உரைவேந்தர் தமிழ்த்தொகை 20 பதிற்றுப்பத்து உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 20 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 648 = 672 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 420/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப் பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச் சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்து வதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ் நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்பு களையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவு படுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற் போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் 1. Introduction 1 2. முன்னுரை 7 3. உரையில் எடுத்தாண்ட நூல்கள் 13 4. உரைநலம் 14 5. பாடினோர் வரலாறு 32 6. பதிற்றுப்பத்தும் பதிகங்களும் 48 7. பதிற்றுப்பத்திற் கண்ட சேரர் மரபு முறை 56 8. உரையில் எடுத்தாளப்பட்ட நூல்களின் குறுக்க அட்டவணை 57 கடவுள் வாழ்த்து 59 இரண்டாம் பத்து 63 மூன்றாம் பத்து 140 நான்காம் பத்து 227 ஐந்தாம் பத்து 288 ஆறாம் பத்து 356 ஏழாம் பத்து 423 எட்டாம் பத்து 489 ஒன்பதாம் பத்து 547 பதிகங்களின் பழையவுரைக் குறிப்பு 616 இடம்விளங்காத பதிற்றுப்பத்துப் பாட்டுக்கள் 618 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 620 அருஞ்சொல் அகரவரிசை 621  INTRODUCTION Tiru Avvai Duraiswamy Pillai of the Annamalai University is well known as the modern commentator on Sangam works. He now gives the world of Tamil Scholars his commentary on Patirruppattu. Patirruppattu is the only available source book of ancient Cera history. Among all the Sangam works this is unique in being a Collection of the poems on Ceras. Ten great poets had sung the greatness of ten great Cera kings. Unfortunately of the hundred verses, the first ten and the last ten, probably singing the glories of Utiyan and Yanaikkan Mantaram Ceral Irumporai respectively, are missing. There were two ruling Cera families that of Utian and that of Antuvan, the former being the senior and the main Cera line of Vanchi; the latter being the Irumporai line of Tondi. The second Ten and the third Tens belong to the two sons of Uthiyan viz., Imaya Varamban Netun Ceral Athan and Palyanaic - Celkezhu Kuttuvan. The fourth, the fifith and the sixth Tens relate respectively to the sons of Netun Ceral Athan viz., Kalamkay-k-kanni Nar Muti-c-ceral, Katal Pirakkottiya Cenkuttuvan and Atukot-Pattu-c-ceral Athan. The rest of the book relate to the Irumporai family; the VII Ten belongs to Selvakkatunko Vazhi Athan, the VIII Ten to Perum Ceral Irumporai, the conqueror of Thakatur and the IV Ten to Ilam Ceral Irumporai, the son, the grandson and the great grandson respecvitvely of Antuvan Ceral. Various places of importance, the great chiefs and chieftains, the foreigners like Yavanas, the warfare and important battlefields, the fivefold classification of the country and other geographical details are all alluded to in this anthology. The poets of this anthology and the literary patronage of the Ceras are not myths. Paranan Kannam Kannan Katu, Vezhakkadu (Umbarkadu) and Kakkaiyur, still existing in Malayalam country, bear testimony to the conferment of Jaghirs on the Poets Paranar, Kumattur Kannanar and Kakkai-p-Padiniyar by the Cera kings, Cenkuttuvan, Imayavaramban Netun Ceral Athan, and Atukotpattu-c-Ceral Athan respectively. This book is important as revealing the culture, the custom and practice, the political and military life of the Tamil land; of the first few centuries of the Christian era. It is interesting to note that the conception of the fundamental unity of India, from Himalayas to Cape Comorin, goes back, to the poems of the sangam Age ( verse 1 and 43 of this anthology). Politics had become, by that time, an all India Science and the Yagas, varying according to the gradation of sovereignty, were believed to have a magical influence in establishing an ever expanding empire. This inspired the ambitious kings of Tamil land to perform the Royal sacrifices; and the study of their sacred texts and related literature became very popular. Further, the political unrest in the North drove the Sanskrit, Pali and Prakrit scholars to South India. Manimekalai, the Tamil epic reveals the Taml land as a centre of all-India learning, with its intellectual capital at Kanchipuram. The beginning of this development is seen in Patirruppattu itself. The Yagas are mentioned in many places. The Rajasuya was not unknown; there was a Cola of the name Rajasuyam Vetta Peru Nar Killi i.e. Nal Killi the Great who had performed the Rajasuya Yaga. There was the great Pandya of many yagas viz. Palyakacalai Muthu Kutumi-p-Peru Vazhuthi. The Ceras, as seen from this book, were no exceptions. The Putra Kameshti yaga is, it may be suggested, mentioned in poem No.74 by Arisilkizhar, a Non-Brahmin poet. There we learn that the queen donned on her beautiful shoulders a circular skin of the stag, well cut out and decked with pearls and precious stones.Was the skin made thus into a valuable amulet? In the Atharva Veda are two charms for obtaining a son ( III 23 & VI.11). The second of these mantras is relevant to the study of this Putra-kameshti. This consists of three parts and when the third part, which runs thus “May Prajapati elsewhere afford the birth of a female but here shall bestow a man” was recited, according to the sutras (Kans 35-9) which explain the procedure, “The fire is surrounded with the wool of a male animal and the wool is tied upon the woman” (probably as an amulet). Instead of the wool we find the skin of the stag, the male animal, being used in the sacrifice performed by the Cera king. This reference to this Putra-kameshti is very important. The question is very often raised whether the Cera who ruled over a country where the MarumakkalTayam or matriarchal succession now reigns supreme, were following the law of Makkal Tayam or patriarchal succession, as their colleagues the Colas and the Pandyas did or were following the law of Marumakkal Tayam, as followed of the kings of Malayalam today. The wife of the king under the Marumakkal Tayam is never called the Queen. InPattirruppattu, every cera king is praised as the husband of the chaste consort. But his does not help us to decide the issue raised. The Putra-kameshti poem, however, conclusively proves, it was the son of the consort that becomes the king, thus establishing beyond doubt the patriarchal succession of these kings. There is one other difficulty, for the Padikam speaks of the mothers of these kings as “ Velavikoman Pathuman Devi” etc. It is this kind of expression that has really created the confusion. Devi ordinarily means a wife, this phrase will then denote a wife of a Velir chief Pathuman etc. How can the wife of a chief be also wife of the Cera King? This leads some scholars to assume that the succession was matriarchal where the mother of the ruling prince is never the wife of a king. But as this theory runs counter to the explicit statement of the Putra kameshti poem. One has to explain the word according to Thiru T.V.Sadasiva Pandarathar as meaning “daughter,” a usage made clear by such phrases as Cera ma Devi, Pancavan ma Devi, all wives of Colas and not of Ceras or Pandyas. Or Ceran ma devi etc. may be an elliptical shorthand expression for “The great Cola queen, the daughter of the Pandya or Cera.” Names like Sentan korran or Kiran Korran etc. mean Korran son of Centan or Kiran. Therefore Patuman Ma Devi mean the Queen, the daughter of Pathuman. One is justified in referring to the usage of the Imperial Cola Inscriptions in view of the close kinship that exists between the Meykkirtis of the later Colas and the Patikams of Patirruppattu as explained by Tiru T.V.Sadasiva Pandarathar in his short introduction to the present commentary. In other places also, the Cera kings are praised in Patirruppattu for bringing forth children. The theory of three debts or duties to the Devas, the ancestors, and the learned, to be discharged respectively, by every man, by performing sacrifices, by bringing forth children, and by learning the ancient texts, it, as seen by this very poem and poem No. 70 as old as the Sangam age. Therefore, when Parimelazhagar speaks of this in his commentary on the chapter on Children in Tirukkutal, he is not going against any Tamil tradition. There is an old commentary on Patirruppattu, whose importance cannot be easily exaggerated; but to the modern reader it is but a series of algebracial formula. The present commentary explains all that is necessary for elucidating the text for the man in the street - the defied abstraction of modern democracy; and serves, therefore, at a valuable key for unlocking the closely preserved treasure - chest of the old commentary. The Sangam poets caught the spirit of the poetic moment and enshrined it in the most appropriate and correct poetic phrase, afraid of spoiling its effect by any elaboration. Brevity is the life of their poetry. This explains why the anthologies of the Sangam verses are arranged according to the length of verses as Kurum Togai, Nedun Togai, Aim Kuru Nuru etc. In every poem there is heart or life centre - a beautiful phrase which is the very quint - essence of the poem and this phrase by common acceptance and appreciation, becomes according to Sangam usage the very name of the verse. This is seen in every one of the verses in the present work. The new commentary has brought out the poetic significance of all these poetic phrases, thus helping us to understand the poetic theory of the Sangam age. On an occasion like this, one cannot but think with reverential gratitude, of the late lamented Dr. Swaminatha Aiyar, but for whose untiring zeal and toil we could not be boasting either of Patirruppattu or its ancient commentary. What has been thus made available is now made more and more popular by the present commentator. My friend Tiru Vellaivaranan has brought out the importance of the new commentary. Whether one agrees with all the points or not one has to agree that this commentary is very valuable for a close study of the ancient work by the modern man. I deem it, therefore, a great privilege, as desired by my friend Thiru Avvai Duraiswami Pillai, to introduce, with heartfelt thanks, this work, to the ever grateful public of Tamil land. Madras 26.10.49 T.P.Meenakshisundaran முன்னுரை கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். சங்கத் தொகைநூல்கள் எட்டுத்தொகையும் பத்துப் பாட்டுமென வகையால் இரண்டாகியும், விரியால் பதினெட்டா கியும் நிலவுவனவாகும். இவற்றுள் பதிற்றுப்பத்தென்பது எட்டுத்தொகையுள் ஒன்றாகும். இது பப்பத்தாக அமைந்த பத்துக்கள் பத்துக் கொண்டதென்றும், நூறு பாட்டுக்கள் கொண்டதென்றும் பதிற்றுப்பத்து எனப்படும் பெயராலே அறியலாம். இதன் ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர வேந் தனைப் பற்றி வேறு வேறு ஆசிரியன்மாரால் பாடப்பட்டுளது. இந்த ஆசிரியன்மார்களும் சேரவேந்தர்களும் ஒரு காலத்தவராகவும் வேறு வேறு காலத்தவராகவும் கருதப்படு கின்றனர். பதிற்றுப்பத் தென்னும் பெயர் இப்பாட்டுக்களைப் பப்பத்தாக எடுத்துத் தொகுத்தோரால் இடப்பெற்ற பெயராதல் வேண்டும். எட்டுத் தொகையுள் காணப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டனுள், புறப்பொருள் வகையில் அமைந்தவை பதிற்றுப்பத்தும், புறநானூறும் என்ற இரண்டுமாகும். இவையிரண்டும், ஏனையவற்றுள் நற்றிணை, கலித்தொகை யென்ற இரண்டு மொழிந்த பிற யாவும் காலஞ் சென்ற பெரும்புலவர் டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையரவர்களால் பல ஆண்டுகட்கு முன்பே பல ஏடுகளின் துணை கொண்டு ஆராய்ந்து செவ்விய முறையில் வெளியிடப்பெற்றுள்ளன. அவற்றுள் பதிற்றுப்பத்து 1904-ஆம் ஆண்டில் முதன்முதலாக அச்சிடப்பெற்று வெளியாயிற்று. இவ்வாறே தமிழகத்துத் தமிழரது இலக்கியப் பழஞ்செல்வமாய், பல நூற்றாண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் நன்மக்களுடைய நாகரிகப் பண்பாடுகளை யுணர்த்தும் நல்விளக்கமாய்த் திகழும் இந்தத் தொகை நூல்களைச் செம்மையுற ஆராய்ந்து இன்றும் என்றும் தமிழ் பயில்வோர் அனைவரும் ஒருமுகமாகப் பாராட்டிப் பரவத்தக்க வகையில் வெளியிடுவதாகிய அரிய தமிழ்ப்பணி புரிந்த டாக்டர் திரு. ஐயரவர்கட்குத் தமிழுலகு பெரிதும் கடமைப்பட்டுளது. திரு. ஐயரவர்கள் முதன்முதலாக வெளியிட்டபோதே இதற்குப் பண்டைச் சான்றோர் ஒருவர் எழுதிய உரையும் அவர்க்கு உடன் கிடைத்தமையின், முதல் வெளியீட்டிலே பதிற்றுப்பத்து மூலமும் பழைய வுரையும் என வெளியிட்டு, இதனை அறிஞர் கண்டு பொருளறிந்து இன்புறும் வாயிலையும் உதவியது பெரிதும் போற்றத்தக்கதாகும். “இவ்வுரை இல்லை யாயின், இந்நூற் பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது” என அவர்களே உரைத்திருப்பது காண்க. ஏடுகளில் உரைகாரர் பெயர் குறிக்கப்படாமையின் அவர் இன்னாரென்று அறிவது இயலாதாயிற்று. ஆயினும், அவர் நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது ஒருதலை. பதிற்றுப்பத்தின் உரையில்,சில்லேராளரென்றவிடத்துச் “சின்மையைச் சின்னூல் என்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க” (பதிற்.76:1) என்றவிடத்து, உரைகாரரால் சின்னூல் எனப்படுவது குணவீர பண்டிதர் எழுதிய நேமிநாத மென்னும் நூலுக்குப் பெயர். இவ்வண்ணம் பாட்டும் உரையுமாகக் கிடைக்கும் இப்பதிற்றுப் பத்து, முதற் பத்தும் பத்தாம் பத்தும் இன்றி இடைநின்ற எட்டுப் பத்துக்களே கொண்டுளது. கிடைக்கும் ஏடுகள் பலவற்றினும் முதற் பத்தும் இறுதிப் பத்தும் காணப்படவில்லை. பாட்டும் உரையும் கொண்ட ஏடொன்றில், ஒன்பதாம் பத்தின் இறுதியில், “பதிற்றுப்பத்து மூலமும் உரையும் முடிந்தது; சுபமஸ்து” என்று காணப்படுகிறது. மூலமேயுள்ள ஏடுகளும் ஒன்பதாம் பத்தோடே முடிகின்றன. இவ்வாறே தொடக்கமும் இரண்டாம் பத்தையே கொண்டு பல ஏடுகளும் உள்ளன. இதனால் நெடுநாள்களுக்கு முன்பே, இதன் முதற் பத்தும் பத்தாம் பத்தும் மறைந்தன எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனி, கிடைத்துள்ள ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்று காணப்படுகிறது. அது, பாடப்பட்ட சேரவேந்தனுடைய மெய்க்கீர்த்திபோல் நின்று, பாடினோர், பாடப்பட்டோர், பாடிய பாட்டு, பாடிப்பெற்ற பரிசில், பாடப்பட்ட வேந் தனுடைய ஆட்சிக் காலம் என்ற இவற்றைக் கூறுகிறது. அப்பதிகங்கள், தாம் உட்கொண்டு நிற்கும் பாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் அவ்வப் பாட்டினுட் காணப்படும் சொற்றொட ரொன்றாற் பெயர் குறித்துள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அப் பாட்டிற்குத் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற இவை வகுக்கப்பெற்றுள்ளன. இப் பெயர்களே பதிகத்திலும் தொகுத்துக் காட்டப்படுகின்றன. மேலும், இப் பதிகங்கள் உரையுள்ள ஏடுகளிற்றான் காணப்படுகின்றன. பழையவுரை இப் பதிகங் கட்கும் உரை குறித்துள்ளது. ஆனால், இப் பதிகங்கள் உரையில்லாத மூலப்பகுதியேயுள்ள ஏடுகளில் இல்லை. மூலமேயுள்ள ஏடுகளில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியன குறிக்கப்பெற்றும், ஒவ் வொரு பத்தின் இறுதியிலும் பாடினோர் பெயரும் பாடப் பட்டோர் பெயரும், “இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு முற்றும்” என்றாற்போலக் குறிக்கப் பெற்றும் உள்ளன. இக் குறிப்புக்களை நோக்குமிடத்து, பதிற்றுப்பத்துப் பாட்டுக்களைத் தொகுத் தோரால் வண்ணம், தூக்கு, துறை, பெயர் ஆகியன வகுக்கப் பெற்றிருக்கலாமென்றும், அவர்க்குப் பின் வந்த சான்றோர் ஒருவரால் பதிகங்கள் பாடிச் சேர்க்கப் பெற்றிருக்கலா மென்றும், கருதுதற்கு இடமுண்டாகிறது. டாக்டர் திரு. ஐயரவர்களும், “ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயரென்பவைகள் உரையில்லாத மூலப் பிரதிகளிலெல்லாம் இருத்தலின், அவை உரையாசிரியரால் எழுதப்பட்டன வல்ல வென்றும், நூலாசிரியர்களாலோ தொகுத் தோராலோ எழுதப்பட்டனவென்றும்; பதிகங்கள் உரைப் பிரதிகளில் மட்டும் காணப்படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரல்லரென்றும் தெரிகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினி யராலும் அடியார்க்கு நல்லாராலும்; தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெற்றிருத்தலின்; இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியவையென்று தோற்று கின்றது” என்று கூறுவது நோக்கத்தக்கது. சுமார் பதினைந்து ஆண்டுகட்குமுன் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்வோர் சிலருக்கு இப் பதிற்றுப்பத்தினைக் கற்பிக்கவேண்டிய கடமை எனக்கு உண்டாயிற்று. அக்காலத்தே அவர்கட்கு இதனைக் கற்பித்து வருகையில், இதற்கொரு விரிவுரை யிருப்பின் நலமாகுமெனும் எண்ணமுண்டாக; என் நண்பர் சிலர் வாயிலாகப் பதிற்றுப் பத்தின் ஏடுகள் இரண்டு பெற்று, அச்சுப்படியையும் அவற்றையும் ஒப்பு நோக்குவது முதற்கண் செயற்பாலதென உணர்ந்து செய்ததில் சில பாடவேறுபாடுகளும், சில பாடங்களிற் காணப்பட்ட ஐயங்கட்குத் தெளிவும் கிடைத்தன. பின்னர் இவ்வுரைப் பணியை மேற்கொண்டு செய்துவருங்கால், திருவை யாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியரும் என் வணக்கத் திற்குரிய ஆசிரியருமாகிய கரந்தைக் கவியரசு. திரு. R. வேங்கடாசலம் பிள்ளையவர்கள் தாம் எழுதிவைத்திருந்த உரை யினையும் தந்து உதவினார்கள். யான் எழுதி வைத்திருந்த உரையை நாவலர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் பார்வையிட்டு இப்போது வெளியாகி யிருக்கும் இந்த முறையைக் காட்டி இவ்வகையில் இவ்வுரையை யமைக்குமாறு தெரிவித்தார்கள். இவ்வுரையின் அமைதியை நேரிற் கண்டு ஊக்கியதோடு விரைய அச்சிடுவது நலமென்று தெருட்டிய எங்கள் அரும்பெறல் ஆசிரியர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், இதன் பதிகங்கள் ஆராய்ச்சிக்கு இடமாக வுள்ளனவாதலால், அவற்றுக்கு உரை வேண்டாவெனப் பணித்தமையின், இந்நூற் கண் பதிகங்கட்கு உரை யெழுதப்படவில்லை. மேலும் இதன் முதற் பத்து கிடைக் காமையின், இதற்கு முன்னணியில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று இருந்திருக்கு மென்றும், “எரியெள்ளுவன்ன நிறத்தன்” எனத் தொடங்குவதும், தொல் காப்பியப் பொருளதிகாரவுரையில் உரைகாரராற் காட்டப் படுவதுமாகிய பாட்டை இப் பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரை யெழுதுமாறும் அவர்கள் உரைத்தார்கள். உரை முழுதும் அச்சாகி வெளிவரும் இந் நாளில் அவர்கள் இல்லாமை என் மனத்தை வருத்துகிறது. இனி, இந்நூலின் பதிகங்களுக்கு உரை யெழுதப் படாமையால், இவற்றின் கருத்து விளங்க ஒரு கோவைப்படுத்தி வரலாற்று முறையில் ஒரு கட்டுரை யெழுதிச் சேர்ப்பது நலமென இவ்வுரையைக் கண்ட அறிஞர் கூறினர். இவ் வரலாற்றுத் துறையில் யான் அறிந்த நாண்முதல் உழைத்துப் பெரும்பயன் தமிழுலகிற்களித்து வருபவர் என் அரும்பெறல் நண்பர் திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தாரவர்களாதலால், அவர்களை இதனைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன். அவர்களும் தமக்குள்ள அலுவல்கட்கிடையே உடல் வலியின்மையும் பொருட் படுத்தாது பதிகப் பகுதிபற்றிய சிறந்த ஆராய்ச்சி யுரையினை வழங்கி யுள்ளனர். அவர்கட்கு என் மனங்கெழுமிய நன்றி யுரியதாகின்றது. இனி, யான் எழுதிய உரையை யானே ஆராய்ந்து நலந் தீங்கு காண்பதென்பது சிறிது அருமையாக இருந்தமையின், உரை கண்ட என்னைப் போலவே பல ஆண்டுகள் வித்துவான் தேர்வுக்குச் செல்வோர்க்கு இதனைக் கற்பிக்கும் பணி மேற்கொண்டு கூர்த்த புலமையால் சிறந்து நிற்கும் என் அரிய நண்பர் திரு. க. வெள்ளை வாரணரவர்களை உரைபற்றியதொரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொண்டேன். அதனை மறாது ஏற்று அழகிய கட்டுரை தந்த அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றி யுரிய தாகின்றது. பல்லவர், சோழர், பாண்டியர் என்ற இவ் வேந்தர்களைப்பற்றிய வரலாறுகளேனும் ஓரளவில் மக்கள் அறிந்து கோடற் கேற்ற வகையில் நூல்வடிவில் வெளியாகி இருக்கின்றன. பண்டை நாளைச் சேர மன்னர்களைப்பற்றிய வரலாற்றினைச் செவ்வே அறிந்துகோடற்கு வேண்டும் கருவிகளாகச் சங்கத் தொகை நூல் கட்கு வேறாக யாதும் கிடைத்திலது. இடைக்காலக் கல்வெட்டுக்கள் பண்டைச் சங்க காலத்துச் சேரர் வரலாற்றுக்குத் துணை செய்வன வாக இல்லை. சேரநாட்டு மொழியும் நடையும் ஒழுகலாறும் பல்வேறு மக்கள் கூட்டுறவால் வேறுபட் டொழிந்தமை இதற்குக் காரணமாம்; ஆயினும், இன்றைய கேரள நாட்டின் பண்டைய வரலாற்றினை ஆராய்ந்தறிதற்கு வேண்டும் கருவிகளும் கிடைத்தில; கிடைக்கச் செய்தாருமில்லை. அதனால் இவ்வுரைக்கண் தெளிவிக்கப்படும் வரலாற்றுக் குறிப்புக்கள் முடிந்த முடிபாகக் கோடற்கு இடமில்லை யென்பது தெளிவாம். வேறு ஆராய்ச்சிகளால் விளக்கமாகுங்காறும், இவற்றை மேற் கோடல் தக்கது. இம்முயற்சிக்குத் துணைசெய்த நண்பரும், 1941இல் வடவார்க்காட்டில் சில்லாக் கல்வித் தலைவராக இருந்தவருமான திரு. இராமன் மேனன் அவர்கட்கு என் நன்றியுரியதாகும். இவ்வுரை யெழுதி முடிக்கப்பெற்றது சில பல ஆண்டுகட்கு முன்பேயெனினும், இரண்டாவது உலகப்போர் காரணமாக, அச்சேற்றி வெளியிடுவதென்பது அரிய செயலாயிற்று. அந் நெருக்கடி இப்போதும் தீர்ந்து பண்டுபோல் ஒழிந்திலதாயினும், இத்தகைய சீரிய செந்தமிழ்நூல் வெளியீடுகளில் சலியாது உழைத்துத், தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் பெருந்தொண்டு புரிந்து சிறக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இவ்வுரையினை வெளியிடச் சமைந்தது குறித்துப் பொதுவாக அதற்கும், சிறப்பாக அதனைப் பலவகை உயர் பணிகளில் ஈடுபடுத்தி அவ்வாற்றால் அஃது உலவாப் பெரும்புகழ் உண்மைத் தமிழ்நிலையமாகத் திகழச்செய்து மேம்படும் கழகச் செயல்முறைத் தலைவர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர் கட்கும் தமிழகத்தின் சார்பில் என் உளம் நிறைந்தெழும் நன்றி யினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்கே குறித்த திருவாளர்களேயன்றி வேறுவகையில் துணைசெய்த பலர்க்கும் என் நன்றியைச் செலுத்தும் கடமை யுடையேன். பல்வகையிலும் குறைபாடுடை யனாகிய என்னை, என் அருமைத் தமிழன்னைக்குத் தொண்டனாக்கி ஆட் கொண்டருளும் எந்தை, தில்லை மன்றில்நின்று திருவருட் கூத்தியற்றும் ஆடலரசன் திருவடிப் போதுகளை மன மொழி மெய்களாற் பரவி யமைகின்றேன். அண்ணாமலைநகர், 31-3-1949 ஒளவை. சு. துரைசாமி. உரையில் எடுத்தாண்ட நூல்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் (தொல்.சொல்.) தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் (தொல். சொல். வேற். மயங்.) தொல்காப்பியம் இடையியல் (தொல்.சொல். இடை) தொல்காப்பியம் எச்சவியல் (சொல். எச்ச.) தொல்காப்பியம் பொருளதிகாரம் (தொல். பொ.) தொல்காப்பியம் புறத்திணையில் (தொல். புறத்) தொல்காப்பியம் களவியல் (தொல். கள.) தொல்காப்பியம் கற்பியல் (தொல். கற்.) தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் (தொல். மெய்.) தொல்காப்பியம் உவமவியல் (தொல். உவம.) தொல்காப்பியம் செய்யுளியல் (தொல். செய்.) தொல்காப்பியம் மரபியல் (தொல். மரபு) நற்றிணை (நற்.) குறுந்தொகை (குறுந்.) ஐங்குறுநூறு (ஐங்.) பதிற்றுப்பத்து (பதிற்.) பரிபாடல் (பரி.) கலித்தொகை (கலி.) அகநானூறு (அகம்.) புறநானூறு (புறம்.) திருமுருகாற்றுப்படை (முருகு.) பொருநராற்றுப்படை (பொருந.) சிறுபாணாற்றுப்படை (சிறுபாண்.) பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.) நெடுநல்வாடை (நெடுநல்.) பட்டினப்பாலை (பட்டி.) மலைபடுகடாம் (மலைபடு.) முல்லைப்பாட்டு (முல்லை.) மதுரைக் காஞ்சி (மதுரைக்.) சிலப்பதிகாரம் (சிலப்.) மணிமேகலை (மணி.) உதயணன் பெருங்கதை (பெருங்) சீவக சிந்தாமணி (சீவக.) திருக்குறள் (குறள்.) திருஞானசம்பந்தர் தேவாரம் (ஞானசம்.) திருக்கழுமல மும்மணிக்கோவை (திருக்கழு. மும்.) பொன்வண்ணத்தந்தாதி (பொன்.) களவழி நாற்பது (கள.) இனியவை நாற்பது (இனி. ) பழமொழி நானூறு (பழ.) புறப்பொருள் வெண்பாமாலை (பு.வெ.மா.) அம்சதேவர் மிருக பக்ஷீசாத்திரம் South Indian Inscriptions Volumes (S.I.I. Vol.) Annual Report on the South Indian inscriptions, Madras. (A.R.) Proceedings and transactions of the third Oriental Conference Madras 1924. உரைநலம் (திரு. வெள்ளைவாரணனார், தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) செந்தமிழ் மொழியின் தீஞ்சுவையினை இனிது விளக்குவன வாகிய சங்க இலக்கியங்களுள் ஒன்றாய்த் திகழ்வது பதிற்றுப்பத்து என்னும் இத்தொகை நூல். ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் சேரநாட்டை ஆட்சிபுரிந்த சேரமன்னர் பதின்மரையும் புலவர் பதின்மர், பத்துப்பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுதி யாதலின், இது பதிற்றுப்பத்து எனப் பெயர் பெறுவதாயிற்று, இத்தொகை யிலுள்ள எல்லாப் பாடல்களும் சேரவேந்தர்களின் கல்வித்திறம், மனத்திண்மை, புகழ்நோக்கு, ஈகைத்திறம் ஆகிய பெருமிதப்பண்புகளையும்; படைவன்மை, போர்த் திறம், பொருள் செயல்வகை, குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித்திறத்தினையும் நயம்பெற விளக்கும் நற்பனுவல்களாம்: இவை யாவும் புறநானூற்றுப் பாடல்களைப் போன்று புறத்திணையைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்றனவாகும். சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் தாம் பெறுதற்குரிய பரிசிற் பொருளையே பெரிதென நம்பித் தகுதியில்லாதாரைப் பாடும் இயல்பினரல்லர்; தமக்கு இயல்பா யமைந்த புலமைத்திறத் தினையோ, அன்றித் தாம் பரிசில்பெற விரும்பிய தலைவனையோ, அவனால் அளிக்கப்படும் பரிசிற்பொருளையோ கருதாமல்; தம்மாற் பாடுதற்குரிய நல்லியல்பாக அத் தலைவன்பால் அமைந்துள்ள ஒழுகலாறு ஒன்றையே தம் பாடலுக்குரிய நற்பொருளாகக் கொண்டிருந்தார்கள். அக்காலத் தலைமக்களும் இத்தகைய புலவர்களால் நன்கு மதிக்கப்பெறும் சிறப்பினையே வாழ்க்கையில் தாம் பெறுதற்குரிய நற்பேறாகப் பெரிதும் விரும்பினார்கள். ஆகவே, இங்ஙனம் புலவராற் பாடப்பெறும் நற்பண்புகளை ஆளுதற்றன்மையாகிய தகுதி சங்ககாலத் தலைமக்கள்பால் நன்கு அமைவதாயிற்று. குடும்ப வாழ்விலே மேற்கொள்ளுதற்கு உரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல்வாழ்விலே மேற் கொள்ளுதற்கு உரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகை யொழுகலாறாகிய புறவொழுக் கங்களும் ஆகிய இவற்றை, அடிப்படையாகக் கொண்டல்லது ஒருவர் ஒருவரைப் பாடுதல் என்பது இயலாத செயலாகும். புறத்திணை ஏழனுள் வெட்சி முதல் காஞ்சி யீறாகச் சொல்லப் பட்ட அறுவகை யொழுகலாறுகளும், தலைமகனுடைய அன்பின் வழிப்பட்ட பெருமிதப் பண்புகளை யடிப்படையாகக் கொண்டு அவன்பால் தோற்றும் வினைநிகழ்ச்சிகளைக் குறிப்பனவாகும். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையையோ அவராற் பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பலரும் பாடிப் போற்றுதலை விரும்பிய தலைமகனொருவன், தன்னுடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை, என்பவற்றை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றினைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இச்சொல் வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகப் புலவராற் பாடப் பெறும் தலைமகனது ஒழுகலாறாகிய பண்புடை மையினை யுணர்த்திற் றென்பது ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்தாகும். வெட்சி முதல் காஞ்சி யீறாகிய அறுவகை யொழுகலாறு களும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வனவாகும். பாடாண் திணையிலோ பாடுதல்வினை புலவர்பாலும் அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ் செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய அறுவகை யொழுகலாறுகளும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக் கொண்டு அவன்பால் தோற்றும் தனிநிலைத் திணைகளாம். பாடாண் திணையோ, தலைமகன்பால் நிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு தோற்றும் சார்புநிலைத் திணையாகும். ஆகவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய அறுவகைப் புறத்திணை களினும், குற்றமற்ற மனைவாழ்க்கையாகிய அகத்திணையினும் அமைந்த செயல்களாய்த், தலைமகனுடைய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கமைந்த ஒழுகலாறு, பாடாண்திணையென்பது நன்கு புலனாம். பாடாண்திணை யல்லாத பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே யெனினும், புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் மனக்குறிப்பின்றி, ஒருவன்பால், தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் வெட்சி முதலியன திணைகளின் பாற்படுவன என்றும்;அச்செயல்களைக் கருவாகக்கொண்டு புலவன் பாடும்போது அவற்றால் உளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவன் பால் தோற்றும் உயர்ந்த உள்ளக்குறிப்பு பாடாண்திணை யென்றும், வேறு பிரித்தறிதல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும், உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் நிலையில்; ஆற்றல் மிக்க போர்த்துறையிலும், அன்பின்வழிப்பட்ட மனைவாழ்க்கையிலும், புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையினையே பாடாண்திணை என, ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் இனிது விளக்கியுள்ளார். சேரவேந்தர்களின் ஆற்றல்மிக்க ஒழுகலாறுகளைப் புலவர்கள் தம் பாடற்குரிய பொருளாகக் கொண்டு பாராட்டும் முறையில் இப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும் அமைந் துள்ளன. ஆகவே, இத்தொகையின்கண் அமைந்த நூறுபாடல் களும் பாடாண் திணை என்ற ஒருதிணையையே பொருளாகக் கொண்டு பாடப்பெற்றன எனக் கொள்ளலாம். “பதிற்றுப்பத்து நூலும் இவ்வாறே வருதலிற் பாடாண்திணையே ஆயிற்று” (தொல்.புறம். 15 உரை) என வரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இவ்வுண்மையினை வலியுறுத்தல் காணலாம். இப்பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பாடலுக்கும் திணையமைதி கூறாது, துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றை மட்டுமே குறித்துச் செல்லுதற்கு இதுவே காரணமாதல் வேண்டும். இத்தொகையிற் சேரமன்னர்களைப் பற்றிய பாடல்களே தொகுக்கப்பெற்றுள்ளன. ஒரு குடியிற் பிறந்த வேந்தர் பலரைக் குறித்துத் தொடர்ச்சியாகப் புலவர்பலர் பாடிய செய்யுட்கள் காலமுறை தவறாது இத்தொகை யொன்றிலேதான் காணப்படு கின்றன. இந்நூல் சங்ககாலச் சேரவேந்தர் வரலாற்றைத் தொடர்ந்து எழுதுதற்கு பெரிதுந் துணை புரிவதாகும். இத்தொகையினைப் போன்று சோழர் பாண்டியர் என்பவர் களைப் பற்றிய பாடல்களைத் தொகுத்த வேறு தொகை நூல்களும் இருந்திருத்தல் கூடும் என எண்ண வேண்டியுளது. அத்தகைய தொகைநூல் எதுவும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரையும் பாராட்டுங் கருத்துடன் முவேந்தருள் ஒவ்வொரு குடியினர்க்கும் தொள்ளாயிரம் தொள்ளாயிரம் புகழ்ப் பாடல்களமைய இடைக்காலத்தே அமைந்த நூல் முத்தொள்ளாயிரம் என்பதாகும். இதிலிருந்து மேற்கொள்களாக எடுத்தாளப் பெற்ற ஒருசில செய்யுட்களைத் தவிர ஏனைய இக்காலத்திற்கிடைத்தில. தமிழ் நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவாக அமைந்த முத்தொள்ளாயிரத்தைப் போலாது; சேரமரபினர்கே சிறப்புரிமை யுடையதா யமைந்த பதிற்றுப்பத்து என்னுந் தொகைநூல், சேரமன்னர்களின் ஆட்சிமுறை வரலாற்றுச் செய்திகளை நன்குணர்ந்த சேரநாட்டறிஞ ரொருவரால் தொகுக்கப்பெற்றிருத்தல் கூடும். பதிற்றுப்பத்துக்குப் பழையதோர் உரை யுளது. அப்பழைய வுரை இல்லாவிட்டால் இத்தொகையிலுள்ள பாடல்களுக்குப் பொருள் காணுதல் என்பது எளிதின் இயலாத தொன்றாம். பழையவுரையினை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமுந் தெரிந்துகொள்ள இயலவில்லை. அவ்வுரையில் ‘சின்னூல்’ என்னும் ஒரு நூற்பெயர் காணப்படுவதுகொண்டு அப்பெயரால் வழங்கப்படும் நேமிநாதநூலை இயற்றிய குணவீரபண்டிதர்க்குப் பின்னர் இவ்வுரையாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என இந்நூலை முதன் முதற் பதிப்பித்த மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் கருதுகின்றார்கள். இவ்வுரையாசிரியர் இந்நூலி லுள்ள அருஞ்சொற்களுக்கும் தொடர்களுக்கும் பொருள்கூறியும், சொன்முடிபு பொருண்முடிபகாட்டியும், ஒவ்வொரு பாடலுக்கு முரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றின் அமைதியைப் புலப்படுத்தியும், இடையிடையே பாட்டின் சுவைநலங்களைச் சுருக்கமாக விளக்கியும், இலக்கணக் குறிப்புக்கள் தந்தும் இறுதியில் கருத்துரைத்தும் பாடல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புக் களைச் சிறிது புலப்படுத்தியும், இந்நூற் பொருளைத் தெளிவுபடுத்து கின்றார். அன்றியும் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அதனாற் பாடப்பெற்ற சேரமன்னரது செயல்முறைகளையும் அவரைப் பாடிய புலவர் பெற்ற வரிசையினையும் குறித்துப் பாடப்பெற்ற பதிகத்தை அமைத்து அப்பதிகங்களுக்கும் விளக்கந் தருகின்றார். இவ்வுரை, புறநானூற்றுரையினைப் போன்று பொழிப்புரையாகவோ, சிலப்பதிகார அரும்பதவுரை போன்று சுருக்கமாகவோ அமையாது, இடைப்பட்டதாகவுளது. அரும்பதங் களுக்கு உரைகூறுவ துடன் இன்றியமையாத இடங்களுக்குப் பொருள் விளக்கமும் தந்து செய்யுளில் அமைந்த தொடர்களை முடித்துக் காட்டும் நிலையில் இப்பழையவுரை யமைந்துளது. போதிய அளவு தமிழ்நூற் பயிற்சி யுடையார்க்கு அரிய சொற் பொருள்களையும் சொன்முடிபு பொருண்முடிபுகளையும் சுருக்க மாகத் தெளிவிக்கும் நிலையில் அமைந்ததே இப்பழையவுரையாகும். சுருங்கக் கூறுவோமானால் பதிற்றுப்பத்தினைப் பாடஞ் சொல்லும் ஆசிரியர்களுக்குப் பொருளுணர்ச்சிக்கு வேண்டும் வழிதுறைகளை நன்றாக வகுத்துக் கொடுப்பது இப் பழையவுரை யெனலாம். பதிற்றுப் பத்து மூலத்தைக் கருத்தூன்றி யுணர்தற்கு வேண்டும் நூற் பயிற்சியுடையவர்களே இப்பழையவுரையின் நுட்பத்தினை யுணர்ந்துரைக்கும் திட்பமுடையோராவர். இப் பழையவுரையின் துணைகொண்டு பதிற்றுப் பத்தினைப் படித்துணரும் வன்மையில்லாதார் சிலர் இந்நூற் பொருளை யாராயத் தொடங்கித் தம் மனம் போனவாறு எழுதிய பிழை யுரைகள் பலவாம். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காட்டுதும்; `சேரர் வஞ்சி’ என்னும் நூலுடையார் ஐந்தாம்பத்தின் முதற் பாடலில் “தெவ்வர் மிளகெறி யுலக்கையின் இருந்தலை யிடித்து” என வருந் தொடர்க்குப் “பகைவேந்தர் தலைகளை உலக்கையினாற் குற்றப்பட்ட மிளகினைப் போலச் சிதறும்படி செய்து” எனப் பொருள்கொள்ள அறியாது, மிளகைக் குற்றும் உலக்கையினையே படையாகக் கொண்டு பகைவேந்தர் தலை களைத் தாக்கி எனப் பொருந்தாவுரை கூறினார். ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார், நச்செள்ளையார் என்னும் நல்லிசைப்புலமை மெல்லியலார் ஆறாம் பத்தினாற் பாடியபொழுது, அவர்தம் புலமைத் திறத்தை நன்குணர்ந்த அவ்வேந்தன் அவ்வம்மையார்க்கு அணிகலன்களுக்காக ஒன்பது காப் பொன்னும், நூறாயிரங் காணமும், பரிசிலாகத் தந்து அப்புலவர் பெருமாட்டியாரைத் தன்னருகே அவைக்களப் புலவராக அமர்த்திக்கொண்டான்; என்னும் செய்தியை ஆறாம்பத்தின் பதிகம் கூறுகின்றது. “பாடிப் பெற்ற பரிசில் கலனணிக வென்று ஒன்பது காப்பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்துப் பக்கத்துக் கொண்டான் அக்கோ” எனவரும் பதிகத்தொடரால் இவ்வுண்மை புலனாம். இதனைத் தெளிவாக வுணரும் வாய்ப்பில்லாத அவ்வரலாற்றாசிரியர் இங்குக் காட்டிய `பக்கத்துக் கொண்டான்’ என்பதற்குச் சேரமன்னன் காக்கை பாடினியார் என்னும் புலவரைத் தனக்குரிய மனைவியாகத் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான் எனப் பொருந்தாத செய்தியினை ஏற்றி யுரைக்கின்றார். சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் தூயவுள்ளத் திறனையும் அவர்களை நன்கு மதித்துப் போற்றிய செந்தமிழ் வள்ளல்களின் மனத் தூய்மையினையும் தெளிவாக அறிந்துகொள்ளும் நூற்பயிற்சி யின்றி வரம்பற்ற தம் கால இயல்புகளை எண்ணித் தம் மனம் போனவாறு பொருள் காண முயலுதல் நேரிதன்று. இத்தகைய பிழைபாடுகளுக் கெல்லாம் காரணம், சங்க இலக்கியங்களின் பொருள் நலங்களை இக்காலத்தில் சாதாரண நூற்பயிற்சி யுடையாரும் தெளிந்து கொள்ளும் முறையில் அமைந்த விரிவுரையில்லாத குறையே யாகும். பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும், சேர வேந்தர்கள் அவ்வப்பொழுது நிகழ்த்திய கடற்போர் முதலிய வரலாற்றுச் செய்திகளையும், அவற்றைச் சிறப்பித்துப் பாடக் கருதிய புலவர்கள் தம் உள்ளத்திற் கருதிய எண்ணங்களையும், அவ் வெண்ணங்களைத் தேனினு மினிய செந்தமிழ்ப் பாடல்களால் அரசனுக்குணர்த்துந் திறங்களையும் தம் அகத்துக் கொண்டு விளங்குகின்றன. இப்பாடல் களின் சுவைநலங்களைத் தமிழ் மாணவர் யாவரும் தெளிவாக உணர்ந்து மகிழும் நிலையில் இந்நூலுக்கு விளக்கமும் விரிவுமுடைய தாகப் புதியவுரை யொன்று எழுதப்பெறல் வேண்டும் என்னும் நினைவு திருவாளர் ஒளவை. சு. துரைசாமி பிள்ளையவர்கள் உள்ளத்திற் கருக் கொண்டு திகழ்வதாயிற்று. எண்ணிய எண்ணி யாங்குத் திருத்த மாகச் செய்து முடிக்கவல்ல திரு. பிள்ளையவர்கள் தமிழ்தழீஇய தம் புலமைத்திறத்தால் பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்ப் பனுவலுக்கு அமிழ்தென விளங்கும் அழகிய இவ் விரிவுரை யினை இயற்றி யுதவியுள்ளார்கள். இவ்வுரை இக்காலத்திற் சங்க இலக்கியங்களைப் பயில விரும்பும் யாவர்க்கும் வழிகாட்டியாய் விளக்கும் நற்றிறம் வாய்ந்ததாகும். இவ்வுரையின் இயல்பினை ஒருசிறிது உற்று நோக்குவோமானால், திரு பிள்ளையவர்கள் இத் துறையில் மேற்கொண்ட பேருழைப்பும், அவ்வுழைப்பின் பயனாக அவர்களால் விளக்கப்பெற்ற அரிய கருத்துக்களும் நன்கு புலனாம். இவ்வுரை பதிற்றுப்பத்துப் பாடல்களின் பொருள் நயங்களை விரிவாக விளக்குவதுடன், அப்பாடல்களுக்குப் பழைய வுரையாசிரியர் எழுதியுள்ள நுட்பங் களையும் இனிது விளக்கிச் செல்லுகின்றது. அம்முறையினால் இது பழைய வுரையின் விளக்கமாகவும் விளங்குகின்றது. எனினும் பழைய உரையாசிரியர் கருத்துக்களை அப்படியே பின்பற்றிச் செல்லாமல்; பதிற்றுப்பத்துப் பாடல்களைத் தனிமுறையிற் சிந்தித்துணர்ந்து வரலாற்றுமுறைக் கேற்ப இவ்வுரையாசிரியர் தரும் புதிய விளக்கங்கள் பெரிதும் பாராட்டத்தகுவனவாம். இரண்டாம்பத்தின் முதற்பாடலில் உள்ள “கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” என்னும் தொடர்க்குப் பழைய உரையாசிரியர் கூறிய நயம் அப்பாடலைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் கருத்துக்கு ஒத்ததுதானா என ஐயுற வேண்டியுளது. “முருக்கமரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள் பகற்பொழுதில் தாம்மேய்ந்த நரந்தம் புற்களையும், அவை வளர்தற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற்கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும் ஆரியர் நிறைந்து வாழும் இமயம் என்றது; இமயமலையின் இயற்கைவளங்களை விளக்குவதல்லது அவ்வளங்களைத் துய்த்து இனி துறையும் கவரிமான்களுக்கும் அங்கு வாழும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பிப்பதன்றாம். இவ்வுண்மையினை நன்குணர்ந்த திரு. பிள்ளையவர்கள் இத் தொடரை இமயமலையின் தன்மை நவிற்சியாகக் கொண்டு உரை கூறிய திறம் (பக்கம்.10,11) நோக்கத் தகுவதாம். இத்தொகையி லுள்ள பாடல்களை இயற்றிய சங்கப் புலவர்களுக்கும், அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய பழைய வுரையாசிரியர்க்கும், இடையே பிறநாட்டார் நுழைவினாலும் அவர்தம் மொழி வழக்கு முதலிய வேற்றுமை களாலும் தமிழகம் அடைந்த அரசியல் சமுதாய நிலை மாற்றங்கள் பலவாகும். இவ்வாறு காலவேறுபாடுகளால் தோன்றும் மாற்றங் களுக்குக் கட்டுப்படாதவர் யாருமிருக்க முடியாது. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் என்பவற்றுக்கு உரையெழுதிப்போந்த ஆசிரியப் பெருமக்கள் யாவரும் இக் காலவேறுபாடுகளில் ஓரளவு சிக்குண்டவர்களே என்னும் உண்மையை யுளத்துட் கொண்டு, பதிற்றுப்பத்தின் பழையவுரை யினை நன்காராய்ந்து திரு. பிள்ளையவர்கள் இப்புதிய விரிவுரையினை இயற்றியுள்ள திறம் இவ்வுரை முழுதையும் கருத் தூன்றிப் படிப்பார்க்கு இனிது விளங்கும். இனி, இப் பழையவுரையினை யடிப்படையாகக் கொண்டு இக்காலத்தார் எழுதிய குறிப்புக்கள் சில, பதிற்றுப்பத்துப் பாடல் களுக்கும், பழையவுரைக்கும் மாறாக; நூல்பயிலும் மாணவர் உள்ளத்தை மருட்டும் நிலையில் உள்ளன. தம்முடன் போர் செய்வோர் தோல்வியுற்று நிலத்தே விழும்படி வாளாற் பொருது, அவர்தம் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் பேராற்றல் படைத்த வீரர்களையுடைய பகைவேந்தர் தலைநடுங்கி வணங்க, அவர்தம் காவல்மரமாகிய கடம்பினை வேந்தர் பெருமானாகிய நெடுஞ்சேரலாதன் அடியோடு வெட்டி வீழ்த்துகின்றான். அம்மன்னனது போர்த்திறத்தை நேரிற்கண்டு மகிழ்ந்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் “வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக், கடம்புமுதல் தடிந்த கருஞ்சின வேந்தே” எனச் சேரலாதனைப் பகைவராகிய கடம்பரது பேராற்றலை மிகுத்துக் கூறும் வாயிலாக அக்கடம்பரை வென்றடக்கிய சேரலாதனது பேராற்றலைப் புலப்படுத்துதல் புலவர் கருத்தாகலின் `வயவர் வீழ வாளரில் மயக்கி இடங்கவர் கடும்பின் அரசு’ என அக் கடம்பரைக் கூறுமுகத்தால் அவர்களை வென்றடக்கிய தம் வேந்தனது வெற்றியை விளக்கும் முறை, “நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்” (49) எனவும் “ நிலந்தப விடூஉம் ஏணிப்புலம் படர்ந்து படுகண் முரசம் நடுவட் சிலைப்பத் தோமர வலத்தர் நாமம் செய்ம்மார் ஏவல் வியங்கொண்டு இளையரோ டெழுதரும் ஒல்லார்” (54) எனவும் வரும் தொடர்களால் நன்கு விளங்கும். இம்மரபினை யுளத்துட் கொண்டு `இடங்கவர் கடும்பின் அரசு’ என்ற தொடர்க்கு “மாற்றாரது இடத்தைக் கவர்ந்துகொள்ள வல்ல ஆற்றல்மிக்க வீரத்தினை யுடைய பகைவேந்தர்” எனப் பொருள் கூறுவதே நேரிய முறையாகும். இதற்கு மாறாக இத்தொடர்க்கு “தனக்குரிய இடத்தைக் கவர்ந்த மந்திரி முதலிய சுற்றத்தை யுடைய பகையரசர்” எனப் பொருள் கூறிய இக்காலத்தார் குறிப்புரை, நெடுஞ்சேரலாதனது நாட்டைக் கடம்பர் முதன் முதல் படையெடுத்துப் பிடித்தன ரெனவும், அதன் பின்னரே சேரலாதன் அவரோடு போர் செய்து வென்றனன் எனவும் பொருள்கொள்ளும் நிலையில் அமைந்துளது. இமய மளவும் படையெடுத்துச் சென்று, ஆரியரை வணக்கிய பெரும்புகழ் படைத்த வேந்தர் பெருமானாகிய சேரலாதன், கடம்பர் என்பார் தன் நாட்டிற் படையெடுத்து இடங்களைக் கவர்ந்துகொள்ளும் படி கருத்தின்றி யிருந்தான் எனத் தவறான பொருள்படும்படி எழுதப்பட்ட இக் காலக் குறிப்புரையின் பொருந்தாமையினை யுணர்ந்த திரு. பிள்ளையவர்கள், வரலாற்று முறைக்கு மாறுபடாத வகையில் இத்தொடர்க்கு உரை கூறிய திறம் (பக்.12,13) வியக்கத்தக்கதாம். திரு. பிள்ளையவர்கள் தமது விரிவுரையில் பாடல்தோறும் பதசாரம் கூறும் முறை பரிமேலழகர் நச்சினார்க்கினியர் என்னும் பழைய வுரையாசிரியர்களின் உரைநயங்களை யெல்லாம் நினைவு கூரச் செய்கின்றது. பாட்டின் பெயர்க்காரணங் கூறுங்கால் பழையவுரையாசிரியர் கருத்தைப் பின்பற்றி இவர்கள் கூறும் விளக்கம் மிகவும் தெளிவுடையதாகும். 16-ஆம் பாடல், துயிலின்பாயல் என்னும் பெயருடைய தாகும். இப்பாடலில் நெடுஞ்சேரலாதனது மார்பினை அவனை விரும்பிய மகளிர்க்குப் பாய லெனச் சிறப்பித்தமையால் இதற்குத் துயிலின் பாயலென்று பெயராயிற்று எனப் பழையவுரை யாசிரியர் கூறினர். “திருஞெம ரகலத்துத் துயிலின் பாயல்” என்பதற்குத் திரு. பிள்ளையவர்கள் கூறிய மற்றொரு நயம் பெரிதும் சுவைதருவ தொன்றாம். நெடுஞ்சேரலாதனது மார்பு திருமகள் வீற்றிருக்கும் சிறப்புடைய தென்பது `திருஞெம ரகலம்’ என்பதனால் விளக்கப்பெற்றது. அங்ஙனம் திருமகள் விரும்பி வீற்றிருக்கும் சேரலாதனது மார்பினை அவன் காதன்மகளிர்க்குப் பாயல் எனப் புலவர் சிறப்பிக்கின்றார். பிறளொருத்தி தன் கணவன் மார்பினைத் தோய்ந்தவழி அதனை வெறுத்துப் புலந்து போதலே குலமகளிர் இயல்பு. சேரலாதனை விரும்பிய மகளிர், அவன் மார்பில் திருமகள் என்னும் மற்றொருத்தி பிரியா துறை தலைக் கண்டும் அவனுடன் புலவாது அத்திருமகளின் இருப்பு ஆள்வினையிற் சிறந்த தம் கணவனாகிய சேரலாதனுக்கு அழகென்று தெளிந்து தம்முடைய சால்பினால் திருவீற்றிருக்கும் அவன் மார்பிற் சார்ந்து பெறும் துயிலினையே மேன்மேலும் விரும்புகின்றார்கள். அவர்தம் காதற்சிறப்பினைக் கூறுதல் பற்றி இப்பாடல் துயிலின்பாயல் எனப் பெயர்பெறுவதாயிற்று என, இவ்வாசிரியர் கூறும் மற்றொரு நயம் (பக்.42) அறிஞர்கள் படித்து இன்புறுதற் குரியதாகும். பாட்டுடைத் தலைவனுடைய பண்புகளுடன் அவனைப் பாடிய புலவரது உள்ளத்துணர்ச்சிகளையும் விரித்துரைக்கும் முறையில் இவ்வுரை அமைந்துளது. 19-ஆம் பாடல், பகைமேற் சென்ற சேரலாதனை நோக்கி அவனை இன்றியமையாப் பெருங் காதலளாகிய கோப்பெருந்தேவியின் பிரிவாற்றாமையை எடுத்துரைத்து அவனுள்ளத்தில் அன்புடைமையைக் கிளர்ந் தெழச் செய்த இயல்பினையும், சேரலாதனது போரினால் பகைவர் நாடழிந்த துன்பநிலையை எடுத்துரைக்கு முகத்தால் அவன் மனத்தில் பகைவர்பால் அருளுணர்வினைத் தோற்று விக்கும் இயல்பினையும், இனிது புலப்படுத்துவதாம். இப் பாடலுக்கு அமைந்த விரிவுரை ஆசிரியர் குமட்டூர்க்கண்ண னாரின் உள்ளத்திற் பொங்கி யெழுந்த அருளுணர்வினை நன்கு தெருட்டுவதாகும். (பக்.49,56) 20-ஆம் பாடலில் சேரலாதனைப் பெற்ற தாய் வயிறு விளங்குவாளாக எனப் புலவர் வாழ்த்தியதன் நுட்பம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. (பக்கம் 63,64). இப்பாட்டில் `வயிறு பசிகூர ஈயலன்’ எனவருந் தொடர்க்குத் “தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்” எனக் குறிப்புரை வரைந்தாரும் உளர். ஈயலன் என்னும் சொல் ஈதலைச் செய்யான் எனப் பொருள் தருவ தன்றி ஈயாமல் இரான் எனப் பொருள் தருதல் கூடாது. வயிறு பசிகூர ஈயலன் என்பதற்கு வயிற்றிற் பசித்தீ மிக்கெழும்படி ஈதலைச் செய்யான் என்பதே நேர்பொருளாகும். வயிற்றிற் பசி மிக்கு எழுமாறு ஈதல் என்றது, இரவலர்க்குக் குறையக் கொடுத்தலை; குறையக் கொடுத்தலைச் செய்யான் என எதிர்மறைமுகத்தாற் கூறவே, இரவலர் பசி தணிய நிறையக் கொடுப்பன் என வற்புறுத்த வாறாயிற்று. “நிறையக் கொடுக்கு மாறு தோன்ற `வயிறு பசிகூர ஈயலன்’ என்றான்” என இவ் விரிவுரையாசிரியர் கூறும் விளக்கம், இத்தொடரின் பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம். 22-ஆம் பாடலில் கயிறு குறுமுகவை என்பதற்கு இவ்விரிவுரை யாசிரியர் கூறும் விளக்கம் (பக்கம் 8-1) இதுகாறும் பிறராற் சொல்லப்படாத புதுமையும் தெளிவும் உடையதாகும். நான்காம் பத்தினாற் பாடப் பெற்ற அரசன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆவான். அவன் அப்பெயருடையனாய் விளங்குதற்குத் தன் பகைவனாகிய நன்னன் கவர்ந்துகொண்ட நிலப்பகுதியை வென்று கோடல் கருதி அவன் அக்காலத்துச் செய்த சூளுறவின்படி களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் புனைந்து கொண்டமையே காரணமாகும் என இவர்கள் கூறிய பெயர்க்காரணம் வரலாற்று நிகழ்ச்சிக்குப் பெரிதும் பொருத்த முடையதாகும் (பக்கம் 160-2). 43-ஆம் பாடலில் “கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம் தென்னங் குமரியொடு வடதிசை யெல்லையாக வென மாறிக் கூட்டுக” எனவரும் பழையவுரைப்பகுதி ஏடெழுதுவோரது கருத்தின்மையால் பிழைபடப் பிறழ்ந்துளது. அப்பகுதி, “மல்லோங்கு நெடுவரையாகிய வடதிசை இமயம் தென்னங்குமரியொடு எல்லையாக என மாறிக் கூட்டுக” என்றிருத்தல் வேண்டும். இமயமும் தென்னங்குமரியும் வடதிசைக் கெல்லையாதல் ஒருவாற்றானும் பொருந்தா தென்பதும் இமயம் வடதிசை யெல்லையாகவும் குமரி தென்னெல்லை யாகவுங் கொள்ளுதலே பொருத்தமுடைத் தென்பதும் கருதிய இவ்விரிவுரை யாசிரியர் அக்கருத்திற்கேற்பத் தம் புதியவுரையை அமைத்துக் கொண்டமை இவண் குறிப்பிடத் தகுவதாம். இப்பாட்டில் `கண்டி நுண்கோல்’ என்பது `கண்டிர னுண்கோல்’ என்றிருத்தல் வேண்டும். `கண்திரள் வேய்’ (பெருங்கதை 1 : 46 : 168) எனவருந் தொடர் இப்பாடத்தின் இயல்பினைப் புலப்படுத்துவ தாகும். இப்பாட்டில் வந்த ஏறாஏணியாகிய கோக்காலியின் இயல்பினை இவ்விரிவுரை நன்கு புலப்படுத்துகின்றது. இவ்விரிவுரை யாசிரியராகிய திரு. பிள்ளையவர்கள் பழைய வுரையாசிரியர் உரையுடன் தம் கருத்திற்பட்ட புதியவுரை யினையும் ஒப்புநோக்கத் தருவது, நூல் நயங்காணும் இவர்தம் ஒட்பத்தினை இனிது விளக்குவதாம். (பக்.199, 200) 45-ஆம் பாடலில் `கடல் மறுத்திசினோர்’ என்பதனை விளக்க வந்த பழைய உரையாசிரியர் “கடல் மறுத்தல் என்றது, கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு அரிதென்பதனை மறுத்தலை” எனத் தம் மதி நுட்பத்தாற் சிறப்புடைய பொருள் கூறினார். இப்பொருள் `அரியவென் றாகாத தில்லை’ (குறள். 537) என வருந் திருவள்ளுவனார் வாய்மொழியை நினைவிற்கொண்டு எழுதப் பெற்ற தாகும். `கடல் மறுத்திசினோர்’ என்பதற்குக் `கடலிற் புக்கு ஒரு தொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர்’ எனப் பொருள் கூறினாரும் உளர். கடலிற் புக்கு ஒருதொழிலைச் செய்தற்கு மறுத்தோராகிய மன்னர் நின்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் எனச் செங்குட்டுவனைப் பழிக்கும் நிலையில் பரணர் என்னும் புலவர்பெருமான் அவ்வேந்தனைப் பாடியிருக்க மாட்டார் என்பதனை இப்பாடலைப் படிப்போர் நன்குணர்வர். `கடல் மறுத்தசினோர்’ என்பதற்குக் `கடலிடத்தே எதிர்ந்த பகைவரை எதிர்த்துப் பொருதழித்த வேந்தர்’ என யாவரும் எளிதின் உணரும்படி இவ்வாசிரியர் கூறிய உரைவேறுபாடு ஏற்றுக் கொள்ளத்தகுவதேயாகும். இவ்வாறே “கரைவாய்ப்பருதி” (பக் 214-5) `வடுவடு நுண்ணயிர்’ (பக். 237) என்பவற்றுக்குக் கூறிய விளக்கங்கள் அறிந்துகொள்ளுதற் குரியனவாகும். இவ்விரிவுரை பாடற்பொருளை விளக்குவதுடன் அதன் பழைய வுரைக்குறிப்பினை விளக்குதற்கரிய சிறந்ததொரு விளக்க வுரையாகவுந் திகழ்கின்றது என்பதனை முன்பே கூறினேன். ஒவ்வொரு பாட்டின் உரைப்பகுதியிலும் பழைய வுரையாசிரியர் கூறிய வுரைக்குறிப்புக்களை எடுத்துக்காட்டி விளக்கிச் சொல்லும் முறை இவ்வுண்மையினை வலியுறுத்துவதாம். சங்கத் தொகை நூல்களுக்கு விரிவுரை யெழுதுவோர் பதிப்புக்களிற் காணப்படும் பிழைகளை யுணர்ந்து அந் நூல்களின் உண்மையான பாடத்தைத் தெரிந்துகொள்ளுங் கடமையுடை யராவர். இக்கடமையினை நன்குணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் பதிற்றுப்பத்தின் ஏட்டுச் சுவடிகளையும், அச்சிடப்பெற்ற சுவடியையும் ஒப்புநோக்கிச் சில பாடவேறுபாடுகளைத் தெரிந்து கொண்டார்கள். 55-ஆம் பாடலில் “பெய்து புறந்தந்து பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச், சென்றா லியரோ பெரும” என்ற தொடர் அமைந்துளது. இத்தொடர்க்கு “பெருமையை யுடையாய், மழையைப்பெய்து உலகத்தைக் காப்பாற்றிப் பின்பு பன்னின பஞ்சைப் போலப் பொங்கி யெழுதலைச் செய்து மலையைச் சேர்ந்த வெளுத்த மேகத்தைப் போலச் செல்லா தொழியாதாக” என இக்காலத்தில் எழுதப்பெற்ற குறிப்புரை காணப்படுகின்றது. இக்குறிப்புரையில் உள்ளவாறு “நின் வாழ்நாள் வெளுத்த மேகத்தைப்போலச் செல்லாதொழியா தாக” என இருமுறை எதிர்மறுத் துரைத்தால் “நின் வாழ்நாள் வெண்மழைபோலச் சென்று ஒழிக” என்னும் வைதற்பொருள் தோன்றுவதன்றி வாழ்த்து தற்பொருள் தோன்றுமா றில்லை. இப்பகுதிக்குப் பொருள் கூறவந்த பழையவுரையாசிரியர் “வெண்மழை போலச் சென்றா லியர் என்றது, அம்மழை பெய்து புறந்தருங் கூற்றையொத்து, அது பெய்து வெண்மையாகக் கழியுங் கூற்றை ஒவ்வாது ஒழிக என்றவாறு” என விளக்கந் தருகின்றார். எனவே, மழையின் இயல்பாகிய புரத்தல் தொழிலும் அம்மழை பெய்தபின் வெண் மேகமாகித் கழிதல் தொழிலும் ஆகிய இரண்டினுள், மழை இவ்வுலக வுயிர்களைப் புறந்தருதல் போன்று, நீ இவ்வுலக மக்களைப் பாதுகாத்தல் வேண்டும் என ஒன்றினை ஒத்தும், அம்மழை வெண்மேகமாகிக் கழிவது போன்று நின் வாழ்நாள் கழிதலாகாது என ஒன்றை ஒவ்வாமலும் சேரலாதனுக்கு உவமை கூறி வாழ்த்தினமை இப்பழைய வுரைக்குறிப்பால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். ஆனால் `சென்றா லியரோ’ என்னும் பாடம் இப்பொருட்கு நேர் முரணாகக் காணப்படுகின்றது. இப்பாடத் தின் பொருந்தாமை யினை யுணர்ந்த இவ்விரிவுரையாசிரியர் ஏடுகளை ஒப்புநோக்கிச் `சென்றறாலியரோ’ எனத் திருத்தமான பாடத்தினை உணர்ந்து வெளியிட்டமை பெரிதும் பாராட்டத் தகுவதொன்றாம். சென்றறாலியர் என்னுந் தொடரினைச் சென்று அறாலியர் என இரண்டு சொல்லாகப் பிரித்து, சென்று என்பதனை “வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய மழைபோலப் பெய்து புறந்தந்து சென்று” எனவும், அறாலியர் என்பதனைப் பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழைபோல அறாலியர்” எனவுந் தனித்தனி இயைத்து உரைக்கும்வழிப் பழையவுரையாசிரியர் கருத்து இனிது புலனாதல் காண்க. 56-ஆம் பாடலில் “வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்து, இலங்கும் பூணன், பொலங் கொடியுழிஞையன்” என்னுந் தொடரிலுள்ள வினைக்குறிப்பு முற்றுக்களை எச்சப் பொருளவாகக் கொண்டு இவ்வாசிரியர் கூறும் உரைநுட்பம் நச்சினார்க்கினியர் உரைகளில் இடைவிடாது பயின்ற தெளிவினைப் புலப்படுத்து கின்றது. 56-ஆம் பாடல் `வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி’ என்னும் பெயருடையதாகும். வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது, பகைவேந்தர் தங்கள் மெய்யை (உடம்பை) மறந்து சேரலாதனோடு எதிர்த்து நின்று பொருது மடிந்தமை காரணமாக அதன் காரியத்தால் சேரலாதனுக்கு வந்து எய்திய வெற்றிவாழ்வாகும் எனவும், மறந்த வாழ்வு என்ற தொடரில் காரணப் பொருட்டாகிய `மறந்த’ என்னும் பெயரெச்சம் வாழ்வு என்னும் காரியப் பெயர்கொண்டு முடிந்த தெனவும் பழைய வுரையா சிரியர் பாட்டின் பெயர்க்காரணங் கூறினார். இவ்விரிவுரை யாசிரியர் “வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி” என்பதற்குப் “பகைமையாற் போர் மேற்கொண்டு வந்து பொருத வேந்தர் தம்முடம்பைத் துறந்து சென்று துறக்கத்தே பெறும் வாழ்வு” எனப் பொருள் கூறிப், பகைவேந்தர் யாக்கைநிலையாமையை நன்குணர்ந்து தம் உடம்பை மறந்து என்றும் நிலைத்த புகழை விரும்பி இறக்க, அதனால் அவர்க்குளதாகும் துறக்கவாழ்வினைச் சிறப்பித்துரைத்தலால் இப் பாடல் வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி என்னும் பெயருடையதாயிற்று எனப் பெயர்க்காரணமுங் கூறினார். பகைவேந்தர் தமக்குரிய பருவுடம்பை மறந்து போர் செய்தலால் அவர் பெறுந் துறக்க வாழ்வினை மெய்ம்மறந்த வாழ்ச்சி என்றார் என்னும் இவ்வுரை “நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும், வித்தகர்க் கல்லால் அரிது” எனவருந் திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய உரைப்பொருளை யுளங்கொண்டு எழுதிய அருமையுடையதாகும். மக்கள் தம் புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்புக்கு உண்டாகும் வறுமையை `ஆக்கமாகுங் கேடு’ எனவும், புகழுடம்பு நிலைபெறப் பூதவுடம்பு இறத்தலை `உளதாகுஞ் சாக்காடு’ எனவும், கூறி இவ்வாறு நிலையாதவற்றால் நிலையுடையன எய்துவார் சதுரப்பாடுடையராகலின் அன்னோரை “வித்தகர்” என மேற்காட்டிய குறளில் தெய்வப்புலவர் அறிவுறுத்தினரெனவும் உரையாசிரியர் பரிமேலழகர் நன்கு விளக்கியுள்ளார். இந் நுட்ப மனைத்தும் `வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி’ என்னும் ஒரு தொடரிற் புலனாதல் கொண்டு இப்பாடல் இதனாற் பெயர்பெற்றது என இவ் வுரையாசிரியர் கூறும் காரணம் அறிஞர்களாற் பாராட்டத்தகும் சிறப்புடையதாம். 70-ஆம் பாடலில் `உடைநிலை நல்லமர்’ என்ற தொடர்க்குப் பகையரசருடைய நிலையாகிய நல்ல போர் என்ற பொருள் பிற்காலக் குறிப்புரையிற் காணப்படுகின்றது. இத் தொடர்க்கு `என்றும் தமக்கே யுடைமையாகப் பெற்ற நல்ல போர்’ எனப் பொருள் கூறி, “போருடற்றுதலும் அதன்கண் வெற்றி பெறுதலும் தமக்கு நிலையாகக்கொண்டு சிறக்கும் வேந்த ரென்பார். பகை வேந்தரைக் கடுஞ்சின வேந்தரென்றும், உடை நிலை நல்லமர் என்றும் கூறினார்” (பக்.332,333) என விரிவுரையா சிரியர் தரும் விளக்கம் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது. 71-ஆம் பாடலில் `அருவியாம்பல்’ என்பதற்கு நிறைந்த பூக்களாகிய ஆம்பல் எனப் பொருள் கூறினார். இப் பொருளுக்கு ஆர்வீ என்பது, அருவீ எனத் திரிந்து பின் அருவி எனக் குறுகிற்று எனக் கூறிக் கலித்தொகை 22-ஆம் பாடலில் ஆர்ந்து என்னுஞ் சொல் அருந்து எனத் திரிந்து நின்றதனை மேற்கோளாகக் காட்டியுள்ளமை இவர்தம் பழைய உரைநூற் பயிற்சியினைத் தெளிவுபடுத்துகின்றது (பக்.340) 73 ஆம் பாடலில் “உரவோர் எண்ணினும் மடவோ ரெண்ணினும் ” என்னுந் தொடர்க்குப் பிறர் கூறுமாறு இரண்டாம் உருபு விரித்து உரைகூறிய இவ் வாசிரியர் “இனி உரவோர் தாம் எண்ணினும் மடவோர் தாம் எண்ணினும் இருதிறத்தோரும் நின்னையே உவம மாகக்கொண்டுரைப்பார் என்றுமாம்” (பக்.351,352) என மற்றோருரை யினையும் குறித்துள்ளமை இவண் கருதத் தகுவதொன்றாம். சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையின் உயர்வற வுயர்ந்த தலைமைப்பண்பினை எடுத்துரைக்க விரும்பிய அரிசில்கிழார் அவ்வேந்தர் பெருமான் அறிவிற்சிறந்த சான்றோராலும் நிரம்பிய கல்வியில்லாத ஏனைமக்களாலும் நன்கறியப்பட்ட பெருமை யுடையான் என விளக்குவார். “ உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு நீ வாயி னல்லது பிறர்உவம மாகா ஒருபெரு வேந்தே” என, அம் மன்னனை முன்னிலையாக்கிப் போற்றினார். உண்மை யாகவே ஒருவன் யாவராலும் பாராட்டத்தகும் சிறப்புடை யவனாக விளங்குவானானால் அவனது பெருமை உலகிலுள்ள கற்றார், கல்லாதார் ஆகிய எல்லா மக்களுக்கும் நன்கு புலனாதல் வேண்டும். ஞாயிற்றால் மக்களுக்கு விளையும் நன்மை, அதன் இயல்பினை நன்கு ஆராய்ந்துணரும் அறிவியல் நூலோருக்கும், நிரம்பிய கல்வியில்லாத ஏனைமக்களுக்கும் ஒப்ப விளங்குதலைக் காணுகின்றோம். அதுபோலவே, உலகில் அறிவாற்றல் முதலிய வற்றால் சிறந்து விளங்கும் பெரியோனொருவனது பெருமை, யாவருள்ளத்திலும் நிலைபெற்றிருக்குமென்பது பெறுதும். “ஆற்றலுடையார்க்கு எடுத்துக் காட்டுதற்குரிய உவமையினைப் பேரறிஞர் ஆராய்ந்து தேடினாலும், ஏனைமக்கள் ஆராய்ந்து தேடினாலும், நின்னையே உவமையாக எடுத்துக் கூறுவதல்லது நினக்குப் பிறரை உவமையாக எடுத்துக்காட்ட இயலாதபடி உயர்வற விளங்கும் பெருமானே” என அரிசில் கிழார் பெருஞ் சேரலிரும்பொறையின் தனக்குவமை யில்லாத தகைமையை நன்கு விளக்கினார். இங்ஙனம் பொருள் கூறுங்கால் `உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்’ என்பதன்கண் எண்ணுவதற்கு வினைமுதல் உரவோரும், மடவோரும் எனக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனமே விரிவுரையிற் காணப்படும் பொருட்சிறப்பினை யெல்லாம் விரித்தெழுதப் புகின், பெருகுமென்றஞ்சி இவ்வளவில் அமைகின்றேன். கற்றோர் உள்ளத்தைக் கவரவல்ல பதிற்றுப்பத்து என்னும் விழுமிய நூலுக்கு இங்ஙனம் சுவைநலங் கெழும விரிவுரையெழுதி யுதவிய திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களைத் தமிழகம் நன்குணரும். ஆங்கிலப் பயிற்சி யுடன் நிரம்பிய தமிழ்நூற் புலமையும், பண்டைத் தமிழிலக்கியச் சுவைநலன்களை உரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும், யாவரும் உணரச் செய்தல் வேண்டுமென்னும் பேரார்வத்தால்; இடைவிடாதுழைக்கும் நன்முயற்சியும் இனிது வாய்க்கப்பெற்ற திரு. பிள்ளையவர்கள் தம் புலமைத்திறத்தால் தமிழகத்திற்குப் பெருந்தொண்டு செய்து வருகின்றார்கள். இவர்கள் பண்டைத் தமிழ்நூல்களுக்கு உரைகாணும் முறையிற் பெருந்தொண்டு புரிந்த உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய செந்தமிழ்ச் சான்றோர்களின் உரைத்திறங்களை யெல்லாம் நன்குணர்ந்த செறிவும் தெளிவும் அமைந்த இனிய செந்தமிழ் நடையில் பழந்தமிழ் நூல்களுக்கு விரிவுரை காணும் மேதகவுடையராய் விளங்குதல்; இவர்களால் இயற்றப்பெற்ற இப் பதிற்றுப்பத்தின் விரிவுரையினால் நன்கு புலனாகின்றது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றுக்கு இன்சுவை கெழும இவர்களியற்றிய விரிவுரை தமிழறிஞர்களாற் பெரிதும் பாராட்டப்பெறும் சிறப்புடையதாகும். மணி மேகலைக்கு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய விரிவுரைப் பகுதியில் எஞ்சிய காதைகளுக்கு இவர்கள் இயற்றிய உரைப்பகுதி இவர்களது பரந்த நூற்பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்வன்மையும், செய்யுட்களின் திறனாய்ந்து தெளியும் இலக்கிய ஆராய்ச்சி முறையும், தொன்னூற் புலமையும் நன்கு நிரம்பப் பெற்ற திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்துக்குச் சிறந்ததொரு விரிவுரையினை இயற்றி யுதவியது காலத்திற்கேற்ற தமிழ்த் தொண்டாகும். பண்டைத் தமிழ்நூற் பொருளை யெல்லாம் இக்காலத் தமிழ்மக்கள் நன்குணர்ந்து சிறந்த புலமைபெற்று விளங்குதல் வேண்டுமென்னும் பேரார்வத்துடன் அவற்றை அரிதின் முயன்று தேடி நன் முறையில் ஆராய்ந்து விளக்கம் தந்து அச்சிட்டுதவிய புலமைப் பெரியார், தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயரவர்களாவர். அவர்கள் முதன்முதலாக இப் பதிற்றுப் பத்தினைப் பழைய வுரையுடன் வெளியிடாதிருந்தால் இத்தகைய புலமைச் செல்வத்தை நம்மனோர் எளிதிற்பெற்று மகிழ்தலியலாது. பதிற்றுப்பத்துக்குச் சிறந்ததொரு விரிவுரையினைப் பெற்று மகிழும் இந்நிலையில் பெரும்பேராசிரியராகிய ஐயரவர்களின் செந் தமிழ்த் தொண்டினை நினைந்து உளமாரப் போற்றுதல் நம் கடனாகும். வாழ்க செந்தமிழ்: வாழியர் தமிழ்த் தொண்டர்கள்! பாடினோர் வரலாறு பதிற்றுப்பத்தைப் பாடிய சான்றோர்களுள் முதற் பத்தையும் பத்தாம் பத்தையும் பாடினோர் ஒழிய, ஏனை இடைநின்ற எட்டுப்பத்துக்கட்கும் உரிய சான்றோர் எண்மர் பெயர்களும் கிடைத்துள்ளன. அவர்கள், முறையே குமட்டூர்க்கண்ணனார், பாலைக்கோதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைபாடினியார், நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்போராவர். இவர்கள் வரலாறு வருமாறு: குமட்டூர்க்கண்ணனார் : இவர் பெயரிலுள்ள குமட்டூர் என்பது இவரது ஊர். கண்ணனார் என்பது இவரது இயற்பெயர். இவர் இந்நூலின் இரண்டாம்பத்தின்கண் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைப் பாடியுள்ளார். இமயவரம்பனைப் பாடி, உம்பற்காடு என்ற பகுதியில் ஐஞ்ஞூறு ஊர்களைப் பிரமதாயமாகவும், அவனது தென்னாட்டு வருவாயுள் பாகமும் பெற்றாரென இரண்டாம்பத்தின் பதிகம் கூறுகிறது. குமட்டூர் என்ற பெயரையுடைய வூர்கள் நம் நாட்டில் இப்போது காணப்படவில்லை. கல்வெட்டுக் காலங்களில் இருந்து, பின் மறைந்துபோன வூர்கள் பல உண்டு. ஆதலால், அவற்றை நோக்குமிடத்துக் குமட்டூரெனப் பெயரிய வூர்கள் இரண்டு கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, குண்டூர் சில்லாவின் தலைநகரான குண்டூர். அங்குள்ள கல்வெட்டொன்று (A.R.No. 83 of 1917) அதனை, ஓங்கேரு மார்க்கத்திலுள்ள குமட்டூர் என்று குறிக்கிறது. அது சகம் 1080ஆம் ஆண்டில் (கி.பி. 1158) தோன்றியதாகும். மற்றொன்று, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் என்னுமிடத்திற் காணப்படும் கல்வெட்டு. இச் சித்தன்னவாசல் கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகவோ மூன்றாம் நூற்றாண்டாகவோ கல்வெட்டாராய்ச்சியாளர் கருதுகின்றனர் (P.S. Ins. No. 1) இஃது அசோகபிராமி யெழுத்தாக எண்ணப் படுகிறது. தமிழ்த்தொடரொன்று அசோக பிராமி யெழுத்தில் எழுதப்பட்டுள்ளதெனவும், இவ் வழக்காறு மதுரை திருநெல்வேலி சில்லாக்களில் வழங்கியதெனவும் எடுத்தோதி, இதனை அரிதின் முயன்று படித்துப் பொருள் உண்மை கண்ட கல்வெட்டுத்துறைத் தலைவர் திரு. K.V. சுப்பிரமணிய அய்யரவர்கள், இக் கல்வெட்டு, “யோமிநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்” என நிற்கிற தெனவும் கூறியுள்ளார். யோமிநாடு என்பது ஓய்மாநாடென்பதன் திரிபெனக் காணப்படவே, இக்கல்வெட்டு, “ஓய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்” எனப் படிக்கப்படுவதாயிற்று. குண்டூர்க் கல்வெட்டையும், சித்தன்னவாசற் கல்வெட்டையும் நோக்குமிடத்துக் கண்ணனாரது குமட்டூர் ஒய்மாநாட்டுக் குமட்டூராமெனக் கருதுதற்கேற்ற வாய்ப்புடைத்தாகிறது. ஈதனுக்கு என்பது யாதனுக்கு என்பதன் பிராமியெழுத்தா லுண்டாகும் திரிபெனக் கொள்வதாயின், ஓய்மாநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தானான காவிதி யாதனுக்கு, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கோ, அவன் தந்தை உதியன் சேரலாதனுக்கோ, தானைத்தலைமை வகையிலோ, வேறு வகையிலோ தொடர் பிருந்திருக்குமெனக் கோடற்கு இடமுண்டாகிறது. இவ்வகையில் ஓய்மாநாட்டுக் குமட்டூர் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே விளங்கியிருந்த தொன்மைநலமுடையதென்று தெளியலாம். இனி, ஓய்மாநாடென்பது தென்னார்க்காடு சில்லாவில் திண்டிவனம் தாலூகாவையும், செங்கற்பட்டுச் சில்லாவின் மதுராந்தகந் தாலூகாவின் தென்பகுதியையும், தன்கண் கொண்டு விளங்கிய தொன்மை நாடாகும். இந்த ஒய்மாநாடு இடைக்காலப் பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தேயுமன்றிச் சங்ககாலத்திலும் சிறப்புற்றிருந்த தென்பது; ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை பாடிச் சிறப்பித்தலால் தெளிவாகிறது. இந் நாட்டிற் காணப்படும் ஊர்களுள் குமட்டூர் என்று பெயரியதோர் ஊர் காணப்பட வில்லை. ஆயினும் திண்டிவனத்துக்கு மேற்கில் முட்டூரென்றோர் ஊருளது. பண்டைய குமட்டூரே இப்போது முட்டூரெனச் சிதைந்து வழங்குவதாயிற்றெனக் கொள்ளின், இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் தொண்டை நாட்டு ஓய்மாநாட்டைச் சேர்ந்த சான்றோர் என்பது தேற்றம். இவர்க்கு இமயவரம்பன் நல்கிய ஊர்களைப் பிரமதாயமெனப் பதிகம் கூறுதலால், அவற்றைப் பெற்ற கண்ணனார் பார்ப்பன ரென்பது விளங்குகின்றது. இரண்டாம் பத்துக்குரிய நெடுஞ்சேரலாதன், இமயவரம் பனாய் விளங்கிய திறத்தை, “பேரிசை இமயம் தென்னங் குமரி யொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து” (பதிற். 11) என்று கூறி வற்புறுத்துகின்றார். கடற்றீவு ஒன்றிலிருந்து போந்து குறும்புசெய்து வாழ்ந்த கடம்பர் என்பவர்களை, நெடுஞ் சேரலாதன் கலஞ் செலுத்திச் சென்று பொருது அவர்களைவென்று மேம்பட்ட நலத்தை முருகன் கடலகம் புகுந்து சூரனை வென்று வாகைசூடி விளங்கிய விளக்கத்தோடு உவமித்துக் கூறுவது படிப்போர்க்கு மிக்க இன்பம் தருவதாகும். இமயவரம்பன் மனைவியின் கற்புநலத்தைப் புகழ்ந்து, “ஆறிய கற்பின் அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின், சுடர்நுதல் அசைநடை” எனவும், “பெருஞ்சால் பொடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுத லரிவை” யெனவும் பாராட்டுவர். சேரலாதன் கொடையை, “மாரி பொய்க்குவ தாயினும், சேரலாதன் பொய்யலன்” எனவும், “எமர்க்கும் பிறர்க்கும் யாவராயினும், பரிசின் மாக்கள் வல்லா ராயினும், கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்” எனவும், “எழிலி தலையா தாயினும், வயிறு பசிகூர ஈயல” னெனவும் போற்றிப் புகழ்வர். இவையும் இவை போல்வன பிறவும் இவருடைய புலமை நலத்தைப் புலப்படுத்திக் கற்போர்க்கு அறிவின்பம் நல்கும் அமைதி யுடையனவாகும். இவ்விரண்டாம் பத்தின் வேறாக இவர் பாடியனவாக வேறே பாட்டுக்கள் கிடைத்தில. பாலைக்கோதமனார் : கோதமனார் என்னும் பெயரை யுடைய இச் சான்றோர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடும் செந்தமிழ்ச் சிறப்புடையராவர். ஆதலால் இவர் பாலைக்கோத மனார் எனச் சான்றோராற் குறிக்கப்படுகின்றார். இவர் இமய வரம்பன் தம்பியான பல்யானைச் செல்கெழு குட்டுவனை இந்நூலில் மூன்றாம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். இவ்வாறு சிறப்பித்ததனால் வேந்தன் மகிழ்ந்து அவர் வேண்டியதனை வழங்கச் சமைந்திருந்தான். அப்போழ்து, அவர் வேந்தனை வேண்டி, “யானும் என் சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத் தருக” என்றார். சேர வேந்தன் அவர் விரும்பிய வண்ணமே வேள்வி பல செய்து “நீ விழையும் துறக்கத்தின்கண் நீடுவாழ்க” என வுதவினான். இச் செய்தியைப் பழமொழி பாடிய முன்றுறையரையனார் குறிப்பாக, “தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர, அடுத்துத்தா என்றாற்கு வாழியரோ” (பழ.316) என்றாராக, அதன் பழையவுரைகாரர் இக்கோதமனார் வரலாறு காட்டி விளக்கியுள்ளார். கோதமனார் ஒரு பார்ப்பனர் என்பது, அவர் யானும் என் பார்ப்பனியும் துறக்கம் புகவேண்டும் எனக் கூறினாரெனப் படுவதால் தெளிவாகிறது. இவர் பாடிய தாகப் புறத்தில் ஒருபாட்டுக் காணப்படுகிறது. அதன்கண் தரும புத்திரனை அவர் பாடினாரெனக் குறிக்கப்பெற்றுளது. பல்யானைச் செல்கெழு குட்டுவனை அவர் புறப்பாட்டில் அறவோன் மகனே எனப் பாராட்டினாராக, பிற்காலத்தோர் அதனைத் தருமபுத்திரன் என வடமொழிப்படுத்திப் பாண்டவனான தருமபுத்திரனைப் பாடியதெனப் பிறழக் கொண்டுவிட்டனரெனக் கோடல் வேண்டும். இப்புறப்பாட்டு இறுதியில் பாலைக்கோதமனார் பாடியதென்றே ஏட்டிற் காணப்படுகிறது. ஆதலால் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனாரே இப்புறப்பாட்டையும் பாடியவராதல் தேற்றமாம். இவர் பெயர் சில ஏடுகளில் கோதமனாரெனக் காணப்படுவது கொண்டு, திரு. ரா. இராகவையங்காரவர்கள், “இவ்வாசிரியரின் வேறாதல் காட்டவே பாலையென்னும் அடையடுத்துப் பாலைக்கௌதமனாரென இவர் பெயரே புனைந்து விளங்கிய பெரியாரும் இத் தமிழ்நாட்டில் உண்டு; இப் பாலைக் கௌதமனார் இறப்பப் பிந்தியவராவர்” (தமிழ் வர. பக். 245) என்று கூறுகின்றார். ஆனால் டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையரவர்கள், பாலைக்கோதமனாரே, கோதமனாரெனச் சில ஏடுகளில் குறிக்கப்பெற்றனரெனவும், பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பாடியவரும் “விழுக்கடிப் பறைந்த” (புறம். 366) எனத் தொடங்கும் புறப்பாட்டைப் பாடியவரும் ஒருவரே யெனவும் கருதுகின்றார். இப் பாலைக்கோதமனார், பெருங்காஞ்சி பாடுவதில் சிறந்த நாநலம் வாய்ந்தவரென்பதை அவர் பாடிய புறப்பாட்டு இனிது விளக்குகிறது. பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாராட்டுங் கால் அவன் குடிவரவினை, “பிறர்பிறர் நலியாது வேற்றுப் பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம், அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள், மூத்த யாக்கை யொடு பிணியின்று கழிய, ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்” எனப் பாராட்டி யிருப்பதும், அவனை வாழ்த்துமிடத்து, அவன் மனைவியின் பெருமாண்பினை விதந்தோதி, “வேயுறழ் பணைத் தோள் இவளோடு, ஆயிர வெள்ளம் வாழிய பலவே” என வாழ்த்துவதும், “சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென், றைந்துடன் போற்றி” எனவும், “சினனே காமம் கழிகண் ணோட்டம்” அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து, அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது” எனவும், “ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல், ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும். அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி” யெனவும் தொகுத்துக் கூறும் சிறப்பும் பாலைக்கோதமனாருடைய பரந்த கேள்விச் சிறந்த புலமையைப் பாரித்துரைக்கும் பண்பின வாகும். காப்பியாற்றுக்காப்பியனார் : இவர் காப்பியாறு என்னும் ஊரினர்; காப்பியன் என்னும் பெயரினர். பண்டைக்காலத்தும் இடைக்காலத்தும் நம் தமிழகத்தில் காப்பியன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர். காப்பியஞ் சேந்தனார், தொல்காப்பியனார் எனப் பண்டும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் (S.I.I.Vol. V. No. 660) என இடைக்காலத்தும் காணப்படுவது காண்க. காப்பியன் என்போர் பலர் இருந்தமை பற்றி, அவரின் வேறுபடுத்தவே இவர் ஊரொடு சேர்த்துக் காப்பியாற்றுக் காப்பியனார் எனச் சான்றோர் வழங்கினர். இக் காப்பியாறு என்னும் ஊர், இன்ன நாட்டில் உள்ளதெனக் காண முடியவில்லை. காப்பியன் என்னும் பெயருடையார் மழ நாட்டைச் சார்ந்த பகுதிகளில் காணப்படுதலால், இக்காப்பியா றென்னும் ஊர், மழநாட்டிலோ கொங்குநாட்டிலோ இருந்திருக்கலாம்; தென்னார்க்காடு வட்டத்து விழுப்புரப் பகுதியில் காப்பியாமூர் என்னுமோர் ஊருளது; அஃது இப்போது கப்பியாமூர் என வழங்குகிறது. தஞ்சை வட்டத்து மாயவரப் பகுதியில் காப்பியக்குடி யென்றோர் ஊருளது. காப்பியஞ் சேந்தனார் எனப்படும் சான்றோரொருவர் நற்றிணை பாடிய ஆசிரியரிடையே காணப்படுகின்றார். அவர் இக்காப்பியனா ருடைய மகனாராவர்; ஆனதுபற்றி அவர் காப்பியஞ் சேந்தனார் எனப்படுகின்றார். காப்பியாற்றுக்காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனை, இந்நூல் நான்காம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் அவனொடு மாறுபட்டு நின்றவர் நெடுமிடலஞ்சி, நன்னன் முதலியோராவர். அவருள் நன்னன், நார்முடிச்சேரல் இளையனாய் இருந்தபோதோ, அவனுடைய முன்னோர் காலத்தோ சேரநாட்டின் ஒரு பகுதியைத் தான் கவர்ந்துகொண்டானாக, நார்முடிச்சேரல் அரசுகட்டி லேறியதும் கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தே நன்னனொடு பொருது வென்றிகொண்டு விளங்கினான். அதனைக் கண்ட காப்பியனார் “பொன்னங் கண்ணிப் பொலந் தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச்சேரல்” என்று பாராட்டியுள்ளார்; நெடுமிட லஞ்சியின் வலிகெடப் பொருதழித்து, அவனது “பிழையா விளையுள் நாடகப் படுத்து” விளங்கின எனச் சிறப்பித்துள்ளார்; நார்முடிச்சேரலின் நார்முடி நலத்தை, “அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச், சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின், இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத், தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க, சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” யெனச் சொல்லோவியஞ், செய்து காட்டு கின்றார். அச் சேரலின் குணநலம் கூறுவாராய் “ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மால்” எனவும், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்,” “தொன்னிலைச் சிறப்பின் நின்னிலை வாழ்நர்க்குக், கோடற வைத்த கோடாக் கொள்கையும்” உடைய னெனவும், “தாவி னெஞ்சத்துப், பாத்தூண் தொகுத்த ஆண்மை” யுடையனெனவும் பலவகையாற் பாராட்டி, அவன் மனைவியின் மாண்பினை, “விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த, செம்மீன் அனையள்” என எடுத்தோதி, அவனுடைய வென்றிச் சிறப்பும், கொடைச் சிறப்பும், நவில்தொறும் இன்பஞ் சுரக்கப் பாடி, “உலகத்தோரே பலர்மன் செல்வர், எல்லா ருள்ளும்நின் நல்லிசை மிகுமே” என்றும், அவன் தனக்கென வாழாப் பெருந்தகையாதலை மிக வியந்து, “தாவில் நெஞ்சத்துப், பகுத்தூண் தொகுத்த ஆண்மைப், பிறர்க்கென வாழ்திநீ” யெனவும், “நன்றுபெரி துடையையால் நீயே, வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே” யெனவும் பாராட்டிக் கூறுவன பன்முறையும் படித்து இன்புறத் தகுவன வாகும். சேரநாட்டவர் திருமாலை வழிபடுந் திறம் இவரால் மிக்க விளக்கமாகக் குறிக்கப்படுகிறது. பரணர் : ஆசிரியர் பரணர் சங்ககாலச் சான்றோர் கூட்டத் துட் சிறப்புடையோருள் ஒருவர். இவர் பாடிய பாட்டுக்கள் மிகப் பல சங்க இலக்கியங்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மாமூலனார் முதலிய சான்றோர் போலத் தம் காலத்தும் தம்முடைய முன்னோர் காலத்தும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டிப் பண்டைத் தமிழ்நாட்டு வரலாற்றறிவு வழங்கும் பெருந்தகை இப் பரணராவர். இவருடைய புலமை நலமும் வளமும் ஈண்டுக் கூறலுறின், அதுவே ஒரு செவ்விய நூலாகும் பெருமையுடையதாகும். இந் நூலின்கண் இவர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனை ஐந்தாம் பத்தாற் பாடிச் சிறப்பித்துள்ளார். இதன் பதிகம், இச் செங்குட்டுவனே வடவரை வென்று கண்ணகியாருக்குக் கற்கொணர்ந்த சேரன் செங்குட்டுவன் என்று கூறுகிறது. இப் பத்தின்கண் அச்செய்தி யொன்றும் குறிக்கப் படாமைகொண்டு, திரு. கா. சு. பிள்ளை முதலியோர், இக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிலப்பதிகாரச் செங்குட்டுவனுக்கு முன்னோனாவன் என்பர். இவன் காலத்தே மேனாட்டவரான யவனரும் பிறரும் கடல்வழியாகக் கலஞ்செலுத்திப் போந்து கடற்குறும்புசெய்து வந்தாராக, இச் செங்குட்டுவன் வேலேந்திய வீரர் பலருடன் கடற்படை கொண்டு கலத்திற்சென்று, கடற் குறும்பு செய்த பகைவரனைவரையும் வேரோடு கெடுத்து வென்று சிறந்தான். அதனால் இவன் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் எனப்படுவானாயினன். இதனைப் பரணர், நேரிற்கண்டு பெரிதும் உவந்து இப் பத்தினைப் பாடியுள்ளார்; இதன்கண் இவன் கடல்பிறக் கோட்டிய செய்தியைப் பல பாட்டுக் களில் எடுத்தோதி இன்புறுகின்றார். “இனியா ருளரோநின் முன்னு மில்லை, மழைகொளக் குறையாது, புனல்புக நிறையாது, விலங்கு வளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல், வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு, முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே” என்பதனால், பரணர் செங்குட்டுவன் கடல்பிறக் கோட்டிய செய்தியை மிக வியந்து கூறுதலை நன்கு காணலாம். இவன் முன்னோருள் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடற்குள் கலஞ்செலுத்திச் சென்று கடம்ப ரென்பாரை வென்றதும், “சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப், பிறகலம் செல்கலாது” (புறம்.126) என மாறோக்கத்து நப்பசலையார் கூறுவதும் நோக்கின், கடலிற் கலஞ்செலுத்திச் சென்று பகைவரொடு கடற்போருடற்றி வெற்றி மேம்படுந் திறம் சேரவேந்தர்பால் சிறந்து விளங்குவது காணப்படும். இக் குட்டுவன் காலத்தே, கோயம்புத்தூருக் கண்மையிலுள்ள பேரூர்க் கருகிலோடும் காஞ்சியாற்றின் கரையில் செல்வமக்கள் வேனிற்காலத்தில் பொழில்களில் தங்கி இன்புறும் பெருஞ்சிறப்பை, “பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, மேவரு சுற்றமொடு உண்டினிது நுகரும், தீம்புன லாய மாடும் காஞ்சியம் பெருந்துறை” யென்று பாராட்டிக் கூறுகின்றார்; செங்குட்டுவன் பெருங் கல்வியுடையன் என்பதை, “தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே” எனவும், அவனுடைய மென்மைப் பண்பும் ஆண்மைச் சிறப்பும் விளங்க, “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை”எனவும் சிறப்பித் துள்ளார்; செங்குட்டுவன் நிலத்தே தன்னை யெதிர்த்த மோகூர் மன்னன் முதலாயினோரை வென்றதை, “வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து, மொய்வளஞ் செருக்கிப் மொசிந்து வரும் மோகூர், வலம்படு குழூஉநிலை யதிரமண்டி.............. படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து” சிறந்தான் என்பர்; அவன் உலகு புரக்கும் நலத்தை, “உலகம் புரைஇச், செங்குணக் கொழுகும் கலுழி மலிர்நிறைக், காவிரி யன்றியும், பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என எடுத்தோதுவர். செங்குட்டுவனுடைய அறச்செயல் நலமும் மறச்செயல் மாண்பும் இவர் பாட்டுக்களில் தொடக்கமுதல் இறுதிவரை இன்பம் ஊற்றெழப் பாடப் பட்டுள்ளன. காக்கைபாடினியார் நச்செள்ளையார் : செள்ளை யென்பது இப் புலவர் பெருமாட்டியின் இயற்பெயர். செந்தமிழ்ப் புலமையாற் பெற்ற சிறப்புக்குறித்து இவர் பெயர், முன்னும் பின்னும் சிறப்புணர்த்தும் இடைச்சொற்கள் சேர்ந்து நச்செள்ளையாரென வழங்குவதாயிற்று. ஒருகால், விருந்துவரக் கரைந்த காக்கையைக் காதலன் பிரிவால் வேறுபட்டு வருந்தும் தலைமகளொருத்தி கூற்றில்வைத்து இவர் ஒரு பாட்டைப் பாடினர். அப் பாட்டுக் குறுந்தொகையுள் சான்றோரால் கோக்கப் பட்டுள்ளது. அப் பாட்டின் நலங்கண்டு வியந்த செந்தமிழ்ச் சான்றோர் நச்செள்ளையாரைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனப் பாராட்டுவாராயினர். அதுமுதல் அவரும் காக்கைபாடினியார் நச்செள்ளையாரென வழங்கப்பெறு கின்றனர். பண்டைநாளில் மகளிர்க்குச் செள்ளையெனப் பெயரிடுவது வழக்க மென்பதனை “வேண்மாள் அந்துவஞ் செள்ளை” என இந்நூலின் ஒன்பதாம்பத்தின் பதிகம் கூறுவதனால் இனிது தெளிவாம். காக்கைபாடினியார் இந்நூல் ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிச் சிறப்பித்திருக் கின்றார். அவர் பாட்டையேற்று மகிழ்ந்த சேரலாதன் அவர்க்கு அணிகலனுக்கென ஒன்பதுகாப் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் வழங்கியதோடு. தன் அரசவைப் புலவராகத் தன் பக்கத்தே இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். நச்செள்ளையாரும் அவன் பக்கத்தே யிருந்து அமைச்சியற் புலமை நடத்திவந்தார். ஒருகால், சேரலாதன், மகளிர் ஆடல் பாடல்களில் பெரிதும் ஈடுபாடுடையனாய் இருப்பது கண்டார். பேரீடுபாடு அரசியற்கு ஊறு விளைவிக்கும் என்பது கண்ட நச்செள்ளையார், “சுடர்நுதல் மடநோக்கின், வாணகை இலங்கெயிற், றமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர். பாடல் சான்று நீடினை யுறைதலின், வெள்வே லண்ணல் மெல்லியன் போன்மென், உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே” யென்று தெருட்டினர். ஒருகால் ,சேரலாதன் மகளிராடும் துணங்கை கண்டு இன்புற்றுவந்தானாக, உடனிருந்து கண்ட அவன் மனைவி அவன்பால் ஊடல்கொண்டு பிணங்கலுற்றாள். அப்பிணக்கத்தின் கண் அரசமாதேவி தன் கையிலிருந்த சிறிய செங்குவளைப் பூவை அவன்மேல் எறிதற்கு ஓங்கினாள். அவள் கையகத்திருக்கும் பேறுபெற்ற குவளை மலர் தன் மேனியிற்பட்டு வாடுதல் காணப் பொறானாய் அதனைத் தன் கையிற் றருமாறு அவளை இரந்து கேட்கவும், அவள் சினந் தணிதலின்றி, “நீ எமக்கு யாரையோ?” எனச் சொல்லிப் பெயர்ந்து போயினள். வளவிய இளமைநலஞ் சிறந்த சேரலாதன், அவளது சிவப்பாற்றுந் துறையில் மிக்க மெல்லியனாய் நடந்துகொண்டது காக்கை பாடினியாரால் தேனூறுஞ் சொற்களால் இப் பத்தின்கண் அழகுறப் பாடப் பட்டுளது. ஒருகால், இச் சேரலாதன் இரவலர்பால் கொண்டிருக்கும் அருட்பெருக்கைக் கண்டார் காக்கைபாடினியார்; அவனது மனைவாழ்வையும், அவர் நன்கறிந்திருந்தார்; அதனால், அவர் மனத்தெழுந்த வியப்பு, “இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த, வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை, ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும், இரவலர் புன்கண் அஞ்சும், புரவெதிர் கொள்வன்” என்று ஒரு பாட்டைப் பாடுவித்தது. சேரலாதன், “உலகம் தாங்கிய மேம்படு கற்பு” உடைய னெனவும், “ஒல்லார் யானை காணின், நில்லாத் தானை இறைகிழ வோன்” எனவும், “பொய்படு பறியா வயங்கு செந்நாவின், எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை, ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை, வான வரம்பன்” எனவும் அவனுடைய கல்வி, ஆண்மை முதலியவற்றைப் பாராட்டும் இவர், தமது ஆராமையால், “எனையதூஉம், உயர்நிலை யுலகத்துச் செல்லாது இவண்நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ” என வாழ்த்துவது மிக்க இறும்பூது பயக்கின்றது. இவையும் இவைபோலும் பிறநலங்களும் இப்பத்தின்கண் நிறைந்துள்ளன. கபிலர் : சங்கத் தொகை நூல்களிற் காணப்படும் சான்றோர் களுள் சான்றோர் பரவும் சால்புமிக்கவருட் கபிலர் சிறந்தவராவர். இவர் இந் நூலில் ஏழாம்பத்தால் செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துள்ளார். “யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” எனத் தாமே தம்மை அந்தணனென்று கூறுவதும், மாறோக்கத்து நப்பசலையார் “புலனழுக் கற்ற அந்த ணாளன்” என்பதும் நோக்குவார், இவர் அந்தணரில் தலையாய அந்தணரென விழைவர். இவர் பறம்புநாட்டு வாதவூரிற் பிறந்தவர். வாதவூர்க் கல்வெட்டுக்களே அதனைத் “தென் பறம்புநாட்டுத் திருவாதவூர்” என்று குறிக்கின்றன. இந்நாட்டு வேந்தனான வேள்பாரிக்குக் கபிலர் உயிர்த்துணைவராவர். அவன் இறந்தபின் அவன்மகளிரைக் கபிலர் தன் மக்களாகக் கொண்டு சென்று திருக்கோவலூரில் மலையமான்மக்களுக்கு மணம் புரிவித்த செய்தி உலகறிந்த தொன்று. திருக்கோவலூர்க் கல்வெட்டொன்று, `மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத், தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன், மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப், பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை, அலைபுன லழுவத் தந்தரிலஞ் செல, மினல்புகு விசும்பின் வீடுபேறெண்ணிக், கனல்புகுங் கபிலர்க் கல்லது’ (S.I.I. Vol. VII No. 863) என்று கூறுகிறது. இவர் பாடியனவாகச் சங்கத் தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றொழிய ஏனை யெல்லா வற்றினும் பல பாட்டுக்கள் உண்டு. பதினெண் கீழ்க்கணக்கு என்பனவற்றுள் ஒன்றான இன்னா நாற்ப தென்பதும் கபிலர் பாடிய தெனப்படுகிறது. இவர் வரலாறு, புலமைத்திறம் முதலிய நலங்களைக் காலஞ்சென்ற திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் மிக அழகாக எழுதி வெளியிட்டிருக்கின்றனர். வேறு சில அறிஞர்களும் எழுதியுள்ளனர்; ஆதலால் இங்கே கபிலரைப் பற்றி மேலும் கூறுவது மிகை. இந் நூலில் ஏழாம்பத்தில் கபிலர், செல்வக்கடுங்கோ வாழியாதனைத் தாம்பாடி வந்ததற்குக் காரணம் கூறுவார், “மலர்ந்த மார்பின் மாவண் பாரி, முழவு மண்புலர இரவலர் இனைய, வாராச் சேட்புலம் படர்ந்தான் அளிக்கென, இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்,” என மொழிந்து, “ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும்நின், நல்லிசை தரவந் திசினே” என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில், செல்வக் கடுங்கோவின் பகைகடிந்து விளங்கும் பண்பினை வியந்து “மாயிரு விசும்பின் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார், உறுமுரண் சிதைத்தநின் நோன்றாள் வாழ்த்திக் காண்கு வந்திசின்” என்று பாடுகின்றார். சேரமானது சிறப்பு அவன் தேவியின் கற்பு மாண்பால் கவின்மிகும் குறிப்பை, “காமர் கடவுளு மாளுங் கற்பின், சேணாறு நறுநுதல் சேயிழை கணவ” என்று சிறப்பிக்கின்றார். நேரிமலையில் காந்தட்பூ மலர்ந்திருப்ப, அது கடவுள் விரும்பும் பூவாதலின் அதனை மொய்த்தலாகாது எனக் கருதி நீங்குதற்குரிய வண்டு நீங்காது அதன்கட் படிந்து தேனுண்ட வழிச் சிறகு பறத்தற்கியலாது வருந்துமென இவர் கூறுவது “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” என வரும் திருமுரு காற்றுப்படை அடியை நினைப்பித்து இன்புறுத்துவதாகும். செல்வக்கடுங்கோவின் ஆட்சி நலத்தைக் கூற விரும்பிய கபிலர், வேந்தே நின்முன்னோர் இந் நாட்டைச் சிறப்புற ஆண்டனர் என்ப; அவர்கள் அவ்வாறு மேம்பட்ட தற்குக் காரணம் அவர்கள் நின்னைப் போல் அசைவில்லாத கொள்கையுடையராய் இருந்தமையே” என்பாராய், “கொற்ற வேந்தே, நின்போல் அசைவில் கொள்கைய ராகலின் அசையாது, ஆண்டோர் மன்ற இம் மண்கெழு ஞாலம், நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணிய, பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர, நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே” என்று பாராட்டியுள்ளார். முடிவில் அவனை வாழ்த்தலுற்ற கபிலர், “வேந்தே, வேள்வியால் கடவுள் அருந்தினை; கேள்வியால் உயர்நிலை யுலகத்து ஐயரை இன்புறுத்தினை; புதல்வரால் முதியரைப் பேணித் தொல்கடன் இறுத்தனை; ஆகவே, `அயிரை நெடுவரை போலத், தொலையா தாகநீ வாழும் நாளே’ என வாழ்த்துகின்றார். இவ்வாறே இவர் கூறும் இயற்கை நலங்களையும் பிறவற்றையும் கூறின் பெருகும். அரிசில் கிழார் : இச்சான்றோரது இயற்பெயர் தெரிந்திலது. அரிசில் என்பது சோழநாட்டு ஊர்களுள் ஒன்று. இவ்வூரருகே காவிரியினின்றும் பிரிந்து சென்ற ஒரு கிளை அரிசிலாறு என வழங்குவதாயிற்று. இச் சான்றோர் இவ்வூர்க்கு உரியராய்க் கிழார் என்ற சிறப்புப்பெற்று வாழ்ந்ததோடு நல்லிசைப்புலமை சிறந்து விளங்கினார்; ஆயினும், சான்றோர் இவர் இயற்பெயரை விடுத்து அரிசில்கிழார் என்ற சிறப்புப் பெயரையே பெரிதெடுத்து வழங்கினமையின், நாளடைவில் இயற்பெயர் மறைந்து போயிற்று. இப்போது அரிசில் என்ற ஊரும் மறைந்துபோயிற்று. போகவே, இச் சான்றோரது அரிசிலூரை, திருச்சி மாவட்டத்து அரியிலூ ராகவும், மைசூர்நாட்டு அரிசிக்கரையாகவும் கொள்ளலாமோ என ஆராய்ச்சியாளர் மயங்கலுற்றனர். பூஞ்சாற்றூர் என்பது சோழ நாட்டிற் சங்ககாலத்திருந்ததோரூர்; அஃது இடைக்காலச் சோழர் காலத்தும் இருந்தமை கல்வெட்டுக்களால் (A.R. 256 of 1926) தெரிகிறது; இப்போது அது மறைந்துவிட்டது. இவ்வாறே அரிசில்கிழாரது அரிசிலூரும் மறைந்தது எனக் கோடல் வேண்டும். அரிசில்கிழார் வையாவிக்கோப் பெரும்பேகனை யும், அதியமான் எழினியை யும் பாடியுள்ளார்; இந்நூலில் எட்டாம்பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையைச் சிறப்பித்துள்ளார்; இவ்விரும்பொறையையும் இவன் காலத்தே இவனைப் பகைத்துக் கெட்ட வேந்தர்களையும் சீர்தூக்கிப் பார்த்த அரிசில்கிழார், இரும்பொறைபால் அறிவும் ஆண்மையும் கைவண்மையும் மிக்குற்றிருப்பது காணுகின்றார்; பகைவர்பால் சூழ்ச்சித் தெளிவும், வினைத்திட்பமும் பொருள்படைகளாற் பெருமையும் இல்லாமையைத் தெரிந்தறி கின்றார். அதனால் அவர்கள் படைக்கோள் அஞ்சாமல், சூழாது துணிந்து போருடற்றி உயிர்க்கேடும் பொருட் கேடும் உண்டாக்குதலை யறிகின்றார்; போரில் இரும்பொறையின் ஆண்மைத்தீ மடங்கற் றீயினைப்போல் அடங்காது பெருகுதலைக் கண்டு, “மடங்கற்றீ யின் அனையை, சினங்கெழு குரிசில் நின் உடற்றிசி னோர்க்கே” என்று பாடு கின்றார். பகைவேந்தர் பகைமை நீங்கி இரும்பொறையின் சொல்வழி நில்லாராயின் நாடு எய்தும் கேடு நினைந்து, “பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய, வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து, நின்வழிப் படாராயின்.... பாடல் சான்ற வைப்பின், நாடுட னாடல் யாவண தவர்க்கே” என்று தெரிவிக்கின்றார்; பகைவர் அறிவுத் துறையில் தெளிவிலராதலை, இனி, இரும்பொறையே தெளிந்து வேண்டுவன செய்தல்வேண்டும் என்னும் கருத்தினராய், “உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி, அறிந்தனை யருளா யாயின், யாரிவண் நெடுந்தகை வாழு மோரே” யென இயம்புகின்றார்; போர்தொடுக்கும் பகைவேந்தரது அறியாமைக்கு இரங்கி, அவர்பாற் சென்று, பொறையனுடைய “வளனும் ஆண்மையும் கைவண் மையும், மாந்தர் அளவிறந்தன” எனப் பன்னாள் சென்று தெரிவிக்கின்றார்; அவ்வழியும் தேறாதாரை, வேறு பிற சான்றோரை விடுத்துத் தெரிவிக்கின்றார்; அவ்வழியும் அவர் தெளிகின்றிலர்; அதுகண்டு வருந்தி, “ஆங்கும் மதிமருளக் காண்குவல், யாங்குரைப் பேனென வருந்துவல் யானே” எனச் சொல்லி வருந்துகின்றனர். இரும்பொறையால் அவர்க்காகப் பரிந்து, “நின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து, நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின், பண்புநன் கறியார் மடம்பெரு மையின்” எனப் பேசுகின்றார்; இவ்வாறு அவன் வண்மைமிகுதி கண்டு பரிந்துபேசிய அரிசில்கிழார், அவனது அறிவுநலத்தை யுணர்ந்து, அதனால் அவன் செயல்களைப் பாராட்டி, “கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப” எனவும், “சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வற் பெற்றனை” யெனவும் புகழ்கின்றார்; கேள்வியாலும் ஓடியாப் படிவத்தாலும் இரும்பொறை யெய்திய உயர்வை, படிவந் தாங்கும் மனத்திட்பமில்லாத நரை மூதாளனைத் தெருட்டி நன்னெறிப்படுத்திய செயலில் வைத்து, “முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை, வண்மையும் மாண்பும் வளனு மெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென, வேறுபடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” என விளக்குகின்றார். இவ்வாறே இவர் இரும்பொறையின் படைப்பெருமை கூறலும், தகடூர் நூறியது கூறலும், செருவிலும் இரவலர் நடுவிலும் பிறவிடத்தும் இரும்பொறை யிருக்கும் இயல்புநிலை கூறலும், பிறவும் படிக்குந் தோறும் இன்பம் சுரக்கும் பண்பினவாகும். பெருங்குன்றூர்கிழார் : பெருங்குன்றூர் எனப் பெயர் கொண்ட வூர்கள் தமிழ்நாட்டிற் பல உள்ளன; அதனால் இச்சான்றோரது பெருங்குன்றூர் இன்ன நாட்டதென அறுதியிட்டுக் கூறுவது இயலாதாயிற்று. மலைபடுகடாம் பாடிய ஆசிரியரது பெருங்குன்றூர், இப்பெருங்குன்றூர் கிழாரது ஊரின் வேறுபட்ட தென்றற்குப் போலும், அவரூரை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் எனச் சான்றோர் தெரிந்து மொழிந்தனர். வையாவிக்கோப் பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப் பாடிய சான்றோருள் இவரும் ஒருவராவர். இவர் பாடினவாகப் பல பாட்டுக்கள் ஏனைத் தொகைநூல்களிலும் உள்ளன. இந்நூல் ஒன்பதாம் பத்தால் இவர் குடக்கோ இளஞ்சேர லிரும்பொறையைச் சிறப்பித்துள்ளார். இளஞ்சேர லிரும் பொறையை இவர் “நிலந்தரு திருவின் நெடியோய்” என்று கூறுவதனால், இரும்பொறை தன் நாட்டு மக்கட்கெனத் தன் நாட்டை விரிவுபடுத்தினனென்று அறியலாம். இவ்வேந்தன் போர்வேட்கை மிக்கு நாளும் போர் புரிவதிலும், அதன் வாயிலாக வந்து தொகும் பொருளைப் பாடிவருவோர்க்கு வரையாது வழங்குவதிலும் சிறந்தவன் : “பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வ” மும், “செற்றோர், கொலக்கொலக் குறையாத் தானை” யும் உடையவன்; களிறும் தேரும் புடைவர, தானை மறவர் படைதாங்கிவர, இவன் போர்க்குச் செல்லும் செலவு, பகைவேந்தர்க்கு இன்னா தாயினும், நடுநின்று காண்போர்க்கு இனிய காட்சியாம் என்பார், “கொல்களிறு மிடைந்த பல்தோற் றொழுதியொடு, நெடுந்தேர் நெடுங்கொடி அவிர்வரப் பொலிந்து, செலவுபெரிது இனிது நிற் காணு மோர்க்கே” எனப் புகழ்ந்து பாடுகின்றார்; நாளும் போரே விரும்பும் அவன் உள்ளத்தில், அருளும் அறமும் நன்கு நிலவி அப் போர் வேட்கையைச் சிறிது மாற்றுதல் வேண்டுமென ஒருகால் பெருங் குன்றூர்கிழார் விரும்பினார்; அதனால் அவன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்று, “வேறு புலத்திறுத்த வெல்போ ரண்ணல்” என எடுத்தோதி, அவன் நெஞ்சத்தில் அவனைப் பிரிந்து மனையுறையும் அவன் காதலியின் காதல் நினைவைத் தோற்றுவிக்கும் கருத்தினராய், அவளுடைய உருநலங்களை எடுத்துரைத்து, “பெருந்தகைக் கமர்ந்த மென்சொல் திருமுகத்து, மாணிழை யரிவை காணிய வொருநாள், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்” என்று இயம்புகின்றார். இவ்வகையால் வேந்தனது போர்வேட்கை மாறிக் காதலிபாற் செல்வது பெருங் குன்றூர்கிழாரது கருத்தை முற்றுவிக்கின்றது. ஒருகால் இவ்விளஞ்சேரல் இரும் பொறை சோழவேந்தன் ஒருவன்பால் மாறாச் சினங்கொண்டான். அதனால் தன் தானைத்தலைவரை நோக்கி, “உடனே விரைந்து சென்று பொருது சோழனைக் கைப்பற்றிக் கொணர்ந்து என் முன்னே நிறுத்துக” வெனப் பணித்தான். பணியேற்றுச் சென்ற சேரர்படைக்கு நிற்ற லாற்றாமல் சோழன் படைமறவர் தாம் ஏந்திய வேலைப் போர்க்களத்தே எறிந்துவிட்டோடினர்; அக்காலத்து, இளஞ்சேர லிரும்பொறை பணித்த பணியை, “ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், முத்தைத் தம்மென இட்ட வெள்வேல்” என்றும், கபிலரென்னும் புலவர்பெருமான் செல்வக்கடுங்கோ வாழி யாதனைப் பாடிச் சிறப்பித்தபோது அவன் அவர்க்கு வழங்கிய வூர்களினும், சோழர் படையிட்ட வெள்வேல் பல என்பார், “நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன், பெற்ற ஊரினும் பல” என்றும் குறித்துரைப்பது பெருங்குன்றூர்கிழாரது புலமை நலத்தைச் சிறப்பிக்கின்றது. பிறிதொருகால், அவர் இளஞ்சேர லிரும்பொறையை முதற்கண் கேள்வியுற்றபோது தம் மனத் தெழுந்த கருத்தும், நேரில் அவனைக் கண்டபோது எழுந்த கருத்தும் இவையென எடுத்தோதுவதும், பொறையனது மென்மைப் பண்பை விளக்கற்கு வானியாற்று நீரை எடுத்துக் காட்டுவதும், அவன் பெருவளங்கொண்டு வருநர்க்கு வரையாது வழங்குதலைத் தெரித்தற்குப் “புனல்மலி பேரியாற்றை” யெடுத் தோதுவதும், மகளிர் நடுவண் விளங்கும் வீற்றினை, “மாகஞ் சுடர மாவிசும் புகக்கும், ஞாயிறு போல விளங்குதி” யென்பதும், அவனை வாழ்த்துங்கால், “நின்னாள் திங்கள் அனைய வாக, திங்கள் யாண்டோ ரனைய வாக, யாண்டே ஊழி யனைய வாக வூழி, வெள்ள வரம்பின வாக” என வாழத்துவதும், “ஈர முடைமை யின் நீரோ ரனையை, அளப்பரு மையின் இருவிசும் பனையை, கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை” யெனப் பாராட்டுவதும் பிறவும் கற்பார்க்குக் கழிபேரின்பம் தரும் கட்டுரைநலம் வாய்ந் தனவாகும். பதிற்றுப்பத்தும் பதிகங்களும் (ஆசிரியர் : திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தார் ஆராய்ச்சி விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சிப் பகுதியில் விரிவுரையாளராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதிவந்தார்கள். ஒப்பற்ற சங்கநூற் பயிற்சியும் நுண்மாண் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பாராட்டப்பெறும் அவர்களது பேருரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்தபோது, அவ்வுரை விரைவில் வெளியிடப்பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித்துணர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன். அதற்கேற்ப, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றலைவரும் என்னுடைய நண்பருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் அந்நூலைப் பிள்ளையவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக் கொண்டு அதனை நிறை வேற்றினார்கள். இந்நிலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித் துறையில் அளவளாவிக் கொண்டும், புதிய புதிய உண்மைகளை ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக் கொண்டும் வரும் என் நண்பர் திரு. பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதிகங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறினார்கள். அதனை யேற்றுக் கொண்ட யான் அடியிற்காணும் கட்டுரையை எழுதியுள்ளேன். சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகைநூல்களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப்புடையனவாகும். அவை பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ்வேந்தர், குறுநில மன்னர், பிற தலைவர்கள், புலவர் பெரு மக்கள், நல்லிசைப் புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலையினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து அவை தமிழ் நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டெழுந்த அவ் விரு நூல்களுள் பதிற்றுப் பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகைநூல்; ஒவ்வொரு பத்தும், பத்துப்பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. இந் நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் இக் காலத்தில் கிடைக்காமையின் இதனை இன்னார் வேண்ட இன்ன புலவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால், அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப் பத்தின் பாட்டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும், அவன் அருஞ்செயல்கள் இன்ன என்பதும், அவனைப் பத்துப்பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும், அப் பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப்பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரைநடைப் பகுதியில் அப் பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன், ஆட்சிபுரிந்த யாண்டின் தொகையும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பத்தின் இறுதியிலுள்ள பதிகமும் உரைநடைப் பகுதியும் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒருதலை. பதிற்றுப்பத்தினைத் தொகுத்துதவிய புலவர் பெருந்தகை, பதிகங்களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருந் திருந்தால் இவ் வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமை களையும் பின்னுள்ளோர் அறிந்து கொள்வது இயலாததாகும். இனி, பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழமன்னர்கள்தம் கல்வெட்டுக்களின் தொடக் கத்தில் வரைந்துள்ள மெய்க்கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந் நிகழ்ச்சியும் அவ்வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி.பி. 993 இல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே, மெய்க் கீர்த்தியைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப் பெற்றிருந்தால் அவை கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டன வாதல் வேண்டும்; ஆனால் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் இறுதி யிலுள்ளன; கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ் வேறுபாட்டை நுணுகியாராயு மிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டு பண்ணியவை, பதிற்றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருது வதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் `காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன், என்று தன்னைக் கூறிக்கொள்வதை அவன் கல்வெட்டுக் களில் காணலாம். எனவே, கி.பி. 989 முதல் சேரநாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேர மன்னர்களின் வீரச்செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித் தன் கல்வெட்டுக் களில் மெய்க் கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதி யெய்து மாயின், கி.பி. பத்தாம் நுற்றாண்டிற்கு முன்னரே பதிகங்கள் இயற்றப் பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப்பட்டன வாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமை யால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம். பதிற்றுப்பத்தில் இக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங்கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும்பொறை மரபினர் ஆகிய இரு சேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ் விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் என்பது உணரற் பாலதாகும். அவ் வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக் கடுங்கோ வழியாதன், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, இளஞ்சேர லிரும்பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ்சேரலுடைய மகன் என்பது பதிகத்தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக்காத முதல் பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ்சேரலின்மீது பாடப்பட்ட தாயிருத்தல் வேண்டும். மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம் பத்தின் தலைவன் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல், அவன் புதல்வர் இருவர், அவன் பேரன்மார் மூவர் ஆகிய அறுவர் மீதும் பாடப்பெற்றவை எனலாம். ஏழாம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோவாழியாதன் என்பான், அந்துவஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எட்டாம் பத்தின் தலைவன் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை என்பவன், செல்வக்கடுங்கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என்போன், பெருஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எனவே, இறுதியிலுள்ள மூன்று பத்துக்களும் செல்வக் கடுங்கோவாழியாதன், அவன் புதல்வன், அவன் பேரன் ஆகிய மூவர் மீதும் பாடப்பட்டவை யாகும். இதுபோது கிடைக்காத இறுதிப் பத்து, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும் பொறையின்மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயல வில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற் குரிய தொன்றாகும். இனி, அச் சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்கட்கு வழங்கியுள்ள பரிசில்களை நோக்குவாம்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க்கண்ணனார்க்கு உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென்னாட்டு வருவாயுள் சில ஆண்டுகள் வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலங்களே பிரமதாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும், பட்ட விருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. செல்வக் கடுங்கோவாழியாதன், கபிலர்க்குச் சிறுபுறமாக நூறாயிரம் பொற்காசும், நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகளையும் வழங்கினான். அவ் வேந்தனுடைய பேரன் இளஞ்சேர லிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்கிழார், `உவலை கூராக் கவலையி னெஞ்சின் - நனவிற் பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற வூரினும் பலவே’ என்று பதிற்றுப்பத்தின் எண்பத்தைந்தாம் பாடலில் கூறியிருத்தலால், புலவர் பெருமானாகிய கபிலர் சேரநாட்டில் பிரமதேயமாகப் பெற்ற வூர்கள் பலவாதல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில் சேரநாட்டிலிருந்த இவ் விரு வேந்தர்களின் பெருங் கொடைத் திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பினதாகும். பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பாலைக் கௌதமனார் விரும்பியவாறு பத்துப் பெருவேள்விகள் செய்வித்து அப்புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச்செய்தான். இவ்வர சனுடைய தமையன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள், தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் `நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்’ என்ற அடிகளில் இந் நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ் வேந்தன் இறுதியில் துறவு பூண்டு காடுபோந்தனன் என்பர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான். இவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு அணி கலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் வழங்கினான். இவர்களுள் பின்னோன், மேல்கடற் கரையிலிருந்த தொண்டியைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பை ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது. கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக்குட்பட்ட உம்பற்காட்டு வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தனன். இவன், தன் புதல்வன் அப்புலவர் பெருமான்பால் கற்றுவல்லனாதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும். தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கினான். அப் புலவர்பிரான் அரியணையை ஏற்றுக் கொள்ளாமல், `நீ அரசு வீற்றிருந்தாளுக’ என்று கூறி, இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர். இளஞ்சேரலிரும்பொறை, பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத் தீராயிரம் பொற்காசும், அவர் அறியாமல் ஊரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210, 211 ஆம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப் பாடிய பெருங்குன்றூர்கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங்கொடாமல் அனுப்பிவிட்டான் என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச்செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய ஊரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கையினராக இவ் வேந்தன் அனுப்பியிருத்தல்வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரைநடைப் பகுதியால் உறுதியெய்துதல் அறியத்தக்கது. இதுகாறும் கூறியவாற்றால், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர்களின் வரையா வண்மையும், அன்னோர் புலவர்பெருமக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலனாதல் காண்க. இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள்விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலைநாட்டில் இக் காலத்தும் செவிவழிச் செய்திகயாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் குமட்டூர்க் கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறூர்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன்பால் பரணர் வருவாய் பெற்றதும் ஆகிய உம்பற்காடு, பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக் களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், சேரநாட்டி லுள்ளன வாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலானவற்றால் உணரக் கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, கண்ணன்நாடு, காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க்கண்ணனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் பெரு மக்களுக்கும் மலைநாட்டிற்கும் ஏற்பட்டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப் பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப் பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலுங் காணப்படும் பொருள்நயம் பொருந்திய அருந்தொடர்களா யிருத்தல் அறியத் தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ள சில அருந்தொடர்களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்கநூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்களுள் தொடித்தலை விழுத்தண்டினார், இரும்பிடர்த் தலையார், கழைதின் யானையார், குப்பைக்கோழியார், அணிலாடு முன்றிலார், கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறு நுரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத் தக்கவராவர். அவர்கள் பாடல்களில் காணப்படும் அருந்தொடர் கள் அன்னோரின் இயற்பெயர்களை மறக்கும்படி செய்து விட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள்வளமிக்க அருந் தொடர்களைக் கொண்ட பதிற்றுப் பத்துப் பாடல்களுக்கு அத் தொடர்களையே பெயர்களாக அமைத்திருப்பது, மிகப் பொருத்த முடையதேயாம். ஆனால் பிற்காலத்தில் அவ் வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங்களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களில் `வேளாவிக்கோமான் பதுமன் தேவி’ என்றும் ஆறாம் பதிகத்தில் `வேளாவிக்கோமான் தேவி’ என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமான் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத் தக்க தொன்றாகும். சோழமன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி எனவும், சேரன்மகள் சேரன் மாதேவி, வானவன் மாதேவி எனவும் வழங்கப்பெற்றனர் என்பது சோழ மன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும். தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப்பத்துப் பதிகங்களின் தொடராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாம். இதுகாறும் கூறியவாற்றால் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாசிரியர்க்குப் பெரிதும் பயன்படுவன வாகும் என்பதும், அப்பதிகங்களே சோழமன்னர்கள் தம் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் வரைவதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளே யாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்தற்குரிய சான்றுகள் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக்காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க. T.V. சதாசிவப் பண்டாரத்தார் ஆராய்ச்சி விரைவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும் கடவுள் வாழ்த்து எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார் எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள் காடமர்ந் தாடிய வாடல னீடிப் 5. புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரல னிரண்டுருவாய் ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி 10. மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே. திணை : பாடாண்டிணை துறை : கடவுள் வாழ்த்து வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு உரை : எரி எள்ளு அன்ன நிறத்தன் - நெருப்பை இகழ்ந்தாற் போன்ற சிவந்த நிறத்தை யுடையனாய்; விரி இணர் கொன்றையம் பைந்தார் அகலத்தன் - விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றைப் பூவால் தொடுக்கப்பட்ட பசிய மாலையணிந்த மார்பினை யுடையனாய்; பொன்றார் எயில் எரி யூட்டிய வில்லன் - கெடாத அவுணருடைய எயில் மூன்றும் வெந்தழியு மாறு தீக்கொளுவி யழித்த வில்லை யுடையனாய்; பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - செறிந்த இருளில் சுடுகொட்டை விரும்பி அவ்விடத்தே நின்று ஆடிய திருக்கூத்தை யுடையனாய்; நீடிய புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்ட முதுகின் புறத்தே வீழ்ந்து அதனை மறைத்த தாழ்ந்த சடையையுடையனாய் வெண் மணி குறங்கு அறைந்து ஆர்க்கும் விழவினன் - வெள்ளிய மணிகள் குறங்கின் (துடையின்) புடையே இயக்கப்பெற்று ஒலிக்கும் விழாவினையுடையனாய்; நுண்ணால் சிரந்தை இரட்டும் விரலன் - நுண்ணிய நூலாற் கட்டப்பட்ட துடியினை மாறி யொலிக்கும் விரலை யுடையனாய்; இரண்டு உருவாய் ஈரணி பெற்ற எழிற்றகையன் - ஆணும் பெண்ணுமாகிய இருவகை யுருவும் ஓருருவிற் பெற்று அவ்விருவகை யுருவுக் கேற்பத் தோடுங் குழையுமாகிய இருவகை யணிகளாற் பொலிந்த அழகை யுடையனாய்; ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - வளர்கின்ற இளம்பிறைத் திங்கள் தங்கிய நுதலையுடையனாய்; களங் கனி மாறேற்கும் பண்பின் மறு மிடற்றன் - நிறத்தால் களங்கனி தான் நிகரொவ்வாமையை யேற்றுக்கொள்ளும் கருநிறத்தால் கறையுற்ற திருக்கழுத்தை யுடையனாய்; தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - தெளிந்த ஒளியையுடைய மூவிலை வேலேந்திய ஒளிவிட்டு விட்டுத் திகழும் வேறு பல படைகளையுடைய காலக் கடவுளாகிய இறைவனுக்கு; உயர்க மாவலன் - மிக்குயர்க வென்றி என்றவாறு. நிறத்தனும், அகலத்தனும், வில்லனும், ஆடலனும், சடையனும், விழவினனும், விரலனும், எழிற்றகையனும், நுதலனும், மிடற்றனுமாகிய காலக் கடவுட்கு வலன் உயர்க; அதனால் எல்லா உயிர்களும் இன்புறுக என்பது கருத்து. சடையன், நுதலன், மிடற்றன், அகலத்தன், விரலன், வில்லன், நிறத்தன், எழிற்றகையன், ஆடலன், விழவினனாகிய காலக் கடவுள் என வரற்பாலது செய்யுளாகலின் முறைபிறழ்ந்து வந்தது. எரிபோலும் நிறமுடையனாயினும், தண்ணிய அருளொளி திகழ நிற்றலின் “எரி எள்ளு வன்ன நிறத்தன்” என்றார்; சான் றோரும், “கழுமல மமர் எரியுரு நிற இறைவன்” (ஞானசம்.) என்றார். “காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை” (புறம்.1) எனப் பிறாண்டுங் கூறினமையின், ஈண்டு, “கொன்றையம் பைந்தா ரகலத்தன்” என்றொழிந்தார். வேறு எவராலும் எவ்வகையாலும் அழியாதவராய்த் திரிந்தமையின், திரிபுரத் தவுணரைப் “பொன்றார்” என்றும், அவரது மூன்றாகிய மதிலை எரிமுகப் பேரம்பு கொண்டு எரித் தழித்தது விளங்க, “எயிலெரி யூட்டிய வில்லன்” என்றும் கூறினார்; “திரிபுரம் தீமடுத்” தென்றார் நல்லந்துவனார். “மரம்பயில் கடிமிளை” (புறம்.21)என்புழிப் போலப் பயிலுதல் செறிதல் மேற்று. இறைவன் இருளில் ஆடுவதை, “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என மணிவாசகனார் உரைத்தருளுவர். எல்லா உலகும் அழிந் தொடுங்குங்கால் இறைவ னொருவனே தனித்து நின்று ஆடுமிடம் சுடுகாடாதலின், “காடமர்ந் தாடிய ஆடலன்” என்றார். இக் குறிப்பே இறைவன் வெண்ணீறணியும் நிலையால் விளக்க முறுவதெனச் சான்றோர் கூறுப. புறம்புதை சடையன், தாழ்ந்த சடையன் என இயையும். வெண்மணி, முத்துமணி; பளிங்கு மணியுமாம். இனி, இருகுறங்கிலும் பக்கத்தே கட்டப் பெறும் வெள்ளிய இம்மணிகள் ஆடுந்தோறும் இனிய ஓசை செய்தலின் “வெண்மணி குறங்கறைந்தார்க்கும்” என்றார். வாராற் கட்டப்படாது நுண்ணிய நூல்களாற் கட்டப்படும் சிறப்புக் குறித்துத் துடியை “நுண்னூற் சிரந்தை” யெனச் சிறப்பித்தார். சிரற்பறவையின் சிறகு அசைவது போலத் துடி கொட்டு மிடத்து கைவிரல்களை அசைய விளங்கும் இசை நலம் தோன்றத் துடி, சிரந்தை யெனப்பட்டது. நிரல், நிரந்தென வருதல் போலச் சிரல் சிரந்தென நின்று சிரந்தை யெனப் பெயராயிற்று; பிறந்து சிறந்தவிடத்தைப் “பிறந்தை” (பரிபா. 11 உரை) என்பது போலச் சிரலினது செய்கை நிகழிடம் சிரந்தை யென அமைந்த தெனக் கொள்க. இரட்டுதல் - மாறி யொலித்தல். ஒருபாற் பெண்ணுருவா தலின், `இரண்டுரு வாய்’ என்றும், அதற்கேற்பத் தோடுங் குழையு மணிதலின், “ஈரணி பெற்ற எழிற்றகையன்” என்றும் கூறினார். ஈரணி பெற்ற எழிற்றகைமையைச் சேரமான்பெருமாள், “வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே, கலந்தான் வலநீ றிடஞ்சாந் தெரி வலம் பந்திடமென், பலந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழி யிடம், சலந்தாழ் சடைவலந் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே” (பொன்.65) என்பது காண்க. ஏர்தல் - எழுதல்; ஈண்டு வளர்தல் குறித்து நின்றது. பண்பு, நிறத்தின் மேற்று. சூலம் - மூவிலை வேல். உயிர்கள் செய்யும் வினைக்குரிய பயனைக் காலமறிந் தூட்டும் கடவுளாதல் விளங்கக் “காலக் கடவுள்” என்றார். தொல்காப்பியனார், “பால்வரை தெய்வம்” என்றதும் இக்கருத்தே பற்றியென அறிக. உயர்கமா: ‘மா’ : அசைநிலை. இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகியிருக்கும் தொகை நூலிற் காணப்பட்டிலது. ஆயினும், புறத்திணை யுரையில் நச்சினார்க்கினியரால் கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக்காட்டப் படும் இப்பாட்டு, பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாட்டாக இருக்கலாமென அறிஞர் பலரும் கருதுகின்றனர். ஆதலின் ஈண்டுக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டு உரை கூறப்பட்டது. மேலும், ஏனைத் தொகைநூல் பலவற்றிற்குக் கடவுள்வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர், பாரதம் பாடிய பெருந்தேவனாராதலால், இப்பாட்டும் அவர் பாடிய தாக இருக்கலாமெனப் பலரும் எண்ணுகின்றனர். இதனைப் பாடியவர் பதிற்றுப்பத்து ஆசிரியர்களுள் ஒருவராதலுங் கூடும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து 1 பதிகம் மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன் அமைவர லருவி யிமையம் விற்பொறித் 5. திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ அருலிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10 பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள் இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம், புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டு மலர் மார்பன் - இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில், உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத் தெட்டியாண்டு வீற்றிருந்தான். நூல் 1. புண்ணுமிழ் குருதி 1. வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ் 1 5. சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற விருங்கழி நீர்நிறம் 2 பெயர்ந்து 10. மனாலக் கலவை போலவரண் 3 கொன்று முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை பலர்மொசிந் தோம்பிய வலர்பூங் கடம்பின் 4 கடியுடை முழுமுத றுமிய வேஎய் 5 வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் 15. நாரரி நறவி னார மார்பிற் போரடு தானைச் 6 சேர லாத மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த நின் 20. பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங் குமரியொ டாயிடை 25. மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே 1 துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புண்ணுமிழ் குருதி திணை : பாடாண்டிணை. “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே” (தொல். பொ.20) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில், ஆசிரியர் நச்சினார்க்கினியர், பதிற்றுப்பத்தினுள், வஞ்சிப் பொருளும் வாகைப் பொருளும் வந்த பாடாண் பாட்டுக்கள் சில காட்டி, “இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண்டிணையே யாயிற்று” என்று கூறியிருக் கின்றனர். அதனாற்றான் இப் பாட்டுக்கட்குத் துறையும் வண்ணமும் தூக்கும் பெயரும் வகுத்தோர் திணை கூறிற்றிலர் போலும். அல்ல தூஉம், இறந்தொழிந்த முதற்பத்தின் முதற்பாட்டில் திணை காட்டிப் பின்னர் ஏனையிடங்களிற் கூறிக் கொள்ளுமாறு விடுத்தனர் போலும். துறை : செந்துறைப் பாடாண்பாட்டு; அஃதாவது, “வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇ” (பொ 82) என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர், “செந்துறை யாவது, விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்; இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்” என்பது காண்க. பாடாணென்பது, “பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையை யுணர்த்தினமையின், வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை” யென்பர் நச்சினார்க்கினியர். தூக்கு : செந்தூக்கு: அஃதாவது ஆசிரியப்பா. “ஈற்றயலடியே யாசிரிய மருங்கின், தோற்ற முச்சீர்த் தாகு மென்ப” என்றதற் கேற்ப, ஈண்டும் எருத்தடி முச்சீரினை யுடைமையின், இதுவும் ஆசிரியப்பாவாகிய செந்தூக்காயிற்று. “வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே” (பொ.383)என்ற நூற்பாவுரையில் ஆசிரியர் பேராசிரியர், செந்தூக்கென்பதற்கு “ஆசிரிய வடி” யென்றே பொருள் கூறி யுள்ளார். இந்நூற்குத் தூக்கு வகுத்தோர், வேற்றடி விரவாது பாட்டு முழுதும் அளவடியா னியன்றவழிச் செந்தூக்கென்றும் வஞ்சியடி முதலியன விரவிவரின் செந்தூக்கும் வஞ்சித்தூக்கு மென்றும் கூறுவர். தூக்கு என்பது செய்யுள் அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது; அஃதாவது பாவகையுள் இன்ன பாவெனத் துணித்துக் கூறுவதென வறிக. வண்ணம் : ஒழுகு வண்ணம். இது வண்ணவகை இருபதினுள் ஒன்று. இது, முடியாதது போன்று முடிந்து நிற்றலும், முடிந்தது போன்று முடியாது நிற்றலுமாகிய அகப்பாட்டுப் புறப்பாட்டு வண்ணங்கள் போலாது, ஒழுகிய வோசையாற் செல்வது. “ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும்” (தொ.பொ. 538) என ஆசிரியர் கூறுதல் காண்க. “வண்ண மென்பது சந்த வேறுபாடு” என்றும், “யாப்புப் பொருள் நோக்கியவாறுபோல, இது பொருள் நோக்காது ஓசையே கோடலானும், அடியிறந்து கோடலானும் யாப்பெனப் படாது” என்றும் பேராசிரியர் விளக்குதலால், இது செய்யுள் வகையு ளடங்கா தெனவும், எனவே, ஒரு செய்யுளில் ஒன்றே யன்றிப் பல வண்ணங்களும் வருமெனவு மறிக. பெயர் : இப்பாட்டிற்குப் பெயர் `புண்ணுமிழ் குருதி’ யென்பது. “அருநிறந் திறந்த” (அடி. 8) என முன் வந்த அடைச் சிறப்பானும், “மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவைபோல” எனப் பின் வந்த அடைச்சிறப்பானும் இதற்குப் `புண்ணுமிழ் குருதி’ யென்று பெயராயிற்றெனப் பழையவுரை காரர் இப் பெயர்க்குக் காரணம் காட்டுகின்றார். 1-6. வரைமருள் ................ களிறூர்ந் தாங்கு உரை : வரை மருள் புணரி - மலைபோல் எழும் அலைகள்: வான் பிசிர் உடைய - வெள்ளிய சிறுதுளிகளாக வுடையுமாறு; வளி பாய்ந்து அட்ட - காற்றுப் போந்து அலைக்கப்பட்ட: துளங்கு இரும் கமம் சூல் - ஓலிட்டலையும் நிறைந்த நீரும்; நளியிரும் பரப்பின் - மிக்க பெரிய இடப்பரப்புமுடைய; மாக் கடல் முன்னி - கரிய கடற்குள் சென்று; அணங்கு உடை அவுணர் - பிறரை வருத்துதலை யியல்பாகவுடைய அவுணர்கள்; ஏமம் புணர்க்கும் - அரணாக நின்று பாதுகாவலைச் செய்யும்; சூருடை முழுமுதல் தடிந்த - சூரவன்மாவினுடைய மாமரத்தினை வேருடன் வெட்டிக் குறைத்த; பேரிசை கடுஞ்சின விறல்வேள் - மிக்க புகழும் கடிய சினமும் விறலுமுடைய செவ்வேள்; களிறு ஊர்ந்தாங்கு - பிணிமுக மென்னும் யானை யிவர்ந்து சிறப் பயர்ந்தது போல என்றவாறு. “பிசிருடைய - பிசிராகவுடைய வென்றவா” றென்பர் பழைய வுரைகாரர். புணரி - அலை; “குடகடல், வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைக்கும்” (புறம்.31) என வருதல் காண்க: பிசிர் - சிறுதுளி. “வெண்டலைக் குரூஉப்பிசி ருடைய” (பதிற்.42) எனப் பிறாண்டும் வரும். “நளியிரும் பரப்பின் மாக்கடல்” எனக் கடலின் பெருமையும் பரப்பும் கூறுதலின், அத்தகைய கடல் துளங்குதற்கு ஏதுக் கூறுவார், “வளிபாய்ந்தட்ட” என்றும், அதன் விளைவாக “வரைமருள் புணரி வான்பிசிர் உடைய” என்றும் கூறினார். முகிற்கூட்டம் படிந்து முகத்தலால் குறைவதும், யாறுகளாலும், மழையாலும், புனல் வருதலால் மிகுவது மின்றி, எஞ்ஞான்றும் நிறைந்திருத்தலின்; “கமஞ்சூல் மாக்கடல்” என்றார். கமஞ்சூல் - நிறைந்த நீர்; சூல் போறலால் சூலெனப் பட்டதென்பர் பழைய வுரைகாரர். “மழைகொளக் குறையாது புனல்புக மிகாது, கரைபொரு திரங்கும் முந்நீர்” (மதுரை 424,5) என்று பிறரும் கூறுதல் காண்க. பிறர்க்குத் துன்பம் செய்தலையே யியல்பாகவுடையராதலின், “அணங்குடை யவுணர்” என்றார். சூரன் ஓம்பிய மாமரம், “அவுணர் தம்முடனே யெதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங் கொண்டிருந்து சாதித்தது” (முருகு.56-60 நச்) பற்றி, அதனை யவன் அவுணர்க்கு ஏமமாகப், புணர்த்து ஓம்பினா னென வறிக. சூருடை முழுமுதல் என்றது சூரவன்மாத் தனக்கரணாக வுடைய மாவின் முழுமுதல் என்றவாறு ; இனி, சூரவன்மாத் தான் ஒரு மாவாய் நின்றானென்று புராண முண்டாயின், சூரனாதற் றன்மையை யுடைய மாவின் முதலென்றவாறு - பழையவுரை. செவ்வேளது கடுஞ்சினம் அவுணரது மாவின் முழுமுதல் தடிதற்குத் துணையாய் அவுணரல்லாத ஏனை நல்லோர்க்கு நலம் பயந்தமையின், “பேரிசைக் கடுஞ்சின விறல்வேள்” என்று சிறப்பித்தார். “அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர், மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து, எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்” (முருகு.59-61) என நக்கீரனார் கூறுதல் காண்க. முருகன் கடற்குட் புகுந்து, அவுணர் சூழ வாழ்ந்த சூரவன்மாவை யழித்த செய்தியை நக்கீரனாரும், “பார்முதிர் பனிக்கடல் கலங்க வுள்புக்குச், சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு 45-46) என்று கூறுதலாலு மறிக. முருகவேள் பிணிமுக மென்னும் களிறூர்தலை முருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினிய ரெழுதிய வுரையாலு மறிக. மாக்கடல் முன்னி முழுமுதல் தடிந்த விறல்வேள் களிறூர்ந் தாங்கு, “யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த” என இயைத்துக் கொள்க. 7-16. செவ்வாய்........... சேரலாத உரை : செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப - கூரிய வாயினை யுடைய வாட்படையானது எதிர்த்துக் குறுக்கிட்டு நிற்கும் பகைவரை யறுக்க; அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின் - அவரது அரிய மார்பு பிளத்தலாலுண்டாகிய புண்ணினின் றொழுகும் உதிரத்தால்; இருங்கழி மணிநிற நீர் - பெரிய கழியிடத்து நீலமணி போலும் நீர்; நிறம் பெயர்ந்து - நிறம் மாறி; மனாலக் கலவை போல - குங்குமக் குழம்பினை நிகர்க்க; அரண் கொன்று - பகைவர் அரண்களை யழித்து; முரண்மிகு சிறப்பின் - வலி மிகுந்து விளங்கும் சிறப்பினால்; உயர்ந்த ஊக்கலை - உயர்ந்த மனவெழுச்சி யுடையையாய்; பலர் மொசிந்து ஓம்பிய - பகைவர் தாம் பலராய்க் கூடிநின்று காத்த; அலர் பூங்கடம்பின் - மலர்ந்த பூக்களையுடைய கடப்ப மரத்தினை; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - காவலமைந்த அடியோடு தடிந் தொழிக்குமாறு வீரரை யேவி; வென்று எறி முழங்கு பணை செய்த - போரை வென்று அறையும் முழங்கு கின்ற முரசினைச் செய்துகொண்ட; வெல் போர் - வெல்லும் போரினையும்; நார் அரி நறவின் - நாரால் வடிக்கப்பட்ட கள்ளினையும்; ஆர மார்பின் - ஆரமணிந்த மார்பினையும் ; போர் அடு தானை - அஞ்சாது நின்று அறப்போர் புரியும் தானையினையுமுடைய; சேரலாத - சேரலாதனே என்றவாறு. மணிநிற நீரும் புண்ணுமிழ் குருதியும் கலந்தவழி இங்குலிகக் கலவையை நிகர்க்கு மென்பதே சிறப்பாயினும், குருதி மேன் மேலும் பெருகிப் பாய்தல்கூட அதன் செந்நிறமே மிகுவது கருதியே பழைய வுரைகாரரும் மனால மென்றது, குங்குமம் என்றார். இங்குலிகத்தைக் கூறலும் குற்றமன்மையின், “சாதிங்குலிக மென்பாரு முளர்” என்றார். “அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி, இங்குலிக விறுவரைபோன் றினக்களி றிடை மிடைந்த, குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட்டுமிழ்குருதி, இங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே” (சீவக. 2239) என்று கூறினர் பிறரும். நிறம், மார்பு. வெலற்கருமை பற்றி வீரர் மார்பு “அருநிற” மெனப்பட்டது. “அரணாவது, மலையுங் காடும் நீரு மல்லாத அகநாட்டுட் செய்த அருமதில்; அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து, இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் எய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து, எழுவும் சீப்பு முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற் கோபுரமும் பிற வெந்திரங்களும் பொருந்த வியற்றப்பட்டதாம்” என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஒருகால் அழித்தவழி இவை மீட்டும் முன்னைய வலிபெறாத வகையில் அழித்தல் வேண்டுதலின், கொலைவாய்பாட்டால், “அரண் கொன்று” எனவும், அச்செய லால் வேந்தர்க்கு மறமும் மானமும் மிகுதலின் “முரண்மிகு சிறப்பின்” எனவும், தன்னைத் தாக்க வருவோர் ஊக்க மழிக்குங் கருத்தால் இயற்றப்பட்ட இவ்வரணைக் கொல்லுந்தோறும் வேந்தர்க்கு ஊக்கம் கிளர்ந்தெழுதலால், “உயர்ந்த வூக்கலை” யெனவும் கூறினார். “உறுபகை யூக்கமழிப்ப தரண்” (குறள் 744) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. ஊக்கம் - ஊக்கலென நின்றது. இவ் வூக்க மிகுதியால் கடல் கடந்து சென்று பலர் கூடிக் காத்த பகைவர் காவல் மரமாகிய கடம்பின் முழு முதல் தடிந்து வென்றெறி முரசு செய்து கொண்டது கூறலுறுகின்றா ராதலின், ஊக்கலை யென முற்றெச்சமாக மொழிந்தாரென வறிக. மொசிதல் - மொய்த்தல், உவமைக்கண் - செவ்வேள் மாக்கடல் முன்னி. மாமுதல் தடிந்தது கூறவே - நெடுஞ்சேரலாதன் முந்நீர்க்குட் சென்று கடம்பெறிந்தா னென்பது இனிது விளக்க மெய்திற்று. கடம்பெறிந்து முரசு செய்துகொண்டதனை, “சால்பெருந் தானைச் சேர லாதன், மால் கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு” (அகம் 127, 147) என மாமூலரும், “துளங்குபிசி ருடைய மாக்கடல் நீக்கிக், கடம்பறுத் தியற்றிய வியன்பணை” (பதிற். 17), “எங்கோ, இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேர லாதன்” (பதிற் 20) என இவ்வாசிரியரும் கூறியிருத்தல் காண்க. சேரலாதன் செய்த போர் பலவும் அவற்கு வெற்றியே பயந்தமை தோன்ற, “வெல் போர்” என்றும், அவன் ஆணைவழி நின்று அறப்போருடற்றும் இயல்பு குறித்து, “போரடு தானை” யென்றும் சிறப்பித்தார். 17-25. மார்புவலி...... கடந்தே உரை : கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி - முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள்; நரந்தம் பரந்து இலங்கு அருவியொடு கனவும் - பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும், அவை வளர்ந்திருக்கும் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற் கண்டு மகிழும்; ஆரியர் துவன்றிய - ஆரியர் நிறைந்து வாழும்; பேரிசை இமயம் தென்னம் குமரியொடு ஆயிடை - பெரிய புகழையுடைய இமயம் தெற்கின்கண் ணுள்ள குமரி யாகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாட்டிலுள்ள; மன் மீக்கூறுநர் - மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின்; மறம் தபக் கடந்து - மறம் கெட்டழியு மாறு வஞ்சியாது பொருது வென்று; மார்பு மலி பைந்தார் - மார்பிற் கிடக்கும் பசிய மாலை; ஓடையொடு விளங்கும் - ஓடை யளவும் தாழ்ந்து அதனோடு விளங்கும்; வலன் உயர் மருப்பின் - வெற்றியாலுயர்ந்த மருப்பினையுடைய; பழிதீர் யானை - குற்றமில்லாத யானையின்; பொலன் அணி யெருத்தம் மேல்கொண்டு பொலிந்த - பொன்னரிமாலை யணிந்த பிடரின் மேல் ஏறியிருந்து சிறக்கும்; நின் பலர் புகழ் செல்வம் - நின்னுடைய பலரும் புகழும் செல்வச் சிறப்பினை; இனிது கண்டிகும் - யாம் இனிது காண்கின்றோம், நீ வாழ்க என்றவாறு. கவரிமானும் நரந்தம் புல்லும் இமயமலைச்சாரலில் மிகுதியாக வுண்மையின் இவற்றை விதந்தோதினார். “நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுனை பருகி யயல, தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை யதுவே வான்றோ யிமயம்” (புறம் 132) என்று ஏணிச்சேரி முடமோசியாரும் கூறுவர். மேல்கொண்டு பொலிந்த நின் செல்வம் என முடிக்க. கவிர்ததை சிலம்பிற் றுஞ்சு மென்றது, ஆண்டுறையும் ஆரிய ராணையானே முருக்கென்னும் முள்ளுடை மரமும் “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா” (குறள் 969) என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக்கவிர் ததைந்த சிலம்பின்கண்ணே இனிதாக வுறங்குமென்றும், அருவியொடு நரந்தம் கனவு மென்றது, அவ்வாரிய ராணையானே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற் காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவிலும் காணும் என்றும், குமரியொடு என்னும் ஒடு எண்ணொடு; ஆயிடை யென்றது, இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடை என்றும், அவ்வென்னும் வகரவீற்றுப்பெயர் ஆயிடை யென முடிந்தது என்றும், மன்னென்றதனை அரசென்றது போல அஃறிணைப் பெயராக்கி, அம்மன்களில் மீக்கூறுமெனக் கொள்க என்றும் கூறுவர் பழையவுரைகாரர். இனி, நெடுஞ்சேரலாதன் இமயம்வரை தன் புகழைப் பரப்பி, ஆங்கே மறம் செருக்கிய ஆரிய மன்னரை வென்று மேம்பட்டானாதலின், “ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம், தென்னங் குமரியொடாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே” யென்றார். “ஆரிய ரலறத் தாக்கிப் பேரிசைத், தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்” (அகம் 366) என ஆசிரியர் பரணரும், “வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பெறிந் திமயத்து, முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து” (அகம் 127) என ஆசிரியர் மாமூலனாரும் கூறியிருத்தல் காண்க. இவ் விருவகை வெற்றிகளுள், இமயத்தில் விற்பொறித்து ஆரிய மன்னரை வென்று பெற்ற வெற்றி பழைமைத்தாயினமையின், அதனைக் குறிப்பா யுணர்த்தி, கடம்பர்பால் பெற்ற வெற்றியினை விரியக் கூறினாரென வறிக. அரசு என்பது உயர்திணைப் பொருண்மைக் கண் வந்த அஃறிணைச் சொல்லாதலின், அதுபோலவே, மன்னென் பதும் உயர்திணைப் பொருட்டாகிய “அஃறிணைப் பெயராக்கி” மீக்கூறு மென்பதனோடு முடிக்க வெனப் பழைய வுரைகாரர் கூறினர். “உயர்திணை மருங்கின் நிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்” (தொல். சொல். 56) என்பது விதி. மறந்தபக் கடந்து (21) முழங்கு பணை செய்த (14) என மாறிக் கூட்டுக. இங்ஙனம் மாறாது எருத்த மேல்கொண்டு (19) என்னும் வினையொடு மாறி முடிப்பாரு முளர் என்பது பழையவுரை. ஆரியமன்னரை மறந் தபக் கடந்த செய்திக்குப் பின்பே கடம்பெறிந்து முரசு செய்த செய்தி நிகழ்தலின், எவ்வழிக் கூட்டினும் பொருள் நலம் குன்றாமை யறிக. சேரலாத (16), கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு (6), யானை (18) யெருத்த மேல்கொண்டு பொலிந்த நின் (19) பலர்புகழ் செல்வம் கண்டிகும் (20) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற் சொல்லியது. அவன் வெற்றிச் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற் றென்பது பழையவுரை. செவ்வேள் கடல் புகுந்து சூருடை முழுமுதல் தடிந்து களிறூர்ந்தது போலச் சேரலாதனும் கடல்புகுந்து கடம்பு முதல் தடிந்து யானை யெருத்தம் மேல்கொண்டு பொலிந்ததும், ஆரிய மன்னர் மறந்தபக் கடந்ததும் கூறியது அவன் வெற்றிச் சிறப்பு; “நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகும்” என்பது செல்வச்சிறப்பு. 2. மறம்வீங்கு பல்புகழ் 1. வயவர் வீழ வாளரின் மயக்கி இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர் 5. அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான் 1 தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ் கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறும் 10. காண்டல் விருப்பொடு கமழுங் குளவி வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை 2 அண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங் கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கல் 15. தொல்பசி யுழந்த பழங்கண் வீழ எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தி னீர்ஞ்சிற கன்ன 20. நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய அமர்புமெய் யார்த்த சுற்றமொடு 25. நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மறம்வீங்கு பல்புகழ் 1-3. வயவர்........... வேந்தே உரை : வயவர் வீழ - வீரர்கள் தோற்று நிலத்தே விழுமாறு; வாள் அரில் மயக்கி - வாட்போரைச் செய்து; இடம் கவர் கடும்பின் - அவர்தம் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத் தாரையுடைய; அரசு தலை பனிப்ப - அரசர்கள் தலைநடுங்கி வணங்க; கடம்பு முதல் தடிந்த - அவர்தம் காவல்மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டி யழித்த; கடும்சின வேந்தே - மிக்க சினத்தையுடைய சேரவேந்தே என்றவாறு. வயவர், வலிமைப் பொருட்டாய உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர். எனவே, இவர் தமது வலியாற் பல போர்களைச் செய்து வெற்றி பெற்ற வீறுடைய ராதல் பெற்றாம். ஆகவே இத்தகையாருடன் போருடற்றுவதே ஆண்மைக்குச் சிறப்பாதல் பற்றி, “வயவர் வீழ வாளரில் மயக்கி” என எடுத்தோதினார். இருதிறத்து வீரரும் தம் வாட்படையால் தம் தொழிற்றிறந் தோன்றப் பொருதலின், அப்போரை “வாளரில்” என்றார்; “வாள்மயங்கு கடுந்தார்” (பதிற். 36) எனப் பிறரும் கூறுதல் காண்க. “இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப” (புறம் 8) எழுந்த தம் வேந்தர்க்குத் துணையாய் மண்ணசை யெஞ்சா மனமாண்புடைய ராதல் தோன்ற, “இடங்கவர் கடும்பின்” என்றும், தாம் கருதும் இடம் கவர்ந்தபின் னல்லது மடங்கா மறமுடைய அக் கடும்பு சூழ விருந்தும், நின் வலிமிகுதி யுணர்ந்து உளம் தளர்ந்து உடல் நடுங்கின ரென்பார், “அரசுதலை பனிப்ப” என்றும், அவர் அன்னராக, நீ அவர்தம் காவல் மரத்தைத் தடிந்தனை யென்பார், “கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே” என்றும் கூறினார். கடம்புமுதல் தடிந்த பின்பும் ஆறாது, முரசுசெய் தெறிந்த காலத்தே தணிந்தமையின், “கடுஞ்சின வேந்தே” என அவன் சினமிகுதியைச் சிறப்பித்தார். இடங்கவர் கடும்பு என்பதற்குத் “தனக்குரிய இடத்தைக் கவர்ந்த கடும்பு” என்று கூறுவாரு முளர்; சேரநாட்டினுட் கடம்பர் போந்து நாடு கவர்ந்து கொண்டதாக வரலாறு ஒன்றும் இன்மையின் அப்பொருள் சிறக்குமாறில்லை. 4-9. தாரணி......... இனிது உரை : தார் அணி எருத்தின் - பிடரிமயிர் பொருந்திய கழுத் தினையும்; வாரல் வள் உகிர் - நீண்ட கூரிய நகங்களையுமுடைய; அரிமான் வழங்கும் சாரல் - சிங்கவேறு உலாவும் மலைச்சரிவிலே; பிற மான் - பிற விலங்குகளின்; தோடு கொள் இன நிரை - இனமினமாய்த் தொகுதி கொண்டிருக்கும் கூட்டம்; நெஞ்சு அதிர்ந்தாங்கு - நெஞ்சு நடுக்குற்று ஒடுங்கி யுறைவது போல; முரசு முழங்கு நெடுநகர் - முரசுகள் முழங்கும் தம் அரண்மனைக் குள்ளேயிருக்கும்; மாதிரம் அரசு துயிலீயாது - நாற்றிசையிலும் வாழும் அரசர் நெஞ்சு துணுக்குற்றுக் கண்ணுறங்காமல்; பனிக்கும் - நடுங்கச்செய்யும்; நின் மறம் வீங்கு பல் புகழ் - நின் வீரத்தால் மிக்கு விரிந்து பலதுறையால் வரும் புகழ்; கேட்டற்கு இனிது - கேட்டற்கு எமக்கு இனிதாயிருந்தது என்றவாறு. தார் - பிடரி மயிர். கிளியினது கழுத்தின் பிடரிபோல் நீண்டு ஒழுகும் கீற்றுக்களையும் இவ்வியைபுற்றித் தார் என்ப; “செந்தார்ப் பசுங்கிளியார்” (சீவக. 1036) என்று தேவர் கூறுதல் காண்க. வாரல்: ‘அல்’, சாரியை. தோடு - தொகுதி. பிற விலங்குகள் தோடுகொள் இனநிரைய வாயினும் அரிமான் வழங்குவதுபற்றி நெஞ்சதிர்ந்து ஒடுங்கியுறைவதுபோல என்ற உவமத்தால் ஆரியரை யலறத் தாக்கியும் கடற்குட் சென்று கடம்பெறிந்தும் செருமேம்பட்டு வரும் சேரலாதனது புகழ் கேட்கும் நாற்றிசை வேந்தரும் அஞ்சி நடுங்கித் தத்தம் நெடுநகர்க்கண் கண்ணுறக்க மின்றிக் கையற்றுக் கிடந்தமை பெற்றாம். (ப-ரை) துயிலீயாது என்றது துயில் ஈயாது என்று கொண்டு மாதிரத் தரசர்- மண்ணசையால் சேரலாதன் எப்போது தம்மேல் வருவனோ என்றஞ்சித் தம் கண்கட்கு உறக்கம் நல்காது, திசைநோக்கி நெஞ்சு நடுங்கிக் கிடக்கச் செய்தது நின் புகழ் என வுரைப்பினுமாம். செல்லிட மெல்லாம் தன் மறம் துணையாகப் பெரும்புகழ் எய்தினமையின், “மறம் வீங்கு புகழ்” என்றும், அதுதானும் வெட்சி முதலாகப் பல்வேறு வகையாற் பெறப்படுதலின் “பல்புகழ்” என்றும், பல வாயினும் மறப்புகழ் என்ற ஒரு பயனையே விளைவித்தமையின், “இனிது” என ஒருமை முடிபு கொடுத்தும் கூறினார். (ப-ரை) கல்வி, செல்வம் முதலியவற்றா லெய்தும் பல்புகழ் மறமொன்றினாலே இச் சேரலாதன் பெறுதலின் “மறம் வீங்கு பல்புகழ்” என்று இதற்குப் பெயராயிற் றென்பார் பழையவுரை காரர். “அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழ் என்றும், இச் சிறப்பானே இதற்கு மறம்வீங்கு பல்புக ழென்று பெயராயிற்” றென்றும் கூறினார். 9-14. நின்செல்வம்......... ஒக்கல் உரை : நின் செல்வம் கேட்டொறும் - நின் செல்வத்தைக் கேள்விப் படுந்தோறும்; காண்டல் விருப்பொடு - நின்னைக் காண்டல் வேண்டுமென் றுந்திய விருப்பத்தால், வாடாப் பைம் மயிர் - உதிராத பசிய மயிரினையும்; இளைய - இளமைத் தன்மைக் கொத்த; ஆடு நடை - அசைந்த நடையினையுமுடைய; அண்ணல் மழகளிறு - பெருமைபொருந்திய இளங்களிற்றினை மொய்க்கும்; அரி ஞிமிறு - வண்டு ஞிமிறு முதலியவற்றை; கமழும் குளவி - மணங்கமழும் காட்டு மல்லிகையால்; ஓப்பும் - ஓட்டுகின்ற; கன்று புணர் பிடிய - கன்றோடு கூடிய பிடிகளையுடைய; குன்று பல நீந்தி வந்து - குன்றங்கள் பலவற்றைக் கடந்து வந்து; அவண் இறுத்த இரும் பே ரொக்கல் - தங்குதற்குரிய அவ்விடத்தே தங்கிய கரிய பெரிய என் சுற்றத்தார். செல்வத்தைப் புகழொடு கூட்டிப் பின் அதனையே வருவித்தலினும், அதனையே கேட்டொறும் என்பதற்கு முடிபாக வருவித்தல் சிறப்பாதல் பற்றி வேறு கொள்ளப் பட்டது. மறம்வீங்கு பல்புகழைக் கேட்குந்தோறும் செல்வமிகுதி தானே பெறப்படுதலின், அதனைக் கேட்டொறும் காண்டல் வேண்டு மென்ற விருப்பெழுந்து என் சுற்றத்தைத் துரப்பதாயிற் றென்றார். பகைப்புலத்து வென்று பெறும் செல்வம் இரவலர்க்கு வழங்கப்படுதலின், மறப்புகழ் கேட்ட இரவலர்க்குக் காண்டல் வேட்கை கிளர்ந்தெழுத லியல்பாதலின், “கேட்டொறும் காண்டல் விருப்பொடு” என்றார். களிற்றின் இளமைச் செவ்வி இனிது தோன்ற, மயிர் வாடாமையும் அசைநடையும் விதந்து, “வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை” யென்றும், காமச் செவ்வி தோன்ற, “அண்ணல் மழகளிறு” என்றும் கூறினார். இக்களிற்றின்பா லொழுகும் மதநீரை யுண்டற்கு மொய்க்கும் வண்டினத்தை, “அரிஞிமிறு” என்றார். அரி, வண்டு. “அரிக்கண மொலிக்கும்” (முருகு 76) என வருதல் காண்க. ஞிமிறு, வண்டின் வகை. அரிஞிமி றென்றே கொண்டு, கோடுகளையுடைய வண்டெனினு மமையும். இவ் வண்டினத்தை, காதலன்புடைய கன்றைத் தழீஇச் செல்லுமிடத்தும், களிற்றின்பா லுள்ள கழிகாதலால், குளவியைப் பிடுங்கி அதனை யோப்பு மென்பார், “கமழும் குளவி யரிஞிமி றோப்பும்” என்றார். குளவியாலென ஆலுருபு விகாரத்தாற் றோக்கது. குளவியையுடைய குன்றென்று கூறுதலு முண்டு. பாணர் முதலிய இரவலர் அரசன்பால் வந்தவிடத்து அவரனைவரும் ஒருபுறத்தே தங்க, அவருள் தலைவனாவான் முதற்கட் சென்று அரசன் செவ்வி யறியும் இயல்பு தோன்ற, “குன்றுபல நீந்தி வந்தவண் இறுத்த ஒக்கல்” என்றும், வறுமைத் துயராலும், வழிநடை வருத்தத்தாலும் மேனி வாடிக் கரிந்திருத்தல் பற்றியும், பலராதல் பற்றியும், “இரும்பே ரொக்கல் என்றும் கூறினார். 15-25. தொல்பசி....... மகிழ்வே உரை : தொல் பசி யுழந்த பழங்கண் வீழ - (என்னுடைய அவ்வொக்கல்) நெடுநாள்களாகப் பசியால் வருந்திய வருத்தம் கெட; எஃகு போழ்ந்து அறுத்த - அரிவாளாற் பிளந்து அறுக்கப்பட்ட; வால் நிணக் கொழுங்குறை - வெள்ளிதாகிய ஊனினது கொழுவிய இறைச்சியும் ; மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு - ஆட்டிறைச்சி பெய்து சமைத்த வெண்ணெல்லின் வெண்மையான சோறும்; நனையமை கள்ளின் தேறலொடு - மலரரும்பு பெய்து பக்குவம் செய்யப் பட்ட கட்டெளிவுடனே மாந்தி - உண்டு; நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகு அன்ன - மழையால் நனைந்த பருந்தினுடைய ஈரிய சிறகை யொப்பக் கிழிந்த; நிலம் தின் சிதாஅர் - மண் படிந்து மாசேறிய கந்தையாகிய உடையை; களைந்த பின்றை - நீக்கிய பின்பு; நூலாக் கலிங்கம் - நூற்கப்படாத நூலாகிய பட்டாலியன்ற ஆடை தந்து; வால் அரைக் கொளீஇ - வாலிதாக அரையில் உடுத்துக்கொண்டு; வணர் இருங் கதுப்பின் - (தம்மில்) கடை குழன்ற கூந்தலையும்; வாங்கு அமை மென்றோள் - வளைந்த மூங்கில்போலும் தோள்களையு முடைய; வசையில் மகளிர் - குற்றமில்லாத மகளிர்; வயங்கு இழை அணிய - விளங்குகின்ற அணிகளை அணிந்து கொள்ளவே; அமர்பு - நின்னை மிக விரும்பி; மெய் ஆர்த்த சுற்றமொடு - நின் மெய்யோடு ஆர்க்கப்பட்டாற்போற் சூழவிருக்கும் நின் சுற்றத்தாருடன்; நின் பெருங் கலி மகிழ்வு - வீற்றிருக்கும் நினது பெரிய திருவோலக்க வின்பம்; நுகர்தற்கு இனிது - கண்டு மகிழ்தற்கு இனிதாக வுளது என்றவாறு. என் ஒக்கலற்ற வறுமைத்துன்பம் பன்னெடு நாள்களுக்கு முன்னர்த் தோன்றி வருத்துவ தென்றற்கு, “தொல்பசி யுழந்த பழங்கண்” என்றும், அஃதினித் தோன்றாவாறு கெட்ட தென்பார் “வீழ” என்றும் அதன் வீழ்ச்சிநிலை கூறலுற்று, வானிணக் கொழுங்குறையும் வெண்சோறும் கட்டெளிவும் உண்டதும் கூறினார். மை யூன் - ஆட்டிறைச்சி. “மையூன் மொசித்த வொக்கல்” (புறம் 96) என்றார் பிறரும். சோற்றோடு ஊன் கலந்து அட்டுண்டல் பண்டை வழக்கு; “நெய்குய்யவூன வின்ற, பல சோற்றான் இன்சுவைய” (புறம். 382) என்று சான்றோர் கூறுதல் காண்க. நனையமை கள்ளின் தேறலாவது, தேனை மூங்கிலிடத்தே பெய்து, அதனுள் இஞ்சிப்பூ முதலிய வற்றை யிட்டுப் பக்குவம் செய்து தெளிவித்துக் கொள்ளும் கட்டெளிவு. “தேறுகள் நறவுண்டார்” (கலி. 147) என்றும், “நீடமை விளைந்த தேக்கட் டேறல்” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. மண்மாசு படிந்து கிழிந்து கந்தையாகிய வுடைக்கு நனைந்த பருந்தின் சிறகு நிகராதலை, “கூதிர்ப்பருந்தின் இருஞ்சிற கன்ன, பாறிய சிதாஅரேன்” (புறம். 150) என ஆசிரியர் வன்பரணரும் கூறுகின்றனர். பட்டு, கையால் நூற்கப்படாமை பற்றி, நூலாநூல் எனப்பட்டது. நூலாநூற் கலிங்கமென்பது நூலாக்கலிங்க மெனத் தொக்கு முடிதல் தமிழ்மரபன்மையின், அதன் பொருந்தாமை கண்டே பழைவுரைக்காரர், “நூலாநூற் கலிங்கமென்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினா னென்பாரு முளர்” என்றார். கலிங்க மெனவே, அது நூலானியறல் பெறப்படுத லாலும், நூற்றல் வினை, நூற்கே யுரிய தாகையாலும், சினைவினை ஒற்றுமைபற்றி முதன்மே னிற்றல் மரபாதலாலும், பழையவுரை காரர் கூறுவது சிறப்புடைத் தாத லறிக. ஒக்கலர் பொதுவாக வூணும் உடையும் கொண்டு இன்புற்றாராக, அவருள் மகளிர் அவற்றின்மேலும் ஒளி விளங்கும் இழை களைப் பெற்றுச் சிறந்தன ரென்பார், “மகளிர் வயங்கிழை யணிய” என்றும், அவற்றைப் பெறற் கமைந்த அவருடைய உருநலத்தை “வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோ” ளென்றும், கற்புநலத்தை, “வசையில் மகளிர்” என்றும் கூறினார். மாண் புடைய மகளிர்க்கு ஆடையும் அணியும் இன்றியமை யாதன வாதலின், “வயங்கிழை யணிய” எனப் பிரித்தோதினார். நின் மறம் வீங்கு பல்புகழ், கேட்டோருள் பகைவர்க்குப் பனிப்பும் நட்டோர்க்குக் களிப்பும் பயக்கும் பான்மைத்தாக, நின் பெருங்கலி மகிழ்வு, எத்திறத்தோர்க்கும் இன்பம் பயப்பதென்பார், “நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே” யென்றார். உண்ண உணவும் உடுக்க வுடையும் குறைவறப் பெறுதலின், “அமர்பு நுகர்தற் கினிது” என்றார். செல்வுழிச் செல்லும் மெய்ந்நிழல் போல, அரசன் மெய்யினைச் சூழ்வருதலின், “மெய்யார்த்த சுற்றமொடு” என்றார். சுற்றம், அமைச்சர், தானைத்தலைவர் முதலாயினார். அவர் வழிநின்று அரசு புரிதலின், ஓடு, உயர்பின் வழித்தாய ஒருவினையொடு. வேந்தே (3), நின் மறம் வீங்கு பல்புகழ் (8) கேட்டற்கினிது (9); பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிது (25) என வினைமுடிவு செய்க. புகழையும் செல்வத்தையும் பிரித்து நிறுத்தி, இனி தென்பதனைத் தனித்தனி கூட்டி முடிக்கும் கருத்தினராதலின், பழையவுரைகாரர், “வேந்தே நின் செல்வம் புகழ் கேட்டற் கினிது; நின் பெருங்கலி. மகிழ்வு நுகர்தற் கினிதென வினை முடிவு செய்க” வென்றார். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஒலக்க வினோதச் சிறப்பும் உடன்கூறியவா றாயிற்று” என்பது பழையவுரை. நின் மறம்வீங்கு பல்புகழ் என்றது வென்றிச் சிறப்பு; பெருங்கலி மகிழ்வு ஓலக்க வினோதச்சிறப்பு என அறிக. 3. பூத்த நெய்தல் 1. தொறுத்தவய 1 லாரல்பிறழ்நவும் ஏறுபொருதசெறு வுழாதுவித்துநவும் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும் 5. கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்நவும் ஒலிதெங்கி னிமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் 10. நாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் 15. கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க வூரிய2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து) உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே 20. காடே கடவுண் மேன புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் 3 குடிபுறந் தருநர் பார மோம்பி 25. அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து) மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பூத்த நெய்தல் 1-10. தொறுத்தவயல் ............ நாடு உரை : தொறுத்த வயல் - ஆனிரைகள் புல்மேயும் கொல்லைகள்; ஆரல் பிறழ்நவும் - ஆரல்மீன் பிறழ்ந்துலாவும் நீர் நிரம்பிய வயல்களாயினவும்; ஏறு பொருத செறு - பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம்; உழாது வித்துநவும் - ஏரான் உழுதலை வேண்டாது காலாற் குழப்பி விதை விதைக்கும் வயல்களாயினவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் - கரும்பு நிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தல்; இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவும் - பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டத்தைப் பிறவிடத்திற்கு மேய்ச்சல் வேண்டிச் செல்லாவாறு தடுக்கும் வயல்களாயினவும்; கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் - இளையமகளிர் கூடி ஒலிமிக்க துணங்கைக்கூத் தயரும் இடங்கள்; வளைதலை மூதா - வளைந்த தலையை யுடைய முதிய ஆக்கள்; ஆம்பல் ஆர்நவும் - அவர் தழையுடை யினின்றுதிர்ந்த ஆம்பலை மேயும் இடங்களாயினவும்; ஒலி தெங்கின் - தழைத்த தென்னைகளும்; இமிழ் மருதின் - புள்ளினம் கூடியொலிக்கும் மருதமரங்களும்; புனல் வாயிற் பூம்பொய்கை - கால் வாய்களையுடைய பூம்பொய்கைகளு முடைமையால்; பாடல் சான்ற பயம்கெழு வைப்பின் - புலவர் பாடும் புகழ்பெற்ற செல்வம் பொருந்திய வூர்களையுடைய நாடு - நாடானது என்றவாறு. புல்லும் தழையும் நிறைந்து ஆளிரைகட்கு மேய்கொல்லை யாக இருந்தவை, நெல் விளையும் நன்செய்களாயின வென்பார், “தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவு” மென்றும், கிழங்கு தேர்ந் துண்ணும் இயல்பினவாகலின், கேழற்பன்றிகள் தம்முடைய மருப்புக்களாற் கிண்டி நிலத்தை யுழுதுவிடுவதால் உழவர் ஏரான் உழுதல் வேண்டாவாயின வென்றற்கு, “ஏறு பொருத செறு உழாது வித்துநவும்” என்றும் கூறினார்; “கடுங்கட் கேழ லுழுத பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாது வித்திய பரூஉக்குரற் சிறுதினை” (புறம். 168) என வருதல் காண்க. “பன்றி புல்வாய் உழையே கவரி, என்றிவை நான்கு மேறெனற் குரிய” (தொல். பொரு. 593) என்றதனால் பன்றி ஏறெனப் பட்டது. இதனாற் காடழிந்து நாடாகிய முறை தெரிவித்தா ராயிற்று. இனி, ஏறு பொருத செறு உழாது வித்துந என்பதற்கு, ஏறுகள் தம்முட் பொருதமையினாலே வயல் சேறுபட்டு உழ வேண்டாதனவாயின வென்றுரைத்து, “பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின், காரேறு பொருத கண்ணகன் செறுவின், உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர், முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவின்” (பெரும்பாண். 206 - 12) என்பதனைக் காட்டலுமொன்று. கரும்புநிற்கும் பாத்தியில் நீர் இடையறா திருத்தலின், நெய்தல் உளதாயிற்று; அது தேன்மிக்குத் தன்னை மேயும் எருமை யினத்தை வேறிடம் செல்லாவாறு பிணித்தலின், “எருமையின் நிரைதடுக்குநவும்” என்றார்; “கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல், சுரும்புபசி களையும் பெரும்புன லூர” (ஐங். 65) எனப் பிறர் கூறுவது இக்கருத்தோ டொருபுடையொத்தல் காண்க. கரும்புநடு பாத்தியிற் கலித்த நெய்தல், தன்பால் நிறைந்துள்ள நறுவிய தேனின் சுவையொடு பொருந்திய இரையாகி, அருகு நிற்கும் கரும்பினை நாடாவாறு செய்யு முகத்தால் அக் கரும்பினைக் காக்கும் இயற்கையழகு விளங்கத் தெரிக்கும் சிறப்பினைப் பாராட்டி, இப்பாட்டினைப் `பூத்த நெய்தல்’ என்றனர். பழையவுரைக்காரரும், “இச்சிறப் பானே பூத்த நெய்தலென்று பெயராயிற்” றென்றார். இளையமகளிர் இடையில் ஆம்பற்றழையுடுத்து, கண்ணியும் மாலையும் அவ்வாம்பலே தொடுத்தணிந்து விளையாட்டயர்ப வாதலின், அவர் துணங்கையாடி விளையாடுமிடம் ஆம்பல் மிடைந்து கிடத்தலால், “துணங்கை யாடிய மருங்கின், வளைதலை மூதா ஆம்ப லார்நவும்” என்றார். கலிகெழு துணங்கை யென்றதனால் வாச்சிய வொலியேயன்றி, இளையமகளிர் விளையாட் டொலியும் பெற்றாம்; “அளிய தாமே சிறுவெள் ளாம்பல்..... இளைய மாகத் தழையா யினவே” (புறம். 248) என்பதும் இதனை வலியுறுத்தும். முதுமை யெய்தியவழி மக்களும் விலங்கும் தலைசாய்தல் இயல்பாதலின், “வளைதலை மூதா” என்றார். இதுகாறும், முல்லையும் குறிஞ்சியுமாயவை நல்வளம் நல்கும் மருதவயலாகிய மாண்புற்று விளங்கும் திறங்கூறிய ஆசிரியர், அதன்கண் நிற்கும் மரவகையும் நீர்நலமும் கூறலுற்று, “ஒலி தெங்கின் இமிழ் மருதின்” என்றும், “புனல்வாயிற் பூம் பொய்கை” யென்றும் கூறினார். இமிழ் மருதெனவே, இமிழ் தற்குரிய வினைமுதல் வருவிக்கப்பட்டது. பொய் கைக்கண்ணுள்ள நீர் சென்று வயல்களிற் பாய்ந்து பயன் விளைக்கும் வாயிலா தலின், கால்வாயைப் “புனல் வாயில்” என்றார். “வயலமர் கழனி வாயிற் பொய்கை” (புறம். 354) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வாறு நீர்வளம் மிகுந்து செல்வம் சிறத்தலால் புலவர் பாடும் புகழ் பெறுவதாயிற்றென்பார், “பாடல்சான்ற பயங்கெழு வைப்பின் நாடு” என்றார். வைப்பு - ஊர்கள். இவ்வண்ணம் கவின்மிக்கு விளங்கும் நாடு, சேரலாதனைப் பகைத்தமையா லெய்தும் அழிவினை இனிக் கூறுகின்றார். 10-19. நாடு கவினழிய........... பாழாயினவே உரை : நாடு கவின் அழிய - (மேற்கூறிய) நாடுகள் தம் அழகு கெடுமாறு; நாமம் தோற்றி - அந்நாட்டிடத்து உயிர்கட்கு அச்சத்தைத் தோற்றுவித்து; நீ சிவந்து இறுத்த - நீ வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகைவிட்டதனால்; கூற்று அடூஉ நின்ற யாக்கை போல - கூற்றுவனால் அடப்படும் யாக்கை புல்லெனத் தோன்றிப் பொலிவழிவது போல; நீர் அழி பாக்கம் - தம் நீர்மை யழிந்த பேரூர்கள்; விரிபூங் கரும்பின் கழனி - விரிந்த பூவையுடைய கரும்பு விளையுங் கழனிகள்; புல்லென - புல்லென்று தோன்ற; திரிகாய் விடத்தரொடு - முறுக்கியது போலும் காயையுடைய விடத்தேரை மரங்களுடன்; கார் உடை போகி - கரிய உடையென்னும் மரங்கள் நெடிது வளர்ந்தோங்க; கவைத்தலைப் பேய்மகள் கமுது ஊர்ந்து இயங்க - கவைத் தலைமயிரினையுடைய பேய்மகள் கழுதினை யூர்ந்து திரிய; ஊரிய நெருஞ்சி - பரந்த நெருஞ்சி முள் மிகுந்து; நீறாடு பறந்தலைத் தாது எரு மறுத்த - நீறுபட்ட போர்க்களத்தின் புழுதிபடிந்து பொலிவிழந்த; கலியழி மன்றத்து - மக்களும் மாவும் செய்யும் ஆரவாரம் இல்லையாயழிந்த ஊர் மன்றத்தின் கண்; ஊக்குநர் உள்ளம் அழிய - செல்லுமாறு கருதுவோர் மனவெழுச்சி அச்சத்தால் அழிய; உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் பாழாயின - கருதிச் செல்வோருடைய மனவலியைக் கெடுத்து உடல் நடுங்கச் செய்யும் பாழிடங்களாயின என்றவாறு. நாடுகவினழிய, தோற்றி, இறுத்த, நீரழிபாக்கம், கழனி, விடத்தரொடு காருடை போகி, பேய்மகள் இயங்க, நெருஞ்சி மன்றத்தின்கண் ஊக்குநர் உள்ளம் அழிய, உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் பாழாயின என வினைமுடிவு செய்க. உடை போக வென்பது போகியென நின்றது. நாடுகவினழிதற்குப் போர்வினை ஒரு காரணமாயினும், நாட்டு மக்கள் மனத்தே அச்சம் பிறப்பித்து, உள்ளத்திட்பத்தைச் சிதைத்தல் பெருங் காரணமாதலை விளக்குவார் “நாமம் தோற்றி” என்றார். இஃது இரண்டாம் உலகப்போரில், மேனாட்டுச் சருமானியர் (Germans) செய்த போர்ச் சூழ்ச்சிகளுள் தலையாயதாக விருந்ததை நாம் கண்டோம். சேரலாதன் பெருவெகுட்சியுடன் தன் பெரும் படை கொண்டு தங்கியதனால், நாட்டு மக்கள் அஞ்சி யலமந்து நீங்கினாராக, பேரூர்கள் காவலின்மையின் தம் செல்வநலமும் சிறப்பும் குன்றின வென்பார், “நீரழிபாக்க” மென்றும், நாள் செல்லச்செல்ல அவற்றின் பொலிவும் தேய்ந்து பாழாயிற்றென் பார், “கூற்றடூஉ நின்ற யாக்கை போல, விரிபூங் கரும்பின் கழனி புல்லென” என்றும் கூறினார். “நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார், போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூர” (கலி. 67) என்பதை யுட்கொண்டு, “நீரழிபாக்க மென்றது, வெள்ளத்தான் அழிவுபடி னல்லது பகைவரான் அழியாத பாக்கம் என்றவாறு” என்றும், கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீ சிவந்து எனக் கூட்டி, “இனிக் கூற்றுவனை யட்டுநின்ற யாக்கையையுடையா னொருவன் உளனாயினும், அவனைப் போல நீ சிவந்து என்றுரைப்பாரு முளர்” என்றும் கூறுவர் பழைய வுரைகாரர். இறுத்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு, விடத்தர், விடத்தேரை யென்னும் மரம். உடை - ஒருவகை முள்மரம். கருநிறத்ததாதலின் “காருடை” யெனப்பட்டது. போகுதல் - உயர்தல். பாழிடத்தே கழுதும் பேயும் வாழு மென்பவாதலின், “பேய்மகள் கழுதூர்ந் தியங்க” என்றார். பேய்களின் தலைமயிர் காய்ந்து செம்பட்டையாய் இருபிளவாய் நிமிர்ந்து நிற்றலின் “கவைத்தலைப் பேய்மகள்” என்றார். இன்றும் தலைமயிர் எண்ணெயும் நீரும் படாது நெடுநாள் விட்டவிடத்து, நுனி பிளவுபடுதல் கண்கூடு. ஆகவே, தலையென்பது ஆகுபெயராதல் காண்க. ஊர்தல் - பரத்தல் : “பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை’ (கலி. 99) என்றாற்போல. பறந்தலை - போர்க்களம். போர்வீரர் தம்முட் கலந்து போருடற்று மிடத்து, அக்களம் புழுதிமிக்கு நீறாதலின், “நீறாடு பறந்தலை” யென்றும் ஊர்ப்புறத்தே போர் நிகழ்தலின், ஆண்டெழும் புழுதி சென்று மன்றத்திற் படிந்து மாசு படுத்துதலால். “நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து” என்றும் கூறினார். தாது எரு - நுண்ணிய புழுதி. மறு - குற்றம்; அழுக்கு - மறுத்த, மறுவினை யுடைத்தாகிய என்றவாறு. மாவும் மாக்களும் வழங்குதலின்றிப் பாழ்பட்ட மன்றத்திற்குட் செல்ல ஒருவர் விரும்பின், அவர் உள்ளம் எழாவகை அச்சம் தோன்றி அதனை அழிவித்தலின், “உள்ளம் அழிய” என்றும், ஒருகால் துணிந்து செல்லக் கருதின், அவர்தம் மனத்திட்பம் சிதைந்து கெடுதலின், “ஊக்குநர் மிடல் தபுத்து” என்றும் கூறினார். தபுத்தல் வினை பனிக்கும் என்பதனோடு இயைய வேண்டிப் பழையவுரைகாரர் “தபுத் தென்பதனைத் தபுக்க வெனத் திரிக்க” என்றும், “மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழென்றது, அம்மன்றிலே போதற்கு உள்ளம் அழியச்செய்தே பின்னும் தம் கரும வேட்கையாற் போக மேற்கொண்ட வருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்கு தற்குக் காரணமாகிய பாழ் என்றவா” றென்றும் கூறுவர். 20-28. காடே.................... காத்தநாடே உரை : பெரும - பெருமானே; காடு கடவுள் மேன - காடுகள் முனிவர் விரும்பி வாழும் இடமாக; புறவு - முல்லைக் கொல்லைகள்; ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன - ஒள்ளிய இழையணிந்த மகளிரொடு மள்ளர்கள் உறையும் இடமாக; ஆறு - காடும் புறவுமல்லாத பெருவழியானது; அவ் வனைத்து - அவற்றைப் போலச் செல்வோர் இனிது செல்லும் இயல்பிற்றாக; அன்றியும் - இவையல்லாமலும்; ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந்தராஅ - நிலத்தே விளையும் எண்வகைக் கூலங்களையும் விற்கும் வணிகர் குடியைப் பேணி; குடிபுறந் தருநர் பாரம் ஒம்பி - குடிமக்களைப் பாதுகாக்கும் காணியாளர் சுற்றத்தைச் சிறப்புற வோம்பி; அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது - செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால்; மழை வேண்டுபுலத்து மாரி நிற்ப - வேண்டும் புலங்களில் வேண்டுங் காலத்து மழை பொழியாநிற்க; நீ காத்த நாடு - நீ காத்தோம்பும் நாடு; நோயொடு பசியிகந்து ஒரீஇ - நோயும் பசியும் இல்லையாக நீங்கி; பூத்தன்று - பல்வளமும் நிரம்பியுள்ளது என்றவாறு. உலகியல் நெறி நில்லாது கடவுள் நெறி நிற்றலின், முனிவர் கடவு ளெனப்பட்டனர்; “தொன்முது கடவுட் பின்னர் மேய” (மதுரை. 41) என்றாற்போல. அரசன் கோல் செவ்விதாயவழி மாதவர் நோன்பு இனிதியலுதல் பற்றி, “காடு கடவுள் மேன” என்றும், புறவங்களில் மள்ளர் மகளிரொடு இயங்கினும் அவர்தம் கற்பு கெடுவ தின்மையின், “புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன” என்றும் கூறினார். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி லின்றால்” (மணி. 22:208-9) என்று சாத்தனார் கூறுதல் காண்க. போரின்மையின் மள்ளர் புறவங்களில் தொழில் செய்கின்றனரென வறிக. புறவு களாவன : வரகு, சோளம், துவரை முதலிய கூலங்கள் விளையும் கொல்லைகள்; ஈண்டுச் சிறுசிறு காடுகளும் உண்டு; ஆங்கு இடையர் தம் ஆனிரைகளை மேய்ப்பர். காட்டிடத்தே முனிவரரும் புறவங்களில் மள்ளரும் இருத்தலின் வழிச் செல்வோர்க்கு ஆறலை கள்வராலும், பிற விலங்குகளாலும் இடையூ றின்மையின், அவ்வந்நிலத்து வழிச்செல்லும் பெரு வழிகள் இனியவாயின வென்பார், “ஆறே அவ்வனைத்து” என்றார். அவ்வென்னும் சுட்டு, காட்டையும் புறவையும் சுட்டி நின்றது. இனி பழையவுரைகாரர் “காடே கடவுள் மேன” என்றது. நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில் களான என்றவாறு. “புறவு மகளிரொடு மள்ளர் மேன” என்றது, சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகளான என்றவாறு. “ஆறே அவ்வனை”த் என்றும் தென்றது, காடும் புறவுமல்லாத பெரு வழிகளும் ஆறலை கள்வரும் பிற இடையூறுமின்றி முன் சொன்ன கடவுளும் மள்ளரும் உறையுமிடமாயின என்றவாறு. என்றும் கூறுவர்.