடையவர் ஆவர். இவ்வுறுப்பினருள் எக்காரணம் பற்றியேனும் அபராதம் கொடுக்க நேர்ந்தவர் அவ்வாரியத் திலிருந்து விலக்கப் படுவர். உடனே குடவோலை வாயிலாக வேறொருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவர். நிறைவேற்றுக் கழக உறுப்பினர் எல்லோரும் ஆளுங்கணத்தார் எனவும், வாரியப் பெருமக்கள் எனவும், பெருமக்கள் எனவும் அந்நாளில் பொதுமக்களால் பெருமையாக வழங்கப் பெற்றுள்ளனர். சபை கூடும் இடம் இப்பெருமக்கள் கூடிக் காரியங்களை நடத்துவதற்குப் பல ஊர்களில் தனியாக மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும் இவர்கள் கோயில் மண்டபங்களிலும் மன்றங்களிலும் கூடுவதும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாவில் குடவாசலுக்குப் பக்கத்தேயுள்ள நாலூர் சபையார், முதல் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் அவ்வூர்க்கோயிலில் கண்டராதித்தன் மண்டபத்திலும் 1 இராசராசன் மண்டபத்திலும்2 வண்ணக்கனார் அம்பலத் திலும்3 கூட்டம் நடத்தியுள்ளமை அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. திருவிடைமருதூர் நகர சபையாரும் திரைமூர் சபையாரும் திருவிடைமருதூர் நாடக சாலையில் கூட்டம் நடத்திய செய்தி ஒரு கல்வெட்டில்4 காணப்படுகின்றது. மேலே குறித்துள்ள நாலூர் சபையும்5 தென்னார்க்காடு ஜில்லா பிரம தேசத்துச் சபையும்6புளிய மரத்தின் கீழ் கூடிப்பொதுக் காரியங்களைக் கவனித்தன என்று அவ்வூர் களிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆகவே, அவ்வப்போதுள்ள நிலைக்கேற்ப இடங்கள் தெரிந்தெடுக்கப் படுவது வழக்கம் போலும். சபை கூட்டும் முறையும் காலமும் காளம் ஊதுவித்தும் முரசடிப்பித்தும்7 சபை கூடும் இடத்தையும் நேரத்தையும் பொது மக்களுக்கு அறிவிப்பது கிராம சபையார் தொன்று தொட்டுக் கைக்கொண்டிருந்த முறையாகும். நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களில் உறுப்பினராயமர்ந்து கிராம காரியங்களைச் செய்து வந்த பெருமக்கள் எல்லோரும் எத்தகைய ஊதியமும் பெறாமல் வேலை பார்த்து வந்தமையாலும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தமை யாலும் அவர்கட்கு ஒழிவு கிடைக்கும் காலத்தே தான் சபை கூடுவது வழக்கம்.எனவே, பகல் இரவு என்ற வேறுபாடில்லாமல் எந்த நேரத்திலும் கிராம சபைகள் கூடிக் காரியங்களைச் செய்து வந்தன என்று தெரிகிறது. நாகப் பட்டினம் தாலூகாவிலுள்ள செம்பியன் மாதேவி என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டொன்று,1 அவ்வூர்ச் சபையார் இரவில் கூட்டம் நடத்துவதில்லை என்று தீர்மானஞ் செய்தனர் என்று கூறுகின்றது. அங்ஙனம் முடிவு செய்தமைக்கு இரண்டு காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. அவை, இரவில் நடத்தபெறுங்காரியங்கள் திறமையாகச் செய்து முடிக்கப் படாமையும், இரவில் விளக்கெரித்தற்கு ஏற்படும் பெருஞ் செலவுமேயாம். இதனால் இரவிலும் சபை கூடும் வழக்க மிருந்தமை காண்க. சபைக்குரிய பணிமக்கள் கிராம சபையார் பணித்தவற்றைச்செய்யும் பணிமக்கள், மத்தியதன், கரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான் (தண்டல்), அடிக்கீழ் நிற்பான் என்போர்.2 இவர்கள் எல்லோரும் கிராம சபையில் ஊதியம் பெற்றுப் பணிபுரிவோர் ஆவர். இவர்களுள், கரணத்தான் என்பவன் கணக்கு எழுதுபவன் ஆவன். நல்வழியில் ஈட்டிய பொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக நியமனஞ் செய்வது வழக்கம். இவன், தான் எழுதிய கணக்கைச் சபையார் விரும்பிய போது, தானே நேரில் காட்டல் வேண்டும். இவன் சபையாரது நன்மதிப்பைப் பெறாவிட்டால் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ்வேலை அளிக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு நானாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழு கழஞ்சு பொன்னும் இரண்டு கூறையுங் கரணத்தானுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுவது வழக்கம். இவன், தான் எழுதிய கணக்கை அவ்வாண்டின் இறுதியில் சபையாரிடம் கொடுக்கும் போது, சிவக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் ஏந்தி, உறுதி மொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின், கணக்கனுக்கு ஏழு கழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேர்ந்து விடுமாயின், சபையாரால் பத்துக் கழஞ்சு பொன் தண்டம் விதிக்கப்படும்.1 பேரூர்களில் கணக்கனுக்கு உதவியாகக் கீழ்க் கணக்கனும் இருந்துள்ளான். ஒவ்வொரு வாரியத்திற்கும் தனித்தனிக் கணக்கன் இருந்தனன் என்று தெரிகிறது. பாடிக்காப்பான் என்போன், கலகம், திருட்டு முதலான குற்றங்கள் நிகழாதவாறு ஊரைக் காத்து வருபவன். இவ்வேலை பார்த்து வந்த பாடிகாவலர்க்கும் இவர்களுடைய தலைவனாகிய நாடுகாவல் அதிகாரிக்கும் ஊதியம் அளித்தற் பொருட்டு ஆண்டு தோறும் ஒவ்வொரு ஊரிலும் பாடிகாவல் என்ற வரியொன்று வாங்கப்பட்டு வந்தமை அறியத் தக்கதாகும். பழைய செப்பேடுகளில் இவ்வரி நாடுகாவல் என்ற பெயருடன் காணப்படுகிறது. தண்டுவான் என்போன், கிராமத்திலுள்ள மக்கள் அரசாங்கத்திற்கும் ஊர்ச் சபைக்கும் கொடுக்க வேண்டிய நில வரியையும் பிற வரிகளையும் வசூலிப்பவன். இவனைத் தண்டல் என்று வழங்குவதும் உண்டு. அடிக்கீழ் நிற்பான் என்போன், ஊர்ச்சபையார்க்குக் குற்றேவல் புரியும் பணிமகன் ஆவன். மத்தியதன் என்போன், கிராமசபையார் கூட்டம் நடத்துமிடத்து, அங்குச் செய்யப்படும் முடிவுகளை அவர்கள் நடுவிலிருந்து அவர்கள் கூறியபடி நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதுபவன். இவன் சபையின் அமைச்சன் நிலையில் இருந்தவனாதல் வேண்டும். சில ஊர்களில் இவனே கணக்கெழுதும் கரணத்தானாகவும் இருப்பதுண்டு.2 கிராம சபைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எத்தகைய தொடர்பு மின்றி நடுநிலைமை வகித்து வந்த காரணம் பற்றி இவன் மத்தியதன் என்று வழங்கப்பட்டனன் போலும். இவனும் கணக்கனைப் போலவே ஊதியம் பெற்று வந்தவன் ஆவன். கிராம சபைக்குரிய வருவாய் ஊர்தோறும் சபையார் தம் செலவின் பொருட்டுப் பொதுமக்களிடம் ஒரு வரி வாங்கி வந்தனர். இவ்வரி சபா விநியோகம் எனவும் ஊரிடு வரிபாடு எனவும் அந்நாட்களில் வழங்கப்பட்டுள்ளது. இக்காலத்திலும் பஞ்சாயத்து போர்டும், யூனியனும் முனிசிபாலிட்டியும் முறையே கிராமங்களிலும் பேரூர்களிலும் நகரங்களிலும் மக்களிடம் வரி வாங்கிப் பல்வகைப் பட்ட பொதுப்பணிகள் புரிந்துவருதலைக் காண்கிறோம். ஆனால் மக்களிடம் அமைதியும் மனநிறைவும் காணப்படவில்லை. முற்காலத்தில் மக்கள் இந்நிலையில் இருந்திலர் என்பது திண்ணம். கிராம சபைக்குரிய கடமைகள் கிராம காரியங்களையும் கடமை காரியங்களையும் செய்து நல்லோர் வாழ்வும் , தீயோர் அடங்கி யொடுங்கவும் காண்பதே கிராம சபையின் கடமையாகும். இதனை நிறைவேற்றுவதற்குக் கிராம சபையார் அவ்வவ்வூர்க்கு இன்றியமையாத உட் கழகங்கள் சிலவற்றை அமைப்பது வழக்கம். இவ்வுட்கழகங்களே வாரியங்கள்என்று முற்காலத்தில் வழங்கி வந்தன என்பதும், இவற்றைக் கிராம சபையார் எவ்வாறு அமைத்து வந்தனர் என்பதும் முன்னர் நன்கு விளக்கப்பட்டுள்ளன. ஈண்டு இவ்வாரியங்களின் கடமைகள் யாவை என்பதை ஆராய்வோம். நியாய விசாரணை செய்து முடிவு கூறுவதும், அறங்களை ஏற்று நடத்துவதும், அறநிலையங்களைக் கண்காணிப்பதும் சம்வற்சரவாரியரது கடமைகள் ஆகும். ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமையாகும். புன்செய் நிலங்களையும் தோட்டங்களையும் பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுதல் தோட்ட வாரியரது கடமையாகும். ஊரில் வழங்கும் பொன்நாணயங்களை ஆராய்வது பொன்வாரியரது கடமையாகும். அரசனுக்குக் குடிகள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிற வரிகளையும் வாங்கி அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் அனுப்பும் கடப்பாடுடையவர் பஞ்சவாரவாரியர் ஆவர். இவ்வாரியங்களே யன்றித் திருப்பாற் கடல் கல்வெட்டில்1 கழனி வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழி வாரியம், குடும்பு வாரியம் ஆகிய வாரியங்களும் குறிக்கப் பட்டிருக்கின்றன. நீர் நிலங்களாகிய நன்செய் நிலங்களைக் கவனித்துவேண்டியவற்றைச் செய்தல் கழனி வாரியரது கடமையாகும். ஊர்க்கணக்கரும் மத்தியதரும் எழுதும் கணக்குகளை ஆராய்ந்து உண்மை காண்பது கணக்கு வாரியரது கடமை யாகும். கலிங்குகளில் நீரைத் தேக்கி அவரவர்க்கேற்பட்ட முறை நாட்களில் கால்வாய்களில் தண்ணீர் விடுவது கலிங்குவாரியரது கடமையாகும். அவ்வவ்வாண்டில் குடிகள் பயிரிடும் நிலங்களைக் கோல் கொண்டு அளந்து விளைநிலங்களின் பரப்பையும் விளையும் பொருளையும் கணக்கனைக் கொண்டு கிராமக் கணக்கில் எழுதி வைப்பது தடிவழி வாரியரது கடமை யாகும். ஒவ்வொரு குடும்பிலும் வாரியத்தில் உறுப்பினராதற்குத் தகுதி யுடைவர்களைத் தெரிந்தெடுத்துரைப்பது குடும்பவாரியரது கடமையாகும். குடும்பு வாரியம் என்பது இக்காலத்திலுள்ள அட்ஹாக் (Adhoc) கமிட்டி போன்றது எனலாம். இவ்வாரியங்கள் எல்லாம் அவ்வூர்களின் பெருமை சிறுமைகளுக்கேற்ப மிகுந்தும் குறைந்தும் இருந்தன என்று தெரிகிறது. அன்றியும், ஒவ்வோர் ஊரிலும் சூழ்நிலைக் கேற்ப இன்றியமையாத வாரியங்களை அமைப்பது தான் பழைய வழக்கமேயல்லாமல் எல்லா ஊர்களிலும் எல்லா வாரியங்களையும் அமைப்பதில்லை என்பது முன்னர் விளக்கப் பட்டது. சில ஊர்களில் சம்வற்சர வாரியம் ஒன்றே கிராம காரியங்கள் எல்லாவற்றையும் செய்து வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. இனி, வேறு ஊர்களில் காணப்படும் சில கல்வெட்டுக் களில், கிராம சபையார் உட்கழகங்களாகிய வாரியங்களை அமைப்பதில் சில திருத்தங் களும் நிகழ்ச்சி முறை பற்றிய விதிகளும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றையும் ஈண்டு ஆராய்வாம். செங்கற்பட்டு ஜில்லா பிள்ளைப் பாக்கத்திலுள்ள கல்வெட்டொன்று1, திருநின்றவூர்க் கிராம சபையார் முதற்பராந்தக சோழனது 19 - ஆம் ஆட்சியாண்டாகிய கி. பி. 926 ல் பாகூர்த் திருவடி என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் நிறைவேற்றிய முடிவுகள் சிலவற்றைக் கூறுகின்றது; அவற்றை அடியிற்காண்க.2 1. ஒவ்வொரு வாரியத்திலும் முன்னே உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பெறாத இருவர் தவறாமல் தெரிந்தெடுக்கப் பெறுதல் வேண்டும். 2. நிலவரிகள் எல்லாம் வாரியத்தின் மூலமாகச் செலுத்தப்பெறுதல் வேண்டும். 3. நிலவரி செலுத்தப்படாத நிலங்களைக் கிராமசபையார் சபைப் பெருவிலையில் விற்று, உரிய வரிப் பொருளை அரசாங்கப் பொருள் நிலையத்தில் சேர்ப்பித்தல் வேண்டும் 4. இந்த விதிகளைப் பொருட்படுத்தாமல் முரண்பட்டு நடப்போர்க்கு நாள் ஒன்றுக்கு ஒரு மஞ்சாடி பொன் தண்டம்விதித்து, அதனை உரிய காலத்தே தவறாமல் வசூலித்தல் வேண்டும். 5. மத்தியதனுக்குத் திங்கள் ஒன்றுக்கு ஒரு கழஞ்சு பொன்னும் ஆறு திங்களுக்கு ஒரு முறை உடுத்திக் கொள்ளுதற்கேற்ற உடைகளும் கொடுத்தல் வேண்டும். தஞ்சாவூர் ஜில்லா சீகாழி தாலுகாவிலுள்ள தலை ஞாயிறு என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டொன்று3, கிராம சபையின் அமைப்பைப்பற்றி மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1185 -ஆம் ஆண்டில் அனுப்பிய உத்தரவு ஒன்றைக் கூறுகின்றது. அதில், 1. இவ்வாண்டுமுதல் சபை வாரியத்திற்கு உறுப்பினர் களாகத் தேர்ந்தெடுக்கப்பெறுவோர் இதற்குமுன் பத்து ஆண்டுகள் அதில் உறுப்பினராக இருந்திருத்தல் கூடாது. 2. சிறந்த கல்வியறிவு உடையவர்களாகவும் நடுவு நிலைமை யுடைவர் களாகவும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களாகவும் இருத்தல் வேண்டும். 3. கடந்த ஐந்தாண்டுகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் களின் உறவினர்கள் உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தற் குரியரல்லர். 4. உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பெற்றோர் ஊர்மக்களிடம் வரி வாங்குதலில் முறைதவறி நடப்பின் தண்டிக்கப் பெறுவர் என்ற விதிகள் இடம் பெற்றுள்ளன. தஞ்சாவூர் ஜில்லா நன்னிலம் தாலூகா அய்யம் பேட்டைக் கோயிலி லுள்ள ஒரு கல்வெட்டிலும்1 அதற்கு அண்மையில் உள்ள இராப்பட்டீச்சுரங் கோயிற் கல்வெட்டொன்றிலும்2 நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் அதற்கு முன் பத்தாண்டுகள் வரையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறாதவர்களுமே கிராம சபையிலுள்ள வாரியங்களில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கு உரிமை யுடையவர் ஆவர் என்னும் மூன்றாங் குலோத்துங்க சோழனது உத்தரவு ஒன்று வரையப் பட்டுள்ளது. இது நுளம்பாதராயன் என்ற அரசியல் அதிகாரி ஒருவன் விண்ணப்பித்துக் கொண்டவாறு கி. பி. 1190 -ல் மூன்றாங் குலோத்துங்க சோழன் அவ்வூர்ச் சபையார்க்கு அனுப்பிய உத்தரவு என்று தெரிகிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகா காமராச வல்லியிலுள்ள கல்வெட்டொன்று3 அவ்வூர் மகா சபையார் முன்பு பண்ணின வியவதைப்படியே சம்வத் சரவரணமாக ஆமென்றாரைக்கொண்டு கிராமகாரி யஞ் செய்யக் கடவோமாக எனக் கி. பி. 1232 -ஆம் ஆண்டில் முடிவு செய்தார்கள் என்று உணர்த்துகின்றது. இதனால் ஓராண்டு முடிய ஊர்ச் சபையிலிருந்து தொண்டு புரிவதற்கு உடன் பட்டவர்களையே வாரியப் பெருமக்களாகத் தெரிந்தெடுத்தல் வேண்டும் என்பது மகாசபையாரின் கருத்தாதல் காண்க. நாகப்பட்டினந் தாலூகா செம்பியன்மாதேவிக் கல்வெட்டொன்றில்1 கிராம சபையிலுள்ள வாரியங்களில் உறுப்பினராயமர்ந்திருப்பவர்களை ஐந்து ஆண்டுகளுக்குள் மறுபடியும் உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தல் கூடாது என மகா சபையார் கி. பி. 1233 -ல் முடிவு செய்தமை காணப்படுகின்றது. தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணந் தாலூகாவிலுள்ள சேய்ஞலூரில் காணப்படும் கல்வெட்டொன்று, அவ்வூரில் வாரியம் அமைப்பது பற்றியும் கடமை முதலியற்றை வசூலிப்பது பற்றியும் சபா விநியோகம் என்னும் வரி வாங்கிச் செலவிடுவது பற்றியும் அவ்வூர்க்கோயில் சபையார் செய்த முடிவுகளைத் தெரிவிக்கின்றது. மூன்றாம் இராசராச சோழனது ஆட்சியில் கி. பி. 1245 - ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முடிபுகளைக் கூறும் இக்கல்வெட்டு, அக்காலத்து ஊராட்சி நிலையை நன்குணர்த்து வதாயிருத்தலால் இதனை அடியிற் காண்க. (1) வதி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு முப்பதாவது கன்னிநாயற்று பூர்வபக்ஷத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற சித்திரை நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மிழலை நாட்டு சேய்ஞலூர் உடையார் விவேவர தேவர் கோயில். (2) மூல பருஷையார் கூட்டங் குறைவறக் கூடியிருந்து கிராம காரியம் வியவதை பண்ணினபடி; நம்மூர்க் கூட்டம் இடுமிடத்து ஒரு ஸம்வற்சரங் கூட்டஞ் செய்தார் அஞ்சாம் வற்சரஞ் செய்யவும் புத்ரர்கள் நாலாம் வற்சரஞ் செய்யவும் ப்ராதாக்கள் மூன்றாம் வற்சர (3) ஞ்செய்யக் கடவதாகவும் அனாதியாக வியவதை யுண்டாகையில் இந்த வியவதைப்படியே செய்யவும். இப்படி செய்யுமிடத்து நாற்பது வயசில் தாழா தாரைப் பார்த்து இடவும் இப்படி கூட்டம் இடுமிடத்து ஊராகத் திரண்டிருந்து இராஜ கீய (4) மான நாளில் பூர்வபுருஷர்கள் செய்த படிக்கீடாக ஆமென்ன இடக்கடவதாகவும் - இப்படி தவிர முதலிகளுடனே கூடி நின்று உள்வரிக் கூட்டம் புகுதல் வியவதைப் படியைத் தவிரப் புகுதல் செய்தாருண்டாகில் கிராம துரோகிகளா யிவர்களை ர்வவஹரணம் (5) பண்ணக் கடவதாகவும். இப்படி கூட்டஞ் செய்யுமிடத்து சம்வற்சர வரணமாகச் செய்யவும். மேற்படநின்றாருண்டாகில் கிராம துரோகிகளாய் இப்படி தண்டிதராகக் கடவர்களாகவும். இப்படி வியவதைப்படி கூட்டஞ் செய்யுமிவர்கள் நம்மூர்க் கடமை குடிமையும் ச (6) பா வினியோகமும் வரிக் கொள்ளுமிடத்து ப்ராப்த மானபடிக்கு மேற்பட்ட வரிக்கொள்ளா தொழியக் கடவர்களாகவும். சபா வினியோகம் குடிமையுடன் கூட்டாதே தனியே வரிக் கொண்டு கணக்கனுக்கு நியோகமெழுதிக் குடுத்து நியோகப்படியே செலவழிக்கக்கடவ (7) தாகவும், செலவழிக்கு ......... க்கு ஒரு பொருளுக்கு இரண்டாயிரங் காசுக்கு மேற்பட்ட துண்டாகில் மகாசபாநியோக மெழுதிக்கொண்டு செலவழிக்கக் கடவர்களாகவும். இப்படி தவிரச் செலவழிந்ததுண்டாகிலும் ஏறவரிக் கொண்ட துண்டாகிலும் வரிக்கோளுக்கு (8) நியோக மெழுதின சபை..... கவாசறுதியாக ஒன்றுக்கு அஞ்சாக வந்த காசும் பேர்வழிசிகைகிடந்த பேர்களிரட்டியாக வந்த காசும் தண்டி சபா விநியோகத்துக்குச் செலவழிக்கக் கடவதாகவும் ஊர்க்கணக்கும் வாரியமும் குடும்பும் ஆண்டுமாறி நியோகப்படி நிற்கக் கட (9) வதாகவும் - மூலபருஷையார் எழுதின வியவதை இவ்வூருடையார் திருவிரவீவர முடையார் கோயில் திரு நடைமாளிகையிலே இப்படி கல்வெட்டக் கடவதாக நிசயித்து இப்படி வியவதை பண்ணினோம்; பணிப் பணியால் ஊர்க் கணக்கு சாத்தனூருடையான் பண்டித (10) ப்ரியன் எழுத்து. இவை பணிப் பணியால் ஊர்க்கணக்கு சேய்ஞலூருடையான் அலங்காரப் பிரியன் எழுத்து. இவை பணிப்பணியால் ஊர்க் கணக்கு இலங்கூருடையான் மூலபருஷைப்ரியன் எழுத்து. இவை பணிப்பணியால் ஊர்க்கணக்குக் காட்டுடையனார் பட்டப்ரி (11) யன் எழுத்து வதிஸ்ரீ. சேய்ஞலூர் மகாசபையார் கிராம காரியம் செய்யு மிடத்துப் பின்பற்றி நடத்தற்குரிய விதிகள் இக்கல்வெட்டில் தெளிவாக வரையப் பட்டிருக் கின்றன. இவ்விதிகள், அவ்வூர்த் திருக்கோயில் காரியங்களைக் கண்காணித்துவந்த மூலபருஷையார் என்ற கழகத்தார் கூட்டங் குறைவறக் கூடியிருந்து அமைத்தனவாகும். ஊர்ச்சபையார் கூடி அமைக்க வேண்டிய கிராம ஆட்சிக்குரிய விதிகளை மூலபருஷையார் ஆராய்ந்தமைத் திருத்தலை நோக்குமிடத்து, ஊர்ப்பொது மக்களுக்கு இவர்களுடைய உள்ளத் தூய்மையிலும் ஆட்சித் திறமையிலும் சிறந்த நம்பிக்கை ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. எனவே, அரசாங்கத்தின் தொடர் பில்லாமல் கிராம ஆட்சிக்குரிய விதிகள் அனுபவமும் கல்வியறிவும் முதிர்ந்த உள்ளுர் அறிஞர்களாலும் அமைக்கப் பெறுவதுண்டு என்பது நன்கு வெளியாகின்றது. இனி, சேய்ஞலூர் மூலபருஷையார் அமைத்த விதிகளை ஆராய்வோம். 1. ஓராண்டில் ஊர் வாரியத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் தம் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மறுபடியும் பழைய விதியின்படி ஐந்தாம் ஆண்டில்தான் வாரிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும். அவர் களுடைய புதல்வர்கள் நான்காம் ஆண்டிலும் உடன் பிறந்தார் மூன்றாம் ஆண்டிலும் அதில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறலாம். 2. நாற்பது வயதுக்குக் குறையாதவர்களே வாரியபெரு மக்களாகத் தேந்தெடுக்கப்பெறுதல் வேண்டும். 3. இவ்வாறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்குமிடத்து அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட நாளில் ஊர்ச்சபையார் ஒருங்கே திரண்டு, முன்னோர்கள் மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி நடப்போமென்று உறுதி கூறியவர்களையே தேர்ந்தெடுத்தல் வேண்டும். 4. அரசியல் அதிகாரிகளின் துணைக்கொண்டு மறைமுகமாக உறுப்பினர் களானவர்களும் விதிகளுக்கு முரணாக உறுப்பினராக அமர்ந்தவர்களும் இருந்தால் அவர்கள் கிராம துரோகிகள் ஆவர். அவர்களுடைய எல்லா வகையான பொருள்களும் பறிமுதல் செய்யப்படுதல் வேண்டும். 5. தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்கள் விதிப்படி ஓராண்டு முடிய அலுவல் பார்த்தல் வேண்டுமாதலின் ஆண்டுதோறும் வாரியத்திற்குப் புதிய உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் வேண்டும். ஓராண்டிற்குமேல் உறுப்பினரா யிருப்பதற்கு முயலுவோர் கிராம துரோகிகளாகி அக்குற்றத்திற்குரிய தண்டனைக்கு உட்படவேண்டும். 6. இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பெற்ற வாரியப் பெருமக்கள், ஊரில் கடமை, குடிமை, சபா விநியோகம் ஆகிய வரிகளை வாங்குமிடத்து, அவரவர்கள் நியாயமாகக் கொடுக்கவேண்டிய வரித் தொகைக்குமேல் அதிகமாக எதனையும் வாங்குதல் கூடாது. 7. சபா விநியோகம் என்ற வரியைக் குடிமக்கள் கொடுக்கவேண்டிய பிற வரிகளோடு சேர்த்து வாங்காமல் தனியாக வாங்கி ஊர்க்கணக்கனுக்கு எழுத்து மூலமாக உத்தரவு அனுப்பிச் செலவிடல் வேண்டும். 8. ஒரு காரியம் பற்றி இராண்டாயிரம் காசுகளுக்கு மேல் அதிகமாகச் செலவிட நேருமாயின், மகாசபையாரின் அனுமதியை முன்னரே பெறுதல் வேண்டும். 9. இவ்விதிகளின்படி செலவழிக்காமல் இவற்றிற்கு முரண்படச் செலவழித்ததுண்டாயினும், நியாயமாக வாங்க வேண்டிய வரிக்குமேல் அதிக வரி வாங்கியிருப்பினும் அவற்றிற்குக் காரணவ ரான வாரியப் பெருமக்கள் அத்தொகைக்கு ஐந்துமடங்கு தண்டம் கொடுத்தல் வேண்டும். 10. குடிமக்கள் கொடுக்கவேண்டிய கடமை, குடிமை ஆகிய வரிகளுள் எஞ்சி நிற்கும் தொகையை ஒன்றுக்கு இரண்டாகத் தண்டம் சேர்த்து வசூலித்தல் வேண்டும். 11. மேலே குறிப்பிட்ட தண்டத் தொகைகள் எல்லா வற்றையும் வாங்கி , சபாவிநியோகத்தோடு சேர்த்துக்கொண்டு செலவிடுதல் வேண்டும். 12. ஊர்க் கணக்கனும் வாரியப் பெருமக்களும் குடும்பின் பிரதிநிதிகளும் மகாசபையாரின் உத்தரவின்படி ஆண்டுதோறும் மாறி நிற்றல் வேண்டும். இவ்விதிகள் முன்னோர்கள் நடத்திவந்த பழைய முறையைப் பின்பற்றி அமைக்கப்பெற்றவையே எனினும், ஊரின் சூழ்நிலைக்கு ஏற்ப இன்றியமை யாதன என்று அனுபவத்தால் உணர்ந்து செய்யப்பட்ட சில மாறுதல்களும் உண்டு என்பது ஈண்டு அறியத் தக்கது. வாரியப் பெருமக்கள் மகாசபையாரின் அனுமதி பெறாமல் ஒரு பொருளுக்கு இரண்டாயிரம் காசுகளுக்கு மேல் செலவழித்தல் கூடாது என்ற விதி, ஊர்ச் சபையார் வரிப் பணத்தை நியாய மாகவும் ஒழுங்காகவும் செலவிடுதலில் பெருங்கவனம் செலுத்தி வந்தனர் என்பதை நன்குணர்த்துவதாகும். இதுகாறும் உத்தரமேரூர், திருநின்றவூர், தலைஞாயிறு, அய்யம் பேட்டை, இராப்பட்டீச்சுரம், காமரசவல்லி, செம்பியன் மாதேவி, சேய்ஞலூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் கிராம சபையைப்பற்றிய விதிகளும் பிற செய்திகளும் எடுத்து விளக்கப்பட்டன. அவற்றை நோக்குங்கால் கிராம சபையார் தம் தம் ஊரின் நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதி பெறாமலும் விதிகளை மாற்றவும் இன்றியமையாத புதிய விதிகளைச் சேர்க்கவும் உரிமையுடைய வராயிருந்தனர் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, கிராமங் களில் அந்நாளில் நடைபெற்று வந்தது உண்மையான மக்களாட்சியே என்று ஐயமின்றிக் கூறலாம். ஆனால் அவ்வாட்சி மக்களுள் பெரும்பான்மையோர் விருப்பத்தின் படி நடைபெற்ற ஒரு கட்சியாரின் ஆட்சியன்று என்பது அறியத் தக்கது. இனி, பெரும்பான்மைக் கட்சியினர் ஆட்சி நடத்துவது என்பது மேனாட்டார் முறையாகும். சில நூற்றாண்டுகளாக அம்முறையைக் கையாண்டு அதில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்று வருவதற்குச் சில காரணங்கள் உண்டு. அவை மேனாட்டு மக்கள் எல்லோரும் கல்வியறி வுடையவர்களாயிருத்தலும், அந்நாடுகளில் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட வகுப்பு வேற்றுமையின்மையுமேயாம். கல்வியின்மையும் வகுப்பு வேற்றுமையும் மிகுந்துள்ள எந்த நாட்டிலும் பெரும்பான்மைக் கட்சியினர் நடத்தும் அரசாங்கத்தால் பொதுமக்களுக்குத் தீமையேயன்றி நன்மை ஏற்படாது என்பது திண்ணம். அரசியல் கட்சிகள் எல்லாம் தம் ஆட்சிக் காலத்தில் தம் கொள்கைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளுதல், எதிர்க் கட்சியினரைப் பகைஞராகக் கொண்டு அவர்களை அழிக்க முயலுதல், அவர்களுக்கு நியாயம் வழங்குவதிலும் தடையா யிருத்தல், தம் கட்சியினர் குற்றம் புரிந்த காலத்தும் நியாய விரோதமாக அன்னோர்க்கு ஆதரவளித்தல் தம் கட்சியைச் சார்ந்த மக்களுக்கு ஒழுங்கற்ற வகையில் நலம் புரிந்து அதன் மூலம் தன்னலத்தை மிகுதியாகப் பெருகிக் கொள்ளுதல், கட்சிச் சார்பற்றவர்களாய் அனுபவமும் கல்வியறிவும் திறமையும் படைத்துள்ள பேரறிஞர்கள் ஆட்சியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாமல் செய்தல், இவற்றுள் ஒன்றேனும் இல்லாதவர்கள் தம் கட்சி யினராயிருத்தல் பற்றி அன்னோரைக் கொண்டு ஆட்சி நடத்திப் பொதுமக்கள்பால் வரிகளாகத் திரட்டிய பெரும் பொருளைப் பாழ்படுத்துதல், பொதுவாக அறத்தையும் நாட்டு மக்கள் நலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்தாமல் தம் கட்சி நலம் ஒன்றையே நாடி ஆட்சி புரிதல் ஆகிய செயல்களை மேற்கொண்டு ஒழுகுதலை நாளும் காண்கின்றோம். சோழர் பேரரசில் ஊர்தோறும் பொதுமக்களால் நடத்தப் பெற்று வந்த கிராம ஆட்சியில் இத்தகைய குறைபாடுகளும் தீமைகளும் யாண்டும் காணப்படவில்லை. அதற்குக் காரணம் அக்காலத்தில் நடைபெற்றுவந்த கிராம ஆட்சி, பெரும் பான்மைக் கட்சியினரின் ஆட்சியாயில்லாமல், கட்சி மனப் பான்மையற்ற பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்ந் தெடுக்கப் பெற்ற நடுநிலை திறம்பா நல்லறிஞர் குழுவின் ஆட்சியாயிருந் தமையேயாகும், ஆகவே, சோழர் பேரரசில் கிராமங்களில் நடைபெற்ற ஆட்சியே உண்மையான மக்கள் ஆட்சி என்பது நன்கு தெளியப்படும். இனி, சில ஊர்களில் விளைநிலங்களுள் ஒரு பகுதி திருக் கோயிலுக்குரிய தேவதானமாகவும் மற்றொரு பகுதி பயிரிடும் குடி மக்களுக்குரிய வெள்ளான் வகையாகவும் இருந்துள்ளன. இத்தகைய ஊர்களில் கிராம ஆட்சியை நடத்துவதற்கு இரு வேறு சபைகள் இருந்தன என்று தெரிகிறது. இவ்வுண்மையை, ஆமூர்க்கோட்டத்துப் படுவூர் நாட்டுத் தேவதாநம் திருவிடவந்தை சபையோமும் ஊரோமும் கைய்எழுத்து1 எனவும். இப்பரிசு ஒட்டிக் கொடுத்தோம். முற்சொல்லப்பட்ட திருவிடவந்தை சபையோமும் ஊரோமும் ஆக இரண்டு திறத்தோம்2 எனவும், விலை ஆவணஞ் செய்து கொடுத்தோம்.......... வானவன் பேரரையனுக்குத் திருநெய்த் தானத்து சபையோமும் ஊரோமும்3 எனவும் போதரும் கல்வெட்டுப் பகுதிகளால் நன்குணரலாம். ஒரே கிராமத்திலிருந்த இவ்விரு சபைகளும் தம் கிராம காரியங்களைத் தனித்தனியே நடத்தி வந்தன என்பது, பல கல்வெட்டுக்களால் தெள்ளிதின் அறியக் கிடக்கிறது.4 எனினும், சில காரியங்களை இவ்விரு திறத்துச் சபைகளும் ஒருங்கு சேர்ந்து நிறைவேற்றிய செய்திகளும் கல்வெட்டுக்களில் அருகிக் காணப்படுகின்றன.5 இங்ஙனமே கிராம சபைகளும் சேர்ந்து சிற்சில காரியங்களை நிறைவேற்றுவ துண்டு என்பது சில கல்வெட்டுக்களால் புலனாகின்றது.6 தஞ்சாவூர் ஜில்லா சாத்தமங்கலம் என்ற ஊரில் ஒரு பகுதி சிவன் கோயிலுக்குரிய தேவதானமாகவும் மற்றொரு பகுதி ஜெயினர்களது பள்ளிச் சந்தமாகவும் இருந்தமையால் அங்குள்ள இருவகை மக்களும் இரண்டு ஊர்ச்சபைகள் அமைத்து அவ்வப் பகுதிக்குரிய காரியங்களைச் செய்து வந்தனர் என்பதும் இவ்விரு சபைகளும் ஒன்றுபட்டு ஒரு குளமும் நந்தவனமும் அமைத்தற்கு ஊர்ப் பொது நிலத்தை வழங்கினர் என்பதும் திருத்தருப்பூண்டியிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றன.1 இருவேறு சமயத்தினரால் நடத்தப் பெற்று வந்த இரண்டு சபைகளும் ஒருங்கு கூடி இங்ஙனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இதுகாறும் எடுத்து விளக்கியவாற்றால் நிலவுரிமை பற்றிச் சில ஊர்களில் இருசபைகள் இருந்தன என்பதும், அவை பெரும்பாலும் தனித்தனியாகவே தம் கிராம காரியங்களைச் செய்து வந்தன என்பதும், இன்றிமையாத சிற்சில காரியங்களை மாத்திரம் அவ்விருசபைகளும் சேர்ந்து நிறைவேற்றியுள்ளன என்பதும் நன்கறியக் கிடத்தல் காண்க. இனி, ஊராள்வான், நகரமாள்வான் என்ற தலைவர்கள் முறையே கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்துள்ளனர் என்பதும், அன்னோர் அவ்வவற்றின் சபை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு என்பதும் சில கல்வெட்டுக்களால்2 தெரிகின்றன. ஆனால், அவர்கள் அவ்வாட்சியுரிமையை எங்ஙனம் பெற்றனர் என்பதும், அவர்களுடைய கடமை இன்னது என்பதும், அவர்களுக்கும் ஊராட்சியும் நகராட்சியும் நடத்தி வந்த சபை களுக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு எத்தகையது என்பதும் நன்கு புலப்பட வில்லை. அறப்புறங்களை ஏற்று நடத்துதல், அவற்றை ஏற்று நடத்து வோரைக் கண்காணித்தல் ஆகிய இரண்டில் ஒன்றை ஊர்ச்சபைகளும் கிராம சபைகளும் தமக்குரிய சிறந்த கடமைகளுள் ஒன்றாகக் கருதித் தவறாமல் மேற்கொண்டிருந்தன என்பது ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களால் தெள்ளிதின் உணரக்கிடக்கின்றது. முன்னோர்கள் அமைத்துச் சென்ற அறச் செயல்களுக்குரிய ஆவணங்களைப் பாதுகாத்தல், அவ்வறங்கள் அன்னோர் கருத்திற்கு முரண்படாமல் ஒழுங்காக நடத்தப்பட்டு வருகின்றனவா என்பதைக் கண்காணித்தல் ஆகிய செயல்களில் ஊர்தோறும் அமைந்த சபைகள் கண்ணுங் கருத்துமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, முன்னோர்கள் அமைத்திருந்த அறச் செயல்கள் நிறுத்தப்பட்டுப் போகாமல் அவற்றைக் கிராம சபைகள் பாதுகாத்து வந்தன என்று ஐயமின்றிக் கூறலாம். பொதுமக்கள் நலத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய பெருங் காரியங் களுக்காக அரசாங்கத் தொடர்பின்றித் தாமே தனி வரி யொன்று விதித்து வசூலித்துக்கொள்ளுதல், நாட்டிலுள்ள செல்வர்களிடத்தும், கோயில் களிடத்தும் பெரும் பொருளைக் கடன் வாங்குதல் ஆகிய உரிமைகள் இச்சபைகளுக்கு இருந்தன. இதனை நோக்குமிடத்து, ஒவ்வொரு ஊரும் சுயேச்சை பெற்ற ஒரு தனிக் குடியரசின் கீழ் அமைந்திருந்தது போல் நிலவியது எனலாம். அன்றியும், ஊர்ப் பொதுமக்கள் இச்சபைகள் பால் எத்துணை நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பது இதனால் நன்கறியக் கிடத்தல் காண்க. இனி, கிராமங்களிலிருந்த வேறு குழுவினர்களையும் ஆராய்வோம். அவர்கள் மூலபருடையார், சாத்தகணத்தார், காளிகணத்தார், கிருஷ்ண கணத்தார், குமாரகணத்தார், மணிக்கிராமத்தார், வளஞ்சியர், சங்கரபாடியார், பன்மாகேச்சுரர் என்போர். அவர்களுள் மூலபருடையார் என்போர் திருக்கோயிற் காரியங்களை நடத்தி வைத்தற்குத் தேவதான ஊர்களிலுள்ள சபையார் அமைத்திருந்த ஓர் உட்கழகத்தினர். இக்கழகத்தில் எத்தனைபேர் உறுப்பினராயிருந்தனர் என்பது இப்போது தெரியவில்லை. சாத்தகணத்தார் என்போர் கிராமங்களில் ஐயனார் என்று இந்நாளில் வழங்கும் சாத்தனாரது கோயிலின் நாள்வழிபாடு, ஆண்டுவிழா இவற்றை நிகழ்த்தி வந்த ஒரு நிர்வாகக் குழுவினர், காளிகணத்தார் என்போர் கிராமங் களிலுள்ள காளிகோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்தி வந்த ஒரு கூட்டத்தினர். கிருஷ்ணகணத்தார் என்போர் ஊர்களிலுள்ள கிருஷ்ணன் கோயிலை நிர்வகித்து வந்த ஒரு குழுவினர். குமாரகணத்தார் என்போர் முருகவேள் கோயிலைப் பரிபாலித்து வந்த ஒரு கூட்டத்தார். இங்கு எடுத்துக்காட்டப் பெற்ற கோயில் நிர்வாகக் குழுவினரைக் கணப்பெருமக்கள் என்று சிறப்பித்து அந்நாளில் வழங்கியுள்ளனர். வளஞ்சியர் முதலான எஞ்சியுள்ள குழுவினரைப் பற்றிப் பின்னர் உரிய இடங்களில் விளக்கப்படும். இனி, ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நிலவிய சபையைப்போல் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சபை, அந்நாட்டின் பொதுக்காரியங் களைக் கவனித்து நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது என்பது கல்வெட்டு களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. நாட்டிலுள்ள எல்லா நகரசபைகளின் பிரதிநிதிகளையும் கிராம சபைகளின் பிரதிநிதி களையும் தன்னகத்து உறுப்பினராகக் கொண்டதே இந்நாட்டுச் சபையாகும். மாநாட்டுக் கூட்டம் நடைபெறும் போது ஒவ்வோரூரின் பிரதிநிதியோடும் அவ்வவ்வூரின் கணக்கரும் அங்கு இருத்தல் வேண்டுமென்று தெரிகிறது.1 நாட்டுச் சபையார் தாமே அறச்செயல்கள் புரிந்தும் அறப்புறங்களை ஏற்று நடத்தியும் வந்தமைக்குக் கல்வெட்டுக்களில் ஆதாரங்கள் காணப்படு கின்றன.2 உத்தம சோழன் காலத்திலிருந்த சிற்றரசனாகியபழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பான், செம்பியன் விறை நாட்டுக்கோன் என்ற தலைவனுக்குக் காணியாக அவன் பிறந்த உறத்தூரில் சில நிலம் வழங்க வேண்டுமென்றும், அதற்கு ஆண்டொன்றுக்கு இருபத்தைந்து பொன் மாத்திரம் வரி வாங்க வேண்டுமென்றும், நிலங்களுக்குத் தரம் வகுத்துப் புதிய வரி விதிக்க நேருங்கால் அவன் காணிக்கு வரியுயருமாறு தரம் வகுக்கக்கூடாதென்றும், தன் ஆட்சிக்குட்பட்ட நாடாகிய குன்றக் கூற்றத்திலிருந்த நாட்டுச்சபைக்கு ஓர் உத்தரவு அனுப்பிய செய்தி, திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகா மேலைப் பழுவூரிலுள்ள ஒரு கல்வெட்டில் உளது.3 அங்ஙனமே அந்நாட்டுச் சபையார் நடந்து கொண்டமை அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இதனால் நிலங்களுக்குத் தரம்வகுத்தல், வரி விதித்தல் முதலான சிறந்த உரிமைகள் நாட்டுச்சபைகளுக்கு இருந்தமை நன்கு பெறப்படுகின்றது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சயங்கொண்ட சோழமண்டலத்துச் சபையார் கூட்டம் அம்மண்டலத்தில் எல்லா நாடுகளிலுமுள்ள தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம் அகரப்பற்று, மடப்புறம், சீவிதப்பற்று, படைப்பற்று, வன்னியப்பற்று ஆகிய எல்லா நிலங்களுக்கும் வரியில் வேலி ஒன்றுக்கு ஆறு கல நெல் தள்ளி விடவேண்டு மென்று தீர்மானித்ததை அம்மண்டலத்தை அரசாண்ட மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்பான் ஒப்புக்கொண்டு ஓர் உத்தரவு அனுப்பிய செய்தி காஞ்சிமா நகரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணப்படுகின்றது.1 இதனால் மண்டலத்திலுள்ள எல்லா நாடுகளுக்குமுரிய பிரதிநிதிகளைத் தன்னகத்துக் கொண்ட பேரவை ஒன்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் இருந்தது என்பதும், அம் மண்டலப் பேரவை எத்துணைஆற்றல் படைத்து விளங்கியது என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ஊர்தோறும் கிராம சபையும், நாடுதோறும் கிராமசபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய நாட்டுச் சபையும், மண்டலந்தோறும் நாடுகளின் பிரதிநிதிகளை உறுப்பினராகக் கொண்ட மண்டலப் பேரவையும் இருந்தன என்பதும், அவற்றின் துணைகொண்டு இராச்சியத்தில் ஆட்சி இனிது நடைபெற்றுவந்தது என்பதும் நன்கு தெளியப்படும். இனி, அறப்புறங்களை ஏற்று நடத்தி வந்த நாட்டுச் சபையார் அதனை எங்ஙனம் நடத்தி வந்தனர் என்பதும் ஆராயத்தக்கதாகும். வாணகப்பாடி நாட்டின் சிற்றரசனாகிய வாணகோவரையன் வீரவர்மன் என்பான், சண்பை2 யில் உள்ள தான்தோன்றீசுவர முடையநாயனார் திருக்கோயிலுக்குத் தன் முன்னோர்கள் வழங்கியிருந்த இரணவீம மங்கலம் என்ற ஊரோடு புதிய நிபந்தங்களுமளித்து, நாள்வழிபாடு, விழாக்கள் முதலானவற்றை ஒழுங்காக நடத்துமாறுஅக்கோயிலை அந்நாட்டுச் சபையாரிடம் ஒப்புவித்தான். அதனை ஏற்றுக் கொண்ட வாணகப்பாடி நாட்டுச்சபையார் அந்நாட்டிலுள்ள கிராமங் களுள் ஒன்றைக் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமத்தி லுள்ள சபையார் கோயில் காரியங்களைப் பார்த்து வருமாறு ஏற்பாடு செய்தமையோடு அதனைத் தாமும் மேற்பார்த்து வந்தனர். ஆண்டுதோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற வெவ்வேறு கிராம சபையாரே அக்கோயில் காரியங்களை நிர்வகித்து வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.1 இதனால் நாட்டுச் சபைக்கும் கிராம சபைக்கும் எத்தகைய தொடர்பு அக்காலத்தில் இருந்து வந்தது என்பதை நன்கறியலாம். ஊர், கிராமம், நகரம், நாடு, மண்டலம் ஆகியவற்றில் நிறுவப் பெற்றிருந்த பொதுமக்கட் சபைகள் எல்லாம் கூட்டம் நடத்திச் செய்த முடிவுகள் மாத்திரம் ஆங்காங்குக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றனவே யன்றி அவற்றின் நிகழ்ச்சி முறைகள் யாண்டும் வரையப்படவில்லை. அம்முறைகள் அக்காலத்தில் வழிவழியாகக் கையாளப்பெற்று நாட்டில் வழக்கிலிருந்து வந்தமையால் அவற்றை யெல்லாம் கல்வெட்டுக் களில் வரையவில்லை போலும். இச்சபைகள் கூட்டங் குறைவறக் கூடி எல்லோரும் உடன்பட்ட நிலையில்தான் எல்லா முடிவுகளையும் செய்து அவற்றை நிறைவேற்றி வைத்தன வேயன்றி இந்நாளில் நிகழ்வது போல் பெரும்பான்மையோர் கருத்தறிந்து அதற்கிணங்கத் தம் முடிவுகளைச் செய்து நிறைவேற்றவில்லை என்பது அறியத்தக்க தொன்றாம். பொதுவாக நோக்குமிடத்து, கிராம நகர சபைகளின் ஆட்சியில் பொதுமக்கட்குப் பலவகை யான நலங்கள் ஏற்பட்டன என்பது தெள்ளிது. சோழ மன்னர்களும் அச்சபைகள் ஒழுங்காகவும் நடுநிலை தவறாமலும் நடைபெற்று வருமாறு கண்காணித்து வந்தமையோடு தவறு கண்ட விடத்துக் கண்ணோட்டமின்றித் தண்டம் விதித்துத் திருத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுமக்கள் வேறு எந்த வேந்தரது ஆட்சியிலும் முன்னர் அடையாத அத்துணைச் சிறந்த பேறுகளை எல்லாம் சோழ மன்னர்களது ஒப்புயர்வற்ற சீரிய ஆட்சியிலும் அவர்களது மேற்பார்வையில் நடைபெற்று வந்த கிராம நகர ஆட்சியிலும் எளிதில் பெற்று இனிது வாழ்ந்து வந்தனர் என்று கூறலாம்.  3. அரசிறையும் பிற வரிகளும் எந்த அரசாங்கமும் பொருள் வருவாயின்றி நடைபெற முடியாது என்பது யாவரும் அறிந்ததொன்று. ஆகவே, ஆட்சி இனிது நடைபெற வேண்டியும் பொதுமக்கட்குப் பல்வகை நலங்கள் புரிந்து அன்னோரைப் புரத்தற் பொருட்டும் அரசன் தன் இராச்சியத்திலுள்ள குடிமக்களிடம் வரி வாங்குவது இன்றியமையாததாயிற்று. ஒரு நாட்டில் உழவுத் தொழில் புரியும் நிலவுரிமையாளராகிய காணியாளர்களும் வாணிகத் தொழிலை மேற்கொண்ட வணிகர்களும் பல்வேறு வகைப்பட்ட பிற தொழில்களைக் கைக் கொண்டவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லோரிடத்திலும் நடுவு நிலை குன்றாமல் நியாயமான முறையில் அரசன் வரி வாங்க வேண்டியது அவனுடைய கடமையும் உரிமையும் ஆகும். சோழ இராச்சியத்தில் அரசனுக்குரிய வருவாய்களுள் முதன்மை பெற்று நிலவியது நிலவரியேயாம். இதனைக் கடமை எனவும் காணிக்கடன் எனவும் இறை எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நிலவரியொழிந்த பிற வரிகளெல்லாம் குடிமை எனவும் சுங்கம் எனவும் அந்நாளில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வரிகளையும் சோழ மன்னர்கள் தம் நாட்டிலுள்ள குடிகளிடம் வாங்கி வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் நன்கறியப்படுகிறது. இவ்வேந்தர்கள் தம்கீழ் வாழ்ந்த குறுநில மன்னர்களிடம் ஆண்டுதோறும் திறைப் பொருள் வாங்கி வந்தமையும் அறியத்தக்கது. இதுவும் ஒரு பேரரசனுக்குக்குரிய வருவாயுள் ஒன்றேயாம். நிலவரியானது விளை நிலங்களுக்கு அவற்றில் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும் காசுமாகவாதல் வாங்கப்பட்டு வந்தது. இதனை ஊர்தோறும் அமைக்கப் பெற்றிருந்த மகாசபையார், பஞ்சவார வாரியர் மூலமாகக் காணிக்கடன் செலுத்த வேண்டிய குடிமக்களிடமிருந்து ஆண்டுதோறும் வாங்கி ஒருங்குசேர்த்துத் தலைநகர்க்கும் அரசாங்கப் பொருள் நிலையங்களிலிருந்த பிற இடங்களுக்கும் அனுப்பி வந்தனர். இனி, விளை பொருளில் எந்த அளவு அரசாங்கத்திற்குரியதாகக் கணக்கிடப் பெற்று நில வரி விதிக்கப்பட்டது என்பது ஆராய்தற்குரியதாகும். அந்நாட்களில் நிலங்களில் விளைந்த நெல்லை அறு கூறாக்கி அவற்றுள் ஐந்து கூறுகளை வெள்ளான் வகையில் நிலவுரிமையாளராயுள்ள குடிகளுக்கு அளித்துவிட்டு, எஞ்சியுள்ள ஒரு பகுதியை அரசாங்கத்திற்குரிய நிலவரியாக வாங்கி வந்தனர் என்று தெரிகிறது. இவ்வாறு வரி வாங்கும் முறை குடிகளிடம் ஆறிலொரு கடமை வாங்குவதாகும். இம்முறையைப் பின்பற்றி ஆட்சி புரிந்தவர்களே சோழ மன்னர்களும் என்று கூறலாம். இது தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்த பழைய முறையாகும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை என்ற குறட்பாவின் விசேட உரையில் ஆசிரியர் பரிழேலகர், அரசனுக்கு இறைப் பொருள் ஆறிலொன்றாயிற்று. இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலானென்பதறிக எனவும் உறுபொருளும் உல்கு பொருளுந் தன்னொன்னார்த் - தெறுபொருளும் வேந்தன் பொருள் என்ற குறட்பாவின் விசேட உரையில் ஆறிலொன்றொழியவும் உரியன கூறியவாறு எனவும், அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரளவிடல் என்ற குறட்பாவின் விசேட உரையில் அவற்றோடு கூடி வருதலாவது ஆறிலொன்றாய் வருதல்; அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர் போலச் செய்தானையும் கொண்டிருத்தலின், அதனைப் புல்லா ரென்றொழியாது புரளவிட லென்றுங் கூறினார் எனவும் எழுதியிருப்பது உணரற்பாலதாம். இதனால், அரசன் குடிகளிடம் ஆறிலொரு கடமை வாங்குவதுதான் அறநெறி பிழையாததாயும் அருளொடும் அன்பொடும் கூடியதாயு முள்ள முறை என்பது முற்காலத்தில் விளங்கிய பெரியோர்களது கருத்தாதல் காண்க. முதற் பராந்தக சோழனது ஆட்சிகாலத்தில் செங்கற்பட்டு ஜில்லா சோழசிங்க புரத்தில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று அரசற்குரிய நிலவரியாக அக்காலத்தில் வாங்கப்பெற்று வந்தது என்பதை இனிது புலப்படுத்துகின்றது. வெண்பா வடிவத்தில் அமைந்துள்ள அக்கல்வெட்டு,1 அறு கூறினால் புரவு மாயதியும் பொன்னும் பெறுமாறு சோழகோன்......... பறிவையர்கோன் மங்கல வீரசோழன் அத்திமல்லன் றான்கொடுத்தான் முங்கில்வரி என்னும் வயல் என்பதாம். இதனால் அரசனுக்குரிய அரசிறையாகிய நிலவரி ஆறிலொன்று என்பதும், அது புரவு என்று அந்நாளில் வழங்கப் பெற்றது என்பதும் நன்கு வெளியாதல் காணலாம். புரவு என்னும் சொல் விளைநிலம், அரசிறை என்ற பொருள்களைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல் என்பது, நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியா தன்கிளையேம் பெரும2 எனவும், குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே3 எனவும், போதரும். புறநானூற்றுப் பாடற் பகுதிகளாலும், மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென4 என்னும் சிலப்பதிகாரச் செய்யுளடிகளாலும் தெள்ளிதின் உணரக் கிடக்கின்றது. எனவே இச்சொல் முதலில் விளைநிலத்தையுணர்த்து வதாயிருந்து, பிறகு இவ் விளை நிலத்திற்குக் குடிகளிடம் அரசன் வாங்கி வந்த ஆறிலொரு கடமையாகிய அரசிறையைக் குறித்ததாதல் வேண்டும். அரசாங்கத்திற்குரிய வருவாய்களுள் பெரும் பொருள் கிடைப்பதற் கேதுவாயிருந்தது நிலவரியாகிய புரவு வரியேயாகும். இப்புரவு வரிக்காகவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு தனிச்சபை சோழ அரசர்களால் நிறுவப் பெற்றிருந்தமை அறியத்தக்கது. அவை தொண்டை நாட்டுப் புரவுவரித் திணைக்களம்,1 சோழ நாட்டுப் புரவுவரித் திணைக்களம் என்ற பெயர்களையுடையன வாயிருந்தன என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. நெல்லாக வாங்கவேண்டிய புரவு வரியைக் குடிகளிடம் வசூலிப்பது கிராமச் சபையின் உட்கழகங்களுள் ஒன்றாகிய பஞ்சவார வாரியத்தின் கடமை என்பது முன்னர் விளக்கப்பட்டது. இவ்வாரியப் பெரு மக்கள் வெள்ளான் வகையில் காணியாளாயுள்ள குடிகளின் நன்செய் நிலங் களில் விளைந்த நெல்லை அறுகூறாக்கி ஐந்து கூறுகளை அவர்களுக்கு அளந்துவிட்டு எஞ்சியுள்ள ஒரு கூறு மாத்திரம் அரசாங்கத்திற்குரியதாகக் கொண்டு அதனை ஊர்க்களஞ்சியத்தில் சேர்ப்பிப்பது வழக்கம். இதன் பொருட்டு ஊர்தோறும் ஒரு பெருங் களஞ்சியம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஊர்க்களஞ்சியம் என்று கூறுவர். குடிகளுக்குப் பஞ்ச வாரம் அளக்கும் மரக்காலுக்குப் பஞ்சவாரக்கால் என்ற பெயர் முற்காலத்தில் வழங்கி வந்தமை உணரற்பாலதாகும். புரவுவரியால் வந்த நெல்லைக் கிராம சபையார் அரசாங்க உத்தரவின்படி உரிய இடங்களுக்கு அனுப்பி வந்தனராதல் வேண்டும். இனி, நிலவரியே யன்றித் தறியிறை, செக்கிறை, மனைஇறை, அங்காடிப்பாட்டம், தட்டாரபாட்டம், இடைப்பாட்டம், ஈழம் பூட்சி, வண்ணாரப் பாறை, கண்ணாலக்காணம், குசக்காணம், ஓடக்கூலி, நீர்க்கூலி, நாடுகாவல், உல்கு, தரகு, மரவிறை, இலைக் கூலம் முதலான பல்வகை வரிகளும் இருந்துள்ளன என்பது சுந்தரசோழனுடைய அன்பிற் செப்பேடு களாலும் முதல் இராசராச சோழனுடைய ஆனைமங்கலச் செப்பேடுகளாலும் கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது. இறை, பாட்டம், பூட்சி, கூலி என்பன வரியை யுணர்த்தும் மொழிகளாம். இவ்வரிகள் எல்லாம் பொதுவாகச் சில்லிறை, சில்வரி, சிற்றாயம் எனவும் குடிமை எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. இவைகள் எல்லாம் நிலவரியை நோக்கச் சிறு வரி களாகவும் உழவுத் தொழிலல்லாத பல்வகைப்பட்ட பிற தொழில்களைச் செய்து கொண்டிருந்த குடிமக்களிடம் வாங்கப்பெற்று வந்தவையாகவும் இருத்தலால் இங்ஙனம் குறிக்கப் பெற்றன போலும். இவற்றுள் தறியிறை, செக்கிறை, தட்டாரப்பாட்டம், வண்ணாரப்பாறை, குசக்காணம், தரகு என்பன போன்றவை அவ்வத் தொழில் புரிந்தோரிடம் அரசாங்கம் வாங்கிவந்த ஓர் வரியாகும். தறியிறை என்பது சில கல்வெட்டுக்களில் தறிப்புடவை என்றும் காணப்படுகிறது. எனவே, துணி நெய்யும் தொழில் புரிந்தவர்களிடம் ஓர் தறிக்கு ஆண்டொன்றுக்கு ஒரு புடவை வரியாக வாங்கப்பெற்று வந்தது போலும். அங்காடிப்பாட்டம், இடைப்பாட்டம், நாடுகாவல், மரவிறை என்னும் வரிகள் முறையே கடையிறை, இடைப்பூட்சி, பாடிகாவல், மரமஞ்சாடி எனவும் சில கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளன. அங்காடிப் பாட்டம் என்பது, கடைக்காரர்களிடம் வாங்கப் பெற்ற வரியாகும். இடைப் பாட்டம் என்பது ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் வருவாயினால் வாழ்ந்த இடைக்குல மக்களிடம் வாங்கிய வரியாகும். ஈழம் பூட்சி என்பது, பனை தென்னை முதலான மரங்களிலிருந்து கள் இறக்குந் தொழில் செய்தவர் களிடம் வாங்கிய வரியாகும். கண்ணாலக்காணம் என்பது, மணமக்கள் தம் திருமண நாளில் அரசாங்கத்திற்குச் செலுத்திவந்த ஒரு வரியாகும். ஓடக் கூலி என்பது, ஆறுகளிலும் ஏரிகளிலும் ஓடந் தள்ளுவோரிடம் வாங்கிய வரியாகும். நாடுகாவல் என்பது, ஊர்களில் களவு முதலான குற்றங்கள் நிகழாதவாறு காத்தற் பொருட்டுக் குடிமக்களிடம் வாங்கிவந்த ஒரு வரியாகும். இவ்வரி சோழர்களுடைய கல்வெட்டுக்களில் பெரும்பாடி காவல் சிறுபாடி காவல் என்ற இருவகைப்பட்ட வரிகளாகக் குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. மரவிறை என்பது, பயன் தரும் மரங்களை அனுபவித்து வந்த குடிகளிடம் வாங்கிய வரியாகும். இது மமரஞ்சாடி எனவும் சில கல்வெட்டுக் களில் காணப்படுவதால் காயும் பழமும் தரக்கூடிய மரம் ஒன்றுக்கு ஒரு மஞ்சாடிப்பொன் அக்காலத்தில் வரியாக வாங்கப்பெற்று வந்தது போலும். இலைக் கூலம் என்பது,வெற்றிலையைக் கொடிக்கால்களில் பயிரிட்டு விற்பவரிடம் வாங்கிய வரியாகும். உல்கு என்பது சுங்கவரியாகும். உறுபொருளும் உல்கு பொருளும் என்று தொடங்கும் திருக்குறட்பாவின் உரையில் உல்கு பொருள் சுங்கமாகிய பொருள் எனவும் சுங்கம் கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது எனவும் ஆசிரியர் பரிமேலழகர் எழுதியுள்ளவை ஈண்டு உணரற் பாலவாம். ஆகவே, சுங்கம் என்பது வாணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளி லிருந்து கடல்வழியாக மரக்கலங்களிலும் உள்நாடுகளிலிருந்து பெருவழி களின் மூலமாக வண்டிகளிலும் வரும் பண்டங்களுக்கு வாங்கிய வரிப்பொருள் என்பது தேற்றம். கப்பலில் ஏற்றப்படுவனவும் அதிலிருந்து இறக்கப்படுவனவும் ஆகிய பண்டங்களுக்கு அக்காலத்தில் அரசாங்கம் வாங்கிவந்த வரியைச் சுங்கம் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் பட்டினப்பாலை யுரையில் கூறியிருப்பது அறியற்பாலதாம். எனவே, சுங்கத் தினாலும் அந்நாளில் அரசாங்கத்திற்கும் பெரும்பொருள் கிடைத்தது என்பது திண்ணம். இதுகாறும் எடுத்து விளக்கப்பட்ட வரிகள் எல்லாம் சோழ அரசர்கள் தம் நாட்டுக் குடிமக்களிடம் வாங்கிவந்த வரிகளே என்பதை வண்ணாரப் பாறையும் உல்கும் ஓடக்கூலியுமுட்பட்டுக் கோத்தொட்டுண்ணற்பால தெவ்வகைப் பட்டதுங்கோக் கொள்ளாதே இத்தேவரே கொள்ளப் பெறுவதாகவும் என்னும் திருவாலங்காட்டுச் செப்பேட்டுச் செய்தியினால் நன்கறியலாம். எனவே அந்நாளில் நாட்டில் நடைபெற்று வந்த எல்லாத் தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருந்தமை தெள்ளிது. வரிகளின் பெயர்கள் மிகுதியாக காணப்படுவதால் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க வரிகள் அதிகமாயிருந்தன என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் வழங்கி வந்தமையால் வரிகள் அதிகமாகக் காணப்படுகின்றனவேயன்றி வேறில்லை. ஒவ்வொரு வரியும் அந்த அந்தத் தொழில் செய்தவர்களிடம் வாங்கப்பட்டதே யல்லாமல் எல்லா மக்களிடத்தும் வாங்கப்படவில்லை. ஆகவே, எல்லா வரிகளையும் எல்லா மக்களும் செலுத்தவில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப் பெயரால் எல்லாத் தொழிலாளர்களிடத்தும் வரி வாங்கப்படுகிறது. எனவே, இற்றை நாளிலுள்ள தொழில்வரி ஒன்றே, எல்லாத் தொழில் களின் மேலும் விதிக்கப்பட்டுள்ள பல்வகை வரிகளையும் தன்னகத் தடக்கிக் கொண்டிருத்தல் காண்க. இரவு வரி வடஆர்க்காடு ஜில்லா வாலாஜாபேட்டைத்தாலூகாவில் இந்நாளில் திருமால்புரம் என்று வழங்கும் திருமாற்பேறு சிவாலயத்திற்குரிய நிலங்களுக்குப் புரவி வரியாக ஆயிரங்கலம் நெல் ஆண்டுதோறும் அளந்து வந்த புதுப்பாக்கத்துச் சபையார் இரவு வரியாக 187 கலம் நெல்லும் இருபத்தாறு கழஞ்சு அரைமஞ்சாடிப் பொன்னும் கொடுத்து வந்தார்கள் என்று உத்தம சோழனது பதினான்காம் ஆட்சியாண்டில் வரையப்பெற்ற கல்வெட்டு ஒன்று1 உண்ர்த்துகின்றது. இந்த இரவு வரியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைக்காமையால் இதைப்பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. இக்காலத்திலும் நிலவரி செலுத்துவோரிடம் அவர்கள் கொடுக்கும் வரித்தொகையை அடிப்படையாகக் கொண்டு ரூபா ஒன்றுக்கு இரண்டணா விழுக்காடு சாலைக்காகவும் கல்விக்காகவும் அரசாங்கத்தால் வாங்கப் பெற்று வரும் ‘cess’ என்ற சிறு வரியைப் போன்றதோர் வரியே இஃது என்று கருதலாம். ஆனால் ‘cess’ என்ற வரி யாண்டும் வாங்கப்படுகிறது. இரவு என்ற வரியே எல்லா ஊர்களிலும் வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை. போர் வரி கங்கை கொண்ட சோழனுடைய புதல்வனாகிய வீர ராசேந்திர சோழன் என்பான் வடக்கேயுள்ள வேங்கை மண்டலத்தின் மேல் படையெடுத்துச் செல்ல நேர்ந்த போது, அச்செலவிற்காகச் சோழ இராச்சியத்திலுள்ள விளை நிலங்களுக்கு வேலி யொன்றுக்கு ஒரு கழஞ்சு பொன் போர் வரியாகத் தன் நாட்டு மக்களிடம் வாங்கினான் என்று தஞ்சாவூர் ஜில்லா ஆலங்குடியி லுள்ள ஒரு கல்வெட்டு கூறுகின்றது.1 இத்தகைய வரிகளை இன்றியமை யாமை பற்றி ஒரு சில ஆண்டுகளில் அரசாங்கம் விதித்து மக்களிடம் வசூலிக்க நேர்ந்ததே யல்லாமல் ஆண்டுதோறும் வாங்கி வரவில்லை என்பது உணரற்பாலதாம். காவிரிக்கரை விநியோகம் மூன்றாங் குலோத்துங்க சோழனது 31 - ஆம் ஆட்சியாண் டாகிய கி. பி. 1209 -ல் தஞ்சாவூர் ஜில்லா திருப்பாம்புரத்தில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றால்2 அந்நாளில் காவேரிக்கரை விநியோகம் என்ற வரியொன்று மக்களிடம் வாங்கப்பெற்றது என்று தெரிகிறது. இது காவேரி யாறும் அதன் கிளைகளும் பெரு வெள்ளங்களில் கரைகளை உடைத்து ஊர்களை அழிக்காதவாறு இருமருங்கும் மிக்க வலிமையான கரைகள் அமைக்கும் பொருட்டு அவ்வாற்றங் கரையைச் சார்ந்த ஊர்களில் வாழ்ந்த மக்களிடம் அவ்வூர்ச் சபையாரால் வாங்கப்பெற்று வந்த ஒரு தனி வரியாயிருத்தல் வேண்டும். எனவே, இஃது எல்லா ஊர்களிலும் வாங்கப் பெற்ற பொது வரி யன்று என்பது தேற்றம். இதனைப்பற்றிய தெளிவான செய்திகள் இப்போது கிடைக்கவில்லை. சபா விநியோகம்3 இது பிராமணர்க்குரிய கிராமங்களாகிய சதுர்வேதி மங்கலங்களி லிருந்து சபையார் சபையின் செலவிற்காக ஆண்டுதோறும் வாங்கிய வரியாகும். ஊரிடு வரிப்பாடு1 இது நகரங்களிலும் வெள்ளான்வகை ஊர்களிலுமிருந்த சபையார் ஆண்டுதோறும் வாங்கிய வரியாகும். இவை இரண்டும் இந்நாளில் நகர சபையாரும் பஞ்சாயத்து போர்டாரும் மக்களிடம் வாங்கும் வரி போன்றவை எனலாம். இவ்வரித்தொகை அரசாங்கத்திற்கு உரியதன்று. வரிகள் விதிப்பதில் சபையார் கைக்கொண்ட முறை பண்டைக்காலத்தில் வழங்கி வந்த முறையைப் பின்பற்றியே ஊர், கிராமம், நகரம் ஆகியவற்றில் மன்றுபாடும் பிறவரிகளும் மக்களிடம் வாங்கப்பெற்று வந்தன என்று தெரிகிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா மேலைப்பழுவூரில் சுந்தர சோழன் ஆட்சியில் வரையப் பெற்றுள்ள இரண்டு கல்வெட்டுக்களில்2 நந்திபுரத்தில் முன்னர் மன்றுபாடும் பிற வரிகளும் வாங்கிய பழைய முறையைப் பின்பற்றி அவ்வூர்ச் சபையாரும் வாங்கி வரவேண்டும் என்று அந்நாட்டுக் குறுநில மன்னன் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பான் செய்ததோர் உத்தரவு காணப்படுகிறது. இங்ஙனமே, முதல் இராசராச சோழன் காலத்திய திருச்செங்கோட்டுச் செப்பேட்டிலும்3 தூசியூர் நகரத்தாரிடம் நந்திபுரத்தைப் போலவே குற்றத்தண்டம் முதலிய மழவரையன் வற்றைத் தான் வாங்கிக்கொள்வதாக அந்நாட்டுச் சிற்றரசன் சுந்தர சோழன் செய்த உத்தரவு ஒன்று வரையப் பட்டுள்ளது. நந்திபுரம் என்பது சோழ நாட்டில் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் பழையாறை என்ற பெயருடன் நிலவிய பெருநகரமாகும். இது முற்காலத்தில் சோழர்களுடைய இரண்டாந் தலைநகரா யிருந்தமை அறியத்தக்க தொன்றாம். இந்நகரிலிருந்த வழக்கத்தைப் பெரிதும் மதித்து இதனைப் பிற நாட்டுக் குறுநில மன்னர்களும் பின்பற்றி வந்தமை இதன் தொன்மையையும் சிறப்பையும் நன்குணர்த்துதல் காண்க. வரிவசூலிப்பதில் ஊர்ச்சபையார்க்கு விசேட அதிகாரம் நில வரியையும் பிற வரிகளையும் வசூலித்து அரசாங்கத்திற்கு அனுப்பி வந்தவர்கள் அவ்வூரிலிருந்த சபையாரே என்பது முன்னர் விளக்கப் பட்டது. இவ்வழக்கம் சோழர்களின் ஆட்சிக் காலம் முழுவதும் நிலை பெற்றிருந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். பொதுமக்களும் தத்தம் வரிகளை ஒழுங்காகச் செலுத்தி வந்தமையால் ஊர்ச்சபையார் துன்பமும் தளர்ச்சியு மின்றித் தம் கடமைகளை இனிது நிறைவேற்றி வந்தனர். சோழர் அரசியலில் நிலவரி முதலான எல்லா வரிகளையும் மக்களிடம் வசூலிக்கும் முழுப் பொறுப்பும் ஊர்ச்சபையார்க்கு இருந்தமையின் அன்னோர்க்கு வரி வசூலிப்பது பற்றிய இன்றியமையாத அதிகாரமும் அரசாங்கம் அளிக்க வேண்டியதாயிருந்தது என்பது வடஆர்க்காடு ஜில்லா உக்கலில் காணப்படும் கல்வெட்டொன்றால்1 நன்கறியப் படுகின்றது. இதில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி, முதல் இராசராச சோழன் தன்னுடைய ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டு நூற்றிருபத்து நான்காம் நாளில் தஞ்சாவூர் பெரிய செண்டு வாயில் சித்திரக்கூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளியிருந்த போது செய்ததோர் உத்தரவு ஆகும். இதில் சோழ நாடு, சோழ நாட்டைச் சார்ந்த புற நாடுகள், தொண்டை நாடு, பாண்டி நாடு ஆகிய நாடுகளிலுள்ள ஊர்களில் காணியாளர்களாயுள்ள மக்கள், தம் நிலங்களுக்குரிய அரசிறையும் ஊரிடு வரிப்பாடும் இவ்வேந்தனது பதினாறாம் ஆட்சி யாண்டு முதல் ஈராண்டு நிரம்பி மூன்றாம் ஆண்டும் கொடாமலிருப்பின் அவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்து ஊர் நிலமாக்கி அவற்றை விற்று அவ்வரிகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்ற உத்தரவு காணப்படுகிறது. இதனால் ஊராட்சியை நடத்திவந்த அவையினர்க்கு எத்தகைய அதிகாரம் அரசாங்கத்தால் அளிக்கப் பட்டுள்ளது என்பது புலப்படுதல் காண்க. அன்றியும், பொதுமக்களிடம் வாங்கிப் பெற்று வந்த வரிகள் எக்காரணம் பற்றியோ ஈராண்டுகள் முடிய வசூலிக்கப்படாமல் கிடந்து மூன்றாம் ஆண்டில் வாங்கப்படும் வழக்கமும் இருந்து வந்தது என்பது இதனால் வெளியாகிறது. இனி, நிலவரி முதலானவற்றைச் செலுத்தாமல் நாட்டையும் ஊரையும் விட்டுவிட்டு வேறு நாட்டிற்குப் போய்க் குடி புகுந்தவர்கள் நிலத்தையும் அவ்வவ்வூர்ச்சபையார் கைப்பற்றிச் சபை விலையாக விற்று அத்தொகையை நிலவரி முதலானவற்றிற்கு ஈடுசெய்த நிகழ்ச்சிகள் கல்வெட்டுகளில் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவது ஏற்புடைத்தேயாம். கி. பி. 1117 -ல் தஞ்சாவூர் ஜில்லா வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்து வந்த அந்தணாளர் சிலர் தம் நிலவரியைச் செலுத்தாமல் தம் ஊரை விட்டு வேற்றூர் புகுந்தனர். அன்னோர் நிலங்களை அவ்வூரிலிருந்த கிராம சபையார் கைப்பற்றி அண்மையிலிருந்த திருச்சேறைக் கோயிலுக்கு விற்று அரசிறை செலுத்தினர் என்று ஒரு கல்வெட்டு1 அறிவிக்கிறது. இங்ஙனமே கி. பி. 1119-ல் தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் என்று வழங்கும் திருநல்லத்திலிருந்த சிலர், தம் நிலங்களுக்குரிய அரசிறையைக் கொடாமல் ஓடி விட்டனர். அன்னோர் அவ்வாண்டொன்றுக்கு மாத்திரம் நிலவரி செலுத்தவில்லையெனினும் வேண்டுமென்றே அவ்வாறு செய்தமையால் அவர்களுக்குரிய நிலங்களைச் சபைவிலையாக விற்று அரசிறை செலுத்த வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு ஒன்று அவ்வூர்ச் சபையார்க்கு வந்தது. அச்சபையாரும் அவ்வுத்தரவின்படி நடந்து கொண்டமை அவ்வூரில் காணப்படும் கல்வெட் டொன்றால்2 அறியப்படு கின்றது. இதனால் வேண்டுமென்றே அரசிறை கொடாமலிருப்பவர்கள்பால் மூன்றாண்டுகள் வரையில் பொறுத்திராமல் ஓராண்டிற்குள் நிலங்களைக் கைப்பற்றிச் சபை விலையாக விற்று அரசிறை வசூலிக்கும் வழக்கமும் இருந்தது என்று தெரிகிறது. இவ்வாறு செய்வதற்கு அரசாங்க உத்தரவு வேண்டும் போலும். திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் இரத்தினகிரி என வழங்கும் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்திலிருந்த அந்தணர் மூவர் தம் நிலங்களுக்குரிய வரியைப் பதினைந்து ஆண்டுகள் முடியச் செலுத்தாமல் ஊரைவிட்டுப் போய் விட்டனர். அவர்களுடைய நிலங்களைக் கி. பி. 1033 - ல் அரசாங்கத்தார் பறிமுதல் செய்து இராசேந்திரப் பெருவிலையில்1 விற்று அத்தொகையை அரசிறைக்கு ஈடுசெய்து கொண்டனர் என்பது இரத்தினகிரி யிலுள்ள ஒரு கல்வெட்டால்2 புலப்படுகின்றது. சுத்தவல்லி நல்லூர் ஆத்திரையான் மாதேவப் பட்டன் என்பான் , தன் நிலங்களுக்குப் பத்து ஆண்டுகள் வரையில் வரி கொடாமல் பாண்டிய நாட்டிற்குப் போய்த் தங்கியிருந்து அங்கேயே இறந்து போய்விட்டனன். அவன் நிலங்களைக் கி. பி. 1274 -ல் ஊர்வாரியப் பெருமக்கள் கைப்பற்றி அவற்றை விற்று அரசிறையைச் செலுத்தினர் என்று தஞ்சாவூர் ஜில்லா களப்பாளிலுள்ள கல்வெட்டொன்று3 கூறுகின்றது . இவ்வாறு பதினைந்து ஆண்டுகளும் பத்து ஆண்டுகளும் அரசிறை வசூலிக்கப்படாமல் கிடந்தமைக்குக் காரணம் அதனை வசூலிக்கவேண்டிய கிராம சபையின் நிர்வாகத்தில் ஏற்பட்ட ஊழலேயாம். இவ்வுண்மை தஞ்சாவூர் ஜில்லா மாயூரம் தாலூகாவில் திருமணஞ்சேரி என்று இக்காலத்தில் வழங்கும் கரிகால சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் கி. பி. 1138 - ஆம் ஆண்டில் செய்துள்ள ஒரு தீர்மானத்தால் நன்கு புலனாகின்றது. இக்கிராம சபையார், நிலவரி கொடுக்க முடியாதோர்,வேறு ஊர்க்கு ஓடிப்போனோர் முதலானோர் நிலங்களைச் சபை விலையில் விற்றாதல் கோயில்களில் வேண்டிய பொருளைப் பெற்று அந்நிலங்களை இறையிலி தேவதானங்களாக விட்டாதல் அரசாங்கத்திற்குரிய நிலவரிகளில் எஞ்சியுள்ள தொகையை வசூலித்துத் தம் கடமைகளை நிறைவேற்றவேண்டுமென்று செய்த அத் தீர்மானத்தைத் திருமணஞ்சேரிக்கோயில் கல்வெட்டொன்றில்4 இன்றுங் காணலாம். அரசிறையாகிய நிலவரி கொடாமல் பொது மக்கள் ஊரைவிட்டோடியமைக்கு, வறுமை, வசூலிக்கும் அதிகாரியின் கொடுஞ்செயல் முதலியனவும் காரணங்களா யிருத்தல் கூடும். அரசியல் அதிகாரிகளுக்கும் நாட்டுத்தலைவர்கட்கும் சீவிதமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு அவர்கள் மக்களிடம் வரிவசூலிக்குமிடத்துக் கைக்கொண்ட முறைகளும் குடிகளை ஊரைவிட்டோடும்படி செய்துவிட்டன என்று கருதற்கு இடமுளது. சோழ இராச்சியத்தில் ஆங்காங்கு இருந்த தலைவர்கள் சோழர்களின் ஆட்சியின் கடைப்பகுதியில் ஓரளவு சுயேச்சை எய்தித் தாமே புதிய வரிவிதித்தும் பழையவரிகளை அதிகப்படுத்தியும் மக்களைத் துன்புறுத்தி வசூலித்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப் படுகின்றன. திருவொற்றியூரில் கி. பி. 1213-ல் வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று1 இவ்வுண்மையை நன்கு உணர்த்துகின்றது. தொண்டை மண்டலத்தில் திருவொற்றியூரைச் சார்ந்த நாட்டிற்குத் தலைவனாக நிலவிய யாதவராயன் என்பான் பயிரிடக்கூடிய நிலங்கள் எல்லாவற்றிற்கும் வேலி ஒன்றுக்குக் கால்மாடைப் பொன் வரி விதித்து எத்தகைய விலக்குகட்கும் இடங்கொடாமல் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் நகரங்களிலும் வசூலிக்கும்படி தண்டல் அதிகாரி ஒருவனை நியமனஞ்செய்தான். அவன் புன்னைவாயில் என்ற ஊரில் தான் வசூலிக்கக்கூடிய வரையில் வசூலித்துக் கொண்டு எஞ்சிநின்ற தொகையைக் கொடுக்குமாறு அவ்வூரிலுள்ள கிராம சபை உறுப்பினர்களைப் பிடித்து வந்து சிறையிலிட்டுவித்தான். அவர்கள் குளத்தூரில் குடியிருப்பு மனைகளோடு எண்பது வேலி நிலங்களையும் இருநூறு காசுக்கு விற்று அதனைக்கொடுத்தனர். தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடியிலுள்ள கயிலாய நாதர் கோயிலிலும் இராசகோபாலப் பெருமாள் கோயிலிலும் கி. பி. 1239 -ல் வரையப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுக்கள்.2 சோழரது ஆட்சியின் இறுதிப்பகுதியில் வரிக்கொடுமை யால் பேரின்னலுக் குள்ளாகிய நாட்டு மக்கள் அவ்வூரிலிருந்த கிராம சபை யாரிடம் முறையிட்டுக் கொண்டதையும், அவர்களது துன்பத்தை நீக்கும் பொருட்டு அச்சபையார் செய்த ஏற்பாட்டையும் தெளிவாக அறிவிக்கின்றன அக்காலப்பகுதியில் சோழர் பேரரசின் வலிமை குறைந்து விட்டமையின் சிற்றரசர்களும் அரசியல் தலைவர்களும் தம் மனம் போனவாறு நாட்டு மக்களிடம் வரி வசூலிக்கத் தொடங்கிவிட்டனர் என்பது அக்கல்வெட்டுக் களால் நன்கு வெளியாகின்றது. அக்கல்வெட்டுக்களில் நம்மூர்ப் பரப்பிலே காசும் நெல்லும் ஆகப் பலரும் கைவந்தபடி தண்டிக் கொள்கையாலே எங்களுக்குத் தரிப்பறுதியாலே வெள்ளாமைசெய்து குடியிருக்கப் போவ தில்லை யென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்படியாகையால் ஊர்தரிப்பறுதி உண்டாயிருக்கையாலும் நம்மூர் இந்நாள் பிரசாதஞ் செய்தருளின திருமுகப்படி தேவைசெய்யுமிடத்து என்ற பகுதி குறிப்பிடத் தக்கதொன்றாகும். இதில் அரசியல் தலைவர் பலர் தம் விருப்பம்போல் அநியாயமாக வரி வசூலிக்கும் கொடுமையைக் கண்டஞ்சிய நாட்டு மக்கள், இனி, பயிர்த் தொழில் புரிந்துகொண்டு தம் தம் ஊரில் குடி யிருக்கப் போவதில்லை என்று கிராம சபையாரிடம் முறையிட்டுள்ள செய்தியைக் காணலாம். இம்முறையீட்டைக் கேட்ட மன்னார்குடிக்கிராம சபையார், பக்கத்துள்ள ஐந்து நாடுகளின் மாசபைகளையும் தம்முர்ச் சபையையும் கயிலாய நாதர் திருக்கோயிலில் கூட்டி, அரசர் பெருமானது திருமுகப்படி பொதுமக்கள் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய நியாயமான வரிகள் இவ்வளவு என்பதைத் தெளிவாக வரையறுத்து உறுதிசெய்து அவற்றிற்கு அதிகமாகக் கேட்கும் எவற்றையும் கொடுக்கவேண்டியதில்லை என்றும், அதற்கு முரணாக நடப்போர் கிராமத்துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆவர் என்றும் முடிவுசெய்தமையோடு, இவற்றையெல்லாம் கயிலாயமுடையார் கோயிலிலும் வண்துவராபதி மன்னனார் கோயிலிலும் கற்களில் வரைந்து வைக்கும்படியும் செய்தனர். இச்சபையார் நடத்திய இக்கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த ஐந்தாம் நாளில் இவ்வூர்க் கண்மையிலுள்ள திருஞானசம்பந்த சதுர்வேதி மங்கலத்துச்சபையாரும் இத்தகைய பேரவை ஒன்று கூட்டி இவ்வாறு தீர்மானஞ் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இச்செய்தியை யுணர்த்தும் கல்வெட்டின்1 இறுதியில் முதலிகள் பக்கல் புக்கு பிராமணர் ஆதல் வெள்ளாழர் ஆதல் கணக்கர் ஆதல் ஊர்க்கேடு நாட்டுக்கேடு பொற்கேடு சொன்னார் உண்டாகில் கிராமத் துரோகிகளும் நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் பட்ட தெண்டம் படக்கடவர் களாகவும் இப்படிச் சம்மதித்து மகாசபா விவவதைபண்ணி உடையார் ஸ்ரீ கயிலாயமுடையரான இராஜாதிராஜீவர முடையார் கோயிலிலும் வண்டு வராபதி மன்னனார் கோயிலும் கல்வெட்டச் சொன்னோம். இப்படி பெருங்குறிப் பெருமக்கள் திருவுள்ளமாக இது எழுதினேன் இவ்வூர் ஊர்க் கணக்குச் செல்கலுடையான் தன்மப்பிரியன் எழுத்து என்று வரையப் பட்டுள்ள பகுதி அறியத்தக்க தொன்றாம். சோழர் ஆட்சியில் இத்தகைய வரிக்கொடுமை பற்றிய நிகழ்ச்சிகள் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படாமல் சிற்சில இடங்களில் மிகவும் அருகியே காணப் படுகின்றன. அன்றியும், இவைகளெல்லாம் இவ்வேந்தர்களின் பேரரசு தளர்ச்சியுற்ற இறுதிக்காலப் பகுதியில் அரசியல் தலைவர் சிலர் தாம் விரும்பியவாறு நடக்கத் தொடங்கிய நாட்களில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளேயாம். மேலே குறிப்பிட்ட மன்னார் குடிக் கல்வெட்டுக்களால் வழக்கத்திற்கும் நியாயத்திற்கும் முரணாகத் தலைவர்கள் வரி வாங்கினால் பொதுமக்கள் நாட்டுப் பேரவையைக் கூட்டிப் பழைய முறையை எடுத்துக் காட்டி இவ்வளவு வரிதான் வாங்கலாம் என்பதை அறிவுறுத்தி அவர்கள் செயலைக் கண்டித்துத் தடைப் படுத்துவது உண்டு என்பதும் , கிராம சபை, நாட்டுச்சபை, ஆகிய சபைகள் எத்துணை ஆற்றலும் மதிப்பு முடையனவாகச் சோழர் அரசியலில் நிலவின என்பதும் நன்கு விளங்குதல் காண்க. சோழர் ஆட்சியில் பொதுவாக நோக்குமிடத்துப் பழையகால முதல் வழங்கி வந்த ஒரு நியாயமான முறையைப் பின்பற்றியே அரசிறை வாங்கப் பெற்று வந்தது என்று ஐயமின்றிக் கூறலாம்.  4. நில அளவு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரியாகிய காணிக்கடன் குடிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு எவ்வளவு வர வேண்டும் என்பதும் நன்கு புலப்படமாட்டா. எனவே, நிலவரியை ஒழுங்குபடுத்தி நடுநிலை தவறாமல் குடிகளிடத்தில் வசூலிக்க வேண்டு மாயின் இராச்சியத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றையும் அளந்து விளை நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்துகொள்வதோடு அந்நிலங்களுக்கு அரசிறை செலுத்தும் கடமையும் உரிமையும் பூண்ட குடிகள் இன்னார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதும் அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும். ஆதலால் சோழ மன்னர்களின் ஆளுகையில் சோழ இராச்சியம் மும்முறை அளக்கப்பட்டுள்ளது அவற்றுள், முதலில் நிகழ்ந்த நில அளவு சோழ மன்னர்களுள் பெரும்புகழுடன் நிலவிய பேரரசனாகிய முதல் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் நடை பெற்றது என்று தெரிகிறது.1 இவ்வேந்தன் தன் ஆட்சியின் பதினாறாம் ஆண்டாகிய கி. பி. 1001-ல் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்து கணக்கெடுக்குமாறு உத்தரவிட்டான். அவ்வேலையும் அவ்வாண்டிலேயே குரவன் உலகளந்தான் இராசராசமாராயன் தலைமையில் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகளில் நிறைவேறியது. இத்தலைவன் முதல் இராசராச சோழனுடைய பெரும்படைத் தலைவர்களுள் ஒருவன். இவன் சோழ இராச்சியம் முழுமையும் அளந்து கணக்கெடுத்தமைபற்றி இவனுக்கு உலகளந்தான் என்ற பட்டமும் அரசனால் அளிக்கப் பட்டிருப்பது அறியற்பாலதொன்றாம்.2 திருச்சிராப்பள்ளி ஜில்லா கருவூர்த் தாலூகாவிலுள்ள சோமூரில் காணப்படும் முதல் இராசராச சோழனது 17 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில்1 உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்ற அரசியல் அதிகாரி ஒருவன் குறிக்கப்பட்டுள்ளனன். இத்தலைவனும் இவ்வேந்தன் ஆணையின்படி சோழ இராச்சியத்தில் நிலம் அளந்து கணக்கெடுக்கப் பெற்றபோது தலைமை வகித்த அதிகாரிகளுள் ஒருவனாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். சோழ இராச்சியத்தில் நில அளவு நடைபெற்ற காலத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒவ்வொரு அதிகாரி தலைமை வகித்து அதனை நடத்தி நிறைவேற்றி யிருத்தல் வேண்டும் என்று சில குறிப்புக்களால் புலப்படு கின்றது. நிலம் அளந்த கோல் உலகளந்தகோல் என்று அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோல் பதினாறு சாண் நீளமுடையது என்று தெரிகிறது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, நத்தம், காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர்நிலம், கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நத்தம் என்பது மக்கள்வீடு கட்டிக் குடியிருந்து கொண்டிருக்கும் மேட்டுநிலப் பரப்பாகும். நிலங்களெல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் நூறு குழி கொண்டது ஒரு மா ஆகவும், இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப் பட்டுள்ளன. நிலத்தை அளந்து எல்லைகள் தெரியும்படி அவ்வவ்விடங்களில் கற்கள் நடுவது வழக்கம் என்பது பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. அக்கற்களைப் புள்ளடிக் கற்கள் என்று வழங்கியுள்ளனர்.2 சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங் களுக்குத் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்களும் திருமால் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்குத் திருவாழி பொறிக்கப்பட்ட கற்களும்3 சைனக் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்குக் குண்டிகை அல்லது முக்குடை பொறிக்கப்பட்ட கற்களும் எல்லைக் கற்களாக நடுவது சோழர் ஆட்சியில் நிலவிய பழைய வழக்கமாகும். இவ்வாறு அளக்கப்பெற்ற நிலங்களுக்கு அரசியல் அதிகாரிகளால் பிறகு தரம் காணப்பட்டு வரி விதிக்கபட்டது, நிலங்களின் வளத்தையும் அவற்றிற்குப் பாய்ச்சப்பெறும் நீர்வளத்தையும் ஆதாரமாகக்கொண்டுதான் எல்லா நிலங்களுக்கும் தரங்கள் வகுக்கப்பட்டன என்று தெரிகிறது. இங்ஙனம் வகுத்தவிடத்துப் பதினான்காம் தரத்து நிலங்களும் இருந்தன என்பது, இந்நிலம் சந்திராதித்தவல் பதினாலாம் தரத்திலே தரம்பெற்றும் என்னும் மகாதானபுரத்துக் கல்வெட்டுத் தொடர்களால் நன்கறியக் கிடக்கின்றது. தரம்வகுக்கப்பெறாத நிலம் தரமிலி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முதல்தரம் இரண்டாம் தரம் மூன்றாம் தரம் என்று வகுக்கப்பெற்ற பல தரப்பட்ட நிலங்களுள் ஒவ்வொன்றும் ஆண்டொன்றுக்கு இவ்வளவு கலம் விளையும் இயல்பினது என்பதைக் கல் வெட்டுக்களின் துணைக்கொண்டு இப்போது தெளிவாக அறிய இயலவில்லை. எனினும் நிலங்களின் விளைவின் அளவைக்கொண்டு தான் அவற்றின் தரங்கண்டே அதிகாரிகளால் அக்காலத்தில் நில வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது தேற்றம். இராசராச சோழனது ஆணையின்படி நிலங்களை அளந்து அவற்றிற்கு வரி விதிக்கப்பெற்ற காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் சில சில இடங்கள் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்று விட்டன என்பதும் கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. அங்ஙனம் ஒதுக்கப்பட்டவை ஊர் நத்தம், கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி, ஈழச்சேரி வெள்ளான் சுடுகாடு,பறைச்சேரி பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க்கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரி கோயில், திருமுற்றம், தேவர் திருமஞ்சனக்குளம், ஊருணி, கழனிக் குளம், நந்தவனம், களம், கொட்டகாரம், ஓடை, சுடுகாட்டுக்குப்போகும் வழி, ஆறு, ஆறிடுபடுகை, பெருவழி, மன்றம் கன்றுமேய்பாழ், மனை, மனைப்படைப்பை, கடை, கடைத்தெரு, கிடங்கு, காடு உவர்நிலம் என்பனவாம். இவற்றை ஆராயுங்கால் அக்காலத்தில் விளைநிலங்களுக்கு மாத்திரம் வரி விதிக்கப் பட்டனவே யன்றிப் பிறநிலங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்பது நன்கறியக் கிடக்கின்றது. ஒவ்வோர் ஊரும் இவ்வளவு வேலி நிலப்பரப்புடையது என்பதை அளந் தறிந்து அதிலிருந்து மேலே குறிப்பிட்ட வரி விதிக்கப்பெறாத இடங்களின் நிலப்பரப்பைக் கழித்துக்கொண்டு எஞ்சிநின்ற விளைநிலங்களுக்குத்தான் நிலவரி விதிக்கப்பட்டது என்பது பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. நிலவளம் மாறுமிடத்து நிலத்தின் தரத்தை மாற்றி வரியை உயர்த்துவதும் குறைப்பதும் உண்டு என்பதும், ஒருபோக நிலம் இரண்டு அல்லது மூன்றுபோக நிலமாக ஆக்கப்படின் அதன் வரியை உயர்த்துவது வழக்கம் என்பதும் கல்வெட்டுக்களால் உணரக்கிடக்கின்றது. எனினும், எத்தகைய மாறுதல்களுக்கு விளைநிலங்கள் உட்பட்டாலும் அந்நிலங்களின் வரியை மாத்திரம் மாற்றி அமைக்காமல் ஒரே நிலையில் வைத்திருப்பதும் உண்டு என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகிறது. அங்ஙனம் ஒரே நிலையில் அமைந்துள்ள நிலவரி அந்நாளில் நிலையிறை1 (Permanent Settlement) என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிக்கப்பெற்ற நிலவரியை நின்றிறை என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் கூறுவதும் உணரற்பாலதாகும்.2 முதற்குலோத்துங்க சோழனது பதினாறாம் ஆட்சி யாண்டாகிய கி. பி. 1086 -ல் சோழ இராச்சியம் முழுமையும் இரண்டாம் முறை அளந்து கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை நம்உடையார் சுங்கந்தவிர்த் தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு (யாண்டு) 16 ஆவது திருவுலகளந்த கணக்குப்படி நீங்கல் நீக்கிப்பனை நின்ற கொல்லையும் உவரும் உப்பு மண்ணும் ஆய் அறுகெழுந்த படுதரையும் என்று அளந்தநிலத்து,3 எனவும் சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்குப் பதினாறாவ தளக்கக் குறைந்த நிலத்தொடு4 எனவும் போதரும் கல்வெட்டுப் பகுதிகளால் நன்கறியலாம். இந்நில அளவும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேறி அரசிறை விதிக்கப்பெற்றது என்பது, உடையார் சுங்கந் தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு 18 ஆவது இறைகட்டின காணிக்கடன், என்னும் திருவீழிமிழலைக் கல்வெட்டொன்றால்,1 பெறப்படுகின்றது. இவ்வேந்தன் காலத்தில் நிலம் அளந்தகோல் திருவுலகளந்த ஸ்ரீ பாதக்கோல் என்று வழங்கப்பெற்றது என்பது வடஆர்க்காடு ஜில்லா திருவோத்தூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.2 திருவுலகளந்த ஸ்ரீ பாதத்தையுடைய திருமாலே குலோத்துங்கனாக அவதரித்தனர் என்பது அந்நாளிலிருந்த அறிஞர்களது கருத்தாதலினால், குலோத்துங்கனது திருப்பாதத்தையே ஓரடியின் அளவாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அளவுகோல் இப்பெயர் எய்தியது போலும். முதற் குலோத்துங்க சோழனது திருவாணையின்படி சோழ இராச்சியம் முழுதும் அளந்து கணக்கெடுக்கப்பட்ட காலத்தில் அதனைச்செய்து முடித்த அரசியல் அதிகாரி இருவருடைய பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படு கின்றன. அவர்களுள் ஒருவன் திருவேகம்பமுடையனான உலகளந்த சோழப் பல்லவரையன் என்பான்.3 இவன், சோழமண்டலத்துத் திருவழுந்தூர் நாட்டுத் தேவூரினன்; குலோத்துங்கன் ஆட்சியில் ஒரு நாட்டின் தலைவனாக விளங்கியவன். இவன் தலைமையில் இராச்சியம் அளக்கப் பெற்றமை பற்றி இவனுக்கு உலகளந்த சோழப் பல்லவரையன் என்ற பட்டம் இவ்வேந்தன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும். மற்றையோன், குளத்தூருடையான் உலகளந்தானான திருவரங்கதேவன் ஆவான்.4 இவனும் உலகளந்தான் என்ற பட்டம் பெற்றுள்ளமை அறியத்தக்கது. இவனைப்பற்றிய பிற செய்திகள் இப்போது தெரியவில்லை. இவ்விருவரே யன்றி வேறு அதிகாரிகள் சிலரும் இவ்வேலையில் அரசாணையின் படி ஈடுபட்டிருத்தல் கூடும். அவர்களைப் பற்றியும் ஒன்றும் புலப்படவில்லை. தஞ்சாவூர் ஜில்லா பட்டுக்கோட்டைத் தாலூகாவில் இந்நாளில் கோயிலூர் என்னும் பெயருடன் நிலவும் திருவுசாத்தானத்தில் காணப்படும் சில கல்வெட்டுக்களால்1 மூன்றாங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டிலும் சோழஇராச்சியம் ஒரு முறை அளந்து கணக் கெடுக்கப்பட்டது என்பது நன்கறியக்கிடக்கின்றது. இந்நில அளவு சோழர்களின் ஆட்சியில் மூன்றாம் முறையாகக் கி. பி. 1216 -ல் நடைபெற்ற தாகும். இச்செய்தி, மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக் களில் தான்2 காணப்படுகின்றது. இதனைத் தெளிவாக உணர்த்தக்கூடியவேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதுகாறும் எடுத்து விளக்கியவற்றால் சோழர் காலத்தில் முதல் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1001-இல் ஒருமுறையும் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியில் கி. பி. 1086 - இல் ஒருமுறையும் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் கி. பி. 1236 - இல் ஒரு முறையும் சோழ இராச்சியம் முழுமையும் அளந்து கணக்கெடுக்கப் பெற்றமை ஒருவாறு உணரக்கிடத்தல் காண்க.  5. நிலவுரிமை சோழரது ஆட்சிக் காலத்தில் நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடிப்படையாக வைத்து அந்நிலங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவற்றுள், உழவுத் தொழிலையே வழி வழியாக மேற்கொண்டு நிலங்களை அனுபவித்து வந்த குடிகளுக்கே உரிமை வெள்ளான் வகை ஒன்றாகும். இவ்வகை நிலங்களுக்குக் குடிமக்கள் அரசிறை செலுத்த வேண்டும். அது பற்றியே இந்நிலங்களைத் திறப்பு என்று வழங்கியுள்ளனர். இக்காலத்தில் ரயட்வாரி முறையில் (Ryotwari System) மிராசு உரிமையுடன் அனுபவிக்கப்பட்டுவரும் நிலங்கள் எல்லாம் மேலே குறிப்பிட்ட சிறப்பு வகை யாகிய வெள்ளான் வகையைச் சேர்ந்தனவேயாம். இவ்வகையில் நிலங் களை, அனுபவிக்கும் குடிமக்கள் இறைகுடிகள் என்று கூறப் பட்டுள்ளனர். இவர்களுள் குறைந்த நிலமுடையவர்கள் தாமே உழவுத் தொழில் நேரில் செய்து வந்தனர். அதிக நிலமுடையவர்கள் பிற குடிகளைக் கொண்டு தம் நிலங்களை உழுவித்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெருங் குடிகள் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவ்விருவகையினரையும் உழுதுண்போர் உழுவித்துண்போர் என்று பிரித்துணர்த்துவது அறியத்தக்கது. மற்றொருவகை நிலங்கள் தானமாக அளிக்கப் பெற்றவையாகும். அவை, தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம், மடப்புறம், சாலாபோகம் பிரமதேயம் என்று வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் தேவதானம் என்பது, சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பெற்ற நிலம்; திருவிடையாட்டம் என்பது, திருமால் கோயில்களுக்குக் கொடுக்கப்பெற்ற நிலம்; பள்ளிச்சந்தம் என்பது, சைனகோயில்களுக்கும் பௌத்த கோயில்களுக்கும் விடப்பெற்ற நிலம்; மடப்புறம் என்பது, மடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்; சாலா போகம் என்பது, அபூர்விகள், அந்தணர்கள், சிவயோகிகள் முதலானோர்க் குணவு கொடுக்கும் அறச்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட நிலம்; பிரமதேயம் என்பது, வேதங்களையும் சாத்திரங்களையும் நன்கு பயின்று சீலமும் புலமையும் படைத்த பார்ப்பனர்க்கு வழங்கப் பெற்ற நிலம். இவ்வகை நிலங்களெல்லாம் பெரும்பாலும் இறையிலி நிலங்களாகவே செய்யப்படுவது வழக்கம். இவற்றை இறையிலியாகப் பெற்றவர்கள் அரசாங்கத்திற்கும் ஊர்ச் சபைக்கும் எத்தகைய வரியும் கொடாமல் இவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். எனினும் இறையிலி நிலங்கள் பெற்றவர் களிடத்தும் இறையிலிக்காசு என்று ஒரு சிறுவரி அரசாங்கம் வாங்கிவந்தது என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகிறது. பிறிதொருவகை நிலங்கள், சில குறிப்பிட்ட காரியங்களைச் செய்தற் பொருட்டு அவற்றைச் செய்து வருவோர்க்குக் கொடுக்கப்பெற்றவை யாகும். இவற்றை, சீவிதம். போகம், விருத்தி, காணி, பற்று, புறம், பட்டி முற்றூட்டு என்று அக்காலத்தில் வழங்கி வந்தனர். சோழரது ஆட்சியில் அரசியல் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கருவூலத்தி லிருந்து திங்கள் தோறும் சம்பளம் கொடுக்கும் வழக்கம் இல்லை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவர்களது தகுதிக்கேற்றவாறு அன்னோர் வாழ் நாள் முழுவதும் அனுபவித்துக்கொள்ளும்படி சோழ மன்னர்களால் அளிக்கப்பெற்ற நிலமே சீவிதம் எனப்படும்.1 அதனைப்பெற்று வாழ்ந்து வந்த அரசியல் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க பெருந் தொண்டுகளை அரசாங்கத் திற்குச் செய்து அவற்றால் பேரும் புகழும் பெற்றிருப்பாராயின் அவர்கள் காலத்திலேயே அந்நிலத்தை சீவித வகையிலிருந்து மாற்றி அவர்களும் அவர்களுடைய வழியினரும் அனுபவித்துக் கொள்ளுமாறு இறையிலியாகக் கொடுத்து விடுவது உண்டு. அத்தகைய சிறந்த அதிகாரிகள் இறந்து போய்விட்டால் சீவிதமாகவுள்ள நிலங்களைப்பிரித்து அவர்களுடைய மனைவி மக்களுக்கும் உடன் பிறந்தார்க்கும் இறையிலி நிலமாக வழங்குவது உண்டு என்பது, சில கல்வெட்டுக்களால் நன்கறியப்படுகின்றது. திருக்கோயில்களிலும், சிற்றூர் பேரூர்களிலும், அம்பலங்களிலும் சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறுமாவது திங்கள் தோறுமாவது ஆண்டுவிழா நாட்களிலாவது செய்துவரும் பொருட்டு அவரவர் வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளுமாறு அன்னோர்க்கு அளிக்கப்பட்ட நிலங்கள், போகம், விருத்தி, காணி. பேறு, புறம், பட்டி, பற்று முதலான பேர்களையுடையனவாயிருந்தன. இவைகள், அரசர்களாலும், அரசியல் தலைவர்களாலும், கிராமசபையாராலும், கோயில் அதிகாரிகளாலும், பிற செல்வர் களாலும் கொடுக்கப் பெற்றனவாகும். இவையெல்லாம் இறையிலி நிலங்களே என்பது தேற்றம். திருக்கோயில்களில் அருச்சனை செய்யும் பொருட்டுச் சிவவேதி யர்க்கும், ஆதுரசாலைகளிலிருந்து பொதுமக்களுக்கு வைத்தியம் செய்யும் பொருட்டு மருத்துவர்கட்கும் விழா நாட்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தும் பொருட்டுக் கூத்தச் சாக்கையர்க்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள், முறையே அர்ச்சனா போகம், வைத்தியபோகம், நிருத்தபோகம் என்று வழங்கி வந்தன. ஊர்களில் இரவில் அம்பலத்தமர்ந்து பாரதம் படித்து விரிவுரை நிகழ்த்தும் பொருட்டுப் புலவர்கட்கும் திருக்கோயிலில் வேதம் ஓதுவதற்கும் புராணங்கள் படித்தற்கும் அந்தணர்கட்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள் முறையே பாரதவிருத்தி, பட்டவிருத்தி எனவும் வழங்கின என்று தெரிகிறது. திருக்கோயில்களில் ஆடல்பாடல்களை நிகழ்த்தும் பதியிலார்க்கும் அவர்களை ஆட்டுவிக்கும் ஆடலாசிரியனாகிய நட்டுவனுக்கும்,ஆரியக் கூத்தாடும் கூத்தச்சாக்கைக்கும், தமிழக்கூத்து ஆடுவோனுக்கும், வீணை வாசிப்போனுக்கும், மத்தளங் கொட்டும் மெய்ம்மட்டிக்கும், இசைபாடும் முரலியனுக்கும், ஒருகட்பறை கொட்டும் உவச்சனுக்கும் கணக்கெழுதும் கணக்கனுக்கும், திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் ஓதுவார்க்கும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் முறையே பதியிலார்காணி, நட்டுவக்காணி, சாக்கைக் காணி, கூத்தாட்டிக்காணி, வீணைக்காணி, மெய்ம் மட்டுக்காணி முரலியக்காணி, உவச்சக்காணி, கணக்கக்காணி, திருப்பதிகக் காணி என்று வழங்கி வந்தன என்பதைக் கல்வெட்டுக்களால் நன்குணரலாம். தளிச்சேரிப் பெண்டுகளாகிய பதியிலார்க்கும் தேவரடியார்க்கும் இசைப் பயிற்சியளித்து வந்த பாணர்க்கும் கொடுக்கப்பெற்ற இறையிலிநிலம் பாணக்காணி எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஊர்களிலிருந்த அம்பலங்களை மெழுகி நாள்தோறும் தூய்மை செய்யும் பணிமகளுக்கும் அவ்வம்பலங்களில் குடிதண்ணீரும் அக்கினியும் சேமித்து ஊரார்க்கு வேண்டும்போது கொடுத்துதவும் பணிமகனுக்கும் அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள் முறையே மெழுக்குப்புறம், அம்பலப்புறம் எனக்கல்வெட்டுக்களில் கூறப்பட்டிருக்கின்றன. சில அறங்களைச் செய்தற்பொருட்டுக் கிராமசபை யாரிடத்தும் குறிப்பிட்ட சிலரிடத்தும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் அறப்புறம் என்று வழங்கின. போரில் உயிர் துறந்த வீரர்களுடைய மனைவி மக்களுக்கு அரசர்களும் தலைவர்களும் வழங்கிய நிலங்கள் உதிரப்பட்டி எனவும், ஏரிகளை ஆண்டுதோறும் வெட்டியும் கரைகட்டியும் பாதுகாத்தற்பொருட்டுக் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஏரிப்பட்டி எனவும் வழங்கி வந்தன. அரசர்கள் விரும்பிய போது படைகளை அனுப்பி உதவி புரியும் பொருட்டு அப்படைகளின் தலைவனுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் படைப்பற்று வன்னியப்பற்று என்று வழங்கின. ஈண்டுக் காட்டப்பட்ட விருத்தி, காணி, போகம், புறம் முதலியவை எல்லாம் ஒரு பொருளனவாம் என்பது நுணுகி நோக்குவார்க்குப் புலப்படாமல் போகாது. இவ்வுண்மையைப் பாரத விருத்தி பாரதப்புறம் எனவும், நட்டுவக்காணி நிருத்தபோகம் எனவும், வைத்தியபோகம் வைத்தியவிருத்தி எனவும், பாணக்காணி பாணசீவிதம் எனவும் கல்வெட்டுகளில் வேறுபாடில்லாமல் குறிக்கப்பட்டிருப்பதாலும் நன்கறியலாம். இவையனைத்தும் பிற்காலக் கல்வெட்டுக்களில் மானியம் என்ற பெயரால் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கதாகும் கிராமங்களில் பொது ஊழியங்கள் புரிந்து வருவோர்க்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊர்ப் பொது நிலங்கள் மானியங்கள் என்று வழங்கப்பெற்று வருதலை இக்காலத்தும் காணலாம். தேவதானம், பிரமதேயம், மடப்புறம், திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் ஆகியவற்றை அரசர்களாதல், அரசியல் தலைவராதல், ஊர்ச்சபையாராதல் இறையிலி நிலங்களாகவே வழங்கி விடுவது வழக்கம். நாட்டிலுள்ள செல்வர்கள் அவற்றை வழங்குவாராயின் அவற்றிற்குரிய அரசிறையின் பொருட்டு அவர்களிடம் முதற்பொருள் பெற்று அத்தொகையினால் கிடைக்கும் பலிசை (வட்டி)யைக் கொண்டு அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய நிலவரியை ஆண்டு தோறும் ஊர்ச்சபையார் செலுத்தி வருவார்கள். இங்ஙனம் சபையாரால் வாங்கப்பட்ட முதற் பொருளுக்கு இறைகாவல் என்னும் பெயர் அந்நாளில் வழங்கிவந்தது. மேலே குறிப்பிட்ட தேவதானம், பிரமதேயம் முதலான நிலங்களுக்குப் பொதுமக்கள் தம் ஊரில் தமக்குள்ள பங்குவீதப்படி அரசிறை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு அவ்வாறே ஆண்டு தோறும் செலுத்தி வருவதும் உண்டு. இத்தகைய தேவதான பிரமதேய நிலங்கள், ஊர்கீழ் இறையிலி என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன. இறையிலி, இறைக்காவல், ஊர்கீழ் இறையிலி ஆகிய இம்மூன்றினுள் ஒன்றின் கீழும் அமையாத தேவதானம் பிரமதேயம் திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம், மடப்புறம் ஆகியவற்றிற்கு அரசிறையும் பிறவரிகளும் வாங்கப்பட்டு வந்தன. இம்மூன்றின் கீழும் அமைந்த எந்த நிலங்களுக்கும் ஊர்ச் சபையார் தம் அதிகார எல்லைக்குள் வாங்கி வந்த ஊரிடு வரிப்பாடு, சபாவிநியோகம் ஆகியவரிகளை வசூலிப்பது வழக்கமில்லை என்பது பல கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது. வெள்ளான்வகை யொழிந்த பிறவகை நிலங்களில் பலவற்றிற்கு அக்காலத்தில் காராண்மை, மீயாட்சி என்ற இருவேறு உரிமைகள் இருந்தன என்று தெரிகிறது. காராண்மை என்பது, பயிரிடும் குடிகளது உரிமையாகும். மீயாட்சி என்பது, நிலத்தின் சொந்தக்காரரது உரிமையாகும். இக்காலத்தில் காராண்மை என்பது குடிவாரம் எனவும், மீயாட்சி என்பது மேல்வாரம் எனவும் வழங்குகின்றன. அரசியல் அதிகாரிகளுக்கு அரசர்களால் கொடுக்கப் பட்டிருந்த சீவிதங்களிலும் இரு பிரிவுகள் இருந்தன என்று தெரிகிறது. ஒன்று, சீவிதம் பெற்றிருக்கும் அதிகாரிகள் அரசாங்கத்திற்குரிய நிலவரி முதலான வரிகளை மாத்திரம் அந்நிலங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் குடிகளிடமிருந்து ஆண்டுதோறும் வாங்கிக்கொள்வது; மற்றொன்று சீவிதமாகத் தமக்குக் கிடைத்துள்ள நிலங்களை இறையிலியாகத் தாமே நேரில் அவ்வதிகாரிகள் அனுபவித்துக்கொண்டிருப்பதாகும். அரசியல் அதிகாரிகளுக்கும் பிறருக்கும் நிலவரி முதலானவற்றை மாத்திரம் வாங்கிக்கொள்ளும்படி அரசரால் கொடுக்கப்பட்ட நிலங்கள் இறை நீங்கல் எனவும் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் இறை இறங்கல் எனவும் அரசாங்க வரிப்புத்தகத்தில் குறிக்கப்படுவது அக்கால வழக்கம் என்பது கல்வெட்டுக்களால் நன்கறியக்கிடக்கின்றது. இறையிலியாக அமைந்த தேவதானத்திற்கு வழங்கப் பட்டுள்ள உரிமைகள் எல்லாம், அவ்வாறமைந்த பிரமதேயம், பள்ளிச்சந்தம் முதலிய வற்றிற்கும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைத் திருவாலங்காட்டுச் செப்பேடு களோடு அன்பிற் செப்பேடுகளையும் ஆனைமங்கலச் செப்பேடுகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து பார்ப்போர் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். பார்ப்பனர், அரசரிடத்தும் பிறரிடத்தும் பிரமதேயமாக வாங்கிய ஊரிலுள்ள நிலங்களைத் தம் தம் பங்கு வீதப்படி அனுபவித்துக் கொண்டு வருவது வழக்கம்-அவ்வூருக்குப் பிரமதேயம் என்று பெயர் வழங்கியது. ஓர் அந்தணரே ஒரு கிராமம் முழுவதையும் பிரமதேயமாகப் பெற்று இறையிலி உரிமையுடன் அனுபவித்தால் அவ்வூர் ஏகபோகப் பிரமதேயம் என்று கூறப்படுவது வழக்கம். சுந்தரசோழனுக்கு அமைச்சனாக விளங்கிய வனும் மழநாட்டு அன்பில் என்ற ஊரில் வாழ்ந்தவனும் ஆகிய அநிருத்த பிரமாதிராசனுக்கு அவ்வேந்தனால் திருவழுந்தூர் நாட்டில் இறையிலியாக வழங்கப்பட்ட கருணாகரமங்கலம் என்னும் ஊர் ஏகபோகப் பிரமதேய வகையைச் சேர்ந்ததாகும். சில ஊர்களில் ஒரு பகுதி தேவதானமாகவும் மற்றொரு பகுதி பிரம தேயமாகவும் இருந்தன என்று தெரிகிறது, திருவிடைமருதூர்க் கண்மையிலுள்ள திருவிசலூர், திரைமூர், கண்டியூர்க்குக் கிழக்கேயுள்ள திருவேதிகுடி முதலான ஊர்கள் தேவதான பிரமதேயங்களாக இருந்தன என்பதைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. சில ஊர்களில் ஒரு பகுதி தேவதானமாகவும் மற்றொரு பகுதி பிறவகுப்பினர்க்குரிய வெள்ளான் வகை நிலமாகவும் இருந்துள்ளன. திருவையாற்றிற்கு அண்மையிலுள்ள திருநெய்த்தானம், செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவடந்தை முதலான ஊர்களில் ஒரு பகுதி தேவதானமாகவும் மற்றொரு பகுதி வெள்ளான் வகையாகவும் இருந்தன என்பது அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக்களால் நன்கறியப்படுகின்றது. சில ஊர்களில் ஒரு பகுதி பிரமதேயமாகவும் மற்றொரு பகுதி வெள்ளான் வகையாகவும் இருந்துள்ளன. இக்காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் இராசகிரி என வழங்கும் இராசகேசரிச் சதுர்வேதிமங்கலம், செங்கல்பட்டு ஜில்லாவிலுள்ள வேளாச்சேரி முதலான ஊர்களில் ஒருபகுதி பிரமதேயமாகவும் மற்றொரு பகுதி வெள்ளான் வகையாகவும் இருந்தன என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவ்வாறு பிரமதேயமும் வெள்ளான் வகையும் கலந்திருந்த ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி நடத்துவதற்கு இரண்டிரண்டு சபைகள் தனித்தனியாக இருந்து வந்தன. அவ்விருவேறு சபைகள் சதுர்வேதி மங்கலத்துச் சபையும் ஊரவையுமாகும். ஒரே கிராமத்தில் இரு சபைகள் ஊராட்சி நடத்தி வருவதில் சில இடர்ப்பாடுகள் காணப்பட்டமையால் அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் ஆட்சியின் கீழ் அமைத்தல் வேண்டும் என்ற எண்ணம் முதல் இராசராச சோழனுக்குத் தோன்றியதாகக் தெரிகிறது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் பிரமதேயப் பகுதியை அனுபவிக்கும் பார்ப்பனரையும் வெள்ளான் வகை நிலங்களுக்குரிமையாள ராகிய பிற வகுப்பினரையும் சேர்த்துக் கிராமசபை அமைத்தல் வேண்டும். இவ்விரு பகுதியிலுள்ளவர்கள் ஒருங்கே ஒரேசபையில் உறுப்பினராகி ஊராட்சி நடத்தும் உட்கழகங்களில் அமர்வதற்கு உறுப்பினர்க்குரிய தகுதி பற்றிய விதிகள் இடங்கொடுக்கவில்லை. அதனால், பார்ப்பனர் ஊர்களில் கிராம ஊழியத்தின் பொருட்டுப் பணிமக்கட்குக் கொடுக்கப்பட்டுள்ள மானியங்கள் தவிர, மற்ற வகுப்பினர் வெள்ளான்வகையில் அனுபவித்து வரும் நிலங்கள் எல்லா வற்றையும் விற்றுவிடவேண்டுமென்று அவ்வேந்தன் ஓர் உத்தரவு செய்யும் நிலைமை ஏற்பட்டதென்று தெரிகிறது. அவ்வுத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஓர் அதிகாரியும் நியமனஞ் செய்யப்பட்டுள்ளான் என்பது கருந்திட்டைக்குடிக் கல்வெட்டொன்றால் புலப்படுகின்றது. அத்தகைய ஊர்களிலுள்ள பிற வகுப்பினருடைய நிலங்களை அவ்வவ்வூரிலுள்ள பார்ப்பனராதல், கிராமசபை யாராதல் விலைக்கு வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது இராசராச சோழனது கருத்துப் போலும். வெள்ளான் வகை நிலவுரிமையாளர் தம் நிலங்களுக்குரிய விலைப்பொருளைப் பெற்று வேறு ஊர்களில் நிலங்கள் வாங்கி அனுபவிப்ப தற்குத் தடையொன்றுமில்லை என்று தெரிகிறது. இவ்வாறு விற்கப்பட்டு வந்த நிலங்களுள் இராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்திலிருந்த பிற வகுப்பினரின் நிலங்கள் சிலவற்றை முதல் இராசஇராச சோழனுடைய தமக்கையார் குந்தவைபிராட்டியார் விலைக்குப் பெற்று அவற்றைக் கருந்திட்டைக்குடித் திருக்கோயிலில் திருநுந்தா விளக்கு எரித்தற்கு நிவந்தமாக அளித்தனர் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டால் நன்கறியக்கிடக்கின்றது. முதல் இராசராச சோழனது உத்தரவும் இக்கருந் திட்டைக்குடிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பது அறியற்பாலதொன்றாகும். முதல் இராசராச சோழனுடைய புதல்வனாகிய கங்கை கொண்ட சோழன் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர் ஊரில் இருந்த பிறவகுப்பினரின் நிலங்கள் விற்கப்பட வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு வந்தது என்று தெரிகிறது. செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள வெளிச்சேரியிலிருந்த மற்ற வகுப்பினரின் நிலங்கள் அரசனது ஆணையின்படி அவ்வூரிலுள்ள திருத்தண்டீச்சுரமுடையார் கோயிலுக்கு விற்கப்பட்டன என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. இவ்வாறு சோழ மன்னர்கள் வெள்ளான் வகை நிலங்களைப் பிரமதேயமாகவும் தேவதானமாகவும் மாற்றியமை போல் பிரமதேயங்களை வெள்ளான்வகையாகவும் தேவதானமாகவும் மாற்றிய நிகழ்ச்சிகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. வட ஆர்க்காடு ஜில்லாவில் பிரமதேயமாயிருந்த பழையனூரை வெள்ளான் வகையாக மாற்றி அதற்குக் குடிகள் கொடுக்கவேண்டிய அரசிறையை வடதிருவாலங் காட்டுச் சிவன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நிலை இறையாகச் செலுத்தி வருமாறு கங்கை கொண்ட சோழன் உத்தரவு செய்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் நன்கறியலாம். இவ்வேந்த னுடைய புதல்வனாகிய சுந்தர சோழ பாண்டியன் என்பான், பாண்டி மண்டலத்திற்கும் சேர மண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதி யாக மதுரைமாநகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்து வந்த காலத்தில் பிரமதேய மாயிருந்த ஐந்து வேலி நிலத்தை வெள்ளான் வகையாக மாற்றி அதற்குரிய அரசிறையைத் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள திருவாலீசுவரத்துக் கோயிலுக்குக் குடிகள் ஆண்டுதோறும் கொடுத்துவருமாறு செய்தமை அவ்வூர்க்கல்வெட்டால் உணரக்கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா விலுள்ள பெண்ணாகடத்திற்கண்மையில் பிரமதேயமாக அனுபவிக்கப்பட்டு வந்த கூடலூர் என்னும் ஊரை இரண்டாங் குலோத்துங்க சோழன் தேவ தானமாக மாற்றி எதிரிலி சோழநல்லூர் என்று பெயரிட்டு, அவ்வூரிலுள்ள தூங்கானைமாடத் திருக் கோயிலின் வழிபாட்டுச் செலவிற்காக வழங்கினான் என்று அங்குக் காணப்படும் கல்வெட்டொன்று தெரிவிக் கின்றது. இவ்வாறு நிலவுரிமைகளை மாற்றியமைக்க நேரும் போதெல்லாம் அந்நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்களையாதல் அவற்றிற்குரிய விலைப்பொருளையாதல் உரியவர்களுக்குச் சோழ மன்னர்கள் கொடுத்து வந்தனர் என்று தெரிகிறது. சோழ மன்னர்கள் கோயில்களுக்குத் தேவதானம் அளிக்குங்கால், சில சமயங்களில் அவ்வூரிலுள்ள குடிகளையும் அவர்களுக்குரிய பழைய உரிமையோடு அக்கோயிலுக்குக் கொடுத்து விடுவதும் உண்டு. அத்தகைய தேவதானம் அக்காலத்தில் குடிநீங்காத்தேவதானம்1 என்றுவழங்கிவந்தது. வடவெள்ளாற்றிற்கும் தென் பெண்ணையாற்றிற்கும் இடையிலுள்ள திருமுனைப்பாடி, நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்குப் போய் அங்கேயே தங்கிவிட்டவர்களுடைய நிலங்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவ்வூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடிகளுக்குக் கொடுத்துப்பயிரிடச் செய்து, ஆண்டுதோறும் அவர்களிடம் அரசிறை வாங்க வேண்டும் என்று கங்கை கொண்ட சோழன் கி. பி. 1027 - இல் செய்த உத்தரவு ஒன்று, தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலுகாவிலுள்ள ஏமப்பேறூர்க் கோயிலில்2 பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், பண்டைக் காலத்தில் சோழர்முதலான தமிழ் வேந்தர்கட்கு அன்னோர் ஆட்சிபுரிந்த நாடுகளில் எத்துணை நிலவுரிமை இருந்து வந்தது என்பது நன்கு புலனாதல் காண்க. திருமுனைப்பாடி நாட்டில் சில ஊர்களில் குடிமக்கள் தங்காமல் ஓடிவிட்டமை பற்றி இவ்வுத்தரவு பொதுவில் செய்யும்படி நேர்ந்தது போலும்.  6. நீர்வளமும் நீர்பாசனமும் வான்பொய்ப்பினும் தான்பொய்யாத காவிரியாறும் அதன் கிளைகளாக நிலவும் பல பேராறுகளும் சோழ மண்டலத்தை என்றும் குன்றாத வளம் படைத்த பெருநாடாக்கி, மேதக்க-சோழவளநாடு சோறுடைத்து என்று புகழ்ந்து கூறுமாறு செய்துள்ளமை அறியற்பாலதாகும். இதுபற்றியே, இந்நாட்டைக் காவிரிநாடு எனவும் பொன்னிநாடு எனவும் புலவர் பெருமக்கள் கூறியுள்ளனர். நிறை மொழி மாந்தராகிய இளங்கோவடிகள், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி என்று வாழ்த்தியவாறு இப்பேராறு பண்டைக்காலம் முதல் சோழ நாட்டைச் செழிப்பித்து வளங்கொழிக்கும் நிலையில் வைத்துப்பேருதவியாற்றி வருதலை யாவரும் அறிவர். கடைச்சங்க காலத்தில் பெருவீரமும் பேராற்றலும் படைத்து விளங்கிய சோழன்கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் என்ற புலவர் பெருமான். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை கடுந்தெற்று முடையின் இடங்கெடக் கிடக்குஞ் சாலிநெல்லின் சிறைகொள் வேலி யாயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே என்று தம் பொருநராற்றுப் படையில் பாராட்டியுள்ளனர். இதில் காவிரியாறு சோழநாட்டை வளப்படுத்திப் பாதுகாத்து வருவதையும் அத்தகைய சிறந்த நாட்டைச் சோழன் கரிகாற்பெரு வளத்தான் தனக்கே யுரியதாகக் கொண்டு விளங்குவதையும் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் தெளிவாகக் கூறுதல் காணலாம். இப்பெருவேந்தனே காவிரியின் இருமருங்கும் கரை யெடுப்பித்து அதனை நாட்டிற்குப் பயன்படும்படிசெய்து புகழ் எய்தியவன். இதுபற்றியே இவனைப் பொன்னிக்கரை கண்ட பூபதி என்று கவிச்சக்கரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழனுலாவில் புகழ்ந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டினில் வரையப்பெற்ற புண்ணிய குமாரனுடைய மேல்பாட்டுச் செப்பேடுகளிலும் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் வீரராசேந்திர சோழனது கன்னியாகுமரிக்கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்து அதன் வெள்ளத்தைத் தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை கூறப்பட்டுள்ளது. இவ்வேந்தன் அவ்வரிய செயலை எவ்வாண்டில் நிறைவேற்றினான் என்பதை, தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்க கரிகால வேந்தனுந்தான்-பக்கம் அலைக்கும் புகழ்ப் பொன்னி யாறுகரை கண்டான் மலைக்கும் புயத்தானும் வந்து. என்ற பழைய வெண்பாவினால் நன்கறியலாம், இதனை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடுமிடத்து, கி. பி. முதல் நூற்றாண்டின் கடைப்பகுதியில் கரிகாற் பெருவளத்தான் காவிரியாற்றிற்குக் கரை அமைத்திருத்தல் வேண்டும் என்று கொள்ளக்கிடக்கின்றது. மேலே குறித்துள்ள வெண்பாவின் முதலடியில் தொக்க சகனிற் றொளாயிரத்துத் தொண்ணூற்றில் என்ற மற்றொரு பாடம் காணப்படுகின்றது. இதனை நோக்குங்கால் கி. பி. 1068 - ஆம் ஆண்டில் கரிகாலன் என்ற பெயருடைய சோழமன்னன் ஒருவன் காவிரிக்குக் கரை கட்டுவித்தான் என்பது புலனாகின்றது. இக்காலப் பகுதியில் சோழ இராச்சியத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன் கங்கை கொண்ட சோழனுடைய புதல்வனாகிய வீரராசேந்திர சோழனேயாவன். இவ்வேந்தனுக்கும் கரிகாலன் என்ற பெயர் வழங்கியுள்ளது. எனினும் ரேநாண்டுச் சோழனாகிய புண்ணியகுமாரனது மேல்பாட்டுச் செப்பேட்டில் கரிகாற் சோழன் காவிரிக்குக் கரை அமைத்த செய்தி காணப்படுவதால் அந்நிகழ்ச்சி கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிகழ்ந்ததாதல் வேண்டும். ஆகவே, கி. மு. முதல் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாற் பெருவளத்தானாகிய திருமாவளவனே காவிரியாற்றிற்கு முதலில் கரை அமைத்துச் சோழமண்டலத்தை வளப்படுத்தியவன் என்பது தெள்ளிது. இவ்வளவர் பெருமான் சோழ மண்டலத்தில் காடு கொன்று நாடாக்கிக் - குளந்தொட்டு வளம்பெருக்கினான் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பட்டினப்பாலையில் கூறியிருத்தல் உணரற்பாலதாகும். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர், வடகுடி என்ற ஊர்களிலும் தஞ்சாவூர் ஜில்லா விலுள்ள திருநெய்த்தானம் திருப்பழனம் என்ற ஊர்களிலும் ஆதித்தன் முதற் பராந்தகன் ஆகிய சோழமன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வரையப்பட்டுள்ள சிலகல்வெட்டுகள் காவிரிக் கரையைக் கரிகாலக் கரை என்று கூறுகின்றன.1 இக்கல்வெட்டு களால் அவ்வேந்தர்களின் காலமாகிய கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் காவிரியாற்றின் வடகரையைக் கரிகாலக்கரை என்றே மக்கள் வழங்கி வந்தனர் என்பது தெள்ளிதிற்புலனாதல் காண்க. எனவே, கடைச் சங்க காலத்தில் பெரும்புகழுடன் நிலவிய சோழன் கரிகாற் பெருவளத்தான் காவிரிக்கு முதலில் கரை அமைத்தவன் என்பதும் அதற்குத் தக்க சான்றில்லை என்று சிலர் கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்பதும் நன்கு துணியப்படும். கடைச்சங்க காலத்தில் காவிரியும் அரிசிலாரும் சோழ மண்டலத்தைச் செழிப்பித்தன என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் நன்கறியக் கிடக்கின்றது. மண்ணி, கொள்ளிடம், கடுவாய், வெண்ணி என்ற சோழ நாட்டாறுகளைக் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நிலவிய சைவசமய குரவர்கள் தம் அருட்பாடல்களில் குறித்திருத்தல் காணலாம். இவ் ஆறுகள் கரிகாற் சோழன் காலத்திலேயே காவிரியின் நீர்ப்பெருக்கை வேறு ஆறு மூலமாகப் போக்கி நாட்டைக் காக்கவும் நாட்டை வளம்படுத்தவும் வெட்டப்பட்டன வாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. கி. பி. பத்தாம் நூற்றாண்டு முதல் ஆட்சி புரிந்த சோழமன்னர்கள் பல ஆறுகளையும் ஏரிகளையும் சோழ இராச்சியத்தில் வெட்டியுள்ளனர் என்பது அவற்றிற்குத் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்களாலும் கல்வெட்டுக்களாலும் நன்கு புலப்படு கிறது. தஞ்சாவூருக்கு வடபுறத்தில் ஓடும் வடவாறு வீரசோழ வடவாறு எனவும், திருப்பனந்தாளுக்கு வடக்கேயுள்ள கொள்ளிடப் பேரணையிலிருந்து பிரிந்து வடக்கே ஓடும் வடவாறு மதுராந்தக வடவாறு எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால், இந்த இரண்டாறுகளும், வீரசோழன் மதுராந்தகசோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற முதற் பராந்தக சோழனால் வெட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். திருவை காவூர், திருப்புறம்பியம், திருவாப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் ஆகிய ஊர்களின் வழியாக ஓடுவதும் சண்டேசுவர நாயனார் மணலால் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் வழிபாடு புரிந்து வந்ததும் ஆகிய மண்ணியாற்றிற்குக் குஞ்சரமல்லன் என்னும் பெயர்1 அந்த நாளில் வழங்கியிருத்தலால் அப்பேராறு குஞ்சரமல்லன் என்ற சிறப்புப் பெயருடைய முதற் பராந்தக சோழனால் திருத்தி யமைக்கப்பெற்று நாட்டிற்குப் பயன் படுத்தப்பட்டதாதல் வேண்டும். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த உய்யக் கொண்டான், கோனேரிராசபுரத்திற் கண்மையில் ஓடும்கீர்த்திமான் ஆகிய ஆறுகள், முதல் இராசராச சோழனாலும் குடமுருட்டி என வழங்கும் கடுவாயிலிருந்து சுந்தரப்பெருமாள் கோயில் பக்கத்தில் பிரியும் முடிகொண்டான் என்னும் ஆறு,2 முடிகொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற கங்கைகொண்ட சோழனாலும் , கும்பகோணத்திற்குக் கிழக்கே மணஞ்சேரிக் கண்மையில் காவிரியினின்று பிரியும் வீரசோழன் என்ற ஆறு வீரராசேந்திர சோழனாலும்3 காவிரியிலிருந்து குற்றாலத்திற்கு வடபால் பிரிந்துசெல்லும் விக்கிரமனாறு விக்கிரம சோழனாலும் அன்னோர் ஆட்சிக் காலங்களிலும் சோணாட்டை வளம்படுத்தற்பொருட்டு வெட்டப்பட்டுள்ளன என்பது அவற்றிற்கு வழங்கிவரும் பெயர்களாலும் கல்வெட்டுக் களாலும் நன்கு துணியப்படும். பேராறுகளின் கிளைகளாகப் புதிய ஆறுகள் வெட்டுவதற்கு இயலாத நிலையிலுள்ள பெருநிலப்பரப்புக்களில் ஆங்காங்கு ஏரிகள் அமைத்து உழவுத்தொழில் இனிது நடைபெற்று வருமாறு சோழ மன்னர்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வட ஆர்க்காடு ஜில்லா சோழசிங்கபுரத்திற்கு அண்மையிலுள்ள சோழவாரிதி என்ற ஏரியும்,1 தென்னார்க்காடு ஜில்லாவில் சிதம்பரத்திற்கு மேற்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள வீரநாராயணன் ஏரியும் இக்காலத்தில் வீராணத்தான் ஏரி என்று வழங்கிவருகிறது. கொள்ளிடத் திலிருந்து தண்ணீரைக் கொணர்ந்து இவ்வேரியை நிரப்பிவைக்கும் பொருட்டே முதற் பாராந்தக சோழனால் வடவாறு வெட்டப்பெற்றது என்பதும், அக்காலத்தில் அது மதுராந்தக வடவாறு2 என்ற பெயருடன் நிலவியது என்பதும், அறியற்பாலவாம். வீரநாராயணன் மதுராந்தகன் என்பன முதற்பராந்தக சோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. வீர நாராயணன் ஏரியினால் சிதம்பரந் தாலுகாவின் பெரும் பகுதி செழிப்புற்றிருப்பதை யாவரும் அறிவர். முதற்பராந்தக சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனும் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூருடை யானும் ஆகிய அருள்நிதி கலியன் என்பான், மதுரை ஜில்லா ஆனைமலைப் பக்கத்திலுள்ள நரசிங்க மங்கலத்தில் கலியனேரி என்னும் ஏரியொன்றையமைத்து அதிலிருந்து நிலங்களுக்கு நீர்பாய்ந்து ஆண்டு தோறும் நெல்விளையுமாறு செய்தான் என்று அவ்வூர்க்கோயிலில் வட்டெழுத்தில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.3 எனவே, பாண்டிய நாடு முதற் பராந்தக சோழனது ஆட்சிக்குட் பட்டிருந்த காலத்தில் அவ்வூரில் இவ்வேரி அமைக்கப்பட்டுள்ளது என்றுணர்க. தென்னார்க்காடு ஜில்லா உலக புரத்திலுள்ள கண்டராதித்தப் பேரேரியும்,1 திருச்சிராப்பள்ளி ஜில்லா திருமழபாடிக் கண்மையிலுள்ள செம்பியன் மாதேவிப் பேரேரியும்9 முதற் பராந்தகன் புதல்வனாகிய கண்டராதித்த சோழனாலும் இவ்வேந்தன் மனைவியார் செம்பியன் மாதேவியாராலும் அமைக்கப்பட்டவையாகும். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்திலுள்ள மதுராந்தகப் பேரேரியும்,3 புதுச்சேரியைச்சார்ந்த திரிபுவனியிலுள்ள மதுராந்தகப் பேரேரியும்,4 வெட்டியவன் கண்டராதித்த சோழன் புதல்வனாகிய உத்தமசோழன் ஆவன். இவனுக்கு மதுராந்தகன் என்ற பிறிதொரு பெயரும் உண்டு.5 என்பது அறியத் தக்கது. வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ள பிரமதேசம் என்ற ஊரில் சுந்தர சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி என்ற இருபெரும் ஏரிகள்6 இரண்டாம் பராந்த கனாகிய சுந்தரசோழனாலும் இம்மன்னர் பிரானுடைய அருமைப்புதல்வியார் குந்தவை யாராலும் அமைக்கப்பட்டுள்ளமை அறியற்பாலதாகும். முதல் இராஜேந்திர சோழன், தான் புதியதாக அமைத்த தலைநகர மாகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மேற்கே சோழகங்கம் என்ற பேரேரி யொன்றமைத்துத் தலைநகரத்தையும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் சில பகுதிகளையும் நீர்வள முடையனவாகச் செய்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும். அது கங்கை நீர்மயமான வெற்றித்தூண்7 என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகளில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. அவ்வேரி இக்காலத்தில் அழிவுற்ற நிலையிலிருப்பினும் பொன்னேரி என்ற பெயருடன்சோழ மன்னர்களின் பண்டைப் பெருமையினை நம்மனோர்க் குணர்த்திக் கொண்டு தோற்றமளித்தலை இன்றுங் காணலாம். சித்தூர் ஜில்லா புங்கனூரில் இராஜேந்திர சோழப் பெரியேரி என்ற ஏரியொன்று முதற்குலோத்துங்க சோழன்1 ஆட்சிக்காலத்தில் வெட்டப் பட்டுள்ளது என்பது அவ்வூரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.2 தஞ்சாவூர் ஜில்லா பாவநாசம் தாலுகாவிலுள்ள முனியூரில் குலோத்துங்க சோழப்பேரேரி என்றதோர் ஏரி, இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது என்ற செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப்படு கின்றது.3 இதுகாறும் விளக்கியவாற்றால் சோழமன்னர்கள் தம் ஆட்சிக்குட் பட்ட நாடுகளில் அவற்றின் இயற்கையமைப்பிற்குத் தக்கவாறு பல ஆறுகளும் ஏரிகளும் வெட்டி அந்நாடுகளை வளப்படுத்தியுள்ளமை தெள்ளிதிற்புலனாதல் காணலாம். இவர்கள் ஆட்சிக் காலங்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்ப்பின் இவர்கள் வெட்டியன எத்தனையோ பல ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் என்பது நன்கு புலப்படும். பேராறுகளுக்குக் குறுக்கே அணைகள் கட்டித் தண்ணீரைத் தேக்கிக் கிளையாறுகளில் விட்டும், ஏரிகளில் மதகுகள் கட்டிக் கால்வாய்களின் மூலமாக வேண்டிய அளவில் தண்ணீரை விட்டும், ஆறுகளும் ஏரிகளும் கரைகளை இடிக்காதவாறு கருங்கற்களால்கற்படைகள் அமைத்தும் சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் புரிந்துள்ள அருந்தொண்டுகள் பலவாகும். திருவரங்கத்திற்குக் கிழக்கே பத்துமைல் தூரத்தில் கோவிலடிக்கு அண்மையிலுள்ள பேரணை, கி. பி. 1063-முதல் 1070 வரையில் ஆட்சிபுரிந்த வீரராசேந்திர சோழனால் அமைக்கப்பட்டதேயாகும், அப்பேரணையின் வலிமையைப் பல்லாற்றானும் தெளிவாக உணர்ந்து கொண்ட ஆங்கிலேயர் பெரிதும் வியப்பெய்தி அதனை அப்படியே வைத்துக் கொண்டு அதன்மேல் புதிய பாலத்தைக்கட்டி விட்டமை குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். வீரராசேந்திர சோழன் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டிய அப்பேரணையினால் தான் தஞ்சாவூர் ஜில்லாவில் நீர்வளம் பெருகி அதனால் நெல்விளைவும் மிகுந்தது என்பது உணரற்பால தொன்றாம். ஏரிகளை ஆண்டுதோறும் ஆழமாக வெட்டியும் கரைகளை உயரமாகக் கட்டியும் மழைக்காலத்தில் தண்ணீரால் நிரப்பியும் பொது மக்கட்குப் பயன்படுமாறு செய்து வந்தவர்கள் கிராமசபையாரால் தெரிந்தெடுக்கப் பெற்று ஓர் உட்கழகத் தினரேயாவர். அன்னோர் ஏரிவாரியப் பெருமக்கள் என்று அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏரி களை ஒழுங்காகப் பாதுகாத்து வரும் பொருட்டுத் தனியாக இறையிலி நிலங்களும் பொருளும் அறம்புரியும் திறல்படைத்த பொது மக்களால் அந்நாளில் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.1 அங்ஙனம் கொடுக்கப்படாத ஊர்களில் ஏரியினால் நீர்பாய்ச்சப் பெறும் நிலங்களை அனுபவிப்போரிடம் மா ஒன்றுக்கு இரண்டு மரக்கால் விழுக்காடு ஒரு வரி வாங்கப்பட்டு வந்தது.2 அவ்வரி ஏரியாயம் என்று வழங்கப்பட்டமை அறியத்தக்கது. நிலங்களை விற்றல், இனாமாக வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அந்நிலங்கள் இன்ன ஆறு அல்லது இன்ன ஏரியின் நீர்ப்பாய்ச்சலுக்குரியன என்பதையும் ஆவணங்களில் குறித்து விடுவது அக்கால வழக்கம். ஏரி, குளம் முதலானவற்றிலிருந்து புலன்களுக்கு நீர் பாய்ச்சுவோர் கிராமத்தில் தமக்குரிய பங்கு வீதத்தின்படி பாய்ச்சிக் கொள்வதுவே அந்நாளில் கைக் கொண்டமுறை என்று தெரிகிறது.  7. பொது மக்களும் சமூக வாழ்க்கையும் சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், சோழ நாட்டிலும் அன்னோர் ஆட்சிக்குட்பட்ட மற்ற நாடுகளிலும் வாழ்ந்து வந்த மக்களின் தொகை யாது என்பதை ஆராய்ந்து காண இயலவில்லை. அவ்வேந்தர்கள் தம் இராச்சியத்தில் அரசிறை இறுத்தற்குரிய விளைநிலங்களையும் பிற நிலங்களையும் சிறிதும் விடாமல் அளந்து கணக்கெடுத்துள்ளனர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அத்தகைய பேரரசர்கள் தம் இராச்சியத்தில் தாம் பாதுகாத்து வந்த பொதுமக்களின் தொகையைக் கணக்கெடுத்து அறிந்து கொள்ள வேண்டு மென்று எண்ணியிருப்பார்களாயின் அதனையும் எளிதில் நிறைவேற்றியிருப்பார்கள் என்பது திண்ணம். அவர்கள் ஆட்சிக்காலங்களில் பொறிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழகத்தி லுள்ள திருக்கோயில்களில் இக்காலத்தில் காண்கின்றோம். அக்கல்வெட்டு களில் அவ்வவ்வூரில் வாழ்ந்துகொண்டிருந்த பொதுமக்களின் தொகை மக்கட் கணக்கெடுத்த குறிப்பு ஆகியவற்றுள் ஒன்றேனும் காணப்பட வில்லை. ஆகவே, மக்கள் கணக்கெடுத்துத் தம் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிமக்களின் தொகை இவ்வளவு என்பதை அறிய வேண்டும் என்ற அவா அவர்கட்கு அந்நாளில் இல்லை என்றே கூறலாம். இனி, நம் தமிழகத்தினைச் சார்ந்து வடபாலுள்ள சில நாடுகள் இரட்டப்பாடி ஏழரையிலக்கம் எனவும், கங்க பாடி தொண்ணூற்றாறாயிரம் நுளம்பாடி முப்பத்தீராயிரம் எனவும், வனவாசி பன்னீராயிரம் எனவும் இடதுறைநாடு இரண்டாயிரம் எனவும். வேங்கை நாடு ஆறாயிரம் எனவும் முற்காலத்தில் வழங்கப்பெற்று வந்தமை கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் அறியக் கிடக்கின்றது. இங்ஙனம் நாட்டின் பெயரோடு இணைத்து வழங்கப்பெற்றுள்ள எண்கள் அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் தொகையைக் குறிக்குமென்று கூறினோரும் உண்டு. அஃது உண்மையா யிருப்பின் அந்நாட்டரசர்கள் முற்காலத்தில் தம் நாடுகளி லிருந்து மக்களின் தொகையைக் கணக்கிட்டுக் கண்டிருத்தல் வேண்டும். அந்நாடுகளோடு அரசியல் தொடர்பு பூண்ட சோழர்களும் தம் நாடுகளில் அவ்வாறு செய்திருத்தல் வேண்டும். இவையிரண்டும் நிகழ்ந்தமைக்கு யாண்டும் ஆதாரங்கள் காணப்படவில்லை. எனவே, அன்னோரின் கூற்று உண்மைக்கு முரண்பட்ட தொன்றே எனலாம். திருக்கோவலூர் கல்வெட் டொன்றில் மலாடு இரண்டாயிரம் பூமியும் என்ற தொடரும் மைசூர் நாட்டில் கோலார் ஜில்லாவிலுள்ள இரண்டு கல்வெட்டுக் களிற் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் நாற்பத் தெண்ணாயிரம் பூமியும் என்ற தொடரும் காணப் படுகின்றன. இவற்றைக் கூர்ந்து நோக்குங்கால். பண்டைக்காலத்தில் நாட்டின் பெயரோடு இணைத்து வழங்கப்பட்டு வந்த எண், அந்நாட்டிலடங்கியிருந்த பூமிகளின் தொகையேயாம் என்பது நன்கு வெளியாதல் காணலாம். ஒரு பூமி என்பது எத்தனை வேலிகளை அல்லது நிலத்தின் வேறு சிறு பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது என்பது இப்போது புலப் படவில்லை. ஆயினும், நாட்டின் பெயரோடு இணைத்து வழங்கப்பட்டு வந்த எண், பூமியின் தொகையன்று என்பதும், அஃது அந்நாட்டிலிருந்த மக்களின் தொகையன்று என்பதும் நன்கு தெளியப்படும். எனவே, நம் நாட்டில் மக்களை எண்ணிக் கணக்கெடுக்கும் வழக்கம் அன்னியர் ஆட்சியில் தோன்றியது என்று கூறலாம். இனி, சோழர் ஆட்சியில் பல்வகைப்பட்ட வகுப்பினரும் தம் தம் கடமை களை ஒழுங்காகச் செய்து கொண்டு நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதற்குக் கல்வெட்டுக்களில் பல ஆதாரங்கள் உள்ளன. அந்நாட்களில் மேல் வகுப்பினர் கீழ் வகுப்பினர் என்ற பாகுபாடுகளும் நிலைபெற்றிருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. அத்தகைய வேறுபாடு பற்றி நாட்டில் எப்பகுதியிலும் பூசலும் குழப்பமும் தோன்றியமைக்குச் சான்றுகள் காணப்படாமை குறிப்பிடத் தக்கதொன்றாகும். ஆகவே, அக்காலத்தில் மக்கள் எல்லோரும் குல வேறுபாடு கருதி முரண்பட்டுப் போகாமல் தம்முள் ஒற்றுமையுடையவராய் ஒருவர் உரிமையில் மற்றொருவர் தலையிடாமல் தம்தம் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டு இனிது வாழ்ந்து வந்தனர் என்பது தெள்ளிது. அக்காலத்தில் ஒவ்வொருவரும் தம்தம் குலத் தொழிலையே செய்துகொண்டு நகரங்களிலும் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் அமைதியாக வாழ்ந்து வந்தமையால் ஒருவனைப் பார்த்து மற்றொருவன் அழுக்காறு கொள்வதற்கு இடமில்லாமலிருந்தது. அரசியல் அலுவல்களுக்குத் தக்க ஆற்றலும் கல்வியறிவும் குடிப்பிறப்பும் உடையவர்களையே அரசன் தேர்ந்தெடுத்து வந்தமையால் அத்தேர்வுபற்றிப் பொதுமக்கட்கு எத்தகைய குறைபாடுகளும் இன்மை, நாட்டின் அமைதியான நிலைக்கு ஒரு காரணமாயிருந்தது எனலாம். அந்நாளில் பார்ப்பனர்கள் வேதங்களிலும் சாத்திரங் களிலும் வல்லுநராயிருந்தமையோடு இரவில் அம்பலங் களிலாதல் திருக்கோயில் மண்டபங்களிலாதல் அமர்ந்து வடமொழியிலுள்ள மகாபாரதம் பதினெண் புராணங்கள் முதலானவற்றைப் படித்துப் பொது மக்கள் உணர்ந்து கொள்ளுமாறு பொருள் விளக்கம் செய்தும் வாழ்ந்து வந்தனரென்று தெரிகிறது. அவர்களுடைய வடமொழிப் புலமையையும் சீலத்தையுங்கண்டு மகிழ்வெய்திய பொதுமக்கள் அன்னோரின் நல்வாழ்வின் பொருட்டு ஊர்ப்பொது நிலங்களுள் சிலவற்றை வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாரத விருத்தி, புராணவிருத்தி என்ற பெயர்களோடு இறையிலி நிலங்களாக அவர்கட்கு வழங்கிப் பெரிதும் ஆதரித்து வந்தனர் என்பது பல கல்வெட்டுக் களால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும் திருக்கோயில்களில் நாள்தோறும் உச்சியம் போதில் பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அரசர்களும் அரசியல் தலைவர்களும் பிற செல்வர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை அறியத்தக்கதாகும். பிரமதேயங்களாக விருந்த பார்ப்பனருடைய ஊர்களே யல்லாமல் மற்ற ஊர்களிலும் அன்னோர் ஒரு குழுவினராகத் தனித்தே வசித்து வந்தனர் என்பதற்கும். அவ்வாறு வசிப்பதில் அவர்கட்கு விருப்பம் இருந்தது என்பதற்கும் அரசாங்கத்தோடு பொதுமக்களும் அச்செயலை ஆதரித்து வந்தனர் என்பதற்கும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. கிராம சபையாரும் அரசாங்க அதிகாரிகளும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க நேரும்போது சில ஐயப்பாடுகளைச் சாத்திரங்களில் வல்லுநரான பட்டர் பெருமக்களிடம் உசாவித்தெளிந்து அன்னோரின் கருத்திற்கேற்ப முடிவு கூறும் வழக்கம் இருந்துள்ளது. அரசரிடம் சில வகுப்பினர் புதிய உரிமைகளைப்பெற்று வாழ்ந்து வந்தமைக்கும் கல்வெட்டுகளில் சான்றுகள் இல்லாமலில்லை. அங்ஙனம் புதிய உரிமைகளை முயன்று பெற்றவர்களுள் ஐந்து வகைப்பட்ட கம்மாளர்களை முதன்மை வாய்ந்தவர்கள் என்று கூறலாம். அவர்கள் பார்ப்பனரைப்போல் பூணுல் அணிந்து அக்கினி ஹோத்திரம் ஔபாசனம் ஆகியவற்றைச் செய்வதற்கு உரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வேண்டியுள்ளனர். அரசனது ஆணையின்படி சாத்திரங்களில் வல்லுநரான பார்ப்பனர்கள் ஒரு கூட்டம் நிகழ்த்தி, அவ்வகுப்பினர் பிரதிலோமரைக் காட்டிலும் உயர்ந்தவர்களான அநுலோமரைச்சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குரிய தொழில்கள் இன்னவை என்றும் அவர்களுக்குச் சாத்திர விதியின்படி பூணுல் அணிந்து கொள்ளும் உரிமை மாத்திரம் உண்டு என்றும், ஆனால் உபநயனம் செய்யுங்கால் மந்திரங்களின்றிச் செய்தல் வேண்டும் என்றும் அக்கினி ஹோத்திரம் ஔபாசனம் முதலியவற்றைச் செய்தல் கூடாது என்றும் முடிவு கூறியுள்ளனர். இந்நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இப்போது உய்யக்கொண்டான் திருமலை என்று வழங்கும் திருக்கற்குடிக் கோயிலில் முதற் குலோத்துங்கச் சோழனது 48-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டிருத்தல் உணரற் பாலதாகும்.1 கோயம்புத்தூர்க்கண்மையிலுள்ள பேரூரிலும்2 கருவூரிலும்3 காணப்படும் இரு கல்வெட்டுக்கள் தென்கொங்கு நாட்டுக் கம்மாளர்களுக்கும் வெங்கால நாட்டுக் கம்மாளர்களுக்கும் சோழ மன்னன் வழங்கியுள்ள சில உரிமைகளைத் தெளிவாக உணர்த்துகின்றன. அவ்வுரிமைகள்; கம்மாளர்கள் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதிப் பேரிகையுள்ளிட்டனவும் கொட்டுவித்துக் கொள்ளலாம்; தாம் செல்லும் இடங்களுக்குப் பாதரட்சை போட்டுக் கொண்டு செல்லலாம்; தம் வீடுகளுக்குச் சுண்ணாம்புச் சாந்து பூசிக் கொள்ளலாம் என்பனவாம். இவ்வுரிமைகளை மூன்றாங் குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சியின் பதினைந்தாம் ஆண்டாகிய கி. பி. 1193 -ல் கொங்கு மண்டலத்துக் கம்மாளர் களுக்கு வழங்கினன் என்று தெரிகிறது. மேலே குறித்துள்ள இரண்டூர்களிலும் உள்ள கல்வெட்டுக்கள் இரண்டும் ஒன்றன் படியாகவே இருத்தல் அறியத்தக்கது. கம்மாளர்களுக்கு அளிக்கப்பெற்ற இவ்வுரிமைகளை யுணர்த்தும் பிறிதொரு கல்வெட்டு கருவூர்த் தாலுக்கா விலுள்ள மொடக்கூரில் மெய்ப்பொருள்நாதசுவாமி திருக்கோயிலில்1 வரையப் பட்டிருத்தல் உணரற்பாலதாம். இதுவும் மேலே குறித்துள்ள இரு கல்வெட்டுக்களின் படியாகவே இருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உள்ளது. மதுரை ஜில்லா மேலூர்த் தாலுகாவிலுள்ள கீரனூரில் காணப்படும் கல்வெட்டொன்று,2 பாண்டிய நாட்டு இடையர் களுக்குச் சோழர் ஆட்சியில் வழங்கப் பெற்ற உரிமைகளைக் கூறுகின்றது. அக்கல்வெட்டில் சில பகுதிகள் சிதைந்துள்ளன. எனினும் அதில் குறிக்கப்பட்டுள்ள சில உரிமைகள் இடையர்கள் வீடுகட்டும்போது இருபுறமும் வாசற்படிகள் அமைத்துக் கொள்ளலாம்; வீடுகளுக்குச் சுண்ணாம்புச் சாந்து பூசிக்கொள்ளலாம்; நன்மைகளுக்குச் சிவிகையேறலாம்; தீமைக்கு மேல் வளைவுள்ள பாடை கட்டி அதன் மேலே பச்சைப்பட்டு, புலியூர்ப்பட்டு என்பவற்றைக் கட்டிக் கொள்ளலாம்; நன்மை தீமைகளுக்குப் பேரிகை கொட்டலாம் என்பனவாம். இப்படி மக்கள் செய்வார்களாகவும்; செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாகவும்; நம் ஓலை கொடுத்தோம் என்பது. விக்கிரம சோழனது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் செய்யப்பட்ட உத்தரவாகும். இவற்றால் ஒவ்வொரு வகுப்பினர்க்கும் அவர்கள் விரும்பிய நியாயமான உரிமைகளைச் சோழமன்னர்கள் வழங்கியுள்ளமை தெள்ளிது. அந்நாட்களில் பெண்மக்கள் எல்லாச்சிறப்புக்களும் எய்தியிருந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப் படுகிறது. எனினும் ஆண்மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுதல் காணலாம். இவ்வழக்கம் நம் தமிழகத்தில் தொன்று தொட்டு நிலைபெற்றிருந்த தொன்று என்பது மிக்க பழைமை வாய்ந்த நூலாகிய தொல்காப்பியம் கற்பியலில்1 பின் முறையாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள சூத்திரத்தினால் தெளிவாக அறியக்கிடக்கின்றது. சோழமன்னர்கள். தம் நாட்டின் அரசியல் நிலை காரணமாக, பெருவலிபடைத்த பிறவேந்தர் குறுநிலமன்னர் ஆகியோரின் தொடர்பினை நிலை பேறுடையதாகச்செய்து கொள்ளும் பொருட்டு அவர் களுடைய மகளிரை மணந்து கொள்ள நேர்ந்தமையால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை யுடையராயிருந்தனர் எனலாம். ஆனால் செல்வர்களும் அச்செயலை மேற்கொண்டது அன்னோரின் செல்வச்செருக்கால் நிகழ்ந்ததே யன்றிப் பிறிதொன்றுமில்லை. பொதுவாக நோக்குமிடத்து ஒருவனும் ஒருத்தியுமாக நிகழ்த்திய இல்வாழ்க்கைதான் யாண்டும் நிலவியது என்றும் அவ்வாழ்க்கையே அக்காலத்தில் சிறப்புடைய தாகக் கருதப்பட்டது என்றும் ஐயமின்றிக் கூறலாம். சோழர்களின் ஆட்சிக்காலத்தில், கணவரை இழந்த மகளிர் சிலர் பிரிவாற்றாமல் உடன்கட்டையேறி உயிர்துறந்து முள்ளனர். சோழ இராச்சியத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவில்தான் நிகழ்ந்துள்ளன. முதற் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் வீரசோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்க் குறுநில மன்னன் மனைவியார் கங்கமாதேவியார் என்பார் தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தி திருச்சிராப்பள்ளி ஜில்லா அல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால்1 உணரப்படு கிறது. பெரும் புகழ்படைத்த முதல் இராசராச சோழனுடைய அருமைத் தாயார் வானவன் மாதேவியார், தம் ஆருயிரனைய கணவனார் சுந்தரசோழர் காஞ்சிமாநகரில் பொன்மாளிகையில் இறந்த ஞான்று அவ்வரசர் பெருமானைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாமல் உடன்கட்டையேறி ஒருங்கே மாய்ந்த வரலாறு, திருக்கோவலூரில் முதல் இராசராசன் ஆட்சிக் காலத்தில் ஆசிரியப்பாவில் வரையப்பெற்ற நீண்ட கல்வெட்டொன்றில்2 படிப்போர் உள்ளம் உருகக் கூறப்பட்டுள்ளது. அவ்வருஞ் செயல் கங்கை கொண்ட சோழனது திருவாலங்காட்டுச் செப்பேட்டிலும்3 சொல்லப் பட்டிருத்தல் காணலாம். கங்கை கொண்ட சோழனுடைய மனைவியார் வீரமாதேவியார் என்பார், கணவனது பெரும் பிரிவிற்காற்றாமல் உடனுயிர் துறந்த செய்தி வடஆர்க்காடு ஜில்லாவில் பிரமதேசம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றால்4 அறியக் கிடக்கின்றது. அக்கல்வெட்டு, கங்கை கொண்ட சோழன், வீரமாதேவி ஆகிய இருவர் உயிர்கட்கும் நீர்வேட்கை நீங்கும் பொருட்டு, அம்மாதேவியின் உடன்பிறந்தான் சேனாபதி மதுராந்தகன் பரகேசரிவேளான் என்பவன் அவ்வூரில் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைத்தான் என்று கூறுகின்றது.5 மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் இராசராசமலய குலராசன் என்ற குறுநில மன்னன் மனைவி தன் கணவன் இறந்தபின்னர் உடன்கட்டை யேறியிருத்தல் வேண்டும் என்பது தென்னார்க்காடு ஜில்லா எலவானாசூர்க் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால்1 உணரக்கிடக்கின்றது. அக்கல்வெட்டினால் கணவனை இழந்த மகளிர் பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. இதுகாறும் விளக்கியவாற்றால் மகளிர் உடன்கட்டை யேறும் வழக்கம் சோழர்களின் ஆட்சியில் மிகமிக அருகியே இருந்து வந்தமை காணலாம். அவ்வருஞ் செயல்களும் மகளிர் சிலரின் உண்மையான விருப்பத்தையும் உளம் உருகிய வேண்டு கோளையும் மக்கள் மறுக்க முடியாத நிலையில் தான் நிகழ்ந்துள்ளன என்பது நன்கறிப் படுகின்றது. அந்நாளில், பரதத்திலும் இசையிலும் வல்ல தளிச்சேரிப் பெண்டுகள் பலர் திருக்கோயில்களில் பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய கலைகளில் தேர்ச்சி பெற்றுச் சிறப்பெய்தியிருந்த பலரைத் தமிழகத்திலுள்ள பல ஊர்களிலிருந்து அழைப்பித்துத் தஞ்சை இராசராசேச் சுரத்தைச் சூழ்ந்துள்ள தெருக்களில் முதல் இராசராசசோழன் குடியேற்றிய செய்தி அன்னோர் பெயர்களுடன் அக்கோயிலில் வரையப் பெற்றிருத்தலை2 இன்றுங்காணலாம். அன்றியும், திருக்கோவலூரிலுள்ள திருவீரட்டானேச்சுரர் கோயிலில் நாடகமகளிர் முப்பத்திரண்டுபேர் தொண்டு புரிந்து வந்த செய்தி அவ்வூரிலுள்ள முதல் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டொன்றால்3 புலப்படுகிறது. அவர்கள் நாள்தோறும் முக்காலங்களிலும் பணியாற்று வதற்குத் திருக்கோயிலைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்து வந்தமைபற்றித் தளிச்சேரிப் பெண்டுகள் எனவும், இறைவனுக்குத் தொண்டு புரிந்து வந்தமை பற்றித் தேவரடியார் எனவும், நாட்டியத்தில் வல்லுநரா யிருந்தமை பற்றி நாடகக்கணிகையர் எனவும் (யாரையும் மணந்து கொள்ளாமைபற்றிப் பதியிலார் எனவும்) அந்நாளில் வழங்கப்பெற்றுள்ளனர். சிலர் தாம் விரும்பியவரை மணந்து வாழ்ந்து வந்த செய்தியும் கல்வெட்டுக்களில் அருகிக் காணப்படுகிறது. முதல் இராசாதிராசசோழன் ஆட்சிக் காலத்தில் திருவொற்றியூரிலிருந்த தேவரடியாளான சதுரன்சதுரி என்பாள்,நாகன் பெருங்காடனுடைய இல்லாள் என்று அவ்வூர் கல்வெட்டொன்று1 உணர்த்துகின்றது தஞ்சாவூர் ஜில்லா அச்சுதமங்கலத்திலுள்ள மூன்றாங் குலோத்துங் சோழன் 11 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட் டொன்று2 அவ்வூர்க் கோயிலில் தேவரடியாள் ஒருத்தி மணம்புரிந்து கொண்டமையைக் கூறுகின்றது. எனவே, தளிச்சேரிப் பெண்களாகிய பதியிலார் தனித்தேனும் மணம்புரிந்து கொண்டேனும் தம் வாழ்க்கையை நடத்திவரலாம் என்பது அக்காலத்து வழக்கம் போலும். அன்னோர் இசையிலும் நாட்டியத்திலும் வல்லுநராய்த் திருக்கோயில்களிலும் அரசவைகளிலும் சிறப்பெய்தியிருந் தமையால் சமுதாயவாழ்வில் அவர்கட்குப் புகழும் மதிப்பும் ஏற்பட்டிருந் தமை ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாகும். அவர்கள் செல்வமுடையவர் களாக இருந்தமையோடு சிறந்த சிவபக்தியுடையவர்களாகவும் திகழ்ந்தனர் என்பது திருக்கோயில்களில் அன்னோர் புரிந்துள்ள பலவகை அறச் செயல்களால் நன்குபுலனாகின்றது.3 சோழ மன்னர்கள் இசையிலும் நாட்டியத்திலும் வல்ல பதியிலார்க்குத் தலைக்கோல் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளனர். அப்பட்டம் பெற்ற கணிகையர் தலைக்கோலி என்று அந்நாளில் வழங்கப்பெற்றனர் என்பது பதியிலாள் நக்கன் அரங்கமான சயங்கொண்ட சோழத் தலைக்கோலியும்4 நக்கன் பவழக்குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும்,5 என்று கல்வெட்டுப் பகுதிகளால் வெளியாதல் காணலாம். அக்கல்வெட்டுத் தொடர்கள் எவ்வேந்தன் ஆட்சியில் அப்பட்டம் அவர்கட்கு வழங்கப் பெற்றது என்பதையும் தெள்ளிதின் உணர்த்துவது அறியத்தக்கதாகும். கடைச்சங்க நாளில் நாடகக் கணிகையர், நூற்களிற் சொல்லப்பட்டுள்ள முறை வழுவாமல் அவிநயந்தோன்ற அரசவையில் ஆடிக்காட்டி அரசன்பால் தலைக்கோற் பட்டமும் பரிசில்களும் பெற்ற வரலாறு, சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது.1 அவ்வழக்கம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் தொடர்ந்து நிலைபெற்றிருந்தது என்பதைப் பல கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் ஆண் மக்களும் பெண் மக்களும் செல்வர்களிடத்தும் கோயில்களிலும் மடங்களிலும் தம்மைவிற்றுக் கொண்டு அடிமைகளா யிருந்து தொண்டாற்றி வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது. கொடிய பஞ்சம் தோன்றி நாட்டு மக்களை வருத்திய காலத்தில் அவர்கள் தம்மையும் தம் குடும்பத்தினரையும் பாதுகாக்க இயலாமல் தங்களை விற்றுக்கொண்டு அடிமைகளாக உயிர் வாழும்படி நேர்ந்தது என்பதைச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுதல் காணலாம். அன்றியும், வழிவழியாக அடிமைகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தினரும் உண்டு என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. தஞ்சாவூர் ஜில்லா மேலப் பெரும்பள்ளத்திலுள்ள திருக்கோயிலுக்கு நாங்கூர் அந்தணன் ஒருவன் பதின்மூன்று காசுக்கு அறுவரை அடிமைகளாக விற்றனன் என்றும் மற்றும் பெண்கள் இருவர் தம்மை உள்ளிட்ட எழுவரை முப்பது காசுக்கும் வேறு பதினைவரை முப்பது காசுக்கும் அக்கோயிலுக்கு விற்றமையோடு தாமும் தம் வழியினரும் வழிவழி அடிமைகளாயினர் என்றும் அவ்வூர்க்கல்வெட்டுகள் கூறுகின்றன.2 நந்திவர்ம மங்கலத்து மத்தியதன் சந்திரசேகரன் என்பான் தன்னுடைய அடிமைப்பெண்கள் மூவரை வயலூர்த் திருக்கற்றளிப் பரமேச்சுரர் கோயிலில் திருப்பதிகம் பாடுவதற்கும் கவரிப்பிணாக்களாகத் தொண்டு புரிவதற்கும் கி. பி. 948-ல் அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று அறிவிக்கின்றது.3 திருநெல்வேலி ஜில்லா நாங்குநேரித் தாலூகாவிலுள்ள கருங்குளம் இராச சிம்மேசுவர முடையார் கோயிலுக்குப் பறை கொட்டும் ஓர் உவச்ச அடிமையை அரசியல் அதிகாரி ஒருவன் கி. பி. 1105-ல் தந்த செய்தி அவ்வூர்க் கல்வெட்டில் காணப்படுகிறது.1 இருமுடி சோழத்தெரிந்த வில்லிகள் என்ற படையின் தலைவன் பெரும்பாணப்பாடி நாட்டுப் பாணபுரத்திலிருந்த கணபதி நம்பியாகிய அழகிய பாண்டிய பல்லவரையன் என்பான், கி. பி. 1119-ல் தன் குடும்பப் பெண்கள் சிலரைத் தேவரடியாராகச் சூல இலச்சினையிட்டுத் திருவல்லங் கோயிலில் பணிபுரிந்து வருமாறு விட்டனன் என்று அவ்வூரிலுள்ள முதற் குலோத்துங்க சோழன் 49 - ஆம் ஆட்சி2 யாண்டுக் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. திருவாலங்காட்டுக் கோயிலுக்குத் தேவரடியாராகத் தொண்டுபுரியுமாறு பெண்கள் நால்வர் 700 காசுக்கு விற்கப்பெற்ற செய்தி திருச் செங்காட்டங்குடிக் கோயிலில் கி. பி. 1175-ல் வரையப்பட்டுள்ளது.3 அரசியல் தலைவனாகிய வயிராதராயனும் அவன் மனைவியும் தம் படுகின்றது. அடிமைகளுள் முப்பத்தாறு பேரைத் திருவாலங்காட்டுக் கோயிலுக்குப் பணிபுரியும் அடிமைகளாகக் கி. பி. 1208 -ல் கொடுத்தமை அவ்வூர்க் கல்வெட்டால்4 உணரக்கிடக்கின்றது. அன்றியும், ஓடிப்போன அடிமைகளைப் பிடித்து வந்து தண்டித்து மீண்டும் அவர்களிடம் வேலை வாங்குமாறு மூன்றாங் குலோத்துங்க சோழன் செய்த உத்தரவு ஒன்றும் அக்கோயிலில் பொறிக்கப்பெற்றுள்ளது.5 கி. பி. 1201-ல் நிகழ்ந்த பஞ்சத்தில் வேளாளன் ஒருவனும் அவன் பெண்மக்கள் இருவரும் கோயிலைச் சார்ந்த மடத்திற்கு 110 காசுக்கு விலைப்பட்டு அடிமைகளாகிய நிகழ்ச்சியொன்று திருப்பாம்புரக் கோயில் கல்வெட்டில்6 காணப்படுகின்றது. நாகப்பட்டினத்துத் திருக்காரோணக் கணக்கர் இருவர், தம் அடிமைப் பெண்களை ஆள் விலைப் பிரமாண இசைவு சீட்டு, எழுதிச் சூலமங்கலக் கோயிலுக்குக் கி. பி. 1208 - ல் விற்றமை அவ்வூர்க் கல்வெட்டில்1 பொறிக்கப்பட்டுள்ளது. அவ்விசைவுச் சீட்டில் அப்பெண்கள் தங்களுக்குக் கிரமாகதமாய் வருகின்ற அடியார் என்று கூறப்பட்டிருத்தல் உணரற்பாலதாம். எதிரிலி சோழ கங்க நாடாள்வான் என்பான் கி. பி. 1219 -ல் திருமறைக்காட்டுக் கோயிலுக்கு ஆடவர் ஐவரையும் பெண்டிர் ஐவரையும் அவர்கள் பரம்பரையினருடன் ஆயிரம் காசுக்கு விற்ற செய்தி அக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்றால்2 புலப் படுகின்றது. தஞ்சாவூர் ஜில்லா அச்சுதமங்கலத்திலுள்ள ஒரு கல்வெட்டு3 அவ்வூர்மடத்தில் விலைக்கு வாங்கப்பட்ட கல் தச்சன் ஒருவனும், அவன் மனைவியும் அன்னோரின் புதல்வர் நால்வரும் கி. பி. 1219 -ல் பணிமக்களாக இருந்தனர் என்று கூறுகின்றது தஞ்சாவூர் ஜில்லா மாயூரந் தாலூகாவிலுள்ளதும் அட்டவீரட்டங்களுள் ஒன்றுமாகிய கொறுக்கையில் இரண்டாம் இராசாதி ராசசோழன், மூன்றாங் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராசராசசோழன் ஆகியோர் ஆட்சிக்காலங்களில் திருக்கோயிலுக்கு விலைக்கு வாங்கப் பட்டவர்களும் பரிசிலாகக் கிடைத்தவர்களுமாகிய ஆண் பெண் அடிமைகள் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் வரையப்பட்டிருக்கின்றன.4 இங்ஙனம் அடிமைகளாகிப் பணிபுரிந்த ஆடவரும், பெண்டிரும் கோயில் களுக்கும், மடங்களுக்கும் விற்கப்பட்டிருத்தலை நோக்குமிடத்து, கடவுளுக்கும், அடியார்களுக்கும் தொண்டுபுரியும் பொருட்டே அன்னோர் பெரும்பாலும் அடிமை புகுந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனா கின்றது. எனினும் வற்கடம் முதலான காரணங்களால் செல்வர்களிடத்தில் அடிமைகளாகி அவர்களுக்குப் பரம்பரையாக ஊழியம் புரிந்து வந்தவர்களும் அந்நாளில் இருந்துள்ளனர் என்பது மேலே எடுத்துக்காட்டிய கல்வெட்டுக்களுள் சிலவற்றால் தெளிவாகப் புலப்படுதல் காணலாம். கோயில்களுக்குத் தொண்டாற்றிய அடிமைகளைப் பற்றிய செய்திகளே கல்வெட்டுக்களில் வரையப்பட்டிருத்தலால் செல்வர்களுடைய அடிமைகளைப் பற்றி யாதும் தெரியவில்லை. அந்நாட்களில் ஆண் மக்களும் பெண் மக்களும் நாட்கூலி பெற்று ஊழியம் புரிந்து வந்த செய்திகளும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஓர்ஆண்மகன் நாளொன்றுக்குப் பெற்று வந்த கூலியில் பாதியை ஒரு பெண்மகள் அக்காலத்தில் பெற்றுப் பணி புரிந்து வந்தமை கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. கணவன் இறந்த பின்னர் அவனுடைய நிலங்களும் அடிமைகளும் பிற பொருள்களும் அவன் மனைவிக்குரியவாகும் என்று குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலச் சபையார் இரண்டாம் இராசாதிராசன் ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் செய்தமுடிவு ஒன்று ஆச்சாள்புரத்திலுள்ள கல்வெட்டொன்றால்1 காணப்படுகிறது. அக்கல்வெட்டிலேயே அந்தக் கிராம சபையார் செய்த வேறு சில முடிவுகளும் உள்ளன. அவை அந்தணர்கள் ஏர்பிடித்து நிலங்களை உழுதல் கூடாது; பணிமக்களாயிருந் தோர் வேள், அரசு முதலான பட்டங்களைப் பெறுதல் கூடாது; தொழிலாளர்கள் நன்மை தீமைகளுக்குப் பேரிகை கொட்டுதல் கூடாது; அவர்கள் அடிமைகளை வைத்துக்கொள்ளுதலும் கூடாது; கிராமத்திலுள்ள வாய்க்கால் பக்கங்களில் மேயும் மாடுகளைப் பிடித்து, ஊர்ப்பொதுக் கொட்டிலில் அடைத்தல் வேண்டும்; குடியிருப்பதற்குரிய இடங்களைத் தன்னகத்துக் கொண்ட நத்தத்தையும் ஆடுமாடுகள் நிற்றற்குரிய நிலப்பரப்பினையும் வயல்களாக மாற்றுதல் கூடாது; சிறு விளக்குகளும் பானைகளும் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம் என்பனவாம். புதுச்சேரியைச் சார்ந்து திருபுவனி வரதராசப் பெருமாள் கோவிலில் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியில் கி. பி. 1113 -ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று2 அவ்வூர்ச்சபையார் செய்ததோர் முடிபினை உணர்த்துகின்றது. அஃதும் ஈண்டறியத்தக்கதொன்றாகும். கிராமத்திலுள்ள பட்டர், உபாத்தியாயர், கணக்கர், தச்சர், கொல்லர் முதலானோர் தத்தமக்குரிய தொழில்களை அவ்வூரிலேயே செய்து கொண்டிருத்தல் வேண்டும் என்றும், அத்தொழில்களைப் பிற ஊர்களுக்குப்போய்ச் செய்வோர் சட்டத்தை மீறி நடப்பவர்களாகவும் கிராமசபைக்குக் குற்றம் புரிந்தவர்களாகவும் கிராமத்தை அழித்த துரோகிகளாகவும் கருதப்படுவார்கள் என்றும் அம்முடிபு கூறுகின்றது. கிராம சபையாரிடம் இறையிலி நிலம் (மானியம்) பெற்றுப் பணியாற்றி வந்தவர்களுள் சிலர் தம் கடமைகளை உள்ளூரில் ஒழுங்காக நிறைவேற்றாமல் இடையிடையே வெளியூர்களுக்குச் சென்று அவ்வப்போது கையில் நாட் கூலி வாங்கிக் கொண்டு ஊழியம் செய்திருத்தல் வேண்டும். அதனால் தம்மூரில் நடைபெறவேண்டிய பொது வேலைகள் நிறைவேற்றப் படாமல் தடைபட்டு நிற்றலைக்கண்ட கிராமசபையார் இத்தகைய முடிபினைச் செய்வது இன்றியமையாத தாயிற்றுப் போலும். கிராமத்தின் நலத்தைக் கருதி எத்தகைய புதிய விதிகளையும் கிராமசபையார் ஏற்படுத்தி வழக்கத்தில் கொண்டு வருவதற்கு உரிமை பெற்றிருந்தார்கள் என்பது இதனால் நன்குபுலனாதல் காணலாம். அன்றியும், கிராமத்தில் இறையிலி நிலங்களை அனுபவித்துக்கொண்டு பொதுவில் தம் தம் தொழில்களைப் புரிந்து வருவோர், கிராமசபையாரின் அனுமதி பெறாமல் யாண்டுஞ்சென்று தம் தொழிலை நடத்துதல் கூடாது என்ற பொது விதியும் கிராமசபைதோறும் அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அவ்விதியைக் கடந்து தம் தம் விருப்பத்தின்படி நடந்தவர்கள் கிராமத்தை அழித்த துரோகிகளாகக் கருதப்பட்டார்கள் என்பதில் வியப்பொன்று மில்லை.  8. வாணிகமும் கைத்தொழிலும் நகரங்களிலும் பேரூர்களிலும் வாணிகத்தொழில் நிகழ்த்தி வாழ்ந்து கொண்டிருந்த வணிகர் பெருமக்கள் பலர், திருக்கோயில்களின் வழி பாட்டிற்கும் விழாவிற்கும் திருவிளக்கினுக்கும் நிபந்தம் வழங்கிய செய்தி களும், ஏரி, குளம் முதலியவற்றைச் சீர்திருத்திப் பாதுகாத்தற்கும் பொருளும் நிலமும் அளித்த நிகழ்ச்சிகளும் கல்வெட்டுகளில்1 ஆங்காங்குக் காணப்படு கின்றன. எனவே தமிழகத்தில் வணிகர் பலர் அந்நாளில் இருந்தமை தெள்ளிது. அவ்வணிகர்கள் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் முறையே வண்டிகளிலும் மரக்கலங்களிலும் பண்டங்கள் ஏற்றிச் சென்று வாணிகம் நடத்தியவராதல் வேண்டும். உள்நாட்டில் வணிகர்கள் பண்டங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுபோய் விற்பதற்கு இன்றியமையாது வேண்டப் படுவனவும் பேருதவியாயிருப்பனவும் பல பெருவழிகளே யாகும். சிற்றூர்களும் சிறுவழிகளும் பெரிதும் பயன்பட்டன. அவை வதிகள் என்று வழங்கப்பட்டன. இத்தகைய பெருவழிகளும் வசதி களும் சோழ இராச்சியத்தில் யாண்டும் நிலைபெற்று நன்னிலையில் அமைந் திருந்தன என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. திருப்பாசூர் நின்று மேற்பாடியான ராஜாசிரயபுரத்துக்குப் போன பெருவழி (S. I. I. III. 205) அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி, தஞ்சாவூர் பெருவழி 363 of 1907 கொங்கப்பெருவழி, 251 of 1911 வடுகப்பெருவழி (S. I. I. Vol. III, No.64) பட்டினப் பெருவழி (S. I. I. XIII. 16)v‹gd போன்ற கல்வெட்டுத் தொடர்களால் இச்செய்தியை இனிதுணரலாம். இத்தகைய பெருவழிகளை ஆங்கில மொழியில் Trunk Roads என்று கூறுவர். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தில் விக்கிரமசோழன் ஆட்சியில் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டொன்றால் இப்பெருவழிகள் மூன்றுகோல் அகலமுடையனவாயிருந்தன என்று தெரிகிறது. நான்குகோல் அகலமுள்ள பெருவழிகளும் இருந்தமைக்கு ஆதாரம் உள்ளது. எனவே இப்பெருவழிகள் வணிகர்கள் வண்டிகளில் பொதிகளை ஏற்றி உள்நாட்டில் யாண்டும் சென்று வாணிகம் செய்து வருவதற்குத் தகுதியுடையன வாயிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இப்பெருவழிகள் கடைச்சங்க காலத்திலேயே சிறந்த நிலையில் இருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகின்றது. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் காவிரியாற்றின் வடகரை யோரமாகப் போந்தபெருவழியில் நடந்து உறையூரைச் சார்ந்தனர் எனவும் அங்கே அப்பேராற்றைக் கடந்து தென்கரைக்கும் போய்க் கொடும்பாளூர் நெடுங்குளம் வழியாகச் சென்ற பெருவழியே போய், மதுரை மாநகரை யடைந்தனர் எனவும் இளங்கோவடிகள் கூறுமாற்றான் இவ்வுண்மையை அறியலாம். வணிகர்கள் வண்டிகளிலும் பொதிமாடுகளின் முதுகிலும் பண்டங் களை ஏற்றிக்கொண்டுபோய் உள்நாடுகளில் வாணிகம் நடத்துங்கால், இடையில் களவு முதலியன நிகழாதவாறு இன்றியமையாத இடங்களில் காவற்படைகள் அமைக்கப் பட்டிருந்தமையோடு அரசாங்கப் பாதுகாவலும் இருந்து வந்தமை அறியதக்கதாகும். சோழர் பேரரசில் பெரும் பாடிகாவல், சிறுபாடிகாவல் அதிகாரிகளும், தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்தமையால் வணிகர்களுக்கும் எத்தகைய இன்னல்களும் உண்டாதற்கு வாய்ப்புப் பெரிதும் ஏற்படவில்லை எனலாம். வணிகர்கள் புறநாடுகளுக்குச் செல்லுங்கால் கூட்டமாகச் செல்வது வழக்கம். அக்கூட்டத்திற்கு வாணிகச் சாத்து என்ற பெயர் வழங்கியது. அக்குழுவின் தலைவன் சாத்தான் எனவும் மாசாத்துவன் எனவும் கூறப்படுவான். வணிகருள் சிறந்தோர்க்குச் சோழ மன்னர்கள் எட்டி என்ற பட்டம் அளித்துப் பாராட்டியுள்ளமை உணரற் பாலதாம். இனி, பல கலஞ்செலுத்திப் பெருங் கடல்களையும் கடந்து போய் சேய்மையிலுள்ள வெளிநாடுகளோடு வாணிகஞ் செய்து கொண்டிருந்த வணிகர்களும் சோழ நாட்டில் இருந்தனர். அவர்கள் நாய்கர் எனவும், மாநாய்கர் எனவும் கூறப்படுவர். சோழமண்டலக் கரையில் கடைச்சங்க நாளில் வாணிகத்திற் சிறந்து விளங்கிய கடற்றுறைப் பட்டினங்களில் தலைமையாய் நிலவிய பெருமையுடையது காவிரிப்பூம்பட்டினம்என்பதைச் சிலப்பதிகாரத்தாலும் பட்டினப்பாலை என்ற நூலாலும் தெள்ளிதின் உணரலாம். நாகப்பட்டினம், காரைக்கால், வீரை (வீராம்பட்டினம்), மாமல்லபுரம், வீரசோழப்பட்டினம் (கோவளம்), மைலாப்பூர் ஆகிய கடற்றுறைப் பட்டினங்களும் சோழப் பேரரசில் சிறந்த துறைமுகங்களாய்க் கடல் வாணிகத்தால் வெளிநாட்டினருடன் தொடர்பு பூண்டு பெரும் புகழெய்தி யிருந்தன என்று தெரிகிறது. சோழ நாட்டு வணிகர்கள், மேற்கேயுள்ள அராபிய நாட்டினரோடும் பாரசீகரோடும் கிழக்கேயுள்ள சுவர்ணபூமி, ஸ்ரீ விஜயம், சுவர்ணதீபம், யவத்தீபம், காம்போசம், சீனம் ஆகிய நாட்டினரோடும் நடத்தி வந்த வாணிகம் அனைத்தும் அத்துறைமுகப்பட்டினங்களின் வழியாக வே நடைபெற்று வந்தன என்பது அறியத்தக்கது. புராணக்கதைகளை விளக்கும் தமிழ்நாட்டுச் சிற்பங்களைப் போன்ற பல சிற்பங்கள் சீனதேயத்துக் கோயில்களில் உள்ளன என்று ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் கூறுகின்றனர். இவைகள் எல்லாம் தமிழ் நாட்டு வணிகர்களின் தொடர்பால் அந்நாடுகளில் முற்காலத்தில் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்று ஐயமின்றிக் கூறலாம். வணிகர்களுக்கு நாநாதேச திசையாயிரத்தைஞ்ஞூற்றுவர் (193 and 402 of 1939 - 40), மணிக்கிராமத்தார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் என்ற பல குழுவினர் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் நன்கறியக் கிடக்கிறது. அவர்களைப் பற்றிய குறிப்புகள் சுமத்ரா, சயாம், பர்மா முதலான வெளிநாடுகளிலுள்ள கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. அவர்கள் செய்துவந்த வாணிகத்தால் சோழ இராச்சியத்தில் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மிகப்பெருகின. அவ்வாணிகத்தால் கிடைத்த சுங்கவரியினால் அரசாங்கத்திற்கு வருவாயும் மிகுந்தது எனலாம். பணமும் கையெழுத்து ஓலை யின்மேல் பொதுவாகக் கொடுக்கப்பெற்று வந்தமையால் வாணிகத்தொழிலும் நாணயமும் சிறப்புற்று விளங்கின என்று கூறலாம். மேலே குறிப்பிட்ட குழுவினருள் நாநாதேசதிசையாயிரத்தைஞ் ஞூற்றுவர், திசையாயிரத்தைந்ஞூற்றுவர் எனவும் ஐந்நூற்றுவர் எனவும் நாநாதேசிகள் எனவும் சில கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளனர். எனவே , அவர்கள் ஆயிரம் திசைகளுக்கும் போய் வாணிகத் தொழில் நிகழ்த்திய ஐந்நூற்றுவரைக் கொண்ட ஒரு குழுவினராதல் வேண்டும் என்பது தெள்ளிது. (291 of 1939) திசையாயிரம் என்பது ஈண்டு எல்லாத் திசைகளையும் உணர்த்துவதாகும். நாநாதேசிகள் என்பதால் பல தேயங்களுக்கும் அவர்கள் சென்று வாணிகம் நடத்திவந்தவர்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆகவே அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று வாணிகம், நடத்துவதற்குத்தக்க ஆற்றலும் அந்நாடுகளின், அரசாங்க ஆதரவும் பெரிதும் பெற்றிருந்தனர் என்பது தேற்றம். முதற் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் கி. பி. 1088 ஆம் ஆண்டில் சுமத்திராவில் வரையப்பெற்றுள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திசையாயிரத்தைஞ்ஞூற்றவர் என்ற வாணிகக்குழுவினர் குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும்.1 இனி, மணிக்கிராமத்தார் என்ற குழுவினர் தலைநகரங் களிலும் கடற்றுறைப் பட்டினங்களிலும் வெளிநாடுகளிலும் வாணிகம் நடத்திய செய்திகள் கல்வெட்டுக்களிலும் செப்பேடு களிலும் காணப்படுகின்றன. உறையூர் மணிக்கிராமம்,2 காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம்,3 கொடும் பாளூர் மணிக்கிராமம்,4 இளங்கோப்பட்டினத்து மணிக்கிராமத்தார்5 என்ற கல்வெட்டுத் தொடர்களால் அவர்கள் தலைநகர்களில் வாணிகத்தில் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. தாணுரவியின் கோட்டயம் செப்பேடுகளில் அஞ்ச வண்ணமும் மணிக்கிராமமும் ரட்சிக்கக்கடவர் எனவும், வீரராகவச் சக்கரவர்த்தியின் கோட்டயம் செப்பேடுகளில் பெருங் கோயிலகத்திருந்தருள மகோதையார் பட்டினத்து இரவிக்கொற்றனாய, சேரமான் லோகப்பெருஞ்செட்டிக்கு மணிக்கிரமப்பட்டம் கொடுத்தோம் .......... நகரத்துக் கர்த்தாவாய இரவிக்கொற்றனுக்கு, எனவும் போதரும் சாசனப் பகுதிகளால் நகரங்களில் அக்குழுவினர்க்கிருந்த பெருமதிப்பும் அக்குழுவின் உறுப்பினர் மணிக்கிராமப்பட்டம் அரசர்பால் பெறும் வழக்கமும் நன்கு புலனாதல் காணலாம். திருநெல்வேலி ஜில்லா திருக்குற்றாலத்திலுள்ள கல்வெட்டொன்று மணிக்கிராமத்து தர்மசெட்டி ஆயின சடையன் கவையன் வச்சவிளக்கொன்று (439 of 1917 ) என்று கூறுவதால் அவர்கள் தர்ம செட்டி என்று வழங்கப் பெற்றமையுணரற்பாலதாகும். திருவண்ணாமலை யிலுள்ள இரு கல்வெட்டுகளில் சத்தியவாசகர் ஆன தன் மவாணியர்2எனவும், தன்மவாணிகர்1 எனவும் அவர்கள் குறிக்கப்பெற்றுள்ளனர். மணிக்கிராமத்து தர்மசெட்டி, சத்தியவாசகர்தன்ம வாணிகர் என்ற தொடர்கள், கடியலூர் உருத்திரங் கண்ணனார் தம் பட்டினப்பாலையில், நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும்பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்3 வணிகர் என்று கூறியிருப்பதை நம் நினைவிற்குக் கொண்டு வருதல் காண்க. பல்லவ வேந்தனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் சயாம் தேசத்தில் தமிழ்மொழியில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே அந்நாட்டில் மணிக்கிராமத்தார் என்ற வாணிகக்குழுவினர் பெருஞ்சிறப்புடன் நிலவிய செய்தியைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.1 எனவே, மணிக்கிராமத்தார் மிகப்பழமைவாய்ந்த வாணிகக்குழுவினர் என்பதும் உள்நாடு களோடு நில்லாமல் கலமிவர்ந்து கடல்கடந்து சென்று தமிழ் வழங்காத வெளிநாடுகளோடும் வாணிகம் நடத்திப் புகழெய்தியவர்கள் என்பதும் நன்கு வெளியாகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் விளங்கிய ஆசிரியர் குணவீரபண்டிதர் என்பார், தம் இலக்கண நூலாகிய நேமிநாதத்திற்குத் தாம் எழுதிய உரையில் மணிக்கிராமத்தார் என்ற தொடரைக் கூடியற்பேருக்கு உதாரணமாக எடுத்துக்காட்டியிருப்பது உணரத்தக்க தாகும்.2 இனி, நகரத்தார் என்பார், பெரிய நகரங்களிலிருந்து கொண்டு வாணிகத்தொழில் நடத்தி வந்த குழுவினராவார். இக்குழுவினர் காஞ்சிபுரம் மாமல்லபுரம், நந்திபுரமாகிய பழையாறை, மயிலாப்பூர் முதலான பல நகரங்களிலும் இருந்தமை கல்வெட்டுக்களாலும் பிறவாற்றானும் புலப்படுகின்றது. இவர்கள் தம் வாணிகத்தொழிலைத் திறமையாக நடத்திக் கொண்டும் நகர ஆட்சியை ஏற்று, பொதுமக்களுக்குச் சிறந்த தொண்டுகள் புரிந்து கொண்டும் நல்வாழ்வு நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வணிகர்களுள் வளஞ்சியர் என்ற ஒரு குழுவினர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால்3 அறியப்படுகிறது. அவர்கள் தென்னிலங்கை வளஞ்சியர் என்று கல்வெட்டுக்களில்4 குறிப்பிட்டிருந்ததால் அன்னோர் ஈழநாட்டு வணிகர்கள் என்பதும் தமிழ்நாட்டில் பல ஊர்களில் தங்கி வாணிகம் நடத்திவந்தவராதல் வேண்டும் என்பதும் தெள்ளிதிற் புலப்படுகின்றன. இலங்கையிலுள்ள கல்வெட்டு ஒன்றும்1 அவர்கள் ஈழநாட்டவர்கள் என்பதையும் பௌத்த சமயத்தினர் என்பதையும் உணர்த்துகின்றது. எனினும் தமிழ்நாட்டில் அவர்கள் தங்கி வாணிகம் நடத்திய போது செய்துள்ள அறங்களையும் வேறு சில நிகழ்ச்சிகளையும் நோக்குமிடத்து, அக்குழுவினர் பொதுநோக்குடன் சைவம் வைணவம் முதலான மற்றைச் சமயங் களிடத்தும் பேரன்புடன் ஒழுகி அதனால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பெற்று வாழ்ந்துவந்தனர் என்றும் தெரிகின்றது. எடுத்துக்காட்டாக ஈண்டுச் சிலவற்றைக் குறித்தலும் ஏற்புடைத்தேயாம். இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் உள்ள சுந்தரேசுவரர்கோயிலில் அருந்தவஞ் செய்த நாச்சியாரையும் இலிங்க புராணதேவரையும் தென்னிலங்கை வளஞ்சியருள் ஒருவனாகிய சேவல் சேவகத்தேவன் என்பான் எழுந்தருளுவித்த செய்தி அக்கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளால்2 அறியப்படுகின்றது. தஞ்சாவூர் ஜில்லா மாயூரந் தாலுகாவிலுள்ள திருவேள்விக்குடிக் கோயிலில் ஒரு பகுதியைத் திசையாயிரத் தைந்நூற்றுவரும் வளஞ்சியரும் கட்டு வித்தனர் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று3 கூறுகின்றது. தஞ்சாவூர் ஜில்லா நன்னிலம் தாலுகாவிலுள்ள திருக்கண்ணபுரத்திலிருந்த கருணாகரவீரர் மடத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களைத் திருவிழாக் காலங்களில் உண்பிக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் இரண்டுகாசு வரிகொடுக்க வேண்டுமெனத் தென்னிலங்கை வளஞ்சியர்கள் தமக்குள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்ட செய்திஅவ்வூர்ச் சௌரிராசப் பெருமாள் கோயிலிலுள்ள கல்வெட்டொன்றில்4 காணப்படுகின்றது. இதுகாறும் கூறியவற்றால் தென்னிலங்கை வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினர் தமிழ்நாட்டில் நிலவிய சைவம் வைணவம் முதலான சமயங்களில் எத்துணை அன்பும் மதிப்பும் கொண்டு ஒழுகிவந்தனர் என்பது தெள்ளிதில் புலனாதல் அறியலாம். எனவே தமிழ்நாட்டுச் சிற்றூர், பேரூர்களில் வசித்து வாணிகம் நடத்தி வந்த அக்குழுவினர் பல்லாற்றானும் சிறந்து விளங்கியவராதல் வேண்டும். அஞ்சு வண்ணத்தார் நம் தமிழகத்தில் வாணிகம் நடத்தி வந்த குழுவினருள் அஞ்சுவண்ணத் தார் என்ற ஒரு வகையினரும் சிறந்து விளங்கினர் என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியக் கிடக்கின்றது. அச்செப்பேடுகள் முதல் ஆதித்த சோழன் காலத்திலிருந்த சேரமான் தாணுரவியின் ஆட்சியிலும்1 முதல் இராசேந்திரசோழன் காலத்திலிருந்த சேரமான் பாகர ரவிவர்மன் ஆட்சியிலும்2 வரையப்பெற்றவையாகும். ஆகவே, அவை மிக்க பழமை வாய்ந்தவை எனலாம். அச்செப்பேடுகளில் குறிக்கப்பெற்றுள்ள அஞ்சு வண்ணத்தார் யாவர் என்பதைப் பற்றி அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு. அன்னோர் சேர நாட்டிலிருந்த யூதர்களாயிருத்தல் வேண்டும் என்பது டாக்டர் குண்டர்ட், டாக்டர் பர்னல் என்ற அறிஞர் இருவரது கருத்தாகும். எல்லி என்ற அறிஞர் அத்தொடர், ஐவகை உரிமைப்பட்டங்களை உணர்த்தும் என்பர். கல்வெட்டிலாகாவின் தலைவராயிருந்த பேரறிஞர் வெங்கையா என்பவர், அஞ்சுவண்ணத்தார் ஒருவாறு சுயேச்சை பெற்று நிலவிய வாணிகக்குழுவினர் என்று குறித்துள்ளனர்.3 வேறுசிலர் அத்தொடர் ஐவகைச் சாதியாரை அறிவிப்பதாகும் என்பர். எனவே, அதன் உண்மைப் பொருள் ஒரு தலையாகத் துணியப்படவில்லை என்பது தெள்ளிது. எனினும், அவர்கள் யாவர் என்பதைப் பல்சந்தமாலை என்ற பழைய நூலிலுள்ள சில பாடல்கள் உணர்த்துகின்றன. அந்நூல்முழுவதும் இப்போது கிடைக்கா விடினும், அதிலுள்ள சில பாடல்கள் களவியற் காரிகை என்ற நூலில் அதன் உரையாசிரியரால் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. அப்பாடல்களில் இயவனராசன் கலுபதிதாமுத லெண்ண வந்தோர்-அயன்மிகு தானையர் அஞ்சுவண்ணத்தவர். என்றும் ஏழ்பெருந்தேரங்கத் தியவனர்கள் -அல்லா எனவந்து என்றும் காணப்படும். தொடர்கள், அஞ்சுவண்ணத்தார் முகமதியராயிருத்தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகின்றன. இச்செய்தியை மற்றொரு பாடலிற் பயின்றுவரும் சோனகர் என்ற சொல் உறுதிப்படுத்துதல் காணலாம். அன்றியும், அவர்கள் பழைய துருக்கிவேந்தனாகிய காலிப் வழியில் வந்தவர்கள் என்பது கலைமதி வாய்மைக் கலுழ்பா வழி வருங் கற்பமைந்த, தலைமையர் ஏழ்பெருந் தேரங்கமும் பெற்றவர் என்ற பிறிதொரு பாடற்பகுதியால் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, அன்னோர் முகமதிய மரபினர் என்பது ஐயமின்றித் துணியப்படும். ஆகவே, தமிழ் நாட்டில் தங்கி வாணிகம் நடத்தி வாழ்ந்து கொண்டிருந்த முகமதிய வாணிகக்குழுவினரே அஞ்சு வண்ணத்தார் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். கீழ்கடற்கரையில் பாண்டி நாட்டிலுள்ள தீத்தாண்ட தான புரத்திலும் அக்குழுவினர் இருந்தனர் என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படு கின்றது. அன்றியும், சோழ நாட்டிலுள்ள துறைமுகப்பட்டினமாகிய நாகப் பட்டினத்தில் அவர்கள் வாணிகம் நடத்திக்கொண்டு சிறப்புற்றிருந்தமை, குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும் குணக்கினில் பசும்பொனும் குளித்ததெற்கி லாரமும் அடிப்பரப்பு டைக்கலத் தனேக வண்ண மாகவந்த தஞ்சுவண்ணமுந் தழைத் தறத்தின் வண்ணமானவூர் கடற்கரைக்கு வித்திடு சந்தனத்தை இந்துடன் கலந்திறைக்கு மந்தியைக் கனன்று முசுவின்குலம் புடைப்பதற் கெழுந்துகை முறுக்கலும் இழுக்கிவாய் புக்கமுத்தை விட்டெறிந்து பூகமேறு நகையே என்ற பழைய பாடலொன்றால் தெளிவாகப் புலப்படுத்தல் காணலாம். எனவே, அவர்கள் தமிழகத்தில் யாண்டும் சென்று வாணிகம் நடத்திப் புகழ்படைத்தவர்கள் என்பது நன்கு தெளியப்படும். இனி, மேலே குறிப்பிட்ட வணிகர் குழுவினர் எல்லாம், தனித்தனி குழுவினர் என்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படாமல் நம் தமிழகத்தில் தம் வாணிகத்தை நடத்திப் பொருளீட்டிப் புகழுடன் வாழ்ந்துவந்தனர் என்பதும் ஈண்டு அறியத்தக்கன. ஒவ்வொரு வாணிகக் குழுவினரும் ஒவ்வொரு சிறு காவற்படை வைத்துக்கொண்டிருந்தனர் என்பதும், அவர்கள் வாணிகத்தின் பொருட்டுத் தாம் செல்லும் இடங்களுக் கெல்லாம் அச்சிறுபடையோடு செல்வது வழக்கம் என்பதும் சில குறிப்புக்களால் உணரக்கிடக்கின்றன. சோழர் பேரரசு உயர்நிலையிலிருந்தமையால் சோழ இராச்சியத்துக் குள்ளிருந்த எல்லா நாடுகளிலும் வணிகர்கள் எத்தகைய தடையுமின்றிச் சுயேச்சையாகச் சென்று வாணிகம் நடத்துவது எளிதாகவும் இருந்தது எனலாம். இனி, நானாதேசிகளாகிய வணிகர்கள் ஒரு குழுவினராய்த் தம் தொழிலை நடத்திக்கொண்டு வாழ்ந்து வந்த இடங்கள் வீரபட்டினம் எனவும் எறிவீரபட்டினம் எனவும் வழங்கப் பெற்று வந்தன என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. நானாதேசிகள் எல்லோரும் முதல் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மயிலாப்பூரில் ஒரு கூட்டம் நடத்தி, செங்கற்பட்டு ஜில்லா பொன்னேரி தாலூகாவிலுள்ள அய்யாப்புழல் காட்டூரை ஒரு வீரபட்டினமாக மாற்றி விட்டமையோடு அவ்வூரில் வாழ்ந்து கொண்டிருந்த பொது மக்களுக்குப் பல நலங்களும் புரிந்தனர் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று1 கூறுகின்றது. அதில் அவர்கள் தம் வரலாறு, பெருமை முதலியவற்றைக் கூறிக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். அங்ஙனமே, சித்தூர் ஜில்லா மதனபல்லி தாலூகாவி லுள்ள பசினி கொண்டா கல்வெட்டொன்று.2 நாட்டாரும் நகரத்தாரும், நானாதேசிகளும் சீராவள்ளி என்ற ஊரில் முதல் இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் ஆயிரத்தைந் நூற்றுவரைக் கொண்ட ஒரு பெருங் கூட்டம் நடத்தி அவ்வூரை நானாதேசீயதசமடி எறி வீரபட்டினம் என்ற பெயருடைதாய் அமைத்து அவ்வூர்க் குடிமக்களுக்குச் சில உரிமைகளும் வழங்கினர் என்று உணர்த்து கின்றது. அக் கூட்டத்திற்கு எண்டிசையிலுமிருந்து வந்திருந்தவர்களுள் எறிவீரர்கள், முனை வீரர்கள், இளஞ்சிங்க வீரர்கள், கொங்கவாளர்கள் ஆகிய குழுவின் பெயர்கள் காணப்படுதல் அறியத்தக்கது.1 அக்குழுவினர் வணிகர்களின் காவற்படையைச் சேர்ந்தவர்களா யிருத்தல் கூடுமென்று கருதற்கு இடமுள்ளது. சித்தூர் ஜில்லா புங்கனூர்த் தாலுகாவிலுள்ள கர்ஷ்ணபல்லியிலுள்ள மற்றொரு கல்வெட்டு2 அவ்வூர்க் கண்மையிலுள்ள முத்துகூர் என்ற ஊர் ஓர் எறிவீரபட்டினம் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. வீரர்களின் பாதுகாப்பிற்கு உட்பட்ட வாணிகதலங்கள் எறிவீரபட்டினம் எனவும் பண்டைக் காலத்தில் வழங்கி வந்தன போலும். கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் விளங்கிய வாணிகத் தலங்களாகிய வீரபட்டினங்கள் கடைச்சங்க காலத்திலும் இருந்தன என்று தெரிகிறது. கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேல் நாட்டு யவனர்கள் நம் தமிழகத்திற்கு வந்து வாணிகத் தொழில் நடத்திய செய்தி, சங்க நூல்களாலும் மேனாட்டு யவன ஆசிரியர்களாகிய பிளைநி, தாலமி என்போரின் குறிப்புக்களாலும், பெரிப்ளூ என்ற அரிய நூலாலும் தெளிவாகப் புலப்படுகின்றது. சங்க நூல்களில் குறிப்பிடப்பெற்ற யவனர்கள் இத்தாலி தேசத்து ரோமானியரே யாவர். அவர்கள் புதுச்சேரிக்குத் தெற்கே இரண்டு மைலிலுள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் கி. பி. 50 முதல் 200 வரையில் பண்டசாலை வைத்து வாணிகம் நடத்தியுள்ள அரிய செய்தி இந்திய அரசியலாரின் புதைபொருள் ஆராய்ச்சித் துறை அறிஞர்கள் அந்நிலப்பரப்பை முறைப்படி அகழ்ந்து ஆராய்ந்த போது வெளிப்பட்டிருத்தல் பலரும் அறிந்தோம். அப்பகுதியைச் சார்ந்த பரதவர்குப்பம் இக்காலத்தில் வீராம்பட்டினம் என்று வழங்குகிறது. அது கடைச் சங்க காலத்தில் சோழ இராச்சியத்தில் நிலவிய வாணிகர் நகரங்களாகிய வீரபட்டினங் களுள் ஒன்றாகும். வாணிகத்தால் சிறப்பெய்தியிருந்த அத்துறைமுகப்பட்டினம் புறநானூற்றிலுள்ள 320-ஆம் பாட்டை இயற்றிய வீரைவெளியனாரும் அகநானூற்றிலுள்ள 188 - ஆம் பாட்டை இயற்றிய வீரைவெளியன் தித்தனாரும் வாழ்ந்த நகரம் என்பது ஈண்டு அறியத்தக்கது. நாகப்பட்டினம் என்பது நாகை என மருவி வழங்கியுள்ளமை போல் வீரபட்டினம் என்பது வீரை என்று மருவியும் அக்காலத்தில் வழங்கியுள்ளது. இனி, சீன தேய வரலாற்றின் துணைக்கொண்டு சோழர்கள் அந்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பினையும் தமிழ் நாட்டார் நிகழ்த்திய வாணிகத்தையும் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனதேயத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத் தினால் அந்நாட்டில் கலகமும் அமைதியின்மையும் மிகுந்து வெளிநாட்டு வணிகர்களுக்குப் பேரச்சத்தை உண்டுபண்ணின. எனவே, தமிழ்நாட்டு வணிகர்களும் பிறநாட்டு வணிகர்களும் தம் வாணிகத்தின் பொருட்டு அந்நாட்டிற்குச் செல்வதை நிறுத்திவிட்டனர். அப்போது சீன தேயத்தார் கலமிவர்ந்து மலேயா, ஸ்ரீ விஜயம் முதலான அயல் நாடுகளுக்குச் சென்று அங்கு வந்துள்ள வணிகர்களிடம் தமக்கு வேண்டிய பண்டங்களை வாங்கி வந்தனர் என்று தெரிகிறது. அக்காலங்களில் கீழ் நாட்டு வணிகர் களுக்கும் மேல் நாட்டு வணிகர்களுக்கும் வாணிகத்திற்குரிய நடு இடமாய் அமைந்து பல்வகையாலும் சிறப்புற்று விளங்கியவை மேலே குறிப்பிட்ட மலேயா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளேயாகும். அந்நாட்களில் தான் சீனதேய மக்களின் கடல் வாணிகமும் தொடங்கியது என்று வரலாற்றாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி. பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீன தேயத்தில் கலகம் அடங்கி அமைதி ஏற்பட்டது. அந்நாட்களில் வெளிநாடுகளோடு வாணிகத்தொடர்பு வைத்துக் கொள்வதற்குச் சீன அரசாங்கம் பேரார்வம் உடையதாயிருந்தது. அதற்கேற்ப, அரசாங்கமே புறநாடுகளோடு நிகழும் வாணிகத்தைக் கைப் பற்றி அதனைப் பெருக்குவதற்குப் பெரிதும் முயன்றது. வெளி நாட்டு வணிகர்களுக்குச் சீன அரசாங்கத்தின் ஆதரவையும் விருப்பத்தையும் தெரிவித்து அவர்களைத் தம் நாட்டிற்கு அழைப்பதற்காகச் சீனதேயத்தி லிருந்து ஒரு தூதுக் குழுவினர் யாண்டும் அனுப்பப்பெற்றனர். அவர்கள் அரசாங்க முத்திரை இடப்பெற்ற ஆணைப்பத்திரங்களோடு ஆடையும் பொன்னும் மிகுதியாகப் பெற்று அயல்நாடுகளுக்குச் சென்றனர். பல பண்டங் களையும் இறக்குமதி செய்வதற்குத் தனியுரிமை கொடுக்கப்படுமென்று வெளிநாட்டு வணிகர்களுக்குச் சீன அரசாங்கம் உறுதிமொழியும் அளித்தது. இந்நிகழ்ச்சிகள் வெளிநாட்டு வணிகர்கள் சீனதேயத்திற்குப் போய்த்தம் வாணிகத்தை நடத்துவதற்கு ஊக்கத்தை உண்டுபண்ணின என்று ஐயமின்றிக் கூறலாம். இதனையுணர்ந்த சோழ மன்னர்கள் தங்கள் தூதர்களைச் சீன தேயத்திற்கு அனுப்பத் தொடங்கினார்கள். அவ் வேந்தர்களுள் முதலில் அனுப்பியவன் முதல் இராசராச சோழனேயாவான். அவனுடைய தூதர்கள் முத்துக்களையும் வேறுபல பொருள்களையும் கையுறையாகக்கொண்டு கி.பி. 1012-ஆம் ஆண்டில் சோழ நாட்டிலிருந்து புறப்பட்டுக் கி. பி. 1015-ல் சீன தேயத்தை அடைந்தனர். எனவே, அவர்கள் அந்நாட்டிற்குப் போவதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின என்று தெரிகிறது. சீன அரசன் அவர்களை வரவேற்றுத் தன் அரண்மனைக்கு அண்மையிலுள்ள மாளிகையில் தங்குமாறு ஏற்பாடு செய்தான். சோழ நாட்டுத் தூதர்கள் அங்குச் சென்ற சமயத்தில் அம் மன்னனது பிறந்தநாள் விழா அந்நாட்டில் நடைபெற்ற மையால் அவர்களும் அவ்விழாவில் கலந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டது. அரசனும் அவர்களுக்குப் பல பரிசில்களை வழங்கினான். நெடுந்தூரத்திலுள்ள சீன தேயத்தரசன் சோழர்களுடைய பேரரசையும் ஆற்றலையும் நன்குணராதவனாதலின், அவர்களைச் சக்கரவர்த்தியின் தூதர்களாக எண்ணாமல் ஓர் அரசனுடைய தூதர்களாகவே கருதி நடத்தினான் என்பது அந்நாட்டு வரலாற்றினால் அறியக் கிடக்கின்றது. இத்தூது பற்றிய மற்றைச் செய்திகள் தெரியவில்லை. எனினும் இதனால் வாணிகத் துறையில் சிறந்த பயன் ஏற்பட்டிருக்கும் எனலாம். முதல் இராசராச சோழனுடைய புதல்வனும் கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப்பெயர் உடையவனும் ஆகிய முதல் இராசேந்திர சோழன் கி. பி. 1033-ஆம் ஆண்டில் தூதர் குழு ஒன்றைச் சீன தேயத்திற்கு அனுப்பினான். அக்குழுவினர் சீன தேய மன்னனால் எவ்வாறு வரவேற்கப்பட்டனர் என்பதையும் பிற செய்திகளையும் அறிதற்குரிய ஆதாரங்கள் இப்போது கிடைக்கவில்லை. ஆயினும், அதற்குப்பிறகு பல ஆண்டுகள் சோழ அரசன் அந்நாட்டிற்குக் காணிக்கை அனுப்பிவந்தான் என்று அந்நாட்டு வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறு சீன தேயத்தாரோடு தொடங்கிய வாணிகம் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இடையீடின்றித் தொடர்ந்து நடைபெற்று வந்தது என்று தெரிகிறது. அந்நூற்றாண்டின் முதற்பகுதியில் முதல் இராசேந்திர சோழன் அலைகடல் நடுவில் பல கலஞ் செலுத்தி ஸ்ரீ விஜய நாட்டின் மீது படையெடுத்தமையும், வாணிகம் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த தமிழக வணிகர்களின் உரிமைகளைக் காப்பாற்றும் பொருட்டு நிகழ்ந்ததாதல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். கி. பி. 1068-ல் தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசன் பொருட்டு, முதல் இராசேந்திர சோழனுடைய புதல்வனாகிய வீர ராசேந்திர சோழன் அந்நாட்டின்மீது படையெடுத்துப் போய், அதனைக் கைப்பற்றி அவ்வரசனுக்கு அளித்த செய்தி சோழர்களின் ஆற்றலையும் வீரத்தையும் கீழ் நாட்டினர் நன்கு அறிந்திருந்தமையைத் தெள்ளிதிற் புலப்படுத்துவதாகும். இந் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழ் நாட்டு வணிகர்கள் கீழ்நாடுகளுக்கு அச்சமின்றிப் போய் வாணிகஞ் செய்து வருவதற்குப் பெரிதும் துணைபுரிந்தன என்று கூறலாம். கி. பி. 1077-ஆம் ஆண்டில் எழுபத்திரண்டு பேர் அடங்கிய ஒரு குழுவினர் சோழ நாட்டிலிருந்து சீன தேயத்திற்குத் தூது சென்ற செய்தி அத்தேய வரலாற்றினால் அறியக்கிடக்கின்றது. இவ்வாண்டை நோக்குமிடத்து, அக்குழுவினர் முதல் குலோத்துங்க சோழனால் அந்நாட்டிற்கு அனுப்பப் பெற்றவராதல் வேண்டும். முதற் குலோத்துங்க சோழன் சோழ நாட்டின் ஆட்சியை முதல் இராசேந்திர சோழனுடைய மகள் வயிற்றுப்பேரன் என்ற உரிமையினால் புதிததாகப் பெற்றவ னாதலின், சோழ இராச்சியத்திற்கும் சீன இராச்சியத்திற்கும் ஓர் உறுதியான வாணிகத் தொடர்பைத் தன் ஆட்சிக் காலத்தில் அமைத்துக்கொள்ளும் பொருட்டு அத்தூதர் குழுவினைச் சீன தேயத்திற்கு அனுப்பியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அம் முயற்சியில் அவன் வெற்றி பெற்றிருத்தல் கூடும். ஆனால் அந்நிகழ்ச்சிகளை நன்கு விளக்கக்கூடிய ஆதாரங்கள் கிடைக்க வில்லை. அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து சீன தேயம், மலேயா, சுமித்திரா முதலானவற்றிற்கு முத்து, யானைத்தந்தம், பவழம், பருத்தி, கண்ணாடிக்கல், பாக்கு, சந்தனக்கட்டை, ஏலம், பளிங்குக்கல், பருத்தி நூல், துணி, சாயந் தோய்ந்த பட்டு நூல் கலந்த துணி ஆகிய பொருள்களும் பிறவும் ஏற்றுமதி செய்யப்பெற்று வந்தன என்பது சௌ - ஜீ - குவா என்ற சீன தேயத்து நூலொன்றால் அறியப்படுகின்றது. கீழ் நாடுகளிலிருந்து சீனச்சூடம், சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோளம், இலவங்கம், குங்குமம், தமாலம் (பச்சிலை) நிரியாசம் முதலான பொருள்கள் தமிழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன என்று தெரிகிறது. சீனச்சூடம் என்பது சீன தேயத்திலிருந்தும், சூடம் என்பது சுமத்ரா முதலான இடங்களிலிருந்தும் வந்தவை; இந்தச் சூட வகைகள் உலகம் முழுதும் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்தவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அகில் வகை களில் அருமணவன், தக்கோலி, கிடாரவன் முதலான பெயர்களைச் சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் குறித்திருப்பது ஈண்டு உணரத்தக்கதாகும். இவற்றுள், அருமணவன் என்பது கீழ் பர்மா தேயத்திலிருந்தும், தக்கோலி என்றது மலேயாவின் மேல் கரையிலுள்ள தகோபா என்ற தக்கோலத்திலிருந்தும் கடாரவன் என்பது அதற்குத் தெற்கேயுள்ள கடாரத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யப்பெற்ற வகைகளாதலின், அப்பெயர்களை எய்தின என்று தெரிகிறது. இலவங்க (மோலக்க) தீவிலிருந்து இலவங்கப்பட்டையும் தாமலிங்கத்திலிருந்து தமாலம் என்ற பச்சிலையும் ஏற்றுமதி செய்யப்பட்டமை பற்றி அப்பெயர்களால் வழங்கி வந்தன. அரேபியாவிலிருந்து ஆண்டுதோறும் மிகுதியான குதிரைகள் கப்பல் மூலமாகத் தமிழகத்திற்கு வந்தன. சோழர், பாண்டியர், முதலான தமிழ் வேந்தர்கள் குதிரைப் படைகள் வைத்திருந் தமையின் பெரும் பொருள் கொடுத்து அவற்றை விலைக்கு வாங்குவது வழக்கம். சோழ இராச்சியத்தின் துறைமுகப் பட்டினங்களில் ஏற்றுமதி இறக்குமதிகள் மிகுதியாக நடைபெற்றுவந்தமையின் சோழ மன்னர்களுக்குச் சுங்க வருவாயாக ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்து வந்தது என்பது திண்ணம். முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1070-ஆம் ஆண்டில் முடி சூடிய பிறகு சோழ இராச்சியத்திலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவில் நலம்புரியக் கருதிச் சுங்க வரியை நீக்கி விட்டான். அதுபற்றி மக்கள் எல்லோரும் அவனை வாயார வாழ்த்திச் சுங்கந் தவிர்த்த சோழன்1 எனவும் சுங்கந்தவிர்த்திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்2 எனவும் பாராட்டி வழங்கி வந்தனர். கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தரும், புவிராச ராசர்மனு முதலோர் நாளில் தவிராத சுங்கந் தவிர்த்தோன்3 எனவும் தம் உலாவில் புகழ்ந்து கூறியுள்ளனர். முதற் குலோத்துங்க சோழன் புரிந்த இவ்வருஞ்செயல் காரணமாகச் சோழ நாடும் சுங்கமில்லாச் சோழ நாடு என வழங்கப் பெற்றுவந்தமை மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டொன்றால் அறியக்கிடக்கின்றது. எனவே, முதற் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு ஆட்சி புரிந்த சோழ மன்னர்களின் காலத்திலும் சோழ நாட்டில் சுங்கம் வாங்கப்படவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது. சுங்கவரி வாங்கப்படாத நாட்டில் புறநாட்டுப் பொருள்கள் எல்லாம் வாணிகத்தின் பொருட்டு வந்து குவியும். எனவே, அவை எல்லாம் நாட்டு மக்களுக்குச் சொற்ப விலைக்கு எளிதிற் கிடைக்கும் என்பது திண்ணம். கடைச்சங்க காலத்தில் நிலவிய ஆசிரியர் திருவள்ளுவனார், அரசற்குக் கிடைத்தற்குரிய வருவாய்களுள் ஒன்றாக விதந்து கூறியுள்ள சுங்கத்தை (உல்கு) முதற் குலோத்துங்க சோழன் நீக்கிய பின்னர், அரசாங்கத்தின் வருவாய் ஓரளவிற் குறைந்து போயிருத்தல் வேண்டும். அக்குறைபாட்டை அவ்வேந்தனும் அவனுக்குப் பிறகு வந்த மன்னர்களும் எவ்வாறு போக்கிக் கொண்டார்கள் என்பது புலப்படவில்லை. இனி, உள்நாட்டில் நடைபெற்ற வாணிகத்தில் பெரும் பகுதி பண்டமாற்று முறையில் நிகழ்ந்தது என்று தெரிகிறது. இம் முறையில் வாணிகஞ் செய்தோர், தலைநகரத்திற்காதல் துறைமுகப்பட்டினங்களுக் காதல் சென்று அங்கு வந்து தங்கியிருந்த வணிகர் பெருமக்களிடம் தம் வணிகத்திற்கு வேண்டிய பண்டங்களை உரியவிலை கொடுத்துப் பெற்று, வண்டிகள் பொதிமாடுகள் இவற்றின் மூலமாகத் தம்தம் இருப்பிடங்களுக்குக் கொணர்ந்து தொழிலை முட்டுப்பாடின்றி நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்க தாகும். வாணிகத் துறையில் ஈடு பட்டோர் இன்றியமையாத சமயங்களில் செல்வர்களிடம் கடனாகப் பொருள் பெற்றுத் தம் தொழிலை நடத்த வேண்டிய நிலை ஏற்படுதலும் இயல்பேயாம். அவ்வாறு கடன் வாங்கும் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுத்து வந்தனர் என்பது தெரியவில்லை. எனினும், தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுக்களால் நூற்றுக்குப் பன்னிரண்டரை வீதம் வட்டி வாங்கப்பெற்ற செய்தி வெளியாகின்றது. சில கல்வெட்டுக்களில் நூற்றுக்குப் பதினைந்து வீதப்படியும் காணப்படுகிறது. இவை அமைதியான காலங்களில் நடைபெற்று வந்த முறையாகும். அன்னியர் படையெடுப்பாலும் போர் நிகழ்ச்சியாலும் இன்னல்கள் நேர்ந்த போது வட்டிவீதம் உயர்ந்து போயிருந்தமையும் கல்வெட்டுக்களால் உணரக் கிடக்கின்றது. திருக்கோயில்களுக்கு அறங்கள் புரிந்தோர் தாம் நிவந்தமாகக் கொடுக்கும் பொருளை அவ்வூரிலுள்ள கிராமசபையாரிடம் வாராக்கடனாகக் கொடுத்து அதன் வட்டித் தொகையைக் கொண்டு தம்தம் அறங்களை நாள் தோறுமாதல் ஆண்டுதோறுமாதல் நடத்திவருமாறு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஊர்ச்சபையாரிடம் சில அறங்களுக்கு நிவந்தமாக வைக்கப்பெற்ற பொருளுக்கு நெல்லையே வட்டியாகப் பெற்று வந்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருக்கோயில்களில் சீகாரியஞ் செய்வோர் வட்டியாகக் கிடைக்கும் அந்நெல்லைக் கொண்டு பண்டமாற்று முறையில் கோயில் வழிபாட்டிற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வாங்கி வந்தனர் என்று தெரிகிறது. அவ்வாறு வாங்கப் பெற்ற நெல் வட்டியிலும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பல பல வேறுபாடுகள் இருத்தலைக் காணலாம். ஆகவே யாண்டும் ஒரே நிலையில் அமைந்த வட்டி வீதத்தைக் காண்டல் அரிது. ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு கலம் முதல் மூன்று நான்கு கலம் வரையில் நெல் வட்டியாக வாங்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுக்களால் புலனாகிறது. வட்டியைப் பொலிசை எனவும் பலிசை எனவும் அந்நாளில் வழங்கியுள்ளனர். சில கல்வெட்டுக்கள் அதனைத் தர்மபொலிசை என்று கூறுவது அறியத் தக்கதாகும்.  9. நாணயங்களும் அளவைகளும் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் பொன்னாலும் வெள்ளியாலும் செம்பாலும் செய்யப்பெற்ற நாணயங்கள் வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவற்றுள் சில, இக்காலத்தும் ஆங்காங்கு அகப்படுகின்றன. செப்புக் காசுகளே யாண்டும் மிகுதியாகக் கிடைக்கின்றன. பொற்காசுகள் கிடைப்பின் ஒருவருக்கும் சொல்லாமல் அவற்றை உருக்கி அணிகலன்களாகச் செய்து அணிந்து கொள்வது நம் நாட்டு மக்களின் இயற்கைக் குணமாயிருத்தலால், அவை வரலாற்றாராய்ச்சிக்குக் கிட்டுவது மிக மிக அருமையாய்ப் போய்விட்டது. வெள்ளிக்காசுகள் மிக அருகியே கிடைக்கின்றன. எனினும் அந்நாளில் வழங்கிய நாணயங்களின் பெயர்கள் பல கல்வெட்டுக்களில் காணப்படு கின்றன. அவற்றைக்கொண்டு உறுதியான முடிவிற்கு வர இயலவில்லை. இதுகாறும் கிடைத்துள்ள சோழ வேந்தர் நாணயங்களுள் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்றுள்ள பொற்காசுதான் மிக்க பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்தாகும். சோழர்களின் ஆட்சிக்காலங்களில் வெளியிடப் பெற்ற நாணயங்கள் எல்லாவற்றிலும் அன்னோரின் இயற்பெயராதல் சிறப்புப் பெயராதல் அமைக்கப்பெற்று அப்பெயர்களால் அவை நாடு முழுவதும் வழங்கிவந்தன என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக்கிடக்கின்றது. இப்போது கிடைத்துள்ளவற்றுள் மிக்க பழமையுடைய தாகச் சொல்லப்படும் உத்தமசோழன் காலத்து நாணயம் நடுவில் புலி யுருவமும் அதன் வலப்பக்கத்தில் மீன் உருவமும் பொறிக்கப் பெற்றது. ஓரத்தில் கிரந்த எழுத்தில் வரையப்பெற்ற உத்தம சோழன் என்ற அன்றாள் கோவின் பெயரையுடையது; வட்டமான வடிவத்தையுடையது; இரு புறங்களிலும் ஒரே தன்மை வாய்ந்த அமைப்புடையது. அஃது ஐம்பது அல்லது அறுபது கிரெயின் எடையுள்ளதாயிருத்தல் வேண்டும் என்று சர் வால்டர் எலியட் என்ற அறிஞர் தென்னிந்திய நாணயங்கள் என்னும் நூலில் கூறியிருப்பது ஈண்டு அறியற்பாலதாம். அவ்வாசிரியருக்குக் கிடைத்த அந்த நாணயம் பின்னர்க் காணாமற் போய்விட்டமையால் அதன் எடையை ஒரு தலையாகத் துணிந்து அவர் கூறமுடியவில்லை. இனி, மதுராந்தகதேவன் மாடை என்ற பொற்காசு ஒன்று முதல் இராசராசசோழன் காலத்துக்கு முன்னரே வழங்கியுள்ளது என்று தெரிகிறது. எனவே, அஃது உத்தமசோழன் என்று வழங்கும் மதுராந்தக சோழன் காலத்தில் நிலவிய பொற்காசு என்பது தெள்ளிது. இராசஇராசன்மாடை எனவும், இராசராசன் காசு எனவும், இராசேந்திரசோழன் மாடை எனவும் இராசேந்திர சோழன் காசு எனவும் கல்வெட்டுக்களில் காணப்படும் நாணயங்களின் பெயர்களைக் கூர்ந்து நோக்குமிடத்து, ஒரு வேந்தன் ஆட்சியிலேயே மாடை, காசு என்ற இருவகை நாணயங்கள் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகப் புலப்படுதல் காணலாம். இவ்விருவகை நாணயங்களும் முதற் குலோத்துங்க சோழனுக்கு முன் ஆட்சி புரிந்த எல்லாச் சோழ மன்னர்களின் காலங்களிலும் வழக்கில் இருந்தன என்று தெரிகிறது. ஒரு வேந்தன் காலத்தில் வெளியிடப்பெற்று அவன் ஆட்சியில் வழங்கி வந்த காசு அன்றாடுநற்காசு எனவும் அவனுக்கு முன் ஆட்சிபுரிந்த அரசர் களின் காசு பழங்காசு எனவும் வழங்கி வந்தன என்பதும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. பழங்காசுகளுள் நாட்டில் வழங்கிவந்த நாணயங் களை அன்றாடுநற்பழங்காசு என்றும் கூறிவந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் உணரக்கிடக்கின்றது. மாடை, காசு, பழங்காசு ஆகிய நாணயங்கள் எல்லாம் பொதுவாகப் பொன் என்றே வழங்கியுள்ளன. மாடை என்பது ஒரு கழஞ்சு எடையுள்ளதும் ஒன்பதரை மாற்றுடையதும் ஆகிய செம்பொன்னால் அமைந்த நாணயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரண்டு குன்றிமணிகள் கொண்டது ஒரு மஞ்சாடி எனவும், இருபது மஞ்சாடிகள் கொண்டது ஒரு கழஞ்சு எனவும் நம் தமிழகத்தில் நீண்டகாலமாக வழங்கி வருதல் அறியத்தக்கது. எனவே, மாடை என்பது நாற்பது குன்றிமணி எடையுடைய பொன் நாணயம் ஆகும். இனி, மைசூர் நாட்டில் கோலாரிலுள்ள முதற் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டொன்றில் மாடை ஒன்றுக்குக் காசு இரண்டாக என்ற தொடர் காணப்படுவதால், இரண்டு காசு கொண்டது ஒரு மாடை என்பது தெளிவாகப் புலனாதல் காணலாம். ஒரு மாடை ஒரு கழஞ்சு எடையுடையது ஆதலில், ஒரு காசு என்பது அரைக்கழஞ்சு எடையுடையது என்பது நன்கு தெளியப்படும். எனவே, காசு என்பது இருபது குன்றிமணி எடையுடைய பொன் நாணயம் ஆகும். திருப்புகலூரிலுள்ள முதற்குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டொன்று, ஒன்பதரை மாற்றும் ஒரு கழஞ்சு எடையுமுடைய மதுராந்தகன் மாடை என்னும் நாணயம் இரண்டு காசுகளுக்குச் சமமானது என்று கூறுகின்றது. இதுவும் மேலே குறிப்பிட்ட செய்திகளை உறுதிப் படுத்துதல் காணலாம். கழஞ்சு என்பது வடமொழியில் நிஷ்கா என்று வழங்கப் பெற்றுள்ளமை, திருவொற்றியூரிலுள்ள முதற் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது. 1946-ஆம் ஆண்டில் கிழக்குக் கோதாவரி ஜில்லாவிலுள்ள தவளேசு வரத்திலிருந்து நூற்றிருபத்தேழு பொன் நாணயங்கள் புதை பொருளாயி ருந்து கிடைத்தன. அவை, செம்பொன்னாலாய நாணயங்கள் ஆகும். அவற்றுள், முதற் குலோத்துங்க சோழன் தந்தையும் கீழைச்சளுக்கிய வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுடைய நாணயங்கள் நாற்பத் தொன்பது உள்ளன. எனவே, அவை, கீழைச் சளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டில் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வழங்கிய பொன் நாணயங்கள் எனலாம். அன்றியும் இரண்டு முடிவேந்தர்களின் பெயர்கள் தனியாயமைந்த இரு வகை நாணயங்களும் அத்தொகுதியில் காணப்படுகின்றன. அவற்றுள், முப்பத்திரண்டு பொன் நாணயங்களில் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது. அவை, அவ்வேந்தனது ஆட்சியின் 28 -ஆம் ஆண்டுமுதல், 33 -ஆம் ஆண்டு முடிய வெளியிடப் பெற்றவை என்று தெரிகிறது. எனவே, அவை, பேரரசனாகிய முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கி. பி. 1040 -க்கும் 1045 -க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பெற்ற பொன் நாணயங்கள் என்பது நன்கு தெளியப் படும். அந்த நாணயங்களில் அரசனது ஆட்சி யாண்டிற்கு மேலே சில இலக்கங்களும், நடுவிலுள்ள இலச்சினையோடு சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றால் அறியப்படுவன யாவை என்பதை இன்னும் ஆராய்ந்துணர இயலவில்லை. எஞ்சியுள்ள நாற்பத்தாறு பொன் நாணயங்களில் மலை நாடு கொண்ட சோழன் என்ற பெயர் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை அவ்வரசனது ஆட்சியின் 34-ஆம் ஆண்டு முதல் 36-ஆம் ஆண்டுமுடிய வெளியிடப்பெற்ற நாணயங்கள் ஆகும். அவற்றில் குறிக்கப்பெற்ற சோழ மன்னன், முதல் இராசேந்திர சோழனுடைய முதல் மகனாகிய முதல் இராசாதிராச சோழன் ஆவன். அவன் கி. பி. 1018 -ல் இளவரசுப் பட்டம் பெற்றுக் கி. பி. 1044 முதல் சோழ ராச்சியத்தின் சக்கரவர்த்தியாக இருந்து ஆட்சி புரிந்து கி. பி. 1054-ல் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவ மல்லனுடன் நிகழ்த்திய கொப்பத்துப் பெரும் போரில் உயிர் துறந்த பேரரசன். அவன், தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இளவரசனாயிருந்தபோது சேர நாடாகிய மலை நாட்டை வென்று தன்னடிப்படுத்திய செய்திகளை அவன் மெய்க்கீர்த்தியில் காணலாம். மேல் குறிப்பிட்ட அவனுடைய நாணயங்கள் கி. பி. 1052 -க்கும் 1054 -க்கும் இடையில் வெளியிடப் பெற்றிருத்தல் வேண்டும். கீழைச்சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் என்பான், கங்கை கொண்ட சோழன் மகளாகிய அம்மங்கை தேவியை மணந்து, சோழர்களின் பேராதரவினால் தன் நாட்டைப் பெற்று, அவர்களுடைய துணைகொண்டு ஆட்சி புரிந்து வந்தான் என்பது வரலாற்றாராய்ச்சியால் அறியப்படும் உண்மையாகும். எனவே, அவ்வரசனது ஆளுகைக்குட்பட்ட தவளேசு வரத்தில் அவன் நாணயங்களோடு முதல் இராசேந்திர சோழன் முதல் இராசாதிராச சோழன் ஆகிய பேரரசர்களின் பொன் நாணயங்களும் கிடைத்துள்ளமை வியப்பிற்குரியதன்று. ஈழக்காசு என்ற ஒருவகைப் பொற்காசு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளமை கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. ஈழம் என்பது பொன் என்று பொருள்படுதலின் அது சோழ மன்னர்களின் பொற்காசாகவே இருத்தல் வேண்டும் என்பது ஒருசாரார் கருத்தாகும். நாணய ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் அஃது ஈழ நாடாகிய சிங்கள நாட்டில் அரசாண்ட வேந்தர்கள் தம் தம் ஆட்சிக் காலங்களில் வெளியிட்ட நாணயமாயிருத்தல் வேண்டுமென்று கருதுகின்றனர். ஈழக்காசு பொன்நாணயமாயிருந்தமை பற்றி ஈழம் என்ற சொல்லுக்குப் பொன் என்று திவாகரமுடையார் பொருள் கொண்டிருக்கலாம். ஆனால் பழைய தமிழ் நூல்களில் இச்சொல்லுக்கு இப்பொருள் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. முதற் பராந்தக சோழன், முதல் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் முதலான மன்னர்கள், தம் ஆட்சிக் காலங்களில் ஈழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று பொன்னும் மணியும் அணிகலன்களும் கொணர்ந்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. எனவே, சோழ இராச்சியத்தில் வழங்கிய ஈழக்காசுகள் எல்லாம் அப்பெரு வேந்தர்கள் ஈழ நாட்டை வென்று திறைப் பொருளாகப்பெற்ற பொன் நாணயங்களாகவே இருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடமுளது. ஈழக்காசுகள் எல்லாம் அரைக் கழஞ்சு எடையும் மாடையைப் போன்ற மாற்றும் உடையன வாயிருந்தமை அறியத்தக்கது. ஈழக் கருங்காசு என்ற நாணயமும் அந்நாளில் வழங்கியமை கல்வெட்டுக்களால் உணரப்படுகின்றது. அந்நாணயம் வெள்ளிக் காசாக இருத்தல் கூடுமென்று ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர். ஆனால், அது செப்புக்காசாக இருத்தல் வேண்டுமென்று எண்ணுவதற்கும் இடந்தருகின்றது. அதன் எடையும் தெரியவில்லை. ஒரு கழஞ்சு எடையுள்ளதும் அதில்பாதி எடையுள்ளது மான வெள்ளி நாணயங்கள் சோழர் ஆட்சியில் வழங்கின என்று சர் வால்டர் எலியட், டாக்டர் ஹூல்டஷ் முதலான அறிஞர்கள் கூறுகின்றனர். சோழ நாராயணன் என்ற பெயருடன் காணப் படும் வெள்ளி நாணயம் முதல் இராசராச சோழன் காலத்தில் வழங்கியதாதல் வேண்டும் என்பது அன்னோர் கருத்து. இனி, சோழர் காலத்துச் செப்பேடுகளில் கண்ணாலக் காணம், குசக்காணம் என்ற வரிகள் குறிக்கப்பட்டிருத்தலை நோக்குமிடத்து, அவர்களது ஆட்சிக் காலத்தில் காணம் என்ற நாணயம் ஒன்று வழங்கி யிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இச்செய்தியைத் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திலும் சீயமங்கலத்திலுமுள்ள சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. எனினும், இந்நாணயம் சோழர்களின் கல்வெட்டுக்களில் மிக அருகியே காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடைச் சங்க காலத்தில் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் காக்கை பாடினியார் நச்செள்ளையார்க்கு நூறாயிரங் காணமும், செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர்க்கு நூறாயிரம் காணமும், தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரங் காணமும், இளஞ்சேரல் இரும்பொறை பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத்தீராயிரம் காணமும் பரிசிலாக வழங்கிப் பாராட்டினர். எனவே, முற்காலத்தில் காணம் என்ற நாணயம் சேர நாட்டில் பெருவழக்கில் இருந்தமை தெள்ளிது. அது பொன்னாலாகிய நாணயம் என்பது அந்நாட்டுக் கல்வெட் டொன்றால் அறியக்கிடக்கின்றது. பல்லவர்கள் ஆட்சியில் தொண்டை நாட்டில் காணம் என்ற நாணயம் வழங்கியுள்ளமை அவர்கள் கல்வெட்டுக்களால் தெரிகிறது. கி. பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் கச்சித் திருவோணகாந்தன் தளிப் பதிகத்தில் கையிலொன்றுங் காணமில்லைக் கழலடிதொழு துய்யினல்லால் என்ற அடியில் காணம் என்னும் நாணயத்தைக் கூறியிருப்பது அறியத்தக்கது. இவற்றையெல்லாம் கூர்ந்து ஆராயுமிடத்து, கடைச்சங்க நாளில் சேரநாட்டில் வழங்கிய காணம் என்ற நாணயம் கி. பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தொண்டை நாட்டில் நடைபெற்ற பல்லவர் ஆட்சியில் பெருக வழங்கியுள்ளது என்பதும், பிறகு அங்கு நிகழ்ந்த சோழர் ஆட்சியிலும் அந்நாணயம் தொடர்ந்து வழக்கிலிருந்ததாயினும் மிக அருகியே வழங்கி யுள்ளது என்பதும் நன்கு புலப்படுதல் காணலாம். சோழர்களின் கல்வெட்டுக்களில் கச்சாணம், அக்கம், திரமம், புசபாலன்மாடை, கண்டகோபாலன்மாடை ஆகிய வேறு நாணயங்களின் பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள், கச்சாணம் என்பது வீரராசேந்திர சோழனுடைய திருமுக்கூடல் கல்வெட்டில் குமாரக்கச்சாணம் என்ற வரியின் பெயராகவும் உளது. எனவே, அது பழைய நாணயங்களுள் ஒன்றின் பெயராக இருத்தல் வேண்டுமென்று கருதற்கு இடம் உளது. இரட்டபாடி நாட்டில் மேலைச் சளுக்கியர் ஆட்சியில் வழங்கி வந்த கத்யாணமே அது; அதன் உண்மை வரலாறு தெரியவில்லை. இனி, அக்கம் என்பது முதற் பராந்தக சோழனது ஆனைமலைக் கல்வெட்டில் கி. பி. 939-ஆம் ஆண்டில் குறிக்கப்பட்டுள்ளமை அறியத்தக்கது. அக்கல்வெட்டிலுள்ள ஒரு ஈழக்காசுக்குப் புத்தகம் ஏழரையாக என்ற தொடரால் ஏழரை புதிய அக்கம் கொண்டது ஓர் ஈழக்காசு என்ற செய்தி புலப்படுகின்றது. தஞ்சை இராசராசேச்சுரக் கல்வெட்டுக்களில் அக்கம் என்ற நாணயத்தின் பெயர் மிகுதியாகப் பயின்று வருதல் காணலாம். எனவே, முதல் இராசராச சோழன் ஆட்சியில் நாணயம் வழங்கி யிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள அவ்வேந்தன் கல்வெட் டொன்று திருப்பள்ளித் தாமத்துக்கு நிசதம் அக்கம் அரையாக ஓராட்டைக்கு அக்கம் நூற்று எண்பது. இவை காசு ஒன்றுக்கு அக்கம் பன்னிரண்டாக வந்த காசு பதினைஞ்சும் என்றுணர்த்துகிறது. இதனால் பன்னிரண்டு அக்கம் கொண்டது இராசராசன் காசு என்பது தெளிவாகப் புலனாகிறது. முதற் பராந்தக சோழன் காலத்துப் புத்தக்கமும் முதல் இராசராச சோழன் காலத்து அக்கமும் எடையிலும் மதிப்பிலும் சமமானவையா அன்றி ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு டையனவா என்பது தெரியவில்லை. இராசராசன் காசு இருபது குன்றுமணி எடையுடையதாதலின் ஓர் அக்கம் குன்றிமணி எடையுடைய ஒரு சிறு பொற்காசாக இருத்தல் வேண்டும். அன்றேல் அத்துணை மதிப்பு வாய்ந்த எடையுடைய வெள்ளி நாணயமாக இருத்தலும் கூடும்; ஒருதலையாகத் துணிய இயலவில்லை. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் மற்றொரு நாணயத்தின் பெயர் திரமம் என்பது. காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள உடையார்குடி, திருப்புகலூர் ஆகிய ஊர்களில் வரையப்பெற்ற கல்வெட்டுக் களில் இந்நாணயத்தின் பெயர் மிக அருகியே வந்துள்ளது. சேர மன்னர்களின் கல்வெட்டுக்களிலும் இதன் பெயர் காணப்படுகிறது. இது கிரேக்க நாணயத்தின் பெயராகவும் இருத்தலால் அந் நாட்டிற்கும் நம் தமிழ் நாட்டிற்கும் வாணிகத்தொடர்பு ஏற்பட்டிருந்த கி.மு.முதல் நூற்றாண்டி லேயே இந்நாணயம் தமிழகத்தில் வழங்கியதாதல் வேண்டு மென்பது அறிஞர் சிலருடைய கருத்தாகும். அங்ஙனமாயின் இது பிற்காலத் திலும் தொடர்ந்து வழங்கியிருத்தல் வேண்டும்.  பிற்சேர்க்கை உத்தரமேரூர்க் கல்வெல்ட்டு - I 1. வதி ஸ்ரீமதுரை கொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பனிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீமுகப்படி ஆணை. 2. இதனால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் இடுவதற்கு வியவதை செய் 3 த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன் மனையிலே அ 4. கம் எடுத்துக் கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிரயாத்துக்கு மேல் பட்டார் வேதத்திலும சாதிரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப் பட்டி 5. ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்ம சௌசமும் உடையாராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெரு மக்களுக்கு 6. அணைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறி யாதான் ஒரு 7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வரும் சம்வத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ 8. லை வாங்கி பன்னிருவரும் தோட்டவாரியம் ஆவதாகவும் நின்ற அறுகுடவோலையும் ஏரிவாரியம் ஆ 9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வியவதை ஓலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு 10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப்படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிரு வரிலும் அறுவர் பஞ்சவாரவாரியம் ஆவதாகவும் அறுவர் பொன் வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத 11. வாரியங்கள் ஒருகால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரிவர்மர் ஸ்ரீமுகம் அருளிச் செய்து வரக்காட்ட 12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளான் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர்வர்த்தித்திடு வாராக வியவதை செய்தோம் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். உத்தரமேரூர்க் கல்வெட்டு - II 1. வதிஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேசரிவன்மர்க்குயாண்டு பதினாலாவது நாள் பதினாறு, காலியூர்க் கோட்டத்து தன் கூற்று உத்தரமேருச் சதுர்வேதி மங்கலத்துச சபையோம் இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தகதேவன் ஸ்ரீ பரகேசரி வன்மருடைய ஸ்ரீமுகம் வரக்காட்ட, ஸ்ரீ முகப்படி ஆ 2. க்ஞையினால் சோழநாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்கநகர்க் கரஞ்சை கொண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசிப் பெருமான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும சம்வத்ஸவாரியமும் தோட்டவாரியமும், ஏரி வாரியமும் இடுவார்க்கு வியவதைசெய்த பரிசாவது, குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா 3. ரே கூடி கானிலத்துக்கு மேல் இறைநில முடையான் தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்படாதார் மந்திரப் பிராமணம் வல்லான் ஓதுவித்து அறிவானை குடவோலை இடுவிதாகவும் அரைக்கானில மேயுடையான் ஆயினும் ஒருவேதம் வல்லான் ஆய்நாலு பாஷ்யத்திலும் ஒரு பா 4. ஷ்யம் வக்கணித்து அறிவான் அவனையும் குடவோலை எழுதிப்புக இடுவதாகவும் அவர்களிலும் காரியத்தில் நிபுணராய், ஆசாரம் உடையாரானாரையே கொள்விதாகவும் அர்த்தசௌஸமும் ஆன்ம சௌஸமும் உடையாராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாதாராய் கொள்வதாகவும் எப்பேர்பட்ட வாரியமுஞ்செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரும் இவர்க்கு சிற்றவ்வை, பேரவ்வை ம 5. க்களையும் இவர்க்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்கு தாயோடு உடப்பிறந்தானையும் இவர்கள் தமப்பனோடு உடப் பிறந்தானையும் தன்னோடுடப்பிறந்தானையும் இவர்களுக்குப் பிள்ளை கொடுத்த மாமனையும் இவர்கள் பிராமணியோடு உடப்பிறந் தானையும் தன்னோடு உடப்பிறந்தாளை வேட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன் மகளை வேட்ட மருகனையும் தன் தமப்பனையும் 6. தன் மகனையுமாக இச்சுட்(டப்பட்ட இத்தினை) பந்துக்களையும் குடவோலை எழுதிப் புகஇடப் பெறாதாராகவும், அகம்மியா கமனத்திலும், மகா பாதகங்களில் முன்படைந்த மகா பாதகத்திலும் எழுத்துப்பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுட்டப்பட்ட இத்தினை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதாராகவும் சம்ஸர்க்கபதிதரை பிராயச்சித்தம் செய்யும் அளவும் 7. குடவோலை இடாதாதாகவும் ...............தியும் சாகஸ்யராய் இருப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாகவும் பரதிரவியம் அபகரித்தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான் கிருதப் பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் பிராணாந்திகம் 8. வாரியத்துக்கு குடவோலை எழுதி புக(விடப்பெறாத தாகவும்) பாதகஞ் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் அகம்மியாகமனம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் அகம்மியாகமனம் பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் பிராணந்திகம் வாரியத்துக்கு குடவோலை எழுதிப் புகவிடப் பெறாததாக 9. வுமாக இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி முப்பது குடும்பிலும் குடவோலைக்கு பேர்தீட்டி இப்பன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாய்ஓலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே காட்டி குடம்புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் (போ)து மகாசபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்ப கூட்டிக்கொண்டு அன்றுள்ளுரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா 10. மே மகாசபையிலே உள்மண்டகத்திலே இருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடந்தை நம்பிமாரில் விருத்தராயிருப்பார் ஒரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமும் காணுமாற்றால் எடுத்துக் கொண்டு நிற்க பகலே அந்தரம் அறியாதான் ஒரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துக்கே புகவிட்டுக் குலைத்து அக்குடத்தில் ஓர் ஓலை வாங்கி மத்தியதன் கையிலே 11. குடுப்பதாகவும் அக்குடுத்த அவ்வோலை மத்தியதன் வாங்கும்போது அஞ்சுவிரலும் அகலவைத்து உள்ளங் கையிலே ஏற்றுக் கொள்வானாகவும் அவ்வேற்று வாங்கின ஓலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்கு உள்மண்டகத்திருந்த நம்பிமார் எல்லாரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பேர் தீட்டுவ தாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஓரோர் பேர் கொள்வதாகவும் இக் கொண்ட முப்பது பேரிலும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் வித்யா விருத்தர்களையும் 12. வயோவிருத்தர்களையும் சம்வத்ஸரவாரியரையும் கொள்வதாகவும் மிக்கு நின்றாருள் பன்னிருவரையும் தோட்ட வாரியங் கொள்விப்ப தாகவும் நின்ற அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்விரண்டு திறத்து வாரியமும் கரைகாட்டிக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங் 13. கண்டபோது அவனையொழித்து விடுவதாகவும் இவர்கள் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்ம கிருத்தியம் கடைக்காணும் வாரியரே மத்தியதரைக் கொண்டு குறி கூட்டிக் குடுப்பாராகவும் இவ்வியவதை ஓலைப்படியே ......க்F¡ குடவோலை பறித்துக்கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியத்து 14. க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர்தீட்டி முப்பது வாயோலைக்கட்டும் புகஇட்டு முப்பதுகுடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டுபேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டிலும் அறுவர் பொன்வாரியம் அறுவர் பஞ்சவாரவாரியமும் ஆவராகவும் பிற்றையாண்டும் இவ்வாரியங்கள் குடவோலை பறிக்கும்போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செ 15. ய்த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரைபறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாதாகவும் மத்தியதரும் அர்த்தசௌஸமும் உடையானே கணக்கு எழுதுவானாகவும் கணக்கு எழுதினான் கணக்குப் பெருங்குறி பெருமக்களோடுகூட கணக்குக் காட்டி சுத்தன் ஆகிடின் பின்னன்றி மற்றுக்கண 16. க்குப் புகப்பெறாதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மற்று கணக்கர்புக்கு ஒடுக்கப் பெறாதாராகவும் இப்பரிசே இவ்வாண்டுமுதல் சந்திராதித்தவல் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பண்டித வத்ஸலன் குஞ்சரமல்லன் சூர சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீபரகேசரி வன்மர்(டைய) ஸ்ரீமுகம் அருளிச்செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆக்ஞையா. 17. சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீவங்கநகர்க் கரஞ்சை கொண்ட யக்ரமவித்தபட்டனாகிய சோமாசிப் பெருமான் உடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்திற்கு அ(ப்யுதயமாக) துஷ்டர்கெட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவதை செய்தோம் உத்தரமேருச் சதுர்வேதி மங்கலத்துச சபையோம் இப்பரிசு குறியுள்ளிருந்து பெருமக்கள் பணித்த வியவதை யெழுதினேன் மத்தியதன் 18. காடடிப்போத்தன் சிவக்குறி இராஜமல்ல மங்கலப் பிரியனேன். மூன்றாம் இராசராசசோழனது திருச்சேய்ஞலூர்க் கல்வெட்டு (1245, செப்டம்பர். 23 சனிக்கிழமை) 1. வதி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு முப்பதாவது கன்னி நாயற்று பூர்வ பஷத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற சித்திரை நாள் விருதராஜ பயங்கர வள நாட்டு மிழலைநாட்டு சேய்ஞலூர் உடையார் விவேவரதேவர் கோயில் 2. மூலபருஷையர் கூட்டங் குறைவறக் கூடியிருந்து கிராம காரியம் வியவதை g‹Ådgo|| நம்மூர்க் கூட்டம் இடுமிடத்து ஒரு ஸம்வத்ஸரஞ் செய்தார் அஞ்சாம் வத்ஸரஞ் செய்யவும் புத்ரர்கள் நாலாம் வத்ஸரஞ் செய்யவும் ப்ராதாக்கள் மூன்றாம் வத்ஸர 3. ஞ் செய்யக்கடவதாகவும் || அனாதியாக வியவதையுண்டாகையில் இந்த வியவதைப்படியே செய்யவும், இப்படி செய்யுமிடத்து நாற்பது வயஸில் தாழா தாரைப் பார்த்து இடவும், இப்படி கூட்டமிடுமிடத்து ஊராகத் திரண்டிருந்து இராஜகீய 4. மான நாளில் பூர்வ புருஷர்கள் செய்தபடிக்கீடாக ஆமென்ன இடக்கடவதாகவும் ( || ) இப்படி தவி(ரமு) தலிகள்ளுடனே கூடிநின்று உள்வரிக் கூட்டம் புகுதல் வியவதைப்படியைத் தவிரப் புகுதல் செய்தாருண்டாகில் கிராமதுரோகிகளாயிவர்களை ஸர்வவஹரணம் 5. பண்ணக் கடவதாகவும் || இப்படி கூட்டஞ் செய்யுமிடத்து ஸம்வத்ஸர வரணமாகச் செய்யவும் மேற்பட நின்றாருண்டாகில் கிராம துரோகி களாய் இப்படி தண்டிதராகக்கடவர்களாகவும் இப்படி வியவதைப் படி கூட்டஞ் செய்யுமிவர்கள் நம்மூர்க் கடமை குடிமையும் 6. சபா வி(னி)யோகமும் வரிக்கொள்ளுமிடத்து ப்ராப்த மானபடிக்கு மேற்பட்ட வரிக்கொள்ளா தொழியக் கடவார்களாகவும் || சபா வினியோகம் குடிமையுடன் கூட்டாதே தனியே வரிக்கொண்டு கணக்கனுக்கு (நி)யோகமெழுதிக்குடுத்து நியோகப்படியே செலவழிக்கக் கடவ 7. தாகவும் செலவழிக்கு மி(டத்து)க்கு ஒரு பொருளுக்கு இரண்டாயிரங் காசுக்கு மேற்பட்டது - ண்டாகில் மஹா சபாநியோக மெழுதிக்கொணடு செல வழிக்கக் கடவர்களாகவும் இப்படி தவிரச் செலவழிந்த துண்டாகிலும் ஏறவரிக்கொண்ட துண்டாகிலும் வரிக்கோளுக்கு 8. நியோகம் எழுதின சபை...... க வாசறுதியாக ஒன்றுக்கு அஞ்சாக வந்த காசும் பேர்வழிசிகை கிடந்(த) பேர்க (ளி) ரட்டியாக வந்த காசும் தண்டி சபா வினியோகத்துக்குச் செலவழிக்கக் - கடவதாகவும் ஊர்க்கணக்கும் வாரியமும் குடு(ம்பும்) ஆண்டுமாறி நியோகப்படி நிற்கக்-கட 9. வதாகவும் || மூல பருஷை யார்.... மூரின் வியவதை இவ்வரு உடையார் திருவிரவீவரம் உடையார் கோயில் திருநடை மாளிகையிலே இப்படிக் கல்வெட்டக் கடவதாக நிச்சயித்து இப்படி வியவதை பண்ணினோம் பணிப்பணியால் ஊர்க்கணக்கு சாத்தனூருடையான் பண்டித 10. பிரியன் எழுத்து. இவை பணிப்பணியால் ஊர்க்கணக்கு சேய் ஞலூருடையான் அலங்காரப்பிரியன் எழுத்து. இவை பணிப்பணியால் ஊர்க்கணக்கு இலங்கூருடையான் மூல பரிஷைபிரியன் எழுத்து. இவை பணிப்பணியால் ஊர்க்கணக்குக்காட்டுடையனார் பட்டப்பிரி 11. யன் எழுத்து - வதிஸ்ரீ || பொருட்குறிப்பு அகராதி அ அக்கம் 130, 131 அகநானூறு 21 அகரப்பற்று 50 அங்காடிப்பாட்டம் 56 அஞ்சுவண்ணத்தார் 113, 114 அடிக்கீழ் நிற்பான் 34, அடிமைகள் 101 அதிராசராச சோழ மண்டலம் 5 அநிருத்த பிரமாதிராசன் 80 அபூர்விகள் 75 அர்ச்சனா போகம் 76 அரசியல், சோழர் 3, 19 அரசிறை 53,55,74 அரிசிலாறு 8 அருமணவன் 120 அருமொழிதேவ வளநாடு 7 அருள்நிதி கலியன் 88 அரேபியா 120 அரையன் 18 அம்பர்நாடு 9 அம்பலப்புறம் 77 அம்மங்கை 127 அமைச்சர்குழு 11,13 அய்யம்பேட்டை 44 அறந்தாங்கி 5 அறப்புறம் 47 அன்பிற் செப்பேடு 57 அன்றாடு நற்காசு `25 ஆ ஆக்கூர்நாடு 9 ஆகவமல்லவன் 127 ஆட்டைவாரியம் 22 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 129 ஆத்திரையன் மாதேவப்பட்டன் 64 ஆதித்த கரிகாலன் 10,11 ஆந்திர நாடு 3 ஆமூர்க் கோட்டம் 46 ஆர்க்காட்டுக் கூற்றம் 8 ஆரியக்கூத்து 76 ஆள்விலைப் பிரமாண இசைவுத் சீட்டு 103 ஆவூர்க் கூற்றம் 8 ஆறிலொரு கடமை 54 ஆனை மங்கலச் செப்பேடு 57 இ இடை துறை 92 இடைப்பாட்டம் 56 இரட்டபாடி 92,130 இரண வீரமங்கலம் 50 இலைக்கூலம் 56,58 இளங்கோவடிகள் 84 இளங்சிங்க வீரர்கள் 116 இரவு வரி 59 இராசகோபாலப் பெருமாள் கோயில் 65 இராசாதித்தன் I 10 இராசராச சோழன் I 6,7 இராசராச நரேந்திரன் 125,126,127 இராசராசப்பாண்டி மண்டலம் 9 இராசராசமலய குலராசன் 98 இராசராச வளநாடு 7 இராசாசிரய வளநாடு 7 இராசேந்திரன் I 128 இராசேந்திர சிங்கவளநாடு 7 இருமுடி சோழத் தெரிந்த வில்லிகள் 102 இறை இறங்கல் 79 இறைகாவல் 78 இறை குடிகள் 74 இறை நீங்கல் 79 இறையிலி 78 இறையிலிக்காசு 75 இன்னம்பர் நாடு 9 ஈ ஈழக்காசு 128,130 ஈழம்பூட்சி 56 உ உக்கல் கல்வெட்டு 62 உடன் கட்டை ஏறுதல் 97,98 உடன் கூட்டத்து அதிகாரிகள் 11 உத்தம சோழன் 49, 59, 124 உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் 23 - 28 உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலம் 28 உதிரப்பட்டி 77 உய்யக் கொண்டான் வளநாடு 7 உருத்திரங் கண்ணனார் 86 உல்கு 56, 58 உலகளந்தான் 68 உலகளந்தான் இராசராச மாராயன் 68 உலகளந்த கோல் 69 உலகளந்த சோழப் பல்லவராயன் 72 உலகளவித்த திருவடிகள் சாத்தன் 69 உலகளந்த திருவரங்க தேவன் 72 உலகுய்யவந்த வளநாடு 8 உவச்சக்காணி 77 உறத்தூர் 49 உறையூர் 21 உறையூர்க் கூற்றம் 9 ஊ ஊர்கீழ் இறையிலி 78 ஊர்ச்சபைகள் 20,21,22 ஊராட்சி மன்றங்கள் 20,21 ஊராள்வான் 47 ஊரிடு வரிப்பாடு 61,62, 78 எ எதிரிலி சோழ கங்க நாடாள் வரை 103 எல்லி 113 எறிவீரர்கள் 116 எறிவீரப்பட்டினம் 115,116 ஏ ஏரிப்பட்டி 77 ஏரிவாரியம் 22,28,31 ஏரிவாரியப் பெருமக்கள் 91 ஒ ஓட்டக்கூத்தர் 85 ஓ ஓடக்கூலி 56 க கங்கை கொண்ட சோழன் 57,81,85,98,118,128, கங்கைகொண்ட சோழபுரம் 4, 89 கங்கபாடி 6 கங்கபாடி தொண்ணுற்றாயிரம் 92 கங்கமாதேவி 98 கச்சாணம் 130 கடாரம் 119 கடிகைமாராயன் 19 கண்ட கோபாலன் மாடை 130 கண்டராதித்த சோழர் 89 கண்டராதித்தப் பேரேரி 88 கண்ணாலக்காணம் 56,129 கணக்கக்காணி 77 கணக்கு வாரியம் 31,37 கணபதி நம்பி 102 கத்யாணம் 130 கயிலாயநாதர் கோயில் 65 கரணத்தா 34,35 கரிகாலக்கரை 86 கரிகாலச் சதுர்வேதி மங்கலம் 64 கரிகாற் பெருவளத்தான் 84,85 கருமம் ஆராயும் அதிகாரி 14 கருணாகர வீரர் மடம் 112 கலிங்கத்துப்பரணி 8,13 கலிங்குவாரியம் 31,37 களவியற் காரிகை 112 கழனிவாரியம் 31,37 கன்னட தேயம் 3 கி கிராம ஆட்சி 20 கிராம சபை 21,67,76 கிராம சபை தெரிந்தெடுக்கும் முறை 29,30 கிராம சபை உறுப்பினர் 23 கிராம சபையர் 122 கிரேக்க நாணயம் 131 கிருஷ்ணகணத்தார் 48 கீ கீழ் முகவெட்டி 154 கு குசக்கணாம் 56,129 குஞ்சரமல்லன் 87 குடவோலை 21,23,32,45,51 குடிமை 53 குடும்பு 30 குடும்புவாரியம் 31,37 குண்டர்ட் 113 குந்தவை 81 குமாரகணத்தார் 48 குமாரக்கச் சாணம் 130 குறட்பா 54 குறி 23 குறுக்கைநாடு 9 கூ கூத்தாட்டுக் காணி 77 கூலி 57 கே கேரளராசன் 18 கேரளாந்தக வளநாடு 7 கொ கொங்கவாளர்கள் 116 கொட்டகாரம் 70 கோ கோஇராச கேசரிவர்மன் 11 கோப்பரகேசரி வர்மன் 11 கோட்டைக்கரை 5 கோனேரின்மை கொண்டான் 11 ச சங்கரபாடியார் 48 சத்திரிய சிகாமணி வளநாடு 7 சதுர்வேதி மங்கலம் 21 சதுரன் சதுரி 99 சபா விநியோகம் 36,40,60,78 சபை விலை 63 சபைக்குரிய பணிமக்கள் 34 சம்வத்சர வாரியம் 28,31 சயங்கொண்ட சோழ மண்டலம் 6, 50 சா சாக்கைக் காணி 77 சாத்தகணத்தார் 48 சாத்தமங்கலம் 46 சாலா போகம் 74 சி சில்லிறை 57 சில்வரி 57,58 சிலப்பதிகாரம் 56,101 சிற்றாயம் 57 சிறுதரம் 12 சிறுதனம் 12 சிவயோகிகள் 75 சீ சீராவள்ளி 115 சீவிதப்பற்றி 50 சீவிதம் 13,66,75,79 சு சுங்கம் 53,58 சுங்கம்தவிர்த்த சோழன் 121 சுந்தரசோழன் 10,57 சுந்தரமூர்த்தி நாயனார் 129 சுந்தரேசுவரர் கோயில் 112 சுமத்ரா 117,120 செ செக்கிறை 56 செம்பியன் மாதேவி 34,40 செம்பியன் மாதேவிப் பேரேரி 89 செம்பியன் விறைநாட்டுக்கோன் 49 செல்வக் கடுங்கோ 129 சே சேகல் சேவகத்தேவன் 112 சேதிராயன் 18 சேய்ஞலூர்க் கல்வெட்டு 40 சேரமான் தாணுரவி 113 சேரமான் பாகர ரவிவர்மன் 113 சோ சோழ இராச்சியம் 6 சோழ கங்கம் 89 சோழகோன் 18 சோழ சிங்கபுரம் 55 சோழ நாராயணன் 129 சோழ மண்டலம் 5 சோழ வாரிதி 88 சோனகர் 114 சௌ சௌ - ஜு - குவா 13,120 த தக்கோலி 120 தஞ்சாவூர்க் கூற்றம் 9 தஞ்சாவூர் ஜில்லா 5 தட்டாரப்பாட்டம் 56 தடிவழிவாரியம் 37 தண்டுவான் 34,35 தரகு 56 தரமிலி 70 தலைக்கோலி 100 தலைஞாயிறு கல்வெட்டு 38, 39 தளிச்சேரிப் பெண்டிர் 77,99,100 தறிப்புடவை 57 தறியிறை 56 தவளேசுவரம் 126,128 தா தாலமி 116 தி திரமம் 130,131 திரிபுவனச் சக்கரவர்த்திகள் 11 திருக்கழுமல நாடு 9 திருச்செங்கோட்டுச் செப்பேடு 61 திருச்சிராப்பள்ளி 5 திருத்தருப் பூண்டி 47 திருநல்லம் 63 திருநறையூர் நாடு 9 திருநின்றவூர் 38 திருநெய்த்தானம் 46 திருப்பதிகக் காணி 77 திருப்பாம்புரக் கல்வெட்டு 60 திருப்பாற் கடல் கல்வெட்டு 32,37 திருமந்திர ஓலை 14 திருமந்திர ஓலை நாயகன் 14 திருமால்புரம் 59 திருமாற்பேறு 59 திருவடியார் 23 திருவழுந்தூர் நாடு 9,80 திருவாரூர்க்கூற்றம் 9 திருவாலங்காட்டுச் செப்பேடு 58,71,85 திருவாலங்காட்டுக் கோயில் 102 திருவாலி நாடு 9 திருவிடையாட்டம் 50, 74, 78, திருவிந்தளூர் நாடு 9 திருவுசாத்தானத்துக் கல்வெட்டு 73 திருவுலகளந்த ஸ்ரீபாதக்கோல் 72 திருவேகம்ப முடையான் 72 திருவேள்விக்குடி 112 திருவொற்றியூர்க் கல்வெட்டு 65 திருவோணகாந்தன்தளி 129 திறப்பு 74 தீ தீத்தாண்டதானபுரம் 114 தெ தென்கரை நாடு 5 தென்னார்க்காடு 5 தென்னிலங்கை வளஞ்சியர் 112 தே தேவதானம் 46,50,64,74,78 தேவதானத்துச் சபை 21 தேவரடியார் 77,99 தொ தொல்காப்பியர் 10,21,97 தொண்டை மண்டலம் 9,129 தொண்டைமான் 18 தோ தோட்டவாரியம் 28,31 ந நகரத்தார் 115 நகரசபை 21 நகரமாள்வான் 47 நச்சினார்க்கினியர் 74 நட்டுவக்காணி 77 நந்திபுரம் 61 நல்லாற்றூர் நாடு 9 நல்லூர் நாடு 9 நாகப்பட்டினம் 114 நாங்கூர் நாடு 9 நாட்டார் 115 நாட்டுச்சபை 49 நாடகக்கணிகையர் 100,99 நாடகப் பேரரையன் 19 நாடாள் வான் 18 நாடுகாவல் 56,57 நாடுகாவல் வரி 15 நாணயங்கள் 124 நானாதேசிகள் 115 நி நிகரிலி சோழ மண்டலம் 6 நித்தவிநோத வளநாடு 7 நில அளவு 68 நிலம் அளந்தது 73 நிலவரி 53,63 நிலவுரிமை 74 நிலையிறை 71 நிருத்தப் பேரரையன் 19 நிருத்தபோகம் 76 நின்றிறை 71 நீ நீர்க்கூலி 56 நு நுளம்பபாடி 7 ப பஞ்சவரவாரியம் 28,31,54 பதியிலார் 77,100 பதியிலார்காணி 77 பட்டங்கள் 18, 19 பட்ட விருத்தி 76, 94 பட்டி 75,76 பட்டினக் கூற்றம் 9 பட்டினப்பாலை 86 பட்டோலை 15 படுவூர் நாடு 46 படைப்பற்று 50,77 பர்னல் 113 பரங்கிப் பேட்டை 5 பராந்தக சோழன் 10 பரிமேலழகர் 54 பல்லவர் 21,22,130 பல்லவராயன் 18 பல்லவராயன் பேட்டை 4 பல் சந்தமாலை 113 பலிசை 78 பழுவேட்டரையன் 49 பழையனூர் 82 பழையாறை 61 பள்ளிச்சந்தம் 46,50 பற்று 75,76 பன்மாகேச்சுரர் 48 பா பாட்டம் 57 பாடி காப்பான் 34,35 பாடி கால்வரி 15 பாண்டிய குலாசனி வளநாடு 7 பாண்டியர் 120 பாணக்காணி 77 பாரத விருத்தி 76,94 பி பிரமதேயம் 21,75,78 பிரமாதிராசன் 18,19 பிரமமாராயன் 18,19 பிளைநி 116 பு புசபாலன் மாடை 130 புத்தக்கம் 130 புதுக்கோட்டை நாடு 5 புதுச்சேரி 116 புதுப்பாக்கத்துச் சபை 58 புரவு 55 புரவுவரித்திணைக்களம் 56 புரவுவரித்திணைக் களத்தார் 15 புரவுவரித்திணைக்களநாயகம் 15 புரவுவரித்திணைக்களத்துக் கண்காணி 15 புராணவிருத்தி 94 புலியூர்க் கோட்டம் 9 புள்ளடிக் கற்கள் 69 புறம் 75,76 புன்னை வாயில் 65 பூ பூட்சி 57 பெ பெரிப்ளு 116 பெருங்குறி 23 பெருஞ்சேரல் இரும்பொறை 129 பெருந்தரம் 12 பெருவழி 70 பெருவிலை 64 பே பேரணை 90 பேரரையன் 18 பேறு 76 பொ பொலிசை 123 பொன் வாரியம் 28, 31 போ போகம் 75,76 போர்வரி 60 ம மகாசபை 66 மத்தியதன் 31,34,35 மத்தயதன் சந்திரசேகரன் 101 மதிமந்த்ரபாலகர் 13 மதுராந்தக சோழன் 87 மதுராந்தக தேவன் மாடை 125 மதுராந்தக பொத்தப்பிச் சோழன் 50 மதுராந்தக வடவாறு 87 மதுரை 5 மடப்புறம் 50,74,78 மண்டலப் பேரவை 50 மணிக்கிராமத்தார் 48,110,111 மயிலாப்பூர் 115 மரவிறை 56 மருகல் நாடு 9 மலேயா 117 மலை மண்டலம் 7 மழவராயன் 18 மணை இறை 56 மா மாசபையர் 54 மாயூரம் 4 மாராயம் 18,19 மானியம் 77 மாவலிவாணராயன் 18 மி மிழலை நாடு 9 மீயாட்சி 78,79 மு முகவெட்டி 15 முடத்தாமக் கண்ணியார் 84 முடிகொண்ட சோழ மண்டலம் 6 முதல் ஆதித்த சோழன் 113 முதல் இராசாதிராசன் 128,113 முதல்இராசராச சோழன் 6,11,68,70,71,73,81 முதல்இராசேந்திர சோழன் 11,82,89,120 முதற்குலோத்துங்க சோழன் 11,71,90,95,102,119,120,126 முதற் பராந்தக சோழன் 87,28,86,98,128,131 மும்முடிச் சோழ மண்டலம் 6 முரலியன் 76 முரலியக்காணி 77 முற்றூட்டு 75 முனைவீரர்கள் 116 மூ மூலபருடையார் 42 மூவேந்த வேளாண் 18 மூன்றாம் குலோத்துங்கன் 38,73,98,121 மெ மெய்ம்மட்டி 76 மெய்ம்மட்டுக்காணி 77 மெழுக்குப்புறம் 77 மே மேலைப்பழுவூர் 49 மோ மோலக்க 120 ய யவனர் 116 யா யாதவராயன் 65 யூ யூதர்கள் 113 ர ரயட்வாரி 74 ரோ ரோமானியர் 116 வ வடகரை நாடு 5,6 வண்ணாரப்பாறை 56 வயிராதராயன் 102 வரிகள் 53 வரிப்பொத்தகம் 15,16 வரியிலிடு 15 வலிவலக் கூற்றம் 9 வளஞ்சியர் 48 வன்னியப் பற்று 50,77 வனவாசி 72 வா வாச்சிய மாராயன் 17 வாணகப் பாடிநாடு 49 வாணகோவரையன் 18 வால்டர் எலியட் 125,129 வானவன் மாதேவி 98 வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் 63 வி விக்கிரமன் 8,11,97 விக்கிரம சோழனுலா 13 விடைவில் அதிகாரி 14 விருத்தி 75,76 விருதராச பயங்கர வளநாடு 8 விலை ஆவணம் 46 விழுப்பரையன் 18 வீ வீரசோழ இளங்கோவேள் 98 வீரசோழ வடவாறு 87 வீரபட்டினம் 115 வீரமாதேவி 98 வீரநாராயணன் ஏரி 88 வீரராசேந்திரன் 60, 87, 90,119 வீரவர்மன் 48 வீராம்பட்டினம் 116 விறைவெளியனார் 116 வீரைவெளியன் தித்தனார் 117 விணைக்காணி 77 வெ வெங்கையா 113 வெண்ணிக் கூற்றம் 9 வெண்ணையூர் நாடு 9 வெள்ளாறு 5,18,92,110 வெள்ளான்வகை 74,78 வே வேங்கை மண்டலம் 6 வேங்கை நாடு 92 வேதவிருத்தி 94 வைத்தியபோகம் 77 ஜாவா 117 ஹுல்ட்ஷ் 129 ஸ்ரீ விஜயா 117,119