உரைவேந்தர் தமிழ்த்தொகை 17 நற்றிணை - 4 (301- 400) உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 004. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 17 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 424 = 432 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 270/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவ லராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரை வேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள் கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் உள்ளடக்கம் பதிப்புரை iii நூலடக்கம் 301. பாண்டியன் மாறன்வழுதி 1 302. மதுரை மருதன் இளநாகனார் 5 303. மதுரை ஆர்வலநாட்டு ஆலம்பேரி சாத்தனார் 9 304. மாறோகத்து நப்பசலையார் 13 305. கயமனார் 18 306. உரோடகத்துக் கந்தரத்தனார் 23 307. அம்மூவனார் 28 308. எயினந்தை மகன் இளங்கீரனார் 32 309. கபிலர் 36 310. பரணர் 40 311. உலோச்சனார் 48 312. கழார்க்கீரன் எயிற்றியார் 52 313. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 56 314. மூப்பேர் நாகனார் 61 315. அம்மூவனார் 66 316. இடைக்காடனார் 70 317. பூவண்டி நாகன் வேட்டனார் 75 318. பாலை பாடிய பெருங்கடுங்கோ 78 319. விளக்குடிச் சொகிரனார் 82 320. கபிலர் 87 321. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 93 322. மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் 98 323. வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் 103 324. கயமனார் 108 325. மதுரைக் காருலவியங் கூத்தனார். 112 326. மதுரை மருதன் இளநாகனார். 116 327. அம்மூவனார் 119 328. தொல் கபிலர் 123 329. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 127 330. ஆலங்குடி வங்கனார் 131 331. உலோச்சனார் 135 332. குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் 139 333. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் 144 334. ஐயூர் முடவனார் 148 335. வெள்ளி வீதியார் 151 336. கபிலர் 155 337. பாலை பாடிய பெருங் கடுங்கோ 158 338. மதுரை ஆர்வல நாட்டு ஆலம்பேரி சாத்தனார் 163 339. சீத்தலைச் சாத்தனார் 166 340. நக்கீரர் 170 341. மருதன் இளநாகனார் 175 342. மோசிகீரனார் 179 343. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 183 344. மதுரை அறுவை வணிகன் இள வேட்டனார் 188 345. நம்பி குட்டுவனார் 191 346. எயினந்தை மகன் இளங்கீரனார். 195 347. பெருங்குன்றூர் கிழார் 199 348. வெள்ளி வீதியார் 202 349. மிளைகிழான் நல்வேட்டனார் 206 350. பரணர் 210 351. மதுரைக் கண்ணத்தனார் 215 352. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 218 353. கபிலர் 223 354. உலோச்சனார் 226 355. மோசி கீரனார் 229 356. பரணர் 233 357. குறமகள் குறிஎயினியார் 237 358. நக்கீரனார் 240 359. கபிலர் 245 360. ஓரம்போகியார் 249 361. மதுரைப் பேராலவாயார் 253 362. மதுரை மருதன் இளநாகனார் 256 363. உலோச்சனார். 259 364. கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார் 263 365. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சொகிரனார் 268 366. மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் 272 367. நக்கீரர் 277 368. கபிலர் 281 369. மதுரை மேலைக் கடையத்தார் நல்வெள்ளையார் 285 370. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 289 371. ஒளவையார் 294 372. உலோச்சனார் 298 373. கபிலர் 302 374. வன்பரணர் 305 375. பொதும்பில்கிழார் மகன் வெண்கண்ணியார் 309 376. கபிலர் 313 377. மடல்பாடிய மோதங்கீரனார் 317 378. வடவண்ணக்கன் பேரிசாத்தனார் 321 379. குடவாயிற் கீரத்தனார் 325 380. கூடலூர்ப் பல்கண்ணனார் 328 381. ஒளவையார் 333 382. களக்கோட்டுத் தண்டியார் 337 383. கோளியூர் கிழார் மகனார் செழியனார் 341 384. பாலை பாடிய பெருங்கடுங்கோ 344 385. அஞ்சிலாந்தையார் 348 386. தண்கால் ஆத்திரையன் செங்கண்ணனார் 348 387. பொதும்பில் கிழார் 353 388. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 357 389. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 361 390. ஒளவையார் 365 391. பாலை பாடிய பெருங்கடுங்கோ 370 392. மதுரை மருதன் இளநாகனார் 373 393. கோவூர்க் கிழார் 376 394. ஒளவையார் 380 395. அம்மூவனார் 384 396. முத்தூற்று மூதெயினனார் 387 397. அம்மூவனார் 391 398. உலோச்சனார் 394 399. தொல்கபிலர் 398 400. ஆலங்குடி வங்கனார் 402 செய்யுள் முதற் குறிப்பு 406 சிறப்புப் பெயர் அகர முதலி 414 பாடினோரும் பாடல்களும் 415 பாடப்பட்டோர் 421  நற்றிணை மூலமும் விளக்கவுரையும் 301. பாண்டியன் மாறன்வழுதி களவின்கண் தோழியிற் கூட்டம்பெற்ற தலைமகன், அதுவே நயந்து தலைமகளும் தோழியும் குறித்த இடத்தே, பகற்போதிற் போந்து தலைவியோடு அளவளாவி இன்புறுவானாயினன். அவனது காதலை மாண்புறுத்தும் கருத்தினளான தோழி, கூட்டத்திற்கு அருமை தோற்றுவிக்கு மாற்றால் பல காரணங் களைப் புணர்த்து அவனைச் சேட்படுக்கலுற்றாள். சேட்படுத்த லாவது அன்பால் நெருங்குபவனைச் சில காரணங்காட்டிச் சேய்மைப் படுத்துவது. இது சேட்படையெனவும் வழங்கும். காதல் வளர்ச்சிக்கு இது மிகவும் இன்றியமையாமல் நின்று அதனை முறுகுவிக்கும் சிறப்புடையது. உண்மைக் காதலொழுக்கம் இடையீடின்றி இனிது ஒழுகும் இயல் பிற்றன்று என மேனாட் டறிஞரும் விளம்புகின்றனர். காதலறிவும் ஒழுக்கமும் இயல் பாகக் கொண்ட மக்களினத்துக்குப் பொதுவாகத் தெரிந்த உண்மையாதலின், பழந்தமிழ் மக்கள் இதனை நன்குணர்ந்து நூலிடைப் புணர்த்துக் காட்டுவது வியப்பன்று. மேலும், காத லுறவுக்குத் தோன்றும் இடையீடுகளுள் இயற்கையாகத் தோன்று வனவும் செயற்கையாகப் படைத்தும் புணர்த்தும் தோற்றுவிக்கப் படுவனவும் உண்டு. மழை, காற்று, நீர்ப்பெருக்கு, காவலருமை முதலியன இயற்கையிடையீடு களாகும். தோழி, பாங்கன், அறிவர் முதலாயினார் கூறுவன செயற்கையிடை யீடுகளாய்ச் சேட் படைக்கண் அடங்கும், ஒருகால் தலைமகன் தலைவியொடு கூடியிருக்கையில். தலைவியின் நலன்களைத் தன் ஆராக் காதலால் தீராச் சிறப்புடன் பாராட்டினான். அது கேட்ட தோழி, அவனது காதலின் மிகுதியுணர்ந்து அது விலங்குணர்ச்சியாய்த் திரிந்து ஏதம் விளைவியா வகையில் நெறிப்படுத்தும் உரன் உடையாளாயினாள். "உறுகண் ஓம்பல் தன் இயல்பாகலின், உரிய தாகும் தோழிகண் உரனே"என ஆசிரியரும் கூறுவர். அவன் பிரிந்து செல்லவும், தோழியின் உள்ளம் அவன் செயற்கண் ஒன்றிப் பலபடச் சிந்திக் கலுற்றது. "தலைவியின் குறிஞ்சி மலர் புரையும் மேனியையும், மாயிதழ் புரையும் மழைக்கண்ணையும், மயிலன்ன சாயலையும், கிளியன்ன கிளவியையும், பணைத் தோளையும், பாவையன்ன வனப்பையும் பலபடப் பாராட்டுகின்றான். இதற்கு ஏது அவன் உள்ளத்து நிறைந்திருக்கும் காதற்பெருக்கு. இவளுடைய அன்னையும் யாமும் இவள்பால்இன்ன காதலுடையம்; ஆகவே, இவளை இவனொடு சேர்ப்பின் எம்மினும் அன்னை இவளை மறப்பரியளாதலின் உயிர் வாழாள்" என்று நினைந்தாள். தோழியின் இந்நினைவின்கண், தலைமக்கள் உள்ளத்து நிலவும் காதலுறவு மாண்பெய்தி ஒருவர் ஒருவரை இன்றியமை யாராக்கும் இளிய செயல் நலம் விளங்கக் கண்ட மாறன் வழுதியார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப்பாடுகின்றார். நீண்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மயிலோர் அன்ன சாயற் செந்தார்க் 1கிளையோர் அன்ன கிளவிப் பணைத்தோள் பாவை யன்ன வனப்பினள் இவள்எனக் காமர் நெஞ்சமொடு2 பலபா ராட்டினன் 3யாய்மறப் பறியாள் மடந்தை தேமறப் பறியாக் கமழ்கூந் தலளே இஃது4 அன்பின் இயல்பினால் தருவதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன்னுள்ளே யாய் மறப்பருமை சொல்லிச் சேட்படுத்தது. உரை : நீள்மலைக் கலித்த - நீண்ட மலையின்கண் தழைத்துள்ள; கருங்கோல் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி - கரிய கொம்புகளையுடைய குறிஞ்சியின் அன்றலர்ந்த மலர் போலும் மேனியையும்; பெருஞ்சுனை மலர் பிணைத்தன்ன - பெரிய சுனைக்கண் மலர்ந்த நீலமலரை இணைத்தாற் போன்ற; மாயிதழ் மழைக்கண் - கரிய இதழ்கள் இமைக்கும் குளிர்ந்த கண்களையும்; மயிலோர் அன்னசாயல் - மயில் போன்ற சாயலையும்; செந்தார்க் கிளியோர் அன்ன கிளவி - சிவந்த வரைகளையுடைய கிளியை யொத்த சொற்களையும்; பணைத்தோள் - மூங்கில் போன்ற தோளையும், பாவையன்ன வனப்பினள் - பாவை போன்ற வனப்பையும் உடைய ளாவள்; இவள்என - இவள் என்று; காமர் நெஞ்சமொடு பல பாராட்டினன் - அன்பு நிறைந்த நெஞ்சத்தால் பலபடியாகப் பாராட்டுதலைச் செய்கின்றான்; யாய் மறப்பறியாள் - பெற்ற தாயாகிய நற்றாயோ அவளை ஒருபோதும் மறக்க மாட்டாத வளாவள்; மடந்தை - மடந்தைச் செவ்வியும்; தேமறப்பு அறியாக் கமழ் கூந்தலள் - தேனினம் மறவாது மொய்க்கும் மணம் கமழும் கூந்தலையுமுடையள் எம் தலைமகள் எ.று. எனவே இவளை எம்மின் நீக்கி இவனொடு கூட்டுவது அரிதாயன்றோ இராநின்றது? எ.று. மேனியும் மழைக்கண்ணும் சாயலும் கிளவியும் தோளும் வனப்பும் உடையள் இவள் எனப் பல பாராட்டினன்; யாயோ மறப்பறியாள்; மடந்தையும் கூந்தலள்; ஆகலின், இவனொடு கூட்டுவது அரிது என எஞ்சிய சொற்பெய்து வினைமுடிவு செய்க. நெடிது உயர்ந்து நீண்ட மலைகளிலே தழைப்ப தாகலின் பெருங்குறிஞ்சியை நீண்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி என்றார்.இன்றும் இதனை நீலகிரி மலைக்காட்டில் மிகுதியாகக் காணலாம் . இதன் கொம்புகள் கரியவாயிருத்தல் பற்றிக் கருங்கோற் குறிஞ்சி யென்றார். "கருங்கோற் குறிஞ்சிப்பூ1"என்று பிறரும் கூறுப . சுனையிடத்து மலர்வன குவளையும் பிறவும் உளவேனும் நீலம் சிறந்து விளங்குமாறு பற்றிச் சுனைமலர் என்றார். இருகண்ணும் இருபூக்களைப் பிணைத்தாற் போறலின் "மலர்பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்" என்று பிறரும்2 கூறுதல் காண்க. செந்தார்க்கிளி, சிவந்த கோடுகளைக் கழுத்திடத்தே கொண்ட கிளி; "செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்1" என்று பிறரும் வழங்குப. காமர், அழகு; அன்பால் நிறைதல் நெஞ்சிற்கு அமைதியாதலின் காமர் நெஞ்சம் என்றார். பாராட்டினன்: வினைக்குறிப்பு முற்று. மடந்தை, மடந்தைப் பருவத்தின் மேற்று. தேன், தேமென நின்றது. தேனுளதனையும் பூக்கள் மணம் கமழ்வது பற்றித் தேமறப் பறியாக் கமழ்கூந்தல் என்றார். தோழியிற் கூட்டம் பெற்ற தலைமகன் பகற்குறிக் கண் தோழியை எதிர்ப்பட்டுத் தலைமகளுடைய நலம் பலவும் பாராட்டக் கண்டதும், தோழியின் உள்ளம் அப் பாராட்டினைத் தனக்குள் எண்ணத் தலைப்பட்டு, அவன் கூறியவற்றை முறையே நிறுத்தி முதற்கண் தலைவியின் மேனி நலத்தை நீண்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி நாண் மலர் புரையும் மேனி என்றது நினைந்தாள். நீண்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி யென்றது தலைவியின் குடிப் பெருமை சுட்டி நின்றது. மழைக்கண் என்றது அவளது காதல் மிகுதி குறித்தது. மயிலோ ரன்ன சாயல் என்றதும், கிளியோரன்ன கிளவி யென்றதும் அவளுடைய மென்மைப் பண்பும் மொழியினிமையும் காட்டின. பாவை யன்ன வனப்பினள் என்றது. வாடாத இளமைவளம் குறித்தது. இங்ஙனம் நலம் பலவும் பாராட்டியதற்கு ஏது யாது என எண்ணினாட்கு அவன்நெஞ்சத்து அன்பினது அகலம் பெறப் பட்டமையின் காமர் நெஞ்சமொடு பல பாராட்டினன் என்றாள். அந்நிலையில் இவள் நலமனைத்தையும் பாராட்டித் தாய் கூறியதும் நினைவிற்கு வரவே, தலைமகன் உள்ளத்தே யன்றித் தாயின் உள்ளத்திலும் தலைவி நிலைபெற்றுறைவது புலனாதலின், யாய்மறப் பறியாள் என்றாள். நலம் பலவும் விளங்கித் தோன்றும் பருவம் என்றற்கு மடந்தை யென்றும். கூந்தலள் என்றும் கூறினாள். யாயின் அன்புமிகுதி நோக்கு மிடத்து, தலைவி தாயிற் பிரிந்து தலைமகனை யடையின், தாய் உயிர் வாழாள் எனச் சேட்படுக்கும் கருத்தினளாதல் தோன்ற, யாய் மறப்பறியாள் என்றும், இனி இவள் புறத்துப் போந்து விளையாடல் தவிர்ந்து மனைக்கண் ஒடுஙகுதற்குரியள் என்றும் கூறுவாள் மடந்தை யென்றும். தேமறப்பறியாக் கமழ் கூந்தலள் என்றும் கூறினாள். இதனாற் பயன் தலை மகனைச் சேட்படுத்தல் எனவுணர்க. 302. மதுரை மருதன் இளநாகனார் மனையறம் புரிந்து மாண்புறும் தலைமக்களது தலைமை வாழ்வில் தலைமகன் வினைகுறித்துப் பிரிந்து சென்றான்; ஆயினும், அவன் தான் பிரிகின்ற காலத்துக் கார்கால வரவின்கண், தான் வினைமுற்றி மீள்வதாகத் தலைமகட்கு வற்புறுத்தினான். அவளும் அவனுடைய சொல்வழியிருத்தல் கற்பறமாதல் கொண்டு அவனது பிரிவாற்றி மனையின்கண் இருந்துவரலானாள். சென்ற தலைமகற்கு மேற்கொண்ட வினை சிறிது நீட்டிப்பதாயிற்று. அவன் குறித்த கார்காலமோ தன் வரவில் சிறிதும் தவறாதாயிற்று. அதன் வரவு காட்டும் முறையில், காட்டில் நிற்கும் கொன்றை மரங்கள் அழகுறப் பூக்கலுற்றன. தெறுழ மரங்களின் பூக்கள் உதிர்ந்து நிலத்தில் பரந்து கிடப்பன வாயின. முல்லைநிலத்தவளான தலைமகள் அக்காட்சியைக் கண்டதும் கார்வரவை உணர்ந்தாள்; காதலன் வாராமையை நினைத்தாள்; கண்கள் கலுழ்ந்தன; கையறவு தோன்றிற்று. தலைமகன், வேனிற் பருவத்து வெயில் வீற்றிருக்கும் வெம்பலை யருஞ்சுரம் சென்றது அவள் நினைவில் எழுந்தது. ஆண்டுப் போந்த தோழியை நோக்கி, "வெயில் வெம்மையாற் காய்ந்து பசையற்றுக் காற்றால் துகள்பட்ட கானத்தின்கண் களிறுகள் வழங்குவதால் நுண்பொடி எழுந்து பரக்கும் நெடுஞ்சுரத்தைக் கடந்து, காழ்ப்புற்ற வேலமரங்கள் ஆங்காங்கு நிற்கும் கொடிய வழிகளினூடே நம் காதலர் சென்றார். இப்போது கார்வரவால் நிலம் குளிர்ந்தது ஒரு புறமிருக்க, கொன்றை மரங்கள் பொன்னிழையணிந்து பொற்புற்று விளங்கும் நன்மகளிர் போலப் பொன்னிறப் பூக்களைப் பூத்து இனிது நிற்கின்றன; இதனை அவரும் காண்பர்; கண்டவழி, அவர்க்கு நமக்கு வற்புறுத்த காலம் ஈதென நினைவெழும்; அவ்வழி விரைந்து மீளற்பாலர் நம் காதலர்; ஒருகால் இதனைக் காணாராயினும், நரைநிறம் படுத்த நல்லிணர்களை யுடைய தெறுழம்பூக்கள் உதிர்ந்து பரந்து கிடத்தலைக் காணின் தேராது ஒழிதற்கு இடமில்லை. அவர் வாராமை என் நெஞ்சை வருத்துகிறது; என் செய்வேன்?" என்று மொழிந்தாள். தலைவியது இக்கூற்றின்கண், காதலன் தெளிந்த சொல்லைத் தேறியிருந்தும் குறித்த காலத்தே அவன் வாராமை அவள் உள்ளத்தே வெம்மை தோற்றுவிப்பினும் , கற்பு நலத்தால், ஊடினும் இனிய கூறும் உள்ளப் பான்மையால், அதனை யடக்கி, நயமொழி கூறி வருந்தும் நலம் கண்ட இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். இழையணி மகளிரின் விழைதகப் பூத்த நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக் காடுகவின் 1பெற்ற வாயினும் நன்றும் வருமழைக் கெதிரிய மணிநிற இரும்புதல் நரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ தாஅம் 2தேர்கிலர் கொல்லோ சேய்நாட்டுக் களிறுதைத் தாடிய3 கவிழ்கண் இடுநீறு வெளிறில் காழ வேலம் நீடிய 4பழங்கண் முதுநெறி 5கவர்க்கும் வழங்கருங் கானம் இறந்திசி னோரே. இது, பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. உரை : இழையணி மகளிரின் விழைதகப் பூத்த - பொன்னால் இயன்ற இழையணிந்த மகளிரைப் போலக் கண்டார் விரும்பி நோக்குமாறு பூத்த; நீடு சுரி இணர - நீண்டு சுரிந்த கொத்துக்களையுடைய; சுடர்வீக் கொன்றை - ஒளி திகழும் பூக்கள் பொருந்திய கொன்றை மரங்கள் நின்ற; காடு கவின் பெற்ற வாயினும் - காடு அழகு பெற்றுள்ளன வாயினும்; நன்றும் - பெரிதும்; வருமழைக் கெதிரிய மணிநிற இரும் புதல் - கார்காலத்து வருமழையை எதிரேற்று நிற்கும் மணி நிறத்தையுடைய பெரிய பூம்புதரின் இடையே வளர்ந்த; நரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ - வெண்ணிறம் கொண்ட நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்கள் மலர்ந்து விளங்கும் தோற்றத்தைக் கண்டுவைத்தும்; தாஅம் தேர்கிலார் கொல்லோ - இஃது யாம் வற்புறுத்த கார்காலம் என்பதைத் தாம் தெளிந்திலர் போலும்; சேய் நாட்டுக் களிறு உதைத்து ஆடிய -சேய்மையிலுள்ள நாட்டிலே யானைகள் காலால் உதைத்து உழக்குதலால்; கவிழ்கண் இடுநீறு - மேல் கீழாக மண்புரளுமிடத்து எழுந்த நுண்ணிய மண்பொடி படிந்து; வெளிறில் காழ வேலம் நீடிய - வெளிறின்றிக் காழ்ப் பேறிய வேலமரங்கள் நிற்கும் ; பழங் கண் முதுநெறி சுவர்க்கும் - பாழ்பட்ட பழைமையான வழி தெரியாதபடி மறைத்தலால்; வழங்கரும் கானம் இறந்தி சினோர் - செல்லுதற்கரிய கானத்தைக் கடந்து சென்றோ ராகிய நம் காதலர் எ.று. காடு கவின் பெற்ற வாயினும் இறந்திசினோராகிய காதலர், நன்றும் தேர்கிலர் கொல்லோ; தேர்ந்து கொள்ளாமை யின், இவண் இப்பொழுது வாராராயினர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பூத்த இணர கொன்றை என இயையும். இரும் புதரை நரை நிறம்படுத்த நல்லிணர் என இயைப் பினுமமையும். தோற்றம் என ஒருசொல் வருவிக்க. களிறு உதைத்து ஆடிய இடுநீறு வேலம் நீடிய முதுநெறி கவர்க்கும் கானம், வழங்கரும் கானம் என இயையும் . தேர்ந்து கொள்ளாமை யின் என்பது முதலாயின குறிப்பெச்சம். சினைதொறும் பூத்து விளங்கும் கொன்றைக்கு உவமம் கூறுதலின், இழையணி மகளிர் என்றது மேனிமுற்றும் தக்க பொன்னிழை அணிந்த செல்வ மங்கல மகளிரை யெனக் கொள்க. விழைவு தக என்பது விழைதக என வந்தது. நீண்ட கொத்தும் சுரிந்த இதழ் களுமுடைமையின் கொன்றைப் பூவை நீடுசுரி இணர என்றும், பொன்னிறமும் ஒளியும் கொண்டு திகழ்தலின் சுடர்வீக் கொன்றை என்றும், பூத்துவிளங்கும் கொன்றை, தானே யன்றித் தன்னைச் சூழ்ந்திருக்கும் கானமும் கவின் மிக்க காட்சிகொள நின்ற நலம் வியந்து கூறலின், காடு கவின் பெற்ற என்றும் கூறினார். எதிர்தல், எதிர்நோக்கி நிற்றல். "காரெதிர் கானம்1" எனப் பிறரும் கூறுப. பசுந்தழை போர்த்த புதல் சேய்மைக்கண் நீலமணிபோலத் தோன்றுதலின் மணிநிற இரும்புதல் எனப்பட்டது. நரை, வெண்மை, வெள்ளிய பூக்களைத் தாங்கிய தெறுழம் புதரிடையே நிற்றலால் அதன் பூவின் நிறம் புதன் மேற்படர்ந்து, அதன் நிறத்தை மாற்றி வெளிறச் செய்தமையின், நரைநிறம் படுத்த நல்லிணர் என்று சிறப்பித்தார். கொல், ஐயப்பொருட்டு. ஓகாரம் அசை நிலை. களிறு உதைத்தலால் மேட்டிடம் பள்ளமும், பள்ளம் மேடு மாக மாறுதலால் தம்மில் உடைந்து மண் நுண்பொடியாக மாறுதலின், அதனைக் களிறு உதைத்து ஆடிய கவிழ்கண் இடுநீறு என்றார். உதைப்ப என்பது உதைத்து என நின்றது. வெளிறில் காழ வேலம் என்றது, கருவேலமரம். பல்லாண்டு களாகப் பலரும் பலவும் நடத்தலால், தேய்ந்து குழிந்த வழி யிடம், பழங்கண் முதுநெறி எனப்பட்டது. இடுநீறு மறைத்த லால் வழி தேர்ந்து வழங்குதற் கருமை பற்றி வழங்கருங் கானம் என்றும், கானத்திடையே நின்றொழியாது கடந்து நீங்கினமை பற்றி, இறந்திசினோர் என்றும் கூறினார். கவர்த்தல் அகப் படுத்துதல்; அஃதாவது மறைத்தல் . கற்பால் தலைமகன் பிரிவாற்றி மனைக்கண் உறையும் தலைமகள், ஒருபால் தத்தம் காதலருடன் புணர்ந்து இனிது மகிழும் ஏனை மகளிர் இழையணிந்து காண்பார் கண்ணும் மனமும் விழையுமாறு விளங்குதலைக் கண்டும் மற்றொரு பால் கானம் கொன்றை மலர்ந்து கவின் கொண்டு தோன்று வதைக் கண்டும் உரைக்கின்றளாகலின், இழையணி மகளி ரின் விழைதகப் பூத்த நீடுசுரியிணர சுடர்வீக் கொன்றைக் காடுகவின் பெற்ற என்றும், கார்மழையால் தளிர்த்துப் பூத்த தெறுழ மரம், தன் பூவின் ஒள்ளிய வெண்ணிறத்தால் சூழ நின்ற புதர்வெண்ணிறம் போர்த்து விளங்கச் செய்தலை யுணர்ந்து, நன்றும் வருமழைக் கெதிரிய மணிநிற இரும்பு தல் நரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ என்றும், கொன்றையின் மலர்ச்சி தன் காதலனொடு கூடி யுறையு மிடத்துத் தன் மேனி எய்தும் பெருநலத்தையும், தெறுழம் பூவின் செயல், அவன் பிரிவால் தான் பசந்து மேனி வேறுபட்டு இருப்பதையும் நினைப் பித்தலின், இவ்வாறே இக்காட்சி பிரிந்துறையும் காதலர் உள்ளத்தும் இதனைச் செய்து அவரை, விரைந்து மீளச்செய்தல் ஒருதலை; வாராமையின் கானம் நல்கும் காட்சியை அவர் கண்டு தெளிந்திலர் போலும் என்பாளாய், தாஅம் தேர்கிலர் கொல்லோ என்றும் கூறி னாள். கவிழ்கண் இடுநீறு முதுநெறி கவர்க்கும் கானத்து இடையாயின், அவர் தெளியாமை யொக்கும்; அதனைக் கடந்து சென்றாராகலின், தெளியார் எனற்கு இடமில்லை என்பாள் கானம் இறந்திசினோரே என்றாள். இனி, கானத்து முது நெறியைக் களிறு உதைத்தாடிய கவிழ்கண் இடுநீறு மறைத்தாற்போலக் கானம் காட்டும் கார்ப்பருவ வரவை, வினைமுடித்தற்கண் நிகழும் நிகழ்ச்சிகளும் அவைபற்றுக் கோடாக எழும் எண்ணங்களும் அவர் உணர்வைத் தம்மிடை அகப்படுத்து மறைத்தன போலும் என்பாள் தேர்கிலர் கொல்லோ என்றாள் என்றுமாம். 'பிரிந்தோர் இரங்கும் அற்சிரக் காலையும், வினையே நினைந்த வுள்ளமொடு துனைஇச், செல்ப என்ப காதலர்' என்று பிறாண்டும் தலைவி கூறுதல் காண்க. நெஞ்சில் மிக்கது கூறி அயர்வு தீர்வது இக்கூற்றின் பயன். 303. மதுரை ஆர்வலநாட்டு ஆலம்பேரி சாத்தனார் ஆர்வலநாடு என்பது இடைக்காலத்தே ஆர்வலக் கூற்றம் என வழங்கினமை கல்வெட்டுக்களால் தெரிகிறது. சில ஏடுகளில் இஃது ஆருலவிய நாடு எனவும், ஆரளநாடு எனவும் குறிக்கப் பட்டுளது. தென்னார்க்காடு மாவட்டத்து உலகாபுரத்துக் கல் வெட்டொன்றால்1 ஆர்வலம் என்பது ஓர் ஊர் என்று தெரிகிறது; ஆயினும் அஃது இன்னநாட்டதென்று விளங்கவில்லை. ஆலம் பேரி இந்த ஆர்வல நாட்டின்கண் உள்ளதோர் ஊர். சீவல்லபப் பேரேரி என்பது சீவலப்பேரி எனச் சிதைந்தாற் போல ஆலம்பேரேரி என்றது ஆலம்பேரி என வந்தது என்றலு முண்டு. ஆலம்பேரி சாத்தனாராகிய இச்சான்றோர், மதுரை நகர்க்கண் வாழ்ந்தமைபற்றி மதுரை ஆலம்பேரி சாத்தனார் எனப்படுவாராயினர். களவின்கண் ஒழுகிவரும் காதலர் இருவருள் காதலனாகிய தலைமகன் வரைதற்பொருட்டுப் பொருள் குறித்துப் பிரிந்தான். அவன் பிரிவின்கண் வேட்கை மிகுந்த தலைவி ஆற்றாளாயினாள். அவள் மனத்தின்கண் தான் உற்ற வேட்கை பற்றி எண்ணங்கள் அலையலையாய் எழுந்தன. தன்னைப் போலவே தன் காதலன் உள்ளத்திலும் இத்தகைய எண்ணங்கள் தோன்றி அவரை வருத்துமோ என்ற எண்ணமொன்று அவட்கு உண்டாயிற்று. அங்ஙனம் தோன்றிற்றாயின் அவர் ஆற்றாராய் மீண்டு வந்திருப்ப ராதலால், அவர் வாராமையின், அவ்வாறு எண்ணியிருக்க மாட்டாரெனக் கருதினாள். இவ்வாறு எண்ணங்கள் மாறிமாறித் தோன்றினமையால், ஆற்றாளாய் மேனி மெலிந்து வேறுபட்ட தலைமகள், "நள்ளிரவுப்போது வந்துவிட்டது; ஊரவரும் நன்கு உறங்கிவிட்டனர்; மன்றத்தின்கண் நிற்கும் பனைமரத்தில் கூடு கட்டி வாழும் அன்றில் தன் துணையுடன் கூடியிருந்து செய்யும் குரலோசையைக் கேட்குந்தோறும் யான் வேட்கை மீதூர்ந்து கண்ணுறக்க மின்றி வருந்துகின்றேன் எனத் தன் தோழிக்குக் கூறுகின்றவள், அன்றிலின் காதற் குரலைக் கேட்குந் தோறும் நம் காதலி நம்மை நினைந்து வருந்துவள் என நம் காதலர் நினைப்பது உண்டோ?" என்று சொல்லுவாளாயினள். இக்கூற்றின் அடியில் உள்ளத்தே முறுகிப் பெருகி நிற்கும் தலைவியின் காதல் மிகுதி கண்ட ஆசிரியர் ஆலம்பேரி சாத்தனார், காதல்வேட்கை கைகடந்த வழியும் அதனைத் தன்வரை நிறுத்திச் சில சொற்களால் புலப்படுத்தும் அவளுடைய திண்மையை வியந்து அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். ஒலியவிந் தடங்கி யாமம் நள்ளெனக் கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே 1தொன்முது கடவுள் சேர்ந்த 2பராரை மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுணர் அன்றில் துயவுக்குரல்3 கேட்டொறும் துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது உண்டுகொல் வாழி தோழி தெண்கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி யவ்வலை பரியப் 4போகிக் கடுமுரண் எறிசுறா வழங்கும் நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே. இது, வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; சிறைப்புறத்தா னென்பது மலிந்ததூஉமாம். உரை : ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென - ஊரிடத்தெழும் ஆரவாரம் அடங்கி யொடுங்க நள்ளென்னும் நடுவியாமம் வருதலும்; கலிகெழு பாக்கம் துயில் மடிந்தன்று - ஓசை மிக்க பாக்கத்தின்கண் வாழ்பவர் உறங்குவாராயினர்; தொன்முது கடவுள் சேர்ந்த - மிக்க பழமைத்தாய கடவுள் சேர்ந்துறையும்; மன்றப் பராரைப் பெண்ணை வாங்கு மடல் குடம்பை - ஊர் மன்றின்கண் நிற்கும் பருத்த அடியையுடைய பனைமரத் தின் வளைந்த மடலின்கண் கட்டப்பட்டிருக்கும் கூட்டில் இருந்து; துணைபுணர் அன்றில் துயவுக் குரல் கேட்டொறும்- துணையொடு கூடியுறையும் அன்றிலின் வேட்கைக் குரலைக் கேட்குந்தோறும்; துஞ்சாக் கண்ணள் துயர்அடச் சாஅய் - கண்ணுறக்க மில்லாமல் ஆற்றாமை வருத்துதலால் மெலிந்து; நம் வயின் வருந்தும் நன்னுதல் என்பது - நம்மை நினைந்து வருந்துவள் நல்ல நெற்றியை யுடைய நம் காதலி என நினைப்ப ரென்பது; உண்டு கொல் - உண்மை கொல்லோ; தோழி -, வாழி - ; வன்கைப் பரதவர் தெண்கடல் இட்ட - வலிய கையை யுடைய பரதவர் தெளிந்த கடலிடத்தே வீசிய; செங்கோல் கொடுமுடி அவ்வலை பரியப் போகி - நேரிய கோலையும் வளைந்த முடிகளையு முடைய அழகிய வலை கிழிந்து கெடத் தப்பிச் சென்று; கடுமுரண் எறிசுறா வழங்கும் - மிக்க வன்மை யும் எதிர்ப்பட்ட பொருளை வீழ்த்தும் கொடுமையு முடைய சுறாமீன் உலவுகின்ற; நெடுநீர்ச் சேர்ப்பன் - ஆழ்ந்த நீர்த் துறையையுடைய தலைவன்; தன் நெஞ்சத்தான் - தன் நெஞ்சின் கண்ணே எ.று. தோழி, பாக்கம் துயில் மடிந்தன்று; அன்றில் துயவுக்குரல் கேட்டொறும், துஞ்சாக் கண்ணள், சாஅய், வருந்தும் என்பது சேர்ப்பன் நெஞ்சத்தின்கண் உண்டுகொல், கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அடங்க என்பது அடங்கியென நின்றது. பாக்கம், நெய்தல் நிலத்து ஊர். விழவின்றாயினும் துஞ்சாத ஆரவாரமுடைமை தோன்றக் கலிகெழு பாக்கம் என்றார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாதலின், தொன்முது கடவுள் என்றார். துணையொடு பிரிவின்றிக் கூடியிருக்கும் அன்றில் என்றற்குத் துணை புணர் அன்றில் எனப்பட்டது. வேட்கை மிகுதியால் அறிவு திரிந்து ஒலித் தலின் அன்றிலின் குரல், துயவுக் குரல் எனப் படுவதாயிற்று. "துயவென் கிளவி அறிவின் திரிபே1" என்பர் ஆசிரியர். உண்மை எனற்பாலது உண்டு எனத் தொழில் மேனின்றது. நெடிய கோலோடு பிணிக்கப்பட் டிருத்தலின் செங்கோல் அவ்வலை என்றார். சுறவின் வன்மையும் வன்கண்மையும் தோன்றக் கடுமுரண் எறிசுறா என்றார். தலைமகன் பிரிவின்கண் ஆற்றாமை மீதூர்ந்த தலைமகள், அவனைப் பற்றிய நினைவே மிகுந்து மேனி மெலிந்து வருந்து பவள், தன் கண்ணுறங்காமையை எடுத்தோதிச் சொல்லாடு கின்றாள். ஊரவர் எடுத்த பேரொலியால் கண்கள் உறங்க வில்லை போலும் எனத் தோழி கூறாமைப் பொருட்டு ஒலியவிந் தடங்கி என்றும், உறங்குதற்குரிய காலமாதலின் அதனை விதந்து யாமம் நள்ளென என்றும், ஊரவர் அயர்ந்து உறங்கினமை புலப்படக் கலிகெழு பாக்கம் துயின் மடிந் தன்று என்றும் கூறினாள். இந்நிலையில் பெண்ணையின் மடற்குடம்பைக் கண்துணையொடு கூடியுறையும் அன்றில், வேட்கை மிகுதியால் அறிவு பேதுற்று எடுத்த குரலிசை தோன்றி அவள் உள்ளத்தில் வேட்கையை யெழுப்பித் தலைவனை நினைந்து துயர்மிகச் செய்தமையின், உறக்கமின்றி உயங்கும் திறத்தை யெண்ணி, இவ்வாறே தலைமகனும் தன்னை நினைந்து வருத்துவன் என்பது பலரும் கூறக் கேட் டிருந்ததனை நினைவு கூர்ந்து தோழியொடு உரைப்பாளாய், துணைபுணர் அன்றில் துயவுக் குரல் கேட்டொறும், துஞ்சாக் கண்ணள் துயரடைச் சாஅய், நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது, உண்டுகொல் என்றும், அவர்க் கஃது இன்றாயினும் மறையாது கூறுக என்பாள், வாழி தோழி என்றும் கூறினாள்; அவர் தெளித்த சொல்லாகிய வலைப் பட்டு அதன்கண்ணே நிற்றற்குரிய என் நெஞ்சம் அதனையும் கிழித்துக்கொண்டு துயருற்று வருந்துகின்றது; என் செய்வேன் என்பாள், வெளிப்படவுரைத்தலைப் பெண்மை தடுத்தலின், கடுமுரண் எறிசுறவின்மேல் வைத்து உள்ளுறுத்துரைத்தாள். விளக்கம் : "மறைந்தவற் காண்டல்1" எனத் தொடங்கும் நூற்பா வின்கண் வரும் "காமஞ் சிறப்பினும்" என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 304. மாறோகத்து நப்பசலையார் மாறோகம் மாறோக்கம் எனவும் வழங்கும். மாறை நாட்டு ஓகம் என்னும் ஊர் மாறோகம் எனப் பண்டை நாளிலே மருவி விட்ட தென்றும், பின்பு அதனைத் தலைநகராகக் கொண்டு இன்றுள்ள கொற்கையைச் சூழ்ந்த நாட்டுக்கு மாறோகம் என்ற பெயர் வழங்குவதாயிற்றென்றும் அறிஞர் கருதுகின்றனர். நற்குடி வேளாளர் வரலாறு என்ற நூலால் இக்குறிப்பு விளங்குகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்து மாறமங்கலம், மாறவன்மன் மங்கலம் எனவும் மானமங்கலம் எனவும் கல்வெட்டுக்களில்1 வழங்குவது; இதுவே சங்ககால மாறோக்கம் என்பாருமுண்டு; அற்றாயின் மாறோகமான மாறவன்மன் மங்கலமெனக் கல் வெட்டுக்கள் குறிக்கவேண்டும்; அவ்வாறு குறிப்பது கல்வெட்டுக் களின் மரபு; அத்தகைய குறிப்பொன்றும் இதுகாறும் காணப் படாமையால் மாறமங்கலத்தை மாறோகம் எனக்கோடற்கு இடமில்லை. இனி, கொற்கையையும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதியையும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் குடநாடு என்று குறிக்கின்றன; எனினும், அப்பகுதியை மாறோகநாடு எனப் பழையவுரைகாரர் காட்டும் குறிப்பு அவற்றில் இல்லை. கல் வெட்டுக்களைப் போல அவர்கள் உரைக்குறிப்பும் வலியுடையன வாதலால், கொற்கையைச் சூழவுள்ள பகுதியை மாறோகநாடு என மேற்கோடல் பொருந்துவதாயிற்று. நப்பசலையார் என்னும் சான்றோர் இந்நாட்டைச் சேர்ந்தவராதல் பற்றி மாறோகத்து நப்பசலையார் எனப்படுவாராயினர். நப்பசலை என்பது நக்கீரன், நச்செள்ளையென்றாற்போலச் சிறப்புணர்த்தும் நகர இடைச் சொற் புணர்ந்து நிற்கிறது என்பர். மற்று, இது தமிழ் நூன் மரபன்மையின், நற்பசலை, நற்கீரன், நற்செள்ளை என்பவற்றின் மரூஉ முடிபாகக் கோடல் வேண்டுமென அறிஞர் கூறுவர். இவர் பாடியனவாகப் பாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. களவின்கண் ஒழுகிவரும் தலைமக்களிடையே நிலவும் காதலுறவு மாண்புறுவது கருதித் தலைமகன் விரைந்து வரைதற்கு முயலாது களவு நெறியையே நீட்டிப்பானாயினன். அவனுடைய தூயவுள்ளத்தை உணர்ந்துகொள்ள இயலாமையால் தலைமகட்கு மெலிவு மிகுவதாயிற்று ஆயினும் தோழியாகிய நங்கை, தலைமைப் பண்புகளால் மாண்புற்ற ஆடவர்க்கு அஃது இயல் பாதலை யுணர்ந்து அதனைக் குறிப்பாலும் வெளிப்படையாலும் ஏற்றவிடத்து அவட்கு எடுத்து உரைத்தாள். எனினும், தலை மகளின் இளமையுள்ளம் அவ்வுரையை ஏலாது உடல் மெலிவுக்கே ஏதுவாய் நின்றது. நயமென் மொழிகளால் அவளை வற்புறுத்தலுற்ற தோழி, 'இவ்வாறு ஆற்றாமை மிக்கு வருந்துகின்ற நீ எப்போதும் ஒரு தன்மையை யாகாது தலைமகன் வரின் மாமைக்கவின் சிறந்து மாண்புறுவதும், பிரியின் அக்கவின் குன்றிப் பசப்புற்றுப் பருவந்து மெலிவுறுவதும் செய்கின்றனை' என்றாள். அது கேட்ட தலைமகள், "நன்மலைநாடனாகிய தலைமகன் போந்து கூடிய வழி என் மாமைக்கவின் எழில்மிக்கு இலங்குவதும், பிரிந்தவிடத்துப் பசலை பாய்ந்து கவின்குன்றி ஒளி குன்றுவதும் செய்தற்குக் காரணம் உண்டு; விறலோனாகிய தலைமகன்மார்பு அசுணப்புள்ளை இன்னிசையால் மகிழ்வித்து வல்லிசையால் வருத்திக் கொல்பவர் கைபோலப் புணர்வால் இன்பமும் பிரிவால் துன்பமும் செய்யும் தன்மையினையுடைத்து" என்றாள். களவின்கண் தலைவியுள்ளத்துத் தோன்றிச் சிறந்துவரும் காதல் பெருகி அவள் மேனிக்கண் மெலிவு தோற்றுவிப்பின் வரும் ஏதத்தை எண்ணித் தோழி வற்புறுத்துவதும், தலைமகளது உள்ளம் காதலின்பம் ஒன்றையே நினைந்து, அதனை நல்கும் காதலன் மார்பையே எண்ணி வன்புறைக்கு எதிரழிந்துரைப்பதும், அது கேட்கும் தோழி வேறு உரைக்கும் திறம் இன்றித் தலைமகனைக் காணுமிடத்து விரைய வரைந்து கொள்ளுமாறு உரைத்தற்கு மனங்கொள்வதும் தலைவி கூற்றால் விளங்குவது கண்டு, அவளது மதிநுட்பம் தேர்ந்து வியந்த நப்பசலையார் அதனை இப் பாட்டின்கண் வைத்துப் பாடுகின்றார். வாரன் மென்றினைப் புலவுக்குரல் மாந்தி சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும் நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் 1புணரிற் புணருமார் எழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயஎன் அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால் 2அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. உரை : வாரல்மென்றினை புலவுக்குரல் மாந்தி - நீண்ட மெல்லிய தினையினது புலவுமணம் கமழும் கதிர்களை யுண்டு; சாரல் வரைய கிளையுடன் குழீஇ - சாரலையுடைய மலையிடத் தனவாகிய தம் இனத்தோடே கூடி; வளிஎறி வயிரின் - காற்று எறிதலால் ஒலிக்கும் இயல்பிற்றாகிய ஊதுகொம்பைப் போல; கிளி விளிபயிற்றும் - கிளிகள் ஒலிசெய்யும்; நளிஇரும் சிலம்பின் நன்மலை நாடன் - அருகிற் செறிந்த பெரிய மலைகளும் குன்றுகளும் பொருந்திய நல்ல மலைநாடனாகிய தலைமகன்; புணரின் புணருமார் எழில் - போந்து கூடியவழி எனது எழில் என்பால் விளங்கித் தோன்றும்; பிரியின் - என்னின் நீங்கிப் பிரிவானாயின்; மணிமிடை பொன்னின் மாமை சாய - மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளி யிழக்குமாறு; பசலை என் அணிநலம் சிதைக்கும் - பசலை போந்து என் அழகிய நலத்தைக் கெடுக்கும்; அதனால் - ; அசுணம் கொல்பவர் கைபோல் - அசுணம் என்னும் புள்ளைக் கொல்பவர் கையைப் போல; நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்து - மிக்க இன்பமும் துன்பமும் உடைத்தா யிராநின்றது; தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பு - தண்ணிதாய்க் கமழும் நறிய மாலை யணிந்த விறலோனாகிய அவன் மார்பு எ-று. விறலோன் மார்பு இன்பமும் துன்பமும் உடைத்து; நன்மலை நாடன் புணரின் எழில் புணரும்; பிரியின் பொன்னின் மாமை சாயப் பசலை என் அணிநலம் சிதைக்கு மாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வார்தல், நீளுதல், ஏனைக் கம்பு, சோளம் முதலியவற்றினும் மென்மையுடைமை பற்றி மென்றினை எனப்பட்டது. முற்றும் செவ்வியிலுள்ள தினைக்கதிர் ஒருவகைப் புலவுமணம் கமழ்வது பற்றிப் புலவுக் குரல் என்றார். தினைமணியை மென்று தின்னாது விழுங்கு மாறு தோன்ற மாந்தி எனல் வேண்டிற்று. சாரல், மலைப் பக்கம்; குளிர்ந்த நீர்த்திவலையையுடைய காற்றுமாம். வயிர், ஊதுகொம்பு. நளி என்னும் உரிச்சொல் ஈண்டுச் செறிவுப் பொருளது. சிலம்பு, நெடிது உயர்ந்து தொடர்ச்சியுற் றிருக்கும் மலை. புணருமார் என்புழி, ஆர் அசைநிலை. மாமை, மாமைக் கவின். மணிமிடைந்த பொன், அம்மணியின் ஒளியால் நிறம் வேறுபடுதல் போல் மாமை நிறம் ஒளி குன்றினமை விளங்க மணிமிடை பொன்னின் மாமை சாய என்றார். சாய்தல், ஈண்டு, நிறம் மழுங்குதல். அசுணம், அசுணப்புள்; இதனை அசுணமா எனவும் கூறுவர். யாழிடத்திற் பிறக்கும் இன்னிசை கேட்பின் இன்புறுதலும், பகைநரம்பைத் தொட்டு வல்லிசை யெழுப்பின் அது பொறாது துன்புற்று இறத்தலும் அசுணத் துக்கு இயல்பு என்பர். "நன்று பெரிதாகும்". நெறியின் கொடுமையும் வருந்தொழிற்கு அருமையும் பொருளாகக் கொள்ளாத ஆண்மை மிகுதி புலப்பட விறலோன் என்றார். களவுநெறிக்கண் குறியிடம் போந்து தன்னைத் தலைப் பெய்து இன்புற்றொழுகும் தலைமகன் அழிவில் கூட்டத் துக்குரிய வதுவைமணத்தை விரைந்து செய்துகோடலை நினையாது நீட்டித்தலால், முறுகிப் பெருகும் காதல் வேட்கையால் ஆற்றாளாகிய தலைமகள், ஓரொருகாற் போந்து தன்னைக் கூடி நீங்கித் தன் பெருமனைக் கண் சுற்றத் தோடு இனிதிருக்கின்றான்; அவனை விரைய வரைந்து கொள்ளுமாறு தெருட்டல் வேண்டும் எனத் தோழிக்கு உரைக்கலுற்றவள், வெளிப்பட மொழியாது உள்ளுறையால், மென்றினைப் புலவுக்குரல் மாந்திச் சாரல் வரைய கிளை யுடன் குழீஇ வளியெறி வயிரின் கிளி விளிபயிற்றும், நன்மலை நாடன் என்றாள். மென்றினையின் புலவுக்குரல் தலைமகள்பால் களவின்கட் பெறும் இன்பம் எனவும், சாரல்வரை தலைமகனது பெருமனை எனவும், கிளையுடன் குழீஇ கிளி விளி பயிற்றுதல், தன் சுற்றத்துடன் கூடியிருந்து தலை மகன் இனிதிருத்தல் எனவும் கொள்க. தலமகளது ஆற்றாமை மெய்ப்படுவது கண்ட தோழி "தலைமகனது காதலொழுக்கம் பலதிறப்பட்ட கடமைகட்கிடையே நிலவுவ தாகலின், அதனை நன்கறிந்த நாம் ஆற்றியிருத்தலே வேண்டும்" என்றாளாக. அவட்குத் தலைவி, "என் மேனிநலம் அவன் புணரப் புணர் தலும், பிரிய மெலிந்து வேறுபடுதலும் இயல்பாகக் கொண் டிருத்தலா லன்றே யான் ஆற்றேனாகின்றேன்?" என்பாள், நன்மலை நாடன் புணரின் புணருமார் எழிலே பிரியின், மணிமிடை பொன்னின் மாமை சாய என், அணிநலம் சிதைக்குமார் பசலை என்றாள். தலைமகனுடைய நற்பண் பினைத் தான் அறிந்தமை புலப்பட நன்மலை நாடன் என்றும், மேனிநலம் மிக்குத் திகழுமிடத்துக் காண்போர் ஐயுற்று வினாதற் கிடமின்மையின், வாளா எழில் என்றும், பிரிவின்கண் எய்தும் வேறுபாட்டினைப் பசலை பரந்து வெளிப் படுத்தலின், மணிமிடை பொன்னின் மாமை சாய என்றும், அணிநலம் சிதைக்குமார் பசலை என்றும் கூறினாள். தன் மேனிக்கண் நின்று திகழும் இயல்பிற் றாகிய அணிநலம் அவன் புணர்ந்துழித் திகழ்தலும் பிரிந்துழிக் கெடுதலு மாகிய காரணம் யாதென ஆராய்ந்தவள், தலைமகனது மார்பு, இன்பமும் துன்பமும் செய்யும் இயல்புடைத்தெனத் துணிந்தமையின், நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பு என்றாள். மாறுபட்ட இருதன்மைகள் ஒரு பொருளிடத்தே யாங்ஙனம் அமையும் என எழும் ஐயம் அறுத்தற்கு, அசுணம் கொல்பவர் கை உவமமாகக் காட்டப்பட்டது. காதலன் மார்பு நினைத்தொறும் இன்பம் செய்யும் இயல்புடைமையும், அதன்பால் தலைமகள் கொண்டுள்ள காதற்பெருக்கும் தோன்ற, தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பு என்றாள். மாமை தலைவி மேனியின் நிறத்தையும், அணிநலம் மெய்ப்பொலிவையும் சுட்டி வந்தன. இதனாற் பயன் தோழி தலைவனை வரைவு கடாவுவாளாவது. விளக்கம் : "அவனறி வாற்ற அறியு மாகலின்1" எனத் தொடங்கும் நூற்பாவின்கண், "இன்பமும் இடும்பையு மாகிய விடத்தும்" என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 305. கயமனார் களவுநெறியிற் காதலுறவு கொண்ட தலைமக்கள் பகற்குறி இரவுக்குறிகளில், தம்மிற் கூடிக் காதற்பெருக்கால் ஒருவரை யொருவர் இன்றியமையா ராயினர். அதனால், தலமகன் மகட்கொடை வேண்டி முயலவும், தலைவியின் பெற்றோர் மகண்மறுக்கும் குறிப்பினராயினமை அறிந்தான். அவர் குறிப் பறிந்த தலைமகளும், அறத்தொடு நிலை வகையால், தலை மகற்கும் தனக்கும் உளதாகிய தொடர்பினை அறிவிக்க முயன்றாள். அதற்கேற்ற இடமும், காலமும் வாயாவாயின. அந்நிலையில் தலைமகன் உடன்போக்கினைத் துணிந்து கூறினான். தலைமகளை நாணம் தடுத்த தாயினும், அதனினும் கற்புச் சிறந்தமையின், அவள் அதனைக் காப்பது கருதிப் போக்குடன்பட்டாள். தோழி உடனிருந்து தலைமகளை அவன்பால் கையடைப்படுத்து விடுக்க, தலைமக்கள் இருவரும் ஒருநாள் இரவு புறப்பட்டுத் தலைமகனது ஊர்க்குச் சென்று சேர்ந்தனர். மகள் போய்விட்டமை அறிந்த நற்றாய் கொண்ட வருத்தத்துக்கு அளவில்லை; தலைவி கை விட்டுச் சென்ற பொருள்களையும் இருந்த இடத்தையும் விளை யாடிய நிழலிடத்தையும் காணுந்தோறும் கையறவு மிகுந்து துயருற்றாள். அவளுடைய வருத்தமிகுதி கண்ட சுற்றத்தாரும் சான்றோரும், "தனக்குச் சிறந்தவனை வழிபட்டுச் சென்றாள் நின்மகள்; கற்பைக் காக்கும் அறநெறிகளுள் உடன்போக்கும் ஒன்றே; ஆதலால், கவலற்க" எனச் சொல்லித் தேற்றினர். தேறியிருந்த நற்றாய்முன், தலைவியொடு உடன் இருந்து உடன் விளையாடி இன்புற்ற தோழி வந்தாள். அவளைக் கண்டதும் தாயின் மனம் மகளை நினைந்து கரைந்துருகியது; தன்மகள் தோழியொடு கூடிப் பந்தாடியதும், வயலைக்கொடி நட்டு நீரூட்டி வளர்த்ததும், நொச்சிவேலியின் நிழலில் இருந்து விளை யாடியதும் பிறவும் அவள் மனக்கண்முன் தோன்றின. கண்கள் நீர் சொரிய, தோழியை நோக்கி, "மகளே, நின் தோழி ஆடிய பந்தும், அவள் இல்லாமையால் வாடிக் கிடக்கும் வயலையும், துப்புரவு செய்யப்படாமையின் மயிலடி போன்ற இலைக்கொத்து உதிர்ந்து கிடக்கும் நொச்சியும் காணுந்தோறும், எனக்கு அவள் நினைவு தோன்றி வருத்தம் செய்கிறது. இவ்வண்ணம் பந்தாடல் வயலை வளர்த்தல் முதலிய செயல்களால் என்னை இன்புறுத்தினவள், இன்று தன் பிரிவால் மிக்க துன்பத்தைச் செய்தது போல, போக்கின் கண், காதலன் உடனுறுதலால் இன்புறுபவள், போகும் சுரத்தின்கண் இலையுதிர்ந்து நிற்கும் மரக்கிளைகளில் புறாக்கள் இருந்து ஒலிசெய்யுமாயின் அவற்றைச் சினந்து நோக்கி, குறுக் கிட்டு நிற்கும் மலைகளைக் கடந்து போதரும் தலைமகனை வழிவருத்தத்தோடு பற்பல வினாக்களை எழுப்பித் துன்புறுத்து வளோ? அதனை நினைக்கும் போது என் நெஞ்சம் வருந்துகிறது" என்று சொன்னாள். புணர்ந்துடன் போகிய மகளது செயல் கண்டு மருண்டு வருந்திய தாயுள்ளம், அஃது அறம் செய்யும் மாண்புடைச் செயலாதல் தெளிந்தகாலை, அவள் தன் விளையாட்டால் இன்பமும் உடன்போக்கால் துன்பமும் தனக்குச் செய்தது கண்டு, இவ்வியல்பினை யுடையாள், தன் காதலனைத் துன்புறுத்துவ ளாயின், அவன் பொறாது முகஞ்சுளிப் பனே; அவள் எங்ஙனம் வருந்துவாளோ என எண்ணி வருந்தும் திறம், நற்றாயின் இவ் வுரையின்கண் சிறந்து நிற்பது கண்ட கயமனார் தாய்மைப் பண்பின் நலம் வியந்து அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். ஈன்ற மக்கள், மனம் நோவன செய்யினும் தாய் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது அவரது இன்பமே நினைந் தொழுகுவது தாய்மைப் பண்பின் தகுதி என்பதை ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும். வரியணி பந்தும் வாடிய வயலையும் மயிலடி 5அன்ன மாக்குரல் நொச்சியும் கடியுடை வியனகர்க் காண்வரத் 1தோன்றித் 2தமியேன் கண்டகண் தலைத்தலைத் தெறுவர நோயா கின்றே மகளை நின்தோழி எரிசினம் 3தணிந்த இலையில் அஞ்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி உருப்பவிர் அமையத் தமர்ப்பனள் நோக்கி இலங்கிலை 1வெள்வேல் விடலையை விலங்குமலை ஆரிடை நலியுங்கொல் எனவே. இது, நற்றாய் தோழிக்குச் சொல்லியது; மனைமரு ட்சி யுமாம். உரை : வரி அணி பந்தும் - வரிந்து கட்டப்பட்ட அழகிய பந்தும்; வாடிய வயலையும் - வாடிக் கிடக்கும் வசலைக் கொடியும், மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும் - மயிலின் காலடி போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியும்; கடியுடை வியன்நகர்க் காண்வரத் தோன்றி - காப்புடைய அகன்ற பெருமனையிடத்தே கண்ணுக்கு அழகுறத் தோன்றி; தமியேன் கண்ட கண் தலைத்தலைத் தெறுவர - அவளை யின்றித் தனித்துக் காணும் என் கண்களைப் பார்க்குமிடமெல்லாம் வருத்துதலால்; நோய் ஆகின்று - மனநோய் உண்டாகா நின்றது; மகளை - மகளே; நின் தோழி - நினக்குத் தோழியாகிய தலைமகள்; எரிசினம் தணிந்த இலையில் அஞ்சினை - பகற்போதில் விளங்கும் வெயிலின் வெம்மை தணிந்த மாலையில் இலை யுதிர்ந்து நிற்கும் மரக்கிளைகளில் தங்கு கின்ற; வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி - புறத்தே வரிகளையுடைய புறாக்களின் வருத்தம் மிக்க தெளிந்த ஓசை; உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி - வெயில் காயும் காலத்தே அதற்கு ஆற்றாது அமர்த்த பார்வையுடன் நோக்கி; இலங்கிலை வெள்வேல் விடலையை - விளங்குகின்ற இலையுரு வமைந்த வெள்ளிய வேற்படை யேந்திய விடலை யாகிய தலைமகனை; விலங்குமலை ஆரிடை நலியுங்கொல் என - குறுக்கிட்டு நிற்கும் மலையிடத்தே செல்லும் அரிய வழியின்கண் வினாக்கள் பல தொடுத்து வருத்துவளோ என அஞ்சுகின்றேன் எ-று. மகளே, நின் தோழி கைவிட்டுச் சென்ற பந்தும் வயலையும் நொச்சியும் தோன்றித் தமியேன் கண்களைத் தெறுவரலால் நோயாகின்று; இவ்வாறே புறவின் தெளிவிளி உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி விடலையை ஆரிடை நலியுங்கொல் என நோயாகின்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மகளை, ஐகாரம் முன்னிலையசை. நீர் பெய்து காத்தல் ஒழிந்தமையால், வயலை வாடியிருந்தமை தோன்ற, வாடிய வயலை என்றார். மனையிடத்தே நொச்சிமரங்களை வேலியாக நிறுத்தி நிழலுண்டாக வளர்க்கும் மரபுபற்றி நொச்சி கூறப்பட்டது. அதன் நிழலில் சிறுவர் இருந்து விளையாட்டயர்ப. நொச்சியிலை மயிலின் அடிபோல மூன்று இலை கூடிய கொத்தாய்க் காம்பு கறுத்து இருப்பது பற்றி, மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி என்றார். "மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி1" எனப் பிறரும் கூறுதல் காண்க. அதன் கீழ் விளையாடுவதை, "கூழை நொச்சிக் கீழது என்மகள், செம்புடைச் சிறுவிரல் வரித்த, வண்டலும் காண்டிரோ கண்ணுடையீரே2" என்பதனாலும் அறிக. வேனில் வெயில் வெம்மைக்கு எரிசினம் இலக்கணை. துணையொடு வாழும் புறவு தனித்தவழித் தன் பெடையினைப் பயிர்ந் தழைக்கும் குரல் தெளிந்த ஓசையுடைத்தாதல் பற்றிப் புலம்புகொள் தெள்விளி எனப்பட்டது. அமர்த்து நோக்குதல், மாறுபட்டு நோக்குதல். நலிதல், வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்து தல். நோயாகின்று என்பது ஒரு சொல்லாய் வருத்துதல் தோன்ற நின்றது. களவின்கண் காதலுறவு கொண்டு ஒழுகிய தலைமக்கள், இற்செறிப்பு மிகுதியும், தமர் அவண் மறுப்ப ரென்ற அச்சமும், நொதுமலர் வரைவு வேண்டுதலும் கருதி உடன் போக்குத் துணிந்து குறித்த நாளில் புணர்ந்துடன் போயினராக, மகட் பிரி வாற்றாத நற்றாய் பெரிதும் வருந்துவாளாயினாள். தன் மனைக்கண் மகளைக் காணாது மருண்டு வருந்தும் அவட்கு, அவளது நினைவு தோன்றும் போதெல்லாம், விளையாடும் பருவத்து அவளது இளமைச் செயல்களே மிக்குத் தோன்றினமையின், அவள் வைத்து விளையாடிய பந்தும் பாவையும், நீர்பெய்து அன்புகொண்டு வளர்த்த வயலையும், இருந்து விளையாடிய நொச்சியின் நிழலும் காணுந் தோறும் தாயின் மனத்தைப் பெரிதும் அலைத்தமையின், வரியணி பந்தும் வாடிய வயலையும், மாக்குரல் நொச்சியும் காண்வரத் தோன்றித் தமியேன் கண்டகண் தலைத்தலைத் தெறுவர என்றாள். என்பவள், மகளது செயல் தன் அன்புள்ளத்தை வருத்தி நோய் செய்வதைத் தன்னுள்ளே உணர்ந்து, இவ்வண்ணமே தன் மனம் விரும்பிய காதலனோடு கொண்டுதலைக் கழிந்தமை நினைந்தாள்; அவள் செல்லும் சுரத்தின் காட்சி மனக்கண்ணில் தோன்ற, அங்கே வேனில் வெம்மையால் இலையின்றி உலர்ந்துநிற்கும் மரக்கிளைகளில் புறாவினம் தனித்திருந்து செய்யும் தெள்ளிய ஓசையினைக் கேட்டு வெருட்சியுற்றுப் பற்பல வினாக்களைத் தொடுத்துக் காதலனது அன்புள்ளம் அயர்ச்சியுறச் செய்வாளோ என நினைந்து வருந்தி எரிசினம் தணிந்த இலையில் அஞ்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி, உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி, வெள்வேல் விட லையை நலியுங்கொல் என்றும், செல்லும் சுரம் வழியரிதாய்க் குறுக்கே மலைநின்று தடுக்கும் இயல்பிற்று என்பாள், விலங்கு மலை ஆரிடை என்றும், வேலைக் கையிலேந்தி அவளைப் புறங்காத்துச் செல்லும் காதலனை, இலங்கிலை வெள்வேல் விடலை என்றும், அப்பெற்றியோனது காவலுள்ளம் அக் காவற்கண் நில்லாவாறு அவள் தொடுக்கும் வினாக்கள் கலக்குதலால் அவனது நெஞ்சம் வருந்தி அவளது மகிழ்ச்சிக்கு இடையூறு செய்யுமோ என அஞ்சுமாறு தோன்ற, விலங்கு மலை ஆரிடை நலியுங்கொல் என நோயாகின்றே என்றும் கூறினாள். புறவின் புலம்புகொள் தெள்விளியும், விலங்குமலை ஆரிடையும் கண்டு வருத்தமுற்று அதனை அவன் காணப் புலப்படுத்தி அவனை வருத்துவளோ என நினைந்து என் நெஞ்சு நோயுறுகின்ற தென்பாள் இவ்வாறு கூறினாள் என்றலும் ஒன்று. இதனாற் பயன் நற்றாய் புலம்பித் தெளிவா ளாவது. விளக்கம் : "தன்னும் அவனும் அவளும் சுட்டி" எனத் தொடங்கும் நூற்பாவின்கண்1 வரும் 'தோழி தேஎத்தும்' என்பதற்கு இதனைக் காட்டி இது, தோழியை வெகுண்டு கூறுவதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர். 306. உரோடகத்துக் கந்தரத்தனார் கந்தரத்தனாரது ஊர் உரோடகம். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் உளது. கல்வெட்டுக்கள் சயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டு உரோடகம்1 என்று கூறுகின்றன. உரோடகத்தனார் என்றொரு சான்றோர் இந்நூலிற் காணப்படுகின்றார். இக்கந்தரத்தனாரே அவ்வாறு குறிக்கப்படுவதாகக் கருதுபவரும் உண்டு. களவின்கண் தலைமக்கள் தமது காதலுறவை வளர்த்து வருகையில், தலைமகட்குத் தந்தை வித்திய தினைப்புனம் காக்கும் பணி உண்டாயிற்று. அங்கே, அவள் தன் தோழியோடு கூடித் தட்டையும் குளிரும் கொண்டு, தினை யுண்பான் படியும் கிளி முதலிய புள்ளினத்தை ஓப்பிவந்தனள். தலைமகனும் அவண் போந்து அவட்குத் துணையாய் விளையாடி இன்புறலானான். தினைக்கதிர் முற்றி விளைதலும் கானவர் தினை கொய்ய முற் பட்டுப் புனத்திற்குப் போந்து தலைமகளைக் கண்டு "அன்னாய், குளிரும் தட்டையும் ஏந்திய கையையுடைய கொடிச்சியாகிய நீ மனைக்குச் செல்க; தினைப்புனம் காக்கும் இச்சிறுபணி இனி நினக்கு வேண்டா" என நல்ல சொற்களால் இன்மையுறக் கூறிவிட்டு, முதற்கண் நன்கு முற்றிய கதிர்களைத் தேர்ந்து பையக் கொய்வாராயினர். அது கண்டதும், இனித் தலைமகனை முன் போல் கண்டு பயிலும் வாய்ப்புக் குன்றுவ துணர்ந்த தலைமகட்கு உள்ளம் வருந்துவதாயிற்று. அந்நிலையில் தலைமகன் தினைப் புனத்துக்கு வந்தான். கானவர் தினை கொய்வது கண்டு, ஒருபால் தன் வரவு பிறர் அறியாதவாறு மறைந்து நின்றான். ஆயினும், அவன் வரவினை அறிந்து கொண்ட தோழி தினை கொய்வது பொருளாகத் தலைவியொடு சொல்லாடுபவள் போன்று, தலை மகன் கேட்குமாறு பேசலுற்று, "கானவர் தினை கொய்யத் தொடங்கிவிட்டனர்; ஆகவே இனி நமது சிறுகிளி கடிதலாகிய தொழில் யாதாவது? தினை கொய்யப்பெற்றவழி, இப்புனம் விழவொழிந்த வியன்களம் போலப் பொலிவின்றி யன்றோ தோன்றும்?. அக்காட்சியைக் காண்டற்குரிய காலம் வந்தமை யால் குறுமகளாகிய நீ சிறுபுனத்தே இருந்து தினைகாவல் புரியும் பெருநிலை என்று எய்துமோ?" என்று சொல்லுகின்றாள். இதன்கண், தோழி தலைமக்களது காதல்நிலையும் அவர்கள் தம்மில் தாம் தனித்துக் கண்டு பயிறற்கு இயலாதவாறு, தினைக் காவல் ஒழியும் நிலையும் நினைந்து, தலைமகள் புனத்தின் நீங்கிச் சென்று இற்செறிப்புண்டவழித் தலைமகனைத் தலைப் பெய்தல் இடையீடுபட்டுத் தலைவி மேனி வேறுபட்டு மெலிதற் கேதுவாம் என எண்ணித் தலைவனை வரைந்து கொள்ளுமாறு தூண்டும் கருத்தினளாகி, அவன் செவிப்படுமாறு கூறும் சொன்னலம் அறிந்த கந்தரத்தனார் தலைவியது கற்பறம் காக்கும் தோழியின் அறிவுமாண்பை வியந்து இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். தந்தை வித்திய மென்றினை பைபயச் சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ குளிர்படு 1கையை கொடிச்சி செல்கென நல்ல இனிய கூறி மெல்லக் கொயல்தொடங் கினரே கானவர் 2கொழுங்குரல் 3குலவுப்பொறை இறுத்த கோற்றலை இருவி விழவொழி வியன்களம் கடுப்பத் 4தோன்றும் பைதல் ஒருநிலை 5காணிய வைகல் யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொற் செறிதொடி 6எல்வளைக் குறுமகள் சிறுபுனத் தல்கிய பெரும்புற நிலையே. இது, புனமழிவு உரைத்துச் செறிப்பறிவுறீஇயது; சிறைப்புறமுமாம். உரை : தந்தை வித்திய மென்தினை - நின் தந்தையாவான் உழுது விதைத்த மெல்லிய தண்டினையுடைய தினைப்புனத்தைக் காக்குமாற்றால்; பைபயச் சிறுகிளி கடிதல் யாவணது - பையச் சென்று தினை கவரும் சிறுகிளிகளை ஓப்புதலாகிய செயல் இனி யாதாகும்; குளிர்படு கையை கொடிச்சி செல்க என - குளிர் என்னும் கருவியை ஏந்தும் கையையுடைய கொடிச்சி யாகிய நீ மனைக்குச் செல்க என்று; நல்ல இனிய மெல்லக் கூறி - அன்பு நிறைந்த சொற்களால் இனிமையுறப் பைய மொழிந்து; கானவர் கொயல் தொடங்கினர் - கானவர் தினைக் கதிர்களைக் கொய்யத் தொடங்கிவிட்டனர்; கொழுங் குரல் குலவுப்பொறை இறுத்த கோற்றலை இருவி - கொழுவிய தினைக்கதிரின் வளைந்த சுமையைத் தாங்கிய திரண்ட தலையையுடைய தினையினது தாள் நின்ற புனம்; விழவொழி வியன்களம் கடுப்பத் தோன்றும் - விழா நிகழ்ந்து கழிந்த அகன்ற இடம் போலத் தோன்றும்; பைதல் ஒருநிலை - வருத்தம் பொருந்திய காட்சியை; காணிய வைகல் - காண்டற்கு அமைந்த காலை எய்தினமையின்; தீஞ்சொல் செறிதொடி எல்வளைக் குறுமகள் - தீவிய சொல்லும் செறிந்த தொடியும் விளங்குகின்ற வளையும் உடைய இளையவளாகிய தலை மகள்; சிறுபுனத்து அல்கிய பெரும்புறநிலை - சிறுசிறு மணி களையுடைய தினைப்புனத்தின்கண் தங்கிக் காவல் புரிந்த அந்நிலை; யாங்கு வருவது கொல்லோ - இனி எக்காலத்து வருமோ? அறியேன் எ-று. கானவர், கையை கொடிச்சி செல்கென, நல்ல, இனிய, மெல்லக் கூறிக் கொயல்தொடங்கின ராகலின், சிறுகிளி கடிதல் யாவணது? இருவி தோன்றும் பைதல் ஒருநிலை காணிய வைகல் எய்தினமையின் பெரும்புறநிலை யாங்கு வருவதுகொல்லோ, அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இனி, பெரும்புறநிலை காணிய வைகல் யாங்கு வருவது கொல்லோ என முடித்தலும் ஒன்று. தந்தை, தலைவியின் தந்தை. பிறக்கு, அசைநிலை. குளிர், கிளிகடியும் கருவி. இது தட்டை என்னும் கருவியுடன் காணப்படுதலின், குளிர்கொள் தட்டை என்பது வழக்கு. "சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண் குளிர்கொள் தட்டை மதனில புடையா1" என்பர். குளிர் என்பதற்கு ஈரம் எனப் பொருள் உரைப்பர் அக நானூற்றுப் பழைய குறிப்புரைகாரர். செல்க என என்பது செல்கென என வந்தது. தந்தை ஏவல்வழி நின்ற ஏனைக் கானவர் பணிந்துநின்று கூறலின், நல்ல இனிய மெல்லக் கூறி என்றார். குலவுப்பொறை, வளைந்து நிற்கும் கதிரின் சுமை. "மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப் பொறை யிறுத்த கோற்றலை இருவி1" எனப் பிறரும் கூறுதல் காண்க. விளைந்து முதிர்ந்து நிற்கும் புனம் மாவும் மக்களும் மிடைந்து விழாவயரும் களம் போலத் தோன்றுதலின், அறுப்புண்டபின் அப்பொலிவை இழத்தல்பற்றி, கொய்தழி புனத்தை விழவொழி வியன்களத்தோடு உவமித்தார், "கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே2" என்றாற்போல. ஓர் இடத்தின் பொலிவழிவு காண்பார்க்கு வருத்தம் பயத் தலின் பைதல் ஒருநிலை என்றார். பைதல், துன்பம். கைவளைக் கரணாக அணிவது தொடியாதலின், செறிதொடி யெல் வளை என இணைத்துக் கூறினார்; "கோடீ ரெல்வளைக் கொழும்பல் கூந்தல் ஆய்தொடி மடவரல்3"எனப் பிறரும் கூறுதல் காண்க புறநிலை, புறம் காக்கும் நிலை. தினைக்காவல் புரிந்தொழுகும் தலைமகட்குக் கூறு வாளாய்ப் பிறர் கேட்டு அயிராமைப் பொருட்டுச் சிறுகிளி கடியும் இத்தொழில் இனி இல்லையாம் என்றற்கு, சிறுகளி கடிதல் யாவணது என்று தோழி கூறுகின்றாள். நின் தந்தைக் குரிய தினையாதலின், அதனைக் காத்தலும் கைவிடலும் நின் வரம்பின அல்ல என்பது தோன்றத் தந்தை வித்திய மென் தினை என்றாள். அதுகேட்ட தலைவி காரண மறியாது வியந்து நோக்கினாளாக, அவட்குக் கானவர் தினைகொய்யத் தொடங்கினமை யுணர்த்துவாள், கொயல் தொடங்கினர் கானவர் என்றாள். காவல்புரியும் தனக்கு அறிவியாது கானவர் தினை கொய்தல் யாங்ஙனம் என்பாள்போல் தலைவி குறிப் பால் நோக்க, அவட்கு விடையிறுப்பாளாய்க் குளிர்படு கையை கொடிச்சி செல்க என நல்ல இனிய மெல்லக் கூறினர்; அதனால் அவர்பால் குற்ற மின்று என்றாள். வேறு வினவுதற் கின்றி மேல் என்னாம் என்று தலைவி கேட்க, இப்புனம் விழவொழி வியன்களம் போலப் பொலி வின்றித் தோன்றப் பைதல் நிலை காணப்படும் என்பாள், கொழுங்குரல் குலவுப்பொறை இறுத்த கோற்றலை இருவி விழவொழி வியன்களம் கடுப்பத் தோன்றும் பைதல் ஒரு நிலை என்றும், அந்நிலை தோன்றுதற்குரிய நாள் சின்னாள் தாழ்த்துத் தானே வரும் என்பாள் போலத் தலைவி தன் தலையை அசைத்துக் காட்ட, அது கண்ட தோழி அந்நாள் நாளையே எய்துமோ, சின்னாள் தாழ்த்துத் தோன்றுமோ, அறியேன் என்பாள். பைதல் ஒருநிலை காணிய வைகல் யாங்கு வருவது கொல்லோ என்றாள். தலைவி யுள்ளம், அது கேட்டலும், தலைமகனைத் தலைப்பெய்தல் அரிதாகுமே என எண்ணி அலமரலுற்றது. அதனைக் குறிப்பாலுணர்ந்த தோழி, இனிய சொற்களை மொழிந்து தொடியும் வளையும் ஒலிக்கச் சிறுகிளி ஓப்பிய தலைவியின் தினைப்புன வாழ்வைச் சிறப்பித்து, இனி அந்நிலை எப்போது எய்துமோ அறியாது மயங்குகின்றேன் என்பாள், யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் செறிதொடி எல்வளைக் குறுமகள் சிறுபுனத்து அல்கிய பெரும்புறநிலை என்றாள். தினைப்புனத்தே தலைமகளைக் காண்டல் விருப்பொடு வந்த தலைமகற்குத் தோழி "தந்தை வித்திய மென்தினை பைபயச் சிறுகிளி கடிதல் யாவணது?" என்று கூறியது, உள்ளத்தே சூழ்ச்சி பிறப்பித்தது. கானவர் தலைமகளை நோக்கி நல்ல இனிய மொழிகளால் மெல்லக் கூறலுற்றுக் குளிர்படு கையை கொடிச்சி செல்க என மொழிந்தது, தலைவற்கு மகிழ்ச்சி பிறப்பித்ததேனும், கானவர் கொயல் தொடங்கினர் என்றது, இனித் தலைமகளைத் தலைப்படுதல் அரிது என்பது தோன்றி வருத்துவதாயிற்று. அதன்மேல் கொய்யப்பட்ட தினைப்புனம் விழவொழி வியன்களம் கடுப்பத் தோன்றும் எனத் தோழி கூறியது, தலைவி ஆறாதுமேனி வேறுபட்டு மெலிவு எய்துமாறும், சிறுபுனத்து அல்கிய பெரும்புற நிலை காணிய வைகல் யாங்கு வரு வது கொல்லோ என்றது, தலைவி மனையறம் மேற் கொண்டு விருந்து புறந்தருதல் முதலிய அறங்களைச் செய்தற்குரிய மணநாள் யாங்கு வருவது கொல்லோ எனத் தலைவனைத் தோழி வினவியவாறும் புலப்படுத்தின. இதனாற் பயன், தலைவன் தெருண்டு விரைய வரைந்து கொள்வானாவது. 307. அம்மூவனார் களவு நெறியில் காதலுறவு கொண்ட தலைமக்களில், தலைமகள் தான் ஆயமகளிருடன் சென்று விளையாடும் கடற் கானற் சோலையில் குறியிடம் கண்டு, அங்கே தலை மகனைக் கண்டு இன்புற்று வந்தாள். தலைவியுள்ளத்துக் காதல் சிறப்புறுவது குறித்துத் தலைவன் தன் குறி வரவைத் தாழ்த்தான். குறித்த பொழுதில் அவன் வாராமை பற்றித் தலைமகட்கு ஆற்றாமை தோன்றி வருத்திற்று. ஆற்றுவிக்கும் தோழி தலைவியைத் தேற்றிக்கொண்டிருக்கையில், தலைவன் வரவை அவனது தேரிற் கட்டிய மணியொலியும் உடன்வரும் ஏவ லிளையர் ஆர்ப்பும் தெரிவித்தன. அதனை யுணர்ந்த தோழி விளையாட்டுக் கருதித் தலைவியை நோக்கி, "அன்னாய், நாம் அங்கே அடி வளைந்து நிழல்செய்து நிற்கும் புன்னை மரத்தின் அடியில் ஒதுங்கி மறைந்து கொள்வோம்; அப்போது தலைவன் போந்து நம்மைக் குறியிடத்தே காணாமல் அலமரும் காட்சியைக் கண்டு மகிழ்ந்து சிறிது போதில் கூடலாம்; நமது இச்செயலால், அவனைக் காணாதவிடத்து நாம் எய்தும் வருத்தத்தை அவன் நன்கு உணர்ந்துகொள்ள முடியு மாகலான்" என்றாள். இதன்கண், காதலரது காதல் ஒருவரை யொருவர் காணாத வழிப் பெருகுதலும், அக்காட்சி தாழ்த்தவிடத்துச் சிறப்புறுதலும் இயல்பாதலை யுணர்ந்து, தலைமக்கள் காதலன்பு பெருகி ஒருவரையொருவர் இன்றியமையா ராகும் திறம் பெறுமாறு செய்யும் தோழியினது சூழ்ச்சியைக் கண்ட அம்மூவனார், அதனை இப்பாட்டின்கண் உய்த்துணர வைத்து உரைக்கின்றார். மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி உய்த்துணர வைத்தல் வெளிப்பட மொழிவதனினும் வலியுடைத்து என்பது பண்டைச் சான்றோர் மரபு. கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் 1பெயர்புடை இயங்கிய இளையரும் ஒலிப்பர் 2கடலாடு விழவிடைப் பேரணிப் 3பொலிந்தநின் திதலை அல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் 1நிழற்பட ஓங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி பானாள் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் 2காணான் 3அல்லல் அரும்படர் 4காண்கம் சிறிதே. இது, குறிநீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. உரை : தோழி - ; கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் -விருப்பந் தரும் செலவினையுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிற் கட்டிய மணியும் ஒலிக்கின்றது; பெயர்புடை இயங்கிய இளையரும் ஒலிப்பர் - பக்கத்தே விரைந்து வரும் ஏவல் இளையரும் ஆரவாரிக்கின்றனர்; கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த - கடலாட்டு விழாவை முன்னிட்டுப் பெரிய அணிகலன்களாற் பொலிகின்ற; நின் திதலை யல்குல் நலம் பாராட்டிய - நின் திதலை பரந்த அல்குலின் நலத்தைப் பாராட்டற்கு; வார்மணல் சேர்ப்பன் வரும் - நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன் வருகுவன்; நிழல்பட ஓங்கிய முழவுமுதல் புன்னை - நிழலுண்டாக ஓங்கி வளர்ந்த முழவு போலும் அடிப்பகுதியையுடைய புன்னைமரத்தின்; மா அரை மறைகம் வம்மதி - பெரிய அடியின்கண் மறைந்து கொள்ளலாம் வருக; பானாள் பூவிரி கானல் புணர்குறி வந்து - நடுவியா மத்தில் பூக்கள் விரிந்த கானற்சோலையில் கூடற்கெனச் செய்த குறியிடத்தே வந்து; நம் மெல்லிணர் நறும் பொழில் காணான் - அவ்விடத்தும் மெல்லிய இணர்களையுடைய நறிய பொழி லிடத்தும் நம்மைக் காணானாய் எய்தும்; அல்லல் அரும்படர் காண்கம் சிறிது - அல்லல் மிக்க அரிய அவலத்தைச் சிறிது போது காணலாம் எ- று. தோழி, தேர் மணியும் இசைக்கும்; இளையரும் ஒலிப்பர்; ஆகலான், வார்மணல் சேர்ப்பன் திதலையல்குல் நின் நலம் பாராட்டிய வரும்; புன்னை மாவரை மறைகம், வம்மதி; பானாள் வந்து புணர்குறியிடத்தும் நறும் பொழிலகத்தும் காணானாய் எய்தும் அல்லல் அரும்படர் காண்கம் சிறிது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கவர்வு, விருப்பம்; "கவர்வு விருப்பாகும்"1 என்பது தொல்காப்பியம். குதிரையின் செலவு காண்பார்க்கு விருப்பம் விளைவித்தலின் கவர்பரி என்றார். பரி: செலவையுடைய குதிரைக்கு ஆகுபெயர். தேரின் இரு புடையும் பரந்து குதிரையின் செலவுக்கு ஒப்பப் பெயர்ந்து வருதலின், ஏவல் இளையரை பெயர்புடை இயங்கிய இளையர் என்றார். கடலாடு விழாவுக்குச் செல்வோர் தம்மை அழகிய ஆடையணிகளால் ஒப்பனை செய்து கொண்டு செல்பவாதலின், அதனை முன்னிட்டு நல்ல பல அணிகள் பூண்டு நின்ற தலைமகளைக் கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த நின் என்று கூறினார். கானற் கடல் விளையாட்டுக் காண்டல் விருப்பொடு சென்ற மாதவி தன்னை ஒப்பனை செய்து கொண்ட திறத்தை இளங்கோவடிகள் கூறுவது2 ஈண்டு நினைவுகூரத் தகுவதாம். திதலை, வரி. பாராட்டிய: செய்யிய வென்னும் வினையெச்சம். நிழல்பட ஓங்கிய புன்னை, நிழலுண்டாகத் தழைத்த புன்னை என்றவாறு. முழவு போலும் முதல், முழவு முதல் எனப்பட்டது. முதல், மரத்தின் அடிப்பகுதி. புணர்குறி, புணர்த்த குறி; அஃதாவது, ஈண்டு இரவுப்போதில் தலைமகனைத் தலைப்பெய்தற்குத் தலைவி சுட்டிய இடம்; இது தலைமகளுடைய மனை வரைப்பின்கண்ணது. "களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்3 என்பது விதி. அல்லல் - துன்பம்; ஈண்டுக் குறி பிழைத்தவிடத்து உளதாகும் வருத்தம். அரும்படர், தீர்த்தற் கரிய கவலை. களவொழுக்கத்தின்கண் குறியிடத்து வந்தொழுகும் தலைமகன் தேரொடு வருதல் விலக்கப்படாமையின், பகற் குறிக்கண் நின்ற தோழி தலைவன் வரவுணர்ந்தமையைத் தலைமகட்குச் சொல்லுவாள், கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் என்றும், பெயர்புடை இயங்கிய இளையரும் ஒலிப்பர் என்றும், எனவே, தலைவன் வருதல் ஒருதலை என்பாள், வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் என்றும் கூறினாள். கடல்விளையாட்டுக் காண்பான்போல வருதலின், இளையர் புடைபெயர்ந்து இயங்கி ஆரவாரிக்கத் தலைவன் கவர்பரி நெடுந்தே ரேறி வாராநின்றான் என்றாளாம். அதற்கேற்ப நீயும் உயரிய ஆடையணிகளாற் பொலிகின்றாய் என்பாள். கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்தனை என்றாள், இனி, தலைமகன் போந்து நின் நலம்பாராட்டி நின்னை மகிழ்விப்பன் என்பாள், கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த நின் திதலையல்குல் நலம் பாராட்டிய வருமே தோழி வார்மணல் சேர்ப்பன் என்றாள். இவ்வாறு தலைவன் வரவு கேட்டதும், தலைவி யுள்ளம் அவனைக் குறியிடத்தே வரவேற்றற்குப் பெரிதும் விதும்பல் கண்ட தோழி, அதற் கேதுவாகிய அவளது காதல் சிறப்பது குறித்து ஒரு சூழ்ச்சி செய்கின்றாள், இருள்படப் பொதுளி நிழல் செய்துநிற்கும் பெரிய புன்னை மரத்தைக் காட்டி அதன் அடியில் மறைந்து நிற்போம் என்றும், அவட்குத் தலைவி உடன்படாள் என நினைந்து சிறிது போது நிற்போம் என்றும் சொல்லுவாள், நிழற்பட ஓங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி என்றாள். அது தலைவி யுள்ளத்தில் உடன்படாமைக் கேதுவாகிய கலக்கத்தை யுண்டு பண்ணுவ தறிந்த தோழி, இரவுக் குறிக்கண் தலைமகன் போந்து நமது வரவு தாழ்க்கினும் குறிபிழைக்கினும் குறி யிடத்தும் அஃது அமைந்த பொழி லிடத்தும் தேடி யலமருதல் உண்டன்றோ? அக்காலத்து அவன் எய்தும் அல்லலை நாம் கேட்ட துண்டே யன்றி நேரிற் கண்ட தின்மையின், ஈண்டு நாம் சிறிது போது மறைந்து நிற்பின் அதனைக் காணலாம் என்பாள், புணர்குறி வந்து பூவிரி நறும்பொழில் நம் காணான் அல்லல் அரும்படர் காண்கம் சிறிது என்றாள். காதலன் வரவு கண்டதும் முறுகிப் பெருகும் காதலன்பு கைகடவா வண்ணம் காத்தல் தோழிக்குக் கடனாதலால், தோழி இச்சூழ்ச்சியினைச் செய்வது அறம் என அறிதல் வேண்டும். காதல் பெருகுமிடத்து மக்களது கல்வியறிவு ஒடுங்கி அக்காதற் காமத்து வழிநிற்கும் இயல்பிற்று; "காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா, வாதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்"1 என்று திருத்தக்கதேவர் கூறுவது காண்க. அக்காலத்தில் இடையீடு தோன்றித் தடை செய்யின், ஒடுங்கிக் கிடக்கும் கல்வியறிவு மேம்பட்டுக் காதற் காமத்தை அடக்கி நெறிப்படுத்தும். அந்நுட்ப முணர்ந்தே தோழி இத்தகைய சிறு தடைகளைப் புணர்ப்பது அறமெனக் கருதப் படுகிறது. ஒரு வகையால் தலைவனை வரைவு கடாவுவது இதனாற் போதரும் பயன் என அறிக. விளக்கம் : "நாற்றமும் தோற்றமும்"1 என்ற நூற்பாவின்கண் "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்" என வருவதனுள், நயம்புரி யிடத்தினும் என்றதனால், "களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க" எனக் கூறி, இப்பாட்டைக் காட்டி இது வருகின்றான் எனக் கூறியது என்பர் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டி.2 'இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ எனக் கூறியது" என்பர். 308. எயினந்தை மகன் இளங்கீரனார் கடிமனைக்கண் இருந்து கற்பறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் தலைமகற்குப் பொருள் குறித்துத் தன் மனைவியைப் பிரிந்து செல்லவேண்டிய கடமை பிறந்தது. பொருளது இன்றியமையாமை பற்றிய நினைவுகள் தலைவன் நெஞ்சில் நிறைந்து அவன் அறிவைப் பணிகொள்ளத் தலைப் பட்டன. அவனது பிரிவிக்குறிப்புப் பையத் தலைமகட்குத் தெரிந்தது. காதலால் ஒன்றிய உள்ளமுடை யார்க்குப் பிரிவினும் கடுந்துன்பம் தரவல்லது பிறிதியாதும் இல்லை; அதனால் தலைவி ஆற்றாமை மீதூர்ந்து செய்வ தறியாது திகைப்புண்டு வருந்தினாள். வேட்கைவழி நின்ற அவளது அறிவு சோர்வுற்றது. செலவுக்கு ஆவனவற்றைச் செய்வான் புறத்தே போயிருந்த தலைவன் மனைக்கட் போதரவும், தலைவி கண்ணீரும் கம்பலையு முடைய ளானாள். அது கண்டு துணுக்குற்ற தலைவன் அதற்குரிய காரணத்தை வினவு முன்பே, ஒன்றும் கூறாமல் விரைந்து ஓடிவந்து அவன் மார்பின்மேல் வீழ்ந்து விம்மி விம்மி அழலானாள். அதனால், அவன் மனம் நீர் நிறைந்த பசுமட் கலம் மழைநீரில் நனைந்து கரைந்தோடுவது போல நெகிழ்ந்து மெலிந்தது. அந்நிலையில், அறிவு அறை போகாத ஆண்மைத் தலைவன், பிரிவுடன்படான் போல அவள் செயலைத் தன் நெஞ்சிற்குக் கூறுவானாய் அவள்அறியுமாறு இன்சொற்களால் கூறலுற்றான். இதன்கண் பொருள் ஈட்டற்குக் கருதும் தலைமகனது கடமையுணர்வை மனைவியின் காதலன்பு இடையீடு செய்வதும், அதனால் அவனது இளமையுள்ளம் வலியிழந்து மெலிந்து இனைவதும், அதனை அவன் தன் நெஞ்சிற்கு எடுத்துரைக்கு மாற்றால் அறிவறை போகாது கடமைவழி நிற்கும் திறமும் கண்ட எயினந்தை மகனான இளங்கீரனார் இதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். இந்நலம் கண்டே நற்றிணையைத் தொகுத்த சான்றோர் இப்பாட்டினையும் மேற்கொண்டு கோத்துள்ளனர். 1 செலவுவிரை வுற்ற அரவம் போற்றி மலரேர் உண்கண்2 பனிவார் பாயிழை யாம்தற் கரையவும் நாணினள் வருவோள் வேண்டா மையின் மென்மெல வந்து வினவலும் தகைத்தலும் செல்லா ளாகி வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப் பொறியழி பாவையின் கலங்கி3 அறிவழிந்து ஆகம் அடைதந் தோளே அதுகண்டு 4ஈர்மட் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கேற் றாங்கெம் பொருண்மலி நெஞ்சம்1 புணர்ந்தன் றன்றே. இது, நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி, ஆற்றானாய் நெஞ்சுக்குச் சொல்லிச் செலவழுங்கியது. உரை : யாம் தன் கரைய நாணினள் வருவோள் - யாம் தன்னை அழைத்தவிடத்து நாணத்தால் ஒடுங்கி வருபவளாகிய; ஆயிழை - ஆராய்ந்த இழைகளை யணியும் காதலி; செலவு விரைவுற்ற அரவம் போற்றி - பொருள்வயிற் செலவுக்குரிய வற்றை விரைந்து ஆற்றும் செயல்வகைகளை உடனிருந்து உதவி; வேண்டாமையின் - என் செலவினைத் தான் விரும்பா மையால்; மலர் ஏர் உண்கண் பனிவார்பு - மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் அரும்ப; மென்மெல வந்து - பையப் போந்து; வினவலும் தகைத்தலும் செல்லாளாகி - என் செலவுபற்றி வினவுதலோ மறுத்தலோ ஒன்றும் செய்யாளாய்; வெறிகமழ் துறுமுடி தயங்க - மணங்கமழும் தன் அடர்ந்த கூந்தல் முடியசைய; பொறியழி நல்வினைப் பாவையின் - விசைக்கயிறு அறுபட்ட நல்ல வேலைப்பாடமைந்த பாவை போல; கலங்கி - நிலை தளர்ந்து; அறிவழிந்து - அறிவு சோர்ந்து; ஆகம் அடை தந்தோள் - என் மார்பின்மேல் வீழ்ந்தொழிந்தாள்; அது கண்டு -; ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் - ஈரமண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பசுமட்கலம்; பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு - பெரிய மழையில் நனைந்து உடைந்து கரைந்து ஓடினாற் போல; எம் பொருள் மலி நெஞ்சம் - பொருள்பற்றிய நினைவுகள் நிறைந்த எமது நெஞ்சம்; புணர்ந்தன்று - பொருளொடு புணராது அவளுணர்வோடே ஒன்றிவிட்டதுகாண் எ.று. நாணினள் வருவோளாகிய ஆயிழை, அரவம் போற்றி, பனிவார்பு, வேண்டாமையின் மென்மெல வந்து, வினவலும் தகைத்தலும் செல்லாளாகித் துறுமுடி தயங்க, பாவையின் கலங்கி, அறிவழிந்து, ஆகம் அடைதந்தோள்; அது கண்டு, பசுமட்கலம் பெயற் கேற்றாங்கு, என் நெஞ்சம் புணர்ந்தன்று என வினைமுடிவு செய்க. கரையவும் என்புழி உம்மை, இசை நிறை. கரைதல், அழைத்தல். அரவம், ஈண்டுப் படை இயங்கு அரவம் என்புழிப் போல நின்றது. போற்றல், மேற்கோடல். தகைத்தல், தடுத்தல்; "கானம் தகைப்ப செலவு1" என்றாற் போல. பொறி, விசைக்கயிறு. பசுமட் கலத்துள் நீர்பெய்து வைத்தலை, "பசுமட் கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று"1 என்பதனாலும் அறிக. அன்றே அசைநிலை. களவின்கண் நிகழும் பொருட்பிரிவு போலாது கற்பிடை நிகழும் இப்பிரிவு காலம் நீட்டிக்கு மாகலின், அதற்கு ஆவன வற்றைச் செய்தற்கண் எழுந்த ஆரவாரம் தலைவன் பிரிவுக் குறிப்பை வெளிப்படுத்தவும், அதனை யறிந்த தலைமகள், தானும் அவற்குத் துணைசெய்தமை அவன் நெஞ்சின் கண் நிலைபேறு கொண்டமையின், அதனை எடுத்த எடுப்பி லேயே வியந்து, செலவு விரைவுற்ற அரவம் போற்றி என்றான். அக்காலை அவன் பிரிவு நினைந்து பிறந்த ஆற்றா மையைக் கண்கள் நீர் நிறைந்து காட்டக் கண்டது பற்றி, மலரேர் உண்கண் பனிவார்பு என்றும், தான் மேற் கொண்ட பிரிவு அவட்கு விருப்பம் தாராமையைக் கண்ணீரே யன்றி மென்னடையும் இனிது புலப்படுத் தினமை பற்றி, வேண்டாமையின் மென்மெல வந்து என்றும் கூறினான். தான் அன்பால் அழைக்குமிடத்து இயல்பாகவுள்ள நாணத்தால் ஒடுங்கி வருபவள், இப்போழ்து அவ்வாறின்றித் தன்னை நோக்கிப் பையத் தானே வந்தமையின், யாம் தற்கரைய நாணினள் வருவோள் மென்மெல வந்து என்றும், அவளது வரவு யாதோ சொல்ல வருவதுபோல் இருந்த தாயினும், ஒன்றும் கூறிற்றிலள் என்றும், கூறியிருந்தால் செலவு பற்றிய வினாவாகவும் அன்றிச் செலவினை மறுக்கும் கூற்றாகவும் இருத்தல் வேண்டும்; மற்று, அவள் ஒன்றும் உரைத்திலள் என்பான், வினவலும் தகைத்தலும் செல்லாளாகி என்றும், துயர்மிக்கு வருந்தினாள் என்றற்கு வெறிகமழ் துறுமுடி தயங்க என்றும், அதனால் நிலைகலங்கி அறிவு சோர்ந்து நிற்கலாற்றாது தன் மாபின்மேல் வீழ்ந்தாள் என்பான், கலங்கி அறிவழிந்து ஆகம் அடைதந்தோள் என்றும் கூறினான். அவள் வீழ்ந்தது, பொறிக்கயிறு அறுபட்ட பாவை நிலை யின் நீங்கிச் சாய்ந்து வீழ்வது போன்றமையின் நல்வினைப் பொறியழி பாவையின் என உவமம் செய்தான். பொறியழி நல்வினைப் பாவையின் என மாறுக. அன்புறைந்த அவளது செயல் கண்ட தன் நிலையை வெளிப்படக் கூறமாட்டாமையின் ஈர்மட், செய்கை நீர்படு பசுங்கலம் எனப் புலப்படுத்தான். அவள் தன் ஆகம் அடை தந்தபோது, தன் நெஞ்சம் தன்கண் நிறைந்த பொருண்மலி கருத்துக்களை மறந்து நிறையழிந்து நெகிழ்ந்தோடிய திறத்தைப் பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருண்மலி நெஞ்சம் புணர்ந் தன்று என்றான். என்றது. யான்மேற்கொண்ட பொருட்பிரிவைக் கைவிடுமளவிற்கு என் நெஞ்சினை நெகிழ்வித்தது என்றானாம். இதனை எடுத்துக் கூறுதலால், செல்லா தொழியான் என அறிக; "செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும்1" என்று ஆசிரியர் கூறுவது காண்க. இதனால் தலைவன் செல்வழுங்குதல் பயன் எனக் கொள்க. 309. கபிலர் களவின்கண், தலைவி உள்ளத்துக் காதல் சிறந்து விளங்குவது கண்ட தோழி, தலைமகனை வணங்கித் தலைவியை விரைய வரைந்து கொள்ளுமாறு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வேண்டினாள். ஆயினும், தலைமகன், அவளுடைய காதல் தன்னை யின்றி ஒரு நொடிப்போதும் அமையாத அளவு பெருகுதல் வேண்டியும், இடையிடையே தோன்றிய கடமைகளை ஆற்று வது குறித்தும் வரைவு மேற்கொள்ளாது நீட்டிப்பா னாயினன். அதனை அறியாத தோழி, தலைமகன் வரைவினைத் தாழ்ப்பதால் தலைவி ஆற்றாமை மிக்கு வருந்துவளே என எண்ணி வருத்த முற்றுத் தன்னைத் தலைவன் குறையிரந்து நின்றமையையும், அதனால் தான் தலைவியை மதியுடம்படுத்து அவனோடு கூட்டினமையையும் நினைந்து, "என்னா லன்றோ இவட்கு இத்துயர் உளதாயிற்று?" என்று ஆற்றாளாயினள். அது கண்ட தலைமகள், தோழியை நோக்கித் "தோழி, என் மேனி மெலிவு கண்டு யான் செய்தது இவள் துயர்' என என்பாற் கொண்ட அன்பால் நீ ஆற்றாயாகின்றனை. மேலும், 'தலைவனது கேண்மை நமக்குத் துன்பம் தருவதொன்றாக உளது; அதனை உள்ளவாறு அறிபவர் இல்லை' என்று இயம்புகின்றாய்; அவரது நட்பின் மெய்ம்மையை யான் நன்கு அறிவேன்; அதனால், அவர் வரைவு தாழ்த்தவிடத்தும் யான் மனம் தேறியிருப்பன்; அவர் வற்புறுத்த சொல்வழி நிற்பது எனக்கு அறம் காண்" எனத் தன் கற்புநலம் தோன்ற மொழிந்தாள். இதன்கண், தலைமகள் எய்தி வருந்துதற் குரிய ஆற்றா மையைத் தான் மேற்கொண்டு தலைவியே தன்னை ஆற்றுவிக்கு மாறு செய்யும் தோழியின் சூழ்ச்சி நலமும், அதற்கு உள்ளீடாக இருக்கும் அவளது பேரன்பும், அதனால் அத்தோழியை ஆற்று விக்கும் தலைவியின் உழுவலன்பும் தலைவனுடைய நட்பிலும் அவன் உரைத்த சொல்லிலும் ஊற்றங் கொண்டு அவன் சொல்வழி நிற்பதல்லது சீரிய கற்பறம் பிறிதில்லை யென்ற கருத்தால், அதன்கண் உறைத்து நின்று, "அவன் தெளித்த சொற்கள் என் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன" எனக் குறிப்பாகவும், "தேறு வன்மன் யான் அவருடை நட்பே" என வெளிப்படையாகவும் மொழியும் திண்மையும் கண்ட சான்றோராகிய கபிலர் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். 3நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர்வனப் பிழந்த4 என் நிறனும் நோக்கி 5யான்செய் தன்றிவள் துயர்என அன்பின் 6ஆழல் வாழி தோழி வாழைக் கொழுமடல் அகலிலைத் தளிதலைக் 1கலாஅம் பெருமலை நாடன் கேண்மை நமக்கே விழும மாகல் அறியுநர் இல்லெனக் கூறுவை மன்னோ நீயே தேறுவென் மன்யான் அவருடை நட்பே. இது, வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. உரை : தோழி -; வாழி -, நெகிழ்ந்த தோளும் - தொடி நெகிழ மெலிந்த என் தோள்களையும்; வாடிய வரியும் - வாட்டத்தால் சுருங்கித் தோன்றும் திதலை வரிகளையும்; தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி - மாந்தளிர் போலும் அழகினை இழந்த என் மேனி நிறத்தையும் பார்த்து; யான் செய்தன்று இவள் துயர் என - யான் செய்த குற்றத்தால் வந்தது இவட்கு இத்துயர் என்று சொல்லி; அன்பின் ஆழல் - என்பாற் கொண்ட அன்பால் நீ வருந்துதல் வேண்டா; வாழைக் கொழு மடல் அகல்இலை - வாழையின் கொழுவிய மடலிடத்தே யுள்ள அகன்ற இலையின்கண்; தளி தலைக் கலாஅம் - மழைத்துளிகள் கலந்து தங்கும்; பெருமலை நாடன் - பெரிய மலைநாடனாகிய தலைவனுடைய; கேண்மை - நட்பானது; நமக்கு விழும மாகல் அறியுநர் இல் எனக் கூறுவைமன் நீ - நமக்குத் துன்பம் தருவ தாதலை அறிபவர் இல்லை யெனக் கூறுவா யாயினும்; யான் அவருடைய நட்பு தேறுவென்மன் - யான் அவருடைய நட்பின் உறுதிப்பாட்டினைத் தெளித்துளே னாகலின் ஆற்றியிருப்பேன் காண் எறு. தோழி வாழி; தோளும் வரியும் நிறனும் நோக்கி, இவள் துயர் யான் செய்தன்று என அன்பின் ஆழல்; பெருமலை நாடன் கேண்மை நமக்கு விழுமம் ஆகல் அறியுநர் இல்லென நீ கூறுவை; ஆயினும், அவருடைய நட்பை யான் தேறுவென்; ஆகவே, யான் ஆற்றியிருப்பேன்காண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. நெகிழ்ந்த தோள், தொடி நெகிழ்ந்து ஓடுமாறு மெலிந்த தோள். இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத் தின்மேல் நின்றது. வரி, அல்குலிடத்தே பரந்திருக்கும் திதலை. மேனி மெலிந்தவழி இவ் வரிகள் சுருங்கி ஒளிமழுங்கித் தோன்றுதல் பற்றி வாடிய வரி என்றார். தளிர், மாந்தளிர்; "மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர்1" எனப் பிறரும் கூறுதல் காண்க. செய்தன்று, இறந்தகால முற்றுவினை: அன்பில்வழிப் பிறர்க்குற்ற வாட்டம் கண்டு வருந்துதல் இல்லை யாகலின், அன்பின் ஆழல் எனச் சிறப்பித்தார். தளி, மழைத்துளி. கலாவல், கலத்தல், விழுமம் பயப்பதனை விழுமம் என்றார். மன்னும் ஓவும் அசைநிலை. ஆகலின் யான் ஆற்றுவேன் என்பது குறிப்பெச்சம். களவொழுக்கத்தில், தலைமகன் வரைதலை மேற் கொள்ளாது நீட்டித்தலால், வேறுபட்டிருக்கும் தலைவியின் மெலிவு கண்ட தோழி, பன்முறை வரைவு கடாவியும், அவன் நீட்டித்தலே செய்தமையின், ஆற்றாது வருந்தும் தோழிக்குத் தலைமகள் கூறுவாள், அவள் வருத்தத்துக்கு ஏதுவாகிய தன் மெலிவைத் தானே விதந்து நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி என்றும், தன்னை நோக்கி நோக்கித் தன் மெலிவுக்கு ஏது தன்னை மதியுடம்படுத்துத் தலைவனொடு கூட்டுவித்த தன் செயலை நினைந்து தோழி வருந்துமாற்றினைத் தான் அறிந்தமை தோன்ற, யான் செய்தன்று இவள் துயர்என என்றும், அதற்கெல்லாம் காரணம் அவள் தன்பால் கொண்ட பேரன்பு என்பாள், அன்பின் என்றும், அதுபற்றி வருந்தற்க எனத் தோழியை ஆற்றுவிப்பாள், ஆழல் வாழி தோழி என்றும் கூறினாள். தலைமகன் வரைவு நீட்டித்தற் குரிய காரணம் யாதாகலாம் எனத் தனக்குள்ளே ஆராய்ந்த தோழி, அவன் நம்பாற் கொண்ட நட்பு நமக்குத் துன்பமாய் மேனி மெலி விக்கும் நோயாதலை அறிந்திலன் என்பாள். பெருமலை நாடன் கேண்மை நமக்கு விழும மாகல் அறியுநர் இல் எனக் கூறுவை மன்னோ நீயே என்று தலைவி தோழி கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தாள். அறியுநன் என்னாது அறியு நர் எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது, வழக்கினாகிய உயர்சொற் கிளவி. தன்னையும் உளப்படுத்தியதாக எண்ணி தலைவி தான் நன்கு அறிந்து ஆற்றியிருக்குமாறு தோன்றத் தேறுவென்மன் யான் அவருடை நட்பே என்றாள். தான் தேறியிருத்தற்கு உரிய ஏதுவினை வெளிப்படக் கூறாது, குறிப்பால் உள்ளுறுத்து மொழியலுற்று, வாழைக் கொழு மடல் அகல்இலைத் தளி தலைக் கலாஅம் என்றாள். வாழைக் கொழுமடல் அகல்இலை தலைவியின் பரந்த உள்ளமாகவும், தளி கலவுதல் தலைமகன் வற்புறுத்த சொற்களாகவும், அதன் கண் தளிநீர் கலந்து தங்கியிருப்பது அவன் சொற்கள் தலைவி மனத்தில் நிலைபெற்றிருப்பதாகவும், தளிநீரைத் தாங்குதல் வாழையின் அகல் இலைக்கு இயல்பாதல் போல, அவன் சொற்களைத் தாங்கித் தேறியிருத்தல் தலைவிக்கு அறமாக வும் கூறியவா றெனக் கொள்க. தோழி வியந்து மகிழ் வாளாவது பயன். விளக்கம் : "உயிரினும் சிறந்தன்று நாணே"1 எனத் தொடங்கும் நூற் பாவுரையில் தோழியைத் தலைவி ஆற்றுவித்தற்கு இப் பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 310. பரணர் கடிமணம் புரிந்துகொண்டு மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் இருவர் உள்ளங்களையும் பிணித்து நிற்கும் காதல் ஒருநீர்மையாகச் செல்லுவதில்லை. இடையிடையே நிகழும் பிரிவு வகைகள் அவரது காதலொழுக்கத்தைச் சிறப்புறு வித்தல் இயல்பு. அதுபற்றியே, காதல் வாழ்வென்பது, கல்லிடைப் படுத்த காட்டாற்றுச் செலவுக் கொப்பாகக் கருதப்படுகிறது. புகழ்புரியும் இல்வாழ்க்கைக்குப் பொருளும் வினையும் கல்வியும் நாடுகாவலும் பிறவும் நேரிய வாயில்களாகும். பொருளீட்டற்கும் வினை முதலியன செய்தற்கும் தலைமகன் செல்வது கடனாகும். அது காரணமாகத் தலைவன் தலைமகளைப் பிரிந்தேகுவது அறநூல்களில் விதிக்கப் படுகிறது. மேலே காட்டிய பொருள் வினை முதலிய புகழ்க் காரணங் கட்குப் புறமாகப் பரத்தையர் மனைக்குத் தலைமகன் செல்லும் பிரிவொன்று அகப்பொருள் நூல்களில் காணப்படுகிறது. இன்றைய மக்கள் வாழ்வு, பரத்தையர் இருப்பைத் தன்னினத்துக்கு வேண்டாத குற்றமாக எண்ணுகிறது. அகப்பொருள் நூல்களும் இலக்கியங்களும் தோன்றிய அந்நாளில், மக்கட் சமுதாயம் பரத்தையர் உளராதற்குரிய சூழ்நிலை பெற்றிருந்தது; அதனால் அவரது இருப்புக் குற்றமாகக் கருதப்படவில்லை. இடைக் காலத்தே, மக்களிடையே வறுமை யடிப்படையில் பரத்தையர் தோன்றியதனால், வறுமையைப் போக்கி எல்லோர்க்கும் வாழ் வளிக்கும் நன்முயற்சி நிலவும் இக்காலம், பரத்தையர் கூட்டம் சமுதாயத்துக்கு மாசு என்று எண்ணிற்று. அதனால் நாடாளும் அரசியல் மன்றமே முன்னின்று சட்டவாயிலாகப் பரத்தையர் இனம் தோன்றுதற்கும் இருத்தற்கும் இடனில்லாதவாறு மக்கட் சமுதாயத்தைத் தூய்மை செய்து விட்டது. தொடக்கத்தில் வரைந்து கொள்வோர் குறைந்த காரணத் தால் உளராகிய இப்பரத்தையர், ஆடல் பாடல் அழகு என்ற கலைத்துறைகளில் ஈடுபட்டுப் பெருஞ்சிறப்புக் குரியராயினர். கலைத்துறை அறிவுத்துறை அறத்துறை ஆட்சித்துறை முதலிய வற்றில் நிற்பார்க்கு உண்டியும் உடையும் விளைவித்து நல்கும் பணியை உழைப்பாளர் செய்தல் முறையாயிற்று; அவர்களும் அவர்களிடையே சிறந்து விளங்கும் செல்வர்களும் தம்முடைய உழைப்பையும் பொருளையும் உதவிக் கலை, அறிவு, அறம், ஆட்சி முதலியவற்றை ஓம்புதல் கடனாகக் கொண்டனர். உணவுக்கும், உடை உறையுள் கல்வி காவல் முதலியவற்றுக்கும் வேண்டிய பொருளுக்கும் செய்யப்படும் உழைப்பு உழவு என்றும், அதனால் விளையும் உணவுப் பொருளும் உடைக்குரிய பருத்தி முதலிய பொருளும் நாட்டு மக்களிடையே சென்று சேருமாறு செய்யும் தொழில் வாணிக மென்றும் அந்நாளில் நிலவின. உழவரது உழவும் வணிகரது வாணிகமும் காவலரது காவல் வன்மையைச் சார்ந்து நின்றமையின், பொருட் செல்வமும் தலைமை மாண்பும் இம்மூவர்பாலே நின்றன. அதனால் இம் மூவரையும் புரவலர் என்றும், இவரது உதவி பெற்று வாழ் வோரை இரவலர் என்றும் முன்னாளைச் சான்றோர் முறை செய்தனர். இரவலர் போல நாளும் செல்வரைத் தேடிச் செல்லும் வாய்ப்பு இப்பரத் தையர்க்கு இன்மையின், இவர்கள் பரத்தமை மேற் கொண்டதில் வியப்பில்லை. இவ்வாற்றால், பரத்தையர்க்கு மேலே கூறிய மூவினச் செல்வரது தொடர்பு வேண்டப் பட்டது. அதனால் பரத்தையர் மனைக்கண் நடக்கும் சிறப்புக்கட்குத் தலைமை தாங்குவதும், சிறந்தார்க்குப் பரிசில் நல்கி மகிழ்வதும் செல்வர் இயல்புகளாயின. அன்றியும், அந்நாளைய ஆடவர் பலரும் போர் எனிற் புகலும் பெருமறவராய் மறவுணர்வு தலைசிறந்து நின்றனர். மக்கட்குரிய பண்புகளுள் மறப்பண்பு மிக்குநிற்குமாயின், நல்லொழுக்கம் சீர்குலையும். மறத்தீயைத் தணித்தற்கு மகளிர் தொடர்பு பெருந்துணை செய்யும் என்பது போர்வினையறிஞர் கண்ட உலகிய லுண்மை, அதனால் பரத்தையர் அந்நெறியில் புறத்துறை மகளிராய்ப் பயன்பட்ட தனால், அவரது இருப்புக்கு அக்காலம் அமைதி கண்டது. இனி, நாட்டவரும், ஊரவரும் கூடி எடுக்கும் விழாக்களில் மகளிர் கூடியாடும் துணங்கை குரவை முதலிய கூத்துக்களில் தலைமக்கள் கலந்து தொடங்கி வைத்தலும் கூடியாடுதலும் அந்நாளைய முறையாதலின், அப்போழ்து தலைவர்கள் அவர் களைத் தீண்டியும் தழுவியும் ஆடுப. தொடங்குவதை அறிஞர் தலைக்கை தருதல் என்ப. அது காணும் தலைவியை உள்ளிட்ட குலமகளிர் உள்ளத்தே நிலவும் காதலாற் பொறாமையும் அது காரணமாகக் கணவன்பாற் புலவியும் ஊடலும் கொண்டு பிணங்குவர். அதனால் காதலொழுக்கம் சிறப்புறுவது குறித்தே திருவள்ளுவர் முதலிய சான்றோர் "உப்பு அமைந்தற்றால் புலவி" என்றும் "ஊடுதல் காமத்திற்கு இன்பம்" என்றும் கட்டுரைப் பாராயினர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், "சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து, முழாஇமிழ் துணங்கைக்குத் தழூ உப் புணையாகச், சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து" வந்தமைக்கு அவன் மனைவியான அரசமாதேவி புலவியால் "உடன்றன ளாகித்" தன் கையி லிருந்த "சிறுசெங்குவளையை" அவன் மேல் "எறியர் ஓக்கிய" நிகழ்ச்சி மேலே கூறிய கருத்தை நன்கு வற்புறுத்தும். முருகன் "மென்றோள் பல்பிணை தழீ இத் தலைத்தந்து குன்றுதோறாட" லை நின்ற தன் பண்பாகக் கொண்டதும் இக்கருத்துப்பற்றியே யாகும். இந்நாளில் மேனாட்டு ஆடவர் பிற மகளிரைத் தீண்டியும், தழுவியும் கூத்தாடுவது இயல்பாதலைக் காண்பார்க்குப் பழந்தமிழரது இக்கூத்து வியப்பாகத் தோன்றாது. தமிழர் வாழ்வில் குலமகளிர் பிற ஆடவரால் தீண்டப்படா ராகலின், பிற ஆடவர் தோள் பற்றிக் குரவையும துணங்கையும் ஆடுபவர் பரத்தையர் என்பதை நினைவுகூர்தல் வேண்டும். குலமகளிராயின், அவர் தாமே தம்மிற் கூடி ஆடுப எனக் கொள்ளல் வேண்டும். இங்ஙனம், பரத்தைய ரினம் தோன்றி ஆடலும் பாடலும் பயின்று சிறப்புறும் தொழிலை மேற்கொண்டதும், அவற்றைப் பயிற்றுதற்கெனப் பாண்மக்களின் கூட்டுறவு அவர்க்கு உண் டாயிற்று. பாணர்க்கும் கூத்தர்க்கும் உரியவா யிருந்த இசை நாடகங்கள் பரத்தையர்பால் வளமையும், சிறப்பும் பெறவே, பாணர் முதலாயினார் அவரது ஆதரவு பெற்று அவர்க்கு வாயில் களாயினர். செல்வர் அருணிழலில் வாழ்ந்த அவர்கள் செல்வ மிக்க பரத்தையர்க்குச் சுற்றமாய் நின்று அப்பரத்தையர்க்கும் செல்வர்க்கும் தொடர்புண்டு பண்ணுவதும் அவர்கட்குத் தொழி லாயிற்று. இவ்வகையில் பரத்தைமை காரணமாகத் தலை மக்களிடையே தோன்றும் ஊடற்காலத்தில் வாயிலாய்த் தூது சேறலும், வாயில் வேண்டிச் சேறலும் பாணர்க்கும் பாண் மகளிரான விறலியர்க்கும் எய்தின. உழவரும் வணிகரும் நாடு காவலரும் உறையும் மனைகள் இருக்குமிடம் ஊர் எனின், பரத்தையரும் பாண்மக்களும் பிறரும் உறையும் இடம் சேரி எனப்படும். அதனால் பாண்சேரி, பரத்தையர் சேரி என நூல்களில் ஊரைச் சாரவுள்ள இடங்கள் குறிக்கப்படுகின்றன. மனைக்கண் இருந்து அறம்புரிந்து வரும் தலை மகனிடத்தே ஒருகால் பரத்தைமை யொழுக்கம் தோன்றிற்று. அது தலை மகட்குத் தெரியவே அவள் உள்ளத்தே புலவி யுண்டாயிற்று. தலைமகன், பூப்பின் புறப்பாட்டுப் பன்னிரண்டு நாள்களும் கருநிற்கும் காலமாதலை நன்கு அறிவன்; அதற்குமேல் பூப்பு எய்துங்காறும் கரு வள முறாத வறுநாளாதலால் அக்காலத்தே பரத்தையிற் பிரிவன், இக்காலக் கருவியலறிஞர் பூப்புப் தோன் றிய பதினேழு நாளும் கருவளர் நாள் என்றும், ஏனைய நாட்கள் வறுநாட்கள் என்றும் கூறுகின்றனர்.1 தொல்காப்பியர் முதலிய சான்றோர் பூப்பெய்திய பன்னிரண்டு நாட்களே வள நாள் என்றும், அக்காலத்தே கணவன் மனைவியின் நீங்கிப் பிரிந்துறைதலை விரும்பலாகாது என்றும் கூறினர். தலைவி பூப்பெய்திய வழிப் பரத்தையின் நீங்கித் தன்மனைக்குப் போத ருதல் உலகியல் வாழ்க்கை அறமாகும். பரத்தைமை பூண் டொழுகும் தலைமகன் தோழி வாயிலாகத் தலைவி பூப்பெய் தினமை யறிந்தான். உடனே அவன் உலகியல் பற்றித் தன் மனைக்குச் செல்லும் கருத்தினனானான். ஆயினும், தன் புறத் தொழுக்கம் தலைவி யுள்ளத்தில் புலவி தோற்றுவித் திருத்தலை உணர்ந்து தன் பரத்தமைக்கு வாயிலாகிய விறலியைத் தலைவி பால் வாயில் வேண்டி விட்டான். சென்ற விறலி தோழியைக் கண்டு தலைவனது காதலன்பைக் கட்டுரைத்து வாயில் வேண்டி னாள். தலைவி மறுக்கும் கருத்தின ளாதலைக் குறிப்பால் உணர்ந்த தோழி, விறலியை வெகுண்டு, "விறலி, நீ நாளும் தலைமக னுக்கு நலம் புதியராகிய பரத்தையரைக் கொணர்ந்து கூட்டும் தொழிலையுடையளாவாய்; நாளைக்கும் ஒருத்தியைப் புணர்த் தற்கு விரும்பி அவள்பாலும் அவளைப் பெற்ற தாயர்பாலும் பொய் பல சொல்லி அவர்தம் உடன்பாடு பெற்று வந்துள்ளாய்; பரத்தையின் தாயரோ நின்சொல்லை மெய்யென உடன்பட்டுப் பொய்யாதலை ஓராத மெல்லியர்; அவரை யொழித்து நீ ஈண்டு வந்துள்ளாய்; நின் பாணனுடைய கையிலுள்ள தண்ணுமை போல உள்ளீடாகிய மெய்யில்லாத பொய் போர்த்த நின் சொல்லை இவண் உரையா தொழிக," என்றாள். பரத்தைமை யொழுக்கத்துக்குத் துணைபுரியும் மக்களிடத்தே உண்மை யறிவும் மெய்ம்மை மொழியும் இலவாம் என்பது பற்றித் தலைமகள் பக்கல் நின்று வாயில் மறுக்கும் தோழி, குற்ற முடையாரது குற்றத்தைக் கடியும் குணமுடையார் அதனைக் கண்ணின்று கண்ணறச் சொல்வதினும் உறுதி வேறில்லை என்ற கருத்தால், விறலியை நோக்கி, இல்லது கூறிச் செம்மை இழந்த நாவும், பிறர் செவிப்படின் பொய்ம்மை வெளிப்பட்டு நாணுத் தகவுடைத்தாம் என ஒலியிழந்த செவிச்சொல்லும் உடையை யெனவும், உன்குறுமொழியை நம்பி மகட் கொடைக்குடன் பட்டு நாளை நின் தலைவன் தன் மகளது அன்பைத் துறந்து வேறொருத்தியை நாடிக் கூடும் இயல்பினன் என்பதை ஓர்ந் துணரும் மதுகை யில்லா தொழிந்த பரத்தைத் தாயரை ஒழித்து உடனே இவண் போந்து நின் வெறுஞ்சொற்களைக் கூறுவதை விடுவாயாக எனவும் மறுக்கும் திறம் கண்ட ஆசிரியர் பரணர் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க உண்டுறை மகளிர் இரியக் குண்டுநீர் வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை 1நேர்ந்த 2மடங்கெழு பெண்டே தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 3உடன்பட் டோராத் தாயரொ டொழிபுடன் சொல்லலை கொல்லோ நீயே4 வல்லே களிறுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே. இது, வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொற்ற தூஉமாம். உரை : விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை - விளக்குப் போல் ஒளி திகழும் தாமரையின்; களிற்றுச் செவி யன்ன பாசடை தயங்க - களிற்றியானையின் செவிபோன்ற பசிய இலைகள் அசையவும்; உண்டுறை மகளிர் இரிய - உண்ணுநீர் கொள்ளும் நீர்த்துறைக்குட் புகும் இளமகளிர் அஞ்சி நீங்கவும்; குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - ஆழ்ந்த நீர்நிலையில் வாழும் வாளைமீன் துள்ளும் ஊரனாகிய தலைமகற்கு; நாளை மகட்கொடை நேர்ந்த மடங்கெழு பெண்டே - நாளை எய்த விரும்பும் கூட்டத்தின் பொருட்டுப் பரத்தையொருத்தியை நேர்வித்து வந்த அறிவறியாத விறலியே; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி - மெய்ம்மையில்லாத தொலைந்த நின் நாவினால் பொய்ம்மையால் போதிய ஓசையின்றிப் பைய மிழற்றும் செவிச்சொல்லாகிய குறுமொழியைக் கேட்டு; உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மகளைப் புணர்த்தற்கு உடன்பட்டு நின் சொல்லின் பொய்ம்மையை ஓர்ந்துணர மாட்டாத பரத்தைத் தாயரை உடனே கைவிட்டு; வல்லே சொல்லலை கொல்லோ நீ - எம்பால் விரைந்து போந்து சொல்லாடுதலை நீ ஒழிவாயாக; களிறுபெறு வல்சிப் பாணன் கையதை - களிற்றைப் பரிசிலாகப் பெற்றுண்டு வாழும் நின் பாணன் கையில் உள்ளதாகிய; வள்ளுயிர்த் தண்ணுமை போல - வளவிய ஓசையைச் செய்யும் உள்ளகம் வெறிதாய்த் தோல் போர்த்தப்பட்டிருக்கின்ற தண்ணுமை போல; உள் யாதும் இல்லதோர் போர்வையஞ்சொல் - உள்ளீடாகிய உண்மை யில்லாமல் பொய்ச்சொற்களால் போர்த்தப்பட்டுள்ள நின் உரையை எ.று. வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை எதிர்ந்த பெண்டே, தொலைந்த நாவின் உலைந்த நின் குறுமொழி உடன்பட்டுப் பொய்ம்மை ஓராத பரத்தைத்தாயரை உடன் ஒழிபு, எம்பால் வல்லே போந்து, நின் போர்வையம் சொல் சொல்லலை எனக் கூட்டி வினைமுடிவு செய்க. "மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை, நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை, இருங்கயம் துளங்கக் காலுறு தோறும் பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரன்1," என்று பிறாண்டும் கூறுப வாதலின் களிற்றுச் செவியன்ன பாசடை என்றார். பிறரும் "களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கில்2" என்றல் காண்க. உண்ணும் நீர் கொள்ளும் துறை உண்டுறை எனப் படும். "ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க பாசி3" என வருதல் காண்க. குண்டுநீர், ஆழ்ந்த நீர்நிலை. நாடோறும் புதிய புதிய பரத்தையரைப் புணர்த்தும் இயல்பினள் என்பது தோன்ற நாளை மகட்கொடை நேர்ந்த மடங்கெழு பெண்டு என விறலியைக் கூறினார். மடம், அறியாமை. சேர்ந்தாரைப் பிரிவதிலன் எனத் தலைவனைக் கூறி நாளும் பரத்தையரைப் புணர்க்கு மாற்றால் அவன் கூற்றுப் பொய்யாய் இளிவரவு பயத்தலை உணராமை பற்றி மடங்கெழு பெண்டு என்றார். தாயரது உடன்பாடின்றி அவர் மகளிராகிய பரத்தையரைக் கொணர்தல் இயலாமையின், முதற்கண் விறலி தாயர்பால் பொய் பல கூறி உடன்பாடு பெறுமாறு விளங்க, உடன்பட்டு ஓராத் தாயர் என்றார். இல்லது கூறித் தோல்வி எய்துதல் நாவிற்குத் தொலைவாதல் பற்றித் தொலைந்த நா என்றார். பொய் பொதிந்து பிறர் செவிப்படாது மொழியும் சொல் என்பது தோன்ற, உலைந்த குறுமொழி என்றார். எம் பால் வல்லே வந்து என எஞ்சிய சொற்களை வருவித்துக் கொள்க. வளவிய இனிய ஓசையினை வள்ளுயிர் என்றல் மரபு "வள்ளுயிர் மாக்கிணை"4 எனவும், "வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை"5 எனவும் வருதல் காண்க. புறத்தொழுக்கம் பூண்ட தலைமகன் வேண்டி விடுத்த வாயிலைத் தலைவி மறுக்கும் குறிப்பின ளாதலை யுணர்ந்து கொண்ட தோழி விறலியின் வாயில்வரவை விரும்பாமையை உள்ளுறுத் துரைத்தலின் வெளிப்படையாக அவளது செயற் புன்மையை எடுத்துணர்த்தி இகழ்வாளாய், ஊரற்கு நாளை மகட்கொடை நேர்ந்த மடங்கெழு பெண்டே என்றாள். நாளைக் கூட்டத்துக்கு வேண்டிய பரத்தையைத் தேர்ந்து அவட்கும் அவள் தாய்க்கும் இனியன கூறி உடன்பாடுபெற்று வந்தமையைத் தான் அறிந்தமை தோன்ற, நாளை மகட் கொடை நேர்ந்த பெண்டே என்றும், நாளும் நீ கூறுவன வற்றைப் பொய்யாக்கி மாறும் தலைவன் பரத்தைமை அறி யாது ஒழுகுகின்றாய் என்பாள், மடங்கெழு பெண்டே என்றும் கூறினாள். மெய்ம்மையால் வெல்லும் தன்மை யில்லாதது நின் நா என்றற்குத் தொலைந்த நாவின் என்றும், தன் செயலின் புன்மைபற்றிப் பிறர் கேட்டு எள்ளி நகைப்பர் என்ற எண்ணத்தால் ஓசையின்றிச் செவிச்சொல் கூறுமாறு தோன்ற உலைந்த குறுமொழி என்றும், அதன் பொய்ம் மையை ஓராமல் தன் மகளைக் கொடுத்தற்கு உடன்பட்ட பரத்தைத்தாயை உடன்பட்டு ஓராத் தாயர் என்றும், உடன் பாடு பெற்றுத் தலைமகன்பாற் போந்தவிடத்து அவன் உல கியல்பற்றி அவளைத் தன் மனைக்கு வாயில் வேண்டிச் செல்லுமாறு பணிக்கவும், அவள் சிறிதும் தாழாது பரத்தை யின் தாயரைக் கைவிட்டுத் தலைவிமனைக்கு வந்தமை பற்றி உடன்ஒழிவு சொல்லலை கொல்லோ என்றும் கூறித் தோழி வாயில் மறுத்தாள். இசைப்புலமை நலத்தால் களிற்றுப்பரிசில் பெறும் வரிசையுடையனாகிய பாணன் கையதாயினும், அவனது தண்ணுமை உள் யாது மின்றித் தோலாற் போர்த் திருப்பது போல, நீ தலைமகன் விடுப்பப் போந்தா யாயினும், நின் சொல்லின்கண் உள்ளீடாகிய மெய்ம்மை யாதும் இல்லை யென்பாள், களிறுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல உள் யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே என்றாள். களிறுபெறு வல்சிப் பாணன் என்றது. பாணனது வரிசை யுணர்த்தி நின்றது. வல்சி, உணவு, கையதை: ஐகாரம் சாரியை. தண்ணுமையை வள் ளுயிர்த் தண்ணுமை எனச் சிறப்பித்தது, விறலியும் கேட்டற்கு இனிய தலைவனது அன்புடைமை காட்டும் சொற்களையே சொல்லுகின்றாள் என்பதை உணர்த்திற்று. உள்யாதும் இல்லதோர் சொல் எனவே அமையுமாயினும், போர்வையஞ் சொல் என மிகுத்துக் கூறியது, கூறுவது பொய்யாயினும் அது மெய்போலத் தோன்றுமாறு கூறும் விறலியின் சொல் வன்மையை இழித்தற்கு என அறிக. விளக்கென ஒளிரும் தாமரையின் பாசடை தயங்கவும், உண்டுறை மகளிர் மருண்டு நீங்கவும், குண்டு நீர்க்கண் வாளை பிறழும் என்றதனால், மனைக்கு விளக்காகிய தலைமகளைச் சூழ்ந்துறையும் சுற்றமும் யாமும் வருந்தவும், தன் மார்பு நலம் விரும்பிச் சேர்ந்த பரத்தையர் மருண்டு தன்னின் நீங்கவும் தலைமகன் பரத்தை யர் சேரிக்கண்ணே புறத்தொழுக்கிற் களிக்கின்றான்; அவன் பொருட்டு வாயில் வேண்டி வருதலைத் தவிர்ப்பாயாக என உள்ளுறுத்தவாறு காண்க. இதனால் பயன் வாயில் மறுத்தல். விளக்கம் : "பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்1" எனத் தொடங்கும் நூற்பாவின்கண், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர், பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" என் புழிக் கூறிய வுரையில் இப்பாட்டைக் காட்டி "இது விறலிக்கு வாயின்மறுத்தது" என்பர் நச்சினார்க்கினியர். 311. உலோச்சனார் களவொழுக்கம் மேற்கொண்ட தலைமக்கள் வாழ்வில் அழிவில் கூட்டம் எய்தப் பெறாமையால் தலைவியின் மேனி வேறுபாடு எய்தக் கண்ட ஊரவர் அலர் கூறுவாராயினர். அது கேட்டதும், பெரு நாணின ளாகிய தலைமகள் வருத்தம் மிக்கு ஆற்றாளாயினள். அவளது ஆற்றாமை தோழிக்கு வியப்பும் வருத்தமும் உண்டுபண்ணிற்று. ஊரவர் கூறும் சொற் பொருளை நோக்கி அது தலைவியின் ஒழுக்கம் பற்றிய தன்றெனக் கண்டு உவகை மிகுந்து தலைவியை அடைந்து அவளை ஆற்றுவிக்கும் கருத்தினளாய், "ஊரவர் அலர் கூறுகின்றனரென நீ மருண்டு கூறுகின்றாய். காலத்தில் மழை பெய்வதால் நெல் நன்கு விளையும் சிறப்பும் கோடைக் காலத்தில் கழிநிலத்தில் முண்டகம் பரந்து விளங்க உப்பின் தடிகள் வெள்ளுப்பு விளையும் வீறும் உடைமை யால் நலம் குன்றாத மரபினை யுடையது நம் இனிய ஊர். நீர்த்துறையோ எனின், ஊரவர் தம் மனைகளில் மீனைச் சுடுதலால் எழும் புகை, தெருக்களில் பரந்து ஞாழல்களின் மணத்தொடு விரவி இனிமை செய்யாநின்றது. இவ்வண்ணம் எங்கும் இனிமை நலம் பெற்று விளங்குவ தாயினும், நாம் விளையாடும் கானற் சோலை மாத்திரம் ஒரு குறையினை யுடையதாகும். அஃது என்னை எனின், கானலில் நின்ற புன்னை மலரின் தாது அருந்தி வண்டினம் முரன்றுகொண்டிருத்தலால், ஆங்கு வரும் நம் காதலர் தேரிற் கட்டிய மணியொலி கேட்பது அரிதாகின்றது. அவ்வொலி கேட்டு ஊரவர் எடுக்கும் அலரென மயங்கி ஆற்றா யாகுதல் நன்றன்று" எனத் தோழி கூறுகின்றாள். இதன்கண், ஊரவர் கூறும் அலர்க் கஞ்சி வேறுபட்ட தலைமகள் ஊரைப் பழித்துத் தூற்றினாளாக, அவ்வூரின் நலங்களைக் கூறி ஒரோவழிச் சிறுகுறை காணப்படு மாயினும் நலங்களின் பன்மையும், தலைமையும் நோக்கிக் குறையின் சிறுமையைப் பொருளாகக் கொள்ளலாகாதெனத் தோழி உரனுடைமை தோன்றக் கூறிய திறம் வியந்த உலோச்சனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். பெயினே, 1விரிமான் உளையின் வெறுப்பத் தோன்றும் இருங்கதிர் நெல்லின் யாண ரஃதே வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் அழியா மரபின்நம் மூதூர் நன்றே கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே ஒன்றே தோழி நம் கானலது பழியே கருங்கோட்டுப் புன்னை மலரில்2" தாதருந்து இருங்களிப் பிரசம்3 ஊதலின் நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே. இஃது, அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. உரை : பெயின் - மழை பொய்யாது பெய்யுமாயின்; விரிமான் உளையின் - குதிரையின் விரிந்த உளைமயிரைப் போல; வெறுப்பத் தோன்றும் - செறிந்து தலைசாய்ந்து தோன்றும்; இருங்கதிர் நெல்லின் யாணரஃது - பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை யுடைத்தாம்; வறப்பின் - மழை பெய்யாது வறக்குமாயின்; மாநீர் முண்டகம் தாஅய் - கடற் கழிக் கரையில் வளரும் நீர்முள்ளி படர்ந்து, சேறு புலர்ந்து - சேறு சிறிதுமின்றிக் காய்ந்து போதலால்; இருங்களிச் செறு வின் வெள்ளுப்பு விளையும் - கரிய கழி சார்ந்த செய்களில் வெண்மையான உப்பு விளையாநிற்கும்; அழியா மரபின் நம் மூதூர் நன்று - இவ்வாற்றால் மக்கள் ஆக்கம் குன்றாத முறைமையினையுடைய நமது மூதூர் நலமிகவுடையதாகும்; கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கி - கொழுவிய மீன் களைச் சுடுதலால் எழும் புகை எழுந்து தெருக்களில் பரத்த லால்; சிறுவீ ஞாழல் துறையுமார் இனிது - சிறு சிறு பூக்களை யுடைய ஞாழல்கள் நின்று நறுமணம் கமழ்தலால் நீர்த் துறையிடமும் இனிதாயுளது; தோழி - ; நம் கானலது பழி ஒன்றே - நம் கானற்சோலையிட மொன்றில் தான் சிறுகுற்றம் உளது; கருங்கோட்டுப் புன்னை மலரின் தாது அருந்து - அத்துறைக்கண் கரிய கொம்புகளையுடைய புன்னையிற் பூத்த பூக்களின் தேனை யுண்டு; இருங்களிப் பிரசம் ஊதலின் - மிக்க களிப்புற்ற வண்டினம் ஒலித்தலால்; நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிது - நம் தலைவரது நெடிய தேரிற் கட்டிய மணியின் இனிய ஒலியைக் கேட்பது அரிதாக உளது, காண் எ.