“இனி, ஆறு முன்சொன்ன அவ்வனைத்தாவது மன்றி, ஆறலை கள்வரின்றிக் கூலம்பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் கூலம் பகர்வார் குடிகளைப் புறந்தந் தென்றும், குடிபுறந்தருநர் பாரத்தை ஓம்பி மழைவேண்டிய புலத்து மாரி நிற்ப வென்றும், கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் தொழிலாகவும் குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழையின் தொழிலாகவும், கூட்டியுரைப்பாரு முளர்” என்பது பழையவுரை. இந்நாட்டில் கூலம் விளைப்போரும், விற்போரும் பெரும் பாலராதலின், இவரை விதந்து “கூலம் பகர்நர்” என்றும் `குடிபுறந்தருநர்’ என்றும் அவரவர் தொழின்மேல் வைத்துரைத் தார். குடிபுறந்தருநர் - உழுவிப்போரும், குடிகள் உழுவோரு மாவர். குடிபுறந்தருவாரின் கீழ்க் குடிகள் மிகப் பலராய் அவரைச் சுற்றி வாழ்தலின், அச் சுற்றத்தைக் “குடிபுறந் தருநர் பாரம்” என்றார்; “பகடுபுறந் தருநர் பாரமோம்பி” (புறம் 35) என்று பிறரும் கூறுதல் காண்க. பண்டம் விளைப்போரும் அதனைப் பிற நாடுகட்குக் கொண்டுசென்று மாறுவோரும் நாட்டின் நல்வாழ்விற்குத் துணைவராதலைத் தேர்ந்து நடாத்தும் அரசியற் சிறப்பு இப் பாட்டால் வெளிப்படுமாறு காண்க. செவ்வாயும் வெள்ளியும் சேர்ந்தால் மழை பெய்யா தென்ப வாகலின், “அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது” என்றார். செங்கோல் கோடின், இக் கோள்கள் நிலைதிரியு மென்ப; திரியின் நோயும் பசியு முளவாமாதலின், “நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடு” என்றார். பெரும, ஆரல் பிறழ்நவும், உழாது வித்துநவும், எருமைநிரை தடுக்குநவும், ஆம்பலார்நவும், தெங்கும் மருதும், பொய்கையும், வைப்புமுடைய நாடுகள், நின்னைப் பகைத்தமையின், நீ சிவந்த நீரழிபாக்கம் கழனி புல்லென, காருடை போக, பேய்மகள் இயங்க, உள்ளுநர் பனிக்கும் பாழாயின; நீ காத்த நாடு காடு கடவுள்மேன வாக, புறவு மள்ளர்மேனவாக, ஆறு, அவ்வனைத் தாக, கூலம் பகர்நர் குடிபுறந்தராஅக், குடிபுறந்தருநர் பாரம் ஓம்பி, வெள்ளி யோடாவகைப் பசியிகந்து ஒரீஇப் பூத்தன்று என இயையும். கூற்றடூஉ நின்ற யாக்கை போல, நாடுகவி னழிய, நாமம் தோற்றி, நீ சிவந்திறுத்த நீரழிபாக்கங்கள், கழனி புல்லெனக் காருடை போக, கழுதூர்ந்தியங்க, பாழாயின; நீ காத்த நாட்டிற் காடு கடவுளால் மேவப்பட்டன; அந்நாட்டுப் புறவுகள் மள்ளரால் மேவப்பட்டன; அந்நாட்டு ஆறு அவ்வனைத் தாயிற்று; அன்றியும், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக், குடிபுறந் தருநர் பார மோம்பி, நீ காத்தநாடு மழைவேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசியிகந் தொருவப் பூத்தது எனக் கூட்டி வினை முடிவு செய்க வென்பர் பழையவுரைகாரர். இதன்கண் பகைவர் நாடழிவு கூறுமுகத்தால் சேரலாதனது வெற்றிச் சிறப்பும் தன்னாடு காத்தல் கூறுமாற்றால் அரசியற் சிறப்பும் கூறப்பட்டமையின், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும். தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறிய வாறாயிற்று” என்பர். “தொறுத்தவய லாரல்பிறழ்நவும், ஏறுபொருதசெறு வுழாது வித்துநவும்” என்பனவும், “ஒலிதெங்கி னிமிழ்மருதின், புனல் வாயிற் பூம்பொய்கை” யென்பனவுமாகிய நான்கும் வஞ்சியடி யும், ஏனைய அளவடியு மாதலின், இப்பாட்டு வஞ்சித்தூக்கும் செந்தூக்குமாயிற்று. “ஆசிரிய நடைத்தே வஞ்சி” (தொல். செய். 107) என்றலின், ஆசிரியப் பாட்டின்கண் வஞ்சித்தூக்கு வந்ததென வறிக. பிறாண்டும் இவ்வாறு வருவனவற்றை அமைத்துக் கொள்க. 4. சான்றோர் மெய்ம்மறை 1. நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு 1 புணர்ந்த விளக்கத் தனையை 5. போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை அக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப 10. கூற்றுவெகுண்டு வரினு மாற்று 2மாற் றலையே எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை 3 வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் 4 15. ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் 20. முன்றிணை முதல்வர் போல நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : சான்றோர் மெய்ம்மறை 1-4. நிலநீர்.................... விளக்கத்தனையை. உரை : நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் - நிலமும் நீரும் காற்றும் விசும்பும் என்ற நான்கினையும் போல; அளப்பரியை - நீ பெருமை யளந்துகாண்டற்கு அரியை யாவாய்; நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் - நாண்மீன்களும், கோள்களும், திங்களும், ஞாயிறும் மிக்க நெருப்பும் என்ற; ஐந்து ஒருங்கு புணர்ந்த - ஐந்தும் ஒருங்குகூடினாற் பிறக்கும்; விளக்கத்து அனையை - ஒளிபோலும் ஒளியுடையை யாவாய் என்றவாறு. அளத்தற்கரிய பெருமையுடையவாகலின், நில முதலிய வற்றைக் கூறினார்; “இருமுந்நீர்க் குட்டமும், வியன்ஞாலத் தகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றாங்கு, அவையளந் தறியினும் அளத்தற் கரியை” (புறம்.20) என்று பிறரும் கூறுதல் காண்க. இதன்கண்ணும் தீயொழிந்த ஏனைப் பூதங்கள் எண்ணப்பட்டிருப்பதும், “அளந்தறியினும்” என்றதனால் அளத்தற்கருமை பெறப்படுவதும் அறிக. தீ ஒளிப்பொருளாதலின், அதனை நாள் கோள் முதலியவற்றோடு கூட்டினார். பழையவுரைகாரர், “பூதங்கள் ஐந்தையு மெண்ணாது தீயை யொழித்தது, மேல்விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின்ற வற்றோடு கூட்ட வேண்டி யென்பது; ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகு கேது வென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஏழினும் சிறப்புப்பற்றி வேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிறென்னும் இரண்டும் நீக்கிநின்ற ஐந்தையும்” என்பது ஈண்டு நோக்கத்தக்கது. நிலம் நீரினும், நீர் நெருப்பினும், நெருப்பு வளியினும், வளி விசும்பினும் ஒடுங்குமாகலின், அம் முறையே பற்றி, “நிலநீர் வளியொடு வீசும்பு” என்றார். நாளும் கோளும் திங்களும் இரவுப்போதில் தோன்றித் தண்ணிய வொளி செய்வன வாகலினாலும், வெம்மையும் மிக்க வொளியு முடைய ஞாயிற்றை யடுத்திருத்தலானும், “ஞாயிறு கனையழல்” என்று சேரக் கூறினார். ஐந்துமென்ற வும்மை விகாரத்தால் தொக்கது. நாள் கோள் முதலிய ஐந்தும் ஒருங்கு கூடியவழிப் பிறக்கும் ஒளியைப்போலும் ஒளி யென்றது, சேரலாதனது நல்லொளி எல்லா நிலத்தினும் சென்று பரவி ஆட்சி புரிதலைக் குறித்து என்க. 5-7. போர்தலை.................. கைவண்மையையே. உரை : போர் - போர் செய்வதில்; தலை மிகுத்த ஈரைம்பதின்மரொடு - மிக்க மேம்பாடுற்ற நூற்றுவருடன், துப்புத் துறை போகிய - துணைவலியாகும் நெறியில் கடைபோகிய; துணிவுடை ஆண்மை - அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய; அக்குரன் அனைய - அக்குர னென்பானைப் போல; கை வண்மையை - வள்ளன்மை யுடையையாவாய் என்றவாறு. பாண்டவர் ஐவரொடு மலைந்த பேராண்மையையுடைய நூற்றுவரது மறச்சிறப்பை இவ்வாசிரியர், “போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு” என்றாற்போல, “நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம்பதின்மர்” (புறம்.2) என முரஞ்சியூர் முடிநாகனாரும் “மறந்தலைக்கொண்ட நூற்றுவர்” (கலி. 52) எனக் கபிலரும் கூறியுள்ளார். போர்த்திறம் பலவற்றின்கண்ணும் நூற்றுவர்க்குத் துணைவலியாந் துறையில் எஞ்சாது ஒழுகினமையின், “துப்புத்துறை போகிய” என்றும், துணிவில் வழி ஆண்மை சிறவாமையின், “துணிவுடை யாண்மை” யென்றும், வள்ளன்மையில் மிக்க மேம்பட்டோனாதலின், அதனை யுயர்த்தும் கூறினார். துப்பு, துணை; “துன்பத்துள் துப்பாயார்” (குறள். 106) என்புழிப்போல. “அக்குரன் பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களு ளொருவனுமாகிய அக்குரன்போலும்; கர்ணனென்று நினைத்தற்கு மிடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” யென்று டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையர் கூறுவர். 8-10. அமர்கடந்து................ ஆற்றலையே. உரை : அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் - போரில் வஞ்சனையின்றிப் பொருது சிறந்த தும்பைப் பகைவருடைய; போர் பீடு அழித்த - போரினையும் அவர்தம் பெருமை யினையும் அழித்தொழித்த; செருப்புகல் முன்ப - அத்தகைய போரை விரும்பும் வலியையுடையோய்; கூற்று வெகுண்டு வரினும் - கூற்றுவனே சினங்கொண்டு பொர வந்தாலும்; மாற்றும் ஆற்றலை - நீ அவனைப் பிறங்கிட் டோடச் செய்யும் ஆற்றலையுடையை யாவாய் என்றவாறு. வெட்சி, கரந்தை முதலாகப் பல்வகைப் போர்களைச் செந்நெறியிற் பொருது சிறந்தோரே, பகைவர் அதிரப் பொரும் தும்பைப்போர் செய்ய முற்படுபவாதலின், அவரைத் “தும்பைப் பகைவ” ரென்பவர். “அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்” என்று சிறப்பித்தார் அவர் செய்யும் போரும், அப்போரால் அவர் பெற்றிருக்கும் பீடும் உயர்ந்தனவாதலின். அவற்றை யழித்த பெரும்போரைச் செய்தலின், “தும்பைப் பகைவர் போர் பீடழித்த முன்ப” என்றும், அம்முன்பினால் மேலும் போர் விரும்பும் அவன் மறப்பண்பை, “செருப்புகல் முன்ப” என்றும் வியந்துரைத்தார். “போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம். 31) எனவும், “செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி” (முருகு. 67) எனவும் சான்றோர் போர் வேட்கையைப் புகழ்ந்தோதுதல் காண்க. முன்னிற்பார் இல்லாத முரணுடைமை பற்றி “முன்பன்” என்ப போலும். உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கிக் கூறுபடுக்கும் முறைமையும் அத் தொழிற்கென வேண்டும் வன்மையும் விரகும் இறப்ப வுடைமையின், கூற்றுவனை வேறல் எத்திறத் தோர்க்கும் கூடாத செயலாயினும், அவனையும் வென்று முதுகிட்டோடச் செய்யும் மொய்ம்புடையாயென்றது, சேரலாதனது ஒப்புயர் வற்ற ஆற்றலைப் புலப்படுத்தற்கென வறிக. “பகையெனிற் கூற்றம் வரினும் தொலையான்” (கலி. 43) எனக் கபிலர் கூறுதல் காண்க. மாற்றுதல், மார்பு காட்டி வருவானை முதுகு காட்டி யோடுமாறு செய்தல். 11-12 எழுமுடி............... சான்றோர் மெய்ம்மறை உரை : எழு முடி கெழீஇய - அரசர் எழுவரது முடிப் பொன்னாற் செய்யப்பட்ட ஆரமணிந்த; திருஞெமர் அகலத்து - திருமகள் விரும்பியுறையும் பரந்த மார்பினையும்; நோன்புரித் தடக்கை - வன்மை பொருந்திய பெரிய கையினையு முடைய; சான்றோர் மெய்ம்மறை - வீரர்கட்குக் கவசம் போல்பவனே என்றவாறு. முடி, முடிப்பொன்னாலியன்ற ஆரத்துக்காதலின் ஆகுபெயர். பகைவரை வென்று அவர் முடிப்பொன்னால் ஆரமும் வீரகண்டையும் பிறவும் செய்துகோடலும், காவல் மரத்தால் முரசு முதலியன செய்துகோடலும், அவர் நாட்டிற் பெற்ற பெருவளத்தைப் பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கலும் பண்டை வேந்தர் மரபு. சேரவேந்தர் பகையரசர் எழுவர் திருமுடிப் பொன்னால் ஆரம் செய்துகொண்ட செய்தியைக் காப்பியாற்றுக் காப்பியனார் “எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து....... தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்” (பதிற். 40) என்றும், பரணர், “எழுமுடி மார்பின் எய்திய சேரல்” (பதிற்.45) என்றும், இளங்கோவடிகள், எழுமுடி மார்பநீ ஏந்திய திகிரி” (சிலப். 28:166) என்றும் கூறுதல் காண்க. “எழுமுடி யென்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழு முடியானும் செய்ததோ ராரமாம்” என்பது பழையவுரை. “நீயே...... அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழல்தைஇய வல்லாளனை வயவேந்தே” (புறம். 40) என்பதனால், முடிப்பொன்னால் கழல் செய்துகோடலை யறியலாம். நோன்மை வன்மை - அறப்போர் புரியும் ஆண்மையும் தறுகண்மையுமுடைய வீரரை, சான்றோர் என்றல் தமிழ் மரபாதலின், அவர்கட்குத் தலைவனும் முன்னணி வீரனுமாதலின் “சான்றோர் மெய்ம்மறை” யென்றார். இச் சான்றோரைத் தாக்கும் பகைவர் இவனைத் தாக்கி வென்றாலல்லது அவர்பாற் சேறலாகாமை தோன்ற “மெய்ம்மறை” யெனச் சிறப்பித்தார். இவ்வியைபால் அவர்கட்கு மெய்ம்மறைக்கும் கவசம்போறலின் இவ்வாறு கூறியதென்க. “ஈண்டுச் சான்றோ ரென்றது போரில் அமைதியுடைய வீரரை; மெய்ம்மறை - மெய்புகு கருவி; மெய்ம்மறை யென்றது அச்சான்றோர்க்கு மெய்புகு கருவி போலப் போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின்; இச் சிறப்பு நோக்கி இதற்கு (இப்பாட்டிற்கு) `சான்றோர் மெய்ம் மறை’ என்று பெயராயிற்று” என்பர் பழைய வுரைகாரரும் என அறிக. 13 - 15. வானுறை............... கணவ உரை : வான் உறை மகளிர் இகல் கொள்ளும் - விண்ணுலகத்து மகளிர் தம் நலத்தால் தனக்கு நிகராதல் வேண்டித் தம்முள் முற்பட்டு இகலும்; நலன் - மெய்ந்நலமும்; வயங்கு இழை கரந்த - விளங்குகின்ற தலைக்கலனால் மறைப்புண்ட; வண்டு படு கதுப்பின் - வண்டு மொய்க்கும் கூந்தலும்; ஈர் ஓதி ஒடுங்கு கொடுங் குழை - மண்ணுதலால் நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய செவியிடத்தே பெய்த வளைந்த குழையும் உடையளாகிய தேவிக்கு; கணவ - கணவனே என்றவாறு. “மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத், தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் அணிகொளக், கொடுங்குழைக் கமர்த்த நோக்கின்” (பதிற். 81) என்று பிறரும் கூறுதல் காண்க. கதுப்பும் குழையும் எண்ணப்படுதற் கேற்ப, வானுறை மகளிர் இகல்கொள்ளும் நலனும் என மாறிக் கூட்டுக. கொள்ளும் நலன் - கொள்ளுதற் கேதுவாகிய நலன் என்க. அரசமாதேவியின் மெய்ந்நலம் கண்டு அதனோடு தம் நலமும் நிகராமென்பது கருதி வானவர் மகளிர் தம்மிற் கூடிப் பிணங்குதல் தோன்ற; `இகல் கொள்ளும்’ என்றார். மானுட மகளிரொடு தம்மை நிகர்ப்பித்துக் காணவேண்டாத வானுறை மகளிர், இதுபோது அச்செயலை மேற்கொண்டு பண்பில்லன செய்தலின், அதற்கேதுக் கூறுவாராய், “இகல்கொள்ளு” மென்றாரென வறிக. பண்பில்லன செய்தலாவது, “அழகிற்கு அவளை யொப்பேன் யானே யானே என்று தங்களில் மறுகொள்” ளுவது. இகலென்பது “பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்” (குறள். 851) என்று சான்றோர் கூறுதல் காண்க. தலைக்கூந்தலை மண்ணிச் சீரிய தலைக்கலன்களை யணிந்ததனால், கதுப்பு, வண்டு மூசுதலாலன்றித் தோன்றாமை யின், “வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்” என்றார். கூந்தலுக்கு நெய்யணிந்து நன்கு மண்ணுதல் செய்தவழி, அது செவியின் பின்னே ஒடுங்கிச் சுருண்டமைதலின், “ஈரோதி ஒடுங்கு கொடுங்குழை” யென்றார். தன் பின்னே ஓதியை ஒடுக்கி நிற்கும் செவி குழையால் விளக்கமுறுதலின், அதனையே விதந்து “கொடுங்குழை” யென்றார். ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை: அன்மொழித் தொகை. கதுப்பு மண்ணியவழிச் சுருண்டு செவியின் புறத்தே ஒடுங்குமாறு தோன்றப் பழையவுரைகாரர், “சுருள்” என்று உரைத்தவாறறிக. 16-17. பல்களிற்று............ வேந்தே உரை : பல்களிற்றுத் தொழுதியொடு - பலவாகிய யானைக் கூட்டத்தோடு; வெல் கொடி நுடங்கும் - வெல்லுகின்ற கொடி யுயர்ந்து அசையும்; படை ஏர் உழவ - படையினை ஏராகக் கொண்டு பகைவர் படையாகிய புலத்தை யுழுகின்ற உழவனே; பாடினி வேந்தே - பாண்மகளுக்கு வேண்டும் பரிசு வழங்கும் வேந்தனே என்றவாறு. தொழுதி - தொகுதி. “இழையணித் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு” (பதிற்.62) எனப் பிறரும் கூறுதல் காண்க. “வில் லேருழவ, சொல்லே ருழவ” என்பன போல, சேரலாதனைப் “படையே ருழவ” என்கின்றார். பாடினி பாடும் பாட்டுக்கு மகிழ்ந்து அவட்கு இழை முதலாயின வழங்கி. அவளுடைய இசைப் புலமையைச் சிறப்பித்து ஆதரித்தலின், “பாடினி வேந்தே” என்றார். 18-22. இலங்குமணி............... உடனே உரை : இலங்கு மணி மிடைந்த பொலங்கலம் - விளங்குகின்ற மணிகள் செறிந்த பொன்னாற் செய்யப்பட்ட கலங்களைப் பூண்டு; திகிரி - அரசியலாகிய ஆணையைச் செலுத்தி; கடல் அகவரைப் பின் - கடல் சூழ்ந்த நிலவுலகத்தே; இப்பொழில் முழுதாண்ட - இத் தமிழகத்தை முழுதும் ஆண்ட; நின் முன்திணை முதல்வர் போல - நின் குலத்து முன்னோர்களைப் போல; நின்று - நிலைபெற இருந்து; இவ் வுலகமொடு - இவ்வுலகின்கண்; கெடாஅ நல் இசை நிலைஇ - அழியாத நல்ல புகழை நிறுவி; உடனே - அதனுடனே; நீ தவாஅலியர் - நீ மெலிவின்றி வாழ்வாயாக என்றவாறு. பொலங்கலத்தையும் திகிரியையு முடையராய்ப் பொழில் முழுதாண்ட என்று இயைத்தலு மொன்று. திகிரி - அரசாணை. அஃது இனிதுருளுதற்கு இடமாய் நிழல் செய்தலின், கொற்றக் குடையைத் “திகிரி” யென்றா ரென்றும், திகிரி யென்றதற்கு ஏற்பச் சாதியடையாகப் பொலங்கலம் என்று விசேடித்தா ரென்றும் கூறுவர். உலக முழுதாண்ட நின் முன்னோர் தம் ஆட்சி நலத்தாலும் வெற்றிச் சிறப்பாலும் இறவாப் புகழ்படைத்து நிலைபெற்றதுபோல, நீயும் நிலைபெறுகவென வாழ்த்துவது கருத்தாகலின், “தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே” என்றார். புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு நல்கூர்தலும் இறத்தலும் உண்மையின், அவை யிலவாய் நிலைபெறுக என்ற தற்குத் “தவாஅலியரோ” என்றாரென வுணர்க. தவல்- வறுமை நோய் முதலியவற்றால் மெலிதல்; “தவலும் கெடலும் நணித்து” (குறள். 856) என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை காண்க. சான்றோர் மெய்ம்மறை, கொடுங்குழை கணவ, உழவ, வேந்தே, அளப்பரியை; விளக்கத்தனையை; கைவண்மையை; ஆற்றலை; அதனால் நீ முதல்வர் போல நல்லிசை நிலைஇ, தவாஅலியரோ என முடிக்க. “நிலமுதற் பூதம் நான்கும் போலப் பெருமை யளத்த லரியை; நாண்மீன் முதல் ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை; கைவண்மையால் அக்குரன் என்பவனை யொப்பை; அன்றி, முன்ப, நின் வலியிருக்கும் படி சொல்லின், கூற்று வெகுண்டு வரினும் அதனையும் மாற்றும் வலியுடையை; ஆதலால் சான்றோர் மெய்ம்மறை, கொடுங்குழை கணவ, படையே ருழவ, பாடினி வேந்தே, நின்குடி முன்திணை முதல்வர்போல நின்று நல்லிசையை நிலைப்பித்து இவ்வுலகத்தோடு கூடக் கெடா தொழிவாயாக என வினை முடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று” என்பர் பழைய வுரைகாரர். இப்பாட்டின்கண், ஒழுகுவண்ணமே யன்றிச் சொற்சீர் வண்ணமும் பயிலுதலின், அதனை விளக்கலுற்ற பழையவுரை, “அளப்பரி யையே யெனச் சொற்சீரடி வந்தமையாற் சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீ ரென்றது அளவடியிற் குறைந்தும் வஞ்சியோசையின்றி அகவலோசையாயும் வரும் அடியினை” என்று கூறுகின்றது. இதனை வாழ்த்தியலென்ப ரென்றும், பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டென்றும் ஆசிரியர் நச்சினார்க் கினியர், “வழங்கியன் மருங்கின்” (தொல். பொ. 82) என்ற நூற்பாவுரையிற் காட்டிக் கூறுவர். 5. நிரைய வெள்ளம் 1. யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் 5. பரந்தாடு கழங்கழி 1 மன்மருங் கறுப்பக் கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த 1 கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் 10. பீரிவர்பு பரந்த 2 நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின் அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் 15. பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச் 20. சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின் போர்வல் யானைச் சேர லாத நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென 25. உண்டுரை மாறிய மழலை நாவின் மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவ 3 லமர்ந்த சுற்றமோடு ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும் 30. பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர் மேயின ருறையும் பலர்புகழ் பண்பின் நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென் 35. மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற் புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி ஏம மாகிய சீர்கெழு விழவின் நெடியோ னன்ன நல்லிசை 40. ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிரைய வெள்ளம் உரை : மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி - மேகம் தவழ்ந்து தங்கும் மதிற்சுவர்களையும் மதிலை யடுத்த காவற் காடுகளையும் அழித்து; நிரை களிறு ஒழுகிய - வரிசையாகக் களிறுகள் செல்லும்; நிரைய வெள்ளம் - பகைவர்க்கு நிரயத் துன்பத்தைத் தரும் நின் படைவெள்ளமானது; பரந்து - நாற்றிசையும் பரந்து சென்று; ஆடு கழங்க அழிமன் - தாம் ஆடிக் காணும் கழங்கால் உள்ளமழிந்து அகநகர்க் கண்ணே மடிந்துறையும் மன்னவருடைய; மருங்கு அறுப்ப - சுற்றமாகிய தானையினைக் கெடுக்க; வேண்டு புலத்து யாண்டுதலைப் பெயர இறுத்து - நீ அழிக்கக் கருதிய நாட்டில் ஓர் யாண்டு கழியு மளவும் தங்கி; முனை எரி பரப்பிய - போர்முனைப்பட்ட ஊர்களில் தீப்பரவக் கொளுத்தி யழிக்க வெழுந்த; துன்னருஞ் சீற்றமொடு - நெருங்குதற்கரிய சினத்துடன்; கால் பொர - காற்று மோதுதலால்; கொடிவிடு குரூஉப் புகை பிசிர - கொடி விட்டெழும் நிறமமைந்த புகை பிசிராக வுடைந்து கெட; அழல் கவர் மருங்கின் - இட்ட தீப்பட்டு வெந்தழிந்த இடங்களைப் போல; உருவறக் கெடுத்து - அத் தீப் பரவாத விடங்களைத் தம் முருக்குலைய நீ அழித்தலால்; தொல் கவின் அழிந்த - பழைய அழகிய நிலை யழிந்த; கண்ணகன் வைப்பின் - இடமகன்ற ஊர்களையும் என்றவாறு. நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப, சீற்றமொடு நீ உருவறக் கெடுத்தலால் தொல்கவின் அழிந்த வைப்பின் எனக் கூட்டுக. பகைமேற் செல்வோர் போர்வினை செய்தற்குரிய காலமும் இடமும் வாய்ப்ப வெய்துங்காறும் இறுத்தல் வேண்டுதலாலும், அதற்குரிய காலமும் ஓர் யாண் டாதலாலும், “யாண்டுதலைப் பெயர வேண்டு புலத் திறுத்து” என்றார் (மதுரைக். 150). “வேந்துறு தொழிலே யாண்டினதகமே” (தொல். கற். 48) என்பது விதி, மேல்வந்தபோதே அடிபணியாது நெடிது தங்குமாறு இகல் விளைத்தமையால், அதற்கேதுவாய பகைவர் வலியழிப்பான் முனையிடத்தே எரியிட்டுக் கொளுத்தி மாறாச் சினம் சிறந்து விளங்குதலின், சேரலாதனை, “முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு” நின்றானென்றும், தீயிடாது பொருதழித்த இடங்கள் தீயால் அழிவுற்ற இடங்கள் போல உருக்குலைந் தழிந்தன என்பார், “அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்து” என்றும் கூறினார். மருங்கின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. செய்தெ னெச்சம் காரணப் பொருட்டு. மரம் ஈண்டுக் காவற்காடு; மதிற்கதவின் பின்னே கிடந்து அதற்கு வன்மைதரும் கணையமரம் எனினுமாம். களிறுகள் நிரைநிரையாகச் செல்லும் இயல்பினவாதலின், “நிரைகளி” றென்றும், அவை எண்ணிறந்தன வாய் வெள்ளம் போல் பரந்து சேறலின், “நிரைகளிறொழுகிய வெள்ளம்” என்றும், இவ் யானைப்படையொடு கூடிய பெருந்தானை பகைவர்க்கு நிரயத்துன்பம் போலும் துன்பத்தைச் செய்யும் இயல்பிற்றாதல் தோன்ற, “நிரைய வெள்ள”மென்றும் கூறினார். “விரவுக்கொடி யடுக்கத்து நிரையத் தானையொடு” (சிலப். 26 :37) எனச் சான்றோர் கூறுதல் காண்க. “நிரையவெள்ள மென்றது, பகைவர்க்கு நிரையபாலரைப்போலும் படைவெள்ள மென்ற வாறு; நிரைய மென்றது, நிரையத்து வாழ்வாரை; இச் சிறப்பானே இதற்கு (இப்பாட்டிற்கு) நிரையவெள்ளமென்று பெயராயிற்” றெனப் பழையவுரை கூறுகிறது. “யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” (இனி. 40 : 5) என்பவாகலின், யானைப்படை விசேடித்துரைக்கப்பட்டது. அரணிடத்தே இவற் கஞ்சி மடிந்துறையும் பகைமன்னர் வெற்றியெய்துவது காண்பாராய்க் கழங்கிட்டு நோக்கித் தமக்கு அது வாராமை யறிந்து ஊக்க மழிந்திருத்தல் தோன்ற, “ஆடுகழங் கழிமன்” என்றார். இனி, “எல்லா மெண்ணின் இடுகழங்கு தபுந” (பதிற். 32) என்பது கொண்டு, எண்ணிறந்த தானை வீரரையுடைய கூட்டம் என்றற்கு, “ஆடுகழங் கழிமன் மருங்கு” என்றா ரெனினுமாம். மருங்கு - சுற்றம்; ஈண்டுத் தானைவீரர் மேற்று. நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப இவன் தீயிட்டும் படை செலுத்தியும் அழித்த செய்தியை, “உருவறக் கெடுத்து” என்றார். காற்று மோதுதலால் தீயானது நாற்றிசையும் பரந்து எரிதலின், எழுகின்ற புகை எங்கணும் பரவி நுண்ணிய பிசிராய்க் கெட்டு மறைய, எரியுமிடம் கரிந்து உருவழிந்து சிதைதல் கூறியது, நாடு உருவறக் கெட்டழிதல் புலப்படுத்தற்கு. இஃது எரிபரந் தெடுத்தல். 9-15. வெண்பூ .............. வந்திசினே உரை : வெண்பூ வேளையொடு - வெள்ளிய பூக்களையுடைய வேளைக் கொடியும்; பைஞ்சுரை கலித்து - பசிய சுரைக்கொடியும் தழைத்து வளர; பீர் இவர்பு பரந்த - பீர்க்கங் கொடியேறிப் படர்ந்த; நீரறு நிறை முதல் - நீரற்ற உழுசால்களில்; முதல் சிதை சிவந்த காந்தள் - வேரோடு காய்ந்த சிவந்த காந்தள் நிறைந்து; புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் - புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும்; புல்லிலை மூதில் வைப்பின் - பனையோலை வேய்ந்த பாழ் வீடுகளே யுள்ள ஊர்களையுடைய; புலஞ் சிதை அரம்பின் - பகைப்புலங்களை யழிக்கும் நின் மறமாண்பினை; அறியாமையால் மறந்து - தம் அறியாமையாலே நினையாது; நின் துப்பெதிர்ந்த பகைவர் - நின் பகைமையை யேறட்டுக் கொண்ட பகைவருடைய; நாடும் கண்டு வந்திசின் - நாடுகளையும் பார்த்து இங்கே வந்தேன் என்றவாறு. புல்லிலை மூதில் வைப்பின் நாடு, நின் பகைவர் நாடு என இயைக்க. இவ்வைப்பின்கண் வாழ்வோர் நீங்கிவிட்டமையின், வீடுகள் பாழ்படுதலால், அவற்றில் வேளையும் சுரையும் தழைத்து வளர, கூரையில் பீர்க்கங்கொடி ஏறிப் படர்ந்திருக்க, உழுதொழித்த சால்களில் மழை பெய்தபோது முளைத்து மலர்ந்த காந்தள் நீரற்றமையின் வேரோடு புலர்ந்தமை கூறுவார், “நீரறு நிறைமுதல் சிதைசிவந்த காந்தள்” என்றார். வேளைப்பூ வெள்ளிதாதலை, “வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய, விரவுமொழிக் கட்டூர்” (பதிற். 60) என்று பிறரும் கூறுதல் காண்க. “நீரறு நிறைமுதற் சிவந்த காந்தள்” என்பதற்கு, நீர் அற்றுப் புலர்ந்தமையின், வளர்ச்சி நிறைந்த அடிமுதல் வாடிச் சிவந்த காந்தள் என்றுரைத்து, நிறைமுதல் உடையதாயினும், நீரறுதலால் தாங்காது சிதைந்தமை தோன்ற, “நிறைமுதற் சிவந்த காந்தள் முதல்சிதை மூதில்” என்றும், செங்காந்தள் என்னாது சிவந்த காந்தளென்றதனால், முதல் நிறைவுற்ற போழ்து சிவப்பேறிய காந்தளென்றும் கூறுதலுமுண்டு. ஆள் வழக்கற்ற இல்லங்களைக் கூறியவர், இனி, இம்மையில் இசையும், மறுமையிற் றுறக்க வின்பமும் விரும்பும் மறவர் போலாது ஆறலைத்தொழுகும் கொடுவினை மாக்களுறையும் இல்லங் களைக் கூறலுற்று, அவரைப் “புலவுவில் லுழவிற் புல்லாள்” என்றும், தீவினையாற் கொள்ளும்பொருள் வாழ்விற்கு நலம் பயவாமையால், அவர்தம் இல்லங்கள் இலம்பாட்டிற் குறை யுளாய்ப் புல்லிலை வேயப்பட்டுள்ளன வென்பார். “புல்லிலை வைப்பு” என்றும் கூறினார். பழையவுரைகாரர், “புல்லிலை வைப்பென்றது, புல்லிய இலைகளாலே வேயப்பட்ட ஊரென்றவாறு; இதனை நூலாக் கலிங்கம் (பதிற். 12) என்றது போலக் கொள்க” என்றும், “புல்லா ளென்றது, புல்லிய தொழிலையுடைய ஆறலை கள்வரை” யென்றும் கூறுவர். இவ் விருவகை வைப்பினையுமுடைய நாடு பகைவர் நாடென்றும், அவர் சேரலாதன் தன்னைப் பகைத்தார் புலங்களில் செய்யும் அரம்பின் திறத்தை யறியின் அடிவணங்கி அவன் அருள் நாடி யிருப்ப ரென்றற்கு, “அறியாமையால் மறந்து” என்றும், அம்மறதியின் பயனே இக் கேடென்றும் கூறினாராயிற்று. அரம்பு செய்தல் - துன்புறுத்தல், அரம்பு செய்தலைப் பகைவர்க் கேற்றி, அச்செயலால் “நின் துப்பு அறியாமையால் மறந்து எதிர்ந்து” கெட்டனர் என்றலு மொன்று, துப்பு - பகைமை; “துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்” (புறம் 380). 16-24. கடலவும்............. சேரலாத உரை : கடலவும் - கடல்படு பொருளும்; கல்லவும் - மலைபடு பொருளும்; யாற்றவும் - ஆறு பாயும் முல்லை மருதம் என்ற நிலங்களி லுண்டாகும் பொருளும்; பிறவும் - வேற நாட்டுப் பொருள்களுமாகிய; வளம் பல நிகழ்தரும் - வளம் பலவும் பெறப்படும்; நனந்தலை நன்னாட்டு - அகன்ற நல்ல நாட்டிலுள்ள; விழவு அறுபு அறியா - இடையறாத விழாக்களைச் செய்யும்; முழவு இமிழ் மூதூர் - முழவு முழங்கும் மூதூர்களில்; கொடி நிழற் பட்ட - பலவகைக் கொடிகளின் நிழலிலே யிருக்கும்; பொன்னுடை நியமத்து - பொன்னை மிகவுடைய கடை வீதிகளிலே; சீர்பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் - சிறப்புப் பெற்ற வெற்றியும் கொடையும் தெரிவிக்கும் முரசு முழங்கும்; வயவர் - வலிமிக்க வீரர்களுக்கு; வேந்தே - அரசே; பரிசிலர் வெறுக்கை - பரிசிலருடைய செல்வமா யுள்ளோனே; தார் அணிந்து - மாலை யணிந்து; எழிலிய - உயர்ந்த; தொடி சிதை மருப்பின் - பூண்கெட்ட கோட்டினை யுடைய; போர்வல் யானை - போரில் வல்ல யானைகளையுடைய; சேரலாத - நெடுஞ்சேரலாதனே என்றவாறு. நானிலத்துப் படும் பொருளனைத்தும் கூறுதலுற்றுக் கடலால் நெய்தலும், கல்லால் குறிஞ்சியும் கூறினமையின், எனை முல்லை மருதங்களை “யாற்றவும்” என்றதனாற் பெற வைத்தார். இவையனைத்தும் தன்னாட்டிற் படுவனவாதலின், வேறுநாடுகளி லிரந்து வந்திருப்பனவற்றைப் `பிறவும்’ என்ற தனால் தழீஇக் கொண்டார். கடவுளர்க்கு விழாவும் மக்கட்குத் திருமண விழாவும் இடையறாது நிகழ்தலின், “விழவறு பறியா முழவிமிழ் மூதூர்” என்றார். பொன்னும் பொருளும் நிறைந் திருத்தலால் “பொன்னுடை நியமத்து” என்றார்; “திருவீற் றிருந்த தீதுதீர் நியமம்” (முருகு 70) என்று நக்கீரனார் கூறுதல் காண்க. இக் கடைத் தெருக்களில் வெற்றி குறித்தும், விழாக் குறித்தும் கள், ஊன் முதலியன விற்பது குறித்தும் பல்வகைக் கொடிகள் எடுக்கப்படுவது உணர்த்துவார், “கொடி நிழற்பட்ட நியமத்து” என்றார். “ஓவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச், சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி, வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள, நாடோ றெடுத்த நலம்பெறு புனை கொடி, புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி, கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல, பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப், பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க” (மதுரைக். 365-74) என்று பிறரும் கூறுதல் காண்க. வீரர் தாம் போரிலே பெற்ற வெற்றியும், ஆங்குப் பெற்ற பொருளை இரவலர்க்கு வழங்கும் கொடையும் தெரிவிப்பாராய், முரசு முழக்குதலின், “சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின், வயவர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின் வயவ ரென்றது, வெற்றிப் புகழ் பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற முரசினையுடைய வீர ரென்றவாறு என்பர். கலிமகிழ் - வெற்றி குறித்துக் கொடை வழங்கும் ஆரவாரத்தோடு கூடிய பெருஞ் சிறப்பு; விழாவுமாம். வயவர்க்கு வேண்டுஞ் சிறப்பளித்து நன்கு ஓம்புவதனால், “வயவர் வேந்தே” என்றார். பரிசிலர்க்குப் பெருஞ் செல்வம் நல்கி இன்புறுத்துவது பற்றிப் “பரிசிலர் வெறுக்கை” யென்றார். எழில் - உயர்ச்சி, “அம்பகட் டெழிலிய செம் பொறி யாகத்து” (புறம் 68) என்புழிப்போல. ஈண்டு எழிலிய என்பதற்கு அழகிய என்று புறநானூற்றுரைகாரர் கூறுவர். உயர்ச்சி யென்பதே சிறப்புடைத்தாதலறிக. பகைவர் மதிற் கதவினைக் குத்திப் பிளத்தலால் பூண் சிதைந்து நுனி மழுகிய கோட்டினை யுடைமையால், “தொடிசிதை மருப்பின் போர்வல் யானை” என்றார்; “கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச், சிறுகண் யானை” (அகம். 24) என ஆவூர் மூலங்கிழார் ஓதுதல் காண்க. 24-34. நீவாழியர்................ மருண்டனென் உரை : வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை - பகை முதலிய வற்றால் மனம் துன்புறுவதின்றிப் பல நலமும் பெருகிய வாழ்க்கையினையும்; ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை - உண்மையே யுரைத்துப் புலனைந்து மடங்கிய ஒழுக்கத் தினையும்; நிரைய மொரீஇய வேட்கை - நிரய மெய்தா வகையில் நல்வினை செய்து நீங்கிய, அறவேட்கையுமுடைய; புரையோர் - பெரியோர்; செய்த - தாம் செய்யும் நல்லறங் களையே; மேவல் அமர்ந்த சுற்றமோடு - தாமும் விரும்பிச் செய்து சூழ்ந்திருக்கும் சுற்றத்தாருடன்; பதி பிழைப் பறியாது - வாழ்பதி யிழக்கும் குற்றமறியாது; துய்த்தல் எய்தி - நுகர்தற் குரியவற்றை இனிது நுகர்ந்து; மேயினர் உறையும் - விரும்பி வாழும்; பலர் புகழ் பண்பின் நீ - பலரும் புகழும் பண்பினையுடைய நீ; புறந்தருதலின் - காத்தோம்புதலால்; நோய் இகழ்ந்து ஒரீஇய - நோய் சிறிது மின்றாகிய; யாணர் நன்னாடும் - புது வருவாயினை யுடைய நல்ல நாட்டையும்; உண்டு உரை மாறிய மழலை நாவின் - உண்ணத் தகுவனவற்றை நிரம்ப வுண்டதனால் நாத்தடித்துக் குழறும் மழலை நாவினால்; மென்சொற் கலப் பையர் - மெல்லிய சொற்களை வழங்கும் யாழ் முதலிய கருவிகளைப் பெய்த பையினையுடைய இயவர்; இவ்வுலகத் தோர்க்கு நீ வாழியர் என - இவ்வுலகத்தோர் பொருட்டு நீ வாழ்வாயாக என்று; திருந்து தொடை வாழ்த்த - குற்றமில்லாத யாழிசைத்து வாழ்த்த; கண்டு - என் இரு கண்களாலும் கண்டு; மதி மருண்டனென் - மதிமயங்கிப் போயினேன் என்றவாறு. வாழ்க்கையினையும், கொள்கையினையும், வேட்கையினை யும் உடைய புரையோர், சுற்றமொடு, பதிபிழைப் பறியாது, துய்த்தல் எய்தி, உறையும் நாடு, நீ புறந்தருதலின், ஒரீஇய நன்னாடு என இயைத்து, இந் நாட்டினை, கலப் பையர் திருந்துதொடை வாழ்த்தக் கண்டு மதி மருண்டனென் என முடிக்க. இவன் வாழ்வு உயர்ந்தோர், தாழ்ந்தோர், செல்வர், இரவலர் முதலிய பலர்க்கும் நலம் பயத்தலின், “நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கு என” இயவர் வாழ்த்தின ரென வறிக. உண்ணத் தகுவனவாவன சோறும், ஊனும், கள்ளு முதலாயின. உண்டதன் பயனாக உரை குழறுதலின், ஈண்டுக் கள்ளே சிறப்பாகக் கொள்ளப் படும்; “உண்டு மகிழ் தட்ட மழலை நாவின், பழஞ் செருக்காளர் தழங்கு குரல்” (மதுரைக். 608 -9 ) என்று மாங்குடி மருதனார் கூறுதல் காண்க. கலப்பை - யாழ் முதலிய இசைக்கருவிகளை யிட்டுவைக்கும் பை; “காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை” (புறப். 206 ) என வருதல் காண்க; “வாங்குபு தகைத்த கலப்பையர்” (பதிற்.23) எனப் பிறாண்டும் வரும். தொடை - யாழ் நரம்பு; “தேஎந் தீந் தொடைச் சீறியாழ்ப் பாண” (புறம். 70) என்றாற்போல; ஈண்டு ஆகுபெயராய் யாழ்மேலதாயிற்று. பகை, பசி, பிணி முதலியவற்றால் வாழ்வோர் துன்புறுதலின்மை தோன்ற, “வெய்துற வறியாது நந்திய வாழ்க்கை” யென்றார். நந்துதல் - பெருகுதல். இனி, இவன் நாட்டில் பெரியோர் மேயினர் உறைதற்குக் காரணங் கூறுவார், அவர்தம் வாழ்க்கையும், கொள்கையும், வேட்கையும் விதந்தோதினார். வெய்துறவைப் பயக்கும் பகை யச்சம் வறுமைத் துன்பங்கள் எஞ்ஞான்றும் இலவாதலின், அவர் அவற்றை யறிந்தில ரென்பார், “வெய்துற வறியாது” என்றும், எனவே அவர் அறிந்தன இம்மையிற் புகழ் பயக்கும் மெய்ம்மையும், மறுமையில் இன்பம் பயக்கும் அறவுணர்வுமே யென்பார், “ஒன்று மொழிந் தடங்கிய கொள்கை” யென்றும், “நிரையம் ஒரீஇய வேட்கை” யென்றும் கூறினார். “பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள். 296) என்றதனால் ஒன்று மொழிதல் புகழ் பயக்குமாறறிக. அடங்கிய கொள்கை யுடையார்க்கு இவ்வுலக வின்பத்தில் வேட்கை யின்மையின், உயர்நிலை யுலகத்து இன்ப வேட்கையும் அதற்குரிய தவவொழுக்கமும் அவர்பால் உளவாதல் கண்டு, “அடங்கிய கொள்கை”யும் “நிரைய மொரீஇய வேட்கை”யும் உடையோ ரெனச் சிறப்பித்தார் என வறிக. கொள்கை, ஒழுக்கம்; “குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்” (குறள். 1019) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, அவர் வாழும் இயல்பு கூறுவார், அவருடைய சுற்றத்தார் அவர் செய்தவற்றையே தாமும் விரும்பிச் செய்து, அச் செய்வினைக்கண் சிறந்த இன்பமும் புகழும் எய்துதலால் அவர்பால் அயரா அன்புற்றுச் சூழ்ந்திருந்தன ரென்றற்கு, “செய்த மேவ லமர்ந்த சுற்றமொடு” என்றார். செய்தன என்பது செய்த என அன் பெறாது நின்றது. “செய்த மேவலமர்ந்த சுற்றமோ” டென்றது, “மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையரென் னினையரும்” என்பதையும், “ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை”யினையுடைய பெரியோ ரென்றது, “ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்” என்பதையும், “பதிபிழைப் பறியாது மேயின ருறையும்” என்றது, “வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்” (புறம் 191) என்பதையும் சுட்டிநிற்பது காண்க. பகை, பசி, பிணி முதலிய காரணங்களால் மக்கள் தாம் வாழும் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்குச் செல்லும் பண்பு, அவர் தம் நாட்டிற்குக் குற்றமாதலின், அத்தகைய குற்றம் இச் சேரலாத னோம்பும் நாட்டிடத்தே யின்மையின், “பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி” யென்றார். “பதியெழு வறியாப் பழங்குடி” (சிலப். 1 : 15) என்று அடிகளும் கூறுதல் காண்க. “நாடென்ப நாடா வளத்தன” என்றதும் இக்கருத்தே பற்றிய தென அறிக. பதியெழு வறியாமை உயர் குடிக்குப் பண்பாதலின், எழுதலைக் குற்றமாக்கி, ஈண்டு ஆசிரியர், “பதி பிழைப்பு” என்றாரென வறிக. பதியெழு வறியாமைக்கு ஏது, துய்ப்பன யாவையும் குறைவின்றிப் பெறுவதாதலின், அதனைத் “துய்த்த லெய்தி” யென்று குறித்தார். பகைவர் நாட்டையும் நின்னுடைய யாணர் நன்னாட்டையும் கண்ட போது, அப் பகைவர் அறியாமை காரணமாக அவர் நாடெய்திய சிறுமையும், நீ புறந்தருதலால் நோயிகந் தொரீஇய நின்னாட்டின் பெருமையும் ஆக்கமும் எனக்குப் பெருவியப்புப் பயந்தன வென்பார், “மதி மருண்டனென்” என்றார். இஃது இருநாட்டிடத்தும் கண்ட சிறுமை பெருமை பொருளாகப் பிறந்த மருட்கை. “புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு, மதிமை சாலா மருட்கை நான்கே” (தொல். மெய்ப். 7) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. “நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கெனத் திருந்துதொடை வாழ்த்த என முடித்து, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ வாழ்வாயாகவெனச் சொல்லித் திருந்திய நரப்புத் தொடையினையுடைய யாழொடு வாழ்த்தவென உரைக்க” என்றும், “செய்த மேவ லமர்ந்த சுற்ற மென்றது, சுற்றத் தலைவர் செய்த காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை மேவுதலையுடைய அத் தலைவரொடு மனம் பொருந்தின சுற்ற மென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். 35-40. மண்ணுடை................... நயந்தே உரை : மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு - மண்ணுலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு; எஞ்சாது ஈத்து - குறைவறக் கொடுத்து; கை தண்டா - கை யோய்தலில்லாத; கைகடுந்துப்பின் - கொடையும் மிக்க வன்மையு முடைமையால்; புரைவயின் புரைவயின் - அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த குடிகட்கு; பெரிய நல்கி - பெருமையுடைய பொருள்களை வழங்கி; ஏமமாகிய சீர்கெழு விழவின் - இன்பம் தரும் சிறப்போடு பொருந்திய விழாவினையுடைய; நெடியோன் அன்ன - திருமாலைப் போன்ற; நல் இசை ஒடியா - நல்ல புகழ் குன்றாத; மைந்த - வலியினையுடையோய்; நின் பண்பு பல நயந்து - நின்னுடைய பல்வகைப் பண்புகளையும் காண விரும்பியே மேற்கூறிய இரு நாடுகளையும் கண்டு மதிமருண்டேன் என்றவாறு. மண் - மண்ணணு. மண்ணணுச் செறிந்திருத்தல் பற்றி “மண்ணுடை ஞால” மென்பது வழக்கு; “மண்டிணிந்த நிலனும்” (புறம்.2) என்று பிறரும் கூறுப. எஞ்சாது ஈத்து என்பதற்குத் தனக்கென ஒன்றும் கருதாது அனைத்தையும் ஈத்து என்றும் கூறுவர். எப்போதும் ஈதல் தோன்றக் “கைதண்டா” என்றார். கை - கொடை. கைக்கு ஈகையே துப்பா மென்றற்குக் “கைகடுந் துப்பின்” என்றார். புரை -உயர் குடிகள். அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த குடிமக்களை ஓம்புதல் அரசியலாதலின்; அவரைப் பேணும் செயலை, “புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி” என்றார். “புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி யென்றது, உயர்ந்த தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்ட வற்றைக் கொடுத்து” என்றவாறு என்பர் பழைய வுரைகாரர். நெடியோன் - திருமால். “உரைசால் சிறப்பின் நெடியோன்” (சிலப். 22 : 60) என வருதல் காண்க. காத்தலால் உண்டாகும் புகழைக் கட்டுரைத்தலின், திருமாலை யுவமித்தார். “புகழொத் தீயே இகழுந ரடுநனை” (புறம். 56) என்று சான்றோர் கூறுதல் காண்க. பண்பு - அவரவர் தகுதியறிந் தொழுகும் நலம். முடிபு : நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன்; அதுவேயன்றி, வேந்தே, வெறுக்கை, சேரலாத, நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய நின் நாடும் கண்டு மதிமருண்டேன்; இவை யிரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும் காண நயந்த நயப்பாகும் என முடிபு செய்க. இதனால் அவன் வென்றிச்சிறப்பும் தன் நாடு காத்தற்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. 6. துயிலின் பாயல் 1. கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல் துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள் பூணா வையவி தூக்கிய மதில 5. நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லுபு ஏன மாகிய நுனைமுரி மருப்பின் கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே 10. ஆறிய கற்பி னடங்கிய சாயல் ஊடினு மினிய கூறு மின்னகை அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள் பாய லுய்யுமோ தோன்ற றாவின்று 15. திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் புரையோ ருண்கட் டுயிலின் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்நின் 20. சாயன் மார்பு நனியலைத் தன்றே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : துயிலின் பாயல் 1-9. கோடு............ வந்திசினே உரை : கோடு உறழ்ந்து எடுத்த - மலைச் சிகரங்களுடன் மாறாட எடுத்த; கொடுங்கண் இஞ்சி - வளைந்த இடத்தையுடைய புற மதிலும்; நாடுகண் டன்ன - அகன்ற நாட்டைக் கண்டாற் போலப் பேரிடத்தை அகத்தேகொண்ட; கணை துஞ்சு விலங்கல் - அம்புக்கட்டுகள் பொருந்திய இடைமதிலும்; துஞ்சு மரக்குழாம் துவன்றி - கதவிடத்தே கிடக்கும் கணைய மரங்கள் பல செறிந்து; புனிற்றுமகள் பூணா ஐயவி - இளமகள் அரைத்துப் பூசிக் கொள்ளும் ஐயவியாகிய வெண்சிறுகடுகல்லாத ஐயவித் துலா மரங்கள்; தூக்கிய மதில - நாலவிடப்பட்ட மதிலினுடைய; நல் எழில் நெடும் புதவு - நல்ல அழகிய நெடிய கதவுகளை; முருக்கிக் கொல்லுபு - தாக்கிச் சிதைத்தலால்; நுனை முரி மருப்பின் - நுனி முரிந்து குறுகிய மருப்பினை யுடையவாதலால்; ஏனம் ஆகிய - பன்றியைப் போலத் தோன்றும்; கடாஅம் வார்ந்து - மதம் சொரிந்து; கடும் சினம் பொத்தி - மிக்க சினம் கொண்டு; மரம் கொல் - கணையமரம் காவல்மரம் முதலியவற்றை யழிக்கும்; மழ களிறு முழங்கும் பாசறை - இளங் களிறுகள் பிளிறும் பாசறைக்கண்ணே; நீடினை யாகலின் - நெடிது தங்கி விட்டாயாதலின்; காண்கு வந்திசின் - நின்னைக் காண்டற்கு வந்தேன் என்றவாறு. கோடு - மலையுச்சி. மலையுள்ள விடத்தே அம்மலையே அரணாதலின், அஃதில்லாதவிடத்து மலையினும் உயர்ச்சியும் திண்மையு முடைத்தாக வெடுத்த அரண் என்றதற்கு, “கோடுறழ்ந் தெடுத்த” என்றும், அதுவும் வளைந்து வளைந்து கிடத்தலின், “கொடுங்கண் இஞ்சி” யென்றும் கூறினார். “கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி யென்றது, மலையுள்ள இடங்களிலே அம்மலைதானே மதிலாகவும், மலையில்லாத இடங்களில் மதிலே யரணாகவும்; இவ்வாறு மலையோடு மாறாட எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதில்” என்பர் பழையவுரைகாரர்; அவரே “கோடுபுரந்தெடுத்த என்பது பாடமாயின், மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்க எடுத்த” என்று உரைக்க என்பர். கொடுமை - வளைவு. கண் - இடம். உறழ்ந்து - உறழவெனத் திரிக்க. அடைமதிற்பட்டவழி அகத்தோர் யாதொரு குறைவு மின்றித் தமக்கு வேண்டுவன அமைத்தும் வளைத்தும் கோடற் குரிய இடப்பரப்பு வேண்டியிருத்தலின், “நாடு கண்டன்ன விலங்கல்” என்றும், புறத்தார் அணுகாவாறு தடுத்தற்குரியகணை முதலிய படையும், எந்திரப் பொறிகளும் பொருந்தியிருப்பது தோன்ற, “கணைதுஞ்சு விலங்கல்” என்றும், புறமதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலைபோல் நிற்றலின், “விலங்கல்” என்றும் கூறினார். ஆசிரியர் திருவள்ளுவனாரும், “சிறுகாப்பிற் பேரிடத்ததாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண்” என்றும், “கொளற் கரிதாய்க் கொண்டகூழ்த்தாகி அகத்தார், நிலைக்கெளிதாம் நீர தரண்” (குறள். 744 : 745) என்றும் கூறுதல் காண்க. “நாடுகண் டன்ன கணை துஞ்சு விலங்கல் என்றது, நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையால் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற அப்புக்கட்டுகள் தங்கும் மலைபோன்ற இடைமதில்” என்றும், “இனி, இடையில் விலங்க லென்றதனை மாற்றார் படையை விலங்குதலையுடைய என்றாக்கி முன்னின்ற கொடுங்கண் இஞ்சி என்ற தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதிலென்றதனை ஆகுபெயரான் ஊர்க்குப் பெயராக்கி நாடு கண்டன்ன வூர் என மாறியுரைப்பாருமுளர்” என்றும் பழைய வுரை கூறுகிறது. மாறியுரைப்பவர் கூற்றுப்படி, இப்பகுதி “கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி, கணைதுஞ்சு விலங்கல் துஞ்சு மரக்குழாம் துவன்றிப் புனிற்றுமகள் பூணா ஐயவி தூக்கிய, நாடுகண் டன்ன மதில் நல்லெழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுப” என வரும். இதன் பொருள் : மலையொடு மாறாட வெடுத்த வளைந்த இடத்தையுடைய மதில்களையும், கணைமரங்கொண்டு மாற்றாரை விலங்குதலையுடைய, அப்புக் கூடுகள் நிறைந்த, இளமகளிர் பூணாத ஐயவித்துலாம் தொங்க விடப்பட்ட மதிற்கதவுகளையுமுடைய, நாடுகண்டாற் போன்ற ஊர்களினுடைய நல்ல உயர்ந்த நெடிய கதவுகளைத் தாக்கி என வரும். மதில் வாயிற் கதவுகளில் சேர நாட்டியிருக்கும் கணைய மரங்களின் பன்மை குறித்து, “துஞ்சுமரக் குழாம்” என்றார். துவன்றி யென்னும் வினையெச்சம் மதில வென்புழி மதிலிடத்த வாகிய வென விரியும் ஆக்கவினை கொண்டது. புனிற்றுமகள் பூணா வையவி யென்றது, வெளிப்படையாய் ஐயவித் துலாம் என்னும் பொறியைக் குறித்துநின்றது. “ஐயவி யப்பிய நெய்யணி முச்சி” (மணி. 3 : 194) என்பவாகலின், “புனிற்றுமகள் பூணா வையவி” எனச் சிறப்பித்தார். உயரிய மணிகள் இழைத்த நெடிதுயர்ந்த கதவென்றற்கு “எழில் நெடும் புதவு” என்றார். இத்துணை வலிய கதவினைத் தாக்கி மருப்பு முரிதலின் வடிவின் சிறுமை, நீளம் முதலியவற்றால் பன்றி மருப்பை நிகர்த்தல் கொண்டு, “முருக்கிக் கொல்பு ஏனமாகிய” என்றும், அங்ஙன மாதற்கு நாணாது மறஞ் செருக்கிச் சினம் மிகுந்து ஏனை மரங்களைச் சாய்த்தலின், “மழகளிறு” என்றும், பெருங்குர லெடுத்துப் பிளிறுதலால் “முழங்கும்” என்றும் கூறினார், வினைமுடித்து இன்ன பருவத்தே வருவலெனத் தன் மனைவிக்குக் குறித்த பருவம் வந்தும் மீளலுறாது பாசறைக் கண்ணே தங்கினானா தலின், சேரலாதனை, “நீடினையாகலின் காண்கு வந்திசின்” என்றார். காண்கு: தன்மை வினைமுற்று; இது வந்திசி னென்னும் வினைகொண்டு முடிந்தது. “அவற்றுள், செய்கென் கிளவி வினையொடு முடியினும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்” (தொல். சொல். 204) என்பது விதி. 10-13. ஆறிய............... உரியள் உரை: ஆறிய கற்பின் - ஆறிய கற்பும்; அடங்கிய சாயல் - அடக்கம் பொருந்திய மென்மையும்; ஊடினும் இனிய கூறும் இன் நகை - ஊடற்காலத்தும் இன்மொழியே பகரும் இனிய முறுவலும்; அமிர்து பொதி துவர்வாய் - அமுதம் நிரம்பிய சிவந்த வாயும்; அமர்த்த நோக்கின் - அமர்த்த கண்களையும்; சுடர் நுதல் - ஒளிவிளங்கும் நெற்றியும்; அசை நடை - அசைந்த நடையு முடைய நின் தேவி; உள்ளலும் உரியள் - நின்னை நினைத்து வருந்துதற்கும் உரியளாவாள் என்றவாறு. சீறுதற்குரிய காரண முள்வழியும், சீற்றமுறாது தணிந் தொழுகும் அறக் கற்புடையா ளென்றற்கு, “ஆறிய கற்பின்” என்றும், மென்மையும் அடக்கத்தாற் சிறப்புறுதலின், “அடங்கிய சாயல்” என்றும் கூறினார். அடக்க மில்வழி, மென்மை, வன்மை யாகிச் சீறிய கற்பாதற் கேதுவாமென்பது கருத்து. ஊடற்காலத்தே புறத்தே வெம்மையும், அகத்தே தண்மையு முடைய சொற்களே மொழிபவாயினும், நின் தேவிபால் அக்காலத்தே அவை யிருபாலும் இனிமைப் பண்பே யுடையவாம் என்பார், “ஊடினும் இனிய கூறும் இன்னகை” யென்றார்;துவர்வாயின் வாலெயிறூறும் நீர் அமிழ்துபோல் மகிழ்செய்வ தென்றற்கு “அமிர்து பொதி துவர்வாய்” என்றும், உள்ளத்து வேட்கையை ஒளிப்பின்றிக் காட்டுவன வென்றற்கு, “அமர்த்த கண்” என்றும், அழிவில் கூட்டத்து அயரா வின்பம் செறிதலால் “சுடர் நுதல்” என்றும், பூங்கொம்பு நடைகற்பதென நடக்கும் அழகு தோன்ற, “அசை நடை” யென்றும் கூறினார். பிறரும், “அடங்கிய கொள்கை, ஆறிய கற்பின் தேறிய நல்லிசை, வண்டார் கூந்தல்” (பதிற். 90) என்பது காண்க. வினையே ஆடவர்க் குயிராதலின், அவர் அதன்மேற் சென்றவழி, அவர் தெளித்துச் சொல்லும் சொல்லைத் தேறியிருத்தல் தனக்குரிய அறமாயினும், அவரை நினைத்தற்குரிய குறிப்புத் தோன்றியவழி, “வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக” (ஐங். 6) என்றாற்போல வேட்ட நெஞ்சின ளாதலே யன்றி, குறித்த பருவம் கழியப் பிரிந்த கணவன் வாராது நீட்டிப்பின் வருந்துதற்கும் உரியளாம் என்னும் இயைபுபற்றி, “உள்ளலும் உரியள்” என்றார். இனி, “உள்ளலும் உரிய ளென்றது, யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்கவென்ற நின் னேவல் பூண்டு நின்னை யுள்ளாதிருத்தலேயன்றி, நீ குறித்த நாளுக்கு மேலே நீட்டித்தாயாதலின் நின்னை நினைத்து வருந்துதலும் உரியள்” என்பர் பழைய வுரைகாரர். 14-20. பாயல்......................யலைத்தன்றே உரை : தோன்றல் - சேரர் குடித் தோன்றலே; திரு மணி பொருத - அழகிய மணிகள் இழைத்த; தாவின்று திகழ் விடு பசும்பொன் பூண் - ஓட்டற்று விளங்கும் பசிய பொன்னாலாகிய பூணாரம்; வயங்கு கதிர் வயிரமொடு - விளங்குகின்ற கதிர்களையுடைய வயிர மணிகளுடன்; உறழ்ந்து - மாறுபட்டு; சுடர் வர -ஒளிவிட்டு விளங்க; புரையோர் - கற்பால் உயர்ந்த நின் காதல் மகளிர்; எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - அரசர் எழுவர் முடிப்பொன்னாற் செய்த ஆரமணிந்த திருவீற்றிருந்த விரிந்த நின் மார்பாகிய; உண்கண் துயில் இன் பாயல் - மைதீட்டிய கண்கள் உறங்குதற்கினிய பாயலிடத்தை; பாலும் - வினைமேற் செல்லுமிடத்து நீக்குதலும்; கொளாலும் - மனைவயின் இருக்குங்காலத்து நீக்காது கோடலும்; வல்லோய் -வல்லவனே; நின் சாயல் மார்பு - நினது மென்மை யமைந்த மார்பு; நனி அலைத்தன்று - அவளது உள்ளத்தை வருத்துகின்ற தாதலால்; பாயல் உய்யுமோ - படுக்கைக்கண் கிடந்து வருந்தும் வருத்தத் தினின்றும் உய்வாளோ; உய்யாளாதலால் விரைந்து சென்று அடைக என்றவாறு. தோன்றல் - வல்லோய், அசைநடை (13) நின் மார்பு நனியலைத் தன்றாதலால் பாயல் உய்யுமோ என இயைக்க. பசும்பொன் பூண் வயிரமொடு உறழ்ந்து சுடர் வர அகலத்துப் பெறும் பாயல் என இயையும், திருமணி - மாணிக்கமணி. திருமணியிழைத்த பொற்பூணும் வயிரமாலையும் ஒன்றுக் கொன்று மாறுபட்டு ஒளி செய்தலால், “திருமணி பொருத திகழ்விடு பசும்பொற் பூண்வயங்கு கதிர் வயிரமொடு உறழ்ந்து சுடர் வர” என்றார். இவ் வணிகளை மகளிர்க் கேற்றுக. இனிப் பழையவுரைக்காரர், மணியினையும், வயிரத்தையும் பொற் பூணுக்கே ஏற்றி, “தாவின்று திருமணிபொருத திகழ்விடு பசும்பொன் என்றது; வலியில்லையானபடியாலே அழகிய மணிகளோடு பொருத ஒளிவிடுகின்ற பசும்பொன் என்றவாறு” என்றும், “பூண் பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து சுடர்வர வெனக் கூட்டி, பூணான பசும்பொன் தன்னிடை யழுத்தின வயிரங் களொடு மாறுபட்டு விளங்க என வுரைக்க” என்றும் கூறுவர். ‘பசும்பொன்னைத் தாவின்று திகழ்விடு பசும்பொன்’ னெனச் சிறப்பித்தது, அது மணிகளோடு பொரத்தக்க ஒளி பெறுதற் கென்பார், “ஈண்டுத் தா வென்றது வலி; பொன்னுக்கு வலியாவது உரனுடைமை; இன்றென்பதனை இன்றாக வெனத் திரித்து இன்றாகையா லெனக் கொள்க என்றது; ஒளியை யுடைய பசும்பொன் என்றவாறு” என்பர் பழையவுரைக்காரர். பொன், தன் வலியிழந்து மென்மை யெய்தியவழி மெருகுற்று ஒளிபெருகும் நலம் உடைமை பற்றி, “ஓட்டற்ற ஒளியை யுடைய பொன்” னென்று உரைத்தா ரென வறிக. ஓட்டற்ற பொன் நன்றாதலை, “தாவில் நன்பொன்” (அகம். 212) என்று சான்றோர் கூறுதல் காண்க. உரிமை மகளிர் பலராதல்பற்றி, “புரையோர்” எனப் பன்மை யாற் கூறினார். புரை - உயர்ச்சி; அஃதாவது கற்பாலுள தாகும் சிறப்பு. ஞெமர்தல் - விரிதல். “இலம்படு புலவர் ஏற்றகை ஞெமரப் பொலஞ் சொரி வழுதி” (பரி. 10) என்று சான்றோர் கூறுதல் காண்க. காமக்கலப்பிற் களிக்கும் மகளிர், தம் கணவனது விரிந்த மார்பின்கட் கிடந்து உறங்குவதைப் பெரிதும் விரும்புவா ராதலின், “அகலத்து உண்கண் துயிலின் பாயல்” என்றார். “நாடன் மலர்ந்த மார்பிற் பாயல், துஞ்சிய வெய்யள்” (ஐங். 205) என்று சான்றோர் கூறுமாற்றா லறிக. வினைமேற் செல்லுமிடத்து மகளிரை யுடன்கொண்டு சேறல் மரபன்மையின், அக் காலையில் அவர்பாற் சென்ற உள்ளத்தை அரிதின் மீட்டு மேற்கொண்ட வினைமேற் செலுத்த வேண்டி யிருத்தல் பற்றியும் வினை முடித்துப் போந்தவழி, மேற்செய் வினைக்கண் உள்ளம் சென்றவழியும் அம் மகளிர்க்குக் கூட்டம் இடையறவின்றி யெய்த நல்கும் இயல்பு பற்றியும், “பாலும் கொளாலும் வல்லோய்” என்றார். “இனித்தன் சாயல் மார்பிற் பாயல் மாற்றி..........செல்லும் என்னும்” (அகம். 210) என்று பிறரும் கூறினார். பழையவுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதலை, “பாலும் கொளாலும் வல்லோய் என்றது, அவ்வகலப் பாயலை வேற்றுப் புலத்து வினையில்வழி நின் மகளிர்க்கு நுகரக் கொடுத்தற்கு நின்னிடத்து நின்று பகுத் தலையும், வினையுள்வழி அம் மகளிர் பால் நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோய் என்றவாறு” என்பதனாலறிக. திருஞெமரகலத்துப் பாயல் என்பதற்குப் பழையவுரை காரர், “அகலப் பாயல் என இருபெயரொட்டாக்கி, அத்தை அவ்வழிச் சாரியை யென்க; துயில் இனிய பாயல் என வுரைக்க” என்றும், “அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித் தமையான், இதற்கு, துயிலின் பாயல் என்று பெயராயிற்று” என்றும் கூறுவர். அகலத்தைப் பாயலெனச் சிறப்பித்தல். “மலர்ந்த மார்பிற் பாயல்” “சாயல் மார்பிற் பாயல்” எனப் பயில வழங்கும் வழக்கால் அறிக. இனி, திருவீற்றிருக்கும் அவன் மார்பிடத்தே, அதுகுறித்துப் புலவாது, தம் புரையால், திருவின் இருப்பு ஆள்வினை யாடவர்க்கு அழகென்று தேறி, அம்மார்பிற் கிடந்து பெறும் பாயலே இனிதாம் எனக் கருதி விழையப்படும் சிறப்பு நோக்கித் “துயிலின் பாயல்” என்று சிறப்பித் தமையின், இதற்குத் “துயிலின் பாயல்” என்பது பெயராயிற் றெனினும் ஆம். துயில்வார்க்கு ஊற்றின்பம் பயந்து மென்மை யுற்று நிலவுவதால், அவன் மார்பினைச் “சாயல் மார்பு” என்றார். ஊரன் மார்பே, பனித்துயில் செய்யும் இன்சா யற்றே” (ஐங். 14) என்றும் “யாம் முயங்குதொறு முயங்குதொறு முயங்க முகந்துகொண் டடக்குவ மன்றோ தோழி,........ நாடன் சாயல் மார்பே” (அகம். 328) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. பாசறைக்கண் நீ நீடினையாதலின் நின்னைக் காண வந்தேன்; நின் தேவியாகிய அசைநடை, நின்னை நினைத்தலும் உரியள்; தோன்றல், வல்லோய், நின் மார்பு நனி யலைக் கின்றதாதலால், அவள் பாயல் உள்ளாள்; ஆதலால், நீ விரைந்து சென்று அவளை அடைக என வினைமுடிவு செய்து கொள்க. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம். இதனாற் சொல்லியது: அவன் வெற்றிச் சிறப்பும் குலமக ளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. 7. வலம்படு வியன்பணை 1. புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புந ராயினும் பகைவர் பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலின் துளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் 5. கடம் பெறுத் தியற்றிய வலம்படு வியன்பணை ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர் அரணங் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென 10. ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின் அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்புண் மார்ப பாடினி வேந்தே. இதுவு மது பெயர் : வலம்படு வியன்பணை 4-7. துளங்குபிசிர்................ இயவர் உரை : துளங்கு பிசிர் உடைய - அலைகின்ற அலைகள் சிறு சிறு திவலையாக வுடையும்படி: மாக்கடல் நீக்கி - கரிய கடலைக் கடந்து சென்று; கடம்பு அறுத்து - ஆங்கே யிருந்துகொண்டு குறும்புசெய்து திரிந்த பகைவரது காவல்மரமாகிய கடம்பினை வெட்டி வீழ்த்தி; இயற்றிய வலம்படு வியன்பணை - அதனால் செய்யப்பட்ட வெற்றி தரும் பெரிய முரசுக்கு; ஆடுநர் - பகைவரை வெல்லும் போர்வீரர்; பெயர்ந்து வந்து - திரும்பப் போந்து; அரும்பலி தூஉய் - அரிய பலியினை யிட்டுப் பரவ; கடிப்புக்கண் உறூஉம் - கடிப்பினைக்கொண்டு அம் முரசின் கண்ணில் அறைந்து முழக்கும்; தொடித் தோள் இயவர் - தொடி யணிந்த தோளையுடைய இயவர்கள் என்றவாறு. துளங்குதல் - அசைதல். துளங்குதலை இடையறவின்றி யுடைய அலையைத் துளங்கு என்றது ஆகுபெயர்; வரைமருள் புணரி வான்பி சிருடைய” (11) என்று பிறாண்டும் கூறினர். கடலை யரணாகக் கொண்டிருந்த பகைவராதலின், அது கடந்து சென்று அவரைத் தாக்கிய சிறப்பை, “மாக்கடல் நீக்கி” என்றார். பகைவர்க்கு அரணாயிருந்த நிலையினைக் கெடுத்து அவரை அண்மிச்சென்று தாக்குதற்கு நெறியாயினது பற்றி “நீக்கி” யென்றுமாம். மாக்கடல் - பெருங்கட லென்றுமாம். அக் கடம்பர் கடலை யரணாகக் கொண்டிருந்ததனை, “இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுதல் தடிந்த..... நெடுஞ் சேரலாதன்” (20) என்று பிறாண்டுங் கூறுதல் காண்க. அக் கடம்பினைத் தடிந்து முரசு செய்துகொண்ட செய்தியைச் “சால்பெருந் தானைச் சேர லாதன், மாக்கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு” (அகம். 347) என்று பிறரும் கூறுவர். பகைவரைப் பொருதழித்துப் பெற்ற வெற்றிக்குறியாகச் செய்த பெருமுரசாதலால், “வலம்படு வியன்பணை” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “வலம் படு வியன்பணை யென்றது, போர் செய்து வருந்தாமற் பகைவர் வெருவி யோட முழக்கி அரசனுக்கு வெற்றி தன்பாலேபட நின்ற முரச மென்றவாறு; இச்சிறப்பானே இதற்கு (இப்பாட்டிற்கு) வலம்படு வியன் பணை யென்று பெயராயிற்று” என்பர். “வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்” (புறம். 60) என்று பிறரும் கூறுதல் காண்க. பகைவர்க்குக் காவலாயிருந்தது போய்த் தமக்கு முரசாய் வெற்றிமுழக்கம் செய்து, தன்னை யோம்பிய அப் பகைவர் அஞ்சி யோடச் செய்வது பற்றி, “வலம்படு வியன் பணை” யென இதற்குப் பெயராயிற்றெனக் கோடல் சீரிதாம். ஆடுநர்- வெற்றி பயக்கும் போர்வீரர். போரிடத்தே தாம் பெற்ற வென்றி குறித்து அவர்கள் பலிதூவி முரசினை வழிபடுதல் மரபாதலின், `ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்’ என்றார். தூவ என்பது தூஉய் என நின்றது. “பெயர்ந்து வந்து” எனவே, அவர் சேரலாதனுடன் சென்று பொருது பகைவரை யழித்தவ ரென்பது பெற்றாம். “ஆடுநர் என்றது வினையெச்சமுற்று வினைத் திரிசொல்” என்று பழையவுரை கூறும். கூறவே, “இயவர் ஆடுநராய்ப் பலிதூஉய்க் கடிப்புக் கண்ணுறுவர்” என்று அவ்வுரைக்காரர் கருதுமாறு பெற்றாம். இயவர் பெயர்ந்து வந்து பலிதூஉய் ஆடுவாராய்க் கடிப்புக்கொண்டு முழக்குவரென்று கொள்க. மறி யறுத்து அதன் குருதியில் செந்தினை கலந்து பூத்தூவிப் பரவுப வாதலின், “அரும்பலி தூஉய்” என்றார். “உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசம் கண்பெயர்த்து” (பதிற். 19) என்றும், “பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும், திண்பிணிமுரசம்” (பு.வெ.மா. 98) என்றும் வருதல் காண்க. இயவர்- இயம் இயம்புபவர். முரசு முழக்குவோரை வள்ளுவர் என்பவாதலின், இவ் வியவரை வள்ளுவ ரென்று கொள்வாரு முளர். 8-14. அரணம்............... வேந்தே உரை : ஞாயிறு புகன்ற - ஞாயிறு பகையாகிய இருளைக் கெடுப்பான் விரும்பிச் செல்லும்; தீது தீர் சிறப்பின் - குற்ற மில்லாத சிறப்பினையும்; அமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇ - நீர் நிரம்பக் கொண்டு திரண்டெழும் முகிற்கணம் பரவுமாறு; கடுங்கால் கொட்கும் - மிக்க காற்று நிலவும்; நன் பெரும் பரப்பின் - நல்ல பெரிய பரப்பினையுமுடைய; விசும்பு தோய் வெண்குடை -வானளாவி நிழல் செய்யும் நின் வெண்குடையைச் சுட்டி; அரணம் காணாது மாதிரம் துழைஇய - அரணாவது ஒன்றனையும் காணாது அதுகுறித்துத் திக்கனைத்தும் தேடியலையும்; நனந்தலைப் பைஞ்ஞிலம் - விரிந்த இடத்தை யுடைய பசுமையான நிலத்து வாழும் மக்களெல்லாம்; இந் நிழல் வருக என நுவலும் - இக்குடை நிழற்கண்ணே வருவார்களாக என்று சொல்லிப் பரவுதற் கேதுவாகிய; பசும் பூண் மார்ப -பசிய பூணணிந்த மார்பினை யுடையோய்; பாடினி வேந்தே - பாடினிக்கு அவள் வரிசையறிந்து சிறப்பிக்கும் அரசே என்றவாறு. பகைவராகிய இருளைக் கெடுத்தற்கு விரும்பி, அவர் நேர்படும் போர்க்குச் செல்வதுபற்றி அவர்களைப் “போரெனிற் புகலும் மறவர்” (புறம். 31) என்பது போல, இருள் கெடுப்பான் ஞாயிறு விரும்பிச் செல்லும் விசும்பினை, “ஞாயிறு புகன்ற விசும்பு” என்றார். ஞாயிறு புகன் றெழுதலால், தன்கட் படிந்த இருள் நீங்கி விளக்க முறுதலால், “தீதுதீர் சிறப்பின் விசும்பு” என்றார். “மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு” (பதிற். 88) என்று பிறரும் கூறுதல் காண்க. அமிழ்து - மழை நீர்; “வானின் றுலகம் வழங்கி வருதலாற், றானமிழ்த மென்றுணரற் பாற்று” (குறள். 11) என்றார் திருவள்ளுவர். தலைஇய என்பது தலைஇ எனத் திரிந்தது. கொட்குதல் - கழன்று மோதுதல். மழைக் கணம் பரவி அமிழ்து பொழிதற்கிடம் தருதல்பற்றி “நல்விசும்பு” என்றும், ஞாயிறும் திங்களும் இயங்கி முறையே பகலினும் இரவினும் நல்லொளி செய்து உலகுயிர்களை யோம்புதற் கிடமாகும் பெருமையுடைமையின் “பெரும் பரப்பின் விசும்பு” என்றும் கூறினார். அமிழ்து திகழ் கணமழை நிலவும் விசும்பிடத்தே தோயும் வெண்குடை யென்றது, வெகுண்ட நிழலும் அமிழ்த நீழல் என்றற்கு; “முழுமதிக் குடையின் அமுதுபொதி நீழல் எழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்” (தொல். பொ. 18. நச். மேற்.) என வருதல் காண்க. பகைவர் நாட்டு மக்கள் இவ் வேந்தனுக்கு அஞ்சித் தமக்கு அரணாவாரைப் பெறாமையால் உலகமுற்றும் சுற்றி யலைந்து வருந்துதல் கண்டு இரங்கி அவர்கட்குப் புகல் கூறுமாற்றால், “அரணம் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக விந்நிழல்” என இயவர் கூறுவாராயினர். பைந்நிலம்- `பைஞ்ஞிலம்’ என வந்தது மரூஉ. `நுவலும்’ என்பது நுவறற்குக் காரணமாகிய சேரலாதனது மார்பென்னும்பெயர் கொண்டது. “நுவலும் மார்ப வென முடிக்க. இஃது ஏதுப்பெயர்” என்பர் பழையவுரைகாரர். “இஃது” என்றது, மார்ப என்னும் பெயரை யென்க. வெண்குடை நுவலும் என்றது, “வெண்குடையின் அருட் சிறப்பைச் சொல்லும் என்றவாறு” என்பது பழையவுரை. 1-3. புரைவது................. யாதலின் உரை : பகைவர் பெரிய தப்புந ராயினும் - நின் பகைவராயினும், பொறுத்தற்கரிய பெரும் பிழை செய்தாராயினும்; பணிந்து திறை பகரக் கொள்ளுநை - அப் பிழையினை யுணர்ந்து வருந்தி நின்பால் அடைந்து பணிந்துநின்று திறை செலுத்த, அவரைப் பொறுத்து அவர் செலுத்தும் அத்திறையினை ஏற்றருளுகின்றாய்; ஆதலின் - ஆதலால்; புரைவது நினைப்பின் - நின் அருட்கு ஒப்பாவ தொன்றனை ஆராய்ந்து காணலுறின்; புரைவதோ இன்று - உயர்பும் ஒப்பும் உடைய தொன்றும் இல்லை என்றவாறு. உவமமும் பொருளும் ஒத்திருத்தல் வேண்டி, நின்னரு ளாட்சிக்கு ஒப்பதொன்று மின்மையின், உயர்ந்ததேனும் உளதோ வென நன்கு ஆராய்ந்து காணவேண்டி யிருக்கின்ற தென்பார், “புரைவது நினைப்பின்” என்றும், அவ்வாறு கண்டவழி உயர்ந்ததாதல், ஒப்பதாதல் இல்லை யென்பது துணியப்பட்ட தென்றற்கு, “புரைவதோ வின்றே” என்றும் கூறினார். ஓகாரம், தெரிநிலை. ஏகாரம், தேற்றம். “புரைவதோ இன்றே” என்றது மேற்கோள்; இனி, இதனைச் சாதித்தற்குக் காட்டும் ஏது, “பெரிய தப்புந ராயினும் பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை யாதலின்” என்பது. இஃது உடம்பொடு புணர்த்தலாய், புரைவது நினைத்தலை வற்புறுத்தி நிற்பது காண்க. தப்புநராயினும் என்றது தப்பாமை தோன்ற நின்றது. பகைவர் வாளாது பணிந்தவழி அவர்பால் பகைமையின்மை விளங்காமையின், “பணிந்து திறைபகர” என்றார். பணிதல் மெய்யின் வினை; பகர்தல் வாயின் வினை. மனத்தின் பான்மை சொல்லாலும் செயலாலும் புலப்படுதலால், அவ் விரண்டனையும் எடுத்தோதினார். பகர்தல் - ஒன்று கொடுத்து ஒன்று வாங்குதல்; ஆகவே, பகைவர் திறை கொடுத்து அருள்பெறுமாறு பெற்றாம்; திறை பெறாது அருளுதல் கழிகண்ணோட்ட மென்னும் குற்றமா மென வறிக. பகைவர்பால் செலுத்தும் நின் அருட் பெருமைக்கு அவர்தம் உயிரல்லது திறை ஆற்றாதாயினும், அருள்செய்தற் பொருட்டு, திறைகொள் வாயா யினை யென்பார், “கொள்ளுநை” யென்றார். கொள்ளுநை - அடுநை விடுநை (புறம். 36) என்றாற் போல்வதொரு முற்றுவினைத் திரிசொல். வலம்படு வியன்பணையை ஆடுநர் பலி தூஉய்ப் பரவ, கடிப்புக் கண்ணுறும் இயவர், பைஞ்ஞிலம் வருக இந் நிழலென வெண்குடை நுவலும் மார்ப, வேந்தே, பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநையாதலின், புரைவது நினைப்பின் புரைவதோ இன்று என வினை முடிவு செய்க. “இதனாற் சொல்லியது, பொறையுடைமையொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 8. கூந்தல் விறலியர் 1. உண்மின் கள்ளே யடுமின் சோறே எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால் 5. ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும் மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட 10. தண்ணிய லெழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவ தாயினும் சேர லாதன் பொய்யல னசையே. துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கூந்தல் விறலியர் 1-2. உண்மின்................. புழுக்கே உரை : கள் உண்மின் - கள்ளை யுண்பீராக; சோறு அடுமின் - சோற்றைச் சமைப்பீராக; திற்றி எறிக - தின்னப்படும் ஊன்கறியை அறுப்பீராக; புழுக்கு ஏற்றுமின் - வேகவைத்தற்குரிய கறிவகை களை உலையில் ஏற்றுவீர்களாக என்றவாறு. பருகுதற்குரியதாகலின் கள்ளைப் பொதுவினை வாய்பாட்டான் “உண்மின் கள்ளே” என்று பரிசுபெற்ற பாணனொருவன் தன் சுற்றத்தார்க்கும், பாடன்மகளிர்க்கும் கூறுகின்றான். சோறு - நெற்சோறு. திற்றி - தின்றற்குரிய இறைச்சி; நன்கு மென்று தின்னப்படுவதுபற்றித் திற்றி யெனப் பட்டது போலும். புழுக்கப்படுவது புழுக்காயிற்று. தான் பெற்ற பெருவளத்தைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லாற் கூறாது தன் ஈகையால் உணர்த்தக் கருதிய பாணர் தலைவன், வந்தோர்க்குச் சோறு சமைத்தற்குள் பசியால் தளர்வோர்க்குக் கள்ளை வழங்கி யுண்பித்தலின், “உண்மின் கள்ளே” என்றும்; விரையச் சமைத்தல் வேண்டி, “அடுமின் சோறே” யென்றும் கூறினான். சோற்றுணவுக்குத் துணை யாகத் திற்றியும் புழுக்கலும் இடக்கருதி, அவற்றுள் திற்றி சிறந்தமையின் “எறிக திற்றி” யென்றும், “ஏற்றுக புழுக்கே” யென்றும் உரைத்தான். 3-6. வருநர்க்கு..............அடுப்பே உரை : இருள் வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால் - இருண்டு கடை குழன்று தழைத்து முடியவிழ்ந்து ஐவகையாய் முடிக்கப் படும் கூந்தலையும்; ஏந்து கோட்டு அல்குல் - உயர்ந்த பக்கத்தையுடைய அல்குலையும்; முகிழ் நகை - முகிழ்த்த நகையினையும்; மடவரல் - இளமையினையுமுடைய; கூந்தல் விறலியர் - வரிசை பெறும் தகுதி சான்ற விறலிகளே; வருநர்க்கு வரையாது - மேலும் வருவோர்க்கு வரையாது வழங்குதற் பொருட்டு; பொலங் கலம் தெளிர்ப்ப - நீவிர் அணிந்துள்ள பொற்றொடிகள் ஒலிக்க; அடுப்பு வழங்குக - உண்டற்குரிய வற்றைப் பெருகச் சமைப்பீர்களாக என்றவாறு. தம்முடைய ஆடல் பாடல்களால் அரசனான சேரலாதன் பால் வரிசைபெற்ற மகளிராதலின், அவருடைய கூந்தல் முதலிய வற்றை விதந்தோதிச் சிறப்பித்தான். கூந்தல் விறலிய ராதலின், அவர் கூந்தலையே முதற்கண் எடுத்து, “இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்” என்று கூறினான். வரிசைக்கு வருந்தும் பரிசில் மாக்களாயினும் தம்பால் வருநர்பால் அவ்வாறு வரிசை நோக்காமை தோன்ற, “வருநர்க்கு வரையாது” என்றும், வேந்தன்பால் பரிசாகப் பெற்றமையின், “பொலங்கலம் தெளிர்ப்ப” என்றும் உரைத்தான். அடுப்பு வழங்குக என்றது, இடையற வின்றிச் சமைத்தவண்ணமே இருக்க என்றவாறு. “வானின் றுலகம் வழங்கி வருதலால்” (குறள். 11) என்புழிப்போல, வழங்குதல் இடையறாது நிகழ்தற்பொருட்டு. வருநர்க்கு வரையாது வழங்குக அடுப்பே என முடிக்க. பழையவுரை காரரும், “வரையாமல் எனத் திரித்து வரையா தொழியும்படி யெனக் கொள்க” என்பர். தெளிர்ப்பவென்னும் வினையெச்சம் வழங்குக என்னும் வினைகொண்டது. இக் கூந்தல் மகளிர் வரிசைக் குரியரே யன்றிச் சமைத்தற் குரிய ரல்ல ரென்றும், சோறு மிக வேண்டியிருத்தல் தோன்ற, அவரையும் சமைக்க வேண்டுகின்றா னென்றும் கூறுவார், பழையவுரைகாரர், “வந்தார்க்குச் சோறு கடிதின் உதவுதற் பொருட்டு அடுப்புத்தொழிற் குரியரல்லாத வரிசை மகளிரும் அடுப்புத்தொழிலிலே வழங்குக என்றவாறு” என்றும், எனவே, அடுப்புத் தொழிற் குரியரல்லாத கூந்தல் விறலியரை அத்தொழிற்கண் விடுக்கும் சிறப்பினால் இப்பாட்டு இப்பெயர் பெறுவதாயிற் றென்பார். “இச்சிறப்பானே இதற்குக் `கூந்தல் விறலியர்’ என்று பெயராயிற்” றென்றும் கூறினார். “புரியவிழ் ஐம்பால்” என்பதனைக் கூந்தற்கே யேற்றி, “ஐம்பாற் கூந்தல் என மாறிக் கூட்டுக” என்று கூறி, “இனி மாறாது கூந்தல் விறலிய ரென்பதை ஒருபெயராக உரைப்பினும் அமையும்” என்று உரைப்பர். ஐம்பாற் கூந்தல் என்றற்கு, ஐம்பாலாக முடிக்கப்படும் கூந்தல் என்று உரைத்துக்கொள்க. 7-12. பெற்றது............... நசையே உரை : பெற்றது உதவுமின் - உணவு பல உதவுவதே யன்றி நீவிர் பெற்ற செல்வத்தையும் வந்தோர்க்கு உதவுவீர்களாக; தப்பு இன்று - அவ்வாறு செய்வதால் குறை வொன்றும் இல்லையாம்; மண்ணுடை ஞாலம் - மண் திணிந்த நிலவுலகத்தை; புரவு எதிர்கொண்ட தண்ணியல் எழிலி - காப்பதை மேற்கொண்ட தண்ணிய இயல்பினையுடைய முகில்கள்; தலையாது மாறி - மழைபெய்தலைத் தலைப்படாது மாறி; மன் உயிர் அழிய - நிலைபெற்ற உயிர்கள் நீரின்மையால் அழிவெய்துமாறு; பல யாண்டு துளக்கி - பல ஆண்டுகள்காறும் வருத்தி; மாரி பொய்க்கினும் - மழையைப் பெய்யாது பொய்த்தாலும்; சேரலாதன் - இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்; பின்னும் நசை பொய்யலன் - பின்னும் நீர் அவன்பால் சொல்லின் நும் விருப்பம் பழுதாகாவண்ணம் வேண்டியவற்றை நிரம்ப நல்குவன் என்றவாறு. பெற்றதைப் பிறர்க்குப் பெருக வழங்கின், தம்பால் பொருளழிவும் இன்மையும் உளவாமென்று மனம் தளராமை குறித்து, “பெற்றது உதவுமின்” என்றும், அவ்வுதவி குற்றமாகா தென்றற்குத் “தப்பின்று” என்றும், அதற்குக் காரணம் கூறு வானாய்ச் சேரலாதனது கொடைமடம் கூறலுற்று, “மாரி பொய்க்குவ தாயினும், சேரலாதன் பொய்யலன் நசையே” யென்றும் கூறினான். ஞாலத் துயிர்கட்கு வேண்டும் உணவுப்பொருள் விளைதற் குரிய நிலப்பகுதியாதலின், அதனை “மண்ணுடைய ஞாலம்” என்றும், கைம்மாறு கருதாது மன்னுயிர்களைக் காத்தலே கடப்பாடாகக் கொண்டமையின் “புரவெதிர் கொண்ட எழிலி” யென்றும், இருதிணைப் பொருளையும் குளிர்ப்பிக்கும் இயல்புபற்றித் “தண்ணியல் எழிலி” யென்றும், உயிர்கள் நிலைபேறுடையவாயினும் மழையின்றேல் அழியும் என்றற்கு “மன்னுயி ரழிய” என்றும், அவ்வழிவுக்கு மழையின்மை பல யாண்டுகள் நிலவ வேண்டுமாதலின், “யாண்டு பல துளக்கி” யென்றும் கூறினார். அறம்புரி செங்கோலனாகிய சேரலாதன் நாட்டில் மழை பொய்க்குவதின்மை தோன்ற, “பொய்க்குவ தாயினும்” என்றும், நச்சியடைந்தோர் நசை பழுதாகாது நச்சியவாறே நல்கும் நலம் தோன்ற, “நசை பொய்யலன்” என்றும் கூறினார். பாண்மக்கள், கள் உண்மின்; அடுமின்; எறிக; ஏற்றுமின்; கூந்தல் விறலியர் அடுப்பு வழங்குக; பெற்றது உதவுமின்; தப்பின்று; சேரலாதன் மாரி பொய்க்குவதாயினும், பின்னும் நசை பொய்யலன் என்று வினைமுடிவு செய்க. சேரலாதனது கொடைச் சிறப்பையே எடுத்தோதினமையின், இஃது இயன்மொழி வாழ்த்தாயிற்று. அடிபிறழாது அளவடியானி யன்ற நேரிசை யாசிரியப்பா வாகலின், ஒழுகுவண்ணமும் செந்தூக்கு மாயிற்று. 9. வளனறு பைதிரம் 1. கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர் கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர் திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப 5. செங்கள விருப்பொடு கூல முற்றிய உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து 10. அவ்வினை மேவலை யாகலின் எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும் கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய நாணுமலி யாக்கை வாணுத லரிவைக் 15. கியார்கொ லளியை இனந்தோ டகல வூருட னெழுந்து நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின பழனந் தோறும் 20. அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப அரிநர் கொய்வாண் மடங்க வறைநர் தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த இன்றோ வன்றோ தொன்றோர் காலை 25. நல்லம னளிய தாமெனச் சொல்லிக் காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே துறை : பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : வளனறு பைதிரம் 1-10. கொள்ளை............... மேவலை உரை : கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர் - பகைப்புலத்தைச் சூறையாடுதலாற் பெற்ற உணவும் மேற்செலவையே விரும்பும் கால்களுமுடைய கூளிப் படையினர்; கல்லுடை நெடு நெறி போழ்ந்து - கற்கள் பொருந்திய நெடிய வழிகளை வெட்டி; சுரன் அறுப்ப - சுரத்தில் அகன்ற வழிகளைச் செய்தமைக்க; ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர் - ஒள்ளிய பொறிகளை யுடைய கழலணிந்த அடி முன் வைத்தது பின்னே பெயர்த் தறியாத போர்மறவர்; திண் பிணி எஃகம் - திண்ணிதாய்க் காம்பொடு செறிக்கப்பெற்ற வாட்படையை; புலி யுறை கழிப்ப - புலித் தோலாற் செய்த உறையினின்றும் எடுத்து வினைக் குரியவாகச் செம்மை செய்ய; செங்கள விருப்பொடு - சிவந்த போர்க்களத்தே புகும் விருப்பத்தால்; கூலம் முற்றிய உருவச் செந்தினை - கூலங்களுள் ஒன்றாக நிரப்பிய நிறம் பொருந்திய செந்தினையை; குருதியொடு தூஉய் - குருதியொடு கலந்து தூவிப் பலியிட்டு; மண்ணுறு முரசம் கண்பெயர்த்து - நீராடி வார்க் கட்டமைந்த முரசத்தின் கண்ணில் குருதி பூசி; கடிப்புடை வலத்தர் - வலக்கையில் கடிப்பினை யேந்தி; இயவர் - முரசு முழக்கும் வீரர்; தொடித் தோள் ஓச்ச - தொடியணிந்த தம் தோளோச்சிப் புடைத்து முரசினை முழக்க; வம்பு களைவறியாச் சுற்றமொடு - கைச் சரடுகளை நீக்குதலில்லாத போர்வீரருடன்; அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து; அவ் வினை மேவலை - செய்து முற்றிய அப் போரினையே மேலும் விரும்பியுறை கின்றாய் என்றவாறு. பகைப் புலத்தே சென்று சூறையாடிப் பெற்ற பொருள்களைக் கொண்டு உண்பன வுண்டு வாழும் இயல்பின ரென்றற்கு, “கொள்ளை வல்சி” யென்றும், தம்மைப் பின்னே தொடர்ந்து வரும் தானைக்கு நெறியமைக்கும் தொழிலால் யாண்டும் தங்காது மேற்சென்றுகொண்டே யிருப்பதால் “கவர்காற் கூளியர்” என்றும் கூறினார். “கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர், கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்” (புறம். 23) என்று பிறரும் கூறுவர். எனவே, இக் கூளிப் படையினர்க்குப் பகைப்புலத்தைச் சூறையாடுவதும் நெறி சமைத்தலும் தொழி லாதல் பெற்றாம். சூறையாடுவது கூறவே, நெறி சமைக்க வரும் தம்மை, யெதிர்த்துப் போருடற்ற வரும் பகைவரை யெதிர்த் தடர்த்தலும் பெறப்படும். “கவர்வு விருப்பாகும்” (தொல். சொல். 362) என்பதனால், கவர்தல் விருப்ப மாயிற்று. பழைய வுரையும், “செலவை விரும்பின கால்” என்று கூறுகின்றது. கொள்ளை வல்சி யுடையார்க்கு மேன்மேலும் அதன்பால் விருப்ப முண்டாதல் பற்றிக் கவர்கால் என்றா ரென்றுமாம். கல்லும் முள்ளும் நிறைந்த நாடு கடந்து செல்லும் தானைக்கு, முன்னே செல்லும் இக் கூளிப்படை, அத்தானை வருந்தாது விரைந்து சேறற்கு நல்ல நெறியினை யமைக்கின்ற தென்பார், “கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரன் அறுப்ப” என்றார். கல்லுடை நெறி மேடும் பள்ளமுமாய் நேராகச் செல்வதற்கு அமையாமையின் நெறி நேர்மையும் சமமும் பொருந்துதல் வேண்டி, பள்ளத்தை நிரப்பி மேட்டினை வெட்டி யமைக்கும் செயலை, “கல்லுடை நெடுநெறி போழ்ந்து” என்றும், இந்நெறி செலவரிதாகிய சுரத்தினை ஊடறுத்துச் செல்வதுபற்றி, “சுரன் அறுப்ப” என்றும் கூறினார். “முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறை” (அகம். 281) என வரும் பாட்டு இச் செயலை விளக்குதல் காண்க. இப் பாட்டில் வடுகர் விரவிய படையில் மோரியர் கூளிப்படையினராய்த் தொழில் செய்வது காண்க. இக் கூளிப் படை இக்காலத்தே பயனீர் (Pioneers) என்றும், சாப்பர் மைனர் (Sappers and Miners) என்றும் வழங்கும். “ஒண்பொறிக் கழற்கால்” என்றதனால், வீரரணியும் கழல் ஒள்ளிய அருப்புத் தொழிலுடைமை பெற்றாம். கழல் - வீரரணியும் காலணி. இனிப் பழையவுரைகாரர், “ஒண்பொறிக் கழற்கால்” (பதிற். 34) என்ற பாட்டில், “ஒண்பொறிக் கழல்கா லென்றது, தாங்கள் செய்த அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலை யுடைய கழற்கால் என்றவாறு” என்று கூறுவர். இத் தொடரினும் “வளனறு பைதிரம்” என்றது சீரிதாக இருத்தல்பற்றி, இதனால் இப்பாட்டிற்குப் பெயர் குறித்திலர் போலும். முன்வைத்த காலைப் பின்வைத்தலையும் தோல்வியாகக் கருதும் மான முடைய ரென்பது பட, “கழல் மாறா வயவர்” என்றார். காம்பி னின்றும் எளிதிற் கழலாவாறு அதன்கண் திணித்து வலிய பூணிட்டிருத்தல் பற்றி, திண்பிணி யெஃகம் என்றும், அதனைப் புலித்தோலாற் செய்த உறையிலிட்டு வைத்தல் தோன்ற, “புலியுறை கழிப்ப” என்றும் கூறினார். வினைக்குரிமை செய் தலாவது செவ்வையாய்த் தீட்டி நெய்பூசி வைத்தல். இதனைப் பழையவுரைகாரர் “கடைவன கடைந்தும் அல்லன வாய்கீறியும் போர்க்குரியவாம்படி பண்ணுதல்” என்பர். “புலியுறை கழித்த புலவுவா யெஃகம்” (பதிற். 24) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனி, இவ் வெஃகத்தை வேலென்று கொள்ளினு மமையு மாயினும் வாள் எனக் கோடல் சிறப்புடைத்தாத லறிக. போர்க்களத்தே அறப்போருடற்றிப் பெறும் புகழ்விருப் பால் அதனை நாடிச் செல்லும் வீரர், முதற்கண் தம் வென்றி முரசிற்கு வார்க் கட்டினைச் செவ்விதாக அமைத்துச் செந்தினையும் குருதியும் பலியாகத் தூவி, குருதியால் அதன் கண்ணைத் துடைத்துக் கடிப்புக் கொண்டு முழக்கும் மரபுபற்றி, “செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசம் கண்பெயர்த்து, இயவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச” வென்றார். கூல வகைகளுள் தினையும் ஒன்றா யமைய, “கூலம் முற்றிய உருவச் செந்தினை” என்றார். போரிற் பட்டு விழும் உயிர்களின் குருதியால் போர்க் களம் சிவப்பது பற்றிச் “செங்களம்” என்றார். போரெனிற் புகலும் மறவராதல் தோன்ற, “செங்கள விருப்பொடு” என்றாரென வறிக. ஒடு - ஆனுருபின் பொருட்டு. வழிபடுதற்கு முன் முரசத்தை நீராட்டுவது மரபாதலால், “மண்ணுறு முரச” மெனல் வேண்டிற்று. இனி, சேரலாதனது செயலைக் கூறுவார், தன்னொடு சூழவிருக்கும் போர்வீரர் கணந்தோறும் போரை யெதிர் நோக்கித் தம் கையிலிட்ட சரடுகளை நீக்காது மனமெழுந்து நிற்ப, அவன் அவர் மனநிலையிற் குறைவின்றி, அம்புகளை யாராய்ந்து தெரிந்துகொண்டும் போர்வினைக் குரியவற்றைச் சூழ்ந்து கொண்டும் இருத்தலின் “வம்பு களைவறியாச் சுற்றமொடு அம்பு தெரிந்து அவ்வினை மேவலை” என்றார். வம்பு - கைச்சரடு; ஏந்திய படை கை வியர்த்தலால் நெகிழாமைப் பொருட்டு அணிவது. மேவல், விரும்புதல். இனி, கூலம் முற்றிய வென்றதற்குப் பழையவுரைகாரர், “பண்டமாக முற்றிய வென்றவாறு” என்றும், “பலிக்குரிய பண்டங்கள் குறைவறக் கூடின வென்பாரு முளர்” என்றும் கூறுவர். அவ்வினை, செய்து முற்றிய அப் போர்வினை. கூளியர் சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்ச நீ அம்பு தெரிந்து அவ்வினை மேவலை யென்று முடித்துக் கொள்க. பிரிநிலை யேகாரம் விகாரத்தால் தொக்கது. 10-15. ஆகலின்............... அளியை உரை : ஆகலின் - நீ அவ்வாறு வினைமேவிய உள்ளத்தானா தலால்; எல்லு நனி இருந்து - பகலில் நின் பிரிவைப் பெரிதும் ஆற்றி யிருந்து; எல்லி - இரவின்கண்; அரிது பெறு பாயல் - அரிதாகப் பெறுகின்ற உறக்கத்தினால்; கனவினுள் பெற்ற - கனவின்கண் தானுற்ற; சிறு மகிழான் - சிறு மகிழ்ச்சி யேதுவாக; உறையும் - உயிர் தாங்கி மனைக்கண்ணே யுறையும்; பெருஞ்சால்பு - பெரிய சால்பும்; ஒடுங்கிய நாணு மலி யாக்கை - உடல் சுருங்கிய தனால் எழும் அலரால் நாணம் நிறைந்த உடம்பும்; வாணுதல் அரிவைக்கு - ஒளி பொருந்திய நுதலுடைய அரிவையாகிய நின் மனைவிபால்; யார் கொல் - நினைவு கொள்ளாமையால் நீ யாராயினை; அளியை - நீ அளிக்கத் தக்காய் என்றவாறு. மெய்யால் வீரரொடு கலந்து அம்புகளை யாராய்தலும், மனத்தால், அவ் அம்புகொண்டு செய்யும் போர்வினையை விரும்புதலும் செய்தொழுகுதலால், நின்பால் நின்னையின்றி யமையாக் காதலுற்றிருக்கும் மனைவியைப் பற்றிய எண்ணம் சிறிதும் எழுந்திலதென அவன் ஆண்மையை ஒருபுடை வியந்து கூறுவார்போல், “வம்புகளை வறியாச் சுற்றமொடு அம்புதெரிந் தவ்வினை மேவலை யாகலின்” என்றார். வினைமேற் செல்லும் ஆடவர் அவ்வினை முடிந்துழியல்லது தம் காதல்வாழ்வை நினையாமை அவர்கட்குச் சிறப்பாதலின், அதனை யெடுத் தோதினார். ஆயினும், ஈண்டு எடுத்த வினைமுற்றிய பின்னும் மீளக் கருதாது அவ்வினையே மேவியிருப்பதுபற்றி அவ னுள்ளத்தை ஆசிரியர் மாற்றக் கருதுகின்றாரென வறிக. வினை முடித்தற்கு வேண்டும் மறம், அது முடிந்தபின் வேண்டாமையின், அதனை மாற்றி அன்பும் அருளும் உள்ளத்தே நிலவுவித்தல் அறவோர் கடனாதலாலும், அவற்றிற்கு வாயில், இல்லிருந்து நுகரும் இன்பமும் ஆண்டிருந்து புரியும் அறமுமா தலாலும், இல்லாள்கண் பெறும் இன்பத்திடத்தே அவற்கு நினைவு செல்லவேண்டி அவளது பிரிவாற்றாமையைப் பாரித் துரைக்கின்றார். பகற்போதின்கண் அவன் வற்புறுத்திப் போந்த காலத்தையும் தெளிந்துரைத்த சொற்களையும் தேறி, உடனுறையும் தோழியர் கூட்டமும் பிறவும் கண்டு ஒருவாறு ஆற்றியிருத்தல் தோன்ற, “எல்லு நனியிருந்து” என்றார். எல் - பகல். எல்லி - இரவு. ஆற்றியிருத்தற்கு வேண்டும் வன்மையினைப் பெரிதும் பெய்து கொண்டிருத்தலின், “நனியிருந்து” என்றல் வேண்டிற்று. எல்லி அரிது பெறு பாயல், கனவினுள் பெற்ற சிறுமகிழான் என இயைக்க. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்” மாண்புடைய காதற் காமம், இரவுப்போதில் அவளை வருத்தலால் உறக்கம் மிகுதியும் இலளாயினாள் என்பார், “எல்லி அரிது பெறு பாயல்” என்றார்; அரிது பெறு பாயல், சிறுதுயில். இது கண்டுயில் மறுத்தல். அரிது பெற்ற பாயலின் கண், நின்னைக் கனவிற் காண்டலால் உண்டாகும் சிற்றின்பமே அவள் உயிர் வாழ்தற்குத் துணையாயிற்று; அதுதானும் இலதாயின் அவள் உயிர் வாழாள் என்பார், “கனவினுள் பெற்ற சிறுமகிழான் உறையும்” என்றார். “நனவினால் நல்கா தவரைக் கனவினாற், காண்டலி னுண்டென் னுயிர்” (குறள். 1213) எனச் சான்றோர் கூறுதல், கனவிற் பெற்ற சிறுமகிழ் உயிர் உளதாதற்குச் சான்றாதல் காண்க. உம்மை, இசைநிறை. இனிப் பழையவுரைகாரர், “எல்லுநனி யிருந் தென்றது, பகற் பொழுதின்கண்ணே ஒரு வினோதமும் இன்றி நெடுக வருந்தியிருந்தென்றவாறு” என்றும், “பெற்ற மகிழ் என முடிக்க” என்றும் “அரிது பெறுதலைப் பாயன்மேலேற்றுக; ஈண்டுப் பாயல் உறக்கம்” என்றும் கூறுவர். கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் பொறையும் நிறையும் பிறவும் நிறைந்திருத்தல்பற்றி, “பெருஞ்சால்பு” என்றும், அதனால் நின் பிரிவாலுளதாகிய வருத்தத்தைத் தன் சால்பினால் ஆற்றியிருந்தாளாயினும், உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கித் தோன்றுதலால், “ஒடுங்கிய நாணுமலி யாக்கை” யென்றும் கூறினார். காதலன் தன்னை யன்பின்றி மறந்தானென்று தன் மெலிவு காண்பவர் கூறும் அலர்க்கு நாணி ஒடுங்கி யிருக்குமாறும் தோன்ற, “நாணுமலி யாக்கை” யென்றார். இது புறஞ்சொல் மாணா நிலைமை. நுதல் பசந்திருத்தலைக் குறிப்பு மொழியால் “வாணுதல்” என்றார். இவை யனைத்தும் அரசிபால் நிகழ்ந்த அழிவில் கூட்டத் தவன் பிரிவாற்றாமை. இவ்வாறு அரிவையாவாள் நின்னையின்றியமையாப் பெருங்காதலளாக, நீயோ அவளை நினைத்தலின்றி வினை மேவிய வுள்ளமுடையையாதலின், நினக்கு அவள்பாலுற்ற அன்புத் தொடர்பு இனிது விளங்கிற் றன்று என்பார், “அரிவைக்கு யார்கொல்” என்றும், இது மிக்க அளிக்கத்தக்க நிலையாம் என்றற்கு, “அளியை” என்றும் இசைக்கின்றார். இவ்வண்ணம் சேரலாதனது உள்ளத்து அன்புநிலையை எழுப்பியவர், அவனது அருணிலையைப் பகைவர் நாட்டழிவு வகையினை விரியக் கூறிக் கிளர்ந்தெழுவிக்கின்றார். 16-19. இனந்தோ டகல............... அன்னவாயின உரை : ஊர் உடன் எழுந்து - நின் பகைவர்நாட்டு ஊரவரெல்லாம் அச்சத்தால் கூட்டமாய்த் திரண்டெழுந்து ஓடிவிடுவதால்; இனம் தோடு அகல - அவர் ஓம்பிய ஆனினங்கள் தொகுதி தொகுதியாய் வேறு வேறு திசைகளில் பரந்தோட; நாஞ்சில் கடிந்து - உழு கலப்பை முதலியவற்றை அவர் எறிந்து விட்டொழிந்தமையின்; நிலம் கண் வாட - நிலங்கள் விளைநிலம் கெட்டழிய; நீ வாழ்தல் ஈயா - ஒருவரும் இருந்து வாழ்தற்குரிய வாய்ப்பினை நீ நின் போர்வினையால் நல்காமையால்; வளன் அறு பைதிரம் - வளப்பம் அழிந்த நின் பகைவர் நாடுகள்; அன்ன வாயின - அவ்வியல்பினையடைவன வாயினகாண் என்றவாறு. எழுந்தமை இனம் அகலுதற்கும், கடிந்தமை வாடுதற்கும் காரணமாயின. இனங்களின் உண்மையும், நிலங்களின் விளை நலமும், நாட்டின் வளத்துக்கும் மக்கள் வாழ்விற்கும் காரண மாதலால், நீ செய்யும் போர்வினை அவற்றைச் சிதைத்து மக்களை அல்லலுறுத்திற் றென்பார், “நீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின” என்றார். எழுந்து கடிந்தென்னும் செய்தெனெச்சங்கள் காரணப்பொருள். அகல, வாட, ஈயா வளனறு பைதிரம் அன்ன வாயின எனக் கூட்டி முடிக்க. இனிப் பழையவுரைகாரர், “ஊரெழுந் தென்னும் முதல்வினையை வழுவமைதியால் இனந்தோ டகல வென்னும் அதன் சினை வினையொடு முடிக்க” என்றும், “தோடகலக் கண்வாட அன்ன வாயின என முடிக்க” என்றும், “நீ வாழ்த லீயா வென்றது, நீ பண்டு போலே குடியேறுக என்று வாழ்வு கொடாத என்றவாறு” என்றும் உரைப்பர். மேலும், அவர், “வாழ்த லீயா என்ற அடைச்சிறப்பானே இதற்கு வளனறு பைதிர மென்று பெயராயிற்” றென்பர். 19-27. பழனந்தோறும்............... பலவே உரை : பழனந்தோறும் - நீர் நிலைகளிலெல்லாம்; அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து - நெருப்புப்போன்ற தாமரை களும் ஆம்பல்களும் மலர; நெல்லின் செறுவின் - நெல் விளையும் இனிய வயல்களில்; நெய்தல் பூப்ப - நெய்தல்கள் மலர; அரிநர் கொய் வாள் மடங்க - விளைந்த நெல்லையரியு மிடத்துத் தொழுவரது அரிவாள் வாய் மடங்கவும்; அறைநர் தீம் பிழி எந்திரம் - கரும்பு வெட்டுவோருடைய அதனை யாட்டிச் சாறுபிழியும் எந்திரம்; பத்தல் வருந்த - கருப்பஞ்சாறு விழும் கூன்வாய் வளையவும்; இன்றோ அன்றோ தொன்றோர் காலை நல்ல மன் - இன்று நேற்றன்று தொன்றுதொட்டே இவ்வளங்களால் இந்நாடுகள் நல்லனவாய் இருந்தனவே, என - என்று; சொல்லி - வாயாற் சொல்லி; காணுநர் கை புடைத்து இரங்க - இப்போது காண்போர் கை கொட்டிப் பிசைந்து வருந்த; பல மாண்டன - பலவகையாலும் மாட்சிமை யுற்றிருந்த இந் நாடுகள்; மாணா மாட்சிய - கெட்டழிந்த தன்மையை யுடையவாயின என்றவாறு. “வளனறு பைதிரம் அன்ன வாயின” எனத் தாம் கண்ட காட்சியைப் பொதுவகையாற் பட்டாங்குக் கூறிய ஆசிரியர், கண்டார்மேல் வைத்து, அவற்றின் வாழ்தற்குரிய வளங்களின் இயல்பைச் சிறப்பு வகையாற் கூறுகின்றார். முதற்கண் நீர்வளத்தைச் சிறப்பிப்பார். தாமரையும் ஆம்பலும் செவ்வி தவறாது மலர்ந்தன என்றற்கு. “அழன்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து” என்றார். ஒடு, எண்ணொடு. நிலவளம் நெல்லாலும் கரும்பாலும் அழகுபெறுதலின், அவற்றை “அரிநர் கொள்வாள் மடங்க அறைநர், தீம்பிழி யெந்திரம் பந்தல் வருந்த” என்றார். அரிவாள் மடங்க என்றது நெற்பயிரின் சிறப்பும், எந்திரம் பத்தல் வருந்த என்பது கரும்பின் சிறப்பும் உணர நின்றன. “அரிநர் - நெல்லறுப் போர், அறைநர் - கரும்பு வெட்டி எந்திரத்திட்டு அறைப்பவர். நெல்லின் நலம் வியந்து, அதனை விளைவிக்கும் நிலத்தை, “இன்செறு” என்றார். மலர, மலர்ந்தென நின்றது. நெல்வயலில் நீர் இடையறாமையின் நெய்தல் பூப்பதாயிற்று. இன்றோ அன்றோ என்புழி ஓகாரம் அசைநிலை. பத்தல் - எந்திரத்திலுள்ள சாறு விழும் தூம்பு. சாற்றின் மிகுதி தோன்ற, “வருந்த” என்றார். “கொய்வாள் மடங்க வென்றது, நெற்றாளின் பருமையாலே கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடிய என்றவாறு” என்றும், “எந்திரமென்னும் முதலெழுவாயை வழுவமைதியாற் பத்தல் வருந்த வென்னும் அதன் சினை வினையோடு முடிக்க” என்றும், “பத்தல் வருந்த என்றது, பலகாலும் சாறோடி நனைந்து சாத” லென்றும் பழைய வுரைகாரர் கூறுவர். பண்டு பல்வளத்தாலும் மாட்சியுற்றிருந்தவை இன்று அம்மாட்சி யழிந்தனவென வருந்திக் கூறுதலின், “மாணா மாட்சிய” என்றார். பண்டு பலவாய் மாண்ட மாட்சி பெற்றிருந்தமை தோன்ற, “மாண்டன பலவே” யென்றும், அம் மாட்சி இப்போது மாணாமையின் “மாணா மாட்சிய” என்றும், கூறல் வேண்டிற்று. மாண்ட மாட்சி - செய்த செயல் என்பது போல்வது. இதன் மறுதலை - செய்யாச் செயல் போல மாணாமாட்சி யென்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர், மாண்ட மாட்சியுடையவை இன்று சேரனது போர்வினையால் மாணாமாட்சி யெய்தின; அவை இப்போதும் மாண்புறுத்தவழி, மாண்ட மாட்சியவாம் போலும் என்று ஐயமுறாவாறு, “மாணா மாட்சிய மாண்டன” என்று கொண்டு, “மாட்சிமைப்படத் திருத்தினும் மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத் திருந்தாத வளவேயன்றி யுருமாய்ந்தன வென்றவாறு” என்றும், “மாணாதவற்றை மாட்சிய வென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த் தோன்றிக் கிடந்த பண்புபற்றியெனக் கொள்க” என்றும், “மாட்சிய வென்பது வினையெச்சமுற்று” என்றும் கூறுவர். எனவே, மாண்டன என்பது மாளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த வினைமுற்றாதல் அவர் கருத்தாதல் காண்க. இனி, அவரே, “இனி மாணா மாட்சிய வென்பதற்கு மாணாமைக்குக் காரணமாகிய பெருக்கு முதலாயவற்றின் மாட்சிய வென்பாரு முளர்” என்று பிறர் கூறுவதையும் எடுத்தோதுகின்றார். இதுகாறும் கூறியவற்றால், ஆசிரியர் சேரலாதன் வினை செய்யும் இடன் அடைந்து, ஆங்கு எடுத்த வினைமுற்றியும் மீளக் கருதாமை கண்டு, “அரசே, கூளியர் சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்சத் தான் சுற்றமொடு அம்பு தெரிந்து அவ்வினையே மேவலையாகலின் (10), “எல்லு நனியிருந்து, எல்லி அரிதுபெறு பாயற்கண் கனவினுள் பெற்ற சிறுமகிழான் உறையும் அரிவைக்கு நீ யார்கொல். அளியை (15)” என்று கூறி வினைமேவிய அவன் மறத்தை இல்லுறையும் மனைவியின் காதல் நிலை காட்டி மாற்றி அன்பு தோற்றுவித்து “நீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின (16); பலவாய் மாண்டனவாகிய அப் பைதிரங்கள், பழனந்தோறும் தாமரையும் ஆம்பலும் மலர, செறுவில் நெய்தல் பூப்ப, அரிநர் வாள் மடங்க, தொன்றோர் காலை நல்லமன் அளிய (25) எனக் காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய வாயின காண்” (27) என்றுரைத்து, அவன் உள்ளத்தே அருள் தோற்றுவித்து அமையுமாறு பெறுகின்றோம். இனி, பல (27) வாகிய நீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின (16) வை மாணா மாட்சியவாய் மாண்டன எனக் கூட்டிமுடித்த பழையவுரைகாரர், “பைதிர மென்னு மெழுவாய்க்கு மாண்டன வென்பது பயனிலை, அன்னவாயின வென்னும் பெயரும் இடையே யொரு பயனெனப்படும்” என்றும், “அன்னவாயின மாணா மாட்சிய மாண்டன வென்றது, பைதிரங்கள் ஊருட னெழுதல் முதலாய வறுமையை யுடைய அளவாய் நின்றன; பின் அவ்வளவினன்றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன; பின் அவ்வளவுமன்றி ஊரும் வயலும் தெரியாதபடி உருவம் மாய்ந்தன என்றவாறு” என்றும் கூறுவர். இனி, இப்பாட்டினை ஆசிரியர் கூற்றாக்காது, பாசறைக்குத் தூது சென்ற பாணனொருவன் கூற்றாக்கி, “நீ அவ்வினை மேவலையா யிருந்தாய்; நீ வினையை மேவுகின்றபடியால் கனவினுள் உறையும் நின்னரிவைக்கு நீ யார்கொல்; நீ அவள் பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ அழிக்க என்று அழிந்த நாடுகள் அழிந்து அற்றால் “வருவல்” எனின், ஆம், அழிக்க அழிந்து நீ பின் வாழ்த லீயாத பைதிரம் காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சியவாய் மாண்டன; அதனால், அது குறையன்று; நின் னன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடி தெழுக என வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று” என்றும் கூறுவர். பாசறைக்கட்சென்று தேவியின் பிரிவாற்றாமை கூறி, இனி அவள்பாற் சென்று அமைதலே வேண்டுவ தென்பதுபட நின்றமையின், இது பரிசிற் றுறையாயிற்று. பெரும்பான்மையும் ஒழுகுவண்ணமும், “அவ்வினை மேவலை யாகலின்” எனவும், “யார்கொ லளியை” யெனவும் சொற்சீர் வந்தமையின் சொற்சீர் வண்ணமும் இப்பாட்டில் உளவாயின. 10. அட்டுமலர் மார்பன் 1. நுங்கோ யாரென வினவி னெங்கோ இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின் 5. நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும் மாற்றோர் தேஎத்து மாறிய வினையே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே 10. கனவினும், ஒன்னார் தேய வோங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து 15. புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ விரியுளை மாவுங் களிறுந் தேரும் வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதி னிலைஞாயில் 20. அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும் கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன் 25. மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் தண்ணிய லெழிலி தலையா தாயினும் வயிறுபசி கூர வீயலன் வயிறுமா சிலீஇயரவ னீன்ற தாயே. துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : அட்டுமலர் மார்பன் 1-5. நுங்கோ............. கண்ணி உரை : நுங்கோ யார் என வினவின் - உங்கட்கு இறைவன் யார் என்று வினவுவீராயின்; எங்கோ - எங்கட்கு இறைவனாவான்; இருமுந்நீர்த் துருத்தியுள் - கரிய கடலிலுள்ள தீவில் வாழ்ந்த; முரணியோர்த் தலைச் சென்று - பகைவரை யழித்தல் வேண்டி அவர் வாழ்ந்த தீவுக்குச் சென்று; கடம்பு முதல் தடிந்த - அவர்தம் காவல் மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தி அவரையும் வென்றழித்த; கடுஞ்சின முன்பின் - மிக்க சினமும் மெய்வன்மையு முடைய; நெடுஞ் சேரலாதன் - நெடுஞ்சேர லாதனாவான்; அவன் கண்ணி வாழ்க - அவன் சூடிய கண்ணி வாழ்வதாக என்றவாறு. கோ என்றது, ஈண்டுப் புரப்போர் மேற்று. சேரலாதன்பாற் சென்று பெருவளம் பெற்று வரும் தம்மைக் கண்டோர் வியந்து நோக்குவதன் குறிப்பறிந்து கூறுதலின்,“நுங்கோ யாரென வினவின்” என்றார். பிசிராந்தையாரும் இவ்வண்ணமே கோப் பெருஞ் சோழனைச் சிறப்பித்துரைக்கும் கருத்தால், “நுங்கோ யாரென வினவின் எங்கோ........ கோழி யோனே கோப்பெருஞ் சோழன்” (புறம். 212) என்று கூறுதல் காண்க. துருத்தி- நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலப் பகுதி. இத்தகைய பகுதி ஆற்றின் இடையிலும் கடலினிடையிலும் உண்டு. இக் கடம்பர் கடலிடத் தேயுள்ள தீவிலிருந்துகொண்டு பகைமை விளைத்து வந்தமை தோன்ற,“இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்” என்றார். பெரும் படையுடன் அவர் உறையும் தீவுக்கே சென்று மண்டி அவர் குடிமுழுதும் அழியப் பொருதமை விளங்க, “தலைச் சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரலாதன்” என்றார். இனி, தலைச்சென் றென்பதற்கு அழித்தென்பது பொருளாமாறு, “முரணியோரை யென விரியும் இரண்டாவதனைத் தலைச்சென்றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது, முடிவிலே சென்றென்பது பொருளாக்கி, அதற்குப் போந்தபொருள் முடிவு செயலாக்கி அதனொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். அரசரையோ செல்வரையோ நேரிற் சென்று காணினும், பிறாண்டுப் பெயர் கூறினும் வாழ்த்தும் மரபினால் கண்ணி முதலியன வாழ்க என்றல் இயல்பாதலால், “வாழ்க அவன் கண்ணி” என்றார்; இஃது அவன் நீடு வாழ்க என்னும் குறிப்பிற்று. 6-10. வாய்ப்பறி............ கனவினும் உரை : மாற்றார் தேஎத்து மாறிய வினை - பகைப்புலத்தே தனக்கு மாறாக அவராற் செய்யப்படும் பகைவினைகள்; வெயில் துகள் அனைத்தும் - வெயிலிடத்தே காணப்படும் மிகச் சிறிய அணுவளவும்; வாய்ப்பு அறியலன் - தன் வினைத்திறத்தால் அவர்கட்குப் பயன்படுதலை யறியான்; கண்ணின் உவந்து - தன் கண்ணெதிரே நட்டார்போலத் தோன்றி; நெஞ்சு அவிழ்பு அறியா - தம் நெஞ்சு மலர்ந்து அன்பு செய்யாத; நண்ணார் தேஎத்தும் - உட்பகை கொண்ட பகைவரிடத்தேயும்; கனவினும் - கனவின்கண்ணும்; பொய்ப்பறியலன் - பொய் கூறுதலை யறியான் என்றவாறு. மாறிய வினை யெனவே, பகைவர் செய்யும் பகைவினை யென்பது பெற்றாம். மாற்றார்தம் நிலத்தே பகைவர்க் கஞ்சி வஞ்சனையும் சூதும் கலந்த சூழ்ச்சிகள் பல செய்தற்கும், அவை தப்பின்றி வாய்ப்பதற்கும் போதிய இடனுண்மையின், “மாற்றார் தேஎத்து மாறிய வினை” யென்றார். ஒற்றாலும் உரைசான்ற நூலாலும் அவர் செய்யும் சூழ்ச்சி யனைத்தும் முன்னுணர்ந்து அவற்றை யறவே சிதைத்தற்குரிய வினைகளை நாடி வாய்ப்பச் செய்தலால், அவர்தம் மாறிய வினைகள் அவர்கட்குப் பயன் படாமையின், “வெயிற்றுக ளனைத்தும் வாய்ப்பறியலன்” என்றார். வாய்ப்பு - மெய்யாய்ப் பயன்படுதல். அனைத்து - அளவின் மேற்று. வெயிற்றுகளனைத்தும் என்றது எள்ளளவும் என்னும் வழக்குப் போல்வது. இனி, மாறிய வினை யென்பதற்குப் பகைவர்க்கு மாறாகத் தான் செய்யும் சூழ்ச்சிகளை யென்றும், வாய்ப்பறியலன் என்பதனோடு கனவினும் என்பதைக் கூட்டிக் கனவிலும் வாய் வெருவிப் புலப்படுத்துவானல்லன் என்றும் கூறுவர்; பறிதல்- வெளியாதல். இது வினை மேற்கொண்டா ரனைவர்க்கும் இருத்தற்குரிய பண்பாதலால், இதனை யெடுத்தோதுவதில் சிறப்பின்மை யறிக. இனி, மாறிய வினை யென்றது, பின் வாங்குதலென்றும், வாய்ப்பென்றது பொருந்துத லென்றும் கூறுவர்; இதனாலும் பொருள் சிறவாமை யறிக. “முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சர்” (குறள். 824) என்றற்கு. “கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார்” என்றார். அவர்க்கு அஞ்சி யொழுகு மிடத்துப் பொய்த்தல் ஓராற்றால் நன்றாயினும், அதனையும் கனவிலும் நெடுஞ்சேர லாதன் செய்வதிலன் என்றற்கு, “கனவினும் பொய்ப்பறி யலனே” யென்றார். இந்த “நண்ணார்” தொடர்பு கனவினும் இன்னாதா தலின், கனவினும் என்றார். “கனவினும் இன்னாது மன்னோ” (குறள். 819) என்று சான்றோர் கூறுதல் காண்க. “மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து, நட்பினுள் சாப்புல்லற் பாற்று” (குறள். 829) என்பதனால், பொய்த்தல் நன்றாதல் உணர்க. 11-21. ஒன்னார்............... மார்பன் உரை : ஒன்னார் தேய - பகைவர் கண்டு அஞ்சி உளம் குலைய; ஓங்கி நடந்து - பெருமிதத்துடன் நடந்து; படியோர்த் தேய்த்து - பகைவரை யழித்து; வடி மணி இரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற - வடித்த ஓசையினைச் செய்யும் மணி யொலிக்கும் மதத்தையுடைய கூட்டமாகிய யானைப்படை ஆற்றாது பிளிறிக் கொண்டு ஓட; வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து - அகன்ற பெரிய பரப்பினையுடைய பகைவரது பெரிய நிலத்தை வென்று கடந்து; புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ - இயற்புலவர் போந்து பாடிப்பரவ அவர்கட்கு வேண்டுவன நல்கி ஓங்கிய புகழை நிலைநாட்டி; வயிரியர் கண்ணுளர்க்கு - வயிரியர் கண்ணுளர் என்ற இருவகைக் கூத்தர்க்கும்; விரியுளை மாவும் களிறும் தேரும் - விரிந்த தலையாட்ட மணிந்த குதிரைகளையும் களிறுகளையும் தேர்களையும்; ஓம்பாது வீசி - தனக்கென்று கருதாமல் மிகுதியாய் நல்கி; கடிமிளை - காவற்காடும்; குண்டு கிடங்கின் - ஆழ்ந்த கிடங்கும்; நெடு மதில் - நெடிய மதிலும்; நிலை ஞாயில் - நிலைபெற்ற ஞாயிலும்; அம்புடை ஆர் எயில் உள் அழித்து - அப்புக்கட் டுடைமையால் கடத்தற்கரிய அகமதிலு முடைய அகநகரை யழித்து; அடாஅ அடு புகையுண்ட - ஊர் சுடு புகை படிந்த; அட்டு மலர் மார்பன் - பகைவரை யட்ட செருக்கினால் விரிந்த மார்பினை யுடையவன் என்றவாறு. ஓங்கி நடந்து, மாநிலம் கடந்து, ஓங்கு புகழ் நிறீஇ, ஓம்பாது வீசி, உண்ட மலர் மார்பன் என இயைத்துக்கொள்க. தேய்த்து, இரட்டும் கணநிரை யலற என இயைக்க. வயிரியர், கூத்தர். கண்ணுளர், சாந்திக் கூத்தாடுபவர். ஞாயில், மதிலுச்சி. எந்திர வில்லும் ஏப்புழையும் உடைமைபற்றி, “அம்புடை யாரெயில்” எனப்பட்டது. அடாஅ அடுபுகை - ஊர் சுடு புகைக்கு வெளிப்படை. எதிர்நின்று பொரும் பகைமன்னர், தம் ஆற்றலிழந்து கெடுதலால், அவர் நாணும் உட்கு மெய்த, அரியேறு போல நடந்தேகும் பெருமிதத்தை, “ஒன்னார் தேய வோங்கி நடந்து” என்று சிறப்பித்தார். இகழ்வார் முன் ஏறுபோற் பீடுநடை கோடல் ஆடவர்க்கு இயல்பு. படியோர் - பகைவர். “படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை” (மலைபடு. 93) என்றார் பிறரும். வடி மணி - வடித்துச் செய்த மணி யென்றும் கூறுப. யானைக் கணம் என்றொழியாது நிரை யென்றதனால், யானைப்படை யாயிற்று. யானைப்படை யுடையவே ஏனைய படைகள் அழிந்தமை சொல்லவேண்டா வாயிற்று. இவ்வண்ணம் நால்வகைப் படையும் கெடுத்து, விரிந்து கிடக்கும் நாட்டைக் கடந்து சென்று தலைநகரை யடைந்து பொருது, அதனுட் சேறல்வேண்டி யிருத்தல்பற்றி “வியலிரும் பரப்பின் மாநிலம் கடந்து” என்றார். வியலிரும் பரப்புடைய தாயினும் அதனை வஞ்சனையின்றிப் பொருது கடந்தமை தோன்ற, பரப்பை விசேடித்துக் “கடந்து” என்றார். இவ்வாறு செய்யும் அறப்போர் இயற்புலவர்க்கு மிக்க இன்பமும் அன்பு முண்டாக்குதலின், அவர் அச்செயலைப் பாட்டிடை வைத்துப் பாராட்டுவது பற்றி, “புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ” என்றார். ஏனைப் புகழ்கள் எல்லாவற்றினும் புலவர் பாடும் புகழ் பொன்றா நிலைமைத் தாதலால், அதனை வியந்தோதினார். அப் புலவர் வியந்து புகழும் பாட்டுக்களைப் பாணரும் கூத்தரும் முறையே பாடி யாடுதலின், அவர்க்கு அவன் வழங்கும் திறத்தை, “விரியுளை மாவும் களிறும் தேரும் ஓம்பாது வீசி” என்றார். “ஓம்பாது வீசி” யென்றதனால், அவை பகைப்புலத்தே கவர்ந்தமை பெற்றாம். “மன்றம் போந்து மறுகுசிறை பாடும், வயிரிய மாக்கள்” (பதிற். 23) என்று பிறரும் கூறுதல் கண்க. கண்ணுளர், கூத்தர்; “நலம்பெறு கண்ணுள ரொக்கல் தலைவ” (மலைபடு. 50) என வருதல் காண்க. கண்ணுளர் சாந்திக் கூத்தாடு பவரென்று அடியார்க்கு நல்லார் உரைப்பர் (சிலப். 5 : 49 உரை). அஃதாவது, கடுஞ்சின முன்பினால் அரும்போருடற்றி வென்றி யெய்தும் வேந்தர்க்கு அச்சினம் தணிதற்கு அவற்குரிய இன்பம் பொருளாக ஆடும் கூத்து. “சாந்திக் கூத்தே தலைவ னின்பம், ஏந்திநின் றாடிய ஈரிரு நடமவை, சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம், என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்” என வரும். வினோதக் கூத்தும் ஈண்டைக்குப் பொருந்து மாயினும், சிறப்புப்பற்றி, சாந்திக் கூத்தாடுவோரை விதந்தோதினார். இவர் மதங்கரென்றும் கூறப்படுவர். இவர்கட்கு மாவும் களிறும் தேரும் வழங்குதற்கும் “கொடைக் கட னமர்ந்த கோடா நெஞ்சின” னென்று கூறுதற் குரிய கொடைக்கும் வேறுபாடு காட்டலுற்ற பழையவுரைகாரர், “மேலே கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினன் என்று கொடை கூறுகின்றான், ஈண்டு ஓம்பாது வீசி என்று கொடை கூறியதற்குக் காத்தற்குச் சென்றவிடைக் கொண்டவற்றைக் களம் பாடச் சென்றார்க்குக் கொடுக்கும் கொடையென வுரைக்க” என்பர். இனி, பகைவர் தலைநகரை யடைந்து செய்யும் போர்த் திறம் கூறுவார், காவற்காட்டை யழித்து, கிடங்கினைக் கடந்து மதின்மேலேறி எயிலிடத்தே பொருது, அகநகர்க்குட் புகுந்து ஆண்டெதிர்ந்த வீரரை யழித்து எரியிட்டுச் சூறையாடினா னென்பார், “கடிமிளைக் குண்டுகிடங்கின், நெடுமதினிலை ஞாயில், அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட, அடாஅவடு புகை யட்டுமலர் மார்பன்” என்றார். மிளை முதலியவற்றின் நலம் கூறியது, அவற்றாற் பயனின்மை தோன்ற நின்றது. “அருங்குழுமிளைக் குண்டுகிடங்கின், உயர்ந் தோங்கிய நிரைப் புதவின், நெடுமதி னிரைஞாயி, லம்புமி ழயிலருப்பந், தண்டாது தலைச்சென்று, கொண்டுநீங்கிய விழுச்சிறப்பு” (மதுரை 64-9) என்று பிறரும் கூறுதல் காண்க. உள்ளழித் துண்ட மலர் மார்பன் என்பதற்கு, “எயிலை யழித்து அகநகரைக் கைக்கொண் டல்லது உணவு கொள்வ தில்லை” யென வஞ்சினம் செய்து, அவ்வாறு அழித்தபின் உணவு உண்ட மலர் மார்பன் என்று கூறலுமாம். இதனை, “இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை, மாண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக், கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்” (பதிற். 58) என்பதனாலுணர்க. அகநகரை யெரித்தலால் எழும் புகை தன் மார்பிடத்தே பரவ, முன்னின்று வினை யாற்றுவதால், “அடாஅ அடுபுகை யட்டு மலர் மார்பன்” என்றார். அட்டென்னும் வினையெச்சம், மலர்த லென்னும் வினை கொண்டது. 22-24. எமர்க்கும்............. நெஞ்சினன் உரை : எமர்க்கும் பிறர்க்கும் பரிசின் மாக்கள் யாவராயினும் - எம்மைச் சேர்ந்த பாணர்க்கும், பொருநர் கூத்தர் புலவராகிய பிறர்க்கும் இவரின் வேறாகிய பரிசிலர் யாவராயினும்; வல்லராயினும் - தாம் பரிசுபெறற்குரிய கலையில் வன்மையில ராயினும்; கொடைக்கடன் அமர்ந்த - எல்லார்க்கும் கொடுப் பதைக் கடமையாக விரும்பிய; கோடா நெஞ்சினன் - செம்மை திறம்பாத நெஞ்சினை யுடையன் என்றவாறு. கூற்று நிகழ்த்துவோன் பாண னாதலால், எமர்க்கும் மென்றது அவனைச் சேர்ந்த பாணர்க்காயிற்று; ஆசிரியர் கூற்றாயின், அவரைச் சேர்ந்த புலவர் பெருமக்களைக் கொள்க. பொருநர், கூத்தர் முதலாயினாரைப் பிறர் என்றான். புலவர் பாணர் விறலியர் பொருநர் கூத்தர் எனப் பலரும் பல்வேறு வகையில் பரிசில் பெறற் குரியராதலின், அவரவர் வரிசை யறிந்து கொடுத்தலை விரும்பினவன் என்றற்கு, “பரிசின் மாக்கள் யாவ ராயினும்” என்றான். வன்மையின்றி அதனைப் பெறும் பயிற்சி நிலைக்கண்ணே யிருப்பார்க்கும் கொடுக்கும் சிறப்பை வியந்து, “வல்லா ராயினும்” என்றான். வன்மையிலார்க்கு வழங்கின், அவர் மேலும் அத்துறையில் வன்மை பெறற்கு ஊக்கம் மிகுவ ரென்ற கருத்தால் வழங்குகின்றா னென்பார், “கோடா நெஞ்சினன்” என்றார். வல்லார் என்றற்கு ஒரு கல்வியும் மாட்டார் என்று பொருள் கொண்டு, அவர்க்குக் கொடைபுரிதல் இல்லை யென்பதுபட நிற்றல் தோன்ற, “வல்லா ராயினு மென்ற வும்மை எதிர்மறை” யென்று பழையவுரைகாரர் கூறுவர். இனி, அப் பழையவுரைகாரர், “எமர்க்கும் பிறர்க்கும் என நின்றவற்றைக் கொடைக்கட னமர்ந்த வென்பதனோடு முடித்து, எமர்க்கென்றது தன் பாணராகிய எமர்க்கென்றும், பிறர்க் கென்றது தன் பாணரல்லாத பிறர்க்கென்றும் உரைக்க” என்றும், “பரிசின்மாக்கள் யாவராயினும் வல்லாராயினும் எனக் கூட்டிப் பரிசின் மாக்கள் என்றதற்கு முன் சொன்ன எமர்க்கும் பிறர்க்கு மெனப்பட்டாரையே ஆக்கி, யாவராயினு மென்றதற்குக் கண்டார் மதிக்கப்படும் தோற்றமில ராயினும் எனவும், வல்லாராயினு மென்றதற்கு ஒரு கல்வி மாட்டாராயினு மெனவு முரைக்க; யாவரினு மென்ற வும்மை இழிவுசிறப்பு” என்றும் கூறுவர். 25-28. மன்னுயிர்............. தாயே உரை : தண் இயல் எழிலி - குளிர்ப்பினைச் செய்யும் மழை முகில்; மன்னுயிர் அழிய - நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு பல யாண்டு மாறி - பல யாண்டுகள் பெய்து குளிர்ப்பிக்கும் செயலின் நீங்கி; தலையா தாயினும் - மழையினைப் பெய்யா தொழியுமா யினும்; வயிறு பசி கூர ஈயலன் - தன்னை யடைந் தார்க்கு வயிற்றிற் பசித்தீ மிக் கெழுமாறு குறைபடக் கொடுத்தல் இலன், பசித் தீத் தலைகாட்டவாறு நிரம்பக் கொடுப்பனாதலால்; அவன் ஈன்ற தாய் - அவனைப் பெற்ற தாய்; வயிறு மாசு இலீஇயர் - வயிறு குற்றமின்றி விளங்குவாளாக என்றவாறு. தண்ணிய லெழிலி என்றவிடத்துத் தண்ணென்றதைப் பெயர்ப்படுத்துத் தட்பத்தைச் செய்யும் என முடிக்க; தண்ணிய இயல்பினையுடைய எழிலி எனினுமாம். சில யாண்டு மாறினாலே, உயிர்கள் உடலோடு கூடியிருத்த லமையா தாகலின், “யாண்டு பல மாறி” யென்றது, உயிர்கள் தாம் நின்ற உடலின் நீங்காது நிற்றலும், இறந்தவை மீளத் தோன்றுதலும் முற்றவும் இலவா மென்றற்கு; உயிர்த்தொகை குன்று மென்றற்கு, “மன்னுயிர் அழிய” என்றும் கூறினார். மாறுதல், பெய்து குளிர்ப்பித்தலைச் செய்யாது நீங்குதல்; நாட்டில் வெப்பம் மிகுவித்தல். ஒருகால் அடங்கியிருக்கும் வயிற்றுத்தீ சிறிது கொடுத்தவழி மிக்கெழுந்து வருத்துமாதலின், நிறையக் கொடுக்குமாறு தோன்ற, “வயிறு பசி கூர ஈயலன்” என்றான். தலையாதாயினும் என்புழி, உம்மை யெதிர்மறை. இனி, ஓம்பாது வீசி யென்றும், கொடைக்கட னமர்ந்த என்றும் இருமுறை கூறியதனோ டமையாது, வயிறு பசிகூர ஈயலன் என மூன்றாமுறையும் கொடையினை, விதந்து கூறிய தற்குக் காரணம் கூறலுற்ற பழையவுரைக்காரர், “மூன்றா வது கொடை கூறியதற்கு, மழை பெய்யா விளைவில் காலைத் தன் பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள் பசித்து வருந்தாமல், வேண்டும் பொழுதுகளிலே வேண்டுவன கொடுக்கும் என்று ஒரு கொடை நிலையாக வுரைக்க” என்று கூறுவர். தாயர் தம் வயிற்றிற் பிறந்த மக்களால் தகாதன நிகழ்ந்த வழித் தம் வயிற்றை நொந்து கொள்ளலும், சான்றோர் அம் மக்களின் செயலால் விளையும் நலந் தீங்கு கண்டு தாயர் வயிற்றை வியத்தலும் பழித்தலும் பண்டை மரபு; அதுபற்றி, ஈண்டு, ஏனோர் வயிற்றுப் பசி தீர்த்துக் குளிர்ப்பிக்கும் சேரலாதனது நலங் கண்டு வியந்து கூறலுற்றோன், அதனை யீன்ற தாய் வயிற்றைச் சிறப்பித்து, “வயிறு மாசிலீஇய ரவன் ஈன்ற தாயே” என்றான். தன் மகன், போர்க்களத்தே, எறிந்த வேல் யானையோடு ஒழிய, வெறுங்கையொடு மனைக்குப் போந்தானாகக் கண்டு மனம் நொந்து, “புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம், அதன்முகத் தொழிய “நீபோந் தனையே, எம்மில் செய்யா அரும்பழி செய்த, கல்லாக் காளைநின் னீன்ற வயிறே” (புறத். 1406) என்றும், போரிடை வெண்று புகழ் பெற்றது கண்டு, ஈன்ற வயிறோ விதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” (புறம். 86) என்றும் தாயர் கூறுதல் காண்க. மகட்கொடை பொருளாகப் போர் நிகழக் கண்ட சான்றோர், அம் மகளை “மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே” (புறம். 349) என்போர், அவளைப் பெற்ற தாயை நொந்து, “குவளை யுண்கண் இவளைத் தாயே, ஈனா ளாயின் நன்றுமன்” (புறம். 348) என்றும், “அறனிலள் மன்ற தானே......... பகைவளர்த் திருந்தவிப் பண்பில் தாயே” (புறம். 336) என்றும் கூறுதல் காண்க. நுங்கோ யாரென வினவின், எங்கோ சேரலாதன்; அவன் கண்ணி வாழ்க, அவன் பகைவர் மாறிய வினைவாய்ப்பறியலன், பொய்ப்பறியலன், அட்டு மலர் மார்பன், கோடா நெஞ்சினன், வயிறுபசி கூர ஈயலன், அதனால், அவளை யீன்ற தாய் வயிறு மாசிலீஇயர் என இயைத்து முடித்துக் கொள்க. “இதனாற் சொல்லியது அவன்றன் செல்வப்பொலிவு கண்டு, நீ யாருடைய பாணன் என்று வினவியாற்கு, யான் இன்னாருடையே னென்று சொல்லி முடிக்க, அவன் குணங்கள் இன்ன எனக் கூறிப் பின் அவனை வாழ்த்தி முடித்தவா றாயிற்று” என்பது பழையவுரை. இருமுந்நீ (2) ரெனவும், முரணியோ (3) ரெனவும் கடிமிளை (17) யெனவும், நெடுமதில் (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடியாகலான் வஞ்சித்தூக்கு மாயிற்று. கனவினும் என்பது கூன். ஆசிரியர் பாலைக் கொளதமனார் பாடிய மூன்றாம் பத்து பதிகம் 1. இமைய வரம்பன் றம்பி யமைவர உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் 5. கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி இருகட னீரு மொருபக லாடி அயிரை பரைஇ யாற்றல்சால் முன்போ டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி 10. நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், அடுநெய் யாவுதி, கயிறுகுறு முகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி, கானுணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி, தொடர்ந்த குவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்ற வாயம். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில், நீர் வேண்டியது கொண்மின் என, யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும் என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட் பிக்க, பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியை யும் காணாராயினர். இமையவரம்பன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 1. அடுநெய் யாவுதி 1. சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவைதுணை யாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி 5. உருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா துணீஇய பாசவர் 10. ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து 15. நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி ஆர்வளம் பழுநிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்ப 20. முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை 25. பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்க வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந 30. யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல் ஒரீஇயின போல விரவுமலர் நின்று 35. திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் அலங்கிய காந்த ளிலங்குநீ ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயிர வெள்ளம் வாழிய பலவே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : அடுநெய் யாவுதி. 1-7. சொல்................. ஆவுதி உரை : எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை - பிற வுயிர்கட்குத் தீங்கு நினையாமல் விளக்கமுற்ற கொள்கையாலும்; காலை யன்ன சீர்சால் வாய்மொழி - ஞாயிறு போலத் தப்பாத வாய்மை யுரையாலும்; உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - உட்குப் பொருந்திய முறைமையினையுடைய முனிவர்களைப் பரவுதற்காக; சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்ற ஐந்துடன் போற்றி - சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் சோதிடமும் வேதமும் ஆகமமும் என்ற ஐந்தினையும் ஒருங்கே கற்று; அவை துணையாக - அவற்றா லெய்திய புலமையைத் துணையாகக்கொண்டு; கொண்ட தீயின் சுடர் எழுதோறும் - எடுத்த வேள்வித்தீயின்கண் சுடர் எழுந்தோறும்; விரும்பு மெய் பரந்த - உள்ளத்தெழுந்த விருப்பம் மெய்யின்கண் பரந்து வெளிப்படுதற்குக் காரணமான; பெரும் பெயர் ஆவுதி - பெரிய பொருளைப் பயக்கும் ஆவுதிப் புகையும் என்றவாறு. உறுநோய் தாங்கல், பிற உயிர்கட்குத் தீங்கு நினையாமை எனத் தவத்திற் குருவென்று கூறிய இரண்டனுள், பிறவுயிர்க்குத் தீங்கு நினையாமை யுளதாகியவழி உறு நோய் தாங்கலாகிய ஏனையது தானே கைகூடுதலின், “எவ்வஞ் சூழாமை” யொன்றையே எடுத்தோதினார். எவ்வுயிர்க்கும் எவ்வம் நினையாதாரை, மன்னுயி ரெல்லாம் கைகூப்பித் தொழு மென்ப வாகலின், அத் தொழுதகு ஒழுக்கத்தை “விளங்கிய கொள்கை” யென்றார். “குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின்” (குறள். 1019) என்பதனால் கொள்கை ஒழுக்கமாதல் காண்க. ஞாயிறு நாட் காலையில் தோன்றி இருணீக்கி யொளி நல்குவது பற்றிக் காலை யெனப் பட்டது. ஞாயிற்றின் வாய்மை யுணர்த்துவது அது செய்யும் கால மாதல் பற்றிக் காலையை வாய்மைக்கு உவமையாக்கி, “காலை யன்ன சீர்சால் வாய்மொழி” யென்றார். “வாய்மையன்ன வைகல்” (கலி.35) என்று பிறரும் கூறுப. “பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள். 296) என்பது பற்றி வாய்மொழி “சீர்சால் வாய்மொழி” யெனப்பட்டது. சொல்லும் செயலும் வாய்மை தெளிதற்குக் கருவியாமாயினும், சொல் சிறந்தமைபற்றி, வாய்மை யென்னாது “வாய்மொழி” யெனல் வேண்டிற்று. காலை யன்ன வாய்மொழி யென்றதற்குப் பழையவுரைகாரர், “ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம் மொழி” யென்றும், “மொழியானென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினுமமையும்” என்றும் கூறுவர். எவ்வம் சூழாக் கொள்கையும் காலை யன்ன வாய்மையும் உடையராதலின், ஏனையோ ருள்ளத்தே அவரைக் கண்டவழி உட்குத் தோன்றுதலால் முனிவரை, “உருகெழு மரபின் கடவுள்” என்றார். பொறிபுலன்களின் செயலெல்லையைக் கடந்தமை பற்றி மக்கட் பிறப்பினராகிய முனிவர் கடவுளெனப் பட்டனர் என்றுமாம்; “முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால். இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய அக் கடவுள் மற்றக் கடவுள்” (கலி. 93) என முனிவர் கடவுளாகக் கூறப்படுமாறு காண்க. பேணிய ரென்னும் வினையெச்சம் கொண்ட வென்னும் வினைகொண்டது. சொல், சொல்லிலக்கணம். பெயர் - பொருள்; எனவே பொருளிலக்கணமாயிற்று. பழையவுரைகாரரும், “பெயர், பொருளிலக்கணம் சொல்லும் நூல்; `பெற்ற பெரும்பெயர் பலர் கை யிரீஇய” (பதிற். 90) என இத் தொகையுண் மேலே வந்தமையால் பெயரென்பது பொருளாம்” என்பர். நாட்டம், சோதிடம். கேள்வி - வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாய்க் கேட்கப்படும் முறைமை யுடைய தாகலின், கேள்வி யெனப் பட்டது. நெஞ்சம், ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றக் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் றாளை வணங்குத லென்ப வாதலானும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுதற்குரிய ஞானமும் வீடுபேறும் பெறுவிக்கும் சிறப் புடைய அருணாலாதல்பற்றி, ஆகமத்தை “நெஞ்ச” மென்றார். செவி முதலிய அறிகருவிகளால் உணரப்படும் உலகியற் பொருள்களின் பொய்ம்மை யுணர்ந்து கழித்தவழி யுளதாய் நிற்கும் ஞானப்பொருள் நெஞ்சால் உய்த்துணரப்படுவதன்றிப் பிறிதோராற்றால் அறியப்படுவ தன்மையின் நெஞ்சினை அந் நெறிக்கட் செலுத்தி ஞானக்காட்சி பெறுவிக்கும் சிறப்புடைமை பற்றி, ஆகமத்தை நெஞ்சமென்றா ரென்றுமாம். இனிப் பழைய வுரைக்காரர், “நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை” யென்பர். ஏனைச் சொல் பெயர் முதலியன போல் நெஞ்சம் நூற்காகாது வேறாயின், ஐந்தென்னும் தொகை பெறுதல் பொருந்தாதாதலால் அது பொருளன்மை யுணர்க. அவை, சொல் முதலிய ஐந்தன் அறிவு. வேதம் முதலிய வற்றின் அறிவு பொது அறிவும், ஆகமவறிவு உண்மையறிவுமாம் எனத் தேர்ந்து கொள்க. “ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள் வாழ்க” (திருவா. சிவபு. 4) என மணிவாசகர் கூறுதல் காண்க. முனிவர் கடன் கேள்வியொடு பயின்ற வேள்வியால் இறுக்கப் படுமென்ப வாகலின், கடவுட் பேணியர் கொண்ட தீயென்றும், இத் தீயினை யோம்புதற்கு மேலே கூறிய சொல் முதலிய வைந்தன் கேள்வியும் துணையாமென்பது பற்றி அவை துணை யாகக் கொண்ட தீயென்றும் கூறினார்; “வேள்வியால் கடவு ளருத்தினை கேள்வியின், உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை” (பதிற். 70) என்று பிறரும் கூறுதல் காண்க. வேள்வித்தீ சுடர்விட்டெழுங்கால், அதனைக் கடவுளர் விரும்பி யேற்று வேட்கும் தம் கருத்து நிறைவிப்ப ரென்ற விருப்பந் தோன்றி உள்ளத்தே உவகை மிகுவிப்ப, அது மெய்யின்கண் வெளிப் பட்டு நிற்குமாறு தோன்ற, “விரும்பு மெய் பரந்த” என்றார். விருப்பு, விரும்பென மெலிந்தது; பழையவுரைகாரர், “விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது” என்றார். ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுப வென்னும் நூற்றுணிபு பற்றி, “பெரும் பயராவுதி” யென்றார். ஆவுதி: வடசொற் சிதைவு. 8-13. வருநர்................ ஆவுதி உரை : வருநர் வரையார் வார வேண்டி - தம்பால் வருவோர் வரைவின்றி யுண்ண வேண்டி; விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் - விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டுவாணிகர்; ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை - ஊனை வெட்டும் மணைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி; குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனாது ஆர்ப்ப - வேக வைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலி போல அமையாது ஒலிக்க; செழு நகர் நாப்பண் - செழுமையுடைய மனையின்கண்ணே; அடும் மை எழுந்த அடு நெய் ஆவுதி - அடுதலாற் புகை யெழுந்த அடிசிலின்கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப் புகையும் என்றவாறு. என்றது, விருந்தாய் வந்தார் உண்ணுங்கால் அவர்க்குப் புகையெழ இட்ட அடிசிற் சோற்றில் பெய்யப்படும் நெய்யாகிய ஆவுதி என்றவாறாம். அடு நெய், அடிசில் நெய்; இஃது உருக்கிப் பெய்யப்படுதலின் அடு நெய் யெனப்பட்டது. பாசவராவார் ஆட்டு வாணிகர். இவர்பால் வாணிபம் குறித்துப் பலர் நெடுந்தொலை விலிருந்தும் வருதலின், அவரை விருந்தேற் றோம்பலும் இவர்க்குக் கடனாதலால், விருந் துண்பிக்குமிடத்து அவர்கள் தாம் இடுவனவற்றை நிரம்ப வுண்டல் வேண்டி விருந்தோம்பற் கின்றி யமையாத அன்பு மிக வுடைய ரென்பது தோன்ற, “வருநர் வரையார் வார வேண்டி, விருந்துகண் மாறாது” என்றார். வார்தல் - சேரக் கொள்ளுதல். அகத்தெழும் அன்பு அவ்வளவில் அமையாது முகத்தினும் சொல்லினும் இனிது விளங்கித் திகழ வேண்டுதலின், “விருந்து கண் மாறாது” என்றார். தம்மை நோக்கி வரும் விருந்தினர் குழைந்து வேறிடம் பெயர்ந்து செல்லாதபடி முகத்தால் இனியராய் வரவேற்கும் சிறப்புத் தோன்றக் “கண்மாறாது” என்றா ரென்றும், விருந்துகண் மாறாது உணீஇய வென்பதைக் கண் மாறாது விருந்தினர் உணீஇய வென வியைத்து, வேறிடம் மாறிச் செல்லாது தம்மிடமே நின்று தமது விருந்துணவை யுண்டற்பொருட்டு என்றும் உரைப்பினுமமையும். உணீஇய வென்பது பிறவினைப் பொருளில் வந்த பெயரெச்சம். ஊனம்- இறைச்சி கொத்தும்; குறடு என்பது பழையவுரை. ஊனை வைத்துக் கொத்தித் துண்டிப்பதற்கு அடிக்கட்டையாய்ப் பயன்படும் மர மணையை “ஊனம்” என்று வழங்குப. `ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை’ யென்றதனால், இக் குறைகள் சோற்றோடு ஒருங்கு பெய்து சமைக்கப்படு மென்பது விளங்கும். துவையும் கறியும் பலவகைய வாதலின், “குய்யிடு தோறும்” என்றார். மை - புகை; அடிசிற்கண் அடு நெய்யைப் பெய்தவுடன் புகை யெழும் விரைவு தோன்ற, எழுந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். கொழுங்குறை குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனா தார்ப்ப, அடும் மையெழுந்த ஆவுதி யென வியையும். பழையவுரைகாரர், “கடலொலி கொண்டு ஆர்ப்ப” வெனக் கூட்டி, “ஆர்ப்ப வெழுந்த வென முடிக்க” என்று கூறி, “கடலொலி கொண்ட வென்பது பாடமாயின், கடலொலி கொண்ட நகர் என்க” என்பர். விருந்தோம்பலும் வேள்வி யெனப்படு மாதலின், அதுகுறித்து அடும் நெய்யும் ஆவுதி யெனப்பட்டது; “இனைத் துணைத் தென்பதொன் றில்லை விருந்தின், துணைத்துணை வேள்விப் பயன்” (குறள். 87) என்று சான்றோர் கூறுதல் காண்க. விருந்தினரை யுண்பித்தற்குச் சமைக்கப்படும் உணவின்கட் பெய்யப்படும் நெய்யை அடுநெய் யாவுதி யெனச் சிறப்பித்த நலத்தால் இப் பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவதாயிற்று. இனி, பழையவுரைகாரர், “அடு நெய்யை யாவுதி என்றது, விருந்துபுறந்தருதலையும் ஒரு வேள்வியாக்கி, ஆள்வினை வேள்வி யென்று ஒரு துறையாக நூலுட் கூறலான் என்பது” என்றும், “இச் சிறப்பானே இதற்க அடுநெய் யாவுதி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். 14-19. இரண்டுடன் ............. மார்ப உரை : இரண்டுடன் கமழும் நாற்றமொடு - பெரும் பெயராவுதி அடு நெய் யாவுதி யென்ற இருவகை ஆவுதிப்புகை கமழும் நறிய புகை மணத்தால்; வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக - வானுலகத்தில் நிலைபெற்ற கடவுளர்தாமும் விருப்பம் கொள்ள; ஆர் வளம் பழுநிய ஐயந் தீர் சிறப்பின் - குறையாத வளம் நிறைந்த ஐயம் நீங்கிய சிறப்பினையும்; மாரியங் கள்ளின் - மழைபோல் சொரியப்படுங் கள்ளினையும்; போர் வல் யானை - போரிலே வல்ல யானையினையும்; போர்ப்புறு முரசம் கறங்க - ஏற்றுரிவை போர்த்த போர்முரசம் முழங்க; ஆர்ப்புச் சிறந்து - ஆரவாரம் மிக்குச் சென்று; நன்கலம் பேணித் தரூஉம் மண்படு மார்ப - பகைவர் திறையாகத் தரும் நன்கலங்களைப் பேணிக் கொணரும் மண்பட்ட மார்பையும் உடையவனே என்றவாறு. இரண்டும் உடன்கமழும் நாற்றத்தால் கடவுளும் விழைதக, வளம் பழுநிய சிறப்பினையும், கள்ளினையும், யானையினையும் மண்படு மார்பினையுமுடையோய் என இயையும். நாற்றமொடு என்பதில், ஒடு ஆனுருபின் பொருட்டு. நாற்றம் - நறுமணம். “ஆவுதி யென்ற விரண்டனையும் அவற்றானாய புகைமேற் கொள்க. கடவுளும் விழைதக வென்றது, கடவுளரும் இவ்வாறு நாம் அறஞ்செய்யப் பெறின், அழகிது என்று அது விரும்ப வென்றவா” றென்று பழையவுரைகாரர் கூறுவர். பேணி யென்பதனை, நன்கலம் பேணித் தரூஉம் எனக் கூட்டிக் கொள்க. இனி, பழையவுரைகாரர்; “பேணி யென்றது முன் சொன்ன வேள்வியால் தேவர்களையும், பின்பு அதனோடு ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய் வரும் மக்களையும் பேணியென்றவாறு” என்றும், “அதனைத் திரித்துப் பேணப் பழுநிய வென முடிக்க” வென்றும் கூறுவர். வேள்விக் கண்ணெழும் நாற்றத்தை வானுலகத்துத் தேவர் விரும்புவ ரென்ப வாதலின், “இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக” என்றார்; பிறரும். “வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்றவுணவி னோரும்” (புறம். 62) என்பது காண்க. ஆர்வளம் பழுநிய சிறப்பாவது, “கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த சிறப்பு” என்பது பழையவுரை. ஆர்வளம் நிறைந்தவழி அதனாற் பிறக்கும் சிறப்பின்கண் ஐயம் பிறவாமையின், “ஐயந்தீர் சிறப்பு” என்றார். கள்ளிற் போர்வல் யானை எனற்பாலது ஒற்று மெலிந்து “கள்ளின் போர்வல் யானை” என நின்றது. மண்படு மார்பம் - நறுஞ்சாந்தால் புனையப்பட்ட மார்பு; “மகளிராய்ந்த, மோட்டுவெண் முத்தமின்னு முகிழ்முலை யுழுது சாந்தம், கோட்டுமண் கொண்ட மார்பம்” (சீவக. 2303) என்று பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், “மண்படு மார்ப வென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்ப” என்பர். 20-24. முல்லை............... மெய்ம்மறை உரை : முல்லைக் கண்ணி - முல்லைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியணிந்த; பல்லான் கோவலர் - பலவாகிய ஆனிரை களை யுடைய கோவலர்; புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பி -புல்லை நிறையவுடைய விரிந்த புலத்தில் அந் நிரை பலவற்றையும் மேயவிட்டு; கல் உயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் - கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணியைப் பெறுகின்ற; மிதியற் செருப்பின் பூழியர் கோவே - மிதியாகிய செருப்பல்லாத செருப்பென்னும் மலையையுடைய பூழி நாட்டவர்க்கு வேந்தே; குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை - பலவகைப் போர்க் கண்ணி யெல்லாம் குவியச் சூடிய மழவர்க்குக் கவசம் போன்றவனே என்றவாறு. ஆயர் முல்லைக்கண்ணி சூடுப வாதலின், “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்” என்றார்; “புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர், முல்லை யொருகாழும் கண்ணியும்” (கலி. 115) என்று பிறரும் கூறுவர். ஆயரினத்திற் புல்லினத்தாயர், கோவினத்தாயர், கோட்டினத்தாயர் எனப் பல ருண்மையின், ஈண்டு இவர் கோவினத்தாய ரென்பது படப் “பல்லான் கோவலர்” என்றார். ஆ பலவாதலின், அவை நன்கு மேய்தற் குரிய புலம் என்றற்குப் “புல்லுடை வியன்புலம்” என்றார். ஆக்கள் தமக்கு வேண்டிய புல்லை நிரம்பப் பெறு மெனவே, அவற்றையுடைய ஆயர் பெறுவன கதிர்மணி யென்றும், அம் மணிகளும் கடத்திடைப் பெறப்படுகின்றனவென்றும் கூறினார். “கல்லிற் பிறக்கும் கதிர் மணி” (7) என்பது நான்மணிக்கடிகை. மிதியல் செருப்பு - மிதியாகிய செருப்பல்லாத மலையாகிய செருப்பு; எனவே, செருப்பென்னும் மலையென்றவாறாம். “செருப்பென்பது ஒரு மலை; மிதிய லென்பது அடை; மிதியென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக வுரைக்க” என்றும், “குவியற்கண்ணி யென்னும் தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்த” தென்றும், “மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்லுவாரு முள” ரென்றும் கூறுவர் பழையவுரை காரர். பூழியர், பூழிநாட்டவர். இப் பூழிநாடும் சேரர்க்குரித் தென்பது “பூழியர் கோவே பொலந்தார்ப் பொறைய” (பதிற். 84) என்று பிறரும் கூறுமாற்றா லறியலாம். வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை எனப் போர்க்கண்ணி பலவாதலால், அவற்றை யணியும் மழவரை, “குவியற் கண்ணி மழவர்” என்றார். பழையவுரைகாரர், “குவியற் கண்ணி யென்றதற்கு வெட்சி முதல் வாகை யீறாய போர்க்கண்ணி யெல்லாம் குவிதலையுடைய கண்ணி யென்க” என்பர். மழவர் ஒருவகை வீரர். இவர் குதிரைப்படைக் குரியராய்ப் போருடற்றும் சிறப்புடையரென மாமூலனார், “வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழல், உருவக் குதிரை மழவர்” (அகம். 1) என்றும், “கறுத்தோர், தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி, வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்” (அகம். 187) என்றும் கூறுகின்றார். 25-29. பல்பயம்............. பொருந உரை : பல் பயந் தழீஇய - பல்வகைப் பயன்களை நல்கும் காடு பொருந்திய; பயங்கெழு நெடுங் கோட்டு - தானும் நல்ல பயன் தருவதாகிய நெடிய உச்சியையுடைய; நீர் அறல் மருங்கு வழிப்படா - நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுதலில்லாத; பாகுடிப் பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சா - சேய்மையி லிருந்தே நுனித்து நோக்கும் கொக்கின் பரிவேட்டத்துக்கு அஞ்சுத லில்லாத; சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய - புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போருடற்றாவாறு குறுக்கிட்டுக் கிடக்கும்; அயிரை - அயிரை யென்னும்; நேருயர் நெடு வரைப் பொருந - நேரிதாய் உயர்ந்த நெடிய மலைக்குத் தலைவனே என்றவாறு. பல் பய மென்றது - மலையைத் தழுவிக் கிடக்கும் காடுபடு பொருள். பயங்கெழு வெனப் பின்னர்க் கூறியது மலைபடு பொருள். நீரறல்: இரு பெயரொட்டு. நெடுங்கோட்டு, நேருயர் நெடுவரை அயிரை, நீர் அறல் மருங்கு வழிப்படா, பரிவேட் பஞ்சா அயிரை, முனைகெட விலங்கிய அயிரை என இயையும். அறல் மருங்கு வழிப்படா அயிரை யெனவும், கொக்கின் பரிவேட் பஞ்சா அயிரை எனவும் நின்று மீனன்மை காட்டி நிற்கும் இத் தொடர்கள், அயிரை மலைக்கு வெளிப்படை. நீரோடுங்கால் அயிரைமீன் அதனை எதிர்த்தேறிச் செல்லும் இயல்பிற் றாகலின் அதனை விலக்கற்கு, “நீரறல் மருங்கு வழிப்படா” வென்றும், அம்மீன் கூர்த்த பார்வையினையுடைய கொக்கிற்கு அஞ்சுவது குறித்துப் “பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா” என்றும் கூறினார். பரிவேட்பு - விரைந்து குத்தும் கடுமை. இம் மீனைப் பரதவர் அசரையென்பர். இது பெரும்பான்மையும் நீர் மட்டத்துக்குச் சிறிது உள்ளேயே உலவுவது. அந்நிலையிற் சிறிது பிறழ்ந்தவழி இம்மீன் கொக்கின் பார்வையிற் படுதலின், அது ஞெரேலெனப் பாய்ந்து கவர்தலின், கொக்கின் பரிவேட்புக் கஞ்சுவதாயிற்று. பிறரும், “தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை, நாரை நிரைபெயர்ந் தயிரையாரும்” (குறுந். 166) என்பது காண்க. கடலிடத்தே யன்றிச் சிறு சிறு நீர்நிலைகளிலும் பழனங்களிலும் இது வாழ்வதுண்டு; “அயிரை பரந்த வந்தண் பழனம்” (குறுந். 178) என வருமாறு காண்க. பிறாண்டும், “அயிரைக் கொழுமீனார்கைய............ வெண்குருகு” (பதிற். 29) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. பாகுடிப் பார்வல், சேய்மையி னின்றே நுனித்துக் காணும் பார்வை. “பரிவேட் பஞ்சா வயிரை யென்று வெளிப்படை கூறுகின்றா னாதலின், அதற்கேற்ப நீரறல் மருங்கு வழிப்படா வென்ற பெயரெச்ச மறையே பாடமாகல் வேண்டும்; இனிப் படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்துக்கு நீரற்ற விடத்தில் தான் படாத படியாலே கொக்கின் பரிவேட்புக் கஞ்சா அயிரை யென வுரைக்க” என்பர் பழையவுரைகாரர். பாகுடியென்பது நாட்டு மக்கள் செலுத்திய வரி வகைகளுள் ஒன்றாக விக்கிரம் சிங்கபுரக் கல்வெட்டால் (A.R.No. 297....1916) தெரிகிறது. கூர்மை போலும் என்றார் உ.வே. சாமிநாதையர். பல் பயந் தழீஇய நாடாதலின் இதனைத் தம் வயமாக்கிக் கோடலை விரும்பிப் போதரும் பகைவேந்தர் போர்செய்து எளிதில் மேல் வாராவாறு குறுக்கே அரண்போல நின்று விலக்கிய நெடுமலை யென்றற்கு “முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை” யென்றார். 30-39 யாண்டு............ பலவே உரை : பிழைப் பறியாது யாண்டு பய மழை சுரந்து - பெய்யாது பொய்த்தலின்றி யாண்டுதோறும் மழைபெய்து பயன் விளைத்தலால்; மாந்தர்க்கு நோயில் ஊழி யாக - மாந்தர்க்கு யாண்டுகள் நோயில்லாத காலமாய்க் கழிய; மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு - மண்ணுதல் செய்யாவிடத்தும் நறுமணமே கொண்டு; கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல் - மண்ணியவழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்; ஒரீஇயின போல - பொய்கையில் நாளத்தின் நீங்கியன போல; இரவு மலர் நின்று - இரவுப்போதிலும் மலர்ந்து நின்று; திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் - அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும்; அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து - அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர் யாற்றின் கரையிடத்தே நின்ற; வேயுறழ் பணைத்தோள் இவளோடு - மூங்கிலை நிகர்க்கும் பெரிய தோளையுமுடைய இவளுடன் கூடி நின்று; பல ஆயிர வெள்ளம் வாழிய - பல்லாயிர வெள்ளம் வாழ்வாயாக என்றவாறு. மழை பிழைப் பறியாது பயன் சுரத்தலால் நாடு வசியும் வளனும் சிறந்து பசியும் பிணியும் முற்றவும் இல்லையாதல் ஒருதலையாகலின், “பயமலை சுரந்து நோயில் மாந்தர்க் கூழி யாக” என்றார். மாந்தர்க்கு நோயில் ஊழியாக வென மாறிக் கூட்டுக. மண்ணாக் காலத்தும் தேவியின் கூந்தல் நறுமணமே கமழ்வ தென்றற்கு “மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு” என்றார்; “அரிவை கூந்தலின் நறியவு முளவோ” (குறுந். 2) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலன், நாடு காவற்கும் வினை செய்தற்கும் பிரிந்தவழிக் கற்புடை மகளிர் தம்மை யொப்பனை செய்துகொள்ளா ராகலின், “மண்ணா வாயின்” என்றார். மண்ணா வாயினும் என்னும் உம்மை தொக்கது. மண்ணுதல் ஒப்பனை செய்தல். கார்மல ரென்றார், முல்லை கார்காலத்து மலரும் இயல்பிற்றாதலால். மண்ணிய கூந்தல் அகிலும் ஆரமும் முதலிய பல விரைப்பொருளின் மணம் கொண்டு கமழுமாயினும், தேவியின் கூந்தல் சிறப்புடைய முல்லையணிந்து அதன் நறுமணமே சிறக்கு மென்பது தோன்ற, “கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்றார்; “கமழகில் ஆர நாறு மறல் போற் கூந்தல்” (குறுந். 286) என்பது காண்க. மண்ணாக்கால் நறுமணமும் மண்ணியக்கால் முல்லை மணமும் என்றது, தேவியின் கற்புச் சிறப்புணர்த்தி நின்றது. பொய்கையி லென்பது அவாய் நிலை; எனவே, இது தாமரையாயிற்று. பொய்கையில் இரவுப்போதிலும் கூம்புதலின்றி விரிந்து திகழ்வதொரு தாமரைப்பூ வுளதேல் அது நிகர்க்கும் கண்ணென்ற தனால், இஃது இல்பொருளுவமை. இனிப் பழையவுரைகாரரும், “ஒரீஇயின போல வென்பதற்குப் பொய்கை யென வருவித்துப் பொய்கையை யொருவினபோல என வுரைக்க; இனி மேற் சொன்ன கூந்தலை ஒரீஇயின போல வென்பாருமுளர். இரவு மலர் நின்றென்பது, பொய்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற்றென்றவா” றென்பர். பொய்கையில் நீங்கியன போல முகத்தே அலமரும் என்றது, பொய்கைக் கண்ணே நாளத்தின் நீங்கி நீர்மேல் அலமரும் பூப்போல முகத்திடத்தே கண் அலமரும் என்க. பெருமை, கண்ணிற் கிலக்கணமாகலின், “பெருமதர் மழைக்கண்” என்று சிறப்பித்தார். நீரழுவம், ஆழ்ந்த நீருள்ள யாறு. காந்தள் இலங்கும் யாறு எனவே, யாற்றின் இரு கரையும் எய்தும்; அவ்விடத்தே நின்ற வேய் என்றது. அதன் குளிர்ச்சியைச் சிறப்பித்தவாறு. “நீரழுவத்து வேயென்றது, ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தேயிருக்கும் தோள் என்றற்கென்க” என்பர் பழைய வுரைகாரர். காந்தளை யுடன்கூறியது, தோளிற்கு வேய்போலக் கைக்குக் காந்தள் உவமநலஞ் சிறந்த தென்றற்கு. வாழ்க்கைத் துணையாதலால், அரசற்கு வாழ்வு வேண்டி வாழ்த்தலுற்ற ஆசிரியர், “இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே” என்றார். பல வென்பதை ஆயிரத்தோடு மாறிக் கூட்டுக. வெள்ளம் - ஒரு பேரெண். விளங்கிய கொள்கையும் வாய்மொழியுமுடைய கட வுளரைப் பேணற் கெடுத்த ஆவுதிப் புகையும், பாசவர் விருந்து கண்மாறா துண்பித்தற் கெடுத்த அடு நெய் யாவுதிப் புகையுமாகிய இரண்டுடன் கமழும் நாற்றத்தால்; வானத்துக் கட வுளரும் விழைதக, வளம் பழுநிய சிறப்பினையும் கள்ளினையும் யானை யினையுமுடைய, நன்கலம் பேணித் தரூஉம் புலம் பரப்பிக் கடத்திடை யுயர்மணி பெறூஉம் செருப்புமலை நிற்கும் பூழி நாட்டவர் கோவே; மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருந, மழை பிழைப்பறியாது பயம் சுரந்து, மாந்தர்க்கு நோயிலூழியாக, கூந்தலையும், மழைக்கண்ணையும், பணைத்தோளையு முடைய இவளோடு கூடிப் பல ஆயிர வெள்ளம் வாழ்வாயாக வென வாழ்த்தியவாறாம். இனிப் பழையவுரைக்காரர், “பூழியர் கோவே, மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருந, பய மழை சுரந்து மாந்தர்க்கு நோயில் ஊழி யுண்டாக, இவளோடே பல ஆயிர வெள்ளம் வாழிய ரெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இனி, “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். பொ. 75) என்ற சூத்திரத்து, “ஐவகை மரபின் அரசர் பக்கமும்” என்பதற்கு இப்பாட்டினைக் காட்டி, இதன்கண் அரசன் “ஓதியவாறும் வேட்டவாறும் காண்க” என்றும், “வழக்கொடு சிவணிய வகைமை யான” (பொ. 86) என்ற சூத்திரவுரையில், “மிதியற் செருப்பிற் பூழியர் கோவே............ அயிரைப் பொருந” என்ற இது, “மலை யடுத்தது” என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மண்படு மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என அரசன் சிறப்பும், “மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு, கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்பது முதலாகத் தேவியின் சிறப்பும் பாடி “ஆயிர வெள்ளம் வாழிய பலவே” யென வாழ்த்தலின், இது செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று. 2. கயிறுகுறு முகவை 1. சினனே காமங் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை தெறல்கடு மையொடு பிறவு மிவ்வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந் 5. தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து கடலுங் கானமும் பலபய முதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையி லறிவினர் செவ்விதி னடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் 10. மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி யுய்த்த வுரவோ ரும்பல் பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச் சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் 15. ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல் உளைப் பொலிந்த மா இழைப் பொலிந்த களிறு வம்பு பரந்த தேர் 20. அமர்க் கெதிர்த்த புகன் மறவரொடு துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் 25. நெடுமதில் நிரைப்பதணத் தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும் நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும் 30. ஒலித்தலை விழவின் மலியும் யாணர் நாடுகெழு தண்பணை சீறினை யாதலின் குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப் பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா நன்பக லமையத்துக் 35. கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக் கழல்கட் கூகை குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன் னளிய தாமே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : கயிறுகுறு முகவை 1-11. சினனே................ உம்பல் உரை : சினன் காமம் கழி கண்ணோட்டம் - கையிகந்த சினமும் கையிகந்த காமமும் கையிகந்த கண்ணோட்டமும்; அச்சம் பொய்ச்சொல் அன்பு மிக வுடைமை - பகைவர்க்கு மிக அஞ்சுதலும் வாய்மையின் படாத பொய் சொல்லுதலும் தொடர்புடையார்பால் அளவிறந்த அன்புடைமையும்; தெறல் கடுமையொடு பிறவும் - கையிகந்த தண்டஞ் செய்தலும் இவைபோல்வன பிறவும்; இவ்வுலகத்து அறம் தெரி திகிரிக்கு - இவ்வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசுமுறை நடத்தற்கு; வழியடையாகும் தீது - இடையீடாய்த் தீது விளைவிப்பன வற்றை; சேண் இகந்து - தன்னாட்டின்கண் இல்லையாக்கி; நன்று மிகப் புரிந்து - அறத்தையே மிகுதியும் செய்து; மாக்கள் - தன்னாட்டில் வாழ்பவர்; பிறர் பிறர் நலியாது - தம்முட் பிறரைத் துன்புறுத்தாமலும்; வேற்றுப் பொருள் வெஃகாது - பிறர்க் குரித்தாய்த் தமக்கு இயைபில்லாத பொருளை விழை யாமலும்; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து - குற்றமில்லாத அறிவுடையராய்ச் செம்மை நெறிக்கண் வழுவுதலின்றி; தம் அமர் துணை பிரியாது - தம்பால் அன்பு செய்து வாழும் வாழ்க்கைத் துணைவியைப் பிரியாமல்; பாத்து உண்டு - பலர்க்கும் பகுத் தளித்துத் தாமும் உண்டு இனிது வாழ; மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய - வெறிதே மூத்த யாக்கையும் நோயும் இலராய் மிக்கு நிலவ; கடலும் கானமும் பல பயம் உதவ - கடலும் காடும் தம்மிடத்தே யுண்டாகும் பொருள் பலவும் உதவ; ஊழி உய்த்த உரவோர் உம்பல் - அரசியலை முறையே செலுத்திய பேரரசர் வழித் தோன்றலே என்றவாறு. கழி கண்ணோட்டம் என்புழி நின்ற கழி யென்னும் உரிச் சொல், ஏனைச் சினம் காமம் என்பவற்றோடும் சென்றியையும், அன்புமிகவுடைமை யென்றதற் கேற்ப மிக்க அச்சமும், வாய்மை யிடத்த தாகாத பொய்ம்மையும் எனக் கொள்க. ஏகாரம் எண்ணுக் குறித் தியல்வது. கழிய வென்பது, கழி யென்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினையெச்சம். தீது சேணிகந்து, நன்று புரிந்து, மாக்கள் மையில் அறிவினராய் நடந்து பாத்துண்டு பிணியின்று கழிய, கடலும் காடும் பயம் உதவ, ஊழி யுய்த்த உரவோர் உம்பல் என இயையும். திகிரி யுருட்டிச் செங்கோ லோச்சும் வேந்தர் செய்வதும் தவிர்வதும் தேர்ந்து, தவிர்வதனைத் தவிர்த்தவழிச் செய்வது செய்தது போலச் செம்மை பயத்தலின், தீதினை முதற்கட் கூறினார். நன்றாற்றலிற் றாழ்க்கினும் தீது களைதலே வேண்டுவ தென்பதை, “நல்லது செய்த லாற்றீ ராயினும், அல்லது செய்த லோம்புமி னதுதான், எல்லாரு முவப்ப தன்றியும், நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” (புறம்.195) என்று சான்றோர் கூறுதல் காண்க. வினைசெய்தற்கண் சினமும் அரசர்க்கு ஓரளவு வேண்டுதலின், விலக் குண்பது கழிசினமே யென்க. வேந்தனைச் “சினங்கெழு குரிசில்” (பதிற். 72) என்றும், “சினங்கெழு வேந்தர்” (புறம். 72) என்றும் சான்றோர் கூறுதலால், சினமும் ஓரளவு வேண்டியிருத்தல் துணியப்படும். உயிர்த் தோற்றத்துக்கும் அன்பும் அருளும் மன்னிய இன்ப வாழ்விற்கும் அளவுட்பட்ட காமம் இன்றியமையாமையின் கழி காமமே தீதென வறிக. “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ........... சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (தொல்.பொ. 192) என்றும், “எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது, தானமர்ந்து வரூஉ மேவற் றாகு” மென்றும், “சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப் படூஉம்” (புறம். 31) என்பதனால் அறத்தின் இம்மைப் பயன்கள் நற்பொருளும் நற்காமமுமாம் என்றும் சான்றோர் ஓதுவது காண்க. எனவே, அறத்துக்குத் துணையும் பயனுமாகிய அளவுட்பட்ட காமத்தை விடுத்து அளவிறந்து செல்லும் கழிகாமமே நூலோரால் யாண்டும் விலக்கப்பட்ட தென்றறிக. குற்றம் செய்தோரை மேன்மேலு மூக்கு மாகலின், கழி கண்ணோட்டமும் தீதெனப்பட்டது. சின முதலிய மூன்றும் உள்ளத்தே யுருத்தெழுவன வாதலின், ஓரினமாக்கப்பட்டன. “காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான், பேணாமை பேணப் படும்” (குறள். 866) என்பதனால், கழிசினமும் கழி காமமும் விலக்கப்படுவன காண்க. அச்சம் உள்ளத்தைச் சிதைத்து மெய்யினும் வாயினும் விளங்கத் தோன்றலின், சின முதலியவற்றைச் சாரவைத்து, உள்ளத்தே யில்லாததைக் கூறுவதாகிய சொன்மே னிற்கும் பொய்ச்சொல்லை அச்சத்தின் பின் வைத்தார். இவ்விரண்டையும் ஓரினப்படுத்தியது சொல்லோடியைபுண்மை கருதி யென்க. “அச்சமே கீழ்கள தாசாரம்” (குறள். 1075) என்றும், “அச்ச முடையார்க் கரணில்லை” (குறள். 534) என்றும் சான்றோர் விலக்கினமையாலும், கொலைக் கடுத்த நிலையிற்றங்கும் குற்றம் பொய் கூறுதலாதலாலும் இவ்விரண்டும் விலக்குண்ப வாயின. “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று” (குறள். 323) என்பதனால் கொலைக்கடுத்த நிலையிற் றங்குவது பொய்கூற லென்பது உணர்க. அரசாட்சியின் கண் பகைவரது பகைமைக்கு ஓரளவு அஞ்சுதலும், வினைக் குரியாரைத் தேர்ந்து தெளிதற்கண் புரைதீர்ந்த பொய்ம்மையும் வேண்டியிருத்தலின், மிக அஞ்சுதலையும், வாய்மைப்பாற் படாத பொய் கூறுதலையும் விலக்கினார். “அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு” என்றும், “உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து, மட்பகையின் மாணத் தெறும்” (குறள். 882, 883) என்றும் வருவனவற்றால் அச்சம் ஓரளவு வேண்டியிருத்தலும், இல்வழி “வகையறிந்து தற்காத்தல்” இலனாய் வேந்தன் கெடுதலும் பயனா மென்க. “அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்” என்பதும், “மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம், பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம். குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி, மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்ப மல்லது தொழுதக வில்” (சிலப். வஞ். 25 - 100 - 104) லெனச் சேரமான் செங்குட்டுவன் அஞ்சிக் கூறுவனவும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். வாய்மையிற் றீராத பொய்ச் சொல்லும் அரசியல் வினைக்கு வேண்டுமென்பதை, “அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின், றிறந்தெரிந்து தேறப் படும்” (501) என்று திருவள்ளுவனார் தெரிவிப்பதனாலறிக. கழி கண்ணோட்டம்போல் - அன்பு மிகவுடைமையும் தீதா மாகலின், நட்டோரை யளிக்குமிடத்து இதன் பயப்பாடு கண்டு விலக்கினார். அன்பு தொடர்புடையார் மேலும், கண்ணோட்டம் தன்னொடு பயின்றார்மேலும் செல்வன. அன்பு மிக வுடையனாயவழி, அன்பு செய்யப்பட்டார் “கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாதன” செய்து வேந்தனது கொற்றம் சிதைப்ப ராதலின், அன்பு மிக வுடைமை தீதாய் விலக்கப்படுவ தாயிற்று. சச்சந்தன் கட்டியங்காரன்பால் அன்பு மிகவுடை யனாய், “எனக் குயி ரென்னப்பட்டான் என்னலாற் பிறரை யில்லான்” என்று தன் னரசினை அவன்பால் வைத்துக் கெட்ட திறத்தைச் சீவகசிந்தாமணி தெரிவிப்பது காண்க. தெறலாவது, நெறி திறம்பியும் பகைத்தும் கொடுமை செய்து குற்றப்பட்டார்கண் வேந்தன் செய்ய வேண்டுவது. அத் தெறலின் கடுமையாவது குற்றத்தின் மிக்க தண்டம்; இது கையிகந்த தண்ட மென்றும் வழங்கும். கையிகந்த தண்டம், “வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்” (குறள். 567) என்ப. குற்றங் காணுமிடத்து, “மெய்கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத் தக வொறுத்” தலும், ஒறுக்குமிடத்தும், “கடிதோச்சி மெல்ல” வெறிதலும் வேண்டு மென்பது அரசியன்முறை. இனிப் பழையவுரைகாரர், “அச்சம் பகைவர்க்கஞ்சுதல்” என்றும், “அன்பு பொருண்மே லன்பு” என்றும் கூறுவர். “பிறவும்” என்றது, இக் கூறியவை போல அரசர்க் காகாவென ஆன்றோரால் விலக்கப்பட்டன வெல்லாம் எஞ்சாமல் தழுவுதற்கு; அவற்றைத் திருக்குறள் முதலிய அற நூல்களுட் காண்க. இக் குற்றங்களை யுடையதாயின் அரசனீதி செல்லாது கெட்டழியும் என்பார், “அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது” என்றார். தீ தென்பதனை ஒவ் வொன்றிற்கும் தனித்தனி கூட்டுக. “கால்பார் கோத்து ஞாலத் தியக்கும், காவற் சாகா டுகைப்போன் மாணின், ஊறின் றாகி யாறினிது படுமே, உய்த்தல் தேற்றா னாயின் வைகலும், பகைக்கூ ழள்ளற் பட்டு, மிகப்பஃ றீநோய் தலைத் தலை தருமே” (புறம். 185) என்று பிறரும் கூறுதல் காண்க. அறம் தெரி திகிரி. அறம் நிற்றற் பொருட்டு ஆராய்ந்து செலுத்தப் படும் அரசு முறை. வழி யடைப்பதை, “வழியடை” யென்றார். கழிசினம் முதலிய குற்றமும் பிறவுமாகிய தீது தம் அரசியலிலும், அது நிலவும் நாட்டிலும் அறவே இல்லையாகப் போக்கினமை தோன்ற, “சேணிகந்து” என்றார். என்றென்பது எஞ்சிநின்றது. தீது நீங்குவது நன்றே யென்றாலும், தாமும் அறம் பலவும் செய்தன ரென்பார் “நன்று மிகப் புரிந்து” என்றார். மிகப் புரிந்தது, அதுநோக்கி நாட்டில் வாழ்பவர் தம் செம்மைநெறி கடவாது நிற்றற்கென வுணர்க. சினம் முதலியன மிக்கவழித் தீது பயத்தல் போல, மிகச் செய்தவழி மிக்க நலம் பயத்தலின், “நன்று மிகப் புரிந்து” என்றெடுத்தோதினார். கடற்பயன் முத்தும், மணியும், பவளமு, முதலாயின. கானம் உதவும் பயன் காடுபடு பொருள் பலவுமாம். தீதுசே ணீங்க நன்று மிகப் புரிந்து நிலவும் அரசியலால், கடலும் கானமும் பயன் பலவும் உதவுவன வாயின வென்றற்கு, “கடலும் கானமும் பலபயம் உதவ” என்றார். கடலும் கானமு மொழிந்த நாட்டிடத்து நலம் கூறுதலுற்ற ஆசிரியர், நாட்டு மக்களின் செயல்நலம் காட்டுவாராய், “பிறர் பிறர் நலியாது” என்பது முதலியன கூறினார். நன்று மிகப் புரியும் அரசியல் நலத்தால் நாட்டில் வளம் மிகுதலின், செல்வக் களிப்பால் மையலுற்றுப் பிறர் பிறரை வருத்தியும், பிறர்க்குரிய பொருளை வெஃகியும் நெறி பிறழும் ஏனை நாட்டவர் போலாது தெளிந்த அறிவும் செவ்விய நடையு மேற்கொண்டு இன்புற் றொழுகின ரென்றற்கு “பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது, மையி லறிவினர் செவ்வி தினடந்து” என்றார். நலியாமைக் கேது வெஃகாமையும், அதற்கேது மையில் அறிவு டைமையு மாமெனக் கொள்க. அறிவுடைமை சொல்லானும் செயலானும் வெளிப்படுமாயினும், சொல்லினும் செயல் சிறந்து தோன்றலின் அதன்மேல் வைத்துச் “செவ்விதின் நடந்து” என்றார். ஓதல், தூது, ஆள்வினை, நாடுகாவல், பொருள் என்ற இவை குறித்துப் பிரிவதல்லது தம்மை விரும்பி யுறையும் துணைவியராய மகளிரை அன்பு கண்ணறப் பிரிதல் அந்நாட்டவர்பால் இல்லை என்பதற்கு “தம் அமர்துணைப் பிரியாது” என்றார். பரத்தையிற் பிரிவு இவ்வாசிரியர் காலத்தே பிரிவாகக் கருதப்படுவ தன்றென்றுணர்க. “ஓதல் பகையே தூதிவை பிரிவே” (தொல். அகத். 25) என ஆசிரியர் தொல்காப்பியனாரும் பரத்தையிற் பிரிவை இவற்றோடு கூறாமை யறிக. பொருண்மிக வுடைமையின் பொருள்வயிற் பிரிவும், பகைமையின்மையின் தூதிற்பிரிவு ஆள்வினைப் பிரிவு நாடுகாவற்பிரிவு முதலியனவும், மையி லறிவினராதலின் ஓதற் பிரிவும் இல்லாதொழிதலின் “பிரியாது” என்றார். இன்ப வொழுக்கத்துக் காமஞ் சிறப்பது குறித்துப் பரத்தையிற் பிரிதல் பிரிவாகாதாயினும், அதுதானும் செய்தில ரென்றற்கு, “தம் அமர்துணைப் பிரியாது” என வற்புறுத்தினார். பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் இல்வாழ்வார்யாவர்க்கும் தலையாய கடனாதலின் “பாத்துண்” டென்றார். உண்ண வென்பது உண்டெனத் திரிந்துநின்றது. இசையாகிய பயனின்றிக் கொன்னே மூத்து விளியும் யாக்கை யென்றற்கு மூத்த யாக்கையென வாளாது கூறினார். “இசையிலா யாக்கை” (குறள். 229) என்று சான்றோர் கூறுவது காண்க. பிணியிலா வாழ்க்கை, வாழ்விற் பெறும் பேறுகளுள் சிறந்த பேறாதலின், “பிணியின்று கழிய” வென்றார்; “நோயின் றியன்ற யாக்கையர்” (முருகு. 143) என நக்கீரனார் பிணியிலா வுடம்பைப் பாராட்டி யுரைப்பது காண்க. இத்தகைய சிறப்புடைய மக்களை “மாக்கள்” என்றார், இன்பமும் துன்பமும் விரவிய வாழ்க்கையில், இன்ப மல்லது காணாமையின். இனி மக்க ளெனற்பாலது விகாரத்தால் நீண்டதெனக் கோடலுமொன்று. இவ் வாழ்க்கை இத்துணைச் சிறப்புற்று விளங்குதற் கேது, கோடா அரசியலே யென வறிக. “யாண்டு பலவாகியும் நரை யில்லையாலோ” என்று வினவிய சான்றோர்க்கு, ஆசிரியர் பிசிராந்தையார் “வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்” (புறம். 191) என்றது ஈண்டுக் கருதத்தக்கது. இங்ஙனம் சீரிய முறையில் அரசு முறை நடாத்துவோர்க்கு இன்றியமையாது வேண்டப்படுவது சிறந்த அறிவு காரண மாகப் பிறக்கும் மனத்திண்மை யாதலின், அதனை யுடையோர் என்றற்கு “ஊழியுய்த்த உரவோர்” என்றார். உம்பல், வழித் தோன்றல். உரவோர் ஊழி யுய்த்த நலத்தால். கடலும் கானமும் பலபயம் உதவலும், நாட்டுமக்கள் இசையின்றிக் கொன்னே மூத்து விளிதல் பிணியுடையராதல் இன்றி மேம்படுதலு முளவாயின என்பார், “பல பயம் உதவி” என்றும், “மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய” வென்றும் பிரித்துக் கூறினார். 12-16. பொன்செய்............. தோன்றல் உரை : பொன் செய் கணிச்சி - இரும்பினாற் செய்த கோடரியால்; திண் பிணி யுடைத்து - திண்ணிய வன்னிலத்தை யுடைத்துத் தோண்டப்பட்டபடியால்; சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல் - சிதறுண்டு சிறிதே யூறிய நீர் பொருந்திய கிணறுகளில்; கயிறு குறு முகவை - நீண்ட கயிறு கட்டிச் சேந்தப்படும் குறுகிய முகவை களை; மூயின மொய்க்கும் - நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும்; ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த - ஆனிரைகளையுடைய கொங்கரது நாட்டை வென்று தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட; வேல் கெழு தானை வெருவரு தோன்றல் - வேலேந்திய தானையால் பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே என்றவாறு. பொன் னென்றது ஈண்டு இரும்பினை. இரும்பைக் கரும் பொன் என்றும் வழங்குப. கருங்கல் நிறைந்த வலிய நிலமாதல் பற்றி, வன்னிலத்தைத் `திண்பிணி’ யென்றார். மண்ணுங் கருங்கற் பாறைகளும் கொண்டு இறுகப் பிணித்தது போறலின், வன்னிலம் பிணி யெனப்பட்டதெனினு மமையும். இந்நிலத்தை நீர் வேண்டி யகழுமிடத்து, கற்பாறைகள் ஒழுங்கின்றிப் பல்லாறாக உடைந்து சிதறி நீர் மிக வூறும் வாய்ப்பின்றி யிருப்பது தோன்ற, “சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தல்” என்றும், நீர் வாயாதவழிப் பத்தலிடத்தே முகவைகள் உளவாகாவாதலின், “நீர்வாய்ப் பத்த” லென்றும் கூறினார். “சிரறுதல், ஒழுங்கின்றிச் சிதறுதல். “சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பு” (கலி. 88) என்றாற் போலச் சிரறுதல் வேறாத லென்றுமாம். வேறாதல், பிளந்து வேறாதல். “சிரறுதல் சிதறுத” லென்றும், “சிலவூறிய வென்றது, பல்லூற் றொழியச் சில்லூற்றாக வூறிய வென்றவா” றென்றும் பழைய வுரைகாரர் கூறுவர். “கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி, ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல்” (நற். 240) என்பதனால், பத்தல் உட்கிண றென்றும் கொள்ளப்படும். மேலே அகலமாக அகழ்வது கூவ லென்றும் அதனுள்ளே குறுகிய வாயுடைத்தாய ஆழமாய்த் தோண்டப்படுவது பத்த லென்றும் கொள்க. இப் பத்தலைப் பிள்ளைக் கிணறு என்றும் கொங்கு நாட்டவர் கூறுப. முகவை - நீர் முகக்கும் கருவி; இது மரத்தாற் செய்யப்படுவது. நீரின் சின்மை குறித்தும், நீரும் மிக்க ஆழத்திலிருப்பது பற்றியும் குறுமுகவை கொள்ளப்பட்டது. பத்தல் இயல்பாகவே மிக ஆழ்ந்திருப்ப துடன் நாடோறும் சுரண்டுதலால் அவ்வாழம் மிகுந்தவண்ண மிருப்பதால், நீண்ட கயிறுகொண்டு முகத்தலல்லது இறங்கி முகந்துகோடல் கூடாமையின் கயிறு குறுமுகவை யென்ற தற்கு, நீண்ட கயிறுகொண்டு நீர் சேந்தப்படும் குறுமுகவை யெனப் பொருள் கூறப்பட்டது. முகவையைக் குறுமுகவை யெனவே, கயிற்றையும் நீண்ட கயிறெனக் கோடல் வேண்டிற் றென்றுமாம். குறுமை - சிறுமை குறித்து நின்றது. நீர் கிடைத்த லருமையால் வேட்கை கொண்டலையும் ஆனிரைகள், முகவை களைக் கண்ட மாத்திரையே அவற்றின் குறுமையும் நீரின்மையும் நோக்காது மொய்க்கின்றன வென்பார், “மூயின மொய்க்கும்” என்றார். அவ்வாறு மொய்ப்பனவற்றிற்குக் கொங்க நீர்முகந் துண்பிப்ப ரென்ற கருத்தால் முகவைகள் கயிற்றோடே கட்டிவைக்கப் பெற்றுள்ளன வென்பது இதனாற் பெறப்படும். இப் பொருட் சிறப்புப்பற்றி, இப்பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவ தாயிற்றென வறிக. இனிப் பழையவுரைகாரர், “தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குக் கயிறுகுறு முகவை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். என்றது, நீர் முகப்பது கருதியிடப்பட்ட முகவை நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் என்றும், இவ்வாறு கூறிய சிறப்புக் கருதியே இப்பாட்டு இத் தொடராற் பெயரெய்திற்றென்றும் கூறியவாறாம். இனி, கொங்கர் என்பவர் கொங்கு நாட்டவர்; இவரை “ஒளிறு வாட் கொங்கர்” (குறுந். 393) என்றும், “ஈர்ம்படைக் கொங்கர்” (பதிற். 73) என்றும் சான்றோர் கூறுதலால், இவர் படைவன்மையாற் புலவர் பாடும் புகழ் பெற்றவ ரென்பது விளங்கும். இவர் வாழும் நாட்டின் பெரும்பகுதி மென்புல வைப்பின் நீர்நா டன்மையின், இவர்பால் ஆனிரை வளர்க்கும் தொழில் மிக்குநின்றது. அதனால், இவரை “ஆ கெழு கொங்கர்” என்றார். “கொங்கர் படுமணி யாயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும், சேதா வெடுத்த செந்நிலப் பெருந்துகள்” (அகம். 79) என்று பிறரும் கூறுதல் காண்க. இவரது கொங்குநாடு சேர நாட்டைச் சேர விருத்தலின், பலகாலும் சேரர் இவர்களை வென்று இவர் நாட்டைத் தம் நாட்டொடு அகப்படுத்திக் கொண்டுள்ளனர். அதுபற்றியே சேரமன்னர்கள், “நாரரி நறவின் கொங்கர் கோ” (பதிற். 87) என்றும், “கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோ” (பதிற் 90) என்றும் பாராட்டப்படுவர். இக் கொங்குநாட்டைத் தாம் கோடல் வேண்டிச் சோழவேந்தரும் பாண்டிவேந்தரும் போருடற்றி யிருக்கின்றனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்ற திறத்தை, “மைந்த ராடிய மயங்குபெருந் தானைக், கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே” (புறம். 373) என்றும், பசும்பூண்பாண்டியன் வென்ற செய்தியை, “வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்” (அகம். 253) என்றும் சான்றோர் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு முடிவேந்தரே யன்றிக் குறுநில மன்னரும் இக் கொங்கரை வென்று கொள்ள முயன்றுள்ளனர். ஆஅய் அண்டிர னென்பான் இம் முயற்சியிலீடுபட்ட திறத்தை “கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றை” (புறம். 130) என்று சான்றோர் குறிப்பது காண்க. முடிவேந்தர் மூவர்க்கும் குறு மன்னர்க்கும் விழைவு தோற்றுவித்துப் போருடற்றுதற் கேது வாகிய நலம் பல வுடைய கொங்கர், எக்காலத்தும் போரை யெதிர்நோக்கி, அதற்கேற்ற போர்ப்பயிற்சி யுடையராயிருந் தமையின், அவரை முற்றவும் வென்று கோடல் அரிதென்பது தமிழக முழுதும் அறிந்த செய்தியாயிற்று. ஆகவே, அக் கொங்கரை வென்று அவர்தம் நாட்டை யகப்படுத்தற்குத் துணை செய்த தானையை, “வேல்கெழு தானை” யென்றும், இச் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவன் அத்தானையை யுடையனாதலால், ஏனை வேந்தர்க்கு இவன்பால் அச்சமுண்டாயிற் றென்பார், “வெருவரு தோன்றல்” என்றும் கூறினார். கணிச்சியால் திண்பிணி யுடைத்துச் செய்த பத்தற் கரை களில் மூயினவாய் மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழு தானையால் வெருவரு தோன்றல் என இயைத்து முடிக்க. 17-27. உளை............ குட்டுவ உரை : உளைப் பொலிந்த மா - தலையாட்டத்தை யணிந்து விளங்கும் குதிரைகளும்; இழைப் பொலிந்த களிறு - இழை யணிந்து விளங்கும் யானைகளும்; வம்பு பரந்த தேர் - தேர்ச் சீலைகளால் விரிந்து தோன்றும் தேர்களும்; அமர்க் கெதிர்ந்த புகல் மறவரொடு - போருடற்றற்கென முற்பட்ட போரை விரும்பும் வீரர்களுமாகிய நால்வகைப் படையுடன் சென்று; மலர் அகன் பறந்தலை - பரந்தகன்ற செண்டு வெளியின் எதிரே நிற்கும்; துஞ்சு மரம் துவன்றிய ஓங்கு நிலை வாயில் - கணைய மரம் செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே; தூங்குபு தகைத்த - தூங்குமாறு கட்டிய; வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி - வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய விழுமிய சிறப்புடைய ஐயவித் துலாமும்; கடி மிளை - காவற் காடும்; குண்டு கிடங்கின - ஆழ்ந்த கிடங்கும்; நெடுமதில் நிரைப் பதணத்து - நெடிய மதிலிடத்தே நிரல்படவமைத்த பதணமும் உடைமையால்; அண்ணல் அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த - பகைவருடைய தலைமையும் பெருமையும் பொருந்திய உயர்ந்த அகப்பா வென்னும் அரணை யெறிந்து வென்றி கொண்டதனால்; பொன் புனை உழிஞை - பொன்னாற் செய்த உழிஞைமாலை சூடிய; வெல் போர்க் குட்டுவ - வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே என்றவாறு. மாவும் களிறும் தேரும் மறவரும் என்ற நாற்படையுடன் சென்று பறந்தலை கடந்து அகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவன் என இயையும். ஒடு, எண்ணொடு. உளை, தலை யாட்டம்; குதிரையின் இரு செவிகட்கு மிடையே நெற்றியிற் கிடந்து அழகு செய்வது. உளையென்பது பிடரிமயிருக்கும் பெயராய் வழங்கும்; “விரியுளைக் கலிமான் தேரொடு வந்த விருந்து” (கலி. 75) என்பதன் உரை காண்க. இழை யென்றது பொன்னரி மாலையும், ஓடையுங், கிம்புரியும், பிறவுமாயினும் சிறப்புடைய பொன்னரி மாலையே ஈண்டு இழையெனப் பட்டது. இவ்வாறு குதிரைக்கு உளையும், களிற்றுக்கு இழையும், அழகு செய்தல் பற்றி, “உளைப் பொலிந்தமா இழைப் பொலிந்த களிறு” எனச் சிறப்பித்தார். வம்பு, தேர்ச்சீலை. அமர்க்கெதிர்ந்த வழியும், ஆடவர்க்கு அவ் வமரின்பால் உள்ளம் செல்லாதாயின், உயிர் காத்த லொன்றே பொருளாகக் கொண்டு மறம் வாடு வராதலால், “அமர்க் கெதிர்ந்த” வென்றதனோ டமையாது “புகல் மறவரொடு” என்றார். ஒடு, உயர்பின் வழிவந்த ஒருவினை யொடு. அமரெனின் அதனை ஆர்வத்தோடு ஏற்று ஆற்றுதற்குச் செல்லும் அவரது விரைவு தோன்ற, “எதிர்ந்த” வென இறந்த காலத்தாற் கூறினார். இனி, குட்டுவன் அகப்பாவை யெறிந்த செய்தி கூறலுற்ற ஆசிரியர். அதன் அமைதியினைத் தெரித்து மொழிகின்றார். அகமதிலைப் பற்றிச் செல்வோர் அதன் எதிரேயுள்ள செண்டு வெளியில் காத்தூன்றும் பகைவீரரை வென்றுகொண்டேக வேண்டுதலின் அங்கே போர் நிகழ்வது கண்டு, அதன் பரப்பும் விளங்க “மலரகன் பறந்தலை” யென்றார். மலரகல் என்பது மீமிசை போல ஒரு பொருள்மேல் நின்றது. கோயிலிடத் தேயுள்ள முரசு முழங்கும் முற்றம்போல அகமதிலின் புறத்தே அதற்கு முற்றமாய் மூலப் படையிருந்து போர் முரசு முழக்கும் வெளியைச் செண்டுவெளி யென்ப. செண்டாட்டயரும் இடமாதலின் இதனைச் செண்டுவெளி யென்பது வழக்கு. அகமதிலைக் கொள்வோரும், காப்போரும் கலந்து போர் செய்தலின், இதனையும் பறந்தலை யென்றாரென வறிக. இவ்வெளி அகமதிற்கும், புறமதிற்கும் இடையே அகழியை யணைந்து கிடக்கும் வெளியிடம். துஞ்சுமரம், கணையமரம். “துஞ்சு மரக்குழாம் துவன்றி” (பதிற். 16) என்புழியும், “மதில் வாயிலில் தூங்கும் கணையமரம்” என்பர் பழைய வுரைகாரர். இதனைக் கழுக்கோ லென்றும் கூறுப. யானையும் தேரும் வருத்தமின்றிச் செல்லுமாறு அகற்சியும் உயர்ச்சியுமுடைய வாயி லென்றற்கு “ஓங்கு நிலை வாயில்” என்றார். ஐயவித்துலாம் - மதிலிடத்தே நிறுத்தப்படும் ஒருவகைப் போர்ப்பொறி. இதனை வாயிலிடத்தே தூங்குமாறு கட்டிக், கதவை முருக்கிப் புகும் களிறுகளை இதனால் தாக்கு வரென்பது தோன்ற, “வாயில் தூங்குபு தகைத்த ஐயவி” யென்றார். மேலும், இதனைப் பகைவர்மேல் விசையம்பு செலுத்தும் விற் பொறியோடு பொருந்த வைத்திருப்ப ரென்றற்கு, “வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி” யென்று கூறினார். இனிப் பழைய வுரைகாரர், “தூங்குபு வென்பதனைத் தூங்க வெனத் திரித்துக் காலவழுவமைதி யெனக் கொள்க” வென்றும் “தகைத்தல், கட்டுத” லென்றும் கூறுவர். விசைவில் லென மாறி யியைக்க. தானே வளைந்து அம்புகளைச் சொரியும் விசையையுடைய வில். விசை வில்லாகிய பொறியென வுணர்க. இனி, “வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி” யென் பதற்கு விசையையுடைய வில்லாற் செலுத்தப்படும் வலிய அம்புகளாலும் வீழ்க்க மாட்டாமையால், விசைவலி யழிந்து வில் கெடுமாறு பண்ணிய விழுச்சீர் ஐயவித் துலாம் என்றுரைப்பினு மமையும். விசையுடைய வில்லாலும் துணையுருவ எய்ய முடியாத மிக்க கனத்தையுடைய “ஐயவித் துலாம்” என்பர் பழைய வுரைகாரர். அவ்வாறு கொள்ளுமிடத்து மாட்டிய வென்பதற்கு மாள்வித்த வென்பது பொருளாகக் கொள்க. மிளை, காடு, கரந்திருந்து தாக்கும் மறவரும் பல்வகைப் பொறிகளும் உடைய காடாதலின், “கடிமிளை” என்றும், இடங்கரும், கராமும், முதலையும், சுறவும், பிறவும் இனிது வாழ்வதற்கேற்ற ஆழமுடைமைபற்றிக் “குண்டுகிடங்” கென்றும் விதந்தோதினார். கவணும், கூடையும், தூண்டிலும், துடக்கும், ஆண்டலை யடுப்பும், சென்றெறி சிரலும், நூற்றுவரைக் கொல்லியும், தள்ளி வெட்டியும், அரிநூலும், பிறவும் கொண்டு, ஏனை வீரரால் காவல் வேண்டப்படாத நொச்சி மதில் “நிரைப் பதணம்” எனப்பட்டது. அகப்பா வென்பது சீரிய அரண மைந்ததோ ரிடமாகும். இஃது உம்பற்காட்டைச் சேர்ந்தது. குட்டுவன் உம்பற் காட்டை வென்றுகொண்ட காலத்து இங்கே யிருந்து, தன்னை யெதிர்த்த பகைவரை வென்று இதனைத் தனக்குரித்தாகக் கொண்டான். இதுபற்றியே “அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த குட்டுவ” என்றார். இவனது இச் செயலையே, “மிகப்பெருந் தானையொடு இருஞ் செரு வோட்டி, அகப்பா வெறிந்த அருந்திறல்” (சிலப். 28. 143-4) என இளங்கோவடிகளும் கூறினர். ஐயவித் துலாம் முதலிய பொறி களாலும் மிளை, கிடங்கு, மதில், பதணம் முதலிய வற்றாலும் தலைமை யமைத்தது பற்றி, “அண்ணல்” என்றும், புறத்தோரால் எளிதில் தோண்டப்படாத அடியகலமும், ஏணிக் கெட்டாத உயரமும், பற்றற்காகாக் காவற்பெருமையும் உடைமை பற்றிப் “பெருங்கோட் டகப்பா” வென்றும் சிறப்பித்தார். இவை அகப்பாவின் அருமை தோன்ற நின்றன வாயினும் குட்டு வனுடைய போர்நலமும் வன்மையும் விளக்குதல் காண்க. பெருங்கோட் டகப்பா வென்பதனால், இதனை மலைமேலர ணாகக் கொள்ளற்கும் இடமுண்டு. குட்டுவற் குரித்தாகிய இவ் வகப்பா பிற்காலத்தே செம்பிய னொருவனால் இவனிடமிருந்து வென்று கொள்ளப்பட்டதாக மாமூலனார், “குட்டுவன் அகப்பா வழிய நூறிச் செம்பியன், பகற்றீ வேட்ட ஞாட்பு” (நற். 14) என்று குறிக்கின்றார். “சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு, முற்றிய முதிர்” (தொல். பொ. 68) வாகிய உழிஞைப்போ ராதலால், இவனது உழிஞை “பொன்புனை யுழிஞை” யெனப்படுவதாயிற்று. பொன்னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றுமாம். உழிஞையைக் கொற்றா னென்றும், அது குட்ட நாட்டார் வழக்கென்றும் புறநானூற்றுரைகாரர் (புறம். 