நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 18 வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி சோழர் சரித்திரம், கள்ளர் சரித்திரம் ஆசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 18 ஆசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 248 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26 . நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் நாட்டார் ஒரு சொல்லோவியம் தமிழ்ப் பெரும்புலவர், தமிழ்ச் சான்றோர், பேராசிரியர், வித்துவான் சரவண ஆறுமுக முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி. காலப் பின்னணி இருபதாம் நூற்றாண்டுப் பிற்பகுதித் தமிழ்வானில், தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்களிடையே தாரகை நடுவண் தண்மதிபோல் விளங்கிப் புலமை நடாத்திய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தனிப்பெருஞ் சிறப்புடையவராய், இன்றும் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து விளங்கி நிற்கின்றார். நாவலரவர்களின் பன்னூறு மாணாக்கர்களில் ஒருவனாகிய யான் என் நினைவிலிருக்கும் வரை அவர்களது குணநலங்கள், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சில குறிப்புக்களை அவர்களது நூற்றாண்டு விழாக்காலத்தில் புகழ் அஞ்சலியாகத் தருவது பொருத்தமானதே. 1925- 27ஆம் ஆண்டுகளில் எஸ்.பி.ஜி. (Bishop Heber) கல்லூரியில் பி.ஏ வகுப்பில் சிறப்புத்தமிழ் (Master Group vi) மாணாக்கனாகவும், 1933 - 35இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கலைத் (Arts) துறையில் முதுகலைப் படிப்பில் (Post Graduate - M.A) ஈராண்டுகள் மாணாக்கனாகவும், குடும்பநண்பன் என்னும் தனிப்பட்ட முறையிலும் யான் நாவலரவர்கள்பால் தமிழ் பயின்றுள்ளேன். தாரகை நடுவண் தண்மதிபோல் என்றேன். அதையே வேறு ஒருவிதமாகவும் கற்பனை செய்து பார்க்கலாம். விக்கிரமாதித்தன் பேரவைக் களத்தில் காளிதாசர் உள்ளிட்டு விளங்கிய ஒன்பது புலவர்கள் குழுப்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நாவலரவர்களை மையமாகக் கொண்டு, சுவாமி விபுலானந்தர், நாவலர் பாரதியார், டாக்டர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சேதுசமஸ்தான சர்க்கரை இராமசாமிப் புலவர், திருவாவடுதுறை ஆதீனஞ்சார் புலவர் பொன் ஓதுவார், சோழவந்தான் கந்தசாமியார், வரலாற்றாசிரியர் கோவிந்தசாமிப்பிள்ளை ஆகிய ஆசிரியர் குழுவை ஒப்பிட்டுக்கூறலாம். நெடுமாலென நிமிர்ந்த தோற்றம், சற்றுநீண்ட எடுப்பான மூக்கு, ஊடுருவிப் பார்க்கும் கண்கள், அகன்று பரந்த நெற்றியில் திருநீற்று முப்பட்டைகளின் நடுவில் சந்தனப் பொட்டு, தாழ்ந்து நீண்ட கைகள், உயரத்துக்கு ஏற்ற மிகு பருமனும் ஒடிசலுமில்லாத ஒத்தசதைப்பிடிப்பு, தூயவெள்ளை எட்டு முழத்தார்பாச்சு மடிப்புவேட்டிக்கட்டு, வெள்ளிய தலைப்பாகை, கழுத்தில் திறப்பு இல்லாத மூடிய முழுக்கை - தாழ்ந்த சட்டை (Close Long Coat), வலக்கையில் ஒற்றைச்சிவப்புக்கல் இழைத்தமோதிரம், நறுக்குமீசை, இன்சொல்லும் அதுகாட்டும் புன்முறுவலும் - இதுவே சுருக்கமாக மனக்கண் காணக்கூடிய நாவலரவர்களின் தோற்றப்பொலிவு. சிவபெருமான் திருவடிக்கே வைத்த நெஞ்சு. ‘குணநலம் சான்றோர் நலனே’ என்றபடி சிறந்த ஒழுக்கமுடைமை, வகுப்பில் நுழைந்தவுடனேயே மாணாக்கர்களை நோட்டம் விட்டுப் புன்முறுவலிக்கும் வாழ்த்து. ஆசிரியத்திறன் - பழமையும் புதுமையும் கலந்ததொரு பெருமை அறுபது ஆண்டுகட்கு முன்னரே இலக்கியத்திறம் ஆய்ந்து காண்பதில் புதுமை, பழமையும் போற்றுதல் ஆகிய இவ்வுத்தி நாவலரவர்களது தனிச்சிறப்பு. பண்டைத்தமிழகத்தில் நிலவிய ஆசிரியர்களின் இலக்கணங்களும், தற்கால மாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் திறமும் இவர்கள்பால் கலந்து களிநடம் புரிந்தன. தொல்காப்பியப் பாயிரத்தில் நச்சினார்க்கினியர், நல்லாசிரியரியல்புக்கு ஆத்திரையன் பேராசிரியன் கூற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவ்வியல்புகள் நம்மாசிரியருக்கும் பொருந்தும். “ வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வான்யாறன்ன தூய்மையும், வான்யாறு நிலம்படர்ந்தன்ன நலம்படர் ஒழுக்கமும், திங்களன்ன கல்வியும், திங்களொடு ஞாயிறன்ன வாய்மையும், யாவதும் அஃகா அன்பும், வெஃகா உள்ளமும், துலைநாவன்ன சமநிலை உளப்பட எண்வகை உறுப்பினர் ஆகி” என்ற எட்டு அடிப்படைத் தகுதிகளைக் கொண்டோரே நல்லாசிரியராவர். மேலும், இப்பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியர் தொன்னெறி மரபும், உலகியலறிதல், பொறை, நிறை, சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மை, கற்போர் நெஞ்சம் காமுறப்படுதல் ஆகிய சார்புத் தகுதிகளும் பெற்றிருப்பர். நம் நாயகர் நாட்டார் அவர்களும் இத்தன்மைத் தொன்னெறிவாய்ந்தவர். கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்ந்த இவர், தொல்காப்பியப் புறத்திணை இயலிற்கண்ட “எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்பதற்கு நச்சினார்க் கினியர் மேலே காட்டிய எட்டுவகை அடிப்படைத்தகுதிகளோடு உருவகமாக அவர்களுடைய நடை, உடை, பாவனைகளை ஆசிரியமாலைச் செய்யுளில் இருந்து எடுத்துக்காட்டி உருவக ஓவியம் தீட்டியுள்ளார். “ குடிப்பிறப்பு உடுத்து, பனுவல்சூடி, விழுப்பே ரொழுக்கம் பூண்டு, காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித், தூய்மைஇல் காதல் இன்பத்துத் தூங்கி, நடுவுநிலை நெடுநகர்வைகி, அழுக்காறின்மை, அவாஇன்மை என இருபெருநிதியம் ஒருதாமீட்டும் தோலாநாவின் மேலோர்.” இதில் இவர்கள் உடுப்பது, சூடுவது, பூண்பது, குடிப்பது, தூங்குவது, வாழ்வது, ஈட்டுவது முதலியவற்றை உருவகமாக விளக்கியுள்ளார். இவற்றுள் பிறர் நிலைகண்டு பொறாமைப்படாமை, பேராசை இரண்டும் இல்லாத செல்வ அமைதிநிலை மிகவும் போற்றற்குரியன. இவ்வளவும் அமைந்தவர் நாட்டார் அவர்கள் என்றே உறுதியாகக் கூறிவிடலாம். இத்தகு பேராசிரியர், தற்கால முறைக்கேற்பவே அப்போதே தாய்மொழியைப் பயிற்றுவித்தார். மாணாக்கர்களை முறைப்படி வழக்கின் இலக்கணம் இழுக்கின்றறிதல், பாடம் போற்றல், கேட்டவை நினைத்தல், ஆசான் சார்ந்தவை அமைவரக்கேட்டல், அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல், வினாதல், வினாயவை விடுத்தல் போன்ற கற்பித்தல் முறைகளைத் தாமும் கையாண்டு மாணாக்கர்களை, மாண்+ஆக்கர்களாகவும், நல்ல மொழித்திறமுடைய மாண்+நாக்கர்களாகவும் ஆக்கியுள்ளார். இனி அவர்கள் செய்யுள் கற்பித்த திறனைச் சுருக்கிக் கூறுவேன். நிறமும் அழகும் எழிலும் நறுமணமும் வாய்ந்தமலர் ஒன்றை அதன் இதழ்களைக் குலைத்து மோந்து கசக்கி வீசிவிடாமல், அதன் நிறம், அழகு, எழில் மணம் முதலியவற்றில் ஈடுபட்டு இன்புறுதல்போலவே செய்யுளையும் முதலிலேயே சொல் சொல்லாகப்பிரித்து உரை சொல்வது, உரை நடையாக்குவது, பொருள் கேட்பது முதலியவற்றைச் செய்து பாழ்படுத்தி விடாமல், முழுச்செய்யுளையும் முதலில் ஓரிருமுறைகள் ஏற்ற இசையோடு பொருள் விளங்குமாறு படித்துப்பாடிக் காட்டினால்தான், சொல்லும் பொருளும், சுவையும், செய்யுளின் உணர்ச்சியும் மனத்திற்படியும். செய்யுட்கு இசை உயிர்நாடியாம். “பாவென்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்வதற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை”யாகும். இவ்வோசைநயம் சிதையாமல் செய்யுளைச் சுவைத்தல் முறையாகும். பின்னர்ப் பாநலம், தொடைநலம், நடை நலம், அணி நலம், இலக்கண (அமைதி)க்குறிப்புக்கள், உவமை உருவகப் பொருத்தங்கள், அணி அமைதி, மேற்கோள்கள், அரிய சொல்லாட்சி முதலியவற்றையும் விளக்கியது முறையேயாம். இக்காலத்தில் நூற்றுக்கு ஓரிருபுலவர்கள் கூட இது போன்று செய்யவல்லாரிலர். இவ்வாறு மாணவர்களின் மனத்தைச் செய்யுளில் ஈர்த்துக் கவனிக்கச்செய்யவும், செய்யுட் பகுதிகளை மேலும்மேலும் கிளர்ச்சியோடு படிக்கத் தூண்டுவதற்கும், புறத்தே சென்றுலவும் மாணவர் மனத்தைக் கவர்ந்து நடைபெறும் பாடத்தில் ஈடுபடுத்தவும், செய்யுளைக் கேள்விக்கு இன்பமாக அதற்குரிய ஓசையில், (இசை அரங்குபோல் இராகம், தாளம், சுரம்பாடுதல் போலன்று,) செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளைக் கொண்ட நாற்பாக்களையும், தாழிசை, துறை, விருத்தம் போன்றவற்றின் ஓசைகளையும் தோன்ற எடுத்துப் படித்துக்காட்டுவது இவரது தனிப்பெருஞ்சிறப்பு. ஆசிரியரவர்கள் பெரும்பாலும் வெண்பாவைச் சங்கராபரணத்திலும், அகவலை ஆரபி தோடிகளிலும், கலிப்பாவைப் பந்துவராளியிலும், தாழிசையைத் தோடியிலும், துறையைப் பைரவியிலும், விருத்தத்தைக் காம்போதி கல்யாணிகளிலும் பொருத்திப்படிப்பது சிந்தைக்கும் செவிக்கும் நல்விருந்தாயிருந்ததில் வியப்பில்லை. ஓசை நயத்தையும் பொதுக் கருத்தையும் அறிந்த பின்னர்ப் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்புக்கள், அணிகள், உவமை உருவக அணிப்பொருத்தங்கள், கதைகள், சொல்பொருள் நயங்கள், நடை தொடை நலங்கள், கவிமாந்தரின் இயல்புகள் (Characteristics), பயின்ற சுவைகள் (Emotions) முதலிய இலக்கியத் திறனாய்வு முறைகளில் பாடம் தொடர்ந்து நடத்தியது இவர்களது நுண்மாண் நுழைபுலத்தையும், ஆசிரியத் திறமையையும் காட்டவல்லனவன்றோ? விரிப்பிற்பெருகும். செய்யுளைநடத்தியது போலவே இலக்கணத்தையும் மாணாக்கர்கள் தற்போதுபோல வெறுக்காமல், விரும்பிப் படிக்கும் தற்கால முறைகளை அக்காலத்தேயே இவர்கள் கையாண்ட முறைமிகவும் போற்றற்பாலது. இலக்கியம் கண்டதற்கே இலக்கணமாதலின் இலக்கியங்களில் வரும் எடுத்துக்காட்டுக்களை வழக்கத்தில் வரும் எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், சிறப்புக்களிலிருந்து பொதுவுக்கும் (Particular to general, known to the unknown) போகும் விதிவருமுறை (Inductive) வழி அறிய இலக்கணப்பகுதிகளைக் கற்பித்தலால் மாணாக்கர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் இலக்கணத்தில் ஏற்பட்டதில்லை. மாறாக, “ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு” (திருக்குறள் 392) என்னும் மொழி உண்மையினை நன்றாக உணர்ந்து மேலும் மேலும் கற்றனர். இவ்வாறு நல்ல தமிழாசானாய்க் கற்றவர்கள்பால் தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்று, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பாடு ஆகியவற்றைச் சொல்லளவில் மட்டும் அன்றிச் செயலிலும் செய்து காட்டி மாணாக்கர்களை நல்வழிப்படுத்திய ந.மு.வே நாட்டார் என்று குழைவுடன் அழைக்கப்பெறும் நாவலரர்கள் புகழ் “ மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே” ’(புறநானூறு 165:1,2) என்றாங்கு இன்றும் என்றும் நிலைத்து ஓங்கும் என்பதில் ஐயமில்லை. விரிவஞ்சிச் செய்யுள், இலக்கணம் நடத்தும் இவர்தம் திறமையை மட்டும் சுருக்கமாகவே கூறியுள்ளேன். தக்கவர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாக வெளியிடல் வேண்டும். பேராசிரியர் மது.ச.விமலானந்தம் (கரூர்) அல்லது பேராசிரியர் பி. விருத்தாசலம் (கரந்தை) இதற்குரியர். இனி இவர்தம் நூற்றாண்டு விழாக்காலத்தில் நாவலர் ந.மு.வே.நாட்டார் அவர்கள் பெயரில் கல்வி அறக்கட்டளை, நினைவுச் சொற்பொழிவுகள், திருவுருவச்சிலை நிறுவல், மாநகரங்களில் நூற்றாண்டு விழா எடுத்தல் முதலியவற்றைத் தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தமிழக அரசு, கல்வி நிலையங்கள், இலக்கிய ஏடுகள் ஆகியபலவும் ஒருங்கே ஒற்றுமையுடன் செய்தல் வேண்டும் என்று கூறி அமைகின்றேன். நாட்டாரின் சங்கப் புலமை டாக்டர் வ,சுப. மாணிக்கம் பிஎச்.டி., டி.லிட்., தொல்காப்பியத் தகைஞர் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) என் ஆசிரியப் பெருந்தகை நாட்டாரையா தமிழாசிரியனுக்கு இன்றியமையாத இருவகைத்திறமும் வாய்ந்தவர். எவ்வகைத் தமிழ் நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது. ஆற்றுநீர் கடலிற் போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டா? சொல்லாலும், பொருளாலும், பண்பாலும், செறிவாலும், நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப்புலமையாகும். புலமையும் பண்பும் ஆசிரியர் நாட்டார் உவர்ப்பற்ற ஆழமான சங்கக் கடலில் திளைத்த புலமைச் செல்வர். சங்கப்புலமையோடு சங்கப் பண்பும் இணைந்த சான்றோர். சங்கப் பண்பு என்பது என்ன? பெருமிதமான உயர்ந்த நெஞ்சம்; தானும் தாழாது பிறரையும் தாழ்த்தாத சால்புடைமை. “ செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே” (புறம். 148) என்ற வன்பரணமே சங்கப் பண்பு. நாவலரையாவின் பேச்சுநடை பொது வழக்கு நடையாக இராது. பாவாணர் வாய்மொழி நடைபோலக் கொச்சை யில்லாத் தூய தமிழ்நடையாகவே இருக்கக் கண்டோம். இதற்கு அடிப்படை அழுத்தமான சங்கத் தோய்வு. ஆத்திசூடி முதல் அகநானூறு வரை உரைகண்ட உரைவள்ளல் நம் நாட்டார். எந்த நூலுரையிலும் சங்க இலக்கியப் பின்னலைக் காணலாம். பின்னூல்களையும் சங்க நூல்களொடு உறவாக்கும் உரையழுத்தம் இவரிடம் உண்டு. “ அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்” என்னும் அதிவீரராமரின் வெற்றிவேற்கைக்கு, ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்ற புறநானூற்றுக் கருத்தை ஒப்பிட்டுக் காட்டுவர். உரைக்கொடை நாட்டாரின் சங்கப் பனுவற் புலமையும் ஆராய்ச்சியும் கபிலர், நக்கீரர், கட்டுரைத்திரட்டு, வேளிர் வரலாற்று ஆராய்ச்சி நூல்களாற் பெறப்படும். எனினும் தலைசிறந்த சங்கத்தொகையான அகநானூற்றுக்கு நாட்டார் பெருமான் வரைந்த உரை தமிழுக்கு வழங்கிய பெரிய உரைக்கொடையாகும். இந்நூலுக்குச் சில குறிப்பும் உரையும் ஒருசில பாக்கட்கே முன்பு இருந்தன. பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்நெடுந்தொகைக்கு அகவல் நடையில் கருத்துரைத்தான் என்னும் செய்தி காணப்படுகின்றது. எனினும் அது கிடைக்கவில்லை. தொல்காப்பியவுரை கண்ட பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை எழுதினார் என்ற வரலாறு உண்டு. நச்சினார்க்கினியர் கலித்தொகைக்கு உரை வரைந்தார். இடைக்கால உரையாளர் எவரும் அகநானூற்றுக்கு முழுவுரை எழுத முன்வரவில்லை. ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி இன்பொருட் பாடல் எனப் பாராட்டப்படும் அகநானூறு ஓர் முழுவுரை பெறுதற்குப் பன்னூறாண்டு தவங்கிடந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூவரை ஈன்றது. இருவேங்கடங்கள் என்று சொல்லத்தக்க நாவலர் வேங்கடசாமி நாட்டாரும் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையும் இவ்விரு புலவரும் உரையிரட்டையர்களாகி உரை எழுதப் பொருட்கொடை செய்த பாகனேரி காசிவிசுவநாதரும் ஒருகாலத்துத் தோன்றியமையால், நீண்ட மலடி மகப்பெற்றாற்போல நெடுந்தொகை என்ற அகநானூறு உரைப்பேறு எய்திற்று. சங்கப் பனுவல்கட்கு, சிறப்பாக அகநானூற்றுக்கு உரைஎழுதப் புகின், இலக்கண இலக்கியவறிவு மட்டும் போதா, இயற்கை, வரலாறு, இசை, குழுமம், காலச்சூழல், பாலியல், அரசியல், தொழிலியல், தொல்லியல் என்றாங்கு அறிவுப்பன்மை வேண்டும். சங்கச் செய்யுளின் கட்டுமானம் அறிவுப் பிணையல் நிறைந்தது. நாட்டார் இளமைக்காலம் தொட்டே பல்லறிஞராக விளங்கினார். ஆதலின் திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு முதலிய தமிழ்ப்பெருநூல்கட்கு உரை எழுதத் தக்கார் ஆனார். உரை விளக்கம் நாட்டாரின் சங்கப் புலமைக்கு அகத்திலிருந்து சில பாட்டுக்கள் பார்ப்போம். ‘இரவுத் துயில் மடிந்த தானை’ (24) என்றால் போர்க்களத்தில் படைகள் இரவு தூங்கிப்போயின என்று பொருள் கொள்ளலாமா? அது மறப்படைக்கு இழுக்காகுமே என்று எதிர்நோக்கிய நாட்டார், ‘பலநாளும் துயிலின்றிப் போர் செய்து வினைமுற்றும் காலை துயின்றதானை’ என்று விளக்கம் செய்தனர். வெற்றிக்குப் பின் தூங்கினதானை என்பது கருத்து. “ மாட மாணகர்ப் பாடமை சேக்கைத் துனிதீர் கொள்கைநங் காதலி” (124) என்று பாடுவார் இளவேட்டனார். தலைவன் பிரிந்த காலத்து வெறுப்போடு இருப்பது தலைவிக்கு இயல்பு. அவ்வாறாகவும் வெறுப்பு ஒழிந்த காதலி என்று பாடுவது பொருந்துமா? பொருந்தும் என்பர் நம் நாட்டார். தலைவன் பிரிவு தலைவிக்கு வருத்தம் தருவதொன்றுதான். எனினும் குறித்த காலத்தில் வருவேன் என்ற அவன் உறுதிச்சொல்லை நம்பி ஆற்றி வீட்டுக் கடமை செய்வதே மனைமாட்சி எனப்படும். கணவர் சொற்பிழையாத கற்பினால் வருத்தத்தை மாற்றிக் கொண்டவள் என்று தலைவிக்கு ஏற்றம் கூறுவர் நாட்டார். பெண்துணை சான்றனள் இவள் (315) என்ற தாயின் கருத்துக்கு, தன் மகள் பெரிய பெண்ணாயினாள் எனவும் நினைத்தபடி வெளியில் சுற்றித் திரியும் பேதைப் பருவம் கடந்து விட்டாள் எனவும் விளக்கம் தருவதைப் பார்க்கின்றோம். நாவலர் நாட்டார்க்கு நாம் செய்யும் நன்றி சங்கவிலக்கியத்தை நன்கு மதித்தலும் வழிவழிக் காத்தலும் வரக்கற்றலும் ஆம். புரியாத நடையுடையது சங்க விலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து நீர் சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும். இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள் தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும். சங்கத் தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்கு கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும். நாட்டார் ஐயா அவர்களின் உரைப்பணியும் ஆய்வுப்பணியும் சிவ.பார்வதி அம்மையார் “ ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே (திருநாவுக்கரசர் தேவாரம்) நாவலர் பண்டித ந.மு.வே. நாட்டாரையா அவர்களின் உரைநடை நூல்களில் உள்ள ஆராய்ச்சிப் பகுதிகளில் எனக்குத் தெரிந்த சிலவற்றை ஈண்டுக் கூறுகிறேன். வேளிர் வரலாற்று ஆராய்ச்சி அய்யா அவர்கள் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்து பி.ஏ. வகுப்புக்குத் திரு மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய வேளிர் வரலாறு என்னும் நூலைப் பாடம் நடத்தும்போது, அந்நூலின் கருத்துக்கள் தம் கருத்துக்கு ஒவ்வாமை கண்டு, அந்நூலுக்கு மறுப்புரை எழுதினார்கள். திரு ஐயங்கார் அவர்கள் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து’ என வரும் தொல்காப்பியப் பாயிரத்திற்கு உரை கண்ட நச்சினார்க்கினியரும், பிறரும் கூறிய வரலாற்றைக் கொண்டு, வேளிர் என்பார் கண்ணபிரான் காலத்து வடக்கே இருந்து தென்புலத்திற்கு வந்த யாதவர்களில் ஒரு சாரார் ஆவர் என்பர். அக்கூற்றை நன்கு ஆராய்ந்து வேளிர் என்பவர் தமிழ்ப் பழங்குடியினரே என அறுதியிட்டு, ஐயங்கார் அவர்கள் கூறிய துவராபதி என்பது பாண்டி நாட்டில் பாரி என்னும் வேள் ஆண்ட பறம்புமலை சார்ந்த ஒரு பகுதியாகும். அது இன்றைக்கும் துவராபதி நாடு என்று அழைக்கப் படுகிறது. அந்நாட்டை வேளிர் ஆண்டனர் என்றும் கருதப்படுகின்றது. எனவே வேளிர் என்பவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினரே எனச் சான்று காட்டி நிறுவியுள்ளார்கள். இந்நூல் 1915-ஆம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாவதாண்டு விழாவின்போது திரு தோ.இராமகிருட்டினப் பிள்ளையவர்கள் தலைமையில் படிக்கப் பெற்றுச் சங்கத்தாரால் பாராட்டப்பெற்றது. கள்ளர் சரித்திரம் - சோழ'fa சரித்திரம் இந்நூல் 1923-ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்டது. இது தமிழ் நாட்டின் ஒரு வகுப்பினரைப் பற்றி எழுதப் பெற்றதாயினும், தமிழ் மக்களைப் பற்றிப் பொதுவகையில் ஆராய்ந்து எழுதப்பெற்ற நூலாகும். மகாமகோ பாத்தியாயர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் இந்நூலை மிகவும் பாராட்டியதுடன் கல்லூரி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்கக் கூடிய தகுதியுடையதென்றும் எழுதியிருந்தார்கள். திரு எம்.எல். பிள்ளையவர்கள் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் அய்யா அவர்களைப் பற்றி எழுதும்போது கள்ளர் சரித்திரத்தை மிகவும் பாராட்டி எழுதியுள்ளார்கள். திரு மு.இராகவையங்கார் அவர்கள் தம் நூல்களில் சில இடங்களில் கள்ளர் சரித்திரத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட லெக்சிகன் அனுபந்தத்திலும் கள்ளர் சரித்திரத்தில் உள்ள சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளனவாம். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தாம் எழுதிய தென்பாண்டிச் சிங்கம் என்னும் நூலுக்குத் தோற்றுவாயாக எழுதியிருப்பது அறிந்து இன்புறத்தக்கதாகும். ஆதலால் அதனையும் இங்குக் குறிப்பிடுகிறேன். “தமிழ் கூறும் நல்லுலகத் தாரால் நாட்டாரையா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு ந.மு.வே.நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணை கொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்” என எழுதியுள்ளார்கள். இந்நூலை எழுதக் கல்லல் மணிவாசகச் சரணாலய சண்முகசாமிகளும், அய்யா அவர்களின் அன்பு மாணாக்கர் சிவகங்கைச் சோமசுந்தரம் பிள்ளை அவர்களும் உறுதுணையாக இருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூலுள் பழந்தமிழ் மக்கள் என்ற பகுதியில் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின். சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே எனக் கூறியுள்ளதிலிருந்தும், கனகசபைப் பிள்ளை அவர்களும், மு.இராகவையங்கார் அவர்களும் எழுதிய வரலாற்றிலிருந்தும் ஆரியர்கள் தென்னாட்டிற்கு வருவதற்கு முன்னரே தென்னாட்டில் பழந்தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்பதும், ஆரியர்கள் வடபெரும் கடற்கரையில் வசித்தவர்கள் என்று உலகமான்ய பாலகங்காதர திலகரால் முடிவு செய்யப்பட்டதென்றும், வருணப்பாகுபாடு போன்றவை ஆரியர்கள் தென்னாட்டிற்கு வந்த பிறகே உண்டாயின எனக் காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் கூறியிருப்பதாக எழுதியுள்ளார்கள். எங்ஙனமாயினும் ஆரியர்கள் வடக்கேயிருந்து வந்தவர்கள் என்பதனை ஆரியர் என்னும் ஆற்று வெள்ளம் இந்தியாவென்னும் தனித் தமிழ்நாட்டிலுள்ள தமிழரென்னும் பெருங்கடலில் புக்க பின்னர் ஆரியர் தமிழரே ஆயினர் என்று கூறுதலே சால்புடைத்து. பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து, பழக்க வழக்கங்களில் ஒன்றுதலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வருவோர்க்குள் காலதேச இயல்புக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டாயினும், அதனை நீடிக்கவிடாது, பிரிவின் காரணங்களை அறிந்து விலக்கி, ஒற்றுமையாக வாழ்தலே கடனாம். பழைய தமிழ்ச்சங்கநாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டு மதித்துப் போற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், சிறிது பிற்காலத்திலிருந்த திருஞானசம்பந்தர் முதலிய பெரியாரெல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றார் என்பதும் அறியற்பாலவாம். இவற்றின்மூலம் அய்யா அவர்கள் ஆரியர், தமிழர் என்ற வேற்றுமையின்றிப் பொது நோக்குடையவராக இருந்தார்கள் என்பது தெளிவாகும். இந்நூலுள் “நாகபல்லவச் சோழரும் கள்ளரும்” என்ற கட்டுரை மிக்க ஆராய்ச்சியுடையதாகும். இப்பகுதி கற்போருக்கு மிக்க இன்பம் தருவதாக அமைந்துள்ளது. இந்நூல் எழுதும் காலத்தில் கள்ளர் மரபினரும், பெரும் நிலக்கிழாரும், தமிழ்ப் புலமையுடையவருமாகிய அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் என்பவரும், தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் உறுதுணையாக இருந்து ஏற்ற இடங்களில் உதவி புரிந்தார்கள் என்பது தெரியவருகின்றது. இந்நூலில் கள்ளர் மரபினரின் பட்டப் பெயர்கள் 348 என ஆராய்ந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. 1928-இல் சோழர் சரித்திரம் என்னும் உரைநடை நூல் மிகுந்த ஆராய்ச்சியுடன் வெளிவந்தது. அய்யா அவர்கள் முதன்முதலில் எழுதியது வேளிர் வரலாற்று ஆராய்ச்சி என்னும் கட்டுரை நூலாகும். தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய கணம்புல்ல நாயனார் திருப்பதி என்ற கட்டுரை தம் கருத்துக்கு மாறாக இருப்பது கண்டு, அதற்கு மறுப்புரையாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிச் சித்தாந்தம் என்னும் பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன் என்று என்னிடம் கூறினார்கள். அதுதான் அய்யா அவர்களின் கடைசிக் கட்டுரையாகும். உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv பதிப்புரை xi 1. வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 5 2. கள்ளர் சரித்திரம் இரண்டாம் பதிப்பின் முகவுரை 27 1. பழந்தமிழ் மக்கள் 31 2. நாக பல்லவ சோழரும், கள்ளரும் 45 3. அரையர்களின் முற்கால நிலைமை 78 4. புதுக்கோட்டை அரசரும், குறுநில மன்னரும் 84 5. நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் 97 6. நன்மக்கள், தற்கால நிலைமை, சீர்த்திருத்தம் 119 7. பட்டப் பெயர்கள் 134 3. சோழர் சரித்திரம் முகவுரை 143 1. தமிழகத்தின் பெருமை 147 2. சோழநாட்டின் பழமை 150 3. சோழர் குடி 152 4. மனு 156 5. முசுகுந்தன் 160 6. சிபி 167 7. காந்தன் 172 8. தூங்கெயிலெறிந்ததொடித்தோட் செம்பியன் 174 9. கரிகாலன் 176 10. கிள்ளிவளவன் 192 11. நலங்கிள்ளி 200 12. தித்தன் 204 13. பெருங்கிள்ளி 206 14. நல்லுத்தரன் 209 15. கோப்பெருஞ்சோழர் 211 16. கோச்செங்கட்சோழர் 220 17. அரசியல் 225 18. கைத்தொழில் வாணிகம் 230 19. கல்வி 231 20. சமயம் 233 குறிப்புரை 240 வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி Introduction “Velir Varalaru” is a book well-known to the Tamil scholars and esteemed by them for the originality of the ideas. Mr.M.Raghava Aiyangar, the author has made there in a bold and heroic attempt to show that the Vellalas of the Tamil country are the descendants of Sri Krishna and are of kin to the Chalukyas and Audhras of the north. In coming to this conclusion Mr.Aiyangar has largely drawn upon Puranic stories, folklores and accidental verbal resemblances which a student of history would hardly recognize as the basis for historic truths. It is, therefore proper that a pandit of accepted standing and merit should take upon himself the task of closely scrntinizing the work and Mr.N.M.Venkatasami Nattar of the S.P.G. college, Trichinopoly, has done it so very well that it merits the commendation of every true lover of Tamil. “The Study of Velir Varalaru” is a very good piece of literary production written in a lucid, elegant and haste style. The arguments are sound and the conclusions sober. Mr. Nattar has done a valuable service to the Tamil public by adding his work to our scanty stock of critical prose literature. The work has received the warmest applause of the Karanthai Tamil Sangam where it was read on the occasion of its last anniversary and the author carries with him the best wishes of the Sangam. It is believed that the book will receive all the encouragement it so very richly deserves and that the Text Book Committee and school authorities will not fail to recognize its merits. The Karanthai Tamil Sangam T.V.Umamaheswaran 24th March, 1915. President. வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1. செந்தமிழ்ப் புலவர், ஸ்ரீமத் மு.இராகவையங்காரவர்கள் எழுதிய "வேளிர் வரலாறு" என்னும் வியாசத்தைக் கல்லூரி மாணாக்கர்கட்குப் பாடம் நடாத்துதற் பொருட்டு யான் பார்த்த காலையில் அது சிறந்த ஆராய்ச்சி கொண்டெழுதப் பட்டிருப்பினும் முடிந்த கருத்துக்களெல்லாம் மெய்ம்மையிற் றிறம்பியுள்ளனவென எனக்குத் தோற்றினமையின்,ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றிய வுண்மைகளை மறையாது வெளிப்படுத்தல் அறிஞரால் விரும்பப்படுவதேயா மென்னுங் கொள்கையுடையேனாய் அதனை ஆராய்ந் தெழுதத் தொடங்கினேன். `எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் - மெய்ப்பொருள் காண்ப தறிவு.' என்னும் வள்ளுவர் வாய்மொழியைத் தெள்ளி தினுணர்ந்து யாவர் கூற்றையும் காய்தலுவத்தலின்றி ஆராய்ந்து துணியும் தமிழ்மக்கள் இதனைக் கடைக்கணிப்பார்களாக. 2. ஐயங்காரவர்களெழுதிய வியாசத்தின் முடிந்தபொருள், தமிழகத்தே சங்கநாளில் விளங்கிய வள்ளல்களான பாரி, பேகன் முதலிய வேளிர்குல முன்னோர் இற்றைக்கு 2900 ஆண்டுகளின் முன் துவாரகையினின்று குடியேறியவர்; கண்ணபிரான் வழியின ராகிய யாதவர்; அவரெல்லாம் ஆரிய வமிசத்தினர்; அன்னவர் தெற்கிற் குடியேறிய பின்னர்ப் பல்வேறு தொழில்களைச் செய்து போந்து பல்வேறு சாதியாராயினர்; இப்பொழுது தமிழ் நாட்டகத்தேயுள்ள வேளாளர், கொல்லர், குயவர், தந்துவாயர், ஆயர் என்போரெல்லாம் அவ்வகுப்பினரேயாவர்; என்பது. 3. இதற்கு அவரெழுதிய பிரமாணங்களை நிரலே எடுத்துக்காட்டி ஆராய்வாம். இவ்வாராய்ச்சியில் சம்பந்தமுறும் சிலரைச் சாதிபற்றி உயர்ந்தவரென்றாதல் தாழ்ந்தவரென்றாதல் கொள்ளுதல் என் கருத்தன்றாம். உலகிலுள்ள எச்சாதியாரும் முற்றும் தாழ்ந்தவரும் உயர்ந்தவரும் ஆகாரெனினும் அவர்களது வரலாற்றை உண்மையா னாராயவேண்டுமென்பதே என் கருத்தாகும். ஐயங்கார் தாமெழுதிய ஆராய்ச்சிக்கு அடிப்படையாக் கொண்டது, தொல்காப்பியப் பாயிரவுரையில் அகத்தியர் தென்றிசைப் போந்த வரலாறாக ஆசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள கதையில், `துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடு முடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடிவேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கி ....... பொதியிலின் கண்ணிருந்தனர்.' எனக் காணப்படும் பகுதியாம். இக்கதையில், புராணமுறையாக எழுதப்பட்டுள `தேவரெல்லாங் கூடி, யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்' என்பது போன்ற கதைகளைச் சரித்திர மெழுதுவோர் புனைந்துரையாக வேனும் உருவகமாகவேனும் கொள்வரன்றி ஒருபொழுதும் பட்டாங்காகக் கோடல்செய்யார். இதனாலே, அவரெழுதிய கதை சரித்திரத்திற்கு யாப்புடைத்தன்றென்பது தெற்றென விளங்கும். 4. இனி, இக்கதையிற் காணப்படும் `துவராபதி' யென்பது துவாரகாபுரியைக் குறிப்பதென்பதும், `நிலங்கடந்த நெடுமுடியண்ணல்' என்பது வடமதுரையினீங்கித் துவாரகைக்கண் வதிந்தோனாய கண்ணபிரானைக் குறிப்பதென்பதும், ஐயங்காரவர்கள் கருத்தாகும். நச்சினார்க்கினியர்க்கும் அதுவே கருத்தென்று அவர் தொல்காப்பியப் பாயிரவுரையில் பிறிதோரிடத்துக் கூறியதொன்று கொண்டு குறிப்பித்தனர். தாம் அவ்வாறு கருத்துக் கொண்டமையின், சங்கநாளிலே தென்னாட்டிற் புகழ்பெற்று விளங்கிய வேளிர்குல முன்னோர் கண்ணன் வமிசத்திற் றோன்றியவராய், அவற்குப் பிற்காலத்தே தெற்கிற் குடியேறியவர் என்ற கொள்கையுடையராய் அதற்கேற்ப வேறுசில ஆதாரங்களும் தேடத் தொடங்கினர். அதற்கிடையே, அவர், "நச்சினார்க்கினியர், 'இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவனை ஆண்டு வாராமை விலக்கி' என்ற செய்தியையும் உடன் கூறுகின்றார்; இச்செய்தி மதுரைக்காஞ்சி யுரையிலும் அவ்வுரைகாரராற் குறிக்கப்பட்டுள்ளது; இவ்விராவணன், இராமபிரானொடு பொருது வீழ்ந்தவனாயின் கண்ணபிரான் காலத்துக்குப் பின்னி கழ்ந்த செய்தியுடன் இராவணன் விஷயம் கூறப்படுதற்குக் காரணம் புலப்படவில்லை; ஒருகால், இவ்விராவணன் தென்றிசை யாண்ட வேறொருவனென்னிற் பொருந்தும்." எனக் குறிப்பெழுதினர். இதனால் இராமாயணம், பாரத காலத்தின் முன்னிகழ்ந்த தென்பதும், பாரத காலத்தின் பின்னிகழ்ந்த செய்தியையும் இராமாயணகாலச் செய்தியையும் ஒரு காலத்தவாக இணைத்துக் கூறுதல் அமையாதென்பதும் அவர் கருத்தாகும். அஃதுண்மையே. சரித்திரகாரர் சிலர் இராமாயணம் பாரதத்தின் பின்னிகழ்ந்ததெனக் கூறாநிற்பர். அது வடமொழி, தென்மொழிகளை வரலாற்று முறையானாராய்ந்த பண்டிதர்களால் ஏற்றுக் கோடற்பாற்றன்று. பாரதகாலத்தில் ஆரியர் யமுனையைக் கடந்து தெற்கிற் செல்ல வில்லை யென்பதும் சரித்திரகாரர் துணிபு. 5. நம் தமிழ்நூல்களை யாராய்வுழி அதற்கு மாறாக எத்தனையோ மேற்கோள்கள் காணக்கிடக்கின்றன. தமிழைப் பற்றியாதல் தமிழ்நாட்டைப் பற்றியாதல் அன்னவர் எத்துணையும் அறிந்தவரல்லர். அவர் கொள்கையில் இன்ன சில பொருந்தா தொழியினும் அன்னவர் உலகிற்கு உதவி புரிந்தவரேயாவர். மு.இராகவையங்காரவர்கள் இராமாயணமே முன்னிகழ்ந்ததாகக் கொண்டது அறிஞரெல்லாரானும் விரும்பத்தக்கது. 6. ஆனால், அவர், இராவணன் தென்றிசையாண்ட வேறொரு வனென்னிற் பொருந்து மென்றார். வேறொரு வனாயினும் பாரத காலத்தின் பின்பு தாம் கூறுங் காலத்தில் இருந்தவனாயினன்றோ பொருந்தும்? பாரத காலத்தின் பின் இராவணனொருவன் இருந்தானென்று நச்சினார்க்கினியர் கருதவில்லை. இராமனொடு பொருத இராவணனையே அவர் கருதிக் கூறினாராவர். அஃதெங்ஙன மெனில், அவர், `இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து' என்றமையின் அத்தொடர்மொழி இசையில் வல்லோனாகிய அவ்விராவணனையே குறிக்கும். அவர், இராவணன் செய்தியோடு, ஐயங்காரால் எடுத்துக் காட்டப்படாத `இராக்கதரை யாண்டியங்காமை விலக்கி' என்ற செய்தியையும் சேர்த்துக் கூறுதலினால், அவன் இராக்கதர் தலைவனான இராவணன் என்பது பெறப்படும். அவர், பாயிரவுரையில், `யமதங்கி யாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு'1 என்றும், `நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையால் நான்மறை யென்றார்; அவை தைத்திரியமும், பௌடிகமும், தல்வாகரமும், சாமவேதமும் ஆம். இனி இருக்கும், யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாருமுளர்; அது பொருந்தாது; இவரிந்நூல் செய்தபின்னர் வேதவியாதர் சில வாழ்நாட் சிற்றறிவினோருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராகலின்.' என்றும், 'பொய்யும் வழுவும்' என்னும் கற்பியற் சூத்திரவுரையில், `இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே யிந்நூல் செய்தலின்' என்றும் தொல்காப்பியனாரது பழமை புலப்படக் கூறுதலினால், அவர்க்கு ஆசிரியரான அகத்தியனார் பாரத காலத்திற்கு நெடுங்காலம் முன்னிருந்தவரென்பதும் அவர் கருத்தாமெனத் தடையென்னை? இவ்வாற்றால் நச்சினார்க்கினியர் இராமன் காலத்தவனான இராவணனையே அகத்தியனாரொடு சம்பந்தப்படுத்திக் கூறினாரென்க. 7. நச்சினார்க்கினியர், கண்ணனுக்குப் பிற்பட்ட செய்தியையும் அகத்தியனாரொடு இயைபுபடுத்துக் கூறுகின்றாரேயெனின், அவரங்ஙனம் காலத்தாற் சேய்மையுற்ற இருவேறு செய்திகளை ஒருவரோடிணைத்துக் கூறுவரேல், அவ்விரண்டும் ஒருபெற்றியே கோடற் பாலவல்ல; அவற்றின் வன்மை மென்மைகளை யாராய்ந்து வலியுள்ளதொன்றைக் கொண்டு, வலியில்ல தொன்றைத் தள்ளுதலே முறைமையாம். அகத்தியனார் இராமாயண காலத்தின ரெனற்கும், இராமன் வனம் புகுமுன்பே அவர் தென்றிசைக்கண் வதிந்து வந்தனரெனற்கும் வடமொழியில் ஆதி காவியமென்று கொள்ளப் படுகிற வான்மீகிராமாயணம் சிறந்த சான்றாகவுள்ளது. அவர் பாரத காலத்தின் பின்னிருந்தவரென்பதற்கு அத்தகைய சிறந்தவாதாரம் ஒன்றுமில்லை.1 8. இவ்வாற்றால் அகத்தியனார்க்கு இராவணனொடு கூறப்படுகிற சம்பந்தம் வலியுள்ள பிரமாணத்தான் ஆதரிக்கப் படுவதாகவும், ஐயங்காரவர்கள் அதனைப் புறக்கணித்து, ஆன்றோர் வழக்கொடு மாறுபடுவதாய வலியற்ற வொன்றை உறுதியுடைத்தாக மேற்கொண்டெழுதியது பொருந்துவதன்றாம். அகத்தியனார் இராமாயண காலத்துடன் தொடர்புற்றவரென்பதற்கு மற்றும் சில வாதாரங்கள் காட்டுதும். கடைச்சங்கப் புலவருளொருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் காவிரிப் பூம்பட்டினத்திருந்த காந்தன் என்னும் சோழமன்னன், பரசுராமன் தன்னொடு போர் குறித்து. வருதலைத் துர்க்கா தேவியாலறிந்து அவளேவற்படி கணிகை வயிற்றுப் பிறந்தமையால் அரசாளுரிமையில்லாத ககந்தனென்பானை நகரைக் காக்குமாறு வைத்துவிட்டு அகத்தியமுனிவரைச் சரணடைந்தானென்றும்,1 அவன் வேண்டிக் கொள்ள, அகத்தியர் காவிரியைப் பெருகச்செய்தாரென்றும்2 கூறுதலின், அரசர் மரபைப் போர்தொலைத்துவந்த பரசுராமன், கோதண்ட ராமனாற் பங்கமுறுதற்குமுன்பே அகத்தியர் தென்னாட்டிருந்த செய்தி வெளியாயிற்று. 9. இனி, இறையனாரகப் பொருளுரையில் தலைச்சங்க வரலாறு கூறுமிடத்து, `அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப; அவர்க்கு நூல் அகத்தியமென்ப.' என்றும், இடைச்சங்க வரலாறு கூறுமிடத்து, ‘அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும்.........என விவை.' என்றும் கூறப்பட்டுளது. இதில், ‘அக்காலத்துப் போலும்' எனப் பொதுவே கூறியிருப்பினும், தென் மதுரையும், கபாடபுரமும் இருவேறு காலத்தில் முறையே கடலாற் கொள்ளப்பட்டன வென்று யூகித்தல் வேண்டும். அங்ஙனம் தெற்கே கடல்கோள் நிகழ்ந்தமையை உறுதிப்படுத்தப் பல ஆதாரங்களுள்ளன. குமரியாறும்3, பேராறும்,4 பஃறுளியாறும்5 முதலிய யாறுகளும், குமரிக்கோடு1 மணிமலை முதலிய மலைகளும், காடுகளும். எழுநூற்றுக் காவத வழியுள்ள நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளும் இப்பொழுதுள்ள தமிழ் நாட்டின் றெற்கே யிருந்த செய்தி பண்டைத் தமிழ் நூல்களாலறியப் படுகின்றது. சிலப்பதிகாரம், வேனிற்காதை முதற்கண் அடியார்க்கு நல்லாரும், "தொடியோள் நதியுமென்னாது பௌவமு மென்றது என்னை யெனின், முதலூழி யிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து......நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான்; அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலைநாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க. இஃதென்னை பெறுமாறெனின், ‘வடிவேலெறிந்த..........கொடுங் கடல் கொள்ள' என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரண வடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும்." என்று உரை விரிப்பாராயினர். அவர், `பிறவாற்றானும் பெறுதும்.' என்றமையின், அவருரைக்கு மற்றும் பல வாதாரமுண்டென்பது தேற்றம். `மலிதிரை யூர்ந்துதன். மண்கடல் வௌவலின்' என்று கலித்தொகை கூறுகின்றது. ‘செங்கோன்றரைச் செலவு' என்னும் பழைய தமிழ் நூலொன்றில் இவ்வரலாறு வேறு சில அரிய செய்தியுடன் காணப் படுகின்றது. ஜர்மானிய பண்டிதரான ஹெக்கேல் என்பவர், இந்துமகா சமுத்திரம் ஆசியாக் கடற்கரையை யடுத்துள்ள சந்தாத் தீவுகளிலிருந்து ஆப்பிரிக்காவின் கீழ் பாகத்திலுள்ள மடகாசிகர் தீவு வரையினும் ஓர் கண்டமான நிலப்பரப்பாகவிருந்து ஒரு காலத்துண்டான பெரும் பிரளயத்தால் அழிவுற்றதென்றும், அப் பெருங் கண்ட மானது முதன்முதற் றோன்றிய மக்கட்குப் பிறப்பிடமாயிருந்திருக்கத் தக்க ஏதுக்களிருத்தலினால் பெரிதும் கருதத்தக்கதாகு மென்றும் கூறுகின்றார். 10. இனி, அந்நிலப்பரப்பு, கடல்கோட்பட்டழிந்தது எக்காலத் தென்று பார்ப்போம். தமிழ் நாட்டில் முதலில் ஒரு கடல்கோள் நிகழ்ந்ததென்பதும், அதற்கு முந்தின காலம் முதலூழி என வழங்கப் பட்டதென்பதும், இரண்டாவதாகச் சிறு கடல்கோளொன்று நிகழ்ந்ததென்பதும், அவ்விரு கடல்கோட்கும் இடைப்பட்ட காலம் இரண்டாமூழியென வழங்கப்பட்ட தென்பதும், முதலூழிக் கண் முதற்சங்கமும், இரண்டா மூழிக்கண் இரண்டாஞ் சங்கமும், அதன் பிற்பட்ட காலத்தே மூன்றாஞ் சங்கமும் நடைபெற்ற வென்பதும் அறியற் பாலவாகும். வான்மீகிராமாயணத்தால், இராமாயணக் காலத்தில் பாண்டியர்களுக்குக் கபாடபுரம் தலைநகராயிருந்ததென விளங்குகிறது.1 இராமாயணம் இரண்டாம் யுகத்தில் நடந்ததென்று கூறுவதும், இடைச்சங்கம் இரண்டாமூழியில் நடந்ததென்பதும், இங்குக் கவனிக்கற்பால. எனவே, இராமாயணக் காலத்தின் முன்பு தானே தலைச்சங்கமிருந்த தென்மதுரை கடல் கொள்ளப் பட்டமை பெறப்படும். முதற்சங்கம் எண்பத் தொன்பது பாண்டியராற் புரக்கப்பட்டு, 4440 ஆண்டும், இரண்டாஞ் சங்கம் ஐம்பத்தொன்பது பாண்டியராற் புரக்கப்பட்டு, 3700 ஆண்டும், மூன்றாஞ் சங்கம் நாற்பத் தொன்பது பாண்டியராற் புரக்கப்பட்டு, 1850ஆண்டும் நடை பெற்றவாக இறையனா ரகப்பொருளுரை கூறுகின்றது. இதன்படி இற்றைக்கு ஏழாயிரத்து நானூறு ஆண்டுகளின் முன் கடற்பெருக்கு நிகழ்ந்து தென்னாடு சிதைவுற்றிருத்தல் வேண்டும். இங்குக் குறித்த ஆண்டுகளின் றொகை மிகுதியாயிருத்தலின் பிற்காலத்தோராற் பிறழ எழுதப் பட்டிருத்தல் கூடுமென இக் காலத்தறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர் கருத்துப்படி நாம் ஆண்டுகளின் றொகையளவை ஒருவாறு குறையவைத்தும் கணக்கிடுவோம். பதிற்றுப் பத்துப் பதிகங்களின் இறுதிக் கட்டுரையில் பாடப்பட்ட அரசர்களின் ஆட்சிக்காலம் வரையப் பட்டிருக்கிறது. அதிற் காணப்படும் அரச ரெண்மரின் தனித்தனியான ஆட்சிக்காலங்களை ஒருங்கு கூட்டின் 259 ஆண்டு ஆகும். அது சராசரி அரச ரொருவர்க்கு 32 3/8 ஆண்டு வீதம் பொருந்துவதாகின்றது. கல்வெட்டெழுத்துப் பரிசோதகரான ஸ்ரீமத். து. அ.கோபிநாதராயரவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்கள்: `புத்திர பௌத்திர பாரம் பரியமாய் வரும் வமிசங்களில் தலைமுறைக்கு முப்பது வருட மென்று கொண்டு காலங்கணிப்பது வழக்கம்; இவ்வாறு கணித்தல் மிகச்சரியான காலத்தைத் தெரிவிக்கிறது என்பது பல வகையாலும் அறிந்து கொண்ட விஷயம்.'1 ஆயுள்நீட்சிபெற்ற அக்காலத்துத் தமிழ்மன்னர் தலைமுறை யொன்றுக்கு மேற்குறித்த' தொகைகளிலொன்றை வைத்துக் கணக்கிடுதல் இழுக்காகாது. தலைமுறைக்கு முப்பதுவருடம் வைத்துக் கணக்கிடுவோமாயின் முச்சங்கமும் புரந்த மன்னர் 197 பேருக்கு 5910 வருடம் ஆகும். கி. பி. 50வரையில் கடைச் சங்க மிருந்தமை துணியப்படுகின்றமையின், தலைச்சங்கத் திறுதியில் நிகழ்ந்த கடல்கோள் கி. மு. 3200, அஃதாவது, இற்றைக்கு 5100 ஆண்டுகளின் முன்னதாகல் வேண்டும். 11. இனி, தலைச்சங்கமிருந்த தென்மதுரையும், அதனைச் சூழ்ந்த நிலங்களும் கடல் கோட்பட்டழியவே, கபாடபுரம் பாண்டியர்களுக்குத் தலைநகராயிற்று. (கபாடபுரம் என்பது இப்பொழுது தெற்குக் கடற் கரையிலுள்ள அலைவாய் என்று சிலர் கருதுகின்றனர். அஃதுண்மையாகலா மெனவே தோன்றுகிறது.) கபாடபுரமும் பின் இடைச்சங்கத் திறுதியில் நிகழ்ந்த வெள்ளத்தால் அதனைச் சார்ந்த நிலப்பகுதியோடும் சிறிது சிதைவதாயிற்று. அதனிற்பின், பாண்டியர் மணலூரிற்றங்கிக் கொண்டு இப்பொழு துள்ள நான்மாடக் கூடலாகிய மதுரையைப் புதுவதாக வியற்றித் தலைநகராக்கிக்கொண்டு இடையீடின்றியே மூன்றாவதாகத் தமிழ்ச்சங்கம் நிறுவிப் போற்றிவந்தனர். அக்காலத்திற்றான் பாரதம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். பாரத நிகழ்ச்சிபற்றி, ஆர்.சி.தத்தர், வி. கோபாலையர் முதலியோர் கூறும் காலத்திற்கு இது சிறிதே முற்படுகின்றது. பாரதம் கடைச்சங்கத் தொடக்கத்தில் நிகழ்ந்ததென்பதில் ஐயுறவுகொள்ளற்கும் ஓர் ஏதுக்காணப்படுகிறது. அது, களவியலுரையில் தலைச்சங்கப்புலவராகக் கூறப்பட்டுள்ள முடிநாகராயர் என்பவர் பாரதப்போரில் பாண்டவர் சேனைக்குச் சோறளித்த சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பாடியிருக்கின்றார் என்பதாகும். அங்ஙனமாயினும் அது ஏனைய பிரமாணங்கள் பலவற்றொடும் முரணுதலின் தலைச்சங்கப் புலவராய முடிநாகராயரும் வேறு, உதியன் சேரலாதனைப் பாடிய முடிநாகராயரும் வேறு என்றாதல், கடைச் சங்கப் புலவராகிய முடிநாகராயரைத் தலைச்சங்கப் புலவராகப் பிறழ எழுதப்பட்டிருக்கின்றது என்றாதல் கொள்ளுதலே நேரிதாம். களவியலுரையிற் சிறிது பிறழ்ச்சியிருத்தலுங் கூடுமென்பது யானெழுதியுள்ள ‘நக்கீரர்' என்னும் பொருளுரையான் விளக்கமாம். 12. நாம் இங்குக் கூறிய ஆண்டுவரையறை தவறாதலுங் கூடும். அங்ஙனமாயினும் பாரதத்தின்முன் இராமாயணம் நிகழ்ந்த தென்பதும், அந்நிகழ்ச்சியின் முன்பே தென்மதுரையில் தமிழ்ச்சங்கமிருந்த தென்பதும் கொள்ளற்பால வாகும். ஆரியர் கூட்டம் தமிழகத்தே புகுந்தது இராமாயணக் காலத்தையடுத் தேயாகும் எனப் பலரும் கருதுகின்றனர். அக்காலத்தின் முன்பு தானே தமிழ்நாடு பலவகையான வளனுமுடையதாய் நிலவிற்று; அங்குக் குடிகளிடத்தில் அன்புபூண்டு நீதிவழுவாது கோலோச்சி வரும் செங்கோன்மன்னரும், மன்னனிடத்துப் பேரன்பு பூண்டு அடங்கியொழுகும் குடிமக்களும் விளக்க முற்றிருந்தனர்; புரவலர் களும், பாவலர்களும் ஒருங்கு கூடிப் பல்லாயிரம் ஆண்டு தமிழா ராய்ந்து வந்தனர். அப்பெற்றியான உயரிய நாகரிகம் கைவரற்கு அதற்குமுன் எத்தனையாண்டுகள் சென்றிருத்தல்வேண்டும்? இங்ஙனமாக, தமிழராயினார் ஏனையோரினும் மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த நாகரிக முதிர்ச்சியுடையாரென்பது மலையிலக்காம். இராகவையங்காரவர்கள் இத்துணைச் சிறந்த வாதாரங்களை யெல்லாம் புறக்கணித்து இராமாயணக் காலத்தின் முன் தலைச்சங்கத்திறுதியில் அதிற்புலவராயிருந்த அகத்தியனாரைப் பாரதகாலத்தின் பின் தெற்கிற் போந்தாரெனக் கொண்டது பொருந்துவதன்றாம். அது பொருந்தாதாகவே, அகத்தியர் கண்ணபிரான் காலத்துக்குப் பின்னர் அவன்வழிவந்த யாதவரைத் தெற்கழைத்து வந்தனரென்றும், இவரே தமிழ் நாட்டில் விளங்கிய வேளிரும் இப்பொழுதுள்ள வேளாளர் முதலாயினாரும் என்றும் அவரெழுதிய சரித்திரம் திரிபுடைத்தென்பது துணியப்படும். அங்ஙனமாயினும் அவர் சான்றுகளாகக் கொண்டெழுதிய பிறவற்றையும் ஆராயாது விடுதல் முறையன்றாகலின் அவற்றையும் சிறிது ஆராய்ந்து காண்டும். 13. அதற்குமுன், அவ்வாராய்ச்சிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுப் பழங்குடிகளாலாரிவரென்பதனை ஒருவாறு விளக்குதும். நாம் முன்புசெய்த ஆராய்ச்சியால் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் மிகப் பழமையானது என வெளியாயிற்று. அதற்கு அந்நூலினகத்தேயே பல ஆதாரங்களுமிருக்கின்றன. தொல்காப்பியத்தாற் பெறப்பட்ட எத்தனையோ பல சொற்களும், வழக்காறுகளும் கடைச்சங்க நாளில் மறைந்தும், வேறுபல புதியனவாகத் தோன்றியுமுள்ளன. கடைச்சங்கத்தார் தொகுத்த எட்டுத்தொகை முதலியவற்றை யாதரவாகக்கொண்டு தொல்காப்பியத்திற்கு உரைகண்ட உரையாளரெல்லாருமே, பல இலக்கணங்களுக்கு உதாரணங் காணப்பெறாமல், இவற்றுக்கிலக்கியம் ஆசிரியன் நூல்செய்கின்ற காலத்து வழங்கிப் பிற்காலத்து வழக்கு வீழ்ந்தனவாகும் என்று பலவிடத்துங் கூறிப்போந்தனர். இங்ஙனம் பல்லாற்றானும் மிக்கபழமையுடையதென நிச்சயிக்கப்படுகிற தொல்காப்பியத்தை நாம் ஆராய்ந்து காண்புழிக் குறிஞ்சி முதலிய நிலங்களில் வசித்த பண்டைத் தமிழ்மக்கள் நிலம் முதலிய பெயர்பற்றியும், தொழில் பற்றியும் வந்த பெயர்களைக் குடிப்பெயராகப் பெற்றிருந்தன ரென அறியலாகும். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், அகத்திணையியலில், "பெயரும் வினையுமென்றாயிரு வகைய-திணை தொறு மரீஇய திணைநிலைப் பெயரே." என்னுஞ் சூத்திரத்தாற் பொது வகையாற் கூறி, "ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்." என்பதனாற் சில பெயரை விதந்தும், இலேசானே ஏனைப் பெயரைத் தழுவியும் கூறிப் போந்தமையாற் காண்க. இவ்வாற்றால் குன்றுவர், வேட்டுவர், வேட்டுவித்தியர், இடையர், ஆயர், ஆய்ச்சியர், எயினர், மறவர், மறத்தியர், களமர், உழவர், உழத்தியர், திமிலர், பரதவர், பரத்தியர், என்பனவாதிய பெயர்க்குரியோரெல்லாம் தமிழ் நாட்டுப் பழங்குடிகளாவா ரென்பது தெற்றென விளங்காநிற்கும். இவர்கட்குத் தலைவராயினார் அண்ணல், தோன்றல், நாடன் முதலிய பெயர்களைப் பெறுவர். தமிழ்நூல்களை நுணுகியாராய்வுழி, இவரெல்லாம், நாட்டின் கண்ணே, குறிஞ்சி முதலிய நிலங்களிலுள்ள சிற்றூர்களில் வதிந்தவராவ ரெனவும், நகரில் வசித்த தமிழ்மக்கள் பிறருளரெனவும் அறிதல்கூடும். நகர், பெரும்பாலும் மருதஞ் சார்ந்திருக்கும். நெய்தலைச் சார்ந்திருப்பது முண்டு. அந்நகர்கள் பதியெனவும், பட்டினமெனவும் பெயர்பெறும். நகருள்ளும் அரசன்வதியும் நகர் தலைநகரென்று வழங்கத்தக்கதாம். 14. இவை பொதுப்பெயர். இவை, தாமிருக்கும் நிலம் பற்றி ஊர், பட்டினம் என்னும் மொழியடுத்த சிறப்புப் பெயர்களையும் பெறும். பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்னும் குடிகளிற் பிறந்தோர் நகரில் வசித்தோராவார். அரசன்கருமத் தலைவராதியோர் இந்நாற்குடியி லடங்குவர். அவரன்றி, எல்லாவுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகுவோரும், மூவகைக்காலமும் அறிவோரும், நிறை மொழி மாந்தருமாகிய அறிவரும், தவவேடம்பூண்டு, விரத வொழுக்கம் மேற்கொண்ட தாபதரும் நகர்களில் வசித்துவந்தனர். இவரில் தாபதர் காடுகளிலும் வதிவர். பரத்தையர்களும் நகரில் வசித்தோராவர். பார்ப்பாரும், அறிவரும், தாபதரும் வேறு வேறாவர் என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலில், பார்ப்பனவாகை1, அறிவன்வாகை2, தாபதவாகை3, என வேறுபடுத்தோதியவாற்றானும், அகப்பொருள் பற்றி வாயில் களாவாரும்1, கூற்றிற் குரியாரு2 முணர்த்துமிடத்துப் பார்ப்பாரும் அறிவரும் வேறுவேறு கூறுகின்றமையானும் கண்டுகொள்க. அறிவரே அந்தணரென்னும் பெயர்க்கு முரியராவர்; அவர் கூறிய கட்டுரையெல்லாம் மறையெனவும் மந்திரமெனவும் படும். இவற்றை `நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த - மறை மொழி தானே மந்திர மென்ப.' எனத் தொல்காப்பியமும், `அந்தண ரென்போ ரறவோர்' எனவும், `நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - மறைமொழி காட்டி விடும்' எனவும் முப்பாலும் கூறுதலானறிக. எனினும், அந்நாள் தொடங்கியே அந்தணரென்னும் பெயர் பார்ப்பாருக்கும், மறையென்னும் பெயர் வேதத்திற்கும் வழங்கலுற்றனவாகும். ஈண்டுக் கூறப் பட்டவரெல்லாம் அக நகரில் வசிப்போராவர். தச்சர், கொல்லர் முதலிய தொழில் வல்லோரும், பாணர், பறையர் முதலியோரும் புறநகர்க்கண் தத்தம் சேரிகளில் வசித்தற்குரியோராவர். தொல்காப்பியனார், 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்று கூறியது புறநகரில் வசிக்கும் குற்றேவன்மாக்களும் தொழில் வல்லோரும் ஆகிய இருதிறத் தோரையும் கருதியாகும். ஆயின், உரையாளர் கருத்து இங்குவேறாக விருத்தலின் இது பின்னும் ஆராய்ச்சிக் குரியதாகும். 15. இவ்வாறாகத் தமிழ்மக்களுக்குட் காணப்படும் குலவேறு பாடுகள் முதலூழிக்கண் உதித்தனபோலும். இப்பிரிவு தமிழர் தாமாகச் செய்து கொண்டனவோ, ஆரிய நாட்டினின்றும் போந்த முனிவர் சிலராற் செய்யப் பட்டனவோ அறியக்கூடவில்லை. "நால்வகைச் சாதியிந் நாட்டில்நீர் நாட்டினீர்" என்று கபிலரகவல் கூறுவதுதானும் இதனை நன்கு விளக்கவில்லை. எங்ஙனமாயினும், அத்துணைப் பழங்காலத்தில் ஆரியர் பெருங்கூட்டமாகத் தென்னாட்டிற் பிரவேசித்தில ரென்று சரித்திரவல்லுநர் கூறுதலின், தமிழகத்தே விளக்கமுற்ற இவரெல்லாம் தமிழரேயாதல் வேண்டும். இக்காலத்து இங்குள்ள பார்ப்பாரெல்லாம் ஆரியரென்றும், ஏனையோரெல்லாம் தமிழரென்றும் சிலர் கூறுவது எத்துணையும் பொருத்த முடைத்தன்று. பிற்காலத்திற் குடியேறினோராகிய ஆரியர் தமிழரின் பல பிரிவுகளிலும் கலந்துளாரெனக் கொள்ளுதல் பொருந்துவதாகும். தமிழ் மக்கள் பல்வேறு குடியினராக வகுக்கப் பட்டிருந்ததுதானும் உலகியல் முட்டின்றி நடைபெறுதற் பொருட்டேயாம். அவரெல்லாம் தத்தமக்கு வரையறுக்கப்பட்ட தொழில்களை வழுவாது புரிந்து வருவாராயினர். எனினும், இவர்க்கு இதுவே செய்தொழி லென்னும் கடுவிதி இருந்திற்றில்லை. இன்றியமையாத காலங்களில் ஒருவர் மற்றைத் தொழில் செய்யு முரிமையுமுண்டு. தமிழ்மக்கள் பல்வேறு குடியினராய விடத்தும் தத்தம் குடிப்பிறப்பை உயர்வு தாழ்வுகளுக் கேதுவாகக் கற்பித்துக் கொண்டு ஒருவரோடொருவர் மாறுபட்டவரல்லர். ஓர்குடிப் பிறந்தோர் ஏனைக்குடிகளில் பெண்கோட லாதியவும் புரிந்து வந்தனர். சுருங்கச் சொல்லின் தமிழ்மக்களனைவரும் குடிமை பற்றி மாறுபடாது ஒருவரையொருவர் நேசித்து வந்தனரென்பது தேற்றம். தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களெல்லாம் தமிழ் மக்களின் அன்பினை வற்புறுத்திக் கூறுகின்றன. எவ்வகையான இன்பத்திற்கும் அன்பே காரணமாதல் அனைவர்க்கும் ஒத்தமுடிபு அன்றோ! 16. இனி, தமிழ்மக்களில் இதுகாறும் கூறப்படாதிருந்த ஒரு பகுதியாருளர். அவர்தாம் குறுநில மன்னராவர். ஆசிரியர் தொல்காப்பியனார், அன்னவரை, `வேந்தனி னொரீஇய ஏனோர்' என்றும், `மன்பெறு மரபின் ஏனோர்' என்றும் முறையே அகத்திணையியலிலும் மரபியலிலும் கூறிப்போந்தனர். அரசர் மரபிற் பிறந்தும் முடிசூடிக் கொள்ளும் உரிமையில்லாதார் முடியுடை வேந்தரால் விடப்பட்ட நிலத்தையாண்டு அவர்க்கு உதவி செய்யாநிற்பர். அன்னவரே குறுநிலமன்ன ரெனப்படுவர். அவர்க்கு ‘வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும்' உரியவாகக் கூறுவர். பேராசிரியர், வைசியரும் குறுநில மன்னராதற்குரியரெனக் கூறினர். வேளாளர் நாடாண்டா ராயினும், வில்லும், வேலும் முதலாயின பெறுதற்குரியரல்ல ரென்றும், அவர் வேந்தனாற் கொடுக்கப்படும் தண்டத் தலைமை யாகிய சிறப்புப் பெறுவரேல் அவன்பாற் படையும், கண்ணியும் பொருளாகப் பெறுவரென்றும் கூறப்படுவர். நாம் இவ்வாராய்ச்சி யுரைக்குப் பொருளாகக் கொண்ட வேளிர் என்பார் மேல் மன்பெறு மரபி னேனோரெனப்பட்ட குறுநிலமன்னராவர். வேளிரையும், வேளாளரையும் பெயரின் ஒருபுடை யொப்புமை கண்டு ஒரு குலத்தவராகக் கூறுதல் பொருந்தாது. நச்சினார்க்கினியரும், 'வேந்து வினையியற்கை வேந்தனி னொரீஇய ஏனோர்மருங்கினு மெய்திடனுடைத்தே,' என்னுஞ் சூத்திரத்து, ‘வேளிர்க்கும் வேந்தன் றொழிலுரித் தென்கின்றது’ என அவதாரிகை யெழுதியும், `முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள் அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது.' எனப்பொருள் வரைந்தும், `அவர்க்குரிய இலக்கணமாவன தன்பகைவயிற் றானேசேறலும், தான் திறைபெற்ற நாடு காக்கப் பிரிதலும், மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை யேவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.' என விசேட மெழுதியும், வேளிர்க்கும் வேளாளர்க்கு முள்ள வேற்றுமையை நன்கு விளக்கிப் போந்தனர். மற்றும் வேளிரைப்பற்றி யெழுந்த புறப்பாட்டு முதலிய சான்றோர் செய்யுட்களிலெல்லாம் அவரை வேளாளரென்று கூறுதற்கு இயைபு சிறிதுங் காணப் படவில்லை. யாண்டும் வேந்தர் தொழில்களும், கருவிகளுமே அவர்க்குக் கூறப்படுகின்றன. இதுகாறும், தமிழ்ப் பழங்குடிகளாவாரிவ ரென்பதனை ஒருவாறு விளக்கினோம். மற்றும் விளக்குதற்குரிய தமிழ்க் குடிகளைப்பற்றிச் சமயம் நேர்ந்துழி வேறு வியாசமாக எழுதி விளக்குவோம். 17. இனி, இங்குச் செய்த ஆராய்ச்சியில் வேளாளர், ஆயர் என்னும் இரண்டு குடிப்பெயரும் தொல்காப்பியனார் வாக்கிற் பயின்றுள்ளமை வெளிப்படலானும், அவருள் ஆய ரென்போர் தென்னாடு கடல்கோட்படு முன் ஆண்டிருந்த பாண்டியரது குடியுடன் ஒக்கத் தோன்றிய பழமையுடையாரென்னுங் கருத்துப் புலனாக, `மலிதிரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன், றொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய, நல்லினத்தாயர்' என முல்லைக்கலி கூறுதலானும், அவர்களைப் பிற்காலத்திற் றுவாரகையினின்றும் போந்த யாதவராகிய ஆரியரெனக் கூறிய ஐயங்கார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை வெளிப்பட்டது. அவர், வேளிர், வேளாளர், வேட்கோ முதலாய சொற்களின் ஒருபுடை யொற்றுமை கொண்டே அனைவரும் ஒரே சாதியாரெனச் சாதித்தனர். வேளிரும், வேளாளரும் வெவ்வேறு குடியினரென்பதனை முன்பே விளக்கியுள்ளோம். அப்பெயர்களின் வரலாற்றையும் சிறிது விளக்குதும். `வேள்' என்னுஞ் சொல்லுக்கு விருப்பம் முதலிய பல பொருள்கள் உரியனவாகும். அதற்கு விருப்ப மென்னும் பொருளுண்டென்பது வேட்கை முதலிய வினைவிகற்பத்தாற் பெறப்படும். முடியுடை வேந்தர்கள் தம் குடியிற் பிறந்தாராகிய ஏனையோரை வெறுத் தொதுக்காது, அவர்க்கும் ஓரோர் பகுதியாகிய நிலங்களை விடுத்துப் போற்றி வந்தமையின் அவரது விருப்பிற்குரியா ரென்னும் பொருள்பட வேளிரென்னும் பெயரால் குறுநில மன்னர் வழங்கப்பட்டனர் போலும். 18. `வேள்' உபகாரமென்னும் பொருளதுமாம். இது, `வேளாண்மை யுபகாரம் ஈகையும் விளம்பும்.' எனத் திவாகரமும், `வேளாணெதிரும் விருந்தின் கண்ணும்' எனத் தொல்காப்பியமும், `வேளாண் வாயில் வேட்பக் கூறி' எனப் பொருநராற்றுப் படையும், `விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு' எனத் திருக்குறளும், `வேளாளனென்பான் விருந்திருக்க வுண்ணாதான்' எனத் திரிகடுகமும், இவ்வாறே பிற இலக்கியங்களும் கூறுதலிற் பெறப்படும். உழுதொழிலாளர், `உழுவா ருலகத்துக் காணியஃதாற்றா, தெழுவாரை யெல்லாம் பொறுத்து' என்றபடி தம் உழு தொழிலாலே ஏனையோர்க்கெல்லாம் ஆருயிர் மருந்தாகிய அன்னமளித்துப் புரக்கும் அரிய உபகாரச் செயலுடைமை பற்றி வேளாளரென வழங்கப்பட்டனராவர். 19. `வேள்' என்னுஞ் சொல்லுக்கு மண் என்ற பொருளும் அகராதிகளிற் காணப்படுகின்றது. குயவர் மட்கலம் வனையுந் தொழிலுடைமையால் வேட்கோ என வழங்கப் பட்டிருக்கலாம். பத்துப்பாட்டு முதலிய இலக்கியங்களில், கொல்லர் முதலியோரை வேள் என்னும் பெயராற் கூறாமையானும், உலக வழக்கினும் தமிழகத்து அங்ஙனம் வழங்காமையானும், அவர்களைப்பற்றிய ஆராய்ச்சி ஈண்டைக்கு வேண்டப் படுவனவல்ல. 20. இனி, அவர் வேளிரென்னுஞ் சொல் வரலாற்றைக் குறித்து `வேள் புலமாகிய பம்பாய்மாகாணத்தினின்று வந்தமை பற்றி வேளிரென வழங்கப்பட்டனர்' என ஓரிடத்தும், `வேள் என்பதற்கு யாகஞ்செய்தல் என்ற பொருளுண்மையால் யாக சமயத்திற் றோன்றியமை பற்றி வேளிரென வழங்கப்பட்டாரெனலும் பொருந்தும்' என ஓரிடத்தும் கூறி, வேள்புலம் என்னுஞ் சொல் வரலாறு பற்றி `வேளிராண்ட தேசமாதலால் வேள்புலமென வழங்கப்பட்டதென்றுங் கொள்ளப்படும்' என ஓரிடத்துரைத்தார். அவர், தாம் கொண்ட கதைகளெல்லாவற் றொடும் வேள் என்னுஞ் சொல்லைப் பொருத்த நேர்ந்தமையின் இங்ஙனம் முன்பின் முரணாகக் கூறலாயினர். அவர் கூறியவற்றுள் யாக சமயத்துத் தோன்றிய தென்பதை நிறுத்தி, ஏனையிரண்டையும் முதற்கண் ஆராய்வாம். வேளிராண்டமையால் வேள்புலமென்னும் பெயரும், வேள்புலத்து நின்றும் போந்தமையால் வேளிரென்னும் பெயரும் உளவாயின எனக் கூறின் அது ஒன்றை யொன்று பற்றுதலிற் குற்றமாம். அவற்று ளொன்றே காரணமாக் கூறப்படல் வேண்டும். 21. வேள்புலமே வேளிரென்னும் பெயரைத் தோற்று வித்ததெனின், அவர் கருத்து நிரம்புமாறில்லை. என்னை? வேள், வேள்புலம் என்பன தமிழ்ச் சொல்லாகும். அது, அவர்க்கும் உடன்பாடானதே. பம்பாய் மாகாணத்துக்கு வேள்புலம் என்னும் தமிழ்ப்பெயர் வழக்குப் பண்டை நாளிலிருந்திருப்பின் அப்பொழுது அங்கிருந்தவர் தமிழரே யாதல் வேண்டும். அவர்கள் அங்கிருந்த பொழுதே வேளிரென்னும் பெயர்க்கு முரியராவர். அவரை ஆரியரென்றும், யாதவரென்றும், தென்னாட்டில் வந்து பிற்றை நாளி லப்பெயர் பெற்றன ரென்றும் கூறுதல் யாங்ஙனம் பொருந்தும்? வேளிராண்டமையால் அத்தேசம் வேள்புலமெனப்பட்ட தென்றால், அப்பொழுதும் அவராட்சி புரிந்த அவ்விடத்திலேயே அவர்க்கு வேளிரென்னும் பெயர் இருந்திருக்க வேண்டுமாகலின், இதுவும் முன்னது போன்றே அவர் கருத்துக்கு மாறாகின்றது. அங்ஙனமாகலின், யான் முற்கூறியவாறு தமிழ்நாட்டிருந்த வேளிரெனப்பட்ட குறுநில மன்னர்கள் ஓரோர் காலத்து வடக்கட் சென்று வென்று வந்தமையானோ, அடிப்படுத் தாண்டமையானோ ஆண்டுள்ள தேசமும், ஊர்களும் வேளென்பதனடியாகப் பெயர் பெற்றன எனக் கொள்ளுதலே பொருத்தமாம். ஒரு நாடும், அந்நாட்டிலுள்ள ஊர்களும் வழிவழியாக ஆண்டு வருபவர் பெயராற் பெயரெய்தல் போன்றே, இடையே புகுந்தாளுமவராற் பெயரெய்தலும் வழக்கமேயாகும். தமிழ் நாட்டரசர் பலர் ஓரோர் காலத்து இமயம் வரை வென்று அடிப்படுத்த செய்தி பண்டைத் தமிழ் நூல்களாலறியப் படுகின்ற தன்றோ? இனி, திராவிட ரென்பார் இமயத்தின் வடபானின்றும் ஆரியர்க்கு முன்னே இந்தியாவிற் புகுந்து பரவியிருந்த ஓர் சாதியாரெனச் சிலர் கூறுவது பொருத்த முடைத்தன்று. ஒரு சமயம் அவர் கூறுவது மெய்யாகவே தெளியப்படினும் அது வேளிரைத் தமிழரென்று கொண்ட என் கொள்கைக்குத் துணையாவதன்றிப் பிறிதில்லை யென்க. 22. இனி, ‘சளுக்கியர், ஹொய்சளர், ஆந்திர ரென்போரெல்லாம் ஒரே வகுப்பினரென்றும், அவரெல்லாம் துவாரகையினின்றுங் குடியேறிய யாதவரென்றும் சரித்திர நூல்களால் நிச்சயிக்கப் பட்டு விட்டன; அன்னவரோடு வேளிரென்பார்க்குத் தனித்தனி சம்பந்தம் பெறப்படுதலின் அவரும் யாதவரேயாவர்.' என ஐயங்கார் கூறுகின்றனர். அவர் கூறுகின்றபடி, சரித்திர நூல்களில் யாண்டும் தெளியக் கூறப்படவில்லை. உரேமேச சந்திர தத்தர், வின்ஸன் ஸ்மித், தாம்ஸன், அரங்கசாமி ஐயங்கார் என்போர் எழுதிய இந்திய சரித்திரப் புத்தகங்களிலெல்லாம் சாளுக்கியர் முதலியோரை ஒருகுலத்தவராகச் சம்பந்தப்படுத்தியதால், யாதவரென்றாதல் தெருட்டப் படவில்லை. அவற்றிற் கூறப்படுவன, அன்னவர் காலமும், இருந்த நிலனும், அவர்களுக்குள் ஓரோர் காலத்துப் போர் நிகழ்ந்தவாறும் பிறவுமாம். சளுக்கியர், அயோத்தியினின்றும் போந்தவரென்றும், சந்திர வமிசத்தைச் சேர்ந்த ரஜபுத்திர வமிசத்தவராவ ரென்றும், திராவிடரென்றும், அவர் இராஜ புதனத்திலிருந்து வந்திருக்கவேண்டுமென்றும் சரித்திரங்கள் பலவாறு கூறுகின்றன. அவர்கள், கோதாவிரி, கிருஷ்ணா என்னும் நதிகளையுடைய குந்தளம் எனப்பட்ட நாட்டிலிருந்து நெடுங்காலம் ஆட்சி புரிந்தவர்கள். ஹொய்சளர் என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளின் முன் துவார சமுத்திரத்தி லிருந்தோராவர். இவ்விரு திறத்தாரும் இங்ஙனம் காலத்தானும் இடத்தானும் வேறுபாடுற்றவ ராவர். எனினும், சளுக்கியர் தம்மிற் பெரிதும் பிற்காலத்தவராய ஹொய்சளரிருந்தநாளினும் இருந்தனரென்பது மெய்யாகும். அவர் ஒரு குலத்தவரென்பது தான் துணியப்படவில்லை. 23. இனி, சளுக்கியரும், வேளிரும் ஒரு குலத்தவரென்பதற்கு அவர் கூறும் ஏதுக்கள்: "வடதேசத்தே ஹாரீத பஞ்ச சிகர் என்ற முனிவர் யாகஞ் செய்து கொண்டிருந்தபோது அவரது தீர்த்த பாத்திரத்தினின்று ஓரரசன் உண்டானான். சுளுகம் என்னும் வடமொழிப் பெயர் பெற்ற பாத்திரத்தினின்றுதித்தமை பற்றி, அவன் வழியினர் சுளுகர் எனப் பெயர்பெற்றனர் என்று பம்பாய் கெஸட்டியரில் காணப்படுகிறது. இச்சொல்லே சாளுக்கியர் முதலியவாகத் திரிந்து வழங்குகிறது. இதற்கேற்பக் கடைச்சங்கப் புலவராகிய கபிலர், வேளிருளொருவனைப் பார்த்து ‘நீயே, வடபால் முனிவன் தடவினுட் டோன்றி' யெனக்கூறுகின்றார். இதன் பொருள், வடநாட்டு முனிவரது யாக பாத்திரத்துத் தோன்றி, யென்பதாகும். வேளிரென்னுஞ் சொல்லே யாகத்துதித்தமையால் வந்திருக்கலாம். மற்றும், ‘வேள்புலவரசர் சளுக்கு வேந்தர்' எனப் பழைய நிகண்டுகள் கூறுகின்றன. சளுக்கியர் வேந்தனை வேள் என்றே பிங்கலந்தை கூறுகின்றது." என்பன. 24. அவற்றைச் சிறிது ஆராய்வோம். சாளுவம் என்னும் தேசத்தை யாண்டவர் சாளுக்கியர் அல்லது சளுக்கியர் ஆவரெனப் பலரும் கருதி வந்தனர். ஐயங்காரவர்கள் அதனை விடுத்துப் புதுவதாய கதை யொன்றினை அப்பெயர்க்குக் காரணமாகக் காட்டினர். சுளுகம், சளுக்கியர் என்னும் சொற்களில் அவர் பொருள் கொண்டவாறே யாக சம்பந்தத்தை யுணர்த்தும் ஆற்றல் சிறிதுமில்லை. சளுக்கியர் பாத்திரத்தினின்றுதித்தவராயின் அவரை யாதவரென்று கூறுதற்குத்தானியை பென்னை? `வடபால் முனிவன் தடவினுட்டோன்றி' யென்பதற்குப் புறநானூற் றுரைகாரர், ‘வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கட் டோன்றி' எனப் பொருளெழுதி, `வடபால்முனிவன் தடவினுட்டோன்றி யென்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும். அது கேட்டுணர்க.' எனக் குறிப்பெழுதியுள்ளார். அதனை நோக்குழி, அவ்வுரைகாரர் காலத்து அவ்வரலாறு விரிந்ததோர் கதையாகத் தமிழகத்தே வழங்கி வந்ததென்பதும், அதனொடு மாறுபடாமலே அவர் ஓமகுண்டம் எனப் பொருளெழுதின ரென்பதும் விளக்க முறுகின்றன. அவ்வாறாகவும் ஐயங்கார் அவ்வுரையொடு மாறுபட்டு, வேறு பொருள் கொள்வாராயினர். இனி, அவர் காட்டிய, 'வேள் புலவரசர் சளுக்கு வேந்தர்' என்னும் பிரமாணமே அவர்கள் வெவ்வேறு குலத்தவரென்பதற்குச் சான்றாகும். என்னை? ஒரு குலத்தவராயின் வேளிர் சளுக்கர், எனச் சூத்திரிக்க அமையு மென்பது. பிங்கலந்தை, சளுக்கியர் வேந்தரில் ஒருவனையே வேள் எனக் கூறுகின்றதாகலின் அஃதீண்டைக்குப் புலங்கொளப் படுவதன்று. 25. இனி, ஹொய்சளரும், வேளிரும் ஒருகுலத்தவ ரென்பதற்கு அவர் காட்டுவது, "முனிவரொருவர் சளன் என்னு மரசனை நோக்கி, ஓர் புலியைச் சுட்டி, இப்புலியைக் கொல் சளனே என்னும் பொருள்படக் கன்னடத்தில் ஹொய் சளனே என்றார். அவனவ்வாறே செய்தமையால் அவன் வழி வந்தார் ஹொய்சளர் எனப்பட்டார். அதற்கிணங்க இருங்கோவேள் என்பானைக் கபிலர், ‘புலிகடி மால்' என்கிறார்." என்பது. அது பொருந்தாது. என்னை? புலிகடிமால் ஹொய்சளர் என்னும் இருதொடர்களும் ஒரு பொருள் பயப்பனவல்ல. ஹொய்சளர் என்பதில் புலியென்னும் பொருள் பெறப்படுமாறில்லை. புலிகடிமால் என்னுந் தொடரில் சளனென்னும் பெயரின்று. ஹொய்சளர் ஒரு சாதிப் பெயர். புலிகடிமால் என்பது வேளிரு ளொருவனுக்கு அவன் புரிந்த யாதோ ஒரு செயல்பற்றிச் சிறப்பாக வழங்கியது. அன்றியும், தொள்ளாயிர மாண்டுகட்கு முந்திய ஹொய்சளரென்னும் வழக்கிலிருந்து ஏறக்குறைய இரண்டாயிர மாண்டுகட்கு முந்திய மற்றொரு பெயர் வழக்கு எங்ஙனம் உண்டாதல் கூடும்? இவ்வாற்றால் அவ்விரு பெயரும் ஒரு சிறிதும் சம்பந்தமுடைய வல்லவென்பது வெள்ளிடை மலையாம். இனி, ஹொய்சளரென்னுஞ் சொற்குப் பதிலாகப் ‘போசளர்' என்னுஞ் சொல் ஸ்ரீமத்.து. அ.கோபிநாத ராயரவர்கள் எழுதிய சோழ வமிச சரித்திரத்திற் பலவிடத்துக் காணப்படுகிறது. அப்பெயரே பொருத்தமுள்ள தாயிருக்கலாமென நினைக்கின்றேன். 26. இனி, ஹொய்சளரில் ஒரு பகுதியார் கன்னடத்தில் பேலாலர் என வழங்கப்படுகிறார்; அச்சொல், தமிழிலுள்ள வேளாளரென்னுஞ் சொல்லோடு ஒற்றுமை பெறுதலின், வேளாள ரென்னுஞ் சொல்லே அங்ஙனந் திரிந்திருக்க வேண்டு மென் கின்றனர். அப்படியாயின், பேலாலரையும் தமிழரென்பதே பொருத்தமாம். அல்லது அச்சொற்கு வேறு காரணங் கூறல்வேண்டும். போசளரில் ‘பல்லாளன்’ முதலிய பெயருடையாருளர். அன்னவர் சார்பால் பல்லாளர் அல்லது பெல்லாளர் என ஒரு சாரார் வழங்கப்படுதலுங் கூடும். ஐயங்காரவர்கள் காட்டிய பிறவும் இப்பெற்றியவென யாரும் உணர்தல் கூடுமாகலின் அவையிற்றை ஆராயாது விடுகின்றேம். 27. இனி, சளுக்கியராதியோர், முற்காட்டியவாறு, தமிழரல்லா விடினும், தமிழின் வழிமொழிகளாகிய தெலுங்கு முதலியன பேசி வந்தவராகலின் அவரைத் திராவிடரென்றும், ஓராற்றால் தமிழரொடு சம்பந்தமுடையவ ரென்றுங் கொள்ளுதல் பொருத்த மாகலாம். கி. பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து சோழ மன்னர்கள் சளுக்கியவரசரோடு சம்பந்தஞ் செய்து கொண்டமை சாஸனங் களாலறியப் படுதலின், பின்னவர்கள் முற்றும் தமிழராகவே மாறியிருத்தலுங் கூடும். 28. இனி, நச்சினார்க்கினியர் கூறிய `துவராபதி' யாதாகுமென ஆராய்வோம். பாண்டி நாட்டில் பாரியென்னும் வேள் ஆண்ட பறம்பு மலையைச் சார்ந்த ஒரு பகுதி இற்றைக்கும் ‘துவராபதி நாடு’ என வழங்கப்படுகிறது. அப்பக்கத்தைச் சென்று பார்க்கும் பொழுது, அது பழைய வேளிராண்ட நிலனெனக் கருதற்குப் பல குறிகள் காணக் கிடக்கின்றன. சங்கப் புலவருளொருவராகிய துவரைக் கோமானும் ஆண்டிருந்தவரே போலும். அது மலையரண் முதலியவுடையதாய்ப், படை விட்டிருத்தற் கிடனாயிருந்தமை பற்றிப் புறநானூற்றுரைகாரர் ‘துவராபதி யென்னும் படைவீடு’ எனப்பொருள் கூறினராவர். அது தொன்று தொட்டு ஒரு சார் வேளிராட்சிக்குட் பட்டிருந்தமையின் ‘துவரையாண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்’எனக் கபிலர் கூறினர். ‘நாற்பத்தொன்பது’ ஈண்டுப் பலவென்னும் பொருட்டு. இவ்வாற்றால் துவராபதிப் போந்து என்பதற்கு வேளிராண்ட துவராபதி யென்னும் நாட்டிற் போந்து எனப்பொருள் கோடலே பொருத்தமாம். 29. இனி, அவர் கூறிய, ‘நிலங்கடந்த நெடுமுடியண்ணல்’ யாரைக் குறிப்பிற் பொருந்துவதாகு மென்று பார்ப்போம். தொல் காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து ஏற்றப் பட்டதென, `வடவேங்கடம்' என்னும் பாயிரங் கூறுகின்றது. அதற்கு ‘மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த்திரு வினையுடைய பாண்டியன் மாகீர்த்தி யவையின் கண்ணே’ என்று நச்சினார்க்கினியர் பொருள் விரித்தார். இது ‘நிலங்கடந்த’ என்னுந் தொடர் மொழிப் பொருளோடு முழுதும் ஒற்றுமை பெறுதல் காண்க. முடி சூடி நெடுங்காலம் ஆட்சிபுரிந் தோரை நெடுமுடி யென்றும், நெடியோர் என்றும் கூறுதல் பண்டை வழக்குப் போலும். நச்சினார்க்கினியர் மாகீர்த்தியை இருபத்து நாலாயிரம் யாண்டு அரசுவீற்றிருந்தானெனக் கூறுவர். மதுரைக் காஞ்சியில், ‘நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோனும்பல்’ என்னுந் தொடர் காணப்படுகிறது. இதிலுள்ள ‘நெடியோன்’ என்பதற்கு ‘வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். மதுரைக் காஞ்சியிலுள்ள இத்தொடர் மொழி மற்றும் பலவிடத்துப் பயின்று வருகின்றது. புறநானூறு ஒன்பதாஞ் செய்யுளில், ‘முன்னீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’ என்பதிலுள்ள ‘நெடியோன்’ என்பதும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனையே குறிக்கின்றது. இதனால், பஃறுளியாற்றை உண்டுபண்ணிக் கடற் றெய்வத்திற்கு விழவெடுத்த வடிம்பலம்ப நின்ற பாண்டியனே, தொல்காப்பியம் புலப்படுத்த நிலந்தரு திருவிற் பாண்டியனாகிய சயமாகீர்த்தியாவான் என்று கருதப்படுகிறது. இவன் பஃறுளியாற்றையுண்டு பண்ணினவ னெனவே, கடற் பிரளயத்தால் குமரிநாடு முதலியன அழிவதன் முன்னர்த் தலைச்சங்கத்திறுதியில் இருந்தோனாவன் என்பது விளக்கமாம். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி யென்பான் நெடியோனுக்குப் பின் வந்தோனாதல் வேண்டும். புறநானூற்றிலும், ‘குடுமி தங்கோ’ என நெடியோன் கூறப்படுகின்றான். பஃறுளியாறும் குடுமியின் காலத்திருந்தது. குடுமியின் முற்றோன்றலாகிய நெடியோன் வாழ்நாள் நனிபெற்று அவனுக்குப் பிற்காலத்து மிருந்தோனாவன். தொல்காப்பியம் ஆதியூழியின் அந்தத்தே யியற்றப்பட்டதென நச்சினார்க்கினியர் இருமுறை குறிப்பிடுவதன்றி, பாயிரவுரைக் கண் உரையாசிரியரும், ‘வினையினீங்கி’ என்னும் மரபியற் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும் அது தெற்கணிருந்த நாடுகள் கடல் கோட்படுவதன் முன்னியற்றப் பட்டதாகக் கூறுதலும், அடியார்க்கு நல்லார் தொல்காப்பியம் புலப்படுத்திய நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்தேயே கடல்கோள் நிகழ்ந்ததெனத் தெளிவாகக் கூறுதலும் இக்கொள்கையை வலியுறுத்துவனவாம். 30. இங்ஙனம் தொல்காப்பியம் புலப்படுத்திய நிலந்தரு திருவிற் பாண்டியன் தலைச்சங்கத் திறுதியிலிருந்தவனென்பது பல சான்றுகளானு முறுதிப்படுதலோடு, அவன் நிலங் கடந்த நெடுமுடியண்ணல் என்னும் பெயர்க்கு முரியனாதல் பெறப் படுகின்றமையின், தொல்காப்பியனார்க்கு ஆசிரியராகிய அகத்தியனாரும் அக்காலத்தே போந்து, அப்பாண்டிய னுதவியாலே யாதோ ஒரு காட்டை யழித்து நாடு செய்தனரெனக் கொள்ளுதலே பெரிதும் பொருத்தமாம். நச்சினார்க்கினியர் கன்ன பரம்பரையாகப் பலபட வழங்கிவந்த செய்தியை ஒரு தொடர்ப்படுத் தெழுதியுள்ளா ரெனக் கொள்ளவேண்டுதலின், அவர் கூறியவற்றிற்கெல்லாம் சொற்கிடக்கை முறையானே பொருள்கொள்ளல் வேண்டுமென்னும் நியதியின்றாம். ஆகவே, துவராபதிக்கும் நெடுமுடியண்ணலுக்கும் சம்பந்தங் கூறுதல் பொருந்தாது. அதற்கும் வேளிர்க்கும் சம்பந்தங் கூறுதல் பொருத்தமாம்.  கள்ளர் சரித்திரம் இரண்டாம் பதிப்பின் முகவுரை குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் - (திருவள்ளுவர்.) உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை. ஆக, அந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாகப் புத்தகங்கள் எழுதி வைத்திருக் கின்றனர். ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்பட வேண்டி யோரான கள்ளர், மறவர், அகம்படியர் என்பவர்களைப் பற்றி யாதொரு சரித்திரமும் வெளிவந்ததில்லை. சில `ஜில்லா மான்யுவல்' ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப்பட்டிருக்கின்றன. எனினும், அவை முற்றிலும் உண்மையறிந்தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோரிற் சிலர் குறுகிய நோக்கமும் அசூயையும் கொண்டுளோர் எனவும் கருத வேண்டியிருக்கிறது. கள்ளர்கள் தொன்றுதொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்றாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர் சட்டத் திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டு மென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1902-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலைநிறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து 4-ஆவது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் 'பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்ன பட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்' (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றைய வெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில் கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப் போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்வமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக் குறித்து எழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னும் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது. இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதை போலன்றி உண்மையாராய்ச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பெரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒரு வகுப்பினைப் பெருமைப்படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையுடையார்க்கு இஃது அறிவு கொளுத்தக் கூடியதாம் என்பதனையும் நன்கு அறியக்கூடும். இஃது ஒரு வகுப்பினைக் குறித்து எழுதப்பெற்றதாயினும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும். இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிப்புரையையும், பல பத்திரிகைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று. சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும் கலாசாலை மாணாக்கர்கள் படித்துப் பயனெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன். இப் பதிப்பிலே பல அரிய புதிய செய்திகள் சேர்க்கப் பெற்றுள்ளன; மிகையாகத் தோன்றிய சில குறைக்கப் பெற்றும், சில திருத்தப்பெற்றும் இருக்கின்றன; பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளின் வரலாறு முழுதும் செவ்வையாக ஆராய்ந்து எழுதப் பட்டிருத்தலை இப்பதிப்பிற் காணலாகும். கள்ளருடைய நாட்டின் பெயர்களிலும், பட்டப் பெயர்களிலும் பல வழக்கத்தில் உருச் சிதைந்து உண்மையறியக் கூடாதனவாகவுள்ளன. ஆராய்ச்சியில் உண்மை வெளியான பெயர்கள் மாத்திரம் செப்பஞ் செய்யப் பெற்றும், ஏனையவை வழங்குகிறபடியும் இதில் எழுதப் பெற்றுள்ளன. மற்றும் கள்ளருடைய நாட்டு விவரங்களும், பழக்க வழக்கங்களும் முதலியவற்றில் இன்னும் ஆராய்ந்து காண வேண்டியவை பல இருத்தல் கூடும். என் அறிவு ஆராய்ச்சிக் குறைவால் பல பிழைகள் நேர்ந்திருத்தலும் கூடும். அவைகளைக் காண்கின்ற அறிவுடையோர்கள் அருள் கூர்ந்து அவற்றைத் தெரிவிப்பரேல் அடுத்த பதிப்பிலே இதனைப் பின்னும் செப்பஞ் செய்து வெளியிட இடனுண்டாகும். கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றன ரென்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடை தற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும். அந்நோக்கம் இந்நூல் வெளியான நாலைந்து ஆண்டுகளுக் குள்ளாக ஓரளவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலன்றி, இலங்கை, பர்மா, மலேயா நாடுகள், சுமத்திரா முதலிய தீவுகள் ஆகிய பல இடங்களிலுள்ளோர் இதனை ஆர்வத்துடன் வரவழைத்துப் படிப்பாராயினர். இவ்வகுப்பினர்க்குள் ஒருவகையான ஊக்கமும், கல்வி விருப்பமும் இதனால் உண்டாயிருக்கின்றன வென்பது நிதரிசனமாகின்றது. கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகிய திருவாளர் T.V.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதலிய அன்பர்கள் இந்நூல் எழுதுதற்குச் செய்த உதவிகள் முதற் பதிப்பிலே காட்டப்பெற்றன. பாண்டிநாட்டிலே உயர்குடும்ப மொன்றிற் பிறந்தாரும், செந்தமிழ்ப்புலமையிற் சிறந்த சந்தநலந் திகழும் பாக்களை நினைத்தமாத்திரையிற் பாடும் ஆற்றல் கைவரப் பெற்றாரும், துறவு பூண்டு திருத்தொண்டியற்றி வருவாரும், என்பாற் பேரன்புடையாரும் ஆகிய திருமிகு. கல்லல் குக..மணிவாசக சரணாலய சுவாமிகள் பாண்டிநாட்டுக் கள்ளர் நாடுகளின் விவரமனைத்தையும் செவ்வனே ஆராய்ந்து தெரிவித்து இப்பதிப் பானது திருத்தமெய்தும்படி செய்தார்கள். அவர்கள் புரிந்த இவ்வுதவியும், மற்றும் பலவாற்றானுஞ் செய்து வரும் உதவிகளும் என்னால் எப்பொழுதும் பாராட்டப் பெறுவனவாகும். ந.மு.வேங்கடசாமி. முதல் அதிகாரம் பழந்தமிழ் மக்கள் தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நாடுகளில் இருந்து வரும் ஓர் பெருங்குழுவினரைக் கள்ளர் என்னும் சொல் குறித்து நிற்கின்றது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய பல சமீன்றார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். இன்னவரின் முன்னோர் பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலைமையில் இருந்தனர் இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது; இப்பொழுது எப்படியிருக்கின்றனர்; என்பன போன்றவை இந்நூலில் ஆராய்ந்து காட்டப்படும். அதற்குமுன் இந்திய நாட்டிலும், ஈழம், கடாரம் முதலிய நாடுகளிலும் பண்டை நாளில் வதிந்திருந்த மக்களைக் குறித்துப் பொதுவாக ஒரு சிறிது ஆராய்வது இன்றியமையாதது, மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனரென்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள தேயங்களிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவுட்புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவின ரென்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அங்ஙனமே இந்நாட்டிற் புகுந்து பரவலுற்றனரென்றும் சரித்திரக்காரர் கூறு கின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு. ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முந்திய தமிழர்’ என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி.கனகசபைப் பிள்ளையவர்கள் இந்தியாவிலிருந்த பழைய மக்களைப்பற்றிப் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். முன் சொன்ன முத்திறத் தாரையுங் குறித்து அவரும் அங்ஙனமே ஒப்பியிருக்கின்றார். எனினும், திராவிடர்க்கும் ஆரியர்க்கும் நடுவே தமிழர் என்ற வகுப்பினை அவர் புகுத்துரைக்கின்றனர். அன்னவர் கொள்கைப்படி நாகர், திராவிடர், தமிழர், ஆரியர் என்ற நான்கு பிரிவுகள் ஏற்படு கின்றன. ஆனால், அவர் எழுதியதிலிருந்தாவது, மற்றையோர் எழுதியதிலிருந்தாவது இப்பொழுது காணப்படும் மக்களில் இன்னவரே நாகர், இன்னவரே திராவிடர் என்று இவ்வாறு திட்டமாக வகுத்துரைக்கக் கூடவில்லை. உரைப்பது அத்துணை யெளிதன்று. எனினும், மறைந்து கிடக்கும் உண்மைகளைக் காண அவாவுதலும், அது குறித்து ஆராய்தலும் இயல்பே யாகலின், பழைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களையும், புராண, இதிகாசங் களையும், கல்வெட்டு, பட்டயம், பிற்காலத்தோர் எழுதிய சரித்திரங்கள் என்பவைகளையும் பற்றாகக் கொண்டு, இக்காலத்து மக்களியல்பு களிற் பொருந்துவனவற்றை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒருவாறு உண்மையெனத் தோன்றுமவைகளை வெளிப்படுத்தலே இவ்வாராய்ச்சியின் நோக்கமாம். தொல்லை நாளிலே நாகர் என்ற வகுப்பினர் பல இடங்களில் மேன்மை யுற்றிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் மவுனேயர் எனப்படும் ஆறு கோடி கந்தருவர் பாதாலத்தி லிருந்த நாகருடைய தலை சிறந்த மணிகளையும், அன்னவராட்சியையும் வௌவிக் கொண்டனரென்றும், நாகர் திருமாலிடத்திற் சென்று முறையிட, அப்பெருமான் அவர்களை நோக்கி, மாந்தாதா என்னும் சக்கரவர்த்தியின் மைந்தனான புருகுச்சன் என்பானிடத்தில் யாம் ஆவேசித்து நுங்கள் பகைவரை அடக்குதும் என அருளிச்செய்தன ரென்றும், நாகர் அது கேட்டு வணங்கி விடை பெற்றுப் பாதலம்புக்கு, தங்கள் உடன்பிறந்த நருமதையென்பாளைப் புருகுச்ச மன்னனுக்கு மனைவியாம்படி அனுப்பினரென்றும், அவளும் அவ்வேந்துடன் சேர்ந்து அவனைப் பாதலத்திற்குக் கொண்டு வந்து விட அம்மன்னவன் மாயோனின் பேரொளியால் ஆவேசிக்கப்பட்டு, அக்கந்தருவர் யாவரையும் அழித்து விட்டுத் தன் பட்டணம் அடைந்தன னென்றும், புருகுச்சனுக்கு நருமதை வயிற்றில் திரசதஸ்யு என்பான் தோன்றினனென்றும், அத் திரசதஸ்யுவின் வழியிலே சத்திய விரதன், திரிசங்கு, அரிச்சந்திரன் முதலிய அரசர்கள் தோன்றினரென்றும் விட்டுணுபுராணம், நாலாம் அமிசம், மூன்றாம் அத்தியாயத்திற் சொல்லியிருக்கிறது. இனி, வியாச பாரதம், சாந்திபருவத்தின் இறுதியிலுள்ள பன்னிரண்டு அத்தியாயங்களில் பதுமன் என்னும் பெயருள்ள ஓர் நாகனைப் பற்றிய செய்திகள் சொல்லப் பெற்றுள்ளன. அவற்றின் சுருக்கம் "கங்காநதியின் தென் கரையிலுள்ள மகாபதுமம் என்னும் பட்டணத்திலே அத்திரி வமிசத்தவரான ஓர் பிராமணர் இருந்தார். ஐம்பொறிகளையும் வென்று தவத்தில் மேம்பட்டவரான அப்பிராமணர் எந்தக் கருமம் செய்யத்தக்கது? எல்லாவற்றினும் மேலான இடம் யாது? அதனை அடையும் நெறி யாது? என்பனவற்றை இடைவிடாது ஆராய்ந்து வந்தும் துணிவு பிறவாதவராயிருந்தார். அப்படியிருக்கும் நாளில் சமாதி நிலையடைந்த பெரியரான ஓர் அதிதி அவரிடத்திற்கு வந்தனர். அவர் மகிழ்ச்சியுற்று அப்பெரியாரைப் பூசித்துத் தமது ஐயத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொள்ள, அதிதியானவர் யானும் இவற்றில் மயக்க முடையனாகவேயிருக் கிறேன். எனக்கும் உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமெனும் விருப்பமுண்டு. உலகிலே சிலர் முத்திப்பேற்றைப் புகழ்கின்றனர்; சில வேதியர் யாகத்தின் பயனைக் கொண்டாடுகின்றனர்; சிலர் இல்லறத்தைச் சார்ந்திருக்கின்றனர்; சிலர் அரச தர்மத்தைப் பொருந்தியுள்ளார்; குருவின் பணிவிடை மேற்கொண்டவர் சிலர்; தாய் தந்தையர்களுக்கு ஊழியம் செய்வார் சிலர்; சிலர் அகிம்சையினையும், சிலர் சத்தியத்தையும் மேற்கொண்டிருக் கின்றனர்; சிலர் போர் புரிந்து மாள்கின்றனர்; சிலர் உஞ்சவிருத்தி செய்கின்றனர். இவ்வாறாக மேலுலகத்தைஅடையும் விருப்ப முடையவர்கள் பல்வேறு வழிகளில் நடப்பவராகின்றனர். அதனால் என் மனமும் கலக்கமடைந்திருக்கிறது. எனினும் என் குருவினால் உபதேசிக்கப்பட்ட ஓர் செய்தியை நுமக்குக் கூறுகின்றேன். கோமதி நதி தீரத்தில் நைமிசம் என்ற வனம் உளது. அது முன் படைப்பில் தரும வடிவமான சக்கரம் தங்கப் பெற்றதாகும். அங்கே நாகபுரம் ஒன்றுள்ளது. பதுமன் என்னும் பெயருள்ளவனும் புகழ்மிக்கவனுமான நாகன் ஒருவன் அங்கிருக்கின்றனன். அவன் கர்மம், உபாசனை, ஞானம் என்னும் மூன்று நெறியிலும் நிலை பெற்றவன்; தன் மனம் மொழி மெய்களினாலே எவ்வுயிர்க்கும் இன்பம் விளைப்பவன்; வாய்மை நெறி தவறாதவன். அவனை அடைந்து நுமது விருப்பத்தைத் தெரிவிப்பீராக. அவன் உண்மையை அறிவுறுத்துவன். அன்னவன் கங்கை நீரில் வசிக்கின்றனன்; என்று கூறினர். அது கேட்ட பிராமணர் மிகவும் மகிழ்ந்து, வழி வினாவிக் கொண்டு அந்நாகன் இருப்பிடம் அடைந்து, பல நாள் காத்திருந்து நோன்பியற்றி, முடிவில் அந்நாகர் பெருமானைக் கண்டு ஐயந்தெளிந்து மீண்டனர்" என்பது. இங்கே காட்டிய இவ்விரு கதைகளிலிருந்தும் நாகர் என்பார் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவராவர் எனக் கொள்ளக் கிடக்கிறது. நாகர்களைப் பற்றிக் கனகசபைப்பிள்ளையவர்கள் கூறுமாறு:-- “தொகையிற் பெருக்க மடைந்து நாகரிகம் வாய்ந்த ஒரு சாதியார் இந்தியா, கடாரம் (பர்மா), இலங்கையென்னும் தேயங்களில் பெரும் பகுதிகளை ஓரொரு காலத்தில் ஆண்டிருக் கின்றனர். இராமாயணத்து நாடவிட்ட படலம் இவர்கள் பெயரைக் குறிப்பதன்றித் தென்னாட்டின் நடுவணிருந்த இவர் களது அரச நகரைப் பதன்வருமாறு விரித்துக் கூறுகின்றது. போகவதிக் கருகே நாகர் வாழும் பதி யொன்றுளது; அது பெரிய தெருக்களையும், மதிற் காப்பினையும் உடையது; தம் நச்சுப் பற்களால் மிகவும் கொடுமை வாய்ந்துள நாகர் மைந்தரின் சேனைக் கூட்டம் அதனைக் காவல் புரியா நிற்கும்; மணிமண்டபத்தில் அரியணை வீற்றிருந்து அவர்களையாளும் அரசன் வாசுகி யென்பான். அந்நகரையும், நகர்ப்புறத்தையும் நன்கு தேடுமின்” “கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் கங்கை, யமுனையாறு கட்கு இடையில் நாகராண்ட நாடுகள் இருந்தனவாக மகாபாரதம் விளக்குகிறது. திங்கள் மரபிற்றோன்றிய ஆரிய வரசர்கள் இப்பொழுது தில்லி (Delhi) யிருக்குமிடத்திற்கு அருகில் ஒரு நகரமைக்க ஆங்கிருந்த நாகரைவென்று அப்புறப் படுத்தியதாக அந்நூல் கூறா நிற்கும். கதாநாயகனான அருச்சுனன் தீர்த்த யாத்திரை சென்ற பொழுது உலூபி என்ற நாக கன்னி யொருத்தியையும், மணிபுரத்தை யாண்ட நாக வரசனாகிய சித்திர வாகனன் மகள் சித்திராங்கதையையும் மணந்து கொண்டனன். இவன் பேரன் தட்சகன் என்ற நாகவரசனாத் கொல்லப்பட்டனன். கொலையுண்ட பரீட்சித்தின் மகன் சனமேசயன் நாகருடன் பெரும் போர் விளைத்து அவரை ஆயிரக்கணக்காக மடிவித்தான். மற்றும் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் மகத நாடு நாகரது ஆட்சியிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சியால் விளங்குகிறது. இவ்வமிசத்து ஆறாம் அரசனாகிய அசாத சத்துருவின் காலத்திற்றான் கௌதம புத்தர் தம் புதுக்கோட்பாடுகளைப் போதித்து, நாகர் பெரும்பாலும் அவற்றையே தழுவும்படி செய்தது.” “இலங்கைத் தீவின் சரித்திரமெல்லாம் தொடக்கத்தில் நாகரைப் பற்றியே கூறா நிற்கும். கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இத்தீவின் குடபாலெல்லாம் நாகர் ஆளுகையில் இருந்ததெனவும், அது பற்றியே இதற்கு நாகத்தீவம் என ஓர் பெயர் வழங்கிற்று எனவும் முன்னூல் மேற்கோள்களால் அறியப்படுகிறது. கல்யாணி நகரந்தான் நாகரது தலைநகர். கல்யாணியரசன் தங்கை மகள் கனவடமாறோலையரசனாகிய ஒரு நாகனுக்கு மணஞ் செய்விக்கப் பட்டாள். இம்மலை, கல்யாணிக் கெதிரில் இந்தியக்கரையில் இக்காலத்து இராமேச்சுரத்திற்கு அருகேயுள்ள கந்தமாதனக்குன்றம் போலும். ஆயிரத்தெண்னூறு ஆண்டுகளின் முன் இயற்றப்பட்டு இப்பொழுது அமராவதி முதலிய இடங்களிற் காணப்படும் சிலைகள் பின்புறத்திற் படம் விரிந்த பாம்பின்றலை யுடையனவாய் நாகரைக் குறிப்பனவாகவுள்ளன. அமராவதிப் பாழ்களிலிருந்து எடுக்கப் பட்ட இச்சிலைகளின் சில பின்னங்களைச் சென்னையிற் பொருட் காட்சி மன்றத்திற் காணலாம். இச்சிலைகளில் அரசர்க்கு மூன்று படமும், அவர் மகளிர்க்கு மூன்று படமும், மற்றை நாகர்க்கு ஒற்றைப்படமும் காணப்படும். தொழிற்றிறம் பொருந்த இச்சிலை களையியற்றிய சிற்பிகள், இந்நாகரை அரவின்றன்மை வாய்ந்து மக்களுருவும் பாம்புருவும் கலந்த மெய்யினரென்றே நினைத்தனர் போலும். பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவராயினாரும் இவ்வெண்ணமே கொண்டிருந்தனர். என்னை? தம் காலத்து நாகரை மக்கட்பிறப்பினராய்க் கூறி, தமக்கு முற்பட்ட காலத்தவரைப் பாரின் கீழ்ப்பாதலத்துறைவோராய்க் கூறியிருக்கின்றனர். சோழர் தலைநகராகிய காவிரிப் பூம்பட்டினத்தின் தொன்மையையும், செல்வப்பெருக்கையும் குறித்தற்கு, இளங்கோவடிகள், “நாக நீணகரொடு நாக நாடதனொடு, போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்” என்று கூறுவர். ஆகலின், ஆயிரத்தெண்ணூறாண்டுகளின் முன்பிருந்த தமிழரது நினைப்பில் நாகரினும் தொன்மையான நாடாண்டோர் உண்டென்ற கொள்கையிருந்ததாகக் கொள்ளுதற் கில்லை” என்பன. இவையெல்லாம் சரித்திரவுண்மை நிறைந்த கூற்றுக்கள் என்பதில் ஐயமில்லை. மேற்காட்டிய வற்றிலிருந்து, நாகரென்பார் இந்திய நாட்டிலும், இந்தியாவின் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள தீவுகளிலும் மிகப்பழைய நாளில் வாழ்ந்து வந்த மக்களென்பதும், சூரிய சந்திர குலத்துப் பேரரசராயினாரும் இவ்வகுப்பினருடன் கல்யாணத்தாற் கலந்திருக்கின்றனரென்பதும் இன்னவர் நாகரிகத்தில் மிக மேன்மையுற்றிருந்தவ ரென்பதும் நன்கு வெளியாதல் காண்க. இங்ஙனம் பல்வேறிடங்களில் வாழ்ந்து வந்தவர்கள் நாகர் என்னும் ஒரே பெயரால் வழங்கப்பட்டிருப்பினும், அவரெல்லாம் நாகரிகம் மிக்குடையார் என அறியப்படினும் அவர்களுக்குள் எவ்வகைப் பிரிவும் இல்லையென்றாவது அன்னவர் ஒழுக்கங் களில் ஏற்றத் தாழ்வில்லை யென்றாவது கூறுதலமையாது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த சாதுவன் என்னும் வணிகன் கப்பலேறிப் பொருள் தேடச் செல்லுங்கால் இடையே கப்பலுடையா நிற்க, ஒருவாறு உயிர் பிழைத்து அருகிலுள்ள நாகர்மலையை அடைந்து, அங்குள்ள நக்க சாரணர் என்னும் நாகர்களுக்கு நல்லறிவு கூறி அவர்களைத் தீநெறியினின்றும் நீங்குவித்து மீண்டனன் என மணிமேகலை கூறுவதாலும் இஃதறியலாகும். எனினும், புத்த மதத்தின் மேன்மையை உணர்த்துதற்குப் பிறரைச் சிறிது தாழ்த்துக் கூறியிருப்பதாக இவ்விடத்துக் கருதுதலும் இழுக்கன்று. நாகநாடு, நாகபுரம், நாகர்மலை என்ற இடங்கள் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளன. நாகநாடானது, “கீழ் நில மருங்கின் நாகநாடு” என்றும், “நாக நன்னாட்டு நானூறி யோசனை” என்றும் கூறப் பட்டிருத்தலின் அஃது இந்தியாவின் கிழக்கேயுள்ள ஓர் பெரிய நிலப்பரப்பு என்பது பெறப்படும். ஒருகால் அது நாகப்பட்டினத்தைத் தொடர்ந்து கிழக்கேயிருந்து கடல் கொள்ளப்பட்டிருப்பினும் இருக்கலாம். சோழனொருவனை மணம் புணர்ந்த பீலிவளையின் றந்தையாகிய வளைவணன் என்னும் அரசனால் ஆளப்பட்ட நாகநாடு என்பது முற்கூறிய நாகநாடோ, பிறிதொன்றோ தெரிய வில்லை. நாகபுரம் என்பது தெற்கிலுள்ள தீவாகிய சாவக (ஜாவா) நாட்டின் தலைநகர்; இந்திரன் குலத்தில் வந்தோரான பூமி, சந்திரன், புண்ணியராசன் என்னும் வேந்தர்களுக்கு இருப்பிடமானது. இனி, இதுகாறும் காட்டிப் போந்தவற்றுள் ஒன்றேனும் வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்துள் வாழ்ந் தோரைக் குறிப்பதாகக் கொள்ளுதற்கு இடனின்று. தமிழக மக்களைத் தெரிந்து கோடற்குப் பழைய தமிழ் நூல்களே சிறந்த கருவியாவன. அவற்றுடன் சேர்ந்தே பிறவும் கருவியாத லமையும். ஆகலின் அவற்றைத் துணையாகக்கொண்டு தமிழரென்பார் யாவரென்று பார்ப்போம். திராவிடம் என்ற சொல்லானது தமிழ் எனத்திரிந்த தென்று ஒரு சாராரும், தமிழ் என்னும் சொல்லே திராவிடமாயிற்று என மற்றொரு சாராரும், திராவிடம் என்பது நாட்டின் பெயர், தமிழ் என்பது மொழியின் பெயர் எனப் பிறிதொரு சாராரும் இங்ஙனம் பலபடக் கூறுவர். கனகசபைப் பிள்ளையவர்களோ இருசொல்லையும் இயைபில்லாத வேறு வேறு எனக்கொண்டு திராவிடர் வேறு, தமிழர் வேறு என்பர். அவர், திராவிடர் முன்னும், தமிழர் பின்னுமாக இந்நாட்டிற்கு குடியேறினர் என்பதன்றி, திராவிடராவார் இவர், தமிழராவார் இவர் என விளங்க வுரைத்திலர். கங்கைக் கரையிலுள்ள தமிலித்தி என்ற இடத்திலிருந்து போந்தவர் தமிழர் என்கின்றனர். தமிழர் வடக்கினின்றும் போந்தவரென்பது நிறுவப்படும் பொழுது அவர் கூற்று உண்மையாகலாம். பல்லாயிரம் ஆண்டு களாகத் தமிழர் உறைவிடம் தமிழகம் ஆய தென்னாடேயென்பதும், அவர்கள் ஓரொருகால் வடக்கிலும் சென்று ஆண்மை காட்டியிருக் கின்றன ரென்பதுமே நாம் காணலாகின்ற உண்மைகள். தமிழ் என்னுஞ்சொல் தொன்றுதொட்டு மொழியின் பெயராகவும், நாட்டின் பெயராகவும் வழங்கி வருகின்றது. திராவிடம் என்னுஞ் சொல் பழைய தமிழ் வழக்கிற் காணப்படுவதன்று. திராவிடம் என்பதன் றிரிபு தமிழ் என்பது சிறிதும் பொருத்தமில் கூற்றாம். நிற்க: - இப்பொழுது இந்தியாவிற்குத் தெற்கிலுள்ள இந்துமா கடலானது ஓர் காலத்து ஒரு பெரிய நாடாக விருந்த தென்றும், அந்நாட்டிற்றான் முதன் முதல் மக்கள் தோன்றிப் பின் பல நாடுகட்கும் சென்றனரென்றும் செருமனிய தேயத்து ஆசிரிய ராகிய எக்கல் என்பவர் தமது ஆராய்ச்சியாற் கண்டு கூறுகின்றனர். அங்ஙனம் இருந்து அழிவுற்ற நாட்டினைக் குமரிக்கண்டம் என்றும், இலமூரியா என்றும் பிற்காலத்தார் வழங்குவாராயினர். குமரிக் கண்டம் என்பது வடக்கில் விந்தியமும், தெற்கில் தென்கடலும், கிழக்கில் சாவகத்தீவும், மேற்கில் மடகாசிகர் தீவும் எல்லையாக உடையது என்பர். இஃது அழிவுற்றதை மேற்புல ஆசிரியர் பலர் வலியுறுத்துரைக்கின்றனர். கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனா ரகப்பொருளுரை முதலிய பழைய தமிழ் நூல், உரை களாலும் இவ்வுண்மை புலனாகின்றது. தென்புவியில் முதன் முதற்றோன்றியோரே தமிழரென்பதும், அதன் பின்னர் பல நாடுகட்கும் முறையே குடியேறினரென்பதும் கருதக் கிடக்கின்ற வுண்மைகளாம். முதன் மக்களின் றோற்றத்திற்கு நெடுங்காலம் பின்னரே தமிழகம் அல்லது தமிழ்நாடு என்ற வரையறை ஏற்பட்டிருத்தல் வேண்டும். ‘ சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே' என்று அறிஞர் சுந்தரம் பிள்ளை யவர்கள் கூறியிருப்பதிலிருந்து தமிழ் இந்தியா முழுவதும் வழங்கியதென்பது அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிபு என அறியலாகும். பின் ஒரு காலத்தில் தமிழகமென்பது தென்னிந்தியா முழுதுமாகியிருத்தல் வேண்டும். எனினும் இவை யெல்லாம் காலங்கடந்த செய்திகளாதலின் இவற்றை விடுத்து, வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்து மக்களைக் குறித்து ஈண்டு ஆராய்வோம். புவியானது மலையும், காடும், பள்ளத்தாக்கும், கடற்கரையு மாகப் பகுக்கப்படுதலின் நானிலம் என்று வழங்கப்படுவதாயிற்று. மலையும் காடும் சார்ந்தவிடம் கால வேற்றுமையால் திரிந்து சுரமாதலும் உண்டு. ஆகையால் நிலம் ஐந்து எனவும்படும். இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழ் நூல்கள் கூறா நிற்கும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அவ்வந் நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்து வகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தொன்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக. இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெயர்களால் வழங்கப் பெறுவர். மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம். நெய்தனில மக்கட்கு நுளையர், பரதவர் முதலிய பெயர்கள் உள்ளன. மிகப் பழைய நாளில் தமிழகத்தில் இருந்த மக்கள் இவர்களே. இவர்களுள் குறிஞ்சி நில மக்கள் வலியும், வீரமும் இயல்பிலே மிக்குடையராகலின் ஏனையரை அடக்கியாளும் பெற்றியும் உடையராயினர். இன்னவரே “கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு - முற்றோன்றி மூத்தகுடி” என்று கூறப்படுதலும் காண்க. எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்ச்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர். தமிழருள்ளே பதிணென்குடி யுண்டென்பது உலக வழக்கால் அறியலாவது. இவ்வாற்றால் தமிழகத்தேயிருந்த இவரெல்லாம் தமிழரெனப்பட, தமிழகத்தைச் சூழவிருந்த பல திறத்தாரும் நாகரென வழங்கப் படுவராயினர் என்க. தமிழரும், நாகரென்பாரும் இடத்தால் வேறுபட்டவரேயன்றி, பிறவாற்றானெல்லாம் முற்றிலும் வேறு பட்டவரல்லர். தமிழரது மொழியும், நாகரது மொழியும் இடம் பற்றிச் சிறிது வேற்றுமையடைந்திருந்த தமிழே யன்றிப்பிறிதன்று. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து நாகர்மலையை யடைந்த சாதுவன் என்னும் வாணிகன் அங்கிருந்த நாகர்களோடு அவரது மொழியிற் பேசினான் என மணிமேகலை கூறுவதும் இக்கருத்திற்குச் சார்பாதல் காண்க. தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் தமிழினின்று உண்டாயவை என்னுங்கொள்கை அங்கெல்லாம் முதலில் வழங்கியமொழி தமிழ் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தமிழானது இங்ஙனம் வெவ்வேறு மொழியைப் பிறப்பித்து விட்டுத் தான் ஓர் எல்லையுட் பொருந்தி நிற்க, பின்பு அதன் கண்ணும் வேற்றுமை உண்டாகிச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடுகளாயிற்று. நெடுங்காலஞ் சென்றபின் ஒரு புறத்திருந்த கொடுந்தமிழ் வேறு மொழிகளாக மாறி மலையாளம் எனப்பட்டது. ஐந்திணை மக்களுள்ளே சிலரைத் திராவிடரென்றும், சிலரை நாகரென்றும் ஒரு சாரார் கூறுவது எத்துணையும் பொருந்துவதன்று. “நாகரில் மறவர், எயினர், ஒளியர், ஓவியர், அருவாளர், பரதவர் என்ற பல கிளைகளுண்டு; இக்கிளைகளுள் மிக்க வன்மையும், போர்த்திறனு முடையராய்த் தமிழர்களிடத்திற் றீராப் பகை கொண்டிருந்தவர் மறவரே” என இவ்வாறு கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவதன் காரணம் நமக்குப் புலப்படவில்லை. ஒளியர், அருவாளர், ஓவியர் என்போர் சில குறுநில மன்னரெனப் பட்டினப்பாலை முதலியவற்றால் அறியலாவது. அவர்களை நாகரென்று கூறிற் கூறுக. ஒருவாற்றால் அவரும் தமிழரே. மறவர், எயினர், பரதவர், என்போரை நாகரென்று கூறுவதும், மறவர் தமிழருடன் பகைமை கொண்டிருந்தன ரென்பதும் எங்ஙனம் பொருந்தும்? இவ்வாற்றால் தமிழர், நாகர் என்ற இருபாலோரும் தமிழகத்திலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பழங்காலந் தொட்டிருந்து வந்த தொன்முது மக்கள் என்பது கடைப்பிடிக்க. எனவே, இடைக்காலத்தே இந்நாட்டிற் குடியேறியவர் ஆரிய ரென்பதும் ஈண்டே அறியற்பாலது. ஆரியரின் வருகையைப் பற்றியும் சிறிது கூறுதும். ஆரியராவார்ஆதிகாலத்தில் நடு ஆசியாவில் வசித்தவ ரென்பதும், அவர்கள் அங்கிருந்து இந்தியா, பெருசியா, ஐரோப்பா முதலிய இடங்கட்குப் பிரிந்து போயினரென்பதும் சரித்திரக்காரர் கொள்கை. ஆரியர் முதலில் வடபெருங்கடற்கரையில் அதாவது வடதுருவப் பக்கத்தில் வசித்தவரென உலகமானிய பாலகங்காதர திலகரால் முடிவு செய்யப் பெற்றுள்ளது. இவ்விரு கொள்கையும் ஒன்றாக அடக்கிக்கொள்ளினும், ஆரியரது தோற்றம் பற்றி முற்றிலும் வேறுபட்ட இருகொள்கைகள் முன்னிற்கின்றன. இந்தியாவிற்குத் தெற்கிலிருந்து ஒரு காலத்தில் அழிவெய்திய குமரிகண்டத்தில் மக்கள் முதற்கட்டோன்றின ரென்பது ஒன்று. இக்கொள்கையின்படி தெற்கே தோன்றி முதன் முதலில் வடக்கே சென்றுவிட்டவர் ஆரியரென்னல் வேண்டும். மத்திய ஆசியாவிலோ வடதுருவப் பக்கத்திலோ முதலிற்றோன்றின ரென்பது மற்றொன்று. இவற்றுள் யாதேனும் ஒன்று உண்மையோ? அன்றி இரண்டும் உண்மையோ? எவ்வாறாயினும் ஆரியர் வடக்கிலிருந்து இந்தியாவிற் குடியேறிய வரென்று கொள்ளப்படுகிறது. ஆரியர் பண்டு தொட்டு இந்தியாவில் இருந்தோரேயன்றிப் பிற நாட்டிலிருந்து குடியேறியவரல்லர் என வாதிப்பாரும் உண்டு. எனினும் அவர் தென்னிந்தியாவில் இடைக் காலத்திற் குடியேறியவரென்பதை அன்றென மறுப்பார் யாரும் இலர். முதலில் அவர்களிடத்தும் சாதிப் பாகுபாடு இருந்த தில்லை யெனவும், பின்னரே பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற வருணப் பாகுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர் எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வருணம் என்பது நிறத்தைப் பற்றி உண்டாய பிரிவு என ஒரு சாரார் கூறுகின்றனர். மக்களின் குண கர்மங்களுக்கு ஏற்றபடி நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டனவென்று கண்ணபிரான் கூறியதாகப் பகவத்கீதை உரைக் கின்றது. இக்காலத்துப் பெரியோர்களாகிய காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் முறையே வருணப் பாகுபாடு அறிவு நூற் கொள்கையோடு பொருந்தியது (Scientific)எனவும், பொருந்தாது (Unscientific) எனவும் வேறுபடக் கருதுகின்றனரெனத் தெரிகிறது. எங்ஙனமாயினும் ஆதியில் இத்தகைய பாகுபாடுகளை யேற்படுத்தி நெடுங்காலம் நிலவச் செய்தவர்கள் பேரறிவுடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. உலகியல் முட்டின்றி நன்கு நடைபெறுதற்கு இம்முறை இன்றியமையாததென அன்னார் கருதினர் போலும்? மிக ஏற்றத் தாழ்வான சட்டதிட்டங்கள் நீண்ட காலஞ்சென்ற பின்பே கற்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இப்பிரிவு ஏற்பட்ட பின்னும் ஒரு வருணத்தான் மற்றொரு வருணத்திற் கல்யாணஞ் செய்து கொள்ளுதலும் இயல்பாகவே இருந்தது. சூத்திரன் ஒழுக்கத்திற் சிறந்து பிராமணன் ஆவதும், ஒழுக்கத்தின் வழுவிய பிராமணன் சூத்திரனாவதும் அப்பொழுது இயற்கையே. ஆரியர் இங்ஙனம் வடக்கிலிருக்கும் பொழுது தமிழக மானது நாகரிகத்தில் ஆரிய நாட்டினும் விஞ்சியேயிருந்தது. ஆரியர் தமிழருடன் மாறுபாட்டுணர்ச்சி கொண்டு எழுதிய நூல்களிலும் தமிழர் நாகரிகம் மிகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. “ஆரியர் வருதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிகமடைந்து விட்டன ரென்பதை, ஆரியத்தினுதவியின்றியே பெருக்கமாய்க் கிடக்கும் தமிழ்ச் சொற்களாலே நினைத்தவற்றைத் தெளியக் கூறும்படி யிருப்பதே விளக்கும். உண்மையில் நிலைபெற்ற பழைய தமிழ் நூல்களில் இசை, இலக்கணம்,சோதிடம், தத்துவம் முதலிய பயிற்சிகளுக்கு வேண்டிய சொற்கள் தமிழ்ச் சொற் களாகவே காணப்படுகின்றன. ஆகையால் பிராமணரோ அல்லது மற்றை ஆரியர்களோ வருதற்கு முன்னரே இக்கல்விகள் போற்றி வளர்க்கப்பட்டன என்பது திண்ணம்.” என்று கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையாகும். தமிழகத்தின் நாகரிகமும், செல்வப் பெருக்கு மன்றோ ஆரிய மக்கள் அதன்கட் குடிப்புகும் படியான பேரவாவை யெழுப்பிவிட்டன. ஆரியர் எப்பொழுது தமிழகத்திற் குடிப்புகுந்தனரென இப்பொழுது அறுதியிட்டுரைக்கக் கூடவில்லை. எனினும் நெடுங்காலத்தின் முன்பே புகுந்துவிட்டனரென்பதற்குத் தமிழ்நூல்களே சான்று பகரும். முதலில் பிராமணர் அல்லது நோன்பிகளே வந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தெய்வத் தலங்களையும், தீர்த்தங்களையும் நோக்கி அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதே அன்னாரது தொழில். இப்பொழுதும் தண்டு, கமண்டலம் முதலியன கைக்கொண்டு இராமேச்சுரம் முதலிய வற்றிற்குச் சென்று வருகிற வடநாட்டுப் பிராமணரை நாம் பார்க் கின்றோம். பண்டும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தாராவர். பின்பு அவர்கள் தமிழ் வேந்தரையடுத்துப் பல வழியாலும் அவர்களைத் தம் வயமாக்கி, தம் இனத்தவரை ஒவ்வொரு கூட்டமாகக் குடியேறும்படி செய்து கொண்டனர். தமிழரோ பரதேசத்தினரை விருந்தேற்றுபசரிக்கும் பெருமாண்பு இயற்கையில் வாய்ந்தவர். அதனோடு, சிறிது அறிவு முதலியன வாய்ந்தாரைக் கண்டால் அவர் எப்படி யொழுகுவரென்பது கூறவேண்டுவதின்று. இவ்வாறு ஆரிய மக்கள் தமிழ் வேந்தருடன் கலந்து நட்புச் செய்து கொண்டு, அவருதவியால் தமிழ் நாட்டிலும் நால்வருணப் பாகுபாட்டினை யேற்படுத்தினர். ஒரு நாட்டினர் வேறு நாட்டிற் சென்று செல்வாக்குப் பெற்றபொழுதில் தமது கொள்கையை அங்கும் நிலை நாட்ட முயல்வது இயற்கைதானே. தமிழகத்தில் அறிவரும், அரசரும், வணிகரும், உழவரும், முன்பே இயல்பாக இருந்தனரெனினும், அன்னார் வேறு வேறு வகுப்பினரென்றாவது, அவர்க்கு இன்னின்ன தொழில்களே உரிய வென்றாவது வரையறை இருக்கவில்லை. ஆரிய மக்களே வரையறை யேற்படுத்தினர். எனினும் ஆரிய நால்வருணத்திற்கும், தமிழ் நாற்குலத்திற்கும் வேற்றுமை பெரிதாகும். ஆரியரில் நாலாம் வருணத்தவர் சூத்திரர் ஆவர்; மேல் மூன்று வருணத்தாரும் ஏவியன செய்தலே அவரது தொழில். தமிழரில் நாலாம் குலத்தவர் வேளாளர் ஆவர்; அவரது தொழில் உழவு அல்லது வேளாண்மை ஆகும். ‘ வேளாண் மாந்தர்க் குழுதூணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி' என்று தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழரில் உழவராயுள்ளோர் பெரிதும் மதிப்பிற்குரியரென்பது துணிபு. ஆரியப் பிராமணரும் தமிழரசரும் சேர்ந்து இங்ஙனம் வரையறை ஏற்படுத்தினராயினும் தமிழரிற் பெரும்பகுதியினர் இதற்குக் கட்டுப்படவில்லை; இற்றைக்கும் கட்டுப்படாமலிருக்கின்றனர். தமிழர் யாவரும் அவ்வரையறையை ஏற்றுக்கொண்டிருப்பின், தொல்காப்பியர் `ஆயர் வேட்டுவர்’ என்று சூத்திரம் செய்திருத்தல் அமையாது; பழந்தமிழ் நூல்களிலெல்லாம் ஐந்திணை மக்களைத்திணைப்பெயராற் கூறுதல் பொருந்தாது; தொன்றுதொட்டு இற்றை நாள்வரை நான்கிலடங்காத வேறு வேறு பெயர்களால் அவர்கள் கூறப்பட்டு வருதலே நாற்குவ வரையறைக்கு அன்னவர் கட்டுப்படவில்லையென்பதை நன்கு விளக்கும். இது குறித்துக் கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவதும் அறிந்து கொள்ளத் தக்கது. அவர் சொல்வது:- “கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளில் தொல்காப்பியர் என்பவர் தமிழில் இலக்கணஞ் செய்து, தம் பெயரையே அந்நூலுக்கிட்டுத் தொல்காப்பியம் என வழங்கினர். அவர், அறிவர் அல்லது தமிழ் முனிவரைப் பற்றிப் பல இடங்களில் குறித்திருக்கின்றனர். ஆனால், மரபியலில், அறிவரைப்பற்றி ஒன்றுஞ் சொல்லாது விடுத்து, பூணூல் தரித்த பார்ப்பனரை முதல் வகுப்பினராகக் குறிக்கின்றார். அரசரை இரண்டாவது வகுப்பினராகவும், வணிகரை மூன்றாவது வகுப்பினராகவும் கூறுகின்றார். பின்பு, வேளாளரை நான்காவது வகுப்பினராகக் கொண்டு அவர்க்கு உழுதலைத் தவிர வேறு தொழிலில்லை யென்று சொல்லுகிறார். தமிழரை வருணபேதத்தில் தமக்குக் கீழாக்கப் பிராமணர் செய்த முதல் முயற்சி இதுதான். தமிழகத்தில் சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடு இல்லாதபொழுது தமிழரின் மேம்பட அன்னார்க்குக் கூடவில்லை. தொல்காப்பியர் ஆயரையும், வேட்டுவரையும் பற்றிக் கூறுகின்றார். ஆனால் வருணப் பாகு பாட்டிற்கு ஒத்து வராமையால் அவர்களையும், மறவர், வளையர், என்போரையும் அவர் மரபியலில் குறிக்கக் கூடவில்லை" என்பது. பின்பு தமிழ் வேந்தர்கள் வேள்வி யியற்றுமாறு கற்பிக்கப் பட்டு, எண்ணிறந்த வேள்விகளை யியற்றினர். அவ்வேள்விகளி லெல்லாம் பிராமணர் ஆசிரியராயிருந்து வந்தமையின் அவரது பெருமை பெரிதும் மிகுவதாயிற்று. ஆரியரும் தமிழரும் மதக் கோட்பாட்டில் ஒருவாற்றால் ஒன்றுபட்டனர். இந்திய நாடு முழுதுமுள்ள ஆரியரும் தமிழருமாகிய அனைவர்க்கும் ஒரே வேதம் மத நூலாயிற்று. தமிழ் நாட்டிலுள்ளாரில் பிராமணரை ஆரியரென்றும், ஏனையரைத் திராவிடரென்றும் பிரித்தலும் பொருந்தாது. ஆரிய நாட்டிலிருந்து பிராமணர் மட்டும் தமிழகத்திற் குடியேறின ரென்பது பொருந்தாமையின் தமிழருள்ளும் ஆரியர் கலந்திருக்கின்றனரென்பது உண்மை. பிராமணரும் தமிழருடன் வதுவையாற் கலந்து விட்டனர். ஆகலின்அவரை வேறு பிரிப்ப தென்பது எங்ஙனம் பொருந்தும்? திருவாளர் பி. சீனிவாசையங்கார் (எம்.ஏ., எல்.டி.) அவர்கள் பின்வருமாறு கூறுவர் : “இப்போழ்து இந்தியாவில் இருக்கும் ‘ஆரியர்’ ‘தமிழர்’ என்பாரைப்பற்றிப் பார்க்குங்கால் அவர்கள் ‘ஆரியத்தமிழர்’ ‘தமிழஆரியர்’ என்னும்படி ஒன்றுபட்டுக் கலந்து கொண்டமையால் தனி ஆரியராயினும் தனித் தமிழராயினும் காண்பதரிது. வடபாலிருந்து முன்வந்த ஆரியர் என்னும் ஆற்று வெள்ளம் இந்தியாவென்னும் தனித்தமிழ் நாட்டிலுள்ள தமிழரென்னும் பெருங்கடலுட்புக்க பின்னர் ஆரியர் தமிழரேயாயினர் என்று கூறுதலே சால்புடைத்து” பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து, பழக்க வழக்கங்களில் ஒன்றுதலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வருவோர்க்குள் காலதேச இயல்புக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டாயினும், அதனை நீடிக்க விடாது பிரிவின் காரணங் களை யறிந்து விலக்கி, ஒற்றுமையாய் வாழ்தலே கடனாம். பழைய தமிழ்ச் சங்க நாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டு மதித்துப்போற்றி வந்திருக் கின்றன ரென்பதும், மற்றும் சிறிது பிற்காலத்திருந்த திருஞான சம்பந்தர் முதலிய பெரியாரெல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றன ரென்பதும் அறியற் பாலவாம். சமய குரவர் முதலாயினார் பெருமையினையும், அவர்கள் செய்து வைத்துள்ள உதவிகளையும் தமிழ் மக்கள் சிறிதும் மறப்பாரல்லர். அங்கெல்லாம் வகுப்பு வேற்றுமையினை யேற்றுவோர் அறிவிலிகளேயாவர். உண்மைத் தமிழராயினாரும், உண்மை அறிவுடையாரும் அவர்களை என்றென்றும் தெய்வ மாகக் கொண்டு போற்றுவர் என்க. இனி, இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர் களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயர்களாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே. ஐயர் என்பது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது. கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறு குலத்துப் பெரியார்களையும் சிறப்புப் பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும், ‘ சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்' என்ற விதிப்படி, அமர முனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறை மாறி வரலாயின. சிறப்புப் பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவனவல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்ப வில்லையென்பது போதரும்.  இரண்டாம் அதிகாரம் நாக பல்லவ சோழரும், கள்ளரும். இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவ ரென்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம். சங்க நாளிலே திருவேங்கடத்தையாண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப்படு கின்றான். அவன் வீரத்தினும், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. பொய்யடிமையில்லாத புலவராகிய சங்கத்துச் சான்றோருள், கபில பரண நக்கீரரோ டொப்பப் பெருமை வாய்ந்த கல்லாடனாரும், மாமூலனாரும் பல பாட்டுக் களால் அவனைப் பாடியிருப்ப தொன்றே அவனது பெருமையை நன்கு புலப்படுத்தா நிற்கும். அகநானூற்றில், ' கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்' ' புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து' ' புல்லி நன்னாட் டும்பர்' ' பொய்யா நல்லிசை மாவண் புல்லி' ' நெடுமொழிப் புல்லி' என மாமூலனாரும், ' புல்லி - வியன்றலை நன்னாட்டு வேங்கடம்' ' மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்' எனக் கல்லாடனாரும் பாடியிருக்கின்றனர். நற்றிணையில், ' கடுமான் புல்லிய காடிறந்தோரே' என்றார் மாமூலனார். அதனுரை, `கடிய குதிரையையுடைய கள்வர் கோமான் புல்லியென் பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின் கண்ணே சென்ற நமது காதலர்' - என்பது. புறநானூற்றிலே, கல்லாடனார், அம்பர்கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்தும், ' காவிரி கனையுந் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி யம்பர் கிழவோன் நல்லருவந்தை வாழியர் புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத் துறையினும் பலவே' எனப் புல்லியது வேங்கடத்தைச் சிறப்பித்தலினாலே அவர் தம் உள்ளத்தை அத்தோன்றலுக்கே ஒப்பித்துவிட்டனரென விளங்குகிறது. அகநானூற்றிலே, ' கள்வர் பெருமகன் - தென்னன்' என, மதுரைக் கணக்காயனார் ஒரு பாண்டியனைக் குறித்துள்ளார். இவ்வாற்றால், சங்கநாளிலே அதாவது ஏறக்குறைய ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு `கள்வர்' என்ற பெயர் வழக்கு இருந்ததென்பதும், கள்வர் குலத்தவர் அரசரா யிருந்தன ரென்பதும் வெளியாகின்றன. அகநானூற்றில், ' வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழு மேற்றரு நெடுங் கோட் டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்' என்று வேங்கட மலையானது தொண்டையருடையதாகக் கூறப் படுதலின், தொண்டையர், கள்வர் என்ற பெயர்கள் ஒரு வகுப் பினர்க்கு உரியன என்பதும், பண்டை நாளிலே வேங்கடமும், அதைச் சார்ந்த நாடும் அன்னவரது ஆட்சியிலிருந்தன வென்பதும் போதரும். இப்பொழுதும் தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்க்கே வழங்குவதும், தொண்டைமான் என்னும் பட்டமுடைய மாட்சிமிக்க புதுக்கோட்டை அரசர் கள்ளர் வகுப்பினராயிருப்பதும் இங்கு அறியற்பாலன. வேங்கடமலையிலிருந்த ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ் வகுப்பினனேயாவன். இவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் பாடிய பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. அவர் பாடிய, ' எந்தை வாழி யாதனுங்க என்னெஞ்சந் திறப்போர் நிற்காண்குவரே நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென்' என்னும் அருமைப்பாட்டை நோக்குங்கால் யாவர் நெஞ்சுதான் உருகாதிருக்கும்? சங்க நாளில் விளங்கிய அரசருள்ளும் வள்ளி யோருள்ளும் பலர் இவ்வகுப்பினராகல் வேண்டும் எனினும் இவர்கட்குச் சிறப்பானுரிய பெயரானும் இடத்தானும் வெளிப் படத் தோன்றினோரையே இங்கே குறிப்பிடலாயிற்று. புல்லியைப் பற்றி எடுத்துக்காட்டிய ஒன்பது மேற்கோள்களில் ஒன்றிலேதான் `கள்வர் கோமான்' என்ற பெயர் வந்துளது. அஃதும் இல்லையேல் அவனை இவ்வகுப்பினன் என அறிந்துகொள்வது எங்ஙனம்? இவ்வாற்றால் அறிந்து கொள்ளலாகாத பலர் இருந்திலர் என்று எங்ஙனம் கூற முடியும்? இனி, இவர்களில் 'முத்தரையர்' என்னும் பெயருடையராய் வள்ளன்மை மிக்க ஓர் குழுவினர் பழைய நாளில் இருந்திருக் கின்றனர். நாலடியாரில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவை, ' பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருணைச் சோறார்வர்' (200) ' நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றிரவாதார்' (296) என்பன இவற்றிலிருந்து, இவர்கள் யாவர்க்கும் நறிய உணவளித்துப் போற்றிவந்தவ ரென்பதும், எல்லையிகந்த செல்வமுடையா ரென்பதும் விளங்கா நிற்கும். விஜயாலயன் என்னும் சோழ மன்னன் கி.பி.849-ல் தஞ்சையைப் பிடித்துச் சோழராட்சியை நிலைநிறுத்துமுன், தஞ்சையில் மன்னராயிருந்தோர் முத்தரையரே என்பர் சரித்திரக்காரர். இப்பொழுது `முத்திரியர்' என வழங்கும் வேறு வகுப்பினர் இருப்பினும், முன் குறிக்கப்பட்டவர் கள்ளர் வகுப்பினரே என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. செந்தலைக் கல்வெட்டில் இவர்களில் ஒருவனைக் குறித்து, `வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன், பெரும் பிடுகு முத்தரையன்' என்று கூறியிருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட தூண்கள், முற்குறித்த பட்டங்களையுடைய இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையனால் திருக்காட்டுப் பள்ளியின் மேற்புறமுள்ள நியமம் என்னும் ஊரிலே கட்டப் பட்ட பிடாரி கோயிலிலிருந்து இடித்துக் கொண்டு வரப் பெற்றவை. கல்வெட்டில் குறித்திருப்பதற்கேற்ப, வல்லத்தரசர், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர். கல்வெட்டுத் தோன்றிய நியமம் என்னும் ஊரிலும், அதனைச் சூழ்ந்த வூர்களிலும் இருப்போரும் கள்ளர் வகுப்பினரே. அன்றியும் கல்வெட்டில், `கள்வர்' என்ற பெயர் வெளிப்படக் கூறியிருப்பதே சான்றாகும். திருவாளர் மு.இராகவையங்கார் அவர்கள் முத்தரையரைப் பற்றிக் கூறி யிருப்பதும் இங்கு அறியற்பாலது. அது, 'நாலடியாரில் முத்தரையரைப் பற்றி இரண்டிடங்களில் குறிப்பிக்கப்பட்டுள்ளது. இன்னோர், தென்னாட்டில் 7, 8-ம் நூற்றாண்டுகளிற் பிரபலம் பெற்ற கள்வர் மரபினராவர். இவ்வமிசத்தவர் சங்க காலத்திலேயே சிற்றரசராக விளங்கியவ ரென்பது, கள்வர் கோமான் புல்லி, கள்வர் கோமான் தென்னவன் என்னும் பெயர்கள் அகநானூற்றுட் பயில்வதனால் அறியப்படும்' என்பது. (செந்தமிழ் தொகுதி 13, பக்கம்-273.) இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும். இனி, பழைய தமிழர் முதலானோரில் கள்ளர் குலத்தவர் எவ்வகுப்பிலடங்குவர் என்பது பற்றி வேறுபட்ட கொள்கைகள் உண்டு. இவர்களை நாகர் வகுப்பினரெனச் சிலரும், சோழர் வகுப்பினரெனச் சிலரும், பல்லவர் வகுப்பினரெனச் சிலரும் கூறாநிற்பர். கனகசபைப் பிள்ளையவர்கள் நாகர் வகுப்பின ரெனக் கூறுகின்றனர். இராமநாதப்புரத்தரசர், மாட்சிமிக்க பா. இராஜராஜேசுவர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் தலைவர்களாக எழுந் தருளிக் கூறிய விரிவுரையில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள்: 'சோழர்கட்கு முன் இப்போதுள்ள மறவர், கள்ளர் இச்சாதியாரின் முன்னோர்கள் நாகர் என்ற பெயரோடு இச்சோழ ராச்சியத்தை ஆட்சி புரிந்ததாகவும், அவர்களின் தலை நகராகத் தஞ்சை, திருக்குடந்தை, காவிரிப்பூம்பட்டினம் இவ்விடங் களிருந்தனவாகவும் சரித்திர வாயிலாக வெளியாகிறது.' மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர் : 'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.' திருவாளர் ம.சீனிவாசையங்கார் அவர்கள், `சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர். (செந்தமிழ், தொகுதி-2, பக்கம்-175) வின்சன் ஏ.ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர் `புராதன இந்திய சரித்திரம்' என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைத்துக் கூறுகின்றனர். அவருரைப்பது, "பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? என்ற கேள்வி களுக்கு இப்பொழுது தக்க விடை யளித்தல் இயலாது.'பல்லவர்' என்ற பெயர் 'பகல்வா' என்னும் பெயருடன் பெரும்பாலும் ஒத்திருப்பதால், பல்லவர் என்பதும் பகல்வா என்பதும் ஒரே பொருளன என்றும், ஆகவே, தென்னாட்டில் காஞ்சியிலாண்ட அரசர் குடி பெருசியா நாட்டில் தோன்றியதாக வேண்டும் என்றும் டாக்டர் பிளீட்டும், ஏனைய ஆசிரியர்களும் நினைக் கின்றனர். இந்நூலின் முதற் பதிப்பிலும் இக்கொள்கை சரியானதா யிருக்கலாமென எழுத நேர்ந்தது. ஆனால் இப்பொழுதைய ஆராய்ச்சி இக்கொள்கை அவ்வளவு சரியானதன் றென்று காட்டி விட்டது. சென்னை மாகாணத்தின் வடபாகத்தில் கிருட்டிணா, கோதாவரி யாறுகட்கு இடையேயிருந்த வெங்கி நாட்டில் வசித்த ஒரு வகுப்பினரெனச் சொல்வதே ஏறக்குறையச் சரியான கொள்கை யெனலாம். தமிழ் மன்னர்களுக்கும் பல்லவருக்கும் இடைவிடாப் பகைமையேற்பட்டிருந்ததும், பல்லவரது ஆட்சிக்குட்பட்ட நிலம் இன்னதென இன்று வரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதும் பல்லவர் தமிழரல்லர் என்பதனைக்காட்டி நிற்கின்றன. ஆகவே, பல்லவர் தென்னாட்டு மன்னரை வென்றே தமது ஆட்சியைத் தமிழ் நாட்டில் நிலைநிறுத்தி யிருத்தல் வேண்டும். மகாராட்டியரைப் போன்றே பல்லவரும் ஒரு கொள்ளைக் கூட்டத்தார், அல்லது வகுப்பினர் என்றும், அவர்களைப் போன்றே தங்களது வலிமையால் சோணாடு முதலிய நாடுகளைத் தமது ஆட்சிக் குட்படுத்தினரென்றும் கொள்வோமாயின் இதுவரையிற் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதனை உறுதிப்படுத்துமென்றே நினைக்கின்றேன். கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்கள் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பினரென்றும், ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திரப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள் தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து, மகாராட்டியர் சௌத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒரு வரியும் வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் என்று நம்ப வேண்டியிருக்கிறது. கள்ளர், மறவர் இவர்களுடன் பள்ளி வகுப்பாரும், உழுது பயிரிடும் வேளாளரிற் சிலரும் தாங்கள் பல்லவரைச் சேர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்றனர். 1பல்லவரோடு கொள்ளைக் கூட்டத்தின ரென்று கூறப்படும் இவர்களும் தமிழருக்கு முன்பே இந்நாட்டில் வசித்து வந்த ஒரு வகுப்பாரைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம்.. இனி, மேல் எடுத்துக்காட்டிய கொள்கை ஒவ்வொன்றிலும் எத்துணை உண்மை யிருக்கின்ற தென்பது பின் ஆராய்ச்சியால் அறிந்து கொள்ளலாகும். கள்ளர் நாகரினத்தவர் என்னுங் கொள்கையை முதற்கண் ஆராய்வோம். நாகரின் வரலாறும், பெருமையும் முன்னரே கூறியுள்ளோம். அவர்கள் கைத்தொழில் முதலியவற்றில் எவ்வளவு மேன்மை யடைந்திருந்தன ரென்பது பின்வரும் கனகசபைப் பிள்ளையவர்கள் கூற்றால் நன்கு விளங்கும்.: "நாகர்கள் பல நுட்பத் தொழில்களில் தெளிவடைந் திருந்ததோடு, நெய்தற் றொழிலில் மிக்க திறமையடைந்திருந்தனர். கலிங்க நாட்டிலிருந்த நாகர் இத்தொழிலில் அடைந்திருந்த புகழ் பற்றிக் கலிங்கம் என்ற சொல்லே தமிழில் துணியை உணர்த்துவ தாயிற்று. பாண்டி நாட்டின் கீழைக் கரையிலிருந்த நாகர் இத்தொழிலில் மிக மேம்பாடெய்தி, துணியும், மசிலினும் பெருக ஏற்றுமதி செய்தனர். இவர்கள் நெய்த நுட்ப இழைகளாலான ஆடைகள் தமிழர்களால் மிக மதிக்கப்பட்டும், பிற நாடுகளில் நம்பத்தகாத விலைக்கு விற்கப்பட்டும் வந்தன. நாகரிடமிருந்து தான் ஆரியர் எழுதும் வித்தையைக் கற்றுக் கொண்டனர். அது பற்றி இற்றைக்கும் வடமொழியெழுத்திற்குத் தேவநாகரி என்ற பெயர் வழங்குகிறது." நாகர் குலத்து மகளிர் பேரழகு வாய்ந்தோரென மணிமேகலை யாலும், பிற நூல்களாலும்அறியப்படுகின்றது. அவர்கள் சிவபக்தியிலும் மேம்பட்டவரென்பது நாககன்னியர் சிவபெருமானைப் பூசித்து வரம் பெற்றனரென்று உறையூர்ப் புராணம், பழைய திருவானைக்காப்புராணம், செவ்வந்திப் புராணம் முதலியன கூறுதல் கொண்டு அறியலாகும். நாகர் வீரத்திலும் மேம்பட்டவரென்பது, சோழ நாகர் என்பார் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழர்களை அப்பதியினின்றும் போக்கிச் சோழ ராட்சியைக் கைப்பற்றிக் கொண்டனரென்று பழைய ஐரோப்பிய ஆசிரியரான தாலமி என்பவர் கூறுவதால் அறிய லாகும். சோழ நாகரென்பார் சோழரும், நாகரும் வரைவாற் கலந்ததிற் பிறந்த வழிபோலும் என்று கனகசபைப் பிள்ளையவர்கள் கருதுகின்றனர். பழைய நாளில் சோழர்கள் நாகர் குலத்தில் கல்யாணஞ் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தேற்றம். நெடுமுடிக்கிள்ளி யென்ற சோழவேந்தன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகள் பீலிவளையை மணம்புரிந்த செய்தி மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கிறது. தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப் படையுள் கீழ்வரும் பகுதி அவனது பிறப்பு வரலாற்றை யுணர்த்து கின்றது. ' இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பல் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்குதானை மூவ ருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோற் பல்வேற் றிரையன்.' நச்சினார்க்கினியர் இதிலுள்ள சொற்களைக் கொண்டு கூட்டி 'மூவேந்தருள்ளும் தலைமை வாய்ந்தோனும், திருமாலின் பின் வந்தோனுமாகிய சோழன் குடியிற் பிறந்தோன், கடலின் திரை கொண்டு வந்தமையால் திரையன் என்னும் பெயரை யுடையவன்' என்று பொருள் கூறி, 'என்றதனால் நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என் செய்வே னென்ற பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற,அவளும் புதல்வனை அங்ஙனம் வர விடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்' என ஓர் வரலாறும் குறித்துள்ளார். நெடுமுடிக்கிள்ளிக்கு நாகர் மகளாய பீலிவளை வயிற்றுப் பிறந்தோனே இவ்விளந்திரையன் என்றும் சிலர் கூறுவர். அவர் நச்சினார்க்கினியர் எழுதியதை உறுதியாக மேற்கொண்டே அங்ஙனம் கூறுவர். நச்சினார்க்கினியரும், மணிமேகலையில் 'புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள்' என்று சாரணர் சோழனுக்குக் கூறியதாகவுள்ள தொடரை யுட்கொண்டோ, அதுபற்றி வழங்கி வந்த கதையை மேற்கொண்டோ அங்ஙனம் எழுதினாராகல் வேண்டும். அவர், `தொண்டையை அடையாள மாகக் கட்டிவிட' என்றமையின், தொண்டைமான் என்ற பெயரின் காரணமும் அதுவென நினைந்தாராகல் வேண்டும். இனி, பெரும்பாணாற்றுப் படையடிகட்கு அவர் கூறியவுரை பொருந்தாதென்பது காட்டுதும். 'முந்நீர் வண்ணன் புறங் கடையந்நீர்த் - திரைதரு மரபி னுரவோனும்பல்' என்பதற்கு, 'கடல்வண்ணனாகிய திருமாலின் பின்வந்தோனும், கடல்நீர்த் திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனும் ஆகிய சோழனது வழித்தோன்றல்' என்பதே நேரிய பொருளாகும். நச்சினார்க்கினியர், இளந்திரையன் திரையால் தரப்பட்டவனாதல் வேண்டுமென்னுங் கொள்கையுடையராய், அதற்கேற்பச் சொற் களை மாற்றி நலிந்து பொருள் கூறினர். திரையன் என்பது சோழனுக்குரியதோர் பெயரெனக் கொள்ள வேண்டும். கனகசபைப் பிள்ளையவர்களும், திரையர் என்னும் பெயரைச் சோழர்க்கே யுரியதாக்குகின்றனர். தொண்டைமான் என்னும் பெயரும் தொண்டையை அடையாளமாகக் கட்டிவிட்டமையால் இளந்திரையனுக்கு வந்ததென்பது பொருந்தாது. அகநானுற்றில் 'வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் - வேங்கடம்'என வந்திருப்பது முன்னரே காட்டியுள்ளாம். பெரும்பாணாற்றிலேயே இளந்திரையன் 'தொண்டையோர் மருகன்' என்று கூறப்படுகின்றான். இஃதொன்றுமே இளந்திரையனுக்கு முன்பே தொண்டையர் என்னும் வழக்குண்மை நிறுத்தப் போதியதாகும். இவ்வாற்றால் தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலிய வற்றைத் தன்னகத்தேயுடையதொரு நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் வகுப்பினரைக் குறிப்பதென்பதே தேற்றம். இளந்திரையானவன், சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும், அவனே தாய்வழி யுரிமையால் தொண்டை நாட்டுக்கு அரசராயினானென்றும், தாய் வழியாற் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியால் திரையன் என்னும் பெயரும் அவனுக்கு எய்தினவென்றும் கோடல் வேண்டும். இனி, இத்தொண்டையரும் காஞ்சியிலிருந்து அரசு புரிந்திருக் கின்றனர். பல்லவரும் காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்தியுளர். ஆகலின் இவ்விருவரும் வெவ்வேறு வகுப்பினரா? ஒரே வகுப்பினரா? என ஆராய வேண்டியிருக்கிறது. பல்லவர் வடக்கே பெருசியாவி லிருந்து வந்தவரென சரித்திரக்காரர்கள் சொல்லி வந்திருக் கின்றனர். இப்பொழுது சிலர் அக்கொள்கையை மாற்றியும் வருகின்றனர். இவர்கள் பல்லவர் தொன்றுதொட்டு இந்நாட்டவரே யெனத் துணிந்துரையாவிடினும், இந்நாட்டினராக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். தொண்டைமான் என்னும் பெயர் கொடி பற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப் பொருளதே யென்கின்றனர். காஞ்சியிலாண்ட தொண்டைமான் இளந்திரையனையும் சோழன் கரிகாலனையும் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பாடியிருத்தலால் இளந்திரையன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்தோன் எனத் தெரிதலானும், அதற்கு முன்பு பல்லவர் செய்தி யொன்றும் கேட்கப் படாமையானும் இளந்திரையனது வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள், பல்லவராயினார் சோழர்க்கும் தமக்கும் ஏற்பட்ட பகைமை பற்றியே தம்மை வேறு பிரித்துக் கொள்ள நினைந்து, தமக்குப் பாரத்துவாச கோத்திரத்தைக் கற்பித்துக் கொண்டனர் என்பர். பல்லவர் பெருசியாவிலிருந்து வந்தோரெனக் கூறுபவர்க்கு ஆதாரமாகவுள்ளது சில வடமொழிப் புராண விதிகாசங்களில் காணப்படும் பகல்வா என்னும் பதமாம். அச்சொல்லே பல்லவர் எனத் திரிந்திருக்கும் என்பது அவர்கள் கருத்து. பல்லவர் இன்ன காலத்தில் இன்ன விடத்திருந்து இவ்வழி யாக இவ்விடத்தை யடைந்தனரென்பது வேறு பல மேற்கோள் களால் உறுதிப்படுத்தப் பெற்ற பின்பன்றி தெற்கே காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வகுப்பினர் பெயராய பல்லவர் என்பது பகல்வா என்பதன் திரிபு என்று கொள்ளல் சிறிதும் பொருந்தாது. வின்சன் ஏ.ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர். பல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியுள்ள புதுச்சேரியி லிருக்கும் புரொபசர் ஜி.ஜே.துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திர நாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தன ரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தோரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டை மண்டலத்தையும் ஒரே காலத்தில் ஆண்டிருக்கின்றனரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம். இனி, இவர்களைக் குறித்து எமது ஆராய்ச்சியிற் புலப்பட்ட வற்றை இங்கே காட்டுதும். காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே யமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப் பட்டது. இவருடன், ஆந்திரரும், கருநாடரும் தமிழ்மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே 'வடுகரருவாளர் வான் கருநாடர்.... குறுகாரறிவுடையார்' என்று இழித்திடப் பட்டனர். சோழன் கரிகாலன் அருவாளரை வென்றதும் தெரிந்ததே. அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப்பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் 'மன்பெறு மரபின் ஏனோர்' எனவும், 'குறுநில மன்னர்' எனவும் கூறப்பட்டு வந்தனர். ' வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந் தாரு மாரமுந் தேரும்வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய' என்னும் மரபியற் சூத்திரமும், 'மன்பெறு மரபின் ஏனோரெனப்படுவார் அரசு பெறு மரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும் பாணாற்றுள்ளும் காணப்படும்' என்னும் அதனுரையும் இவ்வுண்மை தெரிப்பனவாகும். கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பு தொண்டை நாட்டின் ஆட்சியும், நிலைமையும் எப்படி யிருந்தன வென்று விளக்கமாக அறிதற்கு இடமில்லை. கரிகாற் பெருவளவன் காலத்திலிருந்து அது நல்ல நிலைமை யடைந்து விட்டதென்று கொள்ளலாகும். கரிகாலன் காஞ்சிப் பதியை விரிவுபட வகுத் தமைத்தனன் என்பது. ' என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்றி றற்புலி யிமையமால் வரைமேல் வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை சென்று வேடன்முன் கண்டுரை செய்யத் திருந்து காதநான் குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில்புடை போக்கிக் குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்' என்று பெரிய புராணம் கூறுதலால் வெளியாகின்றது. கரிகாலனை யடுத்துத் தொண்டைமான்இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். அவனாட்சியின் பெருமையை, ' கைப்பொருள் வௌவுங் களவோர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம் உருமு முரறா தரவுந் தப்பா காட்டு மாவு முறுகண் செய்யா' என்றும், ' முறைவேண் டுநர்க்குங் குறைவேண் டுநர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத் துருப்பில் சுற்றமோ டிருந்தோன்' என்றும், பிறவாறும் பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்தோராதல் வேண்டும். தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர். அது பற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னும் பெயர்களும் அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்க வேண்டுமென்று கருதச் செய் கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒரு வகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை. திருமங்கையாழ்வார் பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித் திருக்கின்றனர். அவற்றுள்அட்டபுயகரப் பதிகத்தில், ' மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு நீண்முடி மாலை வைரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி யட்ட புயகரத் தாதிதன்னை' என்றும், திருவரங்கப்பதிக்கத்தில், துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில் தொண்டைமன்னவன் என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக் கின்றனர். வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத் தலைவனும் ஆகிய கருணாகரத் தொண்டைமானை, ' பல்லவர்கோன் வண்டைவேந்தன்' என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர். பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும். கல்வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் 'தொண்டையர் தார்வேந்தன்' என்று கூறப்படுகின்றான். 'மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே' என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும். கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலத்தில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உயர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை. அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பௌத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர். சைவசமயக் குரவர்களும், ஆழ்வார்களும் அக்காலத்திற்றான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழ்ந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது! இதுகாறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்றுதொட்டுத் தொண்டைநாட்டிலிருந்து வந்த தொண்டையரே என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணங்கள்: பல்லவர்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தவரென்றும் கூறப்படுதலும் ஆம். பட்டயங்கள் எங்கோ சில சிற்றூர்களிலும், காடுகளிலும், நிலத்தின் கீழும் இருந்து இங்ஙனம் அகப்பட்டவை. அவை முற்றிலும் கிடைத்துவிட்டன என்று எங்ஙனம் கூறமுடியும்? அன்றியும் தமிழ் வழங்காத தெலுங்கு நாட்டை அவர்கள் கைப்பற்றி ஆண்ட பொழுது அங்கே அளித்த பட்டயங்கள் தமிழில் எப்படியிருக்க கூடும்? தமிழராயிருந்தோர் பிராகிருதத்தில் சாசனம் அளித் திருக்க முடியாதென்றால் பிராகிருதம் அல்லது வடமொழியே பயின்றவர் எங்ஙனம் தமிழராகித் தமிழிலே சாசனம் அளித் திருத்தல் கூடும்? இதனாலே அக்காரணம் அத்துணை உறுதியுடைத்தன் றென்பது தோன்றும். அவர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்று சொல்வது காரணம் ஆகலாம். எனின், தமிழ் வேந்தர்கள் சூரியன் மரபினரென்றும், சந்திரன் மரபினரென்றும் கூறப்படுவதற்கு யாது சொல்வது? சோழர்களோடு மாறுபட்டிருந்தோரும், ஆந்திர நாட்டையும் கைப்பற்றி ஆண்டோரும், எண்ணிறந்த பிராமணர்களைத் தமிழகத்திற் குடியேற்றி அவர்கட்கு எண்ணிறந்த தானங்களை அளித்தோரும் ஆகிய பல்லவர், தம்மை அசுவத்தாமன் வழியில் வந்தோரென்றும், பாரத்துவாசகோத்திரத்தினரென்றும் கூறிக் கொள்வதில் வியப்பென்னை? பல்லவரது மரபின் வரலாறு நாளடைவில் விரிந்து வந்திருப்பதைச் சாசனங்கள் விளக்குமன்றோ? அவர்கள் வேள்வி புரிந்ததுதான் எங்ஙனம் காரணமாகும்? தமிழ் மூவேந்தரும் எண்ணிறந்த வேள்விகள் செய்திருத்தலைச் சங்க நூல்களால் அறியலாகும். பாண்டியன் பல் யாகசாலை முதுகுடிமிப் பெருவழுதி என்னும் பெயரே அதனை விளக்கும். அவனைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவரும் 'நின்னுடன் எதிர்த்து தோற்றொழிந்த பகைவர் பலரோ? நீ வேள்வி புரிந்த களம் பலவோ' என்று கூறுகின்றார். இவ்வாற்றால் பல்லவர் வடக்கிலிருந்து வந்தோரென்பார் அதற்குக் கூறும் காரணம் ஒன்றேனும் திட்பமுடைத்தன் றென்பது விளங்கா நிற்கும். பல்லவரது ஆதி உறைவிடம் தொண்டைநாடே என்பதனை மறுக்கத் தகுந்த வேறு ஆதரவுகள் கிடைக்குமேல், அவர் மணிமேகலையிற் கூறப்பட்டதும் தமிழ் நாட்டையடுத்துத் தெற்கிலுள்ளதுமாகிய மணிபல்லவம் என்னும் தீவினின்று வந்தோரெனக் கருதுதல் பொருத்த முடைத்தாகும். இனி, கள்ளர் வகுப்பினரைப் பல்லவர் வழியினரென்பதற்குப் பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர், தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே வகுப்பினரைக் குறிப்பனவென்று முன் விளக்கப்பட்டதும், காடவர், சேதிபர், காடு வெட்டி யென்னும் பெயர்களும் பல்லவர்க்கு உரியவை. திருத் தொண்டர்களில் ஒருவராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனாரை ' பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே' என்று திருத்தொண்டர் திருவந்தாதியும்; ' வையநிகழ் பல்லவர்தங் குலமரபின் வழித்தோன்றி' எனவும், ' கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவ ரையடிகளார்' எனவும் பெரியபுராணமும் கூறுகின்றன. கழற்சிங்க நாயனாரை, ' கடல் சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற் சிங்கன்' என்று திருத்தொண்டத் தொகையும்; ' பல்லவகுலத்து வந்தார்' என்று பெரியபுராணமும் கூறுகின்றன. திருமுனைப்பாடி நாட்டுக்குச் சேதி நாடு என்பதும் ஒரு பெயர். மெய்ப்பொருணாயனார் புராணத்தில், 'சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்' என்று கூறப்பட்டுள்ளது. சேதிநாடு ஆண்டமைபற்றிப் பல்லவர் சேதிபர்கோன் எனவும் படுவர். காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. `காடுவெட்டித் தமிழ்ப்பேரரையன்' என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர் அரசர்க்குரியதென்பது விளங்கும்.. 1பழைய திருவிளையாடற் புராணத்திலிருந்து கீழே காட்டியுள்ள ஒரு சரித்திரத்தாலும் இது விளங்கும். 'சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ் வாய்ந்தோனும் ஆகிய காடுவெட்டியென்னும் ஓர் தலைவன் மதுரையிற் சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற்புரத்து மதிற்கதவையும் சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடுவெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்துவந்து, ஓர் இயந்திரத்தால் அவனை யாற்றின் தென்கரையில் ஏற்றுவித்து, மதில் இடித்த வழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனும் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியுமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலைப் புதுப்பித்துத் தமது இடப விலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித் தருளினார்' என்பது கதைச் சுருக்கம். இதிற் சுட்டியுள்ள தோன்றலை ஓர் சோழன் என்று கடம்பவன புராணம் முதலியன கூறுகின்றன. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் இவனைச் சோழன் என்று கூறினும் கச்சியில் இருந்த வனாகத் தெரிவிக்கின்றது. வரலாற்றுண்மை அறிய வழியில்லாத நிலைமையில் புராண ஆசிரியர்கள் இவனைச் சோழனென்று கருதினர்போலும்? மேலே குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டமான், பல்லவராயர், காடவராயர்,சேதிராயர், காடுவெட்டி) எல்லாம் கள்ள வகுப்பினர்க்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னும் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர் என்பதைக் காட்டும். இவர்க்குள் வழங்கும் பட்டப் பெயர்களெல்லாம் இந்நூலிறுதியில் தொகுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரினையுமுடையார் பற்பலவூர்களில் இருத்தலால் அவ்வூர்களை அங்கே குறிப்பது மிகையாகும். இனி, முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்பே காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்பு அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு, பெரும்பிடுகு (பிடுகு=இடி) என்ற பட்டங்கள் உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் 'விடேல் விடுகு' என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் 'விடேல் விடுகு' என்று கூறப்பட்டிருக்கின்றான். இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பல்லவ வகுப்பினரேயென்று காட்டும். காஞ்சியி லிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இதுகாறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகுப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதிற் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க. கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ.ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது. திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரித்திரத்தில், (நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களை யெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத் தினின்றும் உதித்தவராகார் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்கு மிடத்தில் 'ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலைநிறுத்தி ஆள்கிறார்' என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன. இனி, புதுக்கோட்டை மகாராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வே.இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் கள்ளர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அரிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம். "பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர், பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றொரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற் குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கனகசபைப் பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து நாற்பத்தெண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றின னென்றும் தேக்கத்தூர், சுப்பிரமணிய வேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஓலைச்சுவடியில் குறித்திருக்கிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்து கொண்டிருக்க வேண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை `நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப் போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழ்ந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது. கானாட்டு வெள்ளாளர்க்கும் கோனாட்டு ஒளியூர் வெள்ளாளர்க்கும் பகை யுண்டாகி அவர்கள் தங்கள் தங்கட்குத் துணையாக இராசேந்திர மங்கல நாட்டிலிருந்து நூற்றுக் கணக்கான குடிகளடங்கிய மறவர்களைக் கொண்டு வந்தனர் என ஒரு ஓலைக் சுவடியில் காணப்படுகிறது. நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக் கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து 'மறவர் மதுரை' என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இவட்குப் பிறந்த பிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர். கள்ளர்களைக் குறித்து அகநானூற்றுச் செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன. திருவேங்கட மலையில் வசித்தோரும், அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய இவர்கள் 'கள்வர் பெருமகன் தென்னன்' என்ற பாண்டியனால் தென்னாட்டிற்கு அழைக்கப்பட்டனர் எனத் தோன்றுகிறது. புதுக்கோட்டைக்கு வடகீழ்பாலுள்ள வீசங்கி (மீசெங்கள) நாட்டில் அவர்கள் தலைமை வகித்திருந்தனர். இவர்களிற் பலர் அரசர்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றனர். நாராயணப் பேரரசு மக்கள் என்றும், படைத்தலைவர் என்றும், தந்திரிமார் என்றும், கர்த்தர் என்றும் கள்ளர்கள் அழைக்கப்பட்டனர். கள்ளர் வகுப்பினர் மேன்மேல் ஆதிக்கம் பெற்றனர். அவர் களிடம் நிலங்கள் ஒப்புவிக்கப்பட்டன. கோயிற் சொத்துக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர். கோனாட்டு வெள்ளாளர்க்கும் கானாட்டு வெள்ளாளர்க்கும் ஏற்பட்ட சண்டைகளில் கள்ளர்கள் இருதிறத்தார்க்கும் உதவி புரிந்தனர். வாணாதி ராயர்க்கும் மற்றைக் கார்காத்த வெள்ளாளர்க்கும் உண்டாகிய சண்டையில் வீசங்கி நாட்டுக் கள்ளர்கள் வெள்ளாளர் களைச் சூரைக்குடி வரையில் ஓட்டுவித்து, ஏழுபிரபுக்களைச் சிறைப்பிடித்து வாணாதி ராயர் முன் கொண்டு வந்து விட்டனர். பின்பு இவர்களைச் சிவந்தெழுந்த பல்லவராயரிடம் கொண்டு போயினர். பல்லவராயர் கோனாட்டுப் பிரபுக்களைக் கூப்பிட்டு, இனி, நீங்கள் கள்ளர்களோடு மாமனும் மருமகனும்போல வாழ வேண்டுமென்று கூறி, கள்ளர்களுக்கு 530 கலம் நெல்லும், 550 பொன்னும் வெள்ளாளர் கொடுக்கும்படி தீர்ப்பு அளித்தார். வெள்ளாற்றின் வடக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம், உறத்தூர்க்கூற்றம் என மூன்று கூற்றங் களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10, 11-வது நூற்றாண்டு களில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. கோபிநாத ராவ் அவர்கள் சொல்லுகிறபடி இப்பொழுதும் இவ்வகையினர் சிற்சில இடங்களில் இருத்தல் அறியலாம். அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புல்வயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டு வகை அரையர், அம்பு கோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலி யரையராகிய கடாரத்தரையர், குலோத்துங்கசோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லை யெனத் தெரிகிறது. அக்காலத்தில் வலிமிக்கவன் செய்வன வெல்லாம் சரியானவையே. ஒரு தலைவன் பலமுள்ளவனாயின் தனது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டேயிருக்கலாம். ஒரு கல்வெட்டில் ஐந்து கிராமக் குடிகள் ஒன்று கூடிக் காங்கெயன் என்ற ஒரு தலைவனை மீட்டும் தலைவனாகக் கொண்டு வந்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. சிலர் வாணாதிராய ரென்றும், மகாபலி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லியிருக்கிறது. கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுதந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுதந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லா வற்றிலும் ஒரு பங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300 வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும், நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர். அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான் களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டை மான்களைப் பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514-1567) மிகவும் வலியும், செல்வாக்கு முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத் தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல் கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர் களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். பாளையக்காரரும் நிலவரி வாங்கியும் கிராமங்களைப் பாதுகாத்தும் வந்தனர். கி.பி.1378-ம் ஆண்டுக்குப் பின் இவ்விடங்களில் பல்லவ ராயர்கள் அரையர் என்னும் பெயருடன் இருந்தனர். இவர்கள் பன்னாள் வரை குளத்தூர்த் தாலூகாவிலுள்ள வழுத்தூரிலும், பெருங்களூரிலும் தலைவர்களாக இருந்தனர். தொண்டை மண்டலத்தைச் சோழர்கள் வென்றுவிட்ட பின்பு பல்லவராட்சி முடிவுக்கு வந்தமையின் பல்லவரின் கிளைகள் சோழரிடம் படைத்தலைவராகவும், அமைச்சராகவும் இங்ஙனம் அமைந்தனர். கலிங்கத்துப் பரணியிற் சொல்லப்பட்ட கருணாகரத் தொண்டைமான் அவர்களில் ஒருவன். கல்வெட்டுக்களை ஆராயும் இந்திய அதிகாரியான வெங்கையா அவர்கள் சொல்லுகிறபடி வழுத்தூரிலிருந்த பல்லவ ராயர்கள் பல்லவர் குடும்பத்திற்கு எட்டிய உறவாயிருக்கலாம். தஞ்சாவூருக்குக் கிழக்கே எட்டு நாழிகை வழியிலுள்ள வழுத்தூரி லிருந்து பல்லவராயர்கள் தெற்கே புறப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயரென்பர் பாண்டியர்களைப் பாதுகாத்தவரென்று திருநாரண குளத் திலுள்ள 1539-ம் ஆண்டுக் கல்வெட்டில் சொல்லியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு பல்லவராய அரசர்கள் கார்காத்த வெள்ளாளர் காலத்தில் இருந்தனராக ஆதரவுகள் கூறுகின்றன. பாண்டி நாட்டரசனான உக்கிரவீர பாண்டிய மன்னன் ஏழு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தில் வேங்கடாசலப் பல்லவ ராயரைஅழைத்து வருதற்பொருட்டுக் காத்திருந்ததாகவும், பின் அவருதவியைக் கொண்டு சேதுபதி நந்தி மறவனை வென்ற தாகவும், அதன் பொருட்டுப் பாண்டியன் பொன்னமராவதிப் பக்கத்தில் அவர்க்கு நிலங்கள் கொடுத்ததன்றி, 'அரசனின் மருமகன்' என்ற பட்டமும், ஒரு அரண்மனையும் தந்ததாகவும் செப்புப் பட்டயத்தில் சொல்லியிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி யென்று பட்டம் பெற்ற தொண்டைமான் பல்லவராயருடன் வந்தெனனெனவும், அவனுக்கு அம்புகோவிலில் நிலங்கள் அளிக்கப் பட்டன எனவும் சொல்லப்படுகிறது. கி.பி.1387இல் வழுத்தூர்ப் பல்லவராயர்கள் திருக்கோகரணம் என்னுமிடத்தில் தருமம் செய்திருப்பது தெரிகிறது. கல்வெட்டில் 'இராஜ்யம் பண்ணியருளுகையில்' என்று வருவதால் இவர்கள் அரசரென்றே சொல்லப் பட்டனரென்பது விளங்கும். கி.பி.1312 இல் ஒரு பல்லவராயன் ஆரணிப்பட்டியிலுள்ள கடவுளுக்கு நிலங்கள் விட்டமை புலனாகின்றது. வழுத்தூர்ப் பல்லவராயர்கள் தங்கள் அடையாளமாக 'பல்லவன் குளம்' என்ற வாவியும், பல்லவன் படி என்ற அளவுகருவியும் உண்டாக்கியிருக்கின்றனர். இப்பொழுது தசரா விழாவில் அரிசி அளப்பதற்கு இப் படி கருவியாக விருக்கின்றது. பல்லவன் குளம் என ஒன்று புதுக்கோட்டைக்கு நான்கு நாழிகை வழியிலுள்ள பெரியூர் என்னுமிடத்தில் இருக்கிறது. வழுத்தூரில் அழிந்துபோன கோட்டைகள் உள்ளன. பல்லவராயர்களில், கோனேரிப் பல்லவராயர், மாஞ்சோலைப் பல்லவராயர், அச்சுதப்பப் பல்லவராயர், இளையபெருமாள் பல்லவராயர், ஆவுடைய பல்லவராயர், கந்தப்ப பல்லவராயர், மல்லப்ப பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. புலிக் கொடியும், மீன் கொடியும், வெண்குடையும், ஆறுகாற் சிங்காதனமும், ஆத்தி மாலையும் பல்லவராயர்கள் உடையரா யிருந்தனர். புலிக்கொடி காஞ்சிப்பல்லவரது தொடர்பைக் காட்டுகிறது. மீன் கொடி பாண்டியர்களைத் தோல்வியிலிருந்து காப்பாற்றிய பின் தரித்திருக்கலாம். சோழருக்குரிய ஆத்திமாலை சூடியிருப்பது இவர்கள் சோழர்களின் சார்பு பெற்றிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது. புதுக்கோட்டை, கண்டர்கோட்டை, கல்லாகோட்டை முதலியவற்றின் தலைவர்கள் உதிரத்தாலும், கல்யாணங் களினாலும் சம்பந்தமுடையராவர். இவர்கள் படைவீரராகவும், தலைவர்களாகவும் இருந்தனர். தனித்தனியாகத் தங்களுக்குள் இராச்சியமும் ஏற்படுத்திக் கொண்டனர். திருச்சிராப்பள்ளியை மகம்மதியர் முற்றுகை யிட்டபொழுது கள்ளர்கள் வந்து தாக்கி மகம்மதியரை அஞ்சச் செய்தனர். கள்ளர்கள் இந்நாட்டிற்கு அரசராயிருந்தனர். இவர்கள் மதுரை அரசனுக்குத் தீர்வையாவது கப்பமாவது கொடுக்கவில்லை. அரசன் இவர்களை யடக்குவது கூடாமையாயிருந்தது. பின்பு மங்கம்மாளின் மந்திரி படைகளைக் கொண்டுபோய்ச் சிலரை மடித்து, அங்கே காட்டின் நடுவில் ஒரு கோட்டையைக் கட்டிச் சில பட்டாளங்களையும் வைத்தனன். ஆனால் அவர்கள் படையாள ரெல்லோரையுங் கொன்று, கோட்டையையும் தவிடு பொடி யாக்கி விட்டனர். இங்கே சொன்னவை புதுக்கோட்டைப் பக்கத்தில் நிகழவில்லை. அதற்குக் காரணம் பல்லவராயர் அல்லது தொண்டைமான்கள் இதை ஆண்டுவந்தமையே. கிபி.1116 இல் இராசேந்திர சோழன் ஆட்சியின் 5 ஆவது ஆண்டில் நார்த்தாமலையிற் குறித்துள்ள கல்வெட்டில் தொண்டைமான் என்ற பெயர் குறிப்பிட்டிருக்கிறது. இப்பொழு திருக்கிற தொண்டைமான் மரபினர் தொண்டை மண்டலத்திலுள்ள திருப்பதியைச் சார்ந்த தொண்டைமான் கோட்டையிலிருந்து தொண்டைமான் புதுக்கோட்டைக்கு வந்ததாகச் சொல்வது வழக்கம். தொண்டைமான் தொண்டைமண்டலத்திலிருந்து வந்தவரென்று 'இராஜ தொண்டைமான் அநுராக மாலை' என்ற சுவடியிற் சொல்லியிருக்கிறது. 'தொண்டைமான் வமிசாவளி' என்ற தெலுங்குச் சுவடியில் (வெங்கண்ணாவால் 1750 இல் எழுதப்பட்டது) தேவேந்திரன் ஒருநாள் பூமியில் சுற்றி வந்தனனென்றும், அப்பொழுது ஒரு கன்னிகையை மணந்தானென்றும், அவள் பெற்ற பிள்ளைகள் பலரில் ஒருவன் அரசனாயினா னென்றும் சொல்லப்பட்டிருகிறது. இதன்படி தொண்டைமான் இந்திர வமிசம் என்று கொள்ளப்படும். தொண்டைமான் அம்புகோவிலில் குடியேறுதற்கு முன்பு அன்பில் என்ற இடத்தில் தங்கியிருந்தனனென்றும், தஞ்சைக்குத் தெற்கில் உள்ள அம்புகோவில் நாடானது பன்னிரண்டு தன்னரசு நாடாக ஏற்பட்டதென்றும் வெளியாகின்றது. வெங்கட்டராவ் புதுக்கோட்டை மானுவலில், தொண்டைமான்களோடு ஒன்பது குடிகள் அம்பு நாட்டில் குடியேறினரென்று கூறி, அவர்கள் பெயரும் குறிப்பிடுகின்றார். பெயர்கள் 1. மாணிக்கரான் 6. பல்லவராயன் 2. பன்றி கொன்றான்1 7. தொண்டைமான் 3. பிற்பன்றி கொன்றான் 8. ராங்கியன் 4. காடுவெட்டி 9. போர்ப்பன்றி கொண்டான் 5. மேனத்தரையன் 10. கலியிரான் (வடக்குத்தெருவார்கள்) (தெற்குத்தெருவார்கள்) 'இவர்கள் பத்து வீட்டினரும்அரசு என்றும் சொல்லப்படு கின்றனர். இவர்கள், தங்களது புது நாட்டிற்குக் குருக்கள், பிச்சர், மாலை கோப்பார், மேளகாரன், வண்ணான், பரிகாரி என்னும் இவர்களைக் கொண்டு வந்தனர். இன்னவர் அம்பு நாட்டிற் குடியேறிய பின்பு ஆதிய வலங்கன், காளிங்கராயன் என்ற இரண்டு குடும்பங்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டன வென்றும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து நாலா பக்கங்களிலும் சென்று, பிலாவிடுதி, கரம்பக்குடி, வடக்கலூர், நெய்வேலி, கல்லாக்கோட்டை, நரங்கியன்பட்டி, அம்மணிப்பட்டி, பந்துவாக் கோட்டை, மங்கல வெள்ளாளவிடுதி என்னும் ஒன்பது இடங்களில் குடியேறினரென்றும் அறிகின்றோம். தொண்டைமானால் குறிக்கப்பட்டுள்ள பல தாம்பிரசிலாசா சனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்பு நாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவன், பிள்ளையார், மாரியம்மன், வீரமாகாளி என்ற தெய்வங்களைப் பூசிப்போர் இவர்கள். ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்றபொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னும் பட்டமும், பல நிலங்களும், யானையும், சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன என்றும், அதிலிருந்து 'தொண்டைராய தொண்டைமான்' என அவன் வழங்கப்பட்டனன் என்றும் அறியப்படுகிறது. இந்த மூன்றாவது ஸ்ரீரங்கராயலு என்ற அரசன்றான் சென்னையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவன். இதிலிருந்தே (கி.பி.1639) புதுக்கோட்டை தொண்டைமானால் ஆளப்பட்டு வருகிறது. இதுகாறும் காட்டியவற்றிலிருந்து, கள்ளர்கள் தொண்டை நாட்டினின்றும் சோழ, பாண்டி நாடுகளிற் குடியேறி, அரையர், என்னும் பெயருடன் தன்னரசாக ஆட்சிபுரிந்து வந்தனர் என்னும் உண்மை நன்கு புலப்படுதல் காணலாம். பல்லவராயர், தொண்டைமான், கள்ளர் என்னும் பெயர்கள் ஒரே வகுப்பினர்க்குரியனவென்று துணிந்து கூறமாட்டாது சரித்திர ஆசிரியர் சிறிது இடர்ப்படினும், அவர் கூறிய வரலாறெல்லாம் ஒரு வகுப்பினராகவே வலியுறுத்தி நிற்றல் காண்க. யாம் முன்பு கூறியவைகளை இவற்றுடன் சேர்த்துப் பார்க்குமிடத்து நடுவு நிலையுடைய அறிஞர் எவரும் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென்னும் முடிவினை மேற்கொள்வரென்று துணிகின்றனம். ஒரு காலத்தில் தொண்டை மண்டலத்தோடு, சோழ மண்டலத்தையும் அடிப்படுத்து ஆட்சி புரிந்து வந்த பல்லவ சக்கரவர்த்திகள் பின்பு தம் பேரரசாட்சியை இழந்து, பிற விடங்களிற் குடியேறிச் சிற்றரசர்களாயும், சோழர்களிடத்தில் அமைச்சர், தண்டத் தலைவர் முதலானோராயும் இருந்து வந்தன ரென்பது மறுக்க வொண்ணாத சரித்திர வுண்மையாம். இவர்கள் தம் பெரும்பதவிகளை யிழந்து சிறுமையுற்ற விடத்தும் இவர்களுடன் பிறந்த அஞ்சாமையும், வீரமும் ஒழிந்து விடவில்லையென்பது மேலே காட்டிய வரலாற்றுக் குறிப்புகளாற் புலப்படும். கருணாகரத் தொண்டைமானது வரலாறும் இதனை வலியுறுத்தா நிற்கும். தென்னிந்திய சாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற் பகுதி 22-வது சாசனத்தில், "பாண்டி குலபதி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தொண்டைமானார் தம் பேரால் வைத்த அகரம் சாமந்த நாராயணச்சதுர்வேதி மங்கலம்" என்று வருகிறது. இதற்கு விளக்கம் எழுதியிருப்பது, "தொண்டைமானார் என்பவர் இந்நிலங்களை வாங்கித்தந்தவர். சாமந்த நாராயணன் என்பதே இவர் பெயராகவும் வழங்கி வந்திருக்க வேண்டும். இவர் ஒரு சிற்றரசராகவோ அன்றி ஒரு பெரிய பதவியினராகவோ இருந்திருக்க வேண்டும். இப்பொழுது புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் என்னும் பட்டம் புனைந்தவர். இவருடைய முன்னோர் 1680 இல் பல்லவராய தொண்டைமானைத் தள்ளிவிட்டுப் பட்டத்திற்கு வந்தவர். இவர் ஒருபால் சாமந்த நாராயண தொண்டைமான், கருணாகரத் தொண்டைமான் இவர்கள் வழியினராக இருத்தல் வேண்டும். கலிங்கத்துப் பரணியின்படி கருணாகரத் தொண்டைமான் வண்டை நகரில் வசித்த பல்லவ அரசன்; குலோத்துங்கனுடைய முதன் மந்திரி. தொண்டைமான் என்னும் பட்டத்திற்குப் பொருள் தொண்டை நாட்டரசன் என்பதாம். தொண்டை மண்டலம் என்பது பல்லவர் நாட்டின் தமிழ்ப் பெயராகும். காஞ்சிபுரம் அதன் தலைநகரம். இந்நகரில் அகப்பட்ட எண்ணிறந்த சாசனங்கள் பல்லவராச்சியம் சோழ மன்னருக்கு இரையானமையைத் தெரிவிக்கின்றன" என்பது. இத்தகைய ஆதரவுகள் எண்ணிறந்தனவுள்ளன. இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரேயென நிலைநாட்டப்படுகின்றது. எனினும், சோழர் குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்துவிட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும். சோழர்கள் கி.பி.14 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலைகுலைந்து விட்டதேயன்றி அவர் தாமும் கிளையுடன் அறவேயொழிந்து விட்டனராவரா? எந்த குலமும் அஃது எவ்வளவு சீர்கேடான நிலையை அடைந்திருப்பினும் அறவேயொழிந்து விடுமென்பது பொருத்தமாகாது. ஆயின், அது மற்றொன்றிற் கலந்து விடுதலும், பெயர் முதலியன மாறி நிற்றலும் இயல்பே. ஆகலின் சோழர்கள் எம்மரபிலே கலந்துள்ளனர் என்பதே ஆராயவேண்டுவது. கள்ளர்களைச் சோழர் மரபினரெனச் சிலர் கருதியுள்ளா ரென்பது முன்பு காட்டப்பட்டது. இவர்கள் முதலில் பல்லவ வகுப்பினரேயென்றும், சோழர்கள் பின்பே இவர்களுடன் கலந்துள்ளனரென்றும் நாம் கூறுகின்றோம். சோழர் கலந்துள்ளன ரென்பதற்கும் வேறு ஆதரவுகள் வேண்டும். அவ்வாதரவுகளே இங்கே எடுத்துக் காட்ட விரும்புகின்றவை. இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர் களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந் தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ள வேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொரு காலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது. இப்பெயர் தரித்திருந்தோரும், கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குலோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்குச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின்வருவன: "திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15 ஆவது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும். தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்குப் பாதரக்ஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்த வரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து." "கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு - இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்க்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ் வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப் பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப் பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ் வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து." இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரிமேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்திய சாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21 ஆம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின்வருமாறு குறித்திருக்கின்றனர்: "இப்பெயர் ஒரு விடுகதை போன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள். ...... கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பில்லாதவன் என்று பொருள் கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக் கிறதாகத் தெரிகிறது. வீரசோழனும், குலோத்துங்க சோழ தேவனும் கோனேரிமேல் கொண்டான் எனவும், கோனேரிமேங் கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரிராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கெண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப்பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்ட முண்டு, வீர பாண்டியன், குலசேகர தேவன் இவர்களும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்" இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல் கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத் தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர், 'கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே' என்று பாடுவதால் அறியலாகும். இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இருபெயர்கள் இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப் பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது. கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிபட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்ச மீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திருவாளர் எஸ்.குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர். இவைகளிலிருந்து, சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்து வருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்த பிற்காலத்திலே சோழர் குடியிற் றோன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதொன்றும் துணியலாகும். இனி, இவர்கள் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று. இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம்வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதி களாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக் கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழகேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்னிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59ஆம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் 'சோழங்கன்' என்பதும் ஒன்று. 'தன்றிருத்தம்பியர் தம்முள் - மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மனிமுடிசூட்டி' எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பிசோழகங்கன் எனப் பட்டான் என்பது நன்கு புலனாகின்றது. சோழகங்கன் சோழங்கன் என மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும். சாசனங்களில் 'சோழகோன்' என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது. கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந் தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை `அரையர்' `நாடாள்வார்' என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுக்களில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்துங்கன் மகனாகிய விக்கிரமசோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில், ' சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட் பாராளு மன்னனவன் பாகவத ரிடத்திலென்றும் ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான் ஏராரும் வைகுந்த நாடாள வேகினான்' (794) என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பக்கம் 347-351). விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந் தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்க்கு ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க்குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன. இதுகாறும் காட்டியவற்றிலிருந்து பல்லவர் வழியினராகிய கள்ளரோடு சோழரும் கலந்து விட்டமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கும். பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்று பட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும். இனி, இவர்கட்கு வழங்கும் கள்ளர், இந்திரர் என்னும் பெயர்கள் எப்படி வந்தன என்பது ஆராயற்பாலது. இந்திர குலாதிபர் சங்கம் நாலாவது ஆண்டு விழாவில் தலைமை வகித்த சீமான் வா.கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் தமது முகவுரைப் பிரசங்கத்தில் இப்பெயர்களைக் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். அவற்றில் ஏற்பவற்றை இங்கே சுருக்கிக் காட்டுதும். 1. 'கள்வனென் கிளவி கரியோனென்ப'எனத் திவாகரமும், 'கடகரிப் பெரும் கருநிற மகனும், கர்க்கடக விராசியும் ஞெண்டும் கள்வன்' எனப் பிங்கலந்தையும் கூறுவதிலிருந்து கள்வன் என்னுஞ் சொல் கருநிறமுடையோன் என்னும் பொருளில் தொன்று தொட்டு வழங்கியுள்ளமை புலனாம். ஆரியர் தமிழரைக் கரியவரென்று இருக்குவேத மந்திரத்திற் கூறுகின்றனர். இந்திரனுக்கும் கரியோன் எனப் பெயரிருக்கிறது. சோழனும் கருநிறம் பற்றியே 'மால்' என அழைக்கப்படுகின்றான். இவ்வாற்றால் இந்திர குலத்தவர் எனினும், கள்வர் குலத்தவர் எனினும் இந்தியப் பழங் குடியினரான தமிழர் என்பதே பொருள் எனத் துணியப்படுகிறது. 2. கள்வர் என்னும் சொல்லுக்குப் பிறர் பொருளை வௌவுவோர் என்னும் பொருளும், பகைவர் என்னும் பொருளும் உண்டு. இதற்கு நேரான 'தஸ்யு' என்னும் சொல்லை வடமொழி அமரகோசத்தில் சூத்திர வர்க்கத்தில் சோரன் என்னும் பொருளில் வைத்திருப்ப தோடு க்ஷத்திரிய வர்க்கத்தில் பகைவன் என்னும் பொருளில் வைத்திருத்தலும் காண்க. ஆரியர் இந்நாட்டுப் பழங்குடிகளைத் 'தஸ்யுக்கள்' எனவழங்குகின்றனர். இங்ஙனம் ஆரியர்களால் தமக்குப் பகைவர் என்று அழைக்கப்பட்ட பழந்தமிழரே கள்வர் என்னும் சொல்லுக்குப் பொருளாய் நிற்றல் துணியப்படுகிறது. கள்ளர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர், பகைவர் என்ற இரு பொருளும், இந்திர குலத்தவர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர் என்ற ஒரு பொருளும் இங்கே கொள்ளப்பட்டுள்ளன. இனி, ஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக் கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பாண்டி நாட்டையும் வென்று அடிமைப்படுத்தியிருக்கின்றனர். இனி, சீவகசிந்தாமணி 741 ஆம் செய்யுளில் உள்ள "கள்ளராற் புலியை வேறு காணிய" என்னுந் தொடருக்கு 'அரசரைக் கொண்டு சீவகனைப்போர் காணவேண்டி' என உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருத்தலின் கள்ளர் என்னும் சொல்லுக்கு அரசர் என்னும் பொருள் கருதப்படுகிறது. சீவகனைப் புலியென்று கூறியதற்கேற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின், அப்பொழுதும் வீரத்தின் மேம்பட்டார் என்னும் பொருள் பெறப்படுகின்றது. வீரர் என்னும் பொருள் பற்றியே கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயர் தோன்றியதென்பது பழைய ஆதரவுகட்கும் யூக அநுபவங்கட்கும் ஒத்ததாயிருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவ்வகையான காரணமும் இல்லை. காட்டில் வாழும் ஆறலை கள்வர் என்பார் உளராயினும் அன்னவர் வேறு இவர் வேறு என்பதனைச் சிறிதறிவுடையாரும்அறிவர். பொய்யடிமையில்லாப் புலவர் பெருமக்களால் கள்வர்கோமான் புல்லி எனவும், கள்வர் பெருமகன் தென்னன் எனவும் சிறப்பித்தோதப் பட்டிருத்தலை அறியும் அறிவுடையார் எவரும் கள்வர் என்னும் குலப்பெயர்க்கு உயர்பொருள் கொள்ளாமலிரார். கள்வர் கோமான் புல்லிக்கும் இன்னவர்க்கும் யாதும் தொடர் பில்லை; இவர்கட்கு இப்பெயர் சிறிது காலத்தின் முன்பே இவர்களது தீச்செயலால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்னில், புல்லிக்கும் இவர்க்கும் தொடர்பில்லாது போயினும் பல்லவ, சோழ மன்னரது வழியினராய், இற்றைக்கும் பல இடங்களில் குறு நில மன்னராய், இருந்து வரும் ஓர் பெரிய வகுப்பினர் தமது தீச்செயல் பற்றிப் பிறர் இட்ட பெயரினைத் தமக்குக் குலப்பெயராக ஒருங்கே ஏற்றுக்கொண்டன ரென்பது எவ்வளவு அறியாமையாகும்! இனி வெட்சி மறவர் கள்வர் எனவும், கரந்தை மறவர் எனவும் வழங்கப்படுவரென்னில், வஞ்சி மறவர், உழிஞைமறவர், தும்பை மறவர் முதலியோர்க்கெல்லாம் ஒவ்வொரு வகுப்பினரைக் காட்டுதல் வேண்டும் என்க. ஓர் அரசனாதல், அவன் படையாளராதல் தாம் புரியும் போர் முறைபற்றி வேறு வேறு திணைக்கும் உரியராவ ரென்பதும், அதனால் ஒருவர்க்கே பல பெயரும் பெற உரிமை யுண்டென்பதும் தமிழிலக்கணம் கற்றவர் நன்கு அறிவர். இனி, இவர்கள் வீரராயினும் அரசராகவோ, படையாளராகவோ சென்று மாற்றாரது நிலத்தைக் கொள்ளை கொண்டமையால் இப்பெயர் எய்தினாராவர் என்னில், உலக சரித்திரத்தில் அறியலாகும் எந்த அரச பரம்பரையினரும் கொள்ளை கொள்வோர் என்னும் பெயருக்கு உரியராகாது தப்பவியலாது; இப்பொழுது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா அரசுகளும் இப்பெயரினைப் பெறுதற்கு முற்றிலும் தகுதியுள்ளவை; எனினும் இது குறித்து இப்பெயர் உண்டாதல் வழக்காறன்று. இனி இவ்வகுப்பினரில் களவுத் தொழில் செய்வார் இருப்பதும் உண்மையே. வேறு எவ்வகுப்பிலே தான் இத்தீத்தொழில் செய்வோர் இல்லாதிருக்கின்றனர்? களவுக்குக் காரணம் அவரவர் நிலைமையே யன்றி, ஓர் வகுப்பினுட் பிறத்தலன்று என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்கார். அரசாங்கத்தினரும், பொது மக்களும் ஏழைகளின் நிலைமையறிந்து அவர்க்கு உதவி புரியாது புறக்கணித்திருப்பதனாலேயே இத்தகைய குற்றச் செயல்கள் மிகுகின்றன. எனவே குற்றத்திற்கு அனைவரும் பங்காளிகள் என்பதனை உணர வேண்டும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயரின் வரலாறு பலராற் பலவாறு கூறப்படினும் வீரர் என்னும் பொருள் பற்றி அப்பெயர் உண்டாயிற் றென்பதே முற்றிலும் பொருந்தியதெனல் பெறப்படுமாறு காண்க. இனி, இந்திரகுலத்தார் என இவர்கள் வழங்கப்படுதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன. தேவேந்திரன் ஒரு நாள் பூமியிற் சுற்றி வந்தா னென்றும், அப்போது ஒரு கன்னிகையை மணந்தானென்றும், அவள் அநேக பிள்ளைகளைப் பெற்றனளென்றும், அவர்களில் ஒருவன் அரசனானானென்றும் 172 ஆண்டுகளின் முன் எழுதப் பெற்ற தொண்டைமான் வமிசாவளி என்னும் நூலிற் கூறியிருப்பது முன்பே காட்டியுள்ளாம். கள்ளர், மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்பினரும் ஒரே யினத்தவரென்றும், இவர் களெல்லாரும் இந்திர குலத்தினரென்றும் பலர் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றனர். பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியும் கௌதமர் பத்தினியும் ஆகிய அகலிகையைத் தேவேந்திரன்கரவிற் புணர்ந்த காலத்து மூன்று மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது மறைந்தவன் கள்ளனென்றும், மரத்திலேறியவன் மரவனென்றும், அகங்காரத்துடன் நின்றவன் அகம்படியனென்றும் பெயர் பெற்றனரென்றும் கதை கூறுவர். இதிலிருந்தே இக்கதையைப் படைத்தவன் எவ்வளவு அறிவிலியா யிருக்க வேண்டுமென்பது புலப்படும். இதுபோலும்அறிவிலார் கூற்றுக்களை ஆராயாதே ஆங்கிலத்தில் எழுதிச் சரித்திரமாகக் காட்டிவிடும் பெரியோர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் இருக் கின்றனர்! இக்கதை, இந்திரகுலம் என்ற வழக்கை வைத்துக் கொண்டு, சூரிய குலம், சந்திர குலம் என்பவற்றின் உற்பத்திக்கு ஆண் பெண் வேண்டியிருந்தமைபோல இதற்கும் வேண்டுமென்று கருதிய யாரோ கட்டியதொன்றாகும். கட்டியவரது கல்வி, மறவர் முதலிய பெயர்க்குப் பொருள் காணலாகாத அளவினதாகும். இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தார் என்பதில் ஓர் குறைவு இருப்பதாகக் கருதி இங்ஙனம் கூறுகின்றே மல்லேம். உலகத்தின் படைப்பையும், சூரிய சந்திர வமிசங்களின் தோற்றத்தையும், வசிட்டராதி முனிவர்களின் பிறப்பையும் நோக்குங்கால் அவை யாவும் இழிவுள்ளனவாகவே நமக்குத் தோற்றுதல் கூடும். தமிழர் களாய இவர்களை இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தவர் களென்று கூறுவது சிறிதும் சரித்திர இயல்புடையதாகா தென்பதே நம் கருத்து. அகலியை வரலாறு கூறும் இராமாயணம் முதலிய வற்றில் கள்ளர் முதலியோரின் பிறப்புக் கூறப்பட்டிருக்குமேல் அது சரித்திர மாகாவிடினும் ஒருவாறு மதிப்பிற்குரியதாகும். அங்ஙனமின்றி யாரோ அறிவிலார் கட்டிவிடுவதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ளத் தகும்? இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்று தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சிவபிரான் உமாதேவிக்கும், அகத்தியர் புலத்தியர்க்கும், குதபுராணிகர் நைமிசவன முனிவர் கட்கும் கூறியனவாம். இவற்றின் சிறப்பையும் மதிப்பையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகை. இந்திரன் அகலியைபால் விருப்பங்கொண்டதை யறிந்த இந்திராணி தன் சாயையால் அகலியைபோலும் அழகுடைய மோகனாங்கி என்பாளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றனனென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார்கள் என்றும் அப்புராணங்கள் கூறும். இவையும் இந்திர குலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவை யென்பது கூறவேண்டிய தில்லை. இவைகளிலிருந்து, கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று வகுப்பினரும் நெருங்கிய சம்பந்தமுடையராய், இந்திர குலத்தினரென வழங்கப் பெற்று வந்திருக்கின்றனர் என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாகும். இனி, ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணிய ராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வமிசங்களைக் காட்டுதற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தின ரெனப்பட்ட நாகரது வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும். அன்றி, சோழர்களே இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை. இந்திரன் ஆரியர் வழிபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை. 'சுராதி ராசன் முதலாகவரு சோழன்' எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்க சோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன. இவ்வாற்றால் பண்டுதொட்டு வழங்கியுள்ள இந்திரகுலம் என்னும் வழக்கும் இவ்வகுப்பினர்க்குப் பொருத்தமான தென்றே ஏற்படுகிறது. கள்ளர், இந்திர குலத்தார், தேவர், அரையர், நாடாள்வார் என்னும் இவ்வைந்தும் இவ்வகுப்பினரைக் குறிக்கும் பொதுவான பெயர்களாகும். இவற்றுள்ளும் அரையர் என்பது பல பட்டங் களோடும் கலந்திருத்தலானும், சரித்திர ஆதரவுடைமையானும் முற்றிலும் பொருந்தியதோர் பொதுப் பெயராகக் கொள்ளற் பாலது.  மூன்றாம் அதிகாரம் அரையர்களின் முற்கால நிலைமை கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந்தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சிவந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று. இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த நிலைமையே இங்கே ஆராய்தற்பாலது. இவ்வாராய்ச்சிக்கு இவர்களுக்குள் வழங்கும் கிளைப் பெயர்கள் பெரிதும் உதவி புரிவனவாகவுள்ளன. பழைய தமிழ்ச் சங்க நாளிலே இப்பொழுது வழங்குவன போன்ற பல பட்டப் பெயர்கள் மக்களுக்கு வழங்கவில்லையென முன்பே கூறியுள்ளாம். இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும், பிறநாடுகளை வென்று கைக்கொண்டமை பற்றியும், படைத்தலைவராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் இடைக்காலத்தே உண்டாயின என்பது விளக்கமாம். இங்ஙனம் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவர்க்கு உண்டாகிய இப்பெயர்கள் பின்பு இவர்களின் வழியில் வந்தோர்க்கெல்லாம் வழங்குவனவாயின. விஜய நகர அரசர்கள் தம் படைத்தலைவர்களைப் பல இடங்கட்கு அனுப்பினர். படைத்தலைவர் என்ற பொருளில் நாயக் அல்லது நாயக்கர் என்ற பெயர் அப்பொழுது அவர்கட்கு உரியதாயிருந்தது. இப்பொழுது அப்பெயர் ஓர் பெருங்கூட்டத்தினையே குறித்து நிற்பது காண்கின்றோம். முதலி என்னுஞ் சொல்லும் படைத் தலைவன் என்னும் பொருளது எனச் சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். படையாட்சி என்பது படையை ஆள்பவன் அதாவது படைத்தலைவன் என்னும் பொருளதாதல் வெளிப் படை. பெரிதும் பிற்காலத்திலுண்டாய சாஸ்திரி, தீஷிதர், குருக்கள், ஓதுவார் முதலிய பெயர்களும் இப்பொழுது குலப் பெயராக வழங்குதலையும், அவர்களில் பலர் இப்பெயர்களின் பொருட்டுச் சிறிதும் பொருத்தமில்லா திருத்தலையும் காண்கின்றோம். கள்ளர்களின் பல பட்டங்களைக் குறித்து யாம் எழுதுவதும் அவர்களது பழைய வரலாறு தெரிவிப்பதற்கே யன்றி இப்பொழுதை நிலைமை கருதியன்று. கள்ளர் வகுப்பினர்க்கு வழங்கும் பட்டங்களை இப்புத்தகத்தின் இறுதியிற் காணலாம். யாம் அறியலாகாத பட்டங்கள் பல இன்னும் இருத்தல் கூடும். வேறு எவ்வகுப்பினுள்ளும் இத்துணை மிகுதியான பட்டப் பெயர்கள் இருப்பதாக யாம் விசாரித்தவளவில் வெளியாக வில்லை. அங்கராயர், அரசாண்டார், ஈழத்தரையர், உலகம் காத்தார், உறந்தைராயர், கலிங்கராயர், காடவராயர், குச்சராயர், கொங்கரையர், கொல்லத்தரையர், சீனத்தரையர், சேதிராயர், பாண்டியர், மழவராயர், முனையதரையர், மூவரையர், விஞ்சைராயர், வில்லவராயர் முதலிய பெயர்களெல்லாம் நில ஆட்சியில் இவர் களுக்குள்ள சம்பந்தத்தைப் புலப்படுத்துகின்றன. ஈழங்கொண்டார், கடாரந்தாங்கியார் முதலிய பெயர்கள் இவர்கள் பிற நாடுவென்று கைப்பற்றினமையைக் குறிப்பிடுகின்றன. களத்துவென்றார், களமுடையார், கொற்றப்பிரியர், கோதண்டப்புலியர், யுத்தப் பிரியர், வாள்வெட்டியார் முதலிய பெயர்கள் இன்னவர் படைவீரராயிருந்தமையை தெரிவிக்கின்றன, இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல் கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன. இவ்வாறே, வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:- அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர் கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விழுப்பாதராயன் முதலியன. இவையும் கள்ளர்க் குரியனவாயிருப்பினும் இருக்கலாம். இப்பட்டங்களுடையார் எங்கிருக்கின்றனரென இப்பொழுது எமக்கு அறியவாராமையால் இவை இன்னார்க்குரியவெனத் துணிந்துரைக்கக் கூடவில்லை- மன்றாடி என்பது கொங்கு வேளாளர்க்குள் வழங்குன்றது. கோயில்களுக்கு நிலம் முதலியன தானஞ் செய்தவிடத்தும், அரசர்கள் சில தீர்ப்புச் செய்த விடத்தும் கீழே கையெழுத் திட்டோரின் பெயர்களாக இப்பட்டங்கள் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றன. இதிலிருந்தே இப்பெயர்களையுடையோர் சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாகும். இவர்கள் அமைச்சர் முதலானோராயிருந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படையாகவும் கூறுகின்றன. 'திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து, திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து, அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர மழவராயன் எழுத்து' (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி 1, பக்கம்40) என்று இங்ஙனம் பலவிடங்களில் வருகின்றன. திருமந்திவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலை நாயகம் என்பது முதலமைச்சர்க்கும் உரிய பெயர்களாகும். இது சாசன ஆராய்ச்சி யாளரின் துணிபு. 11, 12-வது நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் நூல்களிலிருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலைமை வெளிப்படுகிறது. கருணாகரத் தொண்டைமான் முதற்குலோத்துங்கனுடைய முதலமைச்சன் என்பது கலிங்கத்துப்பரணியால் வெளிப்படை. விக்கிரமசோழனுலாவில் 'முன்னம் குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுட் பார்க்குமதி மந்திர பாலகரிற் - போர்க்குத் தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த புகழ்முனையர்கோனு - முடுக்கரையும் கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும் கங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் முனியும் பொழுது முரிபுருவத் தோடு குனியுஞ் சிலைச்சோழ கோனும் . . . . . . அடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்' என்று வருதலானும் இன்னோர் நிலைமை புலனாம். சோழ ஆட்சி நிலைதளர்ந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக் கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும், அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கினவென்பதும் முன்பு காட்டப்பட்டன. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர். சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்ததொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன. கூற்றமும், நாடும் பின்காட்டப் பெறும், ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர், வாணாதிராயர், கொங்குராயர், விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர். திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறுகின்றது:- ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107 ஆவது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந் தருளிய திரிபுவனபதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசுவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்க குல கால வளநாட்டு மீசெங்கிளி நாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக் கொடுத்த நிலமாவது . . . . . (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி3, பகுதி 2, பக்கம் 168). இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக்கூட்டம் கூடுதற்குரிய பொது விடமாகும். வில்லவராயன்பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை 'அரையன் மகன்' என்று கூறியிருப்பது காண்க. இக்கல்வெட்டில், 'இவன், உடையார் திருவானைக்காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளுவித்த இடப வாகன தேவர்க்கும்நம் பிராட்டியார்க்கும்' என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம். ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக்கோள முதலிகள் சிலர் அவ்வூர்த் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமாநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழையஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன. பல ஊர்ப்பெயர்கள் இன்னோர் பெயரால் அமைந் திருத்தலும் அவ்விடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் எமக்குத் தெரிந்தன கீழ்வருவன:- 1. காங்கெயன்பட்டி, 2. சோழகன்பட்டி, 3.ராயமுண்டான் பட்டி, 4.வாலியன்பட்டி, 5.தொண்டைமான்பட்டி, 6.கண்டியன் பட்டி, 7.சாதகன்பட்டி, 8.துண்டுராயன்பாடி, 9.ஆரமுண்டான் பட்டி, 10.ஓசையன்பட்டி, 11.வில்லவராயன்பட்டி, 12. செம்பியன்களர், 13.உலகங்காத்தான்பட்டி, 14.மலையராயன்பட்டி, 15.திராணிபட்டி, 16.கலியராயன்பட்டி, 17. சாணூரன்பட்டி, 18. கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்), 19. ஏத்தொண்டான்பட்டி 20. பத்தாளன் கோட்டை, 21. பாப்பரையன்பட்டி, 22. மாதைராயன்பட்டி, 23. சேதிராயன் குடிக்காடு, 24. நல்ல வன்னியவன் குடிக்காடு, 25. வல்லாண்டான்பட்டி, 26. வாண்டையானிருப்பு, 27. தென் கொண்டானிருப்பு, 28. நரங்கியன்பட்டி, 29. பாலாண்டான்பட்டி, 30. கண்டர்கோட்டை, 31. வன்னியன்பட்டி, 32. பாண்டுராயன் பட்டி, 33. சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார்பட்டி), 34. காடவராயன் பட்டி, 35. சாளுவன்பேட்டை, 36. நாய்க்கர்பாளையம் (சாவடி நாயக்கர் கிராமம்), 37. செம்பியன் மணக்குடி. இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பலவிடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது. துண்டுராயன்பாடி, பலபத்திரன்கோட்டை, காங்கெயன்பட்டி, ஆற்காடு, சுரக்குடிப்பட்டி, சோழகன்பட்டி, உறத்தூர், விண்ண மங்கலம், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, பானமங்கலம், அன்பில், மாங்குடி, கண்டர்கோட்டை, கிள்ளிகோட்டை, பத்தாளன் கோட்டை, வாழவந்தான்கோட்டை, பனையக்கோட்டை, காசாங் கோட்டை, பட்டுக்கோட்டை, கல்லாக்கோட்டை, கோட்டைப்பத்து, பிங்களக்கோட்டை, திருமங்கலக்கோட்டை, வத்தனாக்கோட்டை, மல்லாக்கோட்டை, எயிலுவான்கோட்டை, நடுவாக்கோட்டை, மயிலாடு கோட்டை, வாளமரங்கோட்டை, துரையண்டார்கோட்டை, தெற்குக்கோட்டை, சூரக்கோட்டை, சத்துருசங்காரக் கோட்டை, நாயக்கர்கோட்டை, ஆதனக்கோட்டை, மாதைராயன் புதுக்கோட்டை என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டையிருந்து அழிந்த விடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் வீடுகளுக்கும் கோட்டை யென்று பெயர் வழங்குகிறது. சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்திலே திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன. முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரை நாழிகையளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது. அதில் செங்கல்லாலாய கோட்டை மதிலின் அடிப்பகுதியும், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக் குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்து கிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற் பார்த்துளேம். ஒரு மகம்மதிய மன்னரானவர் கண் தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் 'செங்கற்கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா' எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். துண்டுராயன் பாடிக் கோட்டையிலிருந்த சோழங்கதேவ அம்பலகாரர்க்கும், அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அரசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச் செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர். பலபத்திரன்கோட்டை என்பது ஐயனார்புரத்தின் மேற்கே முக்கால் நாழிகை யளவில் உள்ள விண்ணனூர்ப் பட்டியில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முன்னிருந்த பலபத்திரச் சோழகரால் கட்டப்பட்டது. பிறகோட்டைகளின் வரலாறுகள் பின்பே ஆராய்ந்து தெரியவேண்டியிருத்தலின் அவற்றைக் குறித்து ஒன்றும் எழுதாது விடுக்கின்றோம். இப்பொழுது இக்குலத்தாரில் அரசரும், குறுநில மன்னருமாயுள்ளார் வரலாறுகள் அடுத்த அதிகாரத்திற் காட்டப்படும்.  நான்காம் அதிகாரம் புதுக்கோட்டை அரசரும், குறுநில மன்னரும். 'தோட்டி முதல் தொண்டைமான் வரையில்' என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்குப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டை மண்டலமாகிய பல்லவ நாட்டினின்றும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்துக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டு கொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை, ' ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன் றணிநாடு - செய்யதிருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன்' என்பது விளக்கும். புதுக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த மன்னர்களின் வரலாறு சுருக்கமாக இங்கே கூறப்படும். ஸ்ரீரங்கராயலு என்னும் விஜய நகர அரசனது மதம் கொண்ட யானையை அடக்கிப் பலவிருதுகள் பெற்ற ஆவடை ரகுநாத தொண்டைமானைப் பற்றி இரண்டாம் அதிகாரத்தில் கூறியிருக்கிறோம். மேற்படி தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான். 1, இரகுநாதராய தொண்டைமான் (1686 - 1730) புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்க மங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்தவிடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர், மதுரையை ஆண்ட நாயக்கருக்காகத் திருவாங்கூர், மைசூர், தஞ்சாவூர் என்னும் இடங்களில் இருந்த அரசர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை வென்றனர். சொக்கநாத நாயக்கர் வலிமை மிகுவது கண்டு அச்சமுற்றனராக, அக்கால் அவருக்கு முதல் மந்திரியாய் இருந்த கோவிந்தப்ப ஐயர் சூழ்ச்சியால் இவரது வலி குன்ற நேர்ந்தது. பின்பு, இவர் இராமநாதபுரம், தஞ்சை முதலிய இராச்சியங்களிலிருந்து திருமெய்யம், பட்டுக்கோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினர். 1717-1727 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக்குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் புதுக்கோட்டையில் அடைக்கலம் புகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்டு நலமுற வாழ்ந்து வந்தனர். இம்மன்னரது நடுவு நிலைமை கிறித்தவர்களை நடத்தினமுறைமையிலிருந்து அறியக்கிடக்கின்றது. இவர் வீரத்தாலும், புய வலியாலும், மனவுறுதியாலும், நடுவு நிலையாலும் மிகவும் புகழ்வாய்ந்தவராவர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர் தம் பேரர்களில் மூத்தவராகிய விஜயரகுநாதராய தொண்டைமானுக்கு முடி சூட்டிவிட்டு 1730 இல் இவ்வுலக வாழ்வி னீங்கினார். 2. விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769) இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர் களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத் தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டு பாளையப் பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்துக் கொண்டனர். அக்காலத்தில் மொகலாயர் (சந்தா சாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது. ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞான புரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறுப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார். 1733 இல் தஞ்சை அரசரின் சேனைத்தலைவனாகிய ஆனந்த ராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர் புரியாமலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக் கொண்டானாயினும், நெடுநாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியாமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். 'கனத்த புகழ்படைத்த காளிக்குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்' என்று பாடுவதும் உண்டு. ஐதராபாத்து நைசாம் எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேற் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்ட பொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித் திருந்தான். அதனையறிந்த கூனம்பட்டி முதலிய ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர். அவர்களைத் தண்டிக்குமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாது சமாதானமாய்த் திரும்பினான். மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கருநாடக ராச்சியவிடயமாய் நடந்த பேர்பேற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்குத் துணையாய் நின்று சந்தாசாகிப்பையும் பிரெஞ்சுக்காரரையும் எதிர்த்தனர். இந்தப் போரின் பயனாக இவருக்கு அநேக நாடுகள் சேர்ந்தன. நவாப்புக்கு திரை கொடுப்பதில்லை யெனவும் உடன் படிக்கை செய்து கொண்டனர். இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரைப் பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுண்ணிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றி பெறுவர் என்பதனைத் தெளிவாக உணர்ந்தமையாற்றான் புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்குப் புறப்பட்டுப்போகும்பொழுது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அஃது, 'எங்கள் வெற்றிக்குக் காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக்குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூர தேயத்திற்குச் சென்றுவிட்டாலும் எனக்குத் தாங்கள் புரிந்த நன்மைகளும், உதவிகளும் என் மனத்தில் நின்று கொண்டேயிருக்கும்' என்பது. இவர் மதவிடயங்களில் மிகப் பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின் உள் விவகாரங்களை மறந்து விடாது கவனித்து வந்திருக்கின்றனர். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். இராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமை யுறச் செய்தவர் இம்மன்னரேயாவர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769 இல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மா ஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர். 3. இராயரகுநாத தொண்டைமான் (1769-1789) இவர், 1738 இல் பிறந்தார். தமது முப்பத்தோராவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிடத்தில் நண்பு பூண்டிருந்தார். 1780 இல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடி விழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதரலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டை நாட்டில் புகுந்த பொழுது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது. இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்: "நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்றுதான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழித்து வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்காணக்கான குதிரைப் படை வீரரைச் சிறை கொண்டதேயாம். தாங்கள் இன்னும் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு." இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதர் தான் படையெடுத்துச் சென்ற நாடுகளில் ஊர்களைத் தீயிட்டும், மரங்களை வெட்டியும், பயிர்களையழித்தும் ஏரி குளங்களின் அணைகளை வெட்டியும் கொடுமைகள் இயற்றி வந்தான். அன்றியும் பெண்டிர்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளானார்கள். இக்கொடியோனை முற்ற முறியடித் தற்கு இம்மன்னரே காரணமாய் இருந்தார். ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவும் இவர் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக் கோட்டைத் தாலூகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக் குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை. ஒரே மகள்தான் உண்டு. 1789 டிசம்பர் 30 இல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார். 4. இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர். (1789 - 1807) இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத் தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790இல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளி மேல் படையெடுத்து வந்த காலை இம்மன்னர்ஆங்கிலேயருக்குத் துணையாக நின்று அவனை மடக்கியடித்தார். 1795இல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜா பகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார். இவர் மூன்று கல்யாணம் செய்துக் கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகுநாதராய தொண்டைமானும், ரகுநாத தொண்டை மானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர். இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுல கெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடன்கட்டை யேறிவிட்டார். 5. இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 - 1825) இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்தபடியால் இவருடைய பங்காளி விஜய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார். அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக் கொண்டார். ஒப்புக்கொண்டபின், இவருக்கு முடிசூட்டு விழா புதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன் நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார். குழந்தைகளாகவிருந்த விஜய ரகுநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழி களும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் பயிற்றுவிக்கப் பெற்றனர். இம்மன்னர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக் களாகப் பகுக்கப்பட்டது; நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்; அரசாங்கத்திற்கு வேண்டிய காரியங்களும் செய்யப்பெற்றன. 1812இல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று. இப்பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812இல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு. இவர் 1825இல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரகுநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார். 6. ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 - 1839) இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830 இல் ஆங்கில அரசாங்கத்தாரால் `ஹிஸ் எக்சலென்சி' என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜூலை 13இல் இம்மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர். 7. ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839 - 1886) இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844 இல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866 இல் நிதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. அவை:- 1. அப்பீல் கோர்ட்டு. 2. மூன்று ஜட்ஜிகள் உள்ள செஷன்ஸ் கோர்ட்டு. 3. ஸ்மால் காஸ் கோர்ட்டு. 4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள். இலாகாக்கள்:- 1. வரிவசூல் (ரெவின்யூ) (1) கிராமம் (2) தாலுகா 2. காவல் (போலீசு) 3. சிறைச்சாலை (ஜெயில்) 4. தபால் 5. பங்களா 6. மராமத்து (இஞ்ஜினீரிங்) 7. உப்பளம் (ஆப்காரி) 8. காடு 9. நீதிமன்றம் (கோர்ட்டுகள்) 10. ஸர்க்கிள் ஆபீஸ் இவர் 1876இல் நம் மூத்த புதல்வியின் மூன்றாவது குமாரரைத் தத்து எடுத்துக் கொண்டார். 1884இல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபால் ஆபீசுகள் ஏற்பட்டன. 2 ஆவது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப் பெற்றது.இவர் 1886 இல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார். 8. ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886 முதல்) இவர் பதினொரு வயதுடையராயிருக்கும்பொழுது 1886இல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடிசூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரையேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும் ஆங்கில அரசாங்கத் தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம்மன்னர் காலத்தில் முடிவுற்றது. அம்முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டுதோறும் முப்பத்தெண்ணாயிரம் ரூபா இம்மன்னர்க்குக் கொடுக்கும்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விடப்பட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆகலின் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களை யெல்லாம் அளந்து சிறிது வரி விதித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபா ஆண்டுதோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு, நிலக் காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி (காலேஜ்), மருத்துவ நிலையம் (ஆஸ்பத்திரி), மன்றம் (ஆபீஸ்) இவற்றின் கட்டிடங்கள் திருத்தி யமைக்கப் பெற்றன. நீதியிலாக்காவும் மீண்டும் திருத்தியமைக்கப் பட்டது. இதன்படி மூன்று நீதிபதிகள் (ஜட்ஜிகள்) அடங்கிய உயர்நெறி மன்றம் (ஹைகோர்ட்டு) ஆக 1887இல் அமைக்கப் பட்டது. 1898இல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டி யிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் இராச்சியத்தை விட்டுச் சென்றனர். ஐரோப்பாவில் பற்பல இடங்கட்குச் சென்று ஆங்கில நாட்டிற்குச் சென்ற பொழுது ஆங்கில இளவரசராயிருந்த ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ஆம் தேதி வரவேற்கப்பட்டார். ஜூலை மாதம் 14இல் இந்திய மகா சக்கரவர்த்தினியார் தமது அரண்மனையில் வரவேற்றனர். 1898 நவம்பரில் இவ்வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பியபொழுது மகா ஜனங்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரை வரவேற்றதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது. 1902இல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (ஜனப் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907இல் இருந்து இதில் 18 உறுப்பினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப் பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான், நாட்டுக்காவற் றலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்), ஒழிவு பெற்ற தலைமை நீதிபதி (ரிட்டயர்டு சீப் ஜட்ஜி) இவர்கள் அடங்கியதாகும். இம்மன்னர் காலத்திலும் இராச்சியம் பலவழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டு வரப்பட்டது. 1911 டிசம்பர் 12இல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்கு இவ்வரசரும் வரவேற்கப்பட்டனர். 1913இல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது. இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:- 1. புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் படுத்தற்பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால்நடைக் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்கு தற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார். 2. பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார். 3. பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலைவிலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்கும்படி காப்புக்களரிகள் (ரிஜிஸ்தர் ஆபீஸ்கள்) பல இடங்களில் ஏற்படுத்தினார். 4. புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார். 5. நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக் குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார். 6. குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் வைத்தார். (இப்பொழுது சமஸ்தானத்தில் 600 பள்ளிக் கூடங்களிருக்கின்றன.) 7. தொழிற்சாலை, விவசாய சாலை முதலியன ஏற்படுத்தினார். 8. எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார். (இப்பொழுது இச்சங்கங்கள் சுமார் 100 வரை நடைபெற்று வருகின்றன.) 9. நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது ஜட்ஜிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார். 10. ஜனப் பிரதிநிதிச் சபை ஏற்படுத்தினார். இவ்வரசர் மீது 'இயன்மொழி வாழ்த்து' என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் என்னும் புலவரால் இயற்றப்பெற்று, மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் சாத்துக் கவியுடன் வெளி வந்துள்ளது. அதிலே இவ்வேந்தர் பெருமைகள், ' தானந் தனியருள் ஞான முதலன வுரிய நாயக னுத்தம குணநிதி பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு னவிலும் விசயரகு நாதன் மகன்மக னிவனெனக் கன்ன னிவனென நுவலும் கராமடிந் திடச்சக் கரப்படை விடூத்த இராம சந்திர வேந்தல் சேயென ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென அராவணை யமல னருளொருங் குதித்தெனக் குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப் பராவருந் தருமம் பாரில் முளைத்தெனச் சராசன மதனன் றனிவடி வெடுத்தென இராசமண் டலத்தி லிவற்கிணை யிலையெனச் சுராதி ராசன் றொல்குலம் விளங்கத் தராதலம் விளங்கத் தவநெறி விளங்கப் புராதன நான்மறை புவிமிசை விளங்க ஆவிர்ப் பவித்த வரசர் சிகாமணி என்று இங்ஙனம் பலவாறு கூறப்பட்டுள்ளன. மாட்சி பொருந்திய விஜயரகுநாத துரை ராஜ தொண்டைமான் பகதூர் (1922 முதல்) இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்கள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஒப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா தேசத்திற்குச் சென்று விட்டமையால், இவர் 1922அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17 இல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர், 1898-ல் காரிய நிர்வாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினார். 1909இல் திவான் பதவியை ஏற்றுக் கொண்டனர். 1922இல் அரசாட்சியை ஒப்புக்கெண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இதுகாறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கவைகளாம். நகர சபையில் 8 அங்கத்தினரும், சட்டசபையில் 35 அங்கத்தினரும் ஐனங்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டியவராவர். இன்னும் தமது நாடு முழுதும் கட்டாய இலவசக்கல்வி ஏற்படுத்திப் பெரும் புகழுடன் இவ்வரசர் பெருந்தகை நீடுழி வாழ்வாராக. புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்றும், புதுக்கோட்டையரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர் மாங்காட்டான்பட்டி இராங்கியர், மேலைக்குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்றார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்றார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர். புதுக்கோட்டை இராச்சியம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கி வருகிறது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப்பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறியபடி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர். தமது நாட்டிற்குள் குற்றவாளிகட்கு எவ்வகைத் தண்டனையும் விதிக்க உரிமை யுள்ளவர். ஹைகோர்ட் போலும் நீதிமன்றங்களைத் தாமே ஏற்படுத்தி நடத்தும் உரிமை வாய்ந்தவர். ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு சிறிதும் இறை செலுத்தாத பெருமை பெற்று, இந்திய நாட்டு ஏனை மன்னர் களிலும் சிறந்து விளங்குபவர். இந்த இராச்சியத்தின் பரப்பு 1200 சதுர மைல். இதன் வருட வரும்படி 21 லட்சம் ரூபாயாகும். இத்தகைய இராச்சியம் மேன்மேலும் தழைத்தோங்கித் தமிழகத்தின் பெருமைக்குச் சான்றாக நிலவுமாறு இறைவன் றிருவருள் சுரப்பானாக. சோணாட்டின் இராசதானியாகிய தஞ்சையைச் சார்ந்த பதின்மூன்று சமீன்றார்களில் பதினொருவர் கள்ளர் வகுப்பினர் எனவும், இப்பொழுது வேறு வகுப்பினர்க்குரியவாயுள்ள கோனூர், அத்திவெட்டி என்னும் இரு சமீன்களும் முறையே ஆதியில் கண்டர் கோட்டை, மதுக்கூர் என்னும் கள்ளர் குலச் சமீன்களைச் சேர்ந்தன எனவும் தெரிகின்றது. சமீன்றார்களிற் பலர் தங்களுடைய ஊக்கக் குறைவாலும், தீச்செயலாலும் தம் சொத்துக்களையும், பெருமைகளையும் இழந்துகொண்டு வருகின்றனர். இது பெரிதும் இரங்கத்தக்கது. எனினும் சிலரேனும் நன்னிலையில் இருப்பது குறித்து மகிழுகின்றோம். பாப்பா நாடு சமீன்றார் ஆகிய மேன்மை பொருந்திய ராவ் பகதூர் ஆர். சாமிநாத விஜய தேவர் அவர்கள் சமீன்றார்களின் பெருமையை நிலைநிறுத்தி வருகின்றனர். சுற்றம் பேணுதல் முதலிய உயர் குணங்கள் இவர்கள் பால் இருக்கின்றன. சமீன்களின் அளவு முதலிய விவரம் அடுத்துள்ள அட்டவணையிற் காண்க. பூண்டி வாண்டையாரும், உக்கடைத் தேவரும் பாளையக் காரராகிய குறுநில மன்னர் போலும் சிறப்பு வாய்ந்தவர்களே. ராவ் பகதூர் வி. அப்பாசாமி வாண்டையார், எம்.எல்.ஏ அவர் களுக்கு ஆயிரம் வேலிக்கு அதிகமான அதாவது 7000 ஏக்கரின் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. ராவ் பகதூர் ஏ.அண்ணாசாமித் தேவர் அவர்களும் அவ்வளவு பெருநிலம் வாய்ந்தவர்களே. சாவடி நாயக்கரும் பண்டு ஆயிரம் வேலியுடையார் என்பர். இவர்களைக் குறித்துப் பின்னரும் சில கூறப்படும். பாளையத்தின் கிராமங்களின் பரப்பின் 1879 இல் பாளையமுடையார் 1879 இல் அரசாங்கத் பெயர் தொகை அளவு பெயர் திற்குக் கொடுத்த (ஏக்கரில்) இறைப்பகுதி ரு அ ப. 1. கண்டர் கோட்டை 53 54468 அச்சுதப் பண்டாரத்தார் 6577 4 11 2. பாலையவனம் 52 13984 இராமச்சந்திர விஜய அருணாசல வணங்காமுடிப் பண்டாரத்தார் 3767 12 0 3. பாப்பா நாடு 36 23412 இராமலிங்க விஜய தேவர் 4316 6 6 4. கல்லாக்கோட்டை 17 15481 விஜயரகுநாத அரங்கசாமிச் சிங்கப்புலியார் 1701 13 6 5. சில்லத்தூர் 10 14345 விஜயரகுநாத அரங்கசாமிப் பன்றிகொண்டார் 2165 13 9 6. சேந்தங்குடி 9 18909 விஜயரகுநாத அருணாசல வணங்காமுடி வழுவடையார் 2046 10 2 7. கோனூர் 2 1612 சீனிவாசராயர் 483 3 11 8. பாதரங்கோட்டை 7 8896 விஜயரகுநாத பாலாஷி சிங்கப்புலியார் 1369 9 11 9. சிங்கவனம் 26 8631 சவ்வாஜி விஜயரகுநாத மகாராஜா மெய்க்கன் கோபாலர் 3261 9 10 10. மதுக்கூர் 12 13549 சவ்வாஜி விஜயரகுநாத பாலாஜி கனகசபைக் கோபாலர் 2491 7 10 11. நெடுவாசல் 15 9532 விஜயரகுநாத முத்தையன் பன்றிகொண்டார் 2037 9 6 12.அத்திவெட்டி 11 6287 துரைசாமி ஆகாசம் சேர்வைகாரர். 913 14 9 13. புனல்வாசல் 1 2527 அப்புசாமி மழவராய பண்டாரத்தார் 350 15 7 ஐந்தாம் அதிகாரம் நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் தமிழரது நாடு தமிழ் நாடு எனவும் தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகின்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு. முதலிலே, தமிழ்நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்து வந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிழகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியுடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும். சேர மண்டலம் வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு. பாண்டி மண்டலம் வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி. சோழ மண்டலம் கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். தொண்டை மண்டலம் மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் ஆர்க்கு முவரி யணிகிழக்குப் - பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருப தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு. கொங்கு மண்டலம் வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக் குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்குக் கழித்தண் டலைசூழுங் காவிரிநன் னாடா குழித்தண் டலையளவு கொங்கு. சோணாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே திருமுனைப் பாடி நாடு என்றும் ஒன்று உளதாயிற்று. இதற்கு வேறு சில பெயர்களும் உண்டு. கங்க மண்டலம், ஈழ மண்டலம் என்பன இங்கு ஆராய்ச்சிக் குரியவல்ல. சோழ மன்னர்களின் ஆணை பரவிய இடைக்காலத்தில் பாண்டி மண்டலத்திற்கு ராஜராஜ மண்டலம் எனவும், தொண்டை மண்டலத்திற்கு ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனவும், கொங்கு மண்டலத்திற்கு அதிராஜராஜ மண்டலம் எனவும், சோழ கேரள மண்டலம் எனவும் பெயர்கள் வழங்கலாயின. அவை பின்பு விளக்கப்பெறும். இம்மண்டலங் களின் உட்பிரிவுகள் வளநாடு, நாடு, கோட்டம், கூற்றம் என்னும் பெயர்களால் வழங்கின. வளநாடு அல்லாத பிரிவுகள் பழைய தமிழ்ச் சங்கநாளிலே இருந்திருக்கின்றன என்பதற்குச் சங்க நூல்களில் அப்பெயர்கள் காணப்படுதலே சான்றாகும். இடைக்கழி நாடு, ஏறுமா நாடு, கோனாடு, பறம்பு நாடு, மலையமானாடு, மழவர் நாடு, மாறோக நாடு, முக்காவனாடு, பல்குன்றக்கோட்டம், குண்டூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் என்னும் பெயர்கள் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன. பிற்பட்ட தமிழ் நூல்களிலும் நாட்டு வழக்குகள் பயின்றுள்ளன. சைவசமயகுரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் திருநாட்டுத் தொகையில் மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுக்கை நாடு, நாங்கூர் நாடு, நறையூர் நாடு, மிழலை நாடு, வெண்ணி நாடு, பொன்னூர் நாடு, புரிசை நாடு, வேளூர் நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம் என்னும் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றிலுள்ள ஊர்களில் ஒரோவொன்றன் பெயரும் கூறியுள்ளார்கள். பெரிய புராணத்திலே மேன்மழநாடு, மேற்கா நாடு, கோனாடு, மருகல் நாடு என்பன வந்துள்ளன. இங்ஙனம் பிறவற்றுள்ளும் காண்க. கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து அவற்றிலிருந்து நாட்டின் பிரிவுகளைப் பற்றிய பல அரிய செய்திகள் வெளியாகின்றன. அவை ஒருவாறு இங்கே விளக்கப்படும்: கோட்டம், நாடு என்னும் பிரிவுகள் தொண்டை மண்டலத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள்சோழ மண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும், பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும். அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும், பல வளநாடுகள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும். கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாகக் கூறு என்பதொன்றும் சிறுபான்மை காணப்படுகிறது. உதாரணமாக ‘களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத் தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம்’ என வருவது காண்க. இதன்படி ஊர், கூறு, நாடு, கோட்டம், மண்டலம் என்பன முறையே ஒன்றினொன்று உயர்ந்தனவாகும். வளநாட்டின் உட்பட்ட நாடு என்பதற்குப் பிரதியாகக் கூற்றம் என்பதும் காணப்படுகிறது. ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றம், ராஜாசிராய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம், நித்தவிநோத வளநாட்டு ஆ வூர்க் கூற்றம், நித்தவிநோத வளநாட்டுக் கிழார் கூற்றம், கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றம்’ என வருதல் காண்க. சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாகத் தென்கரை நாடு, வடகரை நாடு என்னும் பிரிவினையும் உடைத் தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும். ‘சோழ மண்டலத்துத் தென்கரை நாட்டு நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான்’ என வருகின்றது. சில இடங்களில் கோட்டமாவது, வளநாடாவது கூறப்படாமல், மண்டலத்தையடுத்து நாடு, கூற்றம் என்பன கூறப்படுகின்றன. மண்டலம், கோட்டம், நாடு முதலியவற்றின் பெயர்கள் காலத்திற்குக் காலம் மாறியும் வந்துள்ளன. தொண்டை மண்டலத்திற்கு ஜயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் ஏற்பட்டு விட்டது வெளிப்படை. ‘தொண்டை நாடான ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடு’ என இங்ஙனம் வருகின்றன. இவ்வாறே பாண்டி நாட்டிற்கு ராஜ ராஜ மண்டலம் என்றும், கொங்கு நாட்டிற்குச் சோழ கேரள மண்டலம் என்றும் பெயர்கள் வழங்கியுள்ளமை ‘பாண்டி நாடான ராஜராஜ மண்டலம்’ என்றும், ‘கோனேரி மேல்கொண்டான் கொங்கான சோழகேரள மண்டலம்’ என்றும் வருதலால் அறியலாகும். ‘அதிராஜராஜ மண்டலத்து வெங்காலநாடு' என வருதலால் கொங்கிற்கு அப்பெயருண்மையும் பெறப்படும். ஈழநாடும் ‘மும்மடி சோழ மண்டலம்’ எனப்பட்டது. இவையெல்லாம் சோழ மன்னர்களின் வெற்றிக்கு அடையாளங்களாகும். தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாகவும், 79 நாடு களாகவும் வகுக்கப்பட்டிருந்தது. ‘நாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்’, ‘கோட்டமோ ரிருபானான்கு கூறுநா டெழுபத் தொன்பான்’ என்பன காண்க. கோட்டம் இருபத்து நான்காவன; (1) ஆமூர், (2) இளங்காடு, (3) ஈக்காடு, (4)ஈத்தூர், (5) ஊற்றுக்காடு, (6) எயில், (7) கடிகை, (8) காலியூர், (9)களத்தூர், (10) குன்றபத்திரம், (11) சிறுகரை, (12) செங்காடு, (13) செந்திருக்கை, (14) செம்பூர், (15) தாமல், (16) படுவூர், (17) பல்குன்றம், (18) புழல், (19) புலியூர், (20) பேயூர், (21)மணையில், (22) வெண்குன்றம், (23) வேங்கடம், (24)வேலூர் என்பன. ஒவ்வொன்றன் பின்னும் கோட்டம் என்பது சேர்த்துக் கொள்க. தொண்டை நாடு ஐயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயரெய்தியவிடத்தும் அங்ஙனமே கோட்டம் என்னும் பிரிவு களை உடைத்தாயிருந்தது. ஆமூர்க்கோட்டம், படுவூர்க்கோட்டம், பல்குன்றக்கோட்டம், காலியூர்க் கோட்டம், எயிற்கோட்டம், ஊற்றுக் காட்டுக்கோட்டம், வெண்குன்றக்கோட்டம், செங்காட்டுக் கோட்டம், புலியூர்க்கோட்டம், புழற்கோட்டம், மணையிற் கோட்டம், களத்தூர்க் கோட்டம் முதலியன ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தனவாகச் சாசனங்களால் அறியலாகும். முற்பட்ட சில சோழர் காலத்தில் கோட்டம் என்றிருந்தது, பின்வந்த சோழர் காலத்தில் சோழ மண்டலத்தின் பிரிவுமுறைப்படி வளநாடு என மாறியும் இருக்கிறது. ‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்கசோழ வளநாட்டு மணிமங்கலம்’ என்பது உதாரணமாகும். சோழ, பாண்டிய, சேர மண்டலங்களில் கூற்றம், வளநாடு முதலியவை எத்துணைப் பகுதிப்பட்டிருந்தன வென்னும் வரையறை புலப்படவில்லை. உறையூர்க் கூற்றம், பாச்சிற்கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், வெண்ணிக்கூற்றம், ஆவூர்க் கூற்றம், கழார்க் கூற்றம், பட்டினக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், வேளூர்க் கூற்றம், ஒளியூர்க் கூற்றம், உறத்தூர்க் கூற்றம், சூரலூர்க் கூற்றம் என்னும் கூற்றங்களும்; மங்கலநாடு, மருகல்நாடு, மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு, ஆக்கூர் நாடு, அம்பர் நாடு, அதிகைமங்கை நாடு, இடையள நாடு, நறையூர் நாடு, தேவூர் நாடு, பொய்கை நாடு, மண்ணி நாடு, நென்மலிநாடு, புறங்கரம்பை நாடு, பனையூர் நாடு, திரைமூர் நாடு, பிரம்பூர் நாடு, குறும்பூர் நாடு, மிழலை நாடு, குறுக்கை நாடு, விளத்தூர் நாடு, திருக்கழுமல நாடு, திருவாலி நாடு, வெண்ணெயூர் நாடு, நாங்கூர் நாடு, கொண்டல் நாடு, ஒக்கூர் நாடு, உறத்தூர் நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு, அம்பு நாடு, கற்பிங்க நாடு, ஊமத்த நாடு, காசா நாடு, தென்னவனாடு, மீய்செங்கிளி நாடு, எயினாடு, புறக்கிளியூர் நாடு, மேற்கா நாடு, கார்போக நாடு, வடவழி நாடு, பிட வூர் நாடு, குழித்தண்டலை நாடு, நல்லாற்றூர் நாடு, ஏரியூர் நாடு, இடையாற்று நாடு, ஊற்றத்தூர் நாடு, மீகோழை நாடு, கோனாடு முதலிய நாடுகளும்; அருண்மொழித்தேவ வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு, நித்தவிநோத வளநாடு, இராஜராஜ வளநாடு, இராஜேந்திர சிம்ம வளநாடு, உய்யக்கொண்டான் வளநாடு, ஷத்திரிய சிகாமணி வளநாடு, கேரளாந்தக வளநாடு, ஜயசிங்க குலகால வளநாடு, இராஜாசிரய வளநாடு, கடலடையா திலங்கை கொண்டான் வளநாடு, விருதராஜ பயங்கர வளநாடு என்னும் வளநாடுகளும் சோழ மண்டலத்தில் இருந்தனவாகக் கல்வெட்டுக்கள் முதலியவற்றால் தெரிகின்றது. வளநாடுகளெல்லாம் சோழ மன்னர்களின் பெயர்களையே பெயராகக் கொண்டுள்ளன. சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வளநாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும். வளநாட்டின் பெயரும் ஒவ்வொரு காலத்தில் மாறி வந்துள்ளது. தஞ்சாஆரைத் தன்னகத்துடைய நாடு ஒரு காலத்தில் ‘ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாடு’ என்றும், மற்றொரு காலத்தில் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றம்’ என்றும் வெவ்வேறு பெயர்களை உடைத் தாயிருந்தது. கொங்குமண்டலத்தின் பிரிவுகளில் கோட்டம், வளநாடு என்னும் பெயர்கள் காணப்பட்டில. அஃது இருபத்து நான்கு நாடுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை: 1. பூந்துறை நாடு1 2. தென்கரை நாடு 3. காங்கேய நாடு 4. பொன்கலூர் நாடு 5. ஆறை நாடு 6. வாரக்கனாடு 7. திருவாவினக்குடி நாடு 8. மணநாடு (வையாபுரி நாடு) 9. தலைய நாடு 10. தட்டய நாடு 11. பூவாணிய நாடு 12. அரைய நாடு 13. ஒடுவங்க நாடு 14. வடகரை நாடு 15. கிழங்கு நாடு 16. நல்லுருக்க நாடு 17. வாழவந்தி நாடு 18. அண்ட நாடு 19. வெங்கால நாடு 20. காவடிக்கனாடு 21. ஆனைமலை நாடு 22. இராசிபுர நாடு 23. காஞ்சிக்கோயி னாடு 24. குறும்பு நாடு என்பன. இவற்றில் சில நாடுகட்கு இணை நாடுகள் எனவும் வேறு உள்ளன. பூந்துறை நாட்டின் இணை நாடுகள் பருத்திப்பள்ளி நாடு, ஏழூர் நாடு என்பன. இங்ஙனமே வேறு சிலவும் உள்ளன. கோட்டம், வளநாடு, நாடு என்பன இன்ன இன்ன இடத்தில் இருந்தனவென்பது அவற்றைச் சார்ந்துவரும் ஊர்ப்பெயர் முதலியவற்றால் அறியலாகும். ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கொட்டத்துப் புழல் நாட்டுத் திருவொற்றியூர், ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத் தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம், உலகுய்யக்கொண்ட சோழவள நாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர், பாண்டிய குலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுத் திருவானைக்கா, ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்' என்பன காண்க. சில இடங்களில் ஊர்ப்பெயரே கோட்டம் முதலியவற்றின் பெயராக அமைந்திருத்தலும் அவற்றை அறிதற்கு உதவியாகும். ஒரோவழி நாடு இருகூறுடையதாகி `வகை' என வழங்கியுளது. நகரங்களும், ஊர்களும் `தனியூர், பற்று, ஊர், குறைப்பற்று' என்பனபோலும் பெயர்களால் வழங்கின. சிற்சில ஊர்கள் தமக்குரிய பழம் பெயருடன் சில அரசர் பெயர்களையும் பெயராக ஏற்று வழங்கலுற்றன. ‘கருந்திட்டைக் குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழபுரம், சேவூரான சோழ கேரள நல்லூர், கோட்டாறு ஆன மும்மடிச் சோழநல்லூர், கரு வூரான முடிவழங்கு சோழபுரம், ஏரிநாட்டு விண்ணனேரியான மும்மடிச் சோழநல்லூர்’ என இங்ஙனம் வருகின்றன. கல்வெட்டுக்க ளை ஆராய்தலினால் இங்ஙனம் அறியலாகும் உண்மைகள் மிகப் பலவாம். நாட்டின் பிரிவுகள் தொன்றுதொட்டு இங்ஙனம் வேறுபட வழங்கிவந்தாற்போலவே இப்பொழுதும் கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வளநாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக் கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோராதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொது வாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றித் தெரிந்தவரையில் இங்கே எழுதுகின்றோம். ஈ தர்ஸ்டன் என்பார் எழுதிய ‘தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு’ என்னும் புத்தகத்தில் பின் உள்ளவை காணப்படு கின்றன. மதுரைக் கள்ளர் நாடுகள் 1. மேல் நாடு, 2. சிறுகுடி நாடு, 3. வெள்ளூர் நாடு, 4. மல்லாக் கோட்டை நாடு, 5. பாகனேரி நாடு, 6. கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு, 7. கண்டதேவி நாடு, 8. புறமலை நாடு, 9. தென்னிலை நாடு, 10. பழைய நாடு என்பன. புறமலை நாட்டுத் தலைவரை ஆயர் முடிசூட்டுவது வழக்கம். மேல்நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது. சிறுகுடி நாட்டின் உட்பிரிவுகள்: ஆண்டி, மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர் களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்: வேங்கைப்புலி, வெக்காளிப்புலி, சாமிப்புலி, சம்மட்டி மக்கள், திருமான், சாயும் படைதாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமையில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுவர்ண மூர்த்திஸ்வாமி திருவிழாச் சம்பந்தமாய்க் கண்ட தேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன்மாரி, இரவுசேரி, தென்னிலை என்ற நான்கு நாடுகளும் சிவகங்கைச் சமீனில் மற்றொரு பகுதியாகும். பாண்டி நாட்டில் உள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கல்லல், ஸ்ரீமத்.மணிவாசக சரணாலய சுவாமிகளும், சிவகங்கை, சிரஞ்சீவி எஸ்.சோமசுந்தரம்பிள்ளையும் நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன: 1. மேல நாடு: இது ஐந்து தெருவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலைத் தெருவானது நரசிங்கன்பட்டி முதலிய 8 ஊர்களையும், தெற்குத் தெருவானது தெற்குத்தெரு முதலிய8 ஊர்களையும், வடக்குத் தெருவானது வல்லாளப்பட்டி முதலிய 27 ஊர்களையும், பத்துக்கட்டுத் தெருவானது சிட்டம்பட்டி முதலிய 10 ஊர்களையும், பறப்புநாட்டுத் தெருவானது திருக்கானை முதலிய 8 ஊர்களையும் உடையன. இவர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிபடுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர் களுக்குண்டு. நரசிங்கன்பட்டி அம்பலகாரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்ம கர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடத்தப்பெற்று வருகிறது. 2. நடுவு நாடு: இது மேலூர் முதலிய 20 ஊர்களையுடையது. 3. சிறுகுடிநாடு: இதற்குச் செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழவளவு, மேலவளவு முதலிய பிரிவுகளையும், பல ஊர்களையும் உடையது. முன்பு வெள்ளூரும் இவர்கட்குக் கீழ்ப் பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறுகுடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது. 4. வெள்ளூர்நாடு: இது வடக்கு வேள்வி நாடு வீர பாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கரன்பட்டி, குறிச்சிப் பட்டி, மலம்பட்டி என்னும் ஐந்து மாகாணங்களையுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலகாரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன்பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சிப்பட்டி மாகாணம் 9 ஊர்களையும், மலம்பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன. மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி கரை, சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படைதாங்கி கரை, வெக்காலி கரை, சலிப்புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரை என்னும் பதினொரு கரைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. கரை யொன்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவர். இந்நாட்டிலே ஏழைக்காத்தம்மன் கோயில், வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர். மாகாணக் கூட்டம், நாட்டுக் கூட்டம் என இருவிதக் கூட்டங்கள் இங்கே உண்டு. மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும், குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத் தலைவரும், இருபத்திரண்டு கரை யம்பலங்களும், மற்றைக் குடிகளும் கூடுவது. நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகள் உண்டு. அபராத வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல்தூரத்தில் உள்ளது. நாடு முழுதும் ஏறக்குறைய இருபது சதுர மைல் இருக்கும். 5. அஞ்சூர் நாடு:- இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களை யுடையது. 6. ஆறூர் நாடு:- இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலில் உள்ளது; ஒக்கூர், நாலுகோட்டை முதலிய பல ஊர்களை யுடையது. இந்நாட்டுத் தலைவர்களுக்குச் சோழபுரம் சிவன் கோயிலில் பட்டுப்பரிவட்டம் மரியாதைகள் உண்டு. 7. மல்லாக்கோட்டை நாடு:- இது சிவகங்கையின் வடக்கே எட்டு மைலில் உள்ளது; மல்லாக்கோட்டை, மாம்பட்டி, ஏரியூர் முதலிய ஊர்களையுடையது. 8. பட்டமங்கல நாடு:- இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடற் புராணத்திலே கூறப்பெற்ற அட்டமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தலம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கல நாட்டுக்கும் திருக்கோட்டியூர்ப் பெருமாள் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் மரியாதைகள் உண்டு. 9. பாகனேரி நாடு:- இது பாகனேரி, காடனேரி, நகரம்பட்டி முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டிற்குப் பாகனேரியில் உள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்லா உரிமைகளும் மரியாதையும் உண்டு. 10. கண்டர் மாணிக்க நாடு:- இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களையுடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும், குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும் தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர்திரு விழாக் களில் பட்டுப்பரிவட்ட முதலிய மரியாதைகளும் எல்லா உரிமை களும் உண்டு. 11. குன்னங்கோட்டை நாடு:- இது கல்லல் குன்னமா காளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதித்தான், திறைகொண்ட பெரியான், சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு. இவர்கள் திருவேங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள்; கண்ணிழந்தவர்க்குக் கண்கொடுத்த ஒரு பக்தருடைய வழியினர்; இவர்கள் பாண்டி வேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத்தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிக்குஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக் குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக்கொடி, புலிக்கொடி, இடபக்கொடி, மீனக்கொடி, பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள். காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடிநாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும் வழக்க முடையவர். இந்நாடு தெற்கே காளையார் கோயிலும் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம் பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களை யுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப்பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங் கட்டுவது வழக்கம். இவர்களைப் பட்டத்துச்சாமி, பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள். 12. பதினாலு நாடு:- குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன. அவை ஏழு கிளை பதினாலு நாடு என்னும் பெயரால் வழங்குகின்றன. அவை:- குன்னங்கோட்டை நாடு, தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இரும்பா நாடு, தேர்போகி நாடு, வடபோகிநாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழு கோட்டை நாடு, முத்து நாடு என்பன. இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம். இவற்றில் தென்னிலைநாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்குடி நாடு என்னும் நாடுகளும் உள்ளன. திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென் கிழக்கில் உள்ளது; இடையப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர் களையுடையது. கீழக்குடிநாடு:- இது மதுரைக்கு மேற்கில் உள்ளது. திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பக நாடு என்னும் இரண்டு நாடுகளைப் பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும். கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப்படுகிறது. பின் உள்ளவை புதுக்கோட்டைச் சரிதத்திற் காணப்படுவன. கூற்றம் எனவும், நாடு எனவும், நாடு வகுக்கப்பட்டது. கூற்றம் பெரும் பிரிவு; நாடு அதன் உட்பிரிவு. கோனாடானது உறையூர்க் கூற்றம் (வடபால்), ஒளியூர்க் கூற்றம் (தென்மேற்கு), உறத்தூர்க் கூற்றம் (வடமேற்கு) எனவும், கானாடானது மிழலைக் கூற்றம், அதளிக்கூற்றம் எனவும், பகுக்கப்பட்டிருந்தன. பிற்பட்ட சோழ பாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் ஏற்பட்டன. புதுக்கோட்டைச் சீமையில் உள்ள வளநாடுகள்:- 1. ராஜராஜ வளநாடு, 2. ஜயசிங்க குலகால வளநாடு, 3. இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு, 4. கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு, 5. விருதராஜ பயங்கர சோழ வளநாடு, 6. கேரள சிங்க சோழ வளநாடு, 7. சுந்தரபாண்டிய வளநாடு என்பன. இப்பெயர்கள் பின்னாளிலும் வழங்கி வரலாயின." திருவாளர் சர்க்கரை இராமசாமிப் புலவரவர்கள் வீட்டிலிருந்த பழை ய ஏட்டிற் கண்ட ராயர் எழுவர் பெயர் முன்பு காட்டப் பட்டது. அவர்கட்கு உரியவாக ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும் அதிற் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் கூற்றங்கள்: ‘மிழலைக்கூற்றம், முத்தூர்க்கூற்றம், அரும்பூர்க் கூற்றம், திருக்கானக்கூற்றம், தொகவூர்க் கூற்றம், கொடுமளூர்க் கூற்றம், இளையான்குடிக் கூற்றம் என்பன. நாடுகள்: கருங்கூடி நாடு, உயர்செம்பி நாடு, கலாசை உருக்கு நாடு, தடாதிருக்கை நாடு, உலகு சிந்தாமணி நாடு, தோராபதி நாடு, மதுரை உதய வளநாடு, வாகுள்ள வள நாடு, சேர சோழ பாண்டி வளநாடு, வேள்வி நாடு, கானாடு, கைக்கு நாடு, மெய்கண்ட நாடு, விரிஞ்சிங்க நாடு, தொளசிங்க நாடு, செம்பொன் நாடு, முடுக்கு நாடு என்பன. திருவாளர் எஸ். குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் 1செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்: "தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சுமுக நாடு, ஏரிமங்கல நாடு, மேலத்துவாகுடி நாடு, கீழத்துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ் செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேலமகா நாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்து பத்து நாடு, பனையக் கோட்டை நாடு, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்க நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக் கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற் பத்து நாடு, குண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பா நாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர நாடு, மருங்கை நாடு, வாகரை நாடு, நீர்வதி நாடு, வாராப்பூர் நாடு, பெருங்களூர் நாடு, வித்தி நாடு, வத்தனாக் கோட்டை நாடு, தென்மலை நாடு, வடமலை நாடு, குண்டாகோயில் நாடு, சோத்துப்பாலை நாடு, மின்னாத்தூர் நாடு, நொடியூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சிநில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக் கோட்டை நாடு, மழை நாடு, காவல் நாடு, காவிக்கோவல் நாடு, வல்ல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர்மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெரு போகி நாடு, இரும்பு நாடு, எய்ப்பாம்பாநாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, கீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு" என்பன. தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பீ.ஏ., பீ.எல்.,) வாயிலாகக் கிடைக்கலுற்ற செய்திகள் பின் வருவன: நாடு நாட்டின் பொதுத்தலம் (தஞ்சாவூர்) முதற்கரை 1. காசா நாடு தெக்கூர் கோயிலூர் 2. கீழ்வேங்கை நாடு உழுவூர் பருதியப்பர் கோயில் 3. கேனூர் நாடு தெக்கூர் கோட்டைத் தெருவு 4. பின்னையூர் நாடு பின்னையூர் பின்னையூர் 5. தென்னம நாடு தென்னம நாடு ... 6. கன்னந்தங்குடி நாடு மேலையூர் ... 7. உரத்தநாடு புதுவூர் கோயிலூர் 8. ஒக்கூர் நாடு மேலையூர் ... 9. கீழ ஒக்கூர் நாடு கீழையூர் ... 10. திருமங்கலக் மேலையூர் ... கோட்டை நாடு 11. தென்பத்து நாடு பேரையூர் அப்பராம்பேட்டை 12. ராஜ வளநாடு நடுவாக் கோட்டை ... 13. பைங்கா நாடு பைங்கா நாடு ... 14. வடுகூர் நாடு தென்பாதி ... 15. கோயில்பத்து நாடு கம்பை நத்தம் கோயில் பத்து 16. சுந்தர நாடு வாளமரங் ... கோட்டை 17. குளநீள் வளநாடு துரையண்டார் கடம்பர் கோயில் கோட்டை 18. பாப்பா நாடு தெற்குக் சங்கரனார் கோட்டை கோயில் 19. அம்பு நாடு: தெற்குத் தெரு செங்குமேடு அம்பு வடக்குத்தெரு பன்னிரண்டான் கோயில் விடுதி 20. வாகரை நாடு குருங்குளம் ... 21. வடமலை நாடு பகட்டுவான் பட்டி ... 22. கொற்கை நாடு செங்கிபட்டி ... கூனம் பட்டி 23. ஏரிமங்கல நாடு ராயமுண்டான் வெண்டையன் பட்டி பட்டி 24. செங்கள நாடு விராலிப்பட்டி நொடியூர் 25. மேலைத்துவாகுடி சூரியூர் .. நாடு 26. மீசெங்கிளி நாடு ... ... 27. தண்டுகமுண்ட ராயந்தூர் ... நாடு சித்தர்குடி 28. அடைக்கலங்காத்த அள்ளூர் ... நாடு 29. பிரம்பை நாடு பிரம்பூர் ... 30. கண்டி வளநாடு நடுக்காவிரி ... 31. வல்ல நாடு இளங்காடு ... 32. தந்தி நாடு நத்தமாங்குடி ... 33. வாராப்பூர் நாடு பொன்னம்விடுதி ... 34. ஆலங்குடி நாடு ஆலங்குடி ... 35. வீரக்குடி வாண்டான் திருமணஞ்சேரி நாடு விடுதி 36. கானாடு திருவரங்குளம் ... 37. கோ நாடு ... ... 38. பெருங்குளூர் நாடு பெருங்குளூர் ... 39. கார்யோக நாடு ... ... 40. ஊமத்த நாடு சிங்கவனம் ... கள்ளர் நாடுகளில் இதுகாறும் தெரிந்தவை இங்கு ஒருவாறு எழுதப்பட்டன. இவை இன்னும் நன்காராய்ந்து ஒழுங்கு படுத்தற்பாலன. இனி, நாட்டுக்கூட்டத்தின் இயல்பினைச் சிறிது விளக்குதும். தஞ்சை சில்லாக் கெசட்டியரில் (1906) பின்வருமாறு கூறப்பெற்றுளது. “கள்ளர் நாடுகளில் கிராமப் பஞ்சாயத்து வழக்கமாக இருந்து வந்தது. வேளாளர் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித் தமையால் இது நின்றுவிட்டது. கிராமத்தில் முக்கிய மானவர் அம்பலகாரர் எனப்படுவர். இவர் ஊரிலுள்ள சில்லரைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பர். ஏனையரில் மேலானவராகக் கொள்ளப்படுவர். சில சமயங்களில் பல கிராமப் பஞ்சாயத் தார்கள் ஒன்றுகூடிப் பொதுக் காரியங்களை ஆராய்வதுண்டு”. தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு என்னும் ஆங்கிலப் புத்தகத்தில், “சிவகங்கை ஜமீன்தாரியில் பதினான்கு நாடுகள் உள்ளன. பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுவர்ணமூர்த்தி சுவாமியின் திருவிழா விடயமாய்க் கண்ட தேவியில் கூடுவது வழக்கம்” என்று குறித்திருக்கிறது. "வெள்ளூர் நாடு ஐந்து மாகாணங்களையுடையது. பதினொரு கரைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது. ஒருகரைக்கு இரண்டு கரை யம்பலம் ஆகும். நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவர். மகாகாணக் கூட்டம், நாட்டுக் கூட்டம் என இருவகைக் கூட்டங்கள் உண்டு. ஒரு அம்பலமும், குடிகளும் கூடுவது மாகாணக்கூட்டம், நாட்டுக்கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும், இருபத்திரண்டு கரையம் பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவ தாகும். நீதி (சிவில்) வழக்கு, குற்ற (கிரிமினல்) வழக்குகளைத் தீர்க்கும் கழகங்கள் (பஞ்சாயத்து) அங்கு உள்ளன" என்னும் இச்செய்தி முன்பும் காட்டப்பெற்றுளது. “ஐந்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து காங்கயன் என்பானைத் தலைமையாக ஏற்படுத்தினரென்றும், அதற்காகச் சுற்றிலுமுள்ள நான்கு கிராமத்தின் அதிகாரிகள் காங்கயனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் தாக்கினரென்றும், பின்பு இந்நால்வரும் காங்கயனால் தோல்வியுற்றுத் தலைக்கு ஒரு மாநிலம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் நெடுங்குடிக் கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறது”. “இவர்களில் தலைவர்களை ஏற்படுத்துவதில் தேர்ந்தெடுப்பு (எலக்ஷன்) நடந்து வந்தது. நந்தவனப்பட்டி மேல்கொண்டான் என்ற தலைவன் ஒருகால் தன்றம்பியோடும், மற்றுமுள்ள துணைவர் களோடும் வெளிச்செல்ல நேர்ந்தபொழுது, மேல்கொண்டானுடைய அத்தையை அத்தலைமை யேற்றுக்கொள்ளும்படி செய்தனர். அம்மாது நியாய விசாரணையிலும், காரிய நிர்வாகத்திலும் அவ்வளவு திறமை வாய்த்திருந்தனள். இக்கூட்டத்திற்கு (கான்பிடரேஷனுக்கு) மதுரை அரசர் தலைமையில் உதவி கிடைத்து வந்தது. மதுரையின் பிரதிநிதிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்துகொண்டு வரி வாங்கி இக்கூட்டத் தலைவர்களுக்குக் கொடுத்து வந்தனர். சிலர் இக்கூட்டத்தினரால் சிற்சில துன்பங்கள் உண்டாயின என்று நினைத்தாலும், இக்கூட்டத்தினர் பலமடைந்து ஒற்றுமையுடனிருந்தால் திருச்சிக்கோட்டைக்கு முன்பு அவர்கள் உதவி செய்தது போல் எப்பொழுதும் உதவி செய்யும்படி துணையாகப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சிக் கோட்டையை முற்றுகை யிட்ட மகம்மதியர்கள் சிப்பாய்களின் தாக்குதலைவிடக் கள்ளர்களின் தாக்குதலுக்கே மிக நடுங்கினரென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்று, திருச்சி ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக் கின்றனர். புதுக்கோட்டைச் சரிதத்தில் இவ்வரலாறுகள் காணப் படுகின்றன. இங்கே காட்டியவற்றிலிருந்தும் பிறவாறு யாம் ஆராய்ந்தவற்றி லிருந்தும் நாட்டுக்கூட்டத்தின் இயல்பினைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாகும்:- கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர் களுக்கு1 அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக்காரர் என்பது சிறப்புப்பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுள்ளோர் எல்லாவிதமான வழக்கு களையும் அம்பலகாரரிடம் தெரிவித்துக் கொள்ள அவர் வழக்கு களின் உண்மையைக் கண்டறிந்து, ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்புச் செய்து விடுவர். வழக்காளிகளும் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடீரென அடைந்துவிடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம். ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச் சார்ந்த தகுதியுடைய வேறு யாரையாவது ஊரார் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியராகப் போய்விடினும் அவரது உரிமைக்குப் பழுது வருவதில்லை. சில சமயங்களில் பெண்டிரும்கூட அவ்வுரிமையை வகித்து நடத்து வாராவர். ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதியில் (மாகாணத்தில்) உள்ள ஒவ்வொரு ஊர் அம்பலகாரரும் ஆண்டிற்கு ஒரு முறை கூடுவதுண்டு. இது நாட்டுக் கூட்டம் அல்லது மகாநாடு எனப்படும். நாட்டின் முதற்கரை அல்லது தலைக்கிராமத்திலுள்ள அம்பலகாரர், மற்றையூர்களின் தலைவர்களுக்கு மகாநாடு கூட நாள் குறிப்பிட்டுத் திருமுகம் அனுப்புவர். குறிப்பிட்ட நாளிலே நாட்டின் பொதுத்தலத்தில் கூட்டம் ஆரம்பமாகும். ஒவ்வொரு நாடு அல்லது நாட்டின் உட்பட்ட மாகாணத் திலும் ஏதேனும் ஒரு தெய்வம் இருக்கும். அத்தெய்வத்திற்குக் காப்புக் கட்டித் திருவிழாச் செய்யத் தீர்மானித்தற் பொருட்டாகப் பெரும்பாலும் நாட்டுக் கூட்டம் கூடும். ஆனால் அப்பொழுதே நாட்டின் உட்பட்ட கிராமப் பொது வழக்குகளெல்லாம் கொண்டு வரப்பெறும். ஏரி, குளம், வாய்க்கால், எல்லைப்புறம் என்பன பற்றியும் மற்றும் பலவகையாகவும் ஒரு கிராமத்திற்கு மற்றொரு கிராமத்துடன் ஏற்பட்டுள்ள பிணக்குகளெல்லாம் அப்பொழுது கொண்டுவந்து வாதிக்கப்படும். நாட்டுமக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் உண்டு. எனினும் அவர்கள் வேடிக்கை பார்ப்பதன்றி இடையே யாதும் பேசுதல் செய்யார். அம்பலகாரர்கள் மாத்திரமே பேசி முடிவு செய்தல் வேண்டும். வழக்கு மிகுந்து விடுமேல் கூட்டம் தொடர்ச்சியாய்ப் பலநாள் நடைபெறுவதுமுண்டு. எல்லா வழக்குகளும் யாருக்கும் மனத்தாங்கலின்றித் தீர்த்து வைக்கப் பட்ட பின்னரே திருவிழா நிச்சயிக்கப்பெறும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்புகள் எல்லாம் எழுத்து மூலமன்றி வாய்மொழியாக வேயிருக்கும். பத்திர மெழுதிப்பதிவு (ரிஜிஸ்தர்) செய்தும் பிறழ்ச்சி மிகுகின்ற இக்காலத்தில் இச்செயல் எவ்வளவு வியப்பைத் தருவதாகும்.! வெறும் வாய்மொழிக்கு முன்பு அவ்வளவு மதிப்பிருந்தது. வாய்மொழித் தீர்ப்பிற்கு யாவரும் கட்டுப்பட்டு நடந்து வந்தனர். இவ்வாறாக ஊர் வழக்குகளெல்லாம் அவ்வூர்த் தலைவர்களாலும், நாட்டு வழக்குகளெல்லாம் நாட்டு கூட்டங் களாலும் ஒரு காசும் செலவின்றி உண்மை கண்டு முடிவு செய்யப் பட்டு வந்தன. இப்பொழுதோ வழக்காளிகளிற் பெரும்பாலரும் தம் சொத்துக்களை யெல்லாம் இழந்து முடிவில் ஓட்டாண்டிகளாகி விடுதல் காண்கின்றோம். சட்டத்திற்றேறி மன்றின்கண் ஏறி விடும் வக்கீற் கூட்டத்தினர்க்கு நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலத்தில் கருத்துண்டாவதில்லை. ஏழைகளுக்கு நன்மை செய்ய அவர் களுக்கு எவ்வளவோ வன்மையுண்டு அப்படியிருந்தும் யார் எக்கேடு கெட்டால் என்னென்று அவர்கள் வழக்குகளைப் பெருக்கவே முயலுகின்றனர். அவர்களுக்கு உண்மையாகவே உயர் நோக்கம் இருக்குமாயின் இப்பொழுதுள்ள வளவிற் பாதியளவாகவேனும் வழக்குகள் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை. இராஜராஜ தேவர் முதலான பழைய சோழ மன்னர்கள் காலத்தில் ஊர்தோறும் பஞ்சாயத்துகள் இருந்து, நாட்டின் ஆட்சி சிறிதும் வருத்தமின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்திருத்தலை அறிவிக்கும் கல்வெட்டுச் சாசனங்கள் எண்ணிறந்தனவுள்ளன. அம்முறையானது நாளடைவில் அருகிவந்து இப்பொழுதுள்ள நிலைமை சம்பவித்திருக்கிறது. அரசாங்கத்தினர் சிற்சில இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்படுத்திப் பார்க்கின்றனர். அவற்றின் தன்மையும், பயனும் இப்பொழுது விளக்கமாகச் சொல்லுதற்கில்லை. இந்தியாவிலுள்ள அரசியற் கிளர்ச்சியாளர்களில் ஒரு பகுதியார் தங்கள் கொள்கைகளில் பஞ்சாயத்துச் சபை ஏற்படுத்துவதும் ஒன்றாகக் கொண்டிருக் கின்றனர். அஃது எவ்வளவு பயனளிக்குமென்பது பின்பே தெரியக் கூடும். அது நிற்க, கள்ளர் குலத்தினர்க்குப் பஞ்சாயத்தும், நாட்டுக் கூட்டமும் தொன்று தொட்டுள்ள வழக்கமேயாதலின் அவர்கள் மீண்டும் அவைகளைக் காலத்துக்கேற்ற திருந்திய முறையில் ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருவது எளிதேயாகும். அவ்வாறு நடத்திவரின் அவர்கட்கும், நாட்டிற்கும் எவ்வளவோ நன்மையுண்டு. அரசாங்கத்தினரும், பிறரும் அவற்றை ஆதரிக்கவே கடமைப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஒற்றுமையே இன்றியமையாதது. இனி, நாடு காவலின் இயற்கையைச் சிறிது விளக்குதும். கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக்காட்ட வேண்டுவதின்று. ஏனை நாட்டாண்மைக்காரரைப் பற்றியே இங்குக் கூறுவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கியிருந் தமையாலும் அண்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்குப் பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டாண்மைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற்பல ஊர்கள் அடங்கி யுள்ளன. உதாரணமாகத் தஞ்சை ஜில்லாவின் மேற்குப் பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம். அவர்கட்குச் சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, இராயமுண்டார், சோழகர், சோழங்க தேவர், மேல்கொண்டார், நாட்டரையர், செம்பிய முத்தரசு, வன்னி முண்டார், கொடும்புராயர், கண்டியர் முதலானவர்களைக் கூறலாகும். இதிலிருந்து இன்னார் இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கின்றன ரென்பது விளங்கும். காவற் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும் என்னவென்று பார்ப்போம். ஓர் அரசனுக்குக் குடிகள் வரி செலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோறும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாக வேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாகவேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலகாரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங் காலங்களில் காணிக்கை செலுத்துவதுமுண்டு. இவ்வுரிமையைப் பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலிலுள்ள ஊர்களில் எவ்வகையான களவும், கொள்ளையும் நிகழாமற் பார்த்துக் கொள்ளும் கடப்பாடுடையர். களவு நிகழாமற் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களையனுப்பிக் காப்பதுமில்லை; தம் வலிமையாலும், ஆணையாலுமே பாதுகாப்பாராவர். இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்திருந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்ல மாட்டார்கள். ஒருக்கால் ஏதேனும் களவு நிகழ்ந்துவிடின் கிராமத்தார் அம்பலக்காரருக்குச் செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களைப் பல இடங்கட்கும் அனுப்பிக் களவுபோன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர். சில சமயங்களில் அம்பலகாரர் தம் கைப்பொருள் செலவு செய்தும் மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்களில் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக்கதாகாது. தற்காலத்தில் நாட்டின் சாதாரணப் பாதுகாப்புக்குப் போலீசுப் படை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. நூற்றில் தொண்ணூறு ஊர்களுக்கு அதன் சம்பந்தமேயில்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அவர்கள் நகரங்களிலுள்ள அதிகாரிகட்குத் தெரிவிக்க, அன்னோருத்தரவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பார்த்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர். இதில் எவ்வளவு நன்மையை நாம் எதிர் பார்க்க முடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும். அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட் பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர். அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங் களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்கு உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றனரென்றும் அறிகின்றோம். தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும்பான்மை அரசு காவல் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவு கூர்ந்து, அன்புபற்றி ஒருவகையான சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இனி, அம்பலகாரர்கள் அரசு காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் உழைப்பினால் வருகின்ற பொருள் கொண்டு தம் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள் காட்டி இவ்வதிகாரத்தை முடிப்போம். பின்வருபவை, விண்ணனூர்ப்பட்டி, திருவாளர் மு.கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு வீ.உலகதாசக் கொடும்புராயர் வாயிலாகக் கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய) ஏடுகளிற் கண்டவை: 1. `ஈசுவர ஆண்டு ஆனி மாதம் 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலிருக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப் பட்டியிலிருக்கும் பல பத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவல் பொறுப்பு முறிகொடுத்தபடி. முறியாவது - வட வின்னம் பூண்டி மாகாணத்தில் ரயத்து உடையார் கிராமம் உட்பட நம்முடைய கிராமம் 12. இந்தப் பன்னிரண்டு கிராமத்துக்கும் வருடம் ஒன்றுக்குப் பொறுப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக் கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலேயிருப்பீராகவும்'. 2. அஷய ஆண்டு தை மாதம் 72 முத்துலிங்கரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை)? துறை மங்கலத்தில் இருக்கும் வெட்சுமண ரெட்டியார், நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறம ரெட்டியார், பூசாரி சின்னத்தம்பி உடையார், கலிதீர்த்த உடையார், ரெட்டைப்பச்சை உடையார், அகரத்திலிருக்கும் மகாசனங்கள் கொண்டையா, நரசய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மரவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏரிமங்கல நாட்டிலிருக்கும் கருத்தக்காங்கயர், வேலாயுதச் சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறியெழுதிக் கொடுத்தோம். இதற்கு வருடம் ஒன்றுக்குப் பொறுப்பு மதுரைச் சக்கரம் 10 இந்தப் பத்துப் பொன்னுக்குக் கறுத்தக் காங்கயர் பாதிக்கு ஐந்து பொன்னும், வேலாயுதச் சோழகர் பாதிக்கு ஐந்து பொன்னும் ஆகப் பத்துப் பொன்னும் வருஷாவருஷம் கொடுத்து வருவோமாகவும். இந்தப்படிக்குச் சம்மதித்து நாங்களனைவரும் காவல் முறி கொடுத்தோம். சாட்சிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியார், பெருமயிலூர் நல்லப்ப ரெட்டியார் . . . நாட்டுக்கணக்கு ரெங்கநாத பிள்ளை. 3. தாது வருடம் வைகாசி மாதம் 132 ஏரிமங்கல நாட்டிலிருக்கும் கறுத்தக்காங்கய அம்பலகாரர், கீழத்துவா குடியைச் சேர்ந்த செங்கி பட்டியிலிருக்கும் ஓந்தைய மேல்கொண்டார் அம்பலகாரர், கருவிப் பட்டியிலிருக்கும் இராமைய மேல்கொண்டார் அம்பலகாரர் இவர்களுக்குக் கூகையூர்ச்சீமை நாட்டார் செகநாத உடையார், மற்றுமுள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டயம் எழுதிக் கொடுத்தோம். மேன்காவ லாவது:- கூகையூர், மாமாந்தூர், வீர பயங்கரம், கருந்துளகுறிச்சி. இந்தக் கிராமம் நான்குக்கும் பொறுப்பு மதுரைச் சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம், கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்தூர், திருவாலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார் பாளையம், பில்லங்குளம், சிறுநிலா, பெருநிலா பட்டாக்குறிச்சி, வடகரை பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம் ஆகிய இருபது கிராமத்துக்கும் பொறுப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த இருபது கிராமம் உட்பட கிராமம் இருபத்து நான்குக்கும் பொறுப்பு மதுரைச் சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயங் கொடுத்தோம். ... இதற்குச் சாட்சி:- சிகம்பூர் பெரிய உடையார், சிறு மதுரை திருமேனிப் படையாச்சி.  ஆறாம் அதிகாரம். நன்மக்கள், தற்கால நிலைமை, சீர்திருத்தம். கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும். இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும், வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர். பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநில மன்னராவர். திருமால் அடியாருள் ஒருவரும், பெரிய திருமொழி முதலிய ஆறு சிறந்த பிரபந்தங்களியற்றி நான்கு கவிப்பெருமாள் என்னும் பட்டம் பெற்றவரும், திருவரங்கத்திற் பல திருப்பணிகள் இயற்றிய பெரியாருமாகிய திருமங்கையாழ்வார் இவ்வகுப்பினரென்பது பிரசித்தம். இவர் திருமங்கை யென்னும் நாட்டிலே தோன்றிய சிற்றரசராகலின் திருமங்கை மன்னன் எனவும் கூறப்படுவர். இவருடைய பாசுரங்களினால் இவருக் குரியவாக அறியப்படுகின்ற பரகாலன், கலிகன்றி முதலிய பெயர் களிலிருந்து இவருடைய வீரமும், நேர்மையும் முதலியன நன்கு விளங்கும். நல்லறிவுடையார், இவரது வரலாற்றிற் கலந்துள்ள புனைந்துரைகளை நீக்கி உண்மை காணற்பாலராவர். இவ்வாழ்வாரது பெருமை அளவிட்டுரைக்கற் பாலதன்று. திருவேங்கடத்தையாண்ட முனித்தொண்டைமானுக்குத் திருவேங்கடமுடையான் சங்காழி நல்கியதாயும், அத்தொண்டைமான் திருமகளாராய அலர்மேல் மங்கையாரைத் திருமணஞ் செய்ததாயும் திருமலை மான்மியம் கூறுகின்றது. முனையதரையன் என்பான் ஒருவன் வீரசோழனுக்குத் தண்டத்தலைவன் என்றும், திருமால் பத்தியிற் சிறந்தவனென்றும் திருக்கண்ணபுர புராணம் கூறுகின்றது. முனையதரையன் பொங்கல் என்று இவன் பெயரால் வழங்கும் திருவமுதே இவனது பத்தியின் மேன்மையைப் புலப்படுத்தும். காடுவெட்டியின் சிவபத்தி மேன்மையைத் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும். இவ்வரலாறு முன்பு கூறப்பட்டுளது. இக்குலத்துக் கருணாகரத் தொண்டைமான் என்பான் ஒருவன் அரசற்கு அமைச்சனா யிருந்து, திருவாரூரில் தியாகேசரது திருவடியிற் கலந்தானென்று வரலாறுண்டு. தியாகேசருடைய விருதாவளித் திருநாமங்களில் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்றாக இருத்த லினாலேயே அவனது அன்பு முதிர்ச்சியை அறியலாகும். ' அருணயத் தொண்ட ரனைவருந்தா னென்னுங் கருணையைப் பார்முழுதுங் காணத் - திருவடிக்கீழ் மன்னுங்க ருணா கரத்தொண்டை மான்வந்தான் என்னுந் திருச்சின்னத் தெம்பிரான்.' என்று திருவாரூருலாக் கூறுவது காண்க. திருவரங்கத்தில் சிற்றரச ராயிருந்த அகளங்க நாட்டாள்வார் என்பார் இராமாநுசரது சீடரென்றும், சிறந்த பக்தரென்றும் முன்பே காட்டியுள்ளாம். முத்தரையர், முனையதரையர், செழியதரையர், பல்லவதரையர் என்றாற்போலப் பல பட்டப்பெயர்கள் தரையர் என்னும் பெயருடன் சேர்ந்து கள்ளர்களுக்கு வழங்குகின்றன வென்றும், 'இரவலவா....... திருவேங்கட நாதா' 'தேன் பிறந்த......பிறந்தான் முன்' என்னும் பாட்டுக்களாற் குறிக்கப்படும் திருவேங்கடநாதர் என்னும் வள்ளல் கள்ளர் குலத்தில் செழியதரையர் என்னும் பட்டமுடையவரென்றும், பாண்டிநாடு பஞ்சமுற்றபொழுது சங்கப்புலவர்களை வரவழைத்து ஆதரித் தவனும், சோழ நாட்டவனும் ஆகிய ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் உபகாரியும் இக்குலத்தவனே யென்றும், இக்குலத்த வரைக் குறித்து மூவரையர் வண்ணம் என்பதொரு பிரபந்தம் உண்டென்றும், இக்குலத்தவரில் பல சிறந்த தமிழ்ப்புலவர் களுண்டென மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிக் கூறுவதுண்டென்றும் மகாமகோ பாத்தியாயர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் இளங்காடு நற்றமிழ்ச் சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் தலைமை வகித்தபொழுது கூறியுள்ளார்கள். நன்னூலின் தொல்லுரையாளரான மயிலைநாதரால் 'இந்தப் பத்தெச்சமும் புவி புகழ் புலமை அவிநய னூலுட் டண்டலங் கிழவோன் றகைவரு நேமி யெண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி யென்றறிக' என்று சிறப்பித் தோதப் பெற்ற அவிநய உரையாசிரியராகிய பல்லவதரையரும், அகப் பாட்டுரைகாரரான பால்வண்ணதேவன் வில்லவதரையனார் என்பாரும் கள்ளர் குலத்தினரென்பது தேற்றம். மிக அணித்தாய காலத்திலும் இவ்வகுப்பில் கற்றோர் பலர் இருந்திருக்கின்றனர். தத்தனூரிலிருந்த அண்ணாசாமி நாடாள்வார் திருவானைக்கா மீது 'திருவெண்ணாவற்கோவை' என ஓர் அகப் பொருட்கோவை பாடியுள்ளார். தத்தனூரிலிருந்த கனகசபைச் சர்க்கரையப்ப நாடாள்வார் 'பிரம்பைக் கோவை' என ஓர் அகப்பொருட்கோவை பாடியுள்ளார். செங்கரையூரிலிருந்த குழந்தைக்களத்து வென்றார். 'பஞ்சாட்சர மும்மாலையந்தாதி' என ஓர் அந்தாதி பாடியுள்ளார். அதற்குச் சாத்துக் கவியளித்த சோட சாவதானம் வேலாயுதக் கவிராயர், சோடசாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முதலிய புலவர்கள் களத்து வென்றாரைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பிரம்பூரி லிருந்த நடராசச்சர்க்கரையப்ப நாடாள்வார் 'திருவையாற்றந்தாதி' என்னும் பிரபந்தம் பாடி, மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முன்பு படித்துக்காட்டி, பிள்ளையவர்களாலும், தியாகராசச் செட்டியாரவர்களாலும் சாத்துக் கவியளிக்கப் பெற்றனர். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது: மறைமுடிவாழ் மாதேவன் வண்செவிக்கண் வாக்கு நறையெனநூ லோர்ந்தநட ராசன் - பிறைநுதலார் கையாற்றந் தாதிவர்பூங் கஞ்சந் திகழ்கழனி யையாற்றந் தாதியுரைத் தான். தியாகராசச் செட்டியாரவர்கள் பாடியது: மன்னுதிரு வையாற்றின் வாழ்பரம னார்ச்செவிக்குத் துன்னு மருளுமையின் சொல்லாகும் - நன்னூல்கள் நந்தா தினிதோர் நடராசன் சொல்யமக வந்தாதி யென்னு மது. பூண்டி வீரையா வாண்டையார் திருப்பூவண நாதர் மீது தோத்திரங்கள் பாடியிருக்கின்றனர். இளங்காடு, உறத்தூர், கடையக்குடி, நடுக்காவேரி முதலிய இடங்களில் தமிழ்ப் புலமை யுடையோர் சிற்சிலர் இருந்திருக்கின்றனர். சில ஆண்டுகளின் முன் அன்னம் பட்டீயத்திற்கு விளக்கம் எழுதி 'தருக்க விளக்கம்' என வெளிப்படுத்திய சோமசுந்தரம் பிள்ளையும் இவ்வகுப்பினரே. பொதுவாக இக்குலத்தவர் தமிழிலே அளவு கடந்த ஆர்வமும் பற்றுமுடையர் என்று கூறுதல் பொருந்தும். மூன்றாண்டின் முன் இவ்வுலகில் புகழுடம்பை வைத்துச் சென்றாரும், கல்வியிலும், வண்மையிலும், நற்குணத்திலும் மிக்காரும், அரசஞ்சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஜி.சதாசிவவிஞ்சைராயர், சர்க்கரை இராமசாமிப் புலவர், மு.ரா.அருணாசலக் கவிராயர், கோபால கிருஷ்ணையர், வி.சாமிநாதப்பிள்ளை, முத்துசாமி ஐயர், சேதுராம பாரதியார் முதலிய எண்ணிறந்த புலவர்களாற் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமை வாய்ந்தாரும் ஆகிய அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் இக்குலத்தவரென்பது யாவரும் அறிவர். சோழவந்தான் சண்முகம் பிள்ளையவர்களால் எழுதப்பட்ட தொல்காப்பியப்பாயிரவிருத்தி என்னும் புத்தகம் இராசாளியாரவர் களால் பதிப்பிக்கப்பட்டதென்பதை அதன் முகவேட்டினின்றும் அறியலாகும். மற்றும் பிள்ளையவர்கள் அப்புத்தகத்தில் நன்றிகூறல் என்னும் பகுதியில் இராசாளியாரைக் குறித்துக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. அது, "பின்பு சுவாமிகள் கட்டளைப்படி முறையே பாயிரவிருத்தி முதலாயின அச்சிடுமாறு கருதிக் குரோதி ஆண்டு தை மாதம் தஞ்சை சென்றேன். சென்று வேலை தொடங்கிய சின்னாளுட் சுரங்கண்டு உணவொழித்துக் கிடைப்படுத்திற்றாகலின் அச்சிடு முயற்சியும் நின்றது. அக்காலை, எனக்கு மிக்க நண்பினரும், வடமொழி, தென்மொழி ஆங்கில நூலாராய்ச்சியே பொழுது போக்கும் விளையாட்டாக வுடையாரும், பிரபு சிகாமணியும், வள்ளலும் ஆகிய அரித்துவார மங்கலம் மகா--ஸ்ரீ வா. கோபாலசாமி ரகுநாதராசாளியாரவர்கள் என்னைத் தம்மூர்க்கழைத்துச் சென்று, பல நன்மருத்துவரைக் கொண்டு, மருந்தளித்தும், வேதமுணர்ந்த அந்தணரைக் கொண்டு கிரகசாந்தி முதலாயின செய்தும் பிணி தீர்த்து, வெண்பொற்காசு முந்நூற்றின் மேலாக என்னிமித்தம் செலவு செய்ததுவுமின்றி, அப்பொழுது தேகவன்மை யெனக் கின்மையால் தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையுங் கருதாமல் தாமே பரிசோதித்தும், பிறரைக் கொண்டு பரிசோதிப்பித்தும் இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவி புரிந்தார்கள். அவர்கள் செய்த உதவியேயன்றிக், குணமாட்சியும் பன்னாளுடனிருந்து பழகித் தெரிந்தேனாகலின் அவர்களது நட்பை எழுமையும் மறப்பேனல்லேன்" என்பது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் எழுதி வெளியிட்ட இராசாளி யாரவர்களது வாழ்க்கை வரலாறு: "கல்வியறிவொழுக்கங்களிலும் வண்மையிலும் மேம்பட்டு விளங்கிய இப்பெருந்தகையார் பிரமோதூத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 17 ஆம் நாள் அரித்துவார மங்கலத்தில் பெருநிலக்கிழமை யுடைய ஓர் பிரபலக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம்பருவத்தில் கும்பகோணத்திலுள்ள ஆங்கிலப் பாடசாலையில் மெற்றிக் குலேஷன் வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தவர். அப்பொழுதே குடும்ப பாரம் பொறுக்க நேர்ந்தமையின் படிப்பை விடுத்து ஊருக்கு வந்துவிட்டார். எனினும் கல்வியில் இவருக்கிருந்த விருப்பம் மேன்மேலும் வளர்ந்தே வந்தது. தமது பன்னிரண்டாம் வயதிலிருந்தே யோகநூல்கள் படிக்க வேண்டுமென்னும் அவாவுடையவராய் அவற்றைத் தேடிப் படித்தும் பெரியோர்கள் பலரை உசாவியும் யோக நுட்பங்களைத் தெரிந்து வந்ததோடு, யோகப் பயிற்சியும் ஓரளவு செய்து வந்தாரெனத் தெரிய வருகிறது. திருமந்திரம் முதலிய யோக நூல்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இவருக்குப் பாடமுண்டு மருத்துவ நூல் சோதிட நூல்களிலும் இவருக்குப் பயிற்சியுண்டு. வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தார். சிறு பருவந்தொடங்கியே சிறந்த வொழுக்கமும், தெய்வபத்தியும், உபகாரத்தன்மையும் உடையராயிருந்தாராகலின், இவரது வாழ்க்கை தூய்மையும், பெருமையும் வாய்ந்த தென்பது தேற்றம். மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றது இவருக்குத் தமிழில் மிக்க ஆர்வமும், பயிற்சியும் உண்டாதற்கு ஏது நிகழ்ச்சியாயிருக்க, திருவாளர் பொன். பாண்டித்துரைத் தேவரவர்கள், அரசஞ்சண்முகனார் முதலிய பலருடைய நண்பு அவற்றைப் பெரிதும் வளர்த்து வருவ தாயிற்று. அக்காலந்தொடங்கியே மதுரை முதலான இடங்களில் சங்கங்கள் கூடும்பொழு தெல்லாம் தவறாது செல்வதும், புலவர் களோடு அளவளாவியின்புறுவதும், தமிழ் நூலாராய்ச்சி செய்வதும், பெருஞ் சொற்களியற்றுவதும் இவர் கடப்பாடாகக் கொண்டிருந்தார். பலவூர்களிலுள்ள பல சங்கங்களில் இவர் தலைமை வகித்தும் சொற்பொழிவுகள் புரிந்துமிருக்கின்றனர். பிரணவம், யோகம் என்ற பொருள்களைக் குறித்து மூன்று நான்கு மணிநேரங்கள் அருமையாகப் பேசியிருக்கிறார். ஓராண்டு, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவைத் தஞ்சையில் மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிறைவேற்றற் கழக உறுப்பினராகவும், எம் சங்கத்தின் புரவலராகவும், மற்றும் பல சங்கங்களின் தொடர்புடையராகவும் இருந்திருக்கின்றனர். தம் மரபினராகிய கள்ளர் குலமக்கள் கல்வி முதலியவற்றில் மேம்பட்டுத் தம் பழம்பெருமையின் நழுவாதிருக்க வேண்டுமெனக் கருதி இந்திரகுலாதிபர் சங்கம் என ஓர் சங்கம் நிறுவி நடத்திவந்தார். தஞ்சை ஜில்லா போர்டிலும் தாலுக்கா போர்டிலும் பல ஆண்டுகள் உறுப்பினராய் இருந்துளார். தம்முடைய ஊரில் நூல் நிலையம், மருத்துவ நிலையம் முதலியன ஏற்படுத்தி வைத்தார். அறத்திற்கு மிகுதியான நிலம் எழுதி வைத்தார். நமது பெருமாட்சி பொருந்திய ஐந்தாம் ஜார்ஜ் அரசர் பெருமான் டில்லி மாநகரில் முடிசூடிக் கொள்ளும் அமையத்துச் சென்று தரிசித்து வந்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைத் தம்மூருக்கு எழுந்தருள்வித்துப் பூசித்து அவர்கள் உவந்தளித்த பொற்கடகங்களும் பெற்றார். தமிழ்ப் புலவர்களிடத்தில் இவருக் கிருந்த அன்பு அளவிட்டுரைக்கற்பாலதன்று. இவர்போன்று புலவர்களை உபசரிப்பவர் உலகில் மிக அரியரென்றே சொல்ல வேண்டும். அரசஞ்சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் முதலிய புலவர் பலர் இவர்பால் மிக்க உதவி பெற்றுள்ளார்கள். இவர்மீது எத்தனையோ புலவர்கள் பாடிய பாடல்களும் உள்ளன. பிற வனிதையரைப் பெற்ற தாயெனவும்,பிறர் பொருள் எட்டியே யெனவும், பிறர் வசையுசைத்தல் பெருமையன்றெனவும் கருதியவர். 'ஈதல் இசைபட வாழ்தலதுவல்ல - தூதியமில்லையுயிர்க்கு' என உணர்ந்தவர். சுருங்க உரைக்கின் இவர் தம்பால் ஒன்று வேண்டினர்க்கு மறுத்தறியாத வன்மையும், இன்னல் கருதிக் கண்ணீர் ஒரு துளியும் விடாத திண்மையும், திருமாலின் திருவடிகளிடத்தில் வைத்த பத்தியின் உண்மையும் உடையராவர். இப்பெற்றியமைந்த இவ்வாண்டகை தம் சுற்றத்தார்களும், நண்பர்களும், புலவர்களும் மற்றும் தம் ஆதரவு பெற்றிருந்தோர்களும் ஆகிய எண்ணிறந்தோர் அளவற்ற வருத்தமுறத் தமது ஐம்பதாம் வயதில் சித்தார்த்தியாண்டு பங்குனித் திங்கள் 25ஆம் நாளில் இராம நாமம் சொல்லிக் கொண்டிருந்தபடியே தம் பொன்போலும் அழகிய உடம்பை விடுத்துப் பரந்தாமனுலகெய்தினர்" என்பது. மற்றும், மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சைகளில் முதன்மையுறத் தேறிப் பொற் பதக்கம் பொற்றோடா முதலிய பரிசில்கள் பெற்றோராயும், நூலாராய்ச்சியும், பிரசங்க ஆற்றலும், செய்யுளி யற்றும் திறமையும் வாய்ந்தோராயும், பத்திரிகை நடாத்து வோராயும், பழைய நூல்களை ஆராய்ந்தும், நூல் உரைகள் எழுதியும் வெளிப்படுத்து வோராயும் இப்பொழுதும் சிற்சிலர் இருக்கின்றனர். தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகளும் சிலர் இருக்கின்றனர். இங்ஙனம், தமிழ்ப்பற்று மிக்குடைய இக்குலத்தினர் பண்டு தொட்டுத் தமிழ்ப்புலவர்களை யாதரித்து அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்று வந்திருக்கின்றனர். புதுக்கோட்டை மன்னர் முதலாயினோர் பரிசு பெற்றுளோரை இங்கெடுத்துக் கூறுதல் மிகை. அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் காங்கயன்பட்டி, ஆச்சான் பேட்டை, பிரம்பூர், சீராளூர் முதலிய இடங்களிலிருந்த கள்ளர்குலப் பிரபுக்களிடம் பெரும் பரிசில்கள் பெற்று, அவர்கள் மீது பல பிரபந்தங்களும், தனி நிலைக் கவிகளும் பாடியிருக் கின்றனர். இங்ஙனம் பாடியோர் மற்றும் பலர். இனி, இக்குலத்தவர் பண்டு தொட்டுச் செய்து வந்திருக்கும் அறங்கள் மிகப்பலவாம். தமிழ் நாட்டிலுள்ள எத்தனையோ கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், மானியம் விடுத்து மிருக்கின்றனர்; மடங்கள் கட்டியுள்ளனர்; அன்ன சத்திரங்களும், தண்ணீர்ப்பந்தல்களும் ஏற்படுத்தி யிருக்கின்றனர்; குளங்கள் வெட்டி யிருக்கின்றனர். இவர்களில் தொண்டைமான் குடும்பத்தினர் மாத்திரமே செய்திருக்கும் அறங்களுக்கு ஓர் எல்லை இல்லை. திருவாரூர், வைத்தீசுவரன் கோயில், திருச்செங்காட்டங்குடி, ஆளுடையார் கோயில், திருக்கோகரணம், பேரையூர், பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சங்கரநயினார் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர், தென்காசி, திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் இத்தலங்களிலும், மற்றும் பல விடங்களிலும் இவ்வகுப்பி னருடைய மடங்கள் இருக்கின்றன. இவ்வகுப்பினர் தஞ்சையில் தரும வைத்தியசாலை (ஆஸ்பிடல்) ஏற்படுத்துதற்குப் பெரும் பொருள் உதவியிருக்கின்றனர்; ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆட்களையுதவித் திருவிடைமருதூர் முதலிய தலங்களில் உள்ள திருத்தேரை எழுந்தருளச் செய்கின்றனர். சில காலத்தின் முன்பு இவர்களிலே சிலர் சிவஞானிகளாய் விளங்கினரெனத் தெரிகிறது. இனி, சோணாட்டிலே இன்னோர் அடைந்திருந்த பொது வாழ்க்கை நிலையைக் கவனிப்போம். இவர்களிலே பல சமீன்றார் களும் சில ஆயிரவேலியாளர்களும் இருத்தலை முன்பு குறிப் பிட்டோம். மற்றும் முப்பது நாற்பது குடும்பங்கள் நூறுவேலி, இருநூறு வேலி நிலமுள்ளனவாக விளங்கின. இக்குலத்தவரில் ஏறக்குறைய எல்லோருமே நிலக்காரர்களாயிருந்திருக்கின்றனர். இந்திய தேசத்திற்கே நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சை ஜில்லாவின் பெரும்பாகம் இவர்கட்கு உரியதாயிருந்தது. இவர்களிற் சிற்சிலர் அரசர்கள் பால் பல்லக்கு முதலிய விருதுகள் பெற்றிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஆடவர்களும், பெண்டிர் களும் பல்லக்குகளிற் செல்லும் வழக்கமுடையரா யிருந்திருக் கின்றனர். இவர்கள் மிக்குள்ள ஊர்களிலெல்லாம் வேறு எவ்வகுப்பினரும் இவர்களில் தலைவராயுள்ளார்பால் தங்கள் வழக்குகளைச் சொல்லித் தீர்த்துக் கொள்ளுதல் வழக்கமாக வுள்ளது. இவர்கள் தொகை மிகுந்துள்ள ஊர்களில் தலைவர் களாயிருப்போரும் இவர்களே. தாழ்ந்த அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரென்போர் இவர்களிடம் ஊழியஞ் செய்தலைத்தமக்கு மேன்மையாகக் கொண்டு பாராட்டுவர். இவர்களும் அவர் கட்குக் குடியிருக்க நிலங்கொடுத்தும், கல்யாணத்திற்குத் தாலி செய்து கொடுத்தும் மற்றும் நன்மை தின்மைகட்கு வேண்டுவன புரிந்தும் அவர்களை அன்புடன் ஆதரிப்பார்கள். கல்யாண முதலிய பழக்க வழக்கங்களில் இவர்கட்கும் வெள்ளாளர் முதலிய பிற வகுப்பினர்க்கும் இந்நாட்டில் யாதும் வேற்றுமை காணப்படுவதில்லை. மதுரைப் பக்கத்திலுள்ள கள்ளர்கட்கும் தஞ்சைப் பக்கத் திலுள்ளோர்க்கும் பழக்க வழக்கங்களில் இருக்கிற வேற்றுமையைத் தஞ்சை ஜில்லாக் கெசட்டியர் முதலியன அறிவிக்கின்றன. இவர் கட்கும் அவர்கட்கும் இதுவரை எவ்வகையான சம்பந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் அவர்களை வேறு யாரோ என இவர்கள் ஒதுக்கிவிடப் பார்ப்பது அவ்வளவு சரியன்று; அவர்களும் இன்னோர் துணைவரே. அவர்களிடம் தகாத பழக்க வழக்கங்கள் காணப்படின் இவர்கள் அவர்களோடு கலந்து அவற்றைத் திருத்துதலே கடனாம். இனி இவ்வகுப்பினர் போர் புரிவதில் மிக்க விருப்பமுடையர். வீரம், அஞ்சாமை, தாராளம், அடைக்கலம் புகுந்தாரைப் பாதுகாத்தல் என்பன இவர்கட்குச் சிறப்பாக உரிய குணங்களாம். எங்கோ பெரிய இடங்களில் இரண்டொரு தவறு நேர்ந்திருப்பின் அதனை இங்கே எடுத்துக் கொள்ளலாகாது. '1656 இல் இவர்களை மேற்பார்த்து வந்த திருச்சிராப்பள்ளி நாய்க்கர் (வைசிராய்) ஆன குப்பாண்டி யென்பவர் காந்தலூருக்குச் சென்று அங்குள்ள பாதிரியைப் பயமுறுத்திப் பணங்கேட்ட பொழுது, அப்பாதிரி கள்ளர்களின் பாதுகாவலில் இருந்ததனால் அவர்களுக்கும் குப்பாண்டி நாய்க்கருக்கும் பெரிய சண்டை யுண்டாயிற்று' என்று ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றார். 1745இல் முராரிராவுக்குக்கீழ் மகாராட்டிரர் படையெடுத்தபொழுது ஆவூரிலுள்ள பாதிரிகளும், மற்றைய கிறிஸ்துவர்களும் கூனம்பட்டியில் அடைக்கலம் புகுந்தனர் என்று தெரிகிறது. இங்ஙனம் பலவுள. அடைக்கலம் புக்காரைப் பாதுகாப்பதில் தம்முயிரையும் பொருட்படுத்தாப் பெருந்தன்மை வாய்ந்தவர் இக்குலத்தினரென்பது துணிபு. இவர்களில் பலர் சைவமதத்தையும், சிலர் வைணவ மதத்தையும் தழுவினோராவர். பாண்டிநாட்டுக் கள்ளர்களைப் பற்றி எழுதிய ஒருவர் 'இவர்கள் சைவமதத்தினரேயாயினும், இவர்கள் முக்கிய மாய்க் கொண்டாடும் தெய்வம் அழகர்' என்றனர். அஃது உண்மையென்பதைக் கள்ளழகர் என்னும் பெயரே வலியுறுத்தும். முருகக் கடவுள்பால் இவர்கள் மிக்க அன்புடையவர்கள். சைவர் களும் வைணவர்களும் ஒருவர் வீட்டில் ஒருவர் கல்யாணஞ் செய்து கொள்வதுண்டு. இனி, இவர்களது தற்கால நிலைமையை நோக்குவோம். இவ்வகுப்பினரில் ஓர் அரசர் இருக்கின்றனர்; பல சமீன்றார்கள் இருக்கின்றனர்; ஆயிரவேலி நிலக்காரர்கள் உள்ளனர்; உத்தியோகத்தர் (போலீசு டிப்டி கமிஷனர், போஸ்டல் சூப்பரிண்டெண்ட், ஜில்லா முனிசீப், தாசில்தார், சப்மாஜிஸ்ட்ரேட்) சிலர் உளர்; வக்கீல் சிலர் உண்டு; கல்வியிலாகாவில் உயர் தகுதி வாய்ந்து சென்னை இராஜதானிக் கல்லூரி உள்ளிட்ட காலேஜ் ஹைஸ்கூல்களில் புரொபஸராயும், தமிழாசிரியர் முதலானோராயும் சிலர் இருக்கின்றனர். மற்றும் இவர்களில் சட்டசபை அங்கத்தினர் இருக்கின்றனர்; தாலூகா போர்டு, ஜில்லா போர்டு முனிசிபாலிட்டிகளில் தலைவர், உதவித் தலைவர், உறுப்பினராகச் சிலர் இருக்கின்றனர்: ராவ்பகதூர், திவான் பகதூர் முதலிய பட்டங்களும் பெற்றிருக் கின்றனர். இருப்பினும் என்? இதுகொண்டு இவ்வகுப்பே நல்ல நிலைமையில் இருப்பதாகக் கூறிவிடலாகுமோ? இவ்வகுப்பின் இப்பொழுதைய நிலைமை பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம். இவர்களில் ஏறக்குறைய நூற்றுக்கு எழுபத்தைந்து பேர் வரையில் தங்கள் சொத்தில் முக்காற் பாகத்திற்கு அதிகமாகவே யிழந்து விட்டனர். சிலர் முற்றிலுமே பொருளையிழந்து வாழ்க்கையை நடத்த முடியாது தத்தளிக்கின்றனர். உலகத்திலே தாங்களும் மக்கட் பிறப்பினரென்று வெளித்தோற்ற மாத்திரத்திலாவது காட்டிக்கொள்ள முடியாத இழிந்த நிலைமைக்குப் பலர் வந்து விட்டனர். வம்பு வழக்குகளினாலே பலர் பொருளிழந்தனர்; வீண் ஆடம்பரங்களினாலே பலருடைய பொருள் போயிற்று; மதுபான முதலிய தீய பழக்கங்களினாலும் பலர் தொலைந்தனர். அந்தோ! இழிந்த மாக்களும் மறைந்து குடிக்கும் இயல்புடைத்தாயிருந்த மதுவை இப்பொழுது பெரிய மனிதரென்று சொல்லிக் கொள்வோரெல்லாம் வெளிப்படையாகக் குடித்துவிட்டுப் புரள ஆரம்பித்து விட்டனர். இது கலியின் கொடுமையே போலும்! இங்ஙனம் பொருள் இழந்தனர்; பொலிவழிந்தனர்; மதியிழந்தனர்; வலியிழந்தனர்; வறுமையுற்றனர்; பெருமையற்றனர். இவர்கள் படும் துன்பத்திற்கும் பரிபவத்திற்கும் ஓர் எல்லையில்லை. இவற்றுக் கெல்லாம் பொறுப்பாளர் யாவர்? பொதுவாக இந்நாட்டு மக்கள் அரசாங்கத்திலோ வெளியிலோ சில பதவிகளும் பெருமை களும் அடைந்து விடுவார்களானால் எளிய மக்களின் நிலைமை அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. கடவுள் ஒருவர் உண்டு என்ற எண்ணமேயில்லாமல் எளியவர்களுக்கு எவ்வளவு துன்பமுஞ் செய்ய பின்வாங்க மாட்டார்கள். ஒரு தனி மனிதனை யெடுத்துப் பார்க்கினும் ஒரு கூட்டத்தையெடுத்துப் பார்க்கினும் எங்கும் பிறரை அமிழ்த்திவிட வேண்டுமென்ற எண்ணமே மேலிட்டிருப்பதைக் காணலாகும். பல ஆண்டுகளாகப் பல பெரியோர்கள் தேச முன்னேற்றமே கருதி உழைத்து வந்தார் களாயினும் தேசம் அடிப்படையில் எவ்வளவு சீர்கேடாயிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள முடியாமற் போய் விட்டது. இந்தியா என்கிற கட்டிடத்தின் அடிப்படையைப் பழுது பார்ப்பதற்கு இன்னும் பலர் பலகாலம் உழைக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. பொதுவில் தேசத்தையே குறிப்பாகக் கொண்டு உழைக்க முடியாதவர்கள் தாழ்நிலை யடைந்துள்ள ஒரு சமூகத்தின் பொருட்டாவது உழைக்க வேண்டும். அதுவும் தேச உழைப்பேயாகும். இனி, கள்ளர் வகுப்பினர்க்குப் பிறர் புரிந்த அல்லது புரிகின்ற நன்மை தீமைகளை விடுத்து, இவ்வகுப்பிலே பெரிய மனிதர் களாயுள்ளோர் என்ன நன்மை செய்திருக்கிறார்களென்று கேட்போம். அவர்களில் ஒரு அரசர் இருந்தால் என்? பல ஜமீன்றார்கள் இருப்பின் என்? பெரும் பணக்காரரும் நிலக் காரரும் இருந்து என்? தம் எளிய வகுப்பினரது முன்னேற்றத்திற்கு அவர்கள் யாது உதவி புரிந்திருக்கின்றனர்? இதுகாறும் ஓருதவியும் செய்யவேயில்லை. தம் வகுப்பினர் இவ்வித இழிந்த நிலைமையடைந்திருப்பது அவர்கள் மனத்தில் சற்றேனும் உறுத்தவேயில்லை. அதனாலன்றோ இவ்வளவு பரிபவத்திற்கு அவர்கள் ஆளாகவேண்டியிருந்தது? மதுரைப் பக்கத்திலிருந்த இழிவு பெரிய மனிதர்கள் இருக்கும் தஞ்சைப் பக்கத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இனியேனும் அவர்கள் உறக்கத்தினின்றெழுந்து வேலை செய்தல் வேண்டும். ஒரு தீமையினின்றும் நன்மையுண்டாகும் என்னும் விதிப்படி மதுரைப் பக்கத்துக் கள்ளர் வகுப்பினர் முன் பல துன்பங்களுக்கு ஆளாயினும் இப்பொழுது சில திருத்தமும் நன்மையும் அடைந்து வருகின்றனரென்பது ஒருவாறு ஆறுதலளிக்கக் கூடியதாகும். அங்கே பல பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கட்குக் கைத்தொழில்களும் கற்பிக்கப்படுகின்றன. விவசாயமும், கைத் தொழிலும் நல்ல பயனளித்து வருகின்றன. கடவுள் திருவருளால் கூடிய விரைவில் அவர்கள் நன்னிலையடைவர் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. தஞ்சைப் பக்கத்திலும் இரண்டு மூன்று ஆண்டு களாக இவர்கட்கென அரசாங்கத்தார் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி வருவது பாராட்டத் தகுந்தது. இச்சமயத்தில் தஞ்சைக் கள்ளர் மகாசங்கமானது பலருடைய ஒற்றுமையும் பெற்று ஊக்கத்துடன் முறைப்படி உழைத்து வருமாயின் இதனால் பல நன்மையுண்டாகக்கூடும். இனி, இவ்வகுப்பினர் மேற்கொள்ள வேண்டிய முயற்சி வகைகளையும், சீர்திருத்தங்களையும் கூறுமுன், இவர்கள் கல்வியில் எவ்வளவு பிற்போக்கடைந்துள்ளார்கள் என்பதனைக் காட்டுதும்; 1921 ஆம் வருடம் எடுத்த கணக்குப்படி கள்ளர்களின் ஜனத்தொகை ஜில்லா ஆண் பெண் தஞ்சாவூர் 99671 108013 திருச்சிராப்பள்ளி 13081 14345 புதுக்கோட்டை 24432 26679 மதுரை 94205 92527 இராமநாதபுரம் 20543 24864 திருநெல்வேலி 6115 6468 மொத்தத் படித்தவர்கள் ஆங்கிலம் தொகை படித்தவர்கள் ஆண் 259,428 42223 988 பெண் 274,544 1442 23 ---------- -------- ----- 533,972 43665 1011 ---------- -------- ----- இங்கே குறிப்பிட்ட இடங்களிலன்றி, தென் திருவாங்கூர், கொழும்பு, இரங்கூன், சிங்கப்பூர் முதலிய இடங்களில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனரெனத் தெரிகிறது. இரங்கூனிலும், சிங்கப்பூரிலும் இவர்கள் முறையே 'இந்திரகுல மகாஜன சங்கம்' 'கள்ளர் மகா சங்கம்' எனச் சங்கங்கள் ஏற்படுத்தியும் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் இவர்கள் தொகை பத்து லட்சத்துக்கு மேலாகக் கூடும். நிற்க. இங்கே குறிப்பிட்ட கணிதப்படி இவர்கள் கல்வியில் எவ்வளவு கீழ் நிலையில் இருக்கின்றனரென்று பாருங்கள். மனிதராய்ப் பிறந்திருப்பினும் கல்வியில்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பா வாரென்றும், கற்றவரே கண்ணுடையர் கல்லாதவர் முகத்திலே புண்ணுடையரென்றும் ஆன்றோர் கூறியிருப்பவற்றிலிருந்து கல்வியின் உயர்வும், கல்லாமையின் இழிவும் நன்கு விளங்கு மன்றோ? இம்மை மறுமை வீடு என்னும் மும்மையும் பயப்பதாய், தளர்ந்துழியுதவுவதாய், நல்லிசை பயப்பதாய், எழுமையும் தொடர்ந்து இன்பமளிப்பதாய் உள்ள கல்வியினும் மக்கள் பெறற் பாலதாகிய பேறு யாதுளது? இத்தகைய கல்வியில் இவர்கள் மிகவும் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு வேறு என்ன பெருமையுண்டென்று சொல்லக்கூடும்? இவ்வாற்றால் இவர்கள் முதலிற் செய்யற்பாலது தம்மில் கல்வியை வளர்ப்பதே யாகும். தஞ்சையிலுள்ள கள்ளர் மகா சங்கத்தினர் பற்பல இடங் கட்கும் புலவர்களையனுப்பிப் பிரசங்கங்கள் செய்வித்தும், துண்டுப் பத்திரங்கள் வெளியிட்டும் யாவர்க்கும் கல்வியில் ஆர்வத்தை யுண்டாக்கி, நல்லொழுக்கத்திற்றிருப்புதல் வேண்டும். பள்ளிக் கூடங்களும், உணவு விடுதி (ஹாஸ்டல்)களும் ஏற்படுத்துதல் வேண்டும். கல்லூரி (ஹைஸ்கூல், காலேஜ்)களில் படிக்கும் எளிய மாணவர்களுக்கும், திறமையுடையோருக்கும் உதவிச் சம்பளமும், பரிசுகளும் கொடுத்து ஊக்குதல் வேண்டும். மற்றும் இவ்வகுப்பினர் யாவரும் கல்வியில் விருப்பமுடையவர் களாய்த் தம் பிள்ளைகட்கு எவ்விதத்திலும் கல்வி கற்பித்தல் வேண்டும். ' தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்' என்று, கல்வி யொன்றைத்தானே மக்களுக்குத் தேடித்தர வேண்டு மெனத் திருவள்ளுவர் கூறிவைத்தார். கல்வியின் பிற பயன்களை யெல்லாம் அறியாவிட்டாலும், ஒரு மனிதனாவது ஒரு கூட்ட மாவது கல்வியினாற்றான் உலகத்தில் நாகரிகமாய் வாழமுடியும் என்பதையும் கல்வியில்லாத மனிதன் அல்லது கூட்டம் ஒரு காலத்தில் மற்றையோர்க்கு அடிமையாய்ப் போக நேரிடும் என்பதையும் சிந்தித்தாவது தம் மக்களுக்கு அழியாப் பொருளாகிய கல்வியைத் தேடி வைப்பார்களாக. இனிக் கள்ளர் நாடுகளில் ஓர் ஊரிலாவது பள்ளிக்கூடம் இல்லாதிருத்தல் கூடாது, ஒரு பிள்ளையாவது படிக்காமல் இருத்தல் கூடாது என்று பெற்றோர் களும், பெரியோர்களும் உறுதி செய்து கொள்வார்களாயின் சிலஆண்டுகளில் இவ்வகுப்பு வியக்கத்தக்க விதமாக மேன்மை அடைந்துவிடும். இவ்வகுப்பினர்க்கு இயல்பிலே கூரிய அறிவும், மேற்கொண்டதைச் சாதிக்கும் உறுதியும் உண்டு. இத்தகையோர் கல்வியை மேற்கொண்டால் உலகிற்கே பெரிய நன்மை யுண்டு. இனி இவ்வகுப்பினரில் மதுவுண்டல் என்னும் தீய வழக்க முடையோர் இருப்பின் அஃது எவ்வளவு இழிவானது என்பதை யுணர்ந்து இனியேனும் அவர்கள் அதைக் கைவிடுவார்களாக. மதுவுண்போரை மிக இழிந்தவரென மதித்து, மற்றையோர் அவர்களோடு எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதிருப்பின் அவர்கள் விரைவில் திருந்துதற்கு இடனுண்டு. களவுத்தொழில் செய்வார் யாவரே யாயினும் அவர்களை அரசாங்கத்தினரிடம் பிடித்துத் தருவார்களாயின் இவர்கள் தம் வகுப்பிற்கு எவ்வளவோ நன்மை செய்தவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் நிலக்காரர்களாதலின் உழவுத் தொழிலில் மிக்க கருத்தும் ஊக்கமும் உடையராதல் வேண்டும். 'மேழிச் செல்வம் கோழை படாது' என்பது அமுதவாக் கன்றோ? இந்நாட்டில் இவர்கள் வேறு எவ்வித கைத்தொழிலும் இல்லாதவர்களாகவே யிருக்கின்றனர். ஒரு பெரிய சமூகம் இவ்வாறிருப்பது சிறிதும் சரியன்று. இது நாட்டின் நலத்தையே தடைப்படுத்தக் கூடியதாகும். ஆதலின் இவர்கள் தத்தமக்கியைந்த யாதேனும் ஒரு கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் ஒற்றுமையுடன் கூட்டுறவுச் சங்கங்களும், பண்டசாலைகளும் ஏற்படுத்திக் கொள்வார்களாயின் எவ்வளவோ நலமாகவிருக்கும். கல்யாணம் முதலியவற்றில் அளவின்றிச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அவற்றில் ஒரு சிறு பகுதியைக் கல்விக் கென்று சேர்த்துவைப்பின் மிகுந்த நன்மை பயக்கும். பொதுவில் யாவரும் ஒற்றுமையைப் பலப்படுத்தல் வேண்டும். ஒற்றுமைக் குறைவாலன்றோ இவர்கள் பொருளெல்லாம் அழிந்தொழிந்தன. எவ்வகை வழக்குகளையும் முன்போல் இவர்கள் தாமே தீர்த்துக் கொள்வார்களாயின் அளவுகடந்த நன்மையுண்டாகும். இனி, பல நாடுகளிலுமுள்ள இவ்வகுப்பினர் தம்மிற் கலந்து பழக்க வழக்கங்களை நாகரிக முறையில் திருத்திக்கொண்டு ஒற்றுமை பெறுதல் வேண்டும். நாம் இங்கே சொல்லியனவெல்லாம் உலகத்தில் பல வகுப்பினர் இப்பொழுது மேற்கொண்டு செய்வனவே; ஒன்றும் புதிதன்று; செய்தற்கு அருமையானதுமன்று. ஒவ்வொரு வகுப்பினர் தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு பாடுபட்டு வருகின்றனர்? ஆந்திர நாட்டில் ரெட்டி வகுப்பினரும், மைசூர் நாட்டில் வொக்காலிகர் என்ற வகுப்பினரும் மிக உழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும். இவர்கள் செய்துவரும் காரியங்கள் மிக வியக்கற் பாலனவாகும். இனி கள்ளர்கள் ஏனையெல்லா வகுப்பினரோடும் அன்பும், ஒற்றுமையும் உடையவராய்க் கலந்து வாழ்தல் வேண்டும். சில வகுப்பினர் சில பழக்கங்களினாலே தம்முடன் உணவு முதலிய வற்றில் கலந்துகொள்ள முடியாதவராயிருப்பர். அத்தகைய இடங்களில் தாமும் தம் வகுப்பின் பெருமைக்குக் குறைவுண்டா காதவாறு நடந்துகொள்ளல் வேண்டும். பொதுவில் உலகிலுள்ள மக்களெல்லாம் தமக்குச் சமமானவரென்றும் நண்பரென்றும் போற்றி யொழுகுதல் வேண்டும். இனி, இவர்களோடு ஓரினமாக எண்ணப்படுகின்ற மற்றை வகுப்பினரைக் குறித்தும் இங்கே சிறிது கூறுதல் பொருத்தமாகும் என நினைக்கின்றேம். கள்ளர்களைப் போன்றே மறவர் என்போரும் தமிழ்நாட்டில் ஒர் பெருங்குழுவினராவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவ்வகுப்பினரென்பதை யறிவோர் இவ்வகுப்பானது தொன்று தொட்டு எவ்வளவு மேன்மை வாய்ந்துள தென்பதை உணரக் கூடும். சேதுபதிகளைப் போன்று தமிழை வளர்த்தோரும், புலவர்களை ஆதரித்தோரும், வள்ளன்மை சிறந்து விளங்கினோரும், எண்ணிறந்த அறங்க ளியற்றினோரும் உலகத்தில் யாவருளர்? அன்றியும் இராமேச்சுரம் சென்று இறைவனை வழிபட்டு வருவோர் யாவரே யெனினும் அவர்கள் சேதுபதிகளையும் தரிசித்து வருவது தொன்றுதொட்ட வழக்கமாயிருப்பது அன்னோரது ஒப்பற்ற மாட்சியைப் புலப்படுத்துவதாகும். இராமநாதபுரத்தரசர் போன்றே செல்வத்திலும் பெருமையிலும் சிறந்த சிவகங்கை மன்னரும் இவ்வகுப்பினராவர். இவர்களே யன்றி, பாலவனத்தம், பாலையம்பட்டி, சிங்கம்பட்டி, கடம்பூர், ஊற்றுமலை, சேற்றூர், சொக்கம்பட்டி, ஊர்க்காடு, கொல்லங் கொண்டான் முதலிய பல சமீன்றார்கள் இவ்வகுப்பினராக வுள்ளனர். அகம்படியரென்போரும் ஓர் பெருங் குழுவினரான தமிழ் மக்களாவர். இவர்களும் தொன்றுதொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வந்திருக்கின்றனர். இவ்வகுப்பினரில் பெருநிலமும், பெருஞ்செல்வமும் வாய்ந்தோர் அளவற்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றனர். இம்மூன்று வகுப்பினரும் அஞ்சாமை, வீரம், ஈகை முதலிய குணங்களில் ஒரு பெற்றியே சிறந்து விளங்குவோராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடையரா யிருக்கின்றனர். இம்மூன்று வகுப்பும் ஒவ்வொரு காலத்தில் கல்யாணம் முதலிய வற்றாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. இராமநாதபுரத்தரசர்க்குச் செம்பிநாடன் என்ற பட்டமும், சேற்றூர் ஜமீன்றார்க்குச் சோழகர் என்ற பட்டமும், கொல்லங் கொண்டான் ஜமீன்றார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் இருத்தலாலும், சேற்றூர் ஜமீன்றார் விக்கிரம சோழன் மரபினர் என்றும், கொல்லங்கொண்டான் ஜமீன்றார் தஞ்சைப் பக்கத்தி லிருந்து வந்தவர் என்றும் கூறப்படுதல் முதலியவற்றாலும் இவர் களும் ஆதியில் கள்ளர் வகுப்பினரே யாவர் என்று சிலர் கருது கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பினர் என்ற உணர்ச்சி இப்பொழுதும் இருந்து வருகிறது. இவ்வுணர்ச்சிக்கு அறிகுறியாகச் சிற்சில இடங்களில் சங்கங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் மேன்மேலும் ஒருமையுற்றுப் பெருமை யெய்துவார்களாக. இவர்கள் பெருமை யுறுவதென்பதும், தமிழ்நாடு பெருமையுறுவ தென்பதும் ஒன்றே; தனித்தமிழ் நாட்டிலுள்ள தனித்தமிழ்ப் பெருமக்கள் இவர்களாதலின் இவ்வுரிமையினாலே இவர்கள் தமிழ்மொழியைப் போற்றிப் புரந்து வந்திருக்கின்றனர். மதுரையிலும் கரந்தையிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இவர்களால் நிறுவப் பெற்றும் புரக்கப் பெற்றும் வருவதிலிருந்து இப்பொழுதும் இவர்கள் தமிழ் மொழிக்கு ஆதரவாகவிருப்பது புலனாம். எனினும் இவர்கள் தம் தாய்மொழியைப் புரப்பதில் இன்னம் மிகுதியான ஊக்கமெடுத்துக் கொள்ளக் கடமைப்பாடுடையர் என்பதனைக் குறிப்பிட விரும்புகின்றோம். இனி, தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தாம் இப்பொழுது பல பிரிவினராக இருப்பினும் தாமெல்லாம் தமிழ்த்தாயின் மக்களாகிய ஒரே யினத்தவரென்னும் உண்மையுணர்ந்து யாவரும் அன்பும் ஒற்றுமை யுணர்ச்சியும் உடையராவராக. எவரையும் சிறியரென்று இகழாதிருப்பாராக. தம் பண்டைப் பெருமையை நினைவு கூர்ந்து, மீட்டும் அப்பெருமையை நிலைநிறுத்துதற் பொருட்டு ஒற்றுமை யுடனும் ஊக்கத்துடனும் உழைப்பாராக. கருணையங் கடலாகிய இறைவன் இவர்கட்கு எல்லா அறிவாற்றலையும் தந்து இந்நாட்டினைப் பாதுகாப்பானாக. எங்கும் அவன் புகழே மிகுதல் வேண்டும். மன்னுயிரெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும்.  பட்டப் பெயர்கள் 1 அங்கராயர் 2 அசையாத்துரையர் 3 அச்சுதப்பண்டாரம் 4 அடைக்கப்பட்டார் 5 அடைவளைந்தார் 6 அண்ணுண்டார் 7 அண்ணூத்திப்பிரியர் 8 அதிகமான் 9 அத்திரியர் 10 அம்மாலைத்தேவர் 11 அயிரப்பிரியர் 12 அரசாண்டார் 13 அரசுக்குழைத்தார் 14 அரியபிள்ளை 15 அருமைநாடார் 16 அருவாத்தலைவர் 17 அருவாநாட்டார் 18 அலங்காரப்பிரியர் 19 அன்னவாசல் ராயர் 20 ஆச்சராயர் 21 ஆட்சிப்பிரியர் 22 ஆதாழியார் 23 ஆதித்தநெடுவாண்டார் 24 ஆரம்பூண்டார் 25 ஆர்சுற்றியார் 26 ஆலத்தொண்டமார் 27 ஆலம்பிரியர் 28 ஆவத்தியார் 29 ஆளற்பிரியர் 30 ஆள்காட்டியார் 31 இடங்காப்பிறந்தார் 32 இராங்கிப்பீலியர் (இராங்கியர்) 33 இராயமுண்டார் 34 இராஜாப்பிரியர் 35 இராஜாளியார் 36 இருங்கள்ளர் 37 ஈங்கொண்டார் 38 ஈழத்தரையர் 39 ஈழமுண்டார் 40 உத்தமுண்டார் 41 உய்யக்கொண்டார் 42 உலகங்காத்தார் 43 உலகுடையார் 44 உழுவாண்டார் 45 உறந்தைராயர் 46 ஊமத்தரையர் 47 ஊரத்தியார் 48 ஊரான்பீலியர் 49 எண்ணாட்டுப்பிரியர் 50 எத்திரியப்பிரியர் 51 எத்தொண்டார் 52 ஒண்டிப்புலியார் 53 ஒளிராயர் 54 ஓசையார் 55 ஓட்டம்பிடிக்கியார் 56 ஓந்தரையர் (ஓமாந்தரையர்) 57 ஓயாம்பிலியர் 58 ஓனாயர் 59 கக்கொடையார் 60 கங்கநாடர் 61 கச்சியராயர் 62 கடம்பராயர் 63 கடாத்தலைவர் (கடாரத் தலைவர்) 64 கடாரந்தாங்கியார் 65 கட்டவெட்டியார் 66 கண்டபிள்ளை 67 கண்டர்சில்லி 68 கண்டியார் 69 கதவாடியார் 70 கரடியார் (கருடியார்) 71 கரமுண்டார் 72 கரம்பையார் 73 கருப்பட்டியார் 74 கருப்பூண்டார் 75 கரும்பூரார் 76 கலிங்கராயர் 77 கலியனார் 78 கவுண்டர் (கண்டர்) 79 களத்துவென்றார் 80 களந்தண்டார் 81 களப்பாடியார் 82 களப்பிலார் 83 களமுடையார் 84 களாவர் 85 கனகராயர் 86 கன்னப்பட்டையார் 87 கஸ்தூரிமுண்டார் 88 கஸ்தூரியர் 89 காங்கெயர் 90 காசிநாடார் 91 காடவராயர் 92 காடுவெட்டி 93 காரைக்காச்சியார் 94 காலாக்குடியர் 95 காவாலி 96 காவெட்டார் 97 கிளாக்கடையார் (கிளாக்கர்) 98 கிளிகண்டார் 99 கிளியிநார் 100 கீருடையார் 101 கீரைக்கட்டையார் 102 கீவுடையார் 103 குங்கிலியர் 104 குச்சராயர் 105 குடிக்கமுண்டார் 106 குடிபாலர் 107 குமரையண்டார் 108 குறுக்கண்டார் 109 கூசார் 110 கூராயர் 111 கூழாக்கியார் 112 கையராயர் 113 கொங்கணர் 114 கொங்ககரையர் 115 கொடுப்புலியார் 116 கொடும்புராயர் (கொடுமளூர் ராயர்) 117 கொட்டையாண்டார் (கோட்டையாண்டார்) 118 கொத்தப்பிரார் (கொற்றப்பிரியர்) 119 கொல்லத்தரையர் 120 கொழுந்தராயர் 121 கொன்றையர் 122 கொன்னமுண்டார் 123 கோதண்டப்புலியர் 124 கோபாலர் 125 கோழயர் 126 கோறர் 127 சக்கராயர் 128 சங்கரதேவர் (சங்கரர்) 129 சங்காத்தியார் 130 சமையர் 131 சம்பிரத்தேவர் 132 சர்க்கரை 133 சர்க்கரையப்ப நாடாள்வார் 134 சவுட்டியார் 135 சவுளியார் 136 சன்னாடர் 137 சாணர் (சாணூரர்) 138 சாதகர் 139 சாமுத்திரியர் 140 சாளுவர் 141 சிங்கப்பீலியர் (சிங்கப்புலியர்) 142 சிங்காரிக்கர் 143 சிட்டாச்சியார் (சிற்றாட்சியார்) 144 சிந்துராயர் 145 சிறுநாட்டுராயர் 146 சிறுமாடர் 147 சீனத்தரையர் 148 சுக்கிரர் 149 சுண்டையார் 150 சுந்தர் 151 சுரக்குடியார் 152 சுரைப்பிடுங்கியார் 153 செம்படையார் 154 செம்பியமுத்தரசர் 155 செம்மைகொண்டார் 156 செம்மைக்காரர் 157 செயங்கொண்டார் 158 செனவராயர் (சன்னவராயர், சனகராயர்) 159 சென்னண்டார் 160 சேண்டாப்பிரியர் 161 சேதிராயர் 162 சேப்பிழார் 163 சேர்வைகாரர் 164 சேலைக்கொண்டார் 165 சேனாபதியார் 166 சேனைகொண்டார் 167 சேனை நாடார் 168 சோணாருண்டார் 169 சோணையர் 170 சோதிரையர் 171 சோமணநாயக்கர் 172 சோமரசர் 173 சோழகர் 174 சோழங்கதேவர் 175 சோழங்கநாடார் 176 சோழங்கர் 177 சோழதரையர் 178 சோழப்பிரியர் 179 சோழன்கிளையார் 180 ஞானிசேவகர் 181 தஞ்சைராயர் 182 தனஞ்சராயர் 183 தாக்கலக்கியார் 184 தாளிதியார் 185 தானாதியார் 186 திண்ணாப்பிரியர் 187 திராணியார் 188 திருக்காட்டியார் 189 திருப்பூவாட்சியார் 190 துண்டுராயர் (துண்டீரராயர்) 191 துறவாண்டார் 192 தெத்துவென்றார் 193 தென்கொண்டார் 194 தென்னரையர் 195 தேசிராயர் 196 தேவண்டார் 197 தேவர் 198 தொண்டார் 199 தொண்டைமான் 200 தொண்டைமான் கிளையார் 201 தொரையண்டார் 202 நந்தியராயர் 203 நரங்கியப்பிலியர் 204 நரங்கியர் 205 நல்லவன்னியர் 206 நல்லிப்பிரியர் 207 நாடள்வார் (நாடாவார், நாடார், நாட்டார்) 208 நாட்டரையர் 209 நாய்க்கர் 210 நாய்க்காடியார் 211 நார்த்தவார் 212 நாவிளங்கியார் 213 நெடுங்காளியார் 214 நெடுத்தார் 215 நெடுவாண்டார் 216 நெறிமுண்டார் 217 நைனியார் 218 பசும்பிடியார் 219 பஞ்சரமார் 220 படைத்தலையார் 221 படையெழுச்சியார் 222 பணிபூண்டார் 223 பண்ணியமுண்டார் 224 பதுங்கராயர் 225 பக்தாளர் 226 பம்பாளியார் 227 பரங்கிராயர் 228 பருத்திகொண்டார் 229 பல்லவராயர் 230 பல்லவாண்டார் 231 பவட்டுவார் (பாட்டுவார்) 232 பழங்கொண்டார் (பழனங்கொண்டார்) 233 பன்னிகொண்டார் (பன்றிகொண்டார்) 234 பன்னையார் 235 பாண்டியர் 236 பாண்டுராயர் (பாண்டியராயர்) 237 பாப்பிரியர் 238 பாப்புடையார் 239 பாப்புரெட்டியார் (பாப்பு வெட்டியார்) 240 பாலாண்டார் 241 பாலியார் 242 பால் நாட்டார் 243 பால்ராயர் 244 பாவுடையார் 245 பிசலண்டார் 246 பிச்சாடியார் 247 பிச்சையன்கிளையார் 248 பிலியராயர் 249 பீலிமுண்டார் 250 புட்டில் கழிந்தார் 251 புண்ணாக்கர் 252 புலிக்குட்டியார் 253 புள்ளராயர் 254 புறம்பயத்தார் 255 பூச்சியார் 256 பூவாட்சியார் 257 பூழிராயர் 258 பூனையர் 259 பேதரையர் 260 பொறை பொறுத்தார் 261 பொன்பூண்டார் 262 பொன்னமுண்டார் 263 பொன்னாரம்பூண்டார் 264 பொன்னானீயார் 265 போய்ந்தார் 266 போரைச்சுற்றியார் 267 போர்க்காட்டியார் 268 போர்பொறுக்கியார் 269 போர்மூட்டியார் 270 மங்கலார் 271 மங்காத்தேவர் 272 மட்டையர் 273 மணவாளர் 274 மண்கொண்டார் 275 மண்டராயர் 276 மயிலாண்டார் 277 மலையரார் 278 மல்லிகொண்டார் 279 மழவராயர் 280 மழுவாடியார் 281 மண்வெற்றிக்கூழ் வழங்கியார் 282 மன்னையார் 283 மாங்காட்டார் 284 மாதைராயர் 285 மாதையாண்டார் 286 மாத்துராயர் 287 மாந்தரையர் 288 மாமணக்காரர் 289 மாம்பழத்தார் 290 மாலையிட்டார் 291 மாவலியார் 292 மாவெட்டியார் 293 மாளிச்சுத்தியார் (மாளிச்சர்) 294 மானங்காத்தார் 295 மானமுத்தரையர் 296 மானவிழுங்கியார் 297 மான்சுத்தியார் 298 முடிகொண்டார் 299 முணுக்காட்டியார் 300 முண்டார் 301 முதலியார் 302 முனையரையர் (முனையதரையர்) 303 மூங்கிலியர் 304 மூவரையர் 305 மெய்க்கன் கோபாலர் 306 மெனக்கடார் 307 மேல்கொண்டார் 308 மேனாட்டரையர் 309 மொட்டத்தேவர் 310 யுத்தப்பிரியர் 311 வங்கணர் 312 வங்காரமுத்தரையர் 313 வடுராயர் 314 வம்பாளியார் 315 வல்லத்தரையர் 316 வல்லரண்டார் 317 வல்லாளதேவர் 318 வல்லிடியார் 319 வளம்பர் 320 வன்னிமுண்டார் 321 வன்னியர் 322 வாச்சார் 323 வாட்டாச்சியர் 324 வாணதரையர் 325 வாண்டாப்பிரியர் 326 வாண்டையார் (வண்டைராயர்) 327 வாயாடியார் 328 வாலியர் 329 வாள்வெட்டியார் 330 விசலண்டார் 331 விசாதேவர் (விஜயதேவர்) 332 விசுவரார் 333 விசையராயர் 334 விஞ்சைராயர் 335 விருதுளார் 336 வில்லவராயர் 337 விற்பனர் 338 வீசண்டார் 339 வீணதரையர் 340 வீரங்கொண்டார் 341 வீரப்புலியர் 342 வெங்கிராயர் 343 வெட்டுவார் 344 வெண்டர் (வென்றார்) 345 வெள்ளங் கொண்டார் 346 வேணுடையார் 347 வேளுடையார் 348 வைராயர் முற்றிற்று. (இப்பட்டப் பெயர்களை ஆராய்ந்து தொகுத்துத் தந்தவர்கள் எம் இளவல்களான சிரஞ்சீவி மு. தியாகராஜ நாட்டாரும், மு. பஞ்சநத நாட்டாரும் ஆவர்.)  சோழர் சரித்திரம் முகவுரை "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் சரித்திரம் தொன்று தொட்டு அதனை ஆண்டுவந்த சேர சோழ பாண்டிய வேந்தர்கள், இடைக் காலத்தே ஆட்சி புரிந்த பல்லவர்கள் என்போரின் வரலாறுகளில் பெரும்பாலும் அடங்கியிருக்கிறது. சரித்திர நோக்கில் ஏனை மன்னர்களின் வரலாற்றினும் சோழர் வரலாறு விரிவுடையதாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதிப் பயிலப்பெற்று வருகின்ற இந்திய தேச சரித்திரப் புத்தகங்களில் தமிழ் நாட்டின் வரலாறு எங்கோ ஒரு மூலையில் சிறிதளவாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டின் வரலாற்றினை அறிந்கொள்ளுதற்குரிய சாதனங் களும் சில பெரியார்களின் அரிய முயற்சியால் முப்பது நாற்பது ஆண்டுகளாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பழைய வரலாறு, நாகரிகம், முதலியவற்றைத் தாய்மொழி வாயிலாக நம் இளைஞர்கட்கு நன்கு கற்பிக்க வேண்டுமென்னும் உணர்ச்சி இக்காலத்தில் இந்நாட்டுப் பெரியார் பலரிடை உண்டாகி யிருப்பது வெளிப்படை. இந்நிலையில், " குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தான் புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற" அணில் போன்று, யானும், சோழர் சரித்திரத்தின் முதற் பகுதியாக இதனை எழுதலாயினேன். பத்து ஆண்டுகளின் முன் நாட்டுக்கோட்டை வணிகர்களின் ஊர் ஒன்றில் தமிழன்னையின் தவப் புதல்வராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த பேரவையில் யான் சோழர் சரித்திரம் என்னும் பொருள் குறித்துப் பேச நேர்ந்தது. ஐயரவர்கள் முடிப்புரையில் அதனைச் சிறிது பாராட்டிப் பேசியதுடன், சென்னையிலிருந்து என் நண்பராகிய பண்டிதமணி திருவாளர் மு. கதிரேசச் செட்டியாரவர்கட்கு விடுத்த கடிதத்திலும் அதனைக் குறிப்பிட்டெழுதியிருந்தார்கள். தலைமை சான்ற புலமையுடைய பெரியாரொருவரின் மதிப்பிற்கு அச் சிற்றுரை இலக்காயினமையின், பின்பு அதனை எழுத்துருவிற் கொணரும் ஊக்கம் எனக்கு உளதாயிற்று. சிற்சில பகுதிகளைச் சில தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டேன். அங்ஙனம் வெளியானவற்றைப் பின்பு செப்பஞ் செய்தும், முன் எழுதாதிருந்த பகுதிகளை எழுதிச் சேர்த்தும் இப்புத்தகத்தை வெளியிடலானேன். இதிற் கூறப்பெற்ற வேந்தர்களில் மனு, முசுகுந்தன், சிபி, காந்தன், தொடித்தோட் செம்பியன் என்போர் கால வரையறைக்கு உட்படாதோராவர். அவருள்ளும் முசுகுந்தனானவன் சரித்திரக் காரர்க்கு முற்றிலும் புறம்பான பழம்பிறப்பு, வானவர், அவுணர் என்னும் செய்திகளுடன் தொடர்புடையனாகின்றான். எனினும், அன்னோர் சோழகுல முன்னோராகக் கொள்ளப்பெற்று அவர் வரலாறுகள் நல்லிசைப்புலவரின் செய்யுட்களிற் பயின்றிருத் தலானும், பல நற்பொருளை அறிவுறுத்துவன ஆகலானும் இந்நூலிற் கூறப்படுதற்கு அவர்கள் முற்றிலும் உரிமையுடையராவர். அன்றியும், "கொற்ற வள்ளை யோரிடத் தான" என்னும் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திரவுரையில், `அவுணரான் முற்றப்பட்ட துறக்கத்தினை அகத் துழிஞையானாகி மனுவழித்தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவும் தேவர்க்குக் கூறுதலால்' என நச்சினார்க்கினியர் உரைப்பது போன்றவற்றின் பொருள் விளக்கத்திற்கும் அவர் வரலாறுகள் தமிழ் மக்களால் ஒருதலையாக அறியத்தகு வனவாகும். கரிகாலன் முதலிய ஏனை மன்னர்களின் வரலாறுகட்கு அவர்கள் காலத்தில் விளங்கிய புலனழுக்கற்ற சான்றோராகிய நல்லிசைப் புலவர்கள் நேரிற் கண்டு கூறியனவும், சிறிது பிற்காலத்திருந்த புலவர்கள் அறிந்து கூறியனவுமாகிய புறச்சான்றுகளும், ஒரோவழி அம்மன்னர்களே கூறியனவாகிய அகச்சான்றுகளும் உண்மையின் அவற்றை உறுதியுடைய சரித்திர மாகக் கொள்ளல் தகும். கல்வெட்டும், செப்புப் பட்டயமுமாகிய கருவிகள் கிடைக்கப் பெறாமையொன்றானே அறிவுடையோர் இவை சரித்திரமாகா என ஒருபொழும் கூறத்துணியார். கல்லூரி மாணவர்களுக்கேயன்றி உயர்தரப் பள்ளியிற் (ஹைஸ்கூலில்) படிப்போர்க்கும் நன்று விளங்க வேண்டுமென்னும் எண்ணத்தினால் எளிய நடையில் கூடியவரையிற் சந்தி பிரித்தெழுதியும், மேற்கோள் பலவற்றுக்குப் பொருள் மாத்திரம் தந்தும், எடுத்துக் காட்டிய செய்யுட் பகுதிகட்குப் பொருள் விளக்கியும் இதனை எளிதாக்கியிருக்கின்றேன். இறுதியிற் குறிப்புரையும் எழுதிச் சேர்த்துளேன். கல்வி கேள்விகளில் மிகவும் குறைபாடுடையயான் எழுதிய இதன்கண் பல பிழைகள் இருத்தல் கூடும். அறிவுடையோர் அவற்றைப் பொறுத்து, இத்தகைய பணியில் சிறியேற்கு மேன்மேல் ஊக்க முண்டாக்குவார்கள் என்னும் துணிபுடையேன். இதனை அச்சிடுதற்கு எழுதும் பொழுது கீழைச்சிவற்பட்டி, மீனாட்சிசுந்தரேசர் கலாசாலைத் தலைமையாசிரியரும் என் நண்பரும் ஆகிய திருவாளர் அ.மு.சரவண முதலியாரவர்கள் புரிந்த உதவி பாராட்டற்குரியதாகும். வழக்கம் போல் ஊக்கமெடுத்து இதனை நன்கு அச்சிட்டுத்தந்த டாட்சன் அச்சுக்கூடத் தலைவர் திருவாளர் வி.பி. ஜெகநாத பிள்ளையவர்கட்கு நன்றியறிதலுடையேன். ந. மு. வேங்கடசாமி. 1. தமிழகத்தின் பழமை " நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்" (மனோன்மணீயம் தமிழ்த்தாய் வாழ்த்து) என்றாற்போல அறிஞர்களாற் புகழப்பெற்ற நம் தமிழகத்தி லிருந்து தொன்றுதொட்டு அரசுபுரிந்து வந்தோர் சேர, பாண்டிய, சோழர் என்னும் மூவேந்தராவர். தமிழகம் என்பது ஒருகாலத்தே தெற்கில் கடல் கொள்ளப்பட்ட குமரி (லெமூரியா)க் கண்டத்தின் தென்கோடியிலிருந்து விந்தமலை வரையில் தொடர்புற்றுக் கிடந்த பெருநிலப் பரப்பாகும் என்று இப்பொழுதைய ஆராய்ச்சிவல்லார் துணிகின்றனர். குமரிக் கண்டமானது மிக்க பழமை வாய்ந்ததென்றும், அவ்விடத்திற்றான் முதன் முதல் மக்கள் தோன்றி யிருக்க வேண்டுமென்றும் நில நூல் வல்லாரும், வான நூல் வல்லாரும், தொல்லுயிர் நூல் வல்லாரும் ஆராய்ந்து கூறுகின்றனர். தென்னாடு கடல் கொண்ட செய்தி, பிறநாட்டு ஆராய்ச்சியாளராற் கூறப்படுவதேயன்றி, நம் பழைய தமிழ் நூல்களிலும் கூறப்பட்டிருக்கின்றது. கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனாரகப்பொருளுரை, தொல் காப்பிய உரை, சிலப்பதிகாரவுரை என்பன கடல்கோளைத் தெரிவிக் கின்றன. சுருங்கச் சொல்லின் தமிழகம் என்பது பல்லூழிக் காலமாக நன்மக்களின் பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் நிலைக் களனாய் விளங்கிவருவதொரு நாடு என்று கூறுதல் அமையும். பரதகண்ட முழுவதுமே தமிழகம் என்பது ஒரு சாரார் கொள்கை. பிற்காலத்தில் (பிற்காலம் எனினும் இப்பொழுதைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கில் வேங்கடமும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும், எல்லையாகவுடைய நிலமே தமிழகம் எனப்படுவதாயிற்று. இவ்வெல்லையிலிருந்து ஆட்சிபுரிந்தோரே மூவேந்தராவர். கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மன்னர் ஆட்சியில் தமிழகமானது செல்வத்திலும், நாகரிகத்திலும் சிறந்திருந்த தென்பதற்கும், எகிப்து, கிரீசு முதலான தேயங்களோடு வாணிகம் நடத்தி வந்ததென்பதற்கும் கிறிஸ்தவர்களுடைய பழைய மத நூலும், மேல் நாட்டு யாத்திரைக்காரர்களின் குறிப்புகளும் முதலானவையே சான்றாகவுள்ளன. பாரத காலத்திலே சேர பாண்டிய சோழ நாடுகள் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. பாண்டு மைந்தனான அருச்சுனன் பாண்டி நாட்டரசன் மகளை மணஞ்செய்துகொண்டான். பாரதப்போரிலே மூவேந்தரும் பாண்டவர்க்குத் துணையாய் நின்று போர் புரிந்த செய்தியைப் பாரதத்திலிருந்தே அறியலாகும். உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன் பாண்டவர் சேனைக்குப் போர் முடியும்வரைப் பெருஞ்சோறு அளித்துக்காப்பாற்றி, சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப் பெற்றான் என்பதனை, " அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" (புறநானூறு 2:3-16) என்னும் புறப்பாட்டு அறிவுறுத்தும். பாண்டியன் ஒருவன் பாண்டவர் வெற்றிக்குக் காரணமாயிருந்தான் என்பது, "பாரதப்போர், செற்றானுங் கண்டாயிச் சேய்" என்று நளவெண்பாவிற் குறிக்கப்பெற்றுள்ளது. சோழன் ஒருவன் பாண்டவ சேனைக்கு முழு உதவியும் புரிந்தனன் என்னும் செய்தியை, " தாங்கள் பாரத முடிப்பளவு நின்று தருமன் றன் கடற்படை, தனக்குதவி செய்த வவனும்" என்று கலிங்கத்துப்பரணி எடுத்துக்காட்டுகிறது. இவைகளி லிருந்தே, நூற்றுவர், ஐவர் என்னும் இருதிறத்தாரில் யாவர் பக்கம் நீதியிருந்திருக்க வேண்டு மென்பதும், பாண்டவரது வெற்றியில் பெரும் பங்குக்குரியவர் யாவர் என்பதும் ஒருவாறு துணியலாகும். இராமாயண காலத்திலும் மூவரசர் நாடுகள் மிகமேன்மை யுற்றிருந்தன என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. பாண்டியரது தலைநகரம் கபாடபுரம் எனப் பெயர் சிறக்குமாறு, அதன் கோட்டை வாயிற் கதவு பொன்னாற் செய்யப்பட்டு, முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப் பெற்று விளங்கியதனை வால்மீகி தம் இராமாயணத்துக் கூறுவரேல், அக்காலத்தில் தமிழகம் அடைந்திருந்த மேன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்? அதற்கு முன்னும் எத்துணைத் தூரம் சென்று பார்க்கினும், மூவேந்தருடைய ஆட்சியின் தொடக்கம் கண்டுபிடிக்கக் கூடியதாயில்லை. அதனாலன்றோ தமிழ்க்கடலும், வடசொற் கடலும் நிலைகண்டுணர்ந்த பெரும் புலவராகிய பரிமேலழகர், " வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று" (குறள் - 955) என்னுங் குறளுரையில், `பழங்குடி' என்பதற்குச் `சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புகாலந்தொடங்கி மேம்பட்டுவருங்குடி' என்று பொருள் விரித்தார்.  2. சோழ நாட்டின் பழமை இனி, சோழ நாட்டின் பழமையைத் தனியே விளக்கலுறும் சில மேற்கோளும் இங்கே காட்டுதும். கடைச்சங்கப் புலவருள் ஒருவரான கூலவாணிகன் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்தில், முதல் முப்பத்திரண்டு அடிகளில் புகார் நகரின் பழமை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சம்புத்தீவின் தெய்வமாகிய சம்பு என்பாள் சம்பாபதியில் (புகாரில்) தவஞ் செய்து கொண்டிருக்கும் பொழுது, அகத்திய முனிவர் தமது கமண்டலத்தினின்றும் கவிழ்த்து விடுத்த காவிரிப் பாவையானவள் நேர் கிழக்கே சென்று, சம்பாபதியின் பக்கத்தை யடைந்து, அகத்தியரால் அறிவுறுத்தப் பட்டு, சம்புத்தெய்வத்தை வணங்கி நிற்ப, அவள் மிக மகிழ்ச்சியுற்று அருகணைத்து, 'தெய்வகண பிண்டங்களையும் பிரமகண பிண்டங்களையும் பிரமதேவர் படைத்தகாலத்தில் என் பெயருடையதாகச் செய்த பெரும் புகழ்வாய்ந்த இம்மூதூரை இப்பொழுது நின் பெயருடையதாக்கினேன்; நீ வாழ்வாயாக' என, அன்று தொட்டுச் சம்பாபதி எனவும், காவிரிப்பூம்பட்டினம் எனவும் இரு பெயருடையதாக விளங்குகின்ற பழைய பதி; என்பது அதன் சுருக்கம். " பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோனிலை திரிந்து கோடை நீடினும் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பவத் தொன்மூ தாட்டி கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த வந்நாள் என்பெயர்ப் படுத்தவிவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவாழிய வென இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்" (மணிமேகலைப் பதிகம் 22-32) என்பது காண்க. பழமையும், பெருமையும் வாய்ந்த பரத கண்டத்திலே சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம், தனக்கு முந்திய தொன்றின்றித் தானே எவற்றினும் முந்திய பழமையுடைய தென்னும் கருத்தன்றோ தண்டமிழ் ஆசானாகிய சாத்தனாரால் இவ்வளவு அழகாக வருணிக்கப்பெற்றுள்ளது. இளங்கோவடிகளும், சிலப்பதிகார மங்கல வாழ்த்தின் கண்ணே, " பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோ ருண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே" (சிலப்பதிகாரம் 1:14-19) என்று புகார் நகரைப் பொதியிலோடும், இமயத்தோடும் ஒப்புமைப்படுத்து, அதனைப் பொதுவறு சிறப்புடையது என்றும் கூறி வைத்தார். சோழ நாட்டின் கண்ணதாகிய திருவாரூர்த் திருப்பதியின் பழமையை, திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகத்து ஓர் பதிகம் முழுவதிலும் வைத்துப் பாராட்டியிருப்பது சிந்திக்கற்பாலது. " ஒருவனா யுலகேத்த நின்ற நாளோ வோருருவே மூவுருவ மான நாளோ கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும்விண்ணும் தெரித்த நாளோ மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகம் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே" என்பது காண்க. இங்ஙனமே இந்நாட்டின் பழமையைக் குறிப்பன மற்றும் பலவுள்ளன. இனி, சோழரது மரபு வரலாறு ஆராய்தற்பாலது.  3. சோழர் குடி தமிழ் நாட்டின் பழங்குடிகளினின்றும் தோன்றி அரசு நிலை யிட்டுத் தலைவராயினாரே மூவேந்தரும் எனல் வேண்டும். உலகிலே எவ்வகுப்பினரும் சிறிது நாகரிகமுற்ற காலையில், தம்மை ஏனைய வரினும் மேம்பட்டவர் என்று காட்டிக்கொள்வதற்காக, சூரியன், சந்திரன், அக்கினி என்பவரில் ஒருவரிடத்திலிருந்தோ அல்லது வேறு யாதாவது ஒரு தெய்வத்தினிடமிருந்தோ தமது மரபு தோன்றியதாகக் கற்பித்துக்கொள்வது வழக்கமாக வுள்ளது. இத்தகைய எண்ணம் தமிழ் நாட்டாரையும் பற்றாமல் விடவில்லை. சூரிய சந்திர குலக் கற்பனை வட நாட்டரசரிடமும், தமிழ் நாட்டரசரிடமும் ஒருபெற்றியே காணப்படுகிறது. இது முதலில் எங்கே தோன்றியதென்பது ஐயப்பாடே. வடமொழிப் புராண இதிகாசங்களிற் சில, வடவரசரையும், தமிழ்மன்னரையும் சேர்த்துப் பிணைப்பனவாக வுள்ளன. பாரத அரி வமிசம் கூறுவது பின் வருமாறு காண்க: திருமால் உந்தியில் பிரமன் தோன்றினன்; பிரமன் மகன் அத்திரி; அவன் புதல்வன் சந்திரன்; சந்திரனுக்குப் புதனும், அவனுக்குப் புரூரவனும் தோன்றினர்; புரூரவன் மக்கள் ஆயு முதலானவர்கள்; ஆயுவின் மக்கள் நகுடன் முதலானோர்; நகுடன் மக்கள் யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, உத்தமன் என்ற ஐவருமாவர்; அவருள் யயாதியின் மக்கள் யது, துருவசு, துருகியன், அணு, பூரு என்னும் ஐவரும்; அவருள் துருவசு என்பான் மகன் வன்னி; அவன் மைந்தன் கோபாநு; அவன் புதல்வன் திரை சாநு; அவன் மகன் காந்தமன் என்பான்; அவனுக்கு மகன் மருத்தன்; அவனுக்குத் தத்துமைந்தன் பூருமரபில் உதித்த துட்டியந்தன்; அவன் மகன் கருத்தாமன்; அவன் மகன் ஆக்கிரீடன்; ஆக்கிரீடன் மக்கள் பாண்டியன், கேரளன், சேரன், சோழன் என்போர். இப்பெயர்களிற் சில, வெவ்வேறு புராணங்களிற் சிறிது திரிந்துங்காணப்படு கின்றன. வழி முறைகள் சில கூடக்குறையவும் உள்ளன. விட்டுணு புராணமானது துட்டியந்தன் வரையிற் கூறி, மேற் செல்லாது நின்று விட்டது. அதில் வன்னிக்கும் கோபாநுக்கு மிடையே பார்க்கன் என்பான் ஒருவன் கூறப்படுகின்றான். அரிவமிசத்தில் கேரளன் வேறு, சேரன் வேறு கூறப்படுவ தென்னையோ? இந்நூல் கூறுகின்றபடி தமிழரசர் யாவரும் சந்திரகுலத்தவராதல் வேண்டும். தமிழ் நூல் ஒன்றிலாவது சோழர் சந்திர குலத்தவராகக் கூறப்படவில்லை. கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா முதலியவற்றினெல்லாம் சோழர் சூரிய குலத்தவராகக் கூறப்படுகின்றனர். " செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட" (மணிமேகலைப் பதிகம் 9-10) என்று மணிமேகலையும் சோழரைச் சூரிய குலத்தவராகவே கூறுகின்றது. இங்ஙனமே பாண்டியர் சந்திர குலத்தவராகக் கூறப்படுகின்றனர். " திங்கட் செல்வன் றிருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி" (சிலப்பதிகாரம் 11:23-25) என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இவற்றிலிருந்து, தமிழரசர் யாவரையும் சந்திர குலத்தவர் என்று கூறும் அரிவமிசக்கதை பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டதென்று துணிய வேண்டியிருக்கிறது. இனி, சோழர் சூரிய குலத்தவராதல் எப்படியென்று பார்ப் போம். கலிங்கத்துப்பரணி, அரசபாரம்பரியத்திற் கூறியிருக்கும் சோழ மன்னர் வழிமுறை பின் வருவது: திருமால், பிரமன், மரீசி, காசிபன், சூரியன், மனு, இக்குவாகு, புரந்தரனை வாகனமாகக்கொண்டு தானவரை வென்றவன் (ககுஸ்தன்), புலியும் மானும் ஒரு துறையில் நீருண்ண அரசுபுரிந்தவன், முசுகுந்தன், தேவர்களுக்கு அமுதமளித்தவன், புறாவுக்காகத் துலைபுக்கவன் (சிபி), சோழ மண்டலம் அமைத்தவன் (சுராதிராசன் முதலாக வரு சோழன்), இராசகேசரி, பரகேசரி, காலனிடத்தே வழக்குரைத்தவன், காவிரிப்புனல் கொணர்ந்தவன் (காந்தன்), அகிலலோகமும் வென்று கொண்டவன், இந்திரனைப் புலியாகக் கொடியில் வைத்தவன், ஒரு கடலில் மற்றொரு கடலைப் புகவிட்டவன், தன் குருதியை உண்ணுமாறு அளித்தவன், வாதராசனை (காற்றினை) வலிந்து பணிகொண்டவன், தூங்கெயிலெறிந்தவன், வானத்தில் விமானங்களைச் செலுத்தினவன், பிலத்தின் வழியே சென்று நாககன்னியை மணந்தவன், பொய்கையார் பாடிய களவழிக்கவிதை கேட்டுச் சேரனைச் சிறையினின்றும் விட்டவன் (செங்கணான்), பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்துப் பட்டினப்பாலை என்னும் பாட்டினைக் கொண்டவன் (கரிகாலன்), சேரமண்டலத்தை வென்று சதையநாள் விழாவை ஏற்படுத்தியவன், கங்கையும் கடாரமுங் கொண்டவன், கல்யாணியை வென்றவன், கொப்பத்துப் போரிலே வென்று போர்க்களத்தில் முடி கவித்தவன், குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்றவன், அபயன். விக்கிரம சோழனுலாவும் இது போன்றே கூறிவந்துளது. எனினும், இரண்டிலும் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. காசிபன் மகன் மரீசி என உலாக்கூறுகிறது. உலாவில் கரிகாலன் முன்னும், பரணியில் செங்கணான் முன்னும் கூறப்படுகின்றனர். வேறு சில வேற்றுமைகளும் உள்ளன. இரண்டிலும் பல அரசர்கட்குப் பெயர் கூறாமல் அன்னோர் புரிந்த அருஞ் செயல்கள் மாத்திரமே கூறப்பட்டுள. திருவாளர் டி. ஏ. கோபிநாத ராவ், எம். ஏ, அவர்கள் எழுதிய சோழ வமிச சரித்திரத்தில் பின் வருமாறு கூறப் பெற்றுளது. "சோழர்கள் சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வைவச்சுதமனுவினிடமிருந்து பரம்பரையாயிழிந்தவர்கள் என்று அடியில் வரும் பௌராணிக வழியைத் தமக்குக் கற்பித்துக் கொள்கின்றனர். வைவச்சுதமனு, சூரிய வமிசஸ்தாபகனான இக்ஷ்வாகு, முசுகுந்தன், (இவன் மகனாகிய) வல்லபன், சிபி. இச்சிபியின் பின்பு சோளன், இராசகேசரி, பரகேசரி, இராஜேந்திர மிருத்துஜித், வியாக்கிரகேது, அரிகாலன் முதலியவர்கள் ஆண்டதாகச் சொல்வது வழக்கம்." இவை எல்லாம் சோழர் சூரிய வமிசத்தவர் என்று தொடர்பு படுத்திக் காட்டுதல் காண்க. சூரிய வமிசத்தில் மாந்தாதா என்னும் சக்கரவர்த்திக்கு மக்கள் மூவரென்றும் அவருள் முசுகுந்தன் ஒருவனென்றும் பாகவதம் முதலிய புராணங்களிலிருந்து தெரிகிறது. மாந்தாதாவின் மகனாகிய புருகுச்சனுடைய வழியில் வந்தோரே அரிச்சந்திரன், சகரன், பகீரதன், ரகு, தசரதன், இராமன் முதலானவர்கள். மற்றொரு மகன் அம்பரீடன் என்பான். முசுகுந்தன் வழி எவ்வாறு பெருகிற்று என்பதை விட்டுணு, பாகவத, கூர்ம புராணங்கள் கூறவில்லை. சோழகுல முன்னோரில் முசுகுந்தனும் ஒருவனாகக் கூறப்பட்டதிலிருந்து முசுகுந்தன் வழியினர் சோழரென்று நாம் கருதலாம். முசுகுந்தனுக்கும் தென்னாட்டிற்கும் உள்ள தொடர்பு மிகுதியைப் பின்பு அன்னோன் வரலாறு கூறும் வழிக் காணலாகும். ஒருக்கால் சோழமன்னரைப் பிறப்பால் சூரிய குலத்திலே பிணைக்கக் கருதியோர், சோழர் முன்னோனாய முசுகுந்தனை மாந்தாதாவுக்கு மகனாக்கி விட்டனரோ என்று சிலர் கருதவும் கூடும். எனினும் புராணங்கள் கூறுகிறபடி முசுகுந்தன் சூரிய குலத்து மாந்தாதாவின் மகனே என்றும், அவன் வழியினரே சோழரென்றும் இப்பொழுது வைத்துக்கொண்டு பார்த்தலே சால்புடைத்தாம். பரணி, உலா முதலியவற்றிற் கூறப்படும் சோழகுல முன்னோரைப்பற்றிய செய்திகள் பல சரித்திர எல்லைக்கு அப்பாற்பட்டன. இப்பொழுது உண்மை யென்று நிலை நாட்டவும் காலத்தால் வரையறைப் படுத்துரைக்கவும் அருமையாயிருப்பது கொண்டு அவற்றை யெல்லாம் பொய்ம்மை என்று தள்ளுதலோ, ஆராய்ச்சி இன்றியே எல்லாவற்றையும் முழு உண்மைகளாகக் கொள்ளுதலோ நேரிதன்று. பழைய நூல்களில் புனைந்துரை வகையாற் கூறப்பட்டனவும், சிறிதைப் பெரிதாகவும், ஒன்றைப் பலவாகவும் கூறியுள்ளனவும் இவை இவை என நுண்ணறிவாளர்கட்கு ஒருவாறு புலனாகக் கூடும். அவ்வாறு கூறியனவும் சில நன்மையின் பொருட்டெனின் அவை இகழற்பாலவல்ல. இப்பொழுது உண்மை காணும் நோக்கத்துடன் ஆராய்ந்து வெளிப்படுப்பன பழங்கொள்கையுடன் ஒரோ வழி மாறுபடின் இவையும் வெறுக்கத் தக்கனவல்ல. இனி, பரணி முதலியவற்றால் அறியப்பட்ட பழைய மன்னருள் மனு, முசுகுந்தன், சிபி, காவிரி கொணர்ந்தவன், தூங்கெயிலெறிந்தவன், நாக கன்னியை மணந்தவன், கரிகாலன், செங்கணான் என்போர் புறநானூறு முதலிய பழைய தமிழ்ச் செய்யுட்களிற் குறிக்கப்படுதலின் இன்னோர் செய்திகளும், சங்கச் செய்யுட்களால் அறியப்படுகின்ற வேறு சில சோழ மன்னரைப் பற்றிய செய்திகளும் முதற் பகுதியில் முறையே கூறி வரலாகும்.  4. மனு சோழர் குல முன்னவனாகிய இம் மன்னவன் திருவாரூரிலிருந்து அரசு புரிந்தவன். தனது செங்கோன்மையினால், மனுவினால் உண்டாக்கப்பட்ட நீதியைத் தன் பெயராகச் செய்துகொண்டவன்; மண்ணில் வாழும் உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன். இக்காவலன் நெடுநாள் மகப்பேறின்றி யிருந்து அருந்தவமுழந்து ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றான். அவ்விறைமகன் நிறைமதி போல் வளர்ந்து பல கலைகளும் கற்றுணர்ந்து, படைக்கலப் பயிற்சியிலும், யானை யேற்றம், குதிரை யேற்றம் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினன். அன்னவன் ஓர் நாள் தேரூர்ந்து வீதியிற் செல்லும் பொழுது ஓர் ஆன் கன்று அவனறியாதபடி துள்ளி யோடிவந்து தேர்க்காலிற் பட்டு உயிர் துறந்தது. உடனே கன்றை யிழந்த தாய்ப் பசுவானது விரைந்து வந்து கதறிப்பதறி வருந்தா நின்றது. அந்நிகழ்ச்சியைக் கண்ட அரசிளங்குமரன் எய்திய துயரம் அளவிடற்பாலதன்று. அறிவு கலங்கித் தேரினின்றும் வீழ்ந்தவனாய், அலறுகின்ற ஆவினை நோக்கி உயிர் பதைத்துச் சோர்வான்; நிலத்தில் உயிர் துறந்து கிடக்கும் கன்றை நோக்கிப் பெருமூச்செறிந்து இரங்குவான்; மலர்தலை யுலகம் காக்கும் மனுவெனும் எங்கோமானுக்கு இப்பழி வந்தெய்த யான் ஒருவன் பிறக்கலுற்றேனே என்று தன்னை வெறுப்பான்; இவ்வாறு வருந்தி இதற்குச் செய்யலாவதோர் கழுவாய் உளதெனில் எந்தை இதனை அறிதற்கு முன்பே செய்வேன் என்றெண்ணி, மறைவல்ல அந்தணர் இருப்பிடம் அடைந்தான். கன்றை யிழந்த பசுவும் சும்மா இருந்திலது. அளவற்ற துயரத்துடன் அங்குமிங்கும் ஓடியது; அலறியது; அரசனுடைய கோயில் முற்றத்தை யடைந்து அங்கே தூங்கியதாகிய மணியினைக் கொம்பாற் புடைத்தலும் செய்தது. என்றும் அசையாத நாவினையுடைய அம் மணியின் ஓசை பழிப்பறை முழக்கெனவும், பாவத்தின் ஆர்ப்பெனவும் அரசன் செவிகளிற் சென்று புக்கது. உடனே நெஞ்சம் துணுக்குற் றோடி வந்தான்; நிகழ்ந்ததனை அறிந்துளோர் கூறக்கேட்டான்; ஆவின் உறுதுயர் கண்டான்; தானும் துயரக் கடலில் மூழ்கிக் கரை காணானாயினான். அத்தன்மையனான அரசன் பின்பு ஒருவாறு தெளிந்து அமைச்சர்களோடும் சூழ்வுற, அவர்கள் இவ்வழுவினை ஆய்ந்து கழுவாய் உஞற்றுதல் தகவெனக் கூறினர். அதனை உறுதி யென்று கொண்டிலன்; அமைச்சர் என்ன கூறியும் மன்னன் கொள்கையை மாற்றக் கூடவில்லை. கன்றை யிழந்த பசுவினது துயரத்தைத் தானும் எய்துவதே கடனெனத் துணிந்தானாய், மகனைத் தேர்க்காலில் வைத்தூருமாறு ஓர் அமைச்சனுக்குக் கட்டளையிட்டான். அன்னவன் சென்று அது செய்யானாய்த் தன்னுயிர் துறக்கவே, அரசன் தானே சென்று தன் அருமருந்தனைய ஒரே மகனைத் தேர்க்காலிற் கிடத்தி ஊர்ந்தனன். அப்பொழுதே கருணை யங்கடலாகிய சிவபெருமான் உமையம்மையாருடன் இடபவாகனத்திலே தோன்றி அரசனுக்குக் காட்சியளித்து அருள்புரிவாராயினர்; ஆன்கன்றுடன் அரசகுமாரனும் அமைச்சனும் உயிர் பெற்றெழுந்தனர்; தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்; யாவர்களும் களிப்புற்றனர். இவ்வரலாறு தெய்வ மணக்குஞ் செய்யுள் பாடவல்ல சேக்கிழார் பெருமானால் பெரிய புராணத்தில் மிக அழகாகக் கூறப்பெற்றுளது; அதன் பெருமையை அறிதற்கு அரசனுடைய நீதியைப் புலப்படுத்தும் சில பாடல்களை இங்கே தருதும். " மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால் ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ." " என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயவிசைந்தே அன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல் வேனானால் தொன்மனுநூற்றொடைமனுவாற்றுடைப் புண்டதெனும்வார்த்தை மன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்." " ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான் தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்." (பெரியபுராணம் - திருநகரச் சிறப்பு 36,37,44) இனி, கறவையின் பொருட்டு மகனை முறைசெய்த இவ்வரலாற்றினைச் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் முறையே, " அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினிபுரந் தரிய காதலனை யாவினது கன்றுநிகரென் றெவ்வ ருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும்" எனவும், " சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரின் மைந்தனை யூர்ந்த மனுவோனும்" எனவும், பரிதி மைந்தனாகிய வைவச்சுத மனுவுக்கே உரியதாக்கிக் கூறுகின்றனர். அவன் பொன்னி நாட்டிருந்து அரசு புரிந்த ஓர் சென்னியா மென்பதே சேக்கிழார் கருத்தும், இளங்கோவடிகள் முதலிய பண்டைச் சான்றோர் கருத்துமாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழைய இலக்கியங்களில் மனு, மனுநீதி, மனுநூல் என்னும் பெயர்கள் யாண்டும் காணப்படவில்லை. அவைகள் வேதத்தைப்பற்றிக் கூறுகின்றன. அவற்றில் மறை யென்றும், கேள்வி யென்றும் வேதம் கூறப்படுகின்றது. அதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் பெழுந்த தமிழ்த் திருமுறைகளில் நான்மறை, ஆறங்கம் என்பன பலவிடத்துக் கூறப்பட்டுள. திருமுறைகள் சிலவற்றில் ஆகமங் களும் கூறப்படுகின்றன. அவற்றுள், ஓரிடத்தும் வடமொழி மிருதிகளைப்பற்றிய குறிப்பு யாதொன்றுங் காணப்பட வில்லை. பிற்காலத்தனவாகிய பிங்கல முதலிய நிகண்டுகளில் மனு முதலிய பதினெட்டு நூல்கள் தருமநூ லென்னும் பெயருடன் காணப்படுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலியனவே மனுநீதி யென்னும் ஒன்றைக்குறித்துப் பேசுகின்றன. ஆகையால், அது வடமொழியில் எழுந்தது எக்காலத்தாயினும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளின் பின்பே தமிழ்மக்களுள்ளும் பயிலப்படுவதாயிற்றென்று கருதலாகும். இனி, சோழர்குல முதல்வன் புரிந்த மகனை முறைசெய்ததாகிய இவ் வருஞ்செயலைப் பண்டைப் புலவர் பெருமக்கள் ஒரோவழி எடுத்துக்காட்டிச் சோழரது குலப்பெருமையை நிலைநாட்டிச் செல்கின்றனர்; அவற்றுள் சில காட்டுதும்: " வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே" (சிலப்பதிகாரம் 20:53-56) " மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் றோன்றின னென்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்" - மணிமேகலை. இவற்றுள் முன்னது, கோவலனை யிழந்த நங்கை கண்ணகி நெடுஞ்செழியன் முன் சென்று அவனது தவற்றினைக் கட்டுரைப் பான்புக்கவள் தனது ஊர் இன்னதெனக் கூறுங் கூற்றாக வுள்ளது. ஓர் மாது அரசன் முன் சென்று சிறிதும் அஞ்சாது அவனது தவற்றினை எடுத்துக்காட்டி இடித்துரைப்பான்புக்கதும், அதினும், தன் ஊர்ப்பெயர் கூறும் பொழுதே, `என்னூர் நின்போலும் நீதியற்ற மன்னரால் ஆளப்படுவதன்று' என்பது போதர `ஓர் பசு வுற்ற துயரினையும் சகிக்கலாற்றாது தன் அருமந்த மகனைத் தேர்க் காலில் வைத்தூர்ந்து நீதி செலுத்திய மன்னனால் ஆளப்படுவது காண் என்பதி' என்றுரைத்ததும் எவ்வளவு பெருமித உணர்ச்சியை விளைவிப்பன பாருங்கள்! பின்னது, புகார் நகரிலிருந்த கிள்ளிவளவன், தன் மகனாகிய உதய குமரனென்பான் மணிமேகலை என்னும் தவமகளைக் காதலித்து ஓர் விஞ்சையனால் வெட்டுண்டிறந்தான் என்பது தெரிந்து அவனை உடனே புறங்காடடைவிக்கு மாறு கூறியது. தன் மகன் புரிந்த தீமை பிறவேந்தர் செவியை யடையுமுன் அவனை ஈமத்தேற்றுக என்கிறான்! மகனை முறை செய்த மன்னவன் வழியில் வந்து, தன் குலத்திற்கு ஓர் சிறு மறுவும் உளதாகாது காத்தல் கருதிய இம் மன்னனது மாட்சியை என்னென்றுரைப்பது!  5. முசுகுந்தன் மாந்தாதாவின் மக்கள் மூவரிலொருவனாகப் பாகவத முதலிய புராணங்களிற் கூறப்பெற்றுள்ள இம்மன்னனைக் குறித்துக் கந்தபுராணத்தால் அறியலாகும் செய்திகள் பின்வருவன: பண்டொரு காலத்தில் வெள்ளியங்கிரியில் வானளாவிய பூங்காவிலே ஓர் வில்வ மரத்தடியில் சிவபெருமான் உமாதேவி யாரோடும் எழுந்தருளியிருந்தனர். அப்பொழுது மரங்களில் வாழும் இயல்புடைய ஓர் முசுக்கலையானது அவ் வில்வ மரத்தின் இலை களைப் பறித்து அம்மையப்பர் திருமேனி மறையுமாறு போட்டுக் கொண்டிருந்தது. அது கண்டவளவில் அம்மைக்குக் குரங்கின்மீது சீற்றமுண்டாயிற்று. பரங்கருணைத் தடங்கடலாய பெருமான் அம்மையாரின் சீற்றத்தை மாற்றி யருளி, அம்முசுவிற்கு நல்லுணர் வளித்து, 'நீ புரிந்த பூசனையுவந்தனம்; வில்வத்தழை கொண்டு இங்ஙனம் எம்மைக் குற்றமறப் பூசித்தமையால், நீ, பகலவன் குலத்திற் றோன்றிப் பார் முழுதும் அரசாளுவை' என்று அருள் புரிந்தார். அங்ஙனம் அருள் பெற்ற முசுவும் பெருமானது திருவருளை என்றும் மறவாமைப் பொருட்டு, தான் அரசனாய காலத்தும் முசு முகத்துடன் இருக்க வரம்பெற்றுக் கருவூரின் கண்ணே அரசர் குலத்திலே தோற்றஞ் செய்தது. பெற்றோர்கள் முசுமுகத்துடன் தோன்றிய தம் குழந்தைக்கு முசுகுந்தன் எனப் பெயரிட்டுச் சிறப்பியற்றி, இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்குமாறு செய்து, அரசவுரிமையை அவனிடம் ஒப்புவித்து விட்டுத் தவமியற்றச் சென்றனர். முசுகுந்த மன்னனும் சிவபெருமான் திருவருளைக் கணப்பொழுதும் மறத்தல் இலனாய், அளியும் ஆற்றலும் மிக்கு, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் ஓம்பி முறை வழுவாது ஆட்சி நடாத்தி வருவானாயினன். இப்படி இருக்கும் நாளில், முருகப்பெருமானானவர் சூரபன்மனைச் சங்கரித்துவிட்டுத் திருப்பரங்குன்றமெய்தித் தெய்வயானையாரைத் திருமணம் புரியும் செய்தியைத் தேவேந்திரனுடய ஒற்றரால் அறிந்து, அவன் சென்று திருமணத்தினைத் தரிசித்துக் குமாரக் கடவுளின் திருவருள் பெற்றுத் திரும்பினன். பின்னும், கந்தபிரானுக்குரியவாகும் வெள்ளிக்கிழமை, கார்த்திகை, கந்த சஷ்டி என்னும் விரதங்களின் மேன்மையும், பெரியோர் பலர் அவற்றை அநுட்டித்துப் பேறு பெற்ற வரலாறு களும் விசிட்ட மிக்க வசிட்ட முனிவரால் அறிந்து தானும் அவ்வாறே அவற்றை அநுட்டித்துச் சிறப்பெய்தினன். மற்றும் இம் மன்னர் பெருந்தகை, பொன்னுலகாளும் புரந்தரனானவன் வலன் முதலிய அவுணர்களுக்கு ஆற்றானாகித் தன்னைத் துணைவேண்டிய காலத்தில் வானுலகடைந்து அவுணர்களை வென்று வாகை மிலைந்தனன். அப்பொழுது இந்திரன், தனக்குச்செய்த உதவிக்குக் கைம்மாறளிக்க விரும்பி, கற்பகத்தரு முதலிய சிலவற்றைத் தவிர்த்து யாது வேண்டினும் தருவதாகக் கூறினன். கூறலும், இம்மன்னன், முன்பு திருமாலால் பூசிக்கப் பெற்றதும், பின் திருமாலிடமிருந்து பெற்று இந்திரன் பூசித்து வருவதுமான தியாகேசர் திருவுருவைத் தருமாறு பரமசிவனுடைய திருக் குறிப்பின்படி வேண்டினன். இந்திரனோ ஆன்மலாபப்பேறு கருதித் தான் வழிபட்டு வரும் அவ்வருட் குறியினைத் தருதற்கு மனமிலனாய், அதுபோலும் வேறு ஆறு திருவுருவங்களைத் தேவதச்சனைக்கொண்டு இயற்றி வைத்து, 'இவற்றுள் யாது வேண்டினும் பெறுக' என மொழிந்தனன். முசுகுந்தன் இவ்வேழினுள் எதனைப் பெறுவ தென்று தடுமாற்றமெய்தி, பின்பு, திருமாலும் இந்திரனும் வழிபாடு செய்த அவ்வுருவையே திருவருட்பாங்கால் உணர்ந்து வேண்ட, புரந்தரன் வேறு செய்வதற்குரிய வழியிலனாய் அவ்வேழு படிவங்களையும் பெறுமாறு அளித்தனன். முசுகுந்த வேந்தனும் அவைகளைப் புவியின்கட் கொணர்ந்து, திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயல், திருக்கோளிலி, திருமறைக் காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் என்னும் ஏழு திருப்பதிகளிலும் முறையே ஒரோ வொன்றாகப் பிரதிட்டை செய்தனன். இங்ஙனம் ஏழு தியாகராச மூர்த்திகளும் எழுந்தருளப் பெற்ற இவ்வேழு திருப்பதிகளும் சத்த விடங்கத்தலம் என்று கூறப்படும். இதனை, " சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காறாயல் - பேரான ஒத்ததிரு வாய்மூர் உவந்ததிருக் கோளிலி சத்த விடங்கத் தலம்" என்னும் வெண்பாவானறிக.1 இனி, முசுகுந்தனைப்பற்றி விண்டு புராணத்தில் ஓர் கதை கூறப்பெற்றுள்ளது. அது, "யவன தேசத்ததிபனான காலயவனன் என்பான் ஒருவன் பல்கோடி மிலேச்சர்களுடனும், நால்வகைப் படையுடனும் புறப்பட்டுவந்து கண்ணபிரான் இருந்த மதுரா புரியை முற்றுகை யிட்டனன். அவன் படையெடுத்து வருதலை முன்னமே யறிந்த கண்ணன், துவாரகையை உண்டாக்கி, மதுரையிலுள்ளாரனைவரையும் அவன் வருதற்கு முன்பே அங்கே அனுப்பிவிட்டு, தான் மாத்திரம் மதுரையில் தனித்திருந்து, யவனன் மதுரையை முற்றிய பொழுது அஞ்சியோடுவான் போன்று கையிற் படைக் கலமின்றியே ஓடி ஓர் மலைமுழைஞ்சினுள் நுழைந்தனன். காலயவனனும் கண்ணனைப் பின்றொடர்ந்து சென்று குகையினுட்புக்கு, அங்கே துயின்று கொண்டிருந்த முசுகுந்தனைக்கண்டு, `இவன்றான் கண்ணன்; பொய்த்துயில் புரிகின்றான்' என்று எண்ணிக் காலால் உதைத்தான்; உடனே முசுகுந்தன் தூக்கத்தினின்றெழுந்து அவனை நோக்கினான். அவ்வளவில் யவனன் விளிந்து சாம்பராயினன். அவ்வாறு அவன் விளிந்தமைக்குக் காரணம் யாதெனில், முசுகுந்தச் சக்கரவர்த்தி யானவன் தேவாசுர யுத்தத்தில் தான் வானவர்க்குத் துணையாய் நின்று அவுணர்களை மடித்த காலையில் அமரர்கள் மகிழ்வுற்று `நினக்கு என்ன வரம் வேண்டும்?' என்று வினவ, அவன், தான் போர்த் தொழிலால் நெடுநாள் உறக்கமின்றியிருந் தமையால் களைப்புற்று, `யான் நெடுங்காலம் துயிலும்படி வரம்கொடுமின்.' எனக் கேட்டனன். அன்னவரும் அப்படியே வரங்கொடுத்து `நின்னைத் துயிலினின் றெழுப்புவோன் யாவனாயினும் அவன் சாம்பராவன்' என்று கூறிவிடுத்தனர். இதுவே காலயவனன் மாண்டமைக்குக் காரணம் என்க. பின்பு, முசுகுந்தனானவன் கண்ணனைப்பார்த்து `நீ யார்?' என்று வினவி, `யான் யதுகுலத்து வசுதேவர் மைந்தன்' என்று அவன் கூறக்கேட்டு, `இருபத்தெட்டாம் சதுர்யுகத்தில் துவாபரத்தின் முடிவில் யதுகுலத்திலே திருமால் அவதரித் தருளுவன்' என்று முன்பு விருத்த கார்க்கிய முனிவர் தனக்குச் சொல்லியிருப்பதை நினைவு கூர்ந்து, அவன் பகவனாகிய திருமாலே என்று துணிந்து துதித்தனன். அப்பொழுது கண்ணபிரான் முசுகுந்த மன்னனை நோக்கி `நீ விரும்பிய உத்தம லோகங்களை யடைந்து, திப்பிய போகமெல்லாம் நுகர்ந்து, முடிவில் ஓர் பெருமை வாய்ந்த குலத்திலே பழம் பிறப்புணர்ச்சி யுடையவனாய்த் தோன்றி முத்தியடைவாய், என்று அருளிச்செய்தனன். அங்ஙனம் அருள் பெற்ற முசுகுந்தனும் குகையினின்றும் வெளிப்போந்து குறிய வடிவுடன் திரிகிற மனிதரைப் பார்த்து, கலியுகம் வந்துவிட்ட தென்று தெரிந்துகொண்டு தவம் புரிதற் பொருட்டுக் கந்தமாதனம் என்னும் குன்றத்தை அடைந்தனன் என்பது. முசுகுந்தன் முசுகுந்தன் என்பவன் பேராற்றலும் பெரும் புகழும் வாய்ந்த தென்னாட்டு மன்னர்களில் ஒருவன் என்பதும், அவன் பூர்வ புண்ணியத்தால் அளவுகடந்த சிவ பத்தியும், தவயோகசித்தியும் கைவரப் பெற்றவன் என்பதும் மேற்காட்டிய கதைகளினின்றும் வடித்தெடுக்கற்பாலவாய உண்மைகளாம். இனி, இம்மன்னன் தேவர்கள் பொருட்டாக அவுணர் களோடு போர் புரிந்த செய்தி சில வேறுபாட்டுடன் சிலப்பதிகாரம் முதலியவற்றினின்றும் அறியக் கிடக்கின்றது. ஒரு காலத்தில் கலுழனானவன் விண்ணுலகத்தை யடைந்து அங்கே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ்தத்தை எடுத்துச் சென்றானாக, அதனை மீட்கக் கருதிய இந்திரன், யான் சென்று வருங்காறும் இந் நகரைக் காப்போர் யார் என நினைத்தலும், முசுகுந்த மன்னன் எழுந்து `யான் பாதுகாத்தல் கடன்' என மொழிந்தான். புரந்தரன் அதுகேட்டு மகிழ்ந்து `இது நின்வழி நிற்பதாக' என ஓர் பூதத்தை நிறுத்திச் சென்றனன். அக்காலை அவுணர்கள் பெருந்திரளாகக் கூடிவந்து பொருது, போரில் ஆற்றாது நிலைகெட்டோடியவர்கள், பின்பு ஓருங்கு கூடிச் சூழ்ச்சி செய்து, இவனை வஞ்சத்தாலன்றி வெல்லுதல் அரிதெனத் துணிந்து, பேரிருட்கணை யொன்றை விடுத்தார்கள். அதனால் எங்கணும் இருள் சூழலும், முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி அப்பூதமானது ஓர் மந்திரத்தை யருள, அவன் அதுபெற்று வஞ்சனையைக் கடிந்து அவுணர் படையைக் கொன்று குவித்து நின்றனன். மீண்டுவந்த இந்திரன் நிகழ்ந்த வற்றையறிந்து, உற்றவிடத்து உதவி புரிந்த அப்பூதத்தினை அம்மன்னனுக்கே மெய்க்காவலாகுமாறு பணிக்க, அஃது ஆங்கு நின்றும் போந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பகுதிகளுக்கும் இடையேயுள்ள நாளங்காடியில் (காலைக் கடைத் தெரு) இருந்து பலியுண்டு வருவதாயிற்று, இதனை, " கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த தொடுகழன் மன்னற்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவே லண்ணற்குத் தேவ னேவ இருந்துபலி யுண்ணு மிடனுங் காண்கும்." என்னும் சிலப்பதிகாரக் கடலாடு காதைப் (7-13) பகுதியானும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை, மேற்கோள்களானும் அறிக. மேற்கோளில், " காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்த வேட்கை யமுதம் மீட்க வெழுவோன்" என்று இந்திரன் பொன்னகரை விடுத்துச் சென்றதன் காரணம் குறிப்பிடப்பட்டுளது. சேவல் என்பது பறவையின் ஆணுக் கெல்லாம் பொதுப்பெயராயினும் தன் தாயின் அடிமைத் தனத்தைப் போக்குதற்குக் கருடனானவன் தேவலோகம் புக்கு அமுதினை எடுத்துச்சென்றனன் என்று மகாபாரதம் முதலிய வற்றிற் கூறப்படுதலால் சேவல் என்பதனைக் கலுழனென்றே கொள்ளல்வேண்டும். தன் தாய் மாற்றாளுக்கு அடிமையாயினாள் என்பதை அறிந்தவளவில் ஆண் மகனாய கலுழன் சிறிதும் பொறுக்கலாற்றானாய், உடனே எவ்வாற்றானும் தாயின் அடிமையைப் போக்குவ தென்று உறுதி செய்து கொண்டு, அதன் பொருட்டு நிலவுலகில் எவராலும் அடைய வொண்ணாத தேவாமிர்தமாகிய மருந்தினைக் கொணர்ந்து தாயை மீட்டனன்; தாயின் அடிமையைப் போக்கியவனே எஞ்ஞான்றும் கடவுளுடனிருந்து பணி செய்யும் பேற்றையும், அதனால் பெரிய திருவடி என்னும் பெயரையும் எய்துதற்குரியனாயினான். இனி, புகார் நகரில் முற்கூறிய நாளங்காடிப் பூதமன்றி மற்றொரு பூதமும் உள்ளது. அது நான்கு தெருக்கள் கூடுமிடத்தில் உள்ளதாகலின் சதுக்கப்பூதம் எனப்படும். புகாரில் உள்ள ஐவகை மன்றங்களில் பூத சதுக்கமும் ஒன்று. அம் மன்றங்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்திரவிழ வூரெடுத்த காதையா னறியலாகும். இனி, முசுகுந்தன் துயரைப் போக்கிய தான நாளங்காடிப் பூதமானது காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது. இதனை, " ...............................வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் றுயரம் விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும்" என்னும் மணிமேகலை விழாவறை காதையான் (6, 19-22) அறிக. முசுகுந்தன் தேவருலகத்தைப் பாதுகாத்த செய்தி, " பொருது றைத்தலை புகுந்துமுசு குந்த னிமையோர் புரம டங்கலும் அரண்செய்து புரந்த புகழும்" என்று கலிங்கத்துப் பரணியிற் குறிக்கப்பெற்றுள்ளது. திருவாரூரில் தியாகேசப்பெருமான் முசுகுந்தனால் கொண்டு வரப்பட்ட செய்தியை, " பூவசம் செய்துவிண் ணாடு புணர்பகை போக்கியவோர் கோவசம் செய்வள ராரூர்த் தியாகர்" என்று திருவாரூர் ஒருதுறைக்கோவை கூறுகின்றது.  6. சிபி சந்திர குலத்திலே சிபி எனப் பெயரிய மன்னன் ஒருவன் உளனென்பது புராண இதிகாசங்களால் அறியப்படுகிறது. அவன் யயாதியின் மக்களுள் ஒருவனாகிய அணுவின் வழியில் வந்த உசீநரன் புதல்வனாவான். சிபி, சூரிய குலத்தவனென்றும், சோழர்களின் முன்னோனென்றும் சங்கத்துச் சான்றோராய நல்லிசைப் புலவர்களாலும், இடைக்காலத்தே தோன்றிய சயங் கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்களாலும் பலவிடங்களிலே கூறப்பட்டிருக்கின்றது. ஆகலின், சூரியகுலத்துச் சிபியும் வேறு சந்திரகுலத்துச் சிபியும் வேறென்றே கொள்ளுதல் வேண்டும். பல அரசர்கள் ஒரே பெயர் தரித்திருப்பதைப் புராணங்களிற் காணலாகும். சங்க இலக்கியங்களில் சோழர் குல முன்னோரின் மாட்சியை விளக்க நேர்ந்துழி யெல்லாம் சிபி எனப் பெயரிய மன்னன் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றான். இவ்வேந்தர் பெருமானைக் குறித்து மகா பாரதத்திற் கூறப் பட்டிருக்கும் வரலாற்றின் சுருக்கம் பின் வருவது: தரும புத்திரர் பேரறிவாளரான பாட்டனாரைப் (வீடுமர்) பார்த்து அடைக்கலம் புகுந்த உயிரைப் பாதுகாத்தலினால் உளதாம் பயனை வினவா நிற்புழி வீடுமர் கூறுகின்றார்: தரும நந்தன! சரணாகதித் தருமத்தின் மேன்மையைக் குறித்து முன்பு நிகழ்ந்ததொரு சரித்திரத்தை நினக்குக் கூறுவேன் கேட்பாயாக; காண்டற்கினிய வனப்புவாய்ந்த ஓர் புறாவானது ஓர் பருந்தினால் எற்றப்படுமெல்லையில் சிபி எனப்படும் மன்னர் பிரானைச் சரண் புகுந்தது. அம்மன்னன் தன் மடியிலே அச்சத்துடன் வந்து வீழ்ந்த அப்புறாவினைக்கண்டுதேற்றி, 'நீ சிறிதும் அஞ்சற்க; உலகினைப் பாதுகாத்தற்கென்றே அமைந்துள்ள என்பால் அணுகிய நின்னைப் பற்றுதற் பொருட்டு எவனும் மனத்தில் நினைத்தற்கு வல்லனாகான்; நின்னைக் காப்பது பொருட்டாக இத்தேச ஆட்சியையும் என் உயிரையும் விட்டுவிடவேண்டு மென்றாலும் அங்ஙனமே செய்வேன்; நீ கவலையுறல் வேண்டா' என்று கூறினான். அவ்வளவில் அப்புறாவினைத் துரந்துவந்த பருந்தானது அவ்வேந்தனைப் பார்த்து 'அரசே! இப்புறாவானது எனக்கு உணவாகத் தெய்வத்தால் ஏற்படுத்தப் பட்டது; இதனைப் பிடிப்பதற்காக யான் விடாது தொடர்ந்து பெரிதும் வருந்திப் பற்றுவான் ஆயினேன்; இப்பொழுது நீ இதனைக் காப்பதென்பது சிறிதும் தக்கதன்று; இதன் இறைச்சி குருதி கொழுப்பு முதலிய அனைத்தும் என் உணவிற்கு அமைந்தவை; நானோ இப்போது கொடிய பசியாலும், நீர் வேட்கையாலும் வருந்துகின்றேன்; இனிச் சிறிதும் ஆற்றியிருக்க வொண்ணாது; ஆகலின் இதனை விட்டுவிடுக; மேலும், நின் நாட்டில் வாழும் மக்களைப் புரப்பதே நின் கடமையாகும்; வானிலே பறக்கும் பறவைக்கு நீ தலைவன் அல்லை; வானத்திலும் நின் ஆற்றலைச் செலுத்துவதென்பது விரும்பத் தக்கதன்று; நினக்குரிய பொருளைக் கவர்வோர் திறத்திலே நின் ஆண்மையைக் காண்பிப்பதே முறையாகும்; அன்றியும், இப்புறாவின்றிறத்தில் அறத்தினைக் கருதுகின்ற நீ பசியால்வருந்துகின்ற என்னைமட்டும் புறக்கணித்திடுதல் பொருந்துமோ?' என்று இங்ஙனம் கூறி முறையிட்ட.து. அதனைக் கேட்டு வியப்புற்ற வேந்து முனியாகிய சிபி, பருந்தை நோக்கி, 'அடைக்கலம் புகுந்த இதனை யான் ஒரு பொழுதும் கைவிடுதல் செய்யேன்; நீ நின்பசி யடங்க வேண்டில் காட்டெருமை, பன்றி முதலியவற்றின் இறைச்சியில் எதையேனும் ஏற்றுக்கொள்வாயாக' என்றனன். என்னலும் பருந்து 'யான் வேறு எதனையும் தின்பதில்லை; எனக்கு நெடுங்காலமாகக் கடவுளரால் ஏற்படுத்தப் பெற்றிருக்கும் உணவு இதுதான்; பருந்துகள் புறாக்களை உண்ணுவதே எக்காலத்தும் உள்ள இயற்கை என்பதனையறியாயோ? ஒருகால் நினக்குப் புறாவின்பால் அத்துணை அன்பிருக்குமாயின் நின் தசையினை அப்புறாவின் அளவு நிறுத்து இப்பொழுதே கொடுப் பாயாக' என்று கூறிற்று. அது கேட்டலும் மன்னன் பெரு மகிழ்ச்சி யுற்று 'நீ இங்ஙனம் கூறியதே எனக்குப்புரிந்த பேருதவியாகும்; நீ விரும்பியவாறு இப்பொழுதே செய்வேன்' என்று சொல்லித் தன் தசைகளை அரிந்து துலையில் வைத்து நிறுக்கலானான். அப்பொழுது அந்தப்புர மகளிர், அமைச்சர், பணியாளர் முதலிய யாவரும் ஓடி வந்து கதறுவாராயினர். அரசனோ எதற்கும் சலியாதவனாய்த் தன்னுடைய கைகளிலும், துடைகளிலும், விலாப் புறங்களிலும் உள்ள தசைகளையெல்லாம் அரிந்தரிந்து தராசில் நிரப்பினன்; நிரப்பியும் அவை புறாவின் நிறைக்கு ஒத்திருக்க வில்லை. அதுகண்ட, அருளின் பிறந்தகமாயுள்ள அம்மன்னன் தானே துலையில் ஏறுவானாயினன். அப்பொழுது இந்திரன் முதலிய இமையவர் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்; தேவ துந்துபிகள் முழங்கின; கற்பகமலர் மழை பொழிந்தன. அரச விருடியாகிய சிபி இத்தகைய சிறந்த புண்ணியத்தால் அப்பொழுதே வானவூர்தியில் ஏறி, என்றும் அழிவில்லாததான துறக்கத்தை யடைந்தனன். தரும நந்தன! நீயும் இப்பெற்றியவான சிறந்த அறங்களைச் செய்யக்கடவை; அன்புள்ளோரையும் அடுத்தோரையும் காப்பாற்றி, எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் வைத்திருப்பவன் வீட்டுலக இன்பத்தைப் பெற்று விளங்குபவன்; பெரியோர்களால் ஆசரிக்கப்பட்டு வந்த நல்லொழுக்கத்தை யுடையவன் எதைத்தான் அடைய மாட்டான்? சிபி என்னும் வேந்தன் தன் செய்கையால் மூவுலகத்தாரும் கொண்டாடும் புகழையும், உயர் கதியையும் எய்தினன்; என்று கூறி, அவன் போல் சரண்புகுந்த உயிரைப் பாதுகாக்கும் எவனும் அத்தகைய பேற்றினை நிச்சயமாகப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினர்.1 இம் மன்னனைச் சோதித்தற்பொருட்டு இந்திரன் பருந் தாகவும், அக்கினி புறாவாகவும் இங்ஙனம் வந்தனர் என்றும் கதைகள் வழங்கா நிற்கும். இவ்வரசனது வரலாற்றிலிருந்து இவன் பேரருள் வாய்ந்தவனென்பதும், அடைக்கலங் காத்தலாகிய சீரிய அறத்தைக் கடைப்பிடித்தவனென்பதும் வெளியாகின்றன. இராம சரித்திரம் முழுதும் இவ்வறத்தினையே எவற்றினும் சிறப்பாக விளக்கலுறுகின்றது. விபீடணன் அடைக்கலத்தைக் கூறும் பகுதியில் இதனை நன்கு காணலாகும். அவ்விடத்தில் இராமபிரான் இச் சிபி வேந்தனை எடுத்துக் காட்டாகக் கொண்டு இவ்வறத்தினை வற்புறுத்துரைப்பதாகக் கம்பர் கூறும் பாட்டு இது; " பிறந்தநாட் டொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி மறந்தநா ளுண்டோ வென்னைச் சரணென வாழ்கின் றானைத் துறந்தநாட் கின்று வந்து துன்னினான் சூழ்ச்சியாலே இறந்தநா ளன்றோ வென்று மிருந்தநா ளாவதென்றான்" இனி, சோழர் சிபியின் வழியில் வந்தமையால் செம்பியர் எனப்பட்டனரென்று சிலர் கூறுவர்; சிபி என்பதிலிருந்து சைப்பியர் என்னும் சொல் உண்டாகி, அது செம்பியர் எனத் திரிந்தது என்பது அன்னோர் கருத்து. இங்ஙனம் தாம் வேண்டியவாறு திரிபிலக்கணம் கூறுவது நன்றன்று; சிபியே செம்பியன் என்று கூறப்படுகிறான்; " புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் சினங்கெழு தானைச் செம்பியன் மருக" (புறம்-37:5-6) என்பது காண்க. இனி, பண்டைத் தண்டமிழ்ப் புலவர் பலரும் இவ் வரலாற்றினை யெடுத்துப் பாராட்டுதலைப் பின்வரும் மேற் கோள்களான் அறிக: ஒரு புலவர், ஓர் சோழனை விளிக்குமிடத்து 'புவியில் வாழ்வோருடைய வருத்தம் தீரும்படி ஞாயிற்றின் வெம்மையைத் தாங்கிக்கொண்டு காற்றையுண்டு வானிலே திரியும் முனிவரும் வியக்குமாறு புறாவின் வருத்தத்திற்கு அஞ்சித் துலாம் புகுந்தோனது வழியில் வந்தோனே' என்கின்றனர். அது, " நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக" (புறம் 43-1:8) என்பது. " புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன்" (வாழ்த்துக்காதை 17-ஆம் பாட்டு) என்று சிலப்பதிகாரத்திலும், " உடல் கலக்கற வரிந்துதசை யிட்டு மொருவன் ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்" என்று கலிங்கத்துப் பரணியிலும், " உலகறியக், காக்குஞ் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து தூக்குந் துலைபுக்க தூயோனும்" என்று விக்கிரம சோழனுலாவிலும், இங்ஙனமே ஏனையுலாக் களிலும் இவன் தான் புரிந்த செயற்கருஞ் செயல் பற்றிப் பாராட்டப் படுகின்றான். "துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாடு" என்று சேக்கிழார் கூறுகின்றார். இராமபிரான் குல மேன்மையைக் கௌசிக முனிவர் வாக்கினில் வைத்துக் கம்பர் கூறும் அழகிய பாட்டு இங்கு நோக்கற்பாலது. அது, " இன்னுயிர்க்கு மின்னுயிரா யிருநிலங்காத் தாரென்று பொன்னுயிர்க்குங் கழலவரை யாம்போலும் புகழ்கிற்பாம் மின்னுயிர்க்கு நெடுவேலா யிவர்குலத்தோன்மேற்பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால்" என்பது.  7. காந்தன் இவன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த ஓர் சோழ மன்னன்; அகத்திய முனிவர்பால் மிக்க பத்திமையுடையோன். இவன் வேண்டுகோளுக்கிரங்கியே அகத்தியர் தமது கமண்டலத் திலிருந்த காவிரியை நதி வடிவாக நிலத்திற் பெருகச்செய்து சோழ நாட்டை வளமுறச் செய்தனர் என்ப. இதனை, " செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை" என்னும் மணிமேகலைப் பதிகத்தான் (9-12) அறிக. அகத்தியர் மேருவிலிருந்து தென்னாட்டிற்கு வரும்பொழுது, கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு வந்தா ரென்று தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அவர் இமயத்தினின்றும் தெற்கில் வருங்கால், திருக்கைலையில் இருந்த காவிரியைச் சிவபெருமான் பாற் பெற்றுக் கமண்டலத்திலே தரித்துக்கொண்டு வந்து கொங்கு நாட்டிற் றங்கியிருக்கும் பொழுது, சீகாழிப்பதியிலே தவமியற்றிய தேவேந்திரன் வேண்டுகோட்கிரங்கி விநாயகப் பெருமானானவர் காக்கை யுருவெடுத்து அகத்தியரது கமண்டலத்தைக் கவிழ்த்துக் காவிரியைப் பெருகச் செய்தனரென்று கந்த புராணம் கூறுகின்றது. இங்ஙனம் சில வேறுபாடுகள் காணப்படினும் காவிரி அகத்தியர் கமண்டலத்தினின்றும் போந்ததென்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்படுகின்றது. இனி, காந்தன் எனப் பெயரிய இம்மன்னன், அரசர் குலத்தை வேரறுத்தலையே தனக்கு விரதமாகக் கொண்ட, பரசுராமன் தன்மீது போர் குறித்து வருதலைத் துர்க்கா தேவியால் அறிந்து, அவ்வம்மையின் கட்டளைப்படி, தனக்குக் கணிகை வயிற்றுப் பிறந்தவனாகிய காந்தன் என்பானை யழைத்து 'நினக்கு அரசாளும் உரிமை யின்மையால் பரசுராமன் நின்பால் அணுகான்; நான் அகத்திய முனிவன் அருள்பெற்று மீண்டு வருமளவும், நீ இப்பட்டினத்தை நின் பெயராற் காகந்தி என்று பெயரிட்டுப் பாதுகாத்திருப்பாயாக' என்று சொல்லி, அங்கு நின்றும் வேற்றுருக் கொண்டு சென்று சிலநாள் வேறிடத்திருந்தனன்; என்று மணிமேகலை 22-ஆவது காதையால் அறியப்படுகின்றது.1 " காவிரிப் புனல் கொணர்ந்த வவனும்" எனக் கலிங்கத்துப் பரணியிலும், " மேக்குயரக், கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத் தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்" என விக்கிரமசோழனுலாவிலும் குறிக்கப் பெற்றவன் இம் மன்னனே யாதல் வேண்டும்.  8. தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் இம் மன்னனது பெயரின் பொருள் வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை யழித்த வீரவளையணிந்த தோளையுடைய சோழன் என்பதாகும். இவனால் அழிக்கப்பெற்ற அரண் மூன்றென்பது சிலப்பதிகாரத்தால் வெளியாகின்றது. சோழர் குலத்தாரது வீரத்திற்கு இவ்வேந்தன் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றான். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுகின்ற ஓர் புலவர், " சார்தல், ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல் நின்புகழு மன்றே" (புறநானூறு 39:4-7) என்று கூறுதல் காண்க. இவன் அகத்திய முனிவருடைய கட்டளையால் காவிரிப் பூம்பட்டினத்தில் முதன் முதல் இந்திரனுக்கு விழாச் செய்தனன் என்பது, " உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது" என்னும் மணிமேகலை விழாவறை காதையால் (1-9) விளங்குகிறது. இம்மன்னன் வானத்தில் அசைந்து கொண்டிருந்த மதிலை அழித்த செய்தியானது, " ஒன்னார், ஓங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்" எனச் சிறுபாணாற்றுப்படையிலும், (79-82) " வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற் றூங்கு மெயிலுந் தொலைத்தலால்" எனப் பழமொழியிலும், "தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" எனச் சிலப்பதிகாரத்தும், (வாழ்த்துக்காதை 16-ஆம் பாட்டு) "தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்" எனப் பரணியிலும், "கூடார்தம், தூங்கு மெயிலெறிந்த சோழனும்" என உலாவிலும் குறிக்கப்பட்டுளது. இங்ஙனம் சோழர் குலத்து முன்னோன் புரிந்த செய்தி பின்னோர் பலர்க்கும் ஏற்றிக் கூறப்படுவதி லிருந்து இச்செயல் எவ்வளவு அருமையுடைத்தாகக் கருதப்பட்டதென்பது விளங்கும்.  9. *கரிகாலன் இம் மன்னனுடைய வரலாற்றை அறிதற்குக் கருவியாக இருப்பன பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பழமொழி முதலியன வாகும். அவற்றானறியப்படும் இவன் வரலாற்றின் சுருக்கம்: இவ்வேந்தன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன்; இரும்பிடர்த்தலையாரை அம்மானாக வுடையவன்; இவன் மகள் ஆதிமந்தி என்பாள்; இவன் இளமைப் பருவத்துப் பிறராற் சுடப்பட்டு உயிருய்ந்தனன்; அப்பொழுது கால் கரிந்தமையால் கரிகாலன் எனப் பெயரெய்தினான்; கருவூரிலிருக்கையில் கழுமலம் என்னும் ஊரிலிருந்த யானையாற் கொண்டு வரப்பட்டு அரசாட்சிக்குரியனாய், பின் பகைவராற் சிறைப்படுத்தப் பெற்று மதிலைக் கடந்து பகைவர் சேனையை வென்று மீண்டு முறையாலே அரசுரிமை யெய்தி, உறையூரிற் கோயிலும் மதிலும் முதலியன அமைத்து அதனை அரசிருக்கை யாகக் கொண்டனன்; காவிரிப்பூம் பட்டினத்தையும் தலை நகராக்கி வீற்றிருந்தனன்; தன்னிடம் வழக்குக் கொணர்ந்த முதியோர்கள் தன்னை நோக்கி ‘இளைஞனாகிய இவன் உரை முடிவுகாணான்’ எனக் கருதியதனைக் குறிப்பாலுணர்ந்து, தான்நரைமுடித்து முதுமைக்கோலந் தாங்கிவந்து அம்முதியோர் உவக்கும்படி அவர்கள் சொற்கொண்டே முறை செய்தனன்; வெண்ணிப் பறந்தலையில் பதினொரு வேளிரொடு இரு பெரு வேந்தர் அழியப் பொருதனன்; வாகைப்பறந்தலையில் ஒன்பது மன்னரை ஒரு பகலில் வென்றனன்; ஒரு கால் இமயமலை வரையிற் சென்று வடநாட்டரசர் பலரை வென்று திறைபெற்று, மேலும் வடக்கே செல்லாவாறு அம்மலை குறுக்கிட்டுத் தடுத்தமையிற் அதனைக் செண்டாலடித்துத் திரித்து அதன் தலையிலே தனது புலிக்கொடியை நிறுத்தி மீண்டனன்; காடு கெடுத்து நாடாக்கி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப் படுத்தினன்; வாணிகத் துறையை மேம்படுத்தினன்; கைத் தொழில்களைப் பேணி வளர்த்தனன்; பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அப்பாட்டினைப் பெற்றனன்; என்பது. இனி இவனது பிறப்பினைக்குறித்து ஓர் கதை கூறுவர்; அது, இவன் தாய் கருவுயிர்த்தற்கு வருந்துகையில் ஓர் அறிவர் வந்து ‘இன்னம் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறப்பின் பெரு நலம் உண்டாகும்’ என்று கூறக்கேட்டு, அவளும் அந் நற்பொழுது வருங்காறும் கால்கள் மேலாக நின்று பின் குழவியை ஈன்றனள் என்பது. இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப் படையில் "தாய்வயிற் றிருந்து தாய மெய்திப்பிறந்து" என்பதற்குத் ‘தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்தென்றார்’ என உரையாளர் கூறுவது காண்க. கோச்செங்கட் சோழர் இங்ஙனம் பிறந்தனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியலாவது. செவ்வந்திப் புராணம் பராந்தகன் மகனாகிய (ஒரு) கரிகாலனுக்கு இச்செய்தியை உரிமையாக்குகின்றது. இவ்வாறாய கதைகளில் ஒன்றை யுட்கொண்டே நச்சினார்க்கினியரும் இங்ஙனம் பொருள் கூறினாராவர். ஆனால் தாய் வயிற்றிலிருந்து பிறக்கு முன்னரே தந்தை விண்ணுலகெய்தினன் ஆகலின் அப்பொழுதே அரசுரிமையெய்திப் பிறந்தனன் என்று கூறுவது ஏற்புடைத்தாகத் தோன்றுகிறது. " கழுமலத் தியாத்த களிறுங் கரு வூர் விழுமியோன் மேற்சென் றதனால்- விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுத லரிது" என்னும் பழமொழி வெண்பாவாலும், ‘கழுமலமென்னும் ஊரின் கண்ணே பிணித்து நின்ற களிறும், கரு வூரின் கண்ணே யிருந்த கரிகால் வளவன் கடிது இளையனாயினும் அவன் சிறப்புடையனாதலால் அவன் மேற் சென்று தன்மிசை யெடுத்துக்கொண்டு அரசிற்குரிமை செய்தது’ என்னும் அதன் உரைப் பகுதியாலும், இவன் இளைஞனாயிருந்த பொழுது தனது நாட்டிலன்றி வேறிடத்திற் கரந்து வதிந்து வந்தனனென்பதும், அப்பொழுது சோணாட்டிலே அரசுரிமைபற்றிக் குழப்பம் ஏற்பட அமைச்சர் முதலாயினார் அக்கால வழக்கப்படி யானைய விடுத்து அரசனைத் தேடுமாறு துணிந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த பட்டத்து யானையைக் கட்டவிழ்த்து விட்டன ரென்பதும், அக்களிறு கரு வூரை யடைந்து ஆங்கிருந்த கரிகாலனைத் தன் முதுகின்மேல் எடுத்து வைத்துக்கொண்டு வந்து அவனை அரசிற் குரியனாக்கிற்று என்பதும் பெறப்படுகின்றன. உறையூர் மண்மாரி பெய்து அழிந்தகாலை பராந்தகன் மகனாகிய கரிகாலனை அமைச்சர்கள் இங்ஙனமே யானையை விடுத்துக் கொணர்ந்தனரென்று செவ்வந்திப் புராணம் கூறுகின்றது. ஒருவனோடியை புடைய வரலாறு பெயரொற்றுமையால் உண்மை யுணரமாட்டாது மற்றொருவனுக் குரியதாக்கிக் கூறப்பட்டிருக்கலாம் என்று கருதுவது இழுக்காகாது. யானை சென்று அரசுக் குரியானை எடுத்து வருவதென்பது சிறிது தெய்வத்தன்மை கலந்த செய்திபோற் றோன்றுகிறது. இனி, இவன் அரசாளத் தொடங்கியபொழுது முன்பே இந்நாட்டினைத் தாம் கைப்பற்றி ஆளக் கருதியிருந்த பிறர் சிலர் இவனுடன் பகைமை கொண்டு கரவால் இவனைப் பற்றிச் சிறைப் படுத்தி விட்டனர் என்பதும், மிக்க இளம் பருவத்தினனாகிய இவன் அச்சிறையகத்தே சிலகாலம் இருந்து வளர்ந்து செவ்வி நோக்கிச் சிறைக்கோட்ட மதிலையிடித்து வெளிப்போந்து எதிர்ந்த பகைவரைக் கொன்று, சென்று அரசு கட்டிலேறினான் என்பதும் பட்டினப்பாலை முதலியவற்றாற் பெறப்படுகின்றது. " கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக்காங்கு நுண்ணிதி னுணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து உருகெழு தாயம் ஊழி னெய்தி" என்று பட்டினப்பாலை (221-227) கூறுகின்றது. புலிக்குட்டி கூட்டிலே அடையுண்டிருந்து வளர்ந்தாற்போலப் பகைவரது காவலிடத்தே யிருந்து வலியும் பெருமையும் முற்றி தனது கூரிய அறிவாலே இதுவே செயற்பாலது என ஆராய்ந்து, ஓர் மதவேழ மானது தன்னை அகப்படச் செய்த குழியினைக் கோட்டினாற் கரைகள் இடியும்படி தூர்த்துவிட்டுப் பெண்யானையின் பக்கல் சென்றாற்போல அப்பகைவருடைய மதிலைக் கடந்து, வாளாற் பகைவரைக் கொன்று, உட்குப் பொருந்திய தன் அரசுரிமையை முறையாலே பெற்றனன்; என்பது இதன் பொருள். இவ்வாண்டகை சிறையைக் கடந்து வெளியேறுவ னென்ப துணர்ந்த வன்கண்மையுடைய பகைவர் இவனைக் கோறல் கருதிச் சிறையின்கண் தீக்கொளுவினர் எனவும், இவன் அத்தீயினை அஞ்சாது மிதித்து வெளிப்போந்தனன் எனவும், அதனால் இவனதுகால் கரிந்தமையின் இவனது வீரத்தைப் பாராட்டி யாவரும் கரிகால் எனவே இவனுக்குப்பெயர் கூறிவந்தனரெனவும் கருதப்படுகிறது. பொருநராற்றுப் படையின் ஈற்றிலே காணப்படும், " முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால் இச்சக் கரமே யளந்ததால் - செய்ச்செய் அரிகால்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன் கரிகாலன் கானெருப் புற்று" என்னும் வெண்பாவிலே காலில் நெருப்புற்றமை கிளந்தோதப் பெற்றது. நச்சினார்க்கினியரும் ‘கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்’ என்னும் பொருநராற்றுப்படை யடிக்குப் பொருள் கூறுமிடத்தே “முச்சக்கரமும் என்னுங் கவியானே கரிகாலாதல் உணர்க” என்றனர். " சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையா ரெய்தா வினை.” என்னும் பழமொழி வெண்பாவாலும், அதன் உரையாலும் இவன் தீயாற் சுடப்பட்டு உய்ந்தமையும், இரும்பிடர்த் தலையார் என்பவர் இவனுக்கு அம்மானாதலும், இவன் செங்கோலோச்சுதற்கு அவர் துணையாயிருந்தமையும் பெறப்படுகின்றன. இவ்வரலாற் றுண்மை யுணராத சிலர் கரிகாலன் என்பதனை வடசொற்றொடராகக் கொண்டு ‘யானைப்படைக்குக் காலன் போன்றவன்’ என்று தாம் வேண்டியவாறு பொருளுரைத்தனர். கரிகால்வளவன் முதலிய தொடர்களில் கால் என்றே இருத்தலையும் அவர் நோக்கிற்றிலர். அகநானூற்றிலே பல பாட்டுக்களில் ‘கரிகால்’ என்றே இவன் கூறப்படுகின்றான். இவன் தன் நாட்டை வளம்படுத்திய பெருமை நோக்கி, கரிகால்வளவன், கரிகாற் பெருவளத்தான், திருமாவளவன் எனப் பின்பு வழங்கப் பெற்றானாதல் வேண்டும். பெருவீரனாகிய இவ்வேந்தன் பெயரை இவன் வழியிலே பின் வந்தார் சிலர் தரித்துக் கொள்ளுதல் இயல்பாகலின் அன்னாரை நோக்கி இப்பெயர்க்கு வேறு காரணங் கூறவேண்டுவதும் இன்று. பராந்தகன் மகனாகிய கரிகாலனை யானை எடுத்துச் செல்லும் பொழுது அவன் தாய் அவனது உள்ளங்காலிலே கரிக்கோடு கீறினள் எனச் செவ்வந்திப் புராணம் கூறுவது கரிகாலன் என்னும் பெயரை வைத்துக் கற்பித்ததென்றே தோன்றுகிறது. இனி, " உரைமுடிவு காணா னிளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழிச் செய்யுளாலும், ‘தம்முள் மறுதலையாயினார் இருவர் தமக்கு முறைமை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச்சொல்லின் முடிவுகண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப்பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து, முறைவேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாகமுளவாம்’ என்னும் அதன் பழைய உரையாலும் இம்மன்னன் இளமையில் முதுமைக்கோலம் பூண்டு முறை செய்தமை பெறப்படுகின்றது. இச்செய்தி மணிமேகலையுள்ளும், " இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய வுரவோன்" (மணிமேகலை 4:107,108) எனத் தண்டமிழாசானாகிய சாத்தனாரால் சோழர் குலத்தாரின் நீதியை அறிவுறுத்தற்கு எடுத்துக் காட்டப் பெற்றது. இஃதும், முன் குறித்துப் போந்த சிறையைக்கடந்த செய்தியும் இவ்வரசன் மிக இளையனாயிருந்தபொழுதே யாவரும் வியக்கும்படியான உயர் நீதியும் பெருவீரமும் உடையனாயிருந்தமையைத் தெரிவிக்கும் சிறந்த சான்றுகளாம். இவன் நாங்கூர் வேளிடை மகட் கொண்டான் என்பதும், இவன் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொண்டான் என்பதும், "மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப" (பொருள். அகம் - 32) என்னும் தொல்காப்பியச் சூத்திரவுரைக்கண் நச்சினார்க்கினியர் உரைத்தலாற்பெறப் படுகின்றன. அங்கு அது செவியாறற் செய்தியாகவே அவராற் குறிப்பிடப்படுகின்றது. இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொண்டான் என்பதிலிருந்து அவள் வயிற்றுப் பிறந்தோனே கரிகாலன் எனத் துணிதல் இயலாது; என்னை? அரசர்க்கு மனைவியர் பலருளராகலின் என்க. இனி, இவ்வேந்தனது வீரத்தைச் சிறப்பித்து, பொருநராற்றுப் படையானது, இவன், முருகன் போலும் சீற்றமும் உட்கும் பொருந்தியவனென்றும், கூற்றுவனைக் காட்டிலும் மிக்க வலியுடையவனென்றும், தன் வலியறியாத பகைவர் பின்பு வலியறிந்து ஏவல் கேட்பவும் ஏவல் செய்யாத பகைவர் தேயம் கவற்சி பெருகவும் இளஞாயிறு கடலின் மேலே கதிர்களைப் பரப்பி விசும்பிடைச் சென்றாற் போலப் பிறந்து தவழ்தல் கற்ற நாள் தொடங்கித் தோள் வலியாலே பகைவென்று நாடுகாத்தவன் என்றும், சிங்கக் குட்டியானது பாலுண்டல் கைவிடாத இளம்பருவத்தே முதல் வேட்டையிற் களிற்றினைக் கொன்றாற்போலச் சேரனும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி வெண்ணி என்னும் ஊரிலே தாக்கியவன் என்றும் கூறுகின்றது. இதிலிருந்து இவனது கன்னிப்போர் வெண்ணிப் போர் என்பது பெறப்படுகின்றது. இவன் மலையை அகழ்க்குவன், கடலைத் தூர்க்குவன், வானை வீழ்க்குவன், வளியை மாற்றுவன் என உலகம் மீக்கூறும்படித் தான் கருதிய போர்த்துறைகளை யெல்லாம் பொருது முடித்தானென்று பட்டினப்பாலை கூறுகின்றது. இவன் வெண்ணிப்பறந்தலையில் சேரமான் பெருஞ் சேரலாதனோடு பொருது அவனை வென்றான் என்பதும், சேரலாதன் அப்போரிலே தனக்குண்டாகிய புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தான் என்பதும், 55-ஆம் அகப்பாட்டு 65, 66-ஆம் புறப்பாட்டுக்கள் ஆகியவற்றாலும், அப்போரின்கண் சேரனோடு பாண்டியனொருவனும் தோல்வி யுற்றான் என்பது, " இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்" என்னும் பொருநராற்று அடிகளாலும், (146-148) அவ்வேந்தர்களோடு வேளிர் பதினொருவர் தோற்றனர் என்பது, 246-ஆம் அகப்பாட்டில், " காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைத் தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே" என்று கூறப்படுதலாலும் பெறப்படுகின்றன. வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் இவனுடன் போர் குறித்து வந்த ஒன்பது மன்னர்கள் இவனெதிரிற் செல்லவும் அஞ்சினராய் ஒரு பகலிலே தங்கள் குடைகளைப் போகட்டு ஓடினர் என்பது, 125-ஆம் அகப்பாட்டில், " பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற ஒன்பது குடையும் நண்பக லொழித்த பீடின் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே" என்று கூறப்படுதலாற் போதருகின்றது. தென்னவனும், ஒளியர், அருவாளர், வடவர், குடவர், பொதுவர், இருங்கோவேள் என்பாரும் இவனால் வெல்லப்பட்டு ஒடுங்கினர் என்று பட்டினப் பாலை கூறுகின்றது. இங்ஙனம் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டையடுத்த இடங்களிலுமிருந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் வென்று அடிப்படுத்திய கரிகாலன் போர் விருப்பங்கொண்டு வட நாட்டிற்குச் சென்றான். தமிழகத்திலே தன்னுடன் பொருவாரைப் பெறாத திருமாவளவன் போரிலே பெருவிருப் புடையனாகலின் வடதிசையிற் பகைவரைப்பெறலாமெனக் கருதி, வாளும் குடையும் வீரமுரசும் நாட்கொண்டு, இத்திசை யிலாயினும் நான் பகைவரைப் பெறவேண்டுமெனத் தெய்வத்தை வணங்கி அத்திசை நோக்கிச் சென்றான் என்றும், அங்ஙனம் செல்லுகையில் இமயமலை குறுக் கிட்டுத் தடுத்தமையின் ‘என் நசை யொழிய இது தடுத்தது’ என முனிந்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்து மீண்டான் என்றும், மீளுகையில், பகை நண்பு இலனாகிய வச்சிர நாட்டரசன் ஓர் முத்துப் பந்தரைத் திறையாகத் தந்தனன், பகைவனாகிய மகத நாட்டரசன் பொருது தோற்றுப் பட்டி மண்டபமொன்றைத் தந்தனன், நட்பாளனாகிய அவந்தி வேந்தன் ஓர் வாயிற்றோரணத்தை உவந்தளித்தனன் என்றும், அவ்வேந்தர் களின் முன்னோர் புரிந்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட அப்பந்தர் முதலியன வளவர் பெருமானாற் புகார் நகரின்கண் கொணர்ந்து வைக்கப்பட்டன என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இமயமலையிற் புலிபொறித்தலாகிய செய்தி “இலங்குவேற் கரிகாற் பெருவளத்தோன் வன்றிறற்புலி யிமயமால் வரைமேல் வைக்க வேகுவோன்” எனப் பெரிய புராணத்திலும் கூறப்பெற்றுளது. கரிகாலன் இமயமலையைச் செண்டால் அடித்துத்திரித்தனன் என்றும், அச் செண்டு கச்சிப்பதியிலே காமகோட்டம் காவல் பூண்டிருந்த சாத்தனார் என்னும் தெய்வத்தால் அளிக்கப்பட்டதென்றும், " செண்டு கொண்டுகரி காலனொரு காலி லிமயச் சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப் பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய் புலிப்பொறி குறித்தது மறித்த பொழுதே" (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் -1) " கச்சி வளக்கைச்சி காமகோட் டங்காவன் மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு" (இந்திரவிழவு : 95-98 அடியார்க்கு நல்லார் மேற்கோள்) என்னும் செய்யுட்களாற் பெறப்படுகின்றது. அடியார்க்கு நல்லாரும் இவ்விரு செய்யுட்களையும் மேற்கோளாகக்காட்டி, ‘சாத்தனதருளால் தான் பெற்ற செண்டினாலே அதனை அடித்துத் திரித்தனன்’ என உரை கூறினார். இமயமலையைச் செண்டால் அடித்ததென்னும் செய்தி இத்தகையதென நம்மால் அறியக்கூடவில்லை. இதுபோல்வதொரு செய்தி திருவிளையாடற் புராணத்திலும் கேட்கப்படுகின்றது. அஃது உக்கிர குமார பாண்டியர் மேருவைச் செண்டால் அடித்தார் என்பது. கரிகாலன் இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று அந்நாட்டு மன்னனை வென்று சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்து மீண்டனன் என்று மகா வமிசம் என்னும் இலங்கைச் சரித்திரத்தால் அறியப்படுகின்றது. இனி, இவ்வேந்தர் பெருமானது வள்ளன்மையை, இவன், பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பைம்பொன் பரிந்தளித்தமையே புலப்படுத்தா நிற்கும். இவன் இன்ன பரிசில் அளித்ததனை, " தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும்" என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. இங்ஙனம் நீதியினும் வீரத்தினும் வண்மையினும் மேன்மையுற்று விளங்கிய மன்னர் பெருமானாகிய கரிகாலன் தனது நாட்டை வளம் படுத்துவதிற் கண்ணுங் கருத்துமாய் இருந்தானாவன். நாட்டை வளம்படுத்து தலாவது வேளாண்மை வாணிகம் கைத்தொழில் என்பவற்றால் நாட்டின் செல்வத்தைப் பெருக்குதலாகும். இவற்றுள்ளும் வேளாண்மையே முதலாகக் கருதப்படற் பாலது. " தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு" என்று தெய்வப் புலவர் நாட்டிலக்கணம் கூறினமையும் நோக்குக. வேளாண்மை செழிப்புற வேண்டுமேல் காடு கரம்புகளைத் திருத்தி விளைநிலங்களாக்குதலும், ஆறுகுளம் ஏரிகளை அமைத்தலும், உழு தொழில் செய்வாரைப் போதிய வளவு குடியமைத்துப் பாதுகாத்தலும் செயற்பாலனவாம். கரிகாலனால் இவை செய்யப்பட்டனவென்பது, " காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி ... ... ... ... கோயிலொடு குடிநிறீஇ" என்னும் பட்டினப்பாலை யடிகளாற் பெறப்படுகின்றது. மற்று, இவன் தன்னாட்டில் வெள்ளப்பாழ் உண்டாகாமலும் நாட்டின் எம்மருங்கும் நீர்ப்பாய்ச்சல் உளதாகவும் காவிரியின் கரையை உயர்த்திக் கட்டினன் எனவும் தெரிகின்றது. காவிரிக்குக் கரைகட்டிய இச்செய்தி, " சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும்" என விக்கிரமசோழன் உலாவிற் கூறப்பெற்றுளது. தத்தம் ஆட்களுடன் போந்து காவிரிக்குக் கரை கட்டவேண்டித் தன் கீழடங்கிய அரசர் பலர்க்குக் கரிகாலன் கட்டளையிட்டனன் என்றும், அப்பொழுது தெலுங்கு நாட்டையாண்ட மூன்று கண்களையுடைய அரசனொருவன் அவன் பணியை மதித்துக் கரைகட்ட வாராது செருக்குற்றிருக்க, கரிகாலன் அவனது உருவைப் படத்தில் எழுதிவரச்செய்து படத்திலுள்ள அவனது நெற்றிக் கண்ணையழிக்க உடனே அவன் தனது நெற்றிவிழியை இழந்து தருக்கடங்கினான் என்றும், " மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதாற் கண்கொண்ட சென்னி கரிகாலன்" என்னும் குலோத்துங்கன் உலாவாலும், " தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற் றொடர வந்திலா முகரி யைப்படத் தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென் றிங்க ழிக்கவே யங்க ழிந்ததும்" என்னும் கலிங்கத்துப் பரணியாலும் விளங்குகின்றது. காவிரியின் கிளை நதிகளாகிய வெட்டாறு, அரிசிலாறு முதலியன இவனால் வெட்டப்பட்டன என்றும் சிலர் கருது கின்றனர். இங்ஙனமாகக் காவிரியின் நீர் எஞ்ஞான்றும் வற்றாது பாய்ந்து வளஞ் செய்தலின், சோணாட்டிலே நெல்லையறுத்துச் சூட்டை மலையாக அடுக்கி நாடோறும் கடாவிட்டு மேரு வென்னும் படி திரட்டின நெற்பொலி நெருங்கத் தெற்றின சேர் (நெற்கூடு) களிலே இடமின்றிக் கிடக்கும்படி வேலி நிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல் விளைவுடையதாயிற்று. " கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து சூடு கோடாகப் பிறக்கி நாடொறுங் குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை சுடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கு நாடுகிழ வோனே" (பொருநாறு) " ஏரியும் ஏற்றத்தி னாலும் பிறநாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின் அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு (மேற்படி இறுதிவெண்பா) என்பன காண்க. இனி, இவ்வேந்தனால் வாணிகம் எவ்வளவு மேன்மையடைந் திருந்த தென்பது காவிரிப்பூம் பட்டினத்தின் ஏற்றுமதி இறக்குமதி முதலியன குறித்துப் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் கூறுவனவற்றால் அறியலாகும். புகார் நகரின் மருவூர்ப் பாக்கத்து நடுவிடத்தும், கடலோரத்திலும் " நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும்" சீனம் முதலிய இடங்களினின்றும் வந்த கருப்பூரம் பனி நீர் குங்குமம் முதலிய அரிய பொருள்களும், மற்றும் பெருமையுடைய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி திரண்டு பொருந்தியிருக்கும் என்றும்; கடலோரத்தில் பண்டசாலை யினின்றும் கடலில் ஏற்றுதற்காகவும் கடலினின்றும் பண்ட சாலையில் இறக்குதற்காகவும் சரக்குகளின் பொதிகள் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டு வரம்பின்றி மலை போலத் திரண்டு கிடக்கும் என்றும்; அப்பொதிகளின் அளவு முதலியவற்றிற்கும் ஏற்றபடி ஆயக்கணக்கர்கள் இரவு பகல் ஓயாது சுங்கம் கொள்வார்கள் என்றும்; பட்டினப்பாலை கூறுகின்றது. கூலம்விற்கும் மறுகுகளில் இன்ன சரக்கு ஈண்டு உளதென்று அறிவிக்கும் அடையாளமாகக் கொடியெடுத் திருத்தலும், கப்பல்கள் திசைமயங்கிச் செல்லாது அழைக்கும் கலங்கரை விளக்கம் கடலோரத்தில் நிறுவப்பட்டிருத்தலும் போல்வன சிலப்பதிகாரத்திலும், புகார் நகரின் வணிகர்களும், வேறு பல தேயங்களினின்றும் அங்கு வந்த பல மொழி பேசும் வணிகர்களும் கலந்து இனிதுறைதலும், அங்கே வாணிகஞ் செய்வோர் பிறர் பொருளையும் தம் பொருளையும் ஒப்ப நாடித் தாம் கொள்ளுஞ் சரக்கைக் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளாமலும், கொடுக்குஞ் சரக்கை வாங்கும் பொருட்குக் குறையக் கொடாமலும் இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொடுத்து நல்ல வாணிகம் நடாத்துதலும் பட்டினப்பாலையிலும் கூறியிருத்தலினின்று அற்றை நாள் அங்கு நடை பெற்ற வாணிகத்தின் நாகரிக முறையும், அறந்திறம்பாமையும் புலனாகின்றன. இனி, காவிரிப்பூம் பட்டினத்தில், " பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக (மாக்களும்) கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் றுன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்" முதலாயினோர் மறுவின்றி விளங்கினர் எனச் சிலப்பதிகாரம் கூறுதலினின்று பல்வகையான கைத் தொழில்களின் பெருக்கம் புலனாகின்றது. இனி, திருமாவளவனாற் பல நகரங்கள் சிறந்த முறையில் நிருமிக்கப் பட்டனவாகும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. " பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயில்தொறும் புதைநிறீஇ" என அவன் உறையூரைப் புதுப்பித்த செய்தி பட்டினப்பாலையிற் சுருங்கக் கூறப்பெற்றுளது. காவிரிப்பூம் பட்டினமும் கரிகாலனால் நன்கு திருத்தியமைக்கப் பட்டிருக்கவே வேண்டும். காவிரியின் வடகரையில், கடலையடுத்திருந்த இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என இருகூறாயிருந்தது. இவற்றுள், கடலோரத்திலிருந்த மருவூர்ப் பாக்கத்திலே கலங்கரை விளக்கமும், பண்டசாலைகளும், சுங்கச்சாவடிகளும், கண்ணக் கவரும் அழகுடைய யவனர் இருக்கைகளும், மற்றும் வேறு பல தேயங்களினின்றும் வாணிகப் பொருட்டால் வந்தவர்களின் இருப்பிடங்களும், வண்ணம் சுண்ணம் சாந்தம் பூ புகை விரை என்பன விற்போர் இடங்களும், சந்தனம் அகில் பட்டு பவளம் முத்து பொன் என்பனவும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், பட்டுச்சாலியர், வெண்கலக்கன்னார், செம்புகொட்டிகள், தச்சர், கொல்லர், சித்திரகாரிகள், சிற்பாசாரிகள், உருக்குத்தட்டார், இரத்தினப்பணித்தட்டார், தையற்காரர், கிழியானும் கிடையானும் பூ வாடாமாலை பொய்க் கொண்டை முதலியன செய்வோர், குழலினும் யாழினும் இசைபாடும் பாணர் முதலாயினோர் இருப்பிடங்களும் இருந்தன; பட்டினப்பாக்கத்திலே அரசவீதியும், தேரோடும் வீதியும், ஆவணவீதியும், வணிகர், மறையோர், காணியாளர், மருத்துவர், சோதிடர் என்பாரின் தனித்தனி மறுகுகளும், சூதர், மாகதர், நாழிகைக் கணக்கர், கூத்தர், குயிலுவர், கணிகையர் முதலாயினாரின் வேற்றுமை தெரிந்த இருப்பிடங்களும் இருந்தன; மகத வினைஞரும் மராட்டக்கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத்தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி இயற்றிய மண்டபம் முதலியவற்றையுடைய அரசன் கோயில் நடுவண்இருக்க, அதனைச் சூழ்ந்து கடும்பரிகடவுநர், களிற்றின் பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண்மறவர் என்பார் பரவி யிருக்கும் இருப்பிடங்கள் இருந்தன; தேவ கோட்டங்களும். அம்பலங்களும், பொதியில்களும், கலைக்கழகங்களும், வெள்ளிடை மன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதசதுக்கம், பாவைமன்றம் என்னும் மன்றங்களும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம், உவவனம் என்னும் பூஞ்சோலைகளும் அங்கே விளங்கின; அரசன் அரண்மனையை யடுத்த எந்திரவாவியையுடைய இலவந்திகை என்னும் சோலையின் மதிற்புறத்தினின்றும் காவிரிக்குப் புதுப் புனலாடப் போம் பெருவழி இருமருங்கும் நிழன் மரச்சோலை சூழ்ந்திருந்தது; மரு வூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப் பாக்கத்திற்கும் இடையே நிரைபடச் செறிந்த சோலை மரங்களின் கால்களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய நாளங்காடி (காலைக் கடைத்தெரு) ஒன்று இருந்தது; என, சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப் பாலைகளால் அறியப் படுதலினின்று புகார்நகரின் அமைப்பும் சிறப்பும் ஒருவாறு புலனாகும். இனி, காஞ்சிமா நகரமும் கரிகால் வேந்தனால் நன்கு திருத்தியமைக்கப்பட்டதென்று, " என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்றி றற்புலி யிமையமால் வரைமேல் வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை சென்று வேடன்முன் கண்டுரைசெய்யத் திருந்து காதநான் குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில்புடை போக்கிக் குடியிருத்தின கொள்கையின் விளங்கும்" என்னும் பெரியபுராணச் செய்யுளால் அறியப்படுகின்றது. கச்சி நாற்காத அளவினதென்பதும், மலைபோல் உயர்ந்த மதில் சூழ்ந்த தென்பதும் இச்செய்யுளால் விளங்குகின்றன. அஃது அகழியாலும் மதிலாலும் சூழப்பட்டிருந்ததென மணிமேகலையும் கூறுகின்றது. மற்றும் காவிரிப் பூம்பட்டினத்தின் பல்வேறு வீதிகளும், பற்பல தொழில் செய்வார் இருப்பிடங்களும் சிலப்பதிகாரத்திற் கூறப் பட்டிருத்தல் போன்றே காஞ்சியின் வீதிகளும், குடியிருப்புக் களும் மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கின்றன. இவ்விரு காப்பிய ஆசிரியர்களும் இத் தலைநகரங்களை நேரிற் பார்த்திருத்தல் ஒருதலையாகலின் இவைகளைப்பற்றி அவர்கள் கூறுவதிற் சிறிதும் பிறழ்ச்சி யிருக்கக் காரணமில்லை. இரண்டிலும் காணப் படும் இவ்வொற்றுமையானது இவ்விரு நகரங்களையும் கரிகாலன் திருத்தியமைத்தனன் என்பதனையே வலியுறுத்துகின்றது. இன்னும், கரிகாலனே தொண்டை மண்டலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுத்தனன் என்றும், பலவிடங்களிலுள்ள உழுதொழில் புரியும் வேளாளரை அங்கே குடியேற்றினன் என்றும், கச்சியிற் காமகோட்டத் திருப்பணி செய்தனன் என்றும் கூறுகின்றனர். இக்கூற்றுகட்கும் சிற்சில ஆதரவுகள் உள்ளன. “நாடெங்குஞ் சோழன்முனந் தெரிந்தே யேற்று நற்குடி நாற்பத் தெண்ணாயிரம்” எனச் சேக்கிழார் புராணத்துக் கூறியிருப்பது கரிகாலன் வேளாளரைக் குடியேற்றியதையே குறிப்பதாகல் வேண்டும். இங்ஙனம் தொண்டை நாட்டைச் சீர்படுத்திய சோழன் கரிகாலன் அந்நாட்டினைத் தொண்டைமான் இளந்திரையன் தனக்குப் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வரும்படி செய்தனன் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது. இனி, சோணாட்டிலுள்ள அழுந்தூர், இடையாறு, கழார் என்னும் பதிகளை இவனோடு இயைபு படுத்தி அகநானூற்றிலே பரணர், நக்கீரர் முதலிய நல்லிசைப் புலவர்கள் பாராட்டியிருத்தலின் இவனால் அப்பதிகள் சிறப்பெய்தி யிருக்கவேண்டுமென்று கருதலாகும். இங்ஙனமாக உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சி என்னும் நகரங்களையும், பல ஊர்களையும் திருத்தமுறப் புதுக்கிய வளவர் பெருமான் பல கோயில்கள் எடுப்பித்தும், திருவிழாக்கள் செய்வித்தும், கல்விக்கழகங்கள் நிறுவியும், நீதிமன்றங்கள் ஏற்படுத்தியும், கிராம சபை (பஞ்சாயத்து)கள் தோற்றுவித்தும் பலவாற்றானும் நாட்டிற்கு நலஞ் செய்தனன் என்று கருத ஏதுக்கள் உண்டு. இவை பின் கூறப்படும் வேறு சில சோழர்க்கும் பொதுவாவன ஆகலின், இந்நூலின் இறுதியிற் கூறப்படும். இவனது ஆட்சிக் காலத்திலே ஒவ்வோராண்டிலும் இளவேனிற் பருவத்தில் இருபத்தெட்டு நாள் நடைபெற்ற பெரிய திருவிழா இந்திரவிழாவாகும் என்றும், புதுப்புனல் விழவு இவனால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பெற்றதென்றும் இங்கே கூறுதல் அமையும். இவன் புனல்விழாக் கொண்டாடிய சிறப்பு, " விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல" எனச் சிலப்பதிகாரத்துக் கடலாடு காதையில் உவமையாகக் கூறப்பட்டிருப்பதனால் வெளியாகும். இனி, புதுப்புனல் விழவோடும் இவனோடும் இயைபுடைய மற்றொரு வரலாறும் ஈண்டே அறியற்பாலது. அது, கரிகால் வளவனுக்கு ஆதிமந்தி எனப்பெயரிய புதல்வியொருத்தி இருந்தனள்; இவள் நல்லிசைப் புலமை வாய்ந்தவள்; கற்பிற் சிறந்தவள்; இவள் கணவன் சேரமன்னனாகிய ஆட்டனத்தி என்பான். இவ்விருவரும் சோணாட்டிலுள்ள கழார் முன்றுறையில், புதுப்புனல் விழாவிற்குச் சென்று கரிகாலன் காண நீரில் விளையாடு கையில், காவிரியானது அத்தியை வவ்விச் சென்றது. ஆதிமந்தி, தன் காதலனைக் காணப்பெறாது வருந்தி, காவிரி வழியே ஓடிக் கடல் மருங்கெய்திக் கூவி அரற்றி, பின்பு மருதி யென்பாளால் அவனைக் கண்டு தழுவிக்கொண்டு போந்தனள்; என்பது. இச்செய்தி, சோணாட்டிற் பிறந்த பத்தினிப் பெண்டிர் சிலருடைய பெருமை களை எடுத்துக்காட்டி, அங்கே பிறந்த யானும் ஓர் பத்தினியாயின் இவ்வரசரோடு இந்நகரையும் ஒழிப்பேன் என்று கண்ணகி வஞ்சினங் கூறுமிடத்தில் இளங்கோவடிகளால் உரைக்கப் பட்டுளது. " மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை) என்பது காண்க. ஆதிமந்தியின் கணவன் பெயர் ஆட்டனத்தி என்றும் அத்தி என்றும் அகப்பாட்டுகளிற் கூறப் பெற்றுளது.1 இனி, இவ்வேந்தர் பெருமான் வேதங்கூறும் வேள்வி பலவுஞ் செய்து முடித்தவனென்பது 244-ஆம் புறப்பாட்டால் விளங்குகிறது. இவன் தமிழ்ப்புலமை சான்று தமிழைப் பொன்னேபோற் போற்றி வளர்த்தவனென்பது நல்லிசைப் புலவருள் கருங்குழலாதனார், வெண்ணிக்குயத்தியார் என்போர் புறத்திலும், பரணர், நக்கீரர் மாமூலர் என்போர் அகத்திலும் இவ்வரசனைப் புகழ்ந்து பாடிய துடன், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படையும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையும் இவன் மீது பாடியிருத்தலானும், உருத்திரங்கண்ணனார்க்கு இவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிந்தளித்தமையானும் பெறப்படும். இவனைப் பாடியவருள் வெண்ணிக்குயத்தியார் பெண்பால ராயிருத்தலும், இவன் மகள் ஆதிமந்தி நல்லிசைப் புலமை வாய்ந் திருத்தலும் மகளிர் கல்வியிற் சிறந்து விளங்குவதில் இம் மன்னனுக்கிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தும். கற்பிற் சிறந்த மனைவியர் பலர் இவனுக்கிருந்திருக்க வேண்டுமென்பது, " தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்" என்று புறப்பாட்டிற் கூறியிருத்தலான் அறியலாகும். இவனுக்கு ஆதிமந்தி என்னும் புதல்வியை யன்றி, கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் புதல்வர் மூவர் இருந்தனர். இவனுக்கு அம்மானாகிய இரும்பிடர்த் தலையாரும் நல்லிசைப் புலவர்; புதல்வரும் புதல்வியும் புலமை சான்றவர்; எனவே, இவன் குடும்பமும் சுற்றமுமெல்லாம் தெண்டிரை யமிழ்து மொவ்வாத் தீஞ்சுவை கெழீஇய, செவ்வித் தண்டமிழ் இன்பமாருந்தகையன என்பது போதரும். வீரம், வண்மை, நீதி, சூழ்ச்சித் திறன், ஆட்சிவன்மை முதலியவற்றுக் கெல்லாம் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைய கரிகாற் பெருவளத்தான் என்னும் இவ்வேந்தர் பெருமான் புவியிலே தன் பருவுடலோடு விளங்கிய காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது பலவாற்றானும் வலியுறு கின்றது.  10. கிள்ளிவளவன் இவன் கரிகாலனை யடுத்துக் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தானாகத் தெரிதலானும், இவன் தம்பியாகிய நலங்கிள்ளிக்கு வழங்கும் சேட் சென்னி என்னும் பெயர் பாட்டன் பெயராக இருத்தல் கூடுமாகலானும் இவ்வரசன் கரிகால் வளவன் மகனென்று கருதப்படுகின்றான். நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் இருவரும் இவன் தம்பியர் என்பது பின் காட்டப்பெறும். புகாரில் இருந்தவனாக மணிமேகலையிற் கூறப்படுகின்ற சோழ மன்னன் இவனே. அக்காப்பியத்திலிருந்து இவனுக்கு நெடுமுடிக் கிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்னும் பெயர்களும் வழங்கினவென்பதும், இவனது தேவியாகிய சீர்த்தி என்பாள் மாவலிவமிசத்திற் பிறந்தவள் என்பதும், இவள் வயிற்றுப் பிறந்தோன் உதயகுமரன் என்பதும் அறியப்படுகின்றன. இவன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகளாகிய பீலிவளையை மணந்து ஓர் மகனைப்பெற்ற செய்தியும் அதிலிருந்து தெரிகிறது. பல புலவர்கள் இவனைப்பாடிய புறப் பாட்டுக்களிலிருந்து இவன் மிக்க வீரமும், வண்மையும் உடையவனென்றும், புலவர்கள் தன்னை, நெருங்கிக்கூறும் அறிவுறூஉக்களைச் செவிமடுத்து அந்நெறி யொழுகுதலால் தன் குறைகளைப் போக்கிவந்தனன் என்றும் தெரிகிறது. ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் இவன்பாற் பரிசில் பெற்றுச் செல்லும்பொழுது, 'எம்மை நினைத்து வருவீரோ' என இவன் வினவா நிற்புழி, அவர், 'பாணர்க்குக் கரவில்லாத உள்ளத் துடன் இனிய மொழி கூறி அமலைக் கொழுஞ்சோறு அளித்து அகலாச் செல்வம் முழுதுஞ் செய்தருளிய எம் வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று காலையந்தியும் மாலையந்தியும் நினது பெருமை பொருந்திய தாளைப் பாடேனாயின் ஆதித்தன் தோன்றுதலறியான்; யானோ எளியேன்; இவ்வுலகின்கண் சான்றோர் செய்த நல்வினையுண்டாயின், இமயமலையிலே திரண்டு கொண்டல்கள் சொரிந்த மழைத்துளியினும் பலகாலம் வாழ்வாயாக' என்று கூறினர். இவ்வரசன் சேரனது கருவூரை ஒருகால் முற்றுகையிட்டிருந்தான். சேரனோ இவனோடு எதிர்த்து மலையும் ஆற்றலின்றி மதிலையடைத்துக் கொண்டு உள்ளிருந்தனன். அடைமதிற்பட்டிருக்கும் நகரத்து மக்கள் எய்தும் இன்னல் அளவிடற்கரியதன்றே? அதனை யறிந்தார் அருண்மிக்க புலவராகிய இவ்வாலத்தூர் கிழார்; உடனே வளவனிடத்துச் சென்று, அவனை நோக்கி, `அரசே, காக்கள்தோறும் காவன் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரிலே தனது கோயிற்கண் சென்று ஒலிக்கவும் அவ்விடத்து மானமின்றி இனிதாக விருந்த வேந்தனுடன் இவ்விடத்து நின் முரசு ஒலிக்க நீ பொருதாயென்பது கேட்டார் நாணுந் தன்மையுடையது; நீ அவனைக் கொல்வாயாயினும் கொல்லாது ஒழிவாயாயினும் அவற்றால் நினக்குண்டாகும் உயர்ச்சியை யாம் `கூறவேண்டுவதின்று; நீயே எண்ணியறிவாய்' என்னுங் கருத்துள்ள ஓர் பாட்டினைக் கூறினார். அதனைக் கேட்டு வளவனும் போரொழிந்து மீண்டனன். வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் இவ்வரசனைப் பாடிய செவியறிவுறூஉ உயர்ந்த கருத்துக்கள் பலவுடையது. `பெரும, தமிழ் நாட்டிற்குரிய முரசுமுழங்கு தானையையுடைய மூவேந்தருள்ளும் அரசென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நின்னுடைய அரசே; ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும், வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும் அழகிய காவிரி இடையறாது நீர் பெருகிவந்து பல கால்களால் ஊட்டுதலின் தொகுதி கொண்ட வேற்படையின் தோற்றம் போலக் கரும்பின் வெளிய பூக்கள் அசையும் நாடென்று சிறப்பித்துச் சொல்லப் படுவது நின்னுடைய நாடே; அத்தகைய நாடு கெழு செல்வத்தை யுடைய பீடுகெழு வேந்தே, நினக்குரியன சில சொல்வேன்; என் வார்த்தைகளைக் கேட்பாயாக; அறக்கடவுளே ஆட்சி புரிவது போல் செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையும், முறை கேட்க வேண்டுங்காலத்து எளிய செவ்வியையும் உடையோர் மழை வேண்டுங் காலத்து அதனைப் பெற்றோராவர்; வானை முட்டிய நினது பரந்த வெண்கொற்றக் குடையானது வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ எனின், அன்று; அது, வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; போர்க்களத்திலே வருகின்ற மாற்றார் படையை எதிர்நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடைகண்டு ஆரவாரித்து நின் படைவீரர் தரும் வெற்றியும் கலப்பை நிலத்தின்கண் உழுத சாலிடத்து விளைந்த நெல்லினது பயனே; மாரி பொய்ப்பினும் வாரிகுன்றினும் இயற்கையல்லன செயற்கையிற் றோன்றினும் இவ்வுலகம் காவலரைப் பழித்துரைக்கும்; அதனை அறிந்தாயாயின், நீயும் நொதுமலாளரது உறுதியில்லாத மொழியைக் கொள்ளாது உழுவார் குடியைப் பாதுகாத்து அதனால் ஏனைக் குடிகளையும் புரப்பாயாயின் நின் பகைவர் நின் அடியைப் போற்றுவாராவர்' என்னும் பொருள்கள் அதிற் கூறப்பட்டுள்ளன. இப்பாட்டினைக் கேட்ட கிள்ளிவளவன் அப்புலவரால் இறுக்கப்படாதிருந்த அவருடைய நிலவரி முழுதையும் விடுவித்துவிட்டான். ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், " நீ, உடன்று நோக்கும்வா யெரிதவழ நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை" என்று பாடுவாராயினர். மாறோகத்து நப்பசலையார் என்னும் புலவர், `நீ, தன்னை யடைந்த புறவின் பொருட்டுத் துலைபுக்க செம்பியன் மரபினுள்ளா யாதலால் இரந்தோர்க்கீதல் நினக்கு இயல்பாவதன்றிப் புகழ் அன்று; வானத்திலே தூங்கெயிலை யழித்த நின் முன்னோரை நினைப்பின் ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதலும் நினக்குப் புகழ் அன்று; சோழரது உறந்தை அவையத்து அறம் நின்று நிலை பெற்றதாதலால் முறைமை செய்தலும் நினக்குப் புகழ் அன்று' என்று கூறினர். மணிமேகலையிலுள்ள ஓர் வரலாறு முறை செய்தலில் இவனுக்கிருந்த உயர்ந்த கருத்தைப் புலப்படுத்துகிறது. இவன் மைந்தனாகிய உதய குமரன் பௌத்த சமயத்தைச் சார்ந்து துறவு பூண்டிருந்த மணிமேகலை என்னும் தவமகளைக் காதலித்து அவளைக் கைப்பற்றுவான் இரவிற்சென்ற பொழுது ஓர் விஞ்சை யனால் வெட்டுண்டிறந்தனன். இச்செய்தி அந்நகரத்திருந்த முனிவர்களால் இவனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டலும், இவ்வளவன், தன் அமைச்சனும் படைத் தலைவனுமாகிய சோழிய வேனாதியை நோக்கி, 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாகும்; தன் மகனைப் புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த அரசர் பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தானென்பதை மற்றை அரசர்கள் கேட்குமுன்னம் அவனைப் புறங்காடடைவிக்க' என்று கூறினன். தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் துயருறாது இவன் கூறிய இம்மொழிகள் முறையினை முட்டாமற் செலுத்தும் பண்பு இம் மரபினர்க்கு இயல்பாதலைக் காட்டுகின்றன. எனினும், குற்றமற்ற வளாகிய மணிமேகலையை இவன் சிறைப்படுத்தியதும், இவனது தேவி வஞ்சத்தால் அவளைத் துன்புறுத்தத் தொடங்கியதும் இவர்கட்கு இழுக்கே. கதாநாயகியான மணிமேகலை இராசமா தேவிக்குப் பௌத்த சமய உண்மைகளை அறிவுறுத்தனளாகக் கூறக்கருதிய சாத்தனார் அதற்கொரு வாயிலாகக் கதையை இங்ஙனம் அமைத்துக் கொண்டனர் எனலுமாம். புறப்பாட்டிற் காணலாவதொரு செய்தி இம் மன்னற்குப் பெரிய மறுவினையுண்டாக்குவ தென்பதில் ஐயமில்லை. அச்செய்தியாவது, வரையாத வள்ளண்மையால் உலகமுள்ளளவும் அழியாத புகழினைப் படைத்த கடையெழு வள்ளல்களில் ஒருவனும், திருக்கோவலூரை அரசிருக்கையாக வுடையவனுமாகிய மலையமான் திருமுடிக்காரியின் மிக்க இளமையுடைய மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானைக்காலில் இடறுவிக்கத் துணிந்தமையே யாகும். இவன் அங்ஙனம் செற்றங் கொண்டமைக்குக் காரணம் இதுவாகுமென்று கருதப்படுகிறது; கிள்ளிவளவன் புகாரிலிருந்து அரசாண்டபொழுது நெடுங்கிள்ளி என்னும் சோழமன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனன். கிள்ளி வளவனுக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகைமை மூண்டது. கிள்ளி வளவன் தம்பியும் இளவரசனுமாகிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி யுடன் பல இடங்களிற் பொருது, முடிவில் கரியாறு என்னு மிடத்தில் நடந்த போரிலே அவனைக்கொன்றனன். அப்பொழுது நெடுங்கிள்ளிக்குத் துணையாக அங்கு வந்தெதிர்த்த சேர பாண்டிய மன்னர்களும் நலங்கிள்ளியால் முறியடிக்கப்பட்டனர். காரியாற்றில் இவைநிகழ்ந்தமை, நெடுங்கிள்ளியானவன் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி என வழங்கப் படுதலானும், " வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி ... ... ... தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி" எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படுதலானும் புலனாகின்றது. இங்ஙனம் நெடுங்கிள்ளியை வென்றபின்பு உறையூரும் கிள்ளிவளவற்கும் நலங்கிள்ளிக்கும் உரியதாயிற்று. அதனாற்றான், " பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே" எனக் கிள்ளிவளவனும், "உறந்தை யோனே குரிசில்" என நலங்கிள்ளியும் புறப்பாட்டுக்களிற் கூறப்படுகின்றனர்.இது நிற்க. - திருமுடிக்காரியானவன் பெருவள்ளலாக விளங்கியதன்றி, ஒப்பற்ற வீரனாகவும் திகழ்ந்தான். அதனால், மூவேந்தர்கள் தமக்குள்ளே போர் நேர்ந்த காலையில் காரிக்குப் பெரும் பொருள் கொடுத்து அவனைத் தமக்குப் படைத் துணையாகும்படி தனித்தனி வேண்டுவர். காரியும் தளர்ந்தவர் பக்கல்துணையாகச் சென்று பொருது, தான்பெற்ற பொருளனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிடுவான். இதனை, " வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தருஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே" (புறம், 122) என்பதனால் அறியலாகும். இச்செயல் காரிக்கே யன்றி அவன் குடியிற் பிறந்தார் பிறருக்கும் இயல்பாயிருந்தது. காரியானவன் நெடுங்கிள்ளிக்குத் துணைபுரிந்தமையாலோ, அவன் மக்களு ளொருவன் நெடுங்கிள்ளியின் மகனுக்கு அரசுநிலையிட முனைந் தமையாலோ கிள்ளிவளவனுக்கு மலையமான் மக்களிடத்துத் தகுதியில்லாத சீற்றமுண்டாயது. இக்கொடுஞ் செயல் நிகழ்வுழி அங்கு வந்திருந்த கோவூர்கிழார் என்னும் புலவர் கண்டு பதை பதைத்து இரங்கி, அரசனை நோக்கி 'நீ தான், ஓர் புறாவின் அல்லலன்றியும் பிறவுயிர்களுக்குற்ற துன்பத்தையும் தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்ட சோழன் மரபிலுள்ளாய்; இவர் தாம், அறிவால் உழுதுண்ணும் கற்றோரது வறுமைத் துன்பத்திற்கு அஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் தண்ணிய அருளையுடையாரது மரபிலுள்ளார்; இவர் இப்பொழுது களிற்றைக் கண்ட வியப்பால், முன்பு வெருவியழுத அழுகையை மறந்திருக் கின்ற சிறு பிள்ளைகள்; இம்மன்றினை வெருண்டு நோக்கி முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தையும் உடையர்; இதனைக் கேட்டனையாயின் நீ விரும்பியதைச் செய்க' என்னும் பொருளமைந்த ஓர் பாட்டினைக் கூறினர். இதனைக்கேட்ட கிள்ளிவளவன் தன் குற்றத்திற்கு நாணி, அப்பிள்ளைகளைக் கொல்லாது விடுத்தனன். வளவன் முதலிற் செய்யத் துணிந்த காரியம்பற்றி அவனை எத்துணையும் எள்ளுதல் பொருந்துமேனும், பின்பு சான்றோர் சொற்கேட்டு அதனைச் செய்யாதொழிந்தமை கருதி அவனைப் பாராட்டவே வேண்டும். இனி, கிள்ளிவளவன் தான் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனை வென்றதும், தன் தம்பியால் நெடுங்கிள்ளியையும், சேர பாண்டியர்களையும் வென்றதுமன்றி, தான் மதுரையிற் சென்று பழையன் மாறன் என்பானை வென்றானென்று ஓர் அகப்பாட்டினால் தெரிகிறது. இவன் கூடல் மறுகிலே பழையன் மாறனை வென்ற பொழுது கோதைமார்பன் என்பான் பேருவகையுற்றனன் என்றும் அப்பாட்டுக் கூறுகிறது. இனி, இவனுக்குச் சிறுகுடிகிழான் பண்ணன் என்பான் சிறந்த நட்பாளனாயிருந்தான். பண்ணன் மீது இவ்வரசர் பெருந்தகை பாடிய செய்யுளொன்று புறநானூற்றில் உள்ளது. அச் செய்யுளி லிருந்து பண்ணனுடைய ஈகைத் தன்மையும், அவன்பால் வளவன் பூண்ட நட்பின் பான்மையும், வளவனது கவிபாடுந்திறலும் நன்கு விளங்கும். அச்செய்யுள், " யான்வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிர்ந் தன்ன ஊணொலி யரவந் தானுங் கேட்கும் பொய்யா வெழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறு நுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீற்றுவீற் றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும் மற்று மற்றும் வினவுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே" என்பது பண்ணனிடத்திற் பரிசில் பெற்று மீண்டு வருகின்ற பாணனொருவன் அவன்பாற் பரிசில்பெறுதற்குச் சுற்றத்துடன் வந்துகொண்டிருக்கிற பாணனை வழியிற் கண்டு, அவன் வினாவிய தனைக் கேட்டு, தன் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாகப் பண்ணனது ஒப்பற்ற ஈகை புலப்படப் பாடப் பெற்றது இப்பாட்டு. இதன் பொருள்; 'பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானுங் கேட்கும்; மழை பெய்யுங் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை யடையும் சிற்றெறும்பின் ஒழுக்குப்போலச் சோற்றுத் திரளையைக் கையிலுடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்தோடுங் கூடிய பிள்ளைகளையும் காண்கின்றேம்; அங்ஙனம் கேட்டும் கண்டும், எம் பசி வருத்தத்தால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணிமையிலுள்ளதோ சேய்மையினுள்ளதோ கூறுங்கள் எனப் பின்னும் பின்னும் விரைந்து வினவுகின்றேம்; என்று இப்பாணன் கூறுகின்றான்; பாணரே இப்பரிசிலனது சுற்றத்தின் வறுமையைக் காண்பீராக; இங்ஙனம் என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க விருக்கின்ற பண்ணன் யான் உயிர் வாழு நாளையும் பெற்று வாழ்வானாக' என்பது. இதிலுள்ள உவமை நயம் முதலிய அழகுகள் கற்றோர் நெஞ்சைப் பிணிக்குந் தன்மையன. இனி, காவிரிப்பூம் பட்டினம் இவன் காலத்திலேயே கடலாற் கொள்ளப்பட்டதென்றும், இவன் வேறிடத் தையடைந்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. இவன் அடைந்த வேறிடம் உறையூரோ காஞ்சிநகரோ தெரியவில்லை. புகார் கடல்கோட்பட்டபின் மாதவி மகளாகிய மணிமேகலை காஞ்சிப்பதியை அடைந்த பொழுது அந்நகரத்தில் தொடுகழற்கிள்ளி யென்னும் சோழ னொருவனும் அவனுக்குத் தம்பியாகத் துணையிளங்கிள்ளி யென்பானும் இருந்தாராக அக்காப்பியம் கூறுகிறது. அன்னார் கிள்ளிவளவனும் அவன் றம்பியுமாயின் அவர்கள் காஞ்சியை அடைந்தாராவர். இவ்வேந்தன் முடிவில், சேர நாட்டிலுள்ளதாகிய குளமுற்றம் என்னும் இடத்தில் நடந்த போரில் உயிர் துறந்தானாவன். அதனால் இவன் பெயர், சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பின்பு வழங்குவதாயிற்று. இவனைப் பாடிய புலவர்கள், புறத்தில், ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோகத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்போரும், அகத்தில், நக்கீரரும் ஆவர். இவருள் நப்பசலையார் பெண்பால ராயிருத்தல் வேண்டும். இவர்களில், இவ்வரசன் துஞ்சியபின்னரும் இருந்து பிரிவாற்றாது வருந்திப் பாடியவர்கள் மாறோகத்து நப்பசலையாரும், ஆடுதுறை மாசாத்தனாரும், ஐயூர் முடவனாரும் ஆவர். இன்னோர் இரங்கிக் கூறியவை நெஞ்சை உருக்குந் தன்மையன. நப்பசலையார், 'பொன்னானியன்ற மாலையினையும், நெருங்கிய போரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும், திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று, தன் மனத்துளே கறுவு கொண்டதாயினும், எய்தி நின்று கையோடு மெய் தீண்டி வருத்திற்றாயினும் அதற்குப் பிழைத்தல் இல்லை; அது, பாடுவார் போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்' என்றும்; மாசாத்தனார், 'ஈரமில்லாத கூற்றமே, நீ மிகவும் அறிவிலியா கின்றாய்; வாட் போரில் வல்ல வீரரும் யானையும் குதிரையும் போர்க்களத்தில் மாய எதிர்நின்று கொன்று நாடோறும் நினது பசியைத் தீர்த்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய வளவனை நீ கொண்டாயாயின் இனி நின் பசியைப் போக்குவோர் யார் சொல்வாயாக; விரகு இல்லாமையால் மேல் விளைந்து பயன்படும் விதையைக் குத்தியுண்டாய்; நினக்கு யான் கூறிய இவ்வார்த்தை பிறழாத மெய்யாதலை இன்னமும் காண்பை' என்றும்; கையறு நிலையாகக் கூறினர். முடவனாரோ, சுற்றத்தார் இரங்கிக் கூறும் ஆனந்தப் பையுள் என்னும் துறையில் வைத்து, `கலம் வனையும் வேட்கோவே, கலம் வனையும் வேட்கோவே, இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போலத் திரண்ட புகைவானின்கட் சென்று பொருந்தும் சூளையை யுடைய மூதூரிற் கலம் வனையும் வேட்கோவே, நிலமுழுதும் பரப்பிய பெரிய தானையினையும், புலவர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும் உடைய செம்பியர் மருகனாகிய வளவன் தேவருலகத்தை அடைந்தானாகலான், அத்தன்மையுடை யோனைக் கவிக்கும் இடமகன்ற தாழியை1 நீ வனைய விரும்பினாயாயின் பெரிய நிலவட்டம் திகிரியாக மேருமலைமண்ணாக நினக்கு வனைய இயலுமோ; இயலாமையின் எத்தன்மையை யாகுவை; நீ இரங்கத்தக்காய்' என்று கூறினர். இங்ஙனம், கிள்ளிவளவன் துஞ்சியபின் பாடிய இச்செய்யுட்களிலிருந்து, நல்லிசைப் புலவர் கட்கு அவன் மேல் எத்துணை அன்பிருந்ததென்பது நன்கு புலனாகின்றது.  11. நலங்கிள்ளி இவன் கிள்ளிவளவனுக்குத் தம்பி யென்பது `சிலைக்கயல் நெடுங்கொடி ஆர்புனைதெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட மாவண் கிள்ளி' எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படுவதால் அறியலாவது. இவன் தம்பி மாவளத்தான் என்பது 43 ஆம் புறப்பாட்டின் கீழுள்ள பாடினோர் பாடப்பட்டோரைக் குறிக்கும் தொடரில், `சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத் தானும்' என்றிருப்பதாற் பெறப்படுகின்றது. இவன் (நலங்கிள்ளி) சேட்சென்னி, புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்களானும் கூறப்படுவன். இவன் ஆவூரிலும் உறையூரிலும் முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வென்றதனோடு, அவனைக்காரியாறு என்னு மிடத்திற் பொருது கொன்றான். அவ்விடத்திற்றானே சேர பாண்டியர்களையும் வென்று அவர்கள் கொடியைக் கைப் பற்றினான். இவன் பாண்டி நாட்டிலுள்ள ஏழு அரண்களை வென்று கைப்பற்றி, அவற்றின்கண் தனது புலிக்கொடியை நாட்டினான் என்று 33ஆம் புறப்பாட்டினால் தெரிகிறது. இவன் அளவிடற்கரிய தனது தானையுடன் வலமாகப் புறப்பட்டு முன் பாண்டியனையும், பின் சேரனையும் வென்று அவ்வளவில் அமையானாய் வடநாட்டரசர்களையும் வென்று வலியழித்து மீள்வன் எனப் புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளார்கள். " தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர நிலமலர் வையத்து வலமுறை வளைஇ வேந்துபீ டழித்த ஏந்துவேற் றானையொடு" என ஆலத்தூர்கிழார் இவனது படைப்பெருமையையும், வெற்றித் திறத்தையும் அழகாகப் புனைந்துரைத்தனர். 'முன் செல்லும் தூசிப்படையோர் பனையின் நுங்கினை உண்ண, இடையே செல்வோர் அதன் பழத்தினை நுகர, பின் செல்வோர் பனையின் சுட்ட கிழங்கினை உண்ண இங்ஙனம் உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து மாற்றரசரை வலிகெடுத்த சேனையோடு' என்பது இதன் பொருள். இக்கருத்தே கோவூர்கிழாரால் வேறு வகையாகக் கூறப்பெற்றுளது. அவர், 'கீழ்கடல் பின்னதாக மேல் கடலின் வெள்ளிய அலை நின் குதிரையின் குளம்பை யலைப்ப வலமாக முறையே வருதலு முண்டாமென்று வடநாட்டுள்ள அரசுகள் கலங்கி நெஞ்சிலே அவலம் மிகத் துயிலாத கண்களை யுடையவாயின' என்றனர். இங்ஙனம் ஒப்பற்ற வீரனாகிய இம்மன்னன் புலவர்களை நன்கு மதித்து, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவ்வாறொழுகி வந்தனன் என்று தெரிகிறது. இவன் உறையூரை முற்றுகை யிட்டிருந்த பொழுது, கோவூர் கிழார் என்னுஞ் சான்றோர் ஓர் பாட்டியற்றிக் கூறி, இவனையும் இவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியையும் சந்து செய்வித்தார். அவ்வரிய செய்யுள், " இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன் நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால் குடிப்பொரு ளன்று நுஞ் செய்தி கொடித்தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே" என்பது. 'பெரிய பனையின் தோட்டினைச் சூடினோனல்லன்; கரிய கொம்பினையுடைய வேம்பினது மாலையை உடையோனல்லன்; நினது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; நின்னுடன் போர் செய்வானது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால் நுமது செய்கை நும் குடிக்குத் தக்கதன்று; இம்மாறுபாடு நும்மைப்போலும் தேர்வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும்; இது தவிர்தலே நுமக்குத் தக்கது.' என்பது அதன் பொருளாகும். இவ்வரசனை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய முதுமொழிக்காஞ்சி என்னும் துறையமைந்த செய்யுட்கள் படித்தறிந் தின்புறற்பாலன. 'நூறு இதழ்களையுடைய தாமரை மலரின் நிரை போல் ஏற்றத்தாழ்வில்லாத சிறந்த குடியிற்பிறந்து வீற்றிருந் தோர்களை எண்ணுமிடத்துப் புகழும் பாட்டும் உடையோர் சிலர்; தாமரையின் இலையையொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவராற் பாடப்படும் புகழுடையோர் தாம் செய்யும் நல்வினையை முடித்து, விசும்பிலே பாகனாற் செலுத்தப் படாத விமானத்தைப் பொருந்துவர் என்று அறிவுடையோர் கூறுவர்; எந்தையே, நலங்கிள்ளி, தேய்தலுண்மையும் பெருகலுண்மையும் மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும் கல்வி முகத்தால் அறியாதவரும் அறியும்படி காட்டித் திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில் ஒன்றில் வல்லராயினும் அல்லராயினும் வறுமையால் வருந்திவந்தோர்க்கு அருள் புரிவாயாக' என்றும்; 'தீயோரை ஒறுத்தலும் நல்லோர்க்கு அருள்பண்ணுதலுமாகிய முறைமையின் மடிந்திராது, நல்லதன் நலனும் தீயதன் றீமையும் இல்லயென்போர்க்கு இனமாகா தொழிக; விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம்போல முறை முறையே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தில் நின்சுற்றம் மகிழ்ச்சியிடத்ததாக; நீ பாதுகாத்த பொருள் புகழிடத் ததாக' என்றும்; பிறவாறும் அவற்றிற் கூறப்பட்டுள்ளன. முன்பு போர் செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இம்மன்னன் முதுகண்ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப் பெற்று அறஞ் செய்தலை மேற் கொண்டானாவன். இனி, இவ்வேந்தன் கவிதை யியற்றும் வளமுடைய சிறந்த புலவனாகவும் விளங்கினனென இவன் பாடிய இரண்டு அழகிய செய்யுட்கள் புறநானூற்றில் உள்ளமையால் அறியப்படுகிறது. அவ்விரண்டு செய்யுட்களில் ஒன்று மாற்றாரை நோக்கி வஞ்சினங் கூறுவதாக வுள்ளது. அதிலே, 'மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி ஈயவேண்டுமென்று இரப்பராயின் அவர்க்கு என் அரசாட்சி கொடுத்தலோ எளிது; இனிய உயிரேயாயினும் கொடுப்பேன்; ஆற்றலுடையோரது வலியைப் போற்றாது என் உள்ளத்தையிகழ்ந்த அறிவில்லாதோன் துயில்கின்ற புலியை யிடறிய குருடன் போல உய்ந்து போதலோ அரிது; மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட நீண்ட மூங்கின் முளையையொப்ப அவ்விடத்து வருந்தும்படி மேற்சென்று பொருதிலேனாயின், குற்றமற்ற நெஞ்சத்தாற் காதல்கொள்ளாத பொது மகளிரது பொருந்தாத முயக்கத்தால் என்மாலை துவள்வதாக'என்று கூறியிருப்பது கிள்ளியின் பெருமித வுணர்ச்சியையும், உளத்தூய்மையையும் நன்கு புலப்படுத்துகின்றன. மற்றொரு செய்யுள் 'தம் குடியின் முதியோர்களைக் கூற்றம் கொண்டுபோக, ஊழினாலே தம்பால் வந்த, முன்னோரின் வெற்றியாலுண்டாகிய அரசுரிமையைப் பெற்றேமாயின் இத்தலைமையைப் பெற்றேமெனக் கொண்டு தம் குடிமக்களை இறை வேண்டியிரக்கும் ஆண்மையில்லாத உள்ளஞ்சிறியோன் பெறின், அவ்வரசுரிமை அவனுக்குத் தாங்க வொண்ணாதாம்படி மிகவும் கனத்தது; மனவெழுச்சியும் முயற்சியுமுடைய சீரியோன் பெறுவனாயின், வெண்குடையும் முரசுமுடைய அரசாட்சியைப் பொருந்திய செல்வம் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்துச் சிறிய நெட்டியின் உலர்ந்த சுள்ளிபோலப் பெரிதும் நொய்தாகும்' என்னும் பொருளுடையது. இதிலிருந்து அவனுடைய உள்ளமிகுதியும், குடிகளைப்புரக்குங் கொள்கையும் நன்கு வெளிப்படுகின்றன. இவ்வரசனைப் பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார் என்போர். இவருள், இவன் துஞ்சியபின் இருந்து இரங்கிப்பாடியவர் ஆலத்தூர் கிழார். கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரன் என்னும் புலவராற் பாடப்பட்ட இலவந்திப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளிசேட்சென்னி யென்பான் இம்மன்னனேயாயின் இவன் இலவந்திப்பள்ளி என்னுமிடத்தில் உயிர் துறந்தானாவன். மதுரைக் குமரனாரும் இவனைப் பாடினாராவர்.  12. தித்தன் இவ்வரசன் உறையூரிலிருந்தவன். இவன் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பான். " இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தன்" என அகத்திலே பரணரால் இவன் பாராட்டப்படுவதிலிருந்து இம்மன்னன் பெருங் கொடையாளி என்பதும், கற்பிற் சிறந்த ஐயை என்பாள் இவனுக்குப் புதல்வி என்பதும் வெளியாகின்றன. "தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை" " நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன" " பலநல்ல புலனணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் உறந்தை" எனப் புறநானூற்றிலும் முறையே பரணரும் நக்கீரரும் உறந்தையை இவனுக் குரிமைப்படுத்துரைப்பது முதலியவற்றால் இவன் உறையூரைச் சிறந்த மதிலரணும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புறந்தந்து புகழ்சிறந்து விளங்கினன் எனப் புலனாகின்றது. வடுக அரசனாகிய கட்டி என்பவன் ஒருகால் இத்தித் தனுடன் போர்செய்யக் கருதி வடநாட்டில் அரசுபுரிந்த பாணன் என்னும் வீரனுடன் சேர்ந்து உறையூரையடைந்து ஓர் புறத்தில் இருக்கையில் அவனது நாளவைக்கண் ஒலிக்கப்பெறும் கிணையோசை கேட்டு அச்சமுற்றுப் பொராது ஓடினன். இது, " வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் றெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய வார்ப்பினும் பெரிதே" என அகப்பாட்டிற் கூறப்படுகின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இவ்வேந்தன் தன் மைந்தனாகிய போர்வைக்கோப்பெருநற்கிள்ளி யுடன் எக்காரணத்தாலோ பகைமை கொண்டிருந்தான். அவன் தன்போலும் தாளாண்மையும் வீரமும் இலனாய் மடிந் திருந்தமையால் வெறுப்புற்று அவனைத் தனது நாட்டினின்றும் ஓட்டிவிட்டனன்போலும்? எனினும், தந்தையால் நாடிழந்தோடி வறுமையாற் புல்லரிசிக் கூழ் உண்டிருந்த பெருநற்கிள்ளி பின்பு மிக்க வலிமையும் போர்த்திறலும் வாய்ந்தவனாயினான்; முக்கா வனாட்டு ஆமூர்மல்லன் என்பானொடு மற்போர் பொருது அவனைக் கொன்று புகழ்பெற்றான். இச்செய்திகள் சாத்தந்தையாரும் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையாரும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின்மீது அருமையாகப் பாடியுள்ள புறப் பாட்டுக்களால் வெளிப்படுகின்றன. இனி, தித்தன் என்னும் இச்செம்பியர் குரிசில் சிறந்த புலவனாகவும் திகழ்ந்தனன் என்பது இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருப்பதனால் அறியப்படும். இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவன். இவனது காலம் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் காலத்திற்கு முற்பட்டதாகுமென்று கருதப்படுகிறது. இவனைப் புகழ்ந்து பாடினோர் பரணரும், நக்கீரருமாவர்.  13. பெருங்கிள்ளி இவ்வரசன் உறையூரில் இருந்தவன்; செங்குட்டுவன் என்னும் சேரர் பெருமானுக்கு அம்மான் மகன். இவன், சோழன் கிள்ளி வளவனுக்கும் நலங்கிள்ளிக்கும் பகைவனாயிருந்த நெடுங் கிள்ளியின் மைந்தன் என்றும், இவனே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பின்பு வழங்கப் பெற்றானாவன் என்றும் கருதுவர் திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள்.1 125,174-ஆம் புறப்பாட்டுக்களை நெடுங்கிள்ளியின் வரலாற்றோடு இயைய வைத்து நோக்குமிடத்து அங்ஙனம் கருதுவது பொருத்தமாகவே தோன்றுகிறது. இவன் பெயர் பெருநற்கிள்ளி யெனவும் வழங்கும். இவன் ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பொழுது சோணாட்டிலிருந்த இவனுடைய ஞாதியரசர் பலர் கூடி இவனுக்கு மாறாகக் கலகம் விளைப்பாராயினர். அதனால், இவன், தனக்குத் துணைவனாகவிருந்த மலையமானது முள்ளூர்மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. அப்பொழுது மலையமான் திருமுடிக்காரியின் மகனும், சோழற்குப் படைத் தலைவனாகவிருந்து சிறப்புப் பெற்றவனுமாகிய சோழியவேனாதி திருக்கண்ணன் என்பான் இவனைப் பாதுகாத்து இவன் குடை நிலைபெறும்படி செய்தான். இச்செய்தி, திருக்கண்ணனை மாறோகத்து நப்பசலையார் பாடிய புறப்பாட்டால் இனிது விளங்குகிறது. அதில், " அரசிழந் திருந்த வல்லற் காலை முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு திரங்குபுன னெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னாட் டல்லல் தீர ... .... .... எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி யிருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந" என்று திருக்கண்ணன் பாராட்டப்படுகின்றான். இங்ஙனம் இளையனாகிய பெருங்கிள்ளிக்கு நேர்ந்த இடுக்கணைக் கேள்வியுற்றான் வீரருள் வீரனாகிய சேரன் செங்குட்டுவன்; உடனே சோணாட்டின்மீது படையெடுத்துச் சென்று, தம் மைத்துனற்குப் பகைவராயிருந்த சோழர் ஒன்பதின்மரை ஒரு பகற்பொழுதில் உறையூரின் தெற்கு வாயிற் புறத்ததாகிய நேரிவாயில் என்னும் இடத்திற் பொருதுவீழ்த்தி, அவனது ஆணை இனிது நடக்குமாறு செய்தனன். இச்செய்தி, " மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கு மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி யொருவழிப் படுத்தோய்" எனச் சிலப்பதிகார நீர்ப்படைக்காதையிலும், " ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை நேரி வாயில் நிலைச்செரு வென்று" என நடுகற்காதையிலும் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறுங் கூற்றாக இளங்கோவடிகள் உரைத்தலால் நன்கு புலனா கின்றது. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகத்திலும், " ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து" என இது குறிக்கப்பெற்றுளது. இவன் உறையூரின் கண்ணே கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாச் செய்தனன் என்பது "அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே" என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையாற் பெறப்படும். இனி, இவன் மலையனைத் துணையாகக் கொண்டு சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையுடன் பொருதுவென்றான் என்பது "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன" என்னும் புறப்பாட்டி னாலும், சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப் பேர்தந்த உக்கிரப் பெருவழுதியும் இவனுக்கு நட்பாளர் என்பது ஒளவையார் பாடிய "நாகத் தன்னபாகார் மண்டிலம்" என்னும் புறப் பாட்டினாலும் பெறப்படுகின்றன. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என இவனுக்கு வழங்கும் பெயரானே இவன் அவ்வேள்வி புரிந்தனன் என்பதும் பெற்றாம். இவனைப் பாடிய புலவர்கள் பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார் என்போர்.  14. நல்லுத்தரன் இவனது வரலாறொன்றும் தெரிந்திலதேனும், இவன் பாடிய ஓர் அழகிய புறப்பாட்டிலிருந்து இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பமுடையன் என்பதும், செய்யுளியற்று வதில் வல்லன் என்பதும் புலனாகின்றன. அச்செய்யுள், " விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி உடையதம் வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்பவேட் டெழுந்து இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையோடு இயைந்த வைகல் உளவா கியரோ" என்பது. "விளைந்த செவ்வியை யுடைய சிறிய இடத்தை நோக்கி வளைந்த கதிராகிய உணவைக் கொண்டுபோய் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய பன்றியேறு இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின் அதனை உண்ணுதல் புல்லிதென்று கருதி அன்று அதனை யுண்ணாதிருந்து அடுத்தநாள் மலைமுழையினின்றும் புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச்செய்து உண்ணும் புலி பசித்தாற் போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாகுக' என்பது அதன் பொழிப்பு. கற்றறிந்தாரேத்தும் கலித்தொகையில் முல்லைக்கலி பாடினான் இவனென்றால் இவ்வரசனது புலமையின் பெருமையை யாரால் அளவிட்டுரைக்கலாகும்? இனி, குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன், குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி முதலிய சோழ மன்னர்கள் சங்க இலக்கியங்களிற் கூறப்பட்டிருக் கின்றனரேனும் அவர்களைப்பற்றி மிகுதியாக அறியலாவன இல்லை. சிறப்புடைய இரு சோழ வேந்தரின் வரலாறுகளே இனி இப்பகுதியில் வெளியிடற் குரியவாகும்.  15. கோப்பெருஞ் சோழர் இவர், பண்டொரு காலத்தில் ஒரு கோழியானது யானை யொன்றைப் போரில்வென்ற இடமாதலின் 'கோழி' எனப் பெயர் பெற்றதும், தொன்று தொட்டுச் சோழ மன்னர்கள் வீற்றிருந்து அரசாளப் பெற்ற தலை நகரங்களுள்ளே மிக்க பழமை பொருந்தியதும், அறங்கள் நிலைபெற்ற அவைக்களத்தைத் தன்னகத்தே கொண்டிருந்ததும், 'ஊரெனப்படுவதுறையூர்' என ஆன்றோர் பலராலும் சிறப்பித் தோதப் பெறுவதும் ஆகிய உறந்தையம் பதியில் இருந்தவர்; கல்விக் கடலின் எல்லை கண்டவர்; தீஞ்சுவை கெழுமிய செந்தமிழ்ப்பாக்கள் பாடுவதிற் சிறப்புமிக்கவர்; அறத்தின் நுட்பங்களையெல்லாம் அறிந்து தாம் அவ்வாறொழுகுவதோடு, யாவரும் அறம்புரிந்து மேன்மையுறவேண்டு மென்னும் பெரு விருப்பினர்; புலவர் பெருமக்களிடத்துத் தாம் வைத்துள்ள அன்பாலும் மதிப்பாலும் அவர்களுடைய அன்பையெல்லாம் கொள்ளை கொண்டவர்; அவ்வாற்றால் தோலா நல்லிசை மேலோராகிய பிசிராந்தையார், பொத்தியார் என்னும் தண்டமிழ்ப்புலவர்கள் தமக்கு ஆருயிர் நண்பர்களாக அமையப்பெற்றவர். பிசிராந்தையார் என்பவர் பாண்டிநாட்டில் பிசிர் என்னும் ஊரிலிருந்த ஒரு புலவர். அவரது பெயரிலிருந்து அவரை ஆதன் என்பானுக்குத் தந்தையார் என்றாவது, ஒரு ஆதன் றந்தையின் வழியில் வந்து அப்பெயரிடப் பெற்றவர் என்றாவது கொள்ளுதல் தகும். ஆதன்றந்தை ஆந்தையென மருவுமாறு தொல்காப்பியத்திற் கூறப்பட்டுளது. பிசிராந்தையார் தமது வாழ்நாளி னிறுதிக் கூற்றில் தமக்கு நரையில்லாததன் காரணத்தை வினாவிய சான்றோர்க்குத் தாம் விடையிறுத்தலாகப் பாடியுள்ள பாட்டிலிருந்து அவரது களங்கமற்ற உயரிய வாழ்க்கை நிலை புலப்படும். அது, " யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே" என்பது. தம் மனைவி மக்கள் அறிவிலும் குணத்திலும் மாட்சி யுடையராதலும், ஏவலாளர் தாம் கருதியதைக் கருதியவாறே செய்து முடித்தலும், தம் நாட்டரசன் முறைவழுவாது குடிகளைப் பாதுகாத்தலும், தம்மூரின்கண் சான்றோர் பலரிருத்தலும் தமக்கு ஆண்டுகள் பல சென்றும் நரையில்லாதிருத்தற்குக் காரணம் எனக் கூறிய அவரது உயரிய மனநிலை நமது புகழ்ச்சிக்கண் எங்ஙனம் அடங்குவதாகும்? இப்பெற்றியராய பாண்டி நாட்டுப் பிசிராந்தையார்க்கும் சோழநாட்டுக் கோப்பெருஞ்சோழர்க்கும் செப்புதற்கரிய நட்பொன் றுளதாகி வளர்ந்து வருவதாயிற்று. ஆனால் அவர்கள் ஒரு பொழுதும் ஒருவரை யொருவர் நேரிற் கண்டவரல்லர். ஒருவர் ஒருவருடைய குணங்களைக் கேள்வியுற்ற மாத்திரையானே அவர்கள் பால் அடங்கியிருந்த உழுவலன்பு வெளிப்பட்டு அவ்விருவரையும் ஒத்த வுணர்ச்சியுடைய நட்பினராக்கி விட்டது. அவர்கள் ஒருவரொருவரைப்பற்றிப் பேசாத நாளும், நினையாத நாழிகையும் இருந்திருத்தல் சாலாது. பிசிராந்தையார் ஒருநாள் மாலைப்பொழுதில் தமதாருயிர் நண்பனை நினைந்து காதல் கைமிக்கு அன்னச்சேவல் ஒன்றை. விளித்துப் பாடுகின்ற பாட்டு அந்நட்பினையும் பெட்பினையும் திட்பமுறக்காட்டும். அது, " அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையன் மாலையாம் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசி ராந்தை யடியுறை யெனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே" என்பது. 'அன்னச் சேவலே! அன்னச் சேவலே!! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையளி செய்யும் முகம்போல மதியம் விளங்கும் மாலைப்பொழுதின்கண் யாம் செயலற்று வருந்தா நிற்கின்றோம்; நீ தான் குமரியாற்றின் பெருந்துறையில் அயிரையை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்குச் செல்குதி யாயின், இரண்டிற்கும் இடையிலுள்ளதாகிய சோழநாட்டை அடைந்தவிடத்து, உறையூரின்கண் உயர்ந்து தோன்றும் மாடத் திடத்தே நின் பெடையோடு தங்கி, வாயில் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோயிலிற் புகுந்து, எம் பெருங்கோவாகிய கிள்ளி கேட்க 'யான் பிசிராந்தையின் அடியுறை' என்று சொல்வையாயின் நின் இன்புறும் பேடை அணியத் தன் விருப்பமுள்ள அணிகலத்தை நினக்குத் தருவன்' என்பது இதன் பொழிப்பு. இவ்வாறாகிய உத்தம நட்பினால் விளையும் இன்பத்தைப் பார்க்கிலும் இவ்வுலகத்துச் சிறந்த வின்பம் யாதுளது? தலையாயார் தம்முட்செய்த நட்புக் கரும்பை நுனியிலிருந்து தின்றாற் போலவும், பேரறிவாளர்களியற்றிய நூல்களின் நயம் அவற்றிற் பயிலுந் தோறும் வெளிப்பட்டு இன்பம் விளைத்தல் போலவும் மேன் மேல் வளர்ந்து இன்பம் பயப்பதாமெனக் கூறுவர் ஆன்றோர். துறக்க வின்பமும் இதற்கு நிகராகாதெனில் இதன் பெருமையை வேறு கூறுதல் என்? கோப்பெருஞ் சோழரும் பிசிராந்தையாரும் காண்டலின்றியும் இங்ஙனமாக ஈண்டிய நட்பின் பயன் துய்த்து வருங்காலத்தில் நிகழ்வதொரு செய்தி நெஞ்சினையுருக்குந் தன்மையது. இவ்வரசர் பெருந்தகைக்கு இரண்டு மக்கள் உளராயினர். "மகனுரைக்கும் தந்தை நலத்தை" என்றும், " தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்". என்றும் ஆன்றோர் கூறும் பொதுநீதிக்கு விலக்காக ஒரோ வழித் தகவிலார்க்கு நன் மக்களும், தகவுடையார்க்குத் தீய மக்களும் உண்டாகின்றனர். கோப்பெருஞ்சோழரின் மக்களும் பாற்கடலிற் றோன்றிய ஆலாலம்போலும் கொடிய பண்பினராயிருந்தனர். அன்பிற்கே நிலைக்களமாகிய தம் அருமைத் தந்தையுடன் போர் செய்யவும் எழுந்தனரென்றால் அன்னவரின் தீயபண்பை என்னென் றெடுத்துரைப்பது? கொடியவர்களான மக்கள் போர் குறித்து வருதலைக் கோப்பெருஞ்சோழர் கண்டார்; சினங்கொண்டார்; தாமும் போர் செய்தற்கு அக்கொடியார்மேற் சென்றார். அப்பொழுது அங்கிருந்து அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர்க்கு ஓர் நல்லெண்ணம் உண்டாயிற்று. அஃது அவருக்கு இயற்கையுமாகும். அருஞ்சீர்த்திப் பெருஞ்சோழரைப் போர் செய்யாது தடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம். பெருங்கோவைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவாராயினர்: 'அமரின்கட் பகைவரை அடுதல்செய்த வென்றியையும், வலிய முயற்சியையும், நில முழுதும் நிழல்செய்யும் வெண் கொற்றக் குடையினையும் உடைய வேந்தே, நின்னுடன் போர் செய்தற்கு வந்த இருவரையும் பார்க்குமிடத்து அவர்கள் நின் பகை வேந்தர்கள் அல்லர்; நீயும் அவர்க்குப் பகைவன் அல்லை; தோன்றலே, நீ இவ்வுலகத்துப் பரந்த புகழை யெய்தித் தேவருலகத்தையடைந்த பொழுது நின்னால் ஒழிக்கப்பட்ட அரசாட்சியுரிமை அவர்க் குரியது; அதனையும் நீயே அறிவை; புகழை விரும்புவோனே, நின்னுடன் போர்செய்தற்கெழுந்த சூழ்ச்சியற்ற அறிவினை யுடைய நின் புதல்வர் தோற்பின் நின் பெரிய செல்வத்தை அவருக்கன்றி யாவர்க்குக் கொடுப்பாய்? நீ அவருக்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவக்கும்படியாக இவ்வுலகத்தே பழியை நிறுத்துவாய்; ஆதலால் நினது மறன் ஒழிவதாக; விண்ணோர்கள் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ளுமாறு நல்வினை செய்தல்வேண்டும்; அதற்கு விரைந்து எழுக; நின் உள்ளம் வாழ்வதாக.' இவ்வாறாக நல்லிசைப்புலவரால் தெருட்டப்பெற்ற பின், பெருங்கோவின் உள்ளத்திற் பொங்கியெழுந்த சினம் 'இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல்' அடங்கிவிட்டது. எனினும் மானம் என்பது அரசர்க்கு உயிரினுஞ் சிறந்ததாதலின் அவர் பின் உயிர் வாழ ஒருப்பட்டிலர். " மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே" " மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" என்பன ஆன்றோரின் முதுமொழிகளல்லவா? தம் மக்களால் தமது குலத்திற்கும், தமக்கும் பழியுண்டாதலையுன்னி உயிர் துறக்கத் துணிந்தார் பெருஞ்சோழர். தற்கொலை செய்து கொள்வதில் பழியில்லாததொரு வழியை முற்காலத்தவர் கைக் கொண்டிருந்தனர். அதுதான் வடக்கிருத்தல் என்பது. வடக்கிருத்தல் என்றால் யாதேனும் இன்றியமையாக் காரணம்பற்றி உயிர் துறக்கத் துணிந்தவர் ஆற்றிடைக்குறைபோலும் தூயதொரு தனியிடத்தையெய்தி, வடக்குநோக்கியிருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர்விடுதலாம். பெருங்கோவும் அங்ஙனமே வடக்கிருத்தலை மேற்கொள்வாராயினர். வடக்கிருக் குங்கால் உலகத்தார்க்கு அறத்தின் மேன்மையைத் தாம் தெளிந்த வாறு அறிவுறுத்திச் செல்லவேண்டுமென்று அவர்க்கு விருப்பமுள தாயிற்று. தாம் உயிர் துறக்கும்பொழுதும் உலகத்தார்க்கு உதவிசெய்வதே உயர்ந்தோரின் நோக்கமென்பதற்கு இஃதொரு சான்றாம். தாம் அறிவுறுத்தக் கருதியதனை நாம் என்றும் போற்றுவதொரு செந்தமிழ்ச் செய்யுளாகப் பாடித்தந்தனர் நம் புவிக்கரசாகிய கவிக்கரசர். அது, " செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் ஆனையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனில் தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" (புறம்) என்பது. இதன்பொருள்; 'அழுக்கு நிறைந்த தெளிவில்லாத உள்ளத்தினையுடையோர் அறத்தினைச் செய்வோமோ செய்யா திருப்போமோ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர்; யானை வேட்டைக்குச் செல்வோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; காடை வேட்டைக்குச் செல்வோன் அது பெறாமல் வெறுங்கை யுடனும் திரும்புவன்; அதனால், உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால் அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பருலகத்தின் கண் இன்பமனுபவித்தலும் கூடும்; அவ்வுலகத்து நுகர்ச்சியில்லையாயின், மாறிப்பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; மாறிப்பிறத்தலென்பதேஇல்லையென்று சொல்வாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்போடு கூடி நின்று இறத்தல் மிகவும் பெருமையுடையது; அதனால், எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது' என்பது. இங்ஙனம் அறிவுறுத்தருளி, அங்கே குழுமியிருந்த சான்றோர் களைப் பார்த்து 'என் நண்பன் பிசிராந்தை இப்பொழுது வருவன்' என்று பெருஞ்சோழர் கூறினர். சான்றோர்களோ அவர் வாரார் என்றனர். அதுகேட்டதும் பெருங்கோவானவர் 'என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் பாண்டி நாட்டுள்ளும் சேய்மையிலுள்ளதாகிய பிசிர் என்னும் ஊரிடத்தான் என்று சொல்லுவர்; எனினும், நாம் செல்வம் உடைய காலத்து அவன் வாராதிருப்பினும் யாம் துன்புறுங்காலத்து வாரா திருப்பானல்லன்' என்றனர். சான்றோர்கட்கோ ஐயந்தீர்ந்தபாடில்லை. கோப்பெருஞ் சோழர் பின்னரும் கூறுகின்றார் : "நிறைந்த அறிவினை யுடையீர், 'அவன் நின்னைக் கேள்வியுற்றிருப்பதல்லது சிறிதுபொழுதும் கண்டதில்லை; பல ஆண்டுகள் தவறாது பழகிப்போந்த உரிமை யுடையாராயினும் நீ கூறியவாறு வழுவுதலின்றி யொழுகுதல் அரிதேயாகும்' என்று கருதி ஐயுறாதொழிவீராக; அவன் என்றும் என்னைப் புறக்கணித்தவனல்லன்; இனிய குணங்களை யுடையன்; பிணித்த நட்பினை யுடையன்; புகழை யழிக்கும் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது `என் பெயர் கோப்பெருஞ்சோழன்' என்று என் பெயரையே தன் பெயராகச் சொல்லும் அன்பின் உரிமையையும் உடையன்; அதன்மேலும் இப்படி யான் துயர முறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடமொழித்து வைப்பீராக" என்றனர். இங்ஙனங்கூறிக் கோப்பெருஞ்சோழர் வடக்கிருக்கவே, பிசிராந்தையாரும் அவர் கூறியாங்கு அப்பொழுது அவண் வந்து சேர்ந்தனர். பிசிராந்தையார் போன்றே பெருங்கோவுக்கு ஆருயிர் நண்பரும், உறையூரிலிருந்தவரும் ஆகிய பொத்தியார் என்னும் புலவர் அதனைக் கண்டார்; அளவிடமுடியாத வியப்பினையும், அடக்கவொண்ணாத துயரத்தினையும் உடையராயினார். அப்பொழுது அவர் கூறியது, " நினக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல் அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி இசைமர பாக நட்புக் கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவனென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையுஞ் சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை யிழந்த விவ்வுலகம் என்னா வதுகொல் அளியது தானே" (புறம்) என்பது. இதன் பொருள் : 'இவ்வரசன் எத்துணையும் பெரிய சிறப்புக் களுடன் கூடியும் அவற்றையெல்லாம் கைவிட்டு இவ்விடத்தே இப்படி வரத் துணிதல் நினைக்குமிடத்து வியப்பினையுடையது; வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கமமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக்கோடாக இன்னதோர் இன்னாக்காலத்து வழுவின்றி இவ்விடத்து வருதல் அதனினும் வியப்பையுடையது; இவ்வாறு வருவனென்று துணிந்து சொல்லிய வேந்தனது பெருமையும், அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லைகடந்துளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத் துறையும் சான்றோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற பழைய புகழையுடைய அத்தன்மையுள்ள பெரியோனை யிழந்த இத்தேயம் என்ன துன்பமுறுங் கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது!' என்பது. இங்ஙனம் பொத்தியார் வியந்தும் கையற்றும் கூறுமாறு சென்ற பிசிராந்தையாரும் வடக்கிருந்தனர்.1 மற்றும் வடக்கிருந்தார் பலராவர். என்னே அன்பின் தகைமை! அன்பென்பது பல உடம்பிலுள்ள உயிர்களை ஒன்றாகப் பிணிக்குந் தன்மையாற்றான் அதற்கு நார் என்று பெயர் உண்டாயிற்றாதல் வேண்டும். இங்ஙனம் பெருங்கோவுடன் ஒருங்கே வடக்கிருந்தார் பலராகவும், அவர்க்கு உயிர் நண்பராகிய பொத்தியார் மாத்திரம் உடன் வடக்கிருந் தாரல்லர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந் தமையால் கோப்பெருஞ்சோழர் அவரைத் தடுத்து 'நினக்கு மகன் பிறந்தபின் வருக' என்று கூறிய மொழியை மறுக்கலாற்றாமையே யாகும். எனவே அவர் உடனுயிர் துறவாமைக்கும் நண்பன் சொல்லை மறுக்கலாற்றாத அவரது நட்புரிமையே காரணமாயிற் றென்பது தெளிவு. பிசிராந்தையாரும், பெருங்கோவும் வடக்கிருந்தமை கண்டு முறையே கண்ணகனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர்கள் இரங்கிப் பாடியுள்ளார்கள். கண்ணகனார் பாடியது, " பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து அருவிலை நன்கல மமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே" (புறம்) என்னும் அழகிய பாட்டாகும். 'பொன்னும் பவளமும், முத்தும், மணியும் நிலம், கடல், மலை என்பவற்றில் ஒன்றுக் கொன்று நெடிய சேய்மையிலிருப்பினும், அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும் பொழுது அவை ஓரிடத்துத் தோன்றினாற் போல எப்பொழுதும் சான்றோர் சான்றோர் பக்கத்தினராவர்' என்பது இதன் பொருளாம். பொத்தியார் என்னும் புலவர் தம் நண்பர் சொல்லை மறாது சென்று உறையூரைக் கண்டபொழுதும் பின் பொருகால் அரசனது நடுகல்லைக் கண்டபொழுதும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் நெஞ்சினையுருக்குந் தன்மையன. 'செங்கோலினன், திண்ணிய அன்பினன், மகளிர்க்கு மெல்லியன், வீரர்க்கு வீரன், உயர்ந் தோர்க்குப் புகலிடம்; அவனை அத்தன்மையனென்று கருதாது கூற்றம் உயிர் கொண்டுபோயிற்று; ஆதலால் வாய்மையுடைய புலவர்களே, நம் துன்புற்ற சுற்றத்தையும் சேர்த்துக்கொண்டு அக் கூற்றத்தை வைவோம் வாரீர்'என்று கூறுகின்றார். இவ்வாறு தம் ஆருயிர் நண்பனைப் பிரிந்து ஒருநாளும் பொறுத்திருக் கலாற்றாத பொத்தியாரும், தமக்கு மகன் பிறந்த பின்னரும் வாளா அமைந் திருப்பரோ? மகனும் பிறந்தான்; அவருஞ் சென்றார்; சென்று நடுகல்லைக்கண்டு அவர், `நிழலைக் காட்டிலும் நின்னைப் பிரியாதுறையும் நின் விருப்பமுள்ள மனைவி வயிற்று மகன் பிறந்தபின் வா' எனச்சொல்லி என்னை இங்கு நின்றும் போக்கிய அன்பிலாதவனே, நின்னோடு என்னிடையுள்ள நட்பினை நீ எண்ணா திருப்பாயல்லை; புகழை விரும்புவோனே, எனக்கு நீ குறித்துள்ள இடம் யாது? சொல்வாயாக' என்றனர். கோப்பெருஞ்சோழரோ கல்லாகியும் அவர்க்கு இடங் கொடுத்தனர். அவரும் 'இன்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடையோர் தம்முழைச்செலின், அவர் நடுகல் ஆகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்பர்' என்று அதனை வியந்து கூறி, வடக்கிருப்பாராயினர். இவ்வரசரைப் பாடிய புலவர்கள் பிசிராந்தையார், எயிற்றியனார், பொத்தியார், பூதநாதனார் என்போர்.  16. கோச்செங்கட் சோழர் சோழர் குலமென்னும் பாலாழியிற் றோன்றி அறனும் மறனும் ஆற்றலுங்குன்றாது தனிச்செங்கோல் நடாத்தித்தம் புகழ் நிறுவிய மன்னர்களில், சைவ நன்மக்களது உள்ளத்தை முழுமணிப் பீடமாகக்கொண்டு வீற்றிருத்தற்குரியோருள் முதன்மையுற்றிருப் போர் கோச்செங்கட் சோழர் என்பார். அப்பெரியாரது சரிதம் சைவர்கட்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருக்கும் ஞான பண்டாரமாகிய பெரிய புராணமென்னும் திருத்தொண்டர் புராணத் திருமுறையகத்தே மிளிர்கின்றது. அதன் சுருக்கம் பின் வருமாறு: 'புற வொன்றின் பொருட்டாகத் துலை யேறியும் முறை புரிந்த சோழ மன்னர்க்குத் தொன்றுதொட்டு உரிமை வாய்ந்த தாகிய சோணாட்டின்கண்ணே அலையால் மணிகொழிக்கும் அழகிய காவிரியாற்றின் கரையில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தே பல தருக்களும் நிறைந்த குளிர் பூஞ்சோலை ஒன்றுளது. அப்பூங்கா வின்கண் வெண்ணாவல் மரத்தின் கீழே தேவ தேவராகிய சிவபெருமான் சிவலிங்க மென்னும் திரு அருளுருத் தாங்கி எழுந்தருளியிருந்தனர். பழம் பிறப்பில் மேலாய தவத்தினைச் செய்த தொரு வெள்ளானை அவ்வருளுருவைக் கண்டு அன்பு மேலிட்டுக் கையால் நீரினை முகந்துவந்து ஆட்டியும், பூங்கொத்துக் களைப் பறித்துச் சாத்தியும் நீலகண்டராகிய பெருமானை நித்தலும் வழிபாடு செய்தொழுகாநின்றது. அதனால் திருஆனைக்கா என்னும் பெயரும் அத்தலத்திற்கு உளதாகி நிலவுகின்றது. இஃதிவ்வாறாக, ஞானமுடையதொரு சிலந்தியானது நம்பரது செம்பொற்றிருமுடிமேல் சருகு முதலியன உதிராவண்ணம் மேல் விதானம் என்னுமாறு வாய் நூலால் வலையொன்று செறியப் புரிந்தது. அருமையாக இழைத்த அச்சிலம்பிவலையினைக் கண்டது ஆண்டவரை வழிபடச் சென்ற அவ்வானை; கண்டதும் ஈதிங்கிருப்பது அநுசிதமாமென்று அதனைச் சிதைத்தது. சிலந்தியோ முன்போல் மீண்டும் பந்தர் இழைத்தது. பிற்றைநாள் அதனையும் ஆனை யழித்தது. பார்த்தது சிலந்தி; சினம் மூண்டது; 'எம்பெருமான் திருமேனியிற் சருகு விழாமல் யான் வருந்தி யிழைத்த நூலின் பந்தரை இவ்வானை அழிப்பதோ' என வெம்பிக் கொதித்தெழுந்து யானயின் துதிக்கையுட் புகுந்து கடித்தது. கடிக்கவே யானையானது அதனைப் பொறுக்கலாற்றாது நிலத்திலே கையை மோதிக் குலைந்து வீழ்ந்தது. கையிற் புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது. அருமறைப் பொருளாகும் ஐயனும் அம் மதயானைக்கும் தகுமாறு வரமளித்து, சிலந்தியானது சோழர் குலத்துதித்து உலகு புரந்தளிக்க அருள் புரிந்தனர். அக்காலத்தே சோழ குலத்தரசனாம் சுபதேவன் என்பவன் தன் பெருந்தேவியாகிய கமலவதியுடன் தில்லைத் திருப்பதியை அடைந்து திருச்சிற்றம்பலத்தே திரு நிருத்தம் புரியும் சேவடியை வணங்கித் திருப்படியின் கீழ் வழிபாடு செய்துவந்தனன். தேவி கமலவதியும் இறைவரை வழிபட்டு மகப்பேறு கருதி வரம் வேண்டினள். பெருமானும் திருவுள்ளஞ் செய்தனர். முன் திருப்பணி புரிந்த சிலந்தி அரசு மகிழக் கமலவதி திருவயிற்றில் அழகிய மகவாய் வந்தெய்தியது. கமலவதி கருவுற்றுப் பத்துத் திங்களும் நிரம்பி மகப் பெறும் பொழுது அடுத்த காலையில் காலத்தின் இயல்பை அறியும் முதியா ரொருவர் 'இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேல் இக்குழந்தை மூன்றுலகமும் புரக்க வல்லதாகும்' என இயம்பினர். அதனைக் கேட்ட வளவில் அன்னை கமலவதியும் 'ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் படியாக என் கால்களை மேலேதூக்கிக் கட்டுங்கள்' என்று சொல்லி, அங்ஙனமே அறிஞருரைத்த நற்பொழுது வந்துற்ற வளவில் காற் பிணிப்பு விடப்பெற்று, அருமணி போலும் புதல்வனைப் பெற்றெடுத்து 'என் கோச் செங்கண்ணானோ என்றாள்'. தேவி புதல்வனைப்பெற்று உயிர் துறக்கவே, செங்கோல் மன்னனாகிய சுபதேவன் ஆவியனைய அரும் புதல்வனை வளர்த்து முடிசூட்டுவித்துத் தானும் தவநெறி சார்ந்து சிவலோக மெய்தினன். கோச்செங்கட் சோழரும் சிவபெருமானது திருவருளால் பழம் பிறப்பினை யுணர்ந்து அரசாண்டு வருகின்றார் ஆகலின் சிவனார் மகிழ்ந்துறையும் திருக்கோயில் பல சமைத்தலாகிய திருத்தொண்டினைக் கடன்மையாக மேற்கொண்டனர். ஆனைக் காவிலே தாம் முன்பு அருள் பெற்றதனை அறிந்து ஞானச்சார் வாகும் வெண்ணாவல் மரத்தினுடன்கூட நலஞ் சிறந்து விளங்கும்படி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சமைத்தனர். மற்றும், அமைச்சர்களை யேவிச் சோணாட்டின் பற்பல பகுதிகளிலும் அம்மையப்பர் எழுந்தருளும் செம்மையாய திருக்கோயில்கள் பல சமைத்து அக்கோயில்தோறும் அமுதுபடி முதலானவற்றுக்கு அளவில்லாத செல்வங்களை ஏற்படுத்தினர்; தில்லைத் திருப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே திருநிருத்தம் புரியும் பெருமானைப் பேரன்புடன் அடிவணங்கி உருகி உளங்களித்து உறையும் நாளில் வாய்மை குன்றாத தில்லைவாழ் மறையவர்க்குத் திருமாளிகை பல சமைத்தனர். இவ்வாறாக, பூவுலகைப் பொதுவறப் புரந்தருளிய கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்குரிய திருத்தொண்டுகள் பல புரிந்து, தேவர் போற்றத் தில்லையம்பலவாணரின் திருவடி நீழலை யெய்தினர். இனி, இவ்வேந்தர் பெருமானைப்பற்றிய சில ஆரய்ச்சிக் குறிப்புக்கள் இங்கே எழுதுதற்குரியன : இவர், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேரமன்னனுடன் போர்புரிந்து வாகைசூடி, அவனது கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றியதுடன், சேரமானையும் பிடித்துச் சிறைப்படுத்தினர். அப்பொழுது கணைக்காலிரும்பொறைக்கு உயிர்த்தோழராயிருந்த பொய்கையார் என்னும் புலவர் செங்கட் சோழரது வெற்றித்திறத்தைச் சிறப்பித்துப் பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாகிய களவழி நாற்பது என்னும் நூலினை இயற்றிச் சேரமானைச் சிறை மீட்டனர். சில பிரபந்தங்களிலே இவ்வரலாறு கொண்டு கோச்செங்கட் சோழர் சுட்டப் படுகின்றார். " களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் கால்வழித் தளையை வெட்டியர சிட்ட வவனும்" என்று கலிங்கத்துப் பரணியும், " மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" என்று விக்கிரமசோழனுலாவும், " அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப்பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" என்று குலோத்துங்க சோழனுலாவும், இங்ஙனமே இராசராச சோழனுலா முதலியனவும் கூறுகின்றன. புறநானூற்றிலுள்ள 'குழவியிறப்பினும்' என்னும் பாட்டின் கீழ்க்குறிப்பு "சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு" என்றுளது. தமிழ் நாவலர் சரிதையில் இப்பாட்டின் கீழ்க்குறிப்பு "சேரன் கணைக்காலிரும் பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத்தளைப் பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு" என்றிருக் கிறது. இவை ஒன்றினொன்று சிறிது முரண்படினும் சேரமான் கணைக்காலிரும் பொறை கோச் செங்கண்ணராற் சிறைப்பட்ட செய்தி எல்லாவற்றினும் கூறப்பெற்றுளது. இனி, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகத்தில் " கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற கழன்மன்னர் மணிமுடிமேற் காக மேறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே" என்றும் " பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே" என்றும் இவ்வரசரைக் குறிப்பிட்டிருத்தலால், சோழநாட்டிலுள்ள வெண்ணி, அழுந்தூர் என்னும் ஊர்களில் நிகழ்ந்த போரிலும் இவர் பகையரசரை முறியடித்தன ரென்பது தெரிகின்றது. இவ்வாற்றால் சேர, பாண்டிய மன்னர்கள் இவருடன் போர்புரிந்து தோற்றுக் கீழ்ப்படிந்தாராதல் வேண்டும். மேற்குறித்த பதிகத்தில் திருமங்கை மன்னன் இவரைத் 'தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம்' என்பதனால் மூன்று நாட்டிற்கும் உரியராகக் கூறுவதும், சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் 'தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்' என்று கூறுவதும் இங்கே கருதற்பாலன. திருமங்கை மன்னன் இவரைப் புகழ்ந்து கூறுவதிலிருந்து, இவர் அரசராதற்கேற்ப வேறு மதங்களையும் புரந்துவந்தன ரென்பது பெறப்படும்; எனினும் இவர்செய்த தொண்டுகளெல்லாம் சிவபெருமானுக்கேயாகும். இவர் சிவபெருமானுக்கு ஆனைக்கா முதல் அம்பர் இறுதியாக அறுபத்துநான்கு மாடக்கோயில்கள் கட்டினரென்று சில பெரியோர் கூறுகின்றனர். திருமங்கையாழ்வாரே இவரது கோயிற் றிருப்பணியைக் குறித்து "இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்" என்று கூறியிருக்கின்றார். இதனால் எழுபது மாடக்கோயில் எடுத்தனரென அறியலாகும். மாடக் கோயில் என்பது பெருங்கோயில் என்றும் வழங்கப்பெறும். பெருங்கோயில் எல்லாம் கோச்செங்கண்ணர் கட்டியவே எனின், 'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோ டெட்டும்' என்று திருநாவுக்கரசர் அடைவு திருத் தாண்டகத்திற் கூறியிருத்தலின், எழுபத்தெட்டுப் பெருங்கோயில் செங்கட் சோழர் எடுத்தனரென்று கொள்ளவேண்டும். இவர் சிலந்தியாயிருந்து இறைவனை வழிபட்டு அரசாயின உண்மையையும், இவர் பல திருக்கோயில்கள் எடுப்பித்த வண்மையையும் திருநெறித் தமிழ்வேதம் அருளிய சைவசமய குரவர்கள் தம் பதிகங்களில் பலவிடத்தும் பாராட்டியிருக்கின்றார்களென்றால் இவரது பெருமையை நாம் எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்? " செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெணா வலுளாய் அங்கத் தயர்வா யினளா யிழையே." - திருஞானசம்பந்தர் " புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயி னூலாற் பொதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் மேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே." - திருநாவுக்கரசர் " தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென வியற்றச் சுருண்ட செஞ்சடை யாரது தன்னைச் சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடு துறை யாதியெம் மானே." - நம்பியாரூரர்.  17. அரசியல் சோழநாட்டின் எல்லையும் அளவும் இவை யென்பதனை. " கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்" என்னும் தனிப்பாடல் உணர்த்தா நிற்கும். சோணாடேயன்றித் தொண்டை நாடு முதலியனவும் பழையசோழமன்னர்களின் ஆட்சியில் அடங்கியிருந்தன என்றாவது, அவர்கள் ஆணைக்குக் கீழ்ப்பட்டிருந்தன என்றாவது கூறுதல் பொருந்தும். 1அந்நாளில், நாட்டின் (மண்டலத்தின்) பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர் களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக்குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள நகராகும். நாடு என்பதுதேம் என்னும் பெயரானும் வழங்கிற்று. சங்கச் செய்யுட்களினால் அறியலா கின்ற சோழர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டுமாம். சிலப்பதிகார வேனிற் காதையில், " மாட மதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்" எனச் சோணாட்டிற்கு இவ்விரண்டு தலைநகர் இளங்கோவடிகளால் ஒருங்கு குறிப்பிடப்படுதல் காண்க. இவற்றுள் உறையூர் உறந்தை எனவும் கோழி எனவும் வழங்கப்படும். ஓர் கோழியானது யானை யொன்றைப் போரிலே தொலைத்த இடத்தில் அமைக்கப் பெற்றதாகலின் இந்நகர்க்குக் கோழியெனப் பெயருண்டாயது என்பர்; " முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர்" என இளங்கோவடிகள் கூறுதலுங் காண்க. மற்றொரு தலைநகர்க்குச் சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெயர்கள் உண்டாய வரலாறு மணிமேகலையிற் கூறப் பட்டிருத்தல் முன் சோணாட்டின் பழமை கூறியவிடத்தும், அதற்குக் காகந்தி என்னும் பெயருண்டாயது காந்தன் வரலாறுரைத்த விடத்தும் போந்தமை காண்க. புகார் என்னும் பெயர் அதற் குண்டாயது மரக்கலங்கள் புகும் துறைமுகமுடைமையாலாம். பெரிப்ளஸ் 'கமாரம்' என்றும், டாலமி 'கபேரிஸ்' என்றும் கூறியது இந்நகரையே என்பர். இத் தலைநகரின் அமைப்பும், சிறப்பும் கரிகாலன் வரலாறுரைத்த விடத்துக் காட்டப்பெற்றன. சோழர் தமிழகத்து முடிகெழுவேந்தர் மூவருள் ஒருவராகலின், இவர், " படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய" என்று தொல்காப்பியம் கூறுமாறு படை முதலிய அனைத்தும் உடையராவர். இவற்றுள் முரசானது வீரமுரசு, நீதிமுரசு, ஈகைமுரசு என மூவகைப்படும். வீரமுரசினை இவர்கள் மிக மதித்து நீராட்டி மாலைசூட்டிப் பூசிக்கும் வழக்கமுடையர். சோழர் குலத்தார்க்குப் பொதுவாக வழங்கும் பெயர்கள் இவை யென்பதனை, " சென்னி வளவன் கிள்ளி செம்பியன் பொன்னித் துறைவன் புலிக்கொடிப் புரவலன் நேரியன் ஆர்க்கோன் நேரிறை அபயன் சூரியன் புனனாடன் சோழன் பெயரே" என்னும் திவாகரத்தால் அறிக. இவற்றுள் சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன், சோழன் என்பன குடிபற்றிய சிறப்புப் பெயராகவும், அடையடுத்து இயற்பெயராகவும் சங்கச் செய்யுட் களிற் பயின்றுள்ளன. இப்பெயர்களும், அபயன் என்பதும் ஒழிந்த ஏனைய பெயர்கள் சோழருடைய நாடு, நகர், மலை, யாறு, கொடி, மாலை, குலமுதல்வன் என்பவை பற்றியன. புலி இவர்கட்குக் கொடியாதலோடு இலச்சினையும் ஆம். ஆர் (ஆத்தி) கண்ணியும் தாரும் ஆகும். நேரிமலை சேரர்க்குரியதாகப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது. சோழ மன்னர்கள் அரசியல் நடாத்துதற்கு அமைச்சர் குழு, புரோகிதர் குழு, தானைத்தலைவர் குழு, தூதுவர் குழு, ஒற்றர் குழு என்னும் ஐந்து பெரிய கூட்டங்களைத் துணையாக வைத்துக் கொண்டிருந்தனர்; இவர்களன்றி, கரணத்தியலவர், அரசனது ஆணையை நிறைவேற்றும் கரும விதிகள், பண்டாரம் வகிப்போ ராகிய கனகச் சுற்றம், வாயில் காவலர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் என்போரும் அவர்கட்கிருந்தனர். நட்பாளர், அறிவர், மடைத்தொழிலாளர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப் புலவர் என்பார் உறுதிச்சுற்றமாக விளங்கினர். இவை, "ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்" எனச் சிலப்பதிகாரத்தும், மணிமேகலையிலும் வருதலானும், " அமைச்சர் புரோகிதர் சேனா பதியர் தவாத்தொழிற் றூதுவர் சாரணர் என்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே" " கரணத் தியலவர் கரும விதிகள் கனகச் சுற்றம் கடைகாப் பாளர் நகர மாந்தர் நளிபடைத் தலைவர் யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பே ராயம் என்ப" எனத் திவாகரம் முதலிய நிகண்டுகள் அவற்றை விரித்துரைத் தலானும், பிறவாற்றானும் பெறப்படும். உறையூரிலும், காவிரிப் பூம்பட்டினத்திலும் குடிகளின் வழக்குகளைக்கேட்டு நூனெறி பிழையாது தீர்ப்பளிக்கும் உயர் நீதிமன்றங்கள் (அறங்கூறவையம்) இருந்தன. இவற்றிலிருக்கும் நீதிபதிகள் தருமாசனத்தார் எனப்படுவர். "அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன" என அகத்திலும், "உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று" எனப் புறத்திலும், " அரசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. மற்றும் அரசியல் நடாத்துதற்கு இன்றியமையாத பலதிறப்பட்ட வினைஞர்களும் இருந்தனராவர் எனக் கொள்ளுதல் வேண்டும். இவர்கள் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையும் உடையராயிருந்தனர். இவற்றை நடாத்தும் தானைத் தலைவர் சோழிய ஏனாதி என்னும் பட்டம் பெறுதற்குரியராவர். இவர்கள் வேற்று நாட்டின்மீது போருக்குச் செல்லும்பொழுது வெற்றிவாள், கொற்றக் குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம். இங்ஙனம் செய்தல் வாணாட்கோள், குடைநாட்கோள், முரசுநாட்கோள் எனப்படும். இவர் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும்பொழுது தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பர். போரினை மேற்கொண்ட பின்னாளிலே படைத்தலைவர்க்கும் படைகட்கும் பெருவிருந்து செய்து மகிழ்விப்பர். இதனை, "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை" என்பர் தொல்காப்பியர். 'வேந்தன் போர்தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை' என்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனமாய போர் முறைகள் பலவும் தொல்காப்பியப் புறத்திணையியல் முதலியவற்றான் அறியப் படும். இவை போல்வன ஏனைச் சேர பாண்டிய வேந்தர்கட்கும் பொதுவாவன என்க. இவர்கள் சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்னும் பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்னும் பட்டமும், வணிகர்க்கு எட்டி என்னும் பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும். இவ்வேந்தர்கள் பிறந்தநாள் ஒவ்வோராண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். அப்பொழுது இவர்கள் மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யாதொழிந்து, சிறைவிடுதல், இறைதவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச் செயல்கள் செய்யா நிற்பர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும். இங்ஙனமே இவர்கள் முடிபுனைந்த நாள்தொடங்கி ஒவ்வோராண்டினும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடிபுனைந்து நீராடுதலின் மண்ணுமங்கலம் எனப்படும். இவற்றை முறையே, " சிறந்த நாளணி செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்" "சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்" எனத் தொல்காப்பியர் கூறுதல் காண்க.  18. கைத்தொழில், வாணிகம் இனி, அந்நாளிலே சோணாட்டில் கைத்தொழில்களும் வாணிகமும் எங்ஙனம் பல்கியிருந்தனவென்பது கரிகாலன் வரலாறு கூறிய வழிக் காணப்படும். அங்கே 'அரியவும் பெரியவும்' எனச் சுருங்கக் கூறியவற்றை இங்கே காட்டுதும். சிலப்பதிகாரம் ஊர் காண்காதை உரையில் அடியார்க்கு நல்லார் கூறிய அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும், கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும், மலையாரம், தீமுரண் பச்சை, கிழான் பச்சை, பச்சைவெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத்தொகுதியும், அம்பரேச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புழுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நிரியாசம், தைலம் எனப்பட்ட வாசத்தொகுதியும், மலைச்சரக்கு, கலை, அடைவுசரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வாராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோசு, சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கருப்பூரத்தொகுதியும் புகார் முதலிய நகரங்களில் வாணிகம் செய்யப்பட்டவாதல் ஒருதலை.  19. கல்வி இம்மன்னர்கள் காலத்தில் அரசியல் முதலிய யாவும் தமிழ் மொழி வாயிலாக நடைபெற்று வந்தமையாலும், பாண்டி நாட்டிலும் சோணாட்டிலும் சங்கங்கள் நிறுவித் தமிழ் ஆராயப் பெற்றமையாலும், மூவேந்தர்களும் வள்ளல்களும் வரையாத வண்மையுடன் புலவர்களை மிக மதித்துப் போற்றிவந்தமை யாலும் தமிழ்க் கல்வியானது மிக உயரியநிலையில் இருந்தது; புலவர் பல்லாயிரவர் திகழ்ந்தனர்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணமாகிய அகத்தியமும், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், பனம்பாரம், பன்னிருபடலம், அவினயம், காக்கைபாடினியம், சிறு காக்கைபாடினியம், சங்கயாப்பு, நற்றத்தம், பல்காயம், மயேச்சுரம், வாய்ப்பியம், இறையனார் களவியல் முதலிய இயற்றமிழ் நூல்களும், பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், பெருங்கலம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு முதலிய இசைத்தமிழ் நூல்களும், பரதம், குணநூல், கூத்தநூல், முறுவல், சயந்தம், செயிற்றியம், பரத சேனாபதீயம், மதிவாணனார் நாடகத்தமிழ்நூல் முதலிய நாடகத்தமிழ் நூல் களும் தழைத்து விளங்கின; எண்ணிறந்த பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்டன தலைச்சங்கத்தாராலும், கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலையகவல் என இத்தொடக் கத்தன இடைச் சங்கத்தாராலும், நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், பத்துப்பாட்டு, முத்தொள்ளாயிரம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்று இத்தொடக்கத்தன கடைச் சங்கத்தாராலும் பாடப்பெற்று நிலவின; தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவரால் திருக்குறள் என்னும் செந்தமிழ்த் திருமறையும், சேரமுனியாகிய இளங்கோவடிகளால் சிலப்பதிகாரமும், கூலவாணிகன் சாத்தனாரால் மணிமேகலையும், கபிலர் முதலிய நல்லிசைப் புலவர்களால் இன்னா நாற்பது முதலிய ஏனைய கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பெற்று ஒளிர்ந்தன; வானநூல், எண்ணூல், மருத்துநூல் முதலிய கலைகளும் வழக்கில் இருந்தன. மற்றும், அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழுவகையாற் பகுக்கப் படும் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற்கருவிகளும், வங்கியம் என்னும் துளைக்கருவியும், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரப்புக்கருவிகளும், கஞ்சக்கருவியும் பயிலப் பெற்று வந்தன; ஆயிரம் நரம்புடைய ஆதியாழ் என்பதும் இருந்தது; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையானும் பிறக்கும் பண் விகற்பங்களும், பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும் தமிழ்ப்பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன; வேத்தியல், பொதுவியல் என்னும் இருதிற முடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, கலிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்னும் விநோதக் கூத்து களும், அம்மனை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சி, வாரிச்சி, சிந்துப்பிழுக்கை, குடப்பிழுக்கை, பாண்டிப் பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி முதலிய பல்வரிக் கூத்துகளும், பிறவும் நடிக்கப்பெற்று வந்தன. இப்பொழுது வெளிவந்துள்ள எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய கடைச்சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படும் புலவர் ஏறக்குறைய எழுநூற்றுவர் ஆவர். இவர்களில் ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, குன்றியாள், கழார்க்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண்ணுத்திரையார், பொன்மணியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளூர் நன்முல்லையார், பாரிமகளிர் முதலாயினார் நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலாராவர். இவற்றிலிருந்து அக்காலத்தே கல்வியில் இருபாலாரும் எங்ஙனம் சிறப்படைந்திருந்தன ரென்பது புலப்படும்.  20. சமயம் தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே உயிர் உடல்களை வெவ்வேறாக உணர்ந்திருந்தனர் என்பது தமிழ் எழுத்துக்களுக்கு உயிர் என்றும் மெய் என்றும் பெயரிட்டிருத் தலானே பெறப்படும். எவ்வளவு பழங்காலத்திற் சென்று நோக்கினும் தமிழர்கள் உலகம், உயிர், கடவுள் என்னும் மூன்று பொருளையும் உணர்ந்திருந்தமையோடு, உலகம் ஐம்பூதங்களாலாயதென்றும், உயிர்கள் வினைக் கட்டுடையன என்றும், கடவுள் வினைக் கட்டில் லாதவர் என்றும் அறிந்திருந்தனர் என்பது புலனாகின்றது. மிக்க பழமை வாய்ந்ததாகிய தொல்காப்பியத்தில், " காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம்" எனவும், " நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்" எனவும், " வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" எனவும் கூறப்பட்டிருத்தல் காண்க. மற்றும் அதிலே கடவுள் என்னும் பெயரும், கடவுளை வாழ்த்துதலும் கூறியிருப்பதினின்று பரம்பொருளானது எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இயல்பின தென்பதும், அதனை நினைந்து வாழ்த்தி வழிபடுதலே உயிர்கள் கட்டினின்றும் நீங்கி இன்புறுதற்குரிய நெறி என்பதும் அவர்கள் அறிந்திருந்தமை போதரும். இயல்பாகவே கட்டின்மையும், முற்றுணர்வும், வரம்பிலின்பமும் உடைய அம் மெய்ப் பொருளையே பல்வேறு காலங்களில் பற்பல தேயத்தினுமுள்ள மாந்தர்கள் தாம்தாம் அறிந்தவாறு வெவ்வேறு பெயரானும், வெவ்வேறு நெறியானும் வழிபட்டு வருகின்றனர்.தமிழ் நாட்டிலே குறிஞ்சிநில மக்கட்கு முருகக்கடவுளும், முல்லைநில மக்கட்குத் திருமாலும், மருதநில மக்கட்கு இந்திரனும், நெய்தல் நில மக்கட்கு வருணனும் தெய்வங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. திணைப்பிரிவும், திணைமக்கட் பிரிவும் இயற்கை யானவையே எனினும், திணைகட்குத் தெய்வ அடைவு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. கண்ணபிரான் ஆயர்பாடியில் வளர்ந்து ஆயர் களுடன் சேர்ந்து ஆவினம் மேய்த்தல் முதலிய விளையாடல்களைச் செய்து போந்த பின்னரே முல்லை மக்களிடத்து மாயோன் வழிபாடு சிறந்து விளங்கிற்று என்னலாம். ஆரியவேதங்களில் மிகுத்துக் கூறப்படும் இந்திரன் வழிபாடும், வருணன் வழிபாடும் அக்காலத்திற்றான் தமிழர்களாலே கைக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். முருகன் வழிபாடு அங்ஙனம் இடையில் உண்டாய தென நினைக்கக் காரணமில்லை. இனி, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப் படும் கடவுளர் நால்வர். நக்கீரர் பாடிய 56-ஆம் புறப்பாட்டிலே இடபக்கொடியும் கணிச்சிப்படையும் மணிமிடறும் உடைய சிவபெருமானும், வால்வளைமேனியும் கலப்பைப்படையும் பனைக்கொடியும் உடைய பலராமனும், நீலமணியொக்கும் மேனியும் கலுழக்கொடியும் உடைய கண்ணனும், மயிலாகிய கொடியும் மயிலூர்தியும் உடைய முருகவேளும் முறையே கூறப்பெற்றுளர். அதில், " ஞாலங் காக்கும் கால முன்பின் தோலா நல்லிசை நால்வர்" என இவர்கள் உலகத்தைப் புரப்போராகக் கூறியிருப்பதும் சிந்திக்கற்பாலது. கபிலர் பாடிய இன்னாநாற்பதிலும், " முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு" என இந்நால்வரும் இம்முறையே கூறப்பெற்றனர். சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில், " பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும்" எனவும், ஊர்காண் காதையில், " நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்" எனவும் காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் இந்நான்கு தேவர்களின் கோயில்கள் இருந்தனவாக முறையே கூறப் பெற்றுள. இவற்றில் நால்வரின் முறை முற்கூறியவாறன்றிச் சிறிது பிறழ்ந்துளது. எனினும், யாண்டும் சிவபெருமானே முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அன்றியும், அவர், பிறவாயாக்கைப் பெரியோன் எனவும், பகவன் எனவும் இறையோன் எனவும் தலைமை தோன்றக் கூறப்படுதலும் சிந்திக்கற்பாலது. வேறிடங் களில் இன்னும் வெளிப்படையாகவும் சிவபிரானுக்கு முதன்மை கூறப்பெற்றுளது. " நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவ னாக மாசற விளங்கிய யாக்கையர்" என மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிலும், " நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக" எனக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருத்தல் நோக்குக. இவ்வாற்றால், தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் முழுமுதற் கடவுளாகக்கொண்டு வழிபட்டு வந்த தெய்வம் சிவபெருமானே என்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் விளங்கும். பிற்காலத்துச் சமணவாசிரியர் முதலாயினாரும் தமிழ் வழக்கின் இவ்வுண்மையுணர்ந்தே தம் நூல்களில் பல கடவுளரையும் கூறுமிடத்துச் சிவபெருமானை முதற்கண் வைத்துக் கூறிப் போந்தனர். நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார் முதலிய உரையாசிரியன்மாரும் இந்நெறி பிழையாமலே உரைவரை வாராயினர். இங்ஙனமாயினும், பண்டைத் தமிழ் மக்கள் திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் நிறைந்த அன்புடைய ராகவே விளங்கினர். இன்னோரையும் உலகங்காக்கும் கடவுள ராகப் போற்றிப் புகழ்ந்தனரே யன்றி ஒரு சிறிதும் குறைவுபடக் கூறினாரல்லர். மற்றும், தொகை நூல்களின் கடவுள் வாழ்த்திலும், பரிபாடலிலும் சிவபிரானோடு வேற்றுமையில்லாத முதற் றெய்வங்களாகவே இவர்கள் பரவப்படுகின்றனர். இன்னும், சிவ வழி பாட்டினும் செவ்வேள் வழிபாடு விஞ்சியிருந்த தெனக் கூறுதலும் சாலும். பத்துப்பாட்டில் ஒரு பாட்டும் (திருமுருகாற்றுப் படையும்), பரிபாடலில் முப்பத்தொரு பாட்டும் முருகப் பிரானுக்கு உரியவாயிருத்தலே இவ்வுண்மையை விளக்கும்; முருகவேள் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பல சங்கச் செய்யுட்களிற் பயின்றிருத்தலும் அதற்குச் சான்றாகும். திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் முதலிய திருப்பதிகளைத் திருமுருகாற்றுப் படை கூறுகிறது. பரிபாடலும், பிற தொகைகளும் அவற்றைப் புகழ்ந்துரைக்கின்றன; சிலப்பதிகாரமும், " சீர்கெழு செந்திலும் 1செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்" என்றேத்துகின்றது. இனி, பழைய தமிழ் மக்களின் சமயக்கோட்பாடு இதுவெனக் கூறவே சோழர்களின் சமயமும் இத்தன்மைத் தென்பது கூறாமலே விளங்கும். சோழமன்னர்கள் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவோர் என்பதும், திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் பேரன்புடையார் என்பதும் கடைப்பிடிக்க. கரிகால்வளவன், கோச்செங்கண்ணர் என்னும் சோழ வேந்தர்கள் பற்பல சிவாலயத் திருப்பணிகள் செய்து போந்தமையும் அவர்கள் சமயம் சைவம் என்பதனை நிலை நிறுத்தும். சோழர்கள் இந்திரனுக்குப் பெரியதோர் திருவிழாச் செய்து போந்ததிலிருந்து அவர்கள் நாட்டின் நலங்கருதி இந்திரனையும் அன்புடன் பூசித்து வந்தனரென்பது பெறப்படும். அவர்கள் இந்திரனைப் பெருஞ் சிறப்புடன் கொண்டாடி வந்த காரணத்தால் அவனுடைய கற்பகத்தரு, வெள்ளையானை, வச்சிரப்படை என்பவற்றிற்கும் புகார் நகரிலே தனித்தனியாகக் கோயில்கள் ஏற்படுவன வாயின. இனி, வட நாட்டிற் செங்கோலோச்சிய பெருவேந்தனாகிய அசோகன் தன் மக்களாகிய சங்கமித்திரை, மகேந்து என்பவர் களுடன் புத்தமத போதகர் பலரைத் தேயந்தோறும் விடுத்து அம் மதத்தைப் பரவச் செய்தமையால், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ் நாட்டிலும் இடம் பெற்று வளரத் தொடங் கிற்று. சமண மதமும் அக்காலந்தொடங்கியே பரவலுற்றது என்னலாம். சிலப்பதிகாரம் முதலியன கொண்டு நோக்குமிடத்து, கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளிலே, தமிழ் நாட்டின் தலை நகரங்களாகிய புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, காஞ்சி என்னும் இடங்களில் சமண பௌத்த மதங்கள் மிக்க வலிமை யுற்றிருந்தமை புலனாகின்றது. அருகன் கோட்டமும், புத்த சைத்தியமும் நகர்ப்புறங்களில் கட்டப் பட்டிருந்தன; சமண முனிவர்களும், பௌத்தமுனிவர்களும் உறையும் பள்ளிகள் ஆங்காங்கிருந்தன; சாரணர்கள் இடையறாது மதபோதனை புரிந்து வந்தார்கள்; ஆடவர்களும் பெண்டிர்களும் மிகுதியாக அம்மதங்களிற் புகுவாராயினர். அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் நடுவுநிலையுடன் இத்தனைக்கும் இடந்தந்து அவர்களையும் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டற் குரியது. சிவன், திருமால் முதலிய தெய்வங்களை எள்ளுதலின்றியே அவர்கள் தம் மதங்களைப் போதித்து வந்தமையாற்றான் அவை விரைந்து பரவலுற்றன எனக்கருதல் பொருந்தும். இனி, அக்காலத்திலுள்ள புலவர்களாயினும் பிறராயினும் அவர்கள் தம்மின் வேறுபட்ட சமயத்தார்களின் உணர்ச்சியை மதித்து அவற்றைச் சிறிதும் இகழாது பாராட்டி வந்தனர் என்பதும், ஓர் குடும்பத்திலுள்ள பலர் தத்தம் விருப்பத்திற் கியைந்தவாறு வெவ்வேறு மதங்களைக் கைக்கொண்டும் தம்முள் வேற்றுமை சிறிதுமின்றி ஒழுகி வந்தனர் என்பதும் பழைய இலக்கியங்களி னின்றும் அறியலாகின்ற உண்மைகளாம். எச்சமயத்தையும் இகழாது போற்றும் பெருந்தன்மையுடைமைக்குத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரையும் இளங்கோவடிகளையும் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளல் தகும். வள்ளுவனார், " நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை" "பல்லாற்றால் தேரினு மஃதே துணை" என்றிங்ஙனம் எல்லா நூலினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறிச் செல்வர்; எம் மதத்தையும் இகழார். இளங்கோவடிகள், தம் தமையனாகிய செங்குட்டுவன் சிவபெருமான் திருவருளாற் பிறந்தவன் என்றும், அவன் இமயஞ் செல்லப் புறப்பட்டபொழுது உலகுபொதியுருவத் துயர்ந்தோனாகிய சிவபெருமான் சேவடியை முடிமேற் கொண்டு யாரையும் இறைஞ்சாச் சென்னியால் இறைஞ்சி வலங்கொண்டு போந்து யானையின் பிடரில் ஏறியருளி பின்பு ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டுவந்து சிலர் நின்று துதித்தகாலையில் தான் சிவபெருமான் திருவடியை மணிமுடி மேல் வைத்திருத்தலின் அதனை வாங்கித் தோளின்மீது தரித்தனன் என்றும் கூறுமுகத்தால் செங்குட்டுவன் சிவபெருமானையே முழுமுதலாகக்கொண்டு வழிபடுவோன் என்பது பெறவைத்து, தம்கொள்கையும் அதுவாதலை 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பது முதலியவற்றாற் குறிப்பிட்டனர். அன்னராயினும், அவர், கவுந்தியடிகள் அருக தேவனை வாழ்த்துதல் கூறுமிடத்து, " ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமம் அல்லது நவிலா தென்னா ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என் கண் அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது" என்றிங்ஙனமும்; வேட்டுவவரியில் அவர்கள் கொற்றவையைப் பரவுமிடத்து, " அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை" " ஆனைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்" என்று இவ்வாறாகவும்; ஆய்ச்சியர் குரவையில் அவர்கள் திருமாலைப் பரவுமிடத்து, " மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே" " பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே" என்று இத்தன்மையாகவும்; குன்றக்குரவையில் குறவர்கள் முருகவேளைப் பாடுமிடத்து, " சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே" " அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்தியவே லன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே" என்று இன்னணமும்; அவரவர் உணர்ச்சியுடன் கலந்து எல்லாத் தெய்வங்களையும் வாயார மனமார வழுத்துவாராயினர். இனி, சிவபிரான் திருக்கோயில் முதலாக முன் கூறிப்போந்த கோயில்களன்றி, மாசாத்தன், ஞாயிறு, திங்கள் என்னும் தெய்வங் கட்கும், திருக்கைலை, செவ்வேளின் கைவேல் என்பவற்றுக்கும் தனித்தனியாக இயற்றப்பெற்ற கோயில்கள் அந்நாளிலே நிலவின வென்க.  குறிப்புரை முகவுரை : மூவர் - மூவேந்தர். பொழில் - உலகம். நூக்க - தள்ள. துறக்கம்-சுவர்க்கம். அகத்து உழிஞையான்-பகைவர் மதிலை முற்றுகையிட்ட பொழுது உள்ளிருந்து மதிலைப் பாதுகாப்போன். ப.147. தெக்கணம்-தென்றேயம்; விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள நாடு. நிலைக்களன் - இடம். ப.148. அலங்கு-அசையும். உளை-குதிரையின் பிடரி மயிர்; குதிரையின் தலையாட்டம் என்னும் அணி. ஐவர்-பாண்டவர். சினைஇ-கோபித்து. பொலம்-பொன். ஈரைம்பதின்மர்-துரியோதனன் முதலிய நூற்றுவர். பதம்-உணவு. சேய்-முருகன் போலும் அரசன். ப.142. கபாடபுரம்-இடைச்சங்கம் இருந்த நகரம். ப.149. வழங்குவது - கொடுத்தற்குரிய பொருள். உள்வீழ்ந்தக் கண்ணும்-குறைந்த விடத்தும். தலைப்பிரிதல் - நீங்குதல். ப.150. கோல் நிலைதிரிந்து-அரசன் செங்கோல் கோணுதலுற்று. கழுமிய - நிறைந்த. கவான்-தொடை. ப.151. பதிஎழுஅறியா-பதியினின்றும் பெயர்தல் அறியாத. கருவனாய் - செருக்குடையவனாய்; காரணமானவனாகி என்றுமாம். மருவனாய் - மணம் போல்வானாகி. ப.153. கஞ்சம்-நீர். காந்தமன்-காந்தனாகிய அரசன். செங்கண் ஆயிரத்தோன்-இந்திரன். ஆரம் பூண்டோன்-பாண்டியன். ப.156. கழுவாய் - பிராயச்சித்தம். தூங்கியது-தொங்கியது. துணுக்குற்று-திடுக்கிட்டு. ப.157. சூழ்வுற - ஆலோசிக்க. உஞற்றுதல்-செய்தல். ப.158. ஆவின் கடைமணி-பசுவின் கடைக்கண். ப.159. விஞ்சையன் - வித்தியாதரன். ப.160. முசு - குரங்கின் ஒருவகை. முசுக்கலை - ஆண் குரங்கு. ப.161. விசிட்டம்-மேன்மை. ப.162. வெள்ளிவிண்டு - வெள்ளிமலை. இக்குவேள்-கரும்பு வில்லையுடைய மன்மதன். ஆரியை-உமாதேவியார். கூவிளம்-வில்வம். குயிற்றிய-செய்த. வேலை சுலாவும்-கடல் சூழ்ந்த. மேகவாகனன் - இந்திரன். அனிகம் - சேனை. சீகரம் - நீர்த்துளி. ப.163. ஆரல் - கார்த்திகை. துலையாம் திங்கள்-ஐப்பசி மாதம். அருத்தி-விருப்பம். ஒன்னலர்-பகைவர். ப.165. கொடுவரி-வளைந்த வரிகளையுடையது; புலி. ப.166. விழாக்கோள்-திருவிழாச் செய்தல். ப.169. வான ஊர்தி - தெய்வ விமானம். புன்கண் - துன்பம். ப.170. அலமரல் - வருத்தம். கனலி-சூரியன். கால் - காற்று. கொட்கும் - திரியும். மருள-வியக்க. ஏறு - எற்றுதல். தபுதி-அழிவு. சீரை-துலாம். மருகன்-சந்ததியில் வந்தோன். ப.173. குடகக்குவடு - குடகமலை. மழுவாள்நெடியோன் - பரசுராமன். கன்னி-துர்க்கை. கூஉய் - அழைத்து. உள்வரிக் கொண்டு - வேற்றுருக்கொண்டு. ப.174. உட்கும் - அஞ்சும். ஊங்கணோர் - முன்னோர். மேம்படீஇய - மேம்படுத்த. ப.175. உருமு - இடி. சுவல் - தோள். ப.176. வெண்ணி - கோயில்வெண்ணி என்னும் ஊர் எனக் கருதுவர். பறந்தலை - போர்க்களம். ப.177. அறிவர்- சோதிடர். ப.178. கரவால் - வஞ்சனையால். செவ்வி - தருணம். கொடுவரிக்குருளை - புலிக்குட்டி. பிணி - சிறை. காழ் - வயிரம்; வலிமை. ப.179. நண்ணார் - பகைவர். காப்பு - மதில். உரு-உட்கு; அச்சம். சக்கரம்-உலகம். அரிகால்-நெல் அரிந்த தாள். ப.181. செவியாறல்-கன்னபரம்பரை. கன்னிப்போர்-முதற்போர்; "காகுத்தன் கன்னிப் போரில்" என்பது கம்பராமாயணம். மீக்கூறல் - புகழ்தல். மொய்ம்பு - வலிமை. ப.182. மொய்வலி - மிக்கவலி. தொய்யா - இளையாத. சூடாவாகை - வாகை என்னும் இடம்; வாகைப்பூவின் நீக்குதற்குச் சூடாவாகை என்றார்; இது வெளிப்படை எனப்படும். ஆடு-வெற்றி. ப.182. பட்டி மண்டபம்-வித்தியா மண்டபம். ப.183. காமகோட்டம் - காமாட்சியம்மை கோயில். ப.185. முகரி - ஆரவாரஞ்செய்வோன். குயம் - அரிவாள். சூடுகோடாகப்பிறக்கி - நெல்லரிந்த சூட்டை மலையாக அடுக்கி. குவைஇய-திரட்டின. குப்பை-நெற்பொலி. கடுந்தெற்று மூடை - நெருங்கத்தெற்றினசேர்; மூடை - கோட்டையுமாம். சாலிநெல் - செந்நெல். ப.186. பரி-செலவு. கால்-வண்டி; காற்றுமாம். கறிமூடை-மிளகுபொதி. வாரி-வருவாய். காழகம்-பர்மா. கூலம்-நெல் முதலிய தானியங்கள். மயிர்-எலிமயிர். காருகமாக்கள் -பட்டுச்சாலியர். கஞ்சகாரர் - வெண்கலக்கன்னார். கருங்கை - வலியகை. ப.187. கண்ணுள் வினைஞர் - சித்திரகாரிகள். மண்ணீட்டாளர் -சிற்பாசாரிகள். நன்கலம் தருநர்-இரத்தினப் பணித்தட்டார். துன்னகாரர் - தையற்காரர். கிழி-சீரை. கிடை-நெட்டி. உறந்தை போக்கி-உறையூரைப்புதுவதாகச்செய்து. ப.187. புழை-சிறுவாயில். ஞாயில்-மதின்மேற் சூட்டு - புதை அம்புக்கட்டு. ப.190. வஞ்சிக்கோன்-சேர மன்னன். மாதிரம்-திசை. துழைஇ-துழாவி. ப.192. அமலை -சோற்றுத்திரளை. ப.193. கோயில்-அரண்மனை. ப.194. நொதுமலாளர்-குறளை கூறுவார். உடன்று-வெகுண்டு. வாய்-இடம். முறை-நீதி. முட்டாமல் - குறைவுபடாமல். "இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச்செயின்" என்னுங் குறளும், 'முட்டாமற் செலுத்தியவாறு மகனை முறை செய்தான்கண்ணும் கைகுறைத்தான் கண்ணும் காண்க' என்னும் பரிமேலழகர் உரையும் இங்கு நோக்கற்பாலன. ப.195. தார்-தூசிப்படை. சிலைக்கொடி சேரர்க்கும், கயற்கொடி பாண்டியர்க்கும் உரியன. ப.196. வீயா-கெடாத. துப்புஆகியர்என-வலியாக வேண்டுமென்று. கூழ்-பொருள். ப.197. கடும்பு-சுற்றம். யாணர்-புதுவருவாய். இமிர்ந்தன்ன - ஒலித்தாற்போன்ற. எழிலி - மேகம். வற்புலம்-மேட்டு நிலம். 'எறும்பு முட்டை கொண்டு திட்டை யேறினால் மழை பெய்யும்' என்பது வழக்கு. வீற்றுவீற்று-வேறுவேறு. தெற்றென - விரைய. ப.199. வேட்கோவர்-குயவர். ப.200. தீஞ்சேறு - இனிய செறிவு. ப.201. மிடைந்தன்று - மிடைந்தது; கட்டப்பட்டது. ப.202. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் - நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும். ப.204. புலன் - பாட்டு. பாடு-ஒசை. ப.207. மதிமருள் - சந்திரனை யொக்கும். ப.209. வல்சி-உணவு. புலம்ப-தனிமையுற. ப.211. யாங்கு ஆகியர்-எப்படி ஆயிற்று. மாண்ட-மாட்சிமைப்பட்ட. நிரம்பினர்-அறிவுநிரம்பினர். இளையர்-ஏவல் செய்வார். அதன்றலை - அதன் மேலும். ப.212. ஆன்று - நற்குணங்களால் அமைந்து அவிந்து - உயர்ந்தோாடத்துப் பணிந்து. அடங்கிய - ஐம்புலனும் அடங்கிய. உழுவல் அன்பு - எழுமையும் தொடர்ந்துவரும் அன்பு. ஆடு - அடுதல்; கொல்லுதல். கோடு கூடு - இரண்டு பங்கும் வந்து பொருந்திய. கையறுபு - செயலற்று. குறும் பறை - பெடை. ப.212. அடியுறை - பாதத்தின்கீழ் வாழ்வோன். ப.213. தக்கார் - நடுவுநிலையுடையார். எச்சம்-மக்கள். ப.214. பை அவிந்த-படம் ஒடுங்கிய. ப.215. கசடு-அழுக்கு. வேட்டம்-விருப்பம். தொய்யா-இருவினையும் செய்து வருந்தாத. ப.216. போற்றி-பாதுகாத்து. கந்து-பற்றுக்கோடு. ப.218. தொடை புணர்ந்து - கோவைபொருந்தி. ப.220. பண்டாரம் - பொக்கிஷம். சந்திர தீர்த்தம்-ஸ்ரீரங்கத்திலுள்ள சந்திரபுட்கரணி. ப.222. உதியன், வில்லவன், பொறையன் என்பன சேரர்க்குரிய பெயர்கள். அணங்கு படுத்து - துன்புறுத்தி.பற்றுக்கோட்பட்டு - சிறைபிடிக்கப்பட்டு, ப.224. அருண்டு-பயந்து. ப.226. வாரணம்-யானை, கோழி. ப.228. முகமன்-உபசாரம். ப.229. மண்ணுதல்-கழுவுதல். பால் - ஊழ். முனைவன் - முதல்வன். ப.233. கட்டு -பந்தம். மணிமிடறு - நீலகண்டம். முன்பு - வலிமை. ப.235. உவணச்சேவல் - கலுழன். நியமம், நகரம், கோட்டம் என்பன கோயிலைக் குறிக்கும் பெயர்கள். மழுவாள் நெடியோன் - சிவபெருமான். ப.238. ஆடக மாடம் - திருவனந்தபுரம் என்பர். சேடம் - பிரசாதம். ஒரு மூன்று அவித்தோன் - கா-12ம வெகுளிமயக்கங்களைக் கெடுத்தவன். ஐவரை -பஞ்சேந்திரியங்களை; செறலின்கண் வந்த திணைவழுவமைதி. கைவரை - கையகத்தே. பொருள்இல் - பயனற்ற. இளங்கிளை - தங்கை. பாய்கலை - மான். ஆய்கலை - நூல். மறைமேல் மறையாகி-நான்மறைக்கும் மறைப் பொருளாய். சோ அரண்-சோவாகிய அரண்; வாணாசுரனது கோட்டை. பௌவம்-கடல். ப.239. சூர்மாதடிந்த - சூரபன்மனாகிய மாமரத்தினைத் துணித்த. பிணிமுகம் - முருகப்பெருமான் ஏறும் யானை; மயிலும் ஆகும். வெள்வேல் - வெள்ளொளி பொருந்திய வேல்.  நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) 1. தொல்காப்பியரை ஜமதக்கினி முனிவரின் புத்திரரென நச்சினார்க்கினியர் கூறுகின்றார்; ஜமதக்கினியைப்பற்றி யெழுந்த புராணப் பகுதிகளில் அங்ஙனம் கூறப்படாமையானும், ஏனைத் தமிழ் நூல் உரையாசிரியர்களும் கூறிற்றிலராகலானும் நச்சினார்க்கினியர் கூற்றுத் தெருளற்பாலதன்று. அவருரையே பற்றி யெழுந்த பின்னுளோர் கூற்றுக்களும் அன்ன. 1. திருவிளையாடற் புராணத்து அகத்தியனார் நக்கீரனார்க்கு இலக்கணமுபதேசித்தா ரெனக் கூறும் கூற்று சரித வாராய்ச்சிக்கு ஒத்ததன்று. தவயோகம் கைவரப்பெற்ற அமரமுனியாகிய அகத்தியர் ஏனைச் சாமானிய மனித்தர்போலாது பன்னெடுங் காலம் உயிர்வாழ்ந்திருத்தல் கூடுமெனவும், அவர் இற்றைக்கும் நம்மனோரறியாவாறு யாண்டேனும் இருத்தல் அமையுமெனவும் கொள்வே மெனின் அதனை மறுக்க யான் முன்வந்திலேனென்க. 1. " மன்மருங் கறுத்த மழுவா ணெடியோன் றன்முன் றோன்றல் தகாதொழி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழி னண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினு மெஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையிற் பரசு ராமனின் பால்வந் தணுகான் அமர முனிவன் அகத்தியன் றனாது துயர்நீங்கு கிளவியின் யான்றோன் றளவுங் ககந்தன் காத்தல்' - மணிமேகலை, சிறைசெய் காதை 25-37. 2. ‘ செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட வமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் - கவிழ்த்த காவிரிப் பாவை' - மணிமேகலை, பதிகம் 9-12. 3. ‘ வடவேங்கடந் தென்குமரி' - தொல். பாயிரம். 4. ‘ கல்பொரு திரங்கு மல்லற்பேர் யாறு' - புறம் 192. 5. ‘ முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே' - புறம் 9. 1. ‘ வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' - சிலப்பதிகாரம், காடுகாண் காதை 18-20. 1. ‘ ததோஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்டியனாம் கதாத்ருக்ஷ்யத் வாநரா:' - வால்மீக ராமாயணம், கிஷ்கிந்தாகாண்டம். 1. செந்தமிழ், தொகுதி 6-ல் பக்கம் 58 காண்க. 1. ‘ அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்' 2. ‘ மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய அறிவன் றேயமும்' 3. ‘ நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்' - இவை தொல். புறத்திணையியல் 20. 1. ‘ தோழிதாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப' தொல். கற்பியல் 52. 2. ‘பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி' தொல். செய்யுளியல் 198. 1. பல்லவரையும், கள்ளர், மறவர் முதலாயினாரையும் கொள்ளைக் கூட்டத்தார் என்று இவர் கூறுவது சிறிதும் பொருந்தாவிடினும், இவர் கூற்றில் உண்மையிருப்பது காணலாம். 1. 24.-வது இலச்சினையிட்ட திருவிளையாடல். 1. பன்றிகொண்டான் என்பதே திருத்தமான பெயர். பன்றிநாட்டைக் கைப் பற்றியவன் என்பது பொருள். 1. இப்பெயர்கள், திருச்செங்கோடு உதய திவாகரன் பத்திராதிபரும், கொங்கு மண்டல வரலாற்றை நன்கு ஆராய்ந்துள்ளோரும் ஆகிய திருவாளர் தி.அ.முத்துசாமிக் கோனார் அவர்கள் அன்புடன் தெரிவித்தவை. 1. இப்பட்டயம் கலியப்தம் 4434 சாலிவாகன சகாப்தம் 1255 விக்கிர தைமீ 15 திங்கட் கிழமை, பூச நக்ஷத்திரம், பிரதமை திதியில் எழுதப்பட்டதாக அதிலிருந்து தெரிகிறது. 1. முத்திரிய வகுப்பினர்க்கு அம்பலகாரர் என்பது குலப்பெயராக வழங்குவதுண்டு. கள்ளர் வகுப்பினரில் கிராமத் தலைவர்க்கு மாத்திரமே இப்பெயர் வழக்குண்டு. 1. *இங்கே கூறிய வரலாறுகளைப் பின்வரும் பாடல்கள் சுருக்கமாக உணர்த்துவன: " மிக்க வின்னது நின்றிட முன்னம் வெள்ளி விண்டுவில் விண்டொடு காவில் இக்கு வேளை யெரித்த நுதற்கண் எம்பி ரானுமை யோடு மிருப்ப அக்க ணத்தின் முசுக்கலை யொன்றங் காதி மீதினும் ஆரியை மீதும் தக்க வில்லுவ நல்லிலை சிந்தத் தையல் சீறலும் ஐயன் விலக்கி." " கூவி ளத்தழை கொண்டெமை யிங்ஙன் கோதில் பூசை குயிற்றிய பண்பால் நீவ ளைந்திட வேலை சுலாவும் நீள்பு விக்கர சாகுதி யென்றே மாவ ளைக்கை யிடத்த னிசைப்ப வைய கத்திடை வந்து பிறந்தே காவ ளைத்த வயற்கரு வூர்வாழ் காமர் சேர்முசு குந்த னிடத்தின்." " மேக வாகனன் ஒற்றர் படர்ந்தே வென்றி வேலவன் மன்றல் விளம்ப ஓகை யெய்தி யெழுந்தனி கத்தோ டும்பர் நாத னுறுங்கிரி யுற்றான் சீக ரம்செறி சாகர மண்ணிற் சேரு மன்னவர் யாரு மடைந்தார் மாக நேரிடை மாதர்கண் மைந்தர் வாவி காவி லுலாவி மகிழ்ந்தார்." " கூறிது நின்றிட வேறொரு நாள்முசு குந்த னெனுந்தலைவன் மாறுத லற்ற விசிட்ட மடைந்த வசிட்டனை வந்துபணிந் தாறு முடித்த வருட்கட னல்கிய ஆறு முடிப்பெருமளான் வீறு புகழ்ப்பெறு விரத முரைத்தரு ளென்று விளம்புதலும்." " வெள்ளி யெனுந்தினம் ஆரல தன்றியும் வென்றி யுறுந்துலையாம் ஒள்ளிய திங்களி லிந்து வளர்ந்திட வோங்குமுன் வைகல்முனா எள்ளரி தாமறு நாளு மெழிற்பர சேந்திய வேந்தல்தரும் வள்ளல் மகிழ்ந்தருள் விரத மெனப்புகழ் மாதவ னோதியரோ." " அன்ன தியற்றலும் அன்னது தன்னி லருத்தி பொருத்திமுடித் துன்னரு மேன்மை யடைந்தவர் தம்மையு மோதினன் ஓதுதலும் இன்னலில் மன்னவ னப்படி பற்பக லிப்புவி யிற்புரியா ஒன்னலர் வந்து பணிந்திட வைய முவந்து புரந்தனனே" " மேவொரு நாள்தனின் மண்ணுல கத்தினும் விண்ணுலகத் தணுகித் தேவர் வணங்குறு கோவை வருத்து திருக்கவு ணப்படைவென் றோவில் பெரும்புகழ் ஏழு விடங்கரை யொண்புவி மீதுகொணர்ந் தேவரு மன்பொடு காண விருத்தி யிருங்கதி யுற்றனனே." (கந்தபுராணச் சருக்கம், தேவகாண்டம் 12, 13, 14, தக்ஷகாண்டம் 178, 179, 180, 181.) 1. *ஸ்ரீமத் M. V. இராமனுஜாச்சாரியார் அவர்கள் பதிப்பித்த வியாசபாரத மொழிபெயர்ப்புக் காண்க. 1. " மன் மருங் கறுத்த மழுவா ணெடியோன் தன்முன் றோன்றல் தகாதொழி நீயெனக் கன்னியேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினு மெஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசு ராமன்நின் பால்வந் தணுகான் அமர முனிவ னகத்தியன் றனாது துயர்நீங்கு கிளவியின் யான்றோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பதிக்கிட் டீங்கு உள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்" (மணிமேகலை 22:25-39) ** இவ்வரசனைப்பற்றி, திருவையாற்று வடமொழிக் கல்லூரித் தமிழ் ஆசிரியர் திருவாளர் L .உலகநாதப் பிள்ளையவர்களால் சோழர் கரிகாற் பெருவளத்தான் என்னும் பெயருடன் ஓர் நூல் எழுதப் பெற்றுளது. 1. " ஆட்ட னத்தி நலனயந் துரைஇத் தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின் மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த ஆதி மந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்" (அகம், 222.) " மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால்காண ... ... ... புனனயந் தாடும் அத்தி யணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு" (அகம், 376.) 1. பழைய காலத்தில் இறந்தவர் உடலைத் தாழியாற்கவித்து அடக்கம் செய்தல் வழக்கம்; இது முதுமக்கட்டாழி எனப்படும். 1. சேரன் செங்குட்டுவன் பக்கம் 102, 103. 1.*" புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்" என்னும் குறளுரையில், ‘கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர்நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கு மென்பதாம்' எனப்பரிமேலழகர் உரைத்தலும் காண்க. 1. தமிழகத்திலுள்ள நாடுகளின் பிரிவுவகைகள் யானெழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து காட்டப் பெற்றுள்ளன. 1. செங்கோடு என்பது திருச்செங்கோடு என்றும், வெண்குன்றம் என்பது சுவாமிமலை என்றும் கூறுவர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். ஏரகம் மலைநாட்டகத்தொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர்.