று. தோழி, மழை பெய்யின், நெல்லின் யாணரஃது; வறப்பின் செறுவின் வெள்ளுப்பு விளையும்; ஆகலின் அழியா மரபின் நம் மூதூர் நன்றேயாம்; சுடுபுகை மறுகினுள் மயங்குதலின், சிறுவீ ஞாழலால் துறையுமார் இனிதாம்; கானலது பழி ஒன்றே; அஃதாவது, தலைவரது நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிது; அதுகொண்டு நீ ஆற்றாயாகுதல் நன் றன்று எனக் குறிப்பெச்சம் பெய்து வினை முடிவு செய்க. நெல் முற்றிக் கதிர் சாய்ந்து தோன்றுவது குதிரையின் விரியுளை போறலின் விரிமான் உளையின் வெறுப்பத் தோன்றும் இருங்கதிர் நெல் என்றார். விரிமான் உளை என்பதனை மான் விரியுளை என மாறுக. மாநீர், கரிய நீர் பொருந்திய கடல். முண்டகம், நீர்முள்ளி. இருங்கழி, கரிய சேறு நிறைந்த உப் பங்கழி. மழை பெய்யின் நெல்வளமும் பெய்யாவழி உப்பு வளமும் உடைய சிறப்பினால் ஊர் வாழ்வோர் வறுமை எய்தாத செல்வமுடைமை விளங்க அழியா மரபின் மூதூர் என்றார். யாணரது, யாணரஃது என ஆய்தம் விரிந்து நின்றது; 'இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை1' என்றவிடத்திற் போல. மயங்கி என்னும் செய்தெனெச்சம் காரணப்பொருட்டு. ஞாழல் என்பதன் இறுதியில் காரணப் பொருட்டாய் மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. களி, கள்ளுண்டு மயங்குதல். ஓகாரம் சிறப்பு. தலைமகற்கும் தனக்கும் உளதாய தொடர்பு பற்றி மகளிர் ஊரிடத்தும் நீர்த்துறையிடத்தும் கானற்சோலையினும் அலர் கூறக் கேட்டு ஆற்றாது வெகுண்டு பழித்த தலைமகளை, ஆற்றுவிக்கும் கருத்தினளாகிய தோழி, முதற்கண் ஊரது நன்மை கூறுவாள், அழியா மரபின் நம் மூதூர் நன்றே என்றும், அதற்குரிய ஏது இது வென்பாள் மழை பெய்யின் விரிமான் உளையின் வெறுப்பத் தோன்றும், இருங்கதிர் நெல்லின் யாணரஃது என்றும், "சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே என்றதற்கு ஏது, கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் சிறுவீ ஞாழல் துறையுமார் இனிது" என்றும் கூறினாள். மழை பெய்யினும் பெய்யாதொழியினும் நம்மூர் அழியா மரபிற்று என்றது, ஊரவர் அலர் கூறினும் கூறா தொழியினும் நாம் நம் மனத்திண்மை அழிதல் கூடாது என வற்புறுத்தியவாறு. மழை பெய்யின் நெற்பயிர் விளைதல் போல, அலரெழின் காதலுறவு சிறக்கும் என்னும் குறிப்பிற்று. "அலரிற் றோன்றும் காமத்திற் சிறப்பே2" என ஆசிரியர் கூறுதல் காண்க. மழை பெய்யாவழி வெள்ளுப்பு விளையும் என்றது, அலர் எழாதாயினும் களவொழுக்கம் இடை யீடின்றிச் சிறக்கும் என்றவாறு, தலைவி கூறுவன முற்றும் மறுத்தவழித் தன் வன்புறை அவள் மனத்தில் ஏறாது என்ற சூழ்ச்சியால், கானலைப் பழித்த தலைவிகூற்றை ஓராற்றால் உடன்படுவாள் போன்று, ஒன்றே தோழி நம் கானலது பழியே என்றாள்; அதுதானும் ஆராயுமிடத்துப் பொருளாகக் கொள்ளலாகாத புன்மை யுடைத் தென்பாள், கருங்கோட்டுப் புன்னை மலரின் தாதருந்து இருங்களிப் பிரசம் ஊதலின் நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிது என்றாள். புன்னைமலரின் தாதுண்டு மயங்கிய வண்டினம் செய்யும் ஓசையால் தேரிற் கட்டிய மணியொலி கேளாதவாறு போலத் தலைமகனது தலையளி பெற்று இன்புறும் நாம், அலரைப் பொருளாகக் கொள்ளாமலும் ஆற்றாமையால் நமது ஒழுக்கம் புறத்தோர்க்குப் புலனாகாமலும் ஆற்றுதல் வேண்டும் என்ற வாறு. "வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே1" எனத் தோழி கூறுவது ஈண்டு நினைவுகூரத் தகும். தலைவி ஆற்றி யிருப்பாளாவது பயன். 312. கழார்க்கீரன் எயிற்றியார் புதுமணம் புணர்ந்து இல்லின்கண் இருந்து நல்லறம் புரிந் தொழுகும் தலைமகன், வினை மேற்கொண்டு மனையின் நீங்கிச் செல்லவேண்டிய கடமை யுடைய னானான். அழிவில் கூட்டத்து அயரா இன்புற்றமர்ந்த அவன்காதலிக்கு, அப்பிரிவு ஆற் றொணாத் துயர் நல்குமென்பதை அவன் உணராமலில்லை. எனினும், வினையே ஆண்மகற்கு உயிராதலின், அதன் சிறப்பு ஒரு பாலும் காதலியின் ஆற்றாமைக்குரிய காதல்மாண்பு ஒருபாலும் நின்று அவன் உள்ளத்தை ஈர்க்கலுற்றன. அற்சிரக் காலத்தில் தான் அவளோடு பிரிவின்றிக் கூடியிருந்தபோது, தன் புல்லுச் சிறிது நெகிழினும் காதல் வெம்மையால் அவள் ஆற்றாளாய்க், கோடை நாளில் தோன்றும் முழுத்திங்கள் போல, மெய்விளர்த்துப் பனித்து வருந்தினமை அவன் மனநினைவில் எழுந்தது. இப்பெற்றியாள், தன் பிரிவிடையே பனிப்பருவம் எய்தின் ஒரு சிறிதும் ஆற்றுவாளல்லள்; அதனை நினைக்கும் போது என் நெஞ்சம் வருந்துகின்றது என்றான், தன் நெஞ்சொடு சொல்லும் இச்சொற்கள் தலைமகள் காதிற்படின், பிரிவு நேர்ந்த மையும், அதுவும் முன்பனி பின்பனி யாகிய இரண்டினையும் இடையிட் டிருத்தலையும், அப்பிரிவு ஆற்றாமை பயக்கும் என்பதை அவன் நினைந்த மையும் தோன்றி அவள் ஆற்றுதற் கேற்ற திண்மை பயக்கும் என்பது அவன் கருத்து. இதன்கண், தலைவியது பிரிவருங் காதன்மாண்பை அவளது ஆற்றாமைமேல் வைத்து உரைக்குமாற்றால், பிரிவாற்றி யிருத்தற்கேற்ற திண்மையுடைய ளாக்கும் சூழ்ச்சி நலம் அமைந் திருப்பது கண்டு வியந்த கழார்க்கீரன் எயிற்றியார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். இப்பாட்டு ஏடு களில் அடி பிறழ்ந்து கிடக்கின்றது. நோகோ யானே நோம்என் நெஞ்சே பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடப் பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள சிறைகுவிந் திருந்த 2பைதல குருகின் மாரி நின்ற மையல் அற்சிரம் எதிர்த்த தித்தி முற்றா முலையள் 1யாம்தன் உழைய மாகவும் தானே கோடைத் 2திங்களிற் பனிப்போள் வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே. இது, பிரிவு வலித்த நெஞ்சினைத் தலைமகன் நெருங்கிச் சொல்லியது. உரை : நோம் என் நெஞ்சே - பிரிவுடம்படாது யான் அழுங்குவது பற்றி என்னை வற்புறுத்த வருத்தும் நெஞ்சமே; யான் நோகு - யானும் வருந்துகின்றேன்காண்; பனிப்புதல் ஈங்கை அங்குழை வருட - குளிர்ந்த புதலாகிய ஈங்கையின் அழகிய தளிர்கள் தன் மேற்பட்டு அசையுமாறு; வேட்டுவன் காழ் களைந்து அருள - வேட்டுவன் கால்தளையை நீக்கி வெளியே சென்று உலவு மாறு அன்போடு விட்டவழியும்; சிறை குவிந்திருந்த பைதல பார்வைக் குருகின் - மழைக்கும் குளிர்க்கும் அஞ்சித் தன் சிறகுகளைக் குவித்து ஒடுங்கியிருந்த பனித் துன்பத்தையுடைய பார்வையாகிய குருகைப் போல; மாரி நின்ற மையல் அற்சிரம் - மழை பெய்கின்றமையின் பகல் இரவு எனப் பகுத்தறியாவாறு ஒளி மழுங்கிக் குளிர்ந்து தோன்றும் அற்சிரக் காலத்தில்; எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நேரிய தேமலும் இளமை கனிந்த முலையுமுடையளாகிய காதலி; யாம் தன் உழைய மாகவும் - யாம் அருகில் மேவியிருந்தேமாயினும்; கோடைத் திங்களின் பனிப்போள் - எமது புல்லுச் சிறிது நெகிழினும் தனிமை பொறாது வேனிற்பருவத்து முழுவெண்டிங்களைப் போல் மெய் விளர்த்துப் பனிப்பவளாதலால்; வாடைப் பெரும்பனிக்கு என்னள்கொல் என - பிரிவிடை எய்தும் பனிப்பருவத்து வாடை போந்து செய்யும் வருத்தத்துக்கு என்னாவளோ என்று எ.று. நெஞ்சே, அற்சிரக்காலத்துப் பைதல குருகின் ஒடுங்கி, யாம் தன் உழைய மாகவும், முலையள், கோடைத் திங்களின் பனிப்போள், வாடைப் பெரும்பனிக்கு என்னள் கொல் என யான் நோகு என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. நோகோ என்புழி ஓகாரம் அசைநிலை. நோகு. தன்மை வினை முற்று. நோம் நெஞ்சு என்றவிடத்து நோகும்: என்னும் பெய ரெச்சம் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. பிற குருகுகளைப் பிடிப்பதற்கெனப் பயிற்றப்பட்ட குருகினைப் பார்வைக்குருகு எனல் வழக்கு. அது புறத்தே பறந்து போகாத வாறு தளையிட்டு வைப்பார்; அத்தளை ஈண்டுக் காழ் எனப்பட்டது. மணிக்கயிற்றா லாய தளை எனற்குக் காழ் என்றார். பார்வைப் புள்ளைத் தளை நீக்கி விடுதற்கு ஏது அருளல்லது பிறிதில்லை என்பது தோன்ற, காழ்களைந் தருள என்றார். மழை பொழியும் அற்சிரக்கால மாதலின், பார்வைக்குருகு தளை நீங்கியவழியும் மழைக்கும் குளிர்க்கும் அஞ்சிப் புறத்தே போகாமல் ஒரு புடையில் தன் சிறகுகளைக் குவித்துக்கொண்டு வருந்தி யிருக்குமாறு பற்றி, சிறை குவிந் திருந்த பைதல குருகின் என்பாராயினர். சிறை குவிந்திருந்த பைதல்குருகு மாரிக்காலமாதலின் புறத்தே செல்லாது மனை யில் ஒடுங்கியிருந்தது தலைமகற்கு உவமம். முற்றாமுலையள் என்றது, தலைவியின் இளமை சுட்டி நின்றது. கோடைநாளில் தோன்றும் முழுமதி தூய வெண்ணிலவும் மிக்க குளிர்ச்சியும் கொண்டு பகற்போதின் வெம்மையில் வாடிய உயிர்கட்கு இன்பம் செய்யும் இயல்பிற்று. கோடைத்திங்களை உவமை கூறியது மேனி விளர்ப்பும் குளிர்கூர்ந்து நடுங்குதலும் உணர்த்தற்கு. களவுக்காலத்தில், தலைமகன் கருத்தும் முயற்சியும் தலைவியின் காதலை வளர்ப்பதிலும் வரைந்து மணந்து கோடலிலும் பெரிதும் தோய்ந்து கிடத்தலின், கற்பின்கண் அவனுடைய நினைவும் செயலும், கல்வி புகழ் பொருள் வெற்றி முதலிய நலம் கருதி முயலும் ஆண்மைக்கூறு மிக்கு நிற்குமென அறிக. அதனால் தலைமகன் ஓதல் காவல் பொருள் வினை காரணமாகத் தன் மனையின் நீங்கிச் செல்வது, கற்பு வாழ்வின் சிறப்புடைச் செயல் வகையாகக் கொள்ளப்படு கின்றது. மனைவாழ்வில் காதற்காமவின் பத்துக்கு அடிமை யாகிக் கட்டாண்மைக்குரிய கடமையை நெகிழவிடுதல் தலைமைப் பண்பன்று. காதலின்பம், கடமைக்கு இடையீடாய் நின்று, தலைமகன் கருத்தை அலைக்குமிடத்து, அவனுடைய உள்ளம், அறிவுவழி நின்று வினையும் பொருளும்பற்றிப் பிரிந்தேகும் கடமையின் பெருமையைக் காட்டி வற்புறுத்து மிடத்து, அவன் நெஞ்சு எளிதின் உடன்படாமைபற்றி வருந்து மாறு தோன்ற, நோம் என் நெஞ்சே என்றான். வாரேன் என மறுப்பதாக எண்ணி என்னை வருத்துகின்றனை; வாரேனல் லேன்; வருகுவன்; வாடைப் பெரும்பனி நமது பிரிவிடைத் தோன்றின், அவள் ஆற்றாது என்னாவளோ என எண்ணியே யான் வருந்துகின்றேன் என்பான், வாடைப் பெரும்பனிக்கு என்னள்கொல் என யான் நோகோ என்றும், தலைவியின் ஆற்றாமைக் கேது அவளது மிக்க இளமை என்பான், எதிர்த்த தித்தி முற்றா முலையள் என்றும் கூறினான். அற்சிரக் காலத்திலும் வாடை யுண்டெனினும், அக்காலத்துப் பெய்யும் மழையால், அதன் குளிர்ச்சி பனிக்காலத்திற்போல அத்துணைக் கொடியதன்மை பற்றி, மாரி நின்ற மையல் அற்சிரம் என்றும், அக்காலத்தே தான் உடனிருந் துறைந்தமை தோன்ற, யாம் தன் உழைய மாகவும் என்றும், அப்பொழுதில் தோன்றும் குளிர் எமது உடனுறைவால் தோன்றாதாகவும், புல்லுச் சிறிது நெகிழ்ந்தவழி, ஆற்றாது கோடைநாளில் தோன்றும் குளிர்மதி போல் மேனி விளர்த்து நடுங்குவள் என்பான், கோடைத் திங்களின் பனிப்போள் என்றும் கூறினான். இஃது அழி வில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. இதனை அவன் எடுத்துக் கூறியதன் கருத்து, தலைவி கேட்பின் அவள் தன் ஆற்றாமை தன் காதலனால் பெரிதும் நினைக்கப்படுதற்கு நாணியும் வருந்தியும் ஆற்றியிருத்தற் கேற்ற திண்மை பெறு வள் என்பது. அன்றியும், புகழ் புரிந்தொழுகும் இல்லாள், அது குறித்து முயலும் தன் கணவனது ஆண்மையும் ஆள் வினையுடைமையும் வீறு பெறுதற்குத் துணையாய் நின்று ஊக்குவதன்றி, அதற்கு இடையூறாய் நிற்பது கற்பறம் அன் றென்று தெளிந்து ஆற்றுவள் என்பதுமாம். வேட்டு வனுடைய பார்வைப் புள்ளாகிய குருகு, காழ் களைந்து அருளிய போதும், அது புறத்தே சென்று ஏனைப் புள்ளினத்தை அகப்படுத்தாது, சிறை குவிந்து ஒருபால் இருந்தாற் போல என்றது, மாரி நின்ற மையல் அற்சிரப்போதில் பொருள்வினை காரணமாகப் புறத்தே சேறற்குப் படர்ந்த உள்ள முடைய னாகியும், அதனை ஒடுக்கி மனைக்கண் இருந்தமை குறிப்பால் உணர்த்தியவாறு. ஈங்கையின் அங்குழை வருடக் குருகு இருந் தது, மனைக்கண் மனையாளாகிய தலைவி அடிப்பணி புரியத் தலைமகன் இருந்த திறத்தைக் காட்டுகிறது. இதனாற் பயன் செலவழுங்கல். 313. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் தங்கால் என்பது தண்கால் என்பதன் மரூஉ. இவ்வூர் பாண்டி நாட்டில் இன்றைய விருதுநகர்க்கு அண்மையில் இருக்கிறது. இளங்கோவடிகள் காலத்துக்கு முன்பிருந்தே இது சான்றோர் தோன்றிய தொல்பதியாகப் புகழ் கொண்டது. சங்கச் சான்றோருள், இவ்வெண்ணாகனாரும் ஆத்திரேயேன் செங்கண்ணனாரும் இவ்வூரினராகக் காணப்படுகின்றனர். இளங்கோவடிகள் இவ் வூரை "தடம்புனற் கழனித் தங்கால்" என்று சிறப்பிப்பர். இடைக் காலத்தில் விளங்கிய பாண்டியர் பேரரசில் இஃது இராசராசப் பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால்1 எனக் குறிக்கப் பெறுவது. பாரதமும் இராமாயணமு மாகிய பெருநூல்களை யோதும் பெருநிலையமாக இவ்வூர் விளங்கிற் றென்று மாறவன்மனான முதற் சுந்தரபாண்டிய னுடைய கல்வெட்டுக்கள்2 கூறுகின்றன. சான்றோராகிய இவர் பொற்கொல்லற் குரிய தொழில் செய்தமையால் இவரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்று ஏடுகள் இயம்பு கின்றன. இவருடைய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் தொகுக்கப்பட்டுள்ளன. களவொழுக்கம் பூண்ட தலைமக்களது காதல் வாழ்வில், தலைவி தினைப்புனம் காத்தலை மேற்கொண்டிருந்தாள். அக் காலை, காதல் சிறப்பது வேண்டித் தலைமகன் அத்தினைப் புனம் போந்து தலைமகட்குத் துணையாய், அவள் காக்கும் தினையைக் கவர வரும் புள்ளினங்களைக் கடிந்து உதவினான். இவ்வாறு இருக்கையில், தினைக்கதிர்கள் முற்றிக் கொய்யும் செவ்வி எய்தின. தலைவியின் தமர் போந்து தினை கொய்தற்கு ஆவன சூழ்வாராயினர். அந்நிலையில் தலைவியின் காவல் தினைப்புனத்துக்கு வேண்டாமையின், அவளைத் தம்முடைய கடிமனைக்குச் செல்க, என விடுக்க லுற்றனர். மனை யடைந்த வழி, ஆங்குள்ள காவல்மிகுதியால் அவள் தன் காதலனைத் தனிமையிற் கண்டு மகிழ்தல் இயலாது. இதனைத் தோழி நினைந்து இனித் தான் செயற்பாலது யாது எனச் சூழ்வாளாயினள். அப்போழ்து, தலைமகன் போந்து தினைப்புனத்தின் பக்கலிலே நின்றான். அது கண்டதும் தோழி, அவனைக் காணாள் போன்று, தலைவியை முன்னிலைப்படுத்துத் தான் கூறுவன அவன் செவிப் படுமாறு உரைக்கலுற்று, "தோழி, நாம் காத்தொழுகும் தினை முற்றிக் கொய்பதம் கொள்ளாநின்றது; நாம் விளையாடும் கூதள நறும்பொழிலும் புனமும் புலம்ப ஊர்வயின் மீள்குவம் போலும்; வேங்கையின் புதுப்பூக்களைக் கொண்டு பொற்பணி போன்ற கைவினை யமைந்த கண்ணி தொடுத்துக் கூந்தல் அணிபெறப் புனைந்து நம்பாற் கொண்ட காதலன்பு கைம்மிகுதலால், நமக்கு உறுதுணையாய்த் தினை கவரும் புள்ளும் மாவும் கடிந்து உதவிய காதலற்கு யாம் யாங்காகுவம் கொல் என என் நெஞ்சம் வருந்து கிறது" என்று சொல்லுகின்றாள். இதன்கண், தலைமக்களது களவொழுக்கம் தினை முற்று வதால் இடையீடு படுவதும், மனைவயின் மீண்டவழி யுளதாகும் காவன்மிகுதியும் காட்டி, "இனி வரைந்து கோடலையன்றித் தலைமகற்குச் செயல் வேறில்லை" என்பது தோன்றத் தலைவனைத் தோழி வரைவுகடாவும் திறம் கண்டு வியந்த வெண்ணாகனார் இப்பாட்டின்கண் அவள் கூற்றை வைத்துப் பாடுகின்றார். கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகைவனப் புற்ற1 கண்ணி கட்டழித் தொலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக் காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற் கியாங்கா குவங்கொல் தோழி காந்தட் கமழ்குலை அவிழ்ந்த நயவரு சாரற் கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் மீள்குவம் 2போலும் நன்றும் தோடுபுலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா கொய்பதம் கொள்ளும்நாம் கூஉம் தினையே. இது, தோழி சிறைப்புறமாகத் தலைவிக்குச் சொல்லு வாளாய்ப் புனமடி வுரைத்துச் செறிப்பறிவுறீஇயது. உரை : கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூ - கரிய அடிப் பகுதியையுடைய வேங்கையின் காலத்தில் மலர்ந்த புதுப் பூக்களைக் கொண்டு; பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப - பொற்கொல்லன் தன் கைத்திறம் தோன்றச் செய்த பொன்மலர்க் கண்ணி போல; தகை வனப்புற்ற கண்ணி - மிக்க வனப்பு அமையத் தொடுத்த கண்ணியை; கட்டு அழித்து ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇ - முடிச்சுக்கு அடங்காது தழைத்துள்ள நின் கூந்தல் அழகு பெறுமாறு சூடி; காண்டற் காதல் கைம்மிக - அவ்வழகினை உடனிருந்து காணும் வேட்கை கையிகந்து மிகுதலால்; கடீஇயாற்கு - தினை கவர வரும் புள்ளினங்களைத் தானே சென்று கடிந்து உதவிய தலை மகன்பொருட்டு; யாங்காகுவம் கொல் - என் செய்ய வல்லேம்; காந்தள் கமழ்குலை அவிழ்ந்த நயவரு சாரல் - காந்தளின் மணம் கமழும் பூக்குலைகள் மலர்ந்து அழகு செய்யும் மலைச் சார லிடத்து; கூதள நறும்பொழில் புலம்ப - கூதாளம் நிறைந்த நறிய பொழிலானது தனிமையுற; ஊர்வயின் நன்றும் மீள் குவம் போலும் - நம்மூர்க்கே நாம் பெரும்பாலும் போக வேண்டியவர்களாவோம் போலும்; தோழி -; தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா - தோடுகள் காய்ந்து அருவிபோல ஒலித்தல் நில்லாவாய்; கொய்பதம் கொள்ளும் - கொய்தற் குரிய செவ்வியை எய்தாநின்றன; நாம் கூஉம் தினை - நாம் ஓசையிட்டுப் புள்ளோப்பிக் காக்கும் தினை ஆகலான் எ.று. புதுப்பூக் கொண்டு, கம்மியன் கைவினை கடுப்பத் தொடுத்த, தகை வனப்புற்ற கண்ணியைக் கூந்தல் அணிபெறப் புனைஇக் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு யாங்காகுவங்கொல்; நறும்பொழில் புலம்ப, ஊர்வயின் மீள்குவம் போலும் நன்றும்; நாம் கூஉம் தினை, தோடு புலர்ந்து, அருவியின் ஒலித்தல் ஆனா கொய்பதம் கொள்ளும் ஆகலான் எனக் கூட்டி வினை முடிவு செய்க. வேங்கை மரத்தின் அடிமுதல் கருநிறமும் பெருவன்மையும் உடையதாகலின், கருங்கால் வேங்கை எனப்பட்டது. வேங்கை பூக்கும் காலம் திருமணத்துக் குரிய இனிய காலம் என்பது பற்றி, நாளுறு புதுப்பூ என்றார். பொன்செய் கம்மியன், பொற்கொல்லன். தகை, அழகு; ஈண்டுப் பூக்களை அழகுறத் தொகுத்துத் தொடுப்பதால் பிறக்கும் செயற்கையழகின் மேற்று. வனப்பு, இயற்கையழகு. "கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு1" என்றவிடத்திற் போல அடர்த்தியாய்த் தழைத்த நெடிய கூந்தல் கட்டுக்கு அமையாமை தோன்றக் கட்டழித்து ஒலி பல்கூந்தல் என்றார். காண்டல் வினைக்கு, அணிபெறப் புனைந்தவழிப் பிறக்கும் அழகு செயப்படுபொருள். கொல், ஐயம். காந்தட்பூ. குலைகுலையாய் மலர்வது பற்றிக் கமழ்குலை எனப்பட்டது. காண்பார்க்கு இனிய காட்சியும் அடைந்தார்க்கு நறுமணமும் நல்கும் நயமுடைமை பற்றி மலைச்சாரலை நயவரு சாரல் எனச் சிறப்பித்தார். கூதளம் கூதாளம் எனவும் வரும். நன்றும் பெரிதும் என்னும் பொருட்டு. தோடு, தினைத்தாளில் தோன்றிய தோகை. கூவிக் காக்கும் வினையைக் கூஉம் என்றார். பெயரெச்சம் செயப்படு பொருட்பெயர் கொண்டது; எழுதும் ஓலை என்றாற் போல. தலைவி தினைப்புனக் காவல் மேவி யிருந்தபோது, தோழியை மதியுடம்படுத்து அவளாற் கூட்டமெய்த முயன்ற தலைமகன், கையுறையாகக் கொணர்ந்த தழையும் கண்ணியும் நெஞ்சில் நின்று நிலவுதலின், அவனது கூட்டம் பெறுதல் இனி அரிதெனக் கருதிக் கூறலுறும் தோழி, அவன் செய்த உதவியை நினைவு கூர்வாளாய் வேங்கைப்பூவாற் கண்ணி தொடுத்துத் தந்த சிறப்பைக் கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகை வனப்புற்ற கண்ணி என்று கூறினாள். வேங்கையைக் கருங் கால் வேங்கை யென்றது, அதனது வளமை தோற்றுவித்து நின்றது. சிறைப்புறமாக நிற்கும் தலைவன் கேட்டு விரைய வரைந்து மணந்து கொளல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற நாளுறு புதுப்பூ என்றும், புதுப்பூ என்றதனோ டமையாது நாளுறு புதுப்பூ என்று சிறப்பித்தது வேங்கை மலரும் காலம் திருமணத்துக்குச் சிறந்த காலம் என்பது வற்புறுத்தற் கென்றும் அறிக. பொற்பூவால் செய்யப்பட்ட கண்ணி போலத் தொடுப் பும் வனப்பும் அமைந்த கண்ணி என்று தலைமகன் சூட்டிய கண்ணியைப் பாராட்டி உரைக்கின்றா ளாகலின், பொன் செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகைவனப் புற்ற கண்ணி என்றாள். கட்டுக் கடங்காது நீண்ட குழல் எனத் தலைவி கூந்தலைச் சிறப்பித்தது, அவள் இளமை முதிர்ந்து மணவாழ்க்கை யேற்கும் வளர்ச்சி நிரம்பினள் என்பது குறித்தற்கு. மிக்க இளையளெனக் கருதித் தலைமகன் வரைவு நீட்டித்த லாகாது என்பது கருத்து. தான் தொடுத்த தகை வனப்புற்ற வேங்கைக் கண்ணியைத் தலைவியின் கூந்தலில் அணிபெறச் சூடிய ஒப்பனையாற் பிறந்த அழகினைப் பருகு பவன்போல் ஆர்வத்தொடு நோக்கியும் ஆராது, அவளோடே யிருந்து தினைப்புள் ளோப்பும் செய்வினையால் அவள் மெய்வ ருந்தாமைப் பொருட்டு அவன் அதனைச் செய்து உதவிய சிறப்பைக் காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு என்றாள். இத்துணையும் கேட்டு உவகையும் நாணும் ஒருங் கெய்திச் சமழ்த்திருந்த தலைமகளது உள்ளம் தன் சொல்வழி ஒன்றுமாறு கடீஇயாற்கு என்றாள். தலைவனும் மேலே அவள் யாது கூறப் போகின்றாளென்பது அறியும் நோக்கின னானான். இப்புனத்தின்கண் யான் மேலே கூறிய வகையில் தலைவனது காதலன்பின் உதவி இனி எய்துதற் கியலாது; அவற்கும் நமக்கும் இடையே உளதாகிய காதலுறவு என் னாகுமோ என அஞ்சுகின்றேன் என்பாள், கடீஇயாற்கு யாங்காகுவம் கொல் என்றும், அச்சொல்லைக் கேட்ட மாத்திரையே திடுக்கிட்டு நிலை தளர்ந்த தலைமகளைத் தாங்கித் தோழி என்றும் கூறினாள். இனித் தான் கூறியதற் குரிய காரணம் கூறலுறுவாளாய தோழி, காந்தள் மலர்ந்த சாரலிலும் கூதளம் சிறந்த நறும் பொழிலிலும் முன்போல் விளையாடற்கு வாய்ப்பின்றி நாம் ஊர்க்கு மீண்டேகுதல் வேண்டும் என்பாள், காந்தட் கமழ்குலை அவிழ்ந்த நயவரு சாரல் கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் மீள்குவம் போலும் நன்றும் என்றாள். அதனால், தினைப்புனத்து உளதாகிய தன் களவு வெளிப்பட்டு இந்நிலையைப் பயந்தது கொல்லோ எனத் தலைவியுள்ளம் தடுமாறுதல் கண்டு அவளது ஐயம் அறுத்தற்குக் கொய்பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே என்றும், அதனைத் தினையின் தோடு புலர்ந்து ஒலித்துக் காட்டுகிறது என்பாள், தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா என்றும் கூறினாள். நாம் கூஉம் தினை, தோடு புலர்ந்து அருவியின் ஒலித்துக் கொய்பதம் கொண்டாற் போல, நாம் பேணி யொழுகும் களவுக் காதலுறவு வரைவு மலிந்து நாடறியப் பரவி நன்மணத்தாற் பொலிதல் வேண்டும் என்று உள்ளுறுத் துரைத்தவாறு. இதனைத் தலைமகன் கேட்டுத் தெருண்டு வரைவானாவது பயன். 314. மூப்பேர் நாகனார் இச்சான்றோர் பெயர் முப்பூர் நாகனார் என்று தேவர் ஏட்டில் காணப்படுகிறது. முப்பேர் என்பதை முப்பையூர் என்பதன் மரூஉவாகக் கொண்டு இந்நாகனார் திருவாடானைப் பகுதியைச் சேர்ந்தவர் என எண்ணுமாறு பின்னத்தூர் திரு. நாராயணசாமி ஐயர் கூறுகின்றார். இவர் பாடியனவாக வேறு தொகைநூல்களில் பாட்டுக்கள் இல்லை. கம்பர் பாடியதாக வழங்கும் "காரென்று பேர்படைத்தாய்" எனத் தொடங்கும் பாட்டில் வரும் "முப்பேரும் பெற்றாய்" என வருவது இவ் வூரையும் தன்னகத்தே கொண்டதாமோ என ஐயுறுதற்கு இச் சான்றோரது ஊர் இடம் தருகிறது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ் வில், பொருள்வினை குறித்து மனைவியிற் பிரிந்து சென்று புகழ் நிறுவி மேம்படுதல் சிறப்புடைய கடனாகும். இனம் பெருக்கும் உடற்பணியின் வழிநிற்கும் காதற்காம இன்பத்தினும், புகழ் நிறுத்து இம்மை மறுமையின் வீடு பேறாகிய பிறவாப் பெருநிலை பயக்கும் கடமை யின்பம் சிறந்து விளங்குவது பற்றித் தலைவன் பிரியக் கருதித் தன் குறிப்பையும் பையத் தலைமகட்கு உணர்த்தி னான். அக்காலை அவன், இளமையின் நிலையாமையும், முதுமையின் மாட்டாமையும், வாழ்நாள் அளவுகளை முன்கூட்டி யறியமாட்டாமையும் எடுத்தோதி, இளமை எய்தியபோதே அதனாற் பெறலாகும் இன்பத்தைப் பிரிவின்றிக் கூடியிருந்து நுகர்ந்து கழித்தலே செயற்பாலது என்று அறிவுறுத்தான். இவ் வாறு பிரிவருமை கூறியது பிரிவுண்மையை உணர்த்தற் கென்பதை நினையாத தலைமகள், இளமை மிகுதியால் பிரியான் எனக் கருதினாள். பின்பு, அவன் கடமையை முன்னிறுத்திப் பிரிந்து சென்றான். ஆற்றாளாகிய தலைமகள், கற்பின் திண்மை யால் ஒருவாறு தேறியிருந்தாளாயினும், பிரியே னென்ற சொல் பொய்க்குமாறு பிரிந்த தலைவன் செயல் குற்றமாதலை எண்ணி வருத்த முற்றுத் தோழியை நோக்கி, "நம் கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல்" என்று சொல்லிப் பொய்த்தனர்காண், என்றூழ் நீளிடைப் பிரிந்து சென்றா ராகலான் என்றாள். இதன்கண், இன்பநுகர்ச்சிக்கண் ஆராமை மீக்கொண்ட தலைமகன், இளமைய தருமையும் வாழ்நாட் சிறுமையும், அன்பினதகலமும் சொல்லித் துய்க்குங்கால், உரைத்த பிரியாப் பெருமொழி அவன் பிரிவால் பொய்த்தமை கண்டு, அதன் விளைவு நினைந்து அஞ்சும் தலைவியின் அறமாண்பைக் கண்ட நாகனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை மாரிப் பித்திகத் தீரிதழ் அலரி நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பின் குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்ப்பின்1 கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் 2கழிவ தாக கங்குல் என்றுதாம் 3மொழிவன் மையிற் பொய்த்தனர் வாழியர் நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள் புன்புறா வீழ்பெடைப் பயிரும் என்றூழ் நீளிடைச் சென்றிசி னோரே. இது, பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. உரை : முதிர்ந்தோர் - முதுமை எய்தினோர்; இளமை ஒழிந்தும் எய்தார் - இளமை கழிந்த பின்னரும் அதனை எய்தார்; வாழ்நாள் வகை அளவு அறிநரும் இல்லை - வாழ்நாள் வகையும் அளவும் முன்கூட்டி அறிபவரும் இலர்; மாரிப் பித்திகத்து ஈர்இதழ் அலரி - மாரிக் காலத்து மலரும் பித்திகை யின் குளிர்ந்த இதழ்களையுடைய பூவால் தொடுக்கப் பட்ட மாலையும்; நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பின் - நறிய சந்தனத் தேய்வையும் அணிந்த தம் மார்பின்கண்; குறும்பொறிக் கொண்ட - கச்சணிந்த; புகர்ப்பின் கருங்கண் கொம்மை வெம்முலை ஞெமுங்கப் புல்லி - புள்ளி பொருந்திய கரிய கண்களையுடைய விருப்பம் பயக்கும் நம்முடைய பெரிய முலைகள் அழுந்துமாறு தழுவி; கழிவதாக கங்குல் என்று - கழிவனவாகுக நம்முடைய நாள்கள் எனச் சொல்லி; தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் - தாம் அம்மொழியைக் காக்கும் வன்மையினின்றும் பிழைத்துப் பொய்த்தனர்காண்; வாழியர் - சொல்பொய்த்த வழி எய்தும் குற்றம் அவரைச் சாராது ஒழிவதாக, அவரும் வாழ்வாராக; நொடி விடுவன்ன காய்விடு கள்ளி - நெரித்துவளைத்து விட்டாற் போலக் காய்கள் காய்த்து விளங்கும் கள்ளியின்; அலங்கல் அம்பாவை ஏறி - அசைதலையுடைய தலைப்பகுதியில் ஏறியிருந்து; புலம்பு கொள் புன்புறா வீழ்பெடைப் பயிரும் - தனிமை கொண்ட புல்லிய புறாவின் சேவல் தன்னைக் காதலித் தொழுகும் பெடையை நினைத்து அழைக்கும்; என்றூழ் நீளிடைச் சென்றிசினோர் - வெயில் எறிக்கும் நீண்ட சுரத்திடைச் சென்றாராகலான் எ-று. தோழி, மார்பில் வெம்முலை ஞெமுங்கப் புல்லி, முதிர்ந்தோர் இளமை யொழிந்தும் எய்தார்; வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை; கங்குல் கழிவதாக என்று மொழி வன்மையிற் பொய்த்தனர் காண், வாழியர், என்றூழ் நீளிடைச் சென்றா ராகலான் எனக் கூட்டிவினைமுடிவு செய்க. முதிர்ந்தோர், முதுமை எய்தி யிருந்தோர். மனை வாழ்வில் மகளிரொடு கூடிப் பெறும் ஐம்புல இன்பங்களை ஆர நுகர்தற்குரிய செவ்வியாகிய இளமை ஒருவர் வாழ்வில் ஒருகால் தோன்றி நிலைபேறின்றிக் கழிவதும், கழிந்தவழி மீள எய்தாமையும் உடைமைபற்றி முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் என்றும், அவ்வாறே ஒருவர்க் கெய்தும் வாழ்க்கைவகையும் எல்லையும் மக்களில் ஒருவராலும் முன்கூட்டி யறியப்படாத அருமையுடைமை பற்றி வாழ்நாள் வகை அளவு அறிநருரும் இல்லை என்றும் சான்றோர் கூறுப. வகை அளவு, உம்மைத் தொகை. உம்மை சிறப்பு. பித்திகம், முல்லை வகையுள் ஒன்று; பித்திகம் என்பதே பெருவழக் காயினும் இது பித்திகை எனவும் வழங்கும். "பித்திகை விரவுமலர்"1 எனச் சான்றோர் உரைப்பது காண்க. இக் காலத்தே இதனைப் பிச்சிப்பூ என்பர். மாரிக்காலத்தே மலர்வது பற்றி இது மாரிப் பித்திகம் எனப்பட்டது. அலரி ஈண்டு ஆகுபெயராய் மாலைக்காயிற்று. ஆரம், சந்தனம். கொம்மை வெம்முலை என மாறுக. குறும்பொறி, கச்சு; இடையிற் கட்டப்படின் உதரபந்தம் எனப்படும். "குறும் பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்"1 என்று வழங்குதல் காண்க. புகர்ப்பு, புள்ளியுடைமை, ஞெமுங்கல், அழுந்தல். மொழிவன்மை மொழியைக் காக்கும் வன்மை. "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்2" எனச் சான்றோரும் உரைப்பது காண்க. இன்னுருபு, நீக்கப் பொருட்டு. நொடி விடுதல், நெரித்து வளைத்தல், "அமைகண் விடுநொடி"3 என்புழிப் போல, கள்ளி, கள்ளிச் செடி. கள்ளியின் தலைக்கொம்பு பாவை போறலின், காற்றால் அலையும் கள்ளியின் தலை, அலங்கலம் பாவை எனப்பட்டது. நிறப் பொலிவு இன்மை பற்றிப் பாலைநிலத்துப் புறாவைப் புன்புறா என்றார். என்றூழ், வெயில்சென்றி சினோர்: இறந்தகாலத் தெரிநிலை வினைத்திரிசொல், பொய்த்தனர் என்ற மேற் கோளை வற்புறுத்தலின், சென்றிசினோ ரென்றது ஏது வாயிற்று. மண்ணிற் பிறந்தார்க்குக் கழியும் ஒவ்வொரு நாளும் முதிர்வேயாயினும், இளமைச்செவ்வி தோன்றிக் கனியுங் காறும் வளர்ச்சி என்றும், அது கழியும் நாள் ஒவ்வொன்றும் முதிர்ச்சி என்றும் கூறும் வழக்கியல் நோக்கி, இளமை கழிந்த வரை முதிர்ந்தோர் என்றும். இழந்த ஒன்றை உரிதினின் முயன்று பெறுதல் ஆற்றலுடைய மக்கட்கு இயல்பாயினும், முதுமைக்கண் இழந்த இளமைச் செவ்வியை எத்துணை முயன்றாலும் பெறலரிது என்பது. பற்றி இளமை கழிந்தும் எய்தார் என்றான். செல்வ வாழ்வு அல்லல் வாழ்வு என வகைப்படுதலின், வாழ்நாள் வகை எனவும், வாழ் வார்க்குத் தம் வாழ்நாள் எல்லை யறிதல் வானோர்க்கும் இயலாத ஒன்றாதலால், வாழ்நாள் அளவு எனவும் சிறப்பித்து அவையிற்றை முன்கூட்டி அறியும் அறிவுடையோரே உலகத்து இலர் என்றற்கு அறிநரும் இல்லை என்றான். இவ்வாறு தலைமகன் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தது, அவனது காதற் சிறப்பை வற்புறுத்தற்கு. தலைமகனது அகன்ற மார்பின்கண் கிடந் துறங்கும் இன்பத்தால் அதனையே பெரிதும் நயந்துறைதல் தலைமகட்கு இயல்பு. "மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சா யற்றே"1 என்றும், "வேட்டோர்க்கு அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு"2 எனவும் தலைவி கூறுதல் காண்க. அதனால், தலைவனது மாலையும் சந்தனத் தேய்வையு மணிந்த மார்பினை விதந்து, மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பின் என்றும், அதனைத் தன் மார்பிரண்டும் அழுந்த முயங்கித் துய்த்த இன்ப நுகர்ச்சியை, குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்ப்பின் கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லி என்றும் கூறினாள். மகளிர் நகில் இளமைக் காலத்தே குறுகிய பொன்னிறமான புள்ளிகளைக் கொண்டு கண்கறுத்துக் காதலர் உள்ளத்தே பெருவேட்கையை உண்டுபண்ணுதல் பற்றி இவ்வாறு சிறப்பித்தார். வட்டமாய் அடிபரந்து நுனி குவிந்திருப்பது கொம்மை; அப்பண்புடைமை பற்றி மகளிர் நகிலைக் கொங்கை என்பது வழக்கு. இவ்வாறு மார்பின்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல் எனப் பிரியாமை கூறுவான், இளமையின் எய்த லருமையும், வாழ்நாள் வகையளவு அறிதல் அருமையும் ஏதுவாகக் காட்டி வற்புறுத்தினா னாயிற்று. மெய்ம்மை காட்டிப் பிரியாமை வற்புறுத்திப் பின்பு தலைமகன் பிரிந்தது புகழ்கெட வரூஉம் பொய்ந்நெறியாம் என்பாள், பொய்த்தனர் என்றும் மனத்திட்ப முடையார்க் கன்றிப் பொய்யாமை கைவராமையின் மொழிவன்மையிற் பொய்த்தனர் என்றும் புகழ் புரியும் இல்வாழ்க்கைக்குப் பொய்த்தல் தீது பயக்கும் என்பது நினைந்து, அஃது எய்தாமைப் பொருட்டு வாழியர் என்றும் கூறினாள். தலைமகன் பொய்த்தான் என்பது துணியப்பட்ட தென்றற்கு, என்றூழ் நீளிடைச் சென்றிசி னோர் என்றாள். அது கேட்ட தோழி, சென்றா ராயினும், செல்வுழிக் கானமும் புள்ளும் மாவும் மேற்கொண்டொழுகும் அன்புறு காட்சிகள் அவரை மேலே செல்லாவாறு தகைக்கு மென்றாளாக, அவட்குத் தலைமகள், வினைமேற் சென்ற உள்ளமுடைய அவரை அவை தடுப்பன ஆகா என்பாள், கள்ளி யலங்கலம் பாவை யேறிப் புலம்புகொள் புன்புறா வீழ்பெடைப் பயிரும் என்றூழ் நீளிடைச் சென்றிசினோர் என்றாள். புலம்புகொள் புன்புறவின் சேவல் தன் வீழ் பெடையைப் பயிரும் காட்சிதானும் அவர் உள்ளத்தை மாற்றா தாயிற்று என்றாளாம். இவ்வாற்றால் தன்வயின் உரிமை தோன்றக் கூறுதலால் அவள் கற்பின் திண்மையால் ஆற்றியிருக்கும் பெருஞ்சிறப்பை வியந்து கூறியவா றாயிற்று. கற்பொழுக்கத்தில் தலைமகன் தன் மனையின் நீங்கிப் பிரிந்து சேறல் வேண்டுமிடத்து அவன் கூறத் தக்க பொருள் களுள், "நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும், இன்மையது இளிவும் உடைமைய துயர்ச்சியும், அன்பினது அகலமும் அகற்சிய தருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்" முதலாயின நிகழும் என ஆசிரியர் தொல்காப்பிய னார்1 உரைத்தமையின், இப்பாட்டின்கண் "முதிர்ந்தோர் இளமை கழிந்தும் எய்தார்" என்றது இளமைய தருமையும், "வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை" என்றது நாளது சின்மையும், "புல்லிக் கழிவதாக கங்குல்" என்றது அன்பினது அகலமும் குறித்து நிற்றல் காண்க. இதனாற் பயன் தலைவி ஆற்றியிருப்பா ளாவது. 315. அம்மூவனார் மனைக்கண் இருந்து அறம்புரிந் தியலும் தலைமகன்பால் பரத்தையரைக் கூடி யொழுகும் புறத்தொழுக்கம் உண்டாயிற்று. அதனால் பரத்தையர் பலருடைய தொடர்பும் தோன்றிற்று. அக்காலத்தே, அவன் மனைவியாகிய தலைவி, பூப்பெய்திய செய்தி வந்தது. பூப்பின் புறப்பாடு பன்னிரு நாளும் கருத் தங்கும் வளவிய கால மாதலின், அப்போழ்து, அவன் அவளிற் பிரிந்தொழுகுதல் அறமாகாது. அதுபற்றி அவன் பரத்தையின் நீங்கித் தன் மனைக்கு ஏகும் குறிப்பினனானான். அதனை நலம் புதியளாய பரத்தை யொருத்தியைத் தலைவன் நாடிச் செல்வதாக கருதினாள். அவன் தலைக்கொண்டொழுகும் பரத்தை. அஃது அவள் உள்ளத்தை வருத்துவதாயிற்று. அவனை நோக்கி, "துறைவ, நன்றும் விழுமிது எனக்கருதி யாம் நின்பாற் கொண்ட கேண்மை மிகவிரைவில் தவறாய், எமக்குத் துன்பம் பயத்தலை, நீ நன்கு அறியாயாயினை; அதனால், நின் பெண்டிர் நெகிழ்ந்த தோளும், கலுழ்ந்த கண்ணும், மலர் தீய்ந் தனைய மேனியும் உடையராய் வருந்துகின்றனர்காண்" என்றாள். பரத்தையரது வாழ்வு, தலைவனது தலைமையைச் சார்ந்து நின்றமையின், அதுவே பற்றுக்கோடாகப் பரத்தை, தலைவனை நெருங்கி, "நினது நட்புத் தவறாய்த் துன்பம் பயத்தலை அறிவாயாக" என்பது, தலைமகன் பிறர்க்கென முயலும் பெருந் தகை யாயினும், "யாவரே உலகுக் கெல்லாம் ஒருவராய் இனிய நீரார்?" என்ற உண்மைக்கு விலக்காகாமை புலப்படுத்தக் கண்ட சான்றோராகிய அம்மூவனார், அதனை இப்பாட்டின்கண் குறிப்பாகத் தோன்ற அமைத்துப் பாடுகின்றார். ஈண்டுபெருந் தெய்வத் தியாண்டுபல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு மூத்துவினை போகிய முரிவாய் அம்பியின் நல்லெருது நடைவளம்1 வாய்க்கென உழவர் புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவுமுதற் பிணிக்கும் துறைவ நன்றும் 2விழுமிதிற் கொண்ட கேண்மை 1நொவ்விதின் தவறுநன் கறியாய் ஆயின் எம்போல் ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் 3மலர்தீய்ந் தனையர் நின்நயந் தோரே. இது, தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. உரை : பெருந் தெய்வத்து ஈண்டு யாண்டு பல கழிந்தென - ஒரு பெருங்கடவுளின் ஆணைக்கேற்ப அடுத்தடுத்து வரும் யாண்டுகள் பல கழிந்தமையின்; பார்த்துறைப் புணரி அலைத் தலின் - பாறைகள் பொருந்திய துறைக்கண் அலைகள் மோதி அலைத்தலால்; புடை கொண்டு - பலபடியாலும் அடிபட்டு; மூத்து வினை போகிய - முதுமை யுற்றுக் கடற் செலவாகிய வினைக்கு உதவாதாகிய: முரிவாய் அம்பியின் - விளிம்பு முரிந்து கெட்ட தோணியை; நல் எருது நடைவளம் வாய்க்க என - நல்லெருது நன்கு நடந்து வேண்டிய செல்வத்தினை மேலும் விளைத்தற் பொருட்டு; உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு - அதற்கு உரியராகிய உழவர்கள் புற்கள் வளர்ந்த பொழிலகத்தே தன்னிச்சையாக மேயுமாறு விட் டொழித்தாற் போல; நறுவிரை நன்புகை கொடாஅர் - நன்கு செப்பனிடுதலும் நறிய மணம் கமழும் நல்ல புகையால் வழிபடுதலும் செய்யாராய்; சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவு முதல் பிணிக்கும் - கான லிடத்தே சிறிய பூக்களையுடைய ஞாழலொடு பொருந்திய புன்னைமரங்களின் கொழுவிய நிழலில் அவற்றின் முழவு போன்ற அடியில் கட்டிவைக்கும்; துறைவ - கடற்றுறைவனே; நன்றும் - மிகவும்; விழுமிதின் கொண்ட கேண்மை - பெருமை யாக யாம் கருதிக் கொண்ட நின் நட்பு; நொவ்விதின் - எளிதில்; தவறு நன்கு அறியாய் - தவறாய்த் துன்பம் பயத்தலை நன்கு அறியாதிருக்கின்றாய்; ஆயின்- ஆதலால்; எம்போல் -; ஞெகிழ்தோள் - மெலிந்த தோளும்; கலுழ்ந்த கண்ணர் - கலங்கி யழும் கண்களும் கொண்டு; மலர் தீய்ந்தனையர் - மலர் தீயிற்பட்டு வாடினாற் போல மேனி வேறுபடுவாராயினர்; நின் நயந்தோர் - நின்னைக் காதலித் தொழுகிய பெண்டிர் பலர் எ.று. துறைவ, நன்றும் விழுமிது எனக் கொண்ட நட்புத் தவறாய், எமக்குத் துன்பம் செய்தலை, நீ நன்கு அறியா யாதலின், நின்னை நயந்தோர் பலர், ஞெகிழ் தோளராய்க் கலுழ்ந்த கண்ணராய், மலர்தீய்ந்தனையர்காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பெருந்தெய்வம், பிறப்பிறப் பில்லாத ஒரு பெருங் கடவுள். ஏனைத் தெய்வங்கள் யாவும் செத்துப் பிறக்கின்ற சிறுமையுடைய வாகலின் அவற்றின் வேறு படுத்தற்குப் பெருந்தெய்வம் என்றார். இப்பெருந் தெய்வம் உயிர்களின் வினைநுகர்ச்சிக் கேற்பக் காலமும் உலகும் உடம்பும் படைத்தளிப்பது பற்றி அதனை ஆசிரியர் தொல்காப்பியர் "பால்வரை தெய்வம்1" என்றார். அதன் ஆணைவழி அடுத்தடுத்து வருதலின், பெருந்தெய்வத்து யாண்டு எனல் வேண்டிற்று. இடையீடின்றித் தொடர்தல் பற்றி யாண்டினை ஈண்டு யாண்டு என்றார் என்க. பார், பாறை; "கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும்1" என்றாற் போல. புணரி, அலை, கடல்நீர் சுவறுதலால் வீங்கி வெடித்துக் கெடுமாறு தோன்றப் புடைகொண்டு என்றார். புடை, புடைத்தல். நல்லெருதை உழவர் காவில் தொழில் விட் டாங்குப் பரதவர் அம்பியைக் கானற் சோலையில் புன்னையங் கொழுநிழல் முழவுமுதற் பிணித்துவிட்டனர் என்க; எனினும் உழவர் நடைவளம் வாய்க்கெனப் பிற்பயப்பாடு கருதி விட் டாற் போலப் பரதவர் அம்பியைப் பிற்பயப்பாடு கருதிச் செப்பனிடுதலும், செம்மை செய்த தோணிக்கு நறும்புகை யெடுத்து வழிபடுதலும் செய்யாது கழிந்தனர் என்க. கலம் புதிது செய்யினும், பழையது புதுக்கினும் கடலிற் செலுத்துங் கால் வழிபாடு செய்து விடுத்தல் பண்டையோர் மரபு. நொவ்விது, எளிதில் நோய் செய்வது. அறியாயாயின் எனக் காரணம் கூறினமையின், ஆக்கம் பெய்துரைக்கப்பட்டது; "ஆக்கம் தானே காரண முதற்றே2" என்பது விதி. நின் பெண்டிர் என்பது தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பு. தலைவனது பிரிவுக்குறிப் புணர்ந்த பரத்தை வேறு பரத்தையை நாடிச் செல்வதாகக் கருதி, அவனது கேண்மை தவறாய்த் துன்பம் செய்யும் திறத்தை வெளிப்படக் கூறாது உள்ளுறையால் உணர்த்தலுறுகின்றமையின் அதனை, மூத்து வினைபோகிய முரிவாய் அம்பி நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவுமுதற் பிணிக்கும் துறைவ என்றாள். முரிவாய் அம்பியை நலம் தந்து மூத்துக் கழிந்த பரத்தைய ராகவும், நறுவிரை நன்புகை கொடாது பரதவர் புன்னை முழவு முதற் பிணிப்பது, அப்பரத்தையர் அவனால் பேணப்படாது மனைக்கண்ணே ஒடுங்கிக் கிடப்பதாகவும் கொள்க. உழவர் நல்லெருது நடைவளம் வாய்த்தற் பொருட்டுப் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு என்ற வெளிப்படை யுவமம் உள்ளுறை யுவமத்துக்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. தலை மகனாகிய நினது நட்புப் பெறுவது விழுமிது எனக் கருதிக் கொண்ட எமக்கு, "உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை" யாகும் தவற்றினை யுடைத்தாயிற்று என நொந்து கூறுவாள், நொவ்விதின் தவறு என்றும், அஃது அங்ஙன மாதலை நீ அறிந்திலை போலும் என்பாள், தவறு நன்கு அறியாய் என்றும், அதனால் உளதாய கேட்டினைக் காண்க என்பாள், எம்போல் ஞெகிழ்தோள் கலுழ்ந்த கண்ணர் மலர்தீய்ந்தனையர் நின் நயந்தோர் என்றும் கூறினாள். நின் தலைமைநலம் கண்டு நயந்து நினது நட்பினைப் பெற்ற யாம், அதன் பயனாகிய பிரிவின்றியன்ற இன்பத்தைப் பெறாது, எமது நலத்தை யிழந்ததுடன், நீ புதுவோரை விரும்பி எம்மைக் கைவிடு மாற்றால் துன்பமுறுவித்தல் குற்றம்; அதனை நன்கு அறிவாயாயின் நின் பெண்டிர் தோள் நெகிழ்ந்து கண் கலுழ்ந்து மேனி மெலிந்து வருந்துதல் இலராவர் என்றா ளாயிற்று. இதனாற் பயன் பரத்தை புலத்தல். இனி, தலைமக்களிடையே ஊடல் தோன்றியவழி, அதனைத் தீர்த்தற்குத் தோழி அறிவர் முதலியோர் அவ்விடத்து எய்து வரே யன்றி, அவ்வூடலை மிகுவிக்கும் பரத்தையரும் காமக் கிழத்தியரும் போந்து தலைவியின் ஊடலைத் தீர்ப்பர் என்ற கருத்துப்பட இப்பாட்டிற்குப் பொருள் கூறுவது தமிழ்நெறி யன்று. விளக்கம் : "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்1" எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில், இப்பாட்டைக் காட்டி, "இதனுள் மூத்து வினைபோகிய அம்பி போலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையளாகற் பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல எனத் தலைவ னுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க" என்பர் நச்சினார்க் கினியர். 316. இடைக்காடனார் மனையின்கண் இருந்து மாண்புகழ் வளர்த்து வந்த தலை மகன், கடமை காரணமாகத் தன் மனையின் நீங்கிச் சென்றான். சென்றபோது, மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு கார்காலத் தொடக்கத்தே மீள்வதாக வலியுறுத்திக் கூறினான். அவனது தகைமை சான்ற சொற்காத்துத் தனக்குரிய அறத்தில் சோர்வின்றி இருத்தல் தலைமகட்குச் சால்பு. அவ்வாறு இருக்குங் கால், அவட்கு உயிர்த்துணையாய் அறவடிவினளாகிய தோழி இனிய கேண்மை புரிந்துவந்தாள். தலைமகன் சென்றபின், நாள்களும் கடிது சென்றன. வேனிற்பருவம் விரைந்து சென்றது; கார்காலமும் தலைகாட்டிற்று. அதனைக் கண்ட தோழிக்குக் கவலை பெரிதாயிற்று. கார்காலம் தோன்றத் தலைமகன் வருதல் வேண்டும். வினைமுடித் தல்லது மீளாத விறலோ னாதலால், தலைமகனது வினை முடியாமையையும் அதனை முடித்துப் போதருங்காறும் தலைவியது ஆற்றாமையையும் எண்ண லுற்றாள்; தலைமகள் கற்புத்திண்மையும், நுண்மதியும் ஒருங் குடைய ளாயினும், இல்வரம்பு இகந்தறியா ஏற்றமும், பரந்த உலகியல் நிகழ்ச்சிகள் அனைத்தும் முற்றவும் தெளியாத இளமை யும் உடையளாதலை நினைந்தாள். தலைமகள் வாழும் நிலப் பகுதியோ, தன் எல்லைக்கண் மலைகளும் காடுகளும் தம்மின் மணந்து கிடப்பது. கார்ப்பருவ வரவில் கருமுகில்கள் தோன்றி வானத்திற் பரந்து, சூழ இருக்கும் மலைகளும் அடுக்கமும் தோன்றாதவாறு கால்வீழ்த்து மறைத்து மழைத்துளியைச் சொரியத் தலைப்பட்டன. வானமெங்கும் பரந்த முகிற்கூட்டத் திடையே இடியும், மின்னலும் தோன்றின. அக்காட்சி தலைவி யின் கண்ணைக் கவர்ந்தது; "ஈதன்றோ நம் தலைவர் குறித்த கார்ப்பருவம்?" என்று வினவுவாள் போலத் தோழியை நோக்கி னாள். உடனே அவள், "இம்மணிநிற முகிலுக்கு அறிவு கிடை யாது; பெரும்பேதைமையுடையது காண்" எனச் சிறிதும் தாழாது கூறினாள். அது கேட்ட தலைவி முறுவலித்தாள். அம்முறுவற் குறிப்புத் தோழி கூற்றைக் காரணம் காட்டி நிறுவுக என்பது போல் இருந்தது. மதிநுட்பம் வாய்ந்த தோழி, தலைமகன் பிரிவு நிகழ்ச்சியை நினைப்பித்து, அப்போது அவள் மனைவாயிலிற் படர்ந்து மலர்ந்து விளங்கிய முல்லைக் கொடியைக் கூட்டி, "கனங்குழாய், இம்முல்லை நின் கூரிய பற்களைப் போலும் அரும்புகளை எடுக்கும்போது யான் வந்தெய்துவேன்காண்" என்று சொல்லித் தலைவியைத் தன் மார்பிற் புல்லி அவளுடைய பிறைபோல் விளங்கிய நுதலை நீவிய இன்பச் செய்கையை எடுத்துரைத்தாள். அதனை நினைந்து இன்பம் ஊற நின்ற நிலையில், தலைவியின் இயற்கையறிவு இன்பமயக்கத்தில் ஆழ்ந்தமை கண்டு அவர், அன்று மேற்கொண்டு சென்ற வினை நன்கு முற்றி வருவதற்கு முன்பே, மலைகளையும் அடுக்கத்தையும் கால்வீழ்த்து மறைத்து மழையைப் பெய்து வானத்தே இடியினை யும் முழக்குகின்றது, காண் இம்முகில்; என்னே இதன் அறியாமை இருந்தவாறு!" என்றாள். தோழியின் இவ்வினிய கூற்றின்கண், தலைமகன் வற்புறுத்த சொல்லின்கண் தலைமகட் குள்ள உறுதி குலையாவாறு, முகிலின் மேல் மடமை யேற்றித் தலைமக்களின் காதலுறவு சிறக்குமாறு செய்யும் துணைமை மாண்பு, அறிவுக்கு விருந்தாய்த் தோன்றி இன்பம் செய்வது கண்ட இடைக்காடனார் அவள் கூற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். மடவ தம்ம மணிநிற எழிலி மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக் கயலேர் உண்கண் கனங்குழை இவைநின் எயிறேர் பொழுதின் எய்தரு வேம்எனக் கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்தநின் நன்னுதல் நீவிச் சென்றோர்1 நன்னசை வாய்த்துவரல் வாரா அளவை அத்தக் கன்மிசை அடுக்கம் புதையக் கால்வீழ்த்துத் தளிதரு தண்கார் தலைஇ விளியிசைத் தன்றால் வியலிடத் தானே. இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. உரை : மணிநிற எழிலி - நீலமணியின் நிறத்தையுடைய மேகம்; அம்ம - கேட்பாயாக; மடவது - அறியாமை யுடையதுகாண்; மௌவல் மலரின் நலம்வரக் காட்டி - முல்லையின் மலரினை அழகுற எடுத்துக்காட்டி; கயல் ஏர் உண்கண் கனங்குழை - கயல்மீன் போன்ற மையுண்ட கண்களையும் கனவிய குழை யினையு முடையாய்; இவை நின் எயிறு ஏர் பொழுதின் எய்தருவேம் என - இம்முல்லைகள் நின் பற்களைப் போல அரும்பு எடுக்கும் காலத்தே மீண்டு வருவேம் என்று சொல்லி; கண்ணகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நன்னுதல் நீவி - இடமகன்ற வானத்தில் நிலவும் மதிப்பிறை எனக் கொள்ளத் தக்க நினது நல்ல நெற்றியை நீவி; சென்றோர் - பிரிந்து சென்ற காதலர்; நன்னசை வாய்த்து வரல் வாரா அளவை - விரும்பி மேற்கொண்ட நல்வினை முற்றி மீண்டு வருதற்குரிய காலம் வரும் முன்பே; அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து - வழியிடத்தே நிற்கும் மலையும் பக்கத்தே அடுக்காய்த் தொடர்ந்து நிற்கும் பிற மலைத்தொடர்களும் மறையும்படிக் காலிறங்கி; தளிதரு தண்கார் தலைஇ - மழைத்துளியைப் பெய்யும் தண்ணிய கார்காலத்தைச் செய்து; வியலிடத்து விளி இசைத்தன்று - அகன்ற வானப்பரப்பில் இடிமுழக்கத்தைச் செய்யா நின்றதாகலான் எ-று. மணிநிற எழிலி, அம்ம, மடவது; என்னை மௌவல் நலம்வரக் காட்டி, கனங்குழை, இவை நின் எயிறு ஏர் பொழு தின் எய்தருவேம் என நன்னுதல் நீவிச் சென்றோர், வாரா அளவை, கன்மிசை அடுக்கம் புதையக் கால்வீழ்த்துத் தண்கார் தலைஇ வியலிடத்து விளியிசைத்தன்று ஆகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மணி, ஈண்டு நீலமணி மேற்று. கடனீரை முகந்து வானத்தே உயர்ந்து எழுதலின், மழைமுகில் எழிலி எனப்பட்டது. மௌவலின் மலரைக் கொண்டு, சிறு நனையாய் அரும்பாய்ப் போதாய் மலராய் விரிந்து மணம் கமழும் வரலாற்றைக் கேட்போர் கண்ணும் செவியும் குளிர, அழகுறக் கூறினமை தோன்ற, நலம்வரக் காட்டி என்றார். மௌவல், கொடிமுல்லை. கனங்குழை, கனவிய குழை; கனங் குழை யுடையாளைக் கனங்குழை யென்றது அன்மொழித் தொகை. எயிறு: ஆகுபெயரால் அரும்பின் மேலதாயிற்று. எய்துவேம் எனற்பாலது எய்தருவேம் எனத் துணைவினை கொண்டு வந்தது. மதி: முதலிற் கூறும் சினையறி கிளவி. உணர்தல், உவம வாய்பாடு. நசை, ஆகுபெயராய் வினை மேலும் பொருள்மேலும் நின்றது. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கியது போலத் தோன்றும் மலைக்கூட்டம் அடுக்கம் எனப்பட்டது. அடிவானத்தே நிலந்தொட நிற்கும் கார்மழை கால்வீழ்த்தது என்னும் வழக்குப்பற்றிக் கால் வீழ்த்து என்றார். தளி, மழைத்துளி. தலைஇ, தலைப்பட்டு. வியலிடம், வானப் பரப்பு. விளி, இடிக் குரல். தலைமகன் பிரிவால் மேனி மெலிந்துறையும் தலை மகள், கார்மழையின் வரவு நோக்கி, காதலர் குறித்த பருவம் வந்தது; அவர் வந்திலரே என நினைந்து கண் கலுழ்ந்து தோழியை நோக்க, அவள் இது கார்மழையன்று என வற்புறுத்துகின்றா ளாகலின், மடவது அம்ம மணிநிற எழிலி என்றாள். கார்மழை என்னாது மணிநிற எழிலி என்றதும் இக்கருத்தே பற்றி என அறிக. கார்காலத்து வருவேன் எனத் தலைவன் உரைத்த சொல்லின் திட்பத்தை வற்புறுத்தற்கு, அவன் மௌவல்மலரைக் காட்டிய நிகழ்ச்சியை நினைப்பித்து, மலரின் மௌவல் நலம்வரக் காட்டி என்றாள். மலரால் இனிமை தக்கிருக்கும் மௌவல் என்ற பொருள்பட, மலரின் மௌவல் என்றது, மௌவலைக் காட்டுதற்கு ஓராற்றால் ஏதுவாயிற்று. மௌவன்மலரின் தோற்றத்தை அவன் கூறிய போது, தலைவியின் கட்பார்வை அவன் முகத்திலும் மௌவல் மேலும் மாறிமாறிப் பிறழ்ந்து சென்றமையின் கயலேர் உண்கண் என்றும், அக்கண்கள், காதளவும் ஓடிக் கனங்குழையைக் காட்டினமை தோன்றக் கனங்குழை என்றும் கூறினாள். அதுகேட்டு மகிழ்வு கொண்டு முறுவலித்து நோக் கிய தலைமகட்கு, மௌவலின் அரும்பைக் கூறக் கருதியவள், அதுபோல அவளது பல் தோன்றவே, அதனையே விதந்து எயிறு ஏர் பொழுது என்றாள். அப்பிரிவுரையைக் கேட்க ஆற்றாளாய், அவன் மார்பிற் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்ட தலைவியின் திருமுகத்தைத் தன் இரு கைகளாலும் பற்றித் தன் முகத்துக்கு நேரே நிமிர்த்து வெய்துயிர்ப்பால் வியர்க்கும் அவளுடைய நுதலை நீவி ஆற்றுவித்தமையை நினைப்பிக்க, நன்னுதல் நீவிச் சென்றோர் என்று தோழி கூறினாள். இவ்வண்ணம் நின்பால் பேரன்பு கொண்ட காதலர் தமது உள்ளத்துக் கொண்ட நன்னசை வாய்த்து வருங்காறும் ஆற்றியிருத்தல் மனையுறையும் நமக்குக் கடன் என்பாளாய், நன்னசை வாய்த்துவரல் வாரா அளவை என்றாள். இதனால் ஆற்றியிருத்தல் தக்கது என்ற உணர்வு தலைவி யுள்ளத்தே எழுதலும், இங்ஙனம் நம்மைக் காரென மயக்கும் மடமைச் செயலோ டமையாது, அவர் வரும் வழியிடை நிற்கும் மலை யும் அடுக்கமும் மறையுமாறு கால்வீழ்க்கின்ற தென்பாள், அத்தக் கன்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து என்றும், கார்மழை போலப் பெயலைச் செய்தமைக்கு நாணாது, வானப் பரப்பிலிருந்து கார் முழக்கத்தையும் செய்வது முழுத்த அறியாமையாம் என்பாள், தளிதரு தண்கார் தலைஇ விளி யிசைத்தன்று என்றும் கூறினாள். தளிதரு தண் கார் எனச் சிறப்பித்தது, அது தலைமகன் குறித்த பருவமாம் ஏற்றம் கருதி என்க. தலைவி ஆற்றியிருப்பாளாவது இதனாற் பயன் என்க. 317. பூவண்டி நாகன் வேட்டனார் இவர் பெயரை மதுரைப் பூவண்டன் நாகன் வேட்டனார் என்பர். பூவண்டூர் நாகன் வேட்டன் என்று புதுப்பட்டி ஏடும், பூவண்டி நாகன் வேட்ட னென்று தேவர் ஏடும் வேறுபட்டுக் கூறுகின்றன. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பூவண்டல் என்பது நாகனது ஊர் என்று கருதுகின்றார். மாவண்டூர் பூவண்டூர் என ஊர்கள் பல உண்டு. மதுரை நாட்டுப் பூவண்டிதான் இப்போது பூவந்தியென வழங்குகிறது போலும். நாகன் என்ப வர்க்கு மகனாதல் பற்றி இவர் நாகன் வேட்டனார் எனப் படுகின்றார். மதுரை நகர்க்கண் வாழ்ந்ததனால் மதுரைப் பூவண்டி நாகன் வேட்டனார் என்று சான்றோர் குறித்துள்ளனர். இவர்க் குரியதாக வேறு பாட்டு ஒன்றும் நற்றிணையை யுள்ளிட்ட தொகை நூல்களில் காணப்படவில்லை. களவு மேற்கொண்ட தலைமக்களிடையே காதல் சிறந்து முறுகுவது கண்ட தோழி, தலைமகனை விரைய வரைவு மேற் கொள்ளுமாறு தூண்டும் கருத்தினளானாள், அதற்குரிய சொல்லும் செயலும் கைக்கொண்டு அவள் தலைமகனைச் சேட்படுத்தவழி, அவன் களவையே நயந்து போதரக் கண்டாள். களவு வெளிப்பாடும் அதனால் விளையக் கடவ இடையூறும் நினையாது, களவின்கண் தலைவியைத் தலைக்கூடிப் பெறும் இன்பம் ஒன்றையே நினைந்தொழுகும் அவன் மனத்தில், அந் நினைவுகளைத் தோற்றுவிக்கு மாற்றால், வரைவின்கண் அவன் உள்ளம் ஊன்றச் செய்வாளாய், ஒருநாள் அவன் குறியிடமாகிய சுனைக்கு வரக் கண்டு, மிக்க அன்புடன் உரையாடலுற்று, "உயர் வரை நாட, இவளுடைய கண்களை நோக்குவாயாக. ஆயமகளிர் சூழ்வர இச்சுனைக்குப் போந்து நீரில் விளையாடி அதன்கண் பூத்த குவளை மலர்களைக் கொய்து இன்புறுதலால், அப்பூக்களைப் போல் இவள் கண்களும் இனிய தோற்றமளித்து மிளிர்கின்றன காண். அவற்றைக் கண்டு நீயும் இன்பம் மீதூர்கின்றாய். இவ்வாறு நீ பெரிதும் விரும்பிக் காதலிக்கும் இவட்கு நின்பால் உளதாகிய நட்பை இதுகாறும் ஒருவரும் அறியார். இனி, அதனை அன்னை அறிவாளாயின், இற்செறிப்பு முதலாய இடையீடு தோன்றுமன்றோ? அதனால், நின்னைத் தலைக்கூடி மகிழ்தல் இன்றி, நாளும் கண்கள் அழுது சிவந்து குவளையின் பொலிவை இழக்கும்; பின் விளைவு என்னாகும் கொல்லோ ?" என்று இயம்பினாள். செய்வதும் தவிர்வதும் தானே சிறப்புற உணர்ந்தொழுகும் தலைமை மாண்புடையாற்கு, இது செய்க எனத் தான் தலைமை தோன்றக் கூறுதல், தோழியாகிய தனக்கு அறமாகாது எனத் தெளிந்து, தலைவன் தானே வரைவு மேற்கொள்ளுமாறு அழகிய இனிய முறையில் சொல்லாடிய திறம் கண்டு வியந்த பூவண்டி நாகன் வேட்டனார், அவள் கூற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். நீடிருஞ் சிலம்பிற் பிடியொடு புணர்ந்த பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்பத் தோடுதலை1 வாங்கிய நீடுகுரற் பைந்தினை பவளச் செவ்வாய்ப் பைங்கிளி2 கவரும் உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை அன்னை3 அறிகுவ ளாயின் பனிகலந்து என்னா குவகொல் தாமே எந்தை ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை ஆடி ஆயமொடு குற்ற குவளை மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. இது, தோழி தலைமகனை வரைவுகடாயது. உரை : நீடு இருஞ்சிலம்பில் பிடியொடு புணர்ந்த - நெடிய பெரிய மலையின்கண் பிடியொடு கூடிய; பூம்பொறி ஒருத்தல் - அழகிய வரிகளையுடைய களிற்றியானையின்; ஏந்துகை கடுப்ப - மேலே உயர்த்திய கையைப் போல; தோடு தலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை - தோகை நுனிபிரிந்து வளைந்து தாழ நீண்டு நிற்கும் கதிரையுடைய பசிய தினையை; பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் - பவளம் போற் சிவந்த வாயை யுடைய பச்சைநிறக் கிளிகள் கவர்ந்து சென்று உண்ணும்; உயர்வரை நாட - உயர்ந்த மலைநாடனே; நீ நயந்தோள் கேண்மை - நீ காதலிக்கப்பட்ட இவள்பால் உளதாகிய நட்பை; அன்னை அறிகுவளாயின் - அன்னை அறிவாளாயின்; பனி கலந்து என்னாகுவ கொல் - நீர் சொரிந்து என்னவாகும் கொல்லோ; எந்தை ஓங்குவரைச் சாரல் - எம் தந்தைக்குரிய உயர்ந்த மலைப்பக்கத்தே உள்ள; தீஞ்சுனை ஆடி - தீவிய சுனைநீரிற் படிந்து விளையாடி; ஆயமொடு குற்ற - ஆய மகளிரொடு கூடிக் கொய்த; குவளை மாஇதழ் மாமலர் புரைஇய கண் - குவளையின் கரிய புறவிதழை யுடைய அழகிய மலரை ஒத்த கண்கள் எ.று. நாட, நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவளாயின், குவளை மாமலர் புரைஇய இவள் கண்கள் என்னாகுவ கொல்; நீயே எண்ணி ஏற்பன செய்க என எஞ்சியது பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. பிடியொடு கூடி யொழுகும் களிறு தன் கையை மேலே யுயர்த்திப் பிளிறுவது இயல்பாகலின் பிடியொடு புணர்ந்த பூம்பொறி ஒருத்தல் என்றார். பிடி புணர்ந்த அயர்ச்சி போக்கற்குக் களிறு தன்கையை நிமிர்த்துப் பிளிறும் என்ப. நிமிர்ந்த கை தினைக்கதிரையும் வாயிதழும் மருப்பும் தலைபிரிந்து வளைந்த தோட்டினையும் போறலின் ஒருத்தல் ஏந்துகை எடுப்பத் தோடு தலைவாங்கிய நீடுகுரல் பைந்தினை என்றார். பனி, நீர்த்துளி. குவளையினது புறவிதழ் கருநிற முடைமை பற்றி மா இதழ் என்றார். காதலுறவு சிறப்பது கருதிப் பல்காலும் வந்தொழுகும் தலைமகனை, வரைவின்கண் செலுத்த வேண்டிச் சேட் படுத்த வழியும், அயராது போந்து தலைமகளைத் தலைப் பெய்து இன்புறுத்திய நலம் அறிந்திருத்தலின், தீ நயந்தோள் கேண்மை என்றும், பல நாளைக் களவு ஒரு நாளில் புலப்படும் என்பது பற்றி, ஒருகால் அன்னையால் அறியப்படின் ஏதமாம் என்பாள், அதனை எடுத்து மொழியாது, அன்னை அறிகுவ ளாயின் என்றும், புலம்புற்று அழுவதையன்றித் தலைமகட்குச் செயல் வகை வேறில்லை என்பாளாய், அவள் கண்மேலேற்றி, கண் பனி கலந்து என்னாகுவகொல் என்றும் கூறினாள். சுனைக்குவளை போல அழகு மிக்கு விளங்கும் இவள் கண்கள் அன்னை யறிந்து இற்செறிப் பாளாயின் நின்னைக் காண்டற் பேறிழந்து கலுழ்ந்து நீர் சொரிந்து பொலிவழியும் என்பாள், என்னாகுவகொல் தாமே என்றாள். தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. தம்மாற் காதலிக்கப் பட்டார்க்கு இடுக்கண் நேர்ந்தவழிக் காதலர் அது தமக்கு நேர்ந்ததாக எண்ணி அதனைக் களைதற்கு விரைப என்பது உணர்த்தற்கு, நீ நயந் தோள் கேண்மை என்றாள். அன்னை அறியலுறின், கண்கள் என்னாகுவ கொல்லோ என்றது, அன்னை அறிதற்கு முன்பே நீ வரைந்துகோடல் நன்று என வரைவு கடாயவாறாம். வரைவு மறுக்கப்படுமெனத் தோன்றினும் காப்பு மிகினும் கொண்டு தலைக்கழிதலை நீ மேற்கொள்ளற்பாலை என்பாள், உள் ளுறையால் தோடு தலைவாங்கிய நீடுகுரற் பைந்தினையைச் செவ்வாய்ப் பைங்கிளி கவர்ந்து சென்று உண்ணும் நாடன் என்றாள். தலைமகன் தெருண்டு வரைவானாவது இதனாற் பயன் என அறிக. 318. பாலை பாடிய பெருங்கடுங்கோ மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் கடமை காரண மாகத் தன் மனைவியின் நீங்கிச் செல்ல வேண்டியவ னானான். அவனது பிரிவு, புதுமண வாழ்வின் புத்தின்பத்தில் திளைத்திருந்த அவன்மனையவட்கு மிக்க வருத்தம் தரும் இயல்பிற் றென்பதை நன்கு உணர்ந்திருந்தமையின், அவட்கு நேரிற் சொல்லாது தோழி வாயிலாக உணர்த்த முயன்றான். தோழியோ,அவனது கடமைச் சிறப்பையும் மனையவள் காதல்மாண்பையும் இனிது அறிந்தவள். தலைமக்களின் மனைவாழ்வு, பல்லாற்றானும் தலைமைச் சிறப்புக் குன்றாமை இயலுவதையே அவள் கண்ணும் கருத்து மாகப் பேணுபவள். அதனால், அவள் "இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என" இடர்ப்பட்டாள். பிரிவாற்றும் வன்மை தலைமகள்பால் சிறப்பது குறித்து அவனது பிரிவுக்கு உடன் படாள் போல, முதற்கண் அவனைச் செலவழுங்குவிக்கத் தலைப்பட்டாள். "செலவிடை அழுங்கல் செல்லாமை யன்று". களவுக்காலத் திறுதியில், தலைவன் தலைமகளை உடன்போக்கு வாயிலாகக் கொண்டுதலைக் கழிந்த ஞான்று, வழியிற் சுரத்திடை நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றை நினைப்பித்து, அதுவே சார்பாகத் தலைவியின் ஆற்றாமையை அவற்கு உரைக்கலுற்றாள். போக்குடன்பட்ட தலைமகளை, அவன் ஒரு சுரத்திடையே கொண்டு போதருங்கால், வெயில் வெம்மை மிகவே, தலைவி யொடு ஓமைமரம் ஒன்றின் செறிவில்லாத நிழலில் தங்கினான். அப்போது, அவர்கள் வந்த வழியே களிற்றியானை யொன்று அவர்கட்கு அச்சம் செய்யாது பைய வந்து வேறோர் நெறிக்கண் சென்று மறைந்தது. அது, தன் தலைமேல் தழைகளை ஒடித்துப் போகட்டுக் கொண்டதுடன் தன் கையையும் சுருக்கித் தனது உண்மை தன் பிடிக்குத் தோன்றாதவாறு செய்தது. அதனைத் தொடர்ந்து போந்த அதன் இளம்பிடி தன் காதற் களிறு வேறு நெறியிற் சென்றதைத் தன்பால் அன்பு சுருங்கிப் பிரிந்ததாக நினைத்துப் புலம்பிப் பிளிறுவதாயிற்று. சிறிது போதில், களிறு போந்து அதனைத் தழுவிச் சென்றது. பிறிதோர் நெறியிற் சென்றது பொறாது மடப்பிடி புலம்பிய திறத்தை எடுத்துக் காட்டி, "ஐய, அதனைச் சிறிது நினைந்து நோக்குதல் வேண்டும்; நினைப்பின், அப்பிடியினும் பெருங் காதலளாகிய தலைமகள் நின் பிரிவால் என்னாவள் என்பது இனிது தோன்றும்" என்ற கருத்துப்பட மொழிந்தாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைவியின் பிரிவருங் காதற் சிறப்பும், அதனை எடுத்தோதித் தலைமகனைச் செலவழுங் குவிக்கும் திறமும், மிக்க வியத்தகு முறையில் அமைந்திருப்பது கண்ட பெருங்கடுங்கோ அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். 1நினைத்தலும் நினைதிரோ ஐய அன்றுநாம் 2பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்துமிசைக் கொண்ட ஓங்குமருப் பியானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் 1ஆறிடைப் பட்ட அளவைக்கு வேறுணர்ந்து என்றூழ் விடரகம் சிலம்பப் புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே. இது, 2பிரிவுணர்த்திய தலைமகனைத் தோழி செலவழுங் குவித்தது. உரை : ஐய - ஐயனே; அன்று - போக்குடன் துணிந்து போந்த காலையில்; பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த - பருத்த தாளையுடைய ஓமைமரத்தின் கிளைகள் செய்த; பொருந்தாப் புகர்நிழல் இருந்தனமாக - செறிவின்றிப் புள்ளி பொருந்திய நிழலிடத்தே தங்கினோமாக; நடுக்கம் செய்யாது - நம்மையும் அஞ்சுவியாது; நண்ணுவழித் தோன்றி - யாம் போதரும் வழியிலே வந்து; ஒடித்து மிசைக்கொண்ட ஓங்குமருப்பு யானை - மரத்தின் தழைகளை ஒடித்துத் தன் தலைமேற் கொண்ட உயர்ந்த மருப்புக்களையுடைய களிற்றியானை யொன்று; பொறிபடு தடக்கை சுருக்கி - பொறிகளையுடைய தன் பெரிய கையைச் சுருட்டிக் கொண்டு; பிறிது ஓர் ஆறு இடைப்பட்ட அளவைக்கு - பிறிதொரு வழியிற் சென்று மறைந்த அவ்வளவுக்கு அதன் பிரிவாற்றாது; வேறு உணர்ந்து - வேறு நினைந்து; என்றூழ் விடரகம் சிலம்ப - வெயில் காயும் மலைப்பக்க மெல்லாம் எதிரொலிக்குமாறு; - புன்றலை மடப்பிடி புலம்பிய குரல் - புல்லிய தலையையுடைய இளம் பிடி புலம்புற்றுப் பிளிறிய குரலோசையை; நினைத்தலும் நினைதிரோ - நினைத்துப் பார்ப்பீராயின் நன்று காண் எ.று. ஐய, அன்று நாம் ஓமைப் படுசினைப் புகர்நிழல் இருந்தன மாக, யானை யொன்று நடுக்கம் செய்யாது தோன்றித் தடக்கை சுருக்கிப் பிறிது ஓர் ஆறிடைப்பட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, மடப்பிடி புலம்பிய குரலை நினைத் தலும் நினைதிரோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உடன் போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி நாம் என்றார். இவ்வாறு வருவனவற்றை, "ஒன்றித் தோன்றும் தோழி மேன1" என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர். ஓமையின் சினை இலையுதிர்ந்து கொம்பும், கோடுமாய் இருத்தலின் அதன் நிழல் பொருந்தாப் புகர் நிழல் எனப் பட்டது. பொருந்தாமை, தங்குதற்கேற்ற இலைச் செறிவும் தட்பமும் இல்லாமை. நண்ணுவழி, தலைமக்கள் போந்த வழி. தலைமகனைத் தாக்குதற்கு நினையாது, அவன் கண்ணிற்குத் தான் படாமைப் பொருட்டுத் தழைகளை ஒடித்துத் தலைமேற் போட்டுக்கொண்டு பிறிதோர் ஆற்றிடைச் சென்று மறைந்த தெனக் கொள்க. தடக்கை சுருக்கிக் கொண்டதும் அது பற்றியே யாகும். களிற்றின் மறைவுக்குரிய காரணத்தை அறியும் திறமின்றித் தன்பால் அன்பு சுருங்கிப் பிறிதொரு நெறிபற்றிச் சென்றொழிந்ததென மடப்பிடி பிறழ உணர்ந்து கொண்டது என்பது தோன்ற வேறு உணர்ந்து என்றும், அதற்கு ஏது அதன் இளமைச் செவ்வி என்றற்குப் புன்றலை மடப்பிடி என்றும், தனிமை யாற்றாது எடுத்த குரல் என்பது விளங்கப் புலம்பிய குரல் என்றும் கூறினார். உடன்போக்கு வாயிலாகத் தலைவியை வதுவை செய்து கொண்டு மனைவாழ்க்கை நடாத்தும் தலைமகன் உள்ளத்தில், இன்பநினைவுகளை அடக்கிப் பிரிவுக்கு ஏதுவாகிய பொருள் பற்றிய உணர்வு மீதூர்ந்து நின்றதனால், அவன் தன் கருத்தைத் தோழிக் குணர்த்தலும், அவள் அவன் உள்ளத்தே ஒடுங்கி யிருக்கும் காதலுணர்வைக் கிளர்த்தல் வேண்டி, நினைத் தலும் நினைதிரோ ஐய என்றாள். அச்சொல், யாதனை என்னும் அவாய்நிலையை அவன் கருத்தில் எழுப்பி அவன் கட்பார்வையை அவள்பால் செலுத்தியது. உடன்போக்கில் சுரத்திடைக் காட்சியை நினைப்பிக்கின்றா ளாயினும், கள வொழுக்கத்தில் நேரிய முறையில் தலைமகன் தலைமகளை வரைந்துகோடற்குரிய வாயில்கள் பயன்படாதொழிந்த விடத்தே, வேறு நெறியின் மையின், இறுதியாக மேற் கொள்ளும் இயல்பிற்று உடன்போக்கு என்பது பற்றி அதனைக் கிளந்துரையாது அன்று என்றும், அது தெளியப் புலப்படும்பொருட்டு, அன்று நாம் பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தனமாக என்றும் குறிப்பிட்டாள். உடனே தலைமகன் மனத்தில் உடன்போக்குப் பற்றிய நினைவுகள் நிரம்பவே, அவற்றுள், ஓங்குமருப்பு யானை வந்து பிறிதோர் வழியிற் சென்று மறைந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்தாள். நடுங்கா வுள்ளத்து நம்பி யாகலின், நின் நடுக்கம் காண்பது களிற்றுக்கு இயலாதாகலின் நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றிற்று என்றும், எனினும் தலைமகள் கண்டு நடுங்குவளாயின் தனக்கு நின் னால் ஊறு உண்டாகு மென அஞ்சி வேறோர் வழியாகச் சென்று மறைந்த தென்பாள், ஒடித்து மிசைக்கொண்ட ஓங்குமருப்பு யானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் ஆற்றிடைச் சென்றது என்றும், பின்னர் அதன் பிடி போந்து புலம்பிய திறத்தை விரித்தும் கூறினாள். தன் காதற் களிறு மறைந்தது கண்ட இளம்பிடி, நீ நின் காதலியொடு இருத்தலின் அதற்குத் தீங்குசெய்யாய் என்று அறிந்தும், அது சென்று மறைந்ததற்கு ஏது, தன்பால் அன்பு சுருங்கின மையே என நினைந்தது என்பாள், வேறு உணர்ந்து என்றும், அதனால், தனிமை பொறாது பெருங்குர லெடுத்து விடரகம் சிலம்பப் புலம்பிற்று என்றும் கூறினாள். இவ்வண்ணம் காதற் சூழலில் தலைவன் உள்ளத்தைச் செலுத்திய தோழி, அதனை மறவாது நினைப்பீராயின், நும் பிரிவின்கண் தலைமகள் எய்தும் தனிமைத்துயர் நன்கு புலனாம் என்றற்கு நினைக் கலும் நினைதிரோ ஐய என்றாள். இதனாற் பயன் தலைவன் செலவழுங்குவானாவது. 319. விளக்குடிச் சொகிரனார் சொகினனார் எனற்பாலது சொகிரனார் என வந்தது. சொகின் என்பது நிமித்தம் பார்ப்பதற்குப் பெயர். அது, பின்னர்ச் சொகினம் பார்ப்போர்க்காகி நாளடைவில் மக்கட்கு இயற்பெய ராயிற்று. திருவேங்கடத்தின் அடியில் பொன்முகரி யாற்றின் கரையில் சொகினூர் என்றோர் ஊர் உண்டு. அது திருச்சொகினூர் எனக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இப்போது அது திருச்சானூர் என மருவிப் புராணக்கதை பெற்று அலர்மேலு மங்காபுரம் என வேறு பெயரும் கொண்டு விளங்குகிறது. இச் சொகிரனார் விளக்குடி என்னும் ஊரினராதல் பற்றி விளக்குடிச் சொகிரனார் எனப்பட்டனர். இவ்விளக்குடி விளாக்குடி எனச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. விளக்குடி எனப் பெயரிய ஊர்கள் பல உண்மையின், இவர் இன்ன பகுதியினர் என்பது தெளிய விளங்குகின்றிலது. இனி அச்சுப்படி இவர் பெயரை வினைத் தொழிற் சொகிரனார் என்று குறித்துள்ளது. இவர் பாடியதாக இப்பாட்டு ஒன்றுதான் காணப்படுகிறது. களவுக் காதலுறவு கொண்ட தலைமக்களின் ஒழுகலாற்றில் தலைவிபால் தோன்றிய வேறுபாடு கண்டு அவள்பெற்றோர் அவளை மனைக்கண்ணே செறித்தனர். அவட்குக் காவலும் மிகுந்தது. அதனால், குறியிடங்களில் இரவினும் பகலினும் அவளைத் தலைப்பெய்து கூடல் தலைமகற்கு அரிதாயிற்று. அவன் உள்ளத் தெழுந்த வேட்கை மீதூரவும், அவன் பெரிதும் ஆற்றானாயினான். ஒருநாள் இரவுக்குறிக்கண் எய்தும் கூட்டம் நினைந்து, நள்ளிரவிற் குறியிடம் போந்து தன் வரவு தெரிவிக்கும் குறிகளைச் செய்தான். காப்பு மிகுதியால் தலைமகள் வெளிவர மாட்டாது மனைக்கண்ணே ஒடுங்கினாள். அவளது வர வெண்ணி நெடும்பொழுது இருந்தவன் மிக்க வருத்தமுற்று, "கடலும் முழங்குதல் தவிர்ந்தது. ஊதைக் காற்று அலைத்தலால், கானற்சோலையும் பூவும் தாதும் உதிர்ந்து பொற்பு இழந்தது; மூதூரிடத்து அகன்ற தெருச்சதுக்கத்தின் மேலிருந்து கூகைச் சேவல் தன் பெடையுட னிருந்து குழறாநிற்கும்; பேய்கள் இயங்கும் இருள் செறிந்த இந்நள்ளிரவில் தலைமகளை முயங்க எண்ணி, மீன்களும் கண்ணுறங்கும் இப்பொழுது யான் மாத்திரம் கண்ணுறங்குதல் பெறாதொழிகின்றேன்; என்நிலை இனி என்னாவது?" என ஏங்கிக் கூறினன். ஆண்மக்களின் காளைப் பருவத்து மனத்திண்மையை அவர் மேற்கொள்ளும் காதலுறவு போல் அலைப்பது பிறிதில்லை. அக்காலத்தே அவர்கள் கல்வி, செல்வம், புகழ் முதலிய நலங்கள் பலவும் செய்துகோடற்கு உரியராயினும், உள்ளம் காதற்காம வுணர்வால் கதுவப்படின், அவர்களது உண்மையறிவு, அக்காதல் நெறிக்குத் துணை செய்வது போல், கல்வி முதலியவற்றிற் செல்லுதல் இல்லை. புகழ் மானங்களிற் பெரும்பற்றும் நூண்ணூற் கல்விப் புலமையும் பெருகவுடையார்க் கன்றிக் காதற்காமத்தின் வன்மை தலைவணங்குதல் அரிது; வணங்கினும் அப்பற்றும் புலமையும் ஒருகால் சோருமிடத்து அது நிமிர்ந்துநின்று வருத்து வதில் தப்பாது. இடுக்கண் அடுக்கி வரினும் உடல் மிடுக்குக் குலையாமல், தொடங்கிய வினைக்கண் மடங்குதல் இல்லாத மானமாண்புடையனாயினும், தலைமகன் உள்ளமும் களவுக் காதற்காமம் கதுவியவழிக் கலங்கஞர் எய்திக் கவலுவ துண்டு என்பது உண்மை. அது காதற்காமத்தின் பெருவன்மையையே சிறப்பிப்பது கொண்டு, அவனது கவலையைச் சான்றோர் பொருளாக வைத்துப் பாடுவது பெரும்பான்மை யன்று. ஆசிரியர் சொகிரனார் ஈண்டுத் தலைமகனது தலைமை சான்ற உள்ளமும் காதலுறவிடை நிகழ்ந்த இடுக்கணுக்கு அழிந்து ஏமுறுவதை எடுத்தோதுமுகத்தால், களவொழுக்கத்தின் சிறப்பை இப் பாட்டின்கண் உய்த்துணர வைக்கின்றார். ஓதமும் ஒலியோ வின்றே ஊதையும் தாதுளர்பு கானல் தவ்வென் றன்றே மணன்மலி மூதூர் அகனெடுந் தெருவிற் கூகைச் சேவல்1 குராஅலொ டேறி ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும் அணங்குகால் 2கிளரும் மயங்கிருள் நடுநாள் பாவை யன்ன பலராய் வனப்பின் தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்கல் 3உள்ளி மீன்கண் துஞ்சும் பொழுதும் யான்கண் 4துஞ்சேன் யாதுகொல் நிலையே. இது, காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. உரை : ஓதமும் ஒலி ஓவின்று - கடலும் ஒலியவிந்தது; ஊதையும் தாது உளர்பு கானல் தவ்வென்றன்று - ஊதைக்காற்றுப் போந்து பூவும் தாதும் உதிர்த்தலால் கானற் சோலையும் பொலிவு குன்றியது; மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில் - மணல் நிறைந்த பழையவூரின் அகன்ற நெடிய தெருவில்; ஆர் இருஞ் சதுக்கத்து - ஆத்திமரம் நின்ற பெரிய சதுக்கத்தில்; கூகைச் சேவல் குராஅலொடு ஏறி - கூகையின் சேவல் தன் பெடையாகிய குராலொடு அம்மரத்தின் உச்சியில் ஏறியிருந்து; அஞ்சுவரக் குழறும் - கேட்டோர் அஞ்சுமாறு கூவாநிற்கும்; அணங்கு கால்கிளரும் மயங்குஇருள் நடுநாள் - பேய்கள் இயங்கும் இருள் மயங்கிய நள்ளிரவில்; பாவை யன்ன பலராய் வனப்பின் - பாவைபோலப் பலரால் ஒப்பனை செய்யப்பட்ட வனப்பினையும்; தடமென்பணைத் தோள் - பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையும் உடைய; மடமிகு குறுமகள் - மடப்பம் மிக்க இளையவளுடைய; சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி - சுணங்கு பரந்த அழகிய முலையைத் தழுவ விரும்பி; மீன் கண் துஞ்சும் பொழுதும் - மீனினம் கண்ணுறங்கும் இக்காலத்தும்; யான் கண் துஞ்சேன் - யான் கண்ணயர்தல் இலனானேன்; நிலை யாதுகொல் - என் நிலைமை யாதாகும் கொல்லோ? அறியேன் எ-று. ஓதம் ஒலி ஓவின்று; கானல் தவ்வென்றன்று; தெருவிற் சதுக்கத்துக் கூகைச்சேவல் குராலொடு ஆர் ஏறிக் குழறும்; அணங்கு கால் கிளரும் மயங்கிருள் நடுநாள் குறுமகள் வன முலை முயங்கல் உள்ளி, மீன் கண் துஞ்சும் பொழுதும், யான் கண் துஞ்சேன், நிலை யாதுகொல்லோ அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஓவின்று, இறந்த காலத் தெரிநிலை வினைத்திரிசொல். ஓவுதல், நீங்குதல். உளர்பு, செய்பென்னும் வினையெச்சம் ஈண்டுக் காரணப் பொருளில் வந்தது. தவ்வெனல், பொலிவிழப்புக் குறிக்கும் குறிப்புமொழி; "அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை யிழந்து1" என்றாற் போல. நெய்தல் நிலத்து மூதூராதலின், மணன்மலி மூதூர் எனப்பட்டது. குரால். கூகையின் பெடை. "குடுமிக் கூகை குராலொடு முரல2" என்பது காண்க. இவற்றின் ஓசை கேட் டார்க்கு அச்சம் பயக்கு மென்பதை 'அஞ்சுவரு குராஅற் குரலும் தோன்றும்3' என்பதனாலு மறிக. தெரு நான்கு கூடுமிடத்தே நடுவே ஒரு மரத்தை நட்டு வளர்த்து அதன் அடியில் சதுக்கமாகப் பீடிகை அமைத்து அதன்மேல் தெய்வங்களை நிறுவி வழிபாடு செய்வது பண்டையோர் மரபு. இங்கே ஆத்திமரம் நின்றது தோன்ற ஆர் இருஞ்சதுக்கம் என்றார். ஆர். ஆத்திமரம். சோழர்க்குரிய ஆர், கூறினமையின், இச்சொகிரனார் சோழநாட்டு நெய்தனிலப் பகுதியைச் சேர்ந்தவர் போலும் என எண்ணற்கு இடமுண்டாகிறது. அணங்கு ஈண்டுப் பேய்மேற்று. கால்கிளர்தல், இயங்குதல். பேயின் இயக்கத்தைக் காற்றொடு சார்த்திக் கூறுப வாகலின், கால் கிளரும் என்றார். செல்வமகளிர்க்கு ஒப்பனை செய்யு மிடத்துக் குழல் முடித்தல், பூச்சூடல், விரையூட்டல், அணி யணிதல், உடையுடுத்தல் முதலிய செயல் பலவற்றிற்கும் பணிமகளிர் பலருண்மையின் பலராய் வனப்பு என்றார்; "பாவை யன்ன பலராய் மாண்கவின்1" என்று பிறரும் கூறுதல் காண்க. பணை, மூங்கில். அச்சம் நாணம் மடம் என்ற மூன் றனுள் மடம் மிக்கு நிலவுமாறு தோன்ற மடமிகு குறுமகள் என்றார். இரவில் உறங்குதற் குரிய உயிரினங்களில் மீன் நள்ளிரவிறுதியில் உறங்கும் என்பது பற்றி மீன் கண்துஞ்சும் பொழுதும் என்று சிறப்பித்தார். இரவுக்குறிக்கண் போந்த தலைமகன் தலைவியின் வருகைமேல் கருத்தைச் செலுத்தி ஒடுங்கியிருந்தகாலை, கடலொலி கேளாதாகவே ஓதமும் ஒலியோவின்று என்றும், கடற்பரப்பினின்றும் நிலனோக்கிப் போந்த ஊதைக் காற்றால் அலைப்புண்ட கானற்சோலையிடத்துப் பூக்களும் தாதும் மணற்பரப்பில் உதிர்ந்து அதன் பால்போன்ற தூய நிறத்தை மாற்றினமையின், ஊதையும் தாது உளர்பு கானல் தவ் வென்றன்று என்றும், கடலையும் கானலையும் கண்ட அவன் கண்கள், மூதூரில் அகன்ற தெருவையும், சதுக்கத்தையும் நோக்குதலின், மணல் மலி மூதூர் அகல் நெடுந்தெருவில் என்றும், அங்கே சதுக்கத்து நின்ற ஆத்திமரத்திலிருந்து கூகையும் குராலும் கூடிக் குழறும் குரல் கேட்டு இரவுப் போது நள்ளிரவுப் பகுதியாயினமை உணர்ந்தமை விளங்க அணங்கு கால்கிளரும் மயங்கிருள் நடுநாள் என்றும் கூறினான். நள் ளிரவு கழிந்ததும் மீன் கண்ணுறங்கும் மூன்றாம் யாம வர வினை நீர்ப்பரப்பில் மேய்ந்துலவிய மீனினம் மறைந்து உறங் கினமை புலப்படுத் தினமையின், மீன்கண் துஞ்சும் பொழுதும் என்றும், அதுகாறும் தன் கண் உறக்கம் கொள்ளாமைக்கு ஏது தலைவியை முயங்குதற் குற்ற வேட்கை மிகுதி என்பது தெளிந்து, குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி என்றும், முயக்கமும், உறக்கமும் இல்லையாயின், தன்னிலை பெரிதும் இரங்கத்தக்கதாம் எனக் கவன்றா னாகலின் யான் கண்துஞ்சேன் யாதுகொல் நிலையே என்றும் கூறினான். இங்ஙனம், பெறற்குரிய காலமும் இடமும் முயற்சியும் வாய்த்தும், தான் உள்ளிய பொருள் எய்தப்பெறாத வழித் துனியும் சினமும் கொண்டு நீங்குதற்குரிய தலைமகன் மனம், தன்னை இயக்கும் காதற் காமத்தை வெறுத்து ஒடுக் காது இரங்குதலையே பொருளாகக் கொண்டது, "மிக்க காமத்தின் மிடல்" புலப்படுத்து நிற்றல் காண்க. இத்துணை இடுக்கணையும் ஏறட்டுத் தாங்கி மேற்கொண்ட காதலொழுக் கத்தில் வெற்றி காண்பது தலைமை மாண்பு என அறிக. பயன், அயர்வு தீர்தல். விளக்கம் : "பண்பிற் பெயர்ப்பினும்"1 எனத் தொடங்கும் நூற்பாவில், "பரிவுற்று மெலியினும்" என்றதற்கு இப்பாட்டைக் காட்டி இஃது இரவுக் குறியிற் பரிவுற்றது என்பர் நச்சினார்க் கினியர். 320. கபிலர் பண்டை நாளைத் தமிழர் வாழ்வில் மனைமகளிர் உடனுறை வுக்குப் பொருந்தாக் காலங்களில் செல்வக் காளையர்க்குப் பரத்தையர் பாய லின்றுணையாய்ப் பயன்பட்டனர். மறமிக்க ஆடவர்பால் விலங்குணர்ச்சி மீதூர்ந்து அறவரம்பைச் சிதையா வண்ணம் பரத்தையர் தொடர்பு பேருதவி புரிந்தது. இவ் வாற்றால் பரத்தையிற் பிரிந்தொழுகுவது, பண்டைய ஆடவர்க்குக் கடனாக அமையாதொழியினும் இழுக்காக எண்ணப்பட வில்லை. இத்தகைய சூழ்நிலையில் மனைக்கண் இருந்து அறம் புரிந்தொழுகும் தலைமகற்குப் பரத்தையர் தொடர்புண்டாயிற்று. ஒருகாலத்து ஒருத்தியோடு கூடியுறைபவன், பிற பரத்தையர் மனைக்குச் சேறல் விலக்கப்படாமையின், வேறு மகளிரின் தொடர்பு பெறுதலும் உண்டு. அதனால், பரத்தையரிடையே பூசலும் பிணக்கும் தோன்றுவது இயல்பாயிற்று. அவ்வகையில், பரத்தை யொருத்தியை விட்டு வேறொருத்தியின் வேட்கைக்கு இலக்காயினான் தலைமகன் என்பது உணர்ந்த பழையவள், சினங்கொண்டு தனக்குப் பாங்காயினாரிடத்தே உரையாடுபவள் போலப் புதியவiளப் பற்றிச் சிறைப்புறமாகத் தலைவன் செவிப்படுமாறு தன் பாங்காயின மகளிரிடம் சில கூறலுற்றவள், "ஊரவர் எடுத்த திருவிழாவும் முடிந்தது; முழவும் கட்டிலில் ஏற்றப்பட்டது; அக்காலத்தே நலம் புதியளாகிய இவள் குல மகளிர் வாழும் தெருவில் சென்றது கண்ட மனைமகளிர் தத்தம் கொழுநரை மனைக்கண் இருத்திக் காவல் அமைத்து இவள் கண்ணிற் படாவகைக் காத்துக் கொண்டனர். வேறு ஆடவரைக் காண மாட்டாமையின், எம் மனைக்கண் இருந்து பரத்தையர் சேரியில் உலவிய தலைமகனைப் பற்றிக் கொள்வது அவட்கு எளிதாயிற்றென்பது ஒழிய வேறில்லை" என்றாள். பரத்தை நிகழ்த்திய இக்கூற்றின்கண், வரைவில் மகளிர் உள்ளம் தலைமக்களின் தலைமை மாண்பு கருதாது தமக்குப் பயன்படும் சிறப்புடைப் பொருளாக எண்ணி, அதனால் அவர்களைச் சிறைக்கவும் விடுக்கவும் கூடிய உரிமை தம்பால் இருப்ப தாக நினைந்து இறுமாக்கும் இயல்பும், இன்பம் யாவும் தமக்கே யுரிய எனக் கொள்ளும் சிறுமையும் புலப்படுதல் கண்ட கபிலர், அவற்றை உய்த்துணர்ந்து பரத்தைமை யொழுக்கத்தின் புன்மையை நன்மக்கள் அருவருத்து விலகுதல் நலம் என்பதுபட இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். விழவும் 1முடிந்தன்று முழவும் தூங்கின்று எவன்குறித் தனள்கொல் 2என்றி ராயின் தழையணிந் தலமரும் அல்குல் தெருவில் இளையோள் இறந்த அனைத்திற்குப் பழவிறல் ஓரிக் கொன்ற ஒருபெருஞ் 3செருவிற் காரி புக்க நேரார் புலம்போல் கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு காவல் செறிய மாட்டி ஆய்தொடி எழின்மா மேனி மகளிர் விழுமாந் தனர்தம் கொழுநரைக் 1காத்தே. இது, பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப நெருங்கிச் சொல்லியது. உரை : விழவும் முடிந்தன்று - ஊரவர் எடுத்த திருவிழாவும் முடிந்தது; முழவும் தூங்கின்று - விழவுக்காலத்து முழங்கிய முழவும் பழையபடியே அதன் கட்டிலிலே ஏற்றப்பட்டது; எவன் குறித்தனள்கொல் என்றிராயின் - எவ்வாறு நின் காதலனைக் குறித்தாள் என்று வினாவுகின்றீ ராகலின் கூறுவல்கேண்மின்; அல்குல் தழையணிந்து அலமரும் தெருவில் - இடையில் தழையுடை யணிந்து இளமகளிர் திரியும் தெருவிடத்தே; இளையோள் இறந்த அனைத்திற்கு - எம்மின் நலம் புதியளாய இளைய பரத்தை சென்ற அவ் வளவிற்கே; பழவிறல் ஓரிக் கொன்ற ஒரு பெருஞ்செருவில் - பழமையான வெற்றியையுடைய வல்வில் ஓரி யென்பவனைக் கொன்று ஒரு பெரிய போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட; காரி புக்க நேரார் புலம்போல் - காரி யென்பான் தன் காரி யென்னும் குதிரை யிவர்ந்து களம் புக்கபோது அவனை நேர்பட மாட்டாத மழபுலம் போல; ஊர் கல்லென்றன்று - ஊரிடத்தே கல்லென்ற ஆரவார முண்டாயிற்றுகாண்; அதற் கொண்டு - அதனால், காவல் செறிய மாட்டி - மனைக்கத வங்களைச் செறியத் தாழிட்டு; ஆய்தொடி எழில் மாமேனி மகளிர் - ஆய்ந்தணிந்த தொடியும் அழகிய மாநிறம் கொண்ட மேனியுமுடைய மனைமகளிர்; தம் கொழுநரைக் காத்து - தம் கொழுநர் அவள் கண்ணிற் படாவகை மறைத்து; விழுமாந் தனர் - மேன்மை யுற்றனர்; எம் சேரிக்கண் இருந்தமையின் தலை மகனை அவள் குறித்துக்கோடல் இயலுவதாயிற்று எ.று. விழவும் முடிந்தன்று; முழவும் தூங்கின்று; எவன் குறித் தனள்கொல் என்றிராயின், கூறுவல்: அல்குல் தழையணிந்து அலமருந் தெருவில், இளையோள் இறந்த அனைத்திற்கு ஊர், காரி புக்க நேரார் புலம்போல் கல்லென்றன்று; அதற் கொண்டு மகளிர் காவல் செறிய மாட்டித் தம் கொழுநரைக் காத்து விழுமாந்தனர்; எம் சேரிக்கண் இருந்தமையின் தலை மகனைக் குறிக்கொளல் அவட்கு எளிதின் இயலுவதாயிற் றெனக் குறிப்பெச்சம் பெய்து முடிக்க. ஊரவர் எடுக்கும் விழாக்களில், பரத்தையர் தம்மை நன்கு ஒப்பனை செய்து கொண்டு தம் ஆடல் பாடல் அழகுகளால், "ஆடவர் மனங்க ளென்னும் அரங்கின்மேல்" ஆடுதல் மரபு; விழவு முடிந்த வுடன் அவர்கள் தத்தம் மனைகளில் ஒடுங்குவர் என அறிக. விழவுக்காலத்து முழங்கிய முழவு, அது முடிந்தபின் பழைய படியே முழவுக் கட்டிலில் ஏற்றப்படுவதுபற்றி முழவும் தூங்கின்று என்றார். குறித்தல், குறிக்கொண்டு பற்றிக் கொள்ளுதல். பாங்காயினாருடன் உரையாடுதலின், என்றி ராயின் என்றார். தழையுடை இளைய மகளிர் அணிவதென் றறிக. 'இளையமாகத் தழையாயினவே1' என்றும், "அம்பூந் தொடலை யணித்தழை யல்குல், செம்பொற் சிலம்பின் இளையோள்2"என்றும் வருவன காண்க. தழை யணிந்து அலமரும் தெரு எனவே, இது குலமகளிர் வாழும் தெரு என்பது பெற்றாம். பண்டை நாளில் பரத்தையர் சேரிக்கண் உறையும் மகளிர் குலமகளிர் வாழும் தெருக்களில் விழா வொழிந்த பிறநாள்களில் இயங்குதல் இலர். அவ்வரம்பு கடந்து இளைய பரத்தை சென்றமை தோன்ற இறந்த அனைத் திற்கு என்றார். ஓரி என்பவன் கொல்லிமலையை யுள்ளிட்ட மழநாட்டுக்குத் தலைவன். மழநாடு என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்துக் காவிரியாற்றின் வடகரைப் பகுதியாகும். மழநாட்டவரை மழவர் என்றும் அவர் நாட்டை மழபுலம் என்றும் சான்றோர் குறிப்பர். பண்டை நாளில் மழவர் போர்த் துறையில் சிறப்புற்று விளங்கினமையின், அவர்களை முடி வேந்தரும் குறுநிலத் தலைவர்களான வேளிரும் தம் படைமறவ ராகக் கொண்டு வெற்றி சிறந்துள்ளனர். கொல்லி வேந்தனான ஓரி, ஆதனோரி எனவும் வழங்கப் பெறுவன். விற்றொழிலில் ஓரியின் புகழ் ஒப்புயர்வற்றது. ஒருகால் அவன் ஒரு வேழத்தின் மேற்செலுத்திய அம்பு அதன் உடற்குள் ஊடுருவிச் சென்று, வழியில் ஓரிடத்தில் நின்ற புலியொன்றைக் கொன்று, பிறி தோரிடத்தில் மேய்ந்துகொண்டிருந்த மான்கலையை வீழ்த்தி அதனோடும் விசை குன்றாமல் பன்றியொன்றைத் துளைத்துச் சென்று, புற்றிடத்தே தலையை நுழைத்திருந்த உடும்பொன் றின் உடலில் தைத்துக் கிடந்தது. அது கண்ட வன்பரணர் என்ற சான்றோர் அவனை வல்வில் ஓரி யென்று சிறப்பித்துப் பாடினர்; அதுவே ஏதுவாக அவனும் வல்வில் ஒரி எனச் சிறப் பிக்கப்பட்டான். அந்நாளில் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு தென் பெண்ணைக் கரையின் இருமருங்கும் உள்ள நாட்டை மலைய மான் என்ற வேளிர்தலைவன் ஆண்டு வந்தான். அதனால், அந்நாடு மலையமானாடு எனவும், மலாடு எனவும் பெயர் பெற்றது. மலையமான்களில் திருமுடிக்காரி என்பவன் வல்வில் ஓரியின் காலத்தில் சிறந்து விளங்கினான். சோழ பாண்டிய ராகிய முடிவேந்தர் இருவர்க்கும் வேண்டுமிடத்துப் படைவலி யுதவுவது காரிக்கு வழக்கம். அவன் உதவிய போர்முடிவில் வென்றவன் "வெலீஇயோன் இவன்" எனவும், தோற்றவனும் "வல்வேல் மலையன் அல்லனாயின், நல்லமர் கடத்தல் எளிது மன் நமக்கு என1" எனவும் கூறுவர் என வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் கூறுகின்றார். இம்மலைய மான்கள் வழிவழியாகக் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கின்றனர். இடைக்காலத்தே மலைய மானாடு சேதிநாடு எனவும் மகதை நாடு எனவும் இரண்டாகப் பிரிந் திருந்தது. பிற்காலத்தே கோவலூர் காவற் சிறப்புக் குன்றவே, அப்பகுதியிலுள்ள கிளியூர் சிறப்படைந்தது; அங்கிருந்து நாடுகாவல் புரிந்த அவர்கள் கிளியூர் மலையமான்கள் என்ற பெயர் கொண்டுநிலவினர், ஒருகால் சேரமான் ஒருவன் பொருட்டு மலையமானான காரி ஓரியின் கொல்லிக் கூற்றத் துட் புகுந்து போருடற்றினான், அப்போரில் ஓரி இறந்து பட்டான்; கொல்லிமலைப்பகுதி சேரர்க்குரிய தாயிற்று இதனை "முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி1" என்பதனால் அறியலாம். ஓரியொடு பொருது அவனைக் கொன்று களம் கொண்ட காரியின் தோற்றம் கண்ட ஓரியின் படைமறவராகிய மழவர், "தானை தலைமக்கள் இல்வழி இல்" என்றவாறு அவன் நேர்நின்று பொரமாட்டாது ஓடிய திறம் தோன்ற. "நேரார்" என்றும், அவர்களது ஊரவர் அஞ்சி எடுத்த அரவத்தை உவம மாக்கிக் காரி புக்க நேரார் புலம் போல்கல்லென்றன்றால் ஊரே என்றும் கூறினார். காரி இவர்ந்து சென்ற குதிரைக்கும் காரி என்பது பெயர் என்ப. ஓரியும், காரியும் ஒத்த செல்வமும் ஒத்த வில்வன்மையு முடையராகலின் அவர் செய்த போரின் சிறப்பை, ஒருபெருஞ் செரு என்று கூறினார். மாட்டுதல், ஈண்டுத் தாழிட்டுக் காத்தல் என்க. பரத்தையின் புலந்துரைக்குப் பொருளாயினாள் வேறோர் இளம்பரத்தையே யாதலால், குலமகளிர் நலத்தை எடுத்துமொழிந்தார். விழுமாந்தனர், விழுமம் என்ற உரிச் சொல் லடியாகப் பிறந்த தெரிநிலை வினைமுற்று. "விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்2" என்பது தொல்காப்பியம். தலைமகனைத் தலைக்கொண் டொழுகிய பரத்தை, அவன், நலம் புதியளாகிய வேறொரு பரத்தையிற் பிரிந்தமைக்கு வருந்துபவள், அவட்குப் பாங்காயினாருடன் உரையாடலுற்ற போது, அவருட் சிலர், விழாக்காலத்து ஊர்முழுதும் சென்று திரிதல் பரத்தையர்க்கு ஒக்கும்; இவ்வழி அவ்வாறு போதல் அமையாதன்றே என்று வினவினாராக, அதனைக் கொண் டெடுத்து மொழிவாளாய், விழவும் முடிந்தன்று முழவும் தூங்கின்று, எவன் குறித்தனள்கொல் என்றியாயின் என்றும், குலமகளிர் வாழும் ஊர்த்தெருவில், இடையில் தழை யணிந்து இளஞ் சிறுமியர் விளையாடுமாறு தோன்ற, தழையணிந் தலமரும் அல்குல் தெருவில் என்றும், ஆண்டுச் செல்ல லாகாமை யறியாது இளையளாகிய பரத்தை சென்றது வரம்பு இறந்த செயல் என்றற்கு இளையோள் இறந்த அனைத்திற்கு என்றும், அது கண்டு ஊரவர் எடுத்த ஆரவாரம் பெரிது என்பாள், ஓரிக் கொன்ற ஒருபெருஞ் செருவில் காரி புக்க நேரார் புலம்போல் கல்லென்றன்றால் ஊரே என்றும், காரியின் வரவு கண்ட பகைவர் உடைந்தோடிப் புகலிடம்புக்கு மறைந்தாற்போல, மனைமகளிரை தம் கொழுநரைக் காத்து விழுமாந்தனர் என்றும், காரியின் நேரார் மாட்டாமையால் மேனி வேறுபட்டு ஓடியதுபோலன்றி மனைமகளிர் இவ் விளையவள் வரவு கண்டு வேறுபட்டா ரல்லர் என்றற்கு, ஆய்தொடி எழின்மா மேனி மகளிர் எனச் சிறப்பித்தும், இவள்கண்ணில் தம் கொழுநர் படாவாறு காத்தலையே அவர்கள் செய்தனர்; அஃது ஒன்றே அமையும என்பாளாய்க் காவல் செறிய மாட்டி விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே என்றும் கூறினாள். மேலும் அஞ்சிக் காத்தனர் எனின் இவட்கு ஏற்றமாம் என்பது கருதியும், பரத்தையின் வெறுப் புக்குக் குலமகளிர் பொருளன்மையின் அவர்களைச் சிறப் பித்தும் கூறினாள். இவ்வாற்றால் ஊரகத்தே ஆடவர்ப் பெறாமையின் நம் சேரிக்கண்ணே திரிந்த தலைமகனைக் குறிக்கொண்டாள் என்றாள். இவ்வுரையாடற்கண் தலை மகனது தலைமைமாண்பு பொருளாகக் கருதப் படாமையும், பரத்தையர் பரத்தைமைக்குத் தலைமை சிறக்கும் ஆடவர் எண்பொருளாகக் கருதப்பட்டமையும் நன்கு விளங்கி நிற்றல் காண்க. இதனாற் பயன், பரத்தை அயர்வு தீர்வாளாவது. 321. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் காதலுறவால் கருத்தொன்றிக் கடிமனைக்கண் இருந்து அறம் செய்து போந்த தலைமக்கள் வாழ்வில், தலைமகன் ஆள்வினை பற்றி மனைவியிற் பிரிந்து சென்றான். அவன்பிரிவு தலைவிக்கு மிக்க வருத்தம் விளைத்த தெனினும், மனைவாழ்வின் மாண்பும் கற்பின் திண்மையும் தெளியக் கொண்ட சிறப்பால், அவள் அவ்வருத்தத்தைத் தாங்கி அவன் குறித்த பருவவரவை எதிர்நோக்கி யிருந்தாள். தலைமகன் ஆள்வினையை மேற் கொண்டதும், அவ்வினை பற்றிய நினைவுகளும் அதனைக் கடைபோக ஆற்றுவது பற்றிய திறங்களுமே அவனுடைய உள்ளத்தில் நிறைந்து கொண்டன; அதனால் தலைமகன் அவ் வினையைச் செம்மையும் புகழு முண்டாகச் செய்து முற்றினான். வினைபற்றிய சிந்தனைகட்கு இடனாகி யிருந்த அவன் உள்ளத் தில் அது முற்றியவிடத்து அதுகாறும் ஒடுங்கிக் கிடந்த காதல் நினைவு எழுந்தது; விரைந்து தன் மனைக்கு மீள்வதையே அவன் மனம் கருதிற்று; தான் மேற்கொண்ட வினை, குறித்த காலத்தே முற்றியவழிப் பிறந்த இன்பம் தனக்கேயன்றித் தன் மனை யாட்டிக்கும் உரித்தாதலின், அதனை அவள்பால் கொண்டுய்த் தலும் அவனுக்குக் கடனாகத் தோன்றிற்று. இவ்வாற்றால் வினை முடிந்த உவகையால் மீளலுறும் தலைமகனுக்குத் தன் காதலியின் நினைவுகளே மனத்தில் கிளர்ந்தெழுந்தன. தான் மீள்வதாகக் குறித்த கார்ப்பருவமும் எதிரிலே தோன்றி நிலவுவது கண்டான். தன்னூரில் மாலைப்போதில், பகற்காலத்தில் காடுகளில் திரிந்து மேய்ந்த ஆனிரைகள் தம் கழுத்திற் கட்டிய மணி யொலிக்கத் தொழுவம் நோக்கிப் பெயர்ந்து மீள்வதும், மனைகளில் வளர்ந்து மலர்ந்த முல்லைப் பூக்களைத் தம் கரிய கூந்தலிற் சூடிப் பார்ப்பன மகளிர் மகிழ்வுடன் தோன்றுவதும் அவன் உள்ளத்தில் காட்சி யளித்தன. அவர்களது மகிழ்நகை தவழும் மதிமுகம் காணும் தலைவன் உள்ளத்தே தலைவியின் வருந்திய முகம் தோன்றுகிறது; அவள் மாலைப்போதில் பகலவன் மலைவாய் மறைவது கண்டு, தன் மனையை நோக்கி ஆங்கே தன் காதலன் இல்லாமையால் அது பொலிவின்றி வறிதாய் உள்ளமையின் வருத்தம் மிகு கின்றாள். அது காணப்பொறாத தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, "வல்லைக் கடவுமதி தேரே" என்று மொழிகின்றான்; சிறிதுபோதில் தன் ஊர் அருகே நிற்கும் குறும்பொறையையும் அங்கே குருந்தமரங்கள் நின்று பூத்துப் பொலிவதையும் காண் கின்றான். அவ்விடத்தை அடைதலும் தன் னூர்க்கண் எழும் ஆரவாரம் கேட்கிறது; ஆங்கே நிற்கும் மரங்கள் உயர்ந்து தோன்றுகின்றன. அவன் மனம் இன்பத்தால் மலர்கின்றது. இளமையுள்ளத்தை எளிதிற் பிணித்துத் தன்னையன்றிப் பிற அறிவு புகழ் முதலிய நெறிகளை நினையவிடாத வன்மை படைத்த காதலுணர்வு, தலைமை மாண்புடைய நன்மக்கள் வாழ்வில், அப்புகழ் பொருள் அறிவு முதலியன பற்றிய வினை போந்தவிடத்து, அவர் உள்ளத்தே ஒடுங்கிநின்று, வினைக்குரிய செய்திறங்கட்கு முதலிடம் தந்து, வினைமுற்றிய செவ்வியில், தானே தோன்றிநின்று அவர்களின் உள்ளத்தை இயக்கும் திறம் இந்நிகழ்ச்சியில் இலங்குதல் கண்ட மள்ளனார் அதனை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவைப் பாடின் தெண்மணித் தோடுதலைப் பெயரக் கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்பன மகளிர் 1கார்ப்புறத் தணியக் கல்சுடர் சேரும் கதிர்மாய் மாலைப் புல்லென் வறுமனை நோக்கி மெல்ல வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை வல்லைக் கடவுமதி தேரே 1அல்குநிழற் குருந்தவிழ் குறும்பொறை 2பயின்ற பெருங்கலி மூதூர் மரம்தோன் றும்மே. இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. உரை : செந்நிலப் புறவின் - செம்மண் நிலமாகிய முல்லைப் புறவின்கண்; புன்மயிர்ப் புருவைப் பாடு இன் தெண்மணித் தோடு தலைப்பெயர - புல்லிய மயிரையுடைய ஆட்டினத்தின் ஓசை யினிய மணி கட்டப்பட்ட கூட்டம் தொழுவம் நோக்கி மீள; கான முல்லைக் கயவாய் அலரி - காட்டிடத்து முல்லை யின் இதழ் விரிந்த பூவை; பார்ப்பன மகளிர் கார்ப்புறத்து அணிய - பார்ப்பனப் பெண்கள் குழல் கிடந்து மறைத்த கரிய முதுகிடத்தே சூட; கல் சுடர் சேரும் கதிர்மாய் மாலை - ஞாயிறு மலைவாய் அடைதலால் அதன் கதிர்கள் மறையும் மாலை நேரத்தில்; புல்லென் வறுமனை நோக்கி - யாம் இன்மையின் புல்லென வறிதாய்த் தோன்றும் மனையை நோக்கி; மெல்ல வருந்தும் கொல்லோ - பைய வருந்துவள்; திருந்து இழை அரிவை - திருந்திய இழையணிந்த அரிவை யாதலால்; வல்லை கடவுமதி தேர் - தேரை விரையச் செலுத்து வாயாக; அல்குநிழல் குருந்து அவிழ் குறும்பொறை பயின்ற - தங்குதற் கமைந்த நிழலையுடைய குருந்த மரம் மலர்ந்து நிற்கும் குறுகிய குன்றங்கள் பொருந்திய; பெருங்கலி மூதூர் மரம் தோன்றும் - பெரிய ஆரவாரத்தையுடைய பழமையான ஊர்ப்புறத்து மரங்கள் தோன்றுகின்றன, காண். எ-று. புருவைத்தோடு தலைப்பெயர, பார்ப்பனமகளிர் முல்லை யலரி அணிய, கதிர்மாய் மாலையில், வறுமனை நோக்கி, அரிவை வருந்துவள்; ஆகலின், தேர் வல்லைக் கடவுமதி; மூதூர் மரமும் தோன்றாநின்றனகாண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. முல்லைநிலப் பகுதிகளில் பெரும்பாலன செம்மண் பாங்கின வாதல் பற்றிச் செந்நிலப் புறவு என்றார். பிறரும் "வல்லோன் செய்கை யன்ன செந்நிலப் புறவின்1" என்பது காண்க. புருவை, ஆடு. தோடு, தொகுதி; மந்தை யெனவும் படும். காட்டிடத்தே நெடிது பரந்து மேயும் இயல் பினவாகலின், அவற்றின் உண்மை தெரிதற்காகக் கோவலர் ஆனிரைகளின் கழுத்தில் மணிகட்டுவது மரபு. இராக் காலங்களில் மனைப்புறத்தமைத்த தொழுவின்கண் அவற்றைத் தொகுப்ப வாதலின், மனைநோக்கிப் பெயர்தலைத் தலைப் பெயர என்றார். முல்லைமலர் இதழ் விரிந்து அகன்று தோன்று வது பற்றி முல்லைக் கயவாய் அலரி எனப்பட்டது. கரிய குழல் கிடந்து மறைக்கும் கழுத்தின் புறம் கார்ப்புறம் எனப் பட்டது. நெய் யிடையறாத குழல் கிடக்கும் புறக்கழுத்து நிறம் கறுத்திருப்பது பற்றி அது கார்ப்புறம் எனப்படற்கு ஏற்புடைத் தாயிற்று. சுடர், ஞாயிறு. கல், மலை; "உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு2" என்றாற்போல, கணவன் இல்வழி மனை யுறை மகளிர் அகத்தும் புறத்தும் அழகுறுத்தும் பணியை மேற்கொள் ளாராகலின், புல்லென் வறுமனை என்றார். கொல்லும் ஓவும் அசைநிலை. வல்லை, விரைவு. அல்கு நிழல், தங்குதற் கமைந்த நிழல்; "அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய3" என்பது காண்க. குறும்பொறை, குறுகிய மலை; குன்றுமாம். மேற்கொண்ட வினைமுற்றியபின், தலைமகன் உள்ளம், புறத்தே கார்ப்பருவம் எய்துவது காணத் தன் மனைவாழ்வையும், மனைக்கண் உறையும் மனைவியையும் நினைத்தலின், அவன் மனக்கண்ணில் தன் வாழ்நிலமாகிய முல்லைப்புறவம் செம் மண் பாங்கினால் சிவந்து தோன்றுதலின், அதனைச் செந் நிலப் புறவின் என்றும், ஆங்குள்ள காட்டில் பகலெல்லாம் மேய்ந்து திரிந்த புருவைத்தோடு தொழுவம் நோக்கிப் போத ருதல் காணப்படுவது பற்றி, புன்மயிர்ப் புருவைப் பாடின் தெண்மணித் தோடு தலைப்பெயர என்றும் கூறினான். புருவைத் தோடு, பாடின் தெண்மணித் தோடு என இயையும், பார்ப்பனர் எப்போதும் நீர்வள நிலவளம் நிறைந்த பகுதி களிலே பெருக வாழ்பவ ராகலின், அவ்வளமில்லாத முல்லைப் பகுதிகளில் அருகிக் காணப்படுதற்குக் காரணம், ஆங்கு வாழும் செல்வர்கள் அவர்களை ஓம்பி யாதரிப்பதன்றிப் பிறிதில்லை. இத்தலைவன் பார்ப்பாரை ஓம்பும் பண்புடைய னாதலின், இவனது ஊர்க்கண் பார்ப்பார் இருந்து தமது முல்லையொழுக்கத்தை மேற்கொண் டொழுகுகின்றனர் எனக் கொள்க. மாலைப்போதில் புருவைத்தோடு தொழுவம் நோக்கித் தலைப்பெயருங்கால், பார்ப்பன மகளிர் அப் பொழுது மலர்ந்த முல்லைப் பூக்களைக் கூந்தலிற் சூடி மகிழ்ந்து தோன்றும் காட்சி நினைவில் எழுதலும் அதனை விதந்து கானமுல்லைக் கயவாய் அலரி, பார்ப்பன மகளிர் கார்ப்புறத் தணிய என்று கூறினான்; கணவன் புணர்ந்துடன் இருப்பினும் வேற்றுப்புலம் போகினும், பார்ப்பனமகளிர் தம்மை ஒப்பனை செய்துகோடலில் தப்பாராகலின், அவரை விதந்து கூறினான் என அறிக. மாலைப்போதில் மனை முன்றிலைத் தூய்மை செய்து தண்ணீர் தெளித்து மாலை நாற்றி விளக்கேற்றித் தொழுதல் மனையுறை மகளிரின் செய் கடனாயினும், மனைகிழவோன் பிரிந்தவழி மனையை மிக்க அழகுறப் புனைதலில் குலமகளிர்க்கு மனம் செல்வதில்லை யாதலால், தான் இல்லாத மனை புல்லெனத் தோன்று வதுடன் தன் மனையோட்கு வறிதாகத் தோன்றுதலையும் உணர்ந்து, கல்சுடர் சேரும் கதிர்மாய் மாலைப் புல்லென் வறுமனை நோக்கி என்றும், அக்காட்சி தலைவனாகிய தனது இன்மை தோற்றி அவள் நெஞ்சை வருத்து மென்பதை எண்ணுகின்றா னாகலின், மெல்ல வருந்தும் கொல்லோ திருந்திழை அரிவை என்றும் எடுத்துரைத்தான். தான் மனைக் கண் இல்வழி அதனை ஒப்பனை செய்வதில் மனம் கொள் ளாத தலைவி, திருந்திய இழைகளால் தன்னை அழகுறுத்தாள் என்பது உண்மை யாயினும், அத்தகைய காட்சியை அவள் பால் என்றும் அவன் கண்ட தின்மையின் திருந்திழை அரிவை என்றான். தன் காதலி தன்னை நினைந்து வருந்துவள் என்ற நினைவு தோன்றியதும், உள்ளம் விரைந்து சென்று அவள் வருத்த மெய்தாவகைக் கூடியின்புறுத்தற்குத் துடித்தமையின், பாகனை நோக்கி, வல்லைக் கடவுமதி தேரே என்றான். இனிய நிழல் நல்கும் குருந்தமரங்கள் நின்று மலர்ந்து விளங்கும் குன்று பொருந்தியது அவனது மூதூர் என்றற்கு, அல்குநிழல் குருந்து அவிழ் குறும்பொறை பயின்ற மூதூர் என்றான். மூதூர் எனவே, அங்கே மனைகளிலும் சதுக்கங் களிலும் பிறவிடங்களிலும் முதுமரங்கள் பல வானளாவ ஓங்கியுயர்ந்து ஊரிடத்துப் பெருமனைகளும் தோன்றாதவாறு தழைத்து நிற்பதுபற்றி மூதூர் மரம் தோன்றும்மே என்றும், மரங்களால் மறைக்கப்படினும், ஊரவர் செய்யும் ஆரவாரம் அதனைப் புலப்படுத்துவது தோன்ற, பெருங்கலி மூதூர் என்றும் கூறினான். இதனாற் பயன் பாகன் தேரை விரையச் செலுத்துவானாவது. 322. மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் இக்கொற்றனார் பெயர், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் எனவும், சேந்தங் கூற்றனார் எனவும், சேந்தங் கூத்தனார் எனவும் ஏடுகளில் காணப்படுகிறது. பாலாசிரியர், இளம் பாலாசிரியர் என்ற சிறப்புப் பெயர்கள் இடைக்காலச் சோழபாண்டியர் காலத்தும் வழக்கில் இருந்தமை முன்னமே காட்டப்பட்டுளது. தலைமகளைத் தனிமையிற் கண்டு காதலுறவு கொண்ட தலைமகன் அது வளர்ந்து சிறப்பது குறித்துத் தோழியின் கேண்மையைப் பெற்றுப் பகற்குறி இரவுக் குறிகளில் தலை மகளைக் கண்டு பயின்று வந்தான். இவ்வாறு அவன் களவையே விரும்பி யொழுகுகையில், தலைவியுள்ளத்துப் பெருகிய காதல் அவனை இடையறவின்றிக் கூடியிருத்தலை விழையத் தலைப் பட்டது. அதனை யுணர்ந்த தோழி, தலைமகனைக் காணும்போ தெல்லாம், தலைவியை வரைந்து கொள்வதே இனிச் செயற்பால தென்பதைக் குறிப்பாக வற்புறுத்தி வந்தாள்; ஒருகால் இற்செறிப் புணர்த்தியும், காவலருமை காட்டியும், தலைவன் இரவில் வருதலின் ஏதம் கூறியும் தோழி வரைவுகடாவினாள். ஒருநாள், தலைமகன் தலைவி மனையின் சிறைப்புறம் வந்து நின்றான். கண்டதும் தோழி, தலைமகளைக் கூட்டிச் சென்று ஓரிடத்தே நிறுத்தித் தான் கூறுவது அவன் செவிப்படுமாறு, தலைவனொடு அழிவில் கூட்டம் பெறாமையால் தலைவி எய்திய மேனிவேறு பாடு கண்ட தாய், வெறியறி சிறப்பினையுடைய வேலனை வருவித்து ஆராய்ந்தாள்; அவட்கு அவன் தலைவியது வேறு பாட்டுக்குக் காரணம் முருகனது அணங்குதாக்கு என்றும் அதற்கு வெறியெடுத்துப் பலிக்கொடை செய்வதுதான் மருந்து என்றும் கூறினானாக, அவளும் அவ்வெறியாட்டுக் குரியன செய்து வெறியெடுத்து நல்கும் பலிக்கொடையால், தலைமகளது வேறு பாடு நீங்கு மென்பது உண்மையாகுமா? நீங்குமாயின், அதனை விடக் கொடியது உலகில் பிறிது யாதும் இல்லையாம் என்று சொல்லுகின்றாள். ஒருவர் ஒருவரைஇன்றி உயிர் வாழ்தல் அமையாத நிலை யினை எய்துவதுதான் காதலர் காதலுறவின் எல்லையாகும்; அதனைத் தலைமகள் எய்திய சிறப்பை அவளுடைய மேனி மெலிவு காட்டக் கண்ட தோழி, தலைமகற்கு உணர்த்தும் இக்கூற்றின்கண், தலைவி வேறுபாட்டுக் குரிய காரணத்தின் மெய்ம்மையை, வேலன் வெறியெடுத்து நல்கும் பலிக்கொண்ட பொய்ப்படுத்து அழிக்குமாயின் அதனிலும் கொடியது பிறிது ஒன்றும் இல்லையாம் என்ற நற்பால் நல்லறம் அமைந்திருப்பதைக் கண்டு வியந்த பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். ஆங்கனம் தணிகுவ தாயின் 1யாங்கும் இதனிற் கொடியது பிறிதொன் றில்லை வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை ஊன்றின் பிணவின் 2உட்குபசி களைஇய ஆளியங் கரும்புழை ஒற்றி வாள்வரிக் கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் 3தண்கமழ் வியன்மார் புரிதினிற் 4பெறாது நன்னுதல் பசந்த படர்மலி அருநோய் அணங்கென உணரக் கூறி வேலன் இன்னியம் கறங்கப் பாடிப் பன்மலர் 5சிதறிப் பரவுறு பலிக்கே. இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள் பாங்கிக்கு உரைத்ததூஉமாம். உரை : ஆங்கனம் தணிகுவதாயின் - இவ்வகையால் நம் படர்மலி அருநோய் தணிந்தொழியுமாயின்; யாங்கும் இதனின் கொடி யது பிறிது ஒன்று இல்லை - எக்காலத்தும் எவ்விடத்தும் இவ்வெறியயர் பலிக்கொடையினும் கொடுமையுடையது பிறிது யாதும் இல்லையாம்; தோழி - ; வாழி - ; வேய் உயர்ந்து - மூங்கில் நெடிது உயர்ந்து; எறிந்து செறித்தன்ன - வெட்டிச் செறியப் புதைத்து வைத்தாற் போல; பிணங்கு அரில் விடர் முகை - தம்மிற் பின்னிப் பிணைந்து கிடக்கும் மலைப் பிளவாகிய முழைஞ்சினுள்; ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇய - ஊனுண்ணும் இயல்பிற்றாகிய பெண்புலியின் அஞ்சுதக்க பசியினைக் களைதற்பொருட்டு; ஆள் இயங்கு அரும்புழை ஒற்றி - ஆட்கள் இயங்கும் அரிய புழையின்கண் ஒற்றிநின்று; வாள்வரிக் கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் - ஒளி பொருந்திய வரிகளையும் கடுங் கண்மையு முடைய வலிய புலி ஒடுங்கியிருக்கும் நாடனாகிய தலைமகனது; தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது - தண்ணிய மணம் கமழும் அகன்ற மார்பை உரித்தாகப் பெறாமையால்; நன்னு தல் பசந்த படர்மலி அருநோய் - நமது நல்ல நெற்றி பசத்தற்கு ஏதுவாகிய நினைவு மிகு அருநோய்; அணங்கு என உணரக் கூறி - முருகனது அணங்குதாக்கு எனத் தாயர் நெஞ்சம் கொள்ளுமாறு சொல்லி; வேலன் - வெறியறியும் சிறப்பின னாகிய வேலன்; இன்னியம் கறங்கப் பாடி - இனிய வாச்சிய வகை பலவும் முழங்காநிற்கப் பாடி; பல்மலர் சிதறிப் பரவுறு பலிக்கு - பல்வகைப் பூக்களைச் சொரிந்து நல்கும் பலிக் கொடைக்கு; வாய்கொல் - தணிந்தொழியும் என்பது உண்மை யாகுங் கொல்லோ? அறியேன் எ.