50) கூறுவர். இஃது ஒருவகைக் கொடி; “நெடுங்கொடி யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று சான்றோர் கூறுப. இது பொற்கொற்றான், கருங்கொற்றான், முடக்கொற்றான் எனப் பலவகைப்படும். இவற்றுள் பொற் கொற்றா னென்பதே உழிஞையென்று சிறப்பிக்கப்படுவது. இதன் தளிரும் பூவும் பொன்னிறமுடைய வாதலால், “பொலங்குழை யுழிஞை” (புறம். 50) என்பர். பொன்புனை யுழிஞை யென ஈண்டுக் கூறியது பொன்னாற் செய்யப்பட்ட தென்றற்கு. முழுமுத லரணம் முற்றலும் கோடலும் செய்யும் வேந்தருள், மதில் கொள்வோரும் காப்போரும் என வரும் இருவரில், முற்றிய புறத்தோரை வென்று பெறும் வெற்றியினும், காத்துநின்ற அகத்தோரை வென்று பெறும் வெற்றியே சிறந்ததாகலின், “வெல்போர்க் குட்டுவ” வென்றார். 28-38. போர்த்து............ தாமே உரை : போர்த்தெறிந்த பறையால் புனல் செறுக்குநரும் - தோல் போர்த்துள்ள பறையை யெறிந்து உழவரை வருவித்து மிக்கு வரும் புனலை யடைப்பவரும்; நீர்த் தரு பூசலின் அம்பு அழிக்குநரும் - நீர்விளையாட்டின்கண் எழும் ஆரவாரத்தால் அம்பும் வில்லும் கொண்டு விற்பயிற்சி செய்வாரது ஆரவாரத்தை யடக்குபவரும்; ஒலித்தலை விழாவின் மலியும் - பேராரவாரத்தை யுடைய பல விழாக்களிலே திரண்டு கூடி மகிழும்; யாணர் நாடு தண் பணை - புதுமையினையுடைய பகைவர் நாட்டு மருத நிலங்கள்; சீறினை யாதலின் - அப்பகைவர்பால் நீ சினங் கொண்டனை யாதலால்; குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றி - மாலையில் மேற்றிசையின் மறைந்து காலையில் கீழ்த்திசையி லெழுந்து தோன்றி; பாயிருள் அகற்றும் - தான் மறைந்து தோன்றுதற்கிடையே நிலவுலகிற் பரந்த இருளைப் போக்கும்; பயம் கெழு பண்பின் - பயன் பொருந்திய பண்பினையுடைய; ஞாயிறு கோடா நன்பக லமையத்து - ஞாயிறு ஒருபக்கமும் சாயாமல் நிற்கும் உச்சிப்போதாகிய நண்பகற் காலத்தே; கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றி - பசியால் வருந்துதலையுடைய குறுநரிகள் முழவொலி போல ஊளையிட்டுக் கூவுதலை முறையே செய்ய; கழல்கண் கூகை குழறு குரல் பாணி - பிதுங்கியன போன்ற கண்களையுடைய கோட்டான்கள் செய்யும் குழறு குரலின் தாளத்துக் கேற்ப; கருங்கண் பேய் மகள் வழங்கும் - பெரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்; பெரும் பாழாகும் - பெரிய பாழ்நிலமாய் விடும்; தாம் அளிய - அவை தாம் அளிக்கத்தக்கன என்றவாறு. புதுப்புனல் மிக்குக் கரையை யுடைத்துப் பெருகி வருங்கால், உடைமடையைக் கட்டுதற்குப் பறையை யறைந்து கடையரைத் தருவித்துத் தொகுத்தல் பண்டையோர் மரபாதலால், “போர்த் தெறிந்த பறையால் புனல் செறுக்குநரும்” என்றார். புனலடைக்கும் குறிப்பைத் தன்னோசையால் தெரிவித்தற்குப் பறையே யேற்ற தாதலால் அதனை விதந்தோதினார்; “ஓர்த்த திசைக்கும் பறை” (கலி. 92) எனச் சான்றோர் கூறுவது காண்க. “போர்த்தெறிந்த பறை” யென்றதனால், பழைய தோலை நீக்கிப் புதுத்தோல் போர்த்து முழக்கினமை பெற்றாம். நீர்த்தரு பூசல் - நீர் விளையாட்டின்கண் எழும் ஆரவாரம். அம்பு - ஆகு பெயரால் அம்பும் வில்லும் கொண்டு விற்பயிற்சி செய்வாரின் பூசலுக் காயிற்று. புனல் செறுக்குநரும் - புனல் விளையாட் டயர்வாரும் தம்மில் ஒருங்குகூடி மகிழ்தற்கு இடம் கூறுவார், “ஒலித்தலை விழாவின் மலியு” மென்றார். புனல் செறுக்குநர் உழவ ரென்றும், புனல் விளையாட் டயர்வோர் உழுவிப்போரும் ஏனைச் செல்வரு மென்றும் கொள்க. இருதிறத்தோரும் வேற்றுமையின்றிக் கூடி மகிழும் இடம் விழாவாயிற்று. இனி, “நீர்த்தருபூசலினம் பழிக்குநரும்” என்று கொண்டு நீர் விளையாட் டயர்வார் வில்லும் அம்பும் கொண்டு போருடற்றும் மன்னர் போலத் தம்முள் அணிவகுத்து நின்று, சிவிறிகொண்டு நீரெறிந்து பொரும் விளையாட்டில் ஒருதிறத்தார் மறுதிறத் தாரைப் பழிப்பவரும் என்றும், நீர் கொணரும் ஆரவாரத்தின்கண் விரையக்கூடிச் செய்வன செய்யாதாரைத் தெழித்தும் உரப்பியும் வினைசெய்விப்போரும் என்றும் உரைத்தலு முண்டு. பறையினை யெடுத்து மொழிந்தாரேனும் ஏனைப் பம்பை முதலிய பிற இசைக்கருவிகளும் கொள்ளப்படும்; “தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம், முழங்குதீம் புனலகம் முரிய மொய்த்தவே” (சீவக. 40) என்று சான்றோ ரோதுதல் காண்க. நாளும் புதுமை விருப்பமுடைய ராதலின், “யாணர் நாடு” என்றார்; “நாளும் புதுவோர் மேவலன்” (ஐங். 17) எனச் சான்றோர் கூறுவது காண்க. யாணர், புதுமை. ஆகுபெயரால் புதுவருவா யெனினுமமையும். “நாடுகெழு தண்பணை பெரும்பாழாகுமன்” என்பதனால், அந்நாடு பகைவர் நாடாயிற்று. அது பாழாகு மென ஆசிரியர் இரங்கிக் கூறுதற் கேது, குட்டுவன் அப்பகைவர்பால் கொண்ட பகைமை காரணமாகப் பிறந்த செற்றமாதலின், “சீறினை யாதலின்” என்றார். நாடு பாழாகும் என்னாது, “தண்பணை” எனச் சிறப்புறக் கூறியது, ஏனை நாடுகளை நோக்கச் சேரநாட்டில் தண்பணை அரிதென்றும், அஃது அழியற்பால தன்றென்றும், அரசரது பகைமை அவர் நாட்டை யழிக்கின்றதென்றும் ஆசிரியர் உள்ளக்குறிப்பைப் புலப்படுத்து கிறது. மாய்தல் - மறைதல். ஞாயிறு குடபான் மறைந்ததும், உலகில் இருள் பரந்து பயன்படும் வினை நிகழாவாறு மறைத்து விடுதலாலும், கீழ்பால் ஞாயிறு தோன்றித் தன்வெயி லொளியை உமிழ்தலுறின், வினை பலவும் இனிது நிகழ்தலாற் பயனுறு வித்தலாலும் ஞாயிற்றை, “பயங்கெழு பண்பின் ஞாயிறு” என்றார். இக் காலத்திலும் ஆராய்ச்சியாளர் ஞாயிற்றின் பயன்களை மிக விரித்துக் கூறுவர். இனி, பயங்கெழு பண்பின் ஞாயிறு என்றோதி, அது குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியதனால், அம் மாய்தலும் பாயிருள் பரவுதலும் பயன் குறித்து நிகழ்வனவே யென்பதும் கருத்தாகக் கொள்க. பகற்காலத்தே வினைவழி யுழந்தோயும் உயிர்கட்குத் தன் மறைவால் இரவுப்போ தெய்துவித்து உறக்கமென்னும் உயிர் மருந்தால் ஓய்வகற்றி யூக்கம் கிளர்வித்தலின் ஞாயிற்றின் மறைவும் பயனுடைத்தாதல் உணரப்படும். இவ்வாறு கொண்டுரையாக் கால் குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியது சொற்பல்குத லென்னும் குற்றமா மென வறிக. ஒருமருங்கும் சாயாமல் வான நடுவே ஞாயிறு நிற்ப, அதன் ஒளிக்கதிர் செவ்வே யொழுக விளங்கும் நண்பகற் போதினை, “ஞாயிறு கோடா நன்பகல்” என்றார். தனக்கு வேண்டும் இரையை முயன்று தேடும் மதுகையில்லாத குறுநரி பசிப்பிணியாற் கவலை யெய்தும் இயல்பிற்றாதலின், “கவலை வெண்ணரி” என்றும், அந்நரியும் தனித்தின்றிப் பலவாய்க் கூடி யாமத்திற் கொருமுறை கூவுதல் என்ற முறைமைப்படியே கூவும் என்றற்கு, “கூஉமுறை பயிற்றி” என்றும் கூறினார். பயிற்றி என்பதனைப் பயிற்ற வெனத் திரிக்க. வெண்மை - நிறஞ் சுட்டாது குறுமையும் வலியின்மையும் சுட்டிநின்றது; செவ்விய அறிவிலாரை வெள்ளறிவினர் என்பது போல. கண்கள் பிதுங்கி வெளி வருவது போறலின், “கழல்கட் கூகை” என்றார்; நக்கீரரும், “கழல் கட் கூகை” (முருகு. 49) என்பர். வெண்ணரி முறை பயிற்றி முழவு போல் கூவும் கூக்குரற் கேற்பக் கூகை குழறுதலால் அதன் குரல் தாளங் கொட்டுவது போல வுளதென்பார், “குழறு குரல் பாணிக்கு” என்றார். நரியின் குரல் முழவு போலு மென்பதனை, “வெவ்வா யோரி முழவாக” (சீவக. 309) என்பதனா லறிக. நரியின் முழவோசையும் கூகையின் குரற்பாணியும் கேட்டதும் பேய்மகள் கூத்தாடுகின்றா ளென்பார், “கருங்கட் பேய்மகள் வழங்கும்” என்றார். கருங்கண் - பெரிய கண். பழையவுரைகாரர் கொடிய கண்ணென்பர். அவர் வழங்குதல் - ஆடுதல் என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட கருத்தே, “வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு, பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல. பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி. விளரூன் தின்ற வெம்புலான் மெய்யர், களரி மருங்கிற் கால் பெயர்த் தாடி” (புறம். 359) என்று பிறரும் கூறுதல் காண்க. மருதத் தண்பணைக்கண் நன்பகற் போதில் வெண்ணரி கூவுதலும், கூகை குழறுதலும், பேய்மகள் ஆடுதலும் நிகழா வாகலின், பாழ்பட்ட நிலத்திற் குரிமை கூறுவார், “பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன்” என்றார்; “சிறுவெள் ளென்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப், பகலுங் கூவு மகலுள்” (புறம். 362) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பெரும்பாழாகுமன் என்றது, மீளவும் பண்படுத்திச் சீர் செய்யலாகாமை தோன்றநின்றது. மன் இரக்கப் பொருட்டு. விரைவிற் பாழ்பட விருப்பது நினைந்து கூறுதலின், “அளிய” என்றார். தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றதாம். தீது சேணிகந்து, நன்றுமிகப் புரிந்து மக்கள் பிணியின்று கழிய, ஊழி யுய்த்த உரவோ ரும்பல், கொங்கர் நாடு அடிப்படுத்த வேல்கெழுதானைத் தோன்றல், அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவ, நீ நாடுகெழு தண்பணை சீறினை யாதலின், இனி அவை பேய்மகள் வழங்கும் பெரும் பாழாகும்; அவை அளிய என்பதாம். பழையவுரைகாரர், “உரவோ ரும்பல், தோன்றல், குட்டுவ, நீ சீறினையாதலின், நாடுகெழு தண்பணை அளிய தாம் பெரும்பாழாகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று.” சீறினை யாதலின் நாடுகெழு தண்பணை பாழாகு மென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. உளைப் பொலிந்த மா வென்பது முதலாய நான்கடிகளும் கடி மிளை யென்பது முதலாய இரண்டடிகளும் வஞ்சியடியாகலின், வஞ்சித்தூக்கும் என்றார். புகலென அடியிடையும் ஓடுவென அடியின் இறுதியும் வந்தன கூன். 3. ததைந்த காஞ்சி 1. அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச் சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து நிலம்பை தற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் 5. மன்றம் போந்து மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச் சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் 10. போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந் தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் 15. விண்ணுயர் வைப்பின காடா யினநின் மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் மணன் மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு 20. முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை நந்து நாரையொடு செவ்வரி யுகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழன்மருள் பூவின் றாமரை வளைமகள் குறாஅது மலர்ந்த வாம்பல் 25. அறாஅ யாணரவ ரகன்றலை நாடே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ததைந்த காஞ்சி 4-10. அலந்தலை............... குட்டுவ உரை : அலந்தலை உன்னத்து அங்கவடு பொருந்தி - இலை யில்லாமல் உலர்ந்த தலையினையுடைய உன்ன மரத்தின் சிறு சிறு கிளைகளைப் பொருந்தி யிருந்து; சிதடி கரைய - சிள்வீ டென்னும் வண்டுகள் ஒலிக்க; பெரு வறம் கூர்ந்து - பெரிய வற்கடம் மிகுதலால்; நிலம் பைதற்ற - நிலம் பசுமையற்ற; புலம் கெடு காலையும் - வயல்கள் உலர்ந்து கெட்ட காலத்தும்; கலம் வாங்குபு தகைத்த பையர் - இசைக்கருவிகளைத் தொகுத்துக் கட்டிய பையினை யுடையராய்; மன்றம் போந்து - ஊர் மன்றத்தை யடைந்து; ஆங்கண் மறுகு சிறை பாடும் வயிரிய மாக்கள் - அவ்விடத்தே தம் இசைக் கருவிகளைச் செம்மையுறப் பண்ணி ஊரிடத்து மறுகுகளின் சிறைக்கண்ணே நின்று பாடும் கூத்தரும் பாணருமாகிய பரிசிலர்கள்; கடும்பசி நீங்க உண்டு மலிந்து - தமது மிக்க பசி நீங்குமாறு உண்பனவுண் டமைந்து; பொன் செய் புனை யிழை யொலிப்ப - பரிசிலாகப் பெற்ற பொன்னாற் செய்யப்பட்ட அழகிய இழைகள் ஒலிக்குமாறு; நெஞ்சு மலி உவகையர் பெரிது உவந்து ஆட - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய் மிகவும் மகிழ்ந்து கூத்தாட; சிறு மகிழானும் - தான் நறவு சிறிதே யுண்டு அதனாற் பிறந்த சிறு மகிழ்ச்சி யெய்திய போதும்; பெருங் கலம் வீசும் - பெரு விலையினையுடைய அணிகலங்களை வழங்கும்; போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ - போரிலே வெல்லுகின்ற தானையினையும் பொன்னாற் செய்த மாலையினையுமுடைய குட்டுவனே என்றவாறு. தழங்கு குரல், தழங் குரல் என வருதல் போல, அலந்த தலை, அலந்தலை யென வந்தது; “அலந்தலை யிரத்தி” (புறம். 325) என்றும், “அலந்தலை வேலம்” (பதிற். 39) என இந் நூலுள்ளும் வருதல் காண்க. பழையவுரைகாரரும், “அலந்தலை யெனல் விகாரம்” என்பர். பல்லாறாகக் கிளையும் கவடும் கொண்டு, கணுக்கடோறும் பொருக்கும் குழியும் பெற்றுப் பல்வகைப் பூச்சிகள் பொருந்தி யிருத்தற்கேற்ற அமைதியுடைய தாதலால், “உன்னத்து அங்கவடு பொருந்திச் சிதடி” கரைவதாயிற்றென்க. சிள்வீடு கறங்கும் ஓசை வண்டிசைபோல் இன்பந் தருவதன்மை யின், “சிதடி கரைய” என்றார். சிதடி - சிள்வீ டென்னும் வண்டு. பெருவற மெனவே சிற்றுயிரும் உணவு பெறாது வருந்தும் கால மென்பது பெற்றாம். கூர்ந்தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. நிலம் பைதற்ற காலை யென் றொழியாது புலங் கெடு காலை யென்றது, மழை யின்மையால் வற முண்டாக நிலம் பசுமையற்றதேயன்றி, நிலத்திடத்தே கிணறுகள் எடுத்து நீர் இறைத்து உழவு செய்வார்க்கும் கிணறுகள் நீர் வற்றி விடுதலால் புலங்களும் திண்மையுறக் காய்ந்து உழவுக் கமையா வாயின என்பது உணர்த்துதற்கு. வாங்குதல் - சேரத் தொகுத்துக் கொள்ளுதல்; “கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (கலி. 134) என்றாற் போல. வழிநடை எளிதி லமைவது குறித்து எல்லா இசைக்கலங்களையும் பைக்குள் வைத்துக் கட்டிச் சுமந்து செல்ப வாதலால், “வாங்குபு தகைத்த கலப்பையர்” என்றார். இசைக் கருவிகளை இவ் வயிரியர் சுமந்து செல்லும் திறத்தை ஆசிரியர் பரணர், “வணரமை நல்யா ழிளையர் பொறுப்ப, பண்ணமை முழவும் பதலையும் பிறவும், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்” (பதிற். 41) என்பது காண்க. வயிரிய மாக்கள் - கூத்தர். இக் கூத்தர் முதற்கண் ஊர் மன்றத்தை யடைந்து தம் இசைக் கருவியை இசைத்துத் தம் வரவு தெரிவித்தல் மரபாதலின், “மன்றம் போந்து” என்றும், பின்பு நெடிய மாடங்கள் நிற்கும் மறுகுகளில் உள்ள சிறை களிற் புகுந்து நின்று பாடுபவாகலின், “மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள்” என்றும் குறித்தார். சிறை - மாடங்களின் முற்றத்தே தாழவிட்டிற்கும் முகப்பிடம். இதன் இருமருங்கும் சிறை யெனப்படும். அதனை யொட்டிப் புறந்திண்ணையிருக்கும். “மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக், கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும், அகவலன்” (பதிற். 43) எனப் பிறரும் கூறுவது காண்க. மறுகுசிறை யென்பது இசைத் துறையுள் ஒன்று போலும் எனக் கருதுவாரு முளர். பழுமரம் நாடிச் செல்லும் பறவை போலச் செல்வரை நாடிச் சென்று, அவர் தரும் செல்வத்தைப் பெற்று அமைந்திருப்பதை விடுத்துத் தாம் பெற்றதனைப் பெறார்க்கும் பகுத்தளித்துப் பிற்றைநாளிற் றமது நிலையை நினையாது வாழ்பவராதலால், இவர்பால் பசியுண்மை இயல்பாயினும், நிலம் பைதற்ற புலங்கெடு காலையாதலின் கடும் பசி நிற்பதாயிற்று. அது நின்ற காலத்தும், இவர்கள் பசி நீக்க மொன்றையே கருதுவதன்றிப் பொருளீட்டம் கருதாமை தோன்றக் “கடும்பசி நீங்க” என்றும், அப் பசி நிலை யறிந்து குட்டுவன் பேருணவு இனிதளித்தலால், “உண்டு மலிந்து” என்றும், “பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய” ரென்றும் கூறினார். பெரிதுவந்து நெஞ்சுமலி உவகையராய் ஆட என இயையும். உவகையராய் ஆடுகின்றனரெனவே, முன்னைய பசித் துன்பத்தை மறந்ததே யன்றி, வரும் நாள் எய்தவிருக்கும் இன்மையை நினையாமையும், அப்போதைய பசித்துன்பம் நீங்கப்பெற்று மகிழ்ந்தமையும் பெற்றாம். குட்டுவன் பசி நீங்கப் பேருணவு தந்ததோடு உயர்ந்த அணிகலங்களும் நல்கினா னென்பார், “பொன்செய் புனையிழை யொலிப்ப” என்பதனாற் குறித்தார். பாணர் முதலியோர்க்குச் செய்யும் விருந்தின்கண் அவர் கட்குக் கள் வழங்க, வேந்தன் களிப்பில்லாத நறவினையுண்பன்; அதனை யுண்ட சிறு களிப்பினால் பெருங்கலம் நல்குகின்றா னென்பார் “சிறுமகிழானும் பெருங்கலம் வீசும் குட்டுவ” என்றார். வேந்தன் உடனுண்ணும் இயல்பை, “தெண்கள் வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்ப, தான் தரவுண்ட நனைநறவு மகிழ்ந்து” (பதிற். 43.) என்றும், “நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே, தொலையா நல்லிசை விளங்கு மலையன், மகிழா தீத்த விழையணி நெடுந்தேர், பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட, மாரி யுறையினும் பலவே” (புறம்.123) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக. சிறுமகிழ் - சிறு உண்டாட்டுச் சிறப்பென்றுமாம். புலங்கெடு காலையும், சிறு மகிழானும் என நின்ற உம்மை சிறப்பு. எனவே, பெருங்கலம் நல்காமைக்குரிய காலமும் காரண மும் உளவாகியவழியும் அவற்றை நோக்காது, அடைந்தார் பசித் துன்பம் நீக்கும் பண்பு இச் சேரமான்பால் சிறந்து நிற்றல் இதனால் தெரிவித்தாராயிற்று. 18-25. மருதிமிழ்ந் தோங்கிய.............. நாடே உரை : மருது இமிழ்ந் தோங்கிய- மருத மரங்கள் தம்பால் பல புள்ளினம் தங்கி யொலிக்க வோங்கி நிற்கும்; நளி இரும் பரப்பின் - செறிவினையுடைய பெரிய பரப்பிடமாகிய; மணல் மலி பெருந் துறை - மணல் மிக்க பெருந்துறைக்கண்; ததைந்த காஞ்சியொடு - சிதைந்த காஞ்சி மரங்களுடன்; முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடை கரை - முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த நெருப்புப் போலத் தோன்றும் அடை கரையில்; நந்து நாரையொடு செவ்வரி உகளும் - சங்குகளும் நாரைகளும் செவ்விய வரிகளையுடைய நாரையினத்துப் புள்ளினங்களும் உலவும்; கழனி வாயில் பழனப் படப்பை - கழனிகட்கு வாயிலாக உள்ள பொய்கையைச் சார்ந்த விளைநிலத்தில்; அழல் மருள் பூவின் தாமரை - நெருப்புப் போலும் பூவினையுடைய தாமரையும்; வளைமகள் குறாது மலர்ந்த ஆம்பல் - வளையணிந்த விளையாட்டுமகளிர் பறிக்காமையால் தானே மலர்ந்த ஆம்பலும்; அறாஅ யாணர் - நீங்காத புது வருவாயுமுடைய; அவர் அகன்றலைநாடு - அப்பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் என்றவாறு. பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய அடைகரையில் நாரையொடு செவ்வரி உகளும் படப்பைக்கண் தாமரையும் ஆம்பலும் அறா யாணருமுடைய அவர் அகன்றலை நாடு காடாயின எனக் கூட்டி முடிக்க, பகைவரது நாடு மருதவளஞ் சான்ற மாண்புடைய நாடு என்பது, “மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்” என்பதனாற் பெறப்படும். கிளி முதலிய புள்ளும் வண்டினமும் இனி திருந்து மகிழும் நன்மரம் என்றற்கு, “மருதிமிழ்ந்” தென்றார். சிறப்புடைய மருதினைக் கூறினமையின், ஏனை மாவும் தெங்கும் பிறவும் கொள்ளப்படும். இவற்றாற் செறிவும், இடப்பரப்பும் ஒருங்குடைமை தோன்ற, “நளியிரும் பரப்பு” எனச் சிறப்பித் துரைத்தார். பரப்பினையுடைய பெருந்துறையென்றுமாம். முன்னைய முடிபிற்கு இன்னென்பது சாரியை. பெருந்துறைப் பரப்பில் நிற்பனவும் கூறி, அதன் நிலவியல்பை மணல் மிக்க துறையென்று கூறினார். மாவும் மாக்களும் வழங்குதலால் பூ முதலியனவின்றி மணலே விளங்கித் தோன்றுமாறு காட்டுவார், “மணல்மலி பெருந்துறை” யென்றார். காஞ்சியும் முருக்கமரம் போலத் தாழ நின்று மாலை போலப் பூக்கும் இயல்பிற் றாதலின், அதன் பூவும் தளிரும் விளையாட்டு இளமகளிரால் பறிக்கப்படு தலால் “ததைந்த காஞ்சி” யென்றும், முருக்கம்பூ அவ்வாறு கொள்ளப் படுவ தன்மையின், அது வீழ்ந்து கிடக்குமாறு தோன்ற “முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை” யென்றும் கூறினார். ததைதல் - சிதைதல்; “அருஞ்சமந் ததைய நூறி” (புறம். 18) என்றாற்போல. பழையவுரைகாரர், “ததைந்த காஞ்சி யென்றது, விளையாட்டு மகளிர் பலரும் தளிரும், முறியும், தாதும், பூவும், கோடலாற் சிதைவு பட்டுக் கிடக்கின்ற காஞ்சி யென்றவா” றென்றும் “இச் சிறப்பானே இதற்குத் ததைந்த காஞ்சி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். அடைகரை துறை யன்மையின், அங்கே முருக்கின் கிளை தாழ்ந்து பூக்களைச் சொரிதலால், அப் பூக்களே பரந்து கிடத்தலாலும் அவற்றின் நிறம் நெருப்புப்போன்றிருத்தலாலும், “நெருப்புறழ் அடைகரை” யென்றும், முருக்க மரங்கள் மிக வோங்கி வளராது தாழநின்று கிளைபரந்து நெருப்பெனப் பூத்துள்ள பூக்களைச் சொரிதலால் அடைகரை நீரும் நெருப்பும் தம்முள் உறழ்ந்து காட்சி வழங்குவது போறலின் “முருக்குத் தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை” யென்றும் குறித்தார். முருக்கம்பூ நெருப்புப்போல்வ தென்பதனைப் பிறரும், “பொங்கழல் முருக்கி னொண்குரன் மாந்திச், சிதர்சிதர்ந் துகுத்த செவ்வி” (அகம். 277) என்பர். நீர் இடையறாமையின் தமக்கு வேண்டும் இரையை நிரம்பப் பெறுதலின், ஆக்கமுறும் நாரை யினத்துடன் செவ்வரி யென்னும் நாரை யினமும் கலந்துறையும் என்பார், “நந்து நாரையொடு செவ்வரி யுகளும்” என்றார்; “பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை” (புறம். 351) என்பதனால், செவ்வரி நாரையாதல் காண்க. பழனம் கழனிக்கு வாயில் போறலின், “கழனிவாயிற் பழனம்” என்றார்; “வயலமர் கழனிவாயிற் பொய்கை” (புறம். 354) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழனத்தின் வாயிலாகக் கழனிக்கு நீர் பாய்தலின் இவ்வாறு கூறினா ரென்றுமாம். பழனத்தைச் சார்ந்த படப்பைக்கண் தாமரை மிக்கிருத்தல் தோன்றப் “பழனப் படப்பை யழன்மருள் தாமரை” யென்றார். படப்பை, பழனத்தைச் சார்ந்த தோட்டக்கால். படப்பையில் மலர்ந்த தாமரைப்பூவைப் பறித்துத் தலையிற் சூடி அதன் நாளத்தை வளையாக அணிந்து மகளிர் விளையாடு பவாகலின், அவ்வாறு விளையாடும் இளமகளை “வளைமகள்” என்றும், அவள் பழனத்தில் மலர்ந்த ஆம்பலைப் பறிக்க மாட்டாது விடுப்ப அது தானே மலரும் என்பார் “குறாது மலர்ந்த ஆம்பல்” என்றும் கூறினார். விளையாடும் பருவத்து இளமகளிரை “வளையவ” ரென்பது பண்டையோர் வழக்கு, “வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள” (கலி. 29) என்ற விடத்து, வளையவர் என்றதற்கு நச்சினார்க்கினியர் “வளையினையுடைய இளையோர்” என்றுரைப்பது காண்க. இவ்வளைமகள் குறுதற் கெட்டுமளவி லிருப்பின், நீரிடத்தே அதனை மலரவிடாது பறித்திருப்பள் என்றவாறு. பழைய வுரைகாரரும் “வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பல் என்றது, விளையாட்டு மகளிர் குறுதற் கெட்டாமையாலே மலர்ந்த ஆம்பல் என்றவாறு” என்பர். இன்ன புது நலங்கள் இடையறாத நாடுகள் என்றற்கு “அறாஅ யாணர்” என்றார். இனி, அவர் நாட்டு இளையவர் மலர்ந்த தாமரையைப் பயன்கொண்டு குவிந்த ஆம்பலை வாளாது விடுவ ரென்றது, செல்வத்திற் சிறந்தாரைப் பயன்கொண்டு மெலிந்தாரைப் புறக்கணித்தார்; அதுவும் அவர் நாட் டழிவுக்குக் காரணமா மென்பது கூறியதாகக் கொள்க. வளையோர் மலர்ந்த தாமரைப் பயன்கொண்டது போல, இந்நாட்டரசராகிய பகைவேந்தர் நின்னை வணங்கிப் பயன் கொள்ளாது, மகளிர் தமக்கெட்டாத ஆம்பலைக் குறாது விட்டது போலத் தமக் கெய்தலாகாத வென்றியை யெய்த முயன்று கெட்டனர் என வேறோ ரேதுக் காட்டி நின்ற தெனினுமாம். 11-17. நின்னயந்து............ ஒராலின் உரை : நின் மைந்து மலி பெரும் புகழ் அறியார் - நினது வலியால் நிறைந்த புகழ்நிலையை யறியாராய்; போர் எதிர் வேந்தர் - நின்னொடு பொருதலை யேற்று எதிர்நின் றழிந்த பகை வேந்தர்; தார் அழிந்து ஒராலின் - நின் தூசிப்படைக் குடைந்து ஓடுதலால்; வழங்குநர் அற்றெனப் புல் மிக்கு மருங்கு கெடத் தூர்ந்து - மக்கள் போக்கு வரவற்றபடியால் புல் நிறைந்து சிற்றிடமுமின்றி முட்செடிகள் மண்டித் தூர்ந்து; பெருங் கவின் இழந்த - தமது பெரிய அழகை யிழந்த, ஆற்ற - வழிகளை யுடையவாய்; விண்ணுயர் வைப்பின - வானளாவ உயர்ந்த நெடுநிலை மாடங்கள் பொருந்திய வூர்கள்; அண்ணல் மரையா ஏறு புணர்ந்துறையும் காடாயின - பெரிய காட்டுப் பசுக்கள் ஏறுகளுடன் கூடி யுறையும் காடுகளாயின; நின் நயந்து வருவேம் கண்டனம் - நின்னைக் காண்டலை விரும்பி வரும் யாங்கள் அவற்றைக் கண்டேம் என்றவாறு. அகன்ற நாடுகள், பெருங்கவின் இழந்த ஆற்றவாய்க் காடுகளாயின வென்க. மைந்து - வலிமை. மைந்துடையார்க்கே போர்ப்புகழ் மிகவுண்டாகுமாதலின், “மைந்துமலி பெரும்புகழ்” என்றும், இதனை முன்பறிந்தாரேல் பகைவர் போரில் எதிர் தலைக் கருதியிரார் என்பார், “அறியார் மலைந்த போரெதிர் வேந்தர்” என்றும் கூறினார். நின்னுடைய அகப்படையும் மூலப்படையும் காணாது தூசிப்படையினை யெதிர்ந்த அளவிலே ஆற்றாது உடைந்தமையின், “தாரழிந் தொராலின்” என்றார். தார் என்புழி நான்கனுருபு தொக்கது. இனி, தாரென்றது பகைவரது தூசிப்படையாக்கி, பகைவர் தமது தூசிப்படை யழிந்து உடைந் தோடினமையின் என்றுரைப்பினு மமையும். தாரழிந் தொராலின் என்றதற்கு, தாரும், குடையும், முரசும், பிறவும், இழந்தனரெனக் கோடலு மொன்று. எனவே, நின்னுடைய மைந்து மலி பெரும் புகழ் அறியாது பகைவர் செய்த குற்றம் அவர்கட்கு இக் கேட்டைப் பயந்ததோடு அவர் நாட்டையும் பாழ்படுத்திற் றென்பார், “அவர் அகன்றலை நாடு காடாயின” என்று இரங்கிக் கூறினார். அறாஅ யாணரால் பண்பட்டுச் சிறந்த வளஞ் சுரந்த நாடுகள் இற்றைப்போதில் மக்கள் அனைவரும் வேறுநாடுகட் ககன்றமை யின் வழக்கொழிந்தன வென்பார், “வழங்குந ரற்றென” என்றும் அதனால் வழிகள் ஒதுக்கிடமின்றியாண்டும் புல்லும் முட்புதலும் செறிந்து எம்மருங்கும் மூடிக்கொண்டன வென்பார், “புல்மிக்கு மருங்கு கெடத் தூர்ந்து” என்றும் குறித்தார். “பெருங்கவின் இழந்த ஆற்ற” எனவே, முன்பு அவ்வழியிடங்கள் முழுதும் நறும் புனலும் தண்ணிழலும் பொருந்தி வழக்குடையவாயிருந்தன வென்றும், புல் மிக்குள்ள விடம் நெல் மிக்கும், வழங்குந ரற்ற வழி எனவே, இடையற வின்றி மக்கள் வழங்கும் வழக்கு மிகுந்தும் விளங்கினவென்றும் கொள்ளப்படும். கணவரொடு கூடிக் கற்புக் கடம் பூண்ட மகளிர் இருந்த அவ்விடங்களிலே ஏற்றொடு கூடிய மரையா இனிதுறையாநிற்கு மென்பார், “ஏறுபுணர்ந் தண்ணல் மரையா அமர்ந்தினி துறையும்” என்றார்; மரையா - காட்டுப்பசு; “மலைத் தலை வந்த மரையான் கதழ்விடை” (மலைபடு. 331) என்றாற் போல. இனி, மான்பிணையென்று கொள்வாருமுண்டு. வானளாவ உயர்ந்த நெடுநிலை மாடங்கள் நின்ற அந் நாடுகள் இப்போது காடாயின வென்றலின், “விண்ணுயர்வைப்பின் காடாயின” என்றார். இனிப் பழையவுரைகாரர், “விண்ணுயர் வைப்பின காடென்றது, மரங்கள் விண்ணிலே செல்ல வோங்கி நிற்கும் காடுகளாயின வென்றவா” றென்பர். இதுகாறுங் கூறியது, பெருவறங் கூர்ந்து புலங்கெடு காலையும் வயிரிய மாக்கள் உண்டு மலிந்தாடப் பெருங்கலம் வீசும் குட்டுவ, காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய அடை கரைக்கண் நாரையும் செவ்வரியும் உகளும் படப்பையில் தாமரையும் வளைமகள் குறாது மலர்ந்த ஆம்பலும் அறா யாணருமுடைய அகன்றலை நாடுகள் பெருங்கவின் இழந்த ஆற்றவாய், காடாயின; அவற்றை நின் நயந்து வருவேம் கண்டனம் என்பதாம். இனி, பழையவுரைக்காரர், “குட்டுவ, போரெதிர் வேந்தர் தாரழிந்தொராலின், அவர் அகன்றலை நாடு காடாயின அதனை நின் னயந்து வருவேம் கண்டனம் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் நாடு காடாயினவென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமை யால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.” 4 சீர்சால் வெள்ளி 1. நெடுவயி னொளிறு மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த புலவுவா யெஃக மேவ லாடவர் வலனுயர்த் தேந்தி ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற் 5. பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று 10. நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவர் அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை இடாஅ வேணி யியலறைக் குருசில் 15. நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும் அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ 20. றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி 25. பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் 30. பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சீர்சால் வெள்ளி 1-5. நெடுவயின்................ தலைவ உரை : நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந்தாங்கு - நெடிய விசும்பின்கண் விளங்குகின்ற மின்னல் பரந்தாற் போல; புலியுறை கழித்த புலவு வாய் எஃகம் - புலித்தோலாற் செய்த உறை யினின்றும் வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி - நாளும் போரை விரும்பும் வீரர் தம் வலக்கையில் விளங்க வேந்தி; ஆர் அரண் கடந்த தார் - பகைவருடைய அரிய அரண்களை யழித்தேகும் தமது தூசிப் படையால்; அருந்தகைப்பின் - கடத்தற்கரிய பகைவரது அணி நிலையுட் பாய்ந்து; பீடு கொள் மாலைப் பெரும்படைத் தலைவ - வென்றி கொள்ளும் இயல்பினை யுடைய பெரிய தானைக்குத் தலைவனே என்றவாறு. நிலத்தினும் கடலினும் நெடுமையும் பரப்பு முடைமை பற்றி விசும்பு “நெடுவயி” னெனப்பட்டது. இது நெடிதாகிய இடத்தையுடைய விசும்பென விரிதலின், அன்மொழித் தொகையாய் விசும்பிற்குப் பெயராயிற்று. புலியுறையினின்றும் கழித்த எஃகம், முகிலிடைத் தோன்றும் மின்னுப் போறலின், “நெடுவயின் மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த எஃகம்” என்றார். வாள்வாய்ப் பட்டாரது ஊன் படிந்து புலவு நாற்றம் நாறுதலின், “புலவுவா யெஃகம்” எனப்பட்டது. படை வீரர் போரே விரும்பும் புகற்சியினராய் நாளும் அதன்மேற் சென்ற உள்ளத்தாற் சிறந்து நிற்குமாறு தோன்ற “மேவல் ஆடவர்” என்றார். ஏவ லாடவரெனக்கொண்டு வேந்தனது ஏவல்வழி நிற்கும் வீரரென்றுரைப்பினுமாம்; “புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப” (புறம். 68) என்பதனால் வீரர் ஏவல்வழி நிற்குமாறு பெறப்படும். போர், என்பது அவாய்நிலை. இடக்கையில் தோலையேந்துதலின் “வாளை வலனுயர்த் தேந்தி” யெனல் வேண்டிற்று. புலித் தோலாற் செய்யப்பட்டதனைப் புலியுறை யென்றார். இனி, தார்ப்படையின் வன்மை கூறுவார், பலவகைப் பொறியாலும் காத்து நிற்கும் வயவராலும் நெருங்குதற்கரிய அரண் பலவும் வருத்தமின்றி எளிதிற் கடக்கும் வன்மையுடைய தென்றற்கு, “ஆரரண் கடந்த தார்” என்றார். தார் - துசிப்படை. இதனைத் தாங்கிப் பின்னே அணியுற்று வரும் படை தானை யெனப்படும்; “தார் தாங்கிச் செல்வது தானை” (குறள். 767) எனச் சான்றோர் விளக்குவது காண்க. போர்க் கருவிகளான வில், வேல், வாள் முதலியனவேயன்றி, படையினது அணிவகுப்பும் நிலையும் வன்மை நல்குவனவாதலின், அச்சிறப்பை விதந்து, “அருந் தகைப்பில்” என்றும், அதன் உட்புகுந்து பொருது கலக்கிச் சிதைத்து வென்றி காண்பதே வீரர்க்கு மிக்க வீறு தருவதாதலின், “அருந்தகைப்பிற் பீடுகொள் மாலைப் பெரும் படைத் தலைவ” என்றும் கூறினார். மாற்றாரது அருந்தகைப் புட் புகுந்து கலக்கக் கருதுவோர், முன்பாகக் களிற்றினைச் செலுத்தி இடமகல்வித்து, அதன் வழியே நுழைந்து தாக்கு வரென்ப; இதனைக் “களிறு சென்று களனகற்றவும், களன கற்றிய வியலாங்கண், ஒளிறிலைய வெஃகேந்தி, அரைசுபட வமருழக்கி” (புறம். 26) என்பதனா லறிக. இன்னோ ரன்ன அருஞ்செயல்வழிப்படும் பீடே தம் நடு கல்லினும் பிறங்கு வதாமென் றறிக. “நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” (அகம். 67) என்புழி `நல்லமர்’ என்றது இதனையும் உட்கொண்டு நிற்றலை யுணர்க. இத்தகைய பீடு பெறுதல் நின் படைக்கு இயல்பாயமைந்துள தென் பார்,“பீடுகொள் பெரும் படை” யென்னாது, “பீடுகொள் மாலைப் பெரும்படை” யென்றார். மாலையென்ற அடைநலத்தால், பெருமை, படையினது மிகுதி மேற்றாயிற்று, இனிப் பழைய வுரைகாரர், “தாரருந் தகைப்பின் பீடுகொள் மாலைப் பெரும்படை யென்றது, தார்ப் படைக்கு அழித்தற் கரிய மாற்றார் படை வகுப்பிலே வென்றி செய்து பெருமை கொள்ளும் இயல்பை யுடைய அணியாய் நிற்கும் பெரும்படை யென்றவா” றென்பர். பெரும் படையெனவே, அணிநிலையும், தொகை மிகுதியும் கருவிப்பெருமையும், வினைத்தூய்மையும் பிறவும் அகப்படுதல் காண்க. இப்பெரும்படையை இதன் பெருமைப்பண்பு குன்றாத வகையில் வைத்தாளுந் திறன் தலைமைப்பண்பு முற்றும் நிரம்ப வுடையார்க் கன்றி யின்மையின், பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் “பெரும்படைத் தலைவ” என்றார். திருவள்ளுவ னாரும், “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல்” (குறள். 770) என்பது காண்க. மேலும், குட்டுவனை, பெரும்படை வேந்தே யென்னாது “தலைவ” என்றதனால், அவன் படையினை யேவியிராதே அதற்குத் தானே முன்னின்று தலைமை தாங்கிப் பொருது பீடு கொள்ளும் செயலுடைய னென்பதும் உய்த்துணரப்படும். 6-11. ஓதல்............. கணவ உரை : ஓதல் வேட்டல் அவை பிறர்ச்செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும் - மறையோதுதல், வேள்வி வேட்டல், அவை யிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க் கொன்றீதல், தமக்கொருவர் கொடுத்ததை யேற்றல் என்ற தொழி லாறும் செய்தொழுகும்; அறம் புரி அந்தணர் - அறநூற் பயனை விரும்பும் அந்தணர்களை; வழி மொழிந் தொழுகி - வழிபட் டொழுகி; ஞாலம் நின் வழி யொழுக - அதனால் உலகத்தவர் நின்னை வழிபட்டு நிற்ப; பாடல் சான்று - புலவர் பாடும் புகழ் நிறைந்து; நாடு உடன் விளங்கும் - நிலமுழுதும் பரந்து விளங்கும்; நாடா நல்லிசை - விளங்கிய நல்ல புகழையும்; திருந்திய இயல் மொழி - அறக் கேள்வியால் திருந்திய இனிய இயல்பிற் றிரியாத மொழியினையு முடைய ; திருந்திழை கணவ - திருந்திய இழையணிந்தவட்குக் கணவனே என்றவாறு. ஒதுவித்தலும் வேட்பித்தலும் அந்தணர்க்குரிய ஆறனுள் அடங்குவனவாதலின், “அவை பிறர்ச் செய்தல்” என்றார். செய்தல்: பிறவினைப்பொருட்டு. செய்தல், செய்வித்தல் என்ற வினைவகைகளுள் செய்தல் வகை நான்கினையும் முன்னும் பின்னும் கூறலின், இடையே செய்வித்தல் வகை இரண்டனையும் ஒன்றாய்த் தொகுத்துரைத்தார், சொற் சுருங்குதல் குறித்து. பழைய வுரைகாரர், “அவை பிறர்ச் செய்தல் என்புழிப் பிறரையென விரியும் இரண்டாவதனை, அவை செய்தல் என நின்ற செய்த லென்னும் தொழிலாற் போந்த பொருளால் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனொடு முடிக்க” என்றார். என்று என்பதனை எல்லாவற்றோடும் ஒட்டுக. ஆறென்புழி முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இவ் வாறு தொழிலையும் வழிவழியாக வருத்தமின்றிக் கற்றுப் பயின்று வருதலின் அந்தணரை “ஆறுபுரிந் தொழுகும் அந்தணர்” என்ற ஆசிரியர், அவர் தம் உள்ளத்தே அறநூல்களின் முடி பொருளையே விரும்பாநிற்கின்றன ரென்பார், “அறம்புரி யந்தணர்” என்றார். அறம், அறநூல்களின் முடிபொருண் மேற்று. அது வேத முதலிய நூற்களாற் கற்றுணரப்படாது இறைவனால் உணர்த்தப்படுவது. “ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து” (கலி. கடவுள்) என்றும், “ஒருமுகம், எஞ்சிய பொருள்களை யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே” (முருகு 16-8) என்றும் சான்றோர் கூறுவது காண்க. சைவ நூல்களும், வேத முதலியவற்றின் ஞானம் கீழ்ப்பட்ட தாகிய பாச ஞானம் என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. உலகியற் பொருளையும் அதற்குரிய அறநெறிகளையும் உள்ளவாறுணர்த்தும் உரவோராதலின், அந்தணர் வழிமொழிந் தொழுகுதல் அரசர்க்குக் கடனாதல் பற்றி, “அந்தணர் வழி மொழிந் தொழுக” வென்றார். அவ்வொழுக்கத்தாற் பயன் இதுவென்பார், “ஞாலம் நின்வழி யொழுக” என்றும், அதனால் நாடு நாடா வளம் படைத்து நல்லோர் பாராட்டும் நலம் பெறுதலின் “பாடல் சான்று” என்றும் கூறினார். நாட்டின் புகழ் நாட்டின் அரசர்க்குச் சேறலின், அரசன் மேலேற்றிச் “சான்று” என்றார். இக் குட்டுவனைப் பாடப் போந்த கௌதமனார், “உருத்துவரு மலிர்நிறை” யென்ற பாட்டினை நாடு வாழ்த் தாகவே பாடி யிருப்பது காண்க. அவன் புகழ் பரவாத இடம் நாட்டில் ஒரு சிறு பகுதியு மின்மையின் “நாடுடன் விளங்கும் நல்லிசை” யென்றார். இசைக்கு நன்மை, அழியாமை. நல்லிசைக் குரிய குணஞ் செயல்கள் அவன்பால் நன்கு விளங்கித் தோன்றலின், “நாடா நல்லிசை” யென்றார். விளக்கமில்வழியே நாடுதல் வேண்டுதலின், நாடாமை விளக்கமாயிற்று. இனி, நாடாது செய்தாரை நாடி யடைதலும், நாடிச் செய்தாரை இனிது நாடாமையும் புகழ்க்கு இயல்பாதலின் “நாடா நல்லிசை” யென்றா ரென்றுமாம். அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகும் ஒழுக்கத்தின் பயன் அவன் சொல்லின்கண் அமைந்து கிடத்தலின், “திருந்திய இயன்மொழி” என்றார். சொல்லிற் றோன்றும் குற்றங்கள் இன்றி இனிமைப் பண்பே பொருந்திய மொழி இயல்மொழி. இனி, திருந்திய இயல்மொழி யென்பதற்குப் பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்திய மொழி யென்றும் கூறுவர். திருந்திழையென்னும் அன்மொழித் தொகை அரச மாதேவிக்குப் பெயராயிற்று. 12-14. குலையிழிபு............. குருசில் உரை : குலை இழிபு அறியாச் சாபத்துக் களைவு அறியா அம்பு வயவர் - நாண் களைதலறியாத வில்லையும் கையினின்று களைதலில்லாத அம்பையுமுடைய வீரரது; தூங்கு துளங் கிருக்கை - போர் வேட்கையால் விரையும் குறிப்பொடு செறிந்திருக்கும் இருக்கையும்; இடாஅ ஏணி இயல் அறை - வன்மைக் கெல்லையாகிய எல்லா நலங்களும் பொருந்த வியன்ற பாசைறையுமுடைய; குருசில் - வேந்தே என்றவாறு. வில்லை வளைத்துப் பிணித்து நிற்கும் நாணினது நிலை குலை யெனப்பட்டது; “வில்குலை யறுத்துக் கோலின்வாரா வெல்போர் வேந்தர்” (பதிற். 79) எனப் பிறாண்டும் வருதல் காண்க. களைவறியா அம்பென வியைத்து, சாபத்தையும் அம்பையுமுடைய வயவரென்றும், வயவரது இருக்கை யென்றும் இயைக்க. இருக்கையும் பாசறையுமுடைய குருசில் என முடிக்க. இன்னபொழுது போருண்டாமென் றறியாதே எப்பொழுதும் நாணேற்றியே கிடக்கும் வில்லென்றற்கு, “குலையிழி பறியாச் சாபம்” என்பது பழையவுரை. குலையிழி பறியாச் சாபமேந்திய வழி, அதற்கேற்ப அம்புகளும் கையகலாது செவ்வேயிருத்தல் வேண்டுமாகலின், “அம்பு களை வறியா” என்றார். பழையவுரை காரரும், “அம்பு களைவறியா வென்றது, போர்வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைத லறியா வென்றவா” றென்பர். போர்நிகழ்ச்சியை யெதிர் நோக்குதலால் உள்ளம் பரபரப்பும் துடிப்பும் கொண்டு விரையும் வீரர் சோம்பி ஓரிடத்தே குழீஇயிருக்கவுமாட்டாது, அரசன் ஏவாமையின் போர்க்குச் செல்லவுமாட்டாது இருக்கும் அவர்தம் இருப்பினை, “தூங்கு துளங் கிருக்கை” யென்றார். `புட்பகைக், கேவா னாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப’ (புறம்.68) என்பதனாலும் இப் பொருண்மை யுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், “தூங்கு துளங்கிருக்கை யென்றது, படை இடம் படாது செறிந்து துளங்குகின்ற இருப்பு என்றவா” றென்பர். இடாஅ ஏணி என்றது, எல்லையாகிய பொருட்கு வெளிப் படை. இனி, ஏணிக் குருசில் என இயைத்து, போர் வன்மைக் கெல்லையாகிய குருசில் என்றுரைப்பினுமாம். “கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்” (முருகு. 133-4) என்றாற்போல. இடாஅ ஏணியாவது “அளவிடப்படாத எல்லை” என்று பழையவுரை கூறும். பழையவுரைகாரர், “பாசறை அறையெனத் தலை குறைந்த” தென்றும், “இயலென்றது பாசறைக்குள்ள இயல்” பென்றும் கூறுவர். பாசறைக்குரிய நலங்கள், புரிசையும் இருக்கையும் அரணும் மெய்காப்பாளரும் காலக்கணக்கரும் உழையரும் நன்கமைந்த நலங்கள். “காட்ட இடுமுட் புரிசை யேமுற வளைஇப், படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி” (முல்லைப். 26-28) எனப் புரிசையும், “நற்போர், ஓடா வல்வில் தூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை” (38 - 40) என இருக்கையும், “பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து, வாங்குவில் லரணம்” (41-2) என அரணமும், “துகில் முடித்துப் போர்த்த தூங்க லோங்கு நடைப், பெரு மூதாளர்” (53-4) என மெய்காப்பாளரும், “பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்” (55) எனக் காலக்கணக்கரும், “உடம்பி னுரைக்கு முரையா நாவிற், படம்புகு மிலேச்சர் உழைய ராக” (65-6) என உழையரும் பாசறைக்கு நலங்களாக ஆசிரியர் நப்பூதனார் கூறுதல் காண்க. 15-17. நீர்நிலம்............. கண்டிகுமே உரை : நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் அளந்து கடை அறியினும் - நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் விசும்புமாகிய ஐந்தனையும் அளந்து முடிவு காணினும்; அளப்பரும் குரையை - அறிவு முதலியவற்றால் அளந்து எல்லை காண்பதற்கரியை யாவாய்; நின் வளம் வீங்கு பெருக்கம் - நின்னுடைய செல்வம் பெருகிய நலத்தை; இனிது கண்டிகும் - யாங்கள் இனிது கண்டறிந்தோம் என்றவாறு. நில முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலக மென்பதைக் கண்ட பண்டைத் தமிழ் நன்மக்கள், நிலமுதலிய ஒவ்வொன்றின் அளவையும் அளந்து காண முயன்று அளத்தற் கரியவையெனத் துணிந்தன ராதலின், அளப்பரிய பிற பொருள்கட்கு அவற்றை உவமமாக எடுத்தோதுவதை மரபாகக் கொண்டனர்; அதனால் குட்டுவனுடைய அறிவு, ஆண்மை, பொருள் முதலியவற்றா லாகிய பெருமையைச் சிறப்பித்து, “அளப்பருங் குரையை” என்றார். பிறரும், “நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற். 14) என்றும், “நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு மாரள வின்றே” (குறுந். 3) என்றும் கூறுதல் காண்க. கடை - முடிவு. நிலம் நீர் தீ வளி விசும்பென்றல் முறையாயினும் செய்யுளாதலின் பிறழ்ந்துநின்றன. அறியினும் என்புழி, உம்மை எதிர்மறை. குரை : அசைநிலை. குட்டுவனுடைய செல்வம் முதலிய நலங்களும் நாளும் பெருகுதலால், “வளம் வீங்கு பெருக்க” மாயிற்று. அளத்தற் கரியனாயினும் காட்சிக் கெளிமையும் இனிமையு முடைய னாதல் பற்றி, “இனிது கண்டிகும்” என்றும், அவ்வெளிமை யொன்றே அவனது பெருநலத்தை வெளிப்படுத்தலின், “வளம் வீங்கு பெருக்கம்” என்றும் கூறினார்; “பணியுமா மென்றும் பெருமை” (குறள். 978) என்று சான்றோர் கூறுதல் காண்க. வளம் வீங்கு பெருக்கமெனத் தொகுத்தது மேலே விரிக்கப்படுகிறது. 18-30. உண்மரும்.................. வளனே உரை : வயங்கு விரிந்து வானகம் சுடர்வர - விளங்குகின்ற கதிர் வானமெங்கும் பரந்து திகழ ; வடக்கு வறிது இறைஞ்சிய சீர் சால் வெள்ளி - வடதிசைக்கண் சிறிதே சாய்ந்து தோன்றும் சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்; பயங்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப - பயன் பொருந்திய ஏனை நாண் மீன்களுடனே தன்குரிய நாளிலே நிற்க; கலிழும் கருவியொடு - நீரைச் சொரியும் மழைத் தொகுதியுடன்; கையுற வணங்கி - பக்க வானத்திற் றாழ்ந்து; மன்னுயிர் புரைஇய - மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி; வலன் ஏர்பு இரங்கும் - வலமாக எழுந்து முழங்கும்; கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை - கீழ்க்காற்றுக் கொணரும் தண்ணிய மழைத் துளியால் நிறைந்த சூல்கொண்ட கருமுகிற்கூட்டம்; கார்எதிர் பருவம் மறப்பினும் - கார்காலத்து மழைப்பெயலைப் பெய்யாது மறந்தவழியும்; தொடி மழுகிய உலக்கை வயின்தோறு - பூண் தேய்ந்த உலக்கையிருக்கும் இடங்கடோறும்; அடைச் சேம்பு எழுந்த ஆடுறு மடாவின் - அடையினையுடைய சேம்பு போன்ற, சோறு சமைக்கும் பெரும்பானையும்; எஃகுறச் சிவந்த ஊனத்து - கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால் ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக்கட்டையும்; கண்டு - பார்த்த துணை யானே; யாவரும் மதி மருளும் - யாவரும் அறிவு மயங்கு வதற்குக் காரணமான; உண்மரும் தின்மரும் - உண்பாரும் தின்பாருமாய் வரும் பலரையும்; வரை கோள் அறியாது - வரைந்துகொள்வ தின்றாமாறு வழங்கியவழியும்; வாடாச் சொன்றி - குறையாத சோறு; பேரா யாணர்த்து - நீங்காத புதுமையினையுடைத்து; நின் வளன் வாழ்க - இதற்குக் காரண மாகிய நின் செல்வம் வாழ்வதாக என்றவாறு. குரை - அசை. இடையற வின்றிச் சமைத்தற்கு வேண்டும் அரிசியைக் குற்றிக் குற்றித் தேய்ந்தொழிந்தமை தோன்றத், “தொடி மழுகிய உலக்கை” எனக் கூறப்பட்டது. குற்றுந்தோறும் ஓசை யெழுப்புவது பற்றித் தொடி - குரைத்தொடி யெனப்பட்ட தென்று மாம். உலையிடும் அரிசியைத் தீட்டிக் கோடற் பொருட்டு அட்டிற் சாலைக்கண் மரவுரலும் தொடியிட்ட வுலக்கையும் உளவாதலின், “உலக்கை வயின்றோறும்” என்றார். இலையோடு கூடிய சேம்புபோல அகன்ற வாயையுடைய தாதலால், சோறு சமைக்கும் மடாவினை “அடைச்சேம் பெழுந்த ஆடுறு மடா” வென்றார். சேம்பின் அடி மடாவின் அடிப்பகுதிக்கும் அதன் இலை அகன்ற வாய்க்கும் உவமம். இதுபோலும் வடிவில் இக் காலத்தும் சோறு சமைக்கும் மண் மிடாக்கள் நாட்டுப்புறங்களிற் காணப்படுகின்றன. எழுந்த : உவமப்பொருட்டு. இம் மடாக் களை நேரிற் கண்டறியாதார் தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர். மடா, மிடா வெனவும் வரும். இக்காலத்தவர் முடா வென வழங்குவர். சிவந்த நிறமுடைய ஊனைக் கொத்திச் சோற்றோடு கலந்து சமைப் பவாதலின், மடாவொடு ஊனமும் உடன் காணப்படுகின்றன. “கோழூன் குறைக் கொழு வல்சி” (மதுரை. 141) என்பதனுரையில், “ஊனைக்கூட இட்டு ஆக்குதலின் கொழுவல்சி” யென்றார் என நச்சினார்க்கினியர் உரைப்பது காண்க. ஊனம், ஊனைக் கொத்துதற்குக் கொள்ளும் அடிமணை யாகிய மரக்கட்டை; ஊனைக் கொத்துதலால் அதன் குருதி படிந்து சிவந்து தோன்றதலால் “எஃகுறச் சிவந்தவூனத்” தென்றார். இவற்றைக் காணுமிடத்து இவற்றால் ஆக்கப்படும் சோறும் ஊனும் என்ற இவற்றின் மிகுதி, காண்பார் கருத்திற் றோன்றி, அவர் தம் அறிவை மயக்குதலின், யாவரும் கண்டு மதி மருளுவ ரென்றார். “யாவரும்” என்றார், சமைக்கும் மடையர்க்கும் மதிமருட்சி பயக்கும் பெருமை யுணர்த்தற்கு. இவற்றை முறையே உண்ணவும் தின்னவும் வருவாரை வரையா தேற்று வழங்குதலின், குறைவுண்டா காதவாறு இடையறாது சமையல் நிகழ்ந்தவண்ண மிருத்தலின், “உண்மரும் தின்மரும் வரைகோ ளறியாது வாடாச் சொன்றி” யென்றார். அறியா தென்புழி வழங்கவும் என ஒருசொற் பெய்து கொள்க. இனி, வரைகோ ளறியாது ஆடுறு மடாவென வியைத்து, இத்துணையரென வெல்லை யறியப்படாது பன் முறையும் சமைத்துக் கொட்டுதலைப் பொருந்திய மடாவென் றரைப்பினு மமையும். ஏனைக் கோளினும் நாளினும் வெள்ளி மிக்க வொளியுடைய தாதலால், “வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர்வரு” மென்றார். நேர் கிழக்கில் தோன்றுவதின்றிச் சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்குதலின், வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி யென்றும், அது மழை வளந்தரும் கோள்களிற்றலைமை பெற்றதாதலின், சீர்சால் வெள்ளி யென்றும், தலைமை பெற்றதாயினும் ஏனைக் கோள்களும் கூடியிருந்தாலன்றி மழை வளம் சிறவாமை தோன்ற, “பயங்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப” என்றும் சிறப்புற மொழிந்தார், நாளாவது நாண்மீன் கூட்டம். பொழுது: ஆகுபெயர். “ஆநியம் நிற்ப” (பதிற். 69) எனப் பிறரும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், “வறிது வடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதொ டாநிய நிற்ப வென்றது, சிறிது வடக் கிறைஞ்சின புகழானமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோள்களுடனே தான் நிற்கும் நாளிலே நிற்க வென்றவாறு” என்றும், “பொழுதென்றது அதற்கு அடியாகிய கோளை” யென்றும், “வறிது வடக் கிறைஞ்சிய வென்னும் அடைச் சிறப்பான் இதற்குச் (இப் பாட்டிற்குச்) சீர்சால் வெள்ளி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். மழை பொழியும் முகிற்கூட்டம் பக்க வானத்தே கால் வீழ்த்துப் பெய்தல் இயல்பாதலால், “கையுற வணங்கி” என்றார். கை, பக்கம். மன், மிகுதிகுறித்து நின்றது. ஞாயிறு போல முகிற் கூட்டமும் வலமாக எழுதல் பற்றி, “வலனேர் பிரங்கும்” என்றார். கீழ்க்காற்றாற் கொணரப்படும் மழைமுகில் பெய்யாது பொய்த்தல் அரிதெனற்கு. “காரெதிர் பருவம் மறப்பினும்” என்றார். ஒருகால் அது மறப்பினும் இச் சேரமான் வழங்கும் சோறு குன்றா தென்பது இதனால் வற்புறுத்தவாறு. இதுகாறும் கூறியது, பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ, திருந்திழை கணவ, இயலறைக் குருசில், நீர் முதலிய ஐந்தினையும் அளந்து முடிவறியினும் பெருமை யளத்தற்கரியை; நின் வளன் வீங்கு பெருக்கம் இனிது கண்டேம்; மழை காரெதிர் பருவம் மறப்பினும் நின் வாடாச் சொன்றி பேரா யாணர்த்து; நின் வளன் வாழ்க என்பதாம். பழைய வுரைகாரர், “பெரும் படைத் தலைவ, திருந்திழை கணவ, குருசில், நீர் நில முத லைந்தினையும் அளந்து முடி வறியினும் பெருமை யளந்தறிதற் கரியை; நின் செல்வ மிக்க பெருமை இனிது கண்டேம்; அஃது எவ்வாறு இருந்த தென்னின் வாடாச் சொன்றி மழை காரெதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்து; அப்பெற்றிப் பட்ட நின் வளம் வாழ்க வென வினைமுடிவு செய்க” என்பர். நேர் கிழக்கே நில்லாது சிறிது வடக்கண் ஒதுங்கித் தோன்றிய சீர்சால் வெள்ளியை “வறிது வடக் கிறைஞ்சிய” என அடை கொடுத்து, சீர் மாசுபட்டார் வடக்கிருப்பாராக, வடக் கொதுங்கிய வெள்ளியை வடக்கிறைஞ்சிய வென்றதன் மாசின்மை தோன்றச் “சீர்சால் வெள்ளி” யென்றும், வறிது வடக் கிறைஞ்சிய வென்றும் கூறிய சிறப்பால், இப்பாட்டு இவ்வாறு பெயர் பெறுவதாயிற்றென்றறிக. சீர்மாசு பட்டதனால் கோப்பெருஞ் சோழனும் சேரலாதனும் வடக்கிருந்தமை யறிக. இதனாற் சொல்லியது அவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்தியவா றாயிற்று. 5. கானுணங்கு கடுநெறி 1. மாவாடியபுல நாஞ்சிலாடா கடாஅஞ்சென்னிய கடுங்கண்யானை இனம்பரந்தபுலம் வளம்பரப்பறியா நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி 5. நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின் ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய 10. உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : கானுணங்கு கடுநெறி 10-13. உருமுறழ்பு.............. நாடே உரை : உரும் உறழ்பு இரங்கும் முரசின் - இடிபோல முழங்கும் முரசத்தோடு: பெருமலை வரையிழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க - பெரிய மலையின் பக்கத்தே இழியும் அருவிபோல் விளங்கும் துகிற் கொடிகள் அசைய; கடும் பரி கதழ் சிறகு அகைப்ப - விரைந்த செலவாகிய சிறகுகளையுடைய குதிரை யாகிய புள் பறந்தோட; நீ நெடுந் தேர் ஓட்டிய - நீ நின் நெடிய தேர்களைச் செலுத்திய; பிறர் அகன்றலை நாடு - பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் என்றவாறு. முரசின் முழக்கிற்கு இடி முழக்கை யுவமங் கூறல் மரபு: “படு மழை யுருமின் இரங்கு முரசு” (புறம். 350) என்று ஏனைச் சான்றோரும் கூறுதல் காண்க. முரசின் என்புழி ஒடு வுருபை விரித்து முரசினொடு தேர் ஓட்டிய என இயைக்க. பழையவுரை காரரும், “முரசினொடு என ஓடு விரித்து அதனைத் தேரோட்டிய என்பதனோடு முடிக்க” என்பர். இனி, இன்னென்றதனை அல்வழிச் சாரியையாக்கி, முழங்கவென ஒருசொல் வருவித்து, முரசு முழங்க, கொடி நுடங்க, சிறககைப்ப , தேரோட்டிய என இயைத்து முடிப்பினுமாம். தேரிற் கட்டிய துகிற் கொடிக்கு, பெருமலை வரையிழி அருவியை யுவமங் கூறினாராதலின், அதற்கேற்பத் தேரை “நெடுந்தேர்” என்றார், குதிரையின் செலவினைச் சிற கென்றமையின், அஃது ஆகுபெயராய்ப் புள்ளுக்காய்க் குதிரைக் குவமையாயிற்று. “புள்ளியற் கலிமா” (ஐங். 486) எனச் சான்றோர் கூறுவது காண்க. அகைதல் - மிகுதல்; ஈண்டுச் செலவின் கடுமை மிகுதிமேற்று. பழையவுரைகாரர், “செலவின் கடுமை யாற்றல் தோன்றப் பறவையாகக் கூறுவான், உபசார வழக்குப்பற்றிச் சிறகு அகைப்ப வென்றான்” என்பர். பணிந்து திறை பகர்ந்து நட்புப்பெற் றொழியாது இகலி முரண்கொண்டு பொருதழிந்தமையின் பகைவரைப் “பிறர்” என்றார். 1-9. மாவாடிய................. மன்னிய. உரை : மா ஆடிய புலம் நாஞ்சில் ஆடா - நின் குதிரைப் படை சென்று பொருத வயல்கள் கலப்பைகள் சென்று உழக் கூடாதனவாய் அழிந்தன; கடாஅஞ் சென்னிய யானையினம் பரந்த புலம் - மதஞ் சொரியும் தலையும் கடுத்த பார்வையு முடைய யானைப்படை பரந்து நின்று பொருத வயல்கள்; வளம் பரப்பு அறியா - வளம் மிகப் பயத்தல் இலவா யழிந்தன; நின் படைஞர் சேர்ந்த மன்றம் - நின் காலாட்படைகள் நின்று பொருத ஊர் மன்றங்கள்; கழுதை போகி (பாழாயின) - கழுதையேர் பூட்டிப் பாழ்செய்யப்பட்டன; நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா - நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வா ரின்மையான் கதவு முதலிய காப்பு வைக்கப்படா தழிந்தன; கடுங் கால் ஒற்றலின் - மிக்க காற்றெழுந்து மோதுதலால்; சுடர் சிறந் துருத்து - சுடர்விட் டெழுந்து மிக்குற்று வெதுப்ப; பசும் பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின் - பசிய பொறிகளையுடைய ஒள்ளிய காட்டுத் தீ பரந்த பக்கத்தோடு கூடிய; ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி - காட்டுக்கோழி யுலவும் காடுகள் தீய்ந்து போன கடிய வழிகளும்; முனையகன் பெரும் பாழாக மன்னிய - ஆறலைப்போர் தங்கி வழிச் செல்வோரை வருத்தும் முனையிட மாகிய அகன்ற பெரிய பாழிடங்களாய் அழிவுற்றன என்றவாறு. போகி யென்னும் வினையெச்சத்தைப் பாழாயின வென ஒரு சொல் வருவித்து முடிக்க. மருங்கினொடு கூடிய கடு நெறியினையும் முனையினையுமுடைய அகன் பெரும் பாழ் என வியையும். படைக் குதிரைகள் பந்தி பந்தியாய்ச் சென்று வலமும் இடமும் சுழன்று பொருதலால் வயல்கள் உழவர் ஏரால் உழுது பயன்கொள்ளா வகையிற் பாழ்பட்டன வென்பார், “நாஞ்சில் ஆடா” என்றார்; ஆடல் - முன்னது பொருதலும் பின்னது உழுதலுமாம். யானைகளின் காலடியால் மென்புல மாகிய வயல் அழுந்தி வன்னிலமாய் வளம் பயக்கும் பான்மை சிதைந்து போதலால், “யானையினம் பரந்தபுலம் வளம்பரப் பறியா” என்றார். சென்னிய வென்னும் பெயரெச்சக் குறிப்பு யானை யென்னும் பெயர் கொண்டது. கடாச்சென்னிய, கடாஞ் சென்னிய வென மெலிந்தது; பழையவுரை, “கடாச் சென்னி யென்னு மொற்று மெலிந்த” தென்று கூறுகிறது. நாடு வயல் நாஞ்சி லாடா, புலம் பரப்பறியா என்பன கண்ணன் கை முறிந்தான், கண்ணொந்தான் என்றாற்போலச் சினைவினை முதன் மேனின்றன. “படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி” யென்றதனால், படைவீரர் ஊரிடத்து மன்றங்களிற் சென்று தங்கி, ஆண்டுத் தம்மை யெதிர்த்த பகைவீரரை வென்று அம் மன்றங்களையும் கழுதையேர் பூட்டி யுழுது பாழ் செய்து விட்டன ரென்பது பெற்றாம். இது பண்டையோர் மரபாதல், “வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்” (புறம். 15) என்று பிற சான்றோர் கூறுதலாலும் அறியப்படும். பகைவருடைய பெரிய காவலமைந்த நகரிகள், பகைவர்க் கஞ்சி வாழ்வோர் வேறு புலம் நோக்கிச் சென்றொழிந்தமையின், காவலும் கவினு மிழந்து கெட்டன வென்றற்கு, “நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” வென்றார். வையா: செயப்பாட்டு வினைப்பொருட்டு. தோட்டி - கதவு; “நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி” (மதுரைக். 693) என்றாற் போல மதிலாகிய யானைக்குத் கதவு தோட்டி போறலின், தோட்டி யென்ப. மதிலைக் காத்தற்கு வலிய காவலாதலால், தோட்டி காவற்பொருளுந் தருவதாயிற்று; “ஆரெயில் தோட்டி வௌவினை” (பதிற். 71) என இந்நூலுள்ளும் வருதல் காண்க. தம்மைப் புரப்போர் போரில் அழிந்தமையின், நகர்க்கண் வாழ்வோர் அங்கே யிராது வேற்றிடம் போய்விடுவர்; “வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட” (பதிற். 49) எனப் பிறரும் உரைப்பர். இவ் வண்ணம் நின் பகைவர் நாட்டின் பெரும்பகுதி யழிவுற்றதாக, ஏனைக் காடும், காடு சார்ந்த நிலமும் மழை யின்மையாலும், பெருங்காற்றெழுந்து மோதுவதாலும், தீப்பிறந்து சுடர்விட்டெரிய நிலமுற்றும் வெந்து கரிந்து கிடக்கின்ற தென்பார், “கடுங்கா லொற்றலின் சுடர்சிறந் துருத்துப், பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்” என்றார். பிசிர்- தீப்பொறி. ஆடுதல்-பரந்தடுதல். இவ்விடங்களில் ஏனைப் புள்ளும் மாவும் வழங்குதல் அருகினமையின், காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன வென்றற்கு, “ஆண்டலை வழங்கும்” என்றார். கடுங்காற்றால் தீ: சிறந்து காட்டைச் சுட்டழித்தமையின், கரிந்து கெட்ட கடிய நெறிகளிடத்தே கள்வர் தங்கி அரசு காவலின்மையால் ஆறு செல்வோரை யழிக்கும் பெரும்பாழாயின வென்பார், “முனையகன் பெரும் பாழாக மன்னிய” என்றார்; “அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக், கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக், கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்” (பெரும். 3941) என்பதனால் அரசு காவலுள்வழி, முனையகன் பெரும் பாழாதல் இன்மை யறிக. இவ்வாறு காட்டுத்தீயால் வெந்து கிடக்கும் நிலத்திற் செல்லும் வழியைக் கானுணங்கு கடுநெறி யென்றனர். நிற்க நிழலும் தண்ணென்ற மண்ணு மின்றிச் செல்வோர்க்கு அச்சமும் துன்பமுமே பயக்குமாறு தோன்று நெறியைக் கானுணங்கு கடுநெறி யென மிகுத்துரைத் தலின், இப் பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “கானுணங்கு கடுநெறி யென்றது, மழையின்மையாற் கானம் தீய்ந்த கடிய வழி யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குக் கானுணங்கு கடுநெறி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, நீ தேரோட்டிச் சென்றதனால், பிறர் அகன்றலை நாடுகள், நாஞ்சி லாடா, வளம் பரப்பறியா, எயில் தோட்டி வையா, கடுநெறி பெரும்பாழாக மன்னிய வென்பதாம். பழையவுரைகாரர், “நீ தேரோட்டிய பிறர் நாடு அழிந்தவாறு சொல்லின், நாடு நின் மா வழங்கின வயல் பின்பு கலப்பை வழங்கா; நின் யானையினம் பரந்த வயல் பின் செல்வம் பரத்தலை யறியா, நின் படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையா லுழப்பட, நீ உடன்ற அரசர்தம் நகரிகள் பின்பு தமக்கு அரணாகக் காவலாளரை வைக்கப்படா; இவ்வாறு அழிந்தபடியே யன்றிச் சில்லிடங்கள் கடுங்கா லொற்றலின், அழலாடிய மருங்கினை யுடைய கானுணங்கு கடுநெறியினையும், முனைகளையு முடைய அகன்ற பெரும்பாழாக நின்றன வெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இதன்கண், தேரும் கொடியும் முரசும் விதந்தோதி; மாவாலும், களிற்றாலும், படைவீரராலும், பகைவர் நாடுகள் அழிந்த திறத்தை விளக்கிக் கூறுதலின், அடுத்தூர்ந் தட்ட கொற்ற மாயிற்று. இவ்வாறு பல துறையும் விரவிவரத் தொடுத்தமையின், இப் பாட்டு வஞ்சித் துறைப் பாடாணாயிற்று. “தேரோட்டிய பிறர் நாடு இவ்வாறு அழிந்த தென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்” றென்பது பழையவுரை. “மாவாடிய வென்பது முதலாக மூன்றும் வஞ்சியடி யாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று. நின் படைஞர் எனவும், நீ யெனவும் அடிமுதற்கட் சீரும் அசையும் கூனாய் வந்தன.” இப் பாட்டினாற் சொல்லியது: சேரமானது வென்றிச் சிறப்பென்பது கூறியவாறாயிற்று. 6. காடுறு கடுநெறி 1. தேஎர் பரந்தபுல மேஎர் பரவா களிறா டியபுல நாஞ்சி லாடா மத்து ரறியமனை இன்னிய மிமிழா ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின் 5. நோகோ யானே நோதக வருமே பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் 10. பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்துதொழில் வயவர் சீறிய நாடே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : காடுறு கடுநெறி 1-5. தேஎர்........... வருமே உரை : தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா - தேர்கள் செல்லுதலாற் சேறுபட்ட வயல்கள் பின்னர் ஏர்கள் சென்றுலவி உழுதலை வேண்டா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா - பன்றிகள் உழுத கொல்லைகள் கலப்பையால் உழப்படுதலை வேண்டா; மத்து உரறிய மனை இன்னியம் இமிழா - தயிர் கடையும் மத்தின் ஒலி முழங்கும் ஆய்ச்சியர் மனைகள் இனிய வாச்சியங் களின் முழக்கிசை கேட்கப்படா; ஆஃகு - அவ்விடத்தை; பண்டு நற்கு அறியுநர் - முன்பு நன்றாகக் கண்டறிந்தவர்; செழு வளம் நினைப்பின் - அப்போதிருந்த செழுமையான வளத்தை இப்போது நினைப்பாராயின்; நோதக வரும் - நினைக்கும் நெஞ்சு நோவத்தக்க வருத்தமுண்டாகும்; யான் நோகு - யானும் அதனை நினைந்து வருந்தாநிற்கின்றேன் என்றவாறு. பகைவர் நாடழிந்தது கண்டு, அவ் வழிவின் மிகுதியைப் புலப்படுத்தற்கு அவற்றின் பண்டைய நிலையினையும் உடன் குறிக்கின்றார். அந் நாட்டவர் பலரும் செல்வராதலின், அவர் தேர்கள் வயலிடத்தே செல்லின், அவை பின்பு ஏரால் உழப் படுதலை வேண்டாதே சேறுபட்டு வித்திப் பயன்கொள்ளற் குரிய பண்பாட்டினை யெய்தும் என்பார், “தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா” வென்றார், ஏஎர் - நிமென் புலமாகிய நன்செய்களை உழும் கலப்பை, “தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா என்றது,”ஒருகால் தேர் பரந்த வயல் அத்தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர் பரவா என்றவா” றென்பர் பழையவுரைகாரர். இது மென்புல வைப்பின் நலம் கூறிற்று. புன்செய்களாகிய கொல்லை களைப் பன்றிகள் உழுது பண்படுத்தி விடுதலின், அவையும் முற்கூறிய நன்செய்களைப் போலவே கலப்பை களைக் கொண்டு உழவேண்டாவாம் என்பார், “களிறாடிய புல நாஞ்சி லாடா” வென்றார். “கடுங்கட் கேழ லுழுத பூழி நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை” (புறம். 168) எனப் பிறரும் கூறுதல் காண்க, களிறென்றது ஈண்டு ஆண்பன்றியினை; “வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்” என்ற ஆசிரியர், “கேழற் கண்ணும் கடிவரை யின்றே” (தொல். மரபு. 345) என்றலின், ஆண்பன்றி களிறெனப்பட்டது. கொல்லையில் தானே முளைத்திருக்கும் கோரையின் கிழங்கை யுண்டற்குப் பன்றிகள் நிலத்தைக் கிளருதல் பற்றி, “களிறாடிய புலம்” என்றார்; “கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பு” (ஐங். 270) என்று பிறரும் கூறுவர். பழையவுரைகாரர், “களிறாடிய புலம் நாஞ்சி லாடாவென்றது, பன்றிக ளுழுத கொல்லைத் தரை அவை உழுத மாத்திரை யானே புழுதியாகிப் பின்பு கலப்பை வழங்கா வென்றவா” றென்பர். மென்புலம் உழுவதை ஏர் என்றும், வன்புல முழுவதை நாஞ்சில் என்றும் வழங்குப. இக் கொல்லைகளைச் சார்ந்துள்ள ஆயர் மனைகளின் வளம் விளம்புவார், ஆங்குப் பால்வளம் சிறந்திருத்தலால் மனை தோறும் தயிர் கடைபவரின் மத்தொலியே பெரிதும் முழங்குதலால், அம் முழக்கினை விஞ்சமாட்டாது ஆண்டுள தாகும் மங்கல முழவு முதலியவற்றின் இசையொலி கேட்போர் செவிப்புலத்தை யெட்டா தொழியு மென்பார், “மத்துர றியமனை யின்னிய மிமிழா” என்றார். “மத்தொலிக்கின்ற மனைகள் அம் மத்தொலி யின் மிகுதியானே இனிய இயங்களின் ஒலி கிளரா” என்று பழைய வுரைகாரர் கூறுவர். அந்நாடுகளின் வளமிகுதியைப் பொதுவாக அறிந் தோரினும் சிறப்பாக அறிந்தோர்க்கே அவ்வளத்தின் கேடு இனிது விளங்கும் என்பதுபற்றி, “ஆங்குப் பண்டுநற் கறியுநர்” என்றும், அவர் கண்ட மாத்திரையே அழிவு மிகுதியாற் செயலற்றுப் போவராதலின், “நினைப்பின்” என்றும், நினைக்கலுற்றவழி, பண்டு கண்ட வளத்தின் மிகுதி அவர் நினைவில் தோன்று மாதலின், “செழுவளம் நினைப்பின்” என்றும், அதனால் அவர் நெஞ்சு நொந்து வருந்துவ தொருதலையாதலால் “நோதக வருமே” என்றும் கூறினார். நன்கு - நற்கென விகாரமாயிற்று; “அது நற் கறிந்தனை யாயின்” (புறம். 121) என்றாற்போல. நன்கு அறிந்தோருள் தாமும் ஒருவராதல் தோன்ற, “நோகோயானே” யென்றார். ‘ஓகாரம்’, அசைநிலை. நோகு : தன்மை வினைமுற்று. இவ்வாற்றால் பகைவர் நாட் டழிவின் பொதுவியல்பு கூறினார். இனி, அதன் இயல்பைச் சிறப்புறக் கூறுகின்றார். 6-14. பெயல்மழை.................. நாடே உரை : முருகு உடன்று கறுத்த கலியழி மூதூர் - முருகவேள் வெகுண்டு பொருதழித்தலால் செல்வக்களிப்பிழந்த மூதூர் களைப் போல; உரும்பில் கூற்றத் தன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய நாடு - பிறரால் நலிவுறுதல் இல்லாத கூற்றினை யொத்த நின்னுடைய திருந்திய தொழிலையுடைய வீரர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகள்; பெயல் மழை புரவின் றாகி - காலத்திற் பெய்தலையுடைய மழை பெய்யாமற் பொய்த் தமையால்; வெய்துற்று - வெயிலது வெம்மை மிகுத லால்; வலம் இன்று - நாடு நலம் பயப்ப தின்றாயிற்று; காலையது பண்பு என - இஃது அல்லற்காலத்தது பண்பா மெனச் சொல்லி, கண் பனி மலிர் நிறை தாங்கி - பனித்த கண்ணில் நீர் நிரம்பத் தாங்கி; மெலிவுடை நெஞ்சினர் - வலியழிந்த மனமுடையரான பகைப்புலத்து மக்கள், கை புடை யூஉ - செயலுறுதி தோன்றத் தம் கையைப் புடைத்து; சிறுமை கூர - வருத்த மெய்த; பீர் இவர் வேலிப் பாழ்மனை - பீர்க்கின் கொடிபடர்ந்த வேலி சூழ்ந்த பாழ்மனைகளும்; நெருஞ்சிக் காடுறு கடு நெறியாக மன்னிய - நெருஞ்சி முட்கள் காடுபோல் செறிந்த வழிகளுமாக நிறைபெற்றன என்றவாறு. உரிய காலத்தில் மழையினைப் பெய்து உலகத் துயிர்களைப் புரத்தற்குரிய மழை பெய்யாது பொய்த்தமையின், “பெயல் மழை புரவின்றாகி” யென்றும், அதனால் வெயிலது வெம்மை மிக்கு உயிர்கட்கு வருத்தம் மிகுவித்தல் இயல்பாதலின், “வெய்துற்று” என்றும் கூறினார். செய்தெ னெச்சங்கள் காரணப் பொருள். இந்நிலையில் செய்வோர் செய்வினைப் பயன் பெறுதல் இல்லை யாதலால், “வலமின்” றென்றும். அவர்தம் வருத்தமிகுதி தோன்ற, “அம்ம” வென்றும் குறித்தார். நாடழிந்து விளைபொருளின்றிக் கெட்டு வெம்மை மிக்கதற்குச் சேரனை யாதல், அவன் வயவரையாதல், தம் நாட்டு வேந்தரையாதல் பிறரையாதல் நோவாது காலத்தை நொந்து, “காலையது பண்பெனக் கண்பனி மலிர் நிறை தாங்கிக் கைபுடையூஉ” வருந்தினர் என்றார். ஊழையும் உப்பக்கம் காணும் உரனுடைய ரல்ல ரென்றற்கு, “மெலிவுடை நெஞ்சினர்” என்றும், அதனால் அவரெய்துவது சிறுமையே யென்பது விளங்க, “சிறுமை கூர” என்றும் கூறினார். எனவே, சேரனது சீற்றத்தையும் அவனுடைய வீரரது ஊற்றத்தையும் முன்னே தெரிந்து புகலடையாத சிறுமையும்;.அதற்கின்றியமையாத உரனின்மையும் ஓராற்றால் உணர்த்தினா ராயிற்று. நெஞ்சில் திண்மையிலதாகவே, எய்துவது சிறுமை யாயிற்று. இனி, காலையது பண்பென்புழிக் காலை ஞாயிறென்றும் அதன் பண்பு வெம்மை யென்றும் கொண்டு, காலையது பண்பு வெய்துற்றென இயைத்து ஞாயிற்றின் வெம்மையால் வெயின் மிகுந்து என்பாரு முளர். கட்பனி யெனற்பாலது கண்பனி யென நின்றது. கைபுடையூஉ வென்றது கையாறு. நாடு முற்றும் வயவர் பொருதழித்துக் கொண்டமையின், நாடுகள் மனை பாழ்பட்டுப் பீர் படர்ந்த வேலியும், நெருஞ்சி செறிந்த கடுவழிகளும் உடையவாயின என்பார், “பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக” என்றார்; “முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து, மனை பாழ் பட்ட மரைசேர் மன்றம்” (அகம். 373) எனப் பிறரும் கூறுதல் காண்க. பாழ்மனைகளில் பீரும், நெருஞ்சியும், அறுகும், பிறவும் மிடைந்திருக்கு மென்பது இன்றும் காணக்கூடியது. மக்கள் வழங்குத லின்மையின், நெருஞ்சியும் பிறவும் காடுபோற் செறிதலால் வழிகள் சிறுகிக் கப்பணம் பரந்த கல்லதர் போலச் செல்வார்க்கு வருத்தம் பயத்தலின், “நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக” என்றும், அதனைத் தாம் வரும்போது கண்டு போந்தமை தோன்ற “மன்னிய” வென்றும் கூறினார். “மன்னிய” வென்றதனால் மீளவும் நாடாதல் அருமை தோன்றிற்று. முருகன் சூரனைச் சினந்து சென்று அவனிருந்த மூதூரைச் செறுத்த காலத்தே அவன் இனத்தவரது உயிர் குடித்த கூற்றுவனைப் போல, நீ சினந்து சென்று போருடற்றிய காலத்தே பகைவரை நின் வயவர் கொன்று குவித்தன ரென்பார்; “முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் (போல) உரும்பில் கூற்றத் தன்னநின் வயவர் சீறிய நாடே” யென்றார், முருகு - முருகன், `முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போல’ (நற். 82) என்றாற் போல. மூதூர் போல நாடகள் மன்னிய என முடிக்க. “மூதூர் போல வென உவமவுருபு விரித்து அதனை வயவர் சீறிய என்னும் வினையொடு முடிக்க; இனி, போலும் என விரித்து வயவர் சீறிய நாடெனலும் ஒன்று; இனி மூதூர்க் கூற்ற மெனக் கூட்டிக் கூற்றுவன் கொடுமை மிகுதி கூறலுமொன்” றென்பர் பழைய வுரைகாரர். முருகன் சூரனைச் சினந் துடற்றிய போரால் அச் சூரனது மூதூர் கலியழிந்து மாறிய செய்தி உலகறிந்த தாதலின், “கலியழி மூதூர்” என்று எடுத்தோதி, அச் சூரனாலும் பிற ரெவராலும் நலிவு படாத வன்மையுடைமை பற்றிக் கூற்றுவனை, “உரும்பில் கூற்ற” மென்றும் குறித்தார். நாட்டிற்கு மூதூரும், வயவர்க்குக் கூற்றமும் உவமம் கூறலின், கூற்றுவனை யேவல் கொள்ளும் சேரனது வலிமிகுதி குறிப்பால் உணர்த்தினா ராயிற்று, “உரும்பில் கூற்றென்பது பிறிதொன்றால் நலிவுபட்டு மனக்கொதிப்பில்லாத கூற்ற மென்றவாறு; உருப்பென்னும் ஒற்று மெலிந்து நின்றது” என்பர் பழையவுரைகாரர். படையழிந்து மாறினார்மேலும், மகளிர்மேலும், பிற பொரற்காகாதார்மேலும் படை யெடாச் சீர்மை யுடைமை பற்றி வயவரைத் “திருந்து தொழில் வயவர்” என்றார். சீறிய - சீறிய வதனால் அழிந்தவெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. காடு, நிலந் தெரியாவண்ணம் பசுந்தழையும், முள்ளும் மண்டி, மாவும் மாக்களும் இனிது வழங்காவாறு வருத்தம் செய்வது போல; நெருஞ்சியும், பச்சிலையும், முள்ளும் மண்டி, மக்கள் இனிது நடந்து செல்ல வொண்ணாதபடி வருத்தும் இயல்பு கொண்டுள்ள திறத்தினை விதந்தோதிய சிறப்பால் இப் பாட்டிற்குக் “காடுறு கடுநெறி” யென்பது பெயராயிற்று. “நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக் காடெனக் கூறிய அடைச்சிறப்பால் இதற்குக் காடுறு கடுநெறி யென்று பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர். இதுகாறும் கூறியது: வேந்தே நீ சீறிய நாடுகள் மக்கள் கண்பனி மலிர் நிறை தாங்கி வலமின் றம்ம, காலையது பண்பெனக் கைபுடையூஉ மெலிவுடை நெஞ்சினராய்ச் சிறுமை கூர, நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய; பண்டு அறியுநர் அவற்றின் செழுவளம் நினைப்பின், தேர்பரந்த புலம் ஏர்பரவா நலமும், களிறாடிய புலம் நாஞ்சிலாடா நலமும், மத்துரறிய மனை இன்னியம் இமிழா நலமும்; நெஞ்சிற் றோன்றி நோதக வரும்; யான் நோகு என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “நின் வயவர் சீறிய நாடு அவ் வயவர் சீறுதற்கு முன்பு இருக்கும்படி சொல்லின், தேர்பரந்த புலம் ஏர் பரவா, களிறாடிய புலம் நாஞ்சி லாடா, மத்துரறிய மனை இன்னியம் இமிழா, அவ்வாறு வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை யுடைத்தாகா நின்றது; அதன் செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர் நினைப்பின் நோதக வரும்; நோவேன் யான் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” வென்பர். இதன்கண் நின் வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்த தென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று; தேர்பரந்த என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று; ஆங்கு என்பது அடிமுதற் கூன், “சீர்கூ னாதல் நேரடிக்குரித்தே” (தொல். செய். 49) என்பவாகலின், நேரடி முதற்கண் வந்தது. இப் பாட்டால் சேரனது வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று. 7. தொடர்ந்த குவளை 1. சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி அலர்ந்த வாம்ப லகமடி வையர் சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி 5. அரிய லார்கைய ரினிதுகூ டியவர் துறைநணி மருத மேறித் தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் 10. நெய்தன் மரபி னிரைகட் செறுவின் வல்வா யுருளி கதுமென மண்ட அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச் சாகாட் டாளர் கம்பலை யல்லது 15. பூச லறியா நன்னாட் டியாண ரறாஅக் காமரு கவினே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தொடர்ந்த குவளை உரை : எல் வளை மகளிர் - விளங்குகின்ற வளையினை யணிந்த இளமகளிர்; தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி - இடையற வின்றித் தொடர்ந்து மலரும் குவளையின் முழுப்பூவைச் சேர்த்து; அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் - ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையே அகப்படத் தொடுத்த தழையினை யுடுத்து; சுரியல் அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்கையர் - சுரிந்த தலைமயிரிற் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணி யணிந்து கள்ளுண்ணும் இயல்பினரான; இனிது கூடு இயவர் - இசை இனிது கூட விசைக்கும் இயவர் தங்கியிருக்கும்; துறை நணி மருதம் ஏறி - நீர்த்துறைக்கண் ணிற்கும் மருத மரத்தின்மேல் ஏறி; தெறுமார் - நெற்கதிர்களை மேயும் புட்களை யோப்புதற்காக; தெள் விளி இசைப்பின் - தெளிந்த தம் விளிக்குரலை யெடுத்து இசைப்பாராயின்; பழனக் காவில் பசு மயில் ஆலும் (கம்பலையும்) - வயலருகே யுள்ள பொழில் களில் தங்கும் பசிய மயில்கள் அம் மகளிரிசைக்கொப்ப ஆடுதலா லெழும் ஆரவாரமும்; பொய்கை வாயில் புனல் பொரு புதவின் - பொய்கையின் வாயிலிடத்தே யமைந்து புனலால் தாக்கப்படும் கதவின் கசி கால்களிற் பூக்கும்; நெய்தல் மரபின் நிரைகள் செறுவின் - நெய்தற்பூவை யூதும் முறைமையினை யுடைய வாய் நிரைநிரையாயிரைத்துச் செல்லும் வண்டினம் நிறைந்த நன்செய்ப் புலத்திற் செல்லும்; வல் வாய் உருளி - பண்டியின் வலிய வாயையுடைய உருளை யானது; அள்ளற் பட்டுக் கதுமென மண்ட - சேற்றின்கண் இறங்கிச் சட்டென அழுந்தி விடுதலால்; சாகாட்டாளர் - அப்பண்டியைச் செலுத்துவோர்; துள்ளுபு துரப்ப - துள்ளி யுரப்பி எருதுகளைச் செலுத்த; நல் லெருது முயலும் அளறு போகு விழுமத்துக் கம்பலை யல்லது - நல்லெருதுகள் முயன்று ஈர்த்துச் சேற்றினின்று கழிந் தேகும் வருத்தத்திடைப் பிறக்கும் ஆரவாரமு மல்லது; பூசல் அறியா நன்னாட்டு - வேறே போராரவாரம் கேட்டறியாத நல்ல நாட்டின்; யாணர் அறாஅக் காமரு கவின் - புது வருவாய் குன்றாத விருப்பம் பொருந்திய அழகானது; நீ சிவந்தனை நோக்கலின் - நீ வெகுண்டு சீறிப் பார்த்ததனால்; மன்ற சிதைந்தது - தெளிவாகச் சிதைந் தழிவதாயிற்றுக் காண் என்றவாறு. எல்வளை மகளிர் மடிவையராய்த் தெறுமார் மருதமேறி இசைப்பின் என இயைக்க. ஆண்டு முழுதும் தொடர்ந்து மலரும் இயல்பிற்றாதலின் குவளையைத் “தொடர்ந்த குவளை” யென்றார். இனி, குவளையின் தூநெறிகள் சாம்பி யுதிர்ந்தவழிப் புதியன தொடுத்து இடையறவின்றி யஃது இருக்குமாறு செய்தலின் இவ்வாறு கூறினாரென்றும், தொடுப்போர் தொடர்புறுத்தத் தொடரும் குவளையைத் தொடர்ந்த குவளை யென்றா ரென்றும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், “ஆண்டுகள்தோறும் இட்டு ஆக்க வேண்டாது தொண்டு (பண்டு) இட்டதே யீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும்” என்றும், “இச் சிறப்பானே இதற்குத் தொடர்ந்த குவளை - யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். புறவித ழொடித்த முழுப்பூவைத் தூநெறி யென்றார். குவளை- செங்கழுநீருமாம். குவளையும், ஆம்பலும், பைந்தழையும், விரவித் தொடுக்கப்படும் தழை யுடையில் ஆம்பற் பூவை இடையிட்டு ஏனையவற்றை அதனைச் சூழத் தொடுத்த தழையுடை ஈண்டு “ஆம்ப லகமடிவை” யெனப்பட்டது. இவ்வாறன்றிப் பலவகைப் பூக்களையும் வண்ணம் மாறுபடத் தொடுக்கப்படுவது பகைத் தழை யெனப்பட்டது. இருவகையும் ஒருங்கமையத் தொடுப்பது முண்டு; அதனை “அம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்” (அகம் 226) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, டாக்டர் உ.வே. சாமிநாதைய ரவர்கள் “அலர்ந்த வாம்ப லம்பகை மடிவையர்” என்று பாடங் கொள்ளினும் பொருந்து மெனக் கூறுவர். குவளையும், ஆம்பலும், பிறவும், விரவித் தொடுக்கப்படுதலின், “குவளைத் தூநெறி யடைச்சி, அலர்ந்த ஆம்பல் அகம்படத் தொடுத்த மடிவையர்” என்றார். அடைச்சி யென்னும் வினையெச்சத்தை அகம் என்புழித் தொக்குநின்ற வினையொடு முடிக்க. குவளையும், தழையுடைக்கண் விரவித் தொடுக்கப்படுதலை, “குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்” (புறம். 116) என்று சான்றோர் கூறுதலா லறிக. இனி, குவளைத் தூநெறியைக் கூந்தலில் அடைச்சி யென்று கொண்டு பொருள் கூறுவாரு முளர். இயவர் தம் சென்னியிற் கண்ணி சூடலும், கள்ளுண்டலும், உடைய ராதலின், “சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி, அரிய லார்கையர்” என்றார். தலைமயிர் சுருண்டிருத்தல்பற்றிச் “சுரியலஞ் சென்னி” யென்றும், பொற்பூவாற் செய்யப்பட்ட கண்ணி யன்றென்பதற்குப் “பூஞ்செய் கண்ணி” யென்றும் கிளந் தோதினார். இசையைக் கேள்வியொடு (சுருதி) கூட்டிக் கேட்டார்க்கு இன்ப முண்டாகப் பாடுதலின் “இனிது கூடியவர்” என்றார். இவர் உழவரினத்து இயவர். இவர்தாம் நீர்த் துறையிடத்து நிற்கும் பொழிலகத்தே யுறைபவராதலின், அத் துறை “இயவர் துறை” எனக் கிழமை கூறப்பட்டது. நெற்கதிரை மேயும் மயிலினத்தை இவ் விளமகளிர் ஓப்பியவழி, அவை சென்று துறை யருகிருக்கும் மருத மரத்தில் தங்குதலின், இவர்கள் அம் மருதத்தி லேறி அவற்றை யோப்பு வாராயினர்; “செந்நெலுண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளி ரோப்பலின் பறந்தெழுந்து, துறைநணி மருதத் திறுக்கு மூதூர்” (புறம். 344) என்று பிறரும் கூறுவர். வளையணிந்த மகளி ரெனவே இளையராதல் பெற்றாம். கவணும், தட்டையும், பிறவும், கொண்டு புட்களை யோப்பும் திறம் இலராதலின், இம் மகளிர் தம் குரலெடுத்து விளித்தும் இசைத்தும் பாடின ரென்றும், அப் பாட்டிசைதானும் இயவரது இயவொலி போறல் கண்ட மயில், அவ் வொலிக் கேற்ப ஆடுதல் செய்ததே யன்றி நீங்கிற் றன்று; அதனைக் காண்போர் செய்யும் ஆரவாரத்தை, “பழனக் காவில் பசுமயிலாலும் கம்பலை” யென்றார். இனி, பழையவுரைகாரர், “மகளிர் தெறுமார் இசைப்பின், காவிற் பசுமயில் ஆலும் என்றது, வயலிற் புகுந்து உழக்காதிருத்தற்பொருட்டு அவ்வயற் புள்ளோப்பும் உழவர்மகளிர், அதனைக் கடியவேண்டித் தெள்விளி யெடுப்பின், இயவர் இயங்களின் ஒலிகேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின் ஒலியாகக் கருதி மயில் ஆலு மென்றவாறு” என்பர். மயில் ஆலும் கம்பலை, அளறு போகும் விழுமத்துக் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு என இயையும். பொய்கையிடத்து மிக்கநீர் கழிவது குறித்துச் செய்துள்ள வழியினை “வாயில்” என்றும், மிக்குற்று விரைந்து நீங்கும் நீரைத் தடுத்தற் பொருட்டு அவ் வாயிலில் நிறுத்த கதவு நீரால் தாக்குண்டு எதிர்த்து நிற்கும் இயைபு தோன்றப், “புனல்பொரு புதவின்” என்றும், அதன் வழிப் பொசிந்தோடு நீரால் மருங்குள்ள வயல்களிலும், கால்களிலும், நெய்தல்கள் நிரம்பப் பூத்திருத்தலால் அவற்றின் தாதூதி முரலுதல் கள்ளுண் வண்டிற்கு முறைமை யாயிற் றென்பார், “நெய்தல் மரபின் நிரைகள்” என்றும் கூறினர்; வயலின்கண் எழும் கம்பலையைக் கூறுவார், வண்டினம் கூட்டம் கூட்டமாய் நிரைத்துச் சென்று தேனை யுண்டல் பற்றி, அவற்றை “நிரைகள்” ளென்றார். இனி, இரவெல்லாம் தாமரை முதலிய பூக்களில் துஞ்சிய வண்டினம், விடியலில் எழுந்து போந்து தேனுண்ணுமாறு மலரும் மரபிற்றாகிய நெய்தலின் புதுத்தேனை நாடி யுண்டலை மரபாக வுடைமை பற்றி வண்டினத்தை இவ்வாறு கூறினாரெனினும் அமையும். “வைகறை மலரும் நெய்தல்” (ஐங். 188) எனப் பிறரும் கூறுப. பழையவுரைகாரர், “நெய்தல் மரபின் நிரைகட்செறு என்றது, இடையறாது பூக்கும் மரபினையும் வண்டினையுமுடைய செறு” என்றும், “கள்ளென்பது வண்” டென்றும் கூறுவர். வண்டு மூசும் செறுவின்கட் புக்கதும் சாகாட்டின் ஆழி, சட்டெனச் சேற்றிற் புதைந்து விடுதலால், “கதுமென மண்ட” என்றார்; எனவே, செறுவும் ஆழ வுழப்பட்டுச் சேறு மிகப் பொருந்தியிருத்தல் பெற்றாம். அவ்வாறு ஆழ்தற்கேற்ற திண்மையும் வன்மையும் ஆழிக்கு உண்மை தோன்ற, “வல்வா யுருளி” என்றார். உருளி - ஆழி. உருளியானது அள்ளற்பட்டுக் கதுமென மண்டலும், சாகாட்டினை யீர்த்தேகும் எருது மாட்டாமையால் திருகலிட்டு மயங்குதலால், அம் மயக்கந் தீர்தற்பொருட்டுச் சாகாட்டாளர் துள்ளிக் குதித்துப் பேரிரைச்சலிட்டு அவ் வெருதுகளை யூக்கித் தூண்டுதலின் “துள்ளுபு துரப்ப” என்றும், மாட்டாது மடங்கிப் படுக்கும் ஏனை வலியில்லாத எருதுகளைப் போலாது தம் வன்மை முழுதும் செலுத்தி மூக்கொற்றியும் தாளூன்றியும் அள்ளற் சேற்றினின்றும் நீங்க வலிக்கும் முயற்சி நலமுடைமையின் “நல்லெருது” என்றும் அளற்றின் நீங்கிக் கழியப் போகு மிடத்துச் சிறிது தாழ்ப்பினும் முன்போல் ஆழப் புதையு மென்பது கருதிப் பேராரவாரம் செய்தூக்கிச் செலுத்தலால், “அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை” என்றும் கூறினார். கம்பலை நிகழ்தற்கு விழுமம் இடமாயினும், நிகழ்த்து வோர் இவ ரென்றற்குச் சாகாட்டாளரை யெடுத்தோதினார். விழுமம் - துன்பம். “அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே” (மதுரை. 259-60) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. அந்நன்னாட்டில் மக்களிடையே பகையும், நொதுமலும், அச்சமும் இன்மையின், அவை காரணமாகப் பிறக்கும் போர்ப்பூசல் இல்லை யென்பார்; “சாகாட்டாளர் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு” என்றார். இறந்தது தழுவிய வெச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. இன்ன நன்னாட்டில் நாளும் புதுவருவாய் நிலவுவதால் எந்நிலத்தவரும் விரும்பும் ஏற்றமும், அழகும், இதன்பால் உளவாயின என்பார், “யாணர் அறாஅக் காமரு கவின்” என்றும், தன்னைத் தெறுமார் மகளி ரெடுத்த தெள்விளி கேட்டு ஆலும் பசுமயில் போல, இந் நாட்டவர் நின் போர்ப்பூசல் கேட்டுப் பணிந்து திறை செலுத்தி அருள் பெறாது கெட்டன ரென்பார்; “சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்” என்றும் கூறினார். “சிவந்தனை நோக்கலின்” என்றது குட்டுவனது சினத்தின் கடுமை தோற்றி நின்றது. பகைவர் நாட்டழிவின் மிகுதிநோக்கி, “சிதைந்தது மன்ற” என்றார். “துள்ளுபு துரப்ப வென்றது, சாகாட்டாளர் துள்ளித் துரக்கையாலே என்றும், அளறு போகு........... வருத்த மென்றும்” பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும் கூறியது, பழனக் காவில் பசுமயில் ஆலும் கம்பலையே யன்றிச் செறுவின்கட் சாகாட்டாளர் கம்பலையு மல்லது வேறு பூசலறியாத நன்னாட்டுக் காமரு கவின், நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது மன்ற என்பதாம். பழைய வுரையும், “நன்னாட்டுக் கவின் நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது என வினைமுடிவு செய்க” என்றது. வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப், பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்” (தொல்.பொ. 82) என்பதனால் இஃது அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண்பாட்டாய்ச் செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று. இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறிய வாறாயிற்று. 8. உருத்துவரு மலிர்நிறை 1. திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற் கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப 5. இளையினிது தந்து விளைமுட் டுறாது புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின் விடுநிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவறற் காலையும் 10. நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர் உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே. துறை : நாடு வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உருத்துவரு மலிர்நிறை உரை : கோடை நீட - வேனிற்காலம் நீட்டித்தலால்; குன்றம் புல்லென - குன்றுகள் பொலிவழிந்து தோன்ற; அருவி அற்ற பெரு வறற் காலையும் - அருவிகள் நீர் வற்றி யுலர்ந்த பெரிய வறட்சிக்காலத்தும்; கரை நிவந்து இழிதரு நனந்தலைப் பேரியாற்று - கரையளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந்திழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும்; சீருடை வியன்புலம் - சிறப்புப் பொருந்திய அகன்ற புலத்தில்; விடு நிலக்கரம்பை விடரளை நிறைய - விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு நிலத்தில் உண்டாகிய வெடிப்புக்களில் நீர் நிறைந்து தேங்குமாறு; வாய் பரந்து மிகீஇயர் - இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டி; உவலை சூடி - தழைகளைச் சுமந்து; உருத்து வரும் மலிர் நிறை - சினமுற்று வருவதுபோல ஓலிட்டு மிக்குவரும் பேரியாற்று வெள்ளத்தின்; செந்நீர்ப் பூசல் அல்லது - சிவந்த நீரின் ஆரவார மல்லது; நின் அகன்றலை நாடு வெம்மை அரிது - நினது அகன்ற இடத்தையுடைய நாட்டிடத்தே வேறே உயிர்கட்குக் கொடுமை செய்யும் போர்ப் பூசல் என்பது இல்லை; (இதற்குக் காரணந்தான் யாதோவெனின்) பெரு விறல் பகைவர் - மிக்க வலிபடைத்த பகைவருடைய; பைங்கண் யானைப் புணர் நிரை துமிய - பசிய கண்ணை யுடைய யானை கலந்த படை வரிசை கெடுமாறு; உரம் துரந் தெறிந்த - தமது வலியைச் செலுத்தி யெறிந்த; கறையடிக் கழற் கால் கடுமா மறவர் - குருதிக் கறைபடிந்த கழற்காலும் கடுமாப் போலும் விரைந்த செலவு முடைய வீரர்; கதழ் தொடை மறப்ப - மிக்க விசையுடன் செலுத்தும் தமது விற்றொழிலை மறக்கும்படியாக; இளை இனிது தந்து - காவற் றொழிலை இனிது செய்து; விளைவு முட்டுறாது - விளை நலம் குன்றாதாக; புலம்பா வுறையுள் தொழில் - அவ் வீரர் தமக்குரியவரைப் பிரிந்துறைதலன்றி அவரோடு கூடி இனிதிருக்கும் செயலை; நீ ஆற்றலின் - நீ நின் நாடு காத்தற் றொழிலால் எய்துவிக் கின்றா யாகலான்; திரு வுடைத்து - நினது நாடு மிக்க திருவினை யுடைத்து என்றவாறு. நின் அகன்றலை நாடு செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிது; அதற்குக் காரண மென்னையெனின், நீ தொழி லாற்றலின், நின்னாடு திருவுடைத்து என இயையும். அம்ம : உரையசை. அருமை - இன்மை குறித்து நின்றது. வேந்தர்க்குப் பெருமை தருவது அவருடைய அறிவு ஆண்மை பொருள்களே யன்றிப் படையுமாதலின், அப்படைப் பெருமை தோன்ற, “பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை” யென்றார். “யானையுடைய படை காண்டல் முன்னினிதே” (இனிய நாள். 5) என்பது பற்றி யானைப்படை விதந்து கூறப்பட்டது. யானைகள் இயல்பாகவே தம்மில் ஒருங்கே அணிவகுத்துச் செல்லும் இயல்பின வாதலின், அவற்றைப் “புணர்நிரை” யென்றார். அப்படையினைப் பொருது சிதைப்ப தென்பது மிக்க வன்மையுடையார்க்கே இயலுவதா மென்பது எய்த, “துமிய” என்றும், துமிக்கு மிடத்தும், வீரர் தமது வன்மை முழுதும் செலுத்திப் பொருவர் என்பார், “உரம் துரந்து எறிந்த” என்றும் கூறினார். வில் வீரரது வென்றிமாண்பு அவரது அகன்றுயர்ந்த மார்பின் வன்மையைப் பொறுத்திருத்தலால் உரத்தை யெடுத்தோதினா ரென்றுமாம். துமிந்தவற்றின் குருதி வெள்ளத்தில் நின்று பொருதலால், அவருடைய காலடி குருதிக்கறை படிதலின் “கறையடி” யெனப்பட்டது. பழையவுரை காரரும் “கறையடி யென்றது குருதிக் கறையினையுடைய அடியென்றவா” றென்பர். கடுமா-விரைந்து செல்லும் இயல் பில்வழி; யானைப்போரில் வென்றி பெறல் அரிதாதலின், “கடுமா மறவர்” என்றார்; “கடுமாப் பார்க்கும் கல்லா வொருவன்” (புறம். 189) என்புழிப் போல. இனி, கடுமாவைக் குதிரை யென்று கொண்டு, கடுமா மறவ ரென்றது, குதிரைமேல் வீரரை யெனக் கூறுவாரு முண்டு. இவ்வாறு போர் கிடைத்தவழிப் பேராண்மை காட்டிப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் அது கிடையாமல் மடிந்திருக்கும் திறம் கூறலுற்று, மிக்க விரைவொடு செல்லும் அம்பு தொடுக்கும் விற்றிறத்தை அவர் மறந்தனர் என்பார். “கதழ் தொடைமறப்ப” என்றும், அதற்குக் காரணம் குட்டுவன் நாடு காவலை நன்கு ஆற்றியதும் வேண்டும் பொருள் இனிது விளைந்ததுமே யென்பார், “இளை யினிது தந்” தென்றும், “விளைவு முட்டுறாது” என்றும் கூறினார். பழையவுரைகாரரும். “மறவர் கதழ் தொடை மறப்ப இளை யினிது தந்து என்றது, நின் வீரர் போரில் லாமையால் விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும்படி நாடு காவலை இனிதாகத் தந்தென்றவா” றென்பர். இளை - காவல்.; முட்டுறாது என்றது, முட்டுறாதாக என்றவாறு; “விளைவில் முட்டுறாமல் எனத் திரிக்க” வென்பர் பழையவுரை காரர். இவ்வாற்றால், வினைவயிற் பிரிவும், பொருள்வயிற் பிரிவும், ஆண்மக்கள்பால் இன்மையின், மனைவாழ்க்கையில் தனித்திருந்து வருந்தும் பிரிவு இலதாதலின், “புலம்பா வுறையுள் தொழில்” உளதாயிற்று. இதற் கேதுவாய அரசாட்சி நலத்தை யாப்புற வுணர்த்தற்பொருட்டு, “இளையினிது தந்” தென்ற தனையே “நீ ஆற்றலின்” என்று மீட்டும் கூறினார். இனி, அவன் காவற் சிறப்பைக் கட்டுரைக்கலுற்ற ஆசிரியர், நீர் நலத்தை விரித்தோதுமாற்றால் விளக்குகின்றார். மாரிக்கண் உண்ட நீரைக் கோடைக்கண் அருவி வாயிலாக உமிழும் வாய்ப்பினையுடைய குன்றம்;அக்கோடை நீட எங்கும் பெருவறங் கூருமிடத்து, உயர்ச்சியால் குளிர்ந்து பசுந்தழை போர்த்து அழகு திகழ விளங்கும் பொலி விழந்து புல்லென் றாதலின், “கோடை நீடக் குன்றம் புல்லென” என்றும், எனவே, அக்காலத்து அருவிகளும் நீர் வற்றி விடுதலின், “அருவியற்ற பெருவறற் காலையும்” என்றும் கூறினார். பழையவுரைகாரர், கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி அருவியற்ற காலையும் எனக் கூட்டி யுரைக்க வென்பர். இக்காலத்தும் குட்டுவன் நாட்டில் பேரியாறு கரை புரண்டோடும் மிக்க நீருடையதா மென்பார் “நிவந்து கரை யிழிதரும் நனந்தலைப் பேரியாறு” என்றார். யாற்றுநீர் பாயும் பக்கத்தே கிடப்பது விளை புலத்துக்குச் சிறப்பாதல் பற்றி, “சீருடை வியன்புல” மென்றார். கோடையிலும் மிக்க நீர் பெருகு மென்றலின், அது பாயுமிடத்துக் கோடையால் உலர்ந்து வெடித்துக் கரம்பாய்க் கிடக்கும் புலங்களெல்லாம் அவ் வெடிப்பு நிறைய நீர் நிரம்பித் தேங்கும் என்பார், “விடுநிலக் கரம்பை” என்றார். நீர் இனிது ஏறமாட்டாமையின் வேளாண்மைக்கும் பயன்படாது புல்வகை வளர்ந்து விலங்குகள் மேயுமாறு விடப்பட்ட கரம்பு நிலத்தை “விகுநிலக் கரம்பை” என்றார். வேளாண் மைக்குப் பயன்படாக் கரம்பாயினும், விலங்குகள் மேய்தற்குப் பயன்படுதல் குறிக்கற் பாற்று. இதனால் நீர் ஏறாத மேட்டுப்பாங்கரிலும் நீரேறி நிரம்புமாறு கோடையிலும் பேரியாறு நீர் பெருகிப்பாயும் என்பது கருத்தாயிற்று. “கரம்பை விடரளை நிறைய வென்றது, முன்பு நீரேறாத கரம்பை வயல்களில் கமர்வாய் நீர் நிறைய வென்றவா” றென்பர் பழையவுரைகாரர். வேறே பொருவாரின்மையின் குட்டுவன் நாட்டொடு போர் செய்தற் கெழுந்தது போலப் பேரியாற்று நீர் வருகிற தென்பார், “வாய் பரந்து மிகீஇயர்” என்றார். “வாய் பரந்து மிகீஇயர் உருத்துக் கரையிழிதரும் நனந்தலைப் பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர்” என மாறிக் கூட்டுக என்பர் பழைய வுரைகாரர். வாய் - இடம். யாற்று நீர் எவ்வாயும் பரந்து மிகுதல் வேண்டிப் பெருகிற் றென்றவாறாம். பெருகி மிக்குவரும் செம்புனல் பொருவது குறித்துவரும் மள்ளர்போல வருகிற தென்பார், “உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை” யென்றார். உவலை தழைகள். கண்ணியும் மாலையும் சூடி வரும் மள்ளர் போல வெள்ளம் உவலை சூடி வந்த தென்பதாம். இளங்கோவடிகள் இப் பேரியாற்று நீரைக் கூறலுற்றவிடத்து, “கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை, நாகந் திலக நறுங்கா ழார, முதிர்பூம் பரப்பி னொழுகுபுனவிலொழித்து, மதுகர ஞிமிறொடு வண்டினம் பாட, நெடியோன் மார்பிலாரம் போன்று, பெருமலை விலங்கிய பேரியாறு” (சிலப். 25-17-22) என்பது காண்க. இனிப் பழையவுரைகாரர், “உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை யென்றது, தழைகளைச் சூடித் தோற்றி வரும் வெள்ள மென்றவா” றென்றும், “தன்னை வயல் பொறுக்கு மாறு காணவென்று போர் வேட்டு வருவாரைப்போலு மென்று கூறிய இச் சிறப்பானே இதற்கு உருத்துவரு மலிர்நிறை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். மலிர் நிறை கலங்கிச் சிவந்து தோன்றலின், புதுநீர்ப் பெருக்கைச் செந்நீர் என்றும், அதுதானும் மடைகளை யுடைத்துக் கெடுக்காவண்ணம் மடை யமைத்துச் செறுத்தும், காலிற் போக்கியும் வயலிடைப் பரப்பியும் உழவர் செய்யும் பூசல் மிக்கு நிற்றலின், “செந்நீர்ப் பூசல்” என்றும், அப் பெருக்கின் தன்மையால் மழையின்மை காரணமாகப் பிறந்த வெயில் வெம்மையும் பிறவும் நின்னுடைய பரந்த நாட்டிடத்துக் காண்ப தரிது என்பது தோன்ற, செந்நீர்ப் பூச லல்லது வெம்மையரிது நின் னகன்றலை நாடென்றும், இவ்வாற்றால், சேரனது நாடு ஏனை நாட்டவர் யாவரும் நயத்தற்குரிய வளம் வாய்ந்திருக்கிற தென்பார், “திருவுடைத் தம்ம” வென்றும் கூறினார். இதனால் அவன் நாடுகாத்தற் சிறப்புக் கூறியவாறாயிற்று. இதுகாறும் கூறியது, மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா வுறையுள் தொழில் நீ ஆற்றலின், பெருவறற் காலையும், விடரளை நிறைய, புலம் வாய் பரந்து மிகீஇயர் உருத்துவரு பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர்ப் பூசலல்லது நின் அகன்றலை நாடு வெம்மை யரிது; இவ்வகையால் நின் நாடு திருவுடைத்து என்பதாம்; இனிப் பழையவுரைகாரர், “பெருவறற் காலையும் நின்னகன்றலை நாடு புலம்பா வுறையுட்டொழில் நீ ஆற்றலின் திருவுடைத்து எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இப்பாட்டு முற்றும் சேரன் தனது நாடு காக்கும் சிறப்பே கூறி நிற்றலின், இது நாடு வாழ்த்தாயிற்று. 9. வெண்கைமகளிர் 1. அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை யிரிய வயிரைக் 5. கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும் அழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடும் 10. அகன்கண் வைப்பி னாடும னளிய விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் 15. வரம்பி றானை பரவா வூங்கே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெண்கை மகளிர் உரை : வேறு விரவு கூலமொடு - வேறு வேறாக விரவிய பல கூலங்களுடன்; குருதி வேட்ட மயிர் புதை மாக்கண் - குருதிப் பலி யூட்டிய வட்டமான மயிர் மறையும்படியாகப் போர்த்த கரிய கண் ணமைந்த முழவானது; கடிய கழற - சேணிடத்தே யிருந்து கேட்டார்க்கு அச்ச முண்டாகுமாறு முழங்க; அமர்கோள் நேர் இகந்து - பகைவர் போரில் நேர்படுதலை யஞ்சாது முன்னேறிச் சென்று; ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் - அவரது அரிய மதிலைக் கடக்கும் பெரிய பல யானைகளை யுடைய குட்டுவனுடைய; வரம்பில் தானை பரவா வூங்கு - எல்லையில்லாத தானைகள் சென்று பரந்தழிப்பதன் முன்னே; அவ லெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி - அவலிடித்த உலக்கையை வாழைமரத்தில் சார்த்தி விட்டு; வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் - வளையணிந்த இளமகளிர் வள்ளையினது பூவைப் பறிக்கும்; முடந்தை நெல்லின் விளை வயல் - விளைந்து தலைசாய்ந்து கிடக்கும் நெல் வயலிடத்தே; பரந்த தடந்தாள் நாரை இரிய - பரந்து நின்று மேயும் பெரிய கால்களையுடைய நாரைகள் அவ் வயல்களினின்றும் நீங்க; அயிரைக் கொழுமீன் ஆர்கைய - அயிரையாகிய கொழுவிய மீன்களை யுண்பவையான கொக்கு முதலிய குருகுகள்; மரந்தொறும் குழாஅலின் - வயலருகே நிற்கும் மரங்கள்தோறும் கூடியிருத்தலால்; வெண்கை மகளிர் வெண் குருகு ஓப்பும் - வளை யணியாத மிக்க இளம் பெண்கள் வெள்ளிய சிறு பறவைகளை ஓப்பித் திரியும்; அழியா விழவின் - இடையறாத விழாக்களை யுடைமையால்; இழியாத் திவவின் வயிரிய மாக்கள் - குற்றமில்லாத திவவு யாழினை யுடைய வயிரியர்; பண்மைத் தெழீஇ - அவ்வியாழைப் பண்ணொடு பொருந்த வெழுப்பி; மன்றம் நண்ணி - ஊர்மன்றத்தை யடைந்து; மறுகுசிறை பாடும் - மறுகுகளின் சிறைக்கண்ணே நின்று பாடிச் செல்லும்; அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடத்தையுடைய ஊர்கள் பொருந்திய நாடுகளாயிருந்தன; அளிய மன் - இப்பொழுது அவை அழிந்து கண்டார் இரங்கத் தக்க நிலையை யடைந்தனகாண் என்றவாறு. நெற்கதிரைப் பிசைந்தெடுத்த பசிய நெல்லைக் குற்றி அவலெடுப்பது விளையாடும் பருவத்து இளமகளிர்க்கு இன்றும் இயல்பாயிருத்தலின், அவலெறிந்த வுலக்கையை விதந்தோதி னார். நெல் வயலருகே வாழைகள் நிற்றலின், அவற்றைச் சார்ந்தவிடத்தில் விளையாடும் மகளிர் அவலெறிந்த வுலக்கையை வாழைமரத்திற் சார்த்திவிட்டு வயற்குட் புகுந்து ஆங்கு மலர்ந் திருக்கும் வள்ளைப்பூவைப் பறிக்கும் செயலை “அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி, வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்” என்றார். “வளைக்கை மகளிர்” எனவே, விளையாடும் பருவத்து இளமகளிர் என்பது பெறப்படும். நெல் மணியின் கனத்தைத் தாங்கமாட்டாது தாள் சாய்ந்து வளைந்து கிடக்கும் நெல்லை, “முடந்தை நெல்” என்றார்; மடம் உடை யாளை மடந்தை யெனல்போல. “முடந்தை நெல்லின் கழையமல் கழனி” (பதிற். 32) என்று பிறரும் கூறுதல் காண்க. நெல் விளையும் வயலில் நீர் இடையறாது நிற்றலின் பல்வகை மீன்களும் வாழ்தல்பற்றி, அவற்றைக் கவர்ந் துண்பது குறித்து நாரை முதலிய குருகுகள் வயல் முழுதும் பரந்து நின்று மேயுமாறு தோன்ற, “விளைவயற் பரந்த தடந்தாள் நாரை” யென்றார். மகளிர் வள்ளை கொய்தற்காக வயற்குட் புக்கதும், நாரையினம் அஞ்சி நீங்கு தலின், “நாரை யிரிய” என்றும், வாய்த்தலையினும் வரம்பு களினும் நின்று அயிரை முதலிய மீன்களை யுண்ணும் கொக்கும், புதாவும் உள்ளலும் பிறவும், அருகே நிற்கும் மருதினும், மாவினும், காஞ்சியினும் குழீஇயிருத்தலின், “அயிரைக் கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்” என்றார். குழுவலின் எனற்பாலது “குழாஅலின்” என வந்தது. ஏனைய அன்னங்களும் நீர்க்கோழிகளு மாகியவற்றை வளையணியும் பருவத்தரல்லாத மிக்க இளைய மகளிர் துரத்தி யோப்புவ ரென்பார், “வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்” என்றார். கொய்யு மென்னும் பெயரெச்சம் வயலென்னும் பெயர் கொண்டது. வெண்குரு கோப்பும் நாடு, மறுகு சிறைபாடும் நாடு என இயையும். வெண்கை - வளையணியாத கை; வெறிதாய இடத்தை வெளில் என்பது போல, வளை யணியாத வெறுங்கை வெண்கை யெனப் பட்டது. வெறிதாய இள மகளிரின் மென்கையை “வெண் கை” யென்றும், அதனையுடைய சிறுமகளிரை “வெண்கை மகளிர்” என்றும் சிறப்பித்ததனால், இப்பாட்டு வெண்கை மகளிர் எனப் பெயர் பெறுவதாயிற்று. பழையவுரைகாரர், வெண்கை யென்றதற்கு, “வெண் சங்கணிந்த கை யென்பாரு முளர்; இனி, அடுகை முதலாகிய தொழில் செய்யாத கை யென்பாரு முளர்” என்றும், “முடந்தை நெல் லென்றது கதிர்க்கனத்தாலே வளைந்து முடமான நெல் லென்றவாறு; முடந்தை யென்பது பெயர்த்திரிசொல்; இனிப் பழவழக்கென்பது மொன்று” என்றும் கூறுவர். நாடோறும் மண விழாவும், பிற விழாவும் இடையறவின்றி நிகழ்தலால் “அழியா விழ” வென்றார். திவவையுடைய யாழ் திவவு எனப்பட்டது, ஆகுபெயர். பழையவுரைகாரும் இவ்வாறே கூறுவர். யாழிற்கு இழிவு செயற்பாட்டிலும் இசை நயத்திலும் குற்றமுடைமை யாதலின், குற்றமில்லாத யாழை, “இழியாத் திவவு” என்றார். விழாக் காலத்து வழங்கப்படும் சோற்றை நச்சி வயிரியர் கூட்டம் நிறைந்திருக்குமாறு தோன்ற, விழாவினை விதந்து வயிரிய மாக்களின் உண்மையை யெடுத்தோதினார். “பேரூர்ச், சாறுகழி வழிநாள் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந. 1-3) என முடத்தாமக் கண்ணியார் மொழிவதனால் இவ்வுண்மை துணியப்படும். இவர்கள், மன்றம் புகுந்து யாழைப் பண்ணமைத்து இசையை யெழுப்பி, மறுகுகளின் சிறையிடத்தே நின்று பாடுதலின், “பண்ணமைத் தெழீஇ, மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்” என்றார். நல்ல பரப்பும் செறிந்த வூர்களுமுடைய நாடாதல் தோன்ற, “அகன்கண் வைப்பின் நாடு” என்றார். வைப்பு - ஊர். அச்சிறப் பழிந்து, காண்போ ருள்ளத்தே இரக்கம் தோன்றத்தக்க பாழ்நிலை யெய்திற் றென்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை. பல்வேறு கூலங்களைக் கொண்டு முரசிற்குக் குருதிப் பலியூட்டி, வழிபட்டுப் போர்முழக்கம் செய்வது மரபாதலால், “விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மாக்கண்” என்றார். கண்ணையுடைய முரசு “கண்” ணெனப்பட்டது. கொல்லேற் றுரிவையின் மயிர் சீவாது அகத்தே அம் மயிர் மறையும் படியாகப் போர்த்த முரசு என்றற்கு, “மயிர் புதை மாக்கண்” என்றார். முரசின் முழக்கம், கேட்கும் பகைவர் உள்ளத்தே அச்சம் பயந்து பணிந்து திறை பகராதவழிக் கொன்று குவிப்பேனெனும் வேந்தனது குறிப்பை வெளிப்படுத்தலின், “கடிய கழற” என்றார். இவ்வாறு கழறவும் கேளாது போர் நேரும் பகைவர் செய்யும் போரினைப் பொருள் செய்யாது எளிதில் மலைந்து அவர்தம் காவல் மிக்க அரணைக் கைப்பற்றிலின், “அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும்” என்றும், அவ்வாறு கைப்பற்றும் குட்டுவனது தானைப் பெருமையை, “பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பில் தானை” யென்றும் கூறினார். எனவே, பகைவர் தானை வரம்புடைய தென்றும், அதுவே அப்பகைவரழிவுக்கு ஏதுவாயிற்றென்றும் உணர்த்தியவாறாம், பரந்து சென்று பகைவரை வென்று அவர்தம் வளம் சிறந்த நாட்டை யழித்த தென்பார், “பரவா வூங்” கென்றும், பரவிய பின், அந்நாடு அழிவுற்றுக் கிடக்கும் நிலையைக் கூற நினைக்கின், உள்ளத்தே அந்நாட்ட தழிவு அளியைப் பிறப்பித்துச் சொல் லெழாவாறு செய்தலின், “அளியமன்” என்றும் கூறினார். இதுகாறும் கூறியது வளைக்கைமகளிர் அவலெறிந்த உலக்கையை வாழையிற் சேர்த்தி, வள்ளைப் பூவைக் கொய்யும் நெல்வயற்கண், பரந்து மேயும் நாரை யிரிய, கொழுமீனார்கைய மரந்தொறும் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்புவதும், வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்றம் நண்ணி மறுகு சிறை பாடுவதுமாகிய அகன்கண் வைப்பின் நாடுகளாய் இருந்தன, மாக்கண் கடிய கழற, ஆரெயில் கடக்கும் குட்டுவன் தானை பரவா வூங்கு; “இப்போது அளிய மன்” என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “குட்டுவன் வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக்கின்ற இந் நாடுகள், குட்டுவன் வரம்பில் தானை பரவா வூங்கு முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த நாரை யிரிய, வெண்கை மகளிர் வெண்குரு கோப்புதலை யுடையவாய், அழியாத விழவினையும், இழியாத தீவவினையுமுடையவாய், வயிரிய மாக்கள் எழீஇ, மன்றம் நண்ணி மறுகு சிறைபாடும், இப்பெற்றிப்பட்ட சிறப்பை யுடைய அகன்கண் வைப்பின் நாடு ; இப் பெற்றியெல்லா மிழந்து கண்டார்க்கு அளித்தலையுடைய என வினைமுடிவு செய்க” என்பர். இதனால் குட்டுவனது வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. வரம்பில் தானை பரவா வூங்கென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. 10. புகன்ற வாயம் 1. இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும் 5. அல்குறு கான லோங்குமண லடைகரை தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும் தண்கடற் படப்பை மென்பா லனவும் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் 10. செங்கோட் டாமா னூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்பும் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா 15. தரிகா லவித்துப் பலபூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரியவெள் ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் 20. முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் செழும்பல் வைப்பிற் பழனப் பாலும் ஏன லுழவர் வரகுமீ திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் 25. புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் 30. பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர் 35. உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டம் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி எறும்பு மூசா விறும்பூது மரபிற் கடுங்கட் காக்கையொடு பருந்திருந் தார 40. ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளையுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும் கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே. துறை : பெருஞ்சோற்று நிலை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புகன்ற வாயம் 1-8. இணர்ததை................. பாலனவும் உரை : இணர் ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை - பூங்கொத்துக்கள் கொய்யப்பட்டுச் சிதறிக் கிடக்கும் ஞாழல்கள் நின்ற கரை பொருந்திய பெரிய நீர்த்துறை யாகிய; மா இதழ் நெய்தல் - கரிய இதழ்களை யுடைய நெய்தலின்; பாசடை மணிக் கலத்தன்ன பனிக் கழி - பசிய இலைகள் நிறைந்த நீலமணியாற் செய்த கலம் போன்ற குளிர்ந்த கழிக்கண்; துழைஇ - மீன் வேட்டமாடி; புன்னை வாலிணர்ப் படுசினை - புன்னையின் வாலிய இணர் செறிந்த கிளைகளிடத்தே; குருகு இறை கொள்ளும் - மீனுண் குருகுகள் தங்கும்; அல்குறு கானல் ஓங்கு மணல் அடைகரை - மக்கள் சென்று தங்குதற்குரிய கானற்சோலையின் உயர்ந்த மணலடைந்த கரையில்; தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல - தாழ்ந்திருக்கும் அடும்பங் கொடியை யலைத்த திரையால் ஒதுக்கப்பட்ட சங்கு கிடந் தொலிக்க; இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் - விளங்குகின்ற கடல் முத்துடனே நீண்ட பவளக்கொடிகளை அங்கு வாழ்வோர் எடுத்துக் கொள்ளும், தண் கடற் படப்பைமென்பா லனவும் - குளிர்ந்த கடற் பாங்கான நெய்தல் நிலமும் என்றவாறு. ஞாழற் பூக்களை வளையணிந்த மகளிர் விருப்பத்தோடு கொய்தணிந்து கொள்ப வாதலின் இணர் கொய்யப்பட்டுச் சிதைவுற்றுத் தோன்றுவது பற்றி, “இணர்ததை ஞாழல்” என்றார். மகளிர் கூடி விளையாட்டயரும் பெருமையுடைமை தோன்ற, “பெருந்துறை” யென்றும், அதன் கரைக்கண்ணே ஞாழல் நிற்குமாறு விளங்க, “ஞாழல் கரைகெழு பெருந்துறை” யென்றும் கூறினார். பெருந்துறையாகிய பனிக்கழியென இயையும். நெய்தற்பூ நீலமணி போல்வதாகலின், அது நிறைந்த பனிக்கழியை “மணிக்கலத் தன்ன நெய்தற் பாசடைப் பனிக்கழி” யென்றார் பழையவுரைகாரரும், “மணிக்கல மென்றது நீல மணியாலே செய்த பாத்திர” மென்றும், “மணிக்கலத் தன்ன கழியெனக் கூட்டி, நெய்தற்பூவின் கருமையானும் அதன் பாசடைக் கருமையானும் மணிக்கலம் போன்ற கழியென வுரைக்க” வென்றும் கூறுவர். கழியிடத்தே மீன் தேடி யுண்டு பசி தீர்ந்த குருகுகள் பூவுந் தளிரும் செறிந்து குளிர்ந்த நிழல் பரப்பி நிற்கும் புன்னைக் கிளையில் தங்கியினிதிருக்கு மென்பார், “பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்” என்றும், ஏனை மாவும் மக்களும் இனிது தங்குதற்கும் இஃது இனிய இடமாம் என்பார். “அல்குறு கானல்” என்றும் சுட்டினார். இதனாற் பயன், இந்நிலத்து வாழ்வார் தம் முயற்சி பழுதுறாது வேண்டுவன பெற்று இனிதிருக்குமாறு தெரிப்பதாவது. கடற் கானற்சோலை, ஓங்கு மணலடை கரைக்கண் உள தென்பது விளங்க, “கானல் ஓங்கு மணலடை கரை” யெனப் பட்டது. அக்கரையிடத்தே தாழ வளர்ந்திருக்கும் அடும்பினை யலைத்து வரும் திரைகள் கடலகத் திருந்து வளைகளைக் கொணர்ந்தெறிதலின். அவற்றின் முழக்கமும் கானலிடத்தே யுளதாயிற் றென்பார், “தாழடும்பு மலைந்த புணரி வளைஞரல” வென்றார். தனது வரவுகண்டு தாழ்ந்த அடும்பினை மலைந்த திரையாதலின், தன்னகத்தே வாழ்ந்த சங்கு அலறக் கரையிடத்தே அதனை எறிவதாயிற்றென ஒரு நயந் தோன்றுமாறு காண்க. “கானலென்றது தன்னிடத்து வந்து இரைகொள்ளுதற்குக் குருகு தங்கி வாழும் கான” லென்றும், “புணரி வளை ஞரல வென்றது, கடல் கொண்டுவந்த சங்கு திரையிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய் வருந்திக் கதற வென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வளையலறக் கேட்டு ஓடிப்போந்து அதன் முத்தை யெடுப்பவர் அவ் வளையுடனே யெறியப்படும் பவளத்தையும் எடுத்துக் கொள்வ ரென்பார், “இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்” என்றார். முத்தெடுக்க வந்தவர், அதனோடு பவளமும் எளிதிற் கொள்வரென இதனால் கடல் வளம் கூறியவாறு. எடுப்பாரது வினை, இடத்தின்மேனின்றது; இனி, எடுக்குமென்பது செயப் படுவினைப் பொருளதெனினும் அமையும். பழையவுரைகாரர் “முத்தமொடு வார்துகி ரெடுக்கு மென்றது, கரை நின்றோரில் வளைநரலக் கேட்டார் அம் முத்தெடுக்க வென்று வந்து முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுக்கும் என்றவா” றென்பர். குறிஞ்சி முல்லைகளை வன்பா லென்றும், மருத நெய்தல்களை மென்பா லென்றும் வழங்குப வாதலின், இந் நெய்தற் பகுதியை “தண்கடற் படப்பை மென்பாலன” என்றார். இது நெய்தல் கூறிற்று. 9-13. காந்தளங் ................ வைப்பும் உரை : காந்தளங் கண்ணிக் கொலை வில் வேட்டுவர் - காந்தட் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும், கொலை புரியும் வில்லினையுமுடைய வேட்டுவர் கொணர்ந்த; செங்கோட்டு ஆமான் ஊனொடு - செவ்விய கொம்பினையுடைய ஆமாவின் இறைச்சியுடனே; காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு - காட்டிடத்து வாழ்வனவாகிய வலியுடைய களிற்றி யானையின் கோட்டைப் பெற்றுக்கொண்டு; பிழி நொடை கொடுக்கும் - அவற்றின் விலைக் கீடாக வடித்த கள்ளைக் கொடுக்கும்; பொன்னுடை நியமத்து - பொன்னையுடைய கடைத்தெரு வமைந்த; குன்று தலை மணந்த புன்புல வைப்பும் - குன்றுகள் நெருங்கியுள்ள புன்புலமாகிய நிலப்பகுதியிலுள்ள ஊர்களும் என்றவாறு. இப் புன்புல வைப்புக் குறிஞ்சியைச் சார்ந்து கிடத்தலானும், பூக்கள் வந்த நிலத்தின் பயத்த வாதலானும் “காந்தளங் கண்ணி” கூறப்பட்டது. இனி, குறவராதலின், அவர்க்கேற்ப இதனைக் கூறினாரெனினுமாம். வேட்டுவர் தாம் வேட்டமாடிய ஆமானின் ஊனும், வேழத்தின் வெண்கோடும் கொணர்ந்தமை யின் அவற்றைச் சேரக் கூறினார். வேட்டத்தின் அருமைப்பாடு தோன்ற, “செங்கோட் டாமா” னென்றும், “மதனுடைய வேழ” மென்றும் சிறப்பித்தார். ஊனின் சுவையும், வெண்கோட்டின் வன்மையும் தோன்ற இவ்வாறு கூறின ரென்பாருமுளர். இனி, இப் புன்புல வைப்பின் செல்வச்சிறப்புக் கூறுவார், இங்கேயுள்ள கடைத்தெருவைப் “பொன்னுடை நியமம்” என்றார். இங்குள்ளார் வேட்டுவர்க்கும் பொன்னைத் தந்து அவர் கொணரும் ஊனும் வேழ வெண்கோடும் பெறுதலை யன்றி, அவ் வேட்டுவர் விரும்பும் தேறலை விலைப்பொருளாகத் தருகின்றன ரென்றற்கு, “பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்” என்றார். “பொன்னுடை நியம” மென்றது, பொன்னைக் கொடுத்து வேண்டுவன பெறுந் திறம் சுட்டி நிற்கிறது. உயிர்க் கொலை புரியும் வேட்டுவ ராதலின், பெறு தற்கரிய பொன் னுடைய நியமம் புக்கும், பொன்னைப்பெறாது வடித்த கள்ளினையே விரும்புவாராயினர் என அவரது செயற் புன்மையை யுணர்த்தியவாறாகக் கோடலுமொன்று. இது முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த புன்புல வைப்பின் இயல்பு கூறிற்று. புன்புல வைப்பில் வாழ்வார் வினை அவ் வைப்பின்மே னின்றது. 14-21. காலமன்றியும்................ பழனப்பாலும் உரை : தேம்பாய் மருதம் முதல் படக் கொன்று - தேன் பாயும் மருதமரத்தை அடியோடே சாய்த்து; வெண்டலைச் செம் புனல் பரந்து - வெள்ளிய நுரை சுமந்து வரும் சிவந்த புது வெள்ளம் பரந்து வர; மிகுக்கும் வாய் பல சூழ் பதப்பர் - அது மிக்கு வரும் இடங்களில் அணையாக இடப்படும் பல வைக்கோற் புரிகள் சூழக் கட்டிய மணற் கரிசைகள்; பரிய - கரைந்துகெட; வெள்ளத்துச் சிறை கொள் பூசலிற் புகன்ற ஆயம் - அவ் வெள்ளத்தை அணையிட்டுத் தடுப்பார் செய்யும் ஆரவாரத்தில் விருப்புற்ற மக்கட் கூட்டம்; முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் - முழவு முழங்கும் பழைதாகிய வூரிடத்து நிகழும் திருவிழாக் கண்டு மீண்டு செல்லும்; செழும் பல் வைப்பின் - செழுமையான பலவாகிய ஊர்களையும்; கால மன்றியும் - காலமல்லாத காலத்தும்; கரும்பறுத்து ஒழியாது அரிகால் அவித்து - விளைந்து முதிர்ந்த கரும்பினை யறுத்துக் கொள்வதோ டொழியாது அதன் அரிகாலையும் அகழ்ந்து சிதைத்து; பல பூ விழவின் - அவ்விடத்தே மலரும் பல்வகைப் பூக்களைக்கொண்டு எடுக்கும் விழாவினையுமுடைய; பழனப் பாலும் - மருதநிலப் பகுதியில் என்றவாறு. பல பூ விழவினையும் செழும் பல் வைப்பினையுமுடைய பழனப் பாலும் என இயையும். பழையவுரைகாரர், “பல பூ விழவினையுடைய வைப்பு எனக் கூட்டுக” வென்பர். நீர் வளம் இடையறாமையின், காலமல்லாத காலத்தும் கரும்பு முற்றி விளைவதும் அறுக்கப்படுவதும் உண்டென்பார், “கால மன்றியும் கரும்பறுத் தொழியாது” என்றார். கரும்பறுத்த அரிகாலும் விளைந்து முற்றுதலினாலும், கரும்பின் பாத்தியில் பல்வகைப் பூக்கள் மலர்தலினாலும், அப் பூக்களின் பன்மை மிகுவது குறித்து அரி காலை முற்றவும் சிதைத்தன ரென்பார், “அரிகா லவித்து” என்றார். அவித்து என்னும் வினையெச்சத்தைப் பல பூக்கொண்டெடுக்கும் விழவின் எனத் தொக்கு நிற்கும், எடுக்கும் என்னும் வினையொடு முடிக்க. கரும்பின் பாத்தியிற் பல்வகைப் பூக்களும் மலருமென்பதை “வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின், பாத்திப் பன்மலர்ப் பூத்ததும்பின” (புறம். 386) என்று பிறரும் கூறுதலா லறிக. பல்வகைப் பூக்களைக் கொண் டெடுக்கும் விழா இந்திர விழாவென வறிக. “இந்திர விழாவிற் பூவி னன்ன” (ஐங். 62) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இவ் விழா மென்புலத்தவர்க் குரியது, நிரம்பப் பூத்துத் தேன் சொரிய நின்ற மருதமரம் என்பார் “தேம் பாய் மருத” மென்றும், வந்த வெள்ளம் அதனை அடி யோடே சாய்த்துக் கெடுத்த தென்றற்கு “முதல்படக் கொன்று” என்றும் கூறினார். புதுப்புனல் செந்நிறங் கொண்டு நுரைத்து வருமாதலின், அவ்வியல்பு தோன்ற, “வெண்டலைச் செம்புனல்” என்றார். பரந்தென்புழி வர என ஒரு சொல் வருவிக்க. பழைய வுரைகாரர், “புனல் பரந் தென்றதனைப் பரக்க வெனத் திரிக்க” வென்பர். வாய் மிகுக்கும் என்பதனை மிகுக்கும் வாய் என மாறுக. நீர்ப்பெருக்கின் வேகத்தால் ஆழமாக அறுக்கப்பட்ட இடங்களில் அப் பெருக்கைத் தடுத்து அணையிடு வார் வைக்கோற் புரிகளைக்கொண்டு மணற்கோட்டை யமைத்து அணையாக நிறுத்துப வாதலின், அவற்றைப் “பல சூழ்பதப்பர்” என்றார்; பழையவுரைகாரரும், “பல சூழ் பதப்ப ரென்றது, பல புரியாலும் சூழப்பட்ட மணற்கோட்டை யென்றவா” றென்பர். இக் கோட்டையைக் கரிசை யென்றலும் வழக்கு. இம் மணற் கரிசைகளையும் இச் செம்புனல் கரைத்தொழித்தலின் மக்கட் கூட்டம் பேராரவாரத்துடன் மிக உயரமும் திண்மையும் அமைந்த அணைசெய் தமைத்து நீரைத் தடுத்து வென்றி கண்ட இன்பத்தால் அதனை மேலும் விரும்பிப் பலராய்க் கூடி அணையை மிதித்து வன்மை செய்து மகிழும் நலம் இனிது விளங்க, “சிறைகொள் பூசலிற் புகன்ற ஆயம்” என்றார். பெரும் படை திரண்டு வரும் பகைவர் தானைப்பெருக்கை எதிரூன்றி நின்று தடுத்துப் பற்றிச் சிறைசெய்து வென்றி பெற்று மகிழும் தானைவீரர்கூட்டம் மேலும் அச் செயலையே விரும்புதல் போல, நீர்ப்பெருக்கைச் சிறைசெய்யும் மக்கட் கூட்டத்தைச் சிறப்பித்துக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்குப் புகன்ற வாயம் என்பது பெயராயிற்று. பழைய வுரைகாரர், “புகன்ற ஆய மென்றது, முன்பு மணலணைக்கு நில்லாத பெருவெள்ளத்தினை அணைசெய்து முடித்த விருப்பத்தை யுடைய ஆயமென்றவா” றென்றும், “இச் சிறப்புப்பற்றி இதற்குப் புகன்ற வாயமென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். வெண்டலைச் செம்புனலை அணை நிறுவிச் சிறைசெய்து மகிழ்ந்த மக்கட் கூட்டம், நாட்டின் மூதூர்க்கண் நிகழும் திருவிழாவுக்குச் சென்று அதனைக் கண்டு திரும்புங்கால், மூதூர்க் காட்சியும் திருவிழாச் சிறப்பும் பேசிக்கொண்டு ஆரவாரத்தோடு பெயர்தலின், அதனையும் இதனோடியைத்து, “மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்” என்றார். மூதூர் என்பது பெரிய ஊர்; வைப்பு, சீறூர்கள். சீறூரவர் பேரூர்களில் நிகழும் விழாக் காணச் செல்வது மரபு. 22-25. ஏனலுழவர் ................. வைப்பும் உரை : ஏனல் உழவர் - தினைக் கொல்லையை யுழுது பயிர் செய்யும் குன்றவர்; வரகு மீதிட்ட - வரகினது வைக்கோலை மேலே வேயப்பட்ட; கான்மிகு குளவிய அன்பு சேர் இருக்கை - மணமிக்க காட்டு மல்லிகை வளரும் அன்பு பொருந்திய மனை களில்; மென்றினை நுவணை முறை முறை பகுக்கும் - மெல்லிய தினைமாவை வரும் விருந்தினருக்கு முறை முறையாக அளித் துண்ணும்; புன்புலம் தழீஇய புறவணி வைப்பும் - புன்செய் நிலங்களைத் தழுவிக் கிடக்கும் முல்லைநிலத்தை யணித்தாக வுடைய குறிஞ்சிப் பகுதியும் என்றவாறு. மருத நிலத் துழவர்க்கு நெல்போலக் குறிஞ்சி நிலத்தவர்க்குத் தினையே சிறந்த தாகலின், அவர்களை “ஏன லுழவர்” என்றும், அவர் இருக்கும் வீடுகட்கு வரகின் வைக்கோலைக் கூரையாக வேய்வதும், மனைகளில் காட்டுமல்லிகை வளர்ப்பதும் இயல் பாதலின், “வரகு மீதிட்ட கான்மிகு குளவிய இருக்கை” யென்றும் கூறினார். கான் மணம். வில்லும் அம்பும் கொண்டு விலங்குகளை வேட்டையாடும் வன்கண்மை யுடையராயினும், குன்றவருடைய மனைகளில் அன்பும் அறமும் குன்றாது பொருந்தியிருக்கும் திறத்தை, “அன்புசேர் இருக்கை” யென்றார். இனி, இதனை வன்புசேர் இருக்கை யென்று கொள்ளின், குன்றில் வாழும் விலங்குகளாலும் பிறவற்றாலும் சிதைவுறாத வன்மை பொருந்திய இருக்கை யென்று கொள்க. தினை நுவணை - தினைமா. இது தன்னை யுண்டாரை வேறெதுவும் உண்ண விரும்பாதவாறு பண்ணும் சுவையும், கருப்புக் கட்டியைப் பொடிசெய்து கொழித் தெடுத்த நுண்ணிய பூழிபோலும் தோற்றமும் உடைய தென்பார், “விசையங் கொழித்த பூழி யன்ன, உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை” (மலைபடு. 444-5) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏன லுழவர் தம் அன்பு சேர் இருக்கைக் கண்ணிருந்து ஆற்றும் மனையறம் கூறுவார், வரும் விருந்தினர்க்கு அவர் தகுதி யறிந்து முறை பிறழாமல் தினைமாவைப் பகுத்துண்பர் என்றற்கு, “மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்” என்றார். புன்புலம் - புன்செய். புறவு - முல்லைக்காடு. வைப்பென்றது, ஈண்டு வைப்புக் களையுடைய நிலப் பகுதி குறித்துநின்றது. இது குறிஞ்சியின் இயல்பு கூறிற்று. 26-29. பல்பூஞ்.......... பிறவும் உரை : பல் புஞ் செம்மற் காடு - பல்வகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக் கிடத்தலையுடைய காடுகள்; பயம் மாறி - பயன்படும் தன்மை திரிந்து; அரக்கத் தன்ன நுண்மணற் கோடு கொண்டு - செவ்வரக்குப் போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மட்குன் றுகளைக் கொண்டு; ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் - ஒள்ளிய நுதலையுடைய மகளிர் காலிற் செருப்பணிந்து திரியும்; விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் - வானுற வோங்கிய மரங்கள் செறிந்த காடும் காடு சார்ந்த பகுதியும் என்றவாறு. காடு பயமாறி, அரக்கத் தன்ன கோடு கொண்டு, மகளிர் திரியும் கடற்ற என்றும், விண்ணுயர்ந் தோங்கிய கடற்ற என்றும் இயையும். முல்லைக் காடுகள் தழையும் பூவும் உதிர்ந்து வெறுநிலமே தோன்ற நிற்கும் காட்சியை “காடு பய மாறி” யென் றார்; தழை முதலியன வின்றி நிற்கும் கோடும் அரக்குப்போற் சிவந்து நுண்மணல் பரந்து தோன்றுதலின், “அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு” என்றும், அந் நிலத்தே இயங்கும் மகளிர் காலிற் செருப்பணிந்து இருப்பதை இன்றும் காணலா மாதலின், “மகளிர் கழலொடு மறுகும்” என்றும் கூறினார். கழல் - ஈண்டுச் செருப்பு. “கழலிற் செந்தாமரை யடிகள் புல்லி” (சீவக. 1648) என்புழிக் கழல் என்றதற்கு. நச்சினார்க்கினியர் செருப் பெனப் பொருள் கூறியிருப்பது காண்க. இனிக் கழலென்றது, கழற்சிக்காய் என்றும் கூறுப. இனிப் பழையவுரைகாரர், “மணற் கோடு கொண்டென்றது, மணற்கோட்டைக் கழலாடுதற் கிடமாகக்கொண் டென்றவா” றென்றும், “இனிக் கழலென்ற தனைக் கழலையுடைய தலைமகன் காலாக்கி அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போ மென்பாரு முள” ரென்றும் கூறுவர். விண்ணுயர்ந் தோங்கிய கடறென்றது வானளாவ வுயர்ந்த மரங்கள் செறிந்த காட்டை யுணர்த்தி நின்றது. காட்டின் பயமாறிய பகுதியும் பயம் பொருந்திய பகுதியும், அக்காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லைப் புறவு முற்றும் அகப்பட “கடற்றவும் பிறவும்” என்றார். “பிறவு மென்றது அவ்வாறொரு நிலமாகச் சொல்லப்படாத பல நிலப் பண்புமுடைய இடங்களு மென்றவா” றென்று பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும் கூறிய நிலப் பகுதிகளி லெல்லாம் அங்கு வாழ்வோர் வினையை அவற்றின் மேலேற்றிக் கூறியதற்குப் பழையவுரை காரர், “முன்பு எண்ணி நின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து வாழ்வார் மேலனவாகக் கொள்க” என்று கூறுகின்றார். 30-39. பணைகெழு........... பருந்திருந்து ஆர உரை : பணை கெழு வேந்தரும் வேளிரும் - முரசினை யுடைய முடியுடைய வேந்தரும் குறுநில மன்னரும்; ஒன்று மொழிந்து - தம்முட் கூடி ஒரு காரியமே செய்வதாகத் துணிந்து; கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க - கடலிடத்தும் காட்டிடத் தவுமாகிய அரண்களைக் கொண்டும் வலியிலராய் நடுக்க மெய்துமாறு; முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிர - மாறுபாடு மிக்க போரினைப் புலப்படுத்தும் முரசினது கடிய முழக்கமானது சென்று விசும்பக மெல்லாம் எதிரொலித்து முழங்க; கடுஞ்சினம் கடாஅய் - மறவர்பால் மிக்க சினத்தை யெழுப்பி; முழங்கும் மந்திரத்து - முழங்குகின்ற மந்திர வொலியால்; அருந் திறல் மரபின் கடவுட் பேணியர் - அரிய திறல் படைத்த முறைமையினையுடைய முரசுறை கடவுளை வழிபடுவானாய்; உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் - வழிபாட்டினைச் செய்வோனாகிய உயர்ந்தோன் படைத்த பெறுதற்கரிய பலியினை; கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க - பெரிய கண்களையுடைய பேய்மகள் தீண்டுதற் கஞ்சிக் கைகளைப் புடைத்துக்கொண்டு நடுங்க; நெய்த்தோர் தூய நிறைமகிழ் இரும்பலி - குருதி தூவிய நிறைந்த கள்ளொடு கூடிய பெரிய அப் பலியானது; எறும்பு மூசா இறும்பூது மரபின் - எறும்பும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடைத்தாகவும்; கருங்கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர - தூவப்பட்ட அப் பலியினைக் கரிய கண்களையுடைய காக்கை யுடனே பருந்துகள் இருந்துண்ணுமாறு என்றவாறு. இது வெற்றி வாய்த்தற்பொருட்டு முரசுறை கடவுட்குப் பரவுக் கடன் ஆற்றும் திறம் கூறுகிறது. முரசுடைச் செல்வ ராதலின், முடிவேந்தரைப் “பணைகெழு வேந்தர்” என்றார்; அவர் பாண்டியரும் சோழருமெனக் கொள்க. வேளி ரென்றது, அவ்விருவர்க்கும் துணையாய் வரும் குறுநில மன்னரை என்க. அவருள் ஒருவர் கருதியதே ஏனை யாவரும் துணிந் தொழுகின ரென்றற்கு “ஒன்று மொழிந்து” என்றார். பழைய வுரைகாரர் “ஒன்றுமொழிந்து என்றது, ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து என்றவாறு” என்பர். பாண்டி வேந்தர்க்கு மூன்ற பக்கத்திற் கடல் அரணாகவும், சோழர்க்குக் கிழக்கிற் கடலரணாகவும், ஏனைப் பகுதிகளில் காடு அரணாகவும் இருந்தமையின், “கடலவும் காட்டவும் அரண்” என்றும், கடலும் காடும் பேரரண்களாக விருப்பவும், அவ் வாற்றாலும் மனத்திண்மை பெறாது நெஞ்சு கலங்கி யஞ்சின ரென்பது தோன்ற, “அரண் வலியார் நடுங்க” என்றும் கூறினார். சேரனது போர்வன்மை குறித்துரைக்கும் முரசு முழக்கினை, “முரண்மிகு கடுங்குரல்” என்றும், அம் முழக்கம் வானத்தே சென்று எதிரொலித் ததிர்வது விளங்க, “விசும்படைபு அதிர” என்றும் விதந்தோதினார். இது முரசுறை கடவுட்குப் பலியிடு வோர் செய்யும் முரசு முழக்கமாகும். முரசுறை கடவுட்குப் பலியிட்டு மந்திரம் கூறுவோன் அதனை யோதுதற்குரிய உயர்வுடைய னாதலின் அவனை “உயர்ந்தோன்” என்றும், முரசுறையும் கடவுளின் வெற்றி பயக்கும் சிறப்பினை, “அருந்திறல் மரபின் கடவுள்” என்றும், அவ் வழிபாட்டிடத்தே யோதப்படும் மந்திரம், மானதம், மந்தம், உரை யென்ற மூவகையுள் உரையால் முழக்கி யோதப் படும் வகையினைச் சார்ந்த தாதலின், “முழங்கு மந்திரம்” என்றும், அம் மந்திர முழக்கம், கேட்கும் வீர ருள்ளத்தே பகைவர்பால் மிக்க சினத்தை யெழுப்பும் இயல்பிற் றென்பார் போல, “கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திர” மென்றும் கூறினார். மந்திரத் தென்புழி ஆனுருபு தொக்கது. மந்திரத்தால் கடவுட்குப் பரவுக் கடனாற்றும் உயர்ந்தோன், அக் கடவுட்காக்கிய பலியினைப் பிறர் பெறற்காகா தென்பார், “அரும்பெறற் பிண்டம்” என்றும், அது குருதி விரவிக் கள்ளுடனே கொடுக்கப்படுமாறு தோன்ற, “நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி” யென்றும், அதனால் பேய்மகள் அதனைப் பெற மாட்டாமையின் அஞ்சி நடுங்கின ளென்பார், “கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க” வென்றும், அப் பலியினை முரசுறை கடவுள் என்று கொண்ட தற்குச் சான்றாக, எறும்பும் அதனை மூசா தென்றும் கூறினார். இஃதொரு வியப்பாகலின், “இறும்பூது மரபின்” என்றார். பேய் மகளும் எறும்பும் பெறலாகாப் பெருமை யுடைத்தாயினும், இப் பலி காக்கைக்கும் பருந்திற்கும் இடப்படும் என்பார், “கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார” என்றார். காக்கையை ஒடுக் கொடுத் துயர்த்தியது, அது பருந்துபோல் தனித்துண்ணாது தன்னினத்தை யழைத்து அவற்றோ டிருந்துண்ணும் உயர் செய்கை யுடையதாதலால் என அறிக. இப் பகுதிக்கண், “முழங்கு மந்திர மென்றது, முழங்க வுச்சரிக்கப்படும் மந்திர மென்றவா” றென்றும், “மந்திரத்தா னென வுருபு விரித்து அதனைப் பேணிய ரென்ப தனோடு முடிக்க” வென்றும், “கடவு ளென்றது முரசுறை கடவுளை” யென்றும், “கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க, உயர்ந்தோ னேந்திய அரும்பெறற் பிண்டம், எறும்பு மூசா விறும்பூது மரபின், நெய்த்தோர் தூய நிறைமகி ழிரும்பலி, கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வெனக் கூட்டுக” வென்றும், “இறும்பூது மரபிற் பலியென மாறிக் கூட்டுக” வென்றும், “பேய்களும் எறும்புகளும் அஞ்சிச் செல்லாத பலிகளைக் காக்கையொடு பருந்திருந் தார வென்றது, அம் முரசுறை கடவுள் தன் னாணையால் தன் பலிகளை மேல் தன்னருளாலே போர்வென்றி விளைவது அறிவித்தற்கு நிமித்த மாகக் காக்கையும் பருந்தும் இருந்து ஆர வென்றவா” றென்றும், “இவ்விடத்துக்குப் பிறவாறு கூட்டி யுரைப்பாரு முள” ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். “கடுஞ்சினங் கடாஅய்” என்ற எச்சத்தைப் பழையவுரைகாரர் எறியும் (அடி. 43) முரசு என்பதனோடு முடிப்பர். 40-44. ஓடா....... முரசே உரை : கடுஞ் சின வேந்தே - மிக்க சினமுடைய வேந்தே; ஓடாப் பூட்கை - பகைவர்க்குப் பிறக்கிடாத மேற்கோளும்; ஒண் பொறிக் கழற்கால் - ஒள்ளிய பொறிகள் பொறித்த கழலணிந்த அடியு முடைய; பெருஞ் சமம் ததைந்த - பெரிய போரிடத்தே பகைவர் செய்யும் போரினைச் சிதைத்துக் கெடுத்த; செருப்புகல் மறவர் - போர்த்தொழிலை விரும்பும் வீரர்; நிலன் அதிர்க்கும் உருமுக் குரலொடு - நிலத்தை யதிரப்பண்ணும் இடிபோலும் தம் குரலுடனே; கொளையுணர்ந்து - இசை விருந்திற் கலந்து; பெருஞ் சோறு உகுத்தற்கு - சோற்றுணவாகிய பெரிய விருந்துண்பித்தற்காக; நின் தழங்கு குரல் முரசு எறியும் - நினது முழங்குகின்ற கொடைமுரசம் எறியப்படுகின்றது என்றவாறு. பெருஞ் சமம் ததைந்த செருவைப் புகலும் மறவ ரெனப் புகழ் கின்றாராகலின், அதற்குரிய அவர்தம் பண்பினை, “ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்” என்பதனால் உணர்த்தினார். பொறி - தொழிற்பாடு. தாங்கள் செய்த போர்த்தொழிலின் வெற்றித்திறத்தைக் கழலில் பொறித்தலும் மரபாதலின், அப்பொறிகளை ஈண்டு ஒண்பொறி யென்றா ரெனினு மமையும். “ஒண்பொறிக் கழற்கால்” (பதிற். 34) என்பதற்குப் பழையவுரை காரர் கூறுவதனால், இம் மரபுண்மை அறியப்படும். உருமு நிலன் அதிர்க்கும் குரல் என்பதனை, நில னதிர்க்கும் உருமுக் குரல் என மாறுக. பழையவுரைகாரர், “மறவர் குரலெனக் கூட்டுக” வென்றும், “ஆகுபெயரான் உருமு நிலனதிர்க்கும் குரலொடு ஒத்த மறவர் குரலை உருமு நிலனதிர்க்கும் குரல் என்றானாகக் கொள்க” வென்றும் கூறுவர். மறவர் குரலுக்கு உருமுக் குரலை யுவமம் கூறியது அவரது முரண்மிகு மறத்தைக் குறித்துநின்றது. பெருஞ் சமம் ததைந்த வீரர்க்கு இசை விருந்தும் பெருஞ்சோற்று விருந்தும் செய்தல் வேந்தர்க்கு இயல்பாதலின், அவ்வியல்புபற்றி, எறியப்படும் முரசினை ஈண்டு எடுத்தோதினார். இப் பெருஞ் சோற்று நிலை, “முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல். பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” (அகம். 233) என்பதனாலும், “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை” (தொல். பொ. 63) என ஆசிரியர் கூறுதலாலும் உணரப்படும். இக் கருத்தே கொண்ட நச்சினார்க்கினியரும் இப்பாட்டினைப் பெருஞ்சோற்று நிலைத் துறைக்கு உதாரணமாகக் காட்டுகின்றார். இதுகாறும் கூறியது: மென்பாலனவும், புன்புல வைப்பும், பழனப் பாலும், புறவணி வைப்பும், கடற்றவும் பிறவுமாகிய ஐவகை நிலத்து மக்களும், அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து அரண் வலியாராய் நடுங்கு மாறு, கடுங்குரல் விசும்படைந்ததிர, பேய்மகள் கைபுடைத்து நடுங்க, கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திரத்தான் உயர்ந்தோ னேந்திய பிண்டமாகிய, எறும்பு மூசா இறும்பூது சான்ற மரபினையுடைய, நெய்த்தோர் கலந்த நிறைமகி ழிரும்பலியைக் காக்கையொடு பருந்திருந் தார, செருப்புகல் மறவர் குரலெடுத்துப் பாடும் இசைவிருந்தோடு பெருஞ் சோற்று விருந்துண்பித்தற்கு, வேந்தே, நின் தழங்கு குரல் முரசு எறியப்படுகிறது என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “மென் பால் முதலாகக் கடறீறாக எண்ணப்பட்ட ஐவகை நிலத்து மக்களும் பிறவும், அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து, அரண்வலியாதே நடுங்காநிற்கும்படி, கடுங்குரல் விசும்படைந் ததிரும்படி, கடுஞ்சினத்தைக் கடாவிப் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க, உயர்ந்தோ னேந்திய பிண்டத்தினையும், எறும்பு மூசா மரபின் நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலியினையும் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தாராநிற்க, செருப்புகல் மறவரது குரலோடே கோட்பாடு பொருந்திப் பெருஞ்சோறு உகுத்தற்கு எறியப் படாநின்றது நின் முரசென வினைமுடிவு செய்க” வென்பர். இதனால் சேரனது வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. வேந்தரும் வேளிரும் அஞ்சி நடுங்க, முரசிற்குப் பலியிட்டு, பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்குவது குறித்து நின் முரசு முழங்குகிறதெனப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் வீரர்க்கு வழங்கும் பெருஞ்சோற்றுப் பெருவிருந்து இப்பாட்டின்கட் பொருளாக இருத்தலின், இது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாயிற்று. மூன்றாம் பத்து மூலமும் உரையும் முற்றும். ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நான்காம் பத்து பதிகம் ஆராத் திருவின் சேரலா தற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி யீன்ற மகன்முனை பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த் தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற் பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், கமழ்குரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு பறந்தலை, வாள் மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன்பணை, நாடுகா ணவிர்சுடர். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக் கோ. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 1. கமழ்குரல் துழாய் 1. குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் 5. தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி 10. நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு கோடுகூடு மதிய மியலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண் டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு 15. கருவி வானந் தண்டளி தலைஇய வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய பனிவார் விண்டு விறல்வரை யற்றே கடவு ளஞ்சி வானத் திழைத்த தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட 20. எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்ட னனையைமன் னீயே வண்டுபட ஒலிந்த கூந்த லறஞ்சால் கற்பின் 25. குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின் இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு 30. வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்து அடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள் ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப் புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர் நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச் 35. சூர்நிகழ்ந் தற்றுநின் றானை போர்மிகு குரிசினீ மாண்டனை பலவே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கமழ்குரற் றுழா அய் 1-10. குன்றுதலை............... பெயர உரை : குன்றுதலை மணந்து - குன்றுகள் பல தம்மிற் கூடித் தொடர்ந்து; குழூஉக் கடல் உடுத்த - அலைகள் கூடி முழங்குதலை யுடைய கடலை ஆடைபோலச் சூழக்கொண்ட; மண் கெழு ஞாலத்து - மண் பொருந்திய நிலவுலகத்தில்; மாந்தர் கைசுமந்து ஒராங்கு அலறும் பூசல் - வழிபட வரும் மக்கள் தம் தலைமேற் கைகூப்பி ஒருங்குகூடிச் செய்யும் பேராரவாரம்; நால் வேறு மாதிரத்து நனந்தலை - நான்காக வேறுபட்ட திசை யிடத்தே பரந்த இடங்களில்; ஒருங்கு எழுந் தொலிப்ப - ஒன்றாய்த் திரண்டெழுந் தொலிக்க; உயர்வடித் தெள்மணி எறியுநர் - உயர்ந்த மிகத் தெளிந்த ஓசையைச் செய்யும் மணியையியக்குபவர்; கல்லென - கல்லென வோசை யெழுமாறு இயக்காநிற்ப; உண்ணாப் பைஞ்ஞிலம் - உண்ணாநோன்பு மேற்கொண்ட விரதியர்; பனித்துறை மண்ணி - குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்றுபடிந்து நீராடி; திருஞெமர் அகலத்து - திருவீற்றிருக்கும் மார்பின்கண் அணியப்பெற்றுள்ள; வண்டூது பொலிதார் கமழ்குரல் துழாஅய் - வண்டு மொய்த்து விளங்கும் மாலையாகிய மணம் கமழும் கொத்துக் களாற் றொடுத்த துளசிமாலையும்; கண் பொரு திகிரி - காண்பவர் கண் கூசுமாறு ஒளி திகழும் ஆழிப்படையுமுடைய; செல்வன் சேவடி பரவி - செல்வனான திருமாலின் செவ்விய அடியில் வணங்கி வாழ்த்தி; நெஞ்சு மலி உவகையர் - நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சி யுடையராய்; துஞ்சு பதிப் பெயர - தாந்தாம் இனிதுறையும் ஊர்கட்குத் திரும்பச் செல்ல என்றவாறு. மாந்தர் அலறும் பூசல் ஒருங்கெழுந் தொலிப்ப, மணி யெறியுநர் கல்லென இயக்க, பைஞ்ஞிலமாகிய விரதியர், துறை மண்ணி, செல்வன் சேவடி பரவி, உவகையராய்ப் பதிப் பெயர என முடிக்க. கல்லென இயக்க என ஒருசொல் வருவிக்க. குழூஉதல், அலைகள் கூடி முழங்குதல். பல பொருள்களும் திரளுதலையுடைய கடல் குழூஉக் கடல் எனப்பட்ட தென்றும் கூறுவர். தலைமணத்தலாவது, தம்மிற் கூடித் தொடர்ந் திருத்தல், கடற்பகுதியை நீக்குதற்கு “மண்கெழு ஞாலம்” என்றார். உச்சிக் கூப்பிய கையராய்ப் பலராய் ஒருங்கு கூடிச் செய்து கொள்ளும் வேண்டுகோளின்கண் குறையே பெரிதெடுத்து மொழியப்படு தலின், அதனை, “அலறும் பூசல்” என்றார். குறையை நினைந்து மொழியுமிடத்து மனம் கலங்கி அழுகை தோற்றுவித்தலின், “அலறும் பூச” லாயிற்றென வறிக. நால்வேறு மாதிரத்து நனந்தலை யென்க. மக்கள் நாற்றிசையிலும் பூசலிட்டு வருதலின், நாற்புறத்தும் ஒருங்கெழுந் தொலித்த தென்றார். தெள்ளுயர் வடிமணி யெனக் கிடந்தவாறே கொண்டு தெளிந்த ஓசையும் உயர்ந்த திருந்திய தொழிற்பாடும் உடைய மணியென் றுரைப் பினுமாம். எறியுந ரென்பதை வினையெச்ச முற்றாக்கி, கல்லென்னு மோசை யுண்டாக எறிந்துகொண்டு செல்ல என்றலு மொன்று. “மணி யெறிதலை உண்ணாப் பைஞ்ஞிலத்தின் தொழிலாக்கி அவர்கள் மணியை யெறிந்து தீர்த்த மாடுகின்றார் களாகக் கொள்க. எறியுந ரென்பது வினையெச்சமுற்” றென்றும், “இனி, எறியுந ரென்பதனைத் தொழிற்பெயராக்கி, மணியை யெறிவார் தீர்த்த மாடுதற்கு இது முகுத்த மென்று அறிந்து வருதற்பொருட்டு அம்மணியை யெறிந்தாரவாரிப்ப வென் றுரைப்பாரு முளர்” என்று பழையவுரைகாரர் கூறுவர். உண்ணாப் பைஞ்ஞிலம் என்பதில், நிலமென்பது ஆகு பெயராய் மக்கட் டொகுதியை யுணர்த்த, உண்ண வென்பது அதனை விசேடித்து, உண்ணா நோன்பினையுடைய மக்கட் டொகுதியென்ப துணர நின்றது. உண்ணாப் பைஞ்ஞில மென்றது “அத் திருமால் கோயிலுள் வரம் வேண்டி யுண்ணாது கிடந்த மக்கட் டொகுதி யென்றவாறு” என்று பழையவுரை. திருமகள் வீற்றிருக்கும் மார்பினைத், “திருஞெமரகலம்” என்றார். “திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை (பரி. 1) என்றார் பிறரும். வண்டூது பொலிதா ராகிய துழாய் என்று இயைக்க. தாரையுடைய திருவென இயைத்தலு மொன்று. துழாயும் திகிரியு முடைய செல்வன் என்க. நறுமணங்கமழும் இயல் பிற்றாதல் தோன்ற, “கமழ் குரல் துழாய்” என்றார். பிறரும் “நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை” (பரி. 4) என்பது காண்க. தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத் தொடுக்கப் படும் சிறப்பும், மிகச் சிறிதாகிய தன்னகத்தும் தன்னைச் சூழ்ந்திருக்கும் இலைகளி னகத்தும் ஓரொப்ப மணங்கமழும் மாண்பு முடைய துழாயை, கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்த செம்மை கருதி, இப் பாட்டிற்கு இது பெயராயிற்று. இனி, “நாறாத பூவுடையதனை மிக நாறுவ தொன்று போலச் சாதி பற்றிச் சொன்ன சொற் சிறப்பான் இதற்குக் கமழ்குரற் றுழா யென்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். அவரே, செல்வ னென்றது “திருவனந்தபுரத்துத் திருமாலை” யென்றும் கூறுவர். இதனால், உண்ணா நோன்பிகளும் பிறரும் திருமாலை வழிபடுந் திறம் கூறப்படுமாறு காண்க. 11-17. மணிநிற............... அற்றே உரை : மணி நிற மையிருள் அகல - நீலமணியின் நிறத்தையுடைய கரிய விருள் நீங்கும்படி; கோடு கூடு மதியம் நிலா விரிபு இயலுற் றாங்கு - பக்கம் நிரம்பிய முழுமதியம் வெண்ணிலவைப் பொழிந்து செல்வது போல; துளங்கு குடி விழுத்திணை திருத்தி - வருத்த முற்ற குடிமக்களின் நல்லொழுக்கம் இனிது நிலவப்பண்ணி; முரசு கொண்டு - பகைவரை வென்று அவர்தம் முரசினைக் கைக்கொண்டு; ஆண் கடன் இறுத்த - ஆண்மைக்குரிய கடமைகளைச் செவ்வையாகச் செய்து முடித்த; நின் பூண் கிளர் வியன் மார்பு - நினது பூணார மணிந்த அகன்ற மார்பு; கருவி வானம் தண் தளி தலைஇய - தொகுதி கொண்ட மேகம் குளிர்ந்த மழையைப் பெய்தவற்றை; வட தெற்கு விலங்கி - வடக்கிலிருந்து தெற்காகக் குறுக்கிட்டு நின்று; விலகு தலைத்து எழிலிய - தடுத்த உச்சியினை யுடைத்தாய் எழுந்துள்ள; பனிவார் விண்டு விறல்வரை யற்றே - குளிர்ந்த பெரிய மலையை யொப்பதாகும் என்றவாறு. மதியம் இருளகல நிலா விரித்து இயலுற் றாங்கு, குடி திணை திருத்தி ஆண் கடன் இறுத்த நின் மார்பு வரையற்று என முடிக்க. பிறைமதியின் இருகோடும் கூடியவழி முழுமதிய மாதலின், “கோடு கூடு மதியம்” என்றார். எனவே, கோடு கூடாதது பிறையாதல் பற்றி, “கோடு வாய் கூடாப் பிறை” எனச் சான்றோராற் கூறப்படுதல் காண்க. இருளகற்றி நிலவைச் சொரிந்து செல்லும் மதியம் போல, இச் சேரமானும் குடி மக்களுக்கு உண்டாகியிருந்த துளக்கம் நீக்கி, அருளைச் செய்து, திருமாலை வழிபடுதல் முதலிய நல்லொழுக்கத்திலே செல்வித்த சிறப்புக் குறித்து, “துளங்கு குடி விழுத்திணை திருத்தி” என்றும், துளக்கத்துக் கேதுவாகிய பகைத்துன்பத்தை நீக்கிய வாற்றை, “முரசுகொண்டு” என்றும், மக்களைத் தமக்குரிய நல்லொழுக் கத்திலே நிறுத்துதல் ஆண்கட னாதலின், அவ்வாறு நிற்பித்த சிறப்பை, “ஆண் கடன் இறுத்த” என்றும் கூறினார்; “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (புறம். 312) என்று பிறரும் கூறுதல் காண்க. மக்கட்கு உண்டாகிய துளக்கங் கெடுத்து விழுமிய ஒழுக்கத்தை மேற்கொள்வித்த இவனது மாண்பைப் பிறாண்டும், “ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மல், வான்றோய் நல்லிசை யுலகமோ டுயிர்ப்பத், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்” (பதிற். 37) என்று பாராட்டுவர். இனி இதனை, விழுத்திணை துளங்குகுடி திருத்தி என இயைத்து உயர்ந்த குடியிற் பிறந் தோருடைய வறுமையால் தளர்ச்சியுற்ற குடும்பங்களை அவற்றிற்கு வேண்டுவன வுதவி நன்னிலைக்கண் நிறுத்தி யென்று உரைத்தலுமுண்டு; ஈண்டு அதனாற் பொருள் சிறவாமை காண்க. தலைஇய என்பதனைப் பெயராக்கி, இரண்டாவது விரித்து முடிக்க. வட தெற்காக விலங்கி நிற்பது சேரநாட்டு மலைத் தொடர். கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லும் மேகக் கூட்டத்தைக் குறுக்கே நின்று தடுக்கும் சிகரத்தை யுடைத்தாய் உயர்ந்து நிற்பது பற்றி, மேலை மலைத்தொடரை, “வட தெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய, பனிவார் விண்டு” என்றார். வில கென்னும் முதனிலை, பெய ரெச்சப் பொருட்டு. எழிலிய, உயர்ச்சிப் பொருட்டாய பெய ரெச்சக் குறிப்பு.“பனிவார் விண்டு” என்றது கொண்டு, இதற்கு இமயமலை யென்று பொருள் கூறுவாருமுளர். மேலைமலைத் தொடரும் அவ் வியல்பிற்றாதல் கோடைக்கானல், உதக மண்டலம் முதலியவற்றால் அறியப்படும். இனி, பழையவுரை காரர், “பதிப்பெயர (10) வென்னும் எச்சத்தினை மதியம் இயலுற் றாங்கு என்னும் வினையொடு முடிக்க” என்றும், “உண்ணாப் பைஞ்ஞிலம் நெஞ்சுமலி யுவகையராய்த் தாம் தாம் துஞ்சு பதிகளிலே பெயரும்படி மையிரு ளகலக் கோடு கூடு மதியம் இயலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்திணை திருத்தி எனக் கூட்டி முடிக்க” என்றும், “துஞ்சு பதிப் பெயர வென்னும் பெயரெச்சத்தினை ஆண் கடன் இறுத்த வென்னும் வினையொடு முடித்து, வழி, ஆறலைக் கள்வர் முதலாய ஏதங்களின்றித் தாந் தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படிதன் னாண்மைக்கடனை இறுத்த வென் றுரைப்பாரு முள” ரென்றும் கூறுவர். இனி, முரசு கொண்டு வேறே உரை கூறலுற்ற பழையவுரை காரர், “முரசுகொண் டென்றது, சிலகாலத்துப் பயன் கொள்வா ரின்மையின், பண்ணழிந்து கிடந்த பழைய முரசினைத் தான் தோன்றி அதன் அழிவு தீர்த்து அதன் பயன்கொண்டு” என்றும், ஆண்கட னிறுத்தலாவது “ஆண் மக்களாயுள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற்பொருட் டவர்க்கு அவர் செய்யும் கடன்களெல்லாம் செய்து முடித்த” லென்றும் கூறுவர். விலங்கி யென்பதனை விலங்க வெனத் திரித்து, பனிவார் விண்டுவாகிய விறல் வரை யென இருபெயரொட் டென்று பழையவுரை கூறும். 18-23. கடவுள்............ நீயே உரை : பரே ரெறுழ் முழவுத் தோள் - பருத்த அழகிய வலிமிக்க நின்னுடைய முழவுபோலும் தோள்கள்; கடவுள் அஞ்சி - தேவர்கட்கு அஞ்சி; வானத்து இழைத்த தூங்கு எயில் கதவம் - வானத்தில் அவுணர்களால் அமைக்கப்பட்டிருந்த தொங்கு கின்ற மதிலினது கதவுக்கு; காவல் கொண்ட எழூஉ நிவந்தன்ன - காப்பாக இடப்பட்ட கணைய மரத்தைத் தூக்கி நிறுத்தினாற் போல வுள்ளன; வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து - வெள்ளிய அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்; வண்புகழ் நிறுத்த - வளவிய புகழை நிலைநாட்டின; வகைசால் செல்வத்து - பல்வேறு வகையினைக் கொண்ட செல்வங்களை யுடைய னாதலால்; வண்டன் - வண்டன் என்னும் வள்ளலை; நீ அனையை மன் - நீ பெரிதும் ஒத்திருக்கின்றாய் என்றவாறு. அவுணர் தமக்குப் பகைவராகிய தேவர்கட்கு அஞ்சி வானத்திலே தாம் செல்லு மிடந்தோறும் உடன்வருமாறு அமைத்திருந்த மதிலைச் சோழ னொருவன் தேவர்பொருட்டு வென் றழித்தா னென்பது கதை. இதனை, “திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறல்மிகு முரசின் வெல்பேர்ச் சோழன்” (தொல். கள. 11. நச்.) என்றும், “வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில், தூங்கு மெயிலும் தொலைத்ததால்” (பழ. 39) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கடவுள் என்புழி நான்கனுருபு விகாரத்தாற் றொக்கது. முழவு போலும் தோள், முழவுத்தோ ளெனப்பட்டது. தோள்கள் நிவந்தன்ன என முடிக்க. எழூஉ, கதவுக்குக் காப்பாகக் குறுக்கே இடப்படும் கணையமரம். குறுக்கே கிடக்கும் எழூஉ தோட்கு உவம மாகாமையின், `எழூஉ நிவந்தன்ன’ என்றார். பழையவுரைகாரரும், “நின் தோள்கள் எழூஉ நிவந்தன்ன” என்றே கூறுவர். வண்புகழ்க்கு நிலவுலகம் ஆதாரமாதலின், “உலகத்து வண்புகழ் நிறுத்த” என்றும், உலகம் கடலாற் சூழப்பட்டு நிலைத்திருப்பது அதன்கண் வாழ்வார் இசை நடுதற்பொருட்டே யென்பது தோன்ற, “வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து” என்றும் சிறப்பித்தார். புகழ் ஈவார்மேல் நிற்ப தாகலானும், செல்வத்துப்பயனே ஈத (புறம். 186) லாகலானும், “வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து” என்று கூறினார். எனவே, வண்புகழும் செல்வமும் வண்டன் என்பான்பால் சிறப்புற இருந்தமை பெறப்படும். மன், மிகுதி குறித்து நின்றது. இனி, நிவந்தன்ன என்பதை முற்றாக்காது நிவந் தன்ன முழவுத் தோளால் வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்தை யுடைய வண்டன் என்பானை ஒப்பாய் என்றுரைப்பின், சேரனுடைய பலவகை மாட்சிகளையும் தெரித்துக் கூறும் ஆசிரியர் கருத்து விளக்கமுறாமை காண்க. 24-28. வண்டுபட........... செல்வி உரை : வண்டுபட ஒலிந்த கூந்தல் - வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும்; அறம் சால் கற்பின் - அறம் நிறைந்த கற்பையும்; குழைக்கு விளக்கமாகிய ஒள் நுதல் - காதிலணிந்த குழைகட்கு விளக்கத்தை நல்கும் ஒளி பொருந்திய நெற்றியையும்; பொன்னின் இழைக்கு விளக்காகிய (மேனி) - தானணிந்த பொன்னாற் செய்த இழைகட்கு விளக்கந் தரும் மேனியையும்; அவ் வாங்கு உந்தி - அழகிய வளைந்த உந்தியையு முடைய; தொல் நகர் நின் செல்வி - பழைய பெருமனையிடத்தே யுள்ளவளாகிய நின் பெருந்தேவி; விசும்பு வழங்கு மகளி ருள்ளும் - விண்ணுலகத்தே இயங்கும் மகளி ருள்ளே; சிறந்த - சிறந்தவளான; செம்மீன் அனையள் - சிவந்த விண்மீனாகிய அருந்ததி போன்ற வளாவாள் என்றவாறு. குழலும் கற்பும் நுதலும் மேனியும் உந்தியுமுடைய செல்வி என்க. மனையறத்திற்குரிய அறம் பலவும் கற்றுத் தெளிந்த அறிவும் செயலுமுடைய ளென்பது தோன்ற, “அறஞ்சால் கற்பு” என்றார். நுதல் குழைக்கு விளக்கம் தருமெனவே, இழைக்கு விளக்கம் தருவது மேனியாதல் பெற்றாம். நுதல் குழைக்கு விளக்கம் தருதலை, “குழை விளங்காய் நுதல்” (குறுந். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சிவந்த ஒளியுடைத் தாதலின், அருந்ததி மீன் செம்மீன் எனப்பட்டது. நீ வண்டன் அனையை; நின் மனைவி அருந்ததி யனையள் என்றா ராயிற்று. 29-33. நிலனதிர்பு.............. கொள்ளுநர். உரை : வியன் பணை - நினது பெரிய முரசு; நிலன் அதிர்பு இரங்கல வாகி - நிலத்தவர் கேட்டு வறிதே மனம் நடுங்குமாறு முழங்காது; வலன் ஏர்பு முழங்கும் - வெற்றி மிகுதி குறித்தெழுந்து முழங்கும்; வேல் மூசு அழுவத்து - வேற்படை நெருங்கிய போர்க் களத்தில்; அடங்கிய புடையல் - அடக்கமாகத் தொடுக்கப்பட்ட பனை மாலையும்; பொலங் கழல் நோன்றாள் - பொற்கழல் அணிந்த வலிய தாள்களையுமுடைய; நின் மறப்படை கொள்ளுநர் - நின்னுடைய மறம் மிக்க தானைக்குத் தலைமைகொள்ளும் வீரர்; ஒடுங்காத் தெவ்வர் ஊக்குஅறக்கடைஇ - நின் போர் வன்மை நினைந்து அஞ்சி யடங்கியொழுகா தெழும் பகைவர் தம் ஊக்கம் கெட்டழியுமாறு படைகளைச் செலுத்தி; புறக் கொடை எறியார் - ஆற்றாமையால் அப் பகைவர் புறங்கொடுத் தோடுங்கால் அவர்மேல் தம் வேல் முதலிய படைகளை எறிவது இலர் என்றவாறு. நின் முரசின் முழக்கம் கேட்டவழி நிலத்து வாழும் மக்களனை வர்க்கும் பேரச்சம் உண்டாதல் கண்டு, போரிடையன்றிப் பிறவிடத்து முழங்கா தாயிற் றென்பார், “வியன்பணை, நிலனதிர் பிரங்கல் வாகி வலனேர்பு முழங்கும்” என்றார். எனவே, சேரனுடைய முரசுகளுள், போர்முரசுகள் போர் குறித்தன்றி வறிது முழங்கா என்றும், பிற மணமுரசும் கொடை முரசுமே எக் காலத்தும் முழங்கு மென்றும் கூறியவாறாயிற்று. செய வெனெச்சம் அதிர்பெனத் திரிந்து நின்றது. பழைய வுரைகாரரும் “நிலனதிர வெனத் திரிக்க” என்பர். புடையலும் நோன்றாளு முடைய கொள்ளுநர் என்க. கோடற்குரிய தலைமைப் பொருள் அவாய் நிலையால் வருவிக்கப்பட்டது. “பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று நின்தானை” (34-5) என்கின்றா ராதலின், கொள்ளுநர் என்றது, தானைத் தலைவரை யென் றாயிற்று. “நிலைமக்கள் சாலவுடைத் தெனினும் தானை, தலைமக்க ளில்வழி யில்” (குறள்.770) என்ப வாகலின், மறப்படைக்குத் தலைவரை விதந்தோதினார். தலைவர் இயல்பு கூறவே, அவர்வழி நிற்கும் மறவர் இயல்பு கூறவேண்டாவாயிற்று. உடைய தம் வலி அறியாது ஊக்கமே பொருளாக எழுந்த பகைவரை, “ஒடுங்காத் தெவ்வர்” என்றும், அவர்தாம் ஊக்க மழிந்தவழி நடுங்கி யொடுங்குதல் ஒரு தலையாதலின், “ஊக்கறக் கடைஇ” என்றும், ஊக்க மிழந்து நடுங்கி யோடுவார்மேல், மேற்கொண்ட சினம் தணியாது படை யெறிவது கழிதறுகண்மை யென்னும் குற்றமாதலின், “புறக் கொடை யெறியார்” என்றும் கூறினார். “சினனே காமம் கழிகண் ணோட்டம், அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவுமிவ் வுலகத், தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந் தீது” (பதிற். 22) எனச் சான்றோர் கூறுதல் காண்க. 34-36 நகைவர்க்கு............. பலவே உரை : நின் தானை - நின் படைவீரர்; நகைவர்க்கு அரண மாகி - தம்பால் அன்பும் நட்பு முடையார்க்குப் பாதுகாப்பாளராகி; பகைவர்க்குச் சூர் நிகழ்ந் தற்று - பகைவர்க்கு அச்சஞ் செய்யுந் தெய்வந் தோன்றி வருத்தினாற் போல வுளர்; போர் மிகு குரிசில் நீ - போரிலே வெற்றி மிகும் குரிசிலாகிய நீ; பல மாண்டனை - இவ்வாறு பலவகையாலும் மாட்சி யெய்தி யுள்ளாய் என்றவாறு. நட்பும் அன்பும் கொண்டு இனிய உவகையைச் செய்யும் மக்கள் பலரையும் நகைவர் என்றார். இத் துறையில் சிறப்புடைய பாணர் கூத்தர் புலவர் முதலிய பலரும் அடங்குவர். பிறாண்டும், “நகைவ ரார நன்கலம் வீசி” (பதிற். 37) என்பது காண்க. சூர், கண்டார்க்கு வருத்தத்தைச் செய்யும் தெய்வம். தெய்வத்தால் வருத்தப்படும் ஊழுடையார்க்கு யாதும் அரணாகாதவாறு போல, நின்னாற் பகைக்கப்படும் நிலையுடையார்க்கு எத்துணை வலிய அரணும் அரணாகாதவாறு சிதைத்தழிக்கும் ஆற்ற லுடையது நின் தானை என்றாராயிற்று. மார்பாலும் தோள் களாலும் மனைவியாலும் முரசாலும் படைத்தலைவராலும் படை வீரர்களாலும் எனப் பல்லாற்றாலும் மாண்புடைய னாயினை யென விரிந்தது தொகுத்து, “மாண்டனை பலவே” யென்றார். இதுகாறும் கூறியது. நின் மார்பு விறல் வரை யற்று; தோள்கள் எழூஉநிவந் தன்ன; நீ வண்டன் அனையை; நின் செல்வி செம்மீன் அனையள்; நின் மறப்படைக்குத் தலைமை கொள்ளுநர் புறக்கொடை யெறியார்; நின் தானை பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று; இவ்வாற்றால் நீ பலவும் மாண்டனை யென்றவாறாம். இவ்வாறே பழையவுரைகாரரும், “நின் மார்பு பனிவார் விண்டு விறல் வரையற்று; நின் றோள்கள் எழூஉ நிவந்தன்ன; நீதான் வண்ட னென்பவனை யனையை; நின் செல்வி செம்மீ னனையள்; நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை யெறியார்; நின் தானை நகைவர்க் கரணமாகிப் பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று; அவ்வாற்றால் குருசில் நீ பலவும் மாட்சிமைப்பட்டனை யென வினைமுடிவு செய்க” என்று கூறுவர். இதனாற் சொல்லியது, அவற்குள்ள மாட்சியெல்லாம் எடுத்து உடன் புகழ்ந்தவாறாயிற்று. 2. கழையமல் கழனி 1. மாண்டனை பலவே போர்மிகு குருசினீ மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும் முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று 5. துப்புத் துவர்போகப் பெருங்கிளை யுவப்ப ஈத்தான் றானா விடனுடை வளனும் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ 10. நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப் பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத் தடந்தா ணாரை படிந்திரை கவரும் முடந்தை நெல்லின் கழையமல் கழனிப் பிழையா விளையு ணாடகப் படுத்து 15. வையா மாலையர் வசையுநர்க் கறுத்த பகைவர் தேஎத் தாயினும் சினவா யாகுத லிறும்பூதாற் பெரிதே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கழையமல் கழனி 1 - 9 மாண்டனை .... கொற்றவ உரை : போர் மிகு குருசில் நீ - போரில் வெற்றியால் மேம்பட்ட குரிசிலாகிய நீ; பல மாண்டனை - முன் பாட்டிற் கூறியவாற்றால் பல வகையாலும் மாட்சிமைப்பட்டனை; மாதிரம் விளக்கும் சால்பும் - திசை முழுதும் சென்று விளங்கித் தோன்றும் சால்புடைமையும்; செம்மையும் - நடுவுநிலைமையும்; முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற - முத்துண்டான மருப்பினையுடைய இளங் களிறுகள் பிளிறுமாறு; மிக்கு எழு கடுந்தார் - போர் வேட்கை மிக்கெழுகின்ற கடிய தூசிப்படையானது; துய்த்தலைச் சென்று - பகைவர் நாட்டின் எல்லை முடியச்சென்று; துப்புத் துவர் போக - வலிமைதான் தன்னெல்லைகாறும் மிக்கெழப் பொருது; பெருங்கிளை யுவப்ப - பாணர் முதலிய இரவலராகிய பெரிய கிளைஞருக்கு உவப்புண்டாமாறு; ஈத்தான்று ஆனா இடனுடை வளனும் - பகைப்புலத்தே பெற்ற அரிய பொருள் களை யீத்துப் பெற்றவர்தாம் இனி வேண்டா அமையு மென அமைந்தொழியவும் எஞ்சியவற்றால் தன்னிட முற்றும் நிரம்ப வுடைய பெருஞ் செல்வமும்; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் - தளர்ந்த குடியிலுள்ளாரை அத் தளர்ச்சி நீக்கி முன்னைய நிலைக்கண்ணே யுயர்த்தி நிறுத்திய வெற்றிச் செய்தியுமாகிய; எல்லாம் எண்ணின் - எல்லாவற்றையும் விடாது எண்ணிப் பார்க்குமிடத்து; இடுகழங்கு தபுந - எண்ணு தற்குப் பெய்யும் கழங்கு முடிவறிந்து பயன்கூறமாட்டாது ஒழிதற்குக் காரண மானவனே; அடு போர்க் கொற்றவ - செய்கின்ற போர்களில் வெற்றியே பெறுவோனே; கொன் ஒன்று மருண்டனென் - நின் குணங்களுள் மிக்குத் தோன்றுவ தொன்றனைக் கண்டு அறிவு மருண்டேன்காண் என்றவாறு. மேலே கூறிய மாட்சிகள் பலவற்றையும் தொகுத்துப் பெயர்த்து முரைத்தார், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் குணஞ்செயல்கள் பலவும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கு நிற்கும் அவனது பொறைக் குணத்தைச் சிறப்பிக்கும் கருத்தினராதலின். சால்பு, நற்குணங்களால் நிறைதல். நாற்றிசையினும் உறையும் வேந்தர்களுள், குணநிறைவாலும் செங்கோன்மையாலும் இச்சேரமானின் மிக்காரும் ஒப்பாரும் இன்மையின், “மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்” எடுத் தோதினார். சால்பின் கண் செம்மையும் அடங்குமாயினும், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை யென்ற ஐந்தையுமே சிறப்பாகக் கொண்டிலங்குதலால் செம்மையை வேறு பிரித்தோதினார். இளமையும் சீறிய வன்மையுமுடைய களிற்று மருப்பின்கண் முத்துண்டா மென்ப வாகலின், “முத்துடை மருப்பின் மழகளி” றென்றார். மழகளி றாயினும் மதஞ்செறிந்து போர் வெறி மிக்குச் செருக்குதல் தோன்ற, “பிளிற” என்றார். கடுந்தார், மிக விரைந்து முன்னேறிச் செல்லும் தூசிப்படை. துய்த்தலை, முடிவிடம்; எல்லையுமாம். துவர் போக, கடை போக, முற்றவும் என்றபடி; “துவர முடித்த துகளறு முச்சி” (முருகு. 26) என்புழிப் போல. துவர் போகப் பொருது என ஒருசொல் வருவிக்க. பாணரும் பொருநரும் கூத்தரும் பிறருமாகிய இரவலர் சுற்றம், பொருது பெறும் அருங்கலம் வீரர் கொடுக்கப் பெறுதலின், “பெருங்கிளை யுவப்ப” என்றும், இரப்பவர் இன்முகங் காணு மளவும் ஈத்த வழியும் பெற்ற பொருள் குறையாமை தோன்ற “ஈத்தான் றானா விடனுடை வளன்” என்றும் கூறினார். துளங்கு குடி திருத்தல், செம்மையுடைமையின் பயனாகிய இறைமாட்சி. எல்லாம் என்றது, குணம் பலவும் எஞ்சாமற் றழீஇ நின்றது. இவனொடு பொரக் கருதும் பகைவேந்தர், இவனுடைய குணஞ் செயல்களை எண்ணி, தாம் பெறக் கருதும் வெற்றி குறித்துக் கழங்கிட்டு நோக்குமிடத்து, அவர்க்கு வெற்றி யுண்டாமெனக் காட்ட, அதனால் உளங்கொண் டெழுந்து முடிவில் வெற்றி பெறாது கழங்கு பொய்த்ததென் றெண்ணி யஞ்சி யொடுங்குகின்றார்க ளாதலால், “எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந” என்றார். தபுதற்குக் காரணமான வனைத் தபுநன் என்றார். இக்காலத்தே சிலவற்றை யெண்ணுபவர். தம் கைவிரலிட்டு எண்ணுவது போலப் பண்டைக்காலத்தே கழற்காய் கொண்டு எண்ணுதல் மரபு போலும். அதனால், எண்ணுதற் கிட்ட கழங்கினும் இவன் குணம் பலவாய் விரிந்து நிற்றலால் “இடுகழங்கு தபுந” என்றாரென்றுமாம். தபுந வென்பது பெயர்த் திரிசொல். பழையவுரைகாரர், `இடுகழங்கு தபுந வென்றது, இடுகழங்கும் அலகு தபுதற்குக் காரணமாக இருப்பவ னென்றவா’ றென்பர், வேந்தர் தீப்போலும் சினமுடைய ராதல் பற்றி, அவரைச் சேர்ந்தொழுகுவோர், “அகலாது அணுகாது தீக்காய்வார்” போல ஒழுகுப வாதலின், அவர்பால் பொறைக்குணம் காண்டல் அரிதென்பது பெறப்படும். படவே, அவர்பால் அது மிக்குத் தோன்றுமாயின் சான்றோர்க்கு வியப்பு மிகுமாகலின், “கொன்னொன்று மருண்டனென்” என்றார். இது பிறன்பால் தோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை. கொன், பெருமை. சினம் காரணமாகச் செய்யும் அடுபோர்க் கொற்றவ னாயினும், நின்பால் சினவாமைக் கேதுவாகிய பொறுமைக் குணம் மிக்கு நின்று என் அறிவை மருட்டுகின்ற தென்பார், “மருண்டனென்” என் றொழியாது “அடுபோர்க் கொற்றவ” என்றார். 10-17. நெடுமிடல்............... பெரிதே உரை : கொடு மிடல் துமிய - தான் செய்த கொடிய போர்த் தொழில் பயன்படாது கெடவே; நெடுமிடல் சாய - நெடு மிடலஞ்சி யென்பான் பட்டானாக; பெரு மலை யானையொடு - பெரிய மலைபோன்ற யானைப்படை கொண்டு சென்று; புலம் கெட இறுத்து - அவனாட்டு விளைபுலங்கள் கெடுமாறு தங்கி; தடந்தாள் நாரை - பெரிய கால்களையுடைய நாரைகள்; படிந்து இரை கவரும் - கழனி நீர்க்குட் படிந்து தமக்குரிய இரையாகிய மீன்களைக் கவர்ந் துண்ணும்; முடந்தை நெல்லின் கழை யமல் கழனி - வளைந்த கதிர்களையுடைய நெல்லின் மூங்கில் போலும் தாள்கள் செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளையுள் நாடு - தப்பாத விளைபயனையுடைய நாட்டை; அகப் படுத்து - தன் னடிப்படுத்தி; வையா மாலையர் - ஒருபொருளாக மதிக்கலாகாத கீழ்மைத் தன்மையுடையவர் களும்; வசையுநர் - நாளும் வசையே மொழிபவர்களுமாகிய; கறுத்த - நின்னால் வெகுளப்பட்ட; பகைவர் தேஎத் தாயினும் - பகைவரிடத்தே யிருந்த காலையும்; சினவா யாகுதல் - சினங் கொள்ளாது நீ பொறையே பூண்டொழுகுதல்; இறும்பூது பெரிது - காணும்போதெல்லாம் எனக்குண்டாகும் வியப்பு மிகுகின்றது என்றவாறு. நெடுமிடல் என்பது நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயர். இவன் அதியமான் நெடுமா னஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளஞ் சிறந்ததாகும். இப் பாட்டால் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் நெடுமிட லஞ்சியை வென்று அவனது நாட்டை அகப்படுத்திக் கொண்ட வரலாறு குறிக்கப்படுவது காண்க. நீடூர் கிழவனான எவ்வி யென்பவனது ஏவல்கேளாது அவனை யெதிர்ந்த பசும்பூட்பொருந்தலர் என்பாரை, இந்நெடு மிட லஞ்சி யென்பான் அரிமணவாயில் உறத்தூரின்கண் வென்றானென ஆசிரியர் பரணர் (அகம் 266) கூறுகின்றார். நெடுமிடல் சாய வென்றும், கொடுமிடல் துமிய வென்றும் பிரித்தோதியதால், கொடு மிடலை அவன் போர்வினைக் கேற்றப் பட்டது. கொடுமிடல் என்புழி மிடல், வலி. அதனாற் செய்யப் படுதலின், போர் வினை மிடலாயிற்று. பழையவுரையும், “மிடல் என்றது வலி” யென்றும், “என்றது வலியாற் செய்யப்படும் போரினை” யென்றும் கூறிற்று. யானை புக்க புலம் அழிவது ஒருதலையாதலின், இச் சேரமான் யானைப் படை கொண்டு சென்று தங்கின வளவிலே புலம் கெட்டமை தோன்ற “பெருமலை யானையொடு புலங்கெட விறுத்து” என்றார். யானை புக்கவழி, அதன் கை செய்யும் அழிவினும் “கால பெரிது கெடுக்கும்” (புறம். 184) என வறிக. மிக உயர்ந்த நாரைகள் என்றற்குத் “தடந்தா ணாரை” யென்றமையின், அவை நெல் நின்ற கழனிக்குள் இனிது சென்று இரை கவரும் என்றற்குப் “படிந்திரை கவரும்” என்றும், நெற்றாளின் உயர்ச்சி தோன்ற, “நெல்லின் கழையமல் கழனி” யென்றும் கூறினார். வளைந்த கதிர்களுடன் விளைந்து நிற்கும் நெல், தன் தாளில் நின்ற நீரிற் படிந்து நாரைகள் இரை கவரச் செய்யும் என்றதனால், கொடுமிடல் துமிப்புண்டு நெடுமிடலஞ்சி சாய்ந்தானாக, அவன்கீழ் உள்ள நாட்டகத்துப் பொருளை நின் படைவீரர் புகுந்து திறையாகப் பெறுகின்றனர் என உள்ளுறுத் துரைப்பது காண்க. முடம், முடந்தை யென வந்தது; பிறரும், “முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 29) என்பது காண்க. கழை போலும் தாளைக் கழை யென்றார்; பாவை போல் வாளைப் பாவை யென்பது போல. கதிர்களின் பொறை யாற்றாது நெல்லினது தாள் வளைதலின், முடந்தையைக் கழைக் கேற்றுவர் பழையவுரைகாரர். இனிப் பழையவுரைகாரர், “முடமாகிய கழை யென இருபெயரொட்டு” என்றும், “நெல்லின் கழை, நெல்லினது கழை” யென்றும் கூறுவர். முடச்சினை முடக்கொம்பு என்றாற் போல, இது பண்புத் தொகையாமன்றி இருபெயரொட்டாகாமை யறிக. அவர், “நெற்றாளை அதன் பருமையாலே மூங்கிலோடு ஒப்புமைபற்றிக் கழை யென்று பெயர் கொடுத்த சிறப்பான் இதற்குக் கழையமல் கழனி யென்று பெயராயிற்று” என்பர். இந் நாட்டைச் சேரமான் அகப்படுத்துக் கொண்டதற்குக் காரணம் இது வென்பார், “பிழையா விளையுள்” எனச் சிறப் பித்தார். வைத்தல் நன்கு மதித்தலாகலின், வையா மாலையர் என்றது ஒரு பொருளாக மதிக்கக்கூடிய தன்மையில்லாதவ ரென்னும் பொருட்டாயிற்று. பழையவுரை, “ஒன்றில் வகை படாத இயல்பை யுடையவர்” என்று கூறும். நன்மதிப்பும் இசையு முடையராயின், பகை வேந்தர், நின் சால்பும் செம்மையும் பிற மாண்புகளும் அறிந்த மாத்திரையே பகைமை நீங்கி நகைவராய்க் கூடி மகிழ்வராகலின் நின் பகைவர் வையா மாலையரும் வசையு நரு மாயினர் என்கின்றார்; எனவே, வசையுநராவர் நாளும் பிற வேந்தரை வசை கூறுதலே தொழிலாகவுடைய ரென்பது பெறப்படும். வசையுநர்: பெயர்த்திரிசொல். கறுத்தல், சேரமான் வினையாதலின், கறுத்த வென்னும் பெயரெச்சம் செயப்பாட்டு வினைப்பொருட்டாயிற்று. இனி, பழையவுரை காரர் வசையுநர்க் கறுத்த பகைவர் எனக்கொண்டு, “தாங்கள் பகைவரொடு செற்றங் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டு மளவினும் ஒழியாது அவர்களை அக் கடப்பாடன்றி வெகுண்டிருத்தலே தொழிலாக வுடைய பகைவ ரென்றவா” றென்றும், “இனி, ககரவொற்றின்றி வசையுநர் கறுத்த என்பது பாடமாயின், அதனை வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுத்திரி சொல்லாக்கி, வசை சொல்லு தலை யுடையராய் வெகுண்ட பகைவரென் றுரைப்பாருமுள” ரென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, போர்மிகு குருசில், நீ பல மாண்டனை; நின் மாண்பே யன்றிச் செய்யும் செம்மையும் ஈத்தான் றானா விடனுடை வளனும், துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றி யும் ஆகிய எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந; அடு போர்க் கொற்றவ, கொன்னொன்று மருண்டனென்; தன் கொடு மிடல் துமிதலால் நெடுமிடலஞ்சி யென்பான் சாய, யானை யொடு அவன் புலங்கெட இறுத்து, பிழையா விளையுட்டாகிய நாடு அகப்படுத்து, பகைவர் தேஎத்தாயினும் சினவாயாயினை; இவ்வாறு நீ சினவா யாகுதலால் உண்டாகும் இறும்பூது பெரிது என்பதாம். இக் கருத்தையே பழையவுரைகாரர், “குருசில், நீ பல குணங்களும் மாட்சிமைப்பட்டனை; அப் பல குணங்களும் எண்ணப்புகின், இடு கழங்கு தபும் எல்லைய வாயிருக்கும்; கொற்றவ, பல குணத்தினும் ஒன்றைக் கொன்னே யான் வியந்தேன்; அப் பலவற்றுள்ளும் வியப்பான குணம் யாதெனின், பகைவர் செய்த குற்றத்திற்குத் தண்டமாக அவர் நாட்டை அகப்படுத்திக்கொண்டு வையா மாலையராகிய வசையுநர்க் கறுத்த அப் பகைவரிடத்தாயினும் சினவா தொழிகின்ற பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகாநின்றது என வினைமுடிவு செய்க” என்பர். இதனாற் சொல்லியது, அவற்குள்ள பல குணங்களையும் உடனெண்ணிப் புகழ்ந்து அவற்றுட் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்ந்தவாறாயிற்று. 3. வரம்பில் வெள்ளம் 1. இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாள் கடிமரத்தாற் களிறணைத்து நெடுநீர துறை கலங்க 5. மூழ்த்திறுத்த வியன்றானையொடு புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் 10. காரிடி யுருமி னுரறு முரசிற் கால்வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : வரம்பில் வெள்ளம் 1-5. இறும்பூதால்......................... வியன்றானையொடு உரை : கொடித்தேர் அண்ணல் - கொடியணிந்த தேர்களை யுடைய அரசே; இறும்பூது பெரிது - நின் பொறையுடைமை கண்டவழிக் கொண்ட வியப்பினும் பெரு வியப்பாக வுளது; வடி மணி அணைத்த - வடித்த ஓசையினையுடைய மணியைப் பக்கத்தே கட்டப்பெற்ற; பணை மருள் நோன்றாள் - பணை போன்ற வலிய தாள்களையுடைய; களிறு கடி மரத்தான் அணைத்து - யானைகளைக் காவல்மரத்தோடே பிணித்து; நெடு நீர துறை கலங்க - கலங்காத மிக்க நீரையுடைய துறைகள் கலங்கும்படி; மூழ்த்து இறுத்த வியன்தானையொடு - பலவாய்த் திரண்டு மொய்த்து விரைய முன்னேறித் தங்கும் இயல்பிற்றாகிய பெரிய தூசிப் படையொடு கூடிய என்றவாறு. இறும்பூது பெரிது என மீளவுங் கூறியது, பெரிதுற்ற முன்னைய இறும்பூது, போரெதிர் வேந்தர் பொராது அஞ்சி யொருவுதலால், மிகுதல் தோன்ற நின்றது. எப்போதும் போர்ச் செலவுகுறித்துப் பண்ணமைந்து நிற்குமாறு கூறுவார், “வடிமணி யணைத்த” என்றார். செலவில்வழி யானை மணி யணைப் புண்ணாது வறிதிருக்கு மாதலாலும், நீராடற்குச் செல்ல வேண்டியவழி முன்னே பறை யறைந்து செல்பவாதலாலும், உலாவரல் முதலிய செலவின்கண் கடுமை வேண்டாமையின் இருமருங்கும் கிடந்து இரட்டுமாறு நால விடுவ ராதலாலும் இவ்வாறு “அணைத்த” எனக் கூறினார் என்றுணர்க. அணைத்தல், பிணித்தல். பணை, உரல் போல்வதொரு முரசு வகை; ஆனுருபு ஒடுவின் பொருட்டு. யானையைக் கடிமரத்தோடு பிணித்தல் பண்டையோர் மரபு; “ஒளிறுமுகத் தேந்திய வீங்கு தொடி மருப்பிற், களிறு கடிமரஞ் சேரா” (புறம். 336) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர : பெயரெச்சக் குறிப்பு; “சினைய சிறுமீன்” (ஐங். 1) என்றாற் போல. கடிமரத்திற் களிறு பிணித்தலும் நீர்த்துறையைச் சேறாகக் கலக்கி யழித்தலும் பகைவேந்தர் செயலாகும். மூழ்த்தல், மொய்த்து வளைத்தல்; “முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர் மூசி” (பெருங். 1, 56; 49) எனப் பிறரும் இதனை வழங்குதல் காண்க. சென்றிறுத்தலை விரைந்து செய்யுந் திட்பமுடைமை தோன்ற, இறுத்த வென இறந்த காலத்தாற் கூறினார். ஈண்டுக் கூறியன தூசிப்படையின் செயல் களாதலின், வியன்தானை யென்றது தூசிப்படை யாயிற்று. பழைய வுரைகாரரும், “வியன்றானை யென்றது, பகைவர் நாட் டெல்லையில் முற்பாடு சென்று விட்ட தூசிப் பெரும் படையை” என்றே கூறுவர். நோன்றாட் களிறணைத்து, துறை கலங்க மூழ்த் திறுத்த வியன்றானை யென வியையும். 6-12. புலங்கெட......... நின்னே. உரை : புலங் கெட நெரிதரும் - தங்கிய புலன்கள் விளைபயன் கெட்டழியுமாறு செறிந்து தங்கும்; வரம்பில் வெள்ளம் - கரையில்லாத கடல் போன்றதும்; வாள் மதிலாக - வாட்படையே மதிலாகவும்; வேல் மிளை உயர்த்து - வேற்படையே காவற் காடாகவும் நிற்ப; வில் விசை உமிழ்ந்த அம்பு வைம்முள் - வில்லினின்று விசையுறத் தொடுக்கப்படும் அம்புகள் கூரிய முள்வேலியாகவும்; வளைஇய செவ்வாய் எஃகம் அகழின் - தானையைச் சூழநின்ற சிவந்த வாயையுடைய பிற படைக் கருவிகள் அகழியாகவும்; உரறு முரசின் காரிடி யுருமின் - முழங்குகின்ற முரசங்கள் கார்காலத்து இடிக்கும் இடியேறாகவும்; வழங்கு கால் ஆர் எயில் - நடக்கின்ற காலாட்கள் வெல்லுதற் கரிய அரணாகவும் கொண்ட முழு முத லரணம் போன்றது மாகிய நின் படை; கருதின் - பகைமேற் செல்லக் கருதினால்; போர் எதிர் வேந்தர் - அதன் போரை எதிரேற்றுப் பொர வரும் பகைவேந்தர்; நின் - நின்னையும் நின் படையையும்; ஒரூஉப - கண்டமாத்திரையே அஞ்சி யுளமழிந்து பொர நினையாது புறந்தந்து ஓடுவர் என்றவாறு. தூசிப்படையை “வியன் றானையொடு” எனப் பிரித் தோதினாராகலின், வரம்பில் வெள்ள மென்றது, பின்னணிப் பெரும்படையாயிற்று. தானை சென்று பகைப்புலத்தே தங்குங்கால், அப் புலங்களின் விளை நிலத்தை யெரியூட்டிக் கெடுத்தும், நீர்நிலைகளைக் கரையுடைத்துச் சிதைத்தும் அழிப்ப ராதலின், “புலங்கெட நெரி தரும்” என்றார். “கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப், பெரும்புனல் வாய்திறந்த” பின்னும்” (பு.வெ. 56) என்று பிறரும் கூறுதல் காண்க. படையும் அரசற்கு அரணாகும் சிறப்புடைய தாகலின், வாள், வேல், வில் எஃகம் முதலியவற்றை எயிற் குறுப்பாகிய மதிலும் மிளையும் வேலியும் அகழியுமாக உருவகம் செய்தார். “படைவெள்ளத்தை ஆரெயி லென்றது, அரசன் தனக்கு ஆரெயில் போல அரணாய் நிற்றலின் எனக் கொள்க; இனிக் கால் வழங்கா ரெயில் எனக் காற்றல்லது வழங்கா ஆரெயில் என்று பகைவர் மதிலாக்கி, அதனை வரம்பில் வெள்ளம் கொள்ளக் கருதினென்றுரைப் பாரு முளர்” என்பது பழையவுரை. வரம்பில் வெள்ளமென்றும் ஆரெயி லென்றும் நின்றன பின்னணிப் பெரும் படையையே சுட்டி நின்றன. கடல் கரையுடையதாகலின், அதனின் நீக்கற்கு “வரம்பில் வெள்ள” மென்றார். அதுபோல் அளக்கலாகாப் பெருமை யுடைமையும் உடன்தோன்ற நிற்றலின், இதனானே இப் பாட்டிற்குப் பெயர மைத்தனர். இனிப் பழையவுரைகாரர், “வரம்பில் வெள்ள மென்றது, அதனோடு கூடி நாட்டுள்ளுஞ் சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை; கரையையுடைய கடலை வரம்புடைய வெள்ள மென் றாக்கி, இதனை வரம்பில் வெள்ளமென்று கூறிய சிறப்பான் இதற்கு வரம்பில் வெள்ள மென்று பெயராயிற்று” என்பர். மேலும், அவர், “வெள்ளம் என்பதில் மகர வொற்றுக் கெடாமையான் இருபெயரொட்டுப் பண்புத் தொகையன்றி ஒருபொருளாக இருபெயர் நின்றதாகக் கொள்க” என வுரைப்பர். என்றது. வரம்பில் வெள்ளம் என்பதும், ஆரெயில் என்பதும் ஒருபொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி என்றவாறாம். வரம்பில் வெள்ள மென்றது, தானையின் தொகை மிகுதியும் பெருமையும் குறித்துப் பொதுப்பட நிற்ப, ஆரெயி லுருவகம் அதன் உறுப்புக்கள் அரணாம் சிறப்பை விளக்கி நிற்கிறது. செயவெனெச்சம் செய்தென நின்றது. பழையவுரையும், “உயர்த் தென்பதனை உயர்த்தவெனத் திரித்து, அதனை யெஃகம் வளைஇய வென்ப தனோடு முடிக்க” என்று கூறும். போர் முனைக்குச் செல்லாது ஒழிந்திருக்கும் ஏனைக் குந்தம், தோமரம் முதலிய படைத் திரளைப் பொதுவாய்ச் “செவ்வா யெஃகம்” என்றொழிந்தார். இன், அல்வழிக்கண் வந்தன. பழையவுரைகாரர், “வாள் மதிலாக வென்று வைத்துப் பின்னை ஆரெயி லென்றது, வாண்மதிலைச் சூழ்தலையுடைய ஆராகிய எயிலினை யெனக் கொள்க; ஈண்டு, ஆராவது காலாள் வழங்கிச் செல்கின்ற படையின் திரட்சி” என்றும், “இனி வரம்பில் வெள்ளமானது வாள் மதிலாக வேல்மிளை யுயர்த்துக் கால் வழங்கு ஆரெயிலாதலைக் கருதி னென்றலும் ஒன்று” என்றும், கூறுவர். இனி, “ஆரெயிலைப் பகைவரது படைநிலையாக்கி, அதனை நின் வரம்பில் வெள்ள மாகிய தானை கொள்ளக் கருதின் என்று இயைத் துரைப்பினுமாம்” என்பர். நின் னென்புழி, ஐயுருபு தொக்கது. இதுகாறும் கூறியது, கொடித்தே ரண்ணலே முன்னைய இறும்பூதினும் இது பெரிதாக உளது; யாங்ஙனமெனின், வியன் றானையொடு வரம்பில் வெள்ளம் போன்றதும் ஆரெயில் போன்றதுமாகிய நின் பின்னணிப் பெரும்படை மேற்சென்று பகைவர்பால் வென்றி கொள்ளக் கருதின், போரெதிரும் பகைவேந்தர் கண்ட மாத்திரையே யூக்க மிழந்து அஞ்சி நடுங்கி நீங்கி யோடுகின்றன ராகலான் என்றவாறாம். பழையவுரைகாரர், “அண்ணல், இது பெரிதும் இறும்பூதாயிருந்தது; யாதெனின், வரம்பில் வெள்ளம் கால் வழங் காரெயிவெனச் சொல்லப் பட்ட நின் படை, போர்செய்யக் கருதின் நின்னொடு போரெதிர்ந்த வேந்தர் பொரமாட்டாது நின்னை நீங்குவர்; இஃது அது வென வினைமுடிவு செய்க” என்றும், “இதனால் அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்” றென்றும் கூறுவர். “வரம்பில் வெள்ளம் கருதி னென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையான், வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. கடிமரத்தானென்றது முதலாக மூன்றடி வஞ்சியடியாக வந்தமையான் வஞ்சித் தூக்கு மாயிற்று.” 4. ஒண்பொறிக் கழற்கால் 1. ஒரூஉப நின்னை யொருபெரு வேந்தே ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் இருநிலங் தோயும் விரிநூ லறுவையர் செவ்வுளைய மாவூர்ந்து 5. நெடுங்கொடிய தேர்மிசையும் ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும் மன்னிலத் தமைந்த......... மாறாமைந்தர் மாறுநிலை தேய 10. முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ அரைசு படக் கடக்கு மாற்றற் புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே. துறை : தும்பை யரவம் வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : ஒண்பொறிக் கழற்கால் 1-3. ஒரூஉப ............... அறுவையர் உரை : ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெரிய வேந்தே; ஓடாப் பூட்கை - போரிற் புறங் கொடாத கோட்பாட்டையும்; ஒண் பொறிக் கழற்கால் - ஒள்ளிய பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த கால்களையும்; இரு நிலம் தோயும் - பெரிய நிலம் வரையில் தொங்குகின்ற; விரி நூல் அறுவையர் - விரிந்த நூலான் இயன்ற ஆடையினையுமுடைய பகைவர்; நின்னை ஒரூஉப - நின்னை அஞ்சி நீங்குவர்காண் என்றவாறு. பிறர்துணை வேண்டாதே தானே தன் படையைக்கொண்டு சென்று தன்னைப் போரில் எதிர்ந்தவரைப் பொருது வென்றி யெய்தும் சிறப்புடையனாதல் பற்றி, “ஒரு பெரு வேந்தே” என்றார். மானமும் வலியுமுடைய வீரர்க்குப் புறக்கொடை மாசு தருவதாகலானும், சேரமான் மாசுடையாரோடு பொரா னாகலானும் பகைவேந்தரை “ஓடாப் பூட்கை” யென்றும், “ஒண்பொறிக் கழற்கால்” என்றும் சிறப்பித் துரைக்கின்றார். போரில் செய்த அரிய செயல்களைத் தம் கழலில் பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபாதலின், அம் மரபு மாறா மாண்புடைமை தோன்ற, “ஒண்பொறிக் கழற்கால்” என்றார். ஓடாமையும், கழலணியப்படுதலும் சிறப்புடைச் செயலாக வுடையன வீரர் கால்களாதலால், காலையே விதந் தோதினார். ஓடாப் பூட்கையாலும் ஒண்பொறி பொறித்த கழலாலும் பெருமை யுடையராதலின், உடுக்கும் ஆடையை நிலந்தோய உடுக்கின்றன ரென்பார், “இரு நிலந்தோயும் விரிநூ லறுவையர்” என்றார். கொங்கு வேளிரும், “நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர், தானை மடக்கா மான மாந்தர்” (பெருங். 1, 35 : 64-5) என்று கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “ஒண்பொறிக் கழற்கா லென்றது, தாங்கள் செய்த அரிய போர்த் தொழில் களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்கா லென்றவா” றென்றும். “இச் சிறப்பான் இதற்கு ஒண்பொறிக் கழற்கா லென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். கழல்செய்த கம்மியர் அமைத்த பொறிகள் போலாது போரிடையே புகழ் விளைத்த அரிய செய்திகள் பொறித்த பொறியாதல் பற்றி “ஒண் பொறி” யென்றாரென வறிக. ஒரு பெருவேந்தே, பூட்கையும் கழற்காலும் விரிநூ லறுவையுமுடைய பகைவர் நின்னை யொரூஉப என இயைத்து முடிக்க. பெருவேந் தென்புழிப் பெருமை, பொருளாலும் படையாலுமே யன்றி, அறிவாலும் ஆண்மை யாலுமாகிய ஆற்றலின் மிகுதி குறித்து நின்ற தென்க; இனி மான மாந்தராகிய பகைவர் தன்னைக் கண்டு அஞ்சி ஒருவும் பெருமையுடைமை பற்றிச் சேரமானை, பெருவேந் தென்றா ரென்றுமாம். 4-12. செவ்வுளைய.............. யோம்பன்மாறே. உரை : மாறா மைந்தர் - போர்த்தொழிலில் கூறப்படும் அறத்துறை மாறாத வீரரது; மாறு நிலை தேய - வலியானது கெடுமாறு; முரைசுடைப் பெருஞ் சமம் ததைய - முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருக்கியவழி; ஆர்ப்பு எழ - பல்வகைப் படையிடத்தும் ஆரவார முண்டாக; அரைசு படக் கடக்கும் ஆற்றல் - பகை மன்னர் தம் வலி முற்றவும் அழியப் பொருது வென்றி பெறும் ஆற்றலால்; புரை சால் மைந்த - உயர்வமைந்த வலியினை யுடையோனே; செவ் வுளைய மா ஊர்ந்தும் - சிவந்த பிடரியினையுடைய குதிரைமீ திவர்ந்தும்; நெடுங் கொடிய தேர் மிசையும் - நீண்ட கொடியினையுடைய தேர்மீ தேறியும்; ஓடை விளங்கும் உருகெழு புகர் நுதல் - முகபடாம் அணிந்து விளங்கும் கண்டார்க்கு உட்குப் பயக்கும் புள்ளி பொருந்திய நெற்றி யினையுடைய; பொன்னணி யானையின் முரண்சேர் எருத்தினும் - பொன்னரிமாலை யணிந்த யானை யினுடைய வலிமை பொருந்திய கழுத்தின்மீதிருந்தும்; மன் நிலத்து - நிலைபெற்ற நிலத்திடத்தும் ; அமைந்த........ பொருந்திப் போருடற்றுதற்கண்; நீ ஓம்பல் மாறு - நீ நின் தானையைப் பாதுகாப்பதனால் என்றவாறு. மைந்தர் மாறு நிலை தேய, சமம் ததைய, ஆர்ப்பெழ, அரைசுபடக் கடக்கும் ஆற்றலாற் புரைசான்ற மைந்த, நீ நின் தானையை, மா வூர்ந்தும், தேர்மிசை யேறியும், யானை யெருத்தத் திருந்தும், நிலத்திடை நின்றும் ஆங்காங்கு நின்று பொரும் சான்றோர்க்கு மெய்ம்மறையாய் நின்று ஓம்புகின்றா யாதலால், அறுவையராகிய பகைவர் நின்னை ஒரூஉப என முடிக்க. வேந்தர்களைச் சான்றோர் மெய்ம்மறை (பதிற். 14 : 12) என்பதும் இக் கருத்தே பற்றியென வறிக. போர் குறித்து மேல் வரு வோர்க்கும் அவரை எதிரூன்றுவோர்க்கும் ஒருவர்க் கொருவரது வலி நிலைகெடச் செய்வது போர்க்களத் துட்கோளாதலின், “மாறா மைந்தர் மாறுநிலை தேய” எனப் பொதுப்படக் கூறினார். ததைதல், நெருங்குதல். அரைசுபடக் கடக்கும் ஆற்றலுடைய வேந்தர்க்கு உயர்வு உண்டாதல் ஒருதலையாதலின், “ஆற்றற் புரைசால் மைந்த” என்றார். குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை, காலாட்படை எனப் படை நால்வகைத்தாதலின், அந் நால்வகை யிடத்தும் உண்டாகும் தளர்ச்சியினைப் போக்குவான் பிற தானைத் தலைவரை யேவாது தானே நேரிற் சென்று ஓம்புதலை, மாவூர்ந்தும் தேரிவர்ந்தும் யானை யேறியும் நிலத்து நின்றும், “நீ ஓம்பன் மாறே” என்றார். பழையவுரை காரரும், “மாவூர்ந்து அரைசுபடக் கடக்கும் ஆற்றலையுடைய புரைசால் மைந்த, அவ் வாற்றலிடத்து வரும் குறைகளுக்குப் பிறரை யேவாது அவற்றை நீயே பாதுகாத்துச் செய்தலால் ஒரூஉப அறுவையர்” என்பர். இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “மாற்றார்நாடு கோடன் முதலாயின வன்றி வென்றி கோடலே கூறினமையால் துறை தும்பையாய், ஒரூஉப வெனப் படையெழுச்சி மாத்திரமே கூறினமையான் அதனுள் அரவ மாயிற்று. தும்பையாவது, “மைந்து பொருளாக வந்த வேந் தனைச், சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப” (தொல். புறத். 15) என்றார் ஆசிரியர் தொல்காப்பியர். பகைவரை மாறா மைந்தர் என்றது, மைந்து பொருளாக வந்தவாறாயிற்று; அரைசுபடக் கடக்கும் ஆற்றலால் மாவூர்தல் முதலியவற்றால் ஓம்புதல் சென்று தலையழித்தலாயிற்று. “செவ் வுளைய” வென்பது முதலாக இரண்டும் வஞ்சியடி யால் வந்தமையான் வஞ்சித்தூக்கு மாயிற்று. 5. மெய்யாடு பறந்தலை 1. புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே உரைசான் றனவாற் பெருமைநின் வென்றி இருங்களிற்றி யானை யிலங்குவான் மருப்பொடு நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத் 5. தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத் தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை அந்தி மாலை விசும்புகண் டன்ன செஞ்சுடர் கொண்ட குருதிமன் றத்துப் பேஎ யாடும் வெல்போர் 10. வீயா யாணர் நின்வயி னானே. துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : அது தூக்கு : செந்தூக்கு பெயர் : மெய்யாடு பறந்தலை 3-6. இருங்களிற் றியானை............. பறந்தலை உரை : இருங்களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு - பெரிய களிற்றியானைகளின் விளங்குகின்ற மருப்புக்களுடன்; நெடுந்தேர்த் திகிரி தாய - நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப்பரந்து கிடக்கும்; வியன் களத்து - அகன்ற போர்க்களத்தில் - அளகுடைச் சேவல் கிளை - பெடையையுடைய சேவற்பருந்தினினம்; புகா ஆர - தசையாகிய இரையை யுண்ண; தலை துமிந்தெஞ்சிய மெய்யாடு பறந்தலை - தலை துணிக்கப்படவே எஞ்சிய கவந்தம் எழுந்தாடும் போர்க்களத்துப் பறந்தலை என்றவாறு. யானையுந் தேரும் பட்டுக் கிடத்தலின், அவற்றின் மருப்பும் திகிரியும் போர்க்களத்திற் சிதறிக் கிடக்குமாறு தோன்ற, “மருப்பொடு திகிரி தாய வியன்களத்” தென்றார். மருப்பையும் திகிரியையும் களத்தையும் தனித்தனியே சிறப்பித் தோதியது போரினது பெருமையும் கடுமையுந் தோற்றுதற்கு. ஆங்கே பட்ட குதிரை, யானை, வீரர்களின் உடல் துணிகள் பருந்தினத்துக்கு இரையாகின்றன வென்பதாம். துமிந்து; வினையெச்சத் திரிவு; “உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய யா” என்புழிப் போல. பழையவுரைகாரர் “வியன்கள மென்றது ஒன்றான போர்க்களப் பரப்பை” யென்றும், “அளகுடைச் சேவலென்றது, பெடையொடு கூடின பருந்தின் சேவலை” யென்றும், “பறந்தலை யென்றது, அப்பெரும் பரப்பின் உட்களத்தை” யென்றும் கூறுவர். மேலும், “குறையுட லெழுந்தாடுவது ஒரு பெயருடையார் பலர் பட்டவழி யன்றே; அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பான் இதற்கு மெய்யாடு பறந்தலை என்று பெயராயிற்று” என்று அவர் கூறுவர். 7-10. அந்திமாலை............ நின்வயினானே உரை : அந்தி மாலை விசும்பு கண் டன்ன - அந்திமாலைக் காலத்தில் வானத்தைக் கண்டாற் போன்ற; செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்து - சிவந்த ஒளியையுடைய குருதி படிந்த போர்க்களத்து நடுவிடத்தே; பேஎய் ஆடும் வெல் போர் வீயா யாணர் - பேய்கள் எழுந்தாடுகின்ற வெல்லும் போரிடத்துக் கெடாத புதுமையி னையுடைய; நின் வயினான் - நின்னிடத்தில் என்றவாறு. குருதி படிந்த மன்றம், அந்திமாலைப்போதிற் றோன்றும் செக்கர் வானம் போல்கின்ற தென்பார், “அந்திமாலை விசும்புகண் டன்ன” வென்றார். இடையறாது பெருகும் குருதியின் நிறம் ஒள்ளிதாய்த் தோன்றலின், “செஞ்சுடர் கொண்ட குருதி” என்றார்; “பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன, குருதியா றாவது கொல்” (பு.வெ.மா. 70) எனப் பிறரும் கூறுதல் காண்க. மன்று, போர்க்களத்தின் நடுவிடம். பழையவுரைகாரர், “மன்றென்றது உட்களத்தின் நடுவை; அது மன்று போறலின் மன்றெனப்பட்ட” தென்றும் கூறுவர். போரில் வெற்றியெய்துந் தோறும் புதிய புதிய செல்வம் இடையறாது வருதலால் “வெல்போர் வீயா யாணர்” என்றார். பழைய வுரைகாரர், “போரையே செல்வமாகக் கொண்டு, வெல்போராகிய இடையறாது வருகின்ற செல்வம்” என்பர். செல்வத்துக்குப் போர் வருவாயாதலின், செல்வத்தைப் போர் என்றார். நின் வயினான: ஆனும் அகரமும் அசை. 1-2. புரைசால்............ நின்வென்றி உரை : புரை சால் மைந்த - உயர்ச்சி யமைந்த வேந்தே; நீ ஓம்பல் மாறு - படையழிவு உண்டாகாவாறு நீ நின் தானையை நன்கு பாதுகாத்தலால்; நின் வென்றி பெருமை - உன்னுடைய வென்றிகளும் பொருளும் படையும்; உரை சான்றன - சான்றோர் புகழும் புகழமைந்தன என்றவாறு. பிறரைத் தனக்கு மெய்ம்மறையாகக் கொள்ளாது, பிற சான்றோர்க்குத் தான் மெய்யம்மறையாய் நின்று வென்றி யெய்தித் தன் பெருமைகளை நிலைநாட்டுகின்றா னென்பது தோன்ற, “நின் வயின் நின் வென்றி பெருமை உரை சான்றன” என்றார். “நின் வென்றி பெருமை” என்றவர் மேலும் “நின் வயினான” என வற்புறுத்தலின், உரைசான்ற வென்றியும் பெருமைகளும் பிறரிடத்தின்றி நின்னிடத்தே யுளவாயின என்றாராயிற்று. பெருமை நின் வென்றி யென்பதனை, நின் வென்றி பெருமையென இயைத்து உம்மைத்தொகையாகக் கொள்க. பெருமை, பொருளும் படையும் என்ற இரண்டன் பெருமை மேற்று. இனிப் பழையவுரைகாரர், நின் வென்றி பெருமையென வியைத்து, “நின் வென்றிகளின் பெருமை” என்பர். இதுகாறும் கூறியது: மருப்பொடு திகிரி தாய வியன் களத்துப் பறந்தலையது மன்றத்தின்கண் பேஎய் ஆடும் வெல் போர் வீயா யாணர் நின்வயின், புரைசால் மைந்த, நீ யோம்பல் மாறு, நின் வென்றி பெருமை உரைசான்றன என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “மைந்த, நின் படையழிவு படாமை நீ யோம்புவினை செய்தமையானே நின் வென்றிகளின் பெருமை பிறரிடத்தின்றி நின்னிடத்தே புகழ்ச்சி யமைந்தன என வினை முடிவு செய்க” என்பர். இதனாற் சொல்லியது; அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று. உரை சான்றன நின் வென்றியெனக் கூறியமையான் வாகைத்துறைப் பாடா ணாயிற்று. 6. வாண்மயங்கு கடுந்தார் 1. வீயா யாணர் நின்வயி னானே தாவா தாகு மலிபெறு வயவே மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று 5. பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன் யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார் மாவு மாக்களும் படுபிண முணீஇயர் பொறித்த போலும் புள்ளி யெருத்திற் புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல் 10. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந் துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக் குருதிச் செம்புன லொழுகச் செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. துறை : களவழி வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : வாண்மயங்கு கடுந்தார் 1-2. வீயா........... வயவே உரை : வீயா யாணர் - ஒழியாத புது வருவாயினையுடைய; வின்வயின் - நின்னிடத்தே; மலிபெறு வயவு - மிகுதி பெற்ற வலியானது; தாவா தாகும் - கெடாது நிலைபெறுவதாகும் என்றவாறு. வலி நிலைபெற்றது காரணமாகச் சேரமான் செய்த போர்த்திறத்தைப் பின்னர்க் கூறுகின்றா ராதலின் முன்னர், “தாவா தாகும் மலிபெறு வயவே” யென்றார். மலி பெறு வயவினை வீயா யாணரால் நன்குணருமாறு தோன்ற, அதனை முன்னே யெடுத்து மொழிந்தார். மலிதல் மிகுதல். வய வென்னும் உரிச்சொல் பெயராயிற்று. 3-4. மல்லல்....... தலைச் சென்று உரை : மல்லல் உள்ளமொடு - வெற்றிவளம் சிறந்த மன வெழுச்சியால்; செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று - போரில் மேம்பட்ட வலி பொருந்திய வீரர்களுடனே கூடிச் சென்று; வம்பு அமர் கடந்து - பகைவர் புதுமுறை புணர்த்துச் செய்த போர்களை வஞ்சியாது பொருது வென்று என்றவாறு. உள்ளமொடு மறவரொடு தலைச்சென்று கடந்து என இயையும். வெல்போர், வீயா யாணர் பெறுதற்கு ஏதுவாத லாலும், அவ் வீயா யாணரால் வளவிய வூக்கம் கிளர்ந் தெழலாலும், “மல்லல் உள்ளமொடு” எனச் சிறப்பித்தார். உள்ளமொடு என்புழி ஒடுவுருபு, ஆனுருபின் பொருட்டு. பல போர்களையும் பல காலங்களிற் பொருது தமது வலியினை நிலைநாட்டின வீரர் என்றற்கு, “செருமிகு முன்பின் மறவர்” என்றார். தொன்றுதொட்டு வரும் முறையிற் போர் செய்து பயின்றாரை வேறற்குப் பகைவர் புது முறைகளைப் புணர்த்துப் போருடற்றக் கருதுவது இயல்பே; ஆயினும், இவனுடைய வீரர் பழைமையிற் பழைமையும் புதுமையிற் புதுமையுமாகிய முறை யமைத்துப் பொரும் வித்தகமும், பொருமிடத்து வஞ்சியாமை யும் உடைய ரென்பதற்கு “வம்பமர் கடந்து” என்று குறித்தார். வம்பம ரென்பதற்குப் பழையவுரைகாரரும், “முன்பு செய்து வருகின்ற போரன்றிப் பகைவர் புதிதாகப் பகைத்துச் செய்யும் போர்” என்றார். 5-14. பனைதடி........... நின்வளனே உரை : பனை தடி புனத்தின் - நின்ற பனைமரங்கள் வெட்டப் பட்டுக் கிடக்கும் புனத்தைப்போல; பலவுடன் கை கடிபு யானை பட்ட - பலவாய்க் கை துணிக்கப்பட்டு யானைகள் வீழ்ந்து கிடக்கும்; வாள் மயங்கு கடுந் தார் - இருதிறத்து வாட்படைகளும் தம்முட் கலந்து போருடற்றும் தூசிப்படை நின்ற களத்தின்கண்; மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் - குதிரைகளும் யானைகளும் வீரரும் படுதலால் உண்டாகிய பிணத்தை யுண்டற்பொருட்டு; பொறித்த போலும் புள்ளி யெருத்தின் - பொறித்தாற் போன்ற புள்ளி பொருந்திய கழுத்தினையும்; புன் புறம் - புல்லிய புறத்தினையுமுடைய; பெடை புணர் எருவைச் சேவல் - பெடையொடு கூடி யுறையும் பருந்தினது ஆணையும்; குடுமி எழாலொடு - கொண்டையை யுடைய கழுகையும்; கொண்டு கிழக் கிழிய - உடன் அலைத்துக் கொண்டு பள்ளம் நோக்கியோட; நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து - மேட்டு நிலத்தினின்று கீழ் நிலநோக்கி விழும் நீர்வீழ்ச்சி போல நெடிய பிணக் குவைகள் பலவற்றையும் சுமந்து கொண்டு; உரு கெழு கூளியர் உண்டு மகிழ்ந்தாட - உட்குப் பொருந்திய கூளிக்கூட்டம் வேண்டும் பிணங்களை யுண்டு மகிழ்ச்சி மிக்குக் கூத்தாட; குருதிச் செம்புனல் ஒழுக - குருதி யாகிய செந்நீர் வெள்ளம் பெருக்கெடுத் தோட; செருப் பல செய்குவை - போர்கள் பலவற்றைச் செய்கின்றாய்; நின் வளன் வாழ்க - நினது பெருவளன் நீடு வாழ்வதாக என்றவாறு. யானையின் துணிக்கப்பட்ட கை பனந்துண்டம் போறலின், அவை வீழ்ந்து கிடக்கும் போர்க்களத்துக்குப் பனை தடிந்த புனத்தை யுவமித்து “பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானை பட்ட கடுந்தார்” என்றார். தார், வாளேந்தி முற்படச் சென்று பொரும் தூசிப் படை. தார், ஈண்டு ஆகுபெயராய், அத் தார் நின்று பொரும் களத்தைக் குறித்தது. ஏனைப் படை வகை போலாது, வாட்படை இருதிறத்தினும் இனிது நுழைந்து தம்முட் கலந்து போருடற்றற்கு வாய்ப்புடையதாகலின், அச் சிறப்புத் தோன்ற, “வாள் மயங்கு கடுந்தார்” என்றார். பின்னர் அணிபெற்று வரும் வேற்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை முதலிய பல் படையும் சேரப் பொருது பிறப்பிக்கும் குருதிச் செம்புனலை வாளேந்திச் செல்லும் தார்ப் படையே பிறப்பிக்கும் பீடுடைய தென்பது தோன்ற நிற்கும் சிறப்புப் பற்றி, இப்பாட்டு “வாண்மயங்கு கடுந்தார்” எனப் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “வாள் மயங்கு தலாவது இரண்டு படையில் வாளும் தம்மிற் றெரியாமல் மயங்குதல்; இச் சிறப்பான் இதற்கு வாண்மயங்கு கடுந்தார் என்று பெயராயிற்று” என்பர். எருவை பொறித்தது போன்ற கழுத்தினையுடைய தென்பதைப் பிறரும், “பொறித்த போலும் வானிற வெருத்தின், அணிந்த போலு மஞ்செவி யெருவை” (அகம். 193) என்பர். எருவைச்சேவல் தன் பெடையொடு கூடிப் பிணமுண்பது குறித்து. “எருவைப் பெடை புணர் சேவல்” என்றார். எழால், இராசாளி யென்னுங் கழுகு. திணைமொழியின் பழையவுரைகாரர், புல்லூறு என்பர். இதன் ஆணுக்குக் கொண்டை யுண்டென்றற்கு, “குடுமி யெழால்” என்றார்; இவ் வியைபே பற்றி ஆசிரியர் தொல்காப்பியரும், “மயிலு மெழாலுமே பயிலத் தோன்றும்” (மரபு. 44) என்றமை காண்க. பிணத்தின்மே லிருந்துண்ணும் எருவையும் எழாலும், அப் பிணஞ்செல்வுழித் தாமும் உடன் சேறலின், “கொண்டு கிழக் கிழிய” என்றார்; கிழக்கு, கீழிடம்; “கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந் தனவே” (குறுந். 337) என்றாற் போல. நீர்வீழ்ச்சிக்குரிய நிவப்பினை, “நிலனிழி நிவப்பு” என்றார்; நீர்வீழ்ச்சிக்கண் பெருமரங்கள் புரண்டு வீழ்ந் தோடல்போலக் குருதிச் செம்புன லொழுக்கின்கண் மாவும் மக்களும் பட்ட பிணம் புரண்டு வீழ்ந் தோடுகின்றன வென்பார், “நிலமிழி நிவப்பின் நீணிரை பல சுமந்து குருதிச் செம்புன லொழுக” என்றார். உரு கெழு கூளி, கண்டார்க்கு அச்சம் பயக்கும் பேய்க்கூட்டம். இதனாற் சொல்லியது: இவ்வண்ணம் கடுந்தார் நின்று பொருத போர்க்களத்தின்கண் பிணம் உணீஇயர் சேவல் எழாலொடு கிழக்கிழிய, குருதிச் செம்புனல் நீணிரை பலசுமந்து, கூளிகள் மகிழ்ந்தாட, ஒழுகச் செருப்பல செய்குவை; நின் பெருவளம் வாழ்க என்பதாம். இவ்வாறு சேரனது போர்க் களத்தைச் சிறப்பித்துப் பாடுதலின், இப் பாட்டுக் களவழி யென்னும் துறை யமைந்த பாட்டாயிற்று. இனி, பழைய வுரைகாரர், “உள்ளமொடு வம்பமர்க் கடந்து செருப்பல செய்குவை; அதனானே நினது வலி நின்னிடத்துக் கேடு படாததா யிருந்தது; அதன்மேலும் இதற் கடியாகிய நின் போர்வளம் வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறிய வாறாயிற்” றென்றும், “மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின், துறை களவழி யாயிற்” றென்றும் பழையவுரை கூறுகிறது. 7. வலம்படு வென்றி 1. வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் நின்புக ழேத்தப் 1பகைவ ராரப் பழங்க ணருளி நகைவ ரார நன்கலஞ் சிதறி 5. ஆன்றவிந் தடங்கிய 2செயிர்தீர் செம்மால் வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத் 10. தொன்னிலைச் சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக் கோடற வைத்த கோடாக் கொள்கையும் நன்றுபெரி துடையையா னீயே வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : வலம்படு வென்றி 1-5. வாழ்க....... செம்மால் உரை : பகைவர் ஆரப் பழங்கண் அருளி - பகைவர்க்கு நிரம்பவும் துன்பத்தைச் செய்து; நகைவர் ஆர நன்கலம் சிதறி - பாணர் முதலாயினார்க்கு நிரம்பவும் நல்ல கலன்களை வழங்கி; ஆன்று அவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால் - நற்குணங் களால் நிறைந்து பணிய வேண்டு முயர்ந்தோ ரிடத்துப் பணிந்து ஐம்புலனு மடங்கிய குற்றமில்லாத தலைவனே; வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - வாய்மையே யுரைக்கும் சான்றோர் நின்னுடைய புகழைப் பரவ; நின் வளன் - நின்னுடைய பெரு வளனும்; நின்னுடை வாழ்க்கை வாழ்க - நின்னுடைய இன்ப வாழ்வும் நிலைபெற்று வாழ்வன வாகுக என்றவாறு. “பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச், செய்யா கூறிக் கிளத்தல் எய்யாத” (புறம். 148) நாவினையுடைய சான்றோர் என்றற்கு, “வாய்மொழி வாயர்” என்றார். வாய்மை யமைந்த மொழி, வாய்மொழி யென வந்தது. வாய்மை யன்றிப் பிற சொற்களைப் பயிலாத சிறப்புக்குறித்து, “வாயர்” என்றார். ஏத்தல், உயர்த்துக் கூறல். புலவரையும் பாணரையும் கூத்தரையும் அருளு முகத்தால் முறையே இயலும் இசையும் நாடகமுமாகிய முத்தமிழும் வளர்த்துப் புகழ் நடுதற்கு ஆக்கமாதலின் “வாழ்க நின் வளனே” என்றும், புகழாகிய வூதியம் நிறைந்த வாழ்க்கை யாதலின், “வாழ்க நின்னுடைய வாழ்க்கை” யென்றும் கூறினார். பகைவர்க்குப் பழங்கண் ஆர அருளியென வியைப்பினுமாம். வேந்தன் எக்காலத்தும் பிறர்க்கு அருளுதலையே செய்கையாக வுடைய னாதலாலும், அவ்வருள் நட்டார்க்கு ஆக்கமாகவும், பகைவர்க்குத் துன்பமாகவும் பயன் செய்தல் பற்றி, பகைவர்க்குப் “பழங்கண் அருளி” யென்றார். பழங்கண், துன்பம். பகைவர்க்குப் பழங்கண் செய்தவழி, அவர் தெருண்டு திறை தந்து வேந்தரது அருளைப் பெறுபவாதலின், பழங்கண் அருளி யென்றாரென்று மாம். பகைப்புலத்துப் பெற்ற நன்கலங்களைத் தான் விரும்பாது புலவர் முதலிய நகைப்புல வாணர்க்கு வரையாது வழங்குதலின், “நகைவ ரார நன்கலஞ் சிதறி” என்றார். “அருளி” யென்றதனால் சேரனது தகுதியும், “சிதறி” யென்றதனால் அவனது கொடையும் குறிக்கப்பெற்றன. பிறரும், “பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின், நகைப்புல வாணர் நல்குர வகற்றி, மிகப் பொலியர் தன் சேவடி” (புறம். 387) என்பது காண்க. சேரனுடைய சால்பும் செம்மையும் எடுத்தோதும் கருத்தினராதலின், “ஆன்றவிந் தடங்கிய” வென்றதனால் சால்பும், “செயிர்தீர் செம்மால்” என்றதனால் செம்மையும் விளக்கினார். 6-11. வான்றோய்............. கொள்கையும் உரை : வான் தோய் நல்லிசை - வான் புகழ வுயர்ந்த நல்ல புகழானது; உலகமொடு உயிர்ப்ப - உலக முள்ளளவும் தான் உளதாமாறு நிலைபெற; துளங்கு குடி திருத்திய வளம்படு வென்றியும் - வீழ்ந்த குடியினரை உயரப் பண்ணிய வெற்றி பெறுதற்குக் காரணமான செய்கையும்; மா இரும் புடையல் - கரிய பெரிய பனந்தோட்டா லாகிய மாலையும்; மாக் கழல் - பெரிய வீரக்கழலும்; புனைந்து - அணிந்து சென்று; மன் எயில் எறிந்து - பகை வேந்தருடைய மதில்களை யழித்து; மறவர்த் தரீஇ - அவருடைய சீரிய வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து; தொன்னிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு - பழைமையான நிலைபெற்ற சிறப்பினை யுடைய நின் ஆதரவின் கீழ் வாழும் நன்மக்கட் கொப்ப; கோடு அற வைத்த கோடாக் கொள்கையும் - அவர் மனத் திருந்த கொடுமை யறவே யில்லையாமாறு செம்மை யுறத் திருத்தி வைத்த அறக் கோட்பாட்டையும் என்றவாறு. நிலவுலகை யாதாரமாகக் கொண்டு ஒன்றா வுயர்ந்த புகழைக் கண்டு வானோரும் பரவுதலின், “வான்றோய் நல்லிசை” யென்றார்; இனி, “வானுயர் தோற்றம்” என்றாற் போல இலக்கணையாகக் கொள்ளினு மமையும். அறநெறியாற் பெற்ற புகழென்றற்கு, “நல்லிசை” யெனப்பட்டது. உயிர்த்தல், உள தாதல். ஆதாரமாகிய உலகம் பொன்றுங்காறும் புகழ் பொன்றுத லில்லை யாதலால், “உலகமொ டுயிர்ப்ப” என்றார். வென்றி விரும்பும் வேந்தர்க்கு வலிமிக்க படையும் செல்வமிக்க குடிகளும் ஆதாரமாதலின் அவன் தன் நாட்டில் துளங்கு குடிகளைச் செம்மை நெறிக்கண் திருத்தமுற வைத்தல் வலம்படு வென்றியாம் என்பார், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” யென்றார். வென்றி தரும் செயல் வென்றி யெனப்பட்டது. அரசியல் முறைகள் பலவற்றுள் ஒன்றாகிய துளங்குகுடி திருத்தும் செய்கையின் சிறப்பை எடுத்தோதி , அஃது அரசற்கு நிலைத்த வெற்றியைப் பயக்கும் எனப் பயன்மேல் வைத்து “வலம்படு வென்றி” என்றதனால், இப் பாட்டு இப் பெயரினை யுடைத் தாயிற்று. இனி, பழையவுரைகாரர், “வலம்படு வென்றி யென்றது, மேன்மேலும் பல போர் வென்றிபடுதற்கு அடியாகிய வென்றி யென்றவா” றென்று கூறி, “இச் சிறப்பான் இதற்கு `வலம்படு வென்றி’ என்று பெயராயிற்று” என்பர். சேரமன்னர்க் குரிய அடையாள மாலையாதலின், “மாயிரும் புடையல்” எனச் சிறப்பித்தோதி னார். மன்னெயில் என்புழி, மன்னென்றதற்கு நிலைபெற்ற வென் றுரைப்பினுமாம். அழியா வலியுடைத்தென வெண்ணிச் செருக்கியிருந்த பகைமன்னர் மதிலை எறிந்தா னாதலின், அவர் செருக்கினை யிகழ்ந்து “மன்னெயில்” என்றா ரென்றுமாம். பகை மன்னர் வழிநின்று தமது அறந்திரியா மறத்தை நிலைநாட்டி மேம்பட்டா ராதலின், அவரைச் செகுத்தல் அறமாகாமை யுணர்ந்து அவரைப் பற்றிக் கொணர்ந்து, அவரது உள்ளத்தே தன்பால் பகைமையின்றி நட்பும் துணைமையும் பிறக்குமாறு அறம் புரிந்தாக்கிய திறத்தை, “கோடற வைத்த கோடாக் கொள்கை” யென்றார். நின் நிழல் வாழ்வார்க்கொப்ப வென ஒருசொல் வருவிக்க. இது “பிழைத்தோர்த் தாங்கும் காவல்” (தொல். புறத். 21) என்ற வாகைத்துறைக்கண் அடங்கும். “தொன்னிலைச் சிறப்பின் நின்னிலை வாழ்நர்க் கொப்ப” வைத்தனை யென்றதனால், அறந் திரியா மறவரது வரிசையறிந்து பேணலும் வற்புறுத்தினாராயிற்று. கோடுதல் கொடுமை யாதலின், கொடுமைக்குரிய பகைமையை நீக்குதலைக் “கோடற வைத்தல்” என்றார். அறங்கண்டவழி அதனை யோம்பிப் பாதுகாத்தல் செங்கோன்மை யாதலின், அறத்திற் றிரியா மறவரைப் பேணிய கோட்பாட்டை, “கோடாக் கொள்கை” யென்பா ராயினர். கோடற வைத்த கோடாக் கொள்கை யென்ப தற்குப் பழையவுரைகாரர், “கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கை” யென்பர். எனவே, பகை மன்னர்க்குரிய மறவரைக் கொணர்ந்து, நின்னிழல் வாழும் சான்றோராகிய மறவர்க்குக் கொடுமை செய்தற் கேதுவாகிய பகைமை அவர் நெஞ்சில் நிகழாத வண்ணம் போக்கினை யென்றும், அதனால் கொள்கை பிறழாயாயினை யென்றும் கூறினாருமாம். 12-13. நன்று.............. உலகத்தோர்க்கே உரை : வெந் திறல் வேந்தே - வெவ்விய திறல் படைத்த அரசே; நீ நன்று பெரிது உடையையால் - நீ மிகப் பெரிதும் உடையனாயிருக் கின்றாயாதலால்; இவ்வுலகத்தோர்க்கு - இவ்வுலகத்தில் வாழ் வோரது ஆக்கத்தின் பொருட்டு (நின்னுடைய வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க) என்றவாறு. வலம்படு வென்றியும், கோடாக் கொள்கையும் பலரும் கண்டு பாராட்டுமாறு விளங்க நிற்றலின், இவற்றிற் கேதுவாகிய அவனது திறலை வியந்து “வெந்திறல் வேந்தே” என்றும், தான் செய்யும் மறச்செயல் பலவற்றுள்ளும் இவ்விரு கொள்கைகளும் மிகுதியும் சிறப்புற்று நிற்றலின், “நன்றுபெரி துடையையால்” என்றும் கூறினார். நன்று பெரி தென்பன, ஒருபொருட் பன்மொழி. வலம்படு வென்றியாலும் கோடாக் கொள்கை யாலும் குன்றா வளனும் இன்பவாழ்வு முறையே பயனாய் விளைந்து உலகத் தவர்க்கு ஆக்கமும் இன்பமும் உளவாக்கலின், “உலகத்தோர்க்கு” என்றார். குவ்வுருபு, பொருட்டு. உலகத்தோர் பொருட்டு நீ இவ்விரண்டினையும் நன்று பெரிது உடையை யாதலால், வாழ்க நின் வளனே நின்னுடைய வாழ்க்கை யென இயைத்துக் கொள்க. இதுகாறுங் கூறியது: செயிர்தீர் செம்மால், வாய்மொழி யாளர் நின் புக ழேத்த, நின் வளனும் நின்னுடைய வாழ்க்கையும் வாழ்க; துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும், மன்னெயில் எறிந்து மறவரைத் தந்து நின்னிழல் வாழ்நர்க் கொப்பக் கோடற வைத்த கோடாக் கொள்கையுமாகிய இரண்டையும், வெந்திறல் வேந்தே. நீ நன்று பெரிதுடையை யாதலால், இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின்னுடைய வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “செம்மால், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மன்னெயில்களை யெறிந்து அவற்றில் வாழும் மறவர்களைப் பிடித்துக்கொண்டு பழைதான நிலைமைச் சிறப்பினையுடைய நின் நிழலில் வாழும் வீரர்க்குக் கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கையும் நீ மிகப் பெரிதுடையையா யிராநின்றாய்; ஆதலால், வேந்தே, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின் செல்வமும் நின் வாழ்நாளும் வாழ்வனவாக எனக் கூட்டி, வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவற்குள்ள குணங்களை யெல் லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று.” 8. பரிசிலர் வெறுக்கை 1. உலகத் தோரே பலர்மற் செல்வர் எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் 5. எயின்முகஞ் சிதையத் தோட்டி யேவலின் தோட்டி தந்த தொடிமருப் பியானைச் செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற் செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை 10. வாணுதல் கணவ மள்ள ரேறே மையற விளங்கிய வடுவாழ் மார்பின் வசையில் செல்வ வான வரம்ப இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவினெஞ் சத்துப் 15. பகுத்தூண் டொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே. துறை : களவழி வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பரிசிலர் வெறுக்கை 3-4. வளம்............ சேரல் உரை : வளம் தலை மயங்கிய பைதிரம் - பல்வகைப்பட்ட வளங்களும் தம்மிற் கலந்துள்ள நாட்டை; திருத்திய - அதன் வளம் பலவும் செம்மையுற வருதற்கேற்பத் திருத்திச் செம்மை செய்த; களங்காய்க் கண்ணி - களங்காயாற் றொடுக்கப்பட்ட கண்ணி யினையும்; நார் முடி - நாராற் செய்யப்பட்ட முடியினையு முடைய; சேரல் - சேரமானே என்றவாறு. ஒருவகையான செம்மை நெறியின்றி நாட்டிற் படும் செல்வமெல்லாம் தம்முள் தடுமாறி மயங்கி யிருந்தமையின், “வளந்தலை மயங்கிய பைதிரம்” என்றும், அவற்றைத் திருத்தி யொழுங்கு செய்து வருவாயைச் செம்மைப்படுத்தினமையின், “திருத்திய” என்றும் கூறினார். “காடு கொன்று நாடாக்கிக், குளந்தொட்டு வளம்” பெருக்குதலும், “கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக், குடிபுறந் தருநர் பார மோம்பி” நோயும் பசியு மில்லையாகச் செய்தலும் பிறவும் பைதிரம் திருத்தும் பண்புடைச் செய்கைகளா மென வறிக. சேரவேந்தர் இமயத்தை வரம்பாகக் கொண்டதும், பகையரசர் எழுவர் முடிப் பொன்னை ஆரமாகச் செய்து மார்பி லணிந்து கொண்டதும் போல, இச் சேரமான் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் செய் தணிந்து கொண்டது பற்றி, “களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்” எனப்பட்டான். இனிப் பழையவுரைகாரர், “தான் முடிசூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையின் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன வென்றவா” றென்பர். இவன் இளையனாய் முடிசூடிக்கொண்ட காலத்தே தாமே சேரவரசுக் குரியோ ரெனச் சிலர் நன்னன் என்பான் துணையால் சேரவேந்தராயிருந்தனர்; அவர்க்குத் துணையாம் வகையால் சேரநாட்டின் ஒருபகுதி நன்னன் வசமிருந்தது; அதனால் அக்காலத்துச் செய்து கொண்ட சூளுறவுக் கேற்பக் களங்காய்க் கண்ணியும் நார்முடியும் கொண்டான் என்று கோடல் நேரிதாம். வாகைப் பெருந்துறை யென்னுமிடத்து இவன் அந்த நன்னனை வென்று தான் பண்டிழந்திருந்த நாட்டை வென்று கொண்ட செய்தியை, ஆசிரியர் கல்லாடனார், “குடாஅது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், இழந்த நாடு தந்தன்ன, வளம்” (அகம். 199) என்று கூறுவர். இப் பத்துக்குரிய ஆசிரியரான காப்பியாற்றுக் காப்பியனாரும், இச் சேரமான் நன்னனை வென்றதை, “பொன்னங் கண்ணிப் பொலந் தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” (பதிற். 40) என்று பாராட்டுகின்றார். நன்னனது கடிமரம் தடிந்து களங்காய்க் கண்ணியையும், அவனைக் கொன்று, தான் இழந்த நாட்டைப் பெற்ற பின்பு நார்முடியையும் மாற்றிக் கொண்டான். மாற்றிக் கொண்ட பின்னரும், அவன் வென்றி மாண்பு குறித்துப் பண்டைப் பெயராலே வழங்கப்படுவா னாயினானென வறிக. இந்த நன்னன் வசமிருந்த சேரநாட்டுப் பகுதி இப்போதுள்ள பொள்ளாச்சித் தாலுகா வாகும். இதன்கண் ஆனைமலை யென்னும் ஊர் பண்டை நாளில் நன்னனூர் என்ற பெயர் கொண்டிருந்ததென ஆனைமலைக் கல்வெட்டுக் (A.R.No. 214 of 1927-28 : வீர கேரள வளநாட்டு நன்னனூர்) கூறுகிறது. இவனொடு களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் போருடற்றி வென்றி யெய்திய வாகைப் பெருந்துறை, இப்போது ஈரோட்டுக் கருகிலுள்ள பெருந்துறை யாகலாம். 5-8. எயில்முகம்........... வேந்தே உரை : எயில் முகம் சிதைய - பகைவருடைய மதிலிடங்கள் சிதைந் தழியுமாறு; தோட்டி ஏவலின் - நின்னால் ஏவப்படுதலை யுடைமையால்; தோட்டி தந்த - நாடுகாவலை நினக்கே தந்த; தொடி மருப்பு யானை - தொடி யணிந்த மருப்பினையுடைய யானைப் படையும்; செவ்வுளைக் கலிமா - சிவந்தபிடரி யினையுடைய குதிரைப் படையும்; ஈகை வான் கழல் - பொன்னாற் செய்த உயர்ந்த கழலையும்; செயல் அமை கண்ணி - வேலைப்பா டமையத் தொடுத்த கண்ணியையு மணிந்த; சேரலர் - சேரநாட்டுக் காலாட் படையு முடைய; வேந்தே - சேரமானே என்றவாறு. தோட்டி, முன்னது ஆகுபெயரால் தோட்டி கொண்டு யானைமே லிருந்து அதனைச் செலுத்துவோற் காயிற்று; பின்னது, யானையை நெறியறிந்து செலுத்திக் காத்தற்குக் கருவியாதலின் காவற்பொருட் டாயிற்று. தோட்டி யுடை யானைத் தோட்டி யென்ப தாகுபெயரென்பர் தெய்வச் சிலையார் (தொல். சொல். வேற். மயங் 33). “நீயுடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” (பதிற். 25) என்புழித் தோட்டி யென்பதற்குக் காவல் என்றே பழையவுரைகாரரும் பொருள் கூறினர். தோட்டி யென்றது பொதுப்பட யானைமேல் வீரர்க் காயினும், இச் சேரமான், அவ்வியானைப் படைக்குத் தலைவனாய் நின்று (தலைமைத் தோட்டியாய் நின்று) பகைவர் எயில்முகம் சிதைய ஏவுதலின், “தோட்டி யேவலின்” என்றார். அச்செயலால் யானைப்படை பகைவர் மதில்களை யெறிந்து வேந்தன் கருதிய வென்றியைப் பயந்து நாடுகாவலை நிலைநாட்டுதலால், “தோட்டி தந்த தொடிமருப் பியானை” யென்றார். பகைவர் எயில் முகம் எளிதிற் சிதையுமாறு தோட்டியால் நெறியறிந்து செலுத்தும் திறம் கண்டு அவ் யானை தாமே `நீ மேற்கொண்டு எம்மைச் செலுத்துக’ எனத் தோட்டியைத் தந்தன வென்றும், அதனால் “தோட்டி தந்த தொடிமருப் பியானை” யென்றா ரென்றுமாம். உளை, தலையாட்டமுமாம். ஈகை, பொன். யானையும், கலிமாவும் சேரலருமுடைய வேந்தே என இயைக்க. கழலும் கண்ணியுமுடைய சேரலர் என்க. சேரநாட்டுக் காலாட்படை வீரரை, சேரலர் என்றார். 9-12. பரிசிலர்.............. வரம்ப. உரை : பரிசிலர் வெறுக்கை - பரிசில் மாக்கள் இனிது வாழ்தற்கு வேண்டும் செல்வமா யிருப்பவனே; பாணர் நாள் அவை - பாணர்கள் இருக்கும் நாளோலக்கத்தை யுடையாய்; வாள் நுதல் கணவ - ஒளி பொருந்திய நுதலை யுடையாட்குக் கணவனே; மள்ளர் ஏறு - போர் வீரர்க்கு ஆண்சிங்கம் போல்பவனே; மையற விளங்கிய - குற்ற மின்றாக விளங்கு கின்ற; வடு வாழ் மார்பின் - படைப்புண்ணா லுண்டாகிய வடுப்பொருந்திய மார்பினையுடைய; வசையில் செல்வ - குற்றமில்லாத செல்வத்தை யுடையவனே; வான வரம்ப - வானவரம்ப னென்னும் பெயருடையாய் என்றவாறு. பரிசிலர், பரிசில் பெற்று வாழும் புலவர், பாணர், கூத்தர், பொருநர் முதலாயினோர். இவர்கள் பாடுதற்குரிய பண்புடைய செல்வர்களைப் பாடி அவர் வரிசை யறிந்து நல்கும் பரிசில் பெற்று வாழ்பவர். “பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை” யென்று பாணரைப் பிரித்துக் கூறியது போலவே, “பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை” (பதிற். 65) எனப் பிறரும் கூறுதலின், ஏனைப் புலவர் கூத்தர் முதலாயினாரைப் போலப் பாணர் பரிசிலவாகும் வகையில் அத்துணைச் சிறப்பிலர் என்றது பெறப்படும். வெறுக்கை, செல்வம். செல்வம் தருபவனைச் செல்வம் என்றார். இவ்வாறே முருகவேளையும் நக்கீரர் `அந்தணர் வெறுக்கை (முருகு - 263) என்பர். பழைய வுரைகாரர், “பரிசிலர் வெறுக்கை என்றது, பரிசிலர் வாழ்வு என்றவாறு. இச்சிறப்பான் இதற்குப் பரிசிலர் வெறுக்கை என்று பெய ராயிற்று.” என்பர். செல்வப்பொருளில்லாருக்கு இவ்வுலகத்து வாழ்வில்லை என்பவாகலின், அவ்வியைபுபற்றி வெறுக்கையை வாழ்வு என்ற தொக்குமாயினும், பாட்டிற்குப் பெயராகும் வகையில் இஃது ஏதுவாதல் சிறவாமை அறிக. “வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை” (பதிற். 15) எனப் பிறரும் ’வழங்குதலின், இது பயின்ற வழக்குடைத்தாதல் பெறப்படும். ஏனைப் பாட்டுக் களிற் போலாது, ஈண்டு, இதனைத் தொடர்ந்து நிற்கும் சிறப்புரைகளுள் இது பொருளாலும் இடத்தாலும் தலைமை பெற்று நிற்கும் சிறப்புடைமையால், இப் பாட்டு இதனால் பெயர் பெறுவ தாயிற் றென்றல் அமைவுடைத்து. சேரலர்க்கு வேந்தாய் அவர் வாழ்க்கைக்கு அரணாதலே யன்றி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கோட்பாட்டை யுடையராகிய பரிசிலர் வாழ்க் கைக்கு ஆக்கமாதல் பொருளாற் றலைமை. வேந்தனாயினான் தன்புகழ் பாடும் பரிசிலர்க்கு வேண்டுவன நல்கி அறம் வளர்க்கும் நலத்தை முதற்கண் ணோதி, இன்பப் பகுதிக் குரிய பாணர்களைப் பேணலைப் பின்பும், அவர் வாயிலாகப் பெறும் இல்வாழ்க்கை யியைபை அதன் பின்பும் கூறுதல் இடத்தால் தலைமை. பரிசிலர் வெறுக்கை யாதலால் நிலைபெறும் புகழ் இம்மைப்பயனும், வசையில் செல்வ முடைமையால் மறுமைப் பயனும் சுட்டப்படுதல் குறிக்கத்தக்கது. பாணர் எஞ்ஞான்றும் தம் இசைத்தமிழ் நலத்தை நாளோலக்கத் திருந்து காட்டற்கே பெரிதும் விரும்புவ ராதலின், அவரை அவர் விரும்புமாறே நாளோலக்கத்தே யேற்றுச் சிறப்பிக்கும் பான்மையன் என்பது தோன்ற, “பாணர் நாளவை” யென்றார். இனிப் பழையவுரை காரர், “நாளவை யுடைமையாற் பாணர் நாளவை யென்றும் அவற்குப் பெயராயிற்” றென்பர். நாட்காலத்தே வேந்தன் திருவோலக்க மிருந்தவிடத்து முதற்கண் பாணரும் பின்னர் மகளிரும் போந்து இன்புறுத்துவ ராதலின், அம் முறையே, “பாணர் நாளவை” யென்றவர் இடையீடின்றி, “வாணுதல் கணவ” என்றார்; “பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை, பாண்முற் றொழிந்த பின்றை மகளிர், தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம்” (புறம். 29) என்று சான்றோர் கூறுதல் காண்க. இவற்றால் வேந்தனுடைய அருளும் அன்பும் சிறப்பித்தார்; இனி, அவனது மற மாண்பைக் குறிப்பார், போர் வீரரிடையே மடங்கா வலியுடைய அரிமாப் போல் விளங்குதலால் “மள்ள ரேறே” என்றும், மடங்குதற்கேற்ப, முகத்தினும் மார்பினும் விழுப்புண் பல பட்டவழியும், மடங்காது பொருது வென்றி மேம்பட்ட திறத்தை, “மையற விளங்கிய வடுவாழ் மார்பின், வசையில் செல்வ” என்றார். வடுவாழ் மார்பாயினும் காட்சிக் கின்பம் பயத்தலின், “மையற விளங்கிய வடு” வென்றும், அறத்தாற்றிற் பெற்ற செல்வமாய் இம்மையிற் புகழும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் சிறப்புடைமையின், “வசையில் செல்வ” என்றும் கூறினார். சேர மன்னர்க்குரிய சிறப்புடைய பெயர்களுள் வான வரம்ப னென்பது சீரிதாதலால் “வான வரம்ப” என ஈற்றில் வைத்தோதினார்; “வான வரம்பன் என்ப” (பதிற். 58) என்றும், “வான வரம்பனை நீயே பெரும” (புறம். 2) என்றும், “வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” (பதிக. 6) என்றும் வருதல் காண்க. 13-16. இனியவை.............. மாறே உரை : இனியவை பெறினே - நுகர்தற்கு இனிய பல பொருள் களைப் பெற்றவழி; தனி தனி நுகர்கேம் தருக - அவற்றைத் தனித்தனியாக நுகருவேம், எம்பால் கொணர்க; என - என்று; விழையா - விரும்பாத; தாவில் நெஞ்சத்து - கெடாத நெஞ்சத்தால்; பகுத்தூண் தொகுத்த ஆண்மை - பிறர்க்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்தளித்த ஆண்மை யுடைமையால்; பிறர்க்கென வாழ்தி யாகன்மாறு - நீ பிறர்க்குப் பயன் உண்டாக வாழ்கின்றா யாதலால் என்றவாறு. தனித்தனி நுகர்கே மெனற்பாலது எதுகை நோக்கித் தனி தனி யென வியல்பாயிற்று. பெறுதற்கு அரியனவும் நுகர்தற்கு இனியனவும் ஆகிய பல்வகைப் பொருளும் பெற்றவழி, பெற்றார்க்கு அவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனி நுகர்தற்கு விழைவு சேறல் இயல்பாதலின், “இனியவை பெறினே” யென்றும், “தனிதனி நுகர்கேம் தருக என” என்றும் கூறினார். அவ்வாறு விழைவு சென்றவழி, அதனைக் கெடுத்து, பிறரை நுகர்வித்தற்கண் ணெழுந்த வேட்கை கெடாது நுகரக் கொடுத்த சேரமானது அருள் நிறைந்த நெஞ்சத்தை, “விழையாத் தாவில் நெஞ்சம்” என்றார். இவ்வாறு தனக்கென விழையாது பிறர்க்கென விழையும் நெஞ்சுடையார்க் கன்றி, இனியவை தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பகுத்துண்டலும் இல்லையாதலால், தாவில் நெஞ்சத்தாற் “பகுத்தூண் தொகுத்த ஆண்மை” யென்றார். பாத்துண்டலை விழையாது தனித்தனியே உண்டற்கு விழையும் இனியவை பெற்றவழியும் விழைவுவழி யோடும் நெஞ்சினை யடக்கி, அவ் விழைவினை யறுத்தலினும் ஆண்மைச் செயல் பிறிதியாது மின்மையின், “பாத்தூண் தொகுத்த ஆண்மை” யென்றார். தொகுத்த வூண் முற்றும் பகுத்தூணாகப் பயன்படுத்து கின்றா னாதலால், சேரமானை, “நீ பிறர்க்கென வாழ்தி” யென்றார். இனி “இனியவை நின்பாற் பெறின் தனி தனி நுகர்கேம்; தருக என விழைதற்கு முன்பே தாவில் நெஞ்சத் தோடு பகுத்தூண் தொகுத்தளித்த ஆண்மையால் நீ பிறர்க்கென வாழ்தி” யென இயைத்துரைப்பினு மமையும். “தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென நீ வாழ்தி” என்றதனால், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பிறர்க் குரியாள னாதலை விளக்குதலின், அவன் தனக்கென வாழானா தலை, அவன் நெஞ்சின்மேல் வைத்து, “இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்” தென்றார். எனவே, இவன் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் (அகம். 54) என்றவாறாயிற்று. மாறு: “அனையை யாகன் மாறே” (புறம். 4) என்புழிப்போல, ஏதுப்பொருள்படுவதோரிடைச் சொல்; இனிப் பழையவுரைகாரர், “மாறென்பது ஆனென்னு முருபின் பொருள்படுவதோ ரிடைச்சொல்” (பதிற். 54, உரை) என்பர். 1-2. உலகத்தோரே............. மிகுமே உரை : உலகத்தோர் செல்வர் பலர்மன் - உலகத்தில் வாழ்பவருள் செல்வமுடையோர் பலர் உளர்; எல்லாருள்ளும் - அவ ரெல்லாரும் பெற்றுள்ள புகழ்களுள்; நின் நல்லிசை மிகும் - நினது நல்ல புகழே மேம்பட்டு நிற்கும்காண் என்றவாறு. உலகத்துச் செல்வர் பலரும் பெற்றுள்ள புகழினும் நின் புகழே மிக்கு நிற்கும்; இதற்கு ஏது நீ பிறர்க்கென வாழ்கின்றா யாதலால் என்பது. எனவே, ஏனை யெல்லாரும் பிறர்க்கென வாழ்தலை யொழிந்து தமக்கென வாழ்தலே பொருளாகக் கொண்டன ரென்பதாம். இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றுக்கு முரிய நலஞ்செய்து கோடற்கு உரிய இடமாதலின், உலகத்தை மேற்கொண்டு, இம்மையில் இன்பவாழ்வும் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் வீடுபேறும் பெறுதற்குத் துணையாவது செல்வமாதலின், அதனை யுடையோரையே விதந்து, “செல்வர் பலர்மன்” என்றார். “அறனீனு மின்பமு மீனும் திறனறிந்து, தீதின்றி வந்த பொருள்” (குறள். 754) என்றும், “அறனும் பொருளும் இன்பமு மூன்றும், ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறம். 28) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. எல்லாரும் பெற்ற புகழ், அவர் பொருளளவாய் நின்று மாய்ந்தன என்பார், “பலர்மன்” என்றார். மன் : ஒழியிசை. கெடுவ தின்மையின் “நல்லிசை” யென்றார். “மிகுமே” யென்றதனால், ஏனையோர் புகழெல்லாம் கெட்டழிய, இவனது நல்லிசை யொன்றே நிலைபெற்று நிற்கு மென்றா ராயிற்று. “இந்திர ரமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத் தமிய ருண்டலு மிலரே” யென்றும். “அன்ன மாட்சி யனைய ராகித் , தமக்கென முயலா நோன்றாட், பிறர்க்கென முயலுந ருண்மை யானே” யென்றும் “உண்டா லம்ம வுலகம்” என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாட்டு (புறம். 182) ஈண்டுக் கருதத் தக்கது. இதுகாறுங் கூறியது, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், சேரலர் வேந்தே, பரிசிலர் வெறுக்கை, பாணர் நாளவை, வாணுதல் கணவ, மள்ள ரேறே, வசையில் செல்வ, வான வரம்ப, தாவில் நெஞ்சத்தால் பகுத்தூண் தொகுத்த ஆண்மையால் நீ பிறர்க்கென வாழ்தியாகலான், உலகத்தோர் செல்வர் பலர்மன்; அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “வான வரம்ப, செல்வர் உலகத்தார் பலர்மன்; அச் செல்வத்தாரெல்லாம் பெற்றது ஈதெனத் தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மை யானே பிறர்க்கென வாழ்தி நீ யாகலான் அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறிய வாறாயிற்று.” 9. ஏவல் வியன்பணை 1. பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தார் துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக் கறுத்த தெவ்வர் கடிமுனை யலற 5. எடுத்தெறிந் திரங்கு மேவல் வியன்பணை உருமென வதிர்பட்டு முழங்கிச் செருமிக் கடங்கா ராரரண் வாடச் செல்லும் கால னனைய கடுஞ்சின முன்ப வாலிதின், நூலி னிழையா நுண்மயி ரிழைய 10. பொறித்த போலும் புள்ளி யெருத்திற் புன்புறப் புறவின் கணநிரை யலற அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் 15. தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே. துறை : வாகை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : ஏவல் வியன்பணை 3-8. துப்புத்துறை....... முன்ப உரை : வெப்புடைத் தும்பை - வெம்மையையுடைய தும்பை சூடிப் பொரும் போரின்கண்; கறுத்த தெவ்வர் கடிமுனை யலற - வெகுண் டெழுந்த பகைவர் அச்சம் பொருந்திய முனை யிடத்தே கேட்டு உளங்கலங்கி யலறும்படி; எடுத்தெறிந்து இரங்கும் - கடிப்பினை யோச்சி யறைதலால் முழங்கும்; ஏவல் வியன் பணை - போர் வீரரை முன்னேறிச் செல்லுமாறு ஏவுதலைச் செய்யும் பெரிய முரசமானது; உரும் என அதிர் பட்டு - இடி போல அதிர்ந்து; முழங்கி - முழங்குதலைச் செய்ய; செரு மிக்கு - போர் வேட்கை மிக்குற்று; அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும் - பகைவரது அரிய அரணழியுமாறு மேற்செல்லும்; காலன் அனைய - கூற்று வனை யொத்த; துப்புத் துறை போகிய - போர்த்துறையெல்லாம் முற்றவும் கடைபோகிய; கடுஞ்சின முன்ப - மிக்க சினமும் வன்மையும் உடையோனே என்றவாறு. தும்பை சூடிப் பொரும் போரைத் தும்பை யென்றும், போர் வீரரது வெம்மையைப் போர்மே லேற்றி, “வெப்புடைத் தும்பை” யென்றும் கூறினார். பகைமையுடைய ராயினும், சினம் மிக்குற்றவழி யல்லது போரின்கண் எதிரா ராதலின், “கறுத்த தெவ்வர்” என்றார். கறுப்பு, வெகுளி; “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” (சொல்.உரி. 76) என்ப. கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் பெரு முழக்கமுண்டா மாதலால், “எடுத்தெறிந் திரங்கும்” என்றார். எறிந்தென்னும் செய்தெ னெச்சம் காரணப்பொருட்டு; பழையவுரைகாரர், “எடுத்தெறிய வெனத் திரிக்க” என்பர். நெடுந்தொலைவிற் பரந்து பல்வகைப் படைகளின் இடையே நின்று பொரும் வீரர் செவிப்படுமாறு சென்றொலிக்கும் பெரு முரசு என்றற்கு, “வியன் பணை” யென்றும், அதன் முழக்கொலி செவியிற் கேட்கும் போர் மறவரை முன்னேறிச் சென்று பொருமாறு ஏவி யூக்கும் குறிப்பிற் றாதலால் “ஏவல் வியன் பணை” என்றும் சிறப்பித்தார். வேந்தன் பணிக்கும் ஏவலைத் தன் முழக்கத்தால் உணர்த்தும் பெருமையுடைமை தோன்றப் போர் முரசை “ஏவல் வியன் பணை” யெனச் சிறப்பித் துரைத்த இச் சிறப்பால் இப் பாட்டிற்கு ஏவல் வியன்பணை யெனப் பெயராயிற்று. பழையவுரைகாரர், “ஏவல் வியன்பணை யென்றது, எடுத்த வினை முடிந்த தெனாது மேன்மேலும் படையைக் கடிமுனைக் கண் ஏவுதலை யுடைய முரசு என்றவா” றென்றும், “இச் சிறப்பான் இதற்கு ஏவல் வியன்பணை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். இவ் வியன்பணையின் முழக்கிசையின் இயல்பு தெரித்தற்கு, “உருமென வதிர்பட்டு முழங்கி” யென்றார். கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் அதன் கண் அதிர்குர லெழுந்து முழங்குவது இடியேறு போல்கின்ற தென்பதாம். முழங்க வென்பது, முழங்கியெனத் திரிந்தது. அதன் முழக் கோசை யுடனே சேரலன், ஊக்கம் கிளர்ந்தெழுந்து பொரு மாற்றினை, “செருமிக்கு” என்றார். ஊக்கம் கிளர வுண்டாகும் செருவேட்கை செரு வெனப்பட்டது. செரு மிக்குச் சென்று பொருதலின் பயனாகப் பகைவருடைய அரணங்கள் வலியழி கின்றன வென்பார், “அடங்கார் ஆரரண் வாட” என்றார். பசுமை வற்றிய பைங்கொடியை வாடிய கொடி யென்றாற்போலக், கைப்பற்றுதற்கரிய காவலும் வலியு மழிந்த அரணங்களை, “ஆரரண் வாட” என்றார். “வீயாது நின்ற உயிரில்லை” (புறம்.363) என்பதனால் சாக்காடு பயக்கும் கூற்றுவனை வெல்லுதல் எவ்வுயிர்க்கும் அரிதென்பது பெற்றாம். அவ்வாறு பகைவர் வேறற் கருமைபற்றி, இச்சேரமானைக் “காலன் அனைய முன்ப” என்றார். “கால முன்ப” (புறம். 23) என்றார் பிறரும். காலன் அனைய முன்ப, துப்புத் துறை போகிய கடுஞ்சின முன்ப என இயையும். துப்பு, வலி: பகையும் போருமாம். வில்லும் வாளும் வேலும் கொண்டு, தேர் குதிரை களிறுகளை யூர்ந்து மறவரைத் தக்காங்குச் செலுத்திப் பொருந் திறம் பலவாதலின், “துப்புத்துறை” யென்றும், அத்துறை போகக் கற்றுச் செய்யும் போரி லெல்லாம் வெற்றியே யெய்தினமையால், “துப்புத் துறை போகிய” என்றும் கூறினார். வெப்புடைத் தும்பைப் போர்க்கண், ஏவல் வியன்பணை யானது, தெவ்வர் கடிமுனை யலற, உருமென அதிர்பட்டு முழங்க, அடங்கார் அரண்வாடச், செல்லும் காலன் அனைய கடுஞ்சின முன்ப, துப்புத் துறை போகிய முன்ப என இயையும். 9-17. வாலிதின்............ புகன்றே உரை : அலந்தலை வேலத்து உலவையஞ்சினை - சிதைந்த தலையை யுடைய வேல மரத்தின் உலர்ந்த கிளைகளில்; பொறித்த போலும் புள்ளி எருத்தின் - பொறித்தது போன்ற புள்ளிகளை யுடைய கழுத்தையும்; புன்புறப் புறவின் கண நிரை யலற - புல்லிய முதுகையுமுடைய புறாக் கூட்டம் கண்டு அஞ்சித் தம் ஒழுங்கு சிதைந்து கெட; வாலிதின் நூலின் இழையா - வெண்மையான நூலாக இழைக்கப்படாத; நுண் மயிர் இழைய - நுண்ணிய மயிர்போன்ற இழையையுடைய; சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின் - சிலந்திப் பூச்சி தொடுத்த அசைகின்ற வலையைப் போல; இலங்கு மணி மிடைந்த பசும் பொற் படலத்து - விளங்குகின்ற மணிகள் விளிம்பிலே கோத்த பசிய பொற்றகட்டாற் செய்த கூட்டின் புறத்தே; அவிர் இழை தைஇ - விளங்குகின்ற இழையணிந்து; மின் உமிழ்பு இலங்க - ஒளி சொரிந்து விளங்குமாறு; சீர் மிகு முத்தம் தைஇய - சிறப்புமிக்க முத்துவடம் கோத்த; நார்முடிச் சேரல் - நாரால் தொடுக்கப்பட்ட முடியணிந்த சேரமானே என்றவாறு. இலை முற்றும் உதிர்ந்து வறிது நிற்கும் வேலமரம் என்றற்கு, “அலந்தலை வேலத் துலவை யஞ்சினை” யென்றார். அதன் கொம்பிடத்தே சிலந்திப்பூச்சி தொடுத்திருக்கும் வலைக் கண்ணுள்ள இழை பருத்தி நூலிழை போலாது மயிரிழை போல்கின்றமையின், “நூலின் இழையா நுண்மயி ரிழைய” என்றும், அச் சிலம்பி வலையைக் காணும் புறாக் கூட்டம் அஞ்சவேண்டாவாயினும் அஞ்சி நீங்குகின்றன என்றற்கு, “புறவின் கணநிரை யலறச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வை” என்றும் கூறினார். இழைய வென்னும் பெயரெச்சம், போர்வை யென்னும் பெயர் கொண்டது. “கொலைவில் வேட்டுவன் வலை பரிந்து போகிய, கானப் புறவின் சேவல் வாய்நூல், சிலம்பி யஞ்சினை வெரூஉம் அலங்க லுலவையங் காடு” (நற்.189) எனப் பிறரும் கூறுதல் காண்க; பழையவுரைகாரர், “இழைய போர்வை யெனக் கூட்டுக” என்றும், “புறவின் கணநிரை யலறுதல் அப் போர்வையை வலையெனக் கருதி யலறுதல்” என்றும், “உலவை யஞ்சினை யென்றது, உலந்த சிறு கொம்பினையுடைய பெருங் கொம்பினை” யென்றும் கூறுவர். இனி, சேரமானது நார்முடியின் அமைதி கூறுவார், நாராற் றொடுக்கப்படுமது முடிபோல் இனிது நின்று விளங்குதற்கு விளிம்பிலே மணிகள் இழைத்த பொற்றகட்டாற் கூடொன் றமைத்து, அதன்மேற் புறம் நாராற் பின்னப்பட்டு விளங்குதல் தோன்ற, “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலம்” என்றும் “நார்முடிச் சேரல்” என்றும் கூறினார். “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலமென்றது, விளிம்பு மணியழுத்திய பொற்ற கட்டாற் செய்த கூட்டினை” யென்பது பழையவுரை. இவ்வாற மைந்த முடியின்மேல் நாரால் போர்வைபோலப் பின்னி வைத்த முடியின் தோற்றம் சிறக்குமாறு முத்து வடங்கள் நூலிற்கோத்து அணியப்பட்டன வென்பார், “சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” யென்றார். இம் முத்து வடங்கள் அழகிய ஒளிகான்று சிறக்க வேண்டி விளங்குகின்ற இழைகள் பல இடையிடையே வைத்துப் புனையப்பட்டமை தோன்ற, “அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க” என்றார். இனிப் பழைய வுரைகாரரும், “போர்வையின் முத்தம் தைஇய வென்றது, அப் போர்வையை முத்தாற் சூழுமாறு போல அக் கூட்டினைச் செறிந்த நார்முடியின் பொல்லாங்கு குறைதற்கு முத்து வடங்களைச் சூழ்ந்த வென்றவா” றென்றும், “போர்வையின் முத்தந் தைஇய பசும்பொற் படலத்து நார் முடி என்று மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். நார்முடிமேற் சூழ்ந்து கிடந்த முத்து வடத்துக்கு, சிலம்பி கோலிய வலை யுவமம். அவிரிழை தைஇ யென்பதற்குப் பழையவுரைகாரர், “விளங்கின நூலாலே முத்தைக் கோத் தென்றவா” றென்பர். வேலத்து உலவை யஞ்சினைக்கண், புறவின் கணநிரை கண்டு அலறிச் சிதையுமாறு, சிலம்பி கோலிய நுண்மயிர் இழைய அலங்கற் போர்வையின், மணிமிடைந்த பொற்படலத்து அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தந் தைஇய நார்முடி யினை யணிந்த சேரமானே என இயைத்துரைக்க. போர்வையின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. வேலத்தின் சிலம்பி கோலிய அலங்கற் போர்வை, புறவின் கணநிரை கண்டு அலறிக் கெடுதற்கு ஏதுவாதல் போல, நின்பெரும்படை மாண்பும், சேய்மைக்கட் கண்ட துணையானே நின் பகை வேந்தர் அஞ்சிக் கெட்டொழிதற் கேதுவாம் என உள்ளுறுத்தவாறு பெற்றாம். பெறவே, இதனால் சேரமானது வென்றிச்சிறப்பு உடன் கூறியவாறு விளங்கும். 1-2. பிறர்க்கென......... குழாத்தர் உரை : நின் மறங் கூறு குழாத்தர் - நின் வீரமே யெடுத்தோதிப் பரவி மறம் சிறக்கும் நின் படைவீரரும்; நின் போர்நிழல் புகன்று - நின்னுடைய போராகிய நிழலையே விரும்பி வாழ்வா ராயினும்; நீ பிறர்க்கென வாழ்தி யாகன்மாறு - நீ பிறர்க் குரியாளனாய் வாழ்கின்றா யாதலால்; எமக்கு இல் என்னார் - தம்பால் இரக்கும் எம்போல்வார்க்கு இல்லை யென்னாது வேண்டுவன நல்குவர் என்றவாறு. எனவே, நின் படைவீரரும் நின்னைப் போலவே பிறர்க் குரியாளராய் வாழ்கின்றனர் என்பதாம். மறஞ் செருக்கும் வீரர் தம்முடைய தலைவர் வீரமே எடுத்தோதி மேம்படுதல் இயல் பாதலால், “நின் மறங்கூறு குழாத்தர்” என்றார். “என்னை முன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” (குறள். 771) எனப் படைவீரர் தம் தலைவன் வீரத்தை யெடுத்தோதுதல் காண்க. போருழந்து பெறும் வென்றியே வாழ்வின் பயனாகக் கொண்டு அதனையே விரும்பி வாழ்தல் மறவர் மாண்பாயினும், நின்னைத் தலைவனாகக் கொண்டு செய்யும் போர் அவர்தம் குறிக்கோளாகிய வென்றியைத் தப்பாது பயத்தலின் “நின் போர்நிழல் புகன்று” என்றார். தாள்வழி வாழ்வாரைத் தாணிழல் வாழ்வார் (புறம். 161) என்பதுபோல, போர்வழி வாழ்வாரைப் போர்நிழல் வாழ்வார் என்றார். போர் நிழல் புகன் றென்பதற்குப் பழையவுரைகாரர், “நின் போராகிய நிழலை என்றும் உளவாக வேண்டுமென்று விரும்பி யென்றவா” றென்பர். போரை நிழ லென்றதற்குப் பழையவுரைகாரர், “போரை நிழலென்றது, அப் போர் மறவரது ஆக்கத்துக்குக் காரணமாகலின்” என்றார். தலைமகன் போல அவன் போர்நிழல் வாழும் வீரரும் கொடையுள்ளத்த ராயினரென்றற்கு, “பிறர்க் கென வாழ்திநீ யாகன் மாறு” என்பர். “நின் படைகொண் மாக்கள்..... வருநர்க் குதவியாற்றும் நண்பிற் பண்புடை, யூழிற்றாக நின் செய்கை” (புறம். 29) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதுகாறும் கூறியது, வெப்புடைத் தும்பைப் போர்க்கண் தெவ்வர் கடிமுனை யலறுமாறு இரங்கும் ஏவல் வியன்பணை உருமென அதிர்பட்டு முழங்குதலால் செருமிக்கு, அடங்கார் ஆரரண் வாடச் செல்லும் காலன் அனைய முன்ப, துப்புத்துறை போகிய கடுஞ்சின முன்ப, வேலத்து உலவை யஞ்சினைக்கண் சிலம்பி கோலிய நுண்மயி ரிழைய அலங்கற் போர்வை போல, மணிமிடைந்த பசும்பொற் படலத்து, இழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தம் தைஇய நார்முடிச் சேரல், நீ பிறர்க்கென வாழ்தியாகலான், நின் மறம் கூறும் குழாத்தர் நின்போர்நிழற் புகன்று வாழ்வாராயினும் எமக்கு இல்லென்னாது உதவுவ ரென்ப தாம். இனிப் பழையவுரைகாரர், “முன்ப, சேரல், நீ பிறர்க்கென வாழ்தியாகலான், நின் மறங்கூறு குழாத்தர் நின் போர்நிழற் புகன்று எமக்கு இல்லை யென்னார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இனி இதற்குப் பிறவாறு கூட்டி வேறு பொருள் உரைப்பாரு முள” ரென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பும், அவன் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவா றாயிற்று. அம் மறவரது கொடைக்குக் காரணம் அவன் வென்றியாகலின், துறை வாகை யாயிற்று.” 10. நாடுகா ணவிர்சுடர் 1. போர்நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத் திறாஅ லியரோ பெருமநின் றானை இன்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப் புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக் 5. காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் வந்திறை கொண்டன்று தானை யந்திற் களைநர் யாரினிப் பிறரெனப் பேணி மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க ஒன்னார் தேயப் பூமலைந் துரைஇ 10. வெண்டோடு நிரைஇய 1 வேந்துடை யருஞ்சமம் கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி வென்றி யாடிய தொடித்தோண் மீகை எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் 15. சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல் புன்கா லுன்னஞ் சாயத் தெண்கள் 2 வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத் தான்றர வுண்ட நனைநறவு மகிழ்ந்து 20. நீரிமிழ் சிலம்பி னேரி யோனே செல்லா யோதில் சில்வளை விறலி மலர்ந்த வேங்கையின் வயங்கித ழணிந்து மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப் பாணர் பைம்பூ மலைய விளையர் 25. இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத் தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று பாக ரேவலி னொண்பொறி பிசிரக் காடுதலைக் கொண்ட நாடுகா ணவிர்சுடர் 30. அழல்விடுபு மரீஇய மைந்தின் தொழில்புகல் யானை நல்குவன் பலவே. துறை : விறலியாற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : நாடுகா ணவிர் சுடர் 1-9. போர்நிழல்........... தேய உரை : பெரும - பெருமானே; இன்னிசை இமிழ் முரசு இயம்ப - இனிய இசையைச் செய்கின்ற முரசு முழங்க; கடிப்பு இகூஉ - குணிலோச்சிப் புடைத்துக்கொண்டு; புண் தோள் ஆடவர் போர் முகத்து இறுப்ப - தோளிற் புண்பட்ட போர்வீரர் போரின் முன்னணியில் நிற்க; தானை - தூசிப்படை; காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் - காய்த்த கரந்தையின் கரிய கொடி படர்ந்த விளைபுலத்தே; வந்து இறை கொண்டன்று - வந்து தங்கிற்றாதலான்; நின் தானை - நின்னுடைய பெரிய சேனை வீரர்; போர் நிழல் புகன்ற சுற்றமொடு - போரிடத்தே யுண்டாகும் ஆக்கத்தை விரும்பும் சுற்றத்தாருடனே; ஊர் முகத்து இறாலியர் - போர்நிகழும் முனையிடத்தே தங்கா தொழிவாராக; இனி - இப்பொழுது; களைநர் யார் பிறர் - எமக்குப் புகலாய அரண் தந்து காப்பவர் வேறே பிறர் இலர்; எனப் பேணி - என்றெண்ணி நின்னை விரும்பி; ஒன்னார் தேய - பகையரசர் வலி தேய்ந்து நீங்குதலால்; மறவர் - அப் பகை மன்னருடைய சிற்றரண்களில் இருந்து காக்கும் வீரர்; மன்னெயில் ஒலி யவிந்து அடங்க - நிலை பெற்ற மதிலிடத்தே ஊக்கமிழந்து ஆரவாரமின்றி ஒடுங்கி யடங்க என்றவாறு. போரெனிற் புகலும் மறவராதலின், அவர் வேட்கைக் கொப்பப் போர்மேற் செலவினை ஏவும் குறிப்பிற்றாதலின், முரசின் முழக்கத்தை விதந்து, “இன்னிசை யிமிழ் முரசு” என்றார். புண்தோ ளாடவ ரென்றதனால் முன்னே பல போர்களைச் செய்து வெற்றிப்பேற்றால் மேம்பட்டவரென்பது பெற்றாம். தோளாடவர் போரேற்று முன்னிற்ப, தூசிப்படை வயலிற் றங்குதலின், நின்னைச் சூழ்ந்து வரும் மூலப்படையாகிய சுற்றத்தாருடன் நீ போர்க்களம் சேறல் வேண்டா என்பார், “நின் தானை இறாலியரோ” என்றார். சுற்றமென்றது தானைத் தலைவரையும், தானை யென்றது மூலப்படையினையும் குறித்து நின்றன. புண்தோ ளாடவரும் ஏனைத் தூசிப்படையுமே வென்றி பெறுதற்கு அமைந்திருப்ப, நீ நின் தானையும் சுற்றமும் வர ஊர்முகஞ் சென்றிறுத்தல் வேண்டா என்பார், “போர் நிழற் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து இறாலியரோ பெரும நின் தானை” யென்றார். போர்நிழல் என்பதற்குப் போரிடத் துண்டாகும் புகழாகிய ஒளி யென்றலுமொன்று; இதனை “ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை, உளனென வரூஉம் ஓரொளி” (புறம். 309) எனச் சான்றோர் கூறுதல் காண்க. ஊர்முக மென்றது போர்க்களத்தை. அடுத்தூர்ந் தடும் இடமாதலின், போர்க்களம் ஊர்முக மெனப்பட்டது. இனிப் பழையவுரை காரரும், “போர் நிழற் புகன்ற சுற்ற மென்றது படைத்தலைவரை” யென்றும், “ஊர்முக மென்றது படை பொரும் இடத்தை” யென்றும் கூறுவர். அந்தில் : அசைநிலை; “அந்தி லாங்க அசை நிலைக் கிளவியென், றாயிரண்டாகு மியற்கைத் தென்ப” (சொல். இடை. 19) என்பது தொல்காப்பியம். தானைப் பெருமையும் தமது சிறுமையும் தம்முடைய தலைவர் வலியின்மையும் தேர்ந்து, இனித் தமக்குக் களைகணாதற்குச் சேரமானே தக்கோனெனக் கண்டு அவனைப் புகலடையும் கருத்தினராதலின், “களைநர் யாரினிப் பிறர் எனப் பேணி” யொழுகுகின்றார் என்றார். மன்னெயில் மறவர்க்குத் தலைமை தாங்கி, எதிரூன்றி நின்ற பகை வேந்தர் தம் வலியழிந்து அவரைக் கைவிட்டு நீங்கினமையின், “ஒன்னார் தேய” என்றார். செயவெனெச்சம், காரணப்பொருட்டு. மன்னெயில் மறவர் ஒலியவிந் தடங்கவே, அவரல்லாத தானைத்தலைவரும் வேந்தரும் வலிதேய்ந் தழிந்து அவரைக் கைவிட்டோடினமை பெறப்படுமாயினும் முடியுடைப் பெருவேந்தனாகிய இச் சேரன்முன், மறவர் அவிந்தொடுங்கின ரென்றல் சீரிதன்மையின், “ஒன்னார் தேய” வென்பது கூறப்படுவதாயிற்று. அதனால் ஊக்கமிழந்து வலியழிந்து எயிலிடத்தே யடங்கிக் கிடந்த மறவர், நார்முடிச் சேரலை வணங்கி, “பெரும, ஆடவர் போர் முகத் திறுப்ப, தானை வயலிடத்து வந்து இறை கொண்டதாகலின், நீ நின் தானையுடன் ஊர்முகத்து இறாலியர்; இறைகொள்வை யாயின், எமக்குக் களைகணாவார் பிறர்யாவருளர்” என்பாராய், “களைநர் யார் இனிப் பிறர்” என வேண்டுகின்றா ராயிற்று. இவ்வாறு வேண்டும் மறவர், போர்முகத்துத் தோன்றாது எயிலிடத்தே போர்க்குரிய ஆரவாரமின்றி யவிந்து கிடக்கின்றா ரென்பார், “மறவர் மன்னெயிலிடத்து ஒலியவிந்து அடங்க” என்றார். ஒலி யவியா தாயின், போர்வினை தொடர்ந்து அவர்தம் உயிர்க்குக் கேடு செய்யுமாதலால், “ஒலியவிந் தடங்” குவது இன்றியமையாதாயிற்று. ஒன்னா ரென்றதற்கு மறவர்க்குத் தலைவராகிய பகைவேந்த ரென்னாது, பழைய வுரைகாரர், “ஒன்னா ரென்றது முன்சொன்ன மன்னெயில் மறவரல்லாத பகைவரை” யென்பர். மன்னெயில் என்றதனால், எயிற்புறத்தே போர் நிகழுமாறும், எயில் மட்டில் சிதையாது நிலைபெறு மாறும் பெறப்பட்டன. இக்கருத்தே தோன்றப் பழையவுரை காரரும், “ஆடவர் போர்முகத் திறுப்ப, வயலிலே வந்து இறை கொண்டன்று தானை; களைநர் யார் இனிப் பிறர்; பெரும நின் தானை சுற்றமொடு ஊர் முகத்து இறாலியரெனச் சொல்லிப் பேணி என மாறிக் கூட்டுக” என்பர். 9-16. பூமலைந்துரைஇ ........... சேரல் உரை : பூ மலைந்து உரைஇ - போர்க்குரிய தும்பைப் பூவைச் சூடிச் சென்று; வெண்தோடு நிரைஇய வேந்துடை அரும் சமம் கொன்று - வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலையணிந்து சேர வரசுக் குரியோரெனப் போந்தெதிர்த்த வேந்தருடைய எளிதில் வெல்லுதற்கரிய போரையழித்து; புறம் பெற்று - அவ்வேந்தர் புறந்தந்தோடச் செய்து; மன்பதை நிரப்பி - அவராற் போக்கப்பெற்ற நன்மக்களை நாட்டிற் குடிபுகச் செய்து நிரப்பி; வென்றி யாடிய தொடித்தோள் மீகை - வெற்றியாற் குரவையாடி மகிழ்ந்த தொடியணிந்த மேம்பட்ட கையினையும்; எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து - பகையரச ரெழுவர் முடிப் பொன்னாற் செய்த ஆரமணிந்த திருமகள் விரும்பி யுறையும் மார்பினையும்; பொன்னங் கண்ணி - பொன்னாற் செய்த கண்ணியும்; பொலந் தேர் நன்னன் - பொன்னாற் செய்த தேருமுடைய நன்னன் என்பானது; சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த - ஒளி பொருந்திய பூவையுடைய வாகையாகிய காவல் மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தற் கேதுவாகிய; தார் மிகு மைந்தின் - தூசிப்படையோடே மிக்குச் செல்லும் வலியினையும்; நார்முடிச் சேரல் - நாராற் செய்யப் பட்ட முடியினையுமுடைய சேரமான் என்றவாறு. சேரர்குடிக் குரிய ரல்லாதார் உரிமை யுடைய ரெனச் சொல்லிப் பனந்தோட்டுக் கண்ணியும் முடியு முடையரா யிருந் தமையின், களங்காய்க் கண்ணியும் நார்முடியும் அணிந் தெழுந்த இச் சேரமான், அவர்பால் தும்பை மலைந்து போர் தொடுத்த வரலாற்றை, “பூமலைந் துரைஇ” என்று குறிக்கின்றார். உரிமை யிலராகவும் உடையரெனத் தோற்றுவித்தற்பொருட்டுப் பனந்தோட்டுக் கண்ணியுந் தாரும் நிரைநிரையாக அணிந்திருக்கு மாறு தோன்ற, “வெண்தோடு நிரைஇய வேந்து” என்றார். “வெண்தோடு நிரைத்த” என்ற பாடம் இதற்குக் கரியாத லறிக. பனந்தோடு வெள்ளிதாதலின் வெண்தோ டெனப்பட்டது. “கொம்மைப் போந்தைக் குடுமி வெண்டோ” (குறுந். 281) டென்றும், “வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசிவெண் டோடு” (புறம். 100) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. “போந்தை வெண்டோடு” (பதிற். 51) என்றாற் போலத் தெரித்து மொழியாராயினார், இருதிறத்தார்க்கும் ஒத்த உரிமையுடைத் தாதலால். இனிப் பழையவுரைகாரர், “வெண்டோடு நிரைஇயபூ மலைந்து என மாறிக்கூட்டுக” வென்பர். “பூமலைந் துரைஇ” யென்றும், வெண்டோடு நிரைஇய” வென்றும் பிரித்தோதினமையின், அஃது ஆசிரியர் கருத்தன்மை யுணர்க. வேந்தர் தாமே தம் மைந்து பொருளாக வந்து போர் தொடுத்தலின், “வேந்துடை யருஞ்சமம்” என்றார்; அவரை யெதிரேற்றுச் சென்று பொருதலின், பூ வென்றது தும்பை யாயிற்று; மைந்து பொருளாக வந்த வேந்தனைச், சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (புறத். 15) என ஆசிரியர் தொல் காப்பியனார் தும்பையி னிலக்கணங் கூறு மாற்றா னறிக. வேந்தாதற் குரிய ரல்லாதாரை வேந்தென்றார், அவ்வுரிமை யினை நிலைநாட்டவே பொருகின்றா ரென்பதனை வற்புறுத் தற்கு. பெரும்படையுடன் வந்து பொருதமை தோன்ற, “அருஞ் சமம்” என்றும், மீள ஒருகாலும் போர் தொடுக் காதவாறு அழித்தமை தோன்ற, “கொன்று” என்றும், வேந்தர் முடியும் கண்ணியு மிழந்து ஓடியொழிந்தன ரென்றற்குப் “புறம் பெற்று” என்றும் கூறினார். அவர் வேந்தராயிருந்த காலத்து இச் சேரமான்பால் உரிமை யுண்மை தெரிந்திருந்த நன்மக்களை நாட்டினின்றும் போக்கினராதலின், அவரனைவரையும் மீளக் கொணர்ந்து நிறுத்தி வேண்டுவன நல்கிச் செம்மை செய்தன னென்பார், “மன்பதை நிரப்பி” யென்றார். இனிப் பழைய வுரைகாரர் “மன்பதை நிரப்பி யென்றது, தன் படையை யவ் வேந்தர் நாட்டுத் தன் னாணையானே நிரப்பி யென்றவா” றென்பர். வென்றி யெய்திய வேந்தன் மகிழ்ச்சியால் தானைத் தலைவருடன் கூடித் தேர்த் தட்டிலே நின்று குரவைக் கூத்தயர்தல் மரபா தலால், “வென்றி யாடிய தொடித்தோள் மீகை” யென்றார். இதனை முன்தேர்க் குரவை யென்ப; “தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவை” (புறத். 21) என ஆசிரியர் தொல்காப்பிய னார் கூறுதல் காண்க. இவ்வாறு வெற்றிக் காலத்து வேந்தர் குரவை யாடுதல் மரபேயன்றி, ஏனை விழாக்காலங்களில் ஆடுதல் இல்லையென வறிக. மீ கை யென்பதற்குப் பழையவுரை காரர், “மேலெடுத்த கை” யென்றும், “வென்றி யாடிய வென்னும் பெயரெச்சத்திற்கு மீகை யென்னும் பெயரினை அவன் தான் வென்றி யாடுதற்குக் கருவியாகிய கை யெனக் கருவிப்பெய ராக்குக” என்றும் கூறுவர். விறலியை யாற்றுப்படுப் போன் கூற்றாதலின், அவனது கொடைச்சிறப்புந் தோன்ற, சேரலன் கையை, “மீ கை” யெனச் சிறந்தெடுத்துக் கூறினான். பொன் விளையும் கொண்கானநாட்டுக் குரிய னாதலின், நன்னனை, “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்” என்றார்; பிறரும், “பொன்படு கொண்கான நன்னன்” (நற். 391) என்பது காண்க. நன்னனது காவல்மரம் வாகை யென்பதை இப்பத்தின் பதிகமும், “நன்னனை, நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன், பொன்படு வாகை முழுமுதறடிந்து” என்று கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது. பொன்னிறங் கொண்டு விளங்குதலின் வாகைப்பூவைச் “சுடர் வீ வாகை” யென்றார். இவ்வாறே விளங் கும் வேங்கைப் பூவையும், “சுடர் வீ வேங்கை” (பதிற். 41) எனப் பிறரும் கூறுப. கடி, காவல். தார், “தார் தாங்கிச் செல்வது தானை” (குறள். 767) என்றாற் போலத் தூசிப் படை மேற்று. முந்துற்றுச் செல்லும் தூசிப்படையொடு போகாது அகப்படையின் நடுவே சேறல் வேந்தர்க் கியல்பாயினும் இந் நார்முடிச் சேரல் தூசிப்படைக்கு முன்னே சென்று செரு மேம்படும் செய்கை யுடைய னெனற்கு, “தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” என்றார். தார்க்கு முந்துறச் சென்று மிகுதற்கு ஏது அவனது மிக்குற்ற வலியேயா மென்பார், “தார்மிகு மைந்” தென்றா ரென வறிக. “பொன்னங் கண்ணியும் பொலந் தேரும் நன்னற் கடையாக்குக” வென்பர் பழையவுரைகாரர். தடிந்த வென்னும் பெயரெச்சம் அதற் கேதுப் பெயராகிய மைந் தென்பதனோடு முடிந்தது; சேரல் என்பதனோடு முடித்துத் தடிந்த சேரல், நார்முடிச் சேரல் என இயைப்பினுமாம். இது, பூமலைந்துரைஇ, அருஞ்சமம் கொன்று, புறம் பெற்று, மன்பதை நிரப்பி, வென்றி யாடிய மீ கையையும், திருஞெம ரகலத்தையும், நன்னன் வாகைக் கடிமுதல் தடிந்த மைந்தினையும் நார்முடியினையு முடைய சேரல் என இயையும். 17-20. புன்காலுன்னம் ........... நேரியோனே உரை : தெண் கள் வறிது கூட்டு அரியல் - தெளிந்த கள்ளிலே களிப்பு இறப்ப மிகாவாறு கலத்தற்குரிய பொருள்களைச் சிறிதே கலந்து வடிக்கப்பட்ட கள்; இரவலர்த் தடுப்ப - தன்னை யுண்டு மகிழும் இரவலர்களை வேறிடம் செல்லவிடாது தடுத்து நிறுத்த; தான் தர வுண்ட நனை நறவு மகிழ்ந்து- அவருடனிருந்து தான் உண்டல் வேண்டித் தனக்கெனக் கொணரப்பட்ட பூவரும்புகளாற் சமைக்கப்பட்ட நறவினை யுண்பதனால் துயிப்புற்று; புன்கால் உன்னம் சாயா - புல்லிய காலையுடைய உன்ன மரம் வாடிய வழியு மஞ்சாது; நீர் இமிழ் சிலம்பின் நேரியோன் - அருவி நீர் வீழ்தலால் ஒலிக்கின்ற மலையாகிய நேரிமலையிடத்தே யுள்ளான் என்றவாறு. வறிது, சிறிது. களிப்பு மிகுவிக்கும் பொருள்களைப் பெரிது கூட்டியவழி உண்டார்க்கு மிக்க மயக்கத்தைச் செய்யு மென்பது கருதி, “வறிதுகூட் டரியல்” என்றார். அரியல், வடித்தகள். தெண் கள் என்றதனால், அரியல் பெறுவது கருதுவார் தெளிந்த கள்ளோடே களிதரும் பொருள்களைக் கூட்டுவ ரென்பது பெறப்படும். உண்டு களிக்குந்தோறும் மேன்மேலும் அதனை யுண்டற்கே கள்ளுண்பார் விரும்புவராதலின், இரவலர் கள்ளுணவால் எழுந்த வேட்கையால் பிரியா துறைவாராயின ரென்றற்கு “இரவலர்த் தடுப்ப” என்றார். எனவே, அவன் தரும் பெருவளத்தினும் கள்வளம் இரவலர்க்கு மிக்க விருப்பத்தை யுண்டுபண்ணு மென்பதாம். “களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால்” (குறள். 1145) என்பதனால் கள்ளுண்பார் மேலு மேலு மதனையே விரும்புமாறு துணியப்படும். இரவலரைக் கள்ளுண்பிப்பவன் மிக்க களிப்புள்ளதனை நல்கின் அவர் அறிவு மயங்கிச் செம்மை நிலை திரிவ ராதலாலும், அவருடனே வேந்தனு மிருந்துண்ணுதல் மரபாதலாலும் தெண்கள் வறிது கூட் டரியலே தரப்படுவ தாயிற்றென வறிக. இரவலர்க்கு அரியலும், தனக்கு நனைநறவும் தரப்படுதலின், “தான் தரவுண்ட நனை நறவு மகிழ்ந்து” என்றார். நறவாவது, பழச்சாறுகளாலாக்கப் பட்டு நறிய பூக்களால் மணமூட்டப் பெற்றுக் களிப்பு மிகக் குறைவாக வுள்ளது. உன்னம், ஒருவகை மரம். இது வேந்தர்க்கு ஆக்க முண்டா யின், முன்பே நற்குறியாகக் குழைந்து காட்டுமென்றும், கேடு விளைவதாயின் தீக்குறியாகக் கரிந்து காட்டுமென்றும் கூறுப. அந் நார்முடிச் சேரல், உன்னம் கரிந்து காட்டியவழியும் அஞ்சாது இருக்குமாறு தோன்ற, “புன்கா லுன்னஞ் சாய” என்றார். சிறப்பும்மையும் அஞ்சாதெனவொரு சொல்லும் வருவிக்கப் பட்டன. கரிந்து காட்டியவழியும் பகைவர்மேற் சென்று வென்றி யெய்தியுள்ளா னாதலின், உன்னஞ் சாயவும் அஞ்சாது நேரியிலே யிருப்பானாயின னென்க. இதனால் இம்மேற் கோளுடைய வேந்தரை, உன்னத்துப் பகைவ ரென்றலும் வழக்கு. செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிய ஆசிரியர், கபிலர், வேள் பாரியை, “புன்கா லுன்னத்துப் பகைவன் எங்கோ” (பதிற்.61) என்பது காண்க. இனிப் பழைய வுரைகாரர், “உன்னம் சாய வென்றது, தன்னொடு பொரக் கருதுவார் நிமித்தம் பார்த்த வழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்து காட்டுதலின் வென்றவா” றென்பர். எனவே, பகைவர் காணுந்தோறும் கரிந்து காட்டவேண்டி அவ்வேந்தர் உன்னத்தை யோம்பாது பகைப்ப ரென்பது பட்டுப் பொருள் சிறவாமை யறிக. “வறிது கூட்டரிய லென்றது, களிப்பு விறக்க விடும் பண்டங்கள் பெருகக் கூட்டின் களிப்பு மிகுமென்று அவை யளவே கூட்டின அரிய லென்றவா” றென்றும், “தா னென் பதனைச் சேரல்தான் எனக் கூட்டித் தர வுண்ட வென்பதனை வரையாது கொடுத்தற்பொருட்டு உண்ட வென வுரைக்க” வென்றும் “இனி யிதற்குப் பிறவாறு உரைப்பாரு முள” ரென்றும் பழையவுரைகாரர் கூறுவர். நார்முடிச் சேரல், அரியல் இரவலர்த் தடுப்ப, தான் நனைநறவு மகிழ்ந்து, உன்னம் சாயவும் அஞ்சாது நேரிமலையில் உள்ளான் என முடித்துக் கொள்க. 21-31. செல்லாயோதில் .............. பலவே உரை : சில் வளை விறலி - சிலவாகிய வளைகளை யணிந்துள்ள விறலியே; மலர்ந்த வேங்கையின் - பூக்கள் மலர்ந்துள்ள வேங்கை மரத்தைப் போல; மெல்லியல் மகளிர் - மென்மையான இயல்பினையுடைய ஏனைய விறலியர்; வயங்கு இழையணிந்து எழில் நலம் சிறப்ப - விளங்குகின்ற இழைகளை யணிந்து உயர்ந்த அழகு சிறந்து விளங்கவும்; பாணர் பைம்பூ மலைய - பாணர்கள் பொன்னாற் செய்த பசிய பூக்களை யணிந்து கொள்ளவும்; இளையர் இன்களி வழா மென்சொல் அமர்ந்து - ஏவல் இளையர் இனிய களிப்பாற் குன்றாத மெல்லிய சொற் களை விரும்பிச் சொல்லி; நெஞ்சுமலி யுவகையர் - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய்; வியன் களம் வாழ்த்த - நார்முடிச் சேரலின் பெரிய போர்க்களத்தின் சிறப்பை யெடுத் தோதி வாழ்த்தவும்; தோட்டி நீவாது - பாகர் தோட்டியாற் குறிக்கும் குறிப்புத் தவறாமல்; தொடி சேர்பு நின்று - தொடி யாகிய பூண் செறிந்து நின்றே; ஒண்பொறி சிதற - தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள் தீப்பொறி போலச் சிதறுதலால்; காடு தலைக்கொண்ட - காட்டிடத்தே யெழுந்த; நாடுகாண் அவிர் சுடர் அழல் விடுபு - நாட்டவரால் இனிது காணப்பட விளங்கும் காட்டுத்தீப் போலும் சினமாகிய தீயைக் கைவிட்டு; பாகர் ஏவலின் மரீஇய மைந்தின் - அப் பாகரது ஏவலைப் பொருந்தி யமைந்த வலியினையும்; தொழில் புகல் யானை - வேண்டுந் தொழில்களைச் செய்தற்கு விரும்பும் விருப்பத்தினையுமுடைய யானைகள்; பல நல்குவன் - பலவற்றை வழங்குவ னாதலால்; செல்லாய் - செல்வாயாக என்றவாறு. மெல்லியல் மகளிர் இழை யணிந்து நலஞ்சிறப்ப, பாணர் பூ மலைய ஏவ லிளையர் வியன் களம் வாழ்த்த, மைந்தினையும் புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன்; செல்லாய் என இயைக்க. மலரணிந்த வேங்கை மரத்தின் எம்மருங்கும் பைந்தழையும் பூவும் பொலிந்து தோன்றும் தோற்றம், தலை, காது, மூக்கு, கழுத்து, மார்பு, தோள், கை, இடை, கால் ஆகிய எம்மருங்கும் இழை யணிந்து விளங்கும் மகளிர் போல விருத்தலின், “மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து மெல்லியல் மகளிர் எழினலஞ் சிறப்ப” வென்றார். மலர்ந்த வேங்கைக்கண் ணிருந்த தோகையைக் கண்ட சான்றோர், “எரிமருள் வேங்கை யிருந்த தோகை, இழையணி மடந்தையிற் றோன்றும்” (ஐங். 294) என்பது காண்க. அரசன்புகழ் பாடிய விறலி இழை பெறுதலும் பாணன் பொற்பூப் பெறுதலும் மரபு; இதனை, “வயவேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏருடை விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற்றிசினே...... பாண்மக னும்மே, ஒள்ளழல் புரிந்த வெள்ளி நாராற் பூப் பெற் றிசினே” (புறம். 11) என்றும், “வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின், பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே” (புறம். 319) என்றும் வருவனவற்றா லறிக. இளைய ராவார், பாண் தொழிற்குரிய கல்வி நிரம்பக் கல்லாது ஏவின செய்தொழுகும் இளைஞர். இவர் வேந்தனது களம் பாடுதலால் கள் பெற்றன ரென்பார், “இளையர் இன்களி வழாஅ மென் சொல் அமர்ந்து வியன்களம் வாழ்த்த” என்றார். இனிப்புண்ட கள்ளை யுண்டலால் எய்தும் களிப்பு மிகாமையின், பாடுவன பிழையுறாவாறு எளிய பாட்டுக்களைப் பாடுகின்றாரென்றற்கு, “இன்களி வழாஅ மென்சொல் லமர்ந்து” என்றும், இளமையின் பயன் நகையு முவகையுமே யாதலின், “நெஞ்சுமலி யுவகைய” ரென்றும் கூறினார். இளமைக்கண் பயின்ற எளிய சொற்களா லாகிய பாட்டுக்களை, “மென் சொல்” என்றார். பெரும்படை யுடைய னாதலால், அது நின்று போருடற்றும் களம், “வியன் களம்” எனப்பட்டது. தலைமை சான்ற பாணன் தாமரையும், விறலி இழைகளும் பெறுவ ரெனவே, இளையர் அவர்தம் தகுதிக் கேற்ப, உரியன பெற்றாரென வறிக. தலைவன் தாமரை பெறுதலை, “தலைவன் தாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய” (மலைபடு. 569-70) என்பதனாலறிக. இது விறலியாற்றுப்படை யாதலின், விறலியரை முற்படக் கூறினார்; அவர் பாடி யாடற் கேற்பக் குரலும் சீரும் புணர்த்தலின், பாணரை அவர் பின் கூறினார். “இழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மக னும்மே, எனவாங்கு, ஒள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே” (புறம்.11) எனச் சான்றோர் கூறுதல் காண்க. காட்டிலே தோன்றிப் பரந்துயர்ந்து நின்று, நாட்டவர் இருந்து காண விளங்கும் தீயினை, “காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர் சுடர்” என்றார்; சுடரென்றது ஈண்டு ஆகுபெயராய்த் தீக் காயிற்று. காடுதலைக் கொண்ட சுடர், நாடுகாண் அவிர்சுடர் என இயையும். காட்டிற் பிறந்து பரந்து உயர்ந்து நின்று விளங்குந் தீ, நாட்டவர் தம்மிடத்தே யிருந்து காணுமாறு தன் விளங்குகின்ற சுடரால் காட்டி நிற்கும் சிறப்பினை “நாடுகா ணவிர் சுடர்” எனச் சுருங்க வோதி விளக்கிய நலத்தினால், இப்பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவ தாயிற்று. இனிப் பழையவுரைகாரர். “நாடுகாணவிர்சுட ரென்றது, நாடெல்லாம் நின்று காணும்படி நின்றெரிகின்ற விளங்கின சுடர் என்றவா” றென்றும், “இச் சிறப்பானே யிதற்கு நாடுகா ணவிர்சுட ரெனப் பெயராயிற்” றென்றும் கூறுவர். நாடுகா ணவிர்சுடராகிய காட்டுத்தீப் போலும் சினம் என்றற்கு “அவிர் சுடர் அழல்” என்றார். அழல், இலக்கணையால் சினத்துக் காயிற்று. காட்டுத்தீ சுடர்விட் டவிர்வது போல, யானையின் சினத் தீ “ஒண்பொறி பிசிர” நிற்கு மெனக் கொள்க. ஈண்டுச் சினமின்றாக, பாகரது தோட்டி வழிநின்றியங்கும் யானை யெடுக்குந் துகள் ஒண்பொறியாய்ப் பிசிர நின்ற தென்பார், “தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று, ஒண்பொறி பிசிர” என்றார். தொடி, யானைக்கோட்டிற்கு வலிமிகுமாறு இடையே செறிக்கப்படும் பூண்; நுனியிற் செருகப்படும் கிம்புரி யன்று. தோட்டி நீவாதே தொடி சேர்பு நின்றதாயினும் ஒண்பொறி பிசிர இயங்குதலால் கடுஞ்சின முடையது போலும் என அதனைப் பரிசிலாகப் பெறும் பாணர் அஞ்சாமைப்பொருட்டு, சினத்தின் இயல்பை, “நாடுகா ணவிர்சுடர் அழல்” என விளக்கி, அச் சினமின்றிப் பாகர் ஏவல் வழி யொழுகும் இயல்பிற் றென்றற்கு, “அழல் விடுபு, பாகர் ஏவலின் மரீஇய” தென்றும், சின முற்றவழியும் பாகர் ஏவலின் மரீஇயதனால், சினத்தைச் செயற்படுத்தும் வலி குறைந்தது போலும் என அயிராமைப் பொருட்டு, “மரீஇய மைந்தின்” என்றும் கூறினார். பாகரேவலின், மரீஇய மைந்தின் யானை, தொழில்புகல் யானை யென இயையும். இனிப் பழையவுரைகாரர், “சுடரழ லென்றதனைச் சுடர்போலும் அழலென வுவமத் தொகையாக்கி, அழலை அந்த யானையின் சீற்றத்தீ யாக்குக” வென்றும் “மரீஇயவென்றது, அவ்வாறழல் விட்டும் பாக ரேவலொடு மரீஇயவென்றவா” றென்றும் கூறுவர். தோட்டி நீவுதற்கேற்ற சினமுண்டாகிய வழியும் அச்சினத்துவழி யோடாது அடக்குவதும், மரீஇய நெறிவழிப் பிறழா தொழுகு தலும் வன்மையின் நற்பயனாதலின், “மரீஇயமைந்” தென்றார். மருவுதற் கேதுவாகிய மைந்து ஏதுப்பெயராய் மரீஇய வென்னும் பெயரெச்சத்தை முடித்து நின்றது. பாணர் பெறும் பரிசிலாகிய யானை மறம் புகல் யானையாயின் பயனின் றாதலால், பல தொழிலும் பயின்ற யானையென்றும், மறத் தொழிலினும் பிற தொழில்களை விரும்புவதென்றும் தோன்ற, “தொழில் புகல்யானை” யென்றார். புகல், ஈண்டு முதனிலைத் தொழிற்பெயராய், மைந்தினையும், புகலினையுமுடைய யானை யென இயைய நின்றது. இனிப் புகல் யானையைப் புகலும் யானையாகக் கொண்டு வினைத்தொகை யாக்கலு மொன்று; அல்லதூஉம், பல தொழிலும் பயின்ற தென எல்லாரானும் விரும்பிப் பராட்டப்படும் யானை யென்றுமாம்; பிறரும் “தொழில் நவில் யானை” (பதிற். 84) என்ப; அதற்குப் பழையவுரைகாரர் “போர்க்குரிய யானை யென்று எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானை” யெனப் பொருள் கூறுவர். செல்லாய் : செய்யா யென்னும் முன்னிலை வினைமுற்று, (தொல்.சொல். எச்ச. 54); எதிர்மறைப் பொருளாகாது செல்லென்னும் பொருள்பட வந்தது. ஓ : அசைநிலை. தோட்டி நீவாது தொடி சேர்பு நின்றே தம்மால் எழுப்பப்படும் துகள் ஒண்பொறி பிசிர, அது கண்டு, அவிர் சுடர் அழல் விடுபு, பாகர் ஏவலின் மரீஇய மைந்தினையும் தொழில் புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன் என இயையும். இதுகாறும் கூறியது, நார்முடிச் சேரல், நீரிமிழ் சிலம்பின் நேரியோன்; சில்வளை விறலி, நீ செல்லின், அவன் வயங்கிழை யணிந்து மகளிர் நலஞ் சிறப்ப, பாணர் பைம்பூ மலைய, இளையர் உவகையராய் வியன்களம் வாழ்த்த, மைந்தினையும் தொழில் புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன்; ஆதலால், செல்லாய் என்பதாம். பழையவுரைகாரர் “சேரல் தான், நேரியோன், இளையர் களம் வாழ்த்த, மகளிர் மலர்ந்த வேங்கையின் இழை யணிந்து நலஞ் சிறப்ப, பாணர் பூமலைய யானையைப் பல நல்குவன்; ஆனபின்பு, விறலி நீ, செல்லாயோ எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.” நான்காம் பத்து மூலமும் உரையும் முற்றும். ஆசிரியர் பரணர் பாடிய ஐந்தாம் பத்து பதிகம் வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்றமகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் 5. கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்ப லருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு மாறா வல்வி லிடும்பிற் புறத்திறுத் 10. துறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுர னெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முழாரை 1முழுமுத றுமியப் பண்ணி 15. வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தன் முரற்சியாற் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து 20. நிலைச் செருவி னாற்றலை யறுத்துக் கெடலருந் தானையொடு கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம், சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபு நோன்றொடை, ஊன்றுவை யடிசில், கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனற்றார். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக்கோ. கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். 1. சுடர்வீ வேங்கை புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப் பண்ணமை முழவும் பதலையும் பிறவும் 1கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் 5. காவிற் 2றகைத்த துறைகூடு கலப்பையர் கைவ லிளையர் கடவுட் பழிச்ச மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன் 10. மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச் சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் மழைபெயல் மாறிய கழைதிரங் கத்தம் 15. ஒன்றிரண் டலபல 3 கழிந்து திண்டேர் வசையி னெடுந்தகை காண்குவந் திசினே தாவ லுய்யுமோ மற்றே தாவாது வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ்சமத் தரசுபடக் கடந்து 20. வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர் மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின் எடுத்தே றேய கடிப்புடை வியன்கண் வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து 25. காலுளைக் கடும்பிசி ருடைய வாலுளைக் கடும்பரிப் புரவி யூர்ந்தநின் படுந்திரைப் பனிக்கட லுழந்த 1 தாளே. துறை : காஞ்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சுடர்வீ வேங்கை 1-2. புணர் புரி ............. பொறுப்ப உரை : புணர்புரி நரம்பின் - இசை புணர்த்தற்கு முறுக்கிய நரம்பிடை யெழும்; தீந் தொடை பழுனிய - இனிய இசையைச் செய்வதாகிய; வணர் அமை நல் யாழ் - வளை வமைந்த கோட்டினையுடைய நல்ல யாழை; இளையர் பொறுப்ப - ஏவலிளையர் சுமந்துவர என்றவாறு. யாழிற் புணர்த்து இசை யெழுப்புதற்காக முறுக்கிய நரம்பாதலின் “புணர்புரி நரம்பு” என்றார். இனிப் புணர்தல் மத்தளத்தின் தாளத்தோடு பொருந்துத லென்றுமாம். தீந்தொடை, இன்னிசை; “தீந்தொடைச் செவ்வழிப் பாலை” (சிலப். கானல்.) என்று அடிகளும் கூறுதல் காண்க. வணர், யாழ்க்கோட்டின் வளைவு; “வணர் கோட்டுச் சீறியாழ்” (புறம். 155) என வருதல் காண்க. நல் யாழ் பேரியாழும், இளையர், பாண்மகளிரும் இசை பயிலும் இளமாணாக்கருமாம். 3-6. பண்ணமை ........... பழிச்ச உரை : பண்ணமை முழவும் - பண்ணோடு பொருந்துமா றமைந்த முழவும்; பதலையும் - ஒருகண் மாக்கிணையும்; பிறவும் - பிற இசைக்கருவிகளும்; கண்ணறுத் தியற்றிய தூம்பொடு - மூங்கிற் கணுவை யிடைவிட் டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் என்னும் வாச்சியத்தோடு; சுருக்கி - ஒருங்கே சேர்த்து; தகைத்த காவில் - ஒருபுறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே; துறை கூடு கலப்பையர் - பாடற்றுறைக்கு வேண்டிய கருவி யெல்லாம் கூடின மூடையைச் சுமந்தவராய்; கைவல் இளையர் கடவுள் பழிச்ச - இசைத்துறையில் வல்ல இளையவர்கள் தாம் செல்லும் வழியில் தீங்குவாராமை குறித்துக் கடவுளைப் பரவி வர என்றவாறு. பண், இசைச் சுருதி; பண்ணுதலுமாம். கண்ணறுத்தியற்றிய பெருவங்கியம் களிற்றினது கைபோலும் வடிவை யுடையதாதல் பற்றி, களிற்றுயிர்த் தூம்பு என்றும் வழங்கும். “கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்” (மலைபடு. 6) என்றும், “கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின்” (புறம். 152) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தகைத்த காவில் என மாறுக. தூம்பொடு சுருக்கி ஒருபக்கத்தே தகைத்த காவடியின் மறுபக்கத்தே கட்டிய கலப் பையினையுடையர் என இயைக்க. கலங்களைப் பெய்த பையைக் கலப் பை யென்றார். பிறவும் என்றதனால், எல்லரி, ஆகுளி முதலியனவும் கொள்க. துறை கூடு கலப்பையர் என்றதற்குக் காவடியின் மறுதலைத் துறை சமமாய் நிற்குமாறு எடை கூடிய கலப்பையர் எனினுமாம். “தலைப்புணர்த் தசைத்த பஃறொகைக் கலப்பையர்” (அகம். 301) என்று பிறரும் கூறுதல் காண்க. ஈண்டுத் துறை கூடுதல் இசைக்கலங்கட்குக் கொள்ளப் பட்டிருத் தலை யறிக. பாடற்றுறை, “வலிவு மெலிவு சம மென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப் பாடும் இருபத்தொரு பாடற்றுறை” யென்ப. “மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பி” (புறம். 152) என்று சான்றோர் கூறுதல் காண்க. காடுகளின் வழியே செல்லுமிடத்துக் கள்வராலும் விலங்கு களாலும் பிறதெய்வங்களாலும் தீங்கு வாராது காத்தற்குக் கடவுளைப் பாடிப் பரவுவது இப்பாணர் முதலாயி னார்க்கு இயல்பாதலால், “கடவுட் பழிச்ச” வென்றார்; “இலையின் மராத்த வெவ்வந் தாங்கி, வலைவலந் தன்ன மென்னிழல் மருங்கின், காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை” (பொருந.50-3) என்று பிற சான்றோரும் கூறுவது காண்க. மதுரை நோக்கிச் செல்லலுற்ற கோவலன் கண்ணகியென்ற இருவருடன் வந்த கவுந்தியடிகளும் துணையாகப் புறப்பட்டுச் சென்றவிடத்து. “மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாகெனப், பழிப் பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்” (சிலப். 10 : 100-1) என்று அடிகள் கூறுமாற்றானும் இவ் வழக்கமுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், துறை கூடு கலப்பை யென்றற்கு “ஆடற்றுறைக்கு வேண்டுவன வெல்லாம் கூடின முட்டு” என்பர். எனவே, இப் பாட்டுக் கூத்தர் தலைவன் கூறும் கூற்றென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். அதுவும் பொருந்துமாறு, தூம்பும் குரலும் தட்டையும் எல்லரியும் பதலையும் பிறவும் “கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப, நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்” (மலைபடு. 6-13) என வரும் கூத்தராற்றுப்படையால் அறிக. 7-13. மறப்புலிக்.......... பிளிறும் உரை : வயக் களிறு - வலிமிக்க களிற்றியானை; வரை சேர்பு எழுந்த சுடர்வீ வேங்கை - மலைப்பக்கத்தே சேரவளர்ந்து நின்ற ஒளி பொருந்திய பூக்களையுடைய வேங்கை மரத்தை; மறப்புலிக் குழூஉக் குரல் செத்து - மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமாகக் கருதிச் சினங்கொண்டு; பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து - பூக்கள் பொருந்திய பெரிய வேங்கைக் கிளையை வளைத்து ஈர்த்துப் பிளந்து; தன் மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி - தனது பெரிய கரிய தலையில் அழகுண்டாக அணிந்துகொண்டு; சேஎர் உற்றசெல் படை மறவர் - பலராய்த் திரளுதலையுற்ற பகைமேற் சேறலை யுடைய படைவீரர்; தண்டுடை வலத்தர் - வலக்கையில் தண்டேந்திச் சென்று; போர் எதிர்ந் தாங்கு - போரிடத்தே பகைவர் எதிர் நின்று ஆரவாரித்தாற் போல; வழையமல் வியன் காடு சிலம்பப் பிளிறும் - சுர புன்னைகள் நிறைந்த காட்டகம் எதிரொலிக்குமாறு பிளிறும் என்றவாறு. கரும்பாறைகள் செறிந்த மலையின் பக்கத்தே பெரியதொரு பாறையைச் சேரநின்ற வேங்கை மரத்தின் பூ நிறைந்த தோற்றம், புலியின் மேனியிற் காணப்படும் தோற்றத்தைக் காட்டி, யானையை நடுங்குவித்ததாக, நடுங்கிய அவ் யானை சினம் மிகுந்து தன்னை வறிதே நடுங்கு வித்ததற்குத் தண்டமாக, அவ் வேங்கையின் பூவுடைப் பெருஞ்சினையை வாங்கிப் பிளந்து சினந் தணிவதாயிற் றென்பதாம். வய, வலி. புதுப்பூ வென்றற்குச் சுடர்வீ யென்றார். பூக்களின் நிறமும் ஒளியுமே புலியின் மேனி நிறமும் ஒளியும் காட்டி யானையின் உள்ளத்தில் அச்சமும் நடுக்கமும் எழுப்பின வாதலின் “சுடர்வீ வேங்கை” யென்றும், “மறப்புலிக் குழூஉக் குரல்” என்றும் கூறினார். நிறமும் ஒளியும் புலியின் மேனி மயிர்போல் காணப்படுதலால், அதனைக் “குழூஉக் குரல்” என்றார். குரல், மயிர்; “கொடியியல் நல்லார் குரல்” (கலி.மரு. 23) என்பது காண்க. “வயக்களிறு” என்ற குறிப்பால், முன்பொரு கால் இக் களிறு புலியொடு பொருது வெற்றிபெற்றதென்றறியலாம். வேங்கைப் பூக்கட்குப் பின்னே மலைப்பக்கத்துத் துறுகல் நின்று வேங்கையின் தோற்றத்தைத் தோற்றுவித்த தென்பது “வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கை” யென்பதனாற் பெறுதும். “வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும்” (குறுந். 47) என்றும், “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட் டொள்வீ தாய துறுகல். இரும்புலி வரிப்புறம், கடுக்கும்” (புற. 202) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. அக்களிற்றின் சினமிகுதி தோன்ற “வாங்கிப் பிளந்து” என்றார். பிளந்த வேங்கைச் சினையைச் சென்னியிற் கொண்டு செல்லும் அக் களிறு தண்டேந்திச் செல்லும் போர்மறவரை நினைப் பித்தலின், “செல் படை மறவர் தண்டுடை வலத்தர், போரெதிர்ந் தாங்கு” என்றார். செல்படை யென்று கொண்டு இடிபோல மின்னிப் புடைக்கும் படை யென்றும் கூறுவர். சேஎர், திரட்சி. களிறு பிளிறும் என்றதற்கு ஏற்ப உவமைக்கண் ஆரவாரித்தல் பெற்றாம். “உறுபலி யுரு வேய்ப்பப் பூத்த வேங்கையைக், கறுவுகொண் டதன்முதல் குத்திய மதயானை” (கலி. 38) எனப் பிறரும் கூறுதல் காண்க. “களிறு தன் சினத்தாற் செய்த செயலுக்கெல்லாம் வேங்கை காரணமாய் நின்றமையான், இதற்குச் சுடர்வீ வேங்கை என்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். “கைவல் விளையர் கடவுட் பழிச்ச” அவர் குரலோசையைப் புலிக்குழுவின் குரலாகக் கருதி யானை வேங்கையைச் சிதைக்கலுற்ற தென்பாரு முளர். களிறு, குரல் செத்து, வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை பிளந்து, சென்னி மலைச்சி, மறவர் போரெதிர்ந் தாங்குப் பிளிறும் அத்தம் (14) என இயையும். 14-16. மழைபெயல்........... காண்குவந்திசினே. உரை : மழை பெயல் மாறிய - மழை பெய்தல் நீங்கினதால்; கழை திரங்கு அத்தம் - மூங்கில்கள் பசையற் றுலர்ந்து போன வழிகள்; ஒன்று இரண்டு அல பல கழிந்து - ஒன்று இரண்டன்றிப் பலவற்றைக் கடந்து; திண் தேர் - திண்ணிய தேர்களையுடைய; வசை யில் நெடுந்தகை - குற்றமில்லாத நெடுந்தகையாகிய நின்னை; காண்கு வந்திசின் - காண்டற்கு வந்தேன் என்றவாறு. மழையின்மையால் மூங்கில்கள் பசையற்றுலர்ந்தவழி அவை காற்றால் தம்மில் இழைந்து தீப்பற்றி யெரிவதால், வழிகள் செல்லற் கரியவாதல் பற்றி, அருவழிகளை இவ்வாறு கூறினார். “கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை” (புறம். 370) என்று பிறரும் கூறுதல் காண்க. வந்திசின்: இசின் தன்மைக்கண் வந்தது; இஃது “ஏனையிடத்தொடுந் தகுநிலையுடைய வென்மனார் புலவர்” என்பதனா லமைந்தது. “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற். 61) எனப் பிறரும் தன்மைக்கண் வழங்குதல் காண்க. நெடுந்தகையை விளியாக்கினு மமையும். 17-27. தாவல் ........... தாளே உரை : வஞ்சினம் தாவாது முடித்த ஒன்று மொழி மறவர் - தாம் கூறிய வஞ்சினம் தப்பாது முடித்த வாய்மையினையுடைய வீரர்; முரசுடைப் பெருஞ் சமத்து - முரசு முழங்குதலை யுடைய பெரிய போரின்கண்; அரசுபடக் கடந்து - எதிர்த்த வேந்தர் பட்டழியுமாறு வஞ்சியாது பொருது; வெவ்வர் ஓச்சம் பெருக - நட்பரசருடைய ஆக்கம் பெருகவும்; தெவ்வர் இருந்தலை - பகையரசருடைய பெரிய தலைகளை; உலக்கை எறி மிளகின் இடித்து - உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு போலத் தாம் ஏந்திய தோமரத்தால் இடித்து அழிக்கவும்; வைகு ஆர்ப்பு எழுந்த மைபடு பரப்பின் - இடையறாத முழக்க முண்டாகிய கரிய நிறத்தை யுடைய கடல் போல; எடுத் தேறு ஏய கடிப்புடை வியன்கண் - எடுத்தெறிதலைத் தெரிவிக்கும் குறுந்தடியால் முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரசு; வலம்படு சீர்த்தி - வெற்றியாலுண்டாகிய மிக்க புகழோடு; ஒருங்குடன் இயைந்து - ஒருங்கே கூடி முழங்க; வால் உளைக் கடும்பரிப் புரவி யூர்ந்த - வெள்ளிய தலையாட்ட மணிந்த விரைந்த செலவினையுடைய குதிரையை யூர்ந்த நின்னுடைய; படும் திரைப் பனிக் கடல் கால் உளைக் கடும் பிசிருடைய உழந்த நின் தாள் - ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ந்த கடலிற் சென்று அவ் வலைகள் காற்றால் உளைந்து சிறு சிறு கடிய திவலைகளாக உடையுமாறு போருடற்றிய தாள்கள்; தாவல் உய்யுமோ - வருந்துதலினின்றும் நீங்குமோ; (வருந்தா தொழியுமோ) சொல்வாயாக என்றவாறு. வஞ்சினமாவது “யான் இன்னது செய்யேனாயின் இன்ன குற்ற முடைய னாகுக” என்பது போலும் நெடுமொழியாற் சூளுறவு செய்வது; “இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத், துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்” (பொ. 79) என்று ஆசிரியர் கூறுவதும், “இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை. மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது. உண்குவ மல்லேம் புகா” (பதிற். 58) என்றும் “சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை ...... ஒருங்ககப் படேஎ னாயின் பொருந்திய, என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது, கொடியன்எம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக், குடிபழி தூற்றும் கோலே னாகுக.... புலவர் பாடாது வரைகஎன் நிலவரை” (புறம். 72) என்றும், “முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக” (புறம். 71) என்றும், “காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தல் மகளிர், ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே” (புறம். 73) என்றும் சான்றோர் கூறுவதும் வஞ்சினத்துக்கு இலக்கணமும் இலக்கியங்களுமாம். வஞ்சினம் தப்ப வரின் உயிர் துறப்பரே யன்றி. வீரர் அச் சொல்லைத் தவறா ராதலின், அவரை “ஒன்று மொழி மறவர்” என்றார்; இனி, தமக்குத் தலைவராயினார் ஏற்கும் மேற்கோளே தமக்கும் உரித் தாகக் கொண்டு அவர் வழியொன்றி யொழுகும் இயல்புபற்றி, ஒன்று மொழி மறவர் எனச் சிறப்பித்தா ரென்றுமாம். அரசர் போரிடைச் செய்யும் வஞ்சினம் பகைவரைப் புறங்காண்டலும் அவர் திருநாடு கைப்பற்றிக் கோடலும் கருதி நிற்றல்பற்றி, “வஞ்சினம் முடித்தல் - மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்தல்” என்று பழையவுரைகாரர் கூறுவர். பெரும்போர் நிகழுமிடத்து வீரர்க்கு மறம் கிளர்ந்தெழுவது குறித்து முரசு முழக்குப வாதலின், “முரசுடைப் பெருஞ் சமத்து” என்றார். “முரசுடைப் பெருஞ்சமம் ததைய வார்ப்பெழ, அரைசுபடக் கெடுக்கும் ஆற்றல்” (பதிற். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. நன்மை நன்னர் என வருதல் போல, வெம்மை வெவ்வர் என்று வந்தது என்பார், பழையவுரைகாரர். “வெம்மை யென்னும் பண்பிற்கு வெவ்வ ரென்பதும் ஒரு வாய்பாடு” என்பர். எனவே, போர்க்குரிய மறத்தீயின் வெம்மை மிக என்பது அவர் கருத்தாதலை யறிக. வேண்டற் பொருட்டாய வெம்மை யென்னும் பண்படியாகப் பிறந்த இவ் வெவ்வ ரென்னும் பெயர், வெய்யர் என வரற்பாலது எதுகை நோக்கி வெவ்வ ரென வந்தது என்று கோடல் சீரிது. “யாயும் நனி வெய்யள்” (குறுந். 51) “நீயும் வெய்யை” (அகம். 112) என்றும் வருதல் காண்க. வெவ்வர், வேண்டியவர் என்னும் பொருட்டாய் ஈண்டு நட்பரசர்மேற்று. தெவ்வர் இருந்தலைக்கு மிளகு உவமம். தெவ்வர் இருந்தலை உலக்கையெறி மிளகின் இடித்து என மாறிக் கூட்டுக. உவமத்துக் கேற்பப் பொருளிடத்துத் தோமரம் வருவிக்கப்பட்டது. “தோமர வலத்தர்” (பதிற். 54) என்றும், “தண்டுடை வலத்தர்” (பதிற். 41) என்றும் வீரர் கூறப்படுதல் காண்க. மைபடு பரப்புப் போல, கடிப்புடை வியன்கண், சீர்த்தியுடன் இயைந்து முழங்க என இயையும். வியன்கண், ஆகுபெயரால் முரசுக் காயிற்று. சீர்த்தியுடன் ஒருங்கியைந்து முழங்க எனவே, இது வெற்றி முரசு என்றவாறாம். இயைய வென்பது இயைந் தெனத் திரிந்து நின்றது. கடலகத்தே செல்லும் கலங்களைத் தாக்கித் தீங்குசெய்து திரிந்த பகைவர்களை அக்கடலகத்தே சென்று வேற்படையா லெறிந்து வென்றழித்தா னாதலின், “பனிக்கட லுழந்த தாள்” என்றார்; பிறாண்டும், “கடலொடுழந்த பனித்துறைப் பரதவ” (பதிற். 48) என்பர். கடல் காலுளைக் கடும்பிசிருடைய உழந்த தாளென இயைக்க. இதனாற் கூறியது, மைபடு பரப்புப் போல் எடுத்தேறு ஏவிய வியன்கண்ணையுடைய, முரசு சீர்த்தியுடன் ஒருங்கு இயைந்து முழங்க, அவ் வெடுத்தேறு முழக்கங் கேட்ட ஒன்று மொழி மறவர், பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருகவும், தெவ்வர் இருந்தலை யிடித்து அழிக்கவும், புரவி யூர்ந்த நின்னுடைய பனிக்கடல் பிசிருடைய உழந்த தாள் தாவல் உய்யுமோ உரைப்பாய் என்றவாறாயிற்று. எடுத்தேறு, முன்னேறிப் படையினை யெறிதல். முன்னேறியும் பக்கங்களில் ஒதுங்கியும் போருடற்ற வேண்டுதலின், அவற்றைப் படை வீரர் அனைவரும் ஒருமுகமாகச்செய்வது குறித்துத் தானைத் தலைவர் பணிக்கும் உரை அவ் வீரர் செவியிற் படாமையின், அதனை முரசு முழக்கால் அறிவிக்கும் இயல்பை, “எடுத்தேறேய கடிப்புடை வியன்கண்” என்றும், அம் முழக்கின் குறிப்புவழி யொழுகி வெற்றி பெறுதலால், வெற்றி முழக்கும் உட னெழுதலின், “வியன்கண் வலம்படு சீர்த்தி ஒருங்குட னியைந்து” என்றும் கூறினார். எடுத்தேறி யெறியும் குறிப்பு முரசினை முழக்கும் கடிப்பினால் தெரிவிக்கப்படுவது பற்றி, “எடுத்தே றேய கடிப்பு” எனக் கடிப்பின்மே லேற்றினார்; “எடுத்தே றேய கடிப்புடை யதிரும்” (பதிற். 84) எனப் பிறரும் கூறுதல் காண்க. கடிப்பு, முரசறையும் குறுந்தடி. ஆர்ப்பு இடையறாமை பற்றி, “வைகார்ப்பு” என்றார்; “வைகுபுனல்” (அகம். 116) என்றாற் போல. மை, கருமை. இனிப் பழையவுரைகாரர், “வைகார்ப்பு, ஒருகாலும் இடையறாது தங்கின ஆரவாரம்” என்றும், “மைபடு பரப்பு, கடற்பரப்பு” என்றும், “காலுளை யென்றது, காற்றானே யுளைதலையுடைய வென்றவாறு; உளைதல், விடுபடுதல்” என்றும் கூறுவர். வருத்தப் பொருட்டாய தா வென்னும் உரிச்சொல் தாவ லெனப் பெயராயிற்று. “தாவ லுய்யுமோ வென்றது, வருத்தத் தினின்று நீங்குமோ என்றவாறு” என்றும், “தாவென்னும் உரிச்சொல் தொழிற் பெயர்ப்பட்டுத் தாவலென நின்றது” என்றும் பழையவுரை கூறும். இதுகாறும் கூறியது, வசையில் நெடுந்தகை, இளையர் யாழ் பொறுப்ப, கைவல் இளையர் கலப்பையராய்க் கடவுட் பழிச்ச, அத்தம் ஒன்றிரண்டல, பல கழிந்து நின்னைக் காண்கு வந்திசின்; எடுத்தே றேய கடிப்புடை வியன்கண் சீர்த்தியுடன் ஒருங்கியைந்து முழங்க, ஒன்றுமொழி மறவர் சமத்தில், அரசுபடக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருகவும், தெவ்வர் இருந்தலை இடித் தழிக்கவும், புரவி யூர்ந்த நின்னுடைய பனிக்கடல் பிசிருடைய வுழந்த தாள் தாவ லுய்யுமோ, கூறுக என முடிக்க. “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று. நின் கடலுழந்த தாள் தாவ லுய்யுமோ வென்றதனாற் காட்சி வாழ்த்தாயிற்று.” 2. தசும்பு துளங்கிருக்கை 1. இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் 5. அம்புசே ருடம்பினர் 1 நேர்ந்தோ ரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னோர் பெரும நன்னுதல் கணவ அண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ 10. இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்செறு விளைந்த மணிநிற மட்டம் ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழ வாடியல் 15. உளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் மன்பதை மருள வரசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரொடு மன்ன ரேத்தநின் 20. தேரொடு சுற்ற முலகுடன் மூய மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தசும்புதுளங் கிருக்கை 1-8. இரும்பனம் புடையல் ............. குட்டுவ உரை : இரும்பனம் புடையல் - கரிய பனந்தோட்டாலாகிய மாலையும்; ஈகை வான்கழல் - பொன்னாற் செய்த பெரிய வீரக் கழலுமுடையராய்; மீன்தேர் கொட்பின் - மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால்; சிரல் பனிக்கயம் மூழ்கிப் பெயர்ந்தன்ன - சிரற் பறவை குளிர்ந்த குளத்துட் பாய்ந்து மூழ்கி மேலே யெழுகின்ற காலத்து அதன் வாயலகை யொப்ப; நெடுவெள்ளூசி - மார்பிற் புண்களைத் தைக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந் தெழுகின்ற நெடிய வெண்மையான வூசியினா லாகிய; நெடுவசி - நீண்ட தழும்பும்; பரந்த வடு வாழ் மார்பின் - பரந்த வடுவும் பொருந்திய மார்பினையும்; அம்பு சேர் உடம்பினர் நேர்ந்தோர் அல்லது - அம்புகளால் புண்பட்ட வுடம்பினையு முடையராய்ப் பொர வந்தாரோடு தும்பை சூடிப் பொருவதல்லது அன்னரல்லாத பிறருடன்; தும்பை சூடாது மலைந்த மாட்சி - தும்பை சூடாமல் புறக்கணித்துப் போய்ப் போருடற்றும் போர்மாட்சியு முடையராகிய; அன்னோர் பெரும - அத்தகைய தூய சான்றோர்க்குத் தலைவனே; நன்னுதல் கணவ - நல்ல நெற்றியை யுடைய இளங்கோவேண்மாட்குக் கணவனே; அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ - பெரிய யானைகளையும் வெல்லுகின்ற போரையு முடைய செங்குட்டுவனே என்றவாறு. புடையலும் கழலும் மாட்சியு முடைய அன்னோர் என இயைக்க. வசியும் வடுவும் வாழ்கின்ற மார்பினையும் உடம்பினையு முடையராய் நேர்ந்தோர் என இயையும், புடையல். மாலை. ஈகை, பொன்.“ஈகை வான் கழல்” (பதிற். 38) என்று பிறரும் கூறுதல் காண்க. “ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்” (புறம். 66) என ஒளவையார் கூறுவர். மீன் பிடிக்கும் சிச்சிலிப் பறவை தன் அலகைக் கீழ் நாட்டிக்கொண்டு நீர்க்குட் பாய்ந்து மூழ்கி மறைந்து அலகை மேனோக்கி நிறுத்தி வெளியேறுவது, வீரர் மார்பிற் கிழிந்த புண்ணைத் தைக்கும் ஊசிக்கு உவமம். இது வடிவும் தொழில் விரைவும் பற்றிய தென்க. வசி, தழும்பு; வடு, புண் ஆறியதனால் உண்டாயது. உடம்பினர்: முற்றெச்சம். நேர்ந்தோரல்லது என எதிர்மறை வாய்பாட்டாற் கூறியது, விழுப்புண் பட்டாரோ டன்றிப் பிறரொடு பொரற்கு விரும்பாத மறமிகுதியை யாப்புறுத்தற்கு. தும்பை சூடாத மாட்சி யென்னாது, தும்பை சூடாது மலைந்த மாட்சி யென்றதனால், விழுப்புண் பட்டாரோடு பொருவதன்றிப் பிறர் எதிர்ந்தவழி வீறின்றெனத் தும்பை சூடாது, அவரைப் புறக்கணித் தொதுக்கி ஒத்தாரொடு பொருத சிறப்புத் தோன்ற, “மலைந்த மாட்சி அன்னோர்” என்றார். அம்பு : ஆகுபெயர். இனிப் பழைய வுரைகாரர், “கயல் மூழ்கிச் சிரல் பெயர்ந் தன்ன நெடு வெள்ளூசி யென்றது, கயத்திலே மூழ்கிச் சிரல் எழுகின்ற காலத்து அதன் வாயலகை யொக்கப் புண்களை இழை கொள்கின்ற காலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைந்தெழுகின்ற வூசியென்ற வாறு” என்றும் “இனி நெடு வெள்ளூசியை நெட்டை யென்பதோர் கருவி யென்பாருமுள” ரென்றும், “அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி யென்றது, அரசன் வீரரில் அம்புசேர் உடம்பினராய்த் தம்மோடு வீரமொத்தாரோ டல்லாது போர் குறித்தார்தம்மோடு தும்பை சூடாமல் மாறுபட்ட மாட்சியை யுடையவ ரென்றவா” றென்றும் கூறுவர். இவ்வாறு கூறற்குக் காரணம், “அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ” ரென்று பாடங் கொண்ட தென அறிக. செங்குட்டுவன் மனைவியை இளங்கோ வடிகள் இளங்கோ வேண்மாளென் றாராகலின், நன்னுத லென்ற தற்கு இவ்வாறு கூறப்பட்டது; “இளங்கோ வேண்மாளுடனிருந் தருளி” (சிலப். 25:5) என வருதல் காண்க. அன்னோரென்றது அவ்வியல்பினை யுடைய வீரச் சான்றோர் என்னும் சுட்டு மாத்திரையாய் நின்றது. 9-15. மைந்துடை ............... எண்ணின் உரை : மைந்துடை நல்லமர் கடந்து - பகைவரது வலியுடைந்து கெடுதற் கேதுவாகிய நல்ல போரை வஞ்சியாது எதிர் நின்று செய்து; வலம் தரீஇ - வெற்றியைத் தந்து; இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி - இஞ்சியும் நறிய பூவும் விரவத் தொடுத்த பசிய மாலை யணிந்து; புறத்து சாந்து எறிந்த தசும்பு - புறத்தே சந்தனம் பூசப்பெற்ற கட்குடங்கள்; துளங்கு இருக்கை - அசைகின்ற இருக்கைகளில் வைத்து; தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் - அவற்றில் நிறைந்த தீவிய சுவை நிறைந்த நீலமணி போலும் கள்ளினை; ஓம்பா ஈகையின் - தனக்கெனச் சிறிதும் கருதாது ஈயும் இயல்பி னால்; வண்மகிழ் சுரந்து - மிக்க மகிழ்ச்சியினை வீரர்க்கும் போர்க்களம் பாடும் பொருநர் பாணர் முதலியோர்க்கும் அளித்து; கோடியர் பெருங்கிளை வாழ - கூத்தரது பெரிய சுற்றம் உவக்கும் படியாக; பொழிந்தவை - வழங்கப்பட்டனவாகிய, ஆடு இயல் உளை யவிர் கலிமா - அசையும் இயல்பினையுடைய தலை யாட்ட மணிந்து விளங்கும் குதிரைகளை; எண்ணின் - எண்ணலுற்றால் என்றவாறு. வலம் தரீஇ, மகிழ் சுரந்து. பொழிந்தவையாகிய கலிமா எண்ணின் என இயைக்க. மைந்து, வன்மை. தம்மோ டொத்த வன்மையும் படையும் ஆற்றலும் உடையாரொடு செய்யும் போரே அவரவரும் தம் புகழை நிறுத்தற்குரிய நலமுடைமையின் “நல்லமர்” என்றார். மைந்து, ஈண்டுப் பகைவர்மேல் நின்றது. மைந்துடை அமர் என்றது, “மதனுடை நோன்றா” (முருகு. 4) ளென்புழிப்போல நின்றது. போருடற்றும் சான்றோர்க்கு மெய்ம்மறையாய் நின்று பொருது வெற்றி பெற்றானாகலின், “வலம் தரீஇ” என்றார். பகைவரொடு பொருமிடத்து நடு நிற்கும் வெற்றியினைப் பகைவர்க் கன்றித் தமக்கே யுரித்தாமாறு பொருது கோடலின் “தரீஇ” யென்றாரென்றுமாம். சேறு, சுவை; “தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்” (மதுரை. 400) என்று பிறரும் கூறுதல் காண்க. கட்குடத்தின் கழுத்தில் இஞ்சியும் நறிய பூவும் கலந்து தொடுத்த மாலையைக் கட்டி, புறத்தே சந்தனத்தைப் பூசி, குடம் அசையுமிடத்து அதற் கேற்ப இடந் தந்து நிற்கும் இருக்கையில் வைத்துக், கள்ளை நிரப்பி, உண்பாரை நிரையாக அமர்வித்து வழங்குப. கள்ளுண்பார் களிப்பினை மாற்ற இஞ்சியைத் தின்று பூவின் மணம் தேர்வராதலால், “இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி” யென்றார். புறத்தே சாந்தெறிதலும் நறுமணங் குறித்தே யாகும். பழைய வுரைகாரரும், மது நுகர்வழி இடையிடைக் கறித்து இன்புறுதற் பொருட்டு இஞ்சியும், மோந்து இன்புறுதற் பொருட்டுப் பூவுமாக விரவித் தொடுத்த மாலையினைப் பூட்டி, அவ்வாறு பயன் கோடற்குச் சாந்தும் புறத்தெறிந்த என்றவாறு,” என்பர். “தசும்பு துளங்கிருக்கை யென்றது தன் களிப்பு மிகுதியால் தன்னை யுண்டா ருடல் போல அத் தசும்பிருந்து ஆடும்படியான இருப்பென்றவாறு,” என்றும், “இச் சிறப்பான் இதற்குத் தசும்பு துளங்கிருக்கை யென்று பெயராயிற்று” என்றும் பழையவுரை கூறும். கள் நிரம்பிய குடங்கள் களிப் பேறியவழி அசைவதும் சீறுவதும் உண்டென்றும், அசையுங்கால் இருக்கையி னின்று உருண்டொழியாமைப் பொருட்டு இருக்கைகளும் அதற்கேற்ப அமைந்திருக்கு மென்றும், கள் விற்போரும் உண்போரும் கூறுவர். மட்டு, கள் ; அது மட்ட மென வந்தது. கள்ளின் தெளிவு நீலமணியின் நிறம் பெறுதலால், “மணி நிற மட்டம்” எனப் பட்டது. பெரிதுண்டு மகிழ் சிறக்கு மளவு கள்ளினை வழங்கியது தோன்ற, “வண்மகிழ் சுரந்து” என்றும், ஈத்துவக்கும் பேரின்பத்தால் தனக்கென வோம்பாமை கண்டு “ஓம்பா வீகையின்” என்றும் கூறினார். இவ்வாறு அதியமான் ஓம்பாவீகையின் வண்மகிழ் சுரந்த செய்தியை, ஒளவையார், “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே, பெரியகட் பெறினே. யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே” (புறம். 235) என்று கூறுதல் காண்க. இனி, மணிநிற மட்டத்தை நல்குவதோ டமையாது வளவிய செல்வம் தந்து மகிழ் சுரந்து, கோடியர் கிளை வாழக் கலிமாப் பொழிந்தானென் றுரைத்தலு மொன்று. இது பழைய வுரைகாரர்க்கும் கருத்தாதலை, “மட்டத்தினையும் வளவிய மகிழ்ச்சியினையும் சுரந்து என இரண்டாக வுரைத்தலுமாம்” என்பதனா லறிக. இனி, செங்குட்டுவன் தன் வீரர்க்கு வலமும், பொருநர் பாணர் முதலாயினார்க்கு மணிநிற மட்டமும், கோடியர்க்குக் கலிமாவும் வழங்கினானென்று உரைப்பினு மமையும். 16-23. மன்பதை மருள.............. பலவே உரை : மன்பதை மருள அரசு படக் கடந்து - காணும் மக்கள் வியப்பெய்தும் வண்ணம் பகையரசரை வென்றமையின்; முந்து வினை எதிர்வரப் பெறுதல் காணியர் - முன்னேறிச் செய்யும் போர் வினை இல்லாமையால் அஃது எதிர்வரப் பெறுவதை விழைந்தவராய்; நின் தேரொடு சுற்றம் - நின்தேர் வீரரும் எனை வீரரும், உலகுடன் மூய - நிலமெல்லாம் பரந்து நெருங்கி நிற்ப; ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களி றூர்ந்து - விளங்குகின்ற நிலையினையுடைய உயர்ந்த மருப்புக்களை யேந்திய யானை மேல் இவர்ந்து செல்லும்; மான மைந்தரொடு மன்னர் ஏத்த - மானமுடைய வீரரும் வேந்தரும் அஞ்சி ஏத்திப் பாராட்ட; மாயிருந் தெண் கடல் - பெரிய கரிய தெளிந்த கடலினது; மலி திரைப் பௌவத்து - மிக்க திரைகளையுடைய நீர்ப் பரப்பிலே; வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய - வெள்ளிய நுரையாகிய தலை நிறம் பொருந்திய சிறு சிறு திவலைகளாக வுடைந்து கெட; தண் பல வரூஉம் - தண்ணிய பலவாய் மேன்மேல் வரும்; புணரியிற் பல - அலைகளினும் பலவாகும் என்றவாறு. முந்து வினை யெதிர் வரப் பெறுதல் காணியர் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, அதுகண்டு களிறூர்ந்து செல்லும் மைந்தரொடு மன்னர் அஞ்சி ஏத்த, நீ பிறக்கோட்டிய தெண்கடல் பௌவத்து பிசிருடைய, வரூஉம் புணரியினும் பலவாம் என இயைத்து முடிக்க. இதனால் சொல்லியது, மன்பதை மருளப் பகையரசு களை வஞ்சியாது பொருது வெல்லும் மாண்பினால், போர் பெறுவது இல்லாமையால் அது பெறுதற்கு நின் படைவீரர் நாடெங்கும் பரந்து நெருங்க, அவர் கருத்தறிந் தஞ்சும் வேந்தரும் பிறரும் நின் அருள் நாடி யேத்த, நீ வேற்படை கொண்டு கடல்பிறக் கோட் டினை யென்றும், நீ வழங்கிய மாக்களை யெண்ணின் அவை அக் கடலிடத் தலையினும் பலவாம் என்றும் கூறியவாறாம். தன்னொடு பொர வந்த வேந்தர் செய்யும் சூழ்ச்சி யனைத்தும் நுனித் தறிந்து அற நெறியே நின்று போருடற்றி வென்றி யெய்துவது காணின் மக்கட்கு வியப்புண்டாதல் இயல்பாதலால், “மன்பதை மருள அரசுபடக் கடந்து” என்றார். கடந்து என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. வேந்தன் கடலிற் போர் செய்வான் சென்றானாக நிலத்தே நின்ற வீரர். அற்றமறிந்து பகையரசர் தாக்காமைக் காப்பார் நாடு முற்றும் நெருங்கிப் பரந்தவர், போர் பெறாமையால் வெறிகொண்டு அதனை நாடுவாராய்க் காணப்பட்டமையின், “முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர் தேரொடு சுற்றம் உலகுடன் மூய” என்றார். மூய - நெருங்க. உயர்ந்த களிறூர்ந்து செல்லும் செல்வமும் பெருமையு முடைய வீர மைந்தரும் சிற்றரசரும் குட்டுவனுடைய ஆண்மையும் வெற்றியும் வியந்து பாராட்டுவது தோன்ற, “மான மைந்தரொடு மன்ன ரேத்த” என்றார். பிறர்பால் காணப்படும் ஆண்மை முதலிய நலங்கண்டவழிப் பாராட்டுவது மானமுடைய மக்கட்கு மாண் பாதல்பற்றி, “மான மைந்தரொடு மன்னர்” எனச் சிறப்பித்துரைத்தார் என அறிக. வில்லும் வாளும் வேலும் கொண்டு பொரும் காலாட்களில் பலர் வேந்தனுடன் கடலிற் சேறலால், ஏனைத் தேர் யானை குதிரை முதலிய படை செலுத்தும் வீரர், நாடுகாத்தலில் ஈடு பட்டமை தோன்ற, “தேரொடு சுற்றம் உலகுடன் மூய”என்றார். ஏத்த, மூய என நின்ற வினையெச்சங்களை நீ பிறக்கோட்டிய என ஒருசொல் வருவித்து முடிக்க. இனி, அரசுபடக் கடந்து என்புழி, அரசு, கடலகத்தேயிருந்து கொண்டு குறும்பு செய்த பகையரச ரென்றும், அவரை வென்று மீளும் செய்தியை, “முந்து வினை” யென்றும், அக்காலை அவனை யெதிர் கொள்ளும் பொருட்டுக் கடற்கரைக்கண் வந்திருந்த வேந்தரும் மைந்தரும் ஏத்த, அவனோடு ஒப்பத் தேரேறி யுடன் வரும் அரசியற் சுற்றத்தாரும் ஏனைச் சான்றோரும் மொய்த்து நின்றதை “மூய” என்றும் கூறலுமாம். இவ்வாறு கூறுமிடத்து மூய வென்பது பெயரெச்சம். உலகு, சான்றோர்மேற்று. பௌவம், ஈண்டு நீர்ப்பரப்பின்மேற்று. பலவாய் நெருங்கித் திரைத்து வருதலின், நுரை பிசிராக வுடைவது தோன்ற, “வெண்டலைக் குரூஉப் பிசிருடைய” என்றார். புணரி, அலைகள். கடற்போர் செய்து பெற்ற வென்றியைப் பாராட்டிப் பாடி யாடி மகிழ்வது குறித்து, கோடியர்க்கு அக்கடலிற் போந்த குதிரைகளையே வழங்கினா னென்றற்கு, கடலிற் புணரியொடு உறழ்ந்து கூறினார் போலும். “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” (பட்டினப். 158) என்று சான்றோர் கூறுதலால், கடற்கப்பாலுள்ள நாடுகளிலிருந்து கலங்களிற் குதிரைகள் கொணரப்பட்டமை யறியலாம். இனி, பழையவுரைகாரர், “மன்னர் ஏத்தக் களிறூர்ந்து என முடித்து அதனைக் களிறூர வெனத் திரித்து மூய வென்னும் வினையொடு முடிக்க” என்பர். எனவே, “முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்” என்பதைப் பெயராக்கி, காண்பவர் களிற்றினை யூர, தேரொடு சுற்றம் உலகுடன் மூய என்று ரைக்குமாறு பெறுதும். இதுகாறும் கூறியது, பெரும, கணவ, குட்டுவ, வலம் தரீஇ, மகிழ் சுரந்து பொழிந்தவையாகிய கலிமா எண்ணின், முந்து வினை யெதிர் வரப் பெறுதல் காணியர், நின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, களிறூர்ந்து செல்லும் மைந்தரொடு மன்ன ரேத்த, நீ பிறக்கோட்டிய தெண்கடற் பௌவத்து வரூஉம் புணரியிற் பலவாம் என்பதாம். “இதனாற் சொல்லியது: அவன் கொடைச்சிறப்பும் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.” 3. ஏறா வேணி 1. கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசன் மேவற் சேயிழை மகளிர் உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற் பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள் 5. விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅக் கடவு ணிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய வார்ப்பெழச் 10. சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக் குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ அருவி யற்ற பெருவறற் காலையும் 15. அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக் கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந் தார்கலி வானந் தளிசொரிந் தாஅங் குறுவ ரார வோம்பா துண்டு 20. நகைவ ரார நன்கலஞ் சிதறி ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை வென்றி மேவ லுருகெழு சிறப்பிற் 25. கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகலவன் பெறுக மாவே யென்றும் இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும் 30. தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் தொலையாக் கற்பநின் னிலைகண் டிகுமே நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது நிரம்பகல் பறிய வேறா வேணி நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர் 35. உண்டெனத் தவாஅக் கள்ளின் வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏறா வேணி 1-11. கவரிமுச்சி.......... குட்டுவ உரை : கவரி முச்சி - கவரிமான்மயிர் கலந்து முடித்த கொண்டை யினையும்; கார் விரி கூந்தல் - கரிய மேகம் போன்ற கூந்தலையும்; ஊசல் மேவல் - ஊசலாட்டு விருப்பத்தையும்; சேயிழை மகளிர் - செவ்விய இழைகளையுமுடைய மகளிர்; உரல் போல் பெருங்கால் - உரல்போன்ற பெரிய காலும்; இலங்கு வாள் மருப்பின் - விளங்குகின்ற ஒளி பொருந்திய கொம்பும்; பெருங்கை - பெரிய கையும்; மத மா - மதமு முடைய யானைகள்; புகுதரின் - தாம் இருக்கும் காட்டகத்தே புகுமாயின்; அவற்றுள் - அவ் யானைகளிடையே; விருந்தின் வீழ் பிடி - புதியவாய் வந்து களிறுகளால் விரும்பப்பட்டுவரும் பிடியானைகளையே வரைந்து; எண்ணு முறை பெறா - எண்ணலுற்று அப்பிடி களின் தொகை எண்ணிக்கைக் கடங்காமையால் எண்ணும் முறைமையைக் கைவிடும்; கடவுள் நிலைஇய - கடவுளர் தங்கும் நிலைகளையுடைய; கல் ஓங்கு நெடு வரை - கற்களா லுயர்ந்த நெடிய மலையாகிய; இமயம் வடதிசை யெல்லையாக - இமயமலை வடக்கெல்லையாக; தென்னம் குமரியொடு - தெற்கெல்லை குமரியாக; ஆயிடை - அவற்றின் இடையேயுள்ள நிலத்தின்கண்; அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய - பகை அரசர் செய்யும் முரசு முழங்கும் பெரிய போர் கெடுதலால்; ஆர்ப்பு எழ - வெற்றியாரவார முண்டாக; சொல் பல நாட்டை - அவ்வரசரது புகழமைந்த நாட்டை யடைந்து; தொல் கவின் அழித்த -அதன் புகழ்க்கேதுவாகிய பழைய நலத்தைக் கெடுத் தழித்த; போர் அடுதானை -போரில் நேர்வாரை அடுதலையே தொழிலாகவுடைய தானையினையும்; பொலம் தார்க் குட்டுவ - பொன் மாலையினையு முடைய குட்டுவனே என்றவாறு. மகளிர் தம் கூந்தலிடையே கவரிமாவின் மயிரையும் வைத்து முடியிட்டுக் கொள்பவாதலின், “கவரி முச்சி” யென்றார். கார் விரி கூந்தல் என்றதற்குக் கரிதாய் விரிந்த கூந்தல் என்றுமாம். முச்சி, கொண்டை முடி. “துவர முடித்த துகளறு முச்சி” (முருகு. 126) என வருதல் காண்க. இம் மகளிர் தம் கரிய கூந்தலைச் சீவிக் கவரி மயிர் கலந்து கொண்டையிட்டுக் கொண்டு, செவ்விய அணிகளைப் பூண்டு, காட்டிடத்தே ஊசலாடி மகிழ்வ ரென்பது கருத்தாயிற்று. மேவல், விருப்பம். இனிப் பழையவுரைகாரர், “முச்சி, கொண்டை முடி” யென்றும், கவரி முச்சி யென்றதற்குக் “கவரிபோலும் கூந்த லெனக் கூட்டுக” என்றும் கூறுவர். யானையின் கால் உரல் போறலின், “உரல்போற் பெருங்கா” லெனப்பட்டது; “உரற்கால் யானை” (குறுந். 232) என்று பிறரும் கூறுப. வெண்ணிறமும் மழமழப்பால் ஒளியுமுடைமையின், அவ் யானைகளின் மருப்பு, “இலங்குவாண் மருப்பு” எனச் சிறப்பிக்கப்பட்டது. வேறு காடுகளிலிருந்து புதியவாய் வந்து ஈண்டுள்ள களிறுகளால் விருந்தோம்பப் படுவது கண்டு, “விருந்தின் வீழ்பிடி” யென்றும், களிறுகளால் காதலிக்கப்படுவது தோன்ற “வீழ்பிடி” யென்றும் கூறினார். இவ் யானைக் கூட்டத்தைக் கண்ட மகளிர், நடையால் தம்மை யொத்திருக்கும் இயைபுபற்றி, அப் பிடிகளையே வரைந்து எண்ணலுற்று, அவற்றின் தொகை எண்ணுக் கடங்கப் பெறாராயினர் என்பார், “அவற்றுள் விருந்தின் வீழ்பிடி யெண்ணு முறைபெறா” என்றார். புகுதரின் என்பது தாம் வாழும் காட்டகத்தே குறவர் கூட்டத்துக் கஞ்சிப் புகுதாமை பெற்றாம். குறிஞ்சி மகளிர் பிடிகளை யெண்ணலும், முல்லை மகளிர் மான்பிணை யெண்ணலும், பரதவர் மகளிர் கலமும் குருகு முதலாயின எண்ணலும் இயல்பு. இனிப் பழைய வுரைகாரர் “விருந்தின் வீழ்பிடி யென்றது, எண்ணுகின்ற மகளிர்க்கு விருந்தாகி அம் மகளிர் விரும்பிய பிடி யென்றவாறு. இனிக் காட்டுயானைக்கு விருந்தாகிய அவ் யானைகள் விரும்பும் பார்வைப் பிடி யென்பாரு முளர். பிடியினையே யெண்ணியது, தங்கள் நடை யொப்புமை பற்றி யென்க. மகளிரென்னும் எழுவாய் பெறா என்னும் பயனிலை கொண்டது. பிடியது எண்ணென்க. எண்ணு முறையாவது சங்கு பற்பமுள்ளிட்ட தொகை” என்பர். கடவுள் நிலை, முனிவர்கள் இருந்து தவம் செய்யும் இடங்கள். கடவுள், தெய்வமுமாம். நிலைய வென்னும் குறிப்புப் பெயரெச்சம் வரை யென்னும் பெயர் கொண்டது. கடவுள் நிலைஇய நெடுவரை, கல்லோங்கு நெடுவரை யென இயையும். குமரியொடு: ஒடு எண்ணுப் பொருட்டு. இனிப் பழையவுரைகாரர் “கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம் தென்னங் குமரியொடு வடதிசை யெல்லையாக என மாறிக் கூட்டுக,” என்றும், “எல்லையாக வென்னும் வினை யெச்சத்திற்கு இவ்வாறு எல்லையான என ஒரு பெயரெச்சச் சொல் வருவித்து, அப் பெயரெச்சத்திற்கு ஆயிடை என்புழி அவ் வென்னும் வகரவீற்றுப் பன்மைச் சுட்டுப் பெயரை முடிவாக்குக” என்றும் கூறுவர். பெருஞ்சமம் ததைய வென்றது, பகையரசர் செய்த பெரிய போர்களைச் சிதைத்த செயல் குறித்து நின்றது; “மாறா மைந்தர் மாறுநிலை தேய, முரசுடைப் பெருஞ்சமம் ததைய” (பதிற். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சொல், புகழ். இனி இமயத்துக்கும் குமரிக்கு மிடையே யுள்ளனவென்று சொல்லப் பட்ட பல நாடுகளையும் “சொல் பல நாடு” என்றா ரெனினுமாம். பழையவுரைகாரர் “சொல் பல நாடென்றது ஆயிடை அரசர் நாடெல்லாவற்றையும்” என்றே கூறுதல் காண்க. 12-18. இரும்பணை....... சொரிந்தாஅங் உரை : பெரும் பெயல் ஒளிப்ப - பெரிய மழை பெய்யாது பொய்த்தலால்; இரும்பணை திரங்க - காட்டிடத்தே மிக்க மூங்கில்கள் வாடியுலரவும்; குன்று வறம் கூர - குன்றங்கள் பசும்புல்லும் இன்றிக் கெடவும்; சுடர் சினம் திகழ - ஞாயிற்றினது வெயில் வெப்பம் மிக்குத் தோன்றவும்; அருவி யற்ற பெருவறற் காலையும் - அருவிகள் நீரற் றொழிந்த பெரிய வற்கட காலத்தும்; அருஞ் செலல் பேராறு - கடத்தற்கரிய செலவினையுடைய பெரிய யாற்றிலே நீர்ப்பெருக்கானது; இருங்கரை உடைத்து - பெரிய கரைகளை யுடைத்துக்கொண்டு செல்லுமாறும்; கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய - புதிய ஏரைப் பூட்டும் உழவர் கொன்றைப் பூவைச் சூடிக்கொள்ளுமாறும்; ஆர்கலி வானம் - நிறைந்த முழக்கத்தையுடைய மழைமேகம்; வரைவில் அதிர் சிலை முழங்கி - பன்முறையும் மின்னி யதிர்கின்ற இடிமுழக்கத்தைச் செய்து; பெயல் சிறந்து - பெய்தற்கு மிக்கு; தளி சொரிந்தாங்கு - மழை நீரைப் பொழிந்தது போல என்றவாறு. பெரும் பெயல் பொய்த்தலால் குன்றுகளில் செறிந்திருக்கும் மூங்கில்கள் வாட, ஏனைப் பசும் புல்லும் தலை காண்பரிதாய்க் கெடுதலால் “குன்று வறம் கூர” என்றும், அக்காலத்தே நிலம் புலரக் காற்றும் வெப்பமுற்று வெயிலின் வெம்மையை நன்கு புலப்படுத்தலின், “சுடர் சினம் திகழ” என்றும் கூறினார். வெப்ப மிகுதியைச் சினமென்றது இலக்கணை. குன்று வறம் கூர்ந்த வழி, அருவிகள் நீரற்றொழிதலால் “அருவியற்ற பெருவறற் காலையும்” என்றார். இக்காலத்தே பெருஞ் செல்வமுடையாரும் கொடை புரிதற்குப் பின்னிடுவரென்பது பட நிற்றலின், உம்மை சிறப்பு. இக்காலத்தும் செங்குட்டுவன் ஓம்பா வீகையினை மேற்கொண்டிருந்ததனை இது வற்புறுத்தி நிற்றல் பின்வரும் கூற்றுக்களால் அறிக. இனிப் பழையவுரைகாரர், “பணை திரங்கும் வண்ணம் பெயலொளித்தலானும், குன்று வறங்கூரும் வண்ணம் சுடர்சினம் திகழ்கையானும் அருவியற்றவெனக் கூட்டி யுரைக்க” வென்பர். “கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்” (கலி. 11) எனச் சான்றோர் கூறுதலால், பெயலொளித்தலும் சுடர் சினம் திகழ்தலும் என்ற இரண்டும் ஒருங்கே பெருவறற் காலைக்கு ஏதுவாய்க் கோடல் அமையு மென்க. எனினும் பெயலொளித்த வறற்காலையே சுடர் சினம் திகழ்தற்கும் இடமும் ஏதுவுமாதல் தெற்றென வறிக. “ஆர்கலி வானம் தளிசொரிந் தாங்கு” (18) என்பதை நோக்கின், பெயலொளித்த காலத்துப் புன்மையும், அது சிறந்து சொரிந்த காலத்து நன்மையும் எடுத்தோதுதலே ஆசிரியர் கருத்தாதலை யறிக. வானம் பொய்யாது மழை பெய்தவழி யுண்டாகும் நலங் களைக் கூறுவார், ஆறுகள் நீர் நிரம்பப் பெருகிக் கரைகளை யுடைத்து அலைத்துக் கொண்டோடுதலால் கடத்தலரிதாம் நிலைமையுண்டாதல் குறித்து, “அருஞ் செலற் பேராற்றிருங்கரை யுடைத்து” என்றார். பெரிய கரையினை யுடைத்தாயினும் பயனின் றென்றற்கு, “இருங்கரை” யென்று சிறப்பித்தார். அவ்யாண்டின் விளைவு குறித்து முதற்கட் பூட்டும் ஏராதல் பற்றி, “கடியேர் பூட்டுநர்” என்றார். இதனைப் பொன்னேர் பூட்டுதல் என்று இக்காலத்து வழங்குப. மழைக்காலத்தே கொன்றை மலருமாதலின், “கடுக்கை மலைய” என்றார். உடைத்து என்புழிச் செல்ல என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனிப் பழையவுரைகாரர், “அருஞ்செலற் பேர் ஆறு, புனல் நிறைந்த ஆறு; யாறு ஆறென மருவிற்று,” என்றும், “கரையை யுடைத்துத் தளி சொரிந்தாங்கென உடைத்தற் றொழிலை வானத்தின் றொழிலாக்குக” என்றும், “இந்நீர் என ஒரு பெயர் வருவித்து உடைக்கவெனத் திரிக்கவுமாம்” என்றும், “சிலை முழங்கி யென்றது சிலைத்தலொடு முழங்கியென்றவா” றென்றும் கூறுவர். பெயலொளிப்பதால், குன்று வறம் கூர, சுடர் சினம் திகழ, அருவியற்ற வறற்காலையிலும், வானம் பேராற் றிருங்கரை யுடைத்துச் செல்லவும், ஏர் பூட்டுநர் கடுக்கை மலையவும் முழங்கிப் பெயல் சிறந்து தளி சொரிந்தாங்கு என இயையும். இனி, பேராறு என்பதனை மலையாள நாட்டுப் பேராறெனக் கொண்டு, “அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்து” என்பதற்கு, “அரிய செலவையுடைய பேராற்றின் பெரிய கரையை யுடைத்து” என்று உரைத்து, “மழையில்லாமல் வறட்சி மிக்க காலத்தும் பேராறு நீரறாது பாயும் என்றபடி; இவ்வியல்பு பிற நதிகள் பலவற்றிற்கு இன்மையின் அருஞ்செலற் பேராறு என்றார்” என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுவர். பெருவறற் காலத்தும், வானம் மழை சொரிவது போலச் செங்குட்டுவன் கொடை வழங்கும் திறம் இனிக் கூறப்படுகிறது. 19-20. உறுவர் ......... சிதறி உரை : உறுவர் - தன்னை யடையும் புலவர்களை; ஓம்பாது ஆர உண்டு - உண்பனவற்றை ஓம்பாது நிரம்ப வுண்பித்துத் தானும் அவருடனுண்டு; நகைவர் ஆர - இன்பச் சுவை நல்கும் பாணர் கூத்தர் முதலாயினார் நிரம்பப் பெறுமாறு; நன்கலம் சிதறி - நல்ல பொற்கலன்களை வரைவின்றி வழங்கி என்றவாறு. உறுவர், இன்மையால் வாடி வருபவர். பாடல் ஆடல் களால் இன்புறுத்தும் பாணர் கூத்தர் முதலாயினார் நகை வராதலின், உறுவர் புலவர் மேற்றாதலை யறிக. அவரையுண் பித்துத் தான் உண்டலின், “உறுவர் ஓம்பாது ஆர வுண்டு” என்றார். சிதறி யென்றதனால், வரைவின்றி நல்குதல் பெற்றாம். பாணர் முதலாயினார்க்கு வழங்கும் வழக்குப் பிற்காலத்தும் அரசர்பால் காணப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டி லிருந்த மூன்றாங் குலோத்துங்க சோழன், “பெரும் புலவரும் அருங் கவிஞரும் நரப்புறு நல்லிசைப் பாணரும் கோடியரும் குயிலுவரும் நாடு நாடு சென்று இரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ் படைப்பக்” (S.I.I. Vol. V. No. 645) கொடை வழங்கிய செய்தி கல்வெட்டுக்களால் தெரிகிறது. 21-22. ஆடுசிறை ............ பெறுக உரை : ஆடு சிறை யறுத்த நரம்பு சேர் இன்குரல் - ஆடுகின்ற சிறையையுடைய கின்னரப்பறவையை இசையால் வென்ற, யாழ் நரம்பின் இசையுடன் ஒன்றாய் இயைந்து செல்லும் இனிய மிடற்றால்; பாடு விறலியர் - பாடுதலையுடைய விறலியர்; பல்பிடி பெறுக - பல பிடியானைகளைப் பெறுக என்றும். ஆடு சிறை : ஆகுபெயர். பழையவுரைகாரர், “கின்னர மென்னும் புள்ளின் இசை யெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ்நரம்பென்றவாறு” என்றும், “இனிச் சிறை யென்றதை அந்நரம்பின் ஒலி யெழாமற் சிறைப்படுத்தி நிற்கும் அதன் குற்றமென்பாரு முளர்” என்றும் கூறுவர். குரல், மிடற்றிசை. பாணனுக்குக் களிறும் விறலிக்குப் பிடியும் கொடுத்தல் மரபு. “களிறு பெறுவல்சிப் பாணன்” (நற். 350) என்றும் பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க. 23-25. துய்வீ ........... பெறுக உரை : துய்வீ வாகை - மேலே துய்யினையுடைய வாகைப் பூவும்; நுண் கொடி உழிஞை - நுண்ணிய கொடியாகிய வுழிஞையும் சூடும்; வென்றி மேவல் - வென்றி விரும்பும்; உருகெழு சிறப்பின் - பகைவர்க்கு உட்குதலைப் பயக்கும் சிறப்பும்; கொண்டி மள்ளர் - பகைப்புலத்தே கொள்ளையாடுதலுமுடைய வீரர்; கொல் களிறு பெறுக - கொல்கின்ற களிற்றியானைகளைப் பெறுக என்றவாறு, வென்றியே விரும்பும் இயல்புபற்றி “வென்றி மேவல்” என்றதற் கேற்ப வாகை மாலை சூடுப வென்பார், “துய்வீ வாகை” யினையும், பகைவரது முழுமுத லரணத்தை முற்றலும் கோடலும் செய்தல் பற்றி உருகெழு சிறப்பினை யுடைய ராதலால், “நுண்கொடி யுழிஞை” யினையும் எடுத்தோதினார்; பிறாண்டும் “நுண்கொடி யுழிஞை” (பதிற். 44) என்பர். “நெடுங் கொடி யுழி ஞைப் பவரொடு மிலைந்து” (புறம். 77) என்று பிறரும் கூறுதலால் இவ்வுழிஞைக்கொடி நுண்ணிதாயும் நெடிது படர்வதாயு மிருத்தல் அறியப்படும். இதனுடைய இலை சிறியதாயிருக்கு மென்பது, “சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடி” (பதிற். 63) என்பதனால் விளங்கும். வீரருள் உயர்ந்தோர் பொன்னால் உழிஞைப்பூச் செய்து மாலை தொடுத்தணிதலுமுண்டு; “பொலங்கொடி யுழிஞையன்” (பதிற். 56) என வருதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், “வாகை யுழிஞை யென்றது, வாகையை முடிவிலே உடைய உழிஞை என்றவாறு” என்றும், “ இனி வாகையும் உழிஞையுமென இரண்டாக்கலுமாம்” என்றும், “கொண்டி கொள்ளை” யென்றும் கூறுவர். கொண்டி பெறுதலை வீரர் விரும்புவதை, “கொண்டியுண்டித் தொண்டை யோர்” (பெரும்பாண். 445) எனச் சான்றோர் கூறுப. 26-29. மன்றம் ............ யாகலின் உரை : கண்டி நுண் கோல் கொண்டு - கணுக்களையுடைய நுண்ணிய கோலை யேந்திக்கொண்டு; மன்றம் படர்ந்து - ஊர் மன்றத்தே யிருந்து பாடுதற்குரிய தலைவன் புகழ்களை யெண்ணி; மறுகு சிறை புக்கு - தெருக்களின் இருமருங்கும் சென்று; களம் வாழ்த்தும் - தலைவன் பொருது வென்ற போர்க்களத்தை வாழ்த்திப் பாடும்; அகவலன் மா பெறுக - பாணன் குதிரைகளைப் பெறுக; என்றும் - என்றும் வழங்கும் கொடைத் தொழிலை விரும்பியிருப்பதே யன்றி; இகல்வினை மேவலையாகலின் - போர் வினையையும் ஒப்ப விரும்பி யிருக்கின்றா யாதலால் என்றவாறு. உண்ணப்படுவது உண்டி யென்றும், கொள்ளப்படுவது கொண்டியென்றும் வருதல் போலக் கண்கண்ணாகத் துண்டிக்கப் படுவது கண்டியென்று வந்தது. குலத்தோர் புகழெல்லாம் தொகுத்தெடுத்துப் பாடுவோர் அகவலர் என்ப. அவர் நுண்ணிய கோலேந்திக் கொண்டுவரும் இயல்பினராதலைப் பிறாண்டும் ஆசிரியர், “யாம விரவின் நெடுங்கடை நின்று, தேமுதிர் சிமையக் குன்றம் பாடும், நுண்கோ லகவுநர்” (அகம். 208) என்று கூறுதல் காண்க. இவர்கள் முதற்கண் ஊர் மன்றத்தை யடைந்து தலைவன் புகழ்களை யெல்லாம் தொகுத்துரைத்துப் பின்னர்த் தெருக் களிலும் இருமருங்கிலும் சென்று பாடுவரென்பது தோன்ற, “மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் களம் வாழ்த்தும் அகவலன்” என்றார். என்றும் என்பது மேலே “பிடிபெறுக” (அடி. 22) “கொல் களிறு பெறுக” (அடி. 25) என்புழியும் கூட்டப் பட்டது. “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி, ஒன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே” (தொல். சொல். இடை. 46) என்பது தொல்காப்பியம் “இகல்வினை மேவலை” யென்றதனால் “கொடைவினை மேவல்” வருவிக்கப்பட்டது. எச்சவும்மை தொக்கு நின்றது. அகவலர்க்குக் குதிரை கொடுப்பது வாழக் காதலை, “நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரொடு மா சிதறி” (மதுரை. 223) என்பதனா லறிக. இனி, பழையவுரைகாரர், “நுண்கோல் பிறப்புணர்த்துங் கோல்; நரம்பென்பது மொன்று” என்றும், “அகவலன், பாடும் பாணன்” என்றும், “என்றும் என்புழி உம்மையை இசைநிறை யும்மை யாக்கி, அவ்வென்றென்பதனை முன்னெண்ணி நின்ற வியங்கோட்களுடன் கூட்டிப் பின் அதனை இகல்வினை மேவலை யென்னும் வினையொடு முடிக்க” என்றும் கூறுவர். என்றென்பதனை இகல்வினை மேவலை யென்பதனோடு கூட்டிய வழி, என்று வழங்குதல் குறித்து இகல்வினை மேவுவா யாயினை யென்றுரைத்துக் கொள்க. போரிற் பெற்ற களிறு, பிடி, மா முதலியவற்றை வீரர் முதலாயினார்க்கு வழங்குதல் மரபு. என்று மென்றே கோடற்கும் இசைந்து, “இனி என்று மென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட்டலுமொன்று” என்று பழைய வுரைகாரர் கூறுவர். “முன்னின்ற உண்டு, சிதறி யென்னும் எச்சங்களையும் மேவலை யென்பதனோடு முடிக்க” என்பது பழையவுரை. இனி, “மறுகு சிறை” என்பதற்கு, திரு.உ.வே. சாமிநாதையர் “மறுகு சிறை யென்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர் இசைமுறை போலும்” என்பர். ஆரோகண அவரோ கணக் கிரமத்தை ஆளத்தி யென்பவாகலின், இதற்கு வேறு பொருள் கொள்ளப்பட்டது. மறுகுசிறை இசை வகை யாயின், மன்றத்தே இருந்து பாடுவதும், தெருவிலே நடந்து பாடுவது மாகிய பாடல் வகையுள் ஒன்றாகக் கருதுவது பொருத்தமாம். இவ்வகவலர் முதலாயினாரைப் புரப்பதே தமக்குப் பேரி சையாகப் பண்டைப் பெருமக்கள் கருதினமையின், இவர்களை விதந்தோதினர். “நுண்கோ லகவுநர்ப் புரந்த பேரிசைச், சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்” (அகம். 152) எனச் சான்றோர் கூறுதல் காண்க. 29-31. பகைவரும் ............. கற்ப உரை : பகைவரும் தாங்காது புகழ்ந்த - பகைவராயினாரும் தம் மனத்தெழுந்த வியப்பினைத் தாங்காது புகழ்ந்து பாராட்டும்; தொலையாக் கற்ப - கெடாத கல்வியறிவு ஒழுக்கங்களை யுடையாய் என்றவாறு. “தூங்கு கொளை முழவின்” என்பதனைத் “தவாஅக் கள்ளின்” (அடி. 35) என்பதனோடு கூட்டிக் கலிமகிழ் என்றத னோடியைக்க. கேளாரும் வேட்ப மொழிவது சொல் வன்மையின் சிறப்பாதல்போல, பகைவராயினாரும் வியந்து பரவுவது கல்வியறிவுக்கு மாண்பாதலின், “பகைவரும் தாங்காது புகழ்ந்த கற்ப” என்றார். கேடில் விழுச்செல்வ மென்பது பற்றி, ஈண்டுக் கல்வியறிவு, “தொலையாக்கற்பு” எனப்பட்டது. கற்றல் வினை கல்வியாதலின், கற்பன கற்றுக் கற்றாங் கொழுகும் ஒழுக்கம் கற்பென வறிக, “நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்ப” (பதிற். 80) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, கற்பாவது, கல்வி கேள்விகளினால் ஆய செயற்கையறிவால் உண்மையறிவு தூய்மை யெய்தப் பிறக்கும் மனத்திட்பம் எனினுமாம். இனிப் பழையவுரைகாரர், “கற்ப வென்றது கல்வியுடையாய் என்றவாறு; பிறிதும் உரைப்ப” என்பர். 31-36. நின்னிலை ........... கலி மகிழானே உரை : வண்கை வேந்தே - வளவிய கொடையினையுடைய அரசே; தூங்கு கொளை முழவின் - தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையும்; நிணம் சுடு புகையொடு - நிணத்தைச் சுடுகின்ற புகை நாற்றத்துடன்; நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி - நிரம்புதலும் அகலுதலும் இல்லாத கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள; நிறைந்து நெடிது இராத் தசும்பின் - பெய்த கள்ளால் நிறைந்து நெடிது நேரம் அந்நிறைவு குறையாதிருத்தலை யறியாத குடங்களிலிருக்கும்; வயிரியர் உண்டெனத் தவாஅ - பாணர் முதலாயினார் உண்டவழியும் குறையாத; கள்ளின் - கள்ளினையுமுடைய; நின் கலிமகிழான் - நின் திருவோலக்கத்தின் கண்ணே; நின் நிலை கண்டிகும் - நின் செல்வப் பெருமையெல்லாம் கண்டேம் என்றவாறு. முழவினையும் கள்ளினையுமுடைய கலிமகிழின்கண் நின் நிலை கண்டிகும் இயையும். தூங்கலோசை, மத்திம கருதியை ஆதாரமாகவுடைய இசை. “மந்த கதியையுடைய ஆடற்கேற்ற முழவு” “ஈண்டுத் தூங்கு கொளை முழவு” என்பதற்குப் பொரு ளாக வுரைப்பர் பழையவுரைகாரர். கள்ளுண்பார்க்கு நிணமும் உடனுண்ண வழங்குபவாதலின், அது தோன்ற, “நிணஞ்சுடு புகையொடு” என்றார். கட்குடம் வைக்கும் கோக்காலிக்கும் ஏணியென்பது பெயராதலின், அதனை ஏனை ஏணியின் வேறு படுத்த ஏறா ஏணியென்றார். “ஏறா ஏணி யென்றது கோக்காலி” யென்றும், “அதனை ஏறா ஏணியென்று வெளிப் படுத்த சிறப்பான் இதற்கு ஏறா வேணியென்று பெயராயிற்” றென்றும் பழைய வுரைகாரர் கூறுவர். நிரம்புதல், முழுதும் பொருந்துதல்; அகலுதல், இடைவெளி மிக விரிதல். குட மிருக்குங்கால் முழுதும் நிரம்பியிராமல் சிறிது இடைவெளி யுளதாகக் கோக்காலி அமைந்திருக்குமாறு தோன்ற, “நிரம்பகல் பறியாத ஏறா ஏணி” என்றார். இவ் வேறா வேணிகள் முன்னெல்லாம் புகைவண்டி நிலையங்களில் வடிகட்டிய தண்ணீர் பொருட்டுக் குடத்தோடே நிறுத்தப்பட்டிருந்தமை நினைவார்க்கு “நிரம்பகல் பறியா வேறா வேணி”யின் வடிவம் தெளிய விளங்கும்...... இனி, நிரம்பகல் பறியாத, நிறைந்து நெடிதிராத தசும்பு என இயைத்துரைப்பர் பழையவுரைகாரர். நிரம்பகல் பறியாத குடம் நிறைதல் கூறுவது முரணாதலினாலும் நாற்கோண முக்கோண வடிவினவாகிய கோக்காலியில் கோள வடிவிற்றாய குடம் இடைவெளி யின்றி நிரம்பப் பொருத்த இராமை தோன்றற்கு “நிரம்பகல் பறியா வேணி” யென்பது கருத்தாதலினாலும் அவருரை பொருந்தாமை யறிக. கள்ளை நிறைப்பதும் வழங்குவதும் ஒருங்கு நிகழ்தல் பற்றி, “நிறைந்து நெடிதிராத தசும்பு” என்றார். பழையவுரைகாரரும், “உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும்பொழுதிராத வென்றவாறு” என்றார். தசும்பினை இவ்வாறு சிறப்பித்தவர், அதனிடத்துள்ள கள் உண்ண உண்ணக் குறைபடாது நிரப்பப் பட்டமை தோன்ற, “வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின்” என்று சிறப்பித்தார். புகையொடும் சினம் தவிராது தவாக் கள்ளின் என இயையும். போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ, தொலையாக் கற்ப வண்கை வேந்தே, நின்கலி மகிழின்கண் நின்நிலை கண்டேம் என மாறிக் கூட்டிக் கொள்க. “வேந்தே” யென்னும் விளி முன்னின்ற விளிகளோடு கூடுதலின் மாறாயிற்று. (மாறாயிற்று - மாறிக் கூட்டுதலாயிற்று) இதனாற் சொல்லியது, அவன் செல்வ மகிழ்ச்சி கூறியவாறாயிற்று. 4. நோய்தபு நோன்றொடை 1. நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய வென்னா தோம்பாது வீசிக் 5. கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும் களைகென வறியாக் கசடி னெஞ்சத் தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர் காணிலி யரோநிற் புகழ்ந்த யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை 10. நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை 1சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு 15. நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை 2 யுய்த்தோய் கொழுவில் பைந்துணி 3வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை 20. முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நோய்தபு நோன்றொடை 1-7. நிலம்புடைப்பன்ன ....... அண்ணல் உரை : நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு - நிலத்தை யிடிப்பது போன்ற முழக்கத்துடன்; விசும்பு துடையூ - வானத்தைத் தடவுதற்கென; வான் தோய் வெல் கொடி - வானளாவ உயர்ந்த வெற்றிக்கொடி; தேர் மிசை நுடங்க - தேர்மீது நின்று அசைய; அமர் கடந்து பெற்ற - பல போர்களைச் செய்து பெற்ற பொருள்கள்; பெரிய வாயினும் - பெருமையுடைய வாயினும்; அரிய என்னாது - எளிதிற் பெறற்கு அரியவை என்று கருதாமல்; ஓம்பாது - தனக்கு வேண்டும் எனப் பேணிக்கொள்ளலும் செய்யாமல்; வீசி - பிறர்க்கு நிரம்பவும் நல்கி; கலம் செலச் சுரத்தல் அல்லது - இவ்வாறு பல்வகை அருங்கலங்களை மிகக் கொடுத்தலன்றி; கனவினும் களைக என அறியா - கனவிலும் பிறரை யிரந்து எனக்குற்ற இடுக்கணைக் களைக என வேண்டி யறியாத; கசடு இல் நெஞ்சத்து - குற்றமில்லாத நெஞ்சினையும்; ஆடு நடை அண்ணல் - வெற்றியாற் பிறந்த பெருமித நடையினையுமுடைய அண்ணலே என்றவாறு. போர் முரசின் முழக்கமும் வீரர் ஆரவாரமும் கலந்து நிலம் அதிர முழங்குமாறு தோன்ற, “நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு” என்றார். குளம்பினை யூன்றி விரைந்தேகும் குதிரையின் செலவையும் பிற சான்றோர், “நிலம்பிறக் கிடுவது போற் குளம்பு கடையூ” (புறம். 303) என்று கூறுப. ஆர்ப்பொடு அமர்கடந்து என இயைக்க. வானளாவிய கொடி ஆங்கு நுடங்கி யசையும் தோற்றத்தை, “விசும்பு துடையூ” என்றும், உயர்ச்சியை “வான்றோய் வெல் கொடி” யென்றும் சிறப்பித்தார். போரிற் பெற்றவை யென்னாது “அமர்கடந்து பெற்ற” என்றதனால், போரில் வஞ்சனையின்றி அறநெறியே நின்று பொருது எளிதாகப் பெற்றவை யென்பது பெற்றாம். “வென்றுகலந் தரீஇயர் வேண்டு புலத் திறுத்து” (பதிற். 53) என்பவாதலின், பகைப்புலத்தே அரும்பொருள் பெறுமாறும், “நன்கலம் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து” (அகம். 124) என்பதனால் தோற்ற வேந்தர் பொருள் தருமாறும் காண்க. அமர்கடந்து பெற்றவை பெரியவாயவழியும் ஈதல் அமையுமாயினும், அவற்றின் அருமை நோக்கியவழி அவற்றை யோம்புதற்கே உள்ளம் செல்லுமாதலின், அவ்வியல்பு செங்குட்டுவன் பால் இல்லையென்றற்கு, “அரிய வென்னாது ஓம்பாது வீசிக் கலஞ்செலச் சுரத்தல் அல்லது” என்றார். பிறரும், “அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு, உரிய வெல்லாமோம் பாது வீசி” (மதுரைக். 145-6) என்றார். கலம், மார்பணி ஆரம் கடகம் முதலியன, “மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம், மடை செறி முன்கைக் கடகமொ டீத்தனன்” (புறம். 150) என்று வன்பரணர் கூறுதல் காண்க. இனி, “கனவினும் களைக என வறியா” என்பதற்குக் “கனவினிடத் தாயினும் என்னுடைய துன்பத்தை நீக்குக வென்று கூறுதலை யறியாத” என்றுரைப்பாரு முளர். தான் பிறரால் இரக்கப்படுவதல்லது பிறரைத் தான் இரத்தல் இன்மை வேந்தர்க்குச் சிறப்பெனக் காக்கை பாடினியார் நச்செள்ளையார், “தடக்கை, இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய, மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே” (பதிற். 52) என்று உரைப்பது ஈண்டு நோக்கற்பாலது. 10-17. நுண்கொடி யுழிஞை ......... யுய்த்தோய் உரை : நுண்கொடி யுழிஞை - நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவைச் சூடிய; வெல்போர் அறுகை - வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை யென்பான்; சேணனாயினும் - சேணிடத்தே இருந்தானாயினும்; கேள் என மொழிந்து - நண்பனென மேற்கொண்டு பலருமறியச் சொல்லி; புலம் பெயர்ந்து - பகைவனான மோகூர் மன்னனுக்கு அஞ்சித் தன் நாட்டினின்றும் நீங்கி யோடி; ஒளித்த - ஒளித்துக்கொண்டதனா லுண்டாகிய; களையாப் பூசற்கு - நீக்க முடியாத பழிப்புரையின் பொருட்டு; மோகூர் மன்னன் அரண்கள் - அம் மோகூர் மன்னனுடைய அரண்களை; அணங்கு நிகழ்ந்தன்ன தாவுறீஇ - தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற்போல வலியழித்து; முரசம் கொண்டு - அவன் காவல் முரசைக் கைப்பற்றி; நெடுமொழி பணித்து - அவன் உரைத்த வஞ்சினத்தைச் சிதைத்து அவனையும் பணிவித்து; அவன் வேம்பு முதல் தடிந்து - அவனுடைய காவல் மரமாகிய வேம்பினையும் அடியோடு வெட்டி வீழ்த்து; முரசு செய முரச்சி - முரசு செய்தற்கேற்பச் சிறு துண்டங்களாகத் தறித்து; ஒழுகை களிறு பல பூட்டி யுய்த்தோய் - வண்டியிலேற்றி யானை களை அதனை யீர்க்கும் பகடுகளாகப் பூட்டிச் செலுத்தியவனே என்றவாறு. உழிஞை, ஒருவகை நுண்ணிதாய் நெடிது வளருங் கொடி. “நெடுங்கொடி யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று சான்றோர் கூறுதல் காண்க. உழிஞை சூடிய அறுகை யென்பதனால், மோகூர் மன்னனது முழுமுத லரணம் முற்றி அதனைக் கோடல் குறித்துப் போர் செய்வான் சென்றமை பெற்றாம். தான் செய்த பல போர் களிலும் வெற்றியே பெற்றுப்போந்த பெருமிதங் காரணமாக மோகூர்க்குச் சென்று உழிஞை சூடி முற்றுகை யிட்டமை தோன்ற, “வெல் போர் அறுகை” யென்று சிறப்பித்தார். குட்டுவனோடு அண்மையிலிருந்து புணர்தலும் பழகலும் இலனாய் நெடுஞ்சேணிடத்தே யிருந்தானாயினும், அறுகை யென்பான் அக்குட்டுவன்பால் உண்மை நண்பனாத லால், செங்குட்டுவனும், அவன் துணைமையினை வேண்டானாயினும், அவற்குத் துணை செய்யும் கருத்துடையனாய், மோகூர் மன்னனொடு பொருவான் தான் பொருதற்குக் காரணங் கூறுவதுபோல, “சேணனாயினும் கேள் என மொழிந்தான்” என்றும், இவ்வாறே அறுகையும் தனக்குச் செங்குட்டுவன் கேண்மையனென் றுரைத்துக்கொண்டு சென்று, மோகூர் மன்னனொடு பொருது தோற்று வேற்றுப் புலத்துக் கோடி யொளிந்துகொண்டா னென்பார், “புலம் பெயர்ந் தொளித்த” என்றும், அஃது அவ்வறுகைக்கு இளிவரவே யன்றி, செங்குட்டு வற்குப் பெரு நாணம் பயந்தமையின், “களையாப் பூசல்” என்றும் கூறினார். தம்மைச் சேர்ந்தார்க் குளவாகும் இளிவரவுகளைத் தமக்கு உளவாயினவாகக் கருதி நாணலும், அவற்றைப் போக்கி நலம் செய்தலும் தலைமக்கட்குப் பண்பாதலால், குட்டுவன் மோகூர் மன்னன்பால் போர்குறித்துச் செல்வானாயினானென வறிக. மோகூர் மன்னனைப் பழையன் என்று இப்பத்தின் பதிகமும் சிலப்பதிகாரமும் (27 : 124-6) கூறுகின்றன. இவனுடைய மோகூர் நலத்தை ஆசிரியர் மாங்குடிமருதனார் “மழையொழுக்கறாஅப் பிழையா விளையுள், பழையன் மோகூர்” (மதுரைக். 507-8) என்று கூறுவர். மதுரைக்கு வடகிழக்கில் உள்ள திருமோகூர் இது போலும். பழையன் என்பான் ஒருவன் காவிரி பாயும் நாட்டுப் போஒர் என்னும் ஊரிடத்தே யிருந்து சோழர் கீழ் வாழ்ந்தான். சோழர் ஒரு காலத்தே கொங்கு நாட்டவரைப் பணிவிக்கக் கருதிப் போர் தொடுத்த ஞான்று, அவர் பொருட்டு இப் போஒர்ப் பழையன் அதனைச் செய்தானென நற்றிணை (10) கூறுகின்றது. இவன் வழியின னாதலால் இம் மோகூர்ப் பழையன்பால் அறுகைக்கு வெறுப்பும் பகைமையும் உண்டானதால், மோகூரை முற்றுகையிட்டு ஆற்றாமையால், அறுகை புலம்பெயர்ந் தொளித்தான் என அறிக. தா, வருத்தம். தாவுறீஇ யென்றது வருத்தம் உறுவித் தென்றவாறு. என்றது, அரண்களின் வலியழித்துச் சிதை வித்தவா றாயிற்று. அணங்கு, தெய்வம். சிறிதும் விலக்கொணா வகையில் திடீரென்று தாக்கி அரண்களை யழித்தமை தோன்ற, “அணங்கு நிகழ்ந்தன்ன அரண்கள் தாவுறீஇ” என்றார். பகைவர் விலங்கு முதலிய உயிர்களால் நிகழும் கேட்டினும் தெய்வத்தால் நிகழ்வது விலக்கொணா வீறுடைமை பற்றி, “அணங்கு நிகழ்ந்தன்ன” என்றார். பழையன் வேல் வல்லனாதல் பற்றி இத்துணையுங் கூறல் வேண்டிற்று. தோற்ற வேந்தனது முரசினைக் கோடல், பண்டைத் தமிழ் வேந்தர் மரபாதல்பற்றி “முரசங்கொண்டு” என்றும், எதிர்ந்த வேந்தனை ஈடழித்து அவனுரைக்கும் வஞ்சினத்தைப் பொய்ப் படுத்திப் பணியச் செய்தல் வேந்தரது வீரத்துக்குச் சிறப்பாதலால், “நெடுமொழி பணித்து” என்றும் கூறினார். பழையனது காவல் மரம் வேம்பாதலின், “வேம்பு முதல் தடிந்து” என்றார். இனிப் பழையவுரைக்காரர், “அறுகை யென்பான் மோகூர் மன்னற்குப் பகையாய்ச் சேரனுக்கு நட்பா யிருப்பானோர் குறுநில மன்னன்” என்றும், “சேணனாயினும் கேளென மொழிந்தென்றது, அக் கோ நீ செய்கின்ற வலிக்கு உதவி செய்தற்குச் சேயனாயினும் எனக்கு அவன்தான் நட்பு எனச் சொல்லி யென்றவாறு” என்றும், “களையாப் பூசல், ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம்” என்றும், “அரண்கள் தாவுறீஇ யென்றது மாற்றார் அரண்களை அழித்தற் றொழிலைத் தன்பாலே யுறுவித் தென்றவாறு” என்றும் கூறுவர். தான் தடிந்த வேம்பினை இன்னது செய்தானென்பார், “முரசு செய முரச்சிக் களிறு பல பூட்டி, ஒழுகை” யுய்த் தானென்றார். இனி, இப்பத்தின் பதிகம், “பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின், முழாரை முழுமுத றுமியப் பண்ணி, வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங் கூந்தல் முரற்சியால், குஞ்சர வொழுகை பூட்டி” யுய்த்தான் என்று கூறும். இனிப் பழையவுரைகாரர், “முரசு செய முரச்சி யென்றது, அவ் வேம்பினை முரசாகச் செய்யும்படி முற்றுவித் தென்றவாறு. முற்றுவித்தலாவது ஒழுகை யேற்றலாம்படி துண்டங்களாகத் தறிப்பித்தல். களிறென்றது மோகூர் மன்னன் களிற்றினை. களிறு பல பூட்டி யென்றது, அவனேறும் யானைகளை அவனை யவமதித்துச் சாகாட்டிற்குக் கடாவோபாதியாகப் பூட்டி யென்றவாறு. பூட்டி யென்றதற்கு, “வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங் கூந்தல் முரற்சியால், குஞ்சர வொழுகை பூட்டி” என இதன் பதிகத்து வந்தமையால், அம் மகளிர் கூந்தல்மயிர்க் கயிற்றாற் பூட்டி யெனக் கொள்க” என்றும், “ஒழுகை யுய்த்த” என்று பாடங்கொண்டு, “ஒழுகை யுய்த்த ஆடு நடை யண்ணல் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். 7-9. நிற்பாடுமகள் ........... நோன்றொடை உரை : நிற்புகழ்ந்த - நின்னை வீரர் பலரும் புகழ்தற்குப் பொருளா யமைந்த; முழுவலி துஞ்சும் - மிக்க வன்மை பொருந்திய; நோய்தபு - நோயில்லாத; யாக்கை நோன்றொடை. யாக்கை யாகிய பெரிய உடம்பை; நிற்பாடு மகள் காணியர் - நின்னைப் பாடும் பாடினியே காண்பாளாக என்றவாறு. காணிலியரோ வென்பதற்கு, “வன்னி மன்றத்து விளங்கிய காடு” (அடி. 23) என்பதனோடு கூட்டிப் பொருள் கூறப்படும். தமக்கு மெய்புகு கருவி போறலின், இவன் யாக்கையே வீரர் புகழ்தற்குப் பொருளாயிற் றென்றறிக. அவர் புகழ்தற்குக் காரணமாகிய மெய்யின் வலிக்கு யாக்கை இடமாதலின், “முழுவலி துஞ்சும் யாக்கை” யென்றும், அதற்கு நோயின்மை ஏதுவும் பயனுமாய் இயைந்து நிற்றலால், “நோய்தபு யாக்கை” யென்றும் சிறப்பித்தார். புகழ்வார் புகழும் பாத்தொடையும், பூத்தொடையும், வீரரெறியும் அம்புத்தொடையும், ஏற்று வலிசிறந்து நிற்றலின், குட்டுவன் யாக்கையை “நோன்றொடை” யென்று சிறப்பித்தனர் போலும். இனிப் பழையவுரைகாரர், “நிற்புகழ்ந்த யாக்கை யென்றது, நின்னை யெல்லா வீரரும் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கை யென்றவா” றென்றும், “யாக்கை யாகிய நோன்றொடையென்க” என்றும், “யாக்கையை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினமையால் இதற்கு `நோய்தபு நோன்றொடை’ யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். 17-23. கொழுவில் .......... காடே. உரை : கொழுவில் பைந்துணி - கொழுமை யில்லாத பசிய இறைச்சித் துண்டத்தை; வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை - வைத்த இடத்தை மறந்தொழிந்த உச்சிக் கொண்டையை யுடைய கூகையை; கவலை கவற்றும் - கவலையுறுவித்து வருத்தும்; குரால் அம் பறந்தலை - கூகைப் பெடைகளையுடைய சுடுகாட்டிலே; முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி - முரசினை யுடைய வழி வழியாக உரிமையுற்று வரும் அரசர் பலரை வென்று; துளங்கு நீர் வியலகம் ஆண்டு - அசைகின்ற கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகத்தை ஆட்சி புரிந்து; இனிது கழிந்த மன்னர் - தம் வாழ்நாளை இனிது கழித்திறந்த வேந்தரை யிட்டுப் புதைக்கும்; வன்னி மன்றத்து விளங்கிய காடு - வன்னி மரம் நிற்கும் மன்றத்தால் விளக்கமுற்ற இடுகாட்டின்கண்; தாழி - மட்குடமானது; காணிலியர் - நின் யாக்கையாகிய நோய்தபு நோன்றொடையினைக் காணாதொழிவதாக என்றவாறு. கொழு - கொழுமை; கொழுப்புமாம். கொழுவில் பைந்துணி யெனவே, கொழுப்புடைய துணிகளை நாய் நரிகள் கவர்ந்தும் பிற புள்ளினம் தின்றும் கழிந்தனவென்பது பெற்றாம். பைந்துணி, கொழுப்பின்றி வற்றிய பசிய உடற்றுண்டங்களுமாம். வைத்ததலை வைத்தலையென வந்தது. துய்போறலின், கொண்டையைத் துய்யென்றார். “குடுமிக்கூகை” (மதுரைக். 170) என்று பிறரும் கூறுப. கவலை, வருத்தம்; “அவலக் கவலை கையா றழுங்கல்” (மணி. 4:118) என்பது மணிமேகலை. பழையவுரை காரரும், “பைந்துணிகள் வைத்த இடம் மறந்த கூகையை அதன் பெடை யாகிய குரால் கவற்று மென்க” என்றும், “வைத்தலை விகாரம்” என்றும், “கவ லென்னும் பெயரைத் தாவென்பது போல வருத்த மென் றுரைக்க. கவலை “கவற்றல், வருத்தல்” என்றும், “பறந்தலையென்றது இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை” யென்றும் கூறுவர். தொன்றுதொட்டு வரும் அரசுரிமை பெற்றொழுகிய பெருவேந்தரையும் பொருதழித்துத் தமது ஒருமொழியே வைத்து உலகாண்ட நெடுவேந்தர் என்பார், “முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித், துளங்குநீர் வியலக மாண்டு இனிது கழிந்த மன்னர்” என்றார். இனிது கழிதலாவது, நோய் முதலியன வுற்று மடியாது பொருது புகழ் நிறுவி மாள்வது. “நோற்றோர் மன்ற தாமே கூற்றம். கோளுற விளியார்” (அகம். 61) என்று சான்றோர் கூறுதல் காண்க. குரால், கூகைப்பெடை. அலையால் அலைப்புண்பது பற்றிக் கடலைத், “துளங்குநீர்” என்றார். தாழி, மன்னர் இறந்தவழி அவர் உடலை மண்ணாற் செய்த பானைக்குள் வைத்துப் புதைப்பது பண்டையோர் மரபு. இதனை முதுமக்கட் டாழி யென்றும் வழங்குப. “வளவன் தேவருலக மெய்தின னாதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி” (புறம். 228) என வருதல் காண்க. காடு தாழி காணிலியர் என முடித்தலு மொன்று. வன்னி மன்றம், சுடலை நோன்பிகள் மடையிட்டுப் பரவுமிடம் என்று மணிமேகலை கூறும்; “சுடலை நோன்பிகள் ஒடியா உள்ள மொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றம்” (மணி. 6 : 86) என்பது காண்க. பழையவுரைகாரர், “வன்னி மன்ற மென்றது, அக்காட்டில் வன்னி மரத்தையுடைய இடத்தினை” யென்றும், “அது தான் பிணத்தொடு சென்றார் எல்லாரு மிருந்த மன்று போறலின் மன்றெனப் பட்டது” என்றும், “விளங்கிய காடென்றது, தன் தொழிலில் விளங்கிய காடென்றவாறு” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, ஆடுநடை யண்ணல், ஒழுகை யுய்த் தோய், நிற் புகழ்ந்த யாக்கையாகிய நோய்தபு நோன் றொடை, நிற்பாடு மகள் காணியர்; வன்னி மன்றத்து விளங்கிய காட்டின் கண் தாழி காணிலியர் என்று கூட்டி வினைமுடிவு செய்க. “இதனாற் சொல்லியது: அவனை, `நீ நெடுங்காலம் வாழ்க’ என வாழ்த்தியவாறாயிற்று.” 5. ஊன்றுவை யடிசில் 1. பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின் நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் 5. விழுமியோர் துவன்றிய கன்க ணாட்பின் எழுமுடி மார்பி னெய்திய சேரல் குண்டுக ணகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக் 10. கதவங் காக்குங் கணையெழு வன்ன நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப் பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிசில் ஓடாப் பீட ருள்வழி யிறுத்து 15. முள்ளிடு பறியா வேணித் தெவ்வர் சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல் அனைய பண்பிற் றானை மன்னர் இனியா ருளரோநின் முன்னு மில்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது 20. விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஊன்றுவை யடிசில் 1-6. பொலம்பூ ....... சேரல் உரை : பொலம்பூந் தும்பை - பொன்னாற் செய்யப்பட்ட அழகிய தும்பைப் பூவையும்; பொறி கிளர் தூணி - பொறிகள் பொருந்திய தூணியின்கண்; புற்று அடங்கு அரவின் - புற்றின்கண் அடங்கிய பாம்பு போல; ஒடுங்கிய அம்பின் - ஒடுங்கியிருக்கின்ற அம்பு களையும்; நொசிவு உடை வில்லின் - வளைதலையுடைய வில்லையும்; நொசியா நெஞ்சின் - பகை முதலியவற்றிற்கு அஞ்சி யொடுங்காத மனவெழுச்சியையும்; களிறு எறிந்து முரிந்த - களிறுகளைக் கொல்வதால் நுனி மடிந்த; கதுவாய் எஃகின் - வடுப்பட்ட வேலையுமுடைய; விழுமியோர் துவன்றிய - சீரிய வீரர் நெருங்கிச் செய்கின்ற; அகன்கண் நாட்பின் - அகன்ற போர்க்களத்தை யுடைய; எழு முடி மார்பின் எய்திய சேரல் - பகைவர் எழுவர் முடிப்பொன்னாற் செய்த ஆரத்தை மார்பின் கண் அணிந்த சேரமானான செங்குட்டுவனே என்றவாறு. பொரும் வீரரணியும் தும்பைப்பூ பொன்னாற் செய்யப் படுதலால், “பொலம்பூந் தும்பை” யென்றார். பொறி, பூத்தொழில் வேலைப்பாடு; இனி, தீப்பொறி கக்கும் அம்புகளை யுடைமை யின், பொறி கிளர் தூணி யெனப்பட்ட தென்றுமாம். பாம்பு போற் சீறிச் சேறல்பற்றி, அம்பிற்குப் பாம்பும், தூணிக்குப் பாம்புறையும் புற்றும் உவமமாயின. வில்லிற்கு வளைவும் நெஞ்சிற்கு வளையாமையும் சிறப்பியல்பாதலின், “நொசிவுடை வில்லின் நொசியா நெஞ்சின்” என்றார். எறிந்தென்னும் வினையெச்சம் காரணப்பொருட்டு. முரிதல், ஒடிதலுமாம்; ஆயினும், ஒடிந்த வேல் ஏந்தப்படாதாதலின், நுனி மடிதலே ஈண்டுப் பொருளா யிற்று. கதுவாய், வடு; “குருதி யோட்டிக் கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு” (புறம்.353) எனச் சான்றோர் கூறுதல் காண்க. வீரர்க்குரிய சால்பனைத்தும் நிரம்பிய சான்றோ ரென்றற்கு. “விழுமியோர்” என்றார். ஞாட்பென்பது நாட்பென வந்தது. இனி, நாட்பின் என்பதற்கு நாட்பின்கண் என விரித்து ஆங்கு எதிர்ந்த வேந்தர் எழுவரை வென்று அவர் முடிப்பொன்னாற் செய்த ஆரமணிந்த மார்பு என இயைப்பினு மமையும். தும்பையும் அம்பும் வில்லும் நெஞ்சும் எஃகமுமுடைய விழுமியோர் என இயையும். 7-12. குண்டுகண் ............ ஆடி உரை : குண்டு கண் அகழிய மதில் பல கடந்து - ஆழ்ந்த அகழி களையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று; உள் உண்டு அழித்த - உட்புகுந்து ஆங்குள்ள பொருள் களைக் கொண்டழித்த; நாடு கெழு தாயத்து - நாட்டாட்சிக் குரியதாக அமைந்த; நனந்தலை அருப்பத்து - அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின்; கதவம் காக்கும் கணை எழு அன்ன - வாயிற் கதவுகட்கு வன்மையுண்டாகக் காக்கும் திரண்ட கணைய மரத்தை யொக்கும்; நிலம் பெறு திணிதோள் - பகைவர் நாடுகளைப் பெறும் வலியமைந்த திண்ணிய தோள் களை; உயர ஓச்சி - உயரத் தூக்கி வீசி; பிணம் பிறங்கு அழுவத்து - பிணங்கள் குவிந்து உயர்ந்து கிடக்கும் போர்க்களத்தில்; பண்டும் பண்டும் துணங்கை யாடி - முன்னே பல காலங்களிற் பன்முறை துணங்கைக் கூத்தினை யாடி என்றவாறு. அகழிய மதில் என்பதில், அகழிய என்பது பெயரெச்சக் குறிப்பு. புற மதிலும் அக மதிலும் எனப் பலவாதலின், “மதில் பல” என்றார். அழித்துண் டென்றதனை, உண்டழித்த எனமாறி யியைக்க. உண்டல், கைக்கோடல். இவ்வாறு கொள்ளாது உள்ளழித்துண்ட என்றே கொண்டு, “முற்காலங்களில் தாம் உள்ளே புகுந்தழித்து அவ்விடத்தே சோறு சமைத்துண்ட” என்பாரு முளர். இக் கருத்துக்கு “அம்புடை யாரெயிலுள்ளழித் துண்ட, அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்” (பதிற். 20) என்பது ஆதரவு தருகிறது. அருப்பம், உள்ளரண். “அகநாடு புக்கவர் அருப்பம் வவ்வி” (மதுரை. 149) எனச் சான்றோர் கூறுதலால் அறிக. நாட்டின் அரசியற்கு இஃது இன்றியமையா வுறுப்பாதலின், “நாடுகெழு தாயத்து அருப்பம்” என்றார்.” “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும், உடையான் அரசருள் ஏறு” (குறள். 381) என்று திருவள்ளுவனார் கூறுதல் காண்க. சிறுகாப்பிற் பேரிடத்ததாதல் அரணுக்கு இலக்கணமாதல் பற்றி, “நனந்தலை யருப்பம்” என்றார். மதிற்கதவுகளின் பின்னே மேலும் கீழும் குறுக்கே கிடந்து உரம் தந்து நிற்றலின், “கதவம் காக்கும் கணையெழு” என்றார். இதனை வீரர் தோட்கு உவமமாகக் கூறினார். பல மதிற்கதவுகளையுடைத்துச் சென்ற குட்டுவன் பயிற்சி குறித்து, “தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட, எழூஉ நிவந்தன்ன பரேரெறுழ் பணைத்தோள்” (பதிற். 31) எனப் பிறரும் கூறினர்: பகைவரொடு அறத்தாற்றிற் பொருது அவர் நிலத்தைக் கொள்ளும்தோள் வன்மையைச் சிறப்பித்து, “நிலம்பெறு திணிதோள்” என்றார். “மன்பதை பெயர அரசுகளத் தொழியக், கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை” (பதிற். 77) என்பதனால், வென்ற அரசர் போர்க்களத்தே துணங்கையாடும் திறம் காண்க. இனி, பழையவுரைகாரர், “மதில் பல கடந்து, உள்ளழித் துண்ட, அருப்பத்துப் பிணம் பிறங் கழுவத்து, தோளோச்சிப், பண்டும் பண்டும் துணங்கையாடி என மாறிக் கூட்டுக” என்பர். 13-14. சோறுவேறு ............. இறுத்து உரை : சோறு வேறு என்னா - சோறு வேறு ஊன் வேறு எனப் பிரித்துக் காணமாட்டாதபடி யமைந்த; ஊன் துவை யடிசில் - ஊன் குழையச் சமைத்த சோற்றினை; ஓடாப் பீடர் உள்வழி இறுத்து - பகைவர்க்குப் புறங்கொடாத பெருமையுடைய வீரருள்ளம் விரும்புமாறு பெருவிருந்தளித்துச் சிறந்த என்றவாறு. சிறந்த என ஒருசொற் பெய்து முடிக்க. சோற்றினை ஊன் கலந்து சமைத்தல் பண்டையோர் முறை. “செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை” (பதிற். 55) எனச் சான்றோர் கூறுதல் காண்க. வென்றி யெய்திய வேந்தர் வீரர்க்கும் பாணர்க்கும் ஊன் சோறு வழங்கும் சிறப்பினை, “ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும், செம்மற் றம்மநின் வெம்முனையிருக்கை” (புறம். 33) எனக் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியைப் பாடுமிடத்துக் கூறியிருப்பதைக் காண்க. இனி, இதற்குப் பழையவுரைகாரர், “சோறு வேறென்னா அடிசில் என்றது, அரசனுக்கு அடு சோற்றில் இச் சோறு வேறென்று சொல்லப்படாத அடிசில் என்றவாறு” என்றும், “இவ்வடைச் சிறப்பானே இதற்கு ஊன்றுவை யடிசில் என்று பெயராயிற்” றென்றும் கூறுவர். ஊன்றுவை யடிசில் மிக்க சுவையுடைத்தென வியந்து, “அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்” (புறம். 390) என்று சான்றோர் கூறுப. 15-17. முள்ளிடுபு ............ மன்னர் உரை : முள் இடுபு அறியா ஏணி - பகைவரது குதிரை முதலிய படைகளைத் தடுத்தற்பொருட்டு முள்வேலி யிடுவதை யறியாத எல்லைப்புறத்தையும்; தெவ்வர் சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் - பகைவரது வில்லில் தொடுக்கப்படும் அம்பின் கடுமையைக் கெடுத்த வலிய வெண்மையான கேடகத்தையும்; அனைய பண்பின் தானை மன்னர் - அவற்றிற்கேற்ற மறப்பண்பு படைத்த தானையையுமுடைய வேந்தருள்ளே என்றவாறு. பகைவரது குதிரைப்படை தம் மெல்லைக்குட் புகாதவாறு வழியில் முள்வேலி யிடுதல் மரபாயினும், குட்டுவனைப் பகைத்துப் போந்து பொருவார் இன்மையின், அவன் நாட்டெல்லைப் புறத்தை, “முள்ளிடு பறியா வேணி” என்றார்; “பொருநர்த் தேய்த்த போரரு வாயில்” (முருகு. 1-69) என்றாற் போல. முள்ளிடும் மரபினை, “இனநன்மாச் செலக்கண்டவர், கவை முள்ளிற் புழையடைப்பவும்” (புறம். 18) என்று சான்றோர் கூறுதலாலறிக. சிலை: ஆகுபெயர். எத்துணை விசையாக அம்புகளை விடுக்கினும், அவற்றை இக்கேடகம் தடுத்து விடுதலின், “சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்” என்றார். “மழைத்தோற் பழையன்” (அகம். 186) என்றும் வழங்குவ துண்மையின், “வெண்டோல்” என்றார். ஏணியும் தோலும் தானையு முடைய மன்னர் என இயைக்க. இனிப் பழையவுரைகாரர், தோலனைய பண்பின் என்று கொண்டு, “தோலனைய பண்பென்றது தான் அம்பு படில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பென்றவாறு” என்பர். ஏணி, எல்லை; “நளியிரு முந்நீ ரேணியாக” (புறம். 35) என்றாற்போல. 18-22. இனியா ருளரோ ............ மறுத்திசினோரே உரை : மழை கொளக் குறையாது - முகில் படிந்து முகத்தலால் நீர் குறையாமலும்; புனல் புக நிறையாது - யாறுகளின் வரவால் நீர் நிரம்பிக் கரை கடவாமலும்; விலங்கு வளி கடவும் - செல்லும் செலவைத் தடுத்து மோதும் காற்றுத் திரட்டும்; துளங்கு - அலைகளால் அசைதலையுடைய; இருங் கமஞ்சூல் முழங்கு திரைப் பனிக்கடல் - மிக நிறைந்த நீரை யுடைய முழங்குகின்ற அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடத்தே; வயங்குமணி இமைப்பின் - விளங்குகின்ற மணிபோலும் ஒளியினை யுடைய; வேல் இடுபு - வேற்படையைச் செலுத்தி; மறுத்திசினோர் - அக்கடலிடத்தே யெதிர்ந்த பகைவரை யெதிர்த்துப் பொருதழித்த வேந்தர்; நின் முன்னும் இல்லை - நின் முன்னோருள் ஒருவரும் இலர்; இனி யார் உளரோ - இப்பொழுதும் நினக்கு ஒப்பானவர் இல்லை என்றவாறு. முகில் படிந்து முகத்தலால் குறைதலும், ஆறுகளால் நீர் புகுதலால் மிகுதலுமின்றி எஞ்ஞான்றும் நிறைந்தே யிருத்தல் பற்றிக் கடலை “மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது” என்றார். “மழைகொளக் குறையாது புனல்புக மிகாது, கரை பொரு திரங்குமுந்நீர்” (மதுரை. 424,5) என்று பிறரும் கூறுதல் காண்க. கடலில் கலம் செலுத்திச் செல்வோர்க்கு எதிரே குறுக்கிட்டு மோதுதலால், காற்றை, “விலங்குவளி” யென்றார். வளி மோதுதலால் அலை யெழுந்து அசைவது பற்றி, “வளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்” என்பாராயினார். ஓகாரம் : எதிர்மறை. வேல் : ஆகுபெயர். இனிப் பழையவுரைகாரர், “குறையாது, நிறையாது என்னும் எச்சங்களைக் கடவும் என்னும் வினையொடு முடித்து, அதனைக் கடவப்படும் என வுரைக்க” என்றும், “மணி யிமைப்புப் போலும் மின்னுக்கு மணியிமைப்பென்பது பெயராயிற்று” என்றும், “வேலிடு பென்றது வேலை ஏற்றி நடப்பித் தென்றவாறு” என்றும், “கடல் மறுத்த லென்றது, கடலிற் புக்கு ஒரு வினை செய்தல் அரிது என்பதனை மறுத்தலை,” யென்றும் கூறுவர். எழுமுடி மார்பின் எய்திய சேரல், பண்டும் பண்டும் துணங்கை யாடி, ஊன்றுவை யடிசில் பீடர் உள்வழி இறுத்துச் சிறந்த மன்னருள், பனிக்கடல் மறுத்திசினோர் நின் முன்னும் இல்லை; இனி யார் உளரோ, இல்லை எனக் கூட்டி முடிக்க. இதனாற் சொல்லியது, அவன் வெற்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று. 6. கரைவாய்ப் பருதி 1. இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர் 5. தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபி னுழிஞை பாட இனிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலிற் சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் 10. பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் கோடுநரல் பௌவங் கலங்க வேலிட் டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கரைவாய்ப் பருதி 1-7. இழையர் ............ சுரத்தலின் உரை : இழையர் குழையர் நறுந் தண் மாலையர் - இழையினையும் குழையினையும் நறிய தண்ணிய மாலையினையும்; சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை - ஒளி மிக்கு விளங்குகின்ற தொடியைச் செறிய அணிந்த முன்கையினையும்; திறல் விடு திருமணி - மிக்க வொளி திகழும் அழகிய மணிமாலை கிடந்து; இலங்கு மார்பின் - விளங்குகின்ற மார்பினையுமுடைய; வண்டுபடு கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலை; முடி புனை மகளிர் - கொண்டையாக முடித்துக் கைசெய்துகொண்டுள்ள பாடல் மகளிர்; தொடைபடு பேர்யாழ் - நரம்புத் தொடையினை யுடைய பேரியாழின்கண்; பாலை பண்ணி - பாலைப்பண்ணை யமைத்து; பணியா மரபின் உழிஞை பாட - பகைவர்க்குப் பணியாத முறையினையுடைய உழிஞைத் திணைச் செயலைப் புகழ்ந்து பாட; இனிது புறந்தந்து - அவர்களை நன்கு ஓம்பி; அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் - அவர்கட்கு இனிய மகிழ்ச்சி யினைத் தன் கொடையாலும் முகமலர்ச்சியாலும் செய்தலாலே என்றவாறு. இழையரும் குழையரும் மாலையரும் ஆகிய மகளிர் பாட என இயையும். முன் கையினையும் மார்பினையுமுடைய மகளிர் என முடிக்க. திருமணியின் சீரிய வொளி, தொடியினும் இழையினும் பிறவற்றினும் தோன்றும் நல்லொளியின் மேம் பட்டுத் திகழ்தல்பற்றி, “திறல்விடு திருமணி” யென்றார். “பிறவொளியிற் றிறலுடைமையால் இவ்வொளிக்கு ஆகுபெய ரால் திறலென்று பெயராயிற்” றென்பது பழையவுரை. பூக்களை இடையறவின்றிச் சூடுதல்பற்றி, கூந்தல் “வண்டுபடுகூந்தல்” எனப்பட்டது. அக் கூந்தலைச் சிறப்புடைய கொண்டையாக முடித்துப் பூவும் பொன்னுமணிந்து கைசெய்தல் இயல்பாதல் தோன்ற “முடிபுனை மகளிர்” என்றார். பேரியாழ், ஆயிரம் நரம்புகளையுடைத்தாய் ஆதி யாழ் எனச் சிறப்பித்து ஓதப்படுவது. “அது கோட்டின தளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப் பெற்றிக்கேற்ற ஆணிகளும் திவவும் உந்தியும் பெற்று, ஆயிரங் கோல் தொடுத் தியல்வது” (சிலப். உரைப்பாயிரம்) என்பர் அடியார்க்கு நல்லார். பிறி தோரிடத்தே அவர், யாழ் நால்வகைப்படு மென்றும், அவற்றுள் பேரியாழ் என்பதும் ஒன்றென்றும், அஃது இருபத் தொரு நரம்பினை யுடையதென்றும் கூறுவர். இவற்றுள் ஈண்டுக்கூறிய பேரியாழ் இன்னதெனத் தெரிந்திலது. ஒருகால் இருபத் தொரு நரம்பு சிற்றெல்லையும், ஆயிர நரம்பு பேரெல்லையு மாகவுடைய யாழ் பேரியாழ் எனப்பட்டன போலும். நரப்படை வுடைத்தாய் மங்கலப் பண்ணாகவுமிருத்த லால் உழிஞை பாடு மிடத்து முதற்கண் “பாலை பண்ணி” யென்றார். வேந்தர் பகைவருடைய முழுமுத லரணங்களை முற்றலும் கோடலும் உழிஞைத் திணையாதலின், அச் செயல் குறித்த பாட்டினை யாழில் அமைத்துப் பாடினா ரென்றற்கு, “பணியா மரபின் உழிஞை பாட” என்றார். வேற்று வேந்தன் அரணத்தை முற்றும் உழிஞைச் செயல் பணிவு தோற்றுவியாப் பெருஞ்செயலாதலால் “பணியா மரபின் உழிஞை” யெனப் பட்டது. “இன் மகிழ் சுரத்தல் - இனிய மகிழ்ச்சியைச் சுரத்தல்: இதனாற்பயன், முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே இவர்களை மயக்கிய முகனமர்தலும் உடைய னென்றவாறு” என்பது பழையவுரை. 8-10. சுரம்பல ............ யானை உரை : சுரம் பல கடவும் - காடுகள் பலவற்றினும் செலுத்தப்படும்; கரை வாய்ப் பருதி - குருதிக்கறை தோய்ந்த விளிம்பையுடைய தேராழி; ஊர்பாட்டு - தன் பாட்டிற் செல்லுங்கால்; எண்ணில் பைந்தலை துமிய - எண்ணி லடங்காத வீரருடைய பசிய தலைகள் கீழே அகப்பட்டு நசுங்க; பல செருக்கடந்த - பல போர்களை வஞ்சியாது பொருது வென்றி சிறந்த; கொல் களிற்று யானை - கொல்லுகின்ற யானைகள் பலவும் உடைய (குட்டுவன்) என்றவாறு. செல்லுதற்கரிய காடுகளிலும் இனிது சென்று திரியும் கால் வலிய தேராதல் தோன்ற, “சுரம்பல கடவும்” என்றும், அச் செலவால் மடிந்தாரது குருதிக்கறை தோய்ந்து படிந்திருப்பது குறித்துக் “கரைவாய்ப் பருதி” யென்றும் கூறினார். கறை, கரை யென வந்தது. இனிப் பழையவுரைகாரர், “சுரம்பல வென்றது, பகைவரொடு பொருங் களத்தில் தேர் செல்லுதற்கு அரிதாம்படி படையொடு விளங்கும் அரிய இடங்கள் பலவற்றினும் என்றவாறு” என்பர். வீரரைக் கொல்வதற்கென்று செல்லாது தன் பாட்டிற் செல்லும்போதே, அதன் ஆழியில் வீரர் பலர் வீழ்ந்து தலை துமிந்து மடிவது தோன்ற, “கரைவாய்ப் பருதி யூர்பாட்டு எண்ணில் பைந்தலை துமிய” வென்றார். பருதியூர் பாட்டில் வீரர் வீழ்ந்து மடிந்து தலை துமியப்படுதற்குக் கொல்களிற்று யானையை யேதுவாக்கி, “பைந்தலையைத் துமித்தற்கென்று தேரை வலியச் செலுத்துவதன்றி, அப்பருதி தான் ஊர்கின்ற பாடு தன்னிலே, யானை செய்கின்ற போர்க்கு அஞ்சி ஓடி மடிந்தா ருடைய அளவிறந்த பைந்தலை துமிய என்றவாறு” என்றும், “இவ்வாறு பின்வந்த அடைச் சிறப்பான் இதற்குக் கரைவாய்ப் பருதி யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். பல்செருக் கடந்த குட்டுவன், கொல்களிற்று யானைக் குட்டுவன் என இயையும். 11-14. கோடுநரல் ............. பெயர்ந்தே உரை : கோடு நரல் பௌவம் கலங்க - சங்கு முழங்கும் கடலானது கலங்குமாறு; வேல் இட்டு - வேற்படையைச் செலுத்தி; உடை திரைப் பரப்பின் - உடைந்தலையும் அலைகளையுடைய நீர்ப்பரப் பாகிய; படு கடல் - ஒலிக்கின்ற கடலை யிடமாகக் கொண்டு போர் செய்தோரை; ஓட்டிய - தோற்றோடச் செய்த; வெல் புகழ்க் குட்டுவன் - வெற்றியாலுளதாகிய பெரும் புகழை யுடைய செங்குட்டுவனை; பாடுபு கண்டோர் - பாடிச் சென்று அவனைக் கண்டு அவனால் அளிக்கப்பெற்றோர்; பெயர்ந்து - மீண்டும்; செல்குவம் என்னார் - தம்மூர்க்குச் செல்வோம் என்று நினையார், அவன் பக்கலிலே எப்போதும் இருக்கவே நினைப்பர் என்றவாறு. கோடு, சங்கு; “கோடுமுழங் கிமிழிசை” (பதிற். 50) என வருதல் காண்க. வேல், ஆகுபெயராய் அதனை யேந்திய படை வீரர் மேலதாயிற்று. கடலிடத்தே யிருந்துகொண்டு குறும்பு செய்து திரிந்த கடற் குறும்பராகிய பகைவரை, வேலேந்திய படைவீரரொடு சென்று தாக்கிப் பெரும்புகழ் பெற்ற செய்தியை விதந்து, “வேலிட்டு உடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவன்” என்றார். இனி, பழையவுரைகாரர் “கடலோட்டிய வென்றது, தன்னுள் வாழ்வார்க்கு அரணாகிய கடல் வலியை அழித்த வென்றவா” றென்பர். செங்குட்டுவன் கடலிடத்தே வேலேந்திய படை கொண்டு சென்று, அக் கடலிற் செல்லும் கலங்கட்குத் தீங்கு செய்த குறும்பரை வென்றழித்த செய்தியைப் பிறாண்டும், “மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாது விலங்குசினஞ் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க வோட்டிய, நீர்மா ணெஃகம்” (அகம். 212) என்று ஆசிரியர் பரணர் வியந்து பாராட்டுவர். இச் செயலால், கடற்குறும்பு செய்த பகைவர் அழிந்தன ரென்றும், பிற நாட்டுக் கலங்களும் அச்சத்தால் கடலிடத்தே யுலவுவ தொழிந்தன வென்றும் மலையமான் திருமுடிக்காரியைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையார், “சினமிகு தானை வானவன் குடகடற், பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப், பிறகலஞ் செல்கலா தனையேம்” (புறம். 126) என்று குறித்துள்ளார். இதுகாறுங் கூறியது, மகளிர் உழிஞை பாட மகிழ் சுரத்தலின், குட்டுவற் பாடிக் கண்டோர் பெயர்ந்து செல்குவ மென்னார், நிற்க வெனக் கருதுவர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனால் அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. 7. நன்னுதல் விறலியர் 1. அட்டா னானே குட்டுவ னடுதொறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற் 5. சொரிசுரை கவரு நெய்வழி புராலின் பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல நன்னுதல் விறலிய ராடும் தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நன்னுதல் விறலியர் 1-2. அட்டானானே ............. களிறே உரை : குட்டுவன் - சேரன் செங்குட்டுவன்; அட்டு ஆனான் - பகைவரை வேரொடு பொருதழித்தும் அதனோ டமையானா யினான்; அடுதொறும் - அதனால் அவன் பகைவரை நாடிச் சென்று பொருந்தோறும்; பரிசிலர் - பரிசில் மாக்கள்; களிறு பெற்று ஆனார் - களிறு பல பரிசிலாகப் பெற்றும் அமையாது அவன் போர்ச்சிறப்பைப் பாடுதலே செய்வாராயினர் என்றவாறு. தன்னைப் பகைத்த பகைவரை அவர் குலத்தோடும் தொலைத்தும், போர்மேற் சென்ற உள்ளம் மாறாமையின், அவர் தாமே முன்வாராமை கண்டு அவரை நாடிச்சென்று பொருவா னாயினா னென்றற்கு, “அட்டு ஆனானே குட்டுவன்” என்றார். போர் நிகழுந்தோறும் வெற்றியே பெற்றானாக, பரிசிலரும் அவ்வெற்றி யெய்துந்தோறும் விடாது பாடி அப்பகைப் புலத்துப் பெற்ற களிறு முதலியவற்றைப் பரிசிலாகப் பெற்றமையின், “பெற்றா னாரே பரிசிலர் களிறே” என்றார். பரிசிலர் களிறு பெறுதற்கு ஏதுவாகிய பாட்டும், அதற்கேது வாகிய வெற்றியும் மேன்மேலும் நிகழ்ந்தவண்ண மிருத்தல் பெற்றாம். பெறவே, குட்டுவன் ஆட்சியில் போர் பல நிகழ்ந்தன வென்றும், அவற்று ளெல்லாம் அவன் வெற்றியே பெற்றுச் சிறப்புற்றானென்றும் அறிகின்றோம். இக் குட்டுவற் கிளவலாகிய இளங்கோவடிகளும், இக் குட்டுவன் அட்டானானாதலைக் கண்டு, மாடலன் கூற்றில் வைத்து, “ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும், அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும், மறக்கள வேள்வி செய்வோ யாயினை” (சிலப். 28 : 130-2) என்று கூறுவது இப்பாட்டின் பொருளை வற்புறுத்துகின்றது. பிறாண்டும், இவ்வாசிரியர் இக்குட்டுவனை, “துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த, வேழ முகவை நல்குமதி, தாழா வீகைத் தகைவெய் யோயே” (புறம். 369) என்று பாடுதல் காண்க. சிறப்பும்மை தொக்கது. 3-8. வரைமிசை ............. ஆனாவே உரை : வரைமிசை இழிதரும் அருவியின் - மலைமேலிருந்து வீழும் அருவிபோல; மாடத்து - மாடங்களின் மேலிடத்தி லிருந்து; வளிமுனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் - காற்றால் அலைக்கப்படும் கொடிகள் அசையும் தெருவின் கண்; சொரிசுரை - நெய் சொரியப்படும் விளக்குச் சுரையின்கண்; கவரும் நெய் வழிபு உராலின் - எரிக்கப்படும் நெய் வழியுமாறு பெய்து நிரப்புதலால்; பாண்டில் விளக்கு - கால் விளக்கினது; பரூஉச் சுடர் அழல - பருத்த திரியானது பேரொளி காட்டி யெரிய; நன்னுதல் விறலியர் - நல்ல நெற்றியையுடைய விறலியர்; ஆடும் - கூத்தாடும்; தொல்நகர் வரைப்பின் - பழைமையான மாளிகைகளையுடைய வூர்களில்; அவன் உரை ஆனா - அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவுவவாயின என்றவாறு. துகிற்கொடிக்கு அருவியும், அருவிகட்கு அக்கொடியும் உவமம் கூறுதல் சான்றோர் மரபாகும். “வேறுபல் துகிலின் நுடங்கி .... இழுமென விழிதரும் அருவி” (முருகு. 296-316) என்று நக்கீரர் கூறுமாறு காண்க. மாடங்களின் உச்சியிற் கட்டிய துகிற்கொடிகள் காற்றால் அசைந்தொழுகும் தோற்றம் கூறுவார், “வரைமிசை யருவியின் மாடத்து, வளிமுனை யவிர்வரும் கொடி” யென்றார். மாடங்களின் செல்வ மிகுதியும் இதனால் குறித்த வாறாயிற்று. அகல்போல் இடம் விரிந்து ஒரு பக்கத்தே குவிந்து சுரையுடைத்தாய் உள்ளே திரி செறிக்கப்பட்ட கால் விளக்கினை “பாண்டில் விளக்கு” என்றார். திரி யெரியுங்கால், அதனால் நெய் கவரப்படுதலால், “சொரிசுரை கவரும்நெய்” என்றார். கூத்தாடும் களரிக்கு வேண்டும் ஒளியின் பொருட்டுப் பருத்த திரியிட்டு எரிப்ப வாதலின், “பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல” என்றார். இவ்விளக்கு சேலம் சில்லாவிலும் வடார்க்காடு சில்லாவிலும் இக்காலத்து மண்ணெண்ணெ யெரிக்கும் பேரொளி விளக்குகள் வருவதற்குமுன் வழக்கி லிருந்தன. மூங்கில்களை உயரமாக நட்டு அவற்றின் தலையை மூன்று வரிச்சல்களாகப் பகுத்து அவற்றின் இடையே மட் பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய்பெய்து எரிப்பர். கூத்தாடும் களரியின் வலப்பக்கத் தொன்றும் இடப்பக்கத் தொன்றுமாக இரண்டு பாண்டில்கள் நிறுத்தப்படும். திரி முழுதும் எரிந்து போகாவண்ணம் தடுத்தற்கே சுரை பயன்படும். பரூஉச் சுடர் அழல் போல் பேரொளியிட் டெரியுமிடத்துச் சொரியப் படும் நெய் விரையக் கழியாமைப் பொருட்டு வழியப் பெய் கின்றன ரென்பார், “நெய் வழிபு உராலின்” “”என்றும், பாண்டில் முழுதும் பரவி வழிதலின், “உராலின்” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “சொரி சுரை கவரும்” என்றது, நெய்யைச் சொரியும் உள்ளுப்புடையுண்டாயிருக்கின்ற திரிக் குழாய் தான் ஏற்றுக்கொண்ட நெய்யென்றவாறு” என்றும், “சுரை யென்றது திரிக்குழாய்க்கு ஆகுபெய” ரென்றும் கூறுவர். கூத்தும் குரவையும் விழவும் நடக்குந்தோறும் நாட்டரசனை வாழ்த்துவதும் அவன் புகழோதிப் பாராட்டுதலும் மரபாதலின், “உரையானா” என்றார். சிலப் - குரவைகள் காண்க. விறலியராவார் விறல்படப் பாடி யாடும் மகளிர் என்ப. அம்மகளிர் ஆடல் பாடல்களோடு அழகும் நன்கு பெற்றவர் என்றற்கு, “நன்னுதல் விறலியர்” என்றார். இனிப் பழையவுரை காரர், “நன்னுதல் விறலியரென்றது, தமது ஆடல் பாடற்கேற்ப நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடையா ரென்றவாறு” என்றும், “அவ்வழகினை நுதல் மேலிட்டுக் கூறியவாற்றான் இதற்கு நன்னுதல் விறலிய ரென்று பெயராயிற்” றென்றும் “நெய் வழிபு உராலின் சுடரழல ஆடும் என்றதனால் சொல்லியது அந்த நகரிகளது செல்வ முடைமை” யென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, குட்டுவன் அட்டு ஆனான், அடு தொறும் பரிசிலர் களிறு பெற்று ஆனார்; தொன்னகர் வரைப்புக் களில் அவன் உரை ஆனா என்று கூட்டி வினை முடிவு செய்க. 8. பேரெழில் வாழ்க்கை 1. பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்ப்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ 5. ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர் கொள்ளாப் பாடற் கெளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் கைவ லிளையர் நேர்கை நிரப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை 10. முனைசுடு கனையெரி யெரித்தலிற் பெரிதும் இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டும் மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற் 15. பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொ டுண்டினிது நுகரும் தீம்புன லாய மாடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே. துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பேரெழில் வாழ்க்கை 1-4. பைம்பொற்றாமரை ........... பரதவ உரை : பாணர் - பாணர்களுக்கு; பைம்பொன் தாமரை சூட்டி - பசிய பொன்னாற்செய்த தாமரைப்பூவை யணிந்து; ஒள் நுதல் விறலியர்க்கு - ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு; ஆரம் பூட்டி - பொன்னரி மாலைகள் பூணத் தந்து; கெட லரும் பல்புகழ் நிலைஇ - கெடாத பலவாகிய புகழை நிலைநாட்டி; நீர் புக்கு - கடலகத்து நீர்ப்பரப்பில் சென்று; கடலொடு உழந்த - கடற்பகைவரொடு அரிய போரைச் செய்த; பனித்துறைப் பரதவ - குளிர்ந்த துறையினையுடைய பரதவனே என்றவாறு. புகழ் பாடும் பாணர்களுக்கும் விறலியர்களுக்கும் வேந்தரும் பிற செல்வரும் முறையே பொற்றாமரையும் பொன்னரி மாலையும் வழங்குவது பண்டையோர் மரபு; “பாணன் சூடிய பசும்பொற் றாமரை, மாணிழை விறலி மாலையொடு தயங்க” (புறம். 242), “மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும், ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி, உரவுக்கடன் முகந்த பருவ வானத்துப், பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப், புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின், தொடையமை மாலை விறலியர் மலைய” (பெரும்பாண். 380-6) என்று பிறரும் கூறுதல் காண்க. விறலியர் தம் அழகினை, ஈண்டும் நுதல்மே லேற்றி, “ஒண்ணுதல் விறலியர்” என்றார். நிலத்தின்மேல் அரிய போரைச் செய்து தன் புகழை நாட்டியதே யன்றிக் கடலகத்தும் அதனைச் செய்து அழியாப் புகழ் பெற்றானென்பதை. “கெடலரும் பல்புகழ் நிலைஇ” என்றார். பல் புகழ் என்றது, வெற்றியாலும் கல்வி யாலும் கொடையாலும் உளவாய புகழ்களை. நிலைஇ, நிலைபெறுவித்து. பழையவுரைகாரரும் “நிலைப்பித்தென்னும் பிற வினை” என்பர். கடலிடத் தெழுந்த பெருங் காற்றும் பேரலைகளும் அவனை மேற்செல்லாவாறு தகைந்தும் அஞ்சாது நீர்ப்பரப்பிற் சென்று ஆண்டு எதிர்ப்பட்ட பகையரசரைக் கடலிடத்தே பொருதழித்து வென்றி சிறந்தது கூறுவார், “நீர்ப்புக்குக் கடலொடு உழந்த பரதவ” என்றார். கடலிலே நாவாய் இடைநின்று பொரும் சிறப்புப்பற்றிப் பகைவரைக் கடலென ஆகுபெயராற் கூறினார். கலத்திற் செல்லும் பரதவர்போல, கலத்திற் சென்று போருடற்றி வென்றி யெய்தினமையின் “பரதவ” என்றார். மேலைக் கடற்கரையை யுடைமை பற்றி, இங்ஙனம் கூறினாரெனினுமாம். “நாட னென்கோ வூரனென்கோ, பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ” எனச் சேரமானைச் சான்றோர் கூறுவது காண்க (புறம். 49). இனிப் பழையவுரை காரர், “கடலொடு உழந்த” என்று கூட்டி, “ஓடு வேறு வினை யொடு” என்றும், “பரதவ என்றதனாற் சொல்லியது, அக்கடலின் உழத்தற்றொழி லொப்புமை பற்றி, அக் கடற்றுறை வாழும் நுளையற்குப் பெயராகிய பரதவ னென்னும் பெயரான் இழித்துக் கூறினான் போலக் குறிப்பான் உயர்த்து வென்றி கூறினானாகக் கொள்க” என்பர். இதன்கண் பரதவன் என்னும் பெயராற் கூறுவது இழிப்புரை யென்பது பழையவுரை காரர் கருத்தாதலைக் காணலாம்; அது பொருந்தாது; இறைவனது நுதல்விழி போற் சிறப்புடைய பாண்டியரைத் “தென்பரதவர் போரேறே” (மதுரைக். 144) என்று சான்றோர் கூறுதல் காண்க. 5-8. ஆண்டுநீர்ப் ........... நிரப்ப உரை : ஆண்டு - அக்கடலகத்தே; நீர்ப்பெற்ற தாரம் - பகைவர் கடல் வழியாகக் கொணரப்பெற்ற பொருள்களை; ஈண்டு - இவ்விடத்தே; இவர் கொள்ளாப் பாடற்கு - இப்பரிசிலருடைய நின் புகழ் முழுதினையும் தன்னகத்தே அடக்கிக் கொள்ள மாட்டாத பாட்டிற்காக; எளிதினின் ஈயும் - மிக எளிதாகக் கருதிக் கொடுக்கும்; இவன் - இச் செங்குட்டுவன்; கல்லா வாய்மையன் என - எதனையும் எளிதில் ஈதலை யன்றித் தனக்கென அரியவற்றையோம்புதலைக் கல்லாத வாய்மை யுடையன் என்று; கைவல் இளையர் - இசைத்தொழில் வல்ல இளையர்கள் பாராட்டி; தத்தம் நேர்கை நிரப்ப - தங்களுடைய ஒத்த கைகளை வரிசையாக நீட்ட என்றவாறு. கடலிடத்தே பகைவரைப் பொருதழித்தவழிஅவர்தம் கலங்களிற் கொணர்ந்த பொருள்கள் செங்குட்டுவனாற் கைக்கொள்ளப்படுவது குறித்து. “ஆண்டு நீர்ப்பெற்ற தாரம்” என்றார். அவற்றின் பெற லருமை நினையாது இளையர் பாடும் கொள்ளாப் பாடற்கு வழங்குவதனால், “கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன்” என்று இளையர் தம்முட் கூறிப் பாராட்டுகின்றா ரென்க. “விரிப்பி னகலும் தொகுப்பி னெஞ்சும், மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை, கைம்முற் றலநின் புகழே” (புறம். 53) என்று சான்றோர் கூறுதலின், இளையர் பாட்டுக் கொள்ளாப் பாடலாயிற்று. இனி, “யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாரா” (புறம். 92) இளையர் பாட்டாதலின், “கொள்ளாப் பாட” லென்றுமாம். இனிப் பழையவுரைகாரர், கொள்ளாப் பாடலை “மனங் கொள்ளாப் பாட” லென்றும், “கல்லாவாய்மைய னென்றது, கல்லாத தன்மையை யுண்மையாக வுடைய” னென்றும் கூறுவர். மேலும், அவர், “தாரத்தை யென விரித்து ஈயும் என்பதனோடு முடித்து, ஈயுமென்னும் பெயரெச்சத் தினைக் கல்லா வாய்மையன் என்னும் காரணப் பெயரொடு முடித்து, அப்பெயரை இக் கவி கூறுகின்றான். பிறர் கூற்றினைக் கொண்டு கூறுதற்கண் வந்த எனவொடு புணர்த்து, கடலுட் போர் செய்து அரிதிற் பெற்ற பொருள்களை எளிதாக, மனங்கொள்ளாப் பாடலையுடைய தரம் போதாதார்க்குக் கொடுக்கும் பேதை யிவன் என இழித்துக் கூறற்கேற்பக் கைவல் இளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டி நிரைக்கும்படி இரவலரிடத்து வணங்கிய மென்மை யென வுரைக்க. ஆண்டு நீர்ப்போந்து பெற்ற தாரத்தை யென்றான் இக்கவி கூறுகின்றான்; அவ்வுருபிற்கு முடிபாகிய ஈயுமென்றது கூறுகின்றார் கைவல் இளையர். அக் கைவல் இளையர் கூறிற்றாக இக்கவி கூறு கின்றானுக்குக் கொண்டு கூட்டாகப் புகுந்தமையால், அவ்விரண் டாவதற்கு அவ்வீயு மென்னும் வினை முடிபாம் எனக்கொள்க. இதற்குப் பிறவாறும் கூறுப” என்பர். “இளையர், தரம் போதாதார்” என்பது பழைய வுரை. 9-12. வணங்கிய ............ மார்ப உரை : வணங்கிய சாயல் - நட்டோர்க்கும் மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும்; வணங்கா ஆண்மை - பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும்; உடையையாய், முனை சுடு சுனையெரி எரித்தலின் - பகைவர் ஊர்களைச் சுடுகின்ற மிக்க எரி எரித்தலால்; இதழ் கவின் பெரிதும் அழிந்த மாலையொடு - பூவிதழ் கரிந்து அழகு மிகவும் கெட்ட மாலையும்; புலர் சாந்து - புலர்ந்த சந்தனமும் கொண்டு; பல்பொறி மார்ப - பலவாகிய பொறிகளையுடைய மார்பனே என்றவாறு. அன்புடைய மகளிர்பாலும் நட்டோர்பாலும் அயரா அன்புடையனாய் மிக்க எளியனாய் ஒழுகுதல்பற்றி, “வணங்கிய சாயல்” என்றார். “மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து” (புறம். 221) என்று கோப்பெருஞ் சோழன் நலத்தைப் பொத்தியார் கூறுதலாலும், “நட்டோரை யுயர்பு கூறினன்” (புறம். 239) என்று நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் கூறுதலாலும் அறிக. சாயல் - மென்மை. மென்மைக்கு வணக்கம் போல ஆண்மைக்கு வணங்காமை சிறப்பாதலின் “வணங்கா ஆண்மை” யென்றார். பகைவர் ஊர்களைச் சுடுமிடத் தெழுந்த பெருந் தீயின் வெம்மையால் மார்பிலணிந்த மாலை கரிதலும் சாந்து புலர்தலும் இயல்பாதலால், “பெரிதும் இதழ் கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் மார்ப” என்பாராயினர். ஆடவர் மார்பிடத்தே பொறிகிடந்து அழகு செய்தல் சீரிய விலக்கணமாதல் பற்றி, “பல் பொறி மார்ப” என்றார். “மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து .... அருவரை யன்ன மார்பின்” (பதிற். 88) என்று பிறரும் கூறுவதும், “பொறி யென்றது உத்தம விலக்கணங்களை” யென்று பழையவுரை கூறுவதும் ஒப்புநோக்கற்பாலன. புலர் சாந்து என மாற்றி மாலையொடு கூட்டிக்கொள்க. ஒடு, எண்ணொடு. மாலையும் சாந்தும் செயற்கையணி யாதலின், அவற்றைப் பிரித்தற்குக் கொண்டென ஒருசொல் வருவிக்க. இனிப் பழையவுரைகாரர், “மாலை யொடு என்னும் ஒடு வேறு வினையொடு” என்றும், “சாந்துபுலர் மார்ப வெனக் கூட்டுக” வென்றும் கூறுவர். மாலையொடு சாந்துபுலர் மார்பு என்ற வழிப் புலர்தல் வினை மாலைக்கு இயையாமையின், வேறு வினையொடு என்றார் என வறிக. 12-18. நின் பெயர் ......... பலவே உரை : நின் மலைப் பிறந்து - நினக்குரிய மலையிலே தோன்றி; நின் கடல் மண்டும் - நினக்குரிய கடலிடத்தே சென்று கலக்கும்; மலிபுனல் நிகழ்தரும் - நீர்நிறைந்த யாற்றில் நிகழ்த்தப்படும்; தீ நீர் விழவில் - இனிய புனலாட்டு விழாவும்; பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை - சோலையிடத்தே இனிதிருந்து செய்யும் வேனில் விழாவு முடைய பெரிய அழகிய வாழ்க்கைக்கண்; மேவரு சுற்றமொடு - நின்னை விரும்பிச் சூழும் சுற்றத்தாருடன்; உண்டு - உடனுண்டு; இனிது நுகரும் - ஏனை இன்பப் பகுதி பலவும் துய்க்கும்; ஆயம் ஆடும் - செல்வ மக்கள் கூடி விளை யாடும்; தீம்புனல் காஞ்சியம் பெருந்துறை மணலினும் - இனிய நீரையுடைய காஞ்சியென்னும் யாற்றின் பெருந்துறைக்கண் பரந்த நுண்ணிய மணலினும்; பல - பல யாண்டுகள்; நின் பெயர் வாழியர் - நின்னுடைய பெயர் நிலை பெறுவதாக என்றவாறு. மலையையும் கடலையும் உரிமை செய்யவே இடைக் கிடந்த நிலப் பகுதி சொல்லவேண்டாதாயிற்று. மலையிற் பிறந்து கடலில் மண்டும் மலிபுனல் என்றது யாறாயிற்று. தீநீர் விழவு என்றது புதுப்புனல் விழா. பழைய வுரையும், “மலிபுனலை யுடைமையின், யாறு மலிபுன லெனப்பட்டது” என்றும், “நிகழ்தருந் தீநீர் என்றது அவ் யாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய புதுநீரென்றவாறு” என்றும் கூறும். வேனில் விழா, தட்பம் வேண்டிக் குளிர்ந்த சோலையிடத்தே தங்கிச் செய்யப் படுவது தோன்ற. “பொழில்வதி வேனில் விழா” என்றார். “பொய்கைப் பூந்துறை முன்னித், தண்பொழில் கவைஇய தண்பகக் காவிற், கண்டோர் மருளக் கண்டத் திறுத்த, விழாமலி சுற்றமொடு” (பெருங். 1:38 : 277-80) என்று கொங்குவேளிர் கூறுவது காண்க. பழையவுரைகாரர், “பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை யென்றது வேனிற் காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கை யென்றவாறு” என்றும் “இச்சிறப்பானே இதற்குப், பேரெழில் வாழ்க்கை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். “வேனிற் பொழில்வதி வாழ்க்கை யென்க” என்றும், “வாழ்க்கையை யுடைய ஆயம்” என்றும் பழையவுரை இயைத்துக் காட்டும். விழவினை வேனிலொடும் கூட்டுக. “இனிப் பொழில் வயவேனி லென்பது பாட மாயின், பொழில் வயப்படுவதான பொருளுண் டாகிய வேனிலென வுரைக்க” என்பர் பழையவுரைகாரர். மேலும் அவர், உண்டு இனிது நுகரும் என்றற்கு, “சுற்றத்தோடு உண்டலே யன்றிச் செல்வமுடையார் அச் செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல் லாம் கொள்ளும் என்றவா” றென்றும், “புனலாயம், புனலாடற்கு வந்த திரள்” என்றும் கூறுவர். காஞ்சியாறு, பேரூர்க் கருகிலோடும் யாறு. நம்பியாரூரர், “மீகொங்கிலணி காஞ்சிவாய்ப் பேரூர்ப் பெருமானே” என்று இவ் யாற்றைச் சிறப்பித் துள்ளார். இதனை இப்போது நொய்யலாறு என வழங்குகின்றனர். இதுகாறும் கூறியது: பரதவ, மார்ப, காஞ்சியம் பெருந்துறை மணலினும் பல நின் பெயர் வாழியரோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. இதனாற் செங்குட்டுவனை நீடு வாழ்கவென வாழ்த்திய வாறாயிற்று. 9. செங்கை மறவர் 1. யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின் துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் கொளைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர் களிறுபரந் தியலக் கடுமா தாங்க 5. ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப எஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி 10. நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரச நடுவட் சிலைப்ப 15. வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே. துறை : விறலியாற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : செங்கை மறவர் 4-9. களிறு ............. மண்டி உரை : களிறு பரந்து இயல - யானைப் படையிலுள்ள யானைகள் பரந்து செல்ல ; கடுமா தாங்க - விரைந்த செலவினை யுடைய குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி சிதையாதே அவரைத் தாங்கிச் செல்ல; ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப - விளங்குகின்ற கொடி யசையவருந் தேர்கள் செல்லும் நெறிக்கேற்ப விலகிச் சுழன்று செல்ல; எஃகு துரந்து எழுதரும் - வேற்படையைச் செலுத்தி யெழும்; கை கவர் கடுந்தார் - பகைவர் முன்னணிப் படையின் இரு மருங்கினும் வரும் பக்கப் படையைப் பொருது கவரும் கடிய தூசிப்படையினையும்; வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து - வெல்கின்ற போரினையு முடைய முடிவேந்தரும் குறுநில மன்னரும் தம்மில் ஒற்றுமை மொழிந்து உடன்வர; மொய்வளம் செருக்கி மொசிந்து வரும் - மிகுகின்ற வலியால் மனஞ் செருக்கி அவரொடு கூடிவரும்; மோகூர் - மோகூர் மன்னனான பழையனுடைய; வலம்படு குழூஉ நிலை அதிர மண்டி - வெற்றி தரும் படைத்திரளின் கூட்டம் கலைந்து சிதையுறுமாறு நெருங்கித் தாக்கி என்றவாறு. பருத்த வுடம்பும் அசைந்த நடையு முடைய வாதலின், களிறுகள் இனிது செல்லும் நிலை கூறுவார்,“பரந்து இயல” என்றும், அமர் செய்தற்குரிய திறம் பலவும் கற்ற குதிரை என்றற்குக் “கடுமா தாங்க” என்றும் கூறினார். கல்லா மா வாயின் செலுத்தும் வீரரைத் தாங்கிச் செல்லாது ஆற்றறுக்கு மென்ப; “அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா” (குறள். 814) எனச் சான்றோர் கூறுதல் காண்க. செல்லும் நெறிக் கேற்ப ஒன்றுக் கொன்று விலகியும் சூழ்ந்தும் செல்வது பற்றி, “தேர் திரிந்து கொட்ப” என்றார். பக்கப்படையைத் தாக்கிக் கவரு மிடத்துத் துணைப்படை விலக்கப்படுதலும் அகப்படை நெருக் குண்டழி தலும் நிகழ்தலின், அது செய்யும் தூசிப்படையைக் “கைகவர் கடுந்தார்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கடுமா தாங்கவென்றது, கால் கடிய குதிரைமே லாட்கள் வேண்டிய அளவுகளிலே செலவை விலக்கிச் செலுத்த” என்றும், “திரிந்து கொட்ப வென்றது, மறிந்து திரிய வென்றவா” றென்றும், கைகவர் கடுந்தார் என்றற்கு “மாற்றார் படையில் வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவரும் கடிய தூசிப் படை” யென்றும் கூறுவர். தாரையும் போரையு முடைய வேந்தர் என்க. வேந்தர், சோழ வேந்தர். வேளிர், ஏனைக் குறுநில மன்னர். இவர் அனைவரும் தம்மிற் கலந்து ஒற்றுமை மொழிந்து கொங்கு நாட்டை அடிப்படுத்துங் கருத்தால் அறுகையொடு பொர வந்தவராவர். முடிவேந்தரது பெரும்படையும் குறுநில மன்னரது திரள் படையும் துணையாதலால் வலிமிகுதி நினைந்து உள்ளஞ் சிறந்து வரும் பழையன் மனநிலையினை, “மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரும் மோகூர்” என்றார். மோகூர் : ஆகுபெயர். பழையன், வேந்தரும் வேளிரும் உடன்வரக் கண்ட அறுகை அஞ்சி யொளித்துக் கொண்டதனால், பெருமகிழ்வு கொண்டு செருக்கினமை விளங்க, “மொய்வளஞ் செருக்கி” யென்றா ரென்றுமாம். இனி, அவன் செருக்கி யிருந்த நிலைமையினை, “வலம்படு குழூஉ நிலை” யென்றும், அது செங்குட்டுவன் செய்த போரால் சிதைந்து வேறுவேறாகத் திரிந்தழிந்தமை தோன்ற, “அதிர மண்டி” யென்றுங் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “மொய் வளஞ் செருக்கி யென்றது வலியாகிய செல்வத்தானே மயங்கி யென்றவா” றென்றும், “மொய் யென்பது ஈண்டு வலி” யென்றும் கூறுவர். கூறவே, வளம் என்றது செல்வ மென்பதும் பெற்றாம். ஆகவே, வலியாகிய செல்வக் களிப்பே, அறுகைக்குக் கேளாய்த் துணை செய்ய விருக்கும் செங்குட்டுவன் திறலை நினைந்து தற்காவாது பழையன் அழிதற்குக் காரணமாயிற் றென்பது கூறியவாறாம். 10-17. நெய்த்தோர் ............... வரற்கே உரை : நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் - குருதி யளைந்த தனால் சிவந்த கையினையுடைய போர் வீரருடைய; நிறம் படு குருதி - மார்பிற் புண்ணிடத் தொழுகும் குருதியானது; நிலம் படர்ந்தோடி - நிலத்திற் பரவியோடி; மழை நாள் புனலின் அவல் பரந் தொழுக - புதுமழை பொழியும் நாளில் பெருகி யோடும் கலங்கல் நீரைப் போலப் பரந்து பள்ளம் நோக்கிப் பாய; படுபிணம் பிறங்க - பட்டு வீழும் பிணங்கள் குவியுமாறு; பல பாழ்செய்து- பலவற்றையும் பாழ்படுத்தி; படுகண் முரசம் நடுவண் சிலைப்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய வெற்றிமுரசு படைநடுவே முழங்க; வளன் அற - அப்பழையனது செல்வம் முற்றவும் கெட்டழிய; நிகழ்ந்து வாழுநர் பலர் பட - இருந்து வாழ்தற்குரியவர் பலர் இராது இறப்ப; கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த - கரிய கொம்புகளையும் வன்மையினையு முடைய காவல் மரமான வேம்பினை வெட்டி வீழ்த்திய; பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கு - மிக்க சினத்தை யுடைய குட்டுவனைக் கண்டு வருதற்காக என்றவாறு. பகைவர் மார்பிற் செலுத்தி யழுத்திய படையினைப் பறித்தலால் வழியும் குருதி படிந்த சிவந்த கையினை யுடைய மறவர் எனப் பழைய னுடைய வீரரது மாண்பு தெரித்தற்கு “நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்” என்றார். இவ்வாறே பழைய வுரைகாரரும், “பகைவருடலில் தாங்கள் எறிந்த வேல் முதலிய கருவிகளைப் பறிக்கின்ற காலத்து அவருடைய உடலுகு குருதியை யளைந்து சிவந்த கையையுடைய மறவர் என்றவாறு” என்றும், “இச்சிறப்பானே இதற்குச் செங்கை மறவரென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இத்தகைய சிறப்பமைந்த வீரரையும் குட்டுவன்தானை வென்று மேம்பட்டதென அவன் வெற்றியை விளக்கினா ரென வறிக. இச் செங்கை மறவர் குட்டுவன் வீரரால் புண்பட்டு வீழ்ந்தா ராக அவர் மார்பினின் றொழுகிப் பெருகிய குருதிப் பெருக்கினைச் சிறப்பித்தற்கு, “மறவர் நிறம்படு குருதிநிலம் படர்ந் தோடி, மழைநாட் புனலின் அவல்பரந் தொழுக” என்றார். இவ்வாறே, “கடும்புனல் கடுப்பக் குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப” (பெருங். 1 : 46 : 689) என்று கொங்கு வேளிரும், “ஒண் குருதி, கார்ப்பெயல் பெய்தபின் செங்குளக் கோட்டுக்கீழ், நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற” (கள. 2) என்று பொய்கையாரும் கூறுதல் காண்க. வீரரே யன்றி மாவும் களிறும் பட்டு வீழ்தலின், “பாழ்பல செய்து” என்றார். பொருவார்க்கு மறத்தீக் கிளர்ந்தெழுச் செய்தற்கு முரசு, படை நடுவண் முழங்குவ தாயிற்றென வறிக. இவ்வண்ணம் போர்க்களத்தே பழையன்தானை முழுதும் பட்டழியவே, பொருவாரைப் பெறாது குட்டுவன் தானைவீரர் பலர் மோகூர்க்குட்புகுந்து வாழ்வோருடைய செல்வங்களைச் சூறையாடியது தோன்ற “வளன் அற” என்றும், அதனால், செல்வ வாழ்வு வாழ்பவர் வளன் அழிந்தமையின் வேறு வகையின்றி உயிரிழந்தன ரென்பார். “நிகழ்ந்து வாழுநர் பலர் பட” என்றும் கூறினார். “நிகழ்ந்து என்பதை நிகழவெனத் திரித்துக் கொள்க என்றும், “வளனற நிகழ்ந்தென்றது செல்வ மானது அறும்படி யாகக் கொள்ளை நிகழ வென்றவாறு” என்றும், “இனி வளனற வெனவும் நிகழ்ந்து வாழுந ரெனவும் அறுத்து நிகழ்தலை வாழ்வார்மேலேற்றி நிகழ்ந்து வாழ்த லென்றுமாம்; ஆண்டு நிகழ்தல் விளக்கம்” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர். வீரர் சூறையாட்டால் வாழ்வோர் பலர் கெடுதற்கும் வேம்பினை முதலொடு தடிதற்கும் ஏதுக் கூறுவார், “பெருஞ் சினக் குட்டுவன்” என்று சிறப்பித்தார். குழூஉநிலை யதிர மண்டி, குருதி யொழுகப் பிணம் பிறங்கப் பாழ் பல செய்து, முரசம் நடுவண் சிலைப்ப வளனற, வாழுநர் பலர்பட விறல் வேம்பறுத்த குட்டுவனைக் கண்டனம் வரற்கு என இயைத்துக் கொள்க. கண்டனம் : முற்றெச்சம். 1-3. யாமும் ............... உணீஇயர் உரை : துயலும் கோதை - அசைகின்ற கூந்தலையும், துளங்கியல் - அஞ்சுகின்ற இயல்பையு முடைய; விறலியர் - விறலியர்களே; யாமும் சேறுகம் - யாங்களும் செல்கின்றோம்; நீயிரும் வம்மின் - நீவிரும் வருக; கொளவல் வாழ்க்கை - பாடல் வன்மையால் வாழும் வாழ்க்கையினையுடைய; நும் கிளை - நும்முடைய சுற்றத்தவர்; இனிது உணீஇயர் - உடுப்பனவும் அணிவனவும் பெறுவதேயன்றி உண்பனவும் மிகுதியாய்ப் பெற்று உண்பார் களாக என்றவாறு. கைசெய்து பின்னி நாலவிட்டமை தொன்ற, “துயலும் கோதை” யென்றும், பெண்மைக்குரிய அச்சத்தால் உளம் துளங்குவது மெய்ப்பட்டுத் தோன்றுவது கண்டு, கூறலின், “துளங்கியல் விறலியர்” என்றும் கூறினார். விறலியர் : அண்மை விளி. பெருவளம் பெறற்கண் சிறிதும் ஐயமின்மை தோன்ற, “யாமும் சேறுகம் நீயிரும் வம்மின்” என்றார். கொளை, பாட்டு. பாடிப்பெற்ற பரிசில் கொண்டு வாழ்தல் பற்றி, “கொளவல் வாழ்க்கை” யென்றும், உடை அணி முதலியவற்றினும் உணவு தலைமை யுடைத் தாதல் பற்றி “இனிது உணீஇயர்” என்றும் கூறினார். இதுகாறும் கூறியது, குட்டுவற் கண்டனம் வரற்கு யாமும் சேறுகம், நும் கிளை இனிது உணீஇயர், விறலியர், நீயிரும் வம்மின் எனக் கூட்டி முடிவு செய்க. இதனால் அச் செங்குட்டுவனுடைய வரையா ஈகை கூறியவாறாயிற்று. 10. வெருவரு புனற்றார் 1. மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக் கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக் கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச் 5. செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை கொல்களிற்று, உரவுத்திரை பிறழ வல்வில் பிசிரப் புரைத்தோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர 10. விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க் கரண மாகிய வெருவரு புனற்றார் கன்மிசை யவ்வும் கடலவும் பிறவும் அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து 15. நல்லிசை நனந்தலை யிரிய வொன்னார் உருப்பற நிரப்பினை யாதலிற் சாந்துபுலர்பு வண்ணம் நீவி வகைவனப் புற்ற வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து 20. கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ எவன்பல கழியுமோ பெரும பன்னாள் பகைவெம் மையிற் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறுதுயி லியலாது 25. கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும் பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெருவரு புனற்றார் 1-7. மாமலை ............. அனையை உரை : மாமலை - பெரிய மலையின் கண்ணே; முழக்கின் - மேகத் தின் முழக்கத்தினால்; மான் கணம் பனிப்ப - விலங்குக் கூட்டம் அஞ்சி நடுங்க; கால் மயங்கு கதழ் உறை - காற்றுக் கலந்து மோதுதலால் விரைவுடன் பொழியும் மழை; ஆலியொடு சிதறி - ஆலங்கட்டியோடு சிதறிப் பொழிய; கரும்பு அமல் கழனிய நாடு - கரும்புகள் நெருங்கிய கழனிகளையுடைய நாடுகள்; வளம் பொழிய - வளம் பெருகிச் சுரக்க; வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ - வளம் பொருந்திய சிறப்பினை யுடைய நிலவுலகைப் புரந்து; செங்குணக் கொழுகும் - நேர்கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும் - கலங்கலாகிய நிறைந்த வெள்ளத் தையுடைய காவிரியை யொப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை - பூக்கள் விரிந்த புனலை யுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய் என்றவாறு. மலைமேல் தவழும் மழையின் முழக்கம் அதனால் எதிரொலிக்கப் பட்டு மிகுதலால் அங்கு வாழும் விலங்கினம் அஞ்சுதல் இயல்பாதலால், “மாமலை முழக்கின் மான்கணம் பனிப்ப” என்றும், ஆண்டு மோதும் காற்றால் அலைப்புண்டு மழை கடு விசையுடன் பொழிவது தோன்ற, “கான்பயங்கு கதழுறை” யென்றும், ஆலங்கட்டியும் உடன் பெய்தமையின், “ஆலியொடு சிதறி” யென்றும் கூறினார். சிதற வென்பது சிதறி யென நின்றது. “மாமலைக்கண்ணே உறை சிதறியெனக் கூட்டி அதனைச் சிதறவெனத் திரிக்க” என்று பழைய வுரைகாரரும் கூறினர். காவிரி செங்குணக் கொழுகுதலால் அது பாயும் நிலத்தின் விளைபயன் கூறுவார், “கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய” என்றார். கழனிய : பெயரெச்சக்குறிப்பு. செல்வம் மிக வுண்டாமாறு தோன்ற, “வளம் பொழிய” என்றார். காவிரி பாயும் நாட்டிற்குச் சிறப்பு அதன் குன்றா வளமாதலின், அதனை “வளங்கெழு சிறப்பின் உலகம்” என்றும், தீமை கெடுத்து நல்லதன் நலத்தை யோம்புதல் புரத்தலாதலால், அது செய்யும் காவிரியின் செயலை, “உலகம் புரைஇச் செங்குணக் கொழுகும் காவிரி” யெனச் சிறப்பித்தும் உரைத்தார். நேர்நிற்றலைச் செந்நிற்றல் என்றாற் போல, நேர்கிழக்காக ஓடுதல் “செங்குணக் கொழுகும்” எனப் பட்டது. புரைஇ - புரந்து. உலகம், ஈண்டு நாட்டின் மேற்று; “வேந்தன் மேய தீம்புன லுலகம்” (தொல். அகத். 5) என்றாற் போல. காவிரி செங்குணக் கொழுகி யுலகம் புரத்தற்கு அதன் தலையிடமாகிய மலைக்கண் மழைபெயல் இன்றியமை யாமையின், செங்குட்டுவனுடைய போகச்சிறப்பை விதந் தோது வதால் அதற்கு ஆக்கமாகும் மழையும் செல்வப்பெருக்கும் தொடக்கத்தே எடுத்தோதுகின்றா ரென்றலுமாம். செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி, காவிரி யனையை யென்பார், “காவிரி யனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவது போல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடு டைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக் கொழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை யென்பார், “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய வுரைகாரர், “அக் காவிரி தானும் ஆன்பொருநையும் குடவனாறு மென இம்மூன்றும் சேரக்கூடிய கூட்ட” மென்பர். காவிரி யனையை யாவதேயன்றி மூன்றுடன் கூடிய கூட்டத்தனையை என முடிக்க. கடுகி வரும் காவிரிப் பெருக்கு, “கலுழி மலிர் நிறை” யெனப்பட்டது. பனிப்ப, சிதற வென்ற செயவெனச்சங்கள் காரணப் பொருளினும், பொழிய வென்பது காரியப் பொருளினும் வந்தன. இனி, இம் முக்கூடலைப் பவானி கூட லென்பாரும் உண்டு. ஆண்டுக் குடவனாறு காணப்படாமையாலும், காவிரி ஆங்குத் தெற்கு நோக்கி யொழுகுதலானும், அது பொருந்தாமை யுணரப்படும். 8-16. கொல்களிற்று ............ நிரப்பினை உரை : கொல் களிற்று உரவுத் திரை பிறழ - கொல்லுகின்ற களிறுகளாகிய பரந்த கடலலைகள் அசைந்துவர; வல் வில் பிசிர - வலிய வில்லாகிய படை பிசிர் போலப் பரவ; புரைத் தோல் வரைப்பின் - உயர்ந்த கேடகத்தின் விளிம்பின் மேல்; எஃகு மீன் அவிர்வர - வேற்படையாகிய மீன்கள் விளங்க; விரவுப் பணை முழங்கொலி - போர்ப்பறை முதலியவற்றோடு கலந்து முழங்கும் முரசொலி கேட்டு; வெரீஇய வேந்தர்க்கு - அஞ்சிப் புகலடைந்த அரசர்கட்கு; அரணமாகிய வெருவரு தார்ப் புனல் - காப்பாகிய அச்சம் தரும் தூசிப்படையாகிய வெள்ளம்; கன்மிசையவ்வும் கடலவும் பிறவும் - மலையிடத்தும் கடலிடத்தும் பிறவிடத்து முள்ளனவாகிய; அருப்பம் அமைஇய - அரணிடத்தே பொருந்திய; அமர் கடந்து - போர்களை வஞ்சியாது பொருது வென்று; உருத்த ஆள் மலி மருங்கின் - உட்குப் பொருந்திய வீரர் மலிந்த இடங்களையுடைய; நாடு அகப்படுத்து - நாடுகளைக் கைப்பற்றி; நனந் தலை - அகன்ற இடத்தையுடைய உலகின்கண்; ஒன்னார் நல்லிசை இரிய - பகைவரது நல்ல புகழ் கெட்டழிய; உருப்பு அற நிரப்பினை - அவரது சினமாகிய தீ முற்றும் அவியச் செய்தனை என்றவாறு. இதன்கண், செங்குட்டுவனுடைய படையினை ஒரு பெரு வெள்ளத்தோடு உருவகம் செய்கின்றார். தூசிப்படையினை வெள்ளத்தின் புனலாகவும், களிற்றியானைகளை அலைகளா கவும், விற்படையைப் பிசிராவும், வேற்படையை மீன்களாகவும், விரவுப்பணை யொலியை முழக்கமாகவும், சென்று பகை வேந்தரது சினமாகிய தீயை அவித்தவாறு கூறுமாற்றால் அவனுடைய படையின் சிறப்புக் கூறியவாறாகிறது. பெரு வெள்ளத்திலெழும் பேரலைகள் அணியணியாய்ச் சென்று சேர்தல் போல, யானைகள் பரந்து அசைந்து சென்றன என்றற்கு. “கொல்களிற் றுரவுத்திரை பிறழ” என்றார். “உரவுத் திரை பிறழ வென்றது, வலிய திரைகள் தம்மில் மாறுபட்டுப் புடைபெயர வென்றவா” றென்பர் பழைய வுரைகாரர். யானைப்படைக்கு மேலே வில்லேந்திய வீரர் தாமேந்திய வில்லின் தலை தோன்ற மேம்பட்டு வருவதை, அலைமேல் தோன்றும் பிசிராக நிறுத்தி, “வல்வில் பிசிர” என்றார். பிசிர், நீர்த் திவலை. “வல் வில் பிசிர வென்றது விற்கள் அத்திரைக்குப் பிசிராக” வென்றும், “பிசிர வென்றது பெயரடியாகப் பிறந்த வினை” யென்றும் பழையவுரை கூறும். வேற்படையின் காம்பு கேடகத்தில் மறைய இலைப்பகுதி மட்டில் தோன்றுவது அவ் வெள்ளத்தில் திகழும் மீன் போறலின், “புரைத்தோல் வரைப்பின் எஃகுமீ னவிர்வர” வென்றார். போர்ப்பறையும் முரசும் பிற இசைக்கருவிகளுங் கூடி யிசைத்தலின், அம் முழக்கத்தை “விரவுப்பணை முழங்கொலி” யென்றார். யாறு பெருகி வருமிடத்து அதனைச் சிறைத்து வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்கும் ஏரி குளங்களுக்கும் பாய்ச்சக் கருதும் உழவர் பறை முதலிய கருவிகளை முழக்கி மக்களைத் தொகுத்துச் செய்வன செய்து கொள்ளுமிடத் தெழும் முழக்கமு முண்மையின், இதனை விதந்தோது வாராயினர். “பணையாகிய முழங்கொலி யென இருபெயரொட்டு” என்றும், “ஒலியையுடைய புனல் எனக் கூட்டுக” என்றும் பழையவுரை கூறும். நட்பரசராயின் வெருவுதற்குக் காரணமின்மையானும், “அரணமாகிய” என்ற தனாலும், ஈண்டுக் கூறும் வேந்தர் பகையாயிருந்து புகல் பெற்றவரென்பது பெறுதும். வெரீஇய வேந்த ரென்றற்குப் பழையவுரைகாரர், “தம் பகையை வெருவி இவன்றன்னுடன் நட்பாகிய வேந்த ரென்க” என்றும், “வெருவரு புனற்றார்” என்றற்குத் “தன்னை யடைந்தார் வெருவரத்தக்க புனற்றார்” என்றும், “இச் சிறப்பானே இதற்கு வெருவரு புனற்றார் என்று பெயராயிற்” றென்றும் கூறுவர். புனற்றார் என்பதனைத் தார்ப்புன லென மாறிக் கொள்க. மலையையும் கடலையும் பிறவற்றையும் அரணாகக் கொண்டு செருக்கியிருந் தோரோடு பொருது வென்றா னென்பார், “கன்மிசை யவ்வும் கடலவும் பிறவும் அருப்பம்” என்றார். மலையை யரணாகக் கொண்டு செருக்கியவர் வட வாரியரும், கடலை யரணாகக் கொண்டு இருந்தவர் கடற்பகைவருமாவர். வடவாரியரை வென்று மேம் பட்டதை, “கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி, கானவில் கானம் கணையிற் போகி, ஆரிய வண்ணலை வீட்டி” என்று பதிகங் கூறுதலும், கடலரணை வென்றதை கடல்பிறக் கோட்டிய செய்தியும் வற்புறுத்துகின்றன. உருத்த, உருவையுடைய. உரு, உட்கு. கண்டார்க்கு நெஞ்சிலே உட்குதலைப் பயத்தல்பற்றி, “உருத்த ஆள்” என்றார். ஆள், போர் வீரர். இவ் வீரர் தொகை மிக்குள்ள நாடென்றது, அவற்றை அகப்படுத்தும் அருமை புலப்படுக்கு முகத்தால் தார்ப்படையின் பெருமையைச் சிறப்பித்தவாறு. நனந்தலை: ஆகுபெயர். கெடாப் புக ழென்றற்கு நல்லிசை யென்று கூறி, அது கெட்ட தென்றற்கு, “நல்லிசை இரிய” என்றார். புகழ் கெடாமைக் கேதுவாகிய வன்மை இப்படைப் பெருமையால் அழிந்தமை தோன்ற “நல்லிசை” என்று குறிப்பால் விதந்தோதினார். உருப்பு, வெப்பம்; ஈண்டு வெகுளிக்காயிற்று. புனல் என்றதற் கேற்ப, “நிரப்பினை” யென்றார். பழைய வுரைகாரர், “உருப்பென்றதனைச் சினத்தீ யென்ற வாறாகக் கொள்க” என்பர். “பிறழ வென்றது முதலாக நின்ற செயவெனெச்சங்களை நிரப்பினை யென்னும் பிறவினையொடு முடிக்க” என்பது பழையவுரை. 16-22. ஆதலின் ........... கழியுமோ உரை : ஆதலின் - ஆதலினாலே; சாந்து புலர்பு - பூசிய சந்தனம் புலர; வண்ணம் நீவி - நுதலிலிட்ட திலகமும் கண்ணிலிட்ட மையும் பிறவுமாகிய வண்ணங்கள் நீங்க; வகை வனப் புற்ற - பல்வகையாகக் கைபுனையப்பட்ட அழகு பொருந்திய; வரிஞிமிறு இமிரும் - வரிகளையுடைய வண்டினம் ஒலிக்கும்; மார்பு பிணி மகளிர் - நின் மார்பினால் பிணிக்கப்பட்ட மகளிரது; விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து - விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லிய படுக்கையிலே கிடந்து; கொல் பிணி திருகிய மார்புகவர் முயக்கத்து - மிகவருத்தம் பயக்கும் காமவேட்கை மிகுதலால் மார்படைய முயங்கும் முயக்கத்தால்; பொழுதுகொள் மரபின் - இராப்பொழுதைப் பயன்கொள்ளும் முறைமையினை யுடைய; மென்பிணி யவிழ - சிறு துயில் பெறா தொழியுமாறு; பெரும - பெருமானே; பல - நாள் பலவும்; எவன் கழியுமோ - எவ்வாறு கழியுங் கொல்லோ என்றவாறு. புலர்பு, நீவி என நின்ற எச்சவினைகளைப் புலர, நீவ எனத் திரிக்க. வகை வனப்புற்ற மகளிர், வரிஞிமி றிமிரும் மகளிர், மார்பு பிணி மகளிர் என இயையும். கூந்தலாகிய மெல்லணை வதிந்து பொழுது கொள்ளும் என முடிக்க. புணர்ச்சிக்கண் சாந்து புலர்தலும் வண்ணம் நீங்கலும் இயல்பாதலின், “சாந்து புலர வண்ணம் நீவ” என்றார். இனி, வகை வனப்புற்ற புணர் துணை மகளிர்பால் எழும் நறுமணம் குறித்து வண்டு மொய்த் திசைக்கும் என்பது பற்றி, “வகை வனப்புற்ற வரிஞிமி றிமிரும் மகளிர்” எனல் வேண்டிற்று. இனி, வகை வனப்புற்ற வரிஞிமி றிமிரும் கூந்தலெனக் கூந்தலொடு இயைப்பினும் அமையும்; மகளிர் கூந்தல் ஐவகையாகக் கைபுனையப்படுதலும், வண்டு மொய்த் திசைத்தலும் இயற்கையாதலின். புணர்ச்சி பெற்றொழுகும் மகளிர்பால் எழும் மணம் மான்மதச் சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறு மென்பர் நச்சினார்க்கினியர். “தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து, பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற், பகலும் கங்குலு மகலா தொழுகும்” (தொல்.பொ. 114. நச். மேற்.) என்று சான்றோர் கூறுதல் காண்க. காதலர் மார்பிற் றுஞ்சும் உறக்கமே பெரிதாகக் கருதியும், அதனையடைய முயங்கிப் பெறும் அயரா வின்பமே பேரின்பமென் றெண்ணியும் மகளிர் அவர்மார்பையே நினைந் தொழுகுதல் பற்றி, “மார்பு பிணி மகளிர்” என்றார். காதலர் மார்பு “வேட்டோர்க் கமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு” (அகம். 332) என்றும், “காதலர் நல்கார் நயவா ராயினும், பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே” (குறுந். 60) என்றும், “ஆர்கலி வெற்பன் மார்பு நயந்துறையும் யானே” (நற். 104) என்றும், “நின் மார்பு புளிவேட்கைத் தொன்றிவள், மாலுமா றாநோய் மருந்து” (திணைமா. 150. 142) என்றும் சான்றோர் கூறுவன பலவும், காதலர் மார்பு மகளிர்க்கு இன்பவூற்றாய் இன்றியமையா வியல் பிற்றாதல் துணியப்படும். புணர்துணைக் காதலியோடு உடன் கிடந் துறங்கும் உறக்கத்தைக் கதுப்பிற் பாயலென்ப வாகலின், ஈண்டு அதனை “விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து” என்றார். கூடியுறையும் தலைமகனொருவன் “செய் வினை முடித்த செம்ம லுள்ளமொடு, இவளின் மேவின மாகிக் குவளைக், குறுந்தாள் நாண்மலர் நாறும், நறுமென் கூந்தல் மெல்லணை யேமே” (குறுந். 270) என்று கூறுதல் காண்க. இடங்கழி காமத்தால் அடங்கா வேட்கை மீதூர எய்தும் ஆற்றாமையைக் “கொல்பிணி” என்றும், அதன் வயப்பட்டு ஒருவர் மெய்யில் ஒருவர் புகுவதுபோலக் கைகவர் முயக்கம் பெறுவது பற்றி, “கொல்பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து” என்றும், அப் புணர்ச்சி யிறுதியிற் பிறக்கும் அவசத்தால் எய்தும் சிறு துயிலை “மென்பிணி” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “மார்பு பிணி மகளிரென்றது மார்பாற் பிணிக்கப்பட்ட மகளி” ரென்றும், “முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென்பிணி யென்றது, முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன்கொண்ட முறைமையினையுடைய மெல்லிய வுறக்க” மென்றும், “மென்பிணி யென்றது புணர்ச்சி யவதிக்கண் அப்புணர்ச்சி யலையலான் வந்த சிறு துயிலை” யென்றும், “கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப் பிணி யவிழவெனப் பூத்தொழிலாற் கூறினா” னென்றும் கூறுவர். இனி, பொழுதுகொள் மரபு என்பதற்குக் காம வின்பத்துக் குரிய இளமைப் பொழுதினைப் பயன்கொண்ட என்றுரைப்பினு மமையும். நாளென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. கொல்களிறு என்பது கூன். சாந்துபுலர, வண்ணம் நீவ, மகளிர் கூந்தல் மெல்லணை வதிந்து மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழுமாறு நாள் பல எவன்கழியுமோ எனக் கூட்டி முடிக்க. இக்கூற்று, குட்டுவனது மனத்திண்மையைக் கலக்குறுக்கும் நிலையில் அமைந்திருக்கும் திறம் காண்க. 22-26. பன்னாள் ............ கண்ணே உரை : பன்னாள் - பல நாள்கள்; பாசறை மரீஇ - பாசறை யிடத்தே யிருத்தலால்; கோடு முழங்கு இமிழிசை எடுப்பும் - சங்கு முழங்கும் முழக்கமும் பிற கருவிக ளிசைக்கும் ஒலியும் எழுப்பும்; பீடுகெழு செல்வம் - பெருமை பொருந்திய போர் விளைக்கும் செல்வத்தின் கண்; மரீஇய கண் - பொருந்திய நின் கண்; பகை வெம்மையின் - பகைவர்பா லுண்டாகிய சின மிகுதியால்; பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது -உறங்குதல் அரிதாகப் பொருந்திய சிறு துயிலும் செவ்வே கொண்டிலதாகலான் என்றவாறு. பன்னாள் மரீஇ, செல்வம் மரீஇய கண் சிறுதுயில் இயலாதாகலான், எவன் பல கழியுமோ எனக் கூட்டி வினை முடிபு கொள்க. மரீஇ யென்னும் செய்தெ னெச்சம் காரணப் பொருட்டு; பழையவுரைகாரரும், “பின்னின்ற பன்னா ளென்ப தனைப் பாசறை மரீஇ யென்பதனோடு கூட்டுக” என்றும், “மரீஇ யென்பதனை மருவ எனத் திரித்து மருவுகையா லென்க” என்றும் கூறுவர். கோடு முழங்கும் முழக்கமும் பிற இசைக் கருவிகள் இசைக்கும் ஓசையும் கண்ணுறங்கா வண்ணம் முழங்குதலால், “கோடுமுழங் கிமிழிசை யெடுப்பவும்” என்றார். ஏனைச்செல்வ வருவாயினும் போர் செய்து பெறும் செல்வத்தையே அரசர் புகழ்தரும் செல்வமாகக் கருதினமையின், “பீடு கெழு செல்வம்” என்றும், பகைவர்பால் இக்குட்டுவற் குண்டாகிய சின மிகுதியால், அவரை முற்றவும் வேறற்கண் அவனதுள்ளம் வினைக்குரியவற்றைச் சூழ்ந்த வண்ணம் இருந்தமையின், சிறு துயிலும் இலதாயிற் றென்றற்கு, “பகை வெம்மையின் பாடரி தியைந்த சிறு துயில் இயலாது” என்றும் கூறினார். சிறு துயில் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால்தொக்கது. பாடு, கண்படுதல். இனிப் பழையவுரைகாரர், “கோடு, சங்கு” என்றும், “முழங் கென்றது அவ் வியமரங்களுக்கு இடையிடையே முழங்குகின்ற என்றவா” றென்றும், பீடு கெழு செல்வ மென்றற்கு “படைச் செல்வ” மென்றும், “பீடு, வலி” யென்றும், “மரீஇய கண்ணென்றது அப்படை முகத்திலே நாடோறும் அமர்ந்தும் துயிலெழுந்தும் உலவிப் பழகின கண்” ணென்றும் கூறுவர். மேலும் அவர், “பாடரி தியைந்த சிறு துயிலையுடைய கண்” எனவும், “இயலாது இசை யெடுப்பும்” எனவும் கூட்டுவர். பாடரி தியைந்த சிறுதுயில் என்றதற்கு, “இராப்பொழு தெல்லாம் பகைவரை வெல்கைக்கு உளத்திற் சென்ற சூழ்ச்சி முடிவிலே அரிதாகப் படுதல் இயைந்த சிறு துயில்” என்று கூறுவர். இனி எவ்வாறு கூட்டினும் பாசறைக்கண்ணும் மனை யிடத்துப் போலக் குட்டுவன் சிறுதுயிலே பெறுகின்றா னென்ற முடிபெய்துவது காண்க. பாசறைக்கண் சூழ்ச்சியிற் சென்ற உள்ளத்தால் சிறு துயிலே பயின்ற கண்ணாதலான் மென்பிணி யவிழ்ந்தவழிச் சூழ்தற்குரிய தின்மையின், அந்நாள் பலவும் நினக்கு எவ்வாறு கழியும் என்பார், “எவன் பல கழியுமோ பெரும” என்றார். பல நாள்கள் பாசறை மரீஇக் கழிதலால், “கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொள் மரபிற்” கழியும் நாள் சிலவென்பது பெறுதும். அச்சிலவும் சிறு துயிலே பெறுதலின், ஏனைப் பொழுது கழியுந் திறமே ஆசிரியர் அறியக் கருதுவார் போலச் சிறுதுயிலே பெறும் சிறப்புச் செங்குட்டுவன் பால் உண்மையும், அதனால் அவன் காமவேட்கையினும் போர் வேட்கை மிக்கவன் என்பதை வற்புறுத்தினமையும் பெற்றாம். இதுகாறும் கூறியது, பெரும. நீ காவிரியன்றியும் கூடல னையை; வெருவரு தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை; முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென்பிணி எவன்பல கழியுமோ; பீடுகெழு செல்வம் மரீஇய நின்கண் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறு துயில் இயலாதாகலான் என்று வினை முடிபு செய்துகொள்க. இனிப் பழையவுரைகாரர், “நீ கூட லனையை; பெரும, தார்ப் புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை யாகையாலே யான் நின்னை யொன்று கேட்கின்றேன்: பீடுகெழு செல்வம் மரீஇய கண், முயக்கத்துப் பொழுதுகொள் மரபின் மென் பிணி யவிழ, நாள்பல நினக்கு எவன் கழியுமோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை யென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், துறை வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.” ஆசிரியர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்து பதிகம் 1. குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள் ஆவிக் கோமான் றேவி யீன்றமகன் தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு 5. கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து வான வரம்பனெனப் பேரினிது விளக்கி ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி மன்னரை யோட்டிக் குழவி கொள்வாரிற் குடிபுறந் தந்து 10. நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், வடுவடு நுண்ணயிர், சிறுசெங் குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி. இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பசிரில் : `கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறாயிரங் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான். 1. வடுவடு நுண்ணயிர் 1. துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்கும் கடல்சேர் கானற் குடபுல முன்னிக் கூவற் றுழந்த தடந்தா ணாரை 5. குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும் வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின் அடும்பம லடைகரை யலவ னாடிய வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும் தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந் 10. தியலின ளொல்கின ளாடு மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி அரவழங்கும் பெருந்தெய்வத்து வளைநரலும் பனிப்பௌவத்துக் 15. குணகுட கடலோ டாயிடை மணந்த பந்த ரந்தரம் வேய்ந்து வன்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல் நனையுறு நறவி 1 னாகுடன் கமழச் சுடர்நுதன் மடநோக்கின் 20. வாணகை யிலங்கெயிற் றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின் வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே 25. மழைதவழும் பெருங்குன்றத்துச் செயிருடைய வரவெறிந்து கடுஞ்சினத்த மிடறபுக்கும் பெருஞ்சினப்புய லேறனையை தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும் 30. எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத் தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை கைவ லிளையர் கையலை யழுங்க 35. மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம் வலைவிரித் தன்ன நோக்கலை கடியையா னெடுந்தகை செருவத் தானே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் பெயர் : வடுவடு நுண்ணயிர் 1-9. துளங்கு நீர் ............... பொலிதந்து உரை : துளங்கு நீர் வியலகம் - அசைகின்ற நீர் நிரம்பிய அகன்ற கடற்பரப்பானது; கலங்கக் கால்பொர - கலங்கும்படி காற்று மோதுதலால்; விளங்கு இரும் புணரி - விளங்க வெழுகின்ற பெரிய அலைகள்; உரும் என முழங்கும் - இடிபோல முழங்கும்; குட புலக் கடல் சேர் கானல் முன்னி - மேலைக் கடலைச் சார்ந்த கானற்சோலை நோக்கிச் செல்லலுற்று; கூவல் துழந்த தடந் தாள் நாரை - பள்ளங்களிலே யிருந்து மீனாகிய இரை தேடி வருந்தின பெரிய கால்களையுடைய நாரை; வண்டிறை கொண்ட குவியிணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் - வண்டு தங்குகின்ற குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையிலே தங்கும்; அடும்பு அமல் - பூக்கள் மலர்ந்த அடம்பங் கொடிகள் நெருங்கிய; தண் கடற் பரப்பின் அடைகரை - தண்ணிய கடற்பரப்பினைச் சார்ந்த கரையிலே; அலவன் ஆடிய வடு அடும் நுண்ணயிர் - நண்டுகள் மேய்வதனா லுண்டாகிய சுவடுகளை மறைக்கும் நுண் மணலை; ஊதை உஞற்றும் - ஊதைக் காற்று எறியும்; தூவிரும் போந்தை பொழில் - தூய பெரிய பனஞ் சோலையில்; அணிப் பொலி தந்து - அரசு மேவும் அணி திகழ விளங்கியிருந்து என்றவாறு. கடலகத்தே நிரம்பி நிற்கும் நீர் இடையறா அலைகளால் அசைந்த வண்ண மிருத்தல்பற்றி, அதனைத் “துளங்குநீர் வியலகம்” என்றார். இயல்பாகவே துளங்குதலையுடைய கடலில் காற்று முடுகிப் பொருதவழிப் பேரலைகள் எழுந்து முழங்கு மாதலின், “கால்பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்” என்றார். காற்று முடுகிப் பொருதமை, “வியலகம் கலங்கக் கால்பொர” என்றதனாற் பெற்றாம். கானல், கடற்கரைச் சோலை. குடபுலக் கடல்சேர் கானல் என மாறிக் கூட்டுக. “குடபுல மென்றது தன் நகரிக்கு மேல்பாலாம்” என்பர் பழையவுரை காரர். கானற்சோலை முன்னிப் புறப்பட்டவன், இடையிலே பனஞ் சோலைக்கண் தங்குகின்றானென வறிக. கூவல் எனவே, அதன்பால் மீன்கள் பெருக இல்லாமை யறியப்படும். இருந்த சிலவற்றைத் தேடித் தேடி அதனை நாரை யுழப்பிற் றென்பார், “கூவல் துழந்த தடந்தாள் நாரை” யென்றும், அதனால் அயர்வுற்ற அந் நாரை ஞாழல் மரத்தின் கிளையிடத்தே தங்கிற் றென்பார், “நாரை குவியிணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்” என்றும் கூறினார். மாச்சினை, கரிய கிளை யென்று மாம். ஞாழலின் பூங்கொத்தில் வண்டினம் தங்கித் தேனுண்டு பாடுத லியல்பாதலால், வண்டிறை கொண்ட குவியிணர் ஞாழல் எனப்பட்டது; “தெரியிணர் ஞாழலுந் தேங்கமழ் புன்னையும், புரியவிழ் பூவின கைதையும் செருந்தியும், வரிஞிமி றிமிர்ந்தார்ப்ப விருந்தும்பி யியைபூத” (கலி. 127) என்று சான்றோர் கூறுதல் காண்க. சேக்கும் பொழில், ஊதை யுஞற்றும் பொழில் என இயையும். வண்டிறை கொண்ட என்பதனையும் பொழிலொடு இயைப்பர் பழையவுரைகாரர். அடும்பு அமன்ற இடம் அடைகரை யேயாயினும், அது கடற்பரப்பினை அடுத்த கரையாதலின், அடும்பமல் தண்கடற் பரப்பின் அடைகரை யென இயைத் துரைக்கப்பட்டது. அடுத்துள்ள கரை அடைகரை யாயிற்று. நண்டு நுண் மணல் மேற் செல்லுமிடத் துண்டாகிய சுவட்டினைக் காற்றாலும் அலையாலும் எறியப்படும் நுண் மணல் பரந்து மறைத்தலின் “அலவ னாடிய வடுவடு நுண்ணயிர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “வடுவை யடுதல் வடுவை மாய்த்த” லென்றும், “ஊதை யுஞற்றுதல், அவ் வடு மாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை” யென்றும், “அயிர் நுண் மணல்” என்றும் கூறி, “வடுவை மாய்க்கும் நுண்ணயிர் எனற் பாலதனை வடுவடு நுண்ணயி ரென்ற சிறப்பானே இதற்கு வடுவடு நுண்ணயிர் என்று பெயராயிற் றென்றும் கூறுவர். வடுவாவது ஒருகாலும் மாறாதது. “மாறாதே நாவினாற் சுட்ட வடு” (குறள். 129) என்று சான்றோர் கூறுதல் காண்க. எளிதில் மறையக்கூடிய சுவட்டினை மாறாத இயல்பிற்றாகிய வடு வென்றும், மறைத்தற் பொருட்டாகிய மாய்க்கும் தொழிலையடுத லென்றும் கூறிய சிறப்பால், “வடுவடு நுண்ணயிர்” என்று பெயர் கூறப்பட்டதெனக் கோடல் சீரிதாம். ஊதைக் காற்று நுண்மணலைச் சிறிது சிறிதாக எறிதல் பற்றி, “உஞற்றும்” என்றார். அரசர் தங்குவதாயின் அதற்கேற்ப அச்சோலை பலவகை யாலும் அணிசெய்யப்படுவதுபற்றி “அணி” என்றும், அதன்கண் அரசன் எழுந்தருளுதலால் விளக்கம் மிகுதலின் “பொலிதந்து” என்றும் கூறினார். “எம் மனையகம் பொலிய வந்தோய்”, என்று பிறரும் கூறுதல் காண்க. “பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவு பெற்றென்றவா” றென்று பழையவுரை கூறும். 10-24. இயலினள்............ உணராதோரே உரை : இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் - நடந்தும் அசைந்தும் ஆடலியற்றும் சாலினியொருத்தி; தோன்றி வெறியுறு நுடக்கம் போல - வெறியயர் களத்தே தோன்றி மருளுற்று அசைந்தாடுவது போல; வயின்வயின் விலங்கும் - இடங்கள் தோறும் கிடந்து குறுக்கிட்டு விளங்கும்; அரு மணி அர வழங்கும் - அரிய மணியினையுடைய பாம்புகள் செல்லும்; பெருமலை பெருந் தெய்வம் - பெரிய இமயமாகிய பெரிய கடவுள் மலையும்; வளை நரலும் பனிப் பௌவம் - சங்கு முழங்கும் குளிர்ந்த தென் கடலும்; குண குட கடலோடு - கீழ்க்கடலும் மேலைக் கடலும் ஆகிய; ஆயிடை - அந்த நான்கு எல்லைக் கிடைப்பட்ட நிலத்து வாழும் அரசரும் பிற சான்றோரும்; மணந்த பந்தர் - கூடி யிருந்த பந்தரின்கண்ணே; அந்தரம் வேய்ந்து - மேலிடத்தே நெய்தல் மாலைகளால் அலங்கரித்தலால்; வன் பிணி யவிழ்ந்த கண்போல் நெய்தல் - வளவிய அரும்பவிழ்ந்த கண் போன்ற அந் நெய்தல் மலர்கள்; நனை யுறு நறவின் - தேன் பொருந்திய நறவம் பூக்களோடு; நாகு உடன் கமழ - புன்னையும் உடன் மணம் கமழ; சுடர் நுதல் மட நோக்கின் - ஒளி திகழும் நெற்றியினையும் மடப்பம் பொருந்திய பார்வையினையும்; வாள் நகை இலங்கு எயிற்று - மிக்க ஒளி விளங்கும் பற்களையும்; அமிழ்து பொதி துவர் வாய் - அமுதம் போன்ற சொற்களைச் சொல்லும் சிவந்த வாயினையும்; அசை நடை - அசைந்த நடையினையு முடைய; விறலியர் - விறலிகளின்; பாடல் சான்று நீடினை உறைதலின் - பாடல்களை நிரம்ப வேற்று விரும்பி நீட்டித் திருத்தலாலே; வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் - வெள்ளிய வேலேந்திய அண்ணலாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சிற்றின்பத் துறையில் எளியன் போலும்; என - என்று; நின் உணராதோர் - நின் இயல்பை யுணராத பிறர்; உள்ளுவர்கொல்லோ - நினைப்பார்களோ என்றவாறு. மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றி அர வழங்கும் பெருமலைப் பெருந் தெய்வமும் பனிப் பௌவமும் குண குட கடலும் ஆயிடை மணந்த பந்தரின்கண் நெய்தல் நறவுடன் கமழ, விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின், நின் உணராதோர், அண்ணல் மெல்லியன் போலும் என உள்ளுவர்கொல்லோ; உள்ளுவராயின் அவர்க்கொன்று தெளிய இனிக் கூறுவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நுதலும் நோக்கும் எயிறும் துவர்வாயும் நடையுமுடைய விறலியர் என இயையும். பெருமலையாகிய பெருந் தெய்வத்து என இயைக்க. உலகத்து மலைக ளெல்லாவற்றினும் மிக்க உயர்ச்சி, திண்மை, அகலம் முதலிய வற்றால் ஒப்புயர்வற்ற பெருமை யுடைமைபற்றி, இமயம் “பெருமலை” யெனப்பட்டது. தேவர்கட்குத் தேவனாகிய கண்ணுத லண்ணல் வீற்றிருக்கும் பெருமையும் தெய்வத் தன்மையும் உடைமையால் மலையாகிய பெருந்தெய்வம் என்பா ராயினர். தெய்வத்து, பௌவத்து என்புழி நின்ற அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்து கட்டுரைச்சுவை பயந்து நின்றன. பழையவுரைகாரரும், “அரவழங்கும் பெருமலைப் பெருந் தெய்வம் என மாறிக் கூட்டுக” என்றும், “பெருமலை இமயம்” என்றும், “குண குட கடல் எனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின் கூறுகின்றமையான், வளை நரலும் பனிப் பௌவம் என்றது தென் னெல்லையாம்” என்றும், “தெய்வத்து பௌவத்து என்னும் அத் துக்கள் ஈண்டுச் சாரியைப் பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலை யெனப்படும்” என்றும் கூறுவர். “சாரியையாவது சொல் தொடர்ந்து செல்லும் நெறிக்கண் நின்று அதற்குப் பற்றுக் கோடாகச் சிறிது பொருள் பயந்ததும் பயவாததுமாய் நிற்பது” (சிலப். பதிக. 61. உரை.) என அடியார்க்கு நல்லார் கூறுவதலால், ஈண்டுப் பொருள் பயவாது நிற்கும் அத்துச்சாரியை அசைநிலை யெனக் கொள்ளப் பட்ட தென அறிக. தாழ்ந்தும் நிமிர்ந்தும் உலவியும் அசைந்தும் நடிக்கும் சாலினி தெய்வமருள் கொண்டு அசைந்தும் நடுங்கியும் ஆடுவது பாம்பு படமெடுத்து அசைந்தாடுதற்கு உவமமாதலின், “வெறியுறு நுடக்கம் போலத் தோன்றி அரவழங்கும்” என்றார். பாம்புமிழ் மணி திகழும் கதிரொளி இடந்தொறும் பரந்து வீசுதலால், “வயின் வயின் விலங்கும் அருமணி” என்றார். விலங்குதல், குறுக்கிட் டொளிர்தல். அரா வென்பது அரவெனக் குறுகிற்று. வழங்குதல், ஈண்டு ஆடுதல்மேற்று. வெறியுறு நுடக்க மென்றதற்கு, “இயல்பாக நுடங்கலின்றித் தெய்வமேறிய விகாரத்தால் நுடங்குதல்” என்று பழையவுரை கூறுதல் காண்க. இயலுதல், உலாவுதல். ஒல்குதல், அசைதல். குண குட கடலோடு என்புழி, எண்ணொடு நீண்டது. ஆயிடை, அவ் வெல்லைகட்கு இடைநிலத்தில். பழைய வுரைகாரரும் “ஆயிடை யென்றது அவற்றின் நடு வென்றவா” றென்றும், “அவ்வென்னும் சுட்டு முதல் வகரவீற்றுப் பெயர் ஆயிடை யென முடிந்த” தென்றும் கூறுதல் காண்க. அவ் இடை என்பது ஆறாம்வேற்றுமைத்தொகைப் பொருட்டாயினும். “நான்கனுருபின் தொன்னெறி மரபின் தோன்றனலாறே” (வேற். மயங். 27) என்பதனால் அவ்வெல்லைக்கென வுரைக்கப் பட்டது. இடை யென்பது ஆகுபெயரால் ஆண்டு வாழும் வேந்தரையும் பிற சான்றோரையும் குறித்து நின்றது. பந்தர் அந்தரம் - பந்தரின் உள்வெளி. வேய்ந்தென்பது காரணப் பொருட்டு. வேய வெனத் திரிப்பர் பழையவுரைகாரர். “கண்போல் நெய்தல்” எனப் பின்னே கூறுதலின், “அந்தரம் வேய்ந்து” எனக் கூறியொழிந்தார். நெய்தலும் நறவம் பூவும் விரவித் தொடுத்த மாலைகளால் பந்தர் புனையப்பட்டமை தோன்ற “நெய்தல் நனையுறு நறவின் நாகுடன் கமழ” என்றார். நெய்தற்பூவைப் போல நறவம்பூவும் மகளிர் கண்போல்வ தாகலின், “கண்போல் நெய்தல் நனையுறு நறவின் நாகுடன் கமழ” என்றார்; நறவம் பூ மகளிர் கண்ணிற் குவமையாதலை “நறவின், சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை” (அகம். 19) என வருதலா லறிக. நாகம், நாகெனக் குறைந்துநின்றது. பழைய வுரைகாரர், “நறவி னொடு என ஒடு விரிக்க” என்பர். அரசன் முன் ஆடியும் பாடியும் இன்புறுத்தும் விறலியர் அவற்றிற் கேற்ப மெய்யழகும் நன்குடைய ரென்பது தோன்ற, நுதலும் நோக்கும் எயிறும் பிறவும் எடுத்தோதினார். அமிழ்து பொதி துவர் வாய் என்புழி, அமிழ்து அவர் வாயிலூறும் தீ நீர் என்பாரு முளர். அவர்பாடும் பாட்டின்பத்தில் தோய்ந்து பேரீடுபட்டு அமைந்திருந்தமை தோன்றப் “பாடல் சான்று” என்றும், நீட்டித் துறைதலால் அரசன் உள்ளத்தில் காமவேட்கை யெழுமென் றஞ்சி, “நீடினை யுறைதலின்” என்றும், அஃது ஏனை வேந்தர்க்கு எள்ளுரையாமென்று தெருட்டுவார் “வெள்வே லண்ணல் மெல்லியன் போன்மென, வுள்ளுவர் கொல்லோ” என்றும், மெல்லியன் போலத் தோன்றினும் உரனும் பெருமையும் நீ சிறப்ப வுடையை யென்பது நின்னை யுணர்ந்த எம்போலியர் நன்கறிவர், பிறரறியார் என்பார், “நின்னுணரா தோரே” என்றும் கூறினார். “ஆடலும் பாடலும் அழகு மென்றிக் கூறிய மூன்று” (சிலப். 3.8-9) என்பதனால் அழகும் இன்றியமையாமை யறியப்படும். மேலும், “காவல் வேந்தன் இலைப்பூங் கோதை யியல்பின் வழாமை” (சிலப். 3: 149-60) என்பதன் உரையில் “என்சொல்லிய வாறாமோ வெனின், நாடக மகள் அரங்கேறக் கண்ட அரசன் அவள்மேற் காமக் குறிப்புடையனாதல் இயல்பு” என்று அடியார்க்குநல்லார் கூறுதலால், அரசன் இன்பக் களியாட்டில் நெடிதிருத்தல் குற்றமாதலை யறிக. நெடி திருந்தவழி அரசனது மென்மை பகைவர்க்குத் தம் பகைமைக் குரிய சூழ்ச்சி செய்து வேறற்கு வாயிலா மென்பதற்காகவே, திருவள்ளுவர், இன்னோரன்ன வின்பங்களைப் பிறர் அறியாமைத் துய்ப்பதே வேண்டுவதென்பார், “காதல காத லறியாமைத் 1துய்க்கிற்பின், ஏதில ஏதிலார் நூல்” (குறள். 440) என்றார். இனிப் பழைய வுரைகாரர், “பாடல் சான் றென்பதனைச் சாலவெனத் திரிக்க” வென்றும், “மெல்லிய னென்றது ஐம்புலன் களிடத்தும் மனநெகிழ்ச்சியுடைய னென்றவா” றென்றும் கூறுவர். 25-28. மழைதவழும் .............. ஏறனையை உரை : மழை தவழும் பெருங் குன்றத்து - மேகங்கள் தவழும் பெரிய குன்றுகளில் வாழும்; செயிர் உடைய - நஞ்சினையுடைய; அரவு எறிந்து - பாம்புகளை யுட்குவித்து; கடும் சினத்த மிடல் தபுக்கும் - மிக்க சினத்தையுடைய அவற்றின் வலியை யழிக்கும்; பெருஞ் சினப் புயலேறு அனையை - பெரிய முழக்கத்தினை யுடைய வானிடியேற்றினை யொப்பாய் என்றவாறு. மழை தவழும் குன்றென்பது, குன்றத்தின் உயர்ச்சி தோன்ற நின்றது. மிகு நஞ்சும் பெருவன்மையும் படைத்த நாகங்கள் வாழும் மலை யென்றற்குப் “பெருங் குன்றத்து” என்று சிறப்பித்தார். நஞ்சுடைமை நாகத்திற்குக் குற்றமாதலின், “செயிருடைய அரவு” என்றும், தன் முழக்கத்தாலே அத்தகைய நாகமும் நடுங்கி யொடுங்குமாறு செய்தல்பற்றி, “அர வெறிந்து” என்றும் கூறினார். “விரிநிற நாகம் விடருள தேனும், உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்” (நாலடி. 164) என்று பின்வந்த சான்றோரும் கூறுதல் காண்க. சீறிவரும் பாம்பின் தோற்றம் பெரும் படை வீரர் கூட்டத்தின் வலியையும் சிதைத் தொழிக்கும் ஆற்றல் படைத் திருத்தல்பற்றி, “கடுஞ்சினத்தமிடல்” என்றும், இடி யேற்றின் முழக்கமும் ஒளியும் அந் நாகத்தினைக் கொன்று விடுதலால், “தபுக்கும் பெருஞ்சினப் புயலேறு” என்றும் கூறினார். பாம் பென்றாற் படையும் நடுங்கும் என்னும் பழமொழி, பாம்பின் கடுஞ்சினத்த மிடலை யுணர்த்தி நிற்பது காண்க. பெருஞ்சினம் என்புழிச் சினம் இலக்கணை. மேகத்திடத்தே பிறத்தல்பற்றி, இடியேற்றினைப் “புயலேறு” என்றார். பழைய வுரைகாரர், “கடுஞ்சினத்த அரவு என மாறிக் கூட்டுக” என்பர். எனவே, செயிருடைய கடுஞ் சினத்த அர வெறிந்து மிடல் தபுக்கும் ஏறனையை என்றியையும். இதனால், சிறப்புடைய முடிவேந்தர்களான சோழ பாண்டிய ராகிய பாம்புகளின் மிடல் தபுத்தற்கண், இச் சேரமான் பெருஞ்சினத்த புயலே றனையன் எனச் சிறப்பித்தவாறாயிற்று. ஆகவே, இவனுடைய ஒளியும் ஆணையும் கேட்டு அவர்கள் அஞ்சி யொடுங்கி யிருந்தமையும் ஓராற்றால் உணர்த்திய வாறுமாயிற்று. 29-30. தாங்குநர் ............. வாழ்நர் உரை : நின் படைவழி வாழ்நர் - நின் படையிடத்தே யிருந்து போர் புகன்று வாழும் வீரர்; தாங்குநர் - தாம் மேற்செல்லுமிடத்து எதிரூன்றும் பகைவருடைய; தடக்கை யானை - பெரிய கையையுடைய யானையின்; தொடிக் கோடு துமிக்கும் - தொடியணிந்த கொம்பினை ஒரு வீச்சிலே எறிந் தழிக்கும்; எஃகுடை வலத்தர் - வாளையுடைய வெற்றி வீரராவர் என்றவாறு. போருடற்றிப் பெறும் புகழ் பற்றுக்கோடாகப் படை வீரருள் ஒருவராய் இருந்து வாழ்கின்றன ரென்பார், சேரமான் வீரரை “நின் படை வழி வாழ்நர்” என்றார்; எனவே, அவர், “போரெனிற் புகலும் புனைகழன் மறவர்” (புறம். 31) என்ற வாறாயிற்று. தாங்குதல், எதிர்த்தல்; மேற்செல்லா வகையிற் றடுத்தலுமாம். “வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை” (தொல். பொ. புறத். 8) என்றாற் போல. தாங்குவோர் படையினுள் யானைப்படையை விதந்தோதினார், நால்வகைப் படையினுள் யானைப்படை சிறந்தமைபற்றி. “யானை யுடைய படை காண்டல் முன்னினிதே” (இனிய. 5) என்று சான்றோர் கூறுதல் காண்க. “தடக்கை யானை” யென்றது, அதன் கோட்டின் இயற்கை வன்மை எடுத்துரைத்தவாறாம். அதற்குச் செயற்கை யாகவும் வலியூட்டப்பெற்றமை தோன்ற, பூண் அணிந்திருத்தல் கூறுவார், “தொடிக்கோடு” என்றும், இருவகையானும் வலி பெரிதுடைய தாயினும் படை வாழ்நரின் வாட்படை அக் கோட்டினை மிக எளிதில் துண்டித் தொழிப்பது தோன்ற, “துமிக்கும் எஃகுடை வலத்தர்” என்றும் கூறினார். எஃகு, வாள். வலம் வெற்றி எஃகுடை வலத்த ரென்றற்கு, வலக்கையில் வாளேந் தியவர் என்றுமாம். வீரர்க்கு யானையை யெறிதலிலே வேட்கை மிகுதியாதல் பற்றி, அதனை எடுத் துரைத்தா ரென்றலு மமையும். 31-37. மறங்கெழு ............. செருவத்தானே உரை : போந்தை வெண்டோடு புனைந்து - பனையின் வெண்மை யான தோடுகளாற் செய்யப்பட்டு; நிறம் பெயர் - பகைவர் உடற் குருதி பட்டு நிறம் வேறுபட்ட; மறம் கெழு கண்ணி - வீரர் அணிந்துள்ள கண்ணியை; பருந்து ஊறளப்ப - பருந்துகள் ஊன் துண்டமெனப் பிறழ வுணர்ந்து தாம் உற்று அதனைக் கொத்திக்கொண் டேகற்குரிய அளவினை நோக்கியிருப்ப; தூக் கணை கிழித்த - பகைவர் எறியும் அம்புகள் பாய்தலால் கிழிந்த; மாக்கண் தண்ணுமை - கரிய கண்ணையுடைய தண்ணுமை யானது; கைவல் இளையர் கையலை அழுங்க - இசைக்கும் தொழில் வல்ல இளையவர்கள் கையால் அறையப் படுதலின்றி யொழிய; மாற்றரும் சீற்றத்து - மாற்ற முடியாத சினத்தை யுடைய; மா இரும் கூற்றம் - கரிய பெரிய கூற்றுவன்; வலை விரித் தன்ன நோக்கலை - உயிர்களைக் கவரும் தன் பார்வையாகிய வலையை விரித்தாற்போன்ற பார்வையினை யுடையை; செருவத்தான் - போர்க்களத்தே அப்பார்வைக் குட் பட்ட பகைவர் உயிர் கவரப்படுதலால்; நெடுந்தகை - நெடுந்தகையே; கடியை - அப்பகைவர்க்குப் பேரச்சத்தைச் செய்கின்றாய் என்றவாறு. சேரர்க்குரிய அடையாளப் பூவாதலின், பனையினது வெள்ளிய தோட்டாற் கண்ணி செய்து தலையில் அணிந் திருந்தமை தோன்ற, “போந்தை வெண்டோடு புனைந்து” என்றார். தோடு, ஈண்டு வெள்ளிய குருத்தோலை மேற்று. பகைவரைக் கொல்லுதலால் அவர் குருதி தோய்ந்து நிறம் சிவந்து தோன்றுதல் பற்றி, “நிறம் பெயர் கண்ணி” யென்றும், அதனால் அக்கண்ணி ஊன்தசை போலத் தோன்றவே வானத்திற் பறக்கும் பருந்து அதனைக் கவர்தற்குப் பார்க்கின்ற தென்பார், “பருந்தூ றளப்ப” என்றும் கூறினார். உறுதல், ஊறு என முதனிலை திரிந்து தொழிற் பெயராயிற்று. அளத்தல், ஆராய்தல். “நிறம் பெயர்தல் உதிரத்தால் நிறம் பெயர்த” லென்றும், “ஊறளத்தல் - உறுதற்கு ஆராய்தல்” என்றும் பழையவுரை காரர் கூறுதல் காண்க. எத்துணை வன்மை யுடைய ராயினும், தண்ணுமை இசைப் போர், அது கண் கிழிந்தவழி இசைத்தல் கூடாமையின், “கைவல் இளையர் கையலை யழுங்க” என்றார். கையலை, கையால் அறைந்து இசைத்தல். அத்தண்ணுமை கண் கிழிந்த தற்குக் காரணம் இஃதென்பார், “தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை” என்றார். தூகணை எனற்பாலது தூக்கணையென வந்தது. தூவென்பது ஊனையும் குறிக்குமாகலின், ஊன்படிந்த கணை யென்றுமாம். கையலை யழுங்க என்பது எழுவாயும் பயனிலையுமா யியைந்து ஒருசொன்னீர்மைப்பட்டு, தண்ணுமை யென்பதற்கு முடிபாயிற் றென்பாராய்ப் பழையவுரைகாரர், “கையலை யழுங்க என்னும் எழுவாயையும் பயனிலையையும் ஒருசொல்நீர்மைப்படுத்தித் தண்ணுமை யென்னும் எழுவாய்க்குப் பயனிலை யாக்குக” என்பர். தானைத் தலைவர் குறிக்கும் ஏவலை இத்தண்ணுமை முழக்கித் தானை வீரர்க்குத் தெரிவித்துப் பகைவரை இடமறிந்து தாக்கச் செய்தல் பற்றிப் பகைவர் அதன் கண்ணைத் தம் அம்பு செலுத்திக் கிழிப்ப வாதலின், “தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை” என்றார் என அறிக. “தழீஇந்தாம் என்னத் தண்ணுமை, கழித்தா னொள்வாள் வீழ்ந்தன களிறே” (புறத். 1409) என வருதல் காண்க. உயிர் கவர வரும் கூற்றுவனை வேறல் எத்திறத்தோர்க்கும் அரிதென்பதுபற்றி “மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்” என்றார். பெரிய குற்றம் புரிந்து பேரரசர் சீற்றத்துக்குள்ளாயினார், அக்குற்றம் புரிந்தோர் தம் குற்றமுணர்ந்து அவ்வரசரை யடிபணிந்து நிற்பரேல் அச்சீற்றம் மாற்றப்படும்; கூற்றத்தின் சீற்றம் எவ்வாற்றானும் மாறாமையின், “மாற்றருஞ் சீற்றத்துக் கூற்ற” மென்றாரென வறிக. “பெரிய தப்புநராயினும் பகைவர், பணிந்துதிறை பகரக் கொள்ளுநை” (பதிற். 17) என்றும், “மெல்ல வந்தென் னல்லடி யுள்ளி, ஈயென விரக்குவ ராயின் சீருடை, முரசு கெழுதாயத் தரசோ தஞ்சம். இன்னுயிராயினும் கொடுக்கு வென்” (புறம். 73) என்றும் கூறுதலால் அரசர் சீற்றம் மாற்றருஞ் சீற்றமன்மை யுணரப்படும். கூற்றத்தின் சீற்ற மன்னதன் றென்பது, “நேமி மால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து, மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே” (ஆசிரிய மாலை) என்று சான்றோர் கூறுதலா லறிக. இதுபற்றியே சான்றோர் “மருந்தில் கூற்றத் தருந்தொழி” (புறம். 3) லென்றும், “மாற்றருங் கூற்றம்” (தொல். புற. 24) என்றும் ஓதுகின்றனர். “மாற்றருஞ் சீற்றத்து மாய் இருங்கூற்றம்” என்பதற்கு, மாற்றற் கில்லாத சீற்றத்தால் உயிர்களை மாய்க்கும் பெரிய கூற் றென்றலும் ஒன்று. நாளுலந்தாரையன்றிக் கூற்றம் நோக்காமையாலும், அத னால், அதன் நோக்கிற்பட்டார் மாய்தல் ஒருதலையாதலாலும் “வலை விரித்தன்ன நோக்கல்” என்றார். வலையிற்பட்டது தப்பாமை போலக் கூற்றின் நோக்கிற் பட்டதும் தப்பாமைபற்றி, அதன் நோக்கத்தை வலையென்றார். அவ்வாறே இச்சேரலா தனும் தன்னால் செயிர்த்து நோக்கப்பட்ட பகைவீரரை எஞ்சாமற் கோறலின், “கூற்றம் வலை விரித்தன்ன நோக்கலை” யென்றும், “கடியை நெடுந்தகை செருவத் தானே” யென்றும் கூறினார். கடி. அச்சம். ஒன்னார் உட்கும் உருவச் சிறப்புத் தோன்றக் “கடியை” யென்றும், அவர் காண்பது செருவின் கண்ணே யாகலின், “செருவத்தானே” யென்றும், ஏனை நட்டார்க்கும் தன் அருள் பெற்று வாழ்வார்க்கும் செருநிலத்தும் இனியனா யொழுகுமாறு தோன்ற, “நெடுந்தகை” என்றும் கூறினார். செரு, செருவமென நின்றது. இனிப் பழையவுரைகாரர், “நோக்கென்றது மாற்றார் படையைத் தப்பாமல் ஒன்றாகக் கொல்லக் கருதின நோக்கென்ற வா” றென்பர். அளப்ப, அழுங்க என நின்ற செயவெனெச்சங்கள் நோக் கலை யென்னும் குறிப்புவினை கொண்டன. இதுகாறும் கூறியது: நெடுந்தகை, நீ குடபுல முன்னிப் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து, பந்தர் அந்தரம் வேய்ந்து நெய்தலும் நறவமும் நாகமும் மணம் கமழ, விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின், நின் உணராதோர், அண்ணல் மெல்லியன் போன்மென உள்ளுவர்கொல்லோ; உணர்ந்தோர், மெல்லியன் போலத் தோன்றினும், நீ பெருஞ் சினப் புயலேறனையை; நின் படைவழி வாழ்நர் யானைக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்; பருந்து ஊறளப்ப, தண்ணுமை இளையர் கையலை யழுங்க, நீ கூற்றம் வலை விரித்தன்ன நோக்கலை; செருவத்தின்கண் கடியை என்பதை நன்கறிவர் என வினைமுடிவு செய்க. “நீ குடபுல முன்னிப் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து, நெய்தல் நறவினொடு கமழ, விறலியரது பாடல் சாலப் புறத்து வினையின்மையின் வினோதத்திலே நீடி யுறைதலாலே நீ அவ்வாறு நீடிய தறியாது அண்ணல் மெல்லியன் போன்மென நின்னை யுணராதோர் உணர்வார்களோ? நீதான் அரவோ டொக்கும் நின் பகைவரைக் கடுக அழிக்க வேண்டும் நிலைமையில் அவ்வரவினைக் கடுக அழிக்கும் உருமேற்றினை யொப்பை; அவ்வாறு விரையச் செய்யும் நிலைமைக்கண் நினக்கேற்ப நின் படைவழி வாழுநரும், காலாள்மேற் செல்லாது தாங்குநர் யானைக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தரா யிருப்பர்; அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப் பொரு தழிக்கும்வழி நின் முடிக்கண்ணியை உதிரம் தெறித்தலால் நிறம் பெயர்தலிற் பருந்து உறுதற் களப்ப, நின் முன்னர் வழங்கும் மாக்கண் தண்ணுமை நின் னெதிர்நின்று. மாற்றா ரெய்தலை யுடைய அம்பு கண் கிழித்தலால் ஒலி யொழியக் கூற்றம் வலை விரித்தாற் போலக் களத்தில் எதிர்ந்த மாற்றார் படையை யெல்லாம் ஒன்றாகக் கொல்லக் கருதி நோக்கின நோக்கினை யுடையை; நெடுந்தகாய்! இவ்வாறு செருவத்துக் கடியை என வினைமுடிவு செய்க” என்பது பழைய வுரை. இதனாற் சொல்லியது, அவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறியவாறாயிற்று. தாங்குநர் தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கு மென்று எதிரூன்றினார் மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச் செலவின் மேற்றாய் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. “அர வழங்கும்” என்பது முதலாக இரண்டு குறளடியும், “பந்த ரந்தரம் வேய்ந்து” என வொரு சிந்தடியும். “சுடர்நுத” லென்பது முதலாக இரண்டு குறளடியும் “மழை தவழும்” என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையான் வஞ்சித் தூக்குமாயிற்று, தாங்குநர் என்பது கூன். 2. சிறு செங்குவளை 1. கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு 5. மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோல் மெய்புதை யரணமெண் ணாதெஃகு சுமந்து முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர் தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட 10. நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச் 15. சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்துநீ நளிந்தனை வருத லுடன்றன ளாகி உயவுங் கோதை யூரலந் தித்தி ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப் 20. பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக் கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின் எறிய ரோக்கிய சிறுசெங் குவளை ஈயென விரப்பவு மொல்லா ணீயெமக் கியாரை யோவெனப் பெயர்வோள் கையதை 25. கதுமென வுருத்த நோக்கமோ டதுநீ பாஅல் வல்லா யாயினை பாஅல் யாங்கு வல்லுநையோ வாழ்கநின் கண்ணி அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர் தெறுகதிர் திகழ்தரு முருகெழு ஞாயிற் 30. றுருபுகிளர் வண்ணங் கொண்ட வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே. துறை : குரவை நிலை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சிறு செங்குவளை 1-12. கொடி நுடங்கு .............. கேட்டிகும் உரை : அருங்கலம் தரீஇயர் - பிற நாடுகளினின்று அரிய பொருள் களைக் கொண்டு வருதற்காக; நீர்மிசை நிவக்கும் - கடலின்மேல் மிதந்து செல்லும்; பெருங்கலி வங்கம் - பெரிய ஆரவாரத்தை யுடைய கப்பல்கள்; திசை திரிந்தாங்கு - செல்லுந் திசைகளிலே திரிந்து செல்வது போல; கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து - கொடிகள் அசையும் நிலையையுடைய போர்யானைகள் செறிந்து திரிதலால்; வடிமணி நெடுந்தேர் - வடித்த வோசையினையுடைய மணிகட்டிய நெடிய தேர்களை; வேறு புலம் பரப்பி - வேறிடங்களில் பரவிச் செல்வித்து; மை யணிந்து எழுதரு மா இரும்பல் தோல் - மழைமேகம் போலக் கறுத்தெழும் பெரிய பலவாகிய கேடகங்களுடன்; எஃகு சுமந்து - வேலும் வாளும் ஏந்திக்கொண்டு; முன் சமத்து - போரின் முன்னணியில் நின்று பொருதலை விரும்பி; மெய்புதை அரணம் எண்ணாது - மெய்யை மூடும் கவசத்தையும் வேண்டு மென் றெண்ணாமல் விரைந்து; எழுதரும் வன்கண் ஆடவர் - செல்லும் வன்கண்மையினையுடைய போர்வீரரது; தொலையாத் தும்பை - தோலாமைக் கேதுவாகிய தும்பைமாலை; தெவ்வழி விளங்க - பகைவர் படையிடையே விளங்கித் தோன்றப் பொருதலால்; பலர் பட - பகைவர் பலர் உயிர் துறக்கவும்; உயர்நிலை யுலகம் எய்தினர் - அவரனைவரும் வீரர் புகும் துறக்கத்தை அடைந்தா ராக; நல்லமர் கடந்த - இவ்வாறு நல்ல போர்களை வஞ்சியாது செய்து மேம்பட்ட; நின் செல் உறழ் தடக்கை - நின்னுடைய இடியினும், மாறுபட்ட பெரிய கை; இரப்போர்க்குக் கவிதல் அல்லதை - இரவலர்க்கு ஈதற் பொருட்டுக் கவிதலை யறியுமே யன்றி; இரைஇய - பிறர் எவரையும் இரத்தற் பொருட்டு; மலர்பு அறியா - மலர்தலை யறியாது; எனக் கேட்டிகும் - என்று சான்றோர் பலரும் கூறக் கேட்டிருக்கின்றோம் என்றவாறு. கொடி யேந்தி யசைந்து செல்லும் யானைக்கும் தேர் கட்கும் கடற் பரப்பிற் செல்லும் கலத்தை உவமங் கூறல் சான்றோர் மரபு. “வளைமேய் பரப்பின், வீங்குபிணி நோன்கயி றரீஇயிதை புடையூஉக், கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ, நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து, கோலோர்க் கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதரும் கடாஅ யானையும்” (மதுரை. 375-83) என்றும், “ஊர்ந்த தேரே, சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த, கடுஞ்செலற் கொடுந்திமில் போல” (அகம். 330) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. களிறும் தேரும் வேறுவேறு அணிவகுக்கப்பட்டு வேறுவேறு நெறியிற் சேறல் பற்றி, “பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு” என்றார். திரிந்தாங்கு, களிறு மிடைந்து தேர் வேறு புலம் பரப்பி என இயையும். மிடைந்து: காரணப் பொருட்டாய செய்தெனெச்சம். “திசை திரிந்தாங்குக் கொல் களிறு மிடைந்து என மாறிக் கூட்டுக” என்பது பழைய வுரை. தம் நாட்டிலின்றி வேறு நாட்டில் உளவாய்க் கடல் கடந்து கொணர்தற்குரியவா யிருத்தல்பற்றி, “அருங்கலம்” எனப்பட்டன. அருமை நன்மைமிகுதிபற்றி யென்றுமாம்; “விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர், நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்” (மதுரை 322) எனச் சான்றோர் கூறுப. ஒரு திசையே நோக்கிப் பல நெறியாற் சேறல்பற்றி, “திசை திரிந்து” என்றார். மை, கருமுகில். மா, கருமை. கேடகம் கருமைநிற முடைத்தாதல்பற்றி, “மாயிரும் பஃறோல்” என்றும், தோலாற் செய்யப்படுதலின் தோலென்றும் கூறப் பட்டது. “மழையென மருளும் பஃறோல்” (புறம். 17) என்று வருதல் காண்க. தோலும் எஃகும் சுமந்து எண்ணா தெழுதரும் ஆடவர் என இயைக்க. இனி, பஃறோல் மெய்புதையரண மாதலை யெண்ணாது என இயைத்தல் பொருந்தாது; என்னை, தோலை யின்றி, வேலும் வாளும் ஏந்தாராதலாலும், தோலு டைமையால் வேறு கவசம் வேண்டாவென் றெண்ணற்கு இடமுண்மை யாலும், தோலேந்தாது சேறல் படைமடமா மாதலாலு மென்க. மெய்புதை யரணம், இரும்பினாற் செய்யப் படும் கவசம்; புலித்தோலாற் செய்யப்படுதலு முண்டு. “புலி நிறக்கவசம்” (புறம். 13) என வருதல் காண்க. “மண்டமர் நசை யொடு கண்படை பெறாது” (முல்லை. 67) செருக்கிச் செரு வேட்ட உள்ளமுடைய ரென்பது தோன்ற, “முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்” என்றார். அரண மெண்ணாமைக்கும் முன் சமத்து எழுதருதற்கும் ஏது இஃதென்பார் “வன்கண் ஆடவர்” என்று சிறப்பித்தார். தெவ்வரொடு பொருமிடத்துத் தும்பை சூடிப் பொருது வெல்வது தோன்ற, “தொலையாத் தும்பை தெவ்வழி விளங்கி” யென்றார். தோலாமையை விளக்கும் தும்பைப் போர் என்றற்கு, “தொலையாத் தும்பை” எனல் வேண்டிற்று. விளங்க என்புழிக் காரணம் காரியமாக உபசரிக்கப் பட்டது. தெவ் வரிடையே பட்டவர் பலராயினும், அவரனைவரும் துறக்க வின்பம் பெற்றனர் என்பார், “உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட” என்றார். உயர்நிலை யுலகம், துறக்கம்; “உயர்நிலை யுலகத்துச் செல்லாது” (பதிற். 54) எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. தெவ்வழிப் பலர்பட வெனவே, தன் படையில் பட்டவர் இலர் என்பதாம். இருப்பின் அவர் மிகச் சிலரே. தெவ்வழியிற் பலர்படக் கொன்று வென்றியெய்தியதனோ டமையாது அப் பலர்க்கும் உயர்நிலை யுலகம் வழங்கி இன்புறுத்துதல்பற்றி, சேரலாதன் செய்த போரை “நல்லமர்” என்றும், அதனை யறத்தாற்றிற் பொருது கடக்கும் அவன் வன்மையைச் “செல்லுறழ் தடக்கை” எனக் கைம்மேல் வைத்தும் கூறினார். செல்,இடி; “செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை” (முருகு. 5) என நக்கீரரும் கூறுதல் காண்க. இவ்வாறு போருடற்று முகத்தால் தனக்கழிந்து உயிர் துறந் தார்க்கு உயர்நிலை யுலகமும், தன்னரு ணோக்கம் பெற்று இரக்கும் இரவலர்க்குப் பெரும்பொருளும் வழங்கும் சேரலாதனது கைகளின் சிறப்பைத் “தடக்கை” என்று குறித்தா ராயிற்று. சேரலாதன் இரவலர்க்குக் கொடை வழங்கு மாற்றால் அத் தடக்கையைக் கவிப்ப துண்டே யன்றிப் பிறரை இரந் தறியான் என்றற்கு “இரப்போர்க்குக் கவிதலல்லதை இரைஇய மலர் பறியா” என்றார். இதனை யாம் கண்ணிற் கண்டே மில்லையா யினும் பிறர் பொய்யாகவேனும் கூறக் கேட்டிலோம் என்றற்கு, “இரைஇய மலர் பறியாவெனக் கேட்டிகும்” என்றார். பிறரைப் பொருள் வேண்டி யிரவா னாயினும் துணை வேண்டி யானும் குறையிரந் தறியா னென்பதும் “இரைஇய” எனப் பொதுப்படக் கூறியதனால் பெற்றாம். இன்ன இயல்புடையான் பால் இவ்வாறு கூறலாகா தாயினும், தன்னை “எறிய ரோக்கிய சிறு செங்குவளை ஈயென”த் தன் காதலிபால் அவன் ஊடலுணர்த்துமாற்றால் இரப்பது கூறுகின்றாராதலின், அக்கருத்தினை முடித்தற்கு உபகாரப்படுவ தால் இவ்வாறு கூற லமையுமாறு உணர்க. 12-24. இனியே ............ கையதை உரை : இனி - இப்பொழுது; சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து - ஒளிர்கின்ற கால்விளக்கின் திரு விளங்கும் ஒளியிலே; முழா இமிழ் துணங்கைக்கு - முழவு முழங்க ஆடும் துணங்கைக் கூத்தின்கண் கை பிணைந்தாடும் மகளிர்க்கு; தழூஉப் புணையாக - கை கோத்துக்கொள்ளும் புணையாக; சிலைப்பு வல்லேற்றின் - சிலைத்தலை யுடைய வலிய ஏற்றினைப் போல; தலைக்கை தந்து முதற்கை கொடுத்து; நீ நளிந்தனை வருதல் - நீ செறிந்து வந்தமையின் பொருட்டு; உயவுங் கோதை - அசைகின்ற மாலையும்; ஊரல் அம் தித்தி - பரந்த தேமலையும்; ஈர் இதழ் மழைக்கண் - குளிர்ந்த இமைகள் பொருந்திய குளிர்ந்த கண்களையும்; பேர் இயல் அரிவை - பெரிய இயல்பையு முடைய நின்மனைவியாகிய அரிவை; உடன்றனளாகி - ஊடலுற்று; ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி - ஒள்ளிய இதழ் விரிந்த பூவை யொக்கும் சிறிய அடிகளிலே அணிந்துள்ள; சில பல் கிண்கிணி - இரண்டாகிய பல மணிகள் கோத்த கிண்கிணி யானவை; சிறு பரடு அலைப்ப - சிறிய பரட்டின்கட் கிடந்து ஒலிக்க; கொல்புனல் தளிரின் - கரையை யலைக்கும் நீர்ப்பெருக்கால் அசையும் தளிர் போல; நடுங்குவனள் நின்று - வெகுளியால் வாயிதழ் துடிப்ப நடுங்கி நின்று; நின் எறியர் ஓக்கிய சிறு செங்குவளை - நின்மேல் எறிதற்காக வோச்சிய சிறிய செங்குவளை மலரை; ஈ என இரப்பவும் - ஈவாயாக என இருகையும் விரித்து நீ இரக்கவும்; ஒல்லாள் - சிவப்பாறாது; நீ எமக்கு யாரையோ என - நீ எம்பால் அன்புடையையல்லை யன்றே என்று சொல்லி; பெயர்வோள் கையதை - நின் முன்னின்று நீங்கும் அவளுடைய கையகத்தே இருந்ததுகாண் என்றவாறு. பாண்டில், கால் விளக்கு; “இடவரை யூன்றிய கடவுட் பாண்டில்” (1) என இளம்பெருமானடிகளும் கூறுதல் காண்க. அப் பாண்டில் சுடர்விட்டெரிதலால் உண்டாகும் விளக்கம் “திருநாறு விளக்க” மெனப்படுகிறது. திருநாறு விளக்கம் என்றது, “செல்வ முடைமை யெல்லாம் தோன்றும் விளக்கு” எனப் பழையவுரை கூறும். துணங்கையாடற்கேற்ப முழவு முழங்குதலால் “முழவிமழ் துணங்கைக்கு” என்றார். துணங்கை யெனவே, அதனை யாடும் மகளிரென்பது வருவிக்கப்பட்டது. ஏர்க்களத்தில் மகளிரும் போர்க்களத்தில் வீரரும் பேய் மகளிரும் இத்துணங்கை யாடுப. ஊரிடங்களிலும் இரவில் பாண்டில் விளக்கின் ஒளியில் மகளிரும் ஆடவரும் துணங்கை யாடுவது உண்டு. மகளிர் கைபிணைந் தாடுமிடத்து ஆடவர் முதல்வராய்க் கை தந்து ஆடல் தொடங்குந் திறத்தைத் தலைக்கை தருதல் என்பர். அதனைச் சேரமான் செய்வதுபற்றி, “சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து” என்றார். சிலைத்தல் ஏற்றிற்கு இயல்பு; “ஆமா நல்லேறு சிலைப்ப” (முருகு. 315) எனப் பிறரும் கூறுதல் காண்க. “மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து” (புறம். 24) என்பதனால் ஆடவர் மகளிர்க்குத் தலைக்கை தருமாறு உணரப்படும். நளிந்தனை வருதல், கூடியிருந்து வருதல். நளிதல், செறிதல். முருகனும் இவ்வாறு மகளிரொடு விளையாடி யொழுகுதலை, “மென்றோட் பல்பிணை தரீஇத் தலைத்தந்து, குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே” (முருகு. 216-7) என்பதனா லறியலாம். பழையவுரைகாரரும் நளிதல் என்றற்கு, “தன்னைச் சேவிக்கும் மகளிரொடு குரவை யாடிச் செறிதல்” என்பர். சேரலாதன் துணங்கை மகளிரொடு விளையாடிச் செறிந்து வருதல் அவன் மனைவி ஊடற்கு ஏதுவாயினமையின், “நளிந்தனை வருதல் உடன்றன ளாகி” என்றார். “நளிந்தனை: “தந்தனை சென்மோ” (ஐங் 159) என்புழிப்போல முற்றெச்சம். வருதல் என்புழிக் குவ்வுருபு விகாரத்தால் தொக்கது. உடலுதல், ஊடுதல்; “உடலினெ னல்லேன் பொய்யா துரைமோ” (ஐங். 66) என்றாற்போல. “கிழவோன் விளையாட் டாங்கு மற்றே” (தொல்.கற்பு. 23) என்றதனால், அரசமா தேவி யூடற்கு அவன் விளையாட்டுக் காரணமாயிற்று. உயவுதல். ஈண்டு அசைதல் மேற்று. ஊரல், பரத்தல்; “ஊர லவ்வா யுருத்த தித்தி” (அகம். 326) என வருதல் காண்க. அம்: அல்வழிச் சாரியை. தித்தி, தேமல்; வரியுமாம்; “நுணங்கெழில் ஒண் தித்தி” (கலி.60) என்பதன் உரைக்கண் ஒண் தித்தி யென்றற்கு, “ஒள்ளிய வரி” யென்று நச்சினார்க்கினியர் கூறுவர். கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் முதலிய குண மாண்புகளெல்லாம் உடைமைபற்றி அரசியை, “பேரியலரிவை” யென்றார். ஊடற்காலத்தும் உள்ளத்து வெகுளியை மறைத்துக் குளிர்ந்த நோக்கமே செய்தலின், “ஈரிதழ் மழைக்கண் பேரிய லரிவை” என்றார். சில வென்பதும் பன்மையாயினும் சில விறந்தவற்றையே பல வென்னும் வழக்குப் பற்றி, இரண்டாதல் தோன்ற, “சில கிண்கிணி” யென்றும், மணிகளின் பன்மை தோன்றப் “பல் சில கிண்கிணி” யென்றும் சிறப்பித்தார். பரடு, அடியின் மேல்பக்கம். அதன்மீது காலைச் சூழ்ந்து கிடத்தலின், “பல்சில கிண்கிணி சிறுபர டலைப்ப” என்றார். கொங்கு வேளிரும், “பைம்பொற் கிண்கிணி பரட்டு மிசையார்க்கும், செந்தளிர்ச் சீறடி” (பெருங். 2:3 : 85-6) என்றார். இதனால் விரைந்து நடத்தல் பெற்றாம்; பெறவே, அரசியைச் சேரலாதன் மேலும் செல்லாவகை தடுத்தலும் அவன் வெகுளி சிறப்ப, அதனைக் காக்கும் வன்மை யின்மையின் நுதல் வியர்ப்ப வுடல் நடுங்க நிற்றல் தோன்ற, “கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று” என்றார். “தீயுறு தளிரின் நடுங்கி, யாவது மிலையான் செயற்குரி யதுவே” (குறுந். 383) எனச் சான்றோர் கூறுவர். ஒப்பனை செய்யப்பெற்ற செல்வ மகளிர் காதில் அசோகின் தளிரணிந்து கையில் குவளை செங்கழுநீர் முதலிய பூக்களைப் பிடித்திருப்பது மரபு. ஈண்டு அரசமாதேவி கையில் செங்குவளைப் பூவை வைத்திருந்தவள் புலவியெய்தியதும் அதனை அரசன்பால் எறியலுற்றா ளென்பார். “நின் எறிய ரோக்கிய சிறுசெங் குவளை” என்றார். “ஒண்பூம் பிண்டி யொருகாது செரீஇ” (குறிஞ்சி. 119) என்றும், புலந்த மகளிர் பூக்களை யெறிதலை “குண்டல மிலங்கப் போந்து இனமலர் சிதறி யேகினாள்” (சீவக. 1026) என்றும், “தாள் நின்ற குவளைப் போதின் தாதகம் குழைய மோந்து” (சூளா. கல்யா. 156) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனிக் கூந்தலில் அணிந்திருந்த செங்குவளை கொண்டு சேரலாதனை எறியலுற்றா ளென்றுமாம்; “குவளை நாறும் குவையிருங் கூந்தல்” (குறுந். 300) எனக் கூந்தலில் குவளையணியப்படுமாறு கூறப்படுதல் காண்க. செங்குவளை மிக்க மென்மை யுடைத்தாதலின், அது தன்மேற் படின் மெலிந்து சாம்புமென் றஞ்சி, சேரலாதன் அதனைத் தனக்கு ஈயுமாறு தன் இரு கைகளையும் மலர்த்தி இரந்தா னென்பார், “ஈயென இரப்பவும்” என்றார். தன்னுயர்ச்சி தோன்றக் கொடுவென்றாதல், தனது ஒத்த அன்புடைமை தோன்ற, தருக என்றாதல் கூறாது இழிந்தோர்க் குரிய சொல்லால் அவளை மிக வுயர்த்திக் கூறும் கருத்துத் தோன்ற, “ஈ” என்று இரந்தா னென்றவாறாயிற்று. ஈந்தவழி, தான் அவனது பரத்தைமைக் கியைந்தவாறாம். அதுவேயுமன்றி அவன் தன்னை எளிதிலடைதற்கு வாயிலா மென்னும் கருத்தால், ஈயா ளாயினா ளென்றற்கு, “ஒல்லாள்” என்றார். ஒல்லுதல், உடன்படுதல். “ஒல்லேம் போல்யா மதுவேண் டுதுமே” (ஐங். 88) என்றும், “ஒல்லேன் போல வுரையா டுவலே” (நற். 124) என்றும் வருதல் காண்க. இரப்பவும் ஒல்லாள் என முடிக்க. “நினக்கு எம்பால் அன்பில்லை யாதலால் எம்பால் நீ என்ன முறைமையுடையை” எனப் புலந்துகூறுவாள் பல கூறாது “நீ எமக்கு யாரையோ” எனக் கூறினாள்; “யாரைநீ யெம்மில் புகுதர்வாய்” (கலி. 98) எனப் பிறரும் கூறுதல் காண்க. எமக்கு என்றது தன்வயின் உரிமையும், நீ யாரையோ என்றது அவன்வயிற் பரத்தைமையும் குறித்து நின்றன என்று கூறியவள், அவன்முன் நின்றவழி, ஆற்றாமை வாயிலாகத் தன்னை யெய்து தற்கு இடனா மென்று “பெயர்வோள்” என்றும், அவனால் நயக்கப்பட்ட குவளையை அவன்பாலுள்ள காத லன் பால் எறியாது கையகத்தே கொண்டிருக்குமாறு தோன்றக் “கையதை” யென்றும் கூறினார். கையதை என்புழி, ஐ யென்னும் இடைச் சொல் அசைநிலை. இனிப் பழையவுரைகாரர், அவிழக மென்றதற்கு, `அவிழ்ந்த பூ’ என்றும், சிறு செங்குவளை யென்றதற்குத், `தான் எறிதற் கோக்கிய சிறியதொரு செங்குவளை யெனச் சிறுமையால் அவள் மென்மை கூறிய சிறப்பான் இதற்குச் சிறுசெங்குவளை யென்று பெயராயிற்’ றென்றும் கூறுவர். இரப்பவும் என்ற செயவெனெச்சத்துக்கும் பழையவுரை காரர் வேறு முடிபு கூறுவாராய், அதனைக் “கையதை யென்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க” என்றும், “சிறு செங்குவளை பெயர்வோள் கையதை என முற்றாக அறுத்து அது எனப் பின் சுட்டிற் றாக்குக” என்றும் கூறுவர். 25-26. கதுமென ............ வல்லா யாயினை உரை : கதுமென உருத்த நோக்கமொடு - சட்டென வெகுண்ட பார்வையுடனே; நீ அது பாஅல் வல்லா யாயினை - நீ அச் சிறு செங்குவளை நின்பாற் பகுத்துக் கொள்ளமாட்டா யாயினை என்றவாறு. பிறரால் இரக்கப்படுவதன்றிப் பிறர்பால் இரத்தற்குரி யனல்லாத நீ இரந்து கேட்கவும், ஈயாமையே யன்றி “யாரையோ நீ எமக்கு” என வெகுண்டுரைத்து எதிரே நில்லாது பெயர்ந் தமையின், முன்போல் அவளைப் பெயரவிடாது தகைந்து அதனைக் கவர்ந்துகோடற்கு வேண்டும் வெகுளிகொள்ளினும் குற்றமாகாதாகவும், அது செய்யா தொழிந்தனை யென்பார், “கதுமென வுருத்த நோக்கமொடு அது நீ பாஅல் வல்லா யாயினை” என்றார். எனவே, இச் செயலாலும் நீ மென்மை யுடையை யென்பதே தெரிகின்ற தென்பது கூற்றெச்சம். உருத்த, கண்டார்க்கு உட்கினைப் பயத்தலையுடைய என்றுமாம். உருத்த நோக்கமொடு அதனைக் கவர்ந்துகொள்ளின், கழி சினத்துக்கு எளிதில் இடந்தரும் மெல்லிய வுள்ளமுடைய னென்றாகி நல்லோரது இகழற்பாட்டினைப் பெறுவிக்கு மாகலின், அச் சினத்தைத் தன் அறிவின் திண்மையால் தோன்றா வகையிற் கெடுத்து அன்புவழி நின்ற வல்லாண்மையை விதந்து “வல்லா யாயினை” யென்றா ரெனவறிக. 26-31. பாஅல் ........... எயிலே உரை : அகல் இரு விசும்பில் - அகன்ற நீலவானத்தின் கண்ணே; பகல் இடம் தரீஇயர் - பகற்காலத்துக்கு இடமுண்டா தற் பொருட்டு; தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று - சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் நிறம் பொருந்திய ஞாயிற்றினுடைய; உருபு கிளர் வண்ணம் கொண்ட - உருவத்தையும் விளங்குகின்ற தன்மையையும் கொண்ட; வெண் குடை வேந்தர் தம் - வெண்கொற்றக் குடையையுடைய வேந்தர்களின்; வான் தோய் எயில் - வான்அளாவ வுயர்ந்த மதில்களை; பாஅல் யாங்கு வல்லுநையோ - உருத்துநோக்கி நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லையாயினையோ; நின் கண்ணி வாழ்க - நின் கண்ணி வாழ்வதாக என்றவாறு. ஞாயிற்று உருபு கிளர் வண்ணங்கொண்ட வேந்தர்தம் வான்றோய் எயில் பாஅல் யாங்கு வந்லுநையோ, நின் கண்ணி வாழ்க என இயையும். அகலிரு விசும்பென்றற்கு, “தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய ஆகாயம்” என்றும், “அகலிரு விசும்பென்பது நோய்தீரு மருந்துபோல் நின்ற” தென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர் (பெரும்பாண். 1) ஞாயிற்றின் தோற்றத்தால் உலகில் பகற்போது உண்டாதல் பற்றி, “பகலிடம் தரீஇயர் தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று” என்றார். உரு, நிறம். ஏழுவகை நிறங்களும் ஒருங்கு கலந்தாகிய ஒண்ணிற முடைமையின், உருகெழு ஞாயிறென்றல் அமையுமென்க. உருபு, வடிவு. வண்ணம் ஈண்டுத் தன்மைமேற்று. அஃதாவது இருள் கடிந்து ஒளி பெருக்குதல். உருபும் வண்ணமும் என எண்ணும்மை விரித்துக் கொள்க. கொண்ட வென்னும் பெயரெச்சத்தை வெண்குடையொடு முடிக்க. உருபும் வண்ணமும் கொண்ட குடை, வான்றோய் குடையென இயையும். பழையவுரைகாரர் வண்ணத்தைத் தன்மையென்றே கொண்டு, “வண்ணம் கொண்ட வேந்தரெனக் கூட்டி ஞாயிறுபோலக் கோபித்து எதிர்நின்ற வேந்தரென வுரைக்க” என்றும், உருபு கிளர் வண்ணம் என்றதற்கு “நிறம் விளங்கின தன்மை” என்றும் கூறுவர். ஒருகாலைக் கொருகால் தேய்தலும் வளர்தலுமின்றி எந்நாளும் ஒரு தன்மைத்தாய வடிவும் பகை கடிந்து புகழ்நாட்டும் கொற்றமும் விளங்க நிற்றல் பற்றி, “ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வெண்குடை” யென்றார். தன் ஒளியும் வெம்மையும் நிலவும் பொருட்டு ஞாயிறு தன் தெறுகதிர் திகழ்தரும் என்றதனால், இவ் வேந்தரும் தம் ஒளியும் பொரு முரணும் நிலவுதற்பொருட்டுச் சேரலாதனை எதிர்ப்பவர் என்பது பெற்றாம். வேந்தரதுசெயல் அவர்க்குரிய குடைமேலேற்றிக் கூறப்பட்டதாம். காதலிபால் கொள்ளாத உருத்த நோக்கத்தை எயில் கொள்ளுமிடத்து ஒழியாது மேற்கோடல் பற்றி, ஈண்டு வருவித்துக் கொள்ளப்பட்டது. மகளிர் கையகத்திருந்த சிறு செங்குவளையை மிக நயந்து அது குறித்து ஈயென விரந்து கேட்டு மறுக்கப்பட்டவழியும் சினஞ் சிறிதுமின்றி வன்மையின்றி மெலிந்து நின்ற நீ, ஞாயிறு போலும் தெறலும் வெம்மையு முடைய வேந்தர் காக்கும் மதிலை எளிதிற் கொள்ளும் வலியுடை யோனாய் இருத்தலின், ஆங்கு மனையகத்தே காணப்படாத வன்மை ஈங்குத்தானே வெளியாதற்கு ஏது வொன்றும் தெரிந்தில தென்பார், “பாஅல் யாங்கு வல்லுநையோ” என்றார். இதனால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்பால் அன்புடையார்பால் கொள்ளும் எளிமையும் மென்மையும் எடுத்தோதி, அவன் பகைவரை யடர்த்துப் பலர் உயர்நிலை யுலகமெய்த அவரது எயிலைக் கொள்ளும் வன்மையைச் சிறப்பித்தோதி வாழ்த்தக் கருதுகின்றா ராதலால், “வாழ்க நின் கண்ணி” யென்றார். இதுகாறும் கூறியது; “நல்லமர்க் கடந்த நின் தடக்கை, இரப்போர்க்குக் கவித லல்லதை இரைஇய மலர் பறியா வெனக் கேட்டிகும்; இனி, துணங்கைக்குத் தலைக்கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன்றனளாகி, நின்னரிவை நின் எறியர் ஓக்கிய சிறுசெங் குவளையானது, நீ ஈ யென்று இழிந்தோன் கூற்றான் இரப்பவும் நினக்கு ஈந்துபோகாது நின் இரப்பிற்கு ஒல்லாளாய், நீ எமக்கு யாரென்று பெயர்வோள் கைய தாயிருந்தது; அவ்வாறு நீ இரந்து பெறாது அவளை உருத்த நோக்கமொடு அதை அவள்பால் நின்றும் பகுத்துக்கொள்ள மாட்டா யாயினை; அவ்வாறு அது பகுக்கமாட்டாத நீ வேந்தர்கள் எயிலைப் பகுத்துக் கோடல் யாங்கு வல்லை யாயினாய்; நின் கண்ணி வாழ்க என மாறி வினைமுடிவு செய்க. “பாஅல் யாங்கு வல்லுநையோ என்றதன் முன் எயில் என்பது கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று” என்றும், “இதனாற் சொல்லியது, அவன் கைவண்மையொடும் வென்றி யொடும் படுத்து அவன் காமவின்பச் சிறப்புக் கூறியவாறாயிற்று” என்றும், “இப் பாட்டு, துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த வூடற் பொருட்டாகையால் குரவைநிலை யென்றவாறாயிற்று” என்றும் பழையவுரை கூறும். 3. குண்டுகண் ணகழி 1. வென்று கலந்தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர் வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் 5. தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை 10. ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது 1 முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய எயின்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குரிசில் 15. எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின் தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி 20. மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குநின் களிறே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : குண்டுகண் ணகழி 1-5. வென்றுகலம் ............. செல்குவையாயின் உரை : வென்று கலம் தரீஇயர் - பகைவரைப் பொருது வென்று அவருடைய செல்வங்களைக் கொணர்தற்காக; வேண்டு புலத்து - அச்செயற்கு வேண்டும் இடத்தே; இறுத்து - சென்று தங்குதலால்; அவர் - அப் பகைவர் தாம் வெல்லுதலருமை நினைந்து; எம் நல்கினை யாகுமதி என்று - யாம் இறுக்கும் இக் கலங்களை யேற்றுக்கொண்டு எம்மை அருளியோனாகுக என்று பணிந்த மொழியாற் சொல்லி; வாடா யாணர் நாடு திறை கொடுப்ப - குன்றாது புதுவருவாயினையுடைய தம் நாட்டிடத்தேயுள்ள அரிய செல்வமாகிய கலங்களைத் திறை யாகச் செலுத்த; அருளி - அவற்றை யேற்குமுகத்தால் அவர்கட்கும் நட்பருளி; கல்பிறங்கு வைப்பின் - மலைகள் உயர்ந்த நாட்டகத்தே; கடறு அரையாத்த - காடு சூழ்ந்துள்ள; நின் தொல்புகழ் மூதூர்ச் செல்குவையாயின் - நின்னுடைய பழைமையான புகழமைந்த தலைநகராகிய மூதூர்க்குத் திரும்பிச் செல்வா யாயின் என்றவாறு. செல்வத்தாற் செருக்கித் திரியும் பகைவரை யொடுக்கி அவர் தரும் திறைப்பொருள் கோடலும் நன்கல முதலியவற்றைப் பரிசிலர்க்கு வழங்கலும் பண்டைத் தமிழ் வேந்தர் பொதுவாக மேற்கொண்டிருந்த செயல்களாதலின், அவற்றையே விதந்து, “வென்றுகலந் தரீஇயர்” என்றார். வென்று தரீஇயர் என்ற தனால், இச்செலவு அடங்காத் தெவ்வர் மேற்றென்பதும், கலமென்று சிறப்பித்ததனால், பரிசிலர்க்கீத் துவக்கும் இன்பப் புகழ் குறிக்கோளென்பதும் பெற்றாம். “உறுவ ரார வோம்பா துண்டு, நகைவ ரார நன்கலம் சிதறி” (பதிற். 43) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறு முயற்சியால் பெருவெற்றி எய்துதற்குரிய இடங்கண்டபின்னல்லது வேந்தர் வினைதொடங்காராதலின், அத்தகைய இடங்கண்டு ஆங்கே தங்கினமை தோன்ற, “வேண்டு புலத்து இறுத்து” என்றார். “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்” (பதிற். 15) தென்று பிற சான்றோரும் இடத்தை வேண்டு புலமெனச் சிறப்பித்தோதுவர். நின் வலியும் படை வன்மையும் இடத்தின் வாய்ப்பும் பகைவர்க்குத் தம் மாட்டாமை புலப் படுத்துதலின், அவர் தாமே திறைகொடு போந்து பணிந்த மொழி யால் நின்அருள் வேண்டுகின்றன ரென்பார், “நல்கினை யாகுமதி யெம்மென்று நாடுதிறை கொடுப்ப” என்றார். அவரை யழித்தல் குறித்து வெகுண்டு வந்தமை, “நல்கினை யாகுமதி யெம்மென்று” மொழிந்து திறைகொடுத்தலாற் பெற்றாம். மேன்மேலும் பெருகும் வளம்படைத்த நாடு என்றற்கு, “வாடா யாணர் நாடு” எனப்பட்டது. நாடு ஆகுபெயரால் அந் நாட்டிடத்து அருங்கலம் எனக் கொள்க. இனி, நாட்டையே திறையாகக் கொடுப்ப என்றுமாம். இவ்வாறே பழைய வுரை காரரும் கூறினர். இறுத்தவர் என்பதனைச் செயப்பாட்டு வினைப் பெயராக்கி, நின்னால் படை யிறுக்கப்பட்டவ ரென்றுமாம். அவரென்றது, “அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு எதிர்ந்த அரச” ரென்றும், “திறை தர வென்றற்குத் திறை கொடுப்ப வென்றது இடவழு வமைதி” யென்றும் பழையவுரை கூறுகின்றது. மலைநிறைந்த நாடாதலால் “கல் பிறங்கு வைப்பின்” என்றும், அந்நாட்டையே தொன்று தொட்டு வந்த அரசர் இருந்து ஆட்சிபுரிந்த மூதூர் என்றற்குத் “தொல் புகழ் மூதூர்” என்றும், அந்நகரை மலையரண் சூழ அதன் அடிப்பகுதியைக் காடுகொண்டு கட்டினாற்போலக் காடு சூழ்ந்து கிடத்தலால், “கடறு அரை யாத்த” என்றும் கூறினார். இவ்வாறே பகைவர் அனைவரையும் அழித்தும் பணிவித்து மல்லது திரும்பானாதலின், “செல்குவையாயின்” என்றார். இனி, செல்குவதாகவே கொண்டு, செல்கின்றா யாதலால் என்று உரைப்பினும் அமையும். 6-13. செம்பொறி ............ யாவது உரை : செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் - (பகைவரைப் பாவைபோல் உருச்சமைத்து அதற்குச்) செவ்விய மூட்டுவா யமைந்த சிலம்பும் அணியாகத் தொடுக்கப்பட்ட தழை யுடையும் கட்டித் தொங்கவிட்டிருக்கும்; எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் - எந்திரப் பொறிகளும் எய்யப் படும் அம்பும் அமைக்கப்பட்ட கோட்டை வாயிலும்; கோள்வல் முதலைய குண்டுகண் அகழி - கொலைவல்ல முதலைகளை யுடைய ஆழ்ந்த இடத்தையுடைய அகழியும்; வளைந்து செய் - வளைவு வளைவாகக் கட்டப்பட்டு; வான் உற ஓங்கிய புரிசை - வானளாவ வுயர்ந்த மதிலும் ஆகிய இவ்வெயில்; ஒன்னாத் தெவ்வர் முனைகெட - மனம் ஒன்றாத பகைவேந்தர் போந்து செய்த போர் அழியும்படி; விலங்கி - குறுக்கிட்டு; நின்னில் தந்த - நின்னால் கைக்கொண்டு நல்கப்பட்ட; மன் எயில் - துணை வேந்தர்களின் எயிலாகும்; அல்லதும் - அன்றியும் (அவ்வெயில்); நின் முன்னோர் - நினக்கு முன்னோர்கள்; முன்னும் பின்னும் - தமக்கு முன்னிருந்தோராலும் பின் வந்தோராலும்; ஓம்பிய எயில் - துணை செய்து காக்கப்பட்ட எயிலுமாம்; முகப்படுத்தல் யாவது - திரும்பச் செல்லும் நின் தானையை நேர்முகமாகச் செல்வது குறித்து இவ் வெயிலிடத்தே செலுத்துவது யாதாய் முடியும், எண்ணியருளுக என்றவாறு. சிலம்பின் மூட்டுவாய் அழகாகப் பொறிக்கப்பட்டிருத்தல் பற்றிச் “செம்பொறி” யெனப்பட்டது. தழையாவது பல்வகை மலராலும் தளிராலும் அழகாகத் தொடுக்கப்படுவது. இதன் இயல்பை “மணலாடு மலிர்நிறை விரும்பிய வொண்டழைப் புனலாடு மகளிர்” (ஐங். 15) என்பதன் உரைக்கண் விரியக் கூறினாம்; ஆண்டுக் காண்க. இத் தழையை மகளிர் தமக்கு அணியாகத் தொடுத்தணிதல் பற்றி, அணித்தழை யென்றார். “உடுத்துந் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த வாயம்” (குறுந். 195) என்று பிறரும் கூறுதல் காண்க. கோட்டை வாயிலில் பகைவரை மகளிராக்கி அவர் அணிந்து கோடற்குச் சிலம்பும் தழையும் பந்தும் கட்டித் தொங்கவிடுதல் பண்டையோர் மரபு. அதனால், “செம்பொறிச் சிலம்பொடணித் தழை தூங்கும் வாயில்” என்றார்; நக்கீரனாரும் “செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி, வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” (முருகு. 68) என்று கூறுவர். “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது, ஈண்டுப் பொருவீர் உள்ளீரேல், நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையு மொழித்து இச் சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவா றென்க” வென்றும், “இனி அவற்றை அம் மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாரு முளர்” என்றும் பழையவுரை கூறுகின்றது. வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணு முதலாகப் பல்வகைப் பொறிகள் அமைத்திருத்தல் பற்றிச் சிறப்புடைய வில்லும் அம்பும் விதந்து, “எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்” என்றார். பல்வகைப் பொறிகளும் பகைவர் அணுகாமற் றகைத்தற்குப் பயன்படுதல் பற்றித் “தகைப்” பென்றார். தன்கண் வீழ்ந்தார் நீந்திக் கரையேற மாட்டாதபடி பற்றிக் கொல்லும் செயலால், “கோள்வல் முதலை” யென்றும், அவை வாழ்தற்கேற்ற ஆழமும் அகலமும் உடைமைபற்றிக் “குண்டுகண் ணகழி” யென்றும், கூறினார். இவ்வாறே “கராஅங் கலித்த குண்டுகண் ணகழி” (புறம். 37) என மாறோக்கத்து நப்பசலையாரும் கூறுதல் காண்க. “கோள்வல் முதலைய வென்று முன்வந்த அடைச்சிறப்பான் இதற்குக் குண்டுகண்ண கழி யென்று பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர். புறத்தோரால் எளிதில் தகர்க்கப்படாமை குறித்து, மதிற் சுவர் வளைந்து வளைந்து செல்ல எடுக்கப்படுவதுபற்றி, “வளைந்து செய்புரிசை” யென்றார். செய் யென்னும் முதனிலை வினை யெச்சப் பொருட்டு. வளைந்து செய் வான்றோய் புரிசை என மாறிக் கூட்டி யியைக்க. ஒன்னாத் தெவ்வர், மனம் ஒன்றாத பகைவர் என்க; ஒன்றாவெனற்பாலது ஒன்னாவென மரீஇயிற்று. இனி, ஒன்னாராகிய தெவ்வர் என்றுகொண்டு, “உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும், புள்ளியிறுதி யுயர்திணைப் பெயரும், எல்லா வழியும் இயல்பென மொழிப” (தொல். எழுத்.தொகை. 11) என்பதனுள் “இறுதி” யென்ற மிகையால் ஈறுகெட்டு மிக்கு முடியுமென அமைத்துக் கொள்க. முனை, போர். இனி வளைந்து செய் புரிசை யென்பதனை, “வளையச்செய் புரிசையெனத் திரித்துக் காலவழுவமைதியாகக் கொள்க” என்றும், “வளைந்து செய்புரிசை யாகிய நின்னிற் றந்த மன்னெயில் என இருபெயரொட்டு” என்றும் கூறுவர் பழையவுரைகாரர். விலங்கித் தந்த எயில் என முடிக்க. இவ்வெயிலை வளைந்து செல்லுமாறு கூறுவார், அதற்கேற்ப, எயில் முகத்துப் படை யினைப் படுத்தலால் வரும் கேட்டை நினைந்து, எயிற்கும் அவற்கும் உள்ள தொடர்பு சுட்டி, “நின்னிற் றந்த மன்னெயில்” என்றார். நின்னிற் றந்த மன்னெயிலென்றதற்கு, “நின்னாற் கொண்டு பிறர்க்குக் கொடுக்கப்பட்ட மன்னெயி” லென்பர் பழையவுரைகாரர். எனவே நின்னால் தரப்பட்டதனால் நிலைபெற்ற எயில் என்பது அவர் கருத்தாயிற்று. மன், துணைவேந்தர் மேற்று. அவர் சேரலாதன் துணை பெற்று அவன் அருள்வழி வாழும் அரசராவர். அவர் சேரலாத னுடைய முன்னோர் காலத்திருந்தே வழிவழி அருளப்பட்டமை தோன்ற, “அல்லதும் முன்னும் பின்னும் நின் முன்னோ ரோம்பிய எயில்” என எயில்மேல் வைத்துரைத்தார்; இதுபோது பேணப் படுவதும் அதுவே யாகலின், இவ்வாறு நின்னாலும் நின் முன்னோராலும் ஓம்பப்பட்டுவரும் எயிலிடத்தே நின் படையைப் புகப்படுக்கின், அதனாற் கேடு பெரிதாம் என்பார், “எயின்முகப் படுத்தல் யாவது” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கொடுத்த வென்பதற்குத் தந்தவென்பது இடவழுவமைதி” யென்றும், “கொடுத்தவெனவே கொண்டு கொடுத்தவெனக் கோடல் போந்த பொருளாய் விளங்கிற்” றென்றும், “தரப்பட்ட வென்பதனைத் தந்தவெனச் செயப்படுபொருளைச் செய்தது போலச் சொல்லிற் றாக்குக” வென்றும் “மன்னெயி லல்ல தென்புழி மன்னெயிற்கண் என ஏழாவது விரித்து அதனைப் பின்வருகின்ற எயின் முகப்படுத்தல் என்பதிடமாகப் படுத்த லென்பதொரு சொல் வருவித்து அதனொடு முடிக்க” வென்றும், “முன்னும் பின்னுமென்றது முன்னோர் தாங்கள் இறப்பதற்கு முன்னும் இறந்ததற்குப் பின்னும் என்றவா” றென்றும், “பின்னோம்புதலாவது முன்னோர் தமக்குப் பின்னும் இவ்வரசாள்வாரும் `நம்மைப்போல இவ்வாறோம்புக’வென நியமித்து வைத்த” லென்றும், யாவ தென்றது, “அஃது என்ன காரியம், நினக்குத் தகுவதொன்றன் றென்றவா” றென்றும் கூறுவர். 13-21. வளையினும் ............ களிறே உரை : சினங்கெழு குரிசில் - சினம்பொருந்திய குரிசிலே; வளை யினும் - இவ்வெயில்வழிச் செல்லா தொழியின் வழிவளைந்து வளைந்து நீளுமாயினும்; பிறி தாறு செல் மதி - பிறிதொரு வழியாகச் செல்வாயாக; எழூஉப் புறந்தரீஇ - கணைய மரத்தால் பின்னே வலி செய்யப்பட்டு; பொன் பிணிப் பலகை - இருப்பாணி களால் இறுகப் பிணிக்கப்பட்ட பலகைகளால் இயன்ற; குழூஉ நிலைப் புதவிற் கதவு- பற்பல நிலைகளையுடைய கோயில் வாயிலிற் கதவுகளை; மெய்காணின் - மெய் பெறக் கண்டால்; தேம் பாய் கடாத்தொடு - வண்டினம் பாய்ந்துண்ணும் மதத்தால்; காழ் கை நீவி - குத்துக்கோலை மதியாது சென்று; வேங்கை வென்ற பொறி கிளர் - வேங்கை மரத்தைப் புலியென மருண்டு சிதைத்த தனாலுண்டாகிய வடுப் பொருந்திய; புகர் நுதல் நின் களிறு - புள்ளியமைந்த நெற்றியினையுடைய நின் யானைகள்; ஏந்து கை சுருட்டி - நிமிர்த்த கையைச் சுருட்டி; தோட்டி நீவி - யானைமேல் வீரரேந்தும் தோட்டியைக் கடந்து; மேம்படு வெல் கொடி நுடங்க - செருவில் மேம்படப் பொருது எடுத்த கொடியசையச் சென்று; ஆங்குத் தாங்கலாகா - அம்மதிற் கதவுகளைப் பிளந்து அரண் களைச் சிதைக்கு மாதலின் அப்பொழுது அவை அடக்குதற் காகாவாம் என்றவாறு. சேரலாதன் செல்லக் கருதிய நெறியை மாற்றி வேறு நெறியிற் செல்லுமாறு கூறலின், தன் கருத்துக் கியையாமையால் சினங்கொளாமைப் பொருட்டு, “சினங்கெழு குரிசில்” என்றார். வளைந்துசெய் புரிசைக்கப்புறத்தே வளைந்து வளைந்து சேறல் வேண்டுமாதலின், “வளையினும்” என்றும், “பிறிதாறு சென்மதி” யென்றுங் கூறினார். எழு, கணையமரம். இது கதவிற்குப் பின்னே கிடந்து அதற்கு வன்மை தருவதாகும். பொன், இரும்பு; அஃதாவது ஆணி. மதிற்கோபுரம் பல நிலைகளையுடைய தாதலால், குழூஉநிலை யெனப்பட்டது. பகைவருடைய அரண் கதவுகளைக் கண்டபோது அவற்றைப் பாய்ந்து சிதைத்த பயிற்சியுடைமையான், இக்கதவினைக் காணினும் அது செய்யும் என்கின்றாராதலின், “கதவு மெய் காணின்” என்றார். வேங்கை மர மொன்றைச் சேய்மையிற் கண்ட துணையானே, வேங்கை யெனக் கருதிச் சென்றழிக்கும் இயல்புடையவை நின் களிறு என்பார், “தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி, வேங்கை வென்ற பொறிகிளர் பூநுதல்” என்றார். வேங்கை, வேங்கைமரம். பொறி, ஈண்டு வேங்கையொடு பொருதவழி அதன் கொம்பு களால் உண்டாகிய வடு. யானை மதிற்கதவைத் தாக்குங்கால் தன் கையைச் சுருட்டித் தாக்குமென்றற்கு, “ஏந்துகை சுருட்டி” என்றும், தோட்டியால் யானை வீரர் அடக்கினும் அடங்கா வாகும் என்பார், “தோட்டி நீவி கொடி நுடங்க, தாங்கலாகா” என்றும் கூறினார்; “கூங்கை மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி” (பரி. 10:49) என்று பிறரும் கூறுதல் காண்க. சினங்கெழு குரிசில், நின் களிறு குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின் தாங்கலாகா; ஆகலான், வளையினும் பிறிதாறு சென்மதி என இயைக்க. இனிப் பழையவுரைகாரர், குழூஉநிலைப் புதவென்றது, “பல நிலமாகச் செய்த கோபுரவாயி” லென்றும், “தே மென்றது தேனீ” யென்றும், “கடாம், மதில் கண்டுழிப் போர்வேட்கையாற் பிறக்கும் மத” மென்று கூறுவர். இதுகாறும் கூறியது, சினங்கெழு குரிசில், நீ, கலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து, அவர் நல்கினை யாகுமதி யெம்மென்று, திறை கொடுப்ப, அருளி, நின் மூதூர்ச் செல் குவையாயின், வாயிறும் அகழியும் புரிசையு முடையதாகிய இதோ நின் முன்னே நிற்கும் இவ் வெயில், நின்னிற் றந்த மன்னருடைய எயிலாகும்; அல்லதும், நின் முன்னோரோம்பிய எயிலுமாகும்; இதற்குள்ளே நின் தானையினைப் படுத்தல் யாவதாம்; வளையினும் பிறிதாறு செல்மதி; வேங்கை வென்ற நின் களிறு. புதவிற் கதவு மெய் காணின், ஆங்குத் தாங்கலாகா வாகலான் என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “நீ வேண்டு புலத்திறுத்து, அவர் திறை கொடுப்ப அருளி நின் மூதூர்ச் செல்குவையாயின் குருசில், வளையினும் பிறிதாறு சென்மதி; செல்லுதற்கு யாது காரணமெனின், புதவிற் கதவு மெய் காணின், ஆங்கு நின் களிறு தாங்கலாகா; தாங்க வேண்டுவதேல், நின்னிற் றந்த எயின்முகத்துப் படுத்துவதல்லது நின் முன்னோரோம்பிய எயின்முகத்துப் படுத்தல் யாவது என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்றும், “செல்குவை யாயின் என்பதன்பின் பிறிதாறு சென்மதி யென்பதனையும், தாங்கலாகா வாங்கு நின் களிறு என்பதன் பின் எயின்முகப்படுத்தல் யாவது என்பதனையும் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் முடிப்பர். இதனாற் சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. 4. நில்லாத் தானை 1. வள்ளியை யென்றலின் காண்குவந் திசினே உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள் ஏந்தெழில் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப் 5. பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தல் மின்னிழை விறலியர் நின்மறம் பாட இரவலர் புன்கண் தீர நாடொறும் உரைசா னன்கலம் வரைவில் வீசி அனையை யாகன் மாறே யெனையதூ உம் 10. உயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின் றிருநில மருங்கி னெடிது மன்னியரோ நிலந்தப விடூஉ மேணிப்புலம் படர்ந்து படுகண் முரச நடுவட் சிலைப்பத் தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மார் 15. ஏவல் வியங்கொண் டிளையரொ டெழுதரும் ஒல்லார் யானை காணின் நில்லாத் தானை யிறைகிழ வோயே. துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நில்லாத் தானை 12-17. நிலம் ............ கிழவோயே உரை : நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து - பகைவர்க்குரிய நிலப்பகுதி குறைபடுமாறு அவர் எல்லைக்குட்பட்ட நிலத்தே சென்று பாசறை வகுத்து; படுகண் முரசம் நடுவண்சிலைப்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய போர்முரசம் பாசறை நடுவே முழங்கி வீரரை யேவ; தோமர வலத்தர் - வலக்கையில் தண்டேந்தி; நாமம் செய்ம்மார் - போரினைச் செய்தற்காக; ஏவல் வியம் கொண்டு - அம் முரசொலியின் ஏவலை மேற் கொண்டு; இளையரொடு எழுதரும் ஒல்லார் - அணி வகுக்கப் பெற்ற இளைய வீரருடன் செல்லும் தானைத் தலைவர் முதலாகிய பகை வேந்தருடைய; யானை காணின் - யானைப் படையைக் கண்டால்; நில்லாத் தானை - நொடிப்போதேனும் நில்லாது சென்று தாக்கும் தானைகளையுடைய; இறை கிழவோய் - அரசனாந் தன்மையைத் தனக்கே யுரிமையாக வுடையவனே என்றவாறு. பகைவர் எல்லைக்குட் புகுந்து அவர் நிலப்பகுதியை வளைத்துப் பல்வகைப் படை தங்குதற்கும் பாசறைக்கும் இடஞ் செய்து கொள்ளுங்கால் பகைவர் எல்லை குறைவதால், `நிலம்தப இடூஉம் ஏணிப் புலம்’ என்றார். எல்லையைச் சார்ந்த இடம் ஏணிப் புலம் எனப்பட்டது. ஏணி, எல்லை; “இடாஅ வேணி யியலறை” (பதிற். 24) என வருதல் காண்க. ஏணிப்புலம் படர்ந்து என வரையறுத்துக் கூறியதனால், பாசறை வகுத்தல் பெறப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், நிலந்தப விடூஉம் ஏணிப்புலமென்றது, “நிலவகலம் குறைபடவிட்ட வெல்லையை யுடைய பாசறை யென்றவாறு” என்பர். பாசறையுள் இருக்கும் வேந்தன் குறிப்பறிந்து தெரிவித்தல் வேண்டுமாதலின், முரசம் பாசறை நடுவண் இருந்து முழங்கு வதாயிற்று. போர்க்கு ஏவிய குறிப்புத் தோன்றும் முழக்கம் கேட்டலும் படைவீரர் அனைவரும் போர்க்கெழுதல் கூறுவார், “படுகண் முரசம் நடுவண் சிலைப்ப” என்றார். தோமரம், தண்டு. “தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு” (பதிற். 41) என்று பிறரும் கூறுவர். நாமம், ஆகுபெயராகப் போரைக் குறித்தது; அச்சம் செய்தவனை அச்சமென்றா ரென்க. செய்ம்மா ரென்னும் மாரீற்று வினைமுற்று எழுதரும் என்னும் வினை கொண்டது; “மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு முடியு மென்ப” (தொல். வினை. 10) என்பது தொல்காப்பியம். ஏவல், வியம் என்பன ஒரு பொருளன. இனி, ஏவலை இளையர்க்கும் வியம் தானைத் தலைவர்க்கும் ஏற்றினும் அமையும். “ஏவல் வியங்கொண் டென்றது, இளையரை முன்பு போர்க்குக் கையும் அணியும் வகுப்புழி யேவித் தாமும் ஏவல் களைச் செய்து கொண் டென்றவா” றென்பர் பழையவுரை காரர் போர்க்குக் கையும் அணியுமாய் முற்பட்டுச் செல்லும் சிறப்புப்பற்றி, “இளையரொடு” என்றார். ஒல்லார், வேந்தரையும் தானைத் தலைவரையும் உளப்படுத்தி நின்றது. கை, பக்கம். இனி, “முரசும் நடுவண் படர்ந்து சிலைப்ப எனக் கூட்டி முரசம் பாசறை நடுவே தான் நின்று தன்னொலி பாசறை யெங்கும் படர்ந்துகொண்டு படையை யேவி யொலிப்ப வென வுரைக்க” வென்றும், “வலத்த ரென்றது வினையெச்ச வினைக் குறிப்பு முற்”றென்றும்,“ஏவலை யுடைய வியமென இரண்டாவது விரிக்க; வியம் ஏவல்” என்றும் பழையவுரை கூறும். யானைப் படையைக் கண்ட மாத்திரையே நில்லாது ஞெரே லெனப் பாய்ந்து தாக்கும் வீரமும் கடுமையும் தோன்ற, “நில்லாத் தானை” யென்றார், “ஓடாத் தானை” யென்னும் வழக்குப் போல . யானைப்போரை விரும்பிக் கடுகச் செல்லும் இத் தானையை “நில்லாத்தானை” யென்று சிறப்பித்தமையால் இப் பாட்டிற்கு இது பெயராயிற் றென்றுமாம். பழைய வுரைகாரர், “யானை காணின் நில்லாத் தானை யென்றது, காலாள் முதலாயின வற்றைத் தரமல்ல வென்று கழித்துநின்று யானை காணின் நில்லாது செல்லும் தானை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு நில்லாத் தானை யென்று பெயராயிற்” றென்றும், கூறுவர். “தாங்குநர் தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும், எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்” (பதிற். 51) என்புழியும் “நின் படைவாழ்நரும் காலாண்மேற் செல்லாது தாங்குநர் யானைக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தரா யிருப்பர்” என்று பழையவுரை கூறுவது காண்க. 1-2. வள்ளியை ............... கண்ணி உரை : வள்ளியை என்றலின் - வள்ளன்மை யுடையை யென்று நீ சான்றோரால் பாராட்டிக் கூறப்படுவதால்; காண்கு வந்திசின் - யான் நின்னைக் காண்டற்கு வந்துள்ளேன்; உள்ளியது முடித்தி - யான் கருதியதை முடித்துத் தருவாயாக; நின் கண்ணி வாழ்க - நின் முடிக்கண்ணி வாழ்வதாக என்றவாறு. சேரனாட்டிலிருந்து வந்த பரிசில ரனைவரும் பெருவளம் பெற்று வரக் கண்டதோடு, அவரனைவரும் சேரலாதனது வள்ளன்மையைப் பாராட்டிக் கூறக் கேட்டமை தோன்ற, “வள்ளியை யென்றலின்” என்றும், அத்தகைய வள்ளி யோரைக் காண்டலே தமக்கும் பேரின்பந் தருவ தென்பார், “காண்கு வந்திசின்” என்றும், காணவருவோர் தகுதி நோக்கி அவர் குறிப்பறிந்து தகுவன வழங்குவது வள்ளியோரது செயலாதலால், யான் கருதியது தேர்ந்து அதனை முடித்துத் தருக என்பார், “உள்ளியது முடித்தி” என்றும் கூறினார். பழையவுரைகாரரும், வள்ளிய னென்பதற்கு “வள்ளியை யென்றது இடவழுவமைதி” யென்றும், உள்ளியது முடித்தி யென்றது, “யான் நினைத்து வந்த காரியத்தை முடி யென்றவா” றென்றும், “முடித்தி யென்றது முன்னிலை யேவல்வினை” யென்றும் கூறுவர். பதிகம் கூறுவது போல, சேரமான் பக்கத்துத் தம்மைக் கொள்ளல் வேண்டு மென்பது ஈண்டு முன்னிய கருத்து என்பதும் ஒன்று. இனி, உள்ளியது முடித்தி யென்பதற்கு, கருதிய கருத்தைக் கருதியவாறே முடிக்கின்றா யென்றும், அத்தகைய வினைத் திட்பமும் தூய்மையு முடைய நீ, நீடு வாழ்க என்பார், “வாழ்க நின் கண்ணி” என்றா ரென்றும் உரைத்தலு மொன்று. 3-9. வீங்கிறை ............ மாறே உரை : வீங்கு இறை - அகன்ற சந்து பொருந்திய வளையணிந்த; தடைஇய - பெருத்த; அமைமருள் பணைத் தோள் - மூங்கில் போலும் பருத்த தோளையும்; மழைக்கண் - குளிர்ந்த கண் களையும்; ஏந்து எழில் - உயர்ந்தெழுதலையும்; வனைந்து வரல் இள முலை - தொய்யில் எழுதப்பட்டு வருதலையுமுடைய இளமுலையினையும்; பூந்துகில் அல்குல் - பூத்தொழில் செய்யப்பட்ட உடையணிந்த அல்குலையும்; தேம்பாய் கூந்தல் - வண்டு பாய்ந்தொலிக்கும் கூந்தலையும்; மின் இழை விறலியர் - மின்னுகின்ற இழை யினையுமுடைய விறலியர்; நின் மறம் பாட - நின்னுடைய போர்வீரத்தைப் புகழ்ந்து பாட; இரவலர் புன்கண் தீர - அவ்விறலியர்க்கே யன்றி, இரப்பவர் வறுமை கெடுதற்கும்; உரை சால் நன்கலம் - புகழமைந்த நல்ல அணிகலன் களை; நாடொறும் வரைவில வீசி - நாள்தோறும் வரையாது வழங்கி; அனையை ஆகல் மாறு - அத் தன்மையையுடைய னாதலாலே என்றவாறு. இறை, ஆகுபெயராய் வளைக்காயிற்று. இறையை மூங்கிற்கே ஏற்றுவாரு முளர். தடைஇய, தடவென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சக் குறிப்பு. தடைஇய அமை என்றதற்கேற்பப் பணைத்தோள் என்றார். ஏந்தெழில் இளமுலை வனைந்து வரலிளமுலை யென இயையும். வனைதல், தொய்யி லெழுதுதல். “நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீ கூறு” (கலி. 64) என்றும், “தொய்யில் சூழ் இளமுலை” (கலி. 125) என்றும் வருதல் காண்க. எச்சவும்மை தொக்கது. இனி, பழையவுரைகாரர், “தடைஇய அமை, பருத்த மூங்கி” லென்றும் “நின் மறம் பாட வீசி யெனக் கூட்டி, நின் மறம் பாடா நிற்க, அதனைக் கேட்டிருந்து வீசி யென வுரைக்க” என்றும், “வீசி யென்னும் எச்சத்தினை ஆக லென்னும் தொழிற்பெயரொடு முடிக்க” என்றும், “அனையை யாகன் மாறே யென்றது, அவ்வீசுதற்கு ஏற்ற அத்தன்மையை யுடையை யாகையா னென்றவா” றென்றும் “மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள்படுவதோ ரிடைச்சொல்” என்றும், “அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லு முதலாயின” வென்றும் கூறுவர். 9-11. எனையதூஉம் ............. மன்னியரோ உரை : எனையதூஉம் - எத்துணைச் சிறிது காலமேனும்; உயர் நிலை உலகத்துச் செல்லாது - துறக்க வுலகுக்குச் செல்லாமல்; இவண் - இவ்வரச வாழ்க்கையிலே; நின்று - நிலைபெற்று நின்று; இரு நில மருங்கின் - பெரிய நிலவுலகத்தின்கண்; நெடிது மன்னியர் - நெடுங்காலம் வாழ்வாயாக என்றவாறு. துறக்க வுலகு செல்பவர் சிறிது போதில் மீளாராதலால், “எனையதூஉம்” என்றார். எனையதூஉம் என்றற்கு எத்துணை யின்பச் சிறப்புடையதாயினு மென்றுமாம். “எனையதூஉ மென்றது சிறிது காலமும் என்றவாறு” என்றும், “உம்மை நெடுங்காலமே யன்றிச் சிறிது காலமு மென எச்சவும்மை” யென்றும் பழையவுரையும் கூறும். “இருநில மருங்கின்” என்றதனால், இவணென்றது அரசவாழ்க்கை யாயிற்று. இதுகாறும் கூறியது, ஒல்லார் யானை காணின், நில்லாத் தானை இறை கிழவோய், வள்ளியை என்றலின் காண்கு வந்திசின்; உள்ளியது முடித்தி, நின் கண்ணி வாழ்க; விறலியர் மறம் பாட, இரவலர் புன்கண் தீர, நாடோறும் நன்கலம் வரைவில வீசி அனையை யாகன்மாறே, எனையதூஉம், உயர்நிலை யுலகத்துச் செல்லாது இவண் நின்று, நில மருங்கின் நெடிது மன்னியரோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “இறை கிழவோய், நின்னை வள்ளிய னென்று யாவரும் கூறுதலானே நிற் காண்பேன் வந்தேன்; யான் உள்ளியதனை நீ முடிப்பாயாக வேண்டும்; நின் கண்ணி வாழ்வதாக; விறலியர் நின் மறம் பாட, இரவலர் புன்கண் தீரும்படி நன்கலங்களை வரைவில வீசி, அத்தன்மையை யாகையாலே, என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிது காலமும், இவ்வுலகத்தினின்றும் உயர்நிலை யுலகத்திற் செல்லாதே, இவ் விருநில மருங்கிலே நெடுங்காலம் நிலை பெறுவாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க,” என்றும், “இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி வாழ்த்தியவா றாயிற்று” என்றும் கூறுவர். 5. துஞ்சும் பந்தர் 1. ஆன்றோள் கணவ சான்றோர் புரவல நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் 5. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித்தே ரண்ணல் 10. வாரா ராயினும் மிரவலர் வேண்டித் தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும் நசைசால் வாய்மொழி யிசைசா றோன்றல் வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப் பெய்துபுறந் தந்து பொங்க லாடி 15. விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றறா லியரோ பெரும வல்கலும் நனந்தலை வேந்தர் தாரழிந் தலற நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருதுசினந் தணிந்த செருப்புக லாண்மைத் 20. தாங்குநர்த் தகைந்த வொள்வாள் ஓங்க லுள்ளத்துக் குருசினின் னாளே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : துஞ்சும் பந்தர் 1-2. ஆன்றோள் ............... கொற்றவ உரை : ஆன்றோள் கணவ - கற்புக்குரிய மாண்புகளாலமைந்த நங்கைக்குக் கணவனே; சான்றோர் புரவல - நற்குணங்களால் நிறைந்த சான்றோரை யாதரிக்கும் தலைவனே; அடுபோர்க் கொற்றவ - கொல்லுகின்ற போரைச் செய்யும் வேந்தே; நின் நயந்து வந்தனென் - நின்னை விரும்பிக் காண்பான் வந்தேன் என்றவாறு. கற்புடைய மகளிர்பால் காணப்படும் மாண்குண மனைத் தும் நிரம்பியிருத்தல் பற்றி, அரசமா தேவியை “ஆன்றோள்” என்றார். “கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்” (தொல்.கற்.11) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. சான்றோர் - நற்குணங் களால் நிறைந்த பெருமக்களும் வீரர்களுமாவர்; இவ் விருதிறத் தோராலும் அரசர்க்குச் செங்கோன்மையும் வெற்றியு முண்டா தலால், “சான்றோர் புரவல” எனச் சிறப்பித்தார். இவ்வாறு நற்குண நற்செய்கைகளால் மேம்படும் அரசரைக் காண்டலில் கற்றோரெவர்க்கும் விருப்ப முண்டாதல் இயல்பாதலால், “நின் நயந்து வந்தனென்” என்றார். காரியம் காரணமாக வுரைக்கப்பட்டது. சிறப்புடைய தலைமக்களையும் அரசரையும் பாடுமிடத்து அவர்தம் சிறப்புக்கு ஆக்கமாகும் கற்புடைய அவர் மனைவியையும் சார்த்திப் பாடுதல் பண்டையோர் மரபு; “மட மகளிர், தாம் பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும், தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்” (கலி. 39) என்பதனால், மகளிர் கற்பு கணவர்க்கும் தமர்க்கும் ஆக்கமாதல் காண்க. 3-6. இன்னிசை .......... பொருந உரை : இன்னிசைப் புணரி இரங்கும் - இனிய ஓசையையுடைய அலைகள் ஒலிக்கின்ற; பௌவத்து - கடல்வழியாக வந்த; நன் கல வெறுக்கை - நல்ல கலன்களாகிய செல்வம்; துஞ்சும் பந்தர் - தொகுக்கப்பட்டிருக்கும் பண்டசாலைகள் உள்ள; தாழை கமழும் கானல் அம் பெருந்துறை - தாழையின் மணம் கமழும் கானற் சோலை நிற்கும் பெருந்துறையையுடைய; தண் கடற் படப்பை - தண்ணிய கடற்கரைப் பகுதியாகிய; நன்னாட்டுப் பொருந - நல்ல நாட்டுக்குத் தலைவனே என்றவாறு. புணரி, அலை. ஒரே வகையாக இடையறாத முழக்கத்தைச் செய்துகொண்டே யிருத்தல் பற்றி, “இன்னிசைப் புணரியிரங்கும் பௌவம்” எனப்பட்டது. இக் கடல்வழியாக வேறு நாடுகளி லிருந்து கலங்களில் சீரிய பொன்னும் மணியும் முதலிய கலன்கள் கொணரப்படுதல் தோன்ற, “பௌவத்து நன்கல வெறுக்கை” யென்றார். வெறுக்கை, செல்வம். நன்கலத்தின் மிகுதி தோன்ற “வெறுக்கை” யென்பது நிற்றல் காண்க. வெறுத்தல் மிகுதிப் பொருட்டாதலை, “வெறுத்த கேள்வி” (புறம். 53) என்பதனா லறிக. இனிப் பழையவுரை, “பௌவத்து நன்கல வெறுக்கை யென்றது, பௌவத்திலே வந்த நன்கலமாகிய வெறுக்கை யென்றவா” றென்றும், “நன்கல வெறுக்கை துஞ்சு மென்ற சிறப்பானே இதற்குத் துஞ்சும் பந்தர் என்று பெயராயிற்” றென்றும் கூறுவர் பந்தர், பண்டசாலை (Godowns) பெருந்துறை யிடத்தே கானற்சோலை யுண்மை தோன்ற, “கானலம் பெருந் துறை” யென்றார். படப்பை, சார்ந்துள்ள நிலப்பகுதி. மனைப் படப்பை, காவிரிப் படப்பை என வரும் வழக்காறு காண்க. பொருவிறந் தானைப் “பொருந” என்றார். முருக வேளையும் “போர்மிகு பொருந” (முருகு. 276) என்று நக்கீரர் கூறுவர். 7-9. செவ்வூன் .......... அண்ணல் உரை : செவ்வூன் தோன்றா - தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி தோன்றாதவாறு செய்த; முதிரை வெண் துவை - துவரையால் அரைக்கப்பட்ட வெள்ளிய துவையலையும்; வால் ஊன் வல்சி - வெண்மையான வூன்கலந் தமைத்த சோற்றையு முண்ணும்; மழவர் மெய்ம்மறை - மழவருக்கு மெய்புகு கவசம் போன்றவனே; குடவர் கோவே - குடநாட்டவர்க்குத் தலைவனே; கொடித்தேர் அண்ணல் - கொடிகட்டிய தேரை உடைய அண்ணலே என்றவாறு. செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையா தலால் “வெண்டுவை” யென்றும், சிவந்த வூனாயினும் அத் துவையில் தன் செம்மை தோன்றா தாயினமையின் “செவ்வூன் தோன்றா” வென்றும் கூறினார். பழையவுரைகாரரும், “செவ்வூன் தோன்றா வெண்டுவை யென்றது, அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தேன்றாத வெள்ளிய துவை யென்றவா” றென்றே கூறுவர். முதிரை, துவரை அவரை முதலாயின. வாலூன் என்றது வெள்ளிய நிணமிக்க வூனாயிற்று. துவையிலும் வல்சியிலும் ஊனே மிகுந்து நிற்றலால், இம் மழவர் சோற்றினும் ஊனே பெரிதுண்ப ரென்பது பெறப்படும். வல்சி மழவ ரென்றது “தம் செல்வச் செருக்கானே சோறுண்பது பெரிதன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே யுணவாகவுடைய வீர ரென்றவா” றெனப் பழையவுரை கூறும். மெய்ம்மறை, இதற்குச் “சான்றோர் மெய்ம்மறை” யென்புழிக் (பதிற். 14) கூறினாம். மழவர், ஒருவகை வீரர்; “உருவக் குதிரை மழவர் ஓட்டிய” (அகம். 1) என்று வருதல் காண்க. இவர் வாழும் நாடு, மழநாடு எனப்படும். திருச்சிராப்பள்ளி மாநாட்டுக் காவிரியின் வடகரைப்பகுதி மழநாடாகும். வடநாட்டவரை வடவர் என்பதுபோலக் குடநாட்டவர், குடவரெனப் பட்டனர். 10-12. வாரா ராயினும் ................ தோன்றல் உரை : இரவலர் வாராராயினும் - நாட்டில் இரவலர் இல்லாமையால் இரப்பவர் வாராதொழியினும்; வேண்டி - அவர்க்கு ஈத்துவக்கும் இன்பம் விரும்பி; தேரின் தந்து - பிற நாடுகளிலிருக்கும் இரவலரைத் தேரேற்றிக் கொணர்ந்து; ஆர் பதன் நல்கும் - உண்ணும் உணவு மிகக் கொடுக்கும்; நசை சால் வாய்மொழி - கேட்டார்ப் பிணிக்கும் வாய்மை மொழி யினையுடைய; இசை சால் தோன்றல் - புகழமைந்த தோன்றலே என்றவாறு. “வாராராயினும்” என்றும், “தேரிற்றந்து” என்றும் கூறிய தனால், நாட்டில் இரவலர் இன்மை பெற்றாம். அவ் விரவலர்க் கீத்துவக்கும் இன்பம் பெறல் வேண்டி அவரைத் தானே வலிய வருவித்தா னென்பார், “இரவலர் வேண்டித் தேரிற் றந்து” என்றார். இனிப் பழையவுரைகாரர், “இரவலரை யென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது” என்றும், “இரவலரை வேண்டி யென்றது தன்னாட்டு இரவல ரில்லாமை யான் அவரைப் பெற விரும்பி யென்றவா” றென்றும் கூறுவர். எனவே, தன்னாட்டில் வறுமையின்மையால் இரவலர் வாராராயினும் பிறர் நாட்டில் வறுமை யுண்மையால் இரவல ருண்மை தெரிந்து அவரைப் பெற விரும்பினா னென்பதே கருத்தாயிற்று. தேரிற்றந் தென்றதனால், இவனால் விரும்பிக் கொணரப்பட்ட இரவலர், புலவரும் பாணரும் கூத்தரும் பொருநருமாதல் பெறப்படும். இவர்கட்கு அரசர் தேர் முதலிய ஈதல் இயல்பாதலின், “பாணர் வருக பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென, இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம், கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடு வீசி” (மதுரை : 749-52) என்று பிறரும் கூறுதல் காண்க. இனித் தேரிற்றந் தென்றதற்குப் பழையவுரைகாரரும், “அவ் விரவலருக்கு அவ ருள்வழித் தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணி” யென்றும், “தேரா னென வுருபு விரிக்க” வென்றும் கூறி, “தேர்” எனத் தேர்ச்சியாக்கி அவ் விரவலரை அவருள்ள விடத்தில் தேடி அழைத் தென்றுமா” மென்றும் கூறுவர். ஆர்பதனல்கும் தோன்றல், வாய்மொழித் தோன்றல், இசைசால் தோன்றல் என இயைக்க. வாய்மை, கேட்டார்க் கினிமையும் நற்பயப்பாடும் உடைமையின், அதனை “நகைசால் வாய்மொழி” யென்றார். நசையை மொழிக்கேற்றினு மமையும். இசை, ஈதல்மே னிற்பதாகலின், அதனை மிக வுடையனாதலின், “இசைசால் தோன்றல்” என்பாராயினர். 13-21. வேண்டுவ ........... நாளே உரை : பெரும - பெருமானே; நனந்தலை வேந்தர் - அகன்ற இடத்தையுடைய வேந்தர்; அல்கலும் தார் அழிந்து அலற - நாடோறும் தமது தூசிப்படை கெடுதலால் ஆற்றாது புலம்ப; நீடு வரை அடுக்கத்த நாடு - நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந்த அவர் நாடுகளை; கைக்கொண்டு - கைப்பற்றி; பொருது சினம் தணிந்த - அவரைப் பொருது தொலைத்து அவர்பா லெழுந்த சினம் தணியப்பெற்ற; செருப் புகல் ஆண்மை - போரை விரும்பும் ஆண்மையினையும்; தாங்குநர்த் தகைத்த வொள்வாள் - எதி ரூன்றித் தடுக்கம் பகைவரை யழித்த ஒள்ளிய வாளையும்; ஓங்கல் உள்ளத்து - உயர்ந்த வூக்கத்தையு முடைய; குருசில் - குருசிலே; நின் நாள் - நின்னுடைய வாணாள்; வேண்டுவ அளவையுள் - வேண்டிய கால வளவினுள்; யாண்டு பல கழிய - யாண்டுகள் பல செல்ல; பெய்து - மழையைப் பெய்து; புறந் தந்து - உயிர்களைக் காப்பாற்றி; பொங்கல் ஆடி - மேலோங்கிப் பறக்கும் பிசிராய்க் கழிந்து; விண்டுச் சேர்ந்த வெண் மழை போல - மலையுச்சியை யடைந்த வெள்ளிய முகிலைப் போல; சென்றறாலியர் - சென்று கெடா தொழிவதாக என்றவாறு. பெரும, குருசில், நின் நாள் யாண்டு பல கழிய, வெண் மழை போலச் சென்றறாலியர் என முடிக்க. ஆண்மையும், வாளும், உள்ளமும் உடைய குருசில் என இயையும். பேரிடத்தை யுடையராதலின், பொர வாற்றாது வலி யழிந்தன ரெனத் தாம் கூறுவதை வலியுறுத்தற்கு, “நனந்தலை வேந்தர்” என்றும், அவர் விடுத்த தூசிப்படை நாடோறுந் தோற்றழிவது கண்டு வாய்விட்டலறின ரென்றற்கு, “அல்கலும் தாரழிந் தலற” என்றும் கூறினார். ஒருநாள் தாரழிந்ததற்கு வழிநாள் பலவும் அலற என்றற்கேற்ப, தாரழிந்து அல்கலும் அலற என இயைப் பினுமாம். பழையவுரைகாரர், “அல்கலும் நாடு கைக்கொண்டு” எனக் கூட்டி முடிப்பர். பகைவர் நாடு மலைப்பக்கத்து நாடென்பார், “நீடுவரை யடுக்கத்த நாடு” என்றார். பொருது வேறலால் சினம் தணியினும் போர்வேட்கை யொழியாது நிலைபெறுதலின், “பொருது சினந்தணிந்த” என்றவர், இடை யீடின்றிச் “செருப்புகலாண்மை” யினை எடுத்தோதினார். ஓங்குதற்குக் காரணமாகிய உள்ளத்தை “ஓங்கலுள்ள” மென்றார்; “மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு” (குறள். 595) என்று சான்றோர் கூறுதல் காண்க. படைப்புக்காலத்தே அவரவர்க்கு வரையப்பட்ட கால வெல்லையை “வேண்டுவ வளவை” யென்றார். வள்ளன்மையும் உயிர்புரத்தலும் சிறப்ப வுடைமை பற்றி, சேரலாதற்கு மழைமுகிலை யுவமை கூறலுற்று, அது மழை யினைப் பெய்து பின்னர் வெள்ளிய பிசிராய்ப் பறந்து கழிதல் போல, உவமைப்பொருளாகிய சேரலாதன் கழிதலாகாது எனப் பரிகரித்தற்கு, “பெய்துபுறந் தந்து பொங்கலாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச், சென்றறாலியரோ பெரும” என்றார். பெய்தோய்ந்த முகில் வெள்ளிய பிசிராய்க் கழியு மென்பதனை, “பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப் பட்டன, துவலை” (அகம். 217) என்றும், “எவ்வாயும், தன் தொழில் வாய்ந்த இன்குர லெழிலி, தென்புல மருங்கிற் சென்றற் றாங்கு” (நற். 153) என்றும் சான்றோர் கூறுமாற்றா னறிக. சென்றா லியரோ என்பதே பாடமாயின், சென்றறாலியர் எனற்பாலது சென்றாலியர் எனத் திரிந்ததெனக் கூறிக் கொள்க. இனிப் பழையவுரைகாரர் “பொங்கலாடி யென்றது எஃகின பஞ்சு போல வெளுத்துப் பொங்கி யெழுதலைச் செய்து என்றவா” றென்றும், “வெண்மழை போலச் சென்றறாலிய ரென்றது அம் மழை பெய்து புறந்தரும் கூற்றை யொத்து, அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை யொவ்வாது கழிகவென்றவா றென்றும் கூறுவர். நீடுவரை யடுக்கம் என்புழி, “அடுக்கம் ஈண்டு அடுக்குத” லென்றும், “மழையை அவன் றன்னோடுவமியாது அவன் நாளோடு உவமித்தது, அவனோடு அவன் நாளுக்குள்ள ஒற்றுமைபற்றி யென்க” வென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல, கொற்றவ, பொருந, மழவர் மெய்ம்மறை, கோவே, அண்ணல், தோன்றல், பெரும, குருசில், நின் நயந்து வந்தனென், நின் நாள் வெண்மழை போலச் சென்றறாலியரோ எனக் கூட்டி முடிக்க. “இதனாற் சொல்லியது, அவன் உலகுபுரத்தலும் தன் குறையும் கூறி வாழ்த்தியவாறாயிற்று.” 6. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி 1. விழவு வீற்றிருந்த வியலு ளாங்கண் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் 5. திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. துறை : ஒள்வா ளமலை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி 1-3. விழவு ........... கண்ணி. உரை : விழவு வீற்றிருந்த - விழவானது மிக்க சிறப்புடன் எடுக்கப் பட்ட; வியலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்தே, கோடியர் முழவின் முன்னர் - கூத்தர் முழக்கும் முழாவின் ஓசைக் கேற்ப அதன் முன்னின்று; ஆடல் வல்லான் அல்லன் - ஆடுந்தொழிலில் நம் சேரலாதன் வல்லவன் அல்லன்; அவன் கண்ணி வாழ்க - அவன் முடியில் சூடிய கண்ணி வாழ்வதாக என்றவாறு. விழாக் காலங்களில் ஊர்களில் கூத்தர் முழக்கும் முழ வோசையின் தாளத்திற் கேற்ப வீரர் கூடி ஆடுவது மரபாதலால், அதனுண்மை வற்புறுத்தற்குக் “கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லா னல்லன்” என்றார். வியலுள் ஆங்கண் விழா வயருமிடத்துக் கோடியர் முழவிற் கேற்ப ஆடுதல், பகை வேந்தரை வென்று மேம்படும் சிறப்பால் போர்க்களத்தே தேர் முன் நின்று குரவையாடும் வேந்தனான சேரலாதற்குப் பொருந்தாமை தோன்ற “ஆடல்வல்லா னல்லன்” என்றார். வியலுள், ஊர். ஆங்கண், இடம். கோடியர், கூத்தர். கோடியர் முழவின் முன்னர் ஆடல்வன்மை யின்மையால் சேரலாதற்குத் தாழ்வு சிறிது மில்லை யென்பது தோன்றக் கூறுவார், “வாழ்க வவன் கண்ணி” என்றார். இனி, அவன் போர்க்களத்தே பகைவரை வென்றாடும் குரவையில் வன்மை மிகவுடையன் என்பதனை மேலே கூறுகின்றார். 4-8. வலம்படு .......... கோவே உரை : வலம்படு முரசம் துவைப்ப - வெற்றி முரசம் மிக்கொலிப்ப; வாள் உயர்த்து - வாளை யுயர வேந்தி; இலங்கும் பூணன் - விளங்குகின்ற பூண்களை அணிந்து; பொலங்கொடி உழிஞையன் - பொன்னாற் செய்த உழிஞைக் கொடியைச் சூடி; மடம் பெருமை யின் - அறியாமை மிகுதியால்; உடன்று மேல்வந்த வேந்து - பகைகொண்டு போர் மேற்கொண்டுவந்து பொருத வேந்தர்; மெய் மறந்த வாழ்ச்சி - தம்முடம்பைத் துறந்து சென்று துறக்கத்தே வாழ்வு பெறுதலால்; வீந்துகும் - பட்டு வீழும்; போர்க்களத்து - போர்க்களத்திலே; ஆடும் கோ - இனிது ஆடுதல்வல்ல வேந்தனா வான் என்றவாறு. போருடற்றும் வீரரை யூக்கி வெற்றி பெறுவிக்கும் முழக்கத்தை யுடையதாதலின், “வலம்படு முரசம்” என்றும், அது பெரிது முழங்கு மாறு தோன்றத் “துவைப்ப” என்றும் கூறினார். பிறரும் “வலம்படு வியன்பணை” (பதிற். 17) என்றல் காண்க. வாளைக் கையிலேந்தித் தேர்த்தட்டிலே நின்ற வீரருடன் கைபிணைந்தாடும் சிறப்பைச் சுட்டி, “வாளுயர்த்து” என்றார். பூணன், உழிஞையன் என்ற வினைக்குறிப்பு முற்றுக்கள் “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்” (முருகு. 209) என்புழிப்போல எச்சப்பொருளவாயின. பழையவுரைகாரர், “பூணன் உழிஞைய னென்பன வினைக் குறிப்பு முற்”றென்பர். என்பராயினும், வினைமுடிபின் கண், பூணனாய், உழிஞையனாய் ஆடும் கோவென்றே யியைப்பர். அறிவுடையராயின் பணிந்து திறை பகரும் பண்பு மேற் கொள்வர்; அஃதின்மையின் உடன்று மேல்வந்தன ரென்பார், “மடம் பெருமையின்” என்றும், அதனால் அவர் தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழலுற்றா ரென்றற்கு “மெய்ம்மறந்த வாழ்ச்சி” யென்றும் கூறினார். நிலையில்லாத மெய்யை நிலையாகக் கருதாது அதனை மறந்து நிலைத்த புகழை விரும்பி மாய்தலால் உண்டாகும் துறக்கவாழ்வு, மெய்ம்மறந்த வாழ்ச்சியாயிற்று என வறிக. இவ் வாழ்வு கருதிப் போர்க்களத்தில் வேந்தரும் வீரரும் பொருது மடிதலால், “வீந்துகு போர்க்களம்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர் அஞ்சித் தம் மெய்யை மறந்த வாழ்வென்றவா” றென்றும், “வாழ்ச்சி மெய்ம் மறத்தல் காரணமாக அதன் காரியமாய் வந்ததாகலான், மெய்ம்மறந்த வென்னும் பெயரெச்சம் நிலமுதற் பெயர் ஆறுமன்றிக் காரியப் பெயரென வேறோர் பெயர் கொண்ட தெனப்படும்” என்றும், “வாழ்வு வெற்றிச் செல்வ” மென்றும், “வாழ்ச்சிக் களமெனக் கூட்டுக” என்றும், “இச் சிறப்பானே இதற்கு வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, முரசம் துவைப்ப வாளுயர்த்து இலங்கும் பூணனாய்ப் பொலங்கொடி யுழிஞையனாய்ப் போர்க்களத்து ஆடும்கோ, வியலுளாங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லானல்லன், அவன் கண்ணி வாழ்க என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று. 7. சில்வளை விறலி 1. ஓடாப் பூட்கை மறவர் மிடறப இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை யாடிய வலம்படு கோமான் 5. மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி 10. இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்க ணஞ்சும் 15. புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. துறை : விறலியாற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சில்வளை விறலி 5-6. மெல்லிய ............ விறலி உரை : சில் வளை விறலி - சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே; மெல்லிய வகுந்தில் - மென்மையான நிலத்திடத்த வாகிய வழியிலே; சீறடி ஒதுங்கிச் செல்லாமோ - சிறிய காலடிகளால் நடந்து செல்வேம் வருதியோ என்றவாறு. ஆடற்றுறைக் குரியளாதல் தோன்ற, “சில்வளை விறலி” யென்றார். “பல்வளை யிடுவது பெதும்பைப் பருவத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக் குரியளாதல் கூறியவாறு” என்றும், “இச் சிறப்பானே இதற்குச் சில்வளை விறலி யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரை கூறுகின்றது. “இன்புளி வெஞ்சோறு, தேமா மேனிச் சில்வளை யாயமொடு, ஆமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்” (சிறுபாண். 175:7) என்புழியும் விறலிக்குச் சில் வளையே கூறுமாறு காண்க. மெல்லிய வகுந்தில் என்பது பரலும் முள்ளுமின்றிச் செல்லும் வழி செம்மையும் மென்மையும் உடைத்தாதல் தோன்ற நின்றது. வகுந்து, வழி. “வகுந்து செல் வருத்தத்து வான்றுயர் நீங்க” (சிலப். 14 : 15) என்று சான்றோர் கூறுதல் காண்க. செல்லாமோ என்புழி ஓகாரம் எதிர்மறை : இது செல்லாம் என்னும் மறை வினையொடு புணர்ந்து உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்திச் செல்வோம் வருக என்னும் பொருள்பட நின்றது. செல்வாமோ என்பது செல்லாமோ என மருவி முடிந்தது என்றும் கூறுப. தில் : விழைவின்கண் வந்தது. 6-15. பாணர் கையது ............. வரற்கே உரை : இளம் துணைப் புதல்வர் நல்வளம் பயந்த - இளமையும் துணையாகும் தன்மையுமுடைய மக்களாகிய நல்ல செல் வத்தைப் பெற்றளித்த; வளம் கெழு குடைச்சூல் - வளமை பொருந்திய சிலம்பையும்; அடங்கிய கொள்கை - அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும்; ஆன்ற அறிவின் - நிறைந்த அறிவையும்; தோன்றிய நல்லிசை - குணஞ் செயல்களால் உண்டாகிய கெடாத புகழையுமுடைய; ஒண்ணுதல் மகளிர் - ஒள்ளிய நுதலின ராகிய காதல்மகளிர்; துனித்த கண்ணினும் - புலவியாற் சீறி நோக்கும் பார்வையினும்; இரவலர் புன்கண் அஞ்சும் - இரவலர் குறையிரந்து பசித்துன்பம் தோன்ற நோக்கும் பார்வை கண்டு மிக அஞ்சுகின்ற; புரவெதிர்கொள்வனை - நம்மைப் பாதுகாத்தலை மேற்கொண் டொழுகுவோனாகிய சேரமானை; பாணர் கையது - பாணரது கையிடத்தே யுள்ள தாகிய, பணி தொடர் நரம்பின் - தாழக் கட்டிய நரம்பினை; விரல் கவர் - கை விரலால் வாசித்தலை விரும்பும்; பேர் யாழ் - பேரியாழின்கண்; பாலை பண்ணி - பாலைப்பண்ணை யெழுப்பி; குரல் புணர் இன் இசை - குரலென்னும் நரம்பொடு புணர்த்த இனிய இசையில்; தழிஞ்சி பாடி- தழிஞ்சி யென்னும் துறை பொருளாக அமைந்த பாட்டினைப் பாடிச்சென்று; கண்டனம் வரற்கு - கண்டு வருதற்குச் செல்வோம், வருதியோ என்றவாறு. பாணர் கையது பேரியாழ், நரம்பின் விரல்கவர் பேரியாழ் என இயையும். நரம்பினை இறுக்கும் முறுக்காணி கோட்டின் பக்கத்தே தாழவிருத்தலின், அதனோடு தொடர்படுத்திப் பிணித்திருக்கும் இசை நரம்பை, “பணி தொடர் நரம்” பென்றார். பணியா மரபினையுடைய எத்தகையோரையும் தன்பாலெழும் இசையாற் பணிவிக்கும் சிறப்புப் பற்றி இவ்வாறு கூறினா ரெனினுமாம்; “ஆறலை கள்வர் படைவிட அருளின், மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை” (பொருந. 21 - 22) என்று சான்றோர் கூறுதல் காண்க. கவர்தல், விரும்புதல்; “கவர்வு விருப்பாகும்” என்பது தொல்காப்பியம். கைவிரல்களாற் பலகாலும் வாசித்துப் பயின்ற யாழாதல் தோன்ற, “விரல் கவர் பேரியாழ்” எனப்பட்டது. “விரல் கவர் யாழென்றதனாற் பயன், வாசித்துக் கைவந்த யாழ் என்றவாறு” என்று பழையவுரையும் கூறுதல் காண்க. பேரியாழ், யாழ்வகையுள் ஒன்று. கோல் தொடுத் திசைப்பனவும், விரல் தொடுத் திசைப்பனவும் என இப் பேரியாழ் வகை கூறப்படு கின்றது. கோல் தொடுத் திசைப்பனவற்றுள் ஆயிரம் நரம்பு பெற்று ஆயிரம் கோல் தொடுத்து இசைப்பனவும் பண்டை நாளில் இருந்தன வென்று சிலப்பதிகாரம் பழையவுரை கூறுகிறது; (அடி. நல். உரைப்பாயிரம்.) இப் பேரியாழ் வகையின் நீக்குதற்கு, “விரல் கவர் பேரியாழ்” எனச் சிறப்பித்தா ரென்றுணர்க. குரலென்னும் நரம்பிசையினை ஆதார சுருதியாகப் புணர்த்துப் பாலைப்பண்வகை பலவும் பாடப்படுதல் பற்றி, “குரல் புணர் இன்னிசை” யென்றார். இப் பாலைவகையினைச் சிலப்பதிகார அரங்கேற்று காதை யுரையிற் காண்க. இனி, குரலென்றது மிடற் றோசை யென்று கொள்வாரு முளர். தழிஞ்சியாவது போரில் அழிந்தார்பால் கண்ணோடிச் செய்வன செய்தல். இது பொருளாகப் பாடும் இசைப்பாட் டையும் தழிஞ்சி யென்றார். “தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப், பணியா மரபின் உழிஞை பாட” (பதிற். 46) என்று உழிஞைப்பாட்டு இசைக்கப்படுமாறும் காண்க. தழிஞ்சி பாடி, கண்டனம் வரற்கே என இயையும். சென்றென ஒருசொல் வருவித்துக் கொள்க. இம்மையிற் புகழும் மறுமையிற் பேரின்பமும் பயக்கும் பெறலரும் பேறாதலின், மக்கட் பேற்றினை, “நல் வளம்” என்றும், அதனைத் தெரித்துமொழி கிளவியாற் கூறுவார், “இளந்துணைப் புதல்வர் நல்வள” மென்றும் கூறினார். புதல்வராகிய நல்வள மென்க. “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின் றெய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோர்” (அகம். 66) எனச் சான்றோர் கூறுதல் காண்க. மக்களைப் பயத்தல் கணவர்க்கு உவகை தருவதொன்றாதல் பற்றி, மகளிரை, “இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த மகளிர்” என்றார். “கணவ னுவப்பப் புதல்வர்ப் பயந்து” (மதுரைக். 600) என்று மாங்குடி மருதனார் கூறுவர். குடைச்சூல், சிலம்பு; புடைபட்டு உட்கருவை யுடைத்தாதல் பற்றி, சிலம்பு குடைச்சூ லெனப் பட்டது. “பத்திக்கேவணப் பசும்பொற் குடைச்சூல், சித்திரச் சிலம்பு” (சிலப். 16 : 118-9) என்பதன் உரை காண்க. வளங்கெழு குடைச்சூல் என்புழி, வளம், பொன்னினும் மணியினும் தொழிற் சிறப்பமையச் செய்த சிறப்பு. மன மொழி மெய்களால் அடங்கிய ஒழுக்கமுடைமை தோன்ற, “அடங்கிய கொள்கை” யென்றார். உடையாரது அடக்கம் அவருடைய ஒழுக்கத்தின் மேலேற்றப் பட்டது. அரசமகளிர்க்குக் கல்வியறிவும் இன்றியமையாதெனக் கருதினமையின், “ஆன்ற அறிவின்” என்றார். “அறிவும் அருமையும் பெண்பா லான” (பொ. 209) என்று ஆசிரியர் ஓதுவது காண்க. இல்வாழ்வின் முடிபொருள் நல்லிசை நிலைபெறுவித்த லெனக் கருதியொழுகுவது அவ் வாழ்க்கைத் துணையாம் மகளிர் கடமையாதலை யுணர்ந்து அறஞ்செய்து புகழ் மிகுத்தல் பற்றி, “தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர்” என்றார். “புகழ்புரிந் தில்லிலோர்க்கில்லை” (குறள். 59) என்பதனால், புகழ்புரிதல் மனைமகளிர் கடமையாத லறிக. துனித்தல் உணர்ப்புவயின் வாரா வூடல் மிகுதி. துனித்த வழிக் காமவின்பம் சிறவாமையின், மகளிர் துனிக்கு ஆடவர். அஞ்சுவ ரென வறிக. “இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே, துனி செய்து துவ்வாய்க்காண் மற்று” (குறள். 1294) எனச் சான்றோர் கூறுமாற்றா னறிக. இல்லிருந்து செய்யும் நல்லறப் பயனாக நுகரும் காதலின்பத்தினும், அவ்வறப் பயனாக எய்தும் ஈதலின்பத்தையே பெரிதாகக் கருதுமாறு தோன்ற, “மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வன்” என்றார். செல்வத்துப் பயனும் இதுவே யென்பது பற்றி, இரவலர் புன்கண் கண்டு அஞ்சுதலை விதந்தோதினார். “சேர்ந்தோர் புன்க ணஞ்சும் பண்பின், மென்கட் செல்வம் செல்வமென் பதுவே” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. கண்டனம் வரற்குச் செல்லா மோதில் சில்வளை விறலியெனக் கூட்டிக் கொள்க. 1-4. ஓடாப்பூட்கை ........... கோமான் உரை : துணங்கை யாடிய வலம்படு கோமான் - வெற்றிக் குறியாகத் துணங்கைக் கூத்தாடிய வெற்றி பொருந்திய சேரமானாகிய வேந்தன்; ஓடாப் பூட்கை மறவர் - தோற்றோடாத மேற் கோளை யுடைய வீரரது; மிடல் தப - வலி கெடும்படியாகப் பொரு தழித்தலால்; குருதி - அழியும் அவருடைய உடற்குருதி; இரும்பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப - தான் அணிந் துள்ள பெரிய பனந்தோட்டாற் செய்த மாலையும் பெரிய வீரக் கழலும் சிவக்குமாறு; பனிற்றும் - துளிக்கும்; புலவுக் களத் தோன் - புலால் நாறும் போர்க்களத்தே அமைந்த பாசறையில் உள்ளான் என்றவாறு. போரில் வெற்றிபெற்ற வேந்தன் வீரருடன் துணங் கையாடு வது பற்றி, “துணங்கை யாடிய வலம்படு கோமான்” என்றார். பூட்கை, மேற்கோள். மிடல், வலி. தபவெனக் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. புடையல், மாலை. குருதி புடையலும் கழலும் சிவப்பப் பனிற்றும் என்க. “பனிற்றுதல் தூவுதல்” என்றுரைத்து, “பனிற்றுவது புண்பட்ட வீரருடல் எனக் கொள்க” என்பர் பழையவுரைகாரர். எனவே மறவர் மிடல் தபுதலால், புண்பட்ட அவருடல் குருதியைத் தெளித்துத் தூவுமென்பது கருத்தாயிற்று. களமென்றது கங்கையிடைச் சேரியென்புழிப் போலப் பாசறைமேல் நின்றது. இதுகாறும் கூறியது, “விறலி, புரவெதிர் கொள்வனைத் தழிஞ்சி பாடிக் கண்டனம் வரற்குச் செல்லாமோ; அப் புரவெதிர் கொள்வனாகிய கோமான் இதுபொழுது தான் அவ் வெதிர்கோடற் கேற்பப் புலவுக் களத்தோன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “வரற்குச் செல்லாமோ எனக் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்” றென்றும், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்போடு அவன் கொடைச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். (மாறுதல் - மாறிக் கூட்டுதல்) 8. ஏவிளங்கு தடக்கை 1. ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் வெண்டோட் டசைத்த ஒண்பூங் குவளையர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர் 5. இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய்படு பறியா வயங்குசெந் நாவின் 10. எயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை வான வரம்ப னென்ப கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் 15. புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின் அலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏவிளங்கு தடக்கை 12-19. கானத்து ............. கிழவோனே உரை : கானத்துக் கறங்கு இசைச் சிதடி - காட்டிடத்தே ஒலிக்கின்ற ஓசையையுடைய சிதடிகள்; பொரி அரைப் பொருந்திய - தமது பொரித்த அடிப்பகுதியிடத்தே கொண்ட; சிறி இலை வேலம் - சிறுசிறு இலைகளையுடைய வேல மரங்கள்; பெரிய தோன்றும் - மிகுதியாய்த் தோன்றும்; புன் புலம் வித்தும் - புன்செய்களையுழுது பயிர் செய்யும்; வன் கை வினைஞர் - வலிய கையினையுடைய உழவர்; சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி - சிறப்பினையுடைய பலவாகிய கடாக்களை அவற்றின் கழுத்திற் கட்டிய மணிகள் ஒலிக்கும்படி பூட்டி யுழுது; நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின் - கலப்பையின் கொழுச் சென்ற படைச் சாலின் பக்கத்தே; அலங்கு கதிர் திருமணி பெறூஉம் - அசைகின்ற ஒளிக் கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறும்; அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடம் அமைந்த ஊர்களை யுடைய நாட்டுக்கு; கிழவோன் - உரியவன் என்றவாறு. சிதடி, சிள்வீடு என்னும் வண்டு. வேலங்காட்டிடத்தே மரங்களின் பொரித்த அரையிடத்தே தங்கிப் பேரிரைச்சல் செய்தல்பற்றி, “கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய வேலம்” என்றார். சிறிய இலை, சிறியிலை யென நின்றது; “புன்புலத்த மன்ற சிறியிலை நெருஞ்சி” (குறுந். 202) என்று வருதல் காண்க. வேல், வேலம் என அம்முப்பெற்றது. பெரிய தோன்றும் என்புழிப் பெருமை, மிகுதி மேற்று; “பெரிய கட் பெறினே, யாம் பாடத் தானுண்ணு மன்னே” (புறம். 235) என்புழிப்போல. புன்புலம், புன்செய். புன்புலம் வித்தும் உழவராதலின், “வன்கை வினைஞர்” என்றார். உழுதொழிலிற் பயிற்சி யுடைமைபற்றி, “சீருடைப் பல்பகடு” என்றார். நாஞ்சில், கலப்பை. கொழு வழி, கொழுச்சென்ற வழி; அஃதாவது படைச்சால் என வறிக. பெரிய தோன்று மென்றற்கு, “பெருகத் தோன்றும்” என்றும், “பல்பகட்டை யென விரித்து, அவை யொலிப்பப் பூட்டி யெனக் கொள்க” என்றும் பழையவுரை காரர் கூறுவர். உழுது என ஒருசொல் வருவிக்க. உழுவார் உழவுப் பயனை யுடனே பெறுவார் போல உயர் மணிகளைக் கொழு வழி மருங்கே பெறுகின்றன ரென்பார், “அலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்” என்றார். வைப்பு, ஊர்கள். 2-8. வெண்தோட்டு .......... பெருமகன் உரை : வெண் தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையர் - வெள்ளிய பனந்தோட்டிலே கட்டிய ஒள்ளிய குவளைப்பூவை யுடையராய்; வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் - வாளினது வாயால் வடுப்பட்ட மாட்சிமை பொருந்திய தழும்புகளையுடைய உடம்பினராய்; செல் உறழ் மறவர் - இடிபோலத் தாக்கும் வீரர்; தம் கொல் படைத் தரீஇயர் - தத்தம் கொல்லுகின்ற படையை யேந்தி வருவார்; இன்று இனிது நுகர்ந்தன மாயின் - இன்று நாம் நுகரக்கடவவற்றை இனிது நுகர்ந்தே மாயினும்; நாளை - நாளைக்கு; மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது - மண்ணாற் கட்டப்பட்ட பகைவர் மதில்களைக் கடந்தபின்னன்றி; புகா உண்குவ மல்லேம் - உணவு கொள்ளேம்; எனக் கூறி - என வஞ்சினம் கூறி; கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்; தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஒப்பப் போர் வினை செய்யக் கருதிய வீரர்களையுடைய பெருமகன் என்றவாறு. வெள்ளிய பனந்தோட்டிலே நல்ல நிறமான பூக்களை விரவி நிறம் விளங்கத் தொடுத்தணியும் இயல்பினராதலின், “வெண் தோட்டசைத்த ஒண்பூங் குவளையர்” என்றார். ஈண்டுக் குவளை கூறியதுபோல, வேங்கை வாகை முதலியவற்றையும் பனந் தோட்டுடன் கட்டுவர் என்ப; இதனை “வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து” (புறம். 265) என்றும், “மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வீ” (பதிற். 66) என்றும் வருதலாலறிக. குவளையர் : குறிப்பு முற்றெச்சம். இனிப் பழையவுரைகாரர், “வெண்தோடு பனந்தோ” டென்றும், “தோட்டின் கண்ணென விரிக்க” வென்றும், “அசைத்தல் தங்குவித்தல்” என்றும், “குவளைய ரென்பது வினையெச்ச வினைக் குறிப்புமுற்று; அதனைக் கூறி யென்பதனோடு முடிக்க” என்றும் கூறுவர். வாள்வாயினை வாண்முக மென்றார். வாளால் வெட்டுண்டு தைப்புண்டு வடுப்பட்டுத் தோன்றுதலால் “வாண் முகம் பொறித்த” என்றும், முகத்தினும் மார்பினும் படும் புண்ணை விழுப்புண் ணெனப் பேணி மகிழ்பவாதலால், “மாண்வரி யாக்கைய”ரென்றும் கூறினார். வெண்போழ்க் கண்ணியர் என்னும் பாட்டிலும் (பதிற். 67) வீரர் சிறப்பு, “வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய” ரென்று பாராட்டப்படுமாறு காண்க. குவளையரும் யாக்கையருமாகிய மறவர், தத்தம் படை களையெடுக்க லுற்றபோதே, படை தொடும் தம் கையால் பகைவர்மதில் கடந்தல்லது உணவு தொட்டுண்ணேம் என வஞ்சினம் கூறுமாறு தோன்ற, “இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவமல்லேம் புகா” எனக் கூறுகின்றனர். படையினைத் தொடும்போது வஞ்சினங் கூறுதலுண்மையினை, “சுணங்கணி வனமுலையவ ளொடு நாளை, மணம்புகு வைக லாகுத லொன்றோ..... நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாரா வுலகம் புகுத லொன்றெனப், படைதொட் டனனே குருசில்” (புறம். 341) என்பதனா லறிக. இம் மறவரது மறப் பண்பை, “செல்லுறழ் மறவர்” என்று சிறப்பிக்கின்றார். இடியினும் மிக்க வன்மையுடைமை தோன்ற, “செல்லுறழ் மறவர்” என்பாராயினரென வறிக. அரைத்த மண்ணாற் செய்யப்படுவது பற்றி இஞ்சி, “மண்புனை இஞ்சி” யெனப்படுகின்றது. “அரைமண் இஞ்சி” (புறம். 341) என்று சான்றோர் கூறுதல் காண்க; “இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானால்” (தொல். புறத். 12. நச். மேற்.) என்று சான்றோர் இவ்வாறு வஞ்சினம் கூறுமாறு காண்க. இனிக் குவளையரும் யாக்கை யருமாய், செல்லுறழ் மறவராகிய பகைவரைக் கொல்லும் படை தருவா ராய்க் கூறிக் கண்ணிய வயவர் என்றுரைப்பினுமாம். பழைய வுரைகாரர், “யாக்கையராகிய மறவர் என இருபெய ரொட்டு” என்பர். அன்றியும், குவளையராய், யாக்கையராகிய மறவரைக் கொல்படை தருவாராய் என இயைத்தலு மொன்று. வெண் தோட்டசைத்த வொண்பூங் குவளை யென்றது, அடையாள மாலை. கண்ணி, போர்க்கண்ணி. “கண்ணி கண்ணுதல், தாங்கள் சூடிய போர்க்கண்ணிக் கேற்ப வினைசெயக் கருதுத” லென்பது பழையவுரை. 9-12. பொய்படுபு ........ என்ப உரை : பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின் - தாம் கூறும் சொற்கள் பொய்யாதலை யென்றும் அறியாமையால் விளக்க மமைந்த செவ்விய நாவினையும்; எயில் எறி வல் வில் ஏ விளங்கு தடக்கை - பகைவர் மதில்களை யெறியும் வலிய வில்லும் அம்பும் ஏந்தி விளங்கும் பெரிய கையினையும்; ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை - உயர்ந்த அழகிய மார்பினையு முடைய வீரராகிய சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவன் என்றும்; வான வரம்பன் என்ப - வானவரம்பனாகிய சேரலாத னென்றும் அறிந்தோர் கூறுவர் என்றவாறு. காலமும் இடமும் செய்யும் வினையும் சீர்தூக்கித் தாம் கூறும் சொற்கள் தம் பயனைப் பயத்தலில் சிறிதும் தவறுவ தின்மையின், “பொய் படுபு அறியா” என்றும், பொய்யாமையே நாவிற்குச் சிறப்பும் செம்மையுமாதலால் “வயங்கு செந்நாவி” னென்றும், கூறினார். “எயிலெறி வல் வில் என்பதற்கு விற்படை” யென்றும், “ஏவிளங்கு தடக்கை யென்றது, ஏத் தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய தடக்கை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு ஏவிளங்கு தடக்கை யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரை கூறுகிறது. வான வரம்ப னென்ப என்றார், சான்றோர். சேரர்கட்குப் பொதுவாயமைந்த இப் பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல் விளங்கு செயலைச் செய்தா னென்பது தோன்ற, இப் பத்தின் பதிகமும் “வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” யென்பது காண்க. நாடு கிழவன், வயவர் பெருமகன் என்றும், சான்றோர் மெய்ம்மறை யென்றும் வானவரம்ப னென்றும் கூறுப என இயைக்க. 1. ஆடுக ............. பரிசிலர் உரை : விறலியர் - விறலியர்களே; ஆடுக - நீவிர் ஆடுவீர்களாக; பரிசிலர் பாடுக - பாணரும் பொருநருமாகிய பரிசில் மாக்களே, நீவிர் பாடுவீர்களாக என்றவாறு. சேரலாதனைக் காணப் போந்து அவன் திருமுன் நிற்கும் விறலியரும் பாணரும் பொருநருமாகிய பரிசிலர்களுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பினை இதுகாறும் கூறியவாற்றாற் கூறிக் காட்டினாமாதலின், கண்ட அவர் செய்தற்குரியன இவை யென்பார், “ஆடுக விறலியர்” என்றும், “பாடுக பரிசிலர்” என்றும் கூறினார். இதுகாறும் கூறியது, நாடு கிழவோன் வயவர் பெருமக னென்றும், சான்றோர் மெய்ம்மறை யென்றும், வானவரம்ப னென்றும் அறிந்தோர் கூறுப; அவனைக் கண்டு வியக்கும் நீவிர் ஆடுக, பாடுக என வினைமுடிவு செய்து கொள்க. இனி, “வயவர் பெருமகன், சான்றோர் மெய்ம்மறையாகிய வான வரம்பனைப் புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் தம் கொழுவழி மருங்கின் திருமணி பெறும் நாடுகிழவோன் என்று சொல்லுவார்கள்; அவன் அவ்வாறு செல்வக் குறையிலனா தலான், அத் தரத்திற்கேற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக்கேற்ப விறலியராயுள்ளீர், ஆடலைக் குறையறச் செலுத்துமின்; பரிசிலராயுள்ளீர் நீயிரும் நும் கவிகளைப் பாடிக் கைவரப் பண்ணுமின் என்று மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “வானவரம்பன், நாடு கிழவோன் எனக்கூட்ட வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். “இதனாற் சொல்லியது, அவனாட்டுச் செல்வமும் அதற் கேற்ற அவன் கொடையும் கூறியவாறாயிற்று. ஆடுக பாடுக வென்றதற்கு அவன்பாற் சென்று ஆடுக பாடுக வெனக் கூறாது இவ்வாறு கூறியதன் கருத்து, ஆற்றுப்படை யென்னாது செந்துறைப் பாடாணென்று கிடந்தமையானெனக் கொள்க,” என்பதும் பழையவுரை. 9. மாகூர் திங்கள் 1. பகல்நீ டாகா திரவுப்பொழுது பெருகி மாசி நின்ற மாகூர் திங்கள் பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பப் புல்லிருள் விடியப் புலம்புசே ணகலப் 5. பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி ஞாயிறு குணமுதற் றோன்றி யாஅங்கு இரவன் மாக்கள் சிறுகுடி பெருக உலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச் 10. செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம் அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற் சினஞ்செலத் தணிமோ வாழ்கநின் கண்ணி பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய 15. மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும் ஆறுமுட் டுறாஅ தறம்புரிந் தொழுகும் நாடல் சான்ற துப்பிற் பணைத்தோள் பாடுசா னன்கலந் தரூஉம் நாடுபுறந் தருத னினக்குமார் கடனே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மாகூர் திங்கள் 1-6. பகல் ......... தோன்றியாஅங்கு உரை : பகல் நீடு ஆகாது - பகற்போது நீளாமல்; இரவுப் பொழுது பெருகி நின்ற - இராக்காலம் நீண்டுள்ள; மாகூர் மாசித் திங்கள் - விலங்குகள் குளிர்மிக்கு வருந்தும் மாசித்திங்களிலே; பனிச் சுரம் படரும் - பனிமிக்க அரிய வழிகளை நடந்து செல்ல நினையும்; பாண்மகன் உவப்ப - பாணன் மகிழ்ச்சி யெய்துமாறு; புல் இருள் விடிய - புல்லிய இருட் காலமாகிய விடியற்போது கழிய; புலம்பு சேண் அகல - இருளிலும் பனியிலும் வருந்தும் வருத்தம் நெடிதகன் றொழிய; பாய் இருள் நீங்க - உலக மெங்கும் பரந்துள்ள இருள் நீங்கும் வண்ணம்; ஞாயிறு பல் கதிர் பரப்பி - ஞாயிறானது பலவாகிய தன் கதிர்களைப் பரப்பி; குண முதல் தோன்றியாங்கு - கீழ்த்திசையிலே தோன்றியது போல என்றவாறு. பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகி நின்ற, மாகூர் மாசித் திங்கள் என இயைக்க. பகலும் இரவும் திங்கட்குச் சினையாகலின், சினைவினைகள் முதல்வினை கொண்டன. நீடு ஆகாது என்பன ஒரு சொல்லாய் நீளாமல் என்னும் பொருள் தந்தன. பழையவுரைகாரரும், “நீடாகாது பெருகி என நின்ற பகலிரவென்னும் சினைமேல் வினையெச்சம், மாசி நின்ற என்னும் தம் முதலது வினையொடு முடிந்தன” என்றும், “இனி அவ்வெச்சங்களைத் திரிப்பினு மமையும்” என்றும் கூறுவர். அவர் மாசி நின்ற மாகூர் திங்கள் எனக் கிடந்தபடியே கொண்டு, “மாசி யென்றது மாசித் தன்மையை” யென்றும், “மாகூர்தல் மாக்கள் குளிராலே உடல் வளைதல்” என்றும் கூறுவர். முன்பனியின் பிற்பாதியும், பின்பனியின் முற்பாதியுமாகிய தையும் மாசியு மாகிய திங்களே பனிமிக்குக் குளிரால் உயிர்களை வருத்துங் காலமதலால், “தையு மாசியும் வையகத் துறங்கு” என்பதுபற்றி, மாசித் திங்கள் சிறப்பித் தோதப்பட்டது. மாக்கள் குளிர் மிகுதியால் இரை தேடச் செல்லாது பசி மிக்கு உடல் சுருங்கி ஒடுங்கிக் கிடப்பது குறித்து “மாகூர் திங்கள்” என்றார், “மாமேயல் மறப்ப மந்தி கூர” (நெடுநல். 9) என்றாற்போல. பழுமரம் தேர்ந்து செல்லும் பறவைகளைப் போலச் செல்வமும் வண்மையும் சேர வுடையாரை நாடிச்செல்லும் பரிசின் மாக்களுள் பாணர் நெடுஞ்சுரங்களையும் அரிய வென்னாது கடந்து செல்வராதலால், “பனிச்சுரம் படரும் பாண்மகன்” என்றார். விடியலில் எழுந்து வெயில் வெம்மை மிகுதற்குள் சுரத்தைக் கடந்து செல்லும் கருத்தினனாயினும், பின்பனியின் கடுமையால் வருந்தும் வருத்தம் ஞாயிற்றின் தோற்றத்தால் நீங்குவதுபற்றி, “பாண்மகன் உவப்ப” என்றார். கடையாமத்தின் பிற்பகுதியில் ஞாயிற்றின் வரவு காட்டும் வெள்ளொளி பரந்து இரவுப்போதில் திண்ணிதாய்ச் செறிந் திருந்த இருளை நீக்குதலால், செறிவு குன்றிச் சிறிது சிறிதாய்த் தேய்ந்து கெடும் அவ் விருளைப் “புல்லிருள்” என்றும், அது நீங்கிய காலைப்போதில் உயிர்த்தொகைகள் தத்தம் உறையுளில் தமித்து ஒதுங்கிக் கிடந்த நிலையின் நீங்கித் தெளிந்த வுணர்வுடன் வெளிப் போதருவதால், “புலம்பு சேணகல” என்றும், இரவுப்போதில் உலக முற்றும் அணுப் புதைக்கவும் இடமின்றிச் செறிந்திருப்பது பற்றி, “பாயிருள்” என்றும் சிறப்பித்தார் என வறிக. ஞாயிறு தோன்றுதற்கு முன்பே, அதன் பலவாகிய கதிர்கள் முன்னே போந்து இருட் கூட்டத்தின் ஈடழித்து விளக்கம் செய்யும் சிறப்புத் தோன்ற, “பல்கதிர் பரப்பி” என்றார். புல்லிருள் விடிதல் பாண்மகனுவத் தற்கும், பல்கதிர் பரப்புதல் பாயிருள் நீங்குதற்கும் புலம்பு சேணகறற்குங் காரணமாய் நின்றன. இனி, இப் பாட்டின்கண் மாசித்திங்களை மாகூர் திங்கள் என்று சிறப்பித்தது கொண்டு “இச் சிறப்பானே இதற்கு மாகூர் திங்கள் என்று பெயராயிற்” றென்றும், “திங்கள், மாதம்” என்றும் பழையவுரைகாரர் கூறுவர். பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகிநின்ற மாசித் திங்களிலே, உவப்ப, விடிய, அகல, நீங்க, பரப்பி, ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு என முடிக்க. 7-10. இரவல் ........... அரணம் உரை : இரவல் மாக்கள் சிறு குடி பெருக - இரத்தலைத் தொழிலாக வுடைய பரிசிலர்களின் சிறுமையுற்ற குடிகள் சிறுமை நீங்கிப் பொருட்பேற்றால் பெருக்க மெய்தவும்; உலகம் தாங்கிய மேம்படு - உலகுயிர்களை இனிது புரத்தலால் குடக்கில் சேரர் குடியில் மேம்பட்ட; கற்பின் - கல்வி யறிவினையுடைய; வில்லோர் மெய்ம்மறை - வில்வீரர்க்கு மெய் புகு கருவி போல்பவனே; வீற்றிருங் கொற்றத்துச் செல்வர் செல்வ - வீறும் பெருங் கொற்றமுடைய வேந்தர்க்கெல்லாம் வேந்தா யுள்ளோனே; சேர்ந்தோர்க்கு அரணம் - தன்னைப் புகலென் றடைந்தோர்க்குக் காப்பாயிருப்பவனே என்றவாறு. ஞாயிறு குணமுதல் தோன்றியதனால் பாண்மகன் உவகை யெய்துதலும் உயிர்த்தொகை புலம்பு நீங்கி இன்ப மெய்துதலும் பயனாதல்போல நின் தோற்றத்தால் இரவலர் சிறுமைக்குடி பெருக்க மெய்துவதும், உலகம் நல்லாட்சி பெற்று இன்ப மெய்துவதும் உண்டாயின என்பார், “ஞாயிறு குணமுதற் றோன்றியாங்கு, மேம்படு கற்பின் மெய்ம்மறை” யென்றார். ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு, நீ குடதிசைக்கட் டோன்றினை யென்பது, “உவமப்பொருளின் உற்ற துணர” (தொல். உவம. 30) நின்றது. இசைத்தமிழ் வளர்க்கும் ஏற்றமுடைய ராயினும் இரந்து வாழ்தல்பற்றி, “இரவன் மாக்கள்” என்றும், இரத்தற்கு ஏது அவர் குடியின் சிறுமை யென்பது எய்த, “சிறுகுடி” யென்றும், சிறுமை நீங்கிப் பொருட்பெருக்கம் எய்துதலால் சேரலாதனுடைய கொடை நலம் தோன்றுதலின், “பெருக” என்றும், “மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்” (புறம். 186) என்பதைத் தேர்ந்து தான் அதற்கு உயிரெனக் கருதி, அரசு காவல் புரிந்து மேம்படுதல் விளங்க, அதனை விதந்தும் கூறினர். இம் மேம்பாடு அவன் பெற்ற கல்விச் சிறப்பைத் தோற்று வித்தலின், “கற்பின் மெய்ம்மறை” யென்றார். கற்பு, “தொலை யாக் கற்பு” (பதிற். 80) எனப் பிறாண்டும் வருதல் காண்க. இனி, கற்பினை வில்லோர்க்கு ஏற்றி யுரைப்பினுமமையும். சேரர்க்கு விற்படையே சிறந்ததாதலின், “வில்லோர் மெய்ம்மறை” யென்றார். அவர் கொடியினும் விற்பொறியே காணப்படும். வீற்றையுடைய கொற்றத்தை, வீற்றிருங் கொற்ற மென்றார். வீறு, பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. கொற்றமுடையார் செல்வ முடைய ராதலால், அரசரை, “கொற்றத்துச் செல்வர்” என்றும், அச் செல்வர் பலருள்ளும் தலைசிறந்த வேந்தனாதல் தோன்ற, “செல்வர் செல்வ” என்றும் கூறினார். செல்வமுடை யார்க்குச் சீரிய செல்வமாவது தன்னைச் சேர்ந்தோர் “புன்கண் அஞ்சும் மென்கண்மை” (நற். 210) என்பது பற்றி, “சேர்ந்தோர்க் கரணம்” என்றார். 14-19. பல்வேறு ....... கடனே உரை : பல் வேறு வகைய நனந்தலை - நாடும் காடும் அவலும் மிசையு மெனப் பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து; ஈண்டிய - வந்து தொக்கனவும்; மலையவும் கடலவும் - மலை யிடத்தனவும் கடலிடத்தனவுமாகிய; பண்ணியம் பகுக்கும் ஆறு - செல்வப் பொருள்களை அறம் முதலிய துறைகளில் வகுத்துச் செய்யும் இறைமாட்சியால்; அறம் முட்டுறாது புரிந்தொழுகும் - செய்தற்குரிய அறங்கள் குன்றாமல் செய்தொழு கும்; நாடல் சான்ற துப்பின் - பகைவர் ஆராய்தற் கமைந்த வலி பொருந்திய; பணைத்தோள் - பருத்த தோளையுடைய; நினக்கு - வேந்தனாகிய நினக்கு; பாடு சால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதலும் கடன் - பெருமையமைந்த உயர்ந்த செல்வங் களைத் திறையாக நல்கும் நாடுகளைக்காத்தலும் கடனாதலால் என்றவாறு. ஈண்டியவும் மலையவும் கடலவுமாகிய பண்ணியம் என இயைக்க. இனி, நனந்தலை யீண்டிய, பல்வேறு வகைய பண்ணிய மென்றுமாம். பண்ணிய மென்றது, பொதுவருவாயாகிய பண்டங்க ளென்றும், நன்கல னென்றது, அவற்றுட் சிறப்புடைய மணி முதலாயின வென்றும் கொள்க. இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என்ற நால்வகை அரசியற் செயல்களுள், வகுத்தலால் அரசு மாட்சி யெய்துவது பற்றி, “பண்ணியம் பகுக்கும் ஆறு” என்றார். இவ்வாறு பகுக்குமிடத்து, அறம், பொருள், இன்பம் குறித்துப் பகுத்தல் அறமாதல் கண்டு, அது செய்தொழுகும் வேந்தனை, “பகுக்கும் ஆறு முட்டுறாது அறம் புரிந்தொழுகும் நினக்கு” என்றார். இனிப் பழையவுரைகாரர், ஈண்டிய பண்ணிய மென்றி யைத்து, “நனந்தலை யென்றது பர மண்டலங்களை”யென்றும், “அம் மண்டலங்களில் தன் பகைவர்பால் ஈண்டிய பண்டங் களை” யென்றும், அறம் புரிதல் என்றதற்கு, “நாடு காவலாகிய அறத்திலே மேவுதல்” என்றும், “பகுக்கும் ஆறென்றது, அப் பண்ணியங்களைப் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் நெறி யென்றவா” றென்றும் கூறுவர். நாடல் சான்ற துப்பிற் பணைத்தோள் நினக்கு என்பார், தோளினது வலியை நாடல் சான்ற துப்பு என்றது, தோள் வலியை எளிதாகக் கருத மாட்டாமையின், பகைவர்தம் வலியும் துணைவலியும் படைவலியும் ஒருசேரத் தொகுத்து நோக்கி இவன் தோள்வலிக்கு ஆற்றாமை கண்டு எண்ண மிடுதற் கேதுவாகிய வலி யென்றவாறு. பாடு, பெருமை. இனிப் பழையவுரைகாரர், பணைத்தோளையுடைய நினக்கு என்று இயைக்காமல் பணைத்தோட்கு அணியும் நன்கலம் என்றி யைத்து, “தோட்கல னென்றது தோளிற்கேற்ற கல மென்ற வாறு” என்றும், “தோட்குத் தருமென்றுமா” மென்றும் கூறுவர். நினக்குமார் கடன் என்புழி உம்மை பிரித்துக் கூட்டப் பட்டது. ஆர் : அசைநிலை; (தொல். இடை. 23) மார் என்றே கொண்டு அசைநிலை யாக்குவர் பழைய வுரைகாரர். தரூஉம் என்றதனால், திறைப்பொருளாதல் பெற்றாம். அத் திறைப் பொருளும் அறம் புரிந் தொழுகுதற்குப் பயன்படுதலால், “நாடு புறந்தருதலும் கடன்” என்றாரென வுணர்க. 11-13. அறியாது ............ கண்ணி உரை : நின் பகைவர் - நினக்குப் பகையாய வேந்தர்; துப்பின் அறியாது - தம் வலி யொன்றே பற்றி நின் வலி வலியியல்பை நன்கறியாது; எதிர்ந்து - எதிர்த்துப் பொருது; குறை யுற்று - வலி யிழந்து; பணிந்து - நின்னைப் பணிந்து; திறை தருப ஆயின் - திறையினைக் கொணர்ந்து தருவராயின்; சினம் செலத் தணிமோ - அவர்மேற் சென்ற நின் சினம் தணிவாயாக; நின் கண்ணி வாழ்க - நின் கண்ணி வாழ்வதாக என்றவாறு. நினக்குப் பகையாயினார், நாடல் சான்ற நின் துப்பினை நாடாது பொருதழிந்ததற்கு ஏது, அவர்தம் அறியாமை யென்றும், அதுதனக்கும் ஏது, தம் வலியினைத் தாமே வியந்து கொண்டமையே யென்றும் கூறுவார், “அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்று” என்றும், அதனால் அவர் செய்யக்கடவது பணிந்து திறை தருவதை யல்லது வேறில்லை யென்றற்கு “பணிந்து திறை தருப நின் பகைவர்” என்றும், அவர்கட்கு நீ செய்வது, சினந் தணிந்து அருளுவதே யென்பார், “சினம் செலத் தணிமோ” என்றும், எனவே பகைத்துக் கெட்டார்க்கும் அருள் சுரந்தளிக்கும் நீ நெடிது வாழ்க என வாழ்த்துவதே எம் போன்றார் செயற்பால தென்பார், “வாழ்க நின் கண்ணி” யென்றும் கூறினார். “பாடுசால் நன்கலம் தரூஉம், நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே” என்ப வாகலின், “சினம் செலத்தணிமோ” என்றாரென வுணர்க. மோ : முன்னிலை யசை. இக் கருத்தே பற்றிப் பிற சான்றோரும், “புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே, பெரிய தப்புந ராயினும், பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலின்” (பதிற். 17) என்று கூறுதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றால், பகல் நீடாகாது இரவுப் பொழுது பெருகி நின்ற மாசித் திங்களிலே, பாண்மக னுவப்ப, புல்லிருள் விடிய, புலம்ப அகல, பாயிருள் நீங்க, பல்கதிர் பரப்பி, ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு, சிறுகுடி பெருக, உலகந் தாங்கிய, குடக்கிற் சேரர் குடியில் தோன்றி மேம்பட்ட கற்பினையுடைய மெய்ம்மறை, செல்வர் செல்வ, சேர்ந்தோர்க் கரணம், பண்ணியம் பகுக்கும் ஆறு முட்டுறாது அறம் புரிந்த பணைத்தோளையுடைய நினக்கு நாடு புறந்தருதலும் கடனா தலால், அறியாது எதிர்த்து குறையுற்றுப் பணிந்து பகைவர் திறை தருபவாயின், சினம் தணிவாயாக; அதனால் நின் கண்ணி வாழ்க என்று முடிக்க. பழையவுரைகாரர். “வில்லோர் மெய்ம்மறை, செல்வ, சேர்ந்தோர்க் கரணம், நின்தோட்கேற்ற நன்கலங்களைத் திறை தரும் நாடுகளைப் புறந்தருதல் நின் கடனாயிருக்குமாகலான், நின் பகைவர் அறியா தெதிர்த்து துப்பிற் குறையுற்றுப் பணிந்து திறை தருவராயின் சினம் செலத் தணிமோ, நின் கண்ணி வாழ்க என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “நாடு புறந்தருதல் நினக்குமார் கடன் என்பதன்பின் சினஞ் செலத் தணிமோ என்பதைக் கூட்ட வேண்டுதலின், மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறிய வாறாயிற்று.” 10. மரம்படு தீங்கனி 1. கொலைவினை மேவற்றுத் தானை தானே இகல்வினை மேவலன் றண்டாது வீசும் செல்லா மோதில் பாண்மகள் காணியர் மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியாது 5. அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி அஞ்சே றமைந்த முண்டை விளைபழம் ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும் மறாஅ விளையு ளறாஅ யாணர்த் தொடைமடி களைந்த சிலையுடை மறவர் 10. பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வருங்கட லூதையிற் பனிக்கும் துவ்வா நறவின் சாயினத் தானே. துறை : விறலியாற்றுப் படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மரம்படு தீங்கனி 4-12. மிஞிறு ........ சாயினத்தானே உரை : புறம் மிஞிறு மூசவும் - புறத்தே வண்டினம் மொய்த்து நிற்கவும்; தீஞ்சுவை திரியாது - தீவிய சுவையில் மாறுபடாமல்; அரம் போழ்கல்லா மரம்படு தீங்கனி - அரிவாளால் அறுக்க மாட்டாத மரத்தில் உண்டாகிய இனிய கனியாகிய; அம் சேறு அமைந்த - அழகிய தேன் நிறைந்த; முண்டை விளை பழம் - முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள்; ஆறு செல் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும் - வழிச் செல்வோர்க்கு உணவாகி அவர்தம் வழி நடந்த களைப்பைப் போக்கும்; மறாஅ விளையுள் - மாறாத விளைவினை நல்கும் வயல்களால்; அறாஅ யாணர் - நீங்காத புதுவருவாயினையுடைய; தொடைமடி களைந்த சிலையுடை மறவர் - அம்பு தொடுப்பதில் மடிதலில்லாத வில்லையுடைய வீரர்கள்; பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வரும் - பொங்குகின்ற சிறு நுண்திவலைகளை யெறியும் அலைகளோடும் படிகின்ற மேகத்தோடும் கலந்துவரும்; கடல் ஊதையின் பனிக்கும் - கடற்காற்றால் குளிர் மிக்கு நடுங்கும்; துவ்வா நறவின் சாய் இனத்தான் - நறவென்னும் ஊரின் கண்ணே சாயலை யுடைய மகளிர் கூட்டத்தே யுள்ளான் என்றவாறு. தடுக்கும் நறவு என்றும், அறாஅ யாணர் நறவு என்றும், ஊதையிற் பனிக்கும் நறவு என்றும் இயையும். நறவு, ஓர் ஊர். நற வென்பது உண்ணப்படும் கள்ளிற்கும் பெயராதலால், அதனின் நீங்குதற்குத் “துவ்வா நறவு” என்றார். இது வெளிப் படை. மரம்படு தீங்கனி யாகிய முண்டை விளை பழம் என்க. எதுகை நோக்கி, முட்டையென்பது முண்டையென மெலிந்து நின்றது. மணத்தால் பழத்தை யடைந்த வண்டினம், அதன் உறுதியான தோலைக் கிழித்து உள்ளிருக்கும் சேற்றை யுண்ண மாட்டாமையின் புறத்தே மொய்த்தன வென்றற்கு, “மிஞிறு புறம் மூசவும்” என்றார். வலிய தோலால் புறத்தே மூடப்பட்டு வண்டின மூசியவழியும் உள்ளிருக்கும் பழத்தின் சுவை திரியாமையின், “தீஞ்சுவை திரியாது” என்றார். திரியாது என்ற வினையெச்சம் விளைபழம் என்பதில் விளைதல் என்னும் வினை கொண்டது. மரம்படு தீங்கனி என்புழிப் படுதல் என்னும் வினையொடு முடிப்பினும மையும். இனி, இத் தீங்கனி விளையும் மரத்தின் மாண்பு கூறுவார், “அரம் போழ்கல்லா மரம்” என்றார். பழையவுரைகாரரும், “மிஞிறு புறம் மூசவும் தீஞ்சுவை திரியாமை அப் பழத்தின் புறத்து வன்மையால்” என்றும், “அரம் போழ்கல்லா வென்றது, புறத்து வன்மையால்”அரிவாளும் போழமாட்டா வென்றவாறு” என்றும், “அரம் போழ் கல்லா மரம்படு தீங்கனி என்றது, புறக் காழனவாகிய பனை முதலிய வற்றின் தீங்கனியை நீக்குதற்” கென்றும், “இச் சிறப்பானும் முன்னும் பின்னும் வந்த அடைச் சிறப்பானும் இதற்கு மரம் படு தீங்கனியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். அஞ்சேறு, அழகிய தேன். இக் காலத்தில் பழத்தின் சேற்றைப் பழச்சாறு என்பர். அழகு, இனிமை. அமைதல், நிறைதல். சேறு நிறையாவழிக் கனி, தீவிதாகாமையின், “அஞ்சே றமைந்த முண்டை விளை பழம்” என்றார். முற்றக் கனிந்த பழ மென்றற்கு, விளை பழமெனப் பட்டது. பழையவுரைகாரரும், “முண்டை விளை பழம், முட்டைகள் போலும் விளை பழ” மென்றும், “முட்டை யென்றது மெலிந்த” தென்றும், “மரம்படு தீங்கனியாகிய முட்டை விளை பழம் என இரு பெயரொட்” டென்றும் கூறுவர். வழிச்சாலைகளில் இனிய பழமரங்களை அறத்தின் பொருட்டு வைத்து வளர்ப்பது பண்டையோர் இயல்பு. வழிச் செல்வோர், அப்பழங்களை யுண்டு வழிவருத்தம் போக்கிக் கொள்வது பயன். இக்காலத்தே சாலையிடத்துப் பழ மரங்கட்குக் காவலிட்டு வழிச்செல்வோர்க்குப் பயன்படாவாறு நீக்கிச் சாலை வருவாயாகப் பொருளீட்டுவது இயல்பாய் விட்டது. “அறந் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்” (குறுந். 209) என்றும், “நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” (அகம். 271) என்றும் வருவன காண்மின். இவ்வண்ணம் இப் பழங்கள் வழிச்செல்வோர்க்குப் பயன்படுதலை, “செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” என்று சான்றோர் கூறியது போல, ஈண்டும், “ஆறுசென் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும்” என்பது காண்க. ஓய்தகை, களைப்பு. பண்டை நாளெல்லாம் பெருக விளைந்த வயல், உரம் குன்றி விளைவு பெருகா தொழிதலை, “வயல் விளைவு மறுப்ப” என்ப வாகலின், விளைவு பெருக நல்கும் வயலை, “மறாஅ விளையுள்” என்றார். “தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும், எல்லா வுயிர்க்கும் இல்லால் வாழ்க்கை” (புறம். 203) என ஊன் பொதி பசுங் குடையா ரென்னும் சான்றோர் கூறுதல் காண்க. இவ் விளையுளால் நாளும் புதுவருவாய் குன்றாமையின், “அறாஅ யாணர் நறவு” என்றார். பழையவுரை காரர், “அறாஅ யாண ரென்றது இடையறாத கடல் வருவாய் முதலாய செல்வங்களை” யென்பர். தொடுத்தல் தொடை யென நின்றது; விடுத்தல் விடையாயது போல. மடிந்திருத்தலை வெறுத்துப் போர்வேட்டுத் திரியும் செருக்குடைய ரென்றற்கு, “தொடை மடி களைந்த சிலையுடைய மறவர்” எனப்பட்டனர். இவர்களை ஊதைக் காற்றன்றிப் பிற எவ்வுயிரும் எச் செயலும் நடுங்குவித்தல் இல்லை யென்பது தோன்ற, “சிலையுடை மறவர் ஊதையிற் பனிக்கும் நறவு” என்றார். அவ் வூதையும், புணரியும் மங்குலும் கலந்து வந்தல்லது பனிக்கு மாற்ற லுடைத்தன் றென்பதும் உரைத்தவாறு காண்க. பழையவுரைகாரரும், “மறவர் கடலூதையிற் பனிக்கும் நறவெனக் கூட்டி ஆண்டு வாழும் மறவர் கடலூதையால் மட்டும் நடுங்கும் நற வென்க” என்றும், “நறவு ஓர் ஊர்” என்றும், “துவ்வா நறவு வெளிப்படை” யென்றும் கூறுவர். இனி, அவர், தொடை மடி யென்றற்கு, “அம்பு தொடுத்து எய்தலில் மடிதல்” என்றும், “புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும் கொள்க” என்றும் மயங்கி யென்றதை, “மயங்க வெனத் திரிக்க” வென்றும், “மயங்குவது வருகின்ற வூதை யெனக் கொள்க” என்றும் கூறுவர். சாய், மென்மை. ஈண்டு ஆகுபெயரால், மென்மையை இயல்பாகவுடைய மகளிர்மேல் நின்றது. இம் மகளிர் சேரலா தனைத் தம் ஆடல் பாடல் முதலியவற்றால் இன்புறுத்துபவர். இவருடைய கூட்டத்திடையே வேந்தன் உள்ளான் என்பார், “சாயினத்தான்” என்றார். 1-3. கொலை வினை ........... காணியர் உரை : தானை கொலை வினை மேவற்று - தன் சேனை போராகிய கொலைத்தொழிலை விரும்பும் இயல்பிற்றாக; தான் இகல் வினை மேவலன் - தான் சாயினத்தா னாயினும் உள்ளத்தால் பகைவரைப் பொரும் தொழிலையே விரும்புவ னாதலால்; தண்டாது வீசும் - நாம் சென்றவழி நமக்குப் பகைப்புலத்தே பெறும் அருங்கலன் களை வரையாது வழங்குவன் (ஆகவே); பாண்மகள் - பாண் மகளே; காணியர் செல்லாமோ - அவனைக் காண்டற்குச் செல்வேமோ என்றவாறு. பாண்மகள் : அண்மைவிளி. தில் : விழைவின்கண் வந்தது. புறத்தே நோக்குமிடத்துச் சேரலாதன் நறவென்னு மூரிடத்தே மகளிர்கூட்டத்திடையே இருந்தா னாயினும், அவனுள்ளம் பகைவரை யழித்தலாகிய இகல் வினையே மேவி யுளதென்பார், “தானே இகல் வினை மேவலன்” என்றும், அவன் உள்ளக்குறிப் பின்வழி அவன் தானை வினை மேவிய இயல்பிற் றென்பார், “கொலை வினை மேவற்றுத் தானை” என்றும், இவ்வண்ணம் வினை மேற்கொண்டிருப்பினும் நம்போலும் கூத்தர்க்கும் பாணர்க்கும் கொடுப்பன கொடுத்தலிற் குறைவிலன் என்றற்குத் “தண்டாது வீசும்” என்றும், ஆகவே அவன்பாற் செல்வது தக்க தென்பார், “செல்லாமோ தில் காணியர்” என்றும் கூறினார். காணியர் : செய்யிய ரென்னும் வினையெச்சம்; இது செல் லாமோ என்னும் முற்றுவினை கொண்டது. இதுகாறும் கூறியவாற்றால், மரம்படு தீங் கனியாகிய விளை பழம் மாக்கட்கு ஓய்தகை தடுப்பதும், அறாஅ யாணரை யுடையதும், மறவர் பனிக்கும் இடமாயதுமாகிய நறவு என்னும் ஊரின்கண் ஆய மகளிர் கூட்டத்திடையே இருந்தானாயினும், தன் சேனை கொலைவினை மேவற்றாக, தான் இகல்வினை மேவல னாதலால், நாம் சென்று காணின் தண்டாது வீசும்; ஆதலால், பாண் மகளே, அவனைக் காணியர் செல்லாமோ என்று வினைமுடிவு செய்து கொள்க. இனிப் பழையவுரைகாரர், “அவன்றான் இப்பொழுது துவ்வா நறவின் சாயினத்தான்; இனித் தானை கொலைவினை மேவற்று; ஆகலால் தான் இகல்வினை மேவலன்; இன்ன பொழுது இன்ன விடத்து எழுமெனத் தெரியாது, பாண்மகளே, நாம் அவனைக் காணியர் செல்லாமோ; செல்லின் தண்டாது வீசும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறியவா றாயிற்று.” ஆசிரியர்: கபிலர் பாடிய ஏழாம் பத்து பதிகம் மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன் நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி 5. வெருவரு தானைகொடு செருப்பவ கடந்து ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி ஆக்கிய பொழுதி னறத்துறை போகி மாய வண்ணனை மனனுறப் பெற்றவர் கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப் 10. புரோசு மயக்கி மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழி யாதனைக் கபிலர் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவி யாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகி ழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண்கெழு ஞாலம், பறைக்குர லருவி : இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ. செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 1. புலாஅம் பாசறை 1. பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல் ஓவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் 5. பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ புலர்ந்த சாந்திற் புலரா வீகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர விரவல ரினைய 10. வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான் ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின் நல்லிசை தரவந் திசினே யொள்வாள் 15. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை நிலவி னன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவி னன்னநின் கலிமகி ழானே. துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புலாஅம் பாசறை 1-8. பலாஅம் ........ பாரி உரை : பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் - பலாமரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பிலிருந்தொழுகுந் தேனை; வாடை துரக்கும் - வாடைக்காற்று எறியும்; நாடு கெழு பெருவிறல் - பறம்பு நாட்டிற் பொருந்திய பெரிய விறல் படைத் தவனும்; ஓவத் தன்ன வினை புனை நல்லில் - ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும்; பாவை யன்ன நல்லோள் கணவன் - பாவை போன்ற நல்ல அழகும் நலமும் உடையாட்குக் கணவனும்; பொன்னின் அன்ன பூவின் சிறியிலை - பொன்போலும் நிறமுடைய பூவினையும் சிறிய இலையினையும்; புன் கால் - புல்லிய அடிப்பகுதியினையுமுடைய; உன்னத்துப் பகைவன் - உன்ன மரத்துக்குப் பகைவனும்; எம் கோ - எமக்கு அரசனும்; புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பின் - பூசிப் புலர்ந்த சாந்தினை யுடைய அகன்ற மார்பினையும்; புலரா ஈகை மாவண் பாரி - குன்றாத ஈகையால் பெரிய வள்ளன்மையினையு முடையானு மாகிய பாரி என்றவாறு. பெருவிறலும், கணவனும், பகைவனும், கோவுமாகிய பாரி என இயையும். பலாஅம் பழுத்த பசும்புண் என்றதனால், பலாவின் பழமும் அது முதிர்ந்து வெடித்திருத்தலும் பெற்றாம். பலாஅப் பழுத்த எனற்பாலது மெலிந்து நின்றது. பழத்தின் வெடிப்புப் புண் போறலின், “பசும்புண்” என்றும், அதனினின்று அரித் தொழுகும் தேனை “அரியல்” என்றும் கூறினார். “புண்ணரிந்து, அரலை புக்கன நெடுந்தா ளாசினி” (மலைபடு. 138-9) என்று பிறரும் கூறுதல் காண்க. வாடைக்காற்று வீசுங்கால் இத் தேன் சிறுசிறு துளிகளாக எறியப்படுதலின், “வாடை துரக்கும்” என்றார். நாடு, பறம்பு நாடு. “பறம்பிற் கோமான் பாரி” (சிறுபாண். 91) என்று சான்றோர் கூறுமாறு காண்க. ஓவியம், ஓவமென நின்றது, “ஓவத்தன்ன விடனுடை வரைப்பில்” (புறம். 251) என்றாற்போல. பல்வகை வேலைப்பாட்டால் அழகு செய்யப்பட்ட மனை யென்றற்கு, “வினை புனை நல்லில்” என்றும், மேனி நலத்தால் பாவை போறலின், “பாவை யன்ன” என்றும், குணநலத்தின் சிறப்புத் தோன்ற, “நல்லோ” ளென்றும் கூறினார். பாவை யுவமம் மேனி நலத்தை விளக்கி நிற்றலை, “பாவை யன்ன பலராய் மாண்கவின்” (அகம். 98) என வரும் சான்றோர் உரையானு மறிக. உன்னம், ஒருவகை மரம். இதன் பூ பொன்னிறமாயும் இலை சிறிதாகவும் அடிமரம் புற்கென்றும் இருக்கு மென்பது, “பொன்னினன்ன பூவிற் சிறியிலைப், புன்கா லுன்னம்” என்பதனால் விளங்குகிறது. உன்னமரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம்; காண்பார்க்கு வெற்றி யெய்துவ தாயின் தழைத்தும், தோல்வி யெய்துவதாயின் கரிந்தும் காட்டும் என்ப. அது கரிந்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி யெய்தும் வேந்தன் என்றற்கு “உன்னத்துப் பகைவன்” என்றார்; தான் எய்துவது தோல்வியென உன்னமரம் காட்டவும் காணாது, பொருது வென்றி யெய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவனென்பாராயினரென்க. பூசிய சாந்தின் ஈரம் புலர்ந்தாலும், ஈதற்குக் கொண்ட நெஞ்சின் ஈரம் எஞ்ஞான்றும் புலராது ஈகை வினையைப் புரிவித்தல்பற்றி, “புலர்ந்த சாந்திற் புலரா வீகை” என இயைத்துச் சொன் முரணாகிய தொடையழகு தோன்றக் கூறினார். கூறினா ராயினும், சாந்து பூசுதற்கு இடனாவது மார்பும், ஈகைவினைக் கிடனாவது வண்மையு மாதலின், “புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பு” என்றும், “புலரா வீகை மாவண் பாரி” யென்றும் இயைத்துப் பொருள் கூறப்பட்டதென வறிக. இனிப் பழையவுரைகாரர், “பலாஅம் பழுத்த - பலாஅப் பழுத்த வென்னும் பகர வொற்று மெலிந்தது” என்றும், “பசும் புண்ணென்றது புண்பட்ட வாய் போலப் பழுத்து வீழ்ந்த பழத்தினை” யென்றும், “அரிய லென்றது அப் பழத்தினின்றும் பிரிந்து அரித்து விழுகின்ற தேனை” யென்றும் கூறுவர். பலாஅம் பழத்த வென்னும் பாடத்துக்குப் பலாப்பழத்தி னிடத்த வாகிய வென்று உரை கூறிக் கொள்க. 9-10. முழவு ........... படர்ந்தோன் உரை : முழவு மண் புலர - முழவினிடத்தே பூசிய மார்ச்சனை மண் புலர்ந்தொழியவும்; இரவலர் இனைய - வேண்டுவன வழங்கு வோர் இல்லாமையால் இரவலர் வருந்தவும்; வாராச் சேட்புலம் படர்ந்தோன் - மீண்டு இந் நிலவுலகிற்கு வருதல் இல்லாத மேலுலகிற்குச் சென்றொழிந்தான் என்றவாறு. முழவு முழக்கலுறுவோர் அதன்கண் ஓசை மிகுமாறு கருமட் பொடியும் பசையும் கலந்து பிசைந்து பூசி, ஈரம் புலராவாறு அவ் வப்போது தண்ணீரைத் தடவுவர். இக் காலத்தும் தண்ணுமை முதலியன இசைப்போர்பால் இச் செயலுண்மை காணலாம். முழவு முதலியன இயக்காதவழி மண் புலர்ந்து இறுகி முழவிற்கு இறுதி பயந்து விடுதலால், “முழவு மண் புலர” என்றார். எனவே, அம் முழவினை இயக்கு வோர் இலராயினர் என்பதாம். “முழவு அழிய என்று கூறல் இன்னாத தாதலின் மண் புலர எனத் தகுதிபற்றிக் கூறப்பட்டது; என்றதன் கருத்து, அதனால் தொழில்கொள்வா ரின்மையின் அது பயனிழந்த தென்பது” என்பர், உ.வே. சாமிநாதையர். இரவலர் இன்மை தீர அவர் தகுதியும் குறிப்பும் அறிந்து ஆர வழங்குநர் இல்லை யென்பது பற்றி, “இரவலர் இனைய” என்றார். பிறவா நிலையும் அதற்குரிய மேலுலகும் பெற்றா னென்பார், “வாராச் சேட்புலம் படர்ந்தோன்” என்றார். “வாரா வுலகம் புகுதல்” (புறம். 341) என்று பிறரும் கூறுதல் காண்க. “பாலறி மரபி னம்மூ விற்றும், ஆ வோ வாகும் செய்யுலுள்ளே” (தொல். வினை : 14) என்பதனால், படர்ந்தோனென நின்றது. படர்ந்தோ னென்றது வினைமுற்று. 10-18. அளிக்கென .......... கலி மகிழானே உரை : ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை - ஒள்ளிய வாட் படையையும் வன்மையுடைய களிறுகளையுமுடைய புலால்நாற்றம் பொருந்திய பாசறைக்கண்ணே; நிலவின் அன்ன வெள்வேல் பாடினி - நிலவின் ஒளியைப்போல வெள்ளொளி செய்யும் நின் வேற்படையைப் புகழ்ந்து பாடும் பாடினி; முழவின் போக்கிய வெண்கை - முழங்கும் முழவின் தாளத்திற் கேற்ப ஒத்தறுக்கும் வெறுங் கையை யசைத்துப் பாடும்; விழவின் அன்ன - விழாக்களம் போன்ற; நின்கலி மகிழான் - நின்னுடைய ஆரவார மிக்க திருவோலக்கத்தின் கண்ணே; அளிக்க என இரக்கு வாரேன் - எம்மை இதுகாறும் புரந்த வேள்பாரி இறந்தானாதலின் எம்மை அளிப்பாயாக என்று இரந்து வந்தேனில்லை; எஞ்சிக் கூறேன் - நின் புகழைக் குன்றவும் மிகைபடவும் கூறமாட்டேன்; ஈத்தது இரங்கான் - செல்வக் கடுங்கோ வாழியாதன் ஈதலால் பொருள் செலவாவது குறித்து மனம் இரங்குவ திலன்; ஈத்தொறும் மகிழான் - இடையறாது ஈதலால் இசை மிகுவது காரணமாக மகிழ்ச்சி யெய்துவதும் இலன்; ஈத்தொறும் மா வள்ளியன் என - ஈயும் போதெல்லாம் பெரிய வள்ளன்மை யுடையன் என்று; நுவலும் நின் நல்லிசை தர வந்திசின் - உலகோர் கூறும் நினது நல்ல புகழ் எம்மை நின்பால் ஈர்ப்ப வந்தேன் காண் என்றவாறு. பகைவரைப் பொருது அவர் குருதி படிந்து கிடக்கும் வாட்படையும், அவரைத் தம் கோட்டாற் குத்திக் குருதிக்கறை படிந்திருக்கும் களிற்றுப் படையும் சூழ்தலால் பாசறை புலால் நாறுதல்பற்றி, “புலாஅம் பாசறை” யென்றார். இனிப் பழையவுரை காரர், “புலாஅம் பாசறை யென்றது, வீரரெல்லாரும் போர் செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே யிதற்குப் புலாஅம் பாசறை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இனி, இதற்கு “ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையை யுடைய களிறுகளையுடைய புலால் நாற்றம் வீசும் பாசறை” யென்பர் உ.வே. சாமிநாதையர். வேந்தனது வேற்படை கறை போக்கி யராவி நெய் பூசப் பெற்று வெள்ளொளி திகழ விருத்தலால் “நிலவி னன்ன வெள்வேல்” என்றார். அவன் வென்றி பாடுமிடத்து வேல் முதலிய படைகளைப் பாடுதலும் மரபாதலின், “வெள்வேல் பாடினி” யென்றார். “பிறர்வேல் போலாகி யிவ்வூர், மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே” (புறம். 332) என்றற் றொடக்கத்துப் புறப்பாட்டால் வேல்பாடும் மரபுண்மை காண்க. வேல் பாடினி, வேலைப்பாடும் பாடினி யென்க. “வேலை யென இரண்டாவது விரித்துப் பாடினியிற் பாடுதலொடு முடிக்க” என்பர் பழைய வுரைகாரர். முழவிற் போக்குதலாவது, முழவிசைக் கேற்பத் தாளம் அறுத்திசைத்தல். பாடியாடு மிடத்துக் கையால், பிண்டி, பிணையல், தொழிற்கை முதலிய அவிநயமின்றி இசைக்குத் தாளமிடுவ தொன்றே செய்தலின், “வெண்கை” யென்றார். பழையவுரையும், “வெண்கை யென்றது பொருள்களை அவிநயிக்கும் தொழிற் கையல்லாத வெறுமனே தாளத்திற் கிசைய விடும் எழிற் கையினை” யென்று கூறுதல் காண்க. பாசறைக்கண் வேந்தன் வீற்றிருந்த திருவோலக்கம் விழவுக் களம் போன்றமையின், “விழவி னன்ன கலிமகிழ்” என்றார். “கலி மகிழென்றது, கலி மகிழையுடைய ஓலக்கத்தை” யென்பது பழையவுரை. மாவண் பாரி வாராச் சேட்புலம் படர்ந்தமையின் புரப் பாரேயின்றி, இன்மையால் வருந்தி “எம்மைக் காத்தளிப்பாயாக” என்று நின்னை இரக்க வந்தே னில்லை யென்பார், “அளிக்கென இரக்கு வாரேன்” என்றும், என் குறையையாதல் நின் புகழையாதல் குன்றவும் மிகை படவும் கூறே னென்பார், “எஞ்சிக் கூறேன்” என்றும் கூறினார். கற்றோரை யறிந்தேற்றுப் புரக்கும் வேந்தர் பலர் உளராயினும், அவரவர் வரிசை யறிந்து ஈவோரை நாடிச் சேறல் தமக் கியல்பாதலால், “இரக்கு வாரேன்” என்றார். “வரிசை யறிதலோ வரிதே பெரிதும், ஈத லெளிதே மாவண் டோன்றல், அதுநற் கறிந்தனை யாயின், பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறம். 121) என்று அவர் திரு முடிக்காரிக்குக் கூறுமாற்றால் அவரது உட்கோள் அறியப்படும். இனிப் பழையவுரைகாரர், “இரக்கென்றது தன்மைவினை” யென்றும், “எஞ்சிக் கூறே னென்றது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லே னென்றவாறு” என்றும் கூறுவர். பிறரும், “செய்யா கூறிக் கிளத்தல், எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே” (புறம். 168) என்று கூறுதல் காண்க. மேலே, தாம் கேள்வி யுற்றதை எடுத்தோதுகின்றாராதலின், வேந்தன் இனிதேற்றுக் கோடற்பொருட்டு, “எஞ்சிக் கூறேன்” என்று முகம் புகுகின்றார். “ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்” என்பது உலகு கூறும் புகழுரை. ஈதலால் பொருள் செலவாயினும், மேன்மேலும் ஈட்டிக் கொள்ளும் வன்மை யுடைய னாதலால், “ஈத்த திரங்கான்” என்றும், ஈயுந்தோறும் இன்பம் பெருகிய வழியும், அதனை நினையாது ஈதல் சான்றோர் சென்னெறி யெனக் கருதுமாறு தோன்ற, “ஈத்தொறு மகிழான்” என்றும், முற்பகல் சென்றோரே பிற்பகல் செல்லினும் “முன்னே தந்தனெ னென்னாது துன்னி, வைகலும் செலினும் பொய்யல னாகி” (புறம். 171) மிக்க பொருளை வழங்குதலின், “ஈத்தொறும் மாவள்ளியன்” என்றும் உலகம் அவனைப் புகழ்ந்துரைப்பது கேட்டே னென்பார், “என நுவலும் நின் நல்லிசை” என்றும் கூறினார். யான் வாரே னாயினும், நின் நல்லிசைக் கேள்வி என் உண்ணின்று துரப்ப வந்தே னென்பார், “நின் னல்லிசை தர வந்திசினே” என்றார். உலகவர் என ஒரு சொல் வருவிக்க. “ஈவோ ரரிய விவ்வுலகத்து, வாழ்வோர் வாழ” வாழும் நின்போன்றாரைக் காண்டலின் இன்பம் பிறிதில்லை யாதலின், வந்தேன் என்றாரென்றுமாம். பிறாண்டும், “நின்றோன்றாள் வாழ்த்திக், காண்கு வந்திசின் கழறொடி யண்ணல்” (பதிற். 64) என்று கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “ஈத்தற்கென நான் காவது விரிக்க” என்றும், “ஈத்தொறு மகிழா னென்றது, ஈயுந்தோ றெல்லாம் தான் அயலா யிருத்த லல்லது ஈயா நின்றோமென்று ஒரு மகிழ்ச்சி யுடையனல்ல னென்றவா” றென்றும், “நுவலும் என்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், பெருவிறலும் கணவனும், உன்னத்துப் பகைவனும் எம் கோவுமாகிய மாவண்பாரி, வாராச் சேட்புலம் படர்ந்தோன்; அளிக்க என இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; நின் கலி மகிழின்கண்ணே, நின் நல்லிசை தர வந்திசின் என்று வினைமுடிவு கொள்க. பழையவுரைகாரர். “யான் பாரி சேட்புலம் படர்ந்தோன்; நீ அளிக்கவெனச் சொல்லி இரக்கென்று வந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனு மல்லேன்; அஃதன்றி, உண்மை யொழியப் புகழ்ந்து சொல்லு கின்றேனுமல்லேன்; ஈத்ததற்கு இரங்காமை முதலாகிய அப் பாரி குணங்கள் நின்பாலும் உளவாக, உலகம் சொல்லும் நின் புகழை நின்பாலே தர வந்தேன், நின் பாசறையின் கலி மகிழின் கண்ணே என வினை முடிவு செய்க” என்று கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பொடு படுத்து அவன் கொடைச்சிறப்புக் கூறியவா றாயிற்று.” 2. வரைபோ லிஞ்சி 1. இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி மழையென மருளு மாயிரும் பஃறோல் யொடு எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ 5. வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ் பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும் மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல் துப்புத் துறைபோகிய கொற்ற வேந்தே 10. புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப் பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி வளனுடைச் செறுவின் வளைந்தவை யுதிர்ந்த 15. களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி அரிய லார்கை வன்கை வினைஞர் அருவி யாம்பன் மலைந்த சென்னியர் ஆடுசிறை வரிவண் டோப்பும் பாயல் சான்றவவ ரகன்றலை நாடே.. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வரைபோ லிஞ்சி 5-9. பசும் பிசிர் ........... வேந்தே உரை : பசும் பிசிர் ஒள்ளழல் - பசிய பொறிகளையுடைய ஒள்ளிய நெருப்பானது; ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு - ஞாயிறு பலவாய்த் தோன்றும் மாயத் தோற்றங்கொண்டு சுடர்விட்டு எங்கணும் விளங்க; ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட - உயிர் கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்வதுடன் முழக்கத்தைச் செய்து திரியும் கூற்றினது இயல்பினைக் கொண்ட; கடுந்திறல் - மிக்க திறலோடு; துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே - போர்த்துறை பலவற்றினும் சிறப்பமைந்த வெற்றியை யுடைய அரசே என்றவாறு. போர்மேற்கொண்டு செல்லும் பகைப்புலத்தே எடுக்கும் தீ, ஈண்டுப் பசும்பிசிர் ஒள்ளழல் எனப்பட்டது. இது சேரமான், பகைப்புலத்தே எடுத்த தீயாகும். இதனை, “எரிபரந் தெடுத்தல்” என்று இலக்கணம் கூறும். பகைவர் நாட்டில் பலவிடங் களிலும் தீ யெழுந்து பொறி பறக்கச் சுடர்விட் டெரிவது பற்றி, “பசும்பிசிர் ஒள்ளழல்” என்றும், பலவிடத்தும் தோன்றும் தீ, ஞாயிறு பல்கியது போறலின், “ஞாயிறு பல்கிய மாயமொடு” என்றும் கூறி னார். மாயம் போறலின் மாயமெனப்பட்டது. திகழ வென்பது திகழ்பென நின்றது. பெருமுழக்கம் கேட்டவழி உயிர்கட்கு மயக்க முண்டாதல் இயல்பாதலால், “ஒல்லா மயலொடு பாடிமிழ்பு” என்றும், எல்லா வுயிர்களையும் ஒடுக்கும் திறல்பற்றிக் கூற்றினை “மடங்க” லென்றும் கூறினார். “மடங்க லுண்மை மாயமோ வன்றே” (புறம். 369) என்பதனால், மடங்கல் இப்பொருட்டாத லறிக. இனிப் பழைய வுரைகாரர், “ஞாயிறு பல்கிய மாயமொடு உழிதரு மடங்கல் எனக் கூட்டி, உலகம் கடல் கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம் வற்ற எரித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத்தோடே கூடி அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீ யென்றுரைக்க” என்றும், “சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு மடங்கல் என்றது, சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கல் என்றவா” றென்றும், “ஒள்ளழல் மடங்கல் வண்ணம் கொண்ட எனக்கூட்டி ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்குக் காரணமாய் நின்ற வென வுரைக்க” என்றும், “இனி ஞாயிறு பல வாதலை அவன் பகைவர் நாட்டில் உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கலென்ற தனைக் கூற்றமாக்கி, “சுடர் திகழ்பு என்றதனைத் திகழ வெனத் திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ, மடங்கல் வண்ணங் கொண்ட வேந்தே யெனவுரைப்பாரு முளர்” என்றும் கூறுவர். 1-5. இழையணிந்து ......... இறுக்கும் உரை : இழை யணிந்து எழுதரும் பல்களிற்றுத்தொழுதியொடு - ஓடையும் பொன்னரிமாலையு முதலாகிய அணிகளைப் பூண்டு எழுகின்ற பலவாகிய யானைத் தொகுதியும்; மழையென மருளும் மா இரும் பல் தோல் - மழைமேகமென்று மயங்கத் தக்க கரிய பெரிய பலவாகிய கிடுகை ஏந்திய படையும்; எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு - வேல் வாள் முதலிய படை யேந்திய வீரர்படையினைச் செயலறப் பொருதழித்த கொய்யப் பட்ட பிடரி மயிரை யுடைய குதிரைப் படையுமாகிய நின் தானை, மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ வந்து - வலியினையுடைய கடத்தற்கரிய பகைவரது மதிற்பக்கத்தே நெருங்க வளைத்து வந்து; புறத்து இறுக்கும் - மதிற்புறத்தே தங்கி யிருக்கின்றது என்றவாறு. ஒடு, எண்ணொடு; தோலென்பதனோடும் கூட்டுக. தொழுதியும் தோலும் புரவியும் ஆகிய நின் தானையென ஒரு சொல் வருவித்து எயில் புடைபட வளைஇ வந்து புறத்திறுக்கும் என இயைக்க. போர்க் களிற்றின் முகத்தே ஓடையும் எருத்தத்திற் பொன்னரிமாலையும் அணிப வாதலின் “இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி” யென்றார். இழையணிந்து போர்க்குரிய குறிப்பினைத் தெரிவித்ததும் களிறு வீறு கொண்டெழு மாறு தோன்ற, “எழுதரும்” என்றார். தோல், கிடுகு. கரிய தோலாற் செய்தமையின், கிடுகின் தோற்றம் மழைமேகம் போறலின், “மழையென மருளும் பஃறோல்” என்றார். “புரைதவ வுயரிய மழைமருள் பஃறோல்” (மலைபடு. 377) எனப் பிறரும் கூறுதல் காண்க. பழைய வுரைகாரர், “பஃறோலொடு வென்னும் ஒடு, விகாரத்தால் தொக்க தாக்கி விரிக்க” என்பர். வாளும் வேலும் ஏந்திய படை யென்றற்கு “எஃகுபடை” என்றார். படை வரிசை யின் நிரை சிதைத்துக் கடந்து செல்லும் பேராண்மை விளங்க, “எஃகு படை யறுத்த கொய்சுவற் புரவி” யென்றார். குதிரையின் பிடரி மயிரை அவ்வப்போது கத்தரித்து விடுபவாதலின், “கொள்சுவ”லெனப்பட்டது. உயர்வு, அகலம், திண்மை முதலியவற்றாலும் பல்வகைப் பொறிகளை யுடைமையாலும் அருமை யுடைத்தாதல் பற்றி, “மைந்துடை ஆரெயில்” எனப் பட்டது. களிற்றுத்தொழுதி முதலாகவுள்ள படை போந்து பகைவர் மதிலை வளைத்துப் புறத்தே தங்கியிருப்பது விளங்க, “வந்து புறத்திறுக்கும்” என்றார். இனி, நின் தோற்படை களிற்றுத் தொழுதியொடும் புரவியொடும் வந்து புறத்திறுக்கும் என இயைத்தலு மொன்று. 10-12. புனல் பொரு ............. பகைவராயின் உரை : புனல்பொரு கிடங்கின் - நீர் மிக்குக் கரையை யலைக்கும் அகழியினையும்; வரைபோல் இஞ்சி - மலைபோலும் மதி லினையும் கொண்டு; அணங்குடைத் தடக்கையர் - தமக்குப் பொருந்தாதாரை வருத்துதலை யுடைய பெரிய கையினையுடைய ராய்; நின் பகைவர் - நினக்குப் பகைவரு மாயினார்; தோட்டி செப்பி - வணங்கிய மொழிகளைச் சொல்லி; பணிந்து - நின் தாளில் வீழ்ந்து வணங்கி; திறை தருப வாயின் - திறை செலுத்து வாராயின் என்றவாறு. ஆழ்ந்த கிடங்கும், மலையென வுயர்ந்த மதிலும், தம்மொடு மாறுபட்டாரை வருத்தி யலைக்கும் பல்வகை வலியு முடைய ராயினும் நின்னொடு பொருது வேறல் முடியாதென்பது துணிபு என்பார், கிடங்கினையும் இஞ்சியினையும் அவர்தம் கையினையும் சிறப்பித் தோதினார். நின் தானையின் பெருமை யும் வன்மையும் நோக்கின், அதனால் வளைக்கப்பட்ட இவ்வ கழியும் இஞ்சியும் வலியில்லனவா மென்பதுணராது, “புனல் பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி” யெனத் தம்மரண் சிறப்பைத் தாமே வியந்திருப்பதைப் புலப்படுத்தா ரென்றும், அச்சிறப்பால் இப்பாட்டிற்கு வரைபோ லிஞ்சி யெனப் பெயராயிற் றென்றும் கொள்க. “வரைபோ லிஞ்சியை அரணாக வுடையரா யிருந்தே திறை தருப எனச் சொன்ன சிறப்பானே இதற்கு வரைபோலிஞ்சியென்று பெயராயிற்” றென்பது பழையவுரை. அணங்குறுத்தற் கேதுவாகிய வலியினை “அணங்” கென்றார். தோட்டி போலத் தலைவணங்கி மொழிதலின், “தோட்டி செப்பி” யென்றார்; உடல் நன்கு வணங்கிப் பணிதலைக் “குடந்தம்பட்டு” (முருகு. 229) என்பது போல. பிறரும் “பணிந்து திறை தருபநின் பகைவ ராயின்” (பதிற். 59) என்பது காண்க. 13-19. புல்லுடை ............... நாடே உரை : புல்லுடை வியன் புலம் - புல் நிறையவுடைய அகன்ற புலத்தின் கண்; பல் ஆ பரப்பி - பலவாகிய ஆனிரைகளைப் பரந்து மேயவிட்டு; வளன் உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த - வளப்பத்தையுடைய வயலின்கண் விளைந்த கதிரினின்றும் உதிர்ந்த; களன் அறு குப்பை - களத்திற் சேர்த்துத் தூற்றப்படு வதில்லாத நெல் மணியின் குவியலை, காஞ்சிச் சேர்த்தி - காஞ்சிமரத்தின் அடியிலே சேரத் தொகுத்து வைத்து; அரியல் ஆர்கை வன் கை வினைஞர் - கள்ளுண்டலையும் வலிய கையினையுமுடைய உழவர்; அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் - அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய தலையினை யுடையராய்; ஆடுசிறை வரிவண்டு ஓப்பும் - அசைகின்ற சிறகையும் வரிகளையு முடைய வண்டினம் அவ்வாம் பலை மொய்க்காவாறு ஓச்சும்; அவர் அகன்றலை நாடு - அப்பகைவருடைய விரிந்த இடத்தை யுடைய நாடுகள்; பாடல் சான்ற - புலவர் பாடும் புகழ்பெற்றன வாகும் என்றவாறு. ஆனிரைமேய்ப்போர் அவற்றைப் புல்லுள்ள விடத்தே மேய விட்டுத் தாம் ஒரு புடையில் இருப்ப வாதலின், “புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி” யென்றார். மிக்க மணிகளோடு கூடிய கதிர்களை யுடைமை தோன்ற, “வளனுடைச் செறு” என்றும், அக்கதிரினின்றும் உதிர்ந்தவற்றை, நெல்லரியுந் தொழுவர் கொள்வதில்லையாகலின், அறுவடை முடிந்தபின், உழவரும் ஆனிரை மேய்ப்பாரும் உதிர்ந்து கிடக்கும் அவற்றைத் துடைப் பத்தாற் கூட்டித் தொகுப்பது இயல்பாதலால், “விளைந் தவை யுதிர்ந்த குப்பை” யென்றும், இக்குப்பை களத்தில் தொகுத்துக் கடாவிட்டுத் தூற்றும் அத்துணை மிகுதியும் தகுதியுமுடைய வல்ல வாதலின், “களனறு குப்பை” என்றும் கூறினார். இனி, விளைந்தவை யுதிர்ந்தனவும், களத்திடத்தே ஒதுக்கப்பட்டனவு மாகிய நென்மணியின் குப்பையென வுரைப்பினு மமையும். இவற்றைக் காஞ்சிமரத்தின் நிழலிலே தொகுத்தது, அம்மரங்கள் மிகுதியாக இருப்பதனால் என அறிக. இவ்வாறு தொகுத்த நென்மணிகளை அரியல் விற்பார்க்குக் கொடுத்து அரியலைப் பெற்று உண்பர் என்றற்கு, “அரியலார்கை வினைஞர்” என்றார். உழவர்க்குப் பகடு வேண்டியிருத்தலால், ஆனிரை மேய்த்தலும் ஒரோவழித் தொழிலாதலுணர்க. அரியல், கள். இவ்வண்ணம் தமக்கு வேண்டிய அரியலுக்காக, நெல்மணிகளை அரிது முயன்று தொகுத்தமைக்கும் வன்மை தோன்ற, “வன்கை வினைஞர்” என்றார். அரு வீ ஆம்பல், என்பது அரு வி யாம்பலெனக் குறுகிற்று. நெல்லரியுமிடத்து வயலிடத்து நீரை வடித்து விடுதலின், ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் அரியவாதலின், “அருவியாம்பல்” என ஓதுவாராயினர். இதற்குப் பிறரெல்லாம், வேறுபடக் கூறுவர். வினைஞர் சென்னியராய் வண்டோப்பும் நாடு என இயையும். பாடல் சான்ற என இறந்த காலத்தாற் கூறியது துணிவுபற்றி. திறை தருதலால் நாட்டிற் போரின்மையும், அதுவே வாயிலாக வளம் பெருகுதலும் பயனாதலின் சான்றோர் பாட்டும் உரையும் பெருகிப் புகழ் விளைக்கும் என்பது பற்றி, “பாடல் சான்றவவ ரகன்றலை நாடே” என்றார். வினைஞர் தாம் சென்னியிற் சூடிய ஆம்பலிடத்தே தேன் கவரவரும் வண்டினத்தை யோப்புவ ரென்றதனால், நாட்டில் வாழ்வோர் நற்குடிகளாய் அரசர்க்குப் பொருள் விளைவித்துத் தந்து வளம் கவரும் பகை முதலியன இல்லாவாறு காத்தொழுகுவ ரென்றா ராயிற்று; “சீறூர்க், குடியு மன்னுந் தானே கொடி யெடுத்து, நிறையழிந் தெழுதரு தானைக்குச், சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே” (புறம். 314) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க” வென்றும், “களனறு குப்பை யென்றது, களத்திற் கடாவிடுதற் றொழி லற்ற தூற்றாப் பொலியை” யென்றும், “பரப்பி யென்னும் வினையெச்சத்தினைச் சேர்த்தி யென்னும் வினையொடு முடித்து அதனை வரிவண்டோப்பும் என்னும் வினையொடு முடிக்க” என்றும், “வண்டோப்பும் நாடென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், வேந்தே, நின் தானை வந்து புறத்திறுக்கும்; இனி, நின் பகைவர் பணிந்து திறை தருப வாயின், அவர் அகன்றலை நாடுகள் பாடல் சான்றவாம் என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “கொற்ற வேந்தே, நின் பகைவர், தோட்டி செப்பிப் பணிந்து திறை தருபவாயின், அவரகன்றலை நாடு பாடல் சான்றவென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது: அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று.” 3. அரு வியாம்பல் 1. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமோ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் 5. மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினும் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் 10. குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயும் 15. நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின் அடையடுப் பறியா வருவி யாம்பல் 20. ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே. துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : அருவி யாம்பல் 1-7. பார்ப்பார்க்கல்லது ......... பொய்ப்பறி யலையே உரை : பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலை - பார்ப்பாரை யன்றிப் பிறரைப் பணிதல் இல்லாய்; பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ - இவ்வாறு பணியாத மனவெழுச்சியால் அழகுறப் பொருந்தியும்; நட்டோர்க் கல்லது - உயிரொத்த நண்பர்க் கல்லது; கண் அஞ்சலை - பிறர்க்குக் கண்ணோடி அஞ்சுவது இல்லாய்; வணங்கு சிலை பொருத நின் மணங்கமழ் அகலம் - வளைந்த இந்திரவில் போலும் மாலை கிடந்தலைக்கும் சாந்துபூசி மணங் கமழும் நின் மார்பை; மகளிர்க் கல்லது மலர்ப்பு அறியலை - உரிமை மகளிர்க்கு இன்பந் தருதற்கு விரித்துக் காட்டுவ தன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுவதில்லாய்; நிலம் திறம் பெயரும் காலையாயினும் - நிலவகைகள் தம் இயல்பில் திரிந்து கெடுங்கால மெய்தினும்; கிளந்த சொல் - வாயாற் சொல்லிய சொல் ; நீ பொய்ப்பு அறியலை - பொய் படுவதை நீ அறியாய் என்றவாறு. பார்ப்பனராவார் ஓதல் முதலிய அறுவகை யொழுக் கங்களை யுடையோர். அவர்க்குப் பணியவேண்டுமென்பது பண்டையோர் கொள்கை. “இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே” (புறம். 6) என்று பிறரும் கூறுதல் காண்க. ஏனோர்க்குப் பணியாமை மானமாதலின், “பணியா வுள்ளமொடு” என்றார். அவ்வுள்ளம் மானமுடைய அறவேந்தர்க்கு அழகு செய்தலின், “அணிவரக் கெழீஇ” என்றார். பணியா வுள்ளமுடையார்க்கு அச்சம் பிறவாதாயினும், உயிரொத்த நண்புடையாரைக் கண்ணோட்டத்தால் அஞ்சுவ ரென்பது தோன்ற நிற்கும் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்ணஞ்சல், கண்ணோட்டத்தால் அஞ்சுதல். ஒடு, ஆனுருபின் பொருட்டு. தார், வணங்கிய சிலை போறலின் “வணங்கு சிலை” யென்றும், மகளிர் முயக்கத்தால் மலைத்தவழி விரித்துக் காட்டியின்புறுத்தலின், “வணங்குசிலை பொருத மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறியலை” யென்றும் கூறினார். “மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறம். 10) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இதற்கு வில்லை வணக்கி அம்பு தொடுக்கும் செயலால் உராய்ந்த மார்பு என்று கூறி, “மாண்வினைச் சாப மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை” (பதிற். 90) என்பதனைக் காட்டுவர் உ.வே. சாமிநாதையர். பழையவுரை காரரும், “அகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே என்பது, நின்னொடு பொருவாரின்மையின் நின் அகலத்தை நின் மகளிர்போகத்துக்கு இடமாக வல்லது மலர்வித்தலை யறியா யென, மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப என்றது போலக் கொள்க” என்று கூறுதல் காண்க. பணியாவுள்ள மென்றதற்கு, “நட்பு நின்ற நிலையின் ஒருநாளும் தாழ்வுபடாத வுள்ளமென்றவா” றென்றும், “கெழீஇ யென்னும் எச்சத்தினை நட்டலென்னும் தொழிலொடு முடிக்க” என்றும் பழையவுரை கூறும். நிலவகை, குறிஞ்சி முதலாகக் கூறப்படுவன. பொய்யாவழி நிலம் திறம் பெயர்ந்து கெடுதற்குரிய கால மெய்துமாயினும், சொன்னசொல் பொய்ப்பதிலன் எனச் சேரமானுடைய வாய்மையைச் சிறப்பிப்பார், “நிலந்திறம் பெயரும் காலை யாயினும், கிளந்த சொல்நீ பொய்ப் பறியலை” என்றார். உம்மை, எதிர்மறை. “நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய. சொற்புடை பெயர்தலோ விலரே” (நற். 389) என்று பிறரும் கூறுதல் காண்க. மணங்கம ழகலம் என்புழிக் கமழ்தற் கேதுவாகிய சாந்தின் பூச்சு வருவிக்கப்பட்டது. 8-12. சிறியிலை ........ போரோயே உரை : சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி - சிறிய இலைகளை யுடைய உழிஞைப்பூ மாலையை யணிந்து; கொண்டி மிகைபட - பகைப் புலத்தே கொள்ளத்தக்க பொருள் மிக வுண்டாமாறு; தண் தமிழ் செறித்து - தண்ணிய தமிழ் வீரர்களாலாகிய தன் படையை மேன்மேற் செலுத்தி; குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி - மலைகள் நிலை தளர முழங்கும் இடியேறு போலச் சினந்து சென்று; ஒரு முற்று இருவரோட்டிய - ஒரு வளைப்பில் இரு பேரரசர்களை வென்று புறங்கண்ட; ஒள்வாள் செருமிகு தானை - ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும்; வெல் போரோய் - வெல்லுகின்ற போரினையுமுடையோனே என்றவாறு. செய்வது உழிஞைப்போர் என்றற்கு “உழிஞைத் தெரியல் சூடியென்றார். இப் போரால் பகைவருடைய முழுமுதலரணத் தைக் கொண்டவழி, மிக்க பெருஞ் செல்வம் கொள்ளையாகப் பெறப்படுதலின், “கொண்டி மிகைபட” என்றும், முற்றலிலும் கோடலிலும் தலைசிறந்தவராதல்பற்றித் தமிழ் வீரரையே மிகுதியாகச் செலுத்தினமை தோன்ற, “தண்டமிழ் செறித்து” என்றும், சேரவேந்தன் தானும் அவ் வீரருடன் சென்று அவர்க்குத் தலைமை தாங்கிப் பொரும் திறத்தை, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போ ரோயே” என்றும் கூறினார். அவன் சீற்றத்தால் மலைபோலும் மதிலும் பிற அரண்களும் அழிவது கண்டு, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி” என்றும், தன்னால் வளைக்கப்பட்ட பேரரசனையும் அவற்குத் துணையாகப் போந்தானொரு பேரரசனையும் முற்றிச் செய்த தன் ஒரு போர் வினையால் வென்று புறங்கண்டமை தோன்ற. “ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போரோய்” என்றும் கூறினார். “தமிழ் செறித்து” என்ற தனால், இருவர் தமிழரல்ல ரென்பது பெற்றாம். ஓட்டிய வெல் போரோய், செருமிகு தானை வெல்போரோய் என இயையும். தெரியல் சூடி, தமிழ் செறித்து, சீறி, இருவரோட்டிய வெல் போரோய் என்றது, சேரமானது போர்வன்மை விளக்கி நின்றது. சிறிய விலை சிறியிலை யென நின்றது. இது கடைக் குறை யென்பர் பழையவுரைகாரர். தமிழ்செறித் தென்றது, “மாற்றாரது தமிழ்ப்படை யெல்லாம் இடையறப்படுத்தி” யென்றும், “ஒரு முற்று ஒரு வளைப்பு” என்றும், “இருவர் சோழனும் பாண்டியனும்” என்றும், “இருவரை யென்னும் உருபு விகாரத்தால் தொக்கது” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர். சேரர் படையும் தமிழ்ப்படை யாதலின், சோழ பாண்டியர் படையைமட்டில் தமிழ்ப்படை யெனல் பொருந்தாமையாலும், செறித்து என்றற்கு இடையறப் படுத்தி என்பது பொருளன் றாதலானும், பழையவுரை பொருந் தாமை யுணர்க. பழைய வுரைகாரர் கூறுவதே பொருளாயின், செறித் தென்பதன்றி, தமிழ்செறுத்தென்பது பாடமாதல் வேண்டும். அவ்வாறு பாடமின்று. தமிழ் வேந்தரிடையே நிகழும் போரிற் செறியும் தமிழ்வீரரை, “தமிழ் தலைமயங்கிய தலை யாலங் கானத்து” (புறம். 19) என்று சான்றோர் கிளந்தோதுப. “அருந் தமிழாற்ற லறிந்தில ராங்கென” (சிலப். 26 : 161) என்றும், “தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த வாரிய வரசரை” (சிலப். 27:56) என்றும் சேர வேந்தர் தம்மைத் தமிழரென்றே கூறுதல் காண்க. இனி, “ஒள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே” என்றது, சேரமானது தானைச்சிறப்பை யுணர்த்துகின்றது. விற்படை சேரர்க்கே சிறப்பாக வுரியதாயினும், ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரினும் இத் தானை சிறப்புற்றுப் பல போர்களில் வென்றி மேம்பட்டதென்றெற்கு, “ஒள்வாள் செருமிகு தானை” யென்றார். 13-15. ஆடு பெற்று ............. வென்றோய் உரை : ஆடு பெற்றழிந்த மள்ளர் - பிற வேந்தர்க்குப் படைவீரரா யிருந்து பல போர்களில் வெற்றிபெற்றும் நின்னொடு பொருது வீறழிந்த வீரர்; மாறி - பகைவ ரிடத்தினின்றும் மாறி நின் தாணிழல் விழைந்து போந்து; நீ கண்டனை யேம் என்றனர் - நீ கருதிய தனையே யாமும் கருதி யொழுகும் கருத்துடையே மாயினேம் என்று சூள் மொழிந் தமைந்தனர்; நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் - நீயும் நும் குலத்தோர்க்குச் சிறப்பாக வுரியவாகிய வன்மையும் கண்ணோட்டமும் கொண்டு மேலும் பல போர்களில் வென்றி சிறந்தாய் என்றவாறு. பெற்று என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அழிந்த என்பதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது. முன்னைப் போர்களில் ஆடுபெறுதற் கேதுவாயிருந்த தோள்வலி நின்னொடு பொரற்கு ஆற்றாமையின், மள்ளர் வீறழிந்தன ரென்பார், “ஆடுபெற்று அழிந்த மள்ளர்” என்றும், அழிந்த வீற்றினை மறுவலும் பெற விழைவதே வீரர்க்குக் குறிக்கோளாதலாலும், அதனைப் பெறற்கு அரணும் துணையு மாகும் பெருவிறலுடை யார் வழிநின்று வாழ்வதையே வாழ்க்கையாகக் கருதுபவாத லாலும், “மாறி நீ கண்டனையேம் என்றனர்” என்றும், தாம் பகையிடத்திருந்து மாறுகின்றமையின், தம் நினைவு சொல் செயல்களைத் தலைமகன் அயிராமைப் பொருட்டுச் சூளுறவு முதலியன செய்தமை தோன்ற, “நீ கண்டனையேம் என்றனர்” என அவர் கூற்றைக் கொண்டெடுத்துங் கூறினார். நீ கண்டனை யேம் என்றது. “யான் கண்டனைய ரென்னிளையரும்” (புறம். 191) என்றாற்போல வந்தது. இடைக்காலத்தில் இவ்வாறே வீரர்கள் சூளுறவு செய்த செயல்களைத் திருக்கோயிலூர் வட்டத்து எலவானாசூர் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக்கள் (A.R.No. 500 of 1937-8) கூறுகின்றன. அம் மள்ளரது வினைத் தூய்மையும் மேலும் பல போர்களைச் செய்து அறிந்தாளும் சேரனது ஆட்சித்திறமும் தோன்ற, “நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோ” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “ஆடுபெற்றழிந்த மள்ளரென்றது, முன்பு பிறரொடு பொருது வென்றி பெற்றுப் பின் நினக்கு அழிந்த மள்ளரென்றவா” றென்றும். “நீ கண்டனையே மென்றது, இன்றுமுதல் நின்னாலே படைக்கப்பட்டாற் போல்வே மென்றவா” றென்றும் கூறுவர். நுகம், வன்மை மேற்றாயினும். அதற்கு அழகுதரும் கண்ணோட்டத் தையும் அகப்படுத்து நின்றது. பழையவுரைகாரரும், “நின் பெருமையும் கண் ணோட்டமுமாகிய நும் நுகம்” என்பது காண்க. நுக மென்றற்கு வலியென்றே கொண்டு, நுங்கள் படைக்கு வலியாகக் கொண்டெனினுமமையும். நுகம் வலிமைப் பொருட்டா தலை, “வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி” (குறுந். 80) என ஒளவையார் கூறுமாற்றால் லறிக. 15-21. அதனால் ......... பலவே உரை : அதனால் - இன்ன இயல்புகளையுடையை யாதலால்; சேரலர் மருக - சேரர்குடித் தோன்றலே; செல்வக் கோவே - செல்வக் கடுங்கோவே; கால் எடுத்த திரை முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம் - காற்றால் சுருட்டப்பட்ட அலைகள் முழங்கும் முழக் கத்தையுடைய கடலைச் சுற்றெல்லையாக வுடைய அகன்ற உலகத்தே வாழும் நன்மக்கள்; செய்த நன்று உண்டெனின் - செய்த அறம் நிலைபெறுவ தென்றால்; வாழியாத - செல்வக் கடுங்கோ வாழியாதனே; அடையடுப்பு அறியா அருவி ஆம்பல் - இலையடுத்தலை யறியாத பூவல்லாத ஆம்பலென்னும் எண்ணும் ; பல ஆயிர வெள்ள வூழி - பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ள மென்னும் எண்ணும் ஆகிய ஊழிகள்; வாழிய - நீ வாழ்வாயாக என்றவாறு. அதனால் என்பது, “சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள், அதனால் கொண்டா னுவக்கும்” என்புழிப் போலும் சுட்டு முதலாகிய காரணக் கிளவி. இயல்பு பலவற்றையும் தொகுத்து “அதனால்” என்றதும், ஆசிரியர் உள்ளம் அவற்றையுடைய செல்வக் கடுங்கோவை வாழ்த்துதற்கு விழைந்தமையின், “செல்வக் கோவே சேரலர் மருக” என்று சிறப்பித்தும், உலகம் சான்றோர் செய்யும் அறத்தால் நிலைபெறுகிற தென்பது உண்மையாயின், அவர் நெறிநின்றொழுகும் நீயும் நிலை பெறுக என்பார், “நனந்தலை யுலகம் செய்தநன் றுண்டெனின்” என்றும், “அரு வி யாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழி யாத வாழிய பலவே” யென்றும் கூறினார். இவ்வாறே, “இவ்வுலகத்துச், சான்றோர் செய்த நன்றுண் டாயின், கொண்டன் மாமழை பொழிந்த, நுண்பஃளியினும் வாழிய பலவே” (புறம். 34) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆசிரியர் ஆலத்தூர் கிழார் வாழ்த்துவதும் காண்க. அடை, இலை. ஆம்ப லென்னும் எண்ணுப்பெயர்க்கு “அடையடுப்பறியா அருவியாம் பல்” என்பது வெளிப்படை. அரு வீ என்பது அரு வி யெனக் குறுகிற்று; இஃது “அருங்கேடன்” (குறள். 210) என்புழிப் போலப் பூவல்லாத என்பதுபட நின்றது. அருமை இன்மை குறித்து நின்றது. இனிப் பழையவுரைகாரரும், “அருவி யாம்ப லென்றது வீ அரிய எண்ணாம்ப லென்றவா” றென்றும், “வீ யென்பது குறுகிற்” றென்றும், “அருவி, பண்புத் தொகை” யென்றும், “அடையடுப் பறியா அருவி யாம்பல் எனக் கூறிய இச் சிறப்பானே இதற்கு அருவி யாம்ப லென்ற பெயராயிற்” றென்றும், “பல ஆம்பலென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், செல்வக் கடுங்கோ வாழியாத, நீ பார்ப்பார்க்கல்லது பணிபறியலை; நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலை; அகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை; கிளந்த சொல் பொய்ப்பறியலை; வெல்போரோய்; வென்றோய்; அதனால், சேரர் மருக, செல்வக் கோவே, வாழியாத, சான்றோர் உலகத்துச் செய்த நன்றுண்டெனின், ஆம்பலும் பல வெள்ளமு மாகிய வூழிகள் வாழிய என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “நீ பணிபறியலை, கண்ணஞ் சலை, நின் அகலம் மலர்ப்பறியலை, பொய்ப்பறியலை; இவை நின்னியல்பு; இவையே யன்றி வெல்போரோய், முன் பிறர் பால் வெற்றிபெற்று நினக்கு அழிந்த மள்ளர் நின்னொடு பகைமாறி, நீ கண்டனையே மென்று தாழ்வு கூற, அதற்கேற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம், கொண்டு இன்னும் வென்றி கூர்ந்தனை; நின் குணங்கள் இவ்வாறாகிய அதனானே, செல்வக் கோவே, சேரலர் மருகனே. வாழியாதனே, உலகம் செய்த நன்று உண்டெனில், பல ஆம்பலாகிய ஆயிர வெள்ளவூழி வாழ்க என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “வாழியாத வென்னும் விளி செல்வக் கோவே என்பது முதலிய விளிகளின் பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது: அவன் பல குணங்களையும் ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று.” 4. உரைசால் வேள்வி 1. வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி 5. அந்தண ரருங்கல மேற்ப நீர்பட் டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக் களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி 10. அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின் மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார் உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் 15. காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல் மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி யதனால் பசியுடை யொக்கலை யொரீஇய 20. இசைமேந் தோன்றனின் பாசறை யானே. துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உரைசால் வேள்வி 1-2. வலம்படு ........... அம்ம உரை : வலம்படு முரசின் - வெற்றி யுண்டாக முழங்கும் முரசினை யும்; வாய் வாள் கொற்றத்து - தப்பாத வாட்படையாற் பெறும் வெற்றியினையும்; பொலம் பூண் வேந்தர் - பொன்னாற் செய்த பூண்களையுமுடைய வேந்தர்கள்; பலர்தில் - பலர்தாம் உளர்; அம்ம - இன்னமும் கேட்பாயாக என்றவாறு. வெற்றியும் விழவும் கொடையும் குறித்து முழங்கும் மூவகை முரசுகளுள் வேந்தர்க்கு வெற்றிமுரசு சிறந்தமையின், “வலம்படு முரசினை” எடுத்தோதியும், கொற்றத்துக்கு வாயிலா தலால், “வாய் வாளை” விதந்தும் கூறினார். பொலம் - பொன். வேந்தர் பலருள ராயினும் அவராற் பயனில்லை யென்பதுபட நிற்றலின், தில் ஒழியிசைப் பொருட்டு. பழையவுரைகாரரும் தில் ஒழியிசை யென்றே கூறுவர். 3-11. அறங் கரைந்து .............. அவ்வயின் உரை : அறம் கரைந்து வயங்கிய நாவின் - அற நூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும்; பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி - உயர்ந்த புகழமைந்த வேள்விகள் பல செய்து முடித்தற்கேதுவாகிய கேள்வியினையுமுடைய; அந்தணர் அருங்கலம் ஏற்ப - அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்த்துக் கொடுக்கப் பெறுவதால்; நீர்பட்டு இருஞ்சே றாடிய - அந் நீரொழுகி மிக்க சேறாகியதால்; களிறு நிலை முணைஇய - களிறுகள் நிற்பதற்கு வெறுத்த; மணல் மலி முற்றத்து - மண் நிறைந்த முற்றத்தையும்; தார் அரும் தகைப்பின் - ஒழுங்காக அமைந்த, பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற் கரிய காப்பையு முடைய; அவ்வயின் - அவ்விடத்து நின் பெருமனைக் கண்ணேயிருந்து; வயிரியர் புறஞ்சிறை காணின் - கூத்தர்கள் புறஞ்சிறையிடத்தே வரக் காணினும்; வல்லே - தாழ்க்காது; எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி - வேல் வாள் முதலிய படைவீரரை வென்று கொணர்ந்த கொள்ளப்பட்ட பிடரினை யுடைய குதிரைகளையும்; அலங்கும் பாண்டில் - அசைகின்ற தேர்களையும்; இழையணிந்து ஈம் என - அவ்வவற்றுக்குரிய அணியணிந்து கொடுமின் என்று ஏவி; ஆனாக் கொள்கையை யாதலின் - ஈகையில் அமையாத கொள்கையை யுடையை யாதலினாலே என்றவாறு. பாசறைக்கண்ணே சென்று வேந்தனைக் காண்கின்றா ராதலால், அவன் தன் அரண்மனையிடத்தே யிருந்து செய்யும் ஈகைவினையை இப் பகுதியால் விளக்குகின்றார். பாசறையை நோக்க, அரண்மனை அவ்விடமெனச் சுட்டப்படுமாகலின், “அவ்வயின்” என்றார். அரண்மனைக்கு முன்னே மணல் மலி முற்றமும் அதன்பின் தாரருந் தகைப்பும் உண்மையின் அம்முறையே கூறுகின்றார், உவளகத்துக்கும் மணன்மலி முற்றத் துக்கும் இடையது தாரருந் தகைப்பென்பதாம். தன்பாற் போந்து ஏற்ற பார்ப்பார்க்கு அவர் வேண்டும் அருங்கலங்களை நீர் பெய்து கொடுப்பதால், அந் நீரொழுகி மணல் மலி முற்றத்தைச் சேறாக்கி விட்டதென்பார், “அந்தணர் அருங்கல மேற்ப நீர்பட்டு இருஞ்சே றாடிய மணல்மலி முற்றத்து” என்றார். களிறு நிலை முணைஇய மணல் மலி முற்றம், இருஞ்சே றாடிய முற்றம் என இயைக்க. இருஞ்சே றாடியதனால் களிறுகள் நிற்றற்கு விரும்பா வாயின வென்பார், “களிறு நிலை முணைஇய” என்றார். பழையவுரை காரரும், “களிறு நிலை முணவுதற்குக் காரணம் இருஞ்சே றாடுதல்” என்பது காண்க. இனி, ஏற்கும் பார்ப்பார்களின் தகுதி கூறுவார், அவர் அருமறைப் பொருளைக் கற்றும்கேட்டும் ஒழுகும் நல்லொழுக்க முடையரென்றற்கு, அவரது நாவையும் கேள்வியையும் சிறப் பித்தார். “அறங்கரைந்து வயங்கிய நாவின்” என்றது கல்விச் சிறப்பையும், “பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி” யென்றது கேள்விச் சிறப்பையும் சுட்டி நின்றன. அறநூல்களையே ஓதுதலும் ஓதுவித்தலும் செய்தலால் நன்கு பயின்றவர் என்றற்கு “அறங்கரைந்து வயங்கிய நாவின்” என்றார். பார்ப்பார்க்குப் புகழ், அவர் செய்துமுடிக்கும் வேள்வியொன்றே குறித்து நிற்றலின், “பிறங்கிய வுரைசால் வேள்வி” யென்றும், வேள்வி பலவும் செய்து முடித்தற்குக் கேள்வி ஏதுவும் பயனுமாதலின், “வேள்வி முடித்த கேள்வி” யென்றும் கூறினார். இனி, “உரைசால் வேள்வி யென்றது, யாகங்கள் எல்லா வற்றினும் அரியவும் பெரியவுமாக வுரையமைந்த வேள்வி” யென்றும், வேள்வியை இவ்வாறு உரையமைந்த வேள்வியென வுரைத்த சிறப்பினால் இப்பாட்டு “உரைசால் வேள்வி” யெனப்படுவதாயிற் றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வீரர் உள்ளும் புறமும் இருந்து ஒழுங்குறக் காப்ப, வேந்திருந்து ஈகைவினை புரியுமிட மாதலின், “தாரருந் தகைப்பு” என்றார். தார், ஒழுங்கு. தகைப் பென்பதே கடிமனை யென்னும் பொருட் டாயினும், அருந்தகைப் பென்றது, ஏற்க வரும் இரவலரையும், நன்கு ஆராய்ந்து காக்கும் காப்பு மிகுதி குறித்து. இரவலரும் பரிசிலரும் வாரா தொழியாமைப் பொருட்டு ஈதற்குரியாரைப் புறஞ்சிறை யிடத்தே நிறுவி, கூத்தர் முதலிய பரிசின்மாக்கட்கு வேண்டுவ ஈயுமாறு ஏற்பாடு செய்துள்ளமை தோன்ற, “புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி, அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென, ஆனாக் கொள்கையை” என்றார். பகைப் புலத்தே கொண்ட புரவி யென்றற்கு “எஃகு படை யறுத்த கொய்சுவற் புரவி” யென்றும், அவை ஈர்த் தேகுதற்கெனத் தேரும் சிறப்ப வழங்குக என்றற்கு “அலங்கும் பாண்டில் இழையணிந் தீமென” என்றும் கூறினார். பாண்டில், தேர். இனிப் பழையவுரைகாரர், “தாரருந் தகைப் பென்றது, ஒழுங்குபாட்டை யுடைய ஆண்டு வாழ்வார்க்கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டண” மென்றும், “தார் - ஒழுங்கு; தகைப்பு, கட்டணம்; புறஞ்சிறை, அதன் சிறைப் புறம்; எஃகு படை, கூரிய படை; பாண்டில், தேர் பூணும் எருதுகள்” என்றும், “புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈம் என்றது, நம்மை யவர்கள் காணவேண்டுவ தில்லை, நம் மாளிகையிற் புறத்து நீயிர் காணினும் கொடுமின் என்றவா” றென்றும், “ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை” யென்றும், “அவ்வயி னென்றது நின்னூரிடத் தென்றவா” றென்றும், “ஈமென அவ்வயின் ஆனாக் கொள்கையை யாதலின் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இவ்வாறு தன் அரண்மனை யகத்தும் புறத்தும் தானும் தன் பரிசனமும் ஈகைவினைக்கண் ஊன்றி நிற்பினும், அவ்வளவில் அமையாது, மேலும் அதனையே விழைந்து நிற்கும் நிலையை வியந்து, “ஆனாக் கொள்கையை” என்றார். ஆதலின், என்பதை “மழையினும் பெரும் பயம் பொழிதி” (18) என்பதனோடு இயைக்க. 12-20. மாயிரு ............. பாசறையானே உரை : மா யிரு விசும்பில் - கரிய பெரிய வானத்தே; ஞாயிறு தோன்றி - ஞாயிறு எழுந்து தோன்றி; பன்மீன் ஒளி கெட ஆங்கு - பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற் போல; மாற்றார் உறு முரண் சிதைத்த - சேரர் குடியில் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த; கழல் தொடி அண்ணல் - கழலுமாறு அணிந்த தொடியினையுடைய அண்ணலே; மை படு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு - கரிய நிறம் பொருந்திய விரிந்த கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின் இதழினது அழகிய நிறத்தோடு; உயர்ந்த மழையினும் - உயர்ந் தெழுந்த மழை முகிலினும்; பெரும் பயம் பொழிதி - மிக்க செல் வத்தை வழங்குகின்றாய்; அதனால் - அது காரணமாக; பசியுடை ஒக்கலை ஒரீஇய இசைமேந் தோன்றல் - பசியுடைய சுற்றத்தாரை அப் பசியின் நீக்கியதனால் புகழ் மேவிய தோன்றலே; நின் பாசறையான் - நினது பாசறைக்கண்ணே; நின் நோன்றாள் வாழ்த்தி - நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி; காண்கு வந்திசின் - நின்னைக் காணவேண்டி வந்தேன் என்றவாறு. கெடுத் தென்பது கெட வென நின்றது. விசும்பில் ஞாயிறு தோன்றிப் பன் மீன் ஒளி கெடுத்தாங்கு என இயைக்க. பொருட் கேற்ப, உவமை மாறி யியைக்கப்பட்டது. ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற் கேற்ப, வாழியாதன் தோற்றமும் அதற் கிடனாகிய சேரர் குடியும் வருவிக்கப்பட்டன. பன்மீ னென்றதனால், மாற்றாரது பன்மை பெற்றாம். பலரும் ஒருங்கு திரண்டு இகல் செய்தமையின், “உறுமுரண்” என்றார். மாற்றாரது பன்மையும் உறு முரணும் கண்டு அஞ்சாது பொரு தழித் தமையின், நின் தாள் வாழ்த்துதற் குரித்தாயிற் றென்பார், “நின் நோன்றாள் வாழ்த்தி” யென்றார். மாற்றார் முரண் சிதைத்த அண்ணல், நீ பெரும் பயம் பொழிதி; அதனால், தோன்றல், நின் பாசறையானே, காண்கு வந்திசின் என இயைத்து முடிக்க. கரிய சேறு படிந்திருத்தல் பற்றிக் கழியை,“மைபடு மலர்க்கழி” யென்றார். மலர்க்கழி, விரிந்த கழி; இனி, மலர்களை யுடைய கழி யென்றுமாம். கழியிடத்தே மலர்ந்த நெய்தற்பூவின் இதழ் வண்ணங் கொண்டு எழுந்த முகிலெனவே, கருமுகில் என்பது பெற்றாம். “மழையினும் பெரும்பயம் பொழிதி” யெனச் சேரமானது கொடைநலத்தைச் சிறப்பித்தது, “ஆனாக் கொள்கையை” (11) என்று முற்கூறியதனை வற்புறுத்துநின்றது. இக் கொடையால் விளைந்த பயன் இதுவென்பார், பசியுடை யொக்கல் இலராயினா ரென்றும், நல்லிசை மேவுவதாயிற் றென்றும் கூறினார். ஒரீஇய : பிறவினைப் பொருட்டு. மேவு மென்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. ஞாயிற் றுவமம் வினை பற்றியும், மழை யுவமம் கொடை பற்றியும் வந்தன. நெய்தலின் இதழ் மழைமுகிலின் நிறத்தைச் சிறப்பிப்ப, அந் நிறத்தையுடைய முகில் சேரனது கொடையைச் சிறப்பித்தலின், அடுத்துவரலுவமை யென்னும் குற்றமின்மை யறிக. இனிப் பழைய வுரைகாரர், “நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு பயம் பொழிதி யெனக் கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி, அந் நிறத் தோற்றத்தானும் மழையோடு உவமமாக்கி யுரைக்க” என்றும், “ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் உறு முரண் சிதைத்த என முடிக்க” என்றும் கூறுவர். “ஆதலின் என்பதனை மழையினும் பெரும் பயம் பொழிதி என்பதனோடு கூட்டி, நின்னூ ரிடத்து அவ்வயின் ஆனாக் கொள்கையையாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின் பாசறை யிடத்து மழையினும் பெரும் பயம் பொழியாநின்றாய் என வுரைக்க” என்றும், “பசியுடை யொக்கலை அப் பசியை யொருவிய எனப் பசி வருவிக்க” என்றும், கூறுவர் பழைய வுரைகாரர். இதுகாறும் கூறியதனால், முரசினையும் கொற்றத்தினையும் பூணினையுமுடைய வேந்தர் பலர்தாம் உளர்; அவராற் பெறும் பயன் இல்லை; அந்தணர் அருங்கலம் ஏற்ப, நீர்பட்டு இருஞ் சேறாடி களிறுநிலை முணை இய மணல்மலி முற்றத்தையுடைய தாரருந் தகைப்பி லிருந்துகொண்டு, வயிரியர் புறஞ்சிறை வரக்காணின், வல்லே புரவியும் பாண்டிலும் இழை யணிந்தீமென ஆனாக் கொள்கையை; மேலும், ஞாயிறு தோன்றிப் பன்மீன் ஒளி கெடுத்தாங்குச் சேரர் குடியில் தோன்றி மாற்றார் உறுமுரண் சிதைத்த அண்ணலே; அக் கொள்கையையாதலால், மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால், தோன்றலே, நின் பாசறைக்கண்ணே, நின் தாள் வாழ்த்திக் காண்கு வந்திசின் என வினை முடிவு செய்துகொள்க. காண்கு: தன்மை வினைமுற்று: “செய்கென் கிளவி வினையொடு முடியினும், அவ்விய றிரியா தென்மனார் புலவர்” (வினை. 7) என்பதனால், வந்திசின் என்னும் வினைகொண்டு முடிந்தது. இனிப் பழையவுரைகாரர், “உலகத்து வேந்தர் பலருளர்; அவராற் பெறும் பயன் என் ; தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர் காணின் ஈமென அவ்வயின் ஆனாக் கொள்கையை யாதலின், மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனால், அண்ணல் தோன்றல், பசியுடை யொக்கல் ஒரீஇய பாசறையானே, நின் நோன்றாள் வாழ்த்திக் காண்கு வந்திசின் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “அதனால் என்பதன்பின் அண்ணல் தோன்றல் என்னும் விளிகள் நிற்க வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் கூறுவர். “இதனாற் சொல்லிது: அவன் கொடைச்சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று.” இனி, பழைய வுரைகாரர் காலத்தே ஈய என்றொரு பாடமுண் டாகக் கண்டு, “ஈயவென்றது பாடமாயின், உரைசா லென்றது கூனாம்” என்றும், “உரைசால், வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல மேற்ப வீய நீர்பட்டென்று பாடமாக வேண்டும்” என்றும் கூறுவர். 5. நாண்மகி ழிருக்கை 1. எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பின பரியுடை நன்மா விரியுளை சூட்டி மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும 5. வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின் வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட் காமர் கடவுளு மாளுங் கற்பிற் 10. சேணாறு நறுநுதற் சேயிழை கணவ பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின் நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் 15. பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் சேறுசெய் மாரியி னளிக்கும்நின் சாறுபடு திருவி னனைமகி ழானே. துறை : பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நாண்மகி ழிருக்கை 1-5. எறி பிணம் ...... செல்வ உரை : மலைத்த தெவ்வர் - எதிர்த்துப் பொருத பகைவருடைய; மறம் தப - வீரம் கெட; பரியுடை நன்மா - விரைந்த செலவினை யுடைய நல்ல குதிரைகள்; எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின - படைகளால் எறியப்பட்டு வீழ்ந்த வீரர் பிணங் களை இடறிக் கொண்டு செல்லுதலால் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினை யுடையவாக; விரியுளை சூட்டி - அவற்றின் தலையிலே விரிந்த தலையாட்டத்தை யணிந்து செலுத்தி; கடந்து - பகைவரை வஞ்சியாது எதிர்பொருது வென்ற; காஞ்சி சான்ற வயவர் பெரும - காஞ்சித்திணைக் கமைந்த வீரர்க்குத் தலைவனே; வில்லோர் மெய்ம்மறை - வில் வீரராகிய சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவனே; சேர்ந்தோர் செல்வ - அடைந்தோர்க்குச் செல்வமாய்ப் பயன்படுபவனே என்றவாறு. தெவ்வர் மறத்தைத் தபுக்கவேண்டிக் குதிரைகட்கு விரியுளை சூட்டிச் செலுத்துபவாதலின், தெவ்வர் மறந்தப, செம்மறுக் குளம்பினவாக, விரியுளை சூட்டிக் கடந்த என இயைக்கப் பட்டது. முன்னே செல்லும் தூசிப்படைக்கு ஆற்றாது எறியுண்டு வீழ்ந்த பகைவீரர் பிணத்தை, “எறிபிண” மென்றும், அப் பிணக்குவையைக் கடந்துசென்று மேல்வரும் பகைவரை யடர்க்கின்றமை தோன்ற, “இடறிய செம்மறுக் குளம்பின” என்றும் கூறினார். ஆக வென்பது வருவிக்கப்பட்டது. ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியும் நன்கு கற்ற குதிரை யென்றற்கு “பரியுடை மா” என்னாது, “பரியுடை நன்மா” என்று சிறப்பித்தார். பிணக்குவை கண்டு மருளாது அதனை யிடறிச் சேறற்கு வேண்டும் போர்வேட்கை மிகுவிப்பதாகலின், உளை சூட்டின ரென்பார், “விரியுளை சூட்டி” யென்றார். குதிரைக்கு விரியுளை சூட்டியது போரில் வேட்கை பிறத்தற்பொருட்டெனப் பழைய வுரைகாரரும் கூறுவது காண்க. “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும், நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” (தொல். பொரு. புறத். 23) யென்பவாகலின், புகழொன்றே நிலைபெறுவ தன்றிப் பிற வுடம்புமுத லனைத்தும் நிலைபேறுடைய வல்ல வெனும் கருத்துடைய உயர்வீரர் என்றற்கு, “காஞ்சி சான்ற வயவர்” என்றும், அவர்க்குத் தலைவனாதலின், “பெரும” வென்றும் கூறினார். வீரரென்னாது, வயவர் என்றமையின், முன்னே பல போர்களைத் திறம்படச் செய்து சிறப்பும் வெற்றியும் சிறக்கப் பெற்றவ ரென்று கொள்க; இவரையே பிற்காலத்துப் புராணங்கள் கூறும் மூலபல வீரர் எனவறிக. “காஞ்சிசான்ற வயவரென்றது, நிலையாமை யெப்பொழுதும் உள்ளத்திற் கொண்டிருத்த லமைந்த வீரரென்றவா” றென்பது பழையவுரை. செல்வமுடை யார்க்கு அதனாற் பயன், சேர்ந்தோர்க் குண்டாகும் துன்பந் துடைத்த லென்ப வாகலின், “சேர்ந்தோர் செல்வ” என்றார்; “செல்வ மென்பது சேர்ந்தோர், புன்கணஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. 6-10. பூணணிந்து ....... கணவ உரை : பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இளமுலை - இழை யணிந்து உயர்ந்த ஒப்பனை செய்தாற்போல் வருகின்ற இளமுலையினையும்; மாண் வரி அல்குல் - மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலினையும்; மலர்ந்த நோக்கின் - அகன்ற கண்ணினையும்; வேய் புரைபு எழிலிய வீங்கு இறைப் பணைத்தோள் - மூங்கிலை யொப்ப அழகிய பெரிய மூட்டுக்கள் பொருந்திய (தொடி யணிந்த) பருத்த தோளினையும்; காமர் கடவுளும் ஆளும் கற்பின் - அழகிய கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும்; சேண் நாறு நறு நுதல் - சேய்மைக் கண்ணும் சென்று மணம் கமழும் நறிய நெற்றி யினையும்; சேயிழை கணவ - செவ்விய அணிகளையு முடையாட்குக் கணவனே என்றவாறு. எழில், உயர்ச்சி; “நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்” (குறள். 407) என்புழிப்போல. பூண், முத்துமாலை முதலியன. சாந்து முதலியன அணிந்து தொய்யி லெழுதி ஒப்பனை செய்யப்படு மியல்புபற்றி, “வனைந்துவர லிளமுலை” யென்றார். இனி, பழைய வுரைகாரர், “வனைந்துவர லென்பது ஒரு வாய்ப் பாட்டு விகற்பம்” என்பர். கண் அகன்றிருத்தல் பெண்கட்கு அழகாதலின் “மலர்ந்த நோக்கின்” என்றார் “அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி” (கலி. 108) என்று சான்றோர் கூறுதல் காண்க. கற்புடை மகளிரைத் தெய்வமென்றும், அவர்க்குத் தெய்வமும் ஏவல் செய்யு மென்றும் கூறுபவாதலின், “கடவுளு மாளுங் கற்பின்” என்றார். “இன்றுணை மகளிர்க்கின்றி யமையாக், கற்புக்கடம் பூண்டவித் தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்” (சிலப். 15. 142-4) என்று உயர்ந்தோர் ஏத்துமாறு காண்க. நெடுந்தொலைவு பரந்து மணம் கமழும் இயல்புபற்றிச் “சேணாறு நறுநுதல்” என்றார். “தேங்கமழ் திருநுதல்” என்று சான்றோர் சிறப்பித்துக் கூறுப. கற்புச் சிறப்புப் பற்றிச் “சேயிழை கணவ” என்றார். 11-12. பாணர் ........... மார்ப உரை : பாணர் புரவல - பாண் குடும்பங்களைப் புரப்பவனே; பரிசிலர் வெறுக்கை - பரிசிலர்க்குச் செல்வமா யிருப்பவனே; பூண் அணிந்து விளங்கும் புகழ் சால் மார்ப - பூணார மணிந்து விளங்கும் அகன்ற புகழ் நிறைந்த மார்பினை யுடையோனே என்றவாறு. பாணரைப் புரத்தலால் இசைத்தமிழ் வளர்ச்சியும், பரிசிலரைப் புரத்தலால் புகழ் வளர்ச்சியும் பயனாதல்பற்றி, “பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை” யென்றார்; “வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை” (பதிற். 15) என்று பிறரும் கூறுவது காண்க. விரிந்துயர்ந்திருத்தல் மார்புக்குப் புகழாதலின், “புகழ்சால் மார்ப” என்றார். அணிந்தென்னும் முதல்வினை சினைவினை யாகிய விளங்கிய வென்னும் வினைகொண்டது. 12-17. நின் நாண்மகி ழிருக்கை .......... மகிழானே உரை : தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் - இனிய இசை தொடுத்தலையுடைய நரம்பினா லமைந்த பாலையாழ் வல்லவ னொருவன்; பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு - அழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பாலைப்பண்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மாறிமாறி யிசைத்தாற் போல; சேறு செய் மாரியின் - சேற்றை யுண்டாக்கும் மழை போல; நனை அளிக்கும் - கள்ளை வழங்கும்; சாறுபடு திருவின் - விழாக் களத்தின் செல்வத் தோற்றத்தையுடைய; மகிழான் - திரு வோலக்கத்தின்கண்ணே; நின் நாண் மகிழ் இருக்கை இனிது கண்டிகும் - நின்னுடைய நாட்கால இன்ப விருக்கையினை நன்கு கண்டு மகிழ்வுற்றேம் என்றவாறு. இனிய இசைபயத்தல்பற்றி, “தீந்தொடை நரம்பு” என்றார். பாலை யாழ் வல்லவனன்றிப் பிறரால் அழுகைச் சுவைக்குரிய பாலைப் பண்களை யெல்லாம் தொகுத்து, ஒவ்வொன்றாக மாறி மாறி யிசைக்குமாற்றால் அழுகைச் சுவையை இசைத்துக் காட்டலாகாமை தோன்ற, “பாலை வல்லோன் பையுளுறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு” என்றார். பண்ணொவ்வொன்றிலும் அழுகைச்சுவைக் குரியதாய்த் தனித்தனி சிறந்த உறுப்புக் களுண்மைபோல, களிப்பினைத் தருவதாய் வேறுவேறு சிறந்த கள்வகை யுண்மையாலும், பையுளுறுப்புக்களைப் பாலைவல் லோன் தனித்தனி யிசைத்துக் காட்டுமாறுபோல, தனித் தனியே அக்கள்வகையினை நல்குகின்றானென்றும், ஒவ்வொரு வகைக் கள்ளும், சேறுண்டுபண்ணும் மிகுமழை போல மிகத் தரப் படுவதுபற்றி, “சேறுபடு மாரியின்” என்றாரென்றும் கொள்க. அழுகைச் சுவைக்குரிய பண்ணுறுப்பை, “பையுளுறுப்” பென்றார்; பையுள் அழுகையால் மெய்ப்படுதலின். இனிப் பழையவுரைகாரர், “தீந்தொடை பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை” யென்றும், “பையுளுறுப்பிற் பண்ணுப் பெயர்த் தாங்கு அளிக்கும் நனையெனக் கூட்டி எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோ வொன்றாகப் பெயர்த்து வாசிக்குமாறு போலே ஒன்றையொன்றொவ்வாத இன்பத்தை, உண்ட வர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மது வெனவுரைக்க” என்றும், “நனை யென்றது, ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப்பெயராய் நின்ற” தென்றும், “மாரியி னென்னும் உவமம் மதுக்களில் ஒரோ வொன்றைக் கொடுக்கு மிகுதிக் குவமம்” என்றும், “சாறுபடு திருவினென்ற வுவமம் அம்மதுக்களைப் பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையும் முதலாய பொருள்களுக் குவமம் என்றும்; சாறு என்றது விழாவின் றன்மையை” யென்றும், “மகிழ் என்றது மகிழ்ச்சியை யுடைய ஒலக்க இருப்பினை” யென்றும் கூறுவர். “இருந்தவூர் தொறு நல்யாழ்ப் பண்ணுப் பெயர்த் தன்ன காவும் பள்ளியும்” (மலைபடு. 450-1) எனப் பிறரும் கூறுவது காணத் தக்கது. “அவன் ஓலக்க இருக்கையின் செல்வத்தை நாண்மகி ழிருக்கை யெனக் கூறிய சொற்சிறப்பானே இதற்கு நாண்மகி ழிருக்கை யென்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். இதுகாறும் கூறியது, வயவர் பெரும, வில்லோர் மெய்ம் மறை, சேர்ந்தோர் செல்வ, சேயிழை கணவ, புரவல, வெறுக்கை, மார்ப, பாலை வல்லோன் பண்ணுப் பெயர்த்தாங்கு, மாரியின் அளிக்கும் நனை மகிழின்கண், நின் நாண்மகி ழிருக்கையை இனிது கண்டிகும் என வினைமுடிவு செய்க. இனிப் பழைய வுரைகாரர், “மார்ப, நின் நாண் மகி ழிருக்கையின் சிறப் பெல்லாம் நின் நனை மகிழின்கண்ணே இனிது கண்டேம் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்று கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் ஓலக்க வினோதத்தோடு படுத்து அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 6. புதல் சூழ் பறவை 1. வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லு முதுவா யிரவல இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார் 5. வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக் கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத் தொன்று திறைதந்த களிற்றொடு நெல்லின் அம்பண வளவை விரிந்துறை போக்கிய ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர் 10. உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின் நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற் றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வாளுடை விழவிற் போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த 15. கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப் பூத்த முல்லை புதல்சூழ் பறவை கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும் வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் 20. அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புதல் சூழ் பறவை 1-3. வாங்கு ...... இரவல உரை : வாங்கு இரு மருப்பின் - வளைந்த கரிய தண்டினை யுடைய; தீந்தொடை பழுனிய - இனிய இசைக்குரிய நரம்பு களால் நிறைந்த; இடன் உடைப் பேரியாழ் - இசையின்பத் துக்கு இடமாகவுள்ள பேரியாழிடத்தே; பாலை பண்ணி - பாலைப் பண்ணை யெழுப்பி; படர்ந்தனை செல்லும் - சேரனை நினைந்து செல்லும்; முதுவாய் இரவல - முதிய வாய்மையையுடைய இரவலனே என்றவாறு. பேரியாழின் தண்டு நீண்டு வளைந்திருத்தலின், “வாங்கிரு மருப்பின்” என்றார். ஆயிரம் நரம்புகளை எல்லையாக வுடைய தாய் இசையாற் பெறலாகும் பேரின்பத்துக்கு இடமாக இருத்தல் பற்றி “இடனுடைப் பேரியாழ்” என்றும், இன்னிசை பயக்கும் நரப்புத் தொடையால் குறைபாடின்மை தோன்ற “தீந்தொடை பழுனிய” என்றும் கூறினார். இனி, “இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி” யென்று ஈண்டு இவர் கூறியது போலவே, ஏனைச் சான்றோரும், “தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி” (பதிற். 46) யென்றும், “விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி” (பதிற். 57) என்றும் கூறுவதை நோக்கின், இப்பேரியாழ் பாலைப் பண்ணுக்கு ஏற்ற இசைக்கருவியாதல் துணியப்படும். “படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று; படர்தல் - நினைவு” என்பது பழையவுரை. “முதுவா யிரவல” என்பதற்குப் புறநானூற் றுரைகாரரும் இவ்வாறே கூறினார். முதுமை அறிவுடைமையாகக் கோடலு மொன்று. 9-20. கறுத்தோர் ........... கிழவோனே உரை : கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் - வெகுண்டு மேல்வரும் பகைவரது மிக்க வலியைத் தடுத்தற்குரிய ஒழுங்கினால் அப் பகைவரால் அழித்தற்கரிய படைவகுப்பையும்; நாண் மழைக் குழூஉச்சிமை கடுக்கும் - நாட் காலையிலே மழைக் கூட்டந் தங்கிய மலையுச்சியை யொக்கும்; தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் - தோற்றத்தையுடைய பரிசையினை மேலே தாங்கி யெழுகின்ற; விரிந்து இலங்கு எஃகின் - ஒளி விரிந்து விளங்கும் வேற்படையையும்; தார் புரிந்தன்ன வாளுடை விழவின் - மாலை யுடலிற் பின்னுவது போல வாள் சுழற்றுகின்ற வாள் விழாவினையுமுடைய; போர் படு மள்ளர் - போர்க்கண் அன்றிப் பிறவாற்றால் இறத்தலை விரும்பாத வீரர்; போந்தொடு தொடுத்த - பனங் குருத்துடனே சேர்த்துத் தொடுத்த; கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப - வெற்றித் திரு விரும்பும் வாகையினது துய்யினையுடைய பூப்போல; பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை - பூத்த பூக்களை யுடைய முல்லைப் புதரிடத்தே மொய்க்கும் வண்டினம்; கடத்திடை பிடவின் தொடைக்குலைச் சேக்கும் - காட்டிலே பிடவ மரத்தின் தொடுத்ததுபோலப் பூக்கும் பூக்குலையிலே தங்கும்; வான் பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின் - உயரிய பளிங்குடன் விரவிய சிவந்த பரல்கள் கிடக்கின்ற முரம்பு நிலத்திலே; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் - அங்கு வாழ்வோர் விளங்குகின்ற ஒளிக் கதிரையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற; கண் அகல் வைப்பின் - இடம் அகன்ற ஊர்களை யுடைய; நாடு கிழவோன் - நாட்டிற்கு உரிய தலைமகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றவாறு. கறுப்பு, வெகுளி. கறுத்தோர், வெகுண்டுவரும் பகைவ ரென்பது பெற்றாம். வலி குறைந்தோர்க்கும் வெகுளி யுண்டாய விடத்து அது சிறிது பெருகிக் காட்டுதலின், கறுத்து வந்தோர் வலியை “உறுமுரண்” என்றார். அவரை எதிரூன்றித் தாங்கும் படையின் வலியெல்லாம் அவரது படை யொழுங்கினை அடிப்படையாகக் கொண்டிருத்தல்பற்றி, அதனைத் “தாரருந் தகைப்பு” எனச் சிறப்பித்தார். தார், ஒழுங்கு. தாரால் அரிய தகைப்பினைச் செய்தல்பற்றி இவ்வாறு கூறினார். “தாரருந் தகைப்பு” என்றதற்கு, “ஒழுங்குடைய, மாற்றாரால் குலைத்தற் கரிய படை வகுப்பு” என்று பழையவுரை கூறும். யானைமேலும் குதிரைமேலும் வரும் வீரர், பகைவர் எறியும் அம்பும் வேலும் தடுத்தற்குத் தம் பரிசையினை (கேடயத்தை) மேலே ஏந்தித் தோன்றும் தோற்றம், மலையுச்சியில் நாட்காலையில் படிந்து தோன்றும் மேகக்கூட்டத்தின் தோற்றத்தை யொத்தல்பற்றி “நாண் மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றல் தோல்” என்றார். சேரனுடைய வீர ரேந்திச் செல்லும் வேல் வாள் முதலிய வற்றின் நலங்கூறுவார், “விரிந்திலங்கு எஃகின்” என்றார். வாள் விழவின்கண், வீரர் வாளைச் சுழற்றுமிடத்து உடலெங்கும் ஓடிச் சுழலும் வாள் உடலில் பின்னிக் கிடந்து தோன்றும் மாலையின் தோற்றத்தை நல்குவது பற்றி, “தார் புரிந்தன்ன வாளுடை விழவின்” என்றார். இதனை இக்காலத்தும் தொண்டை நாட்டில் கலைமகள் விழாநாளில் வாட்பயிற்சியுடையார் செய்து காட்டும் வாள்விழாவிற் காணலாம். இனிப் பழையவுரைகாரர், “நாண்மழை” யென்றது. “பருவ மழை” யென்றும், “தோலொடு வென ஒடு விரிக்க” என்றும், “தார் புரிந்தன்ன வாள்” என்றது, “பூமாலைகள் அசைந்தாற்போல நுடங்குகின்ற வாள்” என்றும் கூறுவர். போரில் பகைவர் எறியும் படை முதலியவற்றால் புண் பட்டிறப்பதையே விரும்புவாராதலின், “போர்படு மள்ள” ரென்றார். “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்” (அகம். 61) என மாமூலனார் கூறுதல் காண்க. போர்ப்படு எனற்பாலது போர்படு என வந்தது. இனி, போரை விரும்பி அதற்குரிய நினைவு செயல்களையுடைய வீரரென்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். தகைப்பினையும், எஃகினையும் விழவினையுமுடைய மள்ளர் என்க. போர்க் கேற்றுவர் பழையவுரைகாரர். சேரர்க்குரிய போந்தையொடு வெற்றிக்குரிய வாகைப்பூவை யும் விரவித்தொடுத்த மாலை யுடைமைபற்றி, “போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வீ” யென்றார். போந்து, பனந்தோடு. வெற்றித்திரு விரும்பும் பூவாதலின், வாகைப் பூவினைக், “கடவுள் வாகைத் துய்வீ” யென்றார். இனிப் பழைய வுரைகாரர், கடவுள் வாகை யென்றதற்கு, “வெற்றி மடந்தை யாகிய கடவுள் வாழும் வாகை” யென்பர். போந்தை வெண்ணிறமாயும் வாகைப்பூ நீல நிறமாயும் இருத்தலின், போந்தொடு தொடுத்த வாகைப் பூவிற்கு முல்லைப் புதல் சூழ்ந்த வண்டினத்தை உவமம் கூறினார். வாகைப் பூ நீல நிறமுடைமைபற்றியும், துய்யுடைமை பற்றியும் சான்றோர் அதனை மயிற் கொண்டைக்கு உவமித்து, “குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்” (குறுந். 347) என்றும், “வாகை யொண்பூப் புரையு முச்சிய தோகை” (பரி. 11 : 7-8) என்றும் கூறுதல் காண்க. “மென்பூ வாகை” (அகம். 136) என்பதனால், வாகைப்பூ மெல்லிதாதலும் அறியப்படும். இனிப் பழைய வுரைகாரர், “கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும், வாகைவீ அம்முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமங்கொள்ள வைத்த சிறப்பானே இதற்குப் புதல்சூழ் பறவையென்ற பெயராயிற்” றென்பர். பறவை, சேக்கும் முரம்பின் என இயையும். முரம்பிடத்தே மக்கள் “இலங்கு கதிர்த் திருமணி” பெறுவர் என்பதற்கேற்ப, அவ்விடத்தின் வளம் கூறுவார், “வான் பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பு” என்றார். பெறூஉம் நாடு என இயைக்க. அகன்கண் வைப்பு என்பதனைக் கண்ணகன் வைப்பு என மாறுக. நாட்டிற்கு நலஞ்செய்வன அதன்கண்ணுள்ள ஊர்களே யாதலின், “அகன்கண் வைப்பின் நாடு” என்றார். 4-9. இடியிசை ......... என்ப உரை : இடியிசை முரசமொடு ஒன்று மொழிந்து - இடி முழக்கத்தைப் போன்ற ஓசையினைச் செய்யும் முரசுடனே தப்பாத வஞ்சினத்தைக் கூறிச்சென்று; ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி - பகைவருடைய வேலேந்திய படைக்கூட்டம் செய்யும் போர் அறக் கெடும்படி யழித்து; கொன்று - அவர்களைக் கொன்று; புறம் பெற்ற - அஞ்சினோர் முதுகிட்டோடச் செய்ததனாலுண்டாகிய; பிணம் பயிலழுவத்து - பிணங்கள் நிறைந்த போர்க்களத்தே; தொன்று திறை தந்த களிற்றொடு - தோற்ற வேந்தர் பழையதாகிய திறையாகத் தந்த யானையோடு; அம்பண அளவை - நெல்லையளக்கும் மரக்கால்; விரிந்து உறை போகிய - தன் வாய் விரிந்து அதனைச் சுற்றிலும் புறத்தே யிட்ட செப்புறை தேய்ந்து கழன்றோடுமாறு; நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப - நெல்லாகிய உணவை நிறைய அளந்து கொடுப்பன் என்று அறிந்தோர் சொல்லுவார்கள் என்றவாறு. முரசத்தின் ஓசை இடியோசை போறலின், “இடியிசை” யென்றார். “இடிக் குரல் முரசம்” என்று சான்றோர் பயில வழங்குப. கூறிய வஞ்சினம் தப்பாமற் காக்கும் வாய்மையனாதல் பற்றி, “ஒன்று மொழிந்” தென்றார்; “நிலந்திறம் பெயருங் காலையாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே” (பதிற். 63) என்று பிறாண்டும் ஆசிரியர் சேரனது வாய்மையைக் கிளந்தோதியது காண்க. பழைய வுரைகாரர்,“ஒன்று மொழிதல் வஞ்சினங் கூற” லென்றும், “ஒன்று மொழிந்து கொன்று புறம் பெற்ற எனக் கூட்டி ஒன்று மொழிதலும் கொன்று புறம் பெறுதலும் ஒன்னாரதன்றி இவன் தொழிலாக வுரைக்க” என்றும், “ஒன்னாரது குழுவெனக் கூட்டி, கொன்றதும் புறம் பெற்றதும் அக் குழுவையேயாக வுரைக்க” என்றும் கூறுவர். “தொன்று திறை தந்த” என்றதனால், ஈண்டுக் கூறிய வொன் னார், பண்டெல்லாம் சேரனுக்குத் திறை செலுத்திப் போந்த சிற்றரச ரென்றும், அத் திறையினைத் தாராமையால் பகைமை யுற்ற ஒன்னாராயினரென்றும், அவர் வேலுடைக் குழுவினை இவன் இப்போது வென்று புறம்பெற்று, அவர் செலுத்தவேண்டிய பழந்திறையைப் பெற்றானென்றும் கொள்க. பழைய வுரைகாரர், “திறை தந்த” என்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத் தந்தவென வருவித் துரைக்க” என்பர். அம்பணம், மரக்கால். இது மூங்கிலாற் செய்யப்பட்டு வாய் கிழிந்து விரியாவண்ணம் செம்பினால் வாயின் புறத்தே பட்டையிடப் பட்டிருக்கும். இஃது இக்காலத்தும் வடார்க்காடு சில்லாவிலுள்ள சவ்வாது மலையடிவாரத்தே வாழ்வாரிடத்தே வழக்கிலுள்ளது. இதனை யம்பணமென்றும், செப்புப் பட் டையைச் செப்புறை யென்றும் கூறுப. அளக்குந்தோறும் அம்பணத்தில் நிறையப் பெய்து திணித்துத் திணித்து அளத்தலின், வாய்கிழிந்து உறை தேய்ந்து நீங்குமாறு தோன்ற, “அம்பண வளவை விரிந்துறை போகிய” என்றார். போகிய: வினை யெச்சம்; கெட வென்னும் பொருட்டு. இனிப் பழையவுரைகாரர், “உறை போதல், உறையிட முடியா தொழித” லென்றும் “அளவை விரிய வெனத் திரிக்க” என்றும் கூறுவர். ஆர நிறைத்துக் கொடுக்கும் பதம் ஆர்பதம் எனப்பட்டது. “நெல்லின் ஆர்பதம் என இருபெயரொட்டு” என்பர் பழையவுரைகாரர். அறிந்தோ ரென்பது சொல்லெச்சம். இதுகாறும் கூறியது, பேரியாழ் பாலைபண்ணிப் படர்ந் தனை செல்லும் முதுவாய் இரவல, திருமணி பெறூஉம் நாடு கிழவோன், ஒன்னார் சமம் ததைய நூறி, அவர் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப; அவ் வள்ளியோனைப் பாடுவோமாக என வினைமுடிவு செய்க. இனிப் பழைய வுரைகாரர், “அவனை நினைத்துச் செல்லும் முதுவாயிரவலனே, நின் நினைவிற்கேற்ப நாடு கிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று கொடுப்பதின்றி, ஒன்னார் பிணம் பயிலழுவத்துத் திறையாகத் தந்த களிற்றொடு தன்னாட்டு விளைந்த நெல்லாகிய உணவினைக் கொடாநின்றானென்று எல்லாரும் சொல்லுவார்களாதலால், அவன்பால் ஏகெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். என்பவர், பாணனை அவன்பால் ஏகென்பது பாணாற்றுப் படையாம்; இது பாடாண் பாட்டா தலின் ஆறறிந்து செல்லும் பாணனொடு சேரன் கொடைநலம் கூறிப் பாடுவதே ஈண்டைக்குப் பொருந்துவதென லறிக. “இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்பொடு படுத்துக் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” “படர்ந்தனை செல்லும் என்று பாணன் தன்னில் நினைவன கூறினமையின், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப் பாடாணாயிற்று.” அற்றாயின் வினை முடிபு, “ஆதலால், நெஞ்சே, அவன் பால் செல்வாயாக” எனக் கூட்டி முடித்தல் வேண்டு மென்க. 7. வெண்போழ்க் கண்ணி 1. கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண தென்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை 5. 1கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிர வலம்புரி யார்ப்பப் பல்களிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வர அமர்க்க ணமைந்த வவிர்நிணப் பரப்பிற் குழூஉச்சிறை யெருவை குருதி யாரத் 10. தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுட னடுங்கப் பல்செருக் கொன்று நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் 15. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர் எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தள் மாறா தூதிய 20. கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப் பறைபண் ணழியும் பாடுசா னெடுவரைக் கல்லுயர் நேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே. துறை : பாணாற்றுப் படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெண்போழ்க் கண்ணி 5-12. கொல் படை .............. கொன்று உரை : கொல் படை தெரிய - ஏந்திய படை யழிந்தவர் வேறு படைகளை ஆராய; வெல் கொடி நுடங்க - வென்றி குறித்து யர்த்த கொடியானது விண்ணிலே யசைய; வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப - ஒளிக்கதிர் வீசும் மணிபதித்த கொம்பென்னும் வாச்சியத்தோடு வலம்புரிச்சங்குகள் முழங்க; பல் களிற்று இனநிரை -பலவாகிய களிறுகளின் கூட்டமான வரிசை; புலம் பெயர்ந்து இயல்வர - தத்தமக் குரிய இடத்தினின்றும் பெயர்ந்து போர் நிகழும் இடம் நோக்கித் திரிய; அமர்க்கண் அமைந்த - போரிடுதற் கமைந்த; நிணம் அவிர் பரப்பில் - பொருது வீழ்ந்த மக்கள் மாக்களினுடைய நிணம் விளங்கும் பரந்த களத்திலே; குழூஉ - கூட்டமாகிய; சிறை யெருவை - பெரிய சிறகுகளை யுடைய பருந்துகள்; குருதி ஆர - பிணங்களின் குருதியை யுண்ண; தலை துமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு - தலை வெட்டுண்ட தால் எஞ்சி நிற்கும் குறையுடலாகிய ஆண்மை மலிந்தாடும் கவந்தத்தோடு; உருவில் பேய்மகள் கவலை கவற்ற - அழகிய வடிவில்லாத பேய்மகள் காண்போர் வருந்துமாறு அச்சுறுத்த; நாடு உடல் நடுங்க - நாட்டிலுள்ளோர் அஞ்சி நடுங்க; பல் செருக் கொன்று - பல போர்களிலும் எதிர்த்தோரை வென்றழித்து என்றவாறு. கொல்படை, கொல்லுதற் குரிய வேலும் வாளும் பிறவு மாம். தெரிய வெனவே, ஏந்திய படை போர்த்தொழிலில் முறிந்தழிந்தமை பெற்றாம். இனிப் பழைய வுரைகாரர் 1“சொட்டை யாளர் படை தெரிய வென ஒரு சொல் வருவிக்க” என்பர். செய்யும் போர்களிலெல்லாம் வென்றியே எய்துதலின், “வெல் கொடி நுடங்க” என்றார்; பழைய வுரைகாரர், “வெல்கொடி நுடங்க வென்றது மாற்றா ரெதிரே அவர் கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்க வென்றவா” றென்பர். வயிர், கொம்பு என்னும் இசைக்கருவி. இஃது “விரிக்கும் வழி விரித்த” லென்பதனால் அம்முப் பெற்று வயிரமென நின்றது. இது வளையொடு இணைத்தே கூறப் படுதல் இயல்பாதலின், “வயங்கு கதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்ப” என்றார். இக் கொம்பு வயிரத்தை யுடைய மரத்தாற் செய்து ஒளி திகழக் கடைச்சலிடப் படுமாறு தோன்ற, “வயங்கு கதிர் வயிர” மென்றார் போலும். “திண்காழ் வயிரெழுந்திசைப்ப” (முருகு. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. இதனோசை மயிலினது அகவலோசையையும் அன்றிலின் குரலையும் ஒத்திருக்குமென்பர். யானைகள் இயல்பாகவே தம்மில் அணியணியாக நிரை வகுத்துச் செல்லும் சிறப்புடையவாகலின், அவற்றின் குழுவினை நிரையென்றே சான்றோர் வழங்குப. அவ்வழக்கே ஈண்டும் “பல்களிற் றினநிரை” யெனக் கூறப்படுகிறது. இவை போர்த் துறை பயின்றவையாதலின், போர் நிகழும் இடம் நோக்கிப் பெயர்ந்து சென்றுகொண்டிருப்பது தோன்ற, “புலம் பெயர்ந்து இயல்வர” என்றார். பழையவுரைகாரரும் “களிற்றின்நிரை களத்திலே போர்வேட்டுப் புடை பெயர்ந்து திரிய என்றவா” றென்பர். அமர்க்கண் அமைந்த பரப்பு, நிணம் அவிர் பரப்பு என இயையும். நான்காவதன்கண் ஏழாவது மயங்கிற்று; நிணமவிர் என மாறுக. நிண மென்றதற் கேற்ப இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. பழையவுரைகாரர், “அமர்க்கண் அமைந்த பரப்பென்றது, அமர் செய்யும் இடத்திற்கு இடம் போந்த பரப்” பென்பர். இனி, கண்ணென்பதனை இடமாக்கி, அமர்செய்யு மிடமெனக் கோடலுமொன்று. நிணம் மிக்கு மலையெனக் குவிந்து கிடக்குமாறு தோன்ற, “நிணமவிர் பரப்” பென்றார். நிணமும் ஊனும் தின்ற பருந்துகட்கு உடலினின்று சொரிந் தோடும் குருதியே உண்ணுநீ ரானமையின், “குழூஉச் சிறை யெருவை குருதி யார” என்றார்; “குருதிபடிந் துண்ட காகம்” (கள. 1) என்று பிறரும் கூறுதல் காண்க. குழூஉ வாகிய எருவை யென்க. தலைவெட்டப்பட்டவழி எஞ்சி நிற்கும் முண்டம் (கவந்தம்) துள்ளியாடுதற்கு ஏதுக் கூறுவார், “ஆண்மலி யூப” மென்றார். யூபம், தூண். ஈண்டு அது கவந்தத்துக்காயிற்று. உடலை நெறிப்படுத் தியக்கும் தலை யொழியினும், அவ்வுடற் கண் கிளர்ந்து நின்ற ஆண்மைத் துடிப்பு உடனே ஒழியாமை பற்றி, “ஆண்மலி” யென்றா ரென்க. பழையவுரையும், “ஆண்மை மிக்க யூப” மென்றே கூறுகிறது. பேய்மகளைச் சவந் தின் பெண்டு என்றலும் வழக்கு. உலறிய தலையும், பிறழ் பல்லும், பேழ்வாயும், சுழல் விழியும், சூர்த்த நோக்கும், பிணர் வயிறும் உடையளாதலின், “உருவில் பேய் மகள்” என்றும், அவள் தோற்றம் காண்பார்க்குப் பேரச்சம் தந்து நெஞ்சு நோவச் செய்தல்பற்றி “கவலை கவற்ற” என்றும் கூறினார் கவலை: பெயர். கவல்வித்தற் பொருட்டாய கவற்றல், வினை. போரில் ஈடுபட்டார்க்கன்றி நாட்டிடத்தே யிருக்கும் மக்களனைவர்க்கும் பேரிழவும் பெருந் துன்பமும் உண்டாதலால், “நாடுட னடுங்க” என வேண்டாது கூறினார். உண்டாகிய போர் பலவற்றினும் மீட்டும் போருண்டாகாவாறு அதற் கேது வாயினோரை வேரறக் கொன்று வென்றி யெய்தியது தோன்ற, “பல் செருவென்” றென்னாது, “கொன்” றென்றா ரென வறிக. படையழிந்தவர் படை தெரிய, கொடி நுடங்க, வயிர மொடு வலம்புரி யார்ப்ப, இனநிரை இயல்வர, எருவை குருதியார, யூபமொடு பேய்மகள் கவலை கவற்ற, நாடு நடுங்க, பல்செருக் கொன்று என இயைத்து, மேல்வரும் “மெய் சிதைந்து, மறைந்த சான்றோர்” (18) என்பதனோடு கூட்டிக் கொள்க. இனிப் பழைய வுரைகாரர், “கொல் படை யென்பது முதல் இயல்வர என்பது ஈறாக நின்ற வினையெச்சம் நான்கினையும் நிகழ்காலப் பொருட்டாக்கிச் செருக்கொன்று என்னும் வினையொடு முடிக்க” என்றும், “குருதியாரப், பேய்மகள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க என நின்ற வினை யெச்சங்கள் மூன்றனையும், ஆரும்படி, கவலை கவற்றும்படி, நாடுடன் நடுங்கும்படியென எதிர்காலப் பொருட்டாக்கிக் கொன்றென்னும் வினையொடு முடிக்க” என்றும், கொன் றென்னும் வினையெச்சத்தினை மெய் சிதைந்து என்னும் வினையொடு மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். 13-18. நாறிணர் .............. பெருமகன் உரை : நாறு இணர்க் கொன்றை வெண்போழ் கண்ணியர் - மணம் கமழ்கின்ற கொன்றைப் பூவின் கொத்துக்களை விரவித் தொடுத்த வெள்ளிய பனந்தோட்டாலாகிய கண்ணியினை யுடையராய்; வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் - வாளின் வாய் உண்டுபண்ணிய மாட்சிமைப்பட்ட வடுக்களாகிய வரி பொருந்திய முகத்தை யுடையராய்; நெறிபடு மருப்பின் இருங்கண் மூரியொடு - நெறிப்புடைய கொம்பும் பெரிய கண்ணுமுடைய எருத்துக் களோடு; வளை தலை மாத்த - வளைந்த தலையையுடைய ஏனை விலங்குகளின் இறைச்சி களையுடைய; தாழ் கரும் பாசவர் - தாழ்ந்த இழிந்த பாசவர்; எஃகாடு ஊனம் கடுப்ப - கத்தியால் இறைச்சியை வெட்டுதற்குக் கொண்ட அடிமணை போல; மெய் சிதைந்து - மெய் வடுவும் தழும்பு முறுதலால்; சாந்து எழில் மறைத்த மெய் சான்றோர் - பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினையுடைய சான்றோர்க்கு; பெருமகன் - தலைவனும் என்றவாறு. சேரர்க்குச் சிறப்பாக வுரித்தாகிய பனந்தோட்டுடன் உழிஞை, வாகை, தும்பை முதலிய போர்ப்பூவும் பிற பூக்களும் விரவித் தொடுத்தணிவது இயல்பாதலால், கொன்றை கலந்து தொடுத்த போந்தைக் கண்ணியை, “நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி” யென்றார். “தொழுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினைத் தொடுக்கப்படும் கொன்றையொடு தொடுத்து பற்றி நாறிணர்க்கொன்றை வெண்போழ்க் கண்ணி என்று கூறிய அடைச் சிறப்பானே இதற்கு வெண்போழ்க் கண்ணி என்று பெயராயிற்” றென்பார் பழையவுரைகாரர். வாளால் வெட்டுண்டு வடுப்பட்டது வரிவரியாக முதுகொழிய ஏனை முகத்தினும் மார்பினும் காணப்படுவதுபற்றி, “வாண் முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்” என்றார். வாள் வாயால் உண்டாகிய புண்ணின் வடுவினை வரியென்றா ராதலின், அதற்கேற்பப் புண்படுத்திய வாளின் செயலை, “வாள்முகம் பொறித்த” என்றும், முகத்தின்கண் உண்டாகிய புண்வடு வீரர்க்கு அழகும் மாட்சிமையும் பயத்தலின், பொறித்தல் என்ற வினைக்கேற்ப வரி யென்றே யொழியாது, “மாண்வரி” என்றும் சிறப்பித்தார். முகத்துக்கும் மார்புக்கும் பொதுவாக யாக்கை யென்றாராயினும், “மெய் சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர்” என மார்பினைச் சிறப்பித் தோதுதலின் முகத்துக்காயிற்று. பழைய வுரைகாரரும், “மெய் சிதைந்து உடலுருவப்பட்டமை கீழே சொன்னமையால், “வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய” ரென்பதற்கு வாள் முகத்திலே பொறித்த மாண் வரியையுடைய யாக்கையரென முகத்தில் வடுவாக்கி யுரைக்க” என்பது காண்க. பாசவர், இறைச்சி விற்பவர். எருதுகளையும் ஏனை ஆடு மான் முதலிய விலங்குகளையும் கொன்று அவற்றின் இறைச்சி களை விற்பது பற்றி அவரைத் “தாழ் பாசவர்” என்றும், கொலை வினை யுடைமையால், “கரும் பாசவர்” என்றும் கூறினார். எஃகு, ஈண்டு இறைச்சியைத் துண்டிக்கும் கத்திமேற்று. இறைச்சியைத் துண்டிப்பதற்கு அடியிலே வைக்கும் மரக் கட்டையில் அக் கத்தியின் வெட்டுப் பட்டு மேடும் பள்ளமுமாய் வரிபோன்று கிடப்பதுபற்றி, வீரர் மார்புக்கு அதனை உவமம் கூறுவார், “ஊனம் கடுப்ப” என்றார். “ஊனமர் குறடுபோல விரும்புண்டு மிகுந்த மார்பு” (சீவக. 2281) எனப் பிற்காலச் சான்றோர் கூறுவது காண்க. ஊனம், ஊன்கறி வெட்டும் மணைக்கட்டை. சிதைந்து, காரணப் பொருட்டாய வினை யெச்சம். பூசிய சாந்தம் மார்பின் வடு விளையும் தழும்பினையும் மறைக்கமாட்டாமையின், தன் பொலிவு தோன்றற்கு இடம் பெறாமையால், அச் சாந்தின் பொலிவை மார்பின் சிதைவுகள் மறைத்துத் தாம் மேம்பட்டுத் தோன்ற விளங்கும் மார்பினை யுடைய சான்றோர் என்றற்கு, “சாந்தெழில் மறைத்த சான்றோர்” என்றார். இதனாற் பயன், உவகைச் சுவையினும் வீரச் சுவையே மிக விரும்பும் இயல்பின ரென்றவாறு. மார்பு என ஒருசொல் வருவித்து, சாந்தெழில் மறைத்த மார்பையுடைய சான்றோர் என இயைத்துரைத்துக் கொள்க. மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த என்றதற்குப் பழையவுரைகாரர் “மெய்யானது சிதைந்து அச் சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்த என்றவா” றென்பர். சான்றோர் பெருமகன், உயர்திணை ஆறாம் வேற்றுமைத் தொகை; “அதுவென் உருபுகெடக் குகரம் வருமே” (தொல். வேற். மயங். 11) என்றதனால் சான்றோர்க் கென விரிக்கப்படுவதாயிற்று. இது, கண்ணியரும் யாக்கையரு மாகிய சான்றோர் பெருமகன் என இயையும். 19-23. மலர்ந்த ............. செலினே உரை : மலர்ந்த காந்தள் - பூத்திருக்கும் காந்தட் பூ; சூர் நசைத்தாஅய் - தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால்; மாறாது ஊதிய - நீங்காது படிந்து தாதுண்ட; கடும் பறைத் தும்பி - விரைந்து பறத்தலையுடைய தும்பியானது; பறை பண்ணழியும் - அப்பறக்கும் இயல்பு கெடும்; பாடு சால் நெடுவரை - பெருமை யமைந்த நெடிய மலையாகிய; கல் உயர் நேரிப் பொருநன் - கற்களால் உயர்ந்த நேரிமலைக்குரிய பொருநனும்; செல்வக் கோமான் - செல்வக் கோமானுமாகிய வாழியாதனை; பாடினை செலின் - பாடிச் செல்குவையாயின் என்றவாறு. காந்தட்பூவைத் தெய்வம் விரும்புதலின் வண்டினம் மூசுதலில்லை யென்பது, “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” (முருகு. 43) என்பதனாலும் துணியப்படும். தும்பி மாறாது ஊதியதற்கு ஏது கடிய சிறகுகளை யுடைமைபற்றி யெழுந்த செருக்கே யென்றற்குக் “கடும்பறைத் தும்பி” யென்றார். நசைத்தாஅய், நசைத்தாதலாலே. தும்பி மாறாது ஊதியதனால் எய்திய பயன் இதுவென்பார், “பறை பண்ணழியும்” என்றார். பண், பறத்தற்குரிய இயல்பு; அஃதாவது, பறத்தற்கேற்பச் சிறகுகள் அசைந்துகொடுத்தல். இனி, காந்தள், வேங்கை, சண்பகம் (சம்பை) முதலிய பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணா வென்றும், உண்டால் சிறகுகள் உதிர்ந்துவிடும் என்றும் நூலோர் கூறுதலின், “பறை பண்ணழியும்” என்றா ரென்றுமாம். பாடு, பெருமை. இனிப் பழையவுரைகாரர், “மாறாதூதிய வென்றவா” றென்றும் “சூர் நசைத்தா யென்றதனைச் சூர் நசைத்தாக வெனத் திரித்துக் காந்தள் சூரானது நச்சுதலையுடைத் தாகலானே யென வுரைக்க” என்றும் கூறுவர். மலர்ந்த காந்தளைச் சூர் நச்சுதலால் ஊதலாகாதென்று அறிந்து மாறாது தும்பி கடும்பறைச் செருக்கால் ஊதித்தன் பறை பண்ணழியும் என்றதனால், செல்வக் கடுங்கோ வாழியாதன் கண்டு விரும்பிக் காக்கப்படுதலால், நேரிமலையைப் பகை வேந்தர் வலியுடையே மென்னும் செருக்கால் கொள்ளக் கருதி முயல்வராயின், அவ்வலியிழந்து கெடுவரென்பது வலியுறுத்த வாறாம். 1-4. கொடுமணம் ............ பெறுகுவை உரை : கடன் அறி மரபின் கைவல் பாண - இசை வல்லோர்க் குரிய கடமைகளை நன்கறிந்த முறைமையால் யாழ் வாசித்தலில் கைவன்மை வாய்ந்த பாணனே; நெடுமொழி ஒக்கலொடு - நெடிய புகழ்பெற்ற நின் சுற்றத்தாருடனே; கொடுமணம் - கொடுமண மென்னு மூரிடத்தும்; பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் - பந்தரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழைய வூரிடத்தும்; பட்ட - பெறப்படு வனவாகிய; தென் கடல முத்தமொடு நன்கலம் பெறுவை - தென் கடலில் எடுக்கப்படும் முத்துக்களோடு நல்ல அணிகலங் களையும் பெறுவாய் என்றவாறு. யாழ் இசைத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை நன்கறிந்து இசைப்பவனே யாழ்வல்லோ னாதலால், “கடனறி மரபின் கைவல் பாண” என்றார். “கைவல் பாண்மகன் கடனறிந்தியங்க” (சிறுபாண். 37) என்று பிறரும் கூறுதல் காண்க. தமது கைவன்மை யால் அரசர் முதலாயினார்பால் மாராயம் பெற்ற புகழ்மிக்க சுற்றத்தா ரென்றற்கு, “நெடுமொழி யொக்கல்” என்றார். “மாராயம் பெற்ற நெடுமொழி” (தொல். புறத். 8) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. மாராயம் பெற்றதனால் உலகவர் மீக்கூறும் புகழ் “நெடுமொழி” யெனப்பட்டது. கொடுமணம், பந்தர் என்ற இரண்டும் அக்காலத்தே முறையே நன் கலங்கட்கும் உயரிய முத்துக்கட்கும் சீரிய இடங்களாகத் திகழ்ந்தன போலும். “கொடுமணம் பட்டவினைமா ணருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (பதிற். 74) என அரிசில் கிழாரும் ஓதுதல் காண்க. இதனால், “தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை” யெனப் பொதுப்படக் கூறினாராயினும், கொடுமணம் பட்ட நன்கலமும், பந்தர்ப் பெயரிய மூதூர்ப் பட்ட தென்கடன் முத்தும் பெறுகுவை யென இயைத்துக் கொள்க. இதுகாறும் கூறியது, கொன்றை வெண்போழ்க் கண்ணி யரும், யாக்கையரும், பல்செருக் கொன்று, மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோருமாகிய வீரர்க்குப் பெருமகனும், நேரிப் பொருநனும் ஆகிய செல்வக் கோமானைப் பாடினை செலின், கடனறி மரபின் கைவல் பாண, நீ நின் நெடுமொழி யொக்கலொடு கொடுமணம் பட்ட நன்கலனும் பந்தர் மூதூர்ப் பட்ட தென்கடல் முத்தும் பெறுகுவை யென்று வினைமுடிபு கொள்க. இனிப் பழையவுரைகாரர், “பந்தர்ப் பெயரிய மூதூர்த் தென்கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை யென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.” 8. ஏமவாழ்க்கை 1. கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பண் கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம் அகலிரு விசும்பி னாகத் ததிர 5. வெவ்வரி நிலைஇய வெயிலெறிந் தல்லது உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய நெஞ்சுபுக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்து இன்னா ருறையுட் டாம்பெறி னல்லது வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு 10. கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன் அருங்க ணொடைமை தீர்ந்துபின் மகிழ்சிறந்து நாம மறியா வேம வாழ்க்கை வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும் இன்னகை மேய பல்லுறை பெறுபகொல் 15. பாய லின்மையிற் பாசிழை நெகிழ நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின் ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச் செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல் அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும் 20. மணங்கமழ் மார்பநின் றாணிழ லோரே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏம வாழ்க்கை 15-20. பாயல் ............... தாணிழ லோரே. உரை : பாயல் இன்மையின் - பிரிவாற்றாது உறக்கம் பெறாமை யால்; பாசிழை நெகிழ - அணிந்துள்ள பசிய இழைகள் நெகிழ்ந்து நீங்க வுடல் மெலிந்து; நெடுமண் இஞ்சி - உயரிய மண்ணாற் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த; நீள் நகர் வரைப்பின் - நீண்ட பெருமனை யிடத்தே; ஓவு உறழ் நெடுஞ்சுவர் - ஓவியத்தில் தீட்டிக் காட்டப்படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில்; நாள் பல எழுதி - பிரிவின்கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாள்கள் பலவும் எழுதி யெழுதி; செவ்விரல் சிவந்த - இயல்பாகவே சிவந்துள்ள விரல் மிகச் சிவந்த; அவ் வரி - அழகிய வரிகளையும்; குடைச் சூல் - சிலம்பையும்; அணங்கெழில் - காண்பாரை வருத்தும் அழகையுமுடைய; அரிவையர்ப் பிணிக்கும் - மகளிர் மனத்தைப் பிணித்து நிற்கும்; மணங்கமழ் மார்ப - சாந்தின் நறிய மணம் கமழும் மார்பை யுடையோய்; நின் தாள் நிழலோர் - நின் அடிப்பணி நின்று வாழும் வீரர் என்றவாறு. பாயல், உறக்கம்; “படலின் பாயல்” (ஐங். 195) என்புழிப் போல. பிரிவுத் துயரத்தை யாற்றாது காதல்மகளிர் பலரும் வருந்து மாறு தோன்ற, “பாய லின்மையின்” என்றும், “பாசிழை நெகிழ” என்றும் கூறினார். இவை யிரண்டும் முறையே “கண்டுயில் மறுத்தல்” எனவும், “உடம்பு நனி சுருங்கல்” எனவும் கூறப்படும் மெய்ப்பாடுகளாகும். காதலரைப் பிரிந்த மகளிர் அவர் பிரிந்த நாள்களைச் சுவரில் கோட்டிட்டுக் குறித்தல் மரபாதலின், “ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதி” என்றார்; “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல் வாழி தோழி” (அகம். 61) என்று பிறரும் கூறுதல் காண்க. நெடுமண் இஞ்சி யென்புழி, நெடுமை உயர்ச்சி மேற்று. ஓவு, ஓவ மென்பதன் கடைக்குறை. இயல்பாகவே சிவந்த விரல் சுவரில் பல நாளும் எழுதுவதால் மிகச் சிவந்து தோன்றுதலால், “செவ்விரல் சிவந்த” என்றார். குடைச் சூல், சிலம்பு. கண்டார் மனத்தே வேட்கை விளைவித்து வருத்தும் இயல்புபற்றி, எழிலை “அணங்கெழில்” எனச் சிறப்பித்தார். “நின்னெழில் நலம்........ நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ” (கலி. 56) என வருதல் காண்க. காதல் மகளிர் கிடந்துறங்கி இன்புறும் காமக்களனாய் அவரைப் பிரியாமைப் பிணிக்கும் சிறப்புடைமை பற்றி, மார்பை, “அணங்கெழிலரி வையர்ப் பிணிக்கும் மணங்கமழ் மார்பு” என்றார். “வேட்டோர்க் கமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு” (அகம். 332) என்றும், “காதலர் நல்கார் நயவா ராயினும், பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே” (குறுந். 60) என்றும், “ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு மின்சா யற்றே” (ஐங். 14) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக. இழை நெகிழ, எழுதிச் சிவந்த அரிவையர், என்றும், வரியும் குடைச்சூலும் எழிலுமுடைய அரிவையர் என்றும் இயையும். “பாசிழை நெகிழ நாள் பல எழுதியென முடிக்க” என்பர் பழைய வுரைகாரர். 1-4. கால் கடிப்பாக ........... அதிர உரை : வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் - பகைவர் நாட்டிடத்தே சென்றமைத்துத் தங்கிய பாசறைநடுவில்; கால் கடிப்பாக - மோதுகின்ற காற்றாகிய குறுந்தடி அலைக்க; கடல் ஒலித் தாங்கு - கடலாகிய முரசு முழங்கியது போல; கடுஞ்சிலை கடவும் தழங்கு குரல் முரசம் - மிக்க முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது; அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர - விரிந்த பெரிய வானத்திடத்தே முழங்க என்றவாறு. போர் குறித்துச் செல்லும் செலவினை விதந்தோதுதலின், பாசறையின் நிலைமையைக் கூறுகின்றார். பகைப்புலத்தே சென்று அமைத்த பாசறை யென்றற்கு, “வேறுபுலத் திறுத்த கட்டூர்” என்றார். மோதுகின்ற காற்றைக் கடிப்பென்றாற் போலக் கடலை முரசமென்னாமையின், இஃது ஏகதேச வுருவகம். சிலை, முழக்கம். முரசின் முழக்கம் வீரரைப் போர்க் கட் செலுத்தும் குறிப்பிற்றாதலின், அதனைக் “கடுஞ்சிலை” யென்றும், “கடவும்” என்றும் கூறினார். ஏவுதற் குறிப்பிற்றாய முழக்கம் “சிலைப்பு” எனப்படும் போலும்! இனி, வில்வீரரை யேவும் முரசு முழக்க மென்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கடலை முரசமாகவும் காற்றை முரசு முழக்கும் குறுந்தடியாகவும் கூறுதல் சான்றோர் மரபு; “கடுங்குரல் முரசம் காலுறு கடலிற் கடிய வுரற” (பதிற். 69) “புணரி, குணில்வாய் முரசின் இரங்குந் துறைவன்” (குறுந். 328) என்று வருவன காண்க. “கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு முரசம் அதிரவெனக் கூட்டுக” என்பது பழையவுரை. 5-8. வெவ்வரி ........... பெறி னல்லது உரை : வெவ்வரி நிலைஇய எயில் எறிந்தல்லது - கண்டார் விரும்பத் தக்க கோலங்கள் நிலைபெற்ற பகைவர் மதிலை யழித்தன்றி; உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய - உணவு உண்பது இல்லையென்று உண்ணாது கழித்த நாள்கள் பல கழியவும்; நெஞ்சு புகல் ஊக்கத்தர் - தம் நெஞ்சம் போரே விரும்புதலால் எழுந்த ஊக்கத்தை யுடையராய்; மெய் தயங்கு உயக்கத்து இன்னார் - உடல்வலி குன்றி அசைவுற்று மெலியும் மெலிவினையுடைய பகைவரது; உறையுள் தாம் பெறின் அல்லது - உறைவிடத்தைத் தாம் வென்று கைக் கொண்டாலன்றி என்றவாறு. வெவ்வரி யென்புழி வெம்மை வேண்டற்பொருட்டு. வரிக்கப்படுவது வரியாயிற்று; வரித்தல் கோலம் செய்தல்; ஈண்டு ஓவியத்தின் மேற்று; “ஓவுறழ் நெடுஞ்சுவர்” (பதிற். 68) எனப் பின்னரும் கூறுப. நாள் பல கழியினும் பொலிவு குலையா வண்ணம் எழுதப்பட்டமை தோன்ற, “நிலைஇய” என்றார். எயிலெறிந்தல்லது உணவுண்ணோம் என வஞ்சினம் மொழிந்தமை யின், அம்மொழி தப்பாவண்ணம் பகைவர் மதிலை முற்றி நிற்றலின், “எயிலெறிந்தல்லது உண்ணாதடுக்கிய பொழுது பல கழிய” என்றார். பிறரும், “இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக், கண்ணி கண்ணிய வயவர்” (பதிற். 58) என்று கூறுதல் காண்க. இழைத்த வஞ்சினம் தப்பாமை முடித்தற்கு நாள் பல கழிந்தனவாயினும், தலைநாளிற் போல ஊக்கம் சிறிதும் குன்றாமை தோன்ற, உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சுபுக லூக்கத்தர்” என்றார். கழியவும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. ஊக்கத்தர் : முற்றெச்சம். இனி, பழையவுரைகாரர், “எயிலெறிந்து என்ற எச்சத்திற்கு உண்ணாது என்றது இடமாக உண்டலென வொரு தொழிற் பெயர் வருவித்து முடிக்க” என்றும், “உண்ணாது என்றதனை உண்ணாம லெனத் திரித்து, அதனை அடுக்கிய வென்னும் வினை யொடு முடித்துக் கழிய வென்றதனைக் கழியாநிற்க வென்னும் பொருளதாக்கி, அதனைப் பெறினென்னும் வினையொடு முடிக்க” என்றும், “ஊக்கத்த ரென்றது வினையெச்ச” மென்றும் கூறுவர். தயங்குதல், அசைதல், மெய் தயங்கு உயக்கமாவது ஓய் வின்றிப் பொருதலால் மெய் வலி குன்றுதலால் உண்டாகும் அசைவுக்குக் காரணமாகிய மெலிவுநிலை. இதனை ஓய்ச்ச லென்றும் கூறுப. “தும்பை சான்ற மெய் தயங் குயக்கத்து” (பதிற். 79) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வண்ணம் பெறும் உயக்கத்தை யெய்துபவர் இன்னாமை யெய்துத லியல்பாதலால், அஃதெய்தி நிற்கும் பகைவரை “இன்னார்” என்றார். உயக்கத்து இன்னார் என்பதனால், உயக்கத்தால் இன்னாமை யடைந் திருக்கும் பகைவரென்பதும், அவரை அன்னராக்கு முகத்தால் அவர் உறையும் இடத்தை வென்று கோடலும் பெற்றாம். பெறவே, அவ்வுறையுளைப் பெற்ற வீரர் அவ்விடத்தே இரவினும் பகலினும் எப்போழ்தினும் பகைவரது தாக்குதலை யெதிர் நோக்கியே இருக்குமாறும் பெற்றாம். இன்னாருறையுள் பெறினல்லது, “இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்” என்பதனால், பெரும்பான்மையான நாள்கள் இன்னாருறையுள் பெறுதலிலேயே வீரர் கழித்தலை யறிக. 9-14. வேந்தூர் ............. பெறுபகொல் உரை : வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு - பகை வேந்தர் ஏறிப்போந்த களிற்றினைக் கொன்று அதன் மருப்பினைக் கைக்கொண்டு; கட்கொடி நுடங்கும் ஆவணம் உடன்புக்கு - கள்ளுக்கடையின் கொடி யசைந்துதோன்றும் கடைத் தெருவை உடனடைந்து; அருங் கள் நொடைமை தீர்ந்த பின் - அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து அக் கள்ளைப் பெற்றுண்ட பின்பு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; நாமம் அறியா ஏம வாழ்க்கை வடபுல வாழ்நரின் - அச்சத்தை யறியாத இன்பமே நுகரும் வாழ்க்கையையுடைய உத்தரகுருவில் வாழும் மக்களைப் போல; பெரிது அமர்ந்து - மிக்க விருப்பமுற்று; அல்கலும் இன்னகை மேய பல் உறை பெறுப கொல் - நாடோறும் இனிய உவகை பொருந்தியுறையும் பொழுதுகள் பல பெறுவார் களோ; பெறுதல் அரிது போலும் என்றவாறு. போரில்லாத காலத்தே சேரனுடைய வீரர் காலங்கழிக்கும் திறம் கூறுவார், நாடோறும் அவர்கள் பகைப்புலத்தே பகை வேந்தர் ஊர்ந்துவரும் களிற்றினைக் கொன்று, கொணர்ந்த அவற்றின் வெண்கோடுகளைக் கள்ளிற்கு விலையாகத் தந்து, கள்ளைப் பெற்று மகிழ்வது கூறுவார், “வெண்கோடு கொண்டு ஆவணம் புக்கு அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ் சிறந்து” என்றார். வெண்கோட்டுக் களிறுகளில் சிறப்புடையவற்றையே வேந்தர் ஊர்ந்து செல்பவாதலின் அச் சிறப்புடைமை தோன்ற, “வேந்தூர் யானை வெண்கோடு” என்றார். கள்ளுக்கடையில் கொடிகட்டி வைத்தல் இக்காலத்திற் போலப் பண்டைக் காலத்தும் உண்மை யறிக; நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்” (அகம். 126) என்று பிறரும் கூறுப. உயர்ந்த கோடுகளைத் தந்தல்லது பெறலாகாமை தோன்ற. “அருங்கண் ணொடைமை” யென்றார். எனவே, கள்ளினது இனிப்பும் களிப்பும் கூறியவா றாயிற்று. கட்கடைக்கு வீரர் தம் தோழரோடன்றித் தனித்துச் செல்லா ரென்றற்கு “உடன் புக்கு” என்றார். “மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்” (பதிற். 30) என்று பிறரும் கூறுதல் காண்க. வடபுலம் என்றது உத்தரகுரு வெனப்படும்; அங்கு வாழ்வோர் பகை முதலிய காரணமாகப் பிறக்கும் அச்சம் யாதுமின்றி இன்பமே துய்த்திருப்ப வென்பவாகலின், “நாம மறியா வேம வாழ்க்கை, வடபுல வாழ்நரின்” என்றார். பழைய வுரைகாரரும், “நாம மறியா ஏம வாழ்க்கை யென்றது, துன்பம் இடைவிரவின இன்பமன்றி இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு ஏம வாழ்க்கை யென்று பெயராயிற்” றென்றும், “வடபுலம், போக பூமியாகிய உத்தரகுரு” என்றும் கூறுவர். இதனை “அருந்தவங் கொடுக்குஞ் சுருங்காச் செல்வத்து, உத்தர குருவம்” (பெருங். 2 : 7: 140-1) என்று கொங்குவேளிர் கூறுதல் காண்க. இன்னகை: இனிய இன்பம் என்பது பழையவுரை. உறை, ஆகுபெயரால் உறையும் பொழுதின் மேலதாயிற்று. உறை பெறுதல் அரிது போலும் என்பது குறிப்பு. எனவே, வேந்தன் நாடோறும் போர்வேட்டு வினைபுரிதலையே மேற்கொண் டிருந்தமை பெற்றாம். இதுகாறும் கூறியது: அணங்கெழில் அரிவையர்ப் பிணிக் கும் மார்ப, நின் தாணிழல் வாழ்வோர், கட்டூர் நாப்பண், முரசம் அதிர, உண்ணா தடுக்கியபொழுது பல கழியவும், இன்னார் உறையுள் தாம் பெறினல்லது, அல்கலும் பெரிதமர்ந்து, வடபுலவாழ்நரின் இன்னகை மேய பல்லுறை, பெறுப கொல்லோ; பெறுதல் அரிது போலும் என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், அரிவையர்ப் பிணிக்கும் மணம் கமழ் மார்ப, நின் தாள்நிழலோர் உண்ணா தடுக்கிய பொழுது பல கழிய இன்னார் உறையுள் தாம் பெறினன்றி, இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுபகொல்? பெறார்; அவர் அவ்வாறு அது பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏது எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது: காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.” 9. மண்கெழு ஞாலம் 1. மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக் கடல்போ றானைக் கடுங்குரன் முரசம் காலுறு கடலிற் கடிய வுரற 5. எறிந்து சிதைந்த வாள் இலைதெரிந்த வேல் பாய்ந்தாய்ந்த மா ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் 10. கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே நின்போல், அசைவில் கொள்கைய ராகலி னசையாது ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம் நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப 15. விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : மண்கெழு ஞாலம் 1-10. மலையுறழ் ........... வேந்தே உரை: மலை யுறழ் யானை வான் தோய் வெல்கொடி - மலை போலும் யானையின்மேல் வானளாவ எடுத்த வெற்றிக்கொடி யானது; வரைமிசை யருவியின் - மலைமேலிருந்து விழும் அருவி போல; வயின் வயின் நுடங்க - இடந்தோறும் அசைந்து விளங்க; கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம் - கடல் போன்ற தானையின் நடுவே கடிய முழக்கத்தையுடைய முரசு; கால் உறு கடலின் கடிய உரற - காற்றால் மோதப்பட்ட கடல்போலக் கடிதாய் முழங்க; எறிந்து சிதைந்த வாள் - பகைவரை எறிதலால் சிதைவுற்ற வாள் வீரரும்; இலை தெரிந்த வேல் - இலைபோன்ற தலையையுடைய வலிய வேலேந்திய வீரரும்; பாய்ந்து ஆய்ந்த மா - பகைவர்மேற் பாய்தலால் ஓய்வுற்ற குதிரைகளும்; ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு - ஆராய்ந்து தெரிந்துகொள்ளப்பட்ட போர்வேட்கையினையுடைய வீரர்களும் கொண்ட தானையுடன் சென்று; படு பிணம் பிறங்கப் பகைவர் நூறி - போரிலே பட்டு வீழும் பிணங்கள் குவிந்து உயரப் பகைவரைக் கொன்றழித்து; கெடு குடி பயிற்றிய - அவர் நாட்டில் கெட்டோருடைய குடிகளை வாழச்செய்த: கொற்ற வேந்தே - வெற்றி வேந்தனே என்றவாறு. யானைக்கு மலையும் கொடிக்கு அருவியும் உவமமாயின. “பெருவரை யிழிதரும் நெடுவெள் ளருவி, ஓடை யானையுயர் மிசை யெடுத்த, ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” (அகம்.358) என்று பிறரும் கூறுதல் காண்க. “உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு” (பதிற். 90) என்று பிறரும் கூறுதல்போல, ஈண்டும் ஆசிரியர் “கடல்போல் தானை” யென்றார். கேட்ட பகைவர் உள்ளத்தே அச்சத்தைப் பயத்தல் பற்றிக் “கடுங்குரல் முரசம்” என்றார். “எறிந்து சிதைந்த வா” ளென்றும், “பாய்ந்தாய்ந்த மா” என்றும் கூறியது, முறையே வாட்படை, குதிரைப் படை களின் போர்ப் பயிற்சியின் சிறப்புக் குறித்து நின்றன. வாள், வேல், குதிரை யென்பன, அவ்வவற்றை யாளும் தானை வீரரைச் சுட்டி நின்றன. ஒடுவினை வாள் முதலியவற்றோடும் கூட்டுக. ஆய்தல், ஓய்தல். பல போர்களிலும் அறம் பிழையாது வென்று மேம்பட்டாரையே வீரராக ஆராய்ந்து தேர்ந்து கோடலின், “ஆய்ந்து தெரிந்த மறவ” ரென்றும், அவர்தாமும் அப் போரிடைப் பெறும் புகழே விரும்பி நிற்றல் பற்றிப் “புகல் மறவ” ரென்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “நுடங்க எனவும் உரற எனவும் நின்ற வினையெச்சங்களை நூறி யென்னும் வினையொடு முடிக்க” என்றும், “புகன் மறவரொடு என்னும் ஒடுவை, வாளொடு, வேலொடு, மாவொடு என எங்கும் கூட்டுக” என்றும், “வாள், வேல், மா என நின்ற மூன்றும் ஆகுபெய” ரென்றும் கூறுவர். இக் கூறிய தானையொடு சென்று எதிர்ந்த பகைவரைத் தாக்கி வென்றி மிகும் திறத்தை, “படுபிணம் பிறங்க நூறி” என்றார். பொடிபடுத்த லென்னும் பொருட்டாய நுறி யென்னும் சொல் ஈண்டுக் கோறற் பொருட்டு. பழையவுரையும், “நூறி யென்பது ஈண்டுக் கொன்றென்னும் பொருண்மைத்து,” என்றல் காண்க. போரில் பட்டு வீழும் பிணங்கள் பெருகி மலைபோலக் குவியப் பொருதலால், பகைவர் நாடு குடிவளம் குன்றிக் கெடுதலால், தீது கடிந்து நன்று புரக்கும் வேந்தற்கு, கெட்ட குடியை நலமுறுவித்துப் பேணுதல் கடனாதலின், அது செய்த வேந்தனை, “கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே” யென்றார், “படுபிணம் பிறங்கப் பகைவரை நூறிய பின் அப் பகைவருடைய கெட்டுப்போன குடிமக்களை அவர் நாட்டிலே பயின்று வாழ் வாராகப் பண்ணிய” வென்றும், “இனிப் பகைவருடைய கெட்ட குடிகளை வேற்றுநாட்டிலே பயிலப்பண்ணின வென்றுமா” மென்றும் பழையவுரைகாரர் கூறுவர். 13-17. நிலம் ................. முந்திசினோரே உரை : நிலம் பயம் பொழிய - நிலம் தன்பால் விளையும் விளை பொருள்களை மிக விளைவிக்க; சுடர் சினம் தணிய - வெயிலது வெம்மை வரம்பிகவாது தணிந்து நிலவ; பயம் கெழு வெள்ளி ஆநிய நிற்ப - உலகிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளி யென்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனை நாள் கோள்களுடனே சென்று நிற்ப; விசும்பு மெய்யகலப் பெயல் புரவு எதிர - வானம் மழை முகில்கள் நிரம்பப் பரவி நல்ல மழையைப் பெய்வது காரணமாக இடம் அகன்று விளங்கவே மழை தன் பெயலால் உலகு புரக்கும் செயலுற்று நிற்ப; நால்வேறு நனந்தலை - நான்காய் வேறுபட்ட அகன்ற திசையிட மெல்லாம்; ஓராங்கு நந்த - ஒன்றுபோல ஆக்க மெய்த; இலங்கு கதிர்த் திகிரி முந்திசினோர் - விளங்குகின்ற அரசவாணையாகிய திகிரியைச் செலுத்திய நின் முன்னோர் என்றவாறு. தன்பால் விளைபொருளை மிக விளைத்து வழங்குமாறு பற்றி, “நிலம் பயம் பொழிய” என்றும், வெயிலது வெம்மையும் மழை காலந்தோறும் பெய்தலால் வரம்பிகவாது நிலவுத லாலும், வரம் பிகந்த வெம்மையே உயிர்களால் மிகுதியாகக் கருதப்படு மாதலாலும், “சுடர் சினம் தணிய” என்றும் கூறினார். வெள்ளிக்கோள் உலகுயிர்கட்கு நலம் செய்யுமாகலின், “பயங் கெழு வெள்ளி” யென்றும், அந்நலம் உண்டாதற்குத் துணை யாகும் ஏனை நாளும் கோளும் இயங்குமிடத்தே இவ்வெள்ளி நிற்க வேண்டுதலின், “ஆநியம் நிற்ப” என்றும் கூறினார். “அழல் சென்ற மருங்கின் வெள்ளியோ டாது, மழைவேண்டு புலத்து மாரி நிற்ப” (பதிற். 13) என்றும், “வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப” (பதிற். 24) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், “நிலம் பயம் பொழிய வென்றது, சிலர் அரசு செய்யுங் காலங்களில் மழையும் நீரும் குறைவின்றி யிருந்தும் எவ்விளைவும் சுருங்க விளையும் காலமும் உளவாம்; அவ்வாறன்றி நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய வென்றவா” றென்றும், சுடர் சினம் தணிய வென்றது, “திங்கள் மும்மாரியும் பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினம் தணிந்தாற் போன்ற தோற்ற மென்றவா” றென்றும், “வெள்ளி யென்றது வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி யென்றவா” றென்றும், “பயங்கெழு ஆநிய நிற்க வென்றது, அவ் வெள்ளி மழைக்கு உடலான மற்றை நாள்கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாள்களிலே நிற்க வென்றவா” றென்றும் கூறுவர். ஆட்சி நலம் இல்வழி, மழையின்மைக்குக் காரணமாகிய நாளும் கோளும் நிலை திரிதலின், விசும்பும் இடம் சுருங்கித் தடுமாறுமென்பது பற்றி, “விசும்பு மெய்யகல” என்றும், அதனால் மழை வேண்டுங் காலத்து விளைவு மிகுதிக் கேற்பப் பெய்து உலகுயிர்கட்கு நலம் செய்தலால், “பெயல்புர வெதிர” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “விசும்பு மெய்யகல வென்றது, அம் மழை யில்லாமைக்கு உற்பாதமாகிய தூமத் தோற்ற மின்மையின், ஆகாயவெளி தன் வடிவு பண்டையில் அகன்றாற்போலத் தோன்ற வென்றவா” றென்றும் கூறுவர். நாற்றிசையும் தனித்தனி வேறுவே றியல்பினவாதலால், “நால்வேறு நனந்தலை” யென்றும், இயல்பு வேறுபடினும் பயன்விளைதற்கண் ஏற்றத் தாழ்வின்றி ஒன்றுபோல ஆக்கம் எய்தின என்றற்கு, “ஓராங்கு நந்த” என்றும் கூறினார்; “நாலு திசையும் ஒன்றுபோலே பகையின்றி விளங்க” வென்பது பழையவுரை. பயம் பொழிய, சினம் தணிய, ஆநியம் நிற்ப, பெயல் புரவெதிர, ஓராங்கு நந்த, திகிரி செலுத்திய முந்திசினோர் என ஒரு சொல் வருவித்து முடிக்க. பழையவுரைகாரர், பொழிய என்பது முதல் நந்த என்பது ஈறாக நின்றவற்றை “ஆண்டோர்” (அடி. 12) என்பதனோடு கூட்டி முடிப்பார். 11-12. நின்போல் .............. ஞாலம் உரை : நின்போல் மன்ற அசைவில் கொள்கைய ராதலின் - நின்னைப்போல் தெளிவாக மாறாத கொள்கையை யுடைய வர்களா யிருந்தமையால்; இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டோர் - இவ்வணுச் செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள் என்றவாறு. நின் முன்னோரினும் நீ கொள்கையால் உயர்ந்தாய் என்பார், நின் போல் என உவமைக்கண் வைத்தோதினார். அவர் வரலாற்றுக் கொள்கைகளையும் நின் கொள்கை களையும் சீர்தூக்கிக் காணுமிடத்தே அவருடையவற்றினும் நின்னுடைய கொள்கை மேம்பட்டுத் திகழ்கின்றன வென்பார், “மன்ற” என்றார். அசைவு, முதலது திரிபின்மேலும் பின்னது வருத்தத்தின் மேலும் நின்றன. மேல்வரும் பகை முதலிய வற்றுக்கு எளிமை யுற்று அரசுமுறை திரிதல் கூடாதென்றற்கு, “அசைவில் கொள்கை” யென்றும், முறை கோடியவழி, வறுமை பிணி முதலியன நாட்டிற் பெருகி மக்கட்கு இடும்பை பயத்தலின், “அசையா தாண்டோர்” என்றும் கூறினார். மன்ற வென்பதனை `அசைவில் கொள்கையராதலின்’ என்பதனோடு கூட்டி யுரைக்க. இம் மண்கெழு ஞாலம் என்றற்குப் பழைய வுரைகாரர், “பொன்ஞால மன்றி இம் மண்ஞால முழுதும் ஆண்டா ரென்பது தோன்ற, மண்கெழு ஞாலமென்ற இச் சிறப்பானே இதற்கு மண்கெழுஞால மென்று பெயராயிற்” றென்பர். இதுகாறும் கூறியது: கொடி நுடங்க, முரசம் உரற, வாள்வீரர் முதல் மறவர் உள்ளிட்ட தானையொடு சென்று பகைவர் பிணம் பிறங்க நூறி, அவர்நாட்டுக் கெடுகுடி பயிற்றிய வேந்தே, இலங்குகதிர்த் திகிரி செலுத்திய நின் முந்திசினோர், நின்போல் அசைவில் கொள்கையராதலின், இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டார்கள் எனக் கூட்டி வினைமுடிபு செய்க. இனிப் பழையவுரைகாரர், “கொற்ற வேந்தே, இலங்கு கதிர்த் திகிரியினையுடைய நின் முன்னோர், நிச்சயமாக நின்னைப் போல் அசைவில்லாத மேற்கோளையுடையரா கையாலே, இம்மண் ஞாலத்தினை நிலம் பயம் பொழிதல் முதலாக நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த என்பது ஈறாக எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக அசைவின்றி ஆண்டோராவர்; அவரல் லார் இம்மண்ஞாலத்தின் ஒரோ விடங்களை ஆளுவதல்லது முழுதும் ஆளுதல் கூடாதன்றே யெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “ஆண்டோ ரசையாது என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப்பாரும் உளர். இதனாற் சொல்லியது அவன் ஆள்வினைச் சிறப்பினை அவன் குடிவரலாற்றொடு படுத்துச் சொல்லியவா றாயிற்று.” “எறிந்து சிதைந்த என்பது முதலாக மறவரொடு என்பது ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான், வஞ்சித்தூக்கு மாயிற்று. அவற்றுள் முன்னின்ற மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும், மற்றை யடியின் ஈற்றுச்சீர்” பொதுச் சீராகவும் இட்டுக் கொள்க. நின்போல் என்றது கூன்.” 10. பறைக்குர லருவி 1. களிறுகடைஇய தாள் மாவுடற்றிய வடிம்பு சமந்ததைந்த வேல் கல்லலைத்த தோள் 5. வில்லலைத்த நல்வலத்து வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை குவிமுகி ழூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மிலைந்துமதஞ் செருக்கி உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக் 10. கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த வலம்படு வான்கழல் வயவர் பெரும நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப் பெண்மை சான்று பெருமட நிலைஇக் 15. கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண்கிளர் மார்ப தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை 20. வணங்கிய சாயல் வணங்கா வாண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல் மாடோ ருறையு முலகமுங் கேட்ப இழுமென விழிதரும் பறைக்குர லருவி 25. முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்றும் அயிரை நெடுவரை போலத் தொலையா தாகநீ வாழு நாளே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பறைக்குர லருவி 1-5. களிறு ................. நல்வலத்து உரை : களிறு கடைஇய தாள் - களிறுகளை நெறியறிந்து செலுத்திப் பயின்ற தாளினையும்; மா வுடற்றிய வடிம்பு - குதிரைகளைப் பொருதற்குச் செலுத்திப் பயின்ற தாள் விளிம்பினையும்; சமம் ததைந்த வேல் - பகைவர் செய்யும் போரைக் கெடுத்த வேற் படையினையும்; கல் அலைத்த தோள் - கல்லொடு பொருது பயின்ற தோளினையும்; வில் அலைத்த நல்வலத்து - வில்லேந்திப் பொருது பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையுமுடைய (வயவர். 11) என்றவாறு. களிற்றின்மேலே யிருந்து செலுத்தும் வீரர் அதன் பிடரிக் கண் இருக்கும் கயிற்றிடையே தம் தாளைச் செருகி முன் தாளால் தம் குறிப்பினை யுணர்த்திச் செலுத்துப வாதலின், அச் சிறப்புக் குறித்து, அவர் தாளை, “களிறு கடைஇய தாள்” என்றார். குதிரை மேலிருந்து பொரும் குதிரை வீரர், தம் தாளின் அகவிளிம்பால், அவற்றிற்குத் தம் குறிப்பை யுணர்த்திச் செலுத்துப வாகலின், அச்சிறப்பு நோக்கி, “மாவுடற்றிய வடிம்பு” என்றார். வடிம்பு, தாளின் விளிம்பு. வடிம்பலம்ப நின்ற பாண்டியன்” என்னும் வழக்குண்மை காண்க. வேலும் வாளும் என்றவற்றுள், வேல் சிறந்தமையின் அதனை யெடுத்தோதினா ராகலின், வாள் வன்மையும் கூறியவாறாகக் கொள்க. இனித் தோள்வன்மைக்கு, கற்றூணொடு பொருது மற்பயிற்சி பெற்றுக் காழ்ப்புற்றிருப்பது கூறுவார், “கல்லலைத்த தோள்” என்றார். இவ்வாறு படைவீரர்க்கு வேண்டும் சிறப்பியல்களுள் களிறூர்தல், மாவூர்தல், வேல் வாட்போர், மற்பயிற்சி என்பவற்றைக் கூறி, வில்வன்மை இன்றியமையாமை பற்றி, “வில்லலைத்த நல்வலத்து வயவர்” என்றார். இனி, சமம் ததைந்த வேல் என்றதற்கு, “மாற்றார் செய்யும் சமங்கள் சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவா” றென்றும், “வேலென்றது வேல் வென்றியினை” யென்றும், “கல்லலைத்த தோளென்றது வலியுடைமையால் கல்லை யலைத்த தோள் என்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். இதனால், தாளினையும் வடிம்பினையும் வேற்படை யினையும், தோளினையும், வில்லினையு முடைய வயவர் எனக் கூட்டி முடிக்க. 6-11. வண்டிசை ............... பெரும உரை : வண்டிசை கடவா - வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லாத; தண் பனம் போந்தை - தண்ணிய பனையினது; குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு - குவிந்த அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய பனங்குருத்தோடு; தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து - இனிய சுனையிடத்து மலர்ந்த குவளைப்பூ விரவிய கண்ணியைச் சூடி; மதம் செருக்கி - போர்க்கு வேண்டும் மதம் மிகுந்து; கடுஞ்சின வேந்தர் - மிக்க சினத்தையுடைய பகை மன்னர்; உடைநிலை நல் அமர் கடந்து - என்றும் தமக்கே யுடைமையாகப் பெற்ற நிலைமையினையுடைய நல்ல போர்களை வஞ்சியாது பொருதழித்து; மறம் கெடுத்து - அவருடைய போர்வன்மையைச் சிதைத்து; செம்மல் தொலைத்த - இறுதியாக அவரது தலைமையினையு மறக் கெடுத்த; வலம்படு வான்கழல் வயவர் பெரும - வெற்றி பொருந்திய பெரிய கழலணிந்த வீரர்க்குத் தலைவனே என்றவாறு. வெண்தோடு கொண்டு நீர்மலர் மிலைந்து, செருக்கி, கடந்து, கெடுத்து, தொலைத்த வயவர் என்று கூட்டி, அவர் கட்குப் பெரும என இயைக்க. வயவர்பெரும என்பதனை ஒரு பெயராக்கிச் சேரமானுக்கே ஏற்றி முடிப்பினுமாம். பனந்தோட்டோடு குவளைப்பூவை விரவித் தொடுத்த கண்ணியை யணிவது சேரநாட்டு வீரர்க் கியல்பாதலால், ஈண்டும் அதனை யெடுத்தோதினார். பனங்குருத்தில் தேனின்மையின் வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லை யாதலால், “வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை” யென்றும், அதனை அழகிதாகத் தொடுத்தணிந்தவழி, பூ வென்று கருதி மூசும் வண்டினம் வறிது மீளாமைப்பொருட்டு, வேறு குவளை, வேங்கை, வாகை முதலிய பூக்களை விரவித் தொடுத்தணியும் இயல்பினால், “வெண்தோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து” என்றும் கூறினார். பனங் குருத்தால் குவிந்த அரும்புபோல முடைந்தது ஊசி போலக் கூரிதா யிருத்தல் பற்றி, “குவி முகிழ் ஊசி வெண்தோடு” என்பாராயினர். “வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு” (புறம். 100) என்று பிறரும் கூறுதல் காண்க. தீஞ்சுனை நீர்மலர் என்றற்கு நீலமலர் சிறப்புடைத் தாயினும், குவளைப் பூவே போந்தையிற் றொடுக்கும் பொற் புடைமையால், அது கொள்ளப்பட்டது. “வெண்தோட் டசைத்த வொண்பூங் குவளையர்” (பதிற். 58) என்று பிறரும் கூறுப. போருடற்றுதலும் அதன்கண் வெற்றி பெறுதலும் தமக்கு நிலையாகக் கொண்டு சிறக்கும் வேந்தரென்பார். பகை வேந்தரை, கடுஞ்சின வேந்த ரென்றும், “உடைநிலை நல்லமர்” என்றும் சிறப்பித்தார். உடைநிலை யென்பது “உடைப்பெருஞ் செல்வம்” (பழ. 200) என்பது போல நின்றது. இவ்வியல்பினரான வேந்தரையும் வென்று அடிப்படுத்திக் கொண்டமை தோன்ற, “செம்மல் தொலைத்த” என்றார். காலிற் கழல் யாப்பு வெற்றி பெறும் வீரர்க்கே பெருமை தருதலின், “வலம்படு வான்கழல் வயவர்” என்றாரென வறிக. வென்றி பெறுதற்குக் காரணமான சிறந்த கழலென்பாருமுளர். 12-16. நகையினும் ............ மார்ப உரை : நகையினும் பொய்யா வாய்மை - விளையாட்டானும் பொய் கூறுதலை யில்லாத வாய்மையினையும்; பகைவர் புறஞ்சொல் கேளா - பகைவர் தம் புறத்தே இகழ்ந்து கூறும் சொற்களை ஏறட்டுக்கொள்ளாத; புரைதீர் ஒண்மை - குற்றம் நீங்கிய அறிவினையும்; பூண் கிளர் மார்ப - பூணார மணிந்த மார்பினை யும் உடையோய்; பெண்மை சான்று - நாணம் நிறைந்து; பெரு மடம் நிலைஇ - பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று; கற்பு இறை கொண்ட - கற்புநெறிக்கண்ணே தங்கின; கமழும் சுடர்நுதல் - மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியினையுடைய; புரையோள் கணவ - உயர்ந்தவட்குக் கணவனே என்றவாறு. பொய்யாமை, அறம் பலவற்றுள்ளும் சிறந்தமையுணர்ந்து அதனை விளையாட்டினும் நெகிழாது ஓம்பும் நற்பண்பினை வியந்து, “நகையினும் பொய்யா வாய்மை” என்றார். விளையாட் டாகக் கூறும் பொய் யார்க்கும் என்றும் எத்துணையும் தீமை பயவாதாயினும் கொள்ளற்பால தன்றெனத் தள்ளி யொழுகுவது வாய்மையாம் என்றற்கு நகையினும் பொய்யாமை என்னாது “பொய்யா வாய்மை” என்றாரென வறிக. நகை, விளையாட்டு; “நகையேயும் வேண்டற்பாற் றன்று” (குறள். 871) என்புழிப் போல. பொய்யா வாய்மை; பொய்யாமையாகிய வாய்மை, “பொச்சாவாக் கருவி” (குறள். 53) என்புழிப்போல. பகைவர் எஞ்ஞான்றும் புறத்தே குற்றங் கூறி இகழ்வது இயல்பாதலின், அதனைக் கேட்டு மனவமைதி குலைவதினும், கேளாது அவரை வேரொடு தொலைத்தற்குரிய காலமும் கருவியும் இடமும் நோக்கி யிருத்தல் அறிவுடை வேந்தற்கு ஆண்மையும் புகழும் பயத்தலின், “பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீர் ஒண்மை” யென்றார். புரைதீர் ஒண்மை யென்றதனால், பகைவர் புறத்தே இனிமை தோன்றக் கூறுவனவற்றையும் கொள்ளாமை கூறியவாறாயிற்று. “நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும், ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது” (புறம். 58) என்று சான்றோர் கூறுதல் காண்க. வாய்மையும் ஒண்மையும் முறையே உரை யுணர்வுகட்கு அணியாயின மையின், உடற்கு அணியாகும் பூணினை, “பூண் கிளர் மார்ப” என்றொழிந்தார். இனி, அரசமாதேவியின் நலம் கூறுவார், நாணமே உருவாய்க் கொண்டு விளங்கும் ஒட்பத்தை, “பெண்மை சான்று” என்றார். பெண்மை, பெண்கட்குரிய அமைதித்தன்மையாயினும், ஈண்டுச் சிறப்புடைய நாண்மேல் நின்றது. பெண்டிரின் உருவு நாணத்தா லாய தென்பதனை, “நாண்மெய்க்கொண்டீட்டப் பட்டார்” (சீவக. 1119) என்று பின்வந்த சான்றோரும், “பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி” (நற். 94) எனப் பண்டைநாளை இளந்திரைய னாரும் கூறுதல் காண்க. இனிப் பெண்மை சான்றென்றற்கு, பெண்பாற்குரிய வெனப்பட்ட (தொல். பொ. பொ. 15) “செறி யும், நிறையும், செம்மையும், செப்பும், அறிவும், அருமையும்” நிறையப்பெற்று என்றுமாம். மடமாவது, தான் தன் அறிகருவி களால் ஆராய்ந்து கொண்டதனை எத்துணை இடையூறும் இடையீடும் எய்தினும் விடாமை. இஃது அறிவின் திட்பத்தால் விளையும் பயனாதலின் “பெருமடம்” என்றார். தான் தன் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலற்கு நலந்தருவன வன்றிப் பிறவற்றின்பால் மடம்பட நிற்றல்பற்றி, மடம் எனப்படுவ தாயிற்று. ஈத்துவக்கும் இன்பமும் புகழும் கருதுவோர் பிறவற்றின் பால் மடம்படுதல்பற்றி, கொடைமடம் படுதல் போல்வது இது. இதற்கு வேறு பிற கூறுதலுமுண்டு. கற்பாவது, தன் மென்மைத் தன்மையைப் பெற்றோராலும் சான்றோராலும் நூன்முகத்தாலும் இயற்கை யறிவாலும் அறிந்து, எக்காலத்தும் தன்னைப் பாதுகாத்தொழுகும் அறிவுடைமை. நினைவு, சொல், செயல் என்ற மூன்றும் கற்புநெறியே நிற்றலின், “கற்பிறை கொண்ட புரையோள்” என்றார். இனி, இதற்குக் கற்பால் இறைமைத் தன்மைபெற்ற புரையோள் என்றுரைப்பினு மமையும். ஈண்டுக் கூறப்படாது எஞ்சிநிற்கும் நற்குண நற்செய்கைகளெல்லாம் அகப்பட, “புரையோள்” என்றார். சொல்லுக்கு வாய்மையும், நினைவுக்கு ஒண்மையும்போல உயிர்வாழ்க்கைக்குத் துணைமையாம் இயைபுபற்றி, “புரையோள் கணவ” என்பதை இடையே கூறினார். 17-19. தொலையா ................ இன்புறுத்தினை உரை : தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற - குன்றாத கோட்பாட்டினையுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது சூழ; வேள்வியின் கடவுள் அருத்தினை - போர்க்களத்தே பகைவரை வென்று செய்யும் களவேள்வியால் வெற்றிக் கடவுட்குப் பலியூட்டி அதனை மகிழ்வித்தாய்; உயர்நிலை யுலகத்து ஐயர் - வீரருலகத்து வாழும் சான்றோரை; கேள்வி இன்புறுத்தினை - அவர் செய்த வீரச்செயல்களைப் புலவர் பாட இருந்து கேட்குமாற்றால் மகிழ்வித்தாய் என்றவாறு. உயிர்க்கிறுதி வந்தவிடத்தும் அறத்திற் றிரியாக் கோட் பாட்டை யுடையராய் வேந்தற்கு மெய்ந்நிழல்போலப் பின் சென்று உறுதியாவன ஆற்றும் உள்ளமுடையராதலின், “தொலை யாக் கொள்கைச் சுற்றம்” என்றார். தம்மாற் சுற்றப்பட்ட தலைவன் செல்வம் வலி முதலியன தொலைந் தவழியும், அவனை நீங்காது பழைமை பாராட்டும் பண்பினராதல் பற்றித் தொலையாக் கொள்கைச் சுற்றத்தார் எனச் சிறப்பித் தாரென வறிக. “பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள” (குறள். 521) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. வெல் போரண்ண லாதலின், வெற்றி யெய்துந் தோறும் களவேள்வி செய்து கடவுளரை மகிழ்விக்கின்றா னென்றற்கு “வேள்வியிற் கடவுள் அருத்தினை” என்றார். “அரசுபட வமருழக்கி, முரசு கொண்டு களம் வேட்ட, அடுதிற லுயர்புகழ் வேந்தே” (மதுரைக். 128-30) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, வேள்வியெனப் பொதுப்படக் கூறினமையின், பார்ப்பார் வேட்கும் வேள்விக்கும் துணைபுரிந்து வேட்பிக்கு முதல்வனாய்க் கடவுளரை இன்புறுத் தினை யென்பாருமுளர். கேள்வி யென்புழி, ஏதுப்பொருட்டாய இன்னுருபு விகாரத்தாற் றொக்கது. அறப்போர் புரிந்து உயிர் துறந்தோர் வீரருறையும் துறக்கம் புகுவராதலின், அவர்களை “உயர்நிலை யுலகத் தையர்” என்றார். அவருடைய ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் புலவர் பாட, பாணர் இசைக்க, கூத்தர் கூத்தியற்றக் கண்டும் கேட்டும் சிறப்பித்தலால் அவர் இன்புறுவர் என்ற கருத்தால், “கேள்வியின் உயர்நிலை யுலகத்தையர் இன்புறுத் தினை” யென்றார். இக்கொள்கை பத்தாம் நூற்றாண்டிலும் இருந்து வந்தது என்றற்குத் திருத்தக்கத்தேவர் எழுதிய சீவக சிந்தாமணி சான்று பகர்கின்றது. இனி, ஈண்டுக் கூறிய ஐயரை முனிவராக்கி, அவருரைத்த மறைகளை யோதுவது அவர்க்கு இன்பம் செய்யுமென்று கொண்டு, இது கூறினாரென்பாரு முளர். 20-22. வணங்கிய ............ அண்ணல் உரை : வணங்கிய சாயல் - நட்பமைந்த சான்றோர்க்குப் பணிந் தொழுகும் மென்மையினையும்; வணங்கா ஆண்மை - பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையுமுடைய; இளந் துணைப் புதல்வரின் - இளந்துணையாகிய மக்களைக்கொண்டு; முதியர்ப்பேணி - முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து; தொல் கடன் இறுத்த - தொன்றுதொட்ட தம் கடமையினை ஆற்றிய; வெல்போர் அண்ணல் - வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே என்றவாறு. தாம் பிறந்த குடியின் நலத்தைப் பேணும் நண்பமைந்த சான்றோர்க்கு அடங்கியொழுகும் நல்லாற்றினை “வணங்கிய சாயல்” என்றார். அடங்கி யொழுகுமிடத்து மென்மைப் பண்பல்லது பிறிதொன்றும் தோன்றாமையின் “சாயல்” என்றும், வணக்கமில்வழி, முதியோரால் தம் தொல்குடிவரவும் தொல்லோர் மேற்கொண்டு சிறந்த தொன்னெறிமாண்பும் உணர்த்தப் படாவாகலின் “வணங்கிய” என்றும் கூறினார். இனையார்பால் தோன்றும் அடக்கம் சிறப்பாதல் பற்றி, அதனை முதற்கண்வைத் தோதினார். இளமையிலே மானத்தின் நீங்கா ஆண்மை நற்குடிப் பிறந்தோர்க்குக் கருவிலே வாய்த்த திருவாதல் தோன்ற “வணங்கா ஆண்மை” யென்றார். வணங்காமைக் கேதுவாகிய ஆண்மை “வணங்கா ஆண்மை” யெனப்பட்டது. ஆடவர் பிற துறைக்கு வேண்டப்படுதலின், முதியர்ப்பேணும் நல்லறத்தை “இளந்துணைப் புதல்வரின்” ஆற்றினான் என்றார். முதியோர், முதுமை யெய்துமுன் நாடு காத்தற்கு “அறிவு வேண்டியவழி அறிவு உதவியும் வாள் வேண்டுவழி வாளுதவியும்” (புறம். 179) துணைபுரிந்தோர். அவரை முதுமைக்கண் பேணுதல் நன்றியறித லாகிய பேரற மாகலின், “முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த அண்ணல்” என்றார். இனி, முதியோ ரென்றது பிதிரர்க ளென்றும், அவர்க்கு, இல்வாழ்வார் செய்தற்குரிய கடன், மக்களைப்பெறுதல் என்றும் கொண்டு, இளந்துணைப் புதல்வர்ப்பேற்றால் முதிய ராகிய பிதிரர்க்குரிய தொல்கடனை இறுத்தா யென்றும் கூறுப, வேறு சிலர் தாய்மாமன் முதலாயினார்க்குச் செய்யுங் கடன் தொல்கடனென்றும் தந்தையர்க்குச் செய்யுங் கடன் பிதிர்க்கடனென்றும் கூறுவர். முதுமையுற்ற சான்றோர்க்கும் முனிவரர்க்கும் தாம் பெற்ற இளந்துணை மக்களைத் தொண்டு செய்ய விடுத்தவாகிய செயல் வடநாட்டினும் நிலவிற்றென்ப தற்கு இராமாயணமும் பாரதமும் சான்று பகர்கின்றன. மகப்பேற்றால் பிதிர்க்கடன் கழியு மென்னும் வடவர்கொள்கை, தமிழ்நாட்டவர்க்கு இல்லை. திருவள்ளுவர், மகப்பேறு பிதிர்க் கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற கரியாம். தொல்லோர்க்கும் இறுத்தற்குரிய கடனாதலின், தொல்கடன் எனப்பட்டது. இக்காலத்தும் தமிழ்மக்களிடையே முதியோர், இளையோர் மணம்புணர்ந்து தம்பால் வாழ்த்துப் பெறுவான் அடிவீழ்ந்து வணங்குங்கால், “விரைய மக்களைப் பெற்றுத் தருக; அம் மக்கள் கையால் தண்ணீ ரருந்தினால் எங்கள் உயிர் சாந்திபெறும்” என்று வாழ்த்தும் வழக்க முண்மை இக்கருத்தை வலியுறுத்தும். இவ் வழக்குச் சேர வேந்தர்பாலும் இருந்ததென்றற்கு. “கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் காசறு செய்யுட் பாடிய பரணர்க்கு, அவன்தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்த செய்தியை இப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகம் கூறுவது போதிய சான்றாகும். இனி, வணங்கிய சாயலையும் வணங்கா ஆண்மையினையும் சேரமானுக்கே ஏற்றி வெல்போர் அண்ணலென்பதனோடு முடிப்பாரு முளர். 23-27. மாடோர் ........... நாளே உரை : மாடோர் உறையும் உலகமும் கேட்ப - தேவர்கள் வாழும் பொன்னுலகத்தும் கேட்கும்படி; இழும் என இழிதரும் பறைக்குர லருவி - இழுமென்னு மனுகரணமுண்டாக வீழும் பறைபோன்ற முழக்கத்தையுடைய அருவிகள்; முழுமுதல் மிசைய கோடு தொறும் துவன்றும் - மிகப் பெரியவாகிய உச்சியினையுடைய முடிகள்தோறும் நிறைந்து விளங்கும்; அயிரை நெடுவரைபோல - அயிரை என்னும் நெடிய மலையைப் போல; நீ வாழும் நாள் தொலையாதாக - நீ வாழும் வாழ்நாள் குறையாது பெருகுமாக என்றவாறு. மாடு, பொன்; அவ்வுலகினையுடைய தேவரை “மாடோர்” என்றார். மண்ணுலகத்தேயன்றிப் பொன்னுலகத்தவரும் கேட்குமாறு முழங்குகின்ற தென்றற்கு, “உலகமும் கேட்ப” என்றார். அருவியின் நீரொழுக்கு இழுமெனும் அனுகரண வோசையும், கீழே வீழ்ந்தவழிப் பறைபோன்ற முழக்க முடைமையின், “இழுமென விழிதரும் பறைக்குர லருவி” யென்றார்; “இழுமென இழிதரும் அருவி” (முருகு. 316) என்றும், “பறையிசை யருவி” (புறம். 125) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இச் சிறப்புப்பற்றி, இதற்குப் பறைக்குர லருவி யென்று பெயராயிற்றென வறிக. அயிரை, மேற்குமலைத் தொடரிலுள்ள தொரு மலை; இதிற் பிறக்கும் அயிரையாறு மேலைக்கடலில் விழுகிறது. அருவி துவன்றும் அயிரை நெடுவரை தொலையாது நிலைபெறுவது போல நீ வாழும் நாள் தொலையாதாக என வாழ்த்தியவாறு; இவ்வாறே பிறரும், “கடவுள் அயிரையின் நிலைஇக், கேடில வாக பெரும நின்புகழே” (பதிற். 79) என்று வாழ்த்துதல் காண்க. இதுகாறும் கூறியது: “வயவர் பெரும, புரையோள் கணவ, பூண்கிளர் மார்ப, வெல்போ ரண்ணல், வேள்வியிற் கடவுள் அருத்தினை; கேள்வியின் உயர்நிலை யுலகத்து ஐயர் இன்புறுத் தினை; ஆதலின் கோடுதொறும் அருவி துவன்றும் நெடுவரை போல, நீ வாழும் நாள் தொலையா தாக” என வினைமுடிவு செய்க. “இதனாற் சொல்லியது, அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்திய வாறாயிற்று.” ஏழாம் பத்து மூலமும் உரையும் முற்றும். ஆசிரியர் அரிசில்கிழார் பாடிய எட்டாம் பத்து பதிகம் பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன் கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேற் றானை யதிக மானோ டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று முரசுங் குடையுங் கலனுங்கொண் டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத் துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத் தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திற லொள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறையை மறுவில் வாய்மொழி அரிசில் கிழார் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம், குறுந்தாண் ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ் பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற் றியாணர், மாசித றிருக்கை, வென்றாடு துணங்கை, பிறழ நோக்கியவர், நிறம்படு குருதி, புண்ணுடை யெறுழ்த்தோள். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ளவெல்லாம் கொண்மின் என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர் யான் இரப்ப இதனை யாள்க என்று அமைச்சுப் பூண்டார். தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை பதினேழி யாண்டு வீற்றிருந்தான். 1. குறுந்தாண் ஞாயில் 1. அறாஅ யாண ரகன்கட் செறுவின் அருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின் 5. அம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின் அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் 10. போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில் ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து 15. புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென 20. அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல் பெருங்களிற் றியானையோ டருங்கலந் தராஅர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி 25. உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு பெயர் : குறுந்தாண் ஞாயில் 1-8. அறாஅ .......... உடற்றியோரே உரை : அறாஅ யாணர் அகன்கண் செறுவின் - நீங்காத புது வருவாயினையுடைய அகன்ற இடம் பொருந்திய வயலிடத்தே; அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து - நிறைந்த பூக்களாகிய ஆம்பலையும் நெய்தலையும் நெல்லுடனே அறுத்து; செறு வினைமகளிர் - தொகுப்பதாகிய அறுவடைத்தொழில் செய்யும் உழவர் மகளிர்; மெலிந்த வெக்கை - நெருங்கியுள்ள நெற்களத்தின் கண்; பரூஉப் பகடு உதிர்த்த - பருத்த எருமைகள் கடாவிடப் படுதலால் மிதித்துதிர்த்த; மென் செந்நெல்லின் - மெல்லிய செந்நெல்லின்கண்; அம்பண வளவை உறை குவித்தாங்கு - மரக்கால்களை அளத்தற்காக நெற்குவையில் செருகி வைத்தது போல; கடுந் தேறு உறுகிளை; - கழதாகக் கொட்டி வருத்தும் மிகுதியான குளவிகள்; மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு - தம்மில் நெருங்கிக் கூடியிருந்து உறங்கும் செழுமையான கூட்டினை; கிளைத்த - கலைத்த; இளந்துணை மகாஅரின் - இளஞ்சிறார்கள் போல; பெரும - பெருமானே; நின் உடற்றி யோர் - நின்னொடு பொரக் கருதி மாறுபட்டோர்; அலந்தனர் - அலமந்து வருந்தலுற்றனர் என்றவாறு. குளவியினம் தம்மிற் கூடித் தொக்கியிருக்கும் கூடு, நெற் குவைக்கும் - குளவி, உறை குவித்துக்கிடந்த அம்பணவளவைக் கும் - அக் கூட்டைக் கலைத்துவிட்ட இளந்துணைச் சிறார்கள், அவை கொட்டு மென்று அஞ்சி மூலைக்கொருவராய்ச் சிதறி யோடுதல், சேரமானைப் பகைத்துப் பொருதவர் கெட்டு அலமருதற்கும் - உவமமாயின, யாணர், புதுமை; ஈண்டுப் புதுவருவாய் மேற்று. ஆர் வீ எனற்பாலது அரு வி யென நின்றது; ஆர்தல், நிறைதல். ஆர்ந்தென்பது அருந்தென நிற்பது (கலி. 22) போல, ஆர் வீ அரு வீ யெனத் திரிந்து பின் அருவி யெனக் குறுகிற்று. அருவி யாம்பல் என்பதற்குப் பழைய வுரைகாரர், நீரின் ஆம்பல் என்று பொருள் கூறி, “என்றதனாற் பயன் நீர்க்குறைவற்ற ஆம்பல் என்பதாம்” என்றும், “எண்ணின் ஆம்பலை நீக்குதற் கென்பது மொன்று” என்றும் கூறுவர். ஒடு, எண்ணொடு. அரிந்தெனவே, நெல்லுடனே அரிதல் பெற்றாம். அரிந்த நெற்சூட்டைக் களத்தே சேர்த்துக் கடாவிட்டுத் தூற்றி நெற்பயன் பெறுபவாதலின், “பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்” என்றார். வெக்கை, நெற்களம். அரிந்து மலிந்த வெக்கை யென முடிக்க. செறுவினை மகளிர் என்புழி, நெல்லரிந்து தொகுத்தலாகிய வினை ஈண்டுச் செறுவினை யெனப்பட்டது. மகளிர் அரிந்து மலிந்திருக்குமிடம் வெக்கை யாதல்பற்றி, மலிந்த வெக்கை யென்றார். பழையவுரை காரர், “அரிந்து பகடுதிர்த்த எனக் கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க” என்பர். செறிவளை மகளிர் என்று பாடங் கொண்டு, “உழவர் பெண்மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாதோ ரிடமின்மையின் ஆண்டு அவர்கள் மிக்க களம், செறிவளை மகளிர் மலிந்த வெக்கையாயிற்” றென்பர். செறுவினை மகளி ரென்றே கொண்டு, மகளிரை விளையாட்டு மகளிராகக் கொள்ளின், வினையினை ஆகுபெயரால் வினைபுரியும் உழவர்க்கேற்றுக. பகடு கொண்டு கடாவிட்டுத் தெழித்தும் பண்டியி லேற்றிப் பகட்டினால் கொணர்வித்தும் நெற்பயன் கொள்ளப் பெறுதலின், “பகடுதிர்த்த மென்செந்நெல்” எனப் பகட்டால் விசேடித்தார்; பிறரும் “பகடுதரு செந்நெல்” (புறம். 390) என்றல் காண்க. செந்நெல், வெண்ணெல் போலும் நெல்வகை. மென்மை “சோற்றது மென்மை” யென்பது பழையவுரை. தூய்மை செய்த செந்நெல்லைப் பொன்மலைபோற் குவித்து, அதனை அளத்தற்கென்று அம்பண வளவையைச் செருகி வைத்திருப்பது, கூட்டிடத்தே குளவியினம் இருப்பது போறலின், “அளவை நிறைகுவித்தாங்கு” என்றார். அளவையை நெற் குவையில் உறைவித்தலாவது, அதன் உட்புறத்தே ஒரு பகுதி நெல்லிருப்பப் புதைத்தல். உறை வித்தல், குச் சாரியை பெற்று உறைகுவித்தல் என வந்தது. அளவை: தொழிற்பெயர்; நான்காவது விகாரத்தால் தொக்கது. இதனை இற்றைப் போதும் நெற் களங்களிலும் நெல் விற்கும் களரிகளிலும் காணலாம். பண்டைநாளைய அம்பணம் மூங்கிலாலாயது; இற்றை நாளைய அம்பணம், இரும்பினாலாயது; இதுவே வேறுபாடு. தேறு, கொட்டும் குளவி; தான் குறித்த பொருளைக் கொடுக்கினால் தெறுவது பற்றித் தேறு எனப் பெயர் பெற்றது. கொட்டியவழி யுண்டாகும் துன்ப மிகுதிபற்றி, கடுந்தேறு என்றார். அது வாழும் கூட்டை யழிக்கின், அழிப்பாரைச் சூழ்ந்துதெறும் இயல்பிற்றாதல் பற்றி, முதியோர் அது செய்யாராதலின், கூட்டை யழிப்பவர் இளஞ்சிறார் என்பது கொண்டு, “செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅர்” என்றார். மொசிதல், நிறைதல். மகாஅர், இளையோர் மேற்று; “சிறுதொழில் மகாஅர்” (அகம். 206) என்புழிப் போல. செழுங்கூடு கிளைத்த மகார், குளவியின் கடுந்தெறற்கஞ்சி யலந்து மூலைக்கொருவராய் ஓடி யுலமருவது போல, “நின் உடற்றியோர் அலந்தனர்” என்றார். கடுந்தேற் றுறுகிளை, மகாஅர்பால் பகை நினையாது தன் செழுங் கூட்டின்கண் உறுகிளையுடன் துஞ்சும் என்றதனால், நீயும் நின் செழுமனைக்கண் கிளையுடன் இனிதிருக்கின்றனையே யன்றிப் பிறரைப் பகைக்கின்றா யில்லையாயினும், மகார் தம் இளமையால் கூடு கிளைத்து வருந்துவதுபோல, நின் உடற்றி யோர் தம் அறியாமையால் போர் விளைத்துக் கெடுவாராயினர் என்றலின், “அலந்தனர் நின் உடற்றியோர்” என்றும், “பெரும” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “அளவைக்கென நான்காவது விரிக்க” என்றும், “கடுந்தேறுறுகிளை, கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம்” என்றும், “மொசிந்தன வென்றது, மொய்த்தனவாய் என்னும் வினையெச்சமுற்” றென்றும் கூறுவர். நெற்குவையும் அம்பணவளவையும் குளவியினத்தின் செழுங் கூட்டையும் குளவியையும் சிறப்பிக்கும் உவமமாயின: இவை உருவுவமம். குளவியும், அதன் கூடும், அக்கூடு கிளைக்கும் இளந்துணை மகாஅரும் என்ற மூன்றுவமைகளும் சேரமானை யும் அவன் நகரையும் பகைவரையும் சுட்டித் தொழிலுவம மாயின. ஆகவே இவை அடுத்துவர லுவம மாகாமை யறிக. இனி, உறை குவித்தல், என்பதனை இருசொற்படப் பிரித்து, உறையாகக் குவித்தல் என்று கொண்டு அளவையின் உறையிட்ட வாயிடத்தே குவிக்கப்படுவதுபோல நிலத்தே குவித்துவைத்தல் என்று உரைத்தலுமொன்று. அது பொருளாயின், உறையாகக் குவித்த நெல்லினைச் செழுங் கூட்டிற்கு உவமமாகக் கொள்க. இதனாற் கூறியது: மகளிர் மலிந்த வெக்கைக்கண் தொகுத்த நெல்லினிடத்தே அம்பண வளவை உறைகுவித் தாங்கு, கடுந்தேற் றுறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த மகாஅரின், நின் உடற்றி யோர் அலந்தனர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. 9-13. ஊரெரி ......... வௌவினை உரை : போர் சுடு எரி ஊர் கவர - போரின்கண்ணே சுடுதற்காக எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால்; கமழ் புகை - சுடுநாற்றம் நாறுகின்ற புகை; உருத்தெழுந்து உரைஇ - மிக்கெழுந்து பரந்து; மாதிரம் மறைப்ப - திசைகளை மறைக்க; தோன்றல் ஈயாது - வெளித் தோன்றாமல்; மதில்வாய் - மதிற்குள்ளே யிருந்து; தம் பழி ஊக்குநர் - தம் குற்றத்தால் பழி செய்து கொள்ளும் பகைவருடைய; குண்டுகண் அகழிய - ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும்; குறுந்தாள் ஞாயில் - குறுகிய படிகளையுடைய ஞாயிலையுமுடைய; ஆர் எயில் தோட்டி வௌவினை - கடத்தற்கரிய மதிற்காவலை யழித்துக் கவர்ந்து கொண்டனை, யாதலால் என்றவாறு. போருடற்றுவோர் பகைப்புலத்தே தீ வைத்தல் முறை யாகலின், போர் சுடு எரி என்றார். இதனை எரிபரந்தெடுத்த லென்றும் உழபுல வஞ்சி யென்றும் ஆசிரியன்மார் கூறுப. ஊர் முழுதும் எரி பரவுவதால் புகை மிக்கெழுந்து எம்மருங்கும் சூழ்ந்துகொள்ளும் திறத்தை, “உருத்தெழுந்துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப” என்றார். இனி, “எரி உருத்தெழுந் துரைஇ ஊர் கவர” என்று இயைப்பினு மமையும். பழைய வுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர் எரி கவர எனக் கூட்டுக” என்றல் காண்க. பகைவர் ஊரிடத்தே நீ எடுத்த தீயானது அவ்வூர்களைக் கவர்ந்துண்ண, அதனால் எழுந்த பெரும்புகை மாதிரம் மறைக்க, நீ அப்பகைவருடைய எயிலை வௌவினை யென்பார், “ஆரெயில் தோட்டி வௌவினை” யென்றார்; “நீயுடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” (பதிற். 25) என்று பிறரும் கூறுதல் காண்க. பகைவர், புறமதிலைச் சூழ்ந்துகொண்டவழி, அஞ்சாது வெளிப்போந்து அவரைப் பொருதழித்து வேறலோ, அப் போரிடைப்பட்டு வீழ்தலோ இரண்டி லொன்றைச் செய்யாது அகமதிற்கண் அடைபட்டு மடிந்திருத்தலால் பெரும்பழியே விளையுமாதலின், “மதில்வாய்த் தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்” என்றார். தோன்ற லீயா தென்பது தோன்றாம லென்னும் பொருட்டு. பழையவுரைகாரரும் “தோன்ற லீயா தென்றது, தோன்றா தென்னும் வினையெச்சத் திரிசொல்” என்றும், “தோன்ற லீயாமலெனத் திரிக்க” என்றும் கூறுவர். ஞாயில், மதிலின் அகத்தே புறத்தோர் அறியாவகை யிருந்து அம்பு தொடுக்கும் முக்கோண வறை. இதனை ஏப்புழை ஞாயி லென்பர். மதிற்றலையில் மேலிடத்தே சிறுசிறு படிகளை யுடைத்தா யிருத்தல்பற்றி, இதனைக் “குறுந்தாள் ஞாயில்” என்றார். விற்பொறி யிருந்து எந்திரத்தால் அம்பு சொரிய அதற்கு இடனாகிய ஞாயிலைத் தாளுடையது போலக் கூறும் சிறப்புப் பற்றி, குறுந்தாள் ஞாயி லென்று இப் பாட்டிற்குப் பெயராயிற்று. “குறுந்தாள் ஞாயிலென்றது, இடையிடையே மதிலின் அடியிடங்களைப் பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும் படியையுடைய ஞாயிலென்றவாறு” என்றும், “இவ்வாறு கூறிய சாதிப்பண்பானும், படியைத் தாளென்று கூறியனபடியானும் இதற்குக் குறுந்தாண் ஞாயில் என்று பெயராயிற்” றென்றும், “வௌவினை யென்றது வினை யெச்சமுற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். 13-24. ஏறொடு .......... ஊழி உரை : ஆன்பயம் வாழ்நர் - ஆன்பயன் கொண்டு வாழும் இடையர் கள்; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇ - ஏறுகளுடன் கன்றுகளை யுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால்; புலவுவில் இளையர் - புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின் வீரர்; புகல் சிறந்து - அவர்பால் விருப்பம் மிக்கு; அங்கை விடுப்ப - தாம் கைப்பற்றிய ஆனிரைகளையும் விட்டொழிய; மத்துக் கயிறு ஆடா வைகற்பொழுது - தயிர்கடையும் மத்தினிடத்தே கயிறாடாத விடியற்போதின்கண்; நினையூஉ - நின்னைப் புக லடைய நினைந்து போந்து; கழுவுள் தலை மடங்க - கழுவு ளென்னும் இடையர்தலைவன் தலைவணங்கி நின்றதனால்; பதி பாழாக வேறு புலம் படர்ந்து - ஊர்கள் பலவும் பாழ்படும் படியாகப் பகைவர் நாடு நோக்கிச் சென்று; விருந்தின் வாழ்க்கையொடு - புது வருவாய்கொண்டு இனிது வாழ்தற்கேதுவாகிய செல்வத்தோடு; பெருந் திரு அற்றென - தம் முன்னோர் ஈட்டி வைத்த பெருஞ் செல்வமும் இனிக் கெட்ட தென்றெண்ணி; அருஞ்சமத்து அருநிலை தாங்கிய - கடத்தற்கரிய போரின்கண் தடுத்தற்கரிய போர்நிலையைத் தடுத்துச் சிறந்த; புகர் நுதல் பெருங் களிற்று யானையொடு - புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய பெரிய களிற்றியானை களையும்; அருங்கலம் தராஅர் - அரிய அணிகலன்களையும் திறையாகச் செலுத்தாத பகைவேந்தர்; மெய் பனி கூரா - உடல்நடுக்கம் மிகுந்து; அணங்கெனப் பராவலின்- வருத்தக் கூடிய தெய்வமென நின்னை நினைந்து பரவுவதால், பலி கொண்டு பெயரும் பாசம்போல - தன்னால் தாக்குண்டார் உயிரைக் கொள்ளாது அவர் இட்ட பலியினைக் கொண்டு நீங்கும் பேய் போல; திறைகொண்டு பெயர்தி - அவர் இடும் திறைகளைக் கொண்டு அவர், உயிரை யளித்துவிட்டுத் திரும்பி ஏகுகின்றாய்; நின் ஊழி வாழ்க - நினக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் இனிது வாழ்வாயாக என்றவாறு. கழுவுள் என்பவன், ஆயர் தலைவனாய் ஏனை வேந்தருடன் பெரும் பகை கொண்டிருந்தவன்; அதனால் அவனைப் பிறரும், “பொரு முரணெய்திய கழுவுள்” (பதிற். 88) என்றல் காண்க. அவனிருந்த நகரை முற்றி, அவனுடைய ஆரெயில் தோட்டியை நீ வௌவிக்கொண்டமையின், அவன் அடைமதிற்பட்டுக் கிடப்ப, அவன் கீழ் வாழ்ந்த இடையர்கள் வேறு புகல்காணாது தம்முடைய ஆனிரைகளைத் தாமே கொணர்ந்து தந்து அருள் வேண்டி நின்றமை தோன்ற, “ஆன்பயம் வாழ்நர் ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇ” என்றார். ஆனிரையான் வரும் பாற்பயன் கொண்டு உயிர்வாழும் இயல்பினராயினும், அவற்றைத் தந்தேனும் நின் அருணிழல் வாழ்வு பெறுதல் வேண்டுமென நினைந்தன ரென்பார், “ஆன்பயம் வாழ்நர்” என்றும் கூறினார். தம் உயிர்கொடுத்து அருள்வேண்டினர் என்பது கருத்து. அதுகண்ட நின் வீரர் தாம் முன்பே போந்து வெட்சி நெறியிற் கைப்பற்றிய அவர் தம் ஆனிரைகளை அருளால் வழங்கினமையின், “புகல் சிறந்து அங்கை விடுப்ப” என்றார். பகைவர் தாம் உயிர்வாழ்தற் கேதுவாயவற்றைத் தாமே தந்து புறங்காட்டு தலினும் சீரிய வெற்றியின்மையின், “புகல் சிறந்” தென்றார். இவ் வாயர் முதற்கண் தாம் ஆளும் ஆண்மையும் உள்ளளவும் பொருதுநின்றமை தோன்ற, வில்லேந்திய வீரர் சிறப்பை, “புலவு வில் லிளையர்” என்றார். பெருந்திரளான மக்களைக் கொன்றத னால் வில்லேந்தி அம்பு தொடுக்கும் கைகள், குருதி தோய்ந்து புலவு நாறுதல் ஒருதலை. அம்பு தொடுத்து ஆயர்களைக் கொல்லாது அருள் செய்யும் சிறப்பு நோக்கி, “அங்கை” யென்றார். பகைத்துப் பொருதார் மேல் கண்ணோடாது அம்பு செலுத்தும் நெறிக்கு இளமை மேம்பட்டு நிற்பினும், அஃது அருளுடைமையால் சால் புற்றிருந்தமை விளங்க, “இளையர்” என்றார். தன் வீரராகிய ஆயர்கள் பொருவது விட்டு ஆனிரை களைத் தந்து நின் அருள் வாழ்வு வேண்டியதறிந்த கழுவுள், தான் அவர்கட்குத் தலைவனாகியும் தலைமைப் பணியினை யாற்றும் வலியின்மையால் நாணிப் பகற்போதிற் போந்து புகலடையாது வைகறைக்கண் வருதலை நினைந்தா னென்பார், “மத்துக் கயிறாடா வைகற் பொழுது நினையூஉ” என்றார். வைகறைப் போதில் ஆய்மகள் எழுந்து தயிர் கடைந்துகொண்டு, ஞாயிற்றின் வெயில் மிகுமுன் மாறி வரவேண்டி யிருத்தலின், வைகறை யாமத்தின் இறுதிக்காலத்தை “மத்துக்கயி றாடா வைகற் பொழுது” என்றார். அக் காலத்தே இயங்குவோர் உருவம் ஓரளவு இனிது தெரியும். பகற்போது வரற்கு நாணமும், இருட்போது வரின் காவலர் கொல்வரென்னும் அச்சமும் வருத்துதலால், வைகறைப்பொழுது கொள்ளப்பட்டது. நினைவு பிறந்தவழி, செய்கை பயனாதல்பற்றி, “நினையூஉ” என்றார். கழுவுள் என்பான் தன் பெருமுரணழிந்து மானத்தால் தலை வணங்கிநிற்பது வீரமாகாமையின், “தலை மடங்க” என்றார். வணங்கியது கண்ட துணையே, அவன்பாற்கொண்ட பகைமை நின்னுள்ளத்தி னின்றும், நீங்குதலின், வேறு புலம் நினைந்து செல்குவையாயினை என்பார். “வேறு புலம் படர்ந்து” என்றும், அச்செலவால் பகைவர் ஊர்கள் அழிவது ஒருதலை யாதலின், “பதி பாழாக” என்றும் கூறினார். படர்ந்து திறைகொண்டு பெயர்தி என வினைமுடிவு செய்க. “வௌவினை யென்றது, வினையெச்சமுற்று. ஆயம் தரீஇ யென்றது ஆயங்களை நீ புலவுவில் இளையர்க்குக் கொடுப்ப என்றவாறு. தரீஇ யென்பதனைத் தர வெனத் திரிக்க. இளையர் அங்கை விடுப்ப என்றது, இளையர் அவ் வாயத்தைத் தங்கள் அங்கையினின்றும் பிறர்க்கு விடுப்ப என்றவாறு. கயிறாடா வென்னும் பெயரெச்ச மறையை வைகலென்னும் தொழிற் பெயரொடு முடிக்க. வைகல் - கழிதல். வைகற்பொழுது: இரு பெயரொட்டு. வாழ்நர் - வாழ்பவர், இடையர். பயத்தானென விரிக்க. கழுவுளாவான், அவ்விடையர்க்குத் தலைவனாய் அக்காலத்துக் குறும்பு செய்திருந்தா னொருவன். முன்னர் எயிலென்றது, அவன் தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை. வேறு புலம் பதி பாழாகப் படர்ந்தென்றது, அக் கழுவுள் தலைமடங்குகையாலே அவனை விட்டு, வேறு திறையிடாக் குறும்பர் நாட்டிலே அந்நாட்டுப் பதி பாழாகச் சென்று என்றவாறு. “படர்ந்து திறைகொண்டு பெயர்தி யெனக் கூட்டுக” என்று பழையவுரைகாரர் கூறுவர். இனி, பகைவர் களிறும் கலனும் திறையாகத் தாரா தொழிந்ததற் கேதுவாகிய அவருடைய பெருஞ்செல்வ நிலையை, “விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு” என்றார். விருந்து, ஈண்டுப் புதிதாக ஈட்டப் பெறும் செல்வத்தின் மேற்று; அச் செல்வத்தின் பயன் இன்ப வாழ்க்கை யென்ப. “பெருந் திரு, முன்னோர் ஈட்டிவைத்துச் சென்ற பெருஞ் செல்வம்: “பெருஞ் செல்வம்” (குறள். 1000) என்பதற்குப் பரிமேலழகரும் இவ்வாறு கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், விருந்தின் வாழ்க்கை யாவது” “நாடோறும் புதிதாகத் தாங்கள் தேடுகின்ற பொருள்” என்றும், “பெருந் திரு, முன்னே தேடிக் கிடந்த பொருள்” என்றும் கூறுவர். பதி பாழாக வேறு புலமாகிய தம் நாடு நோக்கி நீ வருவது கண்ட நின் பகைவர்தம் வாழ்க்கையும் திருவும் அழிந்தன வென்று கருதி உளமும் உடலும் ஒருங்கு நடுங்கின ரென்பார், “விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென மெய்பனி கூரா” என்றார். பழையவுரைகாரர் “அற்றென வென்றது, அற்றதெனக் கருதி யென்றவாறு” என்றும், “அற்ற தென்பது கடைக் குறைந்த” தென்றும் கூறுவர். அருஞ் சமத்து அருநிலை யென்றது, கடும்போர் நிகழு மிடத்து வெல்லுதல் அரிதென்னுமாறு இருதிறத்து வீரரும் மண்டிப் பொரும் நிலைமையாகும். அந் நிலைமைக்கண் அஞ்சாது நின்ற பகைவர் முன்னேறாவாறு தகைந்து வெல்லும் போர்த்தகுதி பெற்ற களிறு என்றற்கு, இவ்வாறு சிறப்பித்தார் என அறிக. திறைசெலுத்தும் வேந்தர் இத்தகைய களிறுகளையும் உயரிய அணிகலன்களையும் தருவரென்பதனை, “ஒளிறுவாள் வயவேந்தர், களிறொடு கலந்தந்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப” (பதிற். 90) என்று பிறரும் கூறுமாற்றானறிக. அருங்கலந் தாராத பகைவ ரென்னாது “தராஅர்” எனத் தொழில்மேல் வைத்தோதியது, தாராமைக் கேதுவாய பகைமை நீங்கித் தருதற் கேதுவாகிய அச்சமுண்மை புலப்படுத்தற்கு. பகைவர் தம் முடைய ஆண்மை, அறிவு, பொருள், படை முதலிய வலி வகையைக் கடந்து மேம்பட்டு நிற்றல்பற்றி நின்னைத் தாக்கி வருத்தும் அணங்கெனக் கருதினா ரென்றும், அணங்கொடு பொருது வேறல் மக்கட் கரிதாதலின், அவர் செயற்பாலது வழிபாடு ஒன்றேயன்றிப் பிறிதில்லை யாதலின் “பராவலின்” என்றும் கூறினார். “பலிகொண்டு பெயரும் பாசம்” எனவே உயிர் கொள்ளாது விடுத்தேகுவது பெற்றாம். பாசம், பேய். பேயை உவமங் கூறியது போல, திருத்தக்க தேவரும் சீவகனை, “பெண்ணலங் காதலிற் பேயுமாயினான்” (சீவக. 2010) என்று கூறுதல் காண்க. 25-27. உரவரும் ........... வாழுமோரே உரை : உரவரும் மடவரும் அறிவு தெரிந் தெண்ணி - அறிவுடை யோர் அறிவுநலத்தையும் மடவோரது அறியாமையினையும் ஆராய்ந்து செய்வதும் தவிர்வதும் நினைந்து; அறிந்தனை அருளாயாயின் - அவரவர் தகுதியறிந்து அருளா தொழிகுவை யாயின்; நெடுந்தகை - நெடிய தகுதி யுடையோனே; இவண் வாழுமோர் யார் - இவ்வுலகில் வாழ்வோர் இலராவர் என்றவாறு. அறிவு தெரிந்தெனவே, அறியாமையும் தெரிந்தவாறு பெறப்படுதலின், அதனையும் பெய்து கொண்டு இருதிறத் தார்க்கு முறையே கூட்டி உரை கூறப்பட்டது. உரம், அறிவின் திண்மை. உரவோர் அறிவுநலம் தேர்ந்து அவரைத் தழீஇக் கோடல் வேந்தர்க்குக் கடனாதலாலும், மடவோர் சிற்றினத் தா ராதலின், அவரோடு சேராமை வேண்டுதலாலும், இருதிறத் தார்க்கும் செய்வதும் தவிர்வதும் அறியவேண்டுவனவாயின. உரவோர் புரியும் அறிவுடைச்செயல்கண்டு அருளலும், மடவோர் செய்யும் அறிவில்செயல்கண்டு ஒறுத்தலும் அரசு முறை யாதலால், “அறிந்தனை அருளாய்” என்றும், அருளா தொழியின், உரவோர் தேயச் சிற்றினம் பல்கித் துன்பமே மிகுவித்து உயிர்வாழ்க்கையை இன்னற்படுத்தும் என்றற்கு, “யாரிவண் வாழுமோர்” என்றும், இதனை யறிந்தாற்றும் சிறப்புக் குறித்து “நெடுந்தகை” யென்றும் கூறினார். சேரமானொடு பொருது உடற்றி அலந்த பகைவரை மடவரென்றும், அணங்கெனப் பராவித் திறை செலத்தியோரை உரவரென்றும் குறித்துரைத்தலின், இஃது ஓராற்றால் விரிந்தது தொகுத்து அவன் வென்றிச் சிறப்புரைத்தவாறு மாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “உரவரையும் மடவரையும் என்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது; அறிவு. அவர்களறிவு; வாழுமோர் என்புழி உம்மை அசைநிலை” என்பர். வாழுமோர் என்பது “உணருமோர்” என்பது போலும் தனிச்சொல்லாதலின், உம்மை எதிர்காலப்பொருட்டாயதோர் இடைச்சொல் லெனவுமாம். இதுகாறும் கூறியது: பெரும, நின் உடற்றியோர், கடுந்தேறு உறுகிளை துஞ்சும் செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின் அலந்தனர்; உருத்தெழுந்து உரைஇய எரி ஊர் கவர, புகை மாதிரம் மறைப்ப, ஆரெயில் தோட்டி வௌவினை; அதுகண்ட ஆன்பயம் வாழ்நர் அஞ்சி ஏறொடு கன்றுடை ஆயம் தந்தாராக, நின் இளையர் புகல் சிறந்து அங்கை விடுப்ப, அவர் தலைவனான கழுவுள் நாணி, வைகற் பொழுதிற் போந்து தலை மடங்கி நின்றானாக, நீ வேறு புலம் படர்ந்து சென்று, தராராய பகைவர் பராவலின், அவர் தந்த திறைகொண்டு பெயர்தி; நின் னூழி வாழ்க; இவ்வாறு உரவரு மடவரும் அறிவு தெரிந் தெண்ணி அருளாயாயின், நெடுந்தகை, இவண் வாழுமோர் யார்? ஒருவரு மிலராவர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “ஆரெயில் தோட்டி வௌவி, அதனையுடைய கழுவுள் தலைமடங்குகையாலே புலம் படர்ந்து, அவ்வேறு புலத்து நினக்கு யானையொடு அருங்கலம் திறை யிடார் விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றதெனக் கருதித் தங்கள் மெய்ந்நடுக்கமிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப் பரவுதலான், பேய் தான் பற்றினா ருயிரை வௌவாது தனக்கு அவர் பலியிட்டுழி அப்பலி கொண்டு பெயருமாறுபோல, நீயும் அவருயிரை வௌவாது திறைகொண்டு பெயரா நின்றாய்; இஃதன்றே நீ இதுபொழுது செய்கின்றது; நின்னை யுடற்றியோர் கடுந்தேறு உறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த இளந்துணை மகாரைப்போல, பெருமானே, அலந்தார்கள்; இனிமேல் உள்ளத்து உரவரையும் மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்தெண்ணி, அவர்களிடத்துச் செய்யும் அருளறிந்து அருளாயாயின், நெடுந்தகாய், இவண் வாழ்பவர் யார்? நின்னூழி வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க,” என்றும், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறி அவற்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்த வாறாயிற்” றென்றும் கூறுவர். 2. உருத்தெழு வெள்ளம் 1. இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார் சூழாது துணித லல்லது வறிதுடன் காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து 5. மன்பதை காப்ப வறிவு வலியுறுத்து நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின் பண்புநன் கறியார் மடம்பெரு மையின் துஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை நிலம்பொறை யொராஅநீர் ஞெமரவந் தீண்டி 10. உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத் தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துச் செஞ்சுடர் நிகழ்விற் பொங்குபிசிர் நுடக்கிய 15. மடங்கற் றீயி னையை சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உருத்தெழு வெள்ளம் 3-7. நின்முன்றிணை .......... பெருமையின் உரை : நின் முன் திணை முதல்வர்க்கு - நின் குடியில் நினக்கு முன்னே விளங்கிய முன்னோர்களுக்கு; ஓம்பினர் உறைந்து - பாதுகாப்பா யிருந்து; மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் - மக்கட் கூட்டத்தைப் புரத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தும்; நன்று அறி உள்ளத்து - அறமே காணும் உள்ளத்தை யுடைய; சான்றோர் அன்ன - அமைச்சர் போன்ற சூழ்ச்சிவன்மை படைத்த; நின்பண்பு - நினது இயல்பினை; மடம் பெருமையின் - அறியாமை மிக வுடையராதலால்; நன்கு அறியார் - தெளிய அறியாராயினர் நின் பகைவர் என்றவாறு. அரசர்க்கு “உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்” (குறள். 442) என்றற்கு, “முதல்வர்க்கு ஓம்பின ருறைந்து” என்றும், குடி யோம்பல் இறைமாட்சி யாதலின், “மன்பதை காப்ப” என்றும், அதற்கு வேண்டும் நெறிமுறைகளை உற்றவிடத்துக் கழறிக் கூறுதலும் அவர்க்கியல்பாதல்பற்றி, “அறிவு வலியுறுத்தும்” என்றும், அறம் வழுவியவழி அரசியல் நன்கு நடவாதாகலின், அதனையே தேர்ந்துணரும் அவ்வமைச்சர் மனப்பான்மையை, “நன்றறி யுள்ளத்துச் சான்றோர்” என்றும், அவரது சூழ்ச்சி முற்றும் இச் சேரமான்பால் செறிந்திருக்கு மாறு தோன்ற அவரை உவமமாக நிறுத்தியும் கூறினார். பகைவேந் தரும் சூழ்ச்சியுடையராயினும் அறியாமை மிகவுடைய ரென்றற்கு “மடம் பெருமையின்” என்றும், அதனால் நின் பண்பும் வலியும் அறிந்திலர் என்றற்கு “நின் பண்பு நன்கறியார்” என்றும் கூறினார். அறிவு வலியுறுத்தும் சான்றோர், உள்ளத்துச் சான்றோர் என இயையும். பழையவுரைகாரரும், “மன்பதை மக்கட் பன்மை” யென்றும், “அறிவு வலியுறுத்தும் சான்றோர் எனக் கூட்டுக” என்றும், ஈண்டுச் “சான்றோரென்றது மந்திரிகளை” யென்றும் கூறுவர். மடமென்னும் எழுவாய் பெருமையின் என்னும் பயனிலை கொண்டது. 8-16. துஞ்சல் .............. உடற்றிசி னோர்க்கே உரை : துஞ்சல் உறூஉம் பகல் புகும் மாலை - எல்லாவுயிர்களும் ஒருங்கு அழிதற்குரிய ஊழிக்காலமானது புகுகின்ற பொழுதில்; நிலம் பொறை ஒராஅ - நிலமகள் சுமை நீங்க; நீர் ஞெமர வந்து ஈண்டி - நீர் பரந்து வந்து பெருகுதலால்; உரவுத்திரை கடுகிய - பரந்தெழும் அலைகள் விரையும்; உருத்தெழு வெள்ளம் - நிலத் துயிர்களைக் கோறற்குச் சினந் தெழுவதுபோலும் வெள்ளம்; வரையா மாதிரத்து - எல்லை வரையறுக்கப்படாத திசை முழுதும்; இருள் சேர்பு பரந்து - இருளொடு சேர்ந்து பரவுவதால்; அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து - இருளைப் போக்குதற்குப் பன்னிரண்டாய் விரிந்து வரும் ஞாயிறுகள் தோன்றிய கூட்டத்தினது; செஞ்சுடர் நிகழ்வின் - சிவந்த வெயில் நிகழ்ச்சியினையும்; பொங்கு பிசிர் நுடக்கிய - மிகுகின்ற பிசிரினையுடைய அவ் வெள்ளத்தை வற்றச் செய்த; மடங்கல் தீயின் - வடவைத் தீயினையும்; சினம் கெழுகுருசில் - சினம் பொருந்திய குருசிலே; அம் சாறு புரையும் நின் தொழில் - அழகிய விழாவினைப்போல இன்பம் செய்யும் நின்னுடைய தொழிலை; ஒழித்து - விலக்கி; நின் உடற்றி சினோர்க்கு அனையை - நின்னைப் பகைத்துப் பொருவார்க்கு ஒத்திருக்கின்றாய் என்றவாறு. கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும் தீயினையும் அனையை என இயையும். குருசில், நின் உடற்றிசினோர்க்கு மடங்கற்றீயின் அனையை என இயைத்து முடிக்க. ஒராஅ என்பதனை ஒருவ வென்றும், ஞெமர வென்பதனை ஞெமர்ந் தென்றும், ஈண்டி யென்பதனை ஈண்ட வென்றும் பரந்தென்ப தனைப் பரவவென்றும் திரித்துக் கொள்க. பழையவுரை காரரும் “ஒராஅ வென்றதனை ஒருவ வெனத் திரித்து ஈண்டி யென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க” என்றும், “வெள்ளம் பரந்தென்றதனை பரக்கவெனத் திரித்து அதனை நுடக்கிய வென நின்ற செய்யிய வென்னும் வினையெச்சத்தோடு முடித்து, அதனைச் சுடர் நிகழ்வு என்னும் தொழிற்பெயரொடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே அவ்வெள்ளத்தை மாய்க்க வேண்டிச் சுடர் நிகழ்தலை யுடைத்தான தீயென வுரைக்க” என்றும் கூறுதல் காண்க. எல்லா வுயிர்களும் ஒருங்கு மடியும் ஊழிக்காலத்தைத், “துஞ்சல் உறூஉம் பகல்” என்றார். இருள் படரும் முடிவுக்கால மாதலால், “மாலை” யென்றார். இத்தகையதொரு காலம் வருதல், நிலமகட்குச் சுமை நீக்கம் குறித்தென்றற்கு, “நிலம் பொறை யொராஅ” என்றும், தன்னில் மூழ்கிமறையாத இடமும் பொருளும் இல்லையென்னுமாறு நீர் பரத்தலால், “நீர் ஞெமர வந்தீண்டி” என்றும், அவ்வெள்ளம் கடுகப் பரந்தெழுதற்குச் சூறைக்காற்று மோதுதலால் பேரலைகள் தோன்றிக் கடுகிவருவது உயிர்கண்மேற் சினங்கொண்டு பொங்கி வருவது போறலின், “உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்” என்றும் கூறினார். “துஞ்சல், எல்லா வுயிரும் படுத” லென்றும், “பகலென்றது ஊழியை” யென்றும், “மாலை யென்றது ஊழி முடிவினை” யென்றும், “உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான் கொல்லும் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ள மென்றவா” றென்றும், “இச்சிறப்பானே இதற்கு உருத்தெழு வெள்ளமென்று பெயராயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுகின்றார். ஞாயிறு முதலிய கோள்களும் ஏனை விண்மீன்களும் தோன்றாவாறு திணியிருள் பரந்துவிடுதலால் திசையறியலாகா மையின், “வரையா மாதிரத்து” என்றும், இருள் பரவும்போதே வெள்ளந்தானும் உடன் பரந்து விடுமாறு தோன்ற, “இருள் சேர்பு பரந்து” என்றும் கூறினார். இருளென்புழி உடனி கழ்ச்சிப் பொருட்டாய ஒடு வுருபு விகாரத்தாற் றொக்கது. அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து என மாறி இயைக்க. இவ்வூழியிருளைப் போக்கி நீர்ப்பெருக்கினை வற்றச்செய்தற்கு ஒரு ஞாயிறு அமையாமைபற்றிப் பன்னிரு ஞாயிறுகள் பல்வேறிடங்களில் கூட்டமாய்த் தோன்றிப் பேரொளியும் பெருவெப்பமும் செய்தலால். “அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வின்” என்றார். படுதல், தோன்றுதல். அகலுதல் விரிதல்; “அஃகி யகன்ற வறிவென்னாம்” (குறள். 175) என்றாற்போல. பொங்கு பிசிர் என வெள்ளத்தைச் சுட்டிக் கூறினார், பிசிர் வற்றுவதுபோல இவ்வூழி வெள்ளம் வடவைத் தீயால் வற்றுமாறு தோன்ற. நுடக்கிய வென்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாகக் கொண்டு “நிகழ்வின்” என்பதனோடு முடிப்பர், பழையவுரைகாரர். “ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்” வினால், திணியிருள் கெடுவதுபோல, சேரனது கொற்ற வொளியினால் பகையிருள் கெடுதல் பற்றியும், மடங்கற் றீயால் உருத்தெழு வெள்ளம் வற்றுவதுபோல, பகைவரது கடல்மருள் பெரும்படை கெட்டழிதல் பற்றியும் “செஞ்சுடர் நிகழ்வின் மடங்கற் றீயின் அனையை” என்றார். இனி, “பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்” என்ற பாடமே கொண்டு, உருத்தெழு வெள்ளத்தின் பொங்குகின்ற பிசிரைக் கெடுத்த செஞ்சுடர் நிகழ்வினையும், மடங்கற் றீயினையும் அனையை என்பதே நேரிய முறையாத லறிக. செஞ்சுடர் நிகழ்வு பேரிருளைப் போக்கிப் பிசிர்ப்படலத்தைக் கெடுக்க, மடங்கற்றீ வெள்ளத்தைச் சுவறச் செய்யுமென வறிக. இக் கூறியவாற்றால், சினங்கெழு குருசில், நின் உடற்றிசி னோர்க்கு, சாறு புரையும் நின் தொழிலொழித்து, துஞ்சலுறூ உம் பகல்புகு மாலை, ஞாயிறுபட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும், பொங்கு பிசிர் நுடக்கிய மடங்கற் றீயினையும் அனையை என முடிக்க. விழாக்காலம் நணியார், சேயார், சிறியார், பெரியார், உடையார், இல்லார், இளையார், முதியார் எல்லார்க்கும் இன்பம் செய்தல் போலச் சேரமானும் எல்லார்க்கும் தன் ஆட்சியால் இன்பம் செய்தலின், “அம்சாறு புரையும் நின் தொழில்” என்றார். இன்பஞ் செய்வதைத் தவிர்த்துப் பகைவர்க்குத் துன்பம் செய்தல் பற்றி, “நின்தொழில் ஒழித்து...... அனையை” யென்றார். ஒழித் தென்னும் வினையெச்சம் அனையையென்னும் குறிப்புவினை கொண்டது. ஆக்கம் வருவித்துக் கொள்க. 1-3. இகல் ......... நாடு உரை : கறுத்தோர் - நின்னைப் பகைத்தவர்; இகல்பெருமையின் படை கோள் அஞ்சார் - கருத்தில் பகைமை பெரி தாயிருத்தல்பற்றிப் படையெடுத்தற்கு அஞ்சாராய்; சூழாது துணிதல் அல்லது - காலம் இடம் வலி முதலியவற்றை ஆராயாமல் போர் செய்யத் துணிவதேயன்றி; நாடு - தம் நாட்டை; உடன் காவல் வறிது எதிரார் - பலராய்க் கூடிக் காத்தற்குச் சிறிதும் மாட்டாராவர்காண் என்றவாறு. இகல், மாறுபாடு. இஃது உள்ளத்தே மிக்கவழி, அறிவு தொழில் செய்யாமையின், சினத்திற் கிரையாகி மேல் விளையும் பயனும் ஆராய்ந்திலர் என்பார், “இகல் பெருமையின் படைகோள் அஞ்சார்” என்றும், “சூழாது துணித லல்லது” என்றும் கூறினார். சூழ்ந்தவழித் தமது சிறுமையும் நின் பெருமையும் இனிது தெளிந்து விளையக் கடவ துன்பத் துக்கும் பழிக்கும் அஞ்சுவ ரென்பார், “அஞ்சா” ரென்றும், பலராய்க் கூடிக் காக்கினும் காவல் நிரம்பாது என்றற்கு “உடன் காவலெதிரார்” என்றும் கூறினார். ஒரு சிறிது போதும் அவரால் எதிர்த்து நிற்க முடியாது என்பது “வறிது” என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. பழையவுரைகாரர், “இகல் பெருமையின் என்பதற்கு இகலானது பெரிதாகையானே” என்றும், “இகலென் னும் எழுவாய்க்குப் பெருமையை வினைநிலைப்பயனிலையாகக் கொள்க” என்றும், “அஞ்சா ரென்பது வினையெச்சமுற்” றென்றும், “படைகோளைத் துணிதலெனக் கூட்டுக,” வென்றும், “உடன்காவ லெதிராரென்றது, பலரும் தம்முட் கூடியும் காக்கமாட்டா ரென்றவா” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது: சினங்கெழு குரிசில், நின்னைக் கறுத்தவர், இகல் பெருமையின் படைகோளஞ்சாராய்ச் சூழாது துணிதலல்லது நாடு உடன் காவல் எதிரார்; மடம் பெருமையின் நின் பண்பு நன்கறியார்; நின் உடற்றிசினோர்க்கு, நின் தொழி லொழித்து, நீ துஞ்சலுறூஉம் பகல் புகு மாலை, உருத்தெழு வெள்ளம் பரவுதலால், அகன்று வருகூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும் மடங்கற் றீயினையும் அனையை யாகின்றாய் என்று வினைமுடிவு செய்க. பழையவுரைகாரர், “நின்னொடு கறுத்தோர் தம் மடம் பெருமையால் நின் முன்குடி முதல்வர்க்கு அறிவு வலியுறுத்தும் சான்றோரை யொத்த நின் சூழ்ச்சிப் பண்புடைமை யறிகின்றிலர்; நீதான் சூழ்ச்சியுடையையே யன்றிக் குருசிலே, நின்னுடற்றிசினோர்க்குப் போர் செய்யுமிடத்து மடங்கற் றீயின் அனையை; அதனையும் அறிகின்றில ராதலால், அவர் தம் இகல் பெருமையானே அஞ்சாராய்ப் படைகோளைத் துணிதலல்லது நாட்டைச் சிறிதும் உடன்காவலெதிர் கொள்ளார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க,” என முடிப்பர். “இதனாற் சொல்லியது, அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று,” என்பது பழையவுரை. 3. நிறந்திகழ் பாசிழை 1. உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும் பிறர்க்கு நீவாயி னல்லது நினக்குப் பிறருவம மாகா வொருபெரு வேந்தே.... மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற் 5. செய்யு ணாரை யொய்யு மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை யயரும் காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற் புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை 10. கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக் கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின் வளனு மாண்மையுங் கைவண் மையும் மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள் யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும் 15. சான்றோ ருரைப்பவுந் தெளிகுவர் கொல்லென ஆங்குமதி மருளக் காண்குவல் யாங்குரைப் பேனென வருந்துவல் யானே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிறந்திகழ் பாசிழை 1-3. உரவோர் .......... வேந்தே உரை : உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் - அறிவுடை யோரை யெண்ணினாலும் அஃது இல்லாத மடவோரை யெண்ணினாலும்; பிறர்க்கு நீ உவமம் வாயினல்லது - பிறர்க்கு நீ உவமமாக வாய்ப்பதன்றி; நினக்குப் பிறர் உவமமாகா - நினக்குப் பிறர் உவமமாகலாகாத; ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெருமையை யுடைய வேந்தே என்றவாறு. உயர்ந்தோர் மடவோர் என்ற இருதிறத்தோர் பெருமை கூறலுறுவார்க்கு அவரின் உயர்ந்தோரை யுவமமாக வுரைத்தல் வேண்டு மென்பது பொருளிலக்கண மாதலின் (தொல். உவம. 3), உயர்வற வுயர்ந்த நின்னையே அவர்கட்கு உவமமாக வுரைத்தற் கமைந்தனை யென்பார், “பிறர்க்கு நீ வாயினல்லது நினக்குப் பிறருவம மாகா வேந்தே” யென்றும், ஆகாமைக்கு ஏது நினது உயர்வற வுயர்ந்த பெருமை யென்பார், “ஒரு பெரு வேந்தே” என்றும் கூறினார். உரவோர், படை மடம்படுதலறியாத அறிவுத்திண்மை யுடையோர்; மடவோர், கொடைக்கண் மடம்படுவர்; “கொடைமடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படைமயக் குறினே” (புறம். 142) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருமை, உயர்வு குறித்து நின்றது. இனி உரவோர்தாம் எண்ணினும் மடவோர்தாம் எண்ணினும், இருதிறத்தோரும் நின்னையே உவமமாகக் கொண்டுரைப்ப ரென்றுமாம். 4-9. மருதம் ........... மெய்ம்மறை உரை : மருதம் சான்ற - மருத வளம் அமைந்த; மலர் தலை விளை வயற் செய்யுள் - விரிந்த இடத்தையுடைய விளைபுலங்களாகிய கழனிக்கண்ணே யுலவும்; நாரை ஒய்யும் மகளிர் - நாரைகளை யோப்பும் மகளிர்; இரவும் பகலும் பாசிழை களையார் - இரவு பகலென்ற இருபோதினும் தாமணிந்த பசிய பொன்னாற் செய்த இழைகளைக் களையாராய்; குறும்பல் யாணர்க் குரவை யயரும் - ஒன்றற்கொன்று அணித்தாய்ப் பலவாகிய இடங்களிலே புதிய புதிய குரவைக் கூத்தினை யாடி மகிழும்; காவிரி மண்டிய - காவிரியாற்றின் நீர் மிக்குள்ள; சேய் விரி வனப்பின் - நெடுந்தொலைவிலேயே விரிந்து தோன்றும் அழகினையுடைய; புகார்ச் செல்வ - புகார் நகரத்தையுடைய செல்வனே; பூழியர் மெய்ம்மறை - பூழிநாட்டார்க்கு மெய்புகு கருவி போன்றவனே என்றவாறு. மருதத்திணைக் குரிய பொருள் பலவும் குறைவற நிறைந் திருக்குமாறு தோன்ற, “மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்” என்றும், ஆங்குறையும் உழவர் மகளிர் வயற்கண் விளைபயிரை நாரைகள் மிதித்துச் சிதைக்காவண்ணம் ஓப்பும் செய்கையினரா தலை, “செய்யுள் நாரை யொய்யும் மகளிர்,” என்றும் கூறினார். வித்திய வொன்று ஆயிரமாக விளைதலின், செல்வக் களிப்பால் இரவு பகல் எஞ்ஞான்றும் விளையாட்டினை விரும்பி யொழுகு கின்றா ரென்பார், “இரவும் பகலும் பாசிழை களையார், குறும்பல் யாணர்க் குரவை யயரும்” என்றார். பழையவுரைகாரர், “இரவும் பகலும் குரவையயரு மெனக் கூட்டுக” வென்றும், “மருத மென்றது, மருதநிலத் தன்மையை” யென்றும், “குறும்பல் குரவை யென்றது, ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று அணியதாய் அவைதாம் பலவா யிருக்கின்ற குரவை யென்றவாறு” என்றும், “குரவை யயரும் புகார் எனவும், காவிரி மண்டிய புகார் எனவும் கூட்டுக” என்றும் கூறுவர். காவிரி பாய்தலால் நீர்வளம் சிறத்தலின், வானளாவ வுயர்ந்த சோலைகளும் கொடிமாடப் பெருமனைகளும் சேய்மைக் கண்ணே காண்பார்க்கு அழகிய தமது காட்சியினை வழங்கும் சிறப்பு விளங்க, “சேய்விரி வனப்பிற் புகார்” என்றும், அதனாற் செல்வ மிகுதி தோன்ற, “செல்வ” என்றும் கூறினார். பூழியர், பூழி நாட்டார்; இந் நாடும் சேரர்க் குரியது; “பல்வேற் பூழியர் கோவே” (பதிற். 84) என்று பிறரும் சேரவேந்தரைக் கூறுதல் காண்க. 10-11. கழை ............... பொறைய உரை : கழை விரிந்து எழுதரு - மூங்கில்கள் விரிந்தெழுகின்ற; மழை தவழ் நெடுங்கோட்டு - மேகங்கள் தவழும் நெடிய உச்சியை யுடைய; கொல்லிப் பொருந - கொல்லிமலைக்குத் தலைவனே; கொடித் தேர்ப் பொறைய - கொடியுயர்த்திய தேர்களையுடைய மலைநாட்டரசே என்றவாறு. மூங்கில்கள் விரிந்து வளரும் இயல்பினவாதலின், “விரிந் தெழுதரு” என்றார். கொல்லி, கொல்லிமலை; இதனைச் சூழ்ந்தநாடு, கொல்லிக்கூற்றமென்றும் வழங்கும். பொறை, மலை. சேரநாடு மலைநாடாதலின், சேரர் பொறைய ரெனவும் கூறப்படுவர். 11-17. நின் வளனும் .............. யானே உரை : நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவிறந்தன என - நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்கள் ஆராய்ச்சியெல்லையைக் கடந்தனவாகும் என்று; யான் பன்னாள் சென்று உரைப்பவும் தேறார் - யான் பலநாளும் சென்று உரைத்தேனாகவும் நின் பகைவர் தெளியாராயினார்; பிறரும் சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென - பிறராகிய சான்றோரைக் கொண்டு தெரிவிப்பின் அவர் தெளிவரென முயன்றவழியும்; ஆங்கும் மதிமருளக் காண் குவல் - அப்போழ்தும் அவர் அறிவுமயங்கி யிருப்பதையே கண்டேன்; யாங்கு உரைப்பேன் என யான் வருந்துவல் - அதனால் அவர்கட்கு எவ்வாறு கூறித் தெளிவிக்க முடியு மென்று நினைந்து வருந்துகின்றேன் என்றவாறு. வளம் முதலியன முறையே பொருள்வலி, தன் தோள் வலி, துணைவலி, படைவலி முதலியவற்றைச் சுட்டி நிற்றலால், இவற்றைத் தாம் எடுத்தோதியவாற்றை, “மாந்தர் அளவிறந்தன வெனப் பன்னாள் யான் சென்றுரைப்பவும்” என்றார். ஒருநாளொழியினும் பன்னாளுரைப்பின் அறிவு தெளிகுவ ரென்னும் துணிவால், “பன்னாள் சென்று உரைப்பவும் தேறார்” என்றார். “உரைப்பவும் என்ற உம்மை தாமே அறியக் கடவதனை யாம் சொல்லவும் அறிகிலரெனச் சிறப்பும்மை”, என்றும், “பிறரும் என்ற வும்மை அசைநிலை” யென்றும் பழையவுரைகாரர் கூறுவர். கூறப்படும் பொருளை நோக்காது கூறுவோர் தகுதி நோக்கும் மெல்லியர் போலும் என்று கருதிப் பிறராகிய சான்றோரை விடுத்தவழியும், அவர்பால் மயக்கமே புலப்படுவதாயிற் றென்பார், “ஆங்கும் மதிமருளக் காண்குவல்” என்றும், அத்துணை மடமை நிறைந்தோரை ஒறுப்பது அற மாகாதாகலின், அவர்பொருட்டு இரங்குவதல்லது பிறி தொன்றும் செய்தற் கின்மையின், “வருந்துவல் யானே” என்றும் கூறினார். யாங் குரைப்பேனென மீட்டும் அவர் கட்குத் தகுவன கூறித் தெருட்டற்கண் தம் விழைவிருப்பதைப் புலப்படுத்துவதனால், அவர்பால் அருளலையே வேண்டினா ரென்பது கருத்தாயிற்று. “சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென என்றதன் பின், கருதின் என ஒரு சொல் வருவித்து அதனைக் காண்குவ லென்னும் வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். இதுகாறுங் கூறியது: ஒருபெரு வேந்தே, புகார்ச் செல்வ, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந, கொடித்தேர்ப் பொறைய, நின்வளனும் ஆண்மையும் கை வண்மையும் மாந்தர் அளவிறந்தன எனப்பன்னாள் சென்று யான் உரைப்பவும் நின் பகைவர் தேறார்; பிற சான்றோருரைப்பத் தெளிகுவர் கொல்லென முயன்றவழி ஆங்கும் மதி மருளக் காண்குவல்; யாங்குரைப்பேன் என வருந்துவல்: ஆகவே அவரை அறியாமை யுடையர் என்றெண்ணி அருளுதல் வேண்டும் என்று முடிக்க. இனிப் பழையவுரை, “பெரு வேந்தே, புகார்ச் செல்வ, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந, பொறைய, நின் பகைவர் நின்வளனும் ஆண்மையும் கைவண்மையும் உலகத்து மக்கள் அளவைக் கடந்தன; அவனொடு மாறுபடுவது நுமக்கு உறுதியன்றெனப் பன்னாள் யான் சொல்லவும் தேறிற்றிலர்; தேறாராயினும் உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவரோ வெனக் கருதின் அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதிமருண்டதுவே காணாநின்றேன்; ஆகலான் நின் பெருமையை அவர்கட்கு யாங்குரைப்பேனென வருந்தா நின்றேன் யான்; இஃது என்னுறு குறை; இதனை யறிந்து நீ அவர்பால் அருள வேண்டுவலென வினைமுடிவு செய்க,” என்று கூறும். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிக்கு அடியாகிய செல்வமும் நுண்மையும் கைவண்மையும் உடன் கூறிய வாற்றான் அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று”. `நிறந்திகழ் பாசிழை’ என்ற தொடரமைந்த மூலப்பகுதி கிடைத்திலது. 4. நலம்பெறு திருமணி 1. கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் 5. கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் 10. புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி எஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடு நிலையுற்றுச் சுடர்விடு தோற்றம் 15. விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவில் எண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்பும் செம்மையு முளப்படப் பிறவும் 20. காவற் கமைந்த வரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை 25. வண்மையு மாண்பும் வளனு மெச்சமும் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நலம்பெறு திருமணி 3-17. சாயறல் .......... கருவில் உரை : சாய் அறல் கடுக்கும் - நுண்ணிய கருமணலை யொக்கும்; தாழ் இருங் கூந்தல் - தாழ்ந்த கரிய கூந்தலையும்; கொடுமணம் பட்ட வினை மாண் அருங்கலம் - கொடுமணம் என்னும் ஊரிலே உண்டாகிய அரிய கலன்களையும்; பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் - பந்தர் என்னும் ஊரிடத்தே பெற்ற பலரும் புகழ்கின்ற முத்துக்களையும்; வரை யகம் நண்ணி - பெருமலை களை யடைந்து அவற்றிடத்தும்; குறும்பொறை நாடி - சிறு சிறு மலைகளை யடைந்து அவற்றிடத்தும் தேடி; தெரியுநர் கொண்ட - குற்றமற ஆராய்ந்துகொள்ளும் அறிவினை யுடையோர் கொண்ட; சிரறுடைப் பைம்பொறி - சிதறிக் கிடத்தலையுடைய பசிய பொறிகளையும்; கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பின் - கவைக்கோல் போலக் கிளைத்தலை யுடைய கொம்பினையும்; புள்ளி இரலைத்தோல் - புள்ளியினையு முடைய மான்தோலைக் கொண்டு; ஊன் உதிர்த்து - அதன் உட்புறத்துத் தசையைக் களைந்து; தீது களைந்து - ஏனை அழுக்குகளையும் போக்கி; எஞ்சிய திகழ் விடு - எஞ்சி நின்ற ஒளி வீசுகின்ற; பாண்டிற் பருதி போகிய புடை - வட்டமாக அறுத்த தோலின் விளிம்பிலே; கிளை கட்டி - இனமாகச் சேரக் கட்டி; எஃகுடை இரும்பின் - கூர்மையையுடைய வூசியால்; வல்லோன் - தொழில் வல்லவன்; உள்ளமைத்து - உட்புறத்தே மணிகளைப் பதித்து அழகுற அணி செய்து; சூடு நிலையுற்று - சூடுதற்குரிய நிலைமையினை யுறுவித்து; சுடர் விடு தோற்றம் - ஒளி திகழ்கின்ற தோற்றத்தைப் பெறுவித்தலால்; விசும் பாடு மரபின் - விசும்பிலே பறக்கும் முறைமையினை யுடைய; பருந்து ஊறு அளப்ப - பருந்தானது ஊனென்று கருதி யதனை யுற்றுக் கவர்தற்கு நினையுமாறு; நலம் பெறு திருமணி - நலம் பெற்ற உயரிய அத் தோற்பணியாகிய மணியை; கூட்டும் நற்றோள் - அணிகின்ற நல்ல தோளினையும்; ஒடுங்கீ ரோதி - ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும்; ஒண்ணுதல் - ஒள்ளிய நெற்றியினையும்; வேறுபடு திருவின் - பிறப்பால் திருமகளின் வேறுபட்டா ளென்னும் சிறப்பெய்திய மாண்பினையுமுடைய நின் தேவியினுடைய; நின்வழி வாழியர் - நின் குடிவழி நீடு வாழ்வதன் பொருட்டு; கருவில் - கருவிடத்தே யமைந்து என்றவாறு. மென்மையும் நுண்மையு முடைமைபற்றிக் கருமணலை “சாயறல்” எனல் வேண்டிற்று. தாழ் இருங் கூந்தல் - முதுகிடத்தே தாழ்ந்த கரிய கூந்தல்; “புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்” (அகம் : 126) என்று பிறருங் கூறுதல் காண்க. கூந்தலையும், தோளினையும் நுதலினையுமுடைய தேவியினது கருவில் எனக் கூட்டுக. தாழிருங் கூந்தலென்றவர் மறுபடியும் ஒடுங்கீ ரோதி யென்றது, கூந்தலின் நீட்சியும் நிறப்பொலிவும் பொதுப் படக் கூறி, அதனைச் சுருள் என்னும் பகுதியாக முடிக்கும் சிறப்பினை யுணர்த்தற்கு. திருமகட்குரிய உருவும் பிற நலங் களும் பொருந்திப் பிறப்பொன்றினால் வேறுபடுவது குறித்துத் தேவியை, “வேறுபடு திரு” என்றார். வேறுபடு திருவின் என்பதற்குப் பழையவுரைகாரர், “வேறுபடு திருவின் என்றது, இவளுக்குக் கூறிய குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி என்றவா” றென்றும், “திருவின் என்னும் இன் அசை நிலை” யென்றும் கூறுவர். கொடுமணம், பந்தர் என்பன, அக்காலத்தே சிறப்புற்றிருந்த ஊர்கள். வினைமாண் அருங்கலம், தொழில்நலத்தால் மாண்புற்ற அணிகலன்கள். பலர், பலநாட்டவர். வேள்விசெய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மைசெய்து போர்த்துக் கொள்பவாதலின், அதனை, மானிலக்கணம் தெரிந்தாரைக் கொண்டு பெறுதல் வேண்டி விடுத்தலின், அவரைத் “தெரியுநர்” என்றும், அவர்கள் அதனை நாடிப் பெறுமாறு கூறுவார். “வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர்” என்றும் கூறினார். வரையகம், பெருமலைத்தொடர். குறும் பொறை, சிறு குன்றுகள் நிறைந்த மலைப்பக்கம். கொச்சி நாட்டுப் பகுதிகளை இடைக்காலக் கல்வெட்டுக்கள் நெடும் பொறை நாடென்றும் குறும்பொறை நாடென்றும் (A.R.No. 321 of 1924) கூறுகின்றன. இவ்விடத்தை நண்ணி நாடுதலின், உயரிய மான் வகைகள் அவ்விடத்தே வாழ்தல் பெற்றாம். நல்லிலக்கணம் அமைந்த மானின்நலம் கூறுவார், கிளைத்த கொம்புடைமையும், உடலெங்கும் சிதறிய புள்ளியுடைமையும் விதந்து, “பைம் பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் புள்ளியிரலை” யென்றார். “வரையென்றது பெருமலையை” யென்றும், குறும் பொறை யென்றது “அதனை யணைந்த சிறு பொற்றைகளை” யென்றும், “தெரியுநர் கோடல், இலக்கணக் குற்றமற ஆராய்ந்து கோடல்” என்றும், “பைம்பொறி யென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை” யென்றும், “மேற் புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க” என்றும் பழையவுரை கூறும். சிரறுதல், சிதறுதல். கவலை, கவர்த்தல். வேள்வி செய்வோன் மான் தோலைப் போர்த்துக்கொள்ள, அவன் மனைவி அத்தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்துக்களையும் பிற வுயரிய மணிகளையும் கட்டி, நடுவே உயரிய மாணிக்கம் மணிகளைத் தைத்துத் தோளிடத்தே அணிவள்போலும், ஈண்டு ஆசிரியர் அரசமாதேவி இவ்வாறு அணிந்தாளென்றலின். மயிர் முதலியன மூடிப் பொலிவின்றி யிருக்கும் பகுதியைத் தீது என விலக்குதலால், “தீது களைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி” என்றும், வட்டமான தோலைப் “பாண்டிற் பருதி” யென்றும், அதன் விளிம்பிலே கொடுமணத்துக் கலத்தையும் பந்தரிடத்துப் பெற்ற முத்தினையும் இனஞ்சேரக் கட்டினாரென்றற்கு, “புடைகிளை கட்டி” யென்றும், உள்ளிடத்தே தாமரை முதலிய பூவைப் போலும் அழகிய வேலைப்பாட்டினைச் சிவந்த மாணிக்க மணி கொண்டு தொழில் வல்லுநர், செய்ததனை “வல்லோன் எஃகுடை யிரும்பின் உள்ளமைத்து” என்றும், அவ்வாறு அமைத்தலால் சூடுதற்குரிய நிலையுறுவதால், “சூடு நிலையுற்று” என்றும் கூறினார். உறுவித் தெனற்பாலது, “உற்று” என வந்தது. சிவந்த மணிகள் இடையே பதிக்கப்பெற்றுச் செவ்வொளி கான்று திகழ்தல் கண்டு, ஊனென்று கருதிப் பருந்து கவர்ந்து செல்லக் கருதுமென்பார், “விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப” என்றார். ஊன் தேடி யுற்றுண்டு பயின்ற கூரிய பார்வை யினையுடைய பருந்தினை மயக்குமாறு சிவந்த ஒளிகொண்டு விளங்கும் மணியாதல்பற்றி, “நலம் பெறு திருமணி” எனப் பட்டது. பொன்னிடைப் பதித்துப் பொலி வுறுத்தப் பெறும் மாணிக்கமணி, தோலிடைப் பதித்தவழியும் தன் நல்லொளி குன்றாது திகழும் சிறப்புக் குறித்து இவ்வாறு நலம்பெறு திருமணி யென்ற நலத்தால், இப்பாட்டிற்கு “நலம்பெறு திருமணி”யென்று பெயராயிற்றென வறிக. இனிப் பழைய வுரைகாரர், “நலம்பெறு திருமணி யென்றது மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படு தலையுடைய திருமணி யென்றவாறு; இச் சிறப்பானே இதற்கு நலம்பெறு திருமணி யென்று பெயராயிற்று” என்பர். இதன்கட் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், தாழிருங் கூந்தலையும், திருமணி கூட்டும் நற்றோளையும், ஓதியையும், ஒண்ணுதலையும், வேறுபடு திருவினையுமுடைய நின் தேவியின் கருவிலே என்பதாம். இனி, இப்பகுதிக்கண் வந்தவற்றிற்கு உரைக்குறிப்புக் கூறுலுற்ற பழையவுரைகாரர், “கவலைய வென்னும் அகரம் செய்யுள் விகார” மென்றும், பாண்டி லென்றது, வட்டமாக அறுத்த தோலினை யென்றும், “பருதி போகிய புடை யென்றது, வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினை” யென்றும், “எஃகுடை யிரும்பின் உள்ளமைத் தென்றது, கூர்மையையுடைய கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத் தென்றவா” றென்றும், அமைத்தென்றதனை “அமைப்பவெனத் திரிக்க” வென்றும், வல்லோனால் என விரித்து “வல்லோனால் நின் தேவி சூடுதல் நிலையுறுதலால் என்க” என்றும், “வல்லோன் யாகம் பண்ணுவிக்க வல்லவன்” என்றும், “தோற்ற மென்றது, தோற்றமுடைய அத்தோலினை” யென்றும் கூறுவர். கருவில் என்பதனோடு அமைந்தென ஒரு சொல் வருவித்து, வாழிய ரென்ற முற்றெச்சத்துக்கு முடிபாக்காது, “வாழியரென்னும் வினையெச்சத்தினைச் சூடு நிலையுற்று என்னும் வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். 18-21. எண்ணியல் ......... பெற்றனை உரை : எண் இயல் முற்றி - எண்ணப்படுகின்ற திங்கள் பத்தும் நிரம்பி; ஈர் அறிவு புரிந்து - இருவகை யறிவும் அமைந்து; சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் - சால்பும் நடுவு நிலையு முள்ளிட்ட பிற நற்பண்புகளும்; காவற் கமைந்த அரசு துறை போகிய வீறு சால் - நாடு காத்தற்கு வேண்டும் அரசிய லறிவு வகை பலவும் முற்றக் கற்றுத்துறைபோகிய சிறப்பும் நிறைந்த; புதல்வற் பெற்றனை இவணர்க்கு - நன்மகனைப் பெற்றுள்ளாய் இந் நிலவுலகத்து வாழ்வார்பொருட்டு என்றவாறு. கருவளர்தற்குரிய காலத்தை ஒவ்வொரு திங்களாக வெண்ணுபவாதலின். “எண்ணியல் முற்றி” யென்றார். ஈரறிவு - இருவகை யறிவு: அவை இயற்கையும் செயற்கையுமாகிய இரு வகை யறிவுகள். இயற்கையாய கண்ணொளி யில்லார்க்கு ஏனை ஞாயிற்றொளி முதலியன பயன்படாமைபோல. இயற்கையாய உண்மையறிவில்லார்க் கல்வி கேள்விகளானாம் செயற்கையறிவு பயன்படாதாகலின், “ஈரறிவு புரிந்து” என்றாரென்றுமாம். இம்மை மறுமை யறிவுகளுமாம். பெரிய அறிவெனினுமமையு மென்பர் பழையவுரைகாரர். சால்பு, நற்குணங்களின் நிறைவு; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தின் நிறைவு. அரசாளும் திறனும் கருவிலே வாய்க்குந் திருவென்றற்கு, “காவற்கமைந்த அரசு துறை போகிய வீறு” என்றார். பிறந்த பின்பே இவை யாவும் பெறற் குரியவாயினும், இவற்றின் பேறு இனிது பொருந்துதற்குரிய நல்வாய்ப்புக் கருவிலே உண்டாவ தாகலின், இவ்வாறு கூறினார் என அறிக. இக்கருத்தே, “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த, மக்கட்பே றல்ல பிற” (குறள். 61) என்புழியும் அமைந்துகிடத்தல் காண்க. பெற்றனை யென்பதைப் பழையவுரை காரர் முற்றெச்சமாக்கி மேல் வருவனவற்றோடு முடிப்பர். அரசனது புதல்வற்பேறு அவன் கோற்கீழ் வாழ்வார்க்கு ஏமமாதல் பற்றி, “இவணர்க்” கென்றார். மக்கட்பேறு, பெற்றோர்க்கே யன்றி இப் பெருநிலத்து வாழ்வார்க்கு நலம் பயக்கும் இயல்பிற் றென்பது பண்டைத் தமிழ் நன்மக்கள் கொள்கை. “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள். 68) என்று சான்றோர் கூறுதல் காண்க. 1-2. கேள்வி ......... உவப்ப உரை: கேள்வி கேட்டு - அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டு; படிவம் ஒடியாது - அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு தவிராதொழுகி; உயர்ந்தோர் உவப்ப - அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன்மக்கள் மனமகிழும்படி; வேள்வி வேட்டனை - வேள்விகளைச் செய்து முடித்தாய் என்றவாறு. அருமறைப்பொருளை ஒருவர் தாமே கற்றுணர்தல் கூடாமையின், “கேள்வி கேட்டு” என்றார். கேள்வி, அருமறைப் பொருள்; கேட்டற் குரியது அதுவாகலின், கேட்ட பொருளை நடைமுறையில் தெளிந்து நல்லறிவு கைவரப் பெறுதற்கு விரத வொழுக்கம் வேண்டியிருத்தலால், “படிவ மொடியாது” என்றார். கேட்டவற்றை மனத்தால் ஒன்றியிருந்துணர்தற்குத் துணைசெய்வது படிவமென வுணர்க. வேள்விப்பயன் உயர்நிலை யொழுக்கத்துச் சான்றோர்க்கு உவகை பயப்பிப்பதாதலால், “உயர்ந்தோ ருவப்ப வேள்வி வேட்டனை” யென்றார் “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்றமாக, மன்ன ரேவல் செய்ய மன்னிய, வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே” (புறம். 26) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, பழையவுரைகாரர், “கேள்வி கேட்டல் - யாகம் பண்ணு தற்குடலான விதி கேட்டல்; படிவம் - யாகம் பண்ணு தற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள். “ஒடியாதென்பதை ஒடியாமல் எனத் திரிக்க” என்றும், “வேட்டனை என்றதனை வினையெச்சமுற்றாக்கி அவ்வினையெச்சத்தினை அருங்கடன் இறுத்த என்னும் வினையொடு கூட்டுக” என்றும், “உயர்ந்தோர் தேவ” ரென்றும் கூறுவர். 22-28. அருங்கடன் .......... படிமையானே உரை : அருங்கடன் இறுத்த - இந் நிலவுலகத்து வாழ்வார்க்கு அரசராயினார் செய்தற்குரிய அரிய கடன்களைச் செய்து முடித்த; செருப்புகல் முன்ப - போரை விரும்பும் வலியினையுடை யோய்; நின்வயின் அன்னவை மருண்டனென் அல்லேன் - நின்பால் கேள்வியும் வேள்வியும் புதல்வற்பேறுமாகிய அவை யிற்றைக் கண்டு வியப்புற்றே னல்லேன்; முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூதாளனை - உணரத் தகுவனவற்றை முழுதும் உணர்ந்து பிறர்க்கும் உணர்த்தி நன்னெறி யொழுகப்பண்ணும் நரையும் முதுமையுமுடைய புரோகிதனை; நின் படிமையான் - நீ மேற் கொண்டிருக்கும் தவ வொழுக்கத்தால்; வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - கொடையும் குணவமைதியும் செல்வமும் மகப்பேறும் தெய்வவுணர்வும் பிறவும் முன்னைத் தவமுடையார்க்கே யுளவாவன என அறிவுறுத்தி; வேறுபடு நனந்தலை பெயரக் கூறினை - நாட்டின் வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டிற்குத் தவங் குறித்துச் செல்லப் பணித்தனை; பெரும - பெருமானே! இது கண்டன்றே யான்மருட்கை யெய்துவே னாயினேன் என்றவாறு. அருங்கடன் இறுத்த முன்ப, செருப்புகல் முன்ப என இயையும். மகப்பேற்றால் இவணரையும், வேள்வி வேட்டலால் உயர்ந்தோரையும் ஓம்புதல்பற்றி “அருங்கடன் இறுத்த” என்றும், செருமேம்பட்டார்க்கன்றி இவ்வருங்கடன் எளிதில் இறுக் கலாகாமை தோன்ற, “செருப்புகல் முன்ப” என்றும் கூறினார். உயர் பொருளை யோதி யுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தானொழுக வல்லவன் என்றற்குப் புரோகிதனை “முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை” என்றார். நரைப்பும் முதுமையு மன்றி, வண்மையும் மாண்பு முதலாயின அவன்பால் பெருக உளவாதல் வேண்டிச் சேரமான் இரக்கங்கொண்டு அவற்றைப் பெறுமாறு அறிவுக்கொடை வழங்கினான் என்பார், “வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கு என” அறிவுறுத்தினான் என்றார். எச்சம் புகழ்க்குரித் தாயினும், வண்மையும் மாண்பும் கூறவே அப் புகழும் அவற்றின் பால் அடங்குதலால் மக்கட் பேறாயிற்று. இனிப் பழையவுரை காரர், “நரைமூதாளனை யென்றது, புரோகிதனை” யென்றும், “நரை மூதாளனைக் கூறினை யெனக் கூட்டி அவனைச் சொல்லி யேவினையென ஒருசொல் வருவித்து முடிக்க” என்றும், “மாண் பென்றது மாட்சிமையுடைய குணங்களை” யென்றும், “எச்ச மென்றது பிள்ளைப்பேற்றினை” யென்றும், “தெய்வமென்றது தம்மால் வழிபடும் தெய்வத்தினை” என்றும் “தவமுடையோர்க் கெனச் சொல்லி யென்க” என்றும், “கூறினை யென்பது வினை யெச்சமுற்” றென்றும், “வேறுபடு நனந்தலை யென்றது துறந்து போயிருக்கும் காட்டினை” யென்றும், “பெயர வென்றது அந் நரைமூதாளனைக் காட்டிலே பெயர வேண்டி” யென்றும் கூறுவர். புரோகிதன் சென்ற காட்டினை, “வேறுபடு நனந்தலை” யென்றார், ஐம்பொறிகளானும் ஆர நுகரும் நுகர்ச்சிக்கிடனாகும் நாட்டினும், அவற்றை யடக்குதற்குத் துணையாகும் சிறப்புப் பற்றி வேறுபடுதலின். சேரமான், இவ்வாறு தன் படிமையான் புரோகிதனைத் துறவுமேற்கொள்ளப் பணித்தமை நோக்கின், அப்புரோகிதன் ஆன்றவிந்தடங்கும் சால்பிற் குறைபட்டமையும், அதனை நிறைத்துக்கோடற்கு வேந்தன் கண்ணோடி வேறுபடு நனந்தலைப் பெயர்த்தமையும் பெற்றாம். இது கண்டன்றே யென்பது முதலாயின குறிப்பெச்சம். இதுகாறும் கூறியது: செருப்புகல் முன்ப, பெரும, தாழிருங் கூந்தலையும், நற்றோளையும், ஓதியையும், நுதலையும் திரு வினையுமுடைய நின் தேவியின் கருவிலே, இயல் முற்றி, அறிவு புரிந்து, அரசு துறை போகிய புதல்வற் பெற்றனை இவணர் பொருட்டு; உயர்ந்தோருவப்ப வேள்வி வேட்டனை; அன்னவை கண்டு மருண்டனெனல்லேன்; நரை மூதாளனை, நின்படிமை யான், வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை; இது கண்டன்றே மருட்கை யெய்துவேனாயினேன் என்பதாம். இனிப் பழைய வுரை, “வேட்டனை யென்றும், பெற்றனையென்றும் நீ செய்த யாகங்களாகிய அன்னவையிற்றிற்கு யான் மருண்டேனல்லேன், நின்னை நல்வழி யொழுகுவித்து நின்ற நரை மூதாளனை நின்படிமையானே இல்லற வொழுக்கினை யொழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல ஒழுகுவித்தனை; அவ்வாறு செய்வித்த நின் பேரொழுக்கத்தையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென வினை முடிவு செய்க” என்று கூறும். “இதனாற் சொல்லியது, அவன் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவுடைமையும் கூறியவாறாயிற்று.” 5. தீஞ்சேற்றி யாணர் 1. இரும்புலி கொன்று பெருங்களி றடூஉம் அரும்பொறி வயமா னனையை பல்வேற் பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து 5. நின்வழிப் படாஅ ராயி னென்மிக்(கு) அறையுறு கரும்பின் தீஞ்சேற்றி யாணர் வருநர் வரையா வளம்வீங் கிருக்கை வன்புலந் தழீஇய மென்பா றோறும் மருபுல வினைஞர் புலவிகல் படுத்துக் 1 10. கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும் வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி யறியார் தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடுட னாடல் யாவண தவர்க்கே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தீஞ்சேற்றியாணர் 1-3. இரும்புலி .............. பொறைய உரை : பல் வேல் பொலந்தார் யானை இயல் தேர்ப் பொறைய - பலவாகிய வேற்படையும் பொன்னரிமாலை யணிந்த யானையும் இயலுகின்ற தேருமுடைய பெருஞ்சேரலிரும் பொறையே; இரும்புலி கொன்று - பெரிய புலியைக் கொன்று; பெருங் களிறு அடூஉம் - அதனாலும் சோர்வடையாது உடன் சென்று பெரிய யானையைக் கொல்லுகின்ற; அரும் பொறி வயமான் அனையை - அரிய வரிகளையும் வலியையுமுடைய அரிமாவினை ஒப்பாய்; என்றவாறு. பெருங்களிற்றினும் இரும்புலி வலி மிகவுடைத்தாதலின், அதனைக் கொன்றும் சோர்வடையாதே இடையறவின்றிப் பெருங்களிற்றினையும் கொல்லும் பெருவலியுடைமை தோன்ற “இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்” என்றார். அரிமாவிற்குப் பொறையனையும், புலிக்கு ஏனை வேந்தரையும் பெருங்களிற்றுக்கு வேளிர் முதலாயினாரையும் கொள்க. பொலந்தார், பொன்னரிமாலை. 4-7. வேந்தரும் .......... வீங்கிருக்கை உரை : வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின் வழிப் படாஅ ராயின் - முடிவேந்தரும் குறுநிலமன்னரும் பிறரும் நின்னைக் கீழ்ப்பணிந்து நின் விருப்பின்வழி ஒழுகாராயின்; நெல் மிக்கு - நெல் மிக்கு விளைய; அறையுறு கரும்பின் தீஞ்சேற்று யாணர் - அதற்கிடையூறாக வளர்ந்து முற்றியிருத்தல் பற்றி வெட்டப்பட்ட கரும்பினது தீவிய சாறாகிய புது வருவாயினை; வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை - அவ்விடத்தே வருவோர்க்கு வரையாது வழங்கும் செல்வம் மிகுந்த இருக்கைகள் (ஊர்கள்) என்றவாறு. நெல்மிக்கு விளைதலால் அதனையும், கரும்பின் தீஞ் சாறு மேன் மேலும் பெருகுதலால் அதனையும் வருவோர்க்கு வரையாது வழங்குப என்பதாம். அறையுறு கரும்பு. அறுத்தலைப் பொருந்திய கரும்பு. இறுத்தல் இறையென வருதல்போல, அறுத்தல் அறையென வந்தது. நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து நெல்லின் வளர்ச்சியைக் கெடுத்தலால், அறுக்கப்பட்ட கரும்பு என்றற்கு “அறையுறு கரும்பு” என்றா ரென்க. பழைய வுரை காரரும், “நெல்மிக்கு அறையுறு கரும் பென்றது, நெல்லின் கண்ணே அந்நெல்லை நெருக்கி மிக எழுந்தமையானே அறுக்க லுற்ற கரும்பென்றவாறு” என்றும், “இனி, அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை நெருக்கினமையல் அந்நெல்லிற்கு இட முண்டாக அறுத்த கரும்பு எனினுமாம்” என்றும் உரைப்பர். வரையாது வழங்கிய வழியும் வளம் குன்றாமைபற்றி, “வரையா வளம் வீங்கிருக்கை” என்றார். மிக்கு என்பதை மிக வெனத் திரிக்க. “தீஞ்சேறு இனிய பாகு” என்றும், “யாணரென்றது, அத் தீஞ்சேற்றது இடையற வின்மையை” என்றும், “இச் சிறப்பானே இதற்குத் தீஞ்சேற்றியாணர் என்று பெயராயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து அதன் வளர்ச்சிக்கு இடையூறாவது கண்டு அதனைத் தடிந்துபெற்ற தீஞ்சேற்றியாணரை வருநர்க்கு வரையாது வழங்குவரென்றது, குடி புறந்தாராது அவர்க்கு இடையூறு விளைக்கும் கொடுங் கோலரசை வென்று, அவர்பாற் பெற்ற பொருளை வருநர்க்கு வரையாது வழங்கும் சேரமானது நற்செயல் உள்ளுறுத் துரைத்தவாறு. 8-14. வன்புலம் ................ தவர்க்கே உரை : வன்புலம் தழீஇய மென்பால் தோறும் - வன்னிலங்களைச் சாரவுள்ள மருத நிலங்கள்தோறும்; மருபுல வினைஞர் - வித்தியது முளையாத களர்நிலத்தே தொழிலினைச் செய்யும் மறவர்; புலவிகல் படுத்து - அம் மருதவயல்களைக் கோடல் குறித்து நிகழ்த்தும் மாறுபாட்டைக் கெடுத்தழித்து; கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் - அவர்பாற் பெற்றுக் கள்விற்கும் கடைகளில் கள்ளிற்கு விலையாகக் கொடுக்கும்; வெள்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பை - உழுது வித்திய வெள்ளை வரகும் கொள்ளும் விளையும் கரம்பையாய் விடுதலால்; செந்நெல் வல்சி அறியார் - அவ்வரகும் கொள்ளு மல்லது செந்நெற்சோறு பெறாது வருந்துப வாகலின், அவர்க்கு - அவ் வேந்தர் முதலாயினார்க்கு; தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு - தத்தம்முடைய புலவர் பாடும் புகழ் அமைந்த ஊர்களை யுடைய நாட்டை; உடன் ஆடல் யாவணது - ஒருங்கு ஆளுவது எங்ஙனம் கூடும் என்றவாறு. எளிதில் உழுது வித்துதற்காகாத வன்னிலத்தைச் சார்ந்துள்ள மருத வயல்களை, “வன்புலந் தழீஇய மென்பால்” என்றார். மென்பாலில் நல்ல விளைவு உண்டாதலின், அதனைக் கோடற்கு ஏனை வன்புலத்து வாழும் மருநிலத்தார் விரும்பி முயல்ப வாதலாலும், அக்காலை மென்புலத்து வாழ்நர் அவரொடு பொருப வாதலாலும், அப்போரில் தோற்கும் மருபுல வினைஞர் தம்பால் உள்ள வரகும் கொள்ளும் தண்டமாகத் தருபவாத லாலும், “மருபுல வினைஞர் புலவிகல் படுத்து” என்றும், அத் தண்டப்பொருளும் கள்விலைக்கே பயன்படுகிறதென்பார், “கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் வெள்வர குழுதகொள்” என்றும் கூறினார். மருபுலம், களர்நிலம். “மருநில முழுததில் எரு மிகப் பெய்து, வித்திட்டாங்கே கொள்ளச், சித்தத் துன்னும் மத்தர் போலவும்” (திருக்கழுமல மும்மணி. 22 : 16-8) எனப் பட்டினத்தடிகள் கூறுவது காண்க. வன்புலந் தழீஇய மென்பா லென்றலின், வன்புலத்தார் மென் புலத்தின்கண் வழக்குத் தொடுப்ப ராதலால், அதனைப் “புலவிகல்” என்றார். மென்புல வினைஞரால் புல்லியவாகக் கருதப்படும் வரகும் கொள்ளும் வன்புலத்தார்க்கு ஒண் பொருளாதலால், கள்ளிற்கு அவற்றை உயரிய பொருளாகக் கொடுப்ப ரென்பார், “ஒள்விலை கொடுக்கும்” என்றார். அவ் வளம் வீங்கு இருக்கைகள் வெள்வரகும் கொள்ளும் வித்தும் கரம்பையாய் விடுதலால், “வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பை” யென்றார். கரம்பை யென்புழி ஆதலின் என ஒரு சொல் வருவிக்க. வளம் வீங்கிருக்கை, கரம்பையாதலின் என இயையும். நன்னிலங்களை யழித்துக் கழுதையேர்பூட்டி வெள்வரகும் கொள்ளும் வித்துதல் பண்டையோர் முறை; “இருங்களந்தோறும், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும், வைக லுழவ” (புறம். 392) என்று சான்றோர் கூறுதல் காண்க. இவ்வாறு தாம் இருக்கும் இருக்கைகள் கரம்பையாய் விடுதலால் வேந்தர் முதலாயினார் செந்நெல் லுணவின்றி வறுமையுற்று வலிகுன்றின ரென்பார், “செந்நெல் வல்சி யறியார்” என்றும், எனவே, அவர்தம் நாட்டை இனிதாளுதல் இல்லை யென்றற்கு, “நாடுட னாடல் யாவண தவர்க்கே” யென்றும் கூறினார். “பாடல் சான்ற வைப்பின் நாடு” என்றது, நாட்டின் நன்மை கூறி யிரங்கியது. இதுகாறுங் கூறியது: பொறைய, நீ அரும்பொறி வயமான் அனையை; வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின் வழிப்படாராயின், அவருடைய வளம் வீங்கிருக்கை, கரம்பை யாதலின், செந்நெல் வல்சி யறியாராய்த் தத்தம் நாடுடனாடல் அவர்க்கு யாவணதாம் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், வன்புலந்தழீஇ யென்று பாடங் கொண்டு, அதனைக் கரம்பை யொடு கூட்டி, இருந்து என ஒரு சொல் வருவித்து வன்புலம் தழீஇ யிருந்து என்றும், மென்பால்தோறும் இருந்து என்றும் இயைத்து, “பொறைய, நீ புலி கொன்று களிறடூஉம் வயமான் அனையை; அதனால் வேந்தரும் வேளிரும் பிறரும் நின்னடிக் கீழ்ப் பணிந்து, தமக்குரிய மென்பால்கடோறும் இருந்து முன் பணிந்த வாற்றிற் கேற்ப நின்வழி யொழுகாராயின், அவர்கள் வெள்ளவரகுழுத கொள்ளுடைக் கரம்பையாகிய வன்பாலிலே கெட்டுப்போ யிருந்து ஆண்டு விளைந்த வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டுண்ணும் செந்நெல் வல்சி உண்ணக் கிடையாதபடி மிடிபடுகின்றார்; தத்தம் நாட்டினை ஒருங்கு ஆளுதல் அவர்க்கு யாவணது என வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறிய வாறாயிற்று.” 6. மாசித றிருக்கை 1. களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃகுயர்த் தொளிறுவாண் மன்னர் துதைநிலை கொன்று முரசுகடிப் படைய வருந்துறைப் போகிப் பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும் 5. பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீஇப் பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க் கீத றண்டா மாசித றிருக்கை கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு 10. கருவி வானந் தண்டளி சொரிந்தெனப் பல்விதை யுழவிற் சில்லே ராளர் பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் 15. அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மா சித றிருக்கை 9-15. கால் கொண்டு ......... நாடுகிழ வோயே உரை: கருவி வானம் கால் கொண்டு தண்தளி சொரிந்தென - தொகுதி கொண்ட மழைமேகம் நாற்றிசையும் காலிறங்கித் தண்ணிய மழையைப் பெய்ததாக; பல்விதை உழவின் சில் ஏராளர் - மிகுதியாக விதைத்தற்கேற்பப் பரந்த உழுநிலங்களை யுடைய சிலவாகிய ஏர்களையுடைய உழவர்; பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் - குளிர்ந்த நீர்த்துறை யிடத்தே மலர்ந்துள்ள பகன்றைப் பூவாற்றொடுத்த அழகுடைய மாலையை; கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி - வெளுக்கப்பட்ட வெள்ளாடைபோலத் தலையிற்சூடிக்கொண்டு; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் - உழும் படைச்சாலிடத்தே விளங்கு கின்ற கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற; அகன்கண் வைப்பின் நாடு கிழவோய் - அகன்ற இடமுடைய ஊர்கள் பொருந்திய நாட்டுக்கு உரியோனே என்றவாறு. இடி மின்னல், மழை முதலியவற்றின் தொகுதியாதல் பற்றி, “கருவி வானம்” எனப்பட்டது. மழைமுகில் நாற்றிசையும் பரவுமிடத்துக் கால்விட் டிறங்குதல் கண்கூடாதலின் “கால் கொண்டு” என்றார். கால்கொண்டென்பதற்குப் பெய் தலைத் தொடங்கி யென்றலுமாம். விதையின் பெருமையை நோக்க, உழுதற்குரிய ஏர்கள் சிறியவாதல் பற்றி, “பல்விதை யுழவிற் சில்லே ராளர்” என்றார். “அகல வுழுவதினும் ஆழ வுழுதல் வேண்டுமாதலால் அதற்கேற்ற பெருமையுடைய வாகாது சிறுமையுடைமைபற்றியே “சில்லேராளர்” என்று கூறல் வேண்டிற்று. சின்மை, சிறுமை குறித்து நின்றது. பழைய வுரைகாரரும், “சின்மையைச் சின்னூ லென்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க” என்றார். சில்லேராளர் உழுத படைச்சால் மிக ஆழமுடைத்தன் றாயினும், அதன்கண்ணும் அவர்கள் மிக்க விளை பயனே யன்றி உயரிய மணிகளைப் பெறுகின்றார்க ளென்பார்; “சில்லே ராளர் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் நாடு” என்றார். பகன்றை மலர்க்கு வெளுத்த ஆடையை உவமை கூறுதலும், ஆடைக்கு அம்மலரை யுவமை கூறுதலும் சான்றோர் வழக்காகும். “போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும், கேடின்று நல்குமதி பெரும” (புறம். 393) என்று நல்லிறையனார் என்னும் சான்றோர் கூறுதல் காண்க. பகன்றையைக் கண்ணியாகத் தொடுத்தணிதலே பெரும் பான்மை வழக்காதலின், தெரியலென்றது கண்ணியெனக் கொள்ளப் பட்டது; “பகன்றைக்கண்ணிப் பல்லான் கோவலர்” (ஐங். 87) என்றும், “பகன்றைக் கண்ணிப் பழையர்” (மலைபடு. 459) என்றும் வருதல் காண்க. சலவை செய்யப்பட்ட ஆடை யென்றற்குக் “கழுவுறு கலிங்கம்” என்றார். உயர்ந்த மணியென்பார், “திருமணி” யென்றார். பெரு வருவாயுடைமை தோன்ற, அகன்கண் வைப்பின் நாடு என்று சிறப்பிக்கப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “தண்டளி சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறூஉம் நாடு எனக் கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக்கோடலே யன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை யெடுத்துக்கொள்ளும் நாடென வுரைக்க” என்றும், “பல்விதை யுழவின் சில்லே ராளரென்றது, பலவிதை யுழவாற் பெரியா ராயினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தானும் சிறிய ஏராள ரென்றவா” றென்றும், “பகன்றைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் எனக் கூட்டி, பகன்றை மாலையைக் கழுவுறு கலிங்கம் ஒப்பச் சூடிக்கொண்டு நின்று திருமணிகளை யெடுக்குமென வுரைக்க” என்றும் கூறுவர். 1-9. களிறுடைப் பெருஞ்சமம் ........ வந்தனென் உரை: களிறு உடைப் பெருஞ்சமம் ததைய - களிறுகளைக் கொண்டு செய்யும் பெரிய போர் கெடுமாறு; எஃகு உயர்த்து - வேலும் வாளும் ஏந்திச்சென்று; ஒளிறு வாள் மன்னர் துதைநிலை கொன்று - விளங்குகின்ற வாளையுடைய பகை மன்னர் தம்மிற் கூடிநின்று பொரும் போர்நிலையைக் கொன்றழித்து; முரசு கடிப்பு அடைய - வெற்றிமுரசை அதன் கடிப்பு அறைந்து முழக்க; அருந்துறை போகி - செய்தற்கரிய போர் செயற்குரிய துறை முற்றவும் கடைபோகச் சென்று; பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல - பெருங்கடலைக் கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கிப் பண்டுபோல வலியுடைத் தாக்கும் கடல் வாணிகர்போல; பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ வன்துயர் கழிப்பி - பெரிய கையையுடைய யானைக் கூட்டம் உற்ற போர்ப்புண்களை ஆற்றி அவற்றால் அவை துன்புற்ற வலிய துயரத்தையும் போக்கி; இரந்தோர் வாழ நல்கி - முற்போதில் வந்து இரந்தவர் வறுமை நீங்கி வாழுமாறு கொடுத்து; இரப்போர்க்கு - பிற்போதில் வந்து இரப்போருக்கும்; ஈதல் தண்டாத - ஈதலின் குன்றாத; மா சிதறு இருக்கை - குதிரைகளை வரையாது வழங்கும் நின் பாசறை இருப்பினை; கண்டனென் செல்கு வந்தனென் - கண்டு போவான் வந்தேன் என்றவாறு. களிறுடைமை போர்க்குப் பெருமை தருதலின் “களிறுடைப் பெருஞ் சமம்” என்றார்; “யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” (இனி. 40 : 5) என்று சான்றோர் கூறுதல் காண்க. ததைதல், கெடுதல் : “வேலுடைக் குழூஉச் சமந்ததைய நூறி” (பதிற். 66) எனப் பிறரும் கூறுதல் காண்க. துதை நிலை, கூடியிருக்கும் அணி வகுப்பு. அணிநிலையை யழித்த வழி, வீரர் படையும் பிற படைகளும் ஒழுங்கின்றித் தாறுமாறாய்ச் சிதறி எளிதில் அழிவராதலின், “துதை நிலை கொன்று” என்றார். சிதைத்தென்னாது “கொன்” றென்றார், மறுவலும் துதைந்து நிலைபெறா வகையில் அழித்தமை தோன்ற. முரசு கடிப்பு அடைய என்றது, முரசு முழங்க என்றவாறு. போர் முறை வெட்சி முதலாகப் பல்வகைப்படுதலின், “அருந்துறை போகி” என்றார். பெருங்கடலைப் பகைவர் படைக்கும், மரக்கலத்தைக் களிற்றுத் தொழுதிக்கும், பண்ணிய விலைஞரைச் சேரமான் வீரருக்கும் உவமமாகக் கொள்க. பெருங்காற்றும் பேரலையும் மோதுதலால் கட்டுத் தளர்ந்த கலத்தைக், கரைசேர்ந்ததும் கட்டுடைத்தாக்கி வலியுறுத்தல் கலஞ் செலுத்துவோர்க்கு இன்றியமையாச் செய்தியாகும். பெருங்கடல் நீந்திய மரமென்றது, மரக்கலத்தை. பல்வேறு பண்டங்களையும் கலத்திற்கொண்டு வேறு நாடு சென்று விற்றுப் பொருளீட்டுதல் பற்றிக் கலத்திற் செல்லும் கடல் வாணிகரைப் “பண்ணிய விலைஞர்” என்றார். யானைகட்குப் போரிலுண்டாகிய புண்ணால் மிக்க துயருண்டாவதை யறிந்து புண்ணை யாற்று முகத்தால் துயர் போக்குதலால், “புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி” யென்றார். வன்றுயர் என்றதனால், உற்ற புண் பெரும் புண்ணென் றறிக. இரந்தோர் இரப்போர் என இறப் பினும் எதிர்வினும் கூறிய தனால் பிற்பொழுது முற்பொழுது கொள்ளப்பட்டன. முற்பொழுது வந்திரந்தோர் களிறு பெற்றுச் சென்றமையின், பிற்பொழுது வருவோர்க்குக் குதிரைகளை வழங்கலானானென வுணர்க. எண்ணிறந்தனவாதலின், குதிரை களைச் சிதறினான் என்றார்; இவை பகைவரிடத்தே பெற்றன வாம். இனி, பழைய வுரைகாரரும், “மாசித றிருக்கை யென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட மாக்களை வரையாது அள விறக்கக் கொடுக்கும் பாசறை யிருக்கை யென்றவாறு” என்றும், “இச் சிறப்பானே இதற்கு மாசித றிருக்கையென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது: வானம் தளி சொரிந்தெனச் சில்லேராளர் பகன்றைத் தெரியல் கலிங்கம் கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு கிழவோய், பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து, மன்னர் துதைநிலை கொன்று, அருந்துறை போகி, பண்ணிய விலைஞர்போலப் பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசித றிருக்கை கண்டனென் செல்கு வந்தனென் என்பதாம். பழையவுரைகாரர், “நாடு கிழவோய், மன்னர் பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து அம்மன்னர் பலர் கூடிச் செறிந்த நிலைமையைக் கொன்று அருந்துறை போகிக் கடலை நீந்தின மரக்கலத்தினை அழிவு சேராது வலியுறுக்கும் பண்டவாணிகரைப்போலக் கைத் தொழுதியின் புண்ணை ஒருவுவித்து வலிய துயரைக் கழித்துப் போரிடத்து வினையிலிருத்தலே விநோதமாகக்கொண்டு இரந்தோர் வாழ நல்கிப் பின்னும் இரப்போர்க்கு ஈதலின் மாறாத மாசித றிருக்கையைக் கண்டு போவேன் வந்தேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறியவாறாம்.” 7. வென்றாடு துணங்கை 1. எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன் என்றனி ராயி னாறுசெல் வம்பலிர் மன்பதை பெயர வரசுகளத் தொழியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை 5. மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களும் எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் 10. சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்னபல் செலவின் யானைகாண் பலவன் றானை யானே. துறை : உழிஞை யரவம் வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வென்றாடு துணங்கை 1-2. எனைப்பெரும் படையனோ ............ வம்பலிர் உரை : ஆறு செல் வம்பலிர் - இவ்வழியே செல்லும் புதுவோர்களே; சினப் போர்ப் பொறையன் - சினத்துடன் போரை வெற்றி யுண்டாகச் செய்யும் பெருஞ்சேர லிரும்பொறை; எனைப் பெரும் படையனோ என்றனிராயின் - எத்துணைப் பெரிய படையை யுடையவனோ என்று கேட்கின்றீராயின், கூறுவல் கேண்மின் என்றவாறு. வம்பலர், புதுவோர். “ஆரும் அருவும் ஈரொடு சிவணும்” (தொல். விளி. 21) என்றதனால், வம்பலிர் என வந்தது, இரந்தோர்க்கு எண்ணிறந்த களிறுகளையும் இரப்போர்க்கு அளவிறந்த மாக்களையும் சிதறுதலைக் காண்போர்க்கும், செல்லுமிடந்தோறும் வெற்றியே பெறக்காண்போர்க்கும் பொறையனது படைப் பெருமை யறிதற்கு வேட்கை நிகழு மாதலின், “எனைப் பெரும் படையனோ என்றனி ராயின்” என்றார். எனைப் பெரும் படையனோ என்றது வம்பலர் கூற்றினைக் கொண்டு கூறியது. சினத்தின் விளைவு போரும், அப் போரின் விளைவு வென்றியுமாதலின், “சினப்போர்ப் பொறை யன்” என்று சிறப்பித்தார். கூறுதல் கேண்மின் என்பது எஞ்சி நின்றது. 3-7. மன்பதை ........... இலனே உரை : மன்பதை பெயர - பகைப்படையிலுள்ள வீரர் அழிந் தோட வும்; அரசு களத் தொழிய - பகையரசர் போர்க்களத்தே பட்டு வீழவும்; கொன்று - அப் பகைவரைக் கொன்று; தோளோச்சிய வென்றாடு துணங்கை - தோளை யுயர்த்திக் கைவீசியாடிய வென்றாடு துணங்கையினை யுடையராய்ப் பட்டு வீழ்ந்த; மீ பிணத்து - அவர் பிணத்தின்மீது; உருண்ட தேயா ஆழியின் - உருண்டோடிய வாய்தேயாத சக்கரத்தை யுடைய; பண்ணமை தேரும் - கடுகிச் செல்லுதற் கேற்பப் பண்ணுதலமைந்த தேர்களும்; மாவும் மாக்களும் - குதிரை களும் காலாட்களும்; எண்ணற் கருமையின் - எண்ண முடியாத அளவிலமைந்திருத்தலால்; எண்ணின்றோ விலன் - எண்ணிற்றிலேன் என்றவாறு. பகைவர்படைவீரரை மன்பதை (Mob) யென்றார், வீரர் எனப்படற்குரிய அழியாமை அவர்பால் இன்மையின். உயிர் நீங்கியவழி அரச போகமும் ஒழிதலின், “அரசு களத்தொழிய” வென்றார். வீரர் போரில் பகைவரை வென்று அப்போர்க் களத்தே கையை வீசித் துணங்கையாடித் தம் வென்றி மகிழ்ச்சி யால் இன்புறுவ ராதலின், அக் கூத்தினை “வென்றாடு துணங்கை” யென்றார். பழையவுரைகாரர், “வென்றாடு துணங்கைப் பிணம் என்றது ஊர்களிலே யாடும்”துணங்கை யன்றிக் களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய பிணம் என்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு வென்றாடு துணங்கை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். அரசு களத்தொழிய வென்ற தற்குப் பழையவுரை காரர், “அரசரைக் களத்திலே உடலொழிந்து கிடக்கக் கொன்றென்றவா” றென்றும், “கொன்று தோளோச்சிய பிணம் எனக் கூட்டி, முன்பு தம்முடன் பகைத்தவரைக் கொன்று தோனோச்சியாடி இப்பொழுது இவன் களத்திற் பட்டுக் கிடக்கின்ற வீரர் பிணமென அவ் வீரர் செய்தியை அப் பிணத்தின்மேலேற்றிச் சொல்லியவாறாக வுரைக்க” என்றும், “மீ பிணத்தைப் பிணமீ யெனக் கொள்க” என்றும் கூறுவர். எண்ணிற்றோ வெனற்பாலது மெலிந்து நின்றது. 8-12. கந்து ........... தானையானே உரை : கந்து கோளீயாது - கட்டுத்தறியோடு பிணிப்புண்டற்கு இடந்தராது; காழ்பல முருக்கி - குத்துக்கோல் பலவற்றையும் சிதைத்து; உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி - உயர்ந்து பறக்கும் பருந்தினது நிலத்திடத்தே வீழும் நிழலைச் சினந்து பாயும்; சேண் பரல் முரம்பின் - சேணிடமெங்கும் பரந்த பருக்கைக் கற்களையுடைய முரம்பு நிலத்திலே; ஈர்ம்படைக் கொங்கர் ஆ பரந்தன்ன - ஈரிய படையினை யுடைய கொங் கருடைய ஆனிரைகள் பரந்து செல்வதுபோன்ற; செலவின் பல் யானை - செலவினையுடைய பலவாகிய யானைகளை; அவன் தானையான் - அவனுடைய தானையிலே; காண்பல் - காண்கின்றேனே யன்றி அவை இத்துணை யென்று அறிந்திலேன் என்றவாறு. கந்தினிடத்தே பிணித்தற்கு அடங்காது அக் கந்தினை முறித் தழித்தல் பற்றி, “கந்து கோளீயாது” என்றும், குத்தப்படும் குத்துக் கோல் அவ் யானைகளின் உடலிற்பட்டு ஊடுருவும் வலியின்மை யின் சிதைந்துபோவது தோன்ற, “காழ்பல முருக்கி” யென்றும். பொருளல்லாத நிழலையும் பகைப் பொருளாகக் கருதிச் சினவுதற் கேற்ற மதக்களிப்புடைமைபற்றி, “உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி” யென்றும் கூறினார். பிணிப் புண்ணா தென்னும் பொருட் டாய “கோளீயாது” என்னும் எதிர்மறை வினையெச்சத் திரிசொல் முருக்கி சாடி யென்னும் எச்ச வினைகளுடன் அடுக்கி நின்று “செலவின்” என்பதைக் கொண்டு முடிந்தன. உகத்தல், உயர்தல். கண்ணுக் கெட்டிய வளவும் பரல் நிறைந்த முரம்பு நிலமே காணப்படுதல் பற்றி “சேண் பரல் முரம்பு” என்றும், நீர் வேண்டிக் கூவல் முதலியன தோண்டுதற்குரிய குந்தாலி முதலிய படைகளை “ஈர்ம் படை” யென்றும் கூறினார். கொங்கர் ஆக்கள் பலவுடைய ரென்பதை “ஆ கெழு கொங்கர்” (பதிற். 22) என்று பிறரும் கூறுதல் காண்க. யானைக் கூட்டத்தின் மிகுதியினை ஆனிரைக் கூட்டத்தை யுவமங் காட்டி யுரைத்தல் மரபு; “எருமை யன்ன கருங்கல் லிடைதோ, றானிற் பரக்கும் யானைய” (புறம். 5) என்று சான்றோர் உரைப்பது காண்க. “பல் யானை காண்பல்” என்றதனால் அவற்றை இத்துணை யென வெண்ணற் கருமை பெறப்பட்டது. இதுகாறும் கூறியது, ஆறு செல் வம்பலிர், சினப் போர்ப் பொறையன் எனைப் படையனோ என்றனிராயின், அவனுடைய தேரும்மாவும் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்றோ விலன்; அவன் தானையிலே கொங்கர் ஆ பரந்தன்ன செலவின் பல் யானை காண்பல்; அவற்றையும் இத்துணைய வென்று எண்ணிற்றிலேன் என்பதாம். இனி, பழையவுரைகாரர், “வம்பலிர், பொறையன் எனைப் பெரும்படையன் என்றனிராயின் அவன் தானையிடத்துத் தேரும் மாவும் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின் அவன் தானையின் யானை தான் எண்ணினையோ வெனின், அதுவும் எண்ணினேனல்லேன்; கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல ஆபரந்தாலொத்த செலவிற் பல யானையை அவன் தானையானே காண்பல் எனக் கூட்டி வினை முடிவு செய்க,” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் படைப் பெருமைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” “இப் பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை உழிஞை யரவ மென்றது, ஆண்டு அப்படை யெழுங் காலத்து நொச்சி மதிற்போர் குறித்தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்,” என்று பழையவுரை கூறியது ஆராயத் தக்கது. 8. பிறழ நோக்கியவர் 1. வலம்படு முரசி னிலங்குவன விழூஉம் அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே சில்வளை விறலி செல்குவை யாயின் வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து 5. மெல்லியன் மகளி ரொல்குவன ரியலிக் கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப் பல்பய னிலைஇய கடறுடை வைப்பின் வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி 10. பேஎ மமன்ற பிறழநோக் கியவர் ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று வெம்முனை தபுத்த காலைத் தந்நாட் டியாடுபரந் தன்ன மாவின் ஆபரந் தன்ன யானையோன் குன்றே. துறை : விறலியாற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பிறழ நோக் கியவர் 3. சில்வளை ............ யாயின் உரை : சில்வளை விறலி - சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே; செல்குவையாயின் - பெருஞ் சேரல் இரும்பொறை பால் செல்ல விரும்பினையாயின் என்றவாறு. விறலியைச் சேரமானிடத்தே ஆற்றுப்படுக்கின்றாராதலின், சில்வளை விறலியெனச் சிறப்பித்தார். விறல்படப் பாடியாடு மகளாதலின் ஆடுமிடத்து வளை பலவாயவழி ஒன்றினொன்று தாக்கியுடையுமாதலால் சிலவே யணிதல் அவட்கு இயல்பு என அறிக. இனி, பல்வளையிடும் பருவத்தாளல்லளென்பது தோன்ற இவ்வாறு கூறினாரென்றுமாம். சேரமான்பால் செல்லும் கருத்துடையளாதலைச் சொல்லாலும் குறிப்பாலும் தெரிவித்தா ளாதலால் “செல்குவையாயின்” என்றார். 4-14. வள்ளிதழ் ......... குன்றே உரை : மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி - மெல்லிய இயல்பினையுடைய மகளிர் அசைந்து நடந்து மருத வயற்குச் சென்று; வள்இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து - வளவிய இதழ்களையுடைய தாமரைப் பூவையும் நெய்தற் பூவையும் கொய்துகொண்டு; புறவுதொறும் கிளி கடி மேவலர் நுவல - முல்லைப் புலத்துக்குச் சென்று ஆண்டுள்ள புனந்தோறும் வந்து படியும் கிளிகளை யோப்பும் விருப்புடையராய்க் கிளி கடி பாட்டைப் பாட; பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் - பல்வகைப் பயன்களும் நிலைபெற்ற காட்டிடத்து ஊர்களையும்; வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின் - வெல்லுகின்ற போரை யுடைய வீரர் மறமே விரும்பிக் காத்தற் றொழிலைச் செய்யும் விற்படை நிரம்பிய காவற்காட்டையு முடைய; தகடூர் நூறி - தகடூரை யழித்து; பேஎம் அமன்ற பிறழ நோக்கு இயவர் - கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பகைவரைப் பிறழ்ந்து நோக்கும் பார்வையினையும் பல இயங்களையுமுடைய பகைவீரருடைய; ஓடுறு கடுமுரண் துமியச் சென்று - தம்மோடு எதிர்த்தார் தோற்றோடுதற்குக் காரணமான வலி கெடுமாறு மேற்சென்று; வெம்முனை தபுத்த காலை - அவரது கொடிய போர்முனையைப் பொருதழித்த காலத்து; தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின் - அப் பகைவர் நாட்டிலே ஆடுகள் பரந்தாற்போலப் பரந்து தோன்றும் குதிரைகளையும்; ஆ பரந்தன்ன யானையோன் குன்று - ஆக்கள் பரந்தாற் போலப் பரந்து தோன்றும் யானை களையு முடையனாகிய சேரமானது குன்று என்றவாறு. இயல்பாகவே மென்மைத்தன்மையும் அதனால் அசைந்த நடையு முடையவராதலின் மகளிரை, “மெல்லியல் மகளிர் ஒல்குவன ரியலி” யென்றார். தாமரையும் நெய்தலும் அரிந்தமை கூறியதனால், மருத வயல் பெறப்பட்டது. ஒடு, எண்ணொடு. அண்மையிலே முல்லைப்புறவு மிருத்தலின், மருதநிலஞ் சென்ற மகளிர், உடனே முல்லைப்புறவு சேறலையும் கூறினார். புறவு சேறற்குக் காரணம் இஃதென்பார், “கிளிகடி மேவலர்” என்றார். முல்லை முதலிய நானிலப்பயனும் ஒருங்கு பெறுமாறு தோன்ற, “பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “மகளிர் இயலி நெய்தலொடு தாமரை யரிந்து கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப் பல்பயன் நிலைஇய கடறு எனக்கூட்டிக் கிளிகடி மகளிர் நிலவணுமை யானே மருதநிலத்திலே சென்று நெய்தலொடு தாமரை யரிந்து, பின் கிளிகடி தொழிலை மேவுதலையுடைய ராய்ப் புறவின் புனங்கடோறும் கிளிகடி பாடலை நுவலப் பல்பயங்களும் நிலைபெற்ற முல்லை நிலமென வுரைக்க” என்றார். வைப்பினையும் இறும்பினையுமுடைய தகடூரென இயை யும். “வைப்பின் தகடூர் எனக் கூட்டுக” என்றும், “ஆடவர் காக்கும் இறும்பெனக் கூட்டுக,” வென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வில்பயில் இறும்பு, வில்லேந்திய வீரர்படை யிருக்கும் இறும்பு. பேஎம், அச்சம். கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பார்வையினையுடைய வீரர், பகைவரை நேரே நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பார்க்கும் இயல்புபற்றி, “பிறழ நோக்கியவ” ரென்றார்; பழையவுரைகாரரும், “பிறழ நோக்கியவ ரென்றது, தம் சினமிகுதியானே மாற்றார் படைத் தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ நோக்கும் பகைவராகிய பல்லிய முடையாரென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குப் பிறழ நோக்கியவரென்று பெயராயிற்,” றென்றும் கூறுவர். நெறியால் நோக்கியவழி, படையிலுள்ளாரிற் பலர் இனியரும் நெருங்கிய முறையினரு மாய்க் காணப்படுவரென்றும், அக்காலை யவர்பால் கண்ணோடு மாயின் மறம் வாடு மென்றும் கருதிப் பிறழ நோக்குவது வீரர்க்கு இயல்பாகலினாலும், அப்பிறழ்ச்சி நோக்கிற்கு ஆண்டு இயம்பும் இயங்கள் துணையாகலினாலும் படைவீரரைப் “பிறழ நோக்கியவர்” என்றார். இச் சிறப்பாலே இத் தொடர் இப்பாட்டிற்குப் பெயராயிற்றெனக் கோடல் சீரிதென வறிக. பிறழ்ச்சி நோக்கம் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன்மைகள் நிறைந்திருத்தல் பற்றிப் “பேஎம் அமன்ற” என்றாரென்க. இனி இவ்வியவரது வலிநிலை கூறுவார், “ஓடுறு கடுமுரண்” என்றார். இவ்வியவர் தகடூரைக் காத்து நின்ற பகைவீரர். அப்பகைவர் கொங்கராதலால், அவர்பால் உள்ள யாடுகளின் பன்மையும் ஆக்களின் பன்மையும் உணர்த்துவார், “தந்நாட்டு யாடு பரந்தன்ன மாவின்” என்றும், “ஆபரந்தன்ன யானை” யென்றும் கூறினார். பழையவுரைகாரர், “மாவினொடு வென ஒடு விரித்து முனை தபுத்தகாலை மாவினொடு ஆ பரந்தன்ன யானையோன் என வினைமுடிவு செய்க,” என்றார். 1-2. வலம்படு ........... யதுவே உரை : உவ்வரை - உவ்வெல்லையில் உள்ள; வலம்படு முரசின் - வெற்றியிடத்து முழங்கும் முரசுபோல; இலங்குவன விழூஉம் அவ் வெள்ளருவி அது - முழக்கமும் விளக்கமு முடையவாய் வீழ்கின்ற அழகிய வெள்ளிய அருவிகளையுடைய அதுவாகும் என்றவாறு. வரை, எல்லை. தோன்றுகின்ற குன்றுகளில் உயர்ந்து அருவிகளை யுடைத்தாய்த் தோன்றும் குன்றினை “அது” எனச் சுட்டிக் காட்டுகின்றாராதலின், “உவ்வரை அவ் வெள்ளருவி யதுவே” என்றார். பெரு முழக்கம் எழுதலின், வெற்றி முரசினை யுவமம் கூறினார். “வலம்படு முரசு” எனவே வெற்றி முரசாதல் பெற்றாம். விளக்கம் கூறவே முழக்க முண்மை பெறப்பட்டது. இதுகாறும் கூறியவாற்றால், “சில்வளை விறலி, செல்குவை யாயின் யானையோன் குன்று உவ்வெல்லையில் வெள்ளருவியை யுடைய அது என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.” இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறா யிற்று. 9. நிறம்படு குருதி 1. உயிர்போற் றலையே செருவத் தானே கொடைபோற் றலையே யிரவலர் நடுவண் பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும் 5. பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின் படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப அனைய வளப்பருங் குரையை யதனால் நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து 10. கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர் அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து 15. தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி புறம்படி னல்லது மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற் கடவு ளயிரையி னிலைஇக் கேடில வாக பெருமநின் புகழே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிறம்படு குருதி 1-8. உயிர் ........... குரையை. உரை : வயங்கு செந் நாவின் - மெய்ம்மை மொழியால் விளக்கம் பொருந்திய செவ்விய நாவினையும்; படியோர் தேய்த்த ஆண்மை - வணங்காதாரை வலியழித்த ஆண்மையினையும்; தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப - தொடி யணிந்த மகளிர் தோளைக் கூடுதலால் குழைந்த மாலை யணிந்த மார்பையு முடைய வேந்தே; செருவத்தான் உயிர் போற்றலை - போரிலே நீ உயிரைப் பொருளாகக் கருதிற்றிலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை - பரிசில் வேண்டி வரும் இரப்போர் கூட்டத்திலே கொடுக்குஞ் செயலில் எதனையும் என்றும் வரைதலை யறியாய்; பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி - பெரியோர்களைத் தமராகப் பேணிக்கொண்டு ஆற்றலாற் சிறிய ராயினாரையும் புறக் கணியாது அருள் செய்கின்றாய்; பிரிந்த நின்வயின் நல்லிசை - எல்லாத் திசையினும் சென்று பரவி யிருக்கும் நின் நல்ல புகழ்கள்; கனவினும் பிறர் நசை யறியா - கனவிலும் தம்மை விரும்பும் பிறரை விரும்பிச் செல்லாவாயின; அனைய அளப்பருங் குரையை - அத் தன்மையவாகிய அளத்தற் கரிய குணஞ் செயல்களை யுடையையா யிருக்கின்றாய் என்றவாறு. நாவிற்கு விளக்கம் தான் வழங்கும் மெய்ம்மை மொழி யாலும், செம்மை, யாதொன்றும் தீமையிலாத சொல்லுதலாலு மாதலின் “வயங்கு செந்நாவின்” என்றார். படியார், படியோ ரென நின்றது; படியார், வணங்காதார்; “படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை” 1 (மலைபடு. 423) என்று பிறரும் கூறுதல் காண்க. படிதல் - வணங்குதல். “படியோ ரென்றது பிரதியோ ரென்னும் வடமொழித் திரிவு” (அகம். 22) என அகநானூற்று அரும்பதவுரைகாரர் கூறியது சொன்னிலை யுணராது கூறிய தாகலின் பொருந்தாமை யறிக. மகளிர் முயக்கிடை மார்பி லணிந்த தாருமாலையுங் குழையுமாதலின் “தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப” என்றார்; “காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தல் மகளிர், ஒல்லா முயக்கிடைக் குழைக வென்தாரே” (புறம். 73) எனச் சோழன் நலங்கிள்ளி கூற்றாலும் ஈதறியப்படும். செரு. அம்முப்பெற்றுச் செருவமென வந்தது. செருவின்கண் பிறக்கும் புகழ்மேற் சென்ற வேட்கையால் உயிரைப் பொரு ளாகக் கருதிற்றிலனாதலின். “உயிர் போற்றலையே செருவத் தானே” என்றார்; “சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்” (குறள். 777) எனச் சான்றோர் கூறுதல் காண்க. ஈத்துவக்கும் இன்பத்தாலும் ஈகைக்கண் இசை நிற்பதாலும் வரையாது வழங்கும் வண்மை யுடையதனால் கண்டு “கொடை போற்றலையே இரவலர் நடுவண்” என்றார். கொடை போற்றாமையாவது “இன்று செலினுந் தருமே சிறுவரை, நின்று செலினுந் தருமே பின்னும், முன்னே தந்தனெனென்னாது துன்னி, வைகலும் செலினும் பொய்யல னாகி” (புறம். 171) இரப்போர் வேண்டிய வேண்டி யாங்கு வழங்குவது. பெரியாரைப் பேணிக்கொளல் அரசர்க்குப் பெருவன்மையாதலால், “பெரியோர்ப் பேணி” யென்றார்; “தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல், வன்மையு ளெல்லாந் தலை” (குறள். 444) எனச் சான்றோரும் பணித்தார். சிறியோரென் றது அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் தன்னிற் சிறுமையுடையாரை. அவரை யளித்தோம்பலும் செங்கோன்மை யாதலின், “சிறியோரை யளித்தி” என்றார்; “வல்லா ராயினும் வல்லுந ராயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை யாகுமதி” (புறம். 27) எனச் சான்றோர் கூறும் முதுமொழிக் காஞ்சியானுமறிக. நின்வயின் நல்லிசை, பிரிந்த நல்லிசையென இயையும். புகழ்வரும் வாயில்கள் கல்வி, ஆண்மை முதலாகப் பலவாதலின், புகழும் பலவாதல் பற்றி, “நல்லிசை யறியா” எனப் பன்மையாற் கூறினார். ஒருவன் புகழ்க்கு அவன் காரண மாயினும், அவனைத் தனக்கு ஆதார மாகக் கொள்ளாது அவனிற் பிரிந்துசென்று உலகத்தை ஆதார மாகக் கொண்டு அவன் மடியினும் தான் மடியாது நின்று நிலவுவது புகழ்க்கியல் பாதலின், “நின்வயிற் பிரிந்த நல்லிசை” யென்றார். புகழ் தன்னைச் செய்தோனிற் பிரியாது அவனோடே கிடக்குமாயின், அவன் பொன்றுங்காற் றானும் பொன்று மென்பதுபட்டுக் குற்றமாய் முடிதலின், “பிரிந்த நல்லிசை” எனச் சிறப்பித்தார். இக் கருத்தேபற்றிப் பழையவுரை காரரும், “பிரிந்த நின் வயின் நல்லிசை யெனக் கூட்டுக” என்றும், “பிரிதல் தன்னைவிட்டுத் திக்கு விதிக்குகளிலே போதல்” என்றும் கூறுதல் காண்க. “நின்வயிற் பிரிந்த நல்லிசை” யெனக் கிடந்தபடியே கொண்டு, “நின்பானின்றும் பிரிந்து சென்ற நினது நல்லிசைகள்” என்பாரு முளர்; நின்பானின்றும் பிரிந்து சென்ற என்றவழி நின்னின் நீங்கிய புகழென்றாகிப் பொருள் சிறவா தொழிதலின், அது பொருளன்மை யறிக. நீ பெற்றுள்ள புகழ்களைப் பிறர் கனவிலும் பெற்றறியார் என்பார், புகழ் மேலேற்றி, நின் நல்லிசை “கனவிலும் பிறர் நசை யறியா” என்றார். “நசை யறியா” என்ற தனால், நின் பகைமைக்கஞ்சிப் பிறர் கனவினும் நீ பெற்ற புகழ் களைப் பெறுதற்கு விரும்புவதிலர் என்பது கூறிய வாறாயிற்று. இவ்வாறு உயிர் போற்றாமையால் ஆண்மையும், கொடை போற்றாமையால் வண்மையும் பெரியோர்ப் பேணிச் சிறி யோரை யளித்தலால் செங்கோன்மையும் பிறவும் அளத்தற் கரியவா யிருத்தலால், ஏனைய பிறவும் அத்தன்மையவே யென்பார், “அனைய வளப்பருங் குரையை” யென்றார். 8-19. அதனால் .............. நின் புகழே உரை : அதனால் - ஆதலால்; நின்னொடு வாரார் - நின் விருப்பப் படி யொழுகுதற் கிசையாமல்; தம் நிலத்து ஒழிந்து - நினக்கு மாறுபட்டுத் தங்கள் நாட்டிலேயே யிருந்து; கொல் களிற்று யானை எருத்தம் புல்லென வில்குலை யறுத்து - நின்னை யெதிர்த்த பிற வேந்தர் தாம் ஏறிவந்த கொல்லுகின்ற களிற்றியானையின் பிடரி புல்லென்னுமாறு அவர் ஏற்றுப் பொருத வில்லின் நாணை யறுத்து அவரைக் கொன்று நீ வெற்றி மேம்படக் கண்டும்; கோலின் வாரா வெல் போர் வேந்தர் - நின் செங்கோற் கீழ்ப் பணிந்து வருதலைச் செய்யாது, வெல்கின்ற போர் செய்தலையுடைய வேந்தரது; முரசுகண் போழ்ந்து - முழக்கும் முரசின் கண்ணைக் கிழித்து; அவர் அரசுவா அழைப்ப - அவர்களுடைய பட்டத் தியானை கதறக் கதற; கோடு அறுத்து இயற்றிய அணங்குடை மரபின் கட்டின் மேல் இருந்து - அதன் கோட்டினை யறுத்துச் செய்த தெய்வத் தன்மை பொருந்திய முறைமையினையுடைய கட்டிலின்மேல் இருந்து; தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து - தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவுபற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; நிறம்படு குருதி புறம் படின் அல்லது - மார்பிற் பட்ட புண்ணிடத் தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றி; மடை எதிர் கொள்ளா - கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத; அஞ்சு வருமரபின் - அச்சம் பொருந்திய முறைமை யினையுடைய; கடவுள் அயிரையின் - கொற்றவை வீற்றிருக் கின்ற அயிரை மலைபோல; பெரும - பெருமானே; நின் புகழ் நிலைஇக் கேடிலவாக - நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக என்றவாறு. அதனால் என்பதனை நிலைஇக் கேடிலவாக என்பதனோடு இயைக்க. தம் மனத்துள்ள மாறுபாட்டால் நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைந்தில ரென்பார், “வாரார்” என்றார். வாராது இருந்த நிலை இஃதென்றற்குத் “தந்நிலத் தொழிந்து” என்றார். ஒழிந்தெனவே, அவர்பால் செயலறுதி பெறப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந் தென்றது, நின்னை வழிபட்டு நின்னொடு ஒழுகா திருத்தலே யன்றித் தம் நிலத்திலே வேறுபட்டு நின் றென்றவா” றென்பர். நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைவின்றித் தம் நிலத்தே வறிதிருத்தலும் மானமாதலின் போர்க்கு வரலானார் அது செய்யாது பணிந்து நின் கோற்கீழ் வரற்பாலர் என்பார், “கோலின் வாரா” என்றார். கோலின் வருதலே செயற்பாற் றென்பதற்கு ஏதுக் கூறுவார், இடையிலே நிகழ்ந்த நிகழ்ச்சியை யெடுத்தோதலுற்று, “கொல்களிற்று யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்து” என்றார். அறுப்ப வென்பது அறுத் தென நின்றது. கண்டும் என ஒரு சொல் வருவிக்க. “யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச், சேனைத் தலைவராய்” (நாலடி. 3) வந்தாராதலின், வந்த அவரை வென்று மேம்பட்ட செய்தியை, “யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்து” என்றார். கோலின் வாராத வேந்தர் போர் குறித்து வந்தமை தோன்ற, “வெல்போர் வேந்தர்” என்றார். இனிப் பழையவுரை காரர், “யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வேந்த ரென்றது, முன்பு நின் வழி யொழுகாது ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம் களத்து நின் போர்வலிகண்டு இனி நின் வழி யொழுகுதுமெனச் சொல்லித் தாம் ஏறிய யானை யெருத்தம் புல்லென வில்லின் நாணியை யறுத்து நின் செங்கோல்வழி யொழுகாத வேந்தரென்றவா” றென்பர். பகை வேந்தரை “வெல் போர் வேந்தர்” என்றார், இதற்கு முன்பெல்லாம் அவர் செய்த போரனைத்தினும் வென்றியே யெய்தி வந்தமையும், அச்செருக்கே பற்றுக்கோடாக இப்போதும் வந்தாரென்பதும் உணர்த்துதற்கு. இப் போரில் தோற்றமையால் அவரது முரசும் களத்தே யொழிந்த தென்றற்கு, “அவர் முரசுகண் கிழித்து” என்றார். இதுகாறும் தாம் பெற்றுப்போந்த வென்றியால் தம்மையே வியந்து தம் பட்டத்தியானைமேல் வந்தவர், போரிற்பட்டு வீழ்ந்தமையின், அவரது அவ்யானையைப்பற்றி அஃது ஆற்றாது கதறிப் புலம்பிப் பிளிற அதன் கோட்டினை யறுத்து அதனால் பலிக்கட்டில் செய்து கொண்ட செய்தியை “அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய கட்டில்” என்றும், கொற்றவைக்குப் பலியிடுவது குறித்து விழுப்புண்பட்ட வீரர் அதன்மீதிருந்து தம் மார்பிற் புண்ணினொழுகும் குருதி தெளித்து மடை கொடுப்ப, தெய்வமும் அதனை விரும்பி யேற்பது குறித்து அக்கட்டிலே, “அணங்குடை மரபிற் கட்டில்” என்றும், அதன் மீதிருந்து குருதி விரவிய மடை கொடுப்பினன்றி யேலாத தெய்வம் அஞ்சத்தகும் முறைமை யுடைத்தாதல் பற்றி, “அஞ்சுவரு மரபிற் கடவுள்” என்றும் கூறினார். தும்பை சூடிப் பொரும் வீரர், பகைவரை யெறிகையில் தாமும் முகத்தினும் மார்பினும் புண்பட்டு மெய்தளர ஓய்ச்ச லெய்தியபோதும் தம் மார்பிற் புண்ணின் குருதியைச் சிறிதும் தயங்காது அள்ளி மடையின் புறத்தே தெளிப்பவாதலின், “தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி” யென்றார். பழையவுரைகாரர், “தும்பை சான்ற மெய் தயங்குயக் கத்து நிறம்படு குருதி யென்றது, வீரருடைய, தும்பை சூடியதற் கேற்ப நின்று பொருதலாற்றலையுடைய உடலானது அசையும் படி வந்த ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்துவிட்ட குருதி யென்றவா” றென்றும், “அல்லாத இடங்களிற் குருதி கொள்ளாமையின் நிறங்களைத் திறக்க ஆண்டுண்டான குருதி யென்பதாயிற்” றென்றும், “இச்சிறப்பானே இதற்கு நிறம்படு குருதி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இவ்வாறே, “கோடறுத் தியற்றிய கட்டின்மேலிருந்து நிறம் படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக் கடவுள் எனக் கூட்டி, அவ்வாறு செய்ததொரு கட்டில் கொடு வந்திட்டதன்மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயி னல்லது பலிகொள்ளாக் கடவுளென வுரைக்க” என்றும், “கட்டில் மேலிருந்தல்லது குருதி புறம்படினல்லது என அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க” என்றும் கூறுவர். “நிறம்படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக் கடவுள்” எனவே, கொற்றவை யென்பது பெற்றாம். அயிரை, சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரியின் தெற்கிலுள்ளதொரு குன்று; இதனை இக்காலத்தார் ஐவர்மலை யென்று வழங்குமென் பாரு முளர். பழையவுரைகாரர், “அது கொற்றவை யுறைவ தொரு மலை” யென்பர். அயிரைமலை நின்று நிலைபெறுவது போல நின் புகழ்களும் நிலைபெற்று விளங்குக என்பார், “அயிரையின் நிலைஇக் கேடிலவாக நின் புகழே” யென்றார். இதுகாறும் கூறியவாற்றால், நாவினையும் ஆண்மை யினையும் மார்பினையுமுடையோய் பெரும, செருவத்து உயிர் போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை; பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி; நின்வயின் நல்லிசை கனவிலும் பிறர் நசை யறியா; அனைய அளப்பருங் குரையை; அதனால் நின் புகழ்கள் அயிரையின் நிலைஇக் கேடிலவாக என்பதாம். இனிப் பழையவுரைகாரர் “கோதை மார்ப, செருவத்து உயிர் போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை; பெரியோரைப் பேணிச் சிறியோரை யளித்தி; அனைய நின் குணங்கள் அளப்பரியை; நீ அவ்வா றொழுகுதலால், பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் பிறர் நச்சுத லறியா; அவ்வாறு அறியாமையின், பெரும, நின் புகழ் நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “அனைய வளப்பருங் குரையை யென்றது, சிறியோரை யளித்தி என்றதன் பின்னே நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது: அவன் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியவாறாயிற்று.” 10. புண்ணுடை யெறுழ்த்தோள் 1. வான்மருப்பிற் களிற்றியானை மாமலையிற் கணங்கொண்டவர் எடுத்தெறிந்த விறன்முரசம் கார்மழையிற் கடிதுமுழங்கச் 5. சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்பால் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள் ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ 10. இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ அனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி 15. புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : புண்ணுடை யெறுழ்த்தோள் 1-4. வான்மருப்பின் ........... முழங்க உரை : வால் மருப்பின் களிற்றியானை மாமலையின் கணங் கொண்டு - வெள்ளிய மருப்பினையுடைய போர்க்களிறுகள் பெரிய மலைபோல கூடித் தொக்கு நிற்ப; அவர் எடுத்தெறிந்த விறல் முரசம் - பகைவர் மேற்கொண்டு முழங்கிய வெற்றி முரசமானது; கார் மழையின் கடிது முழங்க - கார் காலத்து முகில் போல மிக்கு முழங்கவும் என்றவாறு. போர்க்குரிய ஆண்மை நலம் சிறந்து நிற்கும் யானைகளைக் “களிற்றியானை” யென்றார். மலையின், இன் : ஒப்புப் பொருட்டு. அவர் என்பது “ஒடுவில் தெவ்வர்” (9) என்றதனைச் சுட்டி நிற்றலின், சுட்டு; செய்யுளாதலின் முற்பட வந்தது. கொள்ள வென்பது கொண்டெனத் திரிந்து நின்றது. பழையவுரை காரரும், “கணங் கொள்ள வெனத் திரிக்க” என்றும், “அவ ரென்றது பகைவரை” யென்றும் கூறுவர். எடுத்தெறிதல், தம் முற்றுகை தோன்ற மேற்கொண்டு முழக்குதல். வெற்றி குறித்து முழக்கும் முரசாதலின் “விறல் முரசம்” என்றார்; பலி பெறும் சிறப்புப் பற்றி இங்ஙனம் கூறினா ரெனினுமாம். மிகுதிப் பொருட்டாய கடி யென்னு முரிச்சொல் கடிது எனத் திரிந்து நின்றது. 5-9. சாந்து ............ நின்று உரை : சாந்து புலர்ந்த வியன் மார்பின் - பூசிய சாந்து புலர்ந்த அகன்ற மார்பினையும்; தொடி சுடர்வரும் வலிமுன்கை - தொடியணிந்தமையால் அதன் ஒளி திகழும் வலிபொருந்திய முன்கையினையும்; புண்ணுடை எறுழ்த்தோள் - ஆறாத விழுப்புண்ணையுடைய வலிய தோளினையும்; புடையலங் கழற்கால் - அத் தோளிடத்தே யணிந்த மாலையொடு வீரகண்டை யணிந்த காலினையும்; பிறக்கடி யொதுங்காப் பூட்கை - முன் வைத்த காலைப் பின் வையாத மேற்கோளினையும்; ஒள்வாள் - ஒள்ளிய வாட்படையினைமுடைய; ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று - வணங்காத பகைவர் முன்னே அஞ்சாது நின்று என்றவாறு. ஆடவர்க்கு அகன்ற மார்பு சிறப்புத் தருவதாகலின், அதனை விதந்து, “சாந்து புலர்ந்த வியன் மார்பின்” என்றார். தொடி, தோள் வளை. இவர்கள் ஏந்தி யடும் வாட்படையை “ஒள்வாள்” எனச் சிறப்பித்தலின், அதற்கேற்ப, “வலிமுன் கை” யென்றார். பல போர்களைச் செய்து வென்றி மேம்பட்டோ ரென்றற்கு, அவர் உற்ற புண்ணை விதந்து, “புண்ணுடை யெறுழ்த் தோள்” என்றும், புண்ணுடைத்தாகியும் வலி குறைந்த தின் றென்றற்குப் புண் ணுடைத்தோ ளென்னாது, “எறுழ்த்தோ” ளென்றும் கூறினார், இனிப் பழையவுரைகாரர், “புண்ணுடை யெறுழ்த்தோ ளென்றது, எப்பொழுதும் பொருத புண்ணறாத வலிய தோளென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குப் புண்ணுடை யெறுழ்த்தோள் என்று பெயராயிற்” றென்றும் கூறுவர். புடையலங்கழல் : உம்மைத்தொகை. புடையல் - மாலை. “ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்” (புறம். 99) என்றும், “மாயிரும்புடையல் மாக்கழல் புனைந்து” (பதிற். 37) என்றும், “இரும்பனம் புடைய லீகை வான்கழல்” (பதிற். 42) என்றும், “இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப” (பதிற். 57) என்றும், “புடையலங் கழற்கால் புல்லி” (அகம். 295) என்றும் இப்புடையல் கழலொடு பிணைத்தே கூறப்படுதலின், இது கழலணியும் வீரர் அடையாளமாகச் சூடும் பூமாலையாதல் துணியப்படும். இரும்பனம் புடையலெனத் தெரித்து மொழி வதும், “புடையல்” என வாளாது கூறுவதும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. ஈண்டுத் தெவ்வர் சூடிய புடையலைத் தெரித்து மொழியாமையின், பனம் புடையலெனக் கோடல் பொருந்தாமை யறிக. அடிபிறக்கிடாத மேற்கோள் வீரர்க்கு இன்றியமையா மையின், “பிறக்கடி யொதுங்காப் பூட்கை” என்றார். “அடி யொதுங்கிப் பிற் பெயராப் படையோர்” (மதுரை. 37-8) என்று பிறரும் கூறுப. ஒடிதல், மறங்குன்றிப் பகைவர்க்கு வணங்குதல்; அறைபோதலுமாம். இத்தகைய ஒடிவில் தெவ்வர் விறல் முரசம் முழங்க முற்றுகை யிட்டு நிற்பவும், அவர்முன் சிறிதும் அச்சமிலராய் நின்று வீறு பேசும் சேரமான் வீரர் மறநிலையை “எதிர்நின்று” என்பதனால் தோற்றுவிக்கின்றார். 9-17. உரைஇ ........... தெம்முனையானே உரை : உயர்ந்தோர் - நின் தானை வீரராகிய உயர்ந்தோர்கள்; அம்புடை வலத்தர் - இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்பு முடையராய்; உரைஇ - அத் தெவ்வர் முன்னே நின்று இருமருங்கும் உலாவி; புரவு எதிர்ந்தோற்கு திறை இடுக - திறை செலுத்தித் தன் கோற்கீழ்ப் பணிந்து நிற்பார்க்குப் பாதுகாப்பினை வழங்குதற்கு ஏறட்டுக்கொண்டு நிற்கும் எங்கள் பெருஞ்சேரலிரும் பொறைக்கு நுங்கள் திறையினைச் செலுத்துவீராமின்; எனப் பரவ - என்று நின்கொடையும் அளியும் தெறலும் பிறவும் பாராட்டிக் கூற; அனையை யாகன்மாறே - நீயும் அவர் கூறும் நலமெல்லாம் உடையை யாதலினாலே; சினப் போர் - சினங் கொண்டு செய்யும் போரினையும்; நிலவரை நிறீஇய நல்லிசை - நிலவுலகத்தே நிறுவப்பட்ட நல்ல இசையினையும்; தொலை யாக் கற்ப - கேடில்லாத கல்வியினையுமுடையாய்; நின் தெம்முனையான் - நீ பகைகொண் டாற்றும் போர்முனை யாகிய; புல வரை - தங்கள் நிலவெல்லையிற்றானும்; பகைவர் - நின் பகைவரது; கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவி - காற்றுக் கிளர்ந்து சென்றாற் போலும் விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டிய; கடும் பரி நெடுந்தேர் மீமிசை - கடுஞ் செலவினையுடைய நெடிய தேர் மீது கட்டிய; நுடங்கு கொடி தோன்றுதல் யாவது - அசைகின்ற கொடி தோன்றுவது எங்ஙனமாகும்; இனி அஃது எவ்வாற்றானும் தோன்றாது காண் என்றவாறு. போர் வீரர்க்கு வேண்டும் உயர்குணங்களெல்லாம் ஒருங்குடைமை பற்றி “உயர்ந்தோர்” என்றார். பகைவீரருடைய மார்பு முதலியவற்றை விதந்து கூறிய ஆசிரியர், அவர்களை உயர்ந்தோ ரென்றது, அவர்கட்கு அக் கூறிய சிறப்பனைத்தும் ஆரவார மாத்திரையே என வற்புறுத்தியவாறு. அம்புடை வலத்தரெனவே, வில்லுடைமை தானே பெறப்படுமாகலின், அது கூறாராயினார். இனி அம்புடை வலத்தர் என்றற்கு, அம்பினா லாகிய வெற்றியையுடைய ரென்றுமாம். தெவ்வர் முன் நின்று இவ்வுயர்ந்தோர் சேரனுடைய தலைமைப் பண்பு களையும் ஆண்மை வண்மைகளையும் பரவிக் கூறலுற்றோர், தம் கூற்று பகைவர் படைப்பரப்பு முற்றும் கேட்டல் வேண்டி இருமருங்கும் உலவிச் சென்று உரைத்தார் என்றற்கு “உரைஇ” யென்றும், படை திரண்டு போர் குறித்து வந்தீராயினும் திறையிடின் எங்கள் இறைவன் நுங்களைப் பொறுத்துப் புரவு பூண்பன் என்பார், “இடுக திறையே புரவெதிர்ந்தோற்கே” என்றார்கள் என்றும் கூறினர். அவ்வுயர்ந்தோர் நின்னைப் பற்றிக் கூறிய அனைத்தும் மெய்யே யென்பார், “அனையை யாகன்மாறே” யென்றார். மாறு: மூன்றாம் வேற்றுமைப் பொருட்டு. பகைவரது குதிரையின் திறம் கூறுவார், “கால்கிளர்ந் தன்ன கடும்பரிப் புரவி” யென்றும், அவற்றைப் பூட்டும் தேரும் இத்தகைய தென்றற்குக் “கடும்பரி நெடுந்தேர்” என்றும், “கால்கிளர்ந் தன்ன வேழம்” (முருகு.) என்றும் சான்றோர் விரைந்த நடைக்குக் காற்றை உவமம் கூறுவது காண்க. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நின் நல்லிசை நிலவரை முழுதும் பரவி நிலைபெறுதலின், பகைவரது கொடி நுடங்குதற்கும் இடனில்லை என்பது கூறியவாறு. நல்லிசை நிறுவுதற்கேற்ற கல்வியும் மிக வுடையாய் என்பார், “தொலையாக் கற்ப” என்றார். இனி, பழையவுரைகாரர், “புரவெதிர்ந்தோற்கென்றது கொடை யேற்றிருக்கின்ற அவனுக்கென்றவா” றென்றும், “கொடி தோன்றல் என்றதனை எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க” என்றும், “நின் தெம்முனைப் புலவரையான் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியது: களிற்றியானை கணங்கொள்ள, அவர் எறிந்த முரசம் முழங்கவும், மார்பினையும், முன் கையினையும் தோளினையும், புடையலையும், கழற்காலையும், பூட்கை யினையும், வாளினையுமுடைய ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று, உயர்ந்தோர், அம்புடைய வலத்தராய் உரைஇ புரவெதிர்ந் தோற்கு இடுக திறையே யெனப் பரவ, அனையை யாகன்மாறே, சினப்போரும் நல்லிசையும் கற்பினையு முடையாய், நின் தெம்முனையாகிய புலவரையில், பகைவர் கதழ்பரிப் புரவிக் கடுந்தேர் மீமிசை நெடுங்கொடி தோன்றல் யாவது என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “தொலையாக் கற்ப, நின் வீரராகிய உயர்ந்தோர் நின் தெவ்வராகிய அவருடைய களிற்றியானை மலையிற் கணங் கொள்ளா நிற்க, முரசம் கடிது முழங்காநிற்க, அவையிற்றை ஒன்றும் மதியாதே நின்னொடு ஒடிவில் தெவ்வ ராகிய அவர் எதிர்நின்று பெயரா இப்புர வெதிர்ந்தோனுக்குத் திறையை யிடுக வெனச் சொல்லி நின்னைப் பரவும்படி நீ அதற்கேற்ற தன்மையை யுடையையான படியாலே நின் தெம்முனைப் புலவெல்லையில் நின் பகைவர் தேர்மிசைக் கொடிபோரைக் குறித்துத் தோன்றல் யாது எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பொடு படுத்து வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “தெம்முனைப் புலவரைப் பகைவர்கொடி தோன்றல் யாவது என எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய வதனால் வஞ்சித் துறைப்பாடாணாயிற்று.” “முன்னர் ஆறடியும் வஞ்சியடியாய் வந்தமையானே வஞ்சித்தூக்கு மாயிற்று.” இருவகைத் தூக்கும் விரவிவந்ததாயினும் ஆசிரிய நடையே பெற்று இனிய ஓசைகொண்டு வருதலின் ஒழுகு வண்ண மாயிற்று; “ஒழுகுவண்ணம் ஓசையி னொழுகும்” (தொல். செய். 224) என்றா ராகலின். எட்டாம் பத்து மூலமும் உரையும் முற்றும். ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்து பதிகம் குட்டுவ னிரும்பொறைக்கு மையூர் கிழான் வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன் வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென் றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ 5. அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து பொத்தி யாண்ட பெருஞ் சோழனையும் வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி 10. மந்திர மரபிற் றெய்வம் பேணி மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ 15. ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவை தாம்: நிழல் விடு கட்டி, வினைநவில் யானை, பஃறோற்றொழுதி, தொழினவில் யானை, நாடுகாண் நெடுவரை, வெந்திறற் றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை. இவைபாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில் : மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்பு மறம் தான்விட்டான் அக் கோ. குடக் கோ இளஞ்சேர லிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான். 1. நிழல்விடு கட்டி 1. உலகம் புரக்கு முருகெழு சிறப்பின் வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல் அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து 5. காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப அரசுபுறத் திறப்பினு மதிர்விலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் 10. மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக் கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார் இடாஅ வேணி வியலறைக் கொட்ப 15. நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி கட்டளை வலிப்ப நின்தானை யுதவி வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல் முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து 20. சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும் சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப் 25. பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத் தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக் கொடுங்குழைக் கமர்த்த நோக்கி யைவரப் 30. பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து மாணிழை யரிவை காணிய வொருநாட் பூண்க மாளநின் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு 35. தொன்மருங் கறுத்த லஞ்சியரண் கொண்டு துஞ்சா வேந்தருந் துஞ்சுக விருந்து மாக நின்பெருந் தோட்கே. துறை : முல்லை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிழல்விடு கட்டி 1-5. உலகம் ........... புலம்புகொள உரை : உலகம் புரக்கும் - உலகத்திலுள்ள உயிர்களைப் பாதுகாத் தலைச் செய்யும்; உருகெழு சிறப்பின் - உட்குதலைச் செய்யும் சிறப்பினையும்; வண்ணக் கருவிய - கரிய நிறத்தையுமுடைய பலவாய்த் தொகுதி கொண்டனவாகிய; வளங்கெழு கமஞ்சூல் - வளம்பொருந்திய நிறைந்த நீரையுடைய மழைமேகங்கள்; அகல் இரு விசும்பின் - அகன்ற கரிய வானத்தின்கண்; அதிர் சினம் சிறந்து - எல்லாப் பொருளும் அதிரும்படி மின்னிக் குமுறி; கடுஞ் சிலையொடு கழறி - மிக்க முழக்கத்தோடு இடித்து; விசும்பு அடையூ நிவந்து - வான முழுதும் பரந்துயர்ந்து; காலை யிசைக்கும் பொழுதொடு - கார்காலத்தைத் தெரிவிக்கும் பருவத்தால்; புலம்பு கொள - உயிர்கள் வருத்த மெய்த என்றவாறு. உலகம் புரக்கும் வளங்கெழு கமஞ்சூல் என்றும், சிறப் பினையும் வண்ணத்தினையுமுடையவாய்க் கருவியவாகிய கமஞ்சூல் என்றும் இயையும். மழையின்றிப் பொய்ப்பின் உலகத்துள் பசிநின்று உடற்று மாதலின், “உலகம் புரக்கும் கமஞ்சூல்” என்றும், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் தருதலின் “வளங்கெழு கமஞ்சூல்” என்றும், இடி மின்னல் முதலியவற்றால் உயிர்கட்கு அச்சத்தை விளைத்தலின், “உருகெழு சிறப்பின் கமஞ்சூல்” என்றும் கூறினார். இரு விசும்பு மிக அகன்ற தாயினும் அதனிடமுழுதும் அதிரக் குமுறுதல் பற்றி, “அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து” என்றார். கமஞ்சூல், கமஞ் சூலையுடைய மேகத்துக்காயிற்று. கமம், நிறைவு. “கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை” (முருகு. 7) என்று பிறரும் கூறுதல் காண்க. அதிர் சினம், முகிற் கூட்டத்தின் குமுறலையும், கடுஞ்சிலை பேரிடியினையும் குறித்து நின்றன. மழை மிக்குப் பெய்தலால் மாவும் புள்ளும் குளிரால் ஒடுங்கி வருந்துதலின், “புலம்பு கொள” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கமஞ்சூல், மேகங்க” ளென்றும், “நிறைந்த சூலுடைமையின் மேகங்கள் கமஞ்சூல் எனப்பட்டன” என்றும், “சிலையொடு கழறியென ஒடு விரிக்க” என்றும், “சிலை, முழங்குதல்; கழறல், இடித்தல்” என்றும், “நிவந்து விசும்படையூ வென மாறிக் கூட்டுக” என்றும், “விசும்படைதல் மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை யடைதல்” என்றும், “காலை யிசைக்கும் பொழுதொடு புலம்பு கொள வென்றது, மேகங்கள் கார் காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென்றவா” றென்றும் கூறுவர். 6-14. களிறு ........... கொட்ப உரை : களிறு பாய்ந்து இயல - களிறுகள் பாசறை யெல்லையிற் பரந்து இயங்க; கடுமா தாங்க - விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களைச் சுமந்து அவர் குறிப்புவழிச் செல்ல; ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்துகொட்ப - விளங்குகின்ற கொடிகள் அசையத் தேர்கள் நாற்றிசையும் சுழன்று திரிய; அரசு புறத்து இறுப்பினும் - பகையரசர் தம் நகர்ப்புறத்தே முற்றுகை யிட்டுத் தங்கினும்; அதிர்விலர் - சிறிதும் நடுக்கமிலராய்; வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் - தமக்குரிய இடங்கட்குக் காவல் கொள்ளாத வலிமையினை யுடையராகிய வீரர்; மாயிருங் கங்குலும் - பெரிய இருள் நிறைந்த இராக் காலத்தும்; விழுத் தொடி சுடர்வர - தம் தோளிலணிந்த வீரவளை ஒளிதிகழ; தோள் பிணி மீகையர் - தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகை யினையுடையராய்; நாளும் முடிதல் வேட்கையர் - போரிற் புண்பட்டு வீழ்தலை விரும்பும் வேட்கையராய், புகல் சிறந்து - போர் விருப்பம் மிக்கு; நெடிய மொழியூஉ - வஞ்சினம் கூறி அவ்வஞ்சினம் தப்பாமல்; தம் குடி கெடாஅ நல்லிசை நிறுமார் - தாம் பிறந்த குடிக்குக் கெடாத நல்ல புகழை நிலைநிறுத்துதற்கு; இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப - அளவிடப்படாத எல்லையால் அகன்ற பாசறைக்கண்ணே சுழன்று திரிய என்றவாறு. பாய்தல் - பரத்தல். பருவுடம்பினவாதலின், களிறுகளின் இயக்கத்தைப் “பாய்ந்தியல” வென்றார். கடுமா என்புழிக் கடுமை விரைவு குறித்து நின்றது. தாங்க வென்றதனால், வீரர்களைச் சுமத்தல் பெற்றாம். வாயில், காவல். மிக்க வலியுடையராயினும் பகையரசர் புறத்திறுத்தவழி, மதிற் காவல்கொள்ளாதொழிவா ரென்பது தோன்ற, “வாயில் கொள்ளா மைந்தினர்” என்றார். வாயில் கொள்ளாமைக்கேது மைந்துடைமை யென்றாராயினும், அதனைப் புலப்படுக்கும் நடுக்கமின்மையை “அதிர்விலர்” என எடுத்தோதினார். இராக் காலத்தே போர் நிகழ்தலின்மையின், “மாயிருங் கங்குலும்” என்றார். மீகை, தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை, தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின் மீகை யெனப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “வாயில்கொள்ளா மைந்தின ரென்றது தமக்குக் காவலடைத்த, இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினை யுடையவ ரென்றவா” றென்றும், “வாயில் ஈண்டு இடம்” என்றும், “தோள் பிணி மீகைய ரென்றது குளிராலே தோளைப் பிணித்த அத்தோள் மீது உளவாகிய கைகளையுடைய ரென்றவா” றென்றுங் கூறுவர். போரிலே புண்பட்டு வீழ்தலின்றி வறிதே மூத்து நோயுற்றுச் சாதலைக் கீழ்மையாகக் கருதி, “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்” (அகம். 61) என மேற் சேறல், பண்டைச் சான்றோர் மரபாதலின், “புகல் சிறந்து நாளும் முடிதல் வேட்கைய” ரென்றார். வேட்கை மிகுதியால் போரில் விருப்பம் சிறக்குமாதலின், வேட்கையர் புகல் சிறந்தென இயைக்கப்பட்டது. பழையவுரைகாரர், “முடிதல் வேட்கைய ரென்றது தாம் எடுத்துக் கொண்ட போர் முடிதலிலே வேட்கை யுடையா ரென்றவா” றென்பர். நெடிய மொழிதலாவது, “தலைத்தா ணெடுமொழி தன் னொடு புணர்த்தல்” (தொல். பொ. புறம். 5). “நெடிய மொழிதலும் கடிய வூர்தலும் செல்வமன்று” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இந் நெடுமொழியை “மாராயம் பெற்ற நெடுமொழி” (தொல். புறத். 8) யாகக் கோடலுமொன்று. இடாஅ ஏணி யென்றது எல்லைக்கு வெளிப்படை. அறை, பாசறை. “இடாஅ ஏணி யியலறை” (பதிற். 24) என வருதல் காண்க. களிறு இயல, மாதாங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் மீகையராய், வேட்கையராய், நிறுமார், வியலறைக் கொட்ப என இயைக்க. 15-18. நாடடிப்படுத்தலிற் ......... அண்ணல் உரை : நாடு அடிப்படுத்தலின் - பகைவர் நாட்டை வென்று அடிப்படுத்தியதனால்; கொள்ளை மாற்றி - அந்நாட்டில் மேலும் கொள்ளத்தகும் பொருளைக் கொள்ளா தொழித்து; அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி - கொண்டவற்றை நெருப்பிலிட்டுருக்கி யதனால் ஓடுதல் இல்லாத ஒளிவிடுகின்ற பொற்கட்டிகளை; கட்டளை வலிப்ப - வீரர் தகுதிகளைச் சான்றோர் வற்புறுத் துரைப்பதால்; நின் தானை உதவி - அவ்வாறே உன் தானை வீரர்க்கு வழங்கி; வேறு புலத்திறுத்த வெல்போர் அண்ணல் - வேற்று நாடுகளில் தங்கிய வெல்லு கின்ற போரையுடைய அண்ணலே என்றவாறு. பகைவர் நாட்டை அடிப்படுத்தற்கு முன்பு, அதனுட்புக்கு எரிபரந்தெடுத்துச் சூறையாடிக் கொண்ட கொள்ளையை, அடிப்படுத்திய பின்பு பெறுவதின்மையின், “நாடடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி” யென்றும், கொண்ட கொள்ளை பல்வேறு வகைப் பொற்கலன்களாதலால், அவற்றை ஓரின மாக்குதற்காகப் பொடித்துருக்கிப் பொற்கட்டிகளாக மாற்றினமை தோன்ற, “அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி” யென்றும் கூறினார். பழையவுரைகாரரும், “நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி” யென்றது, நாட்டை யடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற கொள்ளையை மாற்றி யென்றவா” றென்றும், “அழல்வினை யமைதல், ஓட்டறுதல்; இவ்வடைச் சிறப்பானே யிதற்கு நிழல்விடு கட்டியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். நிழல், ஒளி. வீரர்க்குச் சிறப்புச் செய்யுமிடத்து அவரவர் தகுதியும் வரிசையும் தேர்ந்து அதற்குத் தக்கவாறு செய்வது ஆட்சிமுறை யாதலின், “கட்டளை வலிப்ப” என்றார், “கட்டளை வலித்தலென்பது இன்னார் இன்னதனைப் பெறுக என்று தரங்களை நிச்சயித்தல்” என்பது பழையவுரை. தானை யென்புழி நான்கனுருபு விரிக்க. வேறு புலத்திறுத்தவழி வேந்தன் செய்வன இவை யென்கின்றா ராதலின், “வேறு புலத்திறுத்த வெல்போ ரண்ணல்” என்றுரைக்கின்றார். 19-23. முழவின் .......... ஈயும் உரை : காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - காந்தட் பூவால் தொடுத்த கண்ணி சூடிய செழித்த குடியினையுடைய செல்வ மக்கள்; முழவின் அமைந்த பெரும்பழம் மிசைந்து - முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தை யுண்டு; சாறயர்ந் தன்ன - விழாக் கொண்டாடினாற்போல; யாணர் கார் அணி தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தி - புதுமையினையுடைய கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளை யருந்தி; கலி மகிழ் மேவலர் - ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பி; இரவலர்க்கு ஈயும் - இரப்போர்க்கு வேண்டுவனவற்றை யீதலைச் செய்யும் கொல்லி நாட்டிலுள்ள என்றவாறு. கொல்லிமலையைச் சூழ்ந்த நாட்டைக் கொல்லிக்கூற்ற மென்பர். அந்நாட்டவர் குறிஞ்சி நிலத்து மக்களாதலின், அந்நாட்டுச் செல்வர் காந்தட்கண்ணி சூடுதலை விதந்து, “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்றார். அங்கே, பலாப்பழம் மிகுதியும் கிடைப்பது இக் காலத்தும் உண்மை. “கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்” (புறம். 236) என்பவாகலின், ஈண்டும் பலாப்பழம், “முழவினமைந்த பெரும் பழ” மெனப்பட்டது. விழாக்காலத்துச் சுற்றமும் பிறரும் சூழவுண்டல்போல ஏனைக்காலத்தும் உண்டு மகிழ்தலைச் “சாறயர்ந்தன்ன தீம்பிழி மாந்தி” என்றதனாலும், இனிய கள்ளை மூங்கிற் குழாயிடத்தே பெய்து புளிப்பு முதிர்விக்கும் இயல்பை, “நீடமை விளைந்த தேக்கட் டேறல்” (முருகு. 195) என்பதனாலு மறிக. இரவலர்க்கீயும் கொல்லியென முடிக்க. பழையவுரை காரரும், “சாறயர்ந் தன்ன தீம்பிழியென முடித்து விழாக் கொண்டாடினா லொத்த இனிய மதுவென வுரைக்க” என்றும், “காரணி யாணர்த் தூம்பு என்றது கருமையைப் பொருந்தின அழகிய மூங்கிற் குழாய் என்றவா” றென்றும் கூறுவர். 24-32. சுரும்பு ............ நெடுந்தேர் உரை : சுரும்பார் சோலைப் பெரும் பெயர்க் கொல்லி - வண்டுகள் பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லி மலையில் உண்டாகிய; பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - இருவாட்சிப் பூக்களுடன் பச்சிலையைத் தொடுத் தணிந்து; மின் உமிழ்ந்தன்ன சுடரிழை யாயத்து - மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளிதிகழும் அணிகளையுடைய ஆயமகளிர் புடைசூழ வுள்ள; தன் நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின் - தன் நிறம் மறையும்படியான வண்டு மொய்க்கும் கூந்தலும்; ஒடுங்கீரோதி யொண்ணுதல் - முன் மயிரின் சுருள் தவழும் ஒளி பொருந்திய நெற்றியும்; அணிகொள - முறையே பூவாலும் ஒளியாலும் அழகுமிகுமாறு; கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் - வளைந்த குழையொடு பொருத பார்வையினையும்; பெருந்தகைக்கு நயவர அமர்ந்த மென்சொல் - தன் பெருங்குணங் கட்கு ஏற்ப அமைந்த மெல்லிய சொல்லினையும்; திருமுகத்து மாணிழை யரிவை - அழகிய முகத்தையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்களையு முடைய அரிவையாகிய நின் தேவியை; காணிய - காண்பதற்காக; ஒருநாள் - ஒருநாளேனும்; நின் புரவி நெடுந்தேர் பூண்க - நின்னுடைய குதிரை பூட்டிய தேர் ஏறுவாயாக என்றவாறு. பெருவாய் மலர், இருவாட்சிப்பூ. இதனை இருள்வாசி யென்றும் நள்ளிருணாறி யென்றுங் கூறுப. “நரந்த நாக நள்ளிரு ணாறி” என்று குறிஞ்சிப்பாட்டுக் கூறுகின்றது. பசும்பிடி, பச்சிலைப்பூ; இதனை இக் காலத்தார் மனோ ரஞ்சிதம் என்பர் ; “பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” (குறிஞ். 70) என வருதல் காண்க. “இருவாட்சி முதலியவற்றையும் சுடரிழையினையு முடைய ஆயமகளிர் எனச் சிறப்பித்தவர், அரசமாதேவி அத்தகைய பூ வொன்றும் அணிந்து கொள்ளாது பிரிவுத் துயருற்றிருந்தமை தோன்ற, ஒன்றும் கூறாராயினாரென வுணர்க. மகிழ்ந்தென்பதற்கு, “விரும்பிச் சூடியவா” றென்றும், மின்னுமிழ்ந்தன்ன சுடரிழை யென்றது, மேகம் மின்களை உமிழ்ந்தாற் போன்ற சுடர்களையுடைய இழையென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். தலைமயிரின் கருமை வண்டினம் மிக்குப்படுதலால் தெரியாதாயிற் றென்றற்கு, “தன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின்” என்றும், ஒளி திகழும் நெற்றியிடத்தே சுருண்டு தவழ்தலின், முன்மயிரை “ஒடுங் கீரோதி” யென்றும், அரசன் எய்தித் தன்னைத் தலைக்கூடிய வழி, கூந்தல் பூவணிந்து சிறத்தலும் நுதல் நல்லொளிகொண்டு திகழ்தலும் ஒருதலை யாதல் பற்றி, “தன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீரோதி யொண்ணுத லணிகொள” என்றும் கூறினார். குழையொடு பொரும் நெடுங்கண் ணென்றற்கு, “கொடுங் குழைக்கமர்த்த நோக்கின்” என்றும், பெரியாரது பெருந்தகைமை அவர் பேசும் இன்சொல்லால் விளங்குதலால், “பெருந்தகைக்கு நயவர அமர்ந்த மென்சொல்” என்றும், மங்கல நாணன்றிப் பிறிதணி பேணாமையின் அதனை “மாணிழை” யென்றும் பாராட்டினார். அணிகொள என்பதைக் கதுப்பின் என்பத னோடும் இயைக்க; இன் ; அவ்வழிக்கண் வந்த சாரியை. நயவர அமர்ந்த என இயைத்துக்கொள்க. நாளும் போர் வேட்டெழும் இயல்பினனாதலின், “அரிவை காணிய ஒருநாள் பூண்க மாள நின்புரவி நெடுந்தேர்,” என்றார். எனவே, காமவின்பத்தினும் போரிடை யுண்டாகும் வெற்றி யின்பமே இச்சேரமானுக்குப் பெரிதென்றாராயிற்று. 33-37. முனைகை ......... தோட்கே உரை : முன்னிலை முனைகை விட்டு - நின் முன்னே நின்று பொரும் போரைக் கைவிட்டு; செல்லாது - பிறக்கிட் டோடாது; தூ எதிர்ந்து - நின் வலியோடு பொருது; பெறாஅத் தாவில் மள்ளரொடு - வெற்றி யெய்த மாட்டாமையால் வலியில்லாத வீரருடனே; தொன்மருங்கு அறுத்தல் அஞ்சி - தொன்றுதொட்டு வரும் தம் குடி வேரோடு கெடுதற்கு அஞ்சி; துஞ்சா வேந்தரும் - கண்ணுறங்காத நின் பகைவேந்தர் தாமும் ; அரண் கொண்டு துஞ்சுக - ஒரு நாளைக்கு நீ போரை நிறுத்தி நின் அரிவையைக் காணச் சேறலால்; தம் அரணை யடைந்து சிறிது கண்ணுறங்கு வராக; நின் பெருந்தோட்கு விருந்துமாக - நின்னுடைய பெரிய தோள்கட்கு விருந்தாகவும் அமைக என்றவாறு. முனை, போர். நின் தோள்வலியும் படைவலியும் காட்சி மாத்திரையானே பகைவர்க்கு வெற்றியில்லை யென்பதை யறிவிப்பனவாகவும், அவர்கள் அறியாமல் எதிர்ந்தழிந்தன ரென்பார், “முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது, தூவெதிர்ந்து பெறா அத் தாவில் மள்ளர்” என்றார். பெறாஅ: காரணப்பொருட்டு. பெறுதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. நின் வலி யறிந்து பணிந்து நில்லாமையால் அவர் வேரோடு கெடுதல் ஒருதலை யாதலை யுணர்ந்தமை தோன்ற, “தொன்மருங்கறுத்தல் அஞ்சி” யென்றார். இனிப் பழையவுரை காரர், “முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது துஞ்சா என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு நின் முன்னே வந்து வழிபட்டு நிற்றலைச் செய்யமாட்டாமை யால் துஞ்சாதவென வுரைக்க” என்றும், “தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளரொடு என்றது, முன்பு நின் வலியோடு எதிர்த்துப் பின் எதிர்க்கப் பெறாத வலியில்லாத மள்ளரொடு என்றவா” றென்றும் உரைப்பர். இதுகாறுங் கூறியது கமஞ்சூல் சினஞ் சிறந்து விசும்படையூ நிவந்து காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள, அக்காலத்தே, களிறு இயங்க, மா தங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் வியலறைக் கொட்ப, நாடடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி, நிழல்விடு கட்டியைத் தானைக்குதவி, வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல், செழுங்குடிச் செல்வர் தீம்பிழி மாந்தி, இரவலர்க்கு வேண்டுவன ஈயும் கொல்லிப், பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்தணியும் ஆயத்தார் சூழ வுறையும் அரிவை கதுப்பும் நுதலும் அணிகொள ஒருநாட் காணிய, நின்புரவி நெடுந்தேர் பூண்க; அதனால், தொன்மருங் கறுத் தலஞ்சித் துஞ்சா வேந்தரும் மள்ளருடனே அரண்கொண்டு துஞ்சுக; நின் பெருந்தோட்கு விருந்துமாக என இயைத்து முடித்தவாறு. பழையவுரைகாரர், “அண்ணல், நின் அரிவை காணிய நின்தேர் ஒருநாட் புரவி பூண்பதாக வேண்டும்; அதுதான் நின் அரிவைக்கே யுடலாக வேண்டுவதில்லை; அதனானே துஞ்சா வேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும்; இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச் செய்க என வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது: காம வேட்கையிற் செல்லாத அவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” “இஃது அவனரிவை கற்பு முல்லையைப்பற்றி வந்தமையால் துறை முல்லையாயிற்று.” 2. வினை நவில் யானை 1. பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப் பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைநவில் யானை 5. கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல மறவர் மறல மாப்படை யுறுப்பத் தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக் காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை 10. இன்ன வைகல் பன்னா ளாக பாடிக் காண்கு வந்திசிற் பெரும பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் 15. புகன்றுபுகழ்ந் தசையா நல்லிசை நிலந்தரு திருவி னெடியோய் நின்னே. துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு பெயர் : வினை நவில் யானை 1-10. பகை ........ பன்னாளாக உரை : பகை பெருமையின் - நினது பகைமை பெரிதாதலால்; தெய்வம் செப்ப - பகைவர் தமக்குப் பாதுகாவலாகத் தெய்வத்தை வழிபட; ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - இனிதிருத்தற் கரிதாகியும் வீரர்க்கு அச்சம் பயவாத பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற பாசறையிலே; பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர் - பல்வகைக் கொடிகள் அசைகின்ற வலியினையுமுடைய பகைவரது; செல் சமம் தொலைத்த - மிக்குச் சென்று பொரும் போர்களை யழித்த; வினைநவில் யானை - போர்த்தொழிலிலே நன்கு பயிற்சி பெற்றுள்ள யானைகள்; கடாஅம் வார்ந்து - மதம் பொழிந்து; கடுஞ்சினம் பொத்தி - மிக்க சினம் கொண்டு; வண்டுபடு சென்னிய - மதநீரின் பொருட்டு வண்டு மொய்க்குந் தலையினை யுடையவாய்; பிடி புணர்ந்து இயல - மதவெறி தெளியுமாற்றால் பிடியானைகளைப் புணர்த்தப் புணர்ந்தும் தெளியாது திரிய; மறவர் மறல - வீரர் போர் விரைய நிகழாமையின் போர் வெறிகொண்டு திரிய; மா படை உறுப்ப - குதிரைகள் பொருதல் வேண்டிக் கலனை முதலிய படை யணியப்பெற்று நிற்ப; தேர் கொடி நுடங்க - தேர்கள் பண்ணப் பெற்றுக் கொடி யசைய விளங்க; தோல் புடை யார்ப்ப - கிடுகுப் படைகள் ஒருபுறத்தே ஆரவாரிக்க; காடுகை காய்த்திய - காட்டிலுள்ள விறகுகளை வெட்டிக் குளிர் காய்ந்தழித்த; நீடு நாள் இருக்கை - நெடுநாள்கள் இருத்தலை யுடைய; இன்ன வைகல் பன்னாளாக - இத் தன்மையான நாள்கள் பலவாகக் கழிந்ததனாலே என்றவாறு. தம் வலியும் படை துணை முதலியவற்றின் வலியும் சேரவைத்து நோக்கியபோதும் நின்வலி பெரிதாதல் கண்டு, அஞ்சி, தமக்கு வெற்றி வருதல் வேண்டித் தெவ்வர் தெய்வத்தைப் பரவுகின்றன ரென்பார், “பகை பெருமையின் தெய்வம் செப்ப” என்றார். எனவே, தம்மால் செய்துகொள்ளவேண்டிய வலிமுற்றும் செய்துகொண்டா ராயினும், சேரனது பகைமை பெரிதாதற் கஞ்சித் தம்மின் மேம்பட்ட தெய்வத்தைத் துணை வேண்டு வராயின ரென்பதாம். எப்போதும் படையேந்திய வண்ணமாய்ப் பகைவரை எதிர்நோக்கி யிருத்தலின், பாசறை வீரர்க்கு அரிய இருக்கை யாதலின், “ஆரிறை” யென்றும், அற்றாயினும் அவருள்ளத்தே அச்சம் நிலவாமையின், “அஞ்சா” என்றும், பகைவர்க்கு அச்சத்தைப் பயத்தலின், “வெருவரு கட்டூர்” என்றும் கூறினார். ஆரிறை யஞ்சாக் கட்டூர், வெருவரு கட்டூர் என இயையும். பழையவுரைகாரர், “ஆரிறை யஞ்சாக் கட்டூரென்றது வீரர் அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறை யென்றவா” றென்பர். வேற்று நாட்டிடத்தே புதிதாக அமைக்கப் பெறுதலின், பாசறையைக் “கட்டூர்” என்ப; “வேறு புலத்திறுத்த கட்டூர்” (பதிற். 68) என்று பிறரும் கூறினமை காண்க. தேர், யானை முதலியவை தாங்கிவரும் கொடிகள் பல வாதலின் “பல்கொடி நுடங்கும்” என்றும், இவற்றை யுயர்த்தித் தம் வலியாற் செருக்கிவரும் பகைவரது போர்பலவும் நெறியறிந்து தாக்கி வெற்றி கொண்ட யானை யென்றற்கு, “செறுநர் செல்சமந் தொலைத்த வினை நவில் யானை” யென்றும் கூறினார். இச் சிறப்பால் இப் பாட்டிற்கு வினைநவில் யானை யென்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், “பல கொடி நுடங்கும் யானை” யென இயைத்து, “வினைநவில் யானை யென்றது முன்பே போர் செய்து பழகிய யானை யென்றவா” றென்றும் “இச் சிறப்பானும் முன்னின்ற அடைச் சிறப்பானும் இதற்கு வினைநவில் யானை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். களிறுகள் மதவெறி கொண்டு மிக்க சினத்துடன் பாகர்க்கும் அடங்காது மறலும்வழி, அம் மதம் தணிதற்பொருட்டுப் பிடி யானைகளைக் கொணர்ந்து புணர்விப்பது இயல்பு. அங்ஙனம் களிறுகள் பிடிகளைப் புணர்ந்தும் மதம் தணியாது போர் வேட்டுத் திரிந்தன என்பார், “வினைநவில் யானை பிடி புணர்ந்தியல” என்றார். புணர்ந் தென்புழிச் சிறப்பும்மை தொக்கது. “பிடி புணர்ந்தியல வென்றது, அவ் வினைநவில் யானை கடாம் வார்ந்து கடுஞ் சினம் பொத்தி அச்சினத்திற் கேற்பப் போர் பெறாமையின் பாகன் அதன் சினத்தை அளவு படுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் அப் பிடியொடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரிய வென்றவா” றென்பது பழையவுரை. எதிர்பார்த்தவாறு போர் விரைய நிகழாமையால் வீரர் போர் வெறி கொண்டிருத்தலை, “மறவர் மறல” என்றும், போர் குறித்துக் குதிரைகள் கலனை யணிந்து செருக்கி நிற்குமியல்பை, “மாப்படையுறுப்ப” என்றும், இவ்வாறே தேர்களும் தோற் படைகளும் போர்க்கமைந்து முறையே கொடி நுடங்க ஆரவாரித்து நிற்பதைத், “தேர் கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப” என்றும் கூறினார். பழையவுரைகாரர், “மாப்படை யுறுப்ப வென்றது, இன்னபொழுது போர் நிகழு மென்று அறியாமையின் குதிரைகள் கலனை கட்டி பென்றவா” றென்றும், “தேர்கொடி நுடங்க வென்றது, தேரைப் போர்குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்க வென்றவா” றென்றும், “தோல்புடை யார்ப்ப வென்றது, தோல்களும் முன் சொன்னவற்றின் புடைகளிலே போர் குறித்து நாளிடத்து ஆர்ப்ப வென்றவா” றென்றும் கூறுவர். கூதிர்ப்பாசறையாதலின், வீரர் குளிர்காய்தற் பொருட்டுக் காட்டை வெட்டி விறகை யெரித்தல் பற்றி, “காடு கை காய்த்திய” என்றும், ஒவ்வொரு நாளும் போர் நிகழாது நெடிது கழிதலின், “நீடுநாளிருக்கை” யென்றும், இவ்வாறே பன்னாள்கள் போரின்றியே கழிவது பற்றி, “இன்ன வைகல் பன்னா ளாக” வென்றும் கூறினார். காடுகை காய்த்திய வென்றற்கு, “பாசறை யிருக்கின்ற நாள் குளிர் நாளாகையால் விறகெல்லா முறித்துத் தீக்காய்த்த” வென்றும், இன்ன வைகலென்றற்கு, “இப் பெற்றியை யுடைய பாசறை யிருக்கின்ற நாள்க” ளென்றும் பழையவுரை காரர் கூறுவர். யானை பிடி புணர்த்தியல, மறவர் மறல, மா படையுறுப்ப, தேர் கொடி நுடங்க, தோல் ஆர்ப்ப என்னும் ஐந்தினையும் பன்னாளாக என்பதனோடு முடிக்க. “காட்டையென இரண்டாவது விரித்து அதனைக் காய்த்திய என்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க” என்றும், “நீடுநாளிருக்கையை யுடைய இன்ன வைகலென இரண்டாவது விரிக்க” என்றும் பழையவுரைகாரர் முடிவு கூறுவர். 11-16. பாடி ........... நின்னே உரை : பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வத்து - பாடி வருவோர் நீ வரையாது வழங்குதலின் பலகாலும் கொண்ட வழியும் குறையாத செல்வத்தையும்; செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை - பகைவர் பலகாலும் பொரு தழித்த வழியும் குறையாத தானைவீரரையும்; சான்றோர் - அறிவாலமைந்த புலவர்; வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை - கொடை செங்கோன்மை சால்பு வீரம் என்ற இவற்றால் விரும்பிப் புகழ்தலால் கெடாத நல்ல புகழையும்; நிலம் தரு திருவின் - மாற்றார் நிலத்தைப் போருடற்றிக் கைக்கொள்ளுதலால் வரும் செல்வத்தையுமுடைய; நெடியோய் - நெடிய சேரமானே; பெரும - பெருமானே; நின்னே பாடிக் காண்கு வந்திசின் - நின்னைப் பாடிக் காண்பதற்கு வந்தேன் என்றவாறு. செல்வமும், தானையும் மேன்மேலும் பெருகிய வண்ண மிருப்பது தோன்ற, “பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்து” என்றும், “செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை” யென்றும் கூறினார். செல்வத்துக்குப் பாடுநரும் தானைக்குச் செற்றோரும் குறைவினை யுண்டுபண்ணுப வாதலின், அவர்களை எடுத்தோதினார். செல்வச் சிறப்புக் கூறுமாற்றால் சேரனது கொடைநிலையும் விளங்குதலால் வண்மையை முதற்கட் கூறினார். தானை வீரரின் தகுதியும் வரிசையுமறிந்து சிறப்புச் செய்து அவர் தொகையைப் பெருக்கு தலால், “செம்மை” தெரிவதாயிற்று. சான்றோர் விரும்புதற் கேதுவாதலின், “சால்புமறனும்” இறுதிக்கண் வைத்துச் சிறப்பித்தார். வண்மை முதலிய காரணங்களைக் காணும் சான்றோர் அவற்றால் அவனைப் பெரிதும் விரும்பிப் புகழ்வது கூறுவார், “புகன்று புகழ்ந்து” என்றார். புகழ்ந்தென்னும் வினை யெச்சம் காரணப்பொருட்டு. இனிப் பழையவுரைகாரர், “புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழ வெனத் திரிக்க” என்றும், “புகழ்க் காரணமாகிய வண்மை முதலிய குணங்களைச் சான்றோர் புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல புகழெனக் கொள்க” என்றும் கூறுவர். மாற்றார் நிலத்தை வென்று கைக்கொள்ளுமிடத்து, அவர் திறைப்பொருள் பெருகத் தந்து பணிதலால், அச்செல்வத்தை “நிலந் தரு திரு” என்றார். நிலத்திடத்தே விளைத்துக்கொள்ளும் பெருஞ் செல்வத்தை “நிலந் தருதிரு” என்றா ரென்றுமாம். “செற்றார் கொலக் கொலக் குறையாத் தானை யென்றது, பகைவர் போருட் கொல்லக் கொல்லக் குறைபடாத தானை யென்று அதன் பெருமை கூறியவா” றென்பர் பழையவுரை காரர். பெருமை, மிகுதி. இதுகாறும் கூறியது, நெடியோய், பெரும, கட்டூரிடத்தே யானை பிடி புணர்ந்தியல, மறவர் மறல, மா படை யுறுப்ப, தேர் கொடி நுடங்க. தோல் புடை யார்ப்ப, நீடுநா ளிருக்கையை யுடைய வைகல் பன்னாளாதலால், நின்னைப் பாடிக்காண்கு வந்திசின் என்பதாம். பழையவுரைகாரர், “நெடியோய், பெரும, கட்டூரிடத்தே நீடுநா ளிருக்கை இன்ன வைகல்தான் பன்னா ளான படியானே நின்னைப் பாடிக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 3. பஃறோற் றொழுதி 1. கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும் வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து 5. செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே இன்னா தம்மவது தானே பன்மாண் 1 நாடுகெட வெருக்கி நன்கலந் தரூஉநின் போரருங் கடுஞ்சின மெதிர்ந்து மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. துறை : தும்பை யரவம் வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பஃறோற் றொழுதி. 1-5. கார்மழை ....... காணுமோர்க்கே. உரை : கார் மழை முன்பின் - கரிய முகிற்கூட்டத்தின் முன்னே; கை பரிந்து எழுதரும் வான்பறைக் குருகின் நெடுவரி பொற்ப - ஒழுங்கு குலைந்தெழும் வெள்ளிய சிறகுகளையுடைய கொக்குகளின் நீண்ட வரிசையைப் போல; கொல்களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு - யானைப்படையுடனே செறிந்த பலவாகிய கிடுகுப் படையுடன்; நெடுந்தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து நின் செலவு - நெடிய தேரிற் கட்டியசையும் கொடிகள் விளங்க அழகுற்றுப் பகைமேற் செல்லும் நின் செலவு; காணுமோர்க்குப் பெரிது இனிது - காண்போர்க்கு மிக்க இன்பந் தருவதாம் என்றவாறு. முன்பின், ஈண்டு முன்னே யென்னும் பொருட்டு. கை பரிதல் என்புழி, கை, ஒழுங்கு. கைபரிதலாவது ஒழுங்கு குலை தலென்றே பழையவுரையும் கூறுகிறது. மழைமுகிலின் முன்னே கொக்குகள் ஒழுங்கு குலைந்து எழுந்து நீளப் பறக்கும் நேரிய தோற்றம், போர் யானைகளோடு மிடைந்து வரும் கிடுகுப்படையோடு தேரிற் கட்டிய கொடி யசைந்துவரும் காட்சிக்கு உவமமாயிற்று. ஒழுங்கு குலைந்து செல்லினும், அவற்றின் நேரிய தோற்றம் கருமுகிற் படலத்திட்ட வரிபோலத் தோன்றுவது பற்றி, “நெடுவரி” யென்றார். கருமுகிற் படலத்திற் றோன்றும் மேக வடுக்குப் போலக் களிறு மிடைந்த கிடுகுப் படையின் தொழுதி தோற்றுமாறு உணர்க. இம் மழைத் தோற்றம் நீண்ட தாரை களைப் பொழிந்து நிலத்தே பெரு வெள்ளம் பெருகி யோடுதற்குக் காரணமாதல் போல, நின் படையின் தோற்றம் பகைவர்மேல் அம்புமாரி பொழிந்து குருதி வெள்ளம் பெருகி யோடுதற்குக் காரணமாமெனக் காண்பாரை மகிழ்வித்தலின், “செலவு பெரி தினிது நிற்காணு மோர்க்கே” என்றார். இனிப் பழையவுரைகாரர், “மழைக் கொப்பாகிய யானைகளோடு தோல்களையும், ஒப் பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பான் இதற்குப் பஃறோற் றொழுதி யென்று பெயராயிற்று” என்பர். 6-9. இன்னாது ......... பாசறை யோர்க்கே உரை : பன்மாண் நாடு கெட எருக்கி - பகைத்தோருடைய பலவாகிய மாட்சிமையுற்ற நாடுகள் கெட்டழியுமாறு சிதைத்து; நன்கலம் தரூஉம் - ஆங்கே பெறும் நல்ல கலன்களைக் கொணரும்; நின் போர் அருங் கடுஞ்சினம் எதிர்ந்து - நினது பொருதற்கரிய மிக்க சினத்துக்கு இலக்காகி நேர்பட்டு; மாறுகொள் வேந்தர் பாசறையோர்க்கு - மாறுகொண்ட பகைவேந்தர் தங்கிய பாசறையிலுள்ளார்க்கு; அது இன்னாது - அச் செலவு மிகுதியும் துன்பம் தருவதாகும் என்றவாறு. எருக்குதல், அழித்தல். நாட்டிடத்தும் காட்டிடத்தும் அவலி டத்தும் பலவகை வளங்க ளுண்டாதலின், “பன்மாணாடு” என்றார். இனி, பழையவுரைகாரர், பன்மா என்று பாடங் கொண்டு, “பன்மா வென்றது பலபடி யென்றவா” றென்பர். பலபடியாக அழித்தலாவது, பகைவர் நாட்டை எரியிட்டும் சூறையாடியும் கொலைபுரிந்தும் அழித்தலென்று கொள்க. அவ்வாறு அழிக்குமிடத்து உயரிய கலன்களைக் கவர்ந்து கோடலின், “நன்கலம் தரூஉம்” என்றும், பகைத்தோர் பொருது வேறல் அரிதாதற்கேது, அவனது படைப்பெருமையேயன்றி மிக்க சினமுமா மென்பார், “போரருங் கடுஞ்சினம்” என்றும் கூறினார். நின்பால் அன்புடையார்க்கு நின் படைச்செலவு பெரிதும் இனிதா மெனவே, அன்பின்றிப் பகைமை கொண் டார்க்குப் பெருந்துன்பமாம் என்பார், “இன்னா தம்ம வது தானே” என்றார். தானே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. அம்ம, கேட்பித்தற் பொருட்டு. இதுகாறும் கூறியது, களிறு மிடைந்த பஃறோல் தொகுதி யொடு, நெடுந்தேர் நுடங்கு கொடி விளங்கச் செல்லும் நின் செலவு அன்போடு காணுமோர்க்குப் பெரிது இனிது; நின் கடுஞ்சினம் எதிர்ந்து மாறுகொள் வேந்தரது பாசறையி லுள்ளோர்க்குப் பெரிது இன்னாது என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “நின்னைக் காண்போர்க்கு நின் படை செல்கின்ற செலவு மழைக்குழாத்தின் முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்து செல்லும் கொக்கொழுங்குபோலக் களிறு மிடைந்த பஃறோற்கிடுகின் தொகுதியொடு தேர்களின் நுடங்கு கொடி விளங்காநிற்பப் பொலிவு பெற்றுப் பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரை யொழிய, அதுதான் இன்னாது; யார்க் கெனின், மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கென வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது: அவன் படைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 4. தொழில் நவில் யானை 1. எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக் கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி நுதலணந் தெழுதருந் தொழினவில் யானை 5. பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற் பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா பன்மா பரந்தபுல மொன்றென் றெண்ணாது 10. வலியை யாதனற் கறிந்தன ராயினும் வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன் கான்முளை மூங்கிற் கவர்கிளை போல உய்தல் யாவது நின்னுடற்றி யோரே வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப் 15. போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல நோய்த்தொழின் மலைந்த வேலீண் டழுவத்து முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரோ டுருமெறி வரையிற் களிறு நிலஞ்சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்துநின் 20. குவவுக்குரை யிருக்கை யினிதுகண் டிகுமே காலைமாரி பெய்து தொழி லாற்றி விண்டு முன்னிய புயனெடுங் காலைக் கல்சேர்பு மாமழை தலைஇப் பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே. துறை : வாகை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தொழில் நவில் யானை 1-7. எடுத்தேறு ............ முன்ப உரை : எடுத்தேறு ஏய - படை யெடுத்து முன்னேறிச் செல்லுமாறு வீரரை யேவுகின்ற; கடிப்புடை அதிரும் முரசம் கண்ணதிர்ந் தாங்கு - குறுந்தடியால் புடைக்கப்படுவதால் முழங்கும் தோலாற் போர்த்தலுற்ற முரசமானது கண்ணிடத்தே குமுறி முழங்குவது போல; கார்மழை முழக்கினும் - கார் காலத்து முகிலானது முழங்கினாலும்; வெளில் பிணி நீவி - கட்டுத் தறியை வீழ்த்துக் கட்டறுத்துக்கொண்டு; நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை - நெற்றியை மேலே நிமிர்த் தெழும் போர்த்தொழிலில் நன்கு பயிற்சியுற்ற யானைப்படை; பார்வற் பாசறைத் தரூஉம் - பகைவரைப் பார்த்தற்குரிய அரணமைந்த பாசறையிடத்தை வந்தடையும்; பல் வேற்பூழியர் கோவே - பல வேற்படையினைத் தாங்கும் பூழி நாட்டவர்க்கு அரசே; பொலந்தேர்ப் பொறைய - பொன்னானியன்ற தேரையுடைய சேரமானே; மன்பதை சவட்டும் கூற்ற முன்ப - பகைத்த மக்களைக் கொல்லும் கூற்றுவன் போலும் வலியுடையோனே என்றவாறு. எடுத்தேறேய முரசம், போர்ப்புறு முரசம் என இயையும். வேந்தன் எடுத்துச்செலவினைக் குறித்தவழி, வீரர்க்கு முரசு முழக்கித் தெரிவிக்கப்படுவது பற்றி, “எடுத்தேறேய முரசம்” என்றும், கடிப்புக் கொண்டு அறைவதனால் முழங்குதலின், “கடிப்புடை யதிரும் முரசம்” என்றும், தோலாற் போர்க்கப் பட்ட தென்றற்குப் “போர்ப்புறு முரச” மென்றும் கூறினார். கடிப்பு, கடியென்றும், புடைத்தல் புடையென்றும் நின்றன. புடை : முதனிலைத் தொழிற்பெயர்; புடையாலென மூன்றாவது விரித்துக்கொள்க. பழையவுரைகாரரும், “கடிப் பென்பது கடியெனக் கடைக் குறைந்த” தென்றும், “புடை யானென உருபு விரிக்க” என்றும் கூறுவர். முரசின் போர்ப்புறு வாய் கண்ணிற் கருவிழிபோல் வட்டமாகக் கரிய மை பூசப் பெற்றுக் குமுறி யதிர்வதுபோலும் ஓசை யெழுப்ப வல்லதாகலின், “கண்ணதிர்ந் தாங்கு” என்றார். கண்போறலின், கண்ணெனப் பட்டது; வடிவு பற்றிய உவமம். முரசம் கண்ணதிர்ந்தாங்குக் கார்மழை முழக்கினும் என்க. மழை முழக்கம் கேட்ட துணை யானே முரசு முழக்கமென நினைந்து வெளில் பிணி நீவிப் பாசறை நோக்கிச் செல்லும் யானை, முரசம் போர் குறித்து முழங்குமாயின் எத்துணை மறங்கொண்டு செல்லுமென்பது சொல்லவேண்டா வென்பது கருத்து. இனிப் பழையவுரை காரர், “முழக்கினுமென்ற உம்மை, முரசினது கண்ணின் அதிர்ச்சியிலே யன்றி அதனோடொத்த மழை முழக்கினும் என எச்சவும்மை” யென்பர். துதிக்கையை யுயர்த்து நெற்றியை மேலே நிமிர்த்துப் போர்வெறி கொண்டு மறலும் யானையின் செயலை, “நுதலணந்து எழுதரும்” என்றார். முரசு முழக்கங் கேட்டதும், வெளிலிடத்தே பிணிக்கப் பெற்றிருக்கும் பிணிப்பினைய விழ்த்து விடுத்தற்குட்கழியும் காலத்தி னருமையையும், அதனால் விளையும் கேட்டினையும் நுனித்துணர்ந்து ஒழுங்கு குலையாது போர்க்குரிய செயல் மேற்கொண்டு பாசறை நோக்கித் தானே செல்லும் சால்புடைமையை விதந்து, “தொழில் நவில் யானை” யெனச் சிறப்பித்தமையால், இப்பாட்டு இப்பெயர் பெறுவ தாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “தொழில் நவில் யானை யென்றது போர்க்குரிய யானையென்று எல்லாரானும் சொல்லப் படுகின்ற யானை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானும் முன்னின்ற அடைச் சிறப்பானும் இதற்குத் தொழில் நவில் யானை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். முன்னே “வினை நவில் யானை” (பதிற். 82) என்றற்குக் கூறியவுரை காண்க. பிறர் தம்மைக் காணாது தாம் பிறரைக் காணத்தக்க வகையில் போர்வீரர் இருந்து பகைவரைப் பார்க்கும் இடம் பார்வலெனப் படும். பார்வல் : பார்வை; ஆகுபெயரால் இடம் குறித்து நின்றது. பாசறைக் கட்டங்கிப் பகைவரது அணி நிலையின் மென்மையும் இடமும் காலமும் பிறவும் நோக்கிப் பொருதல் வேண்டு மாகலின், “பார்வற் பாசறை” யெறார். கார்முழக்கினைக் கேட்டுப் போரெனக் கருதிச் செல்லும் யானைக்குப் பாசறை யின்றாயினும், பாசறை பண்டமைத் திருந்த இடத்தை யடை கின்றதென வுணர்க. இனிப் பழையவுரை காரர், இப்பார்வற் பாசறையைப் பகைவர தாக்கி, வெளில் பிணிநீவிச் செல்லும் தொழில் நவில் யானை அப் பாசறைக்குட் சென்று,பகைவரைத் தாக்கி அவருடைய யானைகளைக் கொணரும் என்பார், “பார்வற் பாசறை யானை தரூஉம் என மாறிக் கூட்டி மாற்றாரது காவற் பாசறையிற் புக்கு அவ் யானைகளைக் கொண்டு போது மென்றவா” றென்பர். பூழியர் வேலேந்திச் செய்யும் போரில் சிறந்தவ ரென்றற்கு, “பல்வேற் பூழியர் கோவே” என்றார் போலும். பூழியர், பூழிநாட்டவர். பூழி நாடு, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற் கும் இடைப்பட்ட நாடு. இதனால், இது பாண்டியர்க்கும் சேரர்க்கும் மாறி மாறி நின்றமை தோன்ற, இவ்விரு பெரு வேந்தரும் சான்றோரால் அவ்வக் காலங்களில் “பூழியர்கோ” எனப்படுவதுண்டு. மன்பதை, மக்கட்டொகுதி; ஈண்டுப் பகைவர் மேற்று. கூற்றுவனால் வெல்லப்படாத உயிர் நிலவுலகில் யாதும் இல்லையாதலின், பெருவலிக்குக் கூற்றுவன் எல்லையாயினான்; “மருந்தில் கூற்றத் தருந்தொழில்” “கூற்று வெகுண்டன்ன முன்பு” (புறம். 342) என்று சான்றோர் கூறுப. கூற்றுவன் வெலற்கரியன் என்பதை, “கீழது நீரகம் புகினும் மேலது, விசும்பின் பிடர்த் தலை யேறினும் புடையது, நேமி மால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து, மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே” (ஆசிரிய) என்பதனாலறிக. சவட்டுதல், உருவழித்தல். 8-14 கொடி .......... உரைஇ உரை : கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா- கொடிகள் அசைகின்ற வெல்லுதற்கரிய மதில்களை யெண்ணின் எல்லை காணப்படாத அருமை யுடையவாயின; பல் மா பரந்த - பலவாகிய மாவும் களிறும் பரந்திருக்கின்றன; புலம் ஒன்று என்றும் எண்ணாது - ஆதலால் நின்னொடு கொள்ளுதற்கரிய தொன்று என எண்ணாது பொருதபடியால்; வலியை யாதல் நன்கு அறிந்தனராயினும் - நீ மிக்க வலியுடையையென்பதைத் தெளிய அறிந்துவைத்தும்; வணங்கல் அறியார் - நின்னை வணங்கி வாழ்தலால் வரும் ஆக்கமறியாது மானமொன்றே கொண்டு; உடன் றெழுந் துரைஇ - மாறுபட்டெழுந்து தம் தானை வெள்ளம் பரந்து வர வந்து; நின் உடற்றியோர் - நின்னொடு பொரும் பகைவர்; வார் முகில் முழக்கின் - நீண்ட மழை முகிலின் முழக்கம்போல; மழ களிறு மிகீஇ - இளங் களிறு மதஞ் செருக்கிப் பிளிறிக்கொண்டு வர; தன் கால் கவர் - அதன் காற் கீழ் அகப்பட்ட; முளை மூங்கிற் கிளைபோல - புதிதாக முளைத்த இளைய மூங்கிலின் கிளையாகிய முளை போல; உய்தல் யாவது - உயிருய்தல் ஏது; இல்லை யென்றவாறு. எயில் எண்ணுவரம்பறியா; மா பரந்த; புலம் ஒன்றென் றெண்ணாது பொருது தோற்று வலியை யாதல் நன்கு அறிந்தன ராயினும், வணங்கல் அறியார் மானமொன்றே கொண்டு, உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது என இயையும். கொடியென வாளாது கூறினமையான், செருப் புகன்றெடுத்த கொடியென வறிக. அதனைக் காணுந்தோறும் பகைவர்க்குச் சினத்தீ மிகுமாயினும், அது நின்ற மதிலைக் கோடற்கு எண்ணுங்கால், மதிலின் உயர்வு அகலம் திண்மை அருமை முதலிய நலங்கள் வரம்பின்றி யிருத்தல் தோன்றுதலின், “ஆரெயில் எண்ணு வரம்பறியா” என்றும், காண்பார் கட்புலன் சென்ற அளவும் மாவும் களிறும் பரந்து தோன்றுதலால், “பன்மா பரந்த” என்றும். இவ்வாற்றால் நின்னாடு பகைவர் கொளற் கரிதென்பது நன்கு அறியக் கிடப்பவும் அறியாது பொருது தோல்வி யெய்தின ரென்றற்கு, “புலம் ஒன்றென் றெண்ணா” தென்றும், தோல்விக்கண்ணும் முன்பு தாம் அறியாதிருந்த நின் வலியை நன்கு அறியும் பேறுபெற்றன ரென்றற்கு, “வலியையாதல் நன்கறிந்தன” ரென்றும், அவ்வறி விற்குப் பயன் நின்னை வணங்கி வாழ்தலாகவும், அதை நினையாது மானமொன்றே கருதித் தம் படை முழுதும் திரட்டிக்கொண்டு போந்து பொருத லெண்ணின ரென்றற்கு, “ஆயினும் வணங்கலறியார் உடன்றெழுந் துரைஇ நின் உடற்றியோர்” என்றும், மதஞ் செருக்கிப் பிளிறிவரும் இளங் களிற்றின் காற்கீழ் அகப்பட்ட மூங்கில்முளை மீளவும் தலையெடா வண்ணம் அழிவதன்றி வேறில்லை யாதல்போல, நின்னால் அழிக்கப்படும் பகைவேந்தர் குலத்தோடும் கெடுவது ஒருதலை யென்பார், “மழகளிறு மிகீஇத் தன் கால்முளை மூங்கிற் கவர்கிளை போல உய்தல் யாவது” என்றும் கூறினார். ஏற்புடைய சொற்கள் இசை யெச்சத்தால் வருவிக்கப்பட்டன. மழகளிற்றின் முழக்கிற்கு முகிலின் முழக்கு உவமமாயிற்று; சேரனது எடுத்துச் செலவுக்குக் களிற்றின் செலவு உவமமாயிற்று; ஆகவே அடுத்துவர லுவமையின்மை யறிக. யானையின் காற்கீ ழகப்பட்ட முளை யழியுமாற்றினை, “கழைதின் யானைக் காலகப் பட்ட, வன்றிணி நீண்முளை போலச் சென்றவண், வருந்தப் பொரேஎ னாயின்” (புறம். 79) என்பதனாலு மறிக. பழைய வுரைகாரர், “முளை மூங்கிற் களிறு கால்கவர் கிளை போல நின் உடற்றியோர் உய்தல் யாவது என மாறிக்கூட்டி முளையான மூங்கிலிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கிளையுய் யாதன்றே; அஃது அழிந்தாற்போல நின்னை யுடற்றியோர் உய்தல் கூடாதென வுரைக்க” என்பர். கவர்தல் - அகப்படுத்தல். 15-24. போர்ப்புறு .............. தாங்கே உரை : போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல - தோலாற் போர்க்கப்பட்டுள்ள தண்ணுமையின் ஓசை யெழுந்து போர் செய்தல் வேண்டுமென்று வீரர்க்குத் தெரிவிப்ப; நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து - உயிர்கட்குச் சாதற் றுன்பத்தைச் செய்யும் தொழிலாகிய போர் செய்தற் கமைந்த வேற்படை நெருங்கும் போர்க்களத்தே; முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொடு - போரை விரும்பும் விருப்பத்தால் எதிர்ந்த பகை வீரருடன்; உரும் எறிவரையின் களிறு நிலம் சேர - இடி வீழ்ந்த மலை போலக் களிறுகள் கொலையுண்டு நிலத்தில் வீழ; காஞ்சி சான்ற செரு பல செய்து - நிலையாமை யுணர்வே சிறக்க அமைந்த போர்கள் பல செய்து மேம்பட்டதனால்; மாரி காலை பெய்து தொழிலாற்றி விண்டு முன்னிய புயல் - மழையை உரிய காலத்திற் பெய்து உழவுத்தொழிலை இனிது நிகழப்பண்ணி மலையுச்சியை யடைந்த மழைமுகில்; நெடுங் காலை - நெடுங் காலம் பெய்யாதிருந்து; கல் சேர்பு மாமழை தலைஇ - மலையை யடைந்து மிக்க மழையைப் பெய்ததால்; பல்குரற் புள்ளின் ஒலி எழுந்தாங்கு - பல்வேறு குரலோசையை யுடைய பறவைகளின் ஒலி எழுந்தது போல; குவவுக் குரை நின் இருக்கை - திரண்ட ஆரவாரத்தையுடைய நின் படை யிருக்கையை; இனிது கண்டிகும் - இனிது காணாநின்றேம் என்றவாறு. போர் நேர்ந்த காலத்தே வீரரிடை இயம்பும் இசைக்கருவி அவரைப் போர்க்கு ஏவும் கருத்திற்றாதலின், “எடுத்தேறேய முரசம்” என்றாற்போல, “போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து” “இசைக்க” என்னாது “நுவல” என்றார். உயிர்கட்கு இறுதியை விளைவிக்கும் செயலாதலின், போரை “நோய்த்தொழில்” என் றார். வேற்படை முதலிய படைகள் மிடைந்து கடல்போலத் தோன்றலின், போர்க்களம் “அழுவம்” எனப்பட்டது. அழுவம், ஆழ்ந்த இடம்; ஈண்டுக் கடலின் மேற்று. “போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம். 31) என்றாற்போல இவர், “முனை புகல் புகல்வு” என்றார். மாறாமைக் கேது புகற்சியாதலின், “புகல் வின் மாறா மைந்தர்” என்றார். இவர் பகைப்புறத்து வீரர். வேலிற் பட்டு வீழும் களிற்றுக்கு உருமெறிவரை யுவம மாயிற்று. யாக்கை முதலியவற்றின் நிலையாமையை நன் குணர்ந்த சான்றோர் கூடிச்செய்யும் அறப்போர் என்றற்குக் “காஞ்சி சான்ற செரு” என்றார். பழையவுரைகாரரும், “நுவல வென்றது படையை யுற்றுப் போர் செய்க வென்று சொல்ல வென்றவா” றென்றும், “நோய்த் தொழில் மலைந்த வென்றது, நோய்த்தொழிலாகிய போரை ஏறட்டுக் கொண்ட என்றவா” றென்றும், “வேலீண்டழுவ மென்றது, மாற்றார் படைப்பரப்பினை” யென்றும், “காஞ்சி சான்ற வென்றது, நிலையாமை யமைந்த என்றவா” றென்றும், “செருப்பல செய்து குரைத்தவென முடிக்க” என்றும் கூறுவர். குவவென்றதை அவர் படைக்குழாம் என்பர். பண்டு உரிய காலத்தே பெய்து உழவு முதலிய தொழில்கள் இனிது நடைபெறுவித்த மழை அக்காலம் வருங்காறும் அமைந் திருந்து வந்ததும் மழையைத் தப்பாது பொழிதலின், அதனை யெதிர் நோக்கியிருந்த புள்ளினமனைத்தும் ஆரவாரிப்பது போலும் ஆரவாரத்தை யுடைத்து நின் படையிருப்பு என்ற தனால், பண்டு எதிர்ந்த வேந்தரைப் பொருது பெற்ற வெற்றிச் சிறப்பு, நெடுங்காலம் போரின்மையின் இல்லாதிருந்து இப்போது நேர்ந்ததும் அதனைப் பெற்று ஆரவாரிக்கின்ற தென்றாராயிற்று. பழையவுரைகாரர் “காலைமாரி யென்றது மாரியிற் பெய்யும் பெயலினை” யென்றும், “தொழிலாற்றி யென்றது உழவுத் தொழில் முதலாய தொழில்களைச் செய்வித்” தென்றும், “கல்சேர்பு மாமழை தலைஇ யென்றது, பண்டு ஒரு காலம் பெய்து ஆற்றி வரைக்கட் போயின புயல், நெடுங் காலம் பெய்யாத நிலைமைக்கண்ணே பின்பு பெய்வதாகக் கல்லைச் சேர்ந்து மழை பெய்ய என்றவா” றென்றும், “தலைஇ யென்ப தனைத் தலையவெனத் திரிக்க” என்றும் கூறுவர். இதுகாறுங் கூறியது: “கார்மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதலணந் தெழுதரும் யானை தரூஉம் பல்வேறு பூழியர் கோவே, பொறைய, முன்ப, எயில் எண்ணு வரம்பறியா, மாபரந்த; அதனால் புலம் அரியதொன்றென் றெண்ணாது பொருதழிந்து வலியையாதல் நன்கறிந்தன ராயினும், அறியார் உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது? என்னெனில், தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல, மைந்தரோடு களிறு நிலம் சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்து வென்றி மேம்பட்டதனால், புள்ளின் ஒலி யெழுந்தாங்குக் குவவுக் குரையிருக்கை இனிது கண்டிகும்” என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “பூழியர் கோவே, பொறைய, முன்ப, பகைப்புலத்து ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா; பன்மா பரந்தன; ஆகையால் பகைப்புலம் நமக்கு வெலற்கரிய தொன்றென் றெண்ணாது நீ ஆண்டு வல்லுநையானபடியை முன்பு அறியாது நின்னை உடற்றியோர் இன்று போர் செய்து அதனை அறிந்தாராயினும் அவர் நின்னொடு உடன்று எழுந்து உரைஇ அதனையே பின்னும் அறிவதல்லது நின்னை வணங்கல் அறிகின்றிலர்; இனி அவர் முளை மூங்கிலிற் கால்கவர் கிளைபோல அழிவ தல்லது உய்யவும் கருதுவது யாவது? நெடுங்காலம் பெய்யாத மழை பெய்தவழிப் பல குரலையுடைய புள்ளின் ஒலி யெழுந் தாற்போல நெடுங் காலம் போர் செய்யாது நின்று அவ்வுடற்றி யோர் வேலீண்டழு வத்துச் சான்ற செருப்பல செய்து நின் பல படைக்குழாம் ஆர வாரிக்கின்ற இருப்பினை யாம் இனிது கண்டேம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “உடன்றெழுந்துரைஇ வணங்கலறியார் என்பது, அறிந்தனரா யினும் என்பதன் பின் நிற்க வேண்டுதலின், மாறாயிற்று” என்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.” 5. நாடுகா ணெடுவரை 1. நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண் ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென 5. முன்றிணை முதல்வர் போல நின்று தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச் சூடா நறவி னாண்மகி ழிருக்கை அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய 10. மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வூரினும் பலவே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நடுகா ணெடுவரை 1-4. நன்மரம் ........ தம்மென உரை : நல்மரம் துவன்றிய நாடு பல தரீஇ - நல்ல மரங்கள் செறிந்த நாடுகள் பலவற்றையும் வென்று தந்து; பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண் - பொன்னாலியன்ற அழகிய வேலைப் பாடமைந்து விளங்கும் பேரணிகலன் களையும்; ஒன்னாப் பூட்கை - நம்மொடு பொருந்தாது பகைத்த மேற்கோளையுமுடைய; சென்னியர் பெருமான் - சோழர்களுக்குத் தலைவனான வேந்தனை யும் பற்றி; முத்தை தம்மென - என் முன்னே கொண்டு தருவீராக என்று நீ நின் தானை வீரர்க்குச் சொன்னது கேட்டதும்; இட்ட வெள் வேல் - சோழனுடைய படைவீரர் தோல்விக் குறியாகக் கீழே எறிந்த வேல்கள் என்றவாறு. தத்தமக்குரிய பருவத்தே தப்பாது பழுத்து நல்ல பயன் கொடுக்கும் மரங்களென்றற்கு, “நன்மரம்” என்றார். நன்மரம் துவன்றிய நாடெனவே, எல்லார்க்கும் பயன்படும் வளன்மிக வுடைமை கூறியவாறாயிற்று. சோழ வேந்தன் தன்னொடு பகைத்துக் கொண்டதனால் பொருந்தானாயினும் பொன்னானி யன்ற பேரணிகலன்களை யுடைய னாதலை யறிந்து கூறுவான், “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்” என்றான். என்றது, இவ்வாறு அவன் பொற்பணி பூணுதற்குரியனே யன்றிப் போருடற்றி வெற்றிமாலை பெறுதற்குரிய னல்லனென இகழ்ந்தவாறு. ஒன்னார்க்குரிய பூட்கை, ஒன்னாப்பூட்கை யென வந்தது. ஒன்றா என்பது ஒன்னாவென மருவிற்று என்றுமாம். பழையவுரைகாரர், “ஒன்னாப் பூட்கை யென்றது, பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோள்” என்பர். “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்,” சோழ வேந்தராகிய தமக்கன்றிப் பிறர்க்குரித்தன்று என்னும் பூட்கை யுடைய ரென்றும், அதனால் ஒன்னாப்பூட்கை யென்றது, “பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோ” ளென்றும் பழையவுரைகாரர் கருதுகின்றார்போலும். “அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப், பெருங்கலமுடைய ரேனும் பிறர்க்கவை பேண லாகா” (சூளா. கல். 189) என்று சோணாட்டுத் தோலாமொழித் தேவர் கூறுவது இக் கருத்துக்குச் சான்று பகர்கின்றது. “சென்னியர் பெருமா” னென்றது சோழனை இழித்தற்கண் வந்தது. நன்மரம் துவன்றிய நாடு பல தருவதோடமையாது, அந்நாட்டுச் சென்னியர் பெருமானையும் பற்றிப் பிணித்து என் முன்னே கொணர்ந்து நிறுத்துக என்று சேரன் தன் தானைவீரர்க்குப் பணித்த சொல் கேட்டதும், சோழர் அஞ்சி “இனி இவனொடு பொருது வேறல் இல்லை” யெனத் துணிந்து தாமேந்திய வேற்படையை நிலத்தே யெறிந்து அடிபணிந்தன ரென்றற்கு, “முத்தைத் தம்மென இட்ட வெள்வேல்” என்றார். அவ்வேலின் தொகை, “கபிலன் பெற்ற வூரினும் பல” (அடி. 13) என்பதனால், சென்னியர் பெருமான்பால் இருந்த வீரர் மிகப் பலரென்றும், ஆயினும் அவர் சேரமான் படையொடு பொருது வெல்லும் மதுகை யிலரென்றும் கூறினாராம். முத்தை, முந்தை யென்பதன் விகாரம். பழையவுரைகாரரும், “சென்னியர் பெருமானை யென்பதனுள் இரண்டாவது தொக்க” தென்றும், “முத்தைத் தம்மென - முன்னே தம்மினென” என்றும், “முந்தை முத்தையென வலித்த” தென்றும் கூறுவர். எண்ணுங்கால் தோற்றோர் எறிந்த படையைப் பொருளாக எடுத்துக் கூறு மிம்மரபு, “இன்முகம் கரவா துவந்துநீ யளித்த, அண்ணல் யானை யெண்ணின் கொங்கர்க், குடகட லோட்டிய ஞான்றைத், தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே” (புறம். 130) என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறுதலானும் அறியப்படும். 5-13. முன்றிணை ........ பலவே. உரை : முன் திணை முதல்வர்போல நின்று - நின் குலத்து முன்னோர்களைப் போல நன்னெறிக்கண்ணே நிலைபெற நின்று; தீஞ்சுனை நிலைஇய - இனிய நீர் வற்றாது நிலைபெற்ற; திருமா மருங்கின் - அழகிய பெரிய பக்கத்தாலும்; பல கோடு - பல சிகரங்களாலும் சிறந்த; விரிந்த நாடுகாண் நெடுவரை - அகன்றுள்ள தன் நாடு முற்றும் தன்மேல் ஏறியிருந்து இனிது காணத்தக்க நெடிய மலையிடத்தே; சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை - நறவு என்னும் ஊரின்கண் இருக்கும் அம் முன்றிணை முதல்வர் நாள்காலைத் திருவோலக்கத்தையும்; அவை அரசு பணிய - தனது அரசவைக்கண்ணே ஏனை யரசர் வந்து பணிந்து தொழில் கேட்ப; அறம் புரிந்து வயங்கிய - அறம் செய்து விளங்கிய; மறம்புரி கொள்கை - அறத்திற் கிடையூறு நேர்ந்த வழி அதனைப் போக்குதற்கண் வாடாத மறத்தை விரும்பி மேற்கொள்ளும் கோட்பாட்டையும்; நனவிற் பாடிய - மெய் யாகவே பாடிய; வயங்கு செந்நாவின் - விளங்குகின்ற செம்மை யான மொழியும், உவலை கூராக் கவலையில் நெஞ்சின் - புன்மை மிகுதற் கேதுவாகிய கவலையில்லாத நெஞ்சும்; நல்லிசை - நல்ல புகழும் படைத்த; கபிலன் பெற்ற ஊரினும் - கபிலர் என்னும் புலவர்பெருமான் அவருட் செல்வக் கடுங்கோ வழியாதனால் நன்றா என்னும் குன்றின்மேலிருந்து தரப்பெற்ற ஊர்களைக் காட்டிலும்; பல - (சோழர் இட்ட வேல்கள்) பலவாகும் என்றவாறு. நாண்மகி ழிருக்கையும் மறம்புரி கொள்கையும் கபிலனால் பாடப் பட்டனவென்றும். அக்கபிலன் செந்நாவும் கவலையி னெஞ்சும் நல்லிசையு முடையனென்றும் பகுத்தறிந்து கொள்க. முதல்வர் போல நின்று நிலைஇய நெடுவரை யெனவும், சுனை நிலைஇய நெடுவரை யெனவும் இயையும். ஈண்டு முதல்வர் என்றது அவர் புகழுடம்பின் மேற்று. மாரிக்காலத்து உண்ட நீரைக் கோடைக் காலத்தே உமிழ்வதனால் நீர் இடை யறாது நிலைபெற்றொழுகுதலால், மலைப்பக்கமெங்கும் வளஞ் சிறந்து கண்டாரால் விரும்பப்படும் தன்மை மிகப்பெறு தலால், “திருமா மருங்கின்” என்றார். “மருங்கினாலும் கோடு களால் நெடிதாகிய மலை” யென்க. நாடுமிக விரிந்ததாயினும், தன் சிகரத் தின்மேலேறி நோக்குவார்க்கு நெடுமையால் சிறிதும் ஒழிவின்றிக் காணத் தக்கதாக இருத்தலால், “நாடு காண் நெடுவரை” யென்றார். சேரமானுடைய முன்றிணை முதல்வர்போல் நின்று நிலைஇய சிறப்பினாலும், நாட்டின் நலமுற்றும் காண விழைவார்க்குத் தன் நெடுமையால் இனிது காண வுதவியும், நாட்டின் வளமறிய விரும்பினாரைத் தன் திருமாமருங்கினாலும் பலவாகிய கோடுகளாலும் சேய்மைக் கண்ணிருந்தே காண் பிக்கும் சிறப்பினாலும், “நாடுகா ணெடுவரை” என்ற இத்தொடர் இப்பாட்டிற் சிறப்புற்று நிற்றலின் இதனானே இதுவும் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “நாடுகா ணெடுவரை யென்றது தன் மேலேறி நாட்டைக் கண்டு இன்புறுதற் கேதுவாகிய ஓக்கமுடைய மலை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு நாடுகா ணெடு வரை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். நறவம் பூவின் வேறாக நறவு என்று வெளிப்படுத்தற்கு, “சூடா நறவின்” என்றும், ஞாயிறெழுங் காலைநேரத்தை நாள் கால மென்ப வாகலின், அக்காலத் தரசிருக்கையை, “நாண்மகி ழிருக்கை” யென்றும் கூறினார். அறம்புரிதலும் மறம்புரிதலும் வேந்தற்கு அகத்தொழிலும் புறத்தொழிலுமாதலின், “அறம் புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை” யென்றார். அறம்புரியு மிடத்தும் அதற்கெய்தும் களைகளை நீக்குதற்கு மறம் வேண்டு மென்க. இனிப் பழையவுரைகாரர், “அறம் புரிந்து வயங்கிய கொள்கை யென்னாது மறம்புரி யென்றது, அதற்கு இடையீடு பட வருவழி அதனைக் காத்தற்கு அல்வறக் கொள்கை மறத்தொடு பொருந்து மென்றற்கு” என்பர். நாவிற்கு விளக்கந்தரும் செம்மை “யாதொன்றுந் தீமையி லாத சொலல்” ஆதலின் அதனைச் சொல்லும் கபிலன் நாவினைச் “செந்நா” என்றும், வறுமை கூர்ந்தவழியும் மனத்தின் செம்மை மாறாது, புல்லிய நினைவுகட்கு இடந்தந்து வீணே கவலை யெய்தாது விளங்குவதுபற்றி “உவலை கூராக் கவலையில் நெஞ்சின்” என்றும் கூறினார். உவலை, புன்மை; இழிவு. கபிலன் பாட்டிற் காணப்படும் காட்சியனைத்தும் நனவினும் காணப் படுதலின், “நனவிற் பாடிய” என்றார். பிற்காலச் செய்யுள் வழக்கிற் காணப்படும் இயற்கையொடுபடாத புனைந்துரையும் புனைவுக்காட்சியும் அவன் பாடுவதிலன் என்பதாம். கபிலர் செல்வக் கடுங்கோவாழியாதனை இந்நூலிற் காணப்படும் ஏழாம்பத்தினைப் பாடிப் பெற்ற பரிசில், “சிறு புறமென நூறாயிரங் காணங்கொடுத்து, நன்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்று அவ் வேழாம் பத்தின் பதிகம் கூறுகின்றது. இதுகாறும் கூறியவாற்றால், சேரமானே, நீ நின் தானை வீரரை நோக்கி, “நாடுபல தரீஇ, பெரும்பூணும் பூட்கையு முடைய சென்னியர் பெருமானை முத்தைத் தம்” என ஏவ, சென்னியர் வீரர், அஞ்சி நிலத்தே எறிந்த வேல்கள், நாடுகாண் நெடுவரைக் கண் நாண் மகிழ் இருக்கையையும் மறம்புரி கொள்கையையும் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வூர்களினும் பலவாம் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “இளஞ்சேர லிரும் பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச் சென்னியர் பெருமானை எம் முன்னே பிடித்துக் கொண்டு வந்து தம்மினெனத் தம் படைத் தலைவரை யேவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல், செல்வக் கடுங்கோ வாழியாத னென்பவன் நாடுகா ணெடுவரையின் நாண்மகி ழிருக்கைக் கண்ணே தன் முன்றிணை முதல்வர்போல அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன்பெற்ற வூரினும் பல என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “செம்பியர் பெருமானைத் தம்மென மாறவேண்டுதலின் மாறாயிற்” றென்றும், “இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப் பாரு முள” ரென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறிய வாறாயிற்று.” 6. வெந்திறற் றடக்கை 1. உறலுறு குருதிச் செருக்களம் புலவக் கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய னென்றலின் வெருவா1 வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான் 5. நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத் தில்லோர் புன்கண் டீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சில் பாடுநர் புரவல னாடுநடை யண்ணல் கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் 10. புனல்பாய் மகளி ராட வொழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற தானே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெந்திறற் றடக்கை 1-4. உறலுறு ............ மன்யான் உரை : உறல் உறு குருதிச் செருக்களம் புலவ - நிலத்திலே ஊறிச் சுவறுமாறு மிக்க குருதியால் போர் நிகழ்ந்த நிலம் புலால் நாற்றம் நாற; அமர் கொன்று கடந்த - எதிர்த்த பகைவரைப் போரிலே வஞ்சியாது பொருது கொன்று வென்ற; வெந்திறல் தடக்கை - வெவ்விய திறல் பொருந்திய பெரிய கையையும், வென்வேல் - வெற்றிபொருந்திய வேலையுமுடைய; பொறையன் என்றலின் - பொறையனென்று எல்லாருஞ் சொல்லுதலால்; வெருவா - கேட்குந்தோறும் உளம் அஞ்சி; யான் வெப்புடை ஆடூஉ செத்தனென்மன் - யான் பொறைய னென்பான் வெம்மை யுடைய ஆண்மகனென்றே முன்பெல்லாம் கருதினேன்; அஃது இப்பொழுது கழிந்தது என்றவாறு. நிலத்திலே ஊறிச் சுவறுமாறு மிக்கு ஒழுகுதலின், “உறலுறு குருதி” யென்றும், அதனால் செருநிலம் புலால் நாறுதலின், “செருக்களம் புலவ” என்றும், இந் நிலைமைக்கு ஏதுவாக அவன் செய்த போரை, “கொன்றமர்க் கடந்த” என்றும் குறிப்பித்தார். குருதியூறி நிலம் புலால் நாறுமாறு செய்யும் போரில் எண்ணிறந்த உயிர்கள் கொலையுண்ணப் பொருவது மிக்க திறலுடையார்க் கல்லது கூடாமையின், “வெந்திறல் தடக்கை வென்வேற் பொறையன்” என்றார். இச் சிறப்பினால் இப்பாட்டும் வெந்திறற் றடக்கை யென்று பெயர் பெறுவ தாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “உறலுறு குருதி யென்றது உறுதல் மிக்க குருதி யென்றவா” றென்றும், “உறலுறு என்பது முதலாக முன்னின்ற அடைச் சிறப்பான் இதற்கு வெந்திறற் றடக்கை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இளஞ்சேர லிரும்பொறையைக் கூறுவோ ரெல்லாம் அவன் பெயரைப் பட்டாங்குக் கூறாது வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய னென்றே கூறுதலின், அவன்பால் தண்ணிய மென்மை கிடையாது போலும் என்று அஞ்சினேன் என்பார், “வெருவா, வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்” என்றார். எனவெ னெச்சம் வருவிக்கப்பட்டது. பண்டெல்லாம் இவ்வாறு கருதினேன், இதுபோது அஃதொழிந்த தென்பது பட நிற்றலின், மன் ஒழியிசை. எல்லாரும் சொல்லுதலால், இன்னாரென்று கூறாது, “என்றலின்” எனப் பொதுப்படக் கூறினாரென வுணர்க. 5-13. நல்லிசை ........... தானே உரை : நனந்தலை யுலகத்து நல்லிசை நிலைஇய - அகன்ற இடத்தை யுடைய உலகத்திலே நல்ல புகழை நிலைநிறுத்தும் பொருட்டு; இல்லோர் புன்கண் தீர - வறியவருடைய துன்பம் நீங்குமாறு; நல்கும் - வேண்டுவனவற்றை நிரம்ப வழங்கும்; நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் - அறத்தையே யாராய்தற்கமைந்த அன்புடைய நெஞ்சினையும்; ஆடு நடை அண்ணல் - அசைந்த நடையினையுமுடைய அண்ணலாகிய; பாடுநர் புரவலன் - புகழ்பாடும் புலவர் பாணர் முதலாயினாரை ஆதரிப்பவன்; கழை நிலைபெறாஅக் குட்டத்தாயினும் - ஓடக்கோல் நிற்க மாட்டாத ஆழமுடைத்தாயினும்; புனல்பாய் மகளிர் ஆட - ஆண்டுள்ள நீரில் விளையாட்டயரும் மகளிர் பாய்ந்தாடுதலால்; ஒழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் - அவர் காதினின்றும் வீழ்ந்த பொன்னாற் செய்த அழகிய குழை யானது மேலே நன்றாகத் தெரியும்; சாந்துவரு வானி நீரினும் - சந்தன மரங்கள் மிதந்துவரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும்; மன்ற தீந்தண் சாயலன் - தெளிவாக இனிய தண்ணிய மென்மையை யுடையனாவான் என்றவாறு. ஒருவன் புகழ் பெறுதற்குரிய காரணங்களுள் வறுமையான் இரப்பார்க்கு வழங்கும் கொடை சிறந்ததாகலின், “நல்லிசை நிலைஇய இல்லோர் புன்கண் தீர நல்கும்” என்றார். நிலைஇய: செய்யிய வென்னும் வினையெச்சம். “உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்” (குறள். 232) என்று சான்றோர் கூறுவது காண்க. “நனந்தலை யுலகத்” தென்றது இடைநிலை. வறுமையால் வாடுவோர்க் குளதாகும் துன்பத்தை யோர்ந்து அதனை நீக்குதற்குரிய கடன்மை தன்பால் உண்மையும் தெளிந்து புன்கண் தீரும் அளவும் பொருட்கொடை வழங்குதற்கு நெஞ்சின் கண் ஆராய்ச்சியும் அதற்கேதுவாக அன்பும் வேண்டுதலின், “நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்” என்றார். புலவர் பாடும் புகழுடையோர் வானோருலகம் இனிது எய்துவரென்பது பற்றிப் பாடுநரைப் புரக்கின்றானென்பார், “பாடுநர் புரவலன்” என்றும், வெற்றியும் புகழும் வலியுமுடை யார்க்குப் பெருமித நடையுளதாகலின், “ஆடுநடை யண்ணல்” என்றும் கூறினார். “கழை நிலைபெறாஅக் குட்ட” மெனவே, மிக்க ஆழ முடைமை பெற்றாம். ஆழமுடைய குட்டத்து நீர்நிலை மணிபோற் கறுத்துத் தோன்றுமாதலின், அதனடியில் வீழ்ந்த பொருள் தோன்றுதலரிதன்றோ? இவ்வானி யாற்றுநீர் அத்துணை ஆழமுடைத்தாயினும், பளிங்குபோல் தன்னகத்துப் பட்ட பொருளை இனிது புலப்படுத்துமென்பார், “பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்” என்றார். மகளிர் புனலிற் பாய்ந்தாடுமிடத்து அவர் காதிற் செறிக்கப்பட்டிருக்கும் குழை வீழ்தல் இயல்பு; “வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப், புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை” (பெரும்பாண். 311-2) என்று பிறரும் கூறுதல் காண்க. வானியாறு நீலகிரியில் தோன்றிச் சந்தனமரம் செறிந்த காட்டு வழியாக வருதலின், “சாந்துவரு வானி” யென்றார். அதன் நீர் மிக்க தட்பமுடைய தென்பது அது காவிரியொடு கலக்கு மிடத்தே இக் காலத்தும் இனிது காணலாம். சாயற்கு நீரை யுவமம் கூறுவது, “நெடுவரைக் கோடுதோ றிழிதரும், நீரினும் இனிய சாயற், பாரிவேள்” (புறம். 105) என வரும் கபிலர் பாட்டாலும் அறியலாம். இனிப் பழையவுரைகாரர், “வருவானி யென்றது வினைத் தொகை” யென்றும், “வானி யென்பது ஓர் யாறு” என்றும் கூறுவர். இதுகாறுங் கூறியவாற்றால், “இளஞ்சேர லிரும்பொறையை யெல்லாரும் வெந்திறற் றடக்கை வென்வேற் பொறையன் என்ற லின், யான் வெருவி, வெப்புடை யாடூஉ என்று முன்பெல்லாம் நினைந்து அஞ்சினேன்; அஃது இப்போ தொழிந்தது; அவன் நல்லிசை நிலைஇய, இல்லோர் புன்கண் தீர நல்கும் புரவலன்; அண்ணல்; வானி நீரினும் தீந்தண் சாயலன்” என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “இளஞ்சேர லிரும்பொறையை எல்லாரும் வெருவரச் செருக்களம் புலவக் கொன்றமர்க் கடந்த தடக்கைப் பொறைய னென்று சொல்லுகையாலே, யான் அவனை வெப்ப முடையானொரு மகனென்று முன்பு கருதினேன்; அஃது இப்பொழுது கழிந்தது; அப் பொறையனாகிய பாடுநர் புரவலன் ஆடுநடை யண்ணல்; யான் தன்னொடு கலந்திருந்த வழித் தன்னாட்டு வானியாற்று நீரினும் சாயலனாயிருந் தான்றான் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் வன்மை மென்மைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 7. வெண்டலைச் செம்புனல் 1. சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூழியொடு பொங்குநுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யு நீர்வழிக் கரும்பினும் 5. பல்வேற் பொறையன் வல்லனா லளியே. துறை : விறலியாற்றுப் படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெண்டலைச் செம்புனல் 1-5. சென்மோ ......... அளியே உரை : சந்தம் பூழிலொடு - சந்தனக் கட்டைகளோடும் அகிற் கட்டைகளோடும்; பொங்கு நுரை சுமந்து - மிக்குவரும் நுரைகளைச் சுமந்துகொண்டு; தெண்கடல் முன்னிய - தெளிந்த கடலை நோக்கிச் செல்லும்; வெண்டலைச் செம்புனல் - நுரையால் வெளுத்த தலையுடன் கூடிய சிவந்த புதுப்புனல் பெருகிய யாற்றில்; நீர்வழி ஒய்யும் கரும்பினும் - நீரைக் கடத்தற்குப் புணையாய் உதவும் வேழக்கரும்பைக் காட்டிலும்; பல்வேற் பொறையன் அளிவல்லன் - பல வேற்படை யினையுடைய இளஞ்சேர லிரும்பொறையாவான் நின்னை அளித்தல் வல்லனாதலால்; பாடினி சென்மோ - பாடினியே, நீ விரைந்து அவன்பாற் செல்வாயாக; நன்கலம் பெறுகுவை - சென்றால், நீ நல்ல அணிகலன்களைப் பெறுவாய் என்றவாறு. விறலியைப் பொறையன்பால் ஆற்றுப்படுக்கின்றமையின், “சென்மோ பாடினி” யென்றும், செல்லின் அவன்பால் அவள் பெறுவது ஈதென்பார், “நன்கலம் பெறுகுவை” யென்றும், பெறுமாறு வழங்கும் பொறையனது அருண்மிக வுடைமை யினை, “ஒய்யும் நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லனால் அளியே” என்றும் கூறினார். மோ : முன்னிலை யசை. பாடினி : அண்மைவிளி. ஆல் : அசை. சந்தனத்தையும் அகிலையும் சுமந்து வருதல் காட்டாற்றுக்கு இயல்பாதலின், “சந்தம் பூழிலொடு” என்றார்; “சந்தமா ரகிலொடு சாதி தேக்கம் மரம்” (ஞானசம். காளத். 1) என்பது காண்க. சீரிய விரைப்பொருளாம் இனம்பற்றி, இரண்டையும் சேரக் கூறுவார், கேட்பவள் மகளாதலின் அவள் விரும்பிக் கேட்க அவட்குப் பெரிதும் பயன்படும் இவற்றை விதந் தோதினாரென வறிக. சந்தனமும் அகிலுமாகிய கட்டைகளை யலைத்துச் சுமந்து வருங்கால் அலைகளின் அலைப்பால் நுரை மிகுதலின், “பொங்கு நுரை சுமந்து” என்றும், அதனால் வெளுத்த தலையுடன் கூடிவரும் புனல் புதுவெள்ளமென்பது தோன்ற, “வெண்டலைச் செம்புனல்” என்றும், யாறெல்லாம் கடல் நோக்கியே செல்லுவன வாதலால், “தெண்கடல் முன்னிய செம்புனல்” என்றும் கூறினார். புதுப் பெருக்காதலின் செந்நிறம் பெற்றுப் பொங்கு நுரையால் தலைவெளுத்துக் கலக்கமுற்ற செம்புனல், தெளிவெய்தல் வேண்டித் தெண் கடல் முன்னிச் செல்லுமென்பதனால், வறுமையால் உளம் கலங்கி நன்கல மின்மையால் பொலிவிழந்து செல்லும் நீ, அவனது அளித்தல் வன்மையால் நலம் பெறுவை என்னும் குறிப்புடன் நிற்கும் சிறப்பினால், இப் பாட்டு, “வெண்டலைச் செம்புனல்” என்று பெயர் பெறுவதாயிற்று. இனி, பழையவுரைகாரர் “வெண்டலைச் செம்புனலென முரண் படக் கூறியவாற்றாலும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு வெண்டலைச் செம்புனலெனப் பெயராயிற்” றென்பர். “செம்புனலென்றது, செம்புனலையுடைய யாற்றினை” யென்பது பழைய வுரை. முன்னிய வென்ற பெயரெச்சம் புனலொடு முடிந்தது. வேழப்புணை யாற்றுநீரைக் கடத்தற்குத் துணையாவ தல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை; பொறையன் நினது இவ்வறுமைத் துன்பத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே யன்றி, அத் துன்பமின்றி இனிதிருக்குங் காலத்தும் வழங்கியருள்வ னென்பார், “கரும்பினும் அளித்தல் வல்லன்” என்றார். சீரிய துணையன்மைக்கு வேழப் புணையின் தொடர்பு உவமமாகச் சான்றோரால் கூறப்படுவது பற்றி, உறழ்ந்து கூறினா ரென்க. “நட்பே, கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப், புனலாடு கேண்மை யனைத்தே” (அகம். 186) என்று ஆசிரியர் பரணர் கூறுதல் காண்க. “ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்” என்பதை, நீர்வழி ஒய்யும் கரும்பினும்” என மாறி இயைக்க. பழைய வுரைகாரர், “நீர்வழி ஒய்யும் கரும்பெனக் கூட்டி நீரிடத்துச் செலுத்தும் கரும்பென்க” என்றும், “கரும்பென்றது கருப்பந் தெப்பத்தினை” யென்றும் கூறுவர். இதுகாறுங் கூறியவாற்றால், பாடினி, பல்வேற் பொறையன் அளித்தல் வல்லனாதலின், நீ அவன்பாற் சென்மோ, நன்கலம் பெறுகுவை என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “பல்வேற் பொறையன் வெண்டலைச் செம்புனலை யுடைய யாற்றிற் செலுத்தும் கருப்பம் புணையிலும் அளித்தல் வல்லன்; ஆதலால் அவன்பாலே பாடினி, செல்; செல்லின் நன்கலம் பெறுகுவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது, அவன் அருட் சிறப்புக் கூறியவா றாயிற்று” என்றும் கூறுவர். 8. கல்கால் கவணை 1. வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத் தம்பெயர் போகிய வொன்னார் தேயத் 5. துளங்கிருங் குட்டந் துளங்க வேலிட் டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று நாம மன்னர் துணிய நூறிக் கால்வல் புரவி யண்ட ரோட்டிச் 10. சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக் குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோ டுருகெழு மரபி னயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக 15. வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில் விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின் உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை ஆரெயி லலைத்த கல்கால் கவணை நாரரி நறவிற் கொங்கர் கோவே 20. உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந நீநீடு வாழிய பெரும நின்வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய 25. புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு வருநர் வரையாச் செழும்பஃ றாரம் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப் பாவை யன்ன மகளிர் நாப்பண் 30. புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து திருவிற் குலைஇத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை 35. அருவி யருவரை யன்ன மார்பிற் சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள் ஈங்குக் காண்கு வந்தனென் யானே 40. உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண லடைகரை யடைதரும் தண்கடற் படப்பை நாடுகிழ வோயே. துறை : செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : கல் கால் கவணை 1-15 வையகம் .............. குரிசில் உரை : கடவுட் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - விந்தை யென்னும் பெயரையுடைய கொற்றவையின் பெயராலாகிய விந்தாடவியோடு அப்பெயரையே யுடையதாகிய விந்த மலையினும் புகழ் மிகுந்து; தெண்கடல் வளைஇய மலர் தலை யுலகத்து - தெளிந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற இடத்தை யுடைய நிலவுலகத்தில்; வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது - நாடு வளம்சிறத்தற்கேதுவாகிய அரசர்க்குரிய தொழில்முறை வழுவாதொழுகி; தம்பெயர் போகிய ஒன்னார் தேய - தங்கள் சீர்த்தியை நாற்றிசையும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் குன்ற; துளங்கு இருங்குட்டம் தொலைய - அலையெழுந்தசையும் கரிய கடலிடத்தே அவர்கள் தோற் றழியுமாறு; வேலிட்டு - வேற்படையைச் செலுத்தி வென்று; அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்தும் - அவர்கள் தமக்குக் காவல்மரமாகப் பேணிக்காத்த தெய்வத்தன்மை பொருந்திய, கடம்புமரத்தை வேரோடு தகர்த்தழித்தும்; பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று - காமூரென்னும் ஊரிடத்தே யிருந்து கொண்டு சேரருடன் போருடற்றக் கூடிய மாறுபாட்டினைப் பெற்ற கழுவுள் என்பானைத் தோல்வி யெய்துவித்து; நாம மன்னர் துணிய நூறி - அவற்குத் துணை யாய்ப் போந்த அச்சம் பொருந்திய மன்னர் துண்டுதுண்டாய் வெட்டுண்டு வீழக் கொன்று; கால் வல் புரவி அண்டர் ஓட்டி - காலால் வலியவாகிய குதிரைகளையுடைய இடையர்களைத் துரத்தியும்; சுடர் வீ வாகை நன்னற் றேய்த்து - ஒளிர்கின்ற பூக்களையுடைய வாகைமரத்தைக் காவல்மரமாகக் கொண் டோம்பிய நன்னன் என்பானை அவ்வாகை மரத்தோடும் அழித்தும்; குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு - பகைவரது குருதி தெளித்துப் பிசைந்த திரண்ட சோற்றுக் குவியலாகிய குன்றைக்கொண்டு; உருகெழு மரபின் அயிரை பரைஇ - உட்குதலைப் பயக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் பரவி; வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய - முடியரசராகிய சோழ பாண்டியரும் குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும்; கொற்ற மெய்திய பெரியோர் மருக - வெற்றியெய்திய பெருமக்களின் வழி வந்தோனே; வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் - அகன்ற பிடரியினையுடைய சிங்கத்தினது வலிபொருந்திய தலைவனே என்றவாறு. வடநாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியில் வைத்துச் சான்றோரால் புகழப்படும் பெருஞ் சீர்த்தியுடையதாகலின், சேரர் புகழ்க்கு உவமையாக விந்தமலையையும் அதனைச் சூழவுள்ள கானத்தையும் எடுத்தோதினார். கல்லுயர்ந்து என்புழி உறழ்ச்சிப் பொருட்டாய ஐந்தாவது தொக்கது. பெருங்காற்று மோதியும் பேரியாறுகள் பாய்ந்தும் கலங்காத கடல் என்றற்குத் “தெண்கடல்” என்றார். கலக்கமின்றித் தெளிந்த கடலாற் சூழப்பட்ட உலகத்தைத் தொழின்முறை யொழியாது ஆளு முகத்தால் தம் பெயர் போகியோராயினும், சேரரோடு ஒன்றாமை யின் ஒன்றாராய்த் தேய்ந்தன ரென்பது கருத்தாகக் கொள்க. அரசர் தமக்குரிய ஆட்சிமுறையில் செய்தற்குரிய முறையை யொழியாது செய்யின், ஆட்சியுட்பட்ட வுலகம் எல்லா வளங்களும் நிறைந்து மேன்மையுறும் என்றற்கு, “வையகம் மலர்ந்த தொழின் முறை” யென்றார். மலர்ந்த என்றது, நோய் தீர்ந்த மருந் தொன்றாற்போலக் காரணப் பொருட்டு. விந்தமலையைச் சார்ந்துள்ள நாடு கடம்பருடைய நாடாதலின், அந்த நாட்டை விதந்தோதினார். விந்தையென்னும் கொற்றவையின் பெயர் கொண்டு நிலவுதலின், “கடவுட் பெயரிய கானமொடுகல்” என்றார். இதனால் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடன் கடலிடத்தே போர் தொடுத்த கடம்பருடைய நாடும் அவருடைய ஆட்சியும் புகழும் கூறியவாறு. இப் பெற்றியராயினும், கடலிடத்தே செல்லுங் கலங்களைத் தாக்கிக் குறும்பு செய்தொழுகினமையின், அவரை அக்கடலிடத்தே சென்று எதிர்த்துத் தம் வேற்படையை யேவி வென்றாராதலின், “துளங் கிருங் குட்டம் தொலைய வேலிட்டு” என்றும், பின்பு அவர் நாட்டுட் சென்று அவருடைய கடம்பு மரத்தைத் தடிந்தா ரென் றற்கு, “கடம்பின் முழுமுதல் தடிந்து” என்றும், வெற்றித் தெய்வ முறைவதாகக் கருதி யோம்பினமை தோன்ற “அணங்குடைக் கடம்பு என்றும் கூறினார். “இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேரலாதன்” (பதிற். 20) என்று பிறரும் கூறி யிருத்தல் காண்க. “துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட்” டென்றது, கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் செய்தியையும் நினைப்பிக்கின்றது. “கோடுநரல் பௌவங் கலங்க வேலிட், டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய, வெல்புகழ்க் குட்டுவன்” (பதிற். 46) என வருதல் காண்க. தொடக்கத்தே சேரர்க்குப் பணிந்தொழுகிய கழுவுள் என்பான் பின்னர், வலிய குதிரைகளையுடைய அண்டர் களையும் வேறு சிற்றரசர்களையும் துணையாகக் கொண்டு பெருஞ்சேர லிரும்பொறையை யெதிர்த்துப் பொரலுற்றான் என்பதை, “பொருமுர ணெய்திய கழுவுள்” என்றும், அப்பொறையன் முதலில் கழுவுளை வென்று, அதுகண்டு வீற்று வீற்றஞ்சி யோடிய மன்னரைத் துணித்தும், அண்டரை வெருட்டியும் மேம்பட்டா னென்றற்கு, “கழுவுள் புறம் பெற்று” என்றும், “மன்னர் துணிய நூறி” யென்றும், “அண்டரோட்டி” யென்றும் கூறினார். கழுவுள் அண்டர்கட்குத் தலைவனென்பதும், அவன் தருக்கினை யழித்ததும், “ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க” (பதிற். 71) என்று அரிசில்கிழார் கூறி யிருப்பதனால் அறியப்படும். நன்னனென்பான் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் வாழ்ந்த காலத்தில் தன் பெருவலியால் தருக்கி அவனை யெதிர்த்தானாக, சேரமான் அவனுடைய காவல் மரமாகிய வாகையைத் தடிந்து அவனையும் வென்ற செய்தியை, “சுடர்வீ வாகை நன்னற் றேய்த்து” என்றார். அந்நார்முடிச்சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடி முதல் தடிந்த, தார் மிகு மைந்தி னார்முடிச்சேரல்” (பதிற். 40) என்று கூறுதல் காண்க. அயிரை யென்றது, அயிரை மலையிலுள்ள கொற்றவையை. இக் கொற்றவைக்குச் சேரர் வீரரது விழுப்புண்ணிற் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து வழிபடுவது மரபாதலின், “குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோ, டுருகெழு மரபி னயிரை பரைஇ” என்றார். பிறரும் அயிரைக் கடவுளை, “நிறம்படு குருதி புறம்படி னல்லது. மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற், கடவுளயிரை” (பதிற். 79) என்று கூறுதல் காண்க. பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரைக் கடவுளைப் பரவிய செய்தியை “இருகடல் நீரு மொருபக லாடி, அயிரை பரைஇ” யென்று மூன்றாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பிறாண்டும் இப்பாட்டினாசிரியர், “உருகெழு மரபின் அயிரை பரவியும்” (பதிற். 90) என்று இச்செய்தியைக் குறிக்கின்றார். இளஞ்சேர லிரும்பொறையின் முன்னோர் செய்த செய லெல்லாம் குறித்துரைத்துப் பாராட்டுகின்றா ராதலின், “பெரியோர்” என அவர்தம் பெருமையைப் புலப்படுத்தார். இக்கூறிய செயல்களால் ஏனை வேந்தரும் வேளிரும் தலை தாழ்த்துப் பணிபுரிவது தோன்ற, “வேந்தரும் வேளிரும் முன் வந்து பணியக், கொற்ற மெய்திய பெரியோர் மருக” என்றார். இதுகாறும் கூறியதனால், உலகத்து ஒன்னார் தேய, வேலிட்டும், முழுமுதல் தடிந்தும், புறம் பெற்றும், தேய்த்தும், அயிரை பரைஇயும் கொற்ற மெய்திய பெரியோர் மருக என்று கூறி, இளஞ்சேர லிரும்பொறையின் தனியாற்றலை விளக்கு தற்கு “வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில்” என்றார். இனிப் பழைய வுரைகாரர், “வையக மலர்ந்த தொழி லென்றது, வையகத்திற் பரந்த அரசர் தொழிலென்றவா” றென்றும், “கடவுட் பெயரிய கானமென்றது, விந்தாடவியை” யென்றும், “கடவுளென்றது, ஆண்டுறையும் கொற்றவையினை” யென்றும், “கடவுளினென விரிக்க” என்றும், “கல்லுயர வெனத் திரிக்க” வென்றும், “அயிரை யென்றது அயிரை மலையுறையும் கொற்றவையினை” யென்றும் கூறுவர். 16-21. விரவுப் பணை ............. பொருந உரை : விரவுப் பணை முழங்கும் - பலவகை இசைக் கருவிகளுடன் கலந்து முரசுகள் முழங்குகின்ற; நிரை தோல் வரைப்பின் - வரிசையாகக் கிடுகுகள் பரப்பிய இடத்தினையுடைய; உரவுக் களிற்று வெல் கொடிநுடங்கும் பாசறை - உலாவுகின்ற களிறுகளின் மேல்நின்ற வெற்றிக்கொடிகள் அசையும் பாசறை யில்; ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை - பகைவருடைய அரிய மதில்களைச் சீர்குலைத்த கற்களை யெறியும் கவணைப் பொறியையும்; நார் அரி நறவின் - நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுமுடைய; கொங்கர் கோவே - கொங்கு நாட்டவர்க்குத் தலைவனே; உடலுநர் தபுத்த பொலம் தேர்க் குருசில் - மாறுபட்டுப் பொருதவரை யழித்த பொன்னானியன்ற தேரை யுடைய குரிசிலே; வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந - சங்குகளை யுடைய கடல் முழக்கத்தை முழவு முழக்காகக் கொண்ட தொண்டி நகரிலுள்ளார்க்குத் தலைவனே என்றவாறு. விரவுப்பணை முழங்கும் பாசறை, வரைப்பின் பாசறை, வெல்கொடி நுடங்கும் பாசறையென இயையும். பலவகை வாச்சியங்களின் தொகுதியை யுணர்த்தற்கு “விரவுப்பணை” யென்றும், பாசறையின் எல்லையிடத்தே வில்லும் கேடகமும் வேலியாக நிரை நிரையாக நிறுத்தப்படுவதுதோன்ற, “நிரை தோல் வரைப்பிற் பாசறை” யென்றும், யானைமேற் கொடி நிறுத்தல் பண்டையோர் மரபாதலின், அசைநடை கொண்டு உலாவும் யானை நிரையையுடைய பாசறையை, “உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை” யென்றும் கூறினார். பகைவர்தம் அரண்களைப் பெரிய கற்குண்டுகளை யெறிந்து தாக்குதற்குக் கல் கால் கவணைகள் பல பாசறை யிடத்தே அமைக்கப்பட்டிருப்பது காண்க. மதிலிடத்தே யமைக்கப் பெறும் பல்வகைப் பொறிகளோடு, படைகொண்டு செல்லு மிடத்து உடன்கொண்டு போகப்படும் பொறிகளும் இருந்தன என்பதும், அவற்றுள் கல் கால் கவணை சிறப்புடைத் தாதல் பற்றி, அதனை எடுத்தோதினா ரென்பதும் இதனால் அறியலாம். பண்டைக் கிரேக்கரும் உரோமரும் கொண்டு பொருத கல் கால் கவணை பண்டைச் சேரரிடத்தும் இருந்தமை இதனால் விளங்கும். பெருங் கற்களை வைத்து நெடுந் தொலை யில் மிக விரைய எறிந்து பகைவர் அரண்களைச் சீரழித்து வலியழிக்கும் இயல்புபற்றியும், மக்களால் எறியப்படும் கவண் போலாது பொறிதானே பெருங்கற்களை வீசி யெறிவது பற்றியும் “கல் கால் கவணை” யென்றார். இச் சிறப்பால் இஃது இப்பாட்டிற்கும் பெயராயிற்று. இன்னோரன்ன பொறிகளின் அமைப்பு, வடிவு முதலியவற்றைப் பற்றிய எழுத்தோ ஓவியமோ கிடைக்காமையால் வேறொன்றும் இதனைப்பற்றிக் கூறற்கில்லை. பழையவுரைகாரர், “கல் கால் கவணை யென்றது கற்களைக் கான்றாற்போல இடையறாமல் விடும் கவணென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குக் கல் கால் கவணை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். கவணைப் பொறிகொண்டு பகைவரை யெறியும் கொங்கர்ப் படையினர், போர்வெறி மிகுதற் பொருட்டுக் கள்ளுண்டல் தோன்ற, “நாரரி நறவிற் கொங்கர்” என்றார். உடலுநர்த் தபுத்த குருசில், பொலந்தேர்க் குருசில் என்க. தொண்டி மேலைக் கடற்கரையிலுள்ளதும் சேரர்க் குரியதுமாகிய பேரூர். அங்கே சங்கு மேயும் கடலின் முழக்கம் மிக்கிருத்தல் பற்றி, “வளைகடல் முழவிற் றொண்டியோர் பொருந” என்றார். பொருந என்பது, போர்வீரனே என்னும் பொருட்டு. 21-39. நீ நீடுவாழி ............. பன்னாள் உரை : துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்றரும் தெய்வத்துக் கூட்டம் முன்னிய - பல வாச்சியங்கள் முழங்குகின்ற தும்பை சூடிச் செய்யும் போரின்கண் மெய்ம்மையாக வெற்றி யுண்டாதல் வேண்டிப் பரவப்படும் மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை கூடியிருக்கும் மலையாகிய அயிரையிடத்தே தோன்றிய; புனல் மலி பேர்யாறு இழிதந் தாங்கு - நீர் நிறைந்த பெரிய யாறானது இறங்கி வந்தாற்போல; நின்வயின் வருநர் வரையா - நின்னை நோக்கி வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும்; செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப - செழுமை யாய்ப் பலவாகிய பொருள்கள் அவ் விரவலர் கொள்ளக் கொள்ளக் குறைவுபடாமல் மிக்கு விளங்க; ஓவத் தன்ன உருகெழு நெடுநகர் - ஓவியத் தெழுதினாற் போன்ற உருவமைந்த நெடிய அரண்மனைக்கண்ணே; பாவையன்ன மகளிர் நாப்பண் - கொல்லிப் பாவை போலும் உரிமை மகளிரின் நடுவே; மாகம் சுடர மா விசும்பு உகக்கும் - திசை யெல்லாம் ஒளி விளங்கக் கரிய வானத்தே உயர்ந்து செல்லும்; ஞாயிறு போல - சூரியன் போல; பன்னாள் விளங்குதி - பலகாலம் விளங்கி வாழ்வாயாக; புகன்ற மாண்பொறி - ஆடவர்க்குச் சீர்த்த இலக்கணமாக நூல்களிற் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்திய; பொலிந்த சாந்தமொடு - பூசப்பட்டு விளங்கும் சந்தனத்தோடு; தண் கமழ் கோதை சூடி - தண்ணி தாய் மணங் கமழும் முத்தமாலையை யணிந்து; பூண் சுமந்து - தோள்வளை முதலிய பேரணிகளை யணிந்து; திரு வில் குலைஇ - வான வில்லை வளைத்து; திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து - மாணிக்க மணிபோலச் செந்நிறங் கொண்டு திகழும் மின்னல் முதலியவற்றின் தொகுதிய வாகிய பெருமுகில் சேர்தலால்; வேங்கை விரிந்து - வேங்கை மலர்ந்து; விசும்புறு சேண் சிமை அருவி அருவரை யன்ன மார்பின் - வானளாவி மிக வுயர்ந்த சிகரத்தையும் அருவிகளையு முடைய அரிய மலைபோன்ற மார்பினையுடைய னாய்; நல்லிசை சேணாறும் சேயிழை கணவ - கற்புடைமையா லுண்டாகிய நல்ல புகழானது நெடுந் தொலைவு சென்று பரவிய செவ்விய இழையணிந்தாட்குக் கணவனானவனே; பெரும - பெருமானே; நீ நீடுவாழி - நீ நெடிது வாழ்வாயாக என்றவாறு. தெய்வம் கூடியிருக்கும் இடமாகிய அயிரை மலையைத் “தெய்வத்துக் கூட்டம்” என்றார். கூடுதற்கமைந்த இடம் கூட்டமென்றது ஆகுபெயர். தெய்வம், கொற்றவை. போர்க்குச் செல்லும்போது போரிலே வெற்றியுண்டாதல் வேண்டிச் சேரர்கள் அயிரைமலைக்கொற்றவையைப் பரவுவது பற்றி, “நனவுற்று வினவும்” என்றும், தும்பைப் போரில் பலவகை வாச்சியங்கள் முழங்குதலின் “துவைத்த தும்பை” யென்றும் கூறினார். தும்பைப் போரில் விளையும் வெற்றியாகிய பயன் குறித்தலின், தும்பை ஆகுபெயர். குருதியொடு விரவிய தல்லது பிறவகையால் தரப்படும் மடையினை யெதிர்கொள்ளா மரபிற் றாதலின், “மாற்றருந் தெய்வம்” என்றார். எனவே, இவ்வகை யானன்றி வேறு வகையால் மாற்றற்கில்லாத சினத்தையுடையள் என்பது கருத்தாயிற்று. முன்னிய - தோன்றிய; முன்னென்னும் சொல்லடியாகப் பிறந்து முற்பட்டுத் தோன்றிய என்னும் பொருட்டாய பெய ரெச்சம்; பேரியாறென்னும் பெயர் கொண்டது. இனித் தெய்வத்தென்பதனால் தெய்வத்தின் இடமாகிய அயிரை மலையைத் தலையாகக் கொண்டு, கூட்டம் முன்னிய என்றதற்குக் கடலைக் கூடுதற்குக் கருதிய என்றுரைத்தலுமொன்று. பேரியாறு இழிதந் தாங்கு நின்வயின் வருநர் என இயையும்; “மலையி னிழிந்து மாக்கடனோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லா நின்னோக் கினரே” (புறம். 42) எனப் பிறரும் கூறுதல் காண்க. இறைத்தோறும் கிணறூறுவதுபோலச் செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறைபடாது பெருகுதல் கண்டு. “செழும்பல்தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப” என்றார். ஓவம், ஓவியம். ஓவியத் தெழுதியதுபோலும் அழகமைந் தமையின், “ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்” என்றார். அம் மனைக்கண்ணே யிருந்து அதற்கு விளக்கந் தரும் மகளிரனை வரும் கொல்லிப் பாவை போலும் உரு நலமுடைய ரென்றற்குப் “பாவை யன்ன மகளி” ரென்றார். “ஓவத்தன்ன வியனுடை வரைப்பிற், பாவை யன்ன குறுந்தொடி மகளிர்” (புறம். 251) என்று பிறரும் கூறுப. பாவையன்ன மகளிர் நாப்பண், ஞாயிறு போல விளங்குதி என இயையும். ஆடவர்க்கு மார்பிடத்தே பொறிகள் கிடத்தல் சீர்த்த இலக்கண மாதலின், “புகன்ற மாண் பொறி” என்றும், அம் மார்பில் சாந்தம் பூசி முத்துமாலை யணிந்திருப்பது தோன்ற, “சாந்தமொடு தண்கமழ் கோதை சூடி” யென்றும், தோள்வளை முதலிய பேரணிகளைப் “பூண் சுமந்து” என்றும் கூறினார். இத்துணையும் மார்பினைச் சிறப்பித்தவர், அதன் பெருமையை விளக்குமாற்றால், கார்வர விளங்கும் மலையொன்றினை யுவமமாகக் கூறுகின்றார். மலையுச்சியில் இந்திர வில்லும் மின்னுத் தொகுதியும் கொண்ட மழைமுகில் தவழ, பக்கத்தே வேங்கை மரங்கள் பூத்து நிற்க, அவற்றிடையே மலையுச்சி யினின்று அருவிகள் வீழும் காட்சியைக் காட்டி, இவ்வியல் பிற்றாய மலைபோலும் மார்பையுடையான் என்பார், “அருவி யருவரை யன்ன மார்பின்” என்கின்றார். மாண் பொறியும் சாந்தப் பூச்சும் முத்துமாலையும் பேரணிகலன்களும் சேரன் மார்பின்கண் உளவாகக் கண்டு கூறுவார், திருவில்லும் மின்னுத் தொழுதியும் கொண்ட மழைமுகிலை யுவமம் கூறி, முத்துமாலையை யருவியாகவும் சாந்தப் பூச்சினைப் பூத்த வேங்கையாகவும் கருதிக் கூறுவது மிகப் பொருத்தமாக வுளது. ஆடவர்க்குளவாகும் சிறப்பும் சீர்மையும் அவர்தம் மனை மாண் மகளிரின் கற்பாற் பிறக்கும் புகழாலாதலின், அதனை யுடன்கூறுவார், “சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” என்றார். இனிப் பழையவுரைகாரர், “துவைத்த தும்பை யென்றது எல்லா ராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட தும்பைப்போர்” என்றும், “நனவுற்று வினவும் தெய்வமென்றது அத்தும்பைப் போரை நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை” யென்றும், “தெய்வத்துக் கூட்ட முன்னிய யாறென்றது அத் தெய்வம் கூடி யுறைதலையுடைய அயிரை மலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப்பட்ட யா” றென்றும் “தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப் பட்ட” தென்றும், “இழிந்தாங்கென்றது அவ் யாறு மலையினின்று இழிந்தாற்போல” என்றும், “பொறி யென்றது உத்தம விலக்கணங்களை” யென்றும், “பொறியொடு சாந்தமொடுவென ஒடுவை யிரண்டற்கும் கூட்டியுரைக்க” வென்றும், “ஒடு வேறுவினையோடு” என்றும், “கோதை யென்றது முத்தாரத் தினை” யென்றும், “சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை வரையன்ன வென்பதனுள் அன்ன வென்பதனோடு முடிக்க” என்றும் கூறி, இப் பகுதிக்கு வினை முடிபு காட்டலுற்று, “விற்குலைஇ வேங்கை விரிந்து என்னும் வினையெச்சங்களைத் திரித்து வில் குலவ வேங்கை விரியத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து விசும்புறு சேட்சிமை அருவியருவரை என மாறிக் கூட்டி. இதனைக் குறைவுநிலை யுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும், கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி யுவமமாகவும் சாந்திற்கு உவம மில்லையாகவும் உரைக்க” என்றும், “இவ்வாறு இடர்ப் படாது மலையை யுரைப் பினுமமையு” மென்றும் கூறுவர். மாகம், திசை. இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையி லுள்ள வெளியிடமென்றுமாம். “உகப்பே யுயர்தல்” (தொல். உரி. 9) என்பவாகலின், நண்பகலில் நெடுந்தொலையில் விசும்பில் உயர்ந்து விளங்குதல் பற்றி, “மாவிசும் புகக்கும்” என்றார். “வருநர் வரையாச் செழும்பல் தாரம் தலைத்தலைச் சிறப்ப,” நெடு நகரிடத்தே பாவை போலும் உரிமை மகளிரிடையே நெருஞ்சியை மலர்விக்கும் ஞாயிறுபோல அவர் மனமும் முகமும் காதலன்பால் மலரநின்று விளங்குமாறு விளங்குக என்பார், குறிப்பால், “ஞாயிறுபோல விளங்குதி” யென்றார். சேரனை ஞாயிறென்றாற்போல மகளிரை நெருஞ்சிப்பூ வென்னாமையின் இஃது ஏகதேச வுருவகம். நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி மலர்ந்திருப்பதுபோல இம்மகளிரும் இவனை நோக்கி மலர்ந்திருப்ப ரென்பது. “நீ நீடுவாழிய பெரும” என வாழ்த்துதலின், நெடிது வாழும் வாழ்நாள்கள் பலவினும் ஞாயிறுபோல விளங்குக என்பார், “ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்” என்றார். “விளங்குதி யென்பது ஈண்டு முன்னிலையேவ” லெனப் பழையவுரை கூறுகிறது. 39-42. ஈங்கு ............. கிழவோயே உரை : உறு கால் எடுத்த ஓங்குவரற் புணரி - மிக்க காற்றால் எழுப்பப்பட்ட வுயர்ந்து வரும் அலைகள்; நுண்மணல் அடை கரை யுடைதரும் - நுண்ணிய மணல் பரந்த கரையினை யலைக்கும்; தண்கடற் படப்பை நாடுகிழவோய் - குளிர்ந்த கடற் பக்கத்தை யுடைய நாட்டுக் குரியோனே; ஈங்கு யான் காண்கு வந்திசின் - இவ்விடத்தே யான் நின்னைக் கண்டு நின் புகழ் பரவுவதற்கு வந்தேன், வறுமையுற்று நின்பால் ஒன்றை இரத்தற்கு வந்தேனில்லை என்றவாறு. பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர் கோவே, பொலந்தேர்க் குருசில், தொண்டியோர் பொருந, பெரும, சேயிழை கணவ, நாடு கிழவோய், நீ நீடுவாழிய, வாழும் நாள் பலவும், நின்பால், வருநர் வரையாச் செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, நெடு நகர்க்கண் பாவையன்ன மகளிர் நாப்பண், ஞாயிறு போல விளங்குதி யென்று கூறவே, “செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப” என்ற குறிப் பேதுவாக, இளம்பொறை, ஆசிரியர்க்கு மிக்க பொருளை வழங்கச் சமைந்தானாதலின், அக்குறிப்பறிந் துரைப்பாராய், “ஈங்குக் காண்கு வந்தனென்யான்” என்றார். “ஓங்குவரற் புணரி” யென்றலின், அதற்கேதுவாக, “உறுகால் எடுத்த” என்றும், அவ்வுயரிய அலைகளைத் தடுத்தற்குரிய கல் நிறைந்த கரையில்லை யென்றதற்கு, “நுண் மணலடை கரை” யென்றும், அதனால் கரை முற்றும் தெங்கும் கமுகும் வாழையும் சிறந்து படப்பை போறலின், “தண்கடற் படப்பை நாடு” என்றும் சிறப்பித்தார். படப்பை, வளவிய தோட்டம். செழும்பல் தாரம் வருநர் வரைவின்றிப்பெறத் தருதலால் குன்றாத செல்வம் இடந்தொறும் மிக்குறுக என்பார், “தலைத் தலைச் சிறப்ப” என்றாராகலின், அதற்குரிய ஏதுவினை, உள்ளுறுத் துரைத்திருப்பது மிக்க இன்பம் பயக்கின்றது. உறுகா லெடுத்த ஓங்குவரற் புணரி யென்றதனால், பகைவரது பகைமைச் செயல் மிகுதலால் வீரத்தால் வீறு கொண்டு செல்லும் நின் தானை யென்றும், அவ்வலைகளைத் தடுக்க இயலாத நுண்மணலடை கரை யுடைவதுபோல, நின் தானையை யெதிரேற்றுப் பொரும் வலியில்லாத மெலியோர் திரண்ட பகைவர்திரள் தோற்றோடும் என்றும் உள்ளுறுத் துரைத்திருத்தலை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. இதுகாறுங் கூறியவாற்றால், மலர்தலை யுலகத்து ஒன்னா ராகிய கடம்பர் தேய வேலிட்டும், கடம்பின் முழுமுதல் தடிந்தும், கழுவுள் புறம் பெற்றும், அண்டரோட்டி நன்னற் றேய்த்தும், குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு அயிரை பரவியும், வேந்தரும் வேளிரும் பணியக் கொற்ற மெய்தியும் சிறந்த பெரியோர் மருக, மறங்கெழு குருசில், பாசறை யிடத்துக் கல் கால் கவணையும் நறவையு முடைய கொங்கர் கோவே, பொலந்தேர்க் குருசில், தொண்டியோர் பொருந, பெரும, நீ நீடு வாழ்வாயாக; மாண் பொறியோடு சாந்த மணிந்து கோதை சூடிப் பூண் சுமந்து அருவி யருவரை யன்ன மார்பினை யுடையையாய், நல்லிசைச் சேயிழை கணவனாகியோனே, வருநர் வரையாச் செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, உருகெழு நெடுநகர்க்கண் மகளிர் நாப்பண், மாகம் சுடர மாவிசும்புகக்கும் ஞாயிறுபோலப் பன்னாள் விளங்குதி; தண்கடற் படப்பை நாடு கிழவோய், ஈங்கு யான் காண்கு வந்தனென்; வேறே இன்மை துரப்ப இரத்தற்கு வந்தேனில்லை என்பதாம். இனிப் பழைய வுரைகாரரும், “பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர் கோவே. பொலந்தேர்க் குருசில், தொண்டி யோர் பொருந, பெரும, சேயிழை கணவ, நாடு கிழவோய், ஈங்கு நிற்காண்கு வந்தேன்; நீ நீடு வாழ்வாயாக; பல தாரம் கொளக் கொளக் குறையாமற் சிறப்ப மகளிர் நாப்பண் பன்னாள் ஞாயிறுபோல விளங்குவாய் என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பும் காம வின்பச் சிறப்பும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்றென்பது பழையவுரைக் கருத்து. 9. துவராக் கூந்தல் 1. வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப் பழனுங் கிழங்கு மிசையற வறியாது 5. பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும நன்பல் லூழி நடுவுநின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின் 10. நாளி னாளி னாடுதொழு தேத்த உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ அரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலை யாகியர் நீயே நின்மாட் டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது 15. கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின் 20. வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே. துறை : காவன் முல்லை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : துவராக் கூந்தல் 1-8. வானம் ............. ஒழுக உரை : வானம் பொழுதொடு சுரப்ப - மழை உரிய காலத்திலே தப்பாது பொழிய; கானம் தோடுறு மடமான் ஏறு புணர்ந்து இயல - காட்டிடத்தே தொகுதிகொண்ட மடப்பம் பொருந்திய பிணைமான்கள் தத்தம் ஆணொடுகூடி இனிது செல்ல; புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்ப - பறவைகளும் வண்டினமும் மரக்கிளைகளிலிருந்து ஆரவாரிக்க; பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது - பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவும் உண்டலாற் குறைவுபடாவாக; பல்லான் நல்நிரை புல் அருந்து உகள - பலவாகிய நல்ல ஆனிரைகள் புல்லை மேய்ந்து களித்துலவ; பயங்கடை அறியா வளம் கெழு சிறப்பின் - வறுமை யறியாத வளம்பொருந்திய சிறப்பினால்; பெரும்பல் யாணர்க் கூலம் கெழும - பெரிய பலவாகிய புதுப்புதுக் கூலங்கள் பெருக; நல் பல ஊழி நடுவு நின்று ஒழுக - நல்ல பலவாகிய ஊழிகள் செம்மையிற் றிறம்பாது நிலை பெற்றொழுக என்றவாறு. பொழுதொடு : உருபு மயக்கம். உரிய காலத்திற் றவறாது பொழிவது தோன்ற, “வானம் பொழுதொடு சுரப்ப” என்றார்; எது தவறினும், பொழுதுகள், தவறாது போந்து நிகழ்வன நிகழ்தற் கேதுவாதல் போல, மழையும் உரிய காலத்திற் றவறாது போந்து பொய்யாதுபொழிவது தோன்ற, “பொழு தொடு சுரப்ப” என்றாரென்றும், ஒப்புப் பொருட்டாய இன்னுருபிடத்தே ஒடுவுருபு வந்து மயங்கியதென்றும் கூறினு மமையும். தோடு, தொகுதி. மடமானினம், கானம் மழை பெய்து தழைத்து விளங்குதலின், வேண்டு மேயலை நன்கு மேய்ந்து தத்தம் ஆணொடு கூடி யினிதிருந்தியலும் என்றது இன்பச் சிறப்பினை யுணர்த்திற்று. மானினம் துணையொடு கூடிக் காம வின்பந் துய்க்குங்காலம் கார்கால மாதலின், “மடமான் ஏறு புணர்ந்தியல” என்றார்; கார்பயம் பொழிந்த நீர் திகழ்காலை, ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை, ஏறுபுண ருவகைய வூறில வுகள” (அகம். 234) என்றும், “வானம் வாய்ப்பக் கவினிக் கானம், கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுத்தென, திரிமருப் பேற்றொடு கணைக்கா லம்பிணைக், காமர் புணர்நிலை” (அகம். 134) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனி, அர்சதேவ ரென்னும் சமண் சான்றோர், தாமெழுதிய மிருக பக்ஷி சாஸ்திரத்தில், மானினம் வேனிற் காலத்திற்றான் காமவின்பந் துய்க்குமென்றும், அவற்றின் கருப்பக் காலம் ஐந்து திங்களென்றும் கூறுகின்றார். மழை பெய்தபின் மரந்தொறும் புள்ளினமும் வண்டினமும் பேராரவாரம் செய்வ தியல்பாதலால், “புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்ப” என்றார்; “கல்சேர்பு மாமழை தலைஇப், பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே” (பதிற். 84) என்று பிறாண்டு மோதுதல் காண்க. பழவகையும் கிழங்குவகையும் எப்போதும் இடையறவு படாது கிடைத்தலின், “பழனுங் கிழங்கு மிசையற வறியாது” என்றார். அறியா தென்பதைத் தனித்தனி கூட்டுக. மக்கட்கும் மாக்கட்கும் உணவாய்ப் பயன்படுவது பற்றி, “மிசை” யென்றார். உகளல், துள்ளி விளையாடுதல். பசும்புல் வளமுற வளர்ந்து கான முழுதும் கவினுற விருத்தலின், அதனை ஆர மேய்ந்த ஆனினம் தருக்கி விளையாடுகின்றன வென்பார், “புல்லருந் துகள” என்றார். ஆர்ந்தென்பது அருந்தென விகாரமாயிற்று. பாவத்தை அறங்கடை யென்பது போல வறுமையைப் பயங்கடை யென்றார்; “அறன் கடைப்படாஅ வாழ்க்கையும்” (அகம். 155) என்று சான்றோர் கூறுதல் காண்க. இன்ன நலங்கட்கிடையே “வறுமை” என்னாது, மங்கல மரபாற் “பயங்கடை” யென்றாரென வறிக. பலவாய் மிக்குற்ற புதுவருவாயாகிய கூலங்க ளென்பது, “பெரும் பல் யாணர்க் கூலம்” எனப்பட்டது. பெருமை மிகுதி மேலும், பன்மை வகை மேலும், யாணர் புதுமை மேலும் நின்றன. கார் காலத்து விளைபயனாதலின், இவ்வாறு சிறப்பித் தாரென வறிக. இக் கூறியவாறு வளம் பலவும் பல்லூழி காலமாகக் குறைவின்றி நிலைநின் றொழுகுதல் தோன்ற, “நன் பல்லூழி நடுவு நின் றொழுக” என்றார். நடுவு நின் றொழுகுதலின்றி, சகடக்கால் போல் மிக்கும் குறைந்தும் இன்றாகியும் ஒழுகுவது இயல்பாதலின், அதனை விலக்குதற்கு, “நடுவு நின்றொழுக” என்றார். பல்லூழிதோறும் அதனோடொட்டி நன்கொழுகிய தால், செல்வம் நிற்பதாயிற்றென் றறிக; “பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத், தீராமை யார்க்குங் கயிறு” (குறள். 482) என்று சான்றோரும் கூறுதல் காண்க. இனி, பழையவுரைகாரர், “மிசையறவு அறியாமலெனத் திரிக்க” என்றும், “நடு வென்றது நடுவு நிலைமையை” யென்றும் கூறுவர். 9-11. பல் வேல் ........... பரவ உரை : பல் வேல் இரும்பொறை - பலவாகிய வேற்படையை யுடைய இரும்பொறையே; நின் கோல் செம்மையின் - நினது அரசியன்முறை செம்மையாக நடத்தலால்; நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த - நாடோறும் நாட்டவ ரெல்லாம் நின்னைத் தொழுது பரவுவதாலும், உயர்நிலை யுலகத்து உயர்ந்தோர் பரவ - உயர்ந்த நிலைமையினை யுடைத்தாகிய தேவருலக வாழ்வுக்குரிய ஒழுக்கத்தாலுயர்ந்த சான்றோர் பரவி வாழ்த்துதலாலும் என்றவாறு. எல்லாப் படையினும் சிறப்புடைமைபற்றி, வேற்படையை விதந்து, “பல் வேல் இரும்பொறை” யென்றும், வானம் பொழுதொடு சுரத்தல் முதலியன வுண்டாவது அரசியலின் செம்மையாலென்பார், “நின் கோல் செம்மையின்” என்றும், அதனால் நாட்டில் வாழும் மக்கள் விழா நாள்களிலும் பிற நாள்களிலும் எப்போதும் அரசனை வாழ்த்துதலால், “நாளின் நாளின் நாடு தொழுதேத்த” என்றும் கூறினார். விழாநாள்களில் மக்கள் வேந்தனைப் பரவி வாழ்த்துவதைச் சிலப்பதிகாரத்து விழா நிகழ் காதைகளிலும் திருமணக் காதையிலும் பிற நாள்களில் வாழ்த்துவதை, “வாழி யாதன் வாழி யவினி” எனத் தொடங்கும் ஐங்குறு நூற்றுப் பாட்டுக்களிலும் காணலாம். வையத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் தம் நல்லொழுக்க மாட்சியால் வானுறையும் தெய்வமாத லொருதலையாதலின், அவர்களை “உயர்நிலை யுலகத் துயர்ந்தோர்” என்றும் “நாட்டில் நல்வாழ்வு நடைபெறுவதையே பெருநோக்கமாகக் கொண்டு, அதற்கு மிக்க காவலாயிருந்து அறம் வளர்க்கும் சிறப்புக் குறித்து அரசனை அவர்கள் வாழ்த்துமாறு தோன்றப் “பரவ” என்றும் கூறினார்; உயர்நிலை யுலக மிவணின் றெய்தும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற், பெரியோர்” (மதுரைக் 471-3) என்று சான்றோர் கூறுதல் காண்க. 12-20. அரசியல் ............ பொலிந்தே உரை : அரசியல் பிழையாது - நீ மேற்கொண்டு புரியும் அரசுமுறை பிழையாமல்; செரு மேந் தோன்றி - போரில் வெற்றியால் மேம்பட்டு; நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர் படுபு அறியாது - நின்பால் அன்பாலொடுங்கிய மனம் குற்றப் படாது; கனவினும் பிரியா உறையுளொடு - கனவிலும் பிரிதலை யறியா துறைதலை யும்; தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் - தண்ணிதாகவுள்ள மயிர்ச் சாந்து தடவப்பட்டு நெய்ப்புப் புலராத கூந்தலையும்; வதுவை மகளிர் நோக்கினர் - மண மகளிர் கற்பால் வழிபட்டு நோக்கி; பெயர்ந்து வாழ்நாள் அறியும் நோக்கத்து வயங்கு சுடர் - பின்னரும் தன்னை நோக்கித் தம் வாழ் நாளெல்லையை யறியும் நோக்கத்துக் கேற்ப விளங்கும் ஒளியை யுடைய; மீனொடு புரையும் கற்பின் - அருந்ததி போலும் கற்பினையும்; வாணுத லரிவையொடு - ஒளி பொருந்திய நெற்றியினையுமுடைய அரிவையாகிய நின் மனைவியுடன்; காண்வரப் பொலிந்து; அழகுற விளங்கி; நீ நோயிலையாகியர் - நீ நோயின்றி வாழ்வாயாக என்றவாறு. உறையுளையும், கூந்தலையும், கற்பினையும், நுதலையு முடைய அரிவையொடு காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என இயையும். அரசியற் பொறையால், பல்வகை யச்சத்துக் கிடமாதலின் நெஞ்சு மெலிதலாலும், செருவுடற்று மிடத்து விழுப்புண் படுதலாலும் நோயுண்டாமாதலின், “அரசியல் பிழையாது செருமேந் தோன்றி, நோயிலையாகியர் நீயே” என்றார். பலவகை யச்சமாவன “மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம். பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சங், குடிபுர வுண்டுங் கொடுங் கோலஞ்சும்” அச்சம் என்பன. இவற்றைச் செங்குட்டுவன், “மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்ப மல்லது தொழுதக வில்லை” என்பது (சிலப். வஞ்சி. காட்சி 103-4) காண்க. “பிழையாமலெனத் திரிக்க” என்பது பழையவுரை. நாடு காத்தல் குறித்து வேந்தன் பிரிந்தவழியும், வேறே அவனோடு புலத்தற்குரிய காரணங்கள் உளவாகியவழியும், அவன்பாற் சென்றொடுங்கிய அன்பால், நெஞ்சின்கண், “அன்பிலை கொடியை” என்பன போலும் சொல் நிகழ்தற்குரிய நினைவு தோன்றுவதில்லை யென்றதற்கு, “அடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது” என்றும், நனவிற் பிரியினும் கனவிற் கண்டு நனவிற் கூடினா ரெய்தும் இன்பப் பயனைப் பெறுதலின் மனையின்கண்ணிருந்து நல்லறம் புரியும் கற்புச் சிறப்பினைக் “கனவினும் பிரியா வுறையு” ளென்றும் கூறினார். “நனவினா னல்கா தவரைக் கனவினாற், காண்டலி னுண்டென் னுயிர்” (குறள். 1213) என்றாற்போ லொழுகுவது கனவினும் பிரியா வுறையுளென வறிக. ஈண்டுப் பழையவுரைகாரர், “உறையுளொடு நெஞ்சம் புகர் படுபு அறியாது என மாறிக்கூட்டி அறியா தென்பதனை அறியாமலெனத் திரித்து அதனைப் புரையும் என்றதனொடு முடிக்க” என்று கூறுவர். தலைவன் பிரிந்த விடத்துக் குலமகளிர் தம்மை யொப்பனை செய்து கொள்ளாராகலின், என்றும் தான் தலைவனைப் பிரியா துறைதலால் இடையறா ஒப்பனையால் நெய்ப்புப் புலராத கூந்தலுடையளாயினாள் அரசமாதேவி யென்பார், “தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்த” லென்றார். தகரம், மயிர்ச்சாந்து. இதனை நீவிக் கொள்வதால் தலையும் கண்ணும் குளிர்ச்சி பெறுமென்று மருத்துவ நூலார் கூறுப; அவர் கூற்றும் உண்மை யென்றதற்குச் சான்றாமாறு, “தண்ணென” என்று ஆசிரியர் கூறுவது மிக்க நயமாக வுளது. துவர்தல், புலர்தல். பழைய வுரைகாரர், “துவராக் கூந்தலென்றது எப்பொழுதும் தகர முதலிய நீவுகையால் ஈரம் புலராத கூந்த லென்றவா” றென்றும், இச்சிறப்பானே இதற்குத் “துவராக் கூந்தலென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். வதுவைக் காலத்தே மகளிர் தாம் மணக்கும் கணவனைப் பிரியாமல் கற்புவழி யொழுகும் பொற்பு மேம்படுதற்கு அருந்ததியைக் காண்டல் மரபாதல் தோன்ற, “வதுவை மகளிர் நோக்கினர்” என்றும், பின்னர்த் தாம் வாழும் நாள்களில் வாழ்நாளெல்லையை யறிதற்கு அவ்வருந்ததி மீனைக் காண்பதும் மரபாதல்பற்றி “பெயர்ந்து வாழ்நாளறியும் நோக்கத்து வயங்கு சுடர்” என்றும் கூறினார். “உலந்தநா ளவர்க்குத் தோன்றா தொளிக்குமீன் குளிக்குங் கற்பிற், புலந்தவே னெடுங்கட் செவ் வாய்ப் புதவி” (சீவக. 2141) என்று திருத்தக்கதேவர் கூறுதலால் இவ்வழக் குண்மை துணியப்படும். திருமணக்காலத்து நோக்கி யவர் மறுபடியும் பிற்காலத்தே வேறு குறிப்பொடு நோக்குதல் பற்றி. “பெயர்ந்து” என்றார், வாழ்நா ளுலந்தவர்க்குத் தோன்றாது மறையும் என்பது அமங்கல மாதலின் “வயங்கு சுடர்” என்று கூறிய நாகரிகம் குறிக்கற்பாற்று. மகளிர் நோக்கினர், பெயர்ந்து, அறியும் நோக்கத்து வயங்கு சுடர் மீனொடு புரையும் கற்பின் என இயைக்க. இனி ஆசிரியர் உ.வே. சாமிநாதையர், கூந்தலை வதுவை மகளிர்க்கு அடையாக்குவர். இதுகாறுங் கூறியவாற்றால், இரும்பொறை, வானம் சுரப்ப, மடமான் ஏறு புணர்ந்தியல, புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனுங் கிழங்கும் மிசையற வறியாவாக, ஆனிரை புல்லார்ந் துகள, கூலங் கெழும, பல்லூழி நடுவுநின் றொழுக, நின்கோல் செம்மையிற் றிறம்பாது திகழ்தலின், நாடு தொழுதேத்துத லானும், உயர்ந்தோர் பரவுவதாலும், உறையுளையும் கூந்தலையும் கற்பினையும், நுதலையுமுடைய அரிவையாகிய தேவியுடன் காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என்பதாம். இனிப் பழையவுரை காரர் “உறையுளொடு மீனொடு என நின்ற ஒடுக்கள் வேறு வினையொடு” என்றும், “பல்வேல் இரும்பொறை, நின்கோல் செம்மையாலே வானம் சுரப்ப, கானம் ஏறு புணர்ந்தியல, சினையிற் புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையற வறியாதொழிய, ஆனிரை புல்லருந்துகள, கூலம் கெழும, ஊழி நடுவுநின் றொழுக, நாடு தொழுதேத்த, உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாதொழியச் செருவில்மேம் பட்டுத் தோன்றி, நீ நின் அரிவையொடு பொலிந்து நோயிலை யாகியர் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது, அவன் நாடு காவற் சிறப்புக்கூறி வாழ்த்திய வாறாயிற்” றென்றும், “அவ்வாறு நாடுகாவற் கூறினமையால் துறை காவல் முல்லையாயிற்” றென்றும் கூறுவர். 10. வலிகெழு தடக்கை 1. மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப அச்சற் றேம மாகி யிருடீர்ந் தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத் துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக் 5. கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா ஒளிறுவாள் வயவேந்தர் களிறொடு கலந்தந்து தொன்றுமொழிந்து தொழில்கேட்ப அகல்வையத்துப் பகலாற்றி 10. மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர வாள்வலி யறுத்துச் செம்மை பூஉண் டறன்வாழ்த்த நற்காண்ட விறன்மாந்தரன் விறன்மருக ஈர முடைமையி னீரோ ரனையை 15. அளப்பரு மையி னிருவிசும் பனையை கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை பன்மீ னாப்பட் டிங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உருகெழு மரபி னயிரை பரவியும் 20. கடலிகுப்ப வேலிட்டும் உடலுநர்மிடல் சாய்த்தும் மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப் பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய கொற்றத் திருவி னுரவோ ரும்பல் 25. கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந வெண்பூ வேளையொடு சுரைதலை மயங்கிய 30. விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாப மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின் 35. மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும 40. வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத் தாலும் தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் 45. கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை 50. வண்டார் கூந்த லொண்டொடி கணவ நின்னாள், திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே ஊழி யனைய வாக வூழி வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் 55. காண்கு வந்திசின் யானே செருமிக் குருமென முழங்கு முரசிற் பெருநல் யானை யிறைகிழ வோயே. பெயர் : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் பெயர் : வலிகெழு தடக்கை 1-13. மீன் வயின் ......... மருக உரை : மீன் வயின் நிற்ப - விண்மீன்களும் கோள்களும் தத்தமக் குரிய இடத்தே நிற்க; வானம் வாய்ப்ப - மழை தப்பாது பொழிய; அச்சு அற்று ஏமமாகித் தோன்றி - உயிர்கட்குத் தாம் அச்சமின்றிப் பாதுகாப்பதாய்த் தோன்றி; இருள் தீர்ந்து இன்பம் பெருக - துன்பமின்றி இன்பம் நாளும் மிகுமாறு; தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்று - தமக்குரிய அளவாக வகுக்கப்பட்ட கல்வித்துறையின்கண் கற்பன குறைவு படாது நிரம்பக் கற்று; கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா - வலிமிக்கோர் செய்யும் போர்க் கேதுவாகிய மிக்க வன்மைக்கு அஞ்சுதலில்லாத; ஒளிறு வாள் வய வேந்தர் - விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர்; களிறொடு கலம் தந்து - யானைகளோடு கலன்கள் பலவும் செலுத்தி; தொன்று மொழிந்து தொழில் கேட்ப - தமது பழைமையைச் சொல்லிப் பணியேற்று நடப்ப; அகல் வையத்துப் பகலாற்றி - அகன்ற உலகத்திலே நடுவுநிலைமையைப் புரிந்து; மாயாப் புகழ் வியல்விசும்பு ஊர்தர - அழியாத பல்லாற்றாற் பெருகிய புகழ் அகன்ற வானமெங்கும் பரவ; வாள் வலியுறுத்து - தமது வாள்வன்மையைத் தெரியாத பகைவர் தெரிய வற்புறுத்தி; செம்மை பூஉண்டு அறன் வாழ்த்த - செங்கோன்மை மேற் கொண்டதனால் அறவோர் மகிழ்ந்து வாழ்த்த; நற்கு ஆண்ட விறல் மாந்தரன் - நன்றாக ஆட்சி புரிந்த விறலையுடைய மாந்தர னென் னும் சேரமானது; விறல் மருக - மேம்பட்ட வழித்தோன்றலே என்றவாறு. நாளுங் கோளும் நிலைதிரியின் நாட்டில் மழையின்மை, வறுமை, நோய் முதலிய துன்ப முண்டா மாதலின், “மீன்வயின் நிற்ப” என்றும், நிற்றலாற் பயன் மழையுண்மையும் அச்சமின்மை யும் துன்பமின்மையும் இன்பமும் பெருகுதலாதலால், “வானம் வாய்ப்ப” என்றும், “அச்சற்று ஏமமாகி” யென்றும், “இருள் தீர்ந்து இன்பம் பெருக” என்றும் கூறினார். “வியனாண்மீ னெறி யொழுக” (மதுரைக். 6) என்று மாங்குடி மருதனார் கூறுதல் காண்க. அச்சம், அச்செனக் கடைக் குறைந்து நின்றது; “அச்சாறாக வுணரிய வருபவன்” (கலி. 75) என்றாற்போல, அச்சமின்றிப் பாதுகாவலாக விளங்குதலை, “அச்சமறியா தேமமாகிய” (மதுரைக். 652) என்று சான்றோர் விளக்குத லறிக. இருள், அறியாமை காரணமாக வரும் துன்பம். கற்றற்குரிய வற்றை எஞ்சாமை நிறையக் கற்பதன் பயன் இருள் நீங்கலும் இன்பம் பெறுதலுமாதலின், “இருள்தீர்ந் தின்பம் பெருக” என்றார். “இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு” (குறள். 352) என்று சான்றோர் கூறுப. “ஐவகை மரபி னரசர் பக்கமும்” (தொல். புறத். 20) என அரசர்க்கு வகுத்துள்ள கல்வி முறையை, “தந்துணைத் துறையின்” என்றும், அவற்றைக் கடைபோகக் கசடறக் கற்றது தோன்ற, “எஞ்சாமை நிறையக் கற்று” என்றும் கூறினார். ஏமமாகித் தோன்றி இருள் தீர்ந்து இன்பம் பெருக என இயைக்க. இனித் “தந்துணைத்துறை யென்றது பார்ப்பார் முதலாயினார் தத்தமக் களவான துறை நூல்களை” யென்றும், “கற்றென்பதைக் கற்கவெனத் திரிக்க” வென்றும் பழையவுரை கூறுகிறது. கழிந்தோர், பல போர்களைச் செய்து வெற்றியுற்று நிற்கும் வீரர்; இந்நிலை மிக்க வலியுடையோர்க் கல்லது கூடாமையின், “கழிந்தோர்” என்றும், பல போரினும் பயின்று மேம்பட்ட வலி யென்றதற்குக் “கடுந் தூ” என்றும் கூறினார். பணிந்தொழுகும் சிற்றரசர் வலி கூறவே, பேரரசனாகிய சேரனது பெருவலி தானே விளங்குமாதலின், “தொன்று மொழிந்து தொழில் கேட்கும் வய” வேந்தரை, “கடுந்தூ வஞ்சா ஒளிறுவாள் வயவேந்த” ரெனச் சிறப்பித்தார். தொன்று மொழிதலாவது, வழி வழியாக யாம் பேரரசனாகிய நினக்குத் திறை செலுத்திப் பணிபுரிகின்றே மென்பது. அகன்ற வுலகின்கண் புகழ்பெறுதற்குரிய வாயில்கள் பலவற்றினும் நடுவுநிலைமை புரிதலாற் பெறப்படும் புகழ் தலைமை யுடைத்தாதல் பற்றி, “அகல்வையத்துப் பகலாற்றி மாயாப் பல்புகழ்” என்றும், புகழ், நிலவுலகை ஆதாரமாகக் கொண்டு அகல்வான மெங்கும் பரவி நிற்ப தாகலின், “புகழ் வியல் விசும்பூர்தர” என்றும் கூறினார். நடுவுநிலை, நுகத்துப் பகலாணி போறலின், பகலெனப் பட்டது; “நெடு நுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” (பட்டி. 206-7) என வருதல் காண்க. தமது வாள்வன்மையைப் பகைவர் போர்முகத்தே பொருது கண்டஞ்சச் செய்தமை தோன்ற, “வாள்வலி யுறுத்து” என்றும், தெவ்வரும் வாள்வன்மை தேர்ந்து பணிந்து போந்தகாலை அவர்பால் அருள்செய்து நீதி வழங்குதலால், “செம்மை பூண்டு” என்றும், இரு திறத்து நலந்தீங்குகளையும் உள்ளவா றுணர்ந்து அறிவுறுத்தும் சான்றோர் அறவோராதலின், வேந்தன் செற்றவர் நட்டவர் என்ற இருவர்பாலும் செம்மைபூண் டொழுகுதலால், மிக்க மகிழ்ச்சியுற்று வாழ்த்துமாறு தோன்ற, “அறன் வாழ்த்த” என்றும், “நற்காண்ட” என்றும் கூறினார். விறல், மேம்பாடு; வெற்றியுமாம். ஏமமாகித் தோன்றி, நிறையக் கற்று, வேந்தர் தொழில் கேட்ப, பகலாற்றி, புகழ் விசும்பூர்தர, வாள்வலி யுறுத்துச் செம்மை பூண்டு நற்காண்ட மாந்தரன் மருக என்றியைக்க. இனி இன்பம் பெருக ஏமமாகித் தோன்றி, வேந்தர் தொழில் கேட்ப வையகத்துப் பகலாற்றி, புகழ் விசும்பூர்தர, வாள் வலியுறுத்து, அறன் வாழ்த்தச் செம்மை பூண்டு நற்காண்ட மாந்தரன் மருக என்றியைப்பினு மமையும். இனிப் பழையவுரைகாரர், “தந்தென்றது இடவழு வமைதி” யென்றும், “வையத்துப் பகலாற்றி யென்றது, வையத்தார்கண்ணே நடுவுநிலைமையைச் செய்தென்றவா” றென்றும், “செம்மை பூண் டென்றது, செவ்வையைத் தான் பூண்டென்றவா” றென்றும், “அறனென்றது, அறக்கடவுளை” யென்றும், “நன்காண்ட வென்றது, வலித்த” தென்றும் கூறுவர். 14-18. ஈரம் ............. தோன்றலை உரை : ஈரமுடைமையின் நீரோர் அனையை - நெஞ்சிலே தண்ணிய அன்புடைய னாதலால் தண்ணீரை யொத்துள்ளாய்: அளப்பருமையின் இரு விசும்பு அனையை - அளத்தற்கரிய சூழ்ச்சி யுடையனாதலால் பெரிய விசும்பை யொத்துள்ளாய்; கொளக் குறைபடாமையின் முந்நீ ரனையை - இரவலர் வரை வின்றிக் கொள்ளுதலுற்றவழியும் செல்வம் குறைவுபடாமையால் கடலை யொப்பாய்; பன்மீன் நாப்பண் திங்கள் போல - பலவாகிய விண்மீன்களுக்கிடையே விளங்கும் திங்களைப் போல: பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை - எல்லா நலங்களாலும் நிறைந்து விளங்கும் சுற்றத்தாரிடையே விளக்கமுற்றுத் தோன்றலை யுடையாய் என்றவாறு. கனலிய பொருள் யாதாயினும் வந்தவழி அதனையகத் திட்டுத் தண்ணிதாக்கும் நீர்போல, தக்கோர் யாவராயினும் வந்தவழி அவரை விரைந்து தழீஇக்கொண்டு அன்பு செய்தல் பற்றி, “நீரோ ரனையை” யென்றார். அஃகி யகன்ற சூழ்ச்சி யுடைமை பற்றி, “இருவிசும்பனையை” யென்றார்: போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் விளக்குதற்கு ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகனார் “மண்டிணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும்” (புறம் 2) என்று கூறுதல் காண்க கொள்ளக் குறைவுபடாத செல்வமுடைமைமையை, “வருநர் வரையாச் செழும்பல் தாரம், கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப” (பதிற். 11) என்று பிறாண்டும் கூறியிருத்தலை யறிக. “மழை கொளக் குறையாது புனல்புக மிகாது, கரைகொரு திரங்கு முந்நீர்” (மதுரைக். 424-5) என்பது பற்றி, பன்மீன் நடுவண் விளங்கும் திங்களை யுவமை கூறினார். “பன்மீன் நடுவண் திங்கள் போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி” (மதுரைக். 769-70) எனப் பிறரும் கூறுப. தாதும் மணமும் நிறைந்தவழி மலர் பூத்தல் போல, செல்வமும் புகழும் சிறந்த சுற்றமென்றற்கு, “பூத்த சுற்றமொடு” என்றார்; இது குறிப்புருவகம். நீரோ ரனையை யென்புழி, ஓர், அசைநிலை. விறன் மாந்தரன் விறன் மருக என முன்னிலைப்படுத்திய ஆசிரியர் இதனால் அவன் நலம் பலவும் எடுத்தோதிப் பாராட்டினாராயிற்று. 19-24. உருகெழு ............. உம்பல் உரை : உருகெழு மரபின் அயிரை பரவியும் - அச்சந்தரும் முறையினையுடைய அயிரைமலையிலுள்ள கொற்றவைக்குப் பரவுக்கடன் செய்தும்; கடல் இகுப்ப வேலிட்டும் - கடலிடத்தே வந்து பொருத பகைவர் கெட வேற்படையைச் செலுத்தியும்; உடலுநர் மிடல் சாய்த்தும் - நிலத்தே வந்து பொருதபகைவரது வலியை யழித்தும்; மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌ - மலையிலும் நிலத்திலும் பகைவர் கொண்டிருந்த அரண்களை வென்று கைப்பற்றியும்; பெற்ற பெரும்பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் - பெற்ற பெரும் பொருளைப் பலர்க்கும் வழங்கியதனாலுண்டாகிய கொற்றமும் செல்வமு முடைய திண்ணியோராய முன்னோருடைய; உம்பல் - வழித்தோன்றலே என்றவாறு. “அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படி னல்லது, மடை யெதிர் கொள்ளா, அஞ்சுவரு மரபிற் கடவுள் அயிரை” (பதிற். 79) என்பவாகலின், “உருகெழு மரபின் அயிரை பரவியும்” என்றார். கடலிகுப்ப வேலிட்டவன், கடல் பிறக்கோட்டிய செங் குட்டுவன். உடலுநர் மிடல் சாய்த்து அகநாடு புக்கவர் அருப்பம் வௌவி மேம்பட்டோர், பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலாயினோராவர். பெரும்பெயர் என்புழிப் பெயர் என்றது பொருளை; பொருளால் ஒருவர் பெயர் நின்று நிலவுதலின், பெயர் எனப்பட்டது. “பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்” (தொல்.சொல் 11) என்புழிப் “பெயரென்றது பொருளை” யெனச் சேனாவரையரும் கூறுதல் காண்க. பெற்ற பொருளைத் தனக்கென ஓம்பாது புலவர் பாணர் முதலாயினார்க்கு வழங்கிப் புகழ் பெறுவது இயல்பாதலால், “பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கட லிகுப்ப வென்றது கடலைத் தாழ்க்கவேண்டி யென்றவா” றென்றும், “அருப்பம் வௌவி மிடல் சாய்த்தெனக் கூட்டுக” வென்றும், “பெயரென்றது பொருளை” யென்றும் கூறுவர். 25-30. கட்டி ............ வேந்தே உரை : கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே - சர்க்கரைக் கட்டி கலந்த அவரை முதலியவற்றாலாகிய உணவினை யுண்ணும் கொங்கருக்கு அரசே; மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே - கள்ளொடு கூடிய உணவினையுடைய குட்ட நாட்டவர்க்குத் தலைவனே; எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை - தம்பாற் றோற்று அழிந்தார்மேல் போர்க்கெழாத இணையான தோள்களையுடைய பூழி நாட்டவர்க்கு மெய்புகு கருவி போன்றவனே; இறங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந - ஒலிக்கின்ற கடற்பரப்பின் கரையிடத்தே யுள்ள மரந்தை நகரிலுள்ளார்க்குத் தலைவனே; வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய - வெள்ளிய பூவையுடைய வேளைக்கொடியும் சுரைக்கொடியும் தம்மிற் கலந்து படர்ந்திருக்கும்; விரவு மொழிக் கட்டூர் - பல வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளையுடைய; வயவர் வேந்தே - வீரர்க்கு அரசனே என்றவாறு. அவரை முதலியவற்றின் விதைகளை யிடித்துப் பெற்ற மாவோடு சர்க்கரையைக் கலந்தமைக்கும் உணவினை, “கட்டிப் புழுக்கு” என்றும், கொங்கு நாட்டவர்க்கு ஈது உணவு என்பார், “புழுக்கிற் கொங்கர் கோவே” என்றும் கூறினார். குட்டுவர், தாம் உண்ணும் உணவோடு கள்ளினையும் சேர வுண்ணுப வென்றற்கு, “மட்டப் புகாவிற் குட்டுவ” ரென்றார். “தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்” (பதிற். 42) என்றதனால் மட்டத்தின் இயல் புணரப்படும். இனிப் பழையவுரைகாரர், “கட்டிப் புழுக்கு என்றது, கட்டியொடு கூட்டின அவரைப் பரல் முதலான புழுக்கு” என்றும், “மட்டப்புகா வென்றது, மதுவாகிய வுண” வென்றுங் கூறுவர். அறத்திற் றிறம்பாது பொருது நிலைநாட்டும் வன்மையே சான்றோரால் பாராட்டப்படு மாதலின், போரி லழிந்து புறங்காட்டினார்மேல் எழாத பூழியரது அறப்போர் நலத்தை வியந்து, “எழாஅத் துணைத்தோட் பூழியர்” என்றார். பழையவு ரைகாரரும், “எழாத் துணைத்தோளென்றது, போரில் முதுகிட்டார் மேற் செல்லாத இணை மொய்ம்பு” என்பர். மரந்தை, மேலைக் கடற்கரையில் சேரர்க் குரித்தாயதொரு நகரம். கடற்கரை நகரமென்பது, “இரங்குநீர்ப் பரப்பின் மரந்தை” என்பதனால் இனிது விளங்கும். இது குட்டுவ னென்னும் சேர வேந்தனால் நிறுவப் பெற்றமை தோன்றச் சான்றோர், “குட்டுவன் மரந்தை” (குறுந். 34) என்றும், “குரங்குளைப் புரவிக் குட்டுவன் மரந்தை” (அகம். 376) என்றும் கூறுப. பகைவரொடு போர்செய்தல் வேண்டித் தானையொடு சென்ற வேந்தர், போரெதிர்தல் வேண்டித் தங்குதற்காகச் சமைக்கப்படும் பாடிவீடுகள் “கட்டூர்” என்றும், பல நாடு களினின்றும் வந்த மக்களாகிய தானையாதலாலும், அவர் தத்தம் மொழிகளையே பேசுதலாலும், “விரவுமொழிக் கட்டூர்” என்றும் கூறினார்: “விரவுமொழிக் கட்டூர் வேண்டு வழிக் கொளீஇ” (அகம். 212) என்று பிறரும் கூறுவர். பாடி வீடுகளில் வேளைக்கொடியும் சுரைக்கொடியும் தம்மில் விரவிப் படர்ந்திருப்பது தோன்ற, “வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய கட்டூர்” என்றார். இதனால், இச் சேரமான் கொங்குநாடு, குட்டநாடு, பூழி நாடு, குடநாடு என்பவற்றைத் தனக்குரியனாய், அந்நாட்டவர் பரவும் நல்லரசனாய் விளங்கிய திறம் கூறினாராயிற்று. 31-40. உரவுக்கடல் ........... புகழோயே. உரை : உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு - பரப்பினை யுடைய கடல்போன்ற பகைவரால் தடுத்தற்கரிய தானையையும்; மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி - மாட்சிமைப்பட்ட தொழிற்பாட்டையுடைய வில்லை மார்பளவும் வளைத்தலால்; ஞாண் பொர விளங்கிய வார்ந்து புனைந்தன்ன வலிகெழு தடக்கை - அதன் நாண் உராய்தலால் விளக்கமுற்ற நீண்டு ஒப்பனை செய்தாலொத்த வலிபொருந்திய பெரிய கையினையும்; ஏந்து குவவு மொய்ம்பின் - உயர்ந்த திரண்ட வலியுற்ற தோளினையும்; மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில் - விண்மீன் போல் விளங்குகின்ற மணிகள் வைத்துத் தைக்கப் பெற்ற பக்கரையை யும்; ஆய் மயிர் கவரிப் பாய்மா மேல் கொண்டு - அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையு முடைய பாய்ந்து செல்லும் குதிரை யிவர்ந்து; காழ் எஃகம் பிடித்து எறிந்து - காம்பையுடைய வேற்படையைப் பற்றிப் பகைவர் மேலெறிந்து; விழுமத்திற் புகலும் - அவரெய்தும் துன்பத்தைக் கண்டு அதனையே மேன்மேலும் செய்தற்கு விரும்பும்; பெயரா ஆண்மை - நீங்காத ஆண்மையினையும்; காஞ்சி சான்ற வயவர் பெரும - நெஞ்சிலே நிலையாமை யுணர்வினையு முடைமையாற் பிறக்கும் வலிமிக்க வீரரையுமுடைய தலைவனே; வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே - மிக்க பெருஞ்சிறப்பினால் உயர்ந்த புகழை யுடையோனே என்றவாறு. தானையும், தடக்கையும், மொய்ம்பும், வயவரு முடைய பெரும என்றும், புகழோ யென்றும் இயையும். வயவரை வேறு பிரித்துக் கூறுதலின், தானை யென்றது, களிறும் மாவும் தேரும் என்ற மூன்றையும் எனக் கொள்க. பரப்பும் பெருமையுந் தோன்ற, “உரவுக் கடலன்ன” என்றும், பகைவரால் வெலற் கருமை தோன்ற, “தாங்கருந் தானை” என்றும் கூறினார். மார்புற வாங்கி அம்புகளை மழைபோலச் சொரியும் தளர்ச்சியுறாத வலிய கட்டமைந்த வில்லென்பதற்கு, “மாண் வினைச் சாபம்” என்றும், பலகாலும் வாங்கி அம்பினைத் தொடுத்தலால், நாண் உராய்ந்து காழ் கொண்டு விளங்குதலின், கையினை, “ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை” யென்றும் கூறினார். வில்லை மார்புற வாங்குமிடத்தும், நாணைப் பற்றி அம்புதொடுக்கு மிடத்தும், விரைவும், இலக்குத் தவறாமையும் வன்மையும் கொண்டு, விற்போ ருடற்றற்கண் கைகளே மிக்க வலியும் பெருமையு முடையவாதல் வேண்டு தலின், “வலிகெழு தடக்கை” என்று சிறப்பித்தார்; இதுபற்றியே இப்பாட்டிற்கும் இது பெயராயிற் றென்க. பழையவுரைகாரர், “ஞாண் பொர என்றது நாண் உரிஞுதலால்” என்று பொருள் கூறி, “இவ்வடைச்சிறப்பானே இதற்கு வலிகெழு தடக்கை யென்று பெயராயிற்” றென்பர். “நிமிர்பரிய மாதாங்கவும், ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச், சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க் கருங்கல நல்கவும் குரிசில், வலிய வாகு நின் றாடோய் தடக்கை” (புறம். 14) எனச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாராட்டிக் கூறுதலும் ஈண்டுக் குறித்து நோக்கத் தக்கதாம். இவ்வாறு வலியும் பெருமையுமுடைய கைகட்கேற்ப, அமைந்த தோள்களின் சிறப்பை, “ஏந்து குவவு மொய்ம்பின்” என்றார். மொய்ம்பு, ஈண்டு ஆகுபெயராற் றோள்களைக் குறித்து நின்றது. மொய்ம்பு, வலி. பழையவுரை காரர், மொய்ம்பினைத் தடக்கைக் கேற்றி, “மொய்ம்பினை யுடைய தடக்கை யென மாறிக் கூட்டுக” என்பர். சேரமான் இவர்ந்து செல்லும் குதிரைக்குப் பக்கங்களில் வட்ட மாகப் புனையப் பெற்றுக் கட்டியிருக்கும் பக்கரையைப் “பாண்டில்” என்றும், அதனிடத்தே கோத்துத் தைக்கப் பெற்றிருக்கும் வெண்மணிகளை, “மீன் பூத்தன்ன விளங்கு மணி” யென்றும் கூறினார். அதற்குத் தலையிற் கட்டிய தலையாட்டம் கவரி மயிராலாய தென்றற்கு, “ஆய் மயிர்க் கவரி” என்றார். அம்மயிர் சிக்குறாது வார்ந்து ஒழுகுமாறு செப்பம் செய்திருப்பது தோன்ற “ஆய் மயிர்” என்றார். கவரி : ஆகுபெயர். ஏந்திய வேலைப் பகைவர்மே லெறிந்து தாக்கியவழி, அவர் புண்ணுற்றுப் பெருந்துன்பம் உழப்பக் கண்டும் மறம் தணியாது மேன்மேலும் மண்டிச் சென்று பகைவர்க்குப் புண் ணுண்டாக்கு தலையே பெரிதும் விரும்பும் இயல்பு குறித்து, “காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்துப் புகலும்” என்றார். தாம் புண் செய்தலே யன்றிப், பிறரால் தாம் புண்ணுறினும் அதனையே விரும்புவரென்றற்கு, “விழுமத்திற் புகலும்” எனப் பொதுப்படக் கூறினார். புகழ்ச்சிக் கேதுவாகிய ஆண்மை, பெயராமையால் விளங்குதலின், “பெயரா ஆண்மை” யென்றும், அதுதானும் நிலைபெறுதற்கு, யாக்கைநிலையாமையும் புகழின் நிலை பேறுடைமையும் நெஞ்சில் நிலவுதற்குக், “காஞ்சி சான்ற வயவர்” என்றும் கூறினார். பழைய வுரைகாரர், “காழெஃகம் பிடித் தெறிந்தும் விழுமத்திற் புகலும் என்றற்குப் பகைவரை யென்னும் பெயரை வருவித்துக் காம்பையுடைய வேலைப் பிடித்தெறிந்து அப்பகைவர்க்கு இடும்பை செய்கையிலேயே விரும்பு மென்றவா” றென்று கூறுவர். இக்கூறியவாற்றால் சிறப்பு மிகுதலின், “வீங்கு பெருஞ் சிறப்பி” னென்றும், இதனா லுண்டாகும் புகழ், ஏனையோ ரெய்தும் புகழினும் ஓங்கி நிற்றலின், “ஓங்கு புகழோய்” என்றும் கூறினார். 41-50. கழனியுழவர் ............. கணவ உரை : கழனி யுழவர் தண்ணுமை இசைப்பின் - கழனியில் தொழில் புரியும் உழவர் தண்ணுமையினை முழக்குவராயின்; பழனமஞ்ஞை மழை செத்து ஆலும் - பழனங்களில் வாழும் மயில்கள் மழை முகிலின் முழக்கமெனக் கருதி ஆடும்; தண் புனலாடுநர் ஆர்ப்பொடு - குளிர்ந்த நீரில் மூழ்கியாடுவோர் செய்யும் ஆரவாரத்தோடு; வெம்போர் மள்ளர் தெண் கிணை மயங்கிக் கறங்க - வெவ்விய போரைச்செய்யும் வீரருடைய தெளிந்த ஓசையமைந்த தடாரிப்பறை கலந்து முழங்க; கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப - செல்வமுடைய நல்ல மனை களிலேயுள்ள ஆனேறுகள் தம்மின் மாறுபட்டு முழங்க; செழும் பல இருந்த கொழும்பல் தண் பணை - செழுமையான பல வூர்களையுடைய வளமிக்க பல குளிர்ந்த வயல்களைக் கொண்ட; காவிரிப் படப்பை நன்னாடன்ன - காவிரியாற்றால் வளமுறப் படைக்கப்பட்ட நிலப்பகுதியாகிய நல்ல நாட்டைப் போலும்; வளங்கெழு குடைச்சூல் - தொழில்வளம் பொருந்திய சிலம்பையும்; அடங்கிய கொள்கை - அடக்கத்தைப் பொருளாகக் கொண்ட கொள்கையையும்; ஆறிய கற்பின் - சினங் கொள்ளுத லில்லாத அறக்கற்பையும்; தேறிய நல்லிசை - யாவரும் தெளிய விளங்கும் நல்ல புகழையும்; வண்டார் கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலையும்; ஒண்டொடி கணவ - ஒள்ளிய தொடியையு முடையாட்குக் கணவனே என்றவாறு. மஞ்ஞை ஆலும் நாடு, காவிரிப் படப்பை நாடு என இயையும். கழனிக்கண் தொழில் புரியும் உழவர், தாம் வித்திய நெல் விளைந்தவழி யதனை யரியுங்கால் தண்ணுமை யிசைத்தல் மரபாதலின், “கழனி யுழவர் தண்ணுமை” யென்றார்; “வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள்ளிரிய” (நற். 350) என்று பிறருங் கூறுதல் காண்க. மயில், மழைமுகிலைக் கண்டு தன் தோகையை விரித்தாடுவது இயல்பாதலால், தண்ணுமையின் முழக்கம் மழை முழக்கம் போல்வது கண்டு மயில் ஆலுவதாயிற் றென்றற்கு, “மழைசெத் தாலும்” என்றும், மருதநிலத்தேயுள்ள மயிலென்றற்குப், “பழன மஞ்ஞை” என்றும் கூறினார். புனலாடுவோர் பெருங் கூட்டமாகச் சென்று பல்வகை வாச்சியங்கள் இயம்ப நீர்விளையாட்டயர்தல் பண்டைநாளை மரபாதலின், “தண்புன லாடுந ரார்ப்பொடு” என்றார். வெவ்விய போர்த்தொழில் பயிலும் மறவர், போர்க்குரிய தடாரிப்பறையை முழக்க, அதனிசை புனலாட்டாரவாரத்தோடு கலந்து முழங்கிற் றென்பதாம். கூழ், செல்வம்; சோறுமாம். வேளாள ரில்லங்களில் உள்ள ஆனேறுகள் அம்முழக்கங் கேட்டு, மருண்டு தம்முண் முரண்கொண்டு முழங்கின வென்பார், “ஏறு மாறு சிலைப்ப” என்றார்; “ஆமா நல்லேறு சிலைப்ப” (முருகு. 315) என்று பிறரும் கூறுப. “ஏறுமாறு சிலைப்ப என்றது, ஏறுகள் ஒன்றற்கொன்று மாறாக முழங்க வென்றவா” றென்பது பழையவுரை. செழும்பல கொழும்பல் என்புழிப் பன்மை முறையே ஊர்கள் மேலும் வயல்கள் மேலும் நின்றன. ஊர்கட்குச் செழுமையும், வயல்கட்குக் கொழுமையும் சிறப்புத் தருவனவென வுணர்க. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்து அது கொணரும் வண்டல் தங்கி நாளடைவிற் பெருகிக் காவிரி பாயும் பூம்புனல் நாடு படைக்கப்பட்ட (Delta) தாகலின், “காவிரிப் படப்பை நன்னா” டெனப்பட்டது. படைப்பு எனப்படல் வேண்டு மாயினும், அச்சொல் நிலஞ் சுட்டாது பொருளையே சுட்டி நிற்றலின், நிலஞ் சுட்டும் வகையில் படைப்பை யாகிப் பின்பு “படப்பை” யென வழங்குவதாயிற்றெனக் கொள்க. “டெல்டா” என்ற பகுதிகளைப் பண்டையோர் “படப்பை” யென வழங்கியது போல, ஹார்பர் (Harbour) எனப்படும் துறைமுகங்களைப் பண்டைத் தமிழர் “நாவாய்க் குளம்” என வழங்கினர் என, ஆசிரியர் திரு. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் கூறுகின்றார்கள். மகளிர் நலத்துக்குச் சிறப்புடைய நகரங்களையும், நாடுகளையும் உவமமாகக் கூறுவது பண்டையோர் மரபாதலின், “நன்னாடன்ன ஒண்டொடி” யென்றார். “குட்டுவன், மரந்தையன்ன வென்னலம்” (அகம். 376) என்று சான்றோர் கூறுவது காண்க. குடைச்சூல், சிலம்பு; குடைச்சூலை யுடைமைபற்றி இப்பெயர் பெறுவதாயிற்று. “குடைச்சூற் சித்திரச் சிலம்பு” (சிலப். 16:118-9) என்பதற்கு, “புடைபட்டு உட்கருவை யுடைய சித்திரத் தொழிலை யுடைத்தாகிய சிலம்பு” என்று உரை கூறி, “குடைச்சூல், குடைபடு தலென்பாரு முளர்” என்று கூறினர் அடியார்க்கு நல்லார்; அதன் அரும்பதவுரைகாரர், “குடைச்சூல் ; புடை தாழ்த்தல் ; உள்ளுட் டாழ்த்தலு மாம்” என்பர். சித்திரத் தொழில் நிறைந்து விளங்குமாறு தோன்ற “வளங்கெழு குடைச்சூல்” என்றார். பெருநல முடையளா யிருந்தும், அடக்கத்தையே பொரு ளாகக் கொண்டொழுகிய சிறப்பினால், “அடங்கிய கொள்கை” யென்றும், அக்கொள்கையின் பயன் கணவன்பால் சிவந்து துனித்தற்குரிய காரணங்கள் உளவாகிய வழியும், அது செய்யாது இன்சொல்லும் பணி நடையும் கொண்டிருப்பது தோன்ற “ஆறிய கற்பு” என்றும், இன்ன நன்னடையால் மனைக்கு விளக்காய் வண்புகழ் கொண்டு யாவரும் பரவ இருக்கும் நலம் விளக்குவார், “தேறிய நல்லிசை” என்றும் கூறினார்; பிறரும், வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறும் கூற்றில் வைத்து, “திரு நகரடங்கிய மாசில் கற்பின் ............. அணங்குசா லரிவை” (அகம். 114) என்பது காண்க. இவ்வாறு தேவியின் குணநலம் கூறியவர், உருநலம் கூறலுற்று, “வண்டார் கூந்த லொண்டொடி” யென்றார். 51-57. நின்னாள் ............ கிழவோயே உரை : நின்நாள் திங்கள் அனையவாக - ஒரு திங்களின் காலவளவு நின் வாழ்நாளின் ஒருநாள் அளவாகுக; திங்கள் யாண்டோர் அனையவாக - நின் வாழ்நாளில் ஒரு திங்களின் அளவு ஓர் யாண்டின் கால வளவிற்றாகுக; ஆண்டு ஊழி அனைய வாக - வாழ்நாளில் ஓர் யாண்டினளவு ஊழியளவிற்றாகுக; ஊழி வெள்ளவரம்பினவாக - வாழ்நாளின் ஊழிக்கால வெல்லை வெள்ள மென்னும் காலவெல்லையின் அளவிற்றாகுக; என உள்ளி - என்று கருதி வாழ்த்திக்கொண்டு; செருமிக்கு உருமென முழங்கும் முரசின் - போரில் மேம்பட்டு இடி போல முழங்கும் முரசினையும்; பெருநல் யானை - பெரிய நல்ல யானை களையுமுடைய; இறை கிழவோய் - இறைமைத் தன்மைக் குரியோனே; யான் காண்கு வந்திசின் - யான் நின்னைக் காண்பேன் வந்தேன் என்றவாறு. உலகவர் கூறும் திங்களும், யாண்டும், ஊழியும், வெள்ளமும் முறையே நின் வாழ்நாளின் நாளும், திங்களும், யாண்டும், ஊழியுமாக நீடுக என்பதாம். ஊழி, என்பது யாண்டுகளின் கால வளவு போலும்; பல வூழிகளின் எல்லை வெள்ள வரம்பு. “வெள்ள வரம்பி னூழி போகியும், கிள்ளை வாழிய” (ஐங். 281) எனச் சான்றோர் கூறுதலால், காலக் கணக்கின் வரம்பு வெள்ளமென்று துணியலாம். பிறவியிலே இறைவனாதற்குரிய நன்மாண்பனைத்தும் ஒருங்கு பெற்றுத் தோன்றினா னென்றற்கு, “இறை கிழவோய்” என்றார். இறைவனாதற்குரிய உரிமை, இயற்கையறிவோடு கல்வி கேள்வி முதலியவற்றாலுண்டாகும் செயற்கையறிவும் பிறவும் பெற்றவழி யெய்துவதாக, அவை யாவும் கருவிலே யுடைய னென்றற்கு இவ்வாறு கூறினாரென வுணர்க. இதுகாறுங் கூறியவாற்றால், “விறன் மாந்தரன் விறன் மருக, நீ, நீரோரனையை, இருவிசும்பனையை, முந்நீரனையை, பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை, கொற்றத் திருவின் உரவோர் உம்பல், கொங்கர் கோவே, குட்டுவர் ஏறே, பூழியர் மெய்ம்மறை; மரந்தையோர் பொருந, வயவர் வேந்தே, பெரும, ஓங்கு புகழோயே, ஒண்டொடி கணவ, இறை கிழவோய், நின் நாள் திங்க ளனையவாக, ஊழி வெள்ள வரம்பினவாக என உள்ளி, யான் காண்கு வந்திசின் என்பதாம். இனிப் பழையவுரை காரர், “மருக, உம்பல், கொங்கர் கோவே, குட்டுவரேறே, பூழியர் மெய்ம்மறை, மரந்தையர் பொருந, வயவர் வேந்தே, வயவர் பெரும, ஓங்கு புகழோய், ஒண்டொடி கணவ, இறை கிழவோய், ஈரமுடைமையின் நீரோ ரனையை; அளப்பருமையின் விசும்பனையை; கொள்ளக் குறைபடாமையின் முந்நீரனையை; பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றுதலை யுடையை; ஆதலால், நினக்கு அடைத்த நாள்கள், உலகத்தில் திங்களனைய வாக வென்றும், நின்னுடைய திங்கள் யாண்டனையவாக வென்றும், நின்னுடைய யாண்டு ஊழியனையவாக வென்றும் நின் யாண்டிற் கொப்பாகிய அப்பல்லூழி தம் மளவிற்பட்ட பலவாய் நில்லாது வெள்ள வரம்பினவாக வென்றும், நினைத்து நின்னைக் காண்பேன் வந்தேன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்று கூறுவர். இதனாற் சொல்லியது, அவன் தண்ணளியும் பெருமையும் கொடையும் சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்று. ஒளிறு என்பது முதலாக நான்கடியும், அறன் வாழ்த்த என்பது முதலாக இரண்டடியும், கடலிகுப்ப என்பது முதலாக இரண்டடியும், காழெஃகம் பிடித்தெறிந்து என ஓரடியும் வஞ்சி யடியாக வந்தமையான் வஞ்சித் தூக்கு மாயிற்று. நின்னா ளென்பது கூன். ஒன்பதாம் பத்து மூலமும் உரையும் முற்றும். பதிற்றுப்பத்து மூலமும் விளக்கவுரையும் முடிந்தன. பதிகங்களின் பழையவுரைக் குறிப்பு பதிற்றுப்பத்திற் காணப்படும் பதிகங்கள் இடைக்காலச் சோழ பாண்டியர் கல்வெட்டுக்களிற் காணப்படும் மெய்க் கீர்த்திகள்போல வரலாற்றுக் குறிப்புக்கொண்டு எளிய நடையில் அமைந்திருத்தலால் அவற்றிற்கு ஏனைப் பாட்டுக்கட் கெழுதியதுபோல உரை யெழுதுவது வேண்டா என இந்நூலைப் பயிலும் மாணவர்களே விரும்பாராயினர். அதனால் அவற்றிற்கு இங்கே உரை யெழுதப்படவில்லை. ஆயினும், சிற்சில தொடர்கட்குப் பழையவுரைக் குறிப்பு நல்ல விளக்கந் தருகின்றது. அதனால், அதுமட்டில் இங்கே ஏட்டிற் காணப் பட்டபடியே தரப்படுகின்றது. இரண்டாம் பத்து : இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது, யவனரைப் பொருள் அகப்படுத்தி யென்றவாறு. நெய் தலைப்பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்து என்று உரைக்க. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு என்றது, அந்த யவனரிடைப் பின் தண்டமாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண்டு என்றவாறு. மூன்றாம் பத்து : இதன் பதிகத்து அகப்பா எறிதலைப் பகற்றீ வேட்டற்கு அடையாக்கி யுரைக்க. முதியரை மதியுறழ் மரபின் தழீஇ மண்வகுத் தீத்தெனக் கூட்டித் தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோடொத்த தன் தண்ணளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன் நாட்டைப் பகுத்துக் கொடுத்தென வுரைக்க. இருகடலு மென்றது, தன்னதாய மேல்கடலும் பிற நாட்டதாய்ப் பின்பு தான் பொருது கொண்டு தன்னாடாக்கிய நாட்டிற் கீழ்கடலும் என்றவாறு. கருங்களிற்றியானைப் புணர்நிரை நீட்டி இருகட னீரு மொரு பகலாடி யென்றது, அவ்விரு முந்நீரும் ஒரு பகலிலே வரும்படி யானைகளை நிரைத்து அழைப்பித்து ஆடி என்றவாறு. அயிரை பரைஇ யென்றது, தன்னாட்டு அயிரை யென்னும் மலையில் வாழும் கொற்றவைக் கடவுளைத் தன் குலத்துள்ளார் செய்துவரும் வழிபாடு கெடாமல் தானும் வழிபட்டு என்றவாறு. ஆற்றல் சால் முன்போடு காடு போந்தவெனக் கூட்டுக. நெடும்பாரதாயனார் முந்துறக் காடு போந்த என்றது, தன் புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடுபோக, அது கண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன என்றவாறு. நான்காம் பத்து : இதன் பதிகத்துக் கடம்பின் பெருவாயி லென்றது அந் நன்னனூரை. நிலைச்செரு வென்றது, அந்நன்னன் நாடோறுஞ் செய்த போரினை. ஐந்தாம் பத்து : இதன் பதிகத்துக் கடவுட் பத்தினி யென்றது கண்ணகியை. இடும்பிலென்றது, இடும்பாதவனத்தை. புறம் - அவ்விடம். வாலிழை கழித்த பெண்டிர், என்றது, அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி யென்றது, அவர் கூந்தலை யரிந்து திரித்த கயிற்றினை, குஞ்சர வொழுகை பூட்டியது, அப்பழையன் வேம்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு. குடிக்குரியோ ரென்றது, அரசிற் குரியாரை. ஆறாம் பத்து : இதன் பதிகத்துத் தண்டாரணிய மென்றது, ஆரிய நாட்டிலே உள்ளதொரு நாடு. கபிலை யென்றது, குராற்பசு. ஏழாம் பத்து : இதன் பதிகத்து ஒரு தந்தை யென்றது, பொறையன் பெருந்தேவியின் பிதாவுடையது ஒரு பெயர். வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி யென்றது, யாகம் பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து முடித்து என்றவாறு. மாய வண்ணனை மனனுறப் பெற்றென்பது, திருமாலை வழிபட்டு அவனுடைய மனம் தன்பாலேயாம்படி பெற்று என்றவாறு. புரோசு மயக்கி யென்றது, தன் புரோகிதனிலும் தான் அறநெறி யறிந்து என்றவாறு. சிறுபுற மென்றது, சிறுகொடை. எட்டாம் பத்து : இதன் பதிகத்துக் கொல்லிக்கூற்ற மென்றது, கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. நீர் கூர் மீமிசையென்றது, அந்நாட்டு நீர் மிக்க மலையின் உச்சியை. நொச்சி தந்தென்றது, தகடூர் மதிலைக் கைக்கொண்டு என்றவாறு. ஒன்பதாம் பத்து : இதன் பதிகத்து விச்சியென்பான், ஒரு குறுநில மன்னன். வஞ்சி மூதூர்த் தந்து என்றது, அவர்களை வென்று கொண்ட பொருள்களை; பசுவும் எருமையும் ஆடுமென்பாரு முளர். அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசுமயக்கி யென்றது, தன் மந்திரி யாகிய மையூர் கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப் பண்ணி என்றவாறு. இடம் விளங்காத பதிற்றுப்பத்துப் பாட்டுக்கள் 1. இருங்கண் யானையோ டருங்கலந் துறுத்துப் பணிந்துவழி மொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி நீர்துனைந் தன்ன செலவின் நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே. 2. இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம் எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்குந் தோன்றல் பெரிதெழுந் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரைஞாயிற் கடிமிளைக் குண்டுகிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம் நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ ஒல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே. 3. பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னொடு யுரையுந ளல்லள் தன்னொடு புரையுநர்த் தானறி குநளே. 4. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமான் றேரொடு சுரந்து நன்கல னீயு நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் பகைவெம் மையி னசையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கும் இடாஅ வேணிநின் பாசறை யானே. 5. விசயந் தப்பிய ......................... செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண்கள் : செய்யுள் எண்) அ அட்டா னானே 47 அலந்தலை யுன்னத் 23 அவலெறிந்த வுலக்கை 29 அறாஅ யாண ரகன்கட் 71 ஆ ஆடுக விறலியர் 58 ஆராத் திருவின் 4 ஆம் பதிகம் ஆன்றோள் கணவ 55 இ இகல்பெருமையிற் 72 இணர்ததை ஞாழற் 30 இமைய வரம்பன் 3ஆம் பதிகம் இருங்கண் யாணை தி.1 இரும்பனம் புடையல் 42 இரும்புலி கொன்று 75 இழையணிந் தெழுதரும் 62 இழையர் குழையர் 46 இறும்பூதாற் பெரிதே 33 உ உண்மின் கள்ளே 18 உயிர்போற் றலையே 79 உரவோ ரெண்ணினும் 73 உலகத் தோரே 38 உலகம் புரக்கு 81 உறலுறு குருதிச் 86 எ எடுத்தே றேய 84 எரியெள்ளு வன்ன க.வ எறிபிண மிடறிய 65 எனைப்பெரும் படையனோ 77 ஒ ஒரூஉப நின்னை 34 ஓ ஓடாப் பூட்கை 57 க கவரி முச்சிக் 43 களிறு கடைஇயதாள் 70 களிறுடைப் பெருஞ்சமம் 76 கா கார்மழை முன்பிற் 83 கால்கடிப் பாகக் 68 கு குட்டுவ னிரும்பொறைக்கு 9 ஆம் பதிகம் குடக்கோ நெடுஞ்சேர 6 ஆம் பதிகம் குன்றுதலை மணந்து 31 கே கேள்வி கேட்டுப் 74 கொ கொடிநுடங்கு நிலைய 52 கொடுமணம் பட்ட 67 கொலைவினை மேவற்றுத் 60 கொள்ளை வல்சிக் 19 கோ கோடுறழ்ந் தெடுத்த 16 சி சிதைந்தது மன்றநீ 27 சினனே காமங் 22 செ சென்மோ பாடினி 87 சொ சொற்பெயர் நாட்டங் 21 தி திருவுடைத் தம்ம 28 து துளங்குநீர் வியலகங் 51 தே தேஎர் பரந்தபுல 26 தொ தொறுத்தவய லாரல் 13 ந நன்மரந் துவன்றிய 85 நி நிலநீர் வளிவிசும் பென்ற 14 நிலம்புடைப் பன்ன 44 நு நுங்கோ யாரென 20 நெ நெடுவயி னொளிறு 24 ப பகல் நீ டாகா 59 பகை பெருமையிற் 82 பலாஅம் பழுத்த 61 பா பார்ப்பார்க் கல்லது 63 பி பிறர்க்கென வாழ்திநீ 39 பு புணர்புரி நரம்பின் 41 புரைசான் மைந்தநீ 35 புரைவது நினைப்பிற் 17 பே பேணு தகு சிறப்பின் தி.4 பை பைம்பொற் றாமரைப் 48 பொ பொய்யில் செல்வக் 8 ஆம் பதிகம் பொலம்பூந் தும்பைப் 45 போ போர்நிழற் புகன்ற 40 ம மடியா வுள்ளமொடு 7 ஆம் பதிகம் மலையுறழ் யானை 69 மன்னிய பெரும்புகழ் 2 ஆம் பதிகம் மா மாண்டனை பலவே 25 மாமலை முழக்கின் 32 மாவா டியபுல 50 மீ மீன்வயி னிற்ப 90 யா யாண்டுதலைப் பெயர 15 யாமுஞ் சேறுக 49 வ வடவ உட்கும் 5 ஆம் பதிகம் வந்தனென் பெரும தி.3 வயவர் வீழ 12 வரைமருள் புணரி 11 வலம்படு முரசின்வாய்வாட் 64 வலம்படு முரசி னிலங்கு 78 வள்ளியை யென்றலின் 54 வா வாங்கிரு மருப்பிற் 66 வாழ்கநின் வளனே 37 வான்மருப்பிற் களிற் 80 வானம் பொழுதொடு 89 வி விழவு வீற்றிருந்த 56 விசையம் தப்பிய தி.5 வீ வீயா யாணர் 36 வெ வென்றுகலந் தரீஇயர் 53 வை வையக மலர்ந்த 88 அருஞ்சொல் அகரவரிசை (எண்கள் செய்யுளையும், வேற்றெண் பதிகத்தையும் குறிக்கும்) அ அ 78 அக்கரை- V அக்குரன் 14 அகப்படுத்தல் 22,32,50 அகப்பா III, 22,30 அகம் 51, 52, 81 அகமடிவையர் 27 அகல் 81,90 அகல்பு 43 அகல் வையம் 90 அகல 19,59,69 அகலத்தன் க,வா அகலத்துப் பாயல் 16 அகலம் 14,16, 40, 63 அகலிருவிசும்பு 52, 68, 81 அகவலன் 43 அகவலோசை 14 அகழ் 33 அகழி 33, 45, 53 அகழிய 45, 71 அகன்கண் 29,45,58,66,71,76 அகன்கண் வைப்பு 58,66,76 அகன் பெரும்பாழ் 25 அகன்றலை 23,25,28,62 அகன்றலை நாடு 23,25,28 அகன்று 72 அங்கை 71 அச்சம் 22 அச்சு 90 அசை 33 அசைச்சீர் 69 அசைத்த 58 அசைநடை 16,51 அசைநிலை 26,52,71,73 அசையா 82 அசையாது 69 அசைவில் கொள்கை 69 அஞ்சலை 63 அஞ்சா 21,82,90 அஞ்சார் 72 அஞ்சி 32,81 அஞ்சும் 57 அஞ்சுவரு மரபின் கடவுள் 79 அஞ்சேறு 60 அட்ட 11 அட்டு II,47 அட்டுமலர் மார்பன் 20 அடக்கிய 45 அடங்க 40 அடங்கார் 39 அடங்கிய 31,37,57,90 அடங்கிய சாயல் 16 அடங்கிய கொள்கை VI,15 அடாஅ வடு புகை 20 அடி 26,52,57,80 அடிசில் 45 அடிப்படுத்தல் 87 அடுக்கம் 55 அடுக்கிய 68 அடுகரை 51 அடுகளம் VIII அடுகை 29 அடுசோறு 46 அடுத்தூர்ந் தட்ட கொற்றம்15 அடுதொறும் 47 அடுநெய் யாவுதி 21 அடுப்பு 18,63 அடுபுகை 20 அடுபோர் 32,42,55 அடும்பு 30,51 அடுமின் 18 அடூஉ 13 அடூஉம் 75 அடை 21,63 அடைகரை 23,30,88 அடைச்சி 27 அடைச் சேம்பு 24 அடைபு 30 அடைய 76 அடையூஉ 81 அடைவு 48 அண்டர் 88 அண்ணல் 12,22,23,33,42,44,51 ,55,64,70,81,86 அணங்கு 11,62,68,71,79,88,II அணந்து 84 அணி 11,12,30,41,51,81 அணிக VI அணிகொள 81 அணித்தழை 53 அணிந்து 15,40,52,62,64,65 அணிய 12 அணிவர 63 அணுமை 16,78 அணை 50 அணைத்த 33 அணைத்து 33 அத்தம் 41 அதிகமான் 80,VIII அதிர் 84 அதிர்க்கும் 30 அதிர்சிலை 43 அதிர்சினம் 81 அதிர்ந்தாங்கு 12,84 அதிர்பட்டு 39 அதிர்பு 31 அதிர்விலர் 81 அதிர 49,68 அந்தணர் 24,64 அந்தரம் 51 அந்திமாலை 35 அந்தில் 40 அந்துவஞ்செள்ளை IX அந்துவன் VII அம்பண வளவை 66,71 அம்பு 19,20,22,24,80 அம்பு சேருடம்பினர் 42 அம்புடை வலத்தர் 80 அம்ம 26,28,64,83 அமர் 14,22,36,44,50,70,86 அமர்க்கண் 67 அமர் கோள் 29 அமர்த்த 16,81 அமர் துணை 22 அமர்ந்த 15,23,81,IX அமர்ந்து , க. வா 23,40,68 அமர்பு 12 அமல் 41,50,51 அமலை 56 அமிர்து பொதி துவர்வாய் 16 அமிழ்து 17,51 அமை 12 அமைஇய 50 அமைச்சியல் ix அமைச்சு VIII அமைத்து 29,74 அமைதல் 12 அமைந்த 34,60,67,74,81,v அமை மருள் தோள் 54 அமையம் 22 அமையார் iI அமைவரல் iI,III அயர்ந்தன்ன 81 அயரும் 73 அயிர் 51 அயிரை 21,70,79,88,90,iII அரக்கம் 30 அரசர் 43 அரசியல் 89 அரசு 12,41,42,44,74,77, 81,85,VIIi அரசுகட்டில் 81,85,VIII அரசுவா 79 அரண் 11,17,24,30,31,39,44,81 அரணம் 50,52,59 அரம் 60 அரம்பு 15 அரவு 45,51 அரிகால் 30 அரிசில் கிழார் VIII அரிஞிமிறு 12 அரிது பெறு பாயல் 19 அரிந்து 71,78 அரிநகர் 19 அரிமான் 12,28 அரியல் 27,40,61,62 அரியுநர் 26 அரில் 12 அரிவை 19,52,68,81,89 அருங்கடன் 74 அருங் கடுஞ்சினம் 83 அடுங்கலம் 52,64,71,74,ix அருங்கள் 68 அருங்குரையை 24,79 அருஞ்சமம் 40,71 அருஞ்செலல் 43 அருத்தினை 70 அருந்தகைப்பு 24,66 அருந்திறல் 30,VIII, IX அருந்து 89 அருநிலை 71 அருநிறம் 11 அருப்பம் 45,50,90 அரும்பலி 17 அரும்பெறற் பிண்டம் 30 அரும்பொறி 75 அருமணி 51 அருமிளை ix அருமை 77, 90 அருவரை 88 அருளி 53 அல்கல் 68 அல்கலும் 55 அல்கு 30 அல்குல் 18, 54, 65 அல்லதை 52 அல்ல 74 அலங்கல் 31, 39 அலங்கிய 21 அலங்குகதிர் 58 அலங்கும் 64 அலந்தலை 23, 89 அலந்தனர் 71 அலமரும் 31 அலர்ந்து 27 அலரும் 31 அலவன் 51 அலற 20, 39, 55 அலை 51 அலைத்த 70, 88 அலைத்தன்று 16 அலைப்ப 52 அவ்வயின் 64 அவ்வரி 68 அவ்வனைத்து 13 அவ்வாங்குந்தி 81 அவ்வினை 19 அவ்வெள்ளருவி 78 அவல் 29, 49 அவித்து 30, 37 அவிந்து 40 அவிர் 85 அவிர் தொடி 46 அவிர் நிணம் 67 அவிர்வர 50, 83 அவிர்வரும் 47 அவிரிழை 39 அவிழ்ந்த 51 அவிழ்பு 20 அவிழ 50 அவிழகம் 52 அவுணர் 11 அழல் 13, 14, 15, 23,25,40 அழல் வினை 81 அழல 31, 41, 62 அழன்மலி தாமரை 19 அழி 13, 15 அழித்த 14, 20, 21,43,45, 40 அழிந்த 15, 23, 63 அழிந்து 23, 55 அழிய 13, 18, 20 அழியா 29 அழியும் 67 அழுங்க 51 அழுவம் 21,31,45,66,84 அழைப்ப 79 அள்ளல் 27 அளகு 25 அளந்து 24 அளப்ப 51, 74 அளப்பு 14,24,79,90 அளவு 73 அளவை 55,66,71 அளறு 27 அளி 87 அளிக்கு 61 அளிக்கும் 65 அளித்தி 79 அளிய 29 அளியை 19, 22 அளை 28 அற்ற 23, 28,43 அற்று 31,90 அற்றென 71 அற 49, 50 அறஞ்சால் கற்பு 31 அறத்துறை VII அறந்தெரி திகிரி 22 அறம் 24,59,64,85 அறம்புரி யந்தணர் 24 அறல் 21, 74 அறவு 89 அறன் 90 அறாஅ 23,27,60, 71 அறாஅலியர் 55 அறிந்தனை 71 அறியலை 63 அறியா 15,19,20,23,24,25, 43,44,45,52,58,63, 68,79 அறியாது 15,21,24,59,89 அறியாமை 15,ix அறியார் 72, 75, 84 அறியும் 89 அறிவினர் 22 அறிவு 57,71,72,74 அறு V அறுகை 44 அறுத்த 12,41,43,49,62,64 அறுத்தல் 81 அறுத்து 17,30,70,IV,V,VIII அறுப்பு 11,15,19 அறுபு 15 அறுவையர் 34 அறை 24,75,81 அறைந்து, க.வா. அறைநர் 19 அம்பு மிக உடைமை 22 அன்றியுங் 50 அன்று 16 அன்ன 66,72,90 அன்ன வாயின 19 அன்னோர் 42 அனைத்தும் 20 அனைய 45,79, 90 அனையள் 31 அனையேம் 63 அனையை 14,31,39,50,51,54 72,75,80,90 ஆ ஆ 21, 62, 77-8 ஆக்கிய VII ஆகம் 58,67 ஆகன்மாறு 38,54,80 ஆகியர் 39 ஆகெழு கொங்கர் 22 ஆங்கண் 23,56 ஆங்கு 11,26,53,64,73 ஆட 36,86 ஆடல் 56, 75 ஆடலன், க.வா. ஆடவர் 24,40,52,78 ஆடா 25-6, 71 ஆடி 45,55,III ஆடிய, க.வா. 13,25,26,40, 51,57,58 ஆடியல் 42 ஆடு 13,15,63,67,77 ஆடுக 58 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் VI ஆடுசிறை 43,62 ஆடுநடை 11, 44 ஆடுநடை யண்ணல் 86 ஆடுநர் 17, 90 ஆடும் 35,47,48,51,56,74 ஆடுறும் 24 ஆடூஉ 86 ஆண்கடன் 31 ஆண்ட 14,90,xI ஆண்டலை 25 ஆண்டு 44,48,VII ஆண்டோர் 69 ஆண் மலி யூபம் 67 ஆண்மை 90 ஆதர் 63 ஆநியம் 24,64,69 ஆம்பல் 13,19,23,27,62,63,71 ஆமான் 30 ஆய்ந்த 69,IX ஆய்ந்து 69 ஆய்மயிர் 90 ஆயம் 30,48,71,81,90 ஆயிடை 11,43,51 ஆயிரம் 21,63 ஆர் 81,90 ஆர்க்கும், க-வா. ஆர்கலி 43 ஆர்கை 62 ஆர்கையர் 27 ஆர்த்த 12 ஆர்ந 13 ஆர்ப்ப 21,67,82,89 ஆர்ப்பு 21,90 ஆர்பதம் 55 ஆர்வளம் 21 ஆர 30,35,37,43,67 ஆரம் 48 ஆரமார்பு 11 ஆரரண் 24,34,39,43,44,84 ஆரல் 13 ஆராச் செரு V ஆராத் திரு IV ஆரியர் 11,II ஆரிய வண்ணல் V ஆரிறை 82 ஆரெயில் 20,29,33,62, 71,84,88 ஆலி 50 ஆலும் 27,90 ஆவணம் 68 ஆவி VI ஆவுதி 21 ஆழி 77 ஆள்க VII ஆள்வது IV ஆளும் 65 ஆற்ற 23 ஆற்றல் 28,34,III,IV,V ஆற்றலை 14 ஆற்றி 84,90 ஆற்றுப்படை 49,60 ஆற்றும் 14 ஆறிய 90 ஆறு 13,24,53,59 ஆறு செல் வம்பலிர் 60 ஆன் 61,64,65,77,79,V ஆன்பயம் 71 ஆன் மலி மருங்கு 50 ஆன்ற 37,57 ஆன்றவிந் தடங்கல் 37 ஆனா 32,47,64 ஆனாது 21 ஆனார் 47 ஆனான் 47 இ இகந்து 13,15,22,29 இகல் 14,72,75 இகல்வினை 43 இகுப்ப 90 இகூஉ 40 இசை 50,55,57,64,67,70, 80,86,87,V,VII இசைக்கும் 81 இசைப்பு 27,90 இஞ்சி 16,42,58,62,68 இட்ட 30,85 இட்டு 46,88,90 இடந்தரீஇயர் 52 இடம் 12 இடறிய 65 இடனுடைப் பேரியாழ் 66 இடனுடை வளன் 32 இடனுடை வேள்வி Vii இடாஅ வேணி 24,81 இடித்து 41 இடியிசை 66 இடியுருமு 33 இடுக 79,80 இடு கழங்கு 32 இடுதோறு II இடுபு 45 இடும்பில் V இடூஉம் 54 இடை 66,79 இணர் க-வா. 30,51,67 இதழ் 30,40,48,52,64,78 இமயம் 11,43, II இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் II,III இமிரும் 50 இமிழ் கடல் II இமிழ்தல் 13,30,40,50 இமிழ்ந்து 23 இமிழ்பு 62 இமிழ் முரசு 40 இமிழா 26 இமிழிசை 50 இமைப்பு 45 இயங்க 13 இயம்ப 40 இயம்பும் 15 இயல் 18,40,42,49,74,78,89 இயல்வர 67,IX இயல்வினை 60 இயற்றிய 17,41,79 இயல 49,81,82,89 இயலறை 24 இயலாது 50 இயலி 78 இயலினள் 51 இயலுற்றாங்கு 31 இயவர் 17,19,27,78 இயறேர் 75 இயைந்து 41 இரக்கு 61 இரங்க 19,VII இரங்கல் 31 இரங்கான் 61 இரங்கும் 24,39,55,90 இரட்டும் க-வா.20 இரண்டு க-வா.21,41 இரந்தோர் 76 இரப்ப 52,VII இரப்போர் 52,76 இரலை 74 இரவலர் 40,54,57,61,79,81 இரவலன் 66 இரவன் மாக்கள் 59 இரவு 59,73 இரா 43 இரிய 29,50 இரீஇய 90 இருக்கை 24,30,42,65,85 இருங்கடல் III இருங்கண் 13 இருங்கண்மூரி 67 இருங்கதுப்பு 12 இருங்கமஞ்சூல் 11 இருங்களிற்றியானை 35 இருங்குட்டம் 88 இருங்கூந்தல் 74 இருஞ்சேறு 64 இருந்த 90 இருந்தலை 41 இருந்து 19,30,79 இருநிலம் 34,54 இருபத்தை ஆண்டு III,IV,VII இருபெருவேந்தர் VII இரும்பரப்பு 20,23,II இரும்பலி 30 இரும்பனம் புடையல் 41,57 இரும்பனை 43 இரும்பு 74 இரும்புவி 75 இரும்பே ரொக்கல் 12 இரும்பொறை IX இரும்போந்தை 51 இருமருப்பு 66 இருமுந்நீர் 20 இருவர் 63 இருவிசும்பு 81,90 இருள் க-வா. 18,22,31,59,90 இரை 32 இரைஇய 52 இல் 61,90 இல்லை 45 இல்லோர் 86 இலங்க 39 இலங்கு 11,51 இலங்கு கதிர் 60,61,69,76 இலங்குதல் 35 இலங்கு நீர் 21,30 இலங்கும் 14,56,85 இலங்கு மணி 39 இலங்குவன 78 இலங்கு வாண் மருப்பு 43 இலங்கெஃகு 66 இலவாக 79 இலன் 69,77 இலீஇயர் 20 இலை 15,58,61,63,69 இவ் 14,37 இவண் 54,71,IX இவணா 74 இவர்தல் 26 இவர்பு 15 இழிதந்தாங்கு 88 இழிதரும் 28,47,70 இழி 36 இழிய 36 இழியாத் திவவு 29 இழிவு 24 இழுமென 70 இழை 22,23,31,39,43,54,62, 64,65,68,73,81,88,V இழைத்த 31 இழைய 39 இழையர் 46 இழையா 39 இளஞ்சேரலிரும்பொறை IX இளந்துணை 57,70,71 இளம்பழையன் மாறன் IX இளம்பிறை க-வா. இளமுலை 54,65 இளை 28 இளைய 12 இளையர் 40.41,48,51,54,71 இறந்தன 73 இறாஅலியர் 40 இறுக்கும் 81 இறுத்த 12,13,31,33,68,70,74,81 இறுத்து 15,32,45,53,V இறுப்ப 81 இறுப்பு 81 இறும்பு 78 இறும்பூது 30,32,33 இறை 51,54,82,90 இறைகொண்டன்று 40 இறைகொளல் 30,51,70 இறைஞ்சிய 24 இன்களி 40 இன்குரல் 43 இன்பம் 90,IX இன்பலருவி V இன்பாயல் I I இன்புறுத்தினை 70 இன்மகிழ் 46 இன்மை 68 இன்றாகி 26 இன்று 22,58 இன்றோ 19 இன்ன 82 இன்னகை 16,18 இன்னாது 83 இன்னார் 68 இன்னிசை க-வா,40,55,57,IX இன்னியம் 26 இனந் திரிபல்லன V இனநிரை 12 இனம் 19,25,67,V இனி 40,45,52 இனிது 11,12,23,24,27,28,44,46, 48,49,58,65,83,84,VI இனிய 16 இனியவை 38 இனும் 63 இனைய 61 ஈ ஈகை 42,61 ஈகை வான்கழல் 38 ஈங்கு 88 ஈண்டி 72 ஈண்டிய 52 ஈண்டு 84 ஈத்தது 61 ஈத்தான்று 32 ஈத்து 15,III,VI,VII ஈத்தொறும் 61 ஈதல் 24,76 ஈம் 64 ஈய 19 ஈயலன 20 ஈயும் 48,81 ஈயென 52 ஈர்ஞ்சிறகு 12 ஈர்ப்ப IV ஈர்ம்படை 69,77 ஈரணி க-வா. ஈரம் 90 ஈரறிவு 74 ஈரிதழ் 52 ஈரைம்பதின்மர் 14 ஈரோதி 14 ஈன்ற 20,II,IV,V,VI,VII, VIII,IX உ உகக்கும் 69,77,78 உகள 89 உகளும் 23 உகு 56 உகுத்தல் 30 உகும் 51 உஞற்றும் 51 உட்கும் V உடலுநர் 88,90 உடம்பினர் 42 உடற்றிசினோர் 72 உடற்றிய 70 உடற்றியோர் 71,84 உடற்றும் 89,90 உடன்றனன் 52 உடன்று 26,56,84 உடன்றோர் 25 உடனிலை VIII உடை 13,14,41 உடைத்து 22,43 உடைதரும் 88 உடைதிரைப் பரப்பு 46 உடைநிலை 70 உடைமை 90 உடைய 11,17,42,57 உடையை 37 உடையோர் 74 உண்கண் 16 உண்குவமல்லேம் 58 உண்ட 20,40,45 உண்டு 15,22,23,36,43,48 உண்டென 43 உண்ணா 31 உண்ணாதும் 68 உண்பா 24 உண்மின் 18 உண்மை 40 உணங்கு 74 உணீஇய 21 உணீஇயர் 36,49 உதவி 81,90,II உதவுமின் 18 உதியஞ்சேரல் I I உதிர்த்த 71 உதிர்த்து 74 உதிர்ந்த 62 உம்பல் 22,90 உம்பற்காடு II,III,V உமிழ் 11,II உமிழ்ந்தன்ன 81 உமிழ்பு 39 உய்த்த 22,44 உய்தல் 23,84 உய்யும் 16,41 உயக்கம் 68,79 உயர்கமா - க.வா. உயர்த்து 24,33,56,76 உயர்தல் 23 உயர்ந்த 11,64,III உயர்ந்து 30,88 உயர்ந்தோர் 74,80,89 உயர்ந்தோன் 30 உயர்நிலை யுலகம் 52,54,70,89 உயர் பெருஞ்சிறப்பு IV உயர் மருப்பு 42 உயர 45 உயரவும் 52 உயிர் 15,18,20,24,79 உயிர்ப்ப 37 உரம் 28 உரல் 43 உரவர் 71 உரவு 61,90 உரவுக் கடல் 90 உரவுக் களிறு 88 உரவுத் திரை 50,72 உரவோர் 22,73,90 உரற 69 உரறிய 26 உரறும் 33 உராஅலின் 47 உரியள் 16 உரியோர் V உரு 15,21,34,36 உருகெழு ஞாயிறு 52 உருகெழு சிறப்பு 43,81 உருகெழு நெடுநகர் 88 உருகெழு மரபு 88,90 உருண்ட 77 உருத்த 50,52 உருத்து 71 உருத்துவரு மலிர்நிறை 28 உருத்தெழு வெள்ளம் 72,VII உருப்பு 50 உருபு 52 உரும் 25,39,90 உரும்பில் கூற்றம் 26 உருமு 33,63 உருமெறிவரை 84 உருமென 90 உருவச் செந்தினை 19 உருவாய் க-வா. உருவில் பேய் 67 உருள் பூங்கடம்பு IV உருளி 27 உரை 15,35,47 உரைஇ 40,71,80,84 உரைசால் சிறப்பு VIII உரைசால் நன்கலம் 54 உரைசால் வேள்வி 64,VII உரைப்ப 73 உரைப்பேன் 73 உலக்கை 24,29,41 உலகத்தோர் 15,37,38 உலகம் 14,31,37,50,52,54,59, 63,70,81,86,88,89 உலகு 42 உலவை யஞ்சினை 39 உவ்வரை 73 உவகை IX உவகையர் 20,23 உவந்து 79 உவப்ப 12,41,48 உவமம் 73 உவலை 28,85 உவா 79 உழந்த 12,41,48 உழவர் 30,90 உழவ 15,76 உழாஅது 13 உழிஞை 22,43,44,46,63 உழிஞையரவம் 69 உழிஞையன் 56 உழிதரும் 62 உழுத 75 உள் 74 உள்வழி 45 உள்ள VII உள்ளம் 13,23,36,55,63,72, VII உள்ளல் 16 உள்ளழித்தல் 20,45 உள்ளி 90 உள்ளியது 54 உள்ளுநர் 13 உள்ளுவர் 51 உளர் 45 உளை 20,22,41,65,88 உளைய 34 உற்ற 41,50 உற்று 74 உற 53,90,VII உறல் 96 உறழ்தல் 21,23,52,58,68,69, III உறழ்ந்து 16 உறழ்பு 25 உறீஇ 44 உறு 75,78 உறுக்கும் 76 உறுகால் 88 உறுகிளை 71 உறுகுருதி 86 உறுத்தினை 70 உறுத்து 25 உறுப்ப 82 உறுப்பு 65 உறுபுலி V உறுமுரண் 64,66 உறுவர் 43 உறூஉம் 17,72 உறை 14,19,66,68,71 உறைதல் 51 உறைந்து 72 உறையும் 15,19,23,70 உறையுள் 28,68,89 உன்னம் 23,40,61 ஊ ஊக்கத்தார் 68 ஊக்கலை 11 ஊக்கு 31 ஊக்குநர் 13,71 ஊங்கு 29 ஊசல் 43 ஊசி 42,70 ஊட்டிய க.வா. ஊடு 16 ஊதிய 67 ஊதை 51,60 ஊர் 19,67,71,85,90,11,II,IV,IX ஊர்தர 90 ஊர்ந்த 41 ஊர்ந்தாங்கு 11 ஊர்ந்து 13,34,42 ஊர்பாடு 46 ஊர்முகம் 40 ஊரலந்தித்தி 60 ஊழ் IV ஊழி 21,22,63,71,89,90 ஊறிய 13,22 ஊறு 51,74 ஊன் 12,30,74 ஊன்றுவை யடிசில் 45,V ஊனம் 21,24,67 எ எஃகம் 11,19,24,33,90 எஃகாடூனம் 67 எஃகு 12,24,45,52,62,64,66,76 எஃகுடை யிரும்பு 74 எஃகுடை வலத்தார் 51 எஃகு மீன் 50 எங்கோ 20,61 எச்சம் 74 எஞ்சாது 15 எஞ்சாமை 90 எஞ்சி 61 எஞ்சிய 34,67,74 எடுக்கும் 30 எடுத்த 16,63,88 எடுத்து 39,80 எடுத்தேறு 41,84 எடுப்பும் 50 எண்ணல் 77,IX எண்ணாது 52,84 எண்ணி 71 எண்ணியல் 74 எண்ணின்று 69,77 எண்ணுதல் 32,42,46,73 எண்ணுமுறை 43 எண்ணுவரம்பு 84 எண்பூங்குவளையர் 58 எதிர்கொள்வன் 57 எதிர்கொளல் 18,79 எதிர்தல் 23,42 எதிர்த்த 22 எதிர்ந்த 15 எதிர்ந்து 59,81,83 எதிர்ந்தோன் 80 எதிர்நின்று 80 எதிர்வர 42 எதிர 69 எதிரார் 72 எந்திரத் தகைப்பு 53 எந்திரம் 19 எமர் 20 எய்தி 20 எய்திய 45,88,VII எய்தினர் 52 எயில் க-வா. 20,25,37,38,52, 53,58,62,71,84,IX எயின்முகம் 53 எரி க-வா. 15,48,71 எரித்தல் 48 எரு 13 எருக்கி 33 எருத்தம் 11,79 எருத்து 12,36,39 எருது 27 எருமை 13 எருவை 36,67 எல் 19,27 எல்லாம் 32,VII,VII எல்லாருள்ளும் 38 எல்லி 19 எல்லை 43 எல்வளை 27 எவ்வம் 21 எவன் 50 எழ 34,43 எழாஅத் துணைத்தோள் 90 எழாஅல் 36 எழில் க-வா,48,53,58,67,68 எழிலி 18,20 எழிலிய 15,23,31,65 எழிற்கை க-வா. எழினலம் 40 எழீஇ 29 எழு 45 எழுதரும் 52,53,62,66,73,83,84 எழுதி 68 எழுதொறும் 21 எழுந்த 24,41 எழுந்தாங்கு 84 எழுந்து 19,31,71,84 எழுமுடி 14,16,40,45 எழுமுடி கெழீஇய திருஞெம ரகலம் 40 எழூஉ 31,53 எள்ளு க-வா. எளிதினின் 48 எறி 58 எறிக 18 எறிந்த 22,28,29,42,80,VIII எறிந்து 37,39,45,51,68,69,90, III,V,VIII,IX எறி பிணம் 65 எறியர் 52 எறியார் 31 எறியுநர் 31 எறியும் 30 எறும்பு 30 எறுழ்த்தோள் 80 என்ப 58,66 என்றல் 53,86 என்றனர் 63 என்றனிர் 77 என்றும் 15,43 என்னா 45 என்னாது 44 என்னார் 39,46 எனை 77 எனையதூஉம் 53 ஏ ஏஎய் 11 ஏஎர் 26 ஏண் 44 ஏணி 24,43,45,54 ஏத்த 20,37,42,89 ஏத்தல் VII ஏந்தி 24 ஏந்திய 30,42 ஏந்துகை 53 ஏந்துகோட்டல்குல் 18 ஏந்தெழில் 54,58 ஏமம் 11,15,90 ஏம வாழ்க்கை 68,VII ஏய்ப்ப 66 ஏய 41,84 ஏர் 43,76 ஏர்பு 24,31 ஏராளர் 76 ஏரும் க-வா. ஏவல 24,38,39,40,54 ஏவலாடவர் 24 ஏ விளங்கு தடக்கை 58,VI ஏற்கும் க-வா. ஏற்ப 64 ஏற்றல் 24 ஏற்றுமின் 18 ஏறாஅ வேணி 43 ஏறி 27,VII ஏறு 13,23,38,71,84,89,90 ஏறும் 16 ஏனல் 30 ஏனை VI ஐ ஐஞ்ஞூறு II ஐந்து 14,21,24 ஐந்தெயில் IX ஐம்பத்தெட்டு II ஐம்பத்தையாண்டு V ஐம்பால் 18 ஐயம் 21 ஐயர் 70 ஐயவி 16,22 ஒ ஒக்கல் 12,64,67 ஒகந்தூர் VII ஒடியா 15 ஒடியாது 74 ஒடிவு 80 ஒடுங்கா 31 ஒடுங்கிய 19,45 ஒடுங்கீரோதி 74,81 ஒண்டொடி 90 ஒண்ணுதல் 30,31,48,57,81 ஒண் பொரி 19,30,34,40 ஒண்மை 70 ஒதுங்கா 80 ஒதுங்கி 57 ஒய்யும் 73,87 ஒராஅ 72 ஒராஅலின் 23 ஒராங்கு 31 ஒரீஇ 13,76 ஒரீஇய 15,64 ஒரீஇயன 21 ஒரு VII,63,73 ஒருங்கு 10,31,IV ஒருங்குடன் 41 ஒருநாள் 81 ஒரு பெருவேந்து 34 ஒரு மூன்று 50 ஒரூஉப 34 ஒல்கினள் 51 ஒல்குவனர் 78 ஒல்லா 62 ஒல்லார் 54 ஒல்லாள் 52 ஒலி 13,21,40,50,84 ஒலித்தலை 22 ஒலித்தாங்கு 68 ஒலித்த 31 ஒலிப்ப 23,31,58 ஒலிவரும் 18 ஒழித்து 72 ஒழிந்த 86 ஒழிந்து 79 ஒழிய 77 ஒழியாது 30,88 ஒழுக்கும் 74 ஒழுக 24,36,49,89 ஒழுகி 24 ஒழுகிய 15 ஒழுகும் 24,50,59 ஒழுகுவண்ணம் 11,50,51,69,70 71,80,81 ஒழுகை V,44 ஒள்ளிழை 13 ஒள்வாள் 55,61,63,80 ஒள்வா ளமலை 56 ஒள்விலை 75 ஒள்ளழல் 25,62 ஒள்ளிசை VII ஒள்ளிதழ் 52 ஒளி 64 ஒளித்த 44 ஒளிப்ப 43 ஒளிறு 76,81,90 ஒளிறு கொடி 25,81 ஒளிறு நிலை 41 ஒளிறும் 24 ஒற்றல் 25 ஒன்பதின்மர் V ஒன்பது III,VI,VII ஒன்று 32,41,84 ஒன்றுமொழி 49 ஒன்று மொழிந்து 15,30,66 ஒன்றுமொழி மறவர் 41 ஒன்னாத் தெவ்வர் 53 ஒன்னாப் பூட்கை 85 ஒன்னார் 20,40,50,66,88 ஓ ஓக்கிய 53 ஓங்கல் 55 ஓங்கி 20 ஓங்கிய 23,30,53 ஓங்குநிலை 22 ஓங்கு புகழ் 20 ஓங்கு புகழோய் 90 ஓங்கும் 30 ஓங்குவரல் 88 ஓச்ச 19 ஓச்சம் 41 ஓச்சி 45 ஓச்சிய 77 ஓட்டி 44,88,VI,VII ஓட்டிய 25,46,63,V ஓடா 45,57 ஓடாது 13 ஓடாப் பூட்கை 34 ஓடி 49 ஓடு 78 ஓடை 11,34 ஓதல் 24 ஓதி 74,81 ஓப்பும் 12,29,62 ஓம்பல் 35 ஓம்பா 42 ஓம்பாது 20,43,44 ஓம்பி 13 ஓம்பில 11,53 ஓம்பினர் 72 ஓய்தகை 60 ஓர் VI,90 ஓராங்கு 69 ஓவம் 61,88 ஓவு 68 க கங்கை V கசடில் நெஞ்சம் 44 கட்டளை 81 கட்டி 74,81,90 கட்டில் 79,VII கட்டூர் 68,90 கடக்கும் 29,34 கடந்த 24,46,52,65,86 கடந்து 11,14,20,36,41,42,44,45, 50,58,70,VII கடம் 66 கடம்பு 11,12,17,21,88,IV கடம்பு முதல் 20 கடல 41,45,46,48,51,67-9,88 90,V கடல்சேர் கானல் 51 கடல் 15,30,50,59 கடலொலி 21,I கடவுட்பத்தினி V கடவும் 45-6,68 கடவுள் 13,21,30,31,41,43,65-6, 70,79,88, க-வா கடறு 30,53 கடன் 20,59,70,74 கடனறி மரபு 67 கடாஅம் 16,25,53,82 கடாஅய் 30 கடா அயானை 20 கடாவா 70 கடி 11 கடிது 80 கடிந்து 19 கடிப்பு 17,40,68,76 கடிப்புடை யதிர் 84 கடிப்புடை வலத்தார் 19 கடிப்புடை வியன்கண் 41 கடிமரம் 32 கடிமிளை 20,22 கடிமுதல் 40 கடிமுனை 39 கடிய 29,69 கடியேர் 43 கடியை 51 கடுக்கும் 52,66,74 கடுக்கை 43 கடுகிய 72 கடுங்கண் யானை 25 கடுங்கால் 17,25 கடுங்குரல் 30,69 கடுஞ்சிலை 68,81 கடுஞ்சினம் 11,12,16,20,30,39, 70,82,83 கடுந்தார் 32,36,49 கடுந்திறல் 62 கடுந்தூ 90 கடுந்தேறு 71 கடுநெறி 19,25,26 கடுப்ப 67,76 கடும்பசி 23 கடும்பரி 25,80 கடும்பறைத் தும்பி 67 கடும்பிசிர் 41 கடும்புரவி 41 கடுமா 27,41,81 கடுமுரண் 78 கடுமை 22 கடைஇய 31 கடை யறிதல் 21,89 கண் 17,19,20,21,29,41,50-4, 57,66-7,71,79,84,VII கண்டன்ன 16,35 கண்டனம் 23,49,57 கண்டனென் 76 கண்டனையேம் 63 கண்டி 43 கண்டிகும் 11,24,43,65,84 கண்ணகன் வைப்பு 59,III கண் ணஞ்சலை 63 கண்ணி 20,21,27,30,38,40, 51,52,54,56,58,59,81,IV கண்ணிய 58 கண்ணியர் 67 கண்ணுளர் 20 கண்பனி 26 கண் பெயர்த்து 19 கண் பொருதிகிரி 31 கண் மாறாது 21 கணங்கொளல் 80 கணநிரை 39 கணம் 50 கணமழை 17 கணவன் 14,24,38,42,55,61,65 70,88,90 கணிச்சி 22 கணை 45,51,V கணைதுஞ்சு விலங்கல் 16 கதவம் 31,45 கதழ்தொடை 27 கதழ்வு 25,80 கதழுறை 50 கதிர் 16,52,58,59,66,67,69,76 கதிர்மணி 21 கதுப்பு 14,81 கதுமென 27,52 கதுவாய் 45 கந்து 69 கபிலர் VII,85 கபிலை VI கம்பலை 27 கமஞ்சூல் 11,24,45,81 கமழ்குரல் 31 கமழ்தல் 21,63 கமழ்புகை 71 கமழ 51 கமழும் 12,21,55,70 கயம் 42 கயிறு 71 கயிறு குறு முகவை 22,III கரம்பை 28,75 கரணம் V கரந்த 14,81 கரந்தை 40 கரம்பை 28,75 கரு 74 கருங்கட் காக்கை 30 கருங்கட் பேய்மகள் 30 கருங்கண் 22 கருங் களிற்றியானை III கருஞ்சிறை 49 கருஞ்சினை வேம்பு V கருதல் 33 கரும்பமல் கழனி 50 கரும் பாசவர் 67 கரும்பு 13,30,75,87 கருவி 24,31,51,76 கருவிய 17,81,88 கரை 23,28,43,V கரை கெழு பெருந்துறை 30 கரைந்து 64 கரைய 23 கரைவாய்ப் பருதி 46,V கல் 70,84,88 கல் கால் கவணை 88,IX கல்ல 15 கல் பிறங்கு வைப்பு 53 கல்லகம் IX கல்லா வாய்மையன் 48 கல்லுடை நெறி 19 கல்லுயர்கடம் 21 கல்லுயர்நெறி 67 கல்லென 31 கல் லோங்குவரை 43 கலங்க 33,46,51 கலஞ் செலச் சுரத்தல் 44 கலப்பையர் 15,23,41 கலம் 18,23,52-3,64,67,71,74 83,87,90 கலவை 11 கலன் VI,VIII கலி 13 கலிகெழு துணங்கை 13 கலிங்கம் 76 கலித்த 15 கலிமகிழ் 15,43,61,81 கலிமா 38,42 கலியழிமூதூர் 26 கலிழும் 24 கலுழி 50 கவடு 23 கவணை 88 கவர் 12,15,19,49,57,84 கவர்காற் கூளியர் 19 கவர்கிளை 84 கவர 74 கவரி 11,43,90 கவரும் 32,47 கவலை 22,44,67,85 கவலைய 74 கவற்ற 67 கவற்றும் 44 கவிதல் 52 கவிர் 11 கவின் 13,23,27,43,48 கவைத்தலை 13 கவை மரம் 74 கழங்கு 15 கழல் 30,31,37,38,42,57,70 கழல்கட் கூகை 22 கழல்கண் 64 கழற்கால் 19,27,30,34,80 கழல்தொடி @@22 கழற்கால் 19,27,30,34,80 கழறி 81 கழனி 13,23,32,50,90 கழி 64 கழிகண்ணோட்டம் 22 கழித்த 24,V கழிந்த 41,V கழிந்து 44 கழிந்தோர் 90 கழிப்ப 19 கழிப்பி 76 கழிய 22,55,68 கழியும் 50 கழுது 13 கழுதை 25 கழுவுள் 71,88 கழுவுறு கலிங்கம் 76 கழை 32,41,73,86 கழை யமல் கழனி 32 கள் 12,18,21,43,68 கள்ளுடை நியமம் 75 களங்கனி - க-வா. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 38,VI களம் 40,43,57,77,86 களனறு குப்பை 62 களி 40 களிற்றினம் 67 களிற்றியானை 46,71,80,III 35,79 களிறு 11,14,15,20,22,26,33,41 42,44,45,47,49,52,53,61,64, 66,70,75,81,83,84,90 களிறுடைப் பெருஞ்சமம் 76 களைக 44 களைந்த 12 களைந்து 74 களைநர் 40 களைய 44 களையார் 73 களவு 19 கற்கோள் V கற்ப 43,80,90 கற்பு 16,31,65,70,89 கற்று 90 கறங்க 21,90 கறங்கிசை 58 கறுத்த 26,32,39 கறுத்தோர் 72 கறையடி 27 கன்மிசை 50 கன்று 12,V கன்றுடை யாயம் 71 கனல்சினம் 43 கனவு 19,20,44,79,89 கனவும் 11 கனி க-வா. கனை 14 கனையெரி 48 கா கா 27,41,VI காக்கும் 45,78,V காசு V காஞ்சி 48,62,65,84,90 காஞ்சியம் பெருந்துறை 48 காட்சி வாழ்த்து 41,90 காட்ட 30 காட்டி VII காடு க-வா. III,13,30,40, 44,82 காடுறு கடுநெறி 26 காண் 69 காண்கு 16,41,54,64,82,88,90 காண்குவல் 73 காண்டல் 12,53,54,64 காண்வர 89 காணம் VI,VII,VIII,IX காணாது 17 காணிய 81 காணியர் 42,44,60 காணிலியர் 44 காணுநர் 19 காணுமோர் 83 காணூஉ 30 காத்த IX காந்தள் 15,21,67 காந்தளங்கண்ணி 81 காப்ப 72 காப்பியனார் IV காப்பியாறு IV காமம் 22 காமர் 65 காமரு கவின் 27 காய்த்த 40 காய்த்திய 82 கார் 13,81,83 கார்மலர் 21 கார்மழை 80,84 கார்விரி கூந்தல் 43 கால் 15,19,25,30,33,34,41, 51,63,68,84,88 கால் கிளர்ந்தன்ன 80 கால்கொளல் 76 கால்வல் புரவி 88 காலக்கடவுள் க-வா. காலம் 30 காலன் 39 காலுதல் 88 காலுளைக் கடும்பிசிர் 41 காலுறுகடல் 69 காலை 19,21,23,63,78,81,84 காலையது 26 காவல் 31,72,74 காவற்புறம் IX காவிரி 50,73,90 காழ் 53,69,90 கான் 30,V கான்மயங்குறை 50 கானம் 58,88,89,V கானல் 30,51 கானலம் பெருந்துறை 55 கானவில் தானம் V கி கிடங்கு 20,22,62 கிண்கிணி 52 கிழக்கு 36 கிழங்கு 89 கிழவோன் 54,58,66,76,88,90 கிழித்த 51 கிள்ளி V கிளந்த 63 கிளை 35,49,71,74,84 கிளைத்த 71 கீ கீழ்ப்பணிந்து 75 கு குஞ்சரம் IV,V குஞ்சர வொழுகை V குட்டம் 86,88 குட்டுவர் 90 குட்டுவன் 22,23,29,42,43,46, 47,90,III,V குடக்கோ VI,IX குடகடல் 51 குடதிசை 22 குடநாடு VI குடபுலம் 51,I குடவர் 55,V குடி 13,37,59,84,VI,31-2 குடி திருத்தல் 31 குடி புறந்தருநர் 13 குடுமி 36 குடை 52,VIII குடைச்சூல் 57,68,90 குண்டு 20,22,71 குண்டுகண்ணகழி 45,53,VI குணகடல் 51 குணமுதல் 22,59 குப்பை 62 குமட்டூர் கண்ணனார் I I குமரி 11,43 குய் 21 குரல் 22,30,41,43,57,68-9,70,84,V குரவை 52,73 குரவை நிலை 52 குரால் 44 குருகு 30,35,83 குருசில் 24,32,53,55,72,88 குருதிச் செம்புனல் IV குரூஉப் பிசிர் 42 குரூஉப்பு கை 15 குரை 84 குரைத்தொடி 24 குரையை 24 குலை 24,66 குலைஇ 88 குலையறுத்து 79 குவவு 84,88,90 குவளை 27,52 குவளையர் 58 குவித்தாங்கு 71 குவிமுகி ழூசி 70 குவியற் கண்ணி 21 குவியிணர் 51 குழவி VI குழறு 22 குழாஅம் 16 குழாஅல் 29 குழாத்தர் 39 குழூஉ 41,66 குழூஉக் கடல் 31 குழூஉச் சமம் 65 குழூஉச் சிறை 67 குழூஉ நிலை 49 குழூஉநிலைப் புதவு 53 குழை 31,81,86 குழைந்த 79 குழையர் 46 குளம்பு 65 குளவி 12 குளவிய 30 குறங்கு, க-வா. குறாஅது 23 குறுந்தாண்ஞாயில் 71,VIII குறுந்தாள் 71 குறும்பல்யாணர் 73 குறும்பொறை 74 குறைபடாமை 90 குறையா 82 குறையாது 88 குறையுற்று 59 குன்றம் 27,51 குன்று 12,30,31,43,63,78, 88,VII கூ கூஉம் 22 கூகை 22,44 கூட்டம் 72,88 கூட்டு 40 கூட்டும் 74 கூடல் 50 கூடிய 50 கூடு 27,41,71 கூந்தல் 18,21,31,43,50,54, 89,90,II,V கூந்தல் விறலியர் 18 கூர்ந்து 23 கூர 20,43 கூரா 71,85 கூலம் 13,19,89 கூவல் 51 கூழ் 90 கூழுடை நல்லில் 90 கூளியர் 17,36 கூற்றம் 26,51,84 கூற்று 13,14 கூற 26 கூறி 58 கூறினை 74 கூறு 39 கூறும் 16 கூறேன் 61 கெ கெட 21,23,32-3,53,64,83 கெடலருந் தானை V கெடலரும் புகழ் 48 கெடாஅ 14,84 கெடு குடி 69 கெடுத்து 15,70 கெழீஇ 63 கெழீஇய 14,16,40 கெழு 21,22,34,36,51,52,57, 61,81 கெழும 89 கே கேட்டல் 11 கேட்டிகும் 52 கேட்டு 74 கேட்டொறும் 12 கேட்ப 90 கேடில வாக 79 கேள் 44 கேள்வி 70,III,VII,IX, 64,74 கேளா 70 கை கை 30-1,36,43,46,51,52-3 58,61-2,82-3,86 கைக்கொண்டு 55 கைகடுந்துப்பு 15 கைகவர் கடுந்தார் 49 கைதண்டாமை 15 கைபிற்கொள்வித்தல் I I கை புடைத்து 19 கை புடையூஉ 26 கையது 57 கையதை 52 கையர் 62 கையலை 51 கையுறல் 24 கைவண்மை 14,72 கைவல் பாணன் 67 கைவ லிளையர் 41,48,51 கைவிடல் 81 கொ கொக்கு 21 கொங்கர் 22,69,88,90 கொட்கும் 17 கொட்ட 30 கொட்ப 48,81 கொட்பு 42 கொடி 15,25,40,43-4,49,52-3, 56,67-9,81,82-4,88 கொடித்தேர் 33,55,73 கொடிநுடங்கு தெரு 47 கொடு VII கொடுக்க IX கொடுக்கும் 30,75 கொடுகூர் V கொடுங்குழை 14,81 கொடுங்கணிஞ்சி 16 கொடுத்தான் IV,V,VII கொடுத்து IV,Vi,IX கொடுப்ப 53,VIII கொடுப்பித்து VI கொடுமணம் 67,74 கொடுமிடல் 32 கொடை 79 கொடைக்கடன் 20 கொண்ட 18,21,31,35,52,62 கொண்டல் 24 கொண்டன்று 40 கொண்டான் VI கொண்டி 43,63 கொண்டு 11,21,30,31,36,43-4,54,63,68,71,74 கொண்மின் VIII கொய்சுவல் 62,64 கொய்யும் 29 கொய்வாள் 19 கொல் 19,73 கொல்களிறு 43,46,50,52,79,83 கொல்படை 58,67 கொல்பிடி 50 கொல்புனல் 52 கொல்ல 73 கொல்லி 81 கொல்லிக்கூற்றம் VIII கொல்லுபு 16 கொலக்கொல 81 கொலைவில் வேட்டுவர் 30 கொலைவினை 60 கொழு 44,58 கொழுங்குறை 12,21 கொழும்பல் யானை 90 கொழுமீன் 29 கொள்கை 15,37,57,64,70, 85,VI கொள்கையர் 69 கொள்வன் 57 கொள்வார் VI கொள்ளாப் பாடல் 48 கொள்ளா மைந்தினர் 81 கொள்ளுடைக் கரம்பை 75 கொள்ளுநர் 31 கொள்ளுநை 16 கொள்ளும் 14 கொள்ளை 19,81 கொள 81,90 கொளக் கொள 82,88 கொளால் 16 கொளீஇ 12,II கொளை 30,43 கொளைவல் வாழ்க்கை 49 கொற்றத்திரு 90 கொற்றம் 59,64,88 கொற்றவ 55 கொற்றவன் 32 கொற்ற வேந்து 62,69 கொன் 32 கொன்று 11,30,40,66-7,75-7,86 கொன்றை க-வா. 67 கோ கோ 20,21,55-6,61,63,84,88, 90,V கோட்படுதல் VI கோடா 20,22 கோடாக் கொள்கை 37 கோடியர் 42,56 கோடு 16,18,30,37,50,51,68 79,85,VII கோடுதொறும் 70 கோடு நரல் பௌவம் 46 கோடை 27 கோத்திரம் VII கோதை 49,52,79,88 கோமான் 57,58,67,IV,V கோயில் VIII கோயிலாள் VIII கோல் 43,79,89,II,III கோலம் 29 கோலிய 39 கோவலர் 21 கோள் 14,72 கோள் வன் முதலை 53 கோளீயாது 69 ச சடையன் க-வா. சந்தம் 87 சமம் 41,52,66,70,76 சவட்டும் 84 சா சாகாட்டாளர் 27 சாகாடு 27 சாடி 69 சாந்தம் 88 சாந்தி IX சாந்து 42,48,50,61,80,86 சாபம் 24,90 சாய்த்து 90 சாய 32, 40 சாயல் 16,48,70,86 சாயலன் 86 சாயறல் 74 சாயன்மார்பு 16 சாயினம் 60 சாரல் 12 சால் 31,55,59,II,III சால்பு 31,74,82 சாறு 65, 72, 81 சான்ற 13, 59, 61-2, 65, 73, 75,79, 84, 86, 90, VIII சான்றன 35 சான்று 24,51,70 சான்றோர் 14,55,58,67, 72-3,82, II சி சிதடி 23, 58 சிதர் 76 சிதறி 37, 43 சிதாஅர் 12 சிதை 15 சிதைத்த 64 சிதைந்த 69 சிதைந்தது 27 சிதைந்து 67 சிதைய 38 சிரந்தை க-வா. சிரல் 42 சிரறு 22, 74 சில்லேராளர் 76 சில்வளை 57 சில்வளை விறலி 40,57,VI சில 22,52 சிலம்ப 41 சிலம்பி 39 சிலம்பு 11,40 சிலை 43, 45, 63, 68 சிலைப்ப 49, 54,90 சிலைப்பு 52 சிலையுடை மறவர் 60 சிவந்த 15,24,68 சிவந்தனை 27 சிவந்து 13 சிவப்ப 57 சிறகு 25 சிறந்த 31 சிறந்து 21,25,43,67,71,81 சிறப்ப 40,88 சிறப்பு 11,21,37,43,50,81,89,II சிறியிலை 58,63,VI சிறியோர் 79 சிறுகுடி 59 சிறுகுரல் V சிறு செங்குவளை 52, VI சிறுதுயில் 50 சிறு பரடு 52 சிறுபுறம் VII சிறுமகிழ் 19, 23 சிறுமை 26 சிறை 23,29,43,62,64,67 சிறைகொள் பூசல் 30 சினங்கெழு குரிசில் 53,72 சினப்போர் 77,80 சினம் 22,43,55,59, 66,69,82,83,88 சினை 30,39,41,51,89,V சீ சீர் 21,28,39 சீர்கெழு விழவு 15 சீர்சால் வாய்மொழி 21 சீர்சால் வெள்ளி 24 சீர்த்தி 41 சீர்பெறு கலிமகிழ் 15 சீருடைப் பகடு 58 சீற்றம் 15,51 சீறடி 52 சீறி 63 சீறிய 26 சீறினை 63 சு சுடர் 21,25,40,47,52,62,69,72 சுடர்சினம் 43 சுடர்நுதல் 16,51,70 சுடர்படை க-வா. சுடர் வர 16,24,81 சுடர்வரும் 80 சுடர்விடு தோற்றம் 74 சுடர்வீ 40, 41,87 சுடர்வீ வேங்கை V சுடர 88-9 சுடரிழை 81 சுடரும் 5 சுடு கனையெரி 48 சுடுபுகை 43 சுமந்து 31,36,52,87-8 சுரத்தல் 44,46 சுரந்து 21,42 சுரப்ப 89 சுரம் 46,59 சுரன் 19 சுரியல் 27 சுருக்கி 41, VI சுருட்டி 53 சுரும்பு 81 சுரை 15,47,90 சுவர் 68 சுவர்க்கம் III சுவல் 62,64 சுவை 60 சுற்ற 70 சுற்றம் 12,15,19,40,42,48,70 சுனை 85 சூ சூட்டி 48,65 சூடாது 42 சூடா நறவு 85 சூடி 28,63,76,88 சூடு 74 சூர் 11,67 சூர்நிகழ்ந்தற்று 31 சூல் 45,68,81,90 சூலம் க-வா. சூழாது 21,72 செ செங்களம் 19, IV செங்குட்டுவன் V செங்குணக்கு 50 செங்கை 49 செங்கை மறவர் 49, V செங்கோடு 30 செங்கோல் IX செஞ்சுடர் 35, 72 செத்தனென் 86 செத்து 41,90 செந்நா 58,79,85 செந்நெல் 71,75,89 செந்தினை 19 செந்துறைப் பாடாண்பாட்டு 11, 55,70,79 செந்தூக்கு 11,41,50,52,58, 62, 66, 68-71,80-1, 90 செப்ப 82 செப்பி 62 செம்பரல் 66 செம்புனல் 30,87, IV செம்மல் 30,70 செம்மறு 65 செம்மீன் 31 செம்மை 32,74,82 செய் 44,73 செய்குவை 36 செய்த 63 செய்து 49,84 செய்ம்மார் 54 செய்யுள் V, VI செயல் 85 செயலமை கண்ணி 38 செயிர் 51 செயிர்தீர் செம்மல் 37 செரு 14,36,39,55,63,67,84,89,90, V, VI, VII செருக்களம் 86 செருக்கி 49 செருக்கு 70 செருப்பு 21 செருப்புகன் மறவர் 30 செருப்புகன் முன்பன் 74 செருமிகு முன்பு 36 செருவம் 51,79 செல்கு 76 செல்குவர் 46 செல்சமம் 82 செல்படை 41 செல்லாது 54,81 செல்லாமோ 60 செல்லாயோ 40 செல்லும் 39,66 செல்லுறழ் தடக்கை 52 செல்லுறழ்மறவர் 58 செல்வக்கடுங்கோவாழியாதன் 63, VII, VIII செல்வக்கோமான் 67 செல்வம் 11,12,31,50 செல்வர் 38, 59, 82 செல்வன் 31,59, 65, 73 செல்வி 31 செல 59 செலல் 43,67 செலவு 69,83 செவ்வரி 23 செவ்வா யெஃகம் 11,33 செவ்விது 22 செவ்விரல் 68 செவ்வுளை 34 செவ்வுளைக் கலிமா 38 செவ்வூன் 55 செழுங்குடி 81 செழுங்கூடு 71 செழுநகர் 21 செழும் பஃறாரம் 88 செழும் பல்வைப்பு 30 செழும்பல 90 செழுவளம் 26 செற்றோர் 82 செறித்து 46, 63 செறு 13,19,27,46,62,71,VI செறுக்குநர் 22 செறுநர் 82 செறுவினை மகளிர் 71 சென்மதி 52 சென்மோ 86 சென்று 20,32,55,73,79,IX சென்னி 27,41,82 சென்னிய 25 சென்னியர் 62,85 சே சேஎர் 41 சேக்கும் 51,66 சேட்சிமை 88 சேட்புலம் 61 சேண் 22,65,69 சேணன் 44,88 சேம்பு 24 சேய் விரி வனப்பு 73 சேயிழை 43,65,88 சேர்த்தி 29,62 சேர்ந்த க-வா.25 சேர்ந்து 88 சேர்ந்தோர் 42,65 சேர்பு 40,43,72,84 சேர 84 சேரல் 45, IV சேரலர் 89,63 சேரலாதன் 11,15,18,IV சேராதோர் 59 சேருகம் 48 சேவடி 31 சேவல் 35,36 சேறு 60,64,65 சேணை 59 சொ சொரிசுரை 47 சொரிந்தன 76 சொரிந்தாங்கு 43 சொல் 21,40,43,63 சொற்சீர்வண்ணம்14,50,69, 71,90 சொன்றி 24 சோ சோலை 81 சோழர் V சோழர்மணக்கிள்ளி V சோற்றுக்குன்று 87 சோறு 18 ஞ ஞரல 30 ஞரலும் 51 ஞாட்பு 45 ஞாயில் 30,51,71 ஞாயிறு14,17,22,52,59, 62,64,72,88 ஞாலம் 13,15,18,24,31,69 ஞாழல் 30,51 ஞிமிறு 50,89 ஞெகிழ 68 ஞெமர்தல் 14,16,31,40 ஞெமர 72 த தகடூர் 78, VIII தகரம் 89 தகை 41,60,71,II தகைத்த 22,28,41,55 தகைப்பு 24,53,64,66 தகையன் க-வா. தசும்பு 43 தசும்பு துளங்கிருக்கை 42, V தடக்கை 14,51,52,58,86,88,90 தடக்கையர் 62 தடந்தாள் 29,32,51 தடிதல் 36 தடிந்த 11,12,20,40 தடிந்து 44, IV தடிபு 36 தடுக்கும் 60 தடுப்ப 40 தடைஇய 54 தண்கடல் 51,55,58 தண்கமழ் கோதை 88 தண்சாயல் 86 தண்டமிழ் 63 தண்டளி 24,31,76 தண்டா 15,76 தண்டாது 60 தண்டாரணியம் VI தண்டுடை வலத்தர் 41 தண்ணியல் 18,20 தண்ணுமை 51,84,90 தண்ணென 89 தண்பணை 22,90 தண்பல 42 தண் பனம்போந்தை 70 தண்புனல் 90 தணிந்த 55 தணிமோ 59 தணிய 69 தத்தம் 48,75 ததைதல் 11 ததைந்த 23,30,70 ததைய 34,43,66,75 தந்த 38,66 தந்து 55,90,II,VI,VIII,IX தந்தை VII தப்பின்று 18 தப்புநர் 16 தப 11,54,65 தபு 44 தபுக்கும் 51 தபுத்த 78,88 தபுத்து 13 தபுந 32 தம்பி III தம்மென 85 தமிழகம் 11 தயங்குதல் 68 தர 40,61 தராஅர் 71 தரீஇ 37,42,53,71,85 தரீஇயர் 52,53,58 தருகென 38 தருப 59,62 தரூஉம் 21,59,83-4 தலை 35,44,67 தலைஇ 17,84 தலைஇய 15, 31 தலைக்கை 52 தலைக்கொண்ட 40 தலைச்சென்று 20,36 தலைத்தலை 88 தலைத்து 31 தலை பனிப்ப 11 தலைப்பெய்து II தலைப்பெயர 15 தலை மடங்க 71 தலைமணந்து 31 தலைமயங்கிய 38,90 தலைமிகுத்த 14 தலையாது 18,20 தலைவன் 24 தவம் 74 தவழ்தல் 73 தவழ்பு 15 தவழும் 51 தவாஅ 41 தவாஅலியர் 14 தழங்குரல் 30,68 தழிஞ்சி 57 தழீஇ 21,75,III,IV தழூஉ 51 தழை 53 தளர்க்கும் 63 தளி 24,43,76 தளிர் 52 தனிதனி 38 தா தா 20,38 தாங்க 49,81 தாங்கருந்தானை 90 தாங்கல் 53 தாங்காது 43 தாங்கி 26 தாங்கிய 59,66,71 தாங்குநர் 51,55 தாது 13 தாமரை 19,23,48 தாய 35 தாயம் 44-5 தாயனார் 3 தார் 12,15,23,24,36,42-3, 55,66,75 தார்மிகு மைந்து 40 தாரம் 48,88 தாரருந் தகைப்பு 64,66 தாவல் 41 தாவாது 36, 41 தாவின் மகளிர் 81 தாவின்று 16 தாழ் 74 தாழ் கரும்பாசவர் 67 தாழ்ந்த க-வா தாழ்வு 23 தாழிருங்கூந்தல் 21 தாழை 55 தாள் 41,51,64,68,70,71 தானை 11,22-3,31,33,40, 49,50,54,60,63, 69,82,V,VII,IX தி திகழ்தரும் 52 திகழ்தல் 17 திகழ்பு 62 திகழ்விடுதல் 16 திகழ்விடு பாண்டில் 74 திகழ 43 திகிரி 14,31,35,69 திங்கள் 14,59,90 திசை 43,52 திண்டேர் 41 திண்பிணி 22 திண்பிணி யெஃகம் 19 திணிதோள் 45 திரங்க 43 திரங்குதல் 41 திரள்படுமணி 46 திரிகாய் 13 திரிந்தாங்கு 52 திரிந்து 49,81 திரியாது 60 திரு 14,40,71,74,82,90 திருகிய 50 திருஞெமரகலம் 16,31 திருத்தி 31 திருத்திய IV, 32,37-8 திருந்திய 24 திருந்திறை 24 திருந்துதல் 26 திருந்து தொடை 15 திருமணி 16,46,58,66,74,76,88 திருமாமருங்கு 85 திருமுகம் 81 திருவில் 88 திரை 41,42,45-6,40,63,72 தில் 40,57,60,64 திற்றி 18 திறந்த 11 திறம் 63 திறல் 37, 62, 86; V திறை 16,53,59,62,66,71,80 தின்மர் 24 தின்றல் 12 தீ தீ 21,24,72,III தீங்கனி 60 தீஞ்சுவை 60 தீஞ்சுனை 70,85 தீஞ்சேற்றி யாணர் VIII, 75 தீஞ்சேறு 42,75 தீது 22,74 தீதுதீர் சிறப்பு 17 தீந்தண் சாயலன் 86 தீந்தொடை 41,65,66 தீநீர்விழவு 48 தீம்பிழி 81 தீம்பிழியெந்திரம் 19 தீம்புனல் 48 தீர்தல் 21,68 தீர்ந்து 90 தீர 54, 86 து துகடீர் மகளிர் VIII துகள் 20 துகில் 54 துஞ்சல் 72 துஞ்சா 81 துஞ்சுக 81 துஞ்சுபதி 31 துஞ்சும் 11,44,55,71 துஞ்சும் பந்தர் 55,VI துஞ்சு மரக்குழாம் 22 துஞ்சுமரம் 22 துடையூஉ 43 துணங்கை 13,45,52,57,77 துணி 44 துணிதல் 71 துணிய 88 துணிவு 14 துணை 21,22,57,71,90 துணைத்தோள் 90 துதைநிலை 76 துப்பு 14,15,32,39,59,62,VIII தும்பி 67 தும்பை 14,39,42,45,52,79,88 துமிக்கும் 51 துமிந்து 35,67 துமிய 11,32,46,78,V துய் 44 துய்த்தல் 15 துய்த்தலை 32,44 துய்வீ வாகை 43,66 துயர் 76 துயலுங் கோதை 49 துயில் II துயிலியாது 12 துயிலின் பாயல் 16, II துருத்தி 20 துவ்வாநறவு 60 துவர்போக 32 துவர்வாய் 16,51 துவராக் கூந்தல் 89, IX துவன்றி 16 துவன்றிய 11,22,45,85 துவன்றும் 79 துவை 45 துவைத்த 88 துவைப்ப 56 துழந்த 51 துழாய் 31 துழைஇய 17 துளக்கி 18 துளங்கிய 49 துளங்கிருக்கை 24,42 துளங்கிருங் கமஞ்சூல் 45 துளங்கிருங் குட்டம் 88 துளங்குகுடி 31, IV துளங்குகொடி 32,37 துளங்குதல் 11 துளங்கு நீர் 44,51 துளங்குபிசிர் 16 துறந்து 49 துறை 11,14,23,27,39, 48,55,76,90, VII துறை கூடு கலப்பையர் 41 துறைபோகிய 39,62,74 துன்னருஞ் சீற்றம் 15 துனித்த 57 தூ தூ 51,81 தூஉய் 17,19 தூக்கணை 51 தூக்கிய 16 தூக்கு 11 தூங்கு கொளை 41 தூங்கு துளங்கிருக்கை 24 தூங்குபு 22 தூங்கும் 53 தூங்கெயில் 31 தூநெறி 27 தூம்பகம் 81 தூம்பு 41 தூர்ந்து 23 தெ தெங்கு 13 தெண்கடல் 42,87-8 தெண்கண் 40 தெண்கிணை 90 தெம்முனை 80 தெய்வம் 51,74,82,88,IX தெரிதல் V தெரிந்த 69 தெரிந்து 19,71 தெரிய 67 தெரியல் 63,76 தெரியுநர் 74 தெரு 47 தெவ்வர் 31,39,41,45,53,65,80 தெவ்வழி 52 தெள்விளி 27 தெள்ளுயர் வடிமணி 31 தெளிகுவர் 73 தெளிர்ப்ப 18 தெறல்கடுமை 22 தெறுகதிர் 52 தெறுமார் 27 தென்கடல் 67 தென்னங்குமரி 11,43 தென்னாடு II தே தேஎம் 20,21,32 தேம்பாய் 54 தேம்பாய் கடாம் 53 தேய்த்த 79,II தேய்த்து 20,88 தேய 20,34,40,88 தேயா 77 தேர் 20,22,26,33,34,40,41, 42,44,52,55,73, 75,77,80-2,84,88 தேவி IV தேறல் 12 தேறார்73 தேறிய க.வா. 90 தை தைஇ 39 தைஇய 39 தொ தொகுத்த 38 தொட்ட 49 தொடர்ந்த 27 தொடி 40,46,51,64,80 தொடி சிதை மருப்பு 15 தொடித்தோள் 17,19.40 தொடிமருப்பு 38 தொடியோர் 79 தொடுத்த 66 தொடை 15,57,60,65,66 தொடைக் குலை 66 தொடைபடு பேரியாழ் 46 தொண்டி VI தொண்டியோர் 88 தொல்கடன் 70 தொல்கவின் 15,43 தொல்பசி 12 தொல்புகழ் 63 தொலைத்த 70,82 தொலைய 88 தொலையா 43,52,70,80 தொலையாதாக 70 தொழில் 26,72,84,90 தொழில் புகல் யானை 40 தொழின்முறை 88 தொழினவில் யானை 84 தொழுதி 14,62,76,83 தொழுது 89 தொறுத்த 13 தொன்மருங்கு 81 தொன்று 19,90 தொன்னகர் 31 தொன்னகர் வரைப்பு 47 தொன்னிலை 37 தோ தோட்டி 25,38,40,53,62,71 தோடு 12,19,40,51,58,89 தோணி 45 தோமரம் 54 தோய்வு 17 தோயும் 34 தோல் 45,50,52,62, 66,74,82,83,88 தோள் 17,21,40,45,54,59, 65,70,77,79,80,81 தோற்றம் 64,67 தோற்றி 13 தோன்றல் 16,22,55,64,66 தோன்றலீயாது 71 தோன்றலை 90 தோன்றா 55 தோன்றி 22,51,89,90 தோன்றிய 57 தோன்றியாங்கு 59,64 தோன்றும் 58,86 ந நகர் 47,68 நகை 18,51,68,70 நகைசால் வாய்மொழி 55 நகைவர் 31,37,48 நசை 18,79 நசைத்து 67 நட்டோர் 63 நடந்து 20,22 நடுங்க 30,67 நடுங்குவனள் 52 நடுவண் 21,49.54,79 நடுவு 89 நடை 12,44,51 நண்ணார் 20, VIII நண்ணி 29,74,V நண்பகல் 22 நணி 27 நந்த 69 நந்திய 15 நந்து 23 நயந்து 15,23,55 நயவர 81 நயன் 86 நயனுடை நெஞ்சு VI நரந்தம் 11 நரம்பு 41,43,57,65 நரலுதல் 46 நரைமூதாளன் 74 நல்கி 15,76 நல்கினையாகுமதி 53 நல்கும் 55,66,86 நல்ல 19 நல்லமர் 52,70 நல்லிசை 14,15,24,37-8, 50, 57,61, 79, 80-2, 85-6,88,90 நல்லில் 61,90 நல்லெருது 27 நெல்லெழில் 16 நெல்லோள் 61 நல்வலம் 70 நல்வளம் 57 நலம்பெறு திருமணி 74,VIII நலன் 14 நலியாது 22 நவியம் 90 நவிலல் 84,V நளி 11,23 நளிந்தனை 52 நற்கு 26,84,90 நற்றோள் 74 நறவு 11,51,60,85,88 நறுந்தண் மாலையர் 46 நறு நுதல் 65 நறும் பல்பெண்டிர் V நன்கலன் 21,37,43,55, 59,67,83,87 நன்கு 72 நன் பல்லூழி 89 நன் பெரும்பரப்பு 17 நன்மரம் 85 நன்மா 65 நன்றறி யுள்ளம் 72 நன்றா VII நன்று 22,37,63 நன்னன் 88,IV நன்னாடு 15,27,55,90 நன்னிரை 89 நன்னுதல் 42,47 நன்னுதல் விறலியர் 47, V நனந்தலை 15,17,28,31,45, 50,55,59,63,69,74,86 நனவு 88 நனி 16,19 நனை 12 நனைமகிழ் 65 நனையுறு நறவு 51 நா நா 64 நாகு 51 நாஞ்சில் 19,25-6,58 நாட்டம் 21 நாடல் 59,86, VI நாடா 24 நாடி 74 நாடு 13,15-6,28-9,22,23-5, 28-9, 32,43,50,53,55,58-9, 61-2, 66-7, 72,75-6,78,81,83,85,88,89 நாடுகா ணெடுவரை 85, IX நாடுகெழு தாயம் 45 நாடொறும் 54 நாண்மகி ழிருக்கை 65,85,VII நாண்மழை 66 நாணுமலி யாக்கை 19 நாப்பண் 68,88,90 நாமம் 13,54,68,88 நார் 61 நார்முடிச்சேரல் 39,IV நாரறிநறவு 11,88 நாரை 23,29,32,51,73 நால்வேறு நனந்தலை 31,69 நாள் 14,49,55,68,70,73,81- 2,89,90 நாளவை 38 நாளும் 81 நாளை 58 நாற்பது IV நாற்றம் 21 நாறிணர் 69 நாறு 88 நாறும் 65 நான்கு 14 நி நிகழ்தரு 15,48 நிகழ்ந்தன்ன 44 நிகழ்ந்து 49 நிகழ்வு 72 நிணஞ் சுடுபுகை 43 நிணம் 12,67 நியமம் 15,30,75 நிரப்பினை 50 நிரம்புதல் 43 நிரை 13,15,20,22,28,36, 39,67, 89 நிரைகட்செறு 27 நிரைதோல் 88 நிரைப்ப 48 நிரையம் 15 நிரைய வெள்ளம் II நில்லாத் தானை 54, VI நிலத்த 90 நிலந் தரு திரு 82 நிலந்தின் சிதாஅர் 12 நிலம் 12,14,19,23,24,34,36-7, 44,49,54,63,69,72,79,84 நிலம் பெறு தோள் 45 நிலவரை 80 நிலவு 61 நிலன் 30-1 நிலா 31 நிலை 37,43,49, 63-4, 74,76 நிலைஇ 14,43,48,70,79 நிலைஇய 68,85-6 நிலைச்செரு IV,V நிலைபெறாஅ 86 நிலைபெறு கடவுள் 21 நிலைய 52 நிவக்கும் 52 நிவந்தன்ன 31 நிவந்து 28,81 நிவப்பு 36 நிழல் 15,17,37,69 நிழல்விடு கட்டி 81, IX நிழலோர் 68 நிற்ப 13,24,69,90 நிறத்தன் க-வா. நிறந்திகழ் பாசறை VIII நிறம் 11,31,42,51,81 நிறம்படு குருதி 49,79,VIII நிறீஇ 20,II, III, IX நிறீஇய 80 நிறுமார் 81 நிறை 15,26,30 நிறைந்து 43 நிறைய 28,90 நிறையாது 45 நின்ற 13,59 நின்று 14,21,52,87,89, VII,VIII நினைப்பு 16,26 நினையூஉ 71 நீ நீக்கி 17 நீங்க 23,59 நீட்டி III நீடி க-வா. நீடினை 16, 51 நீடு 52, 82, 88 நீடுவரை 55 நீணகர் 68 நீணிறை 36 நீந்தி 12 நீந்திய 76 நீயிர் 48 நீர் 14,15,21,24,48,51-2, 64,72, 86,87 நீர் கூர் மீமிசை VIII நீர்த்தரு பூசல் 22 நீர்ப்படுபருந்து 13 நீர்ப்பரப்பு 90 நீர்மலர் 70 நீர்வாய்ப் பத்தல் 22 நீரழி பாக்கம் 13 நீரறல் 21 நீரோரனையை 90 நீவி 50,53,84 நீவிய 89 நீறு 13 நு நுகம் 63 நுகர்கேம் 38 நுகர்தல் 12 நுகர்ந்தனம் 58 நுகரும் 48 நுங்கோ 20 நுடக்கம் 51 நுடக்கிய 72 நுடங்க 25,44,49,53,67,69,81-2 நுடங்கு கொடி 37,83 நுடங்குதல் 84 நுடங்கும் 14,51,68,82,88 நுண்கேள்வி VII நுண்கொடி 44 நுண்கோல் 43 நுண்ணயிர் 51 நுண்ணூல் க-வா நுண்மணல் 30,88 நுண்மயிர் 39 நுதல் 16,19,34,51, 53,57,65,70-1, 74, 84 நுதலன் க-வா. நும் 49 நுரை 87 நுவணை 30 நுவல 84 நுவலும் 17,61 நூ நூல் க-வா. நூலாக் கலிங்கம் 12 நூறாயிரம் IV,VI,VII,VIII நூறி 66,69,78,88 V நெ நெஞ்சம் 21,38,44,89 நெஞ்சினர் 26 நெஞ்சினன் 20 நெஞ்சு 12,20,23,45,63,85-6,VI நெஞ்சு மலி யுவகை 31 நெடிது 43,54 நெடிய 81 நெடியோன் 82 நெடுங்காலை 84 நெடுங்கொடி 34,80 நெடுங்கோடு 21,73 நெடுஞ்சுவர் 68 நெடுஞ்சேரலாதன் 20, V, VI நெடுந்தகை 41,51,71 நெடுந்தேர் 25,35,52,80,83 நெடுநகர் 12,88 நெடுநீர் 33 நெடுநுண் கேள்வி VII நெடும்பாரதாயனார் III நெடும்புதவு 16 நெடுமணிஞ்சி 68 நெடுமதில் 20,22 நெடுமிடல் 32 நெடுமொழி 44, 67 நெடுவசி 42 நெடுவயின் 24 நெடுவரி 82 நெடுவரை 21,43,67,70,85 நெடுவள்ளூசி 42 நெய் 21,47,II நெய்த்தோர் 30,49 நெய்தல் 13,19, 27, 30, 51,64, 71,V, II நெரிதரும் 33 நெருஞ்சி 13,26 நெருப்பு 23 நெல் 19,29,66,71,75, VII நெல்லின் கழை 32 நெறி 27 நெறிபடுமருப்பு 67 நே நேர் 29 நேர்கை 48 நேர்ந்தோர் 42 நேரி 67 நேருயர் வரை 21 நொ நொசியா 45 நொசிவு 45 நொடை 30 நொடைமை 68 நோ நோக்கம் 89 நோக்கலை 51 நோக்கினர் 89 நோக்குதல் 16,65,78,81 நோக்கும் 52 நோகு 26 நோதக 26 நோய் 13,15,44 நோய்த்தொழில் 84 நோய்தபு நோன்றொடை 44,V நோயிலையாகியர் 89 நோயின் மாந்தர் 21 நோன்புரித்தடக்கை 14 நோன்றாள் 31,33,64,II நோன்றொடை 44 ப பஃறோல் 52,62 பஃறோற் றொழுதி 83, IX பக்கம் VI பகடு 71 பகர்நர் 13 பகர 16 பகல் 53,59,73,90,III பகல்புகு மாலை 72 பகன்றை 76 பகுக்கும் 30,59 பகுத்தூண் 38 பகை 50,82 பகைவர் 14,15,16,28,31-2, 37,43,59,61,69,70,80 பசி 13,20 பசும்பிசிர் 25,62 பசும்பிடி 81 பசும்புண் 61 பசும்பூண் 17 பசும்பொன் 16,39 பசுமயில் 27 பட்ட 15,36,67,72,74 பட்டு 64 பட 34,41,49,52 படப்பை 23,30,55,90 படர்ந்தனை 66 படர்ந்து 43,49,54,71 படர்ந்தோன் 61 படரும் 59 படலம் 39 படா 21 படார் 75 படிந்து 32 படிமை 74 படியோர் 20,79 படிவம் 74 படுகடல் 40,76 படுகண் 54 படுகண்முரசம் 49 படுசினை 30 படுத்தல் 30,53 படுத்து 75, VII படுதல் 14,27,60 படுபிணம் 39,69 படுபு 58,89 படை க.வா IV,51,64,67,88 படைகோள் 72 படைஞர் 25 படைத்து IX படையே ருழவன் 14 பண் 29,65 பண்டு 26,45 பண்ணமை தேர் 77 பண்ணமை முழவு 41 பண்ணழியும் 67 பண்ணி 46, 57,66,V பண்ணியம் 59,76 பண்பு க.வா. 15,22,26, 45,63,72 பணி 57 பணித்து 44 பணிந்து 16,59,62,75 பணிய 85,88 பணியா 46,63 பணை 11,17,31,33,43,50,88,II பணைகெழு வேந்தர் 30 பணைத்தோள் 21,59,66 பத்தல் 19,22 பத்தினி V பத்து II,V, IX பத்துப்பாட்டு VI பதணம் 22 பதப்பர் 30 பதம் 66 பதலை 41 பதன் 55 பதி 31,71, VIII பதிகம் II,V,VI,VII,IX பதிபிழைப்பு 15 பதுமன்றேவி IV, VIII பந்தர் 51,55,67,74 பயங்கெழு பொழுது 24 பயங்கெழு வெள்ளி 69 பயந்த 57,74 பயம் 13,21-2,24,30,69,71,89 பயமழை 21 பயிலிருள் க-வா பயிலுதல் 78 பயிற்றி 22 பயிற்றிய 69 பரடு 52 பரணம் 57,V பரதவர் 48 பரந்த 15,21,22,25-6,42,84 பரந்தன்ன 69,78 பரந்தாங்கு 24 பரந்து 11,15,28-30,49,72 பரப்பி 52,59,IX பரப்பிய 15 பரப்பு 20,23,25,41,46,51,67 பரல் 66,69 பரவ 80,89 பரவா 26,29 பரவி 31,90 பராவல் 71 பரி 80 பரிசில் II, IX பரிசிலர் 15,38,47,58,65 பரிசிற்றுறை 65 பரிசின் மாக்கள் 20 பரிந்து 83 பரிய 30 பரிவேட்பு 21 பருதி 74 பருந்து 12,30,51,69,74 பருவம் 24 பரூஉப் பகடு 71 பரேரெறுழ் 31 பரைஇ 88, III பல்கதிர் 59 பல்களிறு 14,62,67 பல்கிய 62 பல்குரல் 84 பல்கொடி 82 பல்சில 52 பல்செரு 46,67 பல்பகடு 58 பல்பயம் 21 பல்பிடி 43 பல்புகழ் 12, 48,90,II,IV பல்பொறி 48 பல்யானை 69 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் III பல்லா 21,62 பல்லான் 89, V பல்லான் கோவலர் 21 பல்லிருங் கூந்தல் V பல்லுறை 68 பல்லூழி 89 பல்விதை 76 பல்வேல் 75,84,87,89,VIII பல்வேறு 59 பலகை 53 பலசூழ் பதப்பர் 30 பலபூ விழவு 30 பலர் 11,38,43,52,64,90 பலர்புகழ் செல்வம் 11 பலர்புகழ் பண்பு 15 பலாஅம் 61 பலி 71 பழங்கண் 12,37 பழம் 60 பழமை 27,30 பழன் 89 பழனம் 19,23,90 பழி 11,71 பழிச்ச 41 பழிதீர் யானை 11 பழுத்த 61 பழுனிய 21,41,66,81 பழையன் V, IX பளிங்கு 66 பறந்தலை 13,22,35,44 பறவை 66 பறை 22,67 பறைக்குரல் 70 பறைக்குர லருவி 70, VII பறைக்குருகு 83 பன்மா 84 பன்மாண் 83 பன்மீன் 64,90 பன்னாள் 50,73,82,88 பன்னூறாயிரம் IX பனம்புடையல் 42 பனம்போந்தை 70 பனி 26,41,59,71 பனிக்கடல் 45 பனிக்கயம் 42 பனிக்கழி 30 பனிக்கும் 12,13,60 பனித்துறை 31,48,76 பனிப்ப 50,IV பனிப்பௌவம் 51 பனி வார் விண்டு 31 பனிற்றும் 57 பனை 36 பா பாஅல் 53 பாக்கம் 13 பாகம் II,IV பாகர் 40 பாகுடி 21 பாங்கு 76 பாசடை 30 பாசம் 71 பாசவர் 21,67 பாசறை 16,50,61,64,84,88 பாசறையோர் 83 பாசிழை 68,73 பாட 46,54 பாடல் 13,24,48,62,75 பாடாண்பாட்டு 50-1 பாடி 82,87 பாடிய 85 பாடினார் II,IX பாடினி 14,17,61,87 பாடினை 67 பாடு 50,59,62 பாடுக 58 பாடுசா னெடுவரை 67 பாடுநர் 82,86 பாடுபு 46 பாடும் 29 பாடுமகள் 44 பாடு விறலியர் 43 பாண்டில் 52,64,74 பாண்டில்விளக்கு 47 பாண்மகள் 60 பாண்மகன் 59 பாணர் 40,48,65 பாணன் 67 பாணாற்றுப்படை 67 பாணி 22 பாத்தி 13 பாத்து 22 பாய் 53 பாய்ந்து 11,69,81 பாய்மா 90 பாயல் 16,19,68 பாயிருள் 22,59 பார்ப்பனி III பார்ப்பார் 63,VI,III பார்ப்பான் II பார்வல் 84 பாரம் 13 பாரி 61 பால் 16,30 பாலை 46,57,65-6 பாலைக்கோதமனார் III பாவை 61,88 பாழ் 13,22,25,71 பாற்படல் IX பி பிசிர் 17,25,40-2,60,72 பிசிர 15,50 பிடவு 66 பிடி 43,81-2 பிடித்த க-வா. பிடித்து 90 பிடிய 12 பிண்டம் 70 பிணம் 36,45,49,65,69,77 பிணி 19,22,50,51,53,81,84 பிணிக்கும் 68 பிணித்த VII பிரமதாயம் II பிரிந்த 79 பிரியா 89 பிரியாது 22 பிழி 19 பிழிநொடை 30 பிழைப்பு 21 பிழையா 32 பிழையாது 89 பிளந்து 41 பிளிற 32 பிளிறும் 41 பிறக்கு 80, V பிறங்க 49,69 பிறங்கிய 64 பிறங்குதல் 45,53 பிறந்து 48, IV பிறர் 20,25,38-9,73,75,79,II பிறர்ச்செய்தல் 24 பிறர்பிறர் 22 பிறழ்ந 13 பிறழ 50,78 பிறழ நோக்கியவர் 78,VIII பிறை க-வா. பின்வந்து 88 பின்றை 12 பின்னும் 18,53 பீ பீடர் 45 பீடு 14,24,50 பீர் 15,26 பீரிவர் வேலி 26 பு புக்கு 43,48,68 புக 45 புகர் 34,53,71,89 புகல் 14,22,55,71,81 புகல்வு 84 புகலும் 90 புகழ் 11,20,23,37,46, 48,53,65,74,79, II புகழ்ந்த 43 புகழ்ந்து 82 புகழோய் 90 புகன் மறவர் 69 புகன்ற 17,30,40,88 புகன்ற வாயம் 30 புகன்று 39,82 புகா 35,58,90 புகார் 73 புகுதரல் 43 புகை 20,43,71 புடை 62,74,82 புடைத்து 19 புடைப்பு 44 புடையல் 31,37,42,57,80 புடையூஉ 26,30 புண் 11,40,76 புண்ணுடை யெறுழ்த்தோள்80,VIII புண்ணுமிழ் குருதி 11,II புணர்க்கும் 11 புணர்தல் 12,36 புணர்ந்த 14 புணர்ந்து 23,30,82,89 புணர்நிறை 28. III புணர்புரி நரம்பு 41 புணரி 11,30,42,51,55,60,89 புணை 52 புதல் 68 புதல்சூழ்பறவை 66,VII புதல்வர் 57,70,74 புதவு 16,53 புதை 52 புதைத்தல் 21 புயல் 29 புயலேறு 51 புரக்கும் 81 புரவலன் 55,65,86 புரவி 41,62,64,80,81,88 புரவு 57 புரவெதிர்ந்தோன் 80 புரவெதிர 69 புரிசை 53 புரிந்தன்ன 66 புரிந்து 22,24,74,78,85 புரிநரம்பு 41 புரியவி ழைம்பால் 18 புரை 15,65, IX புரைஇய 24 புரை சான் மைந்தன் 34 புரை தீரொண்மை 70 புரைதோல் 50 புரையும் 72,88,89 புரையோர் 15,16 புரையோள் 70 புரைவது 16 புரோசு VII, IX புல் 23,89 புல்லாள் 15 புல்லிருள் 59 புல்லிலை 15 புல்லுடைப் புலம் 21,82 புல்லென 13,28,79 புலஞ்சிதையரம்பு 15 புலம் 13,21,25-6,32-3, 44,52,53-4,58,61-2,67- 8,71,75,81,84 புலம்பா வுறையுள் 28 புலம்பு 59,81 புலர்தல் 48 புலர்ந்த 61,80 புலர்பு 50 புலர 61 புலரா 61 புலவர் 20 புலவரை 80 புலவிகல் 75 புலவு 15 புலவுக் களம் 57 புலவுவா யெஃகம் 24 புலவுவில் 71 புலாஅம் பாசறை 61,VII புலி 75,V புலியுறை 19,24 புழுக்கு 18,90 புள் 84,89 புள்ளி 36,39,74 புறக்கொடை 31 புறஞ்சிறை 64 புறஞ்சொல் 70 புறந்தந்தவர் 46 புறந்தந்து 55, VI புறந்தராஅ 13 புறந்தருதல் 15,59 புறந்தருநர் 13 புறம் 42,53,60,62,66,81,VIII புறம்படல் 79 புறம்புதைசடையன் க-வா. புறம்பெற்று 40,88 புறவணி வைப்பு 30 புறவு 13,30,39 புன்கண் 57,86 புன்கால் 40,61 புன்புலம் 30 புன்புலவைப்பு 30 புன்புறப்புறவு 39 புன்புறம் 36 புன்னை 30 புனம் 36 புனல் 13,22,45,48-50,87,90 புனல்பாய் மகளிர் 86 புனல்பொரு கிடங்கு 62 புனல்பொரு புதவு 27 புனன்மலி பேரியாறு 38 புனிற்றுமகள் 16 புனைசெயல் 85 புனைந்தன்ன 90 புனைந்து 37 புனையிழை 23 பூ 11,23,40,50,61 பூங்குழை 86 பூசல் 22,27,30,31,44 பூஞ்செய்கண்ணி 27 பூட்கை 30,34,57,80,85 பூட்டி 42,49,58,V பூட்டுநர் 43 பூண் 16,64-5,85,88 பூண்க 81 பூண்கிளர் மார்பன் 31,70 பூண்டார் VIII பூண்டு 90 பூணன் 55 பூணா வையவி 16 பூத்த 13,66,90,II பூத்தன்று 13 பூத்தன்ன 90 பூதர் IX பூந்துகில் 54 பூப்ப 19 பூம்பொய்கை 13 பூவிரி புனல் 50 பூவுடைச் சினை 41 பூழிநாடு IV பூழியர் 21,58,73,84,90 பூழில் 87 பெ பெகுவாய்மலர் 81 பெடை 36 பெண்டிர் V பெண்மை 70 பெய்து 12,84 பெயர் 11,21,31,48,87 பெயர்த்தாங்கு 65 பெயர்த்து 19 பெயர்தி 71 பெயர்ந்தன்ன 42 பெயர்ந்து 17,44,46,67,89 பெயர 74,77 பெயரா 90 பெயரிய 67,89 பெயரும் 30,63,71 பெயல் 41,43,69 பெயன்மழை 26 பெரிதினிது 83 பெரிது 32-3,37,68 பெரிதும் 48 பெரிய 15-6,58 பெரியோர் 79,88,III பெருக்கம் 24 பெருக 41,43,59,90 பெருகி 59 பெருங்கடல் 76 பெருங்கலம் 23 பெருங்கலி 12 பெருங்கலி வங்கம் 52 பெருங்கவின் 23 பெருங்களிறு 71,75 பெருங்கால் 43 பெருங்கிளை 32 பெருங்கிளை பொழிந்தவை 42 பெருங்குன்றம் 51 பெருங்குன்றூர்கிழார் IX பெருங்கை 43,76 பெருங்கோடு 22 பெருஞ்சதுக்கம் IX பெருஞ்சமம் 30,34,43,76 பெருஞ்சால்பு 19 பெருஞ்சிறப்பு 90 பெருஞ்சினம் 49 பெருஞ்சேரலிரும்பொறை VIII பெருஞ்சோழன் IX பெருஞ்சோற்றுநிலை 30 பெருஞ்சோறு 30 பெருந்தகை 81 பெருந்திரு 71 பெருந்துறை 23,30,48,55 பெருந்தெய்வம் 51 பெருந்தேவி VI பெருந்தோள் 81 பெருநல்யானை 90 பெரும்படைத் தலைவன் 24 பெரும்படையன் 77 பெரும்பயம் 64 பெருபல் யாணர் 89 பெரும்பல்யானை 29 பெரும்பழம் 81 பெரும்பாழ் 22 பெரும்புகழ் 23,II பெரும்பூண் 85 பெரும்பெயர் 21,81,90 பெரும்பெயல் 43 பெரும 13,40,42,50,55,65, 70,71,74,79,82,88,90 பெருமகன் 67 பெருமடம் 70 பெருமதர் 21 பெருமலை 25,32 பெருமழை 88 பெருமான் 85 பெருமை 35,56,72,82 பெருவரன் 28 பெருவறம் 23 பெருவறன் 28,43 பெருவாயில் IV பெருவிரல் 28 பெருவிறல் 61,II பெருவேந்தர் IX பெருவேந்து 73 பெருவேள்வி III பெற்ற க-வா. 19,44,48, 66,85,90, VII பெற்றது 18 பெற்றனை 24 பெற்று 47,63,VI பெற 41 பெறா 43 பெறாஅ 81 பெறின் 38,68 பெறுகுவை 67,87 பெறுதல் 42 பெறுப 68 பெறூஉம் 21,58,66,76 பே பேஎம் 78 பேஎய் 35 பேணி 21,40,70,79,IX பேணியர் 21,30 பேய் 67 பேய்மகள் 13,22,30,67 பேர் VI பேரா 24 பேராறு 43 பேரிசை 67,II,V பேரியல் அரிவை 52 பேரியாழ் 46,57,66 பேரியாறு 28,88 பேரெழில் வாழ்க்கை 48,V பேரோய் 63 பை பைங்கண்யானை 28 பைஞ்சுரை 15 பைஞ்ஞிலம் 17,31 பைதிரம் 19,38,II பைது 23 பைந்தலை 46 பைந்தார் க-வா. 11,42 பைந்துணி 44 பைம்பொறி 74 பைம்பொன் 48 பைம்மயிர் 12 பையுள் 65 பொ பொங்கல் 55 பொங்கு நுரை 87 பொங்குபிசிர் 60,72 பொத்தி 16,82,IX பொதி 51 பொதிதல் 16 பொய் 58 பொய்க்குவது 18 பொய்கை 13,27 பொய்ச்சொல் 22 பொய்ப் பறியலன் 20 பொய்ப்பு 20,63 பொய்யலன் 18 பொய்யா 70 பொய்யில் VII பொர 15,51,90 பொரிந்து 59 பொரியரை 58 பொருத 13,16,63 பொருது 55 பொருந்தி 23 பொருந்திய 58 பொருந 21,55,88 பொருநன் 67,73,90 பொருமுரண் 88 பொருள் 22 பொலங்கலம் 14,18 பொலங்கொடி 56 பொலந்தார் 75 பொலந்தேர் 84,88 பொலம் 23,31,40,64 பொலம்பூ 45 பொலன் 11 பொலிதார் 31 பொலிந்த 11,22,II பொலிந்து 51,83,89,90 பொழிதி 64 பொழிய 50,69 பொழில் 14,51 பொழில்வதி வாழ்க்கை 48 பொழுது 59,71,89 பொழுது கொள்மரபு 50 பொற்ப 83 பொறி 19,40-1,48,53,74-5,88 பொறி கிளர் நுதல் 53 பொறித்த 36,39,67 பொறித்து II பொறுப்ப 41 பொறையன்73,75,77,84, 87,VII பொன் 15,22-3,33,62, 85,IV,VI பொன்செய் கணிச்சி 22 பொன்படுவாகை IV பொன்புனை யுழிஞை 22 பொன்றார் க.வா பொன்னங் கண்ணி 40 பொன்னணி யானை 34 பொன்னுடை நியமம் 30 போ போக்கிய 61 போக 32 போகி 13,25,76,VII,V போகிய 14,39,62,66,74,88 போகு 27 போந்து 23,66,VII, போந்தை 51,70,III போர் 11,14,23,35,39, 41,49,55,70,83 போர்க்களம் 56 போர்சுடுபகை 71 போர்த்த 22 போர்ப்பு 21,84 போர்படு மள்ளர் 66 போர்ப்புறு முரசம் 84 போர்மிகுகுரிசில் 31,32 போர்முகம் 40 போர்வல் யானை 15,21 போர்வை 39 போரடுதானை 11,23,43 போரெதிர்வேந்தர் 33 போலும் 36,39 போழ் 67 போழ்கல்லா 60 போழ்து 12,19,79 போற்றலை 79 போற்றி 21 போன்ம் 51 பௌவம் 42,46,51,55 ம மகள் 16,23,44,60,67,VII மகளிர் 12,13,29,30,31,40, 43,46,50,57,63,86 ,88,89,VII மகன் 58,59,67,II,IV, V,VI,VII,IX மகாஅர் 71 மகிழ் 30,43,65,68,85 மகிழ்ந்து 36,40,81 மகிழ்வு 12 மகிழிருக்கை 65 மங்குல் 60 மஞ்ஞை 90 மட்டம் 42,90 மடங்க 19 மடங்கல் 62,72 மடநோக்கு 51 மடம் 56,72 மடமகள் 51 மடமான் 89 மடவர் 71 மடவரல் 18 மடவோர் 73 மடிதல் 60 மடியா VII மடுப்பு 80 மடை 79 மண் 27,31,61,68,III மண்கெழு ஞாலம் 69,VII மண்டி 49 மண்டிய 73 மண்டும் 48 மண்ணுடை ஞாலம் 15,18 மண்ணுறு முரசம் 19 மண்படு மார்பன் 21 மண்புனைஇஞ்சி 58 மணக்கிள்ளி V மணங்கமழ் மார்பன் 68 மணந்த 51 மணம் 21,63 மணல் 23,30,48,88 மணி க-வா. 11,14,1621,31,39,45, 46,51,52,58,66,74,88 மணிக்கலம் 30 மணிநிறம் 42 மத்து 26,71 மதம் 70 மதமா 43 மதர் 21 மதி 53,73,III மதிமருண்டனென் 15 மதிமருளும் 24 மதியம் 31 மதில் 15,20,33,52,58,71 மதில 16 மந்திரம் 36 மந்திரமரபு IX மயக்கி 12,VII,IX மயங்கி 60,90 மயங்குதல் 36,79 மயல் 62 மயிர் 29,39,90 மயில் 27 மரங்கொல் மழகளிறு 16 மரந்தையர் 90 மரந்தொறும் 29 மரம் 15,60,73,74,76,85 மரம்படு தீங்கனி 60,VI மரபு 21,27,30,46,50, 67,74,79,88,90,II,III, IX மரீஇ 50 மரீஇய 40,50 மருக 90 மருகன் 88 மருங்கு 13,15,21,23,25,54,81,85 மருண்டனன் 74 மருதம் 27,30,73 மருது 13,23 மருப்பு 11,15,16,32, 35,38,43,66,67,74 மருபுலம் 75 மருள் 11,23,33,42,54 மருள 73,IX மருளில்லார் IX மருளும் 62 மரையா 23 மல்லல் 36,VII மலர் 21,64,31,II மலர்தலை 73,88 மலர்ந்த 23,40,61,64,65,67,88'99 மலர்ந்து 19 மலர்ப்பு 63 மலர்பு 52 மலர்மார்பன் 20 மலரகன் பறந்தலை 22 மலிதல் 23,50 மலிதிரை 42 மலிந்த 71 மலிபுனல் 48 மலிபெறு வயவு 36 மலியும் 22 மலிர்நிறை 26,28,50 மலை 48,50,51 மலைத்த 65 மலைந்த 14,23,30,42,62,84 மலைந்து 40 மலைய 40,43,59,90 மலையுறழ் யானை 69 மழகளிறு 12,16,32,84 மழகிய 24 மழலைநா 15 மழவயர் 27 மழவர் 21,55,VI மழை 13,15,17,21,24,26,41, 45,51,55,62.66,88,90 மழைக்கண் 21,52,54 மழைநாள் 49 மள்ளர் 13,38,43,63,66,81,90 மற்று 41 மறங்கெழு குருசில் 88 மறங்கெழு போந்தை 51 மறந்த 44,56 மறந்து 15 மறப்ப 28 மறப்படை 31 மறப்பினும் 25 மறப்புலி 41 மறம் 11,12,39,54,65,70,78,II மறம்புரிகொள்கை 85 மறல 82 மறவர் 22,28,30,36,37,40, 41,57,58,60,69,82 மறன் 82 மறாஅ 60 மறு II மறுகுசிறை 23,29,43 மறுகும் 30 மறுத்த 13 மறுவில் வாய்மொழி VII மறை 58,59 மறைத்த 44,67 மறைப்ப 71 மன் 11,15,19,22, 29,31,34,38,53,86 மன்பதை 40,42,72,77,84 மன்ற 27,69,78,86 மன்றம் 13,23,25,27,35,43,44, மன்னர் 42,44,45,76,88,VI மன்னிய 25,26,II மன்னியர் 54 மன்னுயிர் 15,18,20,24,IX மன்னெயில் 25,37,40,53 மனன் VII மனாலம் 11 மனு IX மனை 26,IX மா மா க-வா 20,22,24, 34,36,38, 42,43,49,59,69, 70,77,78, 84,88 மாக்கடல் 11,17 மாக்கண் 29,51 மாக்கழல் 37 மாக்கள் 20,223,29,36, 59,60,67 மாக்கொடி 40 மாகம் 88 மாகூர் திங்கள் 59,VI மாச்சினை 51,89 மாசித றிருக்கை 76, VII மாசு 20,VII மாட்சி 42 மாட்சிய 19 மாட்டிய 22 மாடத்து 47 மாடு 89 மாடோர் 70 மாண் 74 மாண்டன 19 மாண்டனை 31-2 மாண்பு 74 மாண்பொறி 88 மாண்வரி 58,65,67 மாண்வினை 90 மாணா 19 மாணிழை 81 மாத்த 67 மாதிரம் 12,17,31-2,71-2 மாந்தர் 21,31,73 மாந்தரன் 90 மாந்தி 12,81 மாந்தையர் 90 மாநிலம் 20 மாப்படை 82 மாமருங்கு 85 மாமலை 50,80 மாமழை 24,84 மாய்ந்து 22 மாயம் 62 மாயவண்ணன் VII மாயா 90 மாயிதழ்நெய்தல் 30 மாயிருங் கங்குல் 81 மாயிருங் கூற்றம் 51 மாயிருஞ் சென்னி 41 மாயிருந் தெண்கடல் 42 மாயிரும் பஃறோல் 52,62 மாயிரும் புடையல் 38 மாயிரு விசும்பு 64 மார்ப 48 மார்பம் 79 மார்பன் 17,20,65,70,II மார்பு 11,16,21,38,42, 45,61,68,80,88,90 மார்பு கவர் முயக்கம் 50 மார்பு பிணி மகளிர் 50 மாரி 13,18,55,59,84 மாரியங்கள் 21 மாலை 24,48,72 மாலையர் 32 மாவண்பாரி 61 மாவள்ளியன் 61 மாள 81 மாற்றருஞ் சீற்றம் 51 மாற்றருந் தெய்வம் 88 மாற்றார் 20,64 மாற்றி 81 மாற்று 51 மாற்றோர் VII மாறன் IX மாறா 19,34,84,V மாறாது 67 மாறி 18,20,30,63 மாறிய 15,20,41 மாறு க-வா. 34-5,38-9,54,80 மாறுகொள் வேந்தர் 83 மாறு சிலைப்ப 90 மாறுநிலை 34 மாறேற்கும் க-வா. மான் 12,75 மான்கணம் 50 மான மைந்தர் 42 மி மிக்கு 23,39,75,90 மிக 22 மிகீஇ 84 மிகீஇயர் 28 மிகும் 38,39 மிகை 63,IX மிகைத்து 66 மிசை 44,47,52,69, 89 மிசைந்து 81 மிசைய 70 மிஞிறு 60 மிடல் 13,51,57,90 மிடைந்த 14,39,83 மிடைந்து 52 மிதியல் செருப்பு 21 மிலைச்சி 41 மிலைந்து 70 மிளகெறி யுலக்கை 41 மிளை 20,22,33,IX மின் 39 மின்னிழை 54 மின்னு 24,81 மீ மீக்கூறுநர் 11 மீகை 40 மீகையர் 81 மீது 30 மீபிணம் 77 மீமிசை 80,86. VII மீன் 29,50,89,90 மீன்தேர் கொட்பு 42 மு முகம் 38,53,58,67 முகவை 22 முகில் 84 முகிழ்நகை 18 முச்சி 43 முட்டு 28,59 முடந்தை 29,32 முடித்த 41,64 முடிதல் 81 முடிந்து 30 முடிபுனை மகளிர் 46 முடிவு 61 முண்டை 60 முனைஇய 54 முத்தம் 30,39,66,74 முத்து 33 முத்தை 85 முதல் 12,15,20,30,59,88,V முதல்வர் 14,72,85 முதலிய 53 முதியர் III முதியோர் 70 முதிரை 55 முதுவாய் 66 முந்திசினோர் 69 முந்துதல் III முந்துவினை 42 முந்நீர் 20,31,90 முப்பத்தீராயிரம் IX முப்பத்தெட்டு II,VI முயக்கம் 50 முயலும் 27 முரச்சி 44 முரசம் 19,21,44,49,54, 66,68-9,80,84 முரசு 11,12,15,25,30-1,II முரசுடைச் சமம் 41,43 முரசுடைத் தாயம் 44 முரண் 11,30,34,88 முரணியோர் 20 முரம்பு 66,69 முரற்சி V முரிந்த 15 முருக்கி 15,16,69 முருக்குதல் 23 முருகு 26 முரைசு 34 முல்லை 66,81 முல்லைக் கண்ணி 21 முழக்குதல் 50,84 முழங்க 80 முழங்கி 39,43 முழங்கிசை 50 முழங்கு கடல் 45 முழங்கு குரல் 63 முழங்கு பணை 11 முழங்கும் 12,16,30,31,51,88,90 முழங்கொலி 50 முழ விமிழ்தல் 15,30 முழவு 41,43,56,61,81,88 முழவுத்தோள் 31 முழா 52 முழாஅரை V முழுது 14,74 முழுமுதல் 11,70,88,V முழுவலி 44 முள் 45 முளை 84 முற்றம் 64 முற்றி 74 முற்றிய 19 முற்று 63 முறை 22,44,88 முறைமுறை 30 முன்கை 46,80 முன்பன் 14,74,84 முன்பு 20,36,39,82-3,III முன்றிணைமுதல்வர் 14,72,85 முன்னர் 56 முன்னி 11,15 முன்னிய 84,87-8 முன்னிலை 81 முன்னோர் 53 முனை 15,21,25,48,53,81,IV முனை புகல் புகல்வு 84 மூ மூங்கில் 84 மூச 60 மூசா 30 மூசுதல் 31 மூதா 13 மூதில் 15 மூதூர் 15,30,53,67 II,IX மூய 42 மூயின 22 மூரி 66 மூழ்கி 42 மூன்று 50 மெ மெய் 12,21,56,67,69,71,79 IX மெய் காணுதல் 53 மெய்தயங் குயக்கம் 68,79 மெய் புதை யரணம் 52 மெய்ம்மறை 14,21,55,58, 59,65,73,90 மெய் யாடு பறந்தலை 35 மெல்லணை 50 மெல்லிய 57 மெல்லியல் 40 மெல்லியன் 51 மெலிவு 26 மென்கூந்தல் 50 மென்செந்நெல் 71 மென்சொல் 15,40,81 மென்பால் 25 மென்பாலன 30 மென்பிணி 50 மென்றினை 30 மென்றோள் 12 மே மே 13 மேந்தோன்றல் 65 மேந்தோன்றி 89 மேம்படல் 53 மேம்படுகற்பு 58,59 மேய 68 மேல் 11 மேல்வந்த 56 மேலிருந்து 79 மேவரு சுற்றம் 48 மேவல் 15,43,60 மேவலர் 81 மேவலை 19,43 மேவற்று 60 மை மை 12,21,38,52 மைந்தர் 34,42,84 மைந்தன் 34,35 மைந்தினர் 81 மைந்து 15,23,40 மைந்துடை யமர் 42 மைந்துடையா ரெயில் 62 மைபடு பரப்பு 41 மைபடு மலர் 64 மையிருள் 31 மையி லறிவினர் 22 மையூர்கிழான் IX மொ மொசிந்தன 71 மொசிந்து 11,49 மொய்க்கும் 22 மொய்ம்பு 90 மொழி 44,55,90,II மொழிந்து 24,30,44,66,90 மொழியூஉ 81 மோகூர் 44,49 யா யாக்கை 13,19,22,44 யாக்கையர் 58,67 யாங்கு 52,73 யாடு 78 யாண்டு 11,15,18,20-1,90,IX யாணர் 15,22,23,27,35,36, 53,60,71,72,75,81,89 யாணர்த்து 24 யாத்த 53,VI யார் 20,40,45,71 யார்கொல் 19 யாரை 52 யாவணது 75 யாவது 53,80,84 யாவதும் 74 யாவர் 20 யாவரும் 24 யாழ் 41,66 யாற்ற 15 யான் 26,72,73,86,88,VIII யானை 11,20,21,25,28,29,32, 34,36,38,40,46,51,54, 65,68-9,82,84,90 யானையோன் 78 யூ யூபம் 67 வ வகுத்து III வகுந்து 57 வகை 31 வகைசால் செல்வம் 31 வகைவனப்பு 50 வங்கம் 52 வசை 12,38,41 வசையுநர் 32 வஞ்சித்துறை 13,20,22,25- 6,33-4,51,69,80,90 வஞ்சித்தூக்கு 13,20,22,25 6,33-4, 51,69,80 வஞ்சினம் 41,IX வடக்கு 24 வடதிசை 43 வடதெற்கு 31 வடபுலவாழ்நர் 68 வடவர் V வடிம்பு 70 வடிமணி 20,33,52,IV வடுவடு நுண்ணயிர் 51,VI வடுவாழ் மார்பு 38 வண்கை 43 வண்டன் 31 வண்டு 14,31,51,62,70,71,82,90 வண்டூது பொலிதார் 31 வண்ணம் 11,50,52,62,90 வண்ணன் VII வண்பிணி 51 வண்புகழ் 31 வண்மகிழ் 42 வண்மை 74,82 வணக்குதல் II வணங்கல் 84 வணங்கா 48,70 வணங்கி 24 வணங்கிய 48,70 வணங்கு சிலை 63 வணர் 12,18,41 வணரமை நல் யாழ் 41 வதிதல் 48 வதிந்து 50 வதுவை மகளிர் 89 வந்தனென் 55,76,88 வந்திசின் 15,16,41,54, 61,64,82,90 வந்து 12,17,40,62,72,88 வம்பவிர் 77 வம்பு 19,22,36 வம்மின் 48 வயக்களிறு 41 வயங்கிதழ் 40 வயங்கிய 64,85 வயங்கிழை 12,14 வயங்குதல் 16,79 வயங்குகதிர் 24,67 வயங்குசுடர் 89 வயங்குசெந்நா 58,85 வயங்குமணி 45 வயமான் 75 வயல் 13,40,73 வயவர் 12,15,19,23,26, 58,70,81,90,V வயவு 36 வயவேந்தர் 90 வயிர் 67 வயிரம் 16,II வயிரிய மாக்கள் 23,29 வயிரியர் 20,43,64 வயிறு 20 வயின் 15,24,64,74,79,88,90 வயின்வயின் 51,79 வரகு 30,75 வரம்பில்தானை 29 வரம்பு 33,84 வரல் 54,65,88 வரி 50,58,62,65,77-8 வரிஞிமிறு 50 வருக 17 வருடை VI வருதல் 14,49,52,57 வருந்த 19 வருந்துதல் 73 வருநர் 18,21,75,88 வரும் 26,49,60,76 வருவேம் 23 வரூஉம் 42 வரை 11,21,41,47,55, 62,67,70,84-5 வரைகோள் 24 வரைப்பு 14,47,50,68,88 வரைபோ லிஞ்சி 62 வரைமிசை யருவி 69 வரையகம் 74 வரையா 72,75,88 வரையாது 18 வரையார் 21 வரையிழி யருவி 25 வரைவு 43,54 வல்சி 19,55,75 வல்லன் 87 வல்லாய் 52 வல்லார் 20 வல்லான் 56 வல்லுநை 52 வல்லே 64 வல்லேறு 52 வல்லோய் 16 வல்லோன் 65,74 வல்வாயுருளி 27 வல்வில் 50,58,VI வலத்தர் 19,41,51,54,80 வலம் 26,42,49,II வலம்படுகோமான் 57 வலம்படு சீர்த்தி 41 வலம்படு முரசம் 56,64 வலம்படு வான்கழல் 70 வலம்படு வியன்பணை 17 வலம்படு வென்றி 32,37,IV வலம்புரி 67 வலன் க.வா 24 வலனுயர் மருப்பு 11 வலனேர்பு 21 வலி 44,80 வலிகெழு தடக்கை 90,IX வலிப்ப 81 வலியார் 30 வலியுறுக்கும் 76 வலியுறுத்து 90 வலியை 84 வலை 51 வழங்குக 18 வழங்குதல் 33 வழங்குநர் 23 வழங்கும் 12,15,22,25,31,51 வழாஅ 40 வழி 21,51-2,58,74-5,87 வழிபு 47 வழிமொழிதல் 24 வழியொழுகுதல் 24 வழை 41 வள்ளியன் 61 வள்ளியை 54 வள்ளுகிர் 12 வள்ளை 29 வளங்கெழு சிறப்பு 50,89,90 வளம் 15,24-5,38,49,57, 59,75,81,90 வளர்த்து IV வளன் 24,32,36-7,49,73-4,II வளனறுபைதிரம் 19 வளனுடைச் செறு 62 வளி 11,14,24 வளிமுனை 47 வளை 27,30,51,57 வளைஇ 62 வளைஇய 31,33,88 வளைக்கை மகளிர் 29 வளைகடல் 88 வளைதலை 13,67 வளைந்துசெய் புரிசை 53 வளைமகள் 23 வறங்கூர 43 வறம் 23 வறற்காலை 28,48 வறிது 24,40,72 வன்கண் 52 வன்கை 58,62 வன்பு 30 வன்புலம் 75 வன்றுயர் 76 வன்னிமன்றம் 44 வனப்பு 50,73 வனைந்து 54,65 வா வாகை 40,43,66,88,IV வாங்கி 41,90 வாங்குபு 23 வாங்கும் 12 வாங்கு மருப்பு 66 வாட 19,39 வாடா 12,24,53 வாடி 42 வாண்மயங்கு கடுந்தார் 36 வாண்மருப்பு 43 வாண்முகம் 67 வாணுதல் 19,38 வாணுத லரிவை 89 வாய் 28,66,71 வாய்த்தல் 73 வாய்ப்ப 90,IX வாய்ப்பறியலன் 20 வாய்ப்பு 20 வாய் மிகுக்கும் 30 வாய்மை 70 வாய்மையான் 48 வாய்மொழி க-வா. 21,37, 55, VIII வாய்வாள் 64 வாயர் 37 வாயில் 13,21-3,27,53,81 வாயிற்புறம் V வார் 30,84 வார்ந்து 16,82,90 வார 21 வாரல் 12 வாரா 61,79 வாரார் 55,79 வாரி V வாரேன் 61 வால் 12,35,80 வாலரை 12 வாலிணர் 30 வாலிது 39 வாலிழை V வாலுளை 41 வாலூன் 55 வாழ்க்கை 15,37,48-9,68,71 வாழ்க 20,24,36-7,52,54-6, 59,71 வாழ்ச்சி 56 வாழ்த்த 15,40,90 வாழ்த்தி 64 வாழ்த்து 20,41,43,48 வாழ்தலீயா 19 வாழ்தி 38-9 வாழ்நர் 37,49,51,68,71 வாழ்நாள் 89 வாழிய 21,63,88 வாழியர் 15,48,74 வாழியாதன் 63 வாழும் 70 வாழுமோர் 71 வாழை 29,76 வாள் 12,33,36,55-6,58,63-4, 69,76,80,90 வாளுடை விழவு 66 வான் 14,19,38,53,66,IV வான்கழல் 42,57,70 வான்பறைக் குருகு 83 வான்பிசிர் 11 வான்றோய் கொடி 69 வான்றோய்நல்லிசை 37 வான்றோய் வெண்குடை 52 வானகம் 24 வானம் 21,31,43,76,89,90 வானவரம்பன் 38,58,VI வானி 86 வானினம் 12,21 வி விச்சி IX விசும்பு 14,17,24,30-1,35,44,52,64,68-9,79,81,90 விசும்பு வழங்கு மகளிர் 31 விடத்தர் 13 விடரளை 28 விடிய 59 விடிதல் 15 விடுநிலம் 28 விடுப்ப 71 விடுபு 40 விண் 23,30 விண்டு 31,55,84 வித்துந 13 வித்தும் 58 வித்தை IX விதிர்த்த 88 விதை 76 வியம் 54 வியல் 90 வியலறை 81 வியலிரும் பரப்பு 20 வியலுள் 56 வியலுளை 88 வியலூர் V வியன் II வியன்கண் 41 வியன்களம் 35,40 வியன்காடு 41 வியன்பணை 17,31,39 வியன்புலம் 21,28,62 வியன்மார்பு 31,80 வியன்றானை 33 விரல் 57,68 விரலன் க-வா. விரவு 29 விரவுபண்ணை 50.88 விரவுமலர் 21 விரவுமொழி 90 விராய 42 விரிகூந்தல் 50 விரித்தன்ன 51 விரிந்த 85 விரிந்து 24,66,73,88 விரிநூலறுவையர் 34 விரிபு 31 விரிபுனல் 50 விரிபூ 13 விரியிணர் க-வா. விரியுளை 20,65 விருந்து 21,43,71,81 விருப்பு 12,19 விரும்பு (விருப்பு) 21 விரைஇய 66 வில் 45,50,58,70-1,78-9,VII வில்லன் க-வா. வில்லுழவு 15 வில்லோர் 59,65 வில்லிசை 22,23 விலங்கல் 16 விலங்கி 31,53 விலங்கிய 21 விலங்குதல் 31 விலங்குநர் 11 விலங்கும் 51 விலை 75 விலைஞர் 76 விழவினன் க-வா. விழவு 15,22,29,30,48,56,60,66 விழுச்சீர் 22 விழுத்திணை 31 விழுத்தொடி 81 விழுமம் 27,90 விழுமியோர் 45 விழைதக 21 விழையா 38 விளக்கம் 14 விளக்கி VI விளக்கு 31,47,52 விளங்க 52,II விளங்கிய 21,33,44,65,90,VII விளங்கிரும்புணரி 51 விளங்குதி 88 விளங்கும் 11,24,34 விளங்குமணி 90 விளி 27 விளைந்தவை 62 விளைந்து 42 விளைபழம் 60 விளையுள் 32,60 விளைவயல் 29,40,73 விளைவு 28 விறல் 49,61 விறல்வரை 31 விறல்வேள் 11 விறலியர் 40,43,47,51,54,57,II விறலியாற்றுப்படை 49,57,60,87 வின்மூ சழுவம் 31 வினவுதல் 20 வினவும் 88 வினை 19,20,48,60,71,74,81 வினைஞர் 58,62,75 வினைநவில் யானை 82,IX வினைபுனை நல்லில் 61 வீ வீ 40-3,66,88 வீங்குதல் 12,24,75 வீங்குதோள் 54 வீங்கு பெருஞ்சிறப்பு 90 வீசி 20,44,54 வீசும் 23,60 வீந்து 56 வீயா 35-6 வீழ்த்தி V வீழ்பிடி 43 வீழ 12,V,IX வீற்றிருங்கொற்றம் 59 வீற்றிருந்த 56 வீற்றிருந்தான் II-IX வீறு சால் புதல்வன் 74 வெ வெஃகாது 21 வெக்கை 71 வெகுண்டு 14 வெண்குடை 17,52 வெண்குருகு 29 வெண்கை 29,61 வெண்கோடு 30,68 வெண்சோறு 12 வெண்டலை 30 வெண்டலைக் குரூஉப்பிசிர் 42 வெண்டலைச் செம்புனல் 87,IX வெண்டிரை 31 வெண்டுவை 55 வெண்டோடு 40,51,58,70 வெண்டோல் 45 வெண்ணரி 22 வெண்ணெல் 12 வெண்பூ 15,90 வெண்போழ்க் கண்ணி 67,VII வெண்மணி க-வா. வெண்மழை 55 வெந்திறல் 37,V,IX வெந்திறற் றடக்கை *86,IV வெப்பு 86 வெப்புடைத் தும்பை 39 வெம்போர் 90 வெம்முனை 78 வெம்மை 28,50 வெய்துற்று 26 வெய்துற IX வெய்துறவு 15 வெயில் 68 வெயிற்றுகள் 20 வெரீஇய 50 வெருவரு கட்டூர் 82 வெருவருதல் 22,50,86,III,IX வெருவரு தானை VII வெல்கொடி 14,44,53,67,69,V வெருவரு புனற்றார் 50 வெல்புகழ் 46 வெல்போர் 11,22,35,44, 63,70,79,81, வெவ்வர் 41 வெள்வரகு 75 வெள்வேல் 51,61,85-6 வெள்ளம் 15,21,30,33,63,72,90,II வெள்ளி 13,24,69 வெள்ளூசி 42 வெளியன் II வெளில் **84 வெறியுறு நுடக்கம் 51 வெறுக்கை 15,38,55,65 வென்ற 53 வென்றாடு துணங்கை69, 77,VIII வென்றி 35,37,40,43,12,IV வென்று 58,VIII,IX வென்றெறி முரசு II வென்றோன் 63 வே வேங்கை 40-1,53,88 வேட்கை 15 வேட்கையர் 81 வேட்ட 29 வேட்டல் 24 வேட்டனை 74 வேட்டு III,IV,VIII,IX வேட்டுவர் 30 வேட்பிக்க III வேண்டி 21,55,V வேண்டு 13,53 வேண்டுபுலம் 15 வேண்டுவ 55 வேண்மாள் 90 வேந்தர் 23,30,33,49,50,64, 70,75,79,81,83,88,90 வேந்தன் 14,17 வேந்து 12,15,30,34,37-8,43,52, 55-6,62,90 வேந்துடை யருஞ்சமம் 40 வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி 56,VI வேந்தூர் யானை 68 வேய் 21,65 வேய்ந்து 51 வேல் 31,33,45-6,51, 69,70,75,84-5,87-90 வேல்கெழு தானை 22 வேலம் 39 வேலன் 58 வேலி 26,63,II வேலுடைச் சமம் 66 வேழம் 30 வேள் 11 வேள்வி 64,70,74,90,12,VII வேளாவி VI வேளாவிக்கோமான் 80,IV வேளிர் 49,75,88 வேளை 15,90 வேற்றுப்பொருள் 21 வேறு 29,31,45,52,59,68,71,81 வேறுபடு திரு 74 வேறுபடு நனந்தலை 74 வை வைகற்பொழுது 71 வைகல் 82 வைகார்ப்பு 41 வைத்த 37,IX வைத்தலை 44 வைப்பு11,13,15,23,29,30, 53,58,66,75-6 வைம்முள் ளம்பு 33 வையகம் 88 வையா 25,32 வௌ வௌவினை 71