உரைவேந்தர் தமிழ்த்தொகை 25 செந்தமிழ் வளம் - 2 (கட்டுரைகள்) ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 25 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+ 536 = 544 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 340/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் உள்ளடக்கம் பதிப்புரை iii நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் v நூலடக்கம் செந்தமிழ் வளம் - 2 1. அறிவு 1 2. உழைப்பு 16 3. வரனென்னும் வைப்பு 27 4. பிறப்பொக்கும் : சிறப்பொவ்வா 45 5. யாதும் வினவல் 60 6. மையீரோதி மடநல்லீரே 67 7. பொருண்மொழி 78 8. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி 90 9. தமிழ் மகளிர் 113 10. ஏட்டில் இல்லாத இலக்கியம் - பழமொழிகள் - 131 11. சமண முனிவர் தமிழ்த் தொண்டு 139 12. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு 153 13. தமிழகம் - வடவெல்லை 165 14. பழந்தமிழர் நாகரிகம் 179 15. புறநானூறு காட்டும் அரசியல் 191 16. தமிழர் போர்த்திறம் 204 17. புறப்பாட்டுணர்த்தும் தமிழ்வாழ்வு 214 18. பழந்தமிழர் சமயநிலை 232 19. தமிழரிடையே நிலவிய இதிகாச புராணங்கள் 253 20. சங்க காலம் 268 21. நல்லிசைப் புலமைச் சான்றோர் 277 22. கோனாடு 290 23. மதுரைக் குமரனார் 322 24. முடிவேந்தர் தொடர்பு 330 25. செல்வர் தொடர்பு 352 26. பெருங்கோப் பெண்டு 365 27. கோமகள் கண்ணகி 377 28. வணிகர் மகள் கண்ணகி 409 29. துறவி மணிமேகலை 435 30. காரைக்காற் புனிதவதி 465 31. பாட்டங்கால் வந்த பயன்* 476 32. தமிழின் தற்கால நிலையில் தமிழ் மகளிர் செயற்குரிய பணிகள் 483 33. சங்ககாலத்துச் செந்தமிழ்ச் செல்வி 495 34. இலக்கிய வுண்மை 528  1. அறிவு அறிவாவது சொல்வாரது இயல்பு நோக்காது சொல்லப் பெறும் பொருளின் பயனோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வதாம். சொல்வார் தாம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், நட்டோர், பகைவர் எனப் பல்வகையினராதலோடு, முக்குண வயத்தராதலானும், இவருள் ஒவ்வொருவரிடத்து ஒவ்வொன்று ஒரோ வழிக் கேட்கப் படுதலானும். அவரது இயல்பு நோக்காமை வேண்டும் என்பது புலப்படும். அன்றியும், வேண்டப்படுவது பொருளேயன்றிப் பிறிதன்று. ஆகவே "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பதறிவு" என்னும் தமிழ்மறை துணியப்பட்டது. படவே, சொல்வாரது இயல்பு நோக்கிப் பொருளின் பயன்காணாது ஒழிதல் அறியாமை என்பதும், அதனாலெய்தும் பயன் துன்பமேயென்பதும் பெறப்படுகின்றன. இவ்வுண்மை கீழ்க்காணும் பொருட் கதையில் விளங்குதல் காண்க. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பருதியஞ் செல்வன் கீழ்க்கடல் முகட்டில் எழுமுன், வெள்ளி முளைப்ப விடியல் வந்தது; ஓதல் அந்தணர் பாடினர்; கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; இருஞ்சேற்றகன்வயல் முட்டாட்டாமரைத்துஞ்சி, வைகறைக் கட்கமழும் நெய்தலூதி. எற்படக் கண்போல் மலர்ந்த காமர்சுனை மலரை அஞ்சிறைவண்டின் அரிக்கண மொலித்தன. இவற்றினிடையே, முகையவிழ்ந்த முருக்கலரொன்றை வண்டினஞ் சூழ்வந்து முரலாநிற்ப, "ஐயகோ! ஐயகோ!!" எனும் அழுகுரலொன்று, அவ்வலர்க்கீழ் விளங்கிய அழகிய தளிரிடையெழுந்து, கேட்போர் செவிப் புலம்புக்கு, அவர் தம் மனத்திடை அருளூற்றெழச் செய்தது. இங்ஙனம், எவ்வுயிர்க்கும் இன்பக் காட்சி நல்கும் இளஞாயிறு தோன்றுங்காலைத் தோன்றிய துன்பக் காட்சி ஆண்டுற்ற உயிர்ப் பொருளனைத்தும் மருளச் செய்தது. யாண்டும் அமைதி நிலவிற்று. சிறு சுரும்புந் தேனாடிற்றன்று. புனையாவோவியம் கடுப்ப யாவும் போந்தனவாக, மீட்டும் அப்புலம்பிசை கல்லும் புல்லும் கனிந்துருக எழுந்தது. ஓசையியலுணர்ந்தாருளராயின், அது, இறந்துபடு நிலைக்கண் பல்பொறிப் பூச்சியொன்றிடும் மெல்லிசை யாமென வுணர்வர். மற்று, யான் அவ்வறிவிலேன் ஆதலின், நெடுங்காலந் தாழ்த்துப் பின்னரே யுணர்ந்தேன். உணர்ந்தேன், அவ்வோசையை நுனித்துக்கேட்குமவா மீக்கொண்டேனாக, ஆண்டெழுந்த பொருண்மொழி பின் வருமாறு கேட்டேன். அது, "இருநிலம்புரக்கும் இறைவ! எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் இயவுள்!! இச்சினைகளை யான் ஈண்டு இட்டிறத்தல் ஒல்லுமா! ஆ! இவை தோன்றிய நாழிகைகூட இன்னும் கழிந்ததின்றே! அந்தோ! இதற்குள் யான் இறக்கின்றேனே! இன்னாதம்ம வுலகம், இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே என்றெல்லாம் பெரியோர் கூறுதல் உண்மையே! இறைவ! இறத்தற்குப் பணித்த நீ எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யளித்தல் எற்றுக்கோ? இது முறைகொல்! யான் இறந்துபடின், இவ்வருமந்த சினைகளைப் புரக்கவல்லுநர் யாவர் கொல்லோ? உயிர்க்குணவளித்தற்கு நீ உளையெனினும், ஒரு பற்றுக்கோடுமின்றி உயிர் நீத்தற்கன்றே என் உளம் உளைகின்றது! அந்தோ! ஏ! உலகே! என்னே நின் இயற்கை!! உனைத் துறக்கும் நிலைக்கணுற்ற என் உள்ளத்தை இங்ஙனம் தளைசெய்தலே நின் பண்புபோலும்!! நன்று! நன்று! அம்மவோ! புலன்கலங்க பொறி கலங்க நெறிமயங்குகின்றதே! அறிவு அழிகின்றதே! ஆவியும் அலமருகின்றதே!! ஐயகோ! யாரொடு நோகேன், யார்க் கெடுத்துரைப்பேன்! ஆசா கருளினர் யார்கொலோ. ஆ!..." என்பது இங்ஙனம் கூறிப் புலம்பிக்கொண்டிருக்கும் பல்பொறிப் பூச்சி (வண்ணத்துப்பூச்சி) ஒன்றினருகே பச்சிலைப் புழுவொன்று போந்து, இவ்வுரைகேட்டு எரியிடையிழுதென இனைந்து நின்றது. கண்ட அப்பூச்சி "உடைகலப்பட்டோர்க்கு உறுபுணை தோன்றி யாங்கு, இடர்ப்படும் என் முன்றோன்றிய அன்னாய்! வாழி! ஆருயிர் அலமர அழுது சாம்புவேனுக்கு நீ ஓர் உதவியருளல் கூடுங்கொல்லோ! உற்றுழி உதவுதல் உரவோர் கடனாதலின், உன்னைக் காண்டலும், உதவி நாடிற்று என் உள்ளம்" என்றலும், புழுவும் "பிறருறு விழுமம் துடைத்தல் சால்பெனப் பெரியோர் கூறுவர். அவர் வழி நிற்றல் கற்பவை கற்பதின் அழகு. ஆதலின், நின்மாட்டு எய்திய துன்பம் யாது? " கடல்பாடவிந்து தோணி நீங்கி நெடுநீ ரிருங்கழி கடுமீன் கலிப்பினும்." இயன்றன செய்தற் கிடையேன். கூறுக" என்றது. இக்கூற்று பூச்சியின் செவிப்புலம்புக்கதும், அது ஒருவாறு மனந்தேறி, "பைந்தழை வாழ்க்கை பரித்தோய்! ஆவியோ நிலையிற் கலங்கியது. அது என் யாக்கையின் அகத்ததோ புறத்ததோ அறியேன். இந்நிலையில் இறைவன் எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யருளி யுள்ளான் அவற்றையும் அறிவிலியாய யான் இம் முருக்கிலையி லிட்டுள்ளேன். அவற்றை எனக்குப்பின் களைகணாய் நின்று புரப்பார் ஒருவரையும் காணாது மறுகுகின்றேன். இவற்றையருளிய இறைவர்க்கு அளித்தல் கூடும் என்பது உறுதியே எனினும், என் உள்ளந்தடுமாறுகின்றது. ஆகலின், உற்றாரின்றி யுயங்கும் என் முன் ஒருதனித்தோன்றிய நீயே களைகணாய் நிற்பாய்கொல்! அங்ஙனம் நிற்றல் உனக்கு அரிதன்றே. அன்றியும் ஆவி துறக்கும் நிலையிலிருக்கும் என்னுடைய இப்புல்லிய வேண்டுகோளை மறாது ஏற்றருள்க. இது நினக்குப் பேரறமாகும்," என்றது. புழு : ஆம். பேரறமே. ஆயினும் இவற்றை யான் புரத்தல் யாங்ஙனம்? இவையும் என் இனத்தைச் சார்ந்தன வல்லவே! பூச்சி : சாராமையால் வரும் குற்றமொன்றுமில்லை. யான் கூறும் உணவைமட்டில் நீ அருத்தியொடு அளித்துவரின், ஒருவகை இடையூறும் நேராது. இது முற்றும் உண்மை. புழு : அற்றேல், உரைத்தருள். நின் உடல் நிலையும் குன்றி வருகின்றது. காலம் தாழ்த்தற்க. பூச்சி : கூறுவல். செடிகளின் இளந்தளிரும் பனிநீரும் தாம் அவற்றிற்குத் தக்க உணவாம். வேறு எவையேனும் அளிக்கப் பெறின், அவை உண்ணாது இறந்துபடும். ஆதலின் இக்கூறிய உணவை...யே...அ... என்று கூறிக்கொண்டே உயிரை விடுகின்றது. கண்டுகலங்கிய புழுவிற்கு அச்சினைகளையும், அவற்றிற் கெனப் பணிக்கப்பெற்ற உணவையும் நினைத்தொறும் உள்ளம் நெக்குருக, நினைவு தடுமாறலுற்றது. இது இயற்கையே. செத்தாரைக்கண்டு சாவாரும் வருந்துதல் இயல்பன்றே! தாந்தாமும் தம் ஆற்றலறிந்தன்றோ ஒவ்வோர் பணியை ஆற்ற முன் வரல் வேண்டும். எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கன்றோ! நிற்க, செயக்கடம்பூண்ட பணியையெவ் வாற்றானும் செய்து முடித்தலும் வேண்டுமன்றோ. இறந்ததனை எண்ணுதலால் இனிப் பயன் யாதேனும் எய்துமோ? மெய்வருத்தம் பார்த்தல், பசிநோக்கல், கண்டுஞ்சல், செவ்வியருமை பார்த்தல், அவமதிப்புக் கொள்ளல் ஆகிய இவற்றைக் கருமமே கண்ணாயினார் கண்ணாரன்றே. சிறுசினை புரக்கும் பெரும்பணி மேற்கொண்ட புழு ஒருவாறு தேறி, ''ஐயகோ! இவற்றை யான் எங்ஙனம் புரத்தல் கூடும்? இளந்தளிரும் பனி நீரும் எவண் கிடைக்கும்? கிடைப்பினும் யான் எவ்வாறு கொணர்வேன்? இச்சினைக்குட்பிறங்கும் பூச்சிகள் பறக்குந்தன்மைய; யான் அவ்வினத்தைச் சாரேன். இயற்கையான் மாறுபட்டயான் புரத்தற்கு உடன்பட்டேனே! என்னே என் அறிவிருந்தவாறு!! இவற்றினின்றெழும் பூச்சிகள் சின்னாட்களிற் பறந்தெழுமே, அஞ்ஞான்று யான் அவற்றை எவ்வாறு அடக்குதல் கூடும்! ஆ! என்ன காரியம் செய்தேன்! 'ஆய்ந்திடும் உணர்வொன்றில்லார் அலமால் இயற்கை அம்மா!' எனப் பெரியோர் கூறுதல் எத்துணை யுண்மையுடைத்து," என வீழ்ந்து சோர்ந்து, பின்னர்ச் சிறிது தெளிந்து, ''இனியான் இங்ஙனம் வருந்துதல் கூடாது. இதனை முன்னரே நன்கு ஆராய்ந்திருத்தல் வேண்டும் 'விழையாவுள்ளம் விழையுமாயினும்... தற்றகவுடைமை நோக்கி, மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல்' என்பர் நல்லிசைச் சான்றோர். கழிந்தன பற்றிக் கலங்கு துயருழத்தல் என நலத்திற்கே கேடுதரு மொன்றாகலின்,. செய்தல் மேற்கொண்ட இப்பணியை, அறிவின் மிக்கார் பொருளுரை கேட்டுத் தக்கன தேர்ந்து செய்வல். இதுவே யான் இனிச் செயற்பாற் றன்றிப் பிறிதொன்று மன்று" எனத் தேர்ந்து நின்றது. அக்காலை, தேனூண் சுவையினும் ஊனூண் சுவையே உயிரினும் விரும்பிவாழும் பூஞை ஒன்று ஆயிடைப் போதந்தது. கண்டபுழு அதனை யளவாளாவித் தான் மேற்செயற்கேற்ற விரகினையறிய அவாக்கொண்டது. கொள்ளினும், அதன் உளத்தச் சிறிது நாழிகைக்குள் அப்பூஞை தன் வேண்டுகோட்குச் செவி சாய்க்காது, தனக்கும். தன்னுழைக் கையடையாத் தரப்பெற்ற சினைகட்கும் ஊறிழைக்கினுமிழைக்கும் என்னும் ஓர் எண்ணம் எய்த அது அம்முயற்சியைக் கைவிட்டது. கைவிடலும், போன வெஞ்சுரம் புளியிட வந்தாங்கு, மறைந் திருந்த வருத்தம் மீட்டும் அதன் மனத்தே தோன்ற, அது சிறிதுதேறி, தன் மனக்கியைந்த அறவுரை கூறும் ஆற்றலுடை யார் இனியாவருளர் என்னுமோர் ஆராய்ச்சியை ப் பின்னரும் செய்தல் தொடங்கிற்று. அவ்வுழிக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தென, வானிற் பறந்துழலும் வன்சிறைப்பருந் தொன்று அதனருகே சென்றது. இதனை யப்புழுக்காண்டலும், தன் மனத்திற் பலதிறப்பட்ட எண்ணங்களைக் கொண்டது. அவற்றுள், "இப்பருந்தினும் அஃகி யகன்றவறிவுடையார் யாவருளர்? மனத்தானும் எண்ணற்கியலாத சேணிற் பறத்தலும், ஆண்டிருந்தே, மண்மீதியங்கும் திற்றிகளை (ஈண்டுத் தின்னற்குரிய சிற்றுயிர்களை யெனக் கொள்க)க் கண்டு, அவற்றின்மேற் குறிபிழையாது ஞெரேலெனப் பாய்ந்து படிந் துண்டலுமாய உயரிய செயல்களைச் செயல்வல்லார் வேறொரு வருமில ரன்றே! ஆகலின், இதனிடை, யான் எனக்காவனவற்றை யுசாவியறிகின்றேன்" என்பது மொன்றென்க. இங்ஙனம் எண்ணி முடிவுசெய்து கொள்ளும் அப்புழு விருந்த புலத்திற் கயலிருந்த வயலொன்றில் வேறு பருந்தொன்று வாழ்ந்து வந்தது. அதற்கும் அப்புழுவிற்கும் நெருங்கிய நட்பு முண்டு. அந்நட்புரிமை யேதுவாக, புழு, அப்பருந்தினை வரவழைத்துத் தான் அச்சினைகளை வளர்க்கு மாற்றைத் 'தெரிந்து கோடலை நாடி நிற்ப, செல்வக்காலை நிற்பினும் அல்லற்காலை நில்லா மாட்சியமைந்த கேண்மைசால் பருந்தும் காகதாலியமாகப் புழுவைப் பார்த்துச் செல்வான் வந்தது. வரக்கண்ட புழுவும் கழிபேருவகைகொண்டு, ''அன்பு கெழுமிய நண்பே! வருக இன்பங்கனியும் நின்முகங்கண்டும் யான் இன்பமின்றியிருத் தலை யறிதியோ? இங்ஙனமிருக்கு மெனக்கு ஒரு மாற்றுக்கூறல் வல்லை கொல்லோ?" என்றது. பருந்து : அறிவல். மற்று நின்னையுற்ற துன்பம் ஒன்றுண்டென அறிந்தனனேயன்றி அது இத்தன்மைத்து, இவ்வேது வுடைத்து என்பவன வற்றை யறியேனாகலின், மாற்றுக்கூறல் யாங்ஙனம் இயலும்? புழு : நன்று. கேட்டிசின். எனக்கு நின்னொப்ப உயிர்த் தோழமை பூண்ட சேடப்பூச்சி (வண்ணத்துப்பூச்சி) யொன்று ஈண்டுச் சின்னாட்களுக்கு முன் வாழ்ந்து வந்தது. அதன் வழியெச்சமே ஈண்டு நீ காண்குறும் பச்சிளஞ் சினைகள். இவற்றை அதுதான் இறக்குங் காலத்து ஈன்று, என்னையும் புறந்தருமாறு பணித்ததுமன்றி, இவை குடம்பை தனித் தொழியப் பறந்தேகு நாள்காறும் தற்குணவளித் தோம்புதல் செய்யுமாறும் கூறியகன்றது. அவ்வோம் படையேற்ற யான் அங்ஙனம் செய்யுமா றறியாது அலமருகின்றேன். பருந்து : என்னை? புழு : அவ் வாற்றினை யான் அறியேனாகலின். பருந்து : என் அறியாய்? புழு : அப்பூச்சியோ பறக்குமியல்பிற்று; மற்று, யானோ ஊர்வனவற்றைச் சார்ந்த புல்லிய புழுவானேன். பறப்பனவற்றை ஊர்வன புரத்தல், '' பாய்திரைப் புணரி பாடவிந் தொழியினும், காய்கதி ரிரண்டுங் கதிதிரி யோடினும்," கூடாது என்பது உண்மையன்றோ. அது பற்றியே இம் மயக்கம் எய்தியது. பருந்து : மயங்கல் வேண்டா. நுனித்து நோக்கின், இவற்றைப் புரத்தலும், ஏற்ற வுணவு கொடுத்தலும் நின்னா லெளிதிற் செயற்பாலன வென்பதே தோன்றுகின்றது. அன்றியும், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, நினைத் தொறும் நினைத்தொறும் இம்முடிபே எய்துகின்றது. புழு : உய்ந்தேன்! உய்ந்தேன்!! கூறுக. பருந்து : கூறுவல். தடையுமின்றி. மற்று, யான் கூறுவனவற்றை நீ உள்ளவாறே யுட்கொள்ளுவாயோ வென்றையுறு கின்றேன். எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அன்றி யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருளின்கண் மெய்ப் பொருள் காண்டல் கூடும் என்னும் உறுதி நோக்கு (Faith) நின்னுழை யுளதானாலன்றி, என் மொழியின் உண்மைப் பொருள் புலனாகாது. இந்நோக்கின்றிக் கேட்டல் அரங்கின்றி யாடல் புரிவாரது நோக்கினோ டொக்கும். புழு : ஆம். சார்ந்ததன் வண்ணமாதலே மனவியல்பு. எந் நோக்கங் கொண்டு எப்பொருணோக்கப்படுகின்றதோ, அந்நோக்கிற் கமைந்தே அப்பொருளுந் தோன்றும். ஒருவனைக் குற்றமுடையனே யெனக்கருதி நோக்கு வார்க்கு அவன் குற்றமுடையனாகவும், அல்லனெனக் கருதி நோக்குவார்க்கு அல்லனாகவும் தோன்றல் கண் கூடன்றோ! நிற்க, யான், அவ்வுறுதிநோக்கு உடையேன்; வெளிப் படையாகக் கூறின், நீ கூறுமனைத்தையும் கூறி யாங்கே நம்புவல். இது உறுதி. பருந்து : உறுதியாயின், கூறுவல்: முதற்கண் நீ இவற்றிற் கேய்ந்த வுணவு யாதென நினைக்கின்றனை? நின் உளத்தில் தோன்றுவனவற்றை மட்டிற் கூறுக. புழு : (நினைத்து) யாதாகும்? பனித்திவலையும் பைந்தேனுமாம் ! ஆ! பருந்து : அல்லவே. அவற்றிற்கேற்கு முணவை நீ மிக்க எளிதிற் கொணர்தல் கூடுமே. அன்றியும், அது இவ்வனைத்தினும் மிக்க அண்மையிற் கிடைத்தற்பாற்றன்றோ! புழு : (திகைத்து) என்னருகில், எளிதில், பெறக்கூடியது இம்முசுக் கொட்டையிலை யன்றிப் பிறிதொன்றுமிலையே. பருந்து : ஆம்! ஆம்!! நன்று சொன்னாய்! நீயே அவ்வுணவை நன்கு உணர்ந்து கொண்டனை. இம் முசுக்கொட்டையிலை கடாம் அவற்றிற்குத் தக்கவுணவாவன. புழு : (சினந்து) ஏ! என்னே நின் மடமை!! இவற்றையன்றோ அது தருதல் கூடாதென வன்புறை செய்தது. முகநக வொன்று மொழிதலும், பின்னர் மற்றொன்று செய்தலும் அறனல்ல. அதனால் விலக்கப்பட்ட வுணவையே யளிக்குமாறு கூறல் நின் அறிவுடைமைக் கழகன்று; அமைதியுமன்று. பருந்து : அன்பே! பொறுத்தருள். இனிய உளவாக. இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந்தற்று என்பதை நினைத்தருள்க. நிற்க, இவற்றின் தாய்ப்பூச்சி இவ் வுண்மையினை யறியாது. அது பெரும்பேதை. அன்றியும் யான் கூறுவனவற்றை யுறுதி நோக்குடன் கேட்பலெனக் கூறி, கூறக்கேட்டலும், உண்மை நோக்காதொழிதல் நின் உயர்வுக்குக் குறையன்றோ!அறிவும், அமைந்த நம்பிக்கையும் அமைவுறினன்றோ வுண்மை தெள்ளிதாம். புழு : ஓ! அற்றன்று. என் செவிப்புலனாம் பொருள் பல வற்றினும் அமைவுறும் உண்மைப்பொருள் காண்டலேஎன்னியல்பு. உறுதிநோக்கும், உண்மை நம்பிக்கையும் உடையாரின் மிக்கார் தேரின், யானலதில்லை இவ்வுலகத்தானே என்பதை மீட்டும் நினக்கு வற்புறுத்துகின்றேன். அறிக! பருந்து : அறிவதென்! நின்சொல்லின் வலியின்மையை நின் சொற்களே நன்கு காட்டுகின்றன. யான் கூறும் உணவுப் பொருளையே நீ முதற்கண் ஏலா தொழியின், பின்னர்க் கூறப்போவனவற்றை நீ எங்ஙனம் ஏற்றல் அமையும்? நிற்க, இப்பச்சிளஞ் சினைகள் பொரித்தலும் என்னாமென நினைக் கின்றனை? இதனையேனும் உண்மையாகக் கூறுதி. புழு : என்னாம்! விதையொன்று போடப் பதமொன்று விளையுங்கொல் “பண்டு செய்வினையலாற் பரவு தெய்வ மொன்றுண்டெனில், தான் பயன் உதவ வல்லதோ” என்னும் செம் பொருளையும் தெளிக. ஆகலின், சேடத்தின் சினை சேடமா மேயன்றிக் கீடமாகா. பருந்து : அற்றன்று. சேடத்தின் சினை சேடமாகாது முதற்கட் கீடமே யாம். உண்மையைக் கூறின், அவை பொரித்தலும், நின்னொப்பப் புழுக்களாமே யன்றி நீ நினைத்துக் கூறும் வண்ணத்துப் பூச்சி களாகா. நீ இவ்வுண்மையை ஏலாதொழியினும் ஒழிக. உண்மை பின்னர்ப் புலனாம். யான் சென்று வருவல். இங்ஙனம் கூறிக்கொண்டே பருந்து சேணோக்கிச் சிவ்வென்றெழுந்து பறந்து சென்றது. அன்றியும், ஆண்டே யிருந்து, புழுவிற்கு உண்மையுணர்த்தும் வகையாற் கலாய்த்தற்கு அப்பருந்து விரும்பிற்றன்று. 'இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையராயினும், சான்றோர், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பர் பெரியார். ஆகவே, பருந்தும் கலாய்த்துப் பழியெய்தற்கு அஞ்சி யகன்றதென்க. இங்ஙனம் விழுமிய நட்புக்கடம்பூண்ட பருந்து பிரிதலும். புழு மிக்கதோர் மருட்சிகொண்டு, செய்தொழிலறியாது திகைத்து அருகுகிடக்கும் சினைகளைக் காண்டலும், கண்ணீருகுத்தலும், பன்முறை யவற்றைச் சூழ்வரலும் செய்து கொண்டு வரும். இடையிடையே பருந்துகூறிய மொழிகளை எழுத்தளவாய் ஆயும்; பொருட்பயனைப் பன்முறையும் சூழ்ந்து நோக்கும்; தன் யாக்கைப் பண்பையும், பூச்சியின் பொலிவையும் மனத்தானொப்பு நோக்கும். அதுகாலைப்பின் வருமாறும் நினைக்கும். அது; “மாந்தர் இனத்தியல்பதாகும் அறிவு” என்பது தமிழ்மறை. இதுபற்றியன்றே, உயர்ந்தோர் கூட்டமே யுறவாக் கொண்டுழலும் இப்பருந்தும் மிக்க அறிவமைதியுடையதா மென்றெண்ணிக் கெட்டேன்! ஒருகால், அது இம்முறை நெடிது சேணிற் பறந்திருக்கும், அதனாற்றான் இக்கலக்கம்! ஆ! என்ன அலகைத் தன்மை! உலகத்தோர் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகை யென்று எண்ணப்படுமன்றோ! ஆ! உயிர்க் கூட்டத்துள், உயர்ந்தாரோடு கூடி வாழ்வனவும், கூடி வாழ்வதாகத் தம்மையு யர்த்திக் கூறிக் கொள்வனவுமாய பல வுயிர்கள் முடிவில் எத்துணைப் பேதைமையும் கொடுமையும் உடையவாய்த் தோன்றுகின்றன. என்ன உலகம்! பெறுதற்கரிய யாக்கை தமக்கு எய்திற் றென்றால், அது கொண்டு அறிவும் ஒழுக்கமும் அமையப்பெற்று, தக்கவின்ன, தகாதனவின்னவென ஒக்க வுன்னி, ஒப்பனவற்றைக் கோடலன்றோ யாவர்க்கும் ஒரு படித்தாய் வேண்டப்படுவது. “ கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பால் நிலத்துக் காங்கு.” ஆகுமன்றோ, இஃது ஓர் உயிர்க்கு எய்தாவிடின் அதன் பொலிவு கூர் யாக்கை. நிற்க. இப்பறவை அவ்விசும்பைப் படர்ந்து சென்று செய்யும் தொழில் யாது கொல்! நெடுங் காலமளவும் இஃது ஆண்டுப் பறந்து கொட்புறுதலின் உட்கிடையென்னோ? இதனொடு அங்கு உரையாடி நல்லறிவு கொளுத்தவல்லார் யாவரோ? இவ்வனைத்தும், எண்ணுந் தோறும் மயக்கத்தை யன்றோ தருகின்றன. என்ன இறும்பூது பயக்கும் வாழ்வுகாண் இதன் வாழ்வு!” என்பது. இங்ஙனம், அது, நினைத்தவண்ணம் பண்டேபோற் றன் சினைகளைச் சூழ்வந்து காவல் புரிந்து வந்தது. அதுபோது, பருந்தின் மெல்லிசைமட்டிற் புழுவின் செவிப்புலனாகலும், அது, முன்னைக் களிப்பின்றெனினும், சிறிது தேறி, நோக்கக் குழையும் என்பதற்கஞ்சி, இனிமை தோன்ற ஒருவண்ணம் எதிர்நோக்கி நின்றது. பருந்தும் வந்தது. இரண்டன் நட்பும் நகுதற் பொருட்டன்றாகலானும். “ இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நன்பக லமையமும் இரவும் போல வேறுவே றியல வாகி மாறெதிர்ந் துள.” என்னும் பொருளை இவை நன்குணர்ந்தவை யாகலானும், முன்னர் நிகழ்ச்சியிற் புழுவின் சினத்தை யறவே மறைய ஒன்றோடொன்று சிறிது அளவளாவிப் பின் வருமாறு மீட்டும் அவை சொல்லாடல் தொடங்கின. பருந்து : யான் கூறுவனவற்றை, முன்னரே கூறியுள்ளவாறு, உறுதிநோக்கும், ஒப்பன கொள்ளும் உளமும் கொண்டு கேட்பையேற் கூறுவல். புழு : ஆயின், அவை என்னிடத் திலவென வெண்றுதி போலும்! நன்று நன்று!! ஆ! கேள்வியிலா தெய்தும் எவ்வகைப் பொருளையும் உறுதிநோக்குக் கொண்ட, உளத்திற்கோடரே என்னியல்பென யான் கூறி யிருக்கு மது நின் நினைவின்கணில்லை கொல்லோ! பருந்து : “உணர்ந்தன மறக்கும், மறந்தனவுணரும்” என்பர் பெரியோர். இனி மறவேன்; பொறுத்தருள்க. நிற்க யான் முன்பு கூறியன நின்னையும், நின் சினைகளை யும் பற்றிப் பொதுவாக வுணர்ந்தன; இற்றை ஞான்றுகூறப்போவது நின்பொருட்டு ணர்ந்த சிறப்புப் பொருளாகும். அது, சுருங்கக் கூறின், நீயும் ஒருபகல் அப்பூச்சியே யாதல் வேண்டும் என்பது. புழு : என்னை கூறினை? ஏ, மடப்பருந்தே! நிறுத்துக நின் சொற் பொழிவினை! நின்னொடு நிமிர்ந்தஞேயம் இப்பயனைப் பயக்கும் நீர்மைத்தாயின், என் கூறுவது. பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ஆலால நீர்மைத்தே நின்னன்பு என்பதே சாலப் பொருந்துவது. பொலிவு, திட்பம் முதலிய வில்லா யாக்கையேன் என எண்ணி இன்னணம் என்னை இழித்துக் கூறுவான் செய்த கூற்றேயிது. அறிந்தேன். நின் தன்மையை யான் இன்றே உணர்ந்தேன். நீ பெருங்கொடியை! அறிவிலி! திருத்த வியலாத் தீயை! பேதை!! நாணின்றி என் முன்னிற்றல் நின் மாண்பிற்கே குறைவாம். இனி எனக்கு நின் பொங்கு சோறும் வேண்டா: பூசாரித்தனமும் வேண்டா. போதும்! போதும்!! இவ்வண்ணம் கூறிய புழுவின் நெஞ்சுசுடு நெடுமொழி வன்சிறைப்பருந்தின் மனத்துத் தினைத்துணையும் சினத் தீ கொளுத்திற்றின்று. என்னை, வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை யாகலின். மற்று, அது, அதன்மனத்துத் “திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று” என்னும் தெய்வத் திருவள்ளுவப் பயனை யெழச் செய்து, உறுவது தேராப் புழுவின்மாட்டு இரக்கமும், அதன் அறியாமைக்குக் கவற்சியுமே தோன்றச் செய்தது. வேறு என் செயும்!! அது அப்புழுவினை, “அன்ப, நீ வெகுண்டு கூறுவனயாவும் வெளிற்றுரைகளே. ஒரு புடை, அவை, நீ இச்சினை மாட்டுப் பூண்டொழுகும் பேராதரவின் உறுதியைப் புலப்படுத்துகின்றன வெனினும், ஆன்ற கேள்வியாற்றோட்ட செவியை யல்லை யென்பதைக் காட்டாது கழியவில்லை. என் சொற்களை நீ ஏற்றுக் கொள்ளயெனப் பண்டே யான் கூறினேனன்றோ,” என்று கூறிற்று. புழு : ஆம். யான் கேட்பனவற்றில் உறுதிப் பொருளைக் காண்டல் கூடும் என்னும் நோக்கத்துடன் ஏற்றுக் கொள்வ லென்பதைப் பண்டு கூறியதே யன்றி, இன்றும் கூறுகின்றேன். இனி என்றும் கூறுவேன். உரைப்பார் உரைப்பன வற்றை யுரைத்த வாற்றானுட்கொள்ளுமியல்பினை யுடை யார்க்கு, அவர் உண்மை கலந்தவறைத் தாமே யுரைத்தல் வேண்டும். ஒரு வாற்றானு மியைபில்லாத வொன்றை யியைத்துக்கூறின் யாவர் தாம் ஏற்பர். நிலையாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடையாதல் போல, இயைபில்லனவற்றை யியைபுடையவாக்கிக் கூறுதலும், கூறக்கேட்டலும் புல்லறிவாண்மை யாத லோடு கடை யாதலும் தோன்றிற்றன்றே. நண்ப! சேடப் பூச்சிகளின் சினை பொரியின் கீடங்களாக மாறு மென்பதும், கீடங்களுந் தம் இயங்குதற் றன்மை நீங்கிப் பறத்தற்றன்மையினை யெய்து மென்பதும் முற்றிலும் பொருந்தாக் கூற்றுக்களே. இவற்றோரன்ன புன்மொழி களை நீ யாண்டு, யாங்ஙனம், கேட்டற்குத் துணிந்தனை? இவை யொல்லுமோ வென்பதை நீயே ஆய்து நோக்குக. அங்ஙனமாதல் ஒரு காலும் முடியாதன்றோ! பருந்து : இனி வேறு கூறல் எனக்கு இயலாது. வேண்டுமேல் யான் அறிந்தவற்றைக் கூறுவல்; கேள்; யான் வயல் வழியும், வானாறும் படர்ந்து கொட்புறும் பான்மையேன். அங்ஙனம், படருங்கால், இடையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காணாது செல்வது இல்லை. அவற்றுள் ஒவ்வொன்றும் நினைவுவல்லார் நெஞ்சும் கடந்து நிற்குந்தன்மைத்து. அவற்றைக் கண்ணுற்றுத் தெளிந்த யான் இவ்வாறு நிகழ்தலுங் கூடுமெனத் துணிந்தேன். ஓர் குறுகிய எல்லைக்கணியக்கமும், தான்வாழும் இலை யன்றிப் பிற கண்டறியாமையுமுடைய நினக்குப் பிற வனைத்தும் அரியவும், இயைபில்லவும், முடியாதவுமாகவே தோன்றும், கிணற்றுத்தவளை புணரியியல்பை யறியுங்கொல்! புழு : அந்தோ! ஆய்ந்திடு முணர்வுதன்னை நினக்கு அவ்வயன் படைத்திலன் கொல்! அவனைக் காண்பனேல், அற்றதலை போக, அறாததலை நான்கினையும் பற்றித்திருகிப் பறிப்பேன்! அறிதியோ!! இக்கூற்று இத்துணையுறுதியுடைத்து; உண்மை யுடைத்து என்பன வற்றையுமோ யான் அறியேன்! ஆ!! இத்துணைக்காலம் இவ்வுலகிடைப் பிறந்துழன்ற யான் ஈதறியாது ஒழிவலோ? என்னே நின்மடமை! என் பசிய நெடிய வுடலையும், எண்ணிறந்த கால் களையும் நோக்கும் இவற்றை நேரிற் கண்டும், எனக்கு இவ்வுடனீங்கு மென்பதும், பல்வகை வண்ணமமைந்த புத்துடலொன்று எய்து மென்பதும் எத்துணை இழித்தக்க மொழிகளா கின்றன. இஃதறியாமையே பேதமை யென்பது. கூறுவோர்க்கு உணர்வு குன்றினும், கேட்போர்க்கும் அது குன்றுங் கொலோ? பருந்து : சினந்து) என்னை கூறினை? “யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்னும் பொய்யில் மொழியினை மறத்தியோ? என்னை நீ மதியிலி யென்பது உண்மை. கல்லா எறிவில் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுதலுண்டுகொல்! இதனைச் சிறிதேயு மறிந்திருந்தும், யான் இவ்வுண்மையைக் கூறிய வந்தனனன்றே! நின் அறிவுக் கெட்டாதவற்றை வற்புறுத்திக் கூறநினைத்தலும், அது பற்றி நின்னுழை யெய்தலும் என்னிலைக்கு ஏற்பனவல்ல வன்றோ! வானோக்கி யெழுங்கால் என்வாய்வழி வரும் இன்னொலி கேட்டோர்க்கு இன்பம் பயந்து, எனக்கு மதுவழியேயோர் சிறப்பினையும் நல்குதல் ஒருதலை. இது கிடக்க, நீ இனியேனும் வருவன வற்றையும், பிறர் கூறுவனவற்றையும் ஒன்றிய வுள்ளமொடு ஏற்றுக்கொள்க. இவ்வாறு, புழுவின் புன்மொழிகள் பலவும் பருந்தின் செவியிற் புக்கும் அது வெகுளாது, நாணாது, அன்புடை நன்மொழி கூறலும், புழு தன் அறியாமைக்கும், அதனாற் சினந்து பிதற்றிய மொழிகட்கும் உளம் வெள்கி, “அதற்கு நீ கூறும் அந்நம்பிக்கையும் உறுதி நோக்கும் என் மாட்டில வெண்பாயோ? என்றது. பருந்து : உளவேல், இத்துணை நெடுமொழிகள் பிறக்குங் கொல்லோ! புழு : அற்றேல், அவ்வுறுதி நோக்கு என்னுழை யுண்டாதற்கு யான் செய்யக்கடவதென்? அன்பு கூர்ந்து கூறுக. இங்ஙனம் அமைதிசான்ற வுரையாடல் இடைநிகழுங் காலத்துப் பருந்து சேட்புலம் படர்ந்தது. புழுவும் தன்னைப் பன்முறையும் நோக்கி, அச்சினையிருந்த முருக்கிலையைச் சூழ்வந்து கொண்டிருப்ப, அவ்விலையைத் துளைத்துக்கொண்டு ஏழெட்டுப் பச்சிலைப் புழுக்கள் அங்குமிங்கு மியங்கத் தொடங்கின. அவை யாண்டிருந்து போந்தன? அவை அச்சினைக்கணின்று போந்தனவே! போதரக்கண்ட புழுவின் புந்தியிற் கலக்கமும் மானமுங்கலந்து தோன்றின: கண்ணகன் ஞாலம் கொட்புறல் செய்தது; உடல் சுமந்து நிற்கும் தன்னையே மாயமோ வென்றெண்ணிற்று. பருந்து கூறிய மொழி யொவ்வொன்றும் அதன் உளத்துத் தோன்றிற்று. இன்னணம் பருந்தின் முதலுரை யுண்மையாதல் காண்டலின், மற்றதும் அவ்வாறால் கூடுமெனும் துணிபும் உடனெய்திய எய்தலும், அது பட்டபாடு யாராற் கூறப்படுந் தகைத்தாம்!! பின்னர் நாட்கள் சில சென்றன; பரந்தவிவ் வுலகிற்றோன்றும் பொருளினானாம் காட்சியறிவைப் பருந்து உடனுடன் புழுவிற் குரைத்தலும், உண்மையாய்தலும் இரண்டிற்கும் மரபாயிற்று. புழுவும் தன்னினங்கட்குத் தனக்கு நேரவிருக்கும் நிகழ்ச்சியையும், அதுவே யவற்றிற்குமா மென்பதையும் அறிவுறுத்தும்; உறுத்தினும், அதனையவை ஏலாதே யொழிந்தன. புழுமட்டிற் றான்றன் மெய்ந் நட்புக்குரிய பருந்துழைக் கண்ட மெய்ப்பொருள் நிகழ்தற் கேற்ற காலம் எய்திற்றாக, பகல்செய் மண்டிலம் பனிக்கடல் முகட்டெழ, பறவை யின்னிசைபாட, சுரும்புந்தேனும் சூழ்ந்தார்ப்ப, கடிக்கமலம் வாய்விள்ள, பூச்சியினம் பொலிவெய்த, புழுவினங்கள் குழீஇ மறுக, இப்புழுவும் பூச்சியாயிற்று; யாக்கையும் காலொடுமிதக்கும் கவினெய்திற்று; இயங்கியவுடல் பறத்தல் செய்தது; இருமருங்கும் சிறகுகளெழுந்தன; அவற்றின்கட் பல்வகைய வொளிதெறிக்கும் வண்ணங்கள் தோன்றி யழகு செய்தன. இவ்வண்ணம் அழகுதிகழப் புத்துடல் பெற்றுப் பூந்தேனுண்டு பொலிவுகூர் சுற்றமொடு புரிந்து வாழ்ந்த சேடப் பூச்சி, பின்னர்ச் சின்னாட்களுட் டன் னின்னுயிர் நீங்குங் கால மெய்தலும், எண்ணரு மின்பங்கனிய, “இம் மறுவின்று விளங்கும் மாயிரு ஞாலத்து, அறிவு வளர்க்குமாற்றா னமைந்த பொருள்கள் மிகப் பலவுள; அவற்றை யாய்ந்து கோடலறிவின் கடன்: அதற்கு இன்றியமையாத வுறுப்பாவது உறுதிநோக்கே (குயவைா). அதனை அதனருளாலே யடையப்பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! இனி எவை வரினும் வருக. யான் விண்ணகம் படர்குவல்” என்றெழுந்து சென்று விண்ணில் மறைந்தது. (கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியினின்று வெளிவந்த பஞ்சாபகேசன் என்னும் கையெழுத்துத் திங்கள் வெளியீட்டின்கண் முன்னர் வெளிவந்ததோர் மொழிபெயர்ப்பு. ஆங்கில நூற் கட்டுரைகளுள் அமிழ்ந்து திளைத்த நிலையில் இக்கட்டுரை ஆங்கிலம் தழுவிய தமிழாக்கமாக அமைந்தது)  2. உழைப்பு " வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென நமக்குரைத் தோரும் தாமே அழாஅல்தோழி அவர் அழுங்குவர் செலவே..." - குறுந்தொகை : 135 நற்குணமும் நற்செய்கையும் சிறந்த நங்கையொருத்தி, அறிவும் ஆண்மையும் பெருகிய தோன்றல் ஒருவனை மணந்து இல்லறம் பூண்டு வந்தனள். ஒருநாள் அவன், தான் செய்வதற் குரிய வினையொன்று குறித்துத் தன் மனையின் நீங்கிச் செல்ல வேண்டியவனானான். மணந்தநாள் தொட்டுத் தன் கணவனைப் பிரிந்தறியாத அந்நங்கைக்கு இது தெரியின், அவள் பெருவருத்தம் எய்துவள் என்பதை அத்தோன்றல் எண்ணினன். உண்மைக் காதல்வழி யொழுகுவார்க்குப் பிரிவுபோலப் பெருந்துன்பம் தருவது பிறிது கிடையாது. "இன்னாது இனனில்லூர் வாழ்தல், அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு" என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். அதனால் தன் கருத்தினை, அவன், அவளது தோழிக்கு உரைத்து, பின்னர் மெல்லத் தன் மனையாட்குத் தெரிவிக்குமாறு பணித்தான். அவளும் அதற்கு ஒருவாறு உடன்பட்டு, காலம் வாய்த்த போது அவனது கருத்தினைப் பைய வுணர்த்தினாள். கேட்டாளோ இல்லையோ, நங்கைக்குப் பெருந்துயர் உண்டாகிவிட்டது; கண்ணீர் விட்டுக் கதறியழத் தொடங்கினாள். அவளை ஆற்றுவிக்கத் தொடங்கிய தோழி, "நங்காய், கணவன் சொல்லைக் காப்பது மனைவிக்குக் கடன். அவர் ஒருநாள் சொன்னது ஒன்றுண்டு. அது நினக்கும் தெரிந்ததே. அஃதாவது: 'ஆடவர்க்குத் தாங்கள் செய்யும் வினையே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவரே உயிர். அவர்க்கு உயிராகிய வினைமேற் சென்றால்தானே, அவர் நினக்கு உயிராக இருத்தல்கூடும்; நீ அழுதால் அவர் வினைமேற் செல்வதைக் கைவிடுவரே. அதனால் ஏதமன்றோ விளையும்," என்றனள். அது கேட்ட அந்நங்கையும் தேறி அவன் பிரிவை ஆற்றித் தனக்குரிய அறத்தினையும் ஆற்றிவந்தனள். இச்சிறிய பாட்டினைப் பாடியவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் சான்றோராவர். இவ்வாறு வினைமேற்செல்ல நினைந்த தலைமகன் ஒருநாள் மாலைப்போது வரக்கண்டு, "ஆ, இப்போது நம் காதலி நம் மனையகத்து விளக்கேற்றி அதன் முன் நின்று, 'இன்னும் காதலர் வந்திலரே' என்று நினைக்கும் போது அன்றோ?" என்று தனக்குள் நினைத்தான். நினைத்தவன், இம்மாலை, "உள்ளினேன் அல்லனோ யானே, உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே." - நற்றிணை : 3 எனத் தனக்குள் நினைந்து இனைந்தான் என இளங்கீரனார் கூறியுள்ளார். இவ்விரு செய்யுட்களையும் நோக்குவோமாயின், நமக்கு ஓர் உண்மை புலப்படும். அஃதாவது, ஓர் ஆண் மகனுக்கு அவன் செய்தற்குரிய வினைதான் உயிர்; அதனை முடித்தவழி யுளதாகும் இன்பம் காதலின்பம் போல்வது என்பதாம். வினையென்பது நாம் செய்யும் செய்கையாகும். ஒவ்வோருயிரும் உலகில் தோன்றும்போதே வினை செய்வதற்கென்றே பிறக்கின்றது. வினையே ஒருவன் எய்தும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாவது. இன்பத்தையே எவ்வுயிரும் பெற விரும்பும்; துன்பத்தை விரும்பும் உயிர் எதுவு மில்லை. துன்பம் என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் உள்ளம் சுளிக்கும்; சொல்லுதற்கும் நாக்குக் கூசும். இன்பத்தைத் தரும் வினையே யாவரும் விரும்பும் தொழிலாகும். அதனால்தான் இன்பம் தரக்கூடியதனை நல்வினை, நற்செய்கை என்றும், துன்பம் தருவதனைத் தீவினை, தீச்செய்கை என்றும் சொல்லுகின்றோம். இனி இவ்வினையைச் செய்யும்பொழுது நம் உடலும் உயிரும் பெரிதும் பாடுபடுகின்றன. இவ்விரண்டும் ஒருங்கே கூடிச் செய்யாதவழி, எந்தத் தொழிலும் நடைபெறுவது இல்லை. எத்தொழிலைச் செய்வதாயினும் இவை உழைக்க வேண்டியிருக் கின்றன. உயிர் உடலொடு கூடியிருப்பது இவ்வுழைப்புக்கே; இவ்வுழைப்பால், உயிர் உடல்படும் துன்பமனைத்தையும் தான் படுகிறதென்றாலும், உயிர்க்கு உடலின்மேல் உள்ள பற்றினால் உழைக்க உழைக்க, அதற்கு அதன்மேல் பற்று மிகுகின்றது; "துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்" எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே, உடலோடு கூடி வாழும் ஒவ்வோருயிர்க்கும் உழைப்பு இயல்பாக அமைந்திருப்பதை அறிகிறோம். ஆனால், இவ்வுயிர்களுள் மக்களுயிர்மட்டில், ஏனை உயிர்களைவிடச் சிறிது மேம்பட்டதாகும். தன் உழைப்பால் ஆண்டவன் படைப்பில் உள்ள ஏனை உயிர்களையும் உயிரில் பொருள் களையும் முறையே அடிமையாகவும் உடைமை யாகவும் ஆக்கிக் கொள்ளற்கு வேண்டிய உரிமை மக்களுயிர் பெற்றிருக்கிறது. ஆதலாற்றான் இன்று மனிதன் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய பூதம் ஐந்தும் தான் விரும்புமாறு அமையச் செய்கின்றான். நிலத்திற்குள் நுழைந்து குடைந்து செல்கின்றான்; நீரின் மேலும் கீழும் நிமிர்ந்து செல்கின்றான்; காற்றை ஏவல் கொள்ளுகின்றான்; விசும்பில் பறந்தேகு கின்றான். சுருங்கச் சொன்னால், மனிதன் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக விளங்குகின்றான் என்னலாம். மனிதன் இத்துணை ஏற்றமுடையவனாக இருத்தற்குரிய உரிமை அவன்பால் நிலைத்திருக்க வேண்டுமாயின், அவன் சலிப்பின்றி உழைத்தல் வேண்டும். உழைப்பினால் அவன் உடல் தூய்மையடைகிறது. அதனால் அவன் உள்ளம் ஒளிபெறுகிறது; அப்போது ஆண்டவன் அவற்கு அருளியுள்ள உரிமை கதிர்விட்டுத் திகழ்கின்றது. அதுவழியாக அவன்பால் உயரிய எண்ணங்களும், உலவாத இன்பமும் உண்டாகின்றன. மக்களுட் சிலர், அவ்வுரிமையைக் காத்துக் கொள்ளும் வலிகுன்றியிருக்கின்றனர்; உரிமையை நிலைப்பிக்கும் உழைப்பினை நெகிழ்த்துச் சோம்பலுறு கின்றனர். சோம்பல் உடலைக் கெடுக்கின்றது; அதனால் உயிர் மடங்குகின்றது; உரிமை நிலவும் உள்ளம் மடிகின்றது. ஆகவே, சோம்பல் மடிமைக்கு உயிரை இரையாக்கி, உள்ளத்தே இருளையும் உயிர்க்கு இறுதியையும் விளைவிக்கின்றது. ஒரு பெரியாரது உடன்பிறந்தார் இறந்துபோனார் என்பது கேள்வியுற்று, வேறொரு பெரியார் அவரை நோக்கித் "தங்கள் தம்பி எவ்வாறு இறந்தார்?" என்று கேட்டதற்கு, அவர், "அவன் உழைத்தற்கு இன்றி இறந்தான்" என்றாராம். ஆகவே, உழைப்பின்றிச் சோம்பியிருப்பவன், விரைவில் தன் உயிரை இழக்கின்றான்; அவன் உள்ளத்தே, உயிர்க்குத் தீங்கு செய்யும் தீய எண்ணங்களும் அறியாமையுமே குடிகொள்ளும் என அறியலாம். இன்று நாம் அழகிய நகரங்களையும், பெரிய பெரிய மாட மாளிகைகளையும், பசும் கம்பளம் விரித்ததுபோலத் தோன்றும் பரந்த பண்பட்ட வயல்களையும் காண்கின்றோம். காடழிந்து நாடாகியிருக்கிறது; கருங்கடலில் பெருங்கலம் செல்கின்றது; கம்பியின்றியே தந்தி பேசுகிறது; விரைவில், "கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்" என நம் நாவரசர் பாடியதை நாமும் பாடப்போகின்றோம். இவையாவும் உழைப்பின் பயனன்றோ! "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" எனப் பட்டினத்தடிகள் உரைத்தது உண்மை மொழியன்றோ! உழைப்பின்றி உடல் சோம்பி, உயிர் ஓய்ந்து ஒடுங்கியிருக்கும் ஒருவனைப் பாருங்கள்! அவன் உள்ளத்தில் ஒளியில்லை. அதனை அவலம், கவலை, கையாறு, அழுங்கல், ஆசை, வெகுளி, அழுக்காறு முதலியன சூழ்ந்து அரிக்கின்றன; அவனும் உருக்குலைந்து மெலிகின்றான். அவனை ஏதேனும் ஒரு தொழிலைச்செய்ய விடுவோம்: உடனே, அவனது உடலும் உயிரும் ஒருப்பட்டு அத்தொழிற்கண் உழைக்கத் தொடங்குகின்றன. அவன் வன்மை முழுவதும் அத்தொழிலை முடித்தற்கண் ஒன்றிவிடுகின்றது. அவன் உள்ளத்தை யலைத்த அழுக்குணர்வுகளனைத்தும் அகலப்போய் எங்கேயோ மறைந்து போகின்றன. அவன் மனிதன், மனிதனாக வயங்குகின்றான். அவனது உள்ளம் பேரொளி விட்டு மிளிர்கின்றது; அவ்வழுக் குணர்வுகள் அவ்வொளியின்கண் புகைந்து எரிந்து புத்தொளி செய்கின்றன. ஆகவே, ஒருவனது உள்ளத்தைத் தூய்மை செய்வதற்கு உழைப்பே சிறந்த மருந்தாக இருக்கிறதென்பது எளிதில் விளங்குகிறது. நாம் வாழும் இம்மண்ணுலகு ஆதியில் ஞாயிற்றிலிருந்து போந்தது என்றும், அன்றுமுதல் இன்று வரையில் சுழன்று கொண்டேயிருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். இதனை இவ்வாறு சுழல்வித்த பரமன் கருத்து யாதாகல் வேண்டும்? இடையறாது சுழலும் சுழற்சியினால் நாம் வாழும் மண்ணுலகு, விண்ணுலகில் வட்டமாக இயன்று, பல விகார உருவங்களைப் பெற்று, முடிவில், இற்றைய உருண்டை வடிவத்தைப் பெற்றிருக்கிறது. சுழலலாவது நின்றுபோமாயின், இந்நிலவுலகம் யாதாய் முடியும்? ஒருசார் பகலும் மற்றைய பகுதி இருளுமாய் எவ்வுயிரும் வாழ்தற்கின்றி, எப்பொருளும் நிலைபெறுவதின்றிக் கெட்டழியு மென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ! அளித்தக்க இம்மண்ணகம், இடையற வின்றிச் சுழன்றுழலும் உழைப்பினால்தான் இதன்பால் முறை திரும்புதலும், நேர்மை கோடுதலும் பிற தீமைகளும் இலவாயின; விகாரங்கள் நீங்கிச் சீரிய இவ்வுருவமும் அமைவதாயிற்று. குலாலனதுழைப்பும், அவனது தண்ட சக்கரமும் மனிதன் உணவட்டு உண்ணத்தொடங்கிய நாண்முதல் அறிந்தனவாகும். சமய நூல்களும் இலக்கண நூல்களும், அவனையே அவன் செய்யும் வினையையும், வினைக்குரிய கருவி கரணங்களையும் அடிக்கடி எடுத்துக்காட்டித் தம் அறிவுப் பொருளை வழங்குகின்றன. அச்சக்கரத்தின் நடுவில் வைக்கப்படும் மண்திரளைப் பாருங்கள்! அதனிடத்தில் ஏதேனும் பாண்டவமைப்புக்குரிய வடிவமுளதோ? அழகிய உருவமும் திருந்திய வடிவமுமுடைய மட்கலங்கள் அச்சக்கரத்தின் சுழற்சியால் பிறக்கின்றன. அஃது இல்லையாயின் அக்குலாலன் மட்கலன்களை யாக்குதல் கூடுமோ? எத்துணைத் தொழிற்சிறப்பும், உலையாவுழைப்பு முடையனாயினும் அவன் யாதுசெய்ய முடியும்? அவன் செய்ய முயலும் கலங்கட்கு அழகும் வடிவும் அமையுங்கொல்! இயற்கையுலகும், சக்கரத்துணையில்லாத குலாலனைப்போல, ஓய்ந்து ஒடுங்கி நிற்குமாயின் அதன் பயன் என்னாய் முடியும்! அவ்வாறு செய்யாது சலிப்பின்றி, உழைக்குமாறு அருளிய ஆண்டவனை எப்போதும் வணங்குவோமாக. உழைத்த லின்றிச் சோம்பிக் கிடக்கும் ஒருவன் எத்துணைப் பொருணலங்கள் உடையனாயினும், அவற்கு அவை ஒரு பயனையும் செய்யா. சகடசக்கரமின்றிக் கையற்று நிற்கும் குலாலன் பால் உள்ள மண்திரள் போல, உழைப்புச் சிறப்பில்லாத ஒருவனும் வெறுந்தசைப் பொதியும் சிறப்பில் பிண்டமுமாவதல்லது பிறிதில்லை. குலாலனை மகனாகவும், அவனது சக்கரத்தை உழைப்பாகவும் கொண்டு நோக்குக. உழைப்பு உயர்வு தரும்; உழைப்பாளி உலகாள்வான். ஆகவே, உழைப்புப் பெற்றவன் உறுதிபெற்றவனா கின்றான். உயிர் வாழ்க்கையின் உறுதிப்பயன் அவன் பாலேயுளது. உயர்வு வேண்டுவோன் உழைப்பு வேண்டுக. கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கைகலந்து கலித்தோடுகின்ற. இடைப்பட்ட மாண்பொருளை வரன்றியேகும் உழைப்பு வன்மையால் அவை கலித்துச் செருக்குகின்றன. அழுக்கும், மாசும், குப்பையும் கூளமும் அவற்றின் நெறியிற் பட்டு அலைத்துகொண் டேகப்படுகின்றன. கால் காலாய் வயலிடைப்படிந்து உரமாகித் தாம் பரவும் நிலப் பரப்பைப் பசும் புல்லும், நறுமலரும் கண்கவர் வனப்புமுடைய வண்பொழிலாக்கும் சிற்றாறுகளின் மாண்டொழிலை என்னென்பது! அவற்றின் தெண்ணீர் உண்ணீராகிறது. அது சுமந்து கொணர்ந்த அழுக்குகளும் அவற்றோரன்ன மாசுகளும் மாய்ந்து போகின்றன. இதனாலன்றோ, "உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே" எனக் குடபுலவியனாரும் பாண்டியன் நெடுஞ் செழியற்குப் பாடியறிவுறுத்தினார். இத்தகைய நீர் யாதே உழைப்பென வறிக. பலதிறமாய், பல்வகைப் பொருள்களையாக்கி, நாடுகளை நாடா வளமுடையவாகச் செய்து, மக்களை இன்பமும், பொருளும், அறமும், வீடும் இனிது எய்துவித்து, அவர்தம் வாழ்க்கையின் பெரும்பயனை நுகர்விப்பது உழைப்பேயாகும். ஆகவே, உழைப்பே உயிர் என அறிகின்றோம். உயிர் உடலோடு கூடி வாழ்க்கை நடத்துந்தோறும், அதன்பால் பேரின்பம் பெறுதல்போல, உழைப்பாளியும் உழைக்குந் தோறும் உவட்டாத பேரின்பமும் ஊக்க மிகுதியும் பெறுகின்றான். ஆண்டவன் திருவருள் அவன் உள்ளத்தே ஊறுகிறது. உயர் நோக்கும், ஒள்ளறிவும், பெருந் தன்மையும் அவன்பால் உளவாகி யோங்குகின்றன. நோன்மை, துணிவு, முயற்சி, அறிவுப் பேற்றின்கண் ஆர்வம், தன்குற்றம் தேர்ந்து கடிதல் முதலியன இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகும் நல்லறங்கள். உணர்த்த உணர்வதிலும், இவற்றை நாமே நம் உழைப்புவாயிலாக உணர்ந்து நன்னெறிகளிற் செலுத்துவதே நம் உயிர் வாழ்க்கையாகும். உழைப்பு வாயிலாக இவற்றை நாம் உணர்தல் வேண்டும். நோன்மை என்பது எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும் அவற்றிற்கு அழியாது, அவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்து மேற்கொள்ளும் தன்மையாகும். அங்ஙனம் மேற் கொள்ளுதற்குரிய துணையாகும். மனத்திட்பமே துணிவு என்பது. துணிந்தவழி, இடையில் வந்துதகையும் இடையூறுகளால் உள்ளமுடையாமல், செய்வினையைக் கடைபோக உழைத்து வெற்றிகாணும் திறம் முயற்சியாகும் அதன்கண் அறியாதனவற்றை அறிந்தாற்றும் விரகு வேண்டியிருத்தலின், அறிவறியும் ஆர்வம் வேண்டுவதாயிற்று. அவ்வார்வத்தால், முதற்கண் தாமே தேர்தலும் பிறர் காட்டக் காண்டலும் ஆகிய இரு நெறிகளால் தம் குற்றத்தைக் கண்டு அதனைக் கடிவதும், செய்த குற்றத்தை இனிச் செய்யா வகையில் தம்மைப் பாதுகாத்து, அடுத்த முறையில் நன்காற்றல் வேண்டும் என்னும் நற்பண்புடையனாவதும் உழைப்பாளிக்கு இன்றியமையாதனவாகும். இப் பண்புகளைக் கைக்கொண்டு உழைப்போர்முன், வான்றோய் மலையனையபேரிடர்கள் வந்து நிற்கும். "நற்செயலுக் கன்றே நானூறு இடையூறு." ஆயினும் உண்மை யுழைப்பாளியோ, ஏனையவற்றால் வரும் "இன்பம் விழையான்; இடும்பை இயல் பென்பான்; துன்பம் உறுதல் இலன்." கருமமே கண்ணாக உழைக்கும் அவன், "மெய் வருத்தம் பாரான்; பசி நோக்கன்; கண் துஞ்சான்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளான்; செவ்வியருமையும் பாரான்; அவமதிப்பும் கொள்ளான்." சுடச் சுடரும் பொன்போல், அவன் உள்ளம் துன்பங்கள் தொடர்ந்து போந்து சுடச்சுட, ஒட்பமும் திட்பமும் பெற்று ஓங்கி யொளிரும். நிலவுலகினும், அவன் புகழே ஓங்கிப் பொன்றாது நின்று நிலவும், அத்துன்பங்களும் "எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்." இலண்டன் நகரத்தில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் என்னும் பெருங்கோயில் உலையா வுழைப்பின் உருவுடைப் பயனாகும். அதனை யெடுத்தற்கு முயன்ற சர் கிறிஸ்தபர் ரென் என்பார், கணிதநூல், வானநூல், சிற்பநூல் முதலியவற்றிற் பெரும் புலமையும் வினைத்திட்பமும் உடையர். ஆயினும், அவர் இதனைக் கட்டியமைத்தற்கு முயன்ற காலத்து உளவாகிய இடையூறுகட்கு அளவேயில்லை. உரோம் நகரத்துச் செயின்ட் பீட்டர்ஸ் பெருங் கோயில் போலவே இக்கோயிலையும் எடுத்தல் வேண்டுமென எண்ணி முயன்ற அவர்தம் எண்ணம் தூர்ந்து போமாறு, அரசியற் பேரதிகாரிகளும் சமயப் பணியாளரும் பிறரும் மண்ணள்ளி எறிந்த வண்ணமே இருந்தனர்; பொருளுதவி புரிவோர் இருளில் மறைந்தனர்; கிறிஸ்தபருக்கும் இடுக்கண் பல அடுக்கி வரலாயின. ஆயினும் என்? "மடுத்தவாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து" என்ற திருவள்ளுவப் பெருமொழிபோல, அவ்விடையூறுகளும் இடர்ப்பட்டுத் தாமே யழிந்தன. கதீட்ரல் கண்கவர் வனப்பும் மண்மகிழ் தோற்றமும் பெற்று இன்றும் நின்று நிலவும் பெருஞ் சிறப்புடன் திகழும் செம்மை யெய்திற்று. இன்றும் அதனைக் காண்போர், "பெரியார்" எனப் பொறித்துள்ள பெரும் பெயரைக் காணுந்தோறும், நம் கிறிஸ்தபரின் வினைத்திட்பம், முயற்சி முதலிய வினைமாண்புகளை நினைந்து பாராட்ட நிற்கின்றனர். திருவும் கல்வியும் சிறந்து விளங்கும் நாடுகளுள் இப்போது அமெரிக்க நாடு எத்துறையிலும் ஈடுமெடுப்புமின்றி விளங்கு வதனை நாம் அறிகின்றோம். இதன் உண்மையினையுணர்ந்து கண்டு உரைத்த கொலம்பஸ் என்னும் பெரியாரை மேனாட்டவர் அனைவரும், நம் நாட்டவருட் கற்றவரும் நன்கறிவர். நம் நாட்டிற்குப் புதுநெறி யொன்று காணப்புகுந்த அப்பெரியார் அவ்வமெரிக்க நாட்டினைக் கண்டறிந்தனராயினும், அதனை முதலிற் காண்டற் கண் அவர் உற்ற இடுக்கண் உரைக்குந் தரமுடையதன்று. புதுநெறி காண்டல் கூடுமென்ற எண்ணம் அவர் உள்ளத்திற் புகுந்த நாள்முதல், புதுப்பெரு நாடாகிய அதனைத் தம் கண்களாற் காணுந் துணையும், அவரை, அவமதிப்பு, அச்சுறுத்தல், அறியாமை, இகழ்ச்சி, ஏமாற்றம், வசைவு, கொலை, அச்சம் முதலிய பல செயல்கள் பல்லாற்றாலும் அரித்து அலைத்தன. நாட்டின் காட்சியை யெய்துதற்கு இரண்டொரு நாழிகை யிருக்கும்போதும், அவர் சென்ற வங்கத்திலிருந்தோர் அவரைப் பற்றிக் கொலைசெய்து விடவும் துணிந்தனர்: மலைபோல் அலையெழுந்து முழங்கும் மறிகடல், முன்னே கிடந்து, மருட்சி விளைவித்தது; பின்னே அவரது நாடு நெடுந்தொலைவிற் கிடந்து, வறிதே திரும்பின் அவரை இகழ்ந்தெள்ளி இன்னற் படுத்தற்கு எதிர்நோக்கியிருந்தது; அருகில் சூழ விருந்தோர் மடித்த வாயும், வெடித்த சொல்லும், கடுத்த நோக்கும் உடையவராய்த் தீவினையே சூழ்ந்து கொண்டிருந்தனர். கணந்தோறும், நிலையின்றிப் புரளும் அலைகள் அவர்தம் கலத்தைச் செலவொட்டாது தடுத்தற் கெழுந்தன போல வெழுந்து அலைப்ப, அவற்றிடையே ஒடுங்கா வுள்ளமும் கலங்காக் கொள்கையு மல்லது பிறிதில்லாத அவர் மனத் திட்பம், அவ்வலைகளின் தலையை மிதித்தேகியது; விரிகடலைச் சுருக்கிற்று; நெடும்போது குறும்போதாக, நீர்க்காற்று நிலக்காற்றாக, பகல் மாய, இரா வணுக, வினை முடிவின் துனைவு மிக, அமெரிக்கப் புது நாட்டின் அடைகரை புலனாயிற்று, அடர்த் தற்கெழுந்த அலைகள் அவரைத் தலைமேற் சுமந்து தாலாட்டின; வன்காற்றாய் மடித்தற்கு நின்ற கடற்காற்று, மென்காற்றாய் அவர் மெலிவு தீர்த்து மகிழ்வித்தது. ஈதன்றோ வினைமாண்பு! என்றும் பொன்றாத இன்பவிசை நல்கும் வினையினும், உழைப்பினும் ஏற்றமுடைய தொன்று உண்டுகொல்! இல்லை! இல்லை! எஞ்ஞான்றும் இல்லை!! இனி இவ்வுழைப்பினை நம் பண்டைச் சான்றோர் ஆள்வினையென்றே வழங்கி யிருக்கின்றனர். உள்ளத்தின் ஆட்சி வழி நிற்கும் உடல் புரியும் வினை உழைப்பாதலால், அதனை ஆள்வினை யென்றது எத்துணை அழகுடைத்து! காண்மின். அவ்வாள்வினையே ஆடவர்க்கு உயிர் என்பதனால், ஆடவனை ஆண்மகன் என்றல் எத்துணை அறிவுடை மொழி! காண்மின் ஆண்மக்களே! உங்களது ஆண்மை, ஆள்வினையே, அயரா உழைப்பே, அதனையுடைய நீவிர் என் செய்கின்றீர்கள்? அயர்ந்து உறங்குகின்றீர்கொல்? உறங்கன்மின்; உறங்குதல் உய்வற்றார்க்கே உரியது, ஓய்வு உலையா உழைப்புடையார்க்கே உரியது. உழைப்பவர் ஓய்வு கோடற்குரியர், ஓய்வுற்றவர் உறங்குதற்குரியர்; உறங்குவோர் மீட்டும் உழைத்தற்கு உடற்கும் உள்ளத்திற்கும் உரந்தருபவராவார். உங்களது உறக்கம் மீட்டும் உழைத்தல் வேண்டி உங்கட்கு ஊக்கம் செய்தற்கமைந்தது; அதற்குரியபோது இரவுப்போதே, ஆகவே, பகற்போது உழைப்புக் குரியதாகும். உழைப்புக்குரிய அப்பகற்போது உறங்குதற்குரிய தன்று; அதனால் பகற்போதில் நன்கு உழைமின். உலகம் விரிந்து கிடக்கின்றது; இதன்பால் உயரிய பயன் உளது; உழைப்பவர் அப்பயனை நுகர்தற்குரியர்; உலகையளித்த ஒருவன் உங்கட்கு உடம்பு நல்கியுளன்; அவ்வுடம்பினை உலகில் இயக்கி உறுபயன் பெறுதற்குரிய உறுகருவியாக உங்கட்கு, அவன் உள்ளத்தையும் உதவியுளன், உள்ளத்தால் உள்கியவழி உழைத்தற் குரிமையும், ஆற்றலும் உங்கள்பால் உள என்பது விளங்கும். அவற்றை வெளிப் படுத்தல் உங்கள் கடன். ஆற்றலும் உரிமையு முடைய நீவிர் உழைக்குமிடத்து, எங்கெங்கு முறை பிறழ்ச்சி தோன்று கின்றதோ, அஃது உங்கள் உயிர்க்கிறுதி பயக்கும் உறுபகை யாதலின், அங்கங்கு முறைமையை நிறுவுதல் வேண்டும்; நெல் விளையும் வயலிடத்துப் புல் முளைய விடுவிர்கொல்? துரும் பாயினும் விரும்பி யீட்டுமின். பருத்தியின் பஞ்சு காற்றிற் பறக்கும் புன்மைத்தாயினும் விடாது பற்றுமின்; ஈட்டு மின்; பாங்குற நூன்மின்; அஃது அற்றம் மறைக்கும் ஆடையாகுமே; "அணியெல்லாம் ஆடையின் பின்." உழைப்பிற்கு "ஊறு செய்வன பிறவும் சிலவுள, அவை அறியாமையும், மடமையுமாகும். அறிதற்கரிய அமைதி பெற்றும், அறியவேண்டுவனவற்றை அறியவிடாது, மருட்சியும் அச்சமும் பயப்பித்துச் செய்வினை சிதறுவித்தலின், அறியாமை உழைப்பிற்கு ஊறு ஆகும். அறிவுடையோர் அறிவுறுப்பவும், ஆற்றற்குரிய வினையும் உரிமையும் அருகில் இருப்பவும், ஆள் வினைக்கண் கருத்தை இருத்தாது, மடிமைக்கண் மடிந்து கிடப்பித்தலின், மடமை யினைத் தகர்த் தெறிதலும் ஆண்மகற்கு அறமாகும் அதனைச் செய்யவேண்டு மென்பது ஆண்டவன் ஆணை. "இன்று," "இப்பொழுது," "இக்கணம்" என்று வழங்கும் காலமே, அதனை அயராது ஆற்றற்கமைந்த அருமைக் காலமாகும் அயர்ந்தவழி இரவு வந்து விடும்; அக்காலத்தில் எவரும் உறங்குவரே யன்றி உழைத்தலைச் செய்யார். எல்லா வகை உழைப்பும் ஏற்றமுடையவனாகும்; அவற்றுள் கையால் உழைக்கும் உழைப்பில் கடவுட்டன்மையுண்டு எனக் கார்லைல் என்னும் பெரியார் கவினக் கூறுகின்றார்; இக்கட்டுரைக் கண் அடங்கிய கருத்துகளை வழங்கிய பெரும் புலவரும் அவரே. உழைப்பு உலகேபோல் பரந்த பண்பினையுடையது; இதன் உயர்வு வீட்டுலகின் உச்சியிலுளது.. முதற்கண்உடலிலும், பின் மூளையிலும், முடிவில் உள்ளத்திலும் ஒன்றியுலவிப் பயன் உறுவிக்கும் உழைப்பே, கெப்ளர் கண்ட கோணிலைக் கணக்கும், நியூட்டன் நிகழ்த்திய நெடும் பொருளாராய்ச்சியும், அறிவியற்கலைகளும், ஆண்மைச் செயல்களும் இன்னுயிர் வழங்கி இசை நடும் இயல்பும் யாவும் தோற்றுவித்த ஏற்றமுடையது. ஆதலால், ஆண் கடன் இறுக்கும் மாண்புடைய மக்காள்! உழைப்பே ஆண்டவன் உருவென வுணர்மின். அதற்கு அழியாது ஆற்றலே அவனது திருப்பணியென அறிமின்; பரந்த உலகில் சிறந்தோங்கிய பெருமக்கள் கண்டுணர்ந் துரைத்த முதுபொருளும் இதுவேயாம். உழைப்பினை வெறுத்து நொந்துரைக்கும் ஒருவன் உளனோ? உளனாயின், அவனை அது செய்யவேண்டாவென உரைமின். ஒடுங்கிக்கிடக்கும் அவன் முன் சென்று, "அன்ப, ஒடுங்குதல் ஒழிக. இதோ, உன்போல் உழைத்த தோழர்கள் உயர்நிலை யுலகத்தில் இன்பஞ் சிறந்து இனிதே உறைகின்றனர். அவர்களன்றோ ஆங்கே இன்புறுகின்றவர்; பிறர் எவரும் இலரே! இந் நிலவுகினும், உழைப்பு நலத்தால் உயர்ந்த வரன்றோ, மக்கள் மனநிலத்தில் மன்னி, வானவரும் முனிவரரும் போலக் காலங்கழியினும் கோலங் கழியாது என்றும் நின்று நிலவுகின்றனர்," எனத் தெருட்டித் தெளிவுறுத்துமின்.  3. வரனென்னும் வைப்பு உடம்பொடு கலந்து தோன்றும் உயிர்த்தொகையுட் சிறப்புடையவென உயர்ந்தோரான் உணர்த்தப்பெறும் மக்களுயிர்க்கு உறுதிப்பொருளெனப் பெரியோர் வகுத்துக் கூறும் நால்வகைப் பொருள்களுள் வீடென்பதும் ஒன்று. அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து எனப் பெரியோர் கூறுவர். கூறினும், அது இவ்வுலகம் போல் அழிதன்மாலைத்தாய இன்பத் தினைத் தராது, எஞ்ஞான்றும் குன்றா வின்பம் தரும் பேருலக மெனவும், அதனை நாடியே உயிர்கள் நிற்றல் வேண்டுமெனவும் நம் ஆன்றோர் கூறுவதனோடு அமையாது, அவ்வுலகநாட்டம் உயிர்கட்கு இயற்கையிலே அமைந்துள தென்றும், அது, ஆயும் உணர்வுடையார்க்கே புலனாமென்றும் கூறினர்; கூறுகின்றனர். அக்கூற்றினை ஒருவாறு ஆராய்ந்து கண்ட வழியே, ஈண்டுக் கூறப்பெறுகின்றது. புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து, சவியுறத் தெளிந்து, தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கான்யா றொன்றின் அடைகரையின்கண், வெயினுழை பறியாக் குயினுழை பொதும்ப ரொன்றிருந்தது. அதன் கண் எண்ணிறந்த புள்ளினம், மண்ணுறு வாழ்க்கைக்கு மாண்புறுத்தும் செவிச்சுவையமுதம் கேட்போர் செவிப்புலம் வளம் பெற அளித்து வாழ்தர, அவ்வினத்து ளொன்றாய இன்னிசைச் *செம்புளொன்று பெடையுடன் கிளைமல்க அவ்வடைசினைப் பொதும்பருள், பெற்றதுகொண்டு, பேரறம் நேர்ந்து, பெறலரும் இன்பமே துய்த்து வந்தது. அதனால், அது, எங்கெழிலென் ஞாயிறு என்னும் - இறைவனருளா லெய்தும் - நெஞ்சிறுமாப்பும், பழியஞ்சி யீட்டும் பொருளின்ப முடைமையின், வழியெஞ்சா வன்பொருளும் உடைய தாயிற்று. ஆகவே, அதற்கு இனி வேண்டற்பால தென்னாம்? ஒன்றுமில்லை யன்றோ! நிற்க, ஒருநாள், இச் செம்புள்ளின் வாழ்க்கைத்துணை யாய், ஒத்துணர்வும் பான்மையு முடையதாய், துணைச் சேவற்கு ஒருவாற்றானு முயர்வுதாழ்வில்லாக் கவினுங் காட்சியு முடையதாய் விளங்கிய பெடைப்புள், தன் கூட்டகத் தமர்ந்து, பார்ப்புக்கட்கு உணவாவனவற்றை யளித்து உவந்திருக்கையில், பகல்செய்யும் செஞ்ஞாயிறு பாவையிற் படிய, பைய இருள் வந்து பரவ, இன்பத்தெண்கால் இடைவந்துலவ, அருகோடிய அருவிக்க ணெழுந்த சிறுதிரை பொதுவீழ்தலின் எழுந்த விழுமிய வோசை யாங்கணும் பரவ, விரிகதிர்மதியம் விண்ணகத் தெழுந்து, மண்ணக மடந்தையின் மயக்கொழிப்பதுபோலத் தன் ஒண்கதிர் பரப்பிற்று. அது காலை, அப் பார்ப்புக்களு ளொன்று, தன் சிறுதலையை நீட்டி, அன்புகனியும் ஆய்முக நோக்கி, "அன்னாய்! வாழி! நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய இத் தெண்ணீர் யாறு செல்லிடம் யாதுகொல்" என வினவ; கேட்ட தாய்ப்புள், விடையறியாமையின், விளம்பல் கூடாது, குறுநகை காட்டி, "மக்காள் யான்! அறியேன்; 'கலின்' எனக் கலிக்கும் தூக்கணங் குருவியையாதல், கட்புலங்கதுவா விட்புலம் படரும் வானம்பாடியை யாதல் கேட்டல் வேண்டும். ஆண்டுத் தோன்றும் கோட்டெங்கின் குலைமீது அவை ஒருகால் வந்தமரினும் அமரும். அது போழ்து நீவிர் மறவற்க. நீவிர் கேட்டதும், அதனோரன்ன பிறவும் அறிதலாம்" என்று கூறி, வானம்பாடியின் வள்ளிசையைத் தன் மென்குரலால், வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் இசைப்ப, குரீ இக்குஞ்சுகள் குளிர்ப்பெய்தி, "வானம்பாடிகொல் இக் கானம் பாடியது" என்றெண்ணலாயின. மற்று, அவ் வானம்பாடும் வண்குருகு, தன் மெல்லிசை கொண்டு, காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும், வேறுபல் வைப்பும், ஊரும் நகரமும் உறைதரும் இல்லமும், ஊறுசெய் விலங்கும், ஊனூண் வேட்டுவர் விரிக்கும் கண்ணியும், பிறவும் மெய்பெற விசைத்தல் மரபு. அதனை யொருகாலேனும் அருகமர்ந்து நன்கு கேட்டறியா இச் செம்புள், பாடுங்கால், அவ் விசைப்பொருள் முறையிற் சிறிது பிறழ்தலும் குறைதலுமாயின. இழுக்குடைய பாட்டாயினும், இசை நன்றாயின்மை கொண்டு பேருவகை மீதூரத் தாமும், தம் அன்னையொப்ப, மெல்லிசை மிழற்றல் தொடங்கின. இங்ஙனம் குரவராயினார் செய்யும் செய்வினையை மக்களாயினார், நுணுகி நோக்கி, அம்முறையே செய்தல் உயிர்த்தொகையுட் சிறந்து விளங்கும் இயல்புகள் பலவினு ளொன்று. இதுவே, ஏனையறிவு வளர்ச்சிக்கும் பிறவற்றிற்கும் ஒருதலையாக வமைந்த அடிப்படை யென்பது கல்வியாளர் கோள். இதனை யீண்டுரைப்பிற் பெருகும். வெள்ளி முளைத்தது; விடியல் வந்தது; பறவை பாடின; பல்லுயிரும் பரவுக்கடன் செய்தன; விழுந்த ஞாயிறும் எழுந்தது; மென்காற்று வீசலுற்றது; பூநான்கும் பொதுளி வெறி திசை நான்கும் போய்உலவ, கரும்பு தேனார்ந்தன. சேக்கையுளுறங்கிக் கிடந்த செம்புட்குஞ்சுகள், உறக்க நீங்கி, ஒருபுடை வந்து, உவகை கூர்ந்தன. அதுபோது, தாய்ப்புள், தன் செல்வச் சிறு குஞ்சுகளின் மருங்க மர்ந்து, தன் மெல்லிசையைத் தொடுத்து, யாற்றுநீர்ச்செலவின்மேற் பாடிற்று. அக்காலை கரையாக் கல்லும் புல்லும் கனிந்துருகின. சுருங்கக்கூறின், அவ்விசை யின்பத்தால், " மருவியகால் விசைத்தசையா; மரங்கள்மலர்ச்சினைசலியா; கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்தோடா; பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்ந்தொழியப்புனல்சோரா; இருவிசும்பின் இடைமுழங்க; எழுகடலும் இடைதுளும்பா." எனுந் தீங்கவியே அமையும். இங்ஙனம் சிறந்தோங்கிய இசையொன்றில், அப் புள் வீறுற்றதே யொழிய, அதனுளத்தில், சிறுகுஞ்சு வினவிய பொருள்மாத்திரம் புலனாயிற்றன்று. ஆயினும் தானும் தன்பார்ப்புக்களும் ஒருபகல் அவ்வாறு செல்லிடம் சேறல்வேண்டு மென்னும் திப்பியவுணர் வொன்று அதன் நெஞ்சத் தகலாது நிலவுவதாயிற்று. இவ்வாறு நாட்கள் பல சென்றன. அப்புள்ளும் யாற்றுநீர்ச்செலவு பொருளாகப் பாடி வந்தமையை நீக்கிப் பிறிதோர் இடமொன்றனை நாடிப் பாடுதல் தொடங்கிற்று. அக்காலை அவ்விடமே, இவ்வாறு செல்லிடமாம் என்பது அதற்குத் துணிபாயிற்று. இவ்விடத்தைக் கேட்குந்தொறும் அப் பார்ப்புக்களும் தம் தாய்ப்பறவையை, அதனைக் குறித்த வினாக்கள் பல நிகழ்த்தாது ஒழிவதின்று. நிற்க. இவ்விடம் யாதாக விருக்கலாம்? சிலர் இதனை நாம் யாண்டிருந்து போந்தோமோ ஆண்டையது என்பர். வேறு சிலர் நாம் இனிச் செல்லுமிடம் யாது அது வென்பர். சிலர், இத்தகைய இடமே இல்லை யென்பர். வேறுபலர் நாமும் பிறயும் நீங்கியதும்; நீக்கமற இனிச் செருவது மாய இடம் என்பர். காட்சி யொன்றையே அளவையாக் கொள்வார் துணிபு. மற்று, நாம் காண்டல், கருதல், உரை யென்னு மூன்றையும் அளவையாக் கொள்ளும் பான்மையே மாகலானும், அவற்றா னாராயுங் காலத்து, உளத்திற் றோன்றும் சில வுணர்வுகளும், உணர்ந்தோர் பலர் கூறிய உரைகளும் அப்பெற்றித் தாய இடமொன்றுண்டென்பதனை வலியுறுத்துகின்றன. ஆயினும், அதனை ஒருவாறு நாம் காண்டற்குமுன் அறியாவுலகம் என வழங்குவோம். *முதனூலாரும் இவ்வாறே வழங்குகின்றார். அன்றியும், இவ்வுலகைப் பற்றி, இருண்ட வுணர்வுகளே அப்பறவையின் உணர்வுட் கலந்து கிடந்தன. இனி, அத் தாய்ப்புள், தானே தனித்தமர்ந்து, அவ்வுலகு பற்றிய வுணர்வுகள் தன் மனத்தெழுந்தோறும், இசைத்துக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்தூற. உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகிக் களிக்கும். இக் களியாட்டினைப் பின்னர் அது, தன் பார்ப்புக்கள் காணவும் கேட்கவும் செய்தயர்தல் தொடங்கிற்று. இங்ஙனம் செய்தற்குக் காரணம் யாதாகும்? அப்பார்ப்புக்களும் இதனைத் தொடர்வன வல்லவோ? அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ? அது போலும் காரணம்! இவ் வண்ணம் நாட்கள் சில சென்றன. ஒருநாள் அக் குஞ்சுகளு ளொன்று, ஆய்முகநோக்கி, அவ் வுலகு யாண்டுள தென்று கேட்ப, அது, "அவ்வுலகம் உண்டென்பது உண்மை; மற்று, யான் அஃது உறுமிடம் அறியேன். ஆகலின், அவ்விடத்தை யான் கூறுதல் கூடாது" என்றது. என்றலும், அவற்றுட்டலைக் குஞ்சு முன்னின்று, "இவ் யாறு செல்லுமிடம் யாது, அது அவ் அறியா வுலகம்!" என்றது - இது உண்மை கொல்? அன்று. அவ் யாறு, மறுவில்மானவர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்பமதன்றென மலைபடு பொருளும் கான்படு செல்வமும் தலைமணந்துகொண்டு, பெருநகரடைந்து, கால்வழிச் சென்று, வயலிடைப் படர்ந்து, அதன்கண் விளையும் பைங்கூழ் வளர்த்து, வணிகர் மரக்கலம் அணிபெற மிதப்ப, மங்கையர் குடைந்து மாணலம் புனைய, புரிநூல்மார்பர் அருங்கடனாற்ற, மீனுண்குருகும், தூண்டில் வேட்டுவரும், திண்டிமில்வாழ்நரும் செல்வம் மீக்கொளப் பரந்து சென்று, கோனோக்கி வாழுங் குடியனைத்தும் வானோக்கலின், அதற்கின்றியமையாப் பெருமழை பிறக்கும் பெருந்திரைப் புணரியைப் புணரும்! இப்புணரியோ அறியா உலகெனப் படுவது! பகலின் பான்மையும் இரவின் எழிலும் புள்ளினத்துக்கொரு பொலிவும் மாவினத்துகொருமாண்பும் வயங்கத் தருவனவாக, இவையனைத்தும் தந்த வொருவன், இவை செல்லிட மொன்றைச் செய்யாது விடுவனோ? இதுநிற்க, "அன்னாய்! அறியாவுலகின் அழகினைக் கூறுவதால் ஆகும்பயன் யாதுகொல்! அதனைப் பலகாலும் பாடிப் புகழ்தல் எற்றுக்கு?" என்று தொடங்கிய ஒரு குறும்புள். "தேனூற்றெடுப்ப மணநாறும் பூம்பொழிலகத்தைவிட்டு நாம் வேறிடம் சேறல் என்னை? மென்றளிரும் நறுமலரும் மிகைபடச் செறிந்த கூடொன்றாக்கி, நாம் ஏன் என்றும் ஈண்டே வாழ்தல் கூடாது? வான்குயில்க ளிசைபாட வரிவண்டு பாண்மிழற்ற, மான்கன்று பயின்றுள்ள, பல்லுயிரும் பொலிவெய்த விளங்கும் இவ்விளமரக்காவினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம்? ஆருயிரன்னாய்! நாம் வேறிடஞ்சேறல் வேண்டா. இதுபோது, சிந்தாமணி தெண்கடலமிர்தம் தில்லையானருளால் வந்தாலிகழப் படுமே! முயற்சியின்றியே பெரும் பயன் எய்துதற்குரிய இடம் அதுவாயினும், யான் இவ்விடம் விட்டுப் பெயரேன். ஒழிக! இனி வேறுபுலஞ் சேறல். பைந்தாட் கோரையும், பசிய தளிர் நிறைந்த புதலும் மிக்க இவ் வடைகரையினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம்! ஆகலின், அன்னாய்! இனிப் பாடுதலொழிக! பாடுதற்கு உளம் ஒருப்படுதலும் ஒழிக!!" என்றது. பின்னர் அத்தாய்ப்புள், தன்மனத்துப் பலவேறுவகைப் பட்ட எண்ணங்கள் படர்ந்தெழுந் தடங்க, வெய்துயிர்த்து, வேறுகூறா தொழிய, மற்றொரு சிறுகுருகு கூறும். அது, "இறுத்த இருள் கெட, யாண்டும் இளங்காலும், இன்னொலியும் எழ, பொன்னுருக்கென்ன இளவெயில் பரப்பி, விடியலிற் கீழ்க்கடலின் முகட்டெழும் இளஞாயிற்றினைக் காணாய்! தெண்ணீரின் திரையிடை, அச்செஞ்ஞாயிற்றின் செங்கதிர்கள் தவழ்தலும், ஆண்டுப் பல் வண்ணங்கள் தோன்றி மிளிர்தல் காணாய்! வரிக்கெண்டையும் பருவராலும் நண்பகலொளியில் மின்செய்து மறைதலும், இளந்தளிர்கள் ஒளிதெறித்தலும் பிறவும் காணாய்! தண்டென்றல் தளிரசைப்ப, பார்ப்புக்கள் கிளைபடர்ந்து இசைபாட, புதுமலரின் மணம் பரவ, காலையணிந்து பகலெல்லாம் ஒளியின்றியிருந்த கவினனைத்தும், மாலையிற்றுவர முடித்துத் தோன்றும் இயலணங்கின் எழிற் செவ்வியை மறத்தலும் கூடுமா? ஈண்டாயினும், ஆண்டாயினும், யாண்டாயினும் அமர்க. வெண்மதியின் தண்கதிர்கள் பைந்தழைகளின்மீது பரவி, கலித்தோடும் அருவிநீரில் ஆடல் பயின்று, பூங்காவை வானமாக்கி, கான்யாற்றை, அத்திங்கட் புத்தே ளூர்ந்து செல்லுந் தேர்வழியாக்க, விளங்கும் இரவுப் பொலிவை நினைத்தொறும் நெஞ்சம் வேறோரிடத்தையும் நினைக்குங் கொல்! திண்கலமும் சிறுநாவாயும் செல்வுழிச்செல்வுழி யெழும் ஒய்யெனும் ஓசை நம் உறக்கம் கெடுப்ப, நெடுந்தருவின் பைங்கிளை படர்ந்து பாடலை நம் இனம் பயில, இன்பக்காட்சியே யாண்டும் இலங்கும் இந் நிலத்தினும் அவ் அறியாநிலம் அழகுடைத்தோ? "துஞ்சுவது போல இருளி, விண்பக இமைப்பது போல மின்னி, உறைக்கொண்(டு) ஏறுவது போலப் பாடுசிறந்(து) உரைஇ நிலநெஞ்(சு) உட்க ஓவாது சிலைத்தாங்(கு) ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்." நாம் நம் படையமை சேக்கையைப் படர்ந்து, ஒன்றோ டொன்று புல்லி இருக்கின் கார்செய்பனிப்பும் கலங்குதுயர் செய்யாதாக, எழுந்த வெம்மையால் இன்பம் மிகும் இவ்விரும் பொழிலினும், நீ கூறும் அப்பூம் பொழில் ஏற்றமுடைத்தாமோ? ஆதலின் அன்னாய்! வேறுபுலம் முன்னுதலை விட்டொழித்து, இப்புலம் பற்றிய இன்னிசையே மிழற்றுதி!" என்றது. பின்னர், அத்தாயாய செம்புள், இங்ஙனங்கூறிய தன் செல்வக் குஞ்சின் பெருஞ்சொற்களைக் கேட்டு, ஒருவாறு, உளத்தைத் திருத்தி, "செல்வங்காள்! இனி நீவிர் விரும்பிய வண்ணமே வேறொரு பாட்டே பாடுவல். போற்றிக் கேண்மின் என்று ஒரு மெல்லிசை, பொருள் செறியப் பாடுதல் தொடங்கிற்று. அப்பொருள்: "பரந்த உலகிடைத் தோன்றிய யாவும் தன் பொறிபுலன் களின் வழியே மனத்திற்குக் குன்றாவின்பமும், அச்சமறியா வியல்பும் நல்கத் தான் பெற்றுவாழ்ந்தமையும், அவ்வாழ்க்கை யில் நாட்பல செல்ல, தனக்கு உள்ளிருந்தே, 'இஃது நின்னிட மன்று' என வோர் பொருண்மொழி யெழுந்திசைத்தமையும்; அம்மொழி, பின் பலமுறையும் இசைப்பக் கேட்டதான், ஒருகால் உவகையும், ஒருகால் வெறுப்பும், பலகாலும் கேட்டற் கொருப்படாது சேறலும் கொண்டிருந்தமையும்; இருக்கையில், தான் வாழுமிடமே மேதக்க இடமாவது, அதனை நீங்குதல் அறவே கூடாது என்னும் உவகை யுணர்வு தோன்றினமையும்; பின்னர்த் தன் மனக்கினிய துணைப் பறவை போதந்து, காதல் செய்து களித்துக் கலந்தமையும்; அது காலை, அம்மொழிப் பொருள் பன்முறையும் எழுந்து, ஊன்கலந்து, உடல்கலந்து, உயிர்கலந்து, பின்னர் உணர்வுங் கலந்து ஒரோ வோசையாய் உருவெங்குங் கலந்துநின்றமையும்; அக்கலப்பே, தன் துணைப்புள்ளிற்கும் நிகழ, இரண்டும் உளங்கலந்து இக்கான்யாற்றடைகரை யடைந்து, சிற்றிற் சமைத்துச் செவ்விய வாழ்க்கை நடாத்தி வந்தமையும் பிறவுமாம். இதனைக்கேட்ட பார்ப்பினுள் ஒன்று, "அற்றேல், அன்னாய்! நீ பண்டே யிருந்த இடம் யாண்டையது? அருகுளதாயின், யாம் அனைவரும் ஆண்டே படர்ந்து, இன்பந்துய்த்து இனிது வாழலாமே!" என்றது. எனவும், தாய்ப்புள் உளங்கலங்கி, ஆருயிர்ச் செல்வமே! அதனை யெங்குளதென்பேன்! அறியாவுலக மென்பேனோ! அன்றி மிகமிகச் சேய்மையிலுள்ளதோர் விண்ணிடம் என்பேனோ யாது கூறுவேன்! யான் அறியேன். ஆயினும், அன்றெழுந் திசைத்த பொருண்மொழி இன்றுமெழுந்து ஈர்கின்றது. அது அன்றிட்ட ஆணையை மேற்கொண்டடங்கிய யான் இன்று விடுத்தல் கூடுமோ? அயராவின்பத்திற்றிளைத்திருந்த அன்றே அவ்வாணையையேற்ற யான், இளமையும், அதனானாம் இன்பமும் இழந்த இந்நிலையிற் கொள்ளாதொழிதல் முறையோ? ஆகவே, என் அருமைச் செல்வங்களே! அவ் அறியாவுலகம் யாண்டமைந்திருப்பினும் இருக்க. நாம் அனைவரும் அதனைநோக்கிச் செல்வம். வம்மின்!! யான் கூறுவது உண்மையே என்னும் உறுதிநோக்கங் (Faith) கொண்டு ஒருப்படுமின்” என்றது. என்றலும், “நீயும் எம்மொடு வருதியன்றே. ஆயின், யான் இன்னே வருவல்” என்று மிகச்சிறியதோர் பார்ப்பு விளம்பித் தன் தாயிசைத்த தனியிசையிற் றானுங் கலந்து பாடல் தொடங்கிற்று. இன்னணம், சொல்லாடலாலும் இசையாலும் பொழுது கழிய, 'வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நிழற்செய்யவும், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்குபெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்’ மாலை வந்தது. வரக்கண்ட தாய்ப்புள், தன் பார்ப்புக்களைத் தமித்துவிட்டு இரைதேடுவான் சென்றிருப்ப, அவற்றுளொன்று அண்மையிலோடிய அருவியின் மருங்குநின்ற புதற்கணமர்ந்து, அருவியின் கலிப்பும், அடைசினை யசைதலி னெழு மார்ப்பும் கேட்டலும் களிமீக்கூர்ந்து, அங்கு மிங்கு மோடியோடித் தன்னல்லிசை கொண்டு இன்னிசை மிழற்றத் தொடங்கிற்று. அக்காலை அது இசைக்க முயன்ற இசைகள் பலவும் இயைபுபடாதொழிய, இறுதியிற் றன்றாய் பாடிய அறியாவுலக விசையை இயக்கிப்பார்க்க, அது நன்கனம் கைவரவுவந்து அதனையே எடுத்தும் படுத்தும் இனிது பாடிக் கொண்டிருந்தது. “ஆ! யாழோ! குழலோ!! இன்றேன் பெருக்கோ!!! என்பெலாம் உருக்கும் இன்னிசை மிழற்றவல்லது யாதுகொல்! ஆ! தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் கலியா; நீண்ட பொருப்பினின்றும் இழியும் அருவிக்காலும் நதிகளும் புரண்டுதுள்ளா; எப்பொருளையும் தன்வயமாக்கி, உள்நிறை யுயிரும் மெய்யும் உருக்குகின்றதே!” எனப் புகழ்வது போலும் இழித்தக்க கூறிக்கொண்டே புறவமொன்று ஆண்டு அதனருகே வந்தது. இது புறங்குன்றி கண்டனையதேனும் மூக்கிற் கருமையு முடைத்து; அன்றியும் ஒண்மை யுடையம் யாம் என்னும் வெண்மை தலை சிறந்தது. எக்குடிகெடுக்கவோ, எதனலம் தூற்றவோ ஈண்டு இஃது வந்துளது. இதனியல்பறியாச் சிறுசெம்புள், தான் கேட்ட இதன் பொய்யுறு புகழ்ச்சியை மெய்யுறு புகழ்ச்சியென் றெண்ணி, பெரிதும் முயன்றுபாடலும், இம்மடப்புறவம், தன் சிறுதலையைப் பையத்துளக்கி, “நன்று, நன்று, யானும் பல விடங்கட்குச் சென்றுளேன். பல இன்னிசைகளாற் றோட்கப் பெற்று முளேன். ஒருகால், மக்களகத்துப் போற்றி வளர்க்கப்பெறும் பேறும் பெற்றுளேன். எனவே, இசைநலங் காண்டலிற் சிறந்த வன்மை பெற்றுளேன் என்பது நன்கு தோன்றும். யானறிந்தவளவில், ஆணையிட்டுக் கூறுவேன், நின்னொப்பார் நல்லிசைவல்லார் மக்களினும் இலர். ஆயினும் ஒன்று, நின்னாற் பாடப்பெறும் பொருள்கள் யாவை? அவை யான் இது காறுங் கேட்டனவல்லவே!!” எனச் சிறிது சுளித்து வினவிற்று. குறும்புள் : ஆ! அவை யாவும் அறியாவுலகு பற்றியன. புறவம் : எவை? அறியா... குறும்புள் : அவை அறியா வுலகின் அழகு, இன்பம், வாழ்க்கையியல்பு, அதனையடையுமாறு முதலியவற்றைக் கூறுவன? புறவம் : (நகைத்து) அது அறியாவுலகாயிற்றே! அதனைப் பற்றி நீ அறிந்ததியாங்ஙனம்? அம்மம்ம! முற்றாக் காயெல்லாம் முழுத்த கேள்வி வல்லவாயிருக்கின்றன. காடும் செடியும் அவா வறுத்தல் மெய்யுணர்தல் முதலியன செய்கின்றனவே! மெய்யாக, யான் இவற்றை யறிதல் வேண்டும். மூத்து முதிர்ந்த முதுமை மிக்க யான், அவ்வுலகினையறிந்து ஆவன செய்துகோடல் வேண்டுமே! நன்று! அறியாவுலகமென்று நீ கூறுவது யாது? யாண்டுளது? அருள்செய்து கூறுக. குறும்புள் : யான் அறியேன். (உணர்வுகலங்கி) ஒருநாள் அவ்வுலகினுக்குச் சேறல்கூடும் என்பதையன்றி வேறு ஒன்றும் யான் அறியேன். புறவம் : நன்று. அறிந்தேன். பேதையோர் பேதையோர் என நூல்கள் கூறுகின்றன. அவர் யாவர், யாண்டுளர் என ஆய்ந்து கொண்டே வருதல் என் இயற்கை. அன்பே! இன்று கண்டேன். நின்மாட்டே அந் நூல்களின் கூற்று வாய்மையாதல் கண்டேன். நீயே அதற்குத் தக்க சான்று. ஆகவே, நீவிற் அறியா வுலகிற்குச் செல்லும் செலவு மேற்கொண்டுள்ளீர். ஆற்றுப்படையின்றியே போலும்! அப்பெற்றித் தாய செலவு நீ நயந்தனி ராயின், நும் நன்னர் செஞ்சத்து இன்னசை வாய்ப்ப, முன்னிய யாவையும் இன்னே பெறுக!! யான் வருவல் என்று கூறிக்கொண்டே பறந்து சிறிது செல்ல, அக் குறும்புள், விருதுப்பட்டிக்கு விரைந்து போங் கலியைக் குறுக்கிட்டு உறுவிலை கொடுத்து வாங்கியாங்கு, “நிற்க! சிறிது தாழ்த்தல் வேண்டும் நன்று, தாங்கள் கூறியது யாது? என் அறிவு மயங்குகின்றது” என்றது. புறவம் : அறியாவுலகத்திற்கு அமைந்துள்ள நுந்தம் செலவு மேதக்கதே. ஆயினும், இடைப்பட்ட எனக்கும் உனக்குமே அச் செலவு செய்தற்கேற்ற நெறி தோன்றாது போலும். குறும்புள் : ஓ, அதனை விடுக. அவ்வுலகுபற்றிய உம்முடைய கோள் யாது? அதனை யேனும் கூறுக. புறவம் : என்னை? ஏ துரும்பே! என்னையோ இகழ் கின்றனை. நன்று! உன்னொத்த சீரிய இசைப் புலமையும், நுட்பமும் திட்பமுமமைந்து அறிவு முடைய எவ்வுயிரேனும் அறியாத ஒன்றின்மாட்டு வெறிதே நினைந்து சாம்புங்கொல்! வேண்டின், நீ நின்னையே கொள்ளலாம். உன்னைப்போல், வாளாது பொழுது கழிப்பதாயின் என்னையும் கொள்ளலாம். ஒன்று கூறுவேன்; யாவருக்கும் ஒல்லுவ தொல்லும் என்பதே சிறந்தது. மிகுத்துக் கூறல் மிக்க ஏதமே தரும். குறும்புள் : அற்றேல், நீர் அவ் வறியாவுலகிற்குப் போகீர் போலும்! புறவம் : ஒருகாலும் இல்லை. முதற்கண், யானுறையு மிடம், முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கத்தவா வளப்பமும், விழைவு விடுத்த விழுமி யோர்க்கும் விழைவு தோற்றுவிக்கும் விழுப்பமும் வாய்ந்தது. ஆகலின் யான் வேறிடம் விரும்பேன். மேலும், பெற்றது கொண்டு பெறும் பேறே பேறெனப் படுவது, இரண்டாவதாக, கேட்கப் படுவன யாவும் வாய்மைய என எளிது ஆராயாது கொள்ளும் நும்மோரன்னோர் போலும் சிற்றறிவுடையேன் யானலன். அன்றியும், நீர் கூறும் உலகமொன்று உண்டென்பதை யேனும் யான் எங்ஙனம் அறிவது? குறும்புள் : என்னை ஈன்றோர் எனக்கு அருளினர். புறவம் : ஈன்றோர்களோ கூறினர்? அங்ஙனமா!அற்றேல், நீ மிகமிகச் சீரியதோர் பறவையே! நின் ஈன்றோர் கூறுவனவற்றைக் கூறியவாறே உளங்கொளும் நீர்மை வேண்டற்பாலதே! அவர்கள் ஒருபகல், நீ செஞ்ஞாயிற்றைச் சென்று சேர்ந்து வாழ்தலுங் கூடும் என்பராயின், நீ ஆமென்றே கொள்ளுவாய் போலும்!! குறும்புள் : (சீறியது போல்) ஈன்று புறந்தந்த என் குரவர் ஒருபொழுதேனும் என்னை வஞ்சித்ததின்றே! புறவம் : என்னை, யென்னை? வெகுளுவதென்னை? என்னை செய்தி? நின்பெற்றோர் நின்னை வஞ்சித்தனர்; வஞ்சர் என்று ஒருவரும் கூறிற்றிலரே! அவர், நின்னை வஞ்சித்திலராயின், ஒன்று கூறுவேன், அவர் பேதையரே, அன்றேல், பொருளறியாதாரே. நும்மோரன்னோர் மாட்டு ஒன்றுகூறல் விழைவோர், உண்மையில், உளநோய் கோடல் உலகியல், 'ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர்போஒமளவும் ஓர் நோய்.’ நிற்க, அவர் கூற்று வஞ்சனையின்பாற் படுவதோ, பொருளறியாமை யின்பாற் படுவதோ, நீயே ஆராய்க. உலகியலும் உண்மையறிவு மிலரோடு உள்ளோர் உரையாடல் ஒருவாற்றானும் ஒல்லாதாகலின், யான் சென்று வருவல். வாழ்க! வாழ்க!! (மறைகின்றது.) இங்ஙனம் அம் மடப்புறவங் கூறிய சொற்களாற் றன் உண்மையறிவு கலக்கங் கொண்ட குறும்புள் ஒருவாறு தெளிதற்குள், அது கட்புலங் கடந்தது. மறுபகல், வேனில் வெப்பமும், வெவ்விய காற்றும், இலவாக, தன் தன்மையிலோர் திரிபுண்மையைக் காட்டிற்று. நீனிற வானம் மானிறங் கொள்ளக் கொண்மூவினம் விண் மூடின. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வள்ளுறை சிதறித் தலைப்பெயல் பெய்ததாக, கரைபொரு திரங்கும் கான்யாறு வான் யாறொப்பப் பெருக்கிட்டோடி, குளிர்ப்பு மிகுதலும், உறைந்து பட, மாமேயல் மறந்தன; மந்தி கூர்ந்தன; பறவைபடிவன வீழ்ந்தன; கறவை கன்றுகோ ளொழிந்தன; குடாவடி உளியம் முதலியன பெருங்கல் விடரளையிற் செறிந்தன; ஆமா நல்லேறு சிலைத்தன; காற்றுற் றெறிதலால் மயிலினம் வீற்றுவீற் றோடின. இடம்பெற வமைந்த குடம்பைகள், பறவைவும் பார்ப்பும் உறையுளின்றொழிய, நிலம்பட வீழ்ந்தன. வரனெனும் வைப்பில் உரங்கொண்ட அன்பு பூண்ட செம்புள்ளின் சேக்கைமட்டில் ஊறொன்றின்றி இனிதிருந்தது. அதனுழை யிருந்த குஞ்சுகள் இவ் வனைத்துங் காண்டலும், பெருவியப்புற்று, பகலோன் கரந்தனன்; பனி மிகுந்துளது என்கொல்! எனும் எண்ணந் தலைக்கொண் டிருப்ப, ஒன்று, “பெருவானம் விரிகதி ரின்றியும், முகிற்குலம் பரவப்பெற்றும் உளது! தெண்ணீர்யாறு மண்ணீர்மையுற்று அசைவின்றி யுளது! பகலவன் ஒளியே யின்றிப், பார்முற்றும் பசிய இருள் செறியப் பெற்றுள்ளது! என்னோ!” என்றது. மற்றும் ஒன்று : நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை இவ்வுலகு உடைத்தன்றோ! தாய்ப்புள் : (நகைத்து) ஆம்! ஆயினும், விரிகதிர்ச் செல்வனை நாம் நாளை காண்டல் கூடும். இஃதுண்மை! நிற்க. இக்காலத்துப் பகற்பொழுது குன்றிவருதலை நீவிர் அறிந்திலீர் போலும்! இன்றெழுந்த புயலே இப்பகற் பொழுதினைக் குறைத்தது; ஆதலாற்றான், செஞ்ஞாயிற்றின் வெங்கதிரும், இம் முகில்வழி நுழைந்து வெயிலெறித்தல் கூடாது போயிற்று. இதுகிடக்க. இத் தலைப்பெயல் நம் குடம்பை முற்றும் ஈரஞ்செய்திற் றின்றாகலின், உள்ளே வம்மின் குளிர்ப்பு நீங்க; யான் அப் பெரும்பெயர்ச் செலவின்மேற் பாட்டொன்று பாடுகின்றேன். பேதையீர், நீவிர் இப் பகற் பொழுதே என்றும் காண்டல் கூடு மென நினைக்கின்றீர்கொல்லோ? இந் நிலவுலகின் காட்சிநலனைத் தூக்கி யுரைத்த சிறுபுள் முன்போந்து, “அன்னாய்! யான், பண்டு, என்றும் காண்டல் கூடுமென்றே எண்ணினேன், நினைத்தேன்; மற்று, இன்றே யான் அதன்கண்ணும் திரிபுண்மை கண்டேன். ஆயினும் யான் அதற்கு இனி அஞ்சேன்! பருதி பரவை படிய, கருமுகில் பெரு மழை பொழிய, வானங் கருக, கான்யாறு பெருகின், வரும் நோய்தீர் மருந்தும் அறிந்துளேன். அது, நாம் அடைய விரும்பும் அறியாவுலகின் ஆய்ந்த நல்லிசை. கேட்ட தாய், உவகை கிளர்ந்தெழ, நுனிக்கொம்ப ரேறி, கேட்கும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் உள்ளிட்ட யாவும் மெய்பனிக்கும்வண்ணம், தேம்பிழிபோலும் இன்னிசை மிழற்றிற்று. அதுகாலை, அதனோடு சேவற்புள்ளும், சிறுபுள்ளும் ஒத்திசைத்து உவகைத்தேன் சுவைத்தன. யாவும் ஒத்திசைத்தன வெனினும் ஒன்றுமட்டில் அந்தோ! உளம் ஒருப்படாது, உவகையுங் கூராது வெறுத்த நோக்கொடுநிற்ப, இசைப்பெருக்கு நின்றது. நிற்றலும் அது, ஏனைச் சிறுபுட்களை விளித்து, “இவ்விசை, இதனினும் பத்தடுத்ததாம், அதனுட் கூறப்பெறும் உலகுபற்றிய யாவும் உள்ள வாறு உணரப்பெறின்” என்றது. இவ்வாறே, பிரிவு காரணமாகத் துயருற் றிருந்த பெடைச்சிறுபுள்ளொன்று, நகைத்து, “அதனைப் பற்றி நாம் மிகைபட வுணர்வேமாயின், ஈண்டை நலத்தான் நமக்கு மனவமைதி யுண்டாகா தன்றோ!” என்றது. இவற்றைக் கேட்ட மற்றொன்று, “ஆம், நாம் அவ்வுலகு சார்பாக ஒன்றும் அறிந்திலே மன்றோ! உண்மையில், அங்ஙனமோர் உலகு உண்டென்பதை யேனும் எங்ஙனம் அறிதலாம்?” என்றலும், மற்றொரு பெடைப்புள், “அன்று, அங்ஙன மொன்று உண்டென்பதை நாம் நன்கு உணர்கின்றோம். யாதோ? நம் அன்னை கூறிய உள்ளொலி என்னுள் எழுந்திசைத்தது!யான் உணர்ந்தேன்” என்று கூறிற்று. இக் கூற்றினைக் கேட்ட தலைக்குஞ்சு, “உன்னுள் எழுந் திசைத்ததாக நீ நினைத்தனைகொல்லோ! அது தானே! ஆ! இவையாவும் வெற்றுரைகளே. இங்ஙனம் நின்னைக் கூறுமாறு நம் அன்னை கூறினாள்போலும்! அம்மம்ம! நீ கூறுவனவும், அன்னை கூறுவனவும் பிறவும் வீண் பொருளில் யாப்புக்களேயன்றிப் பிறிதில்லை. நுண்ணிய கேள்வியறிவு மிகினும் இயற்கையறிவு கூடினன்றோ அது மாட்சி பெறும்! யானும் அப்புல்லறிவே மேற்கொண் டிருப்பின், அவ் வுள்ளொலி என்னுள்ளு மெழுந் திசைத்த தென்பேன். இனி யான் அவ் வுலகு சேறும் செலவையும் நினையேன். சேறற்கு உடன்படலும் படேன். செல்க” எனச் சிறிது வெகுண்டுரைத்தது. “இஃதன்று நீ நிற்குமிடம்” என்பது பொருளாக வமைந்த நல்லிசை யொன்றை எடுத்திசைத்தவண்ணம், குடம்பையின் புறத்தே தாய் வர, அகத்திருந்த பார்ப்புக்களுட் சில, தாய் பாடியதையே தாமும் பாடத் தொடங்கின. அந்நிலையில், அத் தாய்ப்புள்ளின் உள்ளும் அவ் வொலி யெழுந்தது. எழவே, மறுமுறையும், அது அந் நல்லிசையையே தொடங்கி, “இழுமெனோதையின் அருவி யிரங்கலும், மருங்கு கரை கொன்று கான்யாறு சேறலும், விண்ணகங் கடந்து கொண்மூவேகலும், மால்வரை துளங்கக் கால்பொரு தோடலும், விரிகதிர்ப்பருதி பரவையின் மறைதலும் எப்பொருள் நாடிச் செய்கின்றன. இதற்குக் காரணமாவது, அவற்றி னகத்தெழுந்து, “இஃது அன்று நீ நிற்குமிடம்”என் றொலிக்கும் அருளொலி யன்றோ! யாற்றொடு கூடுக! முகிலொடு மொழிக! காலினை வினவுக! நீவிர் செல்லிடம் யாதென்று! அறியாவுலகமே! வரனெனும் வைப்பே யன்றோ! 'நீ செல்லிடம் யா’ தென வெயிலவனை விளித்துக் கேண்மின். அவன் சேறுமிடனும் அப்பெறலரும் உலகே! குறித்த நாள் வருங்கால் நாம் அனைவரும் ஆண்டுப் படர்குவம்” என முடித்தது. இவ் விசைவயப்பட்டு மனந்திருந்திய அத்தலைக்குஞ்சு, “அன்னாய்! அன்னாய்! நீ கூறுவது வாய்மைகொல்லோ! யான் கொள்ளுமாறு யாது? அவ் வுலகம் உறுமிடம் யாண்டையது? அருள் செய்க,” எனக் கசிந்தழுது, தன் தாய்முக நோக்கி, தனக்கு அம் மடப்புறவங் கூறிய அனைத்தும் முறையும் பொருளும் வழாது விளம்பிற்று. விளம்புங்காறும் அமைதி கொண்டேற்ற அச் செம்புள், “அருமந்த செல்வமே! அலமரல் வேண்டா; யான் வேறோர் நல்லிசை யிசைப்பல் கேட்டி” என்று தொடங்கித் தான் பண்டே யகன்ற உலகியலைப்பற்றிக் கூறல் தொடங்கிற்று. அங்ஙனம், அவ்விடத்தினின்றும் அது அகன்றஞான்று, தான் ஏன் அகறல் வேண்டுமென்று நினைத்ததுண்டோ எனின் இன்று; செல்லுமிடம் இற்றென அறியாமே, பணிவும், உறுதிநோக்கும், நீங்குத னலத்திற்கெனும் திண்ணிய வெண்ணமும் ஆய இவையே அதன் உளப்பொருளா யமைந்திருந்தன! பெருங்கடலுலகிற் பிரிந்து வருநாள், அச் செலவுக்குரிய காரணப் பொருளை யுணர்த்து வாரேனும், “இஃதன்று, அது நின் நெறி” எனக் கூறுவாரேனும், அது கண்டதுண்டோ வெனின், அன்று. அஞ்ஞான்று, அம்மடப்புறவம் கண்டிருத்தல் கூடுமாயின், அது தானும் இவ்வாறு கூறற்பாலதாமோ? இவை யனைத்தும் ஆராயாது போந்த அச்செம்புள் தானும் பின்னர் உரிய நலத்தைத் துய்க்கா தொழிந்ததோ? அதனை யங்ஙனம் சேறல் செய்யுமாறு ஊக்கிய பொருளாய உள்ளொலி யாதாம்? அதுவே திருவருள் என்பது. அப்பறவை, அக் கான்யாற் றடைகரை யடைந்த நாளே உண்மையை ஒருவா றுணர்ந்தது. ஏனெனின், ஆண்டுத் தான் அது சின்னாள்வரைத் தங்குதல் விழைந்தது. பின்னரே, அதன் காதற்றுணைப்பறவை போதந்ததும். வாழ்க்கை யின்பம் நுகர்ந்ததும் பிறவும் நிகழ்ந்தன. அன்பர்களே! அது போது, காதற் சேவலொடு கலந்து அது குடம்பை யமைக்கும்போது, தன்வயிற் பின்னர்த் தோன்றுவனவாய பார்ப்புக்கட்கென அக் குடம்பையைச் சமைக்கும் போது, அம் மடப்புறவங் கண்டிருக்குமேல், எத்துணை இகழ்ச்சி செய்திருக்குங்கொல்லோ! பிறவாப் பார்ப்புக் கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங்கொல்லோ! அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம்? நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று” என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ! யாதோ? நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ? அன்று இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனா லன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது! இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக் காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய உறுதிப்பொருள் களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ? இன்றோ? “இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, புலவர் புரட்சி.” என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ்வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும் அச்செம்புள் “செல்வங்காள்! எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்” என்றும், *“பணிவும் (Obedience) *அறிவும் (Faith) பண்பட்டகாலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப் பெறுதலும் உளவாம்,” என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்! பின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. . மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணீர் வாரவும், ஊன்கலந்து உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து, தித்திக்கும் தன்மையிற் சிறந்தது. இஃதுண்டாதற்குக் காரணம், என்னையெனின், அவை உண்மை யறிந்தன; அவ்வுண்மையை யுணர்ந்தன; அவ்வுண்மையை உறுதி யெனவும் கொண்டன. ஆகலாற்றான், அவை ஆண்டை யின்பத்தையும் ஈண்டே யுணரலாயின. நிற்க, ஒருநாள், சிறுகுஞ்சுகள் குடம்பையினின்றும் வெளிச் சென்றிருப்ப, அவற்றின் உளங் கலங்குதற் கேதுவாய பேரொலி யொன்று அருகே யெழுந்தது. எழ, பேரச்சங்கொண்டு, அவை தம் கூடடைந்தன. கூடு அக்காலை, நிலைகுலைந்து, தளர்ந்து, நீரால் நனைப்புண் டிருந்தது. இருப்பினும், அவை, ஒன்றை யொன்றிறு கப்புல்லிச் சிறிதுபோது கிடப்ப, ஆய்ப்புள் இல்லாமை தெரிந்தது. எதிர் நோக்கிய கண்கள் பூத்துப்போயின; மனம் பெருந்துயர் பூண்டது. என்செய்யும்! பின்னர் அவை, கூட்டினின்றும் வெளிப்போந்து, நோக்கு மிடந்தொறும் தம் தாய்ப்பறவையைத் தேடிச்சென்று, தளர்வும், களைப்பும் மீதூர, ஈன்றாரைக் காணாது ஏக்குற்ற நெஞ்சம் துயர்ந்து சாம்ப, காண்டல் கூடுமோ கூடாதோ என்னும் எண்ணம் ஒரு புடயலைப்ப, பெரும்பேதுற்றகாலை சேறும் நீரும் கலந்து சிறிய நீர்நிலையும், சுற்று மோங்குத லில்லாப் புதலும் உள்ளதோர் துன்பநிலையம் அவற்றின் முன்னர்த் தோன்றிற்று. கூர்ந்து நோக்கிய காலத்து, பறவைச் சிறகும் சிறுமயிரும் சாம்பிய வோசையும் ஆண்டுத் தோன்றின. கண்ட குஞ்சுகள். வேணவாமீக்கொள, அங்குச் சென்று, இறந்த தொன்றும், இறக்கப் போவதொன்றுமாய இரண்டு புட்களைக் கண்டு, இறக்கப்போவது தம் யாயாதல் உணர்ந்து, பட்டதை என் கூறுவது! படுவதைக் கண்ட தாய்ப் பறவை, செல்வங்காள்! “எழுமின்! சென்மின்! திருவருளின் காரியமாய உள்ளொலி உந்தம் உளத்தும் இன்னே எழுந்திசைக்கின்றது! சென்மின்! சென்மின்! பணிமின்! படருமின்! தாழ்த்தற்குச் சிறிது போதும் இன்று! இன்பநாட்டமே கொண்மின்!!” என்றது. எனக்கேட்ட குறும் புட்குழாம், “என்னை? எந்தை யாண்டுளார் ஐயகோ! அன்னாய்! அன்னாய்!!” என்று அலறிக் கூயின. “அமைமின்! அமைமின்! யாங்கள் ஆண்டு உம்மோடு சூழ விருத்தல் முடியாது; கூடாது. இனி...” என்று கூறிக்கொண்டே தன் தலையைக் கீழே சாய்த்து, வரனென்னும் வைப்பில் முளைத்தது. நிற்க, இதனை யீண்டு உரைத்துக்கொண்டே செல்லின் பெருகும். திருவருள் கைகூட்டுமாற்றினை வாழ்க்கைமுகத்தான் உணர்த்த, வுணர்ந்த பறவைக்குஞ்சுகள், இன்பவுலகை யெண்ணித் தாமும் பேரறம் நேர்ந்து, அப் பேருலகினை யடைதல் வேண்டி முடித்தனவாக, பலவும் பலவேறு நெறியிற் படர்ந்து சென்றன. அவை யாண்டுச் செல்கின்றன வென்றேனும், ஏன் செல்கின்றன வென்றெனும் ஒருவறேனும் கட்டுரைத்தல் கூடாது. கனவிற் கண்டன வொப்ப, தம் தாய்நினைவும், தம் பண்டைக் கூட்டி னுறைவும் பின்னர் அவற்றின் புலத்துத் தோன்றலும் மறைதலு மாயின. பெற்றதுகொண்டு பேரின்பந்துய்க்குங் காலத்துத் தம் தாய்நினைவு தோன்றிச் சிறிது மயக்கலும், அவை பின்னர் தெளிதலும் ஆய இன்னோரன்ன பல நிகழுங்காலத்து, ஒன்று கூறியது, “இதனினும் சிறந்ததோர் இன்பவுலகாதல் வேண்டும் நம் தாய் படர்ந்த வுலகம். அன்னதேயாக, அங்ஙனம் நம் தாய் கூறியதும் உண்மையே போலும்” என்பது.  4. பிறப்பொக்கும் : சிறப்பொவ்வா வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணதெய்த இரு தலையுமெய்தும் என்னும் செம்பொருளுணர்ந்து, அந்நடுவணதாய பொளீட்டல் கருதித் திரைகடல்வழியும், மைவரைவழியும் பல நாடுகளுக்குச் செல்லும் மக்கள் உளராதல்போல, சிற்றுயிர்களுள் தேன் தேடிப்பல திசைகளுக்குஞ் செல்வன பலவுள. அவற்றிற்குத் தேன் எனவும், அளியெனவும், வண்டெனவும், சுரும்பெனவும் பலபெயர்கள் உண்டு. நிற்க, ஈண்டுத் தேன் தேடிச்சென்ற வண்டொன்றின் வரலாற்றினையே யான் கூறத்தொடங்குகின்றேன். புதுத்தளிர் தோன்ற, பூக்கள் மலர, நறுமணம் எங்கும் நன்கு பரவ, மலையாநிலம் மருங்குவந்தசைய, யாண்டும் இன்பமே இலகிக்தேனாறும் இளவேனிற்காலத்து முதுபகலொன்றின் பிற்பகலில், தேனீயொன்று நறுந்தேன் வேண்டிக் காவும், சோலையும், கவின்பூந்துருத்தியும் புக்கு, ஆண்டாண்டு மலர்ந்து வயங்கும் பூத்தொறும் சென்று, கொளற்கரிய தேன் மிகைப்படக்கொண்டு, அதனாலெழுந்த உவகையால் விரைந்து எழுந்து, தன்கூடு நோக்கிச் செல்லத் தொடங்கிற்று. ஆயினும், அதுபோது, அது பூவியல் நறவம் மாந்திப் புந்தி மயக்குற்றிருந்தமையால், வழியறியாது மேலெழுந்து சென்று, அருகிருந்த ஓர் பேரகத்தின் மேற்சாளரத்தினூடே அதன் உட்புறம் அடைந்தது. அக்காலை அப்பேரகத்தின்கண் ஏதோ ஒருசிறப்பு நடை பெற்றது: இனியவும் மணமிக்கவுமாய பண்டங்கள் பல மலிந்திருந்தன. மிகப்பலமக்களும் கூடியிருந்ததோடமையாது சொல்லாடலாலும், இசைக்கருவிகளாலும் பிறவற்றானும் பேரோசையும் செய்வா ராயினர். இவற்றைக்கண்ட தேனீயின் கருத்தில் அச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், பண்டங்களின் சுவையும் மணமும் அதனை வெளியேகவிடாது ஒருபுடைத்தகைந்தன. தகையவே, தேனீயும் நறுமணப்பண்டங்கள் வைத்துள்ள தட்டொன்றின் புறத்தேதங்கி, அவற்றின் மணத்தை நுகர்ந்தும் சுவையைத் தேர்ந்தும் சிறிதுபோது கழித்து நிற்க, "ஆ! இதோ பார். தேனீ! தேனீ!!" எனக்கூறிக் கொண்டே சிறுவர் இருவர் அதனருகே வந்தனர். இச்சொற்களை கேட்ட அவ்வீயும், உடனே அச்சத்தால் உடல் நடுங்க வெளிச் செல்வான் முயன்று ஒருசாளரத்தின் மேற்பாய்ந்தது. பாவம்! அதன் கதவு கண்ணாடியாலாயதாகலின், அக்களிவண்டு அதனையுணர வியலாது மயங்கி, ஆடியில் மோதுண்டு கலங்கிக் கீழேவீழ்ந்து, பின்னர்ச் சிறிது தேறி, சாளரச்சட்டத்தின் கீழ்ப்புறத்தே தான் மயக்கத்தாலும் அச்சத்தாலும் இழந்த மனவமைதியும் வன்மையையும் மீட்டும் பெறற்பொருட்டு விழுந்து கிடந்தது. நிற்க, இதனைக்கண்ட சிறுவர்களிருவரும் அருகே போந்து, இதைப்பற்றிய ஒரு சொல்லாடல் நிகழ்த்துவாராயினர். சிறுவன் : தங்காய்! இதுதான் தேனீ. இதனைத் தொழில்புரி தேனீ என்பதும் வழக்கு. இதன் இருதுடைகளுக்கு மிடையிலுள்ள மெழுக்குப் பையினையும் காண். ஆ! என்ன ஊக்கமும் உழைப்பு முடையது இது தெரியுமா! சிறுமி : அண்ணால்! மெழுக்கையும் தேனையும் ஆக்குவது இத்தேனீ தானோ? சிறுவன் : ஆம் பூக்களின் உள்ளிருக்கும் இனியதேனை இது அவற்றின் உட்சென்று கொணர்கிறது. முன்னொரு நாள் நாம் நம்பூம்புதரின் அகத்தும் புறத்தும் "கம்கம்" என எண்ணிறந்த ஈக்கள் மொய்த்து இசைத்தது கண்டோ மன்றோ! அவை அங்குமிங்கும் பறந்து திரிந்ததைக் கண்டு நகைத்தோமல்லவா? இளந்தளிர்களின் மீது இவை படருங் காலத்து இவற்றின் மெய்யழகு நம் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள வில்லையா? நிற்க, இது இன்று காலையில் தேனீட்டுங் காலத்தும் யான் பார்த்ததுண்டு. இதற்குத் தேனீட்டலொன்று தான் தொழிலெனல் ஆகாது. இதனொடு வேறுபல காரியங்களும் இது செய்தல் வேண்டும். தேன் கூடு கட்டுதல், அதனையழகு செயல் முதலிய எல்லாக் காரியங் களையும் இதுதான் செய்தல் வேண்டும். இது பற்றியேதான் இது தொழில்புரி தேனீ என்றழைக்கப் பெறுதலும் காண்க. பாபம்! பாபம்!! சிறுமி : தொழில்புரிதேனீ என்பது யாது? அண்ணா! தாங்கள் "பாபம்! பாபம்!" என்று இதன்மாட்டு இரங்குவதேன்! சிறுவன் : ஏன் தெரியாது? நம் அத்தான் நேற்று நமக்குச் சொன்னதை மறந்துவிட்டாய் போலும்: தம்மைச் சிறிதும் ஓம்பாது பிறர்நலமே யோம்பி யவர்க்கே ஆட்பட்டுச் சிறு தொழில் புரியும் மக்களனைவரும் இரங்கற்பாலரே! அவர் வகையின் பாற்படுவதே இத்தேனீயுமாகலின், யான் இதன் மாட்டும் மனமிரங்கல் வேண்டிற்று. இவ்வீக்களுக்கு அரச ஈ ஒன்றுளது. அதனை ஈயரசி யென்பதுவே பெரு வழக்கு. அது ஒரு சிறுதொழிலும், செய்யாது, எஞ்ஞான்றும் தொழிலீக்கள் அமைத்த கூட்டின்கண்ணே இருந்து, அவை கொணரும் தேனையுண்டலும், கொணர்ந்த ஈக்கட்கு வேறுபணி பணித்தலும், தான்பயந்த சிற்றீக்களைப் புரத்தலும், இவற்றோரன்ன பிறவுமே செய்து கொண்டுவரும். அதற்கு வேண்டும் சிறுபணிகளை, மருங்கிருந்து ஆர்க்கும் வண்டுகள் செய்யாநிற்கும். இவற்றிற்கு வேறாக வெற்றீக்கள் பலவுள. அவை ஒரு தொழிலும் செய்யாது வீணே அங்குமிங்குந் திரிந்து கொண்டிருப்பவை. ஏனையவை யாவும் இவ்வீயைப்போன்று தேனீட்டிப் பிறவற்றிற் களித்ததோடு, அவற்றிற்காம் சிறு தொழிலைப் புரிபவையே யாகும். இக்கூறியவற்றை நம் அத்தான் அறிவாரேல் அவரால் நகைத்து அடங்குதல் முடியாது. சிறுமி : அதனால் இச்செய்திகள் அத்தானுக்குத் தெரியாவோ? சிறுவன் :-இல்லை. அவருக்குத் தெரியும் என்று யான் நினைக்கவில்லை. தெரியுமாயின், அவர் இவற்றைப் பிடித்தலும் பிடித்துத் துன்புறுத்தலும் செய்யா ரன்றே, யான் எவ்வாறு அறிந்தேனெனின், எனக்கு நம் சோலைக்காவலன் கூறினான். நிற்க, நெருநல் அவர் கூறியவற்றை நோக்கினையா? இவ்வுலகில், அரசர், அரசியார் என உயிர்களுட் சிலரிருத்தல் இயற்கைக்கே மாறானதாம்; எல்லாரும் ஒரே அச்சாக இருப்பதே இதற்குப் போதிய சான்றாம்; இயற்கையிற் றோன்றும் ஒவ்வொரு பொருட்கும் பிறப்பினால் ஒருவகை வேறுபாடும் இன்றாம்; எனவே, அரசர் எனவும் அரசியரெனவும் இருப்பவர் நடுநிலை வரம்பைக் கடந்தவரே யாவராம். சிறுமி :ஆனால், இவற்றை உய்த்துணர்ந்து கோடல் இவ்வீக்களுக்கு இயலாதென யான் நினைக்கின்றேன். சிறுவன் :நினைப்பதென்ன! உண்மையிலே அது அவற்றிற்குக் கிடையாதுதான். சோலைக்காவலன் கூறியவற்றை மட்டில் இத்தொழிலீக்கள் கேட்டிருக்குமாயின், எத்தகைய சினங் கொண்டிருக்கும்! நீயே நினைத்துப்பார்!! சிறுமி : அவன் கூறியதென்ன? சிறுவன் : அரசியையும் ஆட்பட்டொழுகும் சிற்றீக்களையும் சீர் தூக்குங்கால் பிறப்பினால் அவற்றிற்கிடையில் ஒருவகை வேறுபாடும் இல்லை. பிறப்பும் தோற்றமும் ஒன்றே. எனினும் இவ்வேறு பாட்டைத் தருவன உண்டிவகையும், உறையுளின் தன்மையுமேயாம். இச்சிற்றீக்களை வளர்க்கும் பெடைவண்டுகள், சிலவற்றிற்கு ஒருவகை உணவும், வேறுசிலவற்றிற்கு ஒருவகை உணவும்; சிலவற்றிற்கு ஒருவகைக்கூடும், வேறு சிலவற்றிற்கு வேறுவகை யான கூடும் தருகின்றன. அதனால் சில ஈயரசி களாகவும், சில தொழிலீக்களாகவும் மாறுகின்றன. இக்கருத்தோ நெருநல் நம் அத்தான் மேன்மக்களையும் தொழில் மக்களையும் பற்றிக் கூறியவற்றுள் அமைந்து கிடந்தது. "பிறப்பொக்கும் எல்லாவு யிர்க்கும்." என்பது தமிழ்மறை. நிற்க, உண்ணுங்காலம் ஆயிற்று. வா, போகலாம். சிறுமி :அண்ணால்! சிறிது நில்லுங்கள். யான் இவ்வீயை வெளியே விடுத்துவருகிறேன். இங்ஙனம் கூறிக்கொண்டே, அச்சிறுமி தன் கைத்துணியால் அதனைப் பையவெடுத்து அருளொழுக நோக்கி, "அந்தோ! ஏ! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! குழவிப் பருவத்தே உன்னை வளர்த்தோர் உனக்கு உண்டியும் உறையுளும் உயர்ந்தன கொடுத்திருப்பரேல், ஆ! இன்றுநியும் ஒரு ஈயரசியாக இருப்பாயன்றோ! என்ன இழிந்த நிலையை உனக்கு அவர் தந்துள்ளார்! அறிதியோ? கிடக்க, நீ இனி வெளிச் சென்று, உன்வாணாள் முற்றிலும் மெழுகு செய்தலிலும், தேனீட்டலிலும் செலவிடல் வேண்டும். செல்க. செல்க. நீ மேற்கொண்ட சிறு தொழில் சீர்த்தொழிலாமாக!" என வாழ்த்தி, சாளரத்தின் புறத்தே விடுத்தனள். வெளிப் போந்த வண்டு, கழிபேருவகைகொண்டு தன் வழிச்செல்கை தொடங்கிற்று. ஆ! என்ன இனியமாலைக்காலம்! காட்சிக்கினியமாலைக் காலம்! காதலர்கூடிக் கலந்துரையாடும் மாலைக்காலம்! இங்ஙனம் இளவேனிலின் முதுமாலை, மன்னுயிர்க்குப் பேரின்பம் பயந்து இனிதாய்த் தோன்ற, அத்தொழிலீக்கு மட்டில் அத்தன்மையின் மாறுபட்டுத் தோன்றிற்று. அதன் மனம் ஏதோ ஓர் பொருளாற் பற்றப்பெற்றுத் துயர்பூண்டிருந்தது; அடிக்கடி அது ஒருவகை யுணர்ச்சியால் நாணி மிக வருந்தத் தொடங்கிற்று. இவ்வாறு வருத்தமும் துயரமும் மயங்கிய உள்ளமொடு அது தன் கூட்டை - பணிசெய்து கிடப்பதே தன்னறமாகும் என்னும் கொள்கை யுடன் அன்று காலையில் விட்டுப்பிரிந்த தன் கூட்டை - அடைந்தது. அடைதலும், அடக்கலாகா வெறுப்பும் வெகுளியும் அதன் உள்ளத்துத் தோன்ற, அது தான் கொணர்ந்த தேன்பையை நெகிழ்த்தெறிந்து, மனம் சலிப்படைய, "எல்லாவுயிரினும் கடைப்பட்டேன் யானே காண்" என அறைந்தது. அக்காலை, அங்குச் சிறுதொழில் செய்துகொண்டிருந்த மற்றொரு தொழிலீ இதனைக் கேட்டு, "என்னை செய்தி? என்னே நின் செய்கை யிருந்தவாறு! வெறிமிக்க வேங்கையின் தேன் உண்டனைகொல்லோ? அன்றி அக்கொடிய பச்சிலைப்புழு நம் கூடுகளில் தன் முட்டையிட்டுளதுபற்றிச் சினங்கொண்டனையோ? என்னைகாரணம்?" என வினவிற்று. அதற்கு இது, "நீ கூறிய யாதேனும் வேண்டுங் காரணமாகாது. ஐயோ பாவம்! அவையென் செய்யும்? தாந்தாமுன் செய்தவினையைத் தாமே துய்ப்ப தல்லது பிறர் செய்வதென்?" எனவிடையிறுப்ப, அது, "பின்னர் என்னையோ காரணம். உரைத்தி" என மீட்டும் வினவ, இது கூறும்:- "இல்லை. அன்ப! இன்று காலையிற் சென்ற யான் மிக்க சேணிற் சென்றேன். சென்றவிடத்து யான், இதுகாறும் கேட்டறியா தனவெல்லாம் கேட்டேன். கேட்டவற்றின் கருப்பொருள் "நாமெல்லோரும் இழிதொழில்புரியும் இழித்தக்க உயிர் களாவோம் என்பதே." இவ்வுரை அதன் செவிப்படலும், அது திடுக்கிட்டு, "நீ இதுகாறும் அறியாத இதனை உனக்கு உணர்த்தியவர் யாவர்?" எனக்கேட்ப, இது சாலவெகுண்டு, உண்மையை யுணர்த்துபவர் யாவராயினுமென்! யான் இன்று அறிந்தது முற்றிலும் உண்மையே. இதுமட்டில் உறுதியே." என்றது. எனவே, அது, "ஒரு காலும் நீ கூறியது உறுதியுடைத் தன்று. பேதைச்சிற்றுயிரொன்று இங்ஙனம் பிதற்றியது கொண்டு, பிழை பட்டொழுகுதல் பெருந்தகைமை யேயன்று. நீ இழித்தக்கோய் என உணர்வுணர்த்தினாரா லுரைக்கப் பட்ட அச்சிறுபொழுது காறும் நீ அப்பெற்றியை யல்லை யென்பதை நீயே நன்கறிவாய். ஆகவே, அவர் உரைத்தாரென நீ கூறும் உரை வெற்றுரையென்பதனினும் வெளிற்றுரை யெனவே யான் கூறுவேன். இனி இதைப் பற்றிக் கூறுதலும் அறமாகாது." எனக் கூறிக்கொண்டே தான் முன்னர்க் குறைபடவிட்ட காரியத்தைச் செய்யத் தொடங்கிற்று. எனினும், இவ்வுரைமுழுவதும் செவிடன் காதில் ஊதப்பெற்ற திவவொலியே போலப் பயனின்றி யொழிந்தது. ஆனால், இது மட்டில், தன்னொத்த ஈக்கள் பலவற்றை ஒருங்கழைத்துத் தான் தேன்றேடிச் சென்றவிடத் தறிந்தவை யனைத்தையும் தெளிவாகக் கூறிற்று. கேட்டவற்றுட் சில பெருவியப்பும், சில பெருங்கலக்கமுங் கொண்டன; முடிவில் அவ்வீக்குழாத்தி னிடையில் ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. பின்னர்ச் சில ஈக்கள் எழுந்து, உண்மையில் தாம் பிறப்பினால் ஒப்பானவை யெனினும், தம்மை அரச ஈக்கள் நடாத்து முறை இழிவானதே யெனவும், அது தம்மையடிமைப் படுத்துவ தொன்றெனவும், அதனை விரைவிற் போக்குவது முதற்கடன் எனவும் முடிவு செய்தன. இடையிற் சில ஈக்கள் முன்வந்து தாம் தொடங்கிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கித் தம்மை உரிய நெறியில் நடத்துவதற்கேற்றவர் அச்சிறுவர் தம் அத்தானே யாவர் எனவும் கூறின. அதுபோது, வேறு சில எழுந்து, முன்னர்க் குறிக்கப்பெற்றவரே தலைவராயின், அவர் தம்மை ஒருங்கே யரசஈக்க ளாக்குதலோ டமையாது தம் கூடுகளையும் செவ்வனம் புரந்து, தமக்கு ஒரு மேதக்க சிறப்புரிமையும் தந்தருள்வாரெனவும் வழிமொழிய, ஒக்கும் ஒக்கும் என்னும் பேரொலி கம்மென அக்குழாத்திடையெழுந்தது." ஆ! இது தகுமா? யாவரும் சிவிகையூரத் தொடங்கின், அதனைக் காவுவார் யார்! இந்நிலையில், சிறிது நாள் முதிர்ந்த தொழிலீயொன்று, அக்கூட்டத்திடைத் தன் தலையை நீட்டி, "பிறர் நலத்துக்கெனத் தொழில்புரியும் ஈக்களனைத்தும் அரச ஈக்களாக மாறின், நன்று! நன்று!! அவற்றிற்கு ஆம்பணியைப் புரிபவை யாவோ?" என்றது. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுவரோ? நண்ணாரன்றே! ஆகலின், அவ்வீக்க ளனைத்தும், இதனைக் கேட்டதும் சாலவெகுண்டு, மதியிலி எனவும், தன்னுரிமை யறியாத்தறுதலையெனவும் கூறி, "நாம் அனைவரும் அரசஈக்களாகுங்கால், இற்றைப் போது அரசு பூண்டிருப்பனவும், அவற்றின் வழித்தோன்றல்களும் தாம் உள்ளளவும் நமக்குப் பணிசெய்து கிடக்கலாமே!" என்றன. என்றலும், அவ் ஈ மறுமுறையும் எழுந்து, "அவற்றிற்குப் பின்னர் அத்தொழிலை மேற்கொள்ளுவோர் யார்" எனக் கேட்ப, கம், கம் என்னும் பேரொலி ஆங்கு மிக்கெழுந்து. உடனே, அதுவும் தன் நாவையடக்கிக் கொண்டது. மற்றொரு ஈ எழுந்து, "அன்புடையீர்! எனக்கு முற்பேசிய ஈக்கு நிகழ்ந்த வசை அழகற்றதாகும். அது நமக்குட் பிளவையுண்டு பண்ணினும் பண்ணும். பண்ணுங்கால், நாம் கைக்கொண்ட இயக்கம் வெற்றிபெறாது. நம் கொள்கைக்கு மாறாகவுள்ள, பழைய நிலையிலே தம் வாணாளைச் செலவழித்தார்க்குப் புதிய கொள்கை களும், உணர்ச்சிகளும், இயக்கங்களும், பிறவும் வெறுப்பைத் தருவனவாகலின், அவ்வெறுப்பை யுடையவரையும் நம் இயக்கத்திற்குக் கொணர்தல் இன்றியமையாது. "நிற்க, தேனீட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில்களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவை யிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள். "என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளா தலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றீவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்" என்றோர் சொற்பொழிவு செய்தது. இடையில், முன்னர் வசைபெற்றுச் சென்ற தொழிலீ மறுமுறையும் எழுந்து, "நாம் அனைவரும் இன்றுவரைத் தொழிலீக்களாகவே உள்ளோம். அற்றாகலின், நமக்கு இவ்வியக்கத்தால் ஒரு வகைப் பயனும் எய்துதல் முடியாதென நினைக்கிறேன்! என்றது. என்றலும் எழுந்தன ஈக்கள். புகைப்படலம் போலத் திரண்டெழுந்து கம் கம் எனப் பேரொலி செய்து, தம் சினத்தை எவ்வெம்முறையில் அதற்குக் காட்டுதல் கூடுமோ அவ்வம் முறையில் காட்டின. காட்டக்கண்டஞ்சிய அது முன்போலவே தன் இருப்பிடம் அடைந்தது. அடைதலும், பகலவனும் மறைந்தனன்; பறவைப்பாட்டு அடங்கின; எங்கும் இளையிருள் பரந்தது; நீலவானத்து நித்திலம் பதித்தாற்போலக் கோல மீனினம் தம் சிற்றொளி பரப்பின; பிற்பகல் முற்றும் குழப்பத்திடையுழந்த ஈக்கள் தத்தம் கூடடைந்து உறங்குவவாயின. பின்னர் அவ்விரவு முற்றும் வேறு குழப்பமின்றி யொழிய யாண்டும் அமைதியே தலைசிறந்து நின்றது. வெள்ளி முளைப்ப, விடியல் வந்தது; தாமரையிற் றுஞ்சிய காமர் வண்டினம், கட்கமழும் நெய்தலுக்குச் சென்று, தாதூதிப் பின்னர், கண்போல் மலர்ந்த காமர்சுனைமலரை யடைந்து ஒலி செய்யா நிற்ப, முன்னாள் நிகழ்ந்த குழப்பத்தில் ஈடுபட்ட ஈக்கள் மட்டில் ஒருங்கு கூடி மீட்டும் தம் நிலைமையையும், அதற்கேற்ற முறைகளையும் பன்னிப்பன்னிப் பேசத்தொடங்கின. வேறு சில, கூடுகளில், அரசியர் ஏவிய பணிகளை இனிது செய்து வந்தவை, இக்குழப்பத்தைப் பற்றியேனும், அதனிடையே நிகழும் விரிவுரை களையேனும் ஒரு பொருளாக நினையாது தம் தொழிலிலே தம் கருத்தைச் செலுத்தி நின்றன. நிற்க, குழப்பத்திற் கலந்த ஈக்குழாத் தினிடை நிகழ்ச்சிகள் பல நிகழ, முதிரா ஈக்களிற் சில முனிவு மீதூரக் கொண்டு, அதனால் தம்மையும், தம் மனத்திண்மையையும் இழந்து, பெருங்கலக்கத்தை விளைவிக்கும் நிலைமையெய்தின. அதுபோது, இக்குழப்பத்திற்கு முதற்காரணமாகவிருந்த ஈ அவற்றின் முன்னர், "அன்பர்களே! நீங்கள் கைக்கொண்ட இயக்கம் நன்மை பயக்கக் கூடியதே. எனினும், இடையிலிருக்கும் ஒரு பொருளை நீங்கள் எண்ணாது போய்விட்டீர்களே! அப்பொருள் தான் எதுவெனின், நீங்கள் அனைவரும் முதிர்ந்துவிட்டமையன்றோ? நான் முதிர்ந்த உங்களை எவ்வாறு இனி அரச ஈக்களாக மாற்றுவது, கூடாதன்றோ. ஆயினும், நாம்கொண்ட இயக்கத்தின் வெற்றிக் கடையாளமாக யாதானுமொரு புதிய முடிபை எய்துதல் வேண்டும். என் அறிவிற் கெட்டிய முடிபொன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். பிறகு உங்கள் விருப்பம்போற் செய்யுங்கள்" என்றது. உடனே, அவ்வீக் களனைத்தும் ஒருபடியாக நீ கூறுகின்றவற்றை யாங்கள் மிக்க விருப்புடன் ஏற்றுக் கொள்ளுகிறோம். சொல்லியருள்க" எனப் பேரொலியிட்டுக் கூறின. கூறலும், அது புன்னகை தவழும் இன்முகங்கொண்டு, "அன்பர்களே! நாளின் முதிர்ந்த நமக்கு இனி அரசியர் வேண்டுவதில்லை. நாம் அனைவரும் இன்றிருப்பது போலவே தொழிலீக்களாகவே யிருப்போம்; நாம் இனி ஒருவருக்கு அடிமைப்பட்டு அவர்கள் காலாலிடும் ஏவலைத் தலையாற் செய்தல் வேண்டா, நாமார்க்கும் குடியல்லோம்! நலமே வாழ்வோம். நம்மைக் கேட்பவர்க்கும், தூய வீரத்தோடும் "யாம் யார்க்கும் குடியல்லோம். யாதும் அஞ்சோம்" எனவே, நாம் இனிக்கூறுவோம். இதுவே என் சிற்றறிவிற் கெட்டிய முடிபாகும். யான் கூறியவற்றில் குற்றங்களிருந்தாற் பொறுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டு, இம்மாட்டோடு என் சிறிய விரிவுரையை நிறுத்திக்கொள்ளுகிறேன், என்றது. எனவே, வண்டினம் முற்றும் கம்மெனும் இசை செய்து "இது தகும். தகும்! தகும்!!" என உடன்பட்டன. பின்னர், அவைகள் ஒருங்கே திரண்டு தாம் இனித்தமித்து வாழ்தற்கேற்ற இடம் நிறுவுதற் பொருட்டு மறுமுறையும் ஒரு கூட்டம் கூடின. இதுபோது இவற்றிற்குத் தலைமைபூண்டு இயல் நெறியிற் செலுத்தவல்லதாய ஒன்றும் வரவில்லை. ஆகவே, அக்கூட்டத்தில் ஒருவகைக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இலவாயின. என் செய்வது! இதுவும் உலகவியற்கையே!! நிற்க, இடம் நிறுவுதற் பொருட்டு நிகழ்ந்த இக்கூட்டத்திடை, "ஒன்று எழுந்து, காட்சிக்கினியவும் கள் நிறைந்தவுமான மலர்கள் செறிந்துளதும், இதோ நம்முன்னர்த் தோன்றுவது மாய சோலையே நாம் இனிது வாழ்தற்கேற்ற இடமாகும்" என்றது; மற்றொன்று எழுந்து, "அச்சோலையினும், அதற்குச் சிறிது சேய்த்துள்ள வயலே இனிதாகும். சோலைக்கு வருவாரும், வருவனவும் பலவாதலானும், காற்றும் எஞ்ஞான்றும் விரைவுடன் மோதியலைத்தலானும் நமக்கும், நம் கூடுகட்கும் தீங்குவிளையினும் விளையும்." என்றது, வேறொன்று, "நன்கனம் அமைத்துள்ள வீடொன்றின் கூரையே மேற் கூறப்பட்ட விரண்டினும் நன்றாகும். அன்றியும் அது நம்மை மழைக்காலத்தில் இனிது காக்கவல்லதாகும்" என்று சொல்லிற்று. நான்காவதாக, வேறொன்று, "பழுமரமொன்றின் கொழுவிய கிளையே நல்லது" என, மற்றொன்று, மலை முழைஞ்சினையும், வேறொன்று கற்பாறையையும் குறித்தன. இங்ஙனம், ஒவ்வொன்றும் தன்தன் கருத்திற் புலனாய இடங்களைக் கூறிச் சென்றனவே யொழிய, உறுதியான இடம் ஒன்றேனும் குறிக்கப்பெறவில்லை. அன்றியும், ஒன்று கூறியது மற்றொன்றின் கருத்துக் கொவ்வா தொழிந்தது: இவ்வண்ணம் ஈக்கள் ஒன்றுக் கொன்று முரணிய கருத்துக் கொண்டு, கலாய்த்து நிற்பக் காலமுஞ்சென்றது; பிற்பகல் எய்திற்று. அப்போது, அத்தேனீ இவ்வியக்கத்துக்குக் காரணமாயிருந்த அத்தேனீ - வேறோரீயினை நோக்கி, 'என்னே உங்கள் அறிவின்மை யிருந்தவாறு! உங்களைக் காணும்தோறும் என் உளத்தில் வெகுளி யெழுகின்றதே யன்றி விருப்புண்டாகின்றதில்லை. எத்தகைய அறிவுள்ள சிற்றுயிரும் இவ்வண்ணம் வீணே காலத்தைக் கழிக்காது. அந்தோ! இதனை அறிவின்மை யென்பதா? அறியாமையென்பதா?" என, அது சாலவும் சினந்து, என்னை கூறினை? ஏ, அறவிலி! உனக்கு ஈயரசு பெறவேண்டும் எனும் எண்ணம் உளது போலும்! அறிந்தேன். அறிந்தேன். இன்றேல், நீ என்னை இங்ஙனம் கேட்டல்கூடுமா? நிற்க, யாங்கள் காலத்தை வீணேகழிப்பதால் உனக்கு உண்டாகும் இழவென்னை? யாங்கள் எதையேனும் செய்கிறோம். அது பற்றி நீ வெகுளுதல் எற்றுக்கு? நீ உன் காரியத்தைப் பார்த்துக் கொள்க." என்றறைந்தது. இத்தகைய மாற்றத்தை எதிர் நோக்காது பெற்ற அத்தேனீ, மனமுளைந்து, தனக்குண்டான மானத்தையும், இழிவையும், உன்னியுன்னிப் பெரிதும் வருந்தத் தொடங்கிற்று. அப்போது, தான் அக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்தமை யையும், அதனால் தனக்கே துன்ப மெய்தினமையையும் அது எத்துணையோ அடக்கிக்கொள்ள முயன்றது. மற்று, அம்முயற்சியாற் பயனொன்று முண்டாயிற்றன்று. ஆகவே, அது மற்ற ஈக்களின் முகத்தைக் காணுதற்கே வெட்கி, சிவ்வென்றெழுந்து பூம்புதரொன்றை யடைந்து, பண்டே போல் தேன்றேடத் தொடங்கிற்று. புதர்க்குட் புகுந்து, ஆண்டு அழகு ஒளிர மலர்ந்து நின்ற மலரொன்றின் உட்புகுந்து, தான் இதுகாறும் கண்டறியாத சுவையும், மிகுதியுமுடைய தேனுண்டு களித்தது. ஆ! இது போதன்றோ அது களிவண்டென்னும் பெயர்க்கு இலக்காயிற்று! அது இதுபோது கொண்ட களிப்புக்கு ஓர் எல்லையுமின்று! அது தன் வாணாளி லோர்நாளிலேனும் இதுபோன்ற களிப்பினை யடைந்த தின்றெனின் வேறு கூறுவதென்னை! வேட்கை முற்றுங் காறும் நறவமுண்டு, வேண்டுவனவும் உடன்கொண்டு தன் கூடு நோக்கி, என்றும் அறியாத ஒருவகைப்பற்று, அன்று அதன் மனத்தை ஈர்ப்ப, அது விரைந்தெழுந்தது. எழுதலும், அதன் முன்னர், பண்டு தான் கேட்டறிந்தனவற்றை முதன் முதலுரைப்பக் கேட்ட முதிர்ந்தவண்டு போதந்தது. கண்டதும், அதற்குப் பெரு நாண் எழுந்து அறிவை மயக்க, அருகிருந்த மலரொன்றிற்குச் சென்று மறைந்தது. ஆயினும் அம்முதிர்வண்டு, நடந்தவனவற்றைக் குறிப்பாக வுணர்ந்தும், ஒன்றும் தெரியாததையொப்பக் கூர்த்த நோக்கத்தோடு, "என்கொல்! நீ ஏன் இங்கு வந்தனை? உனக்கு உற்ற தென்னை? நீ வந்திருப்பாய் என யான் ஒருகாலும் நினைத்த தின்றே! ஓ! உன் உழைவண்டுகள் யாண்டுள? அவற்றை நீ பிரிதற்கேய்ந்த காரணம் யாதோ? கூறுதி" என வினவிற்று. இதைக்கேட்ட அக்களிவண்டு, பெரிதும் நாணி, "யான் அறியேன்; சோலையின் புறத்தே யான் அவற்றைப் பிரிந்து போந்தேன் ஆதலின்" என்றது. மு. வண்டு : அவை யாது செய்துகொண்டிருக்கின்றன? க.வ : க-லா-ய்-க்-கி-ன்-ற-ன-போ-லு-ம்- மு.வ : (விரைந்து.) என்னோ காரணம்? க.வ : தாம் இனிச்செய்ய வேண்டுவனபற்றி. மு.வ : ஆ! என்ன அருந்தொழில் புரிதல் நேர்ந்தன! நன்று!! இளவேனிற்காலத்து இனிய காலையில் மேற் கொள்ளப் பட்டதன்றோ இத்தொழில்! நன்று! நன்று! செய்கறிய செய்வதன்றோ பெரியோரது தொழில்! க.வ : எள்ளுதல் வேண்டாம் ஏ! அன்னாய்!! இனியும் இன்னணம் இழித்துக்கூறற்க. என்னைப் பொறுத் தருள்க. இனி யான் செய்ய வேண்டியவற்றையும் பணித்தருள்க. ஒன்று மட்டில் கூறுகின்றேன்: யான் முன்னர்ச் சென்றிருந்த ஞான்று இயற்கையின் இயல்பையும், நம்மனோரின்றன்மை யையும் பற்றிக் கேள்வியுற்ற உரை முற்றிலும் வாய்மையாகவே தோன்றிற்று; எனினும், நாம் அவ்வுரைவழி நிற்பான் முயலுங்காலத்து, வீணே கலாய்த்தலும் வெறுத்தலும் செய்தல் நேர்கின்றதேயன்றிப் பெரும் பயனொன்றும் பெறுமாறில்லை. என்னை? மு.வ : நிற்க, நின் வயதென்னை. க.வ : (இளமைத் தன்மையொடு நாண்மீக்கொள) ஏழு நாட்களே. மு.வ : என் வயதென்னை யறிதியோ? க.வ : பல திங்களாம்போலும். மு.வ: ஆம். ஆம்! பல திங்கள் முதிர்ந்து உளேன். நீ கூறிய துண்மையே. யான் நாள் முதிர்ந்த ஒரு வண்டே. நிற்க. வருக நாம் இருவரும் பொருது பார்ப்போம். க.வ : ஓ! ஓ! அது கூடாது; கடவுளாணையாக அது ஒரு காலும் கூடாது. யான் கட்டிளமையுடைமையின் பயனாய வலியுடையே னாகலின், நினக்கு ஊறு இழைக்கினும் இழைப்பன். மு.வ :எனவே, நம்மிருவருள் வன்மையற்ற எளியன் யானன்றே. அற்றாக, இளமையும் வன்மையு மிக்க நின்னை என் மாட்டு அறிவுரை கேட்கத்தூண்டியது யாது கொல்? இஃது ஓர் வியப்பையன்றோ தருகிறது! க.வ : அற்றன்று. மெய்வன்மைக்கும் அறிவின் வன்மைக்கும் தொடர்பொன்று மின்று. யான் நின்மாட்டறிவுரை கேட்பான் துணிந்தது நீ அறிவுடையை என்பதை யான் நன்குணர்ந்தமையே யாகும். யான் அஃதில் லேனாகலின், இதுபோது இழித்தக்க நிலையை யெய்தியுளேன். மு.வ : முதுமையும் இளமையும் - வன்மையும் மென்மையும் - அறிவும் அறியாமையும் - ஆ! ஏனோ ஒத்த பிறவியும், ஒத்த நிலையும் பொருளாகக் கிளர்ச்சி செய்த வண்டுகட்கு? எனினும், வருந்தற்க. நாம் இவற்றை யோர் ஒழுங்கிற்குக் கொணர்தல் கூடும். நிற்க, இனி நாம் இருவரும் ஒத்து வாழ்தலாமா? என்னை நின் கருத்து? க.வ : என் இன்னுயி ராணையாக, யான் - இன்றே, ஏன்! இன்னே உடன்படுகின்றேன். நாம் வாழ்தற்கு இடம் யாது? மு.வ : அஃதன்று நான் முதற்கண் வேண்டுவது. நம் இருவர்க்கும் கருத்துக்கள் முரணாங் காலத்து இடைநின்று தகுதி நோக்குவார் யாவராதல் வேண்டும். க.வா : நீயே! என்னெனின் நீயே முதுமையும், அறிவின் திண்மையும் உடையை. மு.வ : நன்று, நல்லுணவாய தேன் நாடிச் சென்று கொணருநர் யாவராதல் வேண்டும்? க.வ : யான் யானே! "இளைஞன் வலியன் ஏவின செய்யும் உளையா முயற்சியன் ஒருவன் யானே." மு.வ : மிகவும் நன்று. ஆகவே, நீ என்னை இதுபோது அரச ஈயாகவும் நின்னைத் தொழிலீயாகவும் கருதி விட்டனையன்றோ? க.வ : ஆம். ஆம். மு.வ : என்னே நின் அறியாமை! இது முடிபாயின், நமது பண்டையகூட்டுக்கும், நாம் பேணிநின்ற, அரச ஈக்கும் நேர்ந்த குறை யாதோ? அன்றியும் நம் இருவர் மாட்டே, ஒருவர் தலைவராக ஒருவர் ஏவலிளைஞ ராதல் வேண்டும் என்பது பெறப்படு கின்றதன்றோ, ஆகவே, பல்லோர்கூடிய கூட்டத்துள் இவரன்ன தலைவராவாரொருவர் வேண்டப்படு வதனை உரைத்தலும் வேண்டுமா? இதனைக் கேட்டலும் அவ்வீக்கு நல்லுணர்வு தோன்ற, அது மிக்க உவகை பூத்துத் தன் ஏனைய இனங்களை நோக்கிச் சிவ்வென்றெழுந்தது. அதுபோழ்து, ஏனைய ஈக்களெல்லாம் குழப்பம் செய்துகொண்டேயிருந்தன. அவற்றுட் சிலமட்டும் தம் வன்மையும், எழுச்சியும் குன்றாதிருந்தனவே யன்றிப்பிறவனைத்தும் குன்றிப் பசியால் வருந்தின. சிறிது பொழுது கழிதலும், சில தம் வழக்கப்படியே தேன் தேடச்சென்றன; சில தம் கூட்டை யடைந்தன. இங்ஙனம் இவை பெருகுழப்பங் கொண்டு உழலாநிற்ப, இளமையும் ஊக்கமும் மிகுதியாக்கொண்ட பல ஈக்கள் புடைசூழ, அம்முதிர்வண்டு, நறுந்தேன்கொண்டு ஈயரசியிருந்த வெழிற் பெருங்கூட்டைச் சென்றடைந்தது. ஆண்டுக் காவல் புரிந்து நின்ற சிற்றீயொன்று. அதனையுட்புக விடாது தகைந்தது. அவ்வண்டு அதனைக் காரணம்வினவ, அது தன் ஈயரசியிறந்துபட்டதாகவும், அதற்காங்கடன்கள் நடைபெறுவதாகவும், ஆண்டு ஏனைய ஏகுதல் கூடாதெனவும் கூறிற்று. கூறலும், அக்களிவண்டு, உளங்கலங்கி, "ஐயோ! எவ்வாறு இறந்தனர் நம் அரசியார்! ஆ! நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்ன ருயிர்த்தே மலர்தலை யுலகம்! ஆ! இனி நமக்குத் தலைமை தாங்கி நம்மை நன்னெறியில் நடாத்துவார் யாவரோ! ஏ! காவல! நம் அரசியார் இறந்தது உண்மையோ! கூறுக." என இனைந்து கூறலும், அது, "ஆம். ஆம். இன்று காலை கூட்டைக் காக்கும் ஈக்களுட் சில வெளிச்சென்றிருந்த பொழுதை நோக்கி, இளமை மிக்க ஈயரசியொன்று, வெளிப்போதல் கூடாது எனினும், போதந்து, நம் அரசியொடு கலாய்த்துக் கொன்று விட்டது" என்றது. முடிவில் அக்களிவண்டு தன் அரசி சாதற்கு அடிப்படையாக நின்றது தானே என்பதையும், தன்னானிகழ்ந்த குழப்பத்தின் பயனே இது வென்பதையும் நினைத்தொறும் அதன் நெஞ்சு அதனைச் சுட்டது; பின்னர் அம்முதிர்வண்டு களிவண்டை நோக்கி, "ஈயரசுகட்கே ஒத்தநிலைமையின்று; அவை பிறப்பினால் ஒத்தன வேனும் தம் தொழிலாற்றான் சிறப்படைகின்றன: ஆதலின், பிறப்பொத்த தோற்றத்தேம் எனினும் சிறப்புறு தொழிற் செய்து உயர்வுபெறுதலன்றோ அமைவுடைத்தாம்" என்றது. நெஞ்சு சுட வருந்திய அவ்வண்டும் பின்னர்த்தன் தொழில்னாடி மலர் வனம் புக்கது. யாண்டும் அமைதியே நின்று விளங்கிற்று.  5. யாதும் வினவல் செங்கைமாத்து வடக்கில் உள்ளது தென்மலை. மலைச்சாரலில் காடு பசுந்தழை போர்த்து இனிய காட்சி தருகிறது. புதர்களில் பல வகைப் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றன. தென்றல் மெல்லென வீசுகின்றது. நண்பகல் வெப்பத்தால் வெம்பி வியர்த்த செல்வமக்கள் இம் மென்காற்றின் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சியடை கின்றனர். மாலை மணி மூன்றுக்கு மேலாகியதனால் வெயிலின் வெப்பமும் சிறிது தணிந்து வருகிறது. கானத்தின் அருகே ஓடும் காட்டாறு சிறிது அகலமாகவே உளது. செக்கர்ச் செவேரெனப் பரந்து விளங்கும் செம்மணல், சிவந்த புடவை யொன்றை நீட்டிப் புரளவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் கரையில் தென்னைகள் ஓங்கி நின்று குலைகள் தாங்கிக் காற்றில் மெல்ல அசைகின்றன. கரையருகே அழகிய ஊரொன்று தோன்றுகிறது. அதன்கண் மிகவுயர்ந்த மாடி வீடொன்று காணப்படுகிறது. அதன் பின் புறத்தே ஆற்றிற்குக் காலடிப்பாதை வருகிறது. அவ்வழியே மங்கையர் இருவர் வருகின்றனர். ஒருத்தி மாந்தளிர் போன்ற நிறமுடையவள். அவளது பின்னி விட்ட கூந்தல் இடைமறையுமளவு நீண்டிருக்கிறது. பொன்னில் கல் வைத்திழைத்த வில்லையொன்று அவள் குழலில் இருந்து நல்ல அழகு செய்கிறது. கைவளைகள் கண்கவரும் வனப்புடையன. நீல நிறங்கொண்ட அவளது புடவையில் நித்திலம் தைத்தது போன்ற பூவேலைகள் இருந்து பொலிகின்றன. அவளருகே செல்பவள் இத்துணைச் சிறப்புடையளாக இல்லை. ஒத்தயாண்டினளாயினும், ஒப்பனையும் ஒழுக்கமும் நோக்கின், முன்னையவட்கு, நிலையில் தாழ்ந்தவளென்றே இவள் தோன்றுகிறாள். மணிநிறம் கொண்ட இவளது உள்ளத்தின் நேர்மையை, முகம் இனிது புலப்படுத்துகிறது. இவளை அடிக்கடி, அவள் "தோழி, தோழி" என்கிறாள்; அவளை இவளும் "அன்னாய்" என அழைக்கிறாள். ஆகவே, அவளை நாம் தலைவியென்றும், இவளை அவட்குத் தோழி யென்றும் வழங்குவோம். தலைவியும் தோழியும் ஆற்றிடைக்குறைக்குச் செல்கின்றனர். அதனைத் துருத்தி (an island in the bed of a river) யென்றலும் மரபு. அங்கே, மா, வேம்பு, ஆல், தென்னை முதலிய மரங்கள் அழகுறத் தழைத்துப் பூத்துக் காய்த்து நலம் கனிந்திருக்கின்றன. புதர் தன்பால் செறிந்த பூவால் நறுமணம் கமழ, தென் காற்று மெல்ல வந்து தளிர் களை இனிதசைப்ப, தரை முழுதும் அறுகுபடர்ந்து பசுங்கம்பலம் விரித்ததுபோல் இன்பம் செய்கிறது. கிள்ளையும் புறவும் குயிலும் பூவையும் இசைபாடும் இவ் வினிய விடம் இவ் விருவர் மனத்தையும் வேறிடம் பெயராதவாறு பிணித்து விடுகிறது. “அன்னாய், இங்கே சிறிதே அமர்வோமே; என்ன இனிய இடம்;” என்கின்றாள் தோழி. தலைவி : என்னை யாதும் வினவல். தோழி, இன்பமுடைய வர்க்கே இயற்கைக் காட்சியும் இன்பமளிக்கின்றது. தோழி : இதற்குத்தான், “கெட்டார்க்கு நட்டாரோ இல்” என்று சான்றோர் கூறுகின்றனர். அது கிடக்க; ஏன் இவ்வாறு பேசுகின்றாய்? இயற்கை யாவர்க்கும் பொது. வாழ்க்கையில் இன்பமுடையார்க்கே யன்றி, அதனை இழந்தார்க்கும் அஃது இன்பம் வழங்குவதில் இழுக்குவது கிடையாது. தலைவி : அப்படித்தான் அறிவுடையோர் கூறுகின்றனர். ஆனால், என்னளவில் அது மாறுபட்டிருக்கிறது. தோழி : அப்படியானால், இதோ! இங்கே தோன்றும் தென்மலையும், செழுங்கானமும், சேயாறும் உங்கட்கு இன்பம் செய்யவில்லையோ? தலைவி : இவற்றைக் காணும்போது என் உள்ளம் திகீர் என்று கலங்குகின்றது. மானினம் துணையொடு கூடிச் செல்வதும், பறவைகள் தத்தம் துணையோடிருந்து பாடி மகிழ்வதும் எனக்கு வருத்தம் செய்யுமே என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது. தோழி : (மருண்டு) அன்னாய், நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. தலைவர் உடன் இருக்கும்போது இவையெல்லாம் உனக்கு இன்பத்தைத் தானே செய்யும்? அவரை விட்டுத் தனியே வந்திருப்பதனால் இவ்வாறு பேசுகின்றாயோ? தலைவி : தோழி, இனி, தனியேதானே இருக்கவேண்டும். இப்போது உன்னோடு தனியே இருப்பது தனிமையாகுமா? தோழி : (பின்னும் மருண்டு) அன்னாய், உன் கருத்தை விளக்கமாய்ச் சொல், எனக்கு உன் பேச்சு சிறிதும் விளங்கவேயில்லை. தலைவி : நேற்று நம் காதலர் பேசியதில் இருந்து அவர் நம்மைப் பிரிந்தே போவர் என்று அறிகின்றேன். அது முதல் என் நெஞ்சம் இவ்வாறு துயரடையத் தொடங்கிவிட்டது. தோழி : (சுட்டிக்காட்டி) அதோ, நம் தலைவர் வருகின்றார். நீ அப்புதரிடையே மறைந்துகொள். நான் அவருடன் பேசி இதன் உண்மையை அறிகின்றேன். தலைவி : நல்லது; அப்படியே செய். (மறைதல்) (தலைமகன் வருகின்றான்; தோழி பூப்பறிப்பதைக் காண்கின்றான்; அவள் அருகே வருகின்றான்.) தலைவன் : (நெருங்கி) தோழி, நீ இங்கே என்ன செய்கின்றாய்? உன்னோடு தலைமகள் வந்தாளே எங்கே? தோழி : (கையாற் காட்டி) அதோ தோன்றும் புதர்க்குப் பின்னே பூப்பறிக்கப் போனார்கள். அழைத்து வரலாமே. (போக ஒருப்படுதல்) தலைவன் : (தடுத்து) வேண்டா. நில் நில். உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அன்றும் நீ தானே துணை செய்தாய்? தோழி : (தலைகுனிந்து தனக்குள்ளே) தலைமகள் சொன்னது போல், இவர்தன் பிரிவைத்தான் இப்போது நம்பால் சொல்வார் போல இருக்கறிது. இருக்கட்டும். தலைவன் : ஒன்றுமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு உயிராவது எது? தெரியுமோ? தோழி : ஐயனே, யானோ பெண். எனக்கு அது தெரியாதே. தலைவன் : (முறுவலித்து) “வினையே ஆடவர்க்கு உயிர்.” அதாவது, புகழ்தரக்கூடிய வினையைச் செய்வது தான் ஆண் மகனுக்கு உயிர். உயிரென்பது உயிரொத்த கடமை. தோழி : ஆமாம். இருக்கலாம். அதனை எனக்குச் சொல்வதால் பயன்? தலைவன் : அந்தக் கடமையைச் செய்ய யான் போக வேண்டும். சில நாட்களே பிரிந்திருக்க வேண்டும். என்ன சொல்கின்றாய்? தோழி : இதைத்தான் எனக்குச் சொல்ல விரும்பினீர்களா? அப்படியானால், இதனோடு வேறொன்று சொல்வார்களே? அது உங்கட்கு நினைவிருக்குமே. தலைவன் : (திடுக்கிட்டு) என்ன அது? எனக்கு நினைவில்லை. தோழி : எனக்கு நினைவிருக்கிறது; “வினையே ஆடவர்க் குயிரே; மனையுறை வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்று சொல்வார்களே. தலைவன் : (மகிழ்ந்து) ஆமாம். மகளிர் தம் கணவனை உயிர் போலக் கருதி ஒழுகுவதுபோல, ஆடவர் தாம் செய்ய வேண்டிய வினையை உயிர்போல் கருதிச் செய்ய வேண்டும். இதுதானே அதன் கருத்து. தோழி : ஏன்? அதற்கு உள்ள பொருளை உள்ளபடியே....... தலைவன் : (இடைமறித்து) நான் சொல்வது தவறோ? தோழி : ... ஆடவர்க்கு வினையே உயிர்; அவர்தம் மனைவியர்க்கு அவரே உயிர். அவர் பிரிந்தால், அவர்தம் மகளிரும் உயிர் பிரிவர். இதுதானே உண்மைப் பொருள்! தலைவன் : எப்படியோ போகட்டும். இன்று யான் தலை மகளோடு இனிதிருப்பதற்கு அன்று நீ செய்த துணையன்றோ காரணமாவது. இன்றும் நீதான் துணை செய்யவேண்டும். என்ன சொல்கின்றாய்? தோழி : ஐயனே, உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன். அன்று அடியேன் செய்த துணையை இன்றும் செய்யக் காத்திருக் கின்றேன். அன்று நீங்கள் சொன்னவை நினைவில் உள்ளனவோ? தலைவன் :(நினைத்து) என்ன சொன்னேன்? எனக்கு ஒன்றும் நினைவில்லை. தோழி : (சினத்தால் முகம் சிவந்து) ஐய, நீங்கள் அன்று சொல்லிய செவ்விய இனிய சொற்களை நான் மறக்கவில்லை. முதன் முதலாக யான் தங்களைப் பொழிலிடத்தே கண்டு உறவு கொண்ட போது, எம் தலைமகளைப் பையப்பற்றிப் பரிந்ததும், மொழிந்ததும் - இவையெல்லாம் மெய்யென்றே இன்றுகாறும் கருதியிருந்தேன். தலைவன் : (நகைத்து) ஏன்? இன்று மாத்திரமன்று; யான் ஒருகால் கூறியது எக்காலும் மெய்யாகவே நிலவச்செய்வேன். தோழி : அல்லவே யல்ல. யான் பேதையாகையால், அன்று நீங்கள் கூறியவற்றைப் பொய்யென்று அறியாது போனேன். எவ்வாறு அறிவேன்? பிரியேன் என்று அன்று சொன்ன சொல்லைப் பொய்ப்படுத்தி, இன்று வெயில் தொறும் பாலை நிலத்தைக் கடந்தேகக் கருதியிருக்கின்றீர்கள் என்பதையறிந்தேன். பின் விளைவது நினையாது பேசுகின்றீர்களே. இதற்கு என் செய்வேன்! தலைவன் : ஒன்றும் உண்டாகாது. நீ வறிதே கவல்கின்றாய். நீ உடன்படுவாயாயின், ஒரு குறையும் வாராது. தோழி : (சினமும் வருத்தமும் விரவி) பெரும, ஊரார் அலர் கூறுவர். நீங்கள் அன்பின்றி இவளை அறவே கைவிட்டீர்கள் என்பர்; பிறள் ஒருத்தியைப் பேணியொழுகுகிறீர்கள் என்பர்; வினையில் வெற்றி பெற்றீர்களோ என ஐயுற்றுப் பிதற்றுவர்; இவ்வாறு பலப்பல சொல்லிப் பழிப்பர். தலைவன் : ஏன்? நீங்களும் மனையிலுள்ள பிறரும் அவ்வாறு அலர் உண்டாகாதவாறு செய்யலாமன்றோ? தோழி : உலைவாயை மூடலாம்; ஊர்வாயை மூடலாமோ? தலைவன் : உண்டோ, முயன்றால் முடியாப் பொருள்? தோழி :- என்ன சொல்கின்றீர்கள். “ செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம் பொய்யாதல் யான்யாங்கு அறிகோம் மற்று ஐய! அகல்நகர் கொள்ளா அலர் தலைத் தந்து பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகன் அல்லை மன்ற இனி.” (கலி - 19) தலைவன் : (முறுவலித்து) தோழி! நீ ஏன் வெகுள்கின்றாய்? தோழி : ஐய! நீங்கள் அன்று செய்தவற்றையும் இன்று செய்வதையும் பார்க்கின் இப்போது அவை எல்லாம் பொய்யே என்பது வெளிப்படை. பொய்கூறி ஒழுகுபவன் மகனா (மனிதனா)? தலைவன் :நீ தலைமகள்பால் கொண்ட காதலால் இவ்வாறு பேசுகின்றாய். நான் அதற்கு மகிழ்கின்றேன். ஆனால் - தோழி :-“ஆனால்” என்பது என்ன? தலைவன் : வினை செய்யவேண்டியவிடத்து அதைச் செய்யாது விடுபவன் மனிதனாகான். 'செய்யத் தக்க செய்யாமை யானுங் கெடும்; அல்ல செய்யவும் கெடும்.’ இது நீ அறியாத தல்லவே! மேலும் காதலரைப் பிரிந்து ஒரு காரியம் செய்து வந்த வழி, அவர் காதல் மாண்புறுமே தவிர, வேறு ஒன்றும் உண்டாகாது. நான் சென்று வருகின்றேன். தோழி : (நெடிது நினைந்து) ஐய, “ செல்இனி, சென்று நீ செய்யும் வினை முற்றி அன்பு அறமாறி யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ! என்று வருவாரை என்திறம் யாதும் வினவல்; வினவில் பகலின் விளங்கும்நின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு” இனி நீ செல்க, சென்று அங்கே செய்யும் வினையை முடித்துக்கொண்ட பின்பே இங்கிருந்து வருவோரைப் பார்த்து அன்பு இல்லாமையால் என்னால் துறக்கப்பட்ட தலைமகள் நலத்தை அறிவீர்களோ? என்று வினவுக; வினைமுடியு முன்பு அவர்களை வினவ வேண்டா. வினவில், சூரியன்போல் தலைமை கொண்டு விளங்கும் உமது தலைமை சிதைந்துவிடும். வேறு வகையால் கெடுதற்கில்லாத உமது செய்வினையும், முடிவடையாதபடி அவலம் உண்டாயினும் உண்டாகிவிடும். தலைவன் : ஏன்? எனக்கு விளங்கச் சொல். தோழி : என் தோழி நின் பிரிவாற்றாது, இறந்தாலும் இறந்து விடுவாள். (புதர் மறைவிலிருக்கும் தலைவி வெளிப்படுகிறாள்) தலைவன் : இதோ, திருமகள் வருகின்றனளே.... (சென்று இரு கைகளையும் பற்றி) நீ எப்போது இங்கு வந்தாய்? தலைவி : காதல, இதுவரையும் என் தோழி சொன்னதைக் கேட்டீர்களா? தலைவன் : இனி அதை நினையேன். உலகு முழுவதும் ஒருங்கு வருவதாயினும் இனி உன்னைப் பிரியேன். வா, இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புறலாம். இயற்கைக் காட்சி இன்ப ஊற்று.  6. மையீரோதி மடநல்லீரே "மையீரோதி மடநல்லீரே, மையீரோதி மடநல்லீரே" என்று மொழிந்து வாய்வெருவும் இம்மட நல்லாள் யாவள்? இவளது மலர்முகம் வாடியுளது; மழைக்கண் நீர் துளிக்கின்றது; வாயிதழ் மெல்ல அசைகின்றது; மெய்யிலும் சிறிது தளர்ச்சி புலனாகின்றது. இவளை உற்று நோக்குவோம். இவளது மனத்தே பெருந்துயர் நின்று அலைக்கின்றது; இவள் அடிக்கடி மருண்டு நோக்குகின்றாள்; ஆம், அவளது உள்ளத்தே அச்சம் பிறந்திருக்கிறது; என்னோ காரணம்?" இவ்வாறு தம்மனத்தோடு சொல்லாடி வரும் இப்பெரியார் உடையாலும் நடையாலும் சிறந்த சான்றோர் போலத் தோன்று கிறார். இவர் பின்னே செல்வோம். அதோ தென் மலையின் அடியில் நிற்கும் பாறைமீது ஏறி நிற்கிறார். பகலவனும் உச்சிகடந்து மேலைத்திசையை நோக்குகின்றான். வெயிலின் வெப்பமும் மிகுதியாக இல்லை. காடும் பசுந்தழை பரப்பி வெண் பூ விரிந்து நறுமணம் கமழ்கின்றது. மானினம் புல்மேய்ந்து மகிழ்ச்சிமிகு கின்றன. கிள்ளையும் புறாவும் கூட்டங் கூட்டமாய்ப் பறந்துதிரி கின்றன. தினைப்புனங் களிலும் கதிர்கள் பால்கட்டிச் சின்னாளில் முற்றும்பக்குவத் தேயுள்ளன. இதோ, இச்சான்றோர் மலையடியின் மேற்றிசையில் உள்ள தினைப்புனத்தே தம்கட் பார்வையைச் செலுத்தி ஊன்றி நோக்குகின்றார்; ஏன்? நன்று, நன்று. அப்புனத் தருகே நிற்கும் வேங்கை மரத்தின் அடியில் வீற்றிருக்கும் உருவம் யாது? தெய்வமோ? பெண்ணோ? தெரிந்திலதே! ஆம், பெண்ணே: அவள் என்ன செய்கின்றாள்? * * * * இதோ இச்சான்றோரும் அவளிருக்கும் திக்கு நோக்கியே செல்கிறார், இவர் ஏன் அவள் அறியாவண்ணம் புதர்களிடையே பதுங்கிப்பதுங்கிப் போகின்றார். அம்மங்கை யருகே செல்கிறார் போலும். அவளோடு ஏதேனும் சொல்லாட விரும்புகின்றனரோ? அற்றன்று; அவள் பேச்சொலியைக் கேட்கும் அளவிலிருக்க வேண்டுமென்று கருதுகின்றார் போலும். இன்றேல், இவர் அப்புதரடியில் அமர மாட்டாரன்றோ? என்ன நடக்கின்றது, காண்போம், நெஞ்சே, நீ ஒன்றும் வேறாக நினையாதே; சால்பு குன்றத் தகுவனவற்றைச் சான்றோர் செய்யார். * * * * “மையீரோதி, மடநல்லீரே” என்று மொழிந்த அம்மன்னவன் இதனையறிந்தால் என்ன நினைவான்? 'மையீரோதி’ என்று அழைத்த அம் மணிமொழி இன்னும் என் செவியகம் நிறைய ஒலிக்கின்றதே! மட நல்லீரே என்ற அவரது மாண்பு என் மனத்தே அவரை உருப்படுத்தி விட்டதே! அவரது வாய்மை காணமாட்டாத என் தாயது தாய்மை என்ன பயனுடையதாம். மேனி மெலிகின்றேன்; வேறொன்றும் நினைவில்லேன். ஏதுக்கு என் தாய் இவ்வாறு அவ்வேலனை வேண்டுகின்றாள்.’ “வினவின் என்னையோ அவனை?” என்றொரு சொல்லெழு கின்றது. மேலே கூறியவாறு தானே பேசிப்புலம்பிய மங்கை சுற்று முற்றும் நோக்குகின்றாள், வாடிய முகம் மலர்கின்றது; பனித்த கண் அருள் வழிகின்றது; விளர்த்தவாய் நாவால் நீர் சுலவப் பெறுகின்றது. தினைப்புனத்தின் உள்ளிருந்த பெண்ணொருத்தி, தினைத்தாளை விலக்கிக் கொண்டு வேங்கையடிக்கு வருகின்றாள். இவள் யார்? பொறுப்போம்; இவர்கள் பேச்சிலிருந்துதான் இவளை இன்னாளென அறிதல் வேண்டும். * * * * “தோழி, முடிந்து போயிற்றோ? என் தாய் இனி என்ன செய்யப் போகிறாளாம்? உள்ளதன் உண்மையை உள்ளவாறு காணும் அறிவுபெற்றும், மக்கள் அதனைச் செவ்வே பயன் கொள்ள அறியாது அலமரு கின்றனரே! இவர்கட்கு அறிவுச்சுடர் உண்டாகுமோ? அஃது உண்டாகு நாள் என்றோ தெரியவில்லையே” என்கின்றாள். வேங்கையடியில் வீற்றிருக்கும் மெல்லியல். தோழி : அம்மா, நாமே அவனை வினவினால் என்? மெல்லி : (அச்சத்தோடு) அவனையா? அந்த வேலனையா? அவனை என்னென்று வினவுவது, தோழி : முருகனது வேல் அவன் கையிலுள்ள வேல். அவன் ஆடும் வெறியாட்டு அம் முருகன் பொருட்டு. அவ்வேல் அறிவின் வடிவம், ஆகவே, அவனுக்கு நல்லறிவும் உளதாயிருக்கும். அதனால், அவனது அறிவு வெளியாகுமாறு நாமே அதனை வினவுவோமே? மெல்லி : எப்படி வினவுவது? தோழி : எப்படியா? அப்படித்தான்? மெல்லி : எனக்கு விளங்கவில்லையே? தோழி : ஏன் விளங்கவில்லை? அன்று நடந்ததை நினைவில் கொண்டு மறைந்த சொற்களால் அவனை வினவுவது. மெல்லி : (மயங்கிய பார்வையுடன்) என்று நடந்ததை? அதனை நன்றாகத் தான் சொல். தோழி : அன்று நாம் தட்டை கொண்டு குருவியோட்டி விளையாடி யிருந்தோமன்றோ? மெல்லி : ஏன், நாம் இன்று தான் அவ்வாறே செய்கின்றோம் தோழி : அன்று நம் தட்டை முறிந்து போகவே, இதோ இம்மூங்கிற் புதரிலிருந்து மூங்கிலொன்றை யறுத்துத் தட்டை யொன்று செய்தோமே, அஃதேனும் நினைவிலிருக்கிறதோ? மெல்லி : (புன்முறுவலுடன்). ஆம். பெரு முழக்கம் செய்து கொடிய ஓசையை உண்டுபண்ணிற்றே, அந்தத் தட்டை செய்தோமே, அன்றா? தோழி : அதனால் தானே நாம் அதை “வெவ்வாய்த் தட்டை” என்றோம். மெல்லி : அதனாலா, அன்றன்று; அதனைச் சுழற்றிய மாத்திரையே, தினைப் புனத்தில் படிந்த பறவைகள் அனைத்தும் பறந்து ஓடிவிட்ட தோடு, தினைமணிகள் பலவும் சிதறிவிட்டன. தோழி : எதனாலோ ஒன்று. அப்போது நாம் அந்த வேங்கை மரத்தின் கவட்டில் கட்டின பரண் மீது இருந்தபோது என்ன நடந்தது? மெல்லி : வண்டினம் வந்து பொன்னிறம் கொண்ட பூவில் தேன் உண்டு இன்பமாக முரன்றது. நாம் அதன் இன்பவோசையைக் கேட்டு அதன் மீது கருத்தைச் செலுத்தி நின்றோம். தோழி : அப்போது நாம் திடுக்கிட்டுச் சட்டெனப் பின்புறம் திரும்பினோமே, ஏன்? மெல்லி : (நாணித் தலை கவிழ்கின்றாள்) தோழி : “மையீரோதி, மடநல்லீரே” என்றொரு காளை நம்மை அழைத்தானன்றோ? அவன் ஏன் நம்மை “மையீரோதி மடநல்லீரே” என்றான். அதனை யறிவாயோ? மெல்லி : நம் பின்நின்ற அவர் கண்ணிற் பட்டது நம் கூந்தல். அதனால் அவ்வாறு அழைத்தார்? இது தானே காரணம்? தோழி : இதனை நுணுக்கமாக அறிந்து கொள்ளும் உனக்கு இன்னும் நான் என்ன சொல்வது? மெல்லி : இல்லை யில்லை. இது தான் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. அது கிடக்கட்டும் நீ சொல். தோழி : அப்போது அவன் நம்மை என்ன கேட்டான்? மெல்லி : கெடுதி வினவினார். தோழி : அதுதெரியாதா? என்ன சொல்லித் தம் கெடுதி வினவினான்? மெல்லி : யான் எய்த அம்புபட்டுப் புண் மிகுந்து பெருந் துயர் கொண்டு யானை யொன்று தன் உயர்ந்த மருப்பு விளங்க இப்புனத் தருகே வந்த துண்டோ? என்றார். தோழி : அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் குதித்து நாற்புறமும் ஓடிவர, அவன் சிறிது நேரம் கழிந்தபின் சென்றானன்றோ? மெல்லி : தோழி, அவரது சாந்தணிந்த மார்பும், வில் சுமந்த தோளும், தனித்திருந்த நம்மிடத்தே அவர் சொல்லாடிய தகைமையும் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டன. அவர் சொல்லிய சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன. அவர் பொருட்டு நாம் வருந்தும் இவ்வருத்தத்தை அன்னை இன்னும் அறியவில்லையே. இதற்கொரு வழியுமில்லையா? தோழி : அதற்குத்தான் தக்க வழிதேடப் படுகிறதே? அதற்குள் நீ ஏன் துயர்கின்றாய்? மெல்லி : வேலனைக்கொண்டு வெறி யயர்கின்றனளே அன்னை; இதுவோ வழி. தோழி : அதுதான் என்று நம் தாயும் நினைக்கின்றாள். அவ்வேலனும் அவட்குத் தக்கவாறு தான் கூறி யுள்ளான். மெல்லி : என்ன அது? தோழி : என்னவா? “எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்து அறிவல்” என்று கூறியுள்ளான். மெல்லி : (திடுக்கிட்டு) உண்மையாகவா? வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா? வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது? தோழி : இப்படித்தான் வேலன் கூறுவான். அறியா மாக்கள் அதனை உண்மை யென்று கருதுவர். இன்றும் அதைத் தான் நம் தாயும் கேட்கப் போகின்றாள். மெல்லி : இன்றும் அதைத்தானே சொல்லப் போகின்றான்? தோழி : ஆமாம். ஆனால், இன்று யானும் வேலனைக் கண்டு ஒன்று கேட்கப் போகிறேன். என் கேள்வியால் வேலன் பொய்ம்மையும், நம் ஒழுக்கத்தின் மெய்ம்மையும் விளக்கமடையப் போகின்றன. மெல்லி : எப்படி? எனக்கு அதை விளங்கச்சொல். தோழி : வேலன் இன்று நம் தாயிடம் முருகன் நம்மை அணங்கினன்; என்பானாயின், வெறி கொள்வேல உனது இறைவன், மத மிக்க வேழத்தின் மெய்யில் ஊடுருவத் தன் அம்பை செலுத்தி, பின் அதன் அடிச்சுவடுபற்றி வேட்டம் செல்லுமோ? என வினவக் கருதுகின்றேன். வினவின் என்? மெல்லி : (முறுவலித்து) வினவின் என்னாம்? யானை வேட்டம் புரிந்து வந்த வீரன் ஒருவனை நாம் நமக்கு இறைவனாகக் கொண்டுள்ளோம் என்று தெரிந்து கொள்வான். * * * * தோழி ஏன் சிறைப்புறத்தை நோக்குகின்றாள். அங்கே ஏன் வேலிக்கண் படர்ந்துள்ள தழைகள் அசைகின்றன. நல்லது. அங்கிருந் தொரு வல்விற் காளை ஏன் மேற்குத் திசை நோக்கிச் செல்கின்றான். அவன் ஏதோ தனக்குள் சொல்லிக் கொள்கின்றான்; அவன் பின்சென்று கேட்போம். காளை:- இனி, நமக்கும் இம் மெல்லியல் நல்லாளுக்கும் உண்டாகிய ஒழுக்கம் அவள் தாய்க்கும் தமர்க்கும் புலனாகி விடும். ஆகவே, இவளை இனி இங்கே தலைக்கூடல் அரிது. ஆகவே, இனிச் சான்றோரைச் செலுத்தி வரைந்து கொள்வதே கடன். * * * * ஆ, இதோ இச்சான்றோரும் நம்முடன் வந்து அவன் சொல்லிக் கொள்வதைக் கேட்டு மகிழ்கின்றார். இவர் என்ன சொல்லுகின்றார் பார்ப்போம். சான்றோர்:- இவ்வில்வீரன் செய்த முடிவே சிறந்தது. இவன் இம் முடிவிற்கு வரக் காரணம் யாது? இத் தோழியின் நல்லுரை யன்றோ? இவளது அறிவுடைமையை என்னென்பேன், இத்தலை மகன் சிறைப்புறம் நிற்பதை யுணர்ந்து அவன் இம் முடிபு செய்யுமாறு பேசிவிட்டாள். அதுமட்டோ, தலைமகட்கும் ஓராற்றால் தேறுதல் கூறிவிட்டாள். கற்புடை மகளிர் கணவனையல்லது பிற தெய்வங் களையும் மனத்தாலும் நினையார். வேலன் முருகன் அணங்கினான் என்றவழி, தலைமகள் அம் முருகனை வணங்கல் வேண்டிவரும். அஃது அவள் கற்பு நெறிக்கு மாறாகும். அதனின்றும் இவள் அவளைத் தப்புவித்துவிட்டாள். வெறியும் விலக்கியாகி விடுகிறது. நல்லது, நாம் இன்று இங்கே வந்ததும் நன்றே யாயிற்று. இவளது செய்கை ஏனைமகளிர்க்கு நன்னெறி காட்டும் நயமுடையது. ஆகவே, இதனைப் பாட்டிடை வைத்துத் தமிழுலகில் நிறுவுவேன்.” * * * * சான்றோர், தம் உடைமடிப்பில் இருந்து ஓர் ஓலை நறுக்கும் எழுத்தாணியும் எடுக்கின்றார், மரத்தடியில் அமர்ந்து தாம் கருதியதனை எழுதுகின்றார். இவர் எழுதிக் கொண்டிருக்கட்டும். நாம் அம்மகளிர் இருக்குமிடம் செல்வோம். * * * * தோழி : அதுமட்டுமா, நம் தாயும் நமக்கும் தலைமகனுக் கும் உண்டாகிய தொடர்பை யறிந்து கொள்வாள். பின்பு, நம் கற்பு நெறிக்கும் இழுக்கு உண்டாகாதே. மெல்லி : தோழி, நீ செய்வது நன்றே. இப்போதே விரைந்து சென்று அதனைச் செய். தோழி : நன்று, அவ்வாறே செய்கின்றேன். (போதல்) * * * * மெல்லியலும் தன் நல்லகம் புகுகின்றாள்; தோழியும் கண்மறைவில் சென்றுவிட்டாள், இச்சான்றோர் தாம் எழுதியதை முடித்துக் கொண்டு படிக்கின்றார்; அதனைக் கேட்போம்; “ அம்ம வாழி தோழி நம்மலை அமையறுத் தியற்றிய வெவ்வாய்த்தட்டையின் நறுவிரை யார மறவெறிந் துழுத உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல் பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ வேங்கையங் கவட்டிடை நிவந்த விதணத்துப் பொன்மரு ணறுந்தா தூதுந் தும்பி இன்னிசை யோரா விருந்தன மாக; மையீ ரோதி மடநல் லீரே நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து எவ்வமொடு வந்த வுயர்மருப் பொருத்தல்நும் புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச் சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை யாடச் சொல்லிக் கழிந்த வல்விற் காளை சாந்தா ரகலமுந் தகையும் மிகநயந் தீங்குநாம் உழக்கும் எவ்வ முணராள்; நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை தந்த முதுவாய் வேலன் எம்மிறை யணங்கலின் வந்தன் றிந்நோய் தணிமருந் தறிவல் என்னு மாயின், வினவி னெவனோ மற்றே, கனல்சின மையல் வேழ மெய்யுளம் போக ஊட்டி யன்ன வூன்புர ளம்பொடு காட்டுமான் அடிவழி யொற்றி வேட்டஞ் செல்லுமோ நும்மிறை யெனவே.” (அகம். 388) * * * * பாட்டின் நலம் காண்டல் இதன்கண் “அம்மவாழி” யென்பது தொடங்கி, “இருந்தனமாக” (9) என்பது வரை, மெல்லியல் நல்லாள் வல்விற்காளையாகிய தலைமகன் கெடுதிவினவி வருங்கால் இருந்தநிலை விளக்கப் படுகின்றது. இங்கே அவர்கள் மூங்கில் அறுத்து 'வெவ்வாய்த் தட்டை” செய்து. அதனால் புனத்திற் படிந்த குருவிகளை ஓப்பினசெய்தி, “அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்,” (2) “பெருவரை யடுக்கத்துக் குருவியோப்பி” (5) என் அடிகளால் குறிக்கப் படுகிறது. அக்குருவிகளை ஓப்பியதற்குக் காரணம் கூறுவதற்காக, “உளைக் குரல் சிறுதினை கவர்தலின்” (4) என்கின்றார். அத்தினையின் அருமையை உணர்த்தும் பொருட்டு, அத்தினைப்புனம் ஆங்கிருந்து சந்தன மரங்களை முற்ற எறிந்து, அவ்விடத்தையும் அரிதின் உழுது பயிர் செய்யப்பட்ட தென்கின்றார். இதனை “நறுவிரை யாரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை” என்று பாடியுள்ளார். வந்து படிந்த குருவிகளும் ஒன்றிரண்டல்ல. பல என்றற்கு “கிளையமல் குரீஇ” என்கின்றார். இனி, இத்தினைப் புனமிருந்த இடம் தென்மலையின் சரிவு; தினைமுற்றும் காலம் வேங்கை மலரும் காலமாகும். அப்போது தான் அப்புனம் காக்கப் படுதல் வேண்டும். தினைப்பயிரும் மிக வுயரமாக வளர்ந்திருந்தது. ஆகவே, புனங்காத்தற்கு அமைக்கும் பரண் மிக வுயர்ந்திருக்க வேண்டியதாயிற்று. இக் கருத்தெல்லாம் தோன்றவே, இச் சான்றோர், “ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ, வேங்கையங்கவட்டிடை நிவந்த இதணத்து” என்று குறிக்கின்றார். இனி, பரண்மீதிருந்த நங்கையர், குருவியோப்பி, பரணருகே மலர்ந்து மணக்கும் வேங்கை மலரிற் படிந்து தாதூதும் தும்பியின் இன்னிசையில் கருத்தைச் செலுத்தி யிருந்தனரன்றோ? இன்றேல், அங்கே வல்விற் காளையைக் கண்டிருப்பர். அதனால்தான் தோழி, “தும்பி இன்னிசை ஓரா இருந்தனமாக” என்கின்றாள். இனி “மையீரோதி” என்பதுமுதல், “போகலுறுமோ மற்று” என்பதுவரை வல்விற்காளை வழங்கிய சொற்களாகும். புனம் நோக்கி வந்தவன் எதிரே தம் கரிய குளிர்ந்த குழலைக் காட்டித் தம் இளமை நலம் இலக நின்றனர் இம்மகளிர். கெடுதி வினவிவருவோன், அவர் முன்வந்து நின்று செவ்வியறிந்து கேட்கும் அத்துணை மனவமைதியிலனாவான். வேறு ஓசை செய்யின், அவர் அஞ்சுவர். அவன் கண்ணெதிரே தோன்றுவது அவர்தம் கரிய குழலே. அதனால், “மையீரோதி மடநல்லீரே” என்கின்றான். அது கேட்ட அம்மடவார் திடுக்கிட்டு அவன் முகநோக்கினர். அவருள் தலைவியின் கூரிய பார்வை அவனுக்கு வருத்தத்தைச் செய்தது. அதனை ஓராற்றால் மறைத்துக் கொண்டு “யான் எய்த பகழியால் புண் மிகுந்து எழுந்த துயரத்தோடு வந்த யானை யொன்றைக் கண்டீரோ” என்று கேட்கலுற்று, “நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து, எவ்வமொடு வந்த உயர் மருப் பொருத்தல் நும் புனத்துழிப் போக லுறுமோ” என்கின்றான், தன் அம்பினை “நொவ்வியற் பகழி” என்றதனால் தன்அம்பின் வன்மையும், அவளது பார்வையின் கடுமையும் சுட்டினான். “பாய்ந்தெனப் புண் கூர்ந்து” என்றதனால், அம்பு குறிவாய்த்து நோய் செய்ததும், தான் வேட்கையுற்றுவேதனை யுற்றதும் கூறினான். “எவ்வமொடுவந்த உயர்மருப் பொருத்தல்” என்று கூறவே, சினம் மிகுந்து வாராது. புண்ணுற்றெய்திய ஆறாத்துன் பத்தால் வந்தது யானை என்றும், ஆயினும் அஃது உயர் மருப்புடைய பேர் யானையென்றும், தான் தலைவியைத் தலைக்கூட வேண்டு மென்னும் வேட்கை நோயால் வெய்துற்று வந்த செய்தியும் சுட்டியிருக்கின்றான். தான் வந்தது போல, யானையும் வந்ததுண்டோ என்றற்கு, “நும்புனத்துழிப் போகலுறுமோ” என்று வினவினான். இவ்வாறு கேட்டவன் நெடிது நில்லாது சிறிது நேரத்திற்குள் கழிந்தான்; அவனோடு வந்த வேட்டை நாய்கள் விலங்குகளின் நடமாட்டமறிந்து சினங்கொண்டு குரைத்துக் குதித்து ஓடத்தலைப் பட்டன. அதனால் அவனும் அவற்றின் பின்னே விரைந்தேக வேண்டியவனானான்; இன்றேல், சிறிது நெடித்தே சென்றிருப்பன். இக்கருத்தை, “சினவுக்கொள்ஞமலி செயிர்த்துப் புடையாடச் சொல்லிக்கழிந்த வல்விற்காளை” என்று குறிக்கின்றார். இது காறும் பண்டு நிகழ்ந்தது கூறிய தோழி, இனி, நிகழ்வது கூறத்தொடங்கி, தங்கள் நிலையும், தாயது நிலையும் கூறலுறு கின்றாள்: “வல்விற்காளை, சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை.” தாய் தன் மகளது எவ்வம் உணராளாயினள்; அதனால் அன்புடைய அவளது நல்ல நெஞ்சம் மயங்குவதாயிற்று; வேலனைக் கொண்டு வெறியெடுக்க நினைக்கின்றாள் என்பது இதனால் தெரிகிறது. இனி வெறியாடும் வேலன் கூறுவதை முன்னறிந்து, “அன்னை தந்த முதுவாய் வேலன் எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் தணி மருந்து அறிவல்” என்பன; அவ்வாறு கூறுவானாயின், நாம் தலைவன் கெடுதி வினாவி வந்து தலைப் பெய்ததைக் கூறி “வினவின் எவனோமற்றே? கனல் சின மையல் வேழமெய்யுளம் போக ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோநும் இறை எனவே” என்று மொழிகின்றான். “நும்மிறை வேட்டம் செல்லுமோ?” என்றால், அவன் “அவ்வாறு செல்வோன் நம் இறை” என்று உணர்வான். ஊன் படிந்து உதிரம் வாரச் செக்கர்ச் செவேலெனச் சிவந்து தோன்றும் அம்பினை “ஊட்டியன்ன ஊன்புரள் அம்பு” என்று பாடியுள்ளாரே, இப்புலவர் யாராக இருக்கலாம்? ஊன்மிகப் பற்றிப் புரளும் அம்பினை, ஊன் ஊட்டியது போன்ற அம்பு என்கின்ற இவர், “ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை” (அகம் 68) எனப்பாடிய புலவரான அவரோ என்னும் நினைவு பிறக்கிறதன்றோ? அவரே தான் இதனைப் பாடியவரும். அவர் பெயர் ஊட்டியார் என்பது.  7. பொருண்மொழி "யான் சிறிது நாட்களுக்குமுன் ஒரு ஆங்கில நூலைப் படித்து வருங்கால், இத்தலைப்புப் பொருள்பற்றிய சொற்பொழி வொன்று அதன்கண் இருக்கக் கண்டேன். அதனையான் நுணுகிப்படித்து வருங்காலத்தில், சில நுண்பொருள்கள் அமைத்திருப்பதையுணர்ந்து அதன் உட்பொருளைத் தமிழில் எழுதின் பலர்க்கும் பயன் படுமென்றெண்ணினேனாகலின், இதுபோது எழுதுவேனாயினேன். பொருண்மொழி யென்பது பழமொழியைப் போல் நுண் பொருளை யகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும் நன்மொழி யாகும். இது நம் தமிழ் நூல்களில் "பொருளுரை" யென்றும் "பொருண்மொழிக்காஞ்சி" யென்றும் வழங்கப் பெறுகின்றது. 1"பொய்யில் புலவன் பொருளுரை" யென்று சீத்தலைச் சாத்தனா ராலும், 2மூதுரை பொருந்திய" என்ற சூத்திரத்துள் "பொருண் மொழிக்காஞ்சி" யென்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க. பொருண்மொழிக் காஞ்சியாவது, "எரிந்திலங்கு சடைமுடி முனிவர், புரிந்து கண்ட பொருண்மொழிந்தன்று" (பு-வெ-மாலை 271)என்பர். பொருண்மொழி யென்றதொடர் பொருளை மொழிதல் எனவிரியும் வேற்றுமைத் தொகையாகும். மொழி, முதனிலைத் தொழிற்பெயர். பொருளாவது முனிவர்கள் விரும்பிக் கண்டுதெளிந்த உண்மையென்பதாகும். இதன்கண் முனிவராவார் 'சடைமுடியுடையராய் உயர்ந்த வொழுக்கமும்' உலகினையும் அதற்கு முழுமுதலாகிய இறைவனையும் ஒப்பக்காணும் ஞானக் கண்ணுமுடையராய், மக்கட்கு வேண்டிய அறிவு நூல்களும் பிறவும் ஆக்கித்தரும் பேரருள் உடைய பெரியோராவர் என்பது அறிஞர் முடிபு. இவர்தம் அறிவும் ஆற்றலும் ஏனையர்க்குள்ளனபோல்வன அல்ல. சுருங்கச் சொல்லின், மக்களுட் கற்றோரினும் சிறந்த கல்வியறிவும், ஒழுகலாறும் உடையோர் என்பது மிகையாகாது. ஆகவே, முனிவர் பெருமக்கள் நம்மனோர்க்கு அறிவுகொளுத்து மாற்றால் உரைப்பனவே பொருண் மொழியென்பது அறிஞர் கொள்ளும் கொள்கையாயிற்று. இப்பொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும், சுருங்கியும் வருதல் நம் நூல்களிற் காணலாம். சுருங்கி வருதலே பெரும்பான்மையெனினும், சுருங்கியே வருதல் வேண்டுமென்ற வரையறையின்மையால் பெருகியும் வருதல் இயல்பாயிற்று. இவை எத்துணைச் சுருக்கமாயிருக்கின்றனவோ அத்துணையும் பொருட் பெருக்கமுடையவாதல் கண்கூடு. எடுத்துக்காட்டாக, திருக்குறள் ஒன்றே யமையும். சின்மென் மொழியால் விழுமியபொருளைத் தன்னகத்தே யுடைத்தாய் ஒவ்வொரு திருக்குறளும் அமைந்திருத்தலும், தொட்டனைத் தூறும் மணற்கேணியைப் போலக் கற்றனைத்தூறும் பொருளாழமுடைமை சிறத்தலும் கொண்டு பொருண் மொழியாதலில் எவ்வகையினும் முற்பட்டிருக்கின்றது. இத்திருக்குறளை ஒரு பெரியோர் "கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றனர் என்ப. இவ்வியல்பே பொருண்மொழிக்கண் இருத்தல் வேண்டு மென்பது ஆங்கிலப் பெரியோர்களின் முடிபுமாகும். பொருண் மொழிக்கண் வரும் பொருள் தத்தம் மனத்தின்கண் முளைத்துத் தோன்றிய பழுத்த எண்ணங்களாகவும், பரந்த உலகில் நிலவும் பொருள்களைப் புலமையாற் கண்டு ஆராய்ந்து தெளிந்த முடிபு களாகவும் இருத்தல் வேண்டுமென்பதும், அவை ஒரு சில சொற் களாலாகிய சொற்றொடர்களாயிருத்தல் வேண்டுமென்பதும், அவை யாராயும் தோறும் பயன் தருவனவாயிருத்தல் வேண்டு மென்பதும் பொருண்மொழியியல்புகளை யாராயும் ஆங்கிலப் புலவர்களின் கொள்கை. சுருங்கச் சொல்லின், பனையளவினவாய பொருளும் முடிபும் ஒருங்கே திணிக்கப் பெற்றுத் தினை யளவிற்றாய சொற்றொடர்க்கண் விளங்குவது பொருண்மொழியின் உயிர் நிலையென்பர்.1 இங்ஙனம், சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முடைமையால், இதனைப் பொன்னேபோற் புலவர்களும் மற்றவர்களும் போற்றி ஒழுகுகின்றனர். பெருங்காப்பியத்துட் சிறந்து விளங்குஞ் சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவரும் திருக்குறளாய பொருண்மொழிக் கணிருந்து சில கொண்டு தம் நூலின்கண் வைத்திழைத்து அழகு செய்து கொள்வாராயினர். அவற்றுள், *"தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் - அழுதகண்ணீரும் அனைத்து"** "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும், எஃகதனிற் கூரிய தில்" என்பன அடங்கும். இவற்றுள், முதற்கண்ணதாய பொருண்மொழியை, 1. "தொழுத தம்கையினுள்ளுந்துறு முடியகத்துஞ்சோர அழுதகண்ணீரினுள்ளும் அணிகலத்தகத்தும் ஆய்ந்து பழுதுகண்ணரிந்துகொல்லும் படையுடனொடுங்கும் பற்றா(து) ஒழிகயார் கண்ணும்தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே." என்ற பாட்டிலும், இரண்டாவதனை. 2. "செய்க பொருள்யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகு பிறிதில்லை யிருந்தேயு யிருமுண்ணும் ஐயமிலை யின்பமற னோடவை யுமாக்கும் பொய்யில்பொருளே பொருள்மற்றல்ல பிறபொருளே." என்ற பாட்டிலும் அமைத்துக் கொண்டிருத்தலும் புலப்படும். விநாயக புராணம் பாடிய ஆசிரியரும் திருக்குறளின் பொருட்பாலே தம்புராணம் பாடுந்தொழிற்கு வாய்த்த பொருளும் கருவியுமாகக் கொண்டது, இப்பொருண்மொழி நூற்கட்கிடந்து அணிசெய்தலே யன்றித் தொழிற்கண் முட்டறுக்கும் துணைக் கருவியாதலும் வலியுறுத்தும். இவ்வாறு இவை பயன்படுதலோடு அமையாது இடையூறு களால் கலங்கித் திகைப்பார்க்குக் கலக்கந்தீர்க்கு மருந்துமாய் உண்மைப் பொருளறிதற்குதவி செய்தல் குறித்தே பேக்கன் என்னும் புலவர் பெருமகனார் இவை அணியாதலே யன்றித் தொழிமுட்டறுத்தும், கலக்கத்திடைத் தெளிவுபிறப்பித்தும் நலம் செய்கின்றன எனும் கருத்துறக் கூறினர். 3. இப்பேக்கன் என்பவரே பிறிதோரிடத்தில் இப்பொருண்மொழிகளை உப்பங் கழிகட்கு ஒப்புமை கூறி, கழியிடத்து உப்பினைப்பெற்று, வேண்டு மிடத்துக் கலந்து சுவையாக்கிக் கோடல்போல், இவற்றினிடத்து மெய்ப்பொருள் கண்டு வேண்டுமிடத்துத் துணைசெய்து கொள்ளலாமென்றார். 'முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" என்பது நற்றிணைக்கண் வருவதோர் (355) பொருண்மொழியாகும். இதனை ஆசிரியர் திருவள்ளுவனார் "பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்" என்ற குறளின்கண் (580) பெய்து கொண்டனர். மேலும், நீரின் றமையாவுலகம் போலத், தம்மின் றமையா நந்நயந்து என்ற அதன் கணநீரின்றமையாது உலகம் என்பது ஒரு பொருண்மொழி (நற்.1) இதனையும் திருக்குறளில் "நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு" என்னுங் குறளின்கட் (குறள்.20) பெய்து கொண்டனர். இந்நற்றினைப் பாட்டில் "தாமரைத் தண்டா தூதிமீமிசைச், சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப், புரைய மன்ற புரையோர் கேண்மை" எனவருவது ஒரு பொருண்மொழியாகும். இதன் பொருள் - தாமரைத் தாதினையும் சந்தனத்தாதினையும் ஊதி அச்சந்தன மரத்திற் செய்த வள்ளத்துள் வைத்தவிடத்து அவை இடத்து நிகழ் பொருளும் இடமுமாயியைந்து தம் பெருமைபுலப் படுத்தினாற்போல உயர்ந்தோர் தம்மிடத்தே வைத்து கேண்மையும் பெருமை புலப்படுத்தி விளங்கும் என்பது. இதனை மணிவாசகப் பெருந் தகையார் தம் திருக் கோவையாரின்கண், "சீரிய லாவியும் யாக்கையு மென்னச் சிறந்தமையாற், காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கமலங் கலந்த, வேரியும் சந்தும் வியறந் தெனக் கற்பில் நிற்பரன்னே, காரியல் கண்டர்வண் டில்லை வணங்கு மெங்காதலரே," என்ற திருப்பாட்டில் (301) அமைத்துக் கொண்டனர். இவை போலும் பொருண்மொழியாட்சிகள் பலவாதலின் இம்மட்டில் நிறுத்து கின்றேன். இப்பொருண்மொழிகள் புலவர் பெருமக்கள் இயற்றும் நூல்களின் இடையிடையே கிடந்து உலகியலில் மக்கள் ஒருவரோ டொருவர் கூடியும் பிரிந்தும் ஒருங்கியைந்தும், பிற நிகழ்ச்சிகளைக் கண்டும். உணரும் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன. வாழ்க்கைச் சாகாடு உகைக்கும் மகன் அவ்வாழ்க்கைக்குரிய மாண்புகளையுணர்ந்து வல்லனா யிருப்பின், அது ஊறின்றாகி ஆற்றை யினிது சென்று பயன் தருவதாகும்; அதனை யறியானாயின், அவ்வாழ்க்கை துன்ப நிலையமாய் மிகப்பல நோய்களைத் தலைத்தலைத் தருவதாய் முடியும். இவ்வியல்பு பற்றியே உலகியலறிவினை வளர்க்கும் பொருண்மொழிகள் மிக்க இன்றியமையாதன வாயமைந் திருக்கின்றன. வாழ்க்கை அரம்பும் அல்லலும் கரம்பும் செறிந்திருத்தலால், இன்னோரன்ன பொருண் மொழிகளைக் கிடந்தன கிடந்தாங்கே எடுத்துக் கோடல் வேண்டும். அவற்றின்கண் ஓராராய்ச்சியும் வேண்டாவாம். இந்நலம் குறித்தே, இவை நாமறியும் பலவுண்மைகளுள், ஒன்றை விலக்கியாதல், வேறொன்றைத் தழுவியதால், ஓருண்மையின் ஒருபுடையைவிலக்கியாதல், மற்றொரு புடையை மிகைபடவிரித் துரைத்தாதல் செல்லாது எத்தகைய கட்டுப்பாட்டிற்கும், நிலைக்கும், ஒழுங்கிற்குந்தக அமைந் திருத்தல் வேண்டும் என்பர். ஆதலால், இவை மக்கள் வாழ்விற் கெனவமைந்த விதிகள் என்பது மிகையாகாது. இது காறும் நாம்பொருள்மொழிகளாவன இவை யென்றும், அவை பொதுவகையிற்படுமாறு இதுவென்றும், அவற்றின் பொதுவியல்பும் அறிந்தோம். இனி இவற்றால் நாம் பெறும் அறிவியல்பையும், இப்பொருண்மொழிகள் பயன்படுமாற்றையும் ஒருசிறிது காண்போம். அறிவாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறே யுணர்தல்" என்பது. இது மக்கள் தோன்றும் போதே உடன் தோன்றி அவரைத் தொழிற்படுத்துகின்றது. நாம் பெற்றதும் பெறுவதுமாகிய அறிவின் இயல்பினை ஆங்கிலப் பெருமக்கள் நால்வகைப்படுத்துத் தலைமை, கடைமை, இடைமை முதலிய ஏற்றத்தாழ்வுகள் கற்பிக் கின்றனர். ஒருவன் தன் இயற்கையறிவினால் பொருளியியல் புணர்ந்து பெறுவது தலையாய அறிவு என்றும், ஏனை மக்களின் ஒழுக்கநெறிகளில் நின்றும் அவரோடு பயின்றும் அவ்வாறே பொருள்களையுணர்ந்தும் பெறுவது அதனிற் குறைந்த சிறப்பினை யுடைய அறிவாமென்றும், மூன்றாவது பல நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிக்கண் மனத்தைச் செலுத்திப் பொருள்களை யாராய்ந்து தெளிந்து பெறுவதாய அறிவு என்றும், இவற்றிற் கடையாயஅறிவாவது நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் கற்றதுணையே பெறுவது என்றும் கூறுவர். 1இப்பாகு பாட்டின் கட் பொருண்மொழிகள், மூன்றாம் பகுதிக்கண் அமைந்து, உண்மை யொன்றின் ஒரு சார் இயல்பினை நமக்குணர்த்தி ஏனையவற்றை ஆராயுமாறு செய்யவல்லனவாகின்றன. இம்மூன்றாம் பகுதிக்கட்படும் அறிவு உலகில் மக்களையும் பிறபொருள்களையும் கண்டும் பழகியும் உணர்ந்தும் பெறப் படுதலால், இதனை வாழ்க்கையறிவு என்றல் பொருந்துவதாம். இது ஒருவன் நல்வாழ்க்கைக்குத் துணைசெய்யும் அறிவுப் பொருள் நிறைந்த மொழியாம். ஒருவன் கற்பதும், கற்றாரோடு பழகுவதும் எல்லாம் உலகில் நல்வாழ்வு நடாத்தி நலம் பெறுதற் பொருட்டேயாம். ஆகவே, அவன் கற்கும் நூல்களுள் இப்பொருண்மொழிகள் இடம் பெறாவாயின், அவையும் அவற்றைப் படிக்குங்காற் கழிந்த பொழுதும் பயன்படாதொழிவனவேயாகும். ஆகவே, இப்பொருண் மொழி ஒவ்வொரு நூலிலும் அமைதல் இன்றியமையாதாம். நாம் வாழும் இக்காலமும், நம்மனப் பான்மையும் புதிய வுணர்ச்சியும் ஒழுக்கமும் கொண்ட முன்னேற்றமென்னும் பொருளால் இழுக்கப்பெறுகின்றன. ஒரு ஊரின்கண் ஒரு அரசன் இருந்தான் - என்று தொடங்கும் சுவடிகள் மறைகின்றன; இன்னயாண்டில் இத்திங்களில் இந்நாளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதென்னும் முறை எழுந்து நிலவுகின்றது. எப்பொருளைக் கேட்பினும், எப்பொருளைக் கற்பினும், அப்பொருளைக் கேட்டவாறோ, கற்றவாறோ உணர்த லின்றிப் பல்வகையினும் ஆராய்வதும், முடிபுகூறுதலுமே எங்கும் விளங்கித் தோன்றுகின்றன. இங்ஙனமே நம்பண்டை வரலாறும், அறிதல் வேண்டுமென்னும் அவா; நாகரிகமும் எங்கும் எல்லோருடைய மனத்திலும் எழுந்துலவுதலைக் காண்கின்றோம். இவ்வுணர்ச்சி மிக்குஎழும் இக்காலத்தில், - பண்டை வரலாற்றா ராய்ச்சியும், பொருளியல்புணர்ச்சியும், அரசியல்கிளர்ச்சியும் விரவிச் செல்லும் இக்காலத்தில் - மக்களியல்பையும் ஆராய்தல் வேண்டுமென்பது கூறாமலே யமையும். மக்களியல்பு பொருண் மொழிக்கண் அடங்கி யிருத்தலால், அவ்வாராய்ச்சி பொருண் மொழியாராய்ச்சியே யாயிற்று. இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் பொருண் மொழிகளைக் கூறவல்லவர் ஒருவர் வேண்டு மன்றே. அவர் யார்? அவரே நம்புலவர் பெருமக்கள். அவரே, உலகில் நாம் வாழ்வினியல்பை யுள்ளவாறே யுரைக்கும் ஆற்றல் படைத்தவராவர்; சில உண்மைகளையும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்கும் சிலரினும், இவர்கள் போற்றற்குரியர். புலவர்களின் செயல் நிலைவனப்பும் தூய்மையும் நிறைந்தது. சொற்பொழிவு செய்தல் ஆகிய இவையாவும் ஒருவனது உலகியலறிவின் திட்பநுட்பத்துக் கேற்ப வமைந்தனவாம். ஒழுக்கநெறியும், சரித்திர முறையும், அரசியல்வாதமும், அவர்தம் கல்வி, கடைப்பிடி முதலியவற்றிற் கேற்ப மக்களால் மதிக்கப்படுவனவாம். மற்று, எளியதாய உரை நூல் எழுதும் ஒருவன், ஒன்றிரண்டாய பொருண்மொழிகளைத் தன் நூலிடையே தொடுப்பனேல் அவன் முனிவரையொப்பக் கருதப்படு கின்றான். இதுவே அப்பொருள்கட்கும் இதற்குமுள்ள வேறுபாடு. " தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க என்ப மாதோ." (நற். 116) என்றும், " நெடிய மொழிய கடிய வூர்தலும் செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன்க ணஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் செல்வமென் பதுவே" (நற். 210) என்றும், " தீயும் வலியும் விசும்பு பயந்தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ." (நற். 294) என்றும், வரும் பொருண்மொழிகளால், இவற்றை யாக்கிய பெரியோர் களும் நல்லிசைச் சான்றோர் வரிசையுள் இடம் பெறுவராயினர். இத்தகைய பொருண்மொழிகள் இலவாயின், இராமாயணமும் சிந்தாமணியும் பிறவும் நின்றுநிலவுதல் யாங்ஙனம் அமையும்? மேனாட்டார் ப்ளூடார்க் (Plutarch) என்பவரை மிக மேம்பட வுரைப்பது, கதை கூறுவதினும் மக்களையும் அவர்தம் பண்பினையும் வெளிப்படுத்துவதே சீரிய கருத்தாய்க் கொண்டமையே யென்பர். இளங்கோவடிகள், “அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவதூஉம், உரைசால் பத்தினிக்குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச், சிலப்பதிகாரமென்னும் பெயரால், நாட்டுவதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” (சிலப்பதிகம்) என்று தொடங்கினமையும் இக்கருத்தே பற்றியென்க. பொருண்மொழி யிடையிடை விரவிய நூல்கள் சிலவே ஆங்கில நாட்டில் உள்ளனவென்றும், அவை எத்துணை மிகுதிப்படு கின்றனவோ அத்துணை ஒழுக்கமும் உயர்வும் மக்கட்குண்டாகு மென்றும், இவற்றில் முற்பட்டு விளங்குவன நம்நாட்டு மொழிகளே யென்றும் ஜான்மார்லி என்பவர் 1887- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் எடின்பர்க் என்ற நகரத்தில் செய்த சொற் பொழிவில் கூறியிருக்கின்றார். அவர் நாட்டில் ஒரு கிறித்தவ ஆசிரியர் சூதினால் தம்கைப்பொரு ளிழந்து, கடன் வாய்ப்பட்டு அது தீர்க்கும் ஆற்றலிலராய் அமெரிக்காவிற்கு ஓடிப் போய் மக்கட்கெனச் சிலபொருண் மொழி நிறைந்த நூலொன்றை “சில சொல்லிற் பல பொருள்கள்” (Lacon or Many things in few words) என்ற பெயரிட்டு 1820-ஆம் ஆண்டில் வெளியிட்டார் என்றும், அந்நூற் கண் உள்ளன பொருளுரையாகாது பொய்யுரை (உள்ளீடில்லாத உரை, வெற்றுரை) யாக இருந்தமை கண்டு தாம் தீயிட்டெரித்துவிட்டதாகவும் அவர் கூறுகின்றார். பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பொருண்மொழி புணர்த்துக்கூறல் தமக்கு அணியாகக் கொண்டிருத்தல் வேண்டுமாயினும் அவை பெரும்பான்மையும் மக்கட்கு வேண்டும் பொதுவுண்மைகளையேயுணர்த்துகின்றன. “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமு மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்” (அகம்-66.) என்றும், “அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த கேளிர் கேடுபல வூன்றலும் நாளும் வருந்தா வுள்ளமோ டிருந்தோர்க் கில்லெனச் செய்வினை புரிந்த நெஞ்சினர்.” (அகம்-173.) என்றும், “ நெறியி னீங்கியோர் நீரல கூறினும் அறியா மையென் றறியல் வேண்டும்” (சிலப்-10.) என்றும், “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமின் அதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” (புறம்-195.) என்றும், “செல்வத்துப் பயனே யீதல், துய்ப்பே மெனினே தப்புந பலவே.” என்றும் வருவனவற்றாலறிக. மக்கள் நாடோறும் இயற்றும் குற்றங்களையும் நலங்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்குதலையும், போற்றுதலையும் செய்யும் பொருண்மொழிகள் நிறைந்த நூல்கள் வேண்டும். ஆங்கிலேயர்கள் மக்களின் ஒழுக்கங்களையும், அவர் செய்யும் பிழைகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துக்காட்டும் பொருண் மொழிகளைப் புணர்த்தற்கு கதை வடிவங்களையே கருவியாகக் கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பான்மையும் எளிய நடையில் வழுவில்லாத இனிய தீஞ்சொற்களாலாக்கப்பட்டுப் பேரிலக்கியங்கட்குள்ள அமைதி நிரம்பிமிளிர்கின்றன. நம் நாட்டில் அம்முறையைக் கையாடல் வேண்டிச் சிலர் புனைகதைகள் எழுது கின்றனர். அவற்றுட் பெரும்பான்மையை மக்களின் ஒழுக்கக்கேடு ணர்த்தும் பொருண்மொழி புணர்த்தலில் அமைந்தன வாயினும், அம்மொழிகட்குரிய சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமுமின்றி, வழுவெல்லாம் நிறைந்து உலவுகின்றன. “முருகன்” என்னும் கதை நூலொன்று இவ்வாண்டில் சென்னைப் பல்கலைக் கழக வகுப்பிற்குப் பாடமாக அமைந்துள்ளது. அதன்கண் மக்கள் வாழ்வு பெறுவதும், நடைப்பிறழ்ச்சியால் கேட்டிற்குள்ளாகி வருந்துதலும், உழவுத் தொழிற்கு வேண்டும் பொருண்மொழிகளும் நிறைந்திருக் கின்றன. மற்று, அதன் சொன்னடை மிகத் தாழ்ந்த நிலையில் உளது. நூலெழுதப்புகுவோர் எம்மொழியில் எழுதவிரும்புகின்றனரோ அம்மொழியில் இயன்றவாறு பிழையின்றி விளங்க எழுதுதல் வேண்டும். சொற்றொடர் களில் இலக்கண வழுக்கள் அமைந் திருத்தல் ஒருபுடை நிற்ப, “ஒருவள்” முதலிய இலக்கண வரம்பு கடந்த சொற்கள் பல விரவியிருத்தல் கற்பார்க்குக் கேடுபயக்கும் தன்மைய தாகின்றது. நிற்க, உரை நூல்களிற் காணப்பெறும் பொருண் மொழிகள் எண்ணிறந்தனவாகலால் ஒருசிலகூறி இக்கட்டுரையினை முடிக்கின்றேன். “ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகாது. புத்தகஞானமே யுடையவர்கள் விடயங்களை யாராயும்போது தமது சொந்த நிலையையிழந்து அப்புத்தக நிலையையே பெற்று ஆராய்வார்கள். ஒரு தேசத்தின் இயல்பினை அத் தேசத்திற்குச் சென்று திரும்பினோர் கூறக்கேட்ட அறிவு எவ்வாறு வலியுடையதாகுமோ அவ்வளவுவலியே புத்தக ஞானமே யுடையோன் ஆராய்ச்சியிற்படும் பொருளுமாகும். புத்தகமே கற்றோன் காணும் பொருண்மை பல்லிழந்தோன் தன் வாயிலமைத்துக் கொள்ளும் போலிப் பல்லைப்போல் மனத்திற் பதிகிறது. தாமே தம்சொந்த அறிவினால் அறிந்ததோ இயல்பாகவே யமைந்த அவயவம் போல் மனத்தில் வலுப்பட்டு நிற்கிறது” - தி. செல்வக் கேசவராய முதலியார். “காமுக னாவானொருவன் ஒரு வனிதையிடத்து அன்புடையன் என்பது அவள் ஒக்கலைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவு பற்றியே அறியப்படும்.” - சிவஞானயோகிகள். “மானமாவது தன்னிலைமையிற் றாழாமையும், தெய்வத்தாற் றாழ்வுவந்துழி உயிர்வாழாமையுமாம்.” “உயிர் நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே - பரிமேலழகர்.” சில ஆங்கிலப் பொருண்மொழிகள் :- 1. நுண்ணறிவோர் இழைக்கும் தவறுகளும், அறிஞர் செய்யும் ஆரவாரமும், நல்லோர் பிழைக்கும் குற்றங்களும் ஆகிய இவையாவும் சேரநிகழ்வது கிளர்ச்சியே. Follies committed by the sensible, extravagances uttered by the clever, crimes perpetrated by the good, that is what makes revolution. 2. மக்களின் மடமைநோக்கி மிக்க சினங்கொள்ளுதல் மடனெனப்பட்ட யாவையும் ஒருங்கே யழைத்துக் கொள்ளும் செயல்களுள் மிக்கதொன்றாம். Excessive anger against human stupidity is itself one of the most provoking of all forms of stupidity. 3. இன்பமன்று அறிஞர் வேண்டுவது; துன்பத்தினீக்கமே. அவர் தேடிச்செல்வதும் அதனையேயாம். Not pleasure but freedom from pain is what the sensible man goes after. 4. தனக்கு முன்னிருந்தோன் ஒருவற்கு ஒப்பாகக் கருதின் அவனின் இரட்டித்த ஆற்றலுடையனாதல் வேண்டும். To equal a predecessor one must have twice his worth. 5. செய்தற் கெளியதாயினும் ஒன்றைச் செய்தலுறுபவன், அதனை அரிதென்றும், அரியதாயின் எளிதென்றும் கருதிப்புகுதல் வேண்டும். What is easy ought to be entered upon as though it were difficult, and what is difficult as though it were easy. இதுகாறும் கூறியவாற்றால், பொருண்மொழியென்பது தமிழ் நூல்களில் பொருண்மொழிக்காஞ்சியென்னும் துறைப் பகுதியுள் அடங்குவதென்பதும், அது சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் பெற்று நூல்கட்கு அணியாதலே யன்றித் தொழில்முட்டறுக்கும் கருவியாமென்பதும், பொருண்மொழிகட்கு ஆங்கிலேயர்கூறும் இலக்கணம் இதுவென்பதும், ஒருவன் கற்றற்குரிய பொருள்களுள் இவற்றைக் கற்றல் அவன் வாழ்க்கைச் சாகாடுகைத்தற்கண் இன்றியமையாது வேண்டப்படுமென்பதனால், இவை மக்கள் வாழ்விற்கென வமைந்த விதிகளாம் என்பதும், அறிவாவது இஃதென்பதும், அது நால்வகைப் பாகுபாடுபெறும் என்பதும், அப்பாகுபாட்டின்கண் பொருண்மொழியாலெய்தும் அறிவு மூன்றாம் பாகுபாட்டிலடங்குமென்பதும், இம்மொழிகள் மக்களின் மனப்பான்மையையுள்ளவாறு காட்டும் இயல்பின என்பதும், ஆராய்ச்சியே பொருளாகச் செல்லும் இக்காலத்தில் பொருண்மொழி களைக் கற்று மக்களின் மனப்பண்பாராய்தலும் வேண்டு மென்பதும், மனப்பண்பு கண்டு உணர்ந்து கூறும் பொருண்மொழி யாட்சியால் ஒருவன் நன்கு மதிக்கப்பெறுவன் என்பதும், நம்நாட்டு இலக்கியங்கள் மக்களின் பொதுவாய பண்பினை யுணர்த்துகின்றன வென்பதும், இக்கால உரை நூல்களிற் சில, மக்களின் சிறப்புப் பண்பினையுணர்த்தினும் வழுமலிந்துள்ளனவென்பதும், ஏனையுரை நூல்களிற் சில பொருண்மொழிகள் இவற்றையும் உணர்த்து கின்றனவென்பதும் பிறவும் கூறப்பட்டனவாம்.  8. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி உரிமை வாழ்வென்பது பொது வுலகில் 'சுதந்திர வாழ்வு' என்று வழங்கும். இந்த வாழ்வு பெறுதற்கு நம் நாட்டவர் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே முயலத் தொடங்கி, இந்த நூற்றாண்டின் இந்த ஆண்டு வரையில் பெரிய போராட்டத்தைச் செய்து வெற்றி பெற்றனர். இத்தகைய வெற்றி, உரிமைப் போருடற்றி வெற்றி பெற்ற நாடுகள் எவற்றிலும் இதுகாறும் உண்டானதே கிடையாது. ஏனை நாட்டவரால் எய்துதற்கரிய தாகிய இத்தகைய வெற்றி கொண்டு விளங்கும் நமக்கு வேறு எவருக்கும் இல்லாச் சிறப்பு உண்டாகிறது. மேலும், நம் நாட்டிலும், இறந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்களிலும், எதிர் காலத்தில் தோன்றுகின்றவர்களிலும் இன்றைய நாம் நல்ல பேறுடையவர்கள் என்பதையும் நினைவு கொள்ளவேண்டும். உரிமைப் போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து கண்டு, அஃது எதிர்பாராத வகையில் வெற்றி தரவும் கண்டு இன்புறு கின்றோமாகையால், நாம் பெற்ற பேறு தலைசிறந்த பேறு என்பதில் தடை ஏது? உரிமை வாழ்வு எய்தப் பெற்று இன்புறுகின்ற நமக்கு இவ்வாழ்வு உரியது தானா? புதிது பெற்றதொரு வாழ்வா? என்று சிறிது எண்ணமிட்டுப் பார்க்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு காண்பவர்க்கு, தமிழ் நாட்டவர்க்கு இது புதிதன்று; முந்நூறு நானூறு ஆண்டுகட்கு முன்பு வரையில் 'தமிழ் நாட்டவர் உரிமை வாழ்விலே உறைந்தவர்' என்பது நன்கு விளங்கும். 'தமிழராகிய நமக்கு இறந்த உரிமை வாழ்வு மீள உயிர் பெற்று வந்திருக்கிறது' என்றே எண்ண வேண்டும். பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமை யின்மை, ஒப்புரவு ஆகிய ஐந்தும் உரிமை வாழ்வுக்குச் சிறந்த உறுப்புக்களாகும். அவரவரும் தத்தமக்குரிய நெறியில் நின்று நெஞ்சால் நினைப்பவற்றைச் சொல்லுதற்குத் தடை யில்லாமை பேச்சுரிமையாகும். நெறியில் நிற்கும் போது நில்லாதார் செய்யும் நீர்மை யற்ற செயல்களை எடுத்தோதித் திருத்துவதற்கும் நெறியிடை யுண்டாகும் இடையூறுகளையும் இடையீடுகளையும் எடுத்தோதி விலக்குதற்கும், நலங்களை எடுத்தோதிப் பாராட்டுதற்கும் பேச்சு நிகழும். அவ்வாறு நிகழும் பேச்சுக்களை வழங்குதற்கு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமை யுண்டு. அப்பேச்சுரிமை யில்லாத வாழ்வு உரிமை வாழ்வாகாது. கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை வழிபடுவது கடனென்றும் கருதி அவரவரும் வேறு வேறு சமய நெறிகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சமய நெறிகளும் பலதிறப்படுகின்றன. அவர்களுக்கு அந் நெறியில் வழிபட்டு வாழ வுரிமை யுண்டு. இது வழிபாட்டுரிமை. அவ் வுரிமையைக் கெடுத்து, யாவரும் ஒரு நெறியையே கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்தி நிறுத்துவது உரிமை வாழ்வுக்குப் புறம்பான தாகும். அவரவர்க்கும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் வழிபாட்டுச் சமய நெறியைப் பிறர்க்கு எடுத்தோத உரிமை யுண்டு. பிறரைத் தம் நெறியைக் கைவிடுமாறு வற்புறுத்துவது உரிமைப் பணியாகாது. உடைமைக்கும் உடையவனுக்கும் உள்ள உரிமையால், உடைமையின் பயனை உடையவன் நுகர்தற்கண் அவனுக்கு அச்சமுண்டாதல் கூடாது. உழைப்பவனுக்குத் தன் உழைப்பால் விளையும் பயனை நுகர்தற் குரிமை யுண்டு; அந் நுகர்ச்சியில் அவனுக்குத் தடை யுண்டாகுமோ என அச்ச முண்டாதல் கூடாது. இவ் வகையால் அவரவர் உரிமையில் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் உரிமை வாழ்வுக்குத் தீதாகும். இம் முறையில் அரசியல் முறைகளும், அவற்றைச் செயற்படுத்தும் வினையாளர்களும் மக்கட்கு அச்சம் பிறவாத வகையில் அமைவதே அச்சம் இல்லாமை யாகும். உரிமை வாழ்வுடைய நாட்டில் வறுமை யுண்டாகுமானால், அஃது அவ் வுரிமையை யழித்து நாட்டைச் சீரழித்தவிடும். 'நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு' என்றதும் இக் கருத்தையே வற்புறுத்துகிறது. வறுமை யறவே இல்லாத உரிமை வாழ்வில், ஒரு வேலையும் இன்றிச் சோம்பித் திரிபவர் இல்லையாவர்; அவரோடு, உழைப்பார் உழைக்க, அவர் உழைப்பின் பயனை உறிஞ்சி யுண்டு உயிர்வாழ விரும்புவோர் ஒழிந்துபோவர். 'யான் வாழ ஏனோர் எனக்கு அடிமையாக எனும் ஊன அறிவு' ஓரிடத்தும் ஒரு சிறிதும் இராது. ஒப்புரவு என்பது உரிமை வாழ்வுக்கு அழகு தருவதாகும். நாடுகளுக்கிடையே நிலவும் ஒப்புரவு, வறுமையும் அச்சமும் போக்கி, உரிமை வாழ்வில் ஊறிப் பெருகும் இன்பத்தை நுகரப் பண்ணும், நாட்டு மக்களிடையே விளங்கும் ஒப்புரவு, மக்கட் சமுதாயத்தில், வேற்றுமைசெய்யும் பிளவுகளைப் போக்கி, ஒற்றுமை நிறுவும் மனப்பண்பினை வளர்க்கும். ஒப்புரவு என்பது ஒருவருக்கொருவர் வேண்டுவன வுதவி யொழுகும் ஒழுக்கமுறை; 'ஒப்புரவொழுகு' என்பது ஆத்திசூடி. மக்களை ஒருவர்க்கொருவர் ஒன்றாகப் பிணித்து ஒருமை யுறுவிப்பதும், நாடுகளை ஒன்றோ டொன்று நீங்கா வகையில் ஒன்றுபட்டு வாழ வைப்பதும் ஒப்புரவென்னும் ஒள்ளிய அறம் ஒன்றேயாகும். மேற்கூறிய பேச்சுரிமை முதலிய ஐவகை யுறுப்புக் களையும் கொண்டு, பிற நாட்டவரது ஆட்சியின் கீழன்றித் தன்னாட்டவ ராளும் ஆட்சியில் வாழும் வாழ்வு உரிமை வாழ்வுக்கு உருவாகும். இன்று நாம் எய்தி இருக்கும் உரிமை வாழ்வு இத்தகைய தாகும். இந்த உரிமை வாழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் தமிழகத்தில் இருந்ததென்பதைச் சங்க நூல்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தைத் தமிழரே ஆண்டனர்; அவரது தமிழ் மொழி அரசியல் மொழியாக விளங்கிற்று. தமிழர்கள் அத்தமிழ் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். அவர் வாழ்வில் இவ்வுறுப்புக்கள் ஐந்தும் குறைவின்றியே இருந்தன. அதனால் அவர்கள் காலத்து இலக்கியங்கள் இவ்வைந்தும் வளம் பெறத் தக்க கருத்துக்களை எடுத்துக் காட்டின. முதற்கண் பேச்சுரிமையைக் காணலாம். தமிழகத்தில் சங்க இலக்கியக் காலத்தில் நிலவியது முடியாட்சியே யன்றிக் குடியாட்சி யன்று. ஆயினும், முடியாட்சி, தான்தோன்றி யாட்சியாய் இல்லாமல், குடிகளின் மனக்கருத்தைத் தழுவிச் செல்லும் இயல்பு பெற்றிருந்தது. இதனால், அரசியலில் உரிமை அறிவுடையவர்க்கே இருப்பதாயிற்று. பாண்டி வேந்தன் ஒருவன், 'ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்' என்றான். திருவள்ளுவரும், 'குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன், அடிதழீஇ நிற்கும் உலகு' என்றார். குடிகளாவார் கற்றாரும் கல்லாரும் என இரு திறப்படுவர். அவருள், கல்லாதவர் கற்றவர் வழி நிற்பவராகையால், அரசியலின் செம்மைக்குக் கற்றறிந்த அறிவுடையோர் பொறுப்புடைய ராயினர். அப்பொறுப்பு, அரசியலில் வேண்டுவன எடுத்தோதற்கு வாய்ப்பளித்தது. சான்றோர் பலரும் பொறுப்புணர்ந்து தமது பேச்சுரிமையை நெகிழ விடாது செய்வன செய்து சிறப்புற்றனர். நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், பாண்டி நாட்டை ஆண்டு வந்த காலத்தில், ஒருகால் நாட்டில் உணவுப் பொருள் விளைவு குறைந்தது. உணவில் வறுமை யுண்டாயிற்று. வேந்தன் துறக்க இன்பம் வேண்டி வேள்வி செய்வதிலும், பெருஞ் செல்வம் ஈட்டிப் பிற வேந்தரோடு போர் செய்வதிலும், வேறே நல்ல புகழ் பெறக் கருதி அதற்குரிய செயல்களிலும் பெரிதும் ஈடுப்பட்டிருந்தான். உணவு முட்டுப்பாட்டைச் சிறிதும் உணராது, அதனை எடுத்தோதுபவர்களை இகழ்ந்து நின்றான். உணவுப் பொருளை மிகுதிப் படுத்துவது குறித்து வேந்தன் கருத்துச் செலுத்தா திருப்பதைக் குடபுலவியனார் என்னும் சான்றோர் கண்டார். அவரோர் அறிவுடைய சான்றோர் என்பதும், அவர்க்கு அரசியலில் பொறுப்புண் டென்பதும் வேந்தன் முதலாயினார்க்குத் தெரியும். அவர் வந்து வேந்தனைக் கண்டபோது, வேந்தன் அவர் சொல்வது கேட்க இசைந்திருந்தான். அவர், மல்லல் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன் தகுதி கேள், இனி, மிகுதி யாள! நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. உண்டி முதற்றே உணவின் பிண்டம். உணவெனப் படுவது நிலத்தொடு நீரே. நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே என்று சொல்லி, நீர் கொண்டு நிலத்தை வளம் படுத்துவது உயிர் களைப் படைப்பதாகும் என்ற கருத்தை வேந்தன் மனத்தில் பதிய வைத்தார். 'ஏனை நாடுகளைப் போலப் பாண்டி நாடு பேராறுகளை யுடைய தன்றே; இதனை நீர் வளமுடைய தாக்குவது எங்ஙனம்? என்று எண்ணாமை கருதி, நம் நாட்டில் உள்ளவை பெரிதும் புன்செய்க ளாகும். வித்திவா னோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட் குதவாதே; அதனால் அடுபோர்ச் செழிய! இகழாது, வல்லே நிலன் நெளிமருங் கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளா தோரே என்றார். இதனால், புன்புலம் பயன்படாத; பள்ளப் பாங்கு நோக்கி நீர்நிலை யமைப்பின், அந்த நீர் நன்புலம் பெருகிப் பெரு நலம் விளைக்கும் என்று வற்புறுத்தினார். அன்று குடவுலவியனாரது பேச்சு நலம், இன்று பாண்டி நாடு நீர் நிலைகளால் மிகுந்து ஓரளவில் உணவுக் குறைவின்றி யமைதற்கு ஏது வாயிற்று. சோழ நாட்டை உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கிள்ளி வளவன் என்பவன் ஒருவன். இவன் முடிவில் குளமுற்றத்து நடந்த போரில் வீழ்ந்து இறந்ததுபற்றிப் பிற்காலத்தார், இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று கூறுவர், இக் கிள்ளிவளவன் ஆட்சியில் குடிதழீஇக் கோலோச்சும் இயல்பு குறைவ தாயிற்று. பிற வேந்தருடன் போர் செய்து வென்றி பெறுவதால் உண்டாகும் விளக்கமே வேந்தன் கருத்தை விழுங்கிக் கொண்டது. உழு படையினும் பொரு படையே வலி யுடையதெனச் சோழன் கருதிவிட்டான். இதனால் குடிகட்கு வருத்தம் மிகுந்தது. இதனை எடுத்துரைக்கும உரிமையுடைய சான்றோர் கருத்தில் அச்சம் குடிகொண்டது. அக் காலத்தே வெள்ளைக்குடி யென்னும் ஊரினரான நாகனார் என்னும் சான்றோர் தோன்றி இக் கிள்ளி வளவனைக் கண்டார். வேந்தே, பொருபடை தரும் வெற்றி குடிகளின் உழுபடையால் விளைவதாகும்; குடிகளின் மன வியல்பை நீ நன்கறிதல் வேண்டும் அவர்கள், மாரி பொய்ப்பினும் வாரி குன்றிலும் இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் வேந்தரையே பழிப்பர். அதுநன் கறிந்தனை யாயின் நீயும், நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறந் தருகுவை யாயின், அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே என்று அறிவுறுத்தினார். வளவன் அறிவு தெளிந்து செய்வன செய்தான். பிறகு நாடு நாடாயிற்று. பாண்டி நாட்டை யாண்ட வேந்தருள் அறிவுடை நம்பியென்பவன் ஒருவன். இவன் பெயரளவில் அறிவுடைய நம்பியே தவிரச், செயலில் அறிவுடைந்த நம்பி யாவன். இவன் ஆட்சிக் காலத்தே, இவன் இன்பத் துறையில் மிக எளியனாய் ஒழுகினான். இவனைச் சூழ்ந்திருந்த அரசியற் குழுவினர் நீர்வழிக் கோரை போல இவன் எண்ணப்படியே ஒழுகினார்கள். நாடு வேந்தனுக்கேயுரியது; அதனால் அதன்கண் விளைவன அவனுக்கே உரியவை; அவற்றை அவன் விரும்புகிறபடியே செய்ய உரிமை யுண் டென்று சொல்லிக் குடிகளைக் பலவகையிலும் அலைக்கத் தொடங்கினர். அதனால் நாட்டில் மக்களுக்கு மிக்க வருத்த முண்டாயிற்று. அதனை யறிந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர், வேந்தனை யணுகி, "வேந்தே, நின் பட்டத்து யானைக் கெனத் தனியே நிலம் விடப்பட்டிருக்கிறது. அதன்கண் விளையும் நெல் அதற் குரியதே. அதனை விளைத்து நெல் லாக்கிக் குற்றி யரிசி யாக்கி, கவளம் கவளமாகத் தரின், அந்நெல்லுணவு அதற்குப் பன்னாளைக்கு உணவாகும். அந்நிலம் யானைக்குரியதே; அதனால்அவ் யானையை அந் நிலத்தே விட்டு மேய விடுக என்று சொல்லிவிட்டால் என்னாகும்? நூறு வேலி நிலமாயினும், அதன் வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும். அதுபோல, நீயே சென்று நில வருவாய் கொள்ளத் தொடங்கின நாடு பாழ்படும்; அது செய்யற்க' என்ற கருத்தமைய, காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே வாய்புகுவத னினும் கால்பெரிது கெடுக்கும். அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானைபுக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே என்று அறிவுறுத்தினார். இவ்வாறு பேச்சுரிமையின் நயமறிந்து சான்றோர் அவ்வப் போது வேந்தர்க்குத் தகுவனவற்றை அறிவுறுத்தி வந்ததனால் தமிழகம் பல நூறாண்டு வரையில் தலைமை குன்றாதிருந்தது. கோவலன் கொலையுண்டதறிந்து, அறிவு பேதுற்று அலமரலுற்ற கண்ணகியார் மதுரை மூதூரில் பெருந்தெருவே செல்பவர், "அரசன்பால் தவறிருப்பவும் அதனை எடுத்துரைக்கும் பேச்சுரிமை பெற்ற சான்றோர் எடுத்துரையாது போயினரே; இம் மூதூரில் சான்றோர் இல்லையோ? என்பாராய், " சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல், ஈன்றகுழவி எடுத்து வளர்க்கு றூஉம், சான்றோரு முண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்" என்று கதறினார். இனி, இரண்டாவதாக வழிபாட்டுரிமையைக் காண்போம். கடவுள் வழிபாட்டில் தமிழகம் மக்கட்கு நெடுங் காலத்துக்கு முன்பே பேருரிமை வழங்கியிருந்தது. பல்வகையான தெய்வங்களை வழிபடும் இயல்பு தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகிறது. குறிஞ்சி முதலிய நிலத்தவர் முருகன் முதலிய தெய்வங்களை வழிபட்டனர். வைதிகம், பௌத்தம், சைனம் முதலிய சமயங்கள் வந்து படர்ந்திருந்த காலத்தும், தமிழ் நாட்டில் வழிபாட் டுரிமைக்குத் தடை யுண்டான தில்லை. சங்க நூல்களில் பரிபாடல் என்பது முருகனையும் திருமாலையும் மக்கள் வழிப்பட்ட நலத்தை எடுத்தோதுகின்றது. பெயர் வகைகள் வேறுபட்டன வாயினும், கடவுட்டன்மை பொதுவாதலால், அவரவர் வழிபாடுகளும் இறைவனொரு வனையே சுட்டும் என்பது பழந் தமிழர் கருத்து. ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயும் நீயே நின் ஆர்வலர் தொழுதகை யமைதியின் அமர்ந்தோயும் நீயே அவரவர் ஏவ லாளனும் நீயே அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. என்றும், பகைவர் இவர்இவர் நட்டோ ரென்னும் வகையுமுண் டோநின் மரபுஅறி வோர்க்கே." என்றும் வருவன காண்க. இவ்வாறே முருகனை வழிபடுவோர் 'நீயே வரம்பிற்றிவ்வுலகம்' என முருகனையும், கொற்றவையைப் பரவுவோர் கொற்றவையையும், முழுமுதற் கடவுளாக வழிபட்டமையின், வழிபாட்டு வகையில் வேறுபட்டுக் காய்தலும் பொருடற்றலும் செய்திலர். இந்நிலை இச் சங்க காலத்தை யடுத்து வந்த இளங்கோவடிகள் காலத்திலும் தன்மை திரியாதே இருந்தது. சிலப்பதிகாரத்தில் இந்திர வழிபாடும், திருமால் வழிபாடும், முருகவேள் வழிபாடும், கொற்றவை வழிபாடும் நிகழ்வது காண்கின்றோம். சைனத் துறவிபால் அருகனை வழிபடுந் திறமும் நன்கு காணப்படுகிறது. ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா; காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமமல்லது நவிலாத என்நா; ஐவரை வென்றோன் அடியினை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண். என்ற இளங்கோவடிகள், 'சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே, 'திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே' 'கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே' என்றும், 'பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே, நாராயணாவென்னா நாவென்ன நாவே' என்றும் பாடுவது போதிய சான்றாகும். இனி, இதனை யடுத்து வந்த மணிமேகலை யாசிரியர் காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம், வைதிகம், பௌத்தம், ஆருகதம், நியாயம், சாங்கியம், வைசேடிகம், யோகம், மீமாஞ்சை முதலிய பல சமயங்கள் இருந்தன என்பது வெளிப்படை. இவ்வாறு சமயங்கள் பல இருந்தன வெனினும், அவை தம்முள் போரிட்டுக் கொண்டு ஒருவர் ஒருவர் வழிபாட்டுரிமைகளைப் பறித்துக் கொண்டதாக வரலாறு கிடையாது. இனி, இதனை அடுத்துவந்த திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் காலத்தில் பல சமயங்கள் நிலவின. சமயப் பூசல் காணப்படவில்லை. இவற்றிடையேயும் ஒற்றுமை காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டுளது. திருமூலர், ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின் முத்தி விளைக்கும் முதல்வனுமாமே ஆன சமயம் அதுஇது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி; கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த உருவது வாமே என்பது காண்க. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமண சமய முன்னேற்றத்தால் சமயப் பூசல் உண்டாயிற்று. வழிபாட் டுரிமைக்குத் தடை பிறந்தது. நடு நாட்டில் பல்லவ வேந்தனும் பாண்டி வேந்தனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமயப் பூசலில் தலையிடு கின்றனர். சமயப் போர் சமண சமயம் ஒன்றோடுதான் நடந்தி ருக்கிறது. ஏனைச் சமயங்கள் எல்லாம் இருந்த வண்ணமே இருந்திருக்கின்றன. சமண சமயத்தைத் தாக்கிப் பேசும் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களும் திருமங்கையாழ்வார் முதலியோர்களும் ஏனைச் சமயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதனையடுத்து வந்த நூற்றாண்டுகளில் சமய வேறுபாடுகள் நாட்டில் நிலவின வாயினும், தமிழ் நாட்டு அரசியலாளர் இச் சமயங்கட்கு இடுக்கண் விளைக்க வில்லை. அவ்வச் சமயத்தவர்க்கும் வேண்டும் உரிமை களை வழங்கியிருக்கிறார்கள். முதல் இராஜராஜன் போளூர்த் திருமலையி லிருக்கும் சமணக் கோயிலுக்கும் நிபந்தம் விட்டிருப்பதும், லெய்டன் கிரான்டு எனப்படும் சாசனங்களால் பௌத்தர் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், அவன் பின் வந்த சோழர்களுள் மூன்றாம் இராஜராஜன். செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப ஆதியுகம் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க என்றும், மூன்றாம் இராஜேந்திரன், "சமஸ்தஜகதேக வீர" என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் "ராஜ பரம மாகேஸ்வர ராஜ நாராயண சகல சமய ஸ்தாபக" என்றும், பாண்டி வேந்தருள் மாறவன்மன் சுந்தர பாண்டியன், ஒரு குடை நீழலிரு நிலங் குளிர, மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க, நால்வகை வேதமும் நவின்றுடன் வளர ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற அறுவகை சமயமும் அழகுடன் திகழ எழுவகைப் பாடலும் இயலுடன் பரவ என்றும், சடையவன்மன் சுந்தரபாண்டியன், ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோர் ஐவேள்வி யாறங்க முடன்சிறப்ப அருந்தமிழும் ஆரியமும் அறுசமயத் தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியும் திறம்பாது தழைத்தோங்க என்றும் கூறுவதும் பல்வகைச் சமயங்களும் தத்தம் உரிமை குன்றாது நிலவியிருந்தன என்பதற்குச் சிறந்த சான்று பகர்கின்றன. இனி, அச்சம் என இழிவாகப் பேசப்படுவது, செய்தற்குரிய அறங்களைச் செய்தற் குண்டாகும் அச்சமே. பழி பாவங்கட்கு அஞ்சும் அச்சம் அற மெனவும், ஏனைய அறங்களைச் செய்தற்கு அஞ்சும் அச்சம் குற்ற மெனவும் அறநூல்கள் கூறுகின்றன. குற்றமான அச்சம் இருத்தல் கூடாது என்பது அறவோர் துணிபு. இதனால் தான், 'அச்சமே கீழ்களது ஆசாரம்' என்றார் திருவள்ளுவர். பாரதியாரும் 'அச்சம் தவிர்' என்றார். உரிமை வாழ்வில் அவரவர் உரிமைக்குக் கேடுண்டாகுமோ என அஞ்சம் அச்சம் இருத்த லாகாது. பெரும்பான்மையோர் கருத்து மேலோங்கும் வகையில் சிறுபான்மையோர் உரிமை பறிக்கப்படுமென்னும் அச்சம் அச்சிறுபான்மையோர்க்கு உண்டாகக் கூடாது. இவ்வாறே வலியோர் மெலியோரை நலிவதாலும், செல்வர்கள் வறியோர்களை வருத்துவதாலும், வலிமிக்க நாட்டவர் அது குறைந்த நாட்டவரை அடர்ப்பதாலும், இடஞ் சிறிதென்று பிறர் மண்ணைக் கவரும் பெருநசையாலும் உரிமை வாழ்வுக்கு ஊறுண்டாகும். அதுபற்றி மக்கட்கு அச்ச முண்டாதல் ஒருதலை. வலியோராலும் செல்வர்களாலும் உண்டாகும் அச்சம், அரசியலின் செவ்விய நேர்மையால் நீங்கும். பண்டைத் தமிழ் வேந்தர், செல்வ ரென்றும வலிய ரென்றும் கருதி ஒரு சிலர்க்குச் சலுகை மிகத் தருதலும், வறிய ரென்றும் மெலியவ ரென்றும் கருதி ஒரு சிலரைப் புறக்கணித்தலும் இலர். இதனால் உண்டாகும் பொருள் வேந்தர்க்கு இம்மை மறுமை இருமையும் கெடுக்கும் என்பது அவர் கருத்து. 'செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவ தறிதியோ' (கலி. 14.) என்றும், 'அல்லற் பட்டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை' என்றும் எடுத்தோதுவது காண்க. இதனால், எளியவர்கள் தமக்கு வலிய வரால் துன்ப முண்டாயின், அவர்முன் அச்ச மின்றிக் கண்ணறப் பேசும் காட்சி யுடையராய் இருந்தனர். சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் தாமப் பல்கண்ணனாரென்னும் சான் றோரும் வட்டாடினர். அப்போது மாவளத்தான், தன் செல்வச் செருக்கால் சினங்கொண்டு தான் ஆடிய வட்டினால் பல்கண்ணனாரை எறிந்து வருத்தினான். அவர், அவன் செல்வச் சோழ வேந்தன் தம்பி யென்றும் பாராது, சிறிதும் அச்சமின்றி, ' நேரார்க் கடந்த முரண்மிகு திருவின், தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல் கொடுமர மறவர் பெரும! கடுமான் கைவண் தோன்றல்! ஐய முடையேன் ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர். மற்றிது நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறினார். ஒருகால், குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திரு மாவளவன், மதுரைக் குமரனார் தன்பால் வறுமை யுற்றுத் தாழ்ந்து இரக்கின்றா ரெனக் கொண்டு அவரை இகழ்ந்தான். அவ்விகழ்ச்சி பொறாத குமரனார், அரச னெனக் கருதி யஞ்சுவது சிறிது மின்றி, ' மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே சீருர் மன்ன ராயினும் எம்வயின் பாடறிந் தொழுகும் பண்பி னோரே' என்று கூறித் தமது உரிமையை நிலை நாட்டினார். மண்ணசை குறித்தும், வலி மிகுதி குறித்தும், பண்டை வேந்தர் பிற வேந்தரொடு போர்தொடுத்தனர். அவருள், பாண்டி வேந்தரும், சேர வேந்தரும் பெரும்பாலும் போருடற்ற வேண்டி யிருந்தது, இடஞ் சிறிதென் றெழுந்த மண்ணசை குறித்தே யாகும். ' வையங் காவலர் வழிமொழிந் தொழுகப், போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது, இடஞ் சிறிதென்னு ஊக்கம் துரப்ப, ஒடுங்கா வுள்ளத்து ஓம்பா ஈகை, கடந்தடு தானைச் சேர லாதன்' என்பதனால், சேரனும், ' மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வவ்வலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்' என்பதனால் பாண்டியனும் இடச் சிறுமை காரணமாகப் போருடற்றினமை துணியப்படும். படவே, கொடியும் முரசும் கொற்ற வெண்குடையும், பிறர் கொளப் பொறாது போருடற்றும் இயல்பு சோழருக்கே உண்டென்பது பெறப்படும். இவ் வகையால் மூவேந்தர்க்கும் அடிக்கடி போருண் டாயினவெனக் கொள்ளலாம். போர்த் துறையில் ஊர்களைச் சூறையாடுதலும் எரிபரந்தெடுத்தலும் உண்டு. இவ்வகையால் உயிக்கேடும் பொருட் கேடும் மிகுதல் முறை. இதனால் மக்கட்கு அச்சம் பெரிதாம். அரசியலில் உரிமை பெற்ற சான்றோர் வேந்தர் கருத்துக்கு இயைய வேண்டுவன வற்றைச் சூழ்ந்துரைப்பாராயினும், போரால் நேரும் கேடுகளை அவர்கள் உணராமல் இருந்ததில்லை. போர் முடிவில் வெற்றி பெற்ற வேந்தர்க்கு அப்போரால் நிகழ்ந்த கேடுகளை ஓவியம்போற் காட்டிப் போர்மேற் செல்லும் அவர்கள் உள்ளத்தை மாற்ற முயன்றதும் உண்டு. ' பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் நாடுகவின் அழிய நாமம் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் உள்ளம் அழிய ஊர்க்குநர் மிடல்தபுத்து உள்ளுநர்ப் பனிக்கும் பாழா யினவே,' என்றும், ' அழல்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர் தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த இன்றோ அன்றோ தொன் றோர்காலை நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக் காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே' என்றும் எடுத்தோதி யிருப்பது அவரது உரிமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. போரில் படையேந்தி நின்று வெற்றிபெற விரும்பும் மறவர் உயிர் கொடுத்தற்கு அஞ்சுவது கிடையாது. அஞ்சாமை யல்லது துணை பிறிதின்றி நின்று விளக்கமுறும் வீரனொருவன் மனைவியைக் கண்ட பெருந்தலைச் சாத்தனார், 'நின் கணவன் போர் வீரரை ஏறட்டு நின்று வருக என அழைத்தான்; பாம்புமிழந்த மணிகண்டும் அதனை நெருங்குதற்கு மக்கள் அஞ்சுவதும் போலப் பகை வீரர் அனைவரும் அஞ்சினர்' என்பார், ' தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து இறையும் பெயரும் தோற்றி நுமருள் நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப் மலைந் தொருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார் நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.' என்று கூறுகின்றனர். பெற்ற தாயொருத்தி போருக்குச் சென்ற ஏனை வீரரெல்லாரும் வந்தும் தன் மகன் நெடிது வாராமை கண்டு, நெஞ்சில் அச்சமோ அவலமோ கொள்ளாமல். 'எல்லா மனையுங் கல்லென் றனவே வேந்து உடன்று எறிவான் கொல்லோ நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே." (புறம் - 296) என்று கூறுகின்றாள். போரில் அணி வகுப்புற்று நிற்கும் வீரன் ஒருவன் வேந்தன் தன்னை முந்தச் செலுத்தாமைக்கு வருந்தி, ' எமக்கே கலங்கல் தருமே, தானே தேறல் உண்ணும் மன்னே, நன்றும் இன்னான் மன்ற வேந்தன் இனியே, நோரர் ஆரெயில் முற்றி வாய் மடித்து உரறிநீ முந்துஎன்னானே.' என்கின்றான். இவ்வாறு பண்டை உரிமை வாழ்வில் திளைத்த தமிழ் மக்கள் அச்சம் இலராய் வாழ்ந்த செய்திக்கு சான்றுகள் பலவுண்டு. இல்லையானால் 'நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளி தொழிலாண்ட உரவோர்' எனும் பெயரை எய்த முடியுமா? உரிமை வாழ்வுக்கு அடுத்த உறுப்பாவது வறுமையின்மை; வறுமை நிலை ஒரு நாட்டின் உரிமை வாழ்வைக் கெடுத்துச் செல்வமுள்ள நாட்டுக்கு அதனை விரைவில் அடிமையாக்கி விடும் 'வறியார் இருமை அறியார்' என்பர். வறுமையுள்ள நாடு அறிவு ஒழுக்கங்களில் நலம் பெறாது; செல்வத்தைப் பெருக்கும் துறை களான கைத்தொழில், வாணிபம், உழவு முதலிய செயல் வகைகளில் சீர் பெற முடியாது. நாட்டில் செல்வர் சிலரும் வறியார் பலருமாக இருத்தற்குக் காரணங்காண வந்த திருவள்ளுவர் தவமுடையார் சிலரும் அஃது இல்லார் பலருமாதல் காரணம் எனக்கருதி, 'சிலர் பலராகிய காரணம் நோற்றார் சிலர்பலர் நோலாதவர்' என்றார். எனினும் அதனை அவ்வாறே சொல்லி நெகிழவிட இக்காலநிலை ஒருப்படாது. இக்காலம் உழைப்பில்லாமை வறுமைக்குக் காரணம்; உழைப்பில்லாதவர் ஒருவரும் இருத்தலாகாது. உழைப்பவர் உழைத்தற்கு நாடு வேலை தர வேண்டும். அவ்வேலையை நாட்டு மக்கள் நடத்தும் அரசியல் நேரிய முறையில் கண்டு அமைத்து உழைப்பாளிகட்டு உதவ வேண்டும் என்பது இன்று நிலவும் கொள்கையாகும். வறியவர் முன்னைத் தவம் இல்லாராயினும், இவ்வுலகில் வாழ்தற்கு உரிமையுடையவர். அதற்கு வேண்டும் பொருளை அவர் பெறாவாறு தவமில்லாமை இடைநின்று ஊழ்வினை வடிவாய் நின்று தடுக்குமாயின், முன்னைத் தவமுடைமையால் செல்வம் பெற்றவரும் பெறுதற்குரிய வலியும் ஆற்றலுமுடைய வரும், வறியவர் வேண்டுவன நல்கி வாழ்வித்தல் அறமெனக் கருதினர். திருவள்ளுவர் முதலிய சான்றோர் இக்கருத்துக்கு ஆதரவு தந்தனர். 'சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்' என்பது திருக்குறள். அதுவே, 'வறியார்க் கொன்று ஈவதே ஈகை' என்றும், 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை யுயிர்க்கு' என்றும் அறவுரை வழங்கிற்று. செல்வமும் அதனைச் செய்தற்கு வேண்டும் வலியும் பெற்ற திருவாளர், இரப்போர்க் கீதல் சிறப்பென்றும், ஈயாமைக் கேதுவாகிய வறுமை இழிவென்றும் கருதி வஞ்சினங் கூறும் போது, 'புரப்போர் புன்கண்கூர, இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே' என்றும் 'மெல்லிய லரிவை நின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவா குகயான் செலவுறு தகவே' (குறுந், 137) என்றும் கூறுவது காணலாம். இவ்வண்ணம் வறியாரது வறுமை தீர்த்தற்கண் பேரார்வங் கொண்டு தம் முயிரையே யளித்த வள்ளல்கள் வரலாறு சங்க இலக்கியங்களில் மலிந்து கிடக்கிறது. வேள்பாரி உயிரிழந்தும் குமணன் தலையிழக்க நேர்ந்ததும் வறுமைக்கடலை ஈகையாற் கடக்கக் கருதியதனாலே யாம். கொங்கு நாட்டில் ஈரோட்டுக் கருகில் உள்ள ஈஞ்சூருக்குப் பண்டை நாளில் ஈர்ந்தூர் என்பது பெயர். அந்த ஊர்க்குத் தலைவன் ஒருவன் கோயமான் என்னும் பெயருடன் விளங்கினான். அவன் தன்பால் வருவார்க்கு வேண்டும் பொருளை நிரம்பத் தரத்தக்க செல்வ முடையனல்லன். ஆயினும், இல்லையெனச் சொல்லி உள்ளது மறைத் தோதி மறுக்கும் சிறுமையும் அவனிடம் கிடையாது. அதனால் அவனை நாடி இரவலர் சென்ற வண்ணம் இருந்தனர்; அவனும் இயன்ற அளவு அவர்கட்கு உதவி வந்தான். அதற்குச் செல்வம் ஏது? அவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவ னல்லன். அவன் வாழ்ந்த நாட்டுக்குரிய முடி வேந்தன் சேரமான் குட்டுவன் கோதை யென்பவன். அவ் வேந்தன் பொருட்டு இக் கோயமான் படையேந்திப் போர் பல செய்து அதனால் பொருள் பெற்றான். அவ்வாறு பெற்ற பொருளே அவன் கொடைக்கு ஆக்கமாயிற்று. போர்க்குச் செல்வதும் வென்றியொடு பொருள் பெறுவதும் அவன் செயல்களாயின. அன்றியும், இரவலர் வறுமை காண அவன் பொறான். வறுமையில்லாமை நாட்டிற்கு அழகு என்றும், வறுமை தீர்த்தற்குப் பயன்படாத செல்வரது செல்வம் நிலத்துக்குப் பொறை யென்றும் கோயமான் எண்ணியிருந்தான். இவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஒரு கால் சென்று கண்டார். அவனது மனப் பண்பைத் தெளிந்தார். ஈர்ந்தூர் கிழானான கோயமான், ' நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே... இன்மை தீர வேண்டின் எம்மொடு நீயும் வம்மோ, முதுவாய் இரவல! யாம் தன்இரக்குங் காலைத் தான்எம் உண்ணா மருங்கு காட்டித் தன்னூர்க் கருங் கைக் கொல்லனை இரக்கும் திருந்திய நெடுவேல் வடித்திசின் எனவே.' என்று பாடியுள்ளார். இதன் கண், 'வறியார் வறுமை கண்டதும், கொல்லனை யழைத்து, பார் இவர் வயிற்றை; எடு அந்த வேலை; வடி அதன் வாயை; கொடு அதைக் கையில்; செல்வேன்; செல்வரை வெல்வேன்; பொருள் மிகக் கொள்வேன்; இவர் வறுமையைக் கொல்வேன்' என்பான், 'எம் உண்ணாமருங்கு காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திரை நெடுவேல் வடித்திசின் எனவே' என்பது கருதத்தக்கது. இத்தகைய மனப்பான்மையை வறுமை மிக்க வழித் தீநெறியில் மக்களைச் செலுத்தி உரிமை வாழ்வுக்கு ஊறுசெய்யும். ஆதலால் உரிமை வாழ்வு வறுமை யில்லாமைக்குரிய வழி பலவும் ஆக்கிக் கொள்ளத் தக்க அறிவுரைகள் வழங்குவது இலக்கியங்கட்கு ஏற்ற பணியாகும். இனி, இறுதியாக ஒப்புரவாண்மையைக் காண்போம். உலகில் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் பெருஞ்செயல் இந்த ஒப்புரவே யாகும். ஆதலால்தான் திருவள்ளுவர், ஒப்புரவைக் காட்டிலும் சிறந்த செயல் விண்ணுலகினும் மண்ணுலகினும் பெறலரிது என்றார். ஒருவர்க்குத் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருளெல்லா வற்றையும் தாமே படைத்துக் கொள்வது இயலாது. தம் மிடத்து இல்லாதவை பிறரிடத்திருக்கும்; பிறரிடத்தில்லாதன தம்பால் இருக்கலாம். இருவரும் தம்பால் உள்ளவற்றைப் பகுத்தளித்து இல்லாதவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இச்செயலை வளம் படுத்துவது ஒப்புரவாகும். ஒரு தனிக் குடும்பத்துக்கு இவ்வொப்புரவு இன்றியமையாதவாறு போல ஒரு நாட்டுக்கும் இது வேண்டப்படு வதாகும். இவ்வொப்புரவு வாணிகத்தின் பெயரால் நிலவுவதாகும். பண்டைநாளில் குறிஞ்சி நிலத்துப் பொருள் மருத நிலத்தவர்க்கும், நெய்தல் நிலத்துப் பொருள் முல்லை நிலத்தவர்க்கும் மாறிமாறி இயங்கியது ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டே யாகும். இவ்வாறு மாறுவது அவ்வந்நிலத்து மக்கள் தத்தம் தேவைக்குரிய பொருளைப் பெறுதற்கு வாயிலாதலால் திணை மயக்கம் என்ற பெயரால் தொல்காப்பிய முதலிய நூல்கள் அமைதி கூறின. பிற்காலத்துப் புலவர் தாம் பாடிய நூல்களில் திணை மயக்கம் கூறுவதைக் கடமையாகக் கொண்டனர். இத்திணை மயக்கத்தால் ஒரு நாட்டவர் பிற நாடுகட்குக் கலத்தினும் காலினும் சென்று மிக்கவற்றைத் தந்து இல்லாதவற்றைப் பெற்றுச் சிறந்தனர். பண்டைத் தமிழர் இதன் இன்றியாமையை யுணர்ந்தே பன்னூறாண்டுகட்கு முன்பே மேலை நாட்டவரோடும் கீழை நாட்டவரோடும் பண்டமாற்றிப் பெருஞ் செல்வம் தேடிக் கொண்டனர் என்பதை வரலாறு கூறுகிறது. இவ்வகையால் பிற நாட்டுப் பண்டங்களும் பிற நாட்டு மக்களும் காவிரிப்பூம் பட்டினத்தில் நிறைந்திருந்த காட்சியை, சிலப்பதிகாரம், எடுத்தோதுகின்றது. 'முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கத் தவா வளத்ததாகி, அரும்பொருள் தரூஉம் விருந்தின்தேயம், ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம், கலத்தினும் காலினும் தருவன ரீட்ட' நிறைந்திருக்கும் காட்சி இதனால் நன்கு புலனாதலைக் காணலாம். பட்டினப்பாலை யென்னும் நூல், ' நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணைவும் காழகத் தாக்கமும்.' ஆகிய பொருள்கள் நிறைந்திருந்தன என்றும், இவ்வழியால், 'மொழி பல பெருகிய பழிதீர் தேயத்து புலம் பெயர் மாக்கள் கலந்தினிது' உறைந்தனரென்றும் கூறுகின்றது. இங்ஙனம் ஒப்புரவு வாயிலாக வாணிகமும் வேற்று நாட்டவர் கூட்டுறவும் பெருக, நாடு செல்வமும் நாகரீகமும் சிறந்து மேன்மை யெய்திற்று. இடைக்காலத்தே அலைகடல் நடுவுள் பல கலம் செலுத்தி, தொடுகடல் முதலிய நாடுகளோடும் இராசேந்திரன் முதலிய சோழர்கட்கும், கலிங்கம், ஈழம், கடாரம், முதலிய நாடுகளுடன் பாண்டியர் கட்கும் தொடர்புண்டானது இந்த ஒப்புரவை அடிப்படை யாகக் கொண்டெழுந்த சிறப்பேயாகும். இதுகாறும் கூறியவாற்றால், குடி தழுவிய முடியாட்சி நிலவிய பண்டை நாளில், உரிமை வாழ்வுக் குறுப்பாகிய பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவாண்மையாகிய ஐந்தும் சிறப்புற்றிருந்தமை இனிது விளக்கமாகும். இன்று நாம் எய்தி யிருக்கும் உரிமை வாழ்வு முடியாட்சியின்றிக் குடியாட்சியில் நிலவும் உரிமை வாழ்வாகும். இவ்வாட்சியில் நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமையுண்டு. நாட்டில் உண்டாகும் நலந்தீங்குகட்கு நாட்டு மக்களே பொறுப்புடைய ராகின்றனர். அப்பொறுப் புணர்ச்சியை மக்கட்கு எழுப்பி நல் வாழ்வு வாழ்விக்கும் பண்பு இலக்கியங்களில் இடம் பெறவேண்டும். பேச்சுரிமை, அச்சமின்மை என்ற இரண்டையும் நம் தமிழிலக்கியங்கள் நன்கு வற்புறுத்துவதைச் சங்க இலக்கிய முதல் எல்லா இலக்கியங்களும் எடுத்துணர்த்துகின்றன. சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலிய இடைக் கால நூல்கள் அரசியற் பகுதிகளைக் கூறுமிடத்து விரியக் கூறியுள்ளன. ஒப்புரவாண்மையிலும் இடைக்கால நூல்கள் சிறிது கருத்துச் செலுத்தியிருக்கின்றன. கட்டியங்காரனோடு நட்புற்றான் போல ஒழுகலுற்ற விதைய நாட்டு வேந்தனான கோவிந்தன், நட்புக் கறிகுறியாக, கட்டியங் காரனோடு காவலன் ஒருவனானான் விட்டுநீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவகூறின், ஒட்டலன் இறைவன் சொன்னீர் நாநுமவல்ல என்னக் கொட்டினான் தடங்கண் வள்வார்க் குளிறிடி முரசமன்றே என்பது அதனைக் காட்டுகிறது. இவ்வொப்புரவுவகை மிகவும் பெருகிச் சாதி சமய சமுதாய வேறுபாடுகளையும் மக்களிடையே நிற வேற்றுமை முதலிய தீமைகளையும் போக்குதற்குத் துணை புரியுமாறு இலக்கியங்கள் பணிபுரிய வேண்டும். நாட்டில் வறுமையைப் போக்குதற்குரிய நெறியில் கருத்தைச் செலவு செய்த இலக்கியங்கள் இல்லையென்றே கூறலாம். செல்வ வாழ்வின் சிறப்புக்களையும்சீர் கேடுகளையும் எடுத்தோதிய இலக்கியங்கள் உண்டு. "எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே, இல்லாருமில்லை யுடையார்களு மில்லை மாதோ" என்றான் கம்பன். ஆனால், எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தற்குரிய நெறிமுறைகளை வகுத்தும் விரித்தும் கூறவில்லை. ஓரளவு நாட்டில் நிலவியிருந்த ஓவியம், இசை, கைத்தொழில் வாணிபம் காட்டினவே யன்றி, அவற்றை யமைக்கும் நூல் வகைகள், செயல் முறைகள் முதலியவற்றை யறிதற்குத் துணை செய்யாவாயின. இக்குறை முற்காலத்து இலக்கியங்களில் சிறிதும் பிற்காலத் திலக்கியங்களில் பெரிதுமாகக் காணப்படுகிறது. இனிவரும் இலக்கியங்கள் 'எல்லாரும் எல்லாச் செல்வமும்' எய்துதற்கு வேண்டும் கருத்துக்களை விரிவாக எடுத்து வழங்க வேண்டும். வழிபாட்டுரிமைக் கேதுவாகிய சமய வுரிமை குறித்துத் தமிழிலக்கியங்கள் பெரும் பணி புரிந்துள்ளன. ஊர்தோறும் பெருங் கோயில்களும் அக்கோயில்கட்குப் பெரும் பொருளும் உண்டான தற்குச் சமய இலக்கியங்களின் பணியே காரணமென்பது வெளிப்படை. கோயில்களைப் பெரும் பொருள் நிலையங்களாகவும் கலை நிலையங் களாகவும் செய்தது சமய இலக்கியமே. அரசரது அரசியற் பயன் கோயில்கட்குச் செய்யும் திருப்பணியிலே ஒன்றி நின்றது. சைவத் திருமுறைகளும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடவுட் கொள்கையை நிலை நாட்டிக் கடவுள் வழிபாட்டில் மக்கள் கருத்து மீதூர்ந்து செல்லுமாறு செய்தன. சமயச் சார்பாயெழுந்த புராணங்கள் மக்களது வழிபாட்டுரிமைக்குத் தீங்கு செய்தன. கோயில்களில் சாதி வேற்றுமை மொழி வேற்றுமைகளைப் புகுத்தின. ஆண்டு தோறும் நம் நாட்டுக் கோயில்கட்கு இரண்டு கோடி ரூபாய் வருமான மாகும். மக்கள் தரும் கொடையும் பிறவும் சேர்ந்து நான்கு கோடி ரூபாய் செலவாகிறது, இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் ஒரு சமுதாயத்தின் நலத்துக்குப் பயன் படுகிறது. எஞ்சிய தொகை வெளிநாட்டுப் பொருட்கும் பிறருக்கும்செலவாகிறது. 'கோயிலில் உள்ள ஆண்டவனை வழிபடுதற்கு எல்லார்க்கும் உரிமையுண்டு; எல்லாரும் ஆண்டவர் அருளுக்கு உரியவர்' என வழிபாட்டுரிமையை வற்புறுத்தி, வேறுபாடில்லாத வழி பாட்டை உண்டு பண்ணுதற்கு இலக்கியங்கள் துணை செய்ய வில்லை. அரசியலாளர் முற் போந்து சட்டவகையில் பாது காப்பளித்த பின்பே வழிபாட்டுரிமை எல்லார்க்கும் வாய்ப்ப தாயிற் றென்பது யாவரும் அறிந்தது. திருப்பாணாழ்வார் வரலாறும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறும் வழிபாட்டுரிமைக்கு வழிகாட்டியா யிருந்தும், இலக்கியங்கள் இவ்வுரிமையை உணர்ந்து நன்கு வற்புறுத்தா தொழிந்தது மறைக்க முடியாத உண்மையாகும். ஆகவே, இன்று நாம் எய்தி இன்புறும் உரிமை வாழ்வில் எழும் இலக்கியங்கள், இதுகாறும் கூறிப் போந்த பேச்சுரிமை, வழிபாட் டுரிமை, வறுமை யின்மை, அச்ச மின்மை, ஒப்புரவாண்மை என்ற பொது வறங்களை வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்தும் பெரும் பணியை மேற்கொள்ள வேண்டும். இப்பணியைச் செம்மை யாகவும் வெற்றி யுண்டாக்கு முறையிலும் செய்வதற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்ளத்தில் வேரூன்றி யிருக்க வேண்டிய கொள்கை யொன்று உளது. அஃதாவது தங்கள் மொழி நிலவும் நாட்டின்பால் அயரா அன்புடைமையாகும். அந்த அன்பு அவர்கள் நெஞ்சில் எழும் ஒவ்வொரு நினைவிலும், வாயில் எழும் ஒவ்வொரு சொல்லிலும், எழுதும் ஒவ்வொ ரெழுத்திலும் விளங்குதல் வேண்டும். கம்பன் கருத்து முற்றும், கோசல நாட்டையும் இலங்கை நாட்டையும் கவ்விக்கொண்டு கிடந்தது; கச்சியப்பர் கருத்து வேறுலகத்தில் உலாவிற்று. திருத்தக்க தேவர் கருத்து ஏமாங்கத நாட்டிலும் அதனைச் சூழ்ந்த நாடுகளிலும் திரிந்தது. கொங்கு வேளிர் கருத்து, தமிழகத்தைத் தொடவே இல்லை. இடைக் காலத் தெழுந்த திருத்தொண்டர் புராணம் தமிழ் நாட்டையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்த தெனினும், கயிலாயத்தையும் பிறவற்றையும் அது கைவிடவில்லை. சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாகிய இரண்டுமே தமிழகத்தை விடாது நின்றன. அதனால், தமிழகத்தின் பழங்கால நிலையினை ஓரளவிலேனும் நாம் உணர்ந்து கோடற்கு உதவியாயின. ஏனைய யாவும் யாம் மேலே கூறிய தாய்மொழி நிலவும் தாய் நாட்டன்பு விளங்கித் தோன்றும் வீறு நிறைந்த நினைவும் சொல்லும் எழுத்தும் உடைய வல்ல வாயின. இதன் விளைவு தமிழகம் உரிமை யிழந்து அடிமை யுற்று வருந்தும் நிலைமையைப் பயந்தது. தாய் நாட்டன்பின் இன்றியமையா இயல்பினை, மேலை நாட்டவர் நன்குணர்ந் திருந்தமையால் 'உரிமை வாழ்வே' உயிராகக் கருதுகின்றார்கள். எட்மாண்டு பர்க் (Edmund Burke) என்பவர், மக்கட்குத் தம் பெற்றோர்பால் உண்டாகும் அன்புக்கடுத்த நிலையில் உள்ளது அவரது தாய் நாட்டின்பால் உண்டாகும் அன்பே யாகும் என்றார். மாதா பிதா குரு தெய்வம் என்பது திருந்தி, மாதா பிதா நாடு குரு தெய்வம் என விளங்குதல் வேண்டும். இந்த அன்பு நம்மவரிடத்தே நன்கு வேரூன்றும் பொருட்டு இலக்கியம் செய்யக் கூடிய பணி இது வென்பாராய், நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரவர்கள் தாம் எழுதிய Essays in Constitution Making என்ற நூலில் கூறியதனை உங்கட்குக் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன். Our literature and art must take up the land for the subject of their treatment. Not the laudation of this or that figure or incident of history or mythology - for history or mythology may divide and antogonize - but the praise of the land of India must fire the artistic ambition of the poets and Painters of modern Inida. When we remember what poets like Gray and Thomson and Wordswoth and Burns have done to make their Countries dear to their people, we have a right to look to our poets to do smilar work for our Country. Landscape painting did much to spread the love of the land among the peoples Europe. What Corot did in France and Gainsborough in England to make the scenery of their Country a delightful memory, Indian painters are now expected to do for the Indian scene.  9. தமிழ் மகளிர் பண்டை நாளைத் தமிழகத்தில் மகளிரது நிலைமையை அறிந்துகொள்வது மிகவும் நன்று. மக்கட் படைப்பில் ஆடவர் பெண்டிர் என்ற இருபாலார்க்கும் உடலமைப்பில் சிறிது வேறுபாடு உண்டேயன்றி நினைவு, சொல், செயல், அறிவு என்ற கூறுகளில் வேற்றுமை கிடையாது. உடலமைப்பு வேறுபாடு மக்கட் பேற்றுக்கும் மக்களினப் பெருக்கத்துக்கும் ஏற்ற வகையில் துணைபுரிகின்றது. அதனால் உலகியல் வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் ஒன்றற் கொன்று இன்றியமையாத் துணையாதலை நாம் காண்கின்றோம். புறத்தே சென்று வாழ்க்கைக்கு வேண்டும் உண்டி, உறையுள் முதலியன நாடி நல்கும் வகையில் ஆடவர் சிறந்து நிற்றலின் அவரது உடற்கூறு ஏனைப் பெண்டிரது உடலினும் வலி மிக்கதாகின்றது. மகப் பெறுதலும் அவற்றை வளர்த்தலும் ஆகிய செயல் வகைகளில் பெண் மகளிர் ஆடவரது துணைமையைப் பெரிதும் நாடுதலின் ஆடவர்நிலை சிறிது உயர்வதாயிற்று. இன்னோரன்ன காரணங்களால் மக்களுலகில் பெண்டிரது நிலை சிறிது அடங்கிய தன்மைத்தாக உளது. இந்த நிலைமையினைப் பழங்கால மக்களில் சிலர் நன்கு உணர்ந்து கொண்டு மகளிரைத் தங்கள் நலனுக்காகப் படைக்கப்பட்டவரெனக் கருதி ஒழுகினர். நம் தமிழகம் பண்டை நாளில் பிற நாடுகளோடு தொடர்புற்று வாணிகம் முதலிய துறைகளில் சிறந்து விளங்கியபோது, மேலை நாடுகளில் கிரேக்கரும், யவனரும், எகிப்தியரும், பாரிசேயரும், பாபிலோனியரும், பிறரும் மதிப்புடைய நாகரிகம் கொண்டு விளங்கினர்; அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளும், அரசியல் நெறி முறைகளும், அறிவுரைகளும் இன்றும் மேனாட்டவரால் பாராட்டப்படும் தகுதி படைத்துள்ளன. அவர்களுடைய வாழ்வில், மகளிர் நிலை ஆடவர்க்கு அடிப்பணி புரியும் துறையிலேயே இருந்தது. எரோடாட்டசு முதலியோர் குறிப்புகளால் ஆண் மக்களால் ஈட்டப்படும் பொருள் வகையுள் ஒன்றாகவே மகளிர் கருதப்பட்டமை தெரிகிறது. மக்களைப் பெறுதலும் வளர்த்தலும் குடும்பத் தொழில்களைச் செய்தலுமே அவர்கட்குச் சிறந்த பணிகளாகக் குறிக்கப்படுகின்றன. எகிப்தியர்கள் மகளிர் பலரை மணந்துகோடல் மரபாகக் கொண்டனர். தொடக்கத்தில் அஃது அரசர்பால் தோன்றி நாளடைவில் யாவர்க்கும் எய்துவதாயிற்று. இசுலாம் சமயம் பரவிய பின் எகிப்து மன்னர் மகளிர் பலரை மணத்தல் கடமையாக் கொண்டனர். ஒருவன் தான்கொண்ட மனைவியர் பலரும் அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் தனக்குக் கிடைத்த செல்வமாகக் கருதினான். அவர் அனைவருடைய உழைப்பும் குடும்பத்துக்குப் பொருள் வருவாயாக இலங்கிற்று. வென்ற வேந்தர் தோற்றோற்பால் பெறப்படும் திறைப் பொருளாக மகளிரைப் பெறுவது அந்நாளைய இயல்பு. வேந்தரைக் காணச் செல்லும் தலைவர்களும் செல்வர்களும் இளமகளிர் பலரை அவர்கட்குப் பரிசுப் பொருளாகவும் வழங்கினரென எகிப்து நாட்டு வரலாறு கூறுகிறது. இம் மனைவியர்க்கு வேறாக இற்பரத்தையராக நூற்றுக் கணக்கில் மகளிரைத் தொகுத்து வைத்தல் மேலை நாட்டு அரசர் செயல்முறையாக இருந்திருக்கிறது. இவ் வழக்கம் கிரேக்கர், யவனர் முதல் பாபிலோனியர், கிசியர் ஈறாக எல்லோரிடையும் இருந்துளது. அரபியர் மாத்திரம் இத் துறையில் ஓரளவு உயர்ந்த நோக்கம் கொண்டனர். ஆண் மக்களைப் போலப் பெண்மக்களும் அரசியல் வகைகளிலும் போர்த் துறையிலும் சிறந்த பங்கு கொண்டனர். முறை புரிதல். படைக்கலம் பயிறல், படைத்தலைமை தாங்கல் முதலியவற்றில் மகளிர் ஆடவரை யொப்ப விளக்க முற்றனர். அறிவாராய்ச்சி, இசை, கூத்து, இலக்கியப் புலமை, இனிய சொல் வன்மை என்ற நலம்பல வற்றில் மகளிர் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். ஆடவர் அனைவரும் மணம் புரிந்துகோடல் இன்றியமையாதது; மணமாகாமை ஓர் ஆடவனுக்கு இழிவையும் பழிப்பையும் நல்கிற்று. மக்கட் பேற்றுள் ஆண்மகப்பேறு கடவுள்பால் பெறலாகும் பேரருளாகக் கருதப்பட்டு வந்தது. மேலைநாட்டுப் பாலை நிலப்பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் பெண் மக்களைப் பெருஞ்சுமையாகவும் வேண்டாப் பொருளாகவும் கருதினர். பழந்தமிழரிடையே நிலவிய நிரைகோடல் என்ற போர்த்துறைபோல, பாலை நில மறமக்கள் பகைவருடைய மகளிரைக் கவர்ந்துகோடலும் பின்பு அடிமை களாக அவர்களை மேற்கொண்டு நடத்தலும் செய்து வந்தமையின், அவர்கட்கு மகப் பேற்றுள் பெண்களைப் பெறுதல் வெறுப்பையும் அச்சத்தையும் விளைவித்தது. பெண்ணினத்தின் பெருக்கத்தைக் குறைப்பது கருதிப் பெண் மகவுகளைத் தாம் வழிபடும் தெய்வங் கட்கு உயிர்ப்பலி செய்வதும் ஒருசில மக்களிடையே ஒழுகலாறாக இருந்தது. அந்நாளில் நமது நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்களும் கிரேக்க யவன எகிப்தியர்களைப் போலப் பெண்களை மகப்பெறுங் கருவியும் கணவனுக்கு மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமையு மாகவே கருதினர். ஒருவன் பல மகளிரை மணத்தல் விலக்கப்பட வில்லை; அரசர் ஐந்து மகளிரை மனைவியராகக் கொள்ளலாம். அவர்கட்கு மேலும் மகளிரை வேந்தர் வரைந்து கொள்வர்; ஆயினும் அவர்கள் மனைவியராகும் தகுதியின்றி உரிமை மகளிர் என்ற பெயரால் நிலவுவர். முதல் மனைவியிருக்க வேறொருத்தியை ஒருவன் மணக்க விரும்பின், முதல் மனைவியின் இசைவைப் பெற்றுத் தான் மணந்து கொள்வான். இவ்வழக்கு மேலை நாட்டிலும் இருந்தது. ஆபிரகாம் என்பவன் சாரா என்ற மனைவி யொருத்தி இருப்பவும் அவளது இசைவு பெற்று இரண்டாம் மனைவியாக ஆகர் என்பவளை மணந்து கொண்ட வரலாறு இதற்குச் சான்று பகருகின்றது. ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும் பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதிப் பணியுரிய வேண்டும் என்றும், மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்பவாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும், மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன் சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அவற்றிற்கு இரையாக்க வேண்டுமென்றும், தன் கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்ற வனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப் பாளாயின் அவள் மூன்று திங்கட்கு உயரிய ஆடையணிகலனின்று வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது. கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஓழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம் என யாஞ்ஞவல்கியர் இயம்புகின்றார். கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அடிகளையோ உடல் முழுவதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாளும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவாள் எனவும் அத்திரி யென்பார் அறிவிக்கின்றார். மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்காதொழுகுபவள் இறந்தால் இன்பவுலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும் என்று வாசிட்டநூல் வற்புறுத்துகின்றது. கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப்பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள் என ஆங்கீரசர் கடிகின்றார். மேலை நாட்டவரைப் போல நம் நாட்டு வடமொழியாளரும் மகளிரை உடைமைப் பொருளாகவே கருதினர். ஏனைப் பொருள் களைப் போல மகளிரையும் சூதாடு பணையமாகவும், விற்கவும் ஒற்றிவைக்கவும் கூடிய பொருளாகவும் மதித்தொழுகினர். இதற்கு இதிகாசங்களும் புராணங்களும் மிகப் பல செய்திகளைச் சான்று காட்டுகின்றன. உயிர்க்கு இறுதி நேரும் காலத்தாயின், சான்றோர் இழிக்கத்தக்க செயல்களைச் செய்தாயினும் உயிர் உய்தல் வேண்டும் என்பது அந்நாளைய அறமாகலின், அந் நிலையில் மகளிர் அறமல்லன செய்யினும் அவர் விலக்கப்படார். மணமான மகளிர்குப் பதி விரதமே சிறந்த அறம். தன் கணவனையன்றிப் பிறர் தம்மைத் தொடினும் தம்பாற்படினும் தம்மை விரும்பினும், மனைவி யாவாள் அவர்களை மனத்தால் விரும்பாமையே பதிவிரதத்தின் பண்பு. கணவன், ஆண்மையிழப்பினும் அறிவு திறம்பினும் வேறு நாடேகினும் பெருநோய் எய்தினும் மனைவியாயினாள் வேறோர் ஆடவனை மணந்து கொள்ளலாம். கொண்ட கொழுநன் குடிவழி யெஞ்சும் நிலையில் மனைவி வேறொருவனைக் கூடி மகப் பெறுவது குற்றமின்று என்றொரு கொள்கை பண்டை நாளில் இருந்தமைக்கு இதிகாசமாகிய பாரதம் ஏற்ற வரலாறொன்றைச் சான்று கூறுகிறது. இனி மேலைநாட்டு ஆங்கிலரிடையே மகளிர் இருந்த நிலையை நோக்கின் அஃது ஏனை மேலை நாடுகளினின்று வேறுபட்ட தாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் அரச மகளிர்மட்டில் அரசிகளாக முடி சூடிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். கிறித்து சமயம் பரவிய பின்பே அந்நாட்டில் ஒருவன் பல மகளிரை மணக்கும் இயல்வு நீங்குவதாயிற்று. நெடுங்காலம் வரையில் மகளிர்க்கு அந்நாட்டவர் கல்வி நல்கவில்லை. சமயத்துறையில் தாபத மகளிர்க்கு லத்தீன் மொழி கற்பிக்கப் பெற்றமையின், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே தாபத மகளிர் சிலர் லத்தீன் மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தனர். ஏனை யாவரும் மகளிர்க்கு மணமும் மகப்பேறுமே வேண்டப்படுவன என்ற கொள்கையிலே ஊன்றி நின்றனர். மணமாகுமுன் ஒருத்திக் கிருக்கும் உரிமை முற்றும் மணத்திற்குப் பின் அவளுடைய கணவன் பால் சேர்ந்து ஒன்றிவிட்டன. மக்களைப் பேணுதல் கல்வி கற்பித்தல் முதலியன பற்றிய உரிமைகள் தந்தையிடமே இருந் தொழிந்தன. வரலாற்றுக் காலம்தொட்டு ஆங்கில நட்டவ ரிடையே கணவற்கு வேறாக மகளிர்க்கு எவ்வகைச் சொத்துரிமையும் இல்லாமலே இருந்து வந்தது; கி.பி. 1882-இல் தான் மகளிர்க்குச் சொத்தில் உரிமை வழங்கப் பெற்றது. அரசாளும் வேந்தன் மக்களுள் மகளிர்க்கு அரசியல் உரிமை பண்டையிருந்தது; ஆயினும் அம் மக்களுள் ஆண் மக்கள் இருப்பின், அவர்க்கே முதலுரிமை நிலவிற்று. சென்ற 1918-இல் தான் மகளிர்க்கு வாக்குரிமை வழங்கினர்; அதன் பிறகே ஆங்கில மகளிர் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றனர். அமெரிக்கர் 1920-இல் அவ்வுரிமையை மகளிர்க்கு வழங்கினர். உயரிய கல்வியும் கலையும் பெறுதற்கேற்ற வாய்ப்பும் ஆங்கில நாட்டு மகளிர்க்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் உண்டாயிற்று. இவர்களையெல்லாம் நோக்கின் பண்டை நாளைத் தமிழ் மகளிரின் நிலை பெரிதும் வியத்தற்குரிய தாக விளங்குகிறது. பழந்தமிழ் மக்களிடையே ஆடவர், பெண்டிர் என்ற இருபாலார்க்கும் பிறப்பு, அறிவு, ஒழுக்கம் முதலிய கூறுகளில் வேற்றுமை காணப்படவில்லை. ஆண் மக்களை யொப்பவே பெண்மக்களும் பேணப்பட்டுள்ளனர். கூர்த்த அறிவுடை மையே மக்களில் வேற்றுமை காட்டிநின்றது. திருவள்ளுவரும் அறிவறிந்த மக்கட் பேற்றையே சிறந்த பேறாக எடுத்துரைக் கின்றார். அதற்குக் காரணம், ஆணாயினும் பெண்ணாயினும், மக்கள் தம்மினும் மிக்க அறிவுநலம் உடையராயினும் உலகிலுள்ள மன்னுயிர்க்கெல்லாம் வாழ்வு இனிதாம் என்பது கருத்து. அதனால் ஆடவர் பெண்டிர் இருபாலாரும் திருந்திய கல்வி பெறுவதில் வேறுபாடின்றி யொழுகினர். பெண் மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர் "செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண் பாலான" என்று தெரிவிக்கின்றார். கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவொழுக்கம் கற்பு என்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், "உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை" என்றும், வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர், அவற்றை "எழுதாக் கற்பு" என்றும் குறிப்பதே இப்பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும். மகளிர்க்குக் கல்வியறிவின் திணிநிலை யொழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், "செயிர்தீர் காட்சிக் கற்பு" என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளு கின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர். மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற்றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின் ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது. ஆண் மக்களை போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின் " விளையாடு ஆயமோடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல் அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்." என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தகுவதாம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது; இருவரும் கூடியே அதனைச் செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கினர். அவளது துணைமையின் சிறப்புணர்ந்து மேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர். பழந்தமிழர் குடியில் கல்விப் பேற்றில் ஆணும் பெண்ணும் ஒத்த உரிமை பெற்றுள்ளனர். மண்ணாளும் வேந்தர்க்குரிய நீதி நன்னூல் பலவும் பெண்களும் கற்றிருந்தனர். பிறந்த குடியின் பெருமையையும் புகுந்த குடியின் தொல்வரவையும் மகளிர் நன்குணர்ந்து குடிப்பெருமை குன்றாத வகையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். கணவனும் மனைவியும் உலகியல் வாழ்க்கைக்கு ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் துணைவராதலின், கணவன் பால் காணப்படும் குறையை மகளிரும் மகளிரது குறையைக் கணவனும் நன்கு உணர்ந்து குணம் பேணி வாழ்கின்றனர். கணவன் பால் பிழை காணுமிடத்து அன்புடைய நன்மொழிகளால் தாய் போல் கழறிக்கூறி நீக்கியும், நலம் காணுமிடத்து மகிழ்ச்சி கூர்ந்தும், மகளிர் நடந்து கொள்வது சிறந்த அறமாகக் கருதப்படுகிறது. "தாய் போற் கழறித் தழீ இக்கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப" எனத் தொல்காப்பியனார் சுட்டிக் காட்டுகின்றார். கொண்ட கணவன்பால் ஒருகால் பிழை தோன்றக் கண்ட அவன் மனைவி தீவிய இனிய கூரிய சொற்களால் அவனைக் கழறினாளாக, அதனால் அவன் நெஞ்சு வருந்தினான்; அந் நிலையில் அவ்விருவர் வாழ்க்கையின் நலம் பேணி நின்ற நங்கை யொருத்திபோந்து, அவனைத் தெருட்டி அவனைக் கழறிக் கூறிய மனைவியின் உரிமைச் சிறப்பை எடுத்துக் காட்டலுற்று, "ஒண்டொடி மடமகள் இவளினும், நுந்தையும் யாயும் கடியரோ நின்னே" 1 என்று கூறியதாக ஆசிரியர் ஓரம்போகியார் உரைக்கின்றார். இல்லிலிருந்து அறம் புரிந்து ஒழுகுமிடத்துக் கணவன், பொருள் செய்தல், போர்வினை முதலிய மேற்கொண்டு சேறல் ஆகிய கடமை காரணமாகப் பிரிந்து செல்லவேண்டின், காதல் வழிநிற்கும் பிரிவுத் துன்பம் தோன்றி மனைவியின் மனத்தை வருத்துவது இயற்கை. காதலுக்கும் கடமைக்கும் இடையே நிகழும் போரில் கடமை வீழ்ச்சியுறின் அது காதல் வாழ்க்கையில் நல்குரவையும் வெறுப்பையும் விளைவித்துத் துன்பம் பயக்கும் என்பதைப் பழந்தமிழ்க் கணவனும் மனைவியும் நன்கு உணர்ந்திருந்தனர். கணவன் பிரியுங்கால் வற்புறுத்தும் சொற்களையே பற்றுக்கோடாகக் கொண்டு பிரிவுத் துன்பத்தை ஆற்றி மனைக்கண்ணே தாம் செய்வனவற்றை முட்டின்றிச் செய்தொழுகுவதே மனையுறை மகளிர்க்கு மாண்பும் கற்புமாம் என்பது தமிழ்மரபு. மனையின்கண் வாழும மகளிர் தாம் பெற்றமக்கட்கு மொழி பயிற்றும் முதற்கல்வி நல்கும்போதே அவர்களிடத்தே நல்லொழுக்கம் வேரூன்றி வளரச் செய்தல் தம் கடன் என்பதை உணர்ந்து ஒழுகு கின்றனர். விளையாடும் பருவத்தனான தன் மகனை நோக்கின ஒரு தமிழ்த்தாய், அவன் தந்தைபால் உள்ள குணநலங்களையும் குறைகளையும் எடுத்தோதி, குணங்களைக் கொண்டு குறைகளைக் கைவிட வேண்டுமென்று கற்பிக்கப் புகுந்த, செம்மால், வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை நிலைப்பாலுள் ஒத்தகுறி என் வாய்க்கேட்டு ஒத்தி, என்று முன்மொழிந்து, கணவன் போர்வல் மறவன் என்றும், போரையும் அதற்குரிய அறம் பிழையாது செய்து வெற்றி கொள்வதில் வீறுடையன் என்றும் கூறுவாளாய், " கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றி மாட்டு ஒத்தி பெரும." என்றும், இவ்வாறே அவனுடைய நடுவு நிலைமை, ஈகைச் சிறப்பு ஆகியவற்றையும், "பால்கொள லின்றிப் பகல்போல் முறைக்கு ஒல்காக் கோல்செம்மை யொத்தி பெரும." என்றும், " வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு ஈதல்மாட்டு ஒத்தி பெரும" என்றும், கூறுவது இன்றைய தாயர்க்கு நல்ல படிப்பினையாகும். இவ்வியல்பு பற்றியே, பொன்முடியார் என்ற சான்றோர், ஒருதாய் தன் மகனுக்குக் கடமையுணர்வு நல்கும் கட்டுரை வடிவில், " ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." என்று கட்டுரைக்கின்றார். இங்ஙனம் தம் குடியில் வாழும் மக்கள் கடமையுணர்வும் நல்லொழுக்கமும் கொண்டு சிறத்தல் வேண்டுமெனக் கருதும் தமிழ் மகளிர், தாம் வாழும் நாட்டின் நலத்தையும் தம் நெஞ்சில் கொண்டு, வாய்த்த போதெல்லாம், "நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க" "விளைக வயலே வருக இரவலர்" "பசி இல்லாகுக பிணி சேன் நீங்குக" "வேந்து பகை தணிகயாண்டு பல நந்துக" 'அறம் நனி சிறக்க அல்லது கெடுக" "அரசு முறை செய்க களவு இல்லாகுக" "நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக" "மாரி வாய்க்க வளம் நனி சிறக்க" என விழைந்து வேண்டுவர். மகளிருடைய மனைவாழ்வில் கணவனது காதலுள்ளம் தன்னின் நீங்கி வேறு - மகளிர்பால் செல்லுமாயின், அம் மகளிர்க்கு அதனினும் மிக்க வருத்தம் தருவது வேறு கிடையாது. உலக நாடுகளில் எங்கு நோக்கினும் மகளிர்க்குரிய இவ் வியல்பு ஒன்றாகவே உள்ளது, மேலை நாடுகளிலுள்ள எகிப்து, அபிசீனியா முதலிய நாடுகளிலும் கீழ் நாட்டுச் சீனம், சப்பான் நாடுகளிலும் உள்ள மகளிர் எப்போதும் கணவனுடைய மன நிறைவையே குறிக் கோளாகக் கொண்டு ஒழுகுவர். சில நாட்டு மகளிர் தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவற்கு உவகை தருகிறதா என்பதை அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வர். அதனால், கணவனது காதலன்பு பிற மகளிர்பால் செல்லாது. காத்தொழுகுவதை அவர்கள் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். உருசிய நாட்டுப் பழங்குடி மக்களும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியரும் ஆடவரினும் மகளிரைத் தாழ்ந்தவராகக் கருதி ஒழுகுபவராயினும், அவர் நாட்டு மகளிர்க்குக் கணவன்பால் பரத்ததைமை தோன்றின் பெரிதும் வருந்துவதை அவர் நாட்டு வரலாறு கூறுகின்றது. சுமேரியா நாட்டில் மகளிரிடையே பரத்ததைமை யொழுக்கம் பெரிதும் பரவியிருந்தது; எனினும், மனையறம் பூண்ட மகளிர் கணவன் பரத்தனாவது காண மிகவும் அஞ்சி யொழுகுகின்றனர். மேலே காட்டிய பழங்குடிகளோடு எவ்வகையிலும் பிற்படாத தொன்மை வாய்ந்த தமிழ் மகளிர் விலக்கல்லராகலின், கணவனது பரத்ததைமை மனையுறையும் மக்களுக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தன்னைக் கொண்ட கணவன் தன்னை யொழியப் பிறமகளிரைக் கனவினும் கருதாத பேராண்மையுடை யனாகப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், "பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு" என்ற திருக்குறள் அமைந்திருக்கிறது. கணவன் பரத்தனாயின் அது தனக்குச் சிறுமை பயப்பதோடு தன் குடிக்கும் பழி தரும் என்ற கருத்தால் தமிழ் மகளிர் அவன் உள்ளம் அந்நெறியிற் செல்வதை விரும்பவில்லை. "பூவோரனையர் மகளிர், வண்டோரனையர் ஆடவர்" என்ற கருத்தொன்றும் அந்நாளில் மக்களிடையே நிலவியிருந்தது. என்றாலும் மகளிருள்ளம் கணவனது காதல் பிறமகளிர்பால் பரவுவதைச் சிறிதும் உடன்படவில்லை. இப்போது பழனியென வழங்கும் ஊர்க்கு முன்னாளில் திருவாவி நன்குடி என்றும் பழங்காலத்தில் பொதினி யென்றும் பெயர்கள் வழங்கின. அதனருகே ஆய்க்குடி யென்ற ஓர் ஊருளது; அதன் உண்மைப் பெயர் ஆவிகுடி என்பது, அதனைத் தலைநகராகக் கொண்ட அப் பகுதியில் ஆவியர் என்பார் வாழ்ந்தனர். அதனால் அதனை வையாவி நாடு என்பர்; பண்டை நாளில் அங்கே பெரும் பேகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். அவனை வையாவிக் கோப்பெரும்பேகன் என்பது வழக்கம்; அவனுடைய மனைவி பெயர் கண்ணகி என்பது. ஒருகால் அவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர் புண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு மனக்கவலை பெரியதாயிற்று. பேகன் அருள் உள்ளம் படைத்த பெருந்தகை; காட்டில் வாழும் மயில் ஒன்றுக்குப் போர்வை யீத்த புகழாளன்; "படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்" என்று சான்றோர் அவனைப் பாராட்டுவது வழக்கம். அவனுக்கு அரிசில் கிழார், கபிலர், பரணர் என்ற சான்றோர் பலர் இனிய நண்பராவர். கண்ணகி அவர்கட்குப் பேகனது பரத்தைமையைச் சொல்லி அவனை அந்நெறியினின்றும் நீக்குமாறு முயன்றாள். ஒருகால் அவள் மனைக்குப் போந்த பரணர் என்ற நல்லிசைச் சான்றோர்க்கு, " எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் வரூஉம் என்ப வியங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல்லூரானே" 1 என்று முறையிட்டனள். அவர்களும் அவளது வேண்டுகோட்கு இணங்கி, பேகனைக் கண்டு வேந்தே, நீ மனையறம் மாண்புறச் செய்தல் வேண்டும்; நீ இன்றிரவே நின் மனையுறையும் கண்ணகிபால் சென்று அவள் எய்தி வருந்தும் துயரத்தைப் போக்கியருளல் வேண்டும் என்பாராய், " அறஞ் செய்தீமே அருள்வெய் யோய்என இஃதுயாம் இரந்த பரிசில்; அஃது இருளின் இனமணி நெடுந்தே ரேறி இன்னாது உறைவி அரும்படர் களைமே." என்று வேண்டினர். அவனும் அவ்வண்ணமே செய்து அறவாழ்க்கையில் நிலை பெறுவானாயினான். அவனது வையாவி நாட்டின் புகழ் விசய நகர வேந்தர் காலம் வரைத் தமிழகத்தில் சிறந்து நின்றது; அக் காலத்தில் வையாவி வையாபுரி எனச் சிதைந்து பெரும் பிறிதாகி மறைந்தது. நிற்க, கோவலன் மனைவியாகிய கண்ணகியார் தம் கணவன் சிலம்பு திருடிய கள்வன் என்று பழி தூற்றப்பட்டுப் பாண்டி வேந்தனால் கொலையுண்டான் என்பது கேட்டு அதனால் தம் செல்வக் குடிக்குண்டான புகழ் மாசு படுவது நினைந்து வேந்தன் முன்சென்று வழக்குரைத்த வரலாறு நாடறிந்த தொன்று. வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் போர் மறத்துக்குப் பெயரும் மாண்பும் பிறங்கப் பெற்றவர். கிரேக்க, பாபிலோனிய எகிப்திய மகளிரைப் போலத் தமிழ் மகளிர் போர்ப் புகழைப் பெரிதும் விரும்பினர். போரில் புறங்கொடுத்துக் குடிக்குப் பழி விளைத்தான் தன் வயிற்றிற் பிறந்த மகன் எனின் அவளது மறவுள்ளம் சிறிதும் பொறாது. போருக்குச் சென்றிருந்த இளையோன் ஒருவனைப் பற்றி அவன் தாயிடம் போந்து பொய்யாக, "அன்னாய், நின்மகன் பகைவர் தொடுத்த போரில் முதுகு தந்து ஓடினன்" என்று ஊரவர் அலர் கூறினர்; அது கேட்டதும், அவன் தாயின் மறவுள்ளம் கொதித்தது; "ஊரவர் கூறுவது உண்மையாயின், அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என்று வஞ்சினம் கூறிப் போர்க் களம் சென்று அங்கே இறந்து கிடக்கும் வயவர் உடலங்களைப் புரட்டிக் காணலுற்றாள் அவற்றின் இடையே, முதுகிற் புண்படாது முகத்திலும் மார்பிலும் புண்பட்டுச் சிதைந்து வேறுபட்டுக் கிடந்த அவன் உடம்பினைக் கண்டு பேருவகை கொண்டாள். இதனைக் காக்கை பாடினியார் என்ற பெருமாட்டி, "முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தன னாயின், உண்டஎன் முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்டவாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே." என்று பாடிக் காட்டுகின்றார். வேறொருத்தியின் தந்தை முன்பொருகால் நடந்த தும்பைப் போரில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான்; அவள் கணவன் முன்னாள் நடந்த கரந்தைப் போரில் நிரைகாவலில் உயிர் கொடுத்தான். மறுநாள் போர் நிகழ்ச்சி தெரிவிக்கும் பறையோசை கேட்டதும் தன் ஒரு மகனையும் போர்க் கோலம் செய்து வேற்படையைக் கையில் தந்து செருமுகம் செல்க என விடுத்தாள்; இதனை, " இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே." என்று சான்றோர் எடுத்துரைக்கின்றனர். இவ்வாறு தம்முடைய மனைக்கண் உள்ள ஆடவர் போரில் மறம் குன்றாது பொருது புகழ் பெறுதலை விரும்பும் தமிழ்மகளிர் போரிற் புண்பட்டுவரும் வயவர்க்கு மருத்துவம் செய்வதில் மிக்க மாண்புறுகின்றனர். கிழிந்த புண்களைத் தைத்தலும் மருந்திடுதலும் இனிய பண்ணில் இசைபாடுதலும் மருத்துவத் துறையில் கையாளப் படுகின்றன. புண்ணுற்ற மறவர்க்கு மருத்துவம் செய்யப்பெறும் மனைகளைப்பேய் முதலிய தீக்கோள் வந்து தாக்காவண்ணம் மனையிறைப்பில் ஈர இலையும் வேப்பிலையும் செருகப்பட்டிருக்கும். பெரும் புண் உற்றவர் உள்ளம் உலகியல் தொடர்பில் விடுதலை பெற்றுத் துறக்கவின்பத்தில் நாட்டம் கொள்ளுமாறு காஞ்சிப் பாட்டுகள் இனிய முறையில் பாடப்படும். போர்த்துறையிலும் பிறவற்றிலும் புகழ்மிக்கு விளங்கிய காதற் கணவன் இறந்துபடின், அவன் பிரிவாற்றாத தமிழ்மகளிர் அவனுடனே உயிர் துறப்பதுண்டு. கணவனோடே தாமும் உயிரிழந்தால் மறுபிறப்பில் அக் கணவனுக்கே மனைவியாய்ப் பிறத்தல் கூடும் என்று பண்டைத் தமிழ்மகளிர் நினைத்தொழுகினர். "இம்மை மாறி மறுமையாயினும், நீயாகியர் எம்கணவனை; யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" என்று மகளிர் கூறுவதாகச் சான்றோர் பாடுவது இதற்கு ஏற்ற சான்றாதல் காண்க. இதனால் இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தில் காதலன்புடைய மகளிர் உடன் வீழ்ந்து உயிர்கொடுக்கும் செயலை மேற்கொண்டனர். உயிர்கொடுப்போருள் மிக்க இளமை நலம் படைத்தவர் தீப்பாய்தலை விரும்பாத சான்றோரும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்தது கண்ட அவன் உயிர்க்காதலியான பெருங்கோப் பெண்டு அவனுடைய ஈமத்தீயில் தானும் வீழ்ந்து சாதலுக்குத் துணிந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர் அவளை விலக்கி அறிவுரை பல கூறுவராயினர். அவர்களை வெகுண்டு, " பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரி தாகுக தில்ல எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே." என்று பெருங்கோப் பெண்டு அவலித்து அரற்றினாள். உயிர் கொடுக்கும் ஆற்றல் இல்லாமையாலோ சான்றோர் பலர் விலக்கியதனாலோ கணவனை இழந்து உயிர் தாங்கி யிருப்போர் கைம்மை நோன்பு மேற்கொண்டு கணவனுக்கு வழிபாடு செய்து ஒழுகுவர். இதனைத் தும்பையூர்ச் சொகினனார் என்ற சான்றோர், " அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை உயர்நிலை யுலகம் அவன்புக ஆர நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி அழுத லானாக் கண்ணள் மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே." என்று குறிக்கின்றார். கொழுநனை யிழந்த குலமகளிர் மேலே குறித்தவாறு உடனுயிர் விடுதல், கைம்மை மேற்கொளல் என்ற இரண்டனுள் ஒன்றனை மேற்கொள்வரேயன்றி மறுமணம் செய்துகொள்வது இலர். பழந்தமிழ் மகளிர் மறுமணம் செய்துகொள்ளற்குப் பண்டைப் பொருளிலக்கண நூலார் விதிக்கவும் இல்லை! மறுமணம் செய்து கொண்ட வரலாறும் தமிழ் நூல்களில் இது காறும் காணப்பட வில்லை. இம்மையிற் பிரிந்த கணவனை மறுபிறப்பில் பெறலாம் என்ற கருத்துநிலவும் சமுதாயமாதலின், பழந்தமிழிரிடையே மறுமணம் நிகழ்தற்கு வாய்ப்பு ஏது? " அலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினும் அருநெறி யாயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே." என்ற முல்லைப் பாட்டு இதற்குத் தக்க சான்றாகும். களவு நெறியில் காதலுற்றுக் கற்பு நெறியில் மணம் செய்து கொண்டு கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் ஒழுகும் மக்களாதலின் மறுமண நிகழ்ச்சி பழந்தமிழர் வாழ்வில் இடம் பெறாதாயிற்று. மணந்து கொண்ட கணவன் போர் முதலியவற்றால் இறுதி எய்தாது முதுமை யெய்துங்கால், அவன் உள்ளத்தே இதுகாறும் நுகர்ந்து போந்த நுகர்ச்சிகளில் உவர்ப்பும் வெறுப்பும் பிறந்து துறவு மேற்கொள்ளும் வேட்கையை யுண்டுபண்ணும். இக்கருத்தையும் செயலையும் காணும் சான்றோர் அவர்க்கு வீடு பேற்றுக்குரிய மெய்யுணர்வையும் தவத்தின் செயல் முறையையும் அறிவுறுத்துவர். அதனால், அவர்கள் தமக்குத் துணையாகிய மனைவியுடன் துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து, அவா அறுத்து, யான் எனது என்ற செருக்கற்று, அறிவு நூல்களைக் கண்டு செம்பொருளாகிய கடவுளின்ப வாழ்வுக்கு உரியராவர். இது பற்றியே தொல்காப்பியர், "அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்று வற்புறுத்தினர். இறத்தல் என்றது வயது முதிர்தல். ஒருவனுக்கு ஒருத்தி யென்ற முறையில் தமிழ் மக்கள் உலகு இணைப்புண்டிருந்தமை பழந்தமிழ் நூல்கள் உரைக்கும் உண்மை யாகும். ஆயினும், அந்நாளில் நாடுகட்கிடையே அடிக்கடி நிகழ்ந்த போர்களால் ஆண் மக்கள் தொகை குறைந்தது; போரில் ஈடுபடாமையும் பாதுகாக்கப் படுதலுமாகிய செயல்களால் மகளிர் தொகை மிகுந்தது. பெண்டிரைக் கொல்லலாகாது என்பது பழந் தமிழர் போரறம். இதே நிலை மேலைநாடுகளிலும் நிலவியதால், மிகுந்து நின்றமகளிரை மனைவியாகவும் உரிமை மகளிராகவும் கொள்வது அவர்கள் நாட்டு வேந்தர்கட்கும், செல்வர்கட்கும் ஓராற்றால் கடமையும் மரபும் ஆயின. அந்தச் சூழ்நிலையே தமிழ் நிலத்தும் இருந்தமையின், மிகை மகளிரைப் பரத்தையரெனக் குறிப்பாராயினர். பரம் என்ற சொல் மிகுதியென்று பொருள் தருவது. இம்மகளிர் உலகில் வாழ்தற்குரியராதலால், அவரது வாழ்வுக்கு வேண்டுவன உதவுவது ஆண்மையுடைய ஆடவர்க்கு அறமாகும். அவ்வாறு உதவுமிடத்தும் உதவி பெறுமிடத்தும் இருதிறத்தார்க்கும் தொடர்புண்டாக, அதன் வழியாகக் தோன்றிய மகளிர் பரத்தையராய்ப் பெருகினர். ஒருவன் ஒருத்தியை மணந்து வாழ்ந்து வருங்கால் அவள்பால் மகப்பேறு இல்லையாயின் வேறொருத்தியை மணந்து கொள்வது அவர்க்கு அமைவதாயிற்று. இரண்டாம் மனைவியைப் "பின் முறையாக்கிய பெரும் பொருள் வதுவை" என்று தொல்காப்பியர் குறிக்கின்றார். இருவர்க்கு மேலும் மனைவியர் உளராயின் அவரைக் காமக் கிழத்தியரென வகுத்து முறை செய்தனர் பண்டைத் தமிழர். நாளும் பெருகிவந்த மிகை மகளிர் தாம் இனிது வாழ்தற்குரிய பொருள் வேண்டி ஆடல் பாடல் அழகு என்ற துறைகளில் பயிற்சி பெறத்தொடங்கினர். அவருள் பொருள் ஒன்றே கருதி அதனைத் தருவோர் யாவராயினும் வரையறையின்றித் தமது பெண்மையை விற்று ஒழுகினோர் வரைவில் மகளிராகக் கருதப்பட்டனர். எஞ்சிய பரத்தையர் தம்மை நயந்த ஆடவனது காதலன்பு ஒன்றே குறிக்கொண்டு ஒழுகினமையின் அவரைக் காதற்பரத்தையரெனப் பிற்காலத்தார் பெயர் குறித்தனர். அவரைச் சில ஆடவர் தாம் உறையும் ஊரகத்தே இருத்தி மனைவியரைப் போலப் பேணினர். அவ்வாறு பேணப்பட்டோர் இற்பரத்தையர் எனப்படுவராயினர். ஏனையோர் பரத்தையர் சேரிக்கண் உறைந்தமையின் அவரைச் சேரிப் பரத்தையரெனவும் பரத்தையர் எனவும் உரைத்தனர். இற்பரத்தையர் காப்பியக் காலத்தில் உரிமை மகளிரெனவும் குறிக்கப்பட்டனர். இவ்வகையில் தமிழ் மகளிர் பண்டை நாளில் குலமகளிரெனவும் பரத்தையரெனவும் இருகூறாய் இருந்தமை தெளியப்படும். ஒருவன் மனைவியான குலமகள் வயிற்றில் பிறக்கும் மக்களுக்கே அவனது உடைமையில் உரிமையுண்டு; பரத்தையர்க்குப் பிறக்கும் மக்கட்கு அவ்வுரிமை இல்லை. இதனை, " யாணர் ஊரநின் மாணிழை மகளிரை எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம் புன்மனத் துண்மையோ அரிதே; அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு எம்பா டாதல் அதனினும் இலமே."1 என்று சான்றோர் கூறுவதால் இனிதறியலாம். மணவாழ்க்கை இயலில் மகளிர் இவ்வாறு இரு வேறு வகையில் இயன்று வாழ்ந்தனராயினும், இயல் இசை கூத்து முதலியவற்றிலும், அறிவு அரசியல் முதலிய துறைகளிலும் ஒத்த உரிமை கொண்டிருந்தனர். அதனால் அரசியற் குறிப்புகளும் அறிவு நிலைபெற்ற இலக்கியங்களும், தமிழ் மகளிரின் சால்பினை ஒரு வேற்றுமையும் தோன்றாதவாறு குறித்துள்ளன. ஓளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியர்/ நப்பசலையார் எனப் பல மகளிர் நல்லிசைப் புலமைத் துறையில் சிறப்புற்று விளங்குகின்றனர். ஒளவையாரும், நச்செள்ளையாரும் அரசர்கட்கு அரசியற் சுற்றமாயிருந்து அறிவுரையும் அறவுரையும் நல்கியுள்ளனர். மகளிர்க்குரிய இச் சிறப்பும் உரிமையும் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் இருந்துள்ளன. அக் காலத்தே வடஆர்க்காடு மாவட்டத்துப் படைவீட்டுத் தலைநகராகக் கொண்டதொரு சிற்றரசு சிறந்து நின்றது. அவ்வரசினர் தம்மைச் சம்புவராயர் என்று குறிப்பர்; அவர்கள் சோழப் பேரரசின் கீழ்ப் பெருமை பெற்றவர். அவருள் எதிரிலிச் சோழ சம்புவராயன் என்பவன் ஆட்சிக் காலத்தில் வந்தவாசிக்கு அண்மையில் உள்ள தெள்ளாறு என்ற ஊரில் கண்டன் இளங்கண்ணன் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனுடைய மனைவி கருணையாட்டி கற்பால் தான் வாழும் ஊரவர் தன் குடியைப் புகழுமாறு வாழ்ந்து வந்தாள். இளங்கண்ணன் ஒரு நாள் கட்குடியால் அறிவு மயங்கி ஊரவர் பலரை வைதான் என்று குற்றங்கண்ட "மகாசபையார்" ஊர்வாரியத் தலைமைபூண்ட கருணையாட்டிக்கு முறையிட, அவர் "கணவனென்றும் பாராது ஏழுநாள் திருமூல நாயனார்க்கு விளக்கேற்றுமாறு" பணித்து, அதனை "அவன் பெண்டாட்டி என்ற பரிசு முட்டாமே விளக்கேற்றி"த் தமது கடமையை ஆற்றினார் என்பது வரலாறு. இதனால், ஊர்வாரியங்களில் தலைமை தாங்கும் உரிமை மகளிர்க்கும் வழங்கப்பட்டிருந்தது தெளிவாகிறதன்றோ? இந்நிலையில் மேலைநாட்டு ஆங்கிலேயரும் பிறரும் அமெரிக்க நாட்டவரும் இந்த நூற்றாண்டில்தான் மகளிர்க்கு அரசியல் உரிமை தந்தனர். இதை நோக்கின் பழந்தமிழ் மகளிர் ஏனை உலக நாடுகளில் வாழ்ந்த மகளிரை நோக்க - மிக உயர்ந்த நிலையில் வைத்துத் தமிழரால் மதிக்கப் பெற்றமை, இதனால் இனிது விளங்கும். இன்னோரன்ன செய்திகளை மறந்தமையால் இடைக்காலத் தமிழ்மக்கள் மகளிரை அடிமையாக்கி இருளில் கிடத்தித் தம்மையும் குருடராகவும் ஊமையாகவும் செவிடராகவும் கெடுத்துக் கொண்டனர். தமது நாடு, மொழி முதலியவற்றின் வரலாறு துறந்து மறந்து கெடும் ஒரு சமுதாயம் நாளடைவில் கெட்டு அடிமைச் சேற்றில் அழுந்தும் என்பததற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயம் தக்கதொரு எடுத்துக்காட்டாக விளங்குவதைத் தமிழகம் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்வு தமிழ் வாழ்வு தழைப்பதற்கு ஆக்கமும் அரணுமாம் என்பது உறுதி.  10. ஏட்டில் இல்லாத இலக்கியம் - பழமொழிகள் - நம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கியங்கள் நிலவுகின்றன. அவை பொருள் செறிந்த சிறு சிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளாகும். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் 'ஏட்டில் எழுதப்பட்டுக் கற்றவர்களால் பாராட்டப்பட்டும், இலக்கிய வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டும், தமிழ்ப் பெரியோர்களால் போற்றப்பெற்றும் வருகின்றன.' அவைகளைப் பழமொழி என்பதோடு முதுமொழி என்றும் மூதுரை என்றும் சான்றோர் வழங்குவர். 'அப்பனைப்போலப் பிள்ளை', என்பது நாட்டில் வழங்கும் பழமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியரே தம் தொல்காப்பியத்தில் 'தந்தைய ரொப்பர் மக்கள் என்பதானல் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்," என்று கற்பியல் சூத்திரம் ஆறில் குறித்துள்ளார். "கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா," என்பதொரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர் "வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு அழியும்நோய் கைம்மிக அணங்காகியது போல," (கலி) என்று கூறியிருக்கின்றார். "இறைக்கிற ஊற்றுத் தான் சுரக்கும்," என்பது மற்றொரு முதுமொழி. இதை நம் திருவள்ளுவர் "மறைப்பேன்மன் யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்," என்று தமது திருக்குறளில் அமைத்து வழங்கி யிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியமாகிய இம்முதுமொழிகளை உயர்ந்த மணிகளாகக் கருதி தாங்கள் எழுதிய இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள். இப்பழமொழிகள் நுட்பமும் சுருக்கமும் எளிமையுமாகிய இனிய நலங்களை யுடையவாகும். இவைகளைக் கண்ட தொல்காப்பியர் இவைகளையும் செய்யுள் வகையில் ஒன்றாக எடுத்து நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் என்றிவை விளங்கத்தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு "வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப," என்று இலக்கணம் கூறியுள்ளார். மேலும் அவர் "முதுமொழி என்ப," என்றதனால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறியலாம். இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. இவற்றில் பொய்யோ, புனைந்துரையோ கிடையா. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொருவரைக் கேட்டு யாதேனும் ஒன்றைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சியாகவும், அதையே கொடுத்தவர் கேட்டு வாங்கும்போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பதும் உண்மை நிகழ்ச்சியாம். இதுவே "கேட்கிறபோது பசப்பு, கொடுக்கிறபோது கசப்போ," என்ற பழமொழியாக வழங்குகின்றது. இதனை இப்போதும் காண்கின்றோம். 2000 ஆண்டுகட்கு முன்பு விளங்கியிருந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் "உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம், கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல், பண்டும் இவ்வுலகத் தியற்கை அஃது இன்றும், புதுவதன்றே புலனுடை மாந்தீர்," (கலி) என்று பாடியுள்ளார். இந்த முதுமொழிகளிடத்தே உண்மையும் தெளிவும் இருப்பது கொண்டே சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு முன்றுரையரையனார் என்ற சான்றோர் ஒருவர் 400 பழமொழிகளை எடுத்து ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயர்வைத்து ஒரு நூல் பாடியிருக்கின்றார். அது பதினெண் கீழ்க்கணக்கு என்ற நீதிநூல் தொகையில் ஒன்றாய் இருக்கிறது. மேலும், இப்பழமொழிகள் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், கைத்தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகளிலும் அமைந்திருக்கின்றன. "குலங்கெட்டவரோடு சம்பந்தம் செய்தாலும் குணம் கெட்ட வரோடு சம்பந்தம் செய்யக்கூடாது." "செத்த பிணத்தையும் சீரிட்டழு," முதலியன சமுதாயத்தில் வழங்குவன. "பணமில்லாதவன் பிணம்" "பணம் பத்தும் செய்யும்," முதலியன பொருள் பற்றி வழங்கும் பழமொழி. "கப்பலேறிப்பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?" "திரைகட லோடியும் திரவியம் தேடு," முதலியன வாணிகத்தில் வழங்கும் முதுமொழிகள். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்," "உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறுபோட வேண்டியதில்லை," என்பவை முதலியன தொழில் சார்பாக நிலவும் மூதுரைகள். "விதைப் பழுது முதற்பழுது" "பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்," என்பவை முதலியன உழவுபற்றி வழங்கும் உலகுரை. "அவனே அவனே, என்பதைவிடச் 'சிவனே சிவனே' என்பது மேல்", "இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தபின் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றார் போல," என்பன சமயம் பற்றி வழங்கும் பழமொழி. "தோட்டிமுதல் தொண்டை மான் வரை," என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும் "டில்லிக்கு ராசாவானாலும் தல்லிக்குப் பிள்ளை," யென்பது விசயநகர வேந்தர் காலத்தும் முகம்மதிய வேந்தர் காலத்தும் நிலவிய அரசியல் பற்றியும் "நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமை போகாது," "பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்," என்பவை முதலியன மேனாட்டவர் காலத்து அரசியல் பற்றியும் உண்டாகி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்த பின் தேர்தலுக்கு நின்று ஓட்டுப் பெறுபவர்களைப் பற்றி "ஓட்டுக்குப் போனாயோ ஓடுவாங்கப் போனாயோ!" என்பது முதலிய பழமொழிகள் உண்டாகியிருக் கின்றன. இந்த பழமொழிகளை நோக்குவோமாயின், பழங்காலக் குறிப்புகளில் பல காணப்படுகின்றன. இடைக்காலப் பாண்டிவேந்தருள் 12, 13-நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்புசெய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற் பணிசெய்யும் சிவப்பிராமணர்களும் வயிராகிகளும்இருப்பர். அப்போது திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் இருந்து வந்தான். சூறையாட வந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயில் சொத்துக்களைக் காக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர்செய்து வாணாதிராயரைத் தோற்றோடச் செய்து தானும் புண்பட்டு வெற்றி பெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணையாற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டென்று கூறுகிறது. (P.S.Ins.380) இந்த வயிராகிகளுக்கு வீரமுஷ்டி என்று பெயர் வழங்கும். கோயில் பணிசெய்பவருள் வயிராகிகள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று காத்த செய்திகள் பல கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவ்வரலாற்றை “உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி,” என்ற பழமொழி குறித்து நிற்கிறது. பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து போவராயின், அவர்களுடைய பெயரையும் அவர் பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதை நீராட்டிப் பலபேர் செல்லகூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்தக் கல்லைக் கல் நின்ற வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து அதைத் தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். இதை “ஒலிமென் கூந்தல் ஒண்ணுத லரிவை, நடுகல் தொழுதுபரவும்,” எனப் புறநானூறு முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே “கல்லென்றாலும் கணவன்,” என்ற பழமொழி உண்டாயிற்று. மேலும், கொல்லைகளிலும் வயல்களிலும் கதிர்முற்றி வரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆள்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்துவது வழக்கம். அதனைப் புல்லாள் என்பர். அதனிடத்தில் வீரச் செய்கை ஒன்றும் இல்லையாயினும் துலையில் வருபவர்க்கும் இரவில் வருபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஓரளவு காவலாவதுபற்றி அப்புல்லாளை நிறுத்திவைப்பர். இவ்வாறே போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரையும் புல்லாள் என்பது வழக்கம். இதைச் சான்றோர் “புல்லாள் வழங்கும் புள்ளலை வைப்பின் புலம்,” என்று பதிற்றுப்பத்தில் குறித்திருப்பதைக் காணலாம். தன்னைக் கொண்டவன் நேரிய வீரமில்லாத புல்லாளாயினும் அவனையும் கணவனாகக் கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு வகுத்துரைக்கும் முறை, இம்முறை இரண்டையும் சேர்த்துக் “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்,” என்ற பழமொழிதோன்றி வழங்கி வருவதாயிற்று. “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,” என்பது ஒரு பழமொழி. மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற அவள் கணவனான கோவலனைக் கள்வன் என்று கொலைத்தண்டனைக் கொடுத்தான் பாண்டியன். அதனையறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் “கள்வனல்லன்,” என்பதை நிலை நாட்டினாள். கோவலன் கள்வனென்ற பழியில்லாதவனானான். பாண்டியன் தான் செய்தது குற்றமென்று உடன்பட்டுக் கீழே வீழ்ந்து உயிர்விட்டான். அவனுடைய மதுரை நகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் வேரற்றுப் போயிற்று. இதனையறிந்த வேந்தனான சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கல்கொண்டு வந்து கண்ணகிக்கு வடிவம் செய்து, கோயிலமைத்து வழிபாடு செய்தான். இதனை அடிப் படையாகக் கொண்டே “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,” என்ற பழமொழி தோன்றுவ தாயிற்று. இதனை வற்புறுத்துவதற்கு வேறொரு செய்தியுண்டு. கொங்கு நாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில் நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். பொள்ளாச்சித் தாலுகாவிலுள்ள ஆனைமலை என்னும் ஊர்க்குப் பழங்காலத்தில் நன்னனூர் என்றே பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. (Annual Report on South Indian epi. Madras No. 214 of 27-28) அவ்வூரில் அவனொரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான் அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்த மரம் இருந்தது ஆற்றங்கரை. ஒருநாள் ஒரு செல்வனுடைய மகள் ஆற்றில் குளிப்பதற்குச் சென்றாள். அவள் குளித்துக் கொண்டிருக்கையில் நன்னனுடைய மா மரத்திலிருந்து நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்துகொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அவள் எடுத்துத் தின்றாள். அதைக் கண்ட காவற்காரன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கக் கொடிய வனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளை யிட்டான். அதையறிந்த அப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் 81-யானைகளும் தந்து அவளைக் கொலைசெய்யாது விட்டுவிடுமாறு வணங்கி வேண்டினான். நன்னன் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றுவிட்டான். அவனை அன்றுமுதல் சான்றோர் “பெண்கொலைபுரிந்த நன்னன்,” என்று புறம் பழித்தனர். அவன் மரபினரையும் இகழ்ந்தனர். அந்த நன்னன் வழியும் பின்பு அழிந்துபோயிற்று. இது முதல் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,” என்ற பழமொழி நிலை பெற்று வருவதாயிற்று. “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்,” என்பதொரு மூதுரை. இயல், இசை, நாடகம் என்ற பிரிவில் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து ஆரியக்கூத்து என இரு வகைப்படும். “ஆரியம் தமிழெனும் சீர்நடம் இரண்டினும்,” என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடு வோர் ஆரியநாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர்போல் கயிற்றின்மேல்நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் எனக் குறுந்தொகையில் பெரும்பதுமனார் பாடிய பாட்டில் அறிகின்றோம். அவர்கட்கு வேந்தரும் செல்வரும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர், அவற்றைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தம் ஆரியநாட்டிற்குச் செல்வர். தமிழ்க்கூத்தர்க்கு நிலம் விடுவது வேந்தர்க்கும் செல்வர்க்கும் மரபு. பின்பு தமிழ்க்கூத்தரும் ஆரியக் கூத்தாடத் தொடங்கினர். அதற்குரிய பரிசிலாகப் பொன்னும் பொருளும் பெறுவதையே விடுத்து நிலம் பெறுவதையே தமிழ்க்கூத்தர் விரும்பினர். தமிழ்க்கூத்தர் இவ்வண்ணமே பரிசில் பெற்று வாழ்ந்த திறத்தைக் கும்பகோணத்து நாகநாத சாமிகோயில் கல்வெட்டும், திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. (Annual Report No. 90 of 32 and No. 120 of 1925) அதனால் தமிழ்க்கூத்தர் ஆரியக்கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணிபெறும் நாட்டமே யுடையராயினர். அது பற்றியே “ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்,” என்ற பழமொழி வழங்கிவருவதாயிற்று. திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று சிவஞானப் பாலுண்டது முதல் “அழுதபிள்ளை பால் குடிக்கும்,” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் புராணத்திலும் திருநாவுக்கரசு புராணத்திலும் கலந்து பாதியளவுக்குமேல் இருப்பதால் “பிள்ளை பாதி பெரியவர் பாதி” என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு, ஆயுள் முழுதும் பயன்பட்டுவரும் சிறப்புபற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டு, “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும், கற்றவர், கல்லாதவர் என்ற இருதிறத்தாருக்கும் கம்பராமாயணம் இலக்கிய இன்பம் தருவதுபற்றி “கல்வியிற் பெரியவர் கம்பர்,” என்ற பழமொழியும் கம்பராமாயணம் தவிர வேறு நூல்களைக் கல்லாதவரும் கவிபாடும் பாவலராக விளங்குவதுபற்றிக் “கம்பர் வீட்டுக் கற்றுத்தறியும் கவிபாடும்,” என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன. கற்றுத்தறி = கற்றுவரும் மாணவன். இது பின்பு கட்டுத்தரியென மருவிவிட்டது; ஏடுகளிலும் கட்டுத் தரியென்றே காணப் படுவதாயிற்று. அதனால், “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்,” என்ற பழமொழியும் மெய்யுரையாய் நிலவுவதாயிற்று. இவ்வாறு இலக்கியத்துறை பற்றியும், இசை நாடகம் பற்றியும், “விருத்த வைத்தியம் பாலிய சோதிடம்,” என மருத்துவம், சோதிடம் முதலிய துறை பற்றியும் பழமொழிகள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நாவிலும் நயம்பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக்கண்ட மேனாட்டு ஆராய்ச்சி யாளருள் ஒருவரான Charles. E. Gover. M.R.A.S. என்பவர் “உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் சிறப்பாகத் தமிழில் மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவைகளை வெளியிட்டுப் பொதுமக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்துகொள்ளவும் செய்வது பழுத்தபுலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக்கும் தகுதியாம்” என்ற கருத்தமைய, "There is a great mass of (thoughts) ready to hand in Tamil and Telegu folk-literature, especially in the former. To raise these to public estimation, to exhibit the true products of the Dravidian mind would be a task worthy of the ripest scholar and the most enlightened government (Introduction to folk songs of southern India printed in 1871) என்று கூறியிருப்பது அறிஞர் கருதத் தக்கது.  11. சமண முனிவர் தமிழ்த் தொண்டு நம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய நெறியின் வளர்ச்சியினை வரலாற்று முறையால் ஆராய்கின்றவர், இவ்வளர்ச்சி குறித்துச் சமண முனிவர் செய்துள்ள தொண்டுகளைக் காணாதுபோக முடியாது. தமிழ் வளர்ச்சிக்கெனச் சிறந்த தொண்டு புரிந்த தமிழ் மக்களைவிடச் சமண முனிவரே தலை சிறந்து நிற்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அவர் செய்த தொண்டினை ஒரு சிறிது ஆராயின், அவர் தொண்டு முற்றும் தம் சமய நெறியினைத் தமிழ்நாட்டில் நிலைபெறுவித்தற்குச் செய்த சமயத் தொண்டாகவே தோன்றுகின்றமையின், அதனைப் புலப்படுக்கும் குறிப்பால் இக்கட்டுரை எழுதப்பெறுகின்றது. 1. சமண முனிவர் வரலாறு சமண முனிவர் என்பவர் சைன சமய வொழுக்கத்தை மேற்கொண்டு, துறவிகளாய், நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் சிறந்து, வினைத்தொடர்பு கெடுமாறு முயலும் சான்றோராவர். இது பண்டைக் காலத்தில் வடநாட்டில் தோன்றிய புதுச் சமயம் என்று சிலர் கூறுவர். சமயக் கலையில் வல்லுனராகிய இராதா கிருட்டினன் என்னும் பேராசிரியர், "இஃது இந்திய நாட்டிற்கே உரித்தாகிய வைதிக சமயத்திலிருந்து புதிதாய் கிளைத்த சமயம்" என்கின்றார். இச் சமயம் வடநாட்டில் சைன சமயம் என்றும், தென்னாட்டில் சமண சமயம் எனவும் வழங்கப்பட்டது. சைனருள், இல்லறத்தோர் சிராவகர் என்றும், துறவு பூண்டு இன்பத்து விருப்பும், துன்பத்து வெறுப்பும் இலராய் இரண்டனையும் ஒப்ப மதித்தொழுகும் சான்றோர் சமணர் எனவும் கூறப்படுவர். இவர்கள், புத்த சமயத்தை நாடெங்கும் பரப்புதற்குரிய பெரு முயற்சியினைச் செய்த பேரரசப் பெருந்தகையாகிய அசோக மன்னராலும் நன்கு மதிக்கப் பெற்றவர்கள். இச் சமணர்கள் நம் தமிழ்நாட்டிற் புகுந்து தம் சமய நெறியினைப் பரப்பியதனால், இவர்களது சமயமாகிய சைன சமயம் இவர்கள் பெயரால் சமண சமயம் என வழங்கப்படுவதாயிற்று. 2. சமண முனிவர் வரவின்கண் தமிழ் இருந்த நிலை தமிழ்நாட்டில், ஆதியில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்; அவர்கள்பால் தனித் தமிழே நிலவியிருந்தது. பின்னர், வடநாட்டு மக்கள் தமிழ்நாட்டிற் குடி புகுந்தனர். அவர் வழங்கிய வடமொழியும் அவரோடு போந்து தமிழ்நாட்டில் இடம் பெற்றது. வடவரும் தமிழரும் வாழ்க்கையில் ஒருங்கு இயைந்து உலவத் தொடங்கியதும், வடமொழியும் தமிழிடைக் கலந்து வழங்கப் பெறுவதாயிற்று. சமணர் தமிழ்நாட்டிற் புகுந்த காலத்துத் தமிழரிடை வடவர் வழக்கும், வடமொழி வழக்கும் நிலவியிருந்தன. தமிழ் மக்களின் மனப்பான்மையும், வடவர் வழக்கினையும், வடமொழி வழக்கினையும் மேற்கொண்டொழுகுதற்கண் பேரார்வமும், பேரூக்கமும் கொண்டு இருந்தது. நம் நாட்டிற்குப் புதியராய், புது வழக்கும், புது வொழுக்கும், புது மொழியும் உடையராய்ப் போந்த மேனாட்டு மக்களின் கூட்டுறவால், நம் நாட்டவர்க்கு அவர் மொழி வழக்கினும், நடையொழுக்கினும் வேட்கையும் விழைவும் பெருக, அதனால் நம் நாட்டு மொழி நிலை தாழ்வுற்றதன்றோ? அங்ஙனமே, வடவர் கொணர்ந்த மொழி வழக்கினையும், நடையொழுக்கினையும் கண்ட தமிழர் அவற்றின்பால் எழுந்த வேட்கையால், தமிழ் வளர்ச்சியிற் கருத்தூன்றாது தாழ்ந்தனர். வடவரது வைதிக சமயக் கோட்பாடுகளை மேற்கொண்டனர். வடவரது வடமொழி உயர்ந்தோர்க்கல்லது உணர்த்தப்படாதென்னும் வடவர் வகுத்த முறையால், இக்காலது ஆங்கிலம் போலத் தமிழரிடம் முதலிடம் பெறாதாயிற்று. ஆனால், வடமொழியைத் தமிழொடு விரவிப் பேசும் நெறியினை மட்டும் கைவிடாது பேணிவந்தனர். அதனால், வடசொல் விரவாத தனித் தமிழ் நூல்கள் அருகின; வடசொல் விரவிய நூல்கள் கூடிய அளவிற் பெருகின. இலக்கணங்களும் வட சொற்கள் தமிழொடு நடைபெற்று இயலுதற்கு இடம் வகுத்து அமைப்பவாயின. "வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" என்று தொல்காப்பியம் கூறுவதாயிற்று. இவ்வறு வடவர் கூட்டுறவால், தமிழர் தம் தாய்மொழி வளர்ச்சிக்கண் ஊக்கம் குறைந்திருப்பதையும், வடமொழிக் கண் விருப்பும், வைதிக சமயக் கதைகளில் வேட்கையும் மிக்குற்றிருப்பதையும், சமண முனிவர் தெளிய வுணர்ந்தனர். தமிழர், வைதிக சமயப்பற்று மிகுந்து அதுபற்றிய கதைகளைக் கேட்டு, அவற்றிற்கு வேறாக வரும் சமண சமயக் கருத்துக்களையும் கதைகளையும் மேற்கொள்ளுதற்குத் தாழ்த்தனர். இவ்வாறு தம்பால் வேறுபட்டு நிற்கும் தமிழர் கூட்டுறவைப் பெறுதற்குரிய நெறியில் சமண முனிவர் முயல்வாராயினர். தமிழர்க்கு வடநூற் கதைகளில் விருப்பு மிக்கிருந்தமையின், தாமும் வடநூற்களையும், வடநூல் மரபுகளையும் தமிழின்கட் கொணருமுகத்தால் தமிழர் ஆதரவைப் பெறலாயினர். இந்நெறிக்குப் பெருங் கருவியாக விளங்குவது இளஞ் சிறார்க்குக் கல்வி பயிற்றுவிக்கும் பெருந் தொண்டேயாகும் என்று உணர்ந்தனர். அதனால் தாம் தங்கியிருந்த பள்ளிகளில் கூடங்கள் அமைத்து, அவற்றுள் இருந்து சிறுவர்க்குக் கல்விக் கொடை புரியலாயினர். அந்நாள் தொட்டே கல்வி பயிலும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் என வழங்கப்படுவவாயின. 3. தமிழித் தொண்டு சமண முனிவர்களின் தொண்டு தேவார காலத்துக்கு முன்னையதும், பின்னையதும் என இருவகைப்படும், தேவார காலத்தும், அதற்கு முன்னரும் இருந்த சமண முனிவர் பெருங் கல்வியும், அறம் உரைக்கும் அமைதியும் நிரம்பித் துறவறமே சீரிதாக மேற்கொண்டு இருந்தனர். இவர்கள் நெறியினைக் கடிந்து வாதுபுரிந்த சைவப் பெரியோர்களான ஞானசம்பந்தர் முதலியோர் இவர்களின் பெருங் கல்வியினையும், அறவுரைகளையும் சுட்டி இருக்கின்றனர். "அமணரும் குண்டரும் சாக்கியரும் நயமுக உரையினர்," "ஓதியும் கேட்டும் உணர் வினையிலாதார் உள்கலாகாதோர் இயல்பினையுடையார்" என்றும், இவர்கள், அறம் உரைத்த பெருமையினை, "பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் அறவுரை", "அறங்காட்டும் அமணரும் சாக்கியரும்", "கடுமலி உடலுடை அமணரும் கஞ்சியுண் சாக்கியரும், இடும் அறவுரை" என ஞானசம்பந்தப் பெருமான் கூறியருளியிருக்கின்றார். இவற்றால் தேவார காலத்திற்கு முன்னர் இருந்த சமண முனிவர் தம் சமய அறங்களை மக்களுக்கு உணர்த்துவதே தமது கடனாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிய விளங்குகிறது. அக்காலத்திற்கு முன்னர் இருந்த தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுட் சமண முனிவர் செய்தனவாகக் காணப்படுவன யாவும் அறநூல்களேயாக இருக்கின்றன. நாலடியார், அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம் முதலிய பலவும் அறம் கூறுவனவேயாகும். அக்காலத்தே அவர்கள், வரலாறு கூறும் தமிழ் இலக்கியங்கள் மிகச் செய்திலர்; ஒன்றிரண்டு செய்தாராயினும் அவை தமிழ் வளங் கெழுமியவாய்த் தமிழர் மனத்தைக் கவ்வுவனவாய் இல்லை. அவர்கள் உலக வாழ்க்கையில்வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் மிக்கு இருந்தமையின் தமிழர் வாழ்க்கையில் நிலவிய அகப்பொருள் நலங்களும், புறப்பொருள் துறைகளும் நெடுநாள்காறும் அவர்கள் மனத்தில் இடம்பெற்று, அவர்கள் அறிவை ஏவல்கொள்ளவில்லை. அதனால், அவர்கள் தமிழ் மொழியின் இலக்ணத் துறையிற் புகுந்து, அதன் பகுதிகளுள் ஒன்றாகிய செய்யுளியலில் பெருந்தொண்டு புரிவாராயினர். கற்றவர் கல்லாதவர் என்ற இருதிறத்தார்க்கும் அறவுரை வழங்குமிடத்தும் உரையும் பாட்டுமே மிக வேண்டற்பாலன. இவற்றுள் முன்னதைவிடப் பின்னையதே கல்லாதவரையும் எளிதிற் பிணிக்கும் வாய்ப்புடையதாகும். ஆகவே, அதற்குரிய செய்யுளியலில் பெரும்பாடுபட்டுப் பல புதுநெறிகளையும் இயல்களையும் காண்பாராயினர். யாப்பருங்கல விருத்தியுரையிற் காட்டப் பெற்றுள்ள செய்யுளியல் நூல்களுட் பல, சமண முனிவராற் செய்யப் பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாகும். இசை நூலும் நாடக நூலும் காமம் பயக்கும் சிறுமையுடையவை என்பது அம்முனிவர் களின் கருத்து, அதனால் அத்துறையை நெகிழ்ப்பதோடு அவ்விசை நாடகங்களில் பற்றுண்டாகாமையும் வளர்த்து வந்தனர். தமிழர் தாமும், தம் தமிழையே மறந்து, வடநூற் கதைகளிலும், வடவர் வழக்க வொழுக்கங்களிலும் வேட்கை மீதூர்ந்து நின்றமையின், அவை பேணற்பாடின்றி இறந்தன. தொல்காப்பிய நூலுட் காணப்படாத பாட்டினங்கள் இவர்கள் செய்த செய்யுளியல்களிற் காணப்படுகின்றன. இவ்வாறு பழைய தமிழ் நெறிகளைப் புதுநெறியிற் கொணர்தற்கு முயன்று பெருந்தொண்டு புரிந்த இப் பெரியோர்கள் இசை, நாடகங் களிலும் தம் கருத்தைச் செலுத்தியிருப்பின், நம் தமிழ் மொழியில் எத்துணையோ இசை நூல்களும் நாடக நூல்களும் தோன்றி யிருக்குமே! இசை நூல்களுட் சில இவர்களால் இயற்றப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனை உண்மையெனத் துணிதற்குரிய சான்றுகள் கிடைத்தில. தொடக்கத்தில் தம் சமய நெறிகளை மக்கட்கு உரைப்பதே பொருளாக்கிக் கொண்டு தமிழ்நாடெங்கும் திரிந்து சமண் பள்ளி களையும், சமண் பாழிகளையும் இவர்கள் நிறுவி வந்தனர். அவை யாவும் அறநிலையங்களாக இருந்தனவேயன்றி, அறிவுச் சுடர் வழங்கும் தமிழ் நூல் நிலையங்களாக இல்லாமையால், தேவாரப் பெரியோர்கள் காலத்தில், இவரது தொண்டு இவர்கட்குப் போதிய அரண் செய்யாதாயிற்று. சமயப்போர் நிகழ்ச்சிகளில், இவர்கட்குப் போதிய படையாகக் கூடிய தமிழ் நூல்கள் இல்லை. அதனால் இவர்கள் எளிதில் வெல்லப் பெற்றனர். தமிழிலக்கணங்களாக, இவர்கள் செய்த அவிநயம், இந்திரகாளீயம், பரிமாணம் முதலியவை சமய நூல்களாகவோ சமய அறநூல்களாகவோ பயன்படவில்லை. தேவார காலத்தில் இச் சமண முனிவர்களுக் குண்டாகிய தோல்வி இவர்கட்குப் பிற்காலத்தில் அழியாப் புகழைப் பயப்பதாயிற்று. இவர்கட்குத் தம் தொண்டில் இருந்த குறைபாடுகள் நன்கு புலனாயின. தமிழர் கூட்டத்தில் நிலவிய சமய நூல்களைப் பயின்று, அவற்றைப்போல இலக்கியங் களையும், சிறுநூல்களையும் செய்யத் தொடங்கினர். இளஞ் சிறார் முதல் பெரியோர் ஈறாகப் பலர்க்கும் பயன்படத்தக்க தமிழ் நூல்களை இயற்றத் தலைப் பட்டனர். தமிழ்த் தொண்டினைத் தம் சமயத் தொண்டிற்குக் கருவியாகக் கொள்ளும் கருத்தினராகலின், இளைஞர்க்கென இயற்றிய சின்னூல்களிலுந் தம் சமயக் கருத்துகளைப் புகுத்து மிடமறிந்து புகுத்தித் தம் கருத்து முற்ற நினைந்தனர். சிறுவர் கற்கும் கணக்கியல் வாய்பாடுகளில், தம் சமயக் கருத்தை நுழைத்தற்கு இடமில்லாமையால், அவற்றிற்குக் காப்புச் செய்யுள் யாத்து, அதன்கண் சமயவுணர்வைப் புகட்டினர். "வன்மதிமுக்குடையான்மலரடிதொழ, நெல்லணி லக்கம் நெஞ்சினில் வருமே" என்பது நெல்லிலக்கவாய்பாடு. "அருகனை அமலனை அசலனையடிதொழ, சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே" என்பது சிறுகுழி வாய்பாடு. இவ்வாறு கல்வி பயின்று வரும் சிறுவர்கட்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தற்குத் தோற்று வாயாக நிகண்டுகள் செய்யத் தொடங்கினர். இவர் காலத்துக்கு முன்பிருந்தவை நூற்பா வடிவில் பெருநூல்களாக இருந்தன. அவை, இசையொடு விரவி, புதுப்பாவினத்திற் செய்யப்படின் கற்பார்க்கு ஊக்கம் மிகும் என்று கருதினர். அதனால் அவர்கள் சூடாமணி நிகண்டு முதலிய நூல்களைச் செய்தனர். இதன்கண்ணும் தம் சமயக் கருத்துக்களை வேண்டுமிடங்களிற் காட்டியிருக்கின்றனர். காப்புச் செய்யுள். "முடிவில் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி"ச் செய்தது உலகறிந்தது. பகவன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமிடத்து, "பகவனே ஈசன்மாயோன் பங்கயன் சினனே புத்தன்" எனத் தொகுத்துரைத்தனர். பன்னிரண்டாவது தொகுதிக் கண், "சொல்வகை எழுத்தெண்ணெல்லாம் தொல்லைநாள் எல்லையாக, நல்வகையாக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை, வெல்வினை தொடங்கச்செய்து வீடருள்வோன் தாள் போற்றி" செய்கின்றார். பின்னர், நானிலங்கள், நால்வகையங்கங்களை விரித்துக் கூறலுறுவார், இடையே, சமண சமயக் கருத்தாகிய நாற்கதி வகையினை நுழைத்து, "நாற்கதி உம்பர் மக்கள் சொல்லிய விலங்கினொடு நரகர்" எனக் கூறினர். இவ்வாறே சைவர்கள் கூறும், சிவனுக்குரிய எண்வகைக் குணங்களைக் கூறுமிடத்து, அருகனுக்குரிய எண்வகைக் குணமும், இறைவனுக்கு ஆகாவெனத் தம் சமய நூல்கள் விலக்கிய எண்வகைக் குற்றங்களையும் கூறியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிலவிய தொல்காப்பியம் மிக விரிந்து பரந்த நூலாய்க் கிடந்தமையின், அதனைச் சிறுவர்கள் எளிதில் கற்றற்குரிய நிலையில் சின்னூலும் நன்னூலும் இயற்றியிருக்கின்றன. சின்னூல் செய்த குணவீரபண்டிதர் என்னும் பெரியார் வடநூன் மரபுகளை ஒரு சிறிதே தழுவி, தம் சமயப் பொருட்குரிய வணக்கங் கூறிச் செல்லுகின்றார். நன்னூல் செய்த பவணந்தி முனிவர் சுருங்கிய சிலவாய சொற்களால் மிக அழகியதாக இதனைச் செய்துள்ளார். இதன்கண், இவர் தம் சமயக் கருத்தைக் காப்புச் செய்யுளிற் காட்டியதோடு நில்லாது, எழுத்தின் இலக்கணத்திலும் புகுத்தியிருக் கின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார் " எழுத்தெனப்படுப அகர முதல் னகர விறுவாய் முப்பஃதென்ப" எனத் தொடங்கினரேயன்றி, எழுத்தாவது இஃது என இலக்கணங் கூறிற்றிலர். அவ்விலக்கணங் கூறப்புகுந்த பவணந்தியார், "மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து" என்று மொழிகின்றார். இதன்கண் "அணுத்திரள் ஒலி" என்றது சமண சமயக் கருத்து. இதனையே எழுத்துக்களின் பிறப்புக் கூறுமிடத்தும், "நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத்திரள்" எனச் சிறுவர் மனத்தில் நன்குபதியக் கூறியிருக்கின்றார். இத்துறைக் கண் ஆசிரியர் தொல்காப்பியனார், "அகத்தெழு வளியிசை அரில்தப நாடி, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே; அஃதிவண்நுவலாது எழுந்து புறத்திசைக்கும், மெய்தெரி வளியிசை அளவு நுவன்றிசினே" என்றே கூறினர். தொல்காப்பியர் கூறிய தனையே அவிநயனாரும், குணவீரபண்டிதரும், புத்தமித்திரனாரும் கூறினர். இதனாலும் பிற்காலச் சமண முனிவர்களின் கருத்துத் தம் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்குக் கருவியாதல் வேண்டும் என்பது தெளிவாகும். இதனையறிந்தே இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகர், "மொழிக் காரணமாம் நாதகாரியவொலி எழுத்து" எனக் கூறினாராதல் வேண்டும். இனி, இவர்கள் செய்தருளிய இலக்கியங்கள் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என இருவகைப்படும். இவற்றுள். சிற்றிலக்கியங்கள் பலவும் அந்தாதி, கலம்பகம் முதலாகப் பலதிறப்படும். அவை யாவும் சமயப் பொருள்களையும், சமண சமயச் சான்றோர்களையும் புகழ்ந்து பாடும் சின்னூல்களாகும். திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி முதலியவை சமண் சமயத்தினர் பெரிதும் போற்றிப் படிக்கும் தீவிய செந்தமிழ் நூல்கள். நரிவிருத்தம் போலும் கதைச் செய்யுள் நூல்களும், மேருமந்தர புராணம், யசோதர காவியம் போல்வனவும் சமண சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் விளக்கும் நற்றமிழ் நூல்கள். சிந்தாமணி முதலாகக் கூறப்படும் பெருங்காப்பியங்களும், சூளாமணி முதலாகக் கூறப்படும் சிறுகாப்பியங்களும் தமிழ் மொழிக்குப் பொதுவாக வைத்துக் கூறப்படுவன. சிறு காப்பியமைந்தனுள், மேலே காட்டிய யசோதர காவியமும் ஒன்றெனக் கூறப்படும். சிறுகாப்பியமைந்தும் தமிழ்மொழிக்குரிய பொதுக் காப்பியங் களாகக் கருதப்படும் செந்தமிழ் நலம் சிறந்தவையாயினும், இவை யாவும் சமண சமயக் கருத்துக்களையே முற்றும் கூறிச் செல்கின்றன. இவற்றுள் சூளாமணி என்பது தலையாயது. இதனை இயற்றிய பெரியார் தோலாமொழித்தேவர். இவர் பெயரும், சீவக சிந்தாமணி செய்த திருத்தக்தேவர் பெயரும் இயற்பெயரல்ல என்று கருதுகிறேன். இவர்களைப்போலத் தமிழ்த் தொண்டு புரிந்த சமண முனிவர் பெயரெல்லாம் வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. குணவீரபண்டிதர், அமுதசாகரர், மண்டலபுருடர், வாமதேவர் என்பன பலவும் வடமொழிப் பெயர்களே. ஆகவே, இவர்கள் தமிழ் நூல் பயின்று, தமிழ் வேட்கை மிகுந்து, தமிழர்போலத் தாமும் தமிழராகவே இயைந்து நிற்கும் தமிழ் நல மிகுதியால், தம்மைத் தமிழ்ப் பெயரால் திருத்தக்கதேவர். தோலாமொழித்தேவர் என்பவராகக் கூறினா ராதல் வேண்டும். இவர்கட்குப் பலவாண்டுகட்குப் பிற்போந்த கான்ஸ்டான்டினஸ் பெஸ்ச்சி என்பாரும், தமிழ்த் தொண்டு புரியும் சால்பு எய்திய வழித் தம்மை வீரமாமுனிவர் எனக் கூறிக்கொண்டது, என் கருத்திற்கு ஆதரவு தருகின்றது. இவ் வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் காவியமும், தொன்னூல் என்னும் இலக்கணமும் பிறவும் செய்து தமிழ்த் தொண்டு புரிந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி யென்பது பெருங்காப்பிய மைந்தனுள் தலையாயது. ஏனை நான்கனுள் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் என்னும் சைவரும், மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் என்னும் தமிழரும் எழுதினர். ஏனை இரண்டும் இறந்துவிட்டன. இவற்றுள் மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களைத் தன்பாற் கொண்டது. சிலப்பதிகாரத்தும் சமண சமயக் கருத்துக்கள் காணப்படும். ஆயினும் சமயத் தொண்டிற்கும் தமிழ்த் தொண்டிற்கும் ஒத்த இலக்கியமாய் விளங்குவது சீவகசிந்தாமணியே யாகும். சூளாமணி, சமண சமயத்தவரும் ஏனைச் சமயத்தவரும் ஒப்பப்போற்றும் தகுதிபுடையதாய் இருக்கிறது. இதனை எழுதிய ஆசிரியர், தமிழ்நாட்டில் நிலவிய புறச்சமயப் பொருள்களையும் சமயப் பொருளையும் கற்று, தம் சமய நூல்களிலும், புறச்சமய நூல்களிலும் ஒத்தவாய் உள்ள கதைப் பகுதிகளைக் கண்டு, அவற்றைத் தமிழ் மக்கட்கு உணர்த்தி அவர் தம் ஆதரவு பெறுவதை நாடிய நல்லறிஞராவர். இதனால், இவர் எழுதிய இந்நூல் இன்றுகாறும் நன்கு போற்றப் பெற்று வருகிறது. சீவகசிந்தாமணியும் இப்பெற்றித் தாய் சைவர் ஒருவரால் உரைகாணவும் பெற்றிருக்கிறது. தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியின்கண், திவிட்டன், விசயன் என்ற இரண்டு அரச குமாரர்கள் வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் வரலாறு வைதிக சமயநூற் கதைகளுள் வரும் வரலாற்றைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இடையிடையே சமண சமயக் கருத்து விரவி நிற்கிறது. எனினும், சிந்தாமணி போல, வைதிக சமயநெறி நிற்பவரும் விரும்பத்தக்க அத்துணை உவமநலம் உடையதன்று என்றே கூறவேண்டும். கண்ணன் கடல்வண்ணன் என்றும், பலராமன் வளை வண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். "பால்நிற உருவிற் பனைக் கொடி யோனும், நீல்நிற உருவின் நேமியோனும் என்றிரு பெருந் தெய்வமும் உடனின்றாங்கு" (புறம் 508) என வரும் திவிட்டனைக் கண்ட மகளிர், "கடலொளி மணிவண்ணன் கனவினில் வந்தெமது, உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான்" (குமார 32) என்றும், விசயனைக் கண்டவர் "வார்வளை வண்ணன் எம் மனத்துளான் பிறர், ஏர்வளர் நெடுங் கணுக்கு இலக்கமல்லானால்" (33) என்றும் கூறினார் என்பர். இதனால் நிறமொத்தல் கூறியவாறாம். கண்ணன் கஞ்சன் விடுத்த குவலயா பீடத்தை அடர்த்தான்; திவிட்டன் அச்சுவகண்டன் விடுத்த சிங்கத்தை வாய்பிளந்தான். கண்ணன் பெருகி வந்த மழையைத் தடுப்பது குறித்துக் குன்றினை யெடுத்துக் குடையாகப் பிடித்தான்; திவிட்டனும் புலவர் ஓதிய வரலாற்றிற்கேற்பக் கொடிமா சிலை என்னும் குன்றத்தை யெடுத்துப் புகழ் நிறுவினான். " எரிமணி கடகக்கை இரண்டு மூன்றியப் பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத் தருமணி நெடுவரை யதனை ஏந்தினான் திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே" எனச் சூளாமணி கூறுகிறது. கண்ணன் பின்னைப் பிராட்டியை மணந்தான்; திவிட்டன் சுயம்பிரபை என்னும் வித்தியாதர மகளை மணந்தான். கண்ணன் சிசுபாலனை ஆழி யெறிந்து வென்றான்; திவிட்டன் அயக்கிரீவனை ஆழி யெறிந்து வென்றான். இவ்வாறு திவிட்டன் செயல் பலவும் கண்ணன் செயல்களோடு ஒத்திருத்தலை, " கோடிசிலை யெடுத்தான் கோளரிமாவாய் போழ்ந்தான் ஆடியல் யானை அயக்கிரீவனை அடித்தான் வீடின் மணியருவி வெண்மலையும் கைப்பிடித்தான் வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே." " வலம்புரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான், சலம்புரி சண்டை தலைபணிப்புக் கண்டான், பொலம்புரி தாமரையாள் பொன்னாகம் தோய்ந்தான், கலம்புரிவண்டடக்கைக் கார்மேக வண்ணனே" என்ற பாட்டுக்களால் இனிது காணலாம். இனி, இப்பெரியோர்களுள் திருத்தக்கதேவர் ஏனை யோரைக் காட்டிலும் உலகியலில் மிக்க தேர்ச்சி யுடையவராக விளங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் தாம் பரப்பக் கருதும் சமயப் பொருள் குறித்த இந்த நூல், தமிழ்நாட்டில் பரவியிருக்கும் சமயப் பொருளைப் புறங்கூறுவதாயிருப்பினும், தம் சமயப் பொருளையே நிரல்படக் கூறுவதாயிருப்பினும், தமிழர்களால் ஆதரிக்கப்படுவது இல்லையாம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அம் மதி நுட்பத்தால், தமிழ்நாட்டிற் பயின்றிருந்த வைதிக சமயக் கதை நிகழ்ச்சிகளை இந்நூற்கண் உவமமுகத்தாற் பயில வழங்கியுள்ளார். அதனால் இந்நூல் சமயக் கொள்கையால் வேறுபட்ட தமிழர் பலராலும் ஆதரிக்கப்பெற்ற தென்பது நாட்டில் வழங்கும் கதை களால் நாம் அறிகின்றோம். இவ்வியல்பினைக் கடைப்பிடியாமை யாற்றான். தேம்பாவணி, சீறாப்புராணம் முதலிய தமிழரிடையே நன்கு வழங்காதிருக்கின்றன போலும். இவ்வியல்பினை மூன்று இயல்களாற் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம். தேவர் காலத்தே, தமிழர் தேவர்கள் இமையா நாட்டம் உடையரென்றும், அவர்கட்கும் அசுரர்கட்கும் பகைமையிருந்து வந்ததென்றும், அதனால் தேவர்கள் அடிக்கடி துன்புற்றனரென்றும், தேவர்கள் திருமாலின் உதவியால் கடல் கடைந்து இனிய அமுதம் பெற்று மகிழ்ந்தனரென்றும் கேட்டிருந்தனர். அந் நிகழ்ச்சிகளைத் திருத்தக்கதேவர் தாம் சமயத் தொண்டு குறித்துப் பாடிய சீவகசிந்தாமணியின்கண் குறித்திருக்கின்றார். கட்டியங் காரன் சச்சந்தனைக் கொல்லக் கருதி அமைச்சரோடு சூழ்ந்த காலத்தில் அமைச்சருள் தருமதத்தன் என்பான் கூற்றில் வைத்து, "இறங்கு கண்ணிமையார் விழித்தேயிருந்து, அறங்கள் வவ்வ அதன்புறம் காக்கலார்" (20408) என்றும், தேவர்கள் கடல் கடைந்து அமுது பெற்ற செய்தியை, பதுமுகன் கோவிந்தையை மணந்து கூடிக் கூறும் நயப்புரையில், “தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர், தாம்பாற் படுத்த அமுதோ” என்றும், அக்கடல் நாகம் கயிறாகக் கொண்டு கடையப் பட்டதென்பதை சீவகன் காந்தருவதத்தையை மணந்தகாலையில், கட்டியங்காரனது ஏவலால், அச்சீவகனை எதிர்த்த வேந்தர் அவனால் அலைப்புண்ட செய்தியை விளக்குதற்கு உவமையாக நிறுத்தி, “அருவரை நாகஞ்சுற்றி ஆழியான் கடையவன்று, கருவரை குடையப்பட்ட கடலெனக் கலங்கி வேந்தர்...உடையலுற்றார்” என்று கூறுகின்றார். இரண்டாவதாக, முருகன் தாமரைப்பூவில் தோன்றியவன் என்றும், அவன் மலைநாட்டுக்குரிய கடவுள் என்றும், அவன் ஏந்திய வேல் வலிசிறந்தது என்றும், அவன் ஆடவரிற் பேராற்றலிலும் பேரழகிலும் மேம்பட்டவன் என்றும் தமிழர் சமயவுலகு கூறிப் பாராட்டி வந்தது. இச் செயல்களைத் திருத்தக்க தேவர், “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” என்றும், “தாமரை அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” என்றும், “மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ” என்றும், “அமருள் ஆனாது, ஒக்கிய முருகன் எஃகம் ஓரிரண்டனைய கண்ணாள்” என்றும், “செம்பொற் கடம்பன் செவ்வேலும்” என்றும், “கதம்பனே முருகன் வேற்போர்” என்றும், “திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன்தான்” என்றும், “வள்ளல் மாத் தடிந்தான் அன்ன மாண்பினான்” என்றும், “முந்து சூர்தடிந்த முருகன் நம்பி என்பார்” என்றும், இவை போலப் பிறவாறும் கூறிச் சிறப்பித்திருக்கின்றார். இவற்றை இடங்கூறி விளக்கலுறின் கட்டுரை விரியும். இனி, சிவபெருமானைக் கூறுமிடத்துப் “போகமீன்ற புண்ணியன்” என்றும், “காரியுண்டிக் கடவுள்” என்றும், “அறவாழி யண்ணல்” என்றும், பிறவும் கூறியும் பாராட்டுவர். பரமன் கண்ணுதலால் காமனைக் காய்ந்த செய்தி “கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரிப்பட்ட காமன்” என்பதனாலும், புரமெரித்த வரலாற்றினை, “கடிமதில் மூன்றுமெய்த கடவுள்” என்பதனாலும், “கணையெரி யழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்” என்பதனாலும், மங்கை பங்கினனாய் நிற்கும் நிலையினை, “பிறையணி யண்ணல் கொண்ட பெண்ணொர்பால் கொண்ட தொத்தார்” என்பதனா லும் பிறவாற்றாலும் புகழ்ந்துள்ளார். இனி, திருமால், பரமன் புரமெரித்த காலத்தில் அம்பாயின செய்தியை, “போகமீன்ற புண்ணிய னெய்த கணையேபோல், மாகமீன்ற மாமதியன்னான் வளர்கின்றான்” என்றும், அவற்குக் கருடப்புள் ஊர்தியென்பதை, “ஆழியான் ஊர்திப்புள்” என்றும், அவன் சக்கரப்படையுடையன் என்பதனை இதனாலும் பெற வைத்தும், திருமால் கண்ணனாய்த் தோன்றிய காலத்து, பாரதப் போரில் சங்கோசை எழுப்பிய செய்தியை, “செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவங் கொண்ட, சங்கு” என்றும், கண்ணனைக் கோறற்குப் போந்த குவலயாபீடமென்ற யானையை அவன் அடர்த்த நிகழ்ச்சியினை, “மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள், கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச், செல்வன் போன்றனன் சீவகன்” என்றும், திருமால் இராமனாகிய காலத்து, அவன் மராமர மேழும் எய்த வில் வன்மையை, “மராமர மேழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லன் என்பது இசையலாற் கண்டதில்லை” என உவமித்தும் மகிழ்கின்றார். மேலும், ஈண்டுக் கூறிய சிவபெருமானும், திருமாலும், தாம் பரவும் அருகமூர்த்தியே எனவும், அவ்விருவரையும் பரவுவோர், அருகனைப் பரவுதல் வேண்டும் என்பார், “ மலரேந்து சேவடிய மாலென்ப மாலால் அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுவார் அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுமேல் இலரே மலரெனினும் ஏத்தாவா றென்னே “ களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவனென்ப, அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல், விளியாக் குணத்துதி நாம் வித்தாலாறென்னே.” என்று மொழிந்திருக்கின்றார். இனி, இவர் காட்டி மகிழ்விக்கும் தமிழ் நூற் சொல்லாட்சி களும், தமிழர் வழக்கவொழுக்கங்களும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின், இஃதோர் பெரும் பரப்பினதாகும். இவ்வாறு, தம் சமயப் பொருளை முற்ற விரித்துரைக்கும் பெருங்காப்பியம் பாடத் தொடங்கியவர், அதனைத் தமிழ் நாட்டவர் பெரிதும் விரும்பியேற்றுப் பேணத்தக்க விரகு அறிந்து அமைத்த அமைதி, அவரது தமிழ் மாண்புலமையினை நன்கு விளக்குகின்றது. மேலும், இவர் காட்டிய நெறியினை இவர்க்குப் பின் வந்தோர் கடைப்பிடித்திருப்பரேல், சமயப் பூசல்களும், பிற தீமைகளும் உளவாதற் கேதுவில்லையாகியிருக்கும். இதுகாறும் கூறியவாற்றால், சமணமுனிவர் சைன சமயத்துச் சான்றோர் என்பதும், அவர்கள் நம் தமிழ்நாட்டில் தம் சமய நெறியை உணர்த்தப் புகுந்தபோது, தமிழர், இப்பெரியார்கட்குப் பல ஆண்டுகள் முன்பே வந்த வடவர் கூட்டுறவால் தம் தமிழ்ச்சமய நெறி மறந்து, வடவர் சமயக் கொள்கையிலும், வடநூன் மரபு களிலும் வேட்கையுற்றுத் தம் தமிழ் வளர்ச்சியைக் கருதாது நின்றனர் என்பதும், ஆயினும் சமண முனிவர்கள் தேவார காலம் வரையில் தமிழ்த் தொண்டு புரிதற்கண் ஊக்கங் கொள்ளாதிருந்தனர் என்பதும், பின்பு அக்காலத்து வாதங்களில் தோல்வியுற்றதன் பயனால், தமிழ்த் தொண்டு புரியத் தொடங்கி, சின்னூல்களும் பெருநூல்களும் செய்தனர் என்பதும், இலக்கணங்களின் சில புதுநெறிக் கருத்துக்களைப் புகுத்தியும், தாம் செய்த நூல்களுள் வேண்டுமிடங்களில் தம் சமயக் கருத்துக்கள் நுழைத்தும் சமயத் தொண்டு விரித்தனர் என்பதும். அதுவே நம் தமிழுக்குப் பெருந் தொண்டாயிற்றென்பது பிறவுமாகும். இந்நெறியைக் கைப்பற்றிய பின் வந்த கிறிஸ்தவப் பெரியார்களும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். இக்காலத்து ஏனைச் சமயத்தவர்களும் இம்முறையை மேற்கொள்வார் களாயின், தங்கள் சமயநெறி வளம் பெறுவதோடு நம் தமிழ் மொழியும் சிறப்பெய்தும் என்பது உறுதி. 12. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு நாம் வாழும் இவ்வினியநாடு இந்திய நாடு என்பதில் நமக்கு இன்பம் எழுகின்றது. இதன்கண் வாழும் நாம் அனைவரும் இந்தியர் என்று எண்ணும்போது, நம் உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சி எழும்பியரும்புகிறது. நமது சமயம், வாழ்க்கை முறை, ஒழுக்கம் என்பனவற்றை நினைந்து எழுதும்போது நம்மையறியாத உவகை கனிந்து ஊறுகிறது. இத்துறைச் சிறப்புக்கு முதலிடமாய், நாம் இருந்து வாழ்தற்குத் தாயகமாய் விளங்கும் நம் இந்திய நாடு ஒருவகையில் வருத்தத்தையும் நல்குகின்றது, நம் கூட்டத்தில் சமயக் காய்ச்சல், வகுப்புப் பூசல் உயர்வு தாழ்வு, தீண்டுதல் தீண்டாமை முதலிய தீக்கோள்கள் நின்று நாம் பெறும் வாழ்க்கை யின்பத்தைச் சிதைக்கின்றன. பிறசமயங்களும், பிறசமயத்தவர்களும் செய்துள்ள நன்மைகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில்நின்று காணவொட்டாது, இவைகள் மறைக்கின்றன; மறைத்தனவர் என்பதைப் பற்றி இனி நினைப்பது பயனில் செய்கையாகும், மறைக்காதிருக்குமாறு செய்தலே செய்யற்பாலதாகும். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காண்பதே நம் அறிவின் கடமையாகும். உயரியபொன் மிகத்தாழ்ந்த மண்ணொடு கலந்து காணப்படுகிறதன்றோ? மிகவுயர்ந்த பாலும் ஒரோ வழித் தீமைபயக்கக் காண்கின்றோமல்லமோ? நன்பொருள் இழிந்தோரிடத்தும், இழி பொருள் உயர்ந்தோரிடத்தும் பெறுகின்றோம்; கெடுபொருள் நண்பர் வாயிலும், நன் பொருள் பகைவர்பாலும் கிடைக் கின்றனவே! இவற்றையுட்கொண்டு, நம் திருவள்ளுவப் பெருந்தகை, “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என மொழிந்தது பொய்யா மொழி யன்றோ! இவ்வுண்மையைக் கற்பதும், பிறர்க்குக் கற்பிப்பதும் செய்யும் நாம், பிற சமயத்தவர் செய்த நலங்களையறிந்து பாராட்டுவது நமக்குக் கடமையாகும். நம்மிலும், “சீறாப்புராணம்” என்னும் தீவிய செந்தமிழ்க் காவியமும், “நாகூர்ப்புராணம்” என்னும் நலஞ் செறி புராணமும் பெற்ற தமிழறிஞர், இசுலாம் சமயத்தவர் நம் தமிழ்க்காற்றிய பெருந்தொண்டினை யறிந்து மகிழும் பெருந்தகைகளாதலின், அவர்கள், இச்சமயத்தவர் நம் இந்திய நாட்டிற்கே செய்துள்ள பெரும் பணிகளைத் தெரிந்து போற்றும் சிறப்புடையவர் எனக் கருதுகின்றேன். இசுலாம் சமயத்தவர் முசல்மான்கள் எனவும், மகமதியர் எனவும் நம் நாட்டில் வழங்கப்பெறுவர். அவர்கள் மேற் கொண்டிருக்கும் இசுலாம் சமயமும் முகமதியமதம் என்றும் கூறப்படும். இச்சமயம், புத்தசமயம், சமணசமயம் போல, இந்து சமயத்தினின்று முளைத்த கிளைச்சமயமன்று; இது, சிறிது காலத்துக்கு முன்பு நம் நாட்டிற்குப் போந்து பரவியிருக்கும் கிறித்தவ சமயத்துக்கும் முன்னர் நம் நாட்டிற்குப் போந்து சிறப்பெய்திய சமயமாகும். நம் நாட்டுச் சமய நூல்களுட் கூறப்படும் அறுவகைப்பட்ட அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச்சமயம் என்ற சமயத் தொகைவகை விரிகளில், இஃது இடம்பெறாமைக்கும் இதுவே காரணமாகும். இதற்கும் கிறித்தவ சமயத்துக்கும் முதற்சமயம் யூதசமயம் என்று கூறுப. அவ்யூதசமயம், இந்தியநாட்டிற் பிறந்து தழைத்த சமயமன்று; அதனால், அதனைப் பற்றி நம் நாட்டுச் சமயக் கணக்கர்கள் ஆராய்ச்சி செய்திலர். பிற்காலத்துப் போந்த சமயப் புலவர்களும் அவ்வராய்ச்சி யினைச் செய்யாதொழிந்தனர். செய்திருப்பா ராயின், நம் சமூகத்தில் பிரிப்பின்றி வாழும் சைனர், புத்தர் முதலியவர்களைப்போல, இச்சமயத்தவர்களும் நம்மொடு பிரிப்பறக் கலந்துகொண்டிருப்பர். ஆனால், இதற்கு வேறு காரணம் கூறுபவரும் உண்டு. ஆயினும் அஃது அத்துணைச் சிறப்பாக இல்லை. அதனையும் பின்னர்க் கூறுவோம். இசுலாம் என்பது ஒருதெய்வக் கோட்பாட்டைக் கடைப் பிடியாகவுடைய பெருஞ் சமயமாகும். புறச்சமயங்களையும் பலதெய்வக் கோட்பாடுகளையும் எவ்வகையிலும் ஏலாதது; பரம் பொருள் ஒன்றைத் தவிரப் பிற எவற்றையும் வணங்குதற்கு மக்களைப் பணியாத பண்பு மேம்பட்டது; கிறித்தவ சமயமும் இந்நிலையில் இதனோடு ஒத்த இயல்புடையது. இவை யிரண்டற்கும் தாய்ச் சமயமாக இருந்த யூதசமயம்போல, இவையுணர்த்தும் இயவுள், ஏனைத் தெய்வங்கள் உளவெனும் எண்ணுதற்கும் இடந்தராத உயர்கடவுள் என்னின் அது மிகையாகாது. “பல்லோரும் பரம்பொருள் ஒன்றே உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசிவாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” என்றே மெய்ம்மைநெறியை உலகில் வற்புறுத்திய பெருநெறி இதற்கே உண்டு. எத்திறத்து மக்களையும் உயர்வு, தாழ்வு இன்றி ஒப்ப எண்ணியொழுக வேண்டும் என்ற உயர்நெறியில் ஒப்பற்ற சமயம் இசுலாம் சமயமே. கடவுளின் அருட்கண்ணின்முன் மக்கள் வேற்றுமை யில்லை என்ற செந் நெறியை உலகில் நிறுவி, யாவரும் அதனைக் கடைப்பிடித்தொழுகச் செய்த முதற்பெருமை இதற்கே உண்டு. இச்சமயம், பண்டைக் காலத்தில், கிறித்து பிறந்த சுமார் அறுநூறு யாண்டுகட்குப்பின், அரபிய நாட்டிற் பிறந்த மகமது என்ற பெருமகனாரால் முதன்முதலாகக் காணப் பெற்றது. அக்காலத்து, அவ்வரபிய நாட்டு மக்களிடையே பொருந்தாச் செய்கைகளும், திருத்தாக் கொள்கைகளும் பலவாய் மலிந்து, உருவ வழிபாட்டின் பெயரால், அந் நாட்டிற்குப் பேரிழிவினைச் செய்து வந்தன. அருள் வள்ளலாகிய இப்பெரியார் அவற்றைக் கண்டு உளம் பொறாது இச்சமயவுண்மையினைக் கண்டு, அம் மக்களை நல்வழியில் தெருட்டித் திருப்பவெண்ணினார். அவர் முயற்சி தொடக்கத்தில் அவரது அருமையுயிர்க்கே இன்னலை விளைவிக்கத் தொடங்கிற்று. அவர்கள் விளைத்த தீமை யினைப் பொறாத அவர், முடிவில், அந்நாட்டின் சீரிய நகரங்களுள் ஒன்றாகிய மெக்கா நகரைவிட்டு நீங்கி மெதினா என்னும் நகருக்குச் சென்றார். அதற்குள் அந்நாட்டவருட்பலர், அவர் தெருட்டியசமயக் கொள்கையை மேற்கொண்டு, அவர் காட்டிய நெறியில் ஒழுகத்தலைப்பட்டனர். அவர்கட்கு மகமதியர் என்றும், அப்புதிய சமயத்திற்கு மகமதிய சமயம் என்றும் பெயர்கள் முறையே வழங்கலாயின. மெக்காவை நீங்கி அவர், மெதினாவுக்குச் சென்ற நிகழ்ச்சி, இன்னும். இஜிரா என்று வழங்குகிறது. அவர் வழங்கிய அருமை மொழிகள், “குர்ஆன்” என்னும் பெயருடைய அருமறையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மகமதியர்கள், அம்மொழிகள் பரம்பொருள், மகமது நபியின் வாய்வழியாக வழங்கியவை என்று கருதுகின்றனர். இந்துக்கள், தங்கள் நான்மறைகளை ஆண்டவனே அருளினான் என்றும், அதனால் அவனுக்கு “வேதங்கள் மொழிந்த பிரான்” எனப்பெயரும் கூறுபவராகலின், அவர்கட்கு இதன்கண் புதுமையொன்றும் தோன்றாது. “அருள்நெறி” யாகிய அச்சமயமும், அருள் நெறியை உணர்த்தும் இயல்பு பற்றி “இசுலாம்” சமயம் என்றே வழங்கப்பெற்றது. இச் சமயம் வளர வரள, அரபியர் இடையில் இருந்த தீநெறிகளும் தீயொழுக்கங்களும் நீங்கின; அவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரெனவுணர்ந்து தம்முள் ஒற்றுமையுண்டு பண்ணிக் கொண்டனர். தங்கட்குப் பெருநலம் செய்த இச்சமயவுணர்வை நிலவுலகில் யாண்டும் பரப்ப வேண்டு மென்ற வேட்கைமிக்கு, ஒரு நூறு யாண்டுகளுக்குள், பாரசீகம், துருக்கித்தானம், ஆப்கனித்தானம் என்ற இன்னோரன்ன நாட்டு மக்கள் அனைவரையும் மகமதி சமயத்தவராக்கிக் கொண்டனர். பாரசீகரும், நம் இந்திய நாட்டின் வடபகுதியில் அக்காலத்து மல்கியிருந்த ஆரியர்களைப் போல, தீயினைக் கடவுளாகக் கருதி வழிபடும் வழக்குடையராயிருந்தவர்கள். அவர்களுட் சிலர் இம்மகமதிய சமயத்தைமேற் கொள்ளாதவராய், இந்தியநாட்டுட் புகுந்து குடியேறினர். மகமதியரும் நெடுங்காலம் வரையில், இப் பாரசீகருடனும், தார்த்தருடனும், ஏனைய வடபுலத்த வருடனும் போர் நிகழ்த்திய வண்ணமேயிருந்தமையின், நம் இந்திய நாட்டில், இப்பொழுதைக்குச் சுமார் தொள்ளாயிரமாண்டு கட்குமுன் வரமாட்டாது நின்றனர்; பின்னரே, அவர்கள் நம் இந்திய நாட்டிற்கு வரலாயினர். இவர்கள், இந்நாட்டிற்கு வருதற்கு முன்பே பாரசீகருட் சிலர் போந்து குடியேறி விட்டனர் என்று முன்பு கூறியுள்ளோம். அவர்கட்கு முன் வேறுபல நாட்டினரும் வந்து இங்கே குடிபுகுந்திருந்தனர். அவர்கட்கும், மகமதியர்கட்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. முன்னே வந்தவர்கள் தம் சமய வுணர்வை நாட்டிற் பரப்பவேண்டு மென்ற நோக்கமுடைய வரல்லர்; இவர்கட்குப் பின்னர்ப் போந்த ஐரோப்பியரும் அவ்வாறு வந்தவரல்லர்; இவர்கள் மட்டில் சமயத் தொண்டினைக் குறிக்கோளாகக் கொண்டு வந்தனர் என்பது பல சான்றுகளால் விளங்குகின்றது. மேலும் இவர்கட்கு முன்னே போந்தவர், நம் நாட்டிற் குடி புகுந்து வாழ்ந்திருந்த ஏனை மக்களோடு கூடி, ஒருமையுற்று, அவர்கட்குரிய ஒழுக்கம், வழிபாடு முதலிய நெறிகளைத் தாமும் ஏற்று, இந்தியரோடு இந்தியராய் இயைந்திருந்தனர். அவர்கள் யவனர், ஸ்கிதியர், மங்கோலியர், பார்த்தியர் முதலிய பலராவர். அவர்கள் நாட்செல்லச் செல்ல, இந்துக்களுள் இந்துக்களாய், தம் பெயர், மொழி, சமயம், ஒழுக்கம், உடை, மனப்பான்மை என்ற பலவற்றினும் ஒன்றிவிட்டனர். கிறித்து பிறப்பதற்கு இரு நூறுயாண்டுகட்கு முன் இந்நாட்டிற்குப் போந்த கிரேக்க தூதர் ஒருவர், இந்நாட்டிற் பலவிடங்களுக்குச் சென்றார். அவர் தந்தை (Dion) என்றும், அவர் பெயர் ஹீலியோ டோரஸ் (Helio dorus) என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு சமயம் வடநாட்டிலுள்ள திருமால் கோயில் ஒன்றிற்குச் சென்று, அவரை வழிபட்டு, அம்மட்டில் நில்லாது, ஒரு “கோபுரமும்” எடுப்பித்தார். பின்னர், அவர் ஒரு வைணவ பாகவதராய், திருமாலை வழிபட்டு வந்தார். இவரைப் பின்பற்றிப் போந்தவர் பலரும், இவ்வண்ணமே வழிபாடு செய்வது வேற்றுநாட்டு மக்கட்கும் இயைந்ததாகும் என்று கருதினர். இச்செய்தி பேஸ் நகரி (Bas nagar) லுள்ள தூணிற் செதுக்கப் பெற்றிருக்கும் கல்வெட்டினால் நமக்குத் தெரிகின்றது. மகமதிய சமயத்தினர், நம் நாட்டிற் புகுந்தபோது, இக்கருத்து நம் நாட்டில் நிலவியிருந்ததாயினும், இவர்கள் அதனை மேற் கொள்ளவில்லை. இசுலாம் சமயம் கூறும் “அல்லா” திருமாலின் பல்வேறு பிறப்புக்களுள் ஒன்றாம் என்றும், இச் சமய வுண்மைகளை யுலகிற்கு வழங்கியருளிய மகமது பெருமானைத் திருமாலடியாருள் ஒருவரென்றும் கூறி, இந்துக்கள் இவர்களைத் தம்முள் ஒருவராக இயைத்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். வடமொழியுள் வல்லுநர், “அல்லோப நிஷத்” என்றொரு நூலை யெழுதி, மகமதிய வேந்தருட் சிறந்தவரான அக்பர் என்ற பெயர் கொண்ட அரசர் பெருமானை, “அவதார மூர்த்தி” என்றும் சொல்லத் தொடங்கினர். ஆயினும், மகமதியர், இவை, தம் சமயக் கருத்துகட்கு முரணாதல் கண்டு, இவற்றை அறவே ஏலாராயினர். அவர்கள், இந்துக்களாற் செய்யப்படும் “சடங்கு” களையும் உடன் பட்டிலர். “பல தெய்வ வழிபாடு செய்பவர் தூயரல்லர்; தூயதல்லாத யாதும் காபாவில் புகுவதும் தீது” என்று குர்ஆன் மொழிவதை அவர் விடாது போற்றினர். இவ்வாறு, திண்ணிய சமயவுணர்வினைக் கொண்டிருந்த தனால், இவர்கள், நம் நாட்டிற் புகுந்து குடியேறிய பின்பும், தமது வழக்கம், ஒழுக்கம், பெயர், மொழி என்ற பலவகையிலும் இந்துக் களிற் பிரிந்தே யிருந்து வரலாயினர். ஒரே நாட்டிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த போதும், அவர் இந்நாட்டவரோடு கலப்பின்றியே இருந்தனர். இவ் வேறுபாட்டை நீக்கிக் கலப்பையுண்டு பண்ணும் துறையில் எம்முயற்சியும் பயன்படாது போயிற்று. இந்திய நாட்டிற் புகுந்து குடியேறி வாழ்ந்துவரும் இந்திய மகமதியர் அனைவரும், தம் சமயவுணர்வு நெகிழாது போற்றி வந்தனர். அதனால், அவர் தம் உள்ளம், அவரது சமயம் பிறந்த நாட்டையே நாடி நிற்பதாயிற்று; நாடோறும், அவர்கள் செய்யும் கடவுள் வழிபாட்டிலும், தொழுகையிலும் அவர்தம் முகம் அரபியநாட்டு மெக்காவையே நோக்கி நிற்கிறது; அவர்தம் மனப்பான்மை, ஒழுக்கமுறை, ஆட்சி முறை, சமயக் கல்வி ஆகிய யாவும் அரேபியா, சிரியா, பாரசீகம், எகிப்து என்ற இந்நாட்டு இயல்பினவாகவே இருக்கின்றன. இவர் களுடைய சமய மொழி, சமய சகாப்தம், இலக்கியம், ஆசிரியன்மார், அடிகண்மார், கோயில்கள் என்றயாவும் ஒரே வகையாகவே இருக்கக் காண்கின்றோம். இவர்கள், இந்நிலவுலகில் எப்புறத்தில் வாழினும், இவையெல்லாம் ஒரு பெற்றியவாய் இருப்பது காணப்படுமே தவிர அவ்வந்நாட்டு எல்லைக்கு அகப்பட்டு, ஆங்கே அடங்கி ஒடுங்கியிருத்தலைக் காண்டல் அரிது. இவர்தம் வருகைக்கும், இவர்கட்கு முன்போந்த ஏனையோர் வருகைக்கும் இருந்த வேறுபாடுகளுள் மேலே காட்டியது தலை சிறந்ததாகும். இதனோடு ஒப்பப் பிறிதொரு வேறுபாடும் உண்டு. நம் நாட்டிற்கு வந்த மகமதியர்கள், ஆயிரத்து இருநூறு முதல் ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுவரையில், அரசியல், சமூகவியல் என்ற எல்லாவற்றிலும், போர்த்திறமும் நாடோடிகளாய் நிலை யின்றித் திரியும் திறமுமே நிரம்பப் கொண்டிருந்தனர். பாசறையிற் றங்கும் அரசர் தானைபோலவே, மகமதிய அரசியற் றலைவர்களும் ஆங்காங்கு இருந்துவந்தனர். ஒரு நிலையாய்த் தங்கி, நாடு நகரங் களைச் சீர்செய்து, அரசியலின் நிலைமையை நிறுவி, நாடுகாத்தல், தீயரை யொறுத்தல் ஆகிய செயல்களோடு சமூகத்துறையிலும் நலம் பல செய்யத் தொடங்கியது பிற்காலத்தில்தான் நிகழ்வதாயிற்று. கலப்பு மணம், சமயக்காய்ச்சலின்மை, ஒத்தவுரிமை முதலிய பல நன்மைகளும் பின்னரே உண்டாயின. உயர்ந்தோர்களிடத்தில் ஒருகுறை உண்டாகுமாயின், அது விரைவில் உலகறியப் பரந்துவிடும். அவ்வண்ணமே, ஒருவன் செய்த குற்றம் உலகறியத் தோன்றி நிலைபெறு மாயின், அவன் - பால் ஒருவகைச் சிறப்புண்டென்பது துணிந்துகொள்ளலாம். அம்முறையே, மகமதிய மன்னர்கள் காலத்துச் சிறுசெயல்கள் சில, இந்திய நாட்டு வரலாற்றுச் சிறு நூல்களுட் காணப்படுமாயின், அவற்றைக் கொண்டே, அவர்பால் அமைந்திருந்த பெருமை இனிது உணரப்படுகின்றது. தன் உயிரைக் கொல்லுதற்குப் போந்த அரச புத்திரன் ஒருவனைப் பொறுத்து வீரனாக்கிச் சிறப்பித்த ஆண்டகை பாபர் வேந்தரை அறியாதார் யாவர்? இந்து சமயத்தவரையும் மகமதிய சமயத்தவரையும் ஒப்பமதித்து உயர்நலம் புரிந்த அரசர் பெருந்தகையான அக்பரை அறியாதவர் அறிவு பெறாதவர் அல்லரோ? அப்பெருந் தகைகள் ஆற்றியுள்ள நலம் பலவும் எழுதப்புகின், இக்கட்டுரை வரம்பின்றி விரிவதல்லது அவர்தம் புகழ்நலம் அடங்கிவிடும் என எண்ணுவது சிறுமையன்றோ? இந்நலமனைத்திற்கும் அடிப்படையாகவுள்ளது இசுலாம் சமயத்தின் இயல்பே என்பதை மறத்தல் ஆகாது. இந்தியநாட்டின் தென்பகுதியாகிய நம் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடைவேந்தர் மூவருள் சோழர்கள் காலத்தில், நிலப்படையுடன் கடற்படையும் இருந்து நாடுகாத்துவந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததாகும். “காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளிய” இராசராசன் முதலிய சோழமன்னர்கள், கடற்படை கொண்டு சென்று பகைப்புலங்களை வென்றனர். அவர்கட்குப் பின் வந்த சோழமன்னர்கள் வீழ்ச்சியடையவே, கடற்படையும் கெட்டழிந்தது. பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் அவர்கள் காலத்திற்குப்பின் கிடைப்பது அரிதாகியது. ஆயினும் இக்கடற் படையும், பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் இம் மகமதிய மன்னர் பெருமக்களால் மறுவலும் உண்டாயின. நம் இந்தியநாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்த சமய காலத்தில் ஏனை நாடுகளிற் பரவி அவற்றோடு சீரிய தொடர்பு பெற்றிருந்தனர். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தொடர்பை நெகிழ்த்து, தம் நாட்டெல்லைக்குள்ளேயே அடங்கியமைந்து விட்டனர். அதனால், இந்நாடு தன்னிலையில் அடங்கி, பிறவற்றோடு தொடர்பின்றித் தனிப்பதாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இசுலாம் சமயத்வரின் பெருந்துணையால், அத்தொடர்பினை மீட்டும் நம் நாடு பெற்றது; ஆயினும் அத்தொடர்பு பண்டே யிருந்தது போன்றில்லை. புத்த சமய, காலத்தில் நம் நாட்டவர் வேறு நாடுகட்குச் சென்றதுபோல, இக்காலத்தில் செல்வது ஒழிந்தனர். பல ஆயிரக்கணக் கினரான வேற்று நாட்டுமக்கள் நம் நாட்டிற்கு வரத்தொடங்கினர். மகமதிய சமயத்தவர் மாத்திரம் வேறு நாடுகட்குச் சென்று வருவதை மேற்கொண்டிருந்தனர். இவர் தம் அரசியல், பதினெட்டாம் நூற்றாண்டில் தளர்ச்சி யடைந்து வீழ்வுற்றது நாம் அறிவோ மன்றோ? அதுவரையில், வடமேற்குக் கணவாய்களின் வழியாகப் பொகாரா, சாமல்கண்டு, பால்கு, குராசான், கிவாரிசும், பாரசீகம் என்ற நாடுகளிலிருந்து மக்கட் கூட்டம் நம் நாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அந்நாளில் ஆப்கானித்தானமும் டில்லி வேந்தரின் ஆட்சியில்தான் அடங்கியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜஹாங்கீர் என்னும் மன்னரது ஆட்சிக்காலத்தில், நம் இந்திய நாட்டிலிருந்து போலன் கணவாய் வழியாக ஆண்டு தோறும் 14000 ஒட்டகச் சுமையளவினவாய பொருள், கந்தகார், பாரசீகம் என்ற நாடுகட்குச் சென்றன. “மேலைக்கடற் கரையில் இருந்த பட்டினங்கள் (Sea ports) வெளிநாட்டுக் கடற் போக்கு வரவுக்கு வாயில் திறந்திருந்தன. கீழைக்கடற்கரைப் பட்டினங்களுள், மசூலிப்பட்டினம் ஆயிரத்து அறுநூற்றேழாம் ஆண்டுவரைக் கோல் கொண்டாவை யாண்ட சுல்தான்களுக்கு உரியதாயிருந்தது. அதற்குப் பின்பே அது முகலாய வேந்தர்கட்கு உரியதாயிற்று. அப்பட்டினத்திலிருந்து, இலங்கை, சுமித்திரை, சாவகம், சீயம், சீனம் என்ற நாடுகட்கு வாணிபம் பேணி, வங்கங்கள் பல சென்ற வண்ணமிருந்தன என முகலாயராட்சி (Moghul administration) என்ற நூல் கூறுகின்றது. வட நாட்டில் முகலாய முடிமன்னர்களின் ஆட்சி நிலவிய காலம் இருநூறுயாண்டுகளேயாகும்; ஆயினும், அக்காலத்தில் நம் நாட்டிற்கு உண்டாகிய நலங்கள் பலவாகும். பல வேறு வகை மொழி வழங்கும் நாட்டிற்கு அரசியல் மொழி யொன்று பொதுவாக வேண்டப்படுவதாயிற்று. அஃது அந்நாட்டு மொழிகளுள் ஒன்றாயின், பிறமொழி பேசுவோர் கூட்டத்து அமைதி உண்டாகாது எனவுணர்ந்து, இம்மன்னர்கள் தமது பாரசீக மொழியினையே அரசியல் மொழியாக வகுத்தனர். பின்னர் அது பலர்க்கும் தாய் மொழியாம் நிலைமையினையும் அடைவதாயிற்று. அதனால் ஆட்சிமுறையும் நாணயச் செலாவணியும் ஒருமுறையாய் நடை பெறலாயின. இன்றும், கச்சேரி, ஜில்லா, தாலுகா, பிர்க்கா, தாசில்தார், உசூர் என வழங்கும் சொற்கள் பலவும் அவர்தம் ஆட்சிநெறியின் ஒருமை முறையினை விளக்கும் அடையாளங் களாகும். நாட்டு மக்களிடை ரெக்டா எனப்படும் இந்துத்தானி மொழி வழங்கி வந்தது. இவர்கள் காலத்தில், விந்தவரைக்கு வடக்கிலுள்ளநாடு, பல சிற்றரசர்க் குரிமையுற்று, பல சிறு நாடுகளாகப் பிரிந்து, எப்பொழுதும் போரும் பூசலும் நிகழும் அமர்க்களமா யிருந்தது, அவர்களையடக்கி, அரசிற்குரிய அமைதி பெறுவித்ததோடு. அவர் தம் நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவுவித்தனர். தம் சமயத்தை நாட்டில் பரப்புதல் வேண்டும் என்ற கருத்து இவர்தம் மனத்தில் மிக்கிருப்பினும், அரசு கட்டில் ஏறி மக்கட்கு நலம் செய்வதும் சிறப்புடைப்பணி யாகலின், இவர்கள் அத்துறையினும் சீரிய அறமே புரிந்து போந்தனர். அந்நாட்டில், பெரும்பாலும் ஒரு நெறிப்பட்ட ஆட்சிமுறையும், பொது மொழியும் நிலவச்செய்த இப்பெருமக்களின் திருப்பணியால், இடந்தோறும் மொழி, உடை முதலியவற்றில் வேறுபட்டுக் கிடந்த இந்திய மக்கள், தவ சமூக வொழுக்கம், உடை முதலிய அவற்றுள்ளும் ஒருமை நெறியை மேற்கொண்டனர். நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவவே, மக்கள் தம் தாய்மொழியிலும் மிக்க பயிற்சி கொண்டு சிறந்த இலக்கியங்கள் செய்தனர். இன்பமும், அமைதியும் உரிமையும் நிலவும் நாட்டில்தான் உயர்ந்த இலக்கியங்களும், அரிய கருத்துக் களும் பிறக்கும் என அறிஞர் கூறுவர். இவர்கள் காலத்தில் இவை மிகப் பெருகி நாட்டிற்குச் சிறப்பு நல்கின. தான் அடைந்த முதுமையினைத் தான்பெற்ற மகனுக்கு நல்கி, அவனது கட்டிளமையைத் தான் பெற்று மகிழ்ந்த அரசர்கள் இந்துக்களில் இருந்தனர். தம் வரலாற்றினைத் தாமே வரைந்த அரசர் பாபர் பெருமான். நாட்டில் வழங்கிய நாணயங்கள், சகடக்கால் போல் மக்கள் கையகத்து நில்லாது பெயரும் நீர்மையவாயினும், அவர்களால் காதலித்துப் போற்றப்படும் இயல்பறிந்து அவற்றின் வழியாக அறத்தைப் பரப்பி நிறுவிய அறிவுநலம் இவர்கள்பால் இயல்பாகவே அமைந்து கிடந்தது. ‘நல்லது செய்வது ஆண்டவனுக்கு அளவிறந்த உவப்பைத் தருவது; நடுநிலை திறம்பாது நன்னெறியிற் சென்றோர் கெடுவதிலர்; கெட்டார் என யாம் கேட்டதுமில்லை” எனப் பொறித்த நாணயங்கள் இவர்கள் காலத்தில் அறநெறி வழங்கி மக்களை அறிவுடையராக்கின. “அயின் அக்பரி” என்ற அரசியல் நூல் அக்பர் என்னும் அரசர் பெருந்தகை காலத்தில் பிறந்த தென்பது சிறுமகாரும் அறிந்த செய்தி யாகும். போர்த்துறையில் பலதிறமானபயிற்சிகளும், நாகரிகத்தில் சிறப்பும், கல்வியில் பெருமாண்பும் நல்கிய இவர் தம் காலத்தில், கைத்தொழிலும், சிற்பமும் பிறவும் உலகு புகழ் உயர்வு பெற்றன. இந்திய சீனக்கைவேலை யமைப்புக்கலந்த இந்துசாரசன் கைத் திறங்கள் நாட்டில் வளம் பெற்றன. புதிய புதிய சிற்பத் தொழில்கள் அரசர் ஆதரவு பெற்றன. “புகை முகந்தன்ன மாசில் தூவுடை” எனவும், “நோக்கு நுழைகல்லா நுண்மையபூக் கனிந்து, அரவுரியன்ன அறுவை” எனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் செய்துதவியது போன்ற நுண் வினையுடைகளும், மெல்லிய பட்டாடைகளும் இவர்கள் காலத்தே வளம்பெற்று உலகு புகழும் ஒண்பொருளாய்ச் சிறந்தன. கம்பளிகளும், பின்னல்களும், கின்காப் (Kin khab) என்பனவும், “நுரைகவர்ந்தன்ன மென்பூங்கம்பல”ங்களும் புகழ்வோர் புலவரையிறந்து விளங்கின. இந்த இசுலாம் சமயப் பெருமக்களால் நம் நாட்டில் விளைந்த நலங்கள் பலவும் எளிதில் கண்டுகோடற்கென ஒருவாறு திரட்டித் தந்து இக்கட்டுரையினை முடித்துக் கொள்ளுகின்றோம். 1. சோழ வேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின் கெட்டழிந்திருந்த கடற்படையும் பிறநாட்டுக் கூட்டுறவும் பண்டேபோல் மீட்டும் தோற்றம் பெற்றுச் சிறந்தன. 2. விந்தியவரைக்கு வடக்கில் உள்ள நாட்டில், இவர்தம் வினைத் திட்பம், ஆட்சி நெறி, நன்மனப் பண்பு என்பவற்றால் அமைதியும் இன்பமும் நிலவுவவாயின. 3. தாம் வென்று அடிப்படுத்தி நாடெங்கும் ஒரு தன்மையும், ஒருநெறியும் பொருந்திய ஆட்சிமுறை இவர்கள் காலத்தே நாட்டில் நடைபெறுவதாயிற்று. 4. உயர் வகுப்பினருள் சமய வேற்றுமை யிருந்ததெனினும், சமூகவொழுக்கம், உடைமுதலியவற்றில் மக்கட்கிடையே ஒற்றுமை யெய்தி யிருந்தது. சமய வேற்றுமையும் காய்ச்சலும் பூசலுமாய் மாறியது பேரரசப் பெருந்தகைகள், காலத்தில் இல்லை. 5. இந்துத்தானியென்றும், ரெக்டா என்றும் கூறப்படும் மொழி பொதுமொழியாயிற்று; அரசியற் பொதுமொழி பாரசிக மொழி. 6. அவ்வந்நாட்டுத் தாய்மொழிகள், அமைதியும் இன்பமும் நிலவியதன் பயனாய் வளம்பெற்றன. வரலாறு கூறும் நூல்களும், அரசியல் நூல்களும் நல்லிடம் பெற்றுத் திகழ்ந்தன. 7. பல தெய்வக் கொள்கையும் வழிபாடும் கூறும் சமயநெறி கட்கிடையே ஒரு தெய்வக் கொள்கையும் வழிபாடும் அறிஞர் மனத்துள் வேரூன்றி விளங்கின. அதனால், சில சமயங்கள் சீரிய திருத்தம் அடைந்தன. 8. போர்முறையிலும், நாகரிகவளர்ச்சியிலும் பல்வகை நலங்கள் இவர்களால் நம் நாடு பெற்றுச் சிறப்படைந்தது. 9. இந்துசாரசன் கைத்திறங்களும், சிற்பத் திறங்களும் பெரு மக்களின் ஆதரவு பெற்றன. பொன்னும் மணியும் செறிந்த நுண்மாண்கைவினைகள், இவர்கள் காலத்திற் பெற்றது போல் பிற எக்காலத்தும் மேம்பாடு பெறவில்லை யெனின், அஃது இறப்பப் புகழும் புகழ்ச்சியாகாது. 10. பட்டினும் பருத்தியினும் ஆய உடைவகைகள் நெய்தலும், கம்பல நெசவும் பிறவும் இந்த இஸ்லாம் சமயத்தவர் நம் இந்திய நாட்டில் செய்த இனிய தொண்டினால் மேன்மையடைந்தன. இக்கூறிய நலங்கள் அனைத்திற்கும் உரியராய் விளங்கும் இப்பெருமக்களின் நற்புகழ் இந்நிலவுலகில் என்றும் நின்று நிலவுக என வாழ்த்தி இக்கட்டுரையை இவ்வளவில் நிறுத்துகின்றோம்.  13. தமிழகம் - வடவெல்லை 'நம் தமிழகத்துக்குத் 'தமிழ் உலகம்' என்ற பெயர் தொல்காப் பியத்துக்குப் பனம்பாரனார் என்பவர் எழுதிய பாயிரத்தில் காணப் படுகிறது. அவர், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்று உரைக்கின்றார். உலகம் என்பது பொதுவாக நாம் வாழும் நிலவுலகம் முழுதும் குறிக்கும்; ஆயினும் "மைவரை யுலகம்," "காடுறை யுலகம்," "பெருமணல் உலகம்" என்றாற் போல, அது நிலவுலகத்தின் பல்வேறு பகுதிகளையும் குறிப்ப துண்டு. அதுவே நாடு என்ற பெயரால் பெரிதும் வழங்கும். இவ்வகையில் தமிழ் உலகம் என்பது தமிழ்நாடு என்றே பொருள்படும். தமிழ் நாட்டைத் தமிழ் உலகம் என்று வழங்கியதோடு தமிழகம் என்றும் வழங்குவதுண்டு. இதனால், தமிழர் வாழும் தென்னாடு, தமிழகம், தமிழ் உலகம், தமிழ் நாடு என்ற பெயர்களையுடையது என்பது தெளிவாம். தமிழகத்துக்கு வடவெல்லை வேங்கடமும், தென் எல்லை குமரியும் கிழக்கும் மேற்கும் கடலும் எல்லைகளாக உள்ளன. எல்லை பற்றிய பேச்சு நிகழும் போதெல்லாம் அறிஞர்கள் தென் குமரியைப் பற்றியே பெரிதும் எடுத்துப் பேசுவர். வடவேங்கடம் தமிழர் வாழிடமாயினமையின், அதனைப் பற்றி ஒன்றும் கூறுவ தில்லை. ஒருகால் ஏதேனும் பேச வேண்டின், வேங்கடமலையில் வீற்றிருக்கும் தெய்வம் திருமாலா, முருகனா என்று ஆராய்ந்து பேசுவது வழக்கம். மலைகள் முருகன் உறையும் இடமாகலின், வேங்கடத் தெய்வம் முருகனே; அதுவே பிற்காலத்தே திருமாலாகி விட்டது என்பர் சிலர்; இளங்கோவடிகள் காலத்தேயே வேங்கடத் தெய்வம் திருமால் என்பது தெளிவாக இருத்தலால் வேங்கடம் திருமாலுக்கே உரியது என்பர் சிலர். வேங்கடம் தமிழகத்தின் வடவெல்லை என்பதில் யாரும் ஐயுற்றது மில்லை; ஆராய்ச்சி மேற்கொண்டது மில்லை. தமிழகத்தில் தமிழரது பண்பட்ட வாழ்வு தோன்றிய அன்று முதல், மேனாட்டவர் ஆட்சி தோன்றி மறைந்த நாள் வரை, நம் தமிழகத்தின் வடவெல்லையைப் பற்றித் தமிழர் எடுத்துப் பேசவேண்டிய இடம் இல்லாமல் இருந்தது. தமிழ் நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த ஆந்திரர்களும் தென் பகுதியில் வாழ்ந்த தமிழர்களும் சென்னை மாநில ஆட்சி முறையில் ஒருசேர வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். இப்போது வேற்று நாட்டவரது ஆட்சி நீங்கி விட்டது. நம் நாட்டு நம்மவரே ஆட்சி செய்யும் நலம் பெற்று விட்டனர். இந்த ஆட்சி இனிதே இயங்கி மக்கட்கு வேண்டும் நன்மைகளைச் செய்தற்கு மொழி வழியாக நாடுகள் தம்முட் பிரிந்து இயல வேண்டும் என்ற கொள்கை உணரப்பட்டது. மக்களின் வாழ்வு கருதி மக்களே முன்னின்று நடத்தும் மக்களாட்சி அம்மக்கள் அறியாத மொழியில் நடப்பது என்பது போலியரசாம் என்று அரசியல் அறிவு வற்புறுத்துவ தாயிற்று. மொழிவழியாகப் பிரிந்து இயங்கும் இயக்கமே மக்களிடையே ஒருமைக் கருத்து வளர்வதற்கு ஏற்றதாம் என்ற கருத்தை முன்கூட்டி யுணர்ந்த காங்கிரசு இயக்கத் தலைவர்கள், பல்லாண்டுகட்கு முன்பே மொழிவழியாக ஆந்திர மாகாணக் காங்கிரசு, தமிழ்நாடு காங்கிரசு, கேரள மாகாணக் காங்கிரசு எனப் பிரித்துத் தமக்குரிய பணியை ஆற்றி வெற்றியும் வீறும் எய்தக் கண்டனர். இதுவும், நாடுகள் மொழிவழியாகப் பிரிந்துநின்று அரசியலை நடத்துவது நல்லது என்ற கருத்தை வலுப்படுத்துவதாயிற்று. இவ்வாற்றால் ஆந்திரரிடையே ஆந்திர நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்ற கிளர்ச்சி தோன்றிற்று. எவ்வகைக் கிளர்ச்சிக்கும் வழக்கம் போல் தோன்றும் தடைகள் இதற்கும் எழுந்தன. முடிவில் ஆந்திரமாநாடு பிரிய வேண்டிய இன்றியமையாமை பிறந்தே போயிற்று. ஆந்திரநாடு பிரிவதென்றால் அதற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் நிறுவ வேண்டிய எல்லையைப் பற்றிய செய்தி முன்னணியில் வந்து நின்றது. ஆந்திர மாகாண அரசியல் தலைவர்களும் அவர்வழி நின்ற தொண்டர்களும் அவர்நாட்டுத் தென்னெல்லயைப் பற்றிப் பேசித் திரிவாராயினர். அவர்கள் பேச்சில் வீண்வம்பு விளையத் தக்க கருத்துக்களும் இடையிடையே பிறந்த வண்ணம் இருந்தன. தமிழகத்தின் முடிமணியாய் மேனாட்டவர் காலத்தில் புதிது தோன்றித் திகழும் சென்னைமாநகர் ஆந்திரருக்குரியதா, தமிழருக் குரியதா என்ற வினா வொன்றை எழுப்பி மக்களிடையே மனக் குழப்பத்தைச் சில அறிஞர்கள் உண்டாக்கத் தலைப்பட்டார்கள். அவருட் சிலர், நாட்டு வரலாற்றின் பெயரை இழுத்துக் கொணர்ந்து தமது பேச்சுக்கு ஆதரவு காட்டுவாராயினர். நெடுநாள்காறும் மடியுற்றிருந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள். அது கேட்டதும் மடிமை நீங்கி விழித்தெழுந்து, "சென்னைமாநகர் ஆந்திரர்கட்குரிய தென்று சொல்லுவது பொருந்தாது; அது தமிழருக்கே உரியது" என்று சொல்லத் தொடங்கினர். அதன் பின் ஆந்திரரது சென்னை மாநகர் பற்றிய ஆரவாரம் அடங்குவதாயிற்று. உலக நாடுகளில் வாழும் மக்களுள் தமது நாட்டுத் தமது வரலாறு அறியாத மடவோர் கூட்டம் ஒன்று இந்த இருபதாம் நூற்றாண்டிலும் உளது என்றால், அது தமிழர் இனத்தின் வேறாக இருக்க முடியாது. "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி" தமிழர் குடி என்று பழந்தமிழ் நூல்கள் பாரித்துரைக்கினும் செவியிற் கொள்ளார்; ஏனை நாட்டவரது வரலாற்றை ஏடு ஏடாய்ப் புரட்டிப் படித்து நெட்டுருச் செய்வர்; தமது நாட்டு வரலாற்றைக் கண்ணெடுத்தும் பாரார்; மேனாட்டு வரலாற்றுப் பெருமையையும் ஏனைக் கீழ்நாட்டு வரலாற்றுக் கிளர்ச்சியையும் தேனும் பாலும் போன்ற செஞ்சொற் களால் சிறக்கப் பேசிப் பிறங்குவர்; தமது நாட்டு வரலாற்றை எடுத்துரைக்க வாயின்றி ஊமையராய் நிற்பர். இவர்களது இச் செயலைக் கண்டே தேசிய கவி பாரதியார், "பாமரராய் விலங்கு களாய்," "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்," "நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?" என்று வயிறெரிந்து பாடினார். இடைக் காலத்தில்தான் இது நிலைமை என்றால், இன்றும் அதுவே நீடித்து நிற்கிறது. நாட்டு வரலாற்றறிவு நாட்டு மக்களின் அரசியல் வாழ்வை எத்துணை உயர்ந்த நிலைக்குக் கொணர்ந்திருக்கிறது என்பதை மேலைநாட்டு வரலாற்றறிவு நிரம்பப் பெற்ற தமிழர் உணராமல் இல்லை. என்றாலும், பிறர்க்கு அஞ்சி அஞ்சி யொடுங்கும் கீழ்மைப் பண்பு எங்ஙனமோ இவர்களைப் பற்றிக்கொண்டுளது. தென்னிந்திய வரலாறு காண்போர்க்கு மிகப் பழமையான வரலாற்றுச் சான்றாகத் தொல்காப்பியம் முற்பட்டு நிற்கிறது. தமிழ்நாட்டின் எல்லைக் குறிப்பாக, அந்நூலின்கண் பனம்பாரனார் என்பார், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்று கூறியதை முன்பே காட்டியுள்ளோம். இதன் கருத்து, தமிழகத்துக்கு வடவெல்லை வடவேங்கடமும் தென்னெல்லை தென்குமரியுமாம் என்பது. மேற்கும் கிழக்கும் எல்லை கடலாதலால் அவை பனம்பாரனாராற் கூறப்பட வில்லை. வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லை இரண்டனுள் தென்குமரியைப் பற்றி ஆராய்ச்சியாளர் பல செய்திகளை விரியக் கூறியிருக்கின்றனர். தென்குமரி யென்பது குமரிக்கோடு என்ற மலையையும் அதனைச் சார்ந்து ஓடிய குமரியாற்றையும் குறிக்கிறதெனத் தெளிவுபடுத்தி யுள்ளனர். தமிழ் பயிலும் மாணவர் அனைவர்க்கும் இது நன்கு தெரிந்த செய்தியாகும். இவ்வாறே வடவேங்கடத்தைப் பற்றிக் கூறியோர், அது திருமால் எழுந்தருளியிருக்கும் திருமலைத் திருப்பதியாகும் என்பதோடு அமைந்து போயினர். வடவேங்கடமலை திருமலைத் திருப்பதியோடு நில்லாமல் திருக்காளத்தி வரையும் கிழக்காகத் தொடர்ந்து சென்று, பின்பு வடக்கு நோக்கி வட பெண்ணையாற்றங்கரை வரையில் படர்ந்து நிற்கிறது. வடக்கு நோக்கிச் செல்லும் மலைத்தொடர் வேங்கடத்தின் தொடர்ச்சியாதலால் அதனையும் வேங்கடகிரி யெனப் பண்டையோர் குறித்தனர். பிற்காலத்தே அந்தப் பெயர் மறைந்து போகவே வேறு பெயர் உண்டாயிற்று. ஆயினும் அதன் பழம் பெயரும் பெருமையும் மறையாதபடி இப்போதும் அதன் அடியில் வேங்கடகிரி யென்னும் பழமையான நகரம் இருந்து சான்று கூறிக்கொண்டு நிற்கிறது. அவ் வேங்கட மலையின் வடகோடியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலக்கும் வடபெண்ணையாறு உளது. எவ்வாறு தென்குமரி யென்பது குமரி மலையையும் அதனைச் சார்ந்தோடிய குமரியாற்றையும் குறிக்கிறதோ, அவ்வாறே வடவேங்கட மென்பது வேங்கடமலையையும் அதனைச் சார்ந்தோடும் வட பெண்ணை யாற்றையும் குறிக்கிறது. தமிழகத்தின் வரலாறு தமிழர் எவராலும் இதுகாறும் எழுதப்படாமையால் அதன் வடவெல்லை வேங்கட மலைத் தொடரும் வட பெண்ணை யாறும் என்ற உண்மை எல்லாரும் தெளிய அறிந்த செய்தி யாகாமல் மறைந்து கிடப்பதாயிற்று. அதனால் ஆந்திரர்களுக்கும் தங்கள் நாட்டின் தென்னெல்லை வடபெண்ணையோடே நிற்கிறதெனத் தெரியாது போயிற்று. தமிழகத்தில் தோன்றிய தலைவர்களின் தலைமை, தமிழறியாமையும் தமிழர் வரலாறறியாமையுமே பெருமை யாகக் கொண்டு பிறங்கின மையின், வடவெல்லையை வரையறுத் தொழுகும் மாண்பு தமிழரிடம் விளங்கா தொழிந்தது. மேலே கூறிய ஆசிரியர் பனம்பாரனார் காலத்தில் நிலவிய தமிழ் உலகம், பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவை, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலாடு, புனல் நாடு என்பவையாகும். இவற்றைத் தொல்காப் பியனார் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்" என்றார். சிறு சிறு நாடாகும் வகையில் பன்னிரண்டாயினும் அரசியல் முறையில் அந்நாளைத் தமிழகம், சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்ற மூன்று பெரும் பிரிவுகளாக இயன்றிருந்தது. இம் மூன்றையும் சேர பாண்டிய சோழர் என்ற முடிவேந்தர் மூவரும் முறையே ஆட்சி புரிந்து வந்தனர். அக் காலத்தே பாண்டி நாட்டுக்கு வடவெல்லை வெள்ளாறு என்பது. இது, பன்றி மலையின் தொடர்ச்சியாகக் கீழ்ப்பகுதியில் குழுமியிருக்கும் சிறுமலைத் தொகுதியில் தோன்றிக் கிழக்கில் புதுக்கோட்டை நகருக் கண்மையில் கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் விழுகிறது. இந்த வெள்ளாற்றைத் தென்னெல்லையாகக் கொண்ட சோழ நாட்டுக்குத் தில்லைச் சிதம்பரத்துக்கு வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக வோடிப் பறங்கிப்பேட்டைக்கு அண்மையில் கடலொடு கலக்கும் வெள்ளாறு வடவெல்லையாகும்; இதனை வட வெள்ளாறு என்பதும் தெற்கிலுள்ளதைத் தென் வெள்ளாறு என்பதும் பண்டை நாளை வழக்கு. வடவெள்ளாற்றுக்கு வடக்கிலும் வடபெண்ணைக்குத் தெற்கிலும் உள்ள பரந்த நிலப்பகுதி தொண்டை நாடு என்ற பெயருடன் சோழ வேந்தர்களின் வழித் தோன்றல்களால் ஆளப் பெற்று வந்தது. தொண்டை நாட்டு வட பகுதியிலுள்ள வேங்கடத்தில் புல்லி யென்பவனும், அதற்குக் கீழ் கடற்கரைப் பேரூரான பவத்திரியில் திரையன் என்பவனும் இருந்து தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். சங்க காலப் புலவருள் ஒருவரான மாமூலனார் வேங்கடத்தைக் குறிக்கும்போது, "கழல் புனை திருந்தடிக் களவர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்"1 என்று கூறியுள்ளார். பவத்திரி நகரை, நக்கீரர் என்ற சங்கப் புலவர், "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன், பல்பூங்கானற் பவத்திரி"2 என்று குறித்துள்ளார். ஏனைக் கிருஷ்ணையும் கோதாவிரியும் போலின்றி, வட பெண்ணையாறு, தென் பெண்ணை போலக் கங்க நாட்டு (மைசூர் நாடு) நந்தி மலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிச் சென்று கடலொடு கலப்பது கொண்டு அதற்குப் பழந்தமிழர் வடபெண்ணையெனப் பெயரிட்டுச் சிறப்பித்தனர். சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்த சோழர் தொண்டை நாட்டை இருகூறாக்கினார். ஒன்று, சோழ நாட்டின் வடவெல்லையாக ஓடும் வடவெள்ளாற்றைத் தென்னெல்லையாகவும், தென்பெண்ணையை வட வெல்லையாகவும் கொண்டு நடுநாடு என்ற பெயர் பெற்று நின்றது; மற்றையது தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டுத் தொண்டை நாடு என்ற பெயருடன் விளங்குவ தாயிற்று. அதன்பின் தொண்டை நாடு, பற்பல கோட்டங்களாகவும் சிறுசிறு உண்ணாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர் களால் ஆளப்பட்டு வந்தது. தொண்டை வேந்தர் தொண்டை மான்கள் எனச் சிறப்பிக்கப்பெற்று வந்தனர். பல்லவர் காலம் : (கி.பி. 300-900) வடவெள்ளாற்றுக்கும் தென் வெள்ளாற்றுக்கும் இடையில் சோழ நாடு சிறந்து விளங்கியது போல, வடபெண்ணை தென்பெண்ணை என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையே தொண்டை நாடு கிடந்து தொல்புகழ் சிறந்து வந்தது. பின்னர்ச் சங்க காலச் சோழர்களும் தொண்டை வேந்தர்களும் வீழ்ந்தனர். இதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். அதற்குப்பின் அறுநூறு எழுநூறு ஆண்டுகள் பல்லவர் முதலிய வேற்று நாட்டவர் தமிழகத்திற் புகுந்து ஆட்சி செய்தனர். அவர் காலத்தே பழைய தமிழ் வேந்தர் குடிகள் வலியிழந்து சிதறிக் கிடந்தன. இதனைத் திருப்பதித் திருமலையிலுள்ள பல்லவர் கல்வெட்டால்1 அறிகின்றோம். பல்லவர்கள் பெரும்பாலும் தொண்டை நாட்டிலும் நடுநாட்டிலுமே தங்கள் ஆட்சியை நிறுவி வளம்படுத்தினர்; எனினும் அவர்களுடைய கல்வெட்டுக்கள் பலவற்றிலும் பழைய தமிழ் வேந்தர்கள் வகுத்திருந்த கோட்டங்களும் நாடுகளும் பெயர் சிதையாமல் உள்ளன.2 மேலும் வட பெண்ணையின் தென்கரையிலுள்ள நாட்டில் காணப்படும் பல்லவர் கல்வெட்டுக்கள் பலவும் தமிழிலே இருக்கின்றன. இதனால் வடபெண்ணைக் கரையிலும் அதன் தெற்கிலுமுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர் தமிழ் மக்கள் என்பது தெளிவாகும். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பலவும் தமிழ்ப் பெயர்களையே கொண்டு நிலவின. வடபெண்ணையின் கரைக்கண் நின்று நெல்லூர் மாவட்டத்துக்குத் தலைமை நகராக விளங்கும் நெல்லூரின் பெயரும் தனித் தமிழ்ப் பெயரேயாகும். இடைக் காலச் சோழ பாண்டியர் காலம் : (900-1400) பல்லவர்க்குப் பின் சோழர்களும் பாண்டியர்களும் அரசியல் வானத்தில் தோன்றி வளம் பெற்றனர். அவர்களது ஆட்சி நலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் வளரத் தலைப்பட்டது. சோழ வேந்தருள் சிறப்பு மிகப் பெற்ற முதல் இராசராசனும் அவன் மகன் கங்கைகொண்டசோழனும் வட புலத்தில் தமது கருத்தைச் செலுத்தித் தங்கள் அரசெல்லையைப் பரப்பலுற்றனர். சோழ நாட்டைப் பல வளநாடுகளாகவும் சிறு சிறு உண்ணாடுகளாகவும் பிரித்து அரசு முறை புரிவாராயினர். சோழ நாட்டின் வட பகுதியான நடுநாடும் தொண்டை நாடும் அவர்கள் ஆட்சி யெல்லையில் அடங்கிக் கிடந்தன. அவற்றுக்குச் "சயங்கொண்ட சோழ மண்டலம்" என்று பெயர் குறித்தனர். திருக்காளத்தியில் உள்ள கல்வெட்டு, அதனைச் "சயங்கொண்ட சோழ மண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்தி'3 என்று குறிக்கின்றது; சென்னைக்கு வடக்கே பொன்னேரி வட்டத்திலுள்ள திருப்பாலை வனம், "சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பையூர்க் கோட்டத்துத் திருப்பாலைவனம்"1 எனப்படுகிறது. அதற்கு வடக்கில் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர்ப்பேட்டையை, "சயங் கொண்ட சோழ மண்டலத்துப் பையூர் இளங்கோட்டத்து வெங்கா நாட்டுச் சூரலூர்"2 என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கட்டுரைக்கின்றது. அதற்கு வடக்கிலுள்ள கூடூர் வட்டத்தின் தலைநகரான கூடூர் குமுளூர் என்ற பழம் பெயரின் சிதைவாதலால், அக் கூடூர்க் கல்வெட்டு அதனை, "சயங்கொண்ட சோழமண்டலத்து மேலைப் பட்டய நாட்டுக் குமுளூர்"3 என்று குறிக்கிறது. அதற்கும் வடக்கில் வடபெண்ணைக் கரையில் உள்ளதும் நெல்லூர் மாவட்டத்துக்குத் தலை நகருமாகிய நெல்லூரை அங்குள்ள கல்வெட்டுக்கள் "சயங் கொண்ட சோழ மண்டலத்துச் சேதிகுல மாணிக்க வளநாட்டுப் பெடை நாட்டு நெல்லூரான விக்கிரம சிங்கபுரம்" என்றும், அவ்வூரிலுள்ள திருமாலை, "திருப்பாற் கடலான சித்திரமேழி விண்ணகரான பள்ளிகொண்ட பெருமாள்"4 என்றும் இயம்புகின்றன. நெல்லூர்க்குக் கிழக்கில் பெண்ணையின் வட கரையிலுள்ள சங்கம் என்னுமூர் பண்டை நாளில் விரியூர் என்ற பெயர் பூண்டிருந்த மையின், "சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கை நாட்டு விரியூரில் பெண்ணையாற்று வடகரையில் சங்கமீச்சுர முடையார்க்கு"5 என அது குறிக்கப்படுகிறது. வேங்கடமலைத் தொடரின் அடியில் வடபெண்ணையின் தென்பாற் பகுதியான இராபூர் வட்டத்தைச் சேர்ந்த சாகணம், சிக்கவோலு, கிலகபாடு, லிங்கபாளையம் முதலிய வூர்களிலும், வேங்கடகிரியைச் சேர்ந்த வேங்கடகிரி, மோப்பூரு, இனுகுண்டா முதலிய இடங்களிலும் உள்ள கல்வெட்டுக்கள் பலவும் இப்பகுதிகளைச் "சயங்கொண்ட சோழமண்டலத்துப் பாக்கை நாட்டு" ஊர்கள் என்று இசைக்கின்றன. இதனால், நெல்லூர் மாவட்டத்துப் பெண்ணையின் தென்பகுதி முற்றும் தமிழ் நாட்டுச் சயங்கொண்ட சோழ மண்டலமான தொண்டை நாடு என்பதைத் தெளிவாக யாவரும் இனிது காணலாம். இங்குள்ள கல்வெட்டுக்கள் தமிழிலே பொறிக்கப்பட்டு இருப்பது ஒன்றே இது தமிழ் நாடு என்பதை நன்கு வற்புறுத்தா நிற்கும். சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடையே தென்னாட்டில் காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்ட போது சயங்கொண்ட சோழ மண்டலத்திலும் ஒரு கடல் கோள் நிகழ்ந்தது. கடல்கொண்ட அப்பகுதி இப்போது பழவேற்காட்டு ஏரி என்ற பெயர்கொண்ட நீர்நிலையாக உளது. இப்பகுதியில் சங்க காலத்துத் திரையன் இருந்து ஆட்சி புரிந்த பவத்திரி நகரம் இருந்தது. பவத்திரிக்குச் சிறிது வடக்கில் கூடூர் வட்டத்துப் பாண்டரங்கம் என்னும் ஊர் இருக்குமிடத்தே காகந்தி என்னும் நகரமொன்றும் இருந்தது. எழுநூறு எண்ணூறு ஆண்டுகட்கு முன்பும் இக் காகந்தி சிறப்புற்றிருந்தது. நாளடைவில் அது தன் சிறப்புக் குன்றிச் சிற்றூராகத் தேய்ந்து போயிற்று. இவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள் இப் பகுதியைக் "கடல்கொண்ட பவத்திரிக் கோட்டம்" என்று குறித்துள்ளன. இவ் வூரருகேயுள்ள ரெட்டிபாளையத்திலுள்ள கல்வெட்டு, இதனை "சயங் கொண்ட சோழ மண்டலத்துக் கடல்கொண்ட சோழ மண்டலத்துக் கடல்கொண்ட பவத்திரிக் கோட்டத்துக் காகந்தி மாநகர்"1 என்று கூறுகிறது. ககந்தன் என்பவன் ஆண்டதனால் காவிரிப்பூம் பட்டினத் துக்குக் காகந்தி என்றொரு பெயருண்டாயிற்றென மணிமேகலை என்னும் நூல் கூறுவது ஈண்டு அறிஞர்கள் நினைவிற்கு வரும். சோழர்களுக்குப் பின் பாண்டியருட் சிலர் தொண்டை நாட்டில் முன்னேறிச் சிறப்புற்றதும் உண்டு. அவர்களுள் மாறவன்மன் சுந்தர பாண்டியன் என்பவன் தமிழ் நாட்டின் வடவெல்லையைக் கண்டான். அக்காலத்தே அவன் நெல்லூரி லுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் தன் பெயரால் ஒரு சந்தி ஏற்படுத்தியுள்ளான். அதனை, "திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோநேரின்மை கொண்டான் மாறவன்மரான ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு ... ஆவணி மாத முதல் சேதி குல மாணிக்க வளநாட்டுப் பெடை நாட்டு நெல்லூரான விக்கிரமசிங்கபுரத்துத் திருப்பாற்கடல் சித்திர மேழி விண்ணகரான பள்ளிகொண்ட ஆழ்வார்க்கு நம் பேரால் கட்டின சுந்தர பாண்டியன் சந்தி....."2 என்று கல்வெட்டுக் கூறுவதனால் நன்கு அறியலாம். விசய நகர மன்னர் காலம் (கி.பி. 1400-1700) : இடைக் காலச் சோழ பாண்டியர்க்குப் பின் தோன்றிய விசய நகர மன்னராட்சியில் நெடு நாள் வரையில் தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடையிலுள்ள தான சயங்கொண்ட சோழ மண்டலம் முழுதும் தமிழ் மொழியே ஆட்சி புரிந்து வந்தது. அரசியல் வழக்குகளே கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் பெரிதும் குறிக்கும் செய்தி யாதலால், அவற்றில் வழங்கிய மொழியே அரசியல் மொழி என்றற்கு ஐயமில்லை. அவ்வகையில் நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி முற்றும் தமிழ்க் கல்வெட்டுக்களே நிரம்பியிருத்தலால் அப்பகுதி முற்றும் தமிழ் நிலமாகத் திகழ்ந்தது என்பது தெளிவாகிறது. இவ் விசய நகர வேந்தர்களில் அரியராயர், சதாசிவ தேவராயர்,1 முதலியோருடைய கல்வெட்டுக்கள் இப்பகுதியில் உள்ளன. அவர் அனைவரும் தெலுங்கு பேசும் மன்னராயினும் அவர்களது அரசியல் முற்றும் இப்பகுதியில் தமிழிலே நடந்திருப்பது ஈண்டு மனங்கொள்ளற் குரியது. ஆகவே விசய நகர மன்னர் காலத்திலும் தமிழ் நாட்டெல்லை வடபெண்ணையை மேற்கொண்டு நின்றமை இனிது விளங்குகிறது. விசய நகர ஆட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் சந்திரகிரி ராச்சியம் சிறந்திருந்தது. அதன் எல்லை தெற்கே காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்புட்குழி வரையில் பரவியிருந்ததென அவ்வூர்க்கல்வெட்டால்2 அறிகிறோம். அதன் ஆட்சியிலும் சென்னைக்கும் வடபெண்ணைக்கும் இடையிலுள்ளபகுதி யெங்கும் தமிழ் மொழியே நிலவிற்று. அரசியலும் தமிழிலேதான் நடந்தது; அங்கே தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். "சந்திரகிரி ராச்சியத்தின்" தலைநகரான சந்திரகிரி தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தின் : தலைநகராக இருந்து வந்தது. இப்பொருள்பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அரசியற் கல்வெட்டிலாகாவின் ஆண்டறிக்கை3 கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேங்கடராயர் காலத்தில் தொண்டை நாட்டு அரசியலில் தெலுங்கு மொழி இடம் பெற்றிருக்கலாம் என்று கண்டுள்ளது. விசய நகர ஆட்சி வீழ்தற்கு முகமதியரது வளர்ச்சி காரணமாகும். முகமதியர்வலி மிகமிகச் சந்திரகிரி யரசும் ஏனைச் சிற்றரசுகளும் கெட்டு வீழ்ந்து தேயத் தலைப்பட்டன. முகமதியரது அரசியல் பாரசீக மொழியில் நடைபெற்றது. அவர் பொறித்த கல்வெட்டுக்கள் சிலவும் அம் மொழியிலே உள்ளன. ஜில்லா, தாலூகா, பிர்க்கா, ஜமாபந்தி, தாசீல் முதலியனயாவும் அவர்கள் புகுத்தியனவாகும். தெலுங்கின் வளர்ச்சியும் பாரசீகத்தின் படர்ச்சியும் செல்வாக்கும் பெற்றதானல், தமிழ்த் தொண்டை நாடான சயங்கொண்ட சோழ மண்டலத்தின் வட பகுதியில் தமிழர் தெலுங்கராயினர்; தமிழ் மொழி பையச் சிதையத் தொடங்கிற்று. வடபெண்ணையின் வட பகுதியில் வாழ்ந்த வடுகர் பலர் தென் பகுதியிற் குடிபுகுந்தனர். அதனால் தமிழ் மொழி அப்பகுதியில் விரைந்து மறைவதாயிற்று. இந்நிலையில் தென்னாட்டில் தெய்வப் பெயர்களும் ஊர்ப் பெயர்களும் மக்கட் பெயர்களும் வட மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சி தோன்றிச் சமயத் துறையில் வெற்றி பெறத் தலைப்பட்டது. அதுவே வாய்ப்பாகக் கொண்ட தெலுங்கர், தாம் குடி புகுந்த ஊர்களின் பெயரைத் தெலுங்காக்கினர். நெல்லூர் மாவட்டத்து நெல்லூரைச் சேர்ந்த கொடுவலூர்1 கொடவலூரு எனவும், வெங்கூர்2 வெகூரு எனவும், ஊட்டக்கூர்3 ஊட்டுகூரு எனவும், சூரலூர்4 சூலூரு பேட்டா கூர் எனவும், தும்பையூர்5 தும்மூரு எனவும், இருங் குண்டையூர்6 இனுகுண்டா எனவும், செறுமணவில்7 சிரமணா எனவும், குமுளூர்8 கூடுரு எனவும் மாறின. இவ்வாறே மிகப் பலவூர்கள் பழைய தமிழ்ப் பெயர் தெரியாதவாறு சிதைந்து உருமாறிப் போயின. திருமலைத் திருப்பதி தேவத்தான செயல்யாவும் மகந்துவின் மேற்பார்வைக்கு வருமுன் தமிழிலே நடைபெற்றுவந்தன. நாளடைவில் அங்கே தொழில் செய்வோர் தெலுங்கராக வேண்டிய நிலைமை யுண்டாயிற்று. திருப்பதியிலும் அதற்குத் தென்பகுதியிலுள்ள ஊர்களிலும் தமிழ் வழங்குவோர் தொகை மிகுதியாக இருந்தும் தெலுங்கு மொழி அப்பகுதியில் வலிபெற்றமையே இம்மாறு பாட்டுக்குக் காரணமாகும். இன்று தெலுங்கரது தெலுங்கு செங்கற்பட்டு மாவட்டத்தின் வடபகுதிகாறும் படர்ந்து வந்திருக்கிறது. இதற்கிடையே மேனாட்டவரான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் உலாந்தக்காரரும் எனப் பலர் தமிழ்நாட்டில் தங்கி வாணிகம் செய்ய முயன்றனர். திருவெற்றியூருக்கும் திருமயிலாப் பூருக்கும் எழுமூருக்கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதியை ஆங்கிலேயர் சந்திரகிரி வேந்தரிடமிருந்து பெற்று அங்கே தமது வாணிக நிலையத்தை நிறுவினர். அப்பகுதி அங்கே வாழ்ந்த கரையார் தலைவன் மதுரேசன் என்பவன் மேற்பார்வையில் இருந்தது. வேந்தன் ஆணைக்கடங்கி அவன் அப்பகுதியை ஆங்கிலேயருக்கு விட்டுவிட்டான். அவனது பெயர் மறையாவண்ணம் ஆங்கிலேயர் அப்பகுதியை மதராஸ் என மருவி வழங்கலா யினர். மதுரேசன் பகுதியை அடுத்துச் சென்னகேசவன் பட்டினம் என்பது இருந்தமையின் மதராசை ஏனையோர் சென்னபட்டினம் என்று வழங்கினர். இவ்வாறே சதுரவாசகன் பட்டினம்1 என வழங்கிய கடற்கரையூர் பிற்காலத்தே சதராசு2 என ஆங்கிலேயரால் சிதைக்கப்பட்டது. இப்பகுதிக்கு மேனாட்டு ஆங்கிலேயர் திடீர் என ஓர் ஆராய்ச்சியுமின்றி வந்துவிடவில்லை. இங்குள்ள திருவெற்றி யூரும் திருமயிலாப்பூரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்புற்று விளங்கிய இடங்கள். திருஞானசம்பந்தர் முதலிய திருமுறை யாசிரியர்கள் அவற்றை மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இப்போது எழும்பூர் என வழங்குவது அந்நாளில் எழுமூர் என்ற பெயரால் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் சிறப்பாகக் குறிக்கும் பேறுபெற்றது. திருவல்லிக்கேணி என்ற திருமால் திருப்பதி திருமங்கை மன்னரால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பெருமை யுடையது. இங்குள்ள தெள்ளிய சிங்கப்பெருமாளுக்கு இடைக்காலச் சோழரும் பிறரும் நிவந்தங்கள் விட்ட குறிப்பைக் கல்வெட்டுக்கள்3 காட்டுகின்றன. திருவெற்றியூரில் இடைக் காலச் சோழ வேந்தர் காலத்தில் அரசர்களும் சான்றோர்களும் கூடியிருந்து நம்பியாரூரர் வரலாற்றைத் திருவிழாக் காலத்தில் மக்கட்கு எடுத்துரைக்கும் சமயப் பணி புரிந்தனர். நாடோறும் சைவ சமயச் சொற்பொழிவுகளும் அங்கே நடைபெற்றன.1 மாணவர்கள் கூடி இலக்கணம் இசை முதலியன கற்கும் கல்வி நிலையமும் இங்கே இருந்தன. திருமயிலாப்பூரில் திங்கள்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும் எனத் திருஞான சம்பந்தர் தெரிவிக்கின்றார். எழுமூர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுக்குத் தலைநகராக விளங்கிற்று. இத்துணைச் சமயச் சிறப்பும் தமிழ்ச் சிறப்பும் அரசியல் சிறப்பும் பெற்றிருந்த தனால்தான் ஆங்கிலேயர் இவ்விடத்தைத் தேர்ந்து கொண்டனர். அந்நாளில் இப்பகுதி சந்திரகிரி இராச்சியத்தில் இருந்ததனால் ஆங்கிலேயர் சந்திரகிரி மன்னனிடம் அதனை வாங்கவேண்டிய நிலைமையேற் பட்டது; இஃது ஒன்றே பற்றிச் சென்னை நகர் தெலுங்கு நாட்டுக்கு உரிய தென்பது அறமன்று. உடையவர் தமது உடைமையின் வரன்முறை அறியாதொழுகுவாராயின் அதனைப் பாதுகாக்கும் மனவலி குன்றி உலகம் பழிக்கும் கீழ்மை எய்துவரென்ற மூதுரைப் படி, தமிழர் தமது வரலாறறியும் கருத்தில்லாது போனமையால் ஒருவர்க்கொருவர் மனங்கசந்து வருந்தும் அவல நிலை எய்தினர். இனியாகிலும் தமிழர் தங்கள் வரலாற்றை முறையுறக் கண்டு எல்லை வரையறுத்துக் கொண்டு நாடு முன்னேறும் நற்பணியில் ஈடுபடுதல் கடனாகும். மக்கள் வாழ்வு, உலகியல் வாழ்வு, அறிவியல் வாழ்வு என இருபாற்பாடும். உலகியல் வாழ்வு, நாடு, பொருள், தொழில், வாணிகம், அரசு முதலிய கூறுகளில் எல்லை வரையறை பெற்று இயலுவது. அறிவியல் வாழ்வு, எல்லையின்றிப் பரந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற விரிந்த நோக்குடன் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் கொண்டு அறம் பேணி நிற்பதாகும். இரண்டையும் ஒன்றாய்க் கலக்கிக் காண்பது அறிவு இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகாது; அரணுமாகாது என்பதைத் தலைவர்கள் உணர்தல் வேண்டும். மக்களை அறியாமை இருளில் கிடத்தி, அதனை அடிப்படையாகக்கொண்டு நிற்கக் கருதும் தலைவர்கள் விரைவில் தலைமையிழந்து அலமருவர். நாளும் மாறிவரும் மக்களுலகம் இனி அறிவு அறைபோகாது. அறிவொளி எழத் தொடங்கிவிட்டது. அறியாமை, அறிவு நெறிக்குப் பொருந்தாமை என்ற படைகொண்டு ஆட்சிசெய்ய நினையும் தலைமை நிலைமை யிழந்து கெடும் என்பதையும் தலைவர்கள் தமது உள்ளத்தில் நிலைபெறக் கொள்ளல்வேண்டும்.  14. பழந்தமிழர் நாகரிகம் தமிழ்மக்களின் வாழ்க்கையியல்பு, ஒழுகலாறு, அரசியல், வாணிகம் முதலிய பலவும் நாகரிகம் என்ற சொல்லால் இந்நாளில் ஆராய்ச்சியாளரால் வழங்கப் படுகின்றன. நாகரிகம் என்பது ஒரு தூயதமிழ்ச்சொல்; சங்ககாலத்தே இதனைக் கண்ணோட்டம் என்ற பொருளில் சான்றோர் வழங்கினர். 'முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்பது நற்றிணை; "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என்பது திருக்குறள். கால வேறுபாட்டால் சொற்கள் பொருள் வேறுபடுவதுபோல இச்சொல்லும் வேறுபட்டு மேலே குறித்தவற்றைத் தன்னகத்தே கொண்டு காட்டும் பொருள்கோள் பெறுவதாயிற்று. பழந்தமிழ் மக்களின் இனம் பொதுவாக நோக்கின், இரு பெரும் பிரிவுக்குள் அடங்கும்; ஒரு பிரிவு திணை நிலைமக்கள் எனவும், மற்றையது பொது நிலை மக்கள் எனவும் இயலும். குறிஞ்சி முதலாகவுள்ள நானிலத்து ஐந்திணைக்கண் நின்ற மக்களையே திணை நிலைமக்கள் என்பர். குறிஞ்சித் திணையினர் குறவர், வேட்டுவர் என்றும், முல்லைத் திணையினர் ஆயர், இடையர் என்றும், மருதத்திணையினர் உழவர், வேளாளர் என்றும், நெய்தல் திணையினர் சேர்ப்பர், நுளையர் பரதவர் என்றும், பாலைத்திணை மேற்கொண்டவர் மறவர் என்றும் வழங்கப் பெற்றனர். நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவாம். பிற்காலத்தே பாலைத்திணைக்கும் ஒருவகை நிலம் காணப்பட்டது. "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப், பாலையென்பதோர் படிவம் கொள்ளும்" என்று இளங்கோவடிகள் குறித்தனர். இப்பாலைப் பகுதியில் வாழ்ந்தோர் மறவர் எயினர் எனப்பட்டனர். இவ்வைந்து திணையும் சேர்ந்ததே தமிழகம். குறிஞ்சித்திணைக் குரியது மலைநிலம்; முல்லை காட்டுப்பகுதியைக் குறிக்கும்; மருதம் நீர் வளம் சிறந்த நிலப்பகுதியாகும்; நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆம். இந்நிலப்பகுதிக்குரிய தொழில் சிறிதும், அரசு புரிதல், ஓதுதல், வாணிகம் செய்தல், ஆடைநெய்தல், போர்புரிதல், போர்க்கருவி உழவுக் கருவி முதலியவற்றைச் செய்தல், பொன்னும் மணியும் முத்தும் கொண்டு அணிவகை செய்தல் முதலாய பலவேறு தொழில் பெரிதும் மேற் கொண்டிருந்த மக்களினமும் உண்டு. அறிவு ஆண்மை பொருள் படை முதலியவற்றால் சிறந்தவர் அரசரும் அரசியல் அலுவலருமாயினர். அறிவாலும் கல்வியாலும் சிறந்தவர் அந்தணராய் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு சிறந்த அறப்பணி புரிந்தனர். ஆண்மையும் பொருளும் சிறந்தவர் வாணிகம் செய்தனர். உழுதலும் உழுவித்தலும் ஆகிய தொழிலால் உணவு உடை முதலியவற்றுக்குரிய பொருளை விளைவித்தோர் வேளாளராக விளங்கினர். கடலிற் கலஞ் செலுத்திச் சென்று வேறு நாட்டவருடன் வாணிகம் செய்தவர் பரதவர். கடலில் மீன் வேட்டம் செய்தும் கடற்கரையில் உப்பு விளைவித்தும். முத்து குளித்தும் பவளம் அறுத்தும் வாணிகம் புரிந்தோர் சேர்ப்பரும் வலைஞரும் உமணருமாகிய வணிகராவர். இங்ஙனம் இவர்கள் தொழிலால் வேறுபட்டாராயினும் போர் நிகழும் காலத்தில் அறப்பணி புரியும் அந்தணரும் மகளிரும் மூத்தோரும் மிக்க இளையரும் நோயுற்றோரும் ஒழிய ஏனை யாவரும் போர்த் தொழில் மேற்கொண்டு உடலுக்கு உணவும் உயிருக்கு அறிவும் போல உலகியல் வாழ்வுக்குப் போர் புரிதலைப் பொதுத் தொழிலாகக் கொண்டிருந்தனர். "மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்......வன் புலச்சீறூர்க், குடியுமன்னும் தானே கொடியெடுத்து, நிறையழிந்து எழுதரு தானைக்குச், சிறையுமன்னும் தானே" எனவரும் புறப்பாட்டால் இதனை நன்கு காணலாம். இவ்வாறு அறிவு, செய்தொழில், வாழ்நிலம் முதலிய சிறப்புப் பற்றி மக்களினத்தே பிரிவுகள் பிறந்திருந்தனவேயன்றி, உணவு, உடை, மகட்கொடை, கல்வி முதலிய வாழ்க்கைக் கூறுகளில் ஒரு சிறு வேற்றுமையும் கிடையாது. திணை நிலைமக்கள் பொது நிலைமக்கள் என்ற பிரிவுதானும் மேனிலையிற் காணப்படினும் செயலளவில் யாவரும் ஓரினமாகவே ஒழுகினர். சாதி என்ற பெயரே தமிழர் சொல்லகராதியில் இல்லை. பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கும் பொதுநிலை மக்களிடையே காணப்படினும், பார்ப்பார் ஒழிந்த மூவரும் நானிலத்து ஐந்திணைக்கும் உரிய திணைநிலை மக்களிடையே தோன்றிய தொன்மையும் சிறப்பும் உடையர். பார்ப்பார் திணை நிலைமக்களிடையே தோன்றாமல் வேறுபடத் தோன்றி நாடோடிகளாய் அம்மக்கள் உழைத்து ஈட்டிய பொருளை இரந்து ஏற்று உயிர்வாழ்ந்தனர்; அவர்கள் ஓதுவதும் ஓதுவிப்பதும் பிறர் தரும் பொருள் கொண்டு வேட்டலும் வேட்பித் தலுமாகிய தொழில்களைச் செய்தொழுகினர். உலகியல் வாழ்வுக் குரிய பொருளை விளைவிக்கும் உழவும், அவற்றை நாட்டில் பரப்பும் வாணிகமும், பொருளுக்கும் அதனை உடையோர்க்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் பணியும் இப்பார்ப்பாருக்கு இல்லை. உறையுள்: குன்றவர் வாழும் குறிச்சிகளில் "புல்வேய் குரம்பை"களும், முல்லைப்பாடிகளில் "வண்காற் பந்தரிட்ட" மனைகளும், மருத நிலத்து ஊர்களிலும் நெய்தற்பாக்கங் களிலும் பட்டினங்களிலும் முறையே வயலை படர்ந்த வளமனைகளும் மீன் வலை உணங்கும் குறியிறைக் குரம்பைகளும் காணப்படுகின்றன. அரசர் இருக்கும் அரண்மனைகள் நெடுநிலை மாடமும் வலிய அரணும் பெற்று நிலா முற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன. அரண்களில் காவலர் காவலேயன்றிப் பல்வகை எந்திரப் பொறிகள் எழிலுடன் இருக்கின்றன. "அமரெனில் திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், கண்மாறு நீட்ட நணி நணியிருந்த குறும்பல் குறும்பு" என்றும், "பொன்னுடை நெடுநகர்" என்றும் அவர்தம் செல்வ மனைகள் சிறப்பிக்கப்படுகின்றன. பார்ப்பாரின் வேறாக அந்தணர் என்பார் காணப்படுகின்றனர். திணைநிலை பொதுநிலை என்ற இருதிணை மக்களிடையே மூத்த அறிவும் முதுமையுமெய்தித் துறவுநெறி மேற்கொண்டு எவ்வுயிர்க்கும் அன்புகாட்டி அறிவு வழங்கும் செயலை இந்த அந்தணர் புரிந்தனர். இவர்களும் பார்ப்பாரைப் போல் உலகியற்குரிய தொழில்களில் ஈடுபடாமமையால் பிற் காலத்தே இவர்கட்கு உரிய அந்தணரென்னும் பெயர் பார்ப்பாருக்கும் எய்துவதாயிற்று. அந்தணர் உறையும் தவப்பள்ளிகளில் அறநூற் பயிற்சியும் பார்ப்பார் மனைகளில் முத்தீக் குண்டங்களும் காணப்படு கின்றன. உண்டி: பழந்தமிழர் உண்டியில் ஊனுணவு விலக்கப் படவில்லை. முற்றத் துறந்த முனிவராகிய அந்தணரொழிய, ஏனைப் பார்ப்பாரை யுள்ளிட்ட அனைவரும் ஊனுண்பர். "புலவு நாற்றத்த பைந்தடி, பூநாற்றத்த புகைகொளீஇ ஊன்றுவை, கறிசோறுண்டு வருந்து தொழிலல்லது பிறிது தொழில் அறியா" எனவரும் கபிலர் கூற்றும், "மைவிடை யிரும்போந்துச் செந்தீச் சேர்த்திக், காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை நறவுண்செவ்வாய்நாத்திறம் பெயர்ப்ப, உண்டும் தின்றும் இறப்போர்க்கீந்தும், மகிழ்கம் வம்மோ மறப்போரோயே" எனவரும் கூகைக் கோழியார் கூற்றும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. உண்ணும் உணவோடு, பாலும் பாகும்கொண்டு பண்ணியம் பல செய்து உண்டலும் உளது; "ஊனும் ஊணும் முனையின் இனிதெனப், பாலிற்பெய்தவும் பாகிற்கொண்டவும், அளவுபு கலந்து மெல்லிது பருகி" மகிழ்ந்திருக்கும் செய்தியை நன்னாகனார் நாவில் நீரூறுமாறு நவில்கின்றார். முல்லைப் புறவுகளில் வாழ்வராகிய ஆயர், தம்நாட்டில் நெல் விளையாமையால் வரகும் தினையும் பயிர்செய்து உண்கின்றனர்; "புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர் நெல்விளையாதே" என்றும், "கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு, இந்நான்கல்லது உணவும் இல்லை" என்று சான்றோர் குறிப்பது காண்க. வரகுச் சோற்றால் ஆயர் புளிச்சோறு சமைத்து உண்ணும் திறத்தைப் பிசிராந்தையார், "கவைக்கதிர் வரகின் அமைப்புறு ஆக்கல், தாதெருமறுகில் போதோடு பொதுளிய, வேளைவெண்பூ வெண்டயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" என்று பாராட்டி, அதனை "அவரை கொய்யுநர் ஆரமாந்துவர்" என்று இயம்புகின்றார். குறிஞ்சி நிலம் உழவர் ஏரால் உழுது பயிர் செய்தற்கு ஏனை நிலங்கள்போல அத்துணை நயம் வாய்ந்த தன்மையின் அங்கே வாழ்பவர் மூங்கில் நெல்லும் பலாப் பழமும் வள்ளிக் கிழங்கும் தேனும் உண்பர்; "உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே சிறியிலைவெதிரின் நெல்விளையும்மே, இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து, திணிநெடுங்குன்றம் தேன்சொரியும்மே" என்று கபிலர் எடுத்தோதுவது காணலாம். நெய்தல் நிலமும் இவ்வாறே நெல் முதலியன விளைவித்துக் கோடற்கு ஏற்றதாகாமையால் அங்கு வாழும் பரதவர் மீன் பிடித்து ஏனை நிலத்தவர்க்கு விற்று நெல்லும் பிற உணவுப் பொருளும் பெற்றுக்கொள்ளுகின்றனர். மருதநிலம் நெல்லும் கரும்பும் விளைதற்கு ஏற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கே வாழ்பவர் கறிசோறுண்டு அரியல் என்னும் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கின்றனர்: "நெய்தலங்கழனி நெல்லரி தொழுவர், கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்து ஆம்பல் அகலிடை அரியல்மாந்தித் தெண்கடல், படுதிரை யின்சீர்ப் பாணிதூங்கும் மென்புல வைப்பு" என வருதல் காண்க. உடை : பிறநாட்டு மக்கள் உடுக்கும் உடைப் பொருள் தோன்றியதற்குக் காலம் வரையறுத்துக் கூறலாம்; ஆனால் தமிழ் மக்கள் பருத்திநூலால் இயன்ற ஆடைகளை முதன்முதலாகக் கண்ட காலம் காலவரம்பைக் கடந்து நிற்கிறது. "பாம்புரியன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியின் இழையன வாரா ஒண்பூங் கலிங்கம்" என்ற பழந்தமிழ்க் குறிப்பு, தமிழ்மக்கள் அந்நாளில் உடுத்த பருத்தி ஆடை இழை தெரியா வகையில் நெருக்கமாக அமைந்து மிக்க மென்மையும் நயப்பும் நொய்ம்மையும் உடையவாய் இருந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆடைகளை, "பகன்றைப் புதுமலரன்ன அகன்று மடி கலிங்கம்", "புகை அரிந்தன்ன பொங்கு துகில்" என்றும், "நேர்கரை நுண்Qற் கலிங்கம்" என்றும் சான்றோர் பாராட்டி யுள்ளனார். இந்நாளில் ஆலைகளில் மிக்க வேலைப்பாடு அமைய நெய்யப்பெற்று வரும் மெல்லிய ஆடையினும் மேன்மை பொருந்தி யனவாக இவை நம் மனக்கண்ணில் தோன்றி மகிழ்ச்சி நல்குகின்றன. இவ்வாறு நுண்ணிய வேலைப்பாடும் நேர்கரையும் புகை போலும் நொய்ம்மையும் பொருந்திய ஆடை அணிந்திருந்த தோடு இளமகளிர் தாம் அணிந்த ஆடையின் மேல், இடையில், அழகிய மலர்களும் தழைகளும் விரவித் தொடுத்த தழையுடை உடுத்திருக் கின்றனர். "ஏந்துகோட்டு அம்பூந் தொடலை அணித்தழை அல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள்" என ஓர் இளம்பெண் காட்டப் பெறுகின்றாள். வேலியிற் படர்ந்து காய்த்திருக்கும் குன்றிமணியைப் பறிக்கும் சிறுமியொருத்தி தழையுடை அணிந் திருக்கும் சிறப்பை, "அணித் தழைநுடங்க வோடி மணிப்பொறிக் குரலங்குன்றி கொள்ளும் இளையோள்" என்று குறித்துள்ளனர். கணவனை இழந்த கைம் பெண்ணொருத்தி, வெள்ளாம்பல் மலர்ந்திருப்பது கண்டு, "அளியதாமே சிறு வெள்ளாம்பல், இளையமாகத் தழையாயினவே" எனக் கையற்றுக் கூறுகின்றாள். அணி : தமிழ்மக்கள் பொன், மணி, முத்து, பவழம் முதலிய உயரிய பொருள்களைக்கொண்டு விலையுயர்ந்த அணிகலன்களைச் செய்து அணிந்து மகிழ்ந்தனர். இளஞ்சிறார்க்கு ஐம்படைத்தாலி, புலிப்பற்றாலி, காலிற் சிலம்பு: கிண்கிணி, காதிற்கு தம்பை குழை, நெற்றியிற் பட்டம் முதலியன அணிந்தனர். மணமான மகளிர் இடையில் அணியும் தழையும் காலிற் சிலம்பும் நீக்கிக் கழுத்தில் கணவன் அளிக்கும் மங்கலமணவணியும் காலில் திருமணச் சிலம்பும் அணிவர். பிறர்க்குக் கொடை வழங்குமிடத்து மங்கல மணவணி யொழித்து ஏனையவற்றையே நல்குவர். மகளிர் தம் கையில் ஆம்பல் தண்டினால் செய்த தொடியணிந்து கொள்வர்; இதனை "ஆம்பல்வள்ளித் தொடிக்கை மகளிர்" என்று பரணர் கூறிக் காட்டுகின்றார். யானைகட்குப் பொன்னால் ஓடைசெய்து அழகு செய்வர். போர் நிகழுமிடத்துப் பகைவர் யானையைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னால் தாமரைப் பூக்களைச் செய்து, பாடியாடும் மக்களாகிய விறலியர்க்கும் பாணர்க்கும் வழங்குவர். "ஒன்னார் யானை ஓடைப் பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை யுரவோன்" என்று சான்றோர் தலைவர்களைப் பாராட்டுதலால் அறியலாம். ஒரு குடியில் தோன்றி ஆங்காங்கு நிலவிய வேந்தர் ஒன்றுபடின் அவருள் தலைவராயினார் ஏனையோர் முடிப்பொன் கொண்டு மார்பில் மதாணி செய்து அணிந்துகொள்வதும், பகைத்த வேந்தரை வென்று அவரது வீறழித்த வழி, அவரது முடிப்பொன் கொண்டு காலுக்குக் கழல் செய்து அணிந்துகொள்வதும் பண்டைத் தமிழ்வேந்தர் மரபு. "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய, மாமலை பயந்த காமருமணியும், இடைபடச் சேயவாயினும் தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்குங்காலை, ஒரு வழித் தோன்றி யாங்கு" என்பதும், "மலை பயந்த மணியும் கடறுபயந்த பொன்னும், கடல்பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும்" என்பதும் நோக்கின், தமிழ் நன்மக்கள் மலையிடத்தே மணியும் காட்டிடத்தே பொன்னும் கடலிடத்தே முத்தும் கண்டறிந்து எடுத்துப் பயன்கொண்டு சிறக்கும் ஒட்பமுடையர் என்பது தெரிகிறது. கொங்கு நாட்டுக் கடறுகளில் பொற்றுகள் இருந்து சிறந்த குறிப்பை ஆராய்ச்சியறிஞர் பால் என்பவர் ஆராய்ந்து காட்டியுள்ளார்.1 சுருங்கச் சொல்லின், தமிழ் மக்கள் விரலுக்கும் செவிக்கும் கழுத்துக்கும் அரைக்கும் தோளுக்கும் மார்புக்கும் தலைக்கும் ஏற்ற அணிகலன்களை உயரிய பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்து அணிந்திருந்தனர் என்பது சாலும். தொழில் : இனி, பண்டைய இத்தமிழ் நன்மக்கள் உயரிய நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் படும் தொழில் பலவற்றையும் நன்கு தெரிந்திருந்தனர். அவரவர் மேற்கொண்டு செய்த தொழில்பற்றியே மக்களை, வேட்டுவர் ஆயர் உழவர் கூத்தர் கொல்லர் கம்மியர் வணிகர் தச்சர் என்பன முதலிய பெயரிட்டழைப்ப தொன்றே அவரது தொழிலறிவின் மேன்மையை இனிது எடுத்துக் காட்டுகிறது. குறிஞ்சி முதலிய நிலப்பகுதிகளில் வாழ்பவர் முறையே தத்தமக்குச் சிறப்பாகவுரிய வேட்டையாடுதல், நிரை மேய்த்தல், நெல் விளைத்தல், மீன் பிடித்தல், கலஞ் செலுத்தல் முதலிய தொழில்வகைகளில் நல்ல வன்மை பெற்றிருந்தனர். ஒன்று காட்டுதும்: குறவர், பறவை விலங்கு முதலியவற்றை வேட்டம் செய்பவராயினும், யானை முதலிய பெருவிலங்கு களை வேட்டம்புரிதலை "உயர்ந்த வேட்டம்" என்று கருதுகின்றனர். அவர்கள் யானை வேட்டம் புரிந்து அவற்றை அகப்படுத்துவது மிக்க நயப்பமைந்துள்ளது. யானைகள் இயங்கும் வழிகளில் ஆழ்ந்த குழிகளை அமைத்து அவை தெரியாதபடி மூடிவைத்து, உண்மை யுணராமல் அக் குழிகளிடை வீழ்ந்த யானைகளை முன்பே பழகிய யானை களைக் கொண்டு பற்றித் தம்வயம் செய்து கொள்கின்றனர். இதனை, "மாப்பயம்பின் பொறைபோற்றாது நீடுகுழி அகப்பட்ட பீடுடைய ஏறுழ் முன்பின், கோடுமுற்றிய கொல்களிறு"1 என வரும் சான்றோர் கூற்றால் அறியலாம். இவ்வண்ணம் யானைகளைக் கொண்டு யானைகளையும் மான்களைக்கொண்டு மான்களையும் பற்றும் குறவரது இயற்கையறிவு இங்கே நாம் குறிக்கத் தகுவதாகும். இதனை வியந்தன்றோ, வினையால் வினையாக்கிக் கொள்ளும் வினைத்திறத்தை விளக்கப் போந்த திருவள்ளுவர், "நனைகவுல் யானையால் யானையாத்தற்று" என மொழிவாராயினர். புள்வேட்டம் புரியுமிடத்தும் இவ்வாறே குறும்பூழ் பூவை முதலியவற்றையும் இக்குறவர் அகப்படுத்து கின்றனர். இவையேயன்றி, பன்றி வேட்டையும் தேனழித்தலும் குறிஞ்சி நிலத்தவர் தொழில்வகைகள் சான்றோர் குறிக்கும் சால்பு பெறுகின்றன. இடையர் நிரைமேய்த்துப் பாற்பயன் கோடலும் பாலைக் காய்ச்சி நெய்யும் தயிரும் மோரும் பெறுதலும், நெய் முதலிய வற்றை விற்று நெல்லும் முத்தும் மணியும் பெறுதலும் அவர்பால் உரிமைத் தொழில்களாய் நிகழ்கின்றன. வேறு சிலர் வரகும் தினையும் கொள்ளும் விளைக்கின்றனர். குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழும் மக்களுட் சிலர் விலங்குகளின் தோலும் மயிரும் கொண்டு தோற்பதனிடுதலும் மயிர்க் கம்பலம் நெய்தலும் செய்கின்றனர். மருதநிலத்தவர் உழவுத் தொழில் புரிகின்றார்கள். "கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டீரத்துப், பூமிமயங்கப் பலவுழுது வித்திப் பல்லியாடிய பல்கிளைச் செவ்வி"2 என்பது இவ்வுழவுத் தொழிற்கு ஏற்ற சான்றாகும். உழுதற்கு எருதுகளே மிகவும் பயன்படு கின்றன. "ஈரச் செவ்வி உதவினவாயினும், பல்லெருத்துள்ளும் நல்லெருது நோக்கி, வீறு வீறு ஆயும் உழவன்"3 என வருதல் காண்க. இவ்வுழவர் தமக்கு எத்துணை வறுமை எய்துமாயினும் வித்தற்கு அமைத்த விதையினை உண்ணுவதில்லை; அதனைச் செய்பவன் உழவருட் கீழ்மகனாக எள்ளி இகழப்படுவன். "வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான் வீழ்குடி யுழவன் வித்துண்டாங்கு"1 என அரிசில்கிழார் என்னும் சான்றோர் அவ்வுழவனை இகழ்ந்து பேசுவது காண்க. மீன் பிடித்தலும் உப்பு விளைத்தலும் இவற்றை விற்று உணவுப் பொருள் பெறுதலும் நெய்தற் பரதவர்க்கு இன்றியமையாத் தொழில்களாகும். இவ்வியைபால் இவர்கட்கு வாணிகமே சிறப்புடைத் தொழிலாதல் நன்கு விளங்கும். இவருள் உப்பு விற்போர் உமணரெனவும், கடலிற் கலஞ்செலுத்திச் சென்று மீன் பிடித்துக் கொணர்ந்து விற்பதனாலும் வேறுநாடுகட்குச் செல்லும் செலவு வாய்ப்பதாலும் நெய்தற்புல வணிகரைப் பரதவர் என்றும் வழங்குகின்றனர். நம் தமிழ் உலகிற்கும் ஏனை மேலைக் கீழைநாடு கட்கும் வாணிகத் தொடர்பு முன்னம் உண்டாகி நிலவியதற்கு இவர்களே காரணர்களாவர். நாவாய் வணிகருள் சிறப்புடையாரைப் பரதகுமரர் என்று வழங்கும் வழக்காறுண்மை சிலப்பதிகாரத்தால் சிறந்து எடுத்துக் குறிக்கப்படுகின்றது. மூன்று பக்கமும் கடலாற் சூழப்பட்ட தென்னாட்டவர் கடல் கடந்து சென்று வாணிகம் புரிந்து வந்தமை தோன்ற அவர்களைத் தென் பரதவர் என்று பெயர் குறித்தனர். அவர்கள் கொடியில் மீன் பொறிக்கப் பட்டிருப்பதும் இதனை வற்புறுத்துவதாகும். சேர வேந்தர் கடலிற் கலஞ் செலுத்திப் பொன் வருவாய் மிகக்கொண்டனர் என்பதும், அக்காலத்தில் கடலிற் கலஞ்செலுத்தும் தனி உரிமையும் வன்மையும் இருந்தன என்பதும் தோன்ற மாறோகத்து நப்பசலையார், "சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறர்கலம் செல்கலாது"2 என்று பாடியிருக்கின்றார். கலம் செலுத்து மிடத்தும் வணிகக் காற்றின்3 வரவும் காலமும் அறிந்து செலுத்தும் மதுகை அவர்பால் இருந்தது; அதனை வெண்ணிக்குயத்தியார் பாட்டொன்று நன்கு புலப்படுத்து கிறது. குயத்தியார் ஒருகால் சோழன் கரிகாற்பெரு வளத்தானைச் சிறப்பித்து உரைக்குமிடத்து, "நளியிரு முந்நீர் நாவாயோட்டி, வளிதொழி லாண்ட உரவோன் மருக, களியியல் யானைக் கரிகால் வளவ"4 என்று தெரிவிக்கின்றார். இதன்கண் "வளிதொழிலாண்ட உரவோன்" எனப்படுபவன் கரிகாலன் முன்னோருள் ஒருவன் என்பதும், அவன் காலத்தே கடலிற் கலம் செலுத்தி வேற்றுநாடு சேறற்குரிய வணிகக் காற்றுத் தொழில் கொள்ளப்பட்டதென்பதும் விளங்குகின்றன. இவ்வளியினை வணிகக் காற்று என்பது பிற்கால வழக்காதலின் பண்டையோர் இதனை "வளி" யென்றே குறித்தொழிந்தனர். இக்காற்றின் இயல்பினை முதன் முதலாகக் கண்டவர் உரோமானியர் என்றும், அவருள் இப்பலாஸ்1 என்பவன் முன்னவன் என்றும் வார்மிங்டன்2 முதலிய வரலாற்றாசிரியன்மார் கூறுவர்.3 இக் கூற்றுத் தவறானது. இவ்வுரோ மானியர்க்குப் பல்லாண்டு முன்னரே தமிழர் அறிந்து பயன் கொண்டனர். ஆங்கிலக் கல்விமுறை நம் நாட்டிற் புகுந்து பல்லாண்டுகள் கழிந்த பின்பே தமிழர் தங்கள் பழந்தமிழ் நூல்களை ஆர்வமுடன் படிக்கும் உணர்வு பெறலாயினராதலின், மேலை நாட்டவர்க்கு இப்பழந் தமிழ்க் கடல் வாணிகக் குறிப்பை முதற்கண் எடுத்துக் காட்டும் திறம் இலராயினர். வடமொழியாளர்க்கு அவர் மொழிபால் உள்ள பற்றினுள் நூற்றில் ஒரு கூறு தமிழ் மக்களுக்கு இருந்திருப்பின், தமிழர் நாகரிகமும் மொழிச் சிறப்பும் தொன்மையும் உலகெங்கும் நன்கு பரவியிருக்கும்; இன்று "தாய் இருக்க மணை வெந்நீராட்டும் தகவிலார்" பலர் தமிழ்க் குடிகளிலே தோன்றியிருக்க மாட்டார்கள்! இந் நெய்தல்நிலத்துப் பரதவர் கடலிற் கலஞ்செலுத்தும் வன்மை பெற்றிருந்ததோடு நிலத்தில் வண்டிகளில் உப்பு மூடைகளை யேற்றி உண்ணாடுகட்குச் சென்று விற்பதும் மேற்கொண்டிருந்தன ரென முன்பே கூறியுள்ளோம். இப்பரதவருடைய நாடு "பெருமணல் உலக" மானதாலும் முல்லை குறிஞ்சி முதலிய வன்புல நாடுகட்கும் மருதமாகிய நீர் நாட்டுக்கும் செல்லவேண்டியிருந்தமையாலும் இவருடைய வண்டிகளிற் பூட்டிய பகடுகள் மிக்க நோன்மையுடைய வையாகும். "கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகடு"4 என்று அவை பாராட்டப் படுகின்றன. இவர்களும், தமது உப்பு வாணிகம் குறித்து நாட்டில் நெடிது செல்வது வேண்டி, இடையே வண்டி அச்சு முறிந்து இடையீடு படாவண்ணம் சேமவச்சும் உடன் கொண்டு செல்வர். இச்செயலைக் கண்டு வியந்த ஒளவையார், " எருதே இளைய, நுகம் உணராவே; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; அவல் இழியினும் மிசையேறினும் அவணது அறியுநர் யார்யென உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு"1 என்று எடுத்தோதுகின்றார். இனி, இவ்வுமணர்பால் ஒரு வன்கண்மையும் காணப்படுகிறது: தாம் தமது வண்டியிற் பூட்டிச் செல்லும் பகடுகளில் யாதேனும் ஒன்று வழியிடையே வலிகுன்றியாதல் நோயுற்றாதல் மேலே செல்லும் தகுதியிழந்து கெடுமாயின், அதன்பால் சிறிதும் இரக்கமின்றி, நீரும்புல்லும் தந்து புரக்கும் நீர்மையின்றி, அது வீழ்ந்தவிடத்தேயே கைவிட்டுச் சென்றொழிகின்றனர்; "நீரும் புல்லும் ஈயாது உமணர், யாருமில் ஒரு சிறை முடத்தொடு துறந்த, வாழா வன்பகடு"2 என்று சான்றோர் இச்செயலைச் சுட்டிக் காட்டுகின்றனர். இனி, மருதநிலத்து உழவர் வயல் விளைவு குறித்து "நிலன் நெளி மருங்கில்" நீரைச் சிறைசெய்து நீர்நிலை அமைத்தும், குளம் கிணறுகள் வெட்டி நிலபுலன்களை வளஞ்செய்தலும், கரும்பு விளைத்து ஆலையிலிட்டுச் சாறு இறக்கிக் காய்ச்சிப் பாகு செய்தலும் பிறவும் செய்கின்றனர். குறிஞ்சி முதலாய திணைநிலைமக்கட்கு உறுதுணையாக ஆங்காங்குப் பருத்திகொண்டு நூல் நூற்றலும், ஆடை நெய்தலும், பொன்னும் மணியும் கொண்டு அணிவகை செய்தலும், மணி கடைதலும் முத்துக் கோத்தலும் மட்கலம் தாழி முதலியன வனைதலும், யானைகளைக்கொண்டு காடுகளிலிருந்து விறகு கொணர்தலும் நடைபெறுகின்றன. தச்சர் தேர் செய்தலும், கருமார் இரும்பு வேலை செய்தலும், கம்மியர் செம்பு வெண்கலம் முதலிய கலவைகொண்டு பாண்டங்கள் செய்தலும் தமிழர் வாழ்விலே காட்சி தருகின்றன. வண்ணாத்தி ஆடை ஒலிப்பதும் மயிர்வினைஞர் முடி சிரைப்பதும் தோல்வினைஞர் மிதியடியும் செருப்பும் பிறவும் செய்வதும் தொழிலாகக் கொண்டுள்ளனர். களர் நிலத்து ஊற்று உவர்ஊறி ஆடையின் அழுக்கினை நன்கு போக்கும் நயம் தெரிந்து தன் தொழிலைச் செய்கின்றார்கள் எனின், இத்தொழிலாளரின் தொழிலறிவுக்கு வேறு சான்றுவேண்டா. "களர்ப்படுகூவல் தோண்டி நாளும், புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை"1 என்று சான்றோர் கூறுதல் காண்க. திணைநிலை மக்கட்குத் துணையாகிய தொழில் நிலை மக்கட்கு வேண்டும் உணவு உடை உறையுள் முதலியவற்றிற்குப் பொருளும் இடமும் அவருடைய தொழிற்கு மாற்றாக வழங்கப் படும். இடைக்காலத்தே வழங்கிய காசும் காணமும் புறநானூற்றுக் காலத்தே இல்லை. பண்டமாற்று எனப்படும் பொருள் மாற்றமே வணிகத்துறையில் வழங்கி வந்தது. வேட்டுவர் தாம் கொணர்ந்த மான் தசையை மருதநிலத்தார்க்கு விற்கின்றனர்; முல்லைநிலத்து ஆயர் தயிரும் நெய்யும் விற்கின்றனர்; இருவர்க்கும் மருதநிலத்தவர் தம்பால் உள்ள வெண்ணெல்லைத் தருகின்றார்கள். "கானுறை வாழ்க்கைக் கதநாய்வேட்டுவன், மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள், தயிர்கொடுவந்த தசும்பும் நிறைய ஏரின்வாழ்நர் பேரில் அரிவையர், குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல், முகந்தனர் கொடுப்ப உகந்தனர்."2 பெயர்வர் என்று சான்றோர் கூறுகின்றார்கள். செல்வவாழ்வில் "தென்பவ்வத்து முத்தும்", "வடகுன்றத்துச் சாந்தமும்", "எண்வகைக் கூலமும்", "வேறுபல் தாரமும்" விற்கவும் வாங்கவும் படுகின்றன. பலவேறு பண்ணிய வகைகளும், கள், தேறல், தேன் முதலயிய குடிவகைகளும் (Drinks) பூமாலைகளும் தெருக்களிலும் அங்காடிகளிலும் விலையாகின்றன. கடன்கோடலும் கைம்மாற்றுகளும் மக்களிடையே நன்கு பயிலு கின்றன. கடனுக்குத் தனிசு (வட்டி) கொடுப்பது முறையாக உளது. குறியெதிர்ப்பை யொன்றுதான் தனிசு இன்றி நடைபெறுகிறது.  15. புறநானூறு காட்டும் அரசியல் புறநானூறு காட்டும் பண்டை நாளைத் தமிழகம் சேர பாண்டிய சோழர் என்ற முடிவேந்தர் மூவர்க்கும் உரியதாய் இருந்தது. இவர்தம் ஆட்சியின் கீழ்ச் சிறு நாடுகள் பலவுள்ளன. அவற்றைக் குறுநில மன்னர் ஆட்சி புரிகின்றனர். சிறுநாடுகள் ஏனைச் சேரநாடு முதலியவற்றை நோக்கக் குறுகிய பரப்புடைய வாதலால் அவை குறுநிலம் எனவும், அந்நாடுகளை ஆளும் தலைவர்களைக் குறுநில மன்னர் எனவும் வழங்கினர். பெருநில மன்னர்க்கே முடிசூடும் பெருமை இருந்தமையால் சேரரும் பாண்டியரும் சோழருமாகிய மூவருமே முடிவேந்தர் எனப் பட்டனர். இவ்விருவகை வேந்தரும் நிலப்பரப்பால் வேறுபடினும், மகட்கோடல் மகட்கொடை புரிதல் முதலிய வாழ்க்கைக் கூறுகளில் வேறல்லர்; இவர்கள் பெரும்பாலும் ஒருவர்க் கொருவர் உதவி யாகவே இருந்துள்ளனர். குறுநில மன்னரின் நாடுகள் பெருநிலம் முழுதாளும் முடிவேந்தர் நாடுகட் கிடையிலும் எல்லையிலும் இருக்கின்றன. சோழ நாட்டின் வடவெல்லையான வேங்கடப் பகுதியில் வேள் புல்லியும், சோழ பாண்டிய நாடுகட்கிடையே வேள் எவ்வியும் வேள்பாரியும், பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையே வேள் ஆயும், சேரநாட்டின் வடவெல்லையில் வேளகமும் இருப்பதைக் காணலாம். கொங்குநாட்டுக்கும் சோழ பாண்டிய நாடுகட்கும் இடையே வேளாவிநாடும் கொல்லிநாடும் மலையமான் நாடும் தகடூர்நாடும் எருமைநாடும் ஆகிய குறுநில மன்னர் நாடுகளும் உள்ளன. இவற்றையாண்ட தலைவர் பலரும் வேளிர் எனவும் வேள் எனவும் சிறப்பித்துக் கூறப்படுவர். இவையே யன்றி, காட்டுநாடு, கொங்குநாடு, பெண்ணைநாடு, தொண்டைநாடு, மலைநாடு, கோனாடு, முக்காவனாடு, மாறோகநாடு என்பன முதலிய உண்ணாடுகளும் புறநானூற்றால் தெரிகின்றன. தமிழில் இல்லாள் என்ற சொல் இல்லத்துக்கு உரியவள் என்றும், இல்லான் என்ற சொல் வறியவன் என்றும் பொருள்படும். இல்லத்துக்கு உரியவன் என்று பொருள்பட வேண்டுமாயின் இல்லக் கிழவன், இல்லாளன் எனச் சொல்வடிவு வேறுபடுதல் வேண்டும். இதற்குக் காரணம் வீட்டுக்கு உரிமை மனையாளது என்பதுபற்றியாகும். அதனால் அவ்வுரிமை இல்லாளின் வயிற்றிற் பிறந்தார்க்கு எய்துகிறது; அது கொண்டு மக்கள் எய்தும் பொருளுரிமை தாயம் எனப்பட்டது. தாயம், தாய் வழிவந்த உரிமையாம். வீட்டில் நிலவிய தாயமே நாட்டரசுக்கும் அமைந்திருந்தமை யால், நாடாளும் ஓர் அரசனுக்குப்பின் அவனது அரசு அவன் தாய்வயிற்றில் அவனோடு உடன் பிறந்த இளையவனுக்கும் அவற்குப்பின் அவனுடைய இளவலுக்கும் சென்றது. உடன்பிறப்பு முறையால் எய்துவது எழாஅத் தாயம்1 என்றும், வேறு முறைமை பற்றி எய்துவது பழவிறல் தாயம்2 என்றும் சான்றோர் குறிப்பர். தந்தைக்குப்பின் அவன் முதன்மகனும், அவற்குப்பின் அவன் முதன்மகனும் எய்தவரும் உரிமை தமிழகத்துக்கு உரியதன்று; அதனைத் தாயம் என வழங்குவது பொருளுரையுமன்று. வேறு முறைமை என்றது மக்கள் இல்வழி நெருங்கிய உறவின் வழிவரும் முறைமையாம். இனி தாமாக எய்தாது களிறு முதலியவற்றால் தேறப்பட்டு எய்தும் அரசுரிமை "பால் தரவந்த பழவிறல் தாயம்" என்று சிறப்பிக்கப்படும். இனி, இங்கே குறித்த குறுநில மன்னர் முடிவேந்தருள் எவரேனும் ஒருவர்க்குக் கீழ் இருந்து ஆட்சி புரிவர். அதனால் அவர்கள் தம்முடைய வேந்தர்க்குரிய அடையாள மாலையினையே தாமும் அணிவர். முடிவேந்தன் பெயரையே தனக்குச் சிறப்புப் பெயராகக் கோடலும் குறுநில மன்னர்க்கு இயல்பு. சேரமான் உதியன் வழிநின்ற குறுநில மன்னனான நன்னன் என்பவன் நன்னன் உதியன் எனப்பட்டதும், தகடூர் அதியமான்கள் பனந்தாரை அணிந்து கொண்டதும் இக்கருத்துக்கட்கு ஏற்ற சான்றுகளாகும். இவ்வழக்கு இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இருந்து வந்துளது. பெருநில மன்னர் தமக்குக் கீழிருந்து ஆட்சி புரிந்த குறுநிலத் தலைவர்கட்குத் தம்முடைய பெயரையும் முன்னோர் பெயரையும் சிறப்புப் பெயராகத்தந்து "எதிரிலி சோழ சம்புவராயன்", "குலோத்துங்க சோழ காங்கேயன்" என்றாற் போலச் சிறப்பித்த செய்திகள் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் காணப்படு கின்றன. கடுமான்கிள்ளி சோழியவேனாதி திருக்குட்டுவன் என்பன சங்க காலத்து நிலவிய சிறப்புக்களாகும் மேலும், இக்குறுநில மன்னர்க்கு ஏனைச் சேர பாண்டிய சோழர்களைப்போல மணிமுடி சூடும் மாண்பொன்று இல்லையேயொழிய ஏனைச் சிறப்புக் களெல்லாம் உண்டு. வேள்பாரிபோல முடிமன்னர் கீழ் இராது தனித்திருந்து நாடுகாவல் புரிந்தோரும் உண்டு. மலயமான் திருமுடிக்காரி, கொல்லிகிழவன் வல்வில் ஓரி, வையாவிக் கோப்பெரும்பேகன், ஆய் அண்டிரன், களவர் தலைவன் மாவண் புல்லி முதலியோர் இவ்வகையைச் சேர்ந்தோராவர். என்றாலும் மூவேந்தரது நிலை பெரிதும் மேன்மையுற்றே இருந்தது. மூவேந்தரையும் இறைவன் திருவிழிகள் போலவே சான்றோர் கருதியுள்ளனர். பாண்டி வேந்தரைப் பாராட்ட லுற்ற சான்றோர், "கறைமிடற்றண்ணல் காமர்சென்னிப், பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற"1 என்று பாடியிருப்பது இங்கே நினைவு கூரத்தகுவதாம். தமிழ்வேந்தர் அனைவரும் கல்வியின் இன்றியமை யாமையினை நன்கு அறிந்து, கற்றோர் கூறும் அறநெறியிலே தமது அரசு முறையினை நடாத்தி வந்தனர். நாட்டில் நிலவியது முடியாட்சி யெனினும், முடியுடை வேந்தன் தன் விருப்பம் போல் ஆட்சி நடத்துவது கிடையாது. அரசியல் அறிவுடையோர் காட்டும் நெறியிலே தான் அரசு நடைபெற்றது. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன் என்ற முடிவேந்தன், மக்கள் அனைவரும் கல்வி கற்பதனால் விளையும் நலத்தை விதந்து, "உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" என்றும் கல்வியறிவுடையோர் உரைப்பனவே அரசுமுறையை நெறிப்படுத்து வனஎன்றற்கு, "ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்றும் இயம்பியுள்ளான். இக்கருத்தால் நாட்டில் கற்றவல்லோருக்குச் செல்வர்கள் உற்றவிடத்துப் பொருள் உதவி செய்த திறங்களும், உறுபொருள் கொடுத்து ஊக்கிய செயல்களும் சங்க நூல்களிற் பெருகக் காணப்படுகின்றன. இவ்வாறு கல்விநலத்தைப் பேணிய வேந்தர், அரசியல் அறிவைப் பெரிதும் விரும்பி யொழுகினர். வேந்தர் அரசியலறிவைச் சிறக்கப் பெற்றாலன்றி அரசினை இனிது நடத்த முடியாது என்றும், அஃது இல்வழிப் பகைத்துன்பம் பெருகி அரசியல் வாழ்வைச் சீரழிக்கும் என்றும் அவர்கள் கருதினர்; "கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும், காவற்சாகாடு உகைப்போன் மாணின், ஊறின்றாகி ஆறு இனிது படுமே, உய்த்தல் தேற்றானாயின் வைகலும், பகைக்கூழ் அள்ளற்பட்டு மிகப்பல் தீ நோய் தலைத்தலைத் தருமே"1 என்று தமிழ்வேந்தன் ஒருவன் எடுத்துரைப்பதைப் புறநானூறு தெரிவிக்கின்றது. இந்நிலையில் இவ்வேந்தர்களின் கருத்தில் சில சீரிய நோக்கங்கள் இருந்து அவர்களைச் சிறப்பித்துள்ளன. அறநெறியில் ஒழுகி அன்புடைக் காதற் பிணிப்பால் மணம்புரிந்துகொண்ட மனைவியைப்பிரிந்து ஒழுகுவதும், தம்பால் காதலன்பு கொள்ளாத மகளிரை வலிதிற் கைப்பற்றுவதும், முறை வேண்டிவந்தோர்க்கு நீதி வழங்காமையும், குடிமக்கள் பழித்துத் தூற்றும் அரசு செய்வதும், புலவர்பாடும் புகழ்பெறாமையும் கையிகந்த இறைவாங்குவதும், போர்க் கருவிகளால் புண்பட்டு இறவாமல் கொன்னே மூத்து நோயுற்று இறப்பதும் கனவிலும் தம்பால் நிகழ்தல் கூடாது என்பது அவர்களுடைய கருத்துக்களாம். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற முடிவேந்தர் பாடியுள்ள பாட்டுக்களால் இவற்றை நாம் நன்கு அறிகின்றோம். இவருள் பூதப் பாண்டியன் தான் பிறந்த பாண்டியர் குடியே மேம்பட்டதென்றும், தான் இறந்து மீண்டும் பிறக்குமிடத்துத் தனக்குத் தென்புலம் காக்கும் பாண்டிவேந்தர் பிறப்பேஎய்துதல் வேண்டுமென்றும் ஏனைநாடுகளை வன்புலமெனப்பழித்து அவற்றைப் புரக்கும் அரசுரிமை தனக்கு எய்தினும் அஃது ஆகாது என்றும் கருதியவனாய், "மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த, தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர், வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே"1 என்று கூறுகின்றான். குடிகள் இறுக்கும் அளவான இறையன்றி மிக்க வரிவிதித்து வாங்கும் கொடுமையை வெறுத்த கொள்கையனான பாண்டியன் நெடுஞ்செழியன், "என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது, கொடியன் எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக், குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக" என்று வஞ்சினமுரைப்பதும், கையிகந்த இறைபெறும் வேந்தனை, "குடிபுரவிருக்கும் கூரிலாண்மைச் சிறியோன்"2 எனச் சோழன் நலங்கிள்ளி இகழ்ந்து பேசுவதும், குடிகட்கு இறைவகுக்கும் வகையில் தமிழ் வேந்தர் எத்துணைக் கண்ணும் கருத்துமாய் இருந்தன என்பதைக் காட்டுகின்றன. நல்லரசு நடத்தும் வேந்தர் தமது செயற்கு ஊதியமாகப் பெறுவனவற்றுள் புலவர்கள் தம்மைச் சிறப்பித்துப் பாடுவதால் எய்தும் புகழையே பெரிதாக மதித்தொழுகினர். ஒருகால், பாண்டியன் நெடுஞ்செழியன் தன் பகைவர் கேட்ப வஞ்சினம் கூறியவிடத்து, பகைவரை அறப்போர் செய்து புறங்காணேனாயின், புலவர் பாடும் புகழ்பெறாத புல்லியோனாய்க் கெடுவேனாக என்பானாய், "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை"3 என்று கூறினான். இதனால் அவனுக்குப் புவலர்பாடும் புகழின்கண் இருந்த வேட்கையும் நன்மதிப்பும் நமக்கு நன்கு விளக்கமாகின்றன. இக்கொள்கை இடைக்காலத்தும் பிற்காலத்தும் தமிழகத்தில் நிலவிய அரசர்கள்பால் இல்லாதொழிந்தமையால், புலமை வளம் பெறாதொழிந்தது; தமிழர் அரசியல் வாழ்வு நிலைபேறின்றிக் கெட்டு அலமரல் எய்திற்று. அறிவு ஊற்றாகிய புலவரினம் பல்லவர் காலமுதலே புறக்கணிக்கப்பட்டு பொற்பிழந்தமையின், வேற்ற வரும் வேற்றுமொழியும் வேற்றுக் கொள்கைகளும் தமிழ்வாழ்வின் இடையே புகுந்து செல்வாக்குப்பெற்றன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பரந்து விளங்கிய தமிழ் உள்ளம், சுருங்கிச் சாதிசமய வேற்றுமைச் சழக்குகட்கு இரையாகிப் பிறர்க்கு அடிமை செய்தொழுகுவதே உலக வாழ்வு என்று கருதத்தலைப்பட்டது. அதனால் மொழியுணர்வும் தொல்வரவும் கைவிட்டுத் தமிழ்க்குக் கேடு செய்யும் சூழ்நிலைக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கிச் சிறுமை எய்தியுள்ளது. நல்லிசைப் புலவர்பால் பேரன்பும் அவர் பாடவுண்டாகும் புகழின்கண் பெருவேட்கையும் சங்ககால வேந்தர்க்கு உண்டான தற்குக் காரணம் காண்போர், "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து"1 என்று கூறுவதுண்டு. உண்மை அஃது ஒன்று மட்டும் அன்று; புகழ்விளைக்கும் சான்றோர் தாம்பாட விரும்பும் வேந்தரது வேத்தியல், கொடிதுகடிந்து கோல் செம்மை கோடாது நடத்தலையே வற்புறுத்தி மொழிவதை நாம் காண்டல் வேண்டும். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சான்றோர், சோழன் இளஞ்சேட் சென்னியின் அரசவையையடைந்து வேந்தர் மக்கள் பண்பறிந்து நடக்கும் பான்மையுடையராகவும், ஒருவன் ஒரு குற்றத்தைத் தம் கண் காணச் செய்த வழியும், அவனை முறைப்படி வழக்காராய்ந்து குற்றத்துக் குத்தக ஒறுப்பதை விடுத்துத் தாம் விரும்பியவாறு செய்யாதவ ராகவும், குற்றம் செய்தோர் தம் குற்றமுணர்ந்து முன் வந்து பணிந்து வழிபட்டு நிற்பின் அவர்க்கு உரிய தண்டத்தைச் சிறிது தணிக்கும் தட்பமுடையராகவும் இருத்தல் வேண்டும் என்பாராய், "வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்வழி கூறுவோர் மொழிதேறலையே நீமெய்கண்ட தீமைகாணின் ஒப்பநாடி அத்தக வொறுத்தி வந்தடி பொருந்திய முந்தை நிற்பின் தண்டமும் தணிதிநீ பண்டையிற்பெரிதே"2 என்று கூறுகின்றார். சோழன் நலங்கிள்ளியின் ஆட்சியில் அரசு எய்தும் செல்வம் எவ்வாறு பாதீடு1 செய்யப்பட வேண்டும் என்பதை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற சான்றோர் நன்கு வகுத்துக் காட்டுகின்றார். "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு" என்றார் திருவள்ளுவர். இவற்றை அவ்வப்போது எடுத்து வற்புறுத்தி அரசு இனிது இயங்கும் வகையில் பண்டைத் தமிழ்ப்புலமை அரும்பணி ஆற்றியுள்ளது. முதுகண்ணன் சாத்தனார், நலங்கிள்ளியை நோக்கி, "வேந்தே, நீ ஈட்டும் செல்வம் நினக்கு நலம் செய்யவல்லது; அந்நலம் அறமும் பொருளும் இன்பமுமாம். அறமுதலிய மூன்றும் பயவாவழி நினது அரசும் நீயும் கெடுவது ஒருதலை" என்பாராய், "அறனும் பொருளும் இன்பமும் மூன்றும், ஆற்றும், பெரும, நின்செல்வம்; ஆற்றாமை நிற்போற்றாமையே"2 என்று இயம்புகின்றார். கொடியோரைத் தெறுவதும் நல்லோரை அளித்தலும் அரசு முறைக்கு அறமாகும்; அந்நிலையில் நல்லதன் நன்மையையும் தீயதன் தீமையையும் உள்ளவாறு காணாது இல்லையென மறுக்கும் ஏதிலார் கூட்டம் அரசியற் சூழலில் இடம் பெறுமாயின், அரசு நிலைபேறின்றிக்கெடும் என்றற்குக் "கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும், ஒடியா முறையின் மடிவிலையாகி, நல்லதன் நலனும் தீயதன் தீமையும், இல்லையென் போர்க்கு இனனாகிலியர்"3 என்று அறிவுறுத்து கின்றார். நாடாளும் அரசியலில், வேந்தன், நாடோறும் தனித்திருந்தும் அறிஞரொடுகூடியும் ஆராய்ந்து செய்யும் வினைவகைகள் பல வாதலின், முறைவேண்டியும் குறை வேண்டியும் வரும் மக்களை வரவேற்றற் கேற்ற காலவாய்ப்பு அவனுக்குச் சுருங்கியே இருக்கும். அவனை நேரிற் காண்டல் வேண்டி வருபவரும் பலசொல்லக் காமுறுவரா தலால், காலம் பயன்படாது கழிதற்கண் அவனுக்கு உள்ளம் வருந்தும்; அதனால் அவன் காட்சிக்கு எளியனாதல் அரிதாவது உண்டு. அதுவே பற்றுக் கோடாக வேந்தர் சிலர் தன்பால்வரும் நன்மக்கட்கும் செவ்வி நல்காது மறுத்தொழுகுவர். அஃது இறைமாட்சியாகாது. வேந்தரிடத்து அது மிகுமாயின், குடி கட்கும் அரசுக்கும் தொடர்புண்டாகாது கெடுக்குமாதலால், காட்சிக் கெளிமையும் கடுஞ்சொல் இன்மையும் வேந்தர்க்குச் சான்றோரால் விதிக்கப்பட்டன. இந் நிலையில் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது ஆட்சிக்காலத்தே அவன் யாவர்க்கும் எளிதில் செவ்வி வழங்கும் இயல்பு குன்றினான். குடிமக்கள் செலுத்தும் செய்க்கடன்குறித்து வெள்ளைக் குடி நாகனார் என்ற சான்றோர் அவனைக் காண்டற்குச் சென்றாராக, அக்காலை அவர் அவன்பால் இருந்த குறையை எடுத்துக் காட்டி, "அறம்புறிந்தென்ன செங்கோல் நாட்டத்து முறைவேண்டும் பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே" என்றும், அரசர் ஏந்திய வெண்கொற்றைக்குடை குடிகளைப் புரத்தற்கென்றே ஏந்தியது என்பதை நினைவுறுத்தி, "கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை, வெயின்மறைக் கொண்டன் றோவின்றே, வருந்திய குடிமறைப்பதுவே" என்றும், நாட்டில் யாதேனும் தீங்கு நேரின் அதற்குக் குடிகள் அரசனையே நோவர் என்ற கருத்துப்பட, "மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும் கண்ணகன் ஞாலம்" என்றும் அறிவுறுத்துவாராயினர். முடிவில் அவர் வேந்தனுக்கு உழவின் இன்றியமையாமையை விளக்கி, வேளாண் மக்களின் உழவுப் பயனே அரசின் வெற்றிக்கும் மேன்மைக்கும் அடிப்படை யென்றற்கு, "வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே" எனவும், எனவே குடிபுறந்தருதலே முதற்கண் செயற்பாலது என்பார், "நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறத் தருநர் பாரம் ஓம்பிக் குடிபிறந் தருவையாயின் நின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே" எனவும் உரைத்துள்ளார். இவ்வாறே பாண்டிநாட்டை ஆண்ட வேந்தருள் அறிவுடைநம்பி என்பவன் ஆட்சியில் அங்கு வாழ்ந்திருந்த சான்றோருள் ஒருவரான பிசிர் ஆந்தையார் குடிகளிடத்திலிருந்து பெறக்கடவ இறையைப் பெறுமிடத்து வேந்தன் நெறியறியாது ஒழுகுவானாயின், அவன் கெடுவதேயன்றி நாடும் நலம் அழிந்து கெடும் என்று கூறலுற்றவர், "அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடியாத்துநாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவனாகி வைகலும் வரிசையறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானைபுக்க புலம் போலத் தானுமுண்ணான் உலகமும் கெடுமே" 1 என்று பாடிக்காட்டினார். வேந்தர்க்குக் கடன் இஃது என்பதை வற்புறுத்தப்புகுந்த மோசிகீரனார், "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்; அதனால் யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே"2 என்று எடுத்துரைத்தார். இவ்வாறு அவ்வப்போது பாடல் சான்ற புலவர் பெருமக்கள் அரசின்பால் உண்டாகும் குறைகளை எடுத்துக் காட்டி நன்னெறிகளை விதந்து பாடும் நலமே அவர்கள் தம்மைப் புலவர் பாடுவதால் பிறக்கும் புகழை வேட்டு நின்றதற்குச் சீரிய காரணங்களாகின்றன. தமிழ்வேந்தர் ஆட்சியில் பெருநகரங்களில் சான்றோர் இருந்து அறம் உரைக்கும் நல்லவைகள் இருந்திருக்கின்றன. உறையூரின்கண், யார்மாட்டும் கண்ணோடாது முறை தேர்ந்துரைக்கும் அறவோர் அவையொன்று இருந்து புகழ் விளைத்து வந்தது. அதனால், "மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறம் நின்று நிலையிற்று"1 என்றும், "அறம் துஞ்சு உறந்தை"2 என்றும் அந்நகர் சிறப்பிக்கப் பெற்றது. திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமா என்னும் பேரூரில் வேள் நன்னன் சேய் என்பான் இருந்து ஆட்சிபுரிந்த காலத்து அவனது அறங்கூறும் அவையத்தின் சிறப்பைக் கூறப் புகுந்த பெருங்கோசிகனார், முறைவேண்டி வருவோர் தமது குறையைக் கேட்போர் இனிது அறியுமாறு முறைப்படக் கூறும் திறம் இல்லாதவராயின், அவர் கூற்றை வாங்கி அவர்க்காகத் தாமே நின்று திறம்படக் கூறி முறைபெறச் செய்யும் சான்றோர் இருந்தனர் என்பாராய், "நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கம்3 என்று இயம்புகின்றார். கற்றோர் எழுதும் நூல்களுள் மக்கட்குப் பயன்படத்தக்க கருத்து நிறைந்தவற்றை ஆராய்ந்து தேர்ந்து சிறப்பிக்கும் தமிழ் கெழு சான்றோர் இருந்த தமிழ்க் கூடல் ஒன்று மதுரைக்கண் இருந்தது. அதனால் மதுரை தமிழ் கெழு கூடல் என்று சான்றோரால் சிறப்பிக்கப் பெற்றது. இச்சான்றோர் பலரும், நாட்டரசு அறத்தை அடிப்படையாகக் கொண்டு நிலவவேண்டும் என்பதைக் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். நாடு காவலையே பெரும் பணியாகக் கருதும் வேந்தருள் மறம் மிகுந்தோர் அகக்காவலினும் புறக்காவலையே பெரிதாக எண்ணி அதற்கு வேண்டும் படை வகைகளைப் பெருக்குவதில் ஊக்கமிகுதல் இயல்பு. படைமிக்க வழி அரசன்பால் போர்வெறி தோன்றிப் பிறர்வாழ வாழும் பெருவாழ்வைக் கைவிடச் செய்யும் என்று அஞ்சி, அக்காலங்களில், இச்சான்றோர் அறத்தை வற்புறுத்தி, அதுவே வெற்றிக்கு உயர்ந்த ஆதாரமாம் என்பர். "கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல் மறவருமென நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்று சான்றோர் உரைப்பது காணலாம். சான்றோர் அரசவைக்கண் இருப்பது பெரிதும் அறம் கூறுதற்கே; ஏனைப் பொருள் முதலியன வரவுக்கன்று என்று கருதுதல் கூடாது. பொருளே அறம் வளர்க்கும் செவிலி; பொருள் இல்லையாயின் ஏனை அறமும் இன்பமும் நாட்டில் நிலவா. ஆதலால் பொருள் வருவாயை வளம் படுத்தும் செயல் அரசுக்குக் கடனாகும். அதனை எடுத்துரைத்தலும் சான்றோர் சால்புக்குத் தகுவதாம். பாண்டியநாடு மழைவளம் பெருகப் பெறுதற்கு ஏற்ற இயற்கைச் சூழ்நிலை அமைந்ததன்று. மேற்கில் நிற்கும் தென்னம் பொருப்பும் வடக்கில் நிற்கும் சிறுமலைத் தொடரும் மேலைக்கடல் கீழ்கடல் ஆகிய இரண்டினின்றும் வரும் மழைமுகிலைத் தடுத்து விடுகின்றன. இவ்விருமலைகளின் கிழக்கிலும் தெற்கிலும் வழிந்தோடும் காட்டாறுகள் ஏனைக்காவிரியும் பெண்ணையும் பாலியாறும் போலப் பெருநீர்ப் பெருக்குடைய அன்மையின், அவ்யாறு கொணரும் நீரைத் தாழ்நிலங்களில் தேக்கிப் பயன் கொண்டாலன்றிப் பாண்டி நாடு நீர் வளமும் நிலவளமும் சிறந்து மிக்க பொருளை விளைவித்தல் இயலாது என்பதைக் குடபுலவியனார் என்னும் சான்றோர் கண்டார்; அந்நாளில் அரசுபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கினார். அவன் செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டியும் போர்த்தொழிலில் ஒருதானாகவேண்டியும், நல்லிசை நிறுவல் வேண்டியும் அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான். அவனைக் கண்ட குடபுலவியனார், " வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணியாளும் இறைவன் தாட்குத வாதே; அதனால் அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே" 1 என்று உரைக்கின்றார். இத்தகைய சான்றோரைத் துணையாகப் பெற்றும் அவர் உரைக்கும் சால்புரைகளை மேற்கொண்டொழுகியும், அவராற் பெறப்படும் புகழ்மேம்பட்டும் விளக்கமுறும் இத்தமிழ் வேந்தர், புலவர்கட்கேயன்றி ஆடல் பாடல்களால் தம்மை இன்புறுத்தலும் தம்புகழைப் பிறநாடுகளில் பரப்புதலும் செய்யும் பாணர் கூத்தர் விறலியர் முதலியோர்க்கும் தாம்பெற்ற செல்வத்தை வரைவின்றி வழங்குகின்றனர். புலவர் பாணர் கூத்தர் ஆகிய மூவராலும் இயலும் இசையும் கூத்துமாகிய முத்தமிழும் முறையே வளர்க்கப்பெறுதலின், இவர்களை ஓம்புவதைத் தமிழ்வேந்தர் தமது புரவுக் கடனாகக் கொண்டுள்ளனர். அதனால் இவர்கட்கு எந்நாடும் எவ்வூரும் தம்நாடும் தம்மூரும்போல ஆதரவு செய்தன. தமது நாட்டிற் புகுதாவாறு இவர்களைத் தடுக்கும் வேந்தர் தமிழகத்தில் இருந்த தில்லை. இருநாடு கட்கிடையே போர் தோன்றி நிலவியபோதும் இவர்கள் அந்நாடுகளுட் சேறற்குத் தடை சிறிதும் தோன்றியதில்லை யெனின் வேறு கூறுவானேன்? பொருள்வளம் சுருங்கிய போழ்தும் தமிழ்த்தலைவர்கள் இவர்கட்குத் தம்பால் உள்ளவற்றை வரையாது வழங்கிய வண்மைகள் நூல்களிற் பெரிதெடுத்துப் பேசப்படுகின்றன. கோவூர்கிழார் என்னும் சான்றோர். " கடும்பின் அடுகலம் நிறைய நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ வண்ணம் நீவிய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன மாடமதுரையும் தருகுவன் எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்" 2 என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறு வழங்கப்படும் பொருள்கள் அனைத்தும் பகைப் புறத்துக் கொள்ளப்படும் பொருளும் பொன்னும் பிறவுமாகும். பகை நிலத்தே பெற்ற யானை குதிரை முதலியவற்றையும் பொருளையும் புலவர் பாணர் முதலா யினார்க்கு வரையாது அளித்தலில் தமிழ்ச் செல்வர் பெருமிதம் கொள்வர். பகைவருடைய பொன்னால் பொன்னரிமாலையும் பொற்றாமரைப் பூவும் செய்து இவர்கட்குத் தந்து சிறப்பித்தல் பெருமரபாகவுளது. இசையும் கூத்தும்வல்ல விறலியர்க்கும் பொற்பூச்சூடுவதும் பாணர் முதலாயினார்க்குப் பொன் மாலை வழங்குவதும் இயல்பு. இதனால் வளம்பெறக் கருதிய புலவர் பாணர் முதலியோர் போர்க்காலத்தே களம்புகுந்து போருடற்றி வெற்றிபெறும் வேந்தர் புகழை மிகுதியும் பாராட்டு கின்றனர். வேந்தர் செய்யும் போர் இவ்வகையில் தமக்குப் பெருவருவாயாக இருப்பினும், இவர்கள் தமது சொல்லாலும் பாட்டாலும் போரின் கொடுமையையும் அதனால் நாடுகள் அழியும் திறத்தையும் விரிவாகப்பாடி, அது நிகழாதவாறு தடுப்பதற்கே முயன்றுள்ளனர். அந்தச் சிறப்புத்தான் இவர்கள்பால் வேந்தர்க்கும் சான்றோர்க்கும் நன்மதிப்புக்குன்றாமல் இவர்களை ஓம்பியதற்குச் சீரிய காரணமாகும். போருடற்றும் வேந்தரும் மறவரும் போர்க்கு இடையே புலவர் முதலாயினார்க்குத் தீங்குண்டாகாவாறு பேணியதும் இது பற்றியேயாம்.  16. தமிழர் போர்த்திறம் இன்பத்தின்கண் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் உயிர்கட்கு இயல்பு. அதனால் இன்பப்பேறு குறித்து உயிர்களின் நினைவும் செயலும் இயலுகின்றன. "எல்லாவுயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என ஆசிரியர் தொல்காப்பியனாரும் கூறுகின்றனர். இவ்வுயிர்களுள் மக்களுயிர் தன் நினைவும் சொல்லும் செயலும் இவ்வின்பப்பேறு குறித்தனவாம் என்று கருதி அதற்கு வாயிலாக அறத்தையும் பொருளையும் ஆக்கிக் கொள்வதையே வாழ்வின் செயலாக மேற்கொண்டு, அஃது உலகில் தோன்றிய நாள்தொட்டே ஒழுகிவருகின்றது. இன்பத்துக்கு மாறானது துன்பம்; இன்பப் பேற்றுக்கு இடையீடும் இடையூறும் தோன்றும் போதெல்லாம் துன்பம் தோன்றுகிறது. துன்பத்தை நீக்கினாலன்றி இன்பம் நுகரப் படாமையால், துன்பத்துக்கு ஏதுவாவனவற்றைக் கண்டு அவற்றை நீக்குவதில் மக்களுயிர் தனது அறிவையும் உடல்கருவி பொருள் முதலியவற்றையும் செலவிடுகின்றது. அது பற்றியே உயிரின்பால் வெகுளியும் இகலும் பகைமையும் தோன்று கின்றன. இந்த அடிப்படையில் தோன்றியதுதான் போர். தமிழ் இலக்கணத் துறையில் வேந்தர்களிடையே பகைப்புறப் போர்த் திறத்தைக் கூறும் பகுதி புறப்பொருள் பிறவும் ஆகும். தமிழ்ச் சங்க இலக்கியத் தொகை நூல்கள் எட்டனுள் புறநானூறும் பதிற்றுப் பத்தும் புறப் பொருள் பற்றியன; பத்துப் பாட்டினுள் ஆற்றுப் படைகளும் காஞ்சிப்பாட்டும் புறப்பொருள் பற்றியனவே யாம். போர்த்துறையின் வரலாறு நினைந்து கூறலுற்ற இடைக்குன்றூர் கிழார் என்னும் சான்றோர், " ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று; இவ்வுலகத் தியற்கை; இன்றின் ஊங்கோ கேளலம் 1 என்று கூறுகின்றார். போர்த்திறங்களைக் கூறும் பண்டைத் தமிழ் நூல்களை நோக்கின், இன்ப நாட்டமும், பொதுச்சொற் பொறாமையும், இடஞ் சிறிதென்னும் குறைபாட்டால் நாடுகண் அகற்றலும் போர்க்காரணங்களாகக் காணப் படுகின்றன. இன்பவளம் பொருள் மேலதாகலின், பொருளும் இன்பமும் வேண்டி வேந்தர் போர் தொடுத்துள்ளனர். பொதுச்சொல் என்பது உலகில் உள்ள வேந்தர் அனைவர்க்கும் நிலவுலகம் உரியது என்பது; அது வலிமிக்க வேந்தர்க்கு உடன்பாடு நல்காது பொறாமை தோற்றுவித்தலால் அதுவும் போர்க்குக் காரணமாயிற்று. நாடு பொருள்நலம் மிகுவது குறித்தும் மக்கட்பெருக்கம் கருதியும் வலியுடை வேந்தர் தமது நாட்டின் பரப்பை மிகுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள் கின்றனர். அம்முயற்சி அயல் நாட்டின் பரப்பைச் சுருக்கி அடிப்படுத்து வதாகையால் அது போர் உண்டாதற்கு வாயிலாயிற்று. இவற்றை, " வையங்காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா வுள்ளம்" 2 என்று கபிலர் சுருங்கக் கூறுதலால் அறிகின்றோம். இங்ஙனம் பொருளும் இன்பமும் வேண்டி வேந்தர் போரை மேற்கொண்டனராயினும், இவையிரண்டும் அறத்தின் வழி வருவன என்பதை இவர்கள் அழுத்தமாக அறிந்திருந்தனர். "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம்" என்றும், "மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்றும் அவர்கள் கருதி அதனை நன்கு கடைப்பிடித்தொழுகினர். அதனால் போர் தொடங்குகிற போதும் போர் செய்கிற போதும் இவ்வேந்தர் பால் அறமே தலைசிறந்து நிற்கிறது. போர் குறித்து இருபாலும் மண்டி நிற்கும் வேந்தரை "அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்"1 எனக் கழாத்தலையார் என்ற சான்றோர் சிறப்பித் துரைக்கின்றார். போர் செய்வது எனத் துணிந்த வேந்தன் முதற்கண் தண்ணுமை முழக்கால் தன்நாட்டுப் போர் வயவரை வருவித்து அவர்கட்கு அடையாளப் பூக்களை நல்குவன். அது பூக்கோள் எனப்படும். பூக்கோளேய தண்ணுமை கேட்டலும் வயவர் அனைவரும் உடனே திரண்டு விடுகின்றனர். போர் என்ற வழி அதனை விரும்பி வரவேற்கும் இயல்பினர் தமிழ் மறவர்; "போர் எனில் புகலும் மறவர்" என்று சான்றோர் அவர்களைப் பாராட்டுவர். படை திரண்டது காணும் வேந்தன் அவரவர் வரிசைக் கொப்ப அடையாளப் பூக்களை நல்கி நாளும் புள்ளும் நோக்கிப் போர்க் குரிய நாளை அறிவிப்பன். அந்நாளில் வேந்தன் நாட்காலத்தே நீராடிப் போர்க்கோலம் கொள்வன். இம் முறையே போர்க்கோலம் கொள்ளும் செழியன் ஒருவனைக்கண்ட சான்றோர், " மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி மன்றவேம்பின் ஒண்குழைமலைந்து தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி வெம்போர்ச் செழியனும் வந்தனன்"2 என்று பாடிக் காட்டுகின்றார். போர்குறித்து பகைவர் நாட்டின் மேற்செல்லும் வேந்தன், அந்நாட்டின் எல்லைக்கண் நின்று தன் போர் வரவு தெரிவித்து அந்நாட்டு மக்கட்கு அறிவுரை வழங்குவன். போரில் அந்தணர், பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், மகப்பெறாதோர், சிறுவர் முதலியோரையும் ஆனிரை களையும் கொல்லலாகாது என்பது அறம்; அதனால் அவர்களை நோக்கி, போர் நிகழவிருக் கின்றமை யுணர்த்தி அவரவர்க்குரிய காப்பான அரண்களில் ஒடுங்கிவிடுமாறு அவ்வறிவுரை வழங்கப்படும். " ஆவும் ஆனியற் பார்ப்பனமாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புலவாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போர் புதல்வர்ப் பெறாதீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண்சேர்மின்" 1 என்று வரும் சான்றோர் பாட்டால் இது துணியப்படும். படைவகையில் கூளிப்படை, வாட்படை, வேற்படை, விற்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எனப் பல்வகையுள்ளன. இவற்றுள் கூளிப்படை முற்படச் சென்று பின்னே வரும் படைகட்கு வழி வகுக்கும் பணியைச் செய்யும். அதனைத் தொடர்ந்து கொடியும் அடையாளப் பூவும், மாலையும் தாங்கி வருவது தார் எனவும் தூசிப்படை யெனவும் வழங்கும். குதிரைவீரர் வேலும் வாளும் ஏந்துவர். தேர்வீரர் யானை மறவர்போலப் போர்ப்பயிற்சி சிறந்து புகழ்மேம்பட்டவராவர். போரில் எதிர்நிற்கமாட்டாது அஞ்சி முதுகு காட்டி ஓடுபவரையும் ஏந்திய படைகளை யிழந்து வெறுங்கையால் நிற்பாரையும் கொல்வது இலர். உறையினின்றும் வாங்கிய வாள் பகைவர் உடலுள்மூழ்கிக் குருதிபடிந்து உருவிழந்து நிற்பதை, "போர்க்குஉரை இப்புகன்று கழித்தவாள், உடன்றவர் காப்புடைமதில் அழித்தலின், ஊனுற மூழ்கி உருவிழந்தனவே" என்று ஒருவர் பாடுகின்றார். பகைவர் அரண்அழித்து உட்புகுந்து மேம்பட்ட வேற்படையின் வேல்கற், "சுரைதழீஇய இருங்காழொடு, மடைகலங்கி நிலைதிரிந்தனவே" என்றும், யானைகள், " எழூஉத்தாங்கிய கதவுமலைந்து அவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின் பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே"2 என்றும், இவ்வாறே குதிரைவீரர்கள் வீரர்திரளைச் சாய்த்துப் போர்க்களமுற்றும் உலாவிக் குளம்புமுழுதும் ஊனும் குருதியும் படிந்து மறுப்பட்டுத்தோன்றுகின்றன என்றும் கூறிய ஒளவையார், படைக்குத் தலைமை தாங்கி நடத்தும் வேந்தனது போர்த்திறம் கூறுவாராய், அவன் ஏந்திய தோல் (கேடயம்) பகைவர் செலுத்திய அம்புபட்டுத் துளையுற்றது கண்டு, " அவன் தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப் பொலந்தும்பைக் கழற்பாண்டில் கணைபொருத துளைத்தோலன்னே"1 என்று பாடியிருக்கின்றார். போரில்வெற்றிமிகும் வேந்தன் தன்பகை வேந்தன் ஓம்பும் காவல் மரத்தைத் தன்வெற்றிக்குறியாக வெட்டி வீழ்த்துவது போர்மரபு. ஒருகால் பழையன் என்னும் வேந்தனொடு பொருது வெற்றிகொண்ட கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் அப்பழையனது காவல் மரத்தைவெட்டி யானைபூட்டிய வண்டியிலேற்றி அவனுடைய உரிமை மகளிரைப்பற்றி அவர்தம் களைந்த கூந்தலைக் கயிறாகத் திரித்துக் கட்டிக்கொணர்ந்தான் எனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுவது இதற்குப்போதிய சான்றாம். ஒவ்வொரு வேந்தனும் ஒவ்வொருமரத்தை வரைந்துகொண்டு அதுவே தன்வெற்றியைச் சிறப்பிக்கும் மரமாகக்குறித்து அதனைச் சிறப்புற ஓம்பிவருதல் பண்டைத்தமிழ் வேந்தர்மரபு. நன்னன் என்பவன் மாமரம் ஒன்றைத் தன் காவல்மரமாக ஓம்பிவருங்கால், அதன்கண் காய்த்திருந்த முற்றாதகாய் ஒன்று அம்மரத்தினின்றும் காம்பற்றுத் தானேதன் கீழ்ஓடிய ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்துசென்ற தாக, சிறிதுதூரத்தே நீராடிக்கொண்டிருந்த இளஞ்சிறுமியொருத்தி அதனை எடுத்துத் தின்ற குற்றத்துக்காக அந்த நன்னன் அவளைக் கொன்ற வரலாறு காவல் மரத்தை வேந்தர் காத்தோம்பிய திறத்துக்குச் சீர்த்த சான்றாகும். காவல்மரம் இரவுபகலாகப் போர் மறவரால் காக்கப் படுவது பற்றிக் கடிமரம் என்றும் கூறப்படும். அதனைப் பகைவர் கைப்பற்றித் தடிகின்றார் எனின், தடியுமவர் வெற்றிபெற்றார் என்பது துணிவாம். "வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்"2 என்று சான்றோர் கூறுவது காண்க. வேங்கை, வாகை, புன்னை, கடம்பு, வேம்பு முதலிய மரங்கள் அந்நாளில் வேந்தர்களால் காவன்மரங்களாகப் பேணி வளர்க்கப் பட்டதிறம் சங்கத்தொகை நூல்களில் மிகுதியாகக் கூறப்படுகிறது. இம்மரங்கள் வேந்தர்களால் சிறப்புறக் காக்கப் படுவதால், வேறுநாடுகட்குச் சென்று பரிசில் பெற்று வரும் புலவர் பாணர் முதலாயினோர் அம்மரங்கள் நின்ற பூங்காக்களில் தங்குவர். அவர்கள் பரிசிலாகப் பெற்றுவரும் யானைகளை அக்காவன் மரங்களிற் கட்டி வைப்பர். அவர்கள் அரசியற் பாதுகாப்புப் பெற்றவராதலின், அதற்கு இஃது அறிகுறியாக இருந்தது. மேலைக் கடற்கரையில் உள்ள தீவுகளில் கடம்புத்தீவு என்பது ஒன்று; அஃது இப்போது கட்மட்தீவு என வழங்குகிறது. அத்தீவின் கண் இருந்து கடம்புமரத்தைக் காவன்மரமாக ஓம்பிய திறத்தால் அதனைப் பேணிய அரசர் கடம்பர் எனப்பட்டனர். அவர்கட்கும் சேரவேந்தர்க்கும் போருண்டாக, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அத்தீவுக்குட் சென்று அவரையும் வென்று அவர்தம் கடிமரமான கடம்பையும் தடிந்து வெற்றி மேம்பட்டான். இதனை, " நுங்கோ யார் என வினவின் எம்கோ இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி,"1 எனச் சான்றோர் கூறுவதனால் அறியலாம். பின்னர் அக் கடம்பர் கோவா என இன்று வழங்கும் கூபகத்திற் படர்ந்து, வானவாசியில் அரசு நிலையிட்டுப் பின்னர்க் கிழக்கே ஆந்திரநாடுகாறும் பரந்து வாழ்ந்தனர். இடைக்காலத்தே இவ்வரலாறு மறைக்கப்பட்டுக் கடம்பர்கள் பிராமணர்கள் என்றும், அரிதிபுத்திரகோத்திரத்தில் பிறந்த ரிஷிகள் மூவரில் முதல்வரான மானவியர் என்பவர் வேதாத்தியயனமும் சாதுர்மாசிய ஓமங்களும் வேள்விகளும் செய்து வருகையில் அவர்மனையில் கடம்ப மரமொன்று வளர்ந்திருந்ததாக அதைப் பேணி வளர்த்த காரணத்தால் அவரும் அவர்வழி வந்தோரும் கடம்பர் எனப்படுவாராயினர் என்றும்2 கூறப் படுவதாயிற்று. இவ்வாறே சங்ககால நிகழ்ச்சிகள் பல இடைக்காலத்துப் புராணங் களில் புதையுண்டு மறைந் துள்ளன. இனி, போர்க்களத்தே நேர்நின்று போர்உடற்றும் வேந்தருள், தோல்வியுறும் வேந்தர் தம்மைவென்ற மன்னனது வீரச் சிறப்பைக் கண்டு வியந்து பாராட்டுவதும், வென்ற வேந்தன் தோல்வி எய்திய அரசனது மறமாண்பைச் சிறப்பித்துப் பாராட்டுவதும், துணை புரிந்த வேந்தர் சிறப்பை இருதிறத்தாரும் பாராட்டுவதும் இயல்பு. பெருஞ்சேரல் இரும்பொறையும் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் போர் செய்த காலையில் சோழன் பக்கல் துணைபுரிந்த தேர்வண்மலையன் சிறப்பை இருவரும் புகழ்ந்து பாராட்டியதைக் "குன்றத்தன்ன களிறு பெயரக் கடந்துஅட்டு நின்றோனும் நிற்கூறும்மே வெலீஇயோன் இவனென" என்றும், "கழலணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு, விரைந்து வந்து சமம்தாங்கிய, வல்வேல் மலையனல் லனாயின், நல்லமர்கடத்தல் எளிதுமன் நமக்குஎனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே, தொலைஇயோன் இவன்என" என்றும் வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் என்பார் பாடுவதால் இதனை அறிகின்றோம். தம்மோடு எதிர்நின்று பொரும்வேந்தன் அஞ்சிய போது அவனைப் பொருதழிப்பது வீரமன்று என்பது தமிழரசர் கொள்கை. பகைவேந்தர் போந்து தமது அரணை முற்றுகையிட்டுக் காவல் மரத்தைத் தடியக் கண்டும் போர் செய்தற்கு அஞ்சி அரணிடத்தே வேந்தர் மடிந்திருப்பாராயின் அவரோடு பொருவது மானம்மிக்க தமிழ்வேந்தர்க்கு நாணுடைச் செயலாகப் பண்டையோர் நாட்டி யிருந்தனர். கருவூரிடத்தே மடித்திருந்த வேந்தனை விட்டொழியாது பொருது அழிக்கலுற்றான் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். அதுகண்ட ஆலத்தூர்கிழார் என்னும் சான்றோர் வியப்பு மேலிட்டவராய்க் கிள்ளிவளவனை அடைந்து, " வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை இயம்ப ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்தே" 1 என்று தெருட்டினார். போர்க்களம் புகுந்தோருள் இன்னாரொடுஇன்னார் இன்னார்க்குப்பின் இன்னார் பொருதல் வேண்டுமென்பதும், வேந்தன் ஏவினாலன்றித் தாமே சென்று வீரர் பொருதலாகா தென்பதும், பெரும்போர் நிகழுமிடத்துத் தலைவர்கள் தாமே முன்சென்று பொரல்வேண்டும் மென்பதும் பிறவும் போர்க் களமுறைகளாக விளங்குகின்றன. போர் முடிவின்கண் போர்வய வரைக் கூட்டி வேந்தன் விருந்து செய்வது வழக்கம். அவ்விருந்தில் வீரராயினார் வாளைக் கையிலேந்துவது குற்றமாகும்; "வாய்வாள் பற்றி நின்றனன் என்று, சினவலோம்புமின்" என்பது காண்க. என்றாலும் மிகச் சிறந்த வீரமும் போர்வன்மையும் ஒருவன்பால் விளங்கி நிற்குமாயின், அவன் போரின்கண் நிகழ்ந்தவை எவையேனும் எடுத்தோதற்கு அறிகுறியாக வாள்பற்றி நிற்பது முறையாகும். இத்தகைய விருந்துகளில், அரசன் ஏனைத் தானை வீரருடன் தானும் வேற்றுமையின்றிக் கலந்து ஒருங்கிருந்து உண்பன். விருந்தின்போது கள் பெரிதும் வழங்கப்படும்; அப்போது புலவர் ஒருவர் அங்கேயிருந்து போர்வீரருடைய குடிநிலைச் சிறப்பை விருந்தவை அறிய எடுத்து விளம்புவார். இத்தகைய விருந்தொன்றில் புலமை நடாத்திய ஒளவையார், தானைத் தலைவனை நோக்கி, இவற்குஈத்து உண்மதி கள்ளே, சினப்போர் இனக்களிற்றியானை இயல்தேர்க்குரிசில்! என்று அறிவுறுத்தி, "நின்தந்தை தந்தைக்கு இவன் தந்தைக்குத் தந்தை உறுதுணையாய் நின்று உயிர் கொடுத்து உயர்ந்தான்: மறப்புகழ்நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலைபோல மறைக்குவென் பெருமநிற் குறித்துவரு வேலே" என்று உரைப்பதைப் புறப்பாட்டில் காண்கின்றோம். போரில் புண்பட்டுவரும் மறவர்க்கு அப்புண்ணை மகளிர் தக்க மருந்திட்டு ஆற்றுகின்றார்கள். வீரர்மகிழுமாறு போரிசை பாடுதலும், தீக்காற்றும்புகாதவாறு ஐயவி புகைத்தலும், வேப்பிலை மாலைகட்டி மனையைப் புனைவதும் செய்கின்றனர். மகளிர் போர்க்களம் சென்று ஆடவர்செய்யும் போர்த்தொழிலைக் காணா ராயினும் போர் முடிவிற்சென்று களங்காண்டலும், ஆடவரது போர்த்திறம் கேட்டுமகிழ்தலும் பெருவழக்காகும். ஒருத்தி தன் கணவனுடைய போர்ச்செயலைக் கேட்கும் வேட்கையுடையளாக, அவட்கு, " தமர்பிறர் அறியாஅமர் மயங்கழுவத்து இறையும் பெயரும் தோற்றி 'நுமருள் நாண்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு' எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியின் குறுகார் நிரைதார் மார்பின் நின் கேள்வனைப்பிறரே" 1 என்று சான்றோர் கூறுகின்றனர். இதுகேட்டுப் பெருமகிழ்வெய்தும் மகளிரது வீர மாண்பு மிக்க இறும்பூது தருகிறது. தம்வயிற்றிற் பிறந்த தமது பாலையுண்ட மக்கள் மறங்குன்றா மானமும் வீரம் செறிந்த வீறாப்பு முடையராதல் வேண்டுமென்பது அவர்களது உட்கோள். ஒருத்தி தன்மகன் போர்புரிந்து படையிடையே உடல்துணிபட்டுச் சிதைந்து வேறாயினான்; அச்சிதைவு கண்ட தாய் அன்புமேலீட்டால் "வாடுமுலை ஊறிச் சுரந்தனள்."2 வேறு ஒருத்தி தன் மகன் போர்ப் புண்பட்டு இறந்துகிடப்பது கண்டு "ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள்."3 ஒருமகனல்லதுவேறு மக்களைப் பெறாளான ஒருத்தி செருப்பறை கேட்டதும் வேற்படை ஒன்றை அவன் கையிற் கொடுத்துப் போர்க்குச் செல்லவிடுப்பதும், "நின்மகன் போர்க்களத்தே படையழிந்து மாறினன்" எனச் சிலர் பொய்கூறக் கேட்டு மெய்யெனக் கொண்டு ஆறாச் சினமுடையாளய்ப் போர்க்களம் நோக்கிச் செல்வாளாயினள். அக்காலை அவள் "மண்டமர்க்கு உடைந்தனனாயின் அவன் உண்ட என்முலையை அறுத்திடுவன்" என முழங்கி மொழிவதும், "நின் மகன் யாண்டுளன்?" என்று கேட்டவர்க்கு, ஒருத்தி, தன் வயிற்றைக் காட்டி, "புலி இருந்து போகிய கல்லளைபோல, ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" என்பதும் பிறவும் தமிழ் மகளிரது மறமாண்பு காட்டும் சீர்த்த சான்றுகளாகும். போர்முறையில் ஓர் அரசன் வேற்றரசன் நாட்டினைக் கைப்பற்றிக் கொண்டபோதிலும் அதன் எல்லையினை மாற்றுவது கிடையாது. சோழர் தொண்டை நாட்டையும், பாண்டியர் பூழிநாட்டையும் கவர்ந்து கொண்டபோதும் அவற்றின் எல்லையையும் பெயரையும் சிதைத்தது கிடையாது. இவ்வழக்காறு இடைக்காலத்தும் இருந்து வந்தது. சோழர் பாண்டி நாட்டின் ஒருபகுதியை வென்று கொண்டபோதும் அதனை இராசராசப் பாண்டிவளநாடு என்றும், தொண்டை நாட்டை அடிப்படுத்த போது தொண்டை நாடான சயங்கொண்ட சோழமண்டலம் என்றும் வழங்கியிருப்பதே இக்கருத்தை வலியுறுத்துகின்றது. தோற்ற வேந்தருடைய நாட்டினின்றும் கொணர்ந்த பொருள்களைப் புலவர் பாணர் முதுலாயினார்க்கு வழங்குவதேயன்றி அவரது முடிப்பொன் கொண்டு காலுக்குக் கழல்செய்து அணிந்து கொள்வதும் வழக்கம். கைப்பற்றப் பட்ட மகளிரைக் கடவுட்கு உரிய கோயில்களில் இருந்து தொண்டுசெய்து வருமாறும் செய்துள்ளனர்.  17. புறப்பாட்டுணர்த்தும் தமிழ்வாழ்வு தமிழிற் காணப்படும் புறப்பாட்டுக்களைக் காணின் அவை யாவும் தமிழ்மக்களின் மறமாண்பை விளக்குவதே பொருளாக இருப்பதை நன்கு காணலாம். அவற்றிடையே அவர்கள் இல்லிலிருந்து செய்யும் நல்லறமும் நாம் அறியவிளங்காமல் இல்லை. அவர்களுடைய இல்வாழ்வில் ஈகையும் புகழுமே மேன்மையுற்று நிலவுகின்றன. விருந்தோம்பலும் வீரம்பேணலும் விதந்து கூறப்படுகின்றன. விருந்துபேணுதற்கு அன்புநெறியும் வீரத்துக்கு மானவுணர்வும் புகழ்வேட்கையும் அடிப்படையாகும். தமிழ்மக்களின் இல்வாழ்வில் அன்பும் அறமும் பண்பும் பயனுமாக விளங்குகின்றன. இல்லிருந்து வாழும் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள தொடர்பு பெரிதும் பாராட்டற்குரிய தொன்று. புறநானூற்றுக் கருத்துக்கள் நிலவிய காலத்தில் ஏனை உலக நாடுகள் கொண்டிருந்த கருத்து வேறு; அந்நாடுகளில் கணவன் மனைவியைத் தன்பொருட்டுத் தான் தேடிக் கொள்ளும் உலகியற்பொருள்களுள் ஒன்றுபோலக் கருதினான்; சில நாட்டவர் மனைவியை அடிமையுயிராகக் கருதி ஒழுகினர்; அதனால் அவர்கள் மனைவியரை விற்கவும் ஒற்றி வைக்கவும் உரிமைபெற்றிருந்தனர். ஆனால், அந்நாளில், தமிழினம் ஒன்றுதான், உலகியல் வாழ்க்கைக்குக் கணவனும் மனைவியும் ஒருவர்க் கொருவர் துணையென மேற்கொண்டு வாழ்க்கைத் துணை என்று போற்றி ஒத்த உரிமை தந்து உயர்ந்து விளங்கிற்று. உலகில் வாழும் மக்கள் ஒருநிகரான வலிபெற்ற உடல் படைத்தவ ரல்லர்; வலிமிக்கவர் பெரும்பொருள் ஈட்டி இன்புறுதலும், குறைந்தவர் பொருட்குறை வெய்தி வருந்துதலும் கண்டனர்; சிலர் பொருள்தேடற்குரிய உடல்நலம் குறைவறப் பெறாமையால் பிறருடைய உதவியின்றி வாழும் வகையின்றி யிருப்பதுகண்ட தமிழ் மக்கள், உடையோர் இல்லோர்க்கு உதவுதல் நல்லறம் என்று கண்டனர். அதனால், ஒருவர்க்கு உளதாகும் நல்லொளி புகழென்று போற்றப்பட்டது. அதனால் தமிழ் அறிஞர் ஈதலும் இசைபட வாழ்தலும் ஆகிய இரண்டும் உலகில் வாழும் உயிர்க்கு ஊதியம் என்று கூறுவாராயினர். உயிர் என்று பொதுப்படக்கூறியது, ஆடவர் பெண்டிர் இருபாலர்க்கும் இது சிறந்த அறம் என்பது உணர்த்தற்கு மனையின்புறத்தே சென்று பொருள் தேடிக்கொணர்வது ஆடவர் தொழிலாயினும், அகத்தே இருந்து ஆவன செய்து துணைபுரிந் தொழுகும் மகளிர்க்கு அப்பொருளைச் செலவிடும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அதன் அறிகுறியே மனைவிக்கு, இல் என்றும் இல்லாள் என்றும் சிறப்புப் பெயர்கள் காணப்பட்டு வழங்கி வருவது. விருந்தோம்பும் நெறியில் குறிஞ்சி நிலத்தவர், தம்பால் வந்த விருந்தினர்க்கு மான்இறைச்சியும் சந்தனமும் யானைமருப்பும் ஆகிய : மூன்றையும் புலித்தோலைப் பரப்பி அதன்மேற் குவித்து வைத்து நல்குவர். பொதியின்மலைப் பகுதிக்குச் சென்ற ஏணிச்சேரி முடமோசியார், ஆங்குவாழ்ந்த குன்றவர், தம்மைப் பேணிய திறத்தைப் பாடலுற்றவர், " சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை விடர்முகை யடுக்கத்துச் சினைமுதற் சாந்தம் புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும் இருங்கேழ் வயப்புலி வரியதள் குவைஇ விருந்திறை நல்கும் நாடன்" 1 என்று குறிக்கின்றார். தம்பால்வரும் விருந்தினர்க்குச் சுவைமிக்க உண்டியே யன்றி உற்றவிடத்து உடையும் வேறு பொருளும் கொடுத்து ஓம்புவது செல்வக்குடிகளில் காணப்படுகிறது. அதிய மானிடம் சென்றிருந்த ஒளவையார்க்கு, " திருமலரன்ன புதுமடிக்கொளீஇ மகிழ்தரல் மரபின் மட்டே யன்றியும் அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத்து ஊட்டலன்றியும்... அகடுநனை வேங்கை வீகண்டன்ன பகடுதரு செந்நெல் போரொடு நல்கி" 1 அவன் சிறப்பித்ததை அவரே கூறுகின்றார். இதன் கண் திருமலர் அன்ன புதுமடி என்றது உடையையும், ஊன்துவை யடிசில் என்றது உண்டியையும் குறித்து நிற்பது காண்க. இரவிடை விருந்து வருமாயின் இனிய உணவோடு, "அதள் உண்டாயினும் பாய்உண்டாயினும், யாதுண்டா யினும்"2 கொடுத்து உறங்குவித்தற் சிறப்பும், கணவன் தன் மனைக்கு வந்த விருந்துக்குப் பரிசில் ஈயக் காணும் மனைவி, "பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும், ஊணொலி யரவமொடு: கைதூவாப்"3 பெருமையும், விருந்து வந்தபோது மனைகிழவோன் "சேட் புலம் படரின், இழையணிந்து... பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்"4 கொடையும் சிறந்து தோன்றுகின்றன. கணவன் இறந்துபடின் மனைமகளிர் கூந்தல் களைதலும் இழை அணியாமையும் கைம்மை நோற்றலும் உடனுயிர்விடுதலும் தீப்பாய்தலும் தமிழ்மக்கள் வாழ்வில் காணப்படுகின்றன. "கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி, அல்லியுணவின்" கைம்மை வாழ்வு, "பெருவளக் கொழுநன் மாயந்தெனப், பொழுதுமறுத்து உண்ணும் இன்னா வைகல்"5 என்று கருதப்படுகிறது. கணவன் இறப்பின் உடனுயிர் துறவாது கைம்மை மேற்கோடல் மறுபிறப்பில் மகளிர் அவனையே கணவனாகப் பெறுவர் என்பது கருத்து. " காதலர் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர்ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகா அராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்பு அடுவர்" 6 எனவரும் மணிமேகலையாலும் இவ்வுண்மை துணியப்படும். பெண்களின் உருநலமும், குணநலமும் கேள்வியுறும் செல்வரும் வேந்தரும் அவருடைய பெற்றோர் பால் மகட்கொடை வேண்டலும், அவரிடத்தே மறப் பண்பும் மறவுணர்வும் குன்றியிருக்கு மாயின், பெற்றோர் மகட்கொடை மறுத்தலும், அதுவாயிலாகப் போர் உண்டாதலும் பண்டைத் தமிழ் வாழ்வின் மரபு. மணவினைக் கண் கணவன் மனைவிக்குத் தாலிகட்டும் முறை முன்னாளில் இல்லை. மணத்தின் குறியாக மணமகன் நல்கும் அணிகளுள் சிறந்ததொன்றனை மணமகள் தன் மங்கல அணியாக வகுத்து அதனைச் சிறப்பாகப் போற்றி ஒழுகுவாள். தான் வாழும் குடி எத்துணை வறுமை எய்தினும், தனது மங்கல அணியை மாத்திரம் மகளிர் பிறர்க்குக் கொடுப்பதிலர். மகட்பேசி இன்னாற்கு இன்னாளை மணம் செய்தல் வேண்டுமென்னும் வரைவு நிகழ்ந்தபின் மணம் நடைபெறுவதற்குள் மணமகன் போர்குறித்துப் பிரிய நேருமாயின், மணநாளில் அவன் கையிலேந்தும் வேல் வாள் ஆகிய படைகளை வைத்துத் திருமணம் செய்தலும் உண்டு. இதனைப் "பிறர் வேல் போலா தாகி இவ்வூர், மறவன் வேலோ பெருந்தகை யுடைத்து" என்று வீரன் ஒருவனது வேலைச் சிறப்பிக்கப் போந்த விரியூர் நக்கனார். " மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினும் செல்லும்"1 என்பதனால் இனிதறியலாம். மனக்கினிய மகளிரை மணந்து பார்ப்பார் முதலியோர்க்கு வேண்டுவன உதவி வாழ்ந்த மக்கள், மகளிர் கையிலேந்தி நல்கும் தேறலை யுண்டு இரவலர்க் கீந்து இறவாப் புகழ் நிறுவிய போதும் "வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்"2 என்ற குறிக்கோளில் ஊன்றிய கருத்துடை யாராவர். அதனால், வேந்தர் முதலாயினாரை வாழ்த்து மிடத்தும், "நகைப்புறனாக நின்சுற்றம், இசைப் புறனாக நீ ஓம்பிய பொருளே"3 என்று வற்புறுத்தியுள்ளனர். ஒரு சான்றோர், "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும், நல்லாற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே"1 என்று வற்புறுத்து கின்றார். குடும்ப வாழ்வில் உழைப்புக்கும் மகப்பேற்றுக்கும் ஏற்ற வன்மை குன்றும் செவ்வி எய்தும்போது ஆடவர்க்குத் துறவுள்ளம் தோன்றுவது இயற்கை. மேலே செய்வன செய்யும் பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை இத்துறவுக்கு வாயிலாக அமைகிறது. அக் காலத்தே ஒவ்வொருவர்க்கும், யாக்கை, இளமை, செல்வம் முதலியன நிலைபேறு இன்றிக் கழிவது கண்கூடாகத் தெரிகிறது. உலகில் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையிடையே தோன்றிய இன்பமும் தொடர்பும் நிலைத்த வாழ்வு பெறுவதில் ஆர்வத்தை நல்குகின்றன. அதனால் மக்களுயிர் நிலைபேறுடைய வாழ்வு பெறுவதில் கருத்தைச் செலுத்துகிறது. நிலையாதவற்றை நிலையுடைய வாகக் கருதிக் காக்க முயன்றதால் வாழ்க்கையில் துன்பங்கள் தோன்றுவதை உணரும் நன்மக்கள் துறவு நெறியைக் கண்டு அதனை மேற்கொள்கின்றனர். "இன்னாது அம்ம உலகம்" என்று கண்ட அறிஞர், இன்பவுலகம் ஒன்று உண்டு; அதனை அடைதல் வேண்டும் என்பாராய் "இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோர்" என்றும், "இன்னாவைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னியவினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே"2 என்றும், அறிவுறுத்து கின்றார்கள். துறவு நெறியினைக் கண்டோர், அதற்குச் சுற்றம் சூழவாழும் மனைவாழ்க்கை இடையூறு எனத் தெரிந்து, "ஓடி யுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே"3 என்று கூறுதலும் உண்டு. துறவு மேற்கொண்டோர் தனக்கு உண்டாகும் நலம் தீங்குகள் இரண்டையும் ஒப்பாகக் கருதி அவற்றின்பால் உவப்போ வெறுப்போ கொள்ளார்; அவர்கள், " யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே"1 என்று தம் உட்கோளை யுரைத்து நம்மைத் தெருட்டுகின்றனர். இவ்வாறு நல்லறிவும் நற்றுறவும் பூண்ட சான்றோர் மனையின் நீங்கிக் காடு சென்று, சடைமுடி வளர்த்து, நீரிற்பலகால் ஆடி, தாளியிலை முதலிய இலைகளையும் காய்கனிகளையும் உண்டு உண்மை நிலையைத் தலைக் கூடுகின்றனர். முன்பு இவர்கள் தம் இல்லறப் பயனாகப் பெற்றுத் துய்த்த இன்பத்தையும் இப்போது துறவுபூண்டு தவம் செய்யும் திறத்தையும் கண்டிருந்த மாற் பித்தியார் என்ற சான்றோர், ஒரு துறவியின் நிலையைக் காட்டி. " கழைக் கண் நெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடைப் புலர்த்துவோன்" ஓவத்தன்ன இடமகன்ற மனையின்கண் "பாவையன்ன குறுந்தொடி மகளிர்" மனம் காமவேட்கையால் கையற்று மெலியுமாறு இன்பவாழ்வு நடத்திய மள்ளன்2 என்றும், வேறொரு துறவியைக் காண்பித்து, இவன் பண்டு, "இல்வழங்கு மடமயில் பிணிக்கும், சொல்வலை வேட்டு வனாக" ஒழுகினான்; இப்போது அருவிநீராடு வதால், நிறம் பெயர்ந்து புல்லிதாகிய சடைமுடிதாங்கி "அள்ளிலைத் தாளி"3 கொய்கின்றான் என்று இசைக்கின்றார். இத்துறவியர், துறவுமேற் கோடற்குமுன்பு தமது நாட்டு அரசர்க்குப் "படை வேண்டுவழி வாள் உதவியும், வினைவேண்டு வழி அறிவு உதவியும் வேண்டுப வேண்டுப"4 விரும்பி வழங்கி வீறு பெற்றவராவர்; அரசன், ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையனாதல் வேண்டும்5 என அவற்கு அறிவுறுத்துவர். எவ்விடத்தே ஆடவர் நல்லவரோ அவ்விடமே நிலவுலகில் சீரிய நலமுடையது என்று கருதும் நயமுடையர். இவர்கள், நற்குண நிறைவால் சால்புடையராதலேயன்றி மறமாண்பிலும் சால்புடையராவர். மறக்குடியிற் பிறந்தோர் குழவிகள் இறப்பினும், கரு முதிராத பிண்டம் தோன்றினும் அவை வாளால் தீண்டப்படாவிடில் உய்தியில்லை என்ற கருத்தால் அடக்கம்செய்யும்போது வாளால் அறுத்து வைப்பர்.1 வயது முதிர்ந்து நோயுற்று இறத்தலினும், போர்க்களத்தே பகைவர் எறிந்த படையால் புண்பட்டு இறப்பதே மானமுடைய உயர்ந்த சாவாகும் என்பது அவர்கள் கொள்கை. அவர்கள் மானம்படவரின் உயிர் வாழார்; தமராயினார் தமக்குப் பிழைசெய்யின் அதனைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிறர் இழிசெயல் செய்யக் காணின் நாணுதலும், படையேந்திய போது "பழிதாரா மைந்தின ராதலும், வேந்துடை அவையின்கண் ஓங்குபு நடத்தலும்"2 ஒவ்வொருவர்க்கும் இருக்க வேண்டிய உயர்பண்புகளாகும். தாம் எத்துணை வலியுடை யாராயினும் தமது வன்மை தோற்றுவிக்கும் செயல் நிகழுமிடத்து இம்மறச் சான்றோர் தம்மை வியத்தல் இலர்.3 இவர்பால் சொல் பெயராச் சிறப்பு மிக்கு நின்றது. உறங்கினும் உழைப்பினும் உயர்ந்தோர் ஒளி, உலகு முழுதும் விளங்கித் தோன்றுதல்போல இச்சான்றோரது ஒளி நல்லிசைச் சான்றோர் உள்ளத்தில் நன்மதிப்பை உண்டு பண்ணி யிருந்தது. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் மறப்புகழ்பெற்ற சான்றோன் ஒருவன் ஒளியினை வியந்து, " நல்லரா உறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் மாற்றருந் துப்பின் மாற்றோர்பாசறை உளன்என வெரூஉம் ஓர்ஒளி வலனுயர் நெடுவேல் என்னைகண்ணதுவே"4 என்று எடுத்தோதுகின்றார். இச்சான்றோர் போரில் புகழுண்டாகப் பொருது மடிவாராயின் இவருடைய பெயரையும் பீடுடைச் செயல்களையும் ஒரு நல்ல கல்லில் எழுதி அதனைச் சிறப்புடைய ஓர் இடத்தே நட்டு மயிற்பீலியும் மாலையும் சூட்டி வழிபாடுபுரிவது பண்டைத்தமிழ் நன் மக்கள் கொண்டிருந்த நற்கொள்கையாகும். பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்த மரல் வகுந்து தொடுத்த செம்பூங்கண்ணி யொடு, அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து, இனி நட்டனரே கல்லும்"1 என்று சான்றோர் குறிப்பது காண்க. இஃது இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் நம்நாட்டில் இருந்துவந்தது என்பது அவர்தம் கல்வெட்டுக் களால் இனிது விளங்குகிறது.2 இந்நடுகல்லையும் அச்சான்றோர் பட்டு வீழ்ந்த இடத்தே நடாது வழிச் செல்வோர்கண்டு வழிபடுமாறு, பலரும் செல்லும் வழியருகே நடுவது இயல்பு; "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடும் எழுதி அதர்தொறும், பிறங்கு நிலை நடுகல்"3 என்று சான்றோர் கூறியிருப்பது அறிஞர் அறிந்தது. இந்நாளில் அதனை வீரக்கல் என்று விளம்புகின்றனர். போரிற் படுவதின்றிப் போர்ப்புகழ் குன்றாது வாழ்ந்து மூத்துவிளிவு எய்திய உயர்ந்தோரைச் சுடுவதும் தாழியிற் கவித்துப் புதைப்பதும் பண்டையோர் மரபு. சோழன் கிள்ளிவளவன் குளமுற்றத்தே துஞ்சிய போது, அங்கிருந்த சான்றோர் பரவி, " சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன், கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தின னாகலின் அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனையாயின் எனையதூஉம் இருநிலம் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே"4 என்று கூறுவதனால் அறிகின்றோம். பூதப்பாண்டியன் என்பான் இறந்தபோது அவன் சுடலையில் வைத்துக் கொளுத்தப் பெறு கின்றான்; அவன்மனைவியும் அத்தீயிற் பாய்ந்து உயிர்விடுகின்றாள். இறந்தாரைப் பாடையிற் கிடத்தி வெள்ளாடை போர்த்துக் கொண்டு செல்லும் வழக்குப் பண்டைநாளிலும் இருந்திருக்கிறது. கணவனை இழந்த மகளிர் பழஞ்சோறே உண்டு பரற்பெய் பள்ளியில் பாயின்றி வதிவதைக் கைம்மை நோன்பாக மேற்கொள்ளு கின்றனர். இறந்தோர்க்குப் பிண்டம் படைத்து வழிபடும் முறை பண்டுதொட்டே இருந்து வருகிறது. கணவன் இருப்பக்காதன் அன்புடைய மனைவி இறப்பின், அவன் வருந்தும் நிலை தபுதார நிலை என வழங்குகிறது. சுடுதலினும் தாழியிற் கவித்துப் புதைப்பது, முதியோர்க்கும் செல்வமிக்கோர்க்கும் உரியதாகத் தோன்று கிறது; அத்தாழிகளை முதுமக்கள் தாழி என்ற வழக்கே இதற்குப் போதிய சான்று பகருகின்றது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தோர் முதுமையில் தவமே சிறந்தது என்று கருதி அதனை மேற்கொள்வர் என முன்பே கூறினோம். தவநெறி மேற்கொண்டோர், அதனைப் பெரிதும் சிறப்பித்து, "வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு, ஐயவி (கடுகு) அனைத்தும் ஆற்றாது"1 என்று கூறுகின்றனர். தவமாவது, உற்ற நோய் நோன்றலும் ஏனை உயிர்கட்கு ஊறுசெய்யாமையுமாம் என்பர் திருவள்ளுவர். இத்தமிழ் மக்கள் வாழ்வில் வேறுபல கொள்கைகள் சீர்த்த இடம்பெறுகின்றன. நாள்பார்த்தலும் புள்நிமித்தம் காண்டலும் பெருவழக்காகும். வானத்தே மீன்வீழ்ந்தாலும், தூமகேது தோன்றினாலும் அரசர்க்குக் கேடுண்டாம் எனக் கருதினர். நண்பகலில் தும்பி பரப்பதும் இரவில் விளக்கு நில்லாது அவிதலும் தீநிமித்தமாம். கனவில், எண்டிசையில் எரிகொள்ளி வீழ்தல், இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றுதல், ஞாயிறு பல விடத்தும் தோன்றுதல், பல்வீழ்தல், எண்ணெயாடல், யானையேறுதல், புத்தாடையுடுத்தல் முதலியன நிகழக் காண்பது தீங்கு பயக்கும் என்பது அந்நாளைக் கொள்கை. அரசனது செங்கோல் கோடு மாயின் நாட்டில் மழையில்லையாம். இவற்றைக் கண்டுரைக்கும் காலக் கணக்கர், " செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்று இவை சென்றுஅளந் தறிந்தோர்போல இனைத்து என்போரும்"2 பிறருமாக உள்ளனர். மகளிர் உலகில் தங்களைமணந்து கோடற்குரிய ஆடவர் தொகையில்லாமையால் சிலர் மணமில்லாமல் கழியக் கூடிய நிலைஉண்டாயிற்று. நாட்டில் நடந்த போர்களில் கட்டாண்மையும் இளமையுமுடைய ஆடவர்களே ஈடுபட்டமையாலும், பெண்களைப் போரில் கொலை செய்தல் குற்றமாகையாலும், தம்மை மகளிர் மணக்கும் ஆடவரையில்லாத குறைபாடு சமுதாயத்தில் தோன்ற வேண்டியதாயிற்று. மகளிரும் ஆடவர்போல இவ்வுலகில் வாழ உரிமையுடையவராதலால் அவர்கள் தாம் வாழ்வதற்கேற்ற வழி காணவேண்டியவராயினர். ஆடவர் போலப்புறத்தே சென்று பல்வேறு தொழில்களைச் செய்யும் உடல்வாய்ப்பு உடையரா காமையால் தம் இயல்புக்கேற்ப ஆடல் பாடல் அழகு என்ற துறைகளில் பயிற்சி பெற்று வாழ்க்கை நடத்தினர். மணமாதற்கு வாய்ப்பில்லாத மிகைமகளிர் பரத்தையர் எனப்பட்டனர். பரத்தல் மிகுதல். பழங்கால மக்களுள் செல்வநலம் பெற்றோர் பரத்தையரைப் புரக்கும் நெறியால் அவரோடு தொடர்பு கொண்டனர்; அவர்கள் கற்று வன்மைபெற்றிருந்த ஆடல் பாடல் என்ற கலைகளை வளர்த்தனர். கலைநலத்தாலும் அழகு முதலியவற்றாலும் செல்வர் தொடர்பு பெற்றோர் பரத்தையர் எனநின்று அவரோடேயிருந்து தம்முடைய வாழ்வு நடத்திவந்தனர். இந்த நிலை நம் தமிழகத்தே யன்றி உலகநாடுகள் பலவற்றிலும் பண்டை நாளில் இருந்தமை உலக வரலாறுகளால் நன்கு அறியப்படுகிறது; அதனால் பரத்தையர் இருப்பும், அவரொடு கூட்டம்பெறும் ஒழுக்கமும் நம் தமிழகத்துக்கே உரிய என்று கருதலாகாது. நாளடைவில் பரத்தையருள் ஒருசிலர் பொருள் வேட்கைமிக்கு அதனை ஈட்டிப் பிறர்சார்பின்றித் தனிநிலை வாழ்வு நாடாத்தும் கருத்தினால் பொருட்பெண்டி ராயினர். மூத்துக் கழிந்த மகளிர் புண்பட்டுவீழும் போர்மறவர்க்கு மருத்துவம்புரியும் மறக்கள மகளிராக வாழ்ந்தனர். பரத்தையர் குழுவில் பொருட் பெண்டி ராயினோர் பெண்மைக்குரிய மென்மை துறந்து செல்வர் செல்வத்தைக் கவரும் தீமைசெய்து ஒழுகினமை கண்ட சான்றோர் அவரது தொடர்பை வெறுத்தனர். நன்மக்கள் இவ்விலைமகளிரைக் கூடுவது குற்றமெனக் கண்டனர். "தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தல் மகளிர், ஒல்லா முயக்கிடைக்குழைக என் தாரே"1 என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுமிடத்து உரைக்கும் வன்புறை இதற்குப் போதிய சான்றாகும். தமிழ்க் குடியில் பிறந்த நன்மக்கள் தம்பால் ஏதேனும் மானக்குறைவு நிகழுமாயின் அதற்குக் கழுவாயாக உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர்விடுவது மரபு. அதனை வடக்கிருத்தல் என்பது வழக்கம். இதனை மேற்கொண்டவர், மக்கள் போக்குவரவு இல்லாத ஓர் இடத்தை வரைந்து கொண்டு தரையில் புல்லைப் பரப்பி அதன்மேல் வடக்கு நோக்கித் தண்ணீரோ பழச்சாறோ எதனையும் உண்ணாதிருந்து உயிர் துறப்பர். அப்போது அவருடைய நெருங்கிய நண்பரும் சுற்றத்தாரும் சூழ இருப்பர்; சிலர் அவரோடு தாமும் உடனுயிர் விடுதலுமுண்டு. வடக்கிருக்கக் கருதுபவன் தன் மனைவி கருவுற்றிருக்கும் போதும் அதனை மேற்கோடலாகாது என்பர். ஒருகாற் கரிகாற் பெருவளத் தானுக்கும் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணில் என்னுமிடத்து ஒரு போர் நிகழ்ந்த போது, கரிகாலன் எறிந்த வேலால் சேரமான் முதுகிடத்தே புண்ணுற்றானாக, "தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த, புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்" என்று சான்றோர் குறிப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. வாள் வடக்கிருத்தல் என்பது, புல்லைப் பரப்புவதை விடுத்து வாளைப் பரப்பி அதன்மேல் இருந்து உண்ணாநோன்பு மேற்கொள்வது. உறையூரிலிருந்து அரசு புரிந்த கோப்பெருஞ் சோழன் என்பான் ஒருகால் தான்பெற்ற மக்களே தன்னொடு மாறுபட்டுப் போர்க்கு எழுந்தது கண்டு மானம்பொறாது காவிரியாற்றின் துருத்தியில் இருந்து வடக்கிருந்தது தமிழறிஞர் நன்கறிந்தது. அக்காலத்தே அவ்வேந்தனுடைய உயிர்த் தோழரான பிசிர் ஆந்தையாரும் வடக்கிருந்து உயிர் துறந்தார். பாரியின் தோழரான கபிலர், பாரி இறந்தபின், அவன் மக்களைத் தக்கார்க்கு மணம் புரிவித்து நட்புக்கடன் கழித்தபின், திருக்கோவ லூர்க்கு அண்மையில் தென் பெண்ணையாற்றுத் துருத்தியில் வடக்கிருந்து உயிர்துறந்தார். இது நண்பர் பிரிவாற்றாமையால் மேற்கொண்டது. பழந்தமிழ் மக்கள் நாட்டுப்பற்று மொழிப்பற்றுக்களில் மிக்க சிறப்புற்றவர். வேள்பாரியது நாடு பறம்பு என வழங்கும். அது தென்பறம்பு, வடபறம்பு என இருபிரிவுகளாகி இடைக்காலச் சோழ பாண்டியர் காலம் வரையிற் பெயர்கொண்டு விளங்கிற்று. தென் பறம்பு நாட்டு வாதவூரில் பிறந்தவர் கபிலர் என்று பலரும் வழிவழி யாகக் கூறிவருகின்றனர். அதனால், அவருக்கும் வேள்பாரிக்கும் உயிரொன்றிய கேண்மை தோன்றியிருந்தது. வேள்பாரி இறந்தபின், கபிலர் பறம்பு நாட்டை நீங்க வேண்டிய வரானார். அக்காலை அவரது நாட்டுப் பற்று அவர் உள்ளத்தை வருத்தத் தொடங்கிற்று. நீங்குங்கால், அவர் கண்ணுக்கு இனிய காட்சி தந்த பறம்புமலையை நோக்கி, " பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னோ முன்னே, இனியே, பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே" 1 என்று பாடி வருந்துகின்றார். தமிழ் மக்களது மொழிப்பற்று மிக்க தூய்மையானது. மொழி யென்பது மக்களுடைய மனவுணர்வை வெளிப்படுக்கும் கருவியென அறிஞர் கூறுவர். உடலொடு கூடி வாழும் மக்களுக்கு, வாழ்க்கைக் குரிய கருவிகளாக அவர்தம் மனமும் மொழியும் உடலும் வாய்ப்ப அமைந்துள்ளன. மனம், கண், காது முதலிய கருவிகளால் உணரும் உலகியற் பொருள்களை வாங்கி வகுத்தும் தொகுத்தும் வகைப் படுத்தும் முறைப்படுத்தும், நலம் கண்டு மகிழ்வதும் தீமைகண்டு வெறுத்து ஒதுக்குவதும் செய்யும். மொழியென்பது மனங்கண்ட காட்சிகளையும் கொண்டகருத்துக் களையும் சொல்லுருவில் வெளிப்படுக்கும் கருவியெனக் கருதுவர். மனம் துணிந்த உணர்வு களை உலகியலுருவிற் செயற்படுத்துப் பயன் எய்துவிக்கும் கை கால் முதலிய உறுப்புக்களோடு இயைந்த உடம்பு செயற்கருவியாக இயலுகின்றது. இம் மூன்று கருவிகட்கும் உரியநிலையில் தமிழ்மொழியை இயல் இசை நாடகமென மூன்றாகக்கொண்டு பேணுவது தமிழர் மரபு. இயல் மனத்தையும், இசைமனமொழி களையும், நாடகம் மனமொழி மெய்களையும் பணி கொள்ளும் இயல்புடையன. இதனால் உயிர்வாழ்க்கைக்கு உடல்போல உலக வாழ்க்கைக்குத் தமிழை இன்றியமையாத உறுப்பாகக் கொண்டனர் தமிழர். தமிழை இழப்பது தமிழ்க்குடிப் பண்புடைய தமிழர்க்குத் தம் உயிரினின்றும் உடலைத் துறப்பது - இறப்பது - போலக் கருத்தை அவல முறுவிக்கும் செயலாகும். மன முதலிய உடற்கூறுகளைப்போல, இயலும் இசையும் நாடகமும் உலகியல் வாழ்க்கைக்குரிய அறிவுக் கூறாகக் கொண்டு அவற்றை வளர்ப்பது வாழ்வின் ஊதியமாகக் கொண்டனர். புலவர்களைப் பேணி இயலையும், பாணர் முதலாயினாரை ஓம்பி இசையையும், கூத்தர் பொருநர் முதலாயினாரை ஊக்கி நாடகத்தையும் பழந்தமிழ் மக்கள் வளர்த்தனர். புலவர் வகையுள், எண்ணும் எழுத்துமாகிய இயற்றுறைக்கணக்கரும் காலக்கணக்கரும் சமயக் கணக்கரும் அடங்குவர். இசைவகையில், பாணர் விறலியர் வயிரியர் யாழோர் எனப் பல திறத்தர் உண்டு. கூத்தருள்ளும் பொருநர் கோடியர், கண்ணுளர், விறலியர், தோரியர் எனப் பலர் உளர். இவர்களுடைய தமிழ் நலங்களில் முடிவேந்தர் முதல் சிறு காணியாளர் ஈறாக அனைவரும் ஈடுபட்டிருந்தனர். அவர்கட்கு அவர்கள் பரிசில் வழங்கிய திறத்தை, "ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என மாடமதுரையும் தருகுவன்"1 என்று சான்றோர் கூறுவ தொன்றே நன்கு காட்டுகின்றது. யாழ் இசைப்போர் மாலையிற் செவ்வழிப் பண்ணும் காலையில் மருதப்பண்ணும் இசைப்பர். செல்வர் தரும் பரிசில் மிகுதியால் செருக்கிக் கையற்று மடிந்த இசைவாணர், "மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழிமருங்கிற் செவ்வழி பண்ணி"2 இசைநெறியை மறந்து போயினர்; இதற்குக் காரணம் செல்வக் களிப்பே என்ற பொருள்பட வன்பரணர் வல்வில் ஓரியென்பானுக்குக் கூறுவதனால் அறியலாம். இசைவாணர், மண்முழா, பண்யாழ், கண்விடுதூம்பு, களிற்றுயிர், எல்லரி, ஆகுளி, பதலை முதலாகப் பலவேறு கருவிகளைக் கொண்டுள்ளனர். அவற்றை இசைக்கும் துறை இருபத்தொன்று என்பர்; "மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி"1 என்று சான்றோர் அத்துறையின் தொகையைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். புறப்பாட்டுக்களை நோக்கின் பழைய தமிழ் நிலத்தின்கண் நிலவிய விழாக்கள் பல காட்சிதருகின்றன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைச் சிறப்பித்துப் பாடிய நெட்டிமையார் என்ற சான்றோர், அப்பெருவழுதியின் முன்னோன் ஒருவன் கடற் றெய்வத்துக்கு முந்நீர் விழா என ஒன்றைச்செய்து பஃறுளியாற்றினைக் கண்டான் என்று கூறுகின்றார். இதனை "குடுமிதங்கோ,..... முந்நீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி"2 எனக் குறிப்பதனால் அறியலாம். பெரிய பெரிய மாடமாளிகை களிலும் செல்வர்கள் தனித்தனியே விழாக் கொண்டாடு கின்றார்கள். விழாக்காலத்தே தெய்வங்களுக்கு உயிர்ப் பலியாகச் செம்மறிக்கிடாய்கள் வெட்டப் படுகின்றன.3 போர் நிகழ்ந்தபின் அதன்கண் உண்டான வெற்றி குறித்து வெற்றி விழா அயர்தலும் இந்த நன்மக்கட்கு இயல்பு.4 விழாக் காலங்களில், களமர், அரியல் என்னும் கள்ளை ஆமை யிறைச்சியுடன் உண்டு ஆரல்மீனைச் சுட்டுக் கதுப்பில் அடக்கிக் கொண்டு உறக்கமின்றி இரவு முழுதும் விளையாட்டயர்வர். திருமணங்கட்கு வதுவை விழா என்று பெயர்கூறுவர். அக்காலத்தே புதியராய் வந்தோரைச் சிறப்பிக்கும் செய்கையை, "வதுவை விழாவிற் புதுவோர்க் கெல்லாம், வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க"5 என்று மாங்குடிகிழார் உரைக்கின்றார். இவ்வாறு சிறுசோற்று விழா, பெருஞ்சோற்றுவிழா, வில்விழா எனப் பலவேறு விழாக்கள் நடைபெறுகின்றன. ஆறுகளில் புது வெள்ளம் வருங்கால் புதுநீர் விழாவும், தைத்திங்களில் தைந்நீர் விழாவும், மாசித் திங்களில் கடலாட்டு விழாவும், பங்குனியில் உள்ளிவிழாவும், சித்திரைத் திங்களில் இந்திரவிழாவும் கொண்டாடி யுள்ளனர். விழாக்காலங்களிலும் பிறகாலங்களிலும் மக்கள் பல்வேறு விளையாட்டுக்களை மேற்கொள்கின்றனர். குறிஞ்சிநிலச் சிறுவர் ஊகம்புல்லின் நுனியில் உடை முள்ளைச் செருகி, வளாரால் செய்த வில்லிடைவைத்து அம்பு எனத் தொடுத்து விளையாடுகின்றனர். முல்லை மருதம் முதலிய நிலங்களில் வாழ்வோர் சிறுவர் "நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து, குளித்து மணல் கொண்டு" மகிழ்கின்றனர். இளமகளிர் நீர்நிலைகளில் ஓரையாடுவர்; மனை யிடத்தே இருந்து கழங்கு அம்மனைபந்து முதலியன விளையாடு கின்றார்கள். நெய்தல் நிலத்துச் சிறுவர் கடலாடு கின்றார்கள். மகளிர் கடற்கரையில் மேயும் சிறுசிறு நண்டுகளை அலைப்பதும், வண்டற் பாவை வைத்து விளையாடுவதும் உண்டு. பாலைப் பகுதியில் வேட்டுவர் சிறுவர், நெல்லிக் காய்களைக் கொண்டு வட்டாடு வார்கள். முல்லை நிலத்தவர் கொல்லேறு தழுவும் விளையாட்டைச் சிறப்பாகக் கருது கின்றனர். யானை முதலிய விலங்குகளை ஒன்றோடொன்று பொரவிட்டு வேடிக்கை பார்ப்பதும், கோழி, குறும்பூழ், ஆடு முதலியவற்றைப் போர் செய்வித்து வெற்றிகண்டு இன்புறுவதும் இயல்பாகவுள்ளன. பழந்தமிழ் மக்களிடையே நிலவிய பழமொழிகளும் பழவழக்குகளும் புறநானூற்றால் அறியப்படுகின்றன. ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனைக் கண்டு பாடிப் பரிசில் பெறுமாறு விறலி ஒருத்திக்குக் கூறுமிடத்து, "விறலி, நீ அண்டிரனைப் பற்றிப் பிறர் கூறக் கேட்டிருப்பாயே யன்றிக் கண்டிருப்பாயல்லை; காணவேண்டினையாயின் நின் கொண்டை மேல் காற்றடிக்கச் செல்க" என்ற பொருள் படுமாறு, "நின்விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக், கலவ மஞ்ஞையின் காண்வர இயலி..... சென்மே"1 என்று இசைக்கின்றார். இவ்வாறே இடைக்காலத்துச் சான்றோர் "இல்லார்க்குக் கிழியீடு வாய்த்தாற்போல்" என்று எளியோன் ஒருவன் பெருமுயற்சி யின்றி அரியபொருள் பெறும் திறத்தைக் கூறுவர். இவ்வழக்குப் பண்டைச் சான்றோர் இடையே, "கிளியீடு வாய்த்தாற்போல" என வழங்கி வந்துளது. தன்னை நாடிவரும். இரவலர்க்கு நாஞ்சில் வள்ளுவன், தன்பால் உள்ள பெரும் பொருளை வரையாது வழங்கும் திறத்தை மருதன் இளநாகனார் சிறப்பிக்கக் கருதினவர், "கிளிமரீஇய வியன்புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன்"1 என்று இவ்வழக்காறு விளங்கக் கூறுவதைக் காணலாம். எறும்புகள் முட்டைகொண்டு திட்டைகளை நோக்கிச் செல்லக் காணின் விரைவில் மழைவரும் என்று வழங்குவது இக்காலத்தும் உண்டு. இவ்வழக்கும் கருத்தும் சங்க காலத்தும் இருந்துளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், "பொய்யா எழிலி பெய்யிடம் நோக்கி, முட்டை கொண்டு வற்புலம் சேரும், சிறு நுண்ணெறும்பு"2 என்று கூறுவதனால் தெரியலாம். நமது நாட்டுத் தென்கடற் பகுதி முத்துக்குப் பெயர்பெற்றது. கடற்குள் மூழ்கி முத்துக்களைக்கொணர்வது தமிழர் மேற்கொண்டிருந்த அரிய தொழில்களுள் ஒன்று. ஆயினும் சங்குகளின் வயிற்றிற் காணப்படும் முத்துக்களின் தோற்றம்பற்றி இந்நாளை உயிர் நூலாராய்ச்சியாளர் கூறுவது வேறு: சங்குகளின் வயிற்றில் சிக்கிக் கொள்ளும் மணற்பொடி, அதன் வயிற்றில் ஊறும் ஒருவகை நீரால் சூழப்பெற்று உறைந்து முதிர்ந்து முத்தாகிறது என்பர். ஆனால், பண்டையோர் மழை பெய்யும் நீர்த்துளியால் முத்து உண்டாகிற தெனக் கருதினர். "மிசைப்பெய்த நீர் கடற் பரந்து முத்தாகுந்து"3 என வரும் சான்றோர் உரை இதனை நாம் அறிய வுரைக்கின்றது. இவ்வாறே நண்டு சினையீனும்காலத்து இறக்கும் என்பதும், முதலைதான் ஈன்ற குஞ்சுகளைத் தின்றுவிடும் என்பதும் பிறவும் அந்நாளைய கருத்துக்களாகும். நிலத்துக்கு நெல்லும் கரும்பும் அணி என்பர். கரும்பின் வகைகள் பல உண்டென்று நாம் அறிகின்றோம். இவற்றுள் சாவகக் கரும்பு, பன்றிக் கரும்பு, நாணற் கரும்பு என்பன சிறந்தவை. சாவகக் கரும்பு சாவகத்திலிருந்து வந்ததெனவும், பன்றிக்கரும்பு பன்றி நாட்டிலிருந்து வந்த தெனவும் மக்கள் கூறுவர். எங்கள் ஒளவையார் குப்பத்துக்கு அண்மையில் உள்ள ஊர் ஆலைக் கிராமம் என்பது. அவ்வூரில் நெடுங்கால மாகக் கரும்பே மிகுதியாகப் பயிர் செய்யப் பட்டதுபற்றி அதற்கு அப்பெயருண்டாயிற்று என்று முதியவர்கள் கூறுவர். அவர்கள் சிறப்பித்துக் கூறும் சாவகக் கரும்பும் பன்றிக் கரும்பும் எக்காலத்துச் சாவகம் முதலிய நாடுகளிலிருந்து வந்தன என்பது தெரியவில்லை. புறநானூற்றுக் காலத்தே கரும்பு வகை யொன்று வேற்று நாட்டிலிருந்து கொணரப் பட்டுளது. இதனை, எங்கள் ஊர்க்குரிய முதல்வியாகிய ஒளவையார், அதிகமானைப் பாடுமிடத்து அவன் முன்னோர் கரும்பினை வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த செய்தியை, "அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும், அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீரகவிருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர்"1 என்றும், "அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன, கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே"2 என்றும் கூறியுள்ளார். இப்புறநானூற்றுப் பகுதிக்கு உரைகண்ட சான்றோர், "அரும் பெறல் மரபின் கரும்பு இவண்தந்தும்" என்ற தொடர்க்குப் "பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத் தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்" என்று உரைகூறு கின்றார். "அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம்" என்றது கொண்டு விண்ணுலகம் என்பது வருவித்து உரைக்கப்படுகிறது போலும். விண்ணுலகம் போகவுலகமே யன்றித் தொழில் செய்யும் கரும பூமி யன்று என்பது நூலோர் கொள்கை. ஆகவே அங்கே கரும்பு விளைவிக்கும் தொழில் இல்லாமையால் விண்ணுலக வரலாறு கூறுவது பொருத்தமாகாது; கரும்பின் வகையொன்று அதியமானின் முன்னோர்களால் ஒருகாலத்தே வேற்று நாட்டிலிருந்து கொணரப் பட்டது என்று கொள்வது நேரிது. அதிகர்கள் குதிரைமலையைச் சூழ்ந்த மேலைக் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தவர்களாதலின், அந்தப் பகுதியில் இருந்த பழைய நாடுகள் ஒன்றிலிருந்து கரும்பைக் கொண்டு வந்திருப்பர்; அதனை உரைகாரர் இவ்வாறு குறித்தனர் போலும் என்றும் கொள்ளலாம். வையாவிக் கோப்பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பாடிச் சென்ற கபிலர், மலை நாட்டவர் வழக்காறு ஒன்றைக் குறிக்கின்றார். மழை வேண்டியபோதும் மிக்க மழை பெய்தபோதும் மலையில் வாழும் குன்றவர், கடவுள் வழிபாடு செய்வராம்; "மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய், மாரியான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர்"1 என்பது அவர் கூறுவது. இவ்வழக்கு இப்போதும் பருமிய நாட்டு மலை வாணரிடையே காணப்படுகிறது. பருமா நாட்டைப் பண்டையோர் அருமணம் என்று குறித்தலால், பருமாவுக்கும் தமிழகத்துக்கும் முன்னாளில் தொடர் பிருந்தமையும் தெரிகிறது.  18. பழந்தமிழர் சமயநிலை பழந்தமிழர் என்ற சொற்றொடர் நம் கண்ணிலும் காதிலும் பட்டவுடன் நமது நினைவு தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் ஆகிய நூல்கள் எழுந்த காலத்துக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது. அக்கால மக்களின் வாழ்க்கைக் கூறுகள் நம் மனக்கண்ணில் தோன்றுகின்றன. அவர்களின் சமய வுணர்வு ஒழுக்கங்களை உணர்ந்து கோடற்கெனச் சில சொற்களும் சொற்றொடர்களும் சிறந்த சான்றுகளாக அக்கால நூல்களில் நின்று நம் அறிவைப் பணிகொள்ளு கின்றன. அந்நாளைய கல்வெட்டுக்களோ ஓவச் செய்திகளோ பிறவோ கிடைக்கவில்லை. நல்லிசைப் புலமைச் சான்றோர் சிலர் அவ்வக்காலத்தில் பாடிய பாட்டுக்கள் சிலவற்றைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனப் பண்டையோர் தொகுத் துள்ளனர். அவை பலவும் தேர்ந்து கொள்ளப்பட்ட ஒரு சில சான்றோர்களின் சிலவும் பலவுமாகிய பாட்டுக்களாதலால், அவற்றைக் கொண்டு வரலாற்று முறையில் வைத்துச் சமய நிலையைக் காண்பது அரிதாகவுளது. ஆயினும், இன்று கிடைக்கும் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு காணப்படும் பழந்தமிழர் சமயநிலை உண்மைக்கு மாறுபட்டதன்று என்பது முதற்கண் மனங்கொள்ளாற்பாலது. மேலே குறித்த தொல்காப்பிய முதலிய இலக்கணங் களும், சங்க இலக்கியங்களும், அக்காலத்தே நிலவிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை வழக்குகளையும் முதலாகக் கொண்டு எழுந்தனவாகும். "தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்றே தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் குறிப்பது இதற்குப் போதிய சான்று. ஆகவே, இவ்விருவகை வழக்குகளில் நிலவிய சமயக் கொள்கைகளைக் காண்பதே நமது முன்னிற்கும் பணியாகிறது. சமய வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை கடவுட் கொள்கையாகும். கடவுள் ஒருவர் உண்டு என்ற உணர்வும், அவரை வாழ்த்தி வழிபட்டு இயலுவது சமய ஒழுக்கம் என்ற கருத்தும் சமயத்தின் உட்கிடை. இவற்றை மேற்கொண்டு, உலகியல் வாழ்வில் அறம் பொருள் இன்பம் என்ற துறைகளில் செய்வனவும் தவிர்வனவும் வகுத்து, நினைவு சொல் செயல்களை அவற்றின் வழி நிறுத்தி யொழுகுவது சமய வாழ்வாகும் என்பது நாடறிந்த செய்தி. சமயத்தின் தோற்றம் மிகமிகத் தொன்மையான மக்கள், இயற்கையில் கண்ட பெரு நிகழ்ச்சிகளால் உள்ளத்தே கொண்ட அச்சமும் அவலமும் காரணமாகத்தோன்றியது என்பர் வரலாற்றறிஞர். அச்சத்திற்கருவுற்றெழுந்த சமயம், இயற்கையின் கூறுகளான நிலம், நீர், தீ, காற்று, வான் என்ற ஐந்துக்கும் அப்பாலாய், அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டிவைக்கும் முதற் பொருள் ஒன்று உண்டென உணர்ந்து, அதற்கும் உலக வாழ்க்கைக்கும் தொடர்பு அமைத்து, அதனை நினைவிற்கொண்டு இனிதொழுகச் செய்யும் முறையில் மக்கட்கு நல்ல தொண்டாற்றியிருக்கிறது. அந்த முதற் பொருளைப் பழந்தமிழர் கடவுள் என்றும் இயவுள் என்றும் வழங்கும் இரண்டு சொற்களால் குறித்துள்ளனர். "கடவுள் வாழ்த்து" எனத் தொல்காப்பியத்தும், "பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்" எனப் பத்துப்பாட்டிலும் காணப்படும் தொடர் மொழிகள் யாவரும் நன்கறிந்தன. கடவுள், இயவுள் என்ற சொற்கள் கடத்தல் இயக்குதல் என்ற பொருட்குரியன. இவை உள்ளென்ற ஈறுகொண்டு முடிவதால், அக்குள் விக்குள் என்றாற்போல, உள்ளும் புறமும் கடந்து நிற்பது, உண்ணின்று இயக்கி நிற்பது என்று பொருள்பட்டுக் கடவுள் எனப்படும் முதற்பொருள் எல்லாப் பொருட்கும் அகத்தும் புறத்தும் கலந்து நின்று இயக்குவதும், அவற்றைக் கடந்து நின்று அவற்றின் செயல் முறைகட்கு ஆணை செலுத்துவதும் செய்தொழுகுவது என்ற கருத்தை உணர்த்துகின்றன. இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களம் உயிரும் உலகமு மாகும். உலகமாவது, "நிலம் தீ நீர் வளி விசும் போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்பது தொல்காப்பியம். சமயச் சூழ்நிலையில் "காலம் உலகம் உயிரே உடம்பே, பால்வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீரைந்தும்" சிறந்த பொருள்களாக இருக்கின்றன. உயிர்கள், புல் பூடுகளாகிய ஓரறிவுயிர் முதல் மக்கள் ஈறாக ஆறுவகையாகப் பிரிகின்றன. இவ்வுயிர்கள் யாவும் மன்னுயிர் எனவும், தொல்லுயிர் எனவும் சிறப்பிக்கப் படும்; அதனால், அவை செயப்படு பொருளாகாமல் கடவுட் பொருள்போல என்றும் நிலைபேறு உடைய இயற்கை உள்பொருள் ஆகும். ஏனை உலகமும் உலகியற் பொருள்களும் தோன்றிநின்று மறையும் காரணத்தால் செயப்படு பொருளாகின்றன. செயப்படு பொருள் எனவே, செய்வோன் ஒருவன் உண்டென்றும், அவனே கடவுளாகிய முதற்பொருள் என்றும் பழந்தமிழர் மேற்கொண்டனர். அதனால் அவனை "உலகு இயற்றியான்" என்றும், "உலகு படைத்தோன்" என்றும் குறித்துரைப்பாராயினர். உயிர்கள் இன்ன வுரு இன்ன நிறம் என்று சொல்ல வொண்ணாத அறிவுப் பொருளாகும். ஆயினும், உலகியற் பொருள்களான உடம்பையும் ஏனைப் பொருள்களையும் இயக்குவதும் அவற்றோடு கூடி நின்று இயங்குவதும் செய்வன. அவ்வியக்கத்தால் அவற்றிடையே வினைகள் தோன்றி நிலவுகின்றன. உடம்போடுகூடி யுறையும் மக்களுயிர்க்கு மனம் என்ற நுண்ணியதொரு கருவி யுண்டு எனப் பண்டையோர் கண்டுள்ளனர்; அஃது உடம்பு தோன்றுதற்குரிய மூலப் பொருளால் ஆகியது என்றும், எனினும் அஃது உடம்பு மாகாது உயிருமாகாது இரண்டிற்கும் வேறாய் உடனாய் நிற்பது என்றும் கூறுவர். இளமைக் காலத்து உயிரைத் தன்வழி நிறுத்தி உடலின் வளர்ச்சிக்குத் துணையாகியும், அது கழிந்த வழி, உயிரின் வழி நின்று அறிவுப் பேற்றுக்கும், உலகியல் இன்பப் பேற்றுக்கு முரிய பணிகளில் உடலை இயக்கி நலமெய்துவிக்கும் நுண் கருவியாகியும் இயலும் இயல்பு இம்மனத்துக்கு உண்டு. காணப்படும் பொருளைத் தன்கண் ஒடுக்கி நிறுத்திக் காட்டும் கண்ணாடிபோல, உலகனைத்தை யும் கண் காது முதலிய கருவிகளால் வாங்கித் தன்கண் ஒடுக்கி நிறுத்திக் காட்டுவதும் இம்மனத்துக்கு வாய்த்த செயல். மேலும், காட்டும் வகையில் கண்ணாடி போல்வதாயினும், கண்ணாடிக்கில்லாத ஒரு சிறப்பு மனத்துக் குண்டு. தன்னில் ஒடுங்கி நிற்கும் உலகியற் பொருள்களை வகுத்தும் தொகுத்தும் விரித்தும் இயைபுபடுத்தும் உருமாற்றியும் திரித்தும் பிரித்தும் கூட்டியும் பெருக்கியும் சுருக்கியும் காட்டவல்லது மனம். மனத்தால் காட்டப் படுவன அனைத்தும் உலகியற் பொருள் களேயாம்; இவற்றின் வேறாய உயிரையோ அதற்கு அப்பாலாகிய முதற் பொருளையோ அதனால் இதுகாறும் காணப்பட்டதில்லை. ஆதலால், உயிர்கள் உடம்பொடுகூடி உலகில் வாழ்க்கை நடத்துவதற்கென்றே அமைந்த நுண்கருவி இம்மனம் என்று பழந்தமிழர் கருதினர்; அதுபற்றியே, "சுவை யொளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின்வகை தெரிவான் கண்ணதே உலகு" என்றும் "மனமென்னும் பொச்சாவாக் கருவி" என்றும் திருவள்ளுவர் கூறினர். மனத்தின் செயலெல்லாம் நினைவு எனப்படும். நினைக்கப்படும் கருத்துக்களுக்கு வடிவு தருவது சொல். சொல் நிகழ்ச்சிக்குக் கருவி வாய்; அவற்றைச் செயற்படுத்துவது கை கால்களோடுகூடிய உடம்பு. உயிர்கள் உடம்போடுகூடிச் செய்யும் வினைகள் யாவும் இந்த மனம், வாய், உடம்பு என்ற மூன்று கருவிகளையுமே வாயிலாகக் கொண்டன என்பர். வினையின் இயல்பை ஆராய்ந்த பழந் தமிழர், ஒவ்வொரு வினையிலும், வினை, வினைமுதல், செயப்படு பொருள், இடம், காலம், கருவி, காரணம், பயன் என எட்டுக்கூறுகளைக் கண்டனர். இவற்றை, " வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி யென்றா இன்னதற் கிதுபயனாக என்னும் அன்னமரபின் இரண்டொடும் தொகைஇ ஆயெட்டென்ப தொழின் முதனிலையே" என்று தொல்காப்பியம் கூறுகிறது. உலகில் செய்யப்படும் தொழிலுக்கேற்ப ஊதியமும் உறையுளும் அமைவது போல உயிர்கள் செய்யும் வினைக்கேற்ப அவ்வுயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன. உடம்பையும் நுகர் பொருளையும் படைத் தளிக்கும் வகையில் முதற்பொருளாகிய கடவுள் மேன்மை யுற்று விளங்குகிறார். கடவுள்போல உயிர்களும் நிலை பேறுடைய உள்பொருளாயினும், அறிவு வகையில் அறியாமை கலந்து இருள் கலப்புண்ட திரிவிளக்கின் சுடர்போல்வன. கடவுட் பொருளோ தூய அறிவாகவேயுளது. உயிர் அறிவு தன்பாற் கலந்திருக்கும் அறியாமையாகிய இருள் நீங்குதற்காகவே உலகில் உடம்பிடைக் கலந்து தோன்றும் படைப்பினைப் பெறுகிறது; உடம்பொடுகூடி உலகில் வினை செய்து அறியாமையின் நீங்கி விளக்கம் எய்துகிறது. அறியாமை விரவிய குறைபாட்டால் உயிர்ப்பொருள் கடவுட் பொருளை நோக்கக் கீழ்ப்பட்டுவிடுகிறது என்பது பழந்தமிழ்க் கொள்கை. இதனால், கடவுட்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு படைப்போனுக்கும் படைக்கப்பட்ட பொருட்கும் உள்ள தொடர்பாய்க் கடவுளை, உலகைத் தனக்குரியதாகக் கொண்ட உடையவனாகவும், உலகம் அவனது உடைமை யாகவும் நிறுத்து கிறது. உயிர்கள் உலகிடைத்தோன்றும் உடம்பை இடமாகக் கொண்டு வினைபல செய்து அறிவுப் பயன் பெறுவதால், இவ்வுல குடம்புகள் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டு அவற்றிற்கு உதவப் பட்டிருப்பது இனிது விளங்கும். இதனால், கடவுட் பொருட்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு உதவி செய்தோனுக்கும் செய்யப்பட்டோர்க்கும் உள்ள தொடர்பாய், உதவி பெற்றோன் அதனைச் செய்தோனுக்குக் கடமைப்பட்டு அவன் செய்த நன்றியினை நினைந் தொழுகுவது போல உயிர்கள் கடவுளது அருளைநினைந்து வழிபட்டொழுகுவது கடனாகும் என்பதை வற்புறுத்துகிறது. இதனால்தான் தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்துக் காட்டினார். உலகுடம்புகளும் ஏனை நுகர்பொருள்களும் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டனவாதலின், இவ்வுலகில் வாழும் உயிர்வகை எல்லாவற்றிற்கும் இதன் கண் வாழ உரிமையுண்டு என்பது பழந் தமிழர் கொள்கையாயிற்று. தமிழகத்தே இக்கொள்கை தோன்றி நிலைபெற்ற காலத்தில் ஏனை நாட்டவரிடையும் கடவுட் கொள்கை தோன்றி யிருந்தது; ஆயினும் அந்நாட்டவர் மக்களுயிர் ஒன்றிற்கே இவ்வுலகு படைக்கப்பட்டது; பிறவற்றிற்கு அன்று என்றும், பிறவெல்லாம் மக்களுயிரின் பொருட்டு அமைந்தன என்றும் கருதினர். மக்களுயிருள்ளும் ஒரு சிலவே உலகில் வாழலாம்; பிறவெல்லாம் வாழ்தற்குரியன அல்ல என்று கருதி யொழுகிய நாட்டவரும் அந்நாளில் பிறநாடுகளில் இருந்தனர். பழந்தமிழர் அவற்றை ஏலாது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தம் பழங்கொள்கையை எடுத்தோதி நிறுவினர். உயிர்வகையுள் மக்களுயிரைத் தனிப்பட நிறுத்திக் காண்பதில் பழந்தமிழர் தவறவில்லை. மக்களை உயர்திணை என்றும், ஏனை உயிர் வகைகளை அஃறிணை யென்றும் பண்டையோர் கொண்டனர். "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே" என்பது தொல்காப்பியம். மக்களினத்துள் அடங்காமல் கடவுளாகிய முதற்பொருளுமாகாமல் இரண்டற்கும் இடைப்பட்ட நிலையில் சிலவுயிர்களைப் பழந்தமிழர் கண்டார்கள். அவற்றைத் தெய்வம் என நிறுத்தி, அவை மக்களுயிர்போல மன வுணர்வும் வினை செய்தலும் இன்பத்துன்ப நுகர்ச்சியும் உடைய வாய்ப் பிறப்பதும் இறப்பதுமாய் இருப்பவை என்றும், அவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்களுலகிற்கு மேனிலையில் இருப்பன என்றும் உரைத்தனர். "தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி" மக்களினத்தன அல்லவாகலின் "இவ்வென அறியும் அந்தம் தமக்கில" என்று விலக்கி, சொல்வழக்கில் வேண்டுமானால், "உயர்திணை மருங்கில் பால்பிரிந்திசைக்கும்" என்று தொல்காப்பியனார் கூறினார். பழந்தமிழர் சொல்லுலகை உயர்திணை அஃறிணை எனக் கொண்டாற்போலப் பொருளுலகைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்து வகையாக வகுத்துக் கொண்டனர். தொடக்கத்தில் பாலைக்கு நிலம் காணப்பட வில்லை; ஆயினும் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு அழிந்து நிலைமை வேறுபடக் கண்டு அதனைப் பாலையெனக் கொண்டார்கள். இப்பகுதியுள் வாழ்ந்த மக்கள் முறையே குன்றவர் ஆயர் வேளாளர் பரதவர் எனக் குறிக்கப் பெற்றனர். அவர்கட்குத் திணைநிலைமக்கள் என்றும் பெயர் வழங்கினர். அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு தொழில் முதலியன தனித்தனியாக உண்டு. அவற்றோடு சமய வொழுக்கத்தைக்கூட்டி மேலே குறித்த தெய்வங்களையும் ஒவ்வொரு திணைக்கும் உரிமை செய்தனர். குறிஞ்சிக்கு முருகனும் முல்லைக்கு மாயவனும் மருதத்துக்கு இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் பாலைக்குக் கொற்றவையும் தெய்வமாவர். மக்களுள் உயர்ந்து நாடாளும் தனிவுரிமை பெற்ற வேந்தனை மருதத்துக்கும், காலையில் கடலில் தோன்றி மாலையில் அக்கடலிடத்தே மறையும் அருணனை நெய்தலுக்கும் ஒருகாலத்தே தெய்வமாகக் குறித் திருந்தனர்; வைதிக வேதியர் தொடர்பு பெற்ற பிற்காலத்தில் வேந்தனிடத்தே இந்திரனையும், அருணனிடத்தே வருணனையும் புகுத்தினர் என்றும், அதனாற்றான் வேளாளர் இந்திரனையும் பரதவர் வருணனையும் வழிபட்ட பாட்டுக்கள் சங்கத்தொகை நூல்களில் காணப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இத்தெய்வங்கட்கு நாட்பூசனையும் விழாச் சிறப்பும் செய்வது சமயவொழுக்கம். கடவுள் என்பது இத்தெய்வ வகைகட்கு மேற்பட்டு நின்று எல்லாம் வல்ல முழுமுதற் பொருள் என நிலவிற்று. எல்லா நிலப்பகுதிகட்கும் நீர் வளி தீ விசும்பு ஆகிய அனைத்துக்கும் வேறாய் ஒன்றாய் உடனாய் மேலாய் எல்லாம் தன் ஆணை வழியொழுகப் பண்ணுவது பற்றிக் கடவுட் பொருட்குத் தனியே நிலம் வகுக்கப்படவில்லை. எல்லா நிலங்களிலும் இக்கடவுட் குறிப்புப் பொதுவாகக் காணப்படுவதொன்றே இதற்குப் போதிய சான்று. மேலும், இடைக்காலத்தே தோன்றிய சிவன் கோயில்களை நோக்கின் இவ்வுண்மை நன்கு புலனாகும். இன்னவுரு இன்ன இயல் என்று அறியப்படாத சிவக்குறியை நடுவண்வைத்து, குறிஞ்சி முதலிய நிலங்கட்குரிய முருகன் மாயவன் கொற்றவை முதலிய தெய்வங்களைச் சுற்றுப் புறத்தே வைத்து அமைத்திருக்கின்றனர்; நடுநிலையாய்த் தலைமை தாங்கி விளங்கும் சிவத்துக்குள்ள சிறப்பை ஏனைச் சூழ்புறத்துள்ள தெய்வங்கட்கு நல்குவதும் வழக்கமன்று. இதனாலும் பண்டையோர் கொண்டிருந்த கடவுட் கொள்கை நன்கு புலனாகும். குறிஞ்சி நிலத்து முருகன், முல்லைக்குரிய மாயவன் முதலிய தெய்வவகை எல்லாவற்றிற்கும், தோற்றமும் நிலைபேறும் கூறப் படுவதுபோல, முழுமுதல் என்று வழங்கும் கடவுட் பொருட்குத் தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. அப்பொருளைக் குறிக்கும் போது, சங்க இலக்கியங்கள், பிறை முடியும் முக்கண்ணும் கறை மிடறும் உடையதாகக் கூறுவதுண்டு. இதனால் இன்று சிவம் என்ற சொல்லால் குறிக்கப்படும் முதற் பொருள் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது பற்றிச் சிவமே பழந்தமிழர் சமயநெறியில் நிலவிய கடவுள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சிவன் கோயில்களில் சிவவடிவு முகம் கைகால் ஆகிய உறுப்புக்களின்றிக் கந்து வடிவில் இருப்பதும் இதற்குச் சிறந்த சான்று பகருகின்றது. தெய்வங்கட்குப் பிறப்பு, தோற்றம் முதலிய வரலாறு கூறப்படுவதும் கடவுட்கு அது கூறப்படாமையும் நோக்கின், பிறவா வாழ்க்கைப் பெருமை யுடையது கடவுள் என்றும், பிறந்து நிலைபேறு கொண்டு இயலுவன தெய்வங்களென்றும் பழந்தமிழர் கருதிய கொள்கைகளா கின்றன. முகம் கைகால் முதலிய உறுப்புடைய பொருள்கள் தோன்றி நின்று மறைவது கண்ட பழந்தமிழர், அவ்வியல்பினவாய தெய்வங்கட்குத் தலை முகம் கை கால் கொண்ட உருவங்களைப் படைத்து நிறுவி வழிபடுவதும், கடவுட்கு அவ்வுருவை அமைக்காது கந்து வடிவில் நிறுத்தி வழிபடுவதும் மரபாகக் கொண்டனர். துறவு நெறியில் நின்று உருவுடைய தெய்வங்களை நீக்கி, உருவமில்லாத கடவுட் பொருளை நினைந்து வழிபட்டமையின் அத்துறவு நெறிச் சான்றோர்களைக் கடவுளர் என்று குறித்துப் பாராட்டி யுள்ளனர். மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறுபிறப்பும் வீடுபேற்றின் பமும் நிரயத் துன்பமும் சொல் வழக்கில் நிலவுகின்றன. மக்களுடைய மனம் மொழி உடம்பு என்ற மூன்றின் அசைவு அசைவின்மைகளால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை. நல்வினை செய்தோர் இன்பத்துக்கும் தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியராவர். வினையென்பது தன்னிலையில் உயிரோ உணர்வோ இல்லாததாகலின், அதுதானே சென்று வினை செய்தவனுக்கு உரிய பயனை நல்குவது இல்லை. வினையைச் செய்தவன்பால் வினைப் பயன் சென்று அடைதற்குரிய செயலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அதுபற்றியே தெய்வத்தைப் பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியர் சிறப்பித்துள்ளார் செய்யப்படும். வினைப் பயன்களுக்கு ஏற்ப உயிர்கட்கு இம்மை மறுமை வீடு என்று மூன்று வகை உலகுகள் காட்டப்படுகின்றன. வினைசெய்தற் குரியது நாம் வாழும் மண்ணுலகம்; நல்வினைப் பயனாகிய இன்ப நுகர்ச்சிக்குரிய உலகம் துறக்கமென்றும், தீவினைப் பயனாகிய துன்பத்தை நுகரும் உலகம் நிரயம் என்றும் கூறுவர். வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் தூய அறிவுடைய சான்றோர்க்கு வீட்டுலகம் உரியதெனப் பழந்தமிழர் கருதினர். வினை தோன்றும்போதே அதன் பயனும் உடன் தோன்றுகிறது. வினை முடிவில் அதன் முழுத்த பயன் உருவாகி வினை செய்த முதல்வனையடையும் நிலையை எய்துகிறது. அஃது அவன் அப்பயனை நுகரும் வரை அவனுக்கு அஃது ஊழ்கனிபோல் நின்று நுகர்வுக்குரிய காலம் வந்ததும் தெய்வத்தின் ஆணையால் எவ்வகையாலேனும் அவனை அடைந்து விடுகிறது. அதனால் அவ்வினையை ஊழ்வினை யெனத் தமிழ்ச் சான்றோர் கண்டு உரைத்தனர். ஊழ்வினையின் பயனை ஊட்டுவிக்கும் பணி, கடவுட் பொருளின் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயலாதலால், தெய்வ வழி பாட்டுக்கு மக்களிடையே இன்றியமையாமை தோன்று வதாயிற்று. தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி கால வகையில் வேறுபடும் என்ற கருத்தைப் பண்டையோர் கொண்டிருந்தனர். குன்றவர் முருகனுக்கு வழிபாடாற்றி வேட்டம் செல்வதும், ஆயர்மாயோனுக்குக் குரவையாடி வழிபாடியற்று வதும், வேளாளர் இரந்திரவிழா, ஆதிரை விழா முதலியன செய்வதும், பரதவர் கறவுக்கோடு நட்டுக் கடல் தெய்வத்துக்குப் பரவுக்கடன் ஆற்றி மீன்வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இதுபற்றியே யாகும். உலகில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் இன்பம் பெறுவது ஒன்றே குறிக்கோள். "எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்கும்" என்பது தொல்காப்பியம். இந்த இன்பப்பயனைப் பெறுவது குறித்தே உலக வாழ்வு நடைபெறுகிறது. உயிர்களால் செய்யப்படும் வினைகள்யாவும் இக் குறிக்கோளையே நாடி நிற்கின்றன. இன்ப முயற்சிக்கண் தோன்றும் வினை இடையீடு படுமிடத்தும் இடையூறு எய்துமிடத்தும் அவற்றை நீக்கும் செயல் வகைகளில் மக்களின் அறிவும் முயற்சியும் பெரிதும் ஈடுபடுகின்றன. அவ்வகையில் சமய வுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மை, கடுங்காற்று, கொடு விலங்கு, பெரும்பகை முதலியவற்றால் இடையூறு உண்டாகு மாயின், மக்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து நிற்கின்றனர். பெரு மழைக்கு வருந்திய குன்றவர். " மலைவான் கொள்கென வான்பலிதூஉய் மாரியான்று மழை மேக்குயர்க எனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர்" 1 எனச் சான்றோர் குறிப்பது காணலாம். செய்யும் வினை காரணமாகத் தோன்றும் சமய வழிபாடுகள் வினைத் தொடக்கத்தில் இடையூறு வாராமை கருதியும், இடையில் வந்த இடையூறு நீங்குவது கருதியும், முடிவில் வினைப்பயன் நல்கும் இன்பம் குறித்தும் நடைபெறுகின்றன. மக்களுடைய வாழ்வை அகம் புறம் என இரண்டாக வகுத்து முறை செய்து கொண்டவர் பழந்தமிழர். அகம் என்பது தனியே இருந்து வாழ்க்கை நடத்துதற்கு வேண்டும் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஒருங்கு பெற்ற ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை யொருவர் கண்டு காதலுறவு கொண்டு உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்து கொண்டு மனையறம் புரியும் ஒழுகலாறாகும். அக்காலத்தே பிறக்கும் காதலுறவு இடையீடும் இடையூறும் எய்துமிடத்துக் காதலர் மேனிக்கண் தோன்றும் வாட்டமும் மெலிவும் குறித்துத் தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. குன்றவர் நடத்தும் வெறியாட்டு இதற்கு ஏற்ற சான்றாகும். புறவாழ்வு என்பது மனையறம் புரிந்தொழுகும் மக்களிடையே பொருளும் புகழும் போர் வென்றியும் பிறவும் பற்றி நிகழும் செயல் வகைகளும் ஒழுகலாறுமாகும். அகவாழ்வு மனையறத்துக்கு ஆக்கம் தந்து இம்மையிற் புகழும் இன்பமும் பெறுவதற்குச் சமைந்தாற் போலப் புறவாழ்வு இம்மைக்குரிய பொருளாகிய செல்வமும் கல்வியும் தந்து மறுமையில் இன்பமும் வீடுபேறும் எய்துதற்கு அமைந்தது. அகத்துறை இன்பம் நுகர்ந்தும் புறத்துறைப் புகழும் வென்றியும் பெற்றும் உவர்ப்புத் தோன்றும் முதுமைச் செவ்வியில் "சிறந்தது பயிற்றல்" என்னும் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது பண்டைத் தமிழர் சமய நெறியாகும். " காமம் சான்ற கடைக்கோள் காலை ஏமம் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுவதைக் காண்க. இதன்கண் சிறந்தது பயிற்றல் என்பது பிறவாப் பெருவாழ் வாகிய வீடு பேற்றுக்குரிய துறவு நெறியை மேற்கொண் டொழுகுதல் என்பது. இறத்தல் என்பது வயது முதிர்தல். முதுமையின் பயனாகிய சிறந்தது பயிற்றற்குக் கிழவனும் கிழத்தியும் உரியர் என்பதனால் துறவும் வீடுபேற்றுக்ககுரிய மெய்யுணர்வு ஒழுக்கங்களும் பெண்களுக்கும் உரியன என்பது தமிழர் பழமைக் கொள்கை. பிற்காலத்தில்தான் பெண்கள் வீடு பேற்றுக்கமைந்த அறிவும் ஒழுக்கமும் பெறுதற்கு ஆகாரென விலக்கப்பட்டனர். இம்மையில் ஒருவனுக்கு வாழ்க்கைத் துணையாகிய பெண் மகள் அவன் புகழும் இன்பமும் பெறுதற்குத் துணைசெய்தாற்போல மறுமையில் இன்பமும் வீடு பேறும் எய்துதற்குத் துணை யாதல் இயல்பும் முறையுமாம் என்பது கருத்து, பொருள் இன்பங்களின் சுவைகாணாத ஒருவன் துறவுமேற் கோடல் என்பது தமிழர் சமயக் கொள்கைக்குப் புறம்பானது. துறவோர் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினையும் ஒரு சேர வுவர்த்து வினையின் நீங்கி விளங்குபவராதலின், வினைச்சார்பு பற்றித்தோன்றும் தெய்வ வழிபாடு அவர்கட்குக் கிடையாது. அவர்களால் வழிபடப் படுவது கடவுளாகிய முழுமுதற் பொருள் ஒன்றேயாம். சடைமுடித்துப் பலகாலும் நீராடித் தோல் உடுத்துக் காய் கனி கிழங்க இலைகளை உண்டு, காடும் குன்றுமாகிய இடங்களில் வாழ்வது துறவோர் இயல்பு. இவர்கள், ஏனையோர்போல நல்வினை செய்து துறக்க வின்பம் பெற விழையாமல், உற்ற நோய் பொறுத்தலும் ஏனை எவ்வுயிர்க்கும் ஊறுசெய்யாமலும் ஒழுகும் தவம் மேற்கொண்டு, மெய்யுணர்ந்து அவா அறுத்து வாழ்வர். இப்பெருமக்களது வாழ்வு முழுதுமே சமயநெறியில் இயங்குவதால் இவர்கட்கெனத் தனி நிலையில் சமய வாழ்வும் வழிபாடும் இல்லை. இவர்கள் உரைப்பனவும் செய்வனவும் ஏனை அகவாழ்வு புறவாழ்வுகளைக் கொண்டொழுகும் மக்களுக்கு ஏதுவும் எடுத்துக் காட்டும் இயல்புடைய அறமுமாகும். செய்வன இவை எனச் சிலவற்றை விதித்தலும், தவிர் வன இவை யெனச் சிலவற்றை மறுத்தலும் இவர்களுடைய உரையியல்பு; அல்லன மறுத்தல், ஆவன விதித்தலினும் சிறந்து நிற்றலின், அவர் உரைப்பன மறை எனப்பட்டன. அம்மறை மொழிகள் மனை வாழ்வார்க்கு அறமும் அறிவுரையுமாதலின், அவற்றை மந்திரம் என்றலும் மரபு. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்பது தொல்காப்பியம். பிறர் அறியா வகையில் மறைத்துக் கூறுவது வஞ்சமொழி என்பதை நினையாமல் பிற்காலத்தார் அதனை மந்திரம் என்றும் மறைமொழியென்றும் தவறாகக் கூறிவிட்டனர். மறைமொழியாகிய மந்திரம் கூறலின், இப்பெரியோர்களை மறையோர் என்றும், அறம் கூறுதலின் அறவோர் என்றும், எவ்வுயிர்க்கும் ஊறு நினையாமையின் அந்தணர் என்றும் பழந்தமிழர் பாராட்டி வழிபட்டனர். இன்பத்தையும் துன்பத்தையும் இவற்றிற்கு முறையே உரிய நல்வினை தீவினை களையும் உவர்த்து வெறுத்தமையின் முனிவர் என்றும் முனைவர் என்றும் மொழிந்தனர். முனைவு, முனிவு என்பன வெறுப்பு என்னும் பொருள் தருவன. இம் முனிவர்களின் மனமும் மொழியும் மெய்யும் யாவுமே கடவுட்பெரும் பொருளோடு கலந்து பிரிப்பின்றிப் பிறங்கும். இவர்களுடைய நெஞ்சில் நிலவும் கடவுள், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீலமணி மிடற்று"ப் பெரும்பெயர்க் கடவுள்; அவருடைய திருவுருவில் ஆணும் பெண்ணுமாகிய இருகூறும் கலந்திருக்கும்; உலகவுயிர்களுள் மிகமிக நுட்பமானவை ஆண்கூறும் பெண்கூறும் ஒன்றாய்க் கலந்து விளங்குவது கண்டே இச்சான்றோர் உயிர்கட்கும் உலகுக்கும் ஒரு முதலாக விளங்கும் கடவுள், ஆணும் பெண்ணுமாகிய இருகூறும் ஒன்றிய ஓருருவினை யுடையது என்றனர். "பெண்ணுரு ஒருதிறனாகின்று" என்றும், "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என்றும் வருவன காண்க. முற்றத் துறந்த முனிவரரும் முடியுடைய வேந்தரும் தலைசாய்த்து வணங்கியது இக் கடவுளையே யாகும். " பணீஇயர் அத்தைநின்குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே" என்று சான்றோர் தெருட்டிக் கூறுவது இங்கே நினைவு கூர்தற்குரியது. முழுமுதற் கடவுட்கும் மண்ணுலக வுயிர்கட்கும் இடையே நிலவும் தெய்வங்கள் மக்களுடைய வழிபாட்டை ஏற்று அவர்கள் நலம் பெறத் துணைபுரியும் என்ற கருத்தால் பகைப் பொருளை வெல்வதற்கும் துன்பத்தினின்றும் உயிர்களைக் காத்தற்கும் அத்தெய்வங் களின் தொடர்பு சமய வாழ்வில் சிறந்து நின்றது. மக்களுயிர்களில் அல்லன கடிந்து நல்லனவே புரிந்தவை மறுமையுலகில் தெய்வங்களாயின. ஆதலால் இத்தெய்வங்கள் இன்ப துன்பங்கட் குரியவாய்ப் பகையுயிர்களால் துன்புறுத்தப்பட்ட வரலாறுகளும், துன்ப நீக்கமும் இன்பப் பேறும் கருதிக் கடவுட் பொருளை வழிபட்ட செய்திகளும், பண்டையோரால் குறிக்கப் படுகின்றன; மாண்புடைய மக்களைப்போல இத்தெய்வங் களும் கடவுளின் அருளை வேண்டியிருத்தலால் இத்தெய்வங் கட்கு மண்ணுலகத்து வேந்தரும் பிற நன்மக்களும் துணைபுரிந்து பகை கடிந்த செய்திகள் பல கூறப்படுகின்றன. இச்செய்திகளை இந்நாளில் புராண வரலாறுகள் என்பது வழக்கம். மக்கள் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு எழுந்த பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வங்கள் சார்பான புராண வரலாறுகள் பல வழங்கி வந்துள்ளன. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனைப்பற்றிய வரலாறுகளில் அம்முருகன் இமயமலைச் சுனையொன்றில் தாமரைப் பூவில் பிறந்தான் என்பதை, "நிவந்தோங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப், பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்" என்று பரிபாடல் முதலிய நூல்கள் குறிக்கின்றன. கடலிடத்தே யிருந்து குறும்பு செய்து உயிர்களை வருத்தித் திரிந்த சூரவன்மாவின் காவல் மரமான மாமரத்தைத் தடிந்து அவனையும் கொன்று முருகன் மேன்மையுற்றான் என்பதை, " நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம்புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள்" என்று பதிற்றுப்பத்தும், " அவுணர்நல் வலமடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்" என்று முருகாற்றுப் படையும் பிறவும் கூறுகின்றன. முருகனுக்கு மனைவி வள்ளி; அவள் குறவர் குடியில் பிறந்த குறக் கோமகள். "குறவர்மடமகள் கொடி போல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகையமர்ந்த" முருகனைச் சிறப்பிக்கும் சான்றோர், வள்ளியை, "முருகுபுணர்ந்தியன்ற வள்ளி" என்றும், அவளுடைய பெற்றோரை, "குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளி தமர்" என்றும் எடுத்துரைப்பர். முல்லைநிலத் தெய்வமான மாயோனைக் கண்ணன் என்பதும் வழக்கு. அவன் இளையனாய் இருந்தபோது முல்லை நிலத்து ஆயருடன் யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு " வடாஅது வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல்" என்றும், கஞ்சன் விடுப்பக் குதிரை வடிவில்வந்த அசுரனை வென்ற செய்தியை, " காயாம் பூங்கண்ணிப் பொதுவன் தகைகண்டை மேவார் விடுத்தந்த கூந்தற்குதிரையை வாய்பகுத் திட்டுப் புடைத்த ஞான்று இன்னன்கொல் மயோன் என்று உட்கிற்று என்நெஞ்சு" என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறே மருத நிலத்தில் வைத்து உரைக்கப்படும் தெய்வமான இந்திரன், முருகன் முதலிய தெய்வங்களுக்குப் படையுதவிய பண்பும், அகலிகை பொருட்டு மேனி முழுதும் கண்பெற்ற கதையும் பழந்தமிழரிடையே நிலவியுள்ளன. பாலைக்குரிய தெய்வமான கொற்றவையை முருகனுக்குத் தாய் என்றும், அவளே எல்லாத் தெய்வங்கட்கும் பழையவள் என்றும் பண்டையோர் பகருகின்றனர். தாருகன் உரன்கிழித்த தறுகண்மையையும் எருமை வடிவில்வந்த அவுணனை வென்ற வீறுபாட்டையும் அவளுடைய வரலாறு வற்புறுத்து கின்றது. நெய்தல் நிலத்துக்கு உரியனாக வுரைக்கப்படும் வருணனைப்பற்றி ஒரு செய்தியும் பழந்தமிழ் நூல்களில் எவராலும் எவ்விடத்தும் கூறப்படவில்லை. இவ்வவரலாறுகளை விழாக் காலங்களில மக்கட்குக் காவியம் கூறியும் ஓவியம் காட்டியும் உரைப்போர் அந்நாளில் இருந்திருக் கின்றனர். இதனை, " இந்திரன்பூசை இவள் அகலிகை; இவன் சென்ற கவுதமன்; சினனுறக் கல்லுரு ஒன்றியபடி யிது என்று உரைசெய்வோரும்" உளர் எனப் பரிபாடல் கூறுகின்றது. இத்தெய்வங்கட்கெல்லாம் மேலாய், உலகு உயிர்களின், வேறாய், ஒன்றாய் உடனாய் நிலவும் கடவுள் நிலையில், சிவபெருமானை வைத்து, அவன் வடிவை, பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் என்றும், பேரிசை நவிரம் மேஎய் உறையும் காரியுண்டிக் கடவுள் என்றும் கூறுவர். அவன் மும்மதில் எரித்த வரலாற்றைப் பலவிடங்களில் பன்முறையும் பண்டைச் சான்றோர் பாடியுள்ளனர். " ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண்கொளீஇ ஒருகணைகொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த கறைமிடற்று அண்ணல்" எனவும், " தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின் மடங்கல்போல் சினைஇ மாயம்செய் அவுணரைக் கடந்தடுமுன்பொடு முக்கண்ணால் மூவெயிலும் உடன்றான்" எனவும், " உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்" எனவும் பழந்தமிழ் நூல்கள் கூறுவது இவ்வுண்மையை நன்கு வற்புறுத்துகின்றன. பழந்தமிழரது சமய வாழ்வில் கார்த்திகை விளக்கீடும், மார்கழி அம்பா ஆடலும், மாசிக் கடலாட்டும், பங்குனி உள்ளிவிழாவும் பிறவும் சிறந்தனவாகும். கார்த்திகை விளக்கீடு, இன்றைய தீபாவளிச் சிறப்பும் பொங்கற் புதுநாள் சிறப்பும் ஆகிய இரண்டினையும் தன்கண்கொண்டு முன்னாளில் விளங்கிற்று. இதனை, " மழைகால் நீங்கிய மாக விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடனயர வருகதில் அம்ம" என்று பாராட்டிக் கூறுகின்றனர். இக்காலத்தே புது மணமகளிர் புதுநெல்கொண்டு அவல் இடித்துப் பாற் பொங்கலிட்டு மகிழ்வர். இச்செய்தியை இந்தப் பாட்டிலே " புதுமணமகடூஉ அயினிய கடிநகர்ப் பல்கோட்டடுப்பிற பால் உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை" என்று நக்கீரர் நவில்கின்றார். மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கும் அம்பாவாடல் தைத்திங்கள் முழுமதி நாளன்று தைந் நீராட்டென்ற பெயரால் முடிவுறுகிறது. விசயநகர வேந்தர் காலத்தில் தோன்றிய மொழிநிலையுணர்வு வேறுபாட்டால் கார்த்திகை பொலிவு குன்றிற்று; தீபாவளி புதிது தோன்றிப் புகழ் பெறுவதாயிற்று. தைந் நீராட்டுத் தலைதடுமாறிப் போயிற்று. வேனில் விழா, காமன் பண்டிகை யாயிற்று. இக்காலத்தில்தான் தெய்வ நிலையங்களில் வழிபாடு வடமொழியில் நடைபெறு வதாயிற்று. ஊர்ப்பெயர்களும் தெய்வப்பெயர்களும் வடமொழியில் மொழி பெயர்ந்தன. மன்னர் மக்கட் பெயர்கள் வடமொழியாக மாறின. பழந்தமிழரிடையே சமய வழிபாட்டில் அவரது பழமையான தமிழ் மொழியே வழங்கி வந்தது. தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. அவற்றை நகர் என்றும் தேவகுலம் என்றும் வழங்கினர். பெருமனைகளில் தெய்வ வழிபாட்டுக் கென ஒருபகுதி ஒதுக்கப் பட்டுத் தேவாரம் என்ற பெயரால் சிறப்பிக்கப் பெற்றது. மலை முடியும் கடற்கரையும் தெய்வங்கட்குரிய கோயில் எடுத்தற்குச் சிறப்புடைய இடங்களாயின. நவிரமலையின் முடியில் முக்கட் செல்வனுக்கு இருந்த கோயிலை மலைபடுகடாம் என்ற சங்க நூல் தமிழ் நலம் கெழும உரைக்கின்றது. சிவனுக்கு மாத்திரம் நூற்றுக் கணக்கான கோயில்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருந்தன. இக்கோயில்கள் பலவும் அந்நாளில் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்பட்டன. பல்லவர் காலத்தில்தான் கோயில்களைக் கருங்கற் களால் அமைக்கும் முறை உருக்கொண்டு சிறப்பதாயிற்று. எல்லாத் தெய்வங்கட்கும் மேலாய கடவுளாய்ச் சிவனுக்கு எடுக்கும் கோயில்களில் சிவனை நடுவில்வைத்து ஏனைக் குறிஞ்சி முதலிய திணை நிலைத் தெய்வங்களைப் "பரிவார தேவதைகள்" எனப் பிற்காலத்தே ஓரிடத்தே வைத்துச் சமயவொருமை கண்டனர். இவையேயன்றி ஊர்தோறும் அன்பர்கள் கூடிப் பரவுதற் பொருட்டுத் தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. இவற்றின் வேறாக, " காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" தெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கந்துடை நிலை யென்றது பிற்காலத்தே சிவலிங்கம் என வடமொழியில் குறிக்கப்படுவதாயிற்று. சிவவடிவம் கந்தும் அதன் பீடம் நிலையுமாகும். இவ்வுண்மை காணாத மடவோர் கந்தினை ஆண்குறி யென்றும் நிலையினைப் பெண்குறி யென்றும் பிதற்றினர். சிலர் இப்பிதற்றுரையை அறிவுடைக் கூற்றாகப் பிறழ வுணர்ந்து பொய்க்கதை புனைந்து இலிங்கபுராணம் என்ற பெயரால் வடமொழியில் எழுதிப் பிறநாட்ட வரும் சமயத்தவரும் கண்டு எள்ளி இகழத்தக்க இழிநிலையை உண்டு பண்ணினர். தெய்வ வழிபாட்டில் உயிர்ப் பலியும் குருதி கலந்த சோறும் பண்டை நாளில் தெய்வங்கட்குப் படைப்பதுண்டு. எங்கும் விளக்கு களை ஏற்றித் தெய்வங்கட்கு நீராட்டிப் பூச்சூட்டி மணி இயக்கி நறும்புகை எடுப்பர். அக்காலை பலவேறு வாச்சியங்களும் முழங்கும். பின்பு பலவேறு நிறமுடைய பூக்களைத் தூவி வழிபாட்டுக்குரிய தெய்வத்தை வழிபடுவர். சொரியப்படும் பூக்களைப் பூப்பலி என்றும், சோறு முதலியவற்றை உண்பலி என்றும் உரைப்பர். முருகனைத் தொழுபவர், பலியிட்டுக் கையால் தொழுது காலுற வணங்கி, " நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பின் பழையோள் குழவி, வானோர் வணங்குவில் தானைத் தலைவ, மாலை மார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள, அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை, மங்கையர் கணவ, மைந்தர் ஏறே, வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே, அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக, நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள, அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய், மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள், சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு பொருந, குரிசில்" எனப் பலவாக வரும் புகழுரைகளைச் சொல்லி, முடிவில், " நின் அளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்" என்று கூறி வணங்குவர். வேறு சிலர், " யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல; நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே" என்றும், மற்றும் சிலர், " யாமும்எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயாம் எனவே" என்றும் வழிபடுகின்றனர். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக" என்பது தமிழ் வழிபாட்டுரை. இன்றைய தமிழர், தாம் அறியாத மொழியில் "முறம் போன்ற காதுகளையுடை யவனே", "குடம் போன்ற வயிற்றை உடையவனே", "பெண்ணின்பத்தைப் பெரிதும் விரும்பு பவனே", "ஆடம்பரத்தை விழைபவனே" என்று ஆண் தெய்வங் களையும், "மலைபோன்ற கொங்கைகளையுடையவளே", "இடையறாத போகத்தை விரும்புபவளே" என்று பெண் தெய்வங்களையும் வழிபாடு என்ற பெயரால் வசைபாடு கின்றனர். இன்றைய வழிபாட்டு அருச்சனைகளில் "தெய்வதூஷணம்" பெருகியிருக்கிறதேயன்றிப் பூசனையும் வணக்கமும் இல்லை. "நானாவித மந்திர புஷ்பாணி சமர்ப்பியாமி" என்பன போன்ற சொற்களால் இல்லாதவற்றை ஏற்றிப் பொய் கூறுகின்றனர். வடமொழித் தொடர்களைக் கேட்கும் வடமொழி யறிஞர்களும் மனத்தில் வெறுப்பும் முகத்தில் சுளிப்பும் கொண்டு வருந்துகின்றனர். இந்நாளில் மக்களில் சிலர் மொழி வெறி கொண்டு வழிபாட்டில் நிலவும் இக்குற்றத்தைப் போக்காமல் விடாப்பிடி கொண்டு தெய்வங்களின் திருமுன் இந்த நேர்மையற்ற முறையை மேற்கொண்டிருப்பது சமய வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக இல்லை. வடமொழி ஆகமங்களோ தமிழ்ச் சமய நூல்களோ யாதும் எக்காலத்தும் எவ்விடத்தும் வடமொழியில்தான் வழிபாடு நடத்தவேண்டும் என்று விதித்ததே கிடையாது. வடமொழி யாளருள்ளும் அறிவுடையோர் உண்டு; அதனால், அவர்கள் இத்தகைய கீழ்மையான செயல்களில் ஈடுபட மாட்டார் களல்லவா? இன்றைய சமுதாயம் மிக்க விரைவாக மாறிவருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த மன்னரது முடியாட்சி மறைந்தது; குடியாட்சி தோன்றிவிட்டது; மக்களுக்குத் தெரியாத மொழியில் நடந்த நாட்டரசு, மக்கள் வழங்கும் அவர் அறிந்த மொழியில் நடைபெறத் தொடங்கிவிட்டது. கல்வி, வாணிகம் முதலிய அனைத்தும் மக்கள் அறிந்த மொழியில் நடப்பதே நேர்மையும் முறையுமாம் என்ற கருத்து நிலவுகிறது. தமிழகத்து அரசியல் மன்றம், பொதுமக்கள் கூடுமிடம், பல்வகை அலுவலகம் எங்கும் தமிழே இடம் பெற்று இலங்குவது காண்கிறோம். ஆகவே, சமய நிலையங்களான கோயில்களில் மாத்திரம் இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி இருப்பானேன்? அது நிலவுவதால் தமிழ் மக்கள் மனத்தில் சமய உணர்வோ சமய ஒழுக்கமோ ஒன்றும் உண்டாக வில்லை; அதற்கு மாறாகச் சமயத்தின்கண் வெறுப்பும் சமய நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பும் வளம்பெற்று வருகின்றன.  19. தமிழரிடையே நிலவிய இதிகாச புராணங்கள் பழந்தமிழருடைய சமய வாழ்வில் தெய்வங்களைப் பற்றி வழங்கும் வரலாறுகள் பல இருப்பதை நாம் அறிவோம். அவற்றைப் பிற்காலத்தார் புராணங்கள் என்று பெயர் குறித்தனர். அப்புராணங் களோடு இதிகாசக் கதைகளும் நிலவின. அவை இராமாயணம் பாரதம் என்ற இரண்டுமாகும். இவ்விரண்டையும் இதிகாசம் என்பது வடநூல் வழக்கு. வடமொழிச் சமயநூல் தொகுதியில் இதிகாசங்களும் புராணங்களும் சேர்ந்தவை. இவை எப்போது தமிழகத்திற் புகுந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. வடமொழியாளர் தொடர்பு உண்டாகியபின் இவை தோன்றியிருக் கலாம் என்பது பொதுவாகக் கூறப்படும் செய்தி. சிந்துவெளி நாகரிக காலத்தும் இவ்விதிகாச நிகழ்ச்சிகள் நாட்டில் நிலவியிருந்தன எனச் சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அஃது உண்மையாயின், இவை ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பும் நிலவிய தொன்மையுடையவை என்றல் நேரிது. இராமாயணம் பாரதம் என்ற இரண்டனுள் இராமாயணத்தை முற்படவைத்துப் பேசுவது வழக்கம். சில ஆராய்ச்சியாளர் பாரதமே முந்தியது என்றலும் உண்டு. எனினும் இவையிரண்டும் ஒத்த நிலையில் நம் தமிழகத்தில் மக்களிடையே பரவியிருக்கின்றன. சங்ககாலத் தமிழ் மக்களிடையே இதிகாச வரலாறுகள் நன்கு பயின்றிருந்தமையின் சான்றோர் செய்யுட்களில் இவற்றின் நிகழ்ச்சிக் கூறுகள் பல உவமவாயிலாக உரைக்கப்படுகின்றன. செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியை ஒருகால் ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சான்றோர் பாணர் சுற்றத்துடன் சென்று கண்டு அவன் புகழை இனிய பாட்டுக்களாற் பாடினார். அதுகண்டு மகிழ்ந்த வேந்தன் பாண் சுற்றத்தின் வறுமைக்கு இரங்கி மிக்க பொருளையும் பொன்னாலாகிய அணிவகைகளையும் நிரம்ப நல்கினான். அவற்றை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. இன்ன அணியை இவ்விடத்தே இவ்வாறு அணிவது என்ற முறையும் அவர்கட்குத் தெரியாது. அதனால், விரலுக்கிடுவதைக் காதிலும், காதில் அணிவதைக் கைவிரலிலும், அரையிற் கட்டுவதைக் கழுத்திலும், கழுத்தில் பூண்பதை அரையிலும் அணிந்து மகிழ்ந்தனர். அவரது செயல் கண்டதும் பசுங்குடையாரது புலமைக் கண்ணில், கிட்கிந்தையில் சீதை கழற்றி யெறிந்த அணிவகைகளைக் கண்டெடுத்த குரக்கினம் தாம் அணிந்து மகிழ்ந்தன என்ற இராமாயண நிகழ்ச்சி தோன்றிற்று. அவர் உவகை மிகுந்து, " மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே; அதுகண்டு இலம்பா டுழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விரற்செறி மரபின செவித் தொடக்குநரும் செவிதொடர் மரபின விரற்செறிக்குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும் மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும்" என்று நகை தோன்றக் கூறி, இராமாயணக் கதையை, " கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பைங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே" என்று பாடியுள்ளார். மணமாகாமுன் இளையோன் ஒருவனுக்கும் இளமகள் ஒருத்திக்கும் மணஞ் செய்துகொள்ளற்குரிய தொடர் புண்டாயிருந்தது. அதனை அறிந்த ஊர்மகளிர் அவர்களைப் பற்றி அலர்கூறத் தொடங்கினர். சின்னாட்களில் அவ்விளையவன் சான்றோருடன் அவள் பெற்றோரைக் கண்டு மணம் பேசி அவளைத் தனக்கு வாழ்க்கைத் துணையாக்க வேண்டுமென வரைந்துகொண்டான். ஊரவர் எடுத்த அலர் அடங்கி யொடுங்கிவிட்டது; அதனை அவ்விளமகளுக்கு அவளுடைய தோழி தெரிவிக்கலானாள். அவள் கூற்றைக் கடுவன் மள்ளனார் என்ற சான்றோர் அழகுறப் பாடக் கருதி, "துறைவன், நம்மொடு புணர்ந்த கேண்மை, முன்னே அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப் பலருமாங் கறிந்தனர் மன்னே, இனியே வதுவை கூடிய பின்றை..... ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே" என்று பாடுவாராயினர். முன்னர்ப் பலரும் அறிய அலர் கூறிய ஊர், வதுவை கூடிய பின்பு ஒலியவிந்தது என்று கூறக் கருதிய மள்ளனார் உள்ளத்தில் இராமாயண நிகழ்ச்சி யொன்று தோன்றிற்று. இராமன் பாண்டிநாட்டுக்குரிய கோடிக் கரையில் குரக்குப் படையுடன் போந்து ஓர் ஆலமரத்தின் கீழே பாசறையிட்டு இருந்தான். அக்காலத்தே அம்மரத்தில் பல்வகைப் பறவைகளும் உயிர் வகைகளும் கூடியிருந்து பேரொலி யிட்டுக்கொண்டிருந்தன. சிறிதுபோதில் இராமன் தன் தானைத் தலைவருடன் யாதோ ஒரு செய்தியை மறையாகப் பேசலுற்றான். அவன் பேச்சுக்கு ஆலமரத்து ஒலி இடையூறு செய்தது; அதனால் அவன் அவற்றை ஒலியவிந்திருக்குமாறு பணித்தான். அவையும் ஒலியவிந்தன. அதனை நினைந்த தமிழ்ச் சான்றோர், " வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவிந்த பல்வீழ் ஆலம் போல ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே" என்று எடுத்துக் கூறி இன்புற்றார். ஒருகால் இராவணன் நாற்றிசையிலும் தன் புகழைப் பரப்பக் கருதி வடவிமயப் பகுதியில் சென்று கொண்டிருந் தான். வழியில் கயிலைமலை நின்று அவன் செல்லும் ஊர்திக்குத் தடை செய்தது. அதனால், அவன் அதனைப் பெயர்த்தெடுத்து ஒரு புறத்தே வைக்கக் கருதி அம்மலையின் அடியைக் குடைந்து அதற்குள் தன் தலையை நுழைத்துத் தூக்கினான். மலையும் அசைந்தது. அப்போது அம்மலை மேல் சிவபெருமான் தன் மனைவி உமையம்மையுடன் வீற்றிருந் தான்; தேவர் பலர் சூழ இருந்தனர். மலையசைவது உணர்ந்த அவ்விறைவன் தன் கால் கட்டை விரலைச் சிறிது ஊன்றினான். மலையழுந்திற்று; இராவணன் தன் தலையை வெளியே இழுத்துக் கொள்ள முயன்று மாட்டாமையால் வருந்தி அலறத் தொடங்கினான். இந்த வரலாறு இராமாயணத்துட்கண்டது. இது சங்ககாலத்தில் தமிழரிடையே வழங்கி வந்தது. ஒரு மலைக்காட்டில் வேங்கைமரம் ஒன்று பூத்து இனிய காட்சி தந்து நின்றது. அதனைக் களிற்றியானை ஒன்று சேய்மையிற் கண்டு வேங்கைப் புலியென்று நினைந்து மனத்தே திடுக்கிட்டு, மறமிகுதியால் அதனைக் கொன்று அழிக்கக் கருதி நெருங்கி வந்தது. வந்ததும் அதற்கு உண்மை புலனாயிற்று. ஆயினும், தனக்கு அச்சம் தோற்றுவித்து அலைத்தமைபற்றி அதற்கு நெஞ்சிலே நெடுஞ்சினமுண்டாயிற்று. உடனே அவ்யானை வேங்கையின் அடிப்பகுதியைத் தன் கொம்பினாற் குத்திக் கீழே தள்ளிவிடக் கருதி அதன்மேற் பாய்ந்தது; அதன் மருப்புக்கள் இரண்டும் மரத்தின் அடியில் நன்கு புதைந்தனவே யொழிய மரம் சாயவில்லை; மீட்டும் அது தன் கொம்புகளை வாங்கித் தாக்கற்கு நினைந்து அவற்றை வெளியே இழுத்தது; மிக்க வன்மையும் பருமையும் உடைய வேங்கைமரமாதலால் அதன் அடியிற் புதைந்த மருப்புக்கள் வெளிவரவில்லை. களிற்றின் வன்மையும் மதமும் சிறிதும் பயன்படவில்லை. அதனால் அது பேரிரைச்சலிட்டுப் பிளிறிப் புலம்புவதாயிற்று. அது கண்டு வியந்த குறிஞ்சிப் புலவரான கபிலர், அதனைக் கலிப்பாட்டொன்றில் வைத்துப் பாடக் கருதினார். அந்நிலையில் அவரது புலமையுள்ளம் இராவணன் கயிலைமலை யடியில் சிக்குண்டு வருந்திய செயலை நினைந்தது. அவன் செய்கையை உவமமாக நிறுத்தி, " இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத் தம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானை நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த்தன் கோடுபுய்க் கல்லாது உழக்கும்" என்று பாடியுள்ளார். இங்கே மற்றொரு குறிப்பும் நினைவுகூர்தல் வேண்டும். பண்டைத் தமிழர் இராவணன் பத்துத்தலையும் இருபது கைகளு முடைய அரக்கன் என்றும், கிட்கிந்தையில் குரங்குகளே வாழ்ந்தன என்றும் கருதினமை துணியப்படும். அவன் தென்னாட்டுக்குரியவன் என்றும், தமிழினத் தவனென்றும் அவர்கள் நினைத்ததில்லை. இராமன் வடநாட்டவனெனவும் இராமராவணப் போர் வடவருக்கும் தென்னாட்டவருக்கும் நடந்த போர் எனவும் பழந்தமிழர் கருதவே யில்லை. ஆங்கில அட்சியில் புதிது தோன்றிய ஆராய்ச்சி அறிவில் கால் வைத்த அறிஞர் சிலர், முதிராத தமது ஆராய்ச்சியறிவால் இவ்வாறு பொருள்கூறி வடவருள்ளத் திலும் தென்னாட்டவர் மனத்திலும் வேற்றுமைக் கருத்துக்களை வித்திவிட்டனர். அதனால் வடபுலத்தார் இராவணன் முதலியோர் உருவங்களைச் சமைத்து எரித்து விழாக் கொண்டாடுமுகத்தால் தமது வெறுப்பைத் தோற்று விப்பாராயினர். அதுகண்ட தென்னாட்டவர் இராமாயணக் கதை எழுதிய நூலைக் கொளுத்தவும் இராமாயணத்தைக் கூறிய புலவர்களை இகழ்ந்து வெறுக்கவும் தலைப்பட்டனர். அண்மையில் தோன்றிய மடமையுரையொன்று நம் நாட்டில் வட புலத்துக்கும் தென் புலத்துக்கும் மாறுபாடு விளைவித்து அரசியல் பொருளியல் வாணிகம் முதலிய துறைகளில் ஒற்றுமை நலத்தைச் சிதைத்துச் சீரழித்துவிட்டது! நம் மதிப்புக்குரிய வினோபாபாவே அவர்கள் இதுபற்றி யுரைத்த அறிவுரை நாட்டில் நன்கு பரவுதல் வேண்டும்; அதுதான் வேற்றுமை நோய்க்கு மருந்து. இராமாயணம்போலப் பாரதக் கதையும் சங்க காலத் தமிழ் மக்களிடையே பரவியிருந்திருக்கிறது. பாண்டவர் இருந்த அரக்கு மாளிகை தீப்பட்டபோது வீமன் ஏனை யோரை முன்னறிந்து காத்ததும், தன் தந்தையாகிய துரோணனைக் கொன்றானை அசுவத்தாமன் இரவிற் சென்று உயிர் கவர்ந்ததும் கலித்தொகையில் குறிக்கப்பட்டுள்ளன. முல்லை நிலத்து ஊரொன்றில் கொல்லேறு தழுவும் விழா நடைபெறுகிறது; ஆயர் விழாமன்றத்தில் கொல்லேறு களை நிறுத்திப் போர்க்கு விடுகின்றனர்; கட்டிளங்காளையர் பலர் அவற்றைப் பாய்ந்து பிடிக்கின்றனர்; பல எருதுகள் அவர்கள் பிடிக்கு அகப்படாது எதிர்த்துப் பொருது அவர்களிற் சிலரை மாய்க்கின்றன. வெண்ணிற எருத்தொன்றைத் தழுவிப் பிடிப்பதற் காகப் பாய்ந்த ஒருவனை அது தன் கூரிய கொம்பாற் குத்திக் கொலை புரிகின்றது. அதனைக் காண்பவர் கூற்றை மேற்கொண்டு பாடலுற்ற நல்லுருத் திரனார், தன் தந்தை துரோணனைக் கொன்ற திட்டத்துய்மனை அசுவத்தாமன் இரவிற் கொன்றதை நினைந்து, " செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் தோற்றம்காண்: ஆரிருள் என்னான் அருங்கங்குல் வந்துதன் தாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றானைத் தோளில் திருகுவான் போன்ம்" என்று பாடுகின்றார். அரக்கு மாளிகை தீப்பட்டபோது, தருமன் முதலிய தன் உடன்பிறந்தோர்களை வீமன் காத்த வரலாறு, காடொன்றில் தீ யெழுந்து அங்கே மேய்ந்து கொண்டிருந்த யானைகளை வளைத்துக் கொள்ள அவற்றுள் வலிமிக்க வேழமொன்று தீயழலிற் புகுந்து வழியுண்டாக்கித் தன் இனமான பிற வேழங்களைக் காப்பது கண்டு வியப்புற்றுப் பாடிய பெருங்கடுங்கோவின் பாட்டில், " வயக்குறுமண்டலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவரென்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக் கைபுனை அரக்கில்லைக் கதழெரி சூழ்ந்தாங்குக் களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல் ஒள்ளுரு அரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப்போ குவான்போல எழுவுறழ்தடக்கையின் இனங்காக்கும்எழில்வேழம் அழுவஞ்சூழ் புகையழல் அதர்பட மிதித்துத்தம் குழுவொடு புணர்ந்து போம்" என்று காட்டப்படுகிறது. ஒருபால் மறைந்திருந்த வயப்புலி யொன்று வலிமிக்க களிற்றின்மேற் பாய்ந்ததாக அதனை அவ்யானை தன் கூரிய கொம்பினாற் குத்தி வெற்றியுடன் சென்ற காட்சியொன்று கபிலர் கருத்தைக் கவர்ந்துகொண்டது. அதனைப் பாட்டிடை வைத்துப் பாராட்டத் தொடங்கிய போது அவர் மனத்தில் பாரதப் போரில் புலிபோற் பொருத துரியோதனன் துடையறுபட்டு இறந்த திறம் தோன்றவே, அதனை உவமவாயிலாகக் குறிப்பாராய், " முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத்திடுவான்போல கூர்நுதி மடுத்து அதன் நிறஞ்சாடி முரண்தீர்ந்த நீண்மருப் பெழில்யானை" என்று பாடுகின்றார். இவ்வாறே அருச்சுனன் காண்டவ வனத்தை எரித்த செய்தியைக், " காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன்" என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கிறது. இவ்விரண்டு இதிகாசங்களிலும் அடங்கிய செய்திகள் சில புறநானூறு பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களுள் குறிக்கப் பட்டுள்ளன. இன்று நாம் பெற்றுள்ள சங்க இலக்கியங்களில் சுமார் 2400 பாட்டுக்கள் உள்ளன; ஆயினும் நாம் இதுகாறும் கண்டு போந்த புராண இதிகாசக் குறிப்புக்கள் அடங்கிய பாட்டுக்கள் ஒரு முப்பது முப்பத்தைந்துக்குமேல் இல்லை. இதனால் சங்ககால இலக்கியச் சூழலில் இவ்வரலாறுகள் அத்துணைச் சிறந்த இடத்தைப் பெறவில்லை என்பது தேற்றம். மாவும் புள்ளும் மாக்களுமாகிய உயிர்ப்பொருள் நிகழ்ச்சிகளே சங்க இலக்கியங்களில் பெரிதும் நிறைந் துள்ளன. நூற்றுக்கு ஒன்று இரண்டாய் அரும்பித் தோன்றிய இக்குறிப்புக்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற பெருங்காப்பியங் களில் சிறுது பெருகித் தோன்றியுள்ளன. சிலப்பதிகாரத்தை நோக்க மணிமேகலை காலத்தாற் பிற்பட்டதே; ஆயினும் அது பெரிதும் பௌத்த சமயச் சூழ்நிலையிலே தோன்றி நிலவிய காரணத்தால் புராண இதிகாசக் கதைகள் மிகுதியும் பயிலும் திறம்பெறா தொழிந்தது. என்றாலும், வாணனுடைய நகரத்தில் கண்ணன் தன் மகன் பொருட்டுப் பேடிக் கோலம்கொண்டு கூத்தாடியதும், இந்திரன் அகலிகை காரணமாக ஆயிரங்கண் பெற்றதும், அக்கினித்தெய்வம் காமவேட்கை கொண்டு அலைந்ததும், திருமால் இராமனாகத் தோன்றி மயங்கியதும், அவர் பத்து அவதாரம் கொண்டதும், வாமனாவதார நிகழ்ச்சியும் ஆகிய இவைகளே மணிமேகலையில் சிறுசிறு குறிப்புகளாகத் தோன்றுகின்றன. இனி, இளங்கோவடிகள் வாழ்ந்த சேரநாடே ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைவிட வடபுலத்துப் புராண இதிகாசக் கதைகளை முதற்கண் மேற்கொண்ட தென்பது வரலாறு காட்டும் உண்மை. மேலும், சேர நாட்டின் வடபகுதியவன ஆசிரியர்கள் காலத்தில் ஆரியகம் (Ariake) என்று குறிக்கப்படுகிறதென மாக்கிரிண்டில் முதலிய மேனாட்டு அறிஞர்கள் உரைத்துள்ளனர். இதனாலும், புராண இதிகாசக் கதைகள் பெரிதும் பயிறற்குச் சேரநாடு மிக்க வாய்ப்புடைய தாதல் வலியுறுகின்றது. அதனால் அடிகள் பாடிய சிலப்பதிகாரம் இக்கதைகளை மிகுதியாகக் குறிக்கின்றது. சங்க காலத்தில் நிலவிய கதைகளோடு சிவனும் கொற்றவையும் முருகனும் கண்ணனும் பல வேறு கூத்துக்களை ஆடியதும், சிவன் கண்ணை உமையம்மை மறைத்ததும், கொற்றவை தாருகன் உரம் கிழித்ததும், அவள் மகிடாசுரனைக் கொன்றதும், இந்திரன் மலைகளின் சிறகை அரிந்ததும், இந்திரன் மகனான சயந்தன் அகத்தியனுடைய சாபம் பெற்றதும், சோழ பாண்டியர்கள் இந்திரனுக்குத் துணைபுரிந்து ஐவகை மன்றங்களைக் கொணர்ந்த செய்தியும், இந்திரனோடு போர் செய்து பாண்டியர் அவனது ஆரம்பெற்றதும், அவன் முடிமேல் அவர்கள் வளை எறிந்ததும், இந்திரன் அவைக்களத்து நாடகமகளிருள் ஒருத்தியாகிய உருப்பசி சாபம் பெற்றதும், சந்திரன் திருமால் மார்பில் பிறந்த கதையும், திருமால் பாற்கடலில் அரவின்மேல் கிடந்து அறிதுயில் கொண்டதும், அவன் நரசிங்கவுருக் கொண்ட கதையும் பிறவும் இளங்கோ குறிக்கும் புராணக் கதைகளாகும். இதிகாசமாகிய இராமாயணக் கதைகளோடு பாரதத்திற் காணப்படும் நளன் கதையுடன் கண்ணன் வானத்து ஞாயிற்றைத் தன் ஆழியால் மறைத்த கதையும் பாண்டவர் பொருட்டுக் கண்ணன் நூற்றுவர்பால் தூதுபோனதும், கண்ணன் யானையைக் கொன்றதும் இடம் பெறுகின்றன. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்ததும், தேவர்களும் அசுரர்களும் பதினெட்டாண்டுகள் போர் செய்ததும், சோழருள் தூங்கெயில் எறிந்த சோழன் மனுச்சோழன் முதலியோர் வரலாறும், பாண்டியருள் ஒருவன் தன் கை குறைத்துக்கொண்ட கதையும், கடல்மேல் வேல் எறிந்ததும் மேகத்தைப் பிணித்ததுமாகிய புராணக் கதைகள் பெருகியுள்ளன. சிலம்பின் காலத்துக்குப்பின் களப்பிரர் என்னும் நாடோடிகள் கூட்டமொன்று வடபுலத்தினின்றும் போந்து தமிழகத்தைச் சீரழித்தது; தமிழ் இலக்கியங்கள் பல அழிந்தன. தமிழர் அரசியற் சிறப்பும் வாழ்க்கை முறைமையும் நிலைகுலைந்தன. வடமொழிக்கு நிலைபேறு தேடும் முறையில் தமிழர்களின் வரலாற்று இலக்கியங் களும் இசை நாடக நூல்களும் அரசியல் பொருளியல் அரண் அமைப்பியல் படையியல் சமயவியல் முதலிய பலவகை இயல் நூல்களும் அழியவும் அழிக்கவும் பெற்றன. அந்நாளில் உலகில் பலவேறு நாடுகளில் இருந்த அரசர்கள் பகைவர் நாட்டிற்குள் புகுந்தால் அந்நாட்டு இலக்கியங்களையும் நூல் வகைகளையும் மொழியையும் அழிப்பதையே முதற் பணியாக மேற் கொண்டிருந்த செயலைப் பொதுவாக உலக வரலாறும் சிறப்பாகச் சீனம், சப்பான் முதலிய நாட்டு வரலாறும் வெளிப்படுத்துகின்றன. களப்பிரர் அவ்வியல் பினராகலான், அவர்கள் மேலே கூறிய அழிவு வேலைகளைச் செம்மையாகச் செய்தனர். தமிழர் “நாளும் புதுவோர் மேவலர்” எனப்படுபவராதலால், மிக விரைவில் தம்முடைய இலக்கியச் செல்வத்தையும் மொழி நலத்தையும் கைவிட்டுப் புதுவோர் கொணர்ந்த மொழிக்கு ஆக்கமும் அரணும் செய்யலாயினர். அதனால், அந்நாளில், வைதிகம், சமணம், பௌத்தம் முதலிய சமயங்களும் வடநூற் சாதிப் பிரிவினைக் கொள்கைகளும் புகுந்து தமிழர் சமய சமுதாய நிலைகளின் ஒருமைப் பண்பாட்டை உருவழித்தன. சங்ககாலத்தே வடபுலத்து வடமொழி வைதிகக் கருத்துக்கள் சிலவும் தமிழகத்திற் புகுந்து தமிழரிடையே ஓரளவு இடம் பெற்றிருந் தனவாயினும் பிற்காலத்திற் போலத் தமிழ் இலக்கியங்களையும் தமிழர் கலை நலங்களையும் விழுங்கி ஏப்பமிடும் கொடுமையைச் செய்யவில்லை; களப்பிரரின் வரவும் கொடுமையும் தமிழ் வாழ்வில் இருள்செய்தமை தமிழ் வீழ்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று. களப்பிரர் கொடுமையிருள் பின் வந்த பாண்டி மன்னராலும் பல்லவர்களாலும் அரசியலினின்று ஒருவாறு நீங்கியது. எனினும் தமிழரது பண்டைய குறிஞ்சி முல்லை முதலிய திணைநிலை வாழ்வு சிதைந்தொழிந்தது. முருகன் மாயோன் முதலிய தெய்வங்கட்குரிய வழிபாடுகள் சிறப்பிழந்தன. அந்தோ, தமிழகமே! என்று தமிழறிவு அரற்றுகின்றது. சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் தலைதூக்கி நிற்க முற்பட்டன. தமிழ் நாட்டில் சிலபல இடங்களில் சிவன் கோயில்களும் திருமால் கோயில்களும் சிறப்புற்றன. இவற்றுள்ளும் சிவ வழிபாட்டுக்குப் பின்னரே திருமால் வழிபாடு செல்வாக்குப் பெற்றமையின், திருமால் கோயில்களின் தொகையினும் சிவன் கோயில்களின் தொகை மிகுந்திருந்தது. பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் முதலியோரும் திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் முதலியோரும் ஆங்காங்குள்ள சிவன் கோயில்கட்கும் திருமால் கோயில்கட்கும் சென்று தம்முடைய செந்தமிழ்ப் பாக்களால் சிறப்பித்துக் களப்பிரவிருளால் குன்றிய தங்கள் சமய வொளியை விளங்கச் செய்தனர். அவர்கள் அப்போது தம்மிடையே ஆதரவு பெற்றிருந்த வைதிக நெறியைத் தழுவிக்கொண்டு தமது பணியை ஆற்றிவந்தனர். அதனால் பல்லவரும் பாண்டியரு மாகிய வேந்தர் சிலர் சைவராயினர். புதியவாய்ப் புகுந்து அரசியல் ஆதரவு பெற்றிருந்த சமணமும் பௌத்தமும் வலிகுன்றின; சமணம் செல்வாக் கிழந்தது; பௌத்தம் கடல் கடந்து சென்றுவிட்டது. கலைவளமும் பொருள் வளமும் அறிவு வளமும் ஒழுக்க வளமும் நிறைந்த தமிழ்ப் பெருநூல்களை இழந்த தமிழர்கட்கு இம் மறுமலர்ச்சியால் சைவ நெறியில் தேவாரமும் திருமால் நெறியில் நாலாயிரப் பிரபந்தமும் தோன்றிச் சமயவரணும் அறிவுக் கருவூலமுமாயின. நாலாயிரப்பிரபந்தம் தோன்றிய காலத்தில் சமயச் சூழ்நிலையில் இராமாயணமும் பாரதமும் கண்ணன் வரலாறு கூறும் பாகவத புராணமும் சிறந்த இடம் பெற்றிருந்தன. பிரபந்த முழுதும் இதிகாசக் கதைகளும் பாகவதச் செய்திகளும் நிரம்பி, இயற்கைச் சூழ்நிலையைக் காட்டும் காட்சிகள் போதிய இடம்பெறாவண்ணம் செல்வாக்கு மிகுந்தன. தேவாரத் திருமுறைகள் சங்க இலக்கியங்களிலும் பின்வந்த சிலப்பதிகாரம் முதலிய வற்றிலும் அரும்பி நின்ற புராண இதிகாசக் கதைகளை மிகுதியாக மேற்கொண்டு அவற்றிற்கே முதலிடம் தந்து சிறப்பித்தன. இதனால் தேவார காலத்துத் தமிழ்ச் சமுதாயம் புராண இதிகாசக் கதைகளில் பொதுவாகப் பெருவேட்கையும் சிவனைப்பற்றிக் கூறும் புராணங்களைக் கேட்பதில் மிக்க பெரும்பற்றும் கொண்டிருந்தமை தெரிகிறது. தேவர் பொருட்டுச் சிவப் புத்தேள் நஞ்சுண்டதும் புரமெரித்தது மாகிய பழஞ் செய்திகளுடன் தக்கன் வேள்வி செற்றது, தாருகவனத்து முனிமகளிரைச் சிந்தை கலக்கியது, மார்க்கண்டன்பொருட்டுக் காலனை வதைத்தது, சிவன் கணபதியைப் பெற்றது, திருமாலுக்குச் சக்கரப்படை அளித்தது, மாலும் பிரமனும் காணாவகையில் சிவன் அழலுருவாய் உயர்ந்து நின்றது, சனகர் முதலிய நால்வர்க்கும் அறமுரைத்தது, விசாரசருமர்க்குச் சண்டீச பதம் தந்தது, முனிமகனுக்குப் பாற்கடல் ஈந்தது முதலிய பல புராணப் புதுச்செய்திகள் இலக்கியவுலகில் சீர்த்த இடம்பெற்றன. திருவாசகம் முதலியன தோன்றியபோது, நரிபரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, பாண்டியனால் சிவன் அடியுண்டது முதலிய புது வரலாறுகள் புராணச் சூழலில் புகுந்தன. இவ்வாற்றால் தமிழ் மக்களிடையே பழைய சங்ககால இயற்கைக் காட்சியின்பமும் ஆழ்ந்த இலக்கிய நோக்கமும் உள்ளதன் உண்மை நிலையை உள்ளவாறு காணும் மனவுரனும் ஒளிகுன்றித் தேய்ந்தன. பொய்யும் புனைவும் நிறைந்த பொருந்தாக் கற்பனைகளும் புதுப்படைப்புக்களும் நிறைந்த செய்திகளைக் கேட்பதில் மக்கள் உள்ளம் ஓடத் தலைப்பட்டது. பல்லவர் காலத்தில் தோன்றிய சைவநாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் செய்த சமயப்பணியால் நாட்டில் எழுந்த கிளர்ச்சியின் பயனாகப் பௌத்தமும் சமணமும் சமழ்த்துப் போயின. ஆயினும் தமிழகத்தில் ஆங்காங்கிருந்த சைன சங்கங்களின் முயற்சியால் சமணமுனிவர்கள் தமிழிலக்கியத் துறையில் பணி புரியத் தொடங்கிச் சிறுகாப்பியங்களும் பெருங்காப்பியங்களும் இலக்கண நூல்களும் எழுதினர். பல்லவர் ஆட்சிக்குப்பின் சோழ பாண்டியரது ஆட்சி தமிழ்நாடு முழுதும் செழித்து நின்றது. அவர்காலத்தே சமண் சான்றோரது காப்பியங்களுள் சீவக சிந்தாமணி சூளாமணி பெருங்கதை என்ற பெருநூல்கள் இலக்கியச் சூழலில் சிறந்து விளங்கின. அந்நாளைய மக்களிடையே சைவ வைணவ சமயப் புராணக் கதைகள் பேராதரவு கொண்டிருந் தனவன்றோ? அவ்வரலாறுகள் பல கோயில்களில் விழாக்கள் வாயிலாகவும் திருநாட்கள் வாயிலாகவும் பரவி வந்தன. புராணி கருடைய செல்வாக்கும் சிறந்து நின்றது. அதனால், சமண் சான்றோர் செய்த காப்பியங்களிடையே இந்தப் புராண வரலாறுகள் புக வேண்டிய இன்றியமையாமை பிறந்தது. இதுநிற்க, சைவவைணவச் சான்றோர்கள் பாடிய தேவாரத் திருமுறைகளும் நாலாயிரப் பிரபந்தமும் கடவுட்பொருளின் முழுமுதலாம் தன்மையை வற்புறுத்தின. உயிர்கள் செய்த வினைக் கேற்ப உளவாகும் இன்ப துன்பங்களை அவைதாமே நுகர்ந்து கழிக்கவேண்டுமே யன்றி, வினைத் தொடக்கினின்றும் கடவுளாலும் அவற்றை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்தை வைதிகரான மீமாஞ்சகரும் சமணரும் பௌத்தரும் வற்புறுத்திவந்தனர். அவரை மறுத்து முழுமுதற்கடவுள் எல்லாம் வல்லவராதலால் அவர் அருள் பெற்றோரை வினைத்தொடக்குத் தடை செய்யாது; கடவுளை வழிபடுவோர் வினையின் நீங்கி விளக்கம் பெறுவர் என்ற சங்ககாலத் தொன்மைத் தமிழ்க் கருத்தை எடுத்தோதி நன்மக்கட்கு அன்பு நெறியில் ஊக்கமுண்டாக்கினர். இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்த நன்மக்களை இருவினையும் சேரா என்றும், இறைவனது அருட்சார்பை யுணர்ந்து வினைச் சார்பு கெட ஒழுகுவாரை, வினையால் விளையும் நோய்கள் சாரா என்றும் திருவள்ளுவர் முதலியோர் சங்ககாலத் தமிழ் மக்கட்கு அறிவுறுத்தியுள்ளமை உலகறிந்த செய்தி. அதனால், வினை நீக்கத்துக்குத் துணைசெய்யும் தெய்வங்கட்கும் அத்தெய்வங் கட்கு அப்பால் உயர்ந்து ஒரு தனிமுதலாக உள்ள கடவுட்கும் கோயிலெடுத்து வழிபாடு செய்வதும் விழா அயர்தலும் மக்களிடையே பெருகியிருந்தன. வினையை வெல்வதென்பது முழுமுதற் கடவுட்கும் ஆகாத ஒன்று என்று கருதினோருள்ளத்தே மக்களுடைய இச்செயல்கள் மனப் புழுக்கத்தை விளைவித்தன. அவருட் சிலர் இத்தெய்வங்கள் பால் மக்கட்குள்ள நன்மதிப்பைக் குறைத்தல் வேண்டிப் பல பொய்யும் வழுவும் புகுத்திப் புராணங்கள் பல எழுதுவாராயினர். இப்புராணக் கேள்வியால் மெய்ம்மை பொய்ம்மைகளைத் தேர்ந்தறியும் செம்மைநிலை மக்களிடையே குன்றினமையின் புராண இதிகாசக் கதைகளைப் புகுத்தாத எந்த நூலும் செல்வாக்குப் பெறாதொழிந்தது. இச்சூழ்நிலையில் தோன்றிய நூல்களுள் சீவக சிந்தாமணி தலையாயாதாகும். சிவன் முப்புரம் எரித்ததும் திருமால் அம்பானதும் தேவரும் அசுரரும் கடல் கடைந்ததும் முதலிய பழஞ் செய்திகளோடு சிவன் மலையரையன் மகளை மணந்ததும், காமனைக் காய்ந்ததும், இராமன் மராமரம் எய்ததும் கண்ணன் பாரதப்போரில் சங்கோசை எழுப்பியதும் புதியவாய்ப் புகுந்தன. கண்ணன் பலதேவன் ஆகிய இருவரைப்பற்றிக் கூறும் புராணச் செய்தியொப்பச் சூளாமணி யென்னும் நூல் விசய திவிட்டர் வரலாறுகளை எடுத்துரைத்து இடையிடையே பழைய புராண வரலாறுகள் சிலவற்றை உரைத்து நின்றது. பெருங்கதையில், கொங்கு வேளிர், பத்திராபதி யென்னும் தெய்வமகள் யானையாகப் பிறந்ததும், இந்திரன் அவுணர்களை வென்றதும், திங்களஞ் செல்வன் உரோகணியை விரும்பியதும், சீதை நிலத்திற் புகுந்ததும், கண்ணன் அபிமன்னுவாவினுடைய வின்னாணை யறுத்ததும், வீமன் கௌரவர் நூற்றுவரைக் கொன்றதும் பிறவும் புதியவாய்ப் புணர்க்கப்பட்டன. இக்கதை கட்கிடையே எவரும் மறந்தேயும் சங்ககால மன்னர் வரலாறுகளையோ மக்களிடையே நிகழ்ந்த செயல் வகைகளையோ உவம வாயிலாகவும் கூறியது கிடையாது. இதிகாச புராணக் கதைகளால் தமிழ் இலக்கியம் ஒருவாறு வளர்ச்சி பெற்றதெனினும், தமிழரது பண்டை வரலாறும் ஒழுகலாறும் நாகரிகக் கூறுகளும் மீளத் தலையெடாவாறு புதைக்கப் பட்டன. தமிழ் மக்களின் நினைவும் சொல்லும் செயலும் எல்லாம் இப்புராண இதிகாசங்கள் நல்கிய அறிவுரையால் திரிந்து வேறுபட்டமையின் பிற்காலத்தில் தோன்றிய புலவர் பெருமக்கள் அத்துறையில் கருத்திலராயினர். நீர் செல்லும் வழியே புல் சாய்வதுபோலப் பின்னர்ச் சைவவுலகில் ஒட்டக்கூத்தரது தக்கயாகப் பரணியும் திருஞான சம்பந்தர் வரலாறும், சேக்கிழாரது திருத்தொண்டர் புராணமும் தோன்றிப் புராணச் சூழ்நிலைக்கு ஆதரவு செய்தன. இந்நிலையிற் பழம் புராணச் செய்திகள் சீர்த்த இடம் பெறக் கண்டதும், இலக்கியப் புலவர்களுள் சிறந்து நின்ற ஆதித்தன் கம்பன் என்பார் இதிகாச வகையான இராமாயணத்தைத் தனியாகக் கொண்டு தமது புலமை நலமெல்லாம் சிறக்கக் கம்பராமாயணத்தை எழுதினார். பின் வந்த சான்றோரான கச்சியப்பர் முருகன் வரலாற்றை வரைந்துகொண்டு கந்த புராணத் தையும், கோனேரியப்பர் முதலியோர் உபதேச காண்டத்தையும், ஒப்பிலாமணிதேசிகர் முதலாயினோர் சிவரகசியம் முதலிய நூல்களையும் தனித்தனியே பல்லாயிரம் பாக்களில் பாரித்துரைத்தனர். சிவனுடைய திருக்கோயில்களையும் ஆங்காங்கு வாழ்ந்த பெரியோர்களையும் பற்றிய செய்திகள் சில சைவத் திருமுறைகளில் குறிப்பாகச் சைவ நாயன்மார்களால் குறிக்கப்பட்டுள்ளன. எல்லை யில்லாத பல புராணச் செய்திகள் வடமொழிக்கண் உள்ளன என்று கொண்டு அவற்றைத் தமிழ்ப்படுத்தினதாகத் தலபுராணங்கள் பல பிற்காலத்தே எழுந்தன. ஆங்காங்கிருந்த சைவ மடங்களில் வாழ்ந்த சான்றோர் சிலரும் தலபுராணங்கள் எழுதினர்; பாண்டி நாட்டுத் திருப்புத்தூரிலிருந்த சைவ மடத்துச் சான்றோர் ஒருவர் ஓங்கு கோயில் புராணம் பாடினர் என அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தலபுராணங்களின் தோற்றம், வளம் பெற்று ஓங்கிய காலம் சோழ பாண்டியராட்சி வீழ்ச்சியுற, விசயநகர வேந்தரது ஆட்சி சிறப்புற்ற காலமாகும். இவ்வாறு தோன்றியுள்ள தலபுராணங்களுள் சிவஞான முனிவர் பாடிய காஞ்சிப் புராணமும் கச்சியப்ப முனிவர் பாடிய தணிகைப் புராணமும், பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணமும், நிரம்ப அழகிய தேசிகர் பாடிய சேதுப்புராணமும், சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்தி புராணமும், திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலத் தலபுராணமும் சிறந்து நிற்கின்றன. தலபுராணத்தின் வளர்ச்சி சென்ற நூற்றாண்டில் விளங்கிய திருவாவடுதுறை யாதீன மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்களால் உயர்நிலை யடைந்தது. அவர்களால் செய்யப் பட்ட தலபுராணங்கள் பல. இத் தலபுராணங்கள் பிற்காலத்தே பழையன சிலவும் புதியன பலவும் கொண்டு இயற்கை அறிவு வரம்பைக் கடந்து செல்லத் தலைப்பட்டன. கீழ்மக்கள் செயலினும் மிகக் கீழ்ப்பட்ட செயல் களைத் தெய்வங்களின்மேல் ஏற்றி யுரைப்பதும் இவற்றின் செயல் களாயின. தென் தமிழ் நாட்டு ஊர்களைப்பற்றிய வரலாறுகள் வட நாட்டு வடமொழிக்கண் தோன்றுதற்கு இடமேது என்றுகூட இவைகள் கருதா தொழிந்தன. இக்கால விஞ்ஞானம் அரசியல் பொருளியல் முதலிய நூலறிவால் காட்சி பெறும் மக்கட்கு இவ்வரலாறுகள் அருவருப்பை விளைவிக்கத் தலைப்பட்டன; இளமை யுள்ளங்கள் இப்புராணச் செய்திகளைக் கேட்டும் இவற்றைத் திரைப் படங்களிலும் நாடக மேடைகளிலும் கண்டும் தெய்வங்கள்பால் நம்பிக்கை கொள்ளா தொழிவனவாயின. புராணங்களைக் கூறலுற்றவர் சிலர் இவற்றிற்கு வேறு பொருள் கூறுவதாகப் பொய் பல புகல்வாராயினர். இவ்வாற்றால் இப்புராண நூல்களின் இலக்கிய நலமும் பேணுவாரற்றுப் போயின. சுருங்கக் கூறின், இலக்கிய வளமும் அழகும் கொண்ட உரையும் பாட்டும் தமிழில் தோன்றுவது அரிதாய் விட்டது. இலக்கியத் தோற்றம் இல்லையாயின், மக்கட் சமுதாயத்தில் அறிவுத் துறையில் வளர்ச்சியில்லை யென்பது முடிபாம். 20. சங்க காலம் இந்தியப் பெருநிலத்தின் பல பகுதிகளிலும் நம் தமிழகப் பகுதி வரலாற்று வகையில் தனிச் சிறப்புடையது. தென்னிந்தியாவில் வடவேங்கடம் தென் குமரி யென்ற இரண்டிற்கும் இடையிலுள்ள நிலப்பகுதியே தமிழகம். இதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடலே எல்லையாகும். ஒரு காலத்தே தென்பகுதியில் நிலப்பரப் பிருந்ததனால், பழங்காலச் சான்றோர் தென்னெல் லையைக் கடலென்று கூறாமல் தென்குமரி யென்று கூறினர். அந் நிலப்பகுதி கடலாற் கொள்ளப்பட்டதென்று பழஞ் செய்யுட்கள் சில கூறுகின்றன. கடல்களின் இயற்கையமைப்புக்களை ஆராய்ந்த மேனாட்டறிஞர் பலரும் தென்கடல் ஒரு காலத்தே நிலமாக இருந்ததென்று கூறியுள்ளனர். தமிழகத்துப் பழந்தமிழ் நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம். சங்க இலக்கிய மெனப்படும் தொகை நூல்களுள் இத் தொல்காப்பியத்துக்கும் முற்பட்ட செய்யுட்கள் சில உண்டு. ஆயினும், நூல் வடிவில் உள்ளது தொல்காப்பியமே. அதற்குச் சிறப்புப் பாயிரம் கூறியவர் பனம்பாரனார் என்பவராவர். அவர் நம் தமிழ்நாட்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும், இதற்கு வடக்கெல்லை வேங்கடமும் தெற்கெல்லை குமரியுமாம் என்றும் உரைத்துள்ளார். தமிழகத்தின் வரலாறு காண்போர்க்கு மிக்க பழமை யான காலம் சங்க இலக்கிய காலமாகும். அது தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னுமாகிய காலமாகும். இதை நாம் இப்போது வழங்கும் முறையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலம் என்பது பொருத்த மாகும் . இக்காலத்தே மேலை நாடுகளில் கிரேக்க நாடும், எகிப்து நாடும் சிறப்புற்று விளங்கின. வடக்கே சிந்துவும் கங்கையும் பாயும் நாடும் அதனை யடுத்திருந்த நாடும் ஆரிய நாகரிகம் நன்கு பரவியிருந்த காலமும் அந்தக் காலந்தான். தமிழ் நாட்டில் ஆரிய நாகரிகம் படர்ந்து ஓரளவு இடம் பெற்றிருந்ததும் அக் காலமேதான். இது பற்றியே சங்க காலம் தமிழக வரலாற்றில் முதலிடமாகக் கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ் நாட்டில் இதுபோது நிலவும் தமிழ் நூல்களில் மிகப் பழையனவாக உள்ள தமிழ் நூல்கள் இக்காலத்தனவே. வேற்று நாட்டு நாகரிகம் ஒரு பொருளாகக் கருதத் தக்க அளவு படராமல் தமிழ் நாகரிகமே சிறந்து நிற்க விளங்குவது இச்சங்க காலமேயாகும். நாட்டில் வாழ்பவர் தனித் தமிழர்; அவரை ஆள்பவரும் தமிழர்; ஆட்சி முறையும் தமிழ்; அவர்கள் நினைப்பதும் பேசுவதும் எல்லாம் தமிழ். ஆதலால் அக்காலம் தமிழகத்துக்குச் சிறந்த தொரு பொற்காலம் என்னலாம். இதனை யடுத்து வந்த காலங்களில் தமிழ் நாகரிகம் வேற்று நாட்டு நாகரிகம் விரவித் தன் தனித்தன்மை குன்றியது; அரசியல், வாணிகம், சமுதாயம் , சமயம், மொழி முதலிய வாழ்க்கைக் கூறுகளும் தமிழ்ப் பண்பில் குறைந்தன. இடைக்காலத்தில், தமிழ் நாகரிகம் பெரிதும் தேய்ந்து விட்டது; அரசியல், சமுதாயம், வாணிகம், சமயம், மொழி முதலிய பலவற்றிலும் வேற்று நாட்டுக் கூறுகட்கே முதலிடம். தமிழகத்தில் தமிழர்க்கே முதலிடம் இல்லையாயிற்று. கலைத் துறையில் தமிழ்மொழி இரண்டாவது மொழியே. அரசியலில் அதற்கு இடமே கிடையாது; ஆங்கிலத்துக்கே முதலிடம் வாணிகத்தின் எல்லை நிலவுலகு முழுதும் பரந்துவிட்டது; அதனால் அதற்கும் ஆங்கிலமே மொழியாய்விட்டது; பொருள் வகையிலும் தமிழர் வறியராயினர்; அதனால் வடநாட்ட வர்க்கும் பிறநாட்டவர்க்கும் கடன்பட்டனர். தமிழரிற் பலர் கடல்கடந்து வேறு நாடடைந்து கூலிகளாய் வயிறுவளர்க்க லுற்றனர். இன்றும் இதுவே தான் நிலை. இனி வருவது எதிர்காலம்; இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்தியப் பெருநிலம் அரசியலில் மேலை நாட்டுக்குக் கீழ்ப்பட்டி ருக்கும் நிலை மாறி விளங்கும் நற்காலம்; அரசியல், பொருள், வாணிகம் முதலிய துறைகளில் இந்தியப் பெருநிலம் தனக்குரிய உரிமையுடன் திகழும் சீரிய காலம். தமிழகத்துக்குச் சிறப்பாக வரும் செம்மைக் காலம். இக் காலத்தே வட இந்தியர்க்கு அரசியல் வகையில் மேலை நாட்டவரிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. தமிழகத்துத் தமிழர்க்கு அரசியல் வகையில் மேலை நாட்ட வரிடமிருந்தும், பொருள் வகையில் வட இந்தியரிட மிருந்தும் விடுதலை யுண்டாகிறது. இக்காலம் தென் தமிழர்க்குச் சிறந்த காலமன்றோ? இவ்வண்ணம் நம்மை நோக்கிவரும் இனிய உரிமைக் காலத்தில் தமிழர், அரசியல், பொருணிலை, வாணிகம், கல்வி முதலிய பலவற்றையும் தமிழ்ப் பண்பு விளங்க மேற்கொள்ள வேண்டிய வராகின்றனர். இப்பண்பாட்டை உள்ளவாறு அறிதற்குச் சங்க இலக்கியம் நிலவிய கால நிலை விளங்கத் தெரியவேண்டும். தமிழகத்து அரசியல் முறை, பொருள் நிலை வகை, வாணிக வளர்ச்சி, கல்விப் பயிற்சி முதலிய பல தமிழ் நாகரிகக் கூறுகள் ஆராயப்பட வேண்டும் இவற்றின் குறைவு நிறைவுகளைக் கண்டு நிறைவைப் பிற நாட்டவர்க்கு உணர்த்துவதும், குறைவைப் பிறநாடுக ளிலிருந்து கொணர்ந்து புகுத்தி நிறைப்பதும் தமிழர்க்குக் கடனாகும். மேலைக் கடற்கரைக்கும் கீழைக் கடற்கரைக்கும் பரவியிருந்த பண்டைத் தமிழ் நாகரிகச் சிறப்பு மீளவும் பரவுவதற்குத் தமிழர் தங்களைச் செம்மை செய்து கொள்ளும் கடமையுடையராகின்றனர். இதற்கு இப்போது செய்யவேண்டுவது யாது? நாம் முன்னே சொன்ன வாறு, தமிழரது தனித் தமிழ் வாழ்க்கைக் காலமாகிய சங்க காலத்தை ஒரு முறை ஆராயவேண்டும். அதனை இங்கே சிறிது காணலாம். சங்க காலத்தில் தமிழகம் வடவேங்கடத்தையும் தென் குமரியையும் வடக்கிலும் தெற்கிலும் எல்லையாகக் கொண்டிருந்த தென்று முன்பே கூறினோம். கிழக்கும் மேற் கும் கடல். இப்போது உள்ள கேரள நாடும் கன்னட நாடும் அக்காலத்தில் இல்லை. அப்பகுதியும் தமிழகத்துத் தமிழ் நாடுகளேயாகும். இந்நாடு சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர்க்கும் உரியதாயிருந்தது. தென்னாட்டின் மேலைக் கடற்கரையில் நிற்கும் மலை நிலமும் அதனைச் சார்ந்த உள்நாட்டுப் பகுதியும் சேரநாடு; வேங்கட முதல் இப்போதுள்ள தஞ்சை திருச்சிராப்பள்ளி யென்ற மாநாடுகளின் எல்லையுள்ளிட்ட பகுதி சோழ நாடு. இதற்குத் தென்பகுதி முற்றும் பாண்டி நாடு. இவற்றையாண்ட வேந்தர் முறையே சேர சோழ பாண்டியரென வழங்கப் பட்டனர். சேர நாட்டுக்கு வஞ்சியும், சோழநாட்டுக்கு உறையூரும், பாண்டிநாட்டுக்கு மதுரையும் தலைநகர்களாகும். இவ்வாறு தமிழகம், நாட்டு வகையில் மூன்று பெரும் பிரிவு பெற்று மூன்று முடி வேந்தரால் ஆளப்பெற்று வந்ததாயினும் அரசியல், வாணிகம், மொழி, சமயம் என்ற வகையில் சிறு வேறுபாடும் இன்றியிருந்தது. அரசர் அனைவரும் “வலியுடை யோர்க்கே நிலம் உரியது” என்ற கருத்துடையர். அதனால் வலிமிக்க வேந்தன், வலி குறைந்தானோடு போர் செய்து அவன் நிலத்தைக் கவர்வது தனக்கு அறமாகக் கருதினான். ஒரு வேந்தன்கீழ் வாழும் குடிமக்களுள் வலிமிக்கோனைத் தலைவனாக்கி, அவன் கீழ் சிலவூர்களைத் தொகுத்துச் சிறு நாடாக்கித் தனக்கு வரி செலுத்துமாறு ஏற்பாடு செய்தான். அத் தலைவர்களுட் சிலர் நாளடைவில் வலிமிக்குக் குறுநில மன்னர்களாயினர். இவ் வகையில் வலிமிக் கோருக்கும் வலி குறைந்தோருக்கும் இடையறாது போர் நடந்தவண்ணம் இருந்தது. குடி மக்களும் தாம் வாழும் இடமும் விளைக்கும் விளை நிலமும் அரசர்க்கே யுரியவெனக் கருதினர். தங்கள் நல்வாழ்வுக்கு அரசவேலி யல்லது வேறு வேலி இல்லையென உணர்ந்து குடிக்குக் குடியாகவும் படைக்குப் படையாகவும் வாழ்ந்தும் பயன்பட்டும் வந்தனர். அவருள் வலியால் தலைவராயினவர் தம் வேந்தர்க்கு “வினை வேண்டு வழி அறிவு உதவியும், படைவேண்டு வழி வாளுதவியும்” வந்தனர். அவர் வலிமுற்றும் அறிவு ஆண்மை பொருள் படை என்ற நான்கு கூறாக அமைந்திருந்தது. அறிவு வேண்டி நல்ல கல்வி கற்றலும், ஆண்மை வேண்டிப் படைப்பயிற்சி பெறுவதும், பொருள் வேண்டி உழவு முதலிய தொழில்களை வளர்த்தலும், படைவேண்டி மக்கட்கு நன்னடை பயிற்றுதலும் செய்து வந்தனர். அறிவுடைய மக்களைத் தேர்ந்து சிறப்பித்து அவர் கூறிய அறிவு நெறி பற்றியே அரசு செலுத்தினர். நிலப்பகுதியைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகையாகப் பகுத்து அவ்வந்நிலத்து மக்கள் ஆங்காங்கு விளையக்கூடிய விளைபொருளை விளைத்தனர். இந்நிலத்து மக்கட்கிடையே பண்டமாற்றுதலும் அதுவே வாயிலாக வாணிகம் செய்தலும் நிலவியிருந்தன. கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தோர் கலங்களில் தம் நாட்டு மிக்க பொருளைப் பிறநாடுகட்குக் கொண்டு சென்று வாணிகம் செய்தனர். வேற்று நாட்டுப் பொருள்களும் நம் நாட்டில் இறக்குமதியாயின. உள் நாட்டுப் பொருள்கள் காலிலும் (வண்டியிலும்) வெளி நாட்டுப் பொருள்கள் கலத்திலும் சென்றன. இருவகையாலும் இயங்கும் வாணிகப் பொருள்கட்கு அரசியல் சுங்கம் விதிப்பதும் உண்டு. உள்நாட்டு வணிகர்க்குக் கள்வரால் தீங்குண்டாகாவாறு படையமைத்து விடுப்பதும் கடற்கொள்ளைக் காரரை யடக்குதற்குக் கடலில் கலஞ்செலுத்திச் சென்று பொருதழிப் பதும் பண்டைத் தமிழ்வேந்தர் அரசு முறையாகக் கொண்டிருந்தனர். பொருள்வளம் மிகுவது குறித்து நாட்டிலுள்ள காடு களை அழித்து நாடாக்கினர்; நிலம் பள்ளமான இடங்களைக் கண்டு குளம் அமைத்தனர். கடலிந் கலஞ்செலுத்துவோர் இரவில் கரையறிந்து கொள்ளுமாறு கலங்கரை விளக்கம் நிறுவினர்; கடலில் அவ்வக் காலந்தோறும் வீசும் காற்றின் இயல்பு கண்டு, அக்காலத்தே கலஞ் செலுத்து முறையைக் கண்டிருந்தனர். தம் நாட்டில் இல்லாத புதுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து கொணர்ந்தனர். அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் வெளிநாட்டிலிருந்து கரும்பைக் கொணர்ந்தனரென ஒளவையார் கூறுகின்றார். இவ்வகையால் சீனரும் யவனரும் இந்நாட்டிற்கு வந்துபோவாராயினர். கல்வித் துறையில் அரசர்கள் பேரூக்கம் காட்டினர். “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று” என்று வற்புறுத்தினர். மக்களில் ஆண், பெண், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று வேறுபாடின்றி எல்லார்க்கும் கல்வி பொதுப் பொருளாய் அமைந்திருந்தது. கற்றவன் கீழோனாயினும் மேலோனாகச் சிறப்பிக்கப் பட்டான். பெண் மக்களும் பெரும் புலமை பெற்று வேந்தர் பாராட்டும் வீறு பெற்றிருந்தனர். இசையும் நாடகமும் மிக்கசிறப்புடன் வளர்க்கப்பெற்றன. வேந்தர்களும் செல்வர்களும் இயற்புலவரைப் பேணி இயற்றமிழும், பாணரையா தரித்து இசைத் தமிழும், கூத்தரைச் சிறப்பித்து நாடகத் தமிழுமாகிய முத்தமிழையும் முறையே சிறப்புற வளர்த்து வந்தனர். தமிழ் மக்கள் மணமாகா முன்னும் மணமாகிய பின்னும் கல்விகுறித்து வெளிநாடு கட்குச் செல்வதும் மரபு. இக்கல்வி எல்லாக் கலைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. வான நூல், நில நூல், பொருணூல், அற நூல் என நூல்கள் பல உண்டு. இசை நாடகங்கட்கும் நூல்கள் இருந்தன. களவு நூல் கனவு நூல் எனவரும் நூல் வகைகள் பண்டைத் தமிழரின் உள நூற் புலமையை விளக்கி நிற்கின்றன. உயர்வு, அகலம், திண்மை, அருமை என்ற கூறுபாட மைந்த கட்டிடங்கள் கட்டுவதும், மெல்லிய ஆடைநெய்வதும், மணி யிழைத்தலும், பொன்னரித்தலும், மீன் பிடித்தலும், முத்துக் குளித்தலும் என்ற இவைபோன்ற தொழில் வகைகட்கும் சங்க காலத்தில் குறைவில்லை. கல்விபோலத் தொழிலிலும் ஆடவர் பெண்டிர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கிடையாது. போர்க்களத்தில் மகளிர் படையேந்திப் போர் செய்வதில்லையே தவிர, போரிற் புண்பட்டோர்க்கு மருத்துவம் செய்வதும் வேறு பல தொண்டுபுரிவதும் உண்டு. இங்கே கூறிய கல்வி, செல்வம், தொழில் முதலியவற்றால் தமிழ் மக்களிடையே வேறுபாடுகள் இருந்தன. ஆயினும், உண்ணுதல், பெண் கொள்ளுமுகத்தால் உறவு முறை கொள்ளுதல் முதலிய வகையில் இவ்வேறு பாடுகள் தடைசெய்யவில்லை. தமிழர் அனைவரும் ஓரினமாகவே யிருந்தனர். இன்று காணப்படும் பிளவு களும் வேற்றுமைகளும் அன்று அச்சங்க காலத்தில் காணப்படவே யில்லை. ஊராட்சியும் நாடாட்சியும் அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த சான்றோர் துணைகொண்டு நடை பெற்று வந்தன. மக்களும் நீண்ட வாழ்நாளுடையவராகவே இருந்திருக் கின்றனர். இடைக்காலத்து நூல்கள் மக்கட் குண்டாகும் நோய் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டென்று கூறும். அவற்றுள் சற்றேறக்குறையப் பத்துப் பனிரண்டு நோய் கட்குத்தான் தமிழில் பெயருண்டு. பிறவெல்லாம் வேற்று மொழிப் பெயராகவே இருக்கின்றன. தமிழ் மக்களிடையே அந்நோய்கள் இருந்திருந்தால் அவற்றுக்குத் தமது தமிழில் பெயர் வைத்திருப்பர். இதனால் தமிழ் மக்களிடையே அக்காலத்தில் நோயும் குறைவு என்பது சொல்லாமலே விளங்கும். “நோயின் றியன்ற யாக்கையர்” என்று புலவர்கள் மக்கள் மெய்ந்நலத்தைப் பாராட்டியுள்ளனர். பிசிராந் தையார் என்ற சான்றோர் ஒருவர், தாம் பிறந்து வளர்ந்த பாண்டி நாட்டைவிட்டுச் சோழநாட்டு உறையூருக்கு வந்தபோது, அவரைக் கண்டோர், அவர்க்கு ஆண்டுகள் மிகப் பல கழிந்தும், மயிர் நரை யெய்தாமை கண்டு வியப்புற்றனர். அவர், “என் குடியில் என் மனைவி யும் மக்களும் அறிவுடையவர்; ஏவலரும் என் கருத்தின் படியே ஒழுகுவர்; எங்களூரில் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றோர் இருந்து ஊராட்சி செய்கின்றனர்; எங்கள் நாட்டு வேந்தனும் அல்லவை செய்யான்; இவ்வாறு யாங்கள் கவலையற்ற வாழ்க்கை நடத்துவதால் நரை திரைகள் எங்களை நாடா” என்று கூறியுள்ளார். நாட்டில் ஊர்கள்தோறும் அவ்வக் காலங்களில் விழாக்கள் நடைபெறும். விழாக்கள் நெடுநாட்கள் தொடர்ந்து நடக்கும். அரசர்கட்குப் பிறந்த நாள் விழாக்களும், ஆண்டிற் புதுமழை பெய்தவிடத்துப் புதுநீர் விழாக்களும், கடலாட்டு, குன்று விளையாட்டு, செண்டாட்டு முதலிய விளையாட்டு விழாக்களும் நடைபெற்றன. இவ்விழாக்களில், விழா நிகழ்ச்சி காணவரும் மக்கட்கு ஊரவர் வரையாது விருந்து செய்வர். போர் செய்து வெற்றிபெற்ற வேந்தன், தன் வீரர் சூழ இருந்து விருந் துண்டு வெற்றிவிழாக் கொண்டாடுவன். அக்காலத்தே கூத்தும் பாட்டும் மிகுந்து மக்கள் உள்ளத்தே மிக்க கிளர்ச்சியை யுண்டுபண்ணும். வெற்றி வகையால் தான் ஈட்டி வந்த பொருளை வேந்தன் பலர்க்கும் வழங்கிப் பாட்டும் உரையும் பெறுவன். அறவழியில் போர் செய்து மாண்ட வீரர்க்குக் கல்லெடுத்து, அதன்கண் அவருடைய பெயரும் பீடும் எழுதி, நீராட்டி நிறுத்தி விழாக் கொண்டாடினர். சுருங்கச் சொல்லின் நாடுகளின் சிறப்பெல்லாம், அவற்றுள் மக்கள் கொண்டாடி மகிழும் விழாக்களையே பொறுத்திருந்ததென்றே கூறலாம். கடவுள் வழிபாட்டிற்கு அக்காலத்தே இடமில்லா மல் இல்லை. குறிஞ்சி நாட்டவர் முருகனையும், முல்லை நாட்டவர் திருமாலையும், மருதநிலத்த வர் இந்திரனையும், நெய்தல் நிலத்தவர் வருணனையும், பாலை நிலத்தவர் கொற்றவையையும் சிறப்பாக வழிபட்டனர். இங்ஙனம் வழிபாட்டு வகையில் கடவுளர் பலர் கூறப்படினும், “எல்லாவற்றிற்கும் மேலாய கடவுள் ஒருவரே; அவர்க்கு இன்ன உரு, இன்ன நிறம் என்பது கிடையாது; உயிரும் உடம்புமாகிய எல்லாவற்றினுடைய இயக்கங்கட்கும் காரணராதலின் அவர் இயவுள்; ஐம்பொறிகளையும் மன முதலிய உட் கருவிகளையும் கடந்து நிற்றலால் கடவுள்” என்ற கொள்கை அம்மக்கள் மனத்தே வேரூன்றியிருந்தது. இன்னவுரு வென்றும் இன்ன நிறமென்றும் சொல்லற்கியலாத அக் கடவுளை வழிபடுதற்குக் குறியாக, மன்றங் களில் கந்து எனப்படும் தறிகளை நட்டு அவற்றை வழிபட்டனர். பகையரசர் நாட்டினின்றும் சிறை கொணரப்பட்ட மக்களுள் மகளிர் பலரும் இம் மன்றங்களில் இருந்து இக்கந்துக் குறிகளை வழிபட்டனர். குறியென்பது வடவாரிய மொழியில் லிங்கம் எனப்படும். இக் கருத்தை யறியாத பிற நாட்டு ஆரியரை யுள்ளிட்ட மக்கள், இக்கந்து வழிபாட்டைத் தவறாகக் கொண்டு பொய்க் கருத்துக்களைப் புகுத்தி விட்டனர். உயிர் வாழ்வுக்கு இம்மை, மறுமை, வீடு என்று மூன்று நிலை யுண்டு. இம்மை வாழ்வு இவ்வுலக வாழ்வு; இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் பெற்றோர் மறுமை யுலகில் இமையவராய் இன்புறுவர்; இவ்விருவகை வாழ்வும் இனிது அமைவது வேண்டி நிலந்தோறும் தெய்வங்கள் நாட்டப்பட்டன. வீடுபேறு என்பது பிறவாநிலை. அதனை வேண்டு வோர்க்குக் கந்துக்குறி வழிபாடு அமைந்திருந்தது. தொல்காப்பியமும் அதன்கட் காணப்படும் பொருட் கூறுகட் கேற்பச் சான்றோர் பாடிய பல பாட்டுக்களிலிருந்தும் தேர்ந்து தொகுத்துக் கொள்ளப் பட்ட தொகை நூல்களுமே இப்போது கிடைக்கின்றன. தொகுத்தற்கு நிலைக் களமாயிருந்த குறிப்புக்களும் பிற பாட்டுக்களும் வரலாறு களும் நூல்களும் இறந்து போயின. அதனால் இக்கடவுள் நிலையை விளங்க விரிவாக அறிந்து கொள்வது அருமையாக இருக்கிறது. மக்களைப்போல நம் நாட்டில் நூல்கள் இறப்பதும் இயற்கை. பழங்காலத்துத் தமிழ் வேந்தர் மேற்கொண்டிருந்த போர் முறைகளுள் பகைவரூரைத் தீக்கிரை யாக்குதல் ஒன்று. அதனால் நூல்கள் அழிதற்கு இடமுண்டு. வேற்று நாட்டவர் போந்து இந்நாட்டு மக்கள் இவர்தம் தொன்மை யுணர்ந்து செம்மை நிலை பெறாவாறு செய்வது குறித்து நூல்களை யழித்ததுமுண்டு. மதுரைமா நாட்டுக்குத் தலைவராய்ப் போந்திருந்த வேற்று நாட்டவரொருவர் தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் ஓலையேட்டுச் சுவடிகள், இரு நூறு நாட்கள் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுதற்குப் பயன்பட்டன என்பர். இம்மட்டோ! ஆடிப் பதினெட்டாம் பெருக்கென்னும் நீர்விழாவின் பெயரால் அழிந்த நூல்கள் எத்தனை எத்தனையோ! யார் அறிவார்? வெள்ளை யராட்சி இந்த நாட்டில் நிலைபெறுமுன் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும், சளுக்க மன்னரும், பல்லவ மன்னரும்; சோழ பாண்டிய சேர மன்னரும் எனப் பலதிற வேந்தர் ஆட்சி நிலைநின்று நடந்த தெனக் கல்வெட்டுக்களும் பிறவும் கூறுகின்றனவே? அவ்வாட்சி நிகழ்ச்சிகளைக் குறித்த ஏடுகளுள் இப்போது சிலவேனும் உண்டா? கல்வெட்டுக்களும் ஆங்காங்குச் சிதறிக் காணப்பெறும் செப்பேடுகளும் தவிர வேறுஒரு குறிப்பும் கிடைக்கிறதில்லை. இவையெல்லாம் குறிக்கொண்டு தேடிப் பற்றறத்துடைத்தெடுப்பதுபோல அழிப்புண்டும் அழிந்தும் போயின. இவற்றின் வேறாகக் கடல்கோட்களும் களவியலுரை காட்டுமக் காலம் போலும் மற்றக் காலங்களும் தம்மால் இயன்ற அழிவினைச் செய்துள்ளன.  21. நல்லிசைப் புலமைச் சான்றோர் சங்க இலக்கியக் காலத்தை யுணர்த்தற்கு துணை செய்யும் சான்றோர் சங்க இலக்கியங்களிற் காணப்படும் நல்லிசைப் புலமை படைத்த சான்றோராவர். போர்த் துறையில் நற்புகழ் பெறுவோரையும் சான்றோர் என்பது சங்ககால மரபு. அதனால் நல்லிசைப் புலமை மிக்க சான்றோர் என அவர்களைச் சிறப்பித்தல் வேண்டிற்று. இச்சான்றோர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் தமிழ்ச் சங்கம் இருந்த தென்றும், அது மூன்று நிலையாகவைத்துத் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென வரும் என்றும், முதலில் அதன்கண் நாலாயிரத்து நானூற்றெண்மரும், இடையில் நானூற்று நாற்பத் தெண்மரும், கடையில் நாற்பத்தெண்மரும் இருந்தனரென்றும், இவருள் அரசர், செல்வர், ஆடவர், பெண்டிர், பார்ப்பார், வணிகர், வேளாளர் முதலிய பலரும் இருந்தனரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனைக் கொள்ளா தொழிபவரும் உண்டு. நெடுங் காலமாக இச்செய்தி தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வருதலால், இதனைக் கொள்ளோமென்று மறுத்தல் நேர்மையாகாது. இச்செய்தியால் ஒரு சிறந்த உண்மை புலனாகிறது. ஒரு காலத்தே நல்லிசைப் புலமை மிக்க சான்றோர் மிகப்பலர் இருந்தனரென்பதும், வரவர அவர் தொகை குறைந்த தென்பதும், புலமைக்குப் பாலும் தொழிலுமாகிய வேறுபாடு கிடையாதென்பதுமாம். வேற்று நாட்டவர்களின் மொழி கலை அரசியல் வாணிகம் சமயம் முதலிய கூறுகள் விரவி மக்கள் தொகை பெருகி நிற்கும் இந்நாளில் பிழையறத் தங்கள் தாய் மொழியில் நினைக்கவும் பேசவும் எழுதவும்வல்லவர் தொகையே நூற்றுக்கு ஐந்து பேருக்குமேல் இல்லை யென்றால், பண்டை நாளில் புலவர் தொகைமிகக் குறைந்து போயிற்றென்பதில் வியப்புண்டாதற்கு இடமெங்கே யிருக்கிறது. தமிழ் மக்களே வாழ்ந்த தமிழகத்தில் தமிழரசும், தமிழ் மொழியும் தமிழ் வாணிகமுமே நிலவியபோது தமிழ்ச் சான்றோர் தொகை குறைவானேன்? இடைக் காலத்திலும் இக்காலத்திலும் வேற்றுநாட்டுப் படர்ச்சி யால் ஒருகால் குறையலாமாயினும், இரண்டாயிர மாண்டு கட்கு முன்பு சான்றோர் தொகை குறைவது தகாதன்றோ? என்ற எண்ணம் நம்மனோர் மனத்தே எழலாம். அவ்வாறு எழுவதும் முறையே. இக்காலத்தே எல்லா நாடுகளிலும் அந்த நாட்டு அரசியல், அதன் கீழ் வாழும் மக்கள் கல்வியறிவு உடையராக வேண்டுமென்பதைத் தன் கடனாக மேற்கொண்டிருக் கிறது. அத்தகைய அரசியற் சூழலில் நாம் வாழ்கின்றோமாதலால், நாம் இவ்வாறு நினைப்பது முறையாகிறது. பழங்காலத்தில் அரசர்கள் இக்கொள்கையை மேற்கொண்டிலர்; எல்லா நாடுகளும் பழைய காலங்களில் இதனை மேற்கொள்ளாமலே இருந்திருக்கின்றன. கல்வித் துறையில் மிக்க மேன்மை யடைந்திருக்கும் நாடுகளிலும் பழங்காலம் நம் நாட்டில் இருந்தது போலவே இருந்தத. ஆயினும், ஏனை நாட்டு அரசர்களைக் காட்டிலும் பழந் தமிழ்நாட்டு அரசர்கள் கல்வியின் இன்றியமையாமையை யுணர்ந்திருந்தனர்; அரசியல், அறிவுடையோன் செலுத்தும் வழியிலே செல்லும் என்றும், அரசியலைக் "காவற்சாகாடு" (காவலாகிய வண்டி) என்றும், அதனைச் செலுத்தும் பாகனாகிய வேந்தன் கல்வியறிவு டையனாய் நெறியறிந்து செலுத்தும் நீர்மையனாக வேண்டும்; அவ்வாறு இல்லையாயின் நாட்டில் பகைமலிந்து தீங்கு விளை விக்குமென்றும் தமிழ்வேந்தர் நன்கறிந்திருந்தனர். அவன் செவிசுடத் தக்க சொற்களை அறிவுடையோர் கூறினும், அவற்றை அமைதியுடன் ஏற்று ஆவன செய்வது அவனுக்கு இயல்பாகவும் இருந்திருக்கிறது. இவ்வாறிருந்தும் நாட்டு மக்களுக்கும் அவனுக்கும் இருந்த தொடர்பு, கல்வித் துறையில் அவன் கருத்தை யீர்த்து நிறுத்தவில்லை. பண்டைத் தமிழ் வேந்தன் தன்னாட்சிக்குட்பட்ட நாடு தனக்கேயுரிய தென்றும், தன் கீழ் வாழ்வார் நாட்டில் விளைந்து வரும் வருவாயில் ஒரு பகுதியைத் தரக் கடமைப் பட்டவரென்றும் கருதினான். மக்கள் தன் நிலத்தே விளைவன விளைத்து ஈட்டுவன ஈட்டி நுகர்வன நுகர்ந்து உடலோடுகூடி உயிர் வாழ்தற் பொருட்டுத் தங்குவதற்காகத் தரப்படும் தங்குகூலி ( வாடகை) யென்றுகூடப் பொருள்படுமாறு குடிகள் இறுத்த இறை அக்காலத்தில் அமைந் திருந்தது. இறை யென்பதற்குத் தங்குதல் என்பதும் பொருளாகும். இதனால் குடிகள் விளைக்கும் பொருள் தனக்குரிய வருவாயாதலால், அது குன்றாத வண்ணம் குடிகளையும் விளைபுலங்களையும் காப்பது அரசியல் முறையென்று பண்டையரசன் நினைந்தொழுகினான். அதனால் கல்வியறிவு பெறுதல் மக்கள் பொறுப்பாயிற்று. "வலியுடை வேந்தர்க்கே நிலவுலகம் உரியது" என்ற கொள்கை சங்க கால வேந்தர் உள்ளத்தே குடிகொண்டிருந்தது. வலி குறைந்த வேந்தன், அறிவால் ஆராய்ந்து, "இந்நிலம் வேந்தர் படைப்பன்று; கடவுள் படைப்பு; நலஞ் செய்தார்க்கு இன்பமும் தீமை செய்தார்க்குத் துன்பமும் உண்டாகுமாறு செய்யும் கடவுள் போல, நிலவேந்தர் குடிகளின் குறை நீக்கி முறை செய்து நல்லோர்க்கு அளியும் தீயோர்க்குத் தெறலும் வழங்குவது முறை; அதனால் இந் நிலம் எல்லா வேந்தர்க்கும் பொது" என்று கூறுவது முண்டு. வலியுடை வேந்தன் "பொதுச்சொல் பொறாது" போர் உடற்றி வலி குறைந்த மன்னனது நாட்டைத் தன் அடிப்படுத்தினான். நிலம் சூழ்ந்த கடல் மக்கள் வாழ்தற்குரிய இடமாகாதாயினும், கலத்திற் சென்று வேற்று நாடுகளிலிருந்து பொருள் கொணர்ந்தீட்டுதற்கு வாயிலாதலால், அதுவும் பொதுவாகாது என அதன்மேலும் தன் ஆணை செலுத்தின தமிழ் வேந்தரும் உண்டு. "சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப், பிறர்கலம் செல்கலாது" (புறம். 126 ) என்று சான்றோர் கூறுவது காண்க. இக்கருத்தால் தமிழ் வேந்தர்க்கு வலி பெறுவதிலே பெருநோக்க முண்டாயிற்று. அவ்வலி, தோள்வலியும் பொருள் வலியும் என இருவகையில் பெரிதும் இயன்றது. தோள்வலி படைப் பயிற்சியால் உண்டாவது. பொருள் வலி குடிமக்கள் விளைத்துத் தரும் பொருளால் வருவது. அதுகொண்டு வேந்தர்க்குப் படைவீரரும் துணைவரும் உளராயினர். அவர்பாலும் தோள்வலியே பெரிதும் எண்ணப் பட்டது. பொருளை எளிதிற் பெறுங் கருத்தால், முடிவேந்தர் மூவரும் தம் நாடுகளைச் சிறுசிறு நாடுகளாக்கி வலிமிக்க தலைவர் தலைமையின் கீழ் இருப்பித்துப் பொருள் பெருக்குதலில் கண்ணு டையராய் அதுவாயிலாக நாட்டைப் பரப்புவதில் பெருநோக்க முடையராய் விளங்கினர். இவ்வகையில் வேந்தர்கட்கும் வேத்தியல் தலைவர்கட்கும் கல்விப் பேற்றில் கருத்து மிகுதியும் செல்லா தாயிற்று. வேந்தர்களிற் பெரும்பாலாரும் தலைவர்களிற் பலரும் சிறிதளவே கல்வி கற்றமைந்தனர். "குலவிச்சை கல்லாமலே பாகம் படும்" என்ற கருத்தும் அவர்கட்குத் துணையாயிற்று. அரசரது அரசுரிமையும் தலைவர்களது தலைமையும் தொழிலாளரது தொழின்மையும் வழிவழியாக வரும் அளவில் ஒழுகிவந்தன. இவ்வகையால் கல்வி நலம் மக்களிடையே பரவிப் பெருகுதற்கு வாய்ப்பிழந்தது. மேலும், மைந்து பொருளாக வேந்தரிடையே அடிக்கடி போரும் நடந்து வந்தது. ஆனியற் பார்ப்பனரும் பெண்டிரும் பிணியுற்றோரும் மகப்பெறாதவரும் ஆகிய இவர்கள் போரில் விலக்கப்பட்டனர். இந்தச் சிறப்புடைய அறத்தால் பார்ப்பனர் முதலியோர் இடையூறின்றி நீங்கினர். உடல் நலமும் குடிவளமும் படைத்த ஆண் மக்கள் தொகை குறைவதாயிற்று. அடிக்கடி நிகழும் போரில் நல்லாண்மையுடைய மக்கள் இறந்தனர். மிகச் சிலரே எஞ்சினர். பார்ப்பனர் அக்காலத்தே ஓதுதல், வேள்வி செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனரேயன்றி, உழவு, வாணிகம் முதலிய தொழில்களில் ஈடுபடாது பிறர் உழைத்துப் பெறும் பொருள் பெற்று வாழ்ந்துவந்தனர். ஆயினும், அவர் தொகையும் பெருகவில்லை. இன்றும் அவர் மிகச்சிலராகவே உள்ளனர். அவர் செய்த அறுவகைத் தொழில்களும் அவர் குடிபெருகத்தக்க ஆக்கத்தை அவர்கட்கு நல்கவில்லை யென்பது இதனால் விளங்குகிறது. நல்ல ஆண் மக்கள் குறைந்தமையின், பெண்டிராலும் நாடு அறிவுடைய நன்மக்களைப் பெறும் வளம் பெறாதாயிற்று. பிணியுற் றோரும் மகப்பெறாதோரும் நாட்டில் இருந்தும் நாட்டுக்குப் பயன்படா ராயினர். இவ்வாற்றால் தமிழ் வேந்தர் அடிக்கடி செய்த போர்கள் தமிழ் மக்களின் குடி வளத்தைச் சீரழித்து வந்தன என்பது நன்கு விளங்கும். இந்நிலையில் அறிவுடை நன்மக்கள் மிகக் குறைவாக இருந்தனரென்பதும், அதனால் கல்வியறிவு எல்லா மக்களிடத்தும் பரவி நிலவ இயலா தாயிற்றென்பதும் இனிது புலனாகின்றன. இங்ஙனம் கல்வி கேள்விமிக்க சான்றோர் தொகை சிறிதாதலை வேந்தர்கள் உணராமல் இல்லை. அவர்கட்கு வேண்டும் உதவியைச் செய்து பேணுவது தமக்குக் கட னென்பதை நன்கறிந்திருந்தனர். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் "அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்." ஆதலால், "உற்றுழி யுதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று" என்று வற்புறுத் தினான். தொண்டைமான் இளந்திரையன் நாடுகாக்கும் வேந்தர் நல்லறிவுடையராதல் வேண்டு மென்றான். சோழன் நல்லுருத்திரன், "மெலிவில் உள்ளத்து உரனுடையாளரா"ன சான்றோர் கூட்டுறவே பெறத்தக்கதென்று பேசினான். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, "தமக்கென முயலாது" "பிறர்க் கென முயலும்" சான்றோர் இருத்தலால் உலகம் உளதா கின்றதென்று உரைத்தான். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன் நிலவரை புலவர்பாடும் புகழ் படைக்க வேண்டுமென விழைந்தான். சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, "அருள் வந்தவை காட்டி, மேனின்று மெய்கூறும் கேளிர்" எனச் சான்றோரைப் பாராட்டினான். தமிழ்ச் சான்றோருடைய சால்புகளை நன்கறிந்த தமிழ் வேந்தர், அவராற் பாடப் பெறும் புகழைத் தாம் மேற்கொண்டு புரியும் அரசியலின் ஊதியமாகக் கருதினர்; புலவர் பாடாதொழிவது தமக்குக் கேடென்றும் அஞ்சினர். "புலவர்பாடும் புகழுடையோர் விசும்பின், வலவனேவா வானவூர்தி எய்துவ" ரென்பது அக்காலத்துக் கொள்கை. புலவர்களின் புலமை, பாவன்மை, நாவன்மையாகிய நலங்களில் தமிழ் வேந்தர் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். புலவர் பெருமானான கபிலர் பாட்டுக்களை வியந்த சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யென்பவன் பொருந்தில் இளங்கீரனாரைப் பார்த்து, "செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்றுமன்" (புறம். 53 ) என்று பரிந்து கூறுவதும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை" (புறம். 72) என்று வஞ்சினம் மொழிவதும் காண்க. இவ்வாறு வேந்தர்களால் நன்கு மதிக்கப்பட்ட நல் லிசைப் புலமைச் சான்றோர் பலரும் கல்வி கேள்வியிற் பிறக்கும் இன்பத் துக்கு இரையாகி வேறே பொருள் செய்தற் கமைந்த பிற துறைகளை நாடாது, தமது புலமை நயந்து செல்வர் நல்கும் பொருள்பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர் பாடும் பாட்டுக்களை யாழ் முதலிய இசைக் கருவிகளில் வைத்துப் பாணரென்பார் பாடி மக்களை இன்புறுத்தினர்; கூத்தரென்பார் கூத்தாடி இன்பம் நல்கினர். இம்மூவராலும் இயல், இசை,நாடகம் என்ற முத்தமிழும் முறையே வளர்ந்து வந்தன. நாம் முன்னே கூறியபடி வேந்தர்கள் பலரும் புலவரைப்பேணி இயற்றமிழையும், பாணரை யோம்பி இசைத் தமிழையும், கூத்தரைப் போற்றி நாடகத் தமிழையும் வளர்த்தார்கள். முத்தமிழையுங்கொண்டு தமிழ்ச் செல்வர்களை உவப்புறச் செய்து அவர்தரும் பரிசில் கொண்டு வாழ வேண்டியவர்கள் இவர்கள். அதனால் இவர்களைப் பரிசிலர் என்றும் வழங்குவர். இவர்கட்கு "யாதும் ஊரே; யாவரும் கேளிரே" பழு மரம் தேர்ந்து செல்லும் பறவைபோல இவர்கள் எப்போதும் கொடைநலம் சிறந்த செல்வ நன்மக்களைத் தேடிச் சென்று பரிசில் பெற்று வாழ்ந்தனர். இசை நாடகங்களிற் போல இயற்றமிழிலும் ஆடவர் பெண்டிரென வேறுபாடின்றி யாவரும் புலமை பெற்றிருந் தனர். புலமை யென்பது பால் வேற்றுமை காணாது எல்லார்க்கும் ஒப்ப அமைவதென்று தமிழ் வேந்தர் நன்கு அறிந்திருந்தனர். அதனால் ஆடவர்க்குப் போல மகளிர்க்கும் நன்மதிப்பும் நற்பரிசிலும் தந்து சிறப்பித்தனர். மகளிருள் ஒளவையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், மறோக்கத்து நப்பசலையார் முதலாகப் பலர் உண்டு. அவர் பாடிய பாட்டுகள் பல, சங்க காலத் தொகை நூல்களிற் காணப்படுகின்றன. மகளிரெனத் தமிழ் வேந்தர் இகழ்ந்து நோக்கியதாகக் கூடத் தமிழ் நூல்களுள் எங்கும் ஓரெழுத்தேனும் கூறப்பட்டது கிடையாது. சிற்றரசர் முதல் முடிவேந்தர் ஈறாக யாவரும் அவர்கட்கு மதிப்புத் தந்துள்ளனர். ஒரு நாட்டு மக்கட்கு அவர் நாட்டு மொழிவல்லா ரிடத்தில் அன்பும் நன்மதிப்பும் உண்டாவது அவர்கட்கு அந்நாட்டின்பால் பெரும் பற்றிருந்தாலன்றிக் கை கூடாது. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நாட்டுமொழியே உயிர்நாடியாகும். நாட்டு மொழியே மக்கள் உள்ளத்தில் நிகழும் எண்ணங்கட்கும் மொழியாகும். அம்மொழியைச் சிதைத்தால் அந்நாட்டு மக்களின் எண்ணமும் சிதையும். ஒரு நாட்டை வென்று அடிப்படுத்தக் கருதிய பிறநாட்டவர், தங்கள் மொழியை வென்ற நாட்டிற் பரப்பி அதன் வாயிலாக நாட்டு மொழியைச் சீரழிப்பது தமது முதற் பணியாகக் கொண்டிருந்தனர். அது நாளடைவில் அந்நாட்டவர்களைப் பிறநாட்டவர்க்கு அடிமை யாகுந் தன்மையை விளைவித்தது. இதனை நம் தமிழகத்தேயன்றிப் பிறநாட்டுக் கடிமையுற்ற ஏனை எல்லா நாடுகளிலும் காண்கின்றோம். நம் நாட்டில் இடைக் காலத்தே போந்து மேம்பட்ட பல்லவ, சளுக்க, நாயக்க வேந்தர்களால் தமிழர் வலியிழந்து அடிமைகளாய் ஒழிந்த திறத்தைக் கல்வெட்டுக்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழிற் பொறிக்கப்படும் கல்வெட்டெழுத்துக்கள் யாவும் எத்துணைவகைப் பிழை மலியலாமோ அத்துணையும் நிரம்பியிருக் கின்றன. அன்றியும், அவை யாவும் தூய தமிழில் இராமல், கிரந்த எழுத்துக்கள் நிரம்பி மாசுபடிந் திருக்கின்றன. ஆங்கிலேயராட்சி வந்தபின் யாவும் ஆங்கில மொழியிலே நடை பெறலாயின. தமிழர்தமது தமிழில் பேசுவதும் எழுதுவதும் தமக்கு மானக் குறைவாகக் கருதிய காலமும் இருந்தது. தமிழர் அரசியலில் உரிமை பெற வேட்கை கொண்டபின், தம் உள்ளத்தை யடிமைப் படுத்தியிருந்த ஆங்கிலத்தை ஓரளவு விலக்கித் தமது தமிழ் மொழியிலே பேசுவதை இப்போது மேற்கொண்டுள்ளனர். எழுதுவது மட்டில் கல்வெட்டெழுத்துக்களைப் போல எழுத முற்பட்டு விட்டனர். கல்வெட்டில் கலக்கும் கிரந்த எழுத்துக்கள் இல்லையே யொழிய அவ்வெழுத் தாலமைந்த சொற்களைத் தமிழெழுத்தால் எழுதுகின்றனர். இதனால் இவர்கள் உள்ளம் பிறமொழிக் கடிமையாயிருக்கும் தன்மை நீங்கப்பெற்றிலதென்றும், எனவே நாட்டுப்பற்று நன்கு அமையவில்லையென்றும் காணலாம். ஆங்கிலேயர்களுக்கு உரிமை யுணர்வு தோன்றிய பன்னெடுங் காலத்துக்கு முன், கிரேக்க உரோமானியர்களுக்கு அடிமையா யிருந்தனர். அக்காலத்தே அவர்கள் மொழியில் லத்தீன் மொழிச் சொற்களும் கிரேக்க மொழிச்சொற்களும் கலந்துகொண்டன. உரிமை யுணர்வு தோன்றி வேர் கொண்ட பின், அவர்கள் அம்மொழிகளை விலக்கித் தூய ஆங்கில மொழியில் எழுதவும் பேசவும் மேற்கொண்டனர். அவர்கட்கு அண்மையிலுள்ள பிரெஞ்சு, சருமனி முதலிய நாட்டு மக்களின் கூட்டுறவால் அவர் மொழிச் சொற்களும் தங்கள் மொழியில் வந்து கலக்கக் கண்ட அந்த ஆங்கிலேயர் அவற்றைத் தங்கள் மொழிநடைக் கேற்பச் சிதைத்த மைத்துக் கொண்டனர். அவர்களை யடியொற்றிச் செல்லும் நம்மவர், அவருடைய அந்நற்பண்பைக் கொள்ளா தொழிந்தது இரங்கத் தக்கதாம். தங்கள் மொழியைப் பிழையின்றித் தூய வகையில் எழுதவும் பேசவும் வேண்டுமென்றால், அவ்வாறு வேண்டுவோர், மொழிபயிலும் தங்கள் நாட்டின்மேல் அன்புடைய ராதல் வேண்டும். நாட்டுப் பற்று நாட்டு மொழியின் பால் பற்றும் அதனை யழகுற எழுதவும் பேசவும் வேண்டுமென முயலும் முயற்சியும் தோற்று விக்குமென மேனாட்டறிஞரான பேராசிரியர் ஆதம்சு என்பவர் கூறியுள்ளார். ஆங்கிலப் பயிற்சி மிகுந்து அம்மொழி காட்டும் நெறியே கற்பன கற்று நம் நாட்டின்நலம் காண விழைபவர்க்கு அவ்வாறே நம் நாட்டின்பால் அன்புண்டாக வேண்டும். நாட்டுக்குத் தொண்டாற்றுவோரென வரும் தலைவர் பலரும் நம் நாட்டு மொழியின் பால் நன்மதிப்புடைய ராகவேண்டும். அஃது அம்மொழி பயின்று விளங்கும் புலவரிடத்தே அவர்கள் காட்டும் நன்மதிப்பால் தெளிவாகும். பண்டைத் தமிழ் வேந்தர் புலவர்கட்குச் செய்த சிறப்புக்களால் அவர்கள் தங்கள் தங்கள் தமிழ்மொழியின் பால் பேரன்பும் அதுவாயிலாகத் தங்கள் நாட்டின்பால் பேரார்வமும் உடையராய் இருந்தனரென அறிகின்றோம். தமிழ் வேந்தனொருவன், போர் குறித்து வஞ்சினங் கூறுங்கால், "என்னொடு பொரவந்து நிற்கும் பகை வேந்தரை இப்போரில் வென்று புறங்காணேனாயின், யான் இறந்து மாறிப் பிறக்கும் போது சிறந்த இத் தென்னாடு காக்கும் பாண்டியர் குடியில் பிறவேனாக," என்ற கருத்துப் பட, "மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த, தென்புலங் காவலின் ஒரீஇப்பிறர், வண்புலங் காவலில் மாறியான் பிறக்கே" (புற.71) என்று கூறுவது கொண்டு, தமிழ் வேந்தர்க்குத் தங்கள் தமிழ் நாட்டின்பால் இருந்த பேரார்வம் தெற்றென விளங்குகிறது. இங்ஙனம் தமிழகத்தின்பாலும் தமிழ்மொழியின் பாலும் உண்டான பேரன்பால், தமிழ் வேந்தர் தங்கள் மொழிப் புலவரான சான்றோரிடத்துக் கொண்டிருந்த அன்பும் நன்மதிப்பும் பெரிதும் அறியத்தக்கனவாம். தங்கள் நாட்டு நன்மக்கள் உள்ளத்தெழுந்த எண்ணங்களையும் உரைத்த உரைகளையும் நாட்டிற் காணப்படும் இயற்கைக் காட்சிகளையும் மக்களின் வாழ்க்கைகளையும், அதன்கட் காணப்படும் நிறைவு குறைவுகளையும் நிழலோவியம் போல நெஞ்சிற் பதித்துக் காட்டும் பாட்டும் உரையும் வழங்கித் தங்கட்குப் புது வாழ்வு காட்டியின்புறுத்தினர் இச்சான்றோர். புறத்தே பொறிவழியாகக் காணும் இத்தமிழகத்தைச் சொல் வழியாக நெஞ்சில் தோற்றுவிக்கும் இவர்கள், வழி வழியாக இத்தமிழகம் தன் சிறப்புக் குன்றாது இயன்று வருதற்கு ஏதுவா கின்றனர் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள். இவ்வாறு, இம்மையிலே இச் சான்றோர் மறுமை யின்பத்தையும் பெறுவித்தலில் பின்னிடார் என்று எண்ணிப் பேணினர். இதுவே இவ்வரசர்கட்கு இச்சான்றோரை வணங்கி வழிபடுதற்கும் நன்கு மதித்தற்கும் முதற் காரணமாயிற்று. இவர்கள் உரைத்த வாயுறை வாழ்த்தும் செவியறிவு றூஉக்களும் பிறவும் இவ்வேந்தர்கட்கு நல்விளக்கமாய்த் துணை செய்தன. தமிழ்ப் புலமை நலத்தால் புகழ் மேம்பட்ட புலவர் வேந்தர் களையும் வேறு செல்வர்களையும் நாடிவருவாராயின், அவர் வரவறிந்து வரவேற்றுச் சிறப்பிப்பது தமிழ்ச் செல்வ வேந்தர் இயல்பு. புலவர்கள் வேந்தர்களின் நாட்டிலுள்ள மலை, காடு முதலிய நாட்டு வளங்களையும் அவர்களின் போராண்மைத் திறங்களையும் பாட்டில் தொடுத்துப் பாடுவர். எத்தகையோர்க்கும் தம்முடைய நாடு புகழ் குணஞ் செயல் முதலிய நலங்களைச் சான்றோர் பாராட்டிப் பாடினால் உள்ளத்தே மகிழ்ச்சியுண்டாதல் ஒருதலை. ஆகவே, அவர்கள் தம் முன் பாடிப் பாராட்டு மவர்க்கு மிக்க பொருள் அளிப்பது இயற்கையாயிற்று. ஏனைப் பாணரும் கூத்தரும் இப்புலவரோடு போந்து இசையாலும் கூத்தாலும் செல்வ மக்களை மகிழ்வித்துப் பரிசில் பெற்றுச் செல்வர். இவ்வண்ணம் சான்றோர்க்கும் பாணர் முதலியோர்க்கும் பொருள் கொடுத்துப் புகழ் கொண்டாரெனின், அப்புகழ் இவ்வேந்தர்க்கும் பிறர்க்கும் எப்பயனை விளைத்திருக்கும் என எண்ணலாம். அக்காலத்தே நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளை வேறு நாடுகட்கு உய்த்துச் சென்றுரைக்கும் நாள் வெளியீடுகள் இல்லை. நாடெங்கும் பரவும் புகழ் மெல்ல மெல்லப் பரவினாலன்றி, ஒருவர்க்குப் பெரும்புகழ் பரவி நிலைபேறுகொள்ளுதற்கு வழி கிடையாது. எல்லா நாடுகட்கும் இனிது சென்று பெருவேந்தருடைய அருஞ் செயல்களை யெடுத்தோதிப் புகழ் பரப்பும் தொழில் இப் புலவர் முதலாயினார்க்கு உரியதாயிற்று. ஒரு வேந்தனுடைய ஆண்மையும் படைப் பெருமையும் வெற்றிச் சிறப்பும் பிறவேந்தருடைய உள்ளத்தில் உட்குத் தோற்றுவிக்கும் வகையில் இப்புலவர் முதலியோர் செயல் நிகழ்ந்து வந்தது. மேலும் இவர்கள் எப்போதும் உள்ள நிகழ்ச்சிகளை யுள்ளவாறே யுரைக்கும் உண்மை நலம் வாய்ந்தவர். இதுபற்றியே இவர்களை "வாய்மொழிப் புலவர்" என வழங்கினர். இச்சிறப்பால் வேந்தர்கள் இப்புலவர் முதலி யோரைச் சிறப்பிப்பது வேண்டியதொரு செயலுமாயிற்று. அன்றியும், நற்செயல் செய்த வேந்தனைப் பாராட்டு தலும் தீச்செயல் செய்தவனைத் தூற்றுதலும் இவர்கள் ஒல்லும் வாயெல்லாம் செய்து வந்தனர். நன்னன் என்னும் வேந்தன் பெண் கொலைபுரிந்த தீச்செயலையும், கோசரென்பார் அவன் மாமரத்தைக் கொன்று அவனை இகழ்ந்த நற்செயலையும், பரணர் முதலிய சான்றோர் ஏற்றவிடத்தில் தாம் பாடிய பாட்டுக்களில் வைத்துப் பாடியிருப்பது இதற்குப் போதிய சான்றாகும். இதனால் ஒருவகையில் அச்சமும் இருந்ததென்னலாம். இப்புலவர் பெருமக்கள் வெறிதே பாடிப் பொருள் பெறுவ தொன்றே கருத்தாகக் கொண்டவரல்லர். புகழ்க்குரிய வேந்தரையும் செல்வர்களையும் நாடி நாடோறும் சென்று கொண்டிருப்பர். ஆங்காங்கு அவர்கள் தரும் செல்வத்தைத் தம்மையொத்த பிறர்க்கும் பகுத்தளித்துண்டு வாழ்வர். அவர்கள் உள்ளத்தே பொருளினது அருமை புலப்படுவதே கிடையாது. அவ்வப்போது கிடைப்பதை அவ்வப்போதே செலவழித்து மறு போதிற்கு வேறு செல்வரை நாடிச் செல்வர். இவர்கள் எப்போது வரினும் அச்செல்வர்களும் அப்போதெல்லாம் பொருள் தந்த வண்ணமிருந்தனர். செல்வத்துப் பயன் ஈதல் என்பது செல்வர் கொள்கை. புலவர்க்குக் கொடுக்கும் கொடை செல்வரது கடன் என்பது இவர் தம் கொள்கை. இதனைப் "புலவர் பூண்கடன்" என்றும் வறியார்க்கு வழங்குவது செல்வர்க்குப் பொதுவாகவுள்ள கடன் என்பது பற்றிக்கொடையைக் "கொடைக் கடன்" என்றும் சான்றோர் கூறியுள்ளனர். வறுமை பெருகிய நாட்டில் அறிவும் தொழிலும் வளம் பெறுதல் இல்லையென்பதைப் பண்டைத் தமிழர் நன்கறிந்திருந்தனர். நாட்டில் பசியும் பிணியுமின்றி வசியும் வளனும் பெருகவேண்டு மென்பது எல்லா மக்களும் பொதுவாக வேட்ட வேட்கை. அடிக்கடி நிகழும் போர்களாலும் ஆடவர் தொகைக் குறைவாலும் நாட்டின் விளை பொருள் எல்லா மக்கட்கும் கிடைப்பது அரிது. இதனால் நாட்டில் இரவலர் உளராதற்கியைபிருந்தது. அவ்விர வலரைப் புரத்தல் புரவலருக்குக் கடனுமாயிற்று. பகுத் துண்டு பல்லுயிரோம்புதல் தலையாய அறம். இரவலர்க்கும் புரவலர்க்கும் உள்ள தொடர்பைப் பண்டைச் சான்றோர் உலகிற்கும் மழைக்குமுள்ள தொடர்பாகக் கருதினர். மழை, கடற்குச் சென்று நீரை முகந்துவந்து கோடையால் வெதும்பும் உலகிற் பெய்து தணிப்பது கடன். அதுபோல, வினை வலியுடைய வேந்தரும் செல்வரும் வினைமேற்சென்று பொருள் கொணர்ந்து இல்லோர்க் களித்தல் கடனாயிற்று. இது குறித்தே கொடை வழங்கும் புரவலரைச் சான்றோரனை வரும் மழைமுகிலோடு உவமித்துக் கூறியிருக்கின்றனர். மேலும், புலவர் முதலாயினார்க்கு வேண்டும் பொருளை அளித்து அவராற் பெறப்படும் புகழ் மேற்சென்ற வேட்கை ஒரு புறருமிக்க, நல்லறிஞர்பால் வறுமையில்லா திருக்கவேண்டி வேந்தரும் பிறரும் பொருளீட்டுதலைப் பெரு நோக்கமாகக் கொண்டே வினையைத் தம் உயிராக வெண்ணினர். "வினையே ஆடவர்க் குயிர்" என்றும், "புரக்கப்படுவோர் புன்கண்கூர, இரப்போர்க்கு ஈயா"மை தீ தென்றும், "செல்வமென்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கண்" என்றும் சான்றோர் பல முறையும் வற்புறுத்தி யுள்ளனர். ஈதற்குரிய ஆண் மகன் இல்வழி, செல்வ மகளிர் இக் கொடைக் கடனைத் தவறாது ஆற்றினர்; இதனை "மனையோள் பாணரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கை தூவாளே" (புறம்.334) என்று சான்றோர் கூறுவது காண்க. சுருங்கச் சொல்லின், பண்டைச் செல்வத் தமிழ் மக்கள், "இரவலர்க் கருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்" என்ற கருத்துடைய ரென்பது சாலும். உண்டாரை நெடுநாள் வாழப் பண்ண வல்ல நெல்லிக் கனி பெற்ற அதியமான் ஒளவைக்கீந்து புகழ் பெற்றது நல்லிசைப் புலமை சான்ற நல்லோர் உலகில் இனிது வாழ்தல் வேண்டுமென்ற கருத்துப்பற்றியேயாம். இக் கருத்துடையராய் வேந்தரும் பிறரும் ஒழுகியது கண்டே, பண்டைச் சான்றோர் பொருள்கருதிப் போர் மேற் செல்லும் வேந்தர்களின் போர்த்திறத்தை வியந்து விரித்துப் பாடி யூக்கினர். அவ்வேந்தர்களும் வென்று கொண்டுவந்த திறையும் பிறவுமாகிய செல்வத்தைப் பரிசிலர்க்கே வழங்கினர். போர் வாயிலாக வந்த பொருள் இல்லாரது இன்மை தீர்த்தற்குப் பயன்பட்டமையின், சான்றோர் அவர் செயலைப் பாராட்டிப் பாட்டிடைவைத்து என்றும் நிலைபெறச் செய்தனர்; நாட்டில் பொருள்வளம் மிகுவித்தல் குறித்து வேந்தர்களைக் காடுகொன்று நாடாக்கு மாறும் குளந்தொட்டு வளம் பெருக்குமாறும் அறிவுறுத்தினர்; இறைபெறுமிடத்தும் முறையே அறநெறி பிழை யாது பெறுமாறு தெருட்டினர்; பகைக்கஞ்சி அடைமதிற் பட்ட விடத்துத் தம்மாற் பேணப்பட்ட வேந்தரை ஊக்கிப் போருடற்றிப் புகழ் நிறுவுமாறு மறத்தீக்கொளுத்தினர். போர்மேற்சென்று வென்றி மேம்பட்ட வேந்தன் மேலும் போரே விரும்பி யொழுகின், அவனால் நாடழிதலும் அதனால் உயிர்கள் வருந்துமாறும் எடுத்தோதி அவனுள்ளத்தில் அருளூற்றெழுமாறு பாடினர். இயற்கையில் தீய நிகழ்ச்சிகள் உண்டாயின், வேந்தர்க்குக் குற்றமெனக் காட்டி அவர்களை அறத்தாற்றில் ஒழுகுமாறு பணித்தனர். குடி மக்கள் முறைவேண்டியும் குறைவேண்டியும் வருவராயின் வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்கப் பண்ணினர். நற்பண்புடைய வேந்தர்பால் மாறுபட்ட கருத்தால் போர்நிகழ விருக்குமாயின் அவர்களைச் சந்துசெய்து போரை நிகழவொட்டாது தடுத்தனர். தமிழ் மூவேந்தரையும் ஒருங்கு காண நேரின், "இன்றேபோல்க நும் புணர்ச்சி" என்றும், "இவ்வாறு நீவிர் மூவிரும் ஒன்று பட்டிருப்பீராயின், இவ்வையக முழுவதும் நும் கையகப்படுவது பொய்யாகாது" என்றும் தேனினுமினிய சொற்களால் தமிழக முழுதையும் ஒரு நாடாகத் திகழ்வித்தற்கு முயன்றிருக்கின்றனர். இவர்தம் முயற்சிப் பயனால் வேந்தர்க்கும் அவர்கீழ் வாழ்ந்த குடிகட்கும் போருண்டாக வில்லை. செல்வர்கட்கும் இல்லாதவர் கட்கும் பகைமை எழவில்லை. வேற்று நாட்டவர் புகுந்து வேறு பல சூழ்ச்சி செய்து நாட்டைக் கெடுத்தற்கு வழி தோன்றவில்லை. எனவே, சங்க இலக்கிய காலத்துச் சான்றோராகிய நல்லிசைப் புலவர்கள் ஒருவகையில், தமிழகம் தன் தமிழ்ப் பண்பு கெடாது நிலைபெறுதற்குரிய வழிகள் பலவற்றிலும் முயன்று நாட்டிற்கு நல்லதோர் அரணாக விளங்கினர் என்பது தெளிவாகும். இவ்வுரிமையால் இச் சான்றோர்கள், அறிவு மென்மை யாலும் செல்வச் செருக்காலும் நிலை மறந்து நீர்மை குன்றியிருக்கும் வேந்தர்பால் சென்றவிடத்து அவர்கள் வேண்டுவன கொடாத விடத்துப் பழித்தலும், வரிசையறியாது நல்கின் வாங்கா தொழிதலும், காணாது கொடுக்கும் பரிசிலை கைக்கொள்ளாது மறுத்தலும், தவறுசெய்தவழி அஞ்சாது நின்று அறிவுறுத்தலும் செய்தொழுகினர். இவர்சென்ற நெறியில் செல்லாமையால் இடைக்காலச் சான்றோர் எளியராயினர்; தமிழகம் தமிழ்ப் பண்பாட்டை இழந்தது. இக் காலத்துச் சான்றோர் எதிர்கால வரவு நோக்கி, பண்டைச் சங்க காலச் சான்றோர் கொண்டிருந்த திட்ப நுட்பப் புலமைக் கூறுகளுள் தக்கவற்றைத் தேர்ந்து கடைப்பிடிக்கும் கடமையுடையராவர்.  22. கோனாடு மேலே உரைத்த சங்ககால நல்லிசைப் புலமைச் சான்றோர் தொகையுள் ஒருவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பொருளாக இச்சிறு நூல் எழுந்ததனால், இங்கே கோனாட்டின் இயல்பும் பிறவும் காணப்படும். சங்ககாலத்தில் தமிழ்ப்பெருவேந்தர் மூவரும் தங்கள் நாட்டின் அரசியலின் கீழ்ப் பல வலிமிக்கோரைத் தலைவராக்கி அவர் ஆட்சிசெய்து தமக்கு வரி செலுத்து மாறு பல ஊர்களைத் தொகுத்துச் சிறு நாடாக வகுத்திருந்தனர் என முன்பே கூறினோம். அத்தலைவர் களில் சிலர்வலிமிகுந்து குறுநிலமன்னராயினரென்றும் முன்பு கூறியுள்ளோம். அச்சிற்றரசர்களுள் சிலர் அரசர் குடியில் தோன்றிய வருமாவர். சோழர் குடியிலும் அவ்வாறே ஏனைச் சேர பாண்டியர் குடியிலும் வேந்தர் சிலர் இருந்தமையின், அவர்களும் தம்மை முறையே சோழ ரென்றும் சேரரென்றும் பாண்டிய யரென்றும்கூறிக் கொண்டனர். அதனால் நல்லிசைச் சான்றோர் ஒருவரே பல சோழர்களையும் சேரபாண்டியர்களையும் பாடிச் சிறப்பித்திருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு வேந்தர் பலராதலால் நாடுகளும் பலவாயின. சோழநாடு ஏனை இருநாடுகளிலும் பரப்பு மிகுந் திருந்ததனால் நெடுங்காலத்துக்கு முன்பே, தென் பெண்ணையாற்றுக்கு வடக்கே திருவேங்கடம் வரையிருந்த சோழநாட்டுப் பகுதி தொண்டை நாடென்ற பெயரால் பிரிந்து விளங்கிற்று. பின்னர் இத்தொண்டை நாட்டுப் பரப்பு கிழக்கே கடலையும் மேற்கே பல்குன்றத் தொடரையும் (சவ்வாது மலைத்தொடர்) எல்லையாகக்கொண்டு விரிந் திருந்தது பற்றித் தொண்டைநாட்டு வேந்தர் இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்தனர். இவ்வாறே சோழ சேர பாண்டிய நாடுகளும் பல உள்நாடுகளையுடைய வாயின சேரநாட்டில் குடநாடு, குட்டநாடு, இரும்பொறை நாடு, கொண்கானநாடு, கொங்குநாடு, இருந்தன. புன்னாடு, துளுநாடு எனப் பல நாடுகள் என்பதைச் சங்க இலக்கியங்களால் அறியலாம். இவ்வாறே பாண்டி நட்டிலும் பல சிறுநாடுகள் உண்டு. தொல்காப்பியர் காலத்தும் இப்பிரிவுகள் இருந்தன. "வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு" என்ற அத் தொல்காப்பியரே, "செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலம்" என்பதனால், அவர்காலத்தே இத்தமிழகம் பல சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்த தென்பது இனிது விளங்குகிறது. தொல்காப்பிய வுரைகாரர்கள், நம் தமிழகத்தே செந்தமிழ் நிலம் ஒரு பகுதியென்றும், இதனைச் சூழ்ந்து பன்னிரண்டு நாடுகள் இருந்தன வென்றும், அவை பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவட தலை நாடு என்பனவென்றும் இவையே தொல்காப்பியர் குறித்த பன்னிருநிலமென்றும் கூறுவர். இந்த நாடுகள் இக்காலத்தே விளங்க அறியும் வகையில் இல்லை. இக்கால ஆட்சியியலுக்கேற்ப நம் தமிழகம் இப்போது வேறுவகையில் பிரிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகம் தனிச் சிறப்பும் தனித்தொன்மையும் உடைய தாயினும், வடக்கிலும் மேற்கிலும் தன்னெல்லை சுருங்கி விட்டது. வேற்றுமொழியின் ஆட்சியால், தமிழகம் ஏனைத் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் என்ற மொழிவழங்கும் நாடுகளோடு இணைப்புற்றுத் தன்னை மறந்து தன் சிறப்பையும் இழந்து தன்னைத்தானே இனிது ஆண்டு கொள்ளும் தனியுரிமையும் துறந்து ஒளிமழுங்கியிருக்கிறது இந்நிலையில் இதன்கண்ணும் சென்னை, செங்கற்பட்டு, தென்னார்க்காடு, தஞ்சை, திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், வடவார்க்காடு, சித்தூர் எனப் பல நாடுகளாகப் பிரிந்திருக்கிறது. பிறநாட்டாட்சி வேகத்தில் அடிமை யுற்று மடிந்துகிடந்ததனால், சித்தூர்நாட்டின் செம்பாகம் தெலுங்கு மொழிக்கிடமாய் விட்டது. திருவேங்கடம் எனதே யெனத் தெலுங்கு மொழி இரைச்சலிட்டுப் பேசுதற்கும் தமிழ் தனது இடத்தையிழந்து ஏக்கற்று நிற்கிறது. எனினும், தன் வடவெல்லை யாகிய வடவேங்கடத்தை, அத்தெலுங்கு "திருமலை திருப்பதி" யென வாயால் வழங்கித் தனக்கு அதனைப் பெற உரிமையில்லை யென்பதைச் சொல்லாமற் சொல்வித்து நிற்பதால், தமிழ் தனக்குரிய வேங்கடத்தை விட்டொழியும் என எண்ணுதற்கிடமுண்டாக வில்லை. இப்போது போலவே இடைக்காலத்தும் நம் தமிழகம் பலப்பல நாடுகளாகப் பிரிந்தேயிருந்தது. தமிழகத்துத் தமிழ்க் கோயில்களிலும் பிற விடங்களிலும் கல்வெட் டெழுத்துக்கள் தோன்றியகாலத்துக்கு முன்பும் பல பிரிவுகள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான நம்பியாரூரர், மருகல்நாடு, கொண்டல் நாடு, குறுக்கைநாடு, வெண்ணிக்கூற்றம், வெண்ணி நாடு, நாங்கூர்நாடு, நறையூர் நாடு, மிழலை நாடு, பொன்னூர் நாடு, புரிசைநாடு, வேளா நாடு, விளத்தூர்நாடு எனப் பல நாடுகளைக் குறிக்கின்றார். இக்காலத்தை யடுத்துப் போந்த காலங்களில் தோன்றிய இடைக்காலத் தமிழ் வேந்தர்கள் காலத்தில் சேரநாடு கேரளநாடாய் விட்டது. சேரநாட்டின் உண்ணாட்டுப் பகுதிகளான கொண்கானம், கொங்கு, புன்னாடு என்பன கேரளநாட்டினின்றும் பிரிந்து விட்டன. கன்னடமும் வேணாடும் வேறுபிரிந்தன. பல்லவ சளுக்க மன்னர்க்குப் பின் தோன்றிய தமிழ் வேந்தர்கள் இடைக்காலத்தே மேம் பட்டிருந் தனர். இவர்கள் காலத்திலும் நம் தமிழ்நாடு பல உண்ணாட்டுப் பிரிவுகளை யுடையதாகவே இருந்தது. சோழநாடு மட்டில் எட்டு மண்டலங்களாகவும் ஒன்பது வளநாடுகளாவும் பிரிந்தது. ஒவ்வொரு வளநாடும் பல சிறுநாடுகளாவும் கூற்றங் களாகவும் பிரிய ஒவ்வொன்றிற் பற்றுக்களும் பிறவும் இருந்தன. இனிச் சங்க இலக்கியக் காலத்திலும் இப்பிரிவுகள் இல்லாமல் இல்லை. தொண்டை நாட்டில் ஓய்மாநாடு இடைக்கழிநாடு என்பன முதலிய நாடுகளும், சோழநாட்டில் கோனாடு முதலியனவும்; பாண்டிநாட்டில் பறம்புநாடு முதலியனவும் நாட்டுப்பிரிவு உண்மைக்குச் சான்று பகரு கின்றன. சோழநாட்டுப் பிரிவுகளுள் ஒன்றான கோனாடுதான் நாம் மேற்கொண்டிருக்கும் மதுரைக் குமரனாருடைய முன்னோர் கட்குரிய வாழிடமாகும். இக்குமரனார் பிறந்து சிறத்தற்குக் காரணமாயிருந்த சிறப்பு இந்நாட்டிற்கு உரியது. ஆதலால், இதன் இயற்கை நலமும் பிற நலங்களும் சிறிது விரியக் காண்பதற்கு இலக்காகின்றன. ஒரு நாட்டில் ஒரு மகன் தோன்றி நாட்டவர் பலரும் சான்றோனெனப் பாராட்டப் பெறுதற்கு அவனுடைய நாட்டியல்பும் சூழ்நிலையும் பெருந்துணை செய்வனவாகும். பொறிகளின் வழியாக அவன் பெறும் முதற்காட்சி அவனது நாடேயாதலின்,அவனுடைய உள்ளத்திற்பதியும் அந்நாட்டுக் காட்சி தன் வளத்துக்கும் பண்புக்கும் ஏற்ப வளவிய கருத்துக் களையும் உயரிய எண்ணங்களையும் தோற்றுவிக்கும். கொல்லன் மகன் உயர்ந்த கொல்லனாதலும், தச்சன் மகன் தகவுடைய தச்சனாதலும் பொற்கொல்லன் மகன் கண்டோர் மருளும் கைவினையுடையனாதலும், கணக்காயனார் மகன் வலிய புலமைக் கண்கொண்டு பிணக்கறுத்துப் பீடு பெறும் பெரும் புலவனாதலும் மேலே கூறிய இயற்கை நலத்தை அடிப்படையாகக்கொண்டு எழுவனவாகும். ஆகவே, மதுரைக் குமரனார் தோன்றுதற்கு இடமாகிய கோனாட்டின் இயற்கைநலங்களைக் காண்பது இன்றியமையாத தாயிற்று. சோழநாட்டிலுள்ள நாடுகள் பலவற்றினும் இக்கோனா டொன்று தான் இன்றுவரையில் தனித் தமிழரசாக இருந்துவருகிறது. இந்நாட்டை ஆண்டு வரும் வேந்தர் தமிழரசராவர். அவரது தாய்மொழி தமிழ் மொழி. அவர் தம் உள்ளமும் உரையும் தூய தமிழ் நெறியில் இயங்குகின்றன. இத்தமிழரசு கால்கொண்டு முந் நூறாண்டுகள் கழிந்துவிட்டன. இவற்றிற்கிடையே நாட்டின்கண் பழம்புள் போதலும் புதுப்புள் வருதலும் போலப் பல குடிகள் பிரிந்துபோதலும் புதுக்குடிகள் பல வந்து குடியேறுதலும் நிகழ்ந்ததனால் நாட்டின் வாழ்க்கைக் கூறுகளில் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் உண்டாயின; ஆயினும், அவற்றால் சிறிதும் தாக்குண்டு திரிபு எய்தாது பண்டைத் தண்டமிழ்ப்பண்பு குன்றாது இக் கோனாட்டு வேந்தர்குடி சிறந்து நிற்கிறது. அரசியல் முறை ஓரளவு மாறியதற்குச் சூழவிருக்கும் நாடுகளின் நிலைமை மாறியது காரணமாகும். தமிழ்மொழிக்கு அரசியலில் முதலிடமும் தமிழர்க்குப் போதிய வுரிமையும் இந்நாட்டாட்சியிலும் சூழவுள்ள நாடுகளில் இல்லாதிருப்பது போல இல்லா தொழியிலும், "மணியில் திகழ்தரும் நூல் போல்." இவ்வேந்தர் பெருமக்களிடையே தமிழ்ப் பண்பு ஊடுருவிச் சென்று ஊக்கமளிப்பது தமிழ் நன் மக்கட்கு மிக்க இறும்பூது விளைக்கின்றது. இக்கோனாடு, இந்நாளில் *புதுக்கோட்டை வளநாடு எனச் சிறந்திருக்கிறது. இதனை இன்று ஆட்சிபுரியும் வேந்தர் பெருமான் கோடியாதிபதி ராஜகோபாலத் தொண்டை மானாராவர். இதனைப் "புதுக்கோட்டை சமஸ்தானம்" என்று வழங்குகின்றனர். புதுக் கோட்டைத் தனியரசு என்பது இதன் கருத்து. கலைவளமும் பொருள்வளமும் பெருக்குதலில் உலைவிலா முயற்சி கொண்டு பீடுற்றுப் பிறங்கும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் இந்நாட்டின் தென்பகுதியிற் பல்கியிருக்கின்றனர். இந்நாட்டில் இன்னும் கலையும் பொருளும் கைகோத்துக் களிநடம் புரிகின்றன. இந்நாடு பரசும் தமிழரசு பல்லாண்டு வாழும் பரிசு தமிழ்த்தாயை வேண்டிக்கொண்டு மேற்செல்வாம். இப்புதுக்கோட்டைத் தனியரசு ஆயிரத்து நூற்றெழுபத் தெட்டுச் சதுரமைல் பரப்புள்ளது. இதன் கிழக்கு மேற்கு ஐம்பத்திரண்டு மைலும், வடக்குத் தெற்கு நாற்பத்தொருமைலும் நீளமாம். சென்னை மாநில அரசியலோடு தொடர்புடையவற்றுள் இது மூன்றாவது தனியரசாக வரிசை பெற்றுள்ளது. ஆட்சிமுறைபற்றி இது மூன்று சிறு நாடுகளாக (தாலூகாக்களாக வகுக்கப் பெற்றுள்ளது. அவை குளத்தூர், ஆலங்குடி, திருமயம் என்பனவாம். இத்தனியரசின் தலைநகரமாகிய புதுக்கோட்டை ஆலங்குடி நாட்டில் இருக்கிறது. ஆலங்குடி முந்நூற்று நாற்பத்தேழு சதுர மைலும், குளத்தூர் நானூற்றறுபத்தைந்து சதுர மைலும், திருமயம் முந்நூற்றறுபத்தாறு சதுர மைலும் தனித்தனியே பரப்புடையன. இந்த நாட்டில் இந்நாளில் ஐந்து லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களுள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை ஏறக்குறைய ஐம்பத்து மூவாயிரத்துக்கு மேல் இல்லை. படித்த மகளிரின் தொகை நாலாயிரத்தைந் நூறுக்குமேல் இராது. சுருங்கச் சொல்லின் படித்தவர் நூற்றுக்குப் பதினொருவருக்குமேல் இத்தனியரசிலும் இலர் என்று காணலாம். இது காண்பவர் தமிழர் தனியரசிலும் கல்விநிலை உயராதுபோலும் என்று எண்ணுதல் கூடாது. சூழவிருக்கும் நாட்டின் அரசியற் சூழல் இதன்கண் வந்து தாக்குமேன்பதை நினைவு கூர்ந்தால் அங்ஙனம் எண்ணுதற்கு இடமில்லையாம். இந்நாட்டின் தென்பகுதியில் வாழும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் எனப்படும் நகரத்தார்கள் தென்னிந்தியப் பெரு நிலப்பகுதி முற்றுமன்றி, ஈழநாடு கடாரநாடு சாவகநாடு முதலிய பல நாடுகட்கும் கலத்திற் சென்று பெரும் பொருளீட்டி வந்து பெருஞ்செல்வ வாழ்வு வாழ்பவராவர். இவர்கள் கழிந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள பெருங்கோயில்கள் பலவற்றிற்குப் பல கோடிக் கணக்கான பொன்னைச் செலவழித்துத் திருப்பணி செய் துள்ளனர். அவர்கட்கு மட்டில் அப்போதே நாட்டு மக்கட்கு நல்லறிவு வழங்குவதாகில் கல்வித் தொண்டின் பெருநலத்தை அறிவுடையோர் அறிவித் திருப்பின், அத்தொகையில் பெரும்பகுதி கல்வித் துறையில் சென்று அறிவுப்பயனை நாட்டு மக்கட்கு விளைத்திருக்கும்! அவர்கள் செய்த திருப்பணியின் விளைபயனும் மிக்க சிறப்புடன் விளக்க மெய்தியிருக்கும்! மக்களென்பார் நடமாடுங் கோயில்கள்; நடமாடாக் கோயில்கட்குச் செய்யும் திருப் பணியிலும் நடமாடுங் கோயில்கட்குச் செய்யும் திருப்பணி நாட்டிற்குப் பெருநலத்தைச் செய்யும்; அப்பெருநலம் நடமாடாக் கோயில்களையும் நன்னிலையில் வைத்து மாண்புறுவிக்கும் என்ற இக்கருத்தை முன்பே அப்பெரு மக்கட்கு வழங்குவோர், இலரானது தமிழகத்திற்கு இடைக் காலத்தில் நேர்ந்த கேடுகளுள் ஒன்று. ஆயிரத் தைந்நூற்றாண்டு கட்கு முன்னர் வாழ்ந்தவரான திருமூல ரென்னும் சான்றோர் மக்களை "நடமாடுங் கோயில்கள்" என்றும், "ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே" என்றும் அறிவுறுத் தினார். ஆயினும் அக்கருத்துக்கள், தமிழ்க்கல்வி நாட்டவரிடையே முதன்மை இழந்ததனால் மறைந்துபோயின. நூலளவில் இருந்து வேறு செயல் கட்கு மேற்கொள்ளப்படுவவாயின. இத்தனித் தமிழ் நாட்டிலும் இன்றும் ஆண்மக்கள் பெண் மக்களைவிடத் தொகையில் குறைந்தே இருக்கின்றனர். இரண்டாயிர மாண்டுகட்கு முன்புண்டான குறைவு இன்னும் நிறைவாகவே இல்லை. அக்குறைவை நிறைவாகாவாறு செய்யும் போரும் ஒழியவே இல்லை. நிலவுலக முழுதும் இக்குறை இப்போது உண்டாய்விட்டது. மக்களுலகு இதற்கான முறை காண்பதற்கு முயன்றுகொண்டே யிருக்கிறது. இனி இதற்கு வேறு காரணமும் 1921- ம் ஆண்டில் மக்கள் தொகையினைக் கணக்கெடுத்த J.J.மார்ட்டின் என்பவராற் கூறப்படுகிறது. “1877 -ஆம் ஆண்டில் இந்நாட்டில் உண்டாகிய பெருவறத் தால்1 ஆண்மக்கள் மிகுதியாக இறந்தனர்; ஆடவரினும் மகளிருடைய உடற்கூறு பசியைப் பொறுத்தலில் ஆற்றலுடைய தாதலின், மகளிர் தொகை மிகுவதாயிற் றென்றும், “மங்கோலியர் திராவிடரினத்து உடன்மை மிக்குள்ள மக்களிடையே பெண் பிறப்பு மிகுதியுமுண்டு” என்றும் கூறினர். இத்தனியரசின் சார்பாக மக்கட் கணக்கெடுத்த அரசியல் அலுவலாளர், “இக்கணக்கை யெடுத்துப் பெண் மக்களின் தொகை மிகுதிக் கேதுவாவனவற்றை ஆராய்வதற்கு வேண்டும் விரிவான வசதிகளில்லை” என்றும், “கிடைத்துள்ள கருவிகளும் இவ்வாராய்ச்சிக்குத் துணை செய்யக்கூடிய அவ்வளவிலும் இல்லை” யென்றும் குறிக்கின்றார். இந்நாட்டின் மேலைப் பகுதி மலையும் குன்றுகளும் நிறைந் திருக்கிறது. குன்றாற்று மலை, (குன்னாத்து மலை) விராலி மலை, ஆளுருட்டி மலை அன்னவாசல் மலை, குடுமியா மலை, கான் சாத்துமலை யென்பனவாகும். இந்நாட்டின் தென் மேலெல்லையில் பிரான் மலை நின்று இதனையும் இராமநாதபுர மாநாட்டையும் பிரிக்கின்றது. இவற்றுள் விராலிமலைக்குத் தெற்கிலுள்ள கொடும் பாளூர்க் குன்றினை முதுகுன்ற மென்றும், குடுமியான் மலையை நற்குன்ற மென்றும், பிரான் மலையைக் கொடுங்குன்ற மென்றும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இந்நாட்டின் இடையிடையே காடுகளும் உள்ளன. அவற்றின் பரப்பு நூற்று நாற்பது சதுர மைல் எனக் கணக்கிட்டுள்ளனர். இக் காடுகளில் மான், காட்டுப் பன்றி, முயல் முதலிய விலங்குகள் வாழ்கின்றன. காடுகள், மழைவளத்துக்கும் பொருள் வருவாய்க்கும், ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கும் ஆக்க மாதல் பற்றி, இத்தனியாரசு இவற்றைப் பேணிப் புரந்து வருகிறது. இப் புதுக்கோட்டை வளநாட்டில் நாம் குறிக்கத் தக்க வகையில் பல காட்டாறுகள் உள்ளன. இவற்றுள் வெள்ளாறும் பாம்பாறும் சிறப்புடையவாகும். இந்நாட்டின் மேற்கேயுள்ள மருங்காபுரி நாட்டு வேழமலையில் தோன்றி, இந்நாட்டின் குறுக்கே கிழக்கு நோக்கி யோடி மணமேற்குடிக்கருகே கடலில் கலந்து விடுவது வெள்ளாறு. இதனால் இந்நாட்டின் குளத்தூர் நாடும் ஆலங்குடி நாடும் திருமய நாட்டினின்றும் பிரிக்கப்படு கின்றன. பாம்பாறு திருமய நாட்டு மேலூர்ப் பகுதியைச் சார்ந்த பெருந்துறைக் குளத்தின் வழிகாலாய்த் தோன்றி இந்நாட்டின் தென்கிழக்கை நோக்கிச் சென்று அறந்தாங்கிக் கருகே வெள்ளாற் றோடு கலந்து ஒன்றாகி, சிறிது தூரம் சென்று மறுபடியும் பிரிந்து தென்கிழக்காக ஓடி ஐந்து கிளைகளாகப் பிரிந்து கடலையடை கின்றது. ஏனையவை குண்டாறு, அஞ்ஞானவிமோசனி, உய்யக் கொண்டான் அம்புலி, கோரையாறு, மணிமுத்தாநதி யென்பன வாகும். இவற்றுள் குண்டாறு கவிநாட்டுக் குளத்திற்றோன்றிச் சென்று கடையக்குடிக் கருகில் வெள்ளாற்றில் கலந்து விடுகிறது; அஞ்ஞானவி மோசனியாகிய அக்கினி யாறு குளத்தூர்க் குளத்திற்றோன்றிப் பெருங்களூர், மலையூர், கடம்பக்குடி என்ற ஊர்களின் வழியாய் ஓடித் தஞ்சை மாநாட்டு அதிராம் பட்டினத்துக்குத் தென்மேற்கில் கடலில் கலந்து விடுகிறது. உய்யக் கொண்டானாறு தஞ்சை மாநாட்டு வல்லத்துக்கு மேற்கிற் பிறந்து, ஆலங்குடி நாட்டில் விரைந்தோடித் தஞ்சை நாட்டில் சாந்தா கோட்டைக் கருகில் அக்கினியாற்றோடு கூடிக்கொள்கிறது. அம்புலியாறு மஞ்சன்விடுதி குளத்திற்றோன்றி ஆலங்குடி, வடக்காடு முதலிய ஊர் வழியே சென்று, சுலோசனா பாய் சத்திரத்தருகில் கடலோடு கலக்கிறது. கோரையாறு விராலி மலைநாட்டிலுள்ளதோ ரேரியிற்றோன்றி, இராசகிரிக்கு மேற்கிலும் கடலூர்க்குக் கிழக்கிலுமாக ஓடி, திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கே மூன்றுமைல் தொலைவில் உய்யக் கொண்டானாற்றோடு கலந்து கொள்கிறது. மணிமுத்தா நதி மதுரைமாநாட்டுச் சிறுமலைப் பகுதியிற் பிறந்து, திருமயநாட்டுத் திருக்களம்பூர் வழியாயோடிச் சிவ கங்கையைச் சார்ந்த திருப்புத்தூர் நாட்டிலுள்ள நெய்க் குப்பைக் கண்மாயில் வீழ்கிறது. இப்புதுக்கோட்டையரசியலின் 1934-35 ஆண்டின் கணக்குப்படி, இந்நாட்டு விளை நிலப்பரப்பு ஏழு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ஏக்கர்; இவற்றுள், கைப்பற்றான பகுதி நான்கு லட்சத்து அறுபத் தொன்பதாயிரம் ஏக்கர்; புறம்போக்காய் ஆடு மாடுகளின் மேய்ச்சற்கமைந்த வீடு நிலம் இரண்டு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ஏக்கர். 1934-35 ஆண்டில் பயிர் செய்யப் பட்ட நிலப்பகுதி நான்கு லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் ஏக்கர் இவற்றுள் இறையிலி இலஷத்து முப்பத்தெண்ணாயிரம் ஏக்கர். எஞ்சிய முப்பத்தொரு லட்ச ஏக்கரிலிருந்து அரசியற்கு வருவாய், 1936-37-ஆம் ஆண்டுக் கணக்கின்படி ஒன்பது லட்சத்து நாற்பத்தெண்ணாயிர ரூபா; காடுகளிலிருந்து வருவாய் முப்பத்தெண்ணாயிரத்து ஐந்நூறு ரூபா. இவற்றின் செம்மை நிலைக்காக இத்தனியரசு விளைபுல வகைக்கு ரூபா லட்சத்துத் தொண்ணூறாயிரமும், காடுகளின் செம்மைநிலை பொருட்டு ரூபா பதினொன்பதாயிரமும் செலவு செய்துள்ளது. நீர் வளங் குறித்து ரூபா எழுபத்திரண்டாயிரமும், கல்விப்பொருட்டு ரூபா இரு லட்சத் தறுபத்தோராயிரமும், மருத்துவ வசதிக்கா ரூபா லட்சத் திருபத்தையாயிரமும் செலவழித்திருக்கிறது. 1945 -46- ஆம் ஆண்டுக் கணக்குப்படி இவ்வரசின் பொது வருவாய் ரூபா இருபத்தொரு லட்சம். இதிலிருந்து நிலவள நீர்வளம் குறித்து ரூபா இருலட்சத்தறுபத் தீராயிரமும், மக்களின் உடல்வளம் உயிர்வளங் கருதி ரூபா மூன்று லட்சத்தெண்பத் தையாயிரமும் செலவு செய்யப் பட்டுளது. இக் குறிப்புக்களையே சுருக்கமாக நோக்கின், நில நீர்வளம் பற்றிச் சிறிதேறக்குறைய நூற்றக்கு எட்டு ரூபாவும், மக்கள் உடலுயிர் வளம்பற்றி நூற்றுக்குப் பதினெட்டு ரூபாவும், செலவாற்றி இத்தனியரசு மேம்படுவதைக் காணலாம். உயிர் வளம் கல்வி யாதலின், கல்வியை உயிர்வளமென்றும், உடல் வளத்துக்கு மருந்து துணை செய்தலின் அதனை உடல்வளமென்றும் கூறினாம். இதுகாறும் கூறியது கோனாடான புதுக்கோட்டைத் தனியரசு நாட்டின் இற்றைக்கால நிலை. இத் தனியரசின் இற்றைக் காட்சி கிறித்து முறை பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வளர்ந்து போந்த சிறப்புக் காட்சியாகும். இன்று அரசு புரிந்தருளும் வேந்தர் பிரானது மரபுமுறை பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்நாட்டிற் காணப்படுகிறது. இவர்கள், சங்கவிலக்கிய காலத்தில் வாழ்ந்த மாமூலனார் முதலிய சான்றோர்களாற் பாராட்டப் பெற்றவனும், தமிழகத்தின் வடவெல்லையாகிய, வட வேங்கடத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவனுமாகிய “கழல்புனை திருந்தடிக் கள்ளர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி” என்ற வள்ளலின் வழிவந்தோர் என ஆராய்ச்சியாளர் கருதுவர். வேங்கடம் தொண்டை நாட்டைச் சேர்ந்ததாகலின், தென்னாட்டில் இவர்கள் தொண்டைமான்கள் என்ற பெயரால் விளங்கினர். இச்சங்ககாலத்து இந்நாட்டின் நிலை காணுமுன் இடைக் காலத்தே இந்நாடிருந்த நிலையினை ஈண்டுச் சிறிது காண்பது முறையாகிறது. இடைக்காலத்தைக் கல்வெட்டுக் காலமென்றும் கூறலாம். இக்காலத்தே நம் நாட்டில் கோயில்கள் எழுந்துவிட்டன. பெருங்கோயில்களே எழுபது இருந்தனவென ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் குறிக்கின்றார். ஏனை மாடக்கோயில்களும் பிறவுமாக தொகுத்து நோக்கின், சிவன் கோயில்கள் மட்டில் இருநூற்றுக்குக் குறைவில்லை. இக்கோயில்களோடு தொடர்புடைய செய்திகள் மட்டில் கோயிற்சுவர்களிலும் பிறவற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றின் வேறாக ஆங்காங்குக் காணப்பட்ட செப்பேடுகள் சிலவாகும். கல்லிற் காணப்பட்டவை கல்வெட்டுக்கள். இடைக்கால வரலாறு முற்றும் பெரும்பான்மைக் கல்வெட்டுக் களையும் சிறுபாண்மை செப்பேடுகளையும் இலக்கியங்களையும் அடிப்படையாகக்கொண்டு காணப்படுவது பற்றி, இக் காலத்தைக் கல்வெட்டுக் காலமென்று குறித்தாம். இக்காலம் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்பே தொடங்கியது. எனினும், ஓரளவு விரியத் தெரிந்துகொள்ளும் முறையில் அமைந்த கல்வெட்டுக்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தே கிடைத்துள்ளன. நம் கோனாடாகிய புதுக்கோட்டையரசில் இரண்டாயிரமாண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டொன்றும், ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் இருந்த பல்லவர் கல்வெட்டுக்கள் சிலவும், சோழரும் பாண்டியரும் பிறருமாகிய இடைக்கால வேந்தர் கல்வெட்டுக்கள் நூற்றறுபதுக்குக் குறையாமலும் கிடைக்கப் பெற்றுள்ளோம். அவற்றை அழகிய முறையில் அச்சிட்டு நம் புதுக்கோட்டைத் தனியரசு வழங்கியுள்ளது. அவற்றின் துணையால் கோனாட்டின் இடைக்கால நிலையை ஓரளவு நாம் அறிதல்கூடும். இந்த இடைக்காலத்தின் பரப்பு கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்கும் பதினேழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதி யென்று மேற்கோடல் சிறப்பு. இக்கோனாட்டின் பரப்பும் இப்போதுள்ள குளத்தூர் நாடு, திருமயம் நாடு என்ற இரண்டின் மேலைப் பகுதியாகும். தென்னெல்லை திருமயம் நாட்டுக் கொன்றையூர், செவலூர் என்ற ஊர்களைக் கொண்டிருந்தது. கிழக்கெல்லை வெள்ளாற்றின் இருகரைமருங்கும் உள்ள பகுதியை மேற்கொண்டு சென்று அறந்தாங்கியையும் தன்னகப்படுத்திக் கொண்டிருந்தது. வெள்ளாற்றின் இருகரைப் பகுதியும் கீழ் கோனாடென்றும், அறந் தாங்கியை யுள்ளிட்ட பகுதி இளங்கோனாடு என்றும் விளங்கின. கீழ் கோனாட்டுக்கு இரண்டு கரை நாடு என்றும் பெயருண்டு (P.S. Ins.565,573,611) இக்கோனாட்டின் குறுக்கே வெள்ளாறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறதென்று முன்பே கூறினோம். வெள்ளாற்றின் வட பகுதிக்கு வடகோனாடு என்றும் தென் பகுதிக்குத் தென்கோனா டென்றும் பெயருண்டாவது இயல்பு. இருபகுதியோடு கீழ் கோனாட்டையும் இளங்கோனாட்டையும் சேரவைத்து நோக்கினால், கோனாடு. வடகோனாடு, தென்கோனாடு, கீழ்கோனாடு, இளங் கோனாடு என நால்வகைத்தாய்ப் பிரிவுற்று விளங்குவது புலனாகும். ஆயினும், கோனாடு என்றவழி இந்நான்கும் அடங்குமாயினும், சிறப்பாக வடகோனாடும் தென்கோனாடு மென்ற இரண்டும் சேர்ந்த பகுதியே கொள்ளப்படுவது இயல்பாயிற்று. இடைக்காலத்தே அரசியலும் அம்முறையே கருதி ஆட்சிமுறை செய்து வந்தது. இடைக்காலத்தே சோழரும் பாண்டியரும் பிறரும் போந்து தங்கள் ஆட்சியைப் பரப்புவதன் முன் பல்லவ வேந்தர் ஆட்சியும் இதன்கண் நடைபெற்றது. அவர்கள் செய்த ஆட்சிக் குறிப்பை விளக்குவதற்கு வேண்டும் குறிகளும் அடையாளங்களும் கிடைத்தில. கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டிலேயே அவர்கள் தமிழகத்துக்கு வந்து காவிரிப் பூம்பட்டினம் முதலிய இடங்களில் சிவனுக்குக் கோயிலெடுத்திருந்தனர். இதனை ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் குறித்திருக்கின்றனர். அங்ஙனமிருந்தும், இக்கோனாட்டில் தங்கள் ஆட்சியைப் பரப்பிய பல்லவ வேந்தரைத் தெரிந்து கோடற்கு வழியில்லை. இக்கோனாட்டைக் குறுக்கே பிளந்துகொண்டோடும் வெள்ளாறு பாண்டி நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் எல்லை யென்பது வழி வழியாக வரும் செய்தி. இவ்வாற்றின் இருகரையிலும் உள்ள ஊர்வாழ்பவர் வழிவழியாகக் கூறிவரும் வழக்காற்றுச் செய்திகளும் இவ்வெல்லை நிலையை வற்புறுத்துகின்றன. இவ்விரு கரையிலும் படர்ந்திருக்கும் இக்கோனாட்டில் சோழ பாண்டியரிரு வரும் உரிமை கொண்டாடியிருப்பரன்றோ? அதனால் இது காலந் தோறும் சோழர்க்கும் பாண்டியர்க்கும் கைம்மாறியிருக்கும் எனக் கருதுவது தவறாகாது. வேற்று நாட்டவரான பல்லவர்களுக்கு இந் நாட்டிடத்தே சிறப்பாகக் கருத்தூன்றுவதற்கு இயைபு தோன்ற வில்லை. பல்லவராட்சி யொடுங்க, பண்டேபோல் சோழ பாண்டியர் தோன்றி நம் தமிழகத்தை ஆளத் தொடங்கி ஆட்சி நடத்திய காலம் இந்த இடைக் காலம். சோழ வேந்தர் பலர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றி இந்நாட்டையும் தங்கள் சோழ நாட்டோடு சேர்த்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் பெயர், ஆட்சி செலுத்திய காலம் முதலிய கூறுகளை அறிதற்கு, இப்போது கிடைத்திருக்கும் கல்வெட்டுக்கள் துணையாகவில்லை. பத்தாம் நூற்றாண்டின் இடையில் விளங்கிய சுந்தர சோழன் காலத்தில், அவன் பெயரால் சுந்தர சோழபுரம் என்றோரூர் தென் கோனாட்டில் தோன்றியிருந்தது. கொடும்பாளூரிலுள்ள கல்வெட்டொன்று (82) இவன் பெயரைக் குறிப்பதொன்று தவிரப் பிறிதியாதும் தெரியாவகையில் சிதைந் துள்ளது. இவற்குப் பின் தோன்றிச் சோழர் குடியின் பெருமாண் பினை நிலை நாட்டி நிலவுலகு முற்றும் இன்றும் பாராட்டிப் பரவத்தக்க பெரும் புகழ் நிறுவிய முதல் இராசராசன் முதலிய சோழ வேந்தர் கல்வெட்டுக்கள் அறுபத்திரண்டுக்குக் குறையாமல் உள்ளன. இக்கோனாடு, பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரையும் சங்க இலக்கிய காலத்தில் தான் கொண்டிருந்த இப்பெயர் வகையில் வேறுபாடு பெறாமலே இருந்தது. பதினோராம் நூற்றாண்டில் கோவிராசகேசரி வன்மனான முதல் இராசராசன் அரசுகட்டி லேறிய மூன்றாமண்டில் கேரள நாட்டை வென்று கேரளாந்தகன் என்ற சிறப்புற்றான். அடுத்த சில ஆண்டுகளில் சோழ நாட்டின் எல்லையாக விளங்கும் கோனாட்டை வலியுறுத்திக் கேரளாந்தக வளநாடென்று பெயரிட்டான். அவனுடைய ஐந்தாமாண்டுக் கல்வெட்டொன்று இக்கோனாட்டிலுள்ள சிற்றையூரைக் குறிக்கலுற்றபோது, கோனாட்டுக் கூடலூர் நாட்டுச் சிற்றையூர் (83) என்று குறிக்கிறது; அதே ஊரில் அவனுடைய அரசியலிருபத்தி ரண்டாவதாண்டில் பிறந்த கல்வெட்டு, இதனைக் கேரளாந்தக நாடென்று (86) கூறுகிறது. இவனுக்குப் பின் வந்த இவன் வழித்தோன்றல்கள் இவனுடைய வென்றிச் செயல்களையே விதந்து, “கோனாடான இரட்டபாடிகொண்ட சோழவளநாடு” என்றும், “கோனாடான கடலடையாது இலங்கை கொண்ட சோழவள நாடென்றும்” பெயரிட்டு மேம்பட்டனர். இரட்டபாடி கொண்ட சோழவள நாடென்ற பெயரால் பதினான்கு கல் வெட்டுக்களுக்கும், கடலடையா திலங்கை கொண்ட சோழ வள நாடென்ற பெயரால் இருபத்துநான்கு கல்வெட்டுக் களுக்கும் குறைவில்லை. இடைக்காலத்திற் பாண்டி வேந்தர்களும் இக் கோனாட்டைக் கைப்பற்றியதுண்டு, அவர்களுடைய கல்வெட்டுக்கள் எண்பதுக்கு மேலிருக்கின்றன. அவர்களில் ஒருவருக்கும் இப்பெயர்களை மாற்றவோ வேறொன்று படைக்கவோ உரிமை இருந்திருப்பதாக விளங்கவில்லை. இருந்திருப்பின், அவர்கள் செய்திருப்பர். அவர்கள் அவ்வாறு செய்ததாகக் குறிக்கும் கல்வெட்டொன்றும் இந் நாட்டில் இதுகாறும் கிடைத்திலது. பின் வந்த ஹொய்சல வேந்தர்களும், முகமதிய மன்னர்களும், வாணாதிராயர்களும், விசயநகர வேந்தர்களும் பாண்டியர்போலத் தமக்கு முன்னிருந்தோர் இட்டிருந்த பெயரை மாற்றவே இல்லை. பின் வந்தோர் அனைவராலும் மேற்கொள்ளப் பட்டிருந்த பெயர், பின்னே தோன்றிய “கோனாடான கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாடு ” என்பதேயாகும். சோழவேந்தர் காலத்தே தொடக்கத்தில் இக்கோனாடு, வடகோனாடு தென்கோனாடென இருபகுதியாய் இருந்த தாயினும், தன்னகத்தே சிறு நாடுகளைக் கொண்டிருந்தது. குன்று சூழ்நாடு, உறத்தூர் நாடு, அண்ணல் வாயில்நாடு, வயலகநாடு, கூடலூர் நாடு, ஒல்லையூர் நாடு என ஆறு அகநாடுகள் இருந்தன. இவை அரசியல் நெறிக்கும் உரிய பிரிவுகள். ஏனை வடகோனாடு, தென்கோனாடு, இரண்டு கரை நாடு என்பன வழக்காற்றில் இயன்றன. இந்த அகநாடுகளுள் சில கூற்றமென்ற பெயரால் வழங்கின. உறத்தூர், அண்ணல் வாயில், ஒல்லையூர் என்ற அகநாடுகள் உறத்தூர்க் கூற்றம், அண்ணல்வாயில் கூற்றம், ஒல்லையூர்க் கூற்றம் என்றே குறிக்கப்பெறும். இரட்டபாடி கொண்ட சோழவள நாடென்ற பெயர் வழங்கிய காலத்தில் கீழ் கோனாடு உறத்தூர்க் கூற்றத்தில் சேர்ந்தது. குன்றுசூழ் நாடும் வயலகநாடும் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உறத்தூர்க் கூற்றத்தில் சேர்ந்திருப்பதை அக்காலத்துக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. பின்னர்க் கூடலூர் நாடு ஒல்லையூர்க் கூற்றத்தைச் சேர்வதாயிற்று. முடிவில் “கோனாடான கடலடையா திலங்கை கொண்ட சோழ வளநாடு,” வெள்ளாற்றின் வடபகுதி உறத்தூர்க் கூற்றமென்றும், தென்பகுதி ஒல்லையூர்க் கூற்றமென்றும் பிரிந் தியலுவதாயிற்று. தொண்டைமான்களின் காலத்தில் இக்கோனாட் டோடு இதன் கிழக்கிலிருந்த தென்கவிர் நாட்டுப் பகுதியும், இராசராச வளநாட்டுப் புன்றிற் கூற்றமும், தென் கிழக்கில் விருதராச பயங்கர வளநாட்டுப் பகுதியும், தெற்கில் கேரளசிங்க வளநாட்டுப் பகுதியும் வந்து சேர, இன்றைய புதுக்கோட்டைத் தனியரசுநாடு தோன்றுவ தாயிற்று. அன்று உறத்தூர்க் கூற்றத்தையும் ஒல்லையூர்க் கூற்றத்தையும் எல்லையாய் நின்று பிரித்த வெள்ளாறு, இன்று குளத்தூர் ஆலங்குடி நாடுகளையும், திருமயம் நாட்டையும் எல்லையாய் நின்று பிரிப்பது வரலாற்றோடியைந்திருப்பது குறிக்கத்தக்க தொன்றாம். உறத்தூர்க் கூற்றத்தில் கல்வெட்டுக்காலத்தில் திரு நலக்குன்றம், புன்னங்குடி, சிகரநல்லூர், பரம்பையூர், கொடும்பாளூர், நீர்ப்பழனி, திருவிறையான்குடி, பையூர், உறத்தூர், ஆலத்தூர், பேராம்பூர், கீழைக்குறிச்சி, தெலுங்க குலகாலபுரம், கூழைக்குளத்தூர், வயலகம், புல்வயல் முதலியன சிறப்புடைய ஊர்கள். ஒல்லையூர்க்கூற்றத்தில், ஒல்லையூர், சாத்தனூர், காரையூர், சிற்றையூர், மேலைத்தணியம், கீழைத்தணியம், இடையாற்றூர், சுந்தரசோழபுரம், காமனூர், சமமங்கநல்லூர், சீரகநல்லூர், மணநல்லூர், கொன்றையூர் முதலிய ஊர்கள் சிறப்புற்றிருந்தன. ஒல்லையூர்க் கூற்றத்தின் தென்னெல்லை கொன்றையூர் செவ்வலூர் வரையில் பரவியிருந்தது. பாப்பாகுறிச்சி, எறிச்சிலூர் முதலியன கீழ்கோனாட்டில் விளங்கியிருந்தன. இன்றே போல் பண்டும் அறந்தாங்கி சிறப்புற்றிருந்தது. இனி, இக்கோனாட்டின் பரப்பு இருபத்துநான்கு காத வட்டகையென்று குடுமியாமலைக் கல்வெட்டொன்று (285) கூறுகிறது. இதன்கண் பார்ப்பார் முதல் பள்ளர் பறையர் ஈறாகப் பல வேறு மரபினர் வாழ்ந்திருந்தனர். சங்க விலக்கியத்திற் காணப்படும் புலவர், கூத்தர் முதலிய பலரும் இருந்தனர். கோயில்களில் பணிபுரியும் சிவப்பிராமணர்களும், பட்டர்களும் கணக்கர்களும் உண்டு. தேவரடியார்கள் பலர் கோயில்களில் சேவகம் புரிந்தனர். காடுகொன்று நாடாக்குதல், குளந்தொட்டு வளம் பெருக்குதல், ஊர்களில் வாணிகஞ் செய்தல் முதலியன ஆங்காங்கு நடந்துவந்தன. வேற்று நாட்டவரது பகைமையால் தீங்குண்டாகா வாறு காப்பதும், நாட்டகத்தேயுள்ள சிறு நாடுகட்கு இடையே நிகழ வேண்டிய பொதுச் செயல்களைப் புறம் தருவதும் பெருவேந்தர் கடன். நாட்டகத்தே வாழும் மக்கட்கு அவ்வப்போது வேண்டும் நலங்களை யறிந்து அவற்றை யமைத்துக் கொள்ளற்கு வேண்டிய முழுவுரிமையும் ஊரவர்க்கு இருந்தது. அதனால் ஒவ்வோரூராரும் தமக்கு வேண்டியவற்றை ஒருங்கு கூடிச்சூழ்ந்து கொள்வர். பலவூரண் ஒருங்குகூடி நாட்டுக்குரியவற்றை ஆராய்ந்து முடிவு செய்வர்; பல நாடுகட்கு வேண்டியவற்றை வேந்தர் அறிந்து செய்வர். இக்கோனாட்டின் தலைநகர் கொடும்பாளூர். ஊர்க்குப் பொதுவான கோயில், குளம், இவற்றைச் சார்ந்த நிலம் மக்கட் சமுதாயம் ஆகிய இவற்றையும் இவற்றின் சார்பாக நிகழும் செயல்வகைகளையும் ஊரவரே செம்மையுற முறைசெய்து கொண்டனர். கோயில்கட்குத் திருப்பணி செய்வதாயினும், நிலம் விடுவதாயினும் இவற்றிற்குரிய நிலத்தைப் பண்படுத்துவதாயினும் ஊர்களின் பொது வாழ்க்கையோடு இயைபுடைய வேறு எது நிகழ்வதாயினும் ஊரவர் ஒன்று கூடியே ஏற்பாடு செய்வர். இக்கோனாட்டுக் குன்றுசூழ்நாட்டு ஊர்களில் ஒன்றான மேல் மணநல்லூரில் விக்கிரம சோழீச்சுரம் என்றொரு கோயில் உண்டு. அதற்குத் திருப்பணி செய்ய வேண்டிய நிலையுண்டாக ஊரவர் ஒன்றுகூடி, அக்கோயிற்குரிய குடிக்காடுகளில் ஒன்றை விற்று அதனைச் செய்வதெனக் கருதினர். அக்காலை அயலூரான சிகரநல்லூர்ச் செல்வர்களில் வேளான் கோதண்டன் என்பவன் அக்குடிக் காட்டை விலைக்குப் பெற்று அதனைச் செய்தான். இதனை, குடுமியாமலையில் உள்ளதொரு கல்வெட்டு, “திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராச தேவர்க்கு யாண்டுஇருவது: இரட்ட பாடிகொண்ட சோழவள நாட்டுக் குன்றுசூழ் நாட்டு மேல் மணநல்லூர் ஊராக இசைந்த ஊரோம்; எங்களூரில் வடக்கில் குடிக்காடு விலைக்குறவிற்கக் ‘கொள்வீர் உளிரோ?’ என்று கூற, இம்மொழி கேட்டு இந்நாட்டுச் சிகரநல்லூரில் வேளான் கோதண்டன் மேல்மணநல்லூரில் விக்கிரம சோழீச்சுரமுடைய மகாதேவர்க்குத் தேவகன்மி கொள்வேன் என்று பிற்கூற, முற்கூரிய ஊராய் இசைந்த ஊரோம் நாங்கள் விற்கிற குடிக்காட்டுக்குப் பெருநான்கெல்லையாவது: கீழ்பாற்கெல்லை தோட்டங்களுக்கு நாட்டின திருச்சூலக் கல்லுக்கு மேற்கும், தென்பாற் கெல்லை களருக்கு நாட்டின திருச்சூலக் கல்லுக்கு வடக்கும்; மேல்பாற் கெல்லை குளத்துக்கு நீர்க் கோவைக்குக் கிழக்கும், வடபாற் கெல்லை தோட்டங்களுக்கு நாட்டின திருச்சூலக்கல்லுக்குத் தெற்கும் ஆக இசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு 25 இக்காசு இருபத்தைந்தும் கொண்டு இக்குடிக் காட்டெல்லையுள் அகப்பட்ட நிலத்தால் வந்த இறையும் மற்றும் எப்பேர்ப்பட்ட குடிமையும் நாங்களே கோமன்னவர்க்குப் போக்கறுக்கக் கடவோமாகவும்......” (P.S.Ins 190) என்று கூறுவதனால் அறியலாம். ஒருகால், குடுமியாமலையில் உள்ள சிவன்கோயிற்குத் திருப்பணி செய்யவேண்டிய நிலையுண்டாக, அதற்கு அவ்வூரும், ஊரமைந்த வடகோனாடும் ஒன்று சேர்ந்து செய்யினும் ஆற்றாத அளவினதாயிற்று அத்திருப்பணி. கோனாட்டவர் அனைவரும் ஒன்றுகூடிச் செய்யவேண்டியவராயினர். அதற்கு வேண்டும் பொருள் குறித்துக் காணியாளர் முதலிய பலருக்கும் ஒரு வரிமுறை வகுத்துக்கொண்டனர். இதனை, “கோமாறவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்குயாண்டு 13-வது மகர ஞாயிற்றுப் பூருவபஷத்துத் திரையோதசியும் திங்கட்கிழமையும் பெற்ற திருவோணத்துநாள்: கோனாடான கடலடையாது இலங்கை கொண்ட சோழவளநாட்டு நாடும் நகரமும் கிராமங்களும் வன்னியர்களும் படைப்பற்றுக்களும், உடையார் திருநலக்குன்ற முடையநாயனார் கோயிலில் காங்கேயராயன் திருமண்டபத்திலே இவ்வனைவரோமும் நிறைவுற நினைந்து குறைவறக் கூடி எங்களில் அமைந்து, உடையார் திருநலக்குன்ற முடைய நாயனார் கோயிலில் ஸ்ரீருத்திர ஸ்ரீமாகேசுரர் ஸ்ரீகாரியம், தேவகன்மி, கோயில் கணக்கர் இவ்வனைவர்க்கும் பிடிபாட்டுச் சாசனம் பண்ணிக்கொடுத்த பரிசாவது; உடையார் திருநலக்குன்ற முடைய நாயனார் கோயிலில் திருப்பணிக்கு இக்கோனாடு இருபத்து நாற்காத வட்டகையும் ஊர்வழிதோறும் காணியாளராயிருக்கும் பிராமணர்.... செட்டிகள், வேளாளர் இப்படியுள்ள பேருக்கு ஆண்டொன்றுக்குப் பேரொன்றுக்குப் பணம் அரையும், இளமையார்க்குப் பேரொன்றுக்குப் பணம் காலும், படைப்பற்றுக்களுக்குப் பேரொன்றுக்குப் பணம்காலும், தண்டிகளுக்கும் மற்றும் உள்ள குடிமக்களுக்கும் பேரொன்றுக்குப் பணம் அரைக்காலும், பறையர் பள்ளர் பேரொன்றுக்குப் பணம் அரைக்காலும், இப்படியால்வந்த பணம் ஊர்வழிதோறும் வந்து தானத்தாரும் வயிராகியும் ஆண்டுகடோறும் தண்டித் திருப்பணி செய்விப்பார்களாகவும்; தண்டுமிடத்துக் கொடாதபேரிடத்தில் வெண்கலமேடுத்தும் மண்கலம் தகர்த்தும் கொள்ளக் கடவார் களாகவும்; இதற்கு வேறொரு ஏற்றச் சுருக்கஞ் சொன்னாருண்டாயின், நாட்டுத் துரோகி சிவத்துரோகி பட்டதும்பட்டு, இதனால்...... உள்ளதுவும் இவனுக்கே பரமவதாகவும், இப்படி எங்களில் இசைந்து உடையார் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கு இப்படிப் பிடிபாட்டுச் சாசனம் பண்ணி, இப்படிச் சந்திராதித்தவர் வரை சீசல்வதாகத் திருமலையிலே கல்வெட்டிக் கொடுத்தோம்; நாடும் நகரங்களும் கிராமங்களும் வன்னியர்களும் படைப் பற்றுக்களும் இவ்வனைவரோம்”(P.S. Ins. 285)என வரும் கல்வெட்டிற் காணலாம். இனி, ஊரில் குளங்களும் வயல்களும் பெருமழை யாலும் பிறவற்றாலும் சீரழிந்து போனவிடத்து ஊரவரே காடுகளை யழித்துக் குளங்களைத் திருத்தி வயல்களைப் பண்படுத்திக் கொண்டனர். கோயில் முதலிய பொது நிலையங்கட் குரியவற்றைத் தக்கார்க்கு விடுத்துச் செம்மை செய்தனர். மாறவன்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் நான்காமாண்டில் (கி.பி. 1271) குடுமியா மலைத் திருநலக் குன்றமுடைய நாயனார் “திரு நாமத்துக் காணியாய்” பாழ்பட்டுக் கிடந்த குளமும் வயலும் செம்மையுறுவித்த செய்தி யொன்று குடுமியா மலைக் கல்வெட்டொன்றில் காணப்படுகிறது. அதனை “இந்நாயனார் திருநாமத்துக் காணியான தட்டான் குளமும் வயலும் குளமும் உடைகுளப்பாழாய்க் கரையும் அழிந்து வயலும் வரம்பழிந்து பருமரக்காடாய் நெடுங் காலம் பாழ்கிடக்கையில் இது பாழாக் கிடவாமல் குளமும் வெட்டி வயலும் திருத்திக்கொண்டு குடிநீங்காத தேவதானமாக விலைக்கு விற்கக் கொள்வார் உளீரோ வென்று ஒருகாலாவதும் இருகாலாவதும் முக்காலாவதும் முற்கூற, இம்மொழிகேட்டு “இக்கோயிலில் சைவா சாரியம் செய்வார்களில்” சுப்பிரமணிய பட்டரும், சிகர வழகியானான நம்பு செய்வார் பட்டரும் விலைக்குக்கொண்டனர். செம்மையுற்ற நிலையில் வயல்களில் விளையும் எள், தினை, வரகு முதலியவற்றிற்கு இறைவரிசையும் குறிக்கப்பட்டது” என்பதனாலறிக. நாடுகாத்தற் கமைந்தோரால் மக்கட்கு ஒவ்வொரு காலத்தில் மிக்க வரிகளும் இடுக்கண்களும் உண்டாயின் அவற்றைப் பொறாது பொதுநிலங்களை விற்று வரிசெலுத்தி இடுக்கண் நீக்க முயன்றுள்ளனர். கோனாட்டு இடையாற்றூர் ஊரார், “எங்களூர்க்கு வேலி காவலாக நிச்சயித்த அச்சுப்பேறாளர் எங்களைப் பல வேதனைசெய்தவிடத்து வேதனைக்காற்றாது எங்களுக்கு மற்றொரு செய்தியில்லா மையால் எங்கள் குடிக்காடு மதுராந்தகபுரத்தை விற்று இக்காசு கொடுப் போமாக இசைந்து........ இக்காசு எண்ணா யிரமும் விலையாவணக் களத்தே கைச்செல்லப் பொருளறக் கொண்டு பேற்றாளர்க்குக் கொடுத்து இம்மதுராந்தகபுரமும் குளமும் நத்தமும் விற்று விலைப்பிரமாணமும் பண்ணிக்கொடுத்தோம்” (P. S. Ins 309) என்பதும், கோட்டையூரார், “கன்னடியர் காலத்துப் பல வரிகளால் வந்த பொருளுக்குப் பண்டார உடலில்லாமையால்” (P.S.Ins.310) நிலம் விற்பதாகக் கூறுவதும், “இந்நாட்டில் வல்லாளதேவன் இறைகொண்ட நாளில் கன்னடியர் எங்களைச் சிறைப்பிடித்ததில், சிறைமீள எங்களால் ஒரு செய்தியில்லாமையால் ஸ்ரீ பண்டாரத்தில் நாங்கள் திருவாபரணங்களை அற விற்றுக்கொடுத்துச் சிறை மீட்கையில், பின்பு இம்முதல் எங்களால் இறுக்க வொண்ணா மையால்” இக் கோயில் நாயனார்க்கு நிலம்விட்டுத் “திருச்சூலக்கல் நாட்டி விலைப் பிரமாணம் பண்ணிக்கொடுத்தோம்” (P.S.Ins 548) என்பதும், “முன்பு எழுதின பிரமாணம் கலத்திலே சேருகையால், இற்றை நாளிலே” (393) பிரமாணம் செய்து கொடுத்தோ மென்பதும் பிறவும் இடைக்காலத்தே இந் நாட்டவர் அரசுநிலையின்மையால் பல துன்பங்கட்குள்ளானதும், அவற்றினின்று மீளுதற்குச் செய்த முயற்சி களும் ஒருவாறு உணரப்படும். ஊர்களில் தேவரடியார்கள் மிக்குக் கோயிற் பணியிற் போட்டியிட்டுப் பிணங்கும் பிணக்குகள் உண்டாயின. இப்பிணக் கொன்று இக்கோனாட்டுக் கூழைக்குளத்தூரில் உண்டாயிற்று. ஊரவர் ஒன்று கூடினர். தேவரடியார்க்குரிய “திருப்பாட்டடைவு, திருவாலத்தியெடுத்தல், மெய்க்காட்டடைவு” முதலிய திருப்பணி களை இனிது ஆற்றற்கு ஏழு முறைகளை வகுத்து ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு முறை வகுத்தமைத்தனர்.(P.S.Ins162) சைவ வைணவர் களுக்கிடையே யுண்டான பிணக்கொன்று திருமெய்யத்தில் தீர்க்கப் பெற்றுள்ளது. பள்ளருக்கும் பறையருக்கு மிடையேயுண்டான வழக்கொன்று (P. S. Ins. 929) நெய்யிலே கைதோய்த்துக் காணும் முறையால் நீதி காணப் பட்டுள்ளது. வாணிகஞ்செய்வாரிடையேயும் ஒருவகை உடன்படிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. திருநலக்குன்ற முடைய நாயனார்க்கு ஆண்டொன்றுக்கு முப்பதினாயிரம் பாக்கும் எழுநூற்றைம்பது கட்டு வெற்றிலையும் வேண்டியிருந்தபடியால், அவற்றை வெற்றிலை வணிகரான கிராஞ்சிமலை கிளியநின்றான் சகஸ்ரனும், வேதகோன் புரத்து அருளாள சகஸ்ரனும் என்ற இருவரும் இடக்கட வரென்றும், இதற்கு ஊதியமாக இவர்கள் இந்நாட்டில் வந்திறங்கும் வெற்றிலைக்குத் தரகுபெறக் கடவரென்றும் குடுமியாமலைக் கல்வெட்டு (125) கூறுவதுகொண்டே அறியலாம், ஒருகால் இத்தகைய தரகு காரணமாகப் பனையூர், குளமங்கலம் என்ற இரண்டு ஊரார்க்கிடையே போரும் உண்டாயிற்று. பொருளழிவும் உயிரழிவும் மிக உண்டாயின. பலர் ஊர்களினின்றும் வெளியேறினர். நடுவிருந்து சந்துசெய்ய ஒற்றுமையெய்தி உடன் படிக்கையும் செய்துகொண்டன ரெனப் பனையூர்க் கல்வெட்டு (670) கூறுகிறது. போருண்டாயின் அதற்குத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவது குறித்து, ஊரவர் அரசர் காவலையே பெரிதும் சார்ந்திராது தம்மைத்தாம் பாதுகாத்தற்கு வேண்டும் செயல்வகை களையும் மேற்கொண்டிருந்தனர். அதனைப் பாடிகாவல் என்றும், அது குறித்துச் செய்யும் சாசனங்களைப் பாடிகாவற் பிரமாணமென்றும் வழங்கினர். ஆதனூர் ஊரவர், பொன்னமராவதிநாட்டு இராசசிங்க மங்கலத் தார்க்குச் செய்து கொடுத்திருக்கும் பாடிகாவற் பிரமாணம் (P. S. Ins.669) “துலுக்கர் கலகமாய் எங்கும் கட்டாளும் பிடியாமல் பரிகரித்து, வேறு ஒருவர் இவ்விடங்களில் சிலைநாரும் கொள்ளாமல் பரிகரித்து, செவ்வலூர் அடித்துக் கொண்டு போன கன்றுகாலியும் விடுவித்துத் தந்து, நாங்கள் இங்கு இருக்குமளவும் சோறும் பாக்கும் ஆராய்ந்து எங்களைப் பரிகரித்துக்கொண்டு போந்தபடி யாலே மேலும் எங்களை இப்படிப் பரிகரித்துக் கொண்டு போகவேண்டு மென்கிற இத்தைப்பற்றிப் பாடிகாவற் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம். இராசசிங்கமங்கலத்து (இராங்கியம்) ஊரவர்க்கு ஆதனூர் ஊராக இசைந்த ஊரவரோம்” என்று கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இத்தகைய போர்களில் போராண்மையில் மேம்பட்ட வீரர்களைத் தக்கவாறு சிறப்புச் செய்திருப்பது காணின் இவர்களின் மனப்பண்பு இனிது விளங்கும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்கவன் றொண்டன் என்பான் வயிராகியாக இருந்தான். வயிராகி யென்பவன் கோயில் காவலன். இவ்வயிராகியர் கோயிற்குரிய பொருள்களைக் காக்குமிடத்துத் தம் உயிரையும் கொடுக்கும் வயிராக்கியம் (மனத் திட்பம்) உடையராதலின் வயிராகியென்று கூறப்பட்டனர். கோயில் சார்பாக நிகழும் பொதுக் கூட்டங்களில் கோயில் தானத் தாரோடு உடனிருந்து ஆராயும் தனிச் சிறப்பும் இவர்கட்குண்டு. இக்காலத்தே இவரது நிலை தாழ்ந்துவிட்டது; வீர முஷ்டியென்று இப்போது வழங்குவர். “உண்பான் தின்பான் சிவப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி”யென்று இப்போது வழங்கும் பழமொழி இக்கருத்தை வற்புறுத்தும். இங்கே கூறிய வயிராகி, இக்கோயிற்குரிய இடையாற் றூர்க்கு வந்திருந்தான். அக்காலத்தே“இவ்வூரில் மாவலி வாணாதராயர் காரியப் பேர்படை கூட்டிவைத்துச் சிறையும் பிடித்துக் கன்றுகாலியும் பிடித்துக்கொண்டு பொன்னமராவதியிலே கொண்டுபோகையில், மறவமதுரையிலே இது செய்வித்த இவனுக்கும் அழகிய பாண்டிய தேவனுக்கும் பரம”(P. S. Ins. 380) என்று கொண்டு இரு கையிலே கோலேந்தியாடி, அவர்களை வென்று புறங்கண்டான். வெற்றி பெறுங்கால் பகைவர் எறிந்த படைகளால் அவன் உடம்பில் புண் உண்டாயிற்று. கோனாட்டு இடையாற்றூரார், அவன் புண்ணைப் “பரிகரித்து” அவனுக்குத், “திருக்கொடுங்குன்ற நாடாழ்வான்” எனச் சிறப்புப்பெயர் தந்து “இவனுக்குச் சிறப்பாக இவ்வூர் வயலில்.... குறுணி நெல்லு அறுப்பிலே” பெற்றுவாழப் பிடிபாடு பண்ணிக் கொடுத்தனர். இனி ஊர்களில் உள்ள கோயில்களுக்கு நாடோறும் நடை பெறும் திருப்பணி குறித்துப்பொருள் வருவாய் போதிய அளவில் இல்லாத விடத்து, ஊரவர் தங்கள் சமுதாயத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒருவகை முறை வகுத்திருந்தனர். நார்த்தாமலைக்கு இடைக் காலத்தே தெலுங்ககுலகாலபுரம் என்று பெயர் வழங்கிற்று. முதற் குலோத்துங்கன் காலத்தில் இதற்குக் குலோத்துங்க சோழ பட்டினம் என்ற பெயர் உண்டாயிற்று. பிற்காலத்தே அப்பெயரே வழங்கி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சுந்தர பாண்டியன் காலத்தில் இக்குலோத்துங்க சோழ பட்டினத்தார் திருமால் கோயிலில் பதினெண் பூமி விண்ணகரப் பெருமானையும் பிராட்டியாரையும் எழுந்தருளுவித்தனர். அவர்கள் “திருப்போன கத்துக்”காகக் “குடி நீங்காத் திருவிடையாட்ட”மும் ஏற்படுத்தினர். திருப்பணிக்கு வகை செய்ய முற்பட்டுத் திருமணங் களில் ஒரு வருவாய் முறை கண்டனர். “இந்தக் கோயில் திருப்பணிக் குடலாக வைத்துக் கொடுத்த பரிசாவது: கண்ணாலத்துக்கு .......................... பெண்ணின் வீட்டில் காசு நூற்றிருபது. ஆடைக்கு காசு எண்பதுமாகக் காசுநூறு அண்ணன் வீட்டில் காசு எண்பது, கிடாய்க் காசு நூறும், விளக்கத் தரையன் வாங்கிக் கொடுத்துக் கண்ணாலம் செய்யக் கடவதாகவும்; பெண் பிள்ளைகள் தாமத்தியம் வந்தால் ஆடையும் மாவையும் தவிர்த்துத் தங்களுக்கு நன்றாகக் கொடுக்கும் காசு நூற்றிருபதும் வாரியம் வாங்கித் திருப்பணிக்குடலாக இக்கோயில் திருவடி பிடிப்பான் கையிலே ஒடுக்கக் கடவதாகவும்”(P.S. Ins. 281) என்று அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. இந்நாட்டவர் தங்களைப் புரக்கும் வேந்தர்பால் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டொழுகினர். கி.பி. 1212-ம் ஆண்டில் மூன்றாங் குலோத்துங்கச் சோழன் மதுரைக்குச் செல்லக்கருதித் தன்கீழ் வாழும் தலைவர்கட்குத் தெரிவித்தான். அவர்களுள் ஒருவன் மணியன் ஊருடைப் பெருமானான எதிரிலி சோழக்கடம் பராயன். அவன் கோனாட்டு அரையர்களில் ஒருவனாதலால், சோழ வேந்தன் மதுரைக்கு வருங்கால் அவன் உடற்கு நோய் நொடி வாராதிருக்கக் கோனாட்டுத் திருப்பெருமானாண்ட நாயனார்க்கு வழிபாடு செய்து, “உலகுடை நாயனார் (குலோத்துங்க சோழன் ) மதுரைக்கு எழுந்தருளினால், திருமேனிக்கு நன்று ஆக, உடையார் திருப்பெரு மானாண்ட நாயனார்க்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக” புன்னங்குடி யென்னும் ஊரையும் அதனையுள்ளிட்ட குடிக்காடு களையும், கோயிற்களித்து, ” சோழ கோனார் பெயரால் உதயப் பெருமாள் நல்லூர் என்று பேரும் இட்டு” (P. S. Ins 163) இதற்கு அடையாளமாகத் திருசூலக்கல் நாட்டித் தந்துள்ளான். இவ்வாறே முடிவேந்தர் இவ்வூர்களுக்கு எழுந்தருளும் போது அவ்வூர்க் கோயில்களுக்கு நிலம்விட்டு, “இப்படிக் கணக்கிலும் இழிச்சி, வரிக்கூறு செய்வார்களுக்கும் சொன்னோம்”(P.S.163) என்று வழங்குகின்றன். நாடுபிடிக்குங் காலையில் சீர்கேடமைந் திருக்கும் கோயில்களின் திருப்பணியின் பொருட்டு நிலம் வழங்கியிருக்கின்றனர். (P.S. 560). தென் கோனாட்டின் தென்னெல்லையில் உள்ள செவ்வ லூர் கி.பி. 1248-ல் பொன்னமராவதிக்கண்டன் சுந்தர வில்லியான நிஷதராஜன் என்பவன் ஆட்சியில் இருந்தது. அவன் ஒருகால் செவலூர் பூமிநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கினான். அக்காலை அவன், “கோனாட்டுக் கூடலூர் நாட்டுச் செவ்வலூருடையார் திருப்பூமீசுரமுடைய நாயனார்க்கு அமுது படிக்கும் .............. நிவந்தங்களுக்கும், நான் பிறந்த நாள் புனர்ப்பூசம் தீர்த்தமாகத் திருப்பங்குனித் திருநாள் எழுந்தருளியருளத்திருநாட் படிக்கும் வேண்டும் வியஞ்சனங்களுக்கும், இந்நாட்டுப் பொன்னமராவதிப் பற்று........ குளமும் வயலும் புன்செயும் ...........இறையிலி தேவதானமாகச் சந்திராதித்தர் வரைச்செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொடுத்தேன். கண்டன் சுந்தர வில்லியான நிஷதராஜனேன்”(P. S. 342) என்று கல்வெட்டித் தந்துள்ளான். தெற்றன் அரசர்கள் அஞ்சப்பிறந்தானான கடம்பராயன் என்னும் வேறொரு தலைவன், தன் பெருவேந்தனான சுந்தர பாண்டியன் (கி.பி. 1232) பிறந்த நாளான ஆவணி உத்திரத் திருநாளில் தீர்த்தமாக உத்தமப்படி ஒன்பது நாள் எழுந்தருளவும், ஆட்டைத் திருப்பவுத்திரம் சாத்தியருளவும் (P.S.Ins.304) திருநலக்குன்றமுடைய நாயனார்க்கு நிவந்தம் விட்டு அந்நாளைச் சிறப்புறக் கொண்டாடினான். இவ்வண்ணம் இடைக்காலத் தமிழ்ச் செல்வமக்கள் தங்கள் பிறந்த நாளையும் தங்கள் தலைவர் பிறந்த நாளையும் சிறப்புறக் கொண்டாடின செய்தி இந்நாட்டின் மட்டுமன்றித் தமிழக முழுதும் நிலவியிருந்தது. மேலும், இவர்கள் தங்களைப் பாதுகாத்துப் புரந்த தலைவர்கள் பணித்த பணிமேற்கொண்டு தங்கள் நன்றி யறிவு விளங்கக்கோயில் திருப்பணிக்காக ஊரும் நிலமும் விட்டிருப்பது நன்கு குறிக்கத்தக்க தொன்றாம். கி.பி. 1163-1178 வரை ஆட்சி புரிந்த இராசாதிராசன் காலத்தில் குலோத்துங்க சோழக் கடாரத் தரையன் என்றொரு தலைவன் இக்கோனாட்டில் இருந்தான். இவனை இளமையில் பேரன்புடன் பேணிப் புறந்தந்து ஞானம் தந்தவன் சீபாதம் சீபுயங்க தேவன் என்போனாவன். இப்புயங்க தேவன் தன் இறுதி நாளில் இக்கடாரத் தலைவனை நோக்கிப் புன்னங்குடியில் இராசேந்திர சோழன் தன் பெயரால் எடுப்பித்த சிவன் கோயிலுக்கு நிலம் வழங்குமாறு பணித்திருந்தான். அவன் பணியை முடியில் தாங்கி அவன் தன்னைப் பேணிய பெட்பை நினைந்து, அவன் பால் தனக்கிருந்த நன்றியுணர்வு மிகுதலால், புன்னங்குடியுள்ள “இராசேந்திர சோழிச்சுரமுடைய நாயனார்க்கு... ஒரு குடிக்காடு விடவேண்டு மென்று என்னை ரஷித்த சீர் பாதம் ஸ்ரீ புயங்க தேவர் திருவாய் மலர்ந்தருள... கொடுத்தேன் சதுரன் இராசனான குலோத்துங்க சோழக் கடாரத் தரையனேன்” (P.S. Ins.141) என்று விளம்பியுள்ளான். இக்கோனாட்டில் இடைக்காலத்தில் வந்து ஆட்சி செய்த வாணாதிராயர்களுள் ஒரு வாணன் உத்திராட நாளிற் பிறந்தவன். அவன் பிறந்த நாளில் குடுமியான் மலையிலுள்ள திருநலக்குன்ற முடைய நாயனார்க்குத் “தீர்த்த விழா” நடந்தது. அப்போது ஆங்கே வந் திருந்த புலவரொருவர், அவ்வாணனையும் அவனது நாளை யும் பாராட்டி, “ பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புவித் தேரோன் திருவுத்தி ராடநாள்- பேருவமைக் குன்றடர் மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்பர் இன்றெடான் இன்றெடான் என்று” (P.S. Ins.673) என்றொரு பாட்டைப் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்ஙனம் வேந்தர் பிறந்த நாள் சிறப்பது போல, அவர்கள் பிறந்த பன்னிரண்டாம் நாளில் அவர்களை அவர் தந்தையாகிய வேந்தர் வந்து காணும் நாளும் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்நாட்டில் ஆட்சிபுரிந்த மாவலிவாணாதிராயன் ஒருவன் தனக்கு மகன் பிறக்க, அவனைக் கண்டதும், அக்காட்சிச் சிறப்பாக நெற்குன்ற மென்னும் ஊர் முழுதையும் பார்ப்பார் பலருக்கும் இனாமாகவிட்டான். இதனை “ஸ்ரீமன், மூவராயகண்டன்.... ஸ்ரீமது வீரப்பிரதாப சுந்தரத் தோளுடையார் மகாபலி வாணாதிராயர் பிருதி விராஜயம் பண்ணியருளாநின்ற சகாப்தம் (1405) மேல் செல்லா நின்ற சோபகிருது சம்வற்சரம் (கி. பி. 1483) துலா ஞாயிற்றுப் பூருவ பஷத்துச் சப்தமியும் பிரகஸ்பதி வாரமும் பெற்ற பூசத்து நாள் நாமகரணம் சாத்தின நம்முடைய புத்திரனான நாயனார் திருமாலிருஞ் சோலை நின்றான் ஜனன காலத்திலே முன்னாள் புத்திர முக தரிசனம் பண்ணிய காலத்திலே உதகம் செய்து கொடுத்த தருமசாசனப் பட்டயம். பட்டமானங் காத்த மண்டலத்துக்கான நாடான விருதராசபயங்கர வளநாட்டுப் பிரம தேயம் திருநெற்குன்றத்து நானாகோத்திரத்து நானாசூத் திரத்து அசேஷ மகா ஜனங்களுக்கும் சகிரணியோதக தாராபூருவமாகப் பண்ணிக் கொடுத்த திருநெற் குன்றமான புவனேகவீரச் சதுர்வேதி மங்கல வூரது புரவு சதுர்ச் சீமையும், சகல உபாதியும் கழித்துச் சருவமானியமாகப் பண்ணிக் கொடுக்கையில் இந்தப் புவனேகவீரச் சதுர்வேதி மங்கல வூரது புரவு நான் கெல்லைக்குட்பட்ட நன்செய் புன்செய் எப்பேர்ப்பட்டதும் சந்திராதித்தவரையில் செல்லச் சருவமானியமாக அனுபவித்துப் போதவும்”(P.S. Ins.672) எனவரும் கல்வெட்டால் அறியலாம். இவ்வாறு அறக் கொடையால் மேம்படும் இடைக் கால வேந்தர் போர் செய்யுமிடத்துச் சிற்சிலரைக் கொல்லக் கூடாதென முன் கூட்டியே பிடிபாடு செய்துகொண்டொழுகினர். “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும் பிணியுடையோரும், பொன்போற் புதல்வர்ப் பெறாதோரும்” போரிற் கொல்லத் தகாதவரெனப் போர் மறவர் கருதின ரென்பது சங்ககாலத்திற் காணும் காட்சி. இடைக்கால வேந்தர் அவ்வரிசையில் ஊரவர், வழி நடைக் குடிகள், இடை குடி மக்கள் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு அவர்களைக் கொல்லாது விட்டனர். இதனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி கோச்சடையவன் மரானசுந்தர பாண்டியன் காலத்துப் பதின்மூன்றாவது ஆண்டில் குன்றாண்டார் கோயிலில் தோன்றிய கல்வெட்டு (P.S. Ins. 484) “இந்நாட்டு இரண்டு மலை நாட்டு அரையர்களோம், எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது: நாங்கள் பகை கொண்டு எய்யு மிடத்து எங்கள் காவலான, ஊர்கள் வழி நடைக் குடிகள், இடைகுடி மக்கள் இவர்களை அழிவு செய்யக் கடவோமல்லமாகவும்; ஒருவன் அழிவு செய்யில் நூறு பணம் தண்டம் வைக்கவும்; ஒரு ஊராக அழிவு செய்யில் ஐந்நூறு பணம் வைக்கவும் கடவதாகவும். இப்படிச் செய்யுமிடத்து வெட்டியும் குத்தியும் செத்தும் நோக்கக் கடவர் களாகவும்” என்று கூறுகிறது. போரிற் கலந்து கொள்ளாத மக்களிடத்து அருள் மேற்கொள்ளும் இவ்வேந்தர், நாட்டு மக்கட்கு வரும் நோய் தீர்க்கும் மருத்துவர்க்கு வேண்டும் சிறப்புக்களைச் செய்திருக்கிறார்கள். திருவரன்குளத்துக் கோயிலில் சீகாரியம் செய்வோரும் கண்காணி செய்வார்களும் தேவ கன்மிகளும் கோயிற் கணக்கரும் பிறரும் கூடி அவ்வூர் மருத்துவன் ஆத்திரேயன் சேந்தராயனான நிம்பவன வைத்தி யனாருக்கு இறையிலியாக நிலம் விட்டனர். இச்செய்தி திருவரன் குளத்துக் கல்வெட்டில் (p.s. 725) காணப்படுகிறது. இதனால் வேறொன்றும் அறியலாம். கோயில் காரியம் பார்த்த பெருமக்கட்கு அக்கோயில் காரியத்தோடு ஊர் மக்கட்கு வேண்டும் மருத்துவவுத விக்குக் கோயிற்குரிய நிலம் பயன் படுத்தப்படுவது இக்கால அரசியல் அறிஞர் குறிக்கொள்ளத் தக்க செய்தியாகும். இடைக்காலத்தே வாழ்ந்த செல்வர்கள் கூத்தும் பாட்டுமாகிய தமிழ்த்துறையினை நன்கு பேணினர். குளத்தூர் நாட்டுத் திருவேங்கை வாசலில் அந்நாட்டு வேந்தனான சதுரன் இராசனான குலோத்துங்க சோழக் கடாரத்தரையன், இவ்வூர் வேங்கை வாயிலாண்ட நாயனார்க்கு வைகாசித் திருவாதிரைத் திருநாள் கொண்டாடுமாறு ஏற்பாடு செய்து அந்நாளில் அறுவகைக் கூத்தும் ஆடுமாறு செய்தான். இதனை அவன், “திருவேங்கைவாயிலாண்டார் கோயிலில் நான் எழுந் தருளிவித்த சதுரவிடங்க நாயகர்க்கு வைகாசித் திருவாதிரைத் திருநாளுங்கண்டு திருநாளுக்குக் கூத்தாடு கைக்குக் காணியாகத் திருவேங்கைவாயில் சபையார் பக்கல் விலைகொண்டு வரியில் இறையிழிச்சிக் கொண்ட சருகிலி வயலான புரவரிவயல்” என்றும், “இத்திருநாளுக்கு ஆறுகூத்து ஆடுவாராகவும், விளையிலும் விளையாவிடிலும் இக்கூத்தாறும் ஆடக்கடவராகவும்” (P. S. 139) என்று கல்வெட்டித் தந்துள்ளான். இவ்வாறே “சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடு கைக்குச் சாந்திக் கூத்தாடுகிற எழுநாட்டு நங்கை” யென்பவளுக்கு இவ்வேங்கை வாயில் ஊரவர், கூத்தாடுகைக்கு நிலம் விட்டு, “இவள் இந்நிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக்கடவ கூத்து ஒன்பதும் ஆடு வாளாகவும்; விளையாத ஆண்டு ஆடின கூத்துக்குக் கொற்றுவிடுவதாக’’ (P.S. Ins.128) என்று ஏற்பாடு செய்து கல்வெட்டித் தந்துள்ளனர். “திருநாடகமாடும் வல்லநாட்டு நங்கை மகன் அகளங்க ஆசாரியனுக்கு இறையிலி” (P.S.Ins.538) நிலம் இவ் வூரவரே விட்டதாக வேறொரு கல்வெட்டு கூறுகிறது. பொன்ன மராவதியிலுள்ள பெருமாள்கோயில் கல்வெட்டொன்று. சீரங்க நாயகி யென்பவள் நாடகப் பயிற்சி முடிவில் அரங்கேறினாளாக, அவட்கு ஊரவர் ஒருமாநிலம் இறையிலியாக விட்டனர். இச் செய்தியை, “ எழில்புனையுஞ் சகாத்தமா யிரத்து முந்நூற் றறுபத் தெட்டதன்மேற் செலுமேட விரவியின் முற்றிதியில் வழுவிலெழு பக்கமர்க்க வாரமுடன் பெற்றே வருபுனர்த்தநாள் விளைசை வாழ்வனச மறையோன் செழுமைபயில் திருவனந்தன் பணியால் வென்றிச் சீரங்க நாயகிதான் தென்பொன்னை நகர்மே வழகர்திருக் கோயிறனில் முதலடைவும் பெற்றே அரங்கேறி யவை மதிக்க ஆடினாளே” (P.S. Ins.781) என்ற கல்வெட்டு அறிவிக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த குடுமியாலை இசைக் கல்வெட்டு ஈண்டு நினைவு கூரத்தக்கது. இயற்றமிழ் வல்ல புலவர்க்குப் பரிசில் தந்து சிறப்பிக்கும் முறை இடைக்காலத்தே தன் இயல் குன்றாமலே இருந்திருக்கிறது. சோழ நாட்டு மண்டலங்களுள் ஒன்றான ஐயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்துர்க் கோட்டமென்பது ஒன்று, அதன்கண் உள்ள ஊர்களில் மருதத் தூரினனான குன்றன் திருச்சிற்றம் பல முடையான் என்பவன் ஒரு புலவன். இவன் வட கோனாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் பையூரில் வாழ்ந்த திருச்சிற்றம்பல முடையான் வேதவன முடையானைப் பாடிக் குடிக்கா டொன்றைப் பரிசிலாகப் பெற்றான். பெற்றவன், “யாதும் ஊரே” யென்ற கொள்கையால் எங்கும் கொடுப்போரை நாடிச்சென்று அவர்கொடைப்புகழை நிலைநாட்டும் கருத்துடன் வாழ்ந்த பண்டைப் புலவர் வழியினனா தலால், அவன் அதனைத் திருப்பெருமானாண்டார்க்கு விட்டான். இதனை அவன், “இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு வடகோனாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் உடையார் திருப்பெரு மானாண்டார்க்கு ஜயங் கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து மருதத்தூர் மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம் பலமுடையானேன்: கன்னி ஞாயிற்று ஏழாந்தியதியும் திங்கட் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் இத்திருப்பெருமானாண்டார் திருக்கைம் மலரிலே நான் நீர்வார்த்துக் கொடுத்த குடிக்காடு இரட்டபாடி கொண்ட சோழவள நாட்டு வடகோனாட்டு உறத்தூர் கூற்றத்துப் பையூர் பையூருடையான் திருச் சிற்றம் பலமுடையான் வேதவனமுடையானை நான் கவி பாடி, பாடின கவிக்கு எனக்குப் பரிசில் தந்த தன் காணி யான குடிக்காடு” (P.S.Ins. 129) என்ற கல்வெட்டித் தந்துள்ளான். இப்பையூரைச் சிறப்பித்து அவன் பாடிய பாட்டொன்று, “ வாளை வயிறு நிறைய மடற்கமுகம் பாளைபசுந் தேனொழுகும் பையூரே -நாளையென்று செப்பாத வாய்மையான் வேதன் திருமனுநூல் உப்பானெங் கோமான்ற னூர்” என இக்கல்வெட்டில் நாமறிய விளங்குகிறது. பொன்னமராவதியை முதலாகக் கொண்டு அதனைச் சூழ வுள்ள நாடுகளில் திருவரன்குள முடையானென்னும் மற வர் தலைவன், கி.பி. 1216- 1238-ல் அரசாண்ட சுந்தர பாண்டியன் காலத்தில் விளங்கியிருந்தான். அக் காலத்தே அந்த நாட்டைக் கைக்கொள்வது குறித்து வேற்றுச் சிற்றரசர் முயன்றனர். ஏனைத் தமிழரையர் நால்வரை உடன் தழுவிக்கொண்டு, இத்திருவரன் குளமுடையான் அப்பகை வேந்தரை வஞ்சி சூடிப் பொருதழித்து அவரது மண் ணாசையைக் கெடுத்து வென்றி மேம்பட்டான். அது கண்டு மகிழ்ச்சியுற்ற பொன்னமராவதி முதலான நாட்டவர் அவன் பெருவஞ்சியைப் பாடிப் பாராட்டினர். அவர் கட்கு அவன் மிக்க பரிசில் நல்கினான். அவர்கள் கி. பி. 1227 ஆண்டு பொன்னமராவதியில் ஒன்றுகூடி, “பெருவஞ்சி கேட்டுப் பரிசிலாகக் கொடுத்தவனான திருவரன் குளமுடையானுக்கு மறச் சக்கரவர்த்திப் பிள்ளையென்று பேருங் கொடுத்துத் தூத்திக்குடிவயலில் வடபாகம் விளைநிலமும் இதுக்கெல்லையான புன்செய்களும் முன்பு எழுதி யணிந்து கொடுத்த செம்பின் படி சந்திராதித்தவரை இறையிலி காணியாகக் கொடுத் தோம்”(P.S.Ins. 278) என்று கல்வெட்டினர். இந்நிலத்தில் தமிழரை யர்கட்கு ஒரு பாதியும் திருவரன் குளமுடையானுக்கு ஒரு பாதியும் இந்நாட் டவரால் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இனி ஒன்று கூறி இவ்விடைக்காலத்தை முடிக்கலாம். இடைக்காலம் பிறத்தற்கு முன்பே சைவர்களுக்கு மூவர் முதலிகள் பாடிய திருப்பதிகங்களும் வைணவர்களுக்கு ஆழ்வார்கள் பாடிய இயற்பாக்களும் தோன்றி விட்டன. அவற்றைக் கோயில்களில் இசைக்கும் முறை இடைக்காலத்தே நல்ல இடம் பெறுவதாயிற்று. நம் முடைய கோனாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய முதல் இராசராசன், தான் அரசுகட்டிலேறிய இருபத்தெட்டாம் ஆண்டில், இந்நாட்டு உறத்தூர்க் கூற்றத்தில் உள்ள திருவிறையான குடியில் திருவிறையான் குடியுடைய நாயனார் “முன் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அடிகள்மார்க்கு நிவந்த மில்லாமையால், இத்திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் ஒருவர்க்கு நிசதம் நெல்லு பதக்காக, நால்வர்க்கு நிசதம் இருதூணிக்கும் அகப்பட முதல் ஓராட்டைக்குக் காசு மூன்றாக நால்வர்க்குக் காசு 12 நிவந்தமாகச் செய்தோம்”(P.S.91) என்று கல்வெட்டித் தந்துள்ளான். “விண்ணப்பம் செய்யும் அடிகட்கு நிவந்தமில்லை” யென்பதால் அவன் காலத்துக்கு முன்பே திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருப்பது விளங்குகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டினனானசுந்தர பாண்டியன் காலத்தில் பொன்னமராவதி சுந்தரராசப் பெருமாள் கோயிலில் இயற்பா விண்ணப்பம் செய்தலும், கி. பி. 1449, ஆம் ஆண்டில் இப்பொன்னமராவதியில் இருந்த சிற்றரையன் சுந்தரராசன் என்பான், “பாடுவார் பத்திரம் பிடிப்பார், குடவர் கோவணவருடன் சௌந்தரராசன் மண்டபத்து இருந்து நம் சடகோபன் பாட்டுக் கேளாநிற்க, நம் சேனாபதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக் காரியம் செய்யும் கோவணவன் ஆத்திரேயகோத்திரத்து திருவனந்தாழ்வார் பாலிகை தேவரளிதாசருக்கு சருவ மானியம்” ( P.S.Ins. 791) என்று கல்வெட்டித் தருமிடத்துச் சடகோபர் அருளிய திருவாய் மொழியை ஓது வதைக் குறிப்பதால் திருவாய்மொழி ஓதுதலும் நிகழ்ந்தன என்று அறியலாம். இனி, இடைக்காலத்துக்கு முற்பட்ட காலத்தைக் காணலாம். சங்கவிலக்கிய காலத்துக்கும் இடைக் காலத் துக்கும் நடுவேயுள்ள காலநிலையைத் தெரிந்து கொள்ளுதற் குப் போதிய கருவிகள் இல்லை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கொடும்பாளூரைக் குறிக்கின்றார். காவிரியாற்றைக் கடந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் ஒருநாள் ஓர் இளமரக்கானத்திருக்கையெய்தியிருந்தனர். அவரெதிரே மறையோன் ஒருவன் போந்து அவர்கட்கு மதுரை மூதூர்க்குச் செல்லும் வழியியல்புகளைக் கூறினான். கூறுபவன் இக்கோனாட்டுக் கொடும்பாளூரைக் குறித்து, அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோ னேந்திய அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும் என்று கூறினான். காவிரியின் வடகரை வருவோர் திரு வரங்கத்தே காவிரியைக் கடந்து உறையூரின் நீங்கிக் கொடும்பாளூர் சென்று, ஆங்கே பிரியும் மூன்று நெறிகளைக் காணலாம் என்பது இங்கே காட்டிய பாட்டடிகளால் மறையோன் உரைக்கும் கருத்தாகும். கொடும்பை யென்பது கொடும்பாளூரின் சுருக்கமான பெயர்; இவ்வாறே இவ்வூர்க் கல்வெட்டும் “கொடும்பை சூழ்ந்த கோனாடு” (P. S. 991) என்று குறிக்கின்றது. உறையூரின் நீங்கிக் கொடும் பாளூர்க்குச் செல்லும் வழி அறை பொறையும் ஆரிடை மயக்கமும், நிறைநீர் வேலியும்” நிறைந்த நெடும் பெரு வழியாம்; அதனைக் கடந்து கொடும்பாளூர்க்குச் சென்று சேரவேண்டும் என்றும் மறையோன் குறித்துள்ளான். கொடும்பாளூர் கொடும்பை, நெடுங் களம் என இருபகுதியினை யுடையது: “கொடும்பாளூர் இரண்டு வகை நகரத்தாரும் இருந்து” (P.S.Ins.82)என மதுராந்தகன் சுந்தர சோழன் கல்வெட்டொன்று கூறுகின்றது. இருபகுதிக்கும் இடையே இருப்பது நெடுங்குளம் என்னும் பெரியஏரி. இதன் கரையைக் கடந்து சென்றால் பிறை முடிக்கடவுள் ஏந்திய சூலம்போல மூன்று வழிகள் பிரியும்; எது கொள்ளத்தக்கது என்பதில் புதியராய்ச் செல்வோர்க்கு மருட்சியுண்டாமென்பானாய்”, அருநெறி கவர்க்கும்” என்றான். இக்குறிப்பு ஒன்றொழிய வேறொன்றும் கோனாட்டைப் பற்றியறிதற்கு இல்லை. சங்க விலக்கிய காலத்திற்கு இனிச் செல்லுதல் வேண்டும் தொடக்கத்தே சங்ககாலம் பொருளாகத் தமிழகத்தின் பொது நிலையினையே கண்டோம். ஈண்டுக்கோனாட்டின் அக்கால நிலையினைக் காண்போம். சங்க விலக்கிய காலத்தில் இக்கோனாடு கீழ்கோனாட் டையும் இளங்கோனாட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆயினும் தென்கோனாடான உல்லையூர்க் கூற்றம் ஒல்லையூர் நாடென்ற பெயரால் விளங்கிற்று, இந்த ஒல்லையூர் இப்போது ஒலிமங்கலம் என்ற பெயரால் விளங்குகிறது. வெள்ளாற்றின் வடகரைப் பகுதி கோனாடென் றும் தென்கரைப் பகுதி ஒல்லையூர் நாடென்றும் பெயர் பெற்று, ஒல்லையூர் நாடு பாண்டியர்க்கும் கோனாடு சோழர்க்கும் உரியவாய் இருந்தன, வெள்ளாற்றின் கரை யிருமருங்கும் உள்ள நாடிரண்டும் இரு பெரு வேந்தர்க்கும் உரியவாயினும், ஒருவரின் ஒருவர் வலிமிக்க காலத்தில், ஒருவர்க்குரிய நாட்டை மற்றொருவர் கைப்பற்றிக் கொள்வது இயல்பாயிற்று. இவ்வகையில் பாண்டியர்க்குரிய ஒல்லையூர் நாடு சோழன் கைப்படுவதும், சோழர்க்குரிய கோனாடு பாண்டியர் கைப்படுவதும் அவ்வப்போது நிகழ்ந்தன. ஒருகால் ஒல்லையூர் நாடு சோழர் கைப்பட்டது. அக்காலத்தே பாண்டி நாட்டைப் பூதப் பாண்டியனுடைய முன்னோர் ஆட்சிபுரிந்தனர், பூதப் பாண்டியன் அரசு கட்டிலேறியதும் பாண்டிய நாட்டின் வடவெல்லைப் பகுதியாகிய ஒல்லையூர் நாட்டை வென்று கொண்டான். அதனால் அவனுக்கு ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்ற பெயருண்டாயிற்று. குடவாயிற் கீரத்தனா ரென்னும் சான்றோர் ஒல்லையூர் நாட்டு ஒல்லையூரில் வாழ்ந்த பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல்பால் நட்புற்றிருந்து அவன் இறந்தபின் மனங்கரைந்து “முல்லையூம் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (புறம்: 242) என்று பாடிய பாட்டொன்று காணப் படுகிறது இனி, கோனாட்டின் கீழ்ப்பகுதியில் எறிச்சிலூர் என்றோர் ஊர் உண்டு. அஃது இப்போது எறிச்சியென வழங்குகிறது. இந்நாட்டில் ஒல்லையூர் ஒலியமங்கலம், என்றும், முதுகுன்றம் முச்சுகுண்டம் என்றும், விறையான்குடி விளாங்குடி யென்றும், சீகரநல்லூர் சேரனூரென்றுந் திரிந்து வழங்குவது கல்வெட்டாராய்ச்சியாளர் நன்கறிந்த தொன்று. அம்முறையே எறிச்சிலூர் இந்நாளில் எறிச்சி யெனமருவுதலில் வியப்பென்னையோ? இவ்வூரில் வாழ்ந்தவருள் மாடலனார் என்பவர் ஒருவர். மாடலன் என்பது செல்வமுடையவன் என்னும் பொருள்பட வரும் மக்கட்பெயர் வகையுள் ஒன்று. இப்பெயர் தமிழகத்து மக்களில் பலருக்குப் பல காலத்திலும் பயின்று வந்திருக்கிறது. சங்ககாலத்தை யடுத்துவந்த சிலப்பதிகாரத்தில், “மாமறை முதல்வன் மாடலன்என் போன்”(15:13) என வருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்நாட்டுக் கல்வெட்டுக்களில் இந்த மாடலன் என்னும் பெயருடையார் காணப்படுகின்றனர். புதுக்கோட்டை யரசிலுள்ள பேரையூர்க் கல்வெட் டொன்று (P. S. I. 225) “மாடலன் நாராயண மாதவன் என்பான் ஒருவனைக் காட்டுகிறது. இக்காலத்தே இப் பெயர் இடைநின்ற அல்லென்னும் சாரியையின்றி, “மாடன்” என மாறித் தாழ்ந்த வகுப்பாரிடையே மக்கட் பெயராக வழங்குகிறது.  23. மதுரைக் குமரனார் கோனாட்டு எரிச்சலூரில் வாழ்ந்த மாடலனார் நல்ல தமிழறிவு வாய்ந்தவர். அவர் இருந்த ஊரைச் சுற்றிக் காடுகள் மிக்கிருந்தன. ஊரில் வாழ்ந்தவரும் பெரும்பாலும் இடையர். ஆனிரைகளைக் காடுகட் கோட்டிச் சென்று மேய்த்து வருவதும், புன்செய்களை உழுது வரகு முதலியவற்றை விளைத்தலும் செய்தனர். காடு சூழ்ந்த இட மாதலின் கானவிலங்குகளின் துன்பம் ஊரவர்க்கு உண்டாவது இயல்பே. ஆயினும், அவற்றிற்கு அஞ்சி வேற்றிடம் நாடும் மன நினைவு அவர்கட்கு உண்டானதில்லை. நன்மக்கள் மதிக்கத்தக்க முறையில் இல்வாழ்வு நடத்தும் ஏற்றம் மாடலனாருக்கும் அவரது ஊரினருக்கும் சிறப்புற அமைந்திருந்தது. மாடலனாருக்கு உரிய காலத்தில் ஒரு மகன் பிறந்தான். இளமையிலே கூர்த்த மதியும் எல்லார்க்கும் இனிய நகை விளை விக்கும் நாநலமும் அம்மகனிடம் அமைந்திருந்தன. "கற்றல் நன்று" என்றும், கல்வியால் அறிவுடையோன் வழியே நாடாளும் அரசரது அரசியல் செல்லும் சிறப்பினை யுடையதென்றும் மாடலனார் நன்கறிந்திருந்தார். அதனால் தன் மகனுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் அரும் பணியை மேற்கொண்டார். அவர் வாழ்த கோனாட்டில் குமரமலை யென்னும் பெயருடைய குன்றொன்று உண்டு. அக்குன்று முருகனுக் குரியது. அம்முருகன் பால் தமக்குளதாகிய அன்பால் முருகனுக்குரிய குமரன் என்ற பெயரையே தம் மகனுக்கு வைத் துக் கல்விப்பயிற்சி தொடங்கினார். பெற்ற தாய் வேண்டும் உணவு தந்து தமது உடலை வளர்க்க, தந்தை கல்வியாகிய உணவு தந்து தமது உயிரை வளர்க்க, குமரனார் செவ்வையாகக் கல்வி கற்று வரலானார். குமரனார்க்குக் கல்வியறிவு வளர வளர, மாடலனார்க்கும் அவர் மனைவியார்க்கும் முதுமை மிகுதலால் தளர்ச்சியுண்டாயிற்று. பெற்றோர்க்குரிய பணிகளைப் புரிவதும் கற்றற்குரிய நூல்களைக் கற்பதும் குமரனார்க்கு நாடோறும் கடமைகளாயின. அவருடைய நேர்மை பிறழாத நெஞ்சமும் எல்லார்க்கும் இன்பம் விளைவிக்கும் அவருடைய சொற்களும் ஊரவ ரனைவருக்கும் அவர் பால் பேரன்பு உண்டுபண்ணின. குமரனாருக்கு அவர் தம் ஊரருகே இருள்படத் தழைத்துப் பல்வகைப் பூக்களைத் தாங்கி நறுமணங் கமழ்ந்து தோன்றும் கானம் இனிய காட்சிகளை வழங்கிற்று. அதன்கண் வாழும் மாவும் புள்ளும் தத்தம் செயல்களைக் குறைவறச் செய்து இன்புறுவது அவர் நெஞ்சக்கிழியில் எழுதிவைத்ததுபோலப் பதிவுறும். பூக்கள், தம்முடைய வண்ணத்தாலும் நறுமணத்தாலும் வண்டினத்தை அழைத்து அவற்றிற்கு இனிய தேனைத் தந்து மகிழ்விக்கு முகத்தால், தாம் கருக்கொண்டு காய்த்துக் கனிந்து தம் இனத்தைப் பெருக்கும் குறிப்புடைய வாதலைக் குமரனார் கண்டு பெருவியப்புக் கொள்வார். ஆங்காங்கே சென்று மேயும் ஆனிரைகளுள் நெறிமாறிச் சென்ற வற்றைக் காட்டில் வாழும் புலி முதலிய விலங்குகள் குறிபிழையாது கொன்றுண்டு வாழ்வதும், புலி வாழ்வதனை முன்பே குறிப்பாலோர்ந்துகொள்ளும் விலங்குகள் தம் உயிர்காத்துக் கொள்வது குறித்து ஓடி உலமருவதும், குமரனாருடைய மனக்கண்ணுக்கு அறிவுக்காட்சி வழங்கும். கவரிமான் முதலிய மான்கள் தம் உடலில் உள்ள மயிரில் ஒன்று நீங்கினும் தரியாது உயிர் துறப்பது காணுந்தோறும் குமரனாருக்கு மானமுடையாரது சிறிது தாழ்வு வந்தவிடத்தும் பொறாது உயிர்விடும் உயர்கொள்கை கைம்மேற் கனியெனத் தோன்றி நல்லறிவை விளக்கும். வெயில் வெம்மை மிகுமிடத்து நிலத்தில் இருக்கும் பயிர் பச்சைகள் பசுமை இழந்து வாடி வதங்குவது காணும் குமரனார், உண்ண உணவின்றி வாடும் ஏழை மக்களை நினைந்து ஏங்குவார். இவற்றோடு தொடர்பில்லாத முகில் காற்றைத் துணையாகக் கொண்டு கடற்குச் சென்று மண்ணுநீருமாகாத அக்கடல் நீரின் உப்பாகிய மாசுநீக்கி முகந்துவந்து, வாடிய பயிர்கட்கு மழையாய்ச் சொரிந்து வாழ்விப்பது குமரனார் கண்களுக்கு அறிவு விருந்து செய்யும். இவ்வாறு இயற்கைக் காட்சியில் நிகழும் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் குமரனார்க்கு இயல்பாகவே கூரிதாய்த் திகழும் அவரது அறிவை ஒளிபெருகச் செய்தது. உள்ளம் புலமை நலத்தால் சிறப்பதாயிற்று. அவர் வாயினின்று வரும் சொற்களெல்லாம் இனிய பாட்டுக்களாய் மலர்ந்தன. உள்ளமும் உரையும் மேன்மேலும் சிறக்குமாறு அவருடைய செயல்களும் சீர்பெற்றன. அவர் தம் பெற்றோர்க்கு நெடிதிருந்து அவரது வாழ்க்கை நலம் கண்டு இன்புறுதற்கு வாய்ப்புக் குறைந்தது. அவர்கள் முதுமையில் மிகுந்து மேலோருலகம் புகுந்தனர். குமரனார்க்குச் சான்றோர் கூட்டுறவின்கண் வேட்கை மிகுவதாயிற்று. அக்காலத்தே மதுரைமூதூர் தமிழ்ச்சான்றோர்க்குச் சீர்த்த உரைவிடமாய் விளங்கிற்று. வணிகர், வேளாளர், மருத்துவர், அரசர் முதலிய பலரும் நல்லிசைப் புலமையுடையராய்த் திகழ்ந்தனர். ஆங்காங்கு வாழ்ந்த சிற்றரசரும் பேரரசரும் இச்சான்றோர்க்குப் பெருஞ் சிறப்பு நல்கிப் பேணி வந்தனர். சான்றோர் பலரும், "யாதும் நமக்கு ஊர்; எத்திறத்தோரும் நமக்குக் கேளிர்; நமக்கு வரும் இன்பமும் துன்பமும் நாம் செய்யும் வினையால் வருவன; ஆதலால் இன்பத்திற் களித்தலும் துன்பத்தில் அவலித்தலும் அறிவுடைமைக்கு இழுக்கு என எண்ணிப் பெற்றது கொண்டு பேரின்புற்று வாழ்வதைக் குமரனார் கண்டார். தாமும் மதுரைக்குச் சென்று சேர்ந்தார். பின்னர் அவர் மதுரையைத் தமக்கு இருக்கை யாகக் கொண்டு தமிழகம் முழுதும் சென்று வந்தனர். அவர்க்கு மதுரைக் குமரனார் என்பதே பெயராயிற்று. மதுரையில் வாழ்வமைத்துக்கொண்ட குமரனார் அக் காலத்தே வாழ்ந்த தம்மையொத்த சான்றோர் பலரைக் கண்டு அளவளாவிச் சிறந்த பல பண்புகளை அறிந்து கொண்டார். தமிழ்நாட்டின் தலைநகரங்களுள் ஒன்றாகிய மதுரையில் இருந்து ஆட்சி புரிந்த வேந்தரும் தமிழர்; அரசியல் மொழியும் தமிழ்; அதனை நடாத்தி யுய்க்கும் அரசவையத்தாரும் சான்றோரும் அனைவரும் தமிழர்; வாணிகம், தொழில், வழக்கியல் யாவும் தமிழாகவே இருந்தன. எங்கும் எவரிடத்தும் தமிழ்மொழியின் தனிமணம் சிறந்து கமழ்ந்தது. தமிழ்ப் புலமை மிக்க சான்றோர்க்குத் தனித்த வகையில் சில உரிமைகள் வழிவழியாக இருந்துவந்தன. அச்சம், நல்குரவு, நாத்தடை, சமயக்கட்டு என்ற நால்வகைத் தடைகளும் தமிழ் மக்கள்பால் பொதுவாக இல்லை; சிறப்பாக அத் தடையின்மையைக் கொண்டு, புலமைவளம் படைத்த சான்றோர் நாட்டிற்கு நல்ல தொண்டாற்றி வந்தனர். நாட்டவர்க்குப் பெரும்பயன் விளைக்கத் தக்க வேந்தரும் செல்வரும் அப்பயனை விளைவிக்கும் துறை களில் இறங்கி வேண்டுவன செய்யுமாறு இச்சான்றோர் அவர்களை யூக்குவது தமது கடமையாகக் கொண்டிருந்தனர். வேந்தரும் செல்வரும் செய்யும் செயல்வகைகளால் வெளிப்படும் நலங்களை இச்சான்றோர் செல்லுமிடந் தோறும் பலரும் அறியத் தம் உரையாலும் பாட்டாலும் எடுத்தோதிப் புகழ் பரப்பினர். அவர் செய்யும் செயல்களால் தீமை விளையின் அதனையும் எடுத்தோதிக் களைந்தனர். இதனால் இச்சான்றோர்பால் பெருமதிப்புக் கொண்டு வேண்டுவன நல்கிச் சிறப்பிப்பது இவ்வேந்தர் முதலாயினார்க்குக் கடமையாயிற்று. அச்சம் கீழ்மக்கட்கு உரியசெயல். "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்பது திருக்குறள். உயிர்கட்கு நலமும் ஆக்கமும் உறுதியும் புகழும் தரத்தக்கவற்றை ஓதுவதற்கும் செய்வதற்கும் இடையே யுண்டாகக்கூடிய இடையீடுகட்கும் இடையூறுகட்கும் அஞ்சும் அச்சம் ஒருவர்க்கு உரிமையன்று; பழிபாவங்களே அஞ்சத் தகுவன. ஏனை நல்வினை செய்தற்கு அஞ்சுபவன் கீழ் மகனாவான். உயர்வடைதல். ஒவ்வொரு மகனுக்கும் மகட்கும் உரிமை வினையா தலால், அதற்குத் துணையாகும் அஞ்சாமை எல்லார்க்கும் ஒப்ப வேண்டிய உரிமையாகும். எல்லாருள்ளும் சான்றோர்பாலுள்ள, அஞ்சாமை, நாடு புரக்கும் பெருவேந்தர்கள் பால் அவர் சொல்லிலும் செயலிலும் தோன்றி அவர்கட்கும் அவர் குடைநிழற்கண் வாழும் மக்கட்கும் தீங்குபயக்கும் குற்றங்களை அவர் முன்னே நின்று விளங்கவுரைத்து நன்னெறிப்படுத்தற்குப் பெரிதும் பயன்படுவ தாகும். இதனை அக்கால வேந்தர் நன்கறிந்து "செவிகைப்பச் சொற்பொறுக்கும்" வேந்தராய், சான்றோர் முதலாயினார்க்கு அச்சமின்றி வாழும் உரிமை வழங்கியிருந்தனர். பாண்டிவேந்தனான அறிவுடை நம்பி மெல்லியனாய்க் குடிகளிடத்தில் மிக்க இறையை வரிசையறியாத சுற்றத்தாரை விடுத்துத் துன்புறுத்திப் பெற முயன்றானாகப் பிசிராந்தை யென்னும் சான்றோர் சென்று அவனது தவற்றை அஞ்சாது கூறி நன்னெறிப்படுத்தினர். பெண்ணொருத்தி செய்த சிறுபிழை பொறாது சான்றோர் விலக்கவும் விலகாது கொலைபுரிந்த நன்னனைப் பலரும் அஞ்சாது பழித்தனர்; அவன் வழிவந்தோரை "நீ நன்னன் மருகனை" யென எள்ளினர். இனி, இச்சான்றோர் நாட்டில் செல்வர் சிலரும் இல்லாதவர் பலருமாய் இருந்த நிலையைக்கண்டு, செல்வர்க்கும் இல்லாதவர்க்கும் இடையே பகைமையும் அதுவாயிலாகத் தீங்கும் உண்டாகா வண்ணம், "செல்வத்துப் பயன் ஈதல்" என்பதை வற்புறுத்தி அவரது செல்வக் கொடையால், கொடுத்தோர்க்குப் புகழும் கொடை பெற்றோர்க்கு இன்பமும் உண்டுபண்ணி மக்களிடையே வாழ்வு செவ்விதாகச் செய்தனர். வறுமை, சான்றோர் உள்ளத்தில் அமைதியைக் குலைத்து அறிவு உரம் நிறைந்த எண்ணங்கள் தோன்றாவாறு செய்துவிடும்; சான்றோர்களும் நாட்டில் இலராவர்; அவர் இலராயின் வேந்தர்க்கும் வாழ்க்கை நிலைபெறாது என்பதனை யுணர்ந்து வேந்தரும் செல்வரும் சான்றோரது சான்றாண்மை நல்குரவால் தடைப்படாமை குறித்து அவர்கட்குப் பெருஞ் செல்வத்தை வரையாது வழங்கினர். ஏனை இல்லாதவர் பலரும் பெறத்தகுவன போதிய அளவு பெற்று வாழ்வது உரிமையாகப் பெற்று வாழ்ந்தனர். அதனால் ஏனைமக்கள் வேந்தர்க்குக் குடிகளாகவும் போர் நேர்ந்தவழிப் படைகளாகவும். துணை புரிந்து வாழ்ந்தனர். வேந்தரும் செல்வரும், தம்பால் . தவறு நேர்ந்தவழி எடுத்தோதி வற்புறுத்தும் உரிமையைச் சான்றோர்க்கு வழங்கியிருந்தனர். "கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள, நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்" அறிவுடைய சான்றோர்க்கு "உரிமையாவன" என்றும், "இடித்துவரை நிறுத்தலும் அவரதாகும்" என்றும் தொல் காப்பியர் கூறினார். திருவள்ளுவர், "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன், கவிகைக்கீழ்த் தங்கும் உலகு" என்றும், "இடிப்பாரையில்லாத ஏமரா மன்னன், கெடுப்பாரிலானும் கெடும்" என்றும் கூறினர். இவ்வுரிமைபெற்ற சான்றோர், வாயுறை வாழ்த்து, செவியுறை முதலிய பாவகையால் வேந்தர்களையும் செல்வர்களையும் தெருட்டினர். "விறலியர், பாடல்சான்று நீடினையுறைதலின், வெள்வேலண்ணல் மெல்லியன் போன்மென, உள்ளுவர் கொல்லோ நின்னுணரா தோரே" எனச் சான்றோர் தவறெடுத்துக் காட்டிச் செய்வினைக்கண் ஊக்கியிருப்பது இதற்குச் சான்று பகரும். இவ்வாற்றால் மதுரைக் குமரனாராகிய சான்றோர், தமிழரசு சான்றோர்க்கு நல்லுரிமை பலவும் நல்கியிருந்ததை நன்கறிந் தார். இரண்டாயிரமாண்டுகட்குப் பின்னர் ஆங்கிலவரசின் அமைச்சியல் முதல்வரும், அமேரிக்க நாட்டு அரசியற்றலைவரும் அட்லாண்டிக் கடல் நடுவே கூடி உலகமக்களின் நல்வாழ்வுக்கு இந்நால்வகை உரிமைகளும் இன்றியமையாது வேண்டப்படுவன என முடிவு செய்தனர். இவற்றை அட்லாண்டிக் சார்ட்டர் என்று கூறுவர். அச்சத்தடை, வறுமைத்தடை, பேச்சுதடை, சமயத்தடை என்ற நால்வகைத் தடைகளின்றி மக்கள் இவற்றில் தனியுரிமையுடைய வராக வேண்டு மென்பது அட்லாண்டிக் சார்ட்டர். சமய வழிபாடு சமுதாயத்தைக் கட்டுப்படுத்தாது அவரவர்க்கும் தனியுரிமையாய் இருந்தமையின், சங்க காலத் தமிழகத்தே விளங்கி யிருந்த சமயம் இன்னதென இதுகாறும் தெளிய விளங்கிற்றிலது. சான்றோர் சமய நிலையைத் தம் பாடல்களிற் குறியா தொழிந்தனர். ஊர்களில் நடக்கும் விழாக்களில் பல சமய வாதிகளையும் வருவித்துத் தத்தம் சமயப் பொருள்களை எடுத்தோதுமாறு ஏற்பாடு செய்திருந்தனர் அந்தந்த நகரங்களின் புறத்தேயிருந்த சேரிகளில் சமயச் சான்றோர்கள் வாழ்ந் திருந்தனர். காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ந்த இந்திர விழாக் காலத்தில் "ஒட்டிய சமயத் துறுபொருள் வாதி கள், பட்டி மண்டபம் பாங்கறிந் தேறுமின்" என்று பணிக்கப்பெற்றனர். வஞ்சி நகரின் புறஞ்சேரியில் அளவை வாதியர், சைவவாதியர் முதல் பற்பல சமய வாதிகள் வாழ்ந்தனர். காஞ்சியம் பேரூரில் சமண சான் றோர்களும் பௌத்த நெறிப் புலவர்களும் மிக்கிருந்தனர். அவருள் தருமபால ரென்னும் தமிழ்ச் சான்றோர் வட நாட்டு நாலந்தாவிலிருந்த பல்கலைக் கழகத்தில் தலைமை நிலை பெற்று மேம்பட்டனர். திக்கநாக ரென்னும் தமிழர் வடநூற் புலமை மிக்குத் தருக்கநெறியறிவில் உயர்வற உயர்ந்து வடநாட்டில் மாண்புற்றுத் திகழ்ந்தனர். அருத்த சாத்திரம் எனப்படும் பொருணூல் வகுத்த சாணக்கியனும் தமிழகத் தானென ஆராய்ச்சியாளர் கூறுவர். பட்டாசாரியன் கொள்கையை நிறுவிய குமரிலபட்டரும் தமிழ் நாட்டிற்றோன்றிய சான்றோ ரென்பாரும் உண்டு. இன்னோர் பலரும் வடமொழிப் புலவராய் மேம்பட்டு அம்மொழியில் தம் நூல்களை எழுதியது கொண்டு இவர்களைத் தமிழரல்லரென ஒதுக்குதல் அறிவுடைய தமிழ் நன்மக்கட்கு அற மாகாது. இம்முறையில் தமிழ் வேந்தர் எல்லாச் சமயங்கட்கும் ஒத்த ஆதரவே புரிந்துவந்தனர். இவரது ஆட்சி நீழலில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் முதலிய பல சமயங்களும் வளர்ந்தன. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த மகேந்திர வன்ம பல்லவன் காலத்தே பாண்டி நாட்டை ஆண்ட நெடுமாறன் என்பான் சமண சமயத்தை மேற்கொண்டான். அவன் மனைவி மங்கையர்க் கரசியார் சைவ சமயத்தை மேற்கொண்டொழுகினர். அவனுக்கு முன் எண்Qறாண்டுகட்கு முன்பே சேரவேந்தனான செங்குட்டுவன் சைவனாய்த் திகழ்ந்தான்; அந்நிலையில் திருமாலை வழிபடும் நெறியைப் புறக்கணிக்கவில்லை. அவன் இளவலாகிய இளங்கோவடிகள் தாம் எழுதிய சிலப்பதிகாரத்தில் சமண சமயத்தையும் திருமால் வழிபாட்டையும், கொற்றவை வழிபாட்டையும் விரியக் கூறினர். இடைக்கால வேந்தருள்ளும் செந்தமிழ்ப் பாண்டி வேந்தன், கோமாற வன்மனான சுந்தர பாண்டியன், தனது மூன்றாமாண்டுக் கல்வெட்டொன்றில் "மூவகைத் தமிழும் முறைமையில் விளங்க, நால்வகை வேதமும் நவின்றுடன் வளர, ஐவகை வேள்வியும் செய்வினையியற்ற, அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ, எழுவகைப் பாடலும் இயலுடன் பரவ, எண்டிசை யளவும் சக்கரம் செல்ல" (p.s. ins. 250) வீற்றிருந்ததாகக் கூறுவதுகொண்டு இத்தமிழகத்து வேந்தர் சமயத்துறையில் ஓரம் கொள்ளாது உயர்ந்து வாழ்ந்த செய்தியைத் தெளிய உணரலாம். இதன் பயனாகச் சமயத் தலைவர் பலர் தோன்றிப் புதுப்புதுக் கொள்கைகளை ஆராய்ந்து கண்டு நாட்டில் அவற்றைப் பரப்பினர். நாட்டவர்க்கும் சமய வுரிமை யிருந்தமையால் கொள்வன கொண்டு உயரிய சமய நாகரிக முடையராயினர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் நிலவுலக மக்கள் உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் இன்ப வாழ்வும் பெற்று வாழ வெண்டுமெனப் பெருந்தலைவர்கள் அட்லாண்டிக் கடலிடைக் கண்ட நால்வகை முடிவும், நம் தமிழகத்தே பன்னூறாண்டுகட்கு முன்பே நிலவியிருந்தமை இனிது தெளியப்படும். படினும், இவை நிலவுலகு முழுதும் பரவாது ஒடுங்கியதுபோல எதிர்காலத்திலும் ஒடுக்கம் உண்டாகலாமாதலால், ஒடுங்குதற்குக் காரணமாயிருந்தவை இவையென ஆராய்ந்து காண்டல்வேண்டும். அவை மீளத் தலை யெடாவாறு செய்வன செய்தல்வேண்டும். எதிர்கால உலக அமைப்பைக் காணவிரும்பும் தலைமைச் சான்றோர்கள் இனியேனும் தமிழகத்தின் பண்டை வரலாற்றை ஆராய்ந்து காண்பார்களாக; அவர்கள் மேற்கொள்ளும் திருப்பணிக்கு இவ்வாராய்ச்சி பெருந் துணையாம் என்பதைத் தெளிய உணர்வார்களாக. இச்சூழ்நிலையில் வாழ்ந்த குமரனார்க்குப் பேச்சுரி மையும் அச்சமின்மையும் பெருந்துணை புரிந்தன. உழைக்கும் ஆடவர் தொகை குறைவால் நாட்டு மக்கட்கு வேண்டும் உணவு நிரம்பாது வறுமை தோன்றி நிலவுதற்கு இடம் அமைந்திருந்தது. மக்களிடையே வலியாரும் மெலியாரும் இருந்தமையின் செல்வரும்வறியரும் உளராயினர். வறுமை யிருளைப் போக்கிச் செல்வ வொளியைப் பரப்பும் தொண்டு புலவர் பெருமக்கள் கடனாதலை நம் குமரனார் நன்குணர்ந்தார். செல்வரையும் வேந்தரையும் கண்டு வறுமைத் துன்பத்தைப் போக்குமாறு வேண்டுவதே தாம் செய்யத் தக்க தெனத் துணிந்தார். இதற்கே முடிவேந்தன் இருந்து ஆட்சி புரிய, புலமை நலஞ்சிறந்த சான்றோர் இருந்து தமிழ்ப் பண்பு வளர்க்கும் மூதூராகிய மதுரையை யடைந்து அங்கே வாழ்வாராயினர். சான்றோர் தொடர்பும் தமிழ் வேந்தர் ஆதரவும் பெருகின. இவரது குடிவரவு விளங்கச் சான்றோர், இவரைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்று சிறப்பித்துரைக்கலுற்றனர்.  24. முடிவேந்தர் தொடர்பு மதுரைக் குமரனார் பரந்த மனப்பண்பும் விரிந்த நோக்கமும் ஆழ்ந்த புலமையும் படைத்தவர். அரிய வேந்த ராயினும் பெரிய செல்வராயினும், அவரவர் குணஞ் செயல் கண்டு பரவும் கொள்கை யுடையராகையால், குமரனார்பால் செம்மாந்த செலவு சிறந்திருந்தது. அதனால் அவர் பொருளுடைமையை உடைமையாகக் கருதிற்றிலர்; உடைமையாவது குணஞ் செயல்களால் மாண்புடைமையே யென்பது அவர் கருத்தாயிற்று. படைப்பெருமை யொன்றே கொண்டு செருக்கும் பெருவேந்தரையும் சிறியோரினத்துள் ஒருவராகக் கருதி அவர் முன் அஞ்சாது நின்றுதகுவது கூறும் தகைமை சிறந்திருந்தார். அவருடைய உள்ளமும் உரையும் செயலும் விளங்கும் பாநலம் கண்ட சான்றோர் பலரும் குமரனாரை நன்கு மதித்தனர். அவரது இருக்கை புலவர் உலகிற்கே சிறந்த புகழை விளைத்துவந்தது. மதுரைக்கண் வாழ்க்கையுடையராயினும் தம் முன்னோர்க் குரிய கோனாட்டின் பால் குமரனார்க்குப் பெரும் பற்று உண்டாகி யிருந்தது. எல்லா நாடுகளையும் தன்னாடாகவும் எல்லாவூர்களையும் தன்னூராகவும் எல்லா மக்களையும் தன்னை யொப்போராகவும் கருதும் புலமைப் பண்பு அவரிடம் குறைவறக் குடிகொண்டிருந்தது. ஆயினும், எத்திறத்தோர்க்கும் தன்னைப்பெற்ற தாய்பால் சிறந்த அன்புதோன்றிப் பிணிப்புறுப்பது போலப் பிறந்த நாட்டின் பால் அத்தகையதோர் அன்பு தோன்றிப் பிணிக்குமென்பது ஒருதலை. அவர்தான் பிறந்த நாட்டின் நீங்கி வேற்று நாட்டில் தங்க நேரின், அக்காலை அத்தாய்நாட்டன்பு எவ்வகையாலேனும் தன் இருப்பைப் புலப்படுத்தாதொழிவது கிடையாது. அவர் தமது நாட்டிலிருந்து எத்துணை நெடுந்தொலைவு சென்றாலும், நாட்டையும் அவர் நெஞ்சத்தையும் பிணித்து நிற்கும் அன்புத்தொடர் அத்துணையும் இடையறவு படாது நீண்டு நின்று, அவரைத் தமது நாட்டை நினைக்கப்பண்ணும். வெளிநாடு சென்று தங்கும் ஒருவர், அங்கிருந்தே தமது தாய்நாட்டை நினைப்பராயின், அந்நினைவால் உள்ளத்தில் தோன்றும் தம் நாட்டுக் காட்சி, நெஞ்சகம் முழுதும் நிறைந்து நரம்புக்கால்தோறும் உவட்டெடுத்தோடும் இன்ப வெள்ளத்தைப் பெருக்கும். கோனாட்டுக்குன்றுகள் பசுந்தழை போர்த்து அருவி யொலிப்ப, மாவும் புள்ளும் மலிந்து, இனிய காட்சிகளைக் குமரனார் மனக் கண்ணுக்கு வழங்கின. அவற்றின் திண்மையும் செம்மையும் அவருள்ளத்தே கலங்கா நிலைமை பயந்தன. காட்டாறுகள் பலவும் மிகச் சிறியவேயாயினும் மழை பெய்யுந் தோறும் நீரைச் சிதையவிடாது தம்பால் பெருகுவித்துக் கொண்டு சென்று கால்களிற் செலுத்தி வயல் வளம்படுத்தியும் குளங்களை நிரப்பியும் உணவுப்பொருளை விளைத்தும் உயிர்கட்குண வாக்கியும் அந்நீரைப் பயன்படுத்தும் செயல், மக்கட்கு முயற்சிவழி யெய்தும் பொருள் அறவழிகளிற் சென்று இல்லாரை வளர்த்தும், குறைந்தாரை நிறைத்தும், தாழ்ந்தாரை யுயர்த்தும், மேன்மேலும் பொருளை மிகு வித்தும், தம்மையுடையார்க்கு நல்வாழ்வளித்தும் நற் செல்வமாதல் வேண்டுமென்னும் ஒள்ளிய அறவுணர்வை அவர் புலமையுள்ளத்தில் நிலைபெறுவித்தது. எஞ்சும் நீரை அக்காட்டாறுகள் நேரே கடலிற்கு அளிப்பது கண்ட குமரனார், குடிமக்களும் தாம் செய்யத் தகுவன வற்றைச் செய்ய எஞ்சும் பொருளைத் தம்மையாளும் வேந்தர்க்கு இறையாகச் செலுத்துவது கடனென்று தெளிந்தார்; கடலடைந்த காட்டாற்றுநீர் மீளவும் முகிலால் மழையாக வருவது கண்டு, வேந்தர்க்கு மக்கள் நல்கும் இறைப் பொருள் அம்மக்கட்கே மீளவும் நலம்புரியும் வருவாயாதலை நன்கறிந்தார். இந்நல்லுணர்வு முற்றும் குமரனாரது புலமையுரைக்கு ஆக்கமாயின! மனத்திற்குத் திட்பம் மிகுவித்தன. இங்ஙனம் பிறந்த நாட்டுணர்வு, ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் மனநலமே விளைப்பதைச் சான்றோர் நன்றாக அறிந் திருந்தனர். ஒருவனுக்கு அயலான் குடி நோக்கத் தன் குடியிலும், அயலூரை நோக்கத் தன்னூரிலும், அயல்நாடு நோக்கத் தன்னாட்டிலும் அன்பு மிகுதலால், தன்னாட்டவர் அனைவரையும் தன் உடன் பிறந்தாராகவும், தன்னாட்டுத் தலைவர் தன் குடித் தலைவராகவும் தோன்றி அன்பு செய்தற்குரிய ராகின்றனர். தன் வாழ்க்கை முற்றும் தன்னாட்டு நலத்துக்கு ஆக்கமும் அரணுமாதல் வேண்டுமெனும் பேருள்ளம் பிறங்குகிறது. உள்ளத்துக்கேற்ப உரையும் செயலும் உளவாகின்றன. தன்னாட்டவருடைய ஆக்கமும் உயர்வும், தனக்குண்டாயின போல உள்ளத்துக்கு எழுச்சியும் இன்பமும் நல்கும்; அவர்க்குண்டாகும் நல்குரவும் துன்பமும் தமக்குண்டாயின போல நெஞ்சை வெதுப்பி உடல் துடிக்க உரைகுழறக் கண் பனிமல்க உறக்கமின்றி வாடும் உண்மை நிலையை யுண்டுபண்ணும். இவை யாவும் தன்னாடு நீங்கி வேறு சென்று உயிர்வாழ்வார் அனைவரும், உயிர் பெற்ற பயனாக உணரும் உண்மையுணர்வு களாகும். உயிரோடு கூடியுறையும் எவரும் இவற்றை யுணராமல் இருக்கமுடியாது. ஒருகால் ஒருவர் உளராயின், அவர் நடைப் பிணமாகவே கருதப்படுவர். இவ்வண்ணம் சிறந்து தோன்றும் தாய்நாட்டுணர்வு குமரனார் உள்ளத்தே நிறைந்து நின்றது. புலமைவளம் பெருகப்பெருக, கோனாட்டுக்கு முதலாகிய சோழநாட்டின் பால் பெருவேட்கை யுண்டாயிற்று. சோழவேந்தர்பால் பேரன்பு மிளிரத் தொடங்கிற்று. சோழநாட்டுக்குச் சென்று சோழவேந்தரையும் பிற செல்வர்களையும் கண்டு அவர் குணநலங்களைப் பாராட்ட வேண்டுமெனும் நினைவு முறுகிவரத் தொடங்கிற்று. அங்கே வாழும் பாணர், கூத்தர் முதலா யினாரும் ஏனை மக்களும் நல்வாழ்வு பெறுதற்குத் தம்மால் இயன்ற பணிபுரியவேண்டு மென்றெழுந்த நல்லுள்ளம் பின்னின்று பிடர் பிடித்து உந்திற்று. செந்தமிழ்ப் பாண்டி வேந்தன் சிறப்பும், மதுரை மூதூரின் மாண்பும், நல்லிசைச் சான்றோரின் நற்சூழ்வும் குமரனாரைச் செலவு மேற்கொள்ளாவாறு தளைத்தன. கட்டிளமையும் கண் கொள்ளாப் பேரழகும் படைத்த காரிகை யொருத்தி வாழ்க்கைத் துணையாய் அமையினும், அவள் பாலுண்டாகும் காதலினும் ஒருவற்குத் தன்னைப்பெற்ற தாய் பாலுண்டாகும் பேரன்பு விஞ்சி நிற்பது போலக் குமரனார்க்குச் சோழநாட்டின்பால் உண்டான அன்பு வலி பெற்று நின்றது. குமரனாரும் சோழநாடு சென்றுவர முற்பட்டார். மதுரைக் குமரனார் சோழநாடு சென்றுவர விரும் பினவர் மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்து வந்த பாண்டியன் பெருவழுதியைக் கண்டு தம் கருத்தையுரைத்து விடைபெற்றார். இப்பெருவழுதி மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்தே குமரனார் இல்லாத காலத்தே உயிர் துறந்தான். இதனால் இவனைப் பிற்காலச் சான்றோர் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனச் சிறப்பித்தனர். இவன் காலத்தே சோழநாட்டில் உறையூரில் இருந்து ஆட்சி புரிந்தவன் பெருந்திருமா வளவன் என்பான். இவன் பிற்காலத்தே குராப்பள்ளி யென்னுமிடத்தே இறந்தமைபற்றி இவனைச் சான்றோர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன் என்று பாராட்டினர். பெருந்திருமாவளவனுக்கும் பெருவழுதிக்கும் நட்புண்டு. ஒருகால் இவ்விருபெருவேந்தரும் ஓரிடத்தே கூடியிருந்தனர். இருதிறத்தாருடைய அரசியற் சுற்றத் தாரும் ஒருங்கே குழுமியிருந்தனர். இவர் தம் போர்ச் சிறப்பைப் போர்க்களம் பாடும் பொருநர் இன்பமுறப் பாடியேத்தினர். பாணர் இசைக்கருவிகொண்டு இன்னிசை பாடினர்; விறலியர் தம் முடைய ஆடலும் பாடலும் அழகும் காட்டி இன்புறுத்தினர். நல்லிசைப் புலமை சிறந்த புலவர் பலர் அம்மகிழ்ச்சியவையில் மேவியிருந்தனர். அக்காலத்தே காவிரிப் பூம்பட்டினத்தவரும் சிறந்த நல்லிசைச்சான்றோருமாகிய காரிக் கண்ணனார் அவ்வவைக்கண் இருந்தனர். இருபெருவேந்தரும் ஒருங்கே நட்பாற் பிணிப்புற்று இனிதிருப்பக் கண்டதும் அவர் உள்ளத்தே இவ்விருவரும் பிரியா நட்பினராய்ப் பிணைந்திருப்பின் தமிழகத்தின் பெருமை பெருநல மெய்துமென்பதைத் தெளிந்தார். அதனால், இருவரையும் நோக்கி, "வேந்தர்களே! நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் துணையாய் வாழ் வீராயின், இம்மாநிலம் உங்கள் கையகப்படுவது பொய்யாகாது. நுங்கள் இடையே புகுந்து நல்ல போலவும் நயமுடையன போலவும், தொல்லைப்பெரியோர் மேற் கொண்ட நெறியின போலவும் சொற்களைச் சொல்லி நுங்களிடையே பிளவை யுண்டுபண்ணுவோர் உளராவர். அவர் கூறுவனவற்றைக் கொள்ளாது இன்றுபோல என்றும் பிரியா நட்பினராகுமின்; இவ்வாறாயின், நாடு முழுதும். உங்கள் கருத்துப் படியே இயலும்" என அறிவுறுத் தினர். இவ்வாறு அறிவுறுத்தின கண்ணனார், பெருவழுதியின் பெருமையினைப் பெரிதெடுத்துப் பேசி வளவனை மட்டில் முன்னிலைப்படுத்தி, "நீயே தண்புனற் காவிரிக் கிழவனை" என்றும், "நீயே அறம் துஞ்சும் உறந்தைப் பொருநனை" என்றும் பாராட்டி யுள்ளார். நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியன; வரைய சந்தமும் திரைய முத்தமும் எளியன அல்ல; பிறர் எல்லார்க்கும் அரிய எனச் சிறந்து மேம்படுபவன், தமிழ்கெழு கூடலில் வைகும் தண் பாண்டிவேந்தன் என வுரைத்து, அவன் நட்பு மிகச் சிறந்ததெனக் குறிப்பித்துரைத்தார். இருவரும் முறையே பலராமனும் கண்ணனும் ஒப்பரென மொழிந்து, அவர் தம் நிறத்தை யெடுத்தோது முகத்தால் வளவன் வெள்ளையுள்ளம் படைத்தவன் என்றும், வழுதி மனத் திட்பமுடையனென்றும் குறித்தார். வளவன் ஏதிலார் கூறும் நல்ல போலவும் நயவ போலவும் உள்ள சொற் களுக்கு எளிதில் இரையாவன் என்பது தோன்ற அவற்றை விரியக் கூறினார். கள்ளமறியும் திறமின்றி வெள்ளையுள்ளம் படைத்த வளவன் பால், உறையூரிலிருந்து மருத்துவப்புலமையாலும் நல்லிசைப் புலமையாலும் வீறுபெற்றிருந்த தாமோதரனார் என்னும் சான்றோர் பேரன்பு கொண்டிருந்தார். ஒருகால் இவர், விறல்படப் பாடி யாடவல்ல விறலி யொருத்தியுடன் காட்டுவழியே வந்தார். இரவுப் போது வந்தது. காட்டிடையிருந்த ஓரூரில் தங்கினர். அன்றிரவு முழுமதி நாளாதலால், பான்மதி பால்போலும் தனது தண்ணிய நிலவை நிலமெங்கும் பொழிந்து குளிரச் செய்தது. அஃது உச்சியை யடையக் கண்டார் தாமோதரனார். விறலியை யழைத்து இத்தண் மதியைக் காண் எனக் காட்டினார். அவளும் அதனைக்கண்டு அதன் அழகினும் தண்ணிய நிலவுபொழியும் தகைமையிலும் தன் காட்சியைச் செலுத்திக் களிப்புற்றாள். புலவர், இத்தண்ணிய வெண்மதி நம் பெருந்திருமாவளவனது வெண்குடைபோல்வது காண் என்றார். உடனே விறலி அதனைத் தொழலுற்றாள். தாமோ தரனாரும் தாழ்ந்து தொழுதார். இந்நிகழ்ச்சியை இனிய பாட்டொன்றிற் பாடினார். இப்பாட்டில் வளவனை, "கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும் , ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன் பகட்டன்ன எங்கோன்,வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்" என்று பாராட்டியிருக்கின்றார். இப்பாராட்டுரையால் பெருந்திரு மாவளவனது பண்பினை நாம் ஓரளவு அறிந்துகொள்ளலாம். ஆரைச் சாகா டென்பது வண்டி. வண்டிகளில் ஏற்றப்படும் உணவுப் பொருள்களில் மிக்க நோன்மை (பளு) யுடையது உப்பே. கல்நாட்டு வழி ஏற்றிழிவுகளை யுடையதாகையால் வண்டியை ஈர்த்துச் செல்வது மிக்க வலியுடைய எருதுகளுக்கல்லது இயலாது. ஆழ்ந்த மடிப்புக்களில் தாழும் வண்டியை மிக்க வலியுடைய எருது பெரிதும் வருந்தியீர்க்கும். அதுபோலவே, வளவனும் மக்கட்குப் பெருநலம் நல்கும். அரசியலாகிய வண்டியை வலிமிக்க எருது போல உய்க்கின்றான் என்பது கருத்து. வண்டியிலேற்றப்பட்ட பொருட் சுவையை நோக்காது அதன் நோன்மையுணர்ந்து ஈர்த்தேகும் பகடுபோல்வன் வளவன் என்பதனால் இப்பெருந்திருமாவளவன், இசையும் இன்பமுமாகிய அரசியற் பயனோராது, அதனை உய்த்த லொன்றே கருதி, உய்த்தற்கு வேண்டும். படைவலியே பெரிது நோக்கும் இயல்பினன் என்பது விளங்குகிறது. எனவே, இவன்தன் களிறு, குதிரை, தேர், காலாள் என்ற படைப் பெருமையையே நோக்கிக் களித்திருந்தான் என்பதாம். இங்ஙனம் படைவலியாற் பிறக்கும் மகிழ்ச்சியால் மைந்துற் றிருந்த பெருந்திருமாவளவன், சான்றோர் கூட் டுறவுக்கு அத்துணை ஏற்றம் நல்காதொழிந்தான். இதனையறிந்திருந்த சோழநாட்டுச் சான்றோர்கள் இவனையடைந்து பாடுவதைப் பெரிதும் தவிர்த்தனர். பாண்டிநாட்டிலிருந்து வந்த மதுரைக் குமரனார் இதனையறியார். அதனால் அவர் உறையூருக்குச் சென்று, பெருந்திருமாவளவனைக் கண்டு பரிசில் வேண்டினார். வளவன் அவரது புலமை நலத்தை நயவாது, பரிசிலும் தந்துவிடாது, படைப் பெருமையுற்று விளங்கும் வேந்தர்களையும் செல்வர்களையும் மதித்துச் சிறப்புச் செய்து கொண்டிருந்தான். அதே நிலையில் அவன் குமரனார்க்குப் பரிசில் கொடுத்தற்கு மறுக்கும் குறிப்பையும் காட்டவில்லை; கொடுக்கும் குறிப்பையும் தோற்று விக்கவில்லை; வெறிதே காலத்தை நீட்டினான். மதுரைக் குமரனார் அவ்வுறையூரில் பலநாள் தங்கி னார். நாட்கள் சென்றனவே யொழிய வளவன் பரிசில் தருவதைக் கண்டிலர்; அவன் உள்ளம் படைப்பெருமையிற் படிந்திருப்பதை உணர்ந்தார். சான்றோருடைய பாடறிந்தொழுகும் தமிழ்ப் பண்பாடு அவன்பால் இல்லாமை கண்டு வருத்தமுற்றார். "இது கொல் சோழவேந்தன் ஈகை நலம்!" என எண்ணி யேங்கினார். அவன் உணர்வைத் தம் வரவறிந்து சிறப்புச் செய்தல் தக்கதெனவுணருமாறு பல முயற்சிகளைச் செய்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. அவர் உள்ளத்திற் கொதிப்புண்டாயிற்று. சீரிய தமிழ்க்குடியிற் பிறந்து தமிழ் நலத்தில் வளர்ந்து தமிழ்ப் புலமை சிறந்து தமிழ் மானம் தலைக் கொண்ட தமிழ்ப் புலவராதலின்; பெருந் திருமாவளவனை எவ்வகையாலேனும் கண்டு, "தமிழ்ப்புலவர் மனப் பண்பு ஈது" என்பதை அறிவுறுத்த வேண்டுமெனத் துணிந்தார். அதற்குரிய செவ்வி நோக்கிச் சிலநாள் தங்கினார். ஒருநாள் பெருந்திருமாவளவனைக் காண்டற்கேற்ற செவ்வி வாய்த்தது. கொக்கினும் கூர்த்த செவ்வி நோக்க முடையர் நம் மதுரைக் குமரனார். வேந்தன் அவைக்கட் புகுந்தார். தமக்குக் குறிக்கப்பெற்ற இருக்கையில் இருந்தார். வளவன் படைச்செருக்கு மிக்குத் தன் திருமுகத்தை அவர்பால் திருப்பி மைந்துமலியும் பார்வையுடன் தன்னை முந்துற்றுச் செம்மாந்து நோக்கும் செந்தமிழ்ப் புலவரைக் கண்டான். அவனது மைந்துமலி பார்வை மழுங்குமாறு, மதுரைக் குமரனார் எழுந்து நின்றார். அரசனையும் அரசியற் சுற்றத் தாரையும் நோக்கினார். கண்களில் புலமையொளி பொங்கித் திகழ்ந்தது. திருவாய் முறுவலித்தது. "பெரும" எனப் பேசத்தொடங் கினார். வேந்தனுக்கும் ஆங்கு வீற்றிருந்த பிறருக்கும் வியப்பு உடன் பிறந்தது. "பெரும, நம் தமிழகத்தில் பேரூர் வேந்தரும் உளர்; சீறூர் வேந்தரும் உளர். பேரூர் வேந்தர்பால் பெருஞ் சோற்றுவளம் உண்டு; அதுகொண்டு அவராற் பேணப்படும் பெரும்படையுண்டு. அதன்கண் காற்றெனக்கடி தேகும் கடுவிசைக் குதிரைகள் பல; கொடியணிந்து விளங்கும் குன்றுபோலும் தேர்களும் பல; கடல்போற் பரந்த படை வீரரும் பலர்; மலை மலைந்தன்ன மால்யானைகளும் பல; இவைகொண்டு உடற்றும் போரில் மறத்தீக் கிளர்ந்தெழ வூக்கி உருமென முழங்கும் முரசுகள் எண்ணில. இப்படை நலத்தால் வென்றி மேம்படும் பேரூர் வேந்தரை யாம் கண்டுளேம்; அவர் மார்பிலும் தோளிலும் விளங்கும் மறப் பூண்களையும் கண்டுளோம்; அவர் முடிமேல் கவிந்து தண்நிழல் செய்யும் வெண்குடையும் கண்டுளேம்; மேன்மேற் பெருகும் அவரது விறல்கெழு செல்வத்தையும் யாங்கள் கண்டுளோம்: அவருள், இந் நால்வகைப் படையும் ஒருங்கே சிறக்கப்பெற்ற பேரூர் வேந்தர் அரியர். சிலர், குதிரையும் தேருமாகிய படைப் பெருமையால் வீறு பெறுவர்; சிலர் களிறு மறவரு மாகிய படைப் பெருமையாற் சிறப்புப் பெறுவர்; சிலர் தமது முரசும் ஆண்மையுமாகிய பெருமையால் மேம்படுவர்" இங்ஙனம் பெருமையால் மைந்துற்று வேறு வேறு திறத்தால் வென்றி மேம்படுவராயினும், பேரூர் வேந்தரது வெண்குடைப் பெருஞ் செல்வத்தை எம்போலும் தமிழ்ப்புலவர் ஒரு பொருளெனக் கருதமாட்டார். அவர் பொருளெனக் கருதி வியத்தற்குரியது படைப் பெருமையும் அன்று; அதனால் ஈட்டப்படும் செல்வப் பெருமையும் அன்று. " வளி நடந்தன்ன வாச்செலல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅக் கடல் கண்டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே" அஃதாவது. இவ்வேந்தர், காற்றுப்போற் கடிது தாவிச் செல்லும் குதிரையொடு கொடியணிந்த தேர்களால் சிறப்பு மிக்கவரென்றோ, அவ்வேந்தர், கடல் போலும் மறவருடன் மலைபோலும் யானைப் படைகொண்டு மாண்புறுபவரென்றோ, இவர் முரசு முழங்கு தானையால் அரசுகளை வென்று மேம்படும் ஆண்மை மிக்கவ ரென்றோ எம்போல் வார் வியந்து பாராட்டும் வெறியர்கள் அல்லர் என்பது. "இனிச் சீறூர் வேந்தராவர் யாவரெனில் கூறுதும். பேரூர் வேந்தர் போலப் பெருஞ் சோறு விளைக்கும் நன் செய்வயல்கள் சீறூர் வேந்தர்கட்கு இல்லை. மிகத் தாழ்ந்த சீறூர் வேந்தர், புன்செய்களே மிகவுடையராவர். அவற்றில் மிகுதியும் விளைவது வரகு; அச்செய்ப்புறத்துப் படப்பைகளில் முள்வேலி இடப்பட்டி ருக்கும். படப்பையில் முஞ்ஞைக்கொடி (முன்னைக்கொடி) முளைத்துப் படர்ந்திருக்கும். மான்மறிகள் (மான் கன்றுகள்) துள்ளி யோடி முன்னையின் மெல்லிலையை மேயும். எஞ்சி நிற்கும் சிறிய நறிய முன்னைக்கீரையை அவ்வூரவர் கொணர்ந்து சமைப்பர். அவரிடம் செல்லும் விருந்தினர்க்கு வரகின் சோறும் முன்னைக் கீரையும் வழங்கப்படும். அதனால் சீறூர் வேந்தர்பால் பெருஞ் செல்வம் உண்டாதல் அரிது. இத்தகைய சீறூர் வேந்தர்பால், பெருஞ் செல்வத்துக்கு மாறாகச் சான்றோர் சால்பறிந்தொழுகும் தமிழ்ப் பண்பாடு தக்கிருக்குமாயின், அவர்களை எம் போலும் தமிழ்ப் புலவர், அப்பண்பை வியந்து என்றும் பொன்றாச் சிறப்ப மைந்த தமிழ்ப் பாட்டில் நிறுவி, " எம்மால் வியக்கப் படூஉ மோரே இடுமுள் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன்புல வரகின் சொன்றி யொடு பெறூஉம் சீறூர் மன்ன ராயினும் எம்வயின் பாடறிந் தொழுகும் பண்பி னாரே" அவரைப் பாராட்டுவர். வேந்தருடைய படையும் பொருளும் பற்றிக் கூறப்படும் பெருமை சிறுமைகளை எம்போல்வார் பொருளாகக் கொள்ளார்; எம்முடைய பாடறிந் தொழுகும் பண்புடைமையே வேந்தரையாம் வியத்தற்குப் பொருளாவது என அறிக. அன்றியும், உலகில் உயிர் வாழ்க்கைக்குப் பொருள் இன்றிய மையாதென்பதை யாம் அறியேமல்லோம்; நன்கு அறிந்துள்ளோம். பொருளில்வழி மிக்க துன்பம் வந்து பொருந்தும் என்பது நாங்கள் அறியாததன்று; அப்பொருள் உதவி நாடியே நாங்கள் பழுமரந் தேரும் பறவை போல வளங்கெழு செல்வரை நாடிச் சென்ற வண்ணம் இருக்கின்றோம். இவ்வாறு பரிசில்வாழ்க்கையே மாயினும், எமது பாடறிந்தொழுகும் பண்புடைச் செல்வர் தரும் செல்வத்தையே விரும்பும் மானமுடையோம்; அப்பண்பில்லாத அதனை மேற்கொள்ளும் நல்லறிவில்லாத வேந்தர்களையோ, பிற செல்வர்களையோ கனவிலும் விரும்பமாட்டோம். அவ்வகையில் யாங்கள் உயிர்விடுதற் கேதுவாகிய மிக்க பெருந்துன்பம் எய்துவதா யினும், எங்கள் மானத்தைக் காத்த எங்களைப் புரப்போருடைய தமிழ்ப் பண்பைப் பாராட்டியே வாழ்வோம். பாடறிந்து ஒழுகும் பண்புடையராகிய நல்லறிஞர் மிக்க வறியராயினும், அவரது வறுமை எங்கட்குப் பேரின்பம் தரும்; அவரது நல்லறிவே எங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் சிறந்த பொருளாவதாம். " மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை யுள்ளோம் நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் பெருமயாம் உவந்து நனிபெரிதே," இங்ஙனம் மதுரைக் குமரனார், தமிழ்ப் பண்பும் புலமை மறமும் தழைத்துத்தோன்ற உரைத்தபேருரையைக் கேட்ட பெருந்திருமா வளவனுக்குத் தன் தவறு புலனாயிற்று. வெட்டித் தள்ளிய பின் கட்டியழுவாரைப் போல வளவன் வருந்தினான். குமரனார் பின்னர் அவன் பால் விடை பெற்றுக் கொண்டு, காவிரியின் வடகரை வழியே காவிரிப்பூம்பட்டினம் சென்று சேர்ந்தார். அக் காலத்தே காவிரிப்பூம்பட்டினம் மிக்க சிறப்புடன் விளக்க முற்றிருந்தது. சோழர் குடியில் தோன்றிய நலங்கிள்ளி சேட் சென்னி யென்பான் அங்கேயிருந்து சோழநாட்டின் கீழ்ப்பகுதியை ஆண்டு வந்தான். சோழன் நலங்கிள்ளிக்கு மகனாதலால் அவன் நலங்கிள்ளி சேட்சென்னியெனப் பட்டான். காவிரிப்பூம்பட்டினத்தில் அரசன் கோயிலைச்சார இலவந்திகைச் சோலை யொன்றுண்டு. இலவந்திகை யென்பது நீராவி. இதன் கரையில் பல்வகைப்பூ மரங்களும் செடிகளும் கொடிகளும் நிறைந்த சோலை யுண்டு. அதனால் இஃது இலவந்திகைச் சோலை யெனப்படும். வேனிற் காலத்தே வேந்தர்க்கு இச்சோலை தண்ணிய நிழலையும் மன்றல் கமழும் தென்றலையும் நல்கி இன்புறுத்தும். இச்சோலை நடுவே உயரிய அரசுறை கோயிலுண்டு. இது வெளியே தோன்றா வண்ணம் சோலையிலுள்ள மரங்கள் தழைத்து மூடிக் கொண்டிருக்கும். இக் கோயிலை இலவந்திகைப்பள்ளி யென்பர். பிற்காலத்தே சோழன் நலங்கிள்ளி சேட் சென்னி போர்ப்புண்பட்டு இப்பள்ளியிடத்தே இருந்து உயிர் துறந்தான். அதனால் அவனை இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி யென்று சான்றோர் பாராட்டி யுரைப்பாராயினர். மதுரைக் குமரனார் தன்னைக் காண்டல் வேண்டி வந்த திறத்தைச் சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி யறிந்து நன்கு வரவேற்று அவர்க்குரிய சிறப்பைச் செய்து அவரைத் தன் நகரத்தே சில நாள் தங்கியிருக்குமாறு வேண்டினான். சேட் சென்னி புலவர் புரவலனாய்த் தன்பால் பேரன்பு கொண்டொழுகுவது கண்டு குமரனார் பெரிதும் இன்புற்று அவ்வாறே தங்கியிருந்தார். குமரனார் காவிரிப்பூம்பட்டினத்தே தங்கியிருக்கையில் அடிக்கடி சோழ நாட்டின் சிற்றூர்கட்குச் சென்று நாட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைநேரிற் கண்டு இன்புற்றார். நாட்டவர்பால் நிகழும் ஒவ்வொரு செய்கையும் அவருடைய கூர்த்த பார்வையைக் கவர்ந்தது. சோழ நாடு நீர் நாடாதலால் வயல்களில் தொழில் புரியும் உழவர் செயல்களையும் இளஞ்சிறார்களின் சிறு விளையாட்டுச் செயல்களையும் நுனித்து நோக்கிப் பயின்றார். உழவுத்தொழில் புரிபவர் நெற்சோறமைத்து உண்ணும் முறையும், நெல்விளைத்த நெற்பயன் கொள்ளும் முறையும், பிறவும் மதுரைக்குமரனாருடைய புலமை யுள்ளத்தில் நன்கு பதிந்தன. நெல் வயல்களில் களையெடுக்கும் தொழிலைக் கடை சியர் செய்தனர். தலையில் கொண்டையும் இடையில் தழையும் விளங்க, வயலில்களை யெடுக்கும் அக்கடைசியர் உருவும் செயலும் குமரனார் கண்ணைக் கவர்ந்தன. நெல்வயலில் நெற்பயிரோடு வேறு அந்நெல்லையே போலும் புல்லும் ஆம்பலும் முளைத்துப் பூத்திருந்தன. புல்லும் ஆம்பலும் நெற்பயிர்க்குக் களையாய் இடையூறு செய்வன வாதலின், அவற்றையறிந்து மகளிர் நீக்குவது முறை. வரம்பு சார்ந்திருக்கும் வாய்த்தலைகளில் நெய்தல்கள் முளைத்துப் பூத்திருப்ப, ஆங்கேகளை யெடுத்துப் போந்த கடைசியர், புல்லையும், ஆம்பலையும் களைவதோடு நெய்தலையும் களைவராயினர். குமரனார்க்கு இஃதொரு வியப்பைத் தந்தது. சிறிதாய் அழகிதாய் அவர் தம் கண்போல் விளங்கும் நெய்தலைக் களைந்தது கண்டு, "கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர், சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு"களை யெடுக்கின்றனரே யென்றார். பின்பு, அவர் பார்வை வயலகத்தே சென்றது. வயல் களில் நிறைந்து நிற்கும் நீரில் மலங்கு மீன்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சில வயல்களில் நீரை வடித்துச் சேற்றை ஆழ வுழுது பண்படுத்த வேண்டி உழவர் தளம் பென்னும் உழுகருவி கட்டி உழுதனர். தளம்பின் அடியில் சேற்றைக் குத்திக் கட்டிகளை யுடைத்துச் செம்மை செய்யும் இருப்பாணிகள் சேற்றிற் பதிந்து சால் சாலாகப் பிளந்து கொண்டு சென்றன. சில இடங்களில் அருகிலிருந்த நீர்நிலையில் வாழ்ந்த வாளை மீன்கள் போந்து சேற்றிற் படிந்து கிடந்தன. அவ்வழியே தளம்பு செல்லவே, அவ்வாளை மீன்கள் குறுக்கிட்டு இருப்பாணியால் துண்டு துண்டாய்விட்டன. அத்துண்டுகளைக் கண்ட உழவர் எடுத்து அவற்றை நீரிற் கழுவித் தளம்பினது மேழியிற் கட்டப் பெற்றிருந்த வட்டிகளிற் பெய்து கொண்டனர். இச்செய்கையைக் கண்ட குமரனார்க்கு ஒருபால் இரக்கமும் இத்துண்டுகளை உழவர் என் செய்வரென்றெழுந்த வேட்கையால் ஒருபால் வியப்பும் உண்டாயின. ஞாயிறு மறையத் தொடங்கிற்று உழவர் தத்தம் வீடு திரும்பினர். வாளைத் துண்டுகளை பெய்த வட்டிகளும் வீட்டிற்கு வந்தன. மகளிர் புது நெல் குற்றிய அரிசியை வெளிதாகத் தீட்டிச் சோறு சமைத்தனர். வாளைத் துண்டுகள் அச் சோற்றுக்குத் துணைக் கறியாக (கண்ணுறையாக) அடப்பட்டன. துணைக்கறி துணை செய்யப் புது நெல் வெண் சோற்றை நன்கு உண்ட உழவர்க்கு இரவுப் போதும் இனிது கழிந்தது. பொழுது விடிந்தது. காலையில் வயல்கட்குச் செல்ல லுற்ற உழவர், இரவிற் சமைத்து நீரிற் கிடப்பித்த வெண் சோற்றை அவ்வாளைக் கறியைத் துணையாகக் கொண்டு தம் வயிறு நிரம்ப வுண்டனர். விலாப்பக்கம் இரண்டும் புது நெல் வெண்சோற்றால் புடைத்துத் தோன்றின. ஆண்களும் பெண்களுமாக உழவர் நெல் விளைந்துள்ள வயல்களை யடைந்தனர். இரவிற் சமைத்த சோறும் கறியும் காலையிற் பழமைபட்டு உண்பார்க்குச் சிறிது களிப்பினை யுண்டு பண்ணும். இதனைக் குமரனாரும் நன்கறிந்தனர். காலையில் வெயில் ஏற ஏறப் பழஞ் சோற்றின் களிப்பும் மிகும். அக்காலை அவ்வுழவருடைய செயலைக் காண்பதில் குமரனாருக்கு விருப்ப முண்டாயிற்று. உழவர் தொழில் புரியும் வயற்பக்கம் சென்றார். உழவர்கள் குனிந்த தலை நிமிராது விளைச்சலை அறுப்பது கண்டார். நெற் சூடு கைந்நிறைந்ததும் அரியரியாக வைப்பது முறை. பழஞ் சோறும் பழங் கறியும் உண்டதனாற் பிறந்த களிப்பு அவர்கட்குத் தடுமாற்றம் விளைப்பதைக் குமரனார் கண்டார். வைத்தற் குரிய இடத்தில் வையாது நெற்சூட்டரிகளை முறைமாறி வைக்கலாயினர். அதனாற் கம்பலையும் பெரிது உண்டாயிற்று. அறுத்த சூட்டை வைக்குங்கால் தடுமாற்றம் உண்டாயிற்றாயினும் அவ் வுழவருடைய கைகள் நெல்லரியும் தொழில் நன்கு பயின்றிருந்தனவாதலால், பிறழ்ந்து தமக்கும் நெற்றாளுக்கும் சிதைவு உண்டு பண்ணாது தளர்வு சிறிது மின்றித் தம் செய்கையைச் செவ்வே செய்தன. அதை நுனித்து நோக்கிய குமரனார் "வன்கை வினைஞர்" என இவர்களைக் குறிப்பது நேரிதே என எண்ணினர். எண்ணியவர் " மலங்கு மிளிர் செறுவில் தளம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடுகதிர்க் கழனிச் சூடு தடுமாறும் வன்கை வினைஞர்" என்று தாம் கண்ட காட்சிகளைத் தொகுத்துப் பாடி இன்புற்றார். நெல் வயல்கட்கு அண்மையில் உள்ள திடர்களில் நெற் போர்க்களம் அமைக்கப்பட்டிருந்தது. அக்களத்தின் விளிம்பில் தென்னைகள் காய்த்துப் பழுத்த குலைகளைத் தாங்கி நின்றன. இடையிடையே பனைகளும் நின்றன. அவற்றினிடத்தும் பனம் பழங்கள் பழுத்திருந்தன. இவை களைச் சேர, உழவர் நெற் சூடுகளை யடித்துப் போர்விட்டிருந்தனர். அவை மீளவும் கடாவிடுதற் குரியவை யாகையால் தலை குவிக்கப்படவில்லை. அவ்விடத்தே உழவருடைய இளஞ் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அச் சிறுவர்களின் தலைமயிர் நெய்ப்பசையின்றி உலறிச் செம்பட்டை யுற்றுப் புல்லிதாயிருந்தது. இப்புன்றலைச் சிறார் தென்னையின் பழுத்த பழங்களைப் பறித்து உடைத்து அதனுடைய தீவிய நீரையுண்டு உள்ளீட்டை வெறிக்கத் தின்றனர். பின்பு, அவர்கள் போர் அருகே நிற்கும் பனைகள் பழம் தாங்கி நிற்பது கண்டு போர்வின் மேல் ஏறி அப் பனம்பழங்களைத் தொட முயன்று கொண்டிருந்தனர். இவ் வண்ணம் நாடோறும் புதிய புதியவாய் நாட்டில் பெறப்படும் வளங்களைக் குமரனார் கண்டு இன்புற்றார். இப்புது வருவாய் நலத்தை, "வன்கை வினைஞர் புன்றலைச் சிறார், தெங்குபடு வியன் பழம் முனையின் தந்தையர், குறைக்கண் நெடும் போரேறி விசைத் தெழுந்து, செங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும், வைகல்யாணர் நன்னாடு எனப் பாடி மகிழ்ந்த மனத்தினரானார். இவ்வாறிருக்கையில் சோழன் சேட் சென்னியின் ஆண்மை வில்லாண்மை முதலிய நலங்களையும் மதுரைக் குமரனார், அறிந்து வந்தார். போர்களும் அடிக்கடி நிகழ்ந்தன. சேட் சென்னியே வென்றி மேம்பட்டான். பகைத்துப் போந்த பேரூர் வேந்தரும் சீறூர் வேந்தரு மாகிய பலரும் தோற்றழியக் கண்டாரே யன்றிக் குமரனார் அவர்கள் வென்றியோடு மீளக் காணவேயில்லை, சென்னியை நினைக்கும் போதெல்லாம் அவனுடைய அகன்றுயர்ந்து, இந்திரவில் போல மாலை கிடந்து விளங்கும் மார்பும் தூண் போல் உயர்ந்து விளங்கும் தோளும் வாளேந்தி மாண்புறும் பெரியகையும் அவர் உள்ளத்தில் தோன்றி உவகை பெருகுவிக்கும். அவனுக் கென்று இயற்றப்படும் தேர்கள் பல, காண் பார்க்கு அவனுடைய போராண் மையைப் புலப்படுத்தின. சென்னியின் அறிவுப் பெருமையும் ஆண்மைப் பெருமையும் படைப் பெருமையும் கண்டு துணுக்குற்ற வேந்தர் சிலர், அவனை யடைந்து வணங்கி அவனது தண்ணிய அருளைப் பெற்று இன்பமேநிலவ வாழ்ந்தனர். அவர்கட்குப் பகைவரால் இடுக்கண் நேர்ந்த போதெல்லாம் சேட் சென்னி தன் படையுடன் சென்று அவர்கட்குத் துணைபுரிந்து அவ் விடுக்கணைக் களைந்து இன்புறுத்தினான். அவர்களும் இன்பம் குன்றாத இனிய வாழ்க்கையில் திளைத்திருந்தனர். இச் செயல்களைக் காணக் காணக் குமரனாருக்குச் சென்னி பால் பெருமதிப்பும் பேரன்பும் பெருகின. இவற்கு வினைவேண்டு வழி அறிவுதவியும் படைவேண்டுவழி வாள் உதவியும் வந்த தானைத் தலைவருள் ஏனாதி திருக்கிள்ளி யென்பவன் சிறந்தவனாவன். அவனது நட்பும் நம் மதுரைக் குமரனாருக்கு உண்டாயிற்று. சோழன் பெருந்திருமாவள வனால் உண்டான இவரது மனக் குறையும் இச்சென்னியின் தொடர்பால் அறவே நீங்குவதாயிற்று. மதுரைக் குமரனார் சென்னியின் நாட்டு நலங்களைக் கண்டு இன்புற்று வருகையில், ஒருகால் நாட்டிடையே நல்லிசைச் சான்றோர் சிலரைக் கண்டு அளவளாவி மகிழ்ந் தார். அவர் கூட்டத்தில் சோழன் சேட் சென்னியின் போர்ப் புகழ் பற்றிய பேச்சுண்டாயிற்று. நாடெங்கும் வேந்தர்கள் அடிக்கடி போர் புரிவதே தொழிலாக மேற் கொண்டிருந்த காலத்தில் சான்றோரிடையே வேந்தர்களின் போர்ச் செயல்கள் பொருளாகப் பேச்சு நிகழுமேயன்றி வேறு பொருள் பற்றிப் பேசுவதற்கு இடமேது? வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் மக்கள் உள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தில் வேந்தன் அவைக்கண் இருந்து நல்லிசைப்புலமை நடாத்தும் மதுரைக்குமரனார் நலங்கிள்ளி மகனான சேட் சென்னியின் போர்ச்சிறப்பை யறிந்திருப்பரென்பதில் ஐயமில்லை. அவற்றை யறிந்தோர், போரைத் திறம்பட நடத்தற்கு வேண்டும் கருவிகாலம், இடம், படைவலி, துணைவலி, வினைவலி, தோள்வலி முதலிய கூறுகளைப் பலரும் அறிய வெளிப்பட மொழிவது முறையன்று. ஆயினும் அவர்கள் பொதுவாக உள்ள வலிமிகுதி வெளிப்படக் கூறுவது தடையாகாது. அஃது ஒற்றர் செவிப்பட்டு வேற்று வேந்தரையடையினும், அவர் அஞ்சித் தாம் கொண்ட போர்க் கருத்து மாறுதற்கு ஏதுவாமாதலால், அதனைப் பெரிதும் சிறப்பித்தோதுவது பொதுமீக்கூற்றாய்ச் சான்றோர்க்குத் தகுவதும் ஆயிற்று. இம்மீக்கூற்றம் மக்கள் மனத்திலும் கலக்கம் பிறப்பியாது அரசன்பால் தண்மையும் தெளிவும் அமைந்த பற்றினைப் பிறப்பித்தலால் நல்லதோர் அறமுமாகக் கருதப்பட்டது. மதுரைக்குமரனார் சென்னியின் மறமாண்பினைச் சான்றோரும் பிறரும் அறியப் பொதுமீக்கூற்றாக உரைப்பது அரசற்கு ஓராற்றால் ஆக்கமும் தமக்கு அறமு மாதலை நன்குணர்ந்திருந்தார். அதனால், அவர் அந்தச் சான்றோர் களை நோக்கி, "சான்றோர்களே, நம் சேட் சென்னியுடன் பொரக்கருதும் வேந்தர் இனி உளராகார்; ஒரு சிலர் உளராயின், அவர்கள் அதனால் தமக்கு வரக்கடவ தீங்கினை அவர் தாமே அறிவர். யான் அறிந்த அளவில் கூறுவன்; கேண்மின்: அவனொடு பகைத்துப் பொருத வேந்தர் உயிரொடு மீண்டு சென்று வாழ்ந்தது மில்லை; அவன் துணை வேண்டியும் அருள் வேண்டியும் வழிபட்ட வேந்தர் வருந்தக் கண்டதும் இல்லை" என்றார். இக்கருத்தையே மதுரைக்குமரனார் ஒரு பாட்டு வடிவில் பாடி வேந்தன் செட் சென்னியைச் சிறப்பிக்க எண்ணினார்; காவிரி நாட்டில் கண்ட காட்சிகளும் அவர் மனக் கண்ணில் தோன்றின. கேட்போர் உள்ளக்கிழியில் சொல்லோவியந் தீட்டுந் தீவிய சொற்களால் ஒரு பாட் டமைத்து, " கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்ப லொடு கட்கும் மலங்கு மிளிர் செறுவில் தளம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையின் தந்தையர் குறைக்கண் நெடும்போ ரேறி விசைத்தெழுந்து செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளரெனின் தாம்அறி குவர்தமக் குஉறுதி; யாம் அவன் எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர் வாழக் கண்டன்று மிலமே தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருத்தக் காண்டல் அதனினும் இலமே" என்று பாடினார். திருவோலக்கத்தே நல்லிசைச் சான் றோர் சுற்றமும் அரசியற் சுற்றமும் சூழ வீற்றிருந்த வேந்தன் சேட் சென்னி, செவி குளிர்ப்ப, உளமுவப்ப, உடல் தளிர்ப்பக் கேட்டு இன்புற்றான். தனது தமிழ் நலஞ் செறிந்த மனக்கண்ணால் தன்னாட்டின் வயல்நலமும், தென்னை பனை முதலியவற்றின் பழநலமும், நெல்விளைவின் நெடுநலமும், உழவர் கடைசியரது வாழ்க்கை நலமும் வனப்புறக் கண்டான்; தன் தோணலமும் மார்பு நலமும் கைந்நலமும் கவினக் கண்டான்; தன்னொடு பொருது சாய்ந்தோர் தளர்வும் துணை பெற்றுத் தாணிழல் வாழ்வோர் நல்வாழ்வும் நன்கு தோன்றின. உள்ளத்தே அவனுக்கு இன்ப வெள்ளம் பெருகிற்று. தன் குடி வரவும் தகுதியும் எண்ணினான். மதுரைக் குமரனாரது வரிசையையும் மனத்தால் அளந்தறிந்தான். அவர்க்குப் பெருஞ் செல்வத்தைப் பரிசிலாக அளித்துத் தன் தமிழ்க் குடிப்பண்பைத் தகவுற மேம்படுத்தான். பெருவளம் நல்கப் பெற்ற குமரனார் சின்னாள் சோழன்பால் தங்கி யிருந்து பின்னர் அவனிடம் பிரியா விடைபெற்றுச் சேர நாடு நோக்கிச் சென்றார். சேரநாடு முடியுடை வேந்தர்களான சேரமான்களுக் குரிய தென்றும், அந் நாட்டில் குடநாடு, குட்டநாடு முதலாகப் பல உண்ணாடுகள் உண்டென்றும் முன்பே கூறியுள்ளோம். குட்டநாட்டு வேந்தர் குட்டுவர் எனப்படுவர். சேரநாட்டு மன்னருள் வலியும் புகழும் பெற்று மேம்பட்டவன் சேரமான் என்ற சிறப்புடனே முடி சூடும் தலைமை யெய்துவன். ஏனையோர் முடிசூடா மன்னராவர். மதுரைக் குமரனார் சேர நாடு நோக்கி வந்தபோது, குட்டுவர் வழித் தோன்றலான கோதை யென்பான் வலியும் புகழும் மிக்குற்று முடிசூடும் மாண்பு பெற்றுச் சேரமான் குட்டுவன் கோதையென வீறுபெற்றிருந்தான். குமரனார் வரக்கண்டதும், சான்றோர் சால்பறிந்து பேணும் சான்றோர் மெய்ம்மறையாகிய குட்டுவன் கோதை அவரை வரவேற்று அன்பு பெருகும் நன் மொழி வழங்கிச் சிறப்பித்தான். குமரனார் அவன்பால் சின்னாள் தங்கினார். குட்டநாடு மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேடுகளிற் பெய்த மழைநீர் பள்ளங்களை யடைந்து தேங்கி நிற்கும். அந் நீர்நலத்தாற் காடுகள் தழைத்து வளம் மிகுந்திருந்தன. மேட்டுப் பாங்கரில் இடையர் வாழ்ந்து வந்தனர். மேய்ச்சல் நலத்தால் இடையர் செல்வமாகிய ஆனிரைகள் வளம்பெருகித் திகழ்ந்தன. பல்லான் திரளும் பாற்பயனும் நாளும் பெருகுதலால் அவ்விடையர் மிக்க செல்வமுற்று மேன்மை யெய்தியிருந்தனர். வரகு, துவரை, கம்பு, பயறு முதலிய கூலங்களை விளைப்பதும் அவர்களது தொழிலாயினும், ஆனிரையோம்புதலே பெருந்தொழிலாக அவர்களாற் கருதப்பட்டு வந்தது. குட்டநாடு செம்மண் பாங்கின தாகலின், அதற்கேற்ப ஆயர் சிவந்த ஆடை யணிவது மரபு. வெயிலால் உலர்ந்து காற்றால் மோதுண்டெழும் செம்மண்ணின் துகள் படிதலால் ஆனிரை மேய்க்கும் ஆயர் மாசுபடிந்த உடையினராயிருந்தனர். குட்ட நாட்டில் தங்கியிருந்த மதுரைக் குமரனார். இடையரது வாழ்க்கையைக் கருத்தூன்றி நோக்கினார். அவர்களது உள்ளத்தின் உயர்வும் ஆனிரை புரத்தலின் அமைதியும் குமரனார் புலமை யுள்ளத்துக்கு இனிய பொருளாயின. தம்முடைய கோனாட்டிடையர் தளவும் முல்லையும் விரவிய கண்ணியணிந்திருந்ததைக் கண்டு பயின்றவராதலால், அவருக்குக் குட்ட நாட்டிடையர் அணிந்திருந்த கண்ணி வியப்பை விளைவித்தது. குட்ட நாட்டவர் பச்சிலையால் அழகுறத் தொடுக்கப்பட்ட உவலைக் கண்ணி யணிந்திருந்தனர். காட்டிடையே காற்றால் எழும் செம்மண் மாசு தன்பால் படிந்தாலும், பாசிலைக் கண்ணியின் பசுமை குன்றாதெனக்கருதி ஆயர் பசுந் தழையைத் தம் கண்ணிக்குப் பயன் கொண்டது, அவ்விடையரது இயற்கையறிவின் ஒட்பத்தைப் புலவர் அறியக் காட்டிற்று. ஒருகால் இடையனொருவன் தன்னுடைய ஆனிரைகளை மேய்க்கக் காட்டிற் செலுத்திக்கொண்டு செல்வதை மதுரைக் குமரனார் கண்டு அவன் செயலில் தமது கருத்தைப் போக்கி நின்றார். எதிரே முழைஞ்சுகள் நிறைந்த கற்குன்றொன்று பசுந்தழை போர்த்து அழகு திகழ நின்றது. அதற்கு நேரெதிரெ சேய்மையில் சிறுகாடு சூழ்ந்த குன்றொன்று நின்றது. ஆங்கே இருந்த தழை மரங்கள் அத்துணை வளமாக இல்லை. ஆயினும் பசுந்தழை போர்த்துப் பார்வைக் கினிமை வழங்கிய கற்குன்று நோக்கிச் செல்லும் ஆனிரைகளை இடையன் தன் மடித்த வாயால் வீளையொலி யெழுப்பி மடக்கி, எதிர் பக்கத்தே சேணிற் புல்லிதாய்த் தோன்றும் சிறு காட்டுக் குன்றுக்குச் செலுத்தினான். அதனைக் கண்ட குமரனார், "இவ்விடையன் எதிர் பக்கத்துச் சிறுகாட்டுக்கு இவற்றைச் செலுத்து வானேன்?" என வியந்து எண்ணமிடலானார். எண்ணமிட்டு முடிவதற்குள் இடையனுடைய ஆனிரைகள் மிக விரைவில் நெடுந்தொலைவு சென்று விட்டன. சிறிதுபோது கழிந்ததும் பசுந்தழை போர்த்த கற்குன்றின் முழைஞ்சொன்றிலிருந்து உருமுரறு போல்வ தொரு முழக்கம் கேட்டது. துணுக்குற்றுத் தெளிவு கொண்ட குமரனார் மடிவாய் இடையனது மனவுணர்வின் மாண்பு தெரிந்து பெரு வியப்பெய்தினார். அக்குன்று சூழ்ந்த வியன்புலம் புலி துஞ்சும் வியன்புலமென்று முன்னறிந்து அதனைக் குறுகுதற் கஞ்சித் தன் ஆனிரைகளைக் கொண்டுய்த்த இடையன் செயல், மதுரைக் குமரனார்க்கு மனத்தால் என்றும் மறக்கப்படாத தொன்றாயிற்று. இவ்வகையில் நாட்கள் சில சென்றன. மேலும் சில சான்றோர் சேரமான் குட்டுவன் கோதையைக் காணக் குட்ட நாட்டுக்குப் போந்தனர். சேரமான் அவர்கட்குப் பெருஞ் செல்வந் தந்து சிறப்பித்தான். அவர்கள் விடைபெற்ற காலையில் மதுரைக் குமரனாரும் தமக்கு விடை தருமாறு வேந்தர் பெருமானை வேண்டினார். சேரமான் மழை முகிலும் நாணுமாறு பெருஞ் செல்வங்களை அவருக்கு வழங்கிக் காலின் ஏழடிப் பின் சென்று வழி விட்டான். குமரனார் ஏனைச் சான்றோர் குழுவுடன் காடும் மலையும் இடையிட்ட வழிகளைக் கடந்து தம் நாடு நோக்கிச் செல்வாராயினர். சான்றோர் குழாத்துக்குத் தலைவராய் வந்துகொண்டிருக் கையில், குமரனார் வழியில் மிடியுற்று வருந்திவரும் பாணர் கூத்தர் புலவர் முதலிய பலரையும் கண்டு, தாம் பெற்ற பெருவளத்தை அவர்கட்கும் அறிவுறுத்திச் சேரமானுடைய ஊரும் பேரும் கொடையும் நடையும் பிறவும் எடுத்தோதி அச்சேரமான் குட்டுவன் கோதை பால் ஆற்றுப்படுத்தார். அவருட் சிலர், அச்சம் நின்று அலைக்கும் உள்ளத்தராய் அயர்வுடைமை தோன்ற "ஐயன் மீர், குட்டுவன் கோதையிருந்து காக்கும் குட்ட நாட்டிற்குள் எவரும் புகுதல் அரிதென்பர்; அரிதின் முயன்று நாடு புகுந்து ஊரடையினும் அவனுடைய செவ்வி பெறுவது அதனினும் அரிதென்பர். நீவிர் எங்ஙனம் சென்று அவன் செவ்வி பெற்றீர்?" என வினவினர். குமரனார்க்கு வியப்புப் பெரிதாயிற்று. மதுரைக் குமரனார் தம்மை வினவிய பரிசிலரை ஆராயலானார். அவர்களைக் குறித்து நோக்கினார். அவ ருள்ளத்தில் உண்மையிலே இவ்வினாக்கட்கு இடமிருப்பதை அறிந்தார். அவரைத் தெருட்டிச் சேரமானைச் சென்று காண்டற்கு உள்ள மெழுமாறு செய்தல் தக்கதெனத் தெளிந்தார். அவரது பார்வையில் அன்பு தோன்றி நின்றது "அன்புடையீர், கேண்மின்; எங்கள் தலைவனான சேரமான் குட்டுவன் கோதையது ஊர் மிக்க கம்பலை யுடையது. மக்கள் மனத்தில் அச்சமும், மனையில் வறுமையும், பேச்சில் தடுமாற்றமும், பிற தொழில் வகையில் இடையூறும் இல்லை; இதுவே கம் பலைக்குக் காரணம்" என்று தொடங்கிய குமரனார், "அவனூர்க்கு நீவிர் புதியராய்ச் சென்றீராயினும், அவ்வாறின்றி, அவ்வூர் முற்றும் தொன்று தொட்டு நம் முடையதாக உடையவர் போல இனிது செல்லலாம். எம்மைப்போற் பரிசில் பெற்று வாழ்வார்க்கு அவனூர்க்குள் உரிமையுடன் செல்வது எளிதாகும். சென்றவழி, அவன் கோயிலை யடைந்து அவன் செவ்வி பெறுதற்கும் சிறிதும் தடையிராது. நம்போலும் இரவலரைக் கண்ட அளவில், வாயில் காவலர் வழி விடுவர். சேரமான் குட்டுவன் கோதையும் இறவாத இன்ப அன்பு மொழி வழங்கிப் பெரும் பொருள் நல்கி நும்மைப் பேணுவன்" என்பாராய், " எங்கோன் இருந்த கம்பலை மூதூர் உடையோர் போல இடையின்று குறுகிச் செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் எம்மன வாழ்க்கை இரவலர்க் கெளிதே" என்று இரை நலந் தோன்றப் பாடிக் கூறினார். உடை யார்பால் இல்லாதார் செல்லுமிடத்து நிமிர்ந்த தலையும் எடுத்த மார்பும் பெருமித நடையும் கொண்டு செல்வது கருதும் பயனை விளைவியாது என்பர் அறநூலார் எனினும், செந்நாப் புலமை படைத்த இரவலர்க்கு இஃது இயல்பாதலால், இதனால் அவர்கட்குத் தடை யொன்றும் உண்டானதில்லை யென்பார், "அண்ணாந்து புகுதல் இரவலர்க்கு எளிது" என்று குறித்துரைத்தார். இச் சொற்களைக் கேட்ட இரவலர், "அற்றேல், யாங்கள் சென்ற விடத்தேல்லாம் வேந்தர் பலரும் சேர மான் குட்டுவன் கோதையை இங்ஙனம் கூறினரே? இதற்குக் காரணம் யாதாகலாம்?" என வினவினர். குமரனார், அது கேட்டதும் குறுமுறுவல் கொண்டார். காரணமும் உண்டென்பார் போலத் தமது தலையை யசைத்தார். பின்னர்ப் புலமை வழங்கும் அருமை வாயைத் திறந்து, "யான் முன்னே சொன்னபடி அவனுடைய மூதூரும் புகுதல் இரவலர்க்கு மட்டில் எளிது, எளிதே" எனத் தொடங்கி, "அவன் இரவலரைப் புரப்பதைக் கடனாக மேற்கொண்டு, கைம்மாறு நோக்காது மழையைப் பெய்யும் வானமும் நாணுமாறு தன்பால் வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டுவனவற்றை வரையாது வழங்கும் வன்மை யுடையவன். விரைந்து செல்லும் குதிரைகள் பல அவன்பால் உண்டு" என்றார். இச் சொற்களைச் செவிமடுத்த ஏனை இரவலருள் ளத்தில் அக் கோதைபால் அன்பு பெருகுவதாயிற்று. அஃது அவர்கள் முகத்தில் விளங்கித் தோன்றிற்று. குமரனார் மேலும் கூறலுற்று, "இத்தகைய வண்மையை யுடைய குட்டுவன் கோதை மிக்க வலி பொருந்திய பெரிய கையையுடையன். அவனது நாட்டிற் புகுதல் இரவலர்க் கெளிதே யன்றிப் பிறர்க்கு எளிதன்று. அவனொடு மாறுபட்டுப் பொரக் கருதிய வேந்தர்க்குப் புகுவது மிகவும் அரிது. அவனைப் பகைத் தெழுந்த மன்னர், நிகழ்த்திய வஞ்சினம் பொய்யாத நெடுமொழி மன்னராயினும் அவன் முன்னே, ஆடு மேய்க்கும் இடையரை ஒப்பர்; அவரது தானை ஆடுகளை ஒக்கும்; அவன் புலியை யொப்பன்; அவனது நாடு இடையன் தன் ஆட்டினத்தோடு புகுதற்கு அஞ்சும் புலி துஞ்சும் காட்டை யொக்கும்" என்பார். " இரவலர்க் கெண்மை யல்லது, புரவெதிர்ந்து வானம் நாண வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பு எதிர்ந்தெழுந்த நெடுமொழி மன்னர், நினைக்குங் காலை, பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே. என்று பாடினர். யாவரும் மகிழ்ச்சிகொண்டு கைகொட்டிப் பாராட்டினர். ஒவ்வொரு சொற்றொடரையும் பன் முறை ஓதி யோதிப் பொருட்சுவை தேர்ந்து உவகை யுற்றனர். இடையனுடைய கண்ணியும் உடையும் பற்றி, வினாவெழுந்தபோது, குமரனார் குட்டநாட்டிடையன் இயல்பெனக் கூற, யாவரும் மகிழ்ந்தனர். இரவலர்க்குக் கவிகையும், இகல்கொண்டு போரெதிரும் புரவலர்க்குத் தடக்கையும் சேரமான் குட்டுவன் கோதையுடையன் என்றதும், தலைமக்கள் செல்லும் நெறி தவறுடைத்தாயினும் மாறாது பின்செல்லும் இயல்பு தோன்றத் தானையைச் சிறுதலையாயம் (ஆடுகள்) என்றதும் சான்றோர்க்கு மிக்க இன்பம் தந்தன. பாணர் இப்பாட்டிற்குப் பண்ணமைத்து நெஞ்சிற்கொண்டு, யாழும் குழலும் தண்ணுமையும் பிறவும் வழி நிற்ப மிடற்றாற் பாடினர். யாவரும் நன்று நன்றெனப் பாராட்டினர். இங்ஙனம் சிறிதுபோது சொல்லாடி இன்புற்ற சான்றோர் தத்தமில் விடைபெற்று நீங்கினர். மதுரைக் குமரனார் தம்மொடு போந்த ஏனைச் சான்றோருடன் தமது நாடு நோக்கி வரலானார். சேரமான்பால் ஆற்றுப்படுக்கப் பட்ட சான்றோர் கூட்டம் குட்டநாடு நோக்கிச் சென்றது.  25. செல்வர் தொடர்பு மதுரைக்குமரனார் சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி பால் இருந்து வருகையில் அவனுடைய தானைத் தலைவர்களுள் ஒருவனான ஏனாதி திருக்கிள்ளி யென்பவன் பெரும் புகழும் பெருவண்மையும் உடையவனாய் விளங்குவது கண்டும் கேட்டும் இருந்தார். நல்லிசைச் சான்றோரும் போர்த்துறை வல்ல மறச் சான்றோரும் திருக்கிள்ளியைப் பாராட்டிக் கூறினர். சோழவேந்தனும் அவனுக்கு ஏனாதி யென்னும் பட்டமும் அதற்குரிய ஏனாதிக் கணையாழியும் தந்து சிறப்பித்திருந்தான். குமரனார் சோழவேந்தன் சேட்சென்னிபால் விடை பெற்றுக் கொண்டு சேரநாடு சென்றபோது வழியில் இந்த ஏனாதி திருக்கிள்ளியைக் காண விரும்பி அவனூருக்குச் சென்றிருந்தார். அவனும் அவரை நன்கு வரவேற்று அவர் வரிசைக்கொப்பப் பரிசில் தந்து பரவினான். குமரனார் அவனை முடிமுதல் அடிகாறும் உற்று நோக்கினார். விழுப்புண் பட்டு வடு நிறைந்த முகமும், எரியெழ விழிக்கும் கண்ணும், எழுவுறழும் தோளும், வாள் வடு தழும்பிய மார்பும், தாளுற நீண்ட தடக்கையும், கழலணிந்த அழகிய அடியும் வியப்புறக் கண்டார். இவனைப் பகைத்துப் பொருதழிந்த சீறூர் மன்னரும் பேரூர் வேந்தருமாகிய பலரையும் நினைந்தார். அவர் உருவங்கள் குமரனார் மனக்கண்ணில் தோன்றின. அவற்றைத் திருக்கிள்ளியின் உருவத்தோடு வைத்து எண்ணினார். அவ்வெண்ணம் மதுரைக் குமரனாரது புலமை யறிவில் செப்ப மெய்தித் தீவிய இனியதொரு செந்தமிழ்ப் பாட்டாய் வெளிவந்தது. " நீயே, அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின் ஊறறியாமெய் யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனால், நீயுமொன் றினியை அவருமொன் றினியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி நின்னை வியக்கும் இவ்வுலகம் அஃது என்னோ பெரும உரைத்திசின் எமக்கே" என்று பாடினர். இதன்கண், திருக்கிள்ளி கண்ணுக்கு இனியனா காமைக்குரிய காரணத்தை "அமர்காணின் அமர் கடந்து அவர் படைகளை விலக்கி மேற்செல்லாவாறு கற்சிறைபோலத் தடுத்து எதிர் நிற்றலின், வாட்புண்ணுற்று வடுவுடைய யாக்கை யுடையனா யினாய்" என்றும், பகைவர் கண்ணுக்கு இனியராதற் கேது, அவர்கள் நின்னைக் காணின் புறங்கொடுத்தோடிடுவர்; புறங் கொடுத்தார்மேற் படையெறிதல் போரறமன்றெனக் கருதி, நீ படை யெறிந்து புண் செய்யாய், அதனால் அவர்கள் வாள் செய்யும் புண்ணால் வடுப்படாத மெய்யுடையராயினர்" என்றும் கூறியது, முன்னையது புகழ்வதும் பின்னையது இகழ்வதுமாய் மிக்க சுவை பயந்து நின்றது. இத்தகைய நின்னைச் சான்றோருலகம் வியந்து புகழ்வதன்றிச் செயற் பாலது பிறிதியாதும் இல்லை யென்பதை உலகின்மேல் வைத்து, "நின்னை வியக்கும் இவ்வுலகம் அஃது என்னோ" என்றார். "பெரும எமக்கு அஃது உரைத்திசின்" என்பது குமரனாரது பேரன்பினை வெளிப்படுத்தக் கண்டான் திருக்கிள்ளி. அவர் இன்முகம் காணும் அளவு பெருஞ் செல்வத்தைப் பரிசில் நல்கிப் பாராட்டினான். குமரனார் அவன்பால் விடைபெற்றுக் கொண்டு காவிரிக்கரை வழியே கொங்குநாடு நோக்கிச் சென்றார். கொங்கு நாடு போந்த மதுரைக் குமரனார் காவிரிக் கரையிலுள்ள ஓடை யென்னும் ஊர் வழியாக வந்து ஈர்ந் துறை யடைந்தார். இவ்வோடை இதுபோது ஈரோ (ஈரோடை) டென்றும், ஈர்ந்தூர் ஈஞ்சூரெனத் திரிந்து பின்பு ஈங்கூர் என்றும் இக்காலத்தே வழங்குகின்றன. அக்காலத்தே ஈர்ந்தூர் கோயமான் என்னும் வேளாண் பெருமகற்கு உரியதாயிருந்தது. இக்கோயமானுடைய பெயர் தோயன்மாறன் என்றும் ஏடுகளிற் காணப்படுகிறது. கோயமான்கள் என்பது கொங்கு நாட்டில் பண்டை நாளில் வாழ்ந்த ஒரு குடியினர் பெயர். கோயமான் புத்தூர் பிற்காலத்தே கோயம் புத்தூராயிற்று. குடிகோயமான் குடியினரான கோயர் என்பது கோவியர், கோவர் என்பவற்றின் திரிபாகும். இடையர் என்பது கருத்து. சிலர் கோயம்புத்தூர் என்பது கோசர்புத்தூர் என்பதன் திரிபு என்கின்றனர். இக் கோயமான் பெருஞ் செல்வனல்லன். ஆயினும் வேற்படை கொண்டு பகைவரை வென்று அவர்பாற் பெறும் பொருளை இல்லார்க்கு வழங்கி, அவரது இன்மை தீர்த்து, அதனால் அவர் எய்தும் இன்பம் கண்டு பெரிதுவக்கும் இயல்பினன். இவனுடைய இசையினை உடன் வந்த சான்றோர் கூறக் கேட்ட குமரனார் ஈர்ந்தூரடைந்து இவனைக் கண்டார். கோயமானும் அவரது புலமைச் சிறப்பறிந்து அன்பு மிக வரவேற்றுப் பெருஞ் சிறப்புச் செய்தான். ஈந்தூரில் தன்னுடைய செல்வமனைக்கண் மதுரைக் குமரனாரைச் சின்னாள் தங்கியிருக்குமாறு கோயமான் வேண்டியிருத்திக் கொண்டான். அங்ஙனமே தங்கி அவனுடைய குணஞ் செயல்களை நேரிற் கண்டறியும் வாய்ப்பு குமரனார்க் குண்டாயிற்று. இக் கோயமான், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவனுக்குத் தானைத் தலைவனாய்ப் படை வேண்டுவழி வாளுதவும் மறமாண்புடையவன். சோழ வேந்தர்பால் பேரன்பும் பெருமதிப்பும் இவனுக்குண்டு. வேந்தர் மதிக்கத்தக்க பெருஞ் செல்வம் இவன்பால் இல்லையாயினும் இவனுடைய போர் வன்மையும் படைப் பெருமையும் அவர் நெஞ்சில் நன்மதிப்பை யுண்டுபண்ணின. தனக்கு வேந்தனான சோழனுக்கு உள்ளம்போல உற்றுழியுதவும் உயர்ந்த மனப்பண்பு இக்கோய மானிடத்தில் அமைந்து கிடந்தது. மேலும், இவன் இல்லார்க்கும் உடையார்க்குப்போல இந்நிலவுலகில் பசியின்றி வாழ உரிமையுண்டெனக் கருதும் உரவோன். உடையார்க்குளதாகிய உடைமை அவர் தம் வலியுடை மையால் உண்டாயதாயின், அவ்வலி பெற்ற தன் பயன், அவர் தாமே தமித்துண்டு தமது வயிறு நிரப் புவதன்றெனக் கருதினன். வலியுடையார் வலியில்லாமையால் வறுமையுறுவோரது பசியை நீக்கி இவ்வுலகில் வாழச்செய்வது கடன் என்று எண்ணி அதற்கேற்ப ஒழுகினன். அதனால், என்றும் படையேந்திச் சென்று, வலியுடை மையாற் செருக்கி மகிழ்ச்சி மிகுவாருடன் போருடற்றி, அவரை வென்று அவர் நல்கும் பொருளைக் கொணர்ந்து தன்னையடைந் தார்க்கு ஈந்து "இல்லோர் சொல்மலை" எனும் வண்புகழ் வளர்த்து வந்தான். இவனது புகழ் பாணர் கூத்தர் முதலிய பலராலும் நாடு முழுதும் பரப்பப்பட்டது. இன்மையுற்று வரும் இரவலர்க்கு வேண்டுவன தந்து அவரது இன்மை தீர்க்கும் கடமையால் இடையீடின்றிப் போர் செய்வதே தொழிலாகக் கொண்டிருந் தமையின், இக்கோயமானுடைய உடல் முற்றும் விழுப்புண்பட்டு வடு மலிந்திருந்தது. ஆயினும், ஆண்மை மாசுபடாமையின், "வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கை" யுடையனாய் விளங்கினான். இச்செல்வன்பால் ஒருகால் பொருட் குறைபாடுண் டாயின் அவன் போர்க்குச் சென்றிலன் என்று கருதவேண்டும்; போர்க்குச் செல்லவில்லையெனின், அவனுடைய படைக் கருவி வடிக்கப்பட்டில; கொல்லன் உலைக்களத்துள்ளன எனல் வேண்டும். சுருங்கச் சொல்லுமிடத்து, இல்லோரது இன்மை தீர்த்து, அவரும் ஏனை உடையோர்போலப் பசியின்றி வாழ்தல் வேண்டுமெனப் போர்மேற்கொண்டு எப்பொழுதும் தன்னுயிரை இல்லாதார் பொருட்டு ஈதற்கு ஈடுபடுத்தி ஈர்ந்தையூரில் வாழ்ந்துவந்தான் ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்பது மிகையாகாது. இல்லோர் வரிசையுள் முன்னணியில் இருப்பவர் பாண்மக்களாதலின், பாணர் பொருட்டு உயிர்வாழ்ந்த பண்பு நோக்கி, இவனைப் "பாண் பசிப்பகைஞன்"என்பது சான்றோர்க்கியல்பாயிற்று. இடையறாது போர்செய்தலால் கோயமானுக்கு வேல் முதலிய படைகள் நாடோறும் வடிக்கப்பட வேண்டியிருந்தன. வேல் வடித்துக் கொடுத்தல் ஊர்க்கொல்லர்க்குக் கடனே. ஆயினும், நாடோறும் வடித்துக் கொடுத்தல் வேண்டுமெனின், எத்தகைய கொல்லர்க்கும் சிறிதேனும் வருத்தமுண்டாகாமல் இராது. அதனை யறியுந் தோறும் கோயமான் அக்கொல்லருக்குத் தன்பால் வரும் இரவலரது பசித்துன்பத்தைப் காட்டியும், எடுத்தோதியும், "இவர்களது பசித்துன்பத்தைப் போக்குதற்கு நீ வடித்துத் தரும் வேல் பயன்படுகிறது; இந்த நினது வேல் வடிக்கும் பணி, இல்லாரது இன்மை தீர்த்து, இன்ப வாழ்வு பெறுவிக்கும் நற்பணி"எனக் கூறியும் ஊக்கம் கொளுத்தினன். இச்செயல் காணுந்தோறும் மதுரைக் குமரனார் அவனை நினைந்து இன்புற்றார். அவன் மனையில் இருந்து வருகையில், மதுரைக் குமரனார் தமது இயற்கைப்படியே சூழவுள்ள வூர்களுக்குச் சென்று மக்கள் செயல் நலங்களைக் கண்டு வருவார். ஒரு நாள் வேற்றூர்க்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியில் வறுமையால் மெலிந்து வருந்தி வரும் முதிய இரவலன் ஒருவனைக் கண்டார். தனது வறுமைத் துன்பத்தை அவன் கூறக் கேட்டார் நம் குமரனார். அவன் பால் கழிவிரக்கம் கொண்டார். "இரவல, நினது வறுமை நீங்கவேண்டின் என்னொடு வருக. இரவலராகிய பாணர் முதலா யினாரது பசிக்குப் பகைவன் ஒருவன் ஈர்ந்தையூரில் உள்ளான். அவன் நாடோறும் தொடர்ந்து கொடை வழங்கும் அத்துணைப் பெருஞ்செல்வ முடையனல்லன். ஆயினும், இரப்போர்க்கு இல்லை யென்று மறுப்பதும் கரப்பதும் செய்யும் இழிகுணம் உடையவனும் அல்லன். தனக்குத் தலைவனாகிய வேந்தனுக்கு உறும் இடும்பை களைத் தாங்கும் அறவுணர்ச்சி நிறைந்தவன். அவ்வப்போது நிகழும் போர்களில் பகைவர் எறியும் படைகளால் புண்பட்டு வடுவுற்ற யாக்கையுடையன். ஆனால், ஆண்மை மாசுபடாமையால் மறநெறி வழுவாத வனப்பு வாய்ந்தவன். இல்லையென இரப்போர்க்கு இயல்வது கரவாது கொடைக்கடன் பூண்டிருக்கின்றான். யாங்கள் எங்கள் வறுமையைக் கூறி அவனை இரப்போமாயின், அவன் உடனே தன்னூர்க் கொல்லனை வருவித்து, அவற்கு எமது உண்ணா வயிற்றைக் காட்டி, இவர்களது பசி தீர்த்தல் வேண்டிப் பொருள் கருதிப் போர்க்குச் செல்வேன்; என் வேல்களை வடித்துத் தருக என வேண்டுவன். இங்ஙனம், இரவலர் வறுமை தீர்ப்பது பொருளாகப் போரில் உயிர் கொடுக்கும் உயர் திருவாளனை நீயும் வந்து காண்" என்று கூறி, இக்கருத்தமைந்த பாட்டொன்றை யமைத்து, " நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே! இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி, அமரகத்து இரும்பு சுவைக்கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடிவின்று வடிந்த யாக்கையன்; கொடையெதிர்ந்து ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்; இன்மை தீர வேண்டின் எம்மொடு நீயும் வம்மோ, முதுவாய் இரவல! யாம்தன் இரக்குங் காலைத் தான், எம் உண்ணா மருங்கு காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே" என்று பாடினர். வந்த இரவலனும் ஒரு பாண் மகனாத லால், அப்பாட்டிற்கு இசைவகுத்துப் பாடினான். இருவரும் கோயமானிடம் சென்றனர். அது கேட்டுப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்த கோயமான் பாணனுக்குப் பொன்னும் பொருளும் தந்து சிறப்பித்தான். மதுரைக் குமரனாரும் அவன்பால் சிறந்த பரிசில் பெற்று விடையும் பெற்றுக் கொண்டு சேரநாட்டுக்குச் சென்று, சேரமான் குட்டுவன் கோதையைக் கண்டு, அவன் தந்த பரிசிலைப் பெற்றுத் தமது மதுரை நாட்டுக்குத் திரும்பிவரலானார். வருகையில் சேரநாட்டு மலைத்தொடர்களையும் காடு களையும் கடந்து பாலக்காட்டு நாட்டுவழியே வந்தார். அந்நாட்டில் வெண்குடையென்னும் ஊர்க்குரியனாய் ஒரு சீறூர்ப் பெருந் தலைவன் விளங்குதலைக் கண்டார். வெண் குடையென்னுமூர், இப்போது மலையாள மொழி வழங்கு மூராய், வெங்கொடி எனத் திரிந்து வழங்குகிறது. அக்காலத்தே இவ்வெண்குடை யென்னும் ஊர்க்குரிய அத் தலைவன் சேரநாட்டுக் குட்டுவர் குடியில் தோன்றிச் சோழ வேந்தர் தானைக்குத் தலைவனாய் ஏனாதிப் பட்டம் பெற்றுக் குட்டுவன் என்னும் குடிப்பெயரே விளங்கச் சோழிய ஏனாதி திருக்குட்டுவனெனச் சிறப்புற்றிருந்தான். அவன் முன்னோர் குட்டநாட்டில் அரசர் குடியிற் றோன்றிய தொன்னல முடையர்; இரவலர்க்கீத்து இறவாப்புகழ் பெற்ற பழங்குடியினர். அவனது குடிவரவு மதுரைக் குமரனாருக்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால், அவர் அத் திருக்குட்டுவனைக் காண விரும்பி அவனுடைய ஊராகிய வெண்குடைக்குச் சென்றார். மதுரைக் குமரனாரது வரவு கேட்டறிந்த திருக்குட்டு வன் மிகவும் விருப்பமுற்று அவரை நன்கு வரவேற்று அன்பு புரிந்தான். அவன் செல்வமனைக்கண் தங்கிய குமரனார் வைகறைப்போதில் தம்மொடு போந்த பாணனைக் கொண்டு திருக்குட்டுவனுடைய தந்தை முன்னாளில் மைந்து பொருளாக மண்ணசையுற்று வஞ்சி சூடிப் பகை வேந்தர்மேற் படைகொண்டு பொருது மேம்பட்ட திறத்தைத் தமிழ் மணங் கமழும் இசைப்பாட்டமைத்துப் பாடினர். பாணனும் ஒரு கண்மாக்கிணை யென்னும் இசைக் கருவியை இசைத்தான். பள்ளி யெழுச்சிக் காலத்தே துயிலுணர்ந்தெழுவோர் பலரும், தெளிந்தமைந்திருக்கும் தம்முள்ளத்துக்கு மிக்க இன்பம் நல்கும். இப் பாட்டின் இன்னிசையில் ஈடுபட்டு அகமலி உவகை யெய்தினர். திருக்குட்டுவனும் பள்ளி யெழுந்து பாட்டிசையில் ஊறிய பண்ணின்பத்தில் மூழ்கிக் குமரனாரைக் கண்டு கழிபேரு வகை கொண்டான். கொண்டவன், குமரனார்க்குக் களிற்றுப் பரிசி லொன்று நல்கி, அவர் தன்னைப் பிரியா வகையில் பிணித்துக் கொள்ளக் கருதினான். போர் யானைக்கொண்டு அறப்போர் புரியும் அடல்வேலனாதலின், திருக்குட்டுவன் தன்பாலுள்ள களிறுகளிற் போருடற்றிப் புகழ்சிறந்த வெஞ்சின வேழமொன்றைத் தேர்ந்து நம் மதுரைக் குமரனார்க்கு நல்கினான். குமரனார் அவ் யானையைச் சென்று கண்டார். அது வெஞ்சினம் தணியாது வீறுகொண்டு நின்றது. அவர்க்கு மனத்தே அச்ச முண்டாயிற்று. இக்களிறு தமக்கு உதவாதென எண்ணிப் பாகனை அழைத்து "இதனை அரசனிடமே சேர்த்து விடுக" என்றார். வேழப்பரிசில் மீளத் தன்பால் திரும்பிவரக்கண்ட திருக்குட்டுவன் முதற்கண் திகைத்தான். சிறிது நீள எண்ணினான். "என் தகுதிக்கும் தனது வரிசைக்கும் ஒவ்வாது குறைந்ததெனக் கருதிக் குமரனார் இவ்வாறு செய்தார் போலும்" என முடிவு செய்தான். வரிசையும் தகுதியும் நோக்காமையாகிய குற்றம் தன்பால் உண்டானதென்று திருக்குட்டுவன் நாணினான். முன்னே தந்தது போல்வதொரு களிற்றினைப் பண்ணுமாறு பாகரைப் பணித்தான். பக்கத்தில் மணி மாறி யொலிக்க, நெற்றிப் பட்டத்தோடு பொன்னரிமாலை கிடந்தசைய, மருப்புக்களில் கிம்புரி இருந்து அழகு செய்ய, பண்ணுதலமைந்த களிறு இரண்டனையும் குமரனார்க்குப் பரிசிலென விடுத்தான். களிறுகளும் அவை சுமந்த பொன்னும் பொருளும் துகிலும் குமரனார். எதிர் பாராவண்ணம் வந்து சேர்ந்தன. மதுரைக் குமரனார் திருக்குட்டு வனது மனமாட்சியை யெண்ணினார். தாம் பாடியவற்றையும் பிற நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தார்; உவகையாற் கலுழ்ந்தார்; அவர் புலமை யுள்ளத்தில் வியப்பும் உவகையும் மாறிமாறி உண்டாயின. ஏனைப் பாடல் சான்ற புலமைச் சான்றோரை நினைந்தார். அவர்கள் அனைவரும் இத்திருக்குட்டுவனுடைய கை வண்மையையறிதல் வேண்டு மெனக் கருதினார். அக்கருத்து மேற்குறித்த பொருள்களைக் கொண்ட இனிய பாட்டாய் வெளிவந்தது. அது, " சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் வள்ளிய னாதல், வையகம் புகழினும் உள்ளல் ஓம்புமின்; உயர்மொழிப் புலவீர்! யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகல் ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப் பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்று சினந்தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன்; அஞ்சி யான்அது பெயர்த்தனென், ஆக; தான்அது சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு இரும்பே ரொக்கல்பெரும்புலம் பெறினும் தன்னரும் பரிசில் தருமென என்றுஞ் செல்லேன் அவன் குன்றுகெழு நாடே" என்பது. இப்பாட்டின்கண், அகன்ற மார்பும் வலி மிக்க கையுமுடைய திருக்குட்டுவன் வெண்குடை யென்னும் ஊர்க் குரியவன் என்று சிறப்பித்து முதலில் அவனுடைய வள்ளன்மையை வையக முழுதும் புகழ்கின்றதென எடுத்தோதுகின்றார். பின்னர், புலவர்களை நோக்கி "இவ்வள்ளியோனை உள்ளன்மின்; இவன் துன்னரும் பரிசில் தரும்" என விலக்குவார். அவனுடைய மிக்க கொடையைத் தமக்கு அவன் நிகழ்த்தியவாற்றால் கூறுகின்றார். பிறரை வேண்டாவென விலக்கும் இவர், தான் விலகி நிற்கும் திறத்தை இறுதியில், "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும், என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாடு" என்று கூறி முடிக் கின்றார். ஏனாதி திருக்குட்டுவன் வலிய வில்லையெடுத்து வளைத் தாளுதலால் அகன்ற தன் மார்பின்கண் சாந்தணிந்து தண்ணிய அருள்மேவிய உள்ளத்தன் என அவன் மெய்ந் நலத்தை, "சிலையுலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்" என்றார். இச்சொற்றொடர் நலத்தைச் சுவைத்து வியந்த காப்பியப் பாவலரான திருத்தக்கதேவர், தாம் சிறப்பித்துப் பாடிய சீவகனை "சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்"என இத்தொடராற் குறித்திருப்பது தமிழறிஞர்க்குப் பேரின்பந் தருவதொன்று. இக்குட்டுவனுக்குரிய வெண்குடை யென்னுமூர், மலைநாட்டதாயினும் நெல்வளம் மிக்க நீர்மை யுடையதென்று விளங்குமாறு, "ஒலிகதிர்க் கழனி வெண் குடை" என்றார். இவ்வில்லேருழவற்குச் சிலைவன்மையும் நெல்வளம் சுரக்கும் வெண்குடை யுரிமையும் ஒருபால் விளங்க, ஒருபால் இரவலர்க்கு ஈதற்கென அமைந்து விளங்கும் கைந்நலத்தை "வலிதுஞ்சு தடக்கை" யெனச் சிறப்பித்து, அக்கை வாட்போரிலும் வல்லதென்பது தோன்ற "வாய்வாள் குட்டுவன்" என்றார். இங்ஙனம் தோள் வன்மையும் கை வண்மையும் ஒருங் குடையார்க்கு வையக முழுதும் புகழ் பரவுவது ஒருதலை யாகலான் "வாய்வாள் குட்டுவன் வையகம் புகழினும்" என்றும், அத்தகைய புகழுடையோனை உயர்ந்த புலவரனைவரும் கண்டு பரவ விரும்பு வது இயல்பாதலால், அவரை நோக்கி, அவ்வாறு செய்யன் மின் என விலக்குவார்போல "உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்" என்றும் கூறினார். இது மறைமுகமாக உயர்மொழிப்புலவர் ஒருங்கு திரண்டுவந்து, தங்கள் உயர்மொழியால் இக்குட்டுவனது புகழுடம்பை உயர்மொழிப்புலமைச் செய்யுளால் உருப்படுத்தி நிலைநிறுவுதல் வேண்டுமெனப் பணிக்கும் தமிழ்ப்பணி. வண்மையாற் புகழ்வளர்க்கும் வள்ளியோனாகிய திருக் குட்டுவனைக் காணவிரும்பும் உயர்மொழிப் புலவர்களை விலக்குதற்கு உரிய காரணத்தை விரியக் கூறத் தொடங்கி, "யான் வைகறைப் போதில் ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, இவன் தந்தையது வாடாவஞ்சி பாடினேன்; அதற்கு அவன் அகமலி உவகையொடு அணுகல் வேண்டி வெஞ்சின வேழம் நல்கினன்; யான் அவ்வேழத்தைக் கண்டு அஞ்சிப் பெயர்த்தேன்; தான் அது சிறிதென உணர்ந்தமை நாணி, பிறிதுமொரு பெருங்களிறு நல்கினன்; அது கொண்டு, ஒக்கல் பெரும்புலம்புறினும், அவன் குன்று கெழுநாட்டிற்குச் செல்லின், துன்னரும் பரிசில் தருவனென்பது தெரியும்; அதனால் யான் என்றும் செல்லேன்; நுமக்கும் அவ்வாறே செய்வன்" என்று கூறியுள்ளார். வாடாவஞ்சி பாடிய பொழுது இன்னது எனத்தெரிய விளங்குதற்கு, "இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை" என்றார். இருள்நிலா என்றது முற்பகுதி இருளும் பிற்பகுதி நிலவுமாகிய இராக்காலம். வைகறை யாவது இரவுக்காலத்துக்கிறுதியாய்ப் பகற்காலத்துக்குத் தோற்றுவாயாய் இருப்பது, அதனைப் "பகல் செய்வைகறை" யென்றார். இவ்வாறே அந்திமாலைப்போது பகற்காலத்துக் கிறுதியாய் இரவுக் காலத்துக்குத் தோற்று வாயாவது கொண்டு, அதனை, "மருண்மாலை" யென்றும் "இருள்மாலை" யென்றும் சான்றோர் கூறுவது மரபு. "இருள்நிலாக் கழிந்த வைகறைப் போது" பகல்போல நிலவொளி திகழும் இனிய தண்ணிய காலமாய்ப் பாவலரும் பாடல் மக்களும் பாடுதற்கு வாய்த்ததொரு காலமாகும் என்பது இதனால் குறிக்கவும் படுகிறது. பாட்டிசைக்கேற்ப, ஒருகண் மாக்கிணையைப் பாண்மகன் இனிமையுற இசைத்தான். பாட்டிசையோடு இயைந்து அதன் பொருள் நலமும் இசைநலமும் கேட்போர் உள்ளத்திற் படிந்து இன்ப மெய்தத்தக்க வகையில் அக்கிணை இசைக்கப்பட்டது. என்பார், "ஒருகண்மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி" என்றார். ஒற்றுதலை "அடக்கமாக வாசித்தல்" என்று இக்காலத்து இசைவாணர் கூறுவர். இனி, வெறும் இசையே போதுமானது; பாட்டும் பொருளும் அத்துணைச் சிறப்பு இல என இக்காலத்தே பேசியும் எழுதியும் திரிபவர்போலப் பண்டைத் தமிழ் மக்கள் அறிவு அறைபோகியவர் அல்லர்; இசை கருவியாக அதனால் உள்ளத்துக்கு நல்கப்படும் பொருளிலும் அவரது கருத்து ஊன்றியிருந்தது; மக்கள் எழுப்பும் இன்னிசைக்கும் ஏனைப் புள்ளினங்களும் உயிரில்லாத இசைக் கருவிகளும் எழுப்பும் இன்னிசைக்கும் பொருள் புணர்ந்தெழும் பாட்டொடு பிறந்த இந்த இன்னிசை இயல் வேறுபட விளங்க வேண்டும் என்று அந்நாளைய அறிவுடைய நன்மக்கள் கருதினர். அக்கால இயல்புக்கேற்பத் தாம் பாடிய பாட்டின் பொருள் இது எனக் குறிப்பதற்காக, "தந்தை வாடா வஞ்சி பாடினேன்" என்றார். திருக்குட்டுவனுக்குத் தந்தை தனக்கென்று அமைந்த தேரும் ஒலிக்கும் முரசும் உடைய பேரரசன் என்பது விளங்க "பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை" எனவும், மைந்து பொருளாக மண்ணசைகொண்டு ஏனைப் பகைவர்மேற் சென்று போருடற்றுவது வஞ்சியெனப் படுமாகையால், அதனை "வாடா வஞ்சி" யெனவும் குறித்தார். அப்போரில் வஞ்சிப் பூவைச்சூடிப் போர்செய்வது மரபு. அதனால் அது வஞ்சியெனப் பட்டது. ஒரு காலத்தே ஆங்கிலேயர் தாம் செய்த போரில் ரோசாப் பூவைச் சூடிக்கொண்டு போர் செய்தனர். அதற்கு ரோசாப்புப் போர் (wars of the roses) என்று பெயர் கூறினர். இங்கே வஞ்சி யென்பது வஞ்சிப்பூ வன்று; வஞ்சி சூடிச் செய்யும் போர் என்பதற்காக, “வாடாவஞ்சி” என்றார். இளையோர்க்குப் பொது வாகவே தம்முடைய குடியிற் பிறந்த முன்னோரது புகழ் கேட்டவழி, அவருடைய உள்ளம் உவகையால் மலிவது இயல்பு. அம்முன் னோரிலும் புகழப்படுபவர் தம்மைப் பெற்ற தந்தையேயாகிய வழி, உவகை பெரிதாமென்பது சொல்ல வேண்டா. உவகை மிகுதியால் தனக்கும் குமரனாருக்கும் பிரியாது நெருங்கிய நட்புண்டாக வேண்டினானென்பது தோன்ற, “அகமலி உவகையோடு அணுகல் வேண்டி” என்றார். வேள்பாரிக்குக் கபிலரும், அதிய மானுக்கு ஒளவையும் போல நட்பால் பிரியாத் தொடர்பினை “அணுகுதல் வேண்டி” யெனக் குறிக்கின்றார். இனி, பாட்டிசையும் பொருளும் கேட்டு இன்புற்ற திருக் குட்டுவன் குமரனாருக்குத் தந்த பரிசிலாகிய வெஞ்சின வேழத்தின் இயல்பு கூறுவாராய், “கொன்று சினம் தணியாப் புலவுநாறு மருப்பின், வெஞ்சிள வேழம் நல்கினன்” என்றார். போரில் பகைவரைக் கொல்லுதற்குக் கொண்ட சினம், கொன்ற பிறகும் தணியாது, கொன்றதனால் மருப்பில் புலால் நாற்றம் நாற நின்றது அவ்வேழம்; அதனை எனக்கு நல்கினன் என்பது இதன் பொருள். அணுகல் வேண்டி என்பதையும் இதனொடு கூட்டிக் காணின், இவ்வெஞ்சின வேழத்தைக் கொணர்ந்து நிறுத்தி, என்னையும் அதனை அணுகல் வேண்டி நல்கினன்; அதன் வெஞ்சினத் தோற்றங் கண்ட மாத்திரையே பேரச்ச முற்றுத்துளங்கிய என்னை நன்கறியாது அதனை யணுகல் வேண்டினன்; எனது நிலை இரங்கத் தக்கதொன்றாகி விட்டது என நகைச் சுவை தோன்ற இச்சொற்றோடர்கள் நிற்பது காணத்தக்கது. இவ்வண்ணம் அச்சம் பயக்கும் வேழத்தை வேண்டா வென யான் பெயர்த்து விட்டேன். என் கருத்தைப் பார்க்காமல், அப்பெருந்தகை, அவ்வேழப் பரிசிலை யான் சிறிதென நினைத்து விட்டதாக எண்ணிக் கொண்டான். அதனால், இருபெரு வேழங்களை நல்குவது என் வரிசைக்கு ஒத்ததாம் என்றும், எனது இவ்வரிசை யறியாது போனது தனது அறியாமை என்றும் நினைத்து, அத் தவற்றுக்கு நாணி வேறொரு பெருங்களிற்றை முன்னே தந்த களிற்றோடு ஒருங்கு என்பால் வரவிடுத்தான். இவை யிரண்டும் பெரும் பொருளைச் சுமந்துகொண்டு வந்தன. அவை துன்னுதற்குரிய வெஞ்சின வேழங்களாதலால், எனக்குக் கலக்கம் பெரிதாயிற்று. ஆதலால் , என் பெருஞ் சுற்றம் பசியால் மிக மெலியினும் அவன்வயிற் சென்றால் அவன் முன்போல் துன்னரும் பரிசில் தந்து அச்சுறுத்துவன் என்ற எண்ணத்தால் என்றும் அவன் குன்று கெழு நாட்டுக்குச் செல்லேன் என்றார். “துன்னரும் பரிசில்” என்னும் இத்தொடர், நம்போல்வார் பெறுதற்கரிய பெரும் பரிசில் என்றும் பொருள் படுமாறு இத்தொடர் அமைந்திருப்பது குறிக்கத் தக்கது. இங்ஙனம் ஏனாதி திருக்குட்டுவனைப் பழிப்பது போலப் புகழ்ந்து அவனது இசையினை நிறுவும் இப்பாட்டைப் பாடினாராக, குமரனாரைத் திருக்குட்டுவன் சின்னாள் தன்பால் இருத்திச் சிறப்பித்தான். “இரும்பே ரொக்கல் பெரும் புலம்புறினும்” என்றதனைத் திருக்குட்டுவன் எண்ணினான். அவரது பிரிவால் அவருடைய ஒக்கலும் மனைவி மக்களும் தனிமையுற்று வருந்துவர் என்பதை யுணர்ந்தான். மதுரைக் குமரனாரது உள்ளம் ஒக்கலின் தனிமை யெண்ணுவதை, அவரது சிறுசொற்றொடர் புலப்படுத்தியது. கண்டு வியந்தான். தனது அன்பின் பெருமைக்கு அகப்பட்டுக் குமரனார் தமது மனைவாழ்க்கையைப் பிரிந்திருந்து நினைந்தெய்தும் வருத்தத்தை விரியக் கூறமாட்டாது திகைப்பது கண்டு காலின் ஏழடிப்பின் சென்று வழிவிட்டான். மதுரைக் குமரனார் பின்பு மலைநாட்டைக் கடந்து மதுரை சென்றடைந்தார். நெடுநாட்களாகப் பிரிந்திருந்த ஒக்கலும் மக்களும் அவரை விரும்பி வரவேற்றனர். நல்லிசைச் சான்றோரும் பிற நண்பரும் அவர் வரலாறு கேட்டுப் பேரின்ப முற்றனர். தனிமை குடிகொண்டி ருந்த அவரது தமிழகத்தில் தமிழ்ப்பாட்டும் தமிழிசையும் தழைத் தோங்கின. தமிழ் வெல்க! தமிழரசு மேம்படுக! தமிழ்நாடு பன்னலமும் தழைத்தோங்க வாழியவே!  26. பெருங்கோப் பெண்டு சங்க காலத்திலே தமிழகத்தைச் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரும் ஆண்டு வந்தனர் என்பது நாடறிந்த செய்தி. அந்நாளில் பாண்டி நாட்டின் தென்பகுதியில் பூதப் பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் சிறந்த மெய்வன்மையும் ஆட்சித் திறனும் படைத்தவன். அவனுக்குப் பட்டத்தரசியாக வாய்த்த மனைவிதான் பெருங்கோப் பெண்டு. அரசியாதற்கு ஏற்ற அமைதி சான்ற உள்ளமும் அரசனாகிய காதற் கணவனிடத்து அசைவில்லாத அன்பும் அவள்பால் சிறந்து நின்றன. இவ்வாறு இருவரும் மனமொத்த அன்பும் செய்வினைத் திட்பமும் சேரப்பெற்றுச் சான்றோர் பலரும் பாராட்டும் தகுதியும் பெற்று விளங்கினர். அக்காலத்தில் பாண்டி நாட்டுக்கு வடவெல்லையாகச் சிறுமலைத் தொடரும் அதன்கண் தோன்றிக் கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் வீழும் வெள்ளாறும் இருந்தன. அவ்வெள்ளாற்றின் தென்கரைப் பகுதி ஒல்லையூர் நாடு எனப்படும். அதன் தலைநகராகிய ஒல்லையூர் இப்போது ஒலியமங்கலம் என்ற பெயருடன் விளங்குகின்றது. வெள்ளாற்றின் வடபகுதி சோழர்க்கும் தென்பகுதி பாண்டியர்க்கும் உரியவாகும்; ஆயினும், சோழரும் பாண்டியரும் ஒல்லையூர் நாடு பொருளாக அடிக்கடிப்போர் செய்துகொள்வர். ஒரு கால் சோழர் ஒல்லையூர் நாட்டைத் தமது நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். அதனை அறிந்ததும் பூதப்பாண்டியனுக்கு உண்டான சினத்துக்கு அளவில்லை. மைந்து பொருளாக மண்ணாசை கொண்டு வந்த சோழரை வென்று, பண்டுபோல் ஒல்லையூர்ப் பகுதியைப் பாண்டி நாட்டு எல்லைப் பகுதியாக நிறுவப் பெரும்படை யொன்றைத் திரட்டிச்சென்றான். சோழர்க்கும் பூதப்பாண்டியனுக்கும் வெள்ளாற்றங் கரையில் கடும்போர் நிகழ்ந்தது. முடிவில் பாண்டியர் வென்றனர்; ஒல்லையூர் நாடு பாண்டி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. அதனால் பூதப் பாண்டியனுக்கு ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்ற சிறப்பு எய்திற்று. கொண்டு வருதல் என்பதைத் தருதல் என்பது சங்க காலத் தமிழ் வழக்கு அதனால் ஒல்லையூர் நாட்டைப் பாண்டி நாட்டிற் கொணர்ந்தமை தோன்ற ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனப்பட்டான். இவ்வாறே பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள கானப் பேரெயில் என்னுமிடத்தே வேங்கை மார்பன் என்றொரு தலைவன் இருந்து அப்பகுதியைப் பாண்டி நாட்டரசி னின்றும் நீக்கித் தனியரசாக நிறுவ முயன்ற போது பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அவனை வென்று அதனைப் பாண்டி நாட்டோடு சேர்த்துக் கொண்டதனால் அவ்வழுதி கானப்போர் தந்த உக்கிரப் பெரு வழுதி எனப்பட்டான். இவ்வாறு ஒல்லையூர் நாட்டைப் பாண்டி நாட்டோடு சேர்த்துப் பெரும் புகழ் கொண்ட பூதப் பாண்டியன் முற்றா இளமைக் காலத்தேயே இறந்தான். அவனது மறைவு தென் பாண்டி நாட்டார்க்கு மிக்க பெரும் துன்பத்தைத் தந்தது. அந்நாளில் நாட்டின் பாதுகாப்புக்கு, அரசாளும் பெருந்தகைகளின் மெய் வன்மையும் செயல் மாண்பும் பேரரண்களாகத் திகழ்ந்தன. பயிர்கள் யாவும் வான் பெயலை எதிர்நோக்கி வாழ்தல் போல மக்கள் அனைவரும் வேந்தனது பாதுகாவலையே நோக்குவர். வேந்தரும் குடிகளின் கருத்தறிந்து அவர் வேண்டுவனவே தாமும் விரும்பிச் செய்வர். இதனால் வேந்தரும் குடிகளும் ஒருவரை யொருவர் தழுவி வாழ்ந்தமையின் நாட்டவர் வாழ்வில் இன்பமே நிறைந் திருந்தது. அரசியலின் செவ்விய முறையால் பாண்டி நாடு இன்பமே நுகர்தற்குக் காரணமாயிருந்த பூதப் பாண்டியன் இறந்தது, இனிய காட்சிகள் நிறைந்த சோலையில் உலவிவரும் செல்வன் ஒருவனுக்குத் திடீரெனக் கட்பார்வை போய் விட்டால் அவன் எத்துணைத் துன்பம் உறுவானோ அத்துணைத் துன்பம் நாட்டு நன்மக்கள் எய்தினர். நாடு முழுதும் அழுகையொலி மிகுந்தது. அதனைக் கண்ட அரச மாதேவியாகிய பெருங்கோப் பெண்டுக்கு உண்டான துயரத்துக்கு எல்லையில்லை. அழுதாள், விழுந்தாள், புரண்டாள், எழுந்தாள்; ஏங்கி ஏங்கி அழுதாள். இன்பமே நிறைந்து தோன்றிய உலகம் அவட்குத் துன்பக் காட்சியே தந்தது. இரவினும் பகலினும் முறையே வெண்ணிலவும் செஞ்ஞாயிறும் மாறி மாறி ஒளி செய்தன வாயினும் பெருங் கோப்பெண்டின் கண்களுக்கு உலகம் துன்பத்தால் இருண்டே தோன்றிற்று. என் செய்வாள்? இறந்த கணவனுடன் தானும் தீப்பாய்ந்து இறத்தலே செய்யத் தக்கது எனத் தோன்றிற்று. அதனை அவள் தன்னைச் சூழ இருந்த அமைச்சருக்கும் ஏனைய அரசியற் சுற்றத்தார்க்கும் தெரிவித்தாள். சிறிது பொழுதுக்கெல்லாம் அச்செய்தி நாடு முழுதும் காட்டுத் தீப்போல் பரந்தது. பெருங்கோப் பெண்டு தீப்புகத் துணிந்த செய்தியறிந்த பாண்டிச் சான்றோர் பலரும் அங்கே வந்து கூடி விட்டனர். பெருங்கோப் பெண்டின் இளமை நலமும் அவளுடைய துணையால் பூதப் பாண்டியன் புரிந்த ஆட்சி நலமும் அவர்களுடைய அறிவுக் கண்ணுக்கு இனிய தோற்றமளித்தன. பூதப் பாண்டியனுடைய வெற்றிக்கும் அரசியலை இனிது நடத்திய மாண்புக்கும் பெருங்கோப் பெண்டின் அறிவு துணை புரிந்த திறத்தை எண்ணிப் பார்த்தனர். அரசியற் பணியில் அயர்ச்சி தோன்றிய போது பூதப் பாண்டியனுக்கு வேண்டிய அறிவுரை கொளுத்துவதில் அரசமாதேவியாகிய அவள் சிறிதும் அயர்ந்ததில்லை, பாண்டி நாட்டின் புகழை மனதிற் கொண்டு அதைப் பேணிக் காப்பது ஒன்றே தன்வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தன் கணவனான பூதப் பாண்டியனை நன்னெறியில் ஊக்கின அவளுடைய அறிவு மாண்பைச் சான்றோர் அனைவரும் எண்ணிப் பாராட்டினர். வேந்தனுடைய அரசியற் செயல்களில் நலம் தோன்றிய போது அவனை அன்புறத் தழுவிப் பாராட்டியும் தவறு தோன்றிய காலையில் பெற்ற தாயினும் பேரன்பு காட்டி மறுத்தும் இடித்துரைத்தும் நன்னெறிக்கண் நிறுத்திய அவளுடைய பேரொழுக்கமும் கண்டோர். "தாய்போல் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரியது" எனத் தொல்காப்பியர் உரைத்த உரைக்குப் பெருங்கோப் பெண்டின் மனை மாண்புசிறந்த எடுத்துக் காட்டாமென எண்ணியுரைத்து இன்புற்றனர். இப்பெற்றியமைந்த இவளே பாண்டி நாட்டு அரசு கட்டிலேறி அறச்செங்கோலோச்சி ஆட்சி மேற்கொள்வது நன்று எனத்துணிந்தனர். இதனை ஏனைச் சான்றோரும் அரசியற் சுற்றத்தாரும் நன்று என உடன் பட்டனர். கணவனை யிழந்த துன்பத்தால் கண்ணீரும் கம்பலையுமாய்க் கையற்றுக் கிடக்கும் பெருங்கோப்பெண்டுக்கு உரைத்து அவள் தீப்புகுந்து மடிவதைக் தடுக்கக் கருதினர், பொன்றாப் புகழும் குன்றாத சால்புமுடைய பெரியோர் சிலர் முன் செல்லச் செல்வரும் கல்வியாளரும் உடன்வரப் பாண்டிமா தேவியின் திருமுன் நின்று தங்கள் கருத்தை மிக்க பணிவும் அன்பும் பொருந்திய கனிந்த மொழிகளால் தெரிவித்துத் தீப்புகுதல் வேண்டாவென அவள் அடிகளில் வீழ்ந்து வேண்டினர். பெண்மை வாழ்வு மனைக்குள்ளிருந்து தாய்மைப் பணிபுரி தற்கும், தகவுடைய அறம் செய்வதற்கும், ஆண்மை வாழ்வு புறத்தே சென்று வினைசெய்தும் பொருளீட்டியும் மனையறத்துக்கு ஆக்கமும் அரணும் சமைத்தற்கும் அமைந்தன; உலகியலில் பொருளில் வழி அறமும் இன்பமும் பெறுமாறு இல்லை. பொருட்குரிய ஆடவனான கணவன் இறந்த பின் அவன் வழி நின்று அறம் செய்து புகழ் வளர்த்துப் பொற்புறுவிக்கும் மனைவிக்கு வாழ்வில்லை. வாழப்பிறந்த மகள் ஒருத்திக்கு மண்ணில் வாழ்வில்லையாயின் மாண்டு மடிவதல்லது வேறு வழி இல்லாமையை எண்ணி மனம் புண்ணாகிப் பேதுற்றிருந்த பெருங்கோப் பெண்டுக்குச் சான்றோர் உரைத்தது, யான் உயிர் விடமாட்டாது வருந்துவதாக இவர்கள் எண்ணுகிறார்கள் போலும் என நினைப்பித்தது. நல்லதன் நன்மை எளிதிற் புலப்படாதன்றோ! "என்னை மணந்த மன்னவனது உள்ளத்துக்கு அவ்வப்போது அறவுரையால் மறத்தீக் கொளுத்தி மாண்புறுவித்தயான் அவனது உயிர் நீங்கிய உடல் வெந்த தீயில் விழுவதற்கு அஞ்சுவதாக இவர்கள் எண்ணுகிறார்களே!" என நினைத்தாள். நினைத்தலும், அவள் உள்ளத்தே சினம் பொங்கி யெழுந்தது; கண்கள் சிவந்தன; வாயிதழ்கள் துடித்தன; முல்லை யரும்பு போன்ற அவள் பற்கள் நெறுநெறு வெனக் கடியுண்டன. சிறிதுமுன்னர்த் தலைவிரி கோலமாகக் கிடந்த அரசமாதேவியின் அவலக் கோலம்; வெகுளியால் வெம்மைக் கோல மாயிற்று. மையழிந்த கண்களை மலரவிழித்து, எதிர் நின்ற சான்றோர் பலரையும் ஏற இறங்க நோக்கி, கண்ணீர் பெருகக் கைகளை மடக்கி மெய்விதிர்க்க வெய்துயிர்த்துப் "பல்சான்நீரே, பல் சான்றீரே! செல்க எனச் சொல்லாது ஒழிக என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே" என்றாள்; 'ஒருவர் இருவர் ஆயின் ஏதோ நம் துயர் அளவு அறியாமல் சொல்லுகின்றீர்கள் எனக் கொண்டொழியலாம்; நீங்கள் பலராய்க் கூடிவந்து தீப்புகுதல் தகாது ஒழிக" என்று சொல்கின்றீர்கள்; இதற்கு முன்பே, நீங்கள் ஒன்று கூடி ஆராய்ந்து இதனைச் சொல்ல வந்தீர்கள் என்பது நன்றாய்த் தெரிகிறது; உங்கள் சூழ்ச்சி எனக்கோ என் காதலனுயிர்க்கோ நலம் செய்வதன்று; பொல்லாங்கு விளைவிக்கும் பொல்லாச் சூழ்ச்சி செய்த சான்றீர்களே' என்று எடுத்த எடுப்பிலே பல சொற்களை அம்புபோல அச்சான்றோர்கள் பால் வழங்கலுற்றாள். அரசமாதேவியின் மனநிலை இவ்வழியில் இயங்குவதை முன்னரே எண்ணுமையால் சான்றோர் பலரும் செயலற்று நின்றனர். பின்பு ஒருவாறு தேறி அவர்கள் பெருங்கோப் பெண்டின் திருமுன் மறுபடியும் வீழ்ந்தெழுந்து தங்கள் மனக் கருத்தும் நாட்டு மக்கள் விருப்பமும் இவையெனத் தெளிவாக உரைத்துத் தங்கள் செயலைப் பொறுத்தருளல் வேண்டுமென பெரிதும் வேண்டினர். பெருங்கோப் பெண்டு அவர்களை நோக்கி, "தனக்கென வாழாது பிறர்க்கென முயல்வது அரச வாழ்வு. அதற்கென அமைந்த ஆண்மையும் ஆற்றலும் ஒருங்கு பெற்றது அரசனாகிய பெருந்தகை வாழ்வு. அவற்குப் பின்னே நின்று உடல் நலமும் உள்ளத்தின் வளமும் சோர்வு எய்துங்கால் அவற்றிற்கு வேண்டுவன நல்கிச் செம்மை நிலை திறம்பாதவாறு பணிபுரிவது அரசியாகிய எனக்கு அறம். என் பணிக்குறிய உடலும் உள்ளமும் படைத்த ஏந்தல் இறந்தபின் என் வாழ்வு செயலற்று நின்று வற்றுகிறது. மேலும் பின்னின்று பேணுவதே பெண்மை எத்துணை முன்னிற்பினும் பின்னிற்கும் பெற்றிமை தோன்றி ஆள்வினைக்கு ஆக்கமுண்டாகா வாறு கெடுக்கும். ஒரு சால் அமைச்சும் நாடும் என்வழி நிற்க விரும்பினும், இப்பாண்டி நாட்டு ஆண்மை பெண்ணேவல் செய்யும் பேதைமைத்து என்னும் பீடில் வசை என்னால் எய்த விடேன்" என மொழிந்தாள். மேலும் தொடர்ந்து, "மற்றொன்று சொல்லுகிறேன்; கேண்மின்; கோலோச்சிக் குடிபுரக்கும் கோத்தொழில் மேற்கொள்ளினும் நெடு முடி கவித்துக் குடை நிழல் வீற்றிருத்தல் கணவனை யிழந்த கைம்பெண்ணுக்கு நேரிதன்று; நெய் பெய்யாத நீர்ச் சோற்றுத் திரளை இலையிற் பெய்து, புளி யிட்டுக் கடைந்த வேளைக் கீரையோடு பிசைந்துண்பது கைம்மை; பரற்கற்கள் பரப்பி அவற்றின் மீது பாயின்றி உறங்குவர், கைம்மை மகளீர்; கணவனோடு உயிரொழியாது தீயின் வெம்மைக்கு அஞ்சும் இயல்புடைய மகளிர்க்கென்றே இக்கைம்மை நோன்பு அமைந் துள்ளது, யான் இக்கைம்மை மேற்கொண்டு அரசு புரிவேனாயின், தீக்கஞ்சும் இவள், அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை ஆகிய இம்மூன்றும் எஞ்சாது நிலனாட்சி செய்வது யாங்ஙனம்? என்ற வசையே நாட்டில் நிலைபெறும். உங்கட்கு வேண்டுமானால் பெருங்காட்டில் என் பொருட்டு நிறுவப்படும் ஈமத்தீ பொறுத்தற்கரிய வெம்மையுடையதாகத் தோன்றும். என் போலும் மறக்குடி மகளிர்க்கு இத்தீயும் மலர் நிறைந்த பொய்கையும் ஓர் இயல்பினவேயாம்" என்பாளாய், " பெருங்காட்டுப் பண்ணிய கருங்கேட்டீமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை அரும்பர நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே" என்றாள். தான் பிறந்த அரசர் குடிக்கும் செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்கும் பெரும் புகழ் ஈட்டித் தந்த பெரிய தோளாண்மை யுடையவன் என் கணவனாகிய பாண்டியன். அப்பெருந்தகை மாய்ந்த பின்பு எனக்கு வாழ்வும் சாக்காடும் ஒன்றே; அதனால் தீப்புகுதலும் பொய்கையுள் மூழ்குதலும் ஒரு தன்மையவே" என்று உரைத்தாள். தொடக்கத்தில் சான்றோர்களாகிய தங்கள் சார்பில் தவறு நினைத்து தன்னைத் தீப்புகாவாறு தடுத்தமைக்கு வெகுண்டு பொல்லாச் சூழ்ச்சியினைச் செய்வோர் என வைதுரைத்த பெருங்கோப் பெண்டின் கற்புள்ளத்தின் இயல்பினைக் கண்ட சான்றோர் திடுக் கிட்டு மனமருண்டு நின்றனர். உயர்ந்த பண்புடைய நன்மக்கட்கு உண்டாகும் சினம் மறுகணத்தே மறைந்து போமன்றோ? அதை யறிந்தே சான்றோர் ஒரு மொழியும் உரையாமல் வாய் பொத்தி நின்றனர். அரசமாதேவி தன் அறிவைச் சிதைத்து மேலெழுந்த சினம் தணிந்ததும், அவர்கள் எடுத்துரைத்த அரச வாழ்வு உள்ளீடில்லாத புறத் தோற்றமாகவும், அகத்தே வெறுத்த வுண்டியும் வேதனைப் பாயலும் நின்று உயிரை ஒறுக்கு மாதலின் அதனை வேண்டேன் என்றற்கு நெய்யில்லாத கீரை கலந்த நீர்ச் சோற்றையும் பரற்கல் பரப்பிப் பாயின்றிக் கிடக்கும் பாயலையும் விரித்து ஓதினாள். அது கேட்ட சான்றோர், "அரசமாதேவி யுரைத்தவை உண்மை; அதனை அடியேங்கள் எண்ணிற்றிலேம்; தேவியின் திருமேனி ஈமத்தீயின் வெம்மையில் வாடி வருந்துமென எண்ணும் போது எங்கள் நெஞ்சம் பேரவலத்தால் பேதுறுகின்றது எனக் கண்ணீர் வடித்தனர்." அது கண்ட அரசமாதேவி, "சான்றோர்களே, பெருங்காட்டு ஈமத்தீ உங்கட்கு அரிய தொன்றாதலால் நீங்கள் அஞ்சி அவலிக்கின்றீர்கள்; கணவனை யிழந்த எனக்கு மாத்திரமன்று; என் போலும் மகளிர்க்கு, இப்பெருந்தீயில் மூழ்கலும், பெருநீரில் படிதலும் ஒன்றே; அது பற்றிக் கவலை வேண்டா" என்பவளாய் "எனக்கு என் பெருந்தோள் கணவன் மாய்ந்தென" என்று உரைக்காமல். "எமக்கு" என்றும், "எம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென" என்றும் பன்மையில் கூறினாள். வேறு கூற மாட்டாமையால் சான்றோர்கள் அவளை ஈமப் பெருங் காட்டுக்கு உரிய சிறப்புடன் அழைத்துச் சென்றனர். பெருங்காடாகிய சுடுகாட்டில் பூதப் பாண்டியனுடைய பூதவுடல் தீயில் வெந்து கொண்டிருந்தது. அரசர் குடியிற் பிறந்தோரைச் சுட்டெரிக்கும் பெருங்காடு காடுகிழாளாகிய கொற்றவையின் கோயில் முற்றமாகும். பிற காலங்களில் யானைகள் மரம் அடர்ந்த நெடிய காட்டினின்று கொணரும் கட்டைகளைக் கானவர் கொற்றவை முன்றிலில் தொகுத்து எரிப்பர். குளிரால் வருந்தும் மானினம் அத்தீ யொளியால் அவண் போந்து அதன் வெம்மையில் கிடந்து இனிது உறங்கும்; சில காலங்களில் குரங்குகள் போந்து மானினத்தின் துயிலைக் கெடுத்து வெருட்டுவதுமுண்டு. அத்தகைய முற்றத்தில் பெருங்கோப் பெண்டு தீப்பாய்தற்கு என அமைத்த தீக்குழியிருந்தது; அதன்கண் சந்தனக் கட்டைகள் நன்கு எரிந்து கொண்டிருந்தன. அந்நிலையில் பெருங்கோப் பெண்டு அங்கேயிருந்த மலர்ப் பொய்கையில் நீராடித் தன் கூந்தலின் நீர் ஒழுக, ஒருபால் தன் கொழுநனுடைய உயிருடன் தான் விண்ணுலகு சென்று சேரும் கருத்து உள்ளத்தே தோன்றி ஊக்கினும், அவன் பிரிவாற்றாத துன்பத்தால் கண்களில் நீர் ஆறாகப் பெருகி வழியத் தீயை வலம் வந்து அதன்கட் புகுந்து மாய்ந்தாள். அந்தத் துன்பக் காட்சியை அரசியற் சுற்றத்தாரும் சான்றோர்களும் சூழ இருந்து கண்களாற் கண்டு வருந்திக் கதறிப் புலம்பினர். ஊரவர்செய்த அழுவிளிக் கம்பலை மக்கள் உள்ளம் பொறுக்கமாட்டாத அளவில் பெருகி நின்றது. அங்கே கூடியிருந்த சான்றோர்களில் மதுரை நகரைச் சேர்ந்த வரான பேராலவாயார் என்ற நல்லிசைச் சான்றோர் கொற்றவை முற்றத்தின் இயல்பையும் பெருங்கோப் பெண்டு தீப்பாய்ந்த காட்சி யையும் தன் உள்ளக்கிழியில் உருவு பெற எழுதி நோக்கினார். துயரம் கரை கடந்து பெருகிற்று. பூதப் பாண்டியனும் பெருங்கோப் பெண்டும் பெருங் காதலாற் பிணிப்புண்டு வாழ்ந்த பெரிய இன்பநிலை அவர் புலமைக் கண்ணில் தோன்றிற்று. அறிவு நிறைந்த அவர்களின் சொல்லாட்டும் அன்பு சிறந்த ஒழுகலாறும் அவர் மனக்கண்ணில் தோன்றி அவலம் மிகுவித்தன. எத்துணை இடுக்கண் வரினும் சலியாத அவரது உள்ளம் தடுமாறிக் குழம்பிற்று. பின்பு பேராலவாயார் ஒருவாறு தமது உள்ளத்தைத் தேற்றிக் கொண்டார். அரசர் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடையவ ராதலால், பெருங் கோப் பெண்டிற்கு, வேந்தனாகிய தன் கணவன் பால் இருந்த பெருங்காதலுறவு அவரது நினைவில் எழுந்தது. பூதப்பாண்டியன் பால் இருந்த காதல் மிகுதியால் அவன் சிறிது தணப்பினும் தனிமை பொறாது பெரிதும் ஆற்றாளாய் வருந்தும் அவளுடைய இளமை நலம் அவர் அறிவை அசைத்தது. உலகில் வாழும் உயிர்கட்கு இளமைக் காலம் போல வளம் மிகுந்தது பிறிது யாதும் இல்லை. "இளமையிற் சிறந்த வளமை இல்லை" என்பர் சான்றோர். இளமைக் காலத்திற்குப் பின்னதே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக் காலம். அவ்வாழ்க்கை இன்பமும் துன்பமும் புணர்வும் பிரிவும், செல்வமும் வறுமையும் உயர்வும் தாழ்வும் , இசையும் வசையும் யாவும் மாறி மாறித் தோன்றக் காணும் காட்சியமைந்தது. அவற்றை வரவேற்றுத் தாங்கிச் செல்வது தான் உலகில் வாழ்வின் உண்மை நிலை. இன்பத்து மகிழ்தலும், துன்பத்துப் புலம்புதலும் எல்லா உயிர்க்கும் பொதுவியல்பு, ஆயினும் மக்களுயிர் ஒன்று தான் அவற்றைப் பிறர்க்கு உணர்த்தியும் உரைத்தும் ஆற்றியும் உறையும் அமைதி சான்றது. மக்கட்கு வாய்த்துள்ள இச்சிறப்புக்குக் காரணம் அவர்பால் அமைந்துள்ள உள்ளமும் அறிவும் என்ற இருபெருங் கருவிகளாகும். உள்ளம் என்பது உடற்கூற்றின் வழி நின்று அதன்கண் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற அறிவு கருவிகளால் புறவுலகைக் கண்டறிந்து வளம் பெறுவது. அறிவு என்பது உயிரினளவாய் நின்று உள்ளம் தரும் அறிவுக் காட்சிகளை வகுத்தும் தொகுத்தும் விரித்தும் பருப்பொருளை நுண்மையிலும் நுண் பொருளைப் பருமையிலும், உருவை அருவுருவிலும் அருவுருவை உருவிலும், பொருளைப் பண்பு வடிவிலும், பண்பைப் பொருள் வடிவிலும் காட்டுவது. உள்ளம் அப்பொருளைப் பண்பு நிலையில் வடித்து காண்பது. உடல் வாயிலாக வளம் பெறும் உள்ளம், குழவிப் பருவத்தும், பிள்ளமைப் பருவத்தும் உயிர் அறிவைத் தன் வழி நிறுத்தி இயக்கும். இவ்வாற்றால் வன்மை பெற்று வரும் அறிவு முதுமையில் உள்ளத்தைத் தன் வழி நிறுத்தித்தான் விரும்பிக் காட்டும் நெறியில் அதனை இயக்கும்; உள்ளத்தின் வழியில் உடம்பு இயங்கும். உயிர் அறிவு, கல்வி, கேள்விகளாலும் உலகியல் வாழ்வாலும் வன்மை பெறாது கழியுமாயின், உணர்ச்சி வழி நிற்கும் உள்ளத்துக்கு உடம்பு அடிமையாய்ச் செய்வன தவிர்வன தெளியாது துன்பச் சூழலில் வீழ்ந்து துயருறும். இதனை யெண்ணியே மக்களினத்துச் சான்றோர் இளமைக் காலத்தே நல்ல கல்வி கேள்விகளால் இளைஞர் அறிவை வன்மை மிக்கு விளங்கச் செய்தல் வேண்டும் என்று இயம்பு கின்றார்கள். பெருங்கோப் பெண்டு தன் கணவனை யிழந்த காலம் வளமை மிக்க இளமைக்காலம். இளமை, உடலுணர்வின் வழி நின்று உடற்குறிய இன்பக் கூறுகளைப் பெரிதும் அவாவி நிற்பது; எதிர்காலத்துக்கு ஆக்கமும் அரணுமாகும் அறிவுப் பேற்றினும், நிகழ்காலத்து இன்பக் காட்சிகளிலும் செய்கைகளிலும் இளமை யுள்ளம் பெரிதும் ஈடுபட்டு நிற்பதால், பெருங்கோப் பெண்டு தன்னுடைய இன்பக் காதற் கணவனை இமைப்போதும் பிரியாது வாழ்வதையே விரும்பினாள். அவன் தன் அரசியற் பணி குறித்துச் சிறிது பிரியினும் ஆற்றாளாய் வருந்தினாள். அவளுடைய அரண்மனையில் முரசு முழக்கமும் மக்கள் இயக்கமும் மிக்கிருப்பினும், காதற் கணவன் இல்லாத போது அவட்கு அப்பெருமனை யாருமில்லாத வெற்றிடம் போலவும், அங்கே தான் ஒரு துணையுமின்றித் தனித்திருப்பது போலவும் எண்ணி நடுங்குவாள். வளமான அறிவுடையளாயினும் அவளுடைய அறிவு இளமைக்குப் புறங்கொடுத்து மடிந்துவிடும்; அதனால் அவள் உள்ளம் கலங்கி உடல் துடித்து வருந்துவள், இவற்றை எண்ணிய பேராலவாயார். " தன் கொழுநன் முழுவு கண் துயிலாக் கடியுடை வியனகர்ச் சிறு நனி தமியளாயினும், இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே" என்று வாய்விட்டுக் கதறினார். இளமை விழையும் இன்பத்தின் பொருட்டு அறிவு வலி குன்றிச் சிறு பிரிவை யாற்றாளாயின பெருங்கோப்பெண்டு கணவனை யிழந்தோர் எய்தும் கைம்மை வாழ்வில் வெறுப்பும் அவன் உயிரோடு தன்னுயிரைத் தீப்பாய்ந்து ஒன்றுவிக்கும் உரமும் பெற்றதை எண்ணுகின்றார் புலவர். அவள் அறிவை இளமை யுணர்வுகள் வெல்ல மாட்டாது புறங்கொடுத்து வீழ்ந்தமை கண்டு பெருவியப்புற்று, " நீர்வார் கூந்தல் இரும் புறம் தாழப் பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்ம" என்று பாடினர். அவர் நினைந்து பாடிய பாட்டைக் கீழே காணலாம். " யானை தந்த முளிமர விறகில் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து மடமான் பெருநிரை வைகு துயிலெழுப்பி மந்தி சீக்கும் அணங்குடைமுன்றிலில் நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப் பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்மதானே தன் கொழுநன் முழவு கண் துயிலாக் கடியுடை வியனகர்ச் சிறு நனி தமியளாயினும் இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே" என்பது பேராலவாயார் பாட்டு. இப்பாட்டின்கண், கொற்றவையின் முற்றம், பெருங்கோப் பெண்டு தீப்பாய்தல், அவளது காதல் வாழ்வு என்ற மூன்று பொருள்கள் குறிக்கப்படுகின்றன. கொற்றவை முற்றத்தில் கானவர் மூட்டிய தீயருகே கிடந்து மானினம் குளிர் காய்ந்து உறங்குவதும், அவற்றை மந்திகள் எழுப்புவதும் நிகழ்கின்றன. தீப்பாயலுற்ற பெருங்கோப் பெண்டு நீராடிக் கூந்தல் நீர் சொரியக் கண்களைப் பரக்க விழித்துச் சுடுகாட்டை நோக்கித் தீயை வலம் வருகின்றாள். அவள் உள்ளத்தில் உண்மையறிவு ஓங்கி நின்று, முன்பு காதற் கணவன் பிரிந்த வழிப் பொறாது உயிரும் உடலும் நடுங்கச் செய்து இளமை யுணர்ச்சியை வீழ்த்துத் தன் கணவன் உயிரொடு தன்னுயிரைச் சேர்க்கும் உரம் கொண்டு நிற்கிறது. பாண்டிமாதேவி சுடுகாட்டுப் பெருந்தீயை வலம் வருவது காணும் பேராலவாயார், அதனைத் "தெருமரும் அம்மதானே" என்று பாடுவதும், அவள் உள்ளத்தே இளமை யுணர்ச்சிகள் வலியழிந்து நிற்கும் திறத்தை 'இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறம் கொடுத்தே" என்பதும் நம் மனத்தில் பெருங்கோப் பெண்டின் தீப்பாயும் சீரிய செயலை நன்கு உருப்படுத்திக் காட்டுகின்றன. தீப்பாய்தலையும், இளமை புறங்கொடுத்தலையும் பாடிய புலவர், இவை நிகழும் சுடுகாடு இருக்கும் இடம் கொற்றவையின் முற்றமாவது பற்றி அதனையும் இப்பாட்டில் குறிக்கின்றார். கொற்றவை முற்றம் என்று குறித்தொழியாமல் அங்கே கானவர் மூட்டிய தீ யெரிவதும், குளிர்காயும் பொருட்டு மானினம் போந்து உறங்குவதும், மந்தி போந்து உறக்கத்தைச் சிதைத்து அவற்றை எழுப்புவதும் கூறுகிறார். இவற்றைக் கூறுவதால் இப் பாட்டுக்கு உண்டாகும் பயன் என்னை? பயனுடையவற்றையே அன்றோ கூறுவர் புலவர். பெருங்கோப் பெண்டு தீப்பாய்தற்கு அவளது அறிவின் உரம் காரணமாகும்; இளமையின் இன்பவுணர்வுகளால் ஒடுங்கியிருந்த அவளது உண்மையறிவு, கணவனது பெரும்பிரிவு தோன்றி அலைக்கவே, தெளிந்து ஓங்கி நிற்கும் திறத்தைப் புலப் படுத்த விரும்புகிறார். அதற்காக இளமையுணர்வு மூட்டிய இன்பக் களிப்பைக் கானவர் பொத்திய தீயாகவும், அதனை நுகர்ந்து. மகிழ்ந்த அவளது உண்மையுணர்வை மானினமாகவும், கணவன் பிரிவு அலைத்து அதனை எழுப்பித் தீப்பாய்விக்கின்ற திறத்தை மந்தி சீக்கும் செயல் மேல் வைத்தும் உணர்வுடையோர் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு உள்ளுறுத்துரைக்கின்றார். இவ்வாறு உயத்துணருமாறு உயரிய கருத்துக்களைப் பாட்டில் தொகுத்துப்பாடு முகத்தால் மதுரைப் பேராலவாயார் பூதப் பாண்டியன் தேவியான பெருங்கோப் பெண்டின் மனத்தது பெருமையை மாண்புறுக்கின்றார்.  27. கோமகள் கண்ணகி மதுரை மாவட்டத்துப் பழனித் தாலூகாவின் மேற்கெல்லையாகத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி யோடும் அமராவதியாற்றுக்கும் திண்டுக்கல் நகரருகே வந்து நிற்கும் மலைத்தொடரின் கீழ்பால் முடிவிடத்துக்கும் இடையிலுள்ள நாட்டுக்குப் பண்டை நாளில் ஆவி நாடு என்று பெயர் வழங்கிற்று. அந்நாளில் அமராவதி யாற்றுக்கு ஆன் பொருநை என்றும் ஆண்பொருந்தம் என்றும் பெயர்கள் வழங்கின. பழனி மலைத் தொடர் அக்காலத்தில் அங்கு வாழ்ந்த பண்ணி என்னும் செல்வன் ஒருவனுக்கு உரியதாய் இருந்தமையால் அதனைப் பண்ணி மலை யெனவும், அவனுடைய ஊரைப் பண்ணிக்காடு எனவும் கூறினர். நாளடைவில் பண்ணி மலை பன்றி மலையாகவும் பண்ணிக்காடு பண்ணைக்காடாகவும் பெயர் திரிந்தன. பண்ணி என்ற தலைமகனைச் சங்க காலச் சான்றோர் "வரை நிலையின்றி இரவலர்க்கு ஈயும், வள்வாய் அம்பின் கோடைப் பொருநன், பண்ணி" (அகம்.13) என்று பாராட்டிக் கூறினர். பழனி மலைத்தொடர் கோடை மலையின் தொடர்ச்சியாதலால் அதனைக் கோடைமலை யெனவே கொண்டு பண்ணியைக் கோடைப் பொருநன் என்று பண்டையோர் குறித்தனர் இன்று கோடைக் கானற் பகுதியில் உள்ள மலை முடிகளுள் மிக உயர்ந்து நிற்கும் பெருமாமலை பொருநன்மாமலை என்பதன் மரூஉ. மலைமேல் மிகக் குளிர்ந்த நிலப் பகுதியும் காடுகளும் உண்டு. அவற்றுள் நிலப் பகுதியைக் கானல் என்றும் காடுகளைச் சோலை யென்றும் கூறுவதுமரபு. அதனால் கோடை மலையைக் கோடைக்கானல் என்கின்றனர். அங்கே, வஞ்சன் கானல், கடியன் கானல், தாமற் கானல் என்றும், புலிச்சோலை, பெருமான் சோலை, குண்டன் சோலை, கூகல்சோலை என்றும் பல இடங்கள் இருப்பது நோக்கத் தக்கது. கோடைக்கானல் மலையின் வடபால் அடிப் பகுதியில் அமராவதியாற்றின் கிழக்கிற் கிடக்கும் ஆவி நாட்டை ஆவியர் என்ற வேளிர் குலத் தலைவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஆண்டு வந்தனர். அவர்கட்குத் தலைநகராய் இருந்தது ஆவிகுடி என்னும் ஊர். அது பிற்காலத்தில் ஆய்க்குடியாகி இப்போது ஆயக்குடி என மருவி நிலவுகிறது. பழனி நகர்க்கண் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமானுடைய பழனி மலைக்கும் அதன் அடியில் உள்ள ஊர்க்கும் பொதினி என்று அக்காலத்தே பெயர் வழங்கிற்று. "முருகன் நற்போர் நெடுவேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி"1 என்றும், "முழவுறழ் திணி தோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி''2 என்றும் சான்றோர் புகழ்ந் துள்ளனர். இப்பொதினி நகர் தான் இடைக்காலத்தே பழனியென மருவி விட்டது என வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். இடைக்காலச் சோழ பாண்டியர் கல்வெட்டுக்கள் ஆவி நாட்டை வையாவி நாடு என்று குறிக்கின்றன. பழனியிலுள்ள கல்வெட்டுக்கள்3 அதனை வைகாவி நாடு என்றும் வைகாவூர் நாடு என்றும் பிழையாகக் கூறுகின்றன. நமது தமிழகம் சேர சோழ பாண்டிய வேந்தர்களால் ஆளப் பட்டபோது, அவர் தம் நாடுகட்கிடையே வேளிர் என்ற குறுநிலத் தலைவர்கள் இருந்து எல்லை வரம்பு கெடாவாறு காவல் புரிந்து வந்தனர். சேர நாட்டுக்கும் தென் பாண்டி நாட்டுக்கும் இடையே பொதியின் மலைப்பகுதியிலுள்ள ஆய்நாட்டுத் தலைவனாய் ஆய் அண்டிரன் என்ற குறுநிலத் தலைவன் வாழ்ந்தான். பாண்டி நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே வேள் எவ்வி வேள்பாரி என்பாரும், சோழ நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையே வட பகுதியில் மலையமானும், தென்பகுதியில் வேள் ஆவியும் எல்லை காவலராக இலங்கினர். இவ்வாற்றால் சேர பாண்டிய சோழரென்ற மூன்று மன்னர்கட்கிடையே எல்லை காரணமாகப் போரும் பூசலும் உண்டாவதற்கு இடமில்லாது போயிற்று. கோடை மலையின் தொடர்ச்சியாய் ஆவி நாட்டுக்குத் தெற்கில் சுவர் வைத்தது போல் நிற்கும் கோடை மலைத் தொடருக்கு இந்நாளில் பழனி மலைத் தொடர் என்று பெயர் வழங்குகிறது. இத் தொடர்க்குக் கிழக்கில் புதுக்கோட்டை வரையில் சிதறுண்டு நிற்கும் குன்றுகட்குச் சிறுமலைத் தொடர் என்று பெயர். இவ்விரு தொடர்களும் சோழ பாண்டிய நாடுகட்கு எல்லையாயின. ஆயினும் சிறுமலைத் தொடரை இளங்கோவடிகள் பாண்டியர்க்கு உரியதாக்கி, 'தென்னவன் சிறுமலை' என்று சிறப்பிக்கின்றார். இச்சிறு மலைத் தொடரிலுள்ள பிளவுகளின் வழியாகவே பண்டை நாளில் சோழ பாண்டிய நாட்டு மக்கள் போக்கு வரவு புரிந்தனர், இன்றும் அவ்விடை வழியின் வழியாகவே இருப்புப் பாதையும் பெருவழிகளும் (High ways) அமைந்துள்ளன. இவ்வாறே பழனி மலைத்தொடரின் வடசார் அடியில் திண்டுக்கல்லிலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்று சேரும் புகை வண்டிப் பாதையும் பெருவழியும் போகின்றன, ஆவி நாட்டின் தென் பகுதி உயர்ந்தும், வடக்கில் காவிரிக் கரை வரையில் தாழ்ந்தும் இருப்பதால், பழனி மலைத் தொடரில் இழிந் தோடும் சிற்றாறுகள் வடக்கு நோக்கியோடி அங்கே மேற்கிலிருந்து கிழக்கு முகமாகப் பாயும் காவிரியாற்றோடு கலந்து கொள்கின்றன. அவற்றுள் சிற்றாறுகள் சிலவற்றைத் தன்னொட சேர்த்து இடம் சிறிது அகன்று விளங்குவது அமராவதியாகிய பழைய ஆன் பொருநை. அதனோடு கலக்கும் சிற்றாறொன்றின் கரையில் பழனிக் குன்றும் ஆவிநன் குடியும் உள்ளன. இன்றைய பழனி நகர்க்குக் கிழக்கில் ஆயக் குடி என்றோர் ஊர் உளது. அதன் பழம் பெயர் ஆவிகுடி என்பது. அஃது இடைக் காலத்தில் ஆய்க்குடியாகிப் பின்பு ஆயக்குடியாகி விட்டது. பண்டை நாளைய இந்த ஆவிகுடி பேரரணும் பெரு நலமும் கொண்டு ஆவி நாட்டின் தலைநகரமாய் அமைந்து விளங்கிற்று. அந்த நாட்டை வேள் குலத்து ஆவியர் ஆண்டமை பற்றி அப்பெயரை எய்திற்று. கொங்கு நாட்டவரை கொங்கரென்றும், ஒய்மானாட்ட வரை ஒவியரென்றும் ஆவி நாட்டவரை ஆவியரெனவும் அவர்களுடைய தலைவனை ஆவியர் கோமான் எனவும் சான்றோர் குறித்தனர். இந்த ஆவி நாட்டில் ஆவிகுடியின் கண் இருந்து அரசு செலுத்திய தலைவர்களில் பெரும் புகழால் மறவாநிலை எய்திய மன்னன் பெரும் பேகன்; அவனைப் புகழ்ந்து சான்றோர் பலர் இனிய பாட்டுக்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் அவனை ஆவியர்கோ என்றும், பேகன் என்றும் பொறித்துள்ளனர். ஆனால், அப்பாட்டு களை அகத்தே கொண்டு நிற்கும் புறநானூறு என்ற தொகை நூலில் பேகனுடைய பெயர் வையாவிக் கோப்பெரும் பேகன் என்று குறிக்கப்பட்டுள்ளது. பழனி நகர்க் கண் உள்ள ஏரியை வையாவியேரி எனவும் வையாபுரி எனவும் மக்கள் வழங்குவதும், அந்நகர்க்கண் காணப்படும் கல்வெட்டுகள் வையாவி நாடு எனக் கூறுவதும் புறநானூற்றுக்குச் சான்றுபகர்கின்றன. ஆனால், ஆவியர்கோ வையாவிக்கோ வானதும் ஆவிநாடு வையாவி நாடாகியதும் எப்பொழுது ஏன் என்ற வினாக்கட்கு இன்றுகாறும் வரலாற்றாராய்ச்சிகள் ஒரு விடையும் காணவில்லை. எதிர்காலந்தான் அம்முயற்சியில் வெற்றி காண்டல் வேண்டும். பழனிக் குன்றின் அடியில் உள்ள ஊர்க்குத் திருவாவிநன்குடி என்று பெயர் வழங்குகிறது. இப்பெயர் முருகாற்றுப் படையைப் பாடிய நக்கீரர் காலத்திலேயே வழக்கிலிருந்தது; அங்கே பெரும் பெயர் முருகன் தன் தேவியுடன் எழுந்தருளியிருக்கும் திறத்தைத் “தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவிநன்குடி அசைதலும் உரியன்” என்று அவர் பாடுகின்றார். ஆவிநன்குடி என்பது ஆவியர் வாழும் நல்ல ஊர் என்று பொருள்படும். ஒருகால் ஆவிநல்லூர் என்பது ஆவிநன்குடி யாயிற்றோ என எண்ணவும் இடமிருக்கிறது. குடியென்பது ஊர்ப் பெயருமாதலின் நன்குடியை நல்லூர் எனக்கோடல் இயலும். இனி, இப்பழனி நகர்க்கொரு தலபுராணம் உளது. திருவாவி நன்குடியைத் திருவாவினன் குடியாக்கித் திரு+ ஆ+ இனன்+ கு+டி என்று பிரித்து, திரு-இலக்குமியையும், ஆ-காமதேனுவையும், இனன்- சூரியனையும், கு-பூமாதேவியையும், டி- அக்கினித் தேவனையும் குறிக்கும் எனவும், இங்கே குறிக்கப்பட்ட தெய்வங்கள் அத்தனையும் வந்து வழிபட்டதனால் இவ்வூர் திருவாவினன் குடியாயிற்று எனவும் கூறுகிறது. இவ்வாறே பொதினி பழனியான தற்கும் ஒருவரலாறு குறிக்கப்படுகிறது. விநாயகரும் சுப்பிரமணியரும் சிறுவர்களாய் இருந்த காலத்து ஒருநாள் சிவபெருமான் மாம்பழம் இருவர்க்கும் காட்டி, “உங்களில் இவ்வுலகத்தைச் சுற்றிக் கொண்டு முதலில் வருபவர்க்கு இதனைத் தருவேன்” என்றார். உடனே சுப்பிரமணியர் மயில் மேல் இவர்ந்து பறக்கலுற்றார். விநாயகர் சிறிது சிந்தனை செய்து தம்முடைய தாய் தந்தையரைச் சுற்றிவந்து,“ உங்கன் இருவருக்குள் இவ்வுலகு முற்றும் அடங்கியுளது; அதனால், உங்களைச் சுற்றிவருவதே இவ்வுலகைச் சுற்றிவருவதன்றோ?” என நயம் பட மொழிந்தார். அவர் கூறியது உண்மை மொழியாதலால், சிவபெருமான் அம்மாங்கனியை அவரிடம் அளித்தார். சுப்பிரமணியர் வேர்த்து வியர்ப் பொழுக வந்து சேர்ந்தார். அவர் நடந்ததை அறிந்து ஆறாச்சினமும் அடங்கா வருத்தமும் எய்திப் பொதினிக் குன்றின் உச்சியை யடைந்து துறவுக் கோலம் பூண்டு தனித்திருக்கலுற்றார். உமையும் சிவனும் அவரைக் கண்டு அன்புரை வழங்கி “எங்கட்குப் பழம் நீ யன்றோ?” என்று தேற்றிப் பாராட்டி மகிழ்வித்தனர். அன்று அவர்க்குப் பழநீ என்ற பெயர் உண்டாயிற்று. அது நாளடைவில் பொதினிக்கும் பெயராகி முடிவில் பழனியெனப் படுவதாயிற்று. அப்பெயரே இன்று வரை வழங்கி வருகிறது. இவ்வாறு புராணங்கள் தோன்றியபின் நம் நாட்டுச் சிறப்புடைய ஊர்கள் பலவற்றில் பழைய வரலாறுகள் மறைந்து போனதுண்டு. புராணச் செய்திகள் செல்வாக்கு மிக்கபோது பழைமையான வரலாற்றுக் குறிப்புக்களும் சான்றுகளும் பேணுவாரற்று மாய்ந்தன. அதனால் மக்களிடையே வரலாற்றுணர்வு அறவே ஒழிந்து மறைந்தது. காலப் போக்கில் இவ்வண்ணம் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு; அது பற்றி எவரையும் குறைகூறுவதற்கு இடமில்லை. நல்லகாலமாக இப்புராணங்கள் தோன்றி மக்களது ஆதரவு பெறுதற்கு முன்பே சில தமிழ் நூல்கள் தொகுக்கப் பெற்று எப்படியோ பாதுகாக்கப்பட்டுவிட்டன. அவற்றுள் புறநானூறு அகநானூறு முதலிய தொகை நூல்கள் தலை சிறந்து விளங்குவன; அவற்றால் இன்று பழனியின் தொன்மையும் அங்கே இருந்து புகழ் நிறுவி வாழ்ந்த ஆவியர்கோவின் வரலாறும் நாம் அறியக் கிடக்கின்றன. சங்கச் சான்றோர் காலத்தில் ஆவிகுடிக்கண் இருந்து அரசு புரிந்த தலைவன் வையாவிக் கோமானான பெரும் பேகன் ஒரு சிறந்த வள்ளல். அவனுடைய வள்ளன்மையை வாயாரப் புகழ்வதில் புலவர் பெருமக்கள் பெருவிருப்பம் காட்டுகின்றனர். நங்கை யொருத்தி பல்வகை மலர்சூடி, நறியமணம் கமழ வந்ததைக் கூறவந்த ஒரு சான்றோர், “பூ மலிந்து அருவியார்க்கும் அயந்திகழ் சிலம்பின் நுண்பல்துவலை புதன்மிசை நனைக்கும், வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன், கொண்டல் மாமலை நாறி, அந்தீங்கிளவி வந்த மாறே”1 என்று பாடுகின்றார். இப்பாட்டில் பேகனையும் அவனது கொண்டல் மலையையும் கொண்டு நிறுத்திப் பாடுவதே முன்னே கூறிய கருத்தை வற்புறுத்துவதாகும். ஆவிநாட்டின் கிழக்கிலுள்ளது கொண்டல் மலை. ஒருநாள் மாலைப்போதில் வானமெங்கும் மழை முகில் பரந்து பெயல் குறித்துக் குமுறிக் கொண்டிருந்தது. கானமும், பசுந்தழை போர்த்து அழகிய பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்ந்தது. குளிர்ந்த காற்றுப் போந்து, மரஞ் செடி கொடிகளின் வளவிய கொம்பு களையும், இலை தளிர்களையும் அசைத்த வண்ணமிருந்து. மாவும் புள்ளும் குளிர் மிகுதியால் இரை தேடுவதை விடுத்துத் தத்தம் இருக்கை நாடிச் சென்றன. மக்கள் மழைவரவு கண்டு விளைபுலங் களிலிருந்து வீடு நோக்கி வருதல் மேவினர். குளிர் காற்றும் மழை முகிலும் நிலப்பரப்பெங்கும் குளிர்ச்சி பரப்பிய அப்பொழுதில் மயிற் சேவலொன்று, காட்டிலுள்ள ஒரு குன்றின் மருங்கில் பெரும் பாறையொன்றின்மேல் நின்று, மகிழ்ச்சி மீதூர்ந்து. தன் அழகிய தோகையை விரித்து ஆடத்தலைப்பட்டது. தலையிலுள்ள கொண்டை அசையப் பாறையின் மேற்பரப்பில் அங்குமிங்கும் நடந்து, விரிந்த தன் தோகை நாற்றிசையும் விளங்கித் தோன்ற மயில் ஆடியது காணும் கண்ணுக்குக் கவினிய காட்சி நல்கிற்று. ஓரொருகால் வானிற் பறந்து நின்ற முகிற் கூட்டம் காற்றால் சிறிது விலக, அதனூடே மாலை வெலியின் பொன்னொளி, பன்னிறம் பூத்தொளிரும் தோகையிற் படும்போது, மின்னற் கொடிபோல் மயிற் சேவலின் மேனியை விளக்கம் செய்தது. அப்பகுதியை ஆட்சி செய்யும் பெருந்தகையான பெரும் பேகன், அவ்வயின் வந்தவன், பாறைமேல் நின்றாடும் பறவை மயிலின் ஆடற் காட்சியின் பத்தில் தன் கருத்தை இழந்தான். பார்த்த கண்கள் இமைத்தல் மறந்தன. பாங்கர் நின்று ஆடல் நல்கும் அதன் இனிய காட்சி நலம் அவன் உள்ளமெல்லாம் படர்ந்து பரந்தது. ஆடுகின்ற மயில் ஒரு பறவை யென்பது மறந்து நாடக நன்னூல் நன்கு பயின்றாடும் வீறுமிகு விறலியோ என விம்முற்றான். புதுமையேதுவாக அவன்பால் பெருமிதம் மெய்ப்பட்டு நின்றது. தன்னை மறந்தான்; தாக்கும் குளிர்க்குத் தான் போர்த்திருந்த போர்வையை எடுத்தான்; அஃது அம்மயிற்குப் போர்வையாகாது என்பது வள்ளன்மை நிறந்த அவன் உள்ளத்தில் தோன்றவில்லை. என் செய்தான்? அரங்காகத் திகழும் பாறைக்கு ஓடினான்; ஆடன் மாக்கட்குத் தூசும்பொன்னும் துளக்கின்றி யள்ளிவீசும் தன் வண்மையால் போர்வையை அதன்பால் எறிந்துவிட்டுப் பொன் பொலியும் தன் நன்மனையை அடைந்தான். அவன் கொடைமடத்தைக் கண்டு வியந்த கானவரும் காவலரும் ஊரவர்க்கு உரைத்தனர். மயிற்குப் போர்வையளித்த நிகழ்ச்சி நாடுமுழுதும் பரந்தது. புலவர் பெருமக்களின் செவியகம் புகுந்த இச்செய்தி “கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய, அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், பெருங்கல் நாடன் பேகன்”1 என்பது போலும் பாட்டாய் வெளிப்பட்டது. எங்கும் எவர் பாலும் உரையும் பாட்டும் யாவும் பேகன் மயிற்குப் போர்வை தந்ததே பொருளாய் எழுந்தன. வையாவிக் கோப்பெரும்பேகன் ஆவி நாட்டில் ஆட்சி புரிந்த நாளில் சேர நாட்டில் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் வஞ்சி நகர்க்கண்ணே இருந்து அரசு செலுத்தினான். அவனுடைய மறப் புகழ் மாண்பு, தமிழகம் நிறைந்து கங்கை பாயும் வடவாரிய நாடுவரையிற் பரந்திருந்தது. அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய தமிழ்ச் சான்றோருள் பரணர் என்பவர் ஒருவர். சேரநாடு சென்று செங்குட்டுவனைக் கண்டு அவன் செய்த சிறப்புக்களைப் பெற்று வருகையில் ஆவி நாட்டுப் பெரும்பேகனுடைய புகழ் அவர் உள்ளத்தை ஈர்த்தது. ஆவி குடிக்குப் போந்து அவனை நேரிற்கண்டு இன்புற்று அளவளாவினார். அவன் சின்னாள் அவரைத் தன்னோடு உடனிருத் தினான். அந்நாட்களில் பேகனது புகழ் வேட்கையை நன்கு உணர்ந்து கொண்டார். அவனுடைய நாட்டில் வாழும் மக்கள் வறுமைப் பிணியுற்று வாடுதல் கூடாது;அது பற்றியவழி உள்ளத்தில் தீய நினைவுகள் தோன்றித் தீச்செயலாய் மக்களின் பொதுநலத்துக்கு ஊறு செய்யுமாகலின், வறியவர்க்கு வேண்டுவன அளித்து வையத்து வாழச் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே அவன் மனத்தில் மீதூர்ந்து நின்றது, அவனுடன் மேலும் உரை யாடியவிடத்துப் பரணர்க்குப் பின்வரும் கருத்துக்கள் தெளியப் புலனாயின. புலவர் பாணர் முதலிய கலைத்துறை மாக்களை வறுமை நோய் தீண்டுமாயின், அதனால் விளையும் தீ நினைவும் தீச்சொல்லும் தீச்செயலும் காட்டுத் தீப்போல் நாடு முழுதும் பரந்து பெருங்கேடு விளைவிக்கும் என்பது பேகன் முதலிய தமிழ் வள்ளல்களின் உள்ளத்தில் நன்கு நிலைபேறு கொண்டிருந்தது. செல்வமுடை யருக்கு வறுமை பெரும்பகையாதலின், வறியவர்தொகை பெருகு மாயின், செல்வத்தினும் அதனையுடையார்க்கு உயிர்க்கேடு விளவிப்பது பிறிது யாதும் இல்லை. வறுமைப் பேயின் வாயில், இசை முதலிய கலைப்புலமை வீழுமாயின், அதன் வலி மிகுந்து செல்வர்பால் செல்வம் நிலையாமைக்குரிய சூழ்ச்சிகளும் செயல் வகைகளும் தோன்றி உலகியல் வாழ்வைச் சீரழித்துவிடும். ஆதலால் செல்வருடைமைக்குப் பயன் வறியார்க்கு ஈந்து அவரது அன்பைப் பெற்றுச் செல்வத்துக்கு அரண் செய்வதாகும். செல்வர் சிலரும் வறியவர் பலருமாதற்குரிய காரணம் அறிவு நூலார் முறையே தவமுடைமையும் இன்மையுமே என்று கூறுவர். தவம் என்பது உழைப்பு என்பதும் பொருளால் ஒன்றே; உயிரிய பயன் கருதி மேற்கொள்ளும் ஊக்கமும் முயற்சியும் தவம் எனப்படும்; உலகியல் வாழ்வு வொன்றே கருதும் ஊக்கமும் முயற்சியும் உழைப்பு என்று உரைக்கப்படும். உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் இரண்டற்கும் உருவாகும். மக்களினத்துள் பிறப்பு வகையில் யாவரும் ஒப்பராயினும் அறிவு ஆண்மை முதலிய சிறப்பியல்புகளில் ஒருவரினொருவர் வேறுபடுதலின் செல்வமும் மக்களிடையே மிக்கும் தாழ்ந்து மிருக்கின்றது. சீர்த்த அறிவும் திண்ணிய ஆண்மையு முடையாரினும் ஏனையோர் பலராதலால் நாட்டில் செல்வர் சிலரும் வறியவர் பலருமாக உள்ளனர். செல்வரும் வறியருமாகிய மக்களுலகில் யாவருடைய ஆர்வத்தையும் எளிதில் கவர்ந்து விழைவு தோற்றுவிப்பது புகழ். புகழை விரும்பாதவர் உலகில் எவருமே இலர். இப் புகழை உலக வாழ்க்கையின் ஊதியம் எனவே உயர்ந்தோர் உரைப்பர். “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி, எய்துப என்பதாம் செய்வினை முடித்து” என்பது தமிழுலகின் தனிப்பட்ட கொள்கை. மேலும் ஒருவர் ஈட்டும் பொருளினும் புகழ் என்றும் பொன்றாத நிலை பேறுடையது. “ஒன்றே உலகத்து ஓங்கு புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்” என்று பொய்யில் புலவரும் புகன்று மொழிந்தனர். இப்புகழ்க்கு விளைநிலம் நல்வினை. தீவினை செய்வோர் இதனை ஒருகாலும் பெறமுடியாது. புகழ் பெற்றோன் ஒருவன் பால் தீவினை தோன்றுமாயின், பெண் கொலை புரிந்த நன்னன் போல, புகழனைத்தும் கெட்டுப் பலரும் இகழ்ந்து வெறுத்தற்கமைந்த பழியை யுண்டாக்கும். அதனால் புகழ் படைத்தோர் தம்பால் அதற்கு ஊறு செய்யும் தீச்செயல்களைக் கனவினும் நினையாமல் நல்லனவே நினைந்தும் செய்தும் ஒழுகுவர். செல்வம் மிகுந்த விடத்து, உள்ளத்தில் களிப்புச் சிறந்து செய்யப்படும் செயல் வகைகளின் தீமை நன்மைகளை வேறு படுத்துணராமல் செல்வப் பேற்றிலேயே செல்லுமாதலால், அதனை இல்லார்க்கு ஈந்த வண்ணமிருத்தல் வேண்டும். ஈகை புகழைப் பெருக்கும். அப்புகழ் இவ்வுலக வாழ்வை மேலுலக இன்ப வாழ்வாக்கும். மறுமையும் வேண்டா வெறுப்பாய் விடும். அதனால், சான்றோர், “புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின், உலகுடன் பெறினும் கொள்ளலர்” எனப்படுகின்றனர். எனவே இம்மை யுலகத்து இசையுடன் விளங்கு பவர் மறுமையின்பத்தை நோக்குவதில்லை. பெரும் பேகனுள்ளத்தில் இக்கருத்துக்கள் நன்கு வேரூன்றி நின்று நிலவுவதைக் கண்ட ஆசிரியர் பரணர் பெருவியப்புற்றார். மறுமையை மதியாது இம்மை வாழ்வு ஈகையும் இசையும் கொண்டு ஏற்ற மெய்தல் வேண்டு மென்னும் அவனுடைய எண்ணமும் செய்கையும் நாடு முழுதும் பரவுதல் நன்று என்னும் துணிவு பரணர் புலமை யுள்ளத்தில் பதிந்தது. மயிற்சேவலுக்கு அவன் ஈந்த போர்வை, அதற்கு உடையாகவோ, போர்வையாகவோ சிறிதும் பயன்படாது என்பதனைப் பேகன் அறியாமல் இல்லை; அவன் நினைத்ததெல்லாம் ஈகையொன்று தான். அதுகண்டு அத்தோகை மயில் ஓகையுடன் தன்னைப் புகழுமென்றோ, ஏற்குமென்றோ, ஏலாதென்றோ, ஒன்றையும் அவன் எண்ணவில்லை. இவ்வீகையால் தனக்கு மறுமை வாழ்வு எய்துமென்றும் அவன் கருதவில்லை. இக்குளிர்காற்றில் தோகையை விரித்த மயிர் சிலிர்த்து இயங்குவது நல்ல போர்வை யில்லாத வறுமை போலும் என எண்ணினானாதல் வேண்டும் எனப் பரணர் துணிந்தார். பின்னர் அவன்பால் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். பேகனும் அவர்க்குரிய சிறப்புக் களைச் செய்து அவரொடு போந்த பாணனுக்கும் பொன்னாற் செய்த தாமரைப் பூவும் அவன் மனைவி யான விறலிக்கு உயரிய பொன்னரி மாலையும் பரிசளித்து மேலும் அவர் தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை வழங்கினான். பெருவளம் பெற்றும் பெருமகிழ்ச்சியுடன் வரும் பாண் சுற்றம் சூழ்ந்துவரப் பரணர் அந்நாட்டின்றும் நீங்கிச் செல்லலுற்றார். பண்டை நாளில் இந்நாளிற் போலக் கற்பரப்பித் திணித்த அகன்ற நெடுவழிகளோ மக்கள் இனிது இயங்குதற்கமைந்த காவற் சாலைகளோ இன்மையின் வழிச் செலவு மேற்கொண்டோர் தனித்துச் சேறலின்றித் துணைவரும் சுற்றமும் சூழப்போவது மரபு. அது பற்றியே துணையோடல்லது நெடுவழி போகேல்’ என்ற மூதுரை பிறந்து வழங்கிற்று அவ்வாறு செல்வோருள் புலவர் பாணர் கூத்தர் பொருநர் முதலாயினோரும் பல்வேறு வணிகரும் கூட்டம் கூட்டமாகவே சென்றனர். அவருள் புலவராயினோர் பாணரும் விறலியரும் கூத்தரும் உடன் வரச் செல்வர். புலவர்பாடும் இயற்றமிழ்ப் பாட்டுக்களைப் பாணர் யாழிலிட்டு இசைக்க விறலியரும் கூத்தரும் அப்பாட்டின் பொருட்கும் இசைக்கும் ஏற்ப ஆடுவர். அதனால் மூவரும் ஒருங்குடன் கூடிச் செல்ல வேண்டிய இயல்பினராயினர். அதனால், பரணர் கபிலர் முதலிய சான்றோர்கள் பாண்சுற்றம் உடன் வரத் தமிழகத்தில் செல்வர்களை நாடிப் போக்கு வரவு செய்தனர். பாண்சுற்றத்தோடு போந்த ஆசிரியர் பரணர் ஆவிநாடு கடந்ததும், எதிரில் காணப்பட்ட சுர மொன்றில் நுழைத்தனர். வேனிற் காலமாதலின் வெயிலின் வெம்மைமிகுந்து அவர்களை வெதுப்பிற்று. விரிநிழல் நல்கும் பெருமரங்கள் சுரத்திடை - இருப்பது அருமையாதலால் யாவரும் பெரிதும் வருந்தினர். “அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவும் களவேக வாழ்க்கைக் கொடியோர்” பெரும் பேகனது ஆட்சி நலத்தால் இலராயினமையின், அச்சமின்றி இயங்கும் அவர்கட்கு ஞாயிற்றின் வெம்மை தான் கொடுமை செய்தது. முடிவில் ஓரிடத்தே குறு மரச் செறிவொன்று தண்ணிய நிழல் பயந்து விளங்குவது தெரியவே அங்கே சென்று தங்கினர். பாணரும் பாண்மகளிரும் விறலியரும் வையாவிக்கோ அளித்த பொன்னணிகளை அணிந்து ஒருவர்க்கொருவர் பொலியும் பொருத்தமும் காட்டி உவகை பூத்தனர். அவர்களது அகத்தில் சுரத்திடை இருக்கும் நினைவேயில்லை; தத்தம் ஊரிலிருப்ப தாகவே இன்பம் தழைத்திருந்தனர். சிறிது போதில் அவர்கட்கு எதிரே இரவலர் திரள் ஒன்று வந்தது. பாணர் சுற்றம் அவர்களை அன்புமிக வரவேற்று இன்புறுத்திற்று. அவர்களுள் தலைவனாகிய இரவலன் முற்படப்போந்து சான்றோனாகிய பரணரை வணங்கி. “ஐயனே. பாணன் பொற்றாமரைப்பூவும் விறலியர் பொன்னரி மாலையும் அணிந்து விளங்க, ஓர் ஊரகத்தே இருப்பது போன்ற மனக்கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்க இச்சுரத் திடையே வீற்றிருக்கின்றீர்கள். நீவிர் யாவிரோ?” என வினவினான். அவனை இனிது நோக்கிய பரணர்க்கு அவனது உள்ளக்கிடை புலமையுள்ளத்தில் அஃது ஒரு பாட்டாய் வெளிவந்தது; அந்த இனிய பாட்டு, பாணன் சூடிய பசும்பொன் தாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்க கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் யாரீரோ என வினவ லானாக் காரென் ஒக்கல் கடும்பசி இரவல வென்வேல் அண்ணல் காணாவூங்கே நின்னினும் புல்லியம் மன்னே இனியே இன்னேம் ஆயினேம் மன்னே என்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ கடாஅ யானைக்கலிமான் பேகன் எத்துணையாயினும் ஈத்தல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றோ பிறர், வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே என்பது. இரவலர் தலைவன் தன்னைக் கண்டதும் சொல்லிய சொல்லும் கேட்ட வினாவும் அதன் வறுமையால் இன்னாமையுற்று வரும் குறிப்பையும், தாம் பேகன் பால் பெற்று வரும் சிறப்பைக் கண்டு எய்திய வியப்பும் பரணர் நன்கு தெளிய நின்றமையின் அவற்றையே கொண்டெடுத்து மொழியலுற்று, “பாணன் சூடிய பசும் பொன் தாமரை, மாணிழை விறலியொடு மாலை விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ, ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர், யாரீரோ என வினவல் ஆனாகக் காரென் ஒக்கல் கடும்பசி இரவல” என்று தமது பாட்டுக்குத் தொடக்கவுரையாகக் கொண்டார். இரவலன் கண்கட்குப் பாணரும் விறலியரும் அணிந்திருந்த பொற்றாமரைப் பூவும் பொன்னரி மாலையும் விளங்கித் தோன்றினமையின், அவற்றையே விதந்து, பாணன் சூடிய பசும் பொன் தாமரையும் விறலியணிந்த மாணிழையும் மாலையும் ஒளிதிகழச் சுரத்திடையிருந்தீர்” என வினவுகின்றாய் என்றார். பாணன் பால் பொற்பூவும் விறலிபால் மாணிழையும் பொன்னரி மாலையுமாகப் பல காணப்பட்டமையின், பாணனது தாமரை, விறலியணிந்த மாலையோடு விளங்க என்றார் ஆசிரியரொடு மாணவர்கள் வந்தனர் என்றால், மாணவர்களைவிட ஆசிரியர்க்கு வருகையில் சிறப்பு மிகுதி என்பது கருத்து. அதனால் பாணன் அணிந்த பசும் பொற் பூவினும் விறலிஅணிந்திருந்த பொன்னரி மாலைக்குச் சிறப்பு மிகுதி என்றற்கு மாலையொடு என்று கூறப்பட்டது. விறலியும் பாண்மகளே; ஆயினும் அவள் விறல் படப்பாடி ஆடும் கலையில் வல்லுநளாகியபோது விறலியென உயர்த்தி கூறப் படுபவன். அவர்களைப் பார்த்த இரவலன், அருகே பூட்டுவிட்டிருந்த தேர்களையும் அவற்றிற் பூட்டப்படும் குதிரை களையும் கண்டான். தேர்கள் நான்கு உருளைகள் கொண்டன; சகடம், சாகாடு, பண்டி என்று நூல்களில் வருவன இரண்டு உருளைகள் உடையன என அறிதல் வேண்டும். தேர்கள் வலியவும் நெடியவாகவும் குதிரைகள் மிக விரைந்து செல்லும் இயல்பின வாகவும் இருப்பது அவன் மனத்தைக் கவர்ந்தது. அதனால் அவற்றைக் “கடும்பரி நெடுந்தேர்” என்றான். பரணருடைய சுற்றம் சுரத்தின்கண் இனிது தங்கியிருந்தது. வழியச்சம் இன்மையும், அதற்குக் காரணமாகப் பேகனது காவல் நலமும் அவனுக்குப் புலப்படுத்தின. ஆதலால், “ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர், யாரீரோ” என்று வினவினான். அவன் பலபட வினவினமை தோன்ற “வினவல் ஆனா இரவல” என்றார். இல்லார்கண்கள் எப்போதும் உடையார் உடைமையையே நோக்குவன. பாண் சுற்றம் பரிசிலாகப் பெற்றிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்து மொழிதலால் இரவலர் தலைவன், இன்மை இடும்பையால் வருந்துதல் விளங்கினமையின், “காரென் ஒக்கல் கடும்பசி இரவல” என்றும், அவன் மனதில் இன்மை தோற்றுவிக்கும் அழுக்காறு முதலிய தீயன எழாவாறு தடுத்து அவனைப் பேகன் பால் ஆற்றுப் படுக்கலுற்று, ‘வென்வேல் அண்ணல் காணாவூங்கே, நின்னினும் புல்லியேம்மன்னே, இனியே இன்னே மாயினேம் மன்னே” என்று பரணர் பாடினார். இரவலன் கருத்தில் பேகன்பால் சேரற்கு மனத்தே எழுச்சியுண்டாகும் குறிப்பினால் அவன் பெயரைக் குறிக்காமல் “வென்வேல் அண்ணல்” என்றும், அவனைக் கண்டதன் பயனே எமது இச்செல்வ நிலை என்றும் உரைப்பாராய், “காணாவூங்கே நின்னினும் புல்லியம் மன்னே” என்றும் கூறினார் இச்சொற்கள் இரவலன் உள்ளத்தில் பரந்த அமைதியும் எழுந்த மகிழ்ச்சியும் அவன் முகத்தில் மலர்ந்து விளங்கின. ‘காணாவூங்கே நின்னினும் புல்லியம்மன்னே’ என்றது கொண்டே, “இனியே இன்னேமாயினேம் மன்னே” என்பது பெறப்படுதலின், பரணர் அதனைக் கூறவேண்டாவே என்றால், பேகன் காட்டிய அன்பும் அளித்த பொருட்கொடையும் அவர் நினைவில் எழுதலின், நன்றியுணர்வு பெருகிநின்று மிகையாயினும் அதனைச் சொல்வித்தது. இது கேட்டதும் இரவலன் உள்ளத்தில், பரணர் குறித்த “வென்வேல் அண்ணல்” பெயரும் பீடும் அறிவதற்கு ஆர்வம் பிறந்தது. அதனைக் குறிப்பாற் கண்டு கொண்ட ஆசிரியர் பரணர், பெயரினும் குணஞ் செயல்கள் ஊக்கம் மிகுவிக்கும் என்பது பற்றி அவற்றைக் கூற முற்பட்டு அவற்றுள்ளும், இரவலர்க்கு வேண்டுவன கொடைநலமேயன்றிப் பேகனுடைய அறிவு ஆற்றல்கள் அல்லவாதலின், தான் அளித்த பொன்னாடையை மயில்கள் உடுக்கவோ போர்த்துக் கொள்ளவோ மாட்டா என்பதைக் தெரிந்திருந்தும், ஈத்துவக்கும் இன்பக் களிப்பால் நல்கியவன் என்பது உணர்த்த, “உடாஆ போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ” என்றார். அதனால் இரவலன் உவகையும் வியப்பும் அடையப் பெற்று ஆர்வத்தோடு பரணரை நோக்கினான். அவற்கு அவர், “கடாஅ யானைக் கலிமான் பேகன்” என வென் வேல் அண்ணலின் பெயரைப் புலப்படுத்தார். இரவலன் எய்திய மகிழ்ச்சிக்கு எல்லை யேயில்லை. இன்பவுரைகள் சில நிகழ்த்திய அவ்விரவலன், “ஆம்; செல்வர்கள் இம்மையிற் பெற்ற செல்வத்துக்கு முன்னைப் பிறப்பிற் செய்த தவம் காரணம் என்பர்; அதனை உணர்ந்தார் களானால், மறுமையிலும் அச்செல்வப் பேறே விரும்பி ஈகையறத்தை மேற்கொள்வது இயல்புதானே?” என்றான். பரணர், அவனை நோக்கி, “நீ கூறுவது ஒக்கும்; ஆனால் வையாவிக் கோப்பெரும் பேகன் அத்தகைய இயல்பினனல்லன் என மறுக்க வேண்டிய நிலையினரானார். ஏனெனில், அவர் அவன் பால் சின்னாள் இருந்து உரையாடி அவனுடைய அறிவு நலத்தை நன்கு கண்டவரன்றோ? தன்பால் உள்ளது எத்துணை யாயினும் ஈதல் நன்று எனக் கருதுவதல்லது மறுமைப் பயன் நோக்கிச் செய்வது பேகனுக்கு எண்ணமன்று. அவன் கொடையாவும் பிறர்பால் நின்று வருத்தும் வறுமையைப் போக்குவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டவை என்பாராய், “எத்துணையாயினும் ஈத்தல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றோ, பிறர் வருமை நோக்கின்று அவன் கை வண்மை” என்றார். இவ்வாறு பரணர் கூறியவற்றைக் கேட்ட இரவலர் தலைவன் நிகழ்த்திய உரைகள் அவன் சிறந்த ஓர் அறிஞனாதலைப் புலப் படுத்தவும், பரணர், அவனோடு தொடர்ந்து உரையாடல் தொடங்கினார். “ஈகையாற் புகழ் எய்தினோர் ஏனை அறிவு ஆண்மையாற் சிறக்கும் புகழாளரினும் சிறிது மெல்லியரா யுள்ளனர்; கொடைப் புகழ் பெற்றோர் பலரும், அது நல்கும் இன்பத்துக்கு இரையாகித் தமது செல்வத்துக்கும் புகழ்க்கும் அரண் நாடாது நெகிழ்ப்பது உண்டு; அதனால் அவர்கள் படை மடம், பட்டுக் கெட்டுப்போனதை வரலாறு கூறுகிறது; புலமை யுடைய சான்றோர் உடனிருந்து அறிவு கொளுத்துதல் கடனன்றோ?” என்று பொதுவாய்பாட்டால் பேகன் மயிற் சேவலுக்குப் படாம் ஈந்த செய்தியைக் குறிப்பாகச் சுட்டி யுரைத்தான். சான்றோராகிய பரணர் சிறிதும் தாழாது விடையிறுக்கத் தொடங்கி, “அறிஞரே, நீர் அற்ற குளத்திலும் அகன்ற வயல்களிலும் தனது மழை நீரைச் சொரிந்து நிறைத்தும், ஓரொருகால் அவற்றிற்குப் பெய்யாது பயனில்லாத களர் நிலத்திற் பொழிந்தும், இவ்வாறு, வேண்டுவது இது வேண்டாதது இது என்று வரைதலைச் செய்யாது, தன்பாலுள்ள நீரை நிலத்தின் மேற்பொழிவது கடன் என உலவும் மழை முகில்போல, எம்கோவாகிய பேகன் கொடைக் கண்மடம் படுவதுண்டேயன்றிப் போரிற் பகைவர் படைவந்து கலக்குமாயின் படை மடம் படுவது இல்லை” என்பாராய், “ அறுகுளத்து குத்தும் அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரிபோலக் கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடை மடம் படுதல் அல்லது படைமடம் படான்பிறர் படைமயக்குறினே.” என்று பாடினார். இரவலர் தலைவனும் அவன் சுற்றமும் அப்பாட்டை இசையமைத்து இனிமையுறப் பாடி விடைபெற்றுச் சென்றனர். தமது சுற்றம் சூழ்தரச் சான்றோராகிய பரணரும் சுரத்தைக் கடந்து போவாராயினர். இரவலர்க்குப் பெரும் பேகன் வழங்குமிடத்து மாரி போலக் கொடை மடம்படுதலுண்டு எனப் பரணர் கூறியதை உற்று நோக்கு மிடத்து, அதன் பாற் காணப்படும் குற்றமொன்று அப்பேகனிடத்தும் உண்டென்று குறிப்பது புலனாகும். உவமைகள், பொருளை விளக்குதற்குப் பயன்படுவது போல, ஓர் உண்மையைத் துணிதற்கு வலியுடைய ஏதுவாகா. ஆயினும், இங்கே மாரியின் குற்றத்தை மறுக்காமல் ‘அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் ’ என்பது வெளிப்படுத்துகிறது. அறு குளத்தும் அகல் வயலிடத்தும் மழை பெய்து நிறைக்கும் என்றதற்கேற்ப வையாவிக்கோமான் வறியவர்க்கும் விரிந்த புலமையுடையவர்க்கும் பெருவளம் நல்கிப் பயன்படுவன் என்ற நன் பொருள் பெறப்படுகிறது; “உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்” என்றதனால், பேகனும் தன்னை யின்றியமையாத தன் காதல் மனைவிக்குத் தன் நலத்தை உதவாமல் மகப் பயந்து பயன்படுதல் இல்லாத பரத்தையர்க்கு மிகைபட அளிக்கும் மெல்லியன் என்றொரு பொருள் கொள்ளக் கிடக்கிறது. ஆவிகுடிக்கண் இருந்து அருளாட்சி புரிந்தொழுகும் பேகனுக்கு ஆறிய கற்பும் அடங்கிய சாயலுமுடைய மனைவியொருத்தியுண்டு. பெருஞ் செல்வப் பெருங் குடியில் தோன்றிப் பெண்மைக்குரிய நற்பண்புகள் யாவும் திரண்டு உருக்கொண்டாற்போலும் அந்நங் கையின் பெயர் கண்ணகி யென்பது. மனைவாழ்க்கைக்குப் பொருந்திய உள்ளமும் திருந்திய செய்கையும் அவள்பால் சிறந்து விளங்கின. தன்னைக் கொண்ட கணவன் பால் அவட்கிருந்த காதல் ‘நிலத்தினும் பெரிது ; வானினும் உயர்ந்தது; கடலினும் ஆழ்ந்து விளங்கும்’ இயல்பிற்றெனின் அது மிகையாகாது. இல்லிருந்து வாழ்வதன்பயன் நல்லறச் செயல்களால் ஓல்காப் புகழ் நிறுவி ஓங்குவது என்னும் குறிக்கோள் அவளது உணர்வில் ஊறிக்கிடந்தது. ஊடினும் இனியவே கூறும் உயர் பண்பினளான அக்கண்ணகி, எவர்பாலேனும் தவறு காணின் மனம் பொறாது வருந்தும் இயல்பினும் தலைசிறந்து நின்றாள். அதனால், பெருவாழ்வால் பிறங்கும் பெருமக்கள் தமது பெருமைக்கொப்பப் பெரும் புகழ் விளைவிக்கும் பெருஞ் செயல் களில் மனம் உறாது பிணங்குவராயின், ‘நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சின’ ளாய் இரங்குவள். இத்தகைய மாண்குணம் படைத்த கண்ணகியுடன் இன்ப வாழ்வு நடாத்தி வந்த வையாவிக்கோ, நல்லூர் ஒன்றில் இளமை வளமும் இனிய வனப்பு முடைய ஒருத்தியின் கண்வலையிற் சிக்குண்டு அவளோடு காதலுறவு கொண்டு, நாளும் அவள் மனைக்குச் சென்று வரலானான். பன்னாள்காறும் புலப்படா மலிருந்த அவனது பரத்தமை எவ்வகையாலோ காதற் கண்ணகியின் காதுக்கு எட்டியது. கவலையும் கையறவும் அவள் மனதைக் கலக்கின. பொன்னையோ பொருளை யோதான் தன் வயிற்றிற் சுமந்து பெற்ற மக்களையோ இழப்பினும் கற்புடைய மங்கை மனம் அத்துணைப் பெரிதாகக் கருதி வருந்தாது. தன் கண்ணைக் கவர்ந்து தனது காதலுள்ளத்தில் இடம்பெற்ற கணவனது காதலுறவு மாறுமாயின். அவள் சிறிதும் பொறாது துடிதுடித்துப் பெரும் பேதுருவள். இஃது இன்றும் எவ்விடத்தும் மாறாத பெண்ணியல்பு. இவ்வாறு இருந்துவரும் நாளில், பெரும்பேகனது கொடைப் புகழ் நாடெங்கணும் பரந்திருந்தமையின், பழுமரம் தேர்ந்து செல்லும் பறவையினம் போலப் புலவர் பெருமக்களும் இன்னிசைப் பாணரும் நன்னயக் கூத்தரும் அவனை நாடி வந்த வண்ணம் இருந்தனர். அவனுடைய திருவோலக்கத்தில் அவன் பெற்ற புகழையும் அவன்பாலுள்ள குன்றாச் செல்வத்துக்கு ஏதுவாகிய நாட்டின் மலையையும் கானத்தையும் சிறப்பித்துப் பாடினர். அப்பாட்டுக்களைக் கேட்குந்தோறும் கண்ணகியின் மனம் கரைந்து கண்ணீராய் ஒழுகும். கணவனுடைய காதலின்பத்தைப் பெறாமை யால், கூந்தலைச் சீவி வாரிப் பூ முடித்தல், நெற்றியில் திலகம் தீட்டல், வேறு பிற ஒப்பனைகள் ஆகியவற்றைச் செய்து கோடலில் கண்ணகியின் கருத்துச் செல்லாதாயிற்று. அவர்களுடைய காதலுறவைக் கைந்நெகிழ்ந்தமையின் பேகனும் அவள் மன நிலையை அறியானாயினன். அந்நாளில் சிறப்புடைய சான்றோர்கள் செல்வர் மனைகட்குப் போதரின், அச்செல்வர்களும் வேந்தர்களும் பேரன்பும் பெருவிருப்பும் கொண்டு சிறப்புடன் வரவேற்று விருந்து பேணுவது மரபு. அவரோடு உடனிருந்து மனைமகளிர் உணவு படைப்ப உண்ணுவதும் வழக்கு. எவரேனும் அவர்களைப் புறத்தே வைத்துப் போற்றுவராயின் அச்சான்றோருள் சிலர், வெகுண்டு, “ யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின் காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு” எனப் பழித்துத் தூற்றியதும் உண்டு. ஒருநாள் சேரநாடு சென்று சிறப்புப் பல பெற்ற கபிலர் என்ற சான்றோர், பேகனது பெருமனைக்கு வந்தார். அவர் வேள் பாரியின் உயிர்த் துணைவரும் அவனது குடும்பத்தினருடன் நெருங்கிப் பயிலும் பான்மையருமாவர்; வேள் பாரி இறந்த பின் அவன் பெற்ற பெண்களைத் தாம்பெற்ற மக்களாகப் பேணிய அப்பெரியார் அவர்களைத் திருக்கோவலூரில் பார்ப்பாரகத்தே அடைக்கலப் படுத்தி அவரை அரசிளங் காளைகட்கு மணம் செய்து கொடுத்தற் பொருட்டு வேண்டப்படும் சீரும் சிறப்பும் குறித்துச் சேரமான் செல்வக் கடுங்கோவையும் பிற செல்வர்களையும் கண்டு வந்தார். வருபவர் பேகனையும் காணவிரும்பினார். அவரது நல்லிசைப் புலமைச் சான்றாண்மையை நன்கறிந்தவனாதலால், பெரும் பேகனும் அவர்க்கு உரிய சிறப்புக்களைச் செய்து வரவேற்று மகிழ்வித்தான். அவனுடைய கொடைநலமும் புகழ்ச் செய்கைகளும் கபிலர்க்கு மிக்க இன்பம் செய்தன. உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட இயலாதன்றோ! கபிலர் ஆவிகுடிக்கு வந்தபோது பேகனது புறத்தொழுக்கத்தை யாரோ அவர்க்குச் சொல்லிவிட்டார்கள். அந்நாளைய தமிழ் வாழ்வில் பரத்தையரைக் கூடி யொழுகும் புறத்தொழுக்கம் பெருங் குற்றமாகக் கருதப்படவில்லை. நாட்டில் அடிக்கடி நிகழ்ந்த போர்களால் பெண் மக்கள் தொகையினும் கட்டாண்மையுடைய ஆடவர் தொகை குறைந்திருந்தமையின், தம்மை மணந்து கோடற் குரிய ஆண் மக்கள் இல்லாத குறையால் மண்ணுலகில் வாழ்தல் வேண்டி மிகை மகளிர் ஆடல் பாடல் அழகு என்ற கலைகளைப் பெரிதும் பயின்று பரத்தையராயினர். அவர்கட்கு வாழ் வளிப்பதும் மக்கள் கடனாயினமையால் பரத்தைமை யொழுக்கம் உளதாயிற்று. பரத்தையருள்ளம் தான் பற்றிய ஆடவன் ஒருவனோடே நில்லாது பொருணசையால் வரையறையின்றிப் பலரைக் கூடிய பரத்தையர் மனம் ஈரமில்லாத பாலை நிலம் போன்றமை பற்றி அவர்களை வரைவில் மகளிர் என நிறுத்தித் திருவள்ளுவர் முதலிய சான்றோர், அவரது உறவை வெறுத்து விலக்குவிதி கூறினர். சங்ககால நல்லிசைச் சான்றோர்களும் வரைவில் மகளிரை வெறுத்து நீக்கி, ஒரு மைப் பரத்தையர் உறவையே தம்முடைய பாட்டுக்களில் நிறுத்திப் பாடினர். அவற்றையும் ஊடுருவி நோக்கின் பரத்தைமையும் விடற்பாற்று என்ற குறிப்பு உணர்வுடையோர்க்குப் புலனாகா தொழிவதில்லை. இது நிற்க. தாம் கேள்வியுற்ற பரத்தைமையின் உண்மை துணிதற்கு நல்ல தொரு வாய்ப்புக் கபிலர்க்குக் கிடைத்தது. ஒருநாள், பேகனையும் அவனது பெருமை மிக்க மலையையும் பாட்டொன்றில் தொடுத்து இனிமை மிக அவர் பாடினர். அதனைப் பாணர் யாழில் இட்டு இசைக்கக் கேட்டோர் பேரின்பம் எய்தினர். பாட்டும் இசையும் பருந்தும் நிழலும் போல் இயைந்து, பேகனது பெரும் புகழைக் கேட்டோர் செவிநிறையத் தேக்கியபோது, கண்ணகியின் உள்ளம் பெரிதும் கையறவுபட்டுக் கவலைப் பெருக்கில் உழன்றது. இத்துணைப் பேரிசைச் செல்வக் கோமகனான பேகனுடைய பெரும் பெயர் அவனது பரத்தைமையால் மாசு படுகிறதே என்ற எண்ணம் எழுந்து அவளை அலைத்தது. அவ்வொழுக்கத்தால் மனைவாழ்வு மாண்புடைய அறச் செயல் குன்றி அவலமெய்துவதும், அது வாயிலாக அவன் பிறந்து மேம்படும் ஆவியர் குடிக்கு அமைந்த உயர்வு, மாற்றார் எள்ளி நகையாடும் அளவிற்குத் தாழ்வடைவதும் பெருந் துயரத்தை விளைத்தன. ஒருபால். இத்துணைப் பெருமகனை உயிர்த் துணைக் கொழுநனாகப் பெற்றும், அவனது புகழின்பத்தை தான் நுகர்வதற்கு இயலாமையால் உளதாகிய துன்பம் அவள் உடலையே மெலி வித்தது. மேனி மெலிவும் ஒப்பினையின்மையும் கண்டு இரங்கி ஏனைய தோழியரும் பிறரும் கூறும் தண்ணிய மொழிகள் அவள் உள்ளத்தில் வெம்மை தோற்றுவித்து, வெதுப்பியதால், முகங்கருகிக் கண்கள் பசந்து, அருவிபோல இடையறாது கண்ணீர் சொரிவளாயினள். அதனைச் சான்றோராகிய கபிலர் அறிந்து தாம் கேள்வியுற்றது மெய்யாதலைத் தெளிந்தார். மறுநாள் அவர் பேகனோடு உரையாடி இருந்த போது ஏற்ற செவ்வி வாய்க்கவும் தமது மனத்திலுள்ளதை உரைக்கக் கருதினார். அவனுடைய பரத்தைமையின் சிறப்பின்மையை வாயாற் கூறாமல் ஒரு செய்யுளால் அவன் உய்த்துணரும் வகையில் உரைக்கலுற்றார். அச்செய்யுள், “ மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் மாரி யான்று மழைமேக்கு உயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண்றிய உவகையர் சாரல் புனத்தினை அயிறும் நாட, சினப்போர்க் கைவள் ளீகைக் கடுமான் பேக, யார்கொல் அளியள் தானே நெருநல் சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசின் இரங்கும் அருவி நளியிருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண் வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின்மலையும் பாட இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் (மார்பகம்) நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே. என வருவது, இதன்கண், ஆவிநாட்டுக் குறவர் இயல்பும் பேகனது கைவண்மையும் முதற்கண் குறிக்கப்படுகின்றன. அதனையடுத்துத் தாம் ஒரு சீறூர் வாயிலில் நின்று பேகனையும் அவன் மலையையும் பாடியதும், அது கேட்டுக் கண்ணகி கண்ணீர் சொரிந்து அழுததும் கூறப்படுகின்றன. இடையில் கண்ணகியின் பெயரைக் குறியாமல், யார் கொள் அவள்? அளியள் என்று இசைக்கு முகத்தால் கண்ணகியின் ஆற்றாமையை அவன் உய்த்துணர உரைக்கின்றார். ஆவிநாட்டுக்குறவர்களின் இயல்புகூறும் பகுதியில், மழை யின்மையாலும் மழை மிகுதியாலும் குறைவு நேர்ந்தால், அவர்கள் தமது வழிபடு கடவுட்குப் பலிதூவி வழிபாடு செய்து குறை நீங்கிப் புனத்தில் விளையும் தினையுண்டு மகிழ்வார் என்றது, நினது அருளின்மை பற்றியும் பிற மகளிர்பால் அவ்வருள் மிக்கிருத்தல் பற்றியும் ஆற்றாமை எய்தின் நின்னைச் சேர்ந்து வழிபடுமாற்றால் அக்குறைவு தீர்ந்து இன்பம் நுகர்தற்குரியவள் நின் மனைவி; அதனால் நீ அவள்பால் அருளடையனாதல் வேண்டும் என்ற கருத்தை உள்ளுறையாகக் கொண்டது. இதனை உய்த்துணரும் பேகன் தன் புறத்தொழுக்கம் கபிலர்க்குத் தெரிந்துவிட்டதென நாணித் தானாகவே திருந்துவன் என்பது உட்கோள். அடுத்தபடியாக இப் பாட்டில் பேகனுடைய போர் வண்மை யையும் ஈகையையும் சிறப்பித்தது, பகைவர்பால் வெவ்விய சினமும் இரவலர்பால் தண்ணிய அருளும் உடையவனாகையால் நின்மறப் புகழும் ஈகையாற் பிறக்கும் நின் அறப் புகழும் கண்ணகியை அருளாமையால் மாசு எய்துதல் நன்றன்று என்பதைக் குறிப்பாய்க் கூறுகிறது. இதனை உள்கியுணருமிடத்து, அவன் மனத்தில் கண்ணகி யால் தன் பரத்தைமை வெளியாகிய தெனச் சினம் பிறவாமல் தடுக்கவேண்டி- அவனுடைய அருளின்மையால் அவள் ஆற்றாமல் வருந்திய நிலையை ‘என்னோடு வந்த பாண் சுற்றத்தார் எய்திய பசித் துன்பத்தைப் போக்க எண்ணி, யாம் நின்னையும் நின் மலையையும் பாடினோமாக, எமது பாட்டு நின்னையும் நினது அன்பு மாறிய நிலையையும் நினைந்து அவளது நெஞ்சைத் துன்புறுத்தியதனால், அவள் பெரிதும் அழுதாள்’ என்றார். இதன் பின், சீறூர்ப் பெருமனைக் கண் உறையும் அவள் யாவள்? இன்னே சென்று நீ அருளுதல் வேண்டும் என உறைக்கலுற்ற கபிலர், ‘யார் கொல், அளியள்” என்றார். மேலும், அவட்குண்டான வருத்தம் ஆற்ற ஒண்ணாத அளவு பெருகி நின்றது என்பது விளங்க, “இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் மார்பகம் நனைப்ப விம்மி அழுதனள் பெரிது’ என்று கூறி இரங்கினார். வேறு இசையின் பத்தால் உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்ததாகக் கொள்ளற்கு இடமில்லை என்பதற்காக, “இன்னாது இகுத்த கண்ணீர்” என விளக்கினார். இவ்வாறு ஆழ்ந்த கருத்துக்களையுடைய சொற்களைச் சொல்லிவிட்டுக் கபிலர், அவனிடம் விடைபெற்றுச் சென்றார். ஆயினும், பேகனுடைய பரத்தைமை யொழுக்கம் நீங்கவே யில்லை; அவண் தன் பரத்தையுறையும் நல்லூர்க்குச் சென்ற வண்ணமேயிருந்தான். சிறிது காலத்துக்குப் பின் சோழநாட்டுக் குடந்தைக்கு அண்மையில் அரிசிலாறு காவிரியினின்றும் பிரியு மிடத்தில் இருந்து, இடைக்காலத்தில் மறைந்துபோன அரிசிலூர்க்கு உரியரான அரிசில் கிழார் என்ற சான்றோர், சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண்டற்குச் செல்பவர் ஆவி நாட்டுக்கு வந்தார். அவர்க்கு வையாவிக் கோவின் கொடைப் புகழ் இன்பம் செய்தமையின், அவனைக் காண விரும்பினார். அவர் வந்த சிறிது போதுக்கெல்லாம் பேகனுடைய பரத்தைமையும் அதனால் கண்ணகியின் ஆற்றாமையும் துன்பமும் கண்காணத் தெரிந்தன, அவர் பேகனைக் கண்டு அவன் காட்டிய அன்பையும் செய்த சிறப்பையும் வியந்து மகிழ்ந்தார். இத்தகைய பெருந்தகையின் இன்ப வாழ்வில் பரத்தைமை யொழுக்கம் தோன்றுமாயின் அது வளம் குன்றுமென அரிசில் கிழார் அஞ்சினார். அதனால் அவர் அவன் நாட்டைப் புகழ்ந்து பாட்டொன்றைச் செய்து செவ்வழிப் பண்ணில் அமைத்துப் பாணரை கொண்டு பாடுவித்தார். அவனும் மிக்க உவகையுற்று, அவர்க்குப் பொன்னும் பொருளுமாகப் பெரும் பரிசில் நல்க முற்பட்டான். அது கண்டதும், அரிசில் கிழார் கைகவித்து, ‘தலைவ, நின் செல்வம் பரிசிலர்க்கு உதவும் பான்மைய வாகுக; யாம் பாடிய செவ்வழிப்பாட்டைக் கேட்டுப் பெரிதும் நயந்து பெரும் பொருட்பரிசில் நல்குவாய் ஆயினை; ஆனால், யாம் விரும்பும் பரிசில் வேறு; ஆதலால், இவற்றைப் பெற விரும்பு கின்றிலேம்; நீ நின் அருளை நல்காமையால், நின் மனைவியாகிய அரிவை பெரிதும் ஆற்றாது வருந்துகின்றாள்; அவள் தனது கூந்தலை முடிப்பதுமில்லை; ஏனை ஒப்பனைகளை வேண்டுவது மில்லை. மனைக்கு விளக்கமாகிய அவள், மங்கலப் பொலிவின்றிக் குழல் முடிக்காமல், மனமும் முகமும் கூம்பியிருத்தல் மனையாட்சி யாகாது. இப்பொழுதே விரிந்து கிடக்கும் அவள் கூந்தல் பூச்சூடுமாறு, நின் தேரில் குதிரைகளைப் பூட்டிப் புறப்படுக” என்ற பொருள் புலப்பட, “ அன்ன வாகநின் அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டாம் அடுபோர்ப் பேக சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல நன்னாடு பாடஎன்னை நயந்து பரிசில் நல்குவை யாயின் குரிசில் நீ நல்கா மையின் நைவரச் சா அய் அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை யரிவை கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே” என்ற இப்பாட்டைப் பாடினர். பேகனுடைய பரத்தைமையைத் தாம் உடன் படாமை தோற்ற, “அன்னவாக நின் அருங்கல வெறுக்கை, அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக” என்று எடுத்த எடுப்பிலேயே குறித்தார். ‘நினது மலைநாட்டைத் தொடுத்து யான் செவ்வழிப் பண்ணிற் பாடியதை நயந்து நீ பரிசில் நல்க முற்பட்டாய்; அதனினும் நீ இப்பொழுதே செய்ய வேண்டியது ஒன்று உளது, அதனைச் செய்க’ என்று கூறுதற்கு, பரணர் முதலியோருடைய குறிப்புரை பயன்படா தொழிந்தமையால், மிகவும் வெளிப்படை யாக, “நீ நல்காமையின் நைவரச்சாஅய், அருந் துயர் உழக்கும் நின் திருந்திழையரிவை, ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை புனைய, வண்பரி நெடுந்தேர் பூண்க நின்மாவே” என உரைத்து விடைபெற்று அகன்றார். அவ்வழியும் பெரும்பேகன் தன்புறத் தொழுக்கை விடவில்லை. அரிசில் கிழார் சென்ற சிறிது காலத்துக்குப்பின் பெருங்குன்றூர் கிழார் என்ற சான்றோர் சேரநாட்டினின்றும் போந்தார். அவர், சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்ற வேந்தனால் முப்பத்தீராயிரம் காணம் பொன் பரிசில் தரப்பெற்றவர். அவர் பேகனைக் காணச் சென்றார். ஒருபால் தமது பாண் சுற்றத்தோடு இருந்து பேகனுடைய புகழைக் கூறும் பாட்டொன்றை அமைத்துச் செவ்வழிப் பண்ணில் பாடினார். அவ்விடத்தே தனித்திருந்த கண்ணகி அதனைக்கேட்டு கண்ணீர் சொறிந்து கவன்றாள். பெருங் குன்றூர்க் கிழார் அவளைக் கண்டு உற்றது வினவவும், அவள் பேகனது பரத்தைமையையும் சான்றோர்களாகிய பரணர் கபிலர் அரிசில் கிழார் ஆகியோர் அறிவுறுத்திய உரைகள் பயன்படா தொழிந்தமையையும் பணிவுடன் தெரிவித்து வணங்கினாள். அவர் பேகனைக் கண்ட போது, சேரமான்கள் பெரும் பரிசில் தந்து சிறப்பிக்கும் அத்துணைப் பெருமையுடைய அவரது புலமை நலத்தை அவன் பாராட்டித் தான் பெரும் பொருள் பரிசில் தரச் சமைந்தான். உடனே, அவர் அவனை நோக்கி,‘அரசே, நின் மனைக்கண் உறையும் மங்கல மடந்தையாகிய நின் மனைவி குழல் முடித்துப் புது பூச்சூடி இன்புறுதலின்றி மனம் வாடி மடிந்துறைவது மாண்பன்று; அதனால்; அவள் மங்கலம் பொலிய மகிழ்ந்து வாழச் செய்வதுதான் நீ எமக்குத் தரத்தக்க பரிசில்” என்ற கருத்தமைய, “ கன்முழை யருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வான் இன்னுறை தமியள் கேளா நெருநல் ஒருசிறைப் புலம்பு கொண்டு உறையும் அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில் ஆவியர் கோவே. என்று பாடினர். பெருங்குன்றூர் கிழார், மலைநாடு கடந்து பேகனுடைய ஊர்க்கண் புகுந்தபோது, அவன் புகழைச் செவ்வழிப் பண்ணிற் பாடின திறத்தைக் “கண் முழையருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை” என்றும், அப்போது கார்முகில் இனிய ஓசையுடன் மழையைப் பெய்ய, ஆங்கு உள்ள பெருமனையில் ஒதுங்கினமையும் அதனுள் கண்ணகி ஒருபால் தனித்து மழை யோசையைச் செவியேற்று இருந்தமையும் புலப்படக் “கார் வான் இன்னுறை தமியள் கேளா, நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் ” என்றும், அவள் இயற்கையாகவே அரிபரந்து அமர்த்த குளிர்ந்த கண்களும் மாமை விளங்கும் மேனியுமுடையவளாயினும், யாம் கண்டபோது மண்ணுதலின்றிச் சீர் குலைந்த வெறுங் கூந்தல் விரிந்தலைய வீற்றிருந்தாள் என்பாராய், “அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை” என்றும், தமக்கு இயல்பாக அமைந்த செய்யுணடையிற் கூறினார். செல்வர் தரும் பரிசிலினும், அவரது செல்வ வாழ்வு சிறந்து நிற்பதையே பேணுவது சீரொழுகு சான்றோர் சிறப்பியல்பாதலால் பேகனது வாழ்வு அறநெறிப்பட்ட இன்பப் பயன் எய்தவேண்டுமென்று கருதி, கண்ணகி தனக்குரிய மங்கல வனப்பும் வசையிலா இன்பமும் பெறுவித்தலே எமக்கு நீ தரற்குரிய பரிசிலாகும் என்ற தம்முடைய விருப்பம் தெற்றென விளங்குமாறு, “நெய் யொடு துறந்த மையிருங் கூந்தல், மண்ணூறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல இன்று பெயரின், அதுமன் எம்பரிசில் ஆவியர் கோவே” என்று பாடினார். இடங்கழி காமத்துக்கு இரையாகிய மனம், அதற்கு ஆக்கமும் அரணுமாகிய செயல்களிலேயே உரைந்து நிற்கும். அதனால் உண்டாகும் குற்றத்தை எடுத்து உரைப்பதினும். அதன் விளைவாகத் தொடர்புடையார் எய்தும் துன்பத்தைக் காட்டி, அவர் மனத்தில் இரக்கப் பண்பை எழுவித்த, நன்னெறிக்கண் நிற்கப் பண்ண வேண்டும்; அக்கொள்கையால்தான் பேகனோடு உரையாடிய சான்றோர் பலரும், கண்ணகியின் கையறவும் கவலையும் நிறைந்த அவல நிலையையே அவனுக்குப் பாடிக்காட்டினர். நாட்களும் பையப் பலவாய்க் கழிந்தன. சான்றோர்களின் சால்புரைகள் பேகன் ஓழுக்கத்தை மாற்றும் வலியின்றி மாண்டு மறைந்தன. கண்ணகியின் கவலைக் கடல் நாடோறும் கரையின்றிப் பெருகிய வண்ணம் இருந்தது. கற்புக் காவலும் பொற்புடை ஒழுக்கமுமே இனி வாழ்க்கைக்குத் துணையென்ற நல்லறமே அவள் அக்கடலுள் நீந்துதற்கு ஏற்ற புணையாய் இலங்கின. ஞாயிற்றை விழுங்கி ஞாலத்தைப் புதைத்த இருளிரவு, எப்படியும் புலர்ந்து விடியத் தானே வேண்டும்? செல்வரது செல்வம் பல்லோர்க்கும் பயன்படுதல் வேண்டி அவரது புகழ் பரவும் செயலினரான பரணர், மறுபடியும் ஆவிநாட்டு வழியாகச் செல்ல வேண்டியவராகிப் பேகனது பேரூர்க்கு வந்தார். முன்பு வந்தபோது, பேகன் மயிற்சேவலுக்குப் போர்வை ஈந்த புகழ் நன்கு பரவியிருந்தது கண்டு இன்புற்றுப் பாடினார் அன்றோ? அப்போது அவர் அவனிடம் பெரும்பொருள் பரிசில் பெற்றுச் சென்றார். அவர் சென்ற சின்னாட்குப் பின்பே அவனுக்குப் புறத்தொழுக்கம் உண்டாயிற்று. அவர் இப்பொழுது அவன் பரத்தமையொழுக்கம் மேற்கொண்டதை ஊரவர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் கண்ணகியைக் கண்டார். அவரைக் கண்டதும் கண்ணகிக்குண்டான துயரத்துக்கு அளவில்லை. ஒருவாறு தேறி, கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் முதலிய சான்றோர் போந்ததும், அவனது புறத்தொழுக்கத்தைப் போக்க இயலாது அவர்களின் சொற்கள் பயனின்றி யொழிந்ததும் எடுத் துரைத்தாள். அவற்றைக் கேட்டதும், அவர் உள்ளத்தே அசைவு பிறந்தது. கானமயிலுக்குப் போர்வை நல்கும் பேரருளாள னுடைய அருள், அவனுடைய காதல் மனைவியான கண்ணகிபால் செல்லாமை கண்டு அவர் தமது உள்ளத்தே மிக்க வருத்தமுற்றார். புறத்தொழுக் கத்தின் புன்மை ஒருபால் நிற்க, அதன் வன்பிணிப்பை நன்கு அறிந்த புலமைச் செல்வராதலால், பேகனை அவர் நொந்து கொள்ளவும் இல்லை; இகழவும் இல்லை. தக்காங்கு மொழியின் அவன் உள்ளம் தெளிகுவன் என்ற ஒரு துணிவு அவர்க்கு உண்டாயிற்று சான்றோராகிய பரணர், பெண்மக்கள் பக்கல் அருளுள்ளம் கொள்ளாமல், வன்கண்மை செய்பவர் யாராயினும் அவர்களை இழித்துக்கூறிப் பழித்தலில் அவர் சிறிதும் கண்ணோட்டம் செய்ப வரல்லர். இளம் பெண் ஒருத்தி ஆற்றில் மிதந்து வந்த மாவின் பசுங்காய் ஒன்றைத் தின்றது காரணமாக இரக்கமின்றி அவளைக் கொலைபுரிந்த நன்னன் என்னும் குறுநிலத் தலைவனைப் புலவருலகம் என்றும் வெறுத்து ஒதுக்குமாறு அவனைப் பழித்துப் பாடியவர். அவருடைய பழித்துரை நாட்டில் எத்துணையளவு பரந்திருந்தது என்பதைப் பின்வரும் நிகழ்ச்சியால் அறியலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள பச்சைமலைத் தொடர்க்குப் பரணர் முதலியோர் வாழ்ந்த காலத்தில் விச்சிமலை என்று பெயர் வழங்கிற்று. அதன் கீழ்ப்பால் அடியில் விச்சியூர் என்று ஓர் ஊர் உளது; இப்போது அதுவிச்சூர் என வழங்குகிறது. அதன் கண் இருந்து விச்சிக்கோ என்ற மன்னர் நாடு காவல் புரிந்து வந்தனர். அதற்கு வடக்குப் பகுதியில் இளங் கண்டீரம் என்றோர் ஊருண்டு. அஃது இப்போது வாளிகண்டபுரம் என்று திரித்துக் கூறப்படுகிறது. அதன்கண் கண்டீரக்கோ என்ற குறுநிலத் தலைவர் அரசு புரிந்தனர். அவர்களுடைய இளங்கண்டீர மான வாளிகண்டபுரம் இன்றும் தன் தொன்மைக் குறிப்பத் தோன்ற இடிந்த கோட்டையொன்றைத் தன்னகத்தே கொண்டு சிராப்பள்ளி யிலிருந்து சென்னைக்குச் செல்லும் பெருவழியில் இருந்து வருகிறது. ஒரு சமயம் இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும் ஒருங்கே நட்பால் கூடி இனிதிருந்தனர். அப்போது கொங்குநாட்டுப் பெருந்தலையூரவரான பெருந்தலைச் சாத்தனார் என்ற பெரும் புலவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை இருவரும் அன்புடன் வரவேற்றனர். ஆனால் அவர் கண்டீரக்கோவை அன்போடு தழுவி, விச்சிக்கோவைத் தீண்டாராயினர். அது கண்டு வியப்பும் வருத்தமும் கொண்ட இளவிச்சிக்கோ, அவரைக் காரணம் வினவ, அவர். “அரசே, யான் நின்னைத் தீண்டிப் புல்லிக்கொள்ளாமைக்குக் காரணம், நீ முன்பு ஒருகால் பெண் கொலை புரிந்த நன்னன் மருமகனாவாய்” என்று சொல்லி அவனைத் தெளிவித்தார். பெண்கொலை புரிந்த நன்னன் பழிபட்ட திறத்தை புலவர் கூட்டத்துக்கு அறிவித்து, அவர் அனைவரும் அவனையும் அவன் வழிவந்தோரையும் இகழ்ந்து நீக்கும் வண்ணம் செய்தவர் இப்பரணர். அதனால், தவறிழைத்த வேந்தரும் செல்வரும் பரணரிடத்தே அஞ்சியே ஒழுகுவர். நன்னன் இருந்து பெண் கொலை புரிந்து பெரும் பழிக் குள்ளானது ஆவிநாட்டை அடுத்து மேற்கிலிருக்கும் மீகொங்கு நாட்டுப் பகுதியாதலால், வையாவிக்கோப்பெரும் பேகனுக்கு அது நன்கு தெரிந்திருந்தமையின், அவனும் பரணர்பால் சிறிது அச்சத் தோடே வரவேற்றுச் சிறப்பிப்பது வழக்கம். சிறிதுபோது அவனோடு அன்புரையாடிய பரணர், கபிலர் முதலியோர் வந்து அவனைப் பாடிச்சென்ற திறத்தைச் சிறிதும் கூறாமல், தான் வரும் போது நிகழ்ந்த தொன்றைக் கூற முற்பட்டார். அவனும் அவர் சொல்லக் கருதியதைக் கேட்பதில் ஆர்வமுடையனானான். உரையாடலுற்ற பரணர், தொடக்கத்தில், “வேந்தே, அருளுரு வாகிய நீ இப்போது அருளில்லா யாவது கொடுமையாகும்” என்றார். அது கேட்டுத் திகைப்புண்ட பேகன், “அருளில்லாத செயலொன்றும் செய்தது இல்லையே” என்பான்போல அவரை நோக்கி முறுவலித்தான். “வள்ளலே, நேற்று மாலை இருள் மயங்கும் போது பாண்சுற்றத்தோடு போந்த யாங்கள் கார்மழையால் தழைத்துப் பூத்துக் கண்கவர் வனப்புடன் விளங்கிய நின் கானத்தின் காட்சியைப் பாட்டொன்றில் வைத்து மாலைப் போதுக்கேயுரிய செவ்வழிப் பண்ணில் பாடினேன். அதனைக் கேட்டு, இளைய நங்கை யொருத்தி நீலமலர் போன்று அழகிய கரிய கண்கள் கலுழ்ந்து நீர் வழிந்து மார்பில் அணிந்த பூண்களை நனைக்க அழுதாள். அவளை நோக்கி, “அன்னையே, எமது கேண்மையை விரும்பும் பெரு வள்ளலாகிய பேகனுக்கு நீ உறவுடையை போலும்” எனத் தொழுது நின்று கேட்டேமாக, தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “யாம் அப்பேகனுக்கு உறவல்லேம்,” என்று தொடங்கியதும் துயரம் அவள் நாவை அடைத்தது; பின்பு ஓரளவு தேறி, “இப்பொழுது எம்மைப் போன்ற ஒருத்தியின் நலத்தை விரும்பி, நாளும் தேரேறி, முல்லையின் வேலி சூழ்ந்த அவளுடைய நல்ல ஊர்க்குச் செல் கின்றான் என்று பலரும் சொல்லுகின்றார்கள்.” என இயம்பினாள்” என்று மொழிந்த பரணர், அதனையே ஒரு பாட்டில் அமைத்து அவனிடம் கொடுத்தார். “ அருளை யாகலோ கொடிதே இருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் கார்எதிர் கானம் பாடினே மாக நீல்நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வார் அரிப்பனி பூணகம் கனைப்ப இனைத லானாள் ஆக, இளையோய் கிளையைமன் எம்கேள் வெய்யோற்கு என யாம்தற் றொழுதனம் வினவக் காந்தள் முகைவுரை விரலின் கண்ணீர் துடையா யாம் அவன் கிளைஞரேமல்லேம்; கேள், இனி எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும் வரூஉம் என்ப வயங்கு புகழ்ப்பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே” என்பது அப்பாட்டு. இதன்கண், பேகன் மயிலுக்குப் போர்வை ஈந்து மகிழ்ந்த தனால் வெளிப்பட்ட அவனது அருள் நலத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய நல்லிசைச் சான்றோராகிய பரணர்க்கே, அவனுடைய அருட்பண்பைப் போற்றிக் காக்கும் உரிமை மிக்கிருத்தலால், ‘அருளாய் ஆகலோ கொடிது’ என்று எடுத்தவுடன் இயம்புகின்றார். அருளின்மை தோன்றின் அவர் சொல் பொய்படுவதன்றி அவன் புகழும் நிலையின்றிக் கெடுவது பற்றியே ‘கொடிது’ என்றார் பேரரு ளாளனாதலால் அச்சொல் அவன் உள்ளத்தை அசைத்து அச்சமும் அவலமும் அடையத் தோற்றுவித்தது. பின்பு, அவர் சொல்ல விருக்கும் அறிவுரைகளைக் கேட்டற்கண் உள்ள ஆர்வமும் அவர் ஒருகாலும் தனக்குத் தீதுகூறார் என்ற நன்னம்பிக்கையும் எழுந்து மகிழ்வித்தலால் அவரை முறுவலித்து நோக்கினான். இகல் மன்னனாயினும், அவர் கூறிய சொல் பிற்பயன் விiக்கும் பெருமை யுடைய தென்பது அவன் அறிந்தவன்; அதனால் அவன் மனத்தில் சினமோ எதிர்ப்புணர்ச்சியோ அப்போது எழவில்லை. அருளறம் திரிந்த அரசில் மழைவளம் குன்றும்; அது மாறாமை தோன்ற “நின்கார் எதிர்கானம் பாடினேம்” என்றார். தான் பாடிய பாட்டைக் கேட்டுக் கண்ணகி வருந்திய திறத்தை, “நீல்நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வார் அரிப்பனி பூணகம் நனைப்ப இனைதல் ஆனாளாயினள்” என்றும், அது கண்டு தான் வியப்பு மிகுந்த அவளை அரசமாதேவியான கண்ணகி என்பது உணர்ந்து கைதொழுது, ஒன்றும் அறியாதார் போல வினவிய வகையை “இளையோய், கிளையைமன் எம்கேள் வெய்யோற்கு எனத் தொழுதனம் ” என்றும் கூறினார். அதனால் பேகனும் புன்னகை பூத்தான். பின்பு, அவள் உரைத்ததை உள்ள வாறே அவனுக்குத் தெரிவிக்கத் தொடங்கி அவன் அவளுக்குத் தன் அருளைச் செய்யாமை இனிது விளங்க, “யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்” என்று அவள் உரைத்ததும், அதனால், பரணர் அவளோடு உரையாடலை விடுத்து நீங்குவது போலும் குறிப்பைக் காட்ட, அவள் இதனையும் கேட்டல் வேண்டும் எனத் தொடங்கி “எம்போல் ஒருத்தி நலம் நயந்து என்றும் வரூஉம் என்ப வயங்கு புகழ்ப்பேகன், ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல்லூரானே” என்றதும் எடுத்துரைத்தார். பேகன் தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையை “எம் போல் ஒருத்தி” என உயர்த்திக், கூறியது, பேகன் தகுதிக்கு இழுக்குண்டாகாவாறு காப்பது குறித்தது. அவ்வுயர் மகளின் நலன் நயந்து என்றும் வரூஉம் என ஒழியாது, என்ப எனப் பிறர்மேல் வைத்துக் கண்ணகி சொன்னது, அவன் செயல் ஊரெங்கும் அலராய்ப் பரந்தமை புலப்படுத்திற்று. கற்பின் கண் அலர்க்கு நாணுவது குலமகட்கு இயல்பு. “ஈரமில் கூற்று எதிர் ஏற்று அலர் நாணல்” என அதனைத் தொல்காப்பியரும் எடுத்துரைப்பர். அன்றியும், அவன் புகழைப் பேணிக் காக்கும் மனைக்கிழத்தி யாதலால், இவ்வலருரை மறுவற்ற அவன் புகழ்க்கு மாசு நல்குவதை விரும்பாமையால் வயங்கு புகழ்ப்பேகன் என்று இயம்பினாள். மேலும், நல்லூர் என்றது, கற்பின் மிக்க மங்கையர் வாழும் நல்லூரின் கண் ஒல்லென ஒலிக்கும் தேரூர்ந்து பலரறிய அவன் பரத்தைபால் வந்து போவதற்கு வருந்தும் நிலையை உணர்த்துகிறது. இத்துணைக் கற்புடைப் பெருமடந்தையை நீ அருளாது ஒழுகுவது செம்மைநெறியன்று என்பது தோன்றவே, தொடக்கத்தையே பரணர், ‘அருளாயாகலோ கொடிது’ என்றார். பேகனும் மனம் தெளிந்து, “சான்றீர், நமது நல்லுரையால் எனது தவற்றை உணர்ந்தேன். இத்தகைய பரத்தமை யொழுக்கத்துக்கு இடங்கொடேன்” என்று சொல்லி அவற்கு விடைநல்க முற்பட்டான். பேகனுடைய மொழியிலும் செயலிலும் ஐயுறத்தக்க சிறுமை பரணர்க்கு இது காறும் காணப்பட்டிலதாயினும், பரத்தமை பூண்டவிடத்து ஒருவன்பால் பொய்ம்மை தோன்றுதற்கு வாய்ப் புண்மையின், பரணர் பேகனை மறுபடியும் அன்பொழுக நோக்கி, “நீ அருளறத்தைப் பெரிதும் விருப்புகிறவன்; தோகையை விரித்து நின்று ஆடிய மயில் குளிரால் வருந்துமெனக் கருதிப் போர்வை நல்கிய பேரருளாளன். எமக்குப் பசித்துன்பமும் இல்லை; அதனை யுற்று வருந்தும் சுற்றமும் இல்லை; கேட்பார் மகிழ்ச்சி மிகுந்து தம் தலையை யசைத்து இன்புறுமாறு யாங்கள் நின் புகழை யாழிலிட்டுப் பாடுவதற்கேற்ப இல்லிருந்து செய்யப்படும் நல்லறத்தை நீ இடையீ டின்றி ஆற்றுதலையே வேண்டுகின்றேம்; நின்னை யாங்கள் மிகவும் இரந்துகேட்கும் பரிசில் இஃது ஒன்றே: அஃதாவது இன்றிரவே நீ நின் நெடிய தேரூர்ந்து, நினது இனிய அருளின்றி வாடி வருந்தியுறையும் கண்ணகியின் நன்மனைக்குச் சென்று அவள் மனக்கவலையை மாற்றவேண்டும் என்ற பொருள்பட, “ மடத்தகை மாமயில் பனிக்கு மென்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம் புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி அறஞ் செய்தீமோ அருள்வெய் யோய்என இஃதுயாம் இரந்தபரிசில் அஃதுஇருளின் இனமணி நெடுந்தேர் ஏறி இன்னாது உறைவி அரும்படர் களைமே” என்று பாடிக் கூறினர். பரணருடைய இப்பாட்டைப் பேகன் நன்கு எண்ணினான். தனது பரத்தைமை, பரணர் முதலிய சான்றோர் தன் புகழைப் பாடாது தான் தரும் பரிசிலை விலக்கி ஒதுக்குதற்குக் கருதும் அளவு தீமை செய்துவிட்ட தென்று உணர்ந்தான். கண்ணகியின் கற்பும் பொற்புமே இச்சான்றோர்களை இன்று வரை நம்மை நயந்து அன்பு செய்யும் நிலையில் நிறுத்தியுள்ளன என்பதையும் மனக்கண்ணில் மாணக் கண்டான். கண்ணகியின் பொருட்டுக் கபிலர், அரசில் கிழார் முதலிய சான்றோர் பரிசில் பெறாது மறுத்து மொழிந்ததும் அவன் நினைவிற்கு வந்தது. “நீ நின் மனைவியுடன் கூடிச்செய்யும் நல்லறமே நிலையான புகழைப் பயப்பது; அதுவே எம்மனோர் யாழிலிட்டு இசைக்கும் சிறப்புடையது; இல்லை யாயின், யாமும் பிறரும் நின்புகழ் நிலைபெறப் பாடுவதைக் கையொழிக்க வேண்டியவரா வோம்” என்ற கருத்துக்கள் பலவும் புலப்பட, “கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந்து உறை நர் நடுங்கப் பண்ணி அறஞ்செய்தீமோ” என்று பரணர் பாடியது, பேகன் உள்ளத்தில் இன்னோரன்ன நினைவுகளும் எண்ணங்களும் எழச்செய்தது. தன் கற்பொழுக்கத்தால் சான்றோர் பலரையும் தன் பொருட்டுத் தமது புலமை நலத்தை ஈடுபடுத்திய கண்ணகியின் மனப் பெருமையை எண்ணினான். பரணரை நோக்கி, “ஐயன்மீர், இப்பொழுதே என் பரத்தைமையை ஒழித்தேன்; கண்ணகி வாழும் கடிமனைக்கே சென்று சேர்கின்றேன்” என்று சொல்லி, பரணர்க்கு விடையளித்துத் தானும் சொல்லிய வண்ணமே செய்தான் கண்ணகியின் கவலையும் ஒழிந்தது.  28. வணிகர் மகள் கண்ணகி சங்க காலத்தில் சோழ மன்னர் தமிழகத்தில் ஆட்சி நிறுவி ஆண்டு வருகையில், இன்று சிராப் பள்ளி நகரத்தின் ஒரு பகுதியாக வுள்ள உறையூர் தான் அவர்களுக்குத் தலைநகரமாக இருந்தது, அந்நாளில் சேரரது வஞ்சி நகர் வாணிகத்துக்கும், பாண்டியரது மதுரை செந்தமிழ்க்கும் புகழ் கொண்டு விளங்கியது போலச் சோழரது இந்த உறையூர் அறத்துக்குச் சீர்த்த இடமாம் எனத் திகழ்ந்தது. அதனால், வையக வாழ்வுக்கு இன்றியமையாத அறம் பொருள் இன்பமென்ற மூன்றினுள் அறத்துக்கு உறையூர்; பொருட்கு வஞ்சி மாநகர் தமிழின்பத்துக்கு மதுரை சிறந்தன என்று சான்றோர் குறித்தனர். "ஊரெனப்படுவது உறையூர்" என்பது பழங்காலப் பழமொழி. சோழநாடு காவிரியாறு பாய்தலால் வளம் மிகுந்து கடற்கு அப்பாலுள்ள நாடுகளிலும் பெயர் சிறந்து நின்றது. அந்நாட்டவர் சோழநாடு வருவதற்கு ஏற்ற வகையில் கடற்கறையில் தகுதி வாய்ந்த நகரம் தொடக்கத்தில் இல்லை. வெளி நாட்டவர் அங்கு வருவதற்கு மிகவும் இடர்ப்பட்டனர். சோழர் குடியில் கரிகாலன் என்ற வேந்தன் ஆட்சிக்கு வந்தபோது கடல் வாணிகத்தின் சிறப்பையும், அஃது இனிது நடத்தற்கு வாய்ப்புடைய கடற்றுறை இன்மையும் உணர்ந்து காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தே சிற்றூராய் இருந்த புகார்ப் பகுதியைக் கலங்களும் வங்கங்களும் வந்து தங்குதற்குரிய பட்டின மாக்கிக் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயரிட்டு விளக்க முறுவித் தான். சின்னாட்களில் வெளிநாட்டுக் கலங்கள் பெருவாரியாக வந்து வாணிகம் செய்யத் தலைப்பட்டன. சோழநாட்டு வணிகர் பலர் கடல் வாணிகத்தை மேற்கொண்டு பொன்னும் பொருளும் ஈட்டிப் பெருஞ் செல்வராயினர். உள் நாட்டில் விளைந்தவற்றுள் மிகையா யினவற்றைக் காவிரிப்பூம்பட்டினத்துக் கொணர்வதில் நாட்டு வணிகர் ஊக்கம் மிகுந்தனர். வெளிநாட்டு வணிகர் சிலர் காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கி வாணிகம் செய்தனர். இவ்வாற்றால் இப்பட்டினத்துக் கடற்கரையில் வானளாவ உயர்ந்த செல்வ மனைகளும் பண்ட சாலைகளும் பெருக உண்டாயின. படிப்படியாக மக்கள் தொகையும், செல்வ வாணிக வகைகளும் பெருகவும் சோழ வேந்தருட் சிலர் காவிரிப் பூம்பட்டினத்தையும் அரசிருக்கை நகரமாகக் கொள்ளலாயினர். அதனால் அகநாட்டு வெளிநாட்டு வாணிகங்கட்கு வேண்டிய அரசியற் காப்பும் எளிதின் இயன்றது அரசியலின் சிறப்பும் மக்களின் மதிப்பும் கடற்கப்பாலுள்ள கீழை நாடுகட்கும் மேலை நாடுகட்கும் இனிது விளங்கத் திகழ்ந்தன. நாளுக்குநாள் காவிரிப்பூம்பட்டினம் மக்கட் பெருக்கம் சிறந்து நகரமாய் வளர்ந்து வருவதுகண்ட சோழ வேந்தர் அதனை அழகிய முறையில் அமைக்கக் கருதினர். கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாக நகரம் பெருகத் தலைப்பட்டமையின், கடற்கரைப் பகுதியை பல்வகை வாணிகத்துக்கும், உட்பகுதியை அரசிருக் கைக்குமாக வகுத்து, கீழ்ப் பகுதியை மருவூர்ப் பாக்கம் எனவும், மேலைப் பகுதியைப் பட்டினப்பாக்கம் எனவும் பெயரிட்டனர். இவ்விரண்டிற்கும் இடையில் பெரிய வெளியிடம் அமைத்து அதன்கண் பல்வேறு பூஞ்சோலைகளும் பூம்பொழில்களும் பெருமரக்காக்களும் மன்றங்களும் நிறுவி அழகு செய்தனர். அதனால் காவிரிப் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் எனப் பெயர்கொண்டு விளங்கிற்று. நாள் செல்லச் செல்ல மருவூர்ப் பாக்கத்தில் வேயா மாடமும், வியன்கல இருக்கையும், யவனர் இருக்கையும், பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் நுண்வினை செய்யும் காருகர் இருக்கையும், முத்தும் மணியும் பொன்னும் ஆகியவற்றால் அணி பல செய்யும் ஆய்வினையாளர் இருப்பும், கூலம் குவித்த கூலவீதியும், கஞ்சகாரர். செம்பு செய்குநர், மரங்கொல் தச்சர், கருங்கைக் கொல்லர், கண்ணுள் வினைஞர், மண்ணீட்டாளர், பொன்செய் கொல்லர், துன்னகாரர் முதலிய பல்வேறு தொழிலினர் வாழும் தெருக்களும், இசை வகையில் வல்ல பெரும்பாணர் இருப்பும் இடம் பெற்றன. பட்டினப்பாக்கத்தில் கோவியல் வீதி, கொடித் தேர் வீதி, பீடிகைத் தெரு, பெருங்குடி வணிகர் பிறங்கும் வீதி, மறையவர் இருக்கை, வேளாளர் வீதி, ஆயுள் வேதரும் காலக் கணக்கரும் பிறரும் வாழும் பெருமனை மறுகுகளும், சூதர், மாகதர், வேதாளிகர், கண்ணுளர், கணிகையர் முதலியோர் இருக்கைகளும், கடும்பரியாளர், களிற்றின் பாகர், நெடுந்தேர் ஊரும் வயவர், பெரும் படை மறவர் முதலியோர் உறையும் தெருக்களும் சிறந்து விளங்கின. இரண்டிற்கும் இடை வெளி யிடத்தில் நாளங்காடியும், பூத பீடிகை, பலி பீடிகை, வச்சிரநாட்டுக் கொற்றப்பந்தர், மகதநாட்டுப் பட்டிமண்டபம், அவந்தி வேந்தன் தோரணவாயில், மயன் செய் மண்டபம் முதலி யனவும், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம், என்ற ஐவகை மன்றங்களும், பிறவா யாக்கைப் பெரியோன் கோயில், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில், வாலியோன் கோயில், நீலமேனி நெடியோன் கோயில் முதலிய கோயில்களும் கோட்டங்களும் அறவோர் பள்ளிகளும் பிறவும் இருந்தன. வணிகர் பல்கி வாழும் இக்காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வாணிகரும் உள்நாட்டு வணிகரும் என்று இருபெரும் பிரிவினர் உண்டு. அவருட் கடல் வாணிகரை நாய்கர் எனவும் மற்றையோரைச் சாத்துவர் எனவும் பண்டையோர் குறித்தனர். இவருள் செல்வப் பெருக்கால் சிறந்தவர்களைப் பரத குமரர் என வேந்தர்கள் தம்மோடு ஒப்பவைத்துப் பேணினர். நாடாட்சி மேற்கொள்ளாது பொருளாட்சி யொன்றையே விரும்பி நின்றமையின், இவ்வணிகரினத்தை அரசர்க்கு அடுத்த நிலையில் முறைப்படுத்தித் தமிழ்ச் சான்றோர் தகுதிப் படுத்தினர். இவர்களை "அரசர் பின்னோர்" என்று சிறப்பிப்பது நூல் மரபாயிற்று. அதனால் வணிகர்க்குப் பொருளும் அதனைக் காத்தற் பொருட்டுப் படையும் உரியவாயின. அகநாட்டவர்க்கு வேண்டப் படும் பொருள் வகை பல வாதலின், அவற்றை விற்போரும் பலராவர். பல்வகைப் பண்டங்களையும் மக்கள் இனிது பெறற் பொருட்டு, அவ் வணிகர் பலரும். ஒரு கூட்டமாய் நாட்டில் உலாவருவர். அக் கூட்டத்துக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வணிகர் சாத்துவர் எனப்பட்டனர். அவர்களில் செல்வமிக்கோரைச் சாத்தப்பன் என்றும், பிறரைச் சாத்தன் என்றும் பிற்காலத்தவர் குறித்து வழங்கி னர். இன்றும் அம் மரபு மறவாமையால் மக்கட்குச் சாத்தப்பன் என்று பெயரிடப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் வணிகருள் கி.பி முதல் நூற்றாண்டில் மாநாய்கன் என்று ஒருவன் வாணிகத்தால் பெருஞ் செல்வம் எய்திச் "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கருத்தால் இரவலர்க்கு ஈந்து இறவாப் புகழ்பெற்று விளங்கினான். அவனை, இளங்கோவடிகள், "மாக வான் நிகர்வண்கை மாநாய்கன்" என்று சிறப்பிக்கின்றார். அவனுக்குக் கண்ணகி என்றொரு மகள் பிறந்து மாண்புற வளர்ந்து வந்தாள். பொன்னிறமும் கொடி போன்ற மேனியுமுடையவளாய், உயர் குலப்பெண் மக்கட்குரிய கற்பும் பொற்பும் ஒருங்கமைந்து இனிய குணஞ் செயல்களால் யாவரும் பாராட்டிப் பரவும் மேன்மையுடன் விளங்கினாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் கண்ணகியைக் கண்ட மகளிர் பலரும் அவளைப் புகழ்ந்து ஏத்தினர்; அதனை, " போதிலால் திருவினாள் புகழுடை வடிவு என்றும் தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ" என்று இளங்கோவடிகள் எடுத்துரைக்கின்றார். அக்காவிரிம் பூம்பட்டினத்தில் உண்ணாட்டு வணிகர் தலைவனாய் விளங்கிய மாசாத்துவான் என்ற பெருஞ்செல்வ வணிகனுக்குக் கோவலன் என்ற ஒரு மகன் இருந்தான். அம்மா சாத்துவானை, "பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்" என்றும், "வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் " என்றும், "இருநிதிக் கிழவன்" என்றும் சான்றோர் பாராட்டினர். அவன் மகனான கோவலன் உரிய பண்பும் கட்டாண்மையும், செவ்வேள் போன்ற மேனியழகும் உடையவன்; இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் நன்கு பயின்று மேம்பட்டவன்; கூத்திலும் இசையிலும் அவன் தனித்த புலமை வாய்ந்தவன். கண்ணகிக்கு பன்னிரண்டு வயதும் கோவலனுக்குப் பதினாறு வயதும் நிரம்பினமை கண்ட பெற்றோர், தம்மிற் கலந்து பேசி நன்னாளில் பட்டினத்துப் பெருமக்கள் பலரும் அறியத் திருமணம் செய்தனர். மணமக்கள் இருவரும் பெருங் காதலாற் பிணிப்புண்டு ஒருவர்க் கொருவர் உயிரும் உடம்புமாய் இயைந்து இனிதிருந்தனர் கண்ணகிபால் பெருங்காதலுற்று ஒழுகிய கோவலன், அவளுடைய குண நலங்களை வியந்து, " மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும் பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமுதே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை" என்று பாராட்டி இன்புற்றான். சின்னாட்களுக்குப்பின் இருவரையும் தனிப் பெரும் வீடொன்றில் இருந்து இல்வாழ்க்கை நடத்துமாறு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். கோவலன் தாய், அவர்கள் புதுவதின் நடத்தும் இல்வாழ்வுக்கு வேண்டும் பொன்னும் பொருளும் ஏவலரும் வழங்கிச் செல்வக் குறைபாடு தோன்றாவண்ணம் எல்லாவற்றையும் நிறைவுறச் செய்தமைத்தாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்ற அறம் பலவும் இருவரும் இனிது ஆற்றி, ஒக்கலும் சுற்றமும் ஒருங்கு பாராட்டத் தமது இல்வாழ்க்கையை நடத்தி வந்தனர், அன்பரது அன்பு வாழ்வு தோற்ற முதல் முடிவு காறும் ஒரு நெறியாக இயலுவதில்லை; இடையிடையே அவலமும் கவலையும் கையறவும் தோன்றி அவர்களைப் பிரித்தும் வேறுபடுத்தும் அலைப்பது இயல்பு. "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நண்பகல் அமையமும் இரவும் போல வேறு வேறு இயலவாகி மாறெதிர்ந்துள" எனச் சான்றோர் கூறுவர். இம்முறையில் கண்ணகியும் கோவலனும் அன்பால் மனமொத்து நடத்திய இல்வாழ்விலும் இவ்வலைப்புகள் தோன்றத் தலைப்பட்டன. அவர்கள் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திராபதி என்ற நாடக மகள் வாழ்ந்து, அரசிளங்குமரரும் வாணிகச் செல்வரும் பாராட்டும் சிறப்புப் பெற்றிருந்தாள். அவளுக்கு மாதவி யென்ற பெயருடைய மகள் ஒருத்தியுண்டு. நாடக மகளிர்க்குக் கூறப்படும் பிறப்பு முறையில் ஒரு குறையுமின்றி இனிது இயன்ற குடியாதலால் மாதவியை, " சிறப்பில் குன்றாச் செய்கையோடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை, தாதவிழ் புரிகுழல் மாதவி" என்று இளங்கோவடிகள் சிறப்பித்துக் கூறுவர். அவள் ஐந்து வயதிலிருந்து ஏழு ஆண்டுகள் இயற் கல்வியும் இசை நாடகக் கல்வியும் பயின்று, பன்னிரண்டாம் வயதில் தான் கற்ற நாடகக் கல்வித் திறனை நகர மக்கட்குக் காட்டும் செவ்வி எய்தினாள். நாடக மகளாதலின், மாதவிக்கு நாடகத்துக்கு வேண்டிய ஆடல் பாடல் அழகு என்ற முத்திறக் கலைகளும் நன்கு கற்பிக்கப் பட்டன. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் துறைகள் முறையே நினைவுப் பயிற்சியும் சொன்னலமும் உடல் வளர்ச்சியும் குறித்தன வாதலால், தமிழ் முன்னோர் ஆண் பெண் இரு பாலர்க்கும் இவற்றைக் கற்பிப்பது கடனாக கொண்டனர். நாடக மகளிர்க்கு இசையும் கூத்தும் ஏற்புடைய தொழிலாதலின், மாதவிக்கு நாடகக் கல்வி நன்கு தரப்பட்டது. நாடகத்தின் உறுப்பாகிய இசைக்கு இசையாசிரியனும், இசைக்கு இன்றியமையாத யாழ், தண்ணுமை, குழல் முதலிய கருவிகளை இயக்கும் ஆசிரியர்களும், ஆடல் வகை பலவும் கற்பிக்கும் ஆடலாசிரியர்களும் அந்நாளில் பெருகியிருந்தனர். இவர்களை ஆதரிக்கும் வகையில் செல்வப் பெருமக்களின் செல்வம் பெரிதும் பயன்பட்டமையின், இசை நாடகக் கலைகள் மிகவும் பரந்துபட்டு விளங்கின. மாதவியும் இயல்பாகவே உடலழகும் இனிய குரலும் வாய்க்கப்பெற்று, அவற்றிற்கேற்ப இசை நுட்பங் களையும் ஆடல் வேறுபாடுகளையும் நுண்ணிதின் உணரும் கூரிய அறிவும் உடைய வளாயிருந்தனள். அதனால் அவளுடைய ஆடலும் பாடலும் அழகும் மிகச் சிறந்த நிலையில் வளர்ந்து ஓங்கி நிற்கக் கண்ட சித்திராபதியும் ஆசிரியர்களும், நாடாளும் வேந்தர் காண அவளுடைய திறமையை அரங்கேற்றம் செய்ய எண்ணினர். நாடகம் அரங்கேறுதற்கெனச் சில விதி முறைகள் உண்டு. அவ்வாறே நாடக மேடை யமைத்து வேந்தன் இசைவு பெற்றுக் குறித்த நாளில் மாதவியை அரங்கேற்றினர். இசைக் கருவிகள் அவள் ஆடல் பாடல்களுக்கு ஏற்ப இசைத்தன. சுருங்கச் சொல்லின், " குழல்வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே; முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை" என்று சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. அப்போது, மாதவி அரங்கின் மேல், "பொன்னியல் பூங்கொடி" போலத் தோன்றி, "நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து" தன் கலைப் புலமையை அரங்கிற் கூடியிருந்த வேந்தரும் செல்வரும் வியக்குமாறு காட்டினள். அவளுடைய புலமை நலத்தை நயந்து நோக்கிய சான்றோர். " எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்ணான்கும் பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் -மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடலரங்கில் வந்து" என்று நற்சான்று வழங்கினர். வேந்தனும் அவட்குத் தலைக்கோலி என்னும் பட்டப் பெயர் தந்து பாராட்டி, "இவள் விரைவில் மகள் அல்லள்" ஆதலால் இவளை உரிமை கொள்பவர் பொன் ஆயிரத்தெண் கழஞ்சு பரிசம் தரல் வேண்டும்" என வரையறை செய்து அதற்கு அறிகுறியாகப் பொன் மாலை யொன்று நல்கிச் சிறப்பித்தான். மாதவியின் கலைப்புகழ் நகரமுற்றும் பரவிற்று, மகள் பெற்ற மாண்புகழ் கண்டு மகிழ்ச்சி மலிந்த சித்திராபதி, அம் மாலையைப் பணிப் பெண்களில் ஒருத்தியான கூனியின் கையில் ஈந்து இந்நகர நம்பியர் திரிதரும் தெருவில் நின்று இப் பசும்பொன் "மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு" எனக் கூறுமாறு ஏற்பாடு செய்தாள். பெருங்குடி வணிகர் செல்வப் பெருமகனான கோவலன் கண்டு கூனி கூறிய அளவிற்றாகிய பொன் தந்து மாலையை வாங்குமாற்றால் மாதவியைத் தனக்கு உரியளாக்கினான். அவளும் அவன்பால் பெயராப் பெருங்காதல் கொண்டாள்; அதனால் அவனும் அவள்பால் விடுதல் அறியா விருப்பினனாயினன். நாட்கள் பல கழிந்தன. கோவலன் செயல் அவன் பெற்றோர்க்கும் மற்றையோர்க்கும் மிக்க வருத்தத்தை விளைவித்தது. குடிக்கு ஒருபெரும் தலை மகனாதலின், உற்றாரும் உறவினரும் அவனை நெருங்குதற்கு அஞ்சி வாளா இருந்தொழிந்தனர். கண்ணகி எய்திய வருத்தத்துக்கு எல்லையில்லை. ஆயினும் அதனை அவன் பெற்றோரும் பிறரும் அறியா வகையில் நன்கு மறைத்தொழுகினாள். கணவன் இல்லாத போது கற்புடை மகளிர் தம்மை அணி செய்து கொள்வது முறையன்மையின், கண்களுக்கு மை தீட்டுவதையும் நெற்றியில் திலகம் இடுவதையும் கை விட்டாள்; கூந்தலுக்கு எண்ணையிட்டுச் சீவி முடிப்பதில்லை; கணவனது பிரிவு தன் நெஞ்சின் கண் நின்று பெரிதும் வருத்திற்றாயினும், அது மாமனார் மாமியார் முதலாயி னார்க்குத் தெரியா வண்ணம் பொய்யாகப் புன் முறுவல் செய்து அவர்கள் மனம் மகிழச் செய்தாள். அவள் மங்கலவணி தவிரப் பிற அணிகளைக் களைந்து காலில் சிலம்பணிவதையும் நீக்கிவிட்டாள். இல்லிருந்து மகிழ்வோர், அறவோர்க்கு அளித்தல், துறவிகளைப் பேணுதல், விருந்தோம்புதல் ஆகிய நல்லறங்களைச் செய்வதற்கு உரியர். கோவலனாகிய தன் கணவர் பிரிந்த போது அவன் மனைவி யாகிய தான் தனியே அவற்றைச் செய்தல் ஆகாமையால் அவள் உள்ளம் மிகவும் வருந்திற்று. மாதவி மனையில் வாழ்ந்த கோவலனுக்கு, மணிமேகலை என்றொரு பெண் அம்மாதவி வயிற்றிற் பிறந்தாள். அவட்குப் பெயரிடும் நன்னாளில் அவன் வழங்கிய கொடையைப் பெறுதற்கு வந்தோருள் முதியவனான வேதியன் ஒருவனை மதயானை யொன்று பற்றிக்கொள்ள, கோவலன் சரேலென அதன்மேற் பாய்ந்து அதன் மதவெறியை யடக்கி அவ்வேதியனை உய்வித்தான், அவனது அருட் பெருஞ் செயலை நகரவர் புகழ்ந்து பாராட்டினர். பார்ப்பன மடந்தை யொருத்தி தான் வளர்த்த கீரிப் பிள்ளையை அறியாது கொன்ற பாவம் நீங்க, கோவலன் அவள்பால் இரங்கி வேண்டுவன வுதவி, அவளுடைய பாவச் செயல் கண்டு வெறுப்புற்று நீங்கிய அவள் கணவனை அவளுடன் கூட்டி மனை வாழ்க்கைக்கு வேண்டிய செல்வங்களையும் அளித்து வாழச் செய்தான் பிறிதொருகால் பத்தினிப் பெண்ணொருத்திமேற் பெரும் பழி எய்துவித்தல் குறித்துப் பொய்க்கரி கூறிச் சதுக்கப் பூதத்தால் ஓர் இளைஞன் கொல்லப் பட்டானாக, அவன் தாய் வருந்திய புலம்புலைக் கண்டு கோவலன் கழிபேரிரக்க முற்று அவட்கும் அவள் சுற்றத்துக்கும் பெரும் பொருள் உதவிப் பல்லாண்டு வாழ்வித்தான். இங்ஙனம் கோவலன் செய்த நற்செயல்களால் அவற்கு மிக்க புகழ் எய்தக் கேட்டுக் கண்ணகியின் உள்ளம் களித்தது. எனினும் அவன் தன்னோடு உடனுறைவதின்றி மாதவியிடமே ஒழுகியது கண்ணகிக்கு மிகுந்த வருத்தம் பயந்தது. கண்டார் இகழ்வன வற்றையே காதலன் செய்தாலும் குலமகள் அவன், தன்னை மனைவியாகக் கொண்டவன் என்ற ஒரு காரணம் பற்றி அவனையே நினைந்து வாழ்வர். அதனால் கண்ணகியும் கோவலனையே நாளும் நினைந்து நலிந்துருகினாள். ஒருகால் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெற்றது. அஃது இருபத்தெட்டு நாள் நடப்பது வழக்கம். ஒருநாள் கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் சென்று அங்குள்ள கானற் சோலையில் தங்கி இன்புற்றனர். அப்பொழுது இருவரும் யாழேந்தி இனிய பாட்டுக்களைப் பாடினர். அப்பாட்டுக்களின் பொருள் இருவர் உள்ளத்திலும் கருத்து வேற்றுமை பிறப்பித்தது. கோவலன் உள்ளம் குழம்பித் தடுமாற்ற மெய்தி மாதவியைப் பிரிந்து தன் மனையகம் நோக்கி வருவானாயினன். இதற்கிடையே ஒருநாள் கண்ணகி ஒரு தீக்கனவு கண்டு மனம் கலங்கித் தன் தோழியான தேவந்தி என்பவட்கு அதனைக் கூறினாள். அத்தேவந்தி நாடோறும் புகார் நகரத்துச் சாத்தன் கோயிற்குச் சென்று அவற்கு வழிபாடாற்றும் இயல்பினளாவள். அவள் சாத்தனார் முன்னின்று "கண்ணகி நல்லாளுக்கு ஒரு குறையுண்டு; அது விரைவில் நீங்குதல் வேண்டும்" என வேண்டிக் கொண்டு வந்தாள். வந்தவள், கண்ணகியை அன்புடன் வாழ்த்தி "பெறுக நின் கணவன்" என்று சொன்னாள் அவட்கு கண்ணகி கண்கலங்கி நீர் துளிக்க, "தேவந்தி யானும் என் கைப்பிடித்த கணவனும் ஒரு பெருநகர்க்குச் சென்றேம்; அங்கே ஊரவர் அவர் மேற் பெரும் பழி யொன்றைக் கூறினர்; அதனால் அவற்கொரு தீங்கு உற்றது கேட்டு, அந்நகர்க் காவலன் முன்னே சென்று, அவன்பால் குற்றமின்மை கட்டுரைத்தேன். அதன்பின் அக்காவலனுக்கும் ஊர்க்கும் பெருந்தீங்கு உண்டாயிற்று; யானும் திடுக்கிட்டுக் கண்விழித்துக் கொண்டேன். 'உரையார் இழித்தக்க காணில் கனா' என்பது பற்றி யாரிடமும் உரையாது உறை வனாயினேன்" என்று சொன்னாள். அவளைத் தேவந்தி தேற்றி, "நீ பழம்பிறப்பில் உன் கணவற்குக் செய்தற்குரிய நோன்பு ஒன்றில் தவறினாய்; காவிரி கடலொடு கலக்கும் துறையில் சூரியகுண்டம் சோமகுண்டம் என இரு குளங்கள் உள்ளன. அவற்றுள் மூழ்கி அருகே இருக்கும் காமவேள் கோட்டத்துக்குச் சென்று வழிபாடு செய்தால், நீங்கின கணவனை மகளீர் பெறுவர்; மறுமை யுலகத்தும் கணவனொடு பிரிவின்றி உறைவர்" என்று இயம்பினாள். கணவனை யல்லது பிற தெய்வங்களைக் கைதொழுதல் கற்புடைய மகளிர்க்கு ஒவ்வாத ஒன்று என்பது தமிழர் கற்புநெறி. அந்நெறியைக் கைப்பிடித் தொழுகுபவளாதலின், கண்ணகி அவள் கூறியது கேட்டு, "அது பீடன்று" என வாளா இருந்தொழிந்தாள். சிறிது போதில் கோவலன் கண்ணகியிருந்த நெடுமனைக்கு வந்து பள்ளியடைந்தான். அவன் மனத்தில் கலக்கமும் முகத்தில் தெளிவின்மையும் விளங்கக் கண்ட கண்ணகியார் வேறு ஒன்று உரையாமல், உள்ளத்தில் அன்பு பெருக முகத்திலும் கண்ணிலும் முறையே மலர்ச்சியும் குளிர்ச்சியும் கொண்டு இன்னுரை வழங்கி வரவேற்றாள். கோவலன் கண்ணுக்குக் கண்ணகியின் பசந்த நுதலும் மெலிந்த மேனியும் பொற்புடைய ஓவியம் புகைபடிந்து தோன்றுவது போலக் காட்சிதந்தன. அவன் பெரிதும் வருந்திச் " சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக் குலம்தரும் வான் பொருட்குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு" என்று எடுத்துரைத்தான். கண்ணகியின் நலம் குன்றியதையோ தான் அவளைப் பின்னால் பிரிந்திருந்ததையோ மொழியாமல் பொருட்குன்றம் தொலைந்ததையே எடுத்துக் கூறியது கண்ணகிக்கு அவன் பொருட் குறை பற்றி வந்துள்ளான் போலும் என்ற எண்ணம் தோன்றியது; உடனே, "என்பால் சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். அவன் பெரிதும் மனம் நொந்து, தான் தெளிவாகக் கூறாமைக்கு வருந்தி, "கண்ணகி, யான் கூறுவது கேள்; இச்சிலம்பை முதலாகக் கொண்டு இதுகாறும் யான் தொலைத்த அணி கலங்களையும் இழந்த செல்வங்களையும் மதுரை மாநகர்க்குச் சென்று ஈட்டக் கருதுகின்றேன்; என்னோடு வருக" என்று இசைத்தான். தான் பன்னாள் தனிப்பப் பிரிந்திருந்த ஆருயிர்க் கணவர் தன்பாற் போந்து தன்னோடு பிரிவின்றிக் கூடியிருக்கு மாற்றால் வருக என அழைத்ததும், கண்ணகிக் குண்டான கரை கடந்த உவகையால் மறுமாற்றம் கூறாது உடன் செல்ல ஒருப்பட்டு எழுந்தாள். அன்றிரவு முற்பகுதி நிலவும் பிற்பகுதி இருளும் கொண்டது. நிலவு மறையக் காரிருள் பரந்த விடியற் காலையில் கோவலன் கண்ணகியைக் கூட்டிக் கொண்டு நகர வாயிலைக் கடந்து திருமால் கோயிலை வலம் செய்து, புத்தசைத்தியத்து இந்திர விகாரம் ஏழையும் கடந்து, சயின சிலாதலத்தைத் தொழுது கொண்டு இலவந்திகையின் எயிற்புற மாகச் சென்ற காவிரியின் வடகரை யடைந்து அதன் வழியாக மதுரை நோக்கிப் போவானாயினன். ஒரு காவதம் சென்றதும் ஒரு சமண்பள்ளி தோன்றக் கண்டு அதனையடுத்துள்ள பூமரப் பொதும்பை இருவரும் சேர்ந்தனர். அந்நிலையில், கண்ணகி, வழி நடந்த களைப்பால் சிறிது அயர்வு போக்கி, கோவலன் முகம் நோக்கி, உவகை மிகுதியால் நாணம் தலைக்கொண்டு குறுமுறுவல் பூத்து, "மதுரை மூதூர் யாது?" என வினவினள். அவனும், "நமது நாட்டிலிருந்து ஆறைந்துகாதம் உளது; சேய்த்தன்று; அணித்தே" என்றுசொல்லி நகைத்தான். பின்பு அப்பள்ளியின் சிறையகத்தே இருந்த கவுந்தியடிகளைக் கண்டு இருவரும் தொழுதனர். அடிகள் அவர்களை நோக்கி, " உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர், என்னோ? உறுகணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறு" எனக் கேட்டார், கோவலன். உண்மையைக் கூறமாட்டாமையால். "அடிகளே, யான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. மதுரைக்குச் சென்று பொருளீட்டும் விருப்பத்தால் வருகின்றேன்" என்றான். அது கேட்டு கவுந்தியடிகள், செல்லும் வழியின் அருமையையும் கண்ணகியின் மென்மைத் தன்மையையும் எடுத்துச் சொல்லி விளக்கினார். கோவலன் செல்வதே கருத்துடையனாய் நின்றான். சிறிது போதில் கவுந்தியடிகள் தெளிவுற்றுக் காடிடையிட்ட நாடு செல்லுதல் அவள் செவிக்கு அரிது; அறிகுநகர் யாரே? உரியதன்று; ஒழிக என ஒழியீர். "தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்குப் போக வேண்டும் என்னும் எண்ணம் எனக்கும் உண்டு. யானும் வருகின்றேன்; வருக" எனச் சொல்லவும், கோவலன் மிக்க மகிழ்வுற்று, "அடிகள்; நீரே அருளுதிராயின், கண்ணகிக்கு உற்ற துயர் நீர்த்தேனாவேன்" என்று உவகை வுரைத்தான். பின்பு, கவுந்தியடிகள் துணையாய் நின்று நெறி காட்டக் கண்ணகி கோவலர்கள் அவரைப் பின் பற்றி நடக்கலுற்றனர். நாளுக்கொரு காவதமாக அவர்கள் நடந்து சென்று சின்னாட் குப்பின் திருவரங்கத்தை அடைந்தனர். காவிரியாற்றின் நடுவில் மரம் பல செறிந்து விளங்கும் திருவரங்கத்துப் பூக்கள் மலிந்த சோலை யொன்றில் தங்கினர். அவ்விடத்தே சயினசமயத்துச் சாரணர் இருந்து அறம் உரைக்கும் சிலாதலம் ஒன்று இடம் பெற்றிருந்தது. சிறிதுபோதில் அவண் சாரணர் சிலர் தோன்றி, " கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய் ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை; இட்ட வித்தின் எதிர்வந் தெய்தி ஓட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா; கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்" என்று சொல்லி, அவர்கள் சமயத்தின் முதல்வனான அருக பரமேட்டியின் சிறப்புக்களைப் பல படியாகப் புகழ்ந்து ஓதினர். அது கேட்டுத் தொழுதெழுந்த கவுந்தியை, "பாவம் தருபாசம் கவுந்தி கெடுக" என்று வாழ்த்திவிட்டு அவர்கள் சென்றனர். பின்பு கவுந்தி யடிகள் கோவல கண்ணகிகளோடு நீரணி மாடம் எனப்படும் படகேறிக் காவிரியாற்றைக் கடந்து, அதன் தென்கரையில் உள்ள உறையூர் என்னும் பேரூரைச் சார்ந்த பூம்பொழில் ஒன்றில் தங்கினர். சிறிதுபோது கழிந்ததும், ஒழுக்கக் குறைவினரான ஆடவன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும் அவ்விடத்துக்கு வந்தனர். வந்தவர்கள் கோவலன் கண்ணகியாகிய இருவரையும் பார்த்துக் கவுந்தியைத்தொழுது,"காமனும் இரதியும் போல விளங்கும் இவர்கள் யாவர்?" என்று கேட்க, காமனும் இரதியும் தேவராவர்; இவ்விருவரும் மக்களினத்தவர் விளங்குவாராய, "மக்கள் காணீர் மானிடயாக்கையர்" என்று கவுந்தியடிகள் விடை கூறினார். மக்கள் என்றது தான் பெற்ற மக்கள் என்றும் பொருள் படுமாதலால், அவர்கள், "ஒருதாய் வயிற்றிற் பிறந்த ஆணும் பெண்ணுமாகிய இருவர் கணவனும் மனைவியுமாக இயைவது உண்டோ?" என இகழ்வது போலக் கேட்டனர். அதனால் சினமுற்ற கவுந்தி, "முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக?" எனச் சபித்தார்; அவர்கள் உடனே நரியாகி ஊளையிட்டனர். அவர்களுடைய நிலையைக் கண்டதும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் மனதில் மிக்க இரக் கமுண்டாயிற்று. அவர்கள், கவுந்தியை நோக்கி, "நெறியின் நீங்கிய இவர்கள் நீர்மையல்லன மொழிந்தனர்; அதற்குக் காரணம் அவர்களது அறியாமை; தங்களை அறியாது குற்றப்பட்ட இவர்கட்கு உய்திக் காலம் உரைத்தருள்க" என வேண்டினர். பன்னிரண்டு திங்கள் இவ்வாறு இருந்து வருந்திப் பின்னர் முன்னையுருவம் பெறுக" எனச் சாபவிடை கூறினர். அவ்விடத்தினிறும் புறப்பட்டு அவ்வுறையூரில் உள்ள அருகன் கோயிலைத் தொழுது வணங்கி, அங்கே நன்மக்கட்குத் திருவரங்கத்தில் சாரணர் தோன்றியுரைத்த நன்மொழிகளை உரைத்து, அன்றிரவு அங்கே தங்கினர். மறுநாள் விடியலில் எழுந்து தென்றிசை நோக்கிச் செல்வாராயினர். சிறிது தூரம் சென்றதும் கிழக்கில் ஞாயிறு தோன்றி வெம்மை செய்யவே ஆங்கே தோன்றிய இளமரக்காவில் இருந்தனர். அவ்விடத்தே குடமலை நாட்டு மாங்காடு என்னும் ஊரிலிருந்து மறையோன் ஒருவன் பாண்டிநாடு கடந்துவந்து கொண்டிருந்தவன், பாண்டியன் புகழை வாழ்த்திக் கொண்டு அவன் வந்து சேர்ந்தான். அவனைக் கண்டு கோவலன், அவன் வரலாறு கேட்டு முடிவில் மதுரை மூதூர்க்குச் செல்லும் வழிகூறுமாறு வேண்டினான். அவன் மதுரைக்குரிய வழி மூன்று என்றும், அவற்றுள் ஒன்று தென்னவற்குரிய சிறுமலைத் தொடரை வலங் கொண்டு செல்வது என்றும், ஒன்று திருமாலிருஞ் சோலைமலை வழியாகச்செல்வது என்றும் சொல்லி அவ்வழியே சென்றால் அக்குன்றத்தில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தியென மூன்று பொய்கைகள் உண்டு; அவற்றுள் மூழ்கினால் இந்திர வியாகரணம், முற்பிறப்புண்மை, இட்ட சித்தி எய்தலாம் என்றும், மூன்றாவது ஊரிடையிட்ட காடுபல கொண்டது; அவ்வழியில் உறையும் தெய்வம் செல்வோர்க்குச் சிறந்த துணையாய் உதவும் என்றும் சொன்னான். அவற்றைக் கேட்டதும், "மறையோய், யாங்கள் பொய்கைகளில் மூழ்க வேண்டுவதில்லை. காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ; யாங்கள் இவ்வழியே செல்கின்றோம்" என்று அவற்கு விடைகொடுத்து, அன்று பகல் முற்றும் அங்கே இருந்த ஊரிலிருந்து விட்டுப் புறப்பட்டனர். இவ்வாறு மூவரும் செல்கையில் ஒருநாள் கோவலன் ஒரு நீர் நிலையில் தனித்து நிற்பக்கண்டு, ஒரு தெய்வம், மாதவியின் தோழியாகிய வயந்தமாலை வடிவில் தோன்றிக் கோவலனை மாதவியை நினைந்து வருத்துதல் கருதி மயக்க முயன்றது; கோவலன் பாய்கலைப்பாவை மந்திரமொன்றைக் கூறலும் அத்தெய்வம் மனநடுங்கித் தன் குற்றத்தைச் சொல்லித் தன் செய்கையைக் கவுந்தியடிகட்கும் கண்ணகிக்கும் தெரிவிக்க வேண்டா என வேண்டிக்கொண்டு நீங்கிற்று. இந்நிகழ்ச்சியால் கோவலற்குக் கவுந்தியடிகளின் புண்ணியச் சிறப்பும் கண்ணகியின் கற்புப் பெருமையும் நன்கு விளங்கின. பின்பி மூவரும் வேட்டுவர் வழிபடும் கொற்றவையிருந்த கோயிற் சூழலையடைந்தனர். அக்காலையில் அங்கே ஆண்களும், பெண்களுமாக வேட்டுவர் கூட்டமொன்று அக்கொற்றவைக்கு வழிபாடு செய்தல் வேண்டி வந்துசேர்ந்தது. அவர்களின் வழிபாட்டு நிகழ்ச்சியில் தெய்வமுற்ற சாலினி முற்போந்து கணவனோடிருந்த கண்ணகியைப் பார்த்து, "இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென் தமிழ்ப் பாவை செய்ததவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி" என்று உரைத்தாள். அது கண்டு பலரும் வியந்து நோக்க, நாணம் மிகுந்த கண்ணகி கோவலன் முதுகின் புறத்தே மறைந்து "பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி" என்று மொழிந்து முறுவலித்தாள். பின்பு வேட்டுவர் தம்முடைய சிறுகுடிக்குச் சென்று சேர்ந்தனர். கவுந்தியடிகள் கண்ணகியின் வாட்டம் கண்டு கோவலனை நோக்கி, "இக்கடுவெயிலின் வெம்மையைக் கண்ணகி பொறாள்; கற்கள் நிறைந்த நெடு வழி நடந்து பயின்றவளல்லள்; இந்நாடு செங்கோல் வழாது தென்னவர் காக்கும் திருநாடு; ஆகலின், இங்கே மாவும் மாக்களும் புள்ளும் பிறவும் எவர்க்கும் தீங்குசெய்யா; அதனால் பகலில் தங்கி இரவுப்போதில் நிலவொளியில் செல்வோம்; இரவில் செல்வதற்கு ஏதம் யாதும் இல்லை; என்றாள். அது கேட்டு இருவரும் இசைவு தெரிவிக்க அன்றைய பகற்போது கழிந்தது. மாலைவரவும், "மலயத்து ஓங்கி மதுரையில் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றல்" மன்றல் கமழ்ந்து தண்ணிலவைப் பொழிய மூவரும் வழி நடக்கலுற்றனர். பொழுது விடியவும் ஞாயிறெழுந்து வெயிலொளியைப் பரப்ப, இருவரையும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊர்க்கண் இருத்திக் கோவலன் கடன் கழிப்பது குறித்து வெளியே சென்றான். சென்றவிடத்தில் கோசிகன் என்ற ஓர் அந்தணன் மாதவி கொடுத்த ஓலையொன்றை அவனிடம் தந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலனைக் காணாத அவன் பெற்றோர் அவனைத் தேடிக் கொணருமாறு ஏவலரை விடுத்து வருந்தியதும், உறவினரும் ஊரவரும் பெருந்துயர் உழந்ததும் கூறினான். பின்பு கோவலன் அவ்வோலையை நோக்கி மாதவி விடுத்ததே எனத் தேர்ந்து, அவ்வோலையைப் படித்து மாதவிபால் குற்றமின்மையும் தனது தவற்றையும் உணர்ந்து ஒருவாறு தேறி, "இந்த ஓலையான் என் பெற்றோர்க்கு எழுதும் முறையில் பொற்புற அமைந்துள்ளது; ஆகவே இதனை என் பெற்றோரிடம் சேர்க்க" எனக் கூறி அவற்கு வழிவிட்டான். கோவலன், பின்பு கவுந்தியோடிருந்த கண்ணகியிடம் அடைந்து இருக்கையில் அங்கே பாடும் பாணர் சிலர் வரக்கண்டான். அவர்கள் பாடிய இசையில் ஈடுபட்டு இனிய உரையாடி, "மதுரை நகர் இன்னும் எவ்வளவு தூரத்தில் உளது" என்று வினவினான். அவர்கள், அப்போது வீசிய தென்றலின் இனிமையை விதந்து, மதுரையில் வாழும் வேளாளர் வணிகர் அரசியற் செல்வர் அந்தணர் முதலியோருடைய மனைகளில் எழும் பல்வேறு புகையின் மணம் கலந்து, பாண்டி வேந்தன் பெருமனையில் புகைக்கப்படும் கலவைக் கூட்டத்து நறுமணம் விரவிப் " புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர்" என்று உரைத்து, "நனிசேய்த்தன்று திருமலி மூதூர்" என்று சொல்லி இன்புறுத்தி, விடைபெற்று நீங்கினர். பின்பு கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் வழக்கம் போல் நடந்து மதுரையருகே வையை யாற்றின் வடகரைக்கண் புறஞ்சேரியை நெருங்கினர். இடையே பல்வகைப் பூக்கள் மிதந்து வரச்செல்லும் வையை யாற்றைக் கண்டு, 'புனல் யாறு அன்று இது பூம்புனல்யாறு" எனச் சொல்லக் கோவலனும் கண்ணகியும் அவ்யாற்றைத் தொழுது மகிழ்ந்தார்கள். வையையின் வடகரையில் நின்றவர்கள், குதிரை, யானை, சிங்கம் முதலியவற்றின் முகம் பொறித்த படகுகள் இயங்கும் நீர்த்துறையைக் கண்டு, அதனை விலக்கி, வேறொரு புணை இயங்கும் துறையை யடைந்து அதன்மேல் ஏறி மூவரும் ஆற்றைக் கடந்து அதன் தென்கரையைச் சேர்ந்து பூம்பொழிலும் தெங்கும் வாழையும் கமுகும் ஆகிய பல்வகைச் சோலைகளும் சூழ்ந்த புறஞ்சேரியை யடைந்து அங்கே அறம்புரி மாந்தர் வாழும் தவப்பள்ளி சென்று சேர்ந்தனர். அந்நிலையில் வைகறை எய்தவும் கழனிகளிலும் சோலைகளிலும் உறையும் புள்ளினம் சிலைக்க கோழிச் சேவல் எழுந்து கூவ, ஞாயிறு கிழக்கில் எழுந்து தோன்றிற்று. கோவலன் கவுந்தியடிகளைத் தொழுது 'யான் மதுரை நகர்க்குட் சென்று மன்னர் பின்னோராகிய வணிகர்களைக் கண்டு என் நிலையை உணர்த்தி வரக் கருதுகிறேன். யான் திரும்புங்காறும் கண்ணகி உங்கள் பாதுகாப்பினளாதல் வேண்டும் " என்று கூறுபவன், தனது பழைய வரலாற்றைக் குறிப்பாய்ச் சுட்டி வருந்தினான். கவுந்தியடிகள் அவன் மனம் தெளியும் வண்ணம் அறிவுரை கூறி இராமன், நளன் முதலியோர் வரலா றுகளைச் சுட்டிக் காட்டித் தேற் றினார். கோவலனும் அவள்பால் விடைபெற்றுக் கொண்டு மதுரைநகர்க்குட் புகுந்து பலவேறு வீதிகளையும் வணிகர் இயல்பையும் வாழ்வோர் வாழ்க்கை அமைதிகளையும் கண்டு கொண்டு புறஞ்சேரி திரும்பினான். கோவலன் கவுந்தியடிகளைக் கண்டு வணங்கி மதுரைநகரின் மாண்பையும் மன்னனாகிய பாண்டியனுடைய வெற்றிச் சிறப்பையும் விளம்பினான். அப்போழ்து, தலைச் செங்கானத்து மறையவனான மாடலன் தென் குமரி சென்று நீராடி வருபவன் வழிநடை வருத்தம் தீரக்கவுந்தி யுறையும் இடத்துக்கு வந்தான். அவனைக் கோவலன் வணங்கினான். தலைச் செங்கான மென்னும் ஊர் காவிரிப்பூம் பட்டினத்துக்கு அண்மையிலுள்ள தாகலின், அம்மாடலன் கோவலனை நன்கு அறிந்திருந்தான். அவன் கோவலன் மாதவியோடிருந்த காலையில் செய்த நல்லறங்களை எடுத்துச் சொல்லி " இம்மைச் செய்தன யான் அறிநல்வினை உம்மைப் பயன்கொல் ஒரு தனி யுழந்து இத் திருத்தகு மாமனிக் கொழுந்துடன் போந்தது விருத்த கோபால நீ என" விளம்பினான். அந்நிலையில், கோவலன் தான் கண்டதொரு தீக்கனவைக் கூறி வருந்தினான். அந்நிலையில், கவுந்தியும் மாடலனும் கோவலனைத் தேற்றி, "இவ்விடம் துறவிகட்கல்லது மனையறம் பூண்ட மக்கள் இருத்தற் குரிய தன்று. இப்பகற் பொழுது கழிவதன் முன் நகரம் புகுந்து வணிகர் மனை யொன்றைக் கண்டு தங்குதற்கு வழிசெய்க" என உரைத்தனர். அந்நிலையில், புறஞ் சிறையிலுள்ள இயக்கி கோயிற்குச் சென்று பால் மடை கொடுத்து வழிபட்டு வரும் மாதரி என்னும் ஆயர் முதுமகள் ஒருத்தி அவண் போந்து கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். அவளைக் கண்டதும், கவுந்தி அவள்பால் கண்ணகியைக் கையடைப்படுக்கக் கருதி "ஆகாத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையில் கொடுமையில்லை; மாதரியும் தீதிலள்; முதுமகள்' அவள்பால் கண்ணகியை இருத்துவது நன்று;' எனத் தனக்குள் எண்ணித் துணிந்து, அவளை நோக்கி, "மாதரி, கேள், இவளுடைய கணவனான இக்கோவலன் தந்தை பெயரைக் கேட்கின், இவ்வூர்ப் பெருவணிகர் இவர்களை விருந் தேற்றுக் கடி மனைப்படித்துவர். அதுவரை, இவளை நினக்கு அடைக்கலம் தந்தேன். இவளை நீராட்டி, கண்கட்கு மைதீட்டி, கூந்தலிற் பூச்சூட்டி, தூய ஆடை யுடுப்பித்து, ஆயமும் காவலு மாவதுடன் தாயும் நீயேயாகித் தங்குதல் வேண்டும். இவளோ தன் சீறடி மண்மகளறியாத செல்வக் குடியிற் பிறந்து வாழ்க்கைப்பட்டவள். இன்துணை மகளிர்க்கு இன்றியமையாத கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்; தவத்தோர் தரும் அடைக்கலம் சிறி தாயினும், அதனால் விளைவது மிகப் பேரின்பம். இனி நீடித்திராது இவர்களைக் கொண்டு செல்க" என்றாள். மாதரியும் மிக்க மகிழ்ச்சியுடன் இருவரையும் தான் வாழும் இடைச்சேரிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே, கவுந்தியடிகள் பணித்தவாறே கண்ணகியை நீராட்டிச் சீராட்டித் தன் மகள் ஐயை என்பவளைக் காட்டி அவளை அடித் தொழிலாட்டியாகக் கொள்க என உரைத்து, பொழுது மறையுமுன் உணவுகொள்ளும் ஒழுக்கமுடையரென நினைந்து, அடிசில் ஆக்குதற்கென ஓர் இடம் வகுத்து, உணவு சமைத்தற்கு வேண்டும் கலங்களையும் காய்கறிகளையும் தந்து சிறப்பித்தாள். கண்ணகியும் நன்முறையில் சமைத்துக் கோவலனை உண்பித்தாள். உணவு கொண்ட கோவலனுக்குக் கண்ணகி மிக்க அன்புடன் வெற்றிலைபாக்குத் தந்தாள். கண்ணகியின் முகமலர்ச்சியும் அன்புக் கிளர்ச்சியும் கோவலனுக்குப் பேரின்பத்தை விளைத்தன. அதே சமயத்தில், கண்ணகியைக் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து கால் கடுக்க நடத்தியே கொண்டு வந்த தன் செயலையும் அவன் நினைத்தான்; அவன் மனம் பெரிதும் வருந்தியது. தன்னை நொந்து கொண்டான். கண்கலங்கக் கண்ணகியைத் தன் அருகே இருத்திக் கூந்தலைக் கையால் நீவி, " இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்; வழுவெனும் பாரேன்; மாநர் மருங்கு ஈண்டு எழுக என எழுந்தாய்; என் செய்தனை! என" மனமார வுரைத்து மறுகினான். கண்ணகியும் மனத்திண்மை கரைந்து அவனையின்றித் தனிந்திருந்த தன் வாழ்வை நினைத்து சுருங்கிய சொற்களால், "இல்லிருந்து அறவோர்க்களித்தல் முதலிய நல்லறங்களைச் செய்யும் வாய்ப்பிழந்து மனைக்கண் தனித்திருந்த என்னை நின் தந்தையார் உள்ளத்தே மிக்க அன்போடு நோக்கியும் அருள் நிறைந்த மொழிகளை வழங்கியும் பாராட்டினர். என் மனநோயும் துன்பமும் அவர்கட்குப் புலனாகாவாறு மறைத்துப் பொய்ம்முறுவல் செய்தேன்; அது கண்டு அவர் பெருந்துன்பம் உழந்து பேதுற்றார். அங்ஙனம் அவர்களெல்லாம் வருந்த, நீங்கள் போற்றா ஒழுக்கமே பூண்டிருந்தீர்கள். எவ்வகையிலும் உங்கள் பால் வைத்த என் உள்ளத்தை ஒரு சிறிதும் மாற்றாத வாழ்க்கையில் இருந்தேன்; அதனால், எழுக என்று சொல் வந்தவுடன் அதனை ஏற்று எழுந்தேன்" என்று கூறினாள். அச்சொற்கள் கோவலன் வருத்தத்தை ஓரளவு மாற்றின. அவனுக்குக் கண்ணகி பால் கரை காணாக் காதலன்பு பொங்கிப் பெருகிற்று; அவன் மனத்தில் நிறைந்திருந்த அவலமும் கவலையும் அறவே நீங்கின; அன்பும் ஆர்வமும் அவன் உணர்வு முற்றும் கவர்ந்தன. அதனால், அவன் கண்ணகியுடன் இனிய உரையாடி அன்று மண அமளிமேல் இருந்து பாராட்டிய நிலையை எய்தி, " நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக என்னோடு போந்து என்துயர்களைந்த பொன்னே கொடிய புனைபூங்கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி" என்று பாராட்டி மகிழ்ந்தான். பின்பு, மதுரைக்குப் புறப்படுங்கால், "சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்" என்று கூறிய வாறே கண்ணகியின் காற்சிலம்புகளில் ஒன்றை வாங்கிக் கொண்டு மதுரை நகர்க்கு புறப்பட்டான். செல்லுங்கால் கண்ணகியைத் தனியே விடுத்துச் செல்வதற்கும் தன்னிலையினை நினைத்தும் வருந்தின கோவலன், எதிரே திமில் ஏறு ஒன்று தீக்குறியாக வந்ததனை நினையாது போய்க் கொண்டிருக்கையில் பீடிகைத் தெருவில் பலர் பின் தொடர வரும் பொற் கொல்லனைக் கண்டு அவன்பால் தன் சிலம்பைக் காட்டி விலைபிட்டுத் தருமாறு கேட்டான். இஃது அரசமாதேவிக்கல்லாது பிறர்க்கு யாப்புறவு இல்லை' என்று சொல்லி, அவனைத் தன் மனைக்கண் இருத்தி வேந்தன் திருமுன் சென்று கோவலனைக் கள்வன் என அவன் மனங்கொள்ளுமாறு ஏற்பன சொல்லிக் கொலை யாணை பெற்று வந்து கொலைஞர்க்கு அவனைக் காட்டிக் கொடுத்தான். அவர்கள் அவனது உருவம் திருவும் குறியும் கண்டு ஐயுற்று உரையாடுகையில் அவருள் கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனைச் சரேலென வாளாற் கொன்றொழித்தான். உடனே இச்செய்தி காட்டுத் தீப்போல் நகரெங்கணும் பரந்தது. கண்ணகியிருந்த ஆய்ச்சேரியில் சில துர்நிமித்தம் கண்டு ஆயர் குரவைக் கூத்து ஆடலுற்றனர். அப்பொழுது மாதரி நீராடற்கு ஆற்றுக்குச் சென்றவள் அங்கே மதுரையிலிருந்து வந்த ஒருத்தி கோவலன் கொலையுண்ட செய்தியைத் தெரிவிக்கக் கேட்டுப் பெரிதும் வருந்தி விரைந்து போந்து கண்ணகிக்கு அதனைக் குறிப்பாய்த் தெரிவித்தாள். கண்ணகி பதைபதைத்துத் துடித்து வீழ்ந்து; அலறினாள்; கதறினாள்; கண்ணீர் ஆறாகப் புலம்பினாள், " இன்புறு தம்கணவர் இடர்எரி யகம்மூழ்கத் துன்புறுவன நோற்றுத் துயருறும் மகளிரைப்போல் மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலம் கொண்டு அழிவலோ நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்து ஏங்கித் துறைபல திறமூழ்கித் துயருறும் மகளிரைப்போல் மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனெனும் மடவோய் யான் அவலங்கொண்டு அழிவலோ தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்கும் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவரிழைப்ப இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி யழிவலோ." என்று வாய்விட்டு அரற்றினாள். சிறிது தேறி, சூழ்ந்து நின்ற ஆய்மகளிரை நோக்கி, "ஆய் மகளிரே, எல்லோரும் கேண்மின்" என்று சொல்லி, ஞாயிற்றை நோக்கி, "காய் கதிர்ச் செல்வனே, கள்வனோ என் கணவன்?" என்று கனன்று கேட்டாள். "நின் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்று கொன்ற இவ்வூர்தீக்கு இரையாகும்" என்றொரு குரல் அக்கூட்டத்தில் எழுந்தது. பின்பு, கண்ணகி தன்பால் இருந்த மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்திக்கொண்டு விரைந்து மதுரை நகர் பெருவீதிக்குட் சென்று, ஓவெனக் கதறிக் கண்ணீரும் கம்பலையுமாக வரும் அவளை அங்கே உறையும் நன்மகளிர் தத்தம் மனைவாயிலில் நின்று நோக்குவது கண்டாள். "மதுரையில் வாழும் பத்தினிப் பெண்களே, கேண்மின்: என்காற்சிலம்பைக் கவர்ந்துகொள்ளும் பொருட்டு என் கணவனைக் கள்வனென்று கொலை செய்து விட்டனர்; என் கணவன் கள்வன் அல்லன்; இதோ, இப்பெண்கள் காணக் கொலைக்களம் சென்று என் கணவனைக் கண்டு அவன் வாயின் நல்லுரை கேட்கப்போகின்றேன்" என்று கதறிப் புலம்பிக் கட்டுரைத்தாள். அவள் நிலைகண்ட மகளிர் அனைவரும், "இவட்கு இப்பெருந் துயரம் உண்டாகுமாறு நமது மன்னவன் செங்கோல் வளைந்து விட்டதே! செங்கையில் பொற்சிலம்பு ஏந்தித் தெருவில் திரிந்து வரும் இவள் தெய்வமோ?" எனச் சொல்லித் துயருற்றனர். சூழ்ந்து வரும் மக்கள் காட்டக் கண்ணகி நேரே கொலைக்களம், கண்ட டைந்தாள். பொழுதும் மறைந்தது; மாலையிருளும் வந்து மயங்கு வதாயிற்று. கொலையுண்டு கிடக்கும் கோவலன் உடலைக் கண்டதும் கண்ணகி கொண்ட துயரத்துக்கு எல்லையில்லை. அவன் உடல் மேல் விழுந்தாள்: புரண்டாள்; அதனைத் தழுவிக்கொண்டு கல்லும் புல்லும் கண்டு உருகுமாறு வாய்விட்டுப் புலம்பினாள். "என் துயர் கண்டும் இவள் இடர்ப்படுகின்றாளே என்று சொல்லு கின்றீரில்லை; உடலெல்லாம் புழுதி படிந்திருப்பது காண்கின்றேன்; உங்கள் நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ?" என்றாள். சுற்று முற்றும் நோக்கினாள். ஒருவரும் இல்லாமை கண்டு வருந்தினாள்; கோவலன் உடலம் குருதி தோய்ந்து மண்படிந்திருப்பது கண்டு மனந் துடித்தாள். "செங்கோல் தவறியதென்னவன் மதுரையில் பத்தினிப் பெண்டிரோ, சான்றோர்களோ, தெய்வங்களோ, ஒன்றும் இல்லையோ?" என்று சொல்லிக் கொண்டு, அவன் தலையை உடலோடு சேர்த்துத் தழுவிப் பிடித்தாள்; ஒருவகை மயக்கம் தலைப் பட்டது. கோவலன் ஒளி விளங்கும் மேனியுடன் தோன்றி, அவள் கண்ணீரைத்துடைத்து "முழு மதி போன்ற நின்முகம் கன்றியது, காண்' என்று சொல்லி, "இரு " எனக் கையால் அமர்த்தித் தேவர் கூட்டம் சூழ விண்ணகம் சென்றான். கண்ணகி மனம் தெளிந்து, "மாயங்கொல் மற்று என் கொல்? தெய்வம் மருட்டிற்றோ? இனி எங்கே போய் நாடுவேன்" என்று வாய்வெருவினாள். இனிக் கோவலன் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தைத் துடைப்பது முதற்கடன் எனத் துணிந்தாள். வேந் தனைக்கண்டு வழக்குரைத்து உண்மையை வெளிப்படுத்தன்றி வெறிதே போகேன்" என்று நேரே வேந்தன் அரசு வீற்றிருக்கும் இடம் நோக்கிச் சென்றாள். நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு ஏது? கண்ணகி சென்ற போது, அரசமாதேவி தீக்கனா ஒன்று கண்டு உள்ளம் நடுங்கி வேந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். கண்ணகி சென்று, வாயிலோனைக் கண்டு "கணவனையிழந்தவள் ஒருத்தி கையிற் சிலம்பேந்திய வண்ணம் வந்திருக்கின்றாள் என்று முறை திறம்பிய நின் வேந்தர்க்கு மொழிக" என்று கண்களில் தீப்பொறி பறக்க மொழிந்தாள். அவளுடைய தலைவிரிகோலத்தையும் கனற்றும் கண்களையும் வெடிக்கும் சொற்களையும் நோக்கி, கொற்றவையோ என அஞ்சி வேந்தனுக்குரைத்துக் கண்ணகியையும் வேந்தன் திருமுன் கொண்டு நிறுத்தினான். தேவி கண்ட தீக்கனவு கேட்டு மனம் தெளிவின்றி யிருந்தானாயினும் பாண்டியன் கண்ணகியைப் பார்த்து, "கண்ணீர் ஒழுக, என் முன் வந்த நீயார்? " என அவன் வினவவும், எனது ஊர் பூம்புகார்; அவ்வூரிலுள்ள மாசாத்து வாணிகன் மகனும், வாழ்தல் வேண்டி நின் மதுரை நகர்க்கும் புகுந்து என் காற்சிலம்பை விற்க முயன்று நின்பால் கொலைக்களப் பட்டவனுமாகிய கோவலன் மனைவியாவேன்; என் பெயர் கண்ணகி என்பது" என்றாள்.உடனே வேந்தன், "கள்வனைக்கோறல் கடுங்கோல் அன்று; வேந்தர் கோல் முறை" என்றான். "வேந்தே, பல கூறுவானேன்; என் காற்சிலம்பின் அரி மாணிக்கமணி" என்று கண்ணகி கூற, தென்னவன், ஆ எனக் கதறி, "யாம் உடைச் சிலம்பு முத்துடையது" என்று, பொற்கொல்லன் கோவலன் கையகத்தி லிருந்தது எனக் காட்டித் தந்த சிலம்பினைக் கொணர்வித்துக் கண்ணகி முன்வைக்க, அவள் அதனை எடுத்து ஓங்கி நிலத்தில் எறிந்து உடைத்தாள்; உடனே அதனுள் இருந்த மாணிக்கமணி வெளிப்பட்டு மன்னன் வாயில் தெறித்தது. உண்மை தெளிந்ததும் வேந்தன் தலை சுழன்றது; அவலம் மீதூர்ந்தது; உடல் தளர்ந்தான்; தான் செய்த பெரும்பிழையை எண்ணினான். அமைச்சர் சொல் கேட்டு அறம்புரிய வேண்டியதான அது செய்யா தொழிந்த குற்றம் அவன் நெஞ்சினை இடித்தது. "பொன்செய்கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்; யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல், என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்' என்று சொல்லிக் கீழே வீழ்ந்தான்; அவன் உயிரும் உடனே நீங்கிற்று. அருகில் நின்ற அரசமாதேவி, "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என்று சொல்லி வீழ்ந்து உயிர் துறந்தாள். கண்ணகி, " காவியுரு நீரும் கையில் தனிச் சிலம்பும் ஆவிகுடிபோன அவ்வடிவம் -பாவியேன் காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டு அஞ்சிக் கூடலான் கூடாயினான்" என்று மொழிந்து, கோப்பெருந்தேவியை நோக்கி, " அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம் என்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே- பொல்லா விடுவினையே செய்த வயவேந்தன் தேவி கடுவினையேன் செய்வதூஉம் காண்" என்று சொன்னாள். அதனோடு அவளுடைய சினம் தணியவில்லை. வீழ்ந்து கிடக்கும் தேவியைப் பார்த்து, " கோவேந்தன் தேவி கொடுவினையாட்டியேன் யாவும் தெரியா இயல்பினேன்; ஆயினும் முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்." என்று இசைத்து, உள்ளத் தெழுந்த வெகுளித்தீ உருத்துவர, " பட்டாங்கு யானும் ஓர்பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஓழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய் நீ" என்று தெழித்து, நகரமக்களை நோக்கி, "என் காதலனைத் தவறு காட்டிக் கொலைசெய்த இக்கோநகரைச் சீறினேன்; ஆதலால் யான் தவறுடையேனல்லேன்" என வருந்தி யுரைத்துத் தன் இடமார்பைத் திருகி எரிந்தாள். நகரிடத்தே உடனே தீயெழுந்தது. அது கண்டு, "தீயே, பார்ப்பார்; அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி என்ற இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்று சொல்லி அவ்விடத்தினின்றும் நீங்கினாள், அவள் கூறிய இடமெல்லாம் தீயெழுந்து சூழ்ந்தது. இவ்வாறு எழுந்த தீ அரசன் அரண்மனை வாயிலை நெருங்கிற்று. அரசனும் தேவியும் இறந்ததை அறியாது அறக்களத்து அந்தணரும் காவிதி மந்திரக்கணக்கரும், அரண்மனை மாக்களும் மகளிரும் மனம் கலங்கிச் செயலற்றொழிந்தனர். செய்வகை தெரியாது கண்ணகி கணவன் பிரிவாற்றாமல் புலம்பியவண்ணம் தெருக்களில் திரியக் கண்ட பெருமனை நன்மகளிர், "இவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? இந்நாட்டு இவ்வூரில் தன் கணவனை இழந்து வேந்தனையும் தன் காற்சிலம்பால் வென்று இவ்வூரில் தீமூட்டினாள்" என்று வியந்து கூறினர். அப்போது கண்ணகியுற்ற வருத்தத்தை, "மறு கிடைமறுகும் ; கவலையிற் கவலும்; இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்" என்று இளங் கோவடிகள் இரங்கிக் கூறுவர்." நகரவீதியில் நள்ளிரவில் திரியும் கண்ணகிமுன் மதுரை நகரத் தெய்வம் தோன்றி, அவள் சினம் தணியத்தக்க சொற்களையும் அவளுடைய முற்பிறப்பு வரலாற்றையும் எடுத்துரைத்து, "உம்மை வினைவந்து உருத்த காலைச் செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது" என்று தெளிவித்து, "இனி, பதினான்கு நாள் எல்லை கழிந்தபின் வானோர் வடிவில் நின் கணவனைக்காண் பாய்" என்று சொல்லவே, "என் கருத்தில் உறையும் கணவனைக் கண்டபின்னன்றி, யான் இருத்தலும் இல்லேன்; நிற்றலும் நில்லேன்" எனக் கதறிக் கொண்டே சென்று மதுரைக் கொற்றவையின் கோயிலைக் குறுகி, வாயிலில் தன்பொற் றொடியை உடைத்தெரிந்துவிட்டு, "கீழ்த்திசை வாயில் கணவ னொடு புகுந்தேன்; மேற்றிசைவாயில் வறியேன் பெயர்கின்றேன்'' என்று சொல்லி வையைக் கரையைத் தொடர்ந்து செல்வாளாயினள். மேடு என்றும் பள்ளமென்றும் நோக்காது கண்ணீரும் கம்பலையுமாய் இப்போது சுருளிமலை யென வழங்கும் நெடுவேள் குன்றம் ஏறி "அங்கே ஒரு வேங்கைமர நிழலையடைந்தாள். இந்நிலையில் மதுரைத் தெய்வம் கூறிய பதினான்கு நாள் எல்லை கழிந்தது. மாலைப்பொழுது நெருங்கவும் "கணவனைக் கண்டு கைதொழும் நாள் இது" என எண்ணி நின்றபோது, வானத்தினின்றும் தோன்றிய தேவர்களிடையே கோவலன் வரக்கண்டு வழிபட்ட கண்ணகி அவனோடே வானவூர்தி ஏறி விண்ணுலக கடைந்தாள். இந்நிகழ்ச்சியை அக்குன்றத்தில் வாழும் குன்றவர் கண்டு குரவையாடி அவளை வழிபட்டனர். அவ்விடத்தே சேர மன்னனான செங்குட்டுவன் மலைவளம் காணும் விருப்பால் தன் தேவியுடன் வந்தானாக, அவற்கு அவர்கள் தெரிவிப்ப, அவனோடு இருந்த தண்டமிழ் ஆசானான சாத்தனார் மதுரை நிகழ்ச்சி முற்றும் விரியக் கூறினார். பாண்டியனைப் பாராட்டி, கண்ணகி பாண்டிமாதேவி என்ற இருவருடன் நின்னால் வியக்கப்படும் நலத்தோர் யார்?" என்று அவன் தன் தேவியை நோக்கிக் கேட்க, அவள், "காதலன் துன்பம் காணாது கழிந்த பாண்டிமாதேவி வானத்தும் பெருந்திருவுறுக; நம் நாடு போந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்" என்றாள். அவள் சொல்லியவாறே செங்குட்டுவன் வட நாடு சென்று செருக்கினால் தமிழரை இகழ்ந்து பேசிய வடவரை வென்று இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையாற்றில் நீராட்டி அங்கே போர்தொடுத்துத் தோற்ற வேந்தர் முடிமேல் வைத்துக் கொணர்ந்து, கண்ணகியின் திருவுருவத்தை அதன் கண் பொருந்தச் சமைவித்தான். " கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்தனன்." " தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து."  29. துறவி மணிமேகலை கோவலன் மதுரை நகர்க்கண் கொலைக்களப் பட்டதும், கண்ணகி பாண்டிவேந்தன்பால் வழக்குரைத்து அம்மதுரையைத் தீக்கிரையாக்கியதும், சேரநாடு சென்று விண்ணுலகு புகுந்ததும் தமிழகமெங்கும் பரவின. அச்செய்தி காவிரிப் பூம்பட்டினத்தை எட்டியதும், கோவலன் காதலி யாகிய மாதவி, அந்நகர்கண் இருந்த புத்தப் பள்ளியில் அறவண அடிகள் என்ற பௌத்த சான்றோர் பால் போதியறம் கேட்டுத் துறவு பூண்டாள். அவட்குக் கோவலன் பாற் பிறந்த மணிமேகலை என்னும் மகள் ஆடல் பாடல் அழகு என்ற கலைகளில் சிறந்து விளங்கினாள். ஆண்டு தோறும் நடைபெறுவது போல் காவிரிப்பூம் பட்டி னத்தில் இந்திர விழா நடைபெற்றது. நகர வீதிகள் நன்கு அழகு செய்யப்பட்டன. பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவைவிளக்குகளும் தெருக்களில் சிறப்புற்றன. குலைக்கமுகும், குலைவாழையும், கரும்பும் பல்வேறு கொடி வகைகளும் மனை வாயில்களில் கட்டப்பட்டன. தெருக்களிலும் மன்றங்களிலும் பழமணலை நீக்கிப் புதுமணல் பரப்பினர். எல்லாக்கோயில்களிலும் விழாவும் பூசையும் இனிது செய்யப்பட்டன. சமய வாதிகளும் அறிவுரையாளர்களும் ஆங்காங்குக் கூடியிருந்து சமயவாதமும் அறிவுரையும் நிகழ்த்தினர். இசைக் கழகங்களில் இன்னிசையும் நாடக அரங்குகளில் பல்வகை கூத்தும் நடைபெற்றன. எங்கும் யாவரும் செற்றமும் சினமும் மறந்து இன்ப அன்புறவு கொண்டு மகிழ்தனர். இசை நாடகச் சிறப்புக்களில் தலைக்கோற் பட்டம் பெற்ற மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் கலந்து கொள்ளவில்லை. அதனால் நகரத்தவர்க்குப் பெரியதோர் ஏமாற்றம் உண்டாயிற்று. பலரும் பலவேறு வகையிற் பேசிக்கொண்டனர். ஊரவர் கூறுவது கேட்டு மனம் பொறாத மாதவியின் தாயான சித்திராபதி வயந்தமாலை யென்னும் அவள் தோழியை, நோக்கி "நீ மாதவிபாற் சென்று அவள் இந்திர விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஒடுங்கியிருப்பது பற்றி ஊரவர் அலர் கூறுகின்றனர் என உரைத்து வருக" எனச் சொல்லிவிடுத்தாள். அவள் மாதவியும் மணிமேகலையும் மலர் மண்டபத்தில் இருப்பதறிந்து அங்கே சென்று கண்டாள். அங்கே மாதவி புத்த சமயத் துறவுக்கோலம் பூண்டு விரதங்களால் வாடிய மேனியுடன் இருப்பது கண்டதும் வயந்த மாலைக்கு வியப்புண்டாயிற்று. " காலக் கணிதமும் கலைகளின் துணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறை போகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்தென்று" ஊரவர் அலர் கூறுவது நயமுடையதன்று" என்று அவள் மாதவிக்கு எடுத்துரைத்தாள் அது கேட்ட மாதவி வருத்தமுற்று, "நங்காய், என் காதலனான கோவலன் எய்திய கடுந்துயர் கேட்டு உடனுயிர் துறவாது இருந்ததனால், என் நாணம் முற்றும் துறந்தேன்; ஆகவே, யான் நற்றவம் பூண்டது நாணுடைத்து என ஊரவர் கூறுவது வெற்றுரை" என்று சொல்லி, கண்ணகியின் கற்பு நலத்தைப் பலபடப் பாராட்டி, "மாபெரும் பத்தினிக்கு மகளான மணிமேகலையை அருந்தவப் படுத்துவதல்லது வேறு செய்வதற்கில்லை; அவளும் நாடக மகளிர்க்குரிய செய்கையை மேற்கொள்ளாள்; யானும் அறவண அடிகளையடைந்து அறம் கேட்டு உய்தி பெற்றேன்; இதனை ஏனை நாடகமகளிர்க்கும் சித்திராபதிக்கும் செப்புக" என்று விடுத்தாள். வயந்தமாலையும், பெறலரும் மாமணியைக் கடலில் வீழ்த்தோர் போன்று கையறவுபட்டுச் சென்றாள். மாதவி வயந்தமாலையுடன் உரையாடிய போது மணிமேகலை ஒரு மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள். மாதவி, கண்ணகி கோவலர்களைப் பற்றிக் கூறியது கேட்டதும், மணிமேகலைக்கு நெஞ்சு துயர் கூர்ந்து கண்ணீர் பெருகி அவள் தொடுத்த மலர்களை நனைத்தது. அதுகண்ட மாதவி, மணிமேகலையைத் தழுவி உச்சி மோந்து, 'மகளே, நின் கண்ணீர்பட்டு நீ தொடுத்த மாலையின் தூத்தகை ஒழிந்தது; மலர் வனம் சென்று தூய மலர்களை நீயே எடுத்து வருக" என உரைத்தாள். அங்கே மணிமேகலைக்குத் தோழியான சுதமதி யென்பவள் அதனைக்கேட்டு, 'மணிமேகலையின் மதிமுகத்து நீலமலர் போலும் கண்கள் உகுக்கும் கண்ணீரைக் கண்டால், காமனும் தன் வில்லையும் அம்பையும் எறிந்து விட்டு மனம் நடுங்கி வருந்துவன்; ஆடவர் அவளைக் காணின் அகலாது தொடர்வர்; மகளிர் தனித்துச் செல்வதால் வரும் தீங்குக்கு யானே ஓர் எடுத்துக்காட்டு; சண்பை நகரத்துக் கோசிகன் என்னும் வேதியன் மகளாகியயான் தனித்துப் பூக் கொய்யச் சென்றதுகண்டு மாருத வேகன் என்னும் விஞ்சையன் பாற்பட்டு இந்நகர்க்கண் அவனால் கைவிடப்பட்டேன்; ஆகவே, மணிமேகலை தனியே மலர் வனம் போதல் கூடாது; பூக்கொய்தற்கு உய்யானம், சம்பாதி வனம், கவேர வனம் ஆகிய இவை ஏற்றன எனினும், அவை முறையே பூதம் காப்பதும் தாக்கணங் குடைமையும் ஆகிய இயல்பின; " அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் பகவனது ஆணையின் பன்மரம் பூக்கும் உவவனம் என்பதொன்று உண்டு" என்று சொல்லி, அதனுள் ஒரு பளிக்கறை மண்டபம் உளது; அதற்குள் தூய மணியொளி திகழும் தாமரைப் பீடிகை ஒன்று இருக்கிறது. அதன்மேல் இட்ட அரும்பு வாடாது; மலர் வாடாது; பல்லாண்டு கழியினும் வண்டினம் அதனை மொய்யா; எந்தத் தெய்வத்தையேனும் நினைத்து மலரை அதன் மேல் இடின், அம்மலர் அத்தெய்வத்தின் திருவடியைச் சென்று சேரும். அது முன்னாளில் மயன் என்னும் தேவனால் பண்டு செய்து வைக்கப் பட்ட சீர்மையுடையது." ' அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்; மணிமேகலை யொடு மாமலர் கொய்ய அணியிகை நல்லாய் யானும் போவல்" என்று சொன்னாள். மாதவி, அது கேட்டு. " அங்ஙனமே செல்க" என்ன, சுதமதியும் மணிமேகலையும் உவவனம் நோக்கிச் செல்வாராயினர், மணிமேகலை தன் பிக்குணுக் கோலத்தோடு செல்லக்கண்ட புகார் நகரத்து மக்கள், அவளுடைய நடை, சாயல், மொழி முதலியவற்றின் நலங்களை வியந்து தம்முள் பாராட்டிக் கூறி வருந்தினர். குரவம், மரவம், குருந்து, கொன்றை, திலகம், வகுளம் , வெட்சி, நரந்தம், நாகம், புன்னை, பிடவம், தளவம், தாழை, குடசம், வெதிரம், அசோகம், செருந்தி, வேங்கை, சண்பகம், இலவம் முதலிய மரங்கள் நின்று பூத்துக் குலுங்கும் உவவனத்தைச் சுதமதி காட்ட மணிமேகலை கண்டு மனம் மிக மகிழ்ந்து மலர் கொய்வான் அதனுட் புகுந்தாள். இதற்கிடையே நகரின் ஒருபால் கால வேகமென்னும் யானை மதங்கொண்டு பாகர்க்கு அடங்காது மக்கட்கு அச்சத்தை உண்டு பண்ணிற்று. அரசன் மகனான உதயகுமரன் என்பான் அது தெரிந்து. யானையின் மதத்தை யடக்கிப் போக்கி, ஒரு தேர்மீது ஏறி நாடக மகளிர் வாழும் வீதிவழியாகச் சென்றான். ஒரு வீட்டில் எட்டி யென்னுஞ் சிறப்புப்பெற்ற செல்வன் ஒருவன் கையில் ஏந்திய யாழுடன் மயங்கிக் கிடந்தான். தேர்மீது சென்ற உதயகுமரன் சாளரத்தின் வழியாக அவனை நோக்கி "நினக்கு உற்றது யாது?" என, அவன் அவ்வழியாக மணிமேகலை உவவனம் நோக்கிச் சென்றது கூறி, அவளைக் கண்டதும் கோவலன் தீதுற்றமை நினைத்து வருத்த மிகுதியால் தன் கை யாழிள் பகை நரம்பைத் தொட்டுத் தடவியதால் தனக்கு மயக்க மெய்தியதென உரைத்தான். உதயகுமரன் மணிமேகலையைக் கண்டு தன் தேர்மீதிருத்திக் கொணர்வேன் எனச்சொல்லி உவவனம் நோக்கி வரலாயினன். உதயகுமரனது தேர் உவவனத்தின் வாயிலைக் குறுகுங்கால் அதன் மணியொலி மணிமேகலையின் செவியில் விழுந்தது. "உதயகுமரன் மணிமேகலை மேல் உள்ளம் வைத்து உறைகின்றான் என்று ஒரு நாள் சித்திராபதியோடு வந்த வயந்தமாலை என் தாயிடம் கூறினள்; அதனை யான் கேட்டேன்; இத்தேரொலி அவன் தேரினதாகலின், யான் என் செய்வேன்" என மணிமேகலை சுதமதிக்குச் சொன்னாள். அவள் உடனே மணிமேகலையைப் பளிக்கறையுட் போக்கி உள்ளே தாழிட்டுக்கொள்ளச் செய்து தான் அம்மண்டபத்தின் புறத்தே ஐந்து விற்கிடை ஒதுங்கி நின்றாள். அவண் போந்த உதயகுமரன் சுதமதியைக் கண்டு, மாதவர் உறையும் இடத்தினின்றும் நீங்கி இவ்வுவவனத்துக்கு மணிமேகலை வரக் காரணம் யாது?" என வினவவும் அச்சத்தால் உள்ளம் வெம்ப, உடல் வியர்க்கப் பெருமூச் செறிந்து நின்ற சுதமதி ஒருவாறு தேறி, " இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டியஉருவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?" என்று முன்மொழிந்து, மக்கள் யாக்கையின் சிறப்பிலாத் திறத்தை அவர்க்கு விளக்கிக் கூறமுற்பட்டு, " வினையின் வந்தது வினைக்கு விளைவாயது புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன் பால் உடையது மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்கோய். இதனைப் புறமறிப் பாராய்" என்று இனிய முறையில் எடுத்து மொழிந்தாள். அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கையில் உதயகுமரன் காண உள்ளிருக்கும் மணி மேகலையின் உருவம் பளிக்கறை வாயிலாகப் புறத்தே தெரிந்தது. அவன் உடனே விரைந்து பளிக்கறைக்குள் புகும் வாயில் காணாது பன்முறையும் அதனைக் காணமுயன்று, சுதமதியை நோக்கி, "மணிமேகலை எத்திறத்தாள்" என்றான். அவள், அவனைப் பணிந்து, "அரசே குன்ற மெறிந்த முருகவேள் போன்ற நின் அழகை நுகரும் தன்மையளல்லள்; ஊழ் வினையால் தவம் வாய்க்கப் பெற்று, பிறரைச் சபிக்கும் ஆற்றலும் உடையளாவள்" என்று மொழிந்தாள். அவன் முறுவல் பூத்து, "காலம்வரின் அவள் என் செவ்வியளாவாள்" என்று சொல்லி, "அராந்தாணத்துள், ஒரு விஞ்சையனால் இடப்பட்டவள் என நின்னைப் பலரும் கூறுவர். நீ இவ்விடத்துக்கு இம் மணிமேகலையுடன் எய்தியது யாங்ஙனம்" என்று கேட்டான். அவற்கு விடை கூறலுற்ற சுதமதி தன் வரலாற்றையும் தன்னைத் தேடிப் போந்த தன் தந்தை எய்திய துன்பத்தையும், தான் புத்த தருமத்தை மேற்கொண்ட இயல்பையும் விரியக்கூறி, அது முதல் புத்த சங்கத்தைச் சேர்ந்த மாதவி மனையில் இருந்து வருவதையும், அதனால் மணிமேகலையுடன் இவண் வந்தமையும் எடுத்துரைத்தாள். மணிமேகலை பால் கருத்திழந்து உணர்ச்சி மீதூர்ந்து நின்ற உதயகுமரன் தான் அவளைச் சித்திராபதி வழியாக அடையக்கூடும் என எண்ணியிசைத்து அவ்விடம் விட்டுப் பெயர்ந்தான். அவனது உணர்ச்சியையும் அவன் கருத்திலுள்ள எண்ணங்களையும் ஒருவாறு உணர்ந்து கொண்ட மணிமேகலை, " கற்புத் தான் இலள் நற்றவ வுணர்விலள் வருணக் காப்பிலள் பொருள் விலை யாட்டி" என்று எண்ணி,"என்னை அவன் இகழ்ந்து நோக்குகின்றானாகவும், என் உள்ளம் அவன் பின்னே செல்லுகின்றது; இது காமக் காதலுணர்வின் இயற்கை போலும்; இயல்பு அதுவாயின், என்பால் அது கெடுக" என்று சொல்லிச் சுதமதியோடு அங்கே நின்றாள். அந்நிலையில் காவிரிப்பூம்பட்டினத்து நடைபெறும் இந்திர விழாவைக் காண்டல் வேண்டி வந்த மணிமேகலா தெய்வம் அந்நகரத்துப் பெண்களில் ஒருத்தி போல் உருக்கொண்டு, பளிக்கறையின் உள்ளே இருக்கும் புத்த பீடிகையை வலங்கொண்டு நின்று, புத்தர் பெருமானை நினைத்து, " புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் முற்ற வுணர்ந்த முதல்வன் என்கோ காமற் கடந்தோய் ஏமமாயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ" எனப் புகழ்ந்து ஏத்துவாளாயினள். அப்பொழுது அந்திமாலை வந்தது. மேயச் சென்றிருந்த ஆனினம் கோவலர் பின்வர ஊர் புகுந்தன; அந்தணர் செந்தீப்பேணினர். மனைதொறும் மகளிர் மணிவிளக்கேற்றினர். யாழோர் மருதம் பாடக் கோவலர் குழலில் முல்லைப் பண்ணிசைத்தனர். எங்கும் இருள் பரந்தது. ஆயினும் சிறிது போதில் வெண்மதி யெழுந்து தண்ணிலவைப் பொழிந்தது. பொழுது மறைவது நினையாது உதயகுமரற்கு அஞ்சிநின்ற சுதமதி மணிமேகலை ஆகிய இருவரையும் கண்டமணிமேகலா தெய்வம், "இங்கு நிற்கின்றீர்களே; உங்கட்கு என் உற்றது?" என்று கேட்க, உதயகுமரன் கூறியவற்றை அவர்கள் உரைத்தனர். "அரச குமரன் மணிமேகலைபாற் கொண்ட வேட்கை தணிந்திலன்; இஃது அறவோர் வாழும் தவ வனமென்று அஞ்சி அகன்றனனாயினும், நீவிர் புறத்தே வீதியிற் செல்லக் காணின் விடான்; ஆதலால், இதன் மதிற்கண் உள்ள மேலைவாயிலில் சிறு புழை வாயிலாக மாதவர் மிக்குறையும் சக்கரவாளக் கோட்டம் சென்று சேர்வீராயின், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது; அங்கு நீவிர் போமின்" என்று மணிமேகலா தெய்வம் அறிவுறுத்திற்று. பின்னர்ச் சுதமதி கேட்ட தற்கு விடையாகச் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறலுற்றது. "இரவு நெடிதாயினும் யான் கூறுவதைக் கேண்மின்" என்று தொடங்கி அவ்வரலாற்றைக் கூறினாள். இருவர்க்கும் உறக்கம் எய்திற்றாக அத்தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு விசும்பு வழியாக மணிபல்லவம் என்னும் தீவுக்குக் கொண்டு சென்று ஓரிடத்தே வைத்து மறைந்தது. மறைந்த தெய்வம், நேரே காவிரிப்பூம்பட்டினம் போந்து உறங்கிக்கொண்டிருந்த உதயகுமரன் முன்னே தோன்றியது. இரவுப்போது கழிந்ததும் மணிமேகலையை என் கையகப்படுத்து வேன் என உறுதிகொண்டிருந்தான். அவனை நோக்கி, "மன்னவன் மகனே, மன்னுயிர் எல்லாம் மண்ணாளும் வேந்தன் தன் உயிராகும்! நீ தவத்திறம் பூண்ட மணிமேகலைமேல் வைத்த அவத்திறம் ஒழிக" என்று உரைத்து நீங்கிற்று. பின்பு அது, உவவனத்தில் உறங்கிக்கிடந்த சுதமதியை எழுப்பி, "சுதமதி, யான் மணிமேகலா தெய்வம்; இந்திர விழாவைக் காண இவ்விடம் போந்தேன்; மணிமேகலைக்கு புத்த பகவானது அறத்தின் வழிப்படும் செவ்வி எய்தினமையின் அவளை வஞ்சமேதும் இல்லாத மணி பல்லவத்தில் வைத்துளேன்; அவள் தன் பழம் பிறப்பை யுணர்ந்து கொண்டு இன்று ஏழாம்நாள் இங்கே வருவாள். இப்பேரூரவர்க்கு அவள் உருத்தெரியா தொழியினும் நீ அவளை நன்கு அறிந்துகொள்வாய்; யான் வந்ததும் மணிமேகலை புத்தநெறிக் குரியளானதும் நீ சென்று மாதவிக்குச் சொல்லுக; அவள் என்னை நன்கு அறிவாள்; அவள் மணிமேகலையைப் பெற்றுப் பெயரிட விரும்பியபோது கோவலன் அவட்கு என்னைப் பற்றிக்கூறி என் பெயரிட்ட அன்றிரவு யான் அம்மாதவி கனவில் தோன்றிக், "காமன் கையறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்று சொன்னேன்" என்று சொல்லி நீங்கிற்று. பொழுதும் விடிவதாயிற்று. சுதமதி அவ்விடத்தின் நீங்கிச் சக்கரவாளக் கோட்டம் புகுந்து அதன் அகன்ற வாயிலிடத்தேயுள்ள உலக வறவியின் ஒருபால் இருந்தாள். அப்போது அங்குள்ள தூண் ஒன்றில் எழுதப்பட்ட பாவையொன்று மக்களைப் போலப் பேசலுற்றுச் சுதமதியின் பழம் பிறப்பைக்கூறி, "இன்று ஏழாம்நாள் மணிமேகலை தன் பிறப்பையும் நின் பிறப்பையும் உணர்ந்துகொண்டு இவண் வருவாள்; அஞ்சுதல் ஒழிக" என்று சொல்லிற்று. அதுகேட்டு அச்சத்தால் நடுக்குற்ற சுதமதி ஞாயிறு கிழக்கில் எழக் கண்டு நகர வீதிகளின் வழியாக மாதவி மனைக்குச் சென்று நடந்தது முற்றும் நன்கு எடுத்து நவின்றாள். நன்பணி இழந்த நாகம் போல மாதவி துயருழந்தாள்; சுதமதியும் உயிர் பிரிந்த யாக்கைபோல உணர்வொழிந்திருந்தாள். மணிபல்லவத்தில் மணிமேகலை இருந்த இடம் புன்னையும் தாழையுமாகிய மரங்கள் செறிந்து, அவற்றின் புதுப்பூ உதிர்ந்து பரந்த மணலிடமாகும்; அருகே ஆழ்ந்த நீர்நிலைகளும், அலைகள் போந்து உலவும் கடற்கரையும் உள்ளன. நீர்நிலைக் கரையில் ஞாழல் மரம் நிற்க, நீரில் ஆம்பலும் குவளையும் மலர்ந்து விளங்கின. வெயிலின் கதிர் நுழையாவாறு இருள்படத் தழைத்துப் பந்தரிட் டாற்போன்றிருந்த அவ்விடத்தே உறங்கிய மணிமேகலை பொழுது விடியவும் துயிலெழுந்தாள். காலை ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பிக் கடலில் எழுதலும் மணிமேகலை சுற்றுமுற்றும் பார்த்து உவவன மருங்கில் ஓர் இடம் போலும் என நினைந்து தன்னொடு போந்த சுதமதியைக் காணாமல், " சுதமதி யொளித்தாய் துயரம் செய்தனை நனவோ கனவோ என்பதை அறியேன் மனம் நடுக்குறூஉம், மாற்றம் தாராய்; வல்லிருள் கழிந்தது; மாதவி மயங்கும்; எல்வளை வாராய், விட்டகன் றனையோ? விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள் கொல்லே, அறியேன் ஒருதனி அஞ்சுவேன்: திருவே வாஎன" உரைத்தும் வருந்தியும் வெறுத்தும் தான் இருந்த சூழல் எங்கும் சுதமதியைத் தேடித்திரிந்தாள். சுதமதியைக் காணாத தனிமையால் அவட்குத் துயரம் மிகுந்தது; ஆவென அலறினான்; கோவெனக் கூவினாள்; அழுதாள்; ஏங்கினாள். அவள் மனம் கலங்கலுற்றது. தந்தையாகிய கோவலனையும், தாய் கண்ணகியையும் நினைந்தாள்; நெஞ்சம் நீராய் உருகிற்று. " கோற்றொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுதனள்!" அங்ஙனம் அழுத மணிமேகலையின் கண்ணெதிரே புத்த பகவானது தரும பீடிகை தோன்றிற்று. மூன்றுமுழ வுயரமும் ஒன்பதுமுழ நீள அகலமும் அமைந்த சதுரப்பீடத்தின் நடுவில் மலர்ந்த தாமரை வடிவில் அமைந்த இருக்கை அமைந்திருந்தது, அதனால் அதனைப் பதுமப்பீடிகை என்று நூலோர் குறிக்கின்றனர். இப்பீடிகை இந்திரனால் சமைத்து இடப்பட்டது; இதன்மேல் நறுமணமுடைய பூக்களைப் பூக்கும் மரங்களல்லது பிற மரங்கள் பூச்சொரிவது கிடையாது. பறவைகளும் அதன்மேற் பறந்து தம் சிறகுகளை உதிர்ப்பதும் இல்லை. ஒருகால் நாகநாட்டு மன்னர் இருவர் அதனைக்கண்டு தமது என உரிமை கொண்டாடிப் போருடற்ற முற்பட்டனர்; அப்போது "போரை நிறுத்துக" என்று சொல்லிக் கொண்டு புத்த பெருமான் தோன்றி, "இஃது எமக்கு உரியது" என மொழிந்து அதன்மேல் இருந்து தமது அறத்தை உரைப்பாராயினர். அதனால் அது தரும என பீடிகை வழங்கி வருவதாயிற்று. அதனைக் கண்டதும் மணிமேகலைக்கு அவளை அறியாமலேயே இருகைகளும் தலைமேற் குவிந்தன; கண்களில் நீர் பெருகி முத்துப் போல் சொரிந்தது. அதனை மும்முறை வலம் வந்து நிலத்தில் வீழ்ந்து வணங்கினள். உடனே அவட்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்தவை நினைவிற்கு வந்தன. அவற்றைப் பீடிகை முன்னின்று முறையே கூறலுற்றாள்; காந்தார நாட்டு இடவயம் என்னும் நகரத்திலிருந்து அரசு செலுத்திய அத்திபதி என்பவனுக்கு மைத்துனன் பிரம தருமன்; அவன் புத்த தருமம் மேற்கொண்டு சிறந்த ஞானியாகத் திகழ்ந்தான்; ஒரு கால் அவன் அத்திபதிபாற் சென்று அறமுரைக்கும் போது, "அன்றை ஏழாம் நாளில் நிலனடுக்கம் ஒன்று தோன்றித் தலைநகரைச் சூழ்ந்து நானூறு யோசனைப் பரப்பை விழுங்கிவிடும்" என்று சொல்ல, அதனை நகரவர்க்கும் பறையறைவித்து அவ்வெல் லோரும் உடன்வர அத்திபதி அவந்தி நாட்டிற் குடியேறுவான் சென்ற காலை, வழியில் காயங்கரை என்னும் ஆற்றங் கரையில் தங்கியிருந்தான்; அப்போது அங்கே பிரம தருமன் தோன்றினானாக, அவற்கு அத்திபதியும் அவன் அமைச்சரும் வணக்கம் செய்து, அவன் உரைத்த வண்ணம் தமது இடவய நகரும் அதனைச் சூழ்ந்த நாடும் நிலனடுக்கத்தால் அழிந்தது கூறி வருந்தினர். அப்போது யான் அசோதர நகர வேந்தனான இரவிவன்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் மகளாய்த் தோன்றி இலக்குமியென்ற பெயர் பூண்டு. அத்திபதிக்கும் அவன் மனைவி நீலபதிக்கும் பிறந்த இராகுலன் என்ற மகனை மணந்து கணவனோடு அப்பிரமதத்தன் பால் அறங்கேட்டிருந்தேன். அவன் என்னை நோக்கி, " இவற்றைப் பதினாறாம் நாள், இராகுலனான நின் கணவன் திட்டிவிடம் என்னும் பாம்பால் கடியுண்டு இறப்பன்; நீயும் அவனுடன் தீப்புகுவாய்; பின்பு நீ காவிரிப்பூம் பட்டினத்தில் மாதவி மகளாய்த் தோன்றி வளர்குவை; உன்னை மணிமேகலா தெய்வம் தென்கடலில் உள்ள ஒரு தீவினுட்கொண்டு சேர்ப்பாள்; அங்கே நீ தரும பீடிகையைக் கண்டு தொழுது நின்பழம் பிறப்புணர்ந்து யான் கூறியவற்றின் உண்மையை யுணர்வாய்" என்றான். அப்போது, "என் கணவனான இராகுலன் என்னானான்? என யான் வினவ, நீ பீடிகை கண்டு பிறப்புணரும் போது மணிமேகலா தெய்வம் தோன்றி உனக்கு அவனது பிறப்பியல்பை அறிவிக்கும்" என்றான் இவ்வாறு சொல்லி முடித்த மணிமேகலை, அந் நினைவே சிறந்து, "இன்னும் மணிமேகலா தெய்வம் வரவில்லையே! ' என எண்ணியிருக்கையில், அத்தெய்வம் போந்து புத்த பீடிகையைப் புத்த பகவானாகவே எண்ணி வலம் செய்து வணங்கி வழிபட்டு வாழ்த்திற்று. அதனை மணிமேகலை கண்டு வணங்கி "நின் அருட்செயலால் என்பழம் பிறப்பை உணர்ந்தேன்; இனி, என் கணவனான இராகுலன் பிறப்பை அறிய அன்பு கூர்ந்து உரைத் தருள்க" என வேண்டினாள். உவவனத்தில் உன்னை நாடிவந்த உதய குமரனே இராகுலன்; அத் தொடர்பு காரணமாகவே, அவன் மனம் நின்பாலும், நின் மனம் அவன்பாலும் சென்றன; நின் மனத்தின் வழிச் செலுத்தாது பிறவா நன்னெறிப் படுத்தற் பொருட்டேயான் நின்னைப் பிரித்துக் கொணர்ந்தேன்; அதற்குக் காரணம் உண்டு. ஒரு பூஞ்சோலையில் நீயும் இராகுலனும் இனிது இருக்கையில் நீ அவனுடன் ஊடலுற்றாய்; அது தீர்த்தற் பொருட்டு அவன் நின் அடியில் வீழ்ந்து வணங்கினான்; அந்நிலையில், சாது சக்கரன் என்னும் பௌத்த முனிவன் அங்கே தோன்றினானாக, உடனே நீ அவன் அடியிற் பணிந்து வணங்கினாய்; அவன் இயல்பறியாமல் இராகுலன் நின்னை வெகுண்டான்; நீ அவன் வாயைப் பொத்தி, தகுவன சொல்லி அவனொடு மறுபடியும் முனிவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி அவற்கு அமுதும் தண்ணீரும் தந்து சிறப்பித்தாய், அவனும் உண்டு மகிழ்ந்து உங்கள் பால் விடைபெற்றுச் சென்றான். அவனை அன்று உண்பித்துப் பேணிய நல்லறம் இன்று நின்னை நல்வழிச் செலுத்தும் ஏது நிகழ்ச்சி யாயிற்று; இனி இப் பழம்பிறப்புணர்வால்; அறத்தின் சிறப்பை அறிந்தனை; நீ ஏனைச் சமயவாதிகளைக் கண்டு அவரவர் கொள்கைகளை உணர்வாய்; அக்காலை நின் இளமைச் செவ்வி கண்டு அவர்கள் தங்கள் சமய வுண்மைகளை உரைத்தற்குத் தயங்குவராதலின், அதற்கு ஒத்த வேற்றுருவம் கோடற் கேற்றதும், வான வழியாகச் செல்லுதற் குதவுவதும் ஆகிய மந்திரம் இரண்டினை அறிவிக்கின்றேன்" என்று சொல்லி மந்திரங்களையும் நல்கிற்று. பின்பு "நீ புத்த பகவானது நல்லறத்தை மேற்கொள்வது உறுதியென வுணர்க; இனி, இப்பீடிகையை வலஞ் செய்து வழிபட்டு நின்ஊராகிய பூம்புகார் செல்க" என்று நீங்கி மறைந்தது. சிறிது போதில் மீளத் தோன்றி, " சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்" என்று அம்மந்திரத்தையும் அறிவுறுத்தி நீங்கிற்று. பின்பு மணிமேகலை மணிபல்லவத்திற் கானக்கிடந்த குன்றங்களையும் பூஞ்சோலைகளையும் மலர்ப் பொய்கைகளையும் கண்டு இன்புற்ற வண்ணம் ஒரு காவததூரம் சுற்றித் திரிந்தாள். அவள் எதிரே தீவ திலகை என்னும் தெய்வமகள் தோன்றி, 'நல்லாய் நீ யார்?"என்று கேட்க, முற்பிறப்பில் யான் இராகுலன் என்னும் வேந்தனுக்கு மனைவியாய் இலக்குமி என்று பெயர் கொண்டிருந்தேன். இப் பிறவியில் ஆடற் கணிகை யாகிய மாதவி ஈன்ற மகள்; மணிமேகலை என்னும் பெயரினேன்" என்று தொடங்கி, "என்னை மணிமேகலா தெய்வம் இங்கே கொணர்ந்தமையின் யான் தரும பீடிகை கண்டு என்பழம் பிறப்புணர்ந்தேன்; யான் வந்த வரலாறு இது; இங்கு யான் எய்திய பயனும் இது" என்று விடையிறுத்து, "நீ யார், கூறுக " என்று கேட்டாள்; அதற்கு அவள், "மங்கையே, இவ்விடத்துக்கு அயலில் உள்ளது சமந்தம் என்னும் குன்றம்; அதன் உச்சியில் புத்த பெருமானது அடியிணை இருக்கிறது; அது பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய்" எனப்படும். அதனைக் கண்டு தொழுதுவந்த என்னைத்தேவர் கோமான் "இப் பீடிகைக்குக் காவல் செய்க" எனப் பணித்தானாக, யான் இவண் இருந்து காவல் புரிகின்றேன்: என் பெயர் தீவதிலகை என்பது" என்று சொன்னாள். அதுகேட்டு வியப்புற்ற மணிமேகலைக்கு அவள் மேலும் கூறலுற்று, "புத்தன் ஓதிய நல்லறம் பிறழாத நோன்புடையோர் இப் பீடிகையைக் கண்டு தொழுவாராயின் தமது பழம் பிறப்புணர்வு பெறுவர்; அப்பெற்றியோர் உலகில் அரியர்; அவர்கட்கு அவனது அறவுரை உரியதாகும். அன்றியும், இப் பீடிகையின் முன்னர்க் கோமுகி யென்னும் பொய்கை யொன்றுளது; ஆண்டுதோறும் இள வேனிற் காலத்து வைகாசித் திங்கள் விசாகநாளில் அதன்கண் அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரம் தோன்றும்; அந்த நாளும் இந்நாளாகும். ஒரு கால் அது நின்கைக்கு வந்து சேர்தலும் கூடும். " ஆங்கு அதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான் தொலைவில்லாத் தகைமையதாகும்" அதன் இயல்பை நின் ஊர்க்கண் உறையும் அறவண வடிகள் பால் கேட்டறியலாம், என்று இயம்பினாள். பின்னர் இருவரும் பீடிகை அடைந்து அதனை வலம் வந்து வணங்கிக் கோமுகிப் பொய்கையைச் சார்ந்து அதனையும் வலஞ் செய்து நின்றனர். சிறிது போதில் பாத்திரம் எழுந்து மணிமேகலையின் கையகம் அடைந்தது; அதனால் மட்டற்ற மகிழ்ச்சியுற்ற மணிமேகலை பேருவகையால் கண்கலுழ்ந்து புத்த பகவானை மனங்கனிய நினைந்து, " மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக்கடும்பகை கடிந்தோய் நின்னடி பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்கும் கண்ணோய் நின்னடி தீமொழிக் கடைத்த தீயோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குதலல்லது வாழ்த்தல் என் நாவிற்கு" அடங்காது என்று ஏத்தினாள். தீவதிலகை பெரு மகிழ்ச்சி கொண்டு மணிமேகலைக்கு பசியின் கொடுமையைப் பாரித்துக் கூறி, " ஆற்றாமாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று அறிவுறுத்தி, உணவு நல்கும் இவ்வுயர்ந்த அறத்தைச் செய்க என வற்புறுத்தினாள். மணிமேகலையும், தான் பழம்பிறப்பில் சாது சக்கர முனிவர்க்கு உணவளித்த அறப்பயனே தன் கையில் இப்பாத்திரமாக வந்ததென மகிழ்ந்து,"வெயிலென முனியாது புயலெனமடியாது பிறர் புறங்கடை நின்று உணவு வேண்டி வருந்துவோர் பலராவர்; அவர்க்கு இதன்வழி வேண்டும் உணவளித்து அவர்களின் முகம் கண்டு இன்புறும் வேட்கையேன்" என்று மொழிதலும், தீவதிலகை, "அறத்தால் சிறந்தோர்க்கல்லது இது நன்கு சுரவாது. செல்க" என்று விடை தரலும், அவள் அடிகளை வணங்கி மணிமேகலை வான் வழியாகக் காவிரிப்பூம்பட்டினம் வருவாளாயினள். "தெய்வம் கூறிய ஏழு நாட்களும் கழிந்தன" என் மகள் வந்திலளே" என ஏங்கி வாடிய மாதவியும் சுதமதியும் கண்களிக்கக் கண்டு மகிழுமாறு மணிமேகலை மாதவியின் மனை வந்து சேர்ந்தாள். அவர்களும் மனக்கவலை நீங்கி இன்புற்று நல்லுரை யாடினர். அப்போது மணிமேகலை, மாதவி சுதமதி யாகிய இருவருடைய பழம் பிறப்பைச் சொல்லி, மாதவியை, "இரவிவன்மன் ஒரு பெரும் மகள்" எனவும், சுதமதியைத் "துரகத்தானைத் துச்சயன் தேவி" எனவும் பாராட்டி, நீவிர் இருவீரும் முன் பிறப்பில் தாரை வீரை என்ற பெயருடன் எனக்குத் தமக்கையராய் இருந்து இப்பிறப்பில் நற்றாயும் செவிலியுமாயினீர்; இனி உமக்குரிய அறங்களை அறவண அடிகள்பால் பெறுமின்" என்று தெளிவித்தாள். பின்பு தன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரத்தின் வடுவும் இயல்பும் விளக்கி "இதனைத் தொழுமின்" என்றாள். அவ்வாறே இருவரும் தொழுதுவிட்டு மணிமேகலையுடன் அறவண அடிகள் உறைவிடம் நோக்கிப் புறப்பட்டனர். அறவண அடிகள் இருந்த இடம் தேடிச் சென்று அவரைக் கண்ட மணிமேகலை, அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கித் தான் உவவனம் சென்றது முதல் மணிபல்லவத்தில் நிகழ்ந்தவற்றை ஒன்று விடாமல் முற்றவும் தெரிவித்தாள். அவரும் பெரிதும் மகிழ்ந்து, நான் ஒருகால் பாதபங்கய மென்னும் மலையில் வழிபட்டு வந்தேன்; வழியில் ஒரு பூஞ்சோலையில் துச்சய மன்னனைக் கண்டேன்; அவனை மனைநலம் கேட்டபோது அவன் மிகவும் துயரெய்தி தன் மனைவியான வீரை கட்குடி மயக்கத்தால் செய்வதறியாது ஒரு யானை முன் வீழ்ந்து இறந்தா ளெனவும் அதனை யறிந்த தாரை ஓர் உயரிய மாடத்தின் மேல் ஏறி அங்கிருந்து வீழ்ந்து உயிர் துறந்தாளெனவும் கூறினன். "இவை யாவும் பழவினையால் நிகழ்வன என ஆறுதல் கூறிப் போந்த என்முன் நீவிர் ஆடும் கூத்தர் அணியே போல வேற்றோர் அணியொடு வந்தீர்" என்று அறவண அடிகள் கூறவும் மணிமேகலை வியந்து நோக்க, ஏனை இருவரும் மகிழ்ச்சி மீதூர்ந்தனர். மேலும், அவன் மணிமேகலையைப் பார்த்து, "நங்காய், நமது தரும தலைவன் உரைத்த நல்லறம் பெருகாதாகித் தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டென உணர்தல் அல்லது இனிது கண்டறிவாராததுபோல ஒளி குன்றியுளது; ஓரளவு யான் அதனைப் பரப்பிவருகின்றேன். " போதிமூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் பிறவிதோறும் மறவேன்; என்று சொல்லி, "இவ்விருவரும் முன்னைப் பிறப்பில் பாதபங்கய மலையைக் கண்டு பரவிய நல்வினையுடையர்; இனி நின்னோடு புத்தர் பெருமான் திருவடியைத் தொழுது வினையின் நீங்கி நன்னெறிப்படர்குவர்; நீ அமுதசுரபியெனும் மாபெரும் பாத்திரம் பெற்றனை யாதலின், மக்கள் பசிப்பிணி தீர்த்தல் என்ற தவப்பெரும் நல்லறம் செய்க" என்றான். மணிமேகலை அப்பாத்திரத்தைப் கையில் எடுத்ததும், அதனை முன்பு கையேந்தி நல்லறம் புரிந்த ஆபுத்திரன் வரலாற்றை விரியவுரைத்து, "அவன் தான்மேற்கொண்ட பசிப்பிணி தீர்க்கும் நல்லறம் செய்தற்பொருட்டு, வங்கமேறிச் சாவக நாடு சென்றானாக, வழியில் ஓர் நாள் வங்கம் மணிபல்லவத்துத் தங்கிற்று; அப்போது ஆபுத்திரன் அத் தீவின்கண் இறங்கினான்; ஆனால் அன்றிரவு அவ்வங்கம் அவன் மீளப் போந்து சேராமை நோக்காது சென்றது; அதனால் அவன் வருந்தி அங்கே மக்களின்மையின் தன் அமுதசுரபி பயன் படாமை கண்டு அதனைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து "ஓர்யாண்டுக்கு ஒரு முறை தோன்றுக; தோன்றுங்கால் ஆருயிர் ஓம்பு வோர் உளராயின் அவர் கைப்படுக" எனவுரைத்து உண்ணா நோன்பிருந்தே உயிர் துறந்தான்; பின்பு அவன் சாவக நாட்டில் ஓர் ஆவின் வயிற்றில் உதித்தான்; அவனைப் பின்பு அந்நாட்டு அரசன் வளர்த்தமையால், இப்பொழுது அரசுரிமை பெற்று வாழ்கின்றான்; இது நிற்க, காவிரிபாயும் இந்நாடு வறுமையுற்றுப் பசியால் வருந்துகின்றது; நீ இவ்வமுத சுரபியை வாளா வைத்திருத்தல் நன்று அன்று," என உரைத்து மணிமேகலையைப் பசிப்பிணி நீக்கும் பண்பு மேற்கொள்ளுமாறு பணித்தார். மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டு கையில் அமுதசுரபி யேந்தி வீதியிற் புகுந்தாள். அவளைக் கண்டதும் புகார் நகரத்தவர் வியப்புற்று "அரசகுமரன் உள்ளம் கவர்ந்த இம்மணிமேகலை பிக்குணியாயது என்னே?" எனத் தம்முட் கூறிக் கொண்டு அவளைச் சூழ்ந்தனர். அப்போது அங்கு நின்ற மகளிருள் காயசண்டிகை என்ற மங்கை அவ்வூரில் கற்புடைய மகள் என்ற பொற்பு மேம்பட்ட ஆதிரையின் வீட்டைக் காட்டி அவள் இடும் ஐயத்தை முதற்கண் ஏற்பாயாக" என்ன, மணிமேகலையும் அவளது அவ்வுரையின் படியே ஆதிரையின் மனையெதிரில் புனையாவோவியம் போல நின்றாள். ஆதிரையும் மனமுவந்து, "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி உணவு கொணர்ந்து அமுதசுரபியிற் பெய்தாள். மணிமேகலை அச்சோற்றை யெடுத்துப் பசித்து வந்த மக்கட்கு இடத் தொடங்கினாள். சோறும் எடுக்க எடுக்கக் குறையாதாயிற்று. மக்கள் கூட்டம் பசிநீங்கி இன்புற்றது. அக்காலை, காயசண்டிகை மணிமேகலையை வேண்டித் தன் பசியையும் போக்குதல் வேண்டு மென இறைஞ்சினள்; மணிமேகலை ஒரு பிடி சோற்றை அவள் கையில் இட, அதனை யுண்டதும் அவள் பசிநீங்கி யொழிந்தது. இக்காயசண்டிகை ஒரு வித்தியாதர மகள். அவள் தன் கணவனோடு தென்பொதிய மலையைக் காண்டற்கு வருங்கால் முனிவன் ஒருவன் உண்டற்கு வைத்த நாவற்கனியைச் சிதைத்து அவன் சாபத்தால் யானைத்தீ யென்னும் நோயுற்று வருந்தினாள். மணிமேகலை யிட்ட சோற்றால் அந்நோய் நீங்கவே தன்வரலாற்றைச் சொல்லி விடை பெறலுற்று, இங்கே உலக வறவி யென்னும் அம்பலத்தின்கண் உறுபசியுழந்தோரும் பிணியுற்றோரும் இடுவோரை நோக்கும் இரவலரும் எனப் பல திறத்தினர் உளர் ஆதலின் அதன்கட் சென்று இவ்வறத்தைச் செய்க" என்று இசைத்தாள். காயசண்டிகை சொல்லவும், மணிமேகலை உலகவறவிக்குட் புகுந்து அங்கே பசித்து உறை வோர்க்கும் வருந்துவோர்க்கும் உணவு நல்கிப் பசி நோய் நீக்கி அந்த இனிய அறத்தையே தொடர்ந்து செய்துவருவாளாயினள். இதனை மாதவியின் தாய் ஆகிய சித்திராபதி அறிந்து, மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் தவக்கோலம் பூண்டது தன் குலத்துக்கு ஒவ்வாதென்று உதயகுமரனுக்கு உணர்த்தினாள். அவட்கு எவ்வாற்றாலேனும் மணிமேகலையை மீளவும் நாடக மகளாக்க வேண்டும் என்பது கருத்து. ஆனால், அவன் , தான் உவவனத்தில் அம்மணிமேகலையைக்கண்டதும், பின்பு தனக்கு மணிமேகலா தெய்வம் உரைத்ததும் பிறவும் சொல்லி, அவளுடைய சிறப்பியல்புகளை விதந்தெடுத்து விளம்பினான். ஆயினும், சித்திராபதி தேனினும் இனிய சொற்களைக் கொண்டு அவன் சிந்தையை மாற்றினாள். அவனும் தன் தேரேறி உலகவற விக்குச் சென்று மணிமேகலையைக் கண்டு "இத் தவக்கோலம் உனக்கு ஏன் வேண்டும்?" எனக் கேட்டான். அவன் தனக்கு முற்பிறப்பில் கணவன் என்ற நினைவால் மணிமேகலை; " பிறத்தலும் மூத்தம் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடுப்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இது என வுணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" என்று சொல்லி, அங்கேயுள்ள சம்பாதியின் கோயிலுக்குட் சென்று, காயசண்டிகையின் வடிவ முற்று அமுதசுரபியைக் கையிலேந்தி வெளியே வந்தாள். அதனை அறியாத உதயகுமரன் அக்கோயிலுக்குட் சென்று, சம்பாதியை வணங்கி மணிமேகலையைக் காட்டாயாயின், நாள் பலவாயினும் நின்முன் பாடுகிடப்பேன்" என்று வாய்விட்டு ரைத்தான். அங்குள்ள சித்திரம் ஒன்று தெய்வமுற்று, "நீ ஆராயாது கூறும் வஞ்சினம் பயனற்றது; அவளைமறத்தல் நன்று" என அவன் மனங்கொள்ளுமாறு வாய் மலர்ந்தது. அது கேட்டு வியப்பு மீதூர்ந்த அவன், " அங்கு அவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்; பைபர வல்குல் பலர்பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்; முத்தை முதல்வி அடிபிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்; " ஆகவே, இவற்றைப் பின்னர்க் காண்போம் எனத் தனக்கும் சொல்லிக் கொண்டு உதயகுமரன் தன் அரண்மனை சென்று சேர்ந்தான். நின்ற மணிமேகலை "யான் என் உண்மை வடிவில் மாதவி மகளாய்த் திரிவேனாயின், வேந்தன் மகன் என்னைக் கைவிடாது தொடர்குவன்; இனி, யான் காயசண்டிகை வடிவிலே இருப்பேன்" எனத் துணிந்து, " ஆற்றாமாக்கட்கு ஆற்றும் துணையாகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே நூற்பொரு ளுணர்ந்தோர் நுனித்தனர்" என்று எண்ணி, அமுதசுரபியுடன் சிறைக்கோட் டம் புகுந்து அங்கே பசிந்திருந்தோர் பலர்க்கும் பேருணவு தந்து மகிழ்வித்தாள். அது கண்ட சிறைக்காவலர், "கையில் ஒரே பாத்திரம் கொண்டு மிகப் பலர்க்கு உணவளிக்கும் இச்செயல் வியத்தற்குரியது; இதனை வேந்தற்குரைத்தல் கடன்" என்ற கருத்துற்று வேந்தன் இருக்குமிடம் நாடிச் சென்றனர். அப்போது சோழவேந்தன் தன் மனைவியாகிய கோப்பெருந் தேவியோடு பொழில் வளம் காண்டற்குச் சென்று அதன் பலவேறு நலங்களையும் நுகர்ந்து இன்புற்று, அதற்குள்ள பசும்பொன் மண்டபத்தை அடைந்திருந்தான். சிறைக்காவலர் அவன் முன்னே நின்று வணங்கி, "மன்னர் பெருந்தகையே, " யானைத் தீ நோய்க்கு அயர்ந்து மெய்வாடி இம் மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர் அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து பெரும்பெயர் என்ன நின் பெயர் வாழ்த்தி ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மெய்கொள் மாக்கள் மொசிக்கவூண் சுரந்தனள்," என்று தெரிவித்தனர். வேந்தன் அது கேட்டு மணிமேகலையைத் தன்முன் வருவித்து "தவத்தோய் நீ யார்? இப்பாத்திரம் யாங்காகியது?" என்று வினவினன். அவற்கு மணிமேகலை, மிக்க பணிவு தோன்ற நின்று, "யான் ஓர் விஞ்சை மகள்; இந்நகர்க்கண் இதுகாறும் திரிந்தேன்; அம்பலத்தில் எனக்கு இப்பாத்திரம் தெய்வம் தர வந்த திப்பியமுடையது; யானைத் தீ என்னும் நோய் தீர்த்த நோன்மையும், மக்கட்கு உயிர் மருந்தாம் தன்மையுமுடையது" என்றாள். பெருமகிழ்ச்சிகொண்ட வேந்தன், "இனி யான் நினக்குச் செய்யவேண்டியது யாது?" என்றான். அதனால் இன்பம் மிக்க மணிமேகலை "இச்சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குதல் வேண்டும்." என்று வேண்டினாள். அவ் வேண்டுகோட்கு இசைந்த வேந்தன் சிறைக் கோட்டத்தை அறவோர் வாழும் அறக்கோட்டமாக மாற்றியமைத் தான். சின்னாட்கள் கழிந்ததும், உதயகுமரன் கருத்து மறுபடியும் காயசண்டிகை வடிவில் இருப்பவள் மணிமேகலையே எனத் துணிந்து அவள் பின்னே செல்லலுற்றது. அவள் உரைத்த அருளுரை கொண்டு வேந்தனால் சிறைக் கோட்டம் அறக் கோட்டமாகியதும், அவள் புத்தன் கோயில், அறவோர் பள்ளி, அட்டிற்சாலை, அருந்துநர்சாலை ஆகிய இடங்களில் அவள் அறப்பணி புரிந்ததும் உதயகுமரன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை உறுதி செய்தன. இனி, "மதியுடையோர் எள்ளினும் மன்னவன் காயுமாயினும் சிறிதும் அஞ்சாது அவளைப் பற்றி என் பொற்றேரிலேற்றிக் கொணர்ந்து அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழியைக் கேட்டே தீர்வேன்" என்று உதயகுமரன் தனக்குள் திண்ணிதாக எண்ணி மணிமேகலை யுறையும் உலக வறவிக்குட் புகுந்தான். இதற்கிடையில் காயசண்டிகை முனிவரிட்ட சாபத்துக்குரிய பன்னீராண்டு கழிந்தும் மீளத் தன்பால் வாராமை கண்ட அவள் கணவனான காஞ்சனன், காவிரிப்பூம்பட்டினம் போந்து பூதசதுக்கமும் பூமலர்ச் சோலையும் மாதவர் பள்ளியும் மன்றமும் பொதியிலும் எங்கும் தேடிக் காயசண்டிகை வடிவில் இயங்கும் மணிமேகலையைக் கண்டு, தன் மனைவி யெனப் பிறழக் கொண்டு, அவளை யணுகி, "இன்று நின் கையிற் பாத்திரம் ஒன்றேயாக, உண் போர் பலராக உள்ளனரே; நின் யானைத்தீ என்னும் பசியைப் போக்குதற்கு என வானோர் இதனை அளித்தனரோ?" எனப் பழமை பாராட்டி உரையாடலுற்றான். மணிமேகலை அவனைப் புறக்கணித்த ஆண்டுப் போந்த உதயகுமரனை அடைந்து, நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி அவள் மேனி இளமைக் காலத்தில் இருந்த எழிலுடை நிலையினை எடுத்தோதி, " பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத் தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனே" என்று மொழிந்து கொண்டிருந்தாள். அதுகண்ட காஞ்சனன், "தன்னைப் பாராட்டும் என் சொல்லைக் கொள்ளாமல் பிறன்பின் செல்கின்றாள்; கணவனாகிய என்னைப் பிறன்போல் நோக்குகின்றாள்; மன்னவன் பால் அன்புடன் அறிவுரை வழங்கி இனிது முறுவலித்தும் குளிர்ச்சியுற நோக்கியும் இவள் இயலுவதால், இவன் இவட்குக் காதலன் போலும்; அதனால் என்பால் வாராது இவ்வூர்க் கண்ணே தங்கினள்" என எண்ணி அழுக்காற்றுப் பெருஞ்சினம் எய்தி ஓரிடத்தே ஒடுங்கியிருத்தான். மணிமேகலை யுரையால், "காயசண்டிகை யல்லள்" எனத் தெளிந்த உதயகுமரன், "இனி இடையாமத்து வந்து காண்பேன்" எனக் கருதி நீங்கினான். மேலும், அவன் கண்ணெதிரில் காய சண்டிகைவடிவில் இருந்த மணிமேகலை அவள் கணவனான விஞ்சையன் பக்கல் நெருங்காது நீங்கி யொழுகியதும் உதயகுமரன் கருத்தைத் தெற்றெனத் தெளிவித்தது. அன்றிரவு ஊர் துஞ்சும் நடுவியாமத்தில் அவன் கோயில் கழிந்து வாயில் நீங்கி அம்பலம் அணைந்து யாரும் அறியா வகையில் ஊழடியிட்டு மணிமேகலை கிடந்து உறங்கும் அறையை நோக்கி நடந்தான். அவன் வரவு நோக்கி ஒடுங்கியிருந்த காஞ்சனன், "இவள் பால் இவன் வருகின்றான்" என நினைத்து சரேலெனப் பாய்ந்து தன் கைவாளால் உதயகுமரன் தோளைத் துணித்து வீழ்த்தி மணிமேகலையாகிய காயசண்டிகையை அந்தரமாகத் தூக்கிச் செல்வது குறித்து அவளை நெருங்கினான். அங்குள்ள தூண்களிற் செய்து வைக்கப்பட்டிருந்த பாவைகளில் ஒன்று தெய்வ முற்று, "நில், காஞ்சனனே, நில்; அங்கு இருப்பவள் மணிமேகலை; அவள் காயசண்டிகை வடிவில் மறைந்துறை கின்றாள். நின் காதலியான காயசண்டிகை வான வழியாகச் செல்கையில் விந்தா கடிகையால் ஈர்க்கப்பட்டு அவள் வயிற்றில் அடங்கினள்; வருந்துதல் ஒழிக. ஊழ்வினை காரணமாக உதயகுமரன் நின்னால் எறியப்பட்டு இறந்தான்; ஆனால் இத்தீவினை நின்னை விடாது" என்றது. காஞ்சனனும் தான் செய்த தவற்றை நினைந்து கையற வெய்தித் தன்னாடு நோக்கிச் சென்றான். உதயகுமரன் இறந்தது கண்டு துயர்மிகக் கொண்ட மணிமேகலை, தான் காயசண்டிகை வடிவு கொண்டது அவன் கொலைக்குக் காரணமானதை யுணர்ந்து, தான் அவ்வடிவை ஏற்றற் குரிய காரணத்தைச் சொல்லிப் புலம்பி அவன் அருகிற் செல்லமுற் பட்டாள்; உடனே கந்திற் பாவைமேல் உற்ற தெய்வம் இடையிட்டு, "நீ இவற்கு மனைவியாயதும், இவன் நினக்குக் கணவனானதும் பண்டும் பண்டும் பல பிறப்புள; ஆதலால் நீ மனம் தருமாறுதல் ஒழிக" என்று தடுத்தது. மணிமேகலை மனம் தெளிந்து, "இவன் காஞ்சனனால் கொலையுண்டதற்கு ஏதுவாகிய தீவினை யாது?" என்று கேட்க, அத்தெய்வம், "இவன் முற்பிறப்பில் பிரமதருமன் என்ற சான்றோர்க்கு விடியற் காலையில் உணவு நல்கற்கு ஏற்பாடு செய்து, அக்காலத்தே சமையற்காரன் கால்நடை யிழுக்கி மடைக்கலம் சிதைய வீழ்ந்து, சான்றோர் உண்டற்குரிய காலம் தாழ்த்தமைக்குச் சினம் கொண்டு, அவனை வாளாற் கொன்றான்; அத் தீவினை இப்போது இவன் உயிரை மாய்த்தது" என்று சொல்லிற்று. பின்னர் மணிமேகலைக்கு எதிர்வில் நிகழ்வன வற்றைச் சுருங்கச் சொல்லி விளக்கிற்று. மணிமேகலை அவற்றைக் கேட்டு மனமயக் கொழிந்தாள். பொழுது விடிந்ததும், சம்பாபதி கோயிற்கு வந்தோர் உதயகுமரன் இறந்து கிடப்பது கண்டு சக்கர வாளத்தில் உள்ள சான்றோர்க்கு உரைத்தனர். அவர்கள் மணிமேகலையைக் கேட்டு உண்மை தெரிந்து, வேந்தனிடம் சென்று, காமக் களிப்பால் பத்தினிப் பெண்டிரை நினைந்து கெட்டோர் பலர் வரலாற்றை முதற்கண் சொல்லி, முடிவில் காஞ்சனனால் உதயகுமரன் வாட் கிரையாகி மடிந்தது கூறினர். அதுகேட்ட சோழ வேந்தன், யான் செய்தற்குரிய இச்செயலை விஞ்சையனான காஞ்சனன் செய்தல் கூடாது; அதனைச் செய்தமையால் அவன் தகவிலனாவான்; மற்று. மகனை முறை செய்த மாண்புடை வேந்தர் தோன்றிய எங்கள் குடியில் இத்துயர்விளையாளன் தோன்றினன் என்ற செய்தி பிற வேந்தர் செவிப்படுமுன் அவன் உடலை ஈமத்தேற்றி மணிமேகலை யையும் சிறை செய்க" என்று ஆணை பிறப்பித்தான். மணிமேகலை சிறையில் இருக்கையில் அரசர்க்கும் அரசியர்க்கும் அவர் மக்கட்கும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பயன்பட்டொழுகும் இயல்பினளான வாசந்தவை என்ற முதுமகள், அரசமாதேவியை அணுகி, மகனையிழந்து வருந்தும் அவள் துயர் தீரும் பொருட்டு, "நின்மகன் தன்மண் காத்ததற்கோ பிறர்மண் காத்ததற்கோ அன்று உயிர் இழந்தது; அதனால் நீ துன்பம் கொள்ளற்க" என்று சொல்லித் தேற்றி நீங்கினாள். ஆயினும் அரசமாதேவி மணிமேகலையை வஞ்சனையால் துன்புறுத்தக் கருதி, வேந்தனை அடைந்து, "அறிவுடைய நன்மகளாய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று; பெற்ற மக்கள் அறிவிலராய்க் கெடின் அதற்காக அறிவுடையாரைச் சிறை செய்தல் சீரிதன்று" என உரைத்தாள். அரசனும் அதனை யேற்று மணிமேகலையைச் சிறையினின்று விடுவிப்ப, அரசமாதேவி அவளைத் தன் பெருமனைக் கண்ணே இருத்தினாள். தன் பெருமனைக்கண் இருந்த மணிமேகலையின் அறிவைத் திரித்துக் கொடுத்தற்கு அரசமாதேவி முயன்றாள்; ஒருகால் அவள் கற்புக்குப் பழியுண்டாகத் தக்க செயலொன்றை அரசி மேற்கொண்டு அதற்கு ஆவன செய்தாளாக, அதுவும் பயனின்றிக் கெட்டது. இவ்வாறு தேவிசெய்த வஞ்சம் பலவும் கெட்டொழியவே அவள் பெரிதும் வருந்தி "என் மகனுக்குற்ற இடுக்கண் பொறாதுயான் சிறுமை பல செய்தேன்; பொருத்தருள்க" என வேண்டினள். அது கேட்டு மணிமேகலை உதயகுமரனுடைய பழம் பிறப்பைக் கூறி, " பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை உடற் கழுதனையோ உயிர்க்கழுதனையோ உடற்கழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரோ; உயிர்க்கழுதனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர்க்கு அன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்" எனப் பொதுவாகக் கூறி, உதயகுமரன் இறந்ததற்கு ஏது அவன் முற்பிறப்பில் சமையல்காரனைச் சினந்து கொன்ற குற்றம் என்றும், அதனைவற்புறுத் தற்குத்தான் மணிபல்லவத்தில் தன் பழம் பிறப்பு உணர்ந்ததும், அரசமாதேவி செய்த வஞ்சமும் அவற்றைத் தான் வென்ற திறமும் விரிவாக, முறையே மணிமேகலை கூறினாள். முடிவில், மணிமேகலை அரசமாதேவியை நோக்கி, " பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர் கையாற் றவலம் கடந்ததும் உண்டோ களவேர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர் இளவேய்த் தோளாய்க்கு இதுவென வேண்டா; மன்பேருலகத்து வாழ்வோர்க்கு இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும்; கற்ற கல்வி யன்றால் காரிகை செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லல்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர்: அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் திருந்தேர் எல்வளை செல்லுலகு அறிந்தோர்: வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர் மன்பதைக் கெல்லாம் அன்பொழியார் என'' இவற்றை இனிது விளக்கிக் கூறவும், அரசமாதேவி அறிவுத் தெளிவுற்று அவள் அடியைத் தொழுதாள். அதுகண்டு பொறாத மணிமேகலை, "நீ என் காதலனைப் பெற்றவள்; அன்றியும் காவலன் பெருந்தேவி" என்று சொல்லி அவள்காலில் தான் வீழ்ந்து வணங்கினாள். சிறிது போதில் மாதவியின் தாயாகிய சித்திராபதி அவண் போந்து இராசமாதேவியைக் கண்டு வணங்கி, 'தேவி, பழமை வாய்ந்த இந்நகர் தோன்றிய நாள்முதல் நாடகக் கணிகையைருள் யான்பட்ட துன்பம் எவரும் பட்டிலர்; மாதவி தவப்பள்ளி அடைந்ததும், அவள் மகளாகிய மணிமேகலை கையிற்பாத்திர மேந்தி மனைதொறும் ஐயம் ஏற்றதும் நகுதல்லது தகுதியென்று கூறார். மன்னவன் மகன் அன்றி மாதவி மகளாலும் இந்நகர்க்கு இடுக்கண் உண்டாகும், மணிமேகலா தெய்வத்தால் இந்நகர் கடல் வாய்ப்படுதற்கு ஏற்ற இந்திரசாபம் ஒன்று உண்டு என்பதை நினைந்து இந்நகர் சான்றோர் மனக் கலக்கம் கொண்டுள்ளனர். அவள் பெயரைக் கொண்ட மணிமேகலை துயருறுவாளாயின். அத் தெய்வம் வந்தாலும் வரும் என அஞ்சுகின்றேன்; ஆதலால் மணிமேகலையை என் மனைக்கு விடுத்தருள்க"என வேண்டினாள். அதனை விரும்பாத அரசமாதேவி, "கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் களவுமாகிய ஐந்தும் தலைமையாகக் கொண்டது கணிகையர் தொழில்; அதன் கீழ்மை நினைந்து நீங்கிய மணிமேகலை என்னோடேயிருப்பள்" என்று சொன்னாள். இவ்வுரையாட்டு நிகழ்கையில் மாதவியும் சுதமதியும் அறவணவடிகளோடு அரசமாதேவிபால் வந்தனர். அவர்களை அரசியும் மணிமேகலையும் சித்திராபதியும் எதிர்கொண்டு வரவேற்று அரவணன் அடிகளில் வீழ்ந்து வணங்கினர். அவனும் அவர்கட்கு அறிவுண்டாகுக என வாழ்த்தினான். அரசமாதேவி அறவணவடிகளைப் பார்த்து "உங்கள் திருவடி வருந்த இம்மனைக்கு வருவித்தது எம் நல்வினை" என முகமன் கூறினள். அவன் முகம் மலர்ந்து, "தேவி, யான் தவம்புரியறத்தை யுடையேனாயினும் வீழ்கதிர் ஞாயிறு போன்றேன்; பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற பன்னிரண்டின் இயல்புகளை அறிந்து ஒழுகுவோர் பெரும்பேறு அறிந்து இன்ப உலகடைவர்; அறியாது தீநெறிச் செல்வோர் ஆழ்நரகடைந்து துன்புறுவர்" எனத் தொகுத்தும், பின் ஒவ்வொன்றையும் விரித்தும் உரைத்தான். முடிவில் மணிமேகலையை நோக்கி, "மேகலாய், நீ பிறவகை அறங்களைக் கேட்டு வருங்கால் இவற்றின் நலம் பலவும் கூறுவன்" என்று விடைபெற்று எழுந்தான். அப்போது மணிமேகலையும் எழுந்து, மாதவி முதலிய மகளிரை நோக்கி, அடிகள் கூறிய அறநெறியில் நின்று உய்வீர்களாக; யான் இவ்வூர்க்கண் இருப்பின், மன்னன் மகற்குக் கூற்றாயினவள் எனப் பலரும் என்னை இகழ்ந் தெள்ளுவர்; யான் ஆபுத்திரன் நாடு சென்று அவனொடு மணி பல்லவம் அடைந்து பீடிகை தொழுதுகொண்டு வஞ்சிமா நகருக்குப் போய் மாபெரும் பத்தினியாகிய கண்ணகி பொருட்டு நல்லறம் செய்வேன்; எனக்கு இடரேதும் எய்துமெனக் கவலவேண்டா" என்று சொல்லி வணங்கி விடைபெற்று உலக அறவிக்குப் போனாள் அங்கே அதனையும் சம்பாதியையும் கந்திற்பாவையையும் தொழுது ஏத்தி, விசும்பாறாக ஆபுத்திரன் இருந்து அரசு புரியும் நாகபுரம் சென்று சேர்ந்தாள். நாகபுரத்தருகில் உள்ள பொழிற்கண் இருந்து அறம்புரிந்து வந்த தருமசாவகன் அடிகளை வணங்கி அவன் உரைத்த அறம் கேட்டிருந்த மணிமேகலையின் வரவரிந்து ஆபுத்திரனாகிய புண்ணியராஜன் கண்டு வினவலும், அவற்கு அவன்பால் இருந்த கஞ்சுகன் மணிமேகலையின் திறமனைத்தையும் கூறினன். அப்போது மணிமேகலை, அவனை நோக்கி, " நின்கைப் பத்திரம் என்கை புகுந்தது மன்பெருஞ் செல்வத்து மயங்கின யறியாது அப்பிறப்பு அறிந்திலை யாயினும் ஆவயிற்று இப்பிறப்பு அறிந்திலை; என் செய்தனையே! மணிபல்லவம் வலம் கொண்டாலல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய் ஆங்கு வருவாய் அரச" என்று சொல்லி, ஞாயிறு குடபால் மறைவதன் முன் வான்வழியாக மணிபல்லவம் சென்று சேர்ந்தாள். அங்கே அவள் பீடிகையின் வரலாற்றையும் அது பழம் பிறப்புணர்த்தும் திறத்தையும் அறிந்து மகிழ்ந்திருந்தாள். மணிமேகலை நீங்கியபின், புண்ணிய ராஜனான ஆபுத்திரன் அமரசுந்தரி யென்னும் தன் தாயை வணங்கித் தன் பிறப்பறிந்தான். அரச போகத்தில் ஆழ்ந்திருந்த அவனது உள்ளம் அறம் கேட்டற்கு விழைந்தது; அமைச்சர்கள் அறிவுறுத்த நன்மொழி கொண்டு ஒரு திங்கள் எல்லையில் மணிபல்லவம் சென்று வருவதாக உரைத்து, அதற்கெனச் செய்யப்பட்ட வங்கமேறி மணிபல்லவம் வந்தான் ஆபுத்திரன்; அவனை அன்போடு வரவேற்ற மணிமேகலை அவற்குத் தரும பீடிகையைக் காட்டலும், அவன் அதனை வலம் செய்து வணங்கி நின்றவுடன் அஃது அவனுடைய பழம்பிறப்புணர்வை நல்கிற்று. பின்பு இருவரும் பீடிகைக்குத் தென் மேற்கில் உள்ள கோமுகிப் பொய்கையை அடைந்தனர்; அவர்கள் வந்திருப்பதுணர்ந்த தீவதிலகை அவர் முன் போந்து, ஆபுத்திரனுக்கு முற்பிறப்பில் விட்ட யாக்கையையும் அவனை யப்போது காணாமல் உயிர்விட்டோர் யாக்கைகளையும் காட்டி, "இத்தனை பேரும் இறத்தற்கு நீ காரணமாயினை" என்று சொன்னாள். மணிமேகலையை நோக்கி "நல்லாய், நீ நீங்கினபின் காவிரிப் பூம்பட்டினம் கடல் வயிறு புகுந்தது; அறவணனும் மாதவியும் சுதமதியும் வஞ்சிமாநகர் சென்றடைந்தனர்; மணிமேகலா தெய்வத்துக்கும் கோவலன் குடிக்கும் உள்ள தொடர்பை வஞ்சி மாநகர்க்கண் அறவணன் பால் அறிகுவை" என்று உரைத்து மறைந்தாள். தீவதிலகை மறைந்ததும், ஆபுத்திரன், முற்பிறப்பில் தான் தாங்கி நின்ற உடம்பைக் கண்டு அறிவு மயங்கினான்; அது கண்ட மணிமேகலை, " என்னுற் றனையோ இலங்கிதழ்த் தாரோய் நின்னா டடைந்துயான் நின்னை ஈங்கழைத்து மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெருந்தீவினும் நின்பெயர் நிறுத்த நீணில மாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால் பொருளும் உண்டோ பிறபுரை தீர்த்தற்கு? அறமெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்: மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்" என்று இயம்பினாள். ஆபுத்திரன் மனம் கனிந்து, என் நாட்டிலும் பிறர் நாட்டிலும் நீயுரைத்த நல்லறத்தைச் செய்வேன்; ஆனால் என் பிறப்புணர்த்தி என்னை உய்வித்த நின்னைப் பிரிதல் ஆற்றேன்" என்றானாக, "நின் பெருநாடு நின்வரவு நோக்கியிருக்கிறது; நீ செல்லாயின் அது வாயெடுத்து அழைக்கும்; ஆதலால் நீ வங்கமேறிச் செல்க; யான் வஞ்சிமாநகர் செல்வேன்" என மொழிந்து விசும்பு வழியாக மேலெழுந்து சென்றாள். வஞ்சிநகர்க்கண் கண்ணகி கோட்டத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்கும் தனித்தனி படிமங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மணிமேகலை அவற்றைத் தொழுது, " அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும்" என்று சொல்லி அழுதாள். இப்போது கண்ணகித் தெய்வம், தான் மதுரையைத் தீக்கிரையாக்கிய போது மதுராபதி யென்னும் தெய்வம் தன் பழம் பிறப்புரைத்ததை எடுத்து ஓதி, உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாமையின் தான் மதுரையை எரித்ததாகவும், "முன்னை நல்வினையால் விண்ணவர் உலகில் உறையினும் அதன் முடிவில் தீவினைப் பயனை நுகர்ந்து பல்வேறு பிறப்புக்களை யெடுத்து, இறுதியில் துறவிகளாகிப் பிறவி நீத்த வெற்றி எய்து வோம்; நீ இம் மூதூர்க்கண் பல்வேறு சமயக் கணக்கரைக் கண்டு அவ்வவர் சமயக் கொள்கைகளைக் கேட்டு மெய்ப்பொருள் தேர்ந்து புத்தனது பிடக நூல் வழி நிற்பாய்; இளையளெனவும் பெண்ணெனவும் கருதி நினக்கு தம் சமய நுண்பொருள் உரையா ராதலால் வேற்றுருக் கொள்க" என்றும் உரைத் தருள, மணிமேகலை ஒரு மாதவன் வடிவு கொண்டு வஞ்சிநகர்ப் புறத்தை அடைந்தாள். அந்நகர்ப்புறத்தே வைதிக சமயத்து அளவை வாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேத வாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோரைக் கண்டு அவரவர் சமயக் கருத்துகளைக் கேட்டறிந்தாள். பின்பு, அறவண அடிகளையும் மாதவி சுதமதிகளையும் காண்டல் வேண்டி, வஞ்சி நகர்க்குட் புகுந்து, பல்வேறு தெருக்களையும் நோக்கிக் கொண்டே சென்று 'பௌத்த முனிவர்கள் தங்கித் தவம் புரியும் தவச்சாலையுட் புகுந்து அங்கே தவம் மேற்கொண்டிருந்த கோவலன் தந்தை மாசாத்துவானை வணங்கி தான் அமுத சுரபி பெற்றது முதல் வஞ்சி நகரில் அறவண அடிகளைத் தேடி வருவது ஈறாக அத்தனையும் முறையாக மொழிந்தாள். மாசாத்துவான் மகிழ்ந்து, "கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்பிருந்த கோவலன் என்பான் இங்கே புத்த சைத்தியம் கட்டினான்; யான் நின் தந்தையாகிய கோவலன் எய்திய துன்பம் கேட்டுத் துறவு பூண்டு அப்புத்த சைத்தியத்தைக் காணப் போந்தேன்; இங்குள்ள முனிவர்கள் புகார் நகரம் கடல் கோட்பட்டது கூறினர்; அறவண வடிகளால் நின் செய்தியையும் அறிந்தேன்; நினக்கு உரிய அறம் உரைத்தற்கு ஏற்ற இடம் கச்சிமா நகர் என்று நினைந்து, அவர் மாதவியையும் சுதமதியையும் அழைத்துக்கொண்டு அந்நகர்க்குச் சென்றொழிந்தார்; காஞ்சி நகர், மழையின்மையால் வறுமைமிக்கு வந்திருக்கிறது; அவன் செல்வது நினக்குகடன்" என்றான். மணிமேகலை அவனை வணங்கி விடைபெற்றுக் கச்சிமா நகரையடைந்து, சோழவேந்தனான இளங்கிள்ளியால் கட்டப் பட்டிருந்த புத்த சைத்தியத்தை வணங்கி அதன் தென்மேற்கில் இருந்த சங்காராமத்தையடைந்து தங்கினாள். அவளது வருகை யறிந்த வேந்தன் அவளைக் கண்டு வணங்கி, "நாடு எய்திய வருமை கண்டு வாடியிருந்த என்முன் ஒரு தெய்வம் தோன்றி நின் வரவை முன்னுணர்த்தி நின்னால் இந்நாடும் நகரும் வளம் பெறும்; அவள் இங்கே தங்குதற்கேற்ப, மணிபல்லவத்தில் இருப்பது போல இந்நகர வீதியில் ஒரு பொய்கையும் அதனைச் சூழ ஒரு சோலையை (ஆராமத்தை)யும் ஏற்படுத்துக என்றது; அதன் ஆணைப்படி அமைத்ததே இவ்விடம்" என்றான். அதனால் மணிமேகலை மிக்க மனமகிழ்ச்சி கொண்டாள். அவள் அவ்வேந்தனைக் கொண்டு புத்த பீடிகை யொன்றும் தீவ திலகை மணிமேகலா தெய்வம் என்ற இருவர்க்கும் கோயிலும் உண்டாக்கி, இப்புத்த பீடிகையில் அமுத சுரபியை வைத்து வழிபாடுசெய்து நகர மக்களையும் நாட்டவரையும் உண்பித்துப்பசிப் பிணியைப் போக்கினாள் சின்னாட்களில் மழை வளம் சுரக்க நகரமும் நாடும் நல்வளமும் நல்வாழ்வும் பெற்றன. மணிமேகலை வரவால் நாடு நகரம் பெற்ற நலம் கண்டு இன்புற்ற அறவண அடிகளும் மாதவி சுதமதிகளும், அவளது அறச்சாலைக்குப் போந்தனர். அவர்களை அன்புடன் வணங்கி வரவேற்ற மணிமேகலை, அடிகட்கு அறுசுவையுண்டியளித்து வணங்கி," வாய்வதாக எனமனப்பாட்டு அறம்" என வுரைத்து, மாதவன் உருவை நீக்கித் தன் பழைய வடிவு பெற்று விளங்கினள். அவட்கு அறவணன் காவிரிப்பூம்பட்டினம் கடல் கோட்பட்டதும் அதன் காரணமும் கூறினர்; அவ்வாறே தனக்குத் தீவ திலகை கூறியதாகச் சொல்லித் தான் சமயக் கணக்கர் பால் அவரவர் சமயம் கேட்டதும் அவற்றுள் ஒன்றும் செவ்விதாகத் தோன்றாமையால் தான் சிந்தையில் வையா தொழிந்ததும் எடுத்துரைத்து "மெய்ப் பொருள் அருளுக" என வேண்டினள். அடிகள் சொல்லத் தொடங்கி, "புத்தர் பெருமான் ஓதிய அளவை, பிரத்தியம் கருத்தளவு என இரண்டேயாகும்; பிரத்தியம் என்பது சுட்டுணர்வு; மற்ற அளவைகள் அனுமான மாகும். இந்த அனுமானமாகிய கருத்தளவை. பக்கம் ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என ஐவகையால் ஆராயப் படும்" எனத் தொகுத்தும் பின்பு ஒவ்வொன்றையும் பலப்பலவாக வகுத்தும் விரித்தும் கூறி, "நூல்களிற் கூறப்படும் உரைகளின் மெய்யும் பொய்யும் இவ் வகையால் ஆராய்ந்து அறிந்து கொள்க" என்றார். அவற்றை மனதிற்கொண்ட மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி, தருமம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்ற மூன்றையும் மும்முறை ஓதி மும்முறைபணிந்து "சரணாகதியாய்ச் சரண்சென்று" அடைந்தாள். பின்பு பேதமை முதலாகக் கூறிய பன்னிரண்டையும் தனித்தனியாக விளக்கி, "இவை யாவும் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றன் காரணமாக உண்டாவன இவற்றை மைத்திரி, கருணை முதிதை அசுபம், உபேட்சை என்ற ஐவகைப் பாவனைகளால் நீக்கவேண்டும்" என்பாராய், காமத்தை, "அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத் தனித்துப் பார்த்துப் பற்றறுத்திடுக" என்றும், வெகுளியை. "மைத்திரி கருணாமுதிதை என்று அறிந்து நல்லுணர்வால் நீக்குக" என்றும், மயக்கத்தைச் சுருதி, சித்தனை, பாவனை, தரிசனை என்ற நான்காலும் கடிதல் வேண்டும் என்றும் கூறினர். இவற்றால் மணிமேகலை தவத்திறம் பூண்டு பவத்திறம் அறுக என்று தவம் செய்வாளாயினள்.  30. காரைக்காற் புனிதவதி கிறித்து பிறப்பதற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நம் தமிழகத்துக் கடற்கரை நகரங்கள் மேனாட்டவர்க்கும் கீழ் நாட்ட வர்க்கும் நன்கு தெரிந்திருந்தன. அவற்றுள் பெரிதும் சிறந்து விளங்கிய காவிரிப்பூம் பட்டினம், கொற்கை, மேலைக் கடற் கரையில் இருந்த முசிறி, கருவூர், தொண்டி முதலியன மேனாட்டு யவனர் குறிப்புக்களில் இன்றும் காணப்படுகின்றன. ஆயினும், பவத்திரி, காரைக்கால், நாகப்பட்டினம் முதலியன கீழ்க் கடற் கரையிலும், பந்தர், அருமணம் என்பன மேலைக் கடற்கரையிலும் ஓரளவு கடல் வாணிகத்துக்குப் பெயர் பெற்றிருந்தன. இவற்றுள், காரைக்கால், நாகப்பட்டினம் என்ற இரண்டு மொழியப் பவத்திரி பந்தர் அருமண மென்ற நகரங்கள் கால வெள்ளத்தில் மறைந்தன. பவத்திரி நகரத்தைச் சூழ இருந்த நாடு கடல் கோட்பட்டதைக் குறிக்கும் நெல்லூர் மாவட்டத்துக் கல்வெட்டுக்கள் "கடல் கொண்ட பவத்திரி" என்றே குறிக்கின்றன. முசிறியும் அவ்வாறே கடல் வயிறு புகுந்தது. தொண்டியும் கருவூரும் சிற்றூர்களாயின. காரைக்காலும் நாகப்பட்டினமும் தஞ்சை மாவட்டத்தில் இன்றும் பண்டைப் பெருமை குன்றாமல் கடல் வாணிகம் நிகழும் இடங்களாகத் திகழ்கின்றன. இவையிரண்டும் ஒன்றுக் கொன்று அண்மையில் இருப்பினும் வாணிகச் சிறப்புக் குன்றாமைக்குக் காரணம் காரைக்கால் பிரெஞ்சு ஆட்சியிலும் நாகப்பட்டினம் ஆங்கிலராட்சியிலும் இருந்தமையாகும். பிரெஞ்சு ஆங்கிலர் ஆட்சி தோன்றுதற்கு முன் இடைக்காலச் சோழப் பெருவேந்த ராட்சியில் நாகப்பட்டினமே காரைக்காலை விடச் சிறிது விளக்கம் பெற்றிருந்தது. கீழைநாட்டு அருமண வேந்தரும் சாவக மக்களும் சீய வணிகரும் நாகப்பட்டினத் துக்கே பெரிதும் போக்கு வரவு புரிந்தனர். வேற்றுச் சமயமான பௌத்தமும் சயினமும் அங்கே ஆதரவு பெற்றிருந்தமை அதற்கு ஒரு காரணமாகக் கூறலாம். காரைக்கால் தொன்று தொட்டே சிவநெறிக்குச் சீர்த்த இடமாகத் திகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே காரைக்கால் கடல் வணிகப் பெருமக்களின் குடிகள் நிறைந்து புகழ்பெற்று விளங்கிற்று; அறநெறியைக் கைப்பற்றி வாய்மை குன்றாத மாண்பு அவர்கள் பால் சிறந்து நின்றது; அது பற்றியே அவ்வூரை, "மானமிகு தருமத்தின்வழி நின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி" என்று சேக்கிழார் கூறுகின்றார். அறத்தைக் கைந்நெகிழ்த்துப் பொய்யே வாய்மையாகக் கொண்டதனால் நமது நாட்டு வாணிகம் பழம் பெருமை தேய்ந்து சீர் குலைந்து போயிற்று. இன்று வரையில் சீரழிந்த மெய்ம்மை நம் வணிகத் துறையில் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லை. அறமும் வாய்மையும் அணிபெறக் கொண்ட வணிகர் பெருங்குடி மல்கியிருந்த காரைக்காலில், தனதத்தன் என்ற பெருஞ் செல்வர் அவ்வணிகரிடையே தலைமை நிலை பெற்று விளங்கினார். செல்வம் பெருகி நிலவுமிடத்தில் திருமகள் வீற்றிருக்கின்றாள் என்பது பண்டையோர் கொள்கை. செல்வம் திகழும் மதுரை நகர்க் கடைவீதியைக் கூறவந்த நக்கீரனார், "திருவீற்றிருந்த தீதுதீர் நியமம்" என்றது இதற்குப் போதிய சான்றாகும். இம்முறையில் செல்வத் தலைமகனான தனதத்தனுக்குத் "திரு மடந்தை அவதரித்தாள் என" ஒரு பெண்மகள் பிறந்தாள். தூய நினைவும் தூய சொல்லும் தூய செயலும் உடைய அப்பெருங்குடியில் மாசு மறு வில்லாத மேனியும் கண்கொள்ளாப் பேரழகும் படைத்து வயங்கிய அப்பெண் மகவுக்குப் புனிதவதி என்று பெற்றோர் பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்பெண்ணும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். குடும்பத்தில் வளரும் சிறுவரிடையே சமயவுணர்வும் ஒழுக் கமும் நன்கு அமைய வேண்டுமாயின், அக்குடும்பத்தில் சமயப் பற்றும் வழிபாடும் அமைந்த சூழ்நிலை இருத்தல் வேண்டும். இளமையிலே குடும்பத்தில் உள்ளவர்பால் நிகழும் சமய வொழுக்கம் சிறுவர் கண்ணிற்பட்டுக் கருத்திற் பதியுமாயின் அவர்கள் உள்ளத்திலும் சமய உணர்வு வேரூன்றும். இன்றைய வாழ்வில் பல குடும்பங்களில் அச்சூழ்நிலையில்லை. கல்வி நிலையங்களில் தரப்படும் கல்வி முற்றும், உலகியல் வாழ்வுக்கு வேண்டிய பொருள், விஞ்ஞானம், தொழில், வணிகம், அரசியல் முதலிய துறைகட்குரிய அறிவையே சார்ந்திருக்கின்றது. கோயில்களும் சமய நிலையங்களும் பெரும் பாலும் சமயஞானம் நல்கும் நிலையில் இல்லை. பொது மேடை களும் செய்தித் தாள்களும் உலகியல் பற்றிய பேச்சும் உரையுமே கொண்டுள்ளன. இவ்வாற்றால் சிறுவரிடையே சமயவுணர்வு வொழுக்கங்களும் கடவுட்பற்றும் நன்கு அமைதற்கு இடமில்லாமல் இருக்கிறது. பன்னூறு ஆண்டுகட்கு முன் மக்கள் குடும்பங்கள் சமய ஞான வொழுக்கங்கட்கு ஏற்ற இடமாக இருந்தமையின் இளமை யுள்ளங்கள் சமயப்பற்று மிக்கிருந்தன. தனதத்தருடைய செல்வக் குடும்பம் சைவ ஞானத் தனி நிலையமாய்த் திகழ்ந்தது; மனையின் கண் உள்ளவர் அனைவரும் சிவ நெறிச் செல்வர்களாய்ச் சிறந்தனர். அவர்களுடைய நினைவும் சொல்லும் செயலும் சிவமணமே கமழ்ந்தன; அதனால் புனித வதியார் குழவிப் பருவத்திலேயே சிவனை நினைந்து அவன் புகழ் பாடும் செந்நெறியில் பயிலத் தொடங்கினார். சிவ நெறித் தொண்டர்வரின், குடும்பத்தவர் அவர்கட்குச் செய்யும் சிறப்புகளைக் கண்டு தாமும் அவ்வாறு செய்யத் தலைப்பட்டார். இதனை, "வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டர்பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்று, தொண்டர்வரின் தொழுது போற்றும் தூய பண்பாடு பெற்றார் என்று அவரது வரலாறு கூறுகிறது. அவரும் தாம் பாடிய நூலில், "பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" என்று குறிக்கின்றார். இவ்வாறு வளர்ந்து வரும் புனிதவதிக்குத் திருமணம் செய்யும் சீர்த்த செல்வி எய்திற்று. அதனையறிந்த உறவினருள் நாகப் பட்டினத்தில் செல்வச் சிறப்புடன் வாழ்ந்த பெருமகனான நிதிபதி என்பவன் ஒருவன். அவற்குப் பரமதத்தன் என்ற மகன் தோன்றி மணத்துக்குரிய மாண்பும் செவ்வியும் எய்தியிருந்தான். அவன் தன் மகன் பொருட்டு மகட் பேசி வருமாறு வழக்கப்படி முதியோர் சிலரைக் காரைக்கால் தனதத்தன் பெருமனைக்குச் செலுத்தினான். அவர்கள் தனதத்தனைக் கண்டு, "நீ பயந்த "பைந்தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக" என்றனர். மணமகன் குடிச் சிறப்பும் மாண் குணமும் கேட்டும் கண்டும் அறிந்த தனதத்தன் மகட் கொடை நேர்ந்தான். திருமணம் செல்வச் சிறப்புடன் நடைபெற்றது. திருமணம் முடித்ததும், புனிதவதி தான் பிறந்த குடிக்கு ஒரு பெருமகளாதலால், அவள் தந்தையான தனதத்தன், நிதிபதியையும் பரமதத்தனையும்கலந்து, காரைக்காலிலேயே தனித்தவொரு மனை யமைத்து அதன்கண் இருந்து மனையறம் புரிதற்கு ஏற்பாடு செய்தான். பரமதத்தனும் அவன் விருப்பத் துக் கிசைந்து அதன் கண் புனிதவதியாருடன் இனிது இருந்து இல்வாழ்க்கை நடத்தினான். புனிதவதியாரும் தற்காத்தலும் தற்கொண்டாற் பேணலும் தகைசான்ற சொற்காத்தலும் சோர்வின்மையுமாகிய நற்பண்புகளால் மாண்புடைய வாழ்க்கைத் துணையாய்ப் பரமதத்தனை இன்புறு வித்து ஒழுகினார். சிறு பருவத்தில் சிவ நெறிப் பற்றும் சிவனடி யார்க்கு ஆவன செய்து சிறப்பிக்கும் சீரிய செய்கையும் இயற்கைப் பண்பும் பயனு மாகக் கொண்டவராதலின், புனிதவதியார் மனைக்கிழத்தியாகிய போதும் அவற்றைக் கைவிடாது செய்து வந்தார். அதனைச் சேக்கிழார், " நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திருவமுது அளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலான தம்பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் உம்பர் பிரான் திருவடிக் கீழ்"உணர்வு மிக" ஒழுகி வந்தார் என்று கூறுகின்றார். பரமதத் தனும் அந்நெறியில் பயின்ற பண்புடையனாதலால் அவரது செயலில் கருத்து வேற்றுமை இலனானான். இருவரும் சிவநெறிக்கண் ஒத்த ஈடுபாடும் மனவொற்றுமையும் கொண்டிருந்தமையின், இல்வாழ்க்கை இன்ப நிலையமாக இலங்கிற்று. புனிதவதியாருடைய சிவத்தொண்டு யாதோர் இடையீடும் இடையூறுமின்றி இனிது நடை பெற்றதே மனைவாழ்வில் அவர்க்கும் அவர் கணவற்கும் மனவொருமை மாண்புடன் விளங்கிற்றென்பதைத் தெற்றெனத் தெரிவிக்கின்றது. ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர் சிலர் மிகவும் அரிய மாங்கனிகள் இரண்டு கொண்டு வந்து தந்தனர், அவற்றின் இனிய நிறமும் நறு மணமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அவற்றை ஏவலரிடம் ஈந்து இல்லத்துக் கொடுக்க இயம்பினான். மனைக்கண் இருந்த புனிதவதியார் அக்கனிகளை வாங்கி ஒரு புடையில் வைத்து விட்டுத் தமது அட்டிற்றொழிலைச் செய் வாராயினர். சோறு சமைத்துக் காய்கறிகளை வகைசெய்யப் புகும்போது, மிகவும் பசித்த மேனியுடன் ஒரு முதிய சிவத் தொண்டர் அவர் மனைக்குப் போந்து புனித வதியாரை நோக்கித் தம் பசிப்பிணியைப் போக்கு மாறு இரந்து நின்றார். அவருடைய இளைத்த மேனியும் களைத்த நிலையும் அம்மையார் உள்ளத்தை அசைவித்தன. அவரது பசி தீர்ப்பது கடன் என்ற உணர்வு மீதூர்ந்தது. உடனே அவர், பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து இன்னடிசில் இடுவாராயினர். தமது மனையில் அப்போது கறியமுது ஒன்றும் ஆகாமையும் சோற்றமுது ஒன்றே ஆகியிருப்பதும் அவர் கண்டார்; வேறொன்றும் நினையாமல், "விடையவன் தன் அடியாரே பெறலரிய விருந்தானால் பேறு இதன்மேல் இல்லை" என்று தெளிந்து, அச்சோற்றை அடியவர் இலையிற்பெய்து, "இல்லாளன் வைக்க" என விடுத்திருந்த மாங்கனி களில் ஒன்றைப் படைத்தார். அவர் அதனையுண்டு பசி தீர்ந்து உள்ளம் குளிர எழுந்த உவகை மிகுதியால் அவரை வாயார வாழ்த்திச் சென்றார். சிறிது போதில் பரமதத்தனும் மனைக்குட் போந்தான். அவன் நீராடி வழிபாடு முடித்துக் கொண்டு உணவு கொள்ளத் தொடங்கினான். சோறும் கறியும் படைத்த புனிதவதியார், அவன் ஏவலர்பால் விடுத்த மாங்கனிகளில் ஒன்றையும் அவற்குப் படைத்தார்; அவனும் அதனை யுண்டான். அதன் சுவை புனித இனிமையுற்று விளங்கிற்று. அவன் உள்ளத்தே அதன் சுவையின் ஆராமை மிகுந்து மற்றொரு கனியையும் உண்டற்கு ஆர்வம் எழுந்தது; அதன் சுவையைப் பாராட்டி, "இனையதொரு பழம் இன்னும் உளது; அதனையும் இடுக" எனப் பெரு விருப்பத்தோடு கேட்டான். அவனது விருப்பமிகுதி கண்ட அம்மையார் தாம் அதனைச் சிவத்தொண்டர்க்கு அளித்தொழிந்தமையை மறந்து அதனைக் கொண்டுவருவார்போல அட்டிலகம் புகுந்தார்; அடியார்க்கு அதனை அளித்தது நினைவிற்கு வந்தது. என் செய்வார்? இறைவனை நினைந்தார்; உள்ளம் உருகிற்று; உடல் நடுங்கிற்று; உடனே இருகையும் ஏந்தி இறைவன் திருவருளை எண்ணினார். மூடிய கண்களைத் திறந்தார்; அவரை அறியாமே, "கைம் மருங்கு வந்திருந்தது அதிமதுரக் கனியொன்று." அவர் அதனை கணவற்குப் படைத்துக் கண்ணுதற் கடவுளின் கருணைத் திறத்தை உள்ளத்தே நினைந்து உவகை மிகுந்தார். அக்கனியையுண்ட பரமதத்தனுக்கு அது தந்த சுவை பெரு வியப்பை உண்டாக்கிற்று, "இது நான் முன்னே தந்த மாங்கனியன்று; இதுபோலும் கனி மூவுலகிலும் பெறல் அரிது; இதனை வேறு எங்கே பெற்றாய்?" என்று அவன் அம்மையாரைக் கேட்டான். "பெற்றது வேறு எங்கே" என அவன் கேட்ட வினா அவர் உள்ளத் தையும் உடலையும் குலுக்கிற்று. இறைவன் திருவருள் என்று மொழியின் அஃது அவனால் எள்ளி இகழப்படும் என அஞ்சினார்; அதனால் அதனை உரைத்தற்கு ஆகாமை ஒரு புறம் வருத்த, கணவற்கு உண்மை கூறாமை தகை சான்ற சொற்காக்கும் கற்புநெறி யாகாமை ஒருபுறம் வருத்த இருதலைக் கொள்ளியுள் எறும்புபோல் அவர் உள்ளம் சிறிது தடுமாறிற்று. 'செய்தபடி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தால்' நிகழ்ந்த தனை நிகழ்ந்தபடி நிகழ்த்தினார். அதனைக் கேட்டதும் பரமதத்தனுக்கு உள்ளம் அமைதி பெறவில்லை. அவரை எள்ளுவான்போல முறுவலித்து, "இது சிவபெருமான் திருவருளாயின். 'இன்னமும் ஓர் ஆசில்கனி அவனருளால் அழைத்தளிப்பாய் என மொழிந்தான்." அவனது முறுவல் இன்னகை அவர் உள்ளத்தைச் சுட்டது. திருவருளை இகழ்ந்தது அவருடைய உடல் கருவி கரணங்கள் எல்லாவற்றையும் எரித்தது. பழையபடி தனியிடம் சென்று இறைவனை வேண்டினார்; "இப்போது, இதனை அளித்தருளீரேல், என் உரை பொய்யாம்" என்று மனமுருகினார். "வேண்டுவோர் வேண்டுவதே ஈபவன்" ஆதலால், மற்றொருமாங்கனி அவர் கைக்கண் வந்து எய்திற்று; உடனே அதனை அவன் கையில் கொடுத்தார். அதனை வாங்கிய பரமதத்தன் நன்கு நோக்கி வியப்புமிக்கு அவரை நோக்கினான். அக்கனி திடீரென மறைந்து போயிற்று, அவன் மனம் அச்சமும் தடுமாற்றமும் எய்தி அலமருவதாயிற்று; அவன் தலை சுழன்றது; எண்ணங்கள் பல எழுந்து அம்மையாரை ஒரு கண்கண்ட தெய்வம் என நினைக்குமாறுதூண்டின. அன்றுமுதல் அவற்கு அம்மையாரைத் தீண்டுதற்கே பேரச்சம் தோன்றிப் பேதுறுவித்தது; அவனுடைய மனமும் படிப்படியாக வேறுபட்டது எங்கேனும் தனித்துச் சென்று வேறு மனைவாழ்க்கை அமைத்துக் கொள்ளல் நன்று என்ற எண்ண முடையவனாய் எவர்பாலும் சொல்லாமல் தன் மனதுக்குள் அடைத்துக்கொண்டான். காரைக்காலிலிருந்து கடல் வணிகர் சிலர் வேறு நாடுகட்கு வாணிகம் குறித்துப் புறப்பட்டனர். அவர்க்குத் தலைமைதாங்கிச் செல்லும் தகைமையும் செல்வமுமுடையனாதலால் பரமதத்தனும் மரக்கல மேறிச் சென்றான். எவ்வெந் நாடுகட்குச் செல்ல விரும்பினரோ அவ்வந் நாடுகட்குச் சென்று அவனும் மிக்க பெருஞ் செல்வம் ஈட்டினான்: இவ்வகையில் நாட்கள் பல கழிந்தன. பின்பு அவன் தன் மரக்கலத்தைச் செலுத்தித் தன்னாடு திரும்புவானாய் வருகையில் நேரே தனது சோழநாட்டை எய்தாது பாண்டி நாட்டுப் பட்டினம் ஒன்றில் இறங்கி ஓர் இடத்தே தன் பொருள் வகை பலவற்றையும் தொகுத்து வாணிகம் புரியலுற்றான். கடற்கரைப் பட்டினமாகிய அதன்கண் வாழ்ந்த வணிகரது நெருங்கிய தொடர்பு உண்டாகவே, பரமதத்தன் அங்கே சிறந்து விளங்கிய வணிகன் ஒருவனுடைய மகளை மணந்து மனையறம் மேற்கொண்டான். முன்னமேதான் புனிதவதியாரை மணந்திருந்த செய்தி புறத்தே வெளியுறாமல் "பொதிந்த சிந்தனையினோடு முறைமையின் வழாமை வைகி முகமலர்ந்து" ஒழுகினான். அவனுக்குச் சில திங்கள் கழிந்தபின் பெண் மகவு ஒன்று பிறந்தது; அதற்குப் புனிதவதி எனப் பெயரிட்டு அன்புடன் பேணி வந்தான். புனிதவதியாரைத் தனக்கு மனைவி யென நினையாது "தெய்வத் தொழுகுலம்" என்றே அவன் அங்கும் எண்ணி வாழ்ந்தான். பரமதத்தன் கடல் வாணிகம் குறித்துப் பிரிந்த காலை, புனிதவதியார் தன் கணவன் வருகைநோக்கி தமக்குரிய மனையறத்தை மாண்புடன் புரிந்து வந்தார். ஆண்டுகள் சில கழிந்தன. பின்பு, பாண்டி நாட்டில் அவன் செல்வப் பெருக்கால் சிறந்து விளங்கிய திறம் உண்ணாட்டு வணிகர்களால், தனதத்தன் முதலியோர்க்கு எட்டிற்று. அவர்கள் தம்மினத்து ஆட்கள் சிலரைப் பாண்டி நாட்டுக்குச் செலுத்திப் பரமதத்தன் நிலையைத் தெளிந்து கொண்டு," இனி, புனிதவதியாரை அவன்பால் சேர்ப்பதே கடன்" என எண்ணினர். அவர்க்கு அச்செய்தியை அறிவித்துச் சிவிகை யொன்றில் வைத்து நெருங்கிய சுற்றத்தவர் உடன் சூழ்ந்து வரப் பாண்டி நாட்டு அப்பட்டினத்துக்குக் கொண்டு சென்றார்கள். சென்றவர்கள் ஓரிடத்தே புனிதவதியாரை இருத்தி, அவர் வந்திருக்கும் செய்தியை முன்பாகச் சென்று பரமதத்தனுக்குத் தெரிவித்தார்கள். புனிதவதியாரின் வரவு கேள்வியுற்றதும் பரமதத்தன் உள்ளத்தில் பேரச்சம் தோன்றிற்று. சிறிது போது சிந்தித்துத் தன் இரண்டாம் மனைவியையும் அவள் வயிற்றிற் பிறந்த பெண்மகவையும் உடன ழைத்துப் புனிதவதியார் முன்தானே முந்துரச் சென்றான். அவன் வரவு கண்டதும் அகத்தெழுந்த அன்பு முகத்திற் பொலிய எழுந்து தொழுது நின்ற புனிதவதியார் திருவடிகளில் விழுந்து வணங்கி, மனைவியையும், வணங்கப் பணித்து, "யான் நுமது அருளால் வாழ்வேன்; இவ்விளங்குழவி தானும் பான்மையால் உமது நாமமே உடையது" என்று பணிவு தோன்ற மொழிந்து மறுபடியும் வணங்கினான். தன்னைக் கைப்பற்றிய கணவன் தன் தாளில் வணங்குவது கண்ட அம்மையார் நெஞ்சில் அச்சம் கொண்டு அருகு நின்ற தம் சுற்றத்தார் குழுவைச் சேர்ந்து ஒதுங்கி நின்றார். அது கண்டு வியப்பும் நாணமும் மிக்குற்ற சுற்றத்தவர், "உன் திருமனைவியை நீ வணங்குதலாகுமோ?" என்று வினவ, பரமதத்தன் அவர்களை நோக்கி, சுற்றத்தீர், இவர் மானுடமல்லர்; நற்பெருந் தெய்வம்; அதனை நான் நன்கு அறிந்தே அகன்றேன்; அதன் பின்பு பெற்ற இம்மகவுக்கு இவர் பெயரே இட்டேன். ஆதலால் நீவிரும் இவருடைய பொற்பதம் பணிந்து போற்றுதல் செய்ம்மின்" என்று எடுத்தியம்பினான். சுற்றத்தார் கேட்டு மனம் மருண்டு,"இது என் கொல்" எனச் சொல்லி வாய் பேசாது மரம் போல் நின்றனர். புனிதவதியார் உள்ளம், இதுகாறும் நடுவேமை நின்ற விளக்கொளி போல் கணவனாகிய பரமதத்தனை நடுவிற் கொண்டு சிவவொளி திகழ்ந்து நின்றது; இப்போது முழுதும் சிவஞானப் பெருவிளக்கால் பிறங்கலுற்றது. சிவபெருமானைத் திருவுள்ளத் திருத்தி, அவன் திருவடியை நினைவால் வணங்கி, பரமதத்தனும் சுற்றத்தாரும் பிறரும் கேட்க, "இங்கு யான் தாங்கிய வனப்புமிக்க இவ்வுடம்பை இவ்விடத்தேயே கழித்து உன்பால் வந்து உன்தாள் களைப் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு அருள வேண்டும்" எனச் சிவனருளைப் பரவி நின்றார். மைதீட்டிய மலர்ந்த குவளை போல் விளங்கிய அவருடைய கண்கள் தம் பொலிவிழந்து சுருங்கின; காண்பார் கண்களுக்கு அழகு விருந்தூட்டிய கன்னங்கள் குழிந்து திரங்கின. முத்து நிரைத்தாற் போன்ற பற்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் நீண்டன. மேனி முழுதும் ஒளி மழுங்கித் தோல் சுருங்கி மெலிந்தது. கையும் காலும் எலும்பு தோன்றச் சூம்பின. தலைமுடி சுருண்டு தீயின் நிறம் பெற்றது. நகங்கள் தாமாகவே நீண்டன. அவர் வாயிலிருந்து, " பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியை சேர்ந்தேன்-அறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர்" என்ற பாட்டு வந்தது. பின் அதனைத் தொடர்ந்து, " இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும்-சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் ஈசனார்க்கு அன்பறாது என்னெஞ்சு எமக்கு." என்ற பாட்டு அந்தாதியாக வருவதாயிற்று. அது கண்டதும் சுற்றத்தாரும் பிறரும் அஞ்சி நடுங்கி அவ்விடம் விட்டு அகன்றனர்; சிறிது சேய்மைக் கண்டு நின்றவர்களும் கையகன்றோடினார்கள். தமது பேய் வடிவுகண்டு மக்கள் அஞ்சி நீங்குவது பார்த்த அம்மையார், "அண்டர் நாயகனார் என்னை அறிவாரேல், அறியாத இம்மண்ணக மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்" என்று மொழிந்து வடக்கிற் கயிலைமலை நோக்கிச் செல்லலுற்றார். பண்ணாள் கழிந்தபின் காரைக்காற் பேயார் கயிலை மலையை நெருங்கினார். அப்பகுதியைத் தம் கால்களால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடக்கலுற்றார்; பேய் வடிவுக்கு அவ்வாறு நடப்பது இயலும் போலும். கயிலையில் சிவனோடு ஒருங்கிருந்த உமையம்மை, இவர் தலையால் நடந்து ஏறி வருவதைக் கண்டு, பெருமானுக்குக் காட்டி "ஓர் எற்புடம்பு நம் கயிலையில் தலையால் நடந்து வரும் அன்பை என்னென்பது" என்றாராக, அவர், "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்; இப்பெருமை சேர் வடிவையும் நம்மை வேண்டியே பெற்றாள்" என்றார். பேயார், அவ்விருவரையும் அணுகவும், சிவன், "அம்மையே" என அன்போடு கூப்பிட்டார்; பேயாரும் "அப்பா" என்று சொல்லி அவர் திருவடியில் வீழ்ந்தார். பின்பு, எழுந்து நின்று ஆராத இன்பப் பெருக்கால் பலவாறு பரவி நிற்க, "அம்மையே, நீ வேண்டுவது யாது? " என்று சிவபெருமான் கேட்டருள, "ஆண்டவனே, எனக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும்; பின்பு, யான் பிறவாமை வேண்டும்; மீண்டும் எனக்குப் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; மேலும், நீ ஆடும் போது உன் அடியின் கீழ் நான் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருக்க வேண்டும்" என்று காரைக்கால் அம்மையார் வேண்டிக் கொண்டார். அவர்க்குச் சிவபெருமான், "தென்னாட்டில் திருவாலங்காடு என்னும் பேரூரில் யாம் ஆடுவோம்; ஆடுங்கால், நீ ஆனந்தம் எய்தி எப்போதும் எம்மை பாடுவாயாக" என்றார். அவரும் அவ்வண்ணமே திருவாலங்காட்டுத் திருநடம் கண்டு பாடுவாராயினர். அவர் பாடிய இசைப் பதிகங்கள், தேவார திருவாசகங்களுக்குக் காலத்தால் முற்பட்டனவாதலால், அவற்றை, மூத்த திருப்பதிகம் எனச் சைவத் திருமுறைகள் குறிக்கின்றன. இவர் வரலாற்றை உண்மைநெறி நின்று ஆராய்ந்துரைத்த சேக்கிழார் " மடுத்த புனல் வேணியினார் அம்மை யென மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரை அடுத்த பெருஞ் சீர்பரவல் ஆர் அளவாயின தம்மா" என்று பாராட்டியுரைக்கின்றார்.  31. பாட்டங்கால் வந்த பயன்* செங்கைமா என்னும்போதே அதனை வடக்கிலும் கிழக்கிலும் வளைந்து மணந்து கிடந்தோடும் சேயாறு மனக் கண்ணில் காட்சி வழங்குகிறது. கலங்கிக் கலுழி பாய்த்தோடு தற்குரிய அதன்கண் தெளிந்த நீரோடுகிறது. குருதி பாய்ந்தது போலப் பரந்து தோன்றும் செம்மணல், இரு மருங்கம் இளைஞர் சடுகுடு விளையாடி மகிழ்தற்கு இடந்தருகிறது. இதன் நடுவே, சிறு சிறு கற்களிடையே, சலசலவெனக் கலித்தோடும் நீர் வழியே செல்லின், செங்கைமாவின் கீழ்ப் பகுதியை அடைகின்றோம். ஆங்கேயுள்ள மணற்பரப்பில், சிறுமியர் மணல் வீடு கட்டிச் சிறு சோறட்டு விளையாட்டயர்கின்றனர். இவ்விடத் திற்கும் கீழைத் தெருவின் முடிவுக்கும் இடையே தென்னந் தோட்டம் நின்று தீவிய நிழல் செய்கின்றது. ஒரு புறத்தே, காய்கறி பயிராகும் பாட்டங்காலில் (தோட்டங்காலில்) உழவரும் பிறரும் தமக்குரிய வேலை செய்கின்றனர். வேலியிற் படர்ந்த பாங்கர்க் கொடி நகைப்பதுபோல அரும்பு மலர்ந்து அழகு திகழ்கின்றது. வேலியின் தென்கீழ் முடுக்கரில் நிற்கும் குறிஞ்சி மரம் தழைத்துப் பூவலர்ந்து பொலிகின்றது. சிவந்த மேனியும் நீண்ட கரிய கூந்தலுமுடைய நங்கை யொருத்தி வேறு சில பெண்களுடன் தென்னந் தோப்பின் கீழ்ப் பக்கத்தே மணல் பரந்த நீழலிடத்தே ஓடி வருகிறாள். அவளெதிரே வேறு சில சிறுமியர் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களைக் கண்டதும், "மணலில் விளையாடலாம், வருவையோ?" என்கிறாள் தலைமை தோன்ற முற்போதரும் தடங்கண்ணி "உன்னோடு விளையாட வந்தால், என் வேலை எல்லாம் அப்படியே கிடக்குமே? என் தாய் சினவுவளே" என்கிறாள் எதிரில் வரும் இடையர் மகள். "யான் என் வேலையெல்லாம் முடித்து விட்டேன். தன்னையர் கறந்து கொணர்ந்த பாலை வேற்றுக் கலங்களில் மாற்றி விட்டேன்; கன்றிருந்த தொழுவினைத் தூய்மை செய்துவிட்டுக் கன்றையும் மனையில் தூண்களில் பிணித்துப் புல்லிட்டேன்." "ஈதேதடி நீலப்பட்டு?" என்று வினவுகிறாள் அருகில் நிற்கும் அரக்காம்பல். தடங்கண்ணி : இந் நீலப் பூவாடையை என் தாய் தந்தாள். இடையர் மகள்: சரி, எனக்கு இன்னும் வேலை முடிய வில்லை; நான் போய் வருகிறேன். தடங்: வேலையைச் சுருக்காய் முடித்துக் கொண்டு வருகிறாயா? இடையர் மகள் : (சிறிது தொலைவு சென்று) தடங்கண்ணி! அதோ,அப்பாங்கர்ப்புதருக்குப் பக்கத்திலேயே இருங்கள். யானும் விரைவில் வந்துவிடுகின்றேன். தடங் : நல்லது, போய் வா. (மற்றவர்களைப் பார்த்து) வாருங்கள் அவள் சொன்னபடியே அப் புதரருகிலேயே விளையாடுவோம். ஏனைமகளிர்: ஆமாம்; அது நல்ல இடந்தான். நீ அங்கே வீடு கட்டிக் கொண்டிரு; நாங்கள் அக்கரையிலுள்ள கோட்டை வெளியில் களாப்பழம் பறித்துக் கொணர்கின்றோம். வீடுகட்டி அதிலிருந்து உண்பதற்குச் சோறு வேண்டாவா? தடங் : அது நல்லதுதான். ( மகளிர் போகின்றனர். தடங் கண்ணி மணல் வீடு புனைகின்றாள்.) உருவில்லாத காமன் உருக்கொண்டு வருதல் போல வரும் இவ் விளங்காளை யாவன்?, இவன் தலையில் குருந்தம் பூவால் தொடுத்த கண்ணியிருந்து நறுமணமும், பேரழகும் செய்கின்றதே! இவனுடைய மார்பும் தோளும் காண்கின்ற நம் மனக்கண்ணைக் கவர்ந்து கொள்கின்றன. முகத்தில் தவழும் முறுவல் நம் உள்ளத்தைக் குளிர்ப்பிக்கின்றது. நெற்றியின் ஒளி அவன் அகத்தே தோய்ந்து கிடக்கும் அருணிலையைப் புலப்படுத்துகின்றது. அசைந்து வரும் அவனது நடையில் அறவொழுக்கத்தின் அமைதி விளங்குகிறது. உரனும் பெருமையும் ஒருங்கு விரவிய அவனது உயர் நிலையை அவனது உடலின் ஒவ்வோருறுப்பும் புலப்படத்து கின்றது. வருகிறவன் முகம் அப்போது அலரும் மலரென மலர்கின்றதே! ஏன்? அவன் தடங்கண்ணியைக் காண்கின்றான். சிறு நாணம் முகத்தே படருகிறது; அதுவும் உடனே மாறுகிறது. முகம் நன்கு ஒளிர்கிறது. இன்பவுணர்ச்சி எழுகிறது என அது நமக்குத் தெளிய உணர்த்துகிறது. முன்னம் முகம்போல முன்னுரைப்பது வேறோன்றும் இல்லை யன்றோ? இவன் யாவன்? இவனே இளங்கண்ணன். முருகனைப் போல முருகுதிகழத் தடங்கண்ணி முன் வருகின்றான். இதுகாறும் அவன் வரவை யறியாதிருந்த தடங்கண்ணி, தன் மலர் முக்ததை அவன் பக்கத்தில் திருப்பி அவனைக் காண்கின்றாள். அவளது தடங்கண்ணிடத்தே களங்கமற்ற தூயவொளி யெழுகிறது. சட்டென அவள் முகம் கவிழ்கிறது. சிற்றில் புனைவதிலே அவள் கைகள் ஈடுபடுகின்றன. அது நன்கு அமையாது கோடுகின்றது. அதனைச் சிதைத்து வேறு அமைக்கின்றாள். அதுவும் நன்கு அமையவில்லை அது கண்டதும் இளங்கண்ணன், பொக்கென நகைத்து, "நல்லாய், இச்சிற்றில்லை யான் புனைந்து தரலாமோ? சிறிது ஒதுங்கு; யான் நன்கு அமைத்துத் தருகின்றேன். பின்பு நீ அதிலிருந்து இல்வாழ்க்கை செய்வாய்," என்கின்றான். இச் சொற்கள் தடங்கண்ணியின் செவியிற் புகுதலும், அவள் முகம் சிவந்தது. நாணத்தாலோ வெகுளியாலோ அறியோம். அவள் மலர் வாயிலிருந்து சில சொற்கள் வெளிவந்தன. அவற்றின் ஓசையில் வேண்டாக் குறிப்பே மேம்பட்டிருந்தது. அச் சொற்கள், "எல்லா! நீ பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல்லிருப்பாய்; கற்றது இலை மன்ற, காண்" என வந்தன. இவற்றால் நம் இளங்கண்ணன், "பிறர் அமைத்த இல்லின்கண் இருந்துகொண்டே, நாம் இதனைப் பெற்றேம் என மகிழ்வோம்; நமக்கென இல் அமைத்துக் கோடலை நாம் அறிந்திலேம் என இறுமாந்து பேசுகின்றாள்," எனக் கொண்டு அவ்விடம் வீட்டுப் பெயர்ந்தேகினன். பின்னொரு நாள் மாலைப் போதில் இளங்கண்ணன் யாற்று மணலில் சிறு மகளிர் பலர் ஒன்று கூடிப் பூக்கொய்து விளையாட்ட யர்தலைக் கண்டான். அவர்கள் தாம் பறித்த பூவை அழகுற மாலை தொடுத்துஒருவருக்கொருவர் அணிந்து கொண்டனர். அவர் செய்கையைச் சேய்மைக் கண்ணே நின்று நோக்கியிருக்கையில், தடங்கண்ணி தொடுத்த பூங்கோதை நன்கு அமையாமையால் மகளிர் கைகொட்டி நகையாடக் கண்டான். அவட்குத் தன்னாலியன்ற துணைபுரிய வேண்டுமென்றொரு வேட்கை அவன் உள்ளத்தே எழுந்தது. அதன் வயப்பட்ட அவன் மெல்ல அம் மகளிர் இருந்த சூழலை அடைந்தான். தடங்கண்ணி, தன் கோதையை மறுவலும் நன்கு தொடுக்க முயல்வதைக் கண்டு, அன்பு கனியும் மொழிகளால், "முற்றிழாய்! தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு?" என்றான். அது கூறி முடிக்குமுன் அவன் செவியகத்தே, "எல்லா, நீ ஏதிலார் தந்த பூக்கொள்வாய்; நனி மிகப் பேதையை மன்ற பெரிது" என்ற சொற்கள் புகுந்து அவன் நெஞ்சத்தைச் சுட்டன. அவன் முகம் விளர்த்தது. நாணத்தால் உடல் சுருங்கிற்று. பேசுதற்கு நாவெழவில்லை. அறிவு கலங்கி ஒன்றும் உரையாடாது அவர் களினின்றும் நீங்கிச் சென்றான். சிறிது தொலைவு சென்றதும் திரும்பி நோக்கின் அவன் நோக்கிற்கு எதிராகத் தடங்கண்ணியின் காதற் குறிப்புணர்த்தும் அன்பு நோக்கம் வந்தது. உள்ளம் குளிர்ப்பெய்த, உவகையூற்றெடுப்ப, ஊக்கம் கிளர்ந்து இளங்கண்ணன் ஏகினன். காலை ஒன்பதுமணி இருக்கும்; சேயாற்றிற்கு இடையர் மகளிர் கூட்டமாகச் செல்கின்றனர். மூவரும் நால்வரும் ஐவரு மாகச் செல்கின்றனர். "ஏடி, கொடிமுல்லை! உங்கள் வீட்டில் இன்றைக்கு ஏதோ சிறப்பு நடைபெறுகிறதாமே? மெய்தானா? என்று வினவு கின்றாள் கண்ணகி என்னும் காரிகை." "இது தெரியாதா? எங்கள் வீட்டிற்குச் சான்றோர் இன்று மணம்பேச வருகின்றார் களாம். விடியலில் மணமுரசு எழுந்ததே; நீ கேட்கவில்லையோ?" என்கிறாள் அக்கொடிமுல்லை. வேறொருத்தி, "யாருக்கு யாரை மணம் பேசப்போகின்றனர்?" கொடிமுல்லை: தடங்கண்ணியை மேற்பாடி கோதை வேலானுக்கு மணம் பேசப் போகின்றார்கள். கண்ணகி : தடங்கண்ணி எங்கே? அவள் இன்னும் வர வில்லையே. அவள் முகத்தைப் பார்க்க வேண்டும். கொடி முல்லை: அவள் முகத்தைப் பார்க்க வேண்டா. அவளுக்கு இந்த மணத்தில் விருப்பமேயில்லை. அவள் முகவாட்டம் என் தாய்க்கு மிக்க வருத்தத்தை யுண்டுபண்ணி யிருக்கிறது. தடங்கண்ணியும் அவள் தோழி அரக்காம்பலும் தோட்டத்தில் ஒரு புறத்தே நிற்கின்றனர். வெண்முகிலிற் படிந்து ஒளிமழுங்கிய திங்கள் போலத் தடங்கண்ணியின் முகம் சாம்பி இருக்கிறது. கண்கள் நீர்த்துளிகள் தாங்கிக் கலுழ்கின்றன. ஏதோ சொல்ல நினைக்கின்றாள். நாணம் தகைக்கின்றது. நெஞ்சைத் தேற்றுகிறாள். பிறர் கேட்பரோ என அஞ்சும் அவள், சுற்று முற்றும் அடிக்கடி பார்க்கிறாள். "ஏடி ஆம்பல்," என்கின்றாள். அரக் : என்ன செய்தி? சொல். தடங் : ஒன்றுமில்லை; இதற்கொரு வழி சொல்வாயா? அரக் : எதற்கு? தடங் : இந்த மணப் பேச்சைத் தடுப்பதற்கு. அரக் : திருமணத்தைச் சிதைப்பது தீது. அறமே யன்று. ஓ அது கூடவே கூடாது. தடங் : ( கையைப் பிசைந்துகொண்டு) ஐயகோ நான் சொல்வதற்குள் நீ ஒரு முடிபு செய்து விடுகிறாயே! நீயும் எனக்குத் தீங்கு செய்யத் துணிந்தனை போலும். (கண்களில் நீர் சொரியத் தேம்பியழுகிறாள்.) அரக் : ( கண் கலங்கி) தடங்கண்ணி! அழாதே! சொல். என்னால் இயன்றதை முட்டின்றி முடிக்கின்றேன். தடங் : (தனக்குள்) எவ்வாறு சொல்வேன். (சிறிது தாழ்த்து) இனி தாழ்ப்பதில் பயனில்லை அறத்தொடு நிற்பதே தக்கது. (வெளிப்படையாக) நீ அவனைக் கண்டு...... அரக் ; (மருண்டு நோக்கி) எவனை? தடங் ; (தழுத்த குரலில்) இளங்கண்ணனை. அரக் : (வியப்புடன்) இளங்கண்ணனையா? அவனோடுதான் நீ முன்னொரு நாள் வெறுத்துப் பேசிவிட்டாயே! தடங் :எப்போதும் கிடையாதே. அரக் : நீயே நினைத்துப் பார். அன்று குறிஞ்சிமரத்து முடுக்கரில் விளையாடும் போது, அவன் வந்தானன்றோ! தடங்: (நகைத்து) நீ அறியாது பேசுகிறாய். நடந்தது கேள். அரக் : என்ன? சொல். தடங் : " தீம்பால் கறந்த கலம்மாற்றிக் கன்றெல்லாம் தாம்பால் பிணித்து மனைநிறீஇ, யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம் புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன்மற்(று) என்னை முற்றிழை ஏஎர் மடநல்லாய்! நீ ஆடும் சிற்றில் புனைகோ சிறிது" என்றான்; "எல்லா! நீ பெற்றேம்யாம் என்று பிறர்செய்த இல்இருப்பாய்; கற்றது இலைமன்ற காண்" என்றேன். (வேறொருநாள்) ............................................................... "முற்றிழாய்! தாதுசூர் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு?" என்றான்; எல்லா! நீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய்; நனிமிகப் பேதையை மன்ற பெரிது, என்றேன். (இவ்வாறே மற்றொருநாள்) ......................................................... "மாதராய்! ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யில் எழுதுகோ மற்று?" என்றான்; "யாம்பிறர் செய்புறம் நோக்கி இருந்துமோ? நீபெரிதும் மையலை மாதோ, விடுக" என்றேன். அரக்: அங்ஙனமிருக்க, அவனிடம் ஏன் போக வேண்டும்? தடங்: .................................... "தையலாய்! சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்." அரக்: அதற்காக இப்போது நாமே போவதா? தடங் : போனால் என்ன? குற்றம் ஒன்றுமில்லை. அரக் : போய் என்ன சொல்வது? தடங்: ............................................. "அவனை, நீ, ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும் யாயும் அறிய உரைத்தீயின், யான்உற்ற நோயும் களைகுவை மன்..." அரக்: (தலையசைத்து) அப்படியா? இருக்கட்டும். ஆயர் மகளிர் இயல்பு என்ன என்றால் என்ன சொல்வது? தடங் : நீயும் ஆய்மகள் தானே, உனக்குத் தெரியாதா? அரக்: எனக்கு இப்போது நினைவு இல்லை; நீயே சொல். தடங் ; " விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்இயல் பன்றே." (கலித்தொகை) அரக் : நல்லது, நல்லது; நான் போய்வருகிறேன். தடங் : நோய் களைதல் வேண்டும்; நினைவில் இருக்கட்டும். வாழ்க. 32. தமிழின் தற்கால நிலையில் தமிழ் மகளிர் செயற்குரிய பணிகள் தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்துப் பெருங் கிளர்ச்சி தோன்றியிருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தில் "தமிழ் வாழ்க" "தமிழ் வாழ்க" என்னும் வாழ்த்தொலி பெரு முழக்கத்தோடு எழுகின்றது. அரசியற் கூட்டம், சமயக்கூட்டம், சமூகக் கூட்டம் என வரும் பலவகைக் கூட்டங்களிலும் தமிழின் வாழ்த்தொலி கேட்கப்பெறுகின்றது. இதனால், தம் தாய்மொழி யாகிய தமிழை மறந்துகிடந்த தமிழர், - தமிழ்மொழியின் வளர்ச்சியின்பால் கருத்தூன்றாதிருந்த தமிழர்,- வேற்று மொழியின்பால் வேட்கைமிக்குத் தம்மையும், தம் மொழியையும், தம் நாட்டையும் புறக்கணித்து மெலிந்திருந்த தமிழர், - இப்போது உறக்கத்தினின்று விழித் தெழுந்து விட்டனர் என்பது இனிது விளங்குகின்றது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தம் உயிரையும் உதவுதற்குரிய வூக்கம் ஆடவர் பெண்டிர், இளையவர் முதியவர், செல்வர்வறியர், கற்றவர் கல்லாதவர் என்ற யாவர் மாட்டும் கிளர்ந்து மிளிர்கின்றது. தமிழின் தற்கால நிலையில், வேண்டும் தொண்டுகளை ஆற்றுதற்கு ஆண் பெண் என்ற பால்வேறுபாடு கிடையாது. ஆடவர்தமிழ், பெண்டிர்தமிழ் என்ற வேறுபாடு மில்லை. தமிழ், ஆடவர்க்கு எத்துணை இன்றியமையாததோ, அத்துணைப் பெண்டிர்க்கும் இன்றியமையாதது. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறிவென்பது பெரும்பேதைமைத்தே" என வெழுந்த இடைக்காலக்கொள்கை, பண்டைய தமிழ்வரலாற்று விளக்கத்தாலும், தற்காலப் புதுக்கோள் வழக்காலும் பொய்படுவதா யிற்று. ஒளவையார், காக்கை பாடினியார், மாறோக்கத்து நப்பசலையார், கழார்க்கீரனெயிற்றியார் என்ற புலவர்பெரு மாட்டிகளின் தமிழ்ப் பணியாலும், காரைக்காற் பேயார், ஆண்டாள் என்போரின் இடைக்காலத்திருத்தொண்டாலும், தமிழ்ப்பணி யென்பது இருபாலார்க்கும் ஒப்பவுரிமை யுடைதென்பது வெளிப் படுவதாயிற்று. ஆயினும், மகளிர், பிறப்புவகையாலும், உடற்கூற்றாலும் ஆடவரின் வேறுபடுதல் உண்டு; அதனால், அவர் வாழ்க்கைப் பணியும் வேறுபடுகின்றது. இல்லிருந்து நல்லறம் செய்தற்கண், அகத்தேயிருந்து ஆவனசெய்தல் மகளிர்க்கும், புறத்தே சென்று ஆண்மைப்பணி புரிதல் ஆடவர்க்கும் உளவாயின. அவ்வாற்றால், மொழித்தொண்டும் அவரவர் வாழ்க்கைத் தொழில்முறையால் சிறிது வேறுபாடு எய்தியிருக்கிறது. அது கண்டே, மகளிர் தமிழ் மொழியின் வளர்ச்சிகுறித்துச் செய்வனயாவை யென்பதுபற்றி ஆராய்ச்சி நிகழ்வதாயிற்று. அது செய்தலும் அறிவுடையோர்க்கு அமைந்த செய்கையே யென்பது துணிபாயிற்று. தமிழ் வளர்ச்சி குறித்து வேண்டுவனவற்றை யெண்ணப் புகுவோர், முதற்கண், அதன் தற்காலநிலையினை உணர்தல் வேண்டியவராவர். ஒரு பொருளின் வளர்ச்சி குறித்துத் துணை செய்தல் வேண்டின், அதன் உண்மைநிலையையும் அதன்கண் உளவாகியிருக்கும் குறைபாடுகளையும், அவற்றை நீக்குமாற்றையும், நீக்கியவழி, அஃது இடையூறின்றி வளர்தற்கு வேண்டும். ஆக்க நெறியையும் ஆராயவேண்டியது இன்றியமையாதது. ஒன்றின் வளர்ச்சிநாடி ஒருபணி புரியவேண்டுமென்பது. உலகறிய விளங்கு மாயின், அதன்பால் குறைகள் உளவாயிருக்கின்றன என்பதுஅறிஞர் அறிந்ததொன்று. "குறைபாடு உள்ளதற்கன்றே வளர்ச்சி உளதாவது" என்றனர் ஆசிரியர் பேராசிரியர். தமிழின் தற்காலநிலையினை உள்ளபடியே நோக்கின் பலவகைக் குறைகள் நமக்கும் புலனா கின்றன. நம் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் (Colleges), உயர் நிலை, நடுநிலைப் பள்ளிகளிலும் (High and Middle Schools) நம் தாய் மொழியாகிய தமிழ்மொழி ஒவ்வொரு தமிழ்மாணவனுக்கும் கட்டாயப் பாடமாக இல்லை. ஒருவர் தம் மனத்தெழும் கருத்துக் களைப் பிறர்க்குத் தெரிவித்தற்கு உறுகருவியாக இருப்பது அவர்தம் தாய்மொழியே யாகும். ஜான் லாக் (John Locke) என்னும் பேராசிரியர், “ஒருவர் எத்துணை மொழி வேண்டினும் கற்கலாம்; எத்துணை மொழிகளை ஒருவர் கற்கிறாரோ அத்துணையும் அவர்க்கு அது நலமே; எனினும், அவர் நாடோறும் ஒழிவின்றிப் பயின்று கசடறக் கற்க வேண்டுவது அவர்தம் தாய்மொழியே யாகும்*” என்று வற்புறுத்தியிருக்கின்றனர். இத்தாய்மொழிப் பயிற்சி ஒவ்வொருவருக்கும் நன்கு இருக்கவேண்டுமென்பதை நம் நாட்டுக் கல்வியாளர் உட்கொள்ளாது இருக்கின்றனர். அதனால், நாற்பது மாணவர்கள் படிக்கும் ஒரு வகுப்பில், தாய் மொழியைப் பயில்பவர் அந்நாற்பதின்மரேயாக வேண்டியிருப்ப, இக்காலத்தில் இருபது இருபத்தைந்து மாணவர்களே தாய்மொழியைப் பயில்கின் கிறனர். பிறரெல்லாம் வடமொழி முதலிய பிறமொழியைப் பயிலுமுகத்தால் தாய்மொழிப் பயிற்சியைக் கைவிட்டு விடுகின்றனர். ஆனால், இந்நாற்பதின்மரும் ஆங்கில மொழியை மட்டில் ஒழியாது பயில வேண்டிய கடப்பாட்டினைக் கட்டாயமாகக் கொண்டிருக் கின்றனர். மைக்கேல் வெஸ்டு என்னும் பெரியார் இக் கொடுமை யைக்கண்டு, பொறாது, “இந்நாட்டில் ஆங்கில மொழியின்பால் வேட்கைமிகுந்து, மக்கள் தம் தாய் மொழிப் பயிற்சியை இழந்து நிற்பது, தன்பால் உள்ள பொருளெல்லாம் கைக்கொண்டு கடைத் தெருவிற்குச் சென்று, உடுத்தற்கென உயரிய பட்டாடைகளும், பூணற்கெனப் பொலிவு மிக்க பொற்பணிகளும் வாங்கிக்கொண்டு, உணவிற்கென ஒருகாசுமின்றி வெறுங் கையளாய் வரும் குறுமக ளொருத்தியின் அறிவில் செயற்கொப்பாகும்”** என நகைச்சுவை தோன்றக் கழறிக் கூறியுள்ளார். இவ்வுண்மையினை அசட்டை செய்யும் கல்வியாளர் ஆங்கில நன்மக்கள் மேற்கொண்டிருக்கும் கலிவிமுறையினையும் உணர்கின்றிலர். “பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ஒருவர்க்குப் பெருந்தன்மையும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையும் பயக்கின்றன; ஆங்கில மகன் ஒவ்வொருவனுக்கும் அடிக்கடி வேண்டியிருக்கும் மொழி ஆங்கிலமே யாகலின், அதனையே அவன் பலகாலும் பயின்று கசடறக் கற்றல் வேண்டும்*” என்று ஆங்கில மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர். ஆங்கில மக்களின் மொழி, நடை உடை, அரசியல் முதலிய எல்லா இயல்களையும் பின்பற்றும் குறிக்கோள் உடையவர்களாய் முயலும் நம் தமிழ் நாட்டவர், அவர் தம் மொழிப்பயிற்சிநெறியைப் பின்பற்றித் தமது மொழியறிவைப் பெறாது நிற்பது பேதைமை யன்றோ? தமிழ் மக்கட்குத் தம் தாய்மொழியாகிய தமிழே உயிர்நிலையாதலின், ஒவ்வொரு மாணவனுக்கும் - அவன் கல்லூரி மாணவனாயினும், கலாசாலை மாணவனாயினும் - தமிழ்ப்பயிற்சி கட்டாயமாக இல்லாமலிருப்பது முதற் குறையாகும். கல்விகற்போர் தம் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதற்கு, அஃது அரசியல்மொழியாக இல்லாமையே காரணமாக இருக்கிற தென்று சிலர் கூறுவதும் பொருத்தமாகவே இருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்க்கு அரசியலார் அரசியற்றுறையில் மிக்க சலுகை காட்டு கின்றனர். ஆங்கில அறிஞர் மிக்க வேதனமும், சிறப்பும், வரிசையும் பெறுவதால், மக்களுக்குத் தாமும் ஆங்கிலம் கற்று அம் மதிப்பும் வரிசையும் பெறவேண்டும் என்று வேட்கையுண்டாதல் இயல்பே. அதனால், கல்வி கற்போரும், கற்பிப்போரும், கல்வியாளரும் ஆங்கிலமொழிப் பயிற்சிக்கே ஏற்றம் கற்பிக்கலாயினர். அரசியல் மொழியும் தமிழ்மொழியாகிவிடின், மக்கட்குத் தம் தமிழ் மொழிப் பயிற்சியில் நாட்டம் உண்டாதல்கூடும். ஏனை அறிவியல், வழக்கு, வானநூல் முதலியனயாவும் தமிழிலே கற்பிக்கப்படினும், அரசியல் மதிப்பிலும் வரிசையிலும் மக்களது ஆர்வம் தணியாமையால், மக்கட்குத் தமிழறிவின்பால் பேரூக்கம் தோன்றிற்றிலது. கல்வித் துறையில் உழைப்பவருள்ளும் ஆங்கிலம் கற்பிப்பவருக்கே வரிசையும் ஊதியமும் மிகத் தரப்படுதலால், மாணவர்கட்கு ஆங்கிலப் பயிற்சியின் மேல் அவா மிகுந்து தமிழைப் புறக்கணிக்க வழி உண்டாகின்றது. கல்வித் துறையிலும், ஆங்கிலமல்லாத பிறமொழிகளைக் கற்பிப் பவர்க்குரிய ஊதியத்தைச் சிறிது உயர்த்திய அளவில், தமிழ் வித்துவான் தேர்வுக்குப் பலர் முன்வந்து பயிலத் தொடங்கியிருக் கின்றனர். ஆங்கிலமொழியைக் கற்பிப்பாரை யொப்ப ஏனைமொழிப் புலவர்க்கும் ஊதியமும் வரிசையும் இன்னும் வழங்காதிருத்தலே, கலாசாலை, கல்லூரி மாணவர்கட்கிடையே தமிழின்கண் ஆர்வமும், அம்மொழியறிவுப்பேற்றுக்குரிய முயற்சியும் அருகியிருத்தற்கு ஏதுவாக இருக்கின்றது. நம் இந்திய நாட்டுள்ளும், வடநாட்டுச் செல்வர்களைப் போலத் தமிழ்நாட்டுச் செல்வர்கட்குத் தமிழ்மொழியின் வளர்ச்சிக் கண் போதிய பற்றுக் கிடையாது. அரசியலார் நன்மதிப்பைப் பெறுதற்கும், அவர் வழங்கும் பட்டங்களை அடைதற்கும், தேர்தல் களில் ஈடுபடுதற்கும், இச் செல்வர்கள் செலவிடும் பொருள்களுள் ஒரு பகுதியினைத் தம் மொழி வளர்ச்சிக்காகச் செலவிடவேண்டும் என்ற எண்ணம் இவர் பால் இல்லை. தமிழ்ப்புலர் நட்புப் பேற்றுக்கும், அப் புலவர் பாடும் புகழைப்பெறுவதற்கும் பெருங்கொடை வழங்கிய செழுந்தமிழ்ச் செல்வர்களின் வழித்தோன்றல்களே இவர்கள்; எனினும், இவர்கள், இக்காலத்துத் தம் பழைமை நிலையினை மறந்து, தம் முன்னோர் தேடிய புகழ்க்கு மாசு எய்து வித்திருக் கின்றனர். பண்டைநாளைப் பாரிவேள் முதல், இற்றை நாளைப் பாண்டித் துரைசாமி, பெத்தாச்சி வரை இருந்தோர் தமிழ் வளர்ச்சிக்குப் பெருங்கொடை நல்கிய பெருந்தகைகளாவர். வடநாட்டில் வாழ்ந்த ஜம்ஜெட் ஜிஜீபாய், தம் பெயரால் மொழி பெயர்ப்பு நிதியொன்று நிறுவி, தம் தாய்மொழியாகிய கூர்ஜர மொழியில் இல்லாத கலைகளை, ஏனை மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துத் தம் மொழிவளர்ச்சி பேணிய செயலினை அறியாதார் யார்? இன்றும், இந்திய நாடெங்கும் தமது தாய்மொழி யாகிய இந்திமொழியைப் பரப்ப வேண்டுமெனப் பலப்பல செல்வர்கள் பெரும்பொருள் வழங்கி, இந்தி வழங்காத நாடுகளில் இந்திமொழிப் பிரசாரசபைகளை நிறுவி, அதன் வளர்ச்சிக்கு ஆக்கம் தேடுவதை அறியாதார்யார்? தென்தமிழ் நாட்டு செட்டி மக்களுள் வேந்தர் பெயர் பெற்ற மேதக்க அண்ணாமலைச் செட்டி யாரவர்கள், தென்னாட்டில் கல்வி வளர்ச்சி குறித்துச் சிதம்பரத்தில் தம் பெயரால், நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தண்டமிழ் நாட்டுப் பல்கலைக் கழகமேயாகும். ஆகவே, அதன்பால், தாய் மொழியாகிய தமிழ்மொழியன்றோ உயரிய இடமும், வளர்ச்சிக்குரிய ஆக்கமும் பெறுதல் வேண்டும்? ஆனால், அதன், இற்றை நாளைத்தலைவர், திரு. சீனிவாச சாத்திரியார் அவர்கள், “இப்பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சி குறித்து நிறுவிய கழகமென்றற் குரிய விதியொன்றும், இதனை நிறுவுதற் கெழுந்த விதிவகைகளுள் இல்லை”யென்று விளங்கக் கூறியிருக்கின்றனர். தமிழ் நாட்டவர் தம்தாய்மொழி வளர்ச்சிக்கண் நாட்டம் இன்றியிருக் கின்றனர் என்பதற்கு இதனினும் பெரியதொரு சான்று வேண்டாவாம். தமிழ்நாட்டவருள் ஆங்கிலப் பெரும்புலமை பெற்று, ஏனைக் கலையுணர்விலும் சமய வுணர்விலும் நிகரற்ற உலகறி புலமை படைத்தவர் உளர். அவர்தம் புலமையறிவால் புதுப்புதுப் பொருள் களைக் காண்கிறார்களாயினும், அவற்றைத் தம் தாய்மொழி யிலாக்கித் தம் நாட்டவர் உணரல் வேண்டுமென நினைந்தவரல்லர். ஒரு சிலர் அவ்வாறு நினையினும், அவர்க்குத் தாய்மொழிப் பயிற்சி இளமை யிலேயே விலக்கப் பட்டமையின், தம் தாய்மொழியில் எழுதும் திறமையிலராகியுளார். திறமை இல்வழியும், தமிழறிந் தாரைக் கொண்டு, அவர்கட்குத் தாம் அறிந்தனவும் கண்டனவுமாய அறிவுப்பொருள்களைக் கூறி எழுதுவிக்க நினைக்கவும் இல்லை. இவர்தம் எண்ணமும், மொழியும், செய்கையும் ஆங்கில மொழி வழியே நிற்றலால், தாய்நாட்டுணர்வும்; தாய்மொழிப் பற்றும், தாய் நாட்டவர்பால் அன்பும் இலராயினர். இவர் தம் இரங்கத்தக்க நிலையினைக் கோகலே என்னும் பேரறிஞர் ஒருவர் தாம் எழுதிய நூல் ஒன்றில், * நம் நாட்டவருட் கற்றார் எனப்படுவோரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “ஒருவர் எந்திர நுண்பொருளுண்மைகளை யறிந்து பெரும் புலமை பெற்றிருக்கின்றார்; ஆயினும், அவர் தம் வீட்டுச் சுவர்க் கடிகாரத்தின் தொங்கட்டானை (Pendulam)ச் செம்மை செய்ய மாட்டாது, அதற்குரிய தொழிலாளி யொருவன் உதவியினையே நாடுகின்றார். ஒருவர் ஒலியின் நுட்பங்களையும், அதன் பல்வேறு இயல்களையும் நுனித் துணர்ந்த பெரும்புலவராக இருப்பர்; மற்று, அவர்க்கு இசையின் இன்பவியல் இருளிடைப் பொருளாயுளது. வெப்பத்தின் மிகுதி குறைவால் உலகியற்பொருள் எய்தும் பல்வேறு நுட்பங்களையும் ஆராய்ந்தறிந்த புலவர் ஒருவர், நெருப்பு மூட்டும் வகையும், தமக்கு ஒருவேளை யுணவு செய்து கோடற்குரிய திறமையும் இல்லாதவராய் இருக்கின்றனர். நீரின் இயல்நலம் பலவும் கற்றுணர்ந்த புலவராயினும், ஒருவர், தாம் ஒரு நீர்நிலையில் தவறிவிழ நேரில் அதன் கண் மூழ்கி உயிரிழத்தலையே செய் கின்றனர். பலவேறு நீரியற் பொருள் நூல் (ரசாயன சாத்திரம்)களைக் கரிசறக் கற்றவராயினும், ஒருவர், தமது வெள்ளிய உடையிற்பற்றிய மைக் கறையையாதல் தம் மனைவி, தாய் முதலியோரின் விலையுயர்ந்த புடவையிற் பற்றிய எண்ணெய்க் கறையையாதல், அவ்வுடை கட்குத் தீங்கின்றி, நீக்கக் கூடிய மதுகையின்றி மயங்கு கின்றனர். தாவர நூற்புலமையில் தமக்குவமையில்லாத தக்கோர் ஒருவர் தமது உடலிற் பற்றிய நஞ்சுக்குரிய பச்சிலைக் செடி இஃது என்றாதல், உடற்குளதாகிய குறைகளை நீக்குதற்குரிய உரிப் பொருள் உடைய கனி, பூ, இலை, வேர், பட்டை இவை யென்றாதல் அறியும் அறிவிலராகி யிருக்கின்றனர்.” இக்கூற்றால் நாம் அறியக்கிடப்பது யாதெனில், இவர்தம் கலையறிவு இவர்க்கே பயன்படாது கழிகின்றதென்பது இவ்வாறு தாமே விரும்பிக்கொண்ட வேற்றுமொழி வாயிலாகப் பெற்ற கலைப்புலமை, தமக்கே பயன்பட்டிலதெனின், தொடக்கத்தே புறக்கணித்த தாய்மொழி வாயிலாக உணர்த்த வேண்டியவழி; அது கைகூடியதென்பது இனிது விளங்குகின்றது. இதனாற்றான், பல கலைகளையும் பயின்று புலமைபெற்ற தமிழ்மக்கள் பேசும் தமிழ் மொழியிற் போதிய கலைநூல்கள் இல்லையாயின. இனி, தமிழ் கற்பிப்போரும் தமிழறிவு வளர்ச்சிக்குரிய பணியினை நன்கு ஆராய்ந்து செய்வன செய்யாது கைந்நெகிழ்ந் திருக்கின்றனர். இவர், தம்மால் தமிழ் கற்கும் மாணவர்தம் மனவியல் பறிந்து தமிழறிவு கொளுத்துவது இலர். “கொள்வோன் கொள்வகை யறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப” என்ற நன்னூற் சூத்திரத்தினை நன்கு மனப்பாடம் செய்தும், பிறர்க்குப் பாடம் சொல்வித்தும், கொள்வோன் கொள்வகை அறிதல், கோட்டமில் மனத்தினராய் நூற்பொருள் கொளுத்தல் என்பவற்றை நினைப்பது கிடையாது. மேனாட்டிலும், அமெரிக்க நாட்டிலும் அறிஞர்கள், கல்விகற்கும் மாணவரதுமனவியல்பினை அறிந்து, பல ஆயிரக்கணக்கான நூல்களை யெழுதியும், சொற்பொழிவு செய்தும் வருகின்றனர். காலநிலைக் கேற்ப, மக்கள் மனவியல் வேறுபடுவது கண்டு, அதற்கேற்பச் சிறுவர்க்குக் கல்வி கற்பித்தற்கும் பலவேறு முறை களைக் கண்டு ஆராய்ந்து வருகின்றனர். நம் தமிழாசிரியர்கள் மாணவர்கட்குக் கற்பிக்கத் தொடங்கும் சின்னூல் கள் யாவும் பெரும்பாலும் கற்போர் மனவியல்பு கண்டு, அதற்கேற்பச் செய்யப் பெற்றனவே யல்ல. தமிழ் கற்பார் முதற்கண் படிக்கத் தொடங்கும் மாலைகளும், அந்தாதிகளும், கலம்பகங்களும், பிறவும் தமிழ் கற்கத் தொடங்குவார்க்கு வேண்டியவை என்று கருதி, அவற்றின் ஆசிரியர்கள் அவற்றைச் செய்யவில்லை; அவர்கள், தமது புலமையின் சிறப்புத்தோன்றவும், பிற நோக்கங்கொண்டும் பாடியனவே. மாணவர் மனப்பயிற்சி குறித்தெழுந்தவை நன்னெறி, மூதுரை என்பனவாய் மிகச் சிலவேயாகும். இலக்கணங்களும், சிறுவர்கட்கு இன்றியமையாது வேண்டப்பெறும் சொற்றொடர் சொற்றொடராக்கம், கட்டுரை யெழுதுதல், பொருளாராய்ச்சி முதலியவற்றைக் குறியாது, நன்னூல் சென்ற முறையினையே அடியொற்றி யெழுதப் பெறுகின்றன. நன்னூலும், அதன் வழி நூல்களும் தொகை வகைவிரி யென்ற முறையும், காரண காரிய முறையும் மேற்கொண்டனவே யொழிய கொள்வோன் கொள் வகை யறிந்துகூறும் மனவியல் முறை (Psychological sequence) பற்றி எழுதப்பட்டனவல்ல. இந்நிலையில், தமிழ் மக்கள் தம் மொழி வளர்ச்சி குறித்துக் செய்யவேண்டுவன யாவை யென்று கொண்டு ஆராயலுறின், இக்கட்டுரை வரம்பின்றிப் பெருகுமென்றஞ்சி, மகளிர் செய்யக் கூடிய தொண்டுகள் என வரைசெய்துகொண்டு, தகுவன சில, யாம் அறிந்தவாற்றால் கூறலுறுகின்றேம். ஆடவர் செய்யும் ஆண்மைப் பணி அனைத்திற்கும் நிரம்பிய ஆற்றலும் ஊக்கமும் நல்குவோர் மகளிரேயாவர். ஒளவை முதலிய அருந்தமிழ் மகளிர் தமிழ்த் தொண்டு புரிந்து தமிழ் வளம் படுத்த ஞான்று, மிக உயரிய நிலையில் விற்றிருந்த தமிழன்னை, அவர்கள் பேதையரென்றும், நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பேதமைப்பாற் படும் என்றும் சொல்லி அறிவுடையோர் மகளிரைப் புறக்கணித்த இழிசெயலால், தன் சிறப்பும் பொலிவுமிழந்து பிற மொழிகட்கு அடிமை யாயினள். தமிழ்மக்களும் அகஞ்சுவர் இருக்கப் புறஞ்சுவர் பொலிவிக்கும் புல்லியோரைப்போல ஆயினர். “மண்ணாள் வேந்தர்க்குக் கண்ணென வகுத்த, நீதி நன்னூல் ஓதிய நாவினள்” எனக் கொங்குவேளிர் கூறியது போல, அரசியல் நீதி நூல்களும், பொருணூா ல்களும் பிற நூல்களும் மகளிர் நிரம்பக் கற்றுப் புலமை யெய்துவதோடு, தமிழ்ப்புலமையும் சிறக்கப் பெறுதல் வேண்டும். மக்களைப் பயந்து மழலைமொழி பயில் வித்துச் சிறார்களை மக்களாக்கும் பணி மகளிர்க்கே சிறப்ப வுரியது. அதனால், ஆண்டுப் பயில வழங்கும் தாய்மொழியில், தாயர் புலமை யுடையராதல் தனிச் சிறப்பாகும். ஆதலால், மகளிர் அனைவரும் தாய்மொழிப் பயிற்சினையே பெரிதும் பெறற்கு முயலுதல் வேண்டும். அதனால், நம் தமிழ் நாட்டுத் தமிழ் மகளிர் “தமிழ் நாட்டுத் தமிழ்ப் பெருமகளிர் தாங்கள்” என்பதைத் தாமே யுணர்ந்து, பிறரும் உணர்ந்து வியக்குமாறு, வீறு கொண்டெழுதல் வேண்டுமெனத் தமிழ்நாட்டுப் பெண்ணுல கினை வணங்கி வேண்டிக்கொள்கின்றேம். அறிவுத்துறையில் மேன்மையுற்றிருக்கும் நாடுகளில், மக்கள், தம் சிறுவர்களின் இளமையினை மிகக்கண்ணுங் கருத்துமாய்க் குறித்து, அப்போதே, அவர்தம் அறிவு செம்மை நெறியில் வளர வேண்டும் என்று முயல்கின்றனர். சிறார்கள் சிறிது பேசத் தொடங்கியுதம், பாட்டிசைப்பதில் பெரிதும் விருப்புற்றிருப்பதை யுணர்ந்து. அவர்கட்கேற்ற பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர். நம் நாட்டு மகளிரும் தம் சிறு குழந்தைகட்குப் பல பாட்டுக்களைப் பாடி மகிழ்ச்சி யூட்டுகின்றன ரெனினும் அவை திருந்திய முறையில் வருதல் வேண்டும். தாயர் பலரும் கல்வியறிவு இல்லாதிருத்தலின், அப்பாட்டுக்கள் செந்நிலை யெய்தாமல் இருக்கின்றன. மேலும், நம் நாட்டு மகளிர் இனிய தூய பாட்டுக்கள் தாமே இயற்றுவதில் சிறந்தவராவர். யாவரேனும் ஒருவர் தம் குடும்பத்தில் இறந்து போவரேல், அவருக்காக இம்மகளிர் தாமே புனைந்து பாடும் “ஒப்பாரிகளை” நுனித்து நோக்கின், இவர்கள் இனிய பாட்டுக் களைப் புனைதலில் தலைசிறந்த வன்மையுடையர் என்பது விளங்கும். இவ்வன்மையை இவர்கள், சிறுவர்கட்குரிய அறிவு வளர்ச்சித் துறையிற் செலுத்திப்பாடத் தொடங்குவரேல், தமிழ்க் குழந்தைகள் மிக்க அறிவு நலம் பெறுவர் என்று உறுதி கூறலாம். படித்த பெண்ணொருத்தி தான் பயந்த குழந்தையைக் கையிலேந்தி, தன் வீட்டின் தோட்டத்திலிருந்து பாடிக்கொண்டிருந்த பாட்டொன்றைக் கீழே தருதும்; “ தோட்டத்திலே முல்லை தோன்றியதுன் பல்லைக் காட்டியதுன் சொல்லை காட்டியது கிள்ளை” “ அம்மா(ள்) கொஞ்சம் பாச்சி அடுப்பில் (வைத்துக்) காய்ச்சி கும்மாளமாய்ப் பே(ச்)சிக் கொடுத்தா(ள்) பசி போச்சி” இவ்வாறு அழகிய மழலைப் பாட்டுக்கள் (Nursery rhymes) பலவற்றை ஆக்கக்கூடிய தமிழ்வன்மையை மகளிர் பெறுதல் வேண்டும். இப்பாட்டுக்களையும் இம்மகளிரே புனைதல் வேண்டும். மேனாட்டவருள்ளும் இன்னோரன்ன பாட்டுக்களுள் பெரும் பாலனவற்றை மகளிரே யாத்திருக்கின்றனர். இப்பாட்டுக்கள் தாமும் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள், சிறுகதைகள் என்ற இவற்றைப் பொருளாகக் கொண்டிருத்தல்வேண்டும். நீராடற்கும், நெற்குற்றுதற்கும், பூக்கொய்தற்கும், பொற்சுண்ண மிடித்தற்கும் பாட்டிசைத்துப் பண்புமேம்பட்டிருந்த தமிழ் மகளிர்க்கு இவை அரியவல்ல; இவற்றை ஆக்கிக் கற்பித்துப்பாடி மகிழ்தற்குரிய தமிழ்ப்பயிற்சி இவர்பால் ஆர இல்லாமையே காரணம். இனியேனும் மகளிர் இப்பணியில் இறங்கித் தம் கடமையை ஆற்றுபவராதல் வேண்டும். எழுத்தறிவிக்கும் தொடக்கப் பாடசாலைக் கல்விக்கு இம்மகளிர் ஆற்றக்கூடிய பெருந்தொண்டு ஒன்று உளது. அத்தொண்டு இல்லாமையால், நம் நாட்டில் தொடக்கக் கல்வி வளம்பெறாது சீர்குலைந்து நிற்கிறது. இளஞ்சிறார்கள் பிறந்து மொழி பயின்று வருங்காலத்து அவரோடு உடனிருந்து, உடன் மொழிந்து, உடன் பயின்று ஒழுகும் ஒழுக்கச் சிறப்பு மகளிர்க்கே பெரிதும் உண்டு. அம்மகளிர் தமிழறிவு பெருக வுடையராயின், அச்சிறுவர்கள் மொழி பயிலத் தொடங்குவது முதல் தம் கருத்துக்களை ஒருவாறு வெளியிடத் தொடங்குவது வரையில் அவர் சொல்வழக்கில் வரும் சொற்களை அவ்வப்போது குறித்து, காலந்தோறும் அவை அவர் வழக்கில் இடம்பெறும் தகுதிக்கேற்ப, வகைப்படுத்தி வருவது ஒன்று. பின்னர், அச்சொற் களே வர, மழலைப் பாட்டும் கதையும் புனைந்து பேசப் பயிற்சி செய்வது ஒன்று. இன்னோரன்ன பணிகள் மக்களின் கல்விப் பயிற்சிக்குப் பெருந்துணை நல்குவனவாகும். மக்களின் செல்வ நிலைக்கேற்ப, சிறுவர்களின் தகுதிப்பாடு வேறுபடும். அதனால் அவ்வவ் நிலையிலுள்ள குடும்பப் பெண்கள் இப்பணியினை யாற்றின், கல்வி வளர்ச்சி வளம்பெறும்.செல்வ நலம் மிக்குள்ள நாடுகளில், இவ்விளஞ் சிறார்களை ஒருங்கு தொகுத்து இப்பணி புரிவித்தல் எளிதில் இயலும் அந்நலம் குறைந்துள்ள நம் நாட்டில், மகளிரே இப்பெரும் பணியினை ஆற்றுதல் நலமாகும். இத்தகைய தொண்டெல்லாம் இனிது செய்தற்குரிய அறிவமைதி, பெருங் கல்வியறிவு பெற்றவர்க்கே இனிது கைகூடுவதாகும். ஆதலால், இந்நிலைமையினை இயல்பாகவே வாய்க்கப்பெற்ற மகளிர், நிரம்பிய கல்வியறிவு பெற்றுத் தம் மக்களின் அறிவு வளர்ச்சிப் பணியாகிய இதற்குத் துணை செய்யவேண்டுமென விழைகின்றேம். பேரறிவும் உண்மை யுழைப்புமுடைய ஆசிரியன்மார் இத்துறையில் உழைத்துத் துணைபுரிய முற்படுவரேல், “அஃது அவர் யாப்பினுள் அட்டிய நீர்” என்பேம். தமிழ் மகளிர் தங்கள் குடும்பப் பண்டை வரலாறுகளையும், தமிழ் நாட்டின் வரலாறுகளையும் கற்றும் கேட்டும் புலமை மிக்கவராய் இருத்தல் வேண்டும். அதனால், அவர்கள் தம் வயிற்றிற் பிறக்கும் சிறார்கட்கு அறிவும் வீரவுணர்ச்சியும், வினைத்திட்பமும், அவ்வரலாறுகள் வாயிலாக வூட்டி உண்மைத் தமிழ் நன்மக்களாகச் செய்தல் முடியும். இக்காலத் தமிழ்ச் சிறுவன் ஒருவனை விளித்து, “உன் தந்தைக்குத் தந்தை செய்த அருஞ்செயல் யாது? அவரது பெற்றோர் பெயர் என்னை? உங்கள் முன்னோருள் மிக்கசிறப்புற்றி ருந்தவர் எவரேனும் உளரோ?” என்பன போன்றவற்றை வினவின், அவன் அறியாது மருள விழித்தலைக் காண்கின்றோம். ஆங்கில நன்மகன் ஒருவனை வினவின், அவன் தன் முன்னோர் வரலாற்றையும், செய்த செயல் வகைகளையும் பெருமிதத்தோடு சொல்லக் கேட்கின்றோம். அவற்றைக் கூறும்போது அவன் முகத்திலும், விழியிலும், உடலிலும் தோன்றும் ஒளியும், மெய்ப்பாடும், அவ் வுணர்ச்சி எத்துனைப் பெரும் பயனை அவனது வாழ்விற்கும் ஆக்கத்திற்கும் உதவுகின்றதென்பதனை இனிது காட்டுகின்றன. மூதின்முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண்முல்லை யென்பனவாகிய துறை வகுத்து, ஆடவர் மகளிர் என்ற இருபாலார் வீரமும், குடிப்பிறந்தார் வீரமும், அவர் தம் ஊரவர் வீரமும் உயர்த்திப் பேசி மறஞ்செருக்கி விளங்கியவர் தமிழ் நன்மக்கள். “முந்தை முதல்வர் கல்தான் காட்டி, மூதில் மடவாள், தன் புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு” என்றும், “கல் நின்றான் எந்தை, கணவன் களப்பட்டான், - முன் நின்று மொய்யவிந்தார் என்னையர் - பின் நின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி, எய்போல் கிடந்தான் என் ஏறு” என்றும் வரும் பழம் பாடல்கள், தமிழ் மகளிர்க்கு இப்பயிற்சி புதுவதன்று; பண்டேயுள்ளது என்று யாவரும் அறிய விளக்குகின்றன.  33. சங்ககாலத்துச் செந்தமிழ்ச் செல்வி தமிழ் இலக்கிய வரலாறு காண்பவர், இவ் வரலாற்றை வரலாற்று நெறிபற்றியும், இலக்கிய நெறிபற்றியும் ஆராய்வதுண்டு. இவற்றுள் வரலாற்று நெறிக்குரிய கருவிகள் பலவும் செவ்வையாகக் கிடைக்காமையால், வரலாறும் இலக்கியமும் ஒருசேரக் கொண்டு காண்பர். அம்முறையே நோக்கின், தமிழ் இலக்கிய வரலாறு, சங்ககாலம், இலக்கியகாலம் புராணகாலம், பிரபந்த காலம் எனப் பகுத்துக் கொள்ளப்படும். சங்ககாலத்துக்குக் கருவியாகச் சங்க இலக்கியங்களைக் கொள்வர். இலக்கிய காலத்துக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, பெருங்கதை, இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றைக் கொள்வர், புராணம் என்றது திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பாகவத புராணம் முதலாகத் தலபுராணங்கள் ஈறாகப் பலவகைப் புராணங் களையுமாகும். பிரபந்தங்கள், குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலிய சான்றோர் பாடிய சிறுநூல்களும் வேறுபலர் எழுதியுள்ள அந்தாதி, மாலை, உலா கோவை முதலியனவுமாகும். தேவார திருவாசகங்களும், திருமுறைகளும், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், தேசிகர் பிரபந்தம் முதலியனவும் ஏற்றம்பெற்றி மேற்கொள்ளப்படும். இவ்ாவறு பலவகையாகத் தமிழ் இலக்கிய வரலாறு ஆராயப் படுமாயினும், காலத்தாலும் வரலாற்று நெறியாலும் பிறவகை யாலும் காண்பார்க்குச் சங்ககாலமே மிகத் தொன்மை வாய்ந்ததென்பது ஒருதலை. இம்முடிபின்கண் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை. எவ்வகை ஆராய்ச்சியாளரும் சங்ககாலத்து இலக்கியங்களை மேற்கொள்வதில் மிக்க ஆர்வமே அடைகின்றனர். இக்காலமும் ஏறக்குறைய இரண்டாயிரமாண்டு கட்கு முன்னதென்பது எத்திறத்தார்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இனி, இவ்விலக்கிய நெறியில் ஆராய்வார்க்கு இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் சில தடைகளை நிகழ்த்துகின்றனர். இவர் ஆராய்ச்சி யுண்மைகளை விஞ்ஞான நெறியுண்மை (Scientific truth) தத்துவநெறியுண்மை (Philosophic truth), வரலாற்றுண்மை (Historie truth), புலவர் வாயுண்மை (Poetic truth) என நான்காக வகுத்து இவற்றிற்கு மதிப்பும் இக் கூறிய முறையே தந்தொழுகுவர். எல்லா வற்றிற்கும் இறுதியாகப் புலவர் வாயுண்மைகளை நிறுத்தியிருப்பது குறிக்கத்தக்கதாகும். இதற்கு அவர்கள் சிறந்த காரணமாக ஒன்று கூறுவர். “புலவர்கள் தாம் காணும் பொருளை உள்ளவாறு கூறாது சிறிது உயர்த்தியே கூறுவர்; அக்கூற்றில் சிறிது உண்மை யல்லாதது கலந்தே இருக்கும்; அதனால், அதனை உள்ளதன் உண்மை கூறியதாகவே கோடற்கில்லை” என்பர். இவர்கள் தம் முடிபு முழுதும் வடவர் மேலைநாட்டவர் வழக்காறுபற்றிய இலக்கியங்களையே அடிப்படையாகக் கொண்டு செய்திருக்கின்றனர். அவற்றுள் இல்லது புனைந்து கூறும் வழக்கும் அதுபற்றிய அணிவகையும் பிறவும் மலிந்திருக்கின்றன. மற்று, சங்க இலக்கியங்களை இவர்கள் நன்கு ஆராய்ந்து கண்டவர் அல்லர். இவை முழுதும் உள்ளதான் உண்மையை உள்ளவாறு காட்டும் சொல்லோவியங்கள் என்பதனை அறிந்தாரில்லை. பொய்யும் வழுவும் புனைந்து ஓதுபவரைப் புலவர் எனக் கொள்வது தமிழ் மரபன்று என்பது இவர்கட்குத் தெரியாது. தம் பொறி புலன்கட்குப் புலனாகும் பொருளை ஐயந் திரிபற ஆராய்ந்துணர்த்தலும், உணர்ந்ததனை உள்ளவாறு உணர்த்தலும் உடையவரே புலவர் எனப்படுவர். புலவர் என்னும் சொற்பொருளையும் இவர்கள் நன்கு உணர்ந்திருப்பதாக இவர்கள் உரைக்கும் உரைகள் காட்டவில்லை. ஆகவே, இவர்கள் கூற்று நம் சங்க இலக்கியத்திற்கு ஏற்பன அல்ல என்பது இனிது விளங்குகின்றது. புலவர் வாயுண்மை யுரைகளில் சில பொய்யும் விரவியிருக்கு மெனத் தாம் கொண்ட முடிபுகளை வற்புறுத்தற்கு இவ்வாராய்ச்சி யாளர் சிந்தாமணி, இராமாயணம் முதலிய இலக்கியங்களிலிருந்து சில புனைவுரைகளைக் காட்டுகின்றனர். “நும்மோரன்னோர் மாட்டும், இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண்டுளதோ இவ்வுலகத்தானே” (அகம்.286) என்றும், “செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்ற எம் சிறு செந்நாவே” (புறம்.148) என்றும், “மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின், புலவர் பாடாது வரைக என் நிலவரை” (புறம்.72) யென்றும், “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவனேவா வானவூர்தி யெய்துப என்ப தம் செய்வினை முடித்து” என்றும், “தொல்லிசை நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய, இனமழை தவழும் ஏழிற்குன்றம்” (அகம்.345) “உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்” (அகம். 78) என்றும் வருவனவும், பிறவும் பண்டைப் புலவரது வாய்மையும், அதுபற்றி அவர்பால் மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் தெற்றென விளக்கும். இவற்றை அவர்கள் உண்மையறிவோடு மிடைந்தவை எனக் கருத்தில் நினைத்தற்கும் கூறித் தம்மையே அருவருத்துக் கொள்வர். இதனாற் போந்ததென்னையெனின், பிறநாட்டு வரலாறு, அந்நாட்டுத் தொன்மை,மக்களின் வாழ்க்கைப்பண்பு முதலிய வற்றை ஆராய்தற்கு வேண்டுமாயின், இவ்வாராய்ச்சியளார் கொள்ளுங் கருத்து, பொருந்திற் பொருந்துமேயன்றிப், பண்டைத் தமிழ்மக்கட்குரிய சங்க இலக்கியப் புலவர் வாய்மொழி ஆராய்ச்சிக்குச் சிறிதும் பொருந்தாது என்பது வற்புறுத்தியவாறாம். இப் புலவர்கள் வழங்கி யுள்ளவற்றின் மெய்ம்மைத் தன்மைக்குச் சான்று காட்டலுறின் இக் கட்டுரை விரியுமென்றஞ்சி மேற் செல்லுகின்றாம். சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நூல்களையும்,* சங்க இலக்கியங்களையும் அறிஞர் நேரே தாமே கண்டு தெளிந்து கொள்வது சிறப்பாகும். சங்ககாலத்துச் செந்தமிழ்ச் செல்வி என்று எடுத்துக் கொண்டோ மாயினும், சங்ககாலம் சங்கநூற் புலவர் இருந்த காலத்தையும் அவர்கட்கு முன்பிருந்த தொல்காப்பியர் காலத்தையும் உளப்படுத்தி நிற்கும். சங்க இலக்கியத்துள் தொகுக்கப்பெற்றுள்ள பாட்டுக்களிற் சில தொல்காப்பியத்துக்கு மூத்தனவாகவும் இருக்கலாம் என்றும், சில சங்ககாலத்துக்குப் பிற்பட்டனவாகவும் இருக்கலாம் என்றும் கூறும் அறிஞர் உண்டு அவர் கருத்தும் அகப்படு, தொல்காப்பியர் காலத்தையும் ஈண்டு அடக்கிக்கொள்ளலாம். மேலும், தொல்காப்பியர் தம் காலத்தும் தமக்கு முன்னோர் காலத்தும் வழங்கிய வழக்க ஒழுக்கங்களைக் தம் நூலகத்தே வடித்துக் காட்டியுள்ளார். அவை பலவும் சங்க இலக்கியங்களால் வற்புறுத்தப்படுகின்றன. சங்ககாலத்தே நம் தமிழகம் நிலத் தகுதிபற்றிக் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுக்கப்பெற்றிருந்தது தொல்காப்பியத்துள் பாலைக்கு நிலம் கூறப்படவில்லை. எனினும் அதற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் பாலைக்கு நிலம் காட்டுகின்றது. இதை நோக்கின், தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னும், சிலப்பதி காரத்துக்கு முன்னும் பாலைக்கு நிலமுண்டாயிற்றென்று அறிகின்றோம். சங்க இலக்கியம் பாலைக்கும் ஓராற்றால் நிலம் குறிக்கின்றது. ஆகவே, சங்ககாலத்தே தமிழகத்தே ஐவகைப் பாகுபாடும் உண்டென்று துணியலாம். இந்நிலப் பாகுபாடேபற்றி மக்கட்சமூகமும் பாகுபாடு பெற்றிருந்தது. குறிஞ்சி நிலத்தவர் குறவர் என்றும், முல்லையோர் ஆயர் என்றும், பாலையோர் மறவர் என்றும், மருதத்தோர் உழவர் என்றும், நெய்தலார் பரதவர் என்றும் கூறப்பட்டனர். “ஆயர் வேட்டுவர் ஆடூஉத்தினைப் பெயர், ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” என்று வருவது தொல்காப்பியம். இக் குறவர் ஆயர் முதலியோரை வேட்டுவர், குன்றவர், வெற்பர், இடையர், பொதுவர், கோவலர் முதலிய பல வேறு பெயர்களாலும் சான்றோர் அழைப்பர். இவர்கள் உயர்தொழிலும் சிறுதொழிலும் என இருவகைத் தொழிலும் செய்தனர். உயர்தொழிற்கண் உயர்கல்வி கற்று அறம் கூறுதலும், அரசாளலும், வாணிபம் செய்தலும், உழவுத்தொழில் செய்தலும், நிரைமேய்த்தலும், வேட்டையாடலும், தேனீட்டலும், மீன் பிடித்தலும் பிறவும் அடங்கின. உயர் தொழிற்குரிய வாய்ப்பின் மையால், அத்தொழிலுக்குத் துணைபுரிதலும், உயர்தொழிலாளர்க்கு ஏவலராதலும், அடியராதலும் பிறவும் சிறு தொழில்களாகக் கருதப் பட்டன. பொருள் ஈட்டலும், அதனால் அறம் செய்தலும் இன்பம் நுகர்தலும், வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதப்பட்டன. அறமே பொருள் இன்பங்களைப் பெறுதற்கு நெறியாவது என்பது, “சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்படூஉம்” (புறம்.31) என்பதனால் அறியப்படுகின்றது. “அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாச் செல்வமும்” (அகம். 155) அவர் வாழ்வில் முதலிடம் பெற்றிருந்தன. சுருங்கச் சொல்லின் அவர்கள், “நாளது சின்மையும், இளமைய தருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையதிழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பின்ன தகலமும்” (தொல்.பொருள் சூ. 41) நன்கு தெரிந்திருந்தனர்; ஈதலும் இசைபட வாழ்தலுமே உடலோடு கூடி வாழும் உயிர்க்கு ஊதியமாகக் கருதினர். ஈதல் குறித்தே பொருளீட்டினர்; புகழ்பெறுவது குறித்தே ஈகை மேற்கொண்டனர். அப்புகழின் அழியாமை யறிந்து, அது பெறுவது குறித்துப் போர் உடற்றினர். “புகழெனின் உயிரும் கொடுக்குவர்” என்பது புறநானூறு (182). அறங்கூறுவோர் அறவோர், சான்றோர், ஐயர் எனப்படுவர். அறவோர் எவ்வுயிர்க்கும் அருள்பூண்டு ஒழுகுபவர் ஆதலால் அவரை அந்தணர் என்று உயர்த்துக் கூறினர். “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” எனத் திருவள்ளுவர் தமக்கு முன்பிருந்த சான்றோர்மேல் வைத்து “என்ப” என்று கூறுதல் காண்க. “ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான். வாழுமூரே” (புறம்.191) என அறவோர் சான்றோராகப் பேசப்படுதல் காண்க. “சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின், மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல், ஆசறு காட்சி யையர்க்கும் அந்நிலை, எளிய என்னார் தொன்மருங் கறிஞர்” (குறிஞ்சி) என அறவோர் ஐயராகவும் வழங்கப்படுமாறு காணலாம். அரசாட்சி புரிந்தோர் அரசர், வேந்தர், மன்னர் என்றும் வாணிபம் புரிந்தோர் வாணிகர் என்றும், உழவுத்தொழில் புரிந்தோர் உழவர், வேளாளர் என்றும் வழங்கி வந்தனர். இனி, இவர்களைப்போல நிலம்பெறாது, தமிழகமெங்கும் திரிந்து, ஆங்காங்கு வாழ்ந்த செல்வர்களையும் மன்னர்களையும் அவர்தம் குணஞ்செயல்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வாழ்ந்த மக்களும் தமிழ்நிலத்தே உண்டு. அவர்கள் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலாகப் பல திறத்தினர்களும் அறமுரைக்கும் சான்றோராகிய புலவர்களும் செல்வர்களும் பாடிப் பரிசில் பெற்றனர்; எனினும், அவருடைய புலமை நலத்தால், பாணர் முதலாயினார் வரிசையில் வையாது செல்வர்கட்கு ஒத்த நிலையிலும் உயர்நிலையிலும் அப்புலவர்கள் வைத்துப் பேணப்பெற்றனர். இருபேரரசர்கட் கிடையே தூது சென்று ஒற்றுமை செய்து உயிர்க் கேடு நீங்கும் உரவோராதலின், இவரை நாடோடிகள் எனக் கருதுவது குற்றம். “இகல்மீக் கடவும் இருபெருவேந்தர், விளையிடை நின்ற சான்றோர்” (குறிஞ்சி) என்று போற்றுதல் காண்க. இவ்வாறு, சங்ககாலத் தமிழ்மக்கள் தம்மில் செயல்வகையால் பலவகைப் பெயர் வேறுபாடு பெற்றிருந்தனரே யன்றி மகட்கோடல், உணவுகோடல் முதலிய துறைகளில் யாதொரு வேறுபாடும் கொண்டிலர். அறவோர் முதல் கூத்தர் பாணர் ஈறாக அனைவரும் ஒருங்கிருந்து உணவு கொள்வர்; ஒருவர்க்கொருவர் மகட்கொடை புரிந்துகொள்வர். இக் காலத்துச் சாதி வேறுபாடும், உணவு வேறுபாடும், மணவேறுபாடுமாகிய இவற்றின் முடைநாற்றம் அக் காலத்தே அவரிடையே தோன்றவே இல்லை. நெய்தல் நிலத்தவர் பிற நிலத்தவரோடும், பிறர் பிறரோடும் கொள்வன கொடுப்பன செய்து இனிது வாழ்ந்தனர். இவற்றின் வேறுபாடு நுழைந்து அவர்தம் அறவாழ்க்கையின் சீரைக் குலைக்கவில்லை. ஊனுண்டனர்; மீனுண்டனர்; பாலுண்டனர் பழமுண்டனர்; சோறுண்டனர்; இனிய சுவையுடைய நல்லனவெல்லாம் உண்டனர். பட்டாடையும் பருத்தி யாடையும் உடுத்தினர். பொன்னும் முத்தும் மணியும் பிறவும் பூண்களாய் அவர் மேனியிற் கிடந்து அழகு செய்தன. ஆடவரும் மகளிரும் உயரிய அணிகளை அணிந்து கொள்வர். பூவும் தொடுத்தணிவர். ஆடவர் தலையில் அணிந்து கொண்ட பூவணி கண்ணியெனவும், தோளிலணிந்தது தார் எனவும் பெயர்பெறும். மகளிர் வண்டுமொய்க்கும் பூக்களைத் தம் குழலில் அணிவர். இளமகளிர் இடையில் ஆம்பலும் பிறவும் விரவத் தொடுத்த தழையை உடைமேல் அணிந்துகொள்வர். அவர்கள் கையில் வளையும் தொடியும் பெய்துகொள்வர். காலில் சிலம்பு பூண்பர். ஆடவர் தாளில் கடகமும், காலில் கழலும் புனைவர். ஆண் மக்களின் நினைவு, சொல், செயல்களில் பெருமையும் உரனும் விளங்கி நிற்கும். கல்வி கேள்வி மிகுந்து மேலும் பல நூல்களை ஓதுதல், வினைபலவும் செய்தல், பொருளீட்டல் ஆடவர்க்குப் பொதுவாய செய்கைகளாகும். ஆடவன் தன் வாழ்க்கைத் துணை வியைத்தானே தேடிக்கொள்வன். பெற்றோர் அது குறித்து முயலும் முயற்சி யொன்றும் சங்ககாலத்து நூல்களில் காணப்படவில்லை. அவன் தேர்ந்துகொண்ட பெண்ணைப் பின் மணம் செய்து கொள்ளுங் காலத்தில் பெற்றோர் முதலிய சான்றோர்களின் உதவியும் வாழ்த்தும் பெறுகின்றான். “போலகம் என்பது தான் உழந் துண்டல்” என்னும் பெருமொழியே அவன் உள்ளத்தில் முன் நிற்கிறது. பெற்றோர் ஈட்டிய பொருளைப் பெற்றுத் தான் இனிது வாழலாம் என்ற கருத்து அவன் நினைவில் நிகழ்வதையே காணோம். அவன் எஞ்ஞான்றும் பழிபாவங்கட்கு அஞ்சும் இயல்பினனாகவே உள்ளான். புகழ்பெறுவதே அவற்குக் குறிக்கோள் அன்பும் அருளும் அறமும் அவனுடைய நினைவிலும் சொல்லிலும் செயலிலும் நிலவுகின்றன. இறைவனான முருகனைப் பரவும்போதும், “யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னுபோகமுமல்ல, நின்பால், அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே” (பரிபா.5) என்றே வேண்டுகின்றான். அஞ்சா நெஞ்சமும் அறிவு நுண்மையும் படைவன்மையும் உடைய இத் தமிழ்மகனது பொதுவியல் இன்னும் விரிக்கிற் பெருகும்; ஈண்டு அது பொருளுமன்று. இனி, இச் சங்க காலத்துச் செந்தமிழ்ச் செல்வியைக் காண்போம். இவள் பேதை பெதும்பை என்ற இருபருவத்தும் தன்னைப் பெற்றோர் ஆதரவில் அழகின் கொழுந்து வளர்வதென் வளர்கின்றாள். இக் காலத்தே இவள் பெற்றோரால் திருந்திய கல்வியும் பொருந்திய ஒழுக்கமும் பெறுகின்றாள். கடிமணமான பின் கணவன் காவலில் இல்லிருந்து நல்லறம் புரியுந் திறத்தால் தன்னை மனைவியாகப் பெற்றவனுக்கு உயிர்க்கினிய உறுதி பயக்குந் துணைவியாய் அவனுவப்ப மக்களைப் பயந்து இன்புறுகின்றாள். “கணவருப்பப் புதல்வர்ப் பயந்து.... சுற்றமொடு வளமனை மகளிர் குளநீர் அயர” (மதுரைக் காஞ்சி, 600-3) என மாங்குடிமருதனார் கூறுதல் காண்க. முதுமை யெய்திய வழி, கணவனோடு தானும் (முதுமையின் பயனாக) மறுமைக்குச் சிறந்த நல்வினையை ஆற்றுவள். “கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்பது தொல்காப்பியம். இதன்கண் “இறந்த” தென்றது, வயது முதிர்ந்தது என்னும் பொருளதாகும், “இளமையும் தருவதோ இறந்த பின்னே” (கலி. 15) வருதல் காண்க. ஒருகால், தாம் உயிருடன் இருக்கும் போதே கணவன் இறக்க நேரின், தாமும் அவனுயிருடன் உடன் கட்டையேறி மாய்தலும் உண்டு. இன்றேல், மறுமையில் கணவனைக் கூடல் வேண்டிக் கைம்மை நோன்பு நோற்றிருத்தலும் உண்டு. இருமணம் புணரும் வழக்கம் பண்டைத் தமிழ் மகளிர்பாற் கிடையாது. “அலந்தத, விரிநீர் உடுக்கை உலகம் பெறினும், அருநெறியாயர் மகளிர்க்கு, இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே” (கலி.114) என்பதனால் துணியப்படும். இம் மகளிரது இளமை, காமஞ் சாலா இளமையும், அது சான்ற இளமையும் என இருதிறமாகக் கருதப்படுகின்றது. காமஞ்சாலா இளமைக்காலத்தே இம் மகளிர் புறத்தே சென்று நன்கு விளையாடுவர். சிற்றில் புனைதலும், சிறுசோறடுதலும், பாவை வைத்து விளையாடலும், அம்மனை, கழங்கு, கழல், பந்து முதலியன கொண்டு விளையாடலும் பிறவும் விளையாட்டுக்களாகும். பூக்கொய்து மாலை தொடுத்தலும் தழை புனைதலும் சிறிது முதிர்ந்த இளமகளிர் செய்வர். குறிஞ்சி நிலத்தவராயின் காமம் சாலும் பருவமெய்தும் நிலையிலுள்ளார், சுனைகுடைதலும், தினைப்புனம் காத்தலும்; முல்லை நிலத்த வராயின் ஆனிரை பின் சென்று பால் கறந்து கொணர்தலும்; மருதநிலத்தவராயின், தாமரையின் பிறவும் கொய்து மாலை தொடுத்தலும், நெற்போரில் ஒளித்து விளையாடலும், ஓரையாடலும்; நெய்தல் நிலத்தவராயின், மீன் கவர வரும் புள்ளோப்புதலும், கடற்கானலில் புன்னை நீழலில் வண்டலயர்தலும் பிறவும் செய்வர். காமம் சான்ற பருவம் எய்தியவழி இம் மகளிர் இற்செறிக்கப்படுவர். “ .... முள்ளெயி றிலங்கின; தலைமுடி சான்ற; தண்தழை யுடையை; அலமர லாயமொடு யாங்கணும் படாஅல்; மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய; காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; பேதை யல்லை; மேதையங் குறுமகள், பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து.” (அகம்.7) என வருதலால் இற்செறிப்பின் இயல்பு புலனாகும். இப் பெதும்பைப் பருவத்தே இவள் தனக்குரிய காதலனைத் தேர்ந்து கொள்வள். இற்செறிக்கப்பட்டபோதும் இவள் தன் மனையகத்தே யாண்டு வேண்டினும் இனிது செல்வள். இவள் இப் பருவத்தேயே சீரிய குணங்கள் நிரம்பி விடுகின்றனள். அச்சம், நாணம், மடன் என்ற மூன்று குணங்கள் நன்கு நிலைபெற்று விடுகின்றன. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இம்மூன்றையே பல விடத்தும் வற்புறுத்துகின்றார். “அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த, நிச்சயம் பெண்பாற்குரிய என்ப” என்பது தொல்காப்பியம். “காமத்திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய” என்றும், “உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்” என்றும், “உயிரும் நாணும் மடனுமென்றிவை, செயிர்தீர் கற்பின் நால்வர்க்கும் உரிய” என்றும் பலவிடத்தும் தொல்காப்பயிர் நாணமும் மடனும் கற்பும் இன்றியமையாது அமைந்திருத்தலை எடுத்தோதுகின்றார். மடன் என்பது தான் தேர்ந்துகொண்டதனை எத்தனை இடையூறும் இடையீடும் எய்தினும் விடாமை. கற்பென்பது தன் மென்மைத் தன்மையைப் பெற்றோராலும், சான்றோராலும் நூல்முகத்தாலும் அறிந்து எக்காலத்தும், தன்னைப் பாதுகாத்தொழுகும் அறிவுடைமை. நூலாராய்ச்சியும் அகப்பட இக் கற்பென்னும் சொல் நிற்பதனை யறியாதார் தாம் வேண்டியவாறெல்லாம் கூறி, அதன் உண்மைப் பொருளை மறைத்து ஒழிந்தனர். “உலகந் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை” (பதிற். 59) எனக் காக்கை பாடினியார் என்ற பெண்பாற் புலவர், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடுதலால், கற்பினைக் கல்விமேல் நிறுத்திப் பண்டையோர் வழங்கியவாறு காணலாம். எத்துணை யிடுக்கண் வரினும் தம் கல்வியறிவு மழுங்காதவரையே பண்டைத் தமிழறிஞர், “தொலையாக் கற்பு” (பதிற்.43,80) என்று ஓதியிருக்கின்றனர். வேதங்களை “எழுதாக் கற்பு” (குறுந். 156) என்பர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் மகளிர்க்குக் கல்வி யறிவின் இன்றியமை யாமையைக் கற்பென வாளா ஓதாது. “செயிர்தீர் காட்சிக் கற்பு” என்று கூறியருளினர். பிறிதோரிடத்தே இம் மகளிர் பாலுள்ள சிறப்புடைய குணம் கூறலுற்று, உயிரினும் நாணினும் சிறந்த கற்பினைக் கற்பென்றோதாது அறிவு என்று நாட்டிக் கொண்டு, “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான” என்று ஓதினர். மகளிர்க்குத் தவத்தினும் கற்பே சிறந்ததென்பது பண்டையோர் முடிபு. இதனை அடியார்க்கு நல்லார், “புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என் திறம் உரையாதேகு” (சிலப்.11:199-200) என்பதன் உரையில் உரைப்பதால் இனிது உணரலாம். கணவனொருவனைக் கடிமணம் செய்து கொள்ளும் கடப்பாட்டினையுடைய இவள்பால் “கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும், வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்” இவை போலுள்ள நலங்கள் பலவும் திகழ்கின்றன. தன் மனக்கினிய காதலன் ஒருவனைப் பெற்றதும் “அவன் வரம்பு இறத்தல்” (தொல்) தனக்கு அறமன்று என்பது இவட்குத் தெரிந்து விடுகிறது. “அவன் சோர்பு காத்தல் கடன்” (தொல்) இவட்கு, என்னும் கற்பு நெறி தானே புலனாகி விடுகிறது. அவன்பால் தவறு உண்டாகிய வழி, “தாய்போல் கழறி” அதனை உணர்வித்துத் “தழீஇக்கோடல்” (தொல்) என்னும் பெருந்தன்மை இவட்கே உரித்தாய் நிற்கிறது. இவ்வாறே தன் வயிற்றிற் பிறக்கும் மகனுக்கும் நல்லறிவு கொளுத்தும் நன்மகளாகின்றாள். “ ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே, சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஒளிறுவான் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” (புறம். 312) என்பது அவள் தன் அருமை மகனைத் தெருட்டும் செவ்வை நன்மொழியாகும். இன்ன நலங்கட்கு இடனாகிய தமிழ்ச்செல்வி பெதும்பைப் பருவம் கடந்து கணவனொருவனைக் கூடிக் கடிமணம் செய்து கொள்ளும் திறமும், அவனுக்கும் தனக்கும் உயிரொன்றிய காதலன்பை வளர்க்கும் திறமும் ஆராயுங்கால் மிக்க இன்பத்தைத் தருகின்றன. இவை பெரும்பாலும் பெற்றோரும் பிறரும் அறியாவகையில் நிகழ்தலின் இவ்வொழுக்கம் களவொழுக்கம் எனப்படுகிறது. இதனைக் காந்தருவ மணம்போலும் ஒரு வகை மணம் என்பர். காந்தருவத்தில் மணந்தவர், பிறகு வேறே வரைவு செய்துகோட லின்றியும் மகப்பெற்றும் அமைவர். இஃது அவ் வியல்பினை யுடையதன்று. களவின்கண் காதல் சிறந்து முதிர்ந்து ஒருவரை யொருவர் இன்றியமையாத் தொடர்பெய்தி மேம்படுவதும், அக் களவொழுக்கம் வெளிப்பட்ட பின்பும் சிறிது அதற்கு முன்பும், பெற்றோரும் சான்றோரும் அறிய மணம் செய்து கொள்வதும் சிறப்பாக உடையதாகும். ஆதலால், வடவர் கூறும் காந்தருவ மணம் வேறு; பண்டைத் தமிழ் நன்மக்கள் மேற்கொண்டிருந்த களவியல் மணம் வேறு. காதலர் இருவர் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே தனித்துக் கூடி மனங்கலந்து அன்பு சிறந்து நிற்கும் அவ் வியைபு ஒன்றையே கருதி ஆசிரியர், “காமக்கூட்டம் காணும் காலைத் துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே” என்று ஓதினர். இவ் வொழுக்கமே பெரும்பான்மையாக நிகழினும் சிறு பான்மை கொல்லேறு தழுவியும், பன்றியெய்தும் இவைபோலும் சில ஆண்மை தோற்றுவிக்கும் செயல்களைச் செய்தும் மேம்பட்ட ஆடவனுக்கு மகட்கொடை செய்தொழுகும் மணமுறையும் நிகழ்ந்திருக்கிறது. அதனைப் பின்பு காண்பாம். இனிக்களவுக் காட்சியிற் புகுவாம். பொதும்பைப் பருவத்தின் முடிவிலோ சிறிது இடையிலோ நம் தமிழ்ச் செல்வி தன் உயிர்க்கினிய தலைவனைக் கண்டு காதலுற்றுத் தேர்ந்து கொள்ளுகின்றாள். இப்பருவத்தே இவள் புறத்தே சென்று விளையாடும் இயல்பினள் என்பது முன்பே கூறப்பட்டது. அக்காலத்தே அவளை அவ்வாறு விளையாட விடாது இல்லின்கண் செறித்து வைத்தல் அறமுமன்று; அதனால் அவள் உடல் நலமுறா மையின், அவளது எதிர்கால வாழ்க்கைக் குரிய ஆக்கமும் தேயும் என்பது பண்டையோர் நன்கறிந்திருந்தனர். “விளையா டாயமோடு ஓரையா டாது, இளையோர் இல்லிடத்திற் செறிந் திருத்தல், அறனு மன்றோ ஆக்கமும் தேய்ம் என.... வல்லிதின் வணங்கிச் செல்லுநர்ப் பெறினே” (நற்.68) எனச் சங்ககாலத் தமிழறிஞர் கூறுதல் காண்க. இக் கருத்தால், நம் செல்வி தன் தோழியருடன் குறிஞ்சியாயின் மலைச்சாரால், மலைச்சுனை, அருவி முதலிய இடங்களிலும், முல்லையாயின், முல்லைக்கொடியும் பாங்கர்க்கொடியும் பிறவும் தழைத்த தோட்டங்களிலும், மருதமாயின், நீர்த்துறைகளிலும், நெய்தலாயின், கழிமருங்களிலும் கானற் சோலையிலும் கடற்கரை யிலும் மகளிர்க்குரிய விளையாட்டுக்கள் பலவும் அயர்வள். இவ்விளையாட்டிடத்திற்கு ஒரு தமிழ்ச் செல்வ மகன் வந்து யாதானு மோருதவியோ, இனிய சொல் சொல்லுதலோ செய்வன். அதுவே வாயிலாக அவட்கு அவன்பால் காதல் பிறக்கும்; அவனுக்கும் அவள்பால் காதலன்பு தோன்றிப் பிணிக்கும். குறிஞ்சி நிலத்தே, ஒருகால் ஒரு தமிழ்ச் செல்வி தன் தோழியர் பலருடன் மலைச்சாரலில் நின்ற வேங்கை மரத்தின் பூக்கொய்து விளையாடற்குச் சென்றாள். மரத்திலேறிப் பூக்களைக் கொய்து கொண்டிருக்கையில் ஒரு சில மகளிர்,. வேங்கையின் பூவுதிர்ந்த கரும்பாறை புலிபோலத் தோன்றக் கண்டுவிளையாட்டாகவே “புலி புலி” என்று இரைச்சலிட்டனர். அது கேட்டுத் திடுக்கிட்ட மகளிரும் உண்மை தெளிந்து தாமும் அத் தோற்றம் வியந்து “புலி புலி” என்று பூசலிட்டனர். அவ்வழியே வடிவெடுத்த காமன்போல வடிக்கணையும் வரி வில்லு மேந்திய தமிழ்ச் செல்வ மகனொருவன் வந்தான். அவன் காதில் இம் மகளிரெழுப்பிய பூசலொலி விழுந்தது. அவன் உடனே வில்லில் அம்பு தொடுத்து அவர்முன் போந்து, “எங்கே, எங்கே புலி?” என வினவி நின்றான். அவனைக் கண்டதும் இம் மகளிர் நாணி ஒருவர்பின் ஒருவராக மறைந்து கொண்டனர். அவர் முகத்தோன்றாது கூந்தலே தன் கண்ணிற்குப் புலனாகக் கண்ட அக்காளை, “மையீரோதி, மடவீர், நும்வாய்ப் பொய்யும் உளவோ?” என்றான். இவர்கள் ஒன்றும் கூறாது நாணித் தலையிறைஞ்சி நின்றொழிந்தனர். நம் செல்வியின் மலர் முகமும் ஒளிநுதலும் வாட்கண்களும் பன்முறை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தான். அவளும் அவன் உயர்தோளும் விரிமார்பும் தடக்கையும் தன் இரு கண்களும் ஆரக் கண்டாள். இருவர் கருத்தும் ஒன்றுபட்டன. பின்பு அவன் சென்றுவிட்டான். அவன் மறையுங்காலும் இவள் அவனையே நோக்கி நின்றாள். அவன் மறைந்த பின், இவள் தன் தோழியை நோக்கி, “இவன் மகனோ, தோழி” (அகம்.48) என்றாள். “அதில் தடையென்னை?” எனத் தோழி கேட்ப, “இல்லை; கேட்டேன்” என முறுவலித்தாள் இத் தமிழ் மகள். இஃதொரு திறம். ஒருகால் இம் மகளிர் சுனையிற் குடைந்து விளையாடுங்கால், அதன்கண் சேய்மையில் ஆழத்தில் பூத்திருந்த பூவைப் பறிக்க முயல்கின்றனர்; அக் காலை இத் தமிழ்மகன் போந்துஅதனைத் தான் நீந்திச்சென்று பறித்துத் தருகின்றான்; அவ்வுதவி வாயிலாகக் காதல் தோன்றுகிறது. பிறிதொருகால், இம் மகளீர் பறித்த பூக்களை மிக அழகாக விரைவில் மாலையாகத் தொடுத்துதவு கின்றான்; அவர்கள் வைத்து விளையாடும் பாவையின் பொருட்டுத் தான் அணிந்திருந்த கண்ணியை எடுத்து அத் தமிழ் மகன் இச் செல்வ மகட்கு உதவுகின்றான். (நள்.173) இதனாலும் காதலன்பு பிறந்து விடுகிறது. மற்றொருகால், இச் செல்வி தன் தோழியருடன் தினைப் புனத்தே யிருந்து, அத் தினைக் கதிரைக் கவரவரும் கிளிகளை ஓப்பிக்கொண்டிருக்கிறாள். அருகே மலைச்சாரால் உளது; அதன்கண் மூங்கில் வளர்ந்து தழைத்து நீண்டிருக்கிறது. கோடைக்காற்று வீசுகிறது. அம் மூங்கில் சிலவற்றுள் துளைதோன்றி யிருக்கிறது. அத்துளைவழி வீசும் காற்றுக் குழலோசை யெழுப்புகின்றது. அதனருகே மலையருவி வீழ்வது முழவு ஒலி போல்கின்றது. ஆங்காங்குப் பூத்திருக்கும் பூக்களில் தேனுண்ணும் வண்டினம் யாழ்போல இசைக்கின்றது. மந்திகள் பாறைமேல் இருந்து இவ்விசை கேட்டு மருண்டிருக்கின்றன. மூங்கில் நிறைந்த சாரலில் மயில் தன் தோகையை விரித்துக் கூத்தாடும் விறலிபோல் ஆடுகின்றது. இக் காட்சி, விழாக்களத்தே குழலியம்ப முழவு முழங்க, யாழிசை இனிதிசைப்ப மக்கள் இருந்து காண விறலியர் கூத்தாடும் இனிய காட்சியை வழங்குகிறது. இது கண்ட நம் தமிழ்ச் செல்வமகள் அக்காட்சி யின்பதைத் துய்த்திருக்கின்றாள். அக்காலத்தே தமிழ் மகனொருவன் வில்லும் அம்பும் கொண்டு, யானை வேட்டம் வருவான் இவள்பால் வந்து, “யானை சென்றது கண்டீரோ? அஃது எவ்வழிச் சென்றது, கூறுமின்,” என்று அத் தினைப் புனத்தின் ஒரு மருங்கே நிற்கின்றான். அவனை இத் தமிழ் மகள் கண்டு காதலுறு கின்றாள் (அகம்.82). இஃதொரு திறம். இனி, இவ் வண்ணமேயன்றி வேறு வகையாலும், காதலன்பு தோன்றற்கு வாயிலுண்டு. செந்தமிழ்ச் செல்வி யொருத்தியது காதலொழுக்கத்தை யுணர்த்தும் வாயிலாக ஆசிரியர் கபிலர் ஆரியவரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழறிவிக்கின்றார். அது பத்துப் பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டு எனப்படும். அதன்கண், செந்தமிழ்ச் செல்வி ஒருத்தியை அவள் தாய், “ துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல் நற்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி எற்பட வருதியர்” (37-9) என விடுவிக்கிறாள்.) அவளும் தன் தோழியருடன் புனம் சென்று, ஆங்கு அமைத்திருந்த பரண்மீது இருந்துகொண்டு, “ சாரல் சூரல் தகைபெற வலந்த தழலும் தட்டையும் குளிரும் பிறவும் கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி” (42-4) புனங் காவல் புரிந்து வருகின்றாள். வருங்கால் வெயில் வெம்மை மிக்க வருத்தும்போது, அருவியிலும் சுனையிலும் நீராடி, நனைந்த கூந்தலைப் புலர்த்திக்கொண்டு, ஆங்குப் பூத்திருக்கும் காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி முதலிய பலவகைப் பூக்களைப் பறித்துத் தொகுத்துத் தழையும் கோதையும் தொடுத்துப் புனைந்துகொண்டு அசோக மரமொன்றின் நிழலில் இருக்கின்றனள். இடையிடையே கிளியோப்புவதை மறக்க வில்லை. அப்போது தமிழ் மகனொருவன், தன் தடக்கையில், “ வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி இயலணிப் பொலிந்த வீகை வான்கழல் துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ முனைபாழ் படுக்குந் துன்னரும் துப்பின் பகைபுறங் கண்ட பல்வேல் இளைஞரொடு” (124-29) அவ்வழியே வருகின்றான். அவனுடன் வேட்டை நாய்கள். வந்தவை இம் மகளைச் சூழ்ந்து கொள்கின்றன. அது கண்டு இம்மகள் அஞ்சி நடுங்குகின்றனள். உடனே அவன் போந்து, மென்மொழி சில கூறி, இவளைத் தேற்றி, அந் நாய்களையும் போக்கிவிட்டு, “ மடமதர் மழைக்கண் இளையீர், இறந்த கெடுதியும் உடையேன்” (141-2) என்கின்றான். அவற்கு இவள் ஒரு விடையும் பகர்கின்றாள் இல்லை. அவன் மனம் திகைத்து, “ கெடுதியும் விடிராயின் எம்மொடு சொல்லலும் பழியோ? மெல்லியலீர்” (144-5) என்று கேட்டு நிற்கின்றான். இருந்தாற்போலிருந்து கானம் கல்லென்னு மாறு ஒரு பெருமுழக்கம் கேட்கிறது. சிறிது போதிற்குள்ளே, “ கார்ப்பெயல் உருமின் பிளிறிச் சீர்த்தக இரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் சினம்திகழ் கடாஅம் செருக்கி மரம்கொல்பு மையல் வேழம்,” (162-5() ஒன்று மடங்கல்போல் எதிர்வருகின்றது. உடனே இம் மகள் அஞ்சி அலமந்து, வளையொலிப்ப நாணம் மறந்து விரைந்தோடி அத் தமிழ்மகனை யடைந்து நடுங்கி நிற்கின்றனள். தமிழ் மகளைத் தழீஇநின்ற அத் தமிழ்க் காளை, “ உடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை அண்ணல் யானை அணிமுகத் தழுத்தலின் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது” (170-3) அயர்ந்து புறங்கொடுத்து ஓடி விடுகின்றது. செல்வியும் அவனைத் தழுவி நின்ற கை விடாது சிறிதுபோது நிற்கின்றாள். அப்பெருந் தகையும், “ அஞ்சி லோதி! அசையல், யாவதும்; அஞ்ச லோம்பு நின் அணிநலம் நுகர்குஎன மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்து” (180-2) அவள் முகம் நோக்கிக் குறுநகை முகிழ்க்கின்றான். அப்போது அவட்கு நாணும் உட்கும் தோன்ற, அவள் சிறிது பிரியக்கருத அவன் அவளை விடாது தழீ இக் கொண்டு நிற்கின்றான். பின்பு அவன் தான் கொணர்ந்த அடிசிலை, “ நின்னோடு உண்டலும் புரைவது என்றாங்கு அறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுதூ ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி அந்தீந் தெண்ணீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து” (207-11) இனிது இருக்கின்றான். பின்பு பொழுது சாய, அந்திமாலை நெருங்கிறது. அதனைக் கண்டதும் அவன், தமிழ் மகளின், “ நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மணம் அயர்கம், சின்னாள் கலங்க லோம்புமின், இலங்கிழை யீர்” என (231-3) ஈரமொழிகள் சில கூறி அவளுடன் அவளிருக்கும் ஊர்க்கு வாயிலில் உள்ள நீர்த்துறைக்கண் விடுத்துவிட்டுத் தான் சென்று விடுகின்றான். இஃதொரு திறமாகும். இனி, மேலே கூறியவாறன்றி, இத் தமிழ்மகள் விளையாட்டி டத்தோ பிறர்ண்டோ, அவள் தனித்திருக்குங்கால் ஒரு தமிழ் மகன் அவளைக் காண்டலும் அவள் அவனைக் காண்டலும் இருவரும் கருத்தொருமித்து அன்பு கொள்வதும் உண்டு. அவ்வாறு உண்டாகிய அன்பு, பிறிதொருங்கால் அவர்கள் தாமே தமித்துக் கண்டு கூடலால் பெருகிக் காதலாய் ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலைமை பயந்துவிடுகிறது. இந் நிலைமைக் கண் அவள், தான் அவனையின்றி அமையமாட்டாத் தன்மையை உணர்ந்துகொள்கின்றாள்; ஆனால் அதனைப் பிறர்க்கு எடுத்தோதும் பெற்றி பெண்மைக்கு இல்லாமை யால், பசுமட்கலத்துள் நீர்பெய்து வைத்தவழி, அது புறத்தே பொசிந்து காட்டுவது போலத் தன் வேட்கை தானே தன் மெய்ப்பட்டு அரிது தோன்றுமாறு ஒழுகுவள்; சொல்லால் கூறாள் எனத் தொல்காப்பியனார் கூறுவர்; இளந்திரையன் என்பார், “ காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும், யானே, பெண்மை தட்ப துண்ணிதில் தாங்கி” (நற். 94) எனத் தமிழ்ச் செல்வமகள் கூற்றில் வைத்துப் பெண்மையே அவளை அவ் வேட்கையைக் கூறமாட்டாது தடுக்குமென்று ஓதுகின்றார். இதனால், அவளை அவன் கண்டு காதலால் தழீ இக்கொண்டு, அக்காதலின் தோற்றம் கூறுவான், “ யாயும் யாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” (குறுந். 40) என்று அவட்குக் கூறகின்றான். பின்பு அவளின் நீங்கித் தனித்திருக் குங்கால் அவள் நினைவே மிகுந்து மெலிந்து அம்மெலிவு கேட்ட நன்பனுக்குத் தன் காதன்மையை எடுத்தோதுகின்றான். “ கேளிர் வாழியோ கேளிர், நாளும்என் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” (குறுந்.280) என்று கூறுகின்றான். பிறாண்டும் அவளது “கதுப்பயல் விளங்கும் திருநுதல், புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே” (குறுந். 129) என்றும், “கொடிச்சி கையகத் ததுவே பிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே” (நற்.95) என்றும் பலப்பல கூறி அவன்தான் அவளை இன்றியமையாக் காதலனாதலைப் புலப்படுத்துகின்றான். இவ்வண்ணம்,இத் தமிழ்ச் செல்வ மகனும் தமிழ்ச் செல்வ மகளும் தம்மில் தாமே தமித்துக் கூடலே பெரும்பான்மை; சிறுபான்மையே தமிழ் மகள் முதற்கண் தோழியர் கூட்டத்திடையே நின்று தமிழ் மகனைக் காண்டலும் காதலுருதலும் நிகழ்வது. தனித்துக் கண்டு காதலெய்தும் மாண்புடைய இவள் தன் செய்கையின் அருமைப் பாட்டினையும், திருமணத்தின் சிறப்பினையும் உணராத வளல்லள். “ முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வருங் குரைய கலம்கெடிற் புணரும்; சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொன்மருங் கறிஞர்.” (குறிஞ்சி.13-8) என்றும், “ கொடுப்பின் நன்கு உடைமையும் குடிநிரல் உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை” (குறி.30-2) என்றும் இம் மகளிரிடை நிகழும் பேச்சுக்களை நோக்கின் இவர்கள் காதல் வாழ்வின் சிறப்பும் கடிமணத்தின் குறிப்பும் பிறவும் நன்குணர்ந் திருத்தல் இனிது விளங்குகிறது. தமித்து நின்று ஒருவரை யொருவர் கண்டு உளம் கலந்து உணர்வொன்ற எய்திய காதல் பின்பு எவ்வகையில் வளர்கின்றது; இவர்களால் எவ்வண்ணம் வளர்க்கப் பெறுகின்றது என்பனவற்றை இனிக் காணலாம். செந்தமிழ்ச் செல்வியின் உள்ளத்தில் முளைத் திருக்கும் காதலை, அவள், பெருநாணும் பேரச்சமும் உடையளா தலின்,பிறர்க்குச் சிறிதும் புலனாகாது மறைந்தொழுகுவாள், அவளோடு உடனிருந்து உடனுறைந்து உடன்பயின்று உடனொழுகும் உயிர்த்தோழிக்கும் வாய்விட்டு உரையாள். செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் பிற நலங்களும் மிகவுடைய இத்தமிழ் மகட்கு உயிர்த்தோழியாக இலகுபவள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சொல்நலத்திலும் எத்துணையும் குறைவில்லாதவள். அறிவு, அன்பு, அறம் என்ற மூன்றும் கலந்து பெற்ற பெண் வடிவமொன்று உளதாயின் அதனைத் தமிழ் மகளின் உயிர்த்தோழி என்றுகூறலாம். அறிவே அவளது உள்ளம்; அன்பே அவளது சொல்; அறமே அவளது செயல். இத்தோழியின் துணைமை இருந்தாலன்றி, தமிழ் மக்கள் இருவர் பாலும் பிறந்த காதல் சிறக்குமாறு இல்லை யென்பதைத் தமிழ் மகள் நன்கு உணர்ந்து சில குறிப்புக்களால் அவள் தன் காதலனுக்கு உணர்த்தி விடுகின்றாள். அவள்தான் தோழியரிடையே இருக்குங்கால், காதலன் வரின் அவன் உணருமாறு, தன் உயிர்த்தோழியுடன் அடிக்கடி சொல்லாடியும் கட்கடையால் குறிப்பாய் நோக்கியும் உணர்த்துவள். அவன் அதனைப் பிழையற உணர்ந்து கொள்வன். இதுவேயன்றி அவனும் தமிழ் மகளைத் தனித்துக் காணுமிடத்து, “இனிவருங்கால் நீருன் தோழியுடன் வருக” (ஐங். 175) எனச் சொல்லால் சொல்லுவன். தோழியின் செய்கைகளைக் கண்டும் அவன் அவளை அறிந்து கோடலும் உண்டு. இக்காலத்தே அவள் பெண்மை நலம் சிறந்து காதல் மாட்சி யெய்தும் முதுக்குறைவு உடையளாயினும், இச்செறிக்கப்பெறும் அத்துணை யருமைப் பாட்டினை எய்திலளாதலின், அவள் தோழியுடன் புறத்துச் சென்று பயிலும் இடமே தமிழ் மகன் தோழியின் மதியினை உடம்படுவிக்கும் முயற்சிக்கும் ஏற்ற இடமாகிறது. அதற்குரிய செவ்வியைப் பெறுவதற்கு அவன் காலம் நோக்கியிருக்கின்றான். தமிழ்மகள் தினைப்புனம் காத்தற்குச் செல்லும் காலத்தை யறிந்து அதனை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றான். தமிழ்மகள் புனங்காத்து ஒழுகுமிடத்து, அவளுடன் உயிர்த் தோழியும் இருக்கின்றாள். இருவரும் ஒருங்கிருக்கும் செவ்வி யறிந்து, அவன் வேட்டம் செல்வான்போற் சென்று, “இங்கு யான் எய்த களிறு வரக்கண்டீரோ? மான் வரக்கண்டீரோ? பன்றி வரக்கண்டீரோ?” என்று வினவி நிற்பன். அல்லது, புதுவோன்போல நின்று, அவர்களுடைய ஊரும் பெயரும் ஊர்க்குச் செல்லும் வழியும் உரைமின் என்று இரந்து நிற்பன். மேதக்க தழையொன்று புனைந்துகொண்டு போந்து, “இதனை ஏற்றுக்கொண்மின்” என வேண்டுவன். இவ்வாறு பலவகையாலும் தோழிபால் சொல்லாடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவள்பால், தான் தமிழ்மகள்பால் கொண்ட காதலுறவினைக் குறிப்பால் தெரிவித்துவிடுவன். தமிழ்மகனது சொல்லும் செயலும் அவன் காதற்குறிப்பை நன்கு புலப்டுத்தக்காணும் தோழி, அவள்பால் பரிவு கொண்டு, தமிழ்மகளின் மனக்கருத்தை யறிந்துகொண்டு அவனை இத்தமிழ் மகள் கருத்துக்கு இசைவிக்கும் கடப்பாட்டினைப் பெறுகின்றாள். தமிழ்மகளின், பெருமையும் தோழியின் தோழமையும் செயலின் அருமையும் பிறவும் ஒன்றற்கொன்று இசைவுறாது பிணங்குகின்றன. இந்நிலையில்,அவர்களிடையே நிகழும் சொல்லாட்டுக்களைச் சிறிது காண்பாம். அச் சொல்லிடையே ஒளிரும் நுட்பமும் அறிவொட்பமும் பண்டைத் தமிழ் மக்களின் சீரிய நாகரிகத்தை இனிது விளக்குகின்றன. செந்தமிழ்ச் செல்வியைத் தனித்துக் கண்டு காதலுற்றுக் கருத்தொன்றிய தமிழ்மகன், அவள்தன் தோழியுடன் இருக்கும் செவ்வி நோக்கியிருக்கின்றான். அவள் தோழியருடன் தினைப்புனம் காத்தற்கு வருகின்றாள். அவனும் அப் புனத்திற்குப் போதரு கின்றான். அவள் தன் தோழியருடன் கூடித் தினைக்குரல் கவரும் கிளிகளை ஒப்புகின்றாள். அக்கிளிகளின் கூட்டம் ஓப்புந்தோறும் நீங்கி, ஓப்பி ஓயுந்தோறும் வந்து புனத்தே படிகின்றன. அதனால், அவள் புனத்தே இருத்தலை அத்தமிழ் செல்வமகன் உணர்ந்து, “செந்தமிழ்ச் செல்வி புனங்காவல் புரிவதை இக் கிள்ளைகள் நமக்குக் காட்டின;” “வெள்ளவரம்பின் ஊழிபோகியும் கிள்ளை வாழிய பலவே” (ஐங்.281) என்று வாழ்த்தி, “நன்றே செய்த உதவி; நன்று தெரிந்து யாம் எவன் செய்குவம் (ஐங்.288) நெஞ்சே!” என்று தனக்குள்ள நன்றியறிவைப் புலப்படுத்தி மகிழ்ந்து கொள்கின்றான். பின்பு, அவன் அச்செல்வியும் உயிர்த்தோழியும் பிறரும் கூடி நீராடச் செல்லுதல் கண்டு மெல்ல மறைவிருந்து பார்த்து “தலைப் புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும், கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும், புணைகை விட்டுப் புனலோ டொழுகின், ஆண்டும் வருகுவள் போலும்” (குறுந்.222) எனத் தோழியின் பெருமையும் துணைமையும் தெளிந்து கொள் கின்றான். இதுபோலும் நெறிகள் பல உண்டு. தோழியைத் தேர்ந்து கொண்டதும் அவளை யண்மி “களிறு, மான், பன்றி முதலியன வரக்கண்ட துண்டோ” என்று வினவுவன்; தக்க விடை பெறாது நீங்குவன். பிறிதொருகால், தோழியும் செல்வியும் ஒருங்கிருப்பப் போந்து, ஊரும் பேரும் பிறவும் வினவி “பெருங்கல் வேலிச் சிறுகுடியாது எனச் சொல்லவும் சொல்லிராயின்................ செங்கேழாடிய செழுங்குரல் சிறுதினைக் கொய்புனங் காவலும் நுமதோ? (நற்.213) என்று வினவி, அவர்கள் முகந்தராமை கண்டு நீங்குவன். இந்நிலையில், அவன் வரவும், அதுகண்டு செல்வி ஒழுகும் ஒழுக்கமும் நோக்கமும் பார்வையும் தோழியால் குறிக்கொண்டு நோக்கப்படும்.” நம் செல்வியோ அத் தமிழ்த் தோன்றலை முன்பே கண்டு காதல் சிறந்து நிற்கின்றாளாதலின், அவன் வருந்தோறும் தோழியோடு சொல்லாடுந்தோறும், கண்டு உள்ளத்தே உவகைமிகினும் அதனை மறைத்து ஒன்றும் அறியாள்போன்று ஒழுகுகின்றாள். தோழியும் பேரறிவினளாதலின், அச் செல்விக்கும் செல்வனுக்கும் முன்பே காதலுறவு உண்டாகியிருத்தலை ஒருவாரு உணர்ந்து கொள்கின்றாள். அதனை நன்கு அறிந்துகோடல் குறித்து மிக நுட்பமாக அவளுடன் பேசி ஆராயத் தொடங்குகின்றாள். புனங்காத் தொழுகும் நாளில், ஒருநாள் தோழியும் செல்வியும் ஒரு புடையே இருக்கின்றனர். ஏனை மகளிர் புனத்தின் பல மருங்கிலும் இருந்து புள்ளினங்களை ஓப்பிக்கொண்டிருக்கின்றனர். தனிமை நன்கு அமையக் கண்ட நம் அறிவுடைத் தோழி, செல்வியின் முகத்தை நோக்கினாள்; பின்பு ஏதோ கூறுவாள் போலச் சொல் லெடுத்தாள். செல்வியும் அவளுடன் நோக்கினள். அதுகண்ட தோழி, “உண்கண்ணாய்! பார்த்தனையா, ஒருவன் புலிவேட்டம் மேற்கொண்டு அதன் அடிச்சுவடுபற்றி வருவான்போல வில்லும் அம்பும் ஏந்தித் தலையில் கண்ணி சூடிப் பன்னாளும் வருகின்றான். வருபவன், என்னை நோக்கி சில குறிப்புக்களைக் காட்டுவனே யன்றித் தன் மனத்தே உற்ற வருத்தத்தை வாயால் சொல்லாமலே போய்விடுவன். என்மனத்தே அவன் வடிவே பதிந்துவிட்டது. அவன் நினைவே மிகுந்தது. அதனால் யானும் இரவெல்லாம் கண்ணுறக்கம் இன்றி வருந்தாநிற்பே னாயினேன். இவ்வாறே சில நாட்கள் கழிந்தன. அவனும் தன் கருத்தை என் முன்நின்று உரைத்தல் ஆற்றான்; நமக்கோ நம் காதற்குறிப்பை வாய்விட்டுரைப்பதும் பெண்தன்மை யன்று. இதனால், சில நாட்களில் அவன் என்னைக் காணாமலே போய்விடுதலும் உண்டு. என்னாலும் இனிப் பொறுத்தல் முடியாது என்றொரு நிலையுண்டாயிற்று. ஆகவே, யானும் அரிதில் துணிந்து ஒரு நாணின்மை செய்தேன்” என்கின்றாள். இது கேட்டதும், செல்வி முகம் சிவப்ப, உள்ளத்தெழுந்த அருவருப்பால் நுதலொளி மாற, வாயில் புன்னகை தவழ, “நடந்தது என்னை” என்கிறாள். அவள் முகவேறு பாட்டைத் தோழி குறிக்கின்றாள். அதன்மேல் தோழி, மேலும் கூறலுற்று, “ .............நறுநுதால்! ஏனல் இனக்கிளி யாம்கடிந் தோம்பும் புனத்தயல் ஊசல் ஊர்ந்தாட, ஒருஞான்று வந்தானை ‘ஐய, சிறிது என்னை ஊக்கி’ என (யான்) கூறத் ‘தையால்! நன்று’ என்று அவன் ஊக்கக், கைநெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில்; வாயாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்,” என்று கூறினளோ இல்லையோ, செல்வி மிகச் சினந்து வாய் துடிப்ப நனைத்து, “சீச்சீ” என்று சொல்லி, “பின்பு நடந்தது என்னை? சொல் சொல்” என்கின்றாள். அவட்குத் தோழி, முறுவலித்து, “மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன்” என்கின்றாள். செல்வி, பொறாமை மீதூர, சினத்தீ கிளற, “இனி, இதை என்னிடம் சொல்லாதே; போ; அவ் வன்கணன்யாவன்” என்று சொல்லவும், தோழி, அவனை விடாதே, “இதைக் கேள்” எனப் பற்றி நிறுத்தி, “ ...................................................ஆயிடை மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின், மற்று, ஒய்யென ‘ஒண்குழாய்! செல்க’ எனக்கூறி விடம் பண்பின் அங்கண் உடையன் அவன்” (கலி.37) என்று முடிக்கின்றான். செல்வியும், “வாழ்ந்தேன்” என வாய் வெருவுகின்றாள். இச் செயல்களால், தமிழ்ச் செல்விக்கு அச் செல்வன்பால் முன்னுறவு உண்டென்பதைத் தோழி யறிந்துகொண்டு, அவனை நோக்கி, “நெருநல்வந்த அவன் இன்றும் வருவன்;” “இன்றும், தோலாவாறில்லை, தோழி! நாம்சென்மோ சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே மாசின் றாதலும் அறியான்; ஏசற்று என்குறைப் புறநிலை முயலும் அண்க ணாளனை நகுகம் யாமே” (அகம்.32) என்று மொழிகின்றாள். இவற்றைக் கேட்டு அச் செல்வி படும் பாடும், பார்க்கும் பார்வையும் குறிப்பும் தோழியின் ஐயத்தை அறவே நீக்கிவிடுகின்றன. இஃதிவ்வாறாக, முன்னை நாள் செவ்விபெறாது வாடிச் சென்ற தமிழ் மகன் மறுநாள் மகளிர்க்குரிய அழகிய தழையொன்று புனைந்துகொண்டு தோழிபால் வருகின்றான். அத்தழையின்கண் முல்லை, மருதம், நெய்தல் முதலிய நிலத்துப் பல்வகைப் பூக்கள் விரவியிருக்கின்றன. அதுகண்டு, “நீ கொணர்ந்த இத்தழையின்கண், வேறுநிலத்துப்பூக்கள் இருக்கின்றன; எங்கள் ‘குன்றம் குருதிப்பூவின் குலைக்காந்தட்டு’ (குறுந் 1); ஆதலின் வேண்டேம்; வேண்டி யணியின் வேறு பல ஐயத்துக்கு இடனாம்” என மறுத்து விடுகின்றாள். அச் செல்வன் சொல்லாடுந் திறனின்றி ஏங்கி நீங்குகின்றான். செல்வியும் அதனைத் தான் ஏற்று அணிந்து அவளை மகிழ்வித்தற்குக் கூடாமையால் மனம் மறுகி வருந்தும் வருத்தத்தை மறைத்துக் கொண்டு ஒழுகுகின்றாள். இச் செயலாலும் இருவர் பாலும் முன்னுறவு இருத்தலைத் தோழி தெளிகின்றாள். பின்னொரு நாள், அச்செல்வன் இச் செல்வியும் தோழியரும் கூடித் தொடுக்கும் தழைபோலும் தழையுடை யொன்று தொடுத்துக் கொண்டு போந்து, தோழியை இரந்து நின்று “இதனை ஏற்றுக் கொண்மின்” என்கின்றான். இனி, மறுத்தற்கு இயலாமையின் ஏற்றுக்கொண்டு செல்வியை யடைந்து, “ ...............................குன்ற நாடன் உடுக்கும் தழைதந் தனனே; யாம் அஃது உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை வாடல கொல்லோ தாமே, அவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை யடுக்கத்து கொயற்கருந் தழையே” (நற்இ.359) என்று கூறுகின்றாள். இதற்குள், அவன் தன் வேண்டுகோளை, இத்தோழியும் செல்வியும் கேளாராயின், தன் காதலைப் பலரறியத் தோற்றுவிக்கும் நெறியை மேற்கொள்வதா? யாது செய்வது? என்று பலபட நினைந்து தோழியின் காதில் விழுமாறு, “மாவென மடலொடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே, வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந். 12) எனக் கூறி இனைகின்றான். உடனே தோழி அவன் முன்னே நின்று, இருவர் குறிப்பும் நன்கு தெரிந்தும் அவளை மறுத்து, இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீனெறி பரதவர் மகளே. நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே நிணச்சுனா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ? புலவு நாறுதும்; செலநின் றீமோ பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; எம்ம னோரில் செம்மலு முடைத்தே” (நற்.45) என்று மொழிகின்றாள். இச்சொற்களால் அச்செல்வன் சிறிதும் தளராது மேன்மேலும் வந்து எவ்வாறேனும் தோழியின் துணை பெற்றுச் செல்வியைக் கூடும் கருத்தினனாகின்றான். அவன் நெஞ்சில், செல்வியைக் காணுந்தோறும் வேட்கை மிகுகின்றது (குறுந்.165). மறுமுறையும் தோழியை இரந்து கேட்கவே விழைகின்றான். “ அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம் அருந்துய ரவலம் தீர்க்கும், மருந்துபிறி தில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்.140) என்று பன்முறையும் முயன்று முடிவில் தோழி தன் குறையை முடித்துத் தர உடன்படுமாறு செய்துகொள்கின்றான். இனி, தோழி செல்வியோடு சொல்லாடி அச் செல்வன் குறை முடித்தற்கு முயலும் முயற்சி மிக்க அருமை வாய்ந்ததாகும். செல்வி, அச் செல்வன் தன் காதலன் என்பதை ஒரு போதும் வாய்விட்டத் தோழிபால் உரைத்ததில்லை. ஆகவே, அவளைத் தன் கருத்திற்கு உடன்படுவித்தலில் தோழி தன் அறிவை மிக்க நயமும் நுட்பமும் அமையக் கையாளும் கடமையளாகின்றாள். தன் செய்கையால் செல்வனுக்கும் செல்விக்கும் தன்பால் மிக்க வருத்த முண்டாயினும், அவர்தம், வெம்மையைத் தாங்கி அறத்தின் வழுவா தொழுகுவிக்கும் அறிவுத்திண்மை அவள் பால் நிரம்பவுண்டு. “உறுகண் ஓம்பல் தன் இயல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே” என ஆசிரியர் நன்கு வற்புறுத்துகின்றார். மேலே, தான் அச்செல்வனோடு கூடியாடியது போல்வனவும், அச்செல்வி கேட்டு நாணத் தகுவனவும் தோழி கூறியதெல்லாம், அச்செல்வியின் ஒழுக்கமும் அறவாழ்வும் குறித்தேயாகும். “மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத்தானும்” (தொல்) தோழி செல்வியை ஆராய்தற்குரியள் என்று ஆசிரியர் கூறினர். இதுவேயன்றி, செல்வன்பால் செல்விக் குரிய காதலை, அவளுடைய “நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்” தகுவன கண்டு தெளிகுவன் என்றும் கூறியருளினர். இவ்வகையாலெல்லாம் தோழி, அச்செல்வியின் காதன் மாண்பை உணர்ந்துகொண்டபோதினும், தான் அறிய அவள் தன் காதலனுடன் கூடி யொழுகப்பண்ணும் கடமை மேற்கொள்கின்றாள். செல்வியோ அச்சமும் மடனும் நாணும் மிகவுடையள். இவற்றுட் சிறிது வழுவினும் உயிர்விடும் அத்துணை மான முடையள். தன் உயிர்த்தோழி யாயினும், அவள் தன் களவினை யறிவளோ எனும் அச்சமும், அது காரணமாக நிற்கும் நாணமும் செல்விபால் சிறிது கெட்டாலன்றி, தோழி அவளைக் களவின்கண் இனிது ஒழுகு விக்கும் அறத்தைச் செய்ய இலயாது. நித்தமும் பெண்பாற்குரிய எனப்படும் அச்சத்தையும் நாணத்தையும் மிகச் சிறிதளவு கெடுக்க முயலும் தோழியின் ஒட்பம் மிக வியத்தற்கரியது. பயிற்சிக்கண் நீங்கும் அச்சத்தினும் நாணம் மகளிர்க்கு உயிரினும் சிறந்ததாகும். “உயிரிற் சிறந்தன்று நாணே” எனத் தொல்காப்பயினாரும், “உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலளாகி நகுதலும் நகூஉம்” (கலி.147) என நல்லந்துவனாரும் கூறுதல் காண்க. இத்துறையில் பாட்டியற்றுவதில் புலவனது புலமைத்திறம் ஓரளவு கால்கொண்டு நிற்கிறதென்றுகூட உரைக்காலம். ஏனெனின், நாணழிவு சுட்டிய குறிப்புக்களைக் கேட்போர் அருவராது நயக்குமாறு கூறல் வேண்டும். அச் செல்வனுக்குக் குறைநேர்ந்த தோழி தன்பால் வந்து அவன் குறையை நயக்குமாறு கூறவருகின்றாள் என்பதனை அத் தமிழ்ச் செல்வியும் தோழியின் குறிப்புக்களால் ஒருவாறு உணர்ந்து கொள்கின்றாள் என்றாலும் அதனைப் புறத்தே காட்டாது மறைத் தொழுகுகின்றாள். இந்நிலையில், தோழி அவளிடம் வந்து, “அன்னாய், ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன், பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி, என் நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை, வரை முதிர்தேனின் போகியோனே (குறுந்.176) என் நெஞ்சு கலுழ்கின்றது” என்கின்றாள். ஒரு முறைக்குப் பன்முறை அவன் குறை யிரந்து நின்றது குறிப்பித்தல் காண்க, பிறிதொருகால் செல்வியை யண்மி, “அக்குன்ற நாடன், யாம் தற்படந்தமை அறியான், தானும் வேனில் ஆனேறுபோலச் சாயினன் என்ப நம் மாண்நலம் படர்ந்தே” (குறுந்.74) என்கின்றாள். அவன் குறையை நயத்தற்குரிய படர்ச்சி அச் செல்விபால் உளதாகத் தானே உளப்படுத்திக் கொண்டு தோழி கூறும் திறம் காண்க. செல்வி நயவாளாயின், தோழி தன்னை யுளப்படுத்துக் கூறுதலை மறுப்பளென்பது கருத்து. இவ்வாற்றால் செல்வி குறைநயக்கும் கருத்தினளாதலைக் குறிப்பலாய் உணர்ந்து கொண்ட தோழி, மற்றொருகால் செவிலியை நோக்கி, “இதை நினைத்தால் நகைக்கு இடனாகின்றது, காண்” என்கிறாள். செவிலி, ஆர்வமுடன் “என்னையது?” என்றலும், “ நகையா கின்றே தோழி; ‘தகைய அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் துணிநீர்ப் பௌவம் துணையோ டாடி....... தெளிதீங்க கிளவி! யாரை யோஎன் அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீ?’எனப் பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான்நம் அணங்குதல் அறியான், நம்மில் தாஅணங் குற்றமை கூறிக் கானல் Rம்புஇமிர் சுடர்நுதல் நோக்கிப் பெருங்கடல் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே” (நற்.245) என்று சொல்லுகின்றாள். இதன்கண் அவன், என் இன்னுயிர் வௌவிய நீ யாரையோ? என்று வினவி, சுடர்நுதல் நோக்கித் தொழுது நின்றது நகையாக இருக்கின்றது என்பவள், அவன்பால் செல்விக்குரிய காதலை. “தான் நம் அணங்குதலறியான்” என்றும், அவளது ஆற்றாக் காதலை “நம்மில் தான் அணங் குற்றது கூறி... தொழுது நின்றது” என்றும் கூறும் திறம் காண்க. பிறிதொருகால், வந்து தோழிபால் விடைபெற்று நீங்கும் அச் செல்வத் தமிழ் மகன் சிறிது சேய்மைக்கண் சென்று கொண்டிருக் கின்றான். அவனைத் தோழி நம் செந்தமிழ் செல்விக்குக் காட்டி, “செல்லுமன்னோ மெல்லம் புலம்பன்” என்கின்றாள். உடனே, செல்வி ஒன்றும் அறியாள்போல், “யார் அவன்? ஏன் செல் கின்றான்?” என்று வினவ, தோழி, அன்னாய், “ கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும் வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும் இன்புறப் புணர்ந்தும் இளிவரப் புணர்ந்தும்” நம்மோடு விளையாட்டயர்ந்த செல்வமகளே அவன். அவன், இப்போது, “ தன்துயர் வெளிப்படத் தவறி, நம்துயர் அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ, மெல்லம் புலம்பன்” என்று உரைக்கின்றாள். “சென்றால் செல்லட்டுமே” என்பாள் போலச் செல்வி தோழியைப் பார்க்கின்றாள். உடனே இவ்வறிவுடைத் தோழி, “ செல்வோன் பெயர்புறத்து இரங்கி முன்நின்று தகைஇய சென்றஎன் நிறையில் நெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே; எய்தியும் காமம் செப்ப நாணின்று கொல்லோ?” என்ற தன் நெஞ்சு கலுழ்ந்தது போலக் கூறி, மேலும், “ உதுவ காண்அவர் ஊர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானும் எக்கர்த் தாழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலல் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே” (அகம். 330) என்று சொல்லி முடிக்கின்றாள். இது கேட்ட செல்வி, தன்னைப் போலவே தன் தோழியும் செல்வன்பால் மெய்யே அன்பு கொண்டொழுகுகின்றாள் எனத் தெளிந்து மகிழ்கின்றாள். இதனால், உயிரினும் சிறந்த அவளது நாணம் சிறிது நெகிழ்கின்றது. பின்பொருகால், அத் தோழி, நம் செல்வியை நோக்கி, “அன்னாய், அச் செல்வநாடன், நெருநல் நம்மொடு கூடி நம் புனத்தே கிளிகடிந்து விளையாடினன் அன்றோ? அவன் என்பால் ஏதோ சொல்லுதற்கு முயன்றான்” என்கிறாள். “சொன்னானா?” என்று செல்வி வினவலும், தோழி, “ சொல்லி டம்பெறான் பெயர்ந்தனன், பெயர்ந்தது அல்ல லன்று, அது காதலந் தோழி. தாதுண் வேட்கையின் போதுதெரிந் தூதா வண்டோ ரன்னஅவன் தண்டாக் காட்சி” என்றதும், செல்வி, அவளைக் கூர்த்து நோக்குகின்றாள். தோழியோ, “ ..................................அவன் தண்டாக் காட்சி கண்டும் கழல்தொடி வலித்தஎன் பண்பில் செய்தி நினைப்பா கின்றே” (நற்.25) என்று மொழிகின்றாள். இதன்கண், “வண்டோரன்ன அவன் தண்டாக் காட்சி” யென்று தோழி கூறியது, நின்பால் நலன் நுகர்தற்கு என்பால் சொல்லாடமுயன்றான் என்றவாறு. “கண்டும் கழல்தொடி வலித்த என் பண்பில் செய்தி” என்றதனால், செல்வி, தன் உயிர்க்காதலனான அச்செல்வனைப் பலகால் காணப்பெற்றும் கூடி மகிழப்பெறாமையின் உடம்புநனி சுருங்கியதும், பாடறிந்து *குறைநயக்கும் குறி விளங்கக் காட்டாமையும் விளக்கப்படுகின்றன. இவ்வாறு செல்வியின் உள்ளத்தை அச்செல்வன்பால் கூட்டுவித்தற்கேற்பத் தோழி பண்படுத்திக் கொண்டபின், அவளை நோக்கி, “ அறியாய் வாரி தோழி......................... மாமலை நாடனொடு மறுவின் றாகிய காமம் கலந்த காதல் உண்டெனின், நன்று மன்;அது நாடாய் கூறி; நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் யானலது இல்லைஇவ் வுலகத் தானே; இன்னுயி ரன்ன நின்னொடும் சூழாது....... பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச் செய்துபின் இரங்கா வினையொடும் எய்யல பெரும்பழி எய்தி னேனே;” (அகம்.268) என்று கூறுகின்றாள். இதன்கண், நம் செல்வி, முன்பு அச் செல்வன்பால் தனித்துத் கூடிப்பெற்ற நட்பினைத் தோழிதான் உணர்ந்திருக்கு மாற்றினையும் ஒருவாறு தெரிவித்துக் குறைநயப் பித்துக் கொண்ட திறம் காணலாம். மறுபடியும், அத் தோழியே, நம் செல்வியை நோக்கி, “ அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்; நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந் தளவல் வேண்டும்; மறுத்தரற்கு அரிய வாழி தோழி; பெரியோர் நாடி நட்பின் அல்லது நாட்டுநா டார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்.32) என அறிவுடைய நன்மொழி கூறி அவளைக் குறைநயப்பிக்கின்றாள். இனி இவ்வகையேயன்றி, வேறு வகையில், “செல்வன் போந்து,” “ அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி பின்னுப்புறந் தாழக் கொன்னே சூட்டி நல்வரல் இளமுலை நோக்கி நெடிநினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன்; அதற்கே...... படப்பை நின்ற முடத்தான் புன்னைப் பொன்னேர் நுண்தாது நோக்கி என்னும் நோக்கும்இவ் வழுங்க லூரே” (அகம்.180) என்றும், “ கொண்கன் ஊர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர் தெண்கடல் அடைகரைத் தேர்மணி யொலிப்பக் காண வந்து நாணப் பெயரும்; அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே” (குறுந்.212) என்றும் தோழி, நம் செல்வி குறைநயக்குமாறு சொல்வன பலவாகும். அவையெல்லாம் விரிப்பின் பெருகும். (கலி.60,61) இவ்வண்ணம் தோழி கூறியவாற்றால், நம் செந்தமிழ்ச் செல்வி, அச்சம் நீங்கி, நாணும் ஒரு சிறிது நெகிழ்ந்து, தனக்கும் அச் செல்வனுக்கும் உளதாகிய தொடர்பினைக் குறிப்பாய் உரைக்கலுறுவள். “ சுடர்த்தொடீஇ! கேளாய்: தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப்பது கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி (செல்வன்), மேலோர்நாள், அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கு, அன்னை ‘அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்! உண்ணும்நீர் ஊட்டிவா’ என்றாள்; என, யானும் தன்னை யறியாது சென்றேன்; மற்றுஎன்னை, வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு, ‘அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்,’ என்றேனா; அன்னை அலறிப் படர்தரத், தன்னை, யான், ‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா; அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று, என்னைக் கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நடைக்கூட்டம் செய்தான்அக் கள்வன் மகன்” (கலி.51) என்று அச் செல்வி உரைக்கின்றாள். இதனைக் கேட்ட தோழி, “அன்னாய், இவ்வாறு முன்பே உறவுண்டாகவும், என்னை இது காறும் மறைத்தொழுகினீரன்றோ! மேலும், நீ கூறியவகையே நோக்கின். அவன் அத்துணை வழிபாடொன்றும் தங்கட்குச் செய்திலன்போல இருக்கிறதே; பட்டிமையுடையாரை நட்டல் கூடாதே” என்று சுடுவதுபோல உரைக்கின்றாள். அது பொறாத செல்வி, அவன் தன்னை வழிபட்ட நெறியும், தான் தன் பெருமை குன்றாது அதனை ஏற்ற நிலையும் கூறலுற்று, “ இன்னகை இலங்கெயிற்றுத் தேமொழிந் துவர்ச்செவ்வாய் நன்னுதால் நினக்கொன்று கூறுவாம்; கேளி; இனி: நில்என நிறுத்தான், நிறுத்தே வந்து நுதலும் முகமும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ, ஐதேய்ந் தன்று, பிறையு மன்று; மைதீர்க் தன்று மதிய மன்று; வேயமன் றன்று மலையு மன்று; பூவமன் றன்று சுனையு மன்று; மெல்ல இயலும் மயிலு மன்று; சொல்லத் தளரும் கிளியு மன்று; எனவாங்கு, அனையன பலபா ராட்டிப், பையனெ வலைவர் போலச் சோர்பதன் ஒற்றிப், புலையர் போலப் புண்கள் நோக்கித் தொழலும் தொழுதான், தொடலும் தொட்டான், காழ்வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன் தொழூஉம் தொடூஉம் அவன்தன்மை ஏழைத் தன்மையோ இல்லை தோழி” (கலி.55) என்று கூறி முடிக்கின்றாள். தோழி, மகிழ்ந்து, நம் செல்வியை ‘வருக’ எனத் தனியே அழைத்துச்சென்று, “நீ ஈங்கே இரு; சென்று பூக்கள் நல்லன கொணர்கின்றேன்” என்று யான் சொல்லி நீங்குகின்றாள். ஆங்கே சிறிது போதில், அச்செல்வன் போந்து நம் செல்வியைக் கண்டு கழியுவகை எய்துகின்றான். நம் செல்வியும் முதலில் பெரிதும் நாணி, தோழியின் செயல் நுட்பம் தெளிந்து, செல்வனது கூட்டத்தால் இன்பம் சிறக்கின்றாள். இவ்வாறு, நம் தமிழ்ச்செல்வியும் செல்வனும் கடிமணம் புணர்தற்கிடையே பலமுறை ஒருவரையொருவர் கண்டு கூடி மகிழ்வர்; ஆனால், இவர்கட்கிடையே மகப்பேற்றுக்குரிய மெய்யுறு புணர்ச்சி நிகழ்வது கிடையாது. பிற்காலக் கோவை நூல்களில் அஃது உளது போன்ற குறிப்புக்கள் காணப்படும். ஆயினும், அவை சங்க காலத்து ஒழுக்கமின்மையின் கொள்ளப்படா. 34. இலக்கிய வுண்மை மக்கள் வழக்கில், அவருடைய நினைவு சொல் செயல் என்ற மூன்றையும் நிலைக்களமாகக் கொண்டே உண்மையும் பொய்ம் மையும் நிலவுகின்றன. நினைவு முதலிய மூன்றும் உலகியற் பொருள் களை அடிப்படையாகக் கொண்டு நிற்பன. ஆதலால் உண்மையும் பொய்ம்மையும் உலகியலோடு தொடர்புற்று இருப்பது தெளிவாகும். ஒருபொருள் உளதாகுங்கால் உண்மையும், அவ்வாறு ஆகாது மறையுங்கால் பொய்ம்மையும் தோற்றம் பெறுகின்றன. உள்ளது ஒன்றன் உண்மையைப் பிறர் சொல்லக் கேட்பவன் அதனை நேரிற் சென்று காணும் போது அப்பொருள் மறைந்தொழியின் அதன் இன்மையால் முன்னர்க் கேள்வியுற்ற உண்மை பொய்யாகி அவனை மயக்குகிறது. அதனை மேற்கொண்டு ஆராய்ந்து காணாவழி அவனுக்கு அது பொய்யாகவே அமைந்து விடுகிறது. இவ்வண்ணமே நினைவும் நிகழ்ச்சியும் ஒன்றாவிடத்தும், சொல்லும் செயலும் ஒவ்வாவிடத்தும், செயலும் பொருளும் (பயனும்) சிறவாவிடத்தும் பொய்ம்மை உருக்கொள்ளுகிறது. ஆராய்ச்சியால் பொய்ம்மை நீங்குவதும், உண்மை ஒளிவிட்டுத் தோன்றி இன்பம் செய்வதும் மக்களுலகில் நாடோறும் நிகழும் நிகழ்ச்சிகளாகும். உண்மையாராய்ச்சியில் தலைப்பட்டோர் உண்மைகளை விஞ்ஞான வுண்மை (Scientific Truth), வரலாற்று உண்மை (Historical) மெய்ந்நெறியுண்மை, (Philosophical Truth), புலனெறியுண்மை (Poetic Truth) என நான்கு வகையாகக் கண்டு உரைத்துள்ளனர். இரண்டோடு மூன்றைக் கூட்டினால் ஐந்தாகும் என்பது போல்வனவும், இருபங்கு நீர்க் காற்றும் ஒரு பங்கு நெருப்புக் காற்றும் சேர்ந்தால் நீர் உண்டாகும் என்பது போல்வனவும் விஞ்ஞான வுண்மை; நமது தமிழகத்தைச் சில ஆண்டுகட்கு முன்னர் மேனாட்டு ஆங்கிலரும், அவர்க்குமுன் நாயக்க முகமதிய மன்னர் களும், அவர்கட்கு முன்னே பாண்டிய சோழ மன்னர்களும், அவர்க்கு முன்பு பல்லவரும் ஆட்சிபுரிந்தனர் என்பது போல்வன வரலாற்றுண்மை; உலகியற் பொருள்களைக் கண் முதலிய கருவி களால் அறிந்தபின் அறிந்தவற்றை ஆராய்ந்து முடிபு செய்வதற்கு மன முதலிய கருவிகள் நமக்கு உண்டு என்பதும் அவற்றை நெறிப்படுத்தும் கருவியாக அறிவு என்பது உண்டு என்பதும் இவை போல்வன பிறவும் மெய்ந்நெறி உண்மைகளாகும். “சுவை யொளி ஊறு ஓசை நாற் நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு” என்பதும் அது. கண் முதலிய கருவிகளால் புறத்தே கண்ட பொருள்களை மனத்தின்கண் நிறுத்தி அவற்றைக் கூட்டியும் கழித்தும் வகுத்தும் மீட்டும் சொல்வடிவில் வெளிப்படுத்திக் கேட்போர் உள்ளத்தில் தன் மனத்திற்கண்ட காட்சி யெழுமாறு செய்யும் புலனெறி வழக்கில் காணப்படும் பொருளும் செய்கையும் புலனெறி யுண்மையாகும். மூத்து நரைத்த முதியவள் ஒருத்தி தன்மகன் யானையோடு போராடி அதனைக் கொன்றுவிட்டுத் தானும் மடிந்தான் என்று கேள்விப்பட்டு, யானையைக் கொன்றதுபற்றி உவகையும் மடிந்தது பற்றித் துயரும் கொண்டு கண்ணீர் வடிக்கின்றாள். அதனைப் புலவனொருவன் நமக்கு உரைக்கின்றான். முதியவளது முதுமை நிலையை “மீனுண் கொக்கின் தூவியன்ன, வால்நரைக் கூந்தல் முதியோள்” என்றும், அவள் மகன் யானையைக் கொன்று தானும் இறந்தானெனக் கேள்வியுற்றதை “முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும்” என்றும், அவள் சொரிந்த கண்ணீரைக் “கண்ணீர், நோன்கழைத் துயல்வரும் வெதிரத்து, வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே” என்றும் உரைத்து, யானையொடு போராடிய மகன் அப் போரில் யானையைக் கொன்று வென்றி எய்தியதனால் உவகைக் கண்ணீர் சொரிந்ததை, “களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே” என்றும், “கண்ணீர் வெதிரத்துச் சிதரினும் பலவே” என்றும் கூறியதுபோல் வன புலனெறி யுண்மைகளாம். “வானத்திற் பறக்கலாம், எந்திரவூர்தி இயற்றுமின் என்றான்”, கடற்குள் மூழ்கிச் சென்றான். நீர் மேல் நடக்கலாம் என்றெல்லாம் புலமைக் கண்ணில் தோன்றிய காட்சிகள் இந்நாளில் நம் கண்முன்னே நிகழ்தலால், அவையும் எதிரது போற்றி மக்களுலக்கின் மாட்சி தெரிக்கும் புலனெறி யுண்மை வகையேயாம். இவ் வுண்மைகளை ஆராய்வது நாட்டு நலனுக்கும் மக்கள் வாழ்வுக்கும் பெருத்த நன்மையாகும். விஞ்ஞான வுண்மை ஆராய்ச்சியால் நாட்டின் பொருளியல் வாழ்வு ஆக்கம் பெறுகிறது மேனாடுகளிற் பலவும் அமரிக்க நாடும் இன்று பொருள் வாழ்வு சிறந்து பொலிவதே இதற்குப் போதிய சான்று. வரலாற் றராய்ச்சியால் அரசியல் வாழ்வு திட்பமும் செம்மையும் அடைகிறது. ஆங்கில நாட்டு அரசியற் பாராளுமன்ற முறை உலகிலுள்ள ஏனை நாடுகட்கு எடுத்துக் காட்டாக இலங்குவது ஆங்கில மக்களின் வரலாற்றா ராய்ச்சியால் விளைந்த பெரும் பயன். மெய்ந்நெறி யாராய்ச்சி, விதிவிலக்கு, நீதி, நேர்மை முதலிய கூறுகள் வளம்பெற்று நாட்டில் அமைதியும் அறமும் பொருந்திய வாழ்வு நிலவுதற்குத் துணை செய்கின்றது. முன்னாளில் சிறந்து விளங்கிய யவனநாட்டு மெய்ந்நெறிப் புலவர்கள் செய்த அறிவுப்பணியால் இன்றைய அரசியல் சட்டங்கள் உருவாய் அமைந்திருப்பதை இதற்கு எடுத்துக் கூறலாம். இன்றும் சட்டக்கல்வி கற்பிக்கும் கல்விநிலையங்கள் யவனநாட்டுச் சட்டங்களை நம்நாட்டு இளைஞர்கட்கு கற்பித்து வருவது இதனை நன்கு வற்புறுத்துகிறது இறுதியாக நிற்கும் புலனெறி யுண்மை ஆராய்ச்சி மக்களை ஏனைய விலங்கு முதலிய மாக்களின் இனத்தினின்று பிரித்து மக்கட்பண்பை வளர்த்து, அறிவு, அறம், அன்பு ஆகியவற்றின் வாயிலாகக் கண்ணுக்கு அழகும் கருத்துக்கு இன்பமும் பெருகும் இம்மை வாழ்வும் அம்மையிற் பெறலாகும் அந்தமில் இன்பத்து அழியாப் பேரின்ப வாழ்வும் கைவரச்செய்யும் கவின் வாய்ந்ததாகும். நாளும் வளர்ந்து வரும் மக்களினத்துக்கு வேண்டுவன வற்றை உணர்த்தி வேண்டாதவற்றை விலக்கி, நேரிய நினைவும் சீரிய நடையும் உடையதாக ஆங்கில மக்கட் சமுதாயத்தைச் செய்தது இப்புலனெறி யுண்மை ஆராய்ச்சியே, இத்துணை நலங்கள் இந்த உண்மையாராய்ச்சியில் இருப்பது கண்டே நாகரிகம் படைத்த நாட்டினர் அனைவரும் இவற்றை மிகவிரும்பிக் கையாண்டு வருகின்றனர். நம்நாட்டு அரசியலும் இத்துறையில் கருத்துச் செலுத்தி வருவதை நாம் நாளும் கண்டு வருகின்றோம். இவ் வுண்மையாராய்ச்சி பொதுவகையில் நான்கு பெரும் பிரிவாகக் காணப்பட்டதாயினும் அவ் வகைகள் ஒன்று கொன்று தொடர்பின்றித் தனித்து இயங்குவதில்லை. ஒன்றையொன்று இன்றியமையாது சார்ந்துவரும் முறைமை இவற்றிடையே விளங்கித் தோன்றுகிறது. விஞ்ஞனத்துறையில் ஒருகலத்திற் காணப்பட்ட வுண்மை பிறிதொரு காலத்தில் தொடர்பாக ஆராய்ச்சி செய்யப் பெற்று விளக்கம் பெறுவதோடு மேலும் பல உண்மைகளைக் காட்டி யமைகிறது. புகைவண்டி முதல் வேற்றுமை பெரிதும் கொண்டுள்ளன. விஞ்ஞான உண்மை காணும் ஆராய்ச்சி வழிவழியாகத் தொடர்ந்து நடந்ததே இதற்குக் காரணம், இன்றைய தோற்ற்ததில் காணப்படும் வேற்றுமைக் கூறுகள், தோன்றிய காலத்துக் கூறுகளோடு ஒப்ப வைத்து நோக்கின், அதன்கண் வரலாற்றுண்மை உள்ளீடாக நிற்பதைக் காணலாம். ஏனை மெய்ந் நெறித் துறையிலும் பிறவற்றிலும் வரலாறு உள்ளுற நிற்பதும், வரலாற்றுண்மை ஆராய்ச்சியில் விஞ்ஞானம், மெய்ந்நெறி முதலிய வற்றின் உண்மை கலந்திருப்பதும் ஆராய்பவர்க்குத் தெளிவாகத் தெரிகின்றன. இயற்கையும் செயற்கையுமாகிய எல்லாப் பொருட்கும் அகக் கூறும் புறக்கூறும் நாண்பற உண்மை யாராய்ச்சிக்கு உருவாகும். அக் கூறுகளில் தோய்ந்திருக்கும் உண்மைகளை மேலே கூறிய விஞ்ஞானம் வரலாறு மெய்ந்நெறி ஆகிய துறைகள் ஆராய்ந்து வெளிப்படுத்தா நிற்ப, புலானெறி யுண்மையாராய்ச்சி அவ் விருவகைக் கூறுகளின் அமைப்பிடையே நிலவும் அழகையும் பொற்பையும் வெளிப்படுத்தி உள்ளத்துக்கு இன்பத்தையும் அமைதி யையும் நல்குகிறது. உலகிலுள்ள மக்களினம் எல்லாவற்றிற்கும் அமைதியையும் நல்குகிறது. உலகிலுள்ள மக்களினம் எல்லா வற்றிருக்கும் அகக் கூறுகளின் அமைப்பிடையே நிலவும் அழகையும் பொற்பையும் வெளிப்படுத்தி உள்ளத்துக்கு இன்பத்தையும் அமைதியையும் நல்ககிறது. உலகிலுள்ள மக்களினம் எல்லா வற்றிற்கும் அகக் கூறுகளில் ஒற்றுமை காணப்படினும் புறக்கூறு களாகிய தோற்றம், நிறம், வடிவம் முதலியவற்றில் பல வேறுவகை வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவ்வேற்றுமை யிடையே ஒவ்வொன்றினும் ஒன்றையொன்றை ஈர்த்து மகிழ் விக்கும் அழகும் பொற்பும் அமைந்திருப்பது உண்மை, இயற்கைப் பொருளிடத்தே காணப்படும் எழிலும் அழகும் மக்கள் மனத்திற் படிந்து அவர் செய்யும் செயற்கைப் பொருளிடத்தும் வெளிப்பட அமைந்து விடுகின்றன. நாம் காணும் மோட்டார்கார்களின் அகக்கூறுகளில் ஒருமை காணப்படுவது போலப் புறக்கூறாகிய தோற்றம், அமைப்பு, நிறம் முதலியவற்றில் காணப்படாது வேற்றுமையுற்றாலும், நம்கண்ணையும் கருத்தையும் ஈர்த்து நிறுத்தி இன்புறுத்தும் வனப்பும் அழகும் தனித்து விளங்குகின்றன. அகமும் புறமுமாகிய இருவகைக் கூறுகளையும் நோக்கிப் புறத் தோற்றத்தில் பூத்து விளங்கும் பொற்பிலும் வனப்பிலும் அமைந்த அழகையும் கவினையும் காண்பதிலும் பிறர்க்குக் காட்டுவதிலும் புலனெறி யுண்மை யாராய்ச்சி பெரிதும் ஈடுபட்டு நிற்கிறது. இது மக்களுயிரின் செயற்றிறத்தை ஊக்குதற்கும் அறிவுத் திறத்தை ஆதரிப்பதற்கும் பெருந்துணையாய் நிற்றலால், ஆராய்ச்சியாளர் புலனெறித் துறைக்குச் சிறந்த இடத்தை நல்கித் திருவுறுகின்றனர். இப் புலனெறித் துறையைப் பண்டைத் தமிழ் நூலார் புலத்துறை யென்றும் புலனெறி வழக்கென்றும் புகன்று உரைத்தனர். பிற்காலத் தார் இலக்கியநெறி என்றும், புலனெறியுண்மை யாராய்ச்சியை இலக்கிய ஆராய்ச்சி யென்றும் வழங்கலாயினர். புலனெறிக் குரியவன் புலவன். புலம் என்பது அறிவு; அறிவுடையவன் புலவனா கின்றான். உயிர் உணரும் தன்மையது. எனவே உயிருடையவர் அனைவரும் உணர்வுடையவரே; ஆயினும் அவருள்ளும் வகை பொது கையாலன்றிச் சிறப்பு வகையால் மேன்மையுறுபவரையே “உணர்வுடை மாந்தர்” என ஆன்றோர் உயர்த்துக் கூறுகின்றனர். ஆசிரியர் தொல்காப்பயினார், “ கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” என்று உரைப்பதனால் இதனை அறியலாம். அவ்வாறே அறிவுடையோர் அனைவரும் அறிஞர் எனப்படுவதில்லை. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற புலன்கள் ஐந்தாலும் உலகியற் பொருள்களைக் காண்பவர் புலவராயினும், அப் புலன்களை ஆளும் அறிவினால் உலகியற் பொருள்களின் உண்ணிகழ் கூறுகளை உள்ளத்தே வைத்து ஆய்ந்து கொள்வதில் புலவன் சிறப்புறு கின்றான். அவனுடைய புலமையில் விஞ்ஞான முதலியவற்றின் உண்மைகளும் உண்மைக் கூறுகளும் அமைந்துள்ளன. அவனே புலத்துறை முற்றியவன்; அவனேபுலவன் என்ற சொற்குப் பொருளா கின்றான். நம் நாட்டில் புலத்துறை முற்றிய புலவனது புலனெறி சிறந்த வகையில் இதுகாறும் இயன்று வந்துள்ளது. உள்ளதன் உண்மையும் இல்லதன் இன்மையும் உய்த்தறியும் அவனுடைய புலமையுள்ளம் அவ் வுண்மைகளை உலகிற்கு உரைக்க முற்படுகிறது. எழுத்தும் இசையும் நடிப்பும் ஓவியமும் சிற்பமும் அவன் உள்ளத்துக்குக் கருவியாகின்றன. பிறருடைய கண்ணும் காதுமாகிய சிறப்புடைய அறிகருவிகளில் கண்ணை மட்டும் நடிப்பும் ஓவியமும் சிற்பமும் வாங்கிக் கொள்கின்றன; இசை செவியைப் பற்றிக்கொள்ளுகிறது. எழுத்து ஒன்றுதான் கண்ணையும் செவியையும் பற்றி அறிவும் இன்பமும் அளிக்கின்றது. அறிவும் இன்பமும் உடலோடு இயங்கும் மக்கட்கு இலக்கமாதலால் அவற்றை நல்கும் எழுத்துத் துறை இலக்கியத்துறை எனப்படுதற்கும் பொருத்தமாக வுளது. இலக்கியத்துறையில் பணிசெய்த தமிழ்ப்புலவர்களின் இலக்கியங்களை நோக்கின், நால்வகைப் புலனெறிகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை உள்ளது புணர்த்தல், இல்லது புணர்த்தல் என இரண்டாய் நின்று ஒவ்வொன்றும் இவ் விரண்டாய் விரிகிறது. உள்ளது புணர்ப்பு, உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், எனவும், இல்லது புணர்ப்பு, உள்ளோன் தலைவனாக புணர்த்தல். இல்லோன் தலைவனாக உள்ளது இல்லது புணர்த்தலும், இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும் எனவும் வரும். இவற்றுள் உள்ளது என்றது உலகியலோடு ஒட்டிநிற்பது; இல்லது உலகியலில் எங்கும் காணப்படாதது. உள்ளது புணர்த்த இக்கியங்கள் எக்காலத்தும் பயன் தருவனவாய் இலங்குகின்றன்; இன்றும் யாவரும் விரும்பிப் பயில்கின்றனர். இவ் வகையில் சங்க இலக்கியங்கள் முன்னணியில் நிற்கின்றன. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி ஆகிய மூன்றும் சிறிதளவு இல்லது புணர்க்கப்பட்டிருப்பினும் அவற்றை விலக்கி சிறிதளவு இல்லது புணர்க்கப்பட் டிருப்பினும் அவற்றை விலக்கி நோக்கியவழி உள்ளது புணர்த்த இலக்கியப்பண்பு சிறிதும் குன்றாமையால் உள்ளது புணர்த்த வகையில் அடக்கிக் கோடற்கு இடமுண்டு. இல்லது புணர்த்த இலக்கிய புணர்த்த இலக்கிய வகையில், கோவை, உலா, தூது, மடல் முதலியன வந்து நிற்கின்றன. இக் கோவை முதலிய இலக்கியங்களுள் மேலேகண்ட விஞ்ஞான முதலிய உண்மைகட்குச் சிர்த்த இடம் இல்லாமையால், விஞ்ஞான முதலியவற்றின் அறிவு பெற்றுள்ள இந் நாளில் அவை சிற்றிலக்கிய மென்ற பெயர் பூண்டு போதிய செல்வாக்கின்றி நூல் வடிவில் பழையோர் பேணித் தந்த பழந் தமிழ்ப் பொருளாய்த் தம்மை விரும்பிப் பயில்வோர் குன்றியிருக்கின்றன. இன்றும் என்றும் இன்பம் தரும வகையில், உள்ளது புணர்த்த இக்கியங்களுள் அழகும் இன்பக் கூறும் பொருந்துமாறு புனைந் துரைப்பகுதிகள் காணப்படுவதுண்டு. புனைந்துரைக்கும் பொய்யு ரைக்கும் வேறுபாடு அறியாத சிலர் அழகு தரும் புனைந் துரையையும் பயனில்லாத பொய்யுரையாகக் கருதி மயங்கவா ராயினர். “பொய் பிறந்தது புலவன் வாயிலே” என்ற பொதுமொழி இம் மயக்கத்தால் விளைந்த பயன். செய்யப்படும் எவ்வகைச் செயற்கைப் பொருளிடத்தும் காண்பார் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் வனப்பும் அழகும் அமைப்பது இயற்கைநெறி, இலக்கியப் புலவன் இந்த இயற்கை நெறிக்கு உட்பட்டவனாதலால் அவன் செய்யும் இலக்கியமாகிய பொருளின் கண் புனைந்துரை வழங்கும் வனப்பும் புலத்துறை யின்பம் தரும் அழகும் அமையாது ஒழியாவன்றோ? ஏனைப் பொருட்கு அழகு செய்தல் ஊதியம் கருதியது; இலக்கியப் பொருட்கு அது வேண்டாவே என்றொரு கேள்வி எழுவதும் உண்டு. உண்மை யுணர்ந்த உயர்ந்தோர் உள்ளத்தே இஃது எழாதாயினும் ஏனோர் இதனை எழுப்புவது இயல்பு. சுமார் முந்நூறு ஆண்டுகட்கு முன் மேனாட்டில் இக் கேள்வி எழுந்தது. அதற்கு அக்காலத்தே செருமனி நாட்டில் வாழ்ந்த ஷோபனவா என்ற நல்லிசைப் பலவர் முன்வந்து, “நாம் உயிர் வாழ்வதற்கு உயிர்க்காற்றே Oxygen வேண்டுவது; அஃது இல்லையாயின் நாம் மடிந்து போவோம் என்பது விஞ்ஞான வுண்மை அந்த உயிர்க் காற்றைப் பிற காற்று வகைகளினின்றும் பிரித்துத் தூயநிலையில் வடித்து உட்கொண்டோ மாயின், சில வினாடிகளில் நுரையீரல் வெந்து இறந்து விடுவோம். இதனால் உயிர்க்கு இன்றியமையாத உயிர்க்காற்றும் பிற காற்றுக் களோடு கலந்து புனைந்துருவாய் வருதல் வேண்டும் என்பது இயற்கையின் விதியென உணர்தல் வேண்டும். மேலும், உண்மையை உள்ளவாறே ஒப்பனையும் ஒளியுமின்றி உரைத்தால் அது கேட்போர் உள்ளத்தை யுற்று ஒளிசெய்யாதொழியும். உடற்குட் புகுந்து உயிர்க்கு நலம் செய்வதற்கு உயிர்க் காற்றோடு பிற காற்றுவகைகளைக் கலந்து உயிர்க் காற்றாகப் புனைந்து இயற்கை வழங்குவது போல உண்மையும் ஒப்பணையால் (புனைந்துரையால்) ஒளியூட்டப்பட வேண்டும்” என விடை யிறுத்தார். உள்ளதன் உண்மையை யுரைக்குமிடத்துப் புனைந்துரை வகையால் பொய் சிறிது கலக்குமாயினும் அப்பொய்ம்மை வாய்மையாய் உண்மை தரும் உறுதிப்பயனைப் பெறுவித்தலால் அது விலக்குண்ணாது. இன்றேல் கொள்ளத்தக்க உண்மையும் காண்போர் கருத்தைக் கவரமாட்டாமல் பொய்யாய் விலகிப் போம். “பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்ற இயற்கையறமும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. இயற்கையை அடிப்படுத்தித் தனக்கு ஏவல் செய்விக்கும் அளவுக்கு மக்களுயிர் உயர்ந்து நிற்கிறது. இதற்கு இந்த ஏற்றத்தைத் தந்தது விஞ்ஞான வளர்ச்சி. அதன் அடிப்படைக் கூறுகளுள் நிலத்தியல் கணக்கு (geometry) என்பது ஒன்று. அந்தக் கணக்கியல் புள்ளியும் கோடும் என்ற இரண்டின்மேல் நிற்கிறது. புள்ளியாவது உட்பரப்பில்லாத வட்டம் என்றும் அஃது இயங்குமிடத்து உண்டாகும் சுவடே (locus) கோடு என்றும், அக்கோட்டுக்கு நீளமுண்டே யன்றி அகலமென்பதே கிடையாது என்றும், அக் கணக்கியல் கூறுகிறது. இது வெறும் புனைந்துரையே யன்றி உண்மை யாகாது. இவ்வாறே நோக்கின் புனைந்துரை கலவாத வரலாற்று நூலே இந்த நிலவு லகத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, புனைந்துரை உண்மைக்கு வேண்டாத தன்று என்பது தெளிய உணரவேண்டுவ தொன்றாம்.  * இதனைச் செம்பகம் என்றும் வழங்குப. “I may call it the unknown Land.” * பணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். ‘அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும்உறுதிநோக்கினைப் பயப்பது.’ 1. மணி: 22 - 61 2. பு.வெ. மாலை. சூ. 12 * The essence of aphorism is the compression of a mass of thought and observation into a single saying.” - John Morley. *. திருக்குறள் - 828 **. குறள் - 759 1. சிந். 1891 2. சிந். 497 3. “These wise sayings; said Bacon, the auther of some of the wisest of them, are not only for ornament but for action andbusiness, having a point or edge, whereby knots in business are pierced and discovered, And he applands Cicero’s description of such sayings as saltpits, that you may extract salt out of them and sprinkle it where you will” - John Morley. 1. It has been said that our knowledge is this; that we know best, first, what we have divined by native instinct; second, what we have learned by experience of men and things; third, what we have learned not in books, but by books - that is, by the reflections that they suggest; fourth, last and least what we have learned in books or with masters. The virtue of an aphorism comes under the third of these heads; it conveys a portin of a truth with such point as to set us thinking on what remains. - J. Morley. “Plutarch’s aim was much less to tell a story tham as he says ‘to decipher the man and his nature’ “Studies in Literature P.66. 1. (ஐங். 98) 1. புறம். 144. 1. நற்.330 16.1.49 - இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது. 1. (அகம்) 2. அகம் 1. S.I.I. Vol. XII.No.43. 2 Nellore Inscriptions >udur No.54. 3. Annual Report Madras Epigraphy No.84 of 1922 1. A.R.No. 309 of 1928 - 29 2. Nellore Iuscriptions Sulurpet. No.4 3. Nellore. Insgudur. No. 20.33. 4. S.I.I.V.V.No.491. 5. Nel. Ins. Nellore. No. 108 1. Nel. Ins Gudur. No.87 2. S.I.I.Vol.V.No.495 1. Nellore Ins. Nel.Tq.No.76 2. A.R.No.172 of 1926 3. Para 14 of A.R. 1904, Madras Epigraphy. 1. No.31 of Nel. Tq 2. 120 of Nel. 3. 66 of Nel. 4. 3 of Sulurpet Tq 5. 12 of sul. 6. 26 of Venkatagiri. 7. 26 of Atnakur 8. 20-33 of Cudur. 1. A.R. 123 of 1933 2. Sudras. 3. S.I.I. Vol Viii. No.533- 44 1. S.I.I. Vol. vii. No.371 1. Indian. Antiquary. Aug. 1884. 1. புறம். 17 2. புறம். 120 3. புறம். 289. 1. புறம் 230. 2. புறம். 126. 3.Trade winds. 4.புறம்66. 1.Hippalos. 2.R.H. Warmington. 3. Commerce between the Roman Empire and India. p. 43-44. 4. புறம். 60. 1. புறம். 102. 2.புறம். 307. 1. புறம். 311. 2. புறம். 33. 1. புறம். 79. 2. புறம். 75. 1 புறம். 55. 1. புறம். 185. 1. புறம். 71. 2. புறம். 75. 3. புறம். 10 1. புறம். 27 2. புறம். 10 1. Budget 2. புறம் 28 3. புறம். 29. 1. புறம். 184. 1.புறம். 186. 1. புறம். 58. 2. புறம். 59. 3. புறம் 77-80. 1. புறம். 18 2. புறம். 32. 1. புறம். 76. 1. புறம். 8. 1. புறம். 62. 2. புறம். 79. 1. புறம். 9. 2. புறம். 97. 1. புறம். 97. 2. புறம். 23. 1.பதிற்.20. 2.Epigraphica Carnatica vol. vii. Part I Insciptions of shimoga. Dt. Vol. 176. 1. புறம். 36. 1. புறம். 294. 2. புறம். 295. 3. புறம். 278. 1. புறம். 374. 1. புறம். 390. 2. புறம். 390. 3. புறம். 334. 4. புறம் 151. 5. புறம். 248. 6. மணி 3:42-7 1. புறம். 332 2. புறம். 367. 3. புறம் 29. 1. புறம். 195. 2 புறம். 363. 3. ௸ 193. 1. ௸ 192. 2. புறம். 251. 3. ௸ 352. 4. ௸ 179. 5. ௸ 55 1. புறம். 74. 2. ௸ 157. 3. ௸ 30. 4. ௸ 309. 1. புறம். 264. 2. A.R. No. 211 of 1910. 3. அகம். 67. 4. புறம். 228. 1. புறம். 358. 2. புறம். 30. 1 புறம். 73. 1 புறம். 113. 1. புறம். 32. 2. புறம். 1. புறம் 152. 2.புறம். 9. 3. புறம். 33. 4. புறம். 84. 5. புறம். 372. 1 புறம். 139. 1. புறம். 138. 2. புறம் 173. 3. புறம். 360. 1 புறம். 99. 2 புறம் 392. 1. புறம். 143. 1 புறம். 149. * அண்மையில் இதுவும் சென்னை மாநிலத்துடன் இணைந்துவிட்டது. 1. கொடும் பஞ்சம். * இவ் வரிய கட்டுரை தான்கட்டுப் பாட்டினால் செந்தமிழ்ச் செல்வி 1944 முதல் 2 ஆண்டுக்காலம் நிறுத்தி வைக்கப் பெற்றபோது வரப் பெற்று இப்போது ஒரு கோப்பிலிருந்து கிடைத்தது. * Whatever languages a youngman meddles with, the more he knows the better; that which her should critically study and labour to get a facility, clearness and elegancy to exáess himself should be his own mother - tongue and to this purpose he should be daily exercised in it.” - Thoughts on Education. *“Teaching of moter - tongue” - Macna’s Secondary Education. * Thoughts on Education -John Locke. “Practical Education”- G.N. Gokhale