று. தோழி, வாழி; நாடன் வியன்மார்பு உரிதினிற் பெறாது நன்னுதல் பசந்த படர்மலி அருநோய், வேலன், கூறி, முழங்கப் பாடிப் பரவுறு பலிக்குத் தணியும் என்பது வாய்கொல், அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தணிதல், நீங்கு தல். இது, வேலன் வெறியயர்ந்து நல்கும் பலிக்கொடை. கொடியது, கொடுமை செய்வது. சிறப்பும்மை தொக்கது. வாய், வாய்மை. விடர்க்கண் நின்ற மூங்கில் உயர்ந்து தம்மிற் பின்னிப் பிணிப்புண்டு அடியிலுள்ள முழைச்சினுக்கு வேலியிட்டது போல வுளது என்றற்கு எறிந்து செறித்தன்ன பிணங்குஅரில் என்றார். அரில், பின்னிக் கிடக்கும் நிலை. வெம்பசி தோன்றி இறப்ப வெதுப்பினும் புலி புல் தின்னாதென்பது பற்றி ஊன் தின் பிணவு என்றார். பிணவு, பெண்புலி. ஆள், வேட்டுவர். அரும்புழை, இனிது செல்லற் காகாத மலைப்பிளவுகட் கிடையே யுள்ள காட்டாற்று வழி. ஒற்றுதல், பிறர் அறியா வகை இருந்து ஆளியக்கம் காண்டல். புழைவழியாக வரும் காட்டாற்றைப் புழை என்றும், மலைப்பிளவிடைச் செல்லும் வழியை முழை என்றும், மலைநாட்டவர் வழங்குவர். முதிரப் புழை, ஆரல்வாய் முழை என்பன காண்க. கடுங்கண், ஈர மில்லாத வன்மை. தண்கமழ் மார்பு, தண்ணிய சந்தனத்தின் மணம் கமழும் மார்பு; தண்ணி தாகிய மார்பு எனினுமாம். உரிதினின் பெறுதல், தனக்கே உரித்தாகப் பெறுதல்; என்றது வரைந்துகொண் டெய்தும் அழிவில் கூட்டத்தின் மேற்று; "நன்றும், அரிது துற்றனையாற் பெரும உரிதினின், கொண்டாங்குப் பெயர்தல் வேண்டும்1" என்றாற் போல. நுதல் பசத்தற்கு ஏது நோயாதல் தோன்றப் பசந்த நோய் என்றார். மார்பிற் கூட்டமே நினைந்த வண்ணம் இருக்கும் நிலை ஈண்டுப் படர் மலிநோய் எனப்பட்டது; மேலும் கூட்டத் தாலன்றி நீங்கற் கருமை பற்றி அருநோய் எனவும் அது சிறப்பிக்கப்படுகிறது. உடற்கண் யாதானுமொரு நோயுற்றார் எஞ்ஞான்றும் அதனையே நினைந்த வண்ண மிருப்பது இயல்பு; அவ்வியல்பு காதற்காமம் கதுவியவர் பாலும் நிலவு தலின் அதுவும் நோய் என்றும், அந்நோய் காதற் காமக் கூட்டத்தையே எஞ்ஞான்றும் நினைக்கப் பண்ணுதலால் படர்மலி அருநோய் என்றும் குறிக்கப்படுகிறது. படர், நினைத்தல். அணங்குதல், வருத்துதல். கேட்போர் உள்ளம் கொள்ளுமாறு கூறினமை தோன்ற உணரக்கூறி என்றார். வெறியெடுத்து நல்கும் பலிக்கொடையால் நோய் நீங்கும் என்பது உலகுரையாய் நிலவினமையின், அதனை எச்ச வகையால் எய்தவைத்தார். இன்னியம், துடி, தொண்டகம் முதலியன. பாடுவது. குறிஞ்சிப்பாட்டு. சிறைப்புறமாக நிற்கும் தலைமகனுக்குத், தலைவி எய்திய வேறுபாடு பெற்றோர் ஆராய்ச்சிக்குப் பொருளா யினமை யுணர்த்தி, வெறியயர்வும் பலிக்கொடையும் செய்வான் தாய் முயலுதலும், அதனால் தலைவிக்கு உளதாகும் வருத்தமும் கூறி வரைவு கடாவும் கருத்தினளாகிய தோழி, தலைவியொடு சொல்லாடலுற்று, ஆங்கனம் தணிகுவதாயின் என்று எடுத்துரைத்தாள். தலைமகனாலன்றி வேலன் வெறியெடுக்கும் முருகனாலும் தணிக்கக் கூடிய திறத்த தன்று நீ யுற்ற அருநோய் என்பது உட்கோள். ஒருகால் தணியுமாயின் நோய்க்குக் காரணமாகிய தலைமகன் நட்பினது மெய்ம்மையைப் பொய்ப் படுத்தும் கொடுஞ்செய லாகலின், யாங்கும் இதனிற் கொடி யது பிறிதொன்றும் இல்லை என்றாள். இதனைச் செவி யேற்கும் தலைமகன் தலைமகட்கு எய்தியிருக்கும் நோயையும் அதனைத் தணித்தற்குச் செய்யப்படும் முயற்சியையும் எண்ணு கையில், நோய்தணி வினை வெற்றிபெறின் தலைமகட்குப் பெரியதோர் ஏதம் விளையும் எனத் தோழி குறிப்பது, அவன் அறிவை மருட்டுகிறது. அந்நிலையில் தோழி தலைவியின் தடுமாற்றத்தைப் போக்க வாய்கொல் என்றும், இதனால் ஏதமொன்றும் எய்துவா யல்லை என வற்புறுத்தற்கு வாழி தோழி என்றும் கூறினாள். உள்ளுறையால், தலைமகன் நின் படல்மலி வருத்தம் துடைப்பான் வரைவுக் குரிய பொருள் நாடி யிருக்கின்றா னாகலின், நீ வருந்துதல் ஒழிக என்று உரைத்தாள். நீ எய்திய வேறுபாடு வேலன் வெறி யெடுத்து நல்கும் பலிக்கொடையால் தணியும் என வேலனும் தாயரும் கூறுவது பொய்படும் என்பாள் வாய்கொல் என்பதனால் உணர்த்தினாள். தாயர் கண்டு வெறியெடுக்கும் அளவிற்குத் தலைவிபால் மெலிவும் வேறுபாடும் தோன்றுவானேன் என்றோர் ஐயம் சிறைப்புறமாக நின்று கேட்கும் தலைமகன் உள்ளத்தில் எழுவதை எண்ணிய தோழி, அதனை நீக்கு முகத்தால் தலைவியின் முதுக்குறைவைப் புலப்படுப்பாளாய் நாடன் தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் என்றாள். உரிதினிற் பெறாமையால் படர்மலி அருநோயும், அதனால் நுதற்பசப்பும் தோன்றின என்பது கருத்து. தலைவன் மார்பைத் தலைமகள் தனக்கேயுரியதாய்த் தான் இடையீடின்றிக் கூடுதற்கு வரைந்து கோடலன்றி வாயில் பிறிதில்லை என்பதனால், தோழி தலைவனை வரைவுகடாயினமை புலப்படும். அழிவில் கூட்டத்தா லன்றித் தீராத வேட்கைநோயை அருநோய் என்றும், அஃது அவன் மார்பிற் கூட்டத்தையே இடையறாது நினைதலால் உளதாயிற் றென்றற்குப் படர்மலி அருநோய் என்றும், அது காரணமாக நுதற்பசப்பும் மேனி வேறுபாடும் மெலிவும் உளவாயின என்றும் தலைமகற்குக் கூறினாள். இந்நிலை களவொழுக்கத்தின் முடிபொருளாதலின், அது பெற்றதும், தலைவன் வரைந்துகோடலைச் செய்தலே அடுத்துச் செய்யத்தகும் செய்வினை; அதனை உடனே செய்தல் வேண்டும் என்பது தலைவனால் உய்த்துணரப் படுவது பயன். நோயுண்மை கண்ட தாய் அதன் காரணத்தை அறிய மாட்டாமையின் வேலனொடு ஆராய்ந்தவழி, அவன் முருகனால் விளைந்த அணங்குதாக்கு எனக் காரணம் கூறலும், அதுபற்றித் தாயர் முதலாயினார் எழுப்பிய ஐயங்கள் அனைத்துக்கும் அவர் மனம்கொள்ளுமாறு அவன் விடைகூறி வற்புறுத்தினான் என்பாள், அணங்கென உணரக் கூறி என்றும், தாய் வெறியெடுத்தற் குரியவற்றைச் செய்கின்றாள்; அதனால் நின் படர்மலி அருநோய் தீரும் என்பது தாயர் கருத்து என்பாள், வேலன் இன்னியம் கறங்கப் பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறு பலிக்கே என்றும், எனினும் அவள் முயற்சி பயனில் உழப்பேயன்றி உண்மை தேர்ந்து செய்யும் உறுசெயல் அன்று என்பாள் வாய்கொல் வாழி தோழி என்றும் இயம்பினாள். வேலனது பலிக்கொடை தாய் கருது மாறு நின் அருநோயைப் போக்குமாயின் என்றற்கு ஆங்கனம் தணிகுவ தாயின் என்றும், அதனால் நோய்க்குரிய உண்மைக் காரணமான தலைவன் காதலுறவைப் பொய்ப்படுத்து நமக்கும் மிக்க ஏதம் விளைக்கும் என்பாள், யாங்கும் இதனிற் கொடியது பிறி தொன் றில்லை என்றும் எடுத்துரைத்தாள், இவ்விளைவுக்கெல்லாம் காரணம் தனது காதல்நட்பென்பதை அவன் அறிந்திலனே எனத் தலைவி நினைந்து இரங்காமைப் பொருட்டு, தலைமகன் பிணவின் உட்குபசி களையும் பொருட்டுப் புலி அரும்புழை ஒற்றி ஒடுங்கும் நாட னாகலின் நின் படர்மலி அருநோய் களைதற் பொருட்டு வரைந்து கோடற் குரிய செவ்வியும் பொருளும் நாடி முயல்கின்றான் என உள்ளுறையால் உரைத்தாள். இதனாற் பயன், தலைவன் தெருண்டு வரைவானாவது. 323. வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் ஒருவரையொருவர் தனிமையிற் கண்டு உணர்ந்த மாத்திரையே காதலுறவு தோன்றி நிறைவு பெறுவதில்லை. தொடக்கத்தில் உடலின் புறத்தோற்றத்தால் ஈர்க்கப்படும் தலை மக்கள் பன்முறைக் கூடிப் பயிலுவதால் தம்மில் ஒருவர் ஒருவரது மனமாண்பு அறிந்து ஒன்றிய உள்ள முடையராவர்; ஒருவர் ஒருவரிற் கலந்த ஒருமைநிலையைப் பயப்பதுதான் களவொழுக் கத்தின் குறிக்கோள். இவ்வொழுக்கத்தில் உணர்ச்சி யொத்துக் காதலரான தலைமக்கள் தனித்தும் தோழியொடு கலந்தும் பழகத் தலைப்படுவர். புணர்ச்சி பழகுதல் உணர்ச்சியொத்தல் எனவரும் மூன்றும், ஒத்த பாலார் இருவரிடை நிலவும் நட்பொழுக்கம் என்பர் திருவள்ளுவர். ஆடவர் மகளிர் என்ற இருபாலாரிடையே தோன்றும் காதல்நட்பும், உணர்ச்சியொத்தல், பழகுதல், புணர்ச்சி என நிற்கும் முறையில் இயலுவதாகும். அவற்றுள் உணர்ச்சி யொத்தல் கைக்கிளை என்றும், பழகுதலைக் களவொழுக்கம் என்றும், புணர்ச்சியைக் கற்பொழுக்கம் என்றும் அகப்பொருள் நூலார் கண்டனர். இப்பழக்கநெறி பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டம் பகற்குறி இரவுக்குறி என நால்வகையில் இயலும். இவ்வாற்றால் ஒன்றிய உள்ளமுடையராய தலைமக்கள் வரைந்து கொள்ளும் முயற்சி வரைவும், அது வாயாதவழி உடன்போக்கும் என இருவகையின் நிகழும். முடிவில் இருவரும் மணம் புரிந்து கொண்டு புணர்ச்சியாகிய மனைவாழ்க்கை மேற்கொள்வர். மனைவாழ்க்கையின் மாண்பு தலைமக்களின் கருத்து ஒருமித்த காதலன்பைச் சார்ந்திருத்தலின், கற்பென்பது களவின் வழித்து என அகப்பொருள் நூல் உரைப்பதாயிற்று. கருத்தொருமையே மனைவாழ்க்கைக்கு உயிர்நிலை யாதலால், அதற்குரிய பழக்க மாகிய அகத்துறை நூல்களில் பாரித்துக் காட்டப்படுகிறது. அந்நெறியில் தோழியிற்கூட்டம் பெற்ற தலைமகன், பகற்போதில் தலைவியும், தோழியும் பயிலும் இடம் போந்து, அவர்களோடு விளையாட்டு விரும்புவன். அவ்விளையாட்டுத் தலைமக்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து உள்ளம் ஒன்று படுதற் குரிய வாய்ப்பினை வழங்கும். இது பகற்குறியின் சிறப்பு. பகற்போதினும் இரவுப்போது நெறிதிறம்புதற்கேற்ற எளிமையும், தனித்துக் காண்டற்கு அருமையும் உடையது; இரவுக்குறியில் தலைமகனைத் தனித்துக் கண்ட விடத்து நெறி வழுவாத நேர்மை யும், காண்டல் அரிதாய வழிக் காதலுறவு கைந்நெகிழ்ந்து கழியாது உள்ளத்தே ஒன்றி நிற்கும் பெருமையும், இருவரையும் ஓருயிரும் ஈருடலுமாக ஒருமைப்படுத்தும் பணியினைச் செய் கின்றன. இப்பழக்கம் மிக்கவிடத்து, ஒருவர் ஒருவரை யின்றி உயிர் வாழ்தல் அமையாத உண்மை யன்புநிலையைப் பயக் கின்றது; அக்காலத்தே இருவர்பாலும் நான் என்னும் தன் முனைப்பு அழிந்துபடுகிறது; தனக்கென வாழாத சால்பு உரு வாகிறது. ஆதலால், பகற்குறி யொழுகிய தலைமகன் இரவுக் குறியை விரும்புகிறான். அவ்விருப்பத்தை அவன் தோழிக்கு உரைக்க, அவனுடைய நெறிவழுவா அறப்பண்பை நன்கு அறிந்திருத்தலின், அவளும் அதற்கு இசைந்து, "எங்கள் சிறுகுடிப் பாக்கம் ஆங்கே தோன்றும் பனைமரச் செறிவின் இடையிலே உளது; அவ்விடத்து எம் மனைப்புறத்தே புன்னைச் சோலை யுண்டு. அதன் பூக்கள் உதிர்ந்து தேன்படிந்துண்ணும் ஈயினத்தின் ஓசையொடு வண்டினத்தின் இசையும் கலந்து ஒலித்தலால், தேரிற் கட்டிய மணியொலி பிறர் கேட்டறியாதவாறு மறைத் தொழியும்; ஈங்கே காணப்படும் இதுவே வருதற்கமைந்த வழி; ஆகவே இவ்வழியை மறவாது கடைப்பிடித்து வந்தருளுக" என்று சொல்லுகின்றாள். இக்கூற்றின்கண், பகற்குறிக்கண் வந்து ஒழுகிய திறத்தால், தலைமகனது தலைமைப்பண்பாட்டினை யுணர்ந்து கொண்டமை தோன்றத் தோழி இரவுக்குறிக்கண் அச்சமின்றி வரவேற்கும் மனத்தெளிவு கண்ட பேரிசாத்தனார் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். ஓங்கித் தோன்றும் தீங்கட் பெண்ணை நடுவ ணதுவே தெய்ய மடவரல் ஆயமும் யானும் அறியா தவண மாய நட்பின் மாணலம் மொழிந்தநின் கிளைமை கொண்ட வளையார் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த மலிதா தூதும் தேனோ டொன்றி வண்டிமிர் இன்னிசை கறங்கத் திண்டேர்த் தெரிமணி கேட்டலும் அரிதே வருமா றீதவண் மறவா தீமே. இது, தோழி இரவுக்குறி நேர்ந்தது. உரை : ஓங்கித் தோன்றும் தீங்கட் பெண்ணை - வானுற உயர்ந்து தோன்றும் இனிய கண்களையுடைய பனைமரச் செறிவின்; நடுவணது - நடுவிலே யுளது; மடவரல் ஆயமும் யானும் அறியாது - மடப்பம் பொருந்திய ஆயமகளிரும் உயிர்த்தோழி யாகிய யானும் அறியாமல்; அவணம் - அவ்விடத்தே; மாய நட்பின் மாணலம் மொழிந்த - களவிற் பெற்ற காதற் கேண்மையின் மாண்புடைய நலம் பாராட்டி மொழிந்த; நின் கிளைமை கொண்ட - நினது உறவைக் கொண்ட; வளையார் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப்பாக்கம் - வளையணிந்த முன்கையை யுடைய தலைவிக்குரிய தந்தையின் சிறுகுடி யாகிய பாக்கம்; புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த - புலியின் மேனியில் தோன்றும் வரி போல மணல் பரந்த எக்கரிடத்து நின்ற புன்னை மரங்கள் உதிர்த்த; மலிதாது ஊதும் தேனோடு ஒன்றி - மிக்க பூக்களிற் படிந்து தேனுண்ணும் தேனீக்களொடு ஒன்றுகூடி; வண்டு இமிர் இன்னிசை கறங்க - வண்டினம் செய்யும் இனிய இசை ஒலித்தலால்; திண்தேர்த் தெரிமணி கேட்டல் அரிது - திண்ணிய தேரிற் கட்டிய மணியோசையைப் பிறர் கேட்பது அரிது; அவண் வருமாறு ஈது - அவ்விடத்துக்கு வரும் வழியும் அதுவாகும்; மறவாதீமே - ஆகவே நீவிர் அதனை மறவாது கடைப்பிடித்து வருவீராக எ-று. ஆயமும் யானும்அறியாது, அவணம் மாய நட்பின் மாணலம் மொழிந்த நின் கிளைமை கொண்ட நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம், பெண்ணை நடுவணது; அவண், புன்னை உதிர்த்த, மலிதாது ஊதும் தேனோடு ஒன்றி, வண்டிமிர் இன்னிசை கறங்குதலால், நின் திண்டேர்த் தெரிமணி கேட்டலும் அரிது; அவண் வரும்ஆறும் ஈது; மறவாதீமே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பனங்காயின் நுங்குள்ள இடம் கண்ணெனப் படுதலின் தீங்கட் பெண்ணை என்றார். பனையின் வளத்துக் கேற்ப அதன் காயிடத்துக் கண்கள் மூன்றும் நான்குமாக இருக்கும்; வளஞ் சுருங்கிய வழிக் காய் சிறுத்துக் கண்கள் ஒன்றும் இரண்டுமாக இருக்கும். தீங்கள் என்று கொண்டு தீவிய கள்ளை வடிக்கும் பனை என்றலுமாம்; ஆயினும், பனையிடத்து நுங்கினை யுண்பது தான் பண்டைநாளிற் பெருவழக்கேயன்றி அதனிடத்தே கள்ளிறக்குதல் வழக்காக இல்லாமை குறிக்கத்தக்கது. தெய்ய: அசைநிலை. மடவரல், மடப்பமுடைமை. அவணம், இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடம். மாயநட்பு, களவிற் பெறும் காதற் கேண்மை. கிளைமை, உறவுடைமை. நல்லோள், நற்பண்புகளே உருவாக அமைந்த தலைவி. பாக்கம், நெய்தனிலத்து ஊர்கட் குரிய பொதுப்பெயர். கடல் திரையால் கொழித்து ஒதுக்கப் பட்ட மணற்பகுதி எக்கர் எனப்படும். திரையாலும் காற்றாலும் மணல் திரைத்துத் தோன்றுவது புலிவரி போறலின், புலிவரி எக்கர் என்றார். தேன், தேன் ஈட்டும் ஈயினம். கறங்க என்னும் செயவெ னெச்சம் காரணப்பொருட்டு. தெரிமணி, இன்னோசை உடையது எனத் தேர்ந்துகொண்ட மணி. மறவாதீமே: முன்னிலை வினைத் திரிசொல். பகற்குறி வந்தொழுகிய தலைமகனுடைய தலைமை மாண்புகளை நன்கு அறிந்துகொண்டா ளாதலின், அவள் இரவுக்குறி நயந்தபோது, ஒருசிறு தடையுமின்றி மிக்க உவகை யுடன் அதனை நேர்கின்றாள். ஆதலால், அவற்கு முதற்கண் தாம் உறையும் சிறுகுடியைக் காட்டுவாளாய், ஓங்கித் தோன்றும் தீங்கட் பெண்ணை நடுவணதுவே தெய்ய என்றாள். நடுவணதுவே தலைவி யுறையும் சிறுகுடிப் பாக்கம் எனற்பாலளாகிய தோழி, தலைவியை நினைத்தலும், அவள் ஆயமும் தோழியும் அறியாவகையில் அவனைத் தலைப்பெய்து நட்புக்கொண்ட திறத்தை நினைப்பிப்பாளாய், மடவரல் ஆயமும் யானும் அறியாது நின்னைக் கண்ட அளவே காதலுணர்வு தலைக்கொண்டு நின் நட்பினை விழைந்தாள் என்றற்கு அவணம் மாய நட்பின் என்றும், அதனால் நீ மிகவும் அருள்கொண்டு அவளுடைய நல மாண்புகளைப் பாராட்டு முகத்தால் பெரிதும் தலையளி செய்தாய் என்பாள், மாண்நலம் மொழிந்தனை என்றும், இவ்வாற்றால் நினக்கு மனையவளாம் கிளைமையை நின்பாற் பெற்றாள் என்பாள் நலம் மொழிந்த நின் கிளைமை கொண்ட என்றும், அவள் இளையளாயினும் நல்லறமாண்பு அனைத்தும் உருவாகப் பெற்றவள் என்பாள், வளையார் முன்கை நல்லோள் என்றும் கூறினாள். இரவுக்குறியிடம் மனைவரம்பு கடவாத நிலைமைத்தாகும். ஆகவே, அவள் தலைவியின் மனைப்புறத்தே யுள்ள புன்னைச்சோலையைக் குறியிடமாகச் சுட்டுவாள், புலிவரி எக்கர்ப் புன்னை என்றும், அவ்விடத்துக்கு நீ நின் தேரிற் கட்டிய மணி யொலிக்க வரினும், ஓசை மனையவர்க்கோ அயலவர்க்கோ தெரியாவாறு புன்னை யுதிர்த்த பூவிற் படிந்து தாதுண்ணும் வண்டினத்தின் இசை கறங்கும் என்பாள், புன்னை யுதிர்ந்த மலிதா தூதும் தேனோடு ஒன்றி வண்டிமிர் இன்னிசை கறங்கத் திண்டேர்த் தெரி மணி கேட்டலும் அரிது என்றும் கூறினாள். அது கேட்டு மகிழ்ந்த தலைமகற்கு அவண் இரவில் வந்தடைவதற்கு வழி ஈதென்பாள் வருமாறு இது அவண் என்றும், இத்தனையும் கேட்டவன் இரவுக்குறியிடம் வருதலை மறவா னாகலின், இவ்வழியை மறவாது கடைப்பிடித்து வருக என்பாள், மறவா தீமே என்றும் கூறினாள். புன்னை உதிர்த்த பூந்தாதினைத் தேனோடு வண்டினம் ஒன்றி யிருந்து உண்ணும் என்றது, தந்தை மனையின் செல்வச் சிறப்புக் கூறியவாறு; அவனுடைய வளமனையில் சுற்றமும் பரிசிலரும் கூடியிருந்து உண்ணு கின்றனர் என்பது. இதனாற் பயன் தோழி இரவுக்குறி நேர்வாளாவது. 324. கயமனார் களவொழுக்கம் மேற்கொண்டு தலைவியின் கருத்தொரு மித்த காதலுறவின் பெருமையை நன்கு உணர்ந்த தலைமகன், அவளை வரைந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட லானான். தலைமக்களின் காதல்நட்பின் திறத்தை அறியாத தலைவியின் பெற்றோர் அவன் முயற்சிக்கு இடையீடு செய்யலுற்றனர். மகள்மறுத்தல், வேற்றோர் வரைவு, தலைவனது தலைமை மாண்பறியாமை, தலைவியின் கற்புநலம் உணராமை முதலியன பெற்றோர் உள்ளத்தில் கிடந்து இடையூறு செய்வன போலத் தோன்றின. அந்நிலையில், வேறு போக்கின்மையின், தலை மகன் அவளைக் கொண்டுதலைக்கழியும் செயலைத் துணிந்து தோழிக்கு உரைப்ப, அவளும் தலைவியொடு சூழ்ந்து அவ்வாறு தலைவனோடு உடன்போவதே தனக்கு அறமாம் என்று தெளிந்து அவற்குத் தம் இசைவினை நல்கினர். குறித்த நாளிரவில், மனையவர் அறியாவகையில் தோழியின் நல்லுதவியால், தலை மகனும் தலைமகளும் உடன் செல்வாராயினர். மனைகடந்து, ஊர்கடந்து, நாடுகடந்து, நெடுஞ்சுரத்திடையே தலைமக்கள் சென்று கொண் டிருந்தனர். எதிரிலே வருவோரும் போவாரு மாகிய மக்கள், தலைமகளுடைய மேனிநலத்தையும் தலைமகனது குணநலத்தையும் கண்டு வியந்தனர். இருவர்பாலும் கிடந்து அவர்தம் தூய உள்ளங்களைப் பிணித்து நிற்கும் காதலன்பு, கண்டோர் மனத்தே பரிவும் வியப்பும் தோற்றுவித்தது. தலைவி யின் நடையும் ஒழுக்கமும் கண்டோர், அவளை அத்துணை நல முடையளாக வளர்த்த தாயின் பெருமையை யுணர்ந்து பாராட் டினர். உயிர்த்துணையாகிய காதலன் பின்னே வர, முந்துற்றுச் செல்லும் தலைமகள், அச்சமோ அயர்ச்சியோ இன்றித் தன் மனையின்கண் உருட்டி ஆடுகின்ற பந்து ஒடியபோது அதன் பின்னே எவ்வாறு செல்வாளோ, அவ்வாறே அவள் சென்றது, கண்டோர் பரிந்து கூறுதற்குப் பொருளாயிற்று. நடைமெலிவும், சுரத்தருமையும், பொன்போலும் மேனியும் பிறவும் எண்ணி, இந்நிலையில் இவளைப் பெற்ற தாயின் உள்ளம் என்ன பாடு படும்? அவள் பெரிதும் அளிக்கத்தக்கவள் என்றனர். போக்குடன்பட்டுச் செல்லும் தலைமக்கள் இருவரையும் கண்டோர்க்கு இவளை இத்துணை நலம்பெற வளர்த்த தாய், இவளது உள்ளத்தில் தோன்றிச் சிறக்கும் காதலன்பை அறியா தொழிந்தனளே என அவள்பால் வெறுப்போ, தலைமகளின் செயலில் வியப்போ கொள்ளாது, தாயின் ஆற்றாமையை நினைந்து இரங்கிக் கூறியது கயமனார்க்குப் பெருமகிழ்ச்சி நல்கினமையின், அதனை இப்பாட்டின்கண் புலப்படத் தொடுத்துப் பாடுகின்றார். அந்தோ தானே அளியள் தாயே நொந்தழி அவலமொ டென்னா குவள்கொல் பொன்போன் மேனித் தன்மகள் 1நயந்தோன் கோடுமுற் றியானைக் 2காடுபின் உழிதர நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் 3ஓடுபந் துருட்டுநள் போல ஓடி அஞ்சி லோதி இவளும் பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே. இஃது, 4இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியது. உரை : அந்தோ - ஐயோ; தாய் அளியள் - இவளைப் பெற்ற தாய் அளிக்கத்தக்காள்; நொந்தழி அவலமொடு என்னாகுவள் - மனம் நொந்து வலியழியும் அவலமிகுதியால் என்னாகுவளோ, அறியேம்; பொன்போல் மேனித் தன்மகள் - பொன் போன்ற மேனியையுடைய தன் மகள்; நயந்தோன் கோடு முற்று யானைக் காடு பின்உழிதர - தன்னை நயந்த காதலன், கொம்பு முற்றிய யானைகள் உறையும் காட்டின்கண் தன் பின்னேவர; நெய்பட்டன்ன நோன்காழ் எஃகின் - நெய் ஒழுகினாற் போன்ற வலிய காம்பு செருகிய வேலையுடைய; செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் - செல்வனாகிய தந்தையின் இட மகன்ற மனையின்கண்; ஓடுபந்து உருட்டுநள் போல - ஓடுகின்ற பந்தின்பின் உருட்டி யோடுபவள் போல; அஞ்சிலோதி இவளும் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவள்தானும்; ஓடி - முற்படத் துள்ளியோடி; பஞ்சின் மெல்லடி நடை பயிற்றும் - பஞ்சியினும் மெல்லிய அடிகளால் நடந்து செல் கின்றாள். எ.று. தன் மகளை நயந்தோன் காடு பின் உழிதர, இடனுடை வரைப்பின், ஓடுபந்து உருட்டுநள் போல இவளும் முற்பட ஓடிப் பஞ்சின் மெல்லடி நடைபயிற்றும்; அந்தோ, தாய் அளியள்; இது காணின் நெஞ்சழி அவலமொடு என்னாகுவள் கொல்லோ என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. நயந் தோள் பின் உழிதர எனவே, இவள் முற்பட ஓடினாள் என்பது பெறப்பட்டது. கோடு முற்று யானை, நன்கு வளர்ச்சி முற்றிய களிற்றியானை. கோடு முற்று யானைக் காடு என்றது, யானைகள் உறையும் பெருங்காடடை அச்சமின்றிக் கடந்து போந்தமை குறித்து நின்றது. உழிதரல், தொடர்ந்து வருதல். பாலைநிலத்து எயினர் தலைவனுடைய மகள் என்பார், நெய்ப்பட்டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை என்றார். பஞ்சி மெல்லடி, பஞ்சினும் மெல்லிய அடி என்க; இனி, பஞ்சி யூட்டிய மெல்லிய அடி என்றுமாம். நடைபயிற்றல், ஈண்டு நடந்து செல்லுதல் மேற்று. போக்குடன்பட்டுத் தலைமகனோடு போதரும் தலை மகளின் நலம் கண்டோர், இத்துணைப் பொற்பு மிக்கு வரும் இவளைப் பெற்ற தாய் யாவளோ எனத் தம் மனத்திடையே நினைந்து, சுரத்தின் வெம்மையையும், அதனைக் கடந்து செல்லும் அருமையையும் கண்டு இரக்கம் மிகுந்து, கண்ணிற் காணும் எமக்கு இத்துணை அவலம் தோன்றுமாயின், தாய் காணின் பெருந்துயருற்று அழுங்குவள் என்பார், அந்தோ அளியள் தாய் என்றும், நொந்து அழி அவலமொடு என் னாகுவள்கொல் என்றும் கூறினர். இங்ஙனம் கண்டோர் இரங்குதற்குக் காரணம், தலைவியின் மேனிநலமாதல் தோன்றப் பொன் போல் மேனித் தன் மகள் என்றும், அவள் தன்னை விரும்பிய காதலனுடன் கொல்யானை வாழும் காடு கடந்து போதருதலும் ஒரு காரணமாதல் விளங்கக் கோடு முற்றி யானைக் காடு பின் உழிதர என்றும் கூறினர். நயந் தோன் பின் உழிதர என இயையும். கோடு முற்றிய களிறு கொலை மேற்கொண்டு திரியுங் காட்டில், இளையோர் செல்வது ஏதமுடைத் தென்பதுபடக் கோடு முற்று யானைக் காடு எனச் சிறப்பித்தார்கள். சுரத்திடைச் செல்லும் தலை மக்களில் தலைவியை முன்னே செல்லவிட்டுத் தலைமகன் பின்னே செல்லுதல் இயல்பாதலால், நயந்தோன் பின்னுழி தர நடைபயிற்றும் என்றார். காட்டின்கண் முற்படச் செல்லும் தலைமகட்குக் கோடு முற்றியானைக் காடு அச்சம் தோற்றுவியாமைக்கு ஏது, அவள் தந்தையின் அஞ்சா நெஞ்சமும், அடல்வேல் ஏந்தும் காட்டாண்மையுமாம் என்றற்கு நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை என்று எடுத்துமொழிந்தார். ஓடு பந்து உருட்டி விளையாடல் செல்வமனைகளில் இளமகளிர் இயற்கை. உருண்டோடும் பந்தை உருட்டிக் கொண்டு ஓடுங்கால் தன் செலவில் உண்டாகும் அயர்ச்சியும் அப்பந்து எங்கேனும் வீழ்ந்து மறைந்தொழியுமே என்ற அச்சமும் இன்றி அவ்விளை யாட்டிற் பிறக்கும் இன்பமே நுகரும் செல்வமகள் உள்ளம் போல, சுரம் போதலால் உளதாகும் அயர்ச்சியும், கோடு முற்றியானைக் காடு ஏதம் விளவிக்குமே என்ற அச்சமும் இன்றித் தலைமகள் தலைமகனுடன் போதருங்கால், அவன் செய்யும் தலையளியிற் பிறக்கும் இன்பமே நினைந்து நுகர்ந்து உள்ளம் மகிழ்ந்து செல்லுமாறு விளங்கச் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஓடுபந்து உருட்டுநள் போல ஓடி மெல்லடி நடைபயிற்றும்மே என்றும், இளமைநலம் தோன்ற அஞ்சிலோதி எனவும், நடத்தலால் அடிசிவந்து மென்மை மிக்குறுவது தோன்றப் பஞ்சின் மெல்லடி எனவும், ஓதியும் மெல்லடியும் நோக்கிக் காதலன் உரைக்கும் இன்பவுரைகட்கு நாணி நடக்குமாறு தோன்ற நடைபயிற்றும்மே எனவும் கூறினர். தந்தையின் இடனுடைப் பெருமனை வாழ்வும் பெருஞ் செல்வமுமாகிய இவற்றிடையே இருத்தலினும், தன் காதற் கணவனாகிய தலைமகனுடன் காட்டிடைக் கல்லதர் அத்தத் தில் நடந்து செல்வது மிக்க இன்பம் தருவதொன்று என்ற நல்லறம் இக்கூற்றின்கண் அமைந்திருப்பது கயமனார் புலமை யுள்ளத்துக்கு மிக்க மகிழ்ச்சி நல்குவது காண்க. இதனால் சுரத்திடைக் காண்போர் வியந்து மகிழ்வது பயன் என்க. 325.மதுரைக் காருலவியங் கூத்தனார். இவர் பெயர் காருள வியன் கூற்றத்தனார் எனவும் காராள் அவியன் கூத்தனார் எனவும் ஏடுகளிற் காணப்படுகிறது. இப்பாட வேறுபாடுகளைக் கண்ட அறிஞர் சிலர், ஆர்வலக் கூற்றத்துத் தத்தனார் எனவும், காராளன் அவியன் மகனான கூத்தனார் எனவும் கொள்ளலாம் என்றனர். உண்மை நன்கு துணியலாகாமை யின், அச்சுப்பிரதியில் உள்ளவாறே கொள்ளப்பட்டது. இவர் பாடியதாக இப்பாட்டு ஒன்றுதான் கிடைத்துளது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன், மனை யின் நீங்கி, நாடும் காடும் இடையிட்ட வேற்றுநாடு சென்று செய்வதற்குரிய கடமை யுடையனானான். மனையுறையும் காதலர்க்கு இத்தகைய பிரிவினும் துன்பம் தருவது பிறிதொன் றில்லை. அழிவில் கூட்டத்து அயரா இன்பநுகர்ச்சிக்கண் சென்ற அவர்களது உள்ளம், அது சிறிது இடையீடு படினும், ஆற்ற வொண்ணாத துன்பம் உற்று வருந்தும். தலைமகன் தன்னைப் பிரிந்து செல்லக் கருதுகிறான் என்ற குறிப்புத் தோன்றக் கண்ட தும், தலைமகட்கு ஆற்றாமை தோன்றி அலைக்கத் தலைப்பட் டது. அவள் கண்களி னின்றும் ஆறுபோல் நீர் சொரியலுற்றது. அது கண்ட தோழி, உண்மை யுணர்ந்து தலைமகனைச் செலவு அழுங்குவிக்கும் கருத்துடைய ளானாள். களவுக் காலத்தில் தோன்றிய இடையீடுகள் அத்தனையும் தாங்கி அரிதின் முயன்று பெற்ற மனைவாழ்வின் இன்பப்பயனை நின் பிரிவன்றோ இப்பொழுது தோன்றி யழிக்கின்றது என்ற கருத்தை உள்ளுறுத்துக் காட்டி, "அன்று அவள் நலனுகர்தற்பொருட்டு, நீ பல் வகையில் முயன்றும் வாயில் பெறாது கையற்று வருந்துவது கண்டு, தன் கட்பார்வையால் அது நேர்ந்து நின் துன்பம் களைந் தாள்; அப்பொழுது நினக்குக் களைகணாகிய இவள் கண், இப்பொழுது ஆற்றாமையால் புன்கணுற்று நீர் சொரிதலைக் காண்; அதனைக் கண்டுவைத்தும், நீ செலவே விரும்புவை யாயின், அது நின் தகைமைக்குப் பொருந்துமோ என அஞ்சு கின்றேன்; செலவினைத் தவிர்வாயாக"என்றாள். காதலின்ப நுகர்ச்சியின் பொருட்டுப் புகழும் பொருளும் அறிவும் நல்கும் கடமையை நெகிழ்த்தல் தலைமை மாண்புடைய நன்மக்கட்குத் தகவன்மை யுணர்ந்தவ ளாகலின், அதனை மாற்றி இன்பப் பேற்றுக்கு வாயிலாய்த் துணைபுரிந்த கண்கள் வருந்தி நீர் சொரிய விட்டுப்பிரிதல் தகவன் றெனத் தோழி கூறிய நாநலம் கண்டு வியக்கின்றாராதலால் கூத்தனார் அதனை இப்பாட் டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். கவிதலை எண்கின் பரூஉமயிர் ஏற்றை இரைதேர் வேட்கையின் இரவிற் போகி நீடுசெயற் சிதலைத் 1தோடுழந் தெடுத்த அரவாழ் புற்றும் 2அழிய ஒய்யென முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் ஊக்கருங் கவலை நீந்தி மற்றிவள் பூப்போல் உண்கண் 3புதுநலம் சிதைய 4உகுநீர் வாரக் கண்டும் தகுமோ பெரும தவிர்கநும் செலவே. இது, தோழி செலவழுங்குவித்தது. உரை : கவிதலை எண்கின் பரூஉமயிர் ஏற்றை - கவிந்த தலையை யுடைய கரடியின் பருத்த மயிரையுடைய ஆண்; இரைதேர் வேட்கையின் - இரை தேடும் ஆர்வத்தால்; இரவில் போகி - இராக் காலத்தே சென்று; நீடு செயல் சிதலைத்தோடு உழந்தெடுத்த - விரைதலின்றி அமைந்து நெடித்துச் செய்யும் இயல்பினவாகிய சிதலையினம் முயன்று செய்த; அரவாழ் புற்றம் அழிய - பாம்புறையும் புற்று அழியுமாறு; ஒய்யென - ஒய்யென்ற முழக்கத்துடன்; முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் - மடிந்த வாயும் கூர்மையு முடைய நகங்களால் தோண்டிப் புற்றாஞ்சோற்றை வளைத்துண்ணும்; ஊக்கரும் கவலை நீந்தி - செல்லுதற்கரிய கவர்த்த வழிகளைக் கடந்து; இவள் பூப்போல் உண்கண் - இவளுடைய பூக்களைப் போன்ற மைதீட்டிய கண்கள்; புதுநலம் சிதைய - தம் புதிய அழகு குன்றுமாறு; உகுநீர் வாரக் கண்டும் - மிக்க நீரைச் சொரியக் கண்டுவைத்தும், பெரும-; நும் செலவு தகுமோ - நீவிர் மேற்கொள்ளும் செலவு தகவுடைத்தாமோ? ஆகாது; ஆகவே; தவிர்க - அதனைத் தவிர்வாயாக எ.று. பெரும, எண்கின் ஏற்றை, இரைதேர் வேட்கையின், புற்றம் அழிய, ஒய்யென, வள்ளுகிர் இடப்ப வாங்கும், கவலை நீந்தி, இவள் உண்கண் புதுநலம் சிதைய, நீர் வாரக்கண்டும், செலவு தகுமோ; தகவுடைத் தாகா தாகலின், தவிர்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பன்றியினம் போலக் கரடியும் தலை கவிந்து இயங்குவதாகலின், கவிதலை எண்கு என்றும், அதன் உடல்மயிர் தடித்திருப்பது பற்றிப் பரூஉமயிர் என்றும் கூறினார். இரவிற் சேறற்குக் காரணம் கூறுவார், இரைதேர் வேட்கையின் என்றார். சிதலை. கறையான்; வெள்ளெறும்பு என்றலும் வழக்கு. பன்னாள் பலவாய்க் கூடி அரிதின் முயன்று செய்த புற்று என்பார், நீடுசெயல் சிதலைத் தோடு உழந் தெடுத்த புற்றம் என்றும், அப்புற்றுக்களில் பாம்புகள் சென்று தங்குதல் இயல்பாதல் பற்றி அரவாழ் புற்றம் என்றும், அதற்கும் அஞ்சாமல் எண்கு தன் கையை நுழைத்துப் புற்றினை அகழ்ந்து சிதைத்து அதன் அடியில் இருக்கும். புற்றாம் சோற்றினைக் கையால் வளைத்து உண்ணுமாறு புலப்பட முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் என்றும் கூறினார். முரவுவாய் எனற்பாலது முரவாய் என வந்தது' "முரவுவாய்க் குழிசி1" என்றாற் போல, முரவுவாய், மடிந்தவாய். ஊக்குதல், மேன்மேல் முடுகுதல். கவலை - கவர்த்தவழி. நீந்தி என்றார், இடையூறும் இடையீடும் பல உடைமை தோன்றற்கு. நீந்தி என்னும் வினையெச்சம் செலவு என்னும் தொழிற் பெயரின் தொழிலொடு முடிந்தது. உண்கண் நீர் வார்தலால் புதுநலம் சிதையுமென அறிக. புதுநலம், புதுமண வாழ்விற் பிறக்கும் இன்பம். தகுமோ: ஓகாரம் எதிர்மறை. நலம் சிதைய வும் உகுநீர் வாரவும் கண்டும் செலவு தகுமோ என உரைப் பினுமாம். மனைக்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன், கடமைகாரணமாகத் தலைவியிற் பிரிந்தொழுகும் திறம் பலவும் அறத்துறையாதலைத் தோழி நன்கு அறிந்திருந் தமையின், தலைமகன் செலவுக்குறிப் புணர்ந்து தலைமகள் ஆற்றாது வேறுபடுவது கண்டு, தகுவன பல கூறி அவளை ஆற்றுவிக்க முயன்றாள். எனினும், தலைவி கண்ணீரும் கம்பலையும் கொண்டு வருந்தியது தோழியது அறிவை அலைக்கலுற்றது. தலைவியின்பொருட்டுத் தலைமகன் மேற் கொண்ட பிரிவுக் கருத்தை மாற்றுதற்கு, அறநூலோ பொருணூலோ தக்க துணைபுரியாமையால், இன்பத்துறை யொன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு தலைமகனோடு உரையாட லுற்றாள். களவொழுக்கத்தின்கண் நின்று பன்னாள் முயன்று, கற்பின்கண் பெறுதற் கமைந்த அழிவில் கூட்டத்து ஆரா இன்பப் பேற்றுக் குரியளாகிய தலைமகளது இன்பநிலையை நீ மேற்கொண்ட பிரிவு தோன்றிச் சிதைக் கின்றதே; அங்ஙனம், அது சிதைய விடுதல் நன்றன்று எனத் தலைமகற்குக் கூற வந்தவள், அதனை வெளிப்பட மொழிதல் நேரிதன்மை நினைந்து, உள்ளுறையால் சிதலைத்தோடு, நெடிது முயன்றெடுத்த புற்றத்தை எண்கின் ஏற்றை இரவிற் போந்து தன் முரவாய் வள்ளுகிரால் இடந்தழிப்பது போல, நின் பிரிவு போந்து இவளது இன்பநிலையை அழிப்ப, இவளது மேனி நலத்தைப் பசலை யுண்டொழியும் என்றாள். அது கேட்ட தலைமகன் அவளுடைய குறிப்புணர்ந்து முறு வலித்தானாகத் தலைமகள் மனமகிழ்ந்து கண்ணீர் சொரிந் தாள். உடனே, தோழி தலைவனை நோக்கி, "பெரும, அன்று இவளது கூட்டம் வேண்டி எம்பாற் போந்து குறையுற்று நின்று ஏற்ற வாயில் பெறாது கையற்று நின்ற நினது நிலையினை நினைந்தாயாயின், தன் இனிய காதற்பார்வையால் நின் கையறவு போக்கிய இவளுடைய கண்களின் பெருந்தகைமை நன்கு விளங்கும். இன்று அவை அத்தகைமை இழந்து இரந்து நோக்கி நீர் சொரிதலைக் காண்; உறுகணாய் நின்று நினக்கு உவகை தந்து உதவிய கண்கள், நின் பிரிவஞ்சி இடுக்கண் எய்துவது கண்டும், நீ அது களையாது பிரிகுவையேல், நன்றி மறவா நன்மாண்புடைய நினக்குத் தகவாகாது என்பாள், பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய, உகுநீர் வாரக் கண்டும், தகுமோ பெரும தவிர்க நும் செலவே என்றாள். மையுண்டமையால் நீலமலர் போல அழகியவாய கண் ணென்பாள் பூப்போல் உண்கண் என்றும், வதுவையிற் கூடிப் புதுமண இன்பத்தாற் பொலியும் தலைவியின் நலத்தைப் புதுநலம் என்றும், அதனைப் பிரிவுத்துயர் போந்து சிதைத்தலால், மேனி பசலையுற்றுக் கெடு மென்றற்குச் சிதைய என்றும், உகுகின்ற கண்ணீரும் கண்ணின் பொற்பையே யன்றி இவளது புதுநலத்தையும் அழிக்கின்ற தென்பாள், பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய உகுநீர் வார என்றும், அதனைக் கண்டவழிக் காதலர் உள்ளம் கரைந்து மென்மை எய்தும்; கண்டுவைத்தும் நின் உள்ளம் திண்மை சிறந்து செலவை மேற்கொள்வது தகுமோ என்பாள் தகுமோ பெரும என்றும், இந்நிலையில் நீயிர் செயற்பாலது இது என்பாள் தவிர்க நும் செலவே என்றும் கூறினாள். இதனாற் பயன் தலைவன் செலவழுங்குவானாவது. 326. மதுரை மருதன் இளநாகனார். களவொழுக்கம் பூண்ட தலைமக்கள் தோழியின் உயரிய துணையால் தம் காதலன்பை வளர்த்துவந்தனர். தலைமகனும் தலைமகளைப் பன்னாளும் குறியிடத்தே கண்டு இன்புற்று வந்தான். இதனால் தலைமகன்பால் தலைமகட்கு உளதாகிய காதல் அவனை யின்றி அமையாத அளவு பெருகிற்று. அதனை யுணர்ந்த தோழி விரைவில் வரைந்துகொள்ளுமாறு தலை மகனைத் தூண்டும் கருத்துடைய ளானாள். தலைமகன் முன் னின்று தன் கருத்தை வெளிப்பட மொழிதல் சீரிதன்மை தேர்ந்த தோழி, குறிப்பால் அவன் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு தன் கருத்தைக் கூற நினைந்தாள். ஒருநாள், தலைமகன் குறியிடம் போந்தது கண்டு, "மலைநாடர் பெருமானே, இதனை யான் நினக்கு உரைத்தற்கு நாணுகின்றேன். பன்னாள்களாக நீ இவண் போந்து இவளை மகிழ்வித்தவழியும் இவள் நுதலும் கண்ணும் பீர்க்கின் பூப்போலப் பசலை படர்வவாயின; பூத்தொறும் தாதூதும் வண்டுகள்தாமும் கண்ணுக்கும் ஏனைப் பூக்கட்கும் வேற்றுமை காணாவாய் இவள் கண்ணைச் சூழ்ந்து மருவு கின்றன. மலைச்சாரலிடத்து நிற்கும் மாமரத்தின் கிளையில் தங்கி. கொக்குத் தான் கொணர்ந்த மீனைக் குடைந்துண்ணுங்கால் எழும் புலால் நாற்றத்தைப் பொறாது உறையும் மந்தியினம் தும்மும் நாடனாகலின் இதனை எடுத்தோதுதற்கு நாணுவே னாயினேன்" என்றாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைவி மேனி வேறுபாடும் காதற் சிறப்பும் குறிப்பது ஒருபாலாக, உள்ளுறையால் ஊரிடத்தே அலர் எழுதலும், அதுகண்டு தாய் சினவுவதும் தோன்றக் கண்ட ஆசிரியர் மருதன் இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின் மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும் நாட 1நினக்கியான் உரைத்தல் நாணுவல் இவட்கே நுண்கொடிப் 2பீரத் தூழுறு பூவெனப் பசலை ஊரும் மன்னோ 3நீயே அரியமர் வனப்பின்எம் கானம் நண்ணவும் வண்டெனும் உணரா வாகி மலரென மரீஇ வரூஉம்இவள் கண்ணே இது, தோழி தலைமகனை வரைவுகடாயது. உரை : கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் - கொழு விய சுளையையுடைய பலாவின் பழங்கள் பொருந்திய மலைப் பக்கத்தே; செழுங்கோள் வாங்கிய மாச்சினை - செழித்துக் காய்த்த குலைகளைத் தாங்கிய மாமரத்தின் கிளையில் தங்கிய; கொக்கின் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது - கொக்கென்னும் புள் தான் கொணர்ந்த மீனைக் கொத்தித் தின்பதால் உண்டாகும் புலால்நாற்றத்தைப் பொறாமல்; துய்த்தலை மந்தி தும்மும் நாட - துய் போன்ற மயிர் வளர்ந்த தலையையுடைய மந்தி தும்மும் மலைநாடனே; நினக்கு யான் உரைத்தல் நாணுவல் - நின்பால் உரைத்தற்கும் நாணுகின்றேன். இவட்கு - இவள்பால்; நுண்கொடிப் பீரத்து ஊழுறுபூ என - நுண்ணிய கொடியாகிய பீர்க்கின் மலர்ந்த பூ என்னுமாறு; பசலை ஊரும் மன்னோ - பசலை பரந்து படருவதாயிற்று; நீ எம் கானம் நண்ணவும் - நீயும் இடையறவின்றி எமது கான மாகிய புனத்துக்கு வாராநிற்பவும்; அரியமர் வனப்பின் இவள் கண் - செவ்வரி பரத்தலால் மிக்க அழகினையுடைய இவ ளுடைய கண்களை; வண்டு எனும் உணராவாகி - வண்டினம் கண்களெனச் சிறிதும் உணராது; மலரென மரீஇ வரூஉம் - பூக்களெனக் கருதிப் போந்து சூழ்கின்றனகாண் எ,று. நாட இவட்குக் கண்களும் நுதலும் பீரத் தூழுறு பூ எனப் பசலை யூரும் மன்னோ; அன்றியும் நீ எம் கானம் நண்ணவும் அரியமர் வனப்பின் இவள் கண்களை என்னும் உணராவாகி, வண்டு மலரென மரீஇ வரூஉம்காண் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. கவாஅன், மலைப்பக்கம். செழுங்கோள் செழித்துக் காய்த்த குலை. குலையின் சுமை தாங்காது வளைந்து தாழ்ந்த சினையைச் செழுங்கோள் வாங்கிய மாச்சினை என்றார். மாச்சினை, மாவின்கிளை. பெரிய மரக்கிளை என்றுமாம், மந்தியின் தலைமயிர் பஞ்சுத்துய் போல் இருப்பது பற்றித் துய்த்தலை மந்தி என்றார். "முட்புற முதுகனி பெற்ற கடுவன், துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்1"எனப் பிறரும் கூறுவது காண்க. மகளிர் மேனியிற் படரும் பசலைக்குப் பீர்க்கின் பூவை உவமித்தல் பண்டை யோர் மரபு. "ஊரலர் தூற்றலின் ஒளியோடி நறுநுதல், பீரலர் அணிகொண்டு பிறைவனப் பிழவாக்கால்2" என்றும், "காதலர் திறைதரு முயற்சி, மேன்றோள் ஆய்கவின் மறையப், பொன் புனை பீரத் தலர்செய் தன்றே3"என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இவ்வாற்றால் மகளிர் நுதலும் தோளும் கண்ணும் மேனியும் பசலை யூர்தல் இயல்பாதல் அறிக. அரி, செவ்வரி. அரியமர் வனப்பின் இவள் கண் என இயையும், என்னும் எனற்பாலது எனும் எனக் குறைந்து நின்றது. மருவுதல், நெருங்குதல். வருதல், சூழ்வந்து மொய்த்தல். களவின்கண் வந்தொழுகும் தலைமகன், தலைவியுள்ளத்தே பெருகி முறுகி யிருக்கும் காதலன்பைத் தானே நன்கு உணர்ந்து வரைந்துகோடலைச் செய்து கோடற் குரியனாகலின், அதனைத் தோழி வெளிப்பட மொழிதல் அவனுக்குச் செயற் குரியவற்றைத் தானே தேர்ந்து செய்யும் தலைமைப்பண்பு இன்றென்பதைச் சுட்டு மெனக் கருதி அஞ்சுகின்றாளாகலின், நினக்கு யான் உரைத்தல் நாணுவல் என முகம்புகுகின்றாள். அது கேட்கவும், நாணுதற்குரிய அவ்வுரைப் பொருளை அறிதற்கு விழைந்து நோக்கினானாக, இவட்கே நுண்கொடிப் பீரத்துஊழுறு பூஎனப் பசலை யூரும் மன்னோ என்று தோழி கூறினாள். மன்னும் ஓவும் அசை நிலை. காதலர் பிரிந்தவழி யன்றோ உளதாவது பசலை; யான் நாளும் வரு தலில் தவறுதல் இன்றே; அற்றாக இவள் பசப்பானேன் என்று வினவுவான் போல நோக்கவும், நீயே எம் கானம் நண்ணவும் என்றும், இவள் உள்ளத்து முறுகிப் பெருகும் காதலுணர்ச்சி நின்பாற் பெறலாகும் அழிவில் கூட்டத்தை யின்றியமையாது என்பது தோன்றக் கண் செவ்வரி மிகப் பரந்து மலரின் முழுத்தோற்றத்தையும், மேனி மதநாற்றத்தையும் பெற்றமை எடுத்து மொழிவாளாய், வண்டு எனும் உணராவாகி மல ரென மரீஇ வரூஉம் இவள் கண்ணே என்றும் தோழி கூறினாள். உள்ளுறையால் அலரச்சம் கூறி வரைவு கடாவு கின்றாளாகலின், தோழி வெளிப்படையில் தலைவியின் கழி பெருங் காதல் மாண்பைக் கட்டுரைக்கின்றாள். மாவின் கிளையில் தங்கிக் கொக்கு மீன் குடைந் துண்ட லால் எழும் புலால்நாற்றத்தைப் பொறாது, மந்தி தும்மும் என்றது, குறியிடத்தே இவளைக் கண்டு மகிழும் நின் செயலால் அலர் பிறந்து பரவ, அது பொறாத தாய் எம்மைச் சினவுவா ளாயினள் என்றவாறு. இதனாற் பயன் தலைவனை வரைவு கடாதல். 327.அம்மூவனார் களவின்கண் ஒழுகும் தலைமகள் உள்ளத்தே வளர்ந்த காதல் பெருகி முறுகி இமைப்பொழுதும் தலைமகனை யின்றி அமையாத நிலையினைப் பயந்தது. அதனை யறிந்த தோழி, தலைமகனைக் கண்டு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரைவு கடாவினாள். அவனும் வரைவுக்குரிய முயற்சியை மேற்கொண்டான்; ஆயினும் காலம் நீட்டிப்ப தாயிற்று. அதனை யும் தோழி உணர்ந்து, வரையாது நெடுங்காலம் அவன் வந்து போதலால் ஆற்றாளாகிய தலைமகட்குத் தகுவன கூறி ஆற்று வித்தாள். தலைவியின் ஆற்றுந் தன்மையும் கைம்மிகும் அளவுக்குக் காலம் கழிந்தது. தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி "பல காலும் பல்லாற்றானும் நாடி நட்டற் குரியவரை நம்புதலே பழியாவது; நம் காதலர் உயரிய சான்றோராவார்" என்று வற்புறுத்தினாள். அதனாலும் மனவமைதி பிறவாமையின், தலைவி, நாடி நட்டற்கு அமைந்தோரை விரும்புதல் பழியெனப் படுமாயின், நாளும் உறக்கமின்றி உடல் மெலிந்து சாதல் இனிய தாகும் என்றாள். அவட்குத் தோழி மறுமாற்றம் தருவாளாய்," நம் காதலர் சான்றோ ராகலின், நமக்கு அவை இனிய வல்ல; சான்றோர் என்றும் தமது கடனிலை குன்றார் என்று அறிஞர் கூறுவ துண்டாகலின்" என்றாள். "அவ்வாறு உலகம் கூறுவது உண்டாயின், நம் காதலரது சாயல் மார்பு நமக்குத் தாயப் பொருளாதலும் அரிதுகாண்" எனத் தலைவி கூறினாள். தலைவியுரைத்த இக்கூற்றின்கண் சான்றோர் சால்பையே பற்றி நிற்கும் தலைவியின் குணநலம் சிறந்து தோன்றக் கண்ட ஆசிரியர் அம்மூவனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின் பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே காதலந் தோழி அந்நிலை1 அல்ல வாயிற் சான்றோர் கடனிலை குன்றலும் இலரென் றுடனமர்ந்து உலகம் கூறுவ2 துண்டெனின் நிலைஇய தாயம்3 ஆகலும் அரிதே போதவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணந் துறைவன் சாயன் மார்பே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலை மகள் வன்பொறை எதிரழிந்தது. உரை : காதலம் தோழி - அன்புடைய தோழி; நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் - ஆராய்ந்து மனத்தாற்கொள்ளப்பட்ட வரை விரும்புதல் குற்றம் என்றால்; பாடில கலுழும் கண் ணொடு சாஅய் - உறக்கமின்றி நீர்சொரியும் கண்களோடு மேனி மெலிவுற்று; சாதலும் இனிது - இறத்தல் இனிதாகும்: அந்நிலை அல்ல வாயின் - உறக்கமின்மையும் மேனிமெலிவும் இறந்துபாடும் ஆகிய அவைகள் இனிய வல்ல வாயின்; சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர் என்று- சான்றோ ராயினர் தமக்குரிய கடனாற்றும் திறத்தில குன்றுவதிலர் என்று; உலகம் உடன் அமர்ந்து கூறுவது உண்டு எனின் - உலகத்தவர் ஒருமனமாக விரும்பிக் கூறுவது முக்காலும் உண்டு என்பதாயின்; நிலைஇய தாயமாகலும் அரிது - நிலைபெற்ற தாயப்பொருளாகப் பெறுதலும் நமக்கு அரி தாகும்; போது அவிழ் புன்னை ஓங்கிய கானல் - அரும்பு மலர்ந்த புன்னைமரங்கள் உயர்ந்து நிற்கும் கானற்சோலையும்; தண்ணம் துறைவன் சாயல் மார்பு - தண்ணிய துறையை யுமுடைய தலைவனது மென்மையான மார்பு எ.று. தோழி, நாடல் சான்றோரை நம்புதல் பழி எனின், கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதல் இனிது; அந்நிலை அல்ல வாயின், சான்றோர் கடனிலை குன்றல் இலர் என்று உலகம் உடனமர்ந்து கூறுவது உண்டு எனின், துறைவன் சாயல் மார்பு நிலைஇய தாயமாகல் அரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. நாடல் சான்றோர், ஆராய்ந்து கொள்ளப் பட்டவர். "ஒருவரை நாடாது நட்டலிற் கேடில்லை 1" என்பவாகலின், நாடப்படும் நிலையில் உள்ளவரை நாடித் தெளியுமுன் நம்புதல் குற்றம் என்றற்கு நாடல் சான்றோர் நம்புதல் பழி என்றார். பாடு, கண்படுதல். உறக்கம் இல்வழிக் கண்கள் நீர் சொரிவது இயல்பு. சாதல் இன்னா தாகலின், உம்மை எதிர்மறை. "சாதலின் இன்னாததில்லை2"எனச் சான்றோர் கூறுதல் காண்க. அந்நிலை, உறக்கமின்மையும் மேனிமெலிவும் இறந்து பாடும் ஆகிய நிலைகள். உடனமர்ந்து கூறுவது, பலரும் ஒருமுகமாக ஒத்துக் கூறுவது முக்காலத்தும் உண்மை தோன்ற உண்டு என்றார். தாயம், முயன்று பெறுவ தின்றி உரிமைபற்றிப் பெறப்படும் பொருள். தண்ணந்துறைவன்; விரிக்கும் வழி விரித்தல். சாயல், மென்மை. தலைமகன் வரையாமல் களவே நீட்டித்தொழுகுதலால் ஆற்றாளாய் வருந்திய தலைமகளை நோக்கி, களவின்கண் காதலரது காதல்மாண்பைப் பன்னெறியினும் நாடுவது இயல்பாகலின் அக்காலத்தே அவர்பால் அழிவில்கூட்டம் பெற விழைவது குற்றம் என்று தோழி வற்புறுத்தினாளாகத் தலைவி மனம் அழிந்து தனது ஆற்றாமை மிகுதி தோன்ற, நாடல் சான்றோர், நம்புதல் பழியெனின் பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச், சாதலும் இனிதே காதலம் தோழி என்றாள். அது கேட்டு வற்புறுக்கும் தோழி, உறக்கமின் மையும் உடல் மெலிவும் எய்திச் சாதல் ஒருகாலும் இனிதாகாது; சால்புடைய நம் தலைவர் அச்சால்பின்கட் குறைபாடுடைய ராதல் இலர்; அஃது உலகு அறிந்த உண்மை என்றாளாக, அற்றாயின், அவர் மார்பிற் கூட்டத்தை நமக்குரிய தாயப் பொருளாகப் பெறுவ தென்பது அரிதாகும்; என்னை யெனின், சான்றோர் தமக்கெனச் சிறிதும் பிறர்க்குப் பெரிதும் உரியராகலின் என்பாள், அந்நிலை யல்ல வாயின் சான்றோர் கடனிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு எனின் நிலைஇய தாய மாகலும் அரிதே என்று கூறினாள். தாயம் என்பது தாய் என்னும் சொல்லடி யாகத் தோன்றியது. திருமணக் காலத்தில் கணவன் தான் ஈட்டும் பொருளைத் தன் மனைவி ஆளுதற்கு உரிமை யளிப்பது தமிழ்முறை; "உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் பெருமையின் திரியா அன்பின் கண்ணும்1" என்ற தொல்காப்பியத்தால் இதனை நன்கு காணலாம். இவ்வாறு கணவன் கொடுக்க மனைவி பெறும் உரிமை அவள் பெறும் மக்கட்குச் செல்லுங்கால் தாயம் என வெளிப்படுகிறது. அது வழிவழியாக நிலைபெறுதல் பற்றி அதனை "நிலைஇய தாயம்" என்று கூறுகிறாள் என அறிக. காலமாற்றத்தாலும் புதுப்புதுக் கொள்கைகள் புகுந்தமையாலும் தாயத்தின் பொருளும் முறையும் மாறிவிட்டன. தாயம் தாய்வழி வருவது என்பது விளங்கத் "தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி2" என முடத்தாமக் கண்ணியார் மொழிவதும், "தாயிடைப் பொருள் தந்தையாகும் என்று ஓதுவார்க்கருள் தன்மையே1" என ஞானசம்பந்தர் குறிப்பதும் ஈண்டு அறிஞர்கள் நோக்கத் தகுவனவாம். தலைவியது இக்கூற்றின் பயன், தலைவன் தெருண்டு வரைவானாவது. 328. தொல் கபிலர் களவொழுக்கில் தம்மிற் பிறந்த காதலை வளர்த்துப் போதரும் தலைமக்களில் தலைமகன் தலைவியை வரைந்து கொள்ளும் முயற்சி மேற்கோண்டு அதற்குரிய பொருள் குறித்துப் பிரிந்து சென்றான். செல்லுங்கால் அவன் கார்கால வரவில் தான் போந்து வரைவால் மணந்து கொள்வதாக வற்புறுத்திச் சென்றான். காதலரிடையே பிரிவு நிகழின் அது சிறிது பொழு தாயினும் நெடும்பொழுதாய் நீட்டித்துக் காட்டு மன்றே? அம்முறையில் கார்கால வரவு நோக்கியிருந்த தலைமகட்கு ஆற்றாமை மிகுவதாயிற்று. அது கண்ட தோழிக்கு அவளை ஆற்றுவித்தலே பெருஞ்செயலாக இருந்தது. பிரிந்துறையும் தலைவன் உள்ளம், ஆண்டுச் செய்தற்குரிய பொருளின்கண்ணும், அதற்கு வேண்டிய வினையின்கண்ணும் ஒன்றிவிடின் காதலியாகிய தன்னை மறந்தொழியுங்கொல்லோ என்ற ஐயத் தால் தலைவியும் மனங்கலங்கினாள். ஒருகால் அதனைத் தன் தோழிக்கும் குறிப்பாய் உரைத்தாள். அது கேட்ட தோழி, தலைவியை நோக்கிப் "பெருங்கல் நாடனாகிய தலைமகன், கூறியன மறந்து பொய்த்தொழுகும் ஏனைய மக்களோடு ஒத்த பிறப்பின னல்லன்; அதனை நம் களவுநெறியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றால் நாம் அறிந்துள்ளோம். அதனால் அவனை வேறுபட நினையற்க. நாளைக் கார்வரவின் தலைமழை பெய்க; உடனே எண்ணெய்க்கும் வெள்ளிய ஆடைக்கும் ஆடல் புரியும் விறலி போந்து, அவற்றை வேண்டாது, நின் திருமணத்தில் நல்கப்படும் நன்கலம் குறித்து ஆடல் புரிவாள்" என்று வற்புறுத் தினாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், ஆற்றாமை காரண மாகத் தலைவி யுள்ளத் தெழும் ஐயம், அவளுடைய எதிர்கால இன்பவாழ்வுக்கு ஆக்கமாகாமை தேர்ந்து, தலைவனது வாய்மை மாண்பை வற்புறுத்தி, நிகழ விருக்கும் திருமணத்தில் விறலி ஆடிப் பெறும் நன்கலம் கூறி மகிழ்விக்கும் நலம் கண்ட ஆசிரியர் தொல்கபிலர் அதனை இப்பாட்டிடையே தொடுத்துப் பாடு கின்றார். கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினைகிளி கடியும் பெருங்கல் நாடன் பிறப்போர் அன்மை அறிந்தனம் அதனால் அதுவினி வாழி தோழி ஒருநாள் சிறுபல் கருவித் தாகி வலன்ஏர்பு பெரும்பெயல் தலைக புனனே இனியே எண்பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது சாந்துதலைக் கொண்ட ஓங்குபெருஞ் சாரல் விலங்குமலை அடுக்கத் தானும் கலம்பெறு விறலி ஆடும் இவ்வூரே. இது, தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற் புறுத்தது. உரை : கிழங்கு கீழ் வீழ்ந்து - ஒருபால் பாத்தியில் வளர்க்கப் பட்ட வள்ளியின் கிழங்கு நிலத்துக்குள் இறங்கிச் சிறக்க; தேன் மேல் தூங்கி - ஒருபால், மேலே மரக்கிளைகளில் கட்டப்பட்ட தேன் அடைகள் தேன் நிறைந்து விளங்க, சிற்சில வித்திப் பற்பல விளைந்து - சிலவாகிய தினையை விதைத்து அவை மிகப் பலவாக விளைத்து; தினை கிளி கடியும் பெருங்கல் நாடன் - அத்தினைகளை யுண்ணும் கிளிகளை ஓப்பும் பெரிய மலை நாடனாகிய தலைமகன்; பிறப்பு ஓரன்மை அறிந்தனம் - பிறப்பால் ஏனை மக்களோடு ஒப்பானாயினும் வாய்மை யொழுக்கத்தில் ஒப்பற்றவன் என்பதைப் பல்லாற்றானும் யாம் அறிந்துள்ளோம்; அதனால் ; அது இனி வாழி - அவனது பிறப்பு இனி வாழ்வதாக ; தோழி -; ஒருநாள் - இக்காலத்து ஒருநாள்; சிறுபல் கருவித்தாகி - சிறியவாய்ப் பலவாய முகில்கள் தொகுதிபடக் கூடி; வலன் ஏர்பு - விசும்பில் வலமாக எழுந்து; பெரும்பெயல் புனன் தலைக-பெரிய மழையினைப் புனத்தின்கண் பொழிக; இனியே - உடனே; எண்பிழி நெய் யொடு - எள்ளின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட நெய்யும்; வெண் கிழி வேண்டாது - வெள்ளிய கிழிந்த ஆடையும் பெற விரும் பாமல்; சாந்து தலைக்கொண்ட ஓங்குபெருஞ்சாரல் - சந்தன மரங்களை மிகுதியாகக் கொண்ட உயர்ந்த பெரிய மலைச் சாரலிடத்தே; விலங்கு மலை அடுக்கத்தான் - குறுக்கிட்டு நிற்கும் மலையடுக்கத்துள்ள; இவ்வூர் - நமது இவ்வூரின்கண்; கலம்பெறு விறலி ஆடும் - நன்கலங்களைப் பரி சிலாகப் பெறும் விறலி போந்து மணவிழாவுக்குச் சிறப்பாக ஆடா நிற்பள்காண் எ.று. நாடன்பிறப்பு ஓரன்மை அறிந்தனம்; அதனால், கார் வரவில், தப்பாது போந்து வரைந்துகோடல் ஒருதலை; ஆகவே, அவனது பிறப்பு வாழி, தோழி, ஒருநாள் புனன் பெரும்பெயல் தலைக; இனி, சாரல் விலங்குமலை யடுக்கத்து இவ்வூர்க்கண் நின் மணவிழாவில் விறலி போந்து, எண்ணெ யும் வெண்கிழியும் வேண்டாது, கலம்பெறுவான் ஆடுவள் காண் என ஏற்பன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. கீழ்வீழ்ந்து, தூங்கி என நின்ற செய்தெ னெச்சங்களைச் செயவே னெச்சமாகத் திரிக்க. விளைத்து எனற்பாலது விளைந் தென மெலிந்து நின்றது. அது, அப்பிறப்பு. கருவி, தொகுதி. எண் பிழிநெய், எண்ணெய். எண்ணெய்க்கும் வெண்கிழிக்கும் விறலியர் ஆடுவது அக்காலமரபு போலும். வெண்கிழி வேண் டாது கலம்பெறு விறலி என இயைக்க. கலம்பெறு விறலி என்றது, கலம்பெறும் பொருட்டுப் போதரும் விறலி என்னும் பொருளை உட்கொண்டு நின்றது. நிலத்தில் கீழ்நோக்கிச் சென்று சிறக்கும் கிழங்கினைக் கிழங்கு கீழ் விழ்ந்து என்றார். "கீழ்செல வீழ்ந்த கிழங்கு1"என்று பிறரும் கூறுதல் காண்க. தினைவிளையும் காலத்தே கிழங்கு முற்றுதலும் தேனடை தேன் நிறைந்து விளங்குதலும் இயல்பாதலின் கிழங்கு முதலிய மூன்றையும் ஒருங்கே இயையக் கூறினார். "வள்ளி கீழ்வீழா வரைமிசைத் தேன்தொடா, கொல்லை குரல்வாங்கி ஈனா2" என்று சான்றோர் பாடுதலா லறிக. களவின்கண் ஒழுகிய தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்தொழுகுதலால், தலைமகள் ஆற்றாமை மீதூர்ந்து, தன்னை அவன் மறந்தொழிவனோ என ஐயற்று அலமரல் எய்துவது கண்ட தோழி தலைவனது வாய்மையைச் சிறப்பித் தற்குப் பொய்த்தொழுகுவார் உறை நிலத்துக் காணப்படும் விளைவின்மை யின்றிக் கிழங்கு கீழ்வீழ்தலும் தேன் தொடையும் தினைவிளைவும் காட்டிக் கூறுகின்றா ளாதலின், கிழங்கு கீழ்வீழ்ந்து தேன் மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினைகிளி கடியும் பெருங்கல் நாடன் என்றும், இவ்விளைவுகளே தலைமகனது வாய்மைக்குக் கரி என்பது தோன்ற, நாடன் பிறப்பு ஓரன்மை அறிந்தனம் என்றும் கூறினாள். அதனால், அவன் குறித்த கார்கால வரவில் வருதல் தப்பான் என்பது சொல்லாமலே பெறப் படுதலின், அதனால் என்றதனோடு ஒழிந்தாள். அன்ன வாய்மையுடையோர் பிறப்பு, உலகில் வாழ்வார்க்கு ஆக்கமும் அரணுமாய் இன்பம் செய்தல் ஒருதலை யாதலின், அது நெடிது வாழ்தல் வேண்டும் என்பாள், அது இனி வாழி தோழி என்றாள். இனி, கார்மழை வருவதுதான் தடை; உடனே தலைமகன் போந்து வரைந்துகோடல் ஒருதலை என்பாளாய், ஒருநாட் சிறுபல் கருவித் தாகி வலன் ஏர்பு பெரும்பெயல் தலைக புனனே என்றும், வரைந்து கோடலைக் கூறலுற்ற தோழி, அதன் பயனாக நிகழும் திருமணத்தை நினைப்பித்து, அக்காலத்தே ஆடுமகளாகிய விறலி போந்து ஆடல் பாடல்களை நிகழ்த்தி நன்கலங்களைப் பரிசிலாகப் பெறுவள் என்பதை வெளிப்படையாக விரித்துக் கூறுவாள், எண்பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது கலம்பெறு விறலி ஆடும் இவ்வூரே என்றும் இயம்பினாள். சாந்து தலைக்கொண்ட ஓங்குமலைச் சாரலிடத்துச் சீறூ ராயினும், தலைமகன் தரும் பொருள்மிகுதி கொண்டு விறலி நன்கலம் நல்கப் பெறுவாள் என்பாள், சாந்து தலைக் கொண்ட ஓங்குபெருஞ்சாரல் விலங்குமலை யடுக்கத் தானும் என்றாள். இனி, நிலத்தின் கீழும் மேலும் இடையும், முறையே, கிழங்கும் தேனும் தினையும் விளையப்பெறும் பெருங்கல் நாடன் என்றது, இக் களவுக்காலத்தும் நாளைக் கற்புக்காலத்தும் இடைநிகழும் வதுவை நாளினும் பேரன்பு செய்து நின்னைப் பேணும் பெருவாய்மையன் என வற் புறுத்தியவாறாகக் கொள்க. தலைவி ஆற்றியிருப்பாளாவது பயன். 329. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனாராகிய இச் சொகுத்தனார் பெயர் புதுப்பட்டி ஏட்டில் சாக்கூத்தனார் என்று காணப்படுகிறது. ஒருகால் சாக்கைக் கூத்தனார் என்பதுதான் சாக்கூத்தனார் எனப் பிழைபட்டதோ என்று நோக்கின், சொகுத்தனார் என்ற பெயரே ஏனை ஏடுகளில் உள்ளமை, அந்நோக்கத்தை அழித்து விடுகிறது. சொகுத்தனார் என்பதைச் சோகுத்தனார் என்று கோடற்கும் இடமுண்டு. எனினும், இரண்டற்கும் உரிய பொருள் விளங்குகின்றிலது. மதுரை மருதங் கிழார் மகனார் இளம்போத்தனார் என ஒருவர் குறுந்தொகையிலும், மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் என ஒருவர் இந் நூலிலும் காணப்படுதலின், இவ்விருவரும் நம் சொகுத்த னார்க்கு உடன் பிறந்தவர்களோ என எண்ணற்கு இடம் உண் டாகிறது. ஒரு தந்தைக்குப் பிறந்த மக்கள்பலர் நல்லிசைச் சான்றோராகும் நலமுடைய ராதல் அரிது. அந்த அரிய பேற்றைப் பெற்ற இவர்களுடைய தந்தையான மருதங்கிழார், மதுரைக்கண் இருந்து மாண்பு பெற்றுள்ளார். சொகுத்தனார் பாடியனவாக வேறே பாட்டுக்கள் கிடைத்தில. மனையின்கண் இருந்து அறம்புரிந்தொழுகும் தலைமககளது இல்வாழ்க்கையில் தலைமகன் இன்றியமையாத வினை குறித்துத் தன் காதல்மனைவியின் நீங்கிச் செல்ல வேண்டியவ னானான். தலைமகட்கு அவனது பிரிவு மிக்க துன்பத்தைத் தந்ததாயினும், தலைமகனும் தோழியும் வற்புறுத்தத் தேறி அவளும், அவன் வருதற்குக் குறித்த பருவம் நோக்கி மனைக்கண் ஆற்றியிருந்தாள். தலைமகனும் அவள்பால் விடைபெற்றுச் சென்றான். அவன் குறித்த பருவகாலமும் நெருங்குவதாயிற்று. இடையிடையே அவனிடமிருந்து போந்த தூதுவரால் அவன் நலமும், அவன் சென்ற வழியின் திறமும் தலைவி அறிந்து கொண்டாள். பிரிந்த காதலர் மீளப் போந்து கூடுதற் குரிய காலம் நெருங்குங்கால், இருவர் உள்ளங்களும் ஒருவரை யொருவர் மிகைபட எண்ணிக் காண்டற்குப் பெருவிதுப்புறுவது இயல்பு. அவ்விடத்து, மகளிர் மனம், காதலராகிய ஆடவரை நினைந்து பெரிதும் துடித்து, அவர் இனிது போதருவா ராயினும், அவர்க்கு இன்னல் தோன்றி இடையூறு செய்யுமோ எனப் பலபட எண்ணி இடர்ப்பட்டு வருந்தும். அதனால், தலைமகன் சென்ற வழியின் கொடுமையைக் கேட்டறிந் துளாளாகலின் தலைவி பெரிதும் ஆற்றாளாயினாள். தலைவன் சென்ற நெறி ஆறலைகள்வர் வாழும் இடம் எனவும், அவர்கள் தம் செயற்கொடுமைக்கு மறுமையில் நிரயத்துன்பமே எய்தும் என்பதை நினையாது, வழிச்செல்வோரை இரக்கமின்றிக் கொன்று துறப்பர் எனவும், கொல்லப்பட்டோருடைய பிணத்தினின்றெழும் முடை நாற்றத்தைப் பொறாது பிணந்தின் பருந்து கழுகு முதலியன உதிர்த்த இறகுகளை, இக்கள்வர் தம் கணையிற் செறித்து மேலும் தம் கொலைத்தொழிலையே செய்தற்கு வழிச்செல்வோர் வரவு பார்த்திருப்பர் எனவும், தலைவன் சென்ற வழியியல் அறிந்தோர் கூறக் கேட்டமையின், தலைவியின் காதலுள்ளம் அமைதியின்றி அன்பால் அஞ்சி அலமரல் உற்றது; தோழிக்குச் சொல்லித் துயர் மிகுந்து உழலத் தலைப்பட்டாள். தோழி அவளை ஆற்று விப்பாளாய், " தோழி, தலைவர் சென்ற நெறி அப்பெற்றித் தாயினும், அவர் அவற்றையெல்லாம் கடந்து இனிதே சென்றன ராகலின், அதுவே நினைந்து வருந்துதல் வேண்டா; அவர் வினைமுடித்து வென்றியோடே மீள்வர்" என்றாள். "வினைமேற் சென்ற அவருடைய உள்ளம் நம்மை மறந்தொழியுமாயின், அவர் தாம் வற்புறுத்த காலத்தில் தப்பாது வருவரோ" என ஐயுற்று வினவ, "அவர் குறித்த கார்கால வரவை விசும்பில் முகில்கள் எழுந்து தோன்றி நினைவுறுத்து மாகலின், அவர் தப்பாது தாழாது வருவர்; கார்முகில் கடனீரை முகந்து விசும்பெல்லாம் அதிர மின்னி முழங்குகின்றது; அதோ நீயே காண்" என்று சொல்லித் தலைவியை ஆற்றுவித்தாள். தோழியினுடைய இக்கூற்றின்கண், வினைமேற் சென்ற தலைமகற்குச் செல்லும் நெறியின் கொடுமை பொருளாகாது கழிந்தமை கூறுமுகத்தால், அவனது ஆண்மையும், மேற்கொண்ட வினையைக் குறித்த காலத்தின்கண் முடித்து மீளும் திட்பமும் தோன்ற நிற்கும் நலம் கண்ட ஆசிரியர் சொகுத்தனார் இப் பாட்டின்கண் அவற்றை அமைத்துப் பாடுகின்றார். வரையா 1நாவின் நிரையம் 2பே'82ார் கொன்றாற்றுத் துறந்த மாக்களின் 3அழிபிணன் இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெறாஅது 4புனிற்றுச்சிறை 5கழித்த பொறிய முதுபாறு இறகுபுடைத் 6திற்ற பறைப்புன் தூவி செங்கணைச் செறிந்த வன்கண் ஆடவர் ஆடுகொள் நெஞ்சமொ டதர்பார்த் தல்கும் அத்தம் இறந்தன ராயினும் நத்துறந்து அல்கலர் வாழி தோழி உதுக்காண் இருவிசும் பதிர மின்னிக் கருவி மாமழை கடல்முகந் தனவே. இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. உரை : வரையா நாவின் நிரையம் பேணார் - வரையறையின்றி விழுங்கும் வாயினையுடைய நிரயத்துன்பம் உண்டு என்பதை மனங்கொள்ளாராகிய ஆறலைகள்வர்; கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அழிபிணன் - கொன்று வழியிடையே கைவிட் டொழிந்த வழிச்செல்வோரின் உருவழிந்த பிணங்கள் பரப்பும்; இடுமுடை மருங்கில் - முடைநாற்றம் மிக்க உடற் கூறுகளில்; தொடுமிடம் பெறாது - குடைந்துண்டற் குரிய இடம் இல்லாமையால்; புனிற்றுச் சிறை கழித்த பொறிய முதுபாறு - ஈன்றணிமைக்கண் தோன்றிய மென்சிறகுகளிற் புள்ளிகளையுடைய முதிய பருந்து; இறகு புடைத்து இற்ற பறைப் புன்தூவி - தன் இறகுகளைப் புடைத்தலால் உதிர்ந்த காற்றிற் பறத்தற்குரிய புல்லிய தூவியை; செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்- சிவந்த அம்புகளிற் செறியப் பிணித்துக் கொண்ட வன்கண்மையையுடைய மறவர்; ஆடுகொள் நெஞ்சமொடு அதர்பார்த்து அல்கும் - வழிச்செல்வோரைக் கொல்லும் கருத்துடன் அவர் வரும் வழிநோக்கி யிருக்கும்; அத்தம் இறந்தனர் - வழியை ஒரு பொருளாகக் கொள்ளாமல் இனிது கடந்து சென்றனர் நம் காதலர்; ஆயினும் -; நத் துறந்து - நம்மைத் தமது நெஞ்சின்கண் மறந்து; அல்கலர் - அவ் விடத்தேயே தங்கியொழிவாரல்லர்; வாழி - ; தோழி-; உதுக் காண் - அதோ பார் ; கருவி மாமழை - தொகுதிகொண்ட முகில்கள் ; இரு விசும்பு அதிர மின்னி - பெரிய வானம் அதிரும்படியாக மின்னி முழங்கி; கடல் முகந்தன - கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றனகாண் எ.று. தோழி, வாழி; நிரயம் பேணார் கொன்று, ஆற்றுத் துறந்த மாக்களின் அழிபிணன் மருங்கில் தொடுமிடம் பெறாது, முதுபாறு. இற்ற தூவியைத் தம் செங்கணை செறித்த ஆடவர் வழிபார்த்து அல்கும் அத்தம் இறந்தனர்; ஆயினும், மாமழை, விசும்பு அதிர மின்னிக் கடல் முகந்து போந்தன வாகலான், நத்துறந்து அல்கலர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தீவினை செய்வோர் யாவராயினும் வரையறையின்றி விழுங்கும் இயல்பிற் றாகலின், வரையா நாவின் நிரையம் என்றும், அதன் உண்மையை நெஞ்சில் நினைப்பராயின் ஆறலைக்கும் மறவர் வழிச்செல்வோரைக் கொலை புரியா ராகலின், பேணார் என்றும், தாம் கொன்ற மக்களின் பிணத்தை ஓரிடத்தே புதைக்காமல், வழியிடத்தே இரக்கமின்றிக் கைவிட்டு நீங்குவது பற்றிக் கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அழிபிணன் என்றும் கூறினார். வழியிடை யுளவாகும் ஏதம் நினையாது, அவ்வழியிற் செல்லுவ தொன்றையே நோக்க மாகக் கொண்டு செல்வதுபற்றி வழிச்செல்வோரை மாக்கள் என்றார். "அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப்பொருள் வவ்வும் களவேர் வாழ்க்கைக் கொடியோர்1"என்று ஆறலைப் போர் இயல்பைப் பிறரும் கூறுவது காண்க. ஆற்றிடை ஏதம் எண்ணாது செல்வோரை, "ஆறுசெல் மாக்கள்2" என்று சான்றோர் குறிப்பது இயல்பு. பிணம் தின்பனவாகிய பருந்து கழுகு முதலிய புள்ளினம், பிணங்களைக் கொத்திக் குடைந் துண்ணும் இயல்பின வாகலின், தொடுமிடம் நோக்கின என்றும், தொடுதற் கேற்ற வன்மையின்றி அழுகி மென்மை யுற்றுக் கிடந்தமையின் தொடுமிடம் பெறாஅது ஒதுங்கின என்றும் கூறினார். பருந்துகள் சினையீனு மிடத்து அவற்றின் அடிவயிற்றில் மெல்லிய தூவியும் முதிர்ந்தன உதிரப் புதிய சிறகும் தோன்றல் இயல்பு. தாம் செலுத்தும் கணைக்கு விரைவு ஊட்டுதற்கு வில்லுடை மறவர் அதன் அடியில் புட்களின் உதிர்ந்த இறகைச் செறிப்பது மரபு; "மடமயில் ஒழித்த பீலி வார்ந்துதம், சிலைமாண் வல்விற் சுற்றிய பலமாண், அம் புடைக் கையர்1" எனச் சான்றோர் உரைப்பது காண்க. குருதிக் கறை படிந்த அம்பு என்றற்குச் செங்கணை என்றார். ஆடு கொள் நெஞ்சம், கொலை செய்தலையே விரும்பிய நெஞ்சம். துறத்தல், ஈண்டு மறத்தல் மேற்று. முகந்தன, கடல்நீரை முகந்த மேகம்; அவை ஆங்கே நின்றொழியாது மலைமுகடு நோக்கிச் செல்வான் அமைந்தன. வினைவயிற் பிரிந்துறையும் தலைமகனை நினைந்தும், அவன் சென்ற ஆற்றின் கொடுமையை யெண்ணியும் வருத் தத்தால் மனம் குழைந்து மேனி மெலிவுற்ற தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி, தலைமகனது ஆண்மையை மிகுத்தற்கு, ஆறலை கள்வரின் கொடுமையை, வரையா நாவின் நிரையம் பே'82ர் கொன்றாற்றுத் துறந்த மாக்களின் அழிபிணன் என்றும், வன்கண் ஆடவர் ஆடுகொள் நெஞ்சமொடு அதர் பார்த்தல்கும் அத்தம் என்றும், அத்துணைக் கொடி யோரையும் அவர் வாழும் அத்தத்தையும் பொருளாக மதியாது கடந்து சென்றனர் நம் காதலர் என்பாள், அத்தம் இறந்தனர் என்றும், வினைமேல் ஒன்றிய உள்ளத்தால் அவ் வாறு சென்றன ராயினும், நம்மை அவர் ஒருகாலும் மறவார் என்பாள், நத்துறந் தல்கலர் என்றும், வினை செயல் வகை களால் அவரது அன்பு நிறைந்த உள்ளத்தில் நம் நினைவு எழாதொழியினும், கடல்நீரை முகந்து எழுதரும் கார்முகில், விசும்பெல்லாம் பரந்து மின்னி முழங்கி அவர் வருகுவல் எனக் குறித்த கார்காலத்தை நினைப்பிக்கு மாதலின், அவர் தவிராது தாழ்க்காது வருவர் என்றற்கு அல்கலர் வாழி தோழி என்றவள், கார்முகிலைக் காட்டி உதுக்காண் இருவிசும்பு அதிர மின்னிக், கருவி மாமழை கடல் முகந்தனவே என்றும் கூறினாள். இதனாற் பயன் தலைவி ஆற்றியிருப்பாளாவது. 330. ஆலங்குடி வங்கனார் மனையறம் புரிந்தொழுகும் மாண்புடைய தலைமக்களது இன்ப வாழ்வில்,தலைமகற்குப் பரத்தை யர்க்கு அருளும் செவ்வி தோன்றிற்று. பரத்தையர் சேரிக்குச் சென்று ஆங்கு நிகழும் கூத்துக்குத் தலைக்கை தருதலும், விழவுகளைச் சிறப்பித்தலும், அவன் செயற் குரியவாயின. இவ்வாற்றால் பரத்தையர் சூழலில் அவன் பயிலும் பான்மையனானான். அதனை அறிந்த தலைமகள். அவன் பரத்தையர் தொடர்புடையனெனக் கொண்டு, மனம் பொறாது அவன்பால் சினம் கொண்டாள். அதனை வாயில் களால் அறிந்த தலைமகன், அவள் மனத்து ஊடலைத் தணிக்கு மாறு தோழியை வேண்டினான். அவற்குப் பரத்தையரின் புன்மையும் குலமகளிர் போலும் பயப்பாடின்மையும் வெளிப்பட மொழிந்து, அப்பரத்தையர் தொடர்பை விரும்புதல் கூடாது என்பதுபடக் கூறி, விரும்புதல் கருத்தாயின் எம் மனை வாரற்க என்று கூறினாள் தோழி. தோழியினது இக்கூற்றின்கண், தலைமக்களது வாழ்வில், புகழ்க்கு மாசு தரும் செயல் தோன்றுமிடத்து, அதனை முன்னறிந்து காக்கும் முதுக்குறைவு நட்புக்கடன் பூண்டார்க்கு அறம் என்பது தோன்ற நிற்பது கண்ட ஆசிரியர் வங்கனார் அதனை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். தடமருப் பெருமைப் பிறழ்சுவல் இரும்போத்து மடநடை நாரைப் பல்லினம் இரிய நெடுநீர்த் தண்கயம் துடுமெனப் பாய்ந்து நாட்டொழில் வருத்தம் வீடச் சேட்சினை 1இருள்புனை மருதின் இன்னிழல் வதியும் யாணர் ஊரநின் மாணிழை மகளிரை எம்மனைத் 2தந்துநீ தழீஇயினும் அவர்தம் புன்மனத் துண்மையோ 3அரிதே அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்தும் நன்றி சான்ற கற்போடு எம்பா டாதல் அதனினும் அரிதே. தோழி தலைமகனை வாயில் மறைத்தது. உரை : தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து - பெரிய கொம்புகளையுடைய எருமையின் பிறழ்ந்த பிடரியையுடைய கரிய ஆண்; மடநடை நாரைப் பல்லினம் இரிய - மடப்பம் பொருந்திய நடையினையுடைய நாரையினம் பலவும் அஞ்சி நீங்கும் படியாக; நெடு நீர்த் தண்கயம் துடும் எனப் பாய்ந்து - ஆழ்ந்த நீரையுடைய தண்ணிய குட்டத்தின்கண் துடும் என்ற ஓசையுண்டாகப் பாய்ந்து நீராடி; நாட்டொழில் வருத்தம் வீட -நாட்போதில் செய்த உழுதொழிலாற் பிறந்த தளர்ச்சி நீங்க; சேண்சினை இருள்புனை மருதின் இன்னிழல் வதியும் யாணர் ஊர - சேணுற உயர்ந்த கிளைமுற்றும் இருளுண்டாகத் தழைத்த மருதமரத்தின் இனிய நிழலில் கிடந்துறங்கும் புது வருவாயினை யுடைய ஊரனே; நின் மாணிழை மகளிரை - நின்னால் அருளப்பட்ட மாண்புடைய இழைகளை யணிந்த பரத்தையரை; எம்மனைத் தந்து நீ தழீஇயினும் - எமது இம்மனைக்கட் கொணர்ந்து வைத்துத் தழுவினையாயினும்; அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிது - அவருடைய புல்லிய மனத்தின்கண் உண்மையான அன்பு உளதாதல் அரிது; அவரும் - மனையிடத்து வதுவையால் கொணரப் படும் அம்மகளிர்தாமும்; பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்தும் - பசிய தொடி யணியும் பெண்மகவோடு ஆண் மக்களையும் பெற்றா ராயினும்; நன்றி சான்ற கற்போடு - அறம் அமைந்த கற்பினால்; எம்பாடு ஆதல் - எம்போலும் குல மகளிர்எய்தும் பெருமையை உடையராதல்; அதனினும் அரிது - அவர் மனத்து உண்மையினும் அரிதாகும்காண் எ.று. ஊர, நின் மகளிரை, எம்மனைத் தந்து, தழீஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிது; அவர் சிறுவர்ப் பயந்தும், எம்பாடாதல் அதனினும் அரிது; ஆதலால், அவர் சூழலில் வீழ்ந்து ஒழுகும் நீ எம்மை நயந்து இவண் வருதல் வேண்டா எனக் குறிப்பெச்சத்தை விரித்துரைத்து வினை முடிவு செய்க. எருமைப்போத்து இரிய, பாய்ந்து, வீட, இன்னிழல் வதியும் என இயையும். எருமையின் ஆணைப் போத்து என்பது மரபு; "ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்து1" எனப் பிறரும் குறித்தல் காண்க. சுவல், பிடரி. ஆழமான நீர்நிலையை நெடுநீர் என்றல் இயல்பு; அதன்கண் வீழும் பொருள் துடும் என்ற ஓசையைச் செய்தலின், துடு மெனப் பாய்ந்து என்றார். "நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து1" என்று சான்றோர் கூறுப. நாட்டொழில், நாட் காலையில் தொடங்கிச் செய்யும் உழவுத் தொழில். வருத்தம் ஈண்டுத்தளர்ச்சி மேற்று. இருளுண்டாகத் தழைத்த மருத மரத்தை இருள்புனை மருது என்றார். பரத்தையரை மாணிழை மகளிர் என்றது, பெண்மை நலத்தினும் இழை நலமே அவர்களால் பெரிதும் விரும்பப்படுவது என்றற்கு, பரத்தையரையும் வதுவை செய்துகோடல் உண்டு என்பது தோன்ற, எம்மனைத் தந்து தழீஇயினும் என்றார்; " பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து வதுவை யயர்ந்தனை என்ப2" என்றார் பிறரும். வரைந்துகோடற் கேற்ற ஆண்மக்கள் குன்றினமையின் பரத்தையாயினாரை மணந்து கோடல் குற்றமாகா தென்பது பண்டை நாள் மரபு. தம்மைப் பேணற் குரிய ஆடவர்பால் பரக்கும் உள்ளத்த ராகலின், பரத்தையர் மனத்தைப் புன்மனம் என்றார். தலைமக்கட்குப் பரத்தையர் வயிற்றிற் பிறக்கும் மக்கட்குத் தலைவிக்குப் பிறக்கும் மக்களை யொப்பத் தாயவுரிமை யில்லையாதலின், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்தும் என்றார். ஆண்மகவினும் பெண்மகவே பரத்தைமைக்கு ஆக்கம் என்பது தோன்றப் பைந்தொடி மகளிரொடு எனச் சிறப்பித்தார். தலைவன் போற்றாவொழுக்கம் பூண்டக்காலையும் யாவதும் மாற்றாத அறம்புரிந்தொழுகும் கற்பு, நன்றி சான்ற கற்பு எனக் கொள்க. பாடு, பெருமை; "கற்றார் அனைத்திலர் பாடு3" என்றாற்போல. ஆனுருபின் பொருட்டாய ஒடு நீண்டது. தலைவனது பரத்தைமை யொழுக்கத்தின் செயற் புன்மையை உள்ளுறைவகையால் குறிப்பாய் உரைக் கின்றமையின், வெளிப்படையில், பரத்தையர் மனத்தின் புன்மையை எடுத்துரைக்கலுற்ற தோழி, பரத்தையர்க்குக் கற்புநலத்தால் பிறக்கும் அழகினும் ஆடையணிகளாற் பிறக்கும் புறவழகிலே ஈடுபாடு மிகுதி என்பாள், அவரை மாணிழை மகளிர் என்றும், அவர்களை மனைக்குரிய மகளிராக வதுவை செய்துகோடல் செவ்விதன்று என்றும், ஒருகால் காமக்கிழத்தியராகக் கொண்டாலும் அவரது மனம் பொருளே நோக்கும் புன்மைத்தன்மை நீங்காது என்றும், பொருட்குறைபாடு இல்லாதொழியின், உண்மையன்பு கொள்வதும் இன்று என்றும் கூறுவாள், எம்மனைத் தந்து நீ தழீஇயினும் அவர் தம் புன்மனத்து உண்மையோ அரிது என்றும் கூறினாள். அன்றியும், ஒரோவழி அவர்பால் தூயமனமும், உண்மையன்பும் உளவாய வழியும், அவர் வயிற்றிற் பிறக்கும் மக்கள் எம்பாற் பிறக்கும் புதல்வரோ டொத்த உரிமை பெறாராகலின் சிறப்பிலர் என்றற்கு அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்தும் என்றும், மகப் பெற்றவழியும், பரத்தையர், அறவோர்க் களித்தலும் துற வோர்க் கெதிர்தலும் ஆகிய அறம்புரி யுரிமையும், ஆன்ற கற்பும் உடைமையால் குலமகளிர்க் குளதாகும் பெருமையை எய்தார் என்பாள், நன்றி சான்ற கற்போடு, எம்பாடு ஆதல் அதனினும் அரிது என்றும் கூறினாள். எருமைப் போத்து நாரையினம் இரியுமாறு தண்கயத்துள் துடும் எனப் பாய்ந்தாற் போல, அறவோரும் துறவோருமாகிய சான்றோர் பலரும் வெறுத்து நீங்குமாறு ஊரெங்கும் அல ரெழப் பரத்தையர் குழுவில் வீழ்ந்தனை என்றும், அவ் வெருமை நாட்டொழில் வருத்தம் வீட மருதின் இன்னிழல் அடைந்தாற்போலப் பரத்தையர் கூட்டத்துப் பிறந்த உவர்ப்பு நீங்கப் பூங்காக்களில் விளையாட் டயர்ந்தனை என்றும் உள்ளுறை கொள்க. இதனால் தோழி வாயில் மறுப்பது பயன் என அறிக. 331. உலோச்சனார் களவுக் காதலுறவு கொண்ட தலைமக்கள் பகற்போதில் விளையாட்டிடத்தும் குறியிடத்தும் தம்மிற் கண்டு தமது காதலை வளர்த்துவந்தனர். அந்நெறியில் அவர்களது காதல் நன்முறையில் வளர்ந்து வந்தமை தோழிக்கு இன்பம் செய்தது. தலைமகனது காதல் உறைத்துச் சிறத்தல் வேண்டி அவனை இரவின்கண் தலைவி மனையின் சிறைப்புறத்தே அவளைக் கண்டு இன்புறுதற் குரிய ஏற்பாட்டினைச் செய்து தலைவியின் உடன்பாட்டினைப் பெற்றாள். மறுநாள், தலைமகனைப் பகற்குறியிடத்தே கண்டு, தன் கருத்தைப் பைய உரைக்கலுற்று, "நெய்தல்நிலத் தலைவனே, எமது ஊர் மிகவும் நல்லது; பொருள்வளத்திலும் ஒருவகையாலும் வெறுப்பை விளைவிக்கும் குறைபாடு இல்லாதது. எம்மூர்க்கு இன்றைய இவ்விரவுப்போதில் நீ வரினும் ஒரு குற்றமும் விளை யாது; எம்மூரைச் சேர்ந்த சேரியில் தமர் என்றும் பிறரென்றும் அறியமுடியாத அளவு மக்கட்பெருக்க முண்டு. அதனால் நீ வருவாயாயின் உன்னை எவரும் கண்டு கொள்ளார்"என்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைவன்பால் தலைவிக் குள்ள காதல் சிறந்து இரவுப்போதில் வரவேற்று விருந்தோம்பும் அளவுக்குப் பெருகியிருப்பதைப் புலப்படுத்தி, அவளது காதலுள்ளத்தை அந்நெறியில் உறைத்துநின்று இயங்கு மாறு செய்யும் சூழ்ச்சி விளங்குவது கண்ட ஆசிரியர் உலோச்ச னார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். உவர்விளை உப்பின் உழாஅ உழவர் ஓகை உமணர் வருபதம் நோக்கிக் கானல் இட்ட காவற் குப்பை புலவுமீன் உணங்கற் படுபுள் 1ஓப்பும் 2மடநோக் காயம் இடனுற் றேறி எந்தை திமில்இது நுந்தை திமில்என வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் திண்டிமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப இனிதே தெய்யஎம் முனிவில் நல்லூர் இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம் பிறர்பிறர் அறிதல் யாவது தமர் 3தம அறியாச் சேரியும் உடைத்தே இது, தோழி 4இரவுக்குறி வலித்தது. உரை : உவர்விளை உப்பின் உழாஅ உழவர் - உவர்நிலத்து விளையும் உப்பினை ஏரால் உழுவதின்றிக் கையாற் பாத்தி கட்டி விளைக்கும் உழவர் ; ஓகை உமணர் வருபதம் நோக்கி - ஆரவாரத்தோடு வரும் உப்புவணிகரது வரவு நோக்கி; கானல் இட்ட காவற் குப்பை - கானலிடத்தே தொகுத்துக் குவிக்கப் பட்ட காவலை யுடைய குவையின்மேல்; புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பும் - புலால் நாறும் மீன்உணங்கலைக் கவரவரும் புள்ளினங்களை ஓப்பும்; மடநோக்கு ஆயம் - மடப்பத்தை யுடைய நோக்கினையுடைய இளமகளிர்; இடனுற்று ஏறி - உப்புக்குவை சரியாத இடம் கண்டு மேலேறி நின்று; எந்தை திமில் இது நுந்தை திமில் என - எம் தந்தையது திமில் இது நும்தந்தையின் திமில் இது என்று சொல்லி; வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் திண்திமில் எண்ணும் - சங்குகள் மேயும் கடலில்மீன் வேட்டம் புரிதற்குச் சென்ற தம் உறவின ருடைய திமில்களை எண்ணும்; தண்கடல் சேர்ப்ப - தண்ணிய கடல்நிலத் தலைவனே; எம் முனிவில் நல்லூர் இனிது - எம்முடைய வெறுப்பில்லாத நல்ல ஊர் மிகவும் இனிய தொன்றுகாண்; இனி வரின் தவறு மில்லை - இப்பொழுது நீ வரினும் ஒரு குற்றமும் இன்றாம்; எனையதூஉம் பிறர் அறிதல் யாவது - எனைத்தும் பிறர் பிறரை அறிதல் எவ்வாறாம்; தமர் தம அறியாச் சேரியும் உடைத்து - இவர் தம்மவர் இது தமது என அறியலாகாத குடிப்பெருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய சேரியையும் உடைத்தாகலான் எ.று. தண்கடற் சேர்ப்ப, எம் முனிவில் நல்லூர் இனிது, இனி வரின், தவறும் இல்லை; பிறர் பிறர் அறிதல் யாவது; தமர் தம அறியாச் சேரியும் உடைத்தாகலான் எனக் கூட்டி வினை முடிவு செய்க. தெய்ய: அசைநிலை. பொருள் விளைவிக்கும் தொழிலுக் கெல்லாம் உழவு பொதுவாகலின், உப்பு விளை விப்போரையும் உழவர் என்பர்; ஆயினும் ஏரால் நிலத்தை உழுவோரின் வேறுபடுத்தற்கு உழாஅ உழவர் என்றார். உப்புக் குவையை இரவும் பகலும் காவலரை நிறுவிக் காத்தல் மர பாகலின், காவற்குப்பை எனப்பட்டது. மடநோக்கு, இளமை யால் பிறக்கும் வெள்ளை நோக்கம். உப்புக்குவை சரியாத வகையில் அமைந்த இடம் கண்டு ஏறவேண்டுதலின் இடனுற் றேறி என்றார். கடலில் தோன்றும் திமில்களை இனிது நோக்கற்கு அமைந்த இடங்கண்டு ஏறி என்றுமாம். செல்வ முடைமை தோன்ற நல்லூர் என்றும், வாழ்பவர் வெறுப்புற்று நீங்குதற் குரிய குறைபாடில்லாத ஊர் என்றற்கு முனிவில் நல்லூர் என்றும் கூறினார். ஊரைச் சேர இருக்கும் குடி யிருப்புச் சேரி எனப்படும். களவின்கண், பகற்போதில் தலைமகளோடு விளையாடி இன்புற்ற தலைமகன் இருள் மாலைப்போது நெருங்குதலும், தன் இருப்பு நோக்கிப் புறப்படத் தலைப்படக் கண்ட தோழி, உள்ளுறையால், இரவுக் குறிக்கண் அவனைத் தலைக்கூடற் கெழுந்த வேட்கையைப் புலப்படுத்துவாளாய், வெளிப்படையாக அவனை நோக்கி,இப்பொழுது நீ எம் மனைக்கு வருக; நின் வரவு யார்க்கும் குற்றமாய்த் தோன்றாது என்பாள், இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம் என்றாள். நீ வருங்காலம் இரவாதலின் உன்னை ஒருவரும் அறியார் என்பாள், பிறர் பிறர் அறிதல் யாவது என்றும், ஊர்க்குட் போதருங்கால், புறத்தே யுள்ள சேரியைக் கடந்து எய்துமிடத்து, அங்கு வாழ்வோர் சிலராகலின் இனிது அறிந்துகோடல் கூடு மெனக் கருதற்க; வருவோரைத் தமர் என்றும் பிறர் என்றும் வரும் பொருள் தம்பாலதோ பிறர்பாலதோ என்றும் நோக்கும் திறமுடையரல்லர் என்பாள், தமர் தம அறியாச் சேரியும் உடைத்தே என்றும் கூறினாள். புலவுமீன் உணங்கலிற் படும் புள்ளினத்தை ஓப்பும் இள மகளிர் அதனைவிட்டு உப்பின் குப்பை ஏறிக் கிளைஞர் திமிலை எண்ணுவர் என்றதனால். பகற்போதில் ஆயமகளிரை நீக்கி நின்னைக் கூடி யொழுகும் இவள், அதனை விட்டு, இரவுக்குறிக்கண் நீ போந்து செய்யும் குறிவகையை நின தென்றும் பிறிதென்றும் தேர்ந்து கூடி இன்புறுதலை விழை கின்றாள் என உள்ளுறுத் துரைத்தாள் எனக் கொள்க. எமது ஊர் முகம்திரிந்து நோக்கக் குழையும் மென்மைப் பண்பிற்று விருந்து என்பதை நன்குணர்ந்து, அன்புமிக ஓம்பும் அமைதி யுடைத் தென்றற்கு, நல்லூர் என்றும், விருந்தினர் வேண்டிய வேண்டியாங்கு அளிக்கும் கொடைநலம் உடைத்து என்பாள், முனிவில் நல்லூர் என்றும், இவ்வாற்றால், எம்மூர் வரு வார்க்குக் குறைவற்ற இன்பம் தரும் இடமாம் என்பாள், இனிது என்றும் கூறினாள். இதனால், தலைமகனை ஓராற் றால் வரைவு கடாவுவது பயன். 332. குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் கண்ணத்தனார் என்ற இச்சான்றோருடைய தந்தை குன்றூர் என்னும் ஊரினர். குன்றூர் எனப் பெயரிய ஊர்கள் தமிழகத்திற் பல வுண்மையின், இஃது இன்ன நாட்டதென வரையறுத்தற்கு இயலவில்லை. சிறந்த புலமை நலத்தாலோ உயரிய சான்றாண்மை யாலோ நாட்டிற்கும் ஊர்க்கும் பெருநலம் புரிந்தமையின், நாட்டின் அரசு, கண்ணத்தனாருடைய தந்தைக்குக் கிழார் என்ற சிறப்பினைத் தந்து பெருமை செய்துளது. அதனால் அவர் குன்றூர்கிழார் எனப்பட்டனர். நாளடைவில் அவரது இயற்பெயர் மறையவே, குன்றூர் கிழார் என்ற சிறப்புப் பெயரே நாட்டில் நிலைபெற்றது. அதனால், அவருடைய மகனார், குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்று சான்றோர்களால் குறிக்கப்படு வாராயினர். இவர் பாடியதாக இவ்வொருபாட்டுத் தான் கிடைத்துள்ளது. களவொழுக்கினனான தலைமகன், தலைவியை வரைந்து கோடற்குள் கடமை காரணமாக அவளைப் பிரிந்து செல்லும் நிலைமையனாயினன். தலைமை வாழ்வுக்குக் காதலினும் கடமை மிக வுரிய தொன்றாகலின், தலைவன் பிரிவுக்குத் தலைமகளும் இசைந்தொழுகினாள். ஆயினும், இளமையின் துடிப்பும் காதலின் கடுப்பும் அவள் உள்ளத்தை நாளும் அலைக் கலுற்றன. கற்புக் காலத்திற் போலாது களவின்கண் தலைமகன் நிகழ்த்தும் பிரிவுகள் யாவும் மிகமிகக் குறுகிய காலத்தனவாகும். ஆயினும், அவை தலைமகட்கு ஆற்றாமை விளைவித்தன. அவளுடைய வேட்கைப் பெருக்கம், கற்பிற் பெறப்படும் அழி வில் கூட்டத்தை நோக்கி நின்றது. அதற்கு இன்றியமையாத வரைவை மேற்கொள்ளாமல் அவன் பிரிவு மேற்கொண்டது தலைவிக்கு மிக்க மனநோயைத் தந்தது. மேலும், பிரியாக் காலங்களில், அவன், இரவுக் காலத்து இருள் மிகுதியும், கார்முகில் கூட்டமும், இடி மின்னுமழை முதலியனவும் காட்டாற்றின் நீர்ப்பெருக்கும் மலைவழியின் தீங்கும் நினையாது, குறியிடம் போந்து நீங்குவது தலைவியின் கருத்தை அழித்தது. இவ்வாற்றால் தலைவி மேனி மெலிந்து வேறுபடலானாள். அவ்வேறுபாடு புறத்தார்க்குப் புலனாயின் வரும் ஏதம் நினைந்த தோழி அவளை நோக்கி, "நீ இங்ஙனம் மேனி வேறுபாடு எய்துவது தீது; நீர் நிலைக்குள் நின்று குவளைமலர் கொய்வோர் நீர் வேட்கைக்கு வருந்தினாற் போல, இரவிடைத் தவிராது வருதலால் தலைவனது கூட்டத்தை இனிது பெற்றும், பெறாய்போல வருந்தி மெலி வதும், தொடிமுதலிய இழைகள் நெகிழ விடுவதும் தகுவன அல்ல" என வற்புறுத்தினாள். இவ்வாறு ஒருமுறை இருமுறை யன்றிப் பன்முறையில் தோழி உரைக்கவும் தலைவி ஆற்றாளாய், "தன்னுயிர் காத்தலைப் பேணாது முதல் நாள் இரவு வந்தாற் போலப் பன்னாளும் இரவின்கண் நம் காதலர் நள்ளிருளில் வருதலைக் காண்கின்றேன்; இந்நிலையில் யான் எங்ஙனம் இழைநெகிழ் துன்பம் எய்தாது இனி திருத்தல் கூடும்?" என்றாள். தலைவியின் இக்கூற்றின்கண், தலைமகன்பால் அவட்கு உண்டாகிய காதல் முறுகிப் பெருகி ஒரு நொடிப் பொழுதும் அவனை யின்றி உயிர் வாழாளாகும் செவ்வி யெய்தி யிருப்பதும், அவளது உள்ளம் முற்றும் அவனை வதுவையிற் கூடிப் பெறும் அழிவில் கூட்டத்து அயர்வில் இன்பத்தையே நாடி நிற்பதும் இனிது தோன்றக் கண்ட ஆசிரியர் கண்ணத்தனார் அவையாவும் குறிப்பால் உணரப்படுமாறு இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். தலைமகளின் சால்பும் பெண்மைப்பண்பும் குன்றாத வகையில் அவளுடைய சொற்கள் அமையுமாறு இப்பாட்டுச் சமைந்திருப்பது கண்டே இதனை இங்கே தொகுத் துள்ளனர். இகுளைத் தோழிஇஃ தென்னெனப் படுமோ குவளை குறுநர் நீர்வேட் டாங்கு நாளும் 1நாளும் கெழீஇய தோளே தொன்னிலை 2அழியல்என் தொடிஎனப் பன்மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை ஈன்பிண வொடுக்கிய 3இருங்கேழ் வயப்புலி இரைநசைஇப் 1பரக்கும் மலைமுதற் சிறுநெறி தலைநாள் அன்ன பேணலன் பலநாள் ஆரிருள் வருதல் காண்பேற் கியாங்கா கும்மே இலங்கிழை 2செறிப்பே. இது, களவுக்காலத்துப் பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுப்பத் தலைவி கூறியது; வன்பொறை எதிர்மறுத்ததூஉமாம். உரை : இகுளைத் தோழி - இகுளையாகிய தோழி; இஃது என் எனப்படுமோ - இது யாதாய்க் கருதப்பட்டு எவ்வாறு முடியுமோ, அறியேன்; குவளை குறுநர் நீர் வேட்டாங்கு - நீர்நிலைக்குள் இறங்கி நின்று குவளைமலரைக் கொய்வோர் நீர்வேட்கை யுற்று வருந்தினாற் போல; நாளும் நாளும் கெழீஇய தோள் தொடி தொல்நிலை அழியல் என் என - நாடோறும் நின் தோள்கள் காதலனைக் கூடினவாயினும் பண்டைய செறிப்பு நீங்கித் தொடிகள் நெகிழ்வது என்னை என்று; நீ பன்மாண் உரைத்தல் ஆன்றிசின் - பன்முறையும் உரைத்தலைப் பொருந்தியுள்ளாய்; விடர்முகை ஈன்பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி - மலைமுழைஞ்சினுள் குட்டி யீன்ற பெண்புலியை இருத்திய பெரிய நிறத்தையுடைய வலிய புலியேறு; இரை நசைஇப் பரக்கும் - இரைபெறுதல் வேண்டித் திரியும்; மலைமுதல் சிறுநெறி - மலைப்பக்கத்துச் சிறுவழியை நடந்து; பேணலன் - தன்னுயிரையும் பொருளெனக் கருதாமல்; தலைநாள் அன்ன - இரவுக்குறி வரைந்த அத் தலைநாளில் வந்தாற் போல; பலநாள் ஆரிருள் வருதல் காண்பேற்கு - பலநாளும் மிக்க இருளில் வருதலைக்காணும் எனக்கு; இலங்கிழை செறிப்பு யாங்கு ஆகும் - இலங்குகின்ற தொடி முதலிய இழைகள் செறிப்புண்டிருத்தல் யாங்ஙனம் இயலும்? நீயே கூறுக எ.று. "தோழி, குவளை குறுநர் நீர் வேட்டாங்குத் தோள் நாளும் கெழீஇய வாயினும், தொடி தொன்னிலை அழியல் என்; இஃது என்னெனப்படுமோ" எனப் பன்மாண் உரைத்தல் ஆன்றிசின்; ஈன்பிணவு ஒடுக்கிய வயப்புலி, இரைநசைஇப் பரக்கும் மலைமுதற் சிறுநெறி, தலைநாள் அன்ன பேணலனாய் வருதல் காண்பேற்கு, இழைசெறிப்பு யாங்காகும், நீயே நினைந்து கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தொன் னிலை யழிதலாகிய பொருள் பின்னர்க் கூறப்படுதலின். இஃது என்னும் சுட்டு செய்யுளாதலின் முற்பட வந்தது. குவளை, இனிய நீர்நிலைக்கண் வளர்ந்து மலரும் பூ. வேட்டுழி வேட் டாங்கு நுகர்தற் குரிய பொருளிடையே இருந்தும், வேட்கை யுற்று வருந்துதல் உலகத்தின்மை தோன்ற குவளை குறுநர் நீர்வேட்டாங்கு என்றார். இவ்வாறே ஏனைச் சான்றோரும் "ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு1" என்பர். தொன்னிலை, பண்டைய தொடி செறிந்திருந்த நிலை. பரத்தல் , திரிதல்; "பரந்து கெடுக உலகியற்றியான்2" என்றாற் போல. தலைநாள், முதல்நாள். தொடியேயன்றிப் பிற இழைகளும் மேனிமெலி வால் நிலையில் நெகிழ்ந்தமை தோன்ற, இலங்குதொடி என்னாது இலங்கிழை என்றார். யாங்காகும்மே என்புழி ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. இகுளை,தோழி என்னும் பொருள்பட வழங்கும் பெயர்த் திரிசொல். இகுளைத் தோழி என்பது முதல் அழியலென் தொடி என என்பது ஈறாக வுள்ளன தோழி கூற்று; அதனைத் தலைவி கொண்டெடுத்து மொழிந்தது மறுத்தற்பொருட்டு. களவின்கண் ஒழுகும் தலைமகட்குக் காதல்பெருகி அழி வில் கூட்டம் பெறுதற்கண் வேட்கை பெருகினமை யறியாத தலைமகன், இரவுக்குறிக்கண் வந்து தலையளித்தலை மேற் கோண்டிருந்தானாக, தலைமகட்கு வேறுபாடு பெரிதும் உண்டாதலைத் தோழி யறிந்து. அதன் ஏதம் நினைந்து வற்புறுத்துவாள், இகுளைத் தோழி இஃது என் எனப் படுமோ என்று முகம்புகுந்தாள். அவள் கருத்து வெளிப் படையாக விளங்காமை கண்ட தலைவி, அவளை வியந்து நோக்க, "நாடோறும்" தலைமகனைத் தலைக்கூடப் பெற்றும், நின் தோள்கள் தொடி நெகிழ்ந்து மெலிகின்றன; நீர்நிலையில் இறங்கிக் குவளைப்பூக் கொய்வோர் நீர் வேட்கை கொண்டு வருந்துதற்கு இடமில்லை; அங்ஙனம் ஒருவர் வருந்துவராயின், அஃது எவ்வாறோ அவ்வாறு உளது நின் செயல்" என்பாள், குவளை குறுநர் நீர் வேட்டாங்கு நாளும் நாளும் கெழீஇய தோளே, தொடி தொன்னிலை அழியல் என் என்று கூறினாள். காதலன் பிரிவின்கண் கூட்டம் இன்மை யால் மகளிர் எய்தும் இவ்வேறுபாடு, நாளும் கூட்டம் பெற் றொழுகும் நினக்கும் உண்டாதல் கூடாது எனத் தோழி பன்முறையும் வற்புறுத்திவந்தாள். அம் முறையே , தோழி இன்றும் உரைத்தாளாக அது பொறாது மறுக்கலுற்று, பன்மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே எனத் தலைவி கூறி னாள். நாளும் யான் கூட்டம் பெற்றும் பெறார் எய்தும் வேறுபாடு எய்துதற்குரிய காரணம் யாது என அறிந்தாயில்லை என்பாள், பன்மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே என்று மொழிந்தது தோழி யுள்ளத்தில் சூழ்ச்சி தோற்றுவித்தது. இரவுக் குறிக்கண் போந்து காதலன் செய்யும் தலையளியினும் அவன் வரும் நெறியின் ஏதம் நினைத்த விடத்துத் தோன்றும் துன்பம் பெரிதாகலின், என்பால் மெலிவு தோன்றித் தோள் தொடிநெகிழச் செய்ததுகாண் என்பாள். பலநாள் ஆரிருள் வருதல் காண்பேற்கு யாங்காகும்மே இலங்கிழை செறிப்பே என்றும், வருந்தோறும் அவனது நெறி அவன் உயிரை விழுங்கும் அத்துணைக் கொடுமையுடைத்தாய் இராநின்றது என்றும் , அற்றாயினும், அவனுக்குத் தன் உயிரினும் நமது கூட்டம் பெரும் பொருளாக வுளது; நமக்கோ பொறுத் தற்கரிய துன்பமாயுள்ளது என்பாள். தலைநா ளன்ன பேணலன் என்றும் கூறினாள். விடர்முகை, ஈன்பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி, இரைநசைஇப் பரக்கும் மலைமுதற் சிறுநெறி என்றது, அவன் வரும் நெறியின் கொடுமை கூறியது. இரவிற் போந்து நம்மை அருளுவதே தம் உயிர்க்கு உறுதி எனக் கருதும் நம் தலைவர், குட்டி யீன்ற பிணவின் பசிதீர்த்தற்கு வயப்புலி இரைதேடித் திரிதல் போலத் தம்பால் பேரன்புற்ற நமது வேட்கைமிகுதி யுணர்ந்து விரைவில் வரைந்து கோடற்குரிய முயற்சி தலைப்படுதல் வேண்டும் என்பது நெறியின் ஏதம் கூறியதன் குறிப்பு எனக் கொள்க. இதனாற் பயன், தலைவனை வரைவு கடாதல் என்க. 333.கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் கள்ளிக்குடி என்பது ஓர் ஊர்; இப்பெயருடைய ஊர்கள் பல இருத்தலின், இவ்வூர் இன்னநாட்டது என வரைந்து கூறற்கு இடமில்லை. பூதன் என்பார்க்கு மகனாதலால் இவர் பூதம் புல்லனார் எனப் பட்டார். இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரு பாட்டுக் காணப்படுகிறது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் பொருளும் புகழும் கருதித் தன்மனைவியிற் பிரிந்து செல்லும் கடமையுடைய னானான். பிரிவினும் வருத்தம் பயப்பது பிறிதில்லை யாகலின் தலைவிக்கு ஆற்றாமை மிகுந்தது. பொருள் வினை புகழ்களின் இன்றியமையாமையும், அவற்றைக் கருதிப் பிரியும் தலைவனது வாய்மையும் செயல்வன்மையும் கூறித் தோழி அவளை ஆற்று வித்தாள். அவன் பிரிவுக் காலம் நெடித்தமையின், தலைவியின் ஆற்றாமை கைம்மிகுந்தது. அவளை ஆற்றுவிக்கும் தோழி, சுவரிடத்தே யிருந்து பல்லி யொன்று சொல்லக் கேட்டு அதன் பயனாகத் தலைவன் வரவுகூறி ஆற்றுவிப்பாளாய், "தோழி, நம் தலைவர் சென்ற காடு, மழைவறம் கூர்ந்து வெயில் மிகுந்து தெறுதலால், மூங்கிற்கழை பசுமையின்றி உலர்ந்து கிடக்கும் சிறு நெறிகளையுடையது; பெருங்கற்கள் நிறைந்த மலைவழியி னருகில் கல்லூற்றுக்கள் உண்டு. அவற்றின்கண் ஊறும் சிறிதாகிய நீரையுண்டற்கு யானையும் புலியுமாகிய கொடிய விலங்குகள் தம்மிற் பொருது ஒன்றை யொன்று வெருட்டிவிட்டு உண்ணும். அவ்வழியே செல்வோர் அவற்றைக் காண்பராயினும், நம் தலைவர் அதனால் நெஞ்சுரம் அழியாது, ஊக்கம் மிகுந்து கருதிய பொருள் குறித்துச் சென்றுள்ளார். மற்று, அவர் விரைவிற் போந்து நின் தோள்நலம் நுகர்வர் என்பது பல்லி சொல்லுவதால் தெளி வாகிறது; ஆதலால் நின் மனக்கவலை ஒழிவாயாக" என்று உரைத்தாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைமகன் சென்ற நெறி கொடிதாயினும், அதனைப் பொருளாகக் கருதாமல் வளமை வேண்டி அரும்பொருட்கு அகன்ற அவனது மனத்திட்பமும் மனையகத்துச் சுவரைப் பொருந்தி நின்று உரைக்கும் பல்லி சொல்லின் வாய்மையும் தோன்றித் தலைவியுள்ளத்தை ஆற்று விக்கும் திறம் கண்ட ஆசிரியர் பூதம்புல்லனார் இப்பாட்டிடை வைத்துப் பாடியுள்ளார். மழைதொழில் 1உலர்ந்து மாவிசும் புகந்தெனக் கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் பரலவல் ஊறற் சிறுநீர் மருங்கிற் பூநுதல் யானையொடு புலிபொரு துண்ணும் சுரன்இறந் தரிய என்னார் 2உரன்மிகுந் 3துளமலி நெஞ்சமொடு வளமை வேண்டி அரும்பொருட் ககன்றனர் காதலர் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் நீங்குக மாதோநின் அவலம் ஓங்குமிசை உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி நள்ளென் யாமத் துள்ளுதொறும் படுமே இது, பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது. உரை : மழை தொழில் உலர்ந்து மாவிசும்பு உகந்தென - மழை முகில் பெய்தற்றொழில் வற்றிக் கரிய விசும்பின்கண் உயர்ந்து சென்றொழிய; கழை கவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறி - மூங்கில்கள் பசுமையழகு அழிந்து தோன்றும் மலையூடு செல்லும் சிறுவழியில்; பரல் அவல் ஊறல் சிறுநீர் மருங்கில் - பரற்கற்கள் பொருந்திய கல்லூற்றில் ஊறிய சிறிதாகிய நீர் பொருந்திய நீர்நிலையருகில்; பூநுதல் யானையொடு புலி பொருது உண்ணும் - புலி, மெல்லிய நெற்றியையுடைய யானையோடு பொருது வென்று வெருட்டிவிட்டுத் தான் இருந்து நீர் அருந்தும்; சுரன் அரிய என்னார் இறந்து - சுரத்தைச் செல்லற்கு அரிதெனக் கருதாமல் கடந்து; உரன் மிகுந்து - செலவின்கண் மனத்திண்மை சிறந்து; உளமலி நெஞ்சமொடு - ஊக்கம் மிகுந்த நெஞ்சுடனே; வளமை வேண்டி - செல்வப்பேறு கருதி; அரும்பொருட்கு அகன்ற காதலர் - அரும்பொருள் தேடிச் சென்ற தலைவராகிய காதலர்: முயக்கு எதிர்ந்து - நின் முயக்கத்தை விரும்பி; திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் - திருந்திய இழையணிந்த பெரிய தோள்களைக் கூடுவர் போலும்; நின் அவலம் நீங்குக - நீ நின் வருத்தம் நீங்குவாயாக; உயர்புகழ் நல்லில் - உயர்ந்த புகழையுடைய நல்ல இல்லின்கண் உள்ள; ஓங்குமிசை ஒண்சுவர் பொருந்தி - நெடிதுயர்ந்த ஒள்ளிய சுவரைப் பொருந்தியிருந்து; நயவரு குரல பல்லி - விரும் பத்தக்க குரலையுடைய பல்லி; நள்ளென் யாமத்தும் - நடுவி யாமத்தும்; உள்ளுதொறும் படும் - அவரை நினைக்குந் தோறும் சொல்லாநின்ற தாகலான் எ.று. மழை உலர்ந்து மாவிசும்பு உகந்தென, கழை கவின் அழிந்த சிறுநெறி, ஊறற் சிறுநீர் மருங்கில், யானையொடு பொருது புலியுண்ணும் சுரன் அரிய என்னார், இறந்து,உரன் மிகுந்து உளமலி நெஞ்சமொடு, வளமை வேண்டி, அரும்பொருட்கு அகன்ற காதலர், முயக்கெதிர்ந்து பணைத்தோள் பெறுநர் போலும்; நின் அவலம் நீங்குக; நல்லில் திண்சுவர்ப் பொருந்தி, நள்ளென் யாமத்தும் உள்ளுதொறும் படும் ஆகலான் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. தொழில் என்றது ஈண்டு மழைபெய்தலாகிய தொழில் மேற்று. தான் சுமந்து போந்த மழைநீரைப் பெய்து முகில் வறிதாயிற் றென்பார் மழை தொழில் உலர்ந்து என்றும், அதனால் நிறம் வெளுத்துப் பஞ்சுபோல் பறக்கும் மேகம் நீலவானத்தில் நெடியதுயர்ந்து சென்ற தென்றற்கு, மாவிசும்பு உகந்தென என்றும் கூறினார். உகப்பு, உயர்தல். மழையின்றி வெயில் மிகத் தெறுதலால், புல்லினத்துள் ஒன்றாகிய மூங்கில் உலர்ந்து பசுமைநிறம் இழந்து பொலிவின்றித் தோன்றுதலின், கழை கவின் அழிந்த தென்றார். கல்லதர், மலையூடு செல்லும் வழி; அது மிகவும் குறுகி யிருத்தலின் சிறுநெறி எனப்பட்டது. அவல், பள்ளம். ஊறல் , ஊற்று. சிறுநீர், சிறியதாகிய நீர்; சின்னீர் என்பதாம். நீர்வேட்கை யுற்று வந்த யானையுண்ணின் தனக்கு நீரின்றாம் என்று எண்ணிய புலி அதனோடு பொருது வெருட்டிற் றென்க. உளம் , ஊக்கம். வளமை "அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும்1" பொருந்திய நிலை பொருட்கு என்புழிக் குவ்வுருபு பொருட்டுப் பொருளது. போலும் உரையசை. ஓங்குமிசை ஒண்சுவர் எனக் கூட்டுக. பல்லி சொல்வது பயன்தரும் என்பது உலகுரை. அதுபற்றி அதனை நயவரு குரல பல்லி எனச் சிறப்பித்தார். படுதல், ஒலித்தல். மாதுவும் ஓவும் அசைநிலை. மனையின்கண் ணிருந்து அறம் புரிந்தொழுகும் கற்பொழுக் கினளாகிய தலைமகட்குத் தலைமகனது பொருட்பிரிவு மிக்க ஆற்றாமை பயந்தது கண்ட தோழி, தலைவர் வருவராதலின் நின் அவலம் ஒழிக என்றவழி, உரிய காரணமின்மையின் கொள்ளாள் என்ற கருத்தால், பிரிந்து சென்ற தலைவன் உள்ளம், மேற்கொண்ட வினை முடியுங்காறும் அதற்குரிய நினைவுசெயல்களே நிறைந்து, பிரிந்த தலைவியின் நினை வுக்கு இடனாகாமை தோன்றச் சுரன் இறந்து அரிய என்னார் உரன் மிகுந்து உளமலி நெஞ்சமொடு வளமை வேண்டி அரும்பொருட்கு அகன்ற காதலர் எனத் தலைவன் இயலை எடுத்துரைத்தாள். சுரத்தின் கொடுமை தலைமகன் செலவுக்கு அருமை காட்டினும், அதனை மதியாது அவன் கடந்து சென்றமை தோன்றச் சுரன் அரிய என்னார் இறந்து என்றும், சுரத்தின் வெம்மையும் நெறியின் கொடுமையும் ஆகியவற்றால் அஞ்சி மெலிவுறாது அவன் மனம் திண்மை மிகுந்தமை பற்றி, உரன் மிகுந்து என்றும், அதனால் அவன் பால் பொருள் செய்தற்குரிய ஊக்கம் கிளர்ந்து நின்றமையின், உளமலி நெஞ்சமொடு என்றும், வளமை யில் வழி உலகியல் வாழ்வு சிறவாமையால் வளமை வேண்டி என்றும், அவ் வளமை நிலையும் அரிய பொருளீட்டத்தாலன்றி வாயாமை பற்றி, அரும் பொருள் என்றும், பொருட் காதலராயினும் நம் தலைவர் நின்பால் பெருங்காதலர் என்பாள், காதலர் என்றும் கூறினாள் தலைமகனது காதல் நலத்தைத் தோழி இவ்வாறு கூறக் கேட்ட தலைவியுள்ளத்தில், அவனுடைய கூட்டத்தின் பால் நினைவு செல்வது தோழிக்குப் புலனாதலும், "இப்போது நின் காதலர் நின் முயக்கத்தை விரும்பிய நெஞ்சமொடு நின் தோள் தோயும் இன்பம் பெறுதற்கு வருகுவர் போலும் என்பாள், நின் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும் என்றும், அதனால் நீ நின் மனக்கவலையை ஒழித்தல் வேண்டும் என்பாள், நீங்குக மாதோ நின் அவலம் என்றும் கூறினாள் . கேட்ட தலைவி முறுவல் பூத்து, நீ இவ்வாறு வற்புறுத்தற்குக் காரணம் யாது என வினவுவாள் போல நோக்கலும், தோழி நமது இல்லின் உயரிய சுவரைப் பொருந்தி யிருந்து, அனைத்துயிரும் கண் ணுறங்கும் நடுவியாமத்தும், நாம் நினைக்குந்தோறும், பல்லி சொல்லுகின்றதுகாண் என்பாள், உயர்புகழ் நல்லில் ஓங்கு மிசை ஒண்சுவர் பொருந்தி நள்ளென் யாமத்தும் உள்ளு தொறும் படுமே என்றாள். நல்லறச் செய்கைகளால் உயர்ந்த புகழ் பெற்றது நமது மனை என்றற்கு உயர் புகழ் நல்லில் என்றும், பல்லிதான் சொல்லுகின்ற தென்பாள் ஒண்சுவர் பொருந்தி என்றும், பல்லி சொல்வதைக் கேட்டற்கு யாவரும் விரும்புவது இயல்பாதலால், நயவரு குரல பல்லி என்றும், நடுவியாமத்திலும் நம் காதலனை நாம் நினைக்குந்தோறும் பல்லி சொல்லுவது பயன் விளைப்பது ஒருதலை என்றற்கு நள்ளென் யாமத்தும் உள்ளுதொறும் படுமே என்றும் கூறினாள். "கானம் சென்றோர், புனைநலம் வாட்டுநரல்லர் மனைவயிற் பல்லியும் பாங்கொத்தது இசைத்தன1"என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. நெறிமருங்கிற் கிடந்த ஊறற் சின்னீரின் பொருட்டுப் புலி பூநுதல் யானையொடு பொரும் என்றது, பொருள்வினை கருதிச் செல்வோர், சுரத்தின் கொடுமை இடையீடு செய்யினும் அஞ்சாது சென்று செய்ப என்பது குறிப்பு; அவ்வகையில் தலைமகன் வரவு சிறிது தாழ்க்கினும் நாம் ஆற்றியிருத்தல் வேண்டுமென அறிவுறுத்தவாறு. ஆகவே தலைவி ஆற்றியிருப் பாளாவது பயன். 334. ஐயூர் முடவனார் களவொழுக்கின்கண் தலைமகன் பகற்போதில் குறியிடத்தே வந்து தலைமகளைக் கண்டு பயின்று இன்புற்றுவந்தான். அக் காலத்தே தலைவியோடு விளையாடும் ஆயமகளிர் கூட்டமும், புனத்திடைத் தொழில்புரிவோர் ஈட்டமும் அவ்வப்போது பகற்குறிப் புணர்ச்சிக்கு இடையீடு செய்தன. இதனால், தலை மக்களது காதலுணர்வு பெருகி இடையீடும் இடையூறு மில்லாத செவ்வி தேர்ந்து கூடற்கண் முடுகுவதாயிற்று. அது கண்ட தோழி, தலைமகனை இரவுக்குறிக்கண் வருமாறு வேண்ட, அவனும் அதற்கு இசைந்தான். இரவின் கண் தனியிடத்தே தலைமகனைக் காணச் செய்யும் சூழ்ச்சியைத் தோழி தலைமகட்கு உணர்த்து வதன் அருமையை எண்ணினாள். வெளிப்பட அதனை அவட்கு உரைப்ப தென்பது தலைவியின் பெண்மைக்கும் தலைமைக்கும் எளிதில் அமைவதன்று. அவள் மறாது ஏற்கும் வகையில் உரைக்க லுற்ற தோழி,தன் கருத்தாக வுரையாமல்,. "நமது தலைவர் பகற்போதில் வருவதை விடுத்துக் கருமுகில் பரந்த நள்ளிருளில் மின்னல் ஒளியை விளக்காகக் கொண்டு அருவி வீழும் மலைச் சாரல் வழியாகத் தன் கைவேலே துணையாக வருவர் என்பதாயின் நம் நிலை என்னாவது?" என்றொரு வினாவைத் தொடுக்கின்றாள். தோழியின் இக்கூற்றுத் தலைவனை இரவின்கண் வருவிக்கு மாற்றால் அவன் காதலின் திண்மையைச் சிறப்பிப்பதும், இரவு வரும் அருமையும் நெறியின் கொடுமையும் அவன் போந்து குறி பிழையாது தலைப்பெய்யும் தன்மையும் எண்ணுமாற்றால் தலைவியுள்ளத்துக் காதல் பெருகிச் சிறப்பதும் பொருளாக அமைந்து, அவனைத் தன்வழி நிற்கப்பண்ணும் சால்பு மிக் கிருப்பது கண்ட ஆசிரியர் முடவனார் அவள் கூற்றை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். கருவிரல் மந்திச் செம்முகப் பைங்கிளை பெருவரை அடுக்கத் தருவி ஆடி ஓங்குகழை ஊசல் தூங்கி வேங்கை வெற்பணி நறுவீ கற்சுனை உறைப்பக் கலையொடு திளைக்கும் வரையக நாடன் மாரி நின்ற ஆரிருள் நடுநாள் அருவி அடுக்கத் தொருவேல் ஏந்தி மின்னுவசி விளக்கத்து வரும்எனின் என்னோ தோழிநம் இன்னுயிர் நிலையே இது, தோழி இரவுக்குகுறி முகம்புக்கது. உரை : கருவிரல் மந்திச் செம்முகப் பைங்கிளை - கரிய விரல் களையுடைய பெண்குரங்கின் சிவந்த முகத்தையுடைய பசிய சுற்றம்; பெருவரை அடுக்கத்து அருவி யாடி - பெரிய மலைப் பக்கத்துள்ள அருவியில் விளையாடி; ஓங்குகழை ஊசல் தூங்கி - உயரிய மூங்கிலின் கழையில் ஊசலாட்டயர்ந்து; வெற்பணி வேங்கை நறுவீ கற்சுனை உறைப்ப - வெற்பிடத்தே அழகுண்டாக மலர்ந்த வேங்கையின் நறிய பூக்கள் மலைச் சுனையின்கண் உதிர; கலையொடு திளைக்கும் வரையக நாடன் - ஆண்குரங்குகளோடு கூடி யுறையும் மலை நாட னாகிய தலைமகன்; மாரி நின்ற ஆரிருள் நடுநாள் - மழை பெய்யாநின்ற இருள்மிக்க நள்ளிரவில்; அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி - அருவி இழியும் மலைப்பக்கமாக ஒரு வேலைக் கையில் ஏந்திக்கொண்டு; மின்னுவசி விளக்கத்து வரும் எனின் - இருளைப் பிளக்கும் மின்னலின் ஒளியில் நெறிபற்றி வருகுவன் என்றால்; தோழி -; நம் இன்னுயிர் நிலை என்னோ - நமது இனிய உயிர் நிற்கும் திறம் யாதாம் எ.று. நாடன், ஆரிருள் நடுநாள், ஒருவேல் ஏந்தி, மின்னுவசி விளக்கத்து வரும் எனின், நம் இன்னுயிர்நிலை என்னோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கருமுகத்தவும் உண்மையின் சிவந்த முகமுடையவற்றைச் செம்முகப் பைங்கிளை என்றார். அருவியாடலும் மூங்கிற் கழையில் ஊசலாடலும் குரங்குகட் கியல்பு. கலை, குரங்கின் ஆண். மாரி நின்ற நாள், மழை பெய்யாநின்ற நாள். மின்னு மின்னுங்கால் இருளைப் பிளந் தது போல் விளங்குதலின், மின்னுவசி விளக்கம் என்றார். "கோனிமிர் கொடியின் வசிபட மின்னி1" என்று பிறரும் கூறுதல் காண்க. பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைமகற்கு, இரவுக் குறி நேர்ந்த தோழி, தலைமகட்கு அதனை அறிவித்தற் பொருட்டுச் சொல்லெடுக்கின்றா ளாகலின், தலைவன் வருதற்குக் குறித்த இரவின் அருமையை மாரி நின்ற ஆரிருள் நடு நாள் என்றும், நெறியின் கொடுமையை அருவி யடுக்கம் என்றும், இருளில் நெறியறிதற்கு மின்னலின் ஒளியையும், தற்காப்புக்கு ஒரு வேலையும் கொண்டு வருகுவன் என்பாள், ஒருவேல் ஏந்தி மின்னுவசி விளக்கத்து வரும் என்றும், தான் அதனை விரும்பாதாள் போலக் கூறி, இவ்வாறு தன் உயிரைப் பொருளாக மதியாது நம்மைத் தலையளிப்ப தொன்றே கருத்திற் கொண்டுவரும் அவனது அருள் மிகுதியை நோக்கின், என் உயிர் அச்சத்தால் நடுங்குகின்ற தென்பாள், நம் இன் னுயிர் நிலை என்னோ என்றாள். பிறாண்டும் தோழி இரவு வரும் தலைமகற்கு "யாமத்து ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப, ஒரு நாள் விழும முறினும் வழிநாள், வாழ்குவ ளல்லள் என்தோழி யாவதும், ஊறில் வழிகளும் பயில வழங்குநர், நீடின் றாக இழுக்குவர் அதனால், உலமரல் வருத்தம் உறு தும்1"என்று உரைப்பது காண்க. மந்தியின் பைங்கிளை அருவி யாடியும் ஊசல் தூங்கியும் வேங்கை நறுவீ யுறைப்பக் கலையொடு திளைக்கும் என்றது, தலைமகள் முன்பு அருவியாடியும் ஊசல் தூங்கியும் சுனை குடைந்தும் தலைமகனொடு கூடி விளையாடி மகிழ்ந்த நிகழ்ச்சியை நினைப்பித்து, அன்று பகற்போதில் தலைமகனை வரவேற்ற தலைவி, இரவின்கண் அவன் வந்தவிடத்து ஏற்றல் தகவுடைத்து என்பதுபட நின்றது. இதனால் தலைவன் தெருண்டு வரைவானாவது பயன் என்க. 335. வெள்ளி வீதியார் களவின்கண் ஒழுகும் தலைமக்களது காதல் நாள் அடைவில் பலவேறு நெறிகளால் வளர்ந்து சிறந்தது. இனித் தலைவியை வரைந்து கொள்வதையொழியத் தனக்கு வேறு வழியில்லை யென்பதைத் தலைவன் உணர்ந்து வரைவுக்குரியவற்றை முயலத் தலைப்பட்டான். அதனால், அவன் அடிக்கடி தலைவியைக் கண்டு பயிலுவது இயலா தாயிற்று. வரைவுக்குரிய பொருள்வினை குறித்து வெளியூர்களுக்குச் சென்றான். அவனுடைய முயற்சிகள் அனைத்தும் தலைமகட்குத் தெரியும். ஆயினும், அவனது கூட்டம் இடையீடு பட்டமையின் தலைமகட்கு வேட்கை பெருகி ஆற்றாமை பயந்தது. அவள் மனம் அமைதி இழந்தது. சூறையின்கட் பட்ட துரும்புபோலக் காதற் புயலிடைப்பட்டு அவள் மனம் அலமந்தது. கல்லும் புல்லும் கடலும் மலையும் மாவும் புள்ளும் அவட்குக் கேட்குந போலவும் கிளக்குந போலவும் தோன்றின. தனித்திருந்து தன் நெஞ்சோடு பேசுதலும் உறுப் பொடு உசாவுதலும் அவள்பால் உளவாயின. சுருங்கச் சொல்லின், அவள் மனம், அறிவுவழி நில்லாது அவ்வறிவைத் தன்வழி நிற்குமாறு பண்ணிற்று. இந்நிலையில் ஒருநாள் மாலைப்போது வந்தது. அதன் இனிய காட்சி அவளுடைய காதல்வேட்கையை மீதூரச் செய்தது. திங்கள், வானத்தில் எழுந்து தண்ணிய நிலவைப் பொழியலுற்றது. ஒருபக்கம், கடல் அலைகள் தம்மொடும் கரையொடும் பொருது மோதி ஆரவாரம் செய்தன. கடல்நீர் பொங்கிப் பெருகிக் கழியினும் கழிக்கானலினும் பரந்தது. கானற் சோலையிடத்து நின்ற தாழையின் முகைகள் மலர அவற்றின் நறுமணத்தை மாலைக்காற்று எங்கும் பரப்பிற்று. பனைமரத்திலுள்ள கூட்டிலிருந்து அன்றிற்புள் கேட்போர் என்பும் உருகுமாறு தன் உயவுக்குரலை யெடுத்து இசைக்க லுற்றது. ஒருபால், யாழோர் தம் யாழ்நரம்பை இயக்கி, நள்ளிரவிலும் இனிய இசையமுதம் நிலமெங்கும் பாயவிட்டனர். இவையாவும் தலைவியின் உள்ளத்தில் தாங்கரும் காதல்நோயை விளைவிக்கவே, அவள், "நள்ளிரவுப் போதிலும் யாழிசை நிலைபெறு கிறது; காதல்நோய் பெரிதாய் இராநின்றது. இத்துன்பத்தைக் களைந்து என்னை உய்விக்கும் காதலரோ இங்கே இல்லை; என் செய்வேன்?" எனப் புலம்பலுற்றாள். தலைவியின் இக்கூற்று, காதல் வெள்ளத்தில் மூழ்கிய தலைமை நலம் சான்ற ஓர் இளம்பெண்ணின் மாசற்ற உள்ளம் கலக்குற்று வருந்தும் நிலைமையை இனிது தோற்றுவிப்பது கண்டு வெள்ளி வீதியார் பாடிய இப்பாட்டைச் சான்றோர் இந்நூற்கண் தொகுத்துள்ளனர். திங்களும் திகழ்வான் ஏர்தரும் 1இருநீர்ப் பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே ஒலிசிறந் தோதமும் பெயரும் மலிபுனற் பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை சோறுசொரி 2குடையிற் கூம்புமுகை அவிழ வளிபரந் தூட்டும் விளிவில் நாற்றமொடு மையிரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் 1என்புக நரலும் அன்றி விரல்2வார்ந் துறழ்ந்த கவர்வின் நல்யாழ் 3யாமமுய் யாமை நின்றது காமம் பெரிதே களைஞரோ இலரே. இது, காமமிக்க கழிபடர் கிளவி 4மீதூர்ந்து தலைமகள் சொல்லியது. உரை : திங்களும் திகழ்வான் ஏர்தரும் - திங்கள் நிலவொளியைப் பொழியும் பொருட்டு வானத்தே எழாநின்றது; இருநீர் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாது - பெரிய கடலில் எழுகின்ற அலைகளும் முழங்குதலை விடாது செய்கின்றன; ஒலி சிறந்து ஓதமும் பெயரும் - ஒலிமிகுந்து படரும் கடற் பெருக்கு நிலத்தின்கட் பெயர்ந்து போந்து பரவாநிற்கிறது; மலிபுனல் பல்பூங்கானல் - கழிநீர் பரந்துள்ள பலவாகிய பூக்களையுடைய கானற்சோலையிடத்து; முள்ளிலைத் தாழை - முள் பொருந்திய இலையையுடைய தாழையின்; சோறு சொரி குடையின் கூம்புமுகை அவிழ - சோறு எடுத்துச் சொரியும் அகப்பை போலக் கூம்பிய அரும்பு மலர; வளி பரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு - காற்றுப் பரந்து வந்தளிக்கும் கெடாத மணத்துடன்; மையிரும் பனைமிசை பைதல் உயவும் - கரிய பனைமரத்தின் மேலேயுள்ள கூட்டின் கண் வருத்தமுற்றிருக்கும்; அன்றிலும் என்பு உக நரலும் - அன்றிற் புள்ளும் என்பு உருகுமாறு கூவும்; அன்றி - அன்றியும்; விரல் வார்ந்து உறழ்ந்த கவர்வு இன் நல்யாழ் - கைவிரல் களால் வார்ந்தும் உறழ்ந்தும் வடித்தும் உந்தியும் விருப் பத்தை விளைவிக்கும் இனிய குற்றமில்லாத யாழிசை; யாமம் உய்யாமை நின்றது - நடுவி யாமத்தும் ஒழியாது இசைக் கின்றது; காமம் பெரிது - இவற்றால் என் உள்ளத்தெழுந்த காமநோயும் பெரிதாயிற்று; களைஞர் இலர் - அதனைப் போக்கும் காதலர் தாமும் இலர்; இனி எவ்வாறு உய்வேன்? எ.று. திங்களும் திகழ்வான் ஏர்தரும்; புணரி பாடோவாது; ஓதமும் பெயரும்; தாழை கூம்புமுகை அவிழ, நாற்றமொடு பனைமிசை பைதல் உயவும், அன்றிலும் நரலும்; அன்றியும், நல்யாழ் யாமம் உய்யாமை நின்றது; காமம் பெரிது; களைஞர் தாமும் இலர்; என் செய்வேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. திகழ்வான்: வானீற்று வினையெச்சம். இருநீர், கடல். திரைப்புணரி, திரைத்து விழும் அலைகள், பாடு, ஒலித்தல் , ஓதம், கடற்பெருக்கு. தாழையரும்பின் மடல், சோறு சொரியும் அகப்பை போல அடி அகன்று ஆழ்ந்து நுனி சுருங்கி நீண் டிருத்தலின் சோறு சொரி குடையின் கூம்புமுகை எனப் பட்டது. பனையோலையை நுனியில் சேர்த்துக் கட்டி நடுவகம் விரித்துக் குழியுற அமைப்பதுபனைக்குடை; அதன்கண் சோறு பெய்து உண்டல் இன்று முள்ள மரபு. இவ்வாறே அடி அகன்று ஆழ்ந்த கமுகம் பாளையைக் "குடையோ ரன்ன கோளமை எருத்திற் பாளை1" என்று பிறரும் கூறுதல் காண்க. வார்தல், உறழ்தல், வடித்தல், உந்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன எட்டு வகைப்படும் இசைக் காரணம் என்பர். கவர்வு, விருப்பம். குற்றமின்றி அமைந்த யாழ் என்றற்கு, நல்யாழ் என்றும், இனிமையால் கேட்கும் உயிர் களைத் தன்பால் ஈர்க்கும் சிறப்புடைமைபற்றிக் கவர்வின் நல்யாழ் என்றும் கூறினார். களவின்கண், காதலன் வரைவை இடைவைத்துப் பிரிந் தொழுகுதலால் காதல் கைம்மிக்குப் புலம்பும் தலைவி, நெய்தல் நிலத்துப் பெருமக ளாதலின், மாலைப்போது எய்தக் கண்டதும், வானத்தில் முழுத்திங்கள் எழுந்து அவள் கண் களைக் கவரவே, திங்களும் திகழவான் ஏர்தரும் என்றும், கடற்பரப்பில் அலை மிகுந்து முழங்குதல் கண்டு, இருநீர்ப் பொங்குதிரைப் புணரி பாடோவாது என்றும், முழுத் திங்கள்தோன்றுங்கால், கடல்நீர் பொங்கிப் பெருகிக் கழி யினும் கழிக்கரையினும் பரந்து நிற்பது கண்டு, ஒலி சிறந்து ஓதமும் பெயரும் என்றும், தான் நின்ற கானற்சோலையின் கழிக்கரையில் வளர்ந்து நிற்கும் தாழை யரும்புகள் மலர, அவற்றின் நறுமணம் காற்றில் பரவினமையின், தாழைக் கூம்புமுகை அவிழ வளி பரந்து ஊட்டும் என்றும், பனை மரத்தின்மேல் கூடமைத்து வாழ்தல் அன்றிற் பறவைக்கு இயல்பாதலின், மையிரும் மனைமிசை என்றும், அதன் ஓசை இரங்கற்பண்ணின் இசை போறலின், பைதல வுயவும் அன்றில் என்புக நரலும் என்றும் குறித்தாள். ஒருபால் யாழோர், தம் யாழைப் பண்ணிக் கைவிரல்களால் அதன் நரம்புகளை வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் இசைத் தமையின், அவ்வினிய இசை, காதற் பைங்கூழை வளர்க்கும் தண்ணீராய்ப் பாய்ந்து அதனை மிகுவிக்க ஆற்றாளாய் விரல்வார்ந் துறழ்ந்த கவர்வின் நல்யாழ் யாமம் உய்யாமை நின்றது என்றும், காமம் பெரிது என்றும், அந்நிலையில் காதலர் தன்பக்கல் இல்லாமைபற்றிப் பெருந்துயர் உழக் கின்றமை தோன்றக் களைஞரோ இலர் என்றும் கையற் றுரைத்தாள். இவ்வண்ணம் தன் காதல் மிகுதியை வாய் விட்டுச் சொல்லுமாற்றால் மனநோய் குறைவது பயன் என உணர்க. 336. கபிலர் களவொழுக்கம் மேற்கொண்ட தலைமகன் இரவின்கண் தலைவியின் மனைப்புறம் போந்து அவளைக் கண்டு மகிழத் தலைப்பட்டான். நள்ளிரவிற் போந்து தன் வரவைத் தெரிவித்தற்கு யாதாயினும் ஒரு குறியைச் செய்வான்; அதனை முன்னரே அறியும் தோழி மனையவர் அறியாவாறு தலைமகளைக் கூட்டிக் கொண்டு அவ்விடத்துக்குச் செல்வாள். தலைமகன் சிறிதுபோது அவர்களோடு அளவளாவி யிருந்து விட்டு நீங்குவன். இவ்வாறு சின்னாட்கள் கழியவே, அவன் வரும் நெறியின் கொடுமையும் அவ்வழியே வரும் தலைமகற்கு எய்தக்கூடிய ஏதமும் நினைந்த தோழி, அவனது வரவை விலக்கும் கருத்தினளானாள். தலைவி யும் தோழி கருத்தை யுடன்பட்டு அவன் வரவை விலக்குதற்கு ஒருப்பட்டாள். ஒருநாள் இரவு, தலைமகன் குறியிடம் போந்த போது, "நாடனே, நீ வரும் வழியில் யானையும் புலியும் இயங்கும்; வேழம், புலியைத் தாக்குதற்குச் செவ்வி நோக்கி யிருக்கும்; அவ்வழியில் நீ சிறிதும் அச்சமின்றி வருகின்றாய்; மேலும், அவ்வழியில் பாம்புறையும் புற்றுக்கள் உண்டு. அவற்றின் உள்ளே யிருக்கும் சோற்றை உண்ணும் பொருட்டுக் கரடிகள் அவற்றை அகழ்ந்து சிதைக்கும். வருதற்குரிய நெறியும் அவ்விடங் களில் விலகுதற் கேற்ற அகலமின்றி மிகவும் குறுகியிருக்கும், ஆதலால் ஏதம் மிகுந்த இவ்வழியைக் கடந்து இரவின்கண் நீ வருதலைக் கைவிட வேண்டும்" என்றாள். தோழியினது இக்கூற்று, தலைமகன் இரவு வருதலை விலக்கற் குரிய காரணத்தை விளக்கு முகத்தால் அவனது அஞ்சாமையைப் புலப்படுத்தும் நலம் கண்ட ஆசிரியர் கபிலர் அதனை இப்பாட் டிடை வைத்துப் பாடுகின்றார். இதன் முற்பகுதி தலைமகனது அஞ்சாமையையும், பிற்பகுதி தலைவியும் தானும் அஞ்சி விலக்குதற் குற்ற பொருளையும் பகுத்துக் காட்டும் திறம் கபிலரது பாட்டின் அமைப்பு நலமாகும். பிணர்ச்சுவற் பன்றி தோன்முலைப் பிணவொடு கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் கல்லதர் அரும்புழை 1அல்கிக் கானவன் வில்லின் தந்த வெண்கோட் டேற்றைப் புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் குடிமுறைப் பகுக்கும் நெடுமலை நாட உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் ஈரளைப் புற்றம் காரென முற்றி இரைதேர் எண்கினம் அகழும் வரைசேர் சிறுநெறி வாரா தீமே. இஃது ஆறுபார்த்துற்றுச் சொல்லியது. உரை : பிணர்ச்சுவல் பன்றி - சருச்சரை பொருந்திய பிடரியை யுடைய பன்றி; தோல் முலைப் பிணவொடு - தோல்போல் திரங்கிய முலையையுடைய பெண்பன்றியொடு கூடிப் போந்து; கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் - திரண்ட தண்டினையுடைய தினைக்கதிரை அளவுமிகக் கவர்ந்துண்டு அழித்தலின்; கல்லதர் அரும்புழை அல்கி - கல்லிடைச் செல்லும் வழியிடத்தே யுள்ள நுழைதற் கரிய புழையிடத்தே தங்கி; கானவன் வில்லில் தந்த வெண்கோட்டு ஏற்றை - கானவன் வில்லினாற் கொன்று கொணர்ந்த வெள்ளிய கோடுகளையுடைய ஆண்பன்றியை; புனையிரும் கதுப்பின் மனையோள் கெண்டி - புனையப்பட்ட கரிய கூந்தலையுடைய மனையவள் துண்டித்து; குடி முறை பகுக்கும் நெடுமலை நாட - ஊரிடத்து வாழ்வாரது குடிமுறைக் கேற்பப் பகுத் தளித்து மகிழும் நெடிய மலைகளையுடைய நாட்டையுடைய தலைவனே; உரவுச் சினவேழம் உறுபுலி பார்க்கும் - மிக்க சினத்தையுடைய களிறு அவ்விடத்தே வந்துறும் புலியைத் தாக்குதற்குச் செவ்வி நோக்கியிருக்கும்; இரவின் அஞ்சாய் - இரவுக் காலத்துக்கு நீ அஞ்சுகின்றா யில்லை; அஞ்சுவல் - யானோ அஞ்சுகின்றேன்; அரவின் ஈரளைப் புற்றம் - பாம்பு வாழும் குளிர்ந்த அளைகளையுடைய புற்றினை; காரென முற்றி - குன்றிற் படிந்த கருமுகில் போலச் சூழ்ந்து; இரை தேர் எண்கினம் அகழும் - புற்றாஞ் சோறாகிய இரை குறித்துக் கரடிகள் தோண்டும்; வரைசேர் சிறுநெறி - மலையிடத்துப் பொருந்திய சிறிய வழியாக; வாராதீமே - வாரா தொழிவாயாக எ.று. நெடுமலைநாட, வேழம் உறுபுலி பார்க்கும் இரவின், அஞ்சாய் வருதற்கு, அஞ்சுகின்றே னாகலின், வரைசேர் சிறுநெறி, இனி வாரா தீமே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிணர் சருச்சரை. சுவல் - பிடரி. பன்றி பிணவொடு கூடி ஏனல் கைம்மிகக் கவர்தலின் என இயையும். கணைக்கால், திரண்ட தாள், கானவர் பன்றியின் ஆணைக் கோறற்குக் காரணம் கூறுவார், கைம்மிகக் கவர்தலின் என்றார்; எனவே, கவர்வது சிறிதாயின் கொலைவினை நிகழாது என்பதாம். கல்லதர், பெருங்கற்களி னூடே செல்லும் வழி. ஏற்றை, ஆண்; "ஆற்ற லொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப1"என்பது தொல்காப்பியம். மனை யோள், ஈண்டுக் கானவனுடைய மனைவி மேற்று. கெண்டுதல், வெட்டித் துண்டு செய்தல். பாத்துண்டல் தமிழ் வாழ்வின் பொதுவியல் பாகலின், குடிமுறைபகுக்கும் என்றார். வலிமை யில் வழிச் சினம் செல்லா தாகலின், உரவுச் சின வேழம் எனல் வேண்டிற்று. புற்றின் அளை ஈரமுடைமை பற்றி, ஈரளை என்றார். புற்றம் குன்றுபோலவும், அதனை அகழும் எண்கு கார்முகில் முற்றிக் கிடப்பது போலவும் தோன்றுதலின், காரெனமுற்றி என்றார். வாராதீமே என்றது முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல். உள்ளுறையில், தலைமகன் தலைவியை மணந்தவழி, அவள் செய்ய இருக்கும் மனையறத்தைக் கூறுதலின், வெளிப் படையில், இரவு வரவு விலக்கி வரைந்துகோடல் வேண்டு மென்பதை உய்த்துணர வைக்கும் தோழி, அவன் போதரும் இரவுப் பொழுதின் கொடுமையை விதந்து. உரவுச் சின வேழம் உறுபுலி பார்க்கும் இரவின் என்றாள். அக்காலை அது நின்னைக் காணின் உளதாகும் ஏதத்துக்கு அஞ்சாது நீ வருவது. நினது பெருவலியை உணர்த்துகின்றது என்றற்கு அஞ்சாய் என்றும், புற்றின்கண், தன் தலையை நுழைத்துக் கொண்டு எண்கு அதனை அகழுமாயினும், அவ்வழி எமக்கு அச்சம் தருகிறது என்பாள், அஞ்சுவல் என்றும் கூறினாள். இரவின் கொடுமையும், வழியின் அருமையும் கண்டு, நீ அஞ்சா யாயினும், யாம் அஞ்சுகின்றே மாகலின், இனி வாரற்க என்பாள் வாராதீமே என்றாள். தினையைக் கைம்மிகக் கவர்ந்தமை பற்றித் தன் வில்லாற் கொன்று கானவன் கொணர்ந்த பன்றியை மனையவள் குடிமுறை பகுக்கும் நாடனாகலின், நீ இவளை மணந்து கொண்டு செய்யும் மனைவாழ்வில், மிகை செய்த பகைவரை வென்று நீ கொணரும் பெரும்பொருளைச் சுற்றமும் துணை யும் பெற்று இன்புறுமாறு இவள் பகுத்தளித் துண்ணும் பண்பு மேம்படுபவள் என உள்ளுறை கொள்க. இதனாற் பயன், தலைமகன் தெருண்டு வரைவொடு வருவானாவது. 337.பாலை பாடிய பெருங் கடுங்கோ மனைக்கண் ணிருந்து அறம்புரிந் தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைமகன் பொருள் குறித்துத் தன் மனைவியிற் பிரிந்து செல்ல வேண்டியவனானான். அதனை அவன் தோழிக்கு உணர்த்தவும், அவள், தலைவியது பிரிவரும் காதன்மையை நன்கு அறிந்தவ ளாதலின், அவள் எய்தும் ஆற்றாமையை நினைந்து ஒருபால் வருந்தினாள். இல்வாழ்க்கைக்குப் பொருளின் இன்றி யமையாமை ஒருபக்கம் தோன்றிற்று. அதனால், தலைமகன் செலவை மறுத்தற்கு அவளது நல்லறிவு இடந்தரவில்லை. உலகியல் வாழ்க்கைக்கு அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும் உறுதிப்பொருள் எனச் சான்றோர் உரைப்பது அவள் நினைவில் எழுந்தது. அம்மூன்றனுள், நடுவணதாகிய பொருள் இல்வழி, ஏனை அறமும் இன்பமும் இல்லை. "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை"என்பது திருவள்ளுவப் பயன். இன்னோரன்ன கருத்து களால், தோழி யறிவு சிந்தனைக்குள் ஆழ்ந்தது. இல்லின்கண் உறைவோர்க்கு அறம் செய்கை மேலும், இன்பம் நுகர்ச்சி மேலும் நின்றாற்போல வன்றிப் பொருள், மனையின் நீங்கிச் சென்று செய்யும் செய்வினை மேலதாவது இனிது விளங்கிற்று. தலை மகனைப் பணிவுடன் நோக்கிய தோழி, உலகியல் பொருளாக உரையாட லுற்றுத் "தலைவ, உலகியலுக்கு உறுதி யென அறம் முதலிய மூன்றையும் படைத்த நல்லிசைச் சான்றோர் ஓர் உண்மையை மறந்தனர்காண்" என்றாள். அவளது அக்கூற்று அவனை வியப்பின்கண் ஆழ்த்திற்று, அவள் தொடர்ந்து பேச லுற்று, 'அறம் செய்து இன்புறுவோர், அதிரலும் பாதிரிமலரும் மோரோடம் பூவும் ஒருங்கே பெய்துவைத்த செப்பினைத் திறந்தவழிப் பிறக்கும் நறுமணம் கமழ்வது தலைவியின் கூந்தல்; ஐம்பாலாக ஒப்பனை செய்யப்படும் மாண்பும் அதற்கு உண்டு. அந்நலம் பலவும் தலைமகன் மனையினின்றும் பிரிந்தவழி இல்லையாம். அக்கூந்தற்பயன் இதனால் தலைமகற்கே உரிய தாதல் தெற்றென விளங்கும். அப்பயனே யன்றி. மனைக்கண் ஒன்றியிருந்து நாளும் செய்யப்படும் அறப்பயனும் நுகரப்படும் இன்பப்பயனும் தலைமக்கள் இருவரும் எய்தாவாறு பிரிந்திருந்து பெறும் முறைமையினையுடைத்தாகப் பொருளைப் படைத் துள்ளனர். பொருள் இல்வழி, ஏனை அறமும் இன்பமும் நடவா. பொருளின் இவ்வியல்பினை நினைந்திருப்பரேல், அதனை உலகியல் வாழ்வுக்கு உறுதியாகப் படைத்திருக்க மாட்டார்கள் அன்றோ?" என்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், பொருட் பிரிவின் குறைபாடு மிக நுட்பமாகத் தருக்க முறையிற் காட்டப்படும் நலம் கண்ட பாலை பாடிய பெருங்கடுங்கோ, இதனை வியந்து இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். இப்பாட்டின் இடையில் சில அடிகள் ஏடுகளில் சிதைந்து காணப்படு கின்றன. உலகம் படைத்த காலைத் தலைவ மறந்தனர் கொல்லோ 1சிறந்திசி னோரே முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் 2குறுமயிர் மாமலர் நறுமோ ரோடமொ டுடனெறிந் தடைச்சிய செப்பிடந் தன்ன நாற்றம் தொக்குடன் அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால் 3புனையிருங் கதுப்பின் அனைநலம் பையென அரும்பெறற் பெரும்பயங் 4கொள்ளாது பிரிந்துறை 5மரபின பொருள்படைத் தோரே. இது, தோழி தலைமகன் பொருள்வயிற் பிரியலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவுணர்த்திய தூஉமாம். உரை : தலைவ - எமக்குத் தலைவனே; உலகம் படைத்த காலை - இவ்வுலகியற்கு உறுதியாகிய அறமும் பொருளும் இன்பமு மாகியவற்றைப் படைத்த போழ்து; சிறந்திசினோர் - அறிவாற் சிறந்த பெரியோர்; மறந்தனர்கொல்லோ - பொருளின் இயல்பை மறந்தார்கள் போலும்; முதிரா வேனில் எதிரிய அதிரல் - இளவேனிற் பருவத்து மலரும் அதிரற்பூவும்; பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் - பருத்த அரையை யுடைய பாதிரியின் குறுகிய மயிர்போன்ற துய் பொருந்திய பெரிய பூவும்; நறு மோரோடமொடு - நறிய மோரோட மலரும்; உடனெறிந்து அடைச்சிய -ஒருங்கே செறிந்து அடைத்துவைத்த; செப்பு இடந்தன்ன - செப்பினைத் திறந்தாற் போன்ற; நாற்றம் தொக்கு - நறிய மணம் தம்மிற் கலந்து கமழும்; அணிநிறம் கொண்ட மணிமருள் - அழகிய நிறத்தையுடைய நீலமணி போலும்; ஐம்பால் புனையிருங் கதுப்பின் - ஐந்து வகையாக முடிக்கப்படும் கரிய கூந்தலிடத்துப் பெறப்படும்; அனைநலம் பையென - அந்நலம் பலவும் பொலிவிழக்கவும்; அரும்பெறல் பெரும்பயம் கொள்ளாது - ஏனைப் பெறற்கரிய அறப்பயனும் இன்பப் பயனும் கொள்ளாமலும்; பிரிந்துறை மரபின - பிரிந்து சென்று உறைந்து பெறும் முறைமையினை யுடைத்தாக; பொருள் படைத்தோர் - பொருளின் இயல்பைப் படைத்தாராகலான் எ.று. தலைவ, சிறந்திசினோர் உலகம் படைத்த காலை மறந் தனர் கொல்லோ, பிரிந்துறை மரபினவாகப் பொருள் படைத்தா ராகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஐம்பாற் புனையிருங் கதுப்பின் அனைநலம் பையென, பெரும் பயம் கொள்ளாது பிரிந்து உறை மரபினவாக என இயையும். உலகம், ஈண்டு மக்கள் வாழ்வுக்கு உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட அறம், பொருள் இன்பம் என்ற மூன்றுமாகிய உலகியல் மேற்று. சிறந்திசினோர், கற்றறிவால் சிறந்த மேலோர். முதிரா வேனில், இளவேனில். அதிரல் புனலிக் கொடி. "குயில்வாயன்ன கூர்முகை யதிரல்1"என்பதன் உரை காண்க. சிலப்பதிகார வுரைகாரர், காட்டுமல்லிகை எனவும் மோசிமல்லிகை எனவும் உரைப்பர். குறுகிய மயிர் போறலின், பாதிரிமலரின் துய் குறுமயிர் எனப்பட்டது "அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ2" என்றும் அதிரலும் பாதிரியும் வேனிற் காலத்து மலர்தலின் "வேனிற் பாதிரிக் கூனி மாமலர்3" என்றும், "கானப்பாதிரிக் கருந்தகட் டொள்வீ வேனில் அதிரலோடு4" என்றும் சான்றோர் கூறுதல் காண்க. மொரோடம், செங் கருங்காலிப் பூ. நெறித்தல் , காம்பு நீக்கி இதழ்களைத் தொகுத்தல். மணி, நீலமணி. ஐந்துவகையாக முடிக்கப்படுவது பற்றிக் கூந்தல் ஐம்பால் எனப்பட்டது. ஐம்பாற் புனையிருங் கதுப்பு ஐந்து வகையாக முடித்துப் புனையப்படும் கூந்தல்; "ஐம்பாற் சிறுபல் கூந்தல்5" எனப் பிறரும் வழங்குதல் காண்க. ஐம்பாலாவன: குழல் அளகம் கொண்டை பனிச்சை துஞ்சை என நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அனைநலம், அந்நலம். பையெனல், பொலிவின்றித் தோன்றல். பெரும்பயம், அறமும் இன்பமுமாகிய இரண்டாலும் பெறப்படும் பயன். மரபின, மரபினவாக என ஆக்கம் பெய்துரைக்க. படைத்தோர் என் புழிச் செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று. பொருள் படைத்தல் ஈண்டுப் பொருளே உறுதிப்பொருளாக வகுத்தமைத்தல். பொருட்பிரிவு குறித்த தலைமகன், தோழிக்கு உரைக் குங்கால், உலகியல் வாழ்க்கைக்கு உறுதி கண்டுரைத்த சான் றோர், அறமும் இன்பமும் போலப் பொருளை உறுதியென வகுத்தன ரென்று மொழிந்தா னாகலின், அவனை மறுக்கும் கருத்தினளான தோழி, அவன் நினைவை உறுதிப்பொருள் வகுத்தமைக்கப்பட்ட காலத்தின்கட் செலுத்துதற்கு, உலகம் படைத்த காலை யென்றும், சான்றோர் சொன்னாரெனக் கொண்டொழியாது, நின் தலைமைக் கொப்ப, அவர் செயலை நன்கு ஆராய்தல் வேண்டும் என்பாள், தலைவ என்றும், எத்துணைச் சிறந்தோர்க்கும் மறதி இயல்பு என்பாள். மறந்தனர் கொல்லோ சிறந்திசினோர் என்றும் கூறினாள். தலைவனோடு பிரிவின்றிக் கூடி யிருக்குங்கால், தலைவி கூந்தல் ஐவகையாக ஒப்பனை செய்யப்படும் நலமும், நறு மலர்களைச் சூடுவதால் பிறக்கும் நறுமணமும் உற்றுத் தலை மகற்கு இன்பம் நல்கினமையின் அவற்றை விதந்து, அதிரல், பாதிரி, மோரோடம் ஆகிய மலர்களைப் பெய்து வைத்த செப்புத் திறந்தவழித் தோன்றும் நறுமணம் தலைவி கூந்தற் குண்டு என்பாள், செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு என்றும், அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பாற் புனை யிருங் கதுப்பின் அனைநலம் என்றும் கூறினாள். தலைவன் பிரிந்த வழித் தலைமகள் தன்னை ஒப்பனை செய்துகொளல் கற்பறம் அன்மையின்,அக்காலத்தில், தலைவியின் கூந்தல் ஒப்பனை பெறும் அந்நலம் இழந்து பொலிவின்றித் தோன்றும் என்பாள், மணிமருள் ஐம்பாற் புனையிருங் கதுப்பின் அனைநலம் பையென என்று உரைத்தாள். நறிய மணத் தாலும், ஐம்பாற் புனை நலத்தாலும் நினக்கு இன்பம் நல்குவது தலைவியது கூந்தல்; பொருட் பிரிவால் அப்பெரும் பயனை நீ கொள்ளா தொழிகின்றனை என்பாள், அரும் பெறற் பெரும் பயம் கொள்ளாது என்றாள். அறவோர்க் களித்தல், அந்தண ரோம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்துபுறந் தருதல் ஆகிய அறப்பயனையும் கொள்ளாது இழத்தல் தோன்ற அரும் பெறற் பெரும்பயம் என்று சிறப்பித்தாள். பிரிந்து சென்று உறைந்தாலல்லாது பெறலாகாத முறைமை யுடைமை பற்றிப் பிரிந்துறை மரபின என்றாள். எனவே, சான்றோர் உலகம் படைத்தகாலை மறதியால் உறுதி யென வகுத்த பொருள், பிரிந்துறை மரபினவாய்ப் பெரும் பயம் கொள்ளாமைக் கேதுவாதலை எண்ணிச் செய்வன செய்க எனத் தோழி செல வழுங்குவித்தமை அறிக. இதனாற் பயன் தலைவன் செலவழுங்குவானாவது. 338.மதுரை ஆர்வல நாட்டு ஆலம்பேரி சாத்தனார் களவு மேற்கொண்ட தலைமகன் இரவுக்குறிக்கண் தலைவியைக் கண்டு அளவளாவி இன்புற்று வந்தான். அதனால் அவன் காதலின் வன்மை விளங்கக் கண்ட தலைவி யுள்ளத்துக் காதல், அவனையின்றிச் சிறிது போதும் அமையாத அளவில் பெருகிற்று, அக்காலத்தே, தலைமகன் கடமை காரணமாகப் பிரிந்து சென்றான். அப்பிரிவு நெடி தன்றாயினும், தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது. உண்டி மறுத்தலும் உறக்கமின்மையும், அடைவே தோன்றி அவளைத் துன்புறுத்தின. அவள் மேனியில் உண்டாகிய வேறுபாடு, ஊரவர் அறியின் அலராம் என நினைந்து தோழி தகுவன கூறி அவளை ஆற்றுவித்தாள். தலைவியும் ஒருவாறு தேறி ஆற்றியிருக்க முயன்றாள். இளமைத் துடிப்பும் காதற் பெருக்கின் புதுமையுணர்ச்சியும் அவளது அறிவை மெலிவித்து மனத்தை அலமருவித்தன. அக்காலை தோழி போந்து மனத்திட்பத்தின் மாண்பு கூறி, மகளிர்க்குப் பொறை யல்லது நிறை காக்கும் துணைவேறில்லை என வற்புறுத்தினாள். தலைமகள் தன் மாட்டாமை கூறுவாளாய். "ஞாயிறு மலைவாய் மறைந்தது; இரவுப் பொழுதில் தலைவரது தேரும் வருகின்ற தில்லை; என் உள்ளத் தெழும் காதல் நோயும் கைம்மிக்கு வருத்துகிறது. நீயோ பொறுத்தல் வேண்டும் என்று சொல்லு கின்றாய். ஓரளவு ஆற்றியிருப்பேமெனின், எதிரே தோன்றும் பனையில் கூடுகட்டி வாழும் அன்றிற்சேவல் தன் புணர்துணை யாகிய பெடைக்குருகை நினைந்து தன் கூடு நோக்கி விரைந்து மீளுமாறு அழைக்கும் குரல், என் உயிர் உடலினின்றும் நீங்கு மாறு என் உள்புகுந்து துரத்துதலின், என்னைப் பொறுத் திருக்க விடுகின்றதில்லை; யான் என் செய்வேன்?" என்றாள். தலைவியது இக்கூற்றின்கண். மாலைக்காலமும், இருள் மாலைப் பொழுதும் தோன்றி எழுப்பும் காதல் வேட்கையைத் தலைவியின் இளமையுள்ளம் பொறுத்தாற்ற முயன்றவழி, அன்றிற்சேவல், தன் புணர்துணையை அழைக்கும் மென்குரல் தோன்றிக் காதல் வெம்மையை மிகுவித்து, அவள் ஆற்றாது புலம்புதற் கேதுவாதல் விளங்குதல் கண்ட ஆசிரியர் ஆலம்பேரி சாத்தனார் அதனை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே அடும்புகொடி துமிய ஆழி போழ்ந்தவர் நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றாது இறப்ப எவ்வம் நலியும் நின்னிலை நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப யாங்கனம் விடுமோ மற்றே 1ஆங்கண் வியலிரும் பரப்பின் இரைஎழுந் 2தருந்த புலவுநாறு சிறுகுடி மன்றத் தோங்கிய ஆடரைப் பெண்ணைத் தோடுமடல் ஏறிக் கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர்செலக் கடைஇப் புணர்துணைப் பயிர்தல் ஆனாப் பைதலங் குருகே. இஃது, ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன் பொறை எதிர் மொழிந்தது. உரை : கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந்தன்று - மிக்க வெயிலைச் செய்யும் ஞாயிறு மேலைமலையில் மறைந்தது; அடும்பு கொடிதுமிய ஆழி போழ்ந்து - அடம்பங் கொடிகள் தேர்க் காலிற் பட்டு அறுபடும்படியாக வரும்; அவர் நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றாது - அவருடைய நெடிய தேரிற் கட்டிய மணி செய்யும் இனிய ஒலியும் இரவுப்போதினும் தோன்றாதாயிற்று; எவ்வம் இறப்ப நலியும் - காதல் நோயும் மிகுந்து வருத்துகிறது; நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி - நினது அழுகையை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்றாய்; நிலைப்ப யாங்கனம் விடுமோ - என் மனம் பொறையுற்று நிற்க யாங்ஙனம் விடும், கூறுக; ஆங்கண் - அவ்விடத்து; வியலிரும் பரப்பின் இரை எழுந்து அருந்த - அகன்ற பெரிய கடற்பரப்பின்கண் மீனாகிய இரையை விரும்பிச் சென்று மேய்ந்துண்ட; புலவுநாறு சிறுகுடி மன்றத்து - புலால் நாறும் சிறுகுடிக்கண் உள்ள மன்றத்தின் கண்; ஓங்கிய ஆடரைப் பெண்ணைத் தோடுமடல் ஏறி - ஓங்கி யுயர்ந்த அசைகின்ற அடியை யுடைய பனையின் தொகுதி கொண்ட மடல்மேல் ஏறியிருந்து; கொடுவாய்ப்பேடை குடம்பைச் சேரிய - வளைந்த வாயையுடைய பெடைக் குருகாகிய அன்றிலைத் தன் குடம்பை நோக்கி மீளும் பொருட்டு; உயிர்செலக் கடைஇ - என் உயிர் உடலினின்று நீங்குமாறு செலுத்தி; புணர்துணை - புணர்துணையாகிய பேடையின்; பயிர்தல் ஆனாப் பைதலம் குருகு - அழைத்தல் குறையாத வருத்தத்தையுடைய அன்றிற் சேவல் எ-று. ஞாயிறு மறைந்தன்று; அவர் நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றாது; எவ்வம் இறப்ப நலியும்; நின்னிலை நிறுத்தல் வேண்டும் என்றி; இரும்பரப்பில் இரை அருந்த, பெண்ணை மடலேறி, புணர்துணையாகிய பேடை குடம்பை சேரிய பயிர்தல் ஆனாக் குருகு நிறுப்ப யாங்ஙனம் விடுமோ, அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடுங்கதிர்,மிக்க வெப்பத்தைச் செய்யும் வெயிற்கதிர். மறைந்தன்று: குற்று கரவீற்று அஃறிணை முற்றுவினை. அடும்புகொடி அடம் பங்கொடி. இது நெய்தல் நிலத்தில் வளரும் கொடிவகை. "முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை, ஒண்பல் மலர கவட்டிலை யடும்பின் செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப1" எனச் சான்றோர் குறிப்பது காண்க. எவ்வம், ஈண்டுக் காதல் நோய். என்றி: முன்னிலை வினைமுற்று. விடுமோ : ஓகாரம் எதிர்மறைப்பொருட்டு. மற்று அசைநிலை. ஆர்ந்த என்பது அருந்த என வந்தது. ஆர்ந்த குருகு என இயையும். மீனுணங்கும் சிறுகுடி யாதலின் புலவுநாறு சிறுகுடி என்றார். பனை மரம் நிற்கும் மன்றம் என்பது தோன்ற மன்றத் தோங்கிய பெண்ணை எனப்பட்டது. நெடிதுயர்ந்து ஓங்கிய பனை காற்றுச் சிறிது தாக்கினும் அசைதல் இயல்பாதலின், ஆடரைப் பெண்ணை எனல் வேண்டிற்று. தோடு, தொகுதி. மடலிடத் துள்ள கூட்டில் தன் பெடையைக் காணாமையின், அன்றிற் சேவல் மடல்மேல் ஏறியிருந்து நரலும் என அறிக. அன்றிலின் வாய் நீண்டு நுனி வளைந்திருக்குமாறுபற்றிக் கொடுவாய்ப் பேடை என்றார். குடம்பை, கூடு. சேர்தல், மீளுதல். அன்றில், உடல் வெண்மையும் மூக்கு மஞ்சள்நிறமும் கொண்ட பருந்தின் இனம். புணர்துணை, சுட்டு மாத்திரையாய்ப் பேடையைக் குறித்து நின்றது. பயிர்தல். அழைத்தல். பைதல், வருத்தம். தலைமகன் கடமை காரணமாகத் தணந்து ஒழுகுதலால், அவனது பிரிவாற்றாத தலைமகட்கு, மாலைப்போதும் இரவுக் காலமும் காதல் நோயை மிகுவித்து வருத்துவது கண்டு, பொறையுடைமையை வற்புறுத்திய தோழிக்குத் தான் ஆற் றாளாதற் குரிய ஏதுவைக் கூறலுறும் தலைவி, கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே என்றும் இரவுப்போதில் வரும் தலைமகன் வரவை, அவன் தேரிற் கட்டிய மணியொலி முற்படப் போந்து அறிவித்து இன்பம் செய்தலை முன்னர்க் கண்டிருக்கின்றா ளாகலின், அவர் நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றாது என்றும், இவ்வாற்றால், என் உள்ளத்திற் காதல்நோய் எழுந்து பெரிதும் வருத்துதலால் ஆற்றே னாகின்றேன் என்பாள், இறப்ப எவ்வம் நலியும் என்றும் கூறினாள். அதனைக் கேட்கும் தோழி, எவ்வம் எத்துணை மிகினும் அதனைப் பொறுத்தலின் வேறு செயலில்லை என வற்புறுத்தமையின், நின்னிலை நிறுத்தல் வேண்டும் என்றி என அவள் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தாள். யானும் அதனை மேற்கொண்டு பொறுத்து ஆற்ற முயல்கின்றேன்; எனினும் என்னை அது செய்யாவாறு நமது சிறுகுடி யின் மன்றத்துள்ள பனைமிசை யிருந்து அன்றிற்சேவல் தன் பேடையைப் பயிரும் பைதற்குரல் என் உயிரை உடம்பின் நீங்குமாறு புறத்தே செலுத்துதலின், யான் ஆற்றியிருக்கு மாறு எங்ஙனம் விடும், விடாதுகாண் என்பாள், நிலைப்ப யாங்ஙனம் விடுமோ என்றாள். கடற்பரப்பில் இரைமேய்ந் துண்ட அன்றில், பனையின் மடலேறிப் பேடை குடம்பை சேர்தற்பொருட்டுப் பயிர்தல் ஆனாதாகவும், கடமை மேற் கொண்டு சென்ற நம் காதலர் அதனை முடித்துக் கொண்டு போந்து நம்மை வரைந்துகோடலை நினையாராயினர் என்று துனியுறு கிளவியால் உள்ளுறுத் துரைத்தவாறு அறிக. இதனாற் பயன் தலைவி அயர்வு தீர்வாளாவது. 339. சீத்தலைச் சாத்தனார் களவின்கண் ஒழுகும் தலைமகன் தலைவிபால் உளதாகிய காதல் சிறப்பது குறித்து வரைவு நீட்டித்தான்; ஆயினும், அவன் அவளுடைய மனையின் புறத்தே சென்று அவளைக் கண்டு பயிலும் முறையைக் கைவிடானாயினன். அவனுடைய கருத்தைத் தோழி அறிந்து கொண்டாளாயினும், அவனை விரைய வரைந்துகோடல் வேண்டுமெனக் குறிப்பாலும், வெளிப் படையாலும், வற்புறுத்தி வந்தாள். ஒரு நாள் அவன் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்துநின்றான். அவனுக்குத் தாம் இருப்பது தெரியாமலும், பேசுவது அவன் செவிப்படும் அள விலும் நின்று தலைமகளோடு சொல்லாடலுற்று, "தோழி, நம் காதலரோ நம்பால் அருளிலர்; அதனால் நினது வேறுபாடு அலராகா தென்று கருதி, அவரை வெறாத நெஞ்சத்துடன், நம்மைப்பற்றி வினவுவோர்க்குப் புதிய பல காரணங்களைக் கூறி நம் துன்பநிலையைக் கடந்து வந்தோம். நெருநல் நம் அன்னை என்பாற் போந்து இவ்வேறுபாடு என்னென்றாளாக, நம் மலை யிடத்துத் தெண்ணீர்ச் சுனையில் நீராடினேம் என்றேன். அது கேட்டு, ஒப்பனை கலைந்த மாலையும், ஒள்ளிய நுதலும் பெதும்பைப் பருவத்து நலமும் உடைய இவளோடு நாளையும் சென்று சுனையாடினீராயின், பெண்மகளிர்க் குரிய பண்பு பெரிதும் வேறுபடும் போலும் என்றாள்" என உரைத்தாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைமகன் வரையாது நீட்டித் தலைத் தம்பால் அருளின்மையாகக் கொண்டமையும், அதனால் தாம் அன்பு புலராமையும், அவன் செயலால் தலைவி வேறு பாடெய்தி வருந்துவதும். அதனை அறிந்து அன்னை புறத்தே செல்லாதவாறு செறித்தமையும் உணர்த்தித் தலை மகனைக் குறிப்பாய் வரைவு கடாவும் திறம் விளங்குதல் கண்ட ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடியுள்ளார். 1தோலாக் காதலர் துறந்துநம் அருளார் அலர்வ தன்றுகொல் 2இதுவென நன்றும் 3புலரா நெஞ்சமொடு புதுவ கூறி இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை சிறந்த சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் ஒண்ணுதற் பெதும்பை நன்னலம் 1பெறீஇய 2மின்னீ ரோதி இவளொடு நாளைப் பன்மலர் கஞலிய வெறிகமழ் 3வெற்பின் தெண்ணீர் மணிச்சுனை ஆடின் என்னோ 4மகளிர்தம் பண்பென் றோளே. இது, சிறப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. உரை : தோலாக் காதலர் - தோல்வியறியாத நம் காதலர்; துறந்து - நம்மைத் துறந்தமையின்; நம் அருளார் - நம்பால் அருளிலராகலான்; அலர்வது அன்றுகொல் இது என - அலராகாது நமது இவ்வேறுபாடு என்று; நன்றும் புலரா நெஞ்சமொடு - மிகவும் அன்பு புலராத நெஞ்சத்துடனே; புதுவ கூறி - வேறுபாடு நோக்கி வினவும் தாயர்க்குப் புதிய புதிய காரணங்களைக் கூறி; இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் - இருவேமும் வருந்தும் துன்பப்பெருக்கை; அன்னை அறிந்தனள் போலும் - அன்னை அறிந்துகொண்டாள் போலும்; சிறந்த சீர்கெழு வியனகர் - சிறந்த புகழ் பொருந்திய அகன்ற நம் மனையின்கண்; வருவனள் முயங்கி - என்னை நோக்கி வந்து சேரத் தழுவி; நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் - நீர் அலைத்தலால் கலைந்த குளிர்ந்த இதழ்கள் தொடுக்கப்பட்ட மாலையும்; ஒண்ணுதல் - ஒள்ளிய நுதலும்; பெதும்பை நன்னலம் பெறீஇய - பெதும்பைப் பருவத்து நல்ல அழகினையும்; மின்னீர் ஒதி இவளொடு - ஓளிதிகழும் குளிர்ந்த கூந்தலையுடைய இவளொடு சென்று; நாளை - நாளையும்; பன்மலர் கஞலிய வெறிகமழ் வெற்பின் - பலவாகிய மலர்கள் செறிதலால் மணம் கமழும் மலையின் கண் உள்ள; தெண்ணீர் மணிச்சுனை ஆடின் - தெளிந்த நீர் நிறைந்த அழகிய சுனையின்கண் ஆடினீராயின்; மகளிர் பண்பு என்னோ என்றோள் - இளமகளிர் நிறமும் மேனியுமாகிய பண்பு பெரிதும் வேறுபடும் போலும் என்று உரைத்தாள் ஆகலான் எ.று. காதலர் அருளார், அலர்வதன்று கொல் இதுஎனப் புலரா நெஞ்சமொடு, புதுவ கூறி இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம், அன்னை அறிந்தனள் போலும், வருவனள் முயங்கிப் பெதும்பை நன்னலம் பெறீஇய மின்னீரோதி இவளொடு நாளை மணிச்சுனை ஆடின் மகளிர் தம் பண்பு என்னோ என்றாளாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தொடையலும், நுதலும், நன்னலமும், ஓதியு முடைய இவ ளொடு என இயையும். துறந்து, செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. இது , இவ்வேறுபாட்டுக் கேதுவாகிய கள வொழுக்கம். புலர்தல், ஈண்டு அன்பு குன்றுதல் மேற்று. பருவரல், துன்பம். போலும்; ஒப்பில்போலி. சீர், புகழ். நீரலைக் கலைஇய ஈரிதழ், நீர் அலைத்தலால் கலைந்த குளிர்ந்த பூவிதழ். "நீரலைக் கலைஇய கண்ணி1" என்றும், "நீரலைக் கலைஇய கூழை2" என்றும் சான்றோர் வழங்குதல் காண்க. பெதும்பை, மகளிரது இல்லிகவாப் பருவம்; பூப்பெய்தும் பருவமுமாம். தெளிந்த நீர் மணிபோறலின், தெண்ணீர் மணிச்சுனை என்றார். பண்பு, ஈண்டு நிறமும் மேனிநலமும் குறித்து நின்றது. என்றாள் எனற்பாலது செய்யுளாகலின் என்றோள் என வந்தது. வரையாது நீட்டித் தொழுகும் தலைமகன், சிறைப்புறமாக வந்தமை யுணர்ந்து, அவன் செவிப்பட மொழியலுறும் தோழி, எத்துணைச் சேட்படுத்தவழியும் தலைமகளைத் தலைப் பெய்து இன்புறும் நெறியில் வெற்றியே கண்டவனாதலின், தலைவனைத் தோலாக் காதலர் என்றும், வரைவு நீட்டித் தலை அன்பின்மையாகக் கருதினமை புலப்படுக்கின்றா ளாகலின், துறந்து நம் அருளார் என்றும், எனவே, அவன் காரணமாக மேனி வேறுபடுதலும், அதுவே பற்றுக் கோடாக அலர் தோன்றுவதும் இல்லையாம் என்பாள், அலர்வ தன்றுகொல் இது என நினைந்தோம் என்றும் கூறினாள். தலைவன்பால் அன்பின்மை கூறியது போலத் தலைவிபால் அவ்வன்பின்மை தோன்றிற்றில்லை என்பாள் நன்றும் புலரா நெஞ்சமொடு என்றும், தலைவன்பால் அன்பின்மையும் தலைவிபால் அஃது அறாமையும் சுட்டினாள். வேறுபாடு கண்டு வினவும் தாயர்க்குப் பல்வேறு காரணங் களைப் புதியபுதியவாகப் படைத்து மொழிந்தமை தோன்ற, புதுவ கூறி என்றும், அவ்வாற்றால் தாம் எய்தி உழந்த துன்பம் நீங்காமை புலப்பட, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் என்றும் கூறினாள். நாளும் அத்துன்பம் ஒழியாமை கண்ட மையின், பருவரல் வெள்ளம் என்றும், அதனிடைக் கிடந்து போதருதலின் நீந்தும் என்றும் சிறப்பித்தாள். இதுகாறும், நம் இருவேமிடையே நிலவிய இப்பருவரல், அன்னை அறியும் அளவைக்கு வந்துவிட்ட தென்பாள் அறிந்தனள் போலும் அன்னை என்றாள். அதுகேட்டுத் திடுக்கிட்ட தலைவி, அஃது எவ்வாறு எப்பொழுது என வினவுவாள் போல நோக்குதலும், நிகழ்ந்தது கூறுவாளாய், தம் மனைக்கண் அன்னை தன்னை வினவிய திறத்தைச் சிறந்த சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி என்றும், பின்பு தலைவியின் தொடையல் கலங்கி யிருத்தலும், நுதல்வேறுபாடும், மேனியின் கதிர்ப்பும் விதந்து கூறி வினவினாள் என்றற்கு, நிரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல், ஒண்ணுதல் பெதும்பை நன்னலம் பெறீஇய மின்னீ ரோதி என்றும், இவ்வேறுபாடு, மலைச்சுனையில் நீராடியதனால் உளதாயிற்றெனத் தான் கூறினமையும், அது கேட்டுச் சுனைநீராட்டு இவ்வேறுபாட்டைப் பயக்குமாயின், நாளை அது செய்தல் கூடாது; நீராடின் இவ்வேறுபாடு மிகும் என்றும், ஏனைமகளிர் அலர் கூறுதற்கு இடனாம் என்றும் குறிப்பால் உணர்த்தினமையும் தோன்ற. மின்னீ ரோதி இவளொடு நாளைப் பன்மலர் கஞலிய வெறிகமழ் வெற்பின், தெண்ணீர் மணிச்சுனை ஆடின், என்னோ மகளிர்தம் பண்பு என்றாள் என்றும் கூறினாள். தெண்ணீர் மணிச்சுனை யாயினும், அஃது இருந்த வெற்பு, பன்மலர் கஞலி வெறிகமழும் இயல்பிற்றென அன்னை விதந்து கூறியது, நீவிர் கள்ளமில்லாத உள்ளமுடையீராயினும், நும்மைக்காணும் மகளிர் பல்வேறு பண்பும் மொழியு முடைய ராகலின், அவர்கள் ஏலாதன கூறி ஏதம் எய்துவிப்ப ராகலின் நாளை நீவிர் புறத்தே செல்லன்மின் என்றற்கு. இதனாற் பயன் தலை மகன் தெருண்டு வரைவானாவது. 340. நக்கீரர் மனைக்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகற்குப் புறத்தொழுக்கம் தோன்றிற்று. பரத்தையர் சேரிக்கண் நிகழும் விழாக்களுக்கும் கூத்துக்களுக்கும், தலைக்கை தந்து சிறப்பிக்கும் தலைமகன்பால் பரத்தையர்க்கு மிக்க அன்புண்டாதல் இயற்கை. வரைந்து கொள்ளும் ஆடவர் இல்லாமையால் பரத்தையராயின மகளிர்பால் தலைமகற்கு அருள் பிறத்தல் முறைமையாகும். இவ்வகையில் தலைவன்பால் பரத்தைமை தோன்றினமை கண்ட தலைமகட்கு உள்ளத்தே பொறாமை யுண்டாயிற்று. தன் காதற் கொழுநனைப் பிறமகளிர் விருப்பொடு நோக்கக் கண்டாலும், மனையவட்குக் கண் சிவப்பது பண்டும் இன்றும் என்றும் உள்ள இயல்பே. தன் காதல்மனைவி தன் செயல் கண்டு உள்ளத்திற் புலவியுற் றிருப்பதை வாயில்களால் அறிந்தான் தலைமகன். அவளுடைய சினம் தணிந்து தன்னை ஏற்குமாறு செய்யப் பரத்தையர் சேரிக்கண் உறையும் பாணர் முதலாயினாரைத் தன் மனைக்குச் செல்ல விட்டான். அவர்கள் அனைவரும் வாயில் மறுக்கப்பட்டனர். முடிவில், அவன் தானே மனைவியைப் பிரிந்திருக்க மாட்டானாய்த் தன் மனைக்குப் போந்தான். அவனை நன்கு வரவேற்று உண்டி முதலியவற்றால் தலைவி புலவாதாள் போல எல்லாப் பணிகளையும் இனிதே செய்தாள். அதனால் உள்ளம் மகிழ்ந்த தலைவன் பள்ளியிடத்தானாக, அவருடைய மனம் காதல் நிறைந் திருந்த தாயினும், அதனை மறைத்து, "பெரும, யான் நின்னை இப்பொழுது புல்லு வேனல்லேன்; நின் பிரிவால், கையிற் செறிந்திருந்த வளைகள் கழன்றோடுமாறு என் மேனி மெலிந்த தாயினும், நின்னை யான் புலந்து மறுக்கின்றேன் என்பது கருத்தன்று என்றாள். தலைவியது இக்கூற்றின்கண், அவன்பால் மனத்தின்கண் அன்பு மாறாமையும், அவன் பரத்தைமை பொறாது அவள் அவனை மறுக்கும் மாண்பும் தோன்றக் கண்ட ஆசிரியர் நக்கீரனார் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப்பாடுகின்றார். புல்லேன் மகிழ்ந புலத்தலும்4 இல்லேன் கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் 1பெயர்மாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை 2அள்ளற் கழனி உள்வாய் ஓடிப் பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவின் அணைமுதற் 1பிறழும் வாணன் சிறுகுடி அன்னஎன் 2கோணேர் எல்வளை நெகிழ்த்த நும்மே. இது, பரத்தையின் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. உரை : மகிழ்ந- தலைவனே; புல்லேன் - நின்னைப் புல்லுவே னல்லேன்; புலத்தலும் இல்லேன் - அதற்கு ஏதுவாகிய புலவி யுற்றேனு மல்லேன்; கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் - தொழில் கல்லாத யானையையும் விரைந்து செல்லும் தேரையு முடைய பாண்டியன்; பெயர் மாண் பெருங் குளம் மடைநீர் விட்டென - தன் பெயர் நின்று மாண்புறுமாறு கட்டிய பெரிய குளத்தின் நீரை மடைவழியாகச் செலவிட்டா ராக: கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை - கால் வழியாகச் சென்று நீரை எதிர்த்துப் போதரும் திரண்ட கொம்பையுடைய வாளைமீன்; அள்ளற் கழனி உள்வாய் ஓடி - சேறு மிக்க நெல்வயற்குட்சென்று; பகடு சேறு உதைத்த - ஆங்கே உழவினைச் செய்யும் எருதுகளின் கால்களால் உதை பட்டுத் தெறித்த; புள்ளி வெண்புறத்துச் செஞ்சால் உழவர் - புள்ளி யுற்று வெண்மை யாகத் தோன்றும் முதுகையுடைய ராய் நேரிய சால் உண்டாக உழும் உழவர்;கோல் புடை மதரி - கைக்கோலால் அடிக்கத் துள்ளி; பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும் - பசிய கால்களையுடைய வயலின் வரம் பணையின் அடியில் கீழ்மேலாகப் புரளும்; வாணன் சிறு குடி அன்ன - வாணன் என்பானது சிறுகுடி போன்ற சிறப்புடைய; என் கோள்நேர் எல்வளை - எனது கோடற்கமைந்த விளக்க முடைய கைவளை; நெகிழ்த்த நும்மே - நெகிழ்ந்தோடுமாறு மெலிவித்த நும்மை எ.று. மகிழ்க, வாணன் சிறுகுடி யன்ன என் எல்வளை நெகிழ்த்த நும்மைப் புல்லேன்; புலத்தலும் இல்லேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பெருங்குளம் மடைநீர் விட்டென, வாளை, ஓடி, உழவர் கோற் புடை மதரி அணைமுதற் பிறழும் சிறுகுடி என இயையும், புலத்தலும் என்றவிடத்து உம்மை, புல்லுதலைச் செய்யாமையைத் தழீஇ நிற்றலின் எச்சப் பொருட்டு. சேரநாடும் பாண்டிநாடும் யானைவளம் உடைய வாயினும், சேரலர் யானை போலப் பாண்டியர் யானை வினைக்குரிய பயிற்சி பெறாமையின், கல்லா யானை என்றும், பாண்டிநாடு கடுந்தேர் இயங்குதற் கேற்ற நிலப்பரப்புடை மையின், கடுந்தேர்ச் செழியன் என்றும் சிறப்பித்தார். கடுந்தேர், விரைந்த செலவிற் கேற்ப அமைந்த தேர். சோழ சேரநாடுகளைப் போலப் பாண்டிநாடு, நீர்நலம் சிறக்க உடைய தன்மையின், "நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருக" அமைப்பது, பாண்டிநாட் டரசின் சிறப்புடைப் பணியாய் வழி வழியாகத் தொடர்ந்து இயன்றமையால், பெருங்குளமாகிய நீர்நிலைகளை அமைத்த பாண்டியர் அவற்றிற்குத் தம்முடைய பெயரையிட்டு நிலை பெறுவித்த குறிப்புத் தோன்றச் செழியன் பெயர்மாண் பெருங்குளம் என்றார்; இன்றும் பாண்டிநாட்டில் மன்னர் பெயரால் அமைந்த ஏரிகளும் பெருங்குளங்களும் இருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். பெருங்குளங்களை ஏரி என்றலும் தமிழ்வழக்கு. கணைக் கோட்டுவாளை, திரண்ட கோட்டினையுடைய வாளை; இது வாளைமீன் வகையுள் ஒன்று; "தன்னையர், காலைத் தந்த கணைக்கோட்டு வாளை1" எனப் பிறாண்டும் கூறுவது காண்க, கால், குளத்து நீர் கழனிகளிற் பாய்தற் கமைந்த வாய்க்கால். நெல் வயலாதல் தோன்ற, அள்ளற் கழனி என்றார். வெயிலும் பனியும் காற்றும் தாக்குதலால், தோல் உரம் பெற்றுள்ள உழவர் முதுகு, சேற்றின் புள்ளி யுலர்ந்து வெளுத்துத் தோன்று தலால், வெண்புறம் எனப்பட்டது. செஞ்சால், கோட்டமின்றி நேரிதாகச் செல்லும் உழுபடைச் சால். புடை, புடைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர். மதர்த்தல், ஈண்டுத் துள்ளுதல் மேற்று. பசும்புல் வளர்ந்த கால் என்றற்குப் பைங்கால் என்றார். அணை; வரம்பணை. வாணன் என்பான் சிறுகுடி யென்னும் ஊரையுடைய பெருஞ்செல்வன்; புலவர் பாடும் புகழ் மிக்க வன்; இவனையும் இவனுடைய சிறுகுடியையும், "பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் வாணன் சிறுகுடி2" "காய்நெற் படப்பை வாணன் சிறுகுடி3" "பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை வாணன் சிறுகுடி4" எனச் சான்றோர் பாராட்டுதல் காண்க. இதனால் இச்சிறுகுடி பாண்டி நாட்டுக் கடற் கரையைச் சார்ந்த தெனலாம். கோணேர் எல்வளை, கொள்ளுதற்கு நேரிதாய் விளக்கம் அமைந்த வளை. நெகிழ் வித்த எனற்பாலது; நெகிழ்த்த என வந்தது. செயப்படு பொருளைச் செய்தது போலக் கிளத்தல். பள்ளியிடத்தானாகிய தலைமகன், தன்னை அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தமை ஏதுவாகத் தலைவியைப் புல்லுதல் வேண்டினானாகத் தலைவி அவனை மறுக்குமாற்றால் புல்லேன் மகிழ்ந என்றாள். இதுகாறும் தோன்றாத புலவி தோன்றக் கண்டவன், அவளை வியந்து நோக்கலும், "உப்பமைந் தற்றால் புலவி1" என்பது கொண்டு அவன் மகிழாவாறு, புலத்தலும் இல்லேன் என்றும், அதற்கேது, தன் புறத் தொழுக்கம் என அவள் நினைப்பதுணர்ந்து, அதனை உள்ளுறையால் வற்புறுத்தி, வெளிப்படையில் அதனானும் யான் புலக்கின்றே னில்லை யென்பாள், என் கோணேர் எல்வளை நெகிழ்த்த நும்மே என்றும் கூறினாள். பெருங்குளம் மடைநீர் விட்டென, வாளை கழனி உள் வாய் ஓடிற்றென்பது, தலைமை வாழ்வு புறத்தே சேறற்கு அமைதி தந்ததாக, நீ பரத்தையர் சேரிக்குட் புகுந்தனை என்றும், உழவர் கோற்புடைக்கு மதரி என்றது, மனைவாழ்வின் மாண்பு பரத்தைமை ஒழுக்கத்தைப் புறம்பழித்தலால் மருண் டனை என்றும், பின்னர் அவ்வாளை அணைமுதற் பிறழும் என்றது, நீயும் நின் பரத்தைமையை மறுத்து மனையை அணைந்தனை என்றும் உள்ளுறை கொள்க. இதனாற் பயன் வாயில் மறுத்தல். விளக்கம் : "அவனறி வாற்ற வறியு மாகலின்2"என்ற நூற்பாவுரை யில் இப்பாட்டைக் காட்டி "இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது" என்பர் இளம்பூரணர்; நச்சினார்க் கினியரும்3 இதுவே கூறுவர். 341. மருதன் இளநாகனார் பண்டைத் தமிழரிடையே நிலவிய வாழ்க்கையில் தலை மக்களிடையே பொருளீட்டல், இரவலர்க்கும் பரிசிலர்க்கும் வேண்டுவ கொடுத்தல் முதலியவற்றால் விளைக்கும் புகழ் களுடன் நாடுகாத்தல், பகையொடுக்கல், தீதுகடிந்து அறம் நிறுவுதல் முதலிய வினைவகைகளால் புகழ்விளைத்தல் சிறந்த கடனாகக் கருதப்பட்டது. அதனை ஆற்றுதற்கண் இல் வாழ்க்கைக்கு இன்றியமையாத காதலறம் குறுக்கிடுவது கிடையாது. தலைமை வாழ்வு, காதலைவிடக் கடமையினையே உயிரினும் சிறப்புடைத்தாகப் பேணிற்று. கடனாகிய வினை குறித்து மனைவியினின்றும் பிரிந்து செல்வோர்க்கு மனைவி மக்களின் நினைவு வினையிடைத் தோன்றுவது இல்லை. மேற் கண்ட வினை முடியுங்காறும் அதனை வென்றியுற முடித்தலி லேயே அவரது உள்ளம் ஒன்றிநிற்கும்; வினையைக் குறைவற முடித்தற்குரிய செயல்வகைகளே அவர்தம் உள்ளத்தில் நிறைந்து நிற்கும். வினைக்கூறுகளில் ஒவ்வொன்று முடிந்தவழி யுண் டாகும் மகிழ்ச்சிக்காலத்தில், புறத்தே தோன்றும் இயற்கைக் காட்சிகள் அவர் மனத்தை ஈர்ப்ப துண்டு. போர்வினை குறித்து மனைவியிற் பிரிந்து போந்த தலைமகனொருவன், அதன் ஒருகூறு முடிந்தவிடத்து, மழை பெய்தமையின், மேலே செயற்குரிய வினை இடையீடுபட்டதனால் பாசறைக்கண் இருந்தான். அக் காலத்தே, ஒருநாள் இனிய காட்சி யொன்றை அவன் காணும் வாய்ப்புண்டாயிற்று. ஈங்கையின் கொடிபடர்ந்த பாறை யொன்றின்மேல், குறமகள் ஒருத்தி தன் புதல்வனுடன் இருந்தாள். சிறிதுபோதில் அவ்விருக்கையை வெறுத்த புதல்வன் ஈங்கையின் சிவந்த முகைகளைத் தொகுக்கும் விளையாட்டில் இன்புற்றான். மகற்குப் பசிவேளையறிந்த தாய் அவற்குப் பாலூட்ட முயன்றாள்; அதனை யறியாத புதல்வன், பாலுணவை மறுத்து விளை யாட்டிலே விருப்புற்று நின்றான். மெல்லிய கொம்பொன்றைக் கொண்டு அவன்மேல் ஓச்சி அச்சுறுத்தி அப்பாலை யுண் பித்தாள். அந்நிலையில் அவள் கணவனான கானவன் அவண் போந்து மகனை அன்புசெய்து அழுகை தீர்த்துதவினான். குற மகளும் கானவனோடே யிருந்து குறுநொடி மொழிந்து மகனை மகிழ்வித்தாள். அந்த இனிய காட்சி தலைமகனைத் தன்னையே நினையுமாறு தூண்டிற்று. அன்றிரவு, அவன் படுக்கையில் இருக்கும்போது, இக்காட்சி நினைவில் தோன்றவே, தான் இருக்கும் பாசறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். தண்ணிய மழை பெய்ததனால் பெருகி யோடும் தண்ணீரின் முழக்கம் கேட்டது; கூதிர்க்காலத்துப் பனியொடு கூடிய வாடைக்காற்றும் வந்து அலைத்தது. அப்பொழுது, அவன் தான் கண்ட குறமகளின் இன்ப வாழ்க்கையை நினைந்தான்; அவ்வண்ணமே தன் மனைவி தன் புதல்வனொடு மகிழ்வள் என்று நினைக்கையில், கானவன் போலத் தான் மனைக்கண் இல்லாது பாசறைக்கண் தனித்து இருப்பது நினைந்து புலம்பினான். "கூதிர்க்காலத்தொடு மயங்கி வாடை வந்து வருத்துகிறது; யான் துணையின்றித் தனித்துப் பாசறைக்கண் உள்ளேன்"என்றான். தலைமகனது இக்கூற்றின்கண், வினைக்சூழலில் இருக்கும் ஆடவன் மழை முதலியவற்றால் மேற்கொண்ட வினையிடை யீடு உற்றுப் பாசறைக்கண் தங்கினும், புறத்தே தோன்றும் இன்பக்காட்சிகள் அவனைத் தாக்கி வருத்துவதும் அவன் வருந்துவதும் ஒரோவழி இயல்பு என்ற உண்மை விளங்கித் தோன்றுவது கண்ட இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் வைத்துப் பாடுகின்றார். 1ஈங்கையிவர் பாசறைச் சிறுபாடு முணையிற் செம்பொறி அரக்கின் 2வட்டுமுகை தொகுக்கும் 3விளையாட் டின்னகை அழுங்கச் 4சில்கிளைத் தலையா உலவை ஓச்சிப் பான்மடுத்துக் குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணைநன் குடையள் மடந்தை யாமே வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென நீரிரங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு வேறுபுல வாடை அலைப்பத் துணையிலேம் தமியேம் பாசறை யேமே. இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் பாசறைக் கண் ணிருந்து சொல்லியது. உரை : ஈங்கை இவர் பாறைச் சிறுபாடு முணையின் - ஈங்கைக் கொடி படர்ந்தேறிய பாறையிடத்தே சிறிதுபோது இருத்தலை வெறுத்தலால்; செம்பொறி அரக்கின் வட்டுமுகை தொகுக்கும் - சிவந்த பொறிகளையுடைய அரக்கினால் இயன்ற வட்டுப் போன்ற ஈங்கைமுகைகளைத் தொகுக்கும்; விளையாட்டு இன்னகை அழுங்க - விளையாட்டின்கட் பிறக்கும் இனிய உவகை கெடுமாறு; சில் கிளைத்து அலையா உலவை ஓச்சி - சிலவாகிய கிளையை யுடையதாகிய மேற்படினும் வருத்தம் செய்யாத கொம்பை யோங்கி அச்சுறுத்து; பால் மடுத்து - பாலை உண்பித்து; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் - குன்றத்துக் குறவனாகிய கணவனுடன் இருந்து சிறு நொடிகளைச் சொல்லி மகிழ்விக்கும்; துணை நன்கு உடையள் மடந்தை - இளந்துணையாகிய புதல்வனை நன்குடையளாவள் இம்மடந்தை; யாம் - யான்; வெம்பகை அருமுனைத் - வெவ் விய பகைவரது நெருங்குதற் கரிய முனையிடத்தே; தண்பெயல் பொழிந்தென - தண்ணிய மழை பெய்ததாக; நீர் இரங்கு அரைநாள் - நீர் பெருகி முழக்க மிட்டோடும் நள்ளிரவில்; கூதிரொடு வேறு புல வாடை மயங்கி அலைப்ப - கூதிர்ப் பருவத்து வேறு புலத்தினின்று வரும் வாடைக்காற்றுக் கலந்து வருத்த; துணையிலேம் தமியேம் - துன்பத் துணையின்றித் தனித்து; பாசறையேம் - இப்பாசறையிடத்து உள்ளேம் எ.று. சிறுபாடு முணையின், செம்முகை தொகுக்கும் விளை யாட்டு இன்னகை அழுங்க, உலவை ஓச்சிப் பால்மடுத்துக் குறவனொடு குறுநொடி பயிற்றும், துணை நன்கு உடையள் மடந்தை, யாமோ எனின், தண்பெயல் பொழிந்தென, நீர் இரங்கு அரைநாள் , வேறு புல வாடை அலைப்பத் துணை யிலேம், தமியேம், பாசறையேம் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. சிறிது படுதல், சிறுபாடு என வந்தது. படுதல், தங்குதல். முணைதல், வெறுத்தல். "முணைவு வெறுப்பாகும்"1 என்பது தொல்காப்பியம், செம்பொறி, சிவந்த வரிகள்; புள்ளியுமாம். "அட்டரக் குருவின் வட்டுமுகை ஈங்கை2" என்று பிறரும் கூறுதல் காண்க. தொகுக்கும் விளையாட்டு என இயைக்க. சில் கிளைத்து அலையா உலவை, சிலவாகிய இளங்குழைகளை யுடைத்தாய் ஓச்சுங்கால் உடம்பிற் படின் வருத்தம் செய்யாத கொம்பு. புதல்வன் விளையாட்டு விருப்பால் பசியறியாமையின், அதனை அறிந்து தாயாகிய மடந்தை வலியப்பற்றிப் பால் உண்பிக்குமாறு தோன்ற, உலவை யோச்சிப் பால்மடுத்து என்றார். பின்னர்ப் புதல்வன் அழுகை தீர்ந்து மகிழ்தற் பொருட்டுக் கணவன் உரைத்த நொடியுடன் தானும் குறு நொடி மொழிதலின், குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் என்றார். நொடிபயிற்றல், விடுகதை கூறல். துணை முதலது இளந்துணையாகிய புதல்வன் மேலும், பின்னது புணர்துணை மேலும் நின்றன. வினை செய்யாது பாசறைக் கண் ஒடுங்கி யிருத்தற்கு ஏதுக் கூறுவார், வெம்பகை அரு முனைத் தண்பெயல் பொழிந்தென என்றார். அரைநாள், நள்ளிரவு. தென்புலக் காற்றாகிய தென்றலுக்கு மாறாக வடபுலத்து நின்று வரும் வாடைக் காற்றை வேறுபுல வாடை என்றும், அது கூதிர்க்காலத்து மிகக் குளிர்ந்து வீசுதலின் கூதிரொடு மயங்கி என்றும் கூறினார். துணையிலேம் தமியேம் பாசறையேம் என வந்தன தனித்தன்மைப் பன்மை. கணவனும் மனைவியுமாகிய குறவர்கள், புதல்வற்குப் பாலூட்டி அவன் மகிழுமாறு குறுநொடி பயிற்றும் காட்சியில் குறமகளாகிய மடந்தை முற்பட்டுத் தோன்றுதலின், அவள் செயலையே பாசறைக்கண் இருக்கும் தலைவன் எடுத்துத் துணை நன் குடையள் மடந்தை என்றான், தனிமை தீர்க்கும் வாயிலாதல் பற்றிப் புதல்வனைத் துணை யென்றான். 'இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி1"என்று பிறரும் கூறுதல் காண்க. குறமடந்தைதுணை நன்குடைய ளாதலைக் காண் பவன், தன் மனைவியாகிய தலைவி புதல்வனைத் தனிமை தீர்க்கும் துணையாகக் கொண்டு உறைதலைக் காணுதல் வேண்டுமென்ற வேட்கையால் உள்ளம் அலைக்கப்படுதலும், மேற்கொண்ட வினை முடியாமைக்கு ஏது மழைபெய்தமை யாதலின், அதனை நொந்து கூறுவான் வெம்பகை யரு முனைத் தண்பெயல் பொழிந்தென என்றும், வினை யின்றி மடிந்திருப்போற்குத் தனிமை மிக்குத் தோன்றுதல் பற்றித் துணையிலேம் தமியேம் பாசறையேம் என்றும் தன் நெஞ்சோடு கூறிப் புலம்பினான். இஃது "ஒன்றாத் தமரினும்2" என்ற சூத்திரத்துக் கூறிய பாசறைப் புலம்பல். இதனாற் பயன் தலைவன் அயாவுயிர்த்தல். 342. மோசிகீரனார் மோசி என்பது ஊர்ப்பெயர் எனவும், மக்கட்பெயர் எனவும் அறிஞர் கருதுகின்றனர். மோசிகுடி என்ற ஊரும் மோசியார் எனச் சான்றோரும் இருப்பதே இக்கருத்துக்குச் சான்று. மக்கட் பெயரென்று கொண்டால் இக்கீரனார் மோசி என்பார்க்கு மகனாதல் கூடும். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையையும். கொண்கானங் கிழானையும் பாடிச் சிறப்புப் பெற்றிருப்பதால், இவரைச் சேரநாட்டவர் என்று கோடற்கும் இடனுண்டு. இவருடைய கருத்துக்கள் ஆழ்ந்த புலமையும் சீரிய பண்பும் பொருந்திக் கற்பார்க்கு மிக்க இன்பம் தருவனவாகும். "நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று, மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்" என்பது அரசியல் பற்றி இவர் கூறும் உண்மையாகும். ஒறுத்தற்குரிய குற்றத்தைத் தாம் செய்தவழி, அரசன் அதற்குரிய காரணத்தை நன்கறிந்து குற்றமின்மை தேர்ந்து சிறப்புச் செய்தது கண்டு வியந்துரைத்த இவரது பாட்டு, யாவரும் படித்து அறிந்து இன்புறத்தக்கது. பொதியில்மலைக்குரிய ஆய் அண்டிரன் முதலியோர் இவரால் சிறப்பிக்கப்படும் செல்வத் தலைவர்கள். இவர் பாடிய பாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. தலைமை மாண்புடைய ஆடவன் ஒருவனும் இளநங்கை ஒருத்தியும் கானற்சோலையில் தம்மிற்றாமே தனித்துக் கண்டு காதலுறவு கொண்டனர். இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் என்ற நிகழ்ச்சிகளால் அவரது காதல் வண்மையுற்று மாண்பெய் திற்று. இருவர் உள்ளத்திடையே நிலவும் காதல், தோழி அறியப் புலப்பட்டாலொழிய, மேலும் வளர்தற்கு இடமில்லை என் பதைத் தலைவன் நன்கு உணர்ந்து தோழியின் நட்பையும் ஆதரவையும் பெற முயன்று வென்றி கண்டான். தலைவியோ, தன் காதற்கருத்தைத் தோழிக்கும் உரைக்காது மறைத் தொழுகினாள். எவ்வாற்றாலேனும் தலைவி தன் கருத்தைக் குறிப்பாகத் தனக்கு வெளியிடற்கு வேண்டிய சொல்லும் செயல்களும் சூழ்வதில் தோழி கருத்துடையளானாள். ஒரு நாள், தலைவி தனித்திருப்பக் கண்ட தோழி, அவ்விடத்துக்கு அண்மையில் அவள் காணாவகையில் இருந்து, தன் நெஞ்சொடு கூறுபவள் போலத் தான் உரைப்பன அவள் செவிப்படுமாறு பேசலுற்றாள்; "மடல்மா ஊர்வோர் அது குதிரையன்றாயினும் குதிரையெனவே கருதி ஊர்வது போல வந்து, நீர் போலத் தோன்றுவது பற்றி நீர் வேண்டிப் பேய்த்தேர்ப்பின் செல்வது போல இவளை வேண்டித் தலைவன் என்னைக் குறையிரந் தானாக, நீ கூறற்குரிய மொழிகளை என் வாயால் யான் கூறவல்லே னல்லேன்; அதனால் நின்பால் வருபவர்க்கு நீ அருளல் வேண்டும் எனக் கண்களால் இனிது விளங்குமாறு காட்டியும், இவள் என்னைத் தெளிகின்றாள் இல்லை; அவனோ பெரிதும் ஆற்றா னாய் என்பாற் போந்து, எல்வளையாய், யான் அவளைக் கானற் சோலையிற் கண்டு என் சென்னி அவள் அடிகளில் தோயுமாறு வணங்கினால், அஃது என்னென்று கருதப்படும் என்று கூறு கின்றான். அஃது ஆயமும் பிறரும் அறியின் ஏதமாகுமே என்ற அச்சத்தால் யான் வருந்துகிறேன்" என்றாள். இது கேட்டதும், தலைவி போந்து, "என்னை என்ன செய்யச் சொல்லுகின்றாய்?" என்பது போலும் சொற்களைச் சொல்லித் தன் கருத்தை வெளி யிட்டுத் தோழியின் அறிவுவழி நடக்கத் தலைப்படுகின்றாள். தோழியின் இக்கூற்று, நாணத்தால் வாயடைத்திருந்த தலைவியைப் பைய நாண் நீங்கித் தன் காதலொழுக்கத்தைத் தோழியறிய வாய் திறந்து மொழிதற்கு ஏற்ற சூழ்ச்சி நிறைந்து நிற்பது கண்ட ஆசிரியர் மோசிகீரனார், அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். இளநங்கை யொருத்தியின் காதலுறவைக் குறிப்பால் அறியினும், ஒரு சிறிதேனும் அது வெளிப்படையாகத் தெரிந்தாலொழிய, அவளைத் தன் காதல னுடன் கூடி யியங்கச் செய்வது அரியவற்றுள் எல்லாம் மிகவும் அரியதொன் றாகும். மாவென மதித்து மடலூர்ந் தாங்கும் 1அறலென மதித்து வெண்டேர் ஏறி என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயிற் 2சேரி சேரா வருவோர்க் கென்றும் அருளல் வேண்டும் அன்புடை யோய்எனக் கண்ணினி தாகக் 1காட்டியும் தேரலள் யானே 2எல்வளை யாய்தண் கானல் வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த சென்னி சேவடி சேர்த்தின் என்னெனப் 3படுமோ என்றலும் உண்டே. இது, குறைநேர்ந்த தோழி, தலைமகளை 4முகம் புக்கவழித் தன் சொல் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினானெனத் தான் ஆற்றாளாய்ச் சொல்லியது; தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புகப் பெறாள் ஆற்றாது தன்னுள்ளே சொற்றதூஉ மாம். உரை : மாவென மதித்து மடல் ஊர்ந்தாங்கும் - குதிரையெனக் கருதிப் பனைமடலாற் செய்யப்பட்ட குதிரை யூர்ந்து வரு வாரைப் போலவும்; அறல் என மதித்து வெண்தேர் ஏறி - நீர் என்று நினைத்துப் பேய்த்தேரை நோக்குவது போலவும் என்பால் வருதலால்; என்வாய் நின்மொழி மாட்டேன் - என் வாயால் நீ கூறற் குரியவற்றைக் கூற வல்லேனல்லேன்; நின் வயின் சேரி சேரா என்றும் வருவோர்க்கு - நீ சேருமிடம் நோக்கி நின்பால் நாளும் சேர வருபவர்க்கு; அருளல் வேண்டும் - நீ அருள்செய்தல் வேண்டும்; அன்புடையோய் - அன்புடையவளே; என - என்பது தோன்ற; கண் இனிதாகக் காட்டியும் - கண்களால் இனிமையுற விளங்கக் காட்டிய வழியும்; தேரலள் - என் தலைவியாகிய இவள் என்னைத் தெளிகின்றாளில்லை; எல்வளையாய் - விளக்கமான வளை களையுடையாய்; தண் கானல் - தண்ணிய கானலிடத்தே; வண்டுண் நறுவீ - வண்டினம் தேனுண்டு உதிர்க்கும் நறிய பூக்கள்; நுண்ணிதின் வரித்த சென்னி - நுண்ணிதாகப் படிந்த என் தலையை; யான் சேவடி சேர்த்தின் - நின் தலைவியாகிய அவளுடைய சேவடி பொருந்த யான் வணங்குவேனாயின்; என் எனப்படுமோ - அஃது என்னென்று அவளாற் கருதப் படும், கூறுக; என்றலும் உண்டு - என்று கேட்டலையும் அவன் உடையன்; அஃது ஆயமும் பிறரும் அறியின் ஏதமாம் என்று யான் அஞ்சுகின்றேன் எ.று. மடல் ஊர்ந்தாங்கு, வெண்டேர் ஏறி வருதலின், என் வாய் நின்மொழி மாட்டேனாக, நின்வயின், என்றும் சேரி சேரா வருவேர்க்கு, அன்புடையோய், அருளல் வேண்டும் எனக் கண்ணினிதாகக் காட்டியும், இவள் தேரலள்; அவனும், எல்வளையாய், தண்கானலில், யான் என் சென்னி அவள் சேவடி சேர்த்தின், என்னெனப்படுமோ என்றலும் உண்டு; அஃது ஆயமும் பிறரும் அறியின் ஏதமாம் என அஞ்சுகின்றேன் என்று குறிப்பெச்சம் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. மடல், பனைமடலாற் செய்யப்பட்ட குதிரை. அறல், நீர், வெண்டேர், பேய்த்தேர். வேனில் வெயிலில் பேய்த்தேர் நீர்நிலைபோலக் காட்சி யளித்தல் இயற்கை; "அறல் அவிர்ந் தன்ன தேர்நசைஇ யோடி1" என்று பிறரும் கூறுதல் காண்க. மடலூர்ந்தாங்கு என்ற உவமை தலைவனது நிறையிழந்த தோற்றத்துக்கும், வெண்டேர் ஏறி என்ற உவமை அவனது வேட்கை மிக்க நோக்கத்துக்கும் நின்றன. உம்மை இசைநிறை. ஏறியாங்கு என உவமவுருபு வருவிக்க . நின்வயின் வருவோர்க்கு என்றதற்கேற்ப, என்வயின் வருதலால் என்பது வருவிக்கப் பட்டது. தேர்தல், தெளிதல், யான் சேர்த்தின் என இயையும். எல்வளை தோழிக்கு முன்னிலை. எல், இலங்குதல். மலரின் தாது படிதல் நுண்ணிதாகத் தோன்றுதல் பற்றி நுண்ணிதின் வரித்த என்றார். உண்டு, இடையற வின்றி உளதாயிற் றென்பதுபட நின்றது, ஓ, ஐயம். தலைவியின் செவிப்படுமாறு தனக்குள்ளேயே பேசுப வளாகிய தோழி, தலைமகன் தன்பாற் குறைவேண்டி வந்தவன், மடலூர்வோன் நாணமும் நிறையு மிழந்து நிமிர்ந்து தோன்றுதல் போல ஆயமும் நீயும் பிறரும் காண்ப ரென்ற எண்ண மின்றி நிமிர்ந்த செலவொடு வந்தான்; நாம் மறுப்பின் மடலூர்தற்கும் சமைந்தான் போலத் தோன்றினான் என்பாள், மாவென மதித்து மடலூர்ந் தாங்கு என்றும், வேனிற் காலத்து நீர்வேட்கையுற்றோர் பேய்த்தேரின் உண்மை தேறாது நீர் என்றே கருதி அதனைப் பெறும் வேட்கை மீதூர்ந்து நோக்குவது போல, அன்பின்மை யுணராது என்பால் அன்புடையாய் போல நீ தோன்றுவது கண்டு நினது அருளைப் பெறலா மென்ற வேட்கை மீதூர்ந்து நோக்கு கின்றான் என்றற்கு அறலென மதித்து வெண்டேர் ஏறி என்றும், நின் மொழிகளை யான் அறியே னாகலின், வாயால் யான் யாதும் கூறற்கில்லேன் என்பதை அறியாமல், என்பால் நின்னை இரக்கின்றான் என்பாள், என்வாய் நின்மொழி மாட்டேன் என்றும், நின்வயின் சேர வருதல் கருத்தாயினும், நீ சேருமிடம் யான் எனக் கருதி என்றும் என்பாலும் நின் பாலும் வருகின்றான் என்பாள், நின்வயின் சேரி சேரா வருவோர்க்கு என்றும், அவன்பால் அன்புடையை யாகலின் நீ அருளல் வேண்டும் என வாயாற் கூறாது கண்ணால் நன்கு விளங்கக் காட்டினேன் என்பாள், அருளல் வேண்டும் அன்புடையாய் எனக் கண்ணினிதாகக் காட்டியும் என்றும், காட்டியும் அவள் என் உடம்பாட்டினைத் தெளிகின் றாளில்லை என்பாள் தேரலள் என்றும் கூறினாள். இவள் நிலை இதுவாக,அவனோ எனின், என்னைக் குறையிரந்து நிற்றலை வெறான் என்பாள், எல்வளையாய் என்றும், அவள் கானற்சோலைக்குப் போதருமிடத்து, என் தலையால் நின் தலைவியினுடைய சேவடியை வணங்கினால் என்னை ஏற்றுக் கொள்வளோ என இடையறவின்றிக் கேட்ட வண்ணம் இருக்கின்றான் என்பாள், சென்னி சேவடி சேர்த்தின் என் னெனப் படுமோ என்றலும் உண்டு என்றும் கூறினாள். இது பிறர் அறியின் ஏதமாகுமே, அன்றி அவள் மறுத்தால் அவன் இறந்து படுவனே என்றெல்லாம் எண்ணி அஞ்சி வருந்து கின்றேன் என்பது குறிப்பெச்சம். இதனாற் பயன் தோழி தலைவியை மதியுடம்படுத்தலாம். 343. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் மனைவாழ்வில் மாண்புறும் தலைமகன், பொருள் குறித்துத் தன் மனைவியின் நீங்கி வேற்று நாட்டுக்குச் சென்றான். மனை வாழ்க்கை தொடங்கிய சின்னாட் கெல்லாம் இப்பிரிவு தோன்றினமையின், புது மண வின்பத்தில் திளைத்திருந்த தலைவிக்கு வேட்கைமிகுதியால் ஆற்றாமை மீதூர்ந்தது. மலைப் பொழுதும், மலயத் தென்றலும், ஆயர்குழலும் அவளுடைய காதல் வேட்கையைக் கைம்மிகச் செய்தன. அவள் வாழும் ஊர், கல்லும் தூறும் நிறைந்த முல்லைக்காட்டின்கண்ணது. வீடு தோறும் திண்ணிய செறிந்த வேலி சூழ்ந்து காட்டுவிலங்குகள் புகாவண்ணம் காவற்கதவு பெற்றிருக்கும். எனினும் அஃது இரவலர்க்கும் பரிசிலர்க்கும் அடையாது திறந்திருக்கும் சிறப் புடையதாகும். ஊர்நடுவே பெரிய ஆலமரம் உண்டு. அதன் நெடிய வீழ்துகள், தெருவிற் புழுதியெழச் செல்லும் ஆனினங்களின் முதுகிற் படுமளவு தாழ்ந்திருக்கும். அம்மரத்தின்கண் கடவுள் உறையும் என்று ஊரவர் கருதுவர். அதனால், அவர்கள் அந்தி மாலையில் அங்கே பொங்கலிட்டுக் கடவுட்குப் பலியாகச் சோறுபடைப்பர். அப்பலியை யுண்ட காக்கையினம் தன் சுற்றத்துடன் அவ்வாலமரத்தின் கிளைகளில் செறிந்திருக்கும். இக்காட்சியில் ஈடுபட்ட தலைமகள், "காக்கையினம் சுற்றத் தோடு கிளைக்கண் தங்க, தென்றல் மணம் கமழ்ந்து வர, ஆயர் குழலிசை அதனூடு பரந்து போந்து கேட்போர் உள்ளத்தில் அவர்தம் துணைவரை நினைப்பித்து வேட்கைத்தீயை மூட்டி வெதுப்பி வருத்தும் இம்மாலைக்காலம், பொருளீட்டல் கருதி நம்மின் நீங்கிச் சென்ற காதலர் உறையும் நாட்டின்கண் இராதோ? இருந்தால், அவர் நம்மை நினைந்து ஆற்றாமையால் விரைந்து போதருவ ரன்றோ?"என்றாள். தலைவியின் இக்கூற்றின்கண், காதலரைப் பிரிந்துறையும் இளமகளிர்க்கு மாலைப்போது தோன்றிக் காதல் நோயை மிகுவிப்பதும், அதனால் அவர்கள் ஆற்றாராகி அம்மாலையாம் பொழுது காதலன் பிரிந்துறையும் நாட்டில் இல்லைபோலும் என அறிவறை போகி மொழிவதும் கண்ட கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் அவற்றை வியந்து இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி 1அடையாத் திறந்த அங்குடிச் சீறூர்த் தாதெரு மறுகின் ஆபுறம் தீண்டும் நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி அருந்திய 2தொகுகருங் காக்கை புன்கண் அந்திக் 3கிளையொடுஞ் செறியப் படையொடு வந்த பையுண் மாலை இல்லைகொல் வாழி1 தோழி நத்துறந் தரும்பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே. இது, தலைமகன் பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் மாலையம் பொழுது கண்டு சொல்லியது. உரை : முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி - முல்லைக் கொடி படர்ந்த கற்களினூடே செல்லும் சிறுவழிகள்; அடையா - அடைக்காமல்; திறந்த - திறந்த வாயில்களையுடைய; அங்குடிச் சீறூர் - அழகிய வீடுகளையுடைய சிறிய ஊரின்கண்; தாதெரு மறுகின் - புழுதி நிறைந்த தெருக்களிற் செல்லும்; ஆ புறம் தீண்டும் - ஆனினங்களின் முதுகிடம் தீண்டி அலைக்கும்; நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து - நெடிய வீழ்துகளைத் தொங்கவிட்ட கடவுள் உறையும் ஆலமரத்தின் அடியில்; உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை - சொரியப்படும் பலிச் சோற்றை யுண்ட தொகுதியான கருங்காக்கை; புன்கண் அந்தி - ஒளி குன்றும் புன்கண்ணையுடைய அந்தியில்; கிளை யொடும் செறிய - கிளைகளாகிய காக்கைகளோடு கூடித் தங்க; படையொடு வந்த பையுள் மாலை - தென்றலும் குழலிசையுமாகிய கொல்லும் படையோடே போந்த துன்பம் மிக்க மாலையம்பொழுது; தோழி -; இல்லைகொல் - இல்லை போலும்; வாழி - நந்துறந்து - நம்மைக் கைவிட்டு; அரும் பொருட் கூட்டம் வேண்டி - அரிய பொருட்டொகுதியை ஈட்டுதலை விரும்பி; பிரிந்துறை காதலர் - பிரிந்துறையும் காதலர்; சென்ற நாட்டு - சென்ற நாட்டின்கண் எ.று. தோழி, வாழி. அரும்பொருட் கூட்டம் வேண்டி நத் துறந்து பிரிந்துறை காதலர் சென்ற நாட்டின்கண் மாலை இல்லைகொல் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. சீறூர் மறுகில், ஆ புறம் தீண்டும் நெடுவீழ் இட்ட ஆலத்துக் காக்கை கிளையொடும் செறிய வந்த பையுள்மாலை என இயையும். விலங்குகட்கு அடைத்து இரவலர்க்கும் பரிசிலர்க்கும் திறந்த வாயிலையுடைய குடி என்றார், அடையாது திறந்த எனற் பாலது அடையாத் திறந்த என வந்தது. தாதெரு, புழுதி. ஆலமரத்தில் கடவுள் உறையும் என்பது வழக்காதல் பற்றிக் கடவுள் ஆலத்து என்றார். புன்கண், ஒளியின்மையால் உள தாகும் சிறுமை. "பொருள்வேண்டும் புன்கண்மை1" என்றாற் போல. மாலை மதியமும் தென்றலும் குழலிசையும் காதல் நோய் உற்றார்க்கு நோய் மிகுவித்துத் துன்புறுத்துவது பற்றி, படை என்றார். நம்மைத் துறந்து என்பது நத்துறந்து என வந்தது. பொருளின் பன்மையும் மிகுதியும் தோன்ற அரும் பொருட் கூட்டம் எனப்பட்டது. மாலைப்போது எய்துமிடத்து ஞாயிற்றின் ஒளி குறை தலால், புறவுலகு மறைந்தொழியும்; அப்போழ்து அதனோடு தொடர்பு கொள்ளும் கண் முதலிய அறிகருவிகள் செய லறும்; அந்நிலையில் மனம் பொறிவழி இயங்கும் இயக்கம் மடங்கித் தன்னுள் அடங்கிக் கிடக்கும் நினைவுகளை நோக்கும்; இளமைக்காலத்து வளஞ் சிறந்து நிற்கும் உடற் கூறுவேறு உடம்பு படைக்கும் செயற்குரிய உணர்வுகளை எழுப்பும்; அவற்றின் வழியே மனம் நின்று புணர்துணையை நினைப்பித்து அலைக்கு மாகலின், மாலைப்போது வரக் கண்ட தலைவி, தன்னைப் பிரிந்துறையும் காதலனை நினைத்து வருந்தலுற்றாள். ஞாயிறு மறையும் அந்திப்போது நெருங்குவது கண்டு, காக்கைகள், பலி யருந்தி ஆலமரத்தின்கண் தத்தம் துணையொடு தங்குதல் தோன்றவே தொகுகருங் காக்கை கிளையொடும் செறிய என்றும், ஒளியின்மை காக்கைகட்கே யன்றிக் காதலரைப் பிரிந்துறையும் மகளிர்க்கும் துன்பம் செய்தல்பற்றிப் புன்கண்அந்தி என்றும் கூறினாள். மாலைத் தென்றலும், ஆயர் குழலிசையும், மெய்யினும் செவியினும் முறையே தோய்ந்து காதல் வேட்கையைத் தூண்டி, உள்ளும் புறமும் வெதும்பினமையின் அவற்றை உயிர் கொல்லும் படையெனக் கருதிப் படையொடு வந்த பையுள் மாலை என்றாள். "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்2" என்றும், "அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை3" என்றும் சான்றோர் கூறுவது காண்க. பையுளைச் செய்யும் மாலையைப் பையுள் மாலை என்றாள். காலையிலும், பகலிலும் உண்மை தெரியாது ஒளித்திருந்த காதல்நோய் வெளிப்பட்டு வருத்துதற்கு மாலைப்போது இடனாதலின், பையுள்மாலை எனப்பட்டது. மாலைப்போதின் இயல்பினைக் காதலர் நன்கு அறிவராகலின், அவர் அறிவுக்குப் புலனாகும் வண்ணம் இப்பையுள் மாலை அவர் பிரிந்துறையும் நாட்டின்கண் எய்துவது இல்லை என்று கருதுகிறேன் என்பாள், பையுள்மாலை இல்லை கொல் என்றாள். எங்கும் நிலவுவதாகிய மாலைப்போது காதலர் உறையும் நாட்டில் இல்லாதொழியாது என வாயாற் கூறாது, கண்ணாலும் முகத்தாலும் தோழி குறித்துக் காட்டி மறுக் கவும் மாலைப்போது எய்தினும் பையுள் மாலையாகி வருத்த முறுவியாது போலும் என்றற்கு இல்லை கொல் என்பதனோடு ஒழியாது பையுள்மாலை இல்லைகொல் வாழி தோழி என்றாள். பிரிந்துறையும் காதலனிடத் தினின்றும் போந்த தூதுரையால், அவன் உள்ளத்துக் காதல் மாண்பினை அறிந்து அவன் விரைந்து வருதல் வேண்டுமென நினையும் தலை மகள், அவனை விரையாவாறு பொருளின் அருமையும் அதனை யீட்டற் கெழுந்த வேட்கையும் தடுக்கின்றன என்பாள், அரும்பொருள் ஈட்டம் வேண்டிப் பிரிந்துறை காதலர் என்றும், அவன்பால், தன்னுள்ளத்து நிறைந்த காதலை மாலைப்போது தோன்றி அலைப்பது போலத் தலைவன் உறையும் நாட்டினும் இவ்வியல் பிற்றாகிய மாலை தோன்றிப் பையுள் விளைக்குமாயின், பொருளை விரைந்து செய்து மீள்வர் என்பாள், காதலர் பிரிந்துறை நாட்டுப் பையுள் மாலை இல்லைகொல் என்றும் கூறினாள். சீறூர்த் தெருவின்கண் புழுதி யெழப் போதரும் ஆவின் புறம், ஆலத்தின் நெடுவீழைத் தீண்டி அலைக்கும் என்றதனால், தலைவன்பானின்றும் காதற்சிறப்புரைத்து வரும் தூது, அவன் வரவு நோக்கி நெடிது நினைத்திருக்கும் தலைவி நெஞ்சினைத் தீண்டி அலைக்கின்றதென உள்ளுறை கொள்ளப்படும். உகு பலி அருந்திய காக்கை கிளையொடு செறிதற்கு ஆலமரம் ஆதாரமானாற் போலத் தன் மனைக்கண் வழங்கும் கொடை யினைப் பெற்று இரவலரும் பரிசிலரும் கிளைஞரும் பிறரு மாகிய சுற்றத்தார் இனிதிருத்தற்குத் தான் தன் கணவனொடு கூடிச் செய்யும் மனைவாழ்க்கை ஆதாரமாம் எனத் தலைவி உள்ளுறுத் துரைத்தமை அறிக. இவ்வாறு பொருட்குப் பயன்படும் வகையிற் கூறாவிடின் உள்ளுறை பயனின்றாமென அறிக. இதனாற் பயன் தலைவி அயாவுயிர்ப்பாளாவது. 344. மதுரை அறுவை வணிகன் இள வேட்டனார் களவுக் காதலொழுக்கம் நிகழ்ந்து வருகையில், தலைவியின் காதல் மாண்பினைத் தோழி நன்கு உணர்ந்து தலைமகனைக் காணும் போதெல்லாம் குறிப்பாய் வரைவுகடாவினாள். ஆயினும், தலைமகளைக் களவிற் கண்டு பெறும் இன்பத்தையே தலைமகன் பெரிதும் விரும்பிநின்றான். விரைந்து வரைந்து கோடலே தலைவன் இனிச் செயற்பால தென்பதைத் தெளிந்த தோழி, தக்க சூழ்ச்சி யொன்றை எண்ணினாள். ஒருகால், தலைவன் தலைவி மனையின் ஒரு பக்கத்தே வந்து நின்றான்; அதனைக் கண்ட தோழி தலைமகளோடு ஒருபால் நின்று அவன் செவிப் படுமாறு சொல்லாடலுற்று, "தோழி, நமது தினைப்புனம் தாள் முற்றிப் பருத்த கதிர்களைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனைக் காப்பது குறித்து நாம் அவண் போதற்குச் சமைந்துள்ளோம்; நாம் போய்விடுவோமாயின், இவண் நம்மைக் காணவரும் தலைமகன் நமது நிலைமையை உணராமல் வறிதே தன் உறைவு இனிய ஊர்க்கே சென்றொழிகுவானோ? அவன் குறிப்பு யாதாம்? "என்றாள். இக் கூற்றின்கண், தான் குறிப்பாய் வரைவு கடாவியதைத் தெருண்டு வரைவுக் குரியன முயல்வதே தலைமகன் செயற்பால தென்ற கருத்தை, வேறு வாய்பாட்டால், சான்றோரைச் சூழ்ந்து வரைவொடு புகுதாது, தன் ஊர்க்கண்ணே ஒடுங்கி யமைவனோ என்பது படக் கூறிய நயம் கண்ட ஆசிரியர் அறுவை வாணிகன் இளவேட்டனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடு கின்றார். அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட மணியேர் தோட்ட மையார் ஏனல் இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் காவல் கண்ணின மாயின் ஆயிழை நந்நிலை இடைதெரிந் துணரான் தன்மலை ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் சாரல் நீளிடைச் சாலவண் டார்ப்பச் 1செல்வன் கொல்லோ தானே உயர்வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப இரும்புலி களிறுதொலைத் துரறும் கடியிடி மழைசெத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும் 2இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே. இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. உரை : அணிவரை மருங்கில் - அழகிய மலைப்பக்கத்தே; ஐது வளர்ந்திட்ட - கண்டோர் வியக்குமாறு செழிப்புற வளர்ந்த; மணியேர் தோட்ட மையார் ஏனல் - நீலமணி போலும் தோட்டினையும் கரிய நிறத்தையுமுடைய தினை; இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும் புனம் - கரிய பிடியானையின் பெரிய கையைப் போலப் பருத்து வளர்ந்த பெரிய புனத்தை; காவல் கண்ணினம் - காவல் புரிவதைக் கருதி அவண் செல்லச் சமைந்துள்ளோம்; ஆயின் - ஆதலால்; ஆயிழை - ஆய்ந்த இழையினை அணிந்த தோழி; நம் நிலை இடை தெரிந்து உணரான் - இவண் போதரும் தலைவன் நமது நிலைமையைக் காலமும் இடமும் ஆராய்ந்து அறியானாய்; தன்மலை ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் - தன் மலையில் விளைந்த சந்தனத்தின் தேய்வை பூசிய அழகிய மார்பின்கண்; சாரல் நீளிடை - மலைச்சாரலின் இடைவெளியில்; சால வண்டு ஆர்ப்ப -வண்டுகள் மொய்த்து மிகவும் ஆரவாரிக்க; செல்வன் கொல்லோ - சென்றொழிவான் போலும்; உயர்வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப - உயர்ந்த மலையில் பெரிய கற்களின் இடையேயுள்ள முழைஞ்சுக ளெல்லாம் எதி ரொலிக்க; இரும்புலி களிறு தொலைத்து உரறும் கடியிடி - பெரிய புலி யானையைக் கொன்று முழங்கும் அச்சம் பயக்கும் முழக்கத்தை; மழை செத்து - மழைமுகிலின் முழக்கமெனக் கருதி; இன்கல் செந்தினை யுணங்கல் தொகுக்கும் யாணர் - இனிய பாறைமேல் பரப்பிய சிவந்த தினையின் உலரவைத்த மணிகளை மகளிர் ஒன்று திரட்டும் புதுமையையுடைய; தம் உறைவு இன்ஊர்க்கு - உறைதற்கு இனிதாகிய தமது ஊர்க்கே எ.று. என்றது, சான்றோரைச் சூழ்ந்து வரைவொடு புகுதலே இனி அவன் செயற்பாலது என்பதாம். ஆயிழை, நாம் பெரும்புனல் காவல் கண்ணின மாயின், நம் நிலை தெரிந்து உணரான், வண்டார்ப்ப, உறைவின் ஊர்க்குச் செல்வன்கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புலி, களிறு தொலைத்து உரறும் கடியிடி, மழை செத்துத் தினை யுணங்கல் தொகுக்கும் இருங்கல் யாணர்த் தம் மூர் என இயையும். அணிவரை, புனம் அமைத்துத் தினை முதலியன விளைத்தற் கேற்ற பக்கத்தை யுடைமையால் அழகி தாகிய மலை என்க. ஐ,வியப்பு. தோடு கதிரை மூடியிருக்கும் தோகை, நீலமணி போல்வது பற்றி மணித் தோடு எனப் பட்டது. பால் கட்டிய தினைக்கதிர் புறம் கறுத்துத் தோன்று தலின், மையார் ஏனல் என்றார். தடைஇய, தடவென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. ஆரம், சந்தனம். குன்றவர் விளைத்தெடுத்த தினையைக் கற்பாறை மேல் பரப்பி உலர்த்துவது மரபு. "நிரைவளை முன்கை நேரிழைமகளிர் இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பி1" என்று பிறரும் கூறுவது காண்க. பிடியானையின் கையைத் தினைக்கதிர்க்கு உவமை கூறல் சான்றோர் மரபு. "பிடிக்கை யன்ன பெருங்குர லேனல்2" என்றும், பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்வு, கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரல்3" என்றும் வருவன காண்க. களவுநெறியில் ஒழுகும் தலைவியது காதல் மாண்பை நன்குணர்ந்துகொண்ட தோழி, தலைமகனைக் குறிப்பாற் பன்முறையும் வரைவு கடாவினாள்; ஆயினும், அவற்றைத் தெருளாது களவையே அவன் விரும்பி யொழுகியது அலர் விளைத்து இற்செறிப்பினைப் பயக்குமென அஞ்சினாள் தோழி.ஒருநாள் அவன் சிறைப்புறம் போதரக் கண்டு, அவன் செவிப்படத் தலைவியொடு சொல்லாடலுற்று, இனி அவன் இவண் வருதலைத் தவிர்த்து வரைவொடு புகுவதையே செயற்பாலன் என அறிவிப்பாளாய்த் தாம் புனங்காவல் குறித்துப் போதற்குச் சமைந்திருக்குமாறு தோன்றப் பெரும் புனங்காவல் கண்ணினம் என்றும், இந்நிலையில் யாம் செயற்பாலது ஒன்றுமில்லை யென்பதை அவன் அறிகின்றா னில்லை யென்பாள், நம் நிலை இடைதெரிந்து உணரான் என்றும், நாம் நீங்கியவிடத்து அவன் போந்து கூட்டம் பெறுவதின்றி வெறிதே நீங்குவன் என்பாள், தன்மலை ஆரம் நீவிய ஆகம் சால வண்டார்ப்பச் செல்குவன் கொல்லோ என்றும், கூட்டம் பெறாவழி நம்மூர் நமக்கு உறைவு இனி தன்றாக, அவர் ஊர் அவற்கு இனிதாகும் போலும் என்பாள், தம் உறைவின் ஊர்க்கே என்றும் கூறினாள். களிறு பொருத புலியுரறும் கடியிடியை மழை யென்று கருதிக் குறமகளிர் தினை யுணங்கலைத் தொகுக்கும் ஊரை யுடையவன் என்றது, தாயறிந்து எழுப்பிய வினாவுக்கு யான் இறுத்த விடையைக் கூறி வரைவு கடாவினேனாக, அதனைச் சேட்படையாகக் கருதிக் களவையே விரும்பு கின்றான் என்ற வாறு. ஆதலால், நம்நிலை தெரிந்துண ரானாய்க் கூட்ட மின்றித் தன்னூர்க்குச் செல்வன் என்றாளாம். இனி, இவ்வாறு கொள்ளாது, புலியுரறும் கடியிடியை மழையென்று பிறழக் கொண்டு மகளிர் தினையுணங்கலைத் தொகுப்பர் என்றது, அவன் பொருட்டுத் தலைமகட் கெய்திய வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதி அன்னை வெறியெடுக்க முயலு கின்றாள் என உள்ளுறுத்தவாறாகக் கோடலும் ஒன்று. இதனாற் பயன் தலைவன் தெருண்டு வரைவு மேற்கொள்வா னாவது. 345. நம்பி குட்டுவனார் களவின்கண் ஒழுகும் தலைமகன் வரைவிடைவைத்து வினை குறித்தும் நாடுகாவல் முதலிய இன்றியமையாக் கடமை குறித்தும் பிரிந்து செல்ல வேண்டியவனானான். இடையிடையே தலை மகளைக் கண்டு பயிலுதல் தவிரானாயினும், தலைவிக்கு ஆற்றாமை மிகுந்தது. தோழி அதனைத் தலைமகற் குரைத்து விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டினாள். ஒருகால், அவன் வரைவிடைவைத்துப் பிரியலுற்றுத் தோழிக்குஅதனைத் தெரிவித்தான். வரைவு கருதாது பிரிவு உணர்த்திய அவனது கூற்றுத் தோழி யுள்ளத்தில் வெம்மை தோற்றுவித்தது. அவள் தலைவியின் காதன்மிகுதியைக் காட்டி, "துறைவ, பெரியோர் செய்யும் கேண்மைகள் பெரியவும் அளியவுமாகும்; நின்னைப் போல் சால்பும் செம்மையும் கொண்ட மேலோர், தமது சொல்லைத் தெளிந்து தம்மை அடைந்தவர் நெஞ்சம் தெளிவிழந்து கையற்றுவாடி வருந்த அவரது கேண்மையை விரும்பாராயின், பின்பு அவர்கள் உயிர் சுமந்து வாழ்தல் என்ன பயனுடைத்தாம்? அடைந்தார் அடைதற்கு ஏதுவாயிருந்த தெளிவு, இனித் தேய்ந்து ஒழிவதாக" என்று சொன்னாள். இதன்கண், வரைவிடைப் பிரிந்தொழுகும் தலைமகன் அதனைக் கைவிட்டு விரைந்து வரைந்துகோடல் வேண்டுமென விரும்பிய தோழி, அவனது கேண்மைமேல் வைத்து, "நின் சொல்லைத் தெளிந்து கொண்ட கேண்மையை நீ விரும்பு கின்றிலை யாயின், கேளாகிய யாம் வாழ்வதிற் பயனில்லை யாகலின், இனி நீ செய்யும் தெளிவுரை கெடுக" எனக் கூறும் திறம் கண்ட ஆசிரியர் நம்பி குட்டுவனார் அதனை இப்பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். கானற் கண்டற் கழன்றுகு பைங்காய் நீனிற இருங்கழி1 உட்பட வீழ்ந்தென உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல் சிறுவெண் காக்கை ஆவித் தன்ன வெளிய விரியும் துறைவ என்றும் அளிய 1பெரிய கேண்மை நும்போல் சால்பெதிர் கொண்ட 2செம்மை யோரும் தேறா 3நெஞ்சம் கையறுபு வாட நீடின்று விரும்பா ராயின் வாழ்தல்மற் றெவனோ தேய்கமா தெளிவே. இது, தெளிவிடை விலக்கியது. உரை : கானல் கண்டல் கழன்றுகு பைங்காய் - கானலிடத்து வளர்ந்துள்ள கண்டல்களின் கழன்று உதிரும் பசிய காய்கள்; நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென - கரிய நிறமுடைய கழியிடத்து நீரின்கண் வீழ்வதனால்; உறுகால் தூக்க - மிக்க காற்றுப் போந்து அசைக்க; தூங்கி - அசைந்து; ஆம்பல் - ஆம்பல் மலர்; சிறுவெண் காக்கை ஆவித்தன்ன - சிறிய வெண்காக்கைகள் கொட்டாவி விட்டாற் போல; வெளிய விரியும் - வெள்ளிய இதழ் விரியும்; துறைவ - துறையினை யுடைய தலைவனே; அளிய பெரிய கேண்மை - அளிக்கத் தக்க பெருமையையுடைய கேண்மையை; என்றும் - எப்போதும்; நும்போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் - நும்மைப் போல் சால்பினை எதிரேற்ற செம்மைப் பண்புடைய தலை மக்கள்; நீடின்று விரும்பாராயின் - நெடிது வளர்தலின்றாக விரும்பா தொழிகுவராயின்; தேறா நெஞ்சம் கையறுபு வாட - அதனை யுணராது கேளாயினார் நெஞ்சம் செயலற்று வாடி வருந்த; வாழ்தல் மற்று எவன் - உயிர் வாழ்வது எப்பயனைச் செய்ய வல்லதாம்; தெளிவு தேய்கமா - ஆகவே நின் தெளிப்புரை கெடுக எ,று. துறைவ, நும்போற் செம்மையோர், என்றும், அளிய பெரிய கேண்மை நீடின்று விரும்பாராயின், வாழ்தல் மற்று எவன்? தெளிவு தேய்கமா எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று வினைமாற்று. ஓகாரம் அசைநிலை. மா, வியங்கோட் கண் வந்த அசைநிலை. பைங்காய் வீழ்ந்தென, ஆம்பல் தூங்கி, வெண்காக்கை ஆவித்தன்ன, வெளிய விரியும் துறை என இயையும். கண்டல், கழிமுள்ளிச் செடி காற்றும், கடல் அலையும் அலைத்தலால் கண்டற்காய்கள் தாம் நின்ற காம்பி னின்றும் உதிர்வது பற்றிக் கழன்றுகு பைங்காய் என்றார். வீழ்ந்தென, வீழ்வதனால் என ஏதுப்பொருள்பட வந்தது; மழை பெய்தெனக் குளம் நிறைந்தது என்றாற்போல. உறு கால்,மிக்க காற்று. ஆவித்தன்ன , கொட்டா விட்டாற்போல; "நீர்வாழ் முதலை ஆவித் தன்ன1" எனப் பிறரும் கூறுதல் காண்க. வெள்ளாம்பலின் வெள்ளிய இதழ்களை வெளிய என்றார். சால்பு, நிறைவு; அன்பு நாண் ஒப்புரவு கண் ணோட்டம் வாய்மை என்ற ஐந்தன் நிறைவு. செம்மைப் பண்பு சால்பினால் விளக்கம் பெறுதலின், சால்பெதிர் கொண்ட செம்மை என்றார். தேறுதல், தெளிதல். நீடின்று, நீடின்றாக. நீடுதல் நெடிது பெருகுதல், தெளிவு, தெளிவுண்டாக வுரைக்கும் சொல். "தெளிந்த சொல் தேறியார்க் குண்டோ தவறு2" என்பது காண்க. வரைவிடை வைத்துப் பிரிந்தொழுகுவதால், தலை மகட்கு ஆற்றாமை மிகுவது கண்டு வருந்தும் தோழியிடம், தலைமகன் தன் பிரிவுக் குறிப்பை யுணர்த்தலுற்று, "அஞ்சுதல் ஒழிக" எனச் சொல்லி, அவளைத் தெளிவிக்க முற்படவே, தலைமகளது வருத்தத்தைப் போக்குவது தனக்குக் கடனாதல் பற்றி உள்ளத்தில் உரம் படைத்துக் கொண்டு, "துறைவனே, நம்மிடை உளதாகிய கேண்மை நின்னை நோக்கப் பெருமையும், எம்மை நோக்க மிகவும் அளித்தற்குரிய தகுதியும் உடையது" என்பாள், அளிய பெரிய கேண்மை என்றும், அன்பு நாண் முதலிய ஐந்தன் நிறைவாகிய சால்பையே எதிரேற்று விளங்கும் செம்மைப்பண்புடைய சான்றோர். இக்கேண்மை நாளும் பெருகிச் சிறப்பதையே விரும்புவ ரென்பாள், சால்பு எதிர்கொண்ட செம்மையோர் என்றும், அவர்களை யொப்ப நீயும் அக்கேண்மை நீடு நிலைபெறுதலையே விரும்புதல் வேண்டும் என்பாள். நும்போல் செம்மையோர் என்றும், நும்போல் செம்மையுடையோர் கேண்மை நீடுதலை விரும்பாராயின், அவர் தமது செம்மைப்பண்பின் நீங்குவ ரென்பதைத் தெளியாது கேண்மையுற்றோர் நெஞ்சு புலர்ந்து செய்திறன் இன்றி வாடி வருந்துவ ரென்பாள், தேறா நெஞ்சம் கையறுபு வாட என்றும், எம் கேண்மையை விரும்பாமை இவ்வாறு வருத்த, ஏதிலாட்டியர் கூறும் அலருரை ஒருபால் தோன்றி எமது உயிரை வாட்டுதலால், இறந்துபடுத வல்லது எமக்கு இனி வாழ்வில்லை என்பாள், நீடின்று விரும்பா ராயின் வாழ்தல் மற்று எவனோ என்றும் கூறினாள். தோழி கூற்றின்கண் விளங்கி நிற்கும் உரன் கண்ட தலைமகன், அவளை வியந்து தெளிவுரை சில கூறத் தலைப்படவும், அவனை மறுப்பாளாய்த் தேய்கமா தெளிவே என்றாள். இங்ஙனம் தலைமை தோன்றத் தோழி மறுப்பது அமையும் என்பதை, "உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே1" என்பர் தொல்காப்பியர். உறுகால் தூக்கக் கண்டலின் கழன்றுகு காய்கள் கழிநீருள் வீழ்ந்தமையால், ஆம்பல் வெளிய வரியும் என்றது, தலைவன் பிரிவு அலைத்தலால் தலைவி மேனி மெலிந்து வேறுபடுவது கண்டு ஏதிலாட்டியர் வாய் விரிந்து அலர் தூற்றுகின்றனர் என உள்ளுறுத்துரைத்தவாறாகக் கொள்க. இதனாற் பயன் வரைவு கடாதல். விளக்கம் : "நாற்றமும் தோற்றமும்1"என்ற நூற்பாவுரையில் இப் பாட்டைக் காட்டி, "இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது" என்பர் நச்சினார்க்கினியர். 346. எயினந்தை மகன் இளங்கீரனார். மனைக்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன் பொருள் செய்யும் வினைகுறித்துத் தன் மனைவியிற் பிரிந்து சென்றான். தம்மிற் பகைகொண்ட வேந்தர் போருடற்றிக் கார்காலம் இடையிட்டதனால், அதனைக் கைவிட்டு நீங்கிய போர்ப்புலத்தின் வழியாகத் தலைமகனை யுள்ளிட்ட பொரு ளாளர் திரள் சென்றது. கார்முகில் பரந்து மழையைப் பெய் திருந்தது; அதனால் நிலமும் வெப்பம் தணிந்து தண்ணென்ற நிலைமை எய்திற்று; பகையரசர் செல்லும் வழியில் இருந்த ஊர்கள் பல அழிந்தன. ஆங்காங்கு வாழ்ந்த குடிகளும் தங்கள் வீடுவயல்களைக் கைவிட்டு நீங்கினர். ஊர்நடுவே யிருந்த மன்றங்களும் பாழ்பட்டமையின், அங்கெல்லாம் மக்கள் வழக் காறு இலதாயிற்று. ஆயினும் அவ்விடங்களில் தாள்வலியும் வன்கண்மையு முடையோர் சூழத் தலைமகன் ஒருபால் தங்கி யிருந்தான். அவ்விடத்தே மலர்ந்திருந்த பூக்களின் நறு மணம் எங்கும் பரவவே, அவனுக்குத் தன் மனைவி மலைப்பச்சை யெனப்படும் குளவி சூடி அதன் மணம் கமழ மனைக்கண் தன்னொடு கூடி யுலவிய தோற்றம் நெஞ்சில் காட்சி தந்தது. காதல் அவன் உள்ளத்தை அலைத்தது. அதுகண்டதும் நெஞ்சினை வேறுபட நிறுத்தி, "நெஞ்சே, பொருள்பற்றிய நினைவு தோன்றிய அப்போது நீ இதனை நினையாமல் ஆற்றிடையே நினைந்து மகிழ் கின்றனை; பொருள்செய்வினை குறைபட மீள்வது ஆள் வினையன்று காண்" என்றாள். தலைவனுடைய இக்கூற்றின்கண், பொருள் முதலியன குறித்து ஆடவர் பிரிந்தவிடத்து, வழியிடை அவர்கட்குத் தம் காதலியின் நினைவு தோன்றும் என்பதும், அது தோன்றினும் கடமையுணர்வு முன்னிற்றலின் நெஞ்சினைத் தெருட்டி மேற் கொண்ட வினைமுற்றுதலையே எண்ணிச் செல்வர் என்பதும் இனிது விளங்குதல் கண்ட ஆசிரியர் இளங்கீரனார் அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். குணகடல் முகந்து குடக்கேர் பிருளித் தண்கார் தலைஇய நிலந்தணி காலை அரசுபகை நுவலும் அருமுனை இயவின் அழிந்த வேலி அங்குடிச் சீறூர் ஆளில் மன்றத் தல்குவளி ஆட்டத் தாள்வலி1 யாகிய வன்கண் இருக்கை இன்று நக்கனைமன் 2போலாம் என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந்தண் கொல்லிச் சிறுபசுங் குளவிக் கடிபதம் கமழும் கூந்தல் மடமா 3அரிவை தடமென் றோளே. இது, பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை : குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி - கீழ்க்கடல் நீரை யுண்டு மேற்றிசையாக எழுந்து இருண்டு; தண்கார் தலைஇய நிலம் தணிகாலை - தண்ணிய கார்மழையைப் பெய்ததனால் நிலம் குளிர்ந்திருக்கும் காலத்தில்; அரசு பகை நுவலும் அருமுனை இயவின் - அரசர் பகைமை கூறிப் போருடற்றும் நெருங்குதற்கரிய போர்க்களம் நோக்கிச் செல்லும் வழியி லுள்ள; அழிந்த வேலி அங்குடிச் சீறூர் - அழிந்து சிதைந்த வேலியையுடைய அழகிய குடிகள் வாழ்ந்த சீறூரின் கண்ணுள்ள; ஆளில் மன்றத்து - காப்பாளர் இல்லாதொழிந்த மன்றத்தின்; அல்கு வளி ஆட்டத் தாள் வலியாகிய வன்கண் இருக்கை - செறிந்த காற்று மோதி அலைப்பவும் அடிப் படை வலிதாகிய வன்கண்மை பொருந்திய இருக்கையின்கண் கிடந்து; இன்று நக்கனைமன் போலாம் - இப்போழுது நினைந்து மகிழ்கின்றனை போலும்; என்றும் - எப்போதும்; நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் - கலைமுற்றும் நிறைந்த முழுமதியம் போல விளங்கும் பொறையனுடைய; பெருந்தண் கொல்லி - பெரிய குளிர்ந்த கொல்லி மலையில் வளரும்; சிறுபசுங் குளவிக் கடிபதம் கமழும் கூந்தல் - சிறிய பசுமையான காட்டுமல்லிகையின் புதுமணம் கமழும் கூந்தலை யும்; மடமா அரிவை - இளமையையும் அழகையுமுடைய அரிவையாகிய தலைவியின்; தடமென்றோள் - பருத்த மெல்லிய தோள்களை எ.று. நெஞ்சமே, நிலம் தணிகாலை, அருமுனை இயவின், சீறூர் ஆளில் மன்றத்து, வன்கண் இருக்கையிற் கிடந்து, அரிவை தடமென்றோள் நினைந்து, நக்கனைமன் போலாம் என்று மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. எயினந்தை மகனாரான இளங்கீரனார் சேரமன்னர் ஆதரவு பெற்றவ ராயினும், பாண்டி நாட்டிற் பிறந்து வளர்ந்தவராதலின், மழை முகில் கீழ்க்கடல்நீரை முகந்து மேற்குச் சேறலை விதந்து குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி என்றார். தலைஇய என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. பகைமை காரணமாக அரசர் தமது போர்த்திறனை முன்மொழிந்துகொண்டு செல்ப வாகலின், அரசு பகை நுவலும் அருமுனை என்றார். முனை, போர்நிகழும் இடம். அது பிறர் நெருங்குதற் கரிய தொன்றா கலின் அருமுனை எனப்பட்டது. இயவு, வழி, வன்மையுடைய வேலி சூழ இடையில் வீடமைத்துக் குடிகள் இனிது வாழ்ந்த சீறூர், அரசர் படைச்செலவால் அழிந்துபட்டமை தோன்ற, அழிந்த வேலி அங்குடிச் சீறூர் என்றும், படை செல்லும் வழியில் இருந்தமையின் அழிவுக்கு இலக்காயிற் றென்பார், இயவின் சீறூர் என்றும் கூறினார். ஊர்க்குப் போதரும் இரவலரும் பரிசிலரும் தங்குமிடமாகிய மன்றம் ஊர் பாழ் பட்டமையின் ஆளில் மன்ற மாயிற்று. தாள் வலியாகிய இருக்கை , அடிப்படை வன்மையால் தளராத இருக்கை. நக்கனைமன் : மன் அசைநிலை. போலாம் : ஒப்பில் போலி. அரசர்க்கும் அரசியற்கும் உரிய கலைபலவும் நிறையக் கற்றிருத்தல் தோன்ற, நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் என்றார். குட்டநாடு, பொறைநாடு, குடநாடு என்ற முத் திறத்ததாகிய சேர நாட்டு அரசர்குடியில், பொறைநாட்டுப் பொறையர்குடியில் தோன்றிய சேர மன்னனைப் பொறையன் என்பர். தமது காலத்தில் கொங்குநாடு முற்றும் சேரமன்னர் ஆட்சியி லிருந்தமையின், அந்நாட்டுக் கொல்லிமலையைப் பொறையன் கொல்லி என்றார். கடிபதம், புதுமணம். குளவி, காட்டுமல்லிகை; இதனை மலைப்பச்சை என்றலும் உண்டு. தோள் பெருத்திருத்தல் இலக்கண மாகலின், மகளிரின் மெல்லிய தோளைத் தடமென்றோள் எனச் சான்றோர் வழங்குப. பொருள் செய்தல் கருதித் தன் மனைவியைப் பிரிந்து போந்த தலைமகன், இடையில் கார்காலம் வந்தமையின், ஒரு சீறூர் ஆளில் மன்றத்து வன்கண் இருக்கையில் தனித் துறையுங் கால், தலைவியின் தோள்நலம் நினைவில் தோன்றவும், பிறர்க்கு உரைத்தல் ஆகாமையால், நெஞ்சோடு கூறு கின்றான். நெஞ்சினை உணர்வுடையது போல வேறு நிறுத்திப் பேசுதல் மக்கட்கு மரபு. கார்மழையில் புறத்தே தோன்றும் நிலவுலகு வேனிலால் உண்டாகி யிருந்த வெப்பம் நீங்கித் தண்ணிதாய், ஆடவர் மேற்கொண்ட வினையைச் செய்தற்கு ஏலாததாய் இருந்தமையின், தலைவன் உள்ளத்தில் ஒடுங்கி யிருந்த காதலுணர்வு வெளிப்படத் தலைப்பட்டது. அவன் தான் இருக்கும் மன்றத்தை நோக்கினான்; அது பகைவரால் அழிந்து பாழ்பட்டமை விளங்கவும், அதனை விதந்து அழிந்த வேலி அங்குடிச் சீறூர் ஆளில் மன்றம் என்றும், அரசர் படைச்செலவால் வேலியே பெரிதும் அழிந்த தென்பான், அழிந்த வேலி அங்குடிச் சீறூர் என்றும், ஊரவர் படையின் செருக்கும் தகைமையும் கண்டு அஞ்சிக் கைவிட்டு நீங்கினமை யால், மன்றத்தின்கண் காப்பாளர் ஒருவரும் இலராயின மையின் ஆளில் மன்றம் என்றும், அதனைக் காற்றும் மழையும் மோதி அலைத்தவழியும், தாள் வன்மையால் அது கெடாது நின்று யாம் இருத்தற்கு இடமாயிற்றாயினும், வாழ்வோர் போகிய பாழூர் ஆளில் மன்றத்து இருத்தல் வன்கண்மை யுடையார்க்கே இயலுவ தென்பான், வன்கண் இருக்கை என்றும் கூறினவன், "வன்கண் இருக்கைக்கண் தலைவியின் மென்றோளை நினைந்து நீ மகிழ்தல் நகுதற்குரியது" என நெஞ்சினை நெருங்கிக் கூறுவான், இன்று நக்கனைமன் போலாம் என்றும், மேற்கொண்ட வினை முடித்தல்லது மீளலாகாமை அறிந்திலை யாகலின் நக்கனை; என்னே நின் பேதைமை இருந்தவாறு என்றும் கூறினான். இதனாற் பயன் செலவழுங்குதல். 347. பெருங்குன்றூர் கிழார் களவின்கண் காதலுறவு கொண்ட தலைமக்களில் தலை மகளின் காதல் சிறந்து முறுகுவது கருதிக் களவிற் கூட்டத்தையே விரும்பி யொழுகினான் தலைவன். விரைய வரைந்து கொள்ளு மாறு தோழி பன்முறையும் அவனுக்கு உணர்த்தினாள். ஆயினும், அவன் வரையாது நீட்டித்தலே செய்தான். அதனால் தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது. அவள் மேனி நலமும் வேறுபடுவதாயிற்று. அது கண்ட தோழி எத்துணையோ கருத்துக்களை எடுத்தோதி ஆற்றியிருக்குமாறு வற்புறுத்தினாள். அப்போது, தலைவி மனம் வருந்தி, "நம் தலைவன்பாற் சென்று மீண்ட பரிசிலர் இவண் போந்து அவன் மிகவும் இனியன்; தவறாத வாய்மையன்; நம்பால் பேரன்புடையன் என நெடிது மொழிந்தனர். வேனிற் காலத்தில் மழை பெய்தவழிக் கத்தும் தேரைகள் போல அவர் கூற்றுக்கள் மிகவும் அளிக்கத் தக்கன வாயினும், நாளும் ஆற்றாமையால் தேய்ந்து கெடும் என் மேனி நலம், அவர்தம் கூற்றின் மெய்ம்மையைக் காணும் அளவும் நிலைத்திருக்குமோ என ஐயுற்று அஞ்சு கின்றேன்" என்றாள். தலைவியது இக்கூற்றின்கண், வன்புறையால் தெளிவு பெறாமையின் தன் மேனிநலம் கெடுகிறதெனத் தன் ஆற்றாமையை நலத்தின்மேல் வைத்துத் தலைவி யுரைப்பதன் அறிவுநலம் கண்டு வியந்த பெருங்குன்றூர் கிழார் அதனை இப்பாட்டிடை வைத்துப் பரிந்து பாடுகின்றார். முழங்குகடல் முகந்த கமஞ்சூன் மாமழை மாதிர நனந்தலை புதையப் பாஅய் ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு வான்புகு தலைய குன்றம் முற்றி அழிதுளி தலைஇய பொழுதிற் புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடந்தொட் டன்ன அருவி இழிதரும் பெருமலை நாடன் இன்னன் நிலையன் பேரன் பினன்எனப் பன்மாண் கூறும் பரிசிலர்1 நன்மொழி வேனில் தேரையின் அளிய காண விடுமோ தோழியென் நலனே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை மறுத்தது. உரை : முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மாமழை - முழங்குகின்ற கடல்நீரைக் குடித்து நிறைந்த கரிய மழைமுகில்; மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் - நான்கு திசைக்கும் இடையே அகன்ற வானவெளி யெங்கும் மறையுமாறு பரந்து; ஓங்குவரை மிளிர வாட்டி - உயர்ந்த மலைகள் சரிந்து விழத் தாக்கி; பாம்பு எறிபு - ஆங்கு வாழும் பாம்புகளைக் கொன்று; வான்புகு தலைய குன்றம் முற்றி - வானத்தில் ஊடுருவிச் செல்லும் மலைமுடிகளைச் சூழ்ந்து படிந்து; அழிதுளி தலைஇய பொழு தில் - மிக்க மழையைப் பொழிந்த காலத்தில்; புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன - புலையன் அகன்ற வாயையுடைய தண்ணுமையின் இடப்பக்கத்தைத் தட்டியவழி யெழும் ஓசையைப் போல; அருவி இழிதரும் பெருமலை நாடன் - அருவிகள் ஒலித்துக்கொண்டு இழியும் பெரிய மலைகளையுடைய நாடனாகிய தலைவன்; இன்னன் நிலையன் பேரன்பினன் என - இனியவன் வாய்மையுடையன் மிக்க அன்புடையன் என்று; பன்மாண் கூறும் பரிசிலர் நன்மொழி - பலவாகப் புகழ்ந்து கூறும் பரிசிலருடைய நன் மொழிகள்; வேனில் தேரையின் அளிய - வேனிற்காலத்துப் பெய்யும் மழைக்குக் கத்தும் தேரையின் ஒலிபோல அளிக்கத் தக்கனவாயினும்; தோழி-; என் நலன் காணவிடுமோ - அவற்றின் மெய்ம்மை காணுமளவும் ஆற்றாமை என் நலத்தை இருக்கவிடுமோ? விடாது காண் எ.று. தோழி, பெருமலை நாடன், இன்னன் நிலையன் பேரன்பி னன் எனப் பரிசிலர் பன்மாண் கூறும் நன்மொழி, தேரையின் அளிய வாயினும், என் ஆற்றாமை, நலன் காண விடுமோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. ஆற்றாமை, அவாய்நிலை யால் வந்தது. மாமழை, பாஅய், பாம்பு எறிபு, குன்றம் முற்றி, அழிதுளி தலைஇய பொழுதில் புலையன் தண்ணுமை இடந்தொட்டன்ன, அருவி இழிதரும் என இயையும். கமஞ்சூல் மாமழை, நீர்நிறைந்து நிறம் கரிதாகிய மழைமேகம். கமம், நிறைவு. நனந்தலை, அகன்ற இடம்; ஈண்டு வானவெளி மேற்று. மிளிர்தல், பிளந்து தலைகீழாகப் புரண்டு வீழ்தல். பாம்பு, மலைப்பிளவுகளில் வாழும் நாகப்பாம்புகள்; "விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேண்நின்றும் உட்கும்1" என்று பிறரும் கூறுவர். விண்ணளாவி நிற்கும் மலைமுடிகளை, வான்புகு தலைய குன்றம் என்றார். அழி துளி, மிக்க மழை. புலையன், புலைத்தொழில் செய்பவன். பேழ்வாய், அகன்ற வாய். தண்ணுமையின் இடப்பக்கம் மந்த வோசையுடையது. இன்னன் : இன்னாதவன் என்பதன் மறுதலை; இத்தகைய நற்பண்புகளையுடையன் என்றுமாம். நிலையன், தப்பாத வாய்மையன்; சொல்லும் செய்கையும் ஒத்தியலும் பண்பினன் என்றவாறு. நன்மொழி- நலங்களைப் பாராட்டிக் கூறும் மொழி. வேனில் தேரை, வேனிற்காலத்து மழைபெய்தவழிக் கத்தும் தவளை. வேனில் வெப்பத்துக்கு ஆற்றாது மணலுள் மறைந்து கிடக்கும் தவளைகள், நீர்பெருகி நிற்குமாறு மழைபெய்தவழி மகிழ்ந்து, பல்வகை ஓசையிட்டுக் கத்துவது இயல்பு. கேட்போர் எவரும் அவ்வோசையை வெறாது இரங்குவ ராகலின், வேனில் தேரையின் அளிய என்றார். விடுமோ : ஓகாரம் எதிர்மறை. வரையாது நீட்டித்தொழுகுவதால், தலைமகள் எய்திய ஆற்றாமை கண்ட தோழி, தலைவனுடைய குணஞ் செயல் களை எடுத்தோதி வற்புறுத்தினாளாக, அவள் கூற்றுக்களால் மனவமைதி பெறாமல் தலைமகள் அவளை நோக்கி, நீயே யன்றி அவனிடம் பரிசில் பெற்றுப் போதரும் பாணர் முதலாயினாரும் அவன் தலைமை நலங்களைப் பல்வேறு வகையில் பாராட்டிக் கூறினார் என்பாள், இன்னன் நிலையன் பேரன்பினன் எனப் பன்மாண் கூறும் பரிசிலர் நன்மொழி என்றும், வேனில் வெம்மைக்கு ஆற்றாது மணலுள் மறைந் துறையும் தேரைகள், தாம் வேண்டிய மழைநீர் பெருக வந்த விடத்து மகிழ்ச்சியால் ஆரவாரிப்பது போலத் தாம் வேண்டிய பரிசில் தரப் பெற்ற மகிழ்ச்சியால் பரிசிலர் அவனுடைய குணஞ்செயல் நலங்களையே கூறுகின்றனர் என்றும். அவை புறக்கணிக்கப்படாத தகுதி வாய்ந்தவை என்றும் கூறுவாள், பரிசிலர் நன்மொழி வேனில் தேரையின் அளிய என்றும், அவரும் நீயும் கூறுவது போல, அவன் வந்து காணும் அளவும் என் நலம் நில்லாது கெடும் என்பாள், தனது ஆற்றாமை மேல் வைத்துக் காண விடுமோ தோழி என் நலனே என்றும் கூறினாள். மாமழை மாதிரம் புதையப் பாஅய் என்றது, தலைவன் சான்றோர் சூழ்தர எழுவதாகவும், பாம்பு எறிபு என்றது, ஏதிலார் கூறும் அலர் சிதைப்பதாகவும், குன்றம் முற்றித் தலைஇய பொழுதில் என்றது, மனையகம் போந்து வரை பொருள் தந்து மணம் பேசுங்காலையாகவும், தண்ணுமை போல முழங்கி அருவி இழிதரும் என்றது, தலைவனுடைய தலைமைநலம் பலர் அறிந்து பாராட்ட விளங்குவதாகவும் உள்ளுறை கொள்ளப்படும். இவ்வாறு உள்ளுறையால் தலை மகன் வரைவொடு புகுந்தாலன்றி என் ஆற்றாமையும் மேனி வேறுபாடும் நீங்குதற்கு வாயில் இல்லை என்று உரைத்தலால், வெளிப்படைக் கூற்றில் காண விடுமோ தோழி என் நலனே என்று மறுத்தாள். இதனாற் பயன் தலைவி ஆற்றாமை தீர்வாளாவது. 348. வெள்ளி வீதியார் களவின்கண், தலைவனை யின்றித் தனக்கு வாழ்வில்லை யென்ற அன்புநிலையினைத் தலைவி எய்தினாள்; அதனை அறிந்த தோழி அவனைப் பகலினும் இரவினும் பயின்று வரு மாறு வேண்டினாள். அவனும் அவ்வண்ணமே சலியாது வந்து போனான். பகற்போதில் தலைவி விளையாடும் இடங்களில் கண்டு இன்புற்ற தலைவன், தலைவி செய்யும் தொழில்கட் குரிய உதவியினைச் செய்து தனது காதலின் உண்மை நிலையைத் தலைவி அறியுமாறு செய்தான். பகற்குறிக்கண் அவனது வரவு பிறர் கண்டு அலர்கூறற்கு இடனாய் அதுவே ஏதுவாக இற்செறிப்புற்றுத் தலைவியைக் காணாதொழிதற்குக் காரண மாதலை எண்ணித் துணிந்த தோழி, இரவுக்குறி வகுத்து அவண் வருமாறு அவனை இயக்கலுற்றாள். இரவுவரவில், வழியின் கொடுமையும், இருளும், மழையும், இடியும், மின்னும் செய்யும் ஏதமும் காவற் கடுமையும் பிறவும் தோற்றுவிக்கும் இடையூறு களையும் இடையீடுகளையும் மதியாது, காதலியைக் காண்டல் வேண்டுமென்ற வேட்கை துரப்பக் கைவேலும் மெய்வன்மையும் துணையாகத் தலைவன் வருவது காணுந்தோறும், தலைமகட்கு அவன்பால் உளதாகும் காதல் உயிரினும் சிறந்து நிற்கிறது. அதனால், தோழி தலைமகனை விரைய வரைந்துகொள்ளுமாறு தூண்ட, அவனும் அவளை வரைந்துகொள்ளும் முயற்சியை மேற்கொள்கின்றான். அதற்கிடையே வரைபொருள் வேண்டியும் நாடு காவல் குறித்தும் புகழ்பயக்கும் வேறு வினை கருதியும் அவன் தலைமகளைக் காணாது பிரிந்திருக்க வேண்டிய நிலைமை தோன்றுவ துண்டு. அவன் பிரிந்தவழித் தலைவியது காதலுள்ளம் வேட்கை மீதூர்ந்து பெருவருத்தத்துக் குள்ளாகும். பசியட நிற்றலும், பசலை பாய்தலும், உறக்கம் இன்மை யும், உடம்புநனி சுருங்கலும் பிறவும் எய்தித் தலைமகள் வருந்துவள்; கண்படை எய்திக் கனவொடு மயங்குவள். இடையிடையே அவனும் இரவிற் போந்து அவளைக் கண்டு இன்புறுத்தி நீங்கு வன். அதனால் இரவு வரின் வரவெதிர் நோக்கிக் கண்ணுறங்காது இருத்தலும், அக்காலை அவன் வாராதொழிதலும், ஒருகால் வந்து அல்ல குறிப்பட்டு நீங்குதலும் உண்டு. இவ்வாறு அலைப் புண்டு வருந்தும் காதல் வாழ்வில் தலைவி ஒருநாள் இரவு அவன் வரவை நோக்கி யிருக்கலானாள். திங்கள் எழுந்து பால் போன்ற தண்ணிலவைப் பொழிந்தது; ஊரவர் விழாக்கொண்டு ஆரவாரம் செய்தனர்; சோலைகளில் மலர்ந்த பூவின் தேனை உண்ட வண்டினம் பெடையுடன் கூடி இன்பமாகப் பாடின; நாழிகை சென்றவண்ணம் இருந்தது; வேட்கைப்பெருக்கால் அவளுக்கும் உறக்கம் வரவில்லை; காதல்நோய் கைம்மிக்குக் கையறவு பயந்தது. அதனை ஆற்றாளாய், "இந்த உலகம் என்னொடு போர் தொடுக்கிறதோ? அன்றி, என் நெஞ்சம் உலகொடு போர் தொடுக்கிறதோ? அதனை அறிதல் வேண்டும்" என்றாள். தலைமை மாண்புடைய பெண்ணொருத்தியின் திருந்திய உள்ளம், காதல்வேட்கை கையிகப்பப் பெருகி எய்தும் உணர்வுத் திறத்தை எடுத்துரைக்கும் வெள்ளிவீதியாரது இப்பாட்டின் நலம் கண்ட சான்றோர் இதனை இந்நூற்கண் தொகுத்துள்ளனர். நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப் பான்மலி கடலிற் பரந்துபட் டன்றே ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிபுதொகு பீண்டிக் கலிகெழு மரபின் விழவய ரும்மே கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறும் தாமமர் துணையொடு வண்டிமி ரும்மே யானே, புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு 1கனையிருங் கங்குலும் கண்படை யிலனே அதனால், என்னொடு பொருங்கொல்இவ் வுலகம் உலகமொடு பொருங்கொல்என் 2அலவுறு நெஞ்சே. இது, வேட்கை பெருகத் தாங்ககிலளாய் ஆற்றாமை மீதூர் கின்றாள் சொல்லியது. உரை : நிலவு - திங்கள்; நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி - நீல நிறமுடைய விசும்பின்கண் தோன்றிப் பலவாகிய கதிர்களைப் பரப்பி; பால்மலி கடலின் பரந்து பட்டன்று - பால் நிறைந்த கடல் போல நிலவைப் பரப்பி விளங்குகிறது; ஊர் - ஊரவர்; ஒலிவரும் சும்மையொடு - ஒலிமிக்க ஆரவாரத்தோடு; மலிபு தொகுபு ஈண்டி - நிறைந்தும் தொக்கும் நெருங்கியும்; கலிகெழு மறுகின் விழவயரும் - ஓசை மிக்க தெருவின்கண் விழா அயர்கின்றனர்; கான் - கானம்; பூமலர் கஞலிய பொழில கந்தோறும் - பூக்கள் நிறைந்த பொழிலிடமெல்லாம்; தாம் அமர் துணையொடு வண்டு இமிரும் - தாம் விரும்பும் பெடை வண்டோடு ஆண்வண்டுகள் கூடி இசைக்கின்றன; யான் -; புனையிழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு- அணிந் துள்ள இழைகள் நெகிழ்ந்தோடச் செய்யும் தனிமைத் துயரத் துடன்; கனை இருங் கங்குலும் கண்படையிலன் - இருள் பெருகிய நள்ளிரவிலும் கண்ணுறக்கமின்றிக் கிடக்கின்றேன்; அதனால் -; என்னொடு பொருங்கொல் இவ்வுலகம் - என் னோடே இல்வுலகம் போர் தொடுக்கிறதோ; என் அலவுறு நெஞ்சு உலகமொடு பொருங்கொல் - எனது துன்பமுறும் நெஞ்சம் இவ்வுலகத்தோடு போர் தொடுக்கிறதோ, இதனை அறிதல் வேண்டும் எ.று. நிலவு பரந்து பட்டன்று; ஊர் விழ வயரும்; கான் பொழி லகந்தோறும் வண்டு துணையோடு இமிரும்; யான் கங்குலும் கண்படையிலன்; அதனால், உலகம் என்னொடு பொருங் கொல், என் நெஞ்சு உலகமொடு பொருங்கொல், இதனை அறிதல் வேண்டும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீலம், நீல் எனக் குறைந்தது, நிலவு, திங்கள். ஊர், ஆகுபெயர். சும்மை, ஆரவாரம். பல்வேறு பொழில்களைத் தன்னகத்தே கொண்டது கான மாதலின், கானம் பொழில் தொறும் வண்டிமிரும் என்றார். இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது ஞெகிழ்த்த. பிறவினை. தனிமை கொள்வது காரணமாகப் பிறந்த அவலம், புலம்புகொள் அவலம் எனப்பட்டது. உறக்கமின்றி விழித்திருப்பார்க்குக் கங்குற்போது நீண்டு தோன்றுதலின், கனையிருங் கங்குல் என்றார். இரவில் நடுவியாமத்தே நள்ளென்னும் ஓசை தோன்றுதலின், நள்ளென் கங்குலைக் கனையிருங் கங்குல் என்பர். "நள்ளென் கங்குற் கள்வன் போல1" எனச் சான்றோர் கூறுதல் காண்க. இரவுப்போதில் காதலன்வரவு நோக்கி யிருந்த தலை மகட்கு, வானத்தே திங்கள் எழுந்து பால்போலத் தன் நிலவைப் பரப்பி இடையீடு செய்தலின், நிலவே நீனிற விசும்பில் பல்கதிர் பரப்பிப் பால்மலிகடலிற் பரந்து பட்டன்று என்றும், நிலவொளியில் ஒருகால் நெறியறிந்து வரினும், ஊரவர் தெருக்களிற் கூடி விழித்திருந்து விழாச் செய்தலால், தலைமகன் வரவு புறத்தார்க்குப் புலனாகி விடுமே என அஞ்சுதல் தோன்ற, ஊரே ஒலிவருஞ் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக் கலிகெழு மறுகின் விழவயரும்மே என்றும், இம்மறுகுகளை ஒருவாறு கடந்து தன் மனைப்புறம் வரும் தலைவன், அங்குள்ள பொழிலகத்தே, வண்டு பெடை யொடு கூடி இமிரும் நிலை காணின், அவை தன் வரவு கண்டஞ்சித் துணைமையிற் பிரிந்து வீற்றுவீற் றோடும் துன்ப நிலைக் கஞ்சி அவற்றூடே புகுதற்கு விரும்பாது மீண்டு செல்வன் எனக் கருதுமாறு தோன்ற, கானே பூமலர் கஞலிய பொழிலகந் தோறும் தாம் அமர் துணையொடு வண்டி மிரும்மே என்றும், அவ்வாற்றால், அவன்பாற் பெறற்குரிய கூட்ட மின்றித் தான் தனித்தவழிப் பெருகும் காதல்நோய் வெதுப்புதலால் உடம்பு சுருங்கி அணிந்துள்ள இழைகள் செறிப்பு நீங்கிக் கழன்று உகுதல் கண்டு வருந்திக் கூறு தலின், புனையிழை ஞெகிழ்ந்த புலம்புகொள் அவல மொடு என்றும், வருத்தம் மிக்கவழிக் கண்ணுறக்கம் எய்தாமையின் கனையிருங் கங்குலும் கண்படையிலன் என்றும் கூறினாள். எத்திறத்தோர்க்கும் நள்ளிரவில் உறக்கம் உண்டாதல் இயல் பாகவும், தனக்கு அக்காலத்தும் அஃது இலதாயினமையின், கங்குலும் என்றாள். உம்மை, சிறப்பு. நிலவும் ஊரும் கானு மாகிய மூன்றும், தலைமகன் வரவுக்கு இடையீடாகி, அவனது கூட்டத்தைத் தான் பெறாவாறு தடுத்தல்பற்றி, என்னொடு பொருங்கொல் இவ்வுலகம் என்றும், தலைமகன் இல்வழித் தனிமை தோன்றி அவலம் உறுவித்தலும். கண்ணுறக்கம் எய்தாமையும், இழைநெகிழ் துன்பமும் கொண்டு உலக வாழ்வை நொந்துகொள்ளச் செய்தலின் உலகமொடு பொருங் கொல் என் நெஞ்சம் என்றும், அதற்கு ஏது அஃது எய்தி வருந்தும் வருத்த மிகுதி என்றற்கு. அலவுறு நெஞ்சு என்றும் கூறினாள். இவ்வண்ணம் இருபாற்பட்ட சூழ்நிலை யில், ஒன்றனைத் துணிந்து அறிந்தாலன்றி, மனம் அமைதி பெறாதாகலின், இதனை அறிதல் வேண்டும் என்பது குறிப் பெச்சத்தால் கொள்ளவைத்தாள். இதனாற் பயன் தலைவி அயர்வு தீர்வாளாவது. 349. மிளைகிழான் நல்வேட்டனார் கடற்கானற் சோலை யொன்றிற்குச் சென்ற தலைமகன் அப்பொழுது அங்கே விளையாட்டு விருப்பால் போந்திருந்த தலைமகளைக் கண்ணுற்று அவள்பால் தன் கருத்தை இழந்தான். அவளும் தன்னை யறியாமல் தன்னுள்ளத்தை அவன்பாற் சேர விட்டாள். இருவர் உள்ளங்களும் ஒன்றுபடவே, மறுநாள் இருவரும் ஒருவரை யொருவர் நினைத்துக்கொண்டு கானற் சோலைக்குப் போந்து தம் காதற்கருத்தை அறிவித்துக் கொண்டனர். புதிது தோன்றிய காதலுணர்வால் வேறுபாடுற்ற தலைமகன் அதனைத் தன் பாங்கற் குரைப்ப, அவனும் சோலை யில் குறித்த இடத்தை யடைந்து அவள் அங்கே எய்தக்கண்டு தன் நண்பனான தலைமகற்கு ஏற்ற துணைவியாம் என்று தெளிந்தான். பின்னர்த் தலைமகன் தலைவியை அளவளாவி அவளுடைய உயிர்த்தோழியை அறிந்தான். தோழியின் அரிய துணையைப் பெற்றாலன்றித்தான் தலைமகளை எய்த முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்து அவளைத் தன் களவுக் காதலொழுக்கத் துக்கு உடன்படுவிக்க முயலத் தொடங்கினான். மக்களினத்து ஆண்மையினும் பெண்மையின் இயக்கவுரிமையும் எல்லையும் சுருக்க முடைமைபற்றி, ஆடவர்பால் உயர்வும் மகளிர் பால் தாழ்வும் இயற்கையமைப்பாகக் கருதப்படுவன. இதனால் மகளிர்பால் தாழும் மனமுடைய தலைமக்கள் தலைவிமுன் தாழ்ந்து தோன்றியொழுகும் தகுதியினை மேற் கொள்வர். இதுபற்றியே சான்றோர் தலைமக்களை "வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை" யுடையர் என்பது வழக்கம். இப்பெற்றிமை யால், தலைவியும் தோழியும் பிற ஆயமகளிரும் விளையாட் டயரும் இடத்துக்குத் தேரூர்ந்தும் குதிரையேறியும் போந்து தலைமகன் விளையாட்டயர்ந்தான். அவர்களோடு கழிக்கரையில் மலர்ந்திருந்த அடும்புமலர் கொய்தான்; கைதையின் சினையை அசைத்துப் பூக்கொய்வித்தான். நீரிடை மலர்ந்த நெய்தற் பூவைப் பறித்தளித்தான். இவ்வாறு அம்மகளிர்க்குத் தன்பால் விருப்புண் டாகத் தக்க வகையில் தலைமகன் அவர்கள்வழி நின் றொழுகினான். ஆயினும். ஏனைமகளிர் தனது காதலுறவை அறிந்துகொள்வ ரென்ற நாணத்தால், தலைமகள் ஒன்றும் அறியாதாள் போலப் பெருமிதத்துடன் இயங்கினாள். தலைமகற்கும் தனக்கும் முன்னை யுற வுண்மையை அவள் தன் உயிர்த்தோழிக்கும் உரைத்தா ளில்லை. அதனால் தோழியும் அவன் கருத்தைக் குறிப்பாய் அறிந்தும் தலைவியை மதியுடம் படுக்கும் முயற்சியை மேற் கொள்ளவில்லை. தன் கருத்தைத் தோழி அறிதல்வேண்டி ஒருகால் தலைமகன் தனக்குள் சொல்லிக் கொள்வானாய், அவள் செவிப்படுமாறு, "யான் என் நிலைமை தோன்றத் தேரூர்ந்தும் வண்டியேறியும் வந்தேன்; என் அன்பு தோன்ற அடும்புமலர் கொய்தும், கைதை ஊக்கியும், நெய்தல் குற்றும் துணை புரிந்தேன்; எனக்கும் தலைமகட்கும் முன்பே காதற்றொடர்பு உண்டென்பது தோன்ற இன்ன பலவற்றை இனிது செய்து மகிழ்வித்தேன்; இத்துணையும் கண்டும் இவன் எத்தன்மையன் என இவள் என்னைக் கருதுகின்றாளோ? தெரிகின்றிலேன்" என்றான். தலைவனது இக்கூற்றின்கண், தோழியிற் கூட்டம் பெறக் கருதி அவளை மதியுடம்படுக்க முயல்வோன், தன் குறை தலைவியின்பாலதாவதை அவள் செவிப்படுமாறு உணர்த்தும் நலம் கண்ட நல்வேட்டனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கடுந்தேர் ஏறியும் காலிற் சென்றும் கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும் கைதை 1ஊக்கியும் நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனைய மாகவும் செய்தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத 2பசும்புண் ணுறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை 3முனியா நம்வயின் என்னென நினையுங்கொல் பரதவர் மகளே இது, தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. உரை : கடுந்தேர் ஏறியும் -விரைந்த தேரைச் செலுத்தியும்; காலில் சென்றும் - வண்டியிற் போந்தும்; கொடுங்கழி மருங்கில் அடும்புமலர் கொய்தும் - வளைந்த கழிக்கரையில் உள்ள அடும்பு மலர்களைக் கொய்தும்; கைதை ஊக்கியும் - கொம்பி லிருக்கும் தாழை மலரைக் கொய்யுமாறு அசைத்தும்; நெய்தல் குற்றும் - நீரிடைச் சென்று நெய்தற் பூவைப் பறித்தளித்தும்; புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு - மணந்து கொண்டது போன்ற உணர்ச்சி கொண்ட நெஞ்சத்துடனே; வைகலும் இனையமாகவும் - நாளும் இன்னோ ரன்னவற்றைச் செய்து மகிழ்வித்தேமாகவும்; செய்தார்ப் பசும்பூண் வேந்தர் - மேற்கொண்ட போர்வகைக் கேற்பத் தொடுக்கப் பட்ட அடையாள மாலையுடன் பசிய பூணாரம் அணிந்த வேந்தர்; அழிந்த பாசறை - படையழிந்து வீழ்ந்த பாசறையின்கண்; ஒளிறு வேல் அழுவத்துக் களிறுபடப் பொருத - விளங்குகின்ற வேற்படைக் கடலில் களிற்றியானை வீழும்படி பொருது வென்றமையின்; பசும்புண் உறுநர்க்குப் பேஎய் போல - பசிய புண்ணுற்ற வீரரைப் புறங்காக்கும் பேய்மகள் போல; பின் னிலை முனியா நம்வயின் - வழிபாட்டு நிலையை வெறா தொழுகும் நம்மை; என்னென நினையுங்கொல் - எத்தகை யோன் என நினைப்பளோ; பரதவர் மகள் - இப்பரதவர்க்கு மகளாகிய தலைவி எ.று. தேர் ஏறியும், காலிற் சென்றும், கொய்தும், ஊக்கியும் குற்றும், புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு, வைகலும் இனையமாகவும், பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயின், பரதவர் மகள் என்னென நினையுங்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடுந்தேர், கடுமை விரைவுப் பொருட்டாய உரிச்சொல்லின் திரிபு. ஊக்குதல், அசைத்தல். நெஞ்சினை உளப்படுத்திக் கூறலின், புணர்ந்தாம் எனவும் இனையம் எனவும் பன்மை கூறினார். தார், அடையாள மாலை; வெட்சி, வஞ்சி, தும்பை, வாகை முதலியன; இவையே நிரைகவர்தல், மேற்செலவு, போர்செய்தல், வென்றி முதலிய தொழிற்கேற்பச் சூடுவன. அழுவம், பள்ளம்; ஈண்டுக் கடல் மேற்று. ஆழம், அழுவம் என வந்தது. பசும்புண், குருதி யொழுகும் புண். இப்புண்ணுற் றோரைக் காப்பதிற் பயனின் றெனக் கருதிச் சுற்றம் கைவிட்டு நீங்குதலின், சவந்தின் பெண்டிர் எனப்படும் பேய்மகளிர் சூழ்ந்துநின்று உயிர் நீங்குமளவும் புறங்காத்தல் பண்டைநாளைப் போர்க்கள நிகழ்ச்சி; " ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்1" என ஆசிரியர் கூறுவது காண்க. பின்னிலை, வழிபாட்டுநிலை. முனிதல், வெறுத்தல். களவின்கண் தலைமகன் தேரூர்தலும் காலிற் போதரலும் விலக்கப் படாமையின், கடுந்தேர் ஊர்ந்தும் காலிற் சென்றும் தோழி முதலிய மகளிர் காணத் தான் போந்தமை கூறினான். இது தலைவனது செல்வச்சிறப்பைக் காட்டுவது. அடும்புமலர் கொய்தல், கைதை யூக்குதல், நெய்தல் குறுதல் முதலியன செய்து அவர் தழையும் கண்ணியும் மாலையும் தொடுத்து விளையாடற்கு உதவியது, தலைவனது எளிமையைக் காட்டுவது. அவர் ஏவின செய்ததும், அவர் பொருட்டுப் புள்ளோப்பியதும் பிறவுமாகிய பணிகளைச் செய்து பின் னின்றது இனையமாகவும் என்பதனால் குறிக்கப்பட்டது. அக்காலையில், தன் குறிப்பால் தனக்கும் தலைவிக்கும் முன்பே உளதாகிய காதற்றொடர்பு காட்டியதைப் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு என்றான். களிறுபடப் பொருது புண்ணுற்று வீழ்ந்தோனை ஏமச்சுற்றம் கைவிட்ட விடத்து பேஎய் ஓம்புவது போல, பலவகை விளையாட்டில் ஈடுபட்டுச் சோர்வுற்ற பொழுது ஆய்மகளிராகிய சுற்றம் நீங்க அவள் தனித்தாளாக, அவட்கு வேண்டிய பணிகளை விருப் புடன் செய்தேன் என்பான், பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயின் என்றும் இவற்றால், நமது குறையினை யுணர்ந்து நேர்வாளோ அன்றி மறுப்பளோ என்பான், என்னென நினையுங்கொல் என்றும் கூறினான். நெய்தல் நிலத் தலைவியாதலின் பரதவர் மகள் என்றான். கடல் புக்கு மீன் கவர்ந்து மகிழும் பரதவர் மகளாதலின், இவள் என் உடல் புக்கு உள்ளம் கவர்ந்து மகிழ்கின்றாள் என்றோர் குறிப்புப் பரதவர் மகள் என்பதனால் பெறப்படுமாறு காண்க. இதனால் தோழி மதியுடம் படுப்பாளாவது. விளக்கம் : "மெய் தொட்டுப் பயிறல்1" என்ற நூற்பாவுரையில் இப் பாட்டைக் காட்டித் "தோழி நம்வயிற் பரதவர்மகளை என் னென நினையும்கொல் என்றது" என்பர் நச்சினார்க்கினியர். 350. பரணர் மனைவாழ்க்கையில் மாண்புடன் விளங்கிய தலைமகன் ஒருகால் பரத்தையர் சேரியில் ஒருத்தி மனைக்கண் நிகழ்ந்த விழவொன்றுக்குச் சென்றான். அங்குள்ளோர் அவன் மார்பிற் சந்தனம் பூசி மாலை யணிந்து சிறப்பித்தனர். பின்பு அவன் தன் மனைக்கு மீளவும், மனையவளாகிய தலைவிக்கு அது மனத்தில் வெகுளித்தீயை எழுப்பிற்று. தன் காதலன் மார்பைப் பிற மகளிர் கண்களால் உவந்து காணினும் பொறாது புலக்கும் அத்துணைப் பெருங்காதலள் தலைமகள். "பெண்ணியலார் எல்லாரும் கண் ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" எனத் திருவள்ளுவனார் மகளிர் இயல்பை எடுத்தோதுதல் காண்க. அப்பெற்றியாட்கு, அவன் மார்பிற் சந்தனப் பூச்சின் தண்மணமும் பூங்கோதைகளின் நறுமணமும் மனவமைதியைக் குலைத்தன. மாலை அசைதலால் சிதறிய சந்தனம் பரத்தையின் முயக்கத்தாற் சிதைந்த தென்றும், மாலையிற் பூக்கள் வாடி யுதிர்ந்திருந்தமை பரத்தை மார்பால் விளைந்த தென்றும் நினைந்து தலைமகள் பிணங்கி ஊடுவாளாயினாள். எத்துணையோ இனிய சொற்களால் தலைமகன் தன்பால் தவறு இல்லை யென்று உணர்த்தினான். ஆயினும், அவள் சிறிதும் உணராது, முகம் சிவந்தும் கண்கள் நீரரும்பியும் நுதல் வியர்த்தும் வெகுண்டு நின்றாளாக, அவளது நிலை அவன் உள்ளத்தில் வேட்கையையே மிகுவித்தது. அதனால், ஆற்றாமை மீதூர்ந்த தலைவன், அவளை யணுகி மெய்யுறத் தழுவ முயன்றான். அவள் பிணக்கம் மிகுந்து அவனின் நீங்கி, "பெரும, நீ என்னை நெருங்குதல் கூடாது" என்றாள்; "நின்னை யான் அணுகி முயங்காவிடில் நின் சீரிய நலம் கெடுமே"என்றானாக, "என் நலன் தொலையினும் தொலைக; நீ என் அருகில் அணுக விடேன்" என்றாள். "ஏன்?" என்று வினவுவோன் போல அவன் அவளை நோக்கவும், "அணுகவிடுவேனாயின், நின் கைகள் என்னைப் பற்றி நின் மார்பகத்தேயிட்டு யான் மீளாவாறு பிணித்துத் தாங்கும் மதுகையுடையவாகும்; நின் மார்பிற் சந்தனம் பரத்தையின் மார்பு தோய்ந்து சிதைந்துளது; நின் மாலையும் வாடிக் கிடக்கிறது; ஆதலால் நின் மார்பு யான் தீண்டுதற் குரியதன்று; நின் மார்பு எனக்கு உரித்தாயினும் அஃது இனி யான் கொள்ளாக் கலமாயிற்று. 'தமவாயினும் கொள்ளாக் கலம் அணியார்1" மகளிர். அதனால் என்னைச் சார வாரற்க. பரத்தையே அதனைத் தோய்ந்து இன்புறுவாளாக"என்றாள். தலைவி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைமகனை ஊடி மறுப்பவள், அவன் மார்பின் தூய்மையின்மை காட்டிப் பரத் தையை வாழ்த்துமாற்றால் தனது தலைமைமாண்பு புலப்படுக்கும் நலம் கண்டு வியந்த பரணரது புலமையுள்ளம் அதனை இப் பாட்டிடை அமைத்துத் தருவதாயிற்று. வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரியக் கழனி வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை அன்னஎன் 2தொன்னலம் தொலையினும்3 தொலைக சார விடேஎன் விடுக்குவெ னாயின் 4கடைஇக் கவவுக்கை தாங்கும் 5மதுகைய குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையை ஆகில் 1கலங்கொளீஇ அற்றுமன் வாரல் 2வாழிநிற் கவைஇ யோளே. இது, தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. உரை : வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ-வெண்ணெல்லை அறுக்கும் உழவர் எழுப்பும் தண்ணுமை முழக்கிற்கு அஞ்சி; பழனப் பல்புள் இரிய - பழனங்களில் வாழும் பல்வகைப் புள் ளினம் நீங்கி யோடுதலால்; கழனி வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும் - கழனி வரம்பில் நிற்கும் வளைந்த கிளையையுடைய மருதமரத்தில் தொங்கும் பூங்கொத்துக்கள் உதிரும்; தேர்வண் விராஅன் இருப்பை அன்ன - தேர்களை வழங்கும் வண்மையுடையவ னாகிய விராஅன் என்பானது இருப்பையூரை யொத்த; என் தொன்னலம் தொலையினும் தொலைக- எனது பழையதாய் வருகின்ற அழகு கெடு மாயினும் கெடுக; சார விடேஎன் - நீ என்னை அணுக வரவிடேன்; விடுக்குவெனாயின் - விடுவேனானால்; கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகைய - தாவி என்னை மார்பகத்தே யிடும் நின் கைகள் யான் மீளாவாறு தாங்கும் வன்மை யுடையன; குவவுமுலை சாடிய சாந்தினை - குவிந்த முலைகள் பாய்ந்து உழக்கிய சாந்தினை மார்பில் உடையை; வாடிய கோதையை - முயக்கிடைக் குழைந்து சாம்பிய மாலையை உடையை; ஆகில் கலம் கொளீஇயற்று மன் - அவற்றோடு கூடிய நின் மார்பை யான் தீண்டிப் பொருந்துவது, கொள்ளு தற் காகாத அணிகலத்தை அணிவது போலாம்; வாரல் - ஆதலால் எம்பால் வாராதொழிக; நிற் கவைஇயோள் வாழி - நின்னை முயங்கி யின்புறுபவளாகிய பரத்தையே வாழ் வாளாக எ.று. இருப்பை யன்ன என் தொன்னலன் தொலையினும் தொலைக; சார விடேஎன்; விடுக்குவெ னாயின், கவவுக்கை கடைஇத் தாங்கும் மதுகைய; குவவுமுலை சாடிய சாந்தினை; வாடிய கோதையை; தீண்டுதல் ஆகில் கலங்கொளீஇ யற்றுமன்; வாரல்; நிற் கவைஇயோள் வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பழனம், மிக்க ஆழமில்லாத நீர்நிலை; வயல்களில் மிக்குக் கழியும் நீர் சென்று தங்கும் நீர்நிலை. ஊரவர்க் கெல்லாம் பொதுவான நிலம் என்றும், மக்களால் அமைக்கப்படாத குட்டம் என்றும் கூறுவர். பழனங்களில் வாழும் புள்ளினம் நெல்விளை வயல்களில் கூடு கட்டி வாழ் வது இயற்கை. விளைந்த நெல்லை அறுப்போராகிய உழவர் முதற்கண் புள்ளினம் தம் குஞ்சுகளுடன் வேறிடம் பெயர்ந்து போதல் வேண்டித் தண்ணுமை முழக்குவது பண்டைத் தமிழ் மரபு. "வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக் கண்மடற் கொண்ட தீந்தேன் இரிய1"என்றும், "வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை, பன்மலர் பொய்கைப் படுபுள் ஓப்பும்2" என்றும் சான்றோர் கூறுதல் காண்க. பழனம் கழனி ஆகிய வற்றின் கரையிலும் வரம்பணையிலும் மருதமரங்கள் நிற்ப துண்டு. வாங்கு சினை, வளைந்த கிளைகள். தூங்கு துணர், தொங்குகின்ற பூங்கொத்து. புள்ளினம் நீங்குங்கால் அவற்றின் சிறகுகள் மேலும் கீழும் அசையு மிடத்துக் காற்றலை பரந்து மருதமரத்தின் துணர்களை உதிர்த்தலின் புள்ளிரிய மருதத்துத் தூங்குதுணர் உதிரும் என்றார். விரா அன், விராலிமலைக் கடியில் உள்ள இருப்பையூரைத் தனக்கு இடமாகக் கொண்டு சங்கச் சான்றோர் காலத்து வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கிச் சிறந்தமை பற்றித் தேர்வண் விராஅன் என்று புகழப் படுகின்றான். இருப்பை, இருப்பையூர்; இன்றும் இவ்வூர் தகுதி யமைந்த பேரூராகவேகாட்சி யளிக்கிறது. தொன்னலம், இளமை முதலே சிறந்து வரும் இயற்கையழகு. கடைஇ, கடவி; செலுத்தி என்றவாறு. கடைஇத் தாங்கும் மதுகைய என்று இயையும். கவவுதல் அகத்திடுதல்; "கவவு அகத்திடுமே3" என்பது தொல்காப்பியம். குவவு, திரட்சி. கலம், அணிகலம். கொள்ளத்தக்க வளையினையும் தொடியினையும், இவ்வளை-கைக்கு ஆகும் இத்தொடி இவள் தோளுக்கு ஆகும் என்றாற் போல, ஆகுதல், கொள்ளற்கேற்ற தகுதிமேல் நின்றது; ஆத லால் கொள்ளாக் கலத்தை ஆகில் கலம் என்றார். மன் : அசைநிலை. பரத்தையிற் பிரிந்து போந்த தலைமகன் தலைவியின் ஊடற்குறிப்புணர்ந்து அதனைத் தீர்த்தல் வேண்டி அவளை அணுகினானாக, அவனை மறுக்கும் தலைமகள் உள்ளுறையால் அவனது பரத்தைமை அலர் பயந்தமை கூறுகின்றாளாகலின், வெளிப்படையில், நின் பிரிவால் என் நலம் தொலைந்தமைக் கிரங்கினாய் போல நீ எம்மனைக்கட் போந்தனை; அதனால் யான் பெறும்பயன் இல்லை என்பாள், என் தொன்னலன் தொலையினும் தொலைக என்றும், அதனைக் கூறிக்கொண்டு என்பால் சார்தல் வேண்டா என்பாள், சார்தலும் சாராமையும் அவன் வினையாதலின், அதனைத் தன்கட் செய்யாவாறு தடுப்பதே தன் செயலாதல் பற்றிச் சார விடேஎன் என்றும், சாரவிடின், நின்கைகள் என்னைப்பற்றி நின் மார்பகத்தேயிட்டு என்னை இறுக வளைத்துக்கொண்டு யான் மீளாவாறு தடுக்கும் வன்மை மிக்குடையன் என்பாள், விடுக்குவெனாயின் கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகைய என்றும், நின் மார்பு யான் தீண்டற்குரிய செம்மையின்றிப் பரத்தைமை யொழுக்கத்தால் தீண்டற்கு ஆகாமை எய்தியுளது என்பாள், அவன் மார்பிற் காணப்படும் சாந்தும் கோதையும் விதந்து குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையை என்றும், நின் மார்பு எனக்கு உரிய தாயினும், சாந்தாலும் கோதையாலும் கொள்ளாத அணிகலம் போலத் தள்ளத் தகுவதாயிற் றென்பாள். ஆகில் கலம் என்றும் கொள்ளாக் கலத்தை வலிதிற் கொள்ள அணிந்தவழி, அணிவோர்க்கு நோயும் அணிகலத்துக்குக் கேடும் விளைவது போல யான் நின் மார்பிடைக் கொள்ளப்படுவது, கொள்ளும் நினக்காதல் கொள்ளப்படும் எனக்காதல் இன்பம் பயவாது என்பாள், ஆகில் கலம்கொளீஇ யற்றுமன் என்றும், அதனால் என்பால் வாரற்க என்பாள், வாரல் என்றும்,பரத்தை தோய்ந்து இன்பம் கொள்ளற்கு நின் மார்பு நன்கு அமைந்தது; அவள்பாலே செல்க என்பாள், வாழி நிற் கவைஇயோளே என்றும் கூறினாள். நெல்லரிவோர் எழுப்பும் தண்ணுமை முழக்கத்துக்கு அஞ்சிப் புள்ளினம் இரிதலால் மருதின் துணர் உதிரும் என்றதனால், நின்மார்பின் நலனுகர்வான் பரத்தையின் ஆர வாரம் கேட்டு ஏனை நின் பெண்டிர் அஞ்சி நீங்கினாராக, அதனாற் பிறந்த அலர் ஊர் எங்கும் பரவிவிட்டது; அதனை மறைத்து என்பால் வருதல் என்னை என உள்ளுறை கொள்ளப் படும். பரத்தையரைக் கூடி வரும் தலைமகன் மார்பைத் தலை மகள் ஊடிக் கூறுமிடத்துத் தீண்டேன் என்று சொல்லிப் பிணங்குவ ளென்பது, "தொடுகலம் குறுக வாரல், நின்னலத் தகுவியை முயங்கிய மார்பே1" என்று இவ்வாசிரியரே கூறுவத னாலும் அறியப்படும். இதனாற் பயன் தலைவி வாயில் மறுத்தல். 351. மதுரைக் கண்ணத்தனார் களவின்கண் காதலுறவை வளர்த்து வரும் தலைமக்களில் தலைமகன் கடமை காரணமாகத் தலைவியைத் தனித்துக் காண்டற்கு ஏற்ற இடம் பெறானாயினான். அருகிலுள்ள ஊர் கட்குச் சென்று செய்யும் கடமைகளும் அவனைத் தன் காதலியைக் காண்டற்கு இயலாதவாறு தடைசெய்தன, இரவுக் குறிகள் இடையீடுபட்டதோடு ஊரில் நடந்த விழாக்களும், தலைவி மனையின் காவலருமையும், பிறவும் அவனது தனிமைக் காட்சியைத் தடுத்தன. இவையாவும் தோழிக்கும் தலைமகட்கும் நன்கு தெரியுமாயினும் தலைமகள் ஆற்றாளாயினாள்; அதனால் அவள் மேனி வேறுபட்டு மெலிவெய்தினாள். அது கண்ட அவளுடைய அன்னை மனைப்புறத்தே செல்லுதல் வேண்டா என அவளை விலக்கி, அவளது வேறுபாட்டின் காரணம் அறியாது நெஞ்சு வருந்தி முதுபெண்டிர் சிலரைக் கொணர்ந்து ஆராய்ந்தாள், அவர்கள் தெய்வங்கட்கு வழிபாடு செய்வதல்லது வேறில்லை என்றனர். அவளும் அவ்வண்ணமே செய்தற்கு ஒருப்பட்டு ஆவன முயலத் தலைப்பட்டாள். அதனை அறிந்த தோழி ஒருநாள் அன்னையை யடைந்து, "என் தோழியாகிய தலைவி பேதைப்பருவம் கடந்து மனைப்புறம் போகலாகாத மடந்தையாயினள் என எண்ணி இற்செறித்துவிட்டாய்; அதனால் அவள் மேனி முழுவதும் நிழலில் வளரும் இளஞ்செடி போலப் பசந்து வேறுபட்டிருப்பதை உணர்கின்றாயில்லை, மேலும் வீணே மனத்தில் வருத்தமெய்தித் தெய்வங்கட்குப் பரவுக்கடன் புரிய முற்படுகின்றாய். மனையில் அடை பட்டிருக்கும் அவள் மறுபடியும் புனங்காவற்குச் சென்று புள் ளோப்புதல் சுனையாடல் முதலியவற்றால் இன்புறுவாளாயின் அவள் பண்டையினும் நலம்சிறந்து திகழ்வள்" என்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், காதலன் காதலுக்குத் தன் கருத்தை யளித்த தலைவி, அதன்கண் வேறு தெய்வங்கட்கும் இடமளியாத கற்புச்சிறப்பு அன்னை செய்யும் பரவுக்கடனால் சிதையும் என்பது பற்றி அதனை மாற்றற்கு ஏற்ற சூழ்ச்சி அமைந்திருப்பது கண்ட கண்ணத்தனார் இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். இளமை தீர்ந்தனள் இவள்என வளமனை அருங்கடிப் படுத்தனை ஆயினும் சிறந்திவள் பசந்தனள் என்ப துணராயாய் பன்னாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழிவேண் டன்னை கருந்தாள் வேங்கையங் 1கவட்டிடைச் சாந்திற் செய்த களிற்றுத்துப் பஞ்சாப் புலியதள் இதணத்துச் சிறுதினை வியன்புனம் காப்பின் பெறுகுவள் மன்னோஎன் தோழிதன் நலனே. இது, தோழி அருகடுத்தது. உரை : இவள் இளமை தீர்ந்தனள்என - இவள் இளமையாகிய பேதைப்பருவம் கடந்து பெதும்பைப்பருவத்தை அடைந்தாள் என்று கருதி; வளமனை அருங்கடிப் படுத்தனை - வளவிய மனையின்கண் அரிய காவலுக் குட்படுத்தினாய்; ஆயினும் -; இவள் சிறந்து பசந்தனள் என்பது உணராய் - இவள் மிகவும் நிறம் பசந்தாள் என்பதை உணராயாய்; பன்னாள் - பல நாள்களாக; எவ்வ நெஞ்சமொடு - துன்புறும் நெஞ்சுடனே; தெய்வம் பேணி வருந்தல் - தெய்வத்தைப் பரவி வருந்துதலை ஒழிவாயாக; வாழி -; அன்னை வேண்டு - அன்னையே, யான் கூறுவதை விரும்பிக் கேள்; கருந்தாள் வேங்கையங் கவட் டிடை - வலிய தாளையுடைய வேங்கைமரத்தின் கிளைகளி னிடையே; சாந்தின் செய்த - சந்தனக்கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட; களிற்றுத் துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்து - களிற்றியானையின் வலிக்கு அஞ்சாது தாக்கும் புலியின் தோல் பரப்பிய பரண்மேல் இருந்து; சிறுதினை வியன்புனம் காப்பின் - சிறுதினை விளையும் அகன்ற புனத்தைக் காத்தலை மேற்கொள்வாளாயின்; என் தோழி தன் நலன் பெறுகுவள்மன் - என் தோழியாகிய தலைமகள் தன் மேனி நலத்தை எய்துவள் காண் எ.று. அன்னை, வாழி, வேண்டு: இவள் இளமை தீர்ந்தனள் என வளமனைக்கண் அருங்கடிப்படுத்தனை; ஆயினும், இவள் சிறந்து பசந்தனள் என்பது உணராயாய், பன்னாள், தெய்வம் பேணி வருந்தல்; இதணத்திருந்து, வியன்புனம் காப்பின், என் தோழி தன் நலன் பெறுகுவள்மன்னோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. மன்னும் ஓவும் அசைநிலை. இளமை, மிக்க இளமையாகிய பேதைப் பருவத்தின் மேற்று. இளமை தீர்ந்த வழி எய்துவது பெதும்பைப் புறமாகிய இல்லிகவாப் பருவம் என்பது பற்றி, இளமை தீர்ந்தனள் இவள் என்றார். கடி, காவல். மேனி முழுவதும் பசந்தமை தோன்றச் சிறந்து பசந்தனள் என்றார். சிறக்க எனத் திரிப்பினுமாம். என்பது, என்னுமாறு விளங்குவது. உணராய் : முற்றெச்சம். எவ்வம், துயர். வருந்தல் : அல்லீற்று எதிர்மறை வியங்கோள். வேண்டு, விரும்பிக்கேள்; "அன்னாய் வாழி வேண் டன்னை1" என்று பிறரும் கூறுதல் காண்க. கருந்தாள், கருமை வன்மை மேற்று. கவடு, மரத்தினின்று கிளைகள் பிரியுமிடம். சந்தனக் கட்டை யால் பரண் செய்தவழி வருத்தம் செய்யும் சிறு தெய்வத்தால் இடையூறு உண்டாகா தென்பது பண்டையோர் கருத்து. புலித்தோலைப் பரப்பியவழிக் காட்டி யானைகள் கண்டு அஞ்சி நெருங்கா என்பதனால் புலியதள் இதணம் என்றார். வலி மிக்க புலியின் தோல் என்றற்குக் களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி என்றார். அதள், தோல். தன் மகள் இளமை நீங்கி மணப்பருவம் எய்துவதில் பெற்றோர் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவது இயல் பாயினும், அவளைப் புறம்போக விடாது காப்பதில் கண்ணுங் கருத்துமாயிருப்பதுபற்றி, இளமை தீர்ந்தனள் இவள் என வளமனை அருங்கடிப்படுத்தனை என்றாள். இதனை, "தலைமுடி சான்ற தண்டழை யுடையை, அலமர லாயமொடு யாங்கணும் படாஅல், மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய, காப்பும் பூண்டிசின் கடையும் போகலை, பேதை யல்லை மேதையங் குறுமகள், பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென, ஒண்சுடர் நல்லில் அருங்கடி1" என்பதனால் நன்கு அறியலாம். இந்நிலையில் நலம் சிறந்து விளங்குதற்குரியளான தலைவி, அவ்வாறின்றி மேனிமுற்றும் பசந்து தோன்றுதலைக் காணாதொழிந்தனை என்பாள், ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் என்றும், அதனால் நின் நெஞ்சம் துயர்க்கு இடனாயிற்றென்பாள், எவ்வ நெஞ்ச மொடு என்றும், பின்பு தலைவியின் வேறுபாடு தீர்தற்குரிய வாயில் நாடிப் பலரோடும் ஆராய்ந்து முடிவில் தெய்வத் துக்குப் பரவுக்கடன் செய்வது எனத் துணிந்தனை; அது வேண்டா; வாயில் வேறே உளது என்பாள், தெய்வம் பேணி வருந்தல் என்றும், தெய்வம் பரவுதலை மறுப்பது கேட்டுத் தாய் மருண்டு நோக்குதலும், தான் கூறுவதைச் சினவாது கேட்டல் வேண்டும் என்பாள், வாழி வேண்டுஅன்னை என்றும் கூறினாள் . அது கேட்டதும், அஃது என்னை என் பாள்போல நோக்கவே, இதணத்துச் சிறுதினை வியன்புனம் காப்பின் என்றும், புனங்காவற்கு விடின் அவள் நலம் சிறந்து விளங்குவது ஒருதலை என்பாள், பெறுகுவள் மன்னோ என் தோழி தன் நலனே என்றும் கூறினாள். இதனால் அன்னை வெறிவிலக்குவாளாவது பயன். 352. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலும், அச்சுப்படியிலும் இச் சான்றோர் மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் என்று பெயர் குறிக்கப்பட்டுளர். மற்றைய ஏடுகளில் மருதங் கிழார் மகனார் என்பதே காணப்படுகிறது. மேலும் இப் பாட்டின் இடையே அடிகள் மாறியும் சொற்கள் சில வேறு பட்டும் உள்ளன. மனையறம் புரிந்தொழுகும் தலைமகன், அது சிறத்தற்குப் பொருளின் இன்றியமையாமை தேர்ந்து, அது குறித்துத் தன் மனைவியின் நீங்கி வேறு நாட்டிற்குச் சென்றான். செல்லுங்கால் இடையே நீர்வளமில்லாத அரிய சுரமொன்றைக் கடந்து செல்ல வேண்டியவனானான். அங்கே ஆறலை கள்வர் வாழ்ந்தனர்; அவர்கள் வழிச் செல்வோரை இரக்கமின்றிக் கொன்று, அவர் கைப் பொருளைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாகக் கொண்டவர்; கொல்லப் பட்டோர் உடல்களைப் புதைப்பதைத் தவிர்த்து ஆங்காங்கே அவற்றைப் பருந்தும் கழுகும் நரியும் பிறவும் உண்டொழிக்க விடுத்தொழிவதே அவர்கட்கு இயல்பு. பெருவன்மையும் பேராண்மையு முடையனாதலால், அவர்கள் அவற்குத் தீங்கு செய்ய நினையாது அவனைக் கண்ட மாத்திரையே அஞ்சி யோடி மறைந்து கொள்வர். தலைவன் சென்ற போது ஓரிடத்தே ஆறலைப்போரால் கொல்லப்பட்டோர் உடம்பைக் கழுகுகள் தின்றுகொண்டிருந்தன. அங்கே முதுநரி யொன்று போந்து கழுகுகளை வெருட்டி யோட்டித் தன் பசிதீரப் பிணங்களின் பச்சூனைத் தின்றது. பின்பு அதற்கு நீர் வேட்கை யுண்டாகவே நீர் வேண்டி நாற்றிசையும் அலைந்தது. வெயில் வெம்மையால் சேய்மையில் தோன்றிய பேய்த்தேரை நீரென்று கருதி, அதன்பின் னோடி யிளைப்புற்றது. அதனால் நீர் இன்றாயி னும் நிழலிடம் கிடைத்தாற்போதும் என்று நினைந்து நிழல் தேடி யலைந்தது. எங்கும் நிழல்தரு மரமோ செடியோ ஒன்றும் காணப்படாமையால் அங்கங்கே தோன்றிய கற்குவியல்களை நாடிச் சென்றது. கற்களிடையே இருந்த சிறுநிழல் அது தங்குதற்கு ஏற்றதாக இல்லை; அதனால் முதுநரிக் குற்ற துன்பம் பெரிதா யிற்று. அது கண்டு வியந்த தலைமகன் அதன் வருத்தத்தைப் போக்குதற்கு வழியின்மையின், மிக்க இரக்கத்துடனே அச் சுரத்தை அரிதிற் கடந்து நிழலும் நீரும் உள்ள நிலப்பகுதியை அடைந்து தங்கினான். தனித்திருந்த அவன் உள்ளம், அவ்விடத்து மாவும் புள்ளும் மக்களும் எல்லாம் தத்தம் துணையொடு கூடி இனிதிருப்பது காணவும், தன் மனையின்கண் தனித் துறையும் தலைவிபாற் சென்றது. காதலுணர்வு மீதூரவே, அவளுடைய உருவெளி அவன் மனக்கண்ணில் தோன்றிற்று. "நாம் வருதற்கே மிகவும் அரிதாகிய நெடுஞ்சுரத்தை எப்படியோ இவள் கடந்து வந்துள்ளாளே; இவள் மிகவும் இரங்கத்தக்கவள்"என வாய் வெருவினான். இக்கூற்றின்கண், பொருள் குறித்துப் போதரும் ஆடவ னுள்ளம், பொருளீட்டத்துக்கு உரியன சூழ்வதன்இடையே காதலுணர்வால் அலைக்கப்பட்டுக் காதலியின் உருவைத் தோற்றுவிப்பதும், அதனை உருவெளியெனத் தெருள மாட்டாது மெய்யென நினைந்து அறிவு மருண்டு பேசுவதும் இயல்பு என்பது தோன்ற நின்றமை கண்ட சொகுத்தனார், அதனை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். மக்கள் வாழ்வில் தோற்றமுதல் முடிவுகாறும் நின்று விளங்கும் பொருள் வேட்கையை, இளமைக்கண் தோன்றி முதுமைக்கண் தேய்ந் தொழியும் காதல்வேட்கை வென்று மேம்பட முயலும் திறம், தலைமகன் வாய்வெருவிய இக்கூற்றின்கண் சிறந்து தோன்றுவது அறிஞர் அறிவுக்கு நல்விருந்தாகும். இலைமாண் பகழிச் சிலைமாண்1 வல்வில் அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன் வம்பலர் தொலைந்த வெம்பலை2 அருஞ்சுரம் நிழலில் நீளிடை நிணம்புரி முதுநரி அழல்போற் செவிய சேவல் ஆட்டிப் பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத் தேர்திகழ் வறும்புலம் துழைஇ நீர்நயந்து பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறாஅ உயவுற்று வருந்திய அஞ்சுவரு கவலை நமக்கும் அரிய3 வாயின அமைத்தோள் மாண்புடைக் குறுமகள் நீந்தி யாங்குவந் தனள்கொல் அளியள் தானே. இது, பொருள்வயிற் பிரிந்த தலைமகன், இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது. உரை : இலைமாண் பகழிச் சிலைமாண் வல்வில்- இலை வடி வாய அம்புகளையும் சிலைக்கும் ஒலியால் மாண்புற்ற வலிய வில்லையுமுடைய; அன்பில் ஆடவர்அலைத்தலின் - மனத் தின்கண் அன்பில்லாத மறவர் கூட்டம் துன்புறுத்திக் கொல்லுவதால்; வம்பலர் பலருடன் தொலைந்த - புதியராய் வழிச்செல்வோர் பலராய் இறந்துபட்ட; வெம்பலை அருஞ் சுர நிழலில் நீளிடை - வெம்மை மிகுந்த கடத்தற்கரிய சுரத்து நிழலில்லாத நீண்ட இடத்தின்கண்; நிணம் புரி முதுநரி - பிணங்களின் நிணத்தைத் தின்ன விரும்பிய முதுநரி; அழல் போற் செவிய சேவல் ஆட்டி - நெருப்பைப் போற் சிவந்த செவியையுடைய கழுகின் சேவலை வெருட்டியோட்டி; பச்சூன் கொள்ளை மாந்தி - பசிய ஊன்மிகுதியை யுண்டு: வெய்துற்று - நீர் வேட்கை யுற்று; தேர் திகழ் வறும்புலம் துழைஇ - பேய்த்தேர் உலாவுகின்ற பசும்புல்லுமின்றி வறி தாகிய நிலத்தில்; நீர் நயந்து - அத்தேரை நீர் என்று விரும்பி; துழைஇ - எங்கும் அலைந்து; பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறா அது - கற்குவியல்களின் கீழேயுள்ள நிழலைக் கண்டு அங்கே தான் தங்குதற் கேற்ற இடம் பெறாது; உயவுற்று வருந்திய அஞ்சுவரு கவலை - துன்புற்று வருந்திய அஞ்சத்தக்க கவர்த்த வழிகளைக் கடந்து வருவது; நமக்கும் அரியவாயின - சென்று பயின்றுள்ள நமக்கே அரிதாக இருக்க; அமைத்தோள் மாண் புடைக் குறுமகள் நீந்தி - மூங்கிலை யொத்த தோள்களால் மாண்புடைய இளமகளாகிய தலைமகள் அவற்றைக் கடந்து; யாங்கு வந்தனள்கொல் - எவ்வண்ணம் வந்தாளோ, தெரிய வில்லை; அளியள் - அவள் அளிக்கத்தக்கவளாவள் எ.று. அஞ்சுவரு கவலை நமக்கும் அரிய வாயின; குறுமகள் நீந்தி யாங்கு வந்தனள்கொல்; அளியள் எனக் கூட்டி வினை முடிவுசெய்க. வம்பலர் தொலைந்த அருஞ்சுர நீளிடை நிணம் புரி முதுநரி, சேவலாட்டி, கொள்ளை மாந்தி வெய்துற்று நீர்நயந்து வறும்புலம் துழைஇ, ஒதுக்கிடம் பெறாஅது உயவுற்று வருந்திய அஞ்சுவரு கவலை என இயையும், இலை வாயம்பு, இலைமாண் பகழி, இலைவடிவான வாயையுடைய அம்பு; இலைவாயம்பு கூர்வாயம்பு, பிறைவாயம்பு என அம்புகள் பலவகைய வாதலின் இலை மாண் பகழி எனச் சிறப்பித்தார். சிலை, சிலைக்கும் ஒலி. "சிலைமாண் வல்வில் சுற்றி1" எனப் பிறரும் கூறுதல் காண்க. சிலை என்பது ஒரு மரத்தையும் குறித்தலின், சிலை மரத்தாற் செய்யப்பட்ட வில் என்றலும் உண்டு. இரக்க மில்லாத மறவர் என்றற்கு அன்பில் ஆடவர் என்றார். வம் பலர், புதியராய்ச் செல்வோர். வெம் பலை, வெப்பம்; "வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம்2" என்று பிறரும் கூறுதல் காண்க. பிணம் தின்னும் புட்களில் கழுகு சிறந்தமையின், சேவல் எனப் பொதுப்படக் கூறினார். ஆண்கழுகின் தலையில் சிவந்த தசை செவிபோல உள்ளமை பற்றிச் செஞ்செவிச் சேவல்3" என்பது வழக்கு; "ஊன்பசித் தன்ன வெருவரு செஞ்செவி, யெருவைச் சேவல்"என வருதல் காண்க. இச்செவி நெருப்புப் போல் சிவந்த நிறமுடைமை பற்றி அழல்போல் செவிய சேவல் என்றார். வெய்துறல், நீர் வேட்கையுறல். தேர், பேய்த்தேர்; கானல் நீர். நயந்துப, நீரென்று நயந்து. துக்கை, கற்குவியல். பொருளீட்டுவான் போந்த தலைமகன், தன் காதலியின் உருவெளி மனக்கண்ணில் தோன்றிய மாத்திரையே அவளது மென்மைத் தன்மையை நெஞ்சில் நினைக்கவும், தான் கடந்து போந்த சுரத்தின் கொடுமை உடன் தோன்றவே. அதனைப் பட்டாங்கு மொழிவான், அங்கு முதுநரி பட்ட துன்பத்தை விரித்துக் கூறினான். ஒன்றின் நினைவு தோன்றுமிடத்து அதற்கு ஒப்பதும் மறுதலையும் இடம் காலமுதலியவற் றோடு இயைபுடையதும் நினைப்பது மனவியல். பொருட்கும் வினைக்கும் பிரிதல் ஆடவர்க்கு அறமாதலின், அவர்கட்கு அரிய சுரங்களைக் கடந்து செல்லும் வன்மையும் உரனும் இயற்கையாய் அமைந்தன. அப்பெற்றியனாகிய தனக்கே இச்சுரம் அருமை தோற்றுவித்த தென்பான், நமக்கும் அரிய வாயின என்றும், நாளும் தலைவியின் தோள் தோயும் இன்பத் திலே திளைத்திருந்தமையின், அவளுடைய உருவெளிக் கண்ணும் அதனை நயந்து கண்டு, அமைத்தோள் மாண் புடைக் குறுமகள் என்றும், அவள் வருதல் அரிது என்பது அவனது உட்கோளாதலின், யாங்கு வந்தனள் கொல் என்றும், தன் பிரிவாற்றாது வந்தனள் போலும் என்றும், அதற்கு ஏது தன்பால் அவள் கொண்ட அன்புமிகுதி என்றும் நினைந்து இரங்குகின்றானாகலின் அளியள் என்றும் கூறினான். சேவலை யாட்டிப் பச்சூன் மாந்திய முதுநரி, வேட்கை யுற்று அலைந்து, ஒதுக்கிடம் பெறாது வருந்துவது போலப் பொருளின் பெருமை காட்டிப் பிரிவால் என் காதலியை அலைத்து வெருட்டிப் பிரிவு மேற்கொண்டு போந்த என் நெஞ்சமே அவள்பால் பெற்ற இன்பத்தை நினைந்து அமைதி பெறாது வருந்துதல் வேண்டா; செல்வுழி யெல்லாம் அவளது உருவெளி தோன்றி ஊக்குமாகலின் என்பான் குறுமகள் நீந்தி யாங்கு வந்தனள் என்றான் என்பது குறிப்பு. இதனாற் பயன் தலைவன் செலவழுங்குவானாவது. 353. கபிலர் களவுவழிக் காதலுறவு கொண்ட தலைமக்களில், தலைவன் தோழியிற்கூட்டம் பெற்றுப் பகற்குறிக்கண் தலைவியைக் கண்டு பயின்று வருங்கால், தோழி மாலைப்போதில் அவன் பிரிவது பற்றி, இரவின்கண் தமது மனைக்கு விருந்தினானாக வருதல் வேண்டும் என்றாள். அதுவே பற்றுக்கோடாக இரவில் குறி யமைத்து அவண் போந்து தலைவியைத் தலைப்பெய்து இன் புற்றான். இரவுக்குறிக்கண் தலைமகளைக் கண்டு பயிறற்கண் உளவாகும் இடையூற்றையும் ஏதத்தையும் எண்ணிப்பார்த்த தோழி, அதனை மறுத்து வரைந்துகோடற்கண் அவன் கருத்தைச் செலுத்த முற்பட்டாள். ஒருநாள் இரவு, தலைமகனைக் கண்ட தோழி, "தலைவ, காதல் முறுகி எத்துணைப் பெருகினும் இவ் விரவில் சிறுநெறி பற்றி வருதல் கூடாது; வழியில் பெரிய புலியை எதிர்த்துக் கொன்று வெற்றிகொண்ட பெருங்களிறு சினம் தணியாது உரறும் முழக்கம் எங்கும் ஒலிக்கிறது; இவற்றைச் சிறிதும் மதியாது வருதலின் நின்னைச் சான்றோன் என்பதற்கு இல்லை" எனச் சிறிது வெம்மை தோன்றக் கூறினாள். இக்கூற்றின்கண், "இரவிடைச் சிறுநெறிபற்றி வருதலால் யாம் அஞ்சி வருந்துமாறு செய்தல் கூடாது; இனி இவளை வரைந்துகோடலே நீ செயற்பாலது" என்று கூறுபவள், "நீ சான்றோயல்லை" எனச் சான்றாண்மை வாய்பட்டாற் கூறும் நயம் கண்ட ஆசிரியர் கபிலர் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார். ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போலக் 1கணங்கொள்பு ஆடுமழை தவழும் கோடுயர் நெடுவரை முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்லுழு2 குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந் தயரும் வான்றோய் வெற்ப சான்றோ யல்லைஎம் காமம் கனிவ தாயினும் யாமத் திரும்புலி தொலைத்த பெருங்கை1 யானை வெஞ்சின உருமின் உரறும் அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. இது, தோழி ஆற்றது அருமை யஞ்சித் தான் ஆற்றாளாய்ச் சொல்லியது. உரை : ஆளில் பெண்டிர் தாளின் செய்த - கைம்பெண்கள் முயன்று நூற்ற; நுணங்கு நுண்பனுவல் போல - மிகமிக நுண்ணிதாகிய பஞ்சிபோல; கணங்கொள்பு - கூட்டமாய்த் திரண்டு; ஆடுமழை தவழும் கோடுயர் நெடுவரை - அசைகின்ற மழைமுகில் தவழும் உயர்ந்த முடியையுடைய நெடுமலையில் உள்ள; முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் - வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போலும் பெரிய பழத்தை; கல் உழு குறவர் காதல் மடமகள் - கற்களை யுழுது களைந்த நிலத்தை உழுது விளைவிக்கும் குறவருடைய அன்புமிக்க இளமகள்; கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் - கரிய விரல் களை யுடைய மந்திக்கு விருந்தளித் தோம்பும்; வான் தோய் வெற்ப - வானளாவிய மலையையுடைய தலைமகனே; சான்றோய் அல்லை - நீ சான்றோனாகத் தோன்றவில்லை; எம் காமம் கனிவதாயினும் - எமது காதல் மிக முறுகிப் பெருகிற்றாயினும்; யாமத்து - நடுவியாமத்தில்; இரும்புலி தொலைத்த பெருங்கை யானை - பெரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை; வெஞ்சின உருமின் உரறும் - மிக்க வெம்மையை யுடைய இடிபோல முழங்கும்; அஞ்சுவரு சிறுநெறி வருத லான் - அஞ்சத்தக்க சிறுவழிகளைக் கடந்து வருதலால் எ.று. எம் காமம் கனிவதாயினும் யாமத்து யானை உரறும் சிறுநெறி வருதலால், வெற்ப, சான்றோயல்லை எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மடமகள் பெரும்பழம் மந்திக்கு வருவிருந் தயரும் வெற்பு என இயையும். கணவனை ஆளன் என்பது தமிழ்வழக் காதலின், கணவனை யிழந்த மகளிரை, ஆளில் பெண்டிர் என்றார். நுணங்கு நுண்பனுவல், மிகமிக நுண்ணிய நூல்; நூற்றற்கு ஏற்ப அமைந்த பஞ்சி. பனுவல், ஆகுபெயர். தாள் வளைந்து முதிர்ந்து நிற்கும் பலாமரத்தை முடமுதிர் பலவு என்றார். "முடமுதிர் பலவின் கொழு நிழல்1" என்று பிறரும் கூறுதல் காண்க. மந்தி, பெண்குரங்கு. காமம் , காதல். இடியின் வெம்மையைச் சினம் எனக் கூறுவது இலக்கணை. சிறுநெறி, ஒதுங்குதற்கேற்ற அகலமில்லாத வழி. இரவின்கண் வந்தொழுகும் தலைமகனை விலக்கி, அவன் கருத்தை வரைவின்கண் செலுத்த விரும்பும் தோழி, அவனது அறிவை மயக்குறுத்தும் காதல்வெம்மையைத் தணித்தல் வேண்டி, வெம்மை கலந்த சொற்களால் சான்றோய் அல்லை என்றாள். அது கேட்டு அவன் விழித்து நோக்கியது கண்ட தோழி, அவன் இனி வருதலைத் தவிர்வானாயின் தலைவி யுள்ளத்தில் சிறந்து நிற்கும் காதல்வேட்கை பெருகி, ஆற்றாமை பயந்து அவள் மேனியை மெலிவிக்குமென்பது அவள் நினைவில் தோன்றினும், அவன் வரும் நெறியின் கொடுமையை நோக்க, மேனி வேறுபாட்டால் எய்தும் ஏதம் பெரிதன் றென்பாள், எம் காமம் கனிவதாயினும் என்றும், நெறியின் கொடுமையைக் கூறலுற்று, இரும்புலி தொலைத்த பெருங்கை யானை, வெஞ்சின உருமின் உரறும் என்றும், அதனை நினைத்தால் எம் நெஞ்சு அஞ்சுகிறது என்பாள், அஞ்சுவரு நெறி என்றும், ஏதம் தோன்றின் ஒதுங்குதற் கேற்ற அகலமின்மை பற்றிச் சிறுநெறி என்றும், இவ்வாறு யாரும் கேட்பின் அஞ்சத்தக்க சிறுநெறி வந்து வருந்துதல் சான்றோர்க்குச் சால்பாகாது என்பாள், அஞ்சுவரு, சிறுநெறி வருதலான் சான்றோ யல்லை என்றும் கூறினாள். குறவர்மகள் மடவ ளாயினும் மந்திக்குப் பெரும்பழம் வருவிருந்தயரும் என்றது, இளையளாயினும் தலைமகள் கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் விருந்துபுறந் தருதலு மாகிய மாண்புகள் பலவும் உடையள் என உள்ளுறுத் துரைத்தவாறு. தலைமகன் தெருண்டு வரைவானாவது பயன். 354. உலோச்சனார் களவுக்காத லொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகன் பகலினும் இரவினும் தலைமகளைக் கண்டு இன்புற்று வந்தான். சின்னாட்குப்பின் அவன் பகற்குறியிடத்திலோ இரவுக்குறியிலோ அவளைக் காணானாயினன். அவன் உள்ளத்தில் சிறந்து நின்ற காதல் அவனைப் பெரிதும் அலைத்தது. ஒருநாள் அவன் தலைவி மனையின் சிறைப்புறத்தே சென்று தோழியைக் கண்டு தான் தலைவியைக் காணாமையாற் பிறந்த வருத்தத்தைத் தெரிவித்தான். ஆற்றாதான் உடனே வரைவுக்குரிய முயற்சியை மேற்கொள்ளாது தன்னொடு உரையாடுவதை வாய்ப்பாகக் கொண்ட தோழி, அவன் மனத்தை வரைவின்கட் செலுத்த முற்பட்டாள். அதனால், அவள், அவனை நோக்கி, "ஐய, கடற்கரையில் வெயில் எறித்தலால் விளையும் உப்பினைக் கொண்டு விற்றற்பொருட்டு உமணர் தம் வண்டிகளை ஓட்டிக் கொண்டு உப்பளம் செல்வதால் எழும் ஆரவாரம் போல, நினது நட்பு இவ்வூரின்கண் பெரிய அலரை எழுப்பிவிட்டது; அதனால் தலைமகள் இற்செறிக்கப் பட்டமையின், யாமுற்ற விழுமம் பெரிதாயிற்று; அதனைத் தலைவி தான் இனிப் பொறுத்தல் இயலாது" என்றாள். இக்கூற்றின்கண், அன்புடைமை தோன்றப் பொறுத்த லாற்றாமை கூறிய தலைமகன் உள்ளத்தை வரைவின்கட் செலுத்தும் தோழியின் நாநலம் இனிது விளங்குதல் கண்ட உலோச்சனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடு கின்றார். தான்அது பொறுத்தல் யாவது 1வேனல் ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை 2வீழ்கால் ஓலைச் சூழ்சிறை யாத்த கானல் நண்ணிய 3வான்மணன் முன்றில் எல்லி யன்ன இருணிறப் புன்னை நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின் கடுவெயிற் 1கலித்த கல்விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம்போ காகுலம் கடுப்பக் 2கவ்வையா கின்ற தையநின் நட்பே. இது, தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது; மனைவ யின் தோழியைத் தலைமகள் புகழ்ந்தாற்கு அவள் மறுத்துச் சொல்லியதூஉ மாம். உரை : அது பொறுத்தல் யாவது - அதனைப் பொறுப்பது எவ்வாறு இயலும்; வேனல் ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை வீழ்கால் ஓலை - உலர்ந்த அடிமரத்தி னின்றும் காற்றால் ஒழிக்கப்பட்ட நீண் டுயர்ந்த பனையின் முற்றிய ஓலையால்; சூழ்சிறை யாத்த - சுற்றுவேலி கட்டப்பட்ட; கானல் நண்ணிய வால்மணல் முன்றில் - கானலைச் சேர்ந்த வெள்ளிய மணல் பரந்த முன்றிலிடத்து; எல்லி அன்ன இருள்நிறப் புன்னை - இரவுப்பொழுதைப் போல இருள்படத் தழைத்த புன்னை மரத்தின்; நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த - பருத்த அடிமரம் நின்ற அவ்விடத்தே கட்டப்பட்ட; தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பில் - காற்றால் அசைகின்ற தோணி யிருக்கும் கடலலைகளின் நீர்த்துளியால் நனைந்த கடற் கரையின் ஒருபால்; கடு வெயில் கலித்த கல்விளை யுப்பு - மிக்க வெயில் எறித்தலால் விளைந்த கல் வடிவினவாகிய உப்பை; நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் - நெடுவழிச் செலவுக்குரிய வண்டிகளில் நிரைநிரையாகக் கொண்டு செல்லும் உப்பு வணிகர்; அளம்போகு ஆகுலம் கடுப்ப - உப்பளத்துக்குச் செல்லுங்கால் எழும் ஆரவாரம் போல; கவ்வையாகின்றது - அலர் விளைத்துள்ளது; ஐய - ஐயனே; நின் நட்பு - நின் காதற்கேண்மை எ.று. ஐய, நின் நட்பு, நிரைசெலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்ப, கவ்வை யாகின்றது; ஆகலின், அது பொறுத்தல் யாவது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கானல் மணல் முன்றில் நின்ற புன்னை முழுமுதல், அவ்வயின் தொடுத்த அம்பி யிருக்கும் தூவலஞ் சேர்ப்பில், உப்பு ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம்போகு ஆகுலம் என இயையும். நெடி துயர்ந்த பனையின் அரை காற்றில் அசையும் இயல்பிற் றாதலின், ஆடரை என்றார். வீழ்ஓலை, முற்றிய ஓலை, வெட்டப்படாது விடப்பட்டு அப்பொழுது வெட்டி வீழ்த்திய ஓலை என்றலும் உண்டு. பெண்ணையின் ஓலையால் சூழ் சிறையாத்த கானல் என்றது, "தேனிடை யார்தரு சந்தின் திண்சிறையால், தினைவித்திக் கானிடை வேடர் விளைக்கும் கற்குடி" என்று வரும் தேவாரத்தை 1நினைப்பிக்கின்றமை காண்க. வால்மணல், வெண்மையான மணல். நிறம் கரிதாய் இருள்படத் தழைத்திருத்தல் பற்றி எல்லியன்ன இருணிறப் புன்னை எனப்பட்டது. தூவல், அலைகள் கரையை மோதி யுடைதலாற் பரக்கும் நீர்த்துளி. கலித்தல், ஈண்டு விளைதல் மேற்று. மிக்க பொறையுடையவாகிய உப்புமூடைகளை நெடுந்தூரம் ஏற்றிச் சேறற்கு வேண்டிய வலிய சகடக்காலும் அச்சும் உடைமை தோன்ற நெடுநெறி ஒழுகை என்றார். ஒழுகை, வண்டி. வண்டிகளை நிரல்படச் செலுத்தும் உமணரை நிரைசெலப் பார்ப்போர் என்றார். நிரல்படச் செல்லாவா யின் வேண்டுமிடம் எளிதிற் சேறல் ஆகாதென அறிக. அளம், உப்பளம்; விளைந்த உப்பைத் தொகுத்திருக்கும் இடம். ஆகுலம், ஆரவாரம், கவ்வை, அலர். இருவகைக் குறியிடத்தும் தலைவியைக் காணப் பெறாமை யால் வருந்திய உள்ளத்தோடு சிறைப்புறத்தே தோன்றித் தனது ஆராக் காதலைத் தலைமகன் உரைப்பவும், பெருமையும் உரனும் உடைமையால் பொறுத்தல் நினக்கு அமையு மாயினும், தலைமகட்கு அரிது என்பாள், தான் அது பொறுத்தல் யாவது என்றும் அதற்கு ஏது நின் நட்பால் விளைந்த அலர் என்பாள் கவ்வை யாகின்றது ஐய நின் நட்பு என்றும் கூறினாள். அலர் பெருகிப் பரந்த திறத்தை கடுவெயிற் கலித்த உப்பினைக் கொள்வான் நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் உப்பளம் போகும் ஆகுலம் கடுப்ப என்ற உவமையால் விளக்கினாள். கடுவெயிலாற் கலித்த கல்லுப் பினைக் கோடற்குச் செல்லும் உமணர் ஆரவாரம் போல, நின் நட்பால் இவள் மேனியிற் கதிர்த்த நலத்தை இற்செறிப்பால் உளதாய பசலை கவர்ந்து படர்கின்றது எனக் கொள்க. பனையின் ஆடரை யொழிந்த வீழோலை கொண்டு சிறை சூழப்படுதல் கூறியது, நின் புணர்வு பிரிவுகளினிடையே நீ யுரைத்த சொற்களையே தனக்கு அரணாகக் கொண்டு தலைவி உயிர்வாழ்கின்றாள் என்றும், புன்னையின் முழுமுதல் நின்ற அவ்விடத்தே கட்டப்பட்ட தோணி காற்றால் அசைந்து தூவலால் நனைந்திருக்கும் என்றது நின்பால் உள்ளம் பிணிப் புண்ட இவள், வேட்கையால் அலைப்புண்டு நின்னைத் தலைக்கூடப் பெறாமையால் கண்ணீர் நனைப்ப வருந்து கின்றாள் என்றும் உள்ளுறை கொள்க. இதனாற்பயன், தலை மகன் தெருண்டு வரைவானாவது. 355. மோசி கீரனார் களவின்கண் ஒழுகும் தலைமகன் காதல் சிறத்தல் வேண்டி, வரைவு மேற்கொள்ளாது நீட்டித்தான், இடையிடையே கடமை காரணமாகப் பிரிந்ததனால். தலைமகளைக் காண்டலும் அரிய னானான். அதனால், தலைமகட்கு ஆற்றாமையும் மேனியில் வேறுபாடும் உண்டாயின. உறுகண் ஓம்புதல் தோழிக்குக் கடனாதலின், ஒருகால் தலைமகன் சிறைப்புறமாக வரக் கண்ட தும். அவள் அவனை நோக்கி. "தலைவ, நண்பராயினார் தமது கண்முன்னே இருந்து நஞ்சினைக் கொடுப்பாராயின், நாகரிகரான சான்றோர் அதனையும் மறாது உண்பார்; என் தோழியாகிய தலைவியின் தோள் நல்கும் இன்பம், நின் நெஞ்சிற்கு உவகை தாராதாயினும், என்பாற் கண்ணோட்டம் செய்தாயினும், அவளை அருளுவாயாக; அவள் நின் அருளையன்றி உயிர் வாழ்க்கைக்குரிய பற்றுக்கோடு வேறு ஒன்றும் இலள்" என்றாள். இக்கூற்றின்கண், தலைமகன்பால் அன்பின்மை காட்டி, உலகியற்கு இன்றியமையாத கண்ணோட்டத்தின்மேல் வைத்து வரைந்துகொள்ளுமாறு தலைவனைத் தூணடும் தோழியின் சொன்னலம் கண்ட கீரனார் அதனை இப்பாட்டின்கண் வைத்துப்பாடுகின்றார். புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைபோற் காந்தட் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை அம்மடற் பட்ட அருவித் தீநீர் செம்முக மந்தி ஆரும் நாட முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் அஞ்சி லோதிஎன் தோழி 1மென்றோள் நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ என்கண் ஓடி அளிமதி நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே. இது, தோழி அருகடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவுகடாயதூஉமாம். உரை : புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை - மகனைப் பெற்ற பூப்போன்ற கண்ணையுடைய மடந்தை யொருத்தி; முலைவாய் உறுக்கும் கைபோல் - கொங்கையின் காம்பைக் குழவியின் வாயில் வைக்கும் கைவிரல்போல்; காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை - காந்தளின் சிவந்த பூக் குலையின் இடையிலே அசையும் கொழுவிய மடலையுடைய வாழைப்பூ; அம் மடற் பட்ட அருவித் தீநீர் - அம்மடலின் வழியாக அருவிபோலச் சொரியும் இனிய நீரை; செம்முகமந்தி ஆரும் - சிவந்த முகத்தையுடைய குரங்கு தன் வாய்வைத்து அருந்தும்; நாட - நாட்டையுடைய தலைவனே; முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் - கண் முன்னாக இருந்து நண்பர் கொடுப்பராயினும்; நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - நஞ்சாயினும் அதனையுண்பர் மிக்க கண்ணோட்டமுடைய சான்றோர்; அஞ்சில் ஓதி என் தோழி மென்றோள் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய என் தோழியாகிய தலைவியின் மென்மையான தோள்களை; நெஞ்சின் இன்புறா யாயினும் - நெஞ்சின்கண் நீ விரும்பாயாயினும்; என் கண் ஓடி அது நீ அளிமதி - என்பாற் கண்ணோட்டம் செய்தேனும் அதனை நீ அவட்கு அளிப்பாயாக; நின்கண் அல்லது பிறிது யாதும் இலள் - நின் அருளல்லது வேறு யாதும் அவள் தனக்குப் பற்றுக்கோடாகக் கொண்டில ளாகலான் எ.று. நாட, நனிநாகரிகர் நட்டோர் முந்தை யிருந்து கொடுப்பின் நஞ்சும் உண்பர்; என் தோழி மென்றோளை நெஞ்சின் இன் புறா யாயினும், என்கண் ஓடி அது நீ அளிமதி; நின்கண் அல்லது பிறிது யாதும் இலளாகலான் எனக் கூட்டி வினை முடிவு செய்க. பூங்கண், பூப்போல் அழகிய கண்கள். காந்தட் பூவின் குலைகள் சிவந்த விரல்களையுடைய கைபோலத் தோன்றும், நஞ்சு கொடுக்கக் கருதுவோர் எவரும் அதனை மறைவில் வைத்துக் கலப்பரேயன்றி உண்போர் கண்ணெதிரே வைத்துக் கலவார்; நண்பராயினார் ஒருகாலும் நஞ்சு கொடார்; நண்பர் நஞ்சினைக் கண்முன்னே வைத்துக் கலந்து கொடுப்பா ராயின், கண்ணோட்டம் உடைய சான்றோர், கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் என்றும், அஃது இல்லையாயின் உலகியல் அழிந்து கெடும் என்றும் கருதுபவராகலின், நண்பர் செயல் உலகியல் நிலைபேறு குறித்து நிகழ்வதாகக் கொண்டு, அவர் தரும் நஞ்சினை யுண்டு அவரையும் வெறாது விரும்பு வது பற்றி முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் என்றார். திருவள்ளுவனாரும், "பெயக் கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்1" என்றார். சங்க காலத்தும் அதற்கு முன்னும் கண்ணோட் டம் என்னும் பொருளில் வழங்கிய நாகரிகம் என்னும் சொல் இக்காலத்தில் யாவரும் பொதுவாகக் கண்டு விரும்பத்தக்க நிலையில் மக்கள் மேற்கொள்ளும் உண்டி உடை உறையுள் உரையாடல் முதலிய உலகியல் வழக்கைப் பொருளாகக் கொண்டு நிலவுகிறது. பழங்கால நாகரிகம் கண்ணோட்டத்தை இடமாகக் கொண்டு அசைவின்றி நின்றது; இக்கால நாகரிகம் கண்ணோட்டத்தைக் கைந்நெகிழ்த்து உண்டி உடை முதலிய வற்றின் மேனின்று நாடுதோறும் காலந்தோறும் மாறும் நிலையில் உளது. நாகரிகம் என்ற இச் சொல்லின் வரலாறு நாளும் மாறிச் சிறக்கும் மக்கட் சமுதாய வாழ்வை அடிப் படையாகக் கொண்ட தாதலால் இப்பொருள் மாறுபாடு தள்ளத்தக்க தன்று என உணர்க. நிற்க, கண்ணோட்டம் இல்வழி முகத்துக் கண் கண்ணெனக் கருதப் படாமைபற்றி அதனைக் கண் என்றலும் வழக்காதலின் நின் கண் என்றார். வரையாது நீட்டித் தொழுகும் தலைமகனை, விரைய வரைந்து கொள்ளத் தூண்டும் கருத்தினளாயினும் தோழி, தலைவியின் ஆற்றாமையும் கற்புச் சிறப்பும் நோக்கித் தன் உள்ளத்தின் மென்மைத் தன்மையை இழந்து அவனது அன்பின்மையை வெளிப்படுப்பாள் போன்று, தலைமகனைப் பார்த்து, என் தோழிபால் பெறலாகும் இன்பம் நினக்கு நஞ்சாகி விட்டது என்பாள். "என் தோழி மென்றோள் நெஞ்சில் இன்புறாய் என்றும், கண்ணோட்டத்து உள்ளது உலகியல்1 என்ற உண்மையை யுணர்ந்திருத்தலால் சான்றோர். தமக்கு நண்பராயினார் தம் கண்ணெதிரே இருந்து நஞ்சு பெய்து தரினும் அவர் தருவதைக் கண்ணோடி மறுத்தலோ வெறுத்தலோ இன்றி, உண்டு அவரைப் பின்னும் விரும்புதலே செய்வர் என்பாள், முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் என்றும் கூறினாள். நட்டோர் தம் கண்முன்னே இருந்து கொடுத்தலின், சான்றோர் அவர் பாற் கண்ணோடி, அவர் தருவது நஞ்சமாயினும் அதனை அமிழ்த மென்றே உண்டு அவரை விரும்புவ ரென்றற்கு முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் என்றும், உண்ட விடத்துத் தம் உயிர்க்கு உறுதி பயவாமல் இறுதி பயப்ப தாயினும் கொடுப்போரின் நட்புரிமை பற்றி அவர்பாற் கண்ணோடி உண்டலையே செய்வர் என்றற்கு நஞ்சும் உண்பர் என்றும், அதற்கு ஏது அவர்பால் இருந்து அழகு செய்யும் கண்ணோட்டமே என்பாள், நனி நாகரிகர் என்றும் கூறினாள். அவர் செயல் கழிகண்ணோட்ட மன்று என்றற்கு நனி நாகரிகர் என்றாள். கழிகண்ணோட்டம் தீது தரும் என்பதைச் சான்றோர் சினமும் காமமும் ஆகிய குற்றங்க ளோடு சேர வைத்துச் "சினனே காமம் கழிகண் ணோட்டம் பொய்ச்சொல் முதலியன" அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது2 என மொழிந்தனர். ஆகவே, என்னாற் புணர்க்கப் பட்ட என் தோழியாகிய தலைவியின் மென்றோள் நினக்கு நஞ்சுபோல் உவகை தாரா தாயினும், என்பாற் கண்ணோட் டம் செய்து இவளைத் தலையளிப்பாயாக என்பாள், என் கண் ஓடி அளிமதி என்றும், நின் கண்ணதாகும் தலையளி யல்லது இவள் வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாவது வேறு யாதும் இல்லை என்பாள் நின் கண் அல்லது பிறிதுயாதும் இலன் என்றும் கூறினாள். காந்தட் குலைவாய் தோய்ந்தசையும் வாழைப்பூவின் மடலில் ஒழுகும் தீநீர், ஒரு தாய் தன் புதல்வற்குத் தன்முலை நல்குதல் போல்வது கண்டு மந்தி அம்மடலில் தன் வாய் வைத்து அருந்தும் என்றது, பகல் இரவு என்ற இருபோதும் குறியிடம் போந்து நீ நீங்கியது, தன்னை மெய்யே தலையளி செய்வது போன்றமை கண்டு, என் தோழியாகிய தலைவி அதனையே தன் நெஞ்சின்கண் நினைந்து வாழ்கின்றாள் என்றவாறு. இதனாற் பயன் தலைவன் தெருண்டு வரை வானாவது. 356. பரணர் களவுவழிக் காதலுறவு கொண்ட தலைமக்கள் பகலினும் இரவினும் முறையே விளையாட்டிடத்தும் மனைப்புறத்தும் தம்மிற் கண்டு பயிலுமாற்றால் காதல் சிறந்தனர். இவ்வாறு நாளும் வளர்ந்து பெருகிய காதல் ஒருவர் ஒருவரை யின்றி உயிர் வாழ்தல் அமையாத உயர்நிலையை அடைந்தது. அதனால் தலைமகன் தன் உயிரோடு ஒன்றாய் இயைந்த தலைமகளே தன் வாழ்க்கைக்குத் துணையாம் எனத் தெளிந்து அவளை மணந்துகோடல் வேண்டிச் சான்றோர் சிலரைத் தலைவியின் பெற்றோர்பால் மகட் பேசுமாறு விடுத்தான். தலைவியின் பெற்றோர்க்கு அவளது களவுக் காதலுறவு தெரியாமையால், தலைமகன் விடுத்த சான்றோர்க்கு மகட்கொடை மறுத்தனர். அது தலைமகட்கோ தோழிக்கோ குறிப்பாகவேனும் தெரிந்திருப்பின், யாரேனும் ஒருவர் அறத் தொடுநிலைவகையால் நிலைமையை அறிவித்திருப்பார். பெற் றோரும் தலைவி கருத்துக்கு மாறாக யாதும் செய்ய விரும்புவா ரல்லர். மகள் மறுக்கப்பட்ட சான்றோர் தலைமகன்பால் மீண்டு வந்து நிகழ்ந்தது கூறினார். தலைமகற்கு வருத்தம் மிகுந்தது; அறிவு அலமரல் எய்த அவன் மனத்தில் பலவேறு எண்ணங்கள் தோன்றி அலைக்கலுற்றன. ஓரளவு அறிவு தெளிவு பெற்றதும், நிலையின்றி அலையும் நெஞ்சிற்குக் கூறுவானாய், "இமயத்தில் வானரமகளிர் வளர்க்கும் அன்னப் பார்ப்புக்கு அதன் தாயன்னம் கடலுக்குச் சென்று இரைதேடிக் கொணர்ந்து ஊட்டும் செயலில், அது பறக்குங்கால், சிறகுகள் மேலுங்கீழுமாக அசைந்து வருந்துதல் போல, நீயும் வருந்தி மெலிந்தனை; எனினும், விடியலில் கிழக்கு வானத்தில் வெள்ளியாகிய மீனைப்போலப் போக்குடன்பட்டு ஒரு நாள் நம்பக்கல் வருவளாதலின் வருந்துதல் ஒழிக" எனத் தேற்றினான். இவ்வாறு தனக்குள் கூறிக்கொண்ட இடம் தலைவி மனையின் ஒரு சிறைப் புறமாகும். அவன் உரைத்த சொற்கள் ஆங்கு நின்ற தோழியின் செவியில் விழுமாயின், அவள் உடன் போக்குக்குத் தலைமகளை உடன்படுவிப்பள் என்பது குறிப்பு. இக்கூற்றின்கண் குறிப்பாகத் தலைவி உயர்வும் அவள் உள்ளத்து நிலவிய காதலும் அதனை நாளும் வளர்த்த அருமையும் புலப்படுத்திப் போக்குடன்படுக்குமாறு தோழியை வேண்டும் குறிப்பு அமைந்திருக்கும் நயம்கண்ட ஆசிரியர் பரணர் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நிலம்தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த இலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் பொன்படு நெடுங்கோட் டிமயத் துச்சி வானர மகளிர்க்கு 1மேவ லாகும் வளராப் பார்ப்பிற் கல்கிரை ஒய்யும் அசைவில் நோன்பறை போலச் 2செலவர வருந்தினை வாழிஎன் உள்ளம் ஒருநாள் காதலி 3உழைய ளாகக் குணக்குத்தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே. இது, வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை : நிலம் தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த - நிலத்தில் மிகவும் தாழ்ந்த இடமாகிய தெளிந்த கடற்பரப்பில் மீனாகிய இரையை மேய்ந்துண்ட; இலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் - விளங்குகின்ற மெல்லிய இறகுகளையும் சிவந்த கால்களையுமுடைய அன்னம்; பொன்படு நெடுங்கோட்டு இமயத்துச்சி - பொன்னிறம் படைத்த நெடிய முடியையுடைய இமயத்தின் உச்சியில் வாழும்; வானர மகளிர்க்கு மேவல் ஆகும் - வானர மகளிரால் விரும்பி வளர்க்கப்படும்; வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் - நன்கு வளராத இளம் குஞ்சு கட்கு வேண்டும் உணவைக் கொணர்ந்து சொரியும்; அசைவில் நோன்பறை போல - அதனாற் சோர்வடையாத வலிய தாயன்னத்தின் சிறகு போல; செலவர வருந்தினை - செலவும் வரவுமாகிய செயல்களை அயராது செய்து வருத்தமுற்றனை; என் உள்ளம் - என் நெஞ்சே; வாழி-; ஒரு நாள் - இனியொரு நாள்; காதலி உழையளாக - காதலியாகிய தலைவி; நம் பக்கலில் உளளாக; குணக்குத் தோன்று வெள்ளியின் - விடியற் காலையில் கிழக்கில் அடிவானத்தில் தோன்றும் வெள்ளி யாகிய விண்மீன் போல்; எமக்குமார் வரும் - எம்பால் வருகுவ ளாகலான் வருந்துதல் ஒழிக எ.று. என்உள்ளமே, வாழி; அன்னம் பார்ப்பிற்கு அல்கிரை சொரிதற்குத் துணையாகிய நோன்பறை போலச் செலவர வருந்தினை; ஒருநாள் காதலி உழையளாகக் குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்கு வருமாதலால் இனி வருந்துதல் ஒழிக எனப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. அன்னம் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் நோன்பறை போலச் செலவர வருந்தினை என இயையும். ஆகலான் என்பது முதலாயின குறிப்பெச்சம். ஒய்யும் என்னும் முதல்வினை நோன்பறை என்ற சினையொடு முடிந்தது. நிலத்தின் மிகத் தாழ்ந்த பகுதியே கடலாயினமை பற்றி நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் என்றார். இமயத்தின் நெடுமுடி பொன்னிறம் கொண்டு விளங்குவது உலகறிந்த செய்தி யாகலின், பொன்படு நெடுங்கோட் டிமயம் என்றனர்; இக்காலத்து இந்நெடுங் கோட்டினைக் காஞ்சன சிருங்கம் என்று வடமொழிப் படுத்துக் கூறுகின்றனர். பொன், காஞ்சனம்; கோடு, சிருங்கம். "ஓங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங் கோட் டிமயத்தன்ன1" என்ப பிறரும். ஈண்டுத் திபேத்திய மகளிரை இவ்வாறு கூறுகின்றார்கள் போலும். இம்மலைப்பகுதியில் வானரமகளிர் வாழ்கின்றனர் என்ப. மேவல், விரும்புதல்; ஈண்டு விரும்பி வளர்க்கப்படும் பொருண்மே னின்றது. அல்கிரை, வேண்டும் அளவிற்றாய இரை.ஆர், அசைநிலை. மகட்கொடை மறுக்கப்பட்டதால் ஆற்றானாகிய தலை மகன், தலைவிமனையின் சிறைப்புறம் போந்து, தன் நெஞ் சொடு கூறுவானாய்த் தோழி செவிப்படுமாறு, "நெஞ்சமே, இத்துணையும் பன்முறைத் தலைவிபால் வருவதும் போவதும் செய்து, அவள்பால் நீ கொண்ட காதலைச் சிறப்பித்தாய்; அவ்வகையில்,கூட்டம் இடையீடு படினும், அல்லகுறிப்பட்டு அலமரல் எய்தினும் அயர்வின்றி முயன்றனை" என்பான், வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும், அன்னத்தின் அசைவில் நோன்பறை போலச் செலவர வருந்தினை என்றும், இப்பொழுது வரைவு மறுக்கப்பட்டது கொண்டு இனி அவளைப் பெறலரிது என எண்ணிப் பேதுறவு கொள் ளற்க என்பான், வாழி என் உள்ளம் என்றும், மகள்மறுத்தமை அறிந்தவழி நம் காதலின் திண்மையினை நன்குணர்ந்து போந்து நலம் நல்கிய பேரன்பின ளாதலின், போக்குடன்பட்டு நம் பக்கல் வந்து கூடுவள் என்பான், ஒருநாள் காதலி உழையளாக எமக்குமார் வரும் என்றும், கிழக்கில் ஞாயிறு தோன்றி இருளைப் போக்கி ஒளி நல்குமுன் இருள் புலரும் விடியற்போதில், அத்திசையில் வெள்ளி தோன்றி விளக்கம் தருதல் போலப் பிற்பயக்கும் அழிவில் கூட்டம் எய்துமுன், போக்குடன்பட்டு நம்பக்கற் போந்து கவற்சி நீக்கி இன்புறுத்து வள் என்பான், குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்கு மார் வருமே என்றும் கூறினான். பொன்படு நெடுங்கோட்டு இமயத்துச்சி என்றது, தலைவி மனையின் சிறப்பும், செங்காலன்னம் என்றது, காதலொழுக்கம் பூண்ட தலைவன் மனநிலையும், வளராப் பார்ப்பு என்றது, தலைவியாற் பேணப்படும் காதலுறவும், அன்னத்தின் நோன் பறை யியக்கம்,தலைவனுடைய வரவு செலவும் குறித்து நின்றன. இக்குறிப்புக்களால் அல்கிரை யுண்ட பார்ப்பு வளர்ச்சி முற்றியதும், தாயன்னத்தோடு பறந்து செல்லுமாறு போலத் தலைவியும் போக்குடன்பட்டு வருவள் என்பதும், அதற்குத் தோழி துணைபுரிய வேண்டும் என்பதும் உணரக் கூறியவாறு காண்க. வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யுமாற்றால், அதனை வளர்த்துப் பறப்பிக்கும் நோன்பறை போலத்தோழி, தான் வரைவு மறுக்கப்பட்டமை அறியாது உறையும் தலை மகட்கு அதனை அறிவித்துப் போக்குடன் படுத்துதல் வேண்டு மென்னும் குறிப்பும் தலைமகன் கூற்றில் அடங்கி யிருப்பது காண்க. குணக்குத் தோன்றும் வெள்ளி என்றது, போக்கிற்குரிய காலம் குறித்து நின்றது. இதனாற் பயன் தலைவன் அயர்வு தீர்வானாவது. 357. குறமகள் குறிஎயினியார் தமிழர்களின் சங்ககால வாழ்வில் குறிஞ்சிநிலப் பெருங்குடி மக்கள், குறவர் குன்றவர் வேட்டுவர் என்ற பெயர் பெற்று விளங்கினர். அவர்களைக் குறிஞ்சித் திணைநிலை மக்கள் என நூலோர் குறித்தனர். இவ்வாறே நெய்தற் றிணைநிலை மக்களைப் பரதவர் எனவும், முல்லைத் திணைநிலை மக்களை ஆயர் எனவும் வழங்கினர். பாலைத் திணைநிலையினரை, எயினன் என்றனர். பழந்தமிழரிடையே நிலவிய மக்கட் பொதுப் பெயர்களில் எயினன் எயினி என்பன ஒரு வகை. எயினி, பெண்பாற் பெயர். பாலைத் திணை மக்களை எயினர் என்பது முண்மையின் இவர் அவ்வகையினர் அல்லர் என்பது தோன்றக் குறமகள் என்று சிறப்பிக்கப்படுகின்றார். குறவர் இனத்தில் குறி கூறிச் சிறப்பு எய்திய குடியிற் பிறந்தமை பற்றிக் குறி எயினி எனப்படுகின்றார். குறமகள் என்பதற்கு ஏற்ப இவர் பாட்டில் குறிஞ்சிக் கருப் பொருள்கள் பயில வழங்குகின்றன. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. களவின்கண் ஒழுகும் தலைமக்களிடையே, தலைவி யுள்ளத்தில் காதல் சிறந்து தலைமகன்பாற் பெறலாகும் அழிவில் கூட்டம் பற்றிய ஆர்வம் பெருகி நின்றது. அதனை யுணர்ந்த தோழி, தலைவனைக் குறிப்பாகவும், வெளிப்படை யாகவும் வரைவுகடாவினாள். எனினும் தலைமகன் வரைவு மேற் கொள்ளாமல் களவையே நீட்டித்தான், தலைமகள் ஆற்றாமை மிகுந்து வருந்துவளே என்று தோழி கவன்றாள். அதனைத் தலைவி யுணர்ந்து தன்னால் ஆற்றுதல் கூடும் என்பது தோன்றத் தோழியை நோக்கி. "பண்டு, நாம் தலைவனுடன் சுனையிற் படிந்து விளையாடிய நிகழ்ச்சி நாளும் நிலைபெற நடவா தாயினும், என் நெஞ்சு புண்ணுற்று வருந்துமாறு மறந்துபோவது கிடையாது; அதுபற்றி நீ கருதுவது யாது? என்று வினாவினாள். இக் கூற்றின்கண் தலைவனது கேண்மை நெஞ்சு வருந்த மறைந்து கெடுவ தின்மையின், வரைவு நீட்டித்த போழ்தும் யான் வருந்தேன் என்ற கருத்து விளங்க நிற்கும் நலம் கண்ட சான்றோ ராகிய குறிஎயினியார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நின்குறிப் பெவனோ தோழி 1என்குறிப் பென்னொடு நிலையா தாயினும் என்றும் நெஞ்சுவடுப் படுத்துக்2 கெடுவறி யாதே சேணுறத் தோன்றும் குன்றத்துக் கவாஅற் பெயலுழந் துலறிய மணிப்பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை3 ஆலும் சோலை அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி நீரலைக் கலைஇய கண்ணிச் சாரல் நாடனொடு ஆடிய நாளே இது, தலைமகன் வரைவு நீடியவிடத்து ஆற்றுவல் என்பது படச் சொல்லியது; மனைமருண்டு 4வேறுபாடா யினாய் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம். உரை : தோழி-; நின் குறிப்பு எவன் - நின் கருத்து யாது; என் குறிப்பு- என் கருத்து யாது எனின்; என்னொடு நிலையா தாயினும் - என்னொடு தொடர்ந்து நாளும் நிலையாக நிகழாதாயினும்; நெஞ்சு வடுப்படுத்துக் கெடு அறியாது - நெஞ்சு புண்பட்டு வருந்துமாறு கெட்டு மறைந்தொழிதல் இல்லை; சேணுறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் - வானளாவ உயர்ந்து தோன்றும் மலைப்பக்கத்தின்கண்; பெயல் உழந்து உலறிய - மழையால் நனைந்து புலர்ந்த; மணிப்பொறிக் குடுமி - நீலமணியின் நிறத்தோடு புள்ளி பொருந்திய கொண்டையையும், பீலி மஞ்ஞை ஆலும் சோலை - பீலியையும் உடைய மயில்கள் ஆலும் சோலை சூழ்ந்த; அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை - அழகிய இடம் பொருந்திய பாறையின்கண் அமைந்த அகன்ற வாயை யுடைய பசிய சுனையிலே பூத்த; உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி - மை தீட்டிய கண்ணைப் போன்ற நீலமலரைப் பறித்துச் சூடிக்கொண்டு; நீரலைக் கலைஇய கண்ணி - சுனைநீரால் அலைப்புண்டு ஒப்பனை கலைந்த கண்ணியை யுடையனாகிய; சாரல் நாடனொடு - சாரல் நாடனான தலை மகனொடு; ஆடிய நாள் - விளையாடி மகிழ்ந்த நாள் எ.று. தோழி, நின் குறிப்பு எவனோ, என் குறிப்பு யாது எனின், சாரல் நாடனொடு அகல்வாய்ப் பைஞ்சுனை நீலம் அடைச்சி ஆடிய நாள் நிலையா தாயினும் நெஞ்சு வடுப்படுத்துக் கெடு அறியாது என்பது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வடு, ஈண்டுப் புண்ணின் மேற்று சேண், வானம். கவாஅன், மலைப் பக்கம். உலறுதல், நனைந்து புலர்தல்; சிலிர்த்தலுமாம். குடுமி, கொண்டை. தலைமகன் வரையாது நீட்டிப்பதால் தான் ஆற்றாமை மீதூர்ந்து வருந்தக் கூடு மென எண்ணித் தோழி ஆற்றாளாய் எய்தும் கவலையைப் போக்கும் கருத்தினளாகிய தலைமகள், அவளை நோக்கி, தோழி நின் குறிப்பு எவனோ என்று வினவினாள். தலைவியின் மனத்தில் உள்ளது தெரியாமல், தோழி அவளை மருண்டு நோக்கினாளாக, அது தன் குறிப்பை அறிய விரும்புதல் போலக் கொண்டு, என் குறிப்புயாதோ எனின் என்பாள், என் குறிப்பு என்றும், குறிப்புக்கு ஏதுவாகிய பொருள் என்னோடே கிடந்து நிலைபெறாமையின், நீ உடனே நினைந்து நின் குறிப்பினைக் கூறல் மாட்டாயாயினை என்பாள், என்னொடு நிலையா தாயினும் என்றும், எக் காலத்தும் என் நெஞ்சு நினைந்து புண்படுமாறு அது மறைந்து கெடுவது இல்லை என்பாள், என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெடுவறியாது என்றும் கூறினாள். இதனால், தோழிக்கு அலமரல் பிறவாவண்ணம், சுனையின்கண் தன்பொருட்டு நீந்திச் சென்று நீலமலரைக் கொய்து கொணர்ந்து தந்து, தலைமகன் தன்னொடு விளையாட் டயர்ந்த இனிய நிகழ்ச்சியை யுரைக்கலுற்று, அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி என்றும் அம்முயற்சியில், அவன், தன் தலையிற் சூடிய கண்ணி நீரால் அலைக்கப்பட்டு ஒப்பனை கலைந்து தோன்றியதை நினைப் பிப்பாள், நீரலைக் கலைஇய கண்ணி என்றும், அவன் இன்னன் என்பாள், சாரல் நாடன் என்றும், அவனோடு காதலுறவு கொண்ட வரலாற்றை ஆடிய நாள் என்றும் கூறினாள். பைஞ்சுனைக்கட் பூத்திருந்த நீலம் தனக்கு எட்டாத நிலையில் இருந்தமை தோன்ற, அகல்வாய்ப் பைஞ்சுனை என்றும், அவன் தன்பொருட்டு நீந்திச் சென்று பறித்துக் கொணர்ந்து தந்தமை தோன்ற, நீரலைக் கலைஇய கண்ணி என்றும், அவ்வுதவி ஏதுவாக, அவன்பால் காதலுறவு கொண்டமை புலப்பட, நாடனொடு ஆடிய நாள் என்றும், அன்று நம்பொருட்டு அகல்வாய்ப் பைஞ்சுனையை நீந்தி வருந்தியவன், வரையாது நீட்டிப்பினும், நம்மை என்றும் மறவா னாகலின் அந்நாளைய நிகழ்ச்சி நினைக்குந்தோறும் நெஞ்சு மகிழ இன்பம் செய்வதனால் யான் நன்கு ஆற்றுவல்; ஆற்றேனாவேன் என வருந்தற்க என்பாள் நாடனொடு ஆடிய நாள் நெஞ்சு வடுப்படுத்துக் கெடலறியாது என்றும் கூறி னாள். எத்துணை நாள் நீட்டிப்பினும் என்பாள், என்றும் என்றாள். பெயல் உழந்து உலறிய குடுமியும் பீலியுமுடைய தாயி னும், மஞ்ஞை, பெயற்குரிய மழைமுகிலை நினைந்து ஆலும் என்றது, வரையாது நீட்டித்தலால், மேனி வேறுபட்டு வருந்தக் கடவேமாயினும், அவனோடு ஆடிய நாளை நினைந்து ஆற்றி யிருத்தலே தகும் என்ற கருத்தை உள்ளுறுத் துரைத்தவாறு அறிக. இதனாற் பயன் தோழி அயர்வு தீர்வாளாவது. 358. நக்கீரனார் களவொழுக்கினரான தலைமக்களில் தலைவன் தலை மகளை வரைந்து கொள்ளும் முயற்சியில் தலைப்பட்டான் தலைவியின் பெற்றோர், வேற்றுவரைவு வரின் உடன்பாடு நல்கும் குறிப்பினராயினர். அதனை ஒருவாறு உணர்ந்த தோழி, தலை மகற்குக் குறிப்பாய் உணர்த்தி வரைவு கடாவவும், அவனது முயற்சி, வன்மையும் விரைவும் பெறுவதாயிற்று. எனினும், தலைவியின் தந்தை மகட்கொடை மறுப்பினும் மறுப்பன் எனத் தலைவி எண்ணி, அதனைத் தோழிக் குரைத்துத் தனக்கும் தலைமகற்கும் உளதாய உணர்ச்சி யொத்த கேண்மையைத் தெரிவித்தல் தனக்கு அறம் என்பது பற்றி அதனை எடுத் துரைத்தாள். அத்தோழி தனக்குத் தாயாகிய செவிலிக் குரைப்ப, அவள் பெற்ற தாயான நற்றாய்க்கு அறிவித்தாள், அவள் முறையே தந்தை தன்னையர்க்கு உணர்த்த ,அவர்களும் கேட்டுத் தம் உடன்பாட்டினை மகிழ்ந்து நல்கினார். இதனைத் தோழி வாயி லாக அறிந்த தலைமகன், வரைவொடு வருதல் வேண்டி, இன்றி யமையாத பொருள் குறித்து வேற்றூர்க்குச் சென்றான். அவன் பிரிவு, வரைவை நீட்டிப்பது பற்றித் துடிக்கும் உள்ளமுடைய தலைமகட்கு ஆற்றாமை பயந்தது. அது கண்ட தோழி, மிக்க வருத்தமுற்று, வெண்ணெய் திரளுங்கால் தாழி கெடுவது போல, வரைவு முற்றுங்கால் அவன் பிரிவதும் அவள் ஆற்றாமை மிகுவதும் நல்லவல்லவே என நினைந்து மனம் கலங்கிப் பின் தெளிவுற்றுத் தலைவியை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்துவாளாய், "தோழி, நாம் தோள் நெகிழவும் வரி வாடவும் மேனி பசக்கவும் இத்தன்மை எய்தினே மாகலின், தலைமகனார் என்பால் தன் பிரிவை உரைத்தற்கு நாணி நின்பால் அறிவித்து விடைபெற்றார்; இந்நிலையிற் பிரிந்துறைவது மிக்க மனவலியுடையார்க்கன்றி ஆவதன்று; அதனைச் செய்து தலைவர் பிரிந்துறைகின்றார்; இதற்கு யாது செய்வது என்று நினைந்த யான், கடல் கெழு கடவுட்குப் பலி தூவி வணங்கி, பிரிந்து செல்லுமாற்றால் சொல் வேறு செயல் வேறுபட்ட குற்றத்துக்காக அவரை அணங்குறுத்தல் வேண்டா எனப் பரவி வரக் கருதுகிறேன்; செல்வேமோ?" என்றாள். இக்கூற்று, ஒருவற்குத் தன் உள்ளத்தை நல்கிய ஒருத்தி, வேறொரு தெய்வத்துக்கு அதனை இடமாக்குவது கற்பறம் அன்மையின், தலைவி உடன்படாது ஆற்றியிருப்பாள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிற்கும் நயம் கண்ட நக்கீரனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளார். பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர 1இன்ன மாகவும் எற்கண்டு நாணி நின்னொடு 2தெளித்தன ராயினும் என்னதூஉம் அணங்கல் ஓம்புமதி வாழிய நீஎனக் 1கடல்கெழு கடவுட் குயர்பலி தூஉய்ப் பரவினம் வருகம் சென்மோ தோழி பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் சிறுவெண் காக்கை நாளிரை 2பெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்னஎன் அரும்பெறல் ஆய்கவின் தொலையப் பிரிந்தாண் டுறைதல் வல்லி யோரே. இது, பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி, இவள் 3ஆற்றாளாயின் இவளை யிழந்தேன் எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூ உமாம். உரை : பெருந்தோள் நெகிழ - பெரிய தோள் மெலிந்து தொடி நெகிழ்ந்தோடவும்; அவ்வரி வாட - அழகிய வரிகள் வாடிக் கெடவும்; சிறுமெல்லாகம் பெரும்பசப்பு ஊர - சிறிய மெல்லிய மார்பு பெரிதும் பசலை பாய்ந்து ஒளிகுன்றவும்; இன்னமாகவும் - இத்தன்மையே மாகவும்; எற்கண்டு நாணி - என்னைக் கண்டு தமது பிரிவுரைத்தற்கு நாணமுற்று; நின்னொடு தெளித்தனர் - நின்பால் அதனைத் தகுமுறை யிற் கூறி நின்னைத் தெளிவித்துச் சென்றனர்; ஆயினும்-; என்னதூஉம் - சிறிதளவும்; அணங்கல் ஓம்புமதி- வருத்துதல் ஒழிக; வாழிய நீ - வாழ்வாயாக நீ; என - என்று சொல்லி; கடல்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய் - கடற்றெய்வத்துக்கு உயர்ந்த பலிகளையிட்டு; பரவினம் வருகம் சென்மோ - பரவிவரச் செல்வேமோ; தோழி-; பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் - பெரிய செவ்விய இறாமீனின் துய் பொருந்திய தலையையுடைய முடங்கிக் கிடக்கும் உடலை; சிறுவெண்காக்கை நாளிரை பெறூஉம் - சிறு வெண் காக்கைகள் நாட்காலை யுணவாகப் பிடித்துண்ணும்; பசும் பூண் வழுதி - பசும்பூண் பாண்டியனுக் குரிய; மருங்கை யன்ன - மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்ற; என் அரும்பெறல் ஆய்கவின் - பெறுதற்கரிய என் தெளிந்த அழகு; தொலைய - கெட்டொழிய; பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோர் - பிரிந்து சென்று அவ்விடத்தேயே தங்கியிருக்க வல்லவராகிய தலைவர் எ.று. தோழி, தோள் நெகிழ, வரிவாட, ஆகம் பசப்பூர, இன்ன மாகவும் எற்கண்டு நாணி, நின்னொடு தெளித்தனர் ஆயினும், ஆய்கவின் தொலையப் பிரிந்து, ஆண்டு உறைதல் வல்லி யோராகிய தலைவரை, என்னதூஉம் அணங்கல் ஓம்புமதி, வாழிய, நீ எனக் கடல்கெழு கடவுட்குப் பலிதூஉய்ப் பரவினம் வருகம் சென்மோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தோள் : ஆகுபெயரால் தொடி மேனின்றது. பெரும்பசப் பூர என்புழிப் பெருமை மிகுதிப் பொருட்டு. ஊர்தல், பரத்தல். ஈண்டுக் கடவுள் என்றது, மக்களில் அறம் செய்தும் மறப்போர் புரிந்தும் தெய்வமாயின நல்லுயிர்களை; மக்கட்பிறப்பைக் கடந்துள்ள பொருள் என இச்சொல் பொருள்படும். இது வேறு; உயிர் உலகுகளின் எல்லைகளைக் கடந்து அப்பாலுக் கப்பாலாய் இலங்கும் முழுமுதலாகிய கடவுள் வேறு. முன்னது கடவுளர் எனப் பன்மை வாய்பாடு பெறும். பின்னதற்குப் பன்மை இல்லை. பரவினம், வருகம் : முற்றெச்சம். இறாமீன் செம்மை யுடைமை பற்றிச் சேயிறவு எனப்பட்டது. "சேயிறா எறிந்த சிறுவெண் காக்கை1" எனப் பிறாண்டும் இவர் கூறுதல் காண்க. நாளிரை, காலைப்பொழுதில் பெறும் உணவு; "நாளிரை கவர மாட்டி2"என்பது காண்க. இறாமீன் கால்களையும் உணரிகளையும் ஒடுக்கிக்கொண் டிருப்பது முடங்கிக் கிடப்பது போறலின், முடங்கல் எனப்பட்டது. பசும்பூண் வழுதி, பாண்டியருள் ஒரு மன்னன்; இவன் காலத்தே பாண்டியர்க்கு மதுரை தலைநகரமாகவும் மருங் கூர்ப்பட்டினம் கடற்கரை நகரமாகவும் விளங்கின. இவனை, "குன்றோங்கு வைப்பின் நாடு மீக்கூறும், மறங்கெழு தானை யரசருள்ளும், அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர், மறம் சாய்த்து எழுந்த வலனுயர் திணிதோள், பலர்புகழ் திரு வின் பசும்பூண் பாண்டியன்3" என்று சான்றோர் பாராட்டு கின்றனர். இவன் கொங்கு நாட்டிற் புகுந்து அதன் உண் ணாடுகள் பலவற்றை வென்று கொண்டான்; இதனை, "வாடாப் பூவின் கொங்க ரோட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்1" என்பதனால் அறியலாம். அக்காலத்தே கொங்கு நாட்டுத் தலைவருள் ஒருவனான அதிகன் என்பான் இப் பாண்டியற்கு வினைவல பாங்கனாய்த் துணை புரிந்தான். அவனுக்கும் கொங்கருக்கும் வாகைப்பறந்தலை யென்னு மிடத்தே நிகழ்ந்த போரில், அவன், தான் இவர்ந்து போந்த களிற்றோடே பொருது வீழ்ந்தான். "வாகைப் பறந்தலைப், பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன், களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பு2" பெரிதா யிருந்தது என்பர். இவன் காலத்து மதுரை நகரைச் சான்றோர்,. "செல் சமம் கடந்த செல்லா நல்லிசை, விசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன், பாடுபெறு சிறப்பின் கூடல்3" என்று குறிக்கின்றனர். இவனது மருங்கூர்ப்பட்டினம், தழும்பன் என்பானுக் குரிய ஊணூர்க்கு வடக்கில் இருப்ப தென்பது தோன்ற, "பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர், விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர், இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்4" என்பர். இது மருங்கை என அந்நாளில் மருவி வழங்கிய துண்டு . அதனால், பசும்பூண் வழுதி மருங்கை என்றார். மருங்கை ஊணூர்க்கு மேற்பாலது என்பாரும் உண்டு. ஆய்கவின், நுண்ணிய அழகு; ஒப்பனை செய்யப் பட்ட அழகு என்றுமாம். செல்வேமோ, சென்மோ என வந்தது; இது தொகுக்கும் வழித் தொகுத்தல். அறத்தொடு நிலையால் களவு வெளிப்பட்ட பின்பு, தலைமகன் வரைவு மேற்கோடற் குரியனாகவும், அதனைச் செய்யாது பொருள் முதலியன குறித்துப் பிரிந்து சேறலால், வரைவை நீட்டித்தலின், தலைவி ஆற்றாளாவள் என்று நினைந்து அஞ்சிய தோழி, அவள் ஆற்றி யிருத்தற்குச் செய்யத் தகுவது யாது எனத் தனக்குள் ஆராய்ந்து, தலைவியை நோக்கி, "தோழி, நம் தலைவர் பிரிந்தபோது தமது பிரிவை நினக்கு அறிவித்துச் சென்றனரோ?" என்று வினவினாள்; அவட்கு "ஆம், விரைவில் மீளுவதாகவே எனக்கு அறிவித்து வற்புறுத் தினார்" என்று தலைவி கூறவும், "பின்னர் நீ தோள் மெலிந்து மேனி வேறுபடுதல் கூடாதாம்" என்பாள், பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர இன்னமாகவும் என்றும், என்பால் உரைப்பின் யான் மறுத்த லோடு வரையாது நீட்டித்தல் தக்கதன் றென்பேன் என்பது கருதி எனக்கு உரைத்திலர் என்பாள், எற்கண்டு நாணி என்றும், எனினும், நினக்கேனும் அவர் அறிவித்துச் சென்றது நன் றென்பாள், நின்னொடு தெளித்தனர் என்றும், ஆயினும், அறத்தொடு நின்றபின், நின் நலம் தொலையப் பிரிவதும், அவ்வாற்றால் சொல் வேறு செயல் வேறு படுவதும், அறத்தின் நீங்கிய செயலாகும் என்பாள், ஆய்கவின் தொலையப் பிரிந்து ஆண்டு உறைதல் என்றும், அது வன்கண்மையுடை யார்க் கல்லது அமையாது என்பாள், வல்லியோர் என்றும், இதற்குக் கழுவாய் நாடுவது நம் கடன் என்பாள், கடல்கெழு கடவுட் குயர்பலி தூஉய்ப் பரவினம் வருகம் சென்மோ என்றும் கூறினாள். அறமல்லன செய்வாரை வருத்துவது தெய்வத்துக்குத் தொழிலாயினும், உயர்பலி தந்து பரவு வார்க்கு அருள்சிறந்து இனியவை செய்யும் என்பது பற்றிப் பரவினம் வருகம் சென்மோ என்றும், அதனால் இனிய செய்யாவிடினும் துன்புறுத்தல் வேண்டா என இரத்தல் பொருத்தமாம் என்பாள், என்னதூஉம் அணங்கல் ஓம்புமதி வாழிய நீ எனப் பரவுவாம் என்றும் கூறினாள். தலை மகற்கென அமைத்த தன் உள்ளத்தை வேறு தெய்வங்கட்கு இட மாக்குதல் தமிழ்மகட்குக் கற்பற மாகாமையின் உடன் படாள் என்பதைத் தோழி நன்கு அறிந்தவ ளாதலின், பரவினம் வருகம் என்றதனோ டொழியாது சென்மோ எனறாள். ஓகாரம் எதிர்மறைக் குறிப்பு. தலைமகன் வரை வொடு வரின், நம் தமர் எளிதில் மகட்கொடை நேரப் பெறு வான் என்பாள், சிறுவெண்காக்கை இறவின் முடங்கலை நாளிரையாக எளிதிற் பெறும் என்றதனால் உள்ளுறுத்துரைத் தாள். இதனாற் பயன் தலைவி ஆற்றியிருப்பாளாவது. 359. கபிலர் களவின்கண் இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன், இடந்தலைப்பாட்டாலும் பாங்கற் கூட்டத்தாலும், தலை மகளைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தக்காள் எனத் தேர்ந்து, அதற்கு இன்றியமையாத காதலுறவை வளர்ப்பது கருதித் தலைவியால் குறிப்பாய்க் காட்டப்பட்ட தோழியைக் கண்டு, அவளோடு உரையாடித் தன் காதற்கருத்தை ஏற்ற வகையால் அறிவிக்க முயன்றான். தனக்கும் தலைமகட்கும் முன்னுறவு உளதென்பதை யுணர்த்தின், தோழி மறுப்பாளாதலின், அதனைப் புலப்படுத்தாமல், புதியனாய்த் தலைமகன் தன் காதலை ஏற்றருளுமாறு தோழியைக் குறை யிரந்து நின்றான். பன்முறை மறுப்புண்டும், தலைவன் தோழியைத் தொடர்ந்து தன் குறையை நயந்தருளுமாறு நாளும் வேண்டினான். தோழியும், அவனைக் காணுங்கால் தலைமகட் குளதாகும் குறிப்பை யோர்ந்து, முன்னுறவை யுணர்ந்து, முடிவில் தலைமகற்குக் குறைநேர்ந்தாள். ஒரு நாள் தலைமகள் கையுறையாகத் தன் மலையில் பெறற்கரிய தோர் இடத்தேயிருந்த தழைகளைக் கொண்டு, மேதக்க தழையுடை யொன்று தொடுத்துக் கொணர்ந்தான். அதன் அழகைத் தோழி கண்டு வியந்து தலைமகட்குக் காட்டி அதனை ஏற்று அணியுமாறு வேண்டினாள். ஆயினும் தலைமகள் தலைவன் கொணர்ந்த கையுறையைத் தோழியின் கண்முன்னே ஏற்றற்கு நாணி மறுப்பவள் போன்று ஒழுகினாள். தலைவனது கேண்மையின் சிறப்பைத் தானும் தலைவியும் நன்கறிந்து மகிழ்ந்தவராதலின், அதனைக் குறிக்கொண்டு, "இவண் போதரும் குன்றநாடன் உகுக்கும் தழையொன்று தொடுத்து வந்து என்பால் நல்கியுள்ளான்; அதனை ஏற்று ஆடைமேல் உடுப்பே மெனில், அன்னை காணின் வெகுள்வள் என்ற அச்சம் ஒருபால் தோன்றுகிறது; வேண்டாவென மறுப்பின் இனிய கேண்மை செய்தொழுகும் தலைமகன் மனமழிவன் என்ற கவலை ஒருபால் அலைக்கிறது; இவற்றிற்கிடையே காலம் தாழ்க்கின், இத்தழை யுடை வாடிக் கெடுமன்றோ? இதற்கு என் செய்வேன்?" என்றாள். இக்கூற்றின்கண், தழை யேற்பிக்கு மாற்றால், தோழி தலைவியை மதியுடன்படுக்கும் திறமும், அவள் தன்னை மறைத்தொழுகிய காதலுறவைப் பையத் தான் அறிய வெளிப் படுக்கும் நயமும் கண்ட ஆசிரியர் கபிலர் அவற்றை இப் பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் கன்றுதாய் மருளும் குன்ற நாடன் உடுக்கும் தழைதந் தனனே அவையாம் உடுப்பின் 1யாய்அஞ் சுதுமே கொடுப்பின் கேளுடைக் 2கேடஞ் சுதுமே ஆயிடை வாடல கொல்லோ தாமே 3அவர்மலைப் போருடை வருடை பாயாச் சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே. இது, தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகள் குறிப்பின் ஓடியது. உரை : சிலம்பில் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா - மலையில் மேய்ந்த சிறுகொம்புகளையுடைய செவ்விய ஆ: அலங்கு குலைக் காந்தள் தீண்டி - அசைகின்ற பூங்குலைகளையுடைய காந்தளைத் தீண்டுதலால்; தாதுஉக - அதன் தாது உதிர்ந்து மேலே படிந்து நிறம் வேறுபடவே; கன்று தாய் மருளும் - அதன் கன்று தாயென அறியாது மருண்டோடும்; குன்ற நாடன் - மலைநாடனாகிய தலைவன்; உடுக்கும் தழை தந்த னன் - அரையில் ஆடைமேல் உடுக்கும் தழை கொணர்ந்து தந் துள்ளான்; அவை யாம் உடுப்பின் - அவற்றை நாம் உடுப்பே மாயின்; யாய் அஞ்சுதும் -அன்னை வெகுள்வளே என அஞ்சு கின்றேம்; கொடுப்பின் - அதனால் வேண்டா வென மீள அவன்பால் கொடுப்போமாயின்; கேளுடைக்கேடு அஞ்சுதும் - நமக்குக் கேண்மை தந்த தலைவன் மனமழிந்து கெடுவன் என்று அஞ்சுகின்றேம்; ஆயிடை - அவ்விடத்து; வாடல கொல்லோ - வாடாவோ; அவர் மலைப் போருடை வருடையும் பாயா - அவரது மலையிடத்துப் போரிற் சிறந்த வரையாடு களும் தாவி யேறமாட்டாத; சூருடை அடுக்கத்த கொயற்கு அரும்தழை - தெய்வங்களையுடைய மலைப் பக்கத்தே கொய்வதற்கு அரிய தழையுடை எ.று. குன்ற நாடன், உடுக்கும் தழை தந்தனன்; அவை, யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும்; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதும்; ஆயிடை, கொயற்கருந் தழை, வாடல் கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேதா, சேம்மையான காட்டுப்பசு. தீண்டி, காரணப் பொருளில் வந்த வினையெச்சம். கன்று, ஆவின் கன்று; பல்லாவுள் உய்த்து விடினும், கன்று தன் தாய் நாடிக் கொள்ளும் கூர்த்த அறிவுடையது. உடுக்கும் தழை, தழையுடை. கேள், கேண்மை தந்த தலைவன், கேடஞ்சுதும் என்புழி நான்கனுருபு தொக்கது. அவ்விடை : ஆயிடை யெனச் சுட்டு நீண்டு இடையே யகரம் பெற்றது. வாடல கொல்லோ என்பது வாடாவோ என நின்று வாடிவிடும் என்ற பொருள் தந்தது. கொல் : அசைநிலை. தாமே : கட்டுரைச் சுவை குறித்து நின்றது. பாயா அடுக்கத்த, சூருடை அடுக்கத்த என இயையும். சூர், மலை யுறையும் தெய்வம். வருடை, வரையாடு, அடுக்கத்த வாகலின் கொய்தற்கு அரியவாயின. தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி அவன் தந்த தழை யுடையைத் தலைமகட்குக் காட்ட அவள் அதன் பொற்பை வியந்து நோக்கலும், தோழி குன்றநாடன் உடுக்கும் தழை தந்தனன் என்றாள். நாம் விரும்பி உடுத்தற் கேற்ற தழை யென்ற கருத்துப்பட உடுக்கும் தழை யெனச் சிறப்பித்தாள்; அதைக் கேட்டலும், தலைவி முகம் உவகையால் மலரக் கண்டு, இத்தழையுடையை உடுக்கலா மெனின், அன்னை பார்த்து இவையிற்றை யாங்குப் பெற்றீர் என வினவி வெகுள்வளென்று அஞ்சுகின்றேன் என்பாள், அவை யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் என்றும். எனவே, இவைகளை மீள அவன்பாலே கொடுப்பின், நம்பாற் கேண்மையுடைய தலைமகன் மன மழிந்து கெடுதற்கு அஞ்சுகின்றேன் என்பாள், கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே என்றும் , இந்நிலையில் இத்தழையை ஏற்பதா மறுப்பதா எனத் தலைவி தடுமாற்றம் எய்தக் கண்டதும், தோழி, அதுவே அவன் கையுறையை ஏற்பித்தற் கேற்ற செவ்வியா மென்று கொண்டு, நாம் ஆராய்ந்து துணிவதற்குள் இவை வாடிவிடும் என்பாள், வாடல கொல்லோ என்றும், மேலும் , இவை தெய்வ முறையும் அடுக்கத்தில் மக்களால் கொய்தற்காகாத அருமை யுடையவை யாகலான், வறிதே வாட விடுதல் நன்றன்று என்பாள், சூருடை யடுக்கத்த கொயற்கருந் தழை என்றும் கூறினாள். போருடை வருடையும் போக முடியாத அடுக்க மாகலின், அங்கே இவை இத்துணைப் பொலிவுடன் தழைத் துள்ளன என்பாள், போருடை வருடையும் பாயா அடுக்கத்த என்றாள், சூருடை யடுக்கத்த தழை யென்றதனால், இவற்றை வாட விடின் சூர் நம்மை ஒறுப்பினும் ஒறுக்கும் என அஞ்சு வித்தவாறுமாம். பலவாகிய ஆத்திரளின் உள்ளே உய்த்துவிடினும் ஆன் கன்று தன் தாயை நாடிக் கொள்ள வல்லதா மாயினும், காந்தளின் தாது தீண்டி மேனி வேறுபட்டமையின், கன்று தாயை மருண்டு நீங்கும் நாட னாதலால், உடுப்பினும் கொடுப் பினும் நமது அன்பு நிலையை நன்கறிவா னாயினும், இத் தழைகளை வாடவிடின் நாம் வேறுபட்டேமென மருண்டு நீங்கி யொழிவன் என உள்ளுறை கொள்க. இதனாற் பயன் தலைவியைத் தழையேற்பித்தல். 360. ஓரம்போகியார் மனையின்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைவன், பரத்தையர் சேரிக்கண் தங்கிப் புதியரும் பழையருமாகிய பரத்தையர்க்கு வேண்டும் சிறப்புக்களைத் தன் தலைமைக் கொப்பச் செய்தொழுகினான். அதனைக் கேள்வியுற்ற தலை மகட்கு உள்ளத்தே தோன்றிய பொறாமை காரணமாக மிக்க சினமுண்டாயிற்று. தலைவன் பக்கலிலிருந்து வந்தோர்பால், அவள் தன் வெகுளியைப் புலப்படுத்தினாள். உலகியல் பற்றித் தலைமகன் தன் மனைக்கு வருதலும், தலைவியின் குறிப்புவழி நிற்கும் தோழி, அவற்கு வாயில் மறுக்கலுற்றாள். தலைவியின் புலவியைத் தணித்தல் வேண்டி அவன் தன் வருத்தத்தை அறி வித்தான். ஆயினும், தோழி, அதனை ஏலாது, "பெரும, நீ பரத்தையர் சேரிக்கண் தங்கினமை பற்றி ஊரவர் பலரும் அலர் கூறிப் பழித்தனர். அதற்கு நாணி நீ மனைநோக்கலும், விரைந்து உண்ணுமாறு முட்கோலாற் குத்தி முடுக்குதலால் கையிற் கொடுத்த கவளத்தை யுண்ணாமல் மெய்யிடைத் திமிரிக் கொள்ளும் இளங்களிறு போல, பரத்தையர் நின்னை மருட்டியும் தெருட்டியும் தம் நலன் நுகரப் பண்ணவும், அவர் தந்த சாந்தம் மாலை முதலியவற்றை மெய்யிற்கொண்டு அவரை விலக்கிப் போந்து, இவண் யாம் வாயில் மறுத்தலால் மிக்க துன்பமுற்றனை; எனினும் நின் வருகை கண்டு யான் மகிழ்கின்றேன்; ஆயினும் இம்மனையின்கண் பெறக் கருதும் துயிலைப் பின்னரும் பெறல் கூடு மாதலால், நெருநல் பரத்தையர் சிலரைக் கொணர்ந்து அவர் நலன் நுகர்ந்து கழித்தவாறு போல இன்றும் சில புதியரைக் கொணர்ந்து நுகர்தற்பொருட்டுப் பரத்தையர் சேரிக்கே செல்க; நின் பரத்தைமை சிறப்புறுக" என்று கூறினாள். இக்கூற்று, தலைவனது பரத்தைமை யொழுக்கத்தை விளக்கிக் கூறுமாற்றால், மனைக்கு வந்தானைத் தெருட்டி மனையறத்தில் ஒன்றுமாறு உரைக்கும் தோழியின் அறிவுநலம் புலப்படுத்துவது கண்ட ஆசிரியர் ஓரம்போகியார் அதனை இப்பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். இப்பாட்டின் பிற் பகுதியில் அடிகள் சில அச்சுப்படியில் வேறுபட்டுள்ளன. முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவொழி 1களத்த பாவை போல நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி இன்றுதரு மகளிர் மென்றோள் பெறீஇயர் சென்றீ பெரும சிறக்கநின் பரத்தை பல்லோர் பழித்தல் நாணி வல்லே காழிற் குத்திக் 2கதழ்ந்தவர் அலைப்பக் 3கையுடைக் கவளம் மெய்யிடைத் திமிரும் முனிவுடை 4இளங்களிறு போல நனிபெரிது உற்றனை விழுமம் 5உவப்பேன் மற்றும் 6கூடுமன் மனைமடி துயிலே. இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉமாம். உரை : முழவுமுகம் புலர்ந்து - முழவின் மார்ச்சனை புலர்ந்து உகுமாறு; முறையின் ஆடிய - முறைப்படி ஆடல் புரிந்த; விழவொழி களத்த பாவைபோல - விழா நீங்கிய களத்தில் நின்ற விறலிப்பாவை போல; நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி - நேற்று நீ கூடிய பரத்தையர் நலத்தை நுகர்ந்து கழித்து; இன்று தரும் மகளிர் மென்றோள் பெறீஇயர் - இன்று கொணரப்படும் புதிய பரத்தையருடைய மெல்லிய தோளின் நலத்தைப் பெறுதற்கு; பெரும - பெருமானே; சென்றீ - செல்வாயாக; சிறக்க நின் பரத்தை - சிறப்புறுவாளாக நின்னைக் கூடும் பரத்தை; பல்லோர் பழித்தல் நாணி - ஊரவர் பலரும் கண்டு பழித்தற்கு நாணி; வல்லே - விரைவாக; காழில் குத்தி - முட்கோலாற் குத்தி; கதழ்ந்தவர் அலைப்ப - விரைந் துண்ணுமாறு பாகர் அலைத்தலால்; கையுடைக் கவளம் மெய்யிடைத் திமிரும் - கையி லேந்திய கவளமாகிய உணவை மெய்யெல்லாம் பூசிக்கொள்ளும்; முனிவுடை இளங்களிறு போல - வெறுத்த உள்ளமுடைய இளங்களிற்றைப் போல; நனி பெரிது உற்றனை விழுமம் - மிக்க பெரு வருத்தத்துடனே இவண் வந்துற்றாய்; உவப்பேன் - நின் வருகைக்கு மகிழ்வே னாயினும்; மற்றும் கூடுமன் மனைமடி துயில் - மற்றொரு காலத்தும் மனைக்கட் கிடந்து பெறும் துயிலைப் பெற கூடுமாகலான் எ.று. பெரும, பல்லோர் பழித்தல் நாணி, இளங்களிறு போல வல்லே நனிபெரிது விழுமம் உற்று வந்தனை; அதனை உவப்பே னாயினும், மற்றும், மனைதுயில் கூடுமன்; ஆகலான், விழவொழி களத்த பாவை போல, நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவிக் கழித்து இன்று தரு மகளிர் மென்றோள் பெறீஇயர் சென்றீ; சிறக்க நின் பரத்தை என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. முழவு முகம், முழவின்கண் உள்ள மார்ச்சனை. புலர எனற்பாலது புலர்ந்து எனத் திரிந்தது. முழவின் பாணிக் கேற்ப விறலியர் அடிபெயர்ந்து ஆடுதல் முறையாகலின் முறையின் ஆடிய என்றார். ஆடிய களம், விழவொழி களம் என இயையும். விழாக் காலத்துப் பேணற் பாடும், அஃதொழிந்தவிடத்துப் பேணற்பாடு இன்மையும் தோன்ற, விழவொழி களத்த பாவை என்றார். பாவை, விழா எடுத்தற் பொருட்டு ஒப்பனை செய்யப்பட்ட ஆடல்மகள்.. விழாக் களத்து ஆடும் கூத்தியருமாம், பாவை போல்வாளைப் பாவை என்றார். விழா எடுத்தற்கென ஒப்பனை செய்து நிறுத்தப்படும் தெய்வப் பாவையுமாம். சென்றீ : முன்னிலை யொருமை வினைத்திரி சொல், காழ், இருப்பு முட்கோல். கதழ்வு, விரைவு. முனிவு, வெறுப்பு. நனிபெரிது : ஒருபொருட் பன்மொழி. உறுதல், ஈண்டு வருதற் பொருட்டு. கூடுமன் : மன் அசைநிலை, நெருநற் புணர்ந்த மகளிர்க்கு விழவொழி களத்துப் பாவையும், இன்று தரு மகளிர்க்கு விழவுடைக் களத்த பாவை யும் உவமம் கொள்க. குத்திக் கதழ்ந்து அலைப்பத் திமிரும் இளங்களிறு, முனிவுடைக் களிறு என இயையும். பரத்தையர் சேரியினின்று உலகியல்பற்றி மனைக்குப் போந்த தலைமகற்கு வாயின்மறுக்கும் தோழி, சேரியில் நிகழ்ந்த பரத்தைமைச் செயலை உரைக்கலுற்று, நெருநல் பரத்தையர் சிலரைக் கொணர்ந்து அவருடைய ஆடல் பாடல் அழகுகளில் தோய்ந்து அவர் தந்த புது நலத்தை நுகர்ந்தனை என்பாள், நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி என்றும், நலுனுகரப் பட்டபின் இன்று அவர் கைவிடப் பட்டமையின், முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவொழி களத்த பாவை போன்றனர் என்றும், இன்று கொணரப்படும் புது மகளிர்பால் நின் உள்ளம் செல்லு மாகலின், இவண் உறையின் நின் கண் மடிதுயில் பெறா தென்பாள், இன்று தருமகளிர் மென்றோள் பெறீஇயர் சென்றீ பெரும என்றும், இன்று நினக்கு நலம் நல்கும் பரத்தை நாளை கையுதிர்க்கப் பெறுதல் ஒருதலை யென்றற்கு வாழ்த்து வகையால் சிறக்கநின் பரத்தை என்றும் இயம்பினாள். பரத்தையர் சேரியினின்றும் நீ எம்மனை நோக்கி வருதற்கு நின்னுள்ளத்தில் விருப்பின்றேனும், ஊரவர் பலரும் கூறும் பழிப்புரை காரணம் என்பாள், பல்லோர் பழித்தல் நாணி என்றும், அதனால் நீ வருத்தத்துடனே விரைந்து போந்தனை என்பாள், வல்லே நனி பெரிது விழுமம் உற்றனை என்றும். பிரிந்திருந்தமையின், நின் வரவு எமக்கு உவப்பைத் தந்தது என்பாள், உவப்பேன் என்றும், ஆயினும், புதுவோர்பால் சென்ற நின்னுள்ளம், எமது மனைக்கண் துயில் கொளப் பொருந்தா தாகலான். அதனைப் பின்னரும் பெறலாம், நீ செல்க என்பாள், மற்றும் கூடுமன் மனைமடி துயில் என்றும் கூறினாள். பாகர் காழிற் குத்திக் கதழ்ந்து அலைப் பதால், இளங்களிறு கையுடைக் கவளத்தை மெய்யுறத் திமிரு வது போலப் பல்லோர் பழிப்புரை தாக்கி யலைப்பதால், கைப்பட்டிருந்த பரத்தையர் பரந்து நீங்க விலக்கிப் போந்தனை என்றும், யானை முனிவுற்ற உள்ளத்தால் கவளத்தை எறிந்தது போல நீயும் மிகப்பெருகிய விழுமத்தால் இவண் போந்தனை என்றும் கூறியவாறாகக் கொள்க. இதனாற் பயன் வாயில் மறுத்தல். 361. மதுரைப் பேராலவாயார் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் பொருள்செய் வினைகுறித்துப் பிரிந்து சென்றான். தலைவியும் தனக்கு உயிராகிய தலைவன் மீண்டு வருவதாக வற்புறுத்த கார்ப்பருவ வரவு நோக்கி யிருந்தாள். அவன் குறித்த பருவமும் வருவதாயிற்று. வேனிலால் வெய்துற்று வாடிய கானம் கார்மழையால் குளிர்ந்து தழைக் கலுற்றது. காட்டில் வளர்ந்த முல்லைகள் அரும்பி மலர்ந்தன. அவற்றின் நறுமணம் எங்கும் பரந்தது. அது கண்ட வாயில்கள் கார்காலத்துத் தலைப்பெயல் பொழியுங்கால், தலைமகன் வாராமைபற்றித் தம்முள் உரையாட லுற்றனர்; சிலர், தலைமகன் வாராமையின், தலைவி ஆற்றாமை மிக்கு வருந்துகின்றாள் என்றனர். அகம்புகு மரபினரான வாயில்கள் சிலர் இவ்வாறு கூறுவதைக் கேட்ட தோழி, தலைவன் வினைமுற்றி மீண்டு வருவதைத் தூதுவர் முற்போந்து கூறினமையின், மிக்க தெளி வுடன் அவர்களை மறுத்துத் தலைமகன் சென்ற நாட்டில் கார்மழையால் கானம் தழைக்க. முல்லை மணம் கமழ மலர்ந் தமை கண்டு மகிழ்பவன், மேற்கொண்ட வினையும் செம்மை யாக முடிந்தமையின், தன் மனைநோக்கி மீளலுற்றான், புதியவாய் மலர்ந்த முல்லையால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தானும் சூடினான்; அவனொடு போதரும் இளையரும் சூடிக் கொண்ட னர். உடனே, அவன் ஏறிய தேரிற் கட்டிய குதிரைகள், மனைக்கு மீளும் கிளர்ச்சி மிகுந்து வானத்திற் பறப்பன போல, மிகவும் விரைந்து அவனை மனைக்குக் கொணர்ந்து நிறுத்திவிட்டன. அவன் பிரிவால் தலைவி, தான் துறந்திருந்த விருந்தோம்பும் தொல்லறத்தை மேற்கொள்ளும் பெருவிருப்பால் பிறங்கு கின்றாள் என்றனர். இக்கூற்று, குறித்த காலவெல்லைக்குள் எடுத்த வினையை இனிதே முடித்து மீளும் தலைவனுடைய ஆள்வினை நலத்தை யும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கொள்ளும் தலைமகளின் மனைமாண்பையும் சிறக்கக் காட்டுவது கண்ட ஆசிரியர் மதுரைப் பேராலவாயார் அவற்றை முறையே தொகுத்துப் பாடியுள்ளார். சிறுவீ முல்லைத் 1தண்கமழ் அலரி தானும் சூடினன் இளையரும் மிலைந்தனர் விசும்புகடப் பன்ன பொலம்படைக் 2கலிமான் படுமழை பொழிந்த தண்நறும் புறவின் நெடுநா ஒண்மணி பாடுசிறந் 3தொலிப்ப மாலை மான்ற மணல்மலி வியனகர்த் தந்தன நெடுந்தகை தேரே 4என்றும் அரும்படர் அகல நீக்கி விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே. இது, வாயில்களோடு தோழி உறழ்ந்து கூறியது. உரை : சிறுவீ முல்லை தண்கமழ் அலரி - சிறிய இதழ்களை யுடைய முல்லையின் தண்ணிய மணம் கமழும் பூ; தானும் சூடினன் - தலைவன் தானும் சூடிக்கொண்டான்; இளையரும் மிலைந்தனர் - இளையரும் சூடிக் கொண்டனர்; விசும்பு கடப் பன்ன - வானத்தைக் கடந்து செல்வன போன்ற; பொலம் படைக் கலிமான் - பொன்னாலாகிய கலனையணிந்த குதிரைகள்; படுமழை பொழிந்த தண்ணறும் புறவின் - பெரு மழை பெய்தலால் குளிர்ந்த தண்ணிய புறவின்கண்; நெடுநா ஒண்மணி பாடு சிறந்து ஒலிப்ப - நெடிய நாவையுடைய ஒள்ளிய மணிகளின் ஒலி எழுந்திசைக்க; மாலை மான்ற மணல்மலி வியன் நகர் - மாலையொளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனைக்கு; தந்தன - கொணர்ந்து சேர்த்தன; நெடுந் தகைதேர் - நெடிய தகவோனாகிய தலைவனது தேரை; என்றும் அரும்படர் அகல நீக்கி - எப்போதும் பொறுத்தற்கரிய துன்பத்தைப் போக்கி; விருந்தயர் விருப்பினள் - விருந்து செய்யும். விருப்புடையளாயினாள்; திருந்திழையோள் - திருந்திய இழையணிந்த தலைமகள் எ.று. நெடுந்தகை தானும் சூடினன்; இளையரும் மிலைந்தனர்; கலிமான், நறும்புறவில் ஒண்மணி பாடு சிறந்து ஒலிப்ப, வியனகர்த் தேர் தந்தனன்; அதனால், திருந்திழை விருந்தயர் விருப்பின ளாயினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விசும்பு கடப்பு, விசும்பைக் கடந்து செல்வது. பொலம்படை, பொன்னாலாகிய கலனை. கலிமான், கனைத்தெழுகின்ற குதிரை. படுமழை, பெருமழை. பாடு, ஒலி. மான்ற : மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை. அரும்படர், பொறுத்தற்கரிய மனநோய். தலைமகன் பிரிவின்கண், அவன் குறித்த பருவவரவும் தலைவியது ஆற்றாமையும் பொருளாக, வாயில்கள் தம்முள் உரையாடியது கேட்ட தோழி, அவர்களை மறுத்துப் பருவ வரவுக்குள் தலைமகன் வினை முடித்து மீளுதற்குச் சமைந்தமை தூதுவரால் அறிந்தமை தோன்ற அவன் பிரிந்து சென்று உறையும் நாட்டில் கார்மழை பெய்ததும், முல்லை மலர்ந்து பருவவரவு காட்டியதும் உரைப்பாள், சிறுவீ முல்லைத் தண்கமழலரி தானும் சூடினன் என்றாள். பருவவரவில் தாழாது வருவல் என்ற தலைமகன். தான் உறையுமிடத்தே முல்லையணிந்து மகிழ்வது தலைவிக்குப் பயன் நல்காதே என்று வாயில்கள் கூற, அவர்கட்குக் கூறுவாளாய்த் தோழி. முல்லை சூடிக் கோடல் வினை முடிவின்கண்ணே யாகலான், தான் சூடியதனோடு இளையரையும் சூடிக்கொள்ள விடுவது ஒன்றே அவனும் இளையரும் வினைமுடித்து மீளும் செயலின ராயினர் என்பதை உணர்த்தும் என்பாள், இளையரும் மிலைந்தனர் என்றாள். மழை பெய்தமையின் கானம் குளிர்ந் திருத்தலால் விரைந்து வருதல் கூடாதே என வாயில்கள் உறழ்ந்து கூறவும் தோழி தலைமகனுடைய குதிரைகள் விசும்பை ஊடறுத்துக் கடந்து செல்வது போன்ற கதியும் வலியும் உடையன என்பாள், விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலிமான் என்றும் , அதனால் அவை, தலைவனது தேரை மிக்க கடிதில் கொணர்ந்து மனையிடத்தே நிறுத்த வல்லன என்பது தேற்றம் என்பாள், இறந்தகால வாய்ப் பட்டால் மணல்மலி வியனகர்த் தந்தன தேரே என்றும், தலைவன் பிரிவின்கண் விருந்தோம்பும் நல்லறம் புரிதற் கமையாமையின் வருந்தி யிருந்த தலைவி அதனை இப் போது மேற்கொள்வாளாயினள் என்பாள் அரும்பட ரகல நீக்கி விருந்தயர் விருப்பினள் என்றும். தலைவன் மனைக்குப் போந்தவழித் தலைவி தன்னைத் திருந்திய அணிகளால் ஒப்பனை செய்து கோடற் குரியளாதல் தோன்றத் திருந் திழையோள் என்றும் கூறினாள். தலைமகன் பிரிந்த காலத்தில் மனையவள் விருந்தோம்புதலை நல்லறமாகத் தமிழர் கருத வில்லை. "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை1" என்று கண்ணகியார் கூறுவது இதற்கு ஏற்ற சான்றாகும். இதனாற் பயன் தலைவி ஆற்றாமை தீர்வாளாவது. 362. மதுரை மருதன் இளநாகனார் களவுநெறியில் காதலுறவு கொண்ட தலைமக்கள், ஒரு வரையொருவர் இன்றியமையாத காதல் நிலைமையினை எய் தினர். தலைவியுள்ளம் காதலுணர்வு நிறைந்து சிறந்து நிற்பது கண்ட தோழி, தலைவனை வரைவுகடாவினாள். அவனும் வரைதற்குரிய முயற்சியில் தலைப்பட்டான். இந்நிலையில், தலைவியின் தமர், அவளை வேற்றோர்க்கு மகட்கொடை நேரும் குறிப்பினராயினர். ஆகவே, அவர்கட்குத் தலைவியும் தோழியும் அறத்தொடுநிற்பது பயனின்றாம் என உணர்ந்து தலைமகற் குணர்த்தினர். அவனும் உண்மையுணர்ந்து தலைவியைத் தன் னுடன் கொண்டுதலைக்கழிவ தல்லது செயற்பாலது வேறில்லை என்று தெளிந்தான். தலைவியும் அவன் கருத்துக்கு இசைந்தாள். குறித்த நாளில் தலைவியைத் தன்னுடன் கொண்டு சென்றான். வழியில் தலைவியைத் தேடிக்கொண்டு அவளுடைய தமர் தொடர்ந்து வருகுவர் என்ற குறிப்புத் தோன்றிற்று. அவன் தலைவியை நோக்கி, "மாயோய், செய்து நிறுத்திய பாவை யொன்று நடப்பது போல நடந்து நின் தந்தை மனையை நீங்கி என்னோடு போந்தனை; நாம் செல்லும் கானம் மழை நன்கு பெய்தமையால், தளிர்த்துத் தழைத்துக் குளிர்ச்சி மிக்குளது; இடையிடையே பசும் புல் நிறைந்த வெளிகளில் தம்பலப்பூச்சிகள் பரந்து கிடக்கின்றன; அவற்றைக் கண்டும் கொண்டும் இங்கே சிறிது விளையாடுக; அங்கே பருத்த அடியையுடைய வேங்கை மரம் நிற்கிறது; அதன்கீழ் உயரிய மணல்மேடு காணப்படுகிறது; யான் அதன் மருங்கே மறைந்திருப்பேன்; சிறிது போதில் நின் தமரோ பிறரோ வருவர்; பிறராயின் உடனே போந்து அஞ்சாது அமர் விளைத்து அவர்களை வெருட்டுவேன்; தமராயின் அவர்களைக் கோறல் நன்றன்மையின் மறைந்திருப்பேன்" என்று சொன்னாள். இக்கூற்றின்கண், தலைவனுடைய அஞ்சா ஆண்மையும், தலைவிபால் உற்ற காதலால் அவள் தமர்பால் உளதாய அவனது அருணிலையும் விளங்குதல் கண்ட மருதன் இளநாகனார் அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். வினையமை பாவையின் இயலி நுந்தை மனைவரை இறந்து வந்தனை ஆயின் தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத் 1தகன்றலைப் 2பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பாராஅரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமவரின் மறைகுவென் மாஅ யோயே. இஃது, உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. உரை : வினையமை பாவையின் இயலி - நல்ல தொழிற்பாடு அமையச் செய்த பாவையொன்று நடப்பதுபோல நடந்து; நுந்தை மனைவரை இறந்து வந்தனை - நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து என்னோடு வந்துள்ளாய்; ஆயின் - ஆகலின்; தலை நாட்கு எதிரிய தண்பெயல் எழிலி - கார்ப் பருவ முதல்மழையைப் பெய்த தண்ணிய பெயலையுடைய மேகத்தால்; அணிமிகு கானத்து அகன்றலைப் பரந்த - பசுமை யழகு மிகுந்துள்ள காட்டிடையேயுள்ள அகன்றவெளியில் பரந்து மேயும்; கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும் -மிகச் சிவந்த தம்பலப்பூச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தும் எடுத்து மேலிட்டும்; நீ சிறிது விளையாடுக - நீ இங்கே சிறிதுபோது விளையாடுக; யான் - யானோ எனில்; மழகளிறு உரிஞ்சிய பரா அரை வேங்கை - இளங்களிறுகள் தம் உடலைத் தேய்த்துக் கொண்ட பருத்த அடியையுடைய வேங்கை மரத் தின்கீழ்; மணல் இடும் மருங்கில் - மணல் குவிந்த மேட்டின்; இரும்புறம் பொருந்தி - பின்புறத்தே சென்று; அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் - சேணிடத்திலிருந்து நம்மை நோக்கி வருவோரால் போர் தோன்றுமாயின் அஞ்சாது நின்று பொருது அவர்களை வெருட்டி ஓட்டுவேன்; நுமர் வரின் - நின் தமர் வருவாராயின்; மாயோய் - மாமை நிறம் உடையாய்; மறைகுவென் - அவர்களைக் கோறல் நன்றன்மை யின் மறைந்து கொள்வேன் எ.று. மாயோய், பாவையின் இயலி, நுந்தை மனைவரை இறந்து வந்தனை; ஆயின், கானத்து, அகன்றலைப் பரந்த செம்மூதாய் கண்டும் கொண்டும், நீ சிறிது விளையாடுக; யான் வேங்கை, மணலிடு மருங்கின், இரும்புறம் பொருந்தி, அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென், நுமர்வரின் மறைகுவென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கைவினைத் திறனால் அழகொழுகச் செய்யப்பட்ட பாவை என்றற்கு வினையமை பாவை என்றார். நெடுந்தூரம் நடந்து பயிலாமை தோன்ற மனைவரை யிறந்து என்றார். தலைப்பெயல், ஈண்டுக் கார்ப்பருவத்து முதல்மழை. எழிலி, தன்பெயலால் தளிர்த்துத் தழைத்து அழகுபெறச் செய்த கானம் தண்பெயல் எழிலி அணிமிகு கானம் எனப் பட்டது. செம்மூதாய் தம்பலப்பூச்சி; இதனைக் கோபம் என்பதும் வழக்கு; இந்திரகோபம் என்பதுமுண்டு. இப் பூச்சிகளின் செம்மைநிறமும் மென்மைத்தன்மையும் காண் பார்க்கு இன்பம் நல்கலின், இளையர் அவற்றை எடுத்துத் தம்முடைய ஆடைமேல் இட்டு மேய விடுவர். சிறிது, சிறிது போது எனக் காலத்தின் மேற்று. வேங்கையின் அடிமரப் பட்டை சிறிதே தேய்ந்திருப்பது தோன்ற, மழகளிறு உரிஞ்சிய பராஅரை என்றார். இரும்புறம் - பின்புறம். வென்று புகழ் நிறுத்தற் கேற்ற மறமும் மாண்புமுடைய ரல்ல ராகலின், வெருவுவித்துப் போக்குதல் தோன்றப் பெயர்த்தல் கூறினார். மாயோய், மாமைநிறம் உடையாய். தனித்துத் தன்னுடன் போதரும் தலைவியின் மேனிநலம் முற்றும், இருகண்ணும் பருக நோக்கி மகிழ்ந்து, தன்பால் கொண்ட பெருங்காதலால் நடை வருத்தம் நோக்காது வருவது பற்றி, வினையமை பாவையின் இயலி என்றும், பிறந்த நாள்தொட்டு இருந்து தவழ்ந்து நடையிட்டுப் பயின்ற மனையின் நீங்கித் தன்னொடு போந்து தனிமைத் துயர் களைந்த நன்றியை எண்ணிப் பாராட்டுகின்றா னாதலால், நுந்தை மனைவரை யிறந்து வந்தனை என்றும் கூறினான். இயற்கையும் செயற்கையுமாகிய அழகுகொண்டு திகழ்வது பற்றி வினையமை பாவையை உவமம் செய்தான். எத்துணைக் காதலால் கதுவப்படினும், மகளிர்க்குத் தாம் பிறந்து வளர்ந்து, பயின்ற இடத்தின் நீங்குவது வருத்தம் செய்யு மாயினும், அதனை உட்கொள்ளாது போந்த அருமை நோக்கி, நுந்தை மனைவரை இறந்து வந்தனை என்றும். தான் தலைமகளைக் கொண்டுதலைக் கழியும் கானம், தண்பெயலால் தழைத்துக் குளிர்ந்து வழிநடைக்கு இனிதாயிருப்பினும், சிறிது தங்கி அதன் அழகினைக் கண்டு இன்புறலாம் என்பான், தலை நாட் கெதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத்து அகன்றலை என்றும், பசும்புற்றரையில் தம்பலப்பூச்சிகள் பரந்து திரிவது காணின், சிறுவர் மிக்க விருப்புடன் அவற்றைக் கண்டும் எடுத்துத் தம் ஆடைமேல் இட்டும் மகிழ்தல் இயல் பாகலின், கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும் நீ சிறிது விளையாடுக என்றும், அது கேட்டுத் தனிமை விரும்பாதாள் போல அவள் அவனை நோக்கலும், தான் அங்கே அணிமையில் நின்ற வேங்கைமரத்தைக் காட்டி அதன்கீழ் இருக்குமாறு கூறுவானாய், யானே மழகளிறு உரிஞ்சிய பாராஅரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி என்றும், அவள் இருக்குமிடத்தே ஏதிலார் பிறர் எவரேனும் வரின், தான் அஞ்சாது எதிர்த்து வெருட்டுதல் கூடும் என்றற்கு, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் என்றும், அவட்குத் தமராயினார் அவளைத் தேடி வந்தன ராயின், அவர்க்கு ஊறுசெய்யேன் என்பான், நுமர்வரின் மறைகுவென் என்றும் கூறினான். இதனாற் பயன் தலைவி உவகை எய்துவாளாவது. 363. உலோச்சனார். களவொழுக்கினரான தலைமக்களில், ஆயமும் தோழியும் உடன் வரச் சென்று, தலைவி விளையாட்டயரும் பொழிலிடத்தே மறைவான குறியிடம் கண்டு, அங்கே தலைமகன் அவளைத் தலைப்பெய்து காதலுறவை வளர்த்து வந்தான். ஒருநாள் தலைவன் குறியிடத்தினின்றும் நீங்குங்கால், தோழியை எதிர்ப் பட்டான். அப்போது அவள், "ஐயனே, எம்மின் நீங்கி ஒரு கவலையுமின்றிப் பெருஞ்செல்வன் என்ற பெருமிதவுள்ளத்தோடு நீ செல்வது எனக்கு வியப்புத் தருகிறது; நின் பிரிவாற்றாது தலைவி வருந்துவாளாயின், தகுவன கூறியான் ஆற்றுவிப்பேன் என்பது நின் கருத்துப்போலும்" என்றாள். அது கேட்டதும், அவன் முறுவலித்து, "ஆம், அதுவே" என்றானாக, "யான் ஆற்றுவிக்கு மிடத்தும், அவள் ஆற்றாளாயின், நீயே வந்து அவளை ஆற்றுவித்தல் வேண்டும்" என்று தோழி கூறினாள். இதனைக் கூறுபவள், வெளிப்படையாக மொழியாமல், "பகற் போதில் என் தலைவி நின்னொடு கூடி அலவனாட்டி விளை யாடியதால், அவள் காற்சிலம்பு உடைந்தொழிந்தது. அதனைக் கம்மியன்பால் தந்து புதுப்பிக்கலா மெனில், அவன் அச்சு அமைத்தற்காகத் துறைக்குச் சென்று சிறிது மண்கொணர வேண்டும்; ஆகவே நீயே அத்துறைக்குச் சென்று மண்கொண்டு வருக" என்றாள். வரைபொருளாகக் காற்சிலம்பு கொணர்ந்து தந்து நீ வரைந்து கோடல் வேண்டும் என உரைக்கும் தோழி, தலைவி சிலம்பின் மேல் வைத்துரைக்கும் நுட்பம் கண்டு வியந்த உலோச்சனார் இதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் தெண்கடல் நன்னாட்டுச் செல்வன் யான்என வியங்கொண் டேகினை எனைய தூஉம் உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் பொறியறு பிணைக்கூட்டும்1 துறைமண் கொண்டு வம்மோ 2வாழி மலிநீர்ச் சேர்ப்ப பைந்தழை சிதையக் கோதை வாட நன்னர் மாலை நெருநை நின்னொடு சிலவிலங் கெல்வளை ஞெகிழ அலவன் ஆட்டுவோள் சிலம்பு3 ஞெமிர்ந் தனவே. இது, பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, "தலை மகளை என்னை ஆற்றுவிக்கு மென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்கு மிடத்துக் கவன்றால் நீயே ஆற்றுவி" எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉமாம். உரை : கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை - கண்டல்களால் ஆகிய வேலியும் கழிசூழ்ந்து கிடக்கும் தோட்டத்தை யுமுடைய; தெண்கடல் நன்னாட்டுச் செல்வன் யான் என - தெளிந்த கடற்கரை நாட்டுத் தலைவன் யான் என்ற பெரு மிதத்துடன்; வியம்கொண்டு ஏகினை - தேரைச் செலுத்திக் கொண்டு செல்லாநின்றனை; எனையதூஉம் - எத்துணையும்; உறுவினைக்கு அசாவா - செய்தற் குற்ற வினையிடத்துச் சோர்வுபடுதல் இன்மையால்; உலைவில் கம்மியன் - கெடுதல் இல்லாத கம்மியன்; பொறி அறுபு இணைக்கூட்டும் - உருக்குப் பொறிசிதைந்தவிடத்து மண்ணை அணைத்து நிறைத்துக் கொள்ளும்; துறைமண் கொண்டு - நீர்த் துறையிடத்து அகப்படும் உருக்குமண் கொண்டு; வம்மோ - வருவாயாக; வாழி -; மலிநீர்ச் சேர்ப்ப - மிக்க நீர் பொருந்திய கடல்நிலத் தலைவனே; பைந்தழை சிதைய - அரையில் தன் ஆடைமேல் உடுத்த பசிய தழையுடை சிதையவும்; கோதை வாட - குழலிற் சூடிய மாலை வாடி யுதிரவும்; சில இலங்கு எல்வளை ஞெகிழ - சிலவாகிய விளங்குகின்ற வளைகள் நெகிழ்ந்தோடவும்; நெருநை நன்னர் மாலை - நேற்றைய நல்ல மாலைப் போதில்; நின்னொடு அலவனாட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்தன- நின்னொடு கூடி கடற்கரையில் அலவன்களை அலைத்து விளையாடுதலையுடையளாகிய தலைவியின் சிலம்புகள் உடைந்தன வாகலான் எ.று. மலிநீர்ச் சேர்ப்ப, தெண்கடல் நாட்டுச் செல்வன் யான் என வியங்கொண்டு ஏகினை; ஆயின், பைந்தழை சிதையக் கோதை வாட, எல்வளை ஞெகிழ, நெருநை மாலை நின் னொடு அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்தன வாகலான், துறைமண் கொண்டு வம்மோ; வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கண்டல், கடற்கரைகளில் வளரும் முள்ளி வகையில் ஒன்று. படப்பை, தோட்டம். வியம், ஏவல்; ஈண்டுத் தேர் வியங்கொளல் என்புழிப் போலத் தேரைச் செலுத்துதல் மேற்று; குதிரைப்பாகனை ஏவித் தேரைச் செலுத்துதல் எனக் கொள்க. ஏகுபவனை நிறுத்திக் கூறலின், ஏகினை என இறந்த காலம் வந்தது. உருக்கி யமைக்கப்படும் அளவில் பெரிதா யினும், செயலருமை நினைந்து சோர்வெய்தாத வன்மை சிறந்த கம்மியன் என்றற்கு உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் என்றார். பொறி, பொன் வெள்ளி முதலியவற்றை உருக்கி வார்க்கும் அச்சு; இது வார்க்கப்படும் பொருட்கேற்ப மண்ணாற் செய்து கொள்ளப்படுவது; வார்ப்புத் தொழில் நிகழுமிடத்து இந்த அச்சில் எப்பகுதியேனும் சிதையின் வேறு மண்ணை யெடுத்து அச்சிதைவிடத்து அணைத்துக் கொள்வது இயல்பாதலின், பொறியறுபு இணைக்கூட்டும் மண் என்றார். களிப்பும் உலர்ந்தவழி வெடிக்காத பண்பும் உடைய மண்ணே வார்ப்பச்சுக்கட்கு வேண்டப்படுவது. அஃது எல்லாவிடத்து மின்றிச் சிற்சில நீர்த்துறைகளிலே காணப் படும். அது பொன் வெள்ளி முதலியவற்றை யிட்டு உருக்கும் மூசைகட்கும் வார்ப்பு அச்சுக்கட்கும் பயன்படுவது பற்றி அதனைக் கம்மியர் உருக்குமண் என வழங்குப. சிலம்பு, வார்ப்புப் பொறிகளில் உருக்கி வாக்கிச் செய்யப்படும் என அறிக. அஃது உடைந்தவழிப் பற்றவைப்புக்கு இடம் தாராமையின், மீட்டும் உருக்கி வார்ப்பதே செயற்பாலது என அறிக. பசுமையான தளிர்களைக் கொண்டு தொடுக்கப் படுவது பைந்தழை; பல்வேறு நிறமுடைய பூக்கள் விரவத் தொடுப்பது பகைத்தழை என வழங்கும். கோதை, கோத்துத் தொடுக்கும் பூமாலை. இலங்கு எல்வளை, மிகவும் ஒளியுடைய வளைகள். எல், விளக்கம், ஞெகிழ்தல், செறிப்பின்றி ஓடுதல். ஆட்டுவோள், ஆட்டுதலை யுடையவள்; செய்யுளாகலின், ஆ ஓவாயிற்று. வாழி : அசைநிலை. வம்மோ : மோ, முன்னிலையசை. பகற்போதில், தலைமக்கள் தம்மில் தலைப்பெய்து கூடி மகிழும் இடம் கடற்கானற் சோலை யாதலின், அதனை விதந்து கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை என்றும், அவ் விடத்தில் தலைமகளைக் கூடி நீங்குவோன், தன் பிரிவு தலை மகட்கு ஆற்றாமை பயக்குமென அவளை ஆற்றுவிக்கும் எண்ணமின்றி மகிழ்வோடு செல்வது கண்டு அவனுள்ளத்தை வரைவு முயற்சியில் செலுத்தும் கருத்தினளான தோழி, அவனை நிறுத்தி மொழிதலின், தெண்கடல் நன்னாட்டுச் செல்வன்யான் என வியங்கொண் டேகினை என்றாள். கேட்ட தலைமகன் அவள் கருத்தை யோர்ந்து மருண்டு நோக்கினானாக, மருட்சி மிகாது உவகை தோன்றுமாறு, கம்மியன் பொறியறுபு இணைக்கூட்டும் துறைமண் கொண்டு வம்மோ என்றும், அது நினக்கு அருமையன்று என்றற்கு மலிநீர்ச் சேர்ப்ப என்றும் கூறினாள். கம்மியன் பொறியறுபு இணைக்கூட்டும் துறைமண் என்றது காரணம் காட்டி நிற்றலின், மண்ணின் அளவு விளங்க எனையதூஉம் என்றாள். கம்மியர்க்கு வேண்டப்படும் மண்ணை நீவிர் வேண்டுவ தென்னை என்று அவன் வினவலும், நெருநல் மாலைப்போது நிகழ்ந்தது மறந்தனை போலும் என்பாள், நன்னர் மாலை நெருநை என்றும், தான் உடுத்த பைந்தழை சிதையவும், கோதை வாடி யுதிரவும் கைவளை நெகிழ்ந்து ஓடவும் என் தலைவி நின்னொடு அலவனாட்டி விளையாட்ட யர்ந்தாளன்றே? அக்காலை, அவள் காற்சிலம்பு உடைந் தொழிந்தது என்பாள், நன்னர் மாலை நெருநை நின்னொடு சில விலங்கு எல்வளை ஞெகிழ அலவனாட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்தன என்றும் கூறினான். சிலம்பு ஞெமிர்ந் தமைக்கு நின்னொடு கூடி அலவனாட்டியது காரண மாகலின், அதனை மீளவும் கம்மியன்பால் தந்து செம்மை செய்தற்கு வேண்டும் உருக்கு மண்ணை நீயே கொணர்தல் வேண்டும் என்பது கருத்தாயிற்று. இது கேட்ட தலைவன் உள்ளத்தில் ஆராய்ச்சி பிறந்தது. தெண்கழி நன்னாட்டுச் செல்வனாகிய தான், தன்னோடு அலவனாட்டி விளையாடியதனால் உடைந்த சிலம்புக்கு மண் கொணர்ந்து தருதல் சிறப்பன்று. வேறுசிலம்பு கொணர்ந்தணிவதே செயற்பாலது என்றற் கன்றே தெண்கழி நன்னாட்டுச் செல்வன் யான் என வியங் கொண் டேகினை எனத் தோழி கூறினாள் என்பது அவற்குப் புலனாயிற்று. புலனாகவே, வேறு புதிய சிலம்பணிவது சிலம்பு கழீஇய செல்வம் எனப்படும் திருமணம் வேண்டுகிறாள் என்பது விளங்கிற்று. எனவே, இனி யான் வரைவொடு போந்து மணந்து கோடலே மாண்பு என்று தெளிந்து, அவள்பால் அதனை யுரைத்து விடைபெறுகின்றான். அது கேட்டு மகிழும் தோழி, இதனை நீயே அவட்கு உரைத்துச் செல் என்று கூறுவாளாவது பயன். ஓராற்றால் வரைவு கடாயதூஉமாம். 364. கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார் கிடங்கில் என்பது சங்ககாலத்தில் தொண்டை நாட்டின் தென் பகுதியான ஓய்மானாட்டுத் தலைநகராய் விளங்கிற்று1 இப்போது திண்டிவனம் புகைவண்டி நிலையத்திற்கு அண்மை யில் அவ்வூர் நகராட்சியில் அடங்கியுளது. "கிடங்கில் கிடங்கிற் கிடந்த கயலைத், தடங்கண் தடங்கண் தளிரியலார் கொல்லார் - கிடங்கில், வளையால் பொலிந்ததோள் வையெயிற்றுச் செவ்வாய், இளையாட்டி கண்ணொக்கும் என்று" என யாப் பருங்கல விருத்தியுரைகாரர் காட்டும் ஆரிடச் செய்யுள் இவ் வூரைச் சிறப்பிப்பது காணலாம். அந்நாளில் அக்கிடங்கிலில் காவிதிப் பட்டம் பெற்றுச் சிறப்புற்றிருந்த சான்றோர்களில் காவிதிப் பெருங் கொற்றனார் ஒருவராவர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத் தான் கிடைத்துளது. களவு மேற்கொண் டொழுகும் தலைமக்களில் தலைவியது காதல் நிலையை யுணர்ந்த தலைமகன் அவளை வரைந்து கோடற்குத் துணிந்தான். அதற்கிடையே அவன் பொருள் செய்வினை குறித்து வெளியூர்க்குச் செல்ல வேண்டியவனானான். செல்லுங்கால் வேனிற் பருவத்தில் தான் வினைமுற்றி மீள்வதாக வற்புறுத்தினான். அவனது பிரிவு வரைபொருள் குறித்து நிகழ்ந் தமையின் தலைவியும் விருப்புடன் விடைதந்து விடுத்தாள். மேற்கொண்ட வினை குறித்த காலத்து முற்றுப் பெறாது இடை யீடுபட்டு நீட்டிப்ப தாயிற்று. அதனை அறியாமையால் தலை மகட்கு ஆற்றாமை மிகுந்தது. வேனிற் பருவம் கழியவே, கார்காலத்து மழையும் வாடைக் காற்றும் போந்து தலைமகளை அலைத்தன. தோழி போந்து அவளை ஆற்றுவிக்கத் தலைப்பட்டு ஒருசில கூறவும், தலைமகள், மனம் அழிந்து, "தோழி, காதலர் குறித்த பருவமும் கழிந்தது; பகற்போதிலும் இருண்ட முகில் நீர் பொதிந்து பரந்துளது; பனிப்பைச் செய்யும் இளவாடையும் வீசுகின்றது; இவற்றால் என் மனத்தே வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றி வெதுப்புகிறது; இவ்வண்ணமே சின்னாட்கள் கழியு மாயின், மாலையில் மன்று நோக்கி வரும் ஆனிரைகளின் மணியொலிக்க, கோவலரது கொன்றையங் குழலின் இசை எங்கும் பரவ, உயிரைத் துணிக்கும் மாலைப் போதும் பருவ மழையொடு கூடி வருமாயின் யான் இவ்வுலகில் பலநாள் வாழ முடியாதுகாண்" என்றாள். இக்கூற்றின்கண், பல்லுயிரும் நல்லுணவு பெறற்கெனப் பருவம் பொய்யாது பொழியும் மழையும், உழைப்பால் ஓயும் உடல் வளமும் வலியும் பெறற்பொருட்டு உளதாகும் ஏம இன்றுயிற் குரிய இரவுப்போதும், அதற்கு முந்துறத் தோன்றும் மாலைக்காலமும் இன்பப் பேற்றுக்கு உறுதுணை யாயினும், காதல் மிக்கவிடத்துத் துன்பக் காரணமாய், உயிர் துளங்குவிக்கும் என்பது தோன்றக் கண்ட பெருங் கொற்றனாரது புலமை யுள்ளம் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளது. சொல்லிய பருவம் கழிந்தன் றெல்லையும் மயங்கிருள் நடுநாள் மங்குலோ டொன்றி ஆர்கலி வானம் 1நீர்பொதிந் தியங்கப் 2பனியிள வாடையொடு 3முனிவுமெய்ந் நிறுப்ப இன்ன சின்னாட் கழியின் பன்னாள் வாழலேன் வாழி தோழி ஊழின் உருமிசை அறியாச் சிறுசெந் நாவின் ஈர்மணி இன்குரல் 4ஊர்வயின் இயம்பப் பல்லான் தந்த கல்லாக் கோவலர் கொன்றையந் தீங்குழல் 5மன்றுதோ றிசைப்ப உயிர்செலத் 6துணிதரு மாலை செயிர்தீர் மாரியொ டொருங்குதலை வரினே. இது, தலைமகள் 7வரைவிடை மெலிந்தது8. உரை : சொல்லிய பருவம் கழிந்தன்று - காதலர் வற்புறுத்திச் சென்ற பருவமும் கழிந்தொழிந்தது; எல்லையும் - பகற் போதிலும்; மயங்கிருள் நடுநாள் - இருள் கலந்த நள்ளிரவிற் போல; மங்குலோடு ஆர்கலி வானம் ஒன்றி - கருமுகிலுடன் ஆரவாரத்தையுடைய மழையானது பொருந்தி; நீர் பொதிந்து இயங்க - நீர் நிறைந்து நாற்றிசையும் மூடிக் கொள்ள; பனி இளவாடையொடு - பனி கலந்த இளைதாகிய வாடைக் காற்றோடு; முனிவு மெய்ந்நிறுப்ப - உள்ளும் புறமும் வெறுப் புணர்ச்சி மேலிட; இன்ன சின்னாள் கழியின் - இவ்வாறு சின்னாள்கள் கழியுமாயின்; பன்னாள் வாழலென் - பலகாலம் வாழ்வேனல்லேன்; வாழி தோழி-; ஊழின் உரும் இசை அறியா - முறையாகத் தோன்றும் மின்னும் இடியும் வருவ தறிந்து; சிறுசெந்நாவின் - சிறிய செவ்விய நாவையுடைய; ஈர்மணி இன்குரல் ஊர்வயின் இயம்ப - குளிர்ந்த மணிகளின் ஓசை ஊரிடத்தே ஒலிக்க; பல்லான் தந்த கல்லாக் கோவலர் - பலவாகிய ஆனிரைகளை மேய்த்து ஊரிடத்தே கொணர்ந்த மேய்த்தற் றொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத ஆனாயர் களின்; கொன்றையந் தீங்குழல் - கொன்றைப் பழத்தாற் செய்யப்பட்ட இனிய குழலோசை; மன்றுதோறு இசைப்ப - மன்றங்கள்தோறும் இசைக்க; உயிர் செலத் துணிதரு மாலை - உயிரை உடலினின்றும் துணித்துவிடுக்கும் மாலைப்போது; செயிர்தீர் மாரியொடு ஒருங்கு தலைவரின் - குற்றமில்லாத மழையுடனே ஒன்று சேர்ந்து வருமானால் எ.று. தோழி, வாழி, சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் மங்குலோடு வானம் ஒன்றி நீர் பொதிந்து இயங்கவும், இள வாடையொடு முனிவு மெய்ந்நிறுப்பவும், இன்ன சின்னாள் கழியினும். ஈர்மணி இன்குரல் இயம்பவும், கோவலர் தீங்குழல் மன்றுதோறு இசைக்கவும், மாலை மாரியொடு ஒருங்கு தலைவரினும், பன்னாள் வாழலேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சொல்லிய பருவம், தலைவன் பிரியுங்கால் வற்புறுத்த பருவம்; ஈண்டு அது வேனிலைக் குறிக்கிறது. நடுநாள், நள் ளிரவு. மங்குல், மழை சுமந்து பரவும் முகில், வானம், மழை நீரைப் பெய்யும் காலத்து நிலவும் முகில். இளவாடை, பருவத் தொடக்கத்து வரும் வாடைக் காற்று முனிவு மெய்ந்நிறுத்தல், உள்ளத்தே நிலவும் வெறுப்புணர்ச்சி புறத்தேயுள்ள பொருள் கள்மேற் சேறல். உருமின் உரறு குரல் கேட்டதும், கோவலர் மழை வரவறிந்து தாம் மேய்க்கும் ஆனினங்களை ஊர் நோக்கிச் செலுத்துப. அறியா : செய்யா வென்னும் வினை யெச்சம். மணியின் நா, நெடிதாய் இன்னோசை பிறப்பிப்ப தாய் இருக்குமாறு தோன்றச் சிறுசெந்நா என்றார். ஓசையிற் கோட்ட மின்றி எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரு தன்மையான இன்னிசை செய்தல் கொண்டு செந்நா என்றார். வேய்ங்குழல், ஆம்பற்குழல் எனப் பலவகை இருத்தலின் கொன்றையந் தீங்குழல் எனச் சிறப்பித்தார். மன்று, ஆனினங்கள் தங்கும் தொழுவம். உடல் முழுதும் பிரிப்பறக்கலந்து ஒன்றியிருக்கும் உயிரைப் பிரித்து வெளியேகச் செய்தலின், உயிர்செலத் துணிதரு மாலை என்றார். துணிதருதல், வெட்டிப் பிரித்தல். பெய்தற்குரிய காலம் தப்பாது பெய்யும் மாரி என்றற்குச் செயிர்தீர் மாரி என்றார். செயிர் குற்றம்; அஃதாவது வேண் டுங்காற் பெய்யாமலும் வேண்டாவிடத்துப் பெய்தும் கெடுத் தல். பகற்போதிற் பெய்யும் மழையினும் இரவுக் காலத்து மழை வலியுடைத்து என அறிக. வரைவிடை நிகழ்ந்த பிரிவால் ஆற்றாமை எய்திய தலை மகளை ஆற்றுவிக்கும் தோழி, தலைமகன் பிரியுங்கால் வற் புறுத்த சொல் தேறியிருத்தல் கடன் என்றாளாக, தலைவி அவர் வற்புறுத்த வேனிற்பருவம் கழிந்தது; அவர் வந்திலர் என மனம் அழிந்து கூறலுற்று, சொல்லிய பருவம் கழிந்தன்று என்றும், இரவுப் போது தான் உறக்கமின்றிக் கழிகின்ற தெனினும், பகற்போதும் இரவுப் போதிற் போல மங்குலும் வானமும் ஒன்றி இருள் கூர்ந்து துயர் செய்கின்றன என்பாள், எல்லையும் மயங்கிருள் நடுநாள் மங்குலொடு ஆர்கலி வானம் ஒன்றி நீர் பொதிந்து இயங்குகிற தென்றும் கூறினாள்; எல்லையும் என்புழி உம்மை எச்சப்பொருட்டு. நடுநாள் என்றவிடத்து ஒப்புப் பொருட்டாய இன்னுருபு விகாரத்தால் தொக்கது. இந்நிலையில் நெய்யால் எரிநுதுப் புவார் போல, இளவாடை போந்து என் உள்ளத்தில் வெறுப் புணர்ச்சியை எழுப்பிப் புறத்தே என் மெய்யிற் புலப்படுத்துகிற தென்பாள், பனியிள வாடையொடு முனிவு மெய்ந் நிறுப்ப என்றும், இனி மாலைப்போது வரின், வானத்தில் தோன்றும் உருமிசையால் மழை வரவறிந்து கோவலர் பின்னின்று உய்ப்ப வரும் ஆனினங்களின் மணியொலி ஊர்முழுவதும் இயம்பி, தலைவர் ஊர்ந்து வரும் தேர்மணியின் இன்னொலியை நினைப்பித்து வருத்து மென்பாள், ஊழின் உரும்இசை அறியாச் சிறுசெந்நாவின் ஈர்மணி இன்குரல் ஊர்வயின் இயம்ப என்றும், கோவலர் ஊதிவரும் கொன்றையங் குழலொலி இனி நிகழ்தற்குரிய மணவொலியை நினைப் பிக்கும் என்பாள், பல்லான் தந்த கல்லாக் கோவலர் கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றிசைக்க என்றும், இவ்வாற்றால் ஏமாற்றம் எய்தும் என் இன்னுயிர் உடலி னின்றும் நீங்குதற்குத் துணிகிற தென்பாள், உயிர்செலத் துணிதரு மாலை என்றும் இப்பெற்றி தாய மாலைப்போது பருவமழையோடு கூடி வருமாயின், வேல் பாய்ந்த புண்ணிற் கனல் நுழைந்தாற் போல, ஆற்றாமை கைம்மிகும் என்பாள், மாலை செயிர்தீர் மாரியொடு ஒருங்கு தலைவரின் என்றும் இவற்றைக் கேட்டுத் தோழி மருண்டு நோக்கினாளாகத் தலைமகள், "இவ்வாறு இரவும் பகலும் துன்பமும் முனிவும் நின்று வருத்துமாயின் என் செய்வேன்?" என்றும் கூறினாள். அவட்குத் தோழி, அவர் கூறிய பருவம் கழிந்த தாயினும், சின்னாள்களில் வருவர்; பின்பு அவரொடு கூடிப் பன்னாள் இனிது வாழ்வாய் என்று சொல்லவும் "அச்சின்னாளும் இவ்வாறாயின், பின்பு பன்னாள் வாழ்வதற்கு வேண்டும் வன்மைமுற்றும் கரைந்தொழியும்; யானும் உயிர்வாழேன்" என்பாள், இன்ன சின்னாள் கழியின் பன்னாள் வாழலேன் வாழி தோழி என்றாள். இதனாற் பயன், தலைவி ஆற்றாமை காரணமாகப் பிறந்த அயர்வு தீர்வாளாவது. 365. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சொகிரனார் கிள்ளிமங்கலம் பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர். கிள்ளி யூர் கிள்ளிகுடி என்றாற் போல இவ்வூரும் கிள்ளி யெனும் சோழவேந்தன் பெயர் தாங்கியது. மேலும், கிள்ளி யென்பது சோழ வேந்தர் குடிவகை ஒன்றிற்குப் பெயராயினும். தொடக் கத்தில் இக்குடியை நிறுவிய பெரியோனாலோ அவன் வழி வந்தோராலோ இவ்வூர்ப் பெயர்கள் தோன்றியுள்ளன. தமிழகம் "பொதுமை சுட்டிய மூவர் உலகம்" எனப்படும் இயைபினால், பாண்டி நாட்டில் சோழசேரர் பெயர் கொண்ட வூர்களும், சோழநாட்டில் "சேரபாண்டியர் பெயர் பெற்ற வூர்களும், சேரநாட்டில் சோழபாண்டியர் பெயர் தாங்கிய வூர்களும் காணப்படு கின்றன. இவ்வேந்தர் பெயரால் ஊர்கள் வழங்குதல் இடைக்காலத்தும் இருந்துள்ளது. பாண்டி நாட்டுக் கரிகாற் சோழனல்லூரும், இராதாவரம் என வழங்கும் இராச ராசபுரமும் இதற்கு ஏற்ற சான்றுகளாகும். இக்கிள்ளிமங்கலத்தில் நல்லிசைச் சான்றோர் ஒருவர் தமது சான்றாண்மையால் கிழார் என வேந்தர் நல்கும் சிறப்புப் பெற்றிருந்தார். கோவூர் கிழார், குன்றூர் கிழார் என்பாரைப் போலச் சிறப்புப் பெயரால் இயற் பெயர் மறையப்பெற்ற கிழார்களுள் கிள்ளிமங்கலங் கிழாரும் ஒருவர். இவர் பாடிய பாட்டொன்று தொகை நூல்களில் உண்டு. இவருடைய மகனார் பெயர் சொகிரன் என்பது. அதனால், சான்றோர் கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சொகிரனார் எனக் குறித்துள்ளனர். சொகிரன், சொகினன் என்பன சங்ககால மக்கட் பெயர் வகைகள். சொகிர் சொகின் என்பவை கணி கூறும் தொழிற்குப் பெயராய் வழங்கியுள்ளன. இப்பெயர்ப்பொருள் கொண்டு இச்சான்றோரைக் கணிகூறுபவர் எனக் கொள்வது நேரிதன்று. ஒருவரது இயற்பெயர்க்குப் பொருள் கண்டு அதனை யுடையார் அத்தொழிலினர் எனக் கூறும் தவறு இக்காலத்தே சிலரிடத்தே காணப்படுவது வருந்தத் தக்கது. இவர் பாட்டுக் களில் ஒன்றுதான் இந்நூற்கண் உளது. இச்சான்றோர் பெயர் அச்சுப்பிரதியில் சோகோவனார் என்று காணப்படுகிறது. அச்சுப் படியைப் பெரிதும் ஒத்து நிற்கும் மதுரைத் தமிழ்ச்சங்கஏடு இவர் பெயரைச் சொகிரனார் என்றே கூறுகிறது. களவின்கண் ஒழுகும் தலைமக்களில், தலைவி யுள்ளத்தில் தோன்றி வளரும் காதல் பெரிதும் சிறந்து தலைமகனை யின்றி உயிர் வாழ்வமையாத உயர்நிலையை யடைந்தது. அதனை நன்குணர்ந்த தோழி தலைமகனைப் பன்முறையும் பல்லாற்றானும் வரைவுகடாவினாள். அவனோ அதனைத் தெருளாது களவே விரும்பி யொழுகினான். அது காணத் தோழிக்கு ஆற்றாமை மிகுந்தது; தலைவனுடைய சொல்லிலும் செயலிலும் திண்ணிய நற்கருத் துடைய ளாயினும், அவன் வரைவு நீட்டித்தது தோழி மனத்துக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஒருநாள் தோழி, தலைவன், தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நிற்பது கண்டாள்; அவன் அறியாவகை மறைந்துநின்று, அவன் செவிப்படுமாறு, தலைவியோடு சொல்லாட லுற்று, "தோழி, நாம் புறம்போகா வண்ணம் இற்செறிப்புண்டோமாயினும், அன்னையின் காவலைக் கடந்து, பெரிய வாயில் வழியாக ஊர்மன்றம் சென்று, பகற் போதிலே பலரும் காணும்படி, உயிரினும் சிறந்த நாணத்தையும் கைவிட்டு, அவனது ஊரைக் கேட்டுச் சென்று அவனை நேரிற் கண்டு இது சான்றாண்மையோ என்று சொல்லி வரச் செல் வேமோ?" என்றாள். அதனைச் செவியேற்ற தலைவி நாணத்தால் முகம் விளர்த்து அஃது எங்ஙனம் அமையும் என்பாள் போல நோக்குதலும், "தோழி, நம் தலைவன் வான் பொய்ப்பினும் பொய்யாத அருவிகளை யுடைய மலைநாடன்; அதனால் அவன் சால்புடைய னாதல் தெளிவு; ஆயினும், வரைதற் குரியன விரைய முயலாது களவே நீட்டித்தொழுகல் நன்றன்று; வரைவு கடாவியவழிச் சிறிதும் தாழாது வரைந்துகோடற்கு முற்படுவர் சான்றோர்; அதனைச் செய்யாமையின், அவன் ஊர் வினவிச் சென்று நீ இவ்வாற்றால் சான்றோயல்லை எனச் சொல்லி வருதல் நமக்குச் சால்பன்றோ?" என்றாள். இக்கூற்றின்கண், தலைவியின் ஆற்றாமையைச் சால்புடைமை மேல் வைத்து அறக் கழிவுடைய வாய்பாட்டால் தோழி கூறும் திறம் கண்ட சொகிரனார், அதனை இப்பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். "அறக் கழி வுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப1" என ஆசிரியர் கூறு வது காண்க. அருங்கடி அன்னை காவல் நீவிப் பெருங்கடை இறந்து மன்றம் போகிப் பகலே பலரும் காண நாண்விட்2 டகன்வயற் படப்பை3 அவனூர் வினவிச் 4சென்மோ வாழி தோழி பன்னாள் கருவி வானம் பெய்யா தாயினும் அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின் வான்றோய் மாமலை நாடனைச் சான்றோ யல்லை என்றனம் வரற்கே இது, தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து இன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது.5 உரை : அருங்கடி அன்னை காவல் நீவி - அரிய இற்செறிப்பால் அச்சத்தைச் செய்பவளாகிய அன்னையது காவலைக் கடந்து; பெருங்கடை இறந்து - பெரிய மனைவாயிலை நீங்கி; மன்றம் போகி - ஊர் மன்றத்துக்குச் சென்று; பகல் பலரும் காண - பகற் போதிலே பலரும் காணும்படியாக; நாண்விட்டு - நாணத்தைக் கைந்நெகிழ்த்து; அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவிச் சென்மோ - அகன்ற வயல்களையும் தோட்டங்களையு முடைய அவனது ஊர்க்கு வழி வினவிச் செல்வேமோ; வாழி-; தோழி-; கருவி வானம் பன்னாள் பெய்யாதாயினும் - முகில்கள் தொகுதிகொண்டு பலநாட்கள் மழை பெய்யா தொழியினும்; அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் - அருவிகள் ஒலிக்கும் நீர் கொண்டு விளங்கும் பக்க மலைகள் பொருந்திய; வான் தோய் மாமலை நாடனை - வானளாவி நிற்கும் பெரிய மலைநாடனாகிய தலைவனை நேரிற் கண்டு; சான்றோய் அல்லை என்றனம் வரற்கு - நீ சால்புக்குரிய குணங்களால் அமைந்தாயில்லை என்று சொல்லி வருதற்கு எ.று. தோழி, வாழி, மாமலை நாடனைச் சான்றோ யல்லை என்றனம் வரற்கு, அன்னை காவல் நீவி, பெருங்கடை யிறந்து,மன்றம் போகி, நாண்விட்டு அவன் ஊர் வினவிச் சென்மோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடி, அச்சம். பெருங்கடை, அகன்ற வாயில். மன்றம், ஊரவர்க் கெல்லாம் பொதுவாகிய இடம். வேற்றூரினர் போதரின் தங்குதற்குரிய இடம். புலவர்,பாணர் பொருநர் முதலாயினர் தங்குமிடமும் அதுவே; ஊரவர் கூடி அறம் ஆராய்வதும் இவ்விடத்தேயாம்; ஆகவே அவ்விடம் எப்போதும் மக்கள் நிறைந்தே இருக்கும் என அறிக. கருவி, தொகுதி. மழை பெய்யுங்கால் நீரை மிகவுண்டு பெய்யாவிடத்தும் அதனை உமிழும் வாய்ப் புடைய மலை என்றற்கு வானம் பெய்யாதாயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பு என்றார். வான்தோய் மலை என்றற்கு எப்போதும் மழைமுகில் படிந்து கிடக்கும் முடிகளை யுடைய மலை என்றலுமாம். களவே விரும்பி யொழுகும் தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை யறிந்த தோழி, தலைமகளோடு உரையாடுவாள் போல, அவன் செவிப்படுமாறு சொல்லுவாள், தலைவியது ஆற்றாமைக்குக் காரணம் அன்னையின் காவல் மிக்க இற் செறிப்பு என்பாள், அருங்கடி அன்னை காவல் என்றாள். அன்புடைய ளாயினும் இற்செறிப்பால் அச்சம் செய்பவ ளாதலின், அருங்கடி யன்னை என்றும், அவளை யறியாமல் புறம்போக வேண்டுதலின் காவல் நீவி என்றும், வாயில் வழியாகப் போவாரும் வருவாரும் பலராதலின் பெருங்கடை யென்றும், அதனைக் கடந்து போதல் அரிதாகலின் பெருங் கடை இறந்து என்றும், தலைமகனது ஊர்க்கு வழி முதலியன கூறுவார் மன்றத்திடையே காணப்படுவர் என்பது பற்றி, மன்றம் போகி யென்றும், பகற்போதில் தன் வேட்கை பலர் அறியப் புலப்படுமாறு புறம்போதல் குலமகட் காகாதாயினும், அதனையும் செய்குவல் என்பாள், பகலே பலரும் காண நாண்விட்டு என்றும், அவனது ஊர்க்குச் சென்று வரைவு முயலுமாறு வற்புறுத்த வேண்டின், அவனுடைய ஊரும் வழியும் அறியே மாயினும் மன்றத்தில் உள்ளாரை வினவி யறிந்து சேறல் வேண்டும் என்றற்கு அவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி என்றும் கூறினாள். இவ்வாறு தலைவனது ஊர் வினவிக் கொண்டு தலைமகள் தானே செல்வது வழக்கன் றாயினும், செல்வேமோ என நினைத்தல் அமையும் என்பது, "ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங்காலை, உரியதாகலும் உண்டென மொழிப1" என்பதனால் அறியப் படும். அங்ஙனம் சென்ற விடத்துத் தனது வேட்கையைத் தானே கூறல் மகளிர்க்கு ஆகா தாகலின், யாது கூறுவது என்று தலைவி வினவினாளாகத் தோழி தலைவனைக் கண்டு "பெரும, நீ சான்றோ யல்லை எனக் கூறுவ தொன்றே சாலும்" என்பாள், மாமலை நாடனைச் சான்றோ யல்லை என்றனம் வரற்கே என்றாள். வானம் பெய்யாதாயினும், அருவி அயந்திகழும் என்றது, தலைமகன் வரைபொருளோடு வாராது சான்றோரை விடுப்பினும் நம் தமர் மகட்கொடை நேர்வர் எனத் தோழி உள்ளுறுத் துரைத்தாளெனக் கொள்க. இதனால் தலைமகன் தெருண்டு வரைந்து கொள்வானாவது பயன். 366. மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் பூதன்தேவனார் என்றொரு சான்றோர் இந்நூலுட் காணப் படுகின்றார். அவரின் வேறுபடுத்தற்கு இவர் ஈழத்துப் பூதன் தேவனார் என்று குறிக்கப்படுகின்றார். ஈழம் என்பது இன்றைய இலங்கையின் பழம்பெயர். தென்குமரிக்குத் தெற்கிற் கிடந்து கடற் கிரையாகி மறைந்துபோன குமரிக்கண்டத்தின் நாடுகள் ஏழு : அவை ஏழ்தெங்க நாடு, ஏழ்பனைநாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலைநாடு . ஏழ் குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ்மதுரைநாடு எனப்படும். இவை யாவையும் தொகுத்துக் கூறுமிடத்து ஏழெழுநாடு எனப் பெயர் கொண்டன. அவ் வேழெழுநாடு நாளடைவில் மருவி ஈழநா டாயிற்று; ஏழ் பனைநாடு யாழ்ப்பாண நாடாய் இன்றும் அப்பெயரோடே திகழ்கின்றது. இன்றும் தமிழகத்துத் தொல்குடி மக்கள் இலங்கையை ஈழம் என்றே கூறுவர். இந்த ஈழமே மேனாட்டவரால் சிலான் என்று திரிக்கப்பட்டது. இந்த ஈழநாட்டினின்றும் போந்து மதுரைக்கண் தங்கித் தமிழ்ப் புலமை நடாத்தினமையின் இச் சான்றோர் ஈழத்துப் பூதன்தேவனார் என்று குறிக்கப்படு கின்றார். இவர் பாடியன ஏனைத் தொகைநூல்களிலும் உண்டு. மனைக்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமக்கள் வாழ்வில், விருந்தும் விழவும் சிறந்து நிலவின. இல்லாதவர் நல்வாழ்வு பெற்றனர்; செல்வர் இனிய துணையுற்றனர்; அறவரும் அந்தணரும் ஆன்றவரும் சான்றவரும் புக்கில் பெற்றுப் புகழ் பாடினர். இந்நிலையில் தலைமகன் அறவினையாற் புகழ் நிறுவிப் பொற்புடைய இன்பம் பெறுவதற்குப் பொருள் பொருளாவதை எண்ணினான். ஆள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்தல் இயல் பன் றாகலின் மனையின் நீங்கிச் சென்று பொருளீட்டல் கடன் என்று அவனது நெஞ்சம் வற்புறுத்தியது. ஆயினும் அவனுடைய இயற்கையறிவு, உடலூழாகிய உணர்ச்சி வயப்பட்டுத் தலைமகள் கூட்டத்தாற் பெறலாகும் இன்ப நுகர்ச்சிக்கு இரையாகிப் பொருட்பிரிவு மனைவியின் நீங்கிச் செயற்பாலதாகலான் அது கூடாதென மறுக்கலுற்றது. நெஞ்சினை நெருங்கி மறுக்கும் அறிவு தொடக்கத்தில் தலைவியின் இன்பத்தைச் சிறப்பிக்கப் புகுந்து அவளது பெண்மைநலத்தை விதந்து மேகலை அணிந்திலங்கும் இடையையும் பெருத்த தோளையும் பாராட்டி முல்லையணிந்த அவளது கூந்தலை அணையாகக் கொண்டு பெறும் பாயலின் பத்தைக் காட்டி, அவ்வின்பம் சிறப்புறும் காலமாகிய கூதிர்ப் பருவத்தில் பிரிந்துறையக் கருதுபவர் ஏதம் கொண்டு ஊதியம் போக இழக்கும் பேதையராவர் என்று கூறிற்று; ஓடவிட்டுப் பிடிக்கும் நெஞ்சம் உவகை யுற்றது. இக்கூற்றின்கண், பொருட்பிரிவுக்குரிய கடமையும் மனைவி பாற் பெறலாகும் காதலின்பமும் தலைவன் உள்ளத்திற் போர் நிகழ்த்தும் திறத்தையும், அப்போரில் கடமை வெற்றிபெறும் சிறப்பையும் கண்ட ஈழத்துப் பூதன் தேவனார் அவற்றை இப் பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். காதலும் கடமையும் நிகழ்த்தும் போர்க்கு இளமையுள்ளமே சிறந்த களமாவது இயல்பாதல் கண்டே சான்றோர் அவ்வுள்ளத்தின் வளமை கருதி அகப் பாட்டுக்களை மிகுதியாகப் பாடினர். அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்டுகில் ஊடுவந் திமைக்கும் திருந்திழை அல்குற் பெருந்தோட் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் 1குறுங்கால் நறுவீ மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி 2முதுக்குறை முதுகுரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கி லங்கழை தூங்க ஒற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழிஇவ் வுலகத் தானே. இது,உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. உரை : அரவுக் கிளர்ந்தன்ன - பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற வடிவமுடைய; விரவுறு பல்காழ் - நிறத்தாலும் வடிவத்தாலும் வேறுபட்ட பலவாய் விரவிய மணிகளைக் கோத்து; வீடுறு நுண்துகில் ஊடு வந்து இமைக்கும் - நெகிழ வுடுக்கப்பட்ட நுண்ணிய நூலாடை முன்றானையின் ஊடே கிடந்து விளங்கும்; திருந்திழை அல்குல் - திருந்திய இழை யாகிய மேகலையையும்; பெருந்தோள் குறுமகள் - பெரிய தோளையுமுடைய இளையளாகிய தலைமகளின்; மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇ - கருமணி போன்ற கூந்தலை நெய் பெய்து சிக்கறக் கோதி; கூதிர் முல்லைக் குறுங்கால் நறுவீ - கூதிர்காலத்து மலரும் முல்லையின் குறுகிய காம்பு பொருந்திய நறிய பூக்களை; மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த- அழகிய வண்டும் சுரும்பும் மொய்க்க முடித்த; இரும்பல் மெல்லணை ஒழிய - கரிய பலவாகிய கூந்தலை மெல்லிய அணையாகக் கொண்டு பெறும் பாயலின்பத்தைத் துறந்து; கரும்பின் வேல் போல் வெண்முகை பிரியத் தீண்டி - கரும்பி னுடைய வேல் போன்ற வெள்ளிய முகை முறுக்கவிழ்ந்து இதழ் பிரிந்து விரியு மாறு தீண்டி; முதுக்குறை முதுகுரீஇ - கருக்கொள்ளும் காலத்தை முற்பட வுணரும் அறிவு சான்ற குருவி; முயன்று செய் குடம்பை - அரிதின் முயன்று செய்த கூட்டை; மூங்கில் அம்கழை தூங்க ஒற்றும் - மூங்கிலினுடைய அழகிய கழை அசைந்து உராயுமாறு அலைக்கும்; வடபுல வாடைக்குப் பிரிவோர் - வடதிசையினின்றும் வீசும் வாடைக் காற்று நிலவும் காலத்திற் பிரிந்து செல்வோர்; மடவர் - பேதையராவர்; இவ்வுலகத்தான் - இவ்வுலகின்கண் எ.று. நெஞ்சே, வாழி; அல்குலும் பெருந்தோளு முடைய குறுமகள் ஐம்பாலைக் கழீஇ முல்லை நறுவீ முடித்த மெல் லணை ஒழிய, கரும்பின் வெண்முகை பிரியத் தீண்டி குடம்பை மூங்கிலங்கழை தூங்க ஒற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர், இவ்வுலகத்தான், மடவர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாழி : அசைநிலை. அரவுக் கிளர்தலாவது, பாம்பு தன் படத்தை விரித்து எழுந்து ஆடுதல். காழ், மேகலையிற் கோக்கப்படும் மணி வீடுறு நுண்டுகில், இடையிற் செறியச் செருகாது நெகிழ்ந்து தொங்க விடப்படும் முன்றானை. மணி, கருமணி. ஐம்பால், ஐந்து வகையாக முடிக்கப்படும் கூந்தல். மாசு, ஈண்டுக் கூந்தல் தம்மிற் பிணங்க வுண்டாகும் சிக்கல்.கழுவுதல், நெய் பெய்து நீவுதல், மாதர், அழகு. வண்டு, சுரும்பு என்பன மலர்களிற் புக்குத் தேனுண்ணும் வண்டினங்கள். கூந்தலைப் பாயலாகக் கொண்டு கிடந்து உறங்குப வாகலின், கூந்தல் மெல்லணை என்றார். முகை பிரிதல் என்றது, முகையிடத்து முறுக்குண்டிருக்கும் இதழ்கள் பிணிப்பவிழ்ந்து விரிதல். முதுக்குறைவு, அறிவுடைமை. தலைச்சூல் அன்மை தோன்ற முதுகுரீஇ என்றார். குடம்பை, கூடு. வாடைக்கு என்ற விடத்துக் குவ்வுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று. வாடை, ஆகுபெயராய் வாடை வீசும் காலத்துக் காயிற்று. இந்நாளில் இது வட கிழக்குக் காற்று எனப்படுகிறது. மடமை, ஈண்டு ஏதம் கொண்டு ஊதியம் இழக்கும் பேதைமை மேற்று. உலகியல் வாழ்வுக்குப் பொருளே பொருளாம் என வற்புறுத்திப் பிரியத் தூண்டிய நெஞ்சினை, மறுத்துரைக்கும் தலைமகன், பிரிவாற்றாத தலைவியை நினைத்தலும், அவ ளுடைய வனப்புற்ற உருவம் மனக்கண்ணில் தோன்றக் கண் டான்; அக்காட்சியில் தோன்றும் தலைவியின் மேலாடைக் குள்ளிருந்து ஒளி திகழும் மேகலை தோன்றி இன்பம் செய்த லால் அதனை விதந்து, அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண்டுகில் ஊடுவந் திமைக்கும் திருந்திழை யல்குல் என்றான். மேகலையின் முக்கோண வடிவம், பாம்பு படம் விரித்து எடுத்தாற் போன்று விளங்குவதால், அரவுக் கிளர்ந்தன்ன என்றும், பல்வேறு நிறமும் வடிவுமுடைய மணிகள் விரவக் கோக்கப் பெற்றிருத்தலின், விரவுறு பல்காழ் என்றும், செறிய உடாது நெகிழவிட்ட முன்றானை என்பது தோன்ற, வீடுறு நுண்டுகில் என்றும், அதனூடு கிடந்து ஒளிர்தலின் ஊடுவந்து இமைக்கும் திருந்திழையல்குல் என்றும் கூறினான். திருந்திழை யாகிய அல்குல் என்க. மேகலையின் ஒளி தன் கருத்தை ஈர்க்கவே, அவன் நிமிர்ந்து நோக்கியவழி, அவளுடைய பெருத்த தோளும், இளமை கனியும் முகமும் விளங்கவே, பெருந்தோட் குறுமகள் என் றான். அக்காலை நெஞ்சு வற்புறுத்த பொருட்பிரிவு ஒருபால் மனத்தே எழவும், அவளுடைய கரிய நெடிய கூந்தலையும் அதன் ஒப்பனையையும் காட்டி, அதனை அணையாகக் கொண்டு பெறும் பாயலின்பம் நினைவில் தோன்ற, அதனை யும் உடன்காட்டி அவ்வின்பப்பேற்றினைத் துறந்து, "நெஞ்சே, நீ பிரியக் கருதுகின்றனை என்பான் மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறுங்கால் நறுவீ மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை கழிய என்றாள். மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇ என்றது, மெல்லணைக் குரிய மென்மைத் தன்மை புலப்படுத்தற்கு. வண்டும் சுரும்பும் மொய்த்த முல்லையைக் கூறியது, மாலைப் போதில் புதியவாய் மலர்ந்து மணம் கமழ நிற்குமாறு தோன்றற்கு. கூந்தலாகிய மெல்லணையிற் சூடிய முல்லை நறுவீ வண்டிற்குத் தேனளித்து இன்பம் செய்தல் போலத் தன்பாற் கிடந்து பாயல்பெறும் தனக்கு இன்பம் நல்கும் திறம் விளங்க, கூதிர் முல்லைக் குறுங்கால் நறுவீ மாதர் வண் டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை என்றான். கூதிர்காலத்துக் காதலர்க்கு "மெய்புகு வன்ன கைகவர் முயக்கம்" நல்கும் ஊற்றின்பத்தைக் கொள்ளாது நெகிழ்த்து, அக்காலத்துக் குளிரும் வாடையும் பயக்கும் பனிப்பும் நடுக்கமு மாகிய துன்பத்தைப் பிரிவால் ஏறட்டுக் கொள்ளுதல் அறி வுடைச் செயலன்மையின், வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி இவ்வுலகத்தானே என்று உரைத்தான். அருவ மாகிய கூதிர்க்கு வாடை உருவமாகிப் பிரிந்தோர்க்குத் துன்பம் செய்தலின், வடபுல வாடை என்று விதந்து கூறினான். கரும்பின் வெண்முகையிடத்துப் பிரிவின்றி யிருக்கும் இதழை வாடை தீண்டிப் பிரிவிக்கும் என்றது, பிரிவின் றியலும் எமது வாழ்க்கையில் பொருள் வேட்கை தோன்றி என்னைப் பிரியச் செய்கிறது என்றும், முதுகுரீஇ முயன்றுசெய் குடம் பையை மூங்கிற் கழை அசைத்து அலைப்பது போல, யாம் அரிதின் முயன்று பெற்ற காதலின்ப நுகர்ச்சியைப் பொருட் பிரிவு தோன்றி வருத்துகிறது என்றும் உள்ளுறை கொள்க. நெஞ்சொடு கூறுதற்கு உள்ளுறை வேண்டா எனினும், இவை வெளிப்படக் கூறலாகா அழுங்கலுரை யாகலின் உள்ளுறுத்தப்பட்டன எனக் கொள்க. 367. நக்கீரர் மனை வாழ்க்கையில் சீர்த்த இன்பம் நுகரும் தலைமகன் பொருள் வினை காரணமாகத் தன் மனையின் நீங்கிச் சென்றான். அவன் பிரிவை அரிதின் ஆற்றியிருந்த தலைமகட்கு அவன் கடிதின் மீளாமை பெருங்கலக்கத்தை விளைவித்தது. அவன் பிரிந்த நாள் முதல் தன் குழல் திருத்திக் குவளையும் முல்லையும் பிறவுமாகிய மலர் சூடிக் கொள்ளும் செயலைக் கையொழிந்தாள். தலைமகன் மனையின்கண் இல்வழித் தலைமகள் தன்னை ஒப்பனை செய்துகோடல் கற்புநெறி யன்று என்பது பழந் தமிழ் மரபு. அதனால் அவள்பால் ஆற்றாமையும் மேனி மெலிவும் பொலிவின்மையும் நிலைகொண்டன. பிரிந்து சென்ற தலை மகனுள்ளம், வினைசெயல் வகைகளில் ஈடுபட்டு அதனை முற்ற முடித்தற்கண் ஒன்றி நின்று வினைமுடிவில் தலைமகளை நினைக்கலுற்றது. தன்னொடு போந்த இளையர்க்கு வினை முடிந்தமையும் தான் மனைக்கு மீளக் கருதிய குறிப்பையும் அறிவித்தான். அது கேட்டு உவகை மிக்குற்ற இளையர், தாம் மனைநோக்கி மீளும் குறிப்பைப் பலரும் அறியுமாறு முல்லை மலரைத் தம் சென்னியிற் சூடி இன்புற்றனர். பனிப் பருவத்தில் மீண்டு வருவதாக, விடைபெறுங்கால், தலைமகட்கு வற்புறுத்தினா னாகலின், அப்பருவவரவும் தான் மனைசேரும் காலமும் ஒத்தல் வேண்டி விரைந்த செலவையுடைய குதிரை பூட்டிய தேரில் தலைமகன் ஊர்ந்து வருவானாயினன். முற்போந்த தூதுவர் மனையுறையும் தோழிக்குத் தலைமகன் வருகையை அறிவித்தனர். தோழியும் மிக்க மகிழ்ச்சியுடன் தலைவிபாற் சென்று. "தோழி, நீ நின் குழலிற் சூடும் முல்லை மலரைத் தலைவனொடு சென்ற இளையரும் சூடினராம் ஆகவே நம் தலைவர் அன்று குறித்த வண்ணம் இப்பொழுது பனிப் பருவ வரவில் தவிராது வருவர் என்பது ஒருதலை; இனிக் கவலை ஒழிக" என்றாள். தலைமகளும் மனைக்கண் நிகழ்தற்குரிய மாண்புடைச் செயல்களை மேற்கொள்ளலானாள். ஆடவர்க்கு வினை உயிராதலின், வினைவழி நிற்கும் அவர் உள்ளம், அது முடிந்தவிடத்து மனைவழி நோக்கும் என்பது பற்றி அவர்கள் மனையறத்துக் குரிய முல்லை சூடுவர் என்ற வழக் காற்றின்மேல் வைத்துத் தலைமகன் வரவைத் தோழி யுரைக்கும் நயம் கண்ட நக்கீரர் அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடு கின்றார். இப்பாட்டின் இடையில் ஓர் அடி அச்சுப்படியில் விடுபட்டுள்ளது. கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கட் கருநைச் செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவரிய 1பேரியற் கூழுடை நன்மனை 2குழீஇயின இருக்கும் மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி 3அன்ன நன்னுதல் ஆய்கோல் அவிர்தொடி மெல்லியல் அரிவைநின் 4நல்லகம் விளங்கக் குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத் தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை இளையரும் 1சூடினர் இனியே நமரும் விரியுளை நன்மா கடைஇப் பரியாது வருவர்இப் பனிபடு நாளே. இது, வரவு மலிந்தது. உரை : கொடுங்கண் காக்கை கூர்வாய்ப் பேடை - கொடிய கண்ணையும் கூரிய வாயையுமுடைய பெடைக்காக்கை; நடுங்கு சிறைப்பிள்ளை தழீஇ - நடுங்குகின்ற சிறகுகளை யுடைய குஞ்சினைத் தழுவிக்கொண்டு; கிளை பயிர்ந்து - சுற்றமாகிய ஏனைக் காக்கைகளைக் கரைந்து; கருங்கண் கருநைச் செந்நெல் வெண்சோறு - கரிய கண்போன்ற கடுகு பொரிக்கப்பெற்ற செந்நெல் லரிசியாலாகிய வெண்சோற்றினை; சூருடைப் பலியொடு கவரிய - தெய்வத்துக்கு இடும் உண் பலியோடு ஒருங்கு உண்டற்பொருட்டு; பேரியல் கூழுடை நன்மனை குழீஇயின இருக்கும் - பெரிய அளவிற்றாகிய செல்வமிக்க நல்ல மனையின் முன்றிலிற் கூடியிருக்கும்; மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி யன்ன - மூதில் மகனாகிய அருமன் என்பானுடைய பெரிய புகழ் படைத்த சிறுகுடி யென்னும் ஊரைப் போன்ற; நன்னுதல் - நல்ல நெற்றியையும்; ஆய் கோல் அவிர்தொடி - நுண்ணியதாய்த் திரண்டு விளங்கும் தொடியையும்; மெல்லியல் அரிவை - மென்மையான இயல்பையு முடைய அரிவையே; நின் நல்லகம் விளங்க - நின்னுடைய நல்ல மனையகம் அறச்செயலால் விளக்கம் பெறுமாறு; குவளையொடு தொடுத்த நறுவீ முல்லை - குவளை மலரொடு விரவித் தொடுக்கப்பட்ட நறிய பூக்களை யுடைய முல்லையின்; தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை - முறுக்கவிழ்ந்த பூவாலாகிய தண்ணிய மணங்கமழும் மாலையை: இளையரும் சூடினர் - தலைவனொடு சென்ற இளைய வீரரும் சூடிக்கொண்டனர்; இனி - இப்பொழுதே; நமரும் - நம் தலைவரும்; விரியுளை நன்மா கடைஇ - விரிந்த தலையாட்ட மணிந்த நல்ல குதிரைகளைச் செலுத்திக் கொண்டு; இப்பனிபடு நாள் பரியாது வருவர் - இம்முன்பனிக் காலத்தே இடையீடின்றி வந்து சேர்வர் காண் எ.று. அரிவை, நின் நல்லகம் விளங்க, கோதையை இளையரும் சூடினர்; இனி, நமரும் நன்மா கடைஇப் பரியாது வருவர் காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. காக்கைப் பேடை, பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து வெண்சோறு பலியொடு கவரிய குழீஇ இருக்கும் சிறுகுடி என இயையும்; குழீஇயின இருக்கும் மூதில் என இயைப்பினும் அமையும். பயிர்தல்; அழைப்பிடுதல் பொறிக்கறி. தாளிதம் செய்யப் பட்டமை தோன்றக் கருங்கண் கருநை என்றார். சூர், தெய்வம். பேரியற் கூழ், பேரளவின தாகிய பொருள். நன்மனை, ஈண்டு மனையின் முன்றில் மேற்று. மூதில், தொல்குடி என்னும் பொருட்டு. மூதில் அருமன் என்பானைப் போலக் குறுந்தொகைக்கண் ஆதிஅருமன் என்பான் ஒருவனைக் கள்ளில் ஆதிரையனார் "பாளை தந்த பஞ்சியங் குறுங்காய், ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும், ஆதி யருமன் மூதூர்"1 என்று குறிக்கின்றார். இம் மூதில் அருமனே ஆதியருமன் எனச் சிறப்பிக்கப்படுகின்றான் என்று கருதுபவரும் உண்டு. அரிவை, நின் நல்லகம் விளங்க நமரும் பரியாது வருவர் என இயைக்க. நறுவீ என்றது முல்லைக்கு இயற்கையடை, பனிபடுநாள் பனிதோன்றும் முன்பனிக் காலம். தலைவனது பிரிவாற்றாது வருந்தும் தலைமகட்கு, அவனது வரவறிந்த தோழி அதனைப் பைய உரைக்கலுற்று மெலிவுற்றிருக்கும் தலைவியின் நலத்தை விதந்து கூறி மகிழ் விப்பாள், அருமன் சிறுகுடி அன்ன நன்னுதல் ஆய்கோல் அவிர்தொடி மெல்லியல் அரிவை என ஆர்வமொழிகள் பல தொடுத்துக் கூறினாள். நுதல் பசந்தமைக்கு நன்னுதல் என்றும், தொடி நெகிழ்ந்து ஓட நின்றமை தோன்ற, ஆய் கோல் அவிர்தொடி என்றும், மெலிவு மிக்குற்றமை புலப்பட, மெல்லியல் என்றும் எடுத்து மொழிந்தாள். அது கேட்ட தலைவி நுதல் துடைத்துத் தொடி செறித்து மேலே தோழி கூறுவன கேட்டற்குச் சமைத்திருப்பத் தோழி நம் தலைவ ரொடு சென்ற இளையர் மேற்கொண்ட வினை முற்றினமை யின் மனைக்கு மீளுமாறு தோன்றத் தம் முடியில் குவளை விரவிய முல்லையைச் சூடிக் கொண்டனர் என்பாள், குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத் தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை சூடினர் என்றாள்.இல்லிருந்து நல்லறம் புரியும் பொற்புடை மகளிர் தமது கற்பொழுக்கத்தின் மாண்பு தோன்ற முல்லை சூடுப; தலைவன் பிரிந்தமையால் தன்னை ஒப்பனை செய்து கோடலைத் தவிர்ந்தமையின், தலைமகட்கு அதன்கண் விருப்புண்டாதல் வேண்டி. இளையர் அணிந்த முல்லையை இவ்வாறு சிறப்பித்தாள். அதனால் தலைவி தனது உள்ளத்து உவகை புலப்பட முறுவலிக்கவும், நின்நல்லகம் விளங்க இனியே நமரும் விரியுளை நன்மா கடைஇப் பரியாது வருவர் என்றாள். செயற்பாலவாகிய அறங்களா லன்றி எத்துணைச் செல்வ மிருப்பினும், ஒரு நன்மனை விளக்கம் பெறாது என்பது பற்றி நின் நல்லகம் விளங்க என்றும். அவ்வறமும் தலைமகன் இல்வழிச் சிறவா தாகலின் அவர் வந்திலரே எனத் தலைவி மனம் அழி யாமைப்பொருட்டு நமரும்இனி வருவர் என்றும், விரைந்து வருமாறு தோன்ற விரியுளை நன்மா கடைஇ என்றும், காடிடையிட்டும் நாடிடை யிட்டும் சென்றன ராயினும், உள்ளம்போல உற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைய ராதலின், இடையீடு படுதலும் வருந்துதலும் இன்றி வருவர் என்பாள், பரியாது வருவர் என்றும் , முன் பனிப் பருவத்து வருவல் எனப் பிரிந்த ஞான்று வற்புறுத்தவாறே முன்பனிப் பருவ வரவாகிய இப்பொழுது வருவர் என்பாள், இப்பனிபடு நாளே என்றும் கூறினாள். குறித்த பருவம் பொய்யாது வருதலில் பரியல் வேண்டாமையின் பரியாது வருவர் என்றாள் என்றுமாம். காக்கைப்பேடை, தன் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து வெண்சோறும் சூருடைப் பலியும் உண்டற்குக் குழீஇயிருக்கும் என்றது, நீயும் நன்மகப் பெற்றுச் சுற்றம் சூழப் பல்வளம் நுகர்ந்து மனையறத்தில் மாண்புறுவாய் என உள்ளுறுத்தவாறு. 368. கபிலர் களவுநெறியிற் காதலுறவு கொண்ட தலைமக்களில், தலைவன் பகற்போதில் புனத்தின்கண் தலைவியைக் கண்டு இன்புறுமாற்றால் இருவரிடத்தும் உளதாகிய காதலைச் செந் நெறியில் வளர்த்துவந்தான். தலைவி யுள்ளத்தில் தோன்றிச் சிறந்த காதல், அவன்பால் அழிவில் கூட்டம் பெறுதலில் ஊன்றி நின்றது. அதனால் அவனை இன்றியமை யாதவளாகிய தலைவி மேனி வேறுபடலானாள். அதனை அறிந்த தோழி தலைமகனைக் கண்டு விரைவில் அவளை வரைந்துகொள்ளுமாறு பல்வகையாலும் வற்புறுத்தினாள். அவனோ அதனை மேலும் முறுகுவிக்கும் கருத்தால் களவே விரும்பி யொழுகினான். தோழியும் அவன் வருந்தோறும் தலைவியை உய்த்துச் சென்று அவன் கருத்து நிறைவுறச் செய்தொழுகினாள். ஆயினும், இனித் தனக்கு அது செய்ய மாட்டாமை அவற்குப் புலப்படுமாறு, தலைமகள் இல்லிக வாமல் காவற்பட்டாள் என்று தலைமகற்கு உணர்த்த நினைத்து, ஒருகால் அவனைக் குறியிடத்தே கண்டு, "ஐய புனங்காவல் புரியுங்கால் நின்னோடு கூடிக் கிளியோப்பியும், வேங்கை மரத்தில் ஊசலாடியும், தழை தொடுத்தணிந்தும் விளையாடி வருதலினும், எமக்கு இன்பம் தருவது பிறிதியாதும் இல்லை; இன்று, எம்பால், எம் அன்னை போந்து இவள் மேனிக்கண் உளதாகிய நாற்றமும் நுதலிடத்துப் பரந்த பசலையும் கண்டு, ஏதிலா எண்ணங்கட்குத் தன் நெஞ்சினை இரையாக்கி, இயை பில்லாத ஒன்றைக் கருத்திற் கொண்டு பெருமூச் செறிந்தாள்; அது கண்ட யாங்கள், இனிப் புறம் போகவிடாது எம்மை இற் செறிப்பள் என்று அறிந்து அஞ்சுவேமாயினேம்; எமது இவ் விரங்கத்தக்க நிலைக்கு என் செய்வது?" என்றாள். இக்கூற்றின்கண், நீ விரைய வரைந்துகோடலே செயற்பால தென்று சொல்லக் கருதிய தோழி, அன்னையின் செயல்வகை மேல் வைத்து மொழியும் மதிநுட்பம் கண்டு வியந்த கபிலரது புலமையுள்ளம் அதனை இப்பாட்டின்கண் அமைத்து நமக்குத் தந்துளது. பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பிக் கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக் கோடேந் தல்குல் தழையணிந் தும்மோடு ஆடினம் வருதலின் 1இனியதும் உண்டோ நெறிபடு கூழைக் கார்முதிர்2 பிருந்த வெறிகமழ் 3கொண்ட நாற்றமும் சிறிய பசலை பாய்தரு நுதலும் நோக்கி வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் யாயே ஐய அஞ்சினம் அளியம் யாமே. இது, தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது. உரை : பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பி - பெரிய தினைப் புனத்தில் நின்ற கதிர்களைக் கவர வரும் சிறுகிளிகளை வெருட்டி யோட்டியும்; கருங்கால் வேங்கை ஊசல் தூங்கி - வலிய தாளையுடைய வேங்கைமரத்தில் தொடுக்கப்பட்ட ஊசலில் அசைந்தாடியும்; கோடு ஏந்து அல்குல் தழை யணிந்து - பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே தழை தொடுத்து அணிந்தும்; உம்மோடு ஆடினம் வருதலின் - நும்மோடு விளையாடி வருதலினும்; இனியதும் உண்டோ - இன்பம் தருவது ஒன்று உண்டோ? இல்லையன்றே; நெறிபடு கூழைக் கார் முதிர்பு இருந்த - நெறிப்பமைந்த கூழையாகிய கூந்தலிடத்தே நிறைந் துள்ள; வெறிகமழ் கொண்ட நாற்றமும் - மதநாற்றம் கமழ் தலையுடைய புதுமணத்தையும்; சிறிய பசலை பாய்தரும் நுதலும் நோக்கி - நுண்ணிதாய்ப் பசலை படர்ந்த நெற்றி யையும் உற்று நோக்கி; வறிது உகு நெஞ்சினள் - வறிதே கரைந்துருகும் நெஞ்சுடனே; பிறிதொன்று சுட்டி - இயை பில்லாத ஏதோ ஒன்றை எண்ணி; யாய் உயிர்த்தனள்- அன்னை பெருமூச் செறிந்தாள்; ஐய - தலைவனே; அளியம் - அளிக்கத் தக்கேமாகிய; யாம் அஞ்சினம் - யாம் அஞ்சா நின்றேம் எ.று. ஐய, கிளியோப்பியும், ஊசல் தூங்கியும். தழையணிந்தும் உம்மோடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? இல்லை யன்றே; இனி, அஃது இயலாது போலும்; நாற்றமும் நுதலும் நோக்கி, யாய், வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி வெய்ய வுயிர்த்தனள்; அது கண்டு யாம் அஞ்சினம், அளிய மாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளைவு மிகுதி யாலும் பரப்புடைமையாலும் பெருமையுடைய புனம் என் றற்குப் பெரும்புனம் என்றார். ஆடுதல், விளையாட் டயர்தல். கூழை, கூந்தல். இடைவெளியின்றிச் செறிந்த கூந்தல் என்பார், நெறிப்படு கூழை என்றார். கருமுகில் நிறம் கறுத்து நீர் நிறைந்திருத்தல் போலக் கருங்கூந்தல் மணம் நிறைந்துளது என்பார், கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி என்றார். கமழ், கமழ்தல்; முதனிலைத் தொழிற் பெயர். நாற்றம், காதற்கூட்ட முடைய மகளிர்பால் உளதாகும் மதநாற்றம். வறிது உகும் நெஞ்சு, காரணம் புலப்படாமையால் கலங்கி வருந்தும் நெஞ்சு. பிறிது, இயைபில்லது; ஈண்டு இற்செறிப்பின் மேற்று யாய், நற்றாய். புனங்காவல் புரிந்த தலைமகளைக் கண்டு இன்புற்று வந்த தலைமகனை வரைவுகடாவும் கருத்தினளாகிய தோழி, இப் புனம் தன் பரப்பாலும் விளைவாலும் மிக்க பெருமை யுடைய தென்பாள், பெரும் புனம் என்று விதந்து, இதன்கண் கதிர் கவர்வான் வந்து படியும் கிளிகள் மிகச் சிறியவாய் எளிதிற் கண்டு ஓப்புதல் அரிதாகலின், நின் துணை எமக்கு இன்றியமையா தென்பாள், பெரும்புனம் கவரும் சிறுகிளி யோப்பி என்றும், புனத்தின் பெருமையை நோக்கிச் சிறு கிளி கவர்வதால் உளதாகும் கேடு சிறிதாதல் பற்றி, வேங்கை மரத்தின் நீழலில் சிறிது விளையாட்டை விரும்பினேம்; அப்பொழுது எமக்கு ஊசலமைத்தும் ஊக்கியும் துணை புரிந்தனை என்பாள், கருங்கால் வேங்கை ஊசல் தூங்கி என்றும், யாம் தழை தொடுத் தணியக் கருதிய போது தழை கொணர்ந்து உதவி இன்புறுத்தினை என்பாள், கோடு ஏந்தல் குல் தழையணிந்து என்றும், இவ்வாறு விளையாட்டயர்தல் இன்பமாயினும், உம்மோடு கூடி யாடுவதால் அது பெரி தாகிறது என்பாள், உம்மோடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ என்றும் கூறினாள். மனையின்கண் உறையுங்கால், யாமோ அன்னையோ விரும்பிய பூக்களே சூடிப் பயின்ற குழலின் நறுமணம், ஈண்டுத் தலைவனாகிய நீ விரும்பும் பூக்களையே சூடுதலின் வேறுபட்டுக் காதலுணர்ச்சி மிகு தலால், மேனியில் தோன்றும் மதநாற்றம் கலந்து கமழ்தலின் நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த வெறிகமழ் கொண்ட நாற்றம் என்றும், இவ்வேறுபாட்டுக் குரிய காரணம் துணிய மாட்டாமையின், அன்னை கலங்கிய நெஞ்சின ளாயினாள் என்பாள். வறிதுகு நெஞ்சினள் என்றும், எமக்கு நும்மோடு உளதாகிய காதற்றொடர்பினை அறிந்துகொண்டாள் என்பாள், பிறிதொன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் யாய் என்றும், அதனால் இற்செறிப்பு உண்டாதல் ஒருதலை யாகலின். யாம் இனி நின்னைத் தலைப்பெய்தல் அரிதாம் என அஞ்சுகின்றேம் என்பாள், அஞ்சினம் என்றும், இந்நிலை யில், நீ வரைவு மேற்கொண்டாலன்றி எமக்கு உய்தியில்லை என்பாள், அளியம் யாம் என்றும் அதனைத் துணிதற்குரிய முதல்வன் நீயே என்பாள், ஐய என்றும் விளங்க வுரைத்தாள்.. இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. 369. மதுரை மேலைக் கடையத்தார் நல்வெள்ளையார் தலைவியின் தமர் தலைமகற்கு வரைவு மறுப்பரென்றும் வேற்றவர்க்கு மகட்கொடை நேர்வரென்றும் நினைத்தற் குரிய சூழ்நிலை தமது பெருமனையில் நிலவக் கண்ட தலைவியும் தோழியும் அறத்தொடு நின்ற பின்பு, இடையறவின்றித் தலைமகன் வரைவொடு வருதலையே செயற்பாலன்; அதனைச் செய்யாது பொருள் கருதி அவன் தலைமகளைப் பிரிந்து சென்றான். களவு வாழ்வில் காதலர்ப்பிரிவு பெருங் கலக்கத்தையும் ஆற்றாமையையும் தோற்றுவிக்கும். இந்நிலையில், தலைவி பெருந்துயர்க்கு உள்ளாகி மனநோயுற்றாள். அவள் மேனியும் வேறுபாடு எய்திற்று. தலைமகன் குறித்த காலவெல்லை எய்து முன்பே. தலைவி ஆற்றாமை பெருகி வருந்துவதும், மேனி மெலிவதும் தோழிக்குப் பெருந்துன்பத்தைச் செய்தன; பொருந்து வனவற்றைத் தேர்ந்து நன்முறையில் தலைவியைத் தோழி வற்புறுத்தினாள். எனினும், தலைமகட்கு ஆற்றாமையே பெரிதாயிற்று. தோழி கூறுவனவற்றால் தெளிவு பிறவாமையால், தலைமகள் மனம் அழிந்து, "தோழி, தலைவன் தொடர்பால் எனக்கு உளதாகிய வேட்கைநோய், மாலைப்போது எய்துந் தோறும் பெருகி வருத்துகிறது; மாலைக்காட்சியும் என் மனத்தை மயக்கிக் கலக்குகின்றது. ஞாயிறு மலைவாயில் மறைவதும், குருகினம் வானத்தில் உயர்ந்து பறப்பதும், முல்லையரும்பு வாய்விரிந்து மலர்வதும் நிகழும் மாலைப்போது இன்றும் வருமாயின், கங்கையாற்று வெள்ளம் பெருகுங்கால் கரையிறந்து ஓடுவது போலக் காதல் வேட்கை பெருகி என் நிறையை யழித்து விடும்; அதனை எதிர்த்துச் செல்லும் திறம் எண்ணிப் பார்க் கின்றேன்; ஒன்றும் புலனாகின்ற தில்லை; என் செய்வேன்?" என்றாள். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மலர்வது காம நோய் என்ற சான்றோர் பொருளுரையைத் தலைவியின் இக்கூற்று இனிது விளக்குதல் கண்ட நல்வெள்ளையார் அதனை இப் பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். சுடர்சினம் தணிந்து குன்றம் சேர நிறைபறைக் குருகினம் விசும்புகந் தொழுக எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்புவாய் 1அவிழ்க்கும் பெரும்புன் மாலை இன்றும் வருகுவ தாயின் நன்றும் அறியேன் வாழி தோழி 2விரிதலை ஞெமையோங் குயர்வரை இமயத் துச்சி 3வாஅன் இழிதரும் வயங்குவெள் அருவிக் கங்கையம் பேரியாற்றுக் 4கரையிறந் துரைஇய 5சிறையரும் கடும்புனல் அன்னஎன் 6நிறையருங் காமம் நீந்து மாறே. இது, பட்ட பின்றை வரையாது, பொருள்வயிற் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் வன்பொறை எதிரழிந்தது. உரை : சுடர்சினம் தணிந்து குன்றம் சேர - ஞாயிறு தன் வெம்மை தணிந்து மேலைமலையை யடைய; நிறைபறைக் குருகினம் - நிறைந்த சிறகுகளையுடைய குருகுகள்; விசும்பு உகந்து ஒழுக - வானத்தில் உயர்ந்து செல்ல; எல்லை பைபயக் கழிப்பி - பகற் போதினைப் பையக் கழித்து; முல்லையரும்பு வாய் அவிழ்க்கும் - முல்லையரும்புகள் மலரும்; பெரும்புன் மாலை - மிகவும் புல்லிதாகிய மாலைக்காலம்; இன்றும் வருகுவ தாயின் - இன்றும் வருமானால்; நன்றும் அறியேன் -பெரிதும் அறியேன்; வாழி -; தோழி-; விரிதலை ஞெமை ஓங்கு உயர்வரை - விரிந்த தலையையுடைய ஞெமைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் உயர்ந்த மலையாகிய; இமயத்து உச்சி வாஅன் இழிதரும் - இமயத்தின் உச்சிக்கண் வானம் பெய்த லால் வீழும்; வயங்கு வெள்ளருவி - விளங்குகின்ற வெள்ளிய அருவி பாயும்; கங்கையம் பேரியாற்றுக் கரை இறந்து உரைஇய - கங்கையாகிய பெரிய யாற்றின் கரையைக் கடந்து பரந்த; சிறையருங் கடும்புனல் அன்ன - அணையிடற் கரிய பெரு வெள்ளம் போல; என் நிறையரும் காமம் நீந்துமாறு - என் னால் அடக்கி நிறுத்தற் கரிதாகிய காதற் பெருக்கைக் கடந்து அமையும் திறத்தை எ.று. தோழி, வாழி; சுடர் சேர, குருகினம் உகந்து ஒழுக, எல்லை கழிப்பி முல்லையரும்பு வாய் அவிழ்க்கும் புன்மாலை, இன்றும் வருகுவ தாயின், கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல் அன்ன, காமம் நீந்துமாறு, நன்றும் அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வெயிலின் வெம்மையைச் சினம் என்பது இலக்கணை. குன்றம், மேலைமலைத் தொடர். வளர்ச்சி முற்றிய சிறை யென்றற்கு, நிறைபறை என்றார். உகத்தல், உயர்தல். குன்றின் தலைக்குமேல் விசும்பில் உயர்ந்தவழி ஞாயிற்றின் ஒளி தோன்றிச் செல்லும் திசை காட்டலின், குருகினம் விசும்பு உகந்து ஒழுகுகின்றன என உணர்க. ஒழுகுதல் - செல்லுதல். எல்லை, பகற்காலம். பையபைய என்பது பைபய என வந்தது. அரும்பு வாய் அவிழ்க்கும் என்றது, மலரும் என்றவாறு. பெரும் புன்மாலை, பெருமை மிகுதி மேற்று, ஒளிதேய இருள் பெருகும் காலமாதலின் புன்மாலை எனப்பட்டது; "ஆர்வலர் புன்கணீர்1" என்புழிப் போல, மாலைப்பயன் கொள்வாரது புன்மை மாலைமேல் ஏற்றப்பட்டது என்றுமாம். நன்று, பெரிது. விரிதலை ஞெமை, நாற்றிசையும் கிளை விரிந்து நிற்கும் ஞெமைமரம். வான், மழைமுகில். அருவிகள் பல வந்து பாய்தலால், கங்கை பேரியாறாயிற்று என்றற்கு வெள்ளருவிக் கங்கைப் பேரியாறு என்றார். உரைஇய - பரந்த. இமய அடிவரைக்கும் கங்கை போந்து கலக்கும் கடலுக்கும் இடைநிலம் குறுகி யிருத்தலால் அதன் பெருக்குக் கரையிறந்து பரவுவது இயல்பா மென அறிக. சிறை, அணை. கடும்புனல், விரைந்தோடும் வெள்ளப் பெருக்கு. நிறையருங் காமம், அடக்கி நிறுத்தற் கரிய காமவேட்கை. காமவேட்கையையும் வெள்ளம் என்பது பற்றி நீந்துமாறு என்றார். வரைவு பயக்கும் அழிவில் கூட்டத்தை நினைந்து மகிழ்வுறும் தலைமகட்குத் தலைமகனது பிரிவு ஆற்றாமை மிகுவிப்ப, ஆற்றுவிக்கும் தோழிக்கு எதிரழிந்து கூறுபவள், பகற்போதில் பொறிவழி யோடி உலகியற் காட்சிகளில் தோயும் இளமையுணர்வு, மாலைப் போதில். ஞாயிறு மறைய, அக்காட்சிக்கு வேண்டும் ஒளி குன்றுதலால் மடங்கி, அகத்தே மீளுவதால், அங்கே ஒடுங்கிக் கிடக்கும் காதல் வேட்கை, மேலெழுந்து வெதுப்புவது பற்றிச் சுடர் சினம் தணிந்து குன்றம் சேர என்றும், நிறைபறைக் குருகினம் விசும் புகந்து ஒழுக என்றும், எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்புவாய் அவிழ்க்கும் பெரும்புன் மாலை என்றும், மாலைப்போதினை விரித்துரைத்தாள். சுடர் சினந்தணிந்து குன்றம் சேரவே, என் காதல்வேட்கை வெம்மை மிகுந்து மேலோங்குகிறது என்பதும், நிறைபறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுகவே, உடலக முற்றும் நிறைந்து நிற்கும் வேட்கைக் கடலுள் என் உள்ளம் அழுந்துகிற தென்பதும், எல்லை பைபயக் கழிப்பி முல்லையரும்பு வாயவிழ்க்கு மாறுபோல, என்னுள்ளத்துக் காதல், பகற்போதில் சிறப்பது தெரியாது பெருகி மாலைப்போதில் கையிகந்து விளங்குகிற தென்பதும் தலைவியின் குறிப்பெனக் கொள்க. தான் எய்தி வருந்தும் துன்பத்தை மாலைப்போது செய்வதாகக் கருதுகின்றா ளாதலால். அதனைப் பெரும்புன் மாலை என்றும், கழிந்த நாட்களில் இவ்வாறு கழிபெருந் துன்பத்தை விளைத்த பெரும்புன் மாலை இனிவரின், அக்காலத்துத் தோன்றும் வேட்கைப் பெருக்கில் அழுந்தி அலைப்புண்டு கெடுவதல்லது வேறு உய்யும் நெறி அறியேன் என்பாள், பெரும்புன் மாலை இன்றும் வருகுவதாயின் நன்றும் அறியேன் என்றும், அதுபற்றித் தான் எய்தும் கையறவு புலப்பட வாழி தோழி என்றும், தன்னுள்ளத்திற் பெருகும் காதல்வேட்கையின் இயல்பு இதுவென வுரைப்பாள், கங்கையம் பேரியாற்றுக் கரையிறந் துரைஇய சிறையருங் கடும்புன லன்ன நிறை யருங் காமம் என்றும் கூறினாள். கங்கை பெருக்குப் போல என் காதற்பெருக்குக் கடுமையுற்றுளது என்றும், அது கரையிறந்து பரவுவது போல என் வேட்கையும் வன்பொறையாகிய கரையைக் கடந்து என் பெண்மையின் எல்லைமுற்றும் பரந்து பாய்கிற தென்றும், மேலும் அக்கங்கைப் பெருக்குச் சிறை யிடற் கரிதாயவாறு போல, என் காமப்பெருக்கும் அறிவு, நாணம், அச்சம் ஆகியவற்றால் தடுத்து நிறுத்தற் கரியதுகாண் என்றும், ஆதலால் யான் அதனை நீந்திக் கரைசேரும் திறம் அறியமாட்டாது வருந்துகிறேன் என்பாள், என் நிறையருங் காமம் நீந்துமாறு நன்றும் அறியேன் வாழி என்றும் கூறி னாள். இதனாற் பயன் தலைவி உள் நிறைந்த அவலத்தை உரைத்து அயாவுயிர்ப்பா ளாவது. 370. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் கதுவாய் என்பது உறையூரின் பகுதிகளுள் ஒன்று. இச் சாத்தனார் அங்கு வாழ்ந்தமைபற்றி, உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் எனப்பட்டன ராதல் வேண்டும். கதுவாய்கள் மேற் கதுவாய். கீழ்க்கதுவாய் எனவும் வழங்கும். சோழர் தலைநகராகிய உறையூர், ஏணிச்சேரி கதுவாய்ச்சேரி எனப் பல சேரிகள் கொண்டு காவிரியின் தென்கரையில் பரந்து விளங்கின மையின், ஊரெனப் படுவது உறையூர் என்ற பழமொழிக்கு இலக்காய் நின்றது. இங்கே இருந்த அறங்கூறு அவையம், தமிழகம் முழுதும் புகழ் பரவி விளங்கிற்று; அதுபற்றிச் சான்றோர், உறையூரை, "அறம் துஞ்சு உறந்தை" எனச் சிறப் பித்தனர். இவ்வூரவராகிய சாத்தனாரைப் பற்றி வேறு குறிப் பொன்றும் கிடைக்கவில்லை. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. மனையறத்தில் மாண்புற் றொழுகிய தலைமக்களில், தலைவி தலைச்சூல் கொண்டு அழகிய புதல்வனைப் பெற்று மகிழ்ந் திருக்கையில், தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று. அதனை யறிந்ததும், தலைவியுள்ளத்தில் பொறாமை மீதூர்ந்தது. தலைவனது பரத்தைமை, அவள்பால் ஊட லுணர்வைத் தூண்டிற்று, உலகியல்பற்றித் தலைமகன் மனைக்கு மீள்வான் பாணனை வாயிலாக விடுப்ப, அவன் மறுக்கப்பட்டமை கண்டு, பாணனொடு தானே தன் மனைக்கு வந்தான். ஊடியிருந்த தலைவி முகம் சிவந்து வாயிதழ் துடிப்ப நுதல் வியர் பொடிப்ப வெகுண்டிருப்பது உணர்ந்து அவளது ஊடல் தீரும் வாயில் யாது என எண்ணினான். சினம் தணிப்பது உவகையல்லது பிறி தில்லை; அது, புகழ்ச்சியாலும் பண்டு நிகழ்ந்த இன்பச்செய்தியை நினைப்பிப்பதாலும் உளதாகும். புகழுரை பயன்படாமை கண்ட தலைவன் முன்னைய இன்பநிகழ் வொன்றை நினைப்பிக்கலுற்றுப், பாணனை நோக்கி, "பாண, இவண் வருக" எனத் தன்முன் நிறுத்தி, "தலைவி நெய்யாடித் தன் மகனோடு இம்மனையின்கண் படுக்கையில் கிடந்த நாள், அவனை ஈன்று நமது குடிக் குதவிய நற்செயலை வியந்து அவளை யணுகி இதுகாறும் இளையள் குறுமகள் எனக் கொண்டிருந்த பெயர்களைப் போக்கி முது பெண்டாகி உறங்குகின்றாய்போலும் எனச் சொல்லிக் குவளை மலர் ஒன்றை அவள் வயிற்றில் மெல்ல ஒற்றி அவள் குண நலங்களை உள்ளி நின்றேனாக. என்னைப் பார்த்துக் குறுநகை கொண்டாள்: அதனை யான்நோக்கவும் அவள் உடனே தன் கண் களைக் கையாற் புதைத்து மறைத்துக் கொண்டாள்; அப் பெற்றியாள் இப்போது முகம் சிவந்து ஊடுவது பற்றி நகைத்து மகிழலாம்" என்று நகைத்தான். அவளும் நகைத்து ஊடல் தீர்ந்தாள். இக்கூற்றின்கண், தலைவி கொண்ட ஊடலை முன்னைய இன்ப நிகழ்ச்சி கூறி மகிழ்வித்துத் தீர்க்கும் தலைவனது சூழ்ச்சி நலம் கண்ட உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் அதனை இப் பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூல் நம்குடிக் குதவி நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் 1இலங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் திதலை யல்குல் முதுபெண் டாகித் துஞ்சுதி 2யோஎம் அஞ்சி லோதிஎனப் பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி 3நின்றனெ னல்லனோ யானே எற்கண்டு முகைநாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே. இஃது 1ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் முன்னிகழ்ந் ததனைப் பாணற்குச் சொல்லியது. உரை : பாண - பாணனே; வாராய் நகுக - வருக, நகையாடி மகிழலாம்; நேரிழை - நேரிய இழை யணிந்த காதலியாகிய தலைமகள்; கடும்புடைக் கடுஞ்சூல் - சுற்றம் விரும்பிச் சூழ்தலையுடைய தலைச்சூல் கொண்டு; நம் குடிக்கு உதவி - நம் குடியை விளக்குறுத்தும் மகவைப் பெற்று உதவி; நெய் யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் - நெய்யோடு விரவி யொளிரும் வெண்கடுகின் திரண்ட விதைகள்; இலங்குநகர் விளங்க - விளங்குகின்ற நம் மனையகம் பொலிவுறுமாறு; கிடந்தோள் குறுகி - கிடந்தாளை அருகிற் சென்று; புதல்வன் ஈன்றென - புதல்வனை ஈன்றதனால்; பெயர்பெயர்த்து - இளையள் குறுமகள் என்ற பெயர்களைப் போக்கி; அவ்வரி திதலை அல்குல் முதுபெண்டாகி - அழகிய வரியும் திதலை யும் அல்குலு முடைய முதுபெண்டு என்னும் பெயரெய்தி; துஞ்சுதியோ- உறங்குகின்றாய் போலும்; எம் அஞ்சில் ஓதி - எம்முடைய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்; என - என்று சொல்லி; அகட்டில் குவளை பன்மாண் ஒற்றி - அவள் வயிற்றில் குவளைமலர் கொண்டு பன்முறையும் ஒற்றி; யான் நின்றனென் அல்லனோ - யான் நின்றேனன்றோ; எற்கண்டு - அப்போது என்னைப் பார்த்து; நாண்முகை முறுவல் தோற்றி- முல்லையின் புதுமுகை போலும் பற்கள் தோன்ற முறுவலித்து; தகைமலர் உண்கண் புதைத்து உவந்தது - அதனை யான் நோக்குதற்கு நாணித் தன் அழகிய மலர் போன்ற கண்களைத் தன் கைகளால் மூடி மறைத்து மகிழ்ந்த செய்தியையுரைத்து. எ-று. பாண, நேரிழை கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி, நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி, ஈன்றெனப் பெயர்பெயர்த்து, முதுபெண்டு ஆகித் துஞ்சுதியோ, எம் அம் சில்லோதி எனக் குவளை ஒற்றி யான் நின்றனெனல்லனோ; எற்கண்டு முறுவல் தோற்றிக் கண் புதைத்து உவந்தது, நகுகம், வாராய் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நேரிழை : தலைவிக்கு அன் மொழித்தொகை. கடும்பு, சுற்றம். செல்வமகளிர் தலைச்சூல் கொண்டவழிச் சுற்றத்தார் சூழ இருப்ப ராதலின், கடும் புடைக் கடுஞ்சூல் என்றார். தலைச்சூல், மகளிர்க்குப் புதி தாகலின், அக்காலை உளதாகும் வயாநோய் மிகப் பெரிதாய்த் தோன்றுவது பற்றிக் கடுஞ்சூல் எனப்பட்டது. போர்ப்புண் பட்ட ஆடவரும் கருவுயிர்த்த மகளிரும் உறையும் மனையிற் காப்பாக வேப்பந் தழையினைச் செருகிவைப்பதும், வாயிலில் எண்ணெய் கலந்த வெண்கடுகு பூசிவைப்பதும் பழந்தமிழர் மரபு. "வேம்புசினை யொடிப்பவும் காஞ்சி பாடவும், நெய் யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், எல்லா மனையும் கல்லென் றவ்வே1" எனச் சான்றோர் குறிப்பது காண்க. மகவீன்ற மகளிர்க்கு வாலாமை நீங்குதற்கு நெய்யாடி நீராட்டுவதும், ஐயவி புகைப்பதும் மருத்துவமுறை. பெயர், மகப்பேற்றுக்கு முன் இளையள் குறுமகள் என வழங்கும் பெயர். மகப் பெற்றவள் இளமை கழிந்து முதுபெண்டு எனப்படுதல் பற்றிப் பெயர் பெயர்த்து என்றார். பெயர்த்தல், நீக்குதல். சூலுற்ற காலத்து விரிந்திருந்த தோல். கருவுயிர்த் தபின் சுருங்கி வரி வரியாக மடங்கி யிருத்தலால் அவ்வரி என்றார். திதலை, துடையிலும் அடிவயிற்றிலும் பொன்னிறம் கொண்டு தோன்றும் தித்தி. அகடு, வயிறு, அக்காலத்தே மகளிரை ஆடவர் தீண்டுதல் நன்றன் றென்ப; அதனால் தீண்டுதல் வேண்டியவிடத்து, மெல்லிய குவளைமலர் கொண்டு ஒற்று தல் கூறினார். இது, நெய்யாட்டுச் சடங்குகளில் ஒன்று. நாண்முகை, மலரும் செவ்வி எய்திய அரும்பு; ஈண்டு முல்லை மேற்று; தகைமலர், அழகிய மலர். உவந்தது : காலங்காட்டும் தொழிற்பெயர். இதனைத் தொல்காப்பியர் தொழில்நிலை யொட்டு என்பார். தலைவனது பரத்தமை பொறாது ஊடியிருந்த தலை மகள்பால் அது தீர்க்கும் வாயிலாய்ப் போந்த பாணன் மறுக்கப்பட்டதனால், அவனோடு தலைவன் நேரே போந்து மனைக்குட் புக்க போது, பாண்மகன் புறங்கடையில் நின்றா னாக, தலைவியின் சினத்தாற் சிவந்த முகமும் வியர்த்த நுதலும் கண்டு, அவளது உள்ளத்தைக் கலக்கிக் கவர்ந்தோங்கும் சினம் தணிதற்குரிய சூழ்ச்சியாக, அவள் முன்பு நெய்யாடிய நாள் நிகழ்ந்த உவகைச் செய்தி உரைக்கலுறு கின்றானாகலின் தலைவன் பாணனைக் கூஉய், வாராய் பாண என்றான். பின்பு நெய்யாடிய நாளை நினைப்பித்தற்கு, அவள் கடுஞ்சூலுற்று மகற்பயந்த செயலைச் சிறப்பித்துக் கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி என்றும், பின்பு நெய்யாடிக் கிடந்த கிடக்கையை நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் இலங்குநகர் விளங்கக் கிடந்தாள் என்றும் கூறினான். மனைவாயில் நெய் கலந்த ஐயவி பூசப்பெற்றும், முன்றில் வேம்பின் பைந்தழை செருகப்பெற்றும் தலைவி கிடந்த கட்டிற்பக்கலில் விளக்குகள் வைக்கப்பெற்றும் ஒளி சிறந்தமை தோன்ற, இலங்குநகர் எனவும், விளங்கக் கிடந்தோள் எனவும் குறித்தான். மனையை மாண்புறுத்து வனவற்றுள், மக்கட்பேறு நன்கலமாய்க் குடிக்கு விளக்கம் தருவதுபற்றிக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி என்றான். கணவன் மனைவியர் இருவரும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணை யாயினும், கணவற்குச் சிறப்புடைத் துணை மனையாள் என்பது தோன்றத் திருவள்ளுவர் மனைமாண்புடைய மகளை வாழ்க்கைத் துணை என்றது நினைவு கூரற்பாற்று. ஈண்டு, வாழ்க்கைத் துணையாய்த் தலைவி, எதிர்வில் தமது குடியைத் தாங்கும் மதலையாக மகற்பெற்று அளித்த நலத்தை உதவி என்று பாராட்டினான். அச்சொல்லைச் செவியேற்கும் தலை மகட்குத் தான் மகற்பெற்றது, தம் குடிக்குச் செய்த உதவியாகக் கருதப்படுவது மனத்தில் அமைதியும் தெளிவும் பிறப்பிக்கிறது. பின்பு, அவள் நெய்யாடிக் கிடந்தபோது, தான் சென்று அவளைக் கண்டது கூறுவானாய், அவளைக் குறுகித் தன் மெய்யால் தீண்ட லாகாமையின் சொல்லாடலுற்று, அவளது கூந்தல் விரிந்து ஐயவிப்புகை கமழக் கிடந்தமையால் எம் அஞ்சிலோதி என்றும், இனி நின்னை இளையவளே, குறு மகளே என்றல் நீங்கியது; நீ இனிய புதல்வனைப் பெற்றதும் முதுபெண்டாயினை. ஆதலால் உறங்குகின்றாய் போலும் என்பான், புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ் வரித் திதலை யல்குல் முதுபெண்டாகித் துஞ்சுதியோ என்றும் கூறினான். வரியும் திதலையும் பண்டும் உளவேனும், ஈன்றணிமைக்கண் விளங்கித் தோன்றலின் அவ்வரித் திதலை யல்குல் முதுபெண்டு என எடுத்து மொழிந்தான். சொல்லாடி, அங்கே கிடந்த குவளைமலரை யெடுத்து, அவள் வயிற்றில் ஒற்றினா னாகலின் பன்மாண் அகட்டில் குவளை யொற்றி என்றான். மகன் பிறந்தானைத் தந்தை சென்று காண்பது என்பது ஒரு சிறப்புவிழாவாகத் தமிழரிடையே முன்னாளிலும் இடைக்காலத்திலும் நடந்து வந்தது. அக்காலத்தில் கடுஞ்சூல் உதவி முதுபெண்டாயினை என வாயாற் சொல்லிக் கையால் குவளைமலர்கொண்டு மனைவியின் மகவிருந்த வயிற்றில் கணவன் ஒற்றுவது பழந்தமிழ் மரபு. இச்சிறப்புக்குப் பின், தந்தை எப்போது வேண்டினும் தன் மகனைச் சென்று காண்பான்; அம்முறையில் ஒரு கால் தலைமகன் சென்ற போது நடந்தது இந்நிகழ்ச்சி யென அறிக. தலைவன் கையால் அவளைத் தீண்டின், அவள் மார்பிற் பாற்பயன் குன்றும் என்ப. இவ்வாறு குவளை யொற்றியதும், அவள் தன்னைக் காண்பது குறித்து அருகில் நின்று நோக்கியதும் கூறுவான், நின்றனென் அல்லனோ யானே என்றான். அது கேட்டதும் தலைமகட்கு உள்ளத்து நிலவிய சினம் மாறி உவகை அரும்பத் தலைப் பட்டது. அந்நிலையில், அவன் மேலே நிகழ்ந்தது கூறத் தொடங்கியதும், அவள் தன் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள் என்பான், எற்கண்டு என்றும், அக்காட்சியில் அவட்குத் தன்பால் இருந்த காதல் இனிது விளங்கி, அவள் வாயில் அரும்பிய முறுவலாய் வெளிப்பட்ட தென்றற்கு, நாண்முகை முறுவல் தோற்றி என்றும், அதனைத் தான் கண்டுகொண்டதற்குப் பெரிதும் நாணிக் கண்புதைத்தாள் என்பான், தகைமலர் உண்கண் புதைத்து உவந்தது என்றும் இசைத்தான். அதனால், தலைமகட்குச் சினம் அறவே தணிந்து மகிழ்ச்சி மீதூர்ந்தது. அதனைக் குறிப்பாய் உணர்ந்த தலைவன், அன்று, இத்துணை யன்புடைய ளாயினாள், இன்று நம்மைக் கண்டு சினம் கொண்டு மறுப்பது இளமை பொருளாகப் பிறந்த நகைவிளையாட் டாதலால், நாம் நகுதல் வேண்டும் என்பான், நகுகம் என்றான். ஒருவர்பானின்றும் பலர்பாற் பரந்து பற்றும் படர்நோய் போல் நகையும், காண்பார் பலரையும் பற்றும் இயல்பிற் றாதல்பற்றி நகுகம் வாராய் பாண என்றான் என்றுமாம். இதனாற் பயன் தலைவி ஊடல் உணர்ந்து கூடுவாளாவது. 371. ஒளவையார் மனைவாழ்வில் இனிதிருந்த தலைமக்களில், தலைவன் பொருள்வினை குறித்து மனைவியைப் பிரிந்து சென்றான். தலைவிபால் விடை பெற்ற காலத்தில் தான் மேற்கொண்ட வினையை முடித்துக் கார்காலத் தொடக்கத்தில் மீளுவதாக அவன் வற்புறுத்தினான். அவன் வரம்பு இறத்தல் தனக்கு அற மன்று என்னும் கற்பு மாண்புடையளாதலால், தலைவியும் அவன் சொல்வழியே தன் மனைக்கண் இருந்து அதற்குரிய கடன்களைச் செவ்வையாகச் செய்தொழுகினாள். வினைமேற் சென்ற தலைவன் அதனைச் செய்து முடித்தற்குரிய வழிவகை களில் தன் கருத்தைச் செலுத்தினான். அவன் உள்ளம் செய்வினைக் குரிய எண்ணங்களையே சிறப்பாகக் கொண்டிருந்தது. அதனால் பொருள்வினையும் குறித்த காலத்தில் குறிக்கொண்ட அளவில் முற்றுதலுற்றது. மரஞ்செடிகொடிகள் நிறைந்து பசுந்தழை போர்த்துத் தோன்றும் குன்றங்களில் நின்ற கொன்றை காயா முதலிய மரங்கள் தழைத்துப் பொன்மையும் நீலமுமாகிய நிறம் பெற்ற பூக்களை மலர்ந்து கார்கால வரவைத் தோற்றுவித்தன. கார்முகில் எழுந்து மலையிட மெங்கும் மின்னித் தலைவன் நாடு இருந்த திசை நோக்கிச் செல்லலுற்றன. அதனை அவன் கண்டான். வினை முடிதலின் அவன் மனத்தில் தலைவியின் காதல் நினைவு எழுந்தது. கார்முகில் வரவு காணின், அவள் தன் வரவு நினைந்து வருந்துவள் என்பது தோன்றிற்று. அவன் எதிரில் நின்ற பாகனை நோக்கினான்; "பாகனே, இக்கார் முகில்கள் மின்னிக் கொண்டு நம் காதலி யுறையும் இடம் நோக்கிச் சென்று மழை பெய்யத் தொடங்குகின்றன; அது காணின் அவள் நம் வரவு நினைந்து வருந்தி அழுவள். மாலைப் போதில் கோவலர் ஊதும் குழலிசை அவள் மனத்துக் காதல் வேட்கையைத் தூண்டித் துயருறுத்தும், ஆதலால் நாம் விரைந்து செல்வது கடனாதலின் தேர் பண்ணுக" என்றாள். இக் கூற்றின்கண், மனைவாழ்வில் கணவன் மனைவியரைப் பிணித்து நிற்கும் காதலுறவு, வினைசெய் கடன் தோன்றியபோது ஒடுங்கியிருந்து தலைவன் உள்ளத்தை வினைக்கு இடனாக்கி அறிவுவழி இயக்கி, அவ்வினை முடிவில் மேற்பட்டுத் தோன்றி அவள்பால் ஈர்த்துக் கொணர்ந்து புணர்க்கும் நலம் கண்ட ஒளவையார் இதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். இப்பாட்டிற் சில அடிகள் சிதைந்துள்ளன. காயாங் குன்றத்துக் கொன்றை போல மாமலை விடரகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பெயல்தொடங் கினவே 1பெய்யா வானம் நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங் கினளே ஆயிழை அதன்எதிர் குழல்தொடங் கினரே கோவலர் 2தழங்குகுரல் உருமின் கங்கு லானே. இது, வினைமுற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது. உரை : காயாங் குன்றத்துக் கொன்றை போல - காயாமரங்கள் நிறைந்த மலைமேல் பூத்து நிற்கும் கொன்றை மரம்போல; மாமலை விடரகம் விளங்க மின்னி - பெரிய மலைப்பிளவுகள் ஒளிபெறுமாறு மின்னி; மாயோள் இருந்த தேஎம் நோக்கி- மாமைநிறமுடைய தலைமகள் உறையும் இடம்நோக்கி; வியல் இருவிசும்பகம் புதையப் பாஅய்- அகன்ற விசும்பிடமெல்லாம் மறையுமாறு பரந்து; பெய்யா வானம் பெயல் தொடங்கின- இதுகாறும் பெய்யாதிருந்த மழைமுகில்கள் பெய்தலைத் தொடங்கிவிட்டன; நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ - ஒளி செய்யும் விளக்கம் பொருந்திய தொடிகள் கழன்றோட; ஏங்கி அழல் தொடங்கினள் - ஏங்கி அழுதலை மேற்கொண்டாள்; ஆயிழை - ஆய்ந்த இழைகளை யணிந்த தலைவியாகிய அவள்; அதன் எதிர் குழல் தொடங்கினர் கோவலர் - அதற்கு எதி ராகக் கோவலர்தம் குழலை ஊதத் தொடங்கிவிட்டனர்; தழங்குகுரல் உருமின் கங்குலான் - முழங்கும் ஓசையையுடைய இடிகள் தோன்றும் இரவின்கண் எ.று. வானம் காயாங் குன்றத்துக் கொன்றை போல மின்னி. நோக்கி, விசும்பகம் புதையப் பாஅய்ப் பெய்யா வானம் பெயல் தொடங்கின; தொடி ஞெகிழ ஏங்கி ஆயிழை அழல் தொடங்கினள்; கங்குலான் கோவலர் குழல் தொடங்கினர்; ஆதலால், விரைந்து தேர்பண்ணுக எனச் சில சொல் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. காயா குன்றம் காயாங்குன்றம் என மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது; "மாமரக் கிளவியு மாவு மாவும், ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன, அகரம் வல்லெழுத் தவையவண் நிலையா, னகர மொற்று மாவு மாவும்1" என்பதில் அவண் என்ற இலேசினால் இதனை அமைப்பர் இளம்பூரணர். காயாமரம் பூத்து நிற்கும் குன்றத்தில் கொன்றை பூத்து நிற்பது போல என்றற்குக் காயாங் குன்றத்துக் கொன்றை போல என்றார். முகில்களிடையே தோன்றும் மின்னொளி மலை மேல் படருங்கால் மலைப்பிளவுகள் இனிது தோன்றுதல் பற்றி விடரகம் விளங்க மின்னி என்றார். கார்காலத்துக் கருமுகில்கள் விசும்புமுழுதும் பரவிநின்று பெய்தல் இயல்பாகலின் வியலிரு விசும்பகம் புதையப் பாஅய் என்றார். நிழல், ஒளி. ஆயிழை என்றது, மாயோள் என்றதனைச் சுட்டிநிற்றலின், சுட்டுப் பெயராயிற்று. குழல் இசைக்கத் தொடங்கியதைக் குழல் தொடங்கினர் என்றார். இடியோசையினும் மின்னொளி விரைந்து செல்வதாகலின், இடியினைப் பின்னர்க் கூறினார். தன் பெருமனையினின்றும் பிரிந்து சென்ற தலைமகன் வினையிடத்து நின்ற காலை, வினை முடிவெய்துவதும், தலைமகட்குத் தான் வற்புறுத்த கார்கால வரவும் காண்டலும், அவன் உள்ளத்தில் ஒடுங்கியிருந்த மனையமர் காதல் முற்பட்டு நிற்கவும், தான் உறையு மிடத்தைச் சூழநோக்கினாற்குக் கார்முகில்கள் திரண்டு மலைகளில் தங்கி மின்னித் தமது வரவு தோற்றுவிக்கவே மாமலை விடரகம் விளங்க மின்னி என்றும், அவை வடகிழக்கிலிருந்து தென்மேற்கை நோக்கி வீசும் காற்றில் மிதந்து சென்றுகால் இறங்குவது தன் மனைவி யிருந்த இடம் சென்று அவட்குத் தான் உரைத்துப் போந்த கார்காலம் மழைபெய்யத் தலைப்பட்டுத் தன் வரவைத் தலைமகட்குத் தெரிவிப்பது போல்கின்றது என்பான், மாயோள் இருந்த தேஎம் நோக்கி விசும்பகம் பாஅய்ப் பெயல் தொடங்கின என்றும் கூறினான். நீனிறம் கொண்டு நிற்கும் மலையகத்தே கருமுகில் மின்னி விளங்குவது காயா மரங்கள் பூத்து விளங்கும் குன்றில் கொன்றைமரம் ஆங்காங்கு நின்று பொன்னிறப் பூக்கள் மலர்ந்து தோன்றுவது போறலின், காயாங் குன்றத்துக் கொன்றை போல எனவும், ஏனைக் காலத்திற் போலாது, கார் காலத்தில் முகில் விசும்பு முழுதும் பரந்துநின்று பெய்தல் இயல்பாதலின் வியலிரு விசும்பகம் புதையப் பாஅய் எனவும், வினை நிகழ்ந்த காலம் வேனி லாதலின், அக்காலமுற்றும் பெய்யா திருந்தமையும், அக் காலத்து இறுதியில் போந்து பெய்வதும் கண்டு கூறுமாறு தோன்றப் பெயல் தொடங்கினவே பெய்யா வானம் எனவும் சிறப்பித்து மொழிந்தான். கார்மழை தோன்றுங்கால், தான் மனைக்கண் சேர்ந்திருக்க வேண்டியவ னாகலின், தான் இதுகாறும் சென்றடையாமை தலைமகட்கு மனக்கலக்கத்தை யுண்டாக்கி மேனி மெலிவிக்கத் தொடி நெகிழ்ந்து வருந்தி அழுவள் என்பான், நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங்கினளே ஆயிழை என்றான். சிறிது நெகி ழினும் மெலிவு பெரிது தோன்றநிற்கும் தொடி என்றற்கு நிழல்திகழ் சுடர்த்தொடி என விதந்தான். அழுதல் தெளிய வுணர்ந்த தாகலான், தொடங்கினள் என இறந்த காலத்தாற் கூறினான். கார்வரவும், தான் வாராமையும் எண்ணி வருந்தும் தலைமகட்கு மாலைப்போது மிக்க மனநோயைச் செய்ய அப்போது மனைநோக்கி மீளும் கோவலர் ஊதும் குழலிசை, எரியும் நெருப்பில் எண்ணெய் பெய்வது போல அதனை மிகுவித்து ஆற்றாமை எய்துவிக்கும் என்பான், அதன் எதிர் குழல் தொடங்கினாரே கோவலர் என்றும், அம் மாலையைத் தொடரும் இரவுப் போதில், இடியேறு முழங்கி அவலத்தை யுண்டாக்கும் என்பான், தழங்கு குரல் உருமின் கங்குலானே என்றும் எடுத்துரைத்தான். இதனாற் பயன், இந்தத் துன்பநிலை அவட்கு எய்துமுன் யாம் சென்று சேர்தல் வேண்டும்; ஆகவே, தேரை விரைந்து பண்ணுக என்பது. தேர் பண்ணிப் பாகன் தேரை விரைந்து கடவுவானாவது பயன். 372. உலோச்சனார் களவின்கண் காதலுறவு கொண்டு அதனை உரிய முறையில் வளர்த்து வரும் தலைமக்களில், தாயர் செயல்களால் தன்னைப் புறத்தே சென்று மீனுணங்கல் காத்தல் முதலியன புரிய விடாது இல்லிடத்தே செறிப்ப ரென்ற குறிப்புத் தோன்றவே, அதனால் தலைமகனைக் கண்டு இன்புறல் முடியாது எனத் தலைவி எண்ணி ஆற்றா ளாயினாள்; அதனால், மீனுணங்கலைக் கவர வரும் புள்ளினங்களை ஓப்பும் மெல்லிய நெடிய கோலைக் கையிற் பிடித்தவண்ணம் செயலற்றுக் கவலையில் ஆழ்ந்திருந்தாள். அதனைக் குறிப்பாய் உணர்ந்த தோழி, ஆயமும் பிறரும் அறியா வண்ணம் அவ்விடத்து ஒருசிறைக்கண் அழைத்துச் சென்று உண்மை தெளிந்து ஆற்றத் தகுவ தொன்று கூற லுற்றாள். சிறைப்புறத்தே தலைமகன் வந்து நின்றான். அவன் செவிப் படுமாறு உள்ளுறையால், தலைவியைப் போக்குடன் படுமாறு கூறி, வெளிப்படையில், "தோழி, நீ இதற்கெல்லாம் மனம் அழிதல் தகுதியன்று; நெய்தற் சேர்ப்பனான தலைமகன், வளைகள் நிறைந்து கிடக்கும் வெண்மணல் பரந்த இடத்தின்கண், தக வுடைய முறையில் நின்னை மணந்தான்; அதனால் நின்பால் உளதாகிய வேறுபாட்டை நோக்காது அன்னை, தன் பெருமை சான்ற உள்ளத்தால் அன்போடு நோக்கி, நின் மனக்கவற்சி கண்டு இக்கோல் ஓச்சியவழி ஒசிந்து கெடுதற்கு அஞ்சுகின்றாய்; அஃது உடைந்தது பற்றி அழாதே என்று கூறுவள்; இவ்வாறே ஊரவரும் கூறுவர். இவ்வாற்றால் இற்செறிப்பர் என எண்ணி வருந்துதல் வேண்டா" என்றாள். தோழியின் இக்கூற்றின்கண், இற்செறிப்புக்கு அஞ்சிய தலைவியை அது நிகழாதென ஆற்றுவிக்கும் தோழி, ஊரவர் மேல் வைத்து, அன்னையின் அன்பு உள்ளத்தைச் சிறப்பித் துரைக்கும் நயம் வியந்த உலோச்சனார் அஃது இனிது விளங்க இப்பாட்டிற் பாடுகின்றார்: அழிதக் கன்றே தோழி கழிசேர்பு கானற் பெண்ணைத் தேனுடை அழிபழம் வள்ளிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு அள்ளல் இருஞ்சேற் றாழப் பட்டெனக் கிளைக்குரு கிரியும் துறைவன் வளைக்கோட் 1டகவயின் வெண்மணல் தகவின் வேட்டநின் அண்ணல் உள்ளமொ 2டமர்ந்தனள் நோக்கி அன்னை தந்த அலங்கல் வான்கோ 1டுலைந்தாங் கொசிதல் அஞ்சினை உடைந்ததற் கினையல் என்னும் என்பர் மனையிருந் திருங்கடல்2 துழவும் பனித்தலைப் பரதவர் திண்டிமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழிநல் லூரே. இது, மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகின்ற தலைமகள், ஆற்ற வேண்டி, உலகியன்மேல் வைத்துச் சிறைப் புறமாகத் தோழி செறியாரெனச் சொல்லியது. உரை : தோழி -; அழிதக்கன்று - மனம் அழிந்து வருந்துதல் தக்கதன்று; கழி சேர்பு கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம் - கடற்கழியைச் சேர்ந்த கானலிடத்து நின்ற பனை யினது மிக முதிர்ந்த பழம்; வள்ளிதழ் நெய்தல் வருந்த - வளவிய இதழ்களையுடைய நெய்தல் வருந்துமாறு; மூக்கு இறுபு - காம்பு அற்று; அள்ளல் இருஞ்சேற்று ஆழப்பட் டென - அள்ளற் சேறாகிய கரிய சேற்றில் ஆழ்ந்து புதைய வீழ்ந்ததாக; கிளைக்குருகு இரியும் துறைவன் - கிளைகளுடன் கூடி யுறையும் குருகுகள் அஞ்சி நீங்கும் துறையையுடைய தலை மகன்; வளைக்கோட்டு அகவயின் வெண்மணல் தகவின் வேட்ட நின் - சங்குகள் நிறைந்த கரையகத்து வெண்மணல் பரந்த இடத்தே தகுதிப்பட மணந்துகொண்ட நின்னை; அண்ணல் உள்ளமொடு அமர்ந்தனள் நோக்கி - பெருமை சான்ற உள்ளத்தால் அயிராது விரும்பிநோக்கி; அன்னை தந்த அலங்கல் வான்கோடு - அன்னையாவாள் மீனுணங்கலைக் கவர வரும் புள்ளினத்தை ஓப்புதற்பொருட்டுத் தந்த அசை தலையுடைய மெல்லிய கோல்; உலைந்தாங்கு ஒசிதல் அஞ்சினை- வளைந்து ஒடிந்து விடுதற்கு அஞ்சி வாளா இருக்கின்றனை; உடைந்ததற்கு இனையல் என்னும் - அஃது உடைந்துபோவதற்கு அழாதே என்று சொல்லுவாள்; என்பர் -என்று சொல்லுவர்; மனையிருந்து - மனையின்கண் இருந்தே; இருங்கடல் துழவும் பனித்தலைப் பரதவர் - கரிய கடலிடத்தே மீன் துழாவும் குளிர்ந்த தலையையுடைய மீன்வேட்டு வருடைய; திண்திமில் விளக்கம் எண்ணும் - திண்ணிய படகு களின் விளக்குகளை எண்ணும்; கண்டல் வேலிக் கழிநல்லூர் - கண்டல்களை வேலியாகக் கொண்ட மனைகளையுடைய கழிசூழ்ந்த நல்ல ஊரில் உள்ளவர்கள் எ.று. தோழி, துறைவன் தகவின் வேட்ட நின்னை உள்ளமொடு அமர்ந்தனள் நோக்கி, அன்னை, தந்த வான்கோடு உலைந் தாங்கு ஒசிதல் அஞ்சினை; உடைந்ததற்கு இனையல் என்னும், நல்லூரவர் என்பர் ஆதலால் அழிதக்கன்று எனக் கூட்டி வினைமுடிபு செய்க. நல்லூர் என்பர் என முடிக்க: நல்லூர் அன்மொழித்தொகை; கருங்குழல் வந்தாள் என்றாற்போல. மிக முதிர்ந்த பழம், அழிபழம் எனப்பட்டது. மூக்கு, பழம் ஒட்டியிருக்கும் காம்பு. அள்ளல், பழமையான சேறு. வளைக் கோடு, சங்குகள் நிறையக் கொண்ட கரையிடம். அண்ணல் உள்ளம், அன்பாற் பெருமை சான்ற உள்ளம். அலங்கல் வான்கோடு, அசைதலையுடைய வெண்மையான கொம்பு. மீன் உணங்கலைப் புள்ளினம் கவர்ந்தேகாவாறு காக்கும் பொருட்டுக் கையில் ஏந்தும் நெடிய மெல்லிய கோல், வான் கோடு எனப்பட்டது. உலைந்தாங்கு ஒசிதல், வளைந்து வலி குன்றி ஒடிந்துகெடல். அடிக்கடி நீர்க்குள் மூழ்குதலாலும் அலைகள் தம்மில் மோதுதலாற் பிறக்கும் நீர்த்திவலைகள் படிதலாலும் ஈரம் புலராமை பற்றிப் பனித்தலைப் பரதவர் என்றார். திமில், படகு. கண்டல், நீர் முள்ளி. நெய்தல் நிலத்தவளான தலைமகள் மீனுணங்கலைக் கவரும் புள்ளினங்களை ஓப்பும் கானலிடத்தே தலைமகனைக் கண்டு பயின்று வருங்கால் தாயர் செயல் வகைகளைக் கண்டு தன்னை இனி இற்செறிப்பா ரென்றும், அப்பொழுது தலை மகனைத் தலைப்பெய்தல் முடியாதென்றும் கவன்றிருக் கையில். அவள் கருத்தறிந்து ஆற்றுவிப்பாள் தோழி போந்து, "தோழி, நீ மனம் அழிந்து தளர்தல் வேண்டா" என்பாள், அழிதக் கன்று தோழி என்றும், நீ மணந்துகொண்ட தலை மகன் தகவு பெரிதுடையன் என்பாள், துறைவன் தகவின் வேட்ட என்றும், அதனால், நின்பாற் பிறந்த வேறுபாட்டை அன்னை நோக்கிற்றிலள் என்றற்கு, நின் அமர்ந்தனள் நோக்கி என்றும் கூறினாள். அன்னையின் பெருமை சான்ற உளளம், நின் வேறுபாட்டின் சிறுமையை நோக்காது, அன்பு நிறைந்து தன் பொதுநலமே நோக்கிற்றென்பாள், அண்ணல் உள்ள மொடு அமர்ந்தனள் நோக்கி என்றும் அவள் புள்ளோப்பு தற்குத் தந்த கோலையும் அதனைக் கையிலேந்தி மனங்க வன்று செயலற்றிருக்கும் நின்னையும் கண்ணுறும் ஊரவர், நீ, கோல் ஒசிந்து உலைதற்கு அஞ்சுகின்றாய் என்றும், அதனைக் காணும் நின் அன்னை கோல் உடைந்ததற்கு அழல் வேண்டா என்பள் என்றும் கூறுவர் என்பாளாய், அன்னை தந்த அலங்கல் வான்கோடு உலைந்தாங்கு ஒசிதல் அஞ்சினை என்றும், உடைந்ததற்கு இனையல் என்னும் என்பர் என்றும் கூறினாள். கடற்கண் பரதவர் திண்டிமிலின் விளக்குகட்கும் மனைக்கண் ணிருக்கும் தமக்கும் இயைபில்லை யாயினும். அவற்றைக் காண்டலும் எண்ணுதலும் ஊரவர் செய்வர் என்றது, நம் அன்னைக்கும் நமக்கும் அவரோடு இயைபின் றேனும், அவர்தாமே கண்டுரைத்தலின், இற்செறிப்பு நிகழாது என்பது ஒருதலை என்றவாறு. பெண்ணையின் அழிபழம் நெய்தல் வருந்தச் சேற்றில் வீழக் கண்டு கிளைக்குருகு இரியும் என்றது, ஆயமும் தாயரும் வருந்தத் தலைவனொடு போக்குடன்பட்டு அவன்பால ளாகுவையேல் அலர் கூறும் பெண்டிர் வாயடங்குவர் என உள்ளுறை கொள்க. இதனாற் பயன், தலைவி போக்குடன் படுவாளாவது. 373. கபிலர் காதலுறவு கொண்ட தலைமக்களில், தலைவி புனங்காவல் மேற்கொண்டிருந்த காலைத் தலைமகன் அவளை அவ்விடத்தே கண்டு அவளோடு புனத்திற் படியும் கிளியோப்புதல் அருவி யாடல் முதலிய செயல்களில் கலந்து இன்புற்று வந்தான். இவ் வகையில் இருவர் உள்ளத்தும் காதலன்பு பெருகி நிற்பது கண்ட தோழி, தலைவனை வரைந்து மணந்துகொள்ளுமாறு குறிப்பாய்த் தூண்டத் தலைப்பட்டாள். ஒருகால் அவன் தினைப்புனத்தின் ஒருபால் வந்திருப்பக் கண்ட தோழி, தலைவியொடு சொல்லாடு வாளாய், அவன் செவிப்படுமாறு, "தோழி, மலைநாடனாகிய தலைவனொடு கூடி இதுகாறும் அருவியாடியும் வேங்கைமரத்திற் கட்டப்பட்ட பரண்மேல் இருந்து தினை யுண்ணவரும் கிளிகளை ஓப்பியும் விளையாடி மகிழ்ந்தேம்; தினை முற்றியது கண்டு நம் தமர் அதனைக் கொய்வான் முற்பட்டுள்ளனர். அதனால் நாளை யும் நமக்கு இவ்விளையாட்டின்பம் உண்டாமோ என ஐயுறு கின்றேன்" என்றாள். தினை கொய்யப்படின் நாம் நம் மனை யின்கண் செறிக்கப்படுவோம்; தலைமகனைத் தலைப்பெய்தல் அரிதாம் என்பது கருத்து. இக்கூற்றின்கண், தலைவனை வரைந்துகொள்க என உரைக்கும் கருத்தினளாகிய தோழி அதனை வெளிப்பட மொழி யாது தினைக்காவல் நாளையில்லையாம் என்பதனால் தலைவனை உய்த்துணரக் கூறும் ஒட்பம் கண்ட கபிலர் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். முன்றிற் பலவின் 1முதுசுளை மரீஇப் புன்றலை மந்தி 2துய்ப்பத் தந்தை மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு சூருடைச் சிலம்பின் அருவி யாடிக் காரரும் பவிழ்த்த 3கருங்கால் வேங்கைப் பாவமை இதணம்4 ஏறிப் பாசினம் வணர்குரற் சிறுதினை 5கடியல் புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே. இது, செறிப்பறிவுறீஇயது. உரை : முன்றில் பலவின் முதுசுளை மரீஇ - மனைமுன்றிலிடத்தே நிற்கும் பலாவின் பெரிய சுளைகள் முதிர்ந்துள்ள கனியைப் பொருந்தியிருந்து; புன்றலை மந்தி துய்ப்ப - புல்லிய தலையை யுடைய குரங்கு அதன் சுளைகளை எடுத்துண்ண; கொடிச்சி - மனையில் வாழும் குறமகள்; தந்தை மைபடு மால்வரை பாடினள் - தன் தந்தையின் முகில் தவழும் பெரிய மலை வளத்தைப் பாடி; ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு - ஐவனம் என்னும் மலையிடத்து விளையும் வெண்ணெல்லைக் குற்றும் நாடனாகிய தலைவனொடு கூடி; சூருடைச் சிலம்பின் அருவி ஆடி - சூர் உறையும் பக்க மலையிலுள்ள அருவியில் விளையாடி; கார் அரும்பு அவிழ்த்த கருங்கால் வேங்கை - கார்காலத்தில் அரும்பி மலர்ந்த வலிய அடியையுடைய வேங்கைமரத்தில்; பாவமை இதணம் ஏறி - பரப்பமையக் கட்டப்பட்ட பரண்மேல் ஏறியிருந்து; பாசினம் வணர்குரற் சிறுதினை கடியல் புணர்வது கொல்லோ - பசிய கிளி யினங்கள் வணர் பொருந்திய சிறுதினைக் கதிர்களைக் கவ ராமல் ஓப்பும் செயல் பொருந்துமோ; நமக்கு நாளையும் - நமக்கு நாளைக்கும் எ.று. தோழி, நாடனொடு அருவியாடி இதண மேறிப் பாசினம் சிறுதினை கடியல், நாளையும் நமக்குப் புணர்வது கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முதுசுளை மரீஇ மந்தி துய்ப்பக் கொடிச்சி பாடினள் வெண்ணெல் குறூஉம் நாடன் என இயையும். முதுசுளை, நன்கு பழுத்த சுளைகளையுடைய பழம்; ஆகுபெயர். மை, கருமுகில். குறிஞ்சி நிலத்து மகளிர்க்குக் கொடிச்சி என்பதும் ஒரு பெயர். ஐவன வெண்ணெல், மலை நெல் வகை. சூர், காடு மலை முதலிய இடங்களில் உறையும் சிறு தெய்வம். அச்சம் செய்யும் இயல்பிற்றாதல் பற்றி அதுசூர் எனப்பட்டது. சிலம்பு, பக்கமலை, கார்காலத்தில் அரும்பி மலர்தல் பற்றிக் காரரும்பு என்றார். காட்டுயானை முதலிய விலங்குகளால் தாக்கப்படாமை வேண்டிப் பரண் அமைப் போர் வலிய தாளையுடைய வேங்கை மரத்தைத் தேர்ந்து கொள்வர். பா, பரப்பு. பச்சைநிறக் கிளிகளைப் பாசினம் என்ப. வணர், கதிர்களைத் தீண்டிய வழிக் காணப்படும் சருச்சரை; சுரசுரப்பு. தினைமணி சிறுகடுகு போன்ற வடிவுடைமை பற்றிச் சிறுதினை எனப்பட்டது. சிறைப்புறம் போந்து நிற்கும் தலைமகற்குத் தமர் தினை கொய்ய வருதலை உள்ளுறையால் உரைக்கலுற்ற தோழி தலைவனொடு கூடிப் பெற்ற இன்பத்தை விதந்து, சிலம்பின் கண்ணதாகிய அருவியில் விளையாடுதல் இயல்பாயினும், தெய்வ முறைதலால் அச்சமுடைத்தாகிய அவ்விடத்தே மகளிர் தமித்துச் செல்லா ராதலின், தலைவனொடு கூடிச் சேறலின் அச்சமின்றி இனிது ஆடினமை விளங்கச் சூருடைச் சிலம்பின் அருவி ஆடி என்றும், பருத்த வலிய அடியை யுடைய வேங்கையின் மேல் அமைந்த பரணை அடைதற்குத் தக நன்கு அமைந்தமையின் கருங்கால் வேங்கைப் பாவமை இதணம் ஏறி என்றும், இவ்வகையில் தலைவனது கூட்டம் பெற்று மகிழ்வேமுக்குத் தினைமுற்றிக் கொய்யப்படும் செவ்வி எய்திற் றென்பாள், வணர் குரற் சிறுதினை என்றும், அக்காலத்தே கிளியினம் வருமாதலால், காவல் இன்றியமை யாமை தோன்றச் சிறுதினை கடியல் என்றும், மறுநாளே தினை கொய்தல் நிகழும் என்பாள், நாளையும் நமக்குப் புணர்வது கொல்லோ என்றும் கூறினாள். முன்றிலிடத்து நின்ற பலவின் முதுசுளையைப் பொருந்தி மந்தியுண்ணக் கொடிச்சி மால்வரை பாடி ஐவன நெல்லைக் குறுவள் என்றது, யாம் தலைமகனோ டிருந்து இன்புறுவே மாகத் தமர் தினைவிளைவு பேசி அதனைக் கொய்தற்குச் சூழ்வாராயினர் என உள்ளுறை கொள்க. தலைமகன் தெருண்டு வரைந்து கொள்வானாவது பயன். 374. வன்பரணர் பரணர் என்ற சான்றோர் சங்கத்தொகை நூல்களிற் காணப் படும் நல்லிசைப்புலவர் நிரலுள் இருத்தலின், அவரின் வேறு படுத்த இவரை வன்பரணர் எனப் பண்டையோர் குறித்துள்ளனர். இவரது ஊர் சோழநாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நெடுங்களம் என்பது. ஏடெழுவது வோர், நெடுங்களத்துப் பரணர் என்ற இவரை நெடுங்கழுத்துப் பரணர் என எழுதவே, பிற்காலத்தார் இவரை நெடுங்கெழுத்துப் பரணர் என்றும், ஏனை எல்லாருடைய கழுத்தினும் சிறிது நீண்டிருந்தமையின் இவர்க்கு இப்பெயர் உண்டாயிற் றென்றும் கருதுவாராயினர். நெடுங் களத்திலுள்ள சிவன் கோயிற் கல்வெட்டுக்கள் அச்சிவனைநெடுங் களத்து மகாதேவர் எனவும் நெடுங்கழுத்து மகாதேவர் எனவும் குறித்தலின் 1உண்மை விளங்குவதாயிற்று; அங்கிருந்த பரணி மேடு பரணர் மேடு எனத் தெளிவாயிற்று. இவ்வாற்றால் இச் சான்றோரும் நெடுங்களத்துப் பரணர் என்ற பெயரினராவர் என்பது இனிது தெரிந்தது. இவருடைய பாட்டுக்கள் பல புற நானூற்றில் உள்ளன. இவர் கொல்லி யாண்ட வல்வில் ஓரியின் வன்மையை வியந்து பாடியது பற்றி இவர் வன்பரணர் எனப் பட்டார். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத் தான் இத் தொகை நூலிற் காணப் படுகிறது. மனைவாழ்வில் மாண்புற்றிருந்த தலைமகன் கடமை காரண மாகப் பிறந்த வினை குறித்துத் தன் மனைவியைப் பிரிந்து சென்றான். இவ்வாறு முன்பும் சென்று பயின்றவ னாதலின், குறித்த காலத்தில் அதனை முடித்துக்கொண்டு மீள்வானாயினன், வருங்கால், வழியில் ஓரிடத்தே முடிமேல் குடை நிழற்றப் புதியோர் சிலர் எதிரே தோன்றக் கண்டான். வேண்டும் உண வின்மையின், களர்நிலத்து நின்ற புளிய மரத்தின் காய்களே அவர்களது பசி போக்கும் பணிபுரிந்தன. அது கண்டு இரக்கம் மிக்க அவனது உள்ளம், தன் மனைக்கு வரின், தன் மனைவி விருந்தோம்பும் திறத்தை நினைக்கலுற்றது. நீராடி அட்டிற் புக்கவள், தாழ்ந்து கிடந்த கூந்தலினின்றும் நீர்த்துளிகள் முது கிடத்தை நனைப்ப, மனநினைவு விருந்தினரை ஓம்பும் நல் லறத்தில் திளைக்க, இனிய சொற்களை மொழிந்துகொண்டு உண்டி சமைத் தளிக்கும் நிலை நெஞ்சில் தோன்றி இன்பம் செய்யவே, இவ்வின்பநிலை முன்னும் எய்திற்றுண்டோ என ஆராயத் தலைப்பட்டு முன்பும் உடையம்; பிற்றையும் உடைய மாவேம் என்று தெளிந்து, அவர்களை நோக்கி, "எம்மனைக்கு வருக" என்றான். இதன்கண், மனைக்கு மீளுங்கால் தனக்குச் செய்யும் விருந் தின் மாண்பு நினைந்து கூறுமாற்றால், தலைமகளின் கற்புநலம் புலப்படுக்கும் திறம் கண்ட வன்பரணர், அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். இவ்வழகிய பாட்டு புதுப் பட்டி ஏட்டில் வரிதோறும் துளைபட்டு மிக்க வருத்தம் விளை வித்தது. முரம்புதலை மணந்த நிரம்பா இயவின் ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் 1களரிப் புளியின் 2காய்பசி பெயர்ப்ப உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலிர் 1முற்றையும் உடையமோ மற்றே இற்றை 2வீழ்மா மணியிற் புனைநெடுங் கூந்தல் நீர்வார் புள்ளிச் 3சிறுபுறம் நனைப்ப விருந்தயர் 4விருப்பினள் வருந்தும் திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே. இது, வினைமுற்றி மீள்வான் இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. உரை : முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் - முரம்புமண் பரந்த சிறுகிய வழியின்கண்; ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடி - உயர்ந்து தோன்றும் உமணர்கள் வாழும் சிறுகுடிப் புறத்தேயுள்ள; களரிப் புளியின் காய்பசி பெயர்ப்ப -களர் நிலத்தில் நின்ற புளியமரத்தின் காய்கள் பசியைப் போக்க; உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலிர் - தலையில் நிழலுண்டாக உயர்ந்த குடையையுடைய புதியோர்களே; முற்றையும் உடையம் - முன்பும் பெற்றுடையம்; இற்றை - இன்று நாம் பெறப்போகும்; வீழ்மாமணியின் - ஒன்றொன்றாய் வீழும் அழகிய மணிகள் போல; புனைநெடுங் கூந்தல் வார்நீர் புள்ளிச் சிறுபுறம் நனைப்ப - ஒப்பனை பொருந்திய நெடிய கூந்தலினின்றும் ஒழுகும் நீர்த்துளிகள் முதுகிடத்தை நனைக்க; விருந்தயர் விருப்பினள் - விருந்தோம்பும் விருப்பம் மிக்கவளாய்; வருந்தும் - அட்டிற் செயலில் ஈடுபட்டிருக்கும்; திருந்திழை அரிவை - திருந்திய இழையணிந்த அரிவையாகிய தலைவியின்; தேமொழி நிலை - தேன் போன்ற சொற்களை வழங்கி மகிழ்விக்கும் இன்பநிலையை; முன்பும் பெற்றுடையே மாகலின் எம்மனைக்கு வருக எ.று. வம்பலிர், இவற்றை, புனைநெடுங் கூந்தல் வீழ் மாமணியின் நீர்வார் புள்ளி சிறுபுறம் நனைப்ப, விருந்தயர் விருப்பினள், வருந்தும் அரிவையது தேமொழிநிலை முற்றையும் உடையம்; ஆகவே நீவிர் எம்மனைக்கு வருக எனக் குறிப்பெச்சத்தால் தகுவன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. முரம்பு, பரற் கற்கள் நிறைந்த மண். அது தரைமேல் பரந்து கிடப்பது தோன்றத் தலைமணந்த என்றார். போதிய அகலமில்லாத வழி நிரம்பா இயவு எனப்பட்டது. இயவு, வழி. வழிக்கரையில் உயர்ந்து தோன்றுவதனால் ஓங்கித் தோன்றும் சிறுகுடி என்றும், அதன்கண் வாழ்பவர் உமணராதலின் உமண்பொலி சிறுகுடி என்றும் கூறினார். களரி, களர்நிலம், களர்நிலத்து நிற்கும் புளிமரம் போதிய வளமும் உயரமும் இன்றிக் குறுகியே இருக்கும். அதன் காய் புளிச்சுவை குன்றித் தின்பார்க்கு இன்சுவை நல்குதலின், வழிச்செல்வோர் அவற்றைத் தின்று பசிபோக்கினர் என அறிக. இன்றும் இளஞ்சிறார் புளிங் காயை விரும்பி யுண்டல் இயல்பு. வம்பலர், புதியராய் வரு பவர். முற்றை இற்றை என்பன முன்றை இன்றை என்ப வற்றின் விகாரம்; இவற்றை ஐ யீற்றுடைக் குற்றுகரம் என்றலும் உண்டு. வீழ்மாமணி, நீர்வார் புள்ளிக்கு உவமம். புள்ளி, நீர்த்துளி. மெய்யும் ஆய்தமும் ஆகிய புள்ளியெழுத்துக்களின் வடிவு போறலின், புள்ளி எனப்பட்டது. இற்றை நாம் பெற இருக்கும். தேமொழி நிலை முற்றையும் உடையம்: இது சூழ்ச்சி யென்னும் மெய்ப்பாடு. ஓவும் மற்றும் ஏயும் அசைநிலை. வினைமுற்றி மீள்கின்ற தலைவன் இடைச்சுரத்தில் உயரிய இடத்தே அமைந்த சிறுகுடியைக் காண்டலும் அதற்குச் செல்லும் சிறுவழியை நோக்கி, முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் என்றும், வழிக்கரையில் இருக்கும் சிறு குடியில் உமணர் மிக்கிருப்பது கண்டு உரைத்தலால் ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடி என்றும் அதனைச் சூழ்ந்து கிடக்கும் நிலப்பகுதி முற்றும் உப்புவிளை களர் நிலமாதலும், ஆங்காங்கே புளி மரங்கள் காய்த்து நிற்ப, அவ்வழியே புதியராய் வருவோர் அக்காய்களைத் தின்று பசிதீர்வதும் கண்டு வியப்பவன், களரிப் புளியின் காய்பசி பெயர்ப்ப என்றும், வெயில் மிக்குக் காய்தலின் அவர்கள் தலைமேல் குடைபிடித்துக் கொண்டுவர அவர்களோடு உரையாட லுறுகின்றா னாதலின், உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலிர் என்றும் கூறினான். நேரிற் காண்டலும் அவர்கள் தன் மனையில் விருந்தினராக ஓம்புதற்குரியராதல் அறிந்து இன்று எம்மனைக்கு வருக என்பான், தன் மனைவி விருந்தயரும் சிறப்பை எடுத்து மொழிவானாயினான்; நீராடிய தன் கூந்தலினின்றும் ஒழுகும் நீர்த்துளிகள் முதுகை நனைப்ப அட்டில் தொழிலைச் செய்பவள் என்பான். புனை நெடுங் கூந்தல் நீர்வார் புள்ளி சிறுபுறம் நனைப்ப என்றும், அவள் முகம் காணும்போதே விருந்தயர்தற்கண் அவட்குள்ள விருப்ப மிகுதியைப் புலப்படுத்தும் என்பான், விருந்தயர் விருப்பினள் என்றும், அவன் மனக்கிழியில் தோன்றிய அவளது உரு நலனை வியந்து திருந்திழை அரிவை தேமொழி நிலை என்றும். அவள் அளித்த விருந்தை எண்ணினவன், அதுபோல் முன்பு நிகழ்ந்த துண்டோ என்று நோக்கி விருந்தோம்பும் அவளுடைய மனையறத்தை நினைத்தலின், முற்றையும் உடையம் என்றும் கூறினான். எனவே, நீவிர் இன்று எம் மனைக்கு விருந்தினராய் வருக என்றானாயிற்று. இதனாற் பயன் மனைவியின் மனையறமாண்பு நினைந்து தலைவன் மகிழ்வது; என்னை? "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு1" என்பவாகலின். 375. பொதும்பில்கிழார் மகன் வெண்கண்ணியார் பொதும்பில் கிழார் நக்கனார் என்றொரு சான்றோர் இத் தொகைநூலுள் காணப்படுகிறார். வெண்கண்ணியார் பொதும் பில் கிழார்க்கு மகன் எனப்படுதலின், இவர் பொதும்பில் கிழாரான நக்கனார்க்கு மகன் எனவும் இவரும் அவர் போல நல்லிசைப் புலமை எய்திச் சான்றோர் மதிக்கும் சால்பு நிறைந் தவர் எனவும் கோடல் தகுதியாகும். இவர்கட்குரிய பொதும்பில் மதுரைக்கு அண்மையில் வையையின் வடகரையிலுள்ள வளம் சிறந்த சிற்றூர்களில் ஒன்று. பொதும்பில் நக்கனார் அவ்வூர்க்குக் கிழாரானது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்திலாம் என்று அவர் பாட்டால் அறி கின்றோம். வெண்கண்ணியார் பாடியதாக இவ்வொரு பாட்டுத் தான் காணப்படுகிறது. களவுநெறியில் காதலுறவை வளர்த்தொழுகும் தலை மகன், அது நன்கு பெருக்கமுறல் வேண்டி, இரவினும் பக லினும் தலைமகளைக் கண்டு பயிலும் இன்பத்துறையில் நெடித்து நின்றான். தலைமகட்கு உயிர் போன்ற தோழி, அவளது காதற்சிறப்பை உணர்ந்து தலைவன் உள்ளத்தை வரைந்துகோடற்கண் உய்க்கத் தலைப்பட்டாள். குறிப்பால் பன்முறை உணர்த்தியும் தலைவன் களவையே விரும்பியது தோழிக்கு மிக்க வருத்ததைச் செய்தது. தலைவனது உண்மைக் காதலை அவள் தெளிய அறிந்திருந்தா ளாயினும், அவன் வரையாது நீட்டித்தது மனவமைதி தரவில்லை. தலைவி பெருநாணினளாதலின், அதற்குச் சிறிது அழிவு நேரினும் உயிர்வாழாத தன்மையளாயது தோழியின் மனவழிவுக்கு ஒரு காரணமாயிற்று. ஒரு நாள் தலைமகன் தலைவியைக் கண்டு நீங்கும்போது, தோழி அவனை எதிர்ப்பட்டு "ஐயனே, நீ எம்பால் அன்பில னாவது கொடிது; தன் அறிவிற்பட்டதை என்பால் உரைத்தற்கும் மிக நாணுதலை யுடையவள் தலைவி; அவள் உவக்குமாறு எம் இனிய ஊர்க்கு வரைவொடு வரு குவையாயின் நன்றுகாண்" என்றாள். நீட்டிப்பின் வரும் ஏதத்தையும் வரைவொடு வரின் தமர் வரவேற்கும் திறத்தை யும் உள்ளுறையால் உரைத்தாள். இக்கூற்றின்கண், தலைவனை வரைவொடு வருக என வற்புறுத்தும் தோழி, அவனைக் கொடுமை கூறும் வாய்பாட் டால் வெளிப்பட மொழிவது கண்டு வியந்த வெண்கண்ணி யார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நீடுசினைப் புன்னை நறுந்தா துதிரக் கோடுபுனை குருகின் தோடுதலைப் பெயரும் பல்பூங் கானன் மல்குநீர்ச் சேர்ப்ப 1அன்பிலை யாதலோ கொடிதே தன்புலன் என்னும் நாணும் நன்னுதல் உவப்ப வருவை யாயினோ நன்றே பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் 2எழுந்தென உரவுத்திரை 3பெயர்வன போல 4வரூஉம் உயர்மணற் படப்பைஎம் 5உறைவின் ஊரே. இது,வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் 6தலைமகளது நிலையுணர்ந்த தோழி தலைமகனை வரைவுகடாயது. உரை : நீடுசினைப் புன்னை நறுந்தாது உதிர - நீண்ட கிளை களையுடைய புன்னைமரத்தின் நறிய தாதுகள் உதிர்ந்தவழி; கோடுபுனை குருகின் தோடு தலைப்பெயரும்- அதன் உச்சியில் தங்கியிருக்கும் குருகின் கூட்டம் அஞ்சி நீங்கும்; பல்பூங்கானல் மல்குநீர்ச் சேர்ப்ப - பல்வகைப் பூக்கள் பூத்து விளங்கும் கானலையுடைய கடல்நிலத் தலைவனே; அன்பிலை யாதலோ கொடிது - நீ எம்பால் அன்பில்லாதவனாதல் கொடுமை யாகும்; தன் புலன் என்னும் நாணும் நன்னுதல் உவப்ப - தன் அறிவிற்பட்டதை என்பாலும் உரைத்தற்கு மிகவும் நாணு தலையுடைய நல்ல நெற்றியின ளாகிய தலைவி மகிழுமாறு; வருவையாயின் நன்று - வரைவொடு வருவாயாயின் அது பெரியதோர் அறச்செயலாகும்; பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் எழுந்தென - பெரிய கடற் கண்ணே இரவில் முழுத்திங்கள் எழுந்ததாக; உரவுத்திரை பெயர்வன போல வரூஉம் - பரந்து நீண்டுறும் அலைகள் கடலிடத்தினின்றும் பெயர்ந்து வருவது போல மிக்கு வரும்; உயர்மணற் படப்பை எம் உறைவின் ஊர் - உயர்ந்த மணற்கரைக்கண் படப்பை களையுடைய எமது உறைதற்கு இனிய ஊர்க்கு. எ.று. சேர்ப்ப, அன்பிலையாதல் கொடிது; தன் புலன் என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, எம் உறைவின் ஊர்க்கு வருவை யாயின் நன்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புன்னையின் கோடுகளில் வீற்றிருக்கும் வெண்குருகுகளின் கூட்டம், அக் கொம்பின் உச்சிகளை அழகுற எழுதி வைத்ததுபோல அணி செய்தலின், கோடுபுனை குருகு என்றார். தோடு, தொகுதி; கூட்டம். மல்குநீர், கடல். சேர்ப்பு, நெய்தல்நிலம். புலன், அறிவு. நன்று, கொடிது என்பன முறையே அன்புடைமையாகிய அறமும் அறமல்லதும் குறித்து நின்றன. அன்புடையார்பால் அன்புசெய்யாமை கொடுமை. மண்டிலம். வட்டம்; ஈண்டு முழுத்திங்கள் மேற்று; முழுத்திங்களன்று கடல்நீர் பொங்கிப் பெருகிப் பேரலைகளால் கரையை அலைப்பது இயல்பு. "அழற்கதிரில் பொங்காது தண்ணென், கதிர்வரவால் பொங்கும் கடல்1"என்று பிற்காலத்து ஆன்றோரும் கூறுதல் காண்க. அக்காலத்துப் பொங்கி வரும் அலைகள் கடலகத்தி னின்றும் புடைபெயர்ந்து வருவது போறலின், உரவுத்திரை பெயர்வன போல வரூஉம் என்றார். ஊர்க்கு என்றவிடத்துக் குவ்வுருபு செய்யுளிறுதிக்கண் தொக்கது. ஓகாரம் இருவழியும் சிறப்பு; ஏகாரம், தேற்றம். தலைமகன் வரைவு நீட்டித்தலும் தலைவியின் நாண மிகுதியும் கண்டு மனவமைதி குலைந்து வருந்தும் தோழி, அவனைக் கண்டதும், அவனது உள்ளம் ஆராய்ச்சியில் ஆழ்தல் வேண்டி அன்பிலை யாதலோ கொடிதே என்றாள். இவ்வாறே பெரும்பேகனது அருள்வேண்டிச் சென்ற சான் றோர் "அருளா யாகலோ கொடிதே2" என்பது காண்க. அது கேட்டதும், தன்பால் அன்பின்மை காண்டற் குரிய செயல் யாது என அவன் நோக்கத் தொடங்கியதும், தலைவியின் நாணமிகுதி கூறுவாள், தன் அறிவிற்பட்ட கருத்து யாதா யினும் என்பாற் கூறற்குரிய அவள் அது செய்தற்கும் இப்போது மாட்டாத பெருநாணம் தலைக்கொண்டாள் என்பாள், தன் புலன் என்னும் நாணும் நன்னுதல் என்றும், நுதலொளி மழுங்கப் பசந்திருப்பதுகாண் என்பாள், நன்னுதல் என்றும் கூறினாள். நுதற்பசப்புப் பிறர்க்குப் புலனாயின் எழும் அலர்க்கு அஞ்சி வருந்துகின்றாளாகலின், அவட்கு உவகை தரும் அன்புடைச் செயல் வரைவொடு வருத லல்லது பிறி தில்லை யென்பாள், நன்னுதல் உவப்ப வருவை யாயினோ நன்று என்றும், அது நினக்கு அறமாம் என்பது தோன்ற நன்று என்றும் கூறினாள். இரவுத்தலை மண்டிலம் எழக் கண்டு உரவுத்திரை பொங்கிப் பெயர்வன போல வரும் என்றது, நீ வரைவொடு வருதலைக் காணின், எம்முடைய தமர் மிக்க மகிழ்ச்சியுட னெழுந்து வரவேற்பர் என்றும், வாராது தாழ்த்தவிடத்துத் தலைவியின், நுதல்பசப்பும் வேறுபாடும் பொருளாக ஊர்க் கண் அலர் எழுமாயின், பெருநாணின ளாதலின் தலைமகள் இறந்துபடுவள் என்று புன்னையின் தாது உதிரக் கண்டு குருகின் தோடு தலைப்பெயரும் என்பதனால் உள்ளுறுத்தும் கூறினாள். தலைமகன் தெருண்டு வரைவானாவது பயன். 376. கபிலர் களவின்கண் காதலுறவு கொண்டொழுகும் தலை மக்களில், தலைமகள் புனங்காவல் மேற்கொண்டிருந்த போது, தலைவனது தொடர்பு பெற்றா ளாகலான், தினை விளைவின்கண் இற்செறிப் புண்டது அவட்கு மிக்க வருத்தத்தைச் செய்தது. புனத்திற் போல மனையின்கண் தலைவனைக் காண்டல் அரிதாயினமையின், அவள் உள்ளத்து நிறைந்த காதல் கையிகந்து கழிபடர் நல்கிற்று. அதனால், கேட்பன இவை கேட்டுழி உரைப்பன இவை எனத் தேறும் தெளிவுணர்வின்றி, அவளது அறிவு தடுமாறலுற்றது. காவல் மிகுதியால் தலைமகனுக்கும் தலைவியைக் காண்பது அருமையாயிற்று. ஓரொருகால் குறியிடத்தே இருவரும் தலைப் பெயது இன்புற்றாராயினும், அது தலைவிக்கு அழிவில் கூட்டத்துக் குரிய வேட்கையையே மிகுவித்தது. இவ்வாற்றால் பெருங்கலக்கத்துக் குள்ளாகிய தலைவி, ஒரு நாள் தன் மனைப் படப்பையில் கிளிகள் கூட்டமாய்ப் போந்து மேய்வது கண்டாள். அவற்றை ஓப்புதற்பொருட்டுத் தான் தினைப்புனம் மேவியிருந்த நிலையும், அக்காலத்தே தலைவன் அவண் போந்து நட்புச் செய்த திறமும் அவள் மனக்கண்ணில் எழுந்தன. குல்லை குளவி கூதளம் முதலிய பூக்களால் தொடுக்கப்பட்ட கண்ணியும் கட்டமைந்த வில்லும் உடையனாய், புனத்தின்கண் இருந்த அசோகு மரத்தின் கீழ் அவன் வந்து நின்ற காட்சி நினைவில் எழுந்தது. அவனது கூட்டம் பெற்றபோது, அவன்மார்பிற் படிந்து இன்புற்றது அவள் மனத்தில தோன்றி வருத்தவும், அவள் அக்கிளிகளை நோக்கி "கிளிகளே, அசோகின் நிழலில் நின்ற நற்றார் மார்பனாகிய தலைமகனைக் காணின், இச்சிறிய செய்தியை அவன் நன்கு தெளியுமாறு கூறுமின்; பின்னின்று பற்றி வருத்தும் அணங்கு போல, என்னைப் பின்தொடரும் அன்னை வறும்புன மாயினமை யின் புறம்போகல் வேண்டா என விலக்கி மனைக்கண்ணே செறித்திருத்தலை நீவிர் காண்கிறீர்கள் அன்றே? இதனை அவற்கு உரைத்தல் வேண்டும்" என்றாள். இக்கூற்றின்கண், காதலுணர்ச்சி மிக்கவழி மக்களினம், அறிவு அறை போகித் தம்மைப் பெற்ற தாயையும் பிறராக எண்ணி இகலும் என்பதற் கொப்ப, இற்செறித்த அன்னையை "அறனில் யாய்" எனத் தலைமகள் இகழ்ந்துரைப்பது கண்டு வியந்த சான்றோராகிய கபிலர் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். முறஞ்செவி யானைத் தடக்கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை வரையோன் வண்மை போலப் பலவுடன் கிளையோ டுண்ணும் வளைவாய்ப் பாசினம் குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 1சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும் நற்றார் மார்பற் காண்குறின் சிறிய நற்கவற் கறிய உரைமின் பிற்றை அணங்கும் அணங்கும் போலும் அணங்கி வறும்புனம் காவல் விடாமை 2அறிந்தனி ரல்லிரோ அறனில் யாயே இது, 3செறிப்பு மிக, ஆற்றாளாய தலைமகள், காமமிக்க கழிபடர் கிளவியால், கிளிமேல் வைத்துச் சொல்லியது; இதனாற் பயன் தோழி தூதுவிடுவாளாவது. தோழி கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீயதூஉமாம். உரை : முறஞ் செவி யானை தடக்கையின் தடைஇ - முறம் போன்ற காதுகளையுடைய யானையின் தடவிய கைபோல் பருத்து வளர்ந்து; இறைஞ்சிய குரல் - தலைசாய்ந்த கதிர் களையும்; பைந்தாள் செந்தினை - பசிய தாளையு முடைய செந்தினையை; வரையோன் வண்மை போல - வரையாது வழங்கும் வள்ளலின் வளம்போல; பலவுடன் கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம் - பலவாய்க் கிளையோடு போந்துண்ணும் வளைந்த வாயையுடைய பச்சைக்கிளி யினங் களே; குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - கஞ்சங்குல்லைப்பூ மலைமல்லிகைப்பூ கூதாளிப்பூ குவளைப்பூ இல்லம்பூ ஆகிய பூக்கள் விரவித் தொடுக்கப்பட்ட குளிர்ந்த கண்ணியைச் சூடி; சுற்றமை வில்லன் - சுற்றி வரிந்து கட்டப்பட்ட வில்லை யேந்தி; செயலைத் தோன்றும் - அசோகு மரத்தடியில் வந்து தோன்றிய; நற்றார் மார்பன் காண்குறின் - நல்ல மாலை யணிந்த மார்பனைக் காண்பீராயின்; சிறிய - இச்சிறிய செய்தியை; நற்கு அவற்கு அறிய உரைமின் - நன்றாக அவன் அறிவில் விளங்குமாறு உரைப்பீர்களாக; பிற்றை அணங்கும் அணங்கு போலும் - பிற்போந்து வருத்தும் தெய்வம் போல; அணங்கி - என்னை வருத்தி; அறனில் யாய் - அறப்பண் பில்லாத என் தாய்; வறும்புனம் காவல் விடாமை - விளை புனத்தில் விட்டாற் போல வறும் புனமாகிய இப்போது காவல் மேவ விடாமையை; அறிந்தனிர் அல்லிரோ - அறிந் தீரன்றோ எ.று. பாசினமோ, கண்ணியனாய், வில்லனாய்ச் செயலைத் தோன்றும் நற்றார் மார்பற் காண்குறின், அறனில் யாய் அணங்கும் போல, அணங்கி வறும்புனம் காவல் விடாமை அறிந்தனி ரல்லிரோ; அவற்கு நற்கு அறியச் சிறிய உரைமின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அறனில் யாய், பிற்றை அணங்கும் அணங்கும் போலும்; அணங்கிக் காவல் விடாமை அறிந்தனி ரல்லிரோ என இயைத்து உரைப்பினும் அமையும். தடைஇ, தடவென்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினை யெச்சம். குரல செந்தினை. பைந்தாட் செந்தினை என இயை யும். குரல : குறிப்புப் பெயரெச்சம். வரையான், வரையாது வழங்கும் வள்ளல். செய்யுளாகலின் ஆவோவாயிற்று. வண்மை : ஆகுபெயர். கிளியின் மூக்கு வளைந்திருப்பது பற்றி, வளைவாய்ப் பாசினம் என்றார். கிளியினத்தைப் பாசினம் என்பது வழக்கு. "செவ்வாய்க் பாசினம்1" எனச் சான்றோர் கூறுதல் காண்க. கிளை, சுற்றம். குல்லை, கஞ்சங்குல்லை; இதனைக் கஞ்சா எனவும் கூறுவர். குளவி, மலைமல்லிகை. கூதளம், கூதாளி. இது வெண்கூதாளி செங்கூதாளி என இரு வகைத்து. இல்லம், தேற்றாமரம். சுற்றமை வில், மூங்கிலைப் பிளந்து இருபாலும் புறம் பொருந்த வைத்து வரிந்து கட்டப் பட்ட வில். செயலை, அசோகு. தார் மார்பில் அணியும் மாலை. கண்ணி, தலையிற் சூடுவது. பிற்றை அணங்கல் பின்னின்று பற்றி வருத்துதல் போலும், போன்று என எச்சப் பொருட்டு. அணங்கும்: உம்மை சிறப்பு. வறும்புனம். தினை யறுக்கப்பட்ட கொல்லை. இற்செறிப்புண்டதனால் காதல்வேட்கை மிகுந்து கழிபட ருற்று வருந்தும் தலைமகள், தன் மனைப்படப்பையில் போந்து பரந்து மேயும் கிளிகளைக் கண்டு, தான் புனங்காவல் பொருந்தியிருந்த காலை, அங்கே வந்து தினை யுண்ட நலத்தைப் பாராட்டிச் செந்தினை கிளையோ டுண்ணும் வளைவாய்ப் பாசினம் என்றாள். வளமுற வளர்ந்து விளைவு முற்றிய தினைக்கதிர் யானையின் தடக்கை போல அடிபருத்து நுனி குவிந்து திரண்டிருத்தலின். யானைத் தடக்கையின் தடைஇ என்றும், முற்றிய தினைக்கதிர் தலைசாய்ந்திருப்பது பற்றி, இறைஞ்சிய குரல என்றும், கதிரின் பொறை தாங்குதற் கேற்ற வன்மையும் பசுமையும் தினைத்தாள் உடையதாதல் தோன்றப் பைந்தாட் செந்தினை யென்றும் சிறப்பித்தாள். தம் பால் தோன்றிய கதிர்மணிகளைத் தாங்குதற் கேற்ற வன்மை யும் பசுமையும் தினைத்தாள் உடையது போல, என்பால் பெருகிய காதல் வேட்கையைத் தாங்கிப் பொறையாற்றும் வன்மை யுடையேனல்லேன்காண் என்பது குறிப்பு. வரையாது வழங்கும் வண்மையுடையோன் செல்வம், பலரும் பெற் றுண்ணப் பயன்படுதல் போல, எம் தினைப்புனமும் நீவிர் நும் கிளையொடு போந்து படிந்துண்டற்குப் பயன்பட்ட தென் பாள், வரையோன் வண்மை போலப் பலவுடன் கிளையோ டுண்ணும் வளைவாய்ப் பாசினம் என்றாள். வரையோன் வண்மை குன்றிய போதும், அதன் பயன் பெற்றோர் அவனை மறவாமை போல, நீவிர் உண்ட தினைப்புனம் வறும்புன மாகியவிடத்தும் அதனை மறவாது அங்குச் செல்வீரன்றே; யான் அது செய்யாவாறு இற்செறிக்கப்பட்டேன்; காண் என்பது குறிப்பு. இனி, வரையோன் என்றதை மலைநாட னாகிய தலைமகற்கேற்றி அவன் வண்மை இரவலர் பரிசிலர் யாவர்க்கும் பயன்படுதல் போலத் தினைப்புனமும் நுமக்குப் பயன்பட்டது என்றலும் ஒன்று; எனவே, அவன்பாற் சென்று என் நிலையைக் கூறினி ராயின். நீவிரும் பயன்பல பெறுவீர் என்பது குறிப்பாகக் கொள்க. இனிப் புனத்தே தலைமகனைக் கண்ணுற்றுக் கூட்டம் பெற்றபோது, அவன் குல்லை குளவி முதலிய பூக்களால் தொடுக்கப்பட்ட கண்ணி மிலைந்திருந்த மையின் குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்ந ஈர்ந்தண் கண்ணியன் என்றும், வில்லேந்தி வேட்டம் காரணமாக அவன் வந்தமை தோன்றச் சுற்றமை வில்லன் என்றும், கூட்டம் பெற்றபோது தன்னை "முயங்கு தொறும் முயங்கு தொறும் யங்கமுகந்துகொண்டு1" அடக்கிய அவன் மார்பே நெஞ்சில் நிலைபெற்று இன்பம் செய்தமையின், நற்றார் மார்பன் என்றும் கூடிய இடம் அசோகின் நிழலிடம் என்பாள், செயலைத்தோன்றும் நற்றார் மார்பன் என்றும் கூறினாள். தான் இற்செறிப்புண்டபின் அவனைக் காணாமை புலப்படக் காண்குறின் என்றும் அன்னையின் காவலும் புறம்போக விடாமையுமாகிய இரண்டுமே தலைமகற்கு உரைக்கத்தகுவன என்ற கருத்தால் சிறிய என்றும், கிளியின் சொல் மழலைபோல் எளிதின் விளங்க வாராதாகலின், அவ்வாறன்றி, நன்கு விளங்கக் கூறல் வேண்டுமென்பாள் நற்கு அவற்கு அறிய உரைமின் என்றும், உரைத்தற்குச் சிறிய என்று சுட்டப்பட்டவை இவை யென்பாள், யான் எங்கே செல்லினும் பின்னே தொடர்ந்து போந்து தன் காவலால் அன்னை துன்பம் செய்கின்றாள் என்பாள், பிற்றை அணங்கும் அணங்கும் போலும் என்றும் முன்பு விளைபுனத்திற் செல்ல விட்டாற் போல வறும்புன மாகிய விடத்துப் போகவிடாமற் காவல்செய்தலை நீவிரே காணலாம் என்பாள் வறும்புனம் காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ என்றும், தான் பெற்ற மகட்கு இன்பமாவன செய்தலே தனக்கு அறமாகவும், தன் காவலால் எனக்கு என் தாய் அதனைச் செய்கின்றா ளில்லை என்பாள் அறனில் யாய் என்றும் கூறினாள். இதனாற் பயன், தலைமகன் தெருண்டு வரைவானாவது. 377. மடல்பாடிய மோதங்கீரனார் மடல் ஏறுவது பொருளாகப் பாடிய சிறப்பால் இம்மோதங் கீரனார் இவ்வாறு குறிக்கப்படுகின்றார். மோதம் என்பது தென்தமிழ் நாட்டில் உள்ள ஊர்களுள் ஒன்று. இப்போது இது மோதகம் என்ற பெயருடன் நிலவுகிறது. வடமோதங்கிழார் என்றொரு சான்றோர் அகத்திலும் புறத்திலும் காணப்படு கின்றார். வடமோதம் என்பது தொண்டைநாட்டில் உள்ளதோர் ஊர்; அஃது இப்போது மாதம் என வழங்குகிறது. இம்மோதங் கீரனார் பெயரும் அச்சுப் பிரதியில் மாதங்கீரனார் என்று காணப்படுகிறது. இவர் பாடியதாக இம்மடற்பாட்டு ஒன்றுதான் இந்நூற்கண் உளது. இயற்கைப்புணர்ச்சியில், தலைமகளைக் கண்டு இடந் தலைப்பாடு பாங்கற்கூட்டம் ஆகியவற்றால் அவட்கும் தனக்கும் இடையே காதலுறவு பிறப்பித்துக்கொண்ட தலைமகன், அவளாற் குறிப்பாய்க் கூட்டப்பட்ட தோழியின் துணை பெற்றாலன்றி, அக்காதல் வளர்தற்கு இடனின்றென உணர்ந்தான்; அதனால் தோழியின் நட்பைப் பெற்றுத் தலைமகளை அடைவதே அதற்கு அமைந்த நேரிய முறையாதலை அறிந்தான்; அருமுயற்சியின் பயனாகத் தோழியொடு நெருங்கி நெருங்கி யுரையாடும் வாய்ப்பைப் பெற்றான்; பின்னர் அவளால் தலைவியின் நட்பைப்பெற முயன்றான். ஆயினும், தனக்கும் தலைமகனுக்கும் உளதாகிய முன்னுறவைத் தோழிக்குத் தலைவி உரைக்கவோ குறிப்பாய் உணர்த்தவோ இல்லை. அதனால், தோழி, தலைவன் கருத்தை ஏலாது மறுத்தாள். அவனும் எத்துணையோ பல நெறிகளில் தலைமகட்கும் தனக்கு முள்ள காதலைப் புலப்படுத்த முயன்றும், பெருநாணத்தால் தலைவி அதனை மறைத்தொழுகினமையின், தோழி அவனைச் சேட்படுத்தவே செய்தாள். கெடுதி வினாதல், தழைமுதலிய கையுறை கொணர்தல், குறையிரத்தல் முதலிய வாயில்கள் பலவும் பயனற்றொழிந்தமையால் முடிவில், மடலேறு தலே பொருள் என்று துணிந்தான் தலைவன்; அதனைத் தொடக் கத்தில் தோழிக்கு உணர்த்தியே செய்தல் வேண்டு மென்ற கருத்தால், அவள் செவிப்படுமாறு, தனக்குள்ளே கூறுவானாய், "அரவு கவ்விய மதிபோலக் கூந்தலாற் கவ்வப்பட்ட நின் தோழியின் ஒளிநுதல் என்னை மிக்க நோய்க்கு இரையாக்கி விட்டது; அதனால், பனைமடலாற் குதிரை செய்து அதன்மேல் இவர்ந்து எருக்கங்கண்ணி சூடி ஊர்தொறும் நாடுதொறும் நின் தோழியின் நலத்தைப் பாராட்டிக் கூறி நாணழிவு குறித்து இறந்துபடுவதே இனிச் செயற்பாலதாம்"என்றான். இக்கூற்றின்கண், தலைமகள்பால் தனக்குற்ற காதலைப் புலப்படுத்தி, அவளை அடையக் கருதும் தலைமகன், தோழி தலைவி ஆகிய இருவருள்ளத்தும் கழிபேரிரக்கம் பிறப்பித்துத் தன் கருத்தை முற்றுவிக்கும் சூழ்ச்சியைக் கண்ட மோதங்கீரனார் இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். மடல்மா ஊர்ந்து மாலை சூடிக் கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் பண்ணல் மேவல மாகி1 அரிதுதுற் றதுபிணி யாக விளியலங் கொல்லோ அகலிரு விசும்பின் அரவுக்குறைப் படுத்த பசுங்கதிர் மதியத் 2தணிநிலாப் போல அளகம் சேர்ந்த சிறுநுதல் 3கழறுபு மெலிக்கும் நோயா கின்றே. இது,சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. உரை : மடல்மா ஊர்ந்து - பனைமடலாற் செய்யப்பட்ட குதிரை யிவர்ந்து; மாலை சூடி - எருக்கம்பூவால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்து; கண்ணகன் வைப்பின் - இட மகன்ற நிலப் பரப்பிலுள்ள; நாடும் ஊரும் - நாடுதோறும் ஊர் தோறும் சென்று; ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டி - ஒள்ளிய நுதலையுடைய அரிவையாகிய தலைவியின் நலங்களைப் புகழ்ந்து பாடி; பண்ணல் மேவலமாகி - எமது காதலை உலகறியப் பண்ணுதலை விரும்பினேமாய்; அரிது துற்றது பிணியாக - அரிதிற் பெற்ற தலைக்கூட்டமே பிணியாக வுற்று; விளியலம் கொல்லோ - இறவாதொழிகுவமோ; இறந்து படுவேம்; அகல் இருவிசும்பின் அரவுக் குறைப்படுத்த - அகன்ற பெரிய வானத்தின் கண்ணதாகிய இராகு வென்னும் பாம்பாற் குறைபடுத்தப்பட்டு விளங்கும்; பசுங்கதிர் மதியத்து அணிநிலா போல - பசிய கதிர்களையுடைய மதியின் அழகிய ஒருபாதி போன்று; அளகம் சேர்ந்த சிறுநுதல் - கூந்தலாற் கதுவப்பட்ட சிறுநுதல்; கழறுபு மெலிக்கும் நோயாகின்று - பாங்காயினார் இடித்துரைக்குமாறு தோள் மெலிவிக்கும் நோயைச் செய் தொழிந்தது ஆகலான் எ.று. சிறுநுதல் கழறுபு மெலிக்கும் நோயாகின்று; ஆகலான், மாவூர்ந்து, மாலை சூடி, நலம்பாராட்டி, மேவலமாகி அரிது துற்றது பிணியாக விளியலங்கொல்லோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. மடல்மா, பனைமடலாற் செய்யப்பட்ட குதிரை. மாலை, ஈண்டு எருக்கம்பூ "பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடும்1"எனப் பிறரும் கூறுதல் காண்க. கண்ணகன் வைப்பு, இடமகன்ற நிலப்பரப்பு. பண்ணல், செய்தல். மேவல், விருப்பம் துற்றது, நுகர்ந்தது; செலுத்துதல் என்பர் அக நானூற்றுப் பழைய உரைகாரர்2.பிணி, இறத்தற் கேதுவாகிய பிணி விளிதல், இறத்தல். கொல் : அசைநிலை. ஓகாரம் எதிர்மறை . அரவுக் குறைபடுத்த மதியம் என்றது, செம்பாதி பாம்பால் விழுங்கப்பட்ட முழுமதி. அது பிறை வடிவால் நுதற்கு உவம மாயிற்று. பசுங்கதிர், தண்ணிய கதிர். பசுமை ஈண்டுக் குளிர்ச்சி மேற்று, அளகம் கூந்தல், ஆகின்று: குற்று கரவீற்று நிகழ்கால முற்றுவினைத் திரிசொல். மேவலம், விளியலம் என நின்ற தனித்தன்மைப் பன்மைகள் தலைமை வீறு தோன்ற நின்றன. விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது. தோழியிற் கூட்டம் பெறல் வேண்டி அவளை மதியுடம் படுக்கும் முயற்சியில் பல்லாற்றானும் உழந்த தலைவன் பன்முறையும் சேட்படுக்கப் பட்டமையின், மடலூர்தலே இனிச் செயற் பாலதெனத் துணிந்து பக்கல் நின்ற தோழியின் செவிப்படுமாறு தனக்குள் உரைக்கலுற்று, "இதுகாறும் கலிமா வூர்ந்து காண்பார் வியக்குமாறு வினைபல செய்து வீறுபெற்று விளங்கிய யான், பனைமடலாலாகிய மாவூர் வேனாயினேன்" என்பான், மடன்மா வூர்ந்து என்றும், வெட்சியும் வஞ்சியும் தும்பையும் வாகையு மெனப்பட்ட மாலைகளால் மாண்புற்ற யான் எருக்கம்பூமாலை சூடுகின்றேன் என்பான், மாலைசூடி என்றும், ஊர்தொறும் நாடு தொறும் நிலப்பரப்பு முற்றும் வினைமாட்சியால் புகழ் பரப்பிய யான் இனி நின் தோழியின் காதல் மாட்சியைப் பாடிப் பரப்புவேன் என்பான், கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டிப் பண்ணல் மேவல மாயினேம் என்றும் கூறினான். இவ்வாற்றால் அரிதின் முயன்று அவளை மணந்தெய்தும் இன்பம் நாணழிவாற் பிறக்கும் பிணியாய்த் துன்பம் செய்தலால் யாம் இறந்துபடுவதல்லது நிலத்து வாழ்தல் இல்லேம் என்பான், அரிது துற்றது பிணியாக விளியலம் கொல்லோ என்றான். இவ்வண்ணம் தான் விளி வதற் கேது தலைவியின் நுதல் செய்த காமநோய் என்பான், அளகம் சேர்ந்த சிறுநுதல் நோயாகின்று என்றும், அச் சிறுநுதல் அரவினாற் குறைக்கப்பட்ட மதியத்து அணிநிலாப் போலுமாயினும் அதன்பால் இலாத நோய் செய்யும் தன்மை இவள் நுதல்பால் உளது என்றற்குப் பசுங்கதிர் மதியம் என்றும், அணி நிலா என்றும் சிறப்பித்தான். "மாக்கடல் நடுவண் எண்ணாட்பக்கத்துப் பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல், புதுக்கோள் யானை யிற் பிணித்தற்றால் எம்மே1"எனப் பிற சான்றோரும் கூறுவது காண்க. மேலும், இந்நோய் பாங்காயினாரால் இடித்துரைக்கப் படும் அளவு என் அறிவையும் தோளையும் மெலிவித்து விட்டது என்றற்கு, கழறுபு மெலிக்கும் நோயாகின்று என்றான். இந்நோய்க்கு மருந்து மடலூர்ந்து இறந்துபடுவதே என்பதாம். இதனாற் பயன், தோழி கேட்டுக் குறைநேர்விப் பாளாவது. 378. வடவண்ணக்கன் பேரிசாத்தனார் களவு முறையில் காதலுறவு பெற்ற தலைமகன், வரைவு மேற்கொள்ளாது அக்களவொழுக்கத்தையே விரும்பியொழு கினான். தலைவியுள்ளத்திற் காதல் சிறந்து நிற்பது கண்ட தோழி, அவனைக் காணும் போதெல்லாம் வரைவு கடாதலைத் தவிராது செய்யலானாள். அவனும் அதனைத் தெருளாதான் போலவே வந்துபோவா னாயினான். ஒருநாள் அவன் தலைவிமனையின் கண் ஒரு சிறைப்புறத்தே நிற்பது கண்டு அவன் செவிப் படுமாறு தோழி தலைவியொடு உரையாடுவாளாய், "தோழி, நடுவியாமமும் நெடிது கழிகிறது; காதல்நோயும் கண்ணுறங்க விடாது பெருகி வருத்துகிறது; பழம்புண்ணுற்றுப் படுக்கையிற் கிடப்பார் போலக் கடலலையும் அசைந்து கொண்டே யுளது; இவற்றால் மனம் அலைப்புண்டு வருந்தி இரவுப்போதை ஒரு வாறு கழிப்பினும், பகற்போது விரைந்து தோன்றுகின்ற தன்று; இந்நிலையில் அயலிற் பெண்டிர் நமது மேனியின் பசப்புக் கண்டு அலர் கூறுகின்றனர்; நாம் முன்பு மணல்வீடு கட்டி விளையாடியபோது அதனைச் சிதைத்துக் கொண்டு போந்தவ னாகிய தலைமகன், அப்பொழுது வழங்கிய பணிவான மொழி யிற் பிறந்த அன்பினாற் பிணிப்புண்டு, அவனோடு ஆராயாது செய்துகொண்ட நட்பின் பயன் இவ்வாறு நம்மைத் துன்புறுத்து கிறது காண்" என்றாள். இக்கூற்றின்கண், தலைவி புறம்போகாவாறு செறிப்புண்டு இரவெல்லாம் கண்ணுறக்க மின்றிக் கையறவு படுகின்றாள் என்பதை அறிவுறுத்தும் தோழி அதனை அவன் செய்த நட்பின் மேல் வைத்துக் கூறும் நயம் கண்ட பேரி சாத்தனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். யாமமும் நெடிய கழியும் காமமும் கண்பட லீயாது பெருகும் தெண்கடல் முழங்குதிரை முழவின் பாணியிற் பைபயப் பழம்புண் ணுறுநரிற் பரவையின் ஆலும் ஆங்கவை நலியவும் நீங்கி யாங்கும் இரவிறந் தெல்லை தோன்றில தலர்வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட ஈங்கா கின்றால் தோழி ஓங்குமணல் வரியார் சிறுமுனை 1சிதைஇ வந்து பரிவுதரத் 2தட்ட பணிமொழி நம்பிப் 3பாடான் றிமிழ்நீர்ச் சேர்ப்பனொடு நாடா தியைந்த நண்பின தளவே இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒரு வழித் தணந்த பின்னை வன்பொறை எதிர்மொழிந்த தூஉமாம். உரை : யாமமும் நெடிய கழியும் - நள்ளிரவும் நெடிதாய்க் கழிகிறது; காமமும் கண்படலீயாது பெருகும் - காதல் வேட்கையும் கண்ணுறங்க விடாமல் பெருகாநிற்கும்; தெண்கடல் முழங்குதிரை - தெளிந்த கடலிடத்து முழங்கும் அலைகள்; முழவின் பாணியின் - முழவோசையை அளவறுத் திசைக்கும் தாளவறுதிபோல; பைபய - மெல்ல; பழம் புண் ணுறுநரின் - பழம்புண்ணுற்றுக் கிடப்பார் இப்படியும் அப்படியும் அசைவது போல; பரவையின் ஆலும் - நீர்ப் பரப்பில் அசைந்து கொண்டுள்ளன; ஆங்கு அவை நலியவும் - ஆங்கு அவை இவ்வாறு வருத்தவும்; நீங்கியாங்கும் - ஒருவாறு தாங்கிக் கழித்தவிடத்தும்; இரவு இறந்து எல்லை தோன்றி யது - இரவுப்போது கடந்து பகற்போது தோன்றுகின்றிலது; அலர்வாய் அயலில் பெண்டிர் பசலை பாட - அலர் கூறும் வாயையுடைய அயலகத்துப் பெண்டிர் எம் பசலை பொருளாக வாயில் வந்தது கூறாநிற்ப; ஈங்கு ஆகின்று - இவ்வாறு உளது; தோழி -; ஓங்குமணல் வரியார் சிறுமனை சிதைஇ வந்து - உயர்ந்த மணற்பரப்பில் அமைத்த கோலமிட்ட சிறுமணல் வீட்டைச் சிதைத்துக்கொண்டு போந்து; பரிவுதரத் தட்ட பணிமொழி நம்பி - அன்புண்டாக எம் முள்ளத்தைப் பிணித்த பணிமொழியை விரும்பி; பாடு ஆன்று இமிழ்நீர்ச் சேர்ப் பனொடு - முழக்கம் பொருந்திய கடல்நிலத் தலைவனுடன்; நாடாது இயைந்த நண்பினது அளவு - ஆராயாது செய்து கொண்ட நட்பின தியல்பு. எ.று. தோழி, சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பின தளவு, யாமமும் நெடிய கழியும்; காமமும் கண்படலீயாது பெருகும்; தெண்கடல் முழங்குதிரை பைபயப் புண்ணுறுநரின் பரவையின் ஆலும்; ஆங்கு அவை நலியவும் நீங்கியாங்கும் இரவு இறந்து எல்லை தோன்றிலது; அலர்வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட ஈங்கு ஆகின்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஆல், அசைநிலை. யாமம், பொதுப் படக் கூறினமையின் நடுவியாமமாயிற்று. கண்படலீயாது, "முரசு முழங்கு நெடுநகர் அரசு துயிலீயாது1" என்றாற்போல உறக்கமின்மை சுட்டிநின்றது. முழவின் பாணி, முழவொலியை அளவறுக்கும் தாளவோசை. பன்னாட்கு முன்னுண்டாகிய புண் ஆறாது வருந்துவோரைப் பழம்புண்ணுறுநர் என்றார். பரவை, பரப்பு. ஆலுதல், அசைதல். எல்லை, பகல். பசலை பொருளாகத் தாம் கூறுவனவற்றைப் பலரிடத்தும் பன் முறையும் கூறுவர் என்றற்குப் பசலை பாட என்றார். மண லிடத்து விளையாடு மகளிர் சிறுவீடு அமைத்துக் கைவிரலால் வரிகளை இழுத்து அழகு செய்ப வாதலின், அதனை ஓங்கு மணல் வரியார் சிறுமனை என்றார். பரிவு, அன்பு. தட்டல், கட்டுதல். பணி மொழி, பணிவைப் புலப்படுத்தும் மொழி. நம்புதல், விரும்புதல். பாடு, ஒலித்தல். சேர்ப்பன், கடல்நிலத் தலைமகன். அளவு, ஈண்டுப் பண்பு குறித்து நின்றது. சிதைஇ வந்து தட்ட பணிமொழி என இயையும். நம்பி, நாடாது, இயைந்த கேண்மை எனக் கூட்டுக. தலைமகன் உள்ளத்திற் காதல் பெருகி விளங்கும் திறத்தைச் சிறைப்புறத்தே நிற்கும் தலைமகற் குணர்த்தக் கருதிய தோழி, அவள் வேட்கைமிகுதியால் இரவுமுற்றும் உறக்க மின்றிக் கழித்ததை யாமமும் நெடிய கழியும் என்றும், பகற் போதில் பொறிவழிச் சென்று இயலும் மனம் இரவுப் போதில் அகத்தே மடங்கி யொடுங்கி அங்கே நிறைந்திருக்கும் காதலுணர்வை யெழுப்பி நோய்செய்தலால் உறக்கம் எய்தா தொழிந்த தென்பாள், காமமும் கண்பட லீயாது பெருகும் என்றும், எவ்வுயிரும் கண்ணுறங்கு மிடத்துக் கடலலைகள் எழுந்து முழங்கி அசைந்த வண்ணம் இருத்தலின், தெண்கடல் முழங்குதிரை பைபயப் பரவையின் ஆலும் என்றும், மேனி பசந்து வேறுபடுதல் கண்டு அயற்பெண்டிர் அலர் கூறு கின்றார்கள் என்பாள், அலர்வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட என்றும், இந்நிலைமைக்குக் காரணம் தலைவ னொடு ஆராயாது கொண்ட நட்பு என்பாள், நாடாது இயைந்த நண்பின தளவு என்றும், நட்புத் தோன்றிய அன்று அவன் வரும் காலையில் நாம் இன்புற அமைத்த மணல் வீட்டைச் சிதைத்தானாகலின், இன்றும் அப்பெற்றியனாய்க் கண்ணுறக்கமின்றிக் கலங்கஞர் எய்துவிக்கின்றான் என்றற்கு ஓங்குமணல் வரியார் சிறுமனை சிதைஇ வந்து என்றும், தன் பண்பு நமக்குத் தோன்றாவாறு தன் பணிமொழியால் மறைத் தமையின், நாம் அவன் காட்டிய பரிவாற் பிணிப்புண்டு ஆராயாது நட்புச் செய்தோம் என்பாள், பரிவுதரத் தட்ட பணிமொழி நம்பி என்றும் கூறினாள். "நாடாது நட்டலிற் கேடில்லை1" என்ற பெருமொழி நம்பால் மெய்ம்மொழி யாயிற்றென்பதாம். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. 379. குடவாயிற் கீரத்தனார் இயற்கையிற் புணர்ந்தும் இடந்தலைப் பட்டும் தலைமகள் பாற் காதற்கருத்துடையனாகிய தலைமகன், பாங்கற் கூட்டத்தால் தன் கருத்துத் திண்மையுறத் தோழி துணையால் காதலுறவை வளர்க்கும் செயலை மேற்கொண்டான். தோழியைக் கண்டு தலைமகள்பால் தனக்குண்டாகிய காதலை அவன் புலப்படுத்திய போது, அவள் அவனைச் சேட்படுக்கலுற்று "ஐயனே, குன்றில் வாழும் பெண்குரங்கின் குட்டி, வேறிடம் செல்லாது மனைக்கண் தழைத்துப் பூத்து நிற்கும் வேங்கைமரத்தைப் பொருந்தி யிருந்து, என் தலைவி தேன் பெய்த பால் நிறைந்த வள்ளத்தைக் கையில் ஏந்தி அருந்துகையில், அவள்பாற் சென்று அதனைக் கவர்ந்து தான் உண்டொழித்ததாக, அதன் பொருட்டு மை தீட்டிய தன் கண் கலுழ்ந்து அழுதமையின் அக்கண்கள் பெயலுறு நீலமலரை ஒத்தன; அது குறித்துத் தன் வயிற்றில் அறைந்துகொண்டதனால் அவள் கைவிரல்கள் காந்தள் போற் சிவந்தன; இத்துணை இளமையும் விளைவின்மையுமுடையாள் நினக்குற்ற குறை நீக்குவாளாவது யாங்ஙனம்?" என்றாள். அக்கூற்றின்கண், தலைவனைச் சேட்படுக்கும் தோழி, தலைவியின் இளமை கூறி மறுக்கும் நயம் கண்டு மகிழ்ந்த குடவாயிற் கீரத்தனார் அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். பாடுமிடத்துத் தமது குடவாயிலையும் தமிழ்க் குரிய பொதியிலையும் மறவாது இடையில் தொடுப்பது அவரது மனப்பாண்பை நாமறியப் புலப்படுத்துகிறது. புன்றலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய 1முன்றிற் போகா தெரியகைந் தன்ன வீததை இணர வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வவ்வலிற் கொடிச்சி எழுதெழில் சிதைய 2வழுதனள் கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயில் மாரியங் கிடங்கின் ஈரிய 1மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅய் அவ்வயி 2றலைத்தலின் ஆனா தாடுமழை தவழும் கோடுயர் 3பொதியில் ஓங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே. இது, தோழி தலைமகனை மடமை கூறிச் சேட்படுத்தது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொற்றதூ உமாம். உரை : புன்றலை மந்திக் கல்லா வன்பறழ் - புல்லிய தலையை யுடைய மந்தியின் கல்லாத வலிய குட்டி; குன்றுழை நண்ணிய முன்றிற் போகாது - மலையிடத்துப் பொருந்திய இல்லத்தின் முன்றிலினின்றும் போகாமல்; எரி அகைந்தன்ன வீததை இணர - நெருப்பின் எரி தழைத்தாற் போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய; வேங்கையம் படுசினை பொருந்தி - வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளையில் தங்கி யிருந்து; கைய தேன் பெய் தீம்பால் வவ்வலின் - தன் கையிலுள்ள தேன் பெய்து கலந்த இனிய பாலைக் கவர்ந்து கொண்ட தனால்; கொடிச்சி - குறமகளாகிய என் தலைவி; எழுதெழில், சிதைய அழுதனள் - மையெழுதப் பிறந்த அழகு கெடுமாறு கண் கலுழ்ந்து அழுதாள்; கண் - அதனால் அவள் கண்கள்; தேர்வண்மையையுடைய சோழர்க்குரிய குடவாயிலிடத்து; மாரியம் கிடங்கின் - மழை நீரால் நிறைந்த அகழியில்; ஈரிய மலர்ந்த - குளிர மலர்ந்த; பெயலுறு நீலம் போன்றன - மழைத்துளி தங்கிய நீலமலர்களை ஒத்தன; விரல் - கை விரல்கள்; பாஅய் - பரந்து; அவ்வயிறு அலைத்தலின் - அழகிய வயிற்றில் அறைந்து கொண்டதனால்; ஆனாது - அது பொறாது; ஆடுமழை தவழும் கோடுயர் பொதியில் - அசை கின்ற மழைமுகில் படியும் உயர்ந்த உச்சியையுடைய பொதி யின் மலையின்; ஓங்குஇருஞ் சிலம்பில் பூத்த - உயர்ந்த பெரிய பக்க மலைகளில் பூத்துக் கிடக்கும்; காந்தளம் கொழுமுகை போன்றன சிவந்து - காந்தளின் கொழுவிய அரும்பு போலச் சிவந்தன எ.று. மந்தியின் வன்பறழ், போகாது, வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய தீம்பால் வவ்வலின், கொடிச்சி எழில் சிதைய அழுதனள்; கண்ணே, குடந்தை வாயில் கிடங்கின் மலர்ந்த நீலம் போன்றன; விரலே, பாஅய் வயிறு அலைத்தலின், சிவந்து, பொதியிற் சிலம்பிற் பூத்த காந்தளம் கொழுமுகை போன்றன; இத்துணை இளமையுடையாள் நின் குறைநேர் வாளாவது யாங்ஙனம் எனப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. குன்றுழை நண்ணிய முன்றில் என்பதனால், மந்தி குன்றில் வாழ்வதும், தாயொடு போந்த வன்பறழ் குன்றின்கண் உள்ள குறவர் முன்றிற்கு வருதல் இயல்பு என்பதும் பெற்றாம். தான் தனித்து மரமேறும் தொழிலை இன்னும் கல்லாத குட்டி என்றற்குக் கல்லாப் பறழ் என்றும், எனினும், தான் பற்றியது விடாத வன்மை வாய்ந்த தென்றற்கு, வன்பறழ் என்றும் கூறினார். முன்றிற்கண் வந்த வன்பறழை மனையோர் வெருட்டியபோதும், அது போகாது. மனைக்கண் நின்ற வேங்கையின் தாழ்ந்த கிளையைப் பற்றி யேறி மறைந்து கொண்டமை தோன்ற, முன்றிற் போகாது வேங்கையம் படுசினைப் பொருந்தி என்றார். வேங்கையின் பொன்னிறப்பூ எரி தழைத்தாற் போன்றிருத்தல் பற்றி எரி அகைந்தன்ன வீததை இணர என்றார். அகைதல், தழைத்தல்; "எரியகைந் தன்ன தாமரை1" என்பதனாலும் அறிக. வேங்கைப்பூ எரி போல்வ தென்பதை, "எரிமருள் வேங்கை2" எனப் பிறரும் கூறுதல் காண்க. படுசினை, தாழ்ந்த கிளை. கைய தீம்பால்: கைய, குறிப்புப் பெயரெச்சம். தேன் பெய் பால், தேம்பெய் பால் என வந்தது; "தேனென் கிளவிமுன் வல்லெழுத்து இயையின்...., மெல்லெழுத்து மிகினும் மானமில்லை3"என்பது தொல்காப்பியம். சோழர் தேர்க்கொடையிற் சிறந்தவர் என்றற்குத் தேர்வண் சோழர் என்றார். குடவாயில், குடந்தை வாயில் என வந்தது. மழை நீரால் நிறைந்த அகழியை மாரியங் கிடங்கு என்றார். பெயல், மழைத்துளி மேற்று. பாஅய், பரந்து; விரிந்து என்றுமாம். ஆடும் மழை, அசைந்தேகும் மழை முகில். தோழியிற் கூட்டம் வேண்டிக் குறையிரந்து நிற்கும் தலைமகனைச் சேட்படுக்கும் தோழி, தலைவியின் மிக்க இளமையைக் கூறுவாளாய், ஒரு குரங்கின் குட்டிக்குள்ள விரகுதானும் உடையளல்லள் என்றற்கு, மந்தியின் வன்பறழ் முன்றிற் போகாது வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய தீம்பால் வவ்வலின் என்றும், அது பற்றி அப்பறழைச் சினந்து ஒறுத்தலைச் செய்யாது கண் கலுழ்ந்து அழுதாள் என்பாள், எழுதெழில் சிதைய அழுதாள் என்றும் கூறினாள். தேன் பெய்த தீம்பாலை மனைப்புறத்தே சென்று உண்டால் இத்தகைய ஏதமுண்டாம் என்பதை எண்ணாமல் நின்றது, அவளது இளமை காரணமாகப் பிறந்த கடமை என்றவாறு மேலும் மையெழுதிய கண் கலுழ்ந்தவழி அவ்வெழு தெழில் சிதைவது தானும் அறியாள் என்றற்கு, எழுதெழில் சிதைய அழுதனள் என்றும், அதனால் நெய்தல் போன்ற கண் நீல மலரை ஒப்பதாயிற்று என்பாள், கண்ணே பெயலுறு நீலம் போன்றன என்றும் உரைத்தாள். துணையின்றி யிருந்த அற்றம் பார்த்து, அவள் கையிலிருந்த வள்ளத்தை அப்பறழ் கவர்ந்து கொண்டமை தோன்றக் கைய தேன்பெய் தீம்பால் எனப்பட்டது. பாலை யிழந்தது பற்றிக் கண்ணீர் சொரிய அழுதவள், தன் கையால் வயிற்றில் அறைந்து கொண்டது பொறாது அவளுடைய கைவிரல் சிவந்து காந்தளங் கொழு முகை போன்றன என்றது, அவளுடைய மேனி போதிய வளர்ச்சியும் பெற்றிலது என்றற்கு. இது, தலைவியின் மடமை யும் இளமையும் விளைவின்மையும் சுட்டித் தலைவனைச் சேட்படுத்தவாறு . இதன் பயன் சேட்படை. 380. கூடலூர்ப் பல்கண்ணனார் மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைவி புதல்வனைப் பெற்று மனைக்கண் இருக்கையில், தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று. அதனைக் கேட்ட தலைமகள், உள்ளம் பொறாளாயினாள். தனக்குரிய கணவன்மார்பைப் பிறமகளிர் கண்ணால் நோக்கினும் கண்சிவந்து பிணங்கும் பெற்றியளாகிய அவட்கு, அவனது பரத்தைமை யொழுக்கம் மிக்க சினத்தை உண்டு பண்ணிற்று, புறத்தே பரத்தையர் இடத்த னாகியபோது அவற்குப் பாணனும் விறலியும் வாயில்களாய் நின்று துணைபுரிந்தனர். அதனால் தலைமகட்கு அவர்பாலும் வெறுப்புத் தோன்றி யிருந்தது. இந்நிலையில் தலைவி புதல்வற் பெற்றுப் புனிறு தீர்ந்து தலைமகனோடு உடனுறை வாழ்க்கைக்கு உரியளானாள். உலகியல் வாழ்க்கைக்கு அவன் மனைக்கண் உறைதல் இன்றியமையாது. அதனால், அவன் தன் மனையை அடைதற்கு மனையாட்டியின் புலவி இடையீடு செய்வதை நன்கு உணர்ந்தான். வாயில்களை விடுத்துத் தலைமகளது புலவியை நீக்க எண்ணிப் பாணனை விடுத்தான். பாணன் போந்தகாலைத் தலைவியும் தோழியும் வாயில்மறுத்தனர். அதனால், தலைவன் ஒருநாள் பாணனொடு தன் மனைக்கு வந்தான். பாணனைக் கண்டதும், தலைவியின் உணர்வுவழி நிற்கும் தோழி வாயில் மறுக்கலுற்று, "பாணனே, மனை வாழ்வில் என்தலைவி நெய்யும் குய்யுமாடி உடை மாசுபட்டுள்ளது; புதல்வன் உண்ணுதலால் முலைப்பால் பட்டு அவள் தோளும் புனிற்று மணம் கமழ்கிறது; இவ்வாற்றால் நறியரும் தூயருமாகிய பரத்தையரைக் கூடி மகிழும் நின் தலைமகற்கு, யாம் ஒத்தவராகேம்; அதனால் யாழ்வல்லுநனாகிய நீ எம்மைத் தொழுவதை விடுக; நின் தலைவன் தேரிற் பூட்டிய குதிரைகள் பூணணிந்து நெடிது நிற்றலைப் பொறாது செலவு கருதி விரைகின்றனகாண்; யாம் விரும்புவ தில்லாத பொழுது பயனில் சொற்களை மொழிந்து நிற்றல் வேண்டா; நின் தலைமகனை நின்னோடே கொண்டு செல்க" என்றாள். தோழி நிகழ்த்திய கூற்றின்கண், உயிரொன்றிய கேண்மையாற் சிறந்த தலைமக்கள் வாழ்வில், ஒருசிறிதும் தலைவனையின்றி அமையாத தலைவியுள்ளம், தலைவனது பரத்தைமை யொழுக் கத்தால் வேறுபட்டு மறுக்கும் திறம் கண்ட கூடலூர்ப் பல் கண்ணனார், அது மனையறத்தை நிறுவும் மாண்புடைத்தாதல் தோன்ற, இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். நெய்யும் குய்யும் ஆடி மையொடு 1மாசுபட் டன்றே கலிங்கமும் தோளும் திதலை மென்முலைத் தீம்பால் 2பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு3நா றும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற் கொத்தனெம் அல்லேம் அதனால் பொன்புனை நரம்பிள் இன்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை 1யாயின் தொழாஅல் 2கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப் 3பாடல் பாடல் கூடாது 4நீடலின் புரவியும் பூணிலை 5பொறாஅ விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே. இது, பாணற்குத் தோழி வாயின் மறுத்தது. உரை : நெய்யும் குய்யும் ஆடி - நெய்யும் தாளிப்புப் புகையும் படிந்து; மையொடு மாசுபட்டன்று - மைக்கறை பட்டு மாசு தோய்ந்துள்ளது; கலிங்கமும் - எமது ஆடையும்; தோளும் - தோள்களும்; திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்ற - திதலை பரந்த மென்மையான முலை சுரக்கும் தீவிய பால் தெறிக்கப்பட்டு; புதல்வற் புல்லிப் புனிறு நாறும் - புதல்வனை அணைத்துக்கோடலால் புனிற்றுப் புலவு நாறாநின்றது; வாலிழை மகளிர் சேரித் தோன்றும - வாலிய இழையணிந்த பரத்தை மகளிர் வாழும் சேரியில் விளக்கமுற்றுத் தோன்றும்; தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் - தேரையுடையனாகிய தலைமகனுக்கு யாம் பொருத்தமுடையே மல்லேம்; அதனால்-; பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ் - பொன்னிறம் கொண்ட நரம்பினது இனிய இசையையுடைய சீறியாழில்; எழாஅல் வல்லை யாயின் - இசை கூட்டிப் பாடுதல் வல்லுந னாதலின்; பாண - பாணனே; தொழாஅல் - என்னைத் தொழுதல் வேண்டா; நின் தண்டுறை ஊரனைக் கொண்டு செல் - நின் தலைவனாகிய தண்ணிய துறையையுடைய ஊரனை நின்னோடே கொண்டு செல்வாயாக; பாடல் - இவண் நின்று பாடுதலையும் ஒழிக; பாடல் கூடாது - நீ பாடியவழியும் எம் உள்ளம் அதனை ஏற்றற்கு ஒருப்படாது; நீடலின் புரவியும் பூணிலை பொறாஅ - நீடு நிற்றலால் குதிரைகளும் தேரிற் பூட்டுற்றுக் கலனையாகிய பூணணிந்து நிற்றலைப் பொறாமல் விரைகின்றன; யாம் வேட்டது இல்வழி - யாம் விரும்பாதவிடத்து; விரகில மொழியல் - பயனில் சொற்களை ஈண்டு மொழியவேண்டா, செல்க எ.று. பாண, கலிங்கம், ஆடி, மையொடு மாசு பட்டன்று; தோள், தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு நாறும்; தேரோற்கு ஒத்தனமல்லேம்; அதனால், நீ சீறியாழ் எழாஅல்; வல்லை யாதலின் தொழாஅல்; இனி, இவண் நின்று பாடல்; பாடல் கூடாது, நீடலின் புரவியும் பூணிலை பொறாஅ; வேட்ட தில்வழி விரகில மொழியல், ஊரனே நின்னோடே கொண்டுசெல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. குய், தாளிப்பு. மை, கரிக்கறை. தீம்பால், மகப்பேற்று அண்மையில் தாய்முலையிற் சுரக்கும் இனிய பால். ஒருபால் மகவுக்குப் பால் தரும்போது, ஒருபால் சுரந்து பால் பிலிற்று மாதலின், மகவூட்டும் தாயர், அதனை மேலாடையால் அழுத்தி யடக்குப வாகலின் தீம்பால் பிலிற்ற என்றார்; புனிறு என்றது ஈண்டு முலைப்பால் நல்கும் புலவு நாற்றத்தை. காண்பார் மனம் கவருமாறு இழையணிதல் பரத்தையர்க்கு நோக்கமாகலின் அவர்களை வாலிழை மகளிர் என்றார். பரத்தையர் மனைகள் ஊரைச் சேர இருத்தலின் அவர் உறையுமிடம் பரத்தையர் சேரி எனப்படும். ஒத்தல், பொருந்துதல்; ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்1" என்றாற் போல. யாழ் நரம்பு பொன்னிற முடைமை பற்றிப் பொன்புனை நரம்பு என்ப. சீறியாழ் என்பன யாழ்வகை. எழாஅல், யாழிடை யெழுப்பப்படும் பாட்டிசை. யாழ் வல்லுநன், பிறராற் போற்றப்படுதற் குரியவனாதலின், அவன் மகளிரைத் தொழுதல் கூடா தென்பது மரபு. பாட்டிசையில் உள்ளம் கூடினன்றி ஏற்றல் கூடாமையின், பாடல் கூடாது என்றார்.விரகு, பயன். வேட்டது, தொழிற்பெயர் மாத்திரையாய் நின்றது. கற்பின்கண் தலைவியைப் பிரிந்து பரத்தைமை பூண் டொழுகும் தலைமகன் உள்ளத்தை, அதன்கண் ஈர்த்து நிறுத்துவது பரத்தையின் தூய ஆடைநலமாதலின், அச் சிறப்பு எம்பால் இல்லை யென்பாள், நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசுபட்டன்றே கலிங்கமும் என்றும், தலைவனை மீளப் பிரிந்து செல்லாவாறு பரத்தையொடு பிணிப்பது அவளது மேனியின் நறுமண மாதலின், அதனை நோக்க என் தலைவிமேனி முலைத் தீம்பால் பட்டும் புனிற்றுப் புலவும் நாறுதலின் அவற்கு ஒவ்வா தென்பாள், தோளும் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே என்றும் தேரோற்கு ஒத்தனெ மல்லேம் என்றும் கூறினாள். அதுகேட்டும் பாணன், தன் கையிலேந்திய யாழொடு தொழக் கண்டு நீ இசைப்புலமை மிக்கோனாத லால் தொழுதல் கூடாதென்பாள், பொன்புனை நரம்பின் இன்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயின் தொழாஅல் என்றும், தலைமகனும் உடன் போந்தமையின் அவனையும் பரத்தையரிடமே கொண்டு செல்க என்பாள், பரத்தைமை யொழுக்கத்துக்குப் பாணன் வாயிலாய்ச் சிறத்தலின், கொண்டு செல் பாணநின் தண்டுறை யூரனை என்றும் கூறினாள். அருள் கண்மாறிய உள்ளத்தில் அவ்வருளைத் தோற்றுவித்து அறநெறி கடைப்பிடிக்கப் பண்ணுவது இசை யாதலின், அப்பயன் கருதிப் பாணன் யாழை யெழுப்பி இசைக்க முற்படலும்,தோழி அவன் கருத்தை ஓர்ந்து பாடல், பாடல் கூடாது என்றும், நீ இவன் நெடிது தங்குதலின், தேரிற் பூட்டிய குதிரைகள் நெடிது நிற்றல் பொறாது செலவு குறித்து விரைகின்றன வாதலின் விரைந்து செல்க என்பாள், நீடலின் புரவியும் பூணிலை பொறாஅ என்றும், அவன் மேலும் சில கூற முற்படவே, தன் மனத்திண்மை நெகிழ்விக்கும் நயமுடை யவை யாதல் பற்றி அவன் சொல்லெடாவாறு விலக்கு வாளாய், எம்பால் நின் சொல் கேட்கும் வேட்கையில் லாதபோது நீ சொல் நிகழ்த்தல் விரகன்மையின் விரகில மொழியல் வேட்டது இல்வழி என்றும் கூறினாள். பரத்தை யரை இகழ்ந்து கூறற்பாலளாய தோழி வாலிழையோர் எனப் புகழ்ந்தோதியது வஞ்சப் புகழ்ச்சி. புலந்து கூறுமிடத்து பரத்தையைப் புகழ்ந்து கூறலும் அமையும் என்பது "கற்பு வழிப் பட்டவள் பரத்தைமை யேத்தினும், உள்ளத் தூடல் உண்டென மொழிப1" என ஆசிரியர் கூறுவது காண்க. இதனாற் பயன் வாயில் மறுத்தல். 381. ஒளவையார் மனைவாழ்வில் இனிதிருந்த தலைமகன் இன்றியமையாத வினை குறித்துத் தன் மனையின் நீங்கிச் சென்றான். அப்போது அவன் கார்கால வரவில் தன் வினையை முடித்துக்கொண்டு மீள்வதாக வற்புறுத்தினான். தலைவியும் அவன் சொல்லைத் தேறி யிருந்தாள்; கற்புநெறியாதல் கொண்டு அவன் வரவு நோக்கித் தன் மனைக்குரிய கடன்களை ஆற்றிவந்தாள். நாட்கள் பல கழிந்தன. அவன் குறித்திருந்த கார்காலமும் நெருங்கிற்று. அதன் வரவு தெரிவிக்கும் வகையில் விசும்பெங்கும் மழைமுகில்கள் பரந்து விசும்பிற்கு விதானமிட்டாற் போல விளங்கின மழையும் இடை யிடையே பொழியலுற்றது. அது கண்ட தலைமகள், கார்காலம் வந்துற்றதாக நினைந்து தன் காதலன் வாராமையை எண்ணி மனம் கலங்கலுற்றாள். அச்சமும் அவலமும் அவள் உள்ளத்தை அலைத் தன. ஆற்றாமை மீதூரவே அவள்மேனியில் மெலிவும் சொல்லில் துன்பக்குரலும் தோன்றின. அதனால் தோழி, ஆற்றுவிக்கு முகத்தால் அவளோடு உரையாடலுற்று, "அன்புடையார் உள்ளத்து அன்புண்மைக்குச் சான்று, அன்பு செய்யப்பட்டாரால் உண்டாகும் அருந்துயரைத் தாங்கி உழத்தல் என்பது உலகுரை" என்றாள். அது கேட்டதும், தலைவி, "அஃதாயின், அருந்துயர் உழப்புக்கு இரையாகி இறப்பதும் அன்புண்மையாகும்; ஆகவே, இறவாமை அன்பின்மையுமாம்; இறந்துபடாமையின் யான் அன்பிலேன் ஆவனோ? யான் அன்பு இல்லேனும் அல்லேன். நீர் நிறைந்தோடும் காட்டாற்றின் இடிகரையில் வேர் அலைக்கப் பட்டு நிற்கும் மாமரத்தின் இளந்தளிர் காற்றால் அசைவதுபோல, அசைவெய்தி இறந்து பாட்டெல்லையில் நிற்கும் என் நெஞ்சமும் ஆற்றாமையால் அலைகின்றது. இந்நிலையில், தானே சாய் வதைத் தடிகொண்டு அடிப்பது போல, அலைவுறும் என் நெஞ்சினை இக் கார்மழை தோன்றி மழையைப் பெய்வது மிகவும் வருத்துகின்றது; இத்துயரை யான் எங்ஙனம் ஆற்று வேன்?" என்றாள். இக்கூற்றின்கண், தலைவன் பருவவரவில் வாராமையால் பிறந்த ஆற்றாமையைத் தோழிக்குத் தருக்க முறையில் காட்டும் தலைவியின் சொன்னலம் கண்ட ஒளவையார் அதனை இப் பாட்டின்கண் அமைத்து வியக்கின்றார். அருந்துயர் 1உழத்தலின் உண்மை சான்மெனின் பெரும்பிறி தின்மையின் இலேனு மல்லேன் கரைபொரு 2திரங்கும் கான்யாற் றிகுகரை வேர்கிளர் மாஅத் தந்தளிர் போல நடுங்க லானா நெஞ்சமொ டிடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்குசெலற் கடும்பகட் டியானை நெடுமான் அஞ்சி ஈர நெஞ்சமொ 3டிருஞ்சேண் விளங்கத் தேர்வீ சிருக்கை போல மாரி 4தரீஇ மான்றன்றால் மழையே இது பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கட் சொல்லியது. உரை : அருந்துயர் உழத்தலின் - மிக்க துன்பத்தை ஆற்றியிருத் தலால்; உண்மை சான்ம் எனின் - அன்புண்மைக்கு அதுவே அமையும் என்பது உலகுரையாயின்; பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் - இறந்துபாடு எய்தாமையின் அன்பு இல்லேனும் அல்லேன்; கரை பொருது இரங்கும் கான்யாற்று இகுகரை - கரையை அலைத்து ஒலித்துக் கொண்டு ஓடும் காட்டாற்றின் இடிகரையில் நின்ற; வேர்கிளர் மாஅத்து அந்தளிர் போல - வேர்தோன்ற நிற்கும் மாமரத்தின் அழகிய தளிர் அசைவது போல; நடுங்கல் ஆனா நெஞ்சமொடு - நடுங்குதல் குன்றாத நெஞ்சினோடு; இடும்பை யாங்கனம் தாங்குவென் - இத்துன்பத்தை யான் எவ்வாறு பொறுப்பேன்; ஓங்குசெலல் கடும்பகட்டு யானை - ஓங்கிய நடையும் மிக்க பெருமையுமுடைய யானைப்படையையுடைய; நெடுமான் அஞ்சியின் - அதியமான் நெடுமான் அஞ்சியினுடைய; ஈர நெஞ்சமொடு - அன்பு நிறைந்த உள்ளத்தோடு; இருஞ்சேண் விளங்கத் தேர் வீசு இருக்கை போல - பெரிய சேணிடத்துள்ள நாடெல்லாம் அறியும் படி ஏற்பார்க்குத் தேர்களை வழங்கும் திருவோலக்கம் காண்போரை மயங்க வைப்பது போல; மழைமாரி தரீஇ மான்றன்று - மழைமுகில் மாரியைப் பெய்து நின்று என்னை மயக்குகின்றது ஆகலான் எ.று. அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனின், பெரும் பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; மழை மாரி தரீஇ மான்றன்றாகலான், நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை யாங்கனம் தாங்குவென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உழத்தலின்: இன் ஏதுப் பொருட்டு. அன்பு என்பது அவாய் நிலையால் வந்தது. சாலும் என்பது ஈற்றுமிசை யுகரம் கெட்டுச் சான்ம் என நின்றது. ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம். பெரும்பிறிது, சாக்காடு. இரங்குதல், ஒலித்தல்; "கரை பொருது இரங்கும் முந்நீர்போல1"என்றாற் போல. இகு கரை, நீர் அலைத்தலால் கரைந்து இடியும் கரை. வேர்கிளர் மா, மண் அரிப்புண்டமையின் வேர் மேலே தோன்ற நிற்கும் மாமரம். நடுங்குதல், அசைதல். இடும்பை பிரிவுத் துன்பத்தின் மேற்று; "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்2" என்பதனால் அறிக. தாங்குதல், அடராதவாறு பொறுத்தல்; "தார் தாங்கிச் செல்வது தானை3" என்றாற் போல. கடும்பகடு என்புழிக் கடுமை மிகுதிமேற்று. ஈரம், அருள். மாரி, மழைப் பெயல். மான்றன்று: மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல். வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவவரவு காண ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக, அவள்கூற்றைக் கொண்டெடுத்து மொழியும் தலைமகள் அருந்துயர் உழத்தலின் உண்மை சான்மெனின் என்றும், எனவே அவ் வருந்துயர்க்கு இரையாகி இறத்தலும் அன் புண்மைக்குச் சாலும் என்றும் கூறினாள். அது கேட்டுத் தோழி அவளை வியந்து நோக்கலும், யான் இறந்து படாமை யின் அன்பிலேன் என்பது பட்டு உண்மைக்கு மாறு படுதலின், அஃது உரையன்று என மறுப்பாள், பெரும்பிறிது இன்மை யின் இலேனும் அல்லேன் என்றாள். பின்பு, தலைமகள் தனது நிலைமையைக் கான்யாற்று இடிகரையில் நிற்கும் மாமரத்தின் நிலைக்கும், தன் நெஞ்சினை அதன் தளிர்க்கும் ஒப்பாக நிறுத்தி அத்தளிர் அசைவது போலத் தன் நெஞ்சும் துயர் மிகுதியால் அலைகின்ற தென்பாள், கரைபொருது இரங்கும் கான்யாற்று இகுகரை, வேர்கிளர் மாஅத்து அந்தளிர் போல, நடுங்க லானா நெஞ்சமொடு என்றும், இந் நிலைமைக்கண், மழை நின்று பெய்வதால் காதலர் குறித்த பருவம் வந்தமையும், அவர் வாராமையும் பற்றி எழும் நினைவு களால் எய்தும் இடும்பை பொறுத்தற்கு அரிதாய் இராநின்ற தென்பாள், இடும்பை யாங்கனம் தாங்குவென் என்றும், மழை, கார்மழையாய் நின்று பெய்கின்றமை காட்டுவாள் அதியமான் நெடுமான் அஞ்சியின் தேர் வீசு இருக்கை போல மாரி தரீஇ மான்றன்றால் மழை என்றும் கூறினாள். இதனாற்பயன், ஆற்றாமையாற் பிறந்த அயர்வு தீர்வது. அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககாலத்தில் தகடூரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டின் தென்மேலைப் பகுதியில் ஆட்சி புரிந்த குறுநிலமன்னன். தகடூர் இந்நாளில் சேலம் மாவட்டத்தில் தர்மபுரி என்ற பெயர் தாங்கியுளது. தகடூர் நாடு, அந்நாளில், தெற்கில் கொல்லிமலையும், கிழக்கில் சவ்வாதி மலையும், வடக்கில் நந்திமலையும் மேற்கில் வான மலையும் என்ற நான்கு மலைக்கும் இடையில் கிடந்தது. அதியமான் வழிவந்தோர் கி.பி. 13,14 ஆம் நூற்றாண்டுவரையில் தமிழகத்தில் வாழ்ந்து பின்பு காலற்றுப் போயினர். நெடுமான் அஞ்சி ஒளவையார்க்கு நெல்லிக்கனி யீந்து அழியாப் புக ழுடம்பு பெற்றவன். இதிகாச புராணக் கதைகளால் நிரம்பிய பிற்காலத்தார் அவனைக் கடையெழு வள்ளல்களுள் ஒருவன் என்பர். தமிழ் இலக்கிய வரலாற்று நெறியே நோக்கின் அவன் தலையெழு வள்ளல்களில் ஒருவனாவன். ஒளவை யாருடைய பாட்டுக்கள் பலவும் அவன் புகழ் பாடுவனவாகவே இருக்கும். அதுபற்றியே ஈண்டும் விடாது பொழியும் மழையைச் சிறப்பித்தற்கு நெடுமான் அஞ்சியின் தேர்வீ சிருக்கையை எடுத்து உவமம் செய்துள்ளார். 382. களக்கோட்டுத் தண்டியார் இவர் பெயர் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என அச்சுப் பிரதியிற் காணப்படுகிறத; ஏட்டில் களக்கோட்டுத் தண்டியார் எனக் காணப்பட்டபோது உடனிருந்து ஆராய்ச்சி புரிந்த என் நண்பர் வெள்ளைவாரணனார், நிகண்டன் என அச்சுப்படியிற் காணப்படுவது நிக்கந்தன் என்பதன் திரிபாகலாம் என்று கருதினர். இது பின்னரும் ஆராய்தற் குரிய தொன்று. களக்கோடு என்பது களக்காடு எனத் திரிந்து பிற்காலத்தே வேந்தர் குடியொன்று தோன்றி இங்கிருந்து ஆட்சிபுரிதற்கு இடமாயிற்று. இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பொதியின் மலைத் தொடர்களின் அடியில் உளது. பிற் காலத்தில் தோன்றிய நிகண்டு என்னும் நூல்வகைக்கும் கலைக் கோட்டுத் தண்டு எனப்படும் நூலுக்கும் இக்களக் கோட்டுத்தண்டிக்கும் தொடர்பு காட்டு வோரும் உண்டு. தண்டி என்பது மக்கட் பெயர்வகையுள் ஒன்று என்பதை நம்பி ஆரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையே நன்கு காட்டுகிறது. இவர் பாடியதாக இவ்வொருபாட்டுத் தான் உளது. இவரைப் பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. களவின்கண் காதலுறவு கொண்ட தலைமக்கள், அதனைச் செவ்விய முறையில் வளர்த்து வருங்கால், கடமை தோன்றித் தலைமகனைத் தன் காதலியினின்றும் சின்னாட்குப் பிரிந்திருக்கு மாறு செய்தது. தலைமக்களின் முதிரா இளமையுள்ளம் காதலுணர்ச்சியை அடக்கியாளும் அத்துணை வன்மையுடைய தன்று. ஆனால், தலைமக்களது தலைமைநலம் அவ்வன்மைச் சிறப்பை அடிப்படையாகக் கொண்டது. அதனால், தலைமகன் தன் மனத்திண்மையால் கடமைவழிச் சென்றான். தலைமகளும், அவனோடு ஒத்த நலம்படைத்தவளாயினும், தலைமகன் போல உடலுரமும் புறவுலகில் புகுந்து அது நல்கும் அறிவுவளம் பெறும் வாய்ப்பும் உடையளல்ல ளாகலின், அவளுடை அறிவு, அக் காதல் துடிப்புக்கு உள்ளாகி அதன் வழிநின்று இயலுவ தாயிற்று. அவள் உண்டியிற் சுருங்கி உறக்கம் குன்றி வாட்டம் உற்றாள். அவளுடைய நுதலும் கண்ணும் பசலை பாய்ந்து ஒளிமழுங்கின. அதனைக் காணும் தோழி எத்துணையோ வகைகளில் அவளை ஆற்றுவிக்க முயன்றாள். அம்முயற்சி போதிய பயன் தாராமையால், அவள் அறிவு சோர்ந்து செய்வது தெளியாது திகைப்புற்றாள். தன்னை ஆற்றுவிப்பதைக் கைவிட்டு ஆற்றாமை மேலிட்டுத் தோழி அயர்ந்தமை தலைமகட்குத் தெரிந்தது.தன் உயிர்த்தோழி கவல்வது காணப் பொறாது அவள் மனம் அன்பால் அழுங்கிற்று; தானே தோழிபாற் சென்று, "நேரிழையாய், யான் ஆற்றாவண்ணம் மாலைப்போதில் கழிநீர் பெருகிக் கானலிடமெல்லாம் பரவுமாறு கடல் பொங்கிக் கரையை அலைப்பதும், நெய்தல் கூம்புவதும், நீர்க்குருகுகள் கடல்மீன் ஆர்ந்து தத்தம் குடம்பை சேர்வதும் நினையாது, நம்மிற் பிரிந்து சென்றுறையும் தலைவர்பொருட்டு நாம் மனையின்கண் இருந்து வருந்துதலால், நமது அரிய உயிரே அழியுமாயினும், காதல்நோயை ஆற்றிப் புறத்தார்க்குப் புலனாகாவாறு யான் மறைத்துக்கொள்வேன்; ஏனெனில், நம் வேறுபாட்டைப் பிறர் அறியின் நம் தலைவர்க்கு மிக்க நாணத்தைப் பயந்து வருத்தம் எய்துமாறு அவர்கள் அலர் கூறிப் பழிதூற்றுவர்" என்றாள். தன் இன்னுயிர் கெடுவதாயினும், காதலற்குத் தன்னாற் பழி யுண்டாதல் கூடா தெனக் கருதும் தலைவியின் மனப்பண்பு தோழிக்கு ஆறுதல் அளித்தது. இக்கூற்றின்கண், தன்னை வெதுப்பிய வேட்கைத்தீயால் எய்திய ஆற்றாமை தன்தோழி யறிவையும் அயர்வித்து ஆற்றாமை உறுவிப்பதைத் தலைமகள் தன் அறிவு நலத்தால் மாற்றித் தோழி யறிவைச் செந்நிலையில் நிறுத்தும் திறம் அமைந்திருப்பது கண்ட களக்கோட்டுத் தண்டியார் வியந்து இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். கானல் மாலைக் கழிநீர் மல்க நீனிற நெய்தல் நிரையிதழ் 1கூம்ப ஆனா தலைக்கும் 2கடலே மீன் ஆர்ந்து புள்ளினம் குடம்பை யுடன்சேர் புள்ளார் துறந்தோர் தேஎத் திருத்துநனி வருந்த ஆருயிர் அழிவ தா-யினும் நேரிழை கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்புநீர்த் தண்ணந் துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. இஃது ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்ககில்லா ளாயினாட்குத் தலைமகள் சொற்றது. உரை : மாலைக் கழிநீர் கானல் மல்க - மாலைப் பொழுதில் கழியிடத்து நீர் பெருகிக் கானற்சோலை யெங்கும் பரவ; நீனிற நெய்தல் நிரையிதழ் கூம்ப - நீல நிறத்தையுடைய நெய்தற் பூக்களின் நிரல்பட அமைந்த இதழ்கள் குவிய; ஆனாது அலைக்கும் கடல் - இடையறவின்றிக் கடலும் அலையா நிற்கும்; புள்ளினம் மீனார்ந்து குடம்பை சேர்பு - கடற் புள்ளினம் மீன் மேய்ந்துண்டு தத்தம் கூடு நோக்கிச் செல்லு தலை; உள்ளார் - நினையாராய்; துறந்தோர் தேஎத்து - பிரிந்து சென்ற காதலர் பொருட்டு; இருந்து நனி வருந்தி - மனைக்கண் இருந்து மிகவும் வருந்தி; ஆருயிர் அழிவதாயினும் - என் அரிய உயிர் கெடுவதாயினும்; நேரிழை - நேர்த்தியான இழைகளை யணிந்த என் தோழி; கரத்தல் வேண்டும் - மறைத்தலே வேண்டுவதாகும்; பரப்பு நீர்த் தண்ணந் துறைவன் நாண - பரந்த நீரையுடைய கடற்றுறைவனாகிய தலைவன் நாண மடையுமாறு; நண்ணார் தூற்றும் பழியுண்டு - ஏதிலார் அலருரைத்துத் தூற்றும் பழியுண்டா மாகலான் எ.று. நேரிழை, துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழியுண்டா மாகலான், துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி ஆருயிர் அழிவதாயினும் நாம் எய்தி வருந்தும் நோயைக் கரத்தல் வேண்டும், எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீலம், நீல் எனக் கடை குறைந்தது. அலைத்தல், அலைகள் அலைந்து ஆரவாரித்தல் மேற்று, குடம்பை, கூடு, சேர்பு. சேர்தல்? உள்ளார். முற்றெச்சம், தேஎத்து என ஏழாவதன் பொருள்பட வருவதாயினும் ஈண்டு நான்காவதற் குரிய பொருட்டுப் பொருள்பட வந்தது. நேரிழை: அண்மைவிளி. ஆல் : அசை நிலை. மற்று : வினைமாற்று, துறைவன், துறந்தோர் என வந்தது ஒருமை பன்மை மயக்கம். நண்ணார், ஈண்டு அயல்மனை மகளிர்மேற்று. களவின்கண் தலைவனொடு தனக்கு உளதாகிய காத லுறவு வரைவால் வெளிப்படுமுன், அவன் கடமை காரண மாகத் தணந்ததனால், காதலுணர்ச்சி மீதூர்ந்து அறிவறை போகி ஆற்றாமை எய்திய தலைவி, அதற்கு ஏதுவாகியவற்றை எடுத்தோதித் தன் அறிவைத் துலக்குவாளாய், மாலைக் காலத்தில் கடல் பெருகிப் பகற்போதில் தலைவனைத் தலைப் பெய்து கூடி விளையாடி இன்புற்ற கானற்சோலையில் கழிநீர் பெருகிப் பரவுமாறு பொங்கி அலைக்கும் என்பாள், கானல் மாலைக் கழிநீர் மல்க ஆனாது அலைக்கும் கடல் என்றும், வைகறையில் மலர்ந்து பகல்முற்றும் இதழ் விரிந்திருந்த நெய்தல் கூம்பத் தலைப்படும் என்பாள், நீனிற நெய்தல் நிரையிதழ் கூம்ப என்றும், பகற்போதில் கடலிடத்து மீனைத் தேடி மேய்ந்த புள்ளினம் மாலையில் தத்தம் கூடு நோக்கிச் செல்லும் என்பாள், மீனார்ந்து புள்ளினம் குடம்பை யுடன் சேர்பு என்றும், கடற்பெருக்கு என் உள்ளத்துக் காதற் பெருக்கை உளதாக்குதலையும், கழிநீர் கானலிற் பரவுவது காதலரை நாம் கண்டு கூடிய காட்சியை நினைப்பித்தலையும் மாலையில் நெய்தல் கூம்புவது யான் கண் உறங்காமையையும், புள்ளினம் மீனார்ந்து குடம்பை சேர்தல், தான் மேற்கொண்ட வினையை முடித்துக் கொண்டு தலைவர் மீளாமையை நினைப்பித்தலையும் நம் தலைவர் நினையாராயினர் என்பாள், உள்ளார் துறந்தார் என்றும், அவர் நம்மை மறந்தாலும் அவரை நாம் மறக்கமாட்டே மாகையால், அவர்பொருட்டு உயிர் தாங்கி இருந்து நனிவருந்தி வாடுகின்றோம் என்றும், என்றாலும் நம் காதலர் நாணுமாறு பழியுண்டாக்குதல் நமக்கு அறமன்மையின் நமது வேறு பாடு பிறர் அறியாவகை உயிர் கொடுத்தேனும் மறைத்தல் இன்றியமையாது என்பாள், ஆருயிர் அழிவதாயினும் கரத்தல் வேண்டுமால் என்றும், கரவாவிடத்துக் காதலரை நாணத்தால் தலைகுனிவிக்கும் பழி தூற்றிப் பரிசழிப்பர் அயற்பெண்டிராகிய ஏதிலார் என்பாள். துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே என்றும் கூறினாள். இதனாற் பயன், தோழி தெளிவும் மனத் தின்மையும் கொண்டு ஆற்றாமை தீர்வாளாவது. 383. கோளியூர் கிழார் மகனார் செழியனார் கோளியூர் கிழார் பெயர் ஏடுகளில் கோழியூர் கிழார் என்றும் காணப்படுகிறது. பாண்டியர்க் குரிய பெயரைத் தம் மகனுக்கு இட்டிருத்தலால் இக்கோளியூர் கிழார் பாண்டி மன்னரால் கிழார் எனச் சிறப்பிக்கப்பட்டவ ரென்பது தெரிகிறது. கோளியூர்கள் சோழநாட்டிலும் தொண்டை நாட்டுப் பையூர்க் கோட்டத்திலும் பாண்டிநாட்டிலும் உள்ளன. எனினும் செழியனார் பெயரை நோக்க இக்கோளியூர் கிழாரது ஊர் பாண்டிநாட்டது என்பது தெளிவாம். கோளியூர், கோழியூர் என்ற பெயர் வகை இரண்டும் வழக்கில் இருத்தலால் ஒருதலையாகத் துணிதற்கு இடமில்லை. இவரை அறிதற்கு வேறு குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. இவர் பாடியதாக இவ்வொருபாட்டுத் தான் உளது. களவொழுக்கினராகிய தலைமக்கள் பகற்குறிக்கண் தலைப் பெய்து இன்புற்று வருகையில், பலவாறு இடையீடுபட்டுக் கூட்டம் பெறாது சென்றனர். அவர்களது உள்ளத்துக் காதல் பெருகி முறுகுமாறு கருதியும், தலைமகன் தெருண்டு வரையுமாறு எண்ணியும், தோழி இரவில் வருமாறு அவனை வேண்டினாள். அவனும் அவ்வாறே வந்து தலைவியைக் கண்டு இன்புற்றான். இரவில் அவன் வரவு நோக்கி விழித்திருத்தலும், அதனால் தலைமகள் கண்ணும் நுதலும் வேறுபடுதலும், இரவில் அவன் வருமிடத்து அல்லகுறிப்பட்டுக் கூட்டம் இன்றிக் கழிதலும் பிறவுமாகிய இடையீடுகள் உண்டாயின. இவ்வாற்றால் தலைவனது உள்ளம் திண்மை யழியாமை கண்ட தோழி, இனி அவன் தலைமகளை வரைந்து கோடலே நேரிது எனத் துணிந்து அவனை வரைவுகடாவத் தொடங்கினாள். அறிவுடை நன் மக்களை ஒன்று செய்யுமாறு வேண்டுவோர், அதனை அவர்பால் வெளிப்பட மொழியாது உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப் பாய்க் கூறுவது உலகியல் வழக்கு, அவ்வியல்பு பற்றித் தோழி தலைமகனை இரவிற் கண்டு அவன் வரவின் அருமைப்பாட்டை வியந்து, எத்துணையோ ஏதம் நிறைந்த வழிகளைக் கடந்து நீ வருவதால் எமக்கு உண்டாகும் இன்பத்தினும் துன்பமே பெரி தாக உளது என்ற கருத்துப்பட மொழியலுற்று, "மலைநாடனே நீ இக்கார்கால நள்ளிரவில் மலைக்காட்டுவழியே வருகின்றாய். ஒருபால் குட்டி யீன்ற பெண்புலி பசித்திருப்பது கண்டு ஆண்புலி ஒரு களிற்றைக் கொன்று இடிபோல் முழங்குகிறது; ஒருபால் இருள் திணிந்த இவ்விரவில் மழைமேகம் திரண்டு மின்னி இடித்துப் பாம்புகளை வருத்துகிறது. இக்கொடுமை நிறைந்த நிலையில் நீ வருவது எம் நெஞ்சை அச்சத்தால் பெருந்துயர்க் குள்ளாக்குகிறது, ஆதலால் நீ இரவு வருதலை விடுத்து வரைந்து கோடலே செயற்பாலது" என்பது தோன்றக் கூறினாள். இக்கூற்றின்கண், இரவில் வரும் தலைமகனை வரைவு கடாவும் தோழி, அவனது ஆண்மையை வியப்பது போல, அவன் வரும் நெறியின் கொடுமையை விதந்து கூறி, அதனால் அவன் உள்ளம் மகிழ்வது கண்டு நின் வரவால் யாம் பெருந்துன்ப முறுகின்றே மாதலால், இனி வாரற்க என மறுத்துரைக்கும் நயம் கண்ட கோளியூர் கிழார் மகனார் செழியனார் அதனை இப்பாட்டி லமைத்துப் பாடுகின்றார். கல்லயற் கலித்த கருங்கால் வேங்கை அலங்கலந் தொடலை யன்ன குருளை 1உயப்புனிற் றிரும்பிணாப் பசித்தென வயப்புலி புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு 2உருமின் உரறும் உட்குவரு நடுநாள் அருளினை 3போலினும் அருளா யன்றே கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவிற் பாம்புடன் 4றிடிக்கும் உருமோ டோங்குவரை நாடநீ வருத லானே. இது, தோழி ஆறுபார்த் துற்றுச் சொல்லியது. உரை : கல்லயல் கலித்த கருங்கால் வேங்கை - மலைப்பக்கத்தே தழைத்துநின்ற கரிய அடியையுடைய வேங்கைமரத்தின்; அலங்கலம் தொடலை யன்ன - அசைகின்ற பூமாலை போன்ற; குருளை உயப் புனிற்று இரும்பிணாப் பசித்தென - குட்டி யீன்ற வருத்தம் மிக்க ஈன்றணிமையையுடைய பெரிய பெண்புலி பசித்திருந்ததாக; வயப் புலி- வலி மிக்க அதன் ஆண்புலி; புகர்முகம் சிதையத் தாக்கி- புள்ளி பொருந்திய முகம் பிளக்கு மாறு தாக்கி; களிறு அட்டு - களிற்றுயானையைக் கொன்று; உருமின் உரறும் உட்குவரு நடுநாள் - இடியேறு போல முழங்கும் அச்சம் பொருந்திய நள்ளிரவில் போந்து; அருளினை போலினும் - எம்மை அருளுவாய் போன்றனை யேனும்; அருளாய் அன்றே - அருளாயாயினை; கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவின் - மிக்க இருள் திணிந்த அஞ்சத்தக்க வழியில்; பாம்பு உடன்று இடிக்கும் உருமோடு - பாம்பை எறிந்து கொல்லும் இடி முழங்க; ஓங்குவரை நாட - உயர்ந்த மலைநாடனே; நீ வருதலான் - நீ வருவதனால்; எ.று. ஓங்குவரை நாட, இரும்பிணாப் பசித்தென, வயப்புலி, முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு உரறும் நடுநாள் அருளினை போலினும் அருளாயன்றே, இயவில் உருமோடு நீ வருதலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றே என்றவிடத்து அன்றென்னும் எதிர் மறைக் குறிப்பும் எதிர்மறை யேகாரமும் புணர்ந்து ஆம் என உடன்பாட்டுப் பொருள் தந்தன. அலங்கல், அசைதல். தொடலை, மாலை. குருளை, குட்டி. உயவு என்பது உய என வந்தது. புகர் முகம் கூறியது களிற்றின் முதுமை யுணர்த்துதற்கு. உட்கு அச்சம். கல், மலை. தலைவனை வரைவு கடாவக் கருதும் தோழி இரவில் அவன் வரும் நெறியின் கொடுமை கூறி வரவு மறுக்கும் குறிப்பால், நள்ளிரவின் தன்மையைக் குருளை யீன்ற தன் பிணவின் பசி தீர்த்தற்கு ஆண்புலி களிற்றினைக் கொன்று முழங்கும் செயலை விதந்து, குருளை உயப் புனிற்று இரும்பிணாப் பசித்தென வயப்புலி களிறு அட்டு உருமின் உரறும் என்றும், அவ்விரவில் தலைவன் வரும் வழியைக் கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவு என்றும், அக் காலத்தே மழைமுகில் திரண்டு மின்னி யிடித்துப் பாம்புகளைக் கொல்லும் திறத்தைப் பாம்பு உடன்று இடிக்கும் உருமொடு என்றும், இவ்வாறு எம்மருங்கும் உயிர்க்கொலையே நிகழும் நெறியில் வருவது எமக்குப் பெருந்துன்பத்தைச் செய்தலின் நின் வரவு அருளாய்த் தோன்றி அருளில் செய்கையாய் வருத்தம் தருகிற தென்பாள், அருளினை போலினும் அருளாய் அன்றே என்றும், எனவே இவ்வரவினை விடுத்து வரைதலைச் செய்வாயாக என்றும் கூறினாள். குருளை யீன்ற பெண்புலி பசித்திருப்பது காணப் பெறாத புலியேறு களிற்றினைக் கொன்று முழங்குவது, நின்பொருட்டு நலன் இழந்து வருந்தும் தலைவியின் காதல் நோய் தீர்தற்கு நீ அலர் கூறுவார் செயலைக் கொன்று வரைவு முழக்கத்தால் விளக்கம் பெறுக என்றும், உருமுத் தோன்றிப் பாம்பினை இடிக்கும் மலைநாட னாதலால், இவ்விருளிடைத் தோன்றி நெறியின் கொடுமை நினைந்து வருந்திய எமது துன்பத்தைப் போக்கு வான் வந்தனை என்றும் கூறியதாகக் கொள்க. தலைமகன் கேட்டு வரைவு மேற்கொள்வானாவது பயன். 384. பாலை பாடிய பெருங்கடுங்கோ தலைமகள்பால் களவுநெறியிற் காதலுறவு கொண்ட தலை மகன், அந்நெறியில் அறம் பிறழா தொழுகி அக்காதலை வளர்த்து அவளை வரைந்துகொள்ள முயன்றானாக, தலைவியின் தமர் வேற்றோர்க்கு மகட்கொடை நேர்ந்து தனக்கு மறுப்பர் என்பது போலும் குறிப்புத் தோன்ற, அதனை நுண்ணிதின் உணர்ந்து உடன்போக்குத் துணிந்தான், அவனின் வேறிலளாகிய தலை மகளும் அவன் கருத்திற்கிசைந்தாள். குறித்த நாளிரவில் தோழி துணைசெய்யத் தலைமக்கள் இருவரும் உடன் போவாராயினர். நெடுஞ்சேண் சென்றதும், வேங்கை மரங்கள் நின்ற சாலை தோன்றிற்று. அதன் வழியே செல்லுங்கால், அவளது நடையழகு தலைமகற்கு மிக்க இன்பத்தைத் தந்தது. ஒருபால் களர்நிலத்து நின்ற கள்ளிமரத்து முள்கொண்டமைத்த கூட்டில் முட்டை யீன்று அடைகாக்கும் பெண்புறாவுக்கு உணவு வேண்டி, அதன் சேவல் முதுபாழாகிய இடத்து உதிர்ந்த நென்மணிகளைத் தேர்ந்து கொணர்ந்து ஊட்டுவது கண்டு, தலைவன் மனை வாழ்வின் மாண்புணர்ந்து மகிழ்ந்தான். வேங்கையின் மலர்கள் சாலையில் உதிர்ந்து கிடக்க, அவற்றின்மேல் தலைவி நடந்து செல்வது கண்டு தன் நெஞ்சை நோக்கி, "அன்று நாம் பொறுத்தற் கரிய துயர் உழந்தபோது நம்பாற் போந்து இன்புறுத்திய இளை யவள் இவ்வேங்கை மலர்மேல் நடந்து செல்லும் அழகை இப்பொழுது நீயும் காண்" என்றான். தலைமகளைப் பெறுதற்கு முன்னிருந்த வேட்கையே பெற்ற பின்னும் இருக்கவேண்டும் என்பது காதலறம். களவுக் காலத்திற் குறியிடத்தினின்றும் பெயர்ந்து சென்ற தலைவியது நடையழகு கண்டு மகிழ்ந்த தலைவன் உள்ளம், அக்களவு வெளிப்பாடாகிய உடன்போக்கிலும் அதுபோலவே மகிழ்வது இக்கூற்றின்கண் விளங்குவது கண்ட பாலை பாடிய பெருங்கடுங்கோ அதனை இப்பாட்டிற் றொடுத்துப் பாடுகின்றார். 1வெண்புறப் புறவின் செங்காற் சேவல் களரி ஓங்கிய கவைமுட் கள்ளி முளரியங் 2குடம்பையின் ஈன்றிளைப் பட்ட வயவுநடைப் பேடை உணீஇய மன்னர் முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம் மாணில் சேய்நாட் 3டாரிடை மலர்ந்த நன்னாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூ பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ காண்இனி வாழிஎன் நெஞ்சே நாண்விட் டருந்துயர் உழந்த காலை மருந்தெனப் 4படூஉம் மடவோ ளையே. இஃது, உடன்போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை : வெண்புறப் புறவின் செங்காற் சேவல் - வெண்மை யான புறத்தையுடைய புறாவின் சிவந்த காலையுடைய சேவல்; களரி ஓங்கிய கவைமுட் கள்ளி - களர்நிலத்து ஓங்கி வளர்ந்த கவைத்த முட்களையுடைய கள்ளி மரத்தில் கட்டிய; முளரியங் குடம்பையின் - முட்களாலாகிய கூட்டின்கண்; ஈன்று இளைப் பட்ட - முட்டை யீன்று அடைகாவலைச் செய்யும்; வயவு நடைப் பேடை உணீஇய - வயாநோயுற்று நடத்தலையுடைய பெண்புறா உண்டற் பொருட்டு; மன்னர் முனைகவர் முதுபாழ் உகுநெல் பெறூஉம் - மன்னர்களால் பகைவர் ஊர்களைக் கவர்ந்து சூறையாடிப் பாழ்படுத்தப்பட்டு முதுபாழாகிய விடத்திற் சிதறிக் கிடக்கும் நெல்லைக் கொணரும்: மாணில் சேய் நாட்டு ஆரிடை - மாட்சியில்லாத சேய்மைக் கண்ணுள்ள நாட்டுக்குச் செல்லும் அரிய சாலைவழியில்; நன்னாள் மலர்ந்த வேங்கைப் பொன் மருள் புதுப்பூ - திருமணக் காலம் நோக்கி மலர்ந்த வேங்கை மரங்களின் பொன்போலும் புதுப் பூக்கள்; பரந்தன நடக்க கண்டனம் - பரந்து கிடப்பன வற்றின் மேல் நடந்து செல்ல யாம் கண்டேம்; என் நெஞ்சே - எனது நெஞ்சமே ; இனி காண் - இப்பொழுது காண்பாயாக; வாழி-; நாண்விட்டு அருந்துயர் உழந்தகாலை - என்னையும் என் தலைமையையும் வேறுபடுத்தி நின்ற நாணத்தைக் கை விட்டுக் குறியிடத்தே நின்று யான் வருந்திய காலத்து; மருந்து எனப்படூஉம் - தன் நோய்க்குத் தானே மருந்து எனச் சிறப் பிக்கப்பெறுதற்கு ஒப்பப் போந்து நோய் களைந்த; மட வோளை - இளையவளாகிய தலைவியை எ.று நெஞ்சே, நாண்விட்டுத் துயர் உழந்தகாலை, மருந்து எனப்படூஉம் மடவோளைச் சேய்நாட்டு ஆரிடை, நன்னாள் மலர்ந்த வேங்கைப் புதுப்பூப் பரந்தன நடக்க யாம் கண்டனம், இனி காண்,வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மாதும் ஒவும் அசைநிலை. புறம், சிறகின் மேற்புறம். முளரி, முட்கள். இளைப்படல், காவற்படல். வயவு , வேட்கைநோய்.முனை, பகைவர் ஊர். குடம்பையில் ஈன்று இளைப்பட்ட பேடை உணீஇய சேவல் முதுபாழ் உகுநெல் பெறூஉம் என இயையும், பெறுதல், பெற்றுக்கொணர்ந்து தருதல். மாணில் சேய்நாடு, மாட்சியாகிய வளமில்லாத சேய்மைக்கண் உள்ள நாடு. "காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே1" என்பது காண்க. வேங்கைமலரும் காலத்தில் திரு மணம் நிகழ்வது பற்றி மலர்ந்த நன்னாள் வேங்கை என்றார். நன்னாள் மலர்ந்த வேங்கை யென மாறுக. அருந்துயர், கூட்டம் எய்துமோ என அலமரும் உள்ளமொடு வருந்திய பொறுத்தற்கரிய துயர் எனக் கொள்க. இன்றியமையாமை தோன்ற மருந்தென்றல் மரபு; "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து" 2எனச் சான் றோர் மருந்து என்றல் காண்க. தலைமகளைக் கொண்டுதலைக்கழியும் தலைவன், அவளை நோக்குந்தோறும் களவுக்காலத்தில் அவள்பால் தன் கருத்தை யீந்து கையறவு எய்தியபோது அவள் தன்பாற் போந்து இன்புறுத்திய செயலை நினைந்து சேவற்புறவின் செய்கைமேல் வைத்து உள்ளுறுத் துரைக்கின்றானாகலான், வெளிப்படையில், தான் அவளுடைய நடையழகைக் காணு மிடத்து, அவள் தான் பிறந்து வளர்ந்த தாய்நாட்டிற் போல மாணாத வேற்று நாட்டிலும் இனிது நடந்தேகுதல், அவளது மனவொருமையைக் காட்டலின் , மாணில் சேய் நாட்டு ஆரிடை யென்றும் அன்று வேங்கை நீழலில் தான் ஊக்க அவள் ஊசலாடியது போலவே, இன்று தான் உடன் வர, வேங்கையின் பூமேல் நடப்பது அப்போதைப் போல ஒரு தன்மையான கிளர்ச்சியே, அவள் மனத்து நிலவுவது தோன்ற, நன்னாள் மலர்ந்த வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் பரந்தன நடக்க யாம் கண்டனம் என்றும். களவுக்காலத்தில் அவளது அருமை நோக்கிப் பெறுமாறு எவ்வாறு எனக் குறியிடத்தே தன் சான்றாண்மைக்கு அணியாய் நின்ற நாண் துறந்து வருந்தி யிருந்தபோது, மனைக்காவலைக் கடந்து தன்பாற் போந்து தன் துயர் களைந்த அருமை நினைந்து நாண்விட்டு அருந்துயர் உழந்த காலை மருந்து எனப் படூஉம் மடவோள் என வியக்கும் நெஞ்சிற்கு இதனையும் காண் என்பான் போல, காண்இனி வாழி என் நெஞ்சே என்றும் கூறினான். சால்புக்கு உறுப்பும், ஆண்மைக்கு அணியு மாதலின், நாண்விட்டு நின்றமையை முதற்கண் நினைந்தும், இளமைக் கண் தோன்றும் புதுநோயாதலின் காதல்நோயை அருந்துயர் என்றும் தன் நெஞ்சில் நிகழ்ந்ததைப் பட்டாங்கு மொழிகின்றான். ஈன்று இளைப்பட்ட பெண் புறாவின் பொருட்டுச் சேவல் முதுபாழ் உகுநெல் பெற்றுப் போந்து நல்கும் என்றது, களவுக் காலத்துக் காதல்வேட்கைக்குத் தன் மனத்தை ஈந்து கையறவு பட்ட எனக்கு, இவள் இச்சுரத் திடை என்னுடன் போந்து இன்பம் நல்குகின்றாள் எனத் தன் உவகையைப் புலப்படுத்தவாறு, இதனாற் பயன் உவகை கூர்தல். 385. அஞ்சிலாந்தையார் எல்லை சென்றபின் மலரும் கூம்பின புலவுநீர் அடைகரை யாஅம் 1பார்ப்போ டலவனும் அளைவயிற் செறிந்தன 2கொடுங்கழி இரைநசை வருத்தம் வீட மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் பொழுதன் றாதலின் 3தமியை வருதி 4எழுதெழில் மழைக்கண் ... ... ... இப்பாட்டை இவ்வளவில் முடித்து, இறுதியில் "இவ் வஞ்சி லாந்தையார் பாட்டு இறந்தது" என்றொரு குறிப்புத் தமிழ்ச்சங்க ஏட்டில் உளது. அச்சுப்படியில் இக்குறிப்பும் காணப்படவில்லை; ஆயினும், இப்பாட்டின் அடிக்குறிப்பு, "கிடைத்த பிரதிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது; இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்பட வில்லை" என்று கூறுகிறது, மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் "எழுதெழில் மழைக்கண்" என்பதும் சிதைந்துவிட்டது. 386. தண்கால் ஆத்திரையன் செங்கண்ணனார் தண்கால் என்பது பாண்டிநாட்டுப் பழமையான ஊர்களி லொன்று. தண்கால், தங்கால் என மருவி வழங்கினமையின், சிவப்பதிகாரம் இவ்வூரைத் தங்கால் என்று கூறுகிறது; இதன் அரும்பதவுரைகாரர் திருந்தங்காலூர் என்பர். டாக்டர் உ.வே . சாமிநாதையர் இது திருத்தண்கால் எனவும் வழங்கும் என் கின்றார். பொதியத்தில் தோன்றி வரும் தென்றல், இவ்வூர்ப் பகுதி யடைந்ததும் மென்மையும் தண்மையும் பெற்றுத் தமிழ்நடை யுற்று இனிமை செயத் தலைப்படுவதால், அவ்விடம் தண்கால் எனப்படுவதாயிற்றுப் போலும். ஆத்திரையன் என்பது ஆதிரை யான் என்பதன் திரிபு. மகளிரை ஆதிரை என்பது போல, ஆண் மக்களை ஆதிரையான் என்பது வழக்கு. புதுப்பட்டி ஏட்டில் ஆதிரையான் எனக் காணப்படுவதுதான் திருந்திய பாடம். ஆதிரையன் மகனார் செங்கண்ணனார் என்று கொள்ளாது, சிலர், ஆத்திரேய கோத்திரத்தான் செங்கண்ணன் என்ற பொருள்பட நிற்கிறது என்பர். அவர், குலம் கோத்திரங்களின் வாடையே தமிழகத்தில் வீசாத காலத்தவர் செங்கண்ணனார் என்பதை மறந்து கூறுகின்றனர். ஆசிரியர் செங்கண்ணனாரது வரலாறு தெரிவிக்கும் குறிப்பொன்றும் கிடைத்திலது. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் உளது. மனைக்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன் பரத்தைமை பூண்டான் என்று சிலர் கூறக் கேள்வியுற்ற தலை மகட்கு உள்ளத்தே புலவி தோன்றிற்று. உண்மையை ஆராய்ந்த தோழி, அவன்பால் அஃது இன்மை யறிந்து அவற்கு வாயில் நேர்ந்தாள். ஆகவே, அவள் தலைவிபாற் போந்து, "தலைவன் களவின்கண் வரைவு நீட்டித்தகாலை, யான் அவனைக் கொடுமை கூறினேனாக, அவன் குறித்தநாளில் வரைவொடு வருவதாக மொழிந்தான்; ஆயினும், யான் அவன் கூற்றை ஐயுற்றேனாக, அவன் தன் சொல்லின் வாய்மையைப் புலப் படுத்தற்குத் தெய்வத்தை முன்னிறுத்துச் சூள் செய்குவேன் என்றான்; உடனே , நும்மோ ரன்னோர் இதுபோலும் செயல் வகைகளை மேற்கொள்ளார் என நீ மறுத்தனை; பின்பு அவன் மொழிந்த வண்ணமே வரைவொடு வந்தான்; அப்போது, நினக்கு அவன் சொல்லின் வாய்மை நன்கு தெரிந்தமை காணவும், எனக்கு வியப்பு மிகுந்தது" என்றாள். தலைமகளும் சிவப்பாறி முகமலர்ந்து, அவர் சொல்லிலும் செயலிலும் தூயர் என்று சொன்னாள். அவட்குத் தோழி, "அதனாற்றான், யானும் அவர்கூற்றை ஐயுறாது தெளிந்தேன்; இனி, நின் குறிப்பறியாது ஒன்றும் செய்யேன்" என்றாள். களவின்கண் தன்னை யின்றியமை யானாய் ஒழுகியது நினைந்த அளவிலே தலைமகட்கு அவனுடைய காதலின் வாய்மையும், செய்த தலையளியும் தோன்றி அவளது புலவியை மாற்றின; தோழிக்கும் வாயில் நேர்ந்தாள். இக்கூற்றின்கண், தலைவியை வாயில் நேர்விக்கும் கருத்தின ளான தோழி, களவுக்காலத்தில், தலைவன்பாற் காணப்பட்ட வாய்மையை எடுத்தோதித் தன் கருத்தை முற்றுவித்துக் கொள்ளும் சூழ்ச்சியைக் கண்ட செங்கண்ணனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகட் கண்ணிக் கானவர் உழுத குலவுக்குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் விடரளைப் பள்ளி வேங்கை அஞ்சாது கழைவளர் சாரல் துஞ்சும் நாடன் அணங்குடை அருஞ்சூள் 1தருகுவென் என நீ நும்மோ ரன்னோர் துன்னார் இவையெனத் தெரிந்தது 2வியந்தனென் தோழி பணிந்துநம் கல்கெழு சிறுகுடிப் பொலிய வதுவை என்றவர் வந்த ஞான்றே. இது, பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி முகம்புகுவலென முற்பட்டாள், தலைமகள்மாட்டு நின்ற பொறாமை நீங்காமை யறிந்து, பிறிதொன்றன்மேல் வைத்துப் பாவியேன் இன்று பேதைமை செய்தேன், எம் பெருமாட்டி குறிப்புணராது வழிப்படுவே னாயினேன்மன் என்று சொல்லியது. உரை : சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் - சிறு கண்களை யுடைய மிக்க சினம் பொருந்திய ஆண்பன்றி; துறுகண் கண்ணிக் கானவர் உழுத - நெருங்கத் தொடுக்கப்பட்ட கண்ணியை யணியும் கானவர் உழுது விளைத்த; குலவுக் குரல் ஏனல் மாந்தி - வளைந்த கதிரையுடைய தினையை யுண்டு; ஞாங்கர் - அப்புனத்தின் மேலிடத்தே; விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது - மலை முழைஞ்சினுள்ளே யுறையும் வேங்கைப் புலிக்கு அஞ்சாமல்; கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் -மூங்கில் வளரும் மலைச்சாரலிடத்தே உறங்கும் நாடனாகிய தலைமகன்; அணங்குடை அருஞ்சூள் தருகு வென் என- பொய்த்தவழி வருத்துதலுடைய அரிய சூள் செய்து தருவேன் என்றானாக; நீ - நீ புகுந்து; நும்மோர் அன்னோர் துன்னார் இவை என - நும்போலும் தலைமக்கள் இது போலும் சூளுறவுகளைச் செய்யார் என்று; தெரிந்தது பணிந்து வியந்தனென் - தெரிந்துரைத்தது உண்மையாதல் கண்டு பணிந்து வியப்புற்றேன்; தோழி - ; நம் கல்கெழு சிறுகுடிப் பொலிய - நமது மலையகத்துள்ள சிறுகுடி முற்றும் விளங்கத் தெரியும் படியாக; வதுவை என்று அவர் வந்த ஞான்று - வதுவை கூறி வருகின்றேமென்று சொல்லிக் கொண்டு வந்தபோது எ.று. தோழி, நாடன் அருஞ்சூள் தருகுவென் என, நீ இடை மறித்து, நும்மோரன்னோர் இவை துன்னார் எனத் தெரிந் துரைத்தது, நம் சிறுகுடி பொலிய வதுவை யென்று அவர் வந்தஞான்று உண்மையாதல் கண்டு வியந்து பணிந்தேன் என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. ஒருத்தல் ஏனல் மாந்தி, வேங்கை யஞ்சாது, சாரல் துஞ்சும் நாடன் என இயையும். பன்றியின் ஆண் ஒருத்தல் எனப்பட்டது. பன்றி, யானை முதலிய விலங்குகளின் ஆணை ஒருத்தல் என்பது மரபு. கண்ணி - இருபக்கமும் பூக்கள் பொருந்தத் தொடுக்கும் ஒரு தொடுப்புக்குக் கண்ணி எனப் பெயர் கூறுவர். கண்ணி களாக நெருங்கத் தொடுக்கப்படும் முடிமலரைத் துறு கண் கண்ணி என்றார்; இதனைத் துறுகள் கண்ணி யெனக் கொண்டு மிக்க தேன் பொருந்திய கண்ணி என்றுரைத்தலும் ஒன்று. குலவுக்குரல், வளைந்த கதிர். ஞாங்கர், மேலிடம். விடர் அளைப் பள்ளி, விடர்க்கண் உள்ள அளையாகிய இடம். கழைவளர் சாரல், மூங்கிற்புதர் செழித்து வளரும் மலைச் சாரல். அணங்கு வருத்தம்; தெய்வமுமாம். தெய்வத்தை முன்னிட்டுச் சூள் செய்தலுண்மை பற்றி அணங்குடைச் சூள் என்றார் என்றுமாம். சூள் பொய்த்தவழித் தெய்வம் ஒறுக்கும் என்பது இன்றும் நாட்டில் நிலவும் ஒரு கொள்கை. துன்னுதல், ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு. வியந்தனென் பணிந்து என்பதை வியந்து பணிந்தனென் என மாறுக; வியப்பு மிக்க வழிப் பணிவு பிறத்தல் இயல்பு. கல்கெழு சிறுகுடி, மலையகத் துள்ள கானவரூர். வரைந்தவழி உடனிகழ்வது பற்றி வரை வொடு வந்தமையை வதுவை யென்று வந்ததாகக் கூறினார். வரைவு இவள் இன்னார்க்கு உரியள் என வரைசெய்தல். இதன்பின்பு நிகழ்வது திருமணம். வரைவு, மகட்கொடை புரிவோர்க்கும் பெறுவோர்க்கும் இடையே சான்றோர் முன்பு ஊரவர் அறிய நடைபெறும் உடன்பாடு. வதுவை , "நாடறி நன்மணம்" எனப்படும். வதுவைக்குப் பின்பே தலைவியும் தலைமகனும் மனைவியும் கணவனுமாய் மனைவாழ்வு மேற் கொள்வார்; இதனால் வரைவு திருமணமாகாமை அறிக. ஒரு மனைக்கண் தலைமகனும் தலைமகளும் ஒருங்கு வதிதற் கமைந்த கரணமாதல் பற்றித் திருமணம் வதுவை எனப் படுகிறது. கரணம், செயல்முறை. இதனால் வரைவும் வதுவை யும் கரணமாதல் காண்க. ஒருவனும் ஒருத்தியும் தம்மிற்றாமே கூடி மனைவாழ்வு நாடிய வகையில் பொய்யும் வழுவும் புகுந்தமை கண்ட சான்றோர் ஊரறிய நடக்கும் வரைவையும் நாடறிய நடக்கும் வதுவையையும் இன்றியமையாக் கரணமாக வகுத்தனர். "பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று தொல்காப்பியனார் உரைப்பது காண்க. இந்நூற்பாவுக்கு உரை கண்ட இடைக்கால அறிஞர்கள் பிறர் மதம் மேற்கொண்டு உரைகூறி விட்டனர். தமிழர் திருமணத்தின் குறிக்கோள் பிறர்க்குப் பயன்பட வாழ்தல்; "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று தமிழ்ச்சான்றோர் கூறுதல் காண்க. வடமொழிவாணரின் திருமணக் குறிக்கோள் மகப்பெறுதல்; மகப்பேற்றினுள்ளும் ஆண்மக்களைப் பெறுதலே அவர் களால் மகப்பேறு எனக் கருதப்படும். "மகற்பேறு கருதியது மணம்" என வடநூலார் கூறுவர். தமிழர் மக்கட்பேற்றைக் குறிக்கோளாகக் கொள்ளாது,. மனைஅறத்தைக் குறியாகவும் மகப்பேற்றை வாழ்வுக்கு நன்கலமாகவும் கருதுவர். ஒருவனும் ஒருத்தியும் உள்ளத்தால் இயைந்த உயிர்வாழ்க்கைக் கமைந்த துணையாம் இயல்பிற்றாகிய திருமணம், இயற்கையில் நிகழ்வ தென்பது தமிழ்க்கொள்கை. ஒருவனும் ஒருத்தியும் மகற்பேறு குறித்துப் பெற்றோர் முதலியோரால் புணர்க்கப்படும் இயல் பிற்றாகிய திருமணம் செயற்கையில் நிகழ்வதென்பது வட நூலார் கொள்கை. மக்களினத்தின் ஒருமையைச் சீர்குலைத்துப் பலவேறு இனமாகச் சிதறுவிக்கும் இதன் குற்றம் இடைக் காலத்தே உணரப்படாமையால் செயற்கை மணங்கள் தமிழ ரிடை நிலைபேறு கொண்டன. இவ்வாற்றால் இயற்கையாகிய வதுவைத் திருமணத்தோடு செயற்கையாய் நடக்கும் வதுவைப் புணர்ச்சியை ஒப்பு நோக்குதல் உவம விலக்கணத்துக்கே முரண் என அறிக. தலைமகன்பால் புறத்தொழுக்க முளதாயிற் றெனக் கேட்டு மனம் பொறாத தலைமகள் உள்ளத்தே தோன்றி நின்ற புலவியை நீக்குவான் போந்த தோழி, உள்ளுறையால், அவன் பால் பரத்தைமை இன்மை கூறுகின்றா ளாகலின், களவுக் காலத்து அவனது காதல்வாய்மையைத் தலைவி நன்கு அறிந் திருந்ததை விதந்தோதலுற்று, அக்காலத்தே அவன் வரைவு நீட்டித்தமை பொறாது தான் கொடுமை கூறியதற்கு, அவன் தன் வாய்மையை நிறுவும்பொருட்டுச் சூளுற முற்பட்டதை நினைப்பிப்பாள், நாடன் அணங்குடை அருஞ்சூள் தருகு வென் என என்றும், உடனே, நீ இடைபுகுந்து மறித்து நும்மோ ரன்னோர் துன்னார் இவை யென வுரைத்தாய் என்றும், அது கண்டு வெள்கிப் பின்னின்ற யான். அவன் குறித்த நாளில் வரைவொடு வந்தமை கண்டேன் என்பாள், நம் கல்கெழு சிறுகுடிப் பொலிய வதுவை யென்று வந்தான் என்றும், அதுபோது அவனுடைய சொல்லின் வாய்மையை முன்னுறத் தெளிந்துரைத்த நின் அறிவு நலம் கண்டு வியந்து பணிந்தேன் என்பாள், வதுவை யென்று அவர் வந்த ஞான்று தெரிந்தது வியந்தனென் பணிந்து என்றும் கூறினாள். அது கேட்டுத் தலைவி மகிழ்ந்து சிவப்பாறி முகம் மலர்ந்து வாயில் நேர்ந்தாள் என அறிக. கேழல், கானவர் உழுது விளைத்த ஏனலை யுண்டு விடரளைப் பள்ளியில் உறையும் வேங்கைப்புலிக்கு அஞ்சாது உறங்கும் நாடன் என்றது, தலைவன் நீ செய்யும் மனை யறத்தால் விளையும் இன்பம் நுகர்ந்து புறத்தே யுறையும் பரத்தையர் கண்வலைக் ககப்படாது ஒழுகு கின்றான் என உள்ளுறுத்துரைத்தவாறு. இதனாற் பயன் தலைவி சிவப்பாறி வாயில் நேர்வாளாவது. 387. பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தவர்; இவரைப் பொதும்பில் கிழார் நக்கனார் என்று தமிழ்ச்சங்க ஏடு குறிக்கின்றது. ஏனை ஏடுகள் பொதும்பில் கிழார் என்று குறிக்கின்றன. இவர் பாடியன வாக இப்பாட்டும் 57 ஆம் பாட்டும் கிடைத்துள்ளன. ஒன்று செறிப்பறிவுறீஇ வரைவுகடாவுவது; இது பருவம் காட்டி வற்புறுத்துவது. இவரது வரலாறு அறிதற்குரிய குறிப்பு வேறு கிடைத்திலது. மனைவாழ்வில், வினை புகழ் பொருள் குறித்து ஆடவர் புறத்தே சென்று உரிய செயல்களை மேற்கொள்வது கட னாகும். வினையே ஆடவர்க்கு உயிர்; ஒருவன் பெறுவனவற்றுள் புகழல்லது பொன்றாது நிற்பது ஒன்று இல்லை. அறன்கடைப் படாத வாழ்க்கையும், பிறன் கடைச் செல்லாத செல்வமும் பொருளால் ஆவன. இக்கடன்களை ஆற்றாது இல்லிருந்து மகிழ்பவர்க்கு அறமோ புகழோ உண்டாகா. இக்கருத்தைக் குறிக்கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் தலைமைப் பண்பாடு. இதனை மேற்கொண்டு தலைமகன் தன் மனையின் நீங்கிக் கார்ப்பருவ வரவில் மீள்வதாகச் சொல்லிச் சென்றான். நாள்கள் திங்களாயின; திங்கள் சிலவாய்க் கழிந்தன; அவன் பிரிவை அரிதின் ஆற்றியிருந்த தலைமகள், அவன் வரும் காலத்தை நோக்கி யிருந்தாள்; தலைவனைப் பிரிந்துறையும் தலைமகட்கு ஒவ்வொரு நொடியும் நெடுங்காலமாகத் தோன்றிற்று. கார் காலத்து அணிமையில் வாடை போதர மழைமுகில்கள் தோன்றி விசும்பில் பரவத் தலைப்பட்டன. தலைவனை நினைந்து தலைவி நுதல்பசந்து தோள் மெலிந்து மேனி வேறுபடலானாள். கார்கால வரவு கண்ட தோழி தலைவியின் வேறுபாடு நோக்கி, தோழி, அங்கே தோன்றும் நெடிய பெரிய குன்றத்தைச் சூழ்ந்துகொண்டு மழை முகில்கள் மிக்க பெயலைச் செய்கின்றன; ஆகலான் அரிய சுரங்களைக் கடந்து சென்ற காதலர் தவிராது வருகுவர். ஆதலால், நாளும் நீ தோள் மெலிந்து மேனிநலம் இழந்து கெடுதல் வேண்டா" என்றாள். இக்கூற்றின்கண், தலைமகள் எய்திய மெலிவுக்குக் காரணம் தலைமகனது பிரிவு என்பது உணர்ந்து அதற்கு மருந்து அவனது வருகையே எனத் தேர்ந்து, அதனை ஏதுக்காட்டி வற்புறுத்தி நலம் சிதையேல் என்ற நயம் கண்டு வியந்த 1பொதும்பில் கிழாரான நக்கனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். நெறியிருங் கதுப்பும் 2நீடமைத் தோளும் அம்ம நாளும் தொன்னலம் சிதையல் ஓராச் செந்தொடை ஓரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன்னருங் கவலை அருஞ்சுரம் இறந்தோர் வருவர் வாழி தோழி 1செருவிறந்து ஆலங் கானத் தஞ்சுவர இறுத்த வேல்கெழு தானைச் செழியன் பாசறை உறைகழி வாளின் மின்னி உதுக்காண் நெடும்பெருங் குன்றம் முற்றிக் கடும்பெயல் பொழியும் கலிகெழு வானே. இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது. உரை : நெறியிருங் கதுப்பும் - நெறித்த கரிய கூந்தலும்; நீடு அமைத் தோளும் - நீண்ட மூங்கில் போன்ற தோளும்; அம்ம-; நாளும் - நாடோறும்; தொன்னலம் சிதையல் - நின் பழைய இளமையழகு கெடாதொழிக; ஓராச் செந்தொடை - ஆராய்ந்து செலுத்தப்படாத அம்பும்; ஓரிஇய கண்ணி - அணியாது விலக்கப்பட்ட கண்ணியும் உடைய; கல்லா மழவர் - போரல்லது பிறிது தொழில் கல்லாத மழவர்களின்; வில்லிடை விலங்கிய - வில்லை அரணமாக நிறுத்திய பாசறை குறுக்கிட்ட; துன்னரும் கவலை அருஞ்சுரம் இறந்தோர் - செல்லுதற்கரிய கவர்ந்த வழியையுடைய அரிய சுரத்தைக் கடந்து சென்ற தலைவர்; வருவர் - நீட்டியாது வந்து சேர்வர்; தோழி -; வாழி-; செரு விறந்து - செருவிற் செறிந்து; ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த - தலையாலங்கானம் என்னு மிடத்தே கண்டோர்க்கு அச்ச முண்டாகப் பொருது வென்றி மேம்பட்டிருந்த; வேல்கெழு தானைச் செழியன் பாசறை - வேல் ஏந்திய தானையையுடைய நெடுஞ்செழியனுடைய பாசறையில்; உறைகழி வாளின் மின்னி - உறையினின்றும் கழித்த வாள் போல மின்னி; உதுக்காண்-; நெடும்பெருங் குன்றம் முற்றி - நெடிய பெரிய குன்றத்தைச் சூழ்ந்து படிந்து; கடும்பெயல் பொழியும் - மிக்க மழையைப் பெய்யாநின்றது; கலிகெழு வான் - முழக்கத்தையுடைய மழைமுகில் எ.று. தோழி, வாழி. கலிகெழு வான், குன்றம் முற்றி, மின்னிக் கடும்பெயல் பொழிகின்றமையான், அருஞ்சுரம் இறந்தோர் வருவர்; ஆகவே, நீ கதுப்பும் தோளும் நாளும் தொன்னலம் சிதையல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீடு அமை, நெடிய மூங்கில். தொன்னலம், இளமைக்காலத்து மிளிரும் புதுநிறம்; மணமாகிய பின்னரும் நின்றமை பற்றித் தொன்னலம் எனப் பட்டது. அம்பு தெரிந்து செலுத்தல் வில்வீரர் இயல் பாயினும், வல்லவனுக்குப் புல்லும் பொருபடை என்றற் கேற்ப, ஆராய்வின்றிச் செலுத்தும் அம்பு என்பார், ஓராச் செந் தொடை என்றும், நாளும் போர்ப்பூவே சூடுதலின் கண்ணி யணியாமை தோன்ற, ஓரீஇய கண்ணி என்றும் கூறினார். ஓரீஇய கண்ணி என்பது "சென்று சேக்கல்லாப் புள்ள உள் ளில் என்றூழ் வியன்குளம்" 1 என்றாற் போல வந்தது. மழவர், மழ நாட்டுப் போர்மறவர். சிராப்பள்ளி மாவட்டத்தில் கொல்லிமலைக்கும் கொள்ளிடத்துக்கும் இடையே காவிரியின் வடகரையிலுள்ளது மழ நாடு. வில்லிடை, "வாங்குவில் அரணம் அரணமாக2" அமைக்கப் பெற்ற பாசறையிடம். விலங்கல், குறுக்கிடுதல். கவலை, கவர்த்தவழி. துன்னுதல், ஈண்டுச் செல்லுதல். விறப்பு, செறிவு, ஆலங்கானம், தலை யாலங்கானம் என்னுமிடம். இது தஞ்சை மாவட்டத்து அறந் தாங்கிப் பகுதியில் உளது என்பர். இறுத்தல், பாசறை யிட்டு இருத்தல். முற்றுதல், சூழ்ந்து படிதல். கடும்பெயல் என்றது, கார்காலத்து மிக்க மழையைச் சுட்டி நின்றது. கலி ஈண்டு இடிமுழக்கத்தின் மேற்று. அம்ம : உரையசை; கேள் என்னும் பொருளது. தலைமகன் பிரிவின்கண் தலைவிக்கு ஆற்றத் தகுவன கூறிப் போந்த தோழி, தலைவன் குறித்த பருவவரவை விசும்பில் மழைமுகில் எழுதலாற் கண்டு தலைவியை நோக்கவும், அவளுடைய கூந்தல் ஒப்பனையின்றிக் கிடப்பதைச் சுட்டி நெறித்துக் கருமை நிறம் பொருந்தி மிளிரும் நின் கூந்தலும் அழகிய தோளும் அவர் கூடியிருந்த காலத்தில் விளங்கிய பழைய நலம் நாடோறும் தேய்ந்து கெட இருப்பது நன்றன்று என்பாள், நெறியிருங் கதுப்பும் நீடமைத் தோளும் தொன்னலம் சிதையல் என்றும், அதனால் வியப்புற்ற தலைவி யது குறிப்பு இவ்வாறு நீ இன்று கூறுதற்குக் காணம் யாதென வினவுவது போன்று இருந்தமையின், அருஞ்சுரம் இறந்தோர் வருவர் வாழி தோழி என்றும் கூறினாள். தலைவன் கடந்து சென்ற சுரத்தைத் தோழி அருஞ்சுரம் என்றாளாகலின், அதன் அருமையை விளக்குவாள், பாசறை குறுக்கிட்டமையின் கவர்ந்த வழிகள் பல தோன்றிச் செல்வோர் உண்மை வழி துணியாவாறு மயக்கும் என்பாள், மழவர் வில்லிடை விலங்கிய துன்னரும் கவலை அருஞ்சுரம் என்றும் அவர்கள் நம் தலைவரது செலவுக்கு இடையூறு செய்யக் கூடிய திற லுடையரல்லர் என்பாள், ஓராச் செந்தொடை ஓரீஇய கண்ணிக் கல்லா மழவர் என்றும் விதந்துரைத்தாள். இத் துணையும் தோழி கூறியது, தூதரால் செய்தியறிந்து கூறு கிறாள் எனத் தலைவி மனம் கொள்ளற் பொருட்டு. அதன் பின் தோழி தலைவர் வருவர் எனத் தெளிந்து சொல்லுதற்கு ஏது இது வென்பாள், உதுக்காண் எனக் காட்டி நெடும் பெருங் குன்றம் முற்றி மின்னிக் கடும்பெயல் பொழியும் கலிகெழு வான் என்றாள். கார்மழை என்பது தெரிவித்தற்கு நெடும் பெருங் குன்றம் முற்றி என்றும் கடும்பெயல் என்றும் கலி கெழுவான் என்றும் சிறப்பித்துரைத்தாள். இதனாற்பயன், தலைவி மனம் தெளிந்து முகம்மலர்ந்து தலைவன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருப்பாளாவது. 388. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மருதம் என்பது பாண்டிநாட்டு ஊர்களுள் ஒன்று. இவ் வூரிடத் திருந்து மன்னர் பாராட்டும் சிறப்பைப் பெற்றதனால் கிழாராகிய சான்றோர் ஒருவரின் மகனாதலால், மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் என்ற பெயர் பெற்றார். இவர் மதுரை நகர்க்கண் தங்கி வாழ்ந்தமை தோன்றப் பிற்காலத்து ஆன்றோர் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் என்று குறித்தனர். இம்மருதங்கிழார்க்குச் சொகுத்தனார் இளம் போத்தனார் என வேறும் இருமக்கள் உளர். இம்மூவரும் மருதங்கிழாரின் மாண்புக் கேற்ப நல்லிசைப்புலமை எய்திச் சான்றோர் மதிக்கும் சால்பு பெற்றுள்ளமை பெரிதும் இன்பம் தருவ தொன்று. பெருங்கண்ணானர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் இந்நூற்கண் உளது; அகநானூற்றில் மூன்று பாட்டுக்கள் உள்ளன. களவு ஒழுக்கினரான தலைமக்களிடையே வரைவு நிகழ் தற்குரிய அளவில் காதலுறவு பெருகினமை கண்ட தோழி தலைவனை வரைவு கடாவியவழியும், அவன் அதனைக் கொள் ளாது கடமையின் இடையீடு காரணமாக நீட்டித்தான். அதனால், தலைமகள் வேட்கைமிக்கு ஆற்றாளாவளே என்று தோழி மிகவும் வருந்தினாள். அப்போது தலைமகனும் சிறைப்புறமாக வந்து நின்றான். அவன் செவிப்படுமாறு தோழிக்குக் கூறலுற்ற தலை மகள், "தோழி, பெருமீன்களை யெறியும் எறியூசிகளை ஏற்றிக் கொண்டு விளக்கு நிறுத்திய படகுகளைச் செலுத்திச் சென்று கடலின்கண் இரவில் மீன்வேட்டம் புரிந்து வைகறையில் கரை வந்து சேர்ந்த பரதவர், தாம் கொணர்ந்த மீன்களைக் கானலிடத்து மணற் பரப்பில் குவித்துவிட்டு, வெயிலேறியதும் புன்னை நீழற்கண் கிளைஞர் சூழ இருந்து தேறலுண்டு மகிழும் துறையை யுடையவர் நம் தலைவர்; அவர் பெருமையை நோக்க என் நெஞ்சு மிகச் சிறிதாயினும் அதனினின்றும் அவர் நீங்குதல் இலர்; அதனால் என் நுதற்கண் பசப்பு உண்டாகக் காரணமில்லை; நீ வருந்தற்க" என்று தெளிய வுரைத்தாள். இக்கூற்றின்கண், தோழியை ஆற்றுவிக்குமாற்றால் தலை மகன்பால் தனக்குள்ள காதல் நிலையைத் தலைமகன் செவிப்படக் கூறுவது கண்டு வியப்பு மிகுந்து பெருங் கண்ணனார் இப் பாட்டைப் பாடியுள்ளார். அம்ம வாழி தோழி நன்னுதற் கியாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக் கயிறுகடை யாத்த 1கடுவிசை எறியுளித் திண்டிமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ 2அரைநாள் வேட்டம் போகி வைகறைக் கடன்மீன் தந்து கானற் குவைஇ ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன்எம் சிறிய நெஞ்சத் 3தகல்வறி யோனே. இது, வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது; மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதுஉமாம். உரை : அம்ம -; தோழி-; வாழி-; நன்னுதற்குப் பசப்பு யாங்கா கின்று கொல் - என் நல்ல நெற்றியின்கண் பசப்பு எங்ஙனம் உண்டாகும், கூறுக; நோன்புரிக் கயிறு கடையாத்த - வலிய புரிகள் பலவற்றால் இயன்ற கயிறு அடியிலே கோத்துக் கட்டப் பட்ட; கடுவிசை எறியுளி - மிகவும் விரைவாகச் சென்று தைக்கக் கூடிய எறியூசிகளை யேற்றிய; திண்திமில் பரதவர் - திண்ணிய படகுகளையுடைய பரதவர்; ஒண்சுடர்க் கொளீஇ - ஒள்ளிய விளக்குகள் கொண்டு; வைகறை அரை நாள் வேட்டம் போகி - நள்ளிரவில் மீன் வேட்டைக்குச் சென்று; கடல்மீன் தந்து - விடியற்காலையில் தாம் பிடித்த கடல்மீன்களைக் கொணர்ந்து; கானற் குவைஇ- கானலிடத்தே குவித்து; ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து - உயர்ந்த கரிய புன்னை மரத்தின் வரிகள் பொருந்திய நீழற்கண் இருந்து; தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி - தேன் கலந்த கட் டெளிவைச் சுற்றம் சூழ இருந்து உண்டு; பெரிய மகிழும் துறைவன் - பெருமகிழ்ச்சி கொள்ளும் துறைவனாகிய காதலன்; எம் சிறிய நெஞ்சத்து அகல்வறியோன் - எமது சிறிய நெஞ்சி னின்றும் நீங்குவதில னாகலான், எ.று. தோழி, வாழி, பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ, வேட்டம் போகி வைகறைக் கடல்மீன் தந்து, கானற் குவைஇ, புன்னை நீழற்கண் இருந்து, கிளையொடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன் எம் சிறிய நெஞ்சத்து அகல்வறியா னாகலான், நுதற்குப் பசப்பு யாங்காகின்றுகொல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. அம்ம : உரையசை. யாங்காகின்று கொல், எங்ஙனம் உண்டாகும்; ஏன் எய்துகின்றதோ அறியேன் என்றுமாம். பல புரிகளால் முறுக்கிய கயிறு மிக்க வலியுடைத் தாதலால் , நோன்புரிக் கயிறு என்றார். கடையாத்த உளி என்றதனால் எறியூசி என்பது விளங்கிற்று. நுனை கூரிதாய்ப் பெரிய உளிபோல் தடித்து நீண்டிருப்பது பற்றி எறியுளி எனப்பட்டது. இதனைத் திமிங்கில வேட்டுவர் கையாளு கின்றனர். இஃது எறியீட்டி எனவும் வழங்கும். இதன் நுனி அங்குசம்போலக் கவையும் கூர்மையு முடையது. பெரு மீனின் தாக்குதற்கு உடைந்து கெடாத திண்மை யுடைமை தோன்றத் திண்டிமில் என்றும், பெருங்காற்று மோதிய போதும் அவியாத வன்மையும் நெடுந்தூரம் ஒளிசெய்யும் தன்மையும் உடைய விளக்கென்றற்கு ஒண்சுடர் என்றும் கூறினார். வரிநிழல் , புள்ளியும் கோடுமாய் வெயிலொளிபட்ட நிழல். தேறல், கட்டெளிவு; இது தேன்கலந்து உண்ணப் படுதலால் தேங்கமழ் தேறல் என்றார். கிளைஞர் பலரோடும் கூடியிருந்து நெடுநேரம் மகிழ்ந்து இன்புறுதல் தோன்ற, பெரிய மகிழும் என்றார். அகல்வறியான் செய்யுளாகலின் அகல்வறியோன் என வந்தது. தலைமகன் வரைவு நீட்டிப்பதால் தலைவி ஆற்றாது வருந்துவளெனக் கருதிச் சோர்வுற்ற தோழியை ஆற்றுவிக்கும் கருத்தினளாய்ப் போந்த தலைவி தோழியை நோக்கி, "தோழி, யான் நுதல் பசந்து மேனி மெலிவேன் என எண்ணி நீ வருந்துதல் வேண்டா; என் நுதலிற் பசலை படர்தற்குக் காரணம் யாதும் இல்லை" என்பாள், அம்ம வாழி தோழி நன்னுதற்குப் பசப்பு யாங்காகின்று கொல் என்றும், ஒருகால் நீ ஆற்றாயாமாறு பசப்புத் தோன்றி யுளதாயின், அதற்குக் காரணம் இல்லை என்றும், நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்றும் வற்புறுத்தற்கு அம்ம வாழி தோழி என்றும் கூறி னாள். இதனால் தலைவி நுதல் பசப்பு எய்தாது என்பது அவள் குறிப்பாகவே, அஃது இன்மைக்குக் காரணம் இது வென்பாள், துறைவன் எம் சிறிய நெஞ்சத்து அகல்வறியான் என்றாள். காதற் கண்களுக்குக் காதலிக்கப்பட்ட பொருட்கண் பெருமையும் காதலிக்கும் தன்கண் சிறுமையும் தோன்றுவது இயல்பாதலால், எம் சிறிய நெஞ்சத்து அகல்வறியான் என்றாள். அவன் ஒருவனையல்லது வேறு யாதும் புகுதற்கு இடமில்லாத அத்துணைச் சிறுமையுடைத் தாகலின், அவன் அதனினின்றும் நீங்காது உறைகின்றான் என்றற்கு இவ்வாறு கூறினாள் என்றுமாம். இரவில் மீன் வேட்டம் சென்ற பரதவர் வைகறையில் மீள்களைக் கானற் சோலையில் குவித்துப் புன்னையின் நீழலில் கிளைஞருடன் கூடிக் கட்டெளிவுண்டு பெருமகிழ்ச்சி கொள்வர் என்றதனால், வரை விடைவைத்துப் பிரிந்த தலை மகன் பொருள் கொடுவந்து நல்கிச் சான்றோராகிய கிளைஞர் சூழ வரைந்து மகிழ்விப்பன் என்பது குறிப்பு என அறிக. தலைவன் தெருண்டு வரைவு மேற்கொள்வானாவது. 389. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்தவரான செங்கண்ணனார் இனிய புலமை நலம் வாய்ந்தவர். இவர் காலத்தே அவியன் என்றொரு குறுநிலத் தலைவன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தான்; அவனது ஊர்க்கும் அவியனூர் என்ற பெயரே பிற்காலத்தே வழங்கியது. 1இடைக்காலச் சோழபாண்டியர் காலத்தில் அது அவியனூர் நாட்டுக்குத் தலைமை நகரமாயிற்று. இந்த அவியன் வழிவந்தோர், பாண்டிநாட்டுத் திருப்புத்தூர்ப் பகுதியிலுள்ள சூரைக்குடியில் இருந்து, அவியன் பெரிய நாயனான விசயாலய தேவன் 2அவியன் மாளவச் சக்கரவர்த்தி 3என விளங்கியிருந்தனர். இச்செங்கண்ணனாரும் மாறோகத்து நப்பசலை யாரும் அவியனைப் பாடியிருத் தலால் இருவரும் ஒருகாலத்தவர் என்னலாம். இச் செங்கண்ணனாரை வணிகர் மரபினர் எனச் சிலர் கூறுவர். வாணிகம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்குத் தான் உரிய தென்பது தவறு. தமிழர் வாழ்வில் யாரும் எத்தொழிலையும் செய்வர். வாணிகம் செய்வோர் வணிகர் எனப்படுவர். இக் காலத்தும் வேளாளர் சிலர் வணிகத் தொழிலை மேற்கொண்டு செட்டிகள் என்ற சிறப்புடையரா யிருப்பதும், நாடார் இனத்தவர் பலரும் வாணிகமே புரிவதும் சான்று பகர்கின்றன. நம் செங் கண்ணனார் வாணிகம் செய்திருப்பாராயின், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன், அறுவை வாணிகன் இளவேட்டன் என்றாற் போல இவரும் குறிக்கப்பட்டிருப்பர். அத்தகைய குறிப் பொன்றும் கிடைக்கவில்லை. இவர் பாடியன சில ஏனைத் தொகைநூல்களில் உள்ளன; இந்நூற்கண் இவ்வொரு பாட்டுத் தான் காணப்படுகிறது. களவுநெறியில் காதலுறவு கொண்ட தலைமக்கள் பகற்குறிக் கண் தம்மிற்றாம் கண்டு இன்புற்று வந்தனர். இதனால், தலைவி யுள்ளத்துக் காதல் பெருகி அழிவில் கூட்டம் பெறுதற்கு ஆர்வம் கொள்வதாயிற்று. அது விரைவில் எய்தாவழித் தலைமகள் தன் நலம் குன்றித் துயர் மிகுவள் என்பது உணர்ந்த தோழி, தலைமகனை வரைவுகடாவத் தலைப்பட்டுத் தலைவியொடு சொல்லாடுவாளாய், அவன் செவிப்படுமாறு "தோழி, வேங்கை யும் பூத்துவிட்டது; அன்னையும் என்னைக் கடுத்த பார்வையுடன் நோக்குகிறாள். தந்தையும் வில்லேந்திய இளையர் உடன்வர மா ஒன்றின் பின்னே சென்றனன்; இப்பொழுதைக்குக் கிளிகள் படிந்துண்ணும் கதிர்களைத் தாங்கிய தினைப்புனம் காவலைச் செய்க என்று கூறுகிறாள். யாமோ நாடனாகிய தலைவனொடு அன்புமிகும் காதற்றொடர்பு கொண்டு அமைந்தனம்;இனி நமது நிலைமை யாதாகுமோ, அறியேன்" என்றாள். இக்கூற்றின்கண், தலைவி இற்செறிக்கப்டுவ ளாதலால் இனித் தனிமைக்காட்சி எய்தா தாகலின், வரைந்துகோடலே தக்கது எனத் தலைமகற் குணர்த்தும் தோழியின் மதிநுட்பம் கண்டு வியந்த செங்கண்ணனார் இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். வேங்கை 1தாம்புலி ஈன்றன 2தேங்கொள் 3அருவியும் நெடுவரை மணியின் மானும் அன்னையும் 4அமரா நோக்கினள் என்னையும் களிற்றுமுகம் திறத்த கல்லா விழுத்தொடை ஏவல் இளையரொடு மாவழிப் 5பட்டனன் சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் இனிஎன் றோளே 6அதன்றலைச் 7சேவலொடு போகிய சிதர்கால் வாரணம் முதைச்சுவற் கிளைத்த 8மூழி மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடனொடு அன்புறு காமம் 9அமைந்தனம் தொடர்பே. இது, பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தோழி தலைமகன் கேட்பச் சொல்லியது, உரை : வேங்கைதாம் புலி யீன்றன - வேங்கைமரம் தாமும் பூத்துப் புலிபுலி யென்ற ஒலியினை எழுப்பிவிட்டன; தேங் கொள் அருவியும் நெடுவரை மணியின் மானும் - தேன் கலந் தொழுகும் அருவியும் நெடிய மலையிடத்தே நீலமணி போலும் நிறத்தினைக் கொண்டு விளங்காநின்றது; அன்னையும் அமரா நோக்கினள் - அன்னையும் கடுத்து நோக்குவாளா யினள்; என்னையும் - என் தலைவனாகிய நின் தந்தையும்; களிற்றுமுகம் திறந்த விழுத்தொடைக் கல்லா ஏவல் இளைய ரொடு - யானையின் முகத்தைப் பிளந்த விழுமிய அம்புத் தொடுப்பினை யல்லது பிறிதொன்றும் கல்லாத ஏவின செய்யும் இளைய வீரருடன்; மாவழிப் பட்டனன் - புனத்தை யழிக்கும் மாவாகிய பன்றியைத் தொடர்ந்து சென்றான்; சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் - சிறுபசுங்கிளிகள் நமக்கு மாறாகப் படிந்துண்ணும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தை; இனிக் காவல் என்றாள் - இப்பொழு தைக்குக் காவல்புரிக என்று சொன்னாள்; அதன்றலை - அதன்மேல்; சேவலொடு போகிய சிதர்கால் வாரணம் - சேவலுடன் சென்ற முன்னும்பின்னும் வலிய நகங்கள் பொருந் திய காலையுடைய கோழிப்பெடை; முதைச் சுவல் கிளைத்த மூழி - பழங்கொல்லையின் மேற்புழுதியைக் கிளைத்த முரம்பு மண்ணின்கண்; மிகப்பல நன்பொன் இமைக்கும் நாட னொடு - நல்ல பொற்றூள்கள் மிகப் பலவாகத் தோன்றி மிளிரும் நாடனாகிய தலைவனொடு; அன்புறு காமத் தொடர்பு அமைந்தனம் - அன்பு பெருகும் காதற்றொடர்பு செய்து கொண்டோம்; அஃது என்னாகுமோ, அறியேன் எ.று. தோழி, வேங்கையும் புலியீன்றன; அருவியும் மணியின் மானும்; அன்னையும் அமரா நோக்கினள்; என்னையும் ஏவல் இளையரொடு மாவழிப்பட்டனன்; ஆதலால் ஏனல் இனிக் காவல் என்றாள்; எனவே, பின்னர் இற்செறிப்பள்; நாம் நாடனொடு அன்புறு காதற்றொடர்பு அமைந்தனம்; அத் தொடர்பு என்னாகுமோ, அறியேன் என எஞ்சியவற்றைப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. வேங்கை பூத்தவிடத்து அதன் மலரைக் கொய்வோர் புலிபுலி என ஒலித்துக் கொண்டே கொய்வர்; "ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப், புலிபுலி யென்னும் பூசல் தோன்ற1" என்று சான்றோர் இவ்வழக்கினைக் குறிப்பது காண்க. இதுபற்றியே வேங்கை புலி யீன்றன என்றார். தெளிந்தொழுகும் அருவிநீர் மணி போன்று விளங்குதல்பற்றி மணியின் மானும் என்றார். அமராநோக்குதல் கடுத்து நோக்குதல். களிற்றுமுகம் திறந்த விழுத்தொடை இளையர், கல்லா இளையர் என இயையும். ஒரு தொடுப்பில் களிற்றியானையின் முகத்தைப் பிளந் தெறியும் வில்வன்மை விழுத்தொடை எனப்பட்டது. அம்பு தொடுக்கும் விற்றொழிலன்றிப் பிறிதுயாதும் கல்லாதவர் என்றற்குக் கல்லா இளையர் என்றார். மா, ஈண்டுத் தினைப் புனத்தை யழிக்கும் காட்டுப்பன்றி மேற்று. தினை முற்றிய வழி ஆடவர் போந்து அறுத்தலை மேற்கொள்ளுங்கால், மகளிர் காவல் விலக்கப்படும் என அறிக. இனிக்காவல், இப்பொழுதைக்குக் காவல் புரிக; எனவே பின்னர் மனைக்கட் போந்து உறைக என்றவாறாயிற்று, சிதர், கூரிய நகம். வாரணம், கோழி. முதை, பழங்கொல்லை. சுவல், மேற்புறம். மூழி, ஈரம் பொருந்திய முரம்பு மண். இரண்டாவது மூன்றாவதாக உழுத சாலின் புரண்ட மண் மூழி எனப்படும். அன்புறு காமம், அன்பு பெருகற் கமைந்த காதற்காமம். காதற் காமத் தொடர்பு, களவுக்காத லுறவு; "நான் மறை விரிந்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற்காமம்2" என்பதன் உரை காண்க. பகற்குறிக்கண் போந்து தலைவியைக் கண்டு இன்புறும் தலைமகனை வரைவுகடாவும் தோழி, அவனுக்கு நேர்முகமாக மொழியாமல் தலைவியொடு உரையாட லுற்றுத் தினை கொய்தற்கும் திருமணம் செய்தற்கும் அமைந்த காலத்தில் வேங்கை மலரும் என்பது கொள்கை யாதலின், அதனை நினைப்பித்தற்காக, வேங்கைதாம் புலி ஈன்றன என்றும், கார்மழையாற் கலங்கி யொழுகிய அருவி மணிபோலத் தெளிந்திருக்குமாறு காட்டுவாள், தேங்கொள் அருவியும் நெடுவரை மணியின் மானும் என்றும் கூறினாள். வேங்கை கொய்தும் அருவி யாடியும் வேறுபட்ட நின் மேனியை நோக்கிய அன்னை வேறுபட நினைந்து ஐயுற்று நோக்கினாள் என்பது உணர்த்தற்கு, அன்னையும் அமரா நோக்கினள் என்றும், பின்னர் அவள், என்னை நோக்கி, தந்தை இளைய ரொடு மாவாகிய பன்றியைப் பின்தொடர்ந்து சென்றமையின் நும்மையும் மனைக்குப் போக்கிவிடின், கிளியினம் போந்து தினைக்கதிரை மாய்க்கு மாதலால், அவர் போந்து தினை கொய்யத் தலைப்படுங்காறும் தினைப்புனங் காவலை இப் பொழுதைக்கு மேற்கொள்க என்றாள் என்பாள், என்னையும் ஏவல் இளையரொடு மாவழிப்பட்டனன் என்றும், சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் இனி என்றாள் என்றும் கூறினாள். எனவே, என்னை இளையரொடு மாவழிப் பட்டில னாயின் இற்செறிப்பன் என்றாளாம். இந்நிலையில் நாம் தலைவனொடு பிரிவரிதாகிய காதற்றொடர்பு கொண்டேம் என்பாள், நாடனொடு அன்புறு காமம் அமைந்தனம் தொடர்பே என்று உரைத்தாள். மேலே இற்செறிக்கப்படின் கூட்டம் அரிதாகு மாதலால், இனி வரைந்து கோடலே வேண்டுவது எனத் தலைவன் தெருளுவன் என்பது குறிப்பு. சேவலும் பெடையும் முதைச்சுவல் கிளைத்த மூழியில் நன்பொன் தோன்றி இமைக்கும் என்றதனால், தலைவனும் தலைமகளும் களவின்கண் செய்துகொண்ட காதற்காமத் தொடர்பால் கற்பின்கண் பொன்போற் புதல்வன் தோன்றி விளங்குவன் எனத் தோழி வரைவின்வழித் தோன்றும் மனை வாழ்வின் மாண்பு கூறினாளாம். இதனால் தலைவன் தெருண்டு வரைவுமேற்கொள்வானாவது பயன். 390. ஒளவையார் பரத்தையர் சேரிக்கண் நிகழும் விழாக்களுக்கும் சிறப்புக் களுக்கும் நாட்டுத் தலைவர்களும் செல்வர்களும் சென்று சிறப் பிப்பது பழங்கால மரபு. அக்காலையில், பரத்தையர்க்கும் அவர்கட்கும் தொடர்புண்டாக இடமிருந்தது; செல்வர்பால் தொடர்புற்ற பரத்தையரிற் பலர் பிறர்பால் தொடர்பு கொள்வதும் கொள்ள முயல்வதும் உண்டு. அம்முயற்சிக்கண் பரத்தையர் தம்முள் பிணங்கிப் பூசலிட்டுக் கொள்வர். அவருள்ளும் செல்வர் உள்ளத்தை எளிதில் கவர்க்கும் திறம் இளமை நலம் சிறக்க உடையார்பால் விளங்குதல் காணும் பிறர்க்கு அழுக்கறுதலும் புறங்கூறலும் செயலாய் அமையும். சிலர் அச்சம் நாணம் முதலிய வற்றின் வரம்பிறந்து பேசுதலும் செய்வர். அந்நிலைமைக்கு ஒப்பத் தலைவன்பால் பரத்தையர் பலர் தம் கருத்தைச் செலுத்தி அவன் உள்ளத்தைப் பறிக்க முயன்றனர். அவருள் ஒருத்தி, வேறொரு நலம் புதியளாய நங்கையைப் பார்த்து உள்ளம் பொறாளாய், அவட்குப் பாங்காயின வாயில்கள் கேட்டு அவட்கு உரைத்தல் வேண்டித் தன் தோழியொடு சொல்லாடலுற்றுத் "தோழி, ஆம்பற் பூவால் தொடுக்கப்பட்ட தழையாடையை இடையில் உடுத்து யான் விழாவுக்குப் போதல் வேண்டும்; ஆங்கே, தலைவன் அந்நங்கையைக் காண்பானாயின், அவளை வரையா தொழியான்; வரைவானாயின், வேய்போன்ற என் தோள்கள் மெலிவதோடு பலவகை நலங்களும் கெடும்" என்றாள். இக்கூற்றின்கண், செல்வத் தலைவர்களைத் தம்பால் ஈர்த்துக் கோடற்பொருட்டு முயலும் பரத்தையர் மனம், அழுக்காறு புறங்கூறல் நாணின்மை ஆகிய தீச்செயல் கன்றி நிற்கும் திறம் நன்கு வெளிப்படுதல் கண்ட ஒளவையார், அதனை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். வரைந்து கொள்வோ ரின்மையின் பழங்காலப் பரத்தையர் வேட்கைவழி நின்றனர்; இடைக்காலக் கணிகையர் பொருளின்மை காரணமாக அப் பொருள்வழி நின்றனர். இதுவே வேறுபாடு. வாளை வாளிற் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கைவண் கிள்ளி 1வெண்ணி வாயில் வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ யாணர் ஊரன் காணுந னாயின் வரையா மையோ அரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையும் நற்றோள் அளிய தோழி தொலையுந பலவே இது, பாங்காயின வாயில்கள் கேட்பப் பரத்தை சொல்லியது; தலைமகள் தோழிக் குரைப்பாளாய் வாயிலாய்ப் புக்கார் கேட்பச் சொல்லிற்றுமாம். உரை : வாளை வாளின் பிறழ - வாளைமீன் வாள்போல ஒளி கொண்டு துள்ளாநிற்ப; பொய்கை நீர்நாய் நாளும் வைகு துயில் ஏற்கும் - பொய்கையிடத்து நீர்நாய் அதனை வெறாது நாட்காலையில் உண்டு உறங்கும்; கைவண் கிள்ளி வெண்ணி வாயில் - கைவண்மையை யுடைய கிள்ளி யென்பவனுடைய வெண்ணி யென்னும் ஊர்முற்றத்திருக்கும்; வயல் வெள்ளாம் பல் உருவ நெறித்தழை - வயலில் மலர்ந்த வெள்ளாம்பலும் பசுந்தளிரும் விரவித் தொடுத்த அழகிய நிறமும் உருவமு முடைய தழையாடையை; ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ - மெல்லிதின் அகன்ற அல்குலிடத்தே அழகுற உடுத்துக் கொண்டு; விழவிற் செலீஇயர் வேண்டும் - விழாவுக்கு யாம் செல்லுதல் வேண்டும்; யாணர் ஊரன் - புதுவருவாயினை யுடைய ஊரனாகிய தலைமகன்; காணுந னாயின்- நலம் புதியளாய் விளங்கும் அப்பரத்தையை விழாக்களத்திற் காண் பானாயின்; வரையாமையோ அரிது - அவளை வரையா தொழிகுவா னல்லன்; வரையின் - அவளை வரைந்து கொள்வா னாயின்; வரைபோல் யானை வாய்மொழி முடியன் - மலைபோன்ற யானைகளையும் வாய்மை பொருந்திய மொழியினையு முடைய முடியன் என்பவனது; வரைவேய் புரையும் நற்றோள் - மலையிடத்து வளர்ந்த மூங்கில்போலும் நல்ல தோள்கள்; தோழி -; அளிய - அளிக்கத்தக்கனவாம்; தொலையுந பல - மேலும் கெடுவன பலவாம் எ.று. தோழி, வெள்ளாம்பல் நெறித்தழை, அணிபெறத் தைஇ, விழவிற் செலீஇயர் வேண்டும்; நலம் புதியளாய அப்பரத்தையை அவ் விழாக்களத்தே காணுந னாயின், வரையாமை அரிது; வரையின் நற்றோள் அளியவாம், தொலையுந பல ஆகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாளை பிறழ நாளும் வெறாது உண்டு நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் என இயைக்க. நாள், நாட்காலை. நீர்நாய் நாளும் வாளைமீனை யுண்ணும் என்ப; பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய், வாளை நாளிரை பெறூஉம் ஊர1" எனச் சான்றோர் கூறுதல் காண்க. நீர்நாயின் இயல்புகளை ஐங்குறு நூற் றுரையின்கட் கூறினாம். கிள்ளி, சோழவேந்தருள் ஒரு குடிக்கு முதல்வன்; இவன் வழிவந்தோர் நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி என நிலவினர். வெண்ணி, தஞ்சை மாவட் டத்தில் உள்ளதோர் ஊர்; இந்நாளிற் கோயில் வெண்ணி யென வழங்குகிறது. பூவும் தழையும் விரவ ஆடைபோல் தொடுத்து இளமகளிர் இடையில் உடைமேல் உடுப்பர். ஐது, மென்மை. மன்னும் ஓவும் அசைநிலை. யாணர், புதுவருவாய். அளிய, இரங்கத் தகுவன. பலவாவன, திருவும், உருவும், செல்வர் தொடர்பும் முதலாயின. முடியன் என்பான், தென் னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல்; அவன் பெயர் தாங்கிய நல்ல ஊர் ஒன்று இன்றும் உளது. அதனை முடியனூர்க் கல்வெட்டுக்கள், மலாடான சனநாத வளநாட்டு மகதை மண்டலத்துக் குறுக்கைக் கூற்றத்து முடியனூர்1 என்று குறிக் கின்றன. இடைக்காலப் பாண்டியர் காலத்தில், இவ்வூர் இரவிகுல மாணிக்கச் சதுர்வேதி மங்கலமாகியது2. இதனை அடுத்துள்ள திருப்பாலைப்பந்தலில் கோயில்கொண்ட திரு நாகீச் சுரமுடையார்மேல் எல்லப்ப நயினார் என்ற புலவர் உலாநூல் ஒன்றைப் பாடினார் என முடியனூர்க் கல்வெட்டு3 உரைக்கின்றது. இங்குள்ள வேறோரு கல்வெட்டு4 இம் முடியனூரை, "பெண்ணைத் தென்கரை மகதை மண்டலத்துக் கீழ்துண்ட நாட்டு முடியனூர்" என்று கூறுகிறது. இம் முடியனுக் குரிய மலைகள் கள்ளக்குறிச்சிப் பகுதியில் உள்ளன. தலைவனது தலைமையில் சிறக்கும் ஊரின் ஒருபால தாகிய பரத்தையர் சேரியில் உறையும் ஒரு பரத்தை, தான் காதலிக்கும் தலைவனை நலம் புதியளாய பரத்தையொருத்தி தன்பால் ஈர்த்துக் கொள்வள் என அவளுடைய நலமேம்பாடு கண்டு அழுக்காறுற்று, அவட்குப் பாங்காயின பாணர் கூத்தர் விறலியர் ஆகிய வாயில்கள் போதரப் பார்த்து, அவர்கள் கேட்டுத் தம் தலைவிக்கு உய்த்தல் வேண்டுமென மனத்தில் எண்ணி, தன் தோழிக்குச் சொல்லுவாளாய், "தோழி, இன்று நடைபெறும் விழாவிற்குத் தலைமகன் பிற செல்வர் சூழ வருவனாதலால், நாம் அவன் மனம் கவரத்தக்க ஒப்பனை செய்துகொண்டு போதல் வேண்டும்" என்பாள், விழவிற் செலீஇயர் வேண்டும் என்றும், இளையவர்க் குரிய ஆம் பற்றழையால் நம்மை அணிசெய்து கோடலே வேண்டுவது என்பாள், வெள்ளாம்பல் உருவ நெறித்தழை ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ என்றும் கூறினாள். புதுநலப் பரத்தை விழாவிற்குச் சேறல் நன்கறிந்த செய்தி யாகலின், அழுக்காறு மிகுதியால் அதனை எடுத்துக் கூறாமல், அவளை விழாக் களத்தில் காண்பானாயின், அவள் நலம்பற்றி வரையா தொழியான் என்பாள், காணுநனாயின் வரையாமையோ அரிது என்றும், அதற்கு ஏது அவன் இயல் பாகவே புதுமை காமுறுவோன் என்பாள், யாண ரூரன் என்றும் கூறினாள். "ஊரன் புதுவோர் மேவலன்1" என்று சான்றோர் கூறுவது காண்க. அவன் அவளை வரைந்துகொண்டால் எய்தக் கடவ தாகிய கேடு இது என்பாளாய், நம் நல்ல தோள்கள் அவனைப் பிணித்து நிறுத்தும் மதுகையில்லனவாம் என்பது பட்டுக் கண்டார் இரங்கத் தக்க மெலிவினை எய்தும் என்பது தோன்ற நற்றோள் அளிய என்றும், அவை வாயிலாக எய்தக்கூடிய நலங்கள் பலவும் கெடுதல் ஒருதலை என்பாள், தொலையுந பல என்றும் கூறினாள். இச்செய்தியைப் புதுநலப் பரத்தை அறியின், ஆடல் பாடல் அழகு என்ற தன் நலம் முற்றும் காட்டி விழவு மேம்படுவள் என்றும், தலைமகள் அறியின் அவள் உள்ளத்திற் புலவி தோன்றி ஊடலாய்ச் சிறந்து மனை வாழ்வுக் குரிய காதலின்பத்தை மிகுவிக்கும் என்றும் கொள்க. "ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்2" என்று திருவள்ளுவனார் உரைப்பது நினைவுகூரத் தக்கது. பொய்கைக்கண் வாளை பிறழ்தலால், நீர்நாய் அதனை நாளிரையாக உண்டு உறங்கும் என்றது. பரத்தையர் சேரிக்கண் விளக்கமுறும் பரத்தையரை வெறாது கூடி நுகர்வது தலை மகன் செயல் என அவனுக்கும் பரத்தையர்க்கும் உள்ள தொடர்பு கூறியவாறு என அறிக. இதனாற்பயன் அயாவுயிர்த்தல். 391. பாலை பாடிய பெருங்கடுங்கோ மனைவாழ்வில் இனிதிருந்து அறம்புரிந் தொழுகும் தலை மகன் பொருள் குறித்துப் பிரியக் கருதினான். இமைப்பொழுதும் அவன் பிரிவறியாமையால், தலைவி தன் பிரிவு கேட்பின் பெருவருத்தம் எய்துவள் என அஞ்சி, வெளிப்பட மொழியாது நுண்ணிய குறிப்புக்களால் உணர்த்தினான். அவற்றைத் தலைவி யறிந்ததும் ஆற்றாமை மிகுந்தாள்; அவளை யறியாமலே கண்கள் நீர்சொரியலுற்றன. அதனைக் கண்ட தோழி தலைவியை நோக்கி, "நீ கண்ணீர் விடுவது எற்றுக்கு?" என அறியாதாள் போல வினவத் தலைமகள் தலைவனுடைய பிரிவுக்குறிப்புக்களைச் சொல்லி வருந்தினாள். தோழி முறுவலித்து அவளை நோக்கி, " நீ இனி வருந்துதல் ஒழிக. அவர் செலவழுங்குவர் செல்லுமிடத்துக் கொண்கான நாட்டு ஏழிற்குன்றமே எளிதிற் பொருளாக எய்து மாயினும், நீ கண்ணீர் சொரியப் பிரிந்து சேறலை ஒருகாலும் தலைவர் செய்யார். காதலி கண்கலுழ்ந்து வருந்த எவரும் பொருள்வயிற் பிரியார் காண்" என்றாள். இதன்கண், பிரிவுக் குறிப்புணர்ந்து ஆற்றாளாயின தலை வியை ஆற்றுவித்தற்குத் தோழி, காதலி கண்ணீர் வடிக்கப் பொருள்வயிற் பிரிவோர் ஒருவருமிலர் என உலகியல்மேல் வைத்து வற்புறுத்தும் நயம் கண்ட பெருங்கடுங்கோ அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே புலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும்பில் பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை ஒண்டொடி மகளிர் இழையணிக் கூட்டும் பொன்படு கொண்கான 1நன்னன் நன்னாட் டேழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் யாரே பிரிகிற் பவரே குவளை நீர்வார் நிகர்மலர் அன்னநின் பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே இது, பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. உரை : மடந்தை ஆழல் - மடந்தையே, நீ மனம் ஆழ்ந்து வருந்தற்க; செலவு அழுங்குவர் - அவர் செலவு மேற்கொள்ளாமல் அழுங்குவ ராகலான்; புலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும் பில் - புலியின் பொறி போன்ற புள்ளி பொருந்திய புதர் களின்கண் படர்ந்திருக்கும்; பனிப்பவர் மேய்ந்த - குளிர்ந்த பசுங்கொடிகளை மேய்ந்த; மாயிரு மருப்பின் மலர்தலைக் காரான் - கரிய பெரிய கொம்புகளையும் விரிந்த தலையையு முடைய கரிய எருமை; அகற்றிய தண்ணடை - கழித்த தண்ணிய குழைகளை; ஒண்டொடி மகளிர் இழையணிக் கூட்டும் - ஒள்ளிய தொடி யணிந்த மகளிர் தம் இழைக்கு அழகுண்டாகச் சேர்த்தணியும்; பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு - பொன் விளையும் கொண்கானத்துக் குரியனாகிய நன்னன் என்னும் குறுநிலத் தலைவனது நல்ல நாட்டிலுள்ள; ஏழிற் குன்றம் பெறினும் - ஏழில்மலை எனப்படும் குன்றினையே எளிதிற் பெறுவதாயினும்; பொருள்வயின் பிரிகிற்பவர் யார் - பொருள் குறித்துப் பிரிவர் யாவர்; குவளை நீர்வார் நிகர்மலர் அன்ன - குவளையின் நீர் துளிக்கும் ஒளி பொருந்திய மலரை யொத்த; நின் பேரமர் மழைக்கண் தெண்பனி கொள - நின்னுடைய பெரிய அமர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீர்த்துளிகளைச் சொரியவிட்டு எ.று. மடந்தை, ஏழிற்குன்றம் பெறினும் நின் மழைக்கண் தெண் பனி கொள, பொருள்வயிற் பிரிகிற்பவர் யார்; ஆகலான், ஆழல்; செலவு அழுங்குவர் எனக்கூட்டி வினை முடிவுசெய்க. ஆழல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள். பசுங்குழைகளை யுடைய கொடி படர்ந்த புதர்மேல் பரவிய நிழலிடையே தோன்றும் வெயிற்புள்ளி புலியின்மேல் தோன்றும் வரியும் புள்ளியும் போறலின், புலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும்பு என்றார். பவர், கொடி. தண்ணடை, தண்ணிய பசுமையான குழைகள்; மலைப்பச்சை என்ற கொடியுமாம். கொண்கானம், மலையாள மாவட்டத்தின் வடபகுதியும் தென் கன்னட மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி. நன்னன், அக்கொண் கான நாட்டின் தலைவன்; இவனது தலைநகர் பாழி என்பது; இதனைச் "சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி1" என்றும் "நன்னன் ஏழில் நெடுவரைப் பாழி1" என்றும் கூறுவர். ஏழில்மலையும் அதனைச் சூழவுள்ள பகுதியும் பொன்வளம் உடைய என்பதை, "இயல்தேர் நன்னன், விண்பொரு நெடு வரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலை2" என்பர், ஏழில் குன்றம் ஏழில்மலை யெனவும் வழங்கும்; இது 855 அடி உயரமுடையது; இதனை இந்நாளில் எலிமலை என வழங்கு கின்றனர்3. பாழி, பிற்காலத்தே பாழிக்கல் லாகி இப் போது பாட்கல் என வழங்குகிறது. யாரே என்புழி ஏகாரம் எதிர்மறை. நிகர், ஒளி. தெண்பனி, தெளிந்த நீர்த்துளி. தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதியதைப் பல்வகைக் குறிப்புக்களால் அறிந்து வேறுபட்டு ஆற்றாளாகிய தலைவி கண்ணீரும் கம்பலையுமாய்க் கலங்கஞர் எய்துவது கண்ட தோழி, அவள் கருதுவது தவறென்பாள் போல நோக்கி முறுவலித்து உரைப்பாளாய், ஆழல் மடந்தை என்றும், செலவு தோன்றினும் அதனை மேற்கோடற்குத் தலைவர் விரும்பார் என்பாள், அழுங்குவர் செலவு என்றும் எடுத் துரைத்தாள். பொருளிற் சிறந்தது பொன்னாகலின், அது விளையும் நாடாகிய கொண்கான நாட்டிற் சிறந்தது ஏழிற் குன்றமென்றும், அதனையுடையான் நன்னன் என்றும், அதனைப் பெறுவது அரிது என்றும் கூறுவாள், பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் பெறினும் என்றும், அதனினும் தலைவர்க்கு நீயே சிறந்து விளங்குதலின் ஆற்றாமையால் நின்மலர் போலும் கண் நீர் துளிக்கு மாயின் அவர் ஒருபோதும் பிரிதலை நினையார் என்பாள், பொருள் வயின் யாரே பிரிகிற்பவரே என்றும், குவளைபோல் விழித்துப் பெரியவாய் அமர்த்த குளிர்ந்த நின் கண்கள் தெளிந்த நீர்த்துளிகளைச் சொரியப் பிரிவது அவர்க்கு மாட்டாத செயல் என்றற்கு, நீர்வார் நிகர்மலர் அன்ன நின் பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே என்றும் கூறினாள். பொதும்பிற் பனிப்பவர் மேய்ந்த காரான் அகற்றிய தண்ணடையை மகளிர் இழையணிக் கூட்டுவர் என்று தோழி கூறியது, நின்பால் உள்ள பொருட்குவையில் நீவிர் உண்டு கழிப்பவை ஏனை இரவலர் முதலாயினார்க்கு உதவியாம் நிலையில் உளது என்னும் உள்ளுறையாய்த் தலைவர் பொருள் வயிற் பிரியார் என்ற வன்புறைக்கு ஏதுக் கூறியவாறு. இதனாற் பயன், தலைவி தேறி ஆற்றியிருப்பாளாவது. 392. மதுரை மருதன் இளநாகனார் களவுக் காதலொழுக்கினரான தலைமக்கள், பகற்போதில் கானற் சோலையில் குறியிடம் கண்டு அங்கே தம்மில் தாம் தமித்துக் கூடி இன்புற்று வந்தனர். ஆயினும், அப்பகற்குறிக் கூட்டம் அவ்வப்போது இடையீடுபட்டது. அதனால், அவரது பகலொழுக்கம் போதிய இன்பப் பயனை நல்காது கழியவே, தலைமகள் பெரிதும் வருத்தமுற்றாள். அது கண்ட தோழி இரவுக்குறிக்கண் அவனை வருவிக்கக் கருதித் தலைவியது குறிப்புணர எண்ணினாள். ஒரு நாள் பகற்போதில் குறியிடத்தே தலைவன் வந்திருப்ப தறிந்த தோழி, அவன் கேட்கக் கூடியதோர் இடத்தே தலைவியை நிறுத்தித் தான் கூறுவது அவன் செவிப்படு மாறு, "தோழி, பனைமரங்கள் நிரல்பட நின்று வேலியிட்டது போல் விளங்கும் சீறூர்க்கண் நமது வீடு இருக்குமிடம் நம் காதலர்க்குத் தெரியுமாயின் மிகவும் நல்லது; ஆயமும் பிறரும் போந்தமையால் நமது பகற்கூட்டம் இடையீடுபட்ட போது, அவர் கானலைக் கண்டு நம்மைக் காணாது வருந்தி யிருப்ப ரன்றே; அவ்வாறே நாம் அவரைக் காணாமையால் இரவிடை எய்தும் வருத்தத்தை அப்போது வந்து களையினும் களை வரன்றே; அவர் நம்பாற் பெருங்காதலராயிருப்பதுபற்றியே யான் இதனைக் கூறுகின்றேன்" என்றாள், அது கேட்டதும் தலைவி இரவுக்குறிக்குத் தன் உடன்பாட்டினை நல்கினாள். தலைமகனும் தன்னைத் தோழி இரவில் வருமாறு சொல்லுகின்றா ளெனத் தெளிந்து கொண்டான். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், பகற்குறி மறுத்து இரவுக்குறிக்கண் கூட்டம் நிகழ்விக்குமாற்றால் களவு நெறி யின் இடையீடு காட்டி வரைவுக்கு வழிகோலும் தோழியின் அறிவுநலம் கண்டு வியப்புற்ற மருதன் இளநாகனார் அதனை இப்பாட்டிடை வைத்து இனிய சொற்களால் அழகுறப் பாடு கின்றார். 1கொடுஞ்சுறா எறிந்த கடுங்கோள் தந்தை புள்ளிமிழ் பெருங்கடற் கொள்ளான் சென்றென மனையழு தொழிந்த புன்றலைச் சிறாஅர் 2பாங்கரின் நின்ற தீங்கள் நுங்கின் பணைகொள் வெம்முலைப் 3பாடுற் றுவக்கும் பெண்ணை வேலிச் 4சீறூர் நண்ணிய 5நம்மனை அறியின் நன்றுமன் தில்ல செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த கானலொ டழியுநர் போலாம் பானாள் முனிபடர் களையினும் களைப நனிபே ரன்பினர் காத லோரே. இஃது இரவுக்குறி முகம் புக்கது; வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவுணர்த்தி வற்புறீஇயதுமாம். உரை : கொடுஞ்சுறா எறிந்த கடுங்கோள் தந்தை - கொடிய சுறாமீனைக் கொன்ற கடிய கொள்கையை யுடைய தந்தை; புள்ளிமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென - கடற் காக்கை முதலிய புள்ளினம் ஒலிக்கும் பெருங்கடற்குத் தம்மை யும் உடன்கொண்டு போகாது சென்றதனால்; மனை அழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர் - மனைக்கண்ணே இருந்து அழுது ஓய்ந்த புல்லிய தலையை யுடைய பரதவர் சிறுவர்; பாங்கரில் நின்ற தீங்கள் நுங்கின் - பக்கத்தே நின்ற பனைமரத்தின் தீவீய நீர் நிறைந்த நுங்கினைப் பெற்று; பணைகொள் வெம்முலைப் பாடுற்று உவக்கும் - தாயரின் பருத்த விருப்பம் பொருந்திய முலையை உண்ணுவது போலச் சுவைத்துண்டு மகிழும்; பெண்ணை வேலிச் சீறூர் நண்ணிய - பனை மரங்களை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின்கண் உள்ள; நம்மனை அறியின் நன்று - நம்முடைய மனையகத்தை அறிந்து கொள்வாராயின் மிகவும் நன்று; செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த - செம்மாந்த உள்ளத்தோடு போந்து நம்மைக் காணாது நீங்கிய; கானலொடு அழியுநர் போலாம் - பகற்குறிக் களமாகிய கானலொடு மனம் நொந்து வருந்துவரன்றே; பானாள் முனிபடர் களையினும் களைப - நள்ளிரவிற் போந்து வாழ்க்கையில் முனிவு தோற்றுவித்து வருத்தும் நம் துயரைப் போக்குதற்கும் முயல்வரன்றே; காதலோர் நனி பேரன்பினர் - காதலராகிய தலைவர் நம்பால் மிக்க பேரன்புடைய ராகலான் எ.று காதலர், சீறூர் நம்மனை யறியின் நன்றுமன்; செம்மல் நெஞ்சமொடு வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம்; பானாள் முனிபடர் களையினும் களைப போலாம்; நனி பேரன்பின ராகலான் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. தந்தை கொள்ளான் சென்றென, அழுது மனை ஒழிந்த சிறாஅர் நுங்கினைப் பாடுற்று உவக்கும் சீறூர், பெண்ணை வேலிச் சீறூர் என இயையும். பாங்கரில் நின்ற பெண்ணை என இயைக்க. வெம்முலை யென்புழி வெம்மை, வேண்டற் பொருட்டு. முலைப்பாடு, முலையை வாய்வைத் துண்ணும் செயல். மன், அசைநிலை. தில்ல, விழைவின்கண் வந்தது. செம்மல், ஈண்டுச் செம்மாப்பின்மேல் நின்றது. பெயர்ந்த கானல், பெயர்ந்து வறிது போதற்குக் காரணமான தனிமை யுற்று நின்ற கானல் என்பது. போலாம்: உரையசை; அது பின்னரும் கூட்டப்பட்டது. உண்டி, உடை, ஒப்பனை முதலிய வற்றின்மேல் வெறுத்த உள்ளமுடைமை முனிபடர் எனப் பட்டது. களவின்கண் பகல்வந்து ஒழுகும் தலைமகற்கு இரவுக்குறி நேரும் கருத்துட் கொண்ட தோழி, அது மனைவரைப்பில் நிகழ்தற்குரிய தாதலின், தலைவியின் குறிப்பறிய முயல்கின்றா ளாகலான், தலைமகற்கு நமது மனை யிருக்குமிடம் தெரிவது நன்று என்பாள், பெண்ணை வேலிச் சீறூர் நண்ணிய நம்மனை அறியின் நன்றுமன் தில்ல என்றாள். பெண்ணை வேலி என்றும், சீறூர் நண்ணிய நம்மனை என்றும் சிறப்பித் தது, ஓராற்றால் இடஞ்சுட்டியதாம். அது கேட்டதும், நம் மனையிடம் அறியினும் அவர் போதரல் கூடாதே என்பது தோன்றத் தலைவி அவளை நோக்கினாளாக, பகற்போதில் செம்மாந்த நெஞ்சமொடு போந்து அவ்வப்போது தோன்றும் இடையீடுகளால் நம்மைக் காணாது கானலைக் கண்டு வருந்துவரன்றே, நம் மனை அறியின் அவரது வருகையை நாம் அறிதல் கூடுமன்றே என்பாள், கானலொடு அழியுநர் போலாம் என்றும், இரவிடைப் போந்து நாம் எய்தும் துன்பத்தை நீக்குதற்கு முயறலும் செய்வர் என்பாள், பானாள் முனிபடர் களையினும் களைப என்றும், அதற்கு ஏது, நம்பால் அவர்க்குள்ள கழிபேரன்பே என்பாள், நனி பேரன் பினர் என்றும், நம்மாற் காதலிக்கப்பட்டோ ராதலின், அவர் வருத்தம் களைதலும் நம் கடன் என்பாள் தலைவர் என்னாது காதலோர் என்றும் கூறினாள். தந்தை உடன்கொண்டு செல்லாமையால் உளதாகிய துன்பத்தைப் பாங்கரில் நின்ற பனையின் நுங்கைத் தின்று மாற்றுதல் போல, இடையீடுகளால் தலைமகன் கூட்டத்தைப் பெறாமையால் நமக்கு உளதாகும் துன்பத்தை, நம் மனைப் புறம் அவர் வரக் காண்டலால் மாற்றிக் கொள்ளலாம் என எடுத்த மொழியில் உள்ளுறையால் எய்த வுரைத்தமையின், நம்மனை யறியின் நன்றுமன் தில்ல என்றாள் என்பது. இதனாற் பயன், தலைவி இரவுக்குறி நேர்வாளாவது. 393. கோவூர் கிழார் கோவூர் கிழார் சங்கச் சான்றோர்களில் மிகச் சிறந்த பெரு மக்களுள் ஒருவர். இவரது கோவூர் தொண்டை நாட்டில் உளது. நல்லிசைப்புலமை பெற்று அரசியலில் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கிய இவருடைய பாட்டுக்கள் பல புறநானூற்றில் உள்ளன. சோழன் நலங்கிள்ளியும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும் கோவூர் கிழார்பால் நன்மதிப்புற்று அவரைப் பல வகையாற் சிறப்பித்தனர். சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங் கிள்ளிக்கும் போருண்டாயபோது, தமது அரிய வீரவுரையால் அந்நெடுங்கிள்ளியாற் சோழரது புகழ் மாசுறா வண்ணம் காத்தார்; இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றனெனக் கருதிக் கொல்லப்புக்க நெடுங்கிள்ளிக்கு உண்மை கூறி அப்புலவனை உய்வித்தார்; இவ்வகையாற் பகைத்திருந்த சோழ மன்னர் இருவரிடையேயும் நட்புறவை யுண்டாக்கி இனிது வாழச் செய்து புகழ்பெற்றார். அம்மன்னரில் நெடுங்கிள்ளி ஒருகால் மலைய மான் மக்களை யானைக்காலில் இட்டுக் கொல்ல நினைத் தானாகக் கோவூர் கிழார் அதனை யறிந்து போந்து தகுவன கூறி அவர்களைக் காப்பாற்றியதோடு, பெண்கொலை புரிந்த நன்னன் போல மலையன் மக்களைக் கோறலால் எய்த இருந்த பெரும்பழி யினின்றும் நெடுங்கிள்ளியை உய்யக் கொண்டு சோழர் புகழ் நிலைபெறச் செய்தார். இவர் பாடியன சில ஏனைத் தொகை நூல்களில் உள்ளன. இந்நூற்கண் இவ்வொரு பாட்டுத் தான் காணப்படுகிறது. களவின்கண் தலைமக்கள்பால் தோன்றிய காதலுறவு பெருகி ஒருவரையொருவர் இன்றியமையாராகியபோது பலவகை இடையீடுகளும் அல்லகுறிப்பாடும் தோன்றிப் பெருந்துயர்க் குள்ளாக்கின. அவரவர்க்கும் ஏற்ற பெற்றி ஒழுகற்பாலளாகிய தோழி, தலைமகனை வரைவு கடாவியும் வரைவிடைவைத்து அவன் தணந்தகாலைத் தலைவியை ஆற்றுவித்தும் வரைவு நிகழ்வதற் காவனவற்றை எண்ணி முயன்று வந்தாள். அவள் விரும்பியவாறே தலைமகன் வரைவொடு வருவா னாயினன். தலைவியின் பெற்றோரும் சுற்றமும் அவனை வரவேற்றுச் சிறப்பித்ததோடு அவற்கு மகட்கொடை யுடன்பட்டு மகிழ்ந் தனர். ஊர் முழுவதும் வரைவு நிகழ்ச்சி பரந்தது. தலைவியின் மனையகமுழுதும் மகிழ்ச்சியே மலிந்திருந்தது. தலைமகள் உள்ளத்தே நாணம் தோன்றி அவளது இயக்கத்தைச் சுருக்கிற்று. தலைமகனும் மிக்க புதியன் போல் ஒழுகினன். இருவர் ஒழுகி யலும் தோழியின் உள்ளத்தில் வியப்பும் உவகையும் தந்தன. தோழி, தலைமகளையடைந்து "தோழி, இரவிடை வரும் நெறியின் கொடுமையும் காவலருமையும் எண்ணி மனநோயுற்று அமைதி யிழந்து கலங்கிய நம் வருத்தம் நீங்குமாறு, குறித்த நாளில் வரைந்து கொள்வல் என்ற தமது வாய்மொழி தப்பாது, நம் தலைவர் வரைவொடு வந்தார். நம் பெற்றோரும். அவர்க்கு மகட்கொடை யுடன்பட்டு நேர்ந்தனர். இந்நிலையில், நம் தலைவர் புதியவராகவும் நாணமிகுதியால் நாம் அவரை அறியாது ஒடுங்கி யுறைபவராகவும் நடந்து கொள்வது கண்டு நம் தலைவர் தமர்பால் உளம்நேர்ந்து இனிது உரையாடுவரோ?, கூறுக"என்றாள். இக்கூற்றின்கண், தாம் விரும்பும் ஒருவரைத் தம்முடைய தமரும் விரும்புதல் நன்றெனக் கருதும் உலகியல் உண்மைக்கு ஒப்பத் தோழி தலைவனைத் தமரும் விரும்புதல் வேண்டு மென்ற கருத்துப்பட மொழியும் நயம் கண்ட கோவூர்கிழார் இப்பாட்டில் அதனைப் பெய்து பாடுகின்றார். நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பிற் கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன் றுயங்கப் பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து வாலா வேழம் வணர்குரல் கவர்தலிற் கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி 1மழைகிளர் மின்னின் தோன்றும் நாடன் இரவின் வரூஉம் இடும்பை நாம்உய வரைய வந்த வாய்மைக் கேற்ப நமர்கொடை நேர்ந்தன ராயின் அவருடன் நேர்வர்கொல் வாழி தோழிநம் காதலர் புதுவ ராகிய வரவும்நின் வதுவைநாண் ஒடுக்கமும் காணுங் காலே. இது, தோழி வரைவு மலிந்துரைத்தது. உரை : நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பில் - நெடிய மூங்கில்கள் உயர்ந்து நிற்பதால் நிழல் பரந்த பக்கமலையில்; கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க - தலைச்சூல் கொண்டு வயவுநோயுற்றுக் கன்றினை ஈன்று பிடியானை வருத்தமுற் றிருப்ப; பாலார் பசும்புனிறு தீரிய - கன்றிற்குப் பால் அருத்தும் மிக்க புனிற்று நிலை தீர்தற்பொருட்டு; களி சிறந்து - களிப்பு மிகுந்து; வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் - வாலாமையையுடைய களிற்றியானை முற்றித் தலைவளைந்த தினைக்கதிரைக் கவர்வதால்; கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி - கானவன் எறிந்த கடிய செலவினையுடைய கொள்ளிக்கட்டை; வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி - மூங்கில் வளர்ந்துநின்ற மலைப்பக்க மெங்கும் சுடரும்படியாக விளங்கி; மழைகிளர் மின்னின் தோன்றும் நாடன் - மழை மேகத்திடையே யுறும் மின்னற்கொடி போலத் தோன்றும் மலைநாடனாகிய தலைவன்; இரவின் வரூஉம் இடும்பை நாம் உய - இரவிடை வருவதால் நாம் எய்தி வருந்தும் துன்பத்தி னின்றும் உய்தற்பொருட்டு; வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப - வரைவொடு போந்த வாய்மைச் செயற்கு ஒப்ப; நமர் கொடை நேர்ந்தனர் - நம் பெற்றோரும் அவர்க்கு மகட்கொடை யுடன்பட்டனர்; ஆயின் - ஆயினும்; அவருடன் நேர்வர்கொல் - அவரோடு உள்ளம் நேர்ந்து உரையாடுவரோ; வாழி-; தோழி-; நம் காதலர் புதுவராகிய வரவும் - புதியவராய் வந்த காதலரது வருகையும்; நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்கால் - வதுவைக் காலத்துப் பலர் காணத் தோன்றும் நின்னுடைய நாணமும் ஒடுக்கமும் காணுமிடத்து எ.று. தோழி, நாடன், இரவின் வரூஉம் இடும்பை நாம் உய்ய, வரைவொடு வருங்கால், வந்த வாய்மைக் கேற்ப, நமர் கொடை நேர்ந்தனர்; ஆயின், காதலர் புதுவராகிய வரவும், நினது வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்கால், அவருடன் நம் காதலர் நேர்வர்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிடி கன்றீன்று உயங்க, பசும்புனிறு தீரிய வேழம், களிசிறந்து வணர்குரல் கவர்தலின், கானவன் எறிந்த ஞெகிழி, அடுக்கம் சுடர மின்னி, மழைகிளர் மின்னின் தோன்றும் என இயையும். கழை நெடிது ஓங்கினமையின் சிலம்பில் நிழல் சிறந்து பரந்தது. கடுஞ்சூல், முதற்சூல். உயங்கல், கன்று ஈன்றவழிப் பிறந்த வருத்தம். வயவுப்பிடி, வயப்பிடி என வந்தது. வயவு, பிள்ளைப் பேற்றுக் காலத்தில் உண்டாகும் வேட்கைநோய். பாலார் பசும்புனிறு, பால் நிறைந்து கன்றினை யுண்பிக்கும் ஈன்றணிமை; அக்காலத்தும் பசிநோய் மிக்கிருத்தல் இயல்பு. வாலாமை, பிடிக்கு ஆவன உதவுமாற்றால் களிற்றின் மேனியில் அழுக்குப் படிந்திருக்கும் நிலைமை; தூய்மையின்மை. வாலாமையுடைய வேழம் வாலா வேழம் எனப்பட்டது. வணர், வளைவு. ஞெகிழி, கொள்ளிக்கட்டை. வரூஉம் இடும்பை, வருதலால் எய்தும் துன்பம். வதுவை நாண் ஒடுக்கம், வதுவைக் காலத்தில் மகளிர்பால் தோன்றும் நாணமும் அதனால் பலர் காணத் தோன்றுதலை விழையாது ஒடுங்கி யிருக்கும் தன்மையும். நாண் ஒடுக்கத்தை நாணத் தோன்றிய ஒடுக்கம் என்றலும் ஒன்று. தலைமகன் வரைவொடு வந்தமை யறிந்து மகிழ்ந் துறையும் தலைமகட்குத் தோழி, அவனது வரவு, நாம் அவன் இரவு வரும் ஏதமும் அருமையும் நினைந்து எய்திய வருத்தத்தைப் போக்குதல் கண்ணியது என்பாள், நாடன் வரூஉம் இடும்பை நாம் உய என்றும், பன்முறை நாம் குறிப் பாகவும் வெளிப்படையாகவும் வரைவுகடாயதன் பயனாகத் தலைவன் தான் குறித்த காலத்தில் வந்தமை தோன்ற, வரைய வந்த வாய்மை என்றும், வரைவொடு வந்தமையை ஏற்று நம் பெற்றோரும் தமரும் மகட்கொடை நேர்ந்தனர் என்பாள். நமர் கொடை நேர்ந்தனர் என்றும், இந்நிலையில் அவர் நம் மவர்முன் முற்றும் புதுவோர்க்குரிய சொல்லும் செயலு முடையராக விளங்குகிறார் என்பாள், நம் காதலர் புதுவ ராகிய வரவும் என்றும், முன்போலின்றிப் பலர் காண இயலு மிடத்துப் புதுமையாக மிக்க நாணமும் ஒடுக்கமும் நின்பால் உளவாகின்றன என்பாள். நின் வதுவை நாண் ஒடுக்கமும் என்றும், இவற்றை நம் தமர் காணுங்கால் உண்மை தெளி யாமல் அவர் தகுதிக்கொத்த செயலின ராவரோ வேறு படுவரோ என்று வினவுவாளாய், அவருடன் நேர்வர்கொல் என்றும் கூறினாள். நேர்ந்து ஒழுகுதல் வேண்டும் என்பது கருத்து. வயப்பிடி கன்றீன்று உயங்க, வேழம் தினைக்குரலைக் கவர்வது கண்டு, சினமுற்ற கானவன் எறிந்த ஞெகிழி, மழை முகிலிடையே தோன்றும் மின்னுக்கொடி போலத் தோன்றும் என்றது, நமது வேட்கைநோய் நீங்கத் தலைவராகிய காதலர் வரைவொடு வந்தமை கண்டு; தமர் மகட்கொடை நேர்ந்த ஆரவாரம், வதுவைமணம் போன்று ஊர் முழுவதும் விளங்கு கிறது என்றவாறு. இதனாற் பயன், தலைவி மெய்ம்மலியுவகை யுடையளாவது. 394. ஒளவையார் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் இன்றியமையாத வினை குறித்துத் தன் மனைவியின் நீங்கிச் சென்றான். விடை பெறுங்கால் அவன் கார்ப்பருவ வரவில் தாழாது வருவதாக வற்புறுத்தினான். கற்புவழிப்பட்ட பொற்பினளான தலைமகள், அவன் உரைத்த கார்கால வரவை எதிர்நோக்கி இனிதிருந்தாள். மேற்கொண்ட வினை கார்ப்பருவ வரவுக்குள்ளே முடிந்தது. அவனும் தன் மனைநோக்கி மீள்வானாயினன். இடைச்சுரத்தே அவன் வந்துகொண் டிருக்கையில் தூதுவர் முற்போந்து அவன் வினைமுற்றி மீள்வதைத் தோழிக்கு அறிவித்தனர். கேட்ட தோழி மிக்க உவகை கொண்டாள். தலைமகன் தேரேறி வன்பரல் முரம்பில் ஆழியதிர தேரிற் கட்டிய மணி யொலிக்க முன்பு செலவயர்ந்த திறமும் வினைமுற்றி மீள்வோன் இடைச்சுரத்தில் கார்முகில் எழுந்து பருவவரவு உணர்த்தக் கண்டு விரைந்து வரும் குறிப்பும் அவள் மனக்கண்ணில் தோன்றின. உடனே அவளது உண்மையறிவு அவன் உள்ளத்தை அறியலுற்று, இடைச்சுரத்து எழிலி யுரைத்த கார்ப்பருவம் கண்டு காதலியை நினைந்து தணிந்த உள்ளத்தனாய் வருகின்றனோ, அப்பருவம் எய்துமுன் தான் வாராமைக்கு வருந்தும் உள்ளத்தனாய் வருகின்றானோ என்று எண்ணி ஒரு தலையாகத் துணியமாட்டாமையின் "நோகோ யானே" என வருந்துகின்றாள். இதன்கண், வினைமுற்றி மீளும் தலைவன் உள்ளம் தலைவிபால் பெருகிய அன்பால் தண்ணிதாய் விளங்குதல் வேண்டுமென விரும்பும் தோழியின் மனமாட்சி சிறந்து நிற்பது கண்ட ஒளவையார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடு கின்றார். மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து அலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லனின் 1முன்னிய இரட்ட பெய்ம்மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுந்தேர் 2வன்பரல் முரம்பின் நேமி அதிரச் சென்றிசின் வாழிய பனிக்கடு நாளே இடைச்சுரத் தெழிலி உரைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட 3சாந்தமொடு நறுந்தண் ணியன்கொல் நோகோ யானே. இது, வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச்சுரத்திற் கண்டோர் சொல்லத் தோழி தனித்துச் சொல்லியது; வன்சொல்லாற் குறை நயப்பித்த தோழி தான் தனித்துக் கூறியதூஉமாம். உரை : மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து - மரங்கள் வளர்ந்து கிளைகள் தம்மில் விரவிக் கலந்து நிற்கும் அகன்ற இடத்தையுடைய கானத்தின்கண்; அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை - வற்றிய தலையையுடைய ஞெமை மரத்தில் இருந்த பேராந்தை; பொன்செய் கொல்லனின் முன்னிய இரட்ட - பொற்பணி செய்யும் தட்டான் தட்டுவது போல ஒன்றினொன்று முன்னுற் றிரட்ட; பெய்ம்மணி ஆர்க்கும் இழையணி நெடுந்தேர் - கட்டப்பட்ட மணிகள் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரினது; நேமி வன்பரல் முரம்பின் அதிரச் சென்றிசின் - ஆழி வலிய பரற்கற்கள் நிறைந்த முரம்பு நிலத்தில் அதிர்ந்து உருண்டோடச் சென்றான்; பனிக்கடுநாள் வாழி - அவன் செல்லுதற்கு முன்னர்க் கழிந்த பனி மிக்க நாள்கள் வாழ்க, அக்காலத்துத் தன் மனைவியிற் பிரியாது உடனிருந்தா னாகலின்; இடைச்சுரத்து எழிலி உரைத்தென - இடைச்சுரத்தின்கண் மழைமுகில் தோன்றிக் கார்ப்பருவ வரவு தெரிவித்ததனால்; மார்பில் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு - மார்பில் குறும்புள்ளிகளாகப் பரந்த சந்தனப்பூச்சுடன்; நறுந்தண்ணியன்கொல் - தன் தலைவிபாற் பெருகிய அன்பினால் நறிய தண்ணிய உள்ளத்தனாவனோ அன்றி, கார்ப்பருவம் எய்துமுன் தான் மனையகம் சென்று சேராமைக்கு வருந்திய உள்ள முடையனாவனோ; யான் நோகோ - ஒரு தலையாகத் தெளிய மாட்டாமையின்யான் மனம் நோவாநின்றேன் எ.று. தலைவன், குடிஞை யிரட்ட, நெடுந்தேர் நேமி அதிரச் சென்றிசின்; பனிக்கடுநாள் வாழி; இடைச்சுரத்து எழிலி உரைத்தென, மார்பிற்கொண்ட சாந்தமொடு நறுந்தண் ணியன்கொல், பருவம் வருமுன் வாராமைக்கு வருந்திய உள்ளமுடையன் கொல் யான் நோகு எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஓகாரங்கள் அசைநிலை. நனந்தலை, அகன்ற இடம். ஞெமைமரத்தின் கிளைகளில் தழையும் குழையுமின்றி வெறுங்கொம்புகளே காணப்படுமாறு தோன்ற, அலந்தலை ஞெமை என்றார். ஞெமை, ஞெமையம் என அம்முப்பெற்றது. குடிஞை, பேராந்தை. இரட்டல், இரட்டித் தொலித்தல். பெய்ம்மணி, வேண்டும் போது கட்டப்படும் மணி. நேமி, ஆழி. சென்றிசின் : படர்க்கை வினைமுற்றுத் திரிசொல்; "வெள்ளி நாராற் பூப்பெற்றிசின்1" என்றாற் போல. பனிக்கடுநாள் : கடுமை, மிகுதிமேற்று. எழிலி, கார்காலத்து முகில். மார்பில் அணியும் சந்தனம், புலர்ந்தவழிக் குறும்புள்ளி போறலின் குறும்பொறிக் கொண்ட சாந்தம் என்றார். நோகு: தன்மை வினைமுற்று. வினைமுற்றி மீள்கின்றான் தலைமகன் என இடைச் சுரத்துக் கண்டார் போந்து உரைப்பக் கேட்ட தோழிக்கு உள்ளத்தே உவகை மிகுதலும், அவன் அன்று தன் மனைவி னின்றும் பிரிந்து சென்ற செலவு நினைவில் எழுந்தமையின், அதனைத் தனக்குள் தனித்துச் சொல்லுவாளாய் முதற்கண் அவன் சென்ற கானத்தை மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து என்றும், ஆங்கே ஞெமைமரத்திலிருந்து ஒருபால் பேராந்தைகள் இரட்ட, ஒருபால் தேரிற் கட்டிய மணிகள் ஒலிக்க இடையே தேரினுடைய ஆழிகள் முரம்புநிலத்து வன்பரல் பரந்த வழியில் அதிர்ந்து செல்வது தோன்ற, அலந் தலை ஞெமையத்து இருந்த குடிஞை, பொன்செய் கொல்ல னின் இரட்ட என்றும், இழைகிளர் நெடுந்தேர் நேமி வன்பரல் முரம்பின் அதிரச் சென்றிசின் என்றும் கூறினாள். அவன் சென்றபின் தலைவியை ஆற்றுவித்திருந்த தன் மனத் துக்குச் செல்லுதற்குமுன்பு கழிந்த பனிப்பருவத்தில் அவன் மனைக்கண் மனைவியொடு உடனிருந்தமையின் நாள்கள் மிகவும் இன்பமாய்க் கழிந்தமை தோன்றவே, வாழியோ பனிக்கடு நாளே என்றும், வினைமுற்றி மீண்டு வருபவற்கு இடைச்சுரத்தில் மழைமுகில் தோன்றி அவன் வற்புறுத்த கார்ப்பருவ வரவு தெரிவிப்பதைக் கண்டோர் கூறியதனால், அப்பருவவரவில் தான் வருவதாகக் கூறியது நினைந்து தன் வரவு நீடுவதால் தலைவி ஆற்றாளாவள் என எண்ணி வெய் துற்று வருந்துவனோ, அவளைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து அன்பால் தணிந்த மனத்தொடு வருகின்றானோ என்பாள், மார்பில் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந்தண்ணியன்கொல் என்றும் ஒருதலையாகத் துணிய மாட்டாமையின், நோகோ யானே என்றும் கூறினாள். வாழியோ பனிக்கடுநாள் என்றதற்குத் தலைமகன் பனிப் பருவத்திற் பிரிந்தா னெனக் கொண்டு, அக்காலத்திற் பிரிந்தவன், தான் வற்புறுத்தவாறே கார்ப்பருவவரவில் வந் தமைக்கு மகிழ்ந்து அப்பருவத்தை வாழ்த்தியதாக உரைத் தலும் ஒன்று, இதனாற் பயன், நெஞ்சில் மிக்கது கூறித் தோழி அயாவுயிர்ப்பாளாவது. 395. அம்மூவனார் களவின்கண் காதலுறவு கொண்டு அதனை நன்முறையிற் பேணி வளர்த்த தலைமக்களில், தலைமகனை வரைந்து கொள்ளுமாறு பன்முறையும் தோழி வற்புறுத்தினாள்; மற்று, தலைமகனோ, களவையே விரும்பி யொழுகினான். தலைமகள் அழிவில்கூட்டம் பெறுதலில் பெரு வேட்கையுற்று அதற்கு இடையீடாகத் தலைவன் வரைவு நீட்டித்தமையால் மேனி வேறுபட்டு வருத்தம் மிகுவா ளாயினாள். அதனால் தோழிக்கு ஆற்றாமை மீதூர்ந்தது. அன்புடை நன்மொழிகளால் கருதிய பயன் விளையாமை கண்ட தோழி சிறிது வன்மை தோன்றக் கூறி வரைவு கடாவலுற்றாள். அவள், ஒருநாள் தலைமகனைக் கண்டாள். அவனும் அவளையணுகித் தன் அன்புமிகுதி தோன்ற உரையாடத் தலைப்படலும், அவள், "எலுவ , நீ யார்? எமக்கு நீ தொடர்புடையையல்லை" என்றாள். அது கேட்டுத் திடுக்கிட்டு அவளை வியப்புடன் தலைவன் நோக்கினான். "நீ எமக்கு நண்பனுமல்லை; பகைவனுமல்லை; அயலானாகுவை. கொண் கனே, அவ்வளவே எம்மிடை நினக்கு உளதாகும் தொடர்பு" என்றாள். தலைமகன் வருத்தமுற்று, "நீ இவ்வாறு கூறுவதற்குக் காரணம் யாது?" என வினவலும், "யான் பன்முறை வரைவு கடாவியும், நீ அதனைக் கொள்ளாதொழிந்தனை; எம்மை நீ விரும்புகின்றிலை யாதலின், நின்பொருட்டு யாம் இழந்த நலத்தைத் தந்து செல்க" என்று தோழி கூறினாள். தலைவியின் உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின், தோழி தன்பால் உரன்உடைமை தோன்றத் தலைவனை நெருங்கிக் கூறும் இதன்கண், அவள் வலிய சொற்களால் காதலுறவு முரிந்து கெடா வண்ணம் உரைக்கும் நயம் கண்ட அம்மூவனார் அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். யாரை எலுவ யாரே நீஎமக் கியாரையும் அல்லை நொதும லாளனை அனைத்தாற் கொண்கஎம் மிடையே நினைப்பின் 1மாபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு 2களத்தின் முரசதிர்ந் தன்ன ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் அணிந்திடு பல்பூ மரீஇ 3ஊர்ந்த கடல்கெழு மரந்தை அன்னஎம் வேட்டனை யல்லையால் நலந்தந்து சென்மே. இது, நலம் தொலைந்தது. உரை : எலுவ - நண்ப; யாரை- நீ யார்; நீ எமக்கு யார் - நீ எமக்கு எவ்வகைத் தொடர்புடையாய்; யாரையும் அல்லை நொது மலாளனை - எமக்கு நண்பனுமல்லை பகைவனும் அல்லை, அயலானாகுவை; கொண்க- கொண்கனே; நினைப்பின் - நினைத்துப் பார்க்குமிடத்து; எம்மிடை அனைத்து - எம்மிடை யுள்ள தொடர்பு அவ்வளவிற்றேயாம்; மா புலம் புகுதரு பேரிசை மாலை - பகற்போதில் மேய்புலத்திருந்த ஆனினும் தொழுவம் நோக்கி மீளும் பெரிய சிறப்பையுடைய மாலைக் காலத்தில்; கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் - கடிய பெரிய யானைப்படையும் நெடிய தேர்ப்படையு முடைய குட்டுவன்; வேந்து அடுகளத்தில் முரசு அதிர்ந்தன்ன - பகை வேந்தரை வென்று கொண்ட களத்தின்கண் முரசு அறைந்தது போல; ஓங்கல் புணரி பாய்ந்து ஆடும் மகளிர் - மலைபோன்ற அலைகளினூடு பாய்ந்து விளையாடும் மகளிர்; அணிந்திடு பல்பூ மரீஇ ஊர்ந்த - அணிந்திட்ட பலவாகிய பூக்களைக் கொணர்ந்து கரையிடத்தே ஒதுக்கிய; கடல்கெழு மரந்தை அன்ன - கடற்கரையில் உள்ள மரந்தை என்னும் நகரத்தைப் போன்ற; எம் வேட்டனையல்லை - எம்மை விரும்பினாயல்லை யாகலான்; நலம் தந்து சென்மே - நின்பொருட்டால் இழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக எ.று. எலுவ, யாரை, நீ எமக்கு யார்; யாரையும் அல்லை; நொதுமலாளனை; கொண்க, நினைப்பின் எம்மிடை அனைத்தே; குட்டுவன் மரந்தை யன்ன எம் வேட்டனையல்லை யாகலான், நலம் தந்து சென்மே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எலுவன், தோழன்; இது சீதநாட்டு வழக்கு என்பர் நச்சினார்க்கினியர்1. யாரை : முன்னிலைக் குறிப்புவினை. நொதுமலாளன் என்றதனால் நட்பும் பகையும் கொள்ளப் பட்டன. அனைத்து அவ்வளவிற்று. "மனத்துக்கண் மாசில னாதல் அனைத்து அறன்2" என்றாற் போல. கொண்கன், நெய்தல் திணைப்பெயர். மாலை, முரசதிர்ந்தன்ன புணரி பாய்ந்து ஆடும் மகளிர் என இயையும். குட்ட நாட்டவர் மாலைப்போதில் கடலாடுவது இன்றும் உள்ள மரபு; குட நாட்டிலும் உண்டு. பகடு, பெருமை. குட்டுவன், குட்டநாட்டுச் சேர மன்னர் குடியினன். வடவாரியரொடும் கடலில் உள்ள தீவுகளில் வாழ்ந்த கடம்பரொடும் போருடற்றி வென்றி கண்டவனாதலால், இக் குட்டுவனைக் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் என்பதும் வழக்கு. அது பற்றியே அவன் ஏனைவேந்தரொடு வென்றி பெற்ற போர்க்களம் ஈண்டுச் சிறப்பிக்கப்பட்டது. ஓங்கற் புணரி, மலைபோல் எழும் அலை. அணிந்திடுபூ, அணிந்து உதிர்த்த பூ. ஊர்தல், பரத்தல். மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள் காணப் படுகிறது. ஆல், அசை. சென்மே : முன்னிலை யேவல் வினை முற்று. பன்முறையும் பலகாலும் வரைவு கடாவியும். களவையே விரும்பி யொழுகிய தலைவனைக் காண்டலும், அவன் அன் போடு உரையாடல் தொடங்கவே, தோழி, அவனைச் சேய்மைப்படுத்து, நீ யாவன், நினக்கும் எமக்கும் யாதும் தொடர்பில்லை என்பாள், யாரை எலுவ யாரே நீ எமக்கு என்றும், தொடர்பின்றேல் நின்னொடு உரையாடல் இல்லையா மன்றோ என்பான் போலத் தலைவன் அவளை நோக்கினானாக, நீ எமக்கு நண்பனுமல்லை பகைவனு மல்லை நொதுமலாளன் என்பாள், யாரையும் அல்லை நொதுமலாளனை என்றும், நினக்கும் எமக்கும் இடையே யாதேனும் தொடர்புளதோ என ஆராயும்போது நொது மலாம் இயையு ஒழிய வேறு ஒன்றும் இருப்பது தெரிய வில்லை என்றற்கு, நினைப்பின் அனைத்தால் கொண்க எம்மிடை என்றும் கூறினாள். நின்னோடு கூடி விளையாடி யதால் கழிந்த எம் நலத்தை அயலவர் தூற்றி ஊரில் அலர் பரப்பாநின்றனர் என்பாள், உள்ளுறையால், ஓங்கற் புணரி பாய்ந்தாடும் மகளிர் அணிந்திடு பல்பூ மரீஇ ஊர்ந்த கடல்கெழு மரந்தை என்றும், எம்மை இவ்வாற்றால் துன்புறச் செய்தலின் எம்பால் நீ அன்புடையையல்லை என்பாள், எம் வேட்டனை யல்லையால் என்றும், இனி நீ செயற்பாலது யாம் எம் நலத்தை மீளப்பெற்று மகிழச் செய்வதல்லது பிறிதில்லை என்றற்கு, எம் நலம் தந்து சென்மே என்றும் உரைத்தாள். இதனாற் பயன், தலைமகன் தெருண்டு வரை வானாவது. 396. முத்தூற்று மூதெயினனார் முத்தூற்று மூதெயினனார் எனப்படும் இச்சான்றோர் பெயர் அச்சுப்படியில் இல்லை யெனினும், ஏட்டில் இப்பாட்டினைத் தொடர்ந்து நிற்கும் துறைக்குறிப்புக்களின் இறுதியில் எழுதப் பட்டுள்ளது. அகநானூற்றுச் சான்றோர் நிரலுள் காணப்படும் மூதெயினனார், விற்றூற்று மூதெயினனார் எனப்படுகின்றார். வித்தூற்று வண்ணக்கன் தத்தனார் என்றொரு சான்றோர் இந் நூற்கண் காணப்படு கின்றார். இவற்றை நோக்கின், முத்தூறு வேறு எனத் தோன்றுகிறது. முத்தூறு பாண்டி நாட்டு ஊர்களில் ஒன்று இது, “பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர். குப்பை நெல்லின் முத்தூறு” என்று மாங்குடி கிழார் சிறப்பித் துரைக்கும் பெருமை யுடையது. இவ்வூரைச் சூழ்ந்துள்ள பகுதி முத்தூற்றுக் கூற்றம் என வழங்கும், திருப்பூவணத்துச் செப்பேடுகளில் இது பன்முறையும் குறிக்கப்படுகிறது என்று கல்வெட்டறிஞர்களான வி. வெங்கையார் முதலியோர் கூறுகின்றார். முத்தூற்று மூதெயினனார் பாடியதாக இவ்வொரு பாட்டுத் தான் கிடைத்துளது. களவின்கண் ஒழுகும் தலைமக்களில், தலைவி மனத்திற் பிறந்த காதலுணர்வு சிறந்து தலைவனது பிரிவின் றியைந்த இன்ப நிலையைப் பெறுதற்கு வேண்டும் ஆர்வத்தைப் பயந்தது. அதனை யுணர்ந்த தோழி, வரைந்து கொள்ளு மாற்றாலன்றி அந்நிலையைப் பெறுதல் அரிதாகலின், தலைமகனை வரைவு கடாவும் செயலினளானாள். ஒருநாள் தலைவியைக் கண்டு நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு “தலைவ, நின் மார்பைப் புல்லியதால் என் தோழிக் குண்டாகிய வேட்கைநோய் பொறுத்தற் கரிதாயது; இதனை யான் யார்க்கு உரைப்பேன்? இவளைத் தலைப்பெய்து கூடிய நாள்முதல், இனிய சொற்கள் பலவும் மிகுதியாகச் சொல்லித் தேற்றி வருகின்றனையேயன்றி அவற்றைச் செயலிடைப்படுத்து எமக்கு ஏமமாவ தொன்றனைச் செய்கின்றாயில்லை, எமது நிலையினை அறிதற்கோ, நின் சொற்களை நீயே நினைவு கூர்தற்கோ மாட்டாயாய் அறிவு அயர்ந்தனை; இனியாகிலும் தெளிந்து செயல் மேற்கொள்க” என்று சொன்னாள். இக் கூற்றின்கண், தலைவனை வரைவு கடாவும் தோழி மக்களினத்தின் தெளிவு, கலக்கம், மயக்கம் என்ற குணநிலை மூன்றனுள், மயக்கநிலைமேல் வைத்துத் தலைவனைத் தெருட்டும் திறம் கண்ட மூதெயினனார் அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். பெய்துபோ கெழிலி வைகுமலை சேரத் தேன்றூங் குயர்வரை அருவி ஆர்ப்ப 1வெற்பணி தந்த வேங்கை நன்னாள் பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் கமழ்தா தாடிய கவின்பெறு தோகை பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற் றுறுகதிர் இளவெயில் உண்ணும் 2நாட நின்மார் பணங்கிய செல்லல் அருநோய் யார்க்குநொந் துரைக்கோ யானே பன்னாள் காமர் நனிசொற் சொல்லி 3ஏமம்ஒன் றருளாய் நீமயங் கினையே. இது, தோழி தலைமகனை வரைவுகடாயது; வரைவுணர்த்தப் பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉமாம்; இரவுக்கு மறுத்ததூஉமாம்.4 உரை : பெய்து போகு எழிலி - மழைபெய்து நீங்கும் முகில்; வைகுமலை சேர - தான் தங்கும் மலையை அடைய; தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப - தேனடை தூங்கும் உயர்ந்த மலையினின் றொழுகும் அருவிகள் ஒலிக்க; வெற்பு அணி தந்த வேங்கை - வெற்பிடம் அழகுபெற நின்ற வேங்கை மரம்; நன்னாள் - மணநிகழ் காலத்தே பூத்த; பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇ - பொன்போன்ற பூக்களைத் தாங்கும் கிளைகளை அலைத்தலால்; கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை - மணம் கமழும் தாது படிந்து அழகு பெற்ற மயில்கள்; பாசறை மீமிசை - பசுமைநிறம் கொண்ட கற்பாறை யின்மேல்; கணம் கொள்பு - கூட்டமாய் இருந்து; ஞாயிற்று உறுகதிர் இளவெயில் உண்ணும் - ஞாயிற்றினின்று நீண்டுவரும் கதிர்கள் பரவும் இளவெயில் காயும்; நாட - நாடனே; நின் மார்பு அணங்கிய செல்லல் அருநோய் - நின்மார்பைப் புல்லுதலால் உண்டாகிய வேட்கையால் பிறந்த பொறுத்தற்கரிய நோயை; நொந்து யான் யார்க்கு உரைக்கோ - மனம் வருந்தி யான் எவரிடம் சொல்லி ஆற்று வேன்; பன்னாள் - பல நாள்களாக; காமர் சொல் நனி சொல்லி - விருப்பம் தரும் சொற்களை மிகவும் சொல்லி; ஏமம் ஒன்று அருளாய் - எங்கட்கு ஏமமாவ தொன்றனைச் செய்யா யாயினை; நீ மயங்கினை - நீ மயக்க முற்றனை எ.று. நாட, நின்மார்பு அணங்கிய அருநோய், யான் நொந்து யார்க்கு உரைக்கோ; பன்னாள், காமர் சொல், நனி சொல்லி ஏமம் ஒன்று அருளாயாயினை; நீ மயங்கினை எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எழிலி சேர, அருவி யார்ப்ப, வேங்கை பூஞ்சினை துழைஇ ஆடிய தோகை கணம் கொள்பு உண்ணும் நாட என இயையும் போகு எழிலி, மேனோக்கிச் செல்லும் முகில். நன்னாள், திருமணக்காலம்; வேங்கை மலரும் காலம் திருமணத்துக்குரிய தென்பது வழக்கு. பாசறை, பசுமை நிறம் உற்ற கற்பாறை. மழைத்தூவலால் பாசிபடிந்த பாறை பாசறை எனப்பட்டது. ஞாயிற்றின் கதிர் காலைப்போதில் நீண்டு உறுவது பற்றி உறுகதிர் எனப்பட்டது. காலைக்குளிர்க்கு வருந்திய மயில் பாறைமீது இருந்து இளவெயில் காய்வது இங்கே காட்டப்படுகிறது. அணங்குதல், வருத்துதல்; “மணங் கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்” என்று பிறரும் கூறுதல் காண்க. அருமை, பொறுத்தற் கருமை. உரைக்கு : தன்மை வினைமுற்று . காமர் சொல், விருப்பம் உண்டாக்கும் சொல் . ஏமம், காப்பு; நோய் மிக்கு வருந்துமாறு கூறலின். அதற்கு மருந்தாகும் திருமணக் கூட்டத்தை ஏமம் என்றார். தெளிவு, கலக்கம், மயக்கம் என்ற உயிர்க்குணம் மூன்றனுள் மயக்கத்தைச் சுட்டி மயங்கினை என்றார். இம்மூன்றையும் சுகம் துக்கம் மோகம் என வடமொழியிற் கூறுப. தலைமகனைக் களவிற் கண்டு பயிலுமாற்றால், இன்புற் றொழுகும் தலைமகனைத் தோழி கண்டு, இனியும் நீட்டி யாது வரைந்து கொள்ளல் வேண்டும் என உள்ளுறையால் வற்புறுத்துகின்றமையின் வெளிப்படையில் “தலைவனே, நின்னைக் களவிற்கண்டு புல்லி மகிழ்ந்ததனால், தலைமகட்கு உண்டாகிய வேட்கை பொறுத்தற்குரிய எல்லையைக் கடந் தொழிந்தது என்பாள், நின் மார்பு அணங்கிய செல்லல் அருநோய் என்றும் அதனை வாய்விட் டுரையாவழி, மனத் தின்கட் கிடந்து மேனி மெலிவித்துப் பெருந்துயர் செய்யும் என்பது பற்றிப் பிறர்பால் சொல்லி ஆற்றுதற்கும் நின்னை யன்றி வேறே ஒருவரும் இலர் என்பாள், யார்க்கு நொந்து உரைக்கோ யானே என்றும், எம்பால் அன்புற்று நாளும் போதரும் நீ எமது காதல் பெருகுதற்கு ஏற்ற சொற்களை மிகவும் சொல்லுகின்றனையே யொழிய, எம் நோய் தீரும் மருந் தொன்றும் தருகின்றிலை என்பாள், பன்னாள் காமர் சொல் நனி சொல்லி ஏமம் ஒன்றும் அருளாய் என்றும், இதற்குக் காரணம் நோக்கின் மக்கட்குக் கணந்தோறும் மாறித் தோன் றும் தெளிநிலை கலக்கநிலை மயக்கநிலை என்ற உயிர்க் குணநிலை மூன்றனுள் மயக்க நிலையால் நீ அறிவயர்ந்து யாம் இறந்துபடினும் தெளியாய் என்பாள், நீ மயங்கினையே என்றும் கூறினாள். ஒருபால் அருவியார்ப்ப, வேங்கையின் தாதாடிய மயில் பாசறைமேல் கணம் கொள்பு ஒருபால் இருந்து இளவெயில் உண்ணும் நாடனாகலின், மணமுரசியம்ப மணவறைக்கண் இருந்து பெற்றோரும் தமரும் கண்டுமகிழ இவளை மணந்து இன்புற வேண்டும் என உள்ளுறை கொள்க. இதனாற் பயன் தலைவன் தெருண்டு வரைவானாவது. 397. அம்மூவனார் மனைக்கண் இருந்து அறம்புரிந்து ஒழுகும் தலைமகன், இன்றியமையாத வினை குறித்து வெளிநாடுகட்குச் சென்றான். தலைமகள் அவன் வற்புறுத்த சொல்லைத்தேறி மீண்டு வரும் நாளை எதிர்நோக்கி யிருந்தாள். மனையுறைமகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற பொருளுரைக்கு ஏற்பத் தலைமகள், அவன் பிரி வாற்றாது நாளும் மெலிவுற்றாள். அது கண்ட தோழி, தலைவனது வினையாண்மையையும், பிரியுங்கால் அவன் வற்புறுத்த சொற்களையும் எடுத்துக்காட்டிப் பிரிவாற்றியிருத்தலே பெருங் கற்பு எனச் சொல்லித் தேற்றினாள். தலைமகள் ஆற்றாமை மிக்கிருந்தா ளாயினும், தோழி வருந்தாமைப் பொருட்டுத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறுவாளாய். “தோழி, என் தோள்கள் மெலிந்தொழிந்தன; அவர் குறித்த நாள்களும் கழிந்தன; அவர் சென்ற நெறியை நோக்கி நோக்கிக் கண்கள் ஒளிகுன்றிக் காட்சித் திறம் இழந்தன; என் அறிவும் என்னின் நீங்கி மயக் குற்றது; வேட்கை நோயும் மிகுந்துளது; அதன்மேல் மாலைப் போதும் நெருங்கிவிட்டது; எவ்வாறு இவற்றைத் தாங்கி ஆற்றுவேனோ? ஆற்றாமையால் இறந்துபாடு எய்துமா யினும் யான் அதற்கு அஞ்சுவேனல்லேன்; இறப்பே னாயின் பிறத்தலுண்டாம்; பிறக்குமிடத்து வேறு பிறப்பாய் விடின் என் காதலனை மறந்தொழிவேனோ என்று அஞ்சு கின்றே னாகலின், பிரிவுத்துயரை ஆற்றியிருப்பன்; நீ கவலற்க” என்றாள். இக்கூற்றின்கண், தான் ஆற்றாது இறந்துபடுதற் கேற்ற காரணங்கள் உளவாயினும், இறந்தவழித் தன் காதலனை மறப்பதற் கஞ்சிச் சாதலை விரும்பாது ஆற்றியிருப்பல் என்று தலைமகள் கூறுவது கண்ட அம்மூவனார் அவளது காத லொருமையை வியந்து இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஏட்டில் அம்மூவனார் பெயர்க்கு மாறாகக் கழார்க்கீரன் எயிற்றியார் பெயர் காணப்படுகிறது தோளும் அழியும் நாளும் 1சென்றன நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தவ்வின என்நீத் தறிவும் மயங்கிப் பிறிதா கின்றே நோயும் 2ஏரும் மாலையும் வந்தன்று யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவ தாயின் மறக்குவென் கொல்என் காதலன் எனவே. இது, பிரிவிடை ஆற்றாளாய் நின்ற தலைமகளை வற்புறுத்த தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது3. உரை : தோளும் அழியும் - என் தோள்களும் மெலிந்து நல மழிந்தன; நாளும் சென்றன - தலைவர் குறித்த நாள்களும் கழிந்தன; நீளிடை அத்தம் நோக்கி - நீண்ட சுரத்திடையே அவர் வரும் வழியை நோக்கிநோக்கி; கண்ணும் வாள் அற்றுக் காட்சி தவ்வின - கண்களும் ஒளியிழந்து காணும் திறம் குன்றின; அறிவும் என் நீத்து மயங்கிப் பிறிதாகின்று - என் அறிவும் என்னின் நீங்கி மயங்கிச் செயலற் றொழிந்தது; நோயும் ஏரும் - காதற்காமநோயும் மிக்கு எழாநின்றது; மாலையும் வந்தன்று - மாலைப்போதும் வந்துவிட்டது; யான் யாங்காகு வென்கொல் - யான் என்னாவேனோ அறியேன்; ஈங்கு சாதல் அஞ்சேன் - இவ்விடத்து நோய் கைம்மிகின் எய்தும் இறந்துபாட்டுக்கு அஞ்சேனாயினும்; சாவின் - இறந்தால்; பிறப்புப் பிறிது ஆகுவதாயின் - மறுபிறப்பு வேறாகி விடுமாயின்; என் காதலன் மறக்குவென்கொல் என - என் காதலனை மறந்தொழிவேனோ என்று; அஞ்சுவல் - அஞ்சு கின்றே னாதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன், நீ கவலற்க. எ.று. தோளும் அழியும் நாளும் சென்றன; அத்தம் நோக்கிக் கண்ணும் வாளற்றுக் காட்சி தவ்வின; அறிவும் என் நீத்து மயங்கிப் பிறிதாகின்று; நோயும் ஏரும்; மாலையும் வந்தன்று; யாங்காகுவென் கொல்; தோழி, ஈங்குச் சாதல் அஞ்சேன்; சாவின், பிறப்புப் பிறிதாகுவதாயின், என் காதலனை மறக்கு வென்கொல் என அஞ்சுவல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. நீளிடை, நீண்ட சுரம்; தலைவன் மனைக்கும் சென் றுறையும் இடத்துக்கும் இடையே நீண்டு கிடப்பது பற்றி நீளிடை எனப்பட்டது என்க. அத்தம், வழி. தவ்வுதல், கெடுதல், ஏர்தல், எழுதல், பிறப்பும் இறப்பும் உறக்கமும் விழிப்பும் போல மாறிமாறி வருவன வாதலின், மீண்டும் பிறப்புண்டேல் என்று கூறாராயினர். “மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும், அறியா தோரையும் அறியக் காட்டித், திங்கட் புத்தேள் திரிதரும் உலகே1” என்று பிறரும் கூறுதல் காண்க. உடம்பி னின்றும் நீங்கும் உயிர் மலவிருளும் வினைப்பிணிப்பும் உற்று அவற்றின் வன்மை மென்மைகட்கேற்ற உடம்பொடு கூடித் தோன்றுவது மறுபிறப்பாகலின், அக்காலத்தே அவ்வுடம்புக் குரிய கருவிகளைக் கொண்டு உயிர் அவற்றின் அளவாய் நின்று தம் அறிவு விழைவு செயல்வகைகளில் ஈடுபடும்; முன்னைப் பிறப்பில் நிகழ்ந்த வினைக்கண் விளைந்த பயனே உயிரைத் தொடர்தலால், அப்பயன் உருவாவதற்கு ஏதுவாய் நின்ற உடம்பும் கருவிகளும் செயலும் கழிந்தொழிதலின், மறுபிறப்பில் முன்னைப் பிறப்பு நிகழ்ச்சிகள் மனநிலையில் வாராதொழியும் என்பதும், மனம் உடம்பின் உட்கூறே யன்றி வேறன்று என்பதும் தமிழர் கொள்கை. மேலும் வினைக்கு முதல் உயிராயினும், அவ்வினையின் செயப்படுபொருள் போலப் பயன் அதனால் அறியப்படுவதன்றாகலானும், அப்பயன் நுகர்ச்சி குறித்து வரும் உடம்பையும் உயிர் அடைந்து உலகிடைத் தோன்றுங்காறும் அறிவதில்லை யாகலானும், அவ்வுடம்பைச் செய்தலும் அதனைக் கூடலும் உயிரின் செயலாகாமையாலும், உடம்பு மாறுங்கால் உயிர்க்கு மறதி இயல்பாயிற்று. ஆதலாற்றான். திருநாவுக்கரசர், “பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர், மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே2” என்றும், திருஞான சம்பந்தர், “மறக்குமாறிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல், பிறக்குமாறு காட்டினாய்”3 என்றும் கூறினார். கற்புவாழ்வில் தலைவனது பிரிவாற்றாத தலைமகள், களவிற்போலப் பிறர்க்கு நாணி மறைத்தல் வேண்டாமையின், உடம்பு சுருங்கியது கூறுவாள், தோளும் அழியும் என்றும், தலைமகன் வற்புறுத்த பருவம் எய்தியும் வரவு நீட்டிக்கின்ற தென்பாள், நாளும் சென்றன என்றும், ஒவ்வொரு பொழு தும் அவன் வருங்கால மாதலின், அவள், அவன் வரும் வழிமேல் விழிவைத்து வருந்தும் திறம் கூறுவாள், நீளிடை யத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தவ்வின என்றும் இந்நிகழ்ச்சிகளால் அறிவு அறை போகாது நிற் பினல்லது ஆற்றியிருத்தல் கூடா தென்பாள், என் நீத்து அறிவும் மயங்கிப் பிறிதாகின்று என்றும், பகற்போது கழிய மாலைக்காலம் நெருங்குமிடத்துக் காதற்காமவேட்கை பெருகி யெழுதல் தோன்ற, நோயும் ஏரும் மாலையும் வந்தன்று என்றும், இனி ஆற்றாது இறந்துபடுதற்கும் அவரது ஆணை யின்மையின் செய்வதறியாது வருந்துகிறேன் என்பாள், யாங்காகுவென்கொல் யானே என்றும் கூறினாள். “சாதலின் இன்னாத தில்லை1” எனச் சான்றோர் கூறுப எனத் தோழி கூறலும். அஃது இன்னா தென்பது கொண்டு அஞ்சிற்றி லேன் என்பாள், சாதல் அஞ்சேன் என்றும், செத்தால் எய்தக்கடவ பிறப்புத் தலைமகற்கும் எனக்கும் உள்ள இத் தொடர்பே நிலைபெற அமையாது வேறுபடுமாயின், என் காதலனை மறத்தல் கூடுமென அஞ்சுகின்றேன் என்பாள், அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவ தாயின் மறக்கு வென்கொல் என் காதலன் எனவே என்றும் கூறினாள். “இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சுநேர்பவளே2” எனப் பிறாண்டும் இவ்வாசிரியரே கூறுதல் காண்க. ஆதலால் அவர்பிரிவை ஆற்றியிருப்பேன்; நீ கவலற்க என்பது குறிப்பெச்சம். தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க. 398. உலோச்சனார் இயற்கைப்புணர்ச்சி வகையால் தலைமகள்பால் கருத்தைச் செலுத்திக் காதலுறவு கொண்ட தலைமகன், தோழியின் துணை யால் அவளொடு நெருங்கிய தொடர்புற்றுப் பகற்போதில் கானற்சோலைக்கண் ஓரிடத்தே தனித்து விளையாடும் பேறு பெற்றான். தலைவி தோழி முதலாயினாரிடையே கூடி யுறையும் தலைமகன், மாலையில் தன்னூர்க்குச் செல்வது இயல்பு. ஒருநாள் பகற்குறிக்கண் தலைவியைக் கானற் பொழிலில் கண்டு இன் புற்றவன், மாலை வரவும் தோழிபால் விடை பெறலானான். தலைவி யுள்ளத்தில் காதலுணர்வு சிறந்து நிற்பதைக் காட்டி அவன் கருத்தை வரைவின்கட் செலுத்தும் நோக்கமுடையளான தோழி, “ஐயனே, பகற்பொழுது கழிவதறிந்த யான் ஏனை மகளிர் தத்தம் மனைக்குச் செல்வதை யுணர்த்தி யாமும் செல்வேமோ என்றேன்; அது கேட்டதும் தன் மலர்போன்ற கண்களினின்றும் நீர் பெருகி மார்பகம் நனைப்பச் சில சொற்களேனும் சொல்லாளாய் வருந்தினாள்; ஆகலின், இனி நீ அவளிடமே நின் செலவை யுரைத்துக்கொள்க” என்றாள். காதலர்க்குத் தாம் தலைப்பெய்து விளையாடிய பொழிலி னின்றும் பிரிதலும் காதலரைப் பிரிவது போலும் துன்பம் செய்யும் என்ற உண்மை தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண் விளங்குதல் கண்ட உலோச்சனார் அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே நீரலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ்வயி றலைப்ப உடனியைந் தோரை மகளிரும் 1ஊர்எய் தினரால் பன்மலர் நறும்பொழில் பழிச்சி 2யாமும் சென்மோ சேயிழை 3என்றனென் அதனெதிர் சொல்லான் 4மெல்லிய சிலவே நல்லகத் தியாணர் இளமுலை 5நனைய மாண்எழில் 6மலர்க்கண் தெண்பனி கொளவே. இது, 7பகற்குறி வந்து மீளும் தலைமகனை, நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனத் தோழி சொல்லியது. உரை : உருகெழு தெய்வமும் கரந்துறையின்று - உட்குப் பொருந் திய தெய்வமும் மறைந்திராது வெளிப்பட்டு இயங்கா நிற்கும்; விரிகதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும் - விரிந்த கதிர்களையுடைய ஞாயிறுதானும் அவற்றைச் சுருக்கிக் கொண்டு மேற்கில் சாய்ந்து விழாநிற்கும்; நீரலைக் கலைஇய கூழை வடியா - நீராடியதால் அலைப்புண்டு கலைந்த கூந் தலைப் பிழிந்து புலர்த்தி; சாஅய் - சுருக்கி முடித்துக் கொண்டு; அவ்வயிறு அலைப்ப உடன்இயைந்து - அழகிய வயிறு குலுங்க ஓடி ஒன்றாய்த் திரண்டு; ஓரைமகளிரும் ஊரெய் தினர் - ஓரையாடிய ஆயமகளிரும் ஊர்நோக்கிச் சென்றெய்து கின்றனர்; பன்மலர் நறும்பொழில் பழிச்சி - பலவாகிய மலர்களையுடைய நறிய பொழிலைப் பரிந்து நோக்கி விடை கொண்டு; யாமும் சென்மோ - யாமும் செல்வேம்; சேயிழை - செவ்விய இழையுடையாய்; என்றனென் - என்று சொன்னே னாக; அதன் எதிர் - அதற்கு எதிர்மாற்றமாக; மெல்லிய சில சொல்லாள் - மென்மையான சில சொற்களேனும் சொல்லாளாயினள்; நல்லகத்து யாணர் இளமுலை நனைய - நல்ல தன் மார்பின்கண் புதியவாய் எழுந்த இளமுலைகள் நனையுமாறு; மாண் எழில் மலர்க்கண் தெண்பனி கொள - மிக்க அழகு படைத்த பூப்போன்ற கண்கள் கலங்கித் தெளிந்த நீர் நிறைந்து நிற்ப எ.று. சேயிழை, தெய்வம் கரந்துறையின்று; ஞாயிறு குடக்கு வாங்கும்; ஓரை மகளிர் கூழை வடியா, சாஅய் வயிறலைப்ப உடன் இயைந்து, ஊர் எய்தினர்; பொழில் பழிச்சி யாமும் சென்மோ என்றனென்; அதனெதிர் மலர்க்கண் இளமுலை நனையத் தெண்பனி கொள்ள நின்று மெல்லிய சிலவும் சொல்லாள்; ஆகவே அவட்கு இனி நீயே உரைத்து ஆற்று விப்பாயாக எனக் குறிப்பெச்சம் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. ஓரை, நீர்விளையாட்டுவகை; இஃது இக்காலத்து ஓரியாடல் என வழங்குகிறது. ஆல் : அசைநிலை. பழிச்சுதல், பாராட்டுதல்; புகழ்தலுமாம். செல்லுவேமோ என்பது, சென்மோ என நின்றது. சிலவும் என்ற உம்மை தொக்கது. யாணர், புதுமை. மாணெழில் என்றவிடத்து மாணுதல் மிகுதி மேற்று. “மாணப் பெரிது” என்றாற் போல. துறையிலும் பொழிலிலும் தெய்வம் உறையும் என்பதும், அஃது இரவில் வெளிப்பட்டு இயங்கும் என்பதும் பண்டையோர் கருத்து. தெய்வம் மக்களை வருத்தும் என்பது பற்றிப் பண்டை யோர்க்குத் தெய்வங்கள் அஞ்சத்தகுவன எனப்பட்டமையின், உருகெழு தெய்வம் எனவும் பகற்போதில் மறைந்துறைந்து இரவில் வெளிவந்தியங்கும் என்றும் பண்டையோர் கூறுப, அதுபற்றியே, உருகெழு தெய்வமும் கரந்துறை யின்று என்றார். உறை, உறைதல். விரிகதிர் என்றதனால். மாலையில் சுருக்குதல் கூறவேண்டுவதாயிற்று. குடக்கு, மேற்கு. வாங்குதல், வளைதல். வடித்தல், பிழிந்து புலர்த்தல். சாய்தல், ஈண்டுச் சுருக்கி முடித்தல் மேற்று. பல்வேறிடத்தினின்றும் ஓடி ஒன்று கூடுவது தோன்ற, அவ்வயி றலைப்ப வுடனியைந்து என்றார். உடன் இயைதல், ஒன்று சேர்தல். யாணர் இளமுலை என்றது பேதைப்பருவம் கடந்து தாய்மைக்கடன் பூணும் வளர்ச்சி யுற்ற பெதும்பைச் செவ்வி சிறந்து நிற்குமாறு அறிவித்தற்கு. தெண் பனி கொளநின்று என ஒருசொல் வருவித்துக் கொள்க மெல்லிய சிலவும் சொல்லாள் என்றது, தானேயும் ஒன்றும் உரையாள் என்பது. பகற்குறிக்கண் தலைவனொடு விளையாடி இன்புற்ற தலைமகளை மாலைப்பொழுது வரக் கண்டு மனைக்குச் செல்வோம் என்று தான் சொல்லக் கேட்டுத் தலைமகள் வருந்தினாள் என முன்னாள் நிகழ்ந்த செய்தியைப் பின் பொருநாள் தலைமகற்குக் கூறுவாளாய்த் தலைவியின் காதல் மாட்சியைப் புலப்படுக்கும் தோழி, முதற்கண் மாலை வரக் கண்டு தலைமகட்கு உணர்த்திய திறத்தை முறையாக உரைக் கின்றாள். பகற்போதில் வெளிப்படா துறையும் தெய்வம் மாலையில் உலவத் தலைப்படும் என்ற கருத்தால், உருகெழு தெய்வமும் கரந்துறையின்று என்றும், பகலில் எங்கும் தன் கதிர்களை விரித்துப் பரப்பி விளங்கிய ஞாயிறு மாலையில் தன் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு மேற்றிசையில் இறங்கத் தொடங்கிற் றென்பாள், விரிகதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே என்றும் கூறினாள். தெய்வத்தின் காட்சிப்படின் நோயும் அச்சமும் உண்டாம் என்றும், ஞாயிறு மறையின் எங்கும் இருள் பரந்து மனைக்குச் செல்லும் நெறி விளங்கா தென்றும், தாயர் தன்னையர் வெறுப்பும் தோன்றும் என்றும் கூறுவாள், உருகெழு தெய்வம் எனவும் விரிகதிர் ஞாயிறு எனவும் சிறப்பித்தாள், ஞாயிறு குடக்கு வாங்கக் கண்டதும், ஓரை மகளிர் நீரால் நனைந்து ஒப்பனை சிதைந்த கூந்தலைப் பிழிந்து புலர்த்தி மனையவர் வெகுள்வ ரென்ற அச்சத்தால் விரைந்து ஒன்று கூடுகின்றனர் என்பாள், நீரலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் என்றும், அவ்வயிறலைப்ப உடன் இயைந்து ஊர் எய்தினர் என்றும் கூறினாள். வயிறு அலைக்க வெய்துயிர்த்துக் கொண்டு மகளிர் விரைந்தோடித் திரள்வதும், பலரும் ஒன்றுசேரும் பண்பும் புலப்பட, அவ் வயிறலைப்ப உடனியைந்து என்றும் சிறப்பித்தாள். அதனைக் காட்சிச் சேயிழாய், யாமும் செல்வேம் என்றமை கூறுவாள், யாமும் சென்மோ சேயிழை என்றனென் என்றாள். ஓரை மகளிரொடு கூடி நீரலைக் கலைஇய கூழையளாகாது, குறியிடத்தே தலைவனொடு கூடி விளையாடி மகிழ்ந்தமை தோன்றச் சேயிழை என்றும், எனவே நாம் மகிழ்ந்து விளை யாடற்கு இடமளித்து இன்பம் நுகர்வித்த கானற்பூம் பொழி லுக்கு வாழ்த்துக் கூறிச் செல்வேம் என்பாள், பன்மலர் நறும்பொழில் பழிச்சி யாமும் சென்மோ என்றும் இயம்பி னாள். காதலனொடு கூடியிருந்த பொழிலைப் பிரிதலும் காதலனைப் பிரிவது போலும் துன்பம் பயந்தமையின் தன்னை மறந்து கண்களில் நீர்சுரந்து மார்பகம் நனைப்ப ஒருசொல்லும் கூற மாட்டாது கலக்கமுற்றாள் என்றற்கு, மாணெழில் மலர்க் கண் தெண் பனிகொள என்றும் இளமுலை நனைய என்றும் சொல்லாள் என்றும் உரைத்தாள். தலைமகள் இயல்பாகவே சின்மென்மொழி வழங்கும் நல்லிளம் பெதும்பை என்பது தோன்ற, மெல்லிய சில சொல்லாள் எனவும் யாணர் இளமுலை எனவும் குறித்தாள், முன்னாள் இவ்வாறு வருந்தி னாட்கு இன்று நீயே சொல்லி ஆற்றுவிப்பாயாக என்பது தோழியின் குறிப்பு. இது கேட்கும் தலைவன் தெருண்டு வரைதற்கு முயல்வானாவது பயன். 399. தொல்கபிலர் களவுக் காதலொழுக்கம் பூண்ட தலைமகன், தலைவி யுள்ளத்தில் காதல் சிறந்து நிற்பது கண்டும் களவையே விரும்பி யொழுகினான். விரைய வரைந்து கோடல் வேண்டுமெனத் தோழியும் அவ்வப்போது வரைவு கடாவினாள். எனினும், வரைவு முயற்சியை மேற்கொள்ளாது அவன் ஒழுகியதனால் தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது; அவளுடைய மேனியும் வேறுபடுவதாயிற்று; நுதலும் பசந்து ஒளிகுன்றிற்று. அது மிக்குத் தோன்றுமாயின் பெற்றோர்களின் காப்பும் மிகும்; தலைவனைக் குறியிடத்தே கண்டு பயிலும் வாய்ப்பும் இல்லையாம்; வேற்று வரைவும் அறத்தொடுநின்று நிகழ்ந்தன கூறும் நாணழிவும் தோன்றி வருத்தும் எனவும் தோழி எண்ணினாள். தலைவனொடு இந்நிலையை எடுத்து மொழிந்தாள். அவனும் வரைவொடு வருவதாக வற்புறுத்தினான். அவன் தப்பா வாய்மையன் என்று தோழி நன்கு அறிவாளாகலின், பின்பொருநாள் தலைமகன் சிறைப்புறத்தானாக உள்ளுறையால் அவற்குத் தலைவியின் பெற்றோர் மகட்கொடை புரிதற்குச் சமைந்திருப்பதும், தாய் பிரிவின்றிக் காவல் புரிவதும் உணர்த்தித் தலைமகளை நோக்கி, “தோழி, நின் திருநுதல் கவினழிந்தமை எண்ணி வருந்தற்க; தலைமகன் வரைவொடு வருகின்றான் என்று சொல்லும் சொல்லே நின் நுதற்குரிய கவினைக் கொணர்ந்து தரும் ஆகலான்” என்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைமகள் எய்திய மெலிவுநோய் தீர்தற்குத் தலைமகன் வரைந்துகோடல் ஒன்றே மருந்து எனத் துணிந்து அவளுடைய நுதழலகின்மேல் வைத்துக் கூறும் நயம் கண்டு வியந்த தொல்கபிலர் அதனை இப்பாட்டிடை அமைத்துத் தொடுக்கின்றார். அருவி யார்க்கும் பெருவரை அடுக்கத்துக் குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் வரியணிச் சிறகின் வண்டுண மலரும் 1வாழியஞ் சிலம்பிற் கேழல் 2கெண்டிய நிலவரை நிவந்த பலவுறு திருமணி ஒளிதிகழ் விளக்கத் தீன்ற மடப்பிடி களிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும் மாமலை நாடன் நயந்தனன் வரூஉம் 3பெருமை யுடையன் என்பது 4தருமே தோழிநின் திருநுதற் கவினே. இது, நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய் வேறுபட நின்ற தலைமகளைத் தோழி எம்பெருமான் இதற்கு ஆய நல்லது புரியும் எனத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது; “இதற் காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டும்” என்றாட்குத் தலைமகள் சொல்லியதூ உமாம். உரை : அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து - அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பக்கத்தில்; குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் - குருதிபோலச் சிவந்த நிறமுடையவாய் மணம் கமழும் பூக்களையுடைய காந்தள்; வரியணிச் சிறகின் வண்டு உண மலரும் - வரிகள் பொருந்திய அழகையுடைய சிறகுகளை யுடைய வண்டினம் போந்து தாது உண்ணுமாறு மலர்ந் திருக்கும்; சிலம்பில் - பக்கமலையில்; கேழல் கெண்டிய நிலவரை - பன்றி தன் கோட்டினால் உழுத நிலத்தின்கண்; நிவந்த பலவுறு திருமணி ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி - மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின் ஒளி பரந்து விளங்கும் விளக்கத்தில் கன்றையீன்ற இளம்பிடி; களிறு புறம்காப்பக் கன்றொடு வதியும் - களிற்றியானை புறத்தே நின்று காவலைச் செய்யத் தான் தன் கன்றினை நீங்காது உறையும்; மாமலை நாடன் - பெரிய மலையையுடைய நாட னாகிய தலைமகன்; நயந்தனன் வரூஉம் - மிக்க விருப்புற்று வரைவொடு வருகுவன் என்னும்; பெருமையுடையன் என்பது தருமே - வாய்மை தவறாத பெருமையுடையன் எனப்படுவ தொன்றே தரவல்லதாம்; நின் திருநுதல் கவின் - நினது திருவிளங்கும் நுதலிழந்த அழகினை எ.று. எனவே நீ இனி வருந்துதல் ஒழிக என்பதாம். தோழி, காந்தள் வண்டுண மலரும், சிலம்பில், கேழல் கெண்டிய நிலவரை நிவந்த திருமணி விளக்கத்துக் களிறு புறங்காப்ப மடப்பிடி கன்றொடு வதியும் மலைநாடன் நயந் தனன் வரூஉம் பெருமையுடையன் என்பதே நின் திரு நுதற்கவினைத் தரும்; ஆகலான் வருந்துதல் ஒழிக எனப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. காந்தட்பூ குருதி போலச் சிவந்த நிறமுடைமை பற்றிக் குருதி யொப்பின் கமழ்பூங் காந்தள் என்றார்; “குருதிப் பூவின் குலைக்காந்தட்டு1” எனப் பிறரும் கூறுதல் காண்க. வாழி : உரையசை. கெண்டுதல், உழுவது போல நிலத்தைக் குடைந்து பிளந்து புரட்டுதல். நிவத்தல், மேற்பட வருதல். மேல்வந்த மண்ணில் மணி கிடந்து மிளிர்வதை, ‘செம்பரல் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு1” என்று கபிலர் கூறுவது காண்க. நயந்து வருதல், ஈண்டு வரைவொடு வருதல் மேற்று. வரூஉம் பெருமை, வருதற்கு ஏதுவாகிய பெருமை. பெருமை, வாய்மை தப்பாமை. தருமே என்புழி ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. தலைமகன் வரையாது நீட்டித்தலால் தலைமகள் ஆற்றாமை எய்துவது கண்ட தோழி, அவள் ஆற்றத் தகுவன கூறக் கருதியகாலைத் தலைமகன் சிறைப்புறமாக வந்திருப்ப துணர்ந்து உள்ளுறையால் இற்செறிப்பும் காவல்மிகுதியும் அவற்கு அறிவுறுத்துவாளாய், வண்டு போந்து தாதுண்ணு மாறு காந்தள் மலரும் சிலம்பில், கேழலால் கிளறப்பட்ட மணியின் விளக்கத்தில் கன்றீன்ற பிடி, களிறு புறம் காப்ப, அதனோடு வதியும் என்றாள் என்றது, தலைவற்கு மகட் கொடை நேர்தற்குத் தமர் நேர்ந்த உள்ளத்தரா யிருப்பதும், தலைவியின் வேறுபாடு பயந்த அலர்க்கு அஞ்சி தன்னையர் புறங்காப்பத் தாய் தலைவியைப் பிரியாது உடனுறைவதும் குறித்தவாறு. இந்நிலையில். அவன் வரைவு மேற்கொண்டு வருவான் என்பதற்குரிய வாய்மை தவறாத பெரியவன் என்று நாம் நன்கறிந்துளே மாகலின், அதனை நினைப்ப தொன்றே அமையும்; நுதல் இழந்த கவின் முன்போல் நின்று ஒளிதிகழும் என்பாள், மாமலை நாடன் நயந்தனன் வரூஉம் பெருமை யுடையன் என்பது தருமே தோழி நின் திருநுதல் கவினே என்றாள். களவின்கண் குறித்த பொழுதில் போந்து தலையளி செய்தலில் அவன் தவறா தொழுகினமை தலைவி நன்கறிந்தவ ளாதலால், அவன் வரைவொடு வருவதாகக் கூறியதனை அவட்கு அறிவிக்கும் குறிப்பால் நாடன் நயந்தனன் வரூஉம் பெருமையன் என்றும், அதனை அவன் தனக்கு உரைத்தனன் என்பாள், என்பது என்றும், இனி இது கேட்டு நீ மகிழ்தல் வேண்டும் என்பாள், என்பது ஒன்றே நின் நுதற் கவினைத் தரும் என்றும் கூறினாள். வரைவொடு வருதல் கேட்ட விடத்துப் பிறக்கும் உவகைக் கிளர்ச்சி மேனியிற் கதிர்ப்பும், நுதலில் விளக்கமும் பயத்தல் ஒருதலை யாகலின், வரூஉம் பெருமையன் என்பதே நின் திருநுதற் கவினைத் தரும் என்றாள். இது கேட்டுத் தலைமகன் வரைவொடு வருவா னாவது பயன். 400. ஆலங்குடி வங்கனார் தலைமகன் பரத்தையர் சேரிக்குச் சென்றவிடத்து அவன் நல்கும் சிறப்புக்களைப் பெறும் பரத்தையர் பலர் உண்டு. அவருள் தன் நலத்தாலும் ஆடல் பாடல் அழகுகளால் உளவாகும் தகுதியாலும் மேம்படும் பரத்தைக்கு அவன்பால் நெருங்கிய தொடர்புண்டாதலும் இயல்பு. இத்தகைய பரத்தை யொருத்தியொடு தொடர்புற்ற தலைமகன் வேறு பரத்தையர் பலர்க்கும் தன் தலைமைப் பயனை நல்கியபோது அவட்கு உள்ளத்தே பொறாமை தோன்ற அதனால் அவள் தன்னைத் தலைமகன் புறக்கணிப்பதாக எண்ணி மனமருட்சி கொண்டாள். ஒருகால், அவள் தலைவனைக் கண்டு, “ஐயனே, யான் நின்னை இன்றியமையேன்; அமைவேனாயின், இன்னா நோக்கமொடு என் உயிரைப் போக்கும் பிழைப்பு அன்றி எனக்கு வேறு யாது உண்டு? சோழருடைய உறையூர் அவையத் திருந்து அறம் நீங்காதவாறு போலச் சிறந்த கேண்மை தந்து என் உள்ளத்தோடு கலந்த நீ என் நெஞ்சின்கண் நீங்குதல் அறியாய் ஆகலான்” என்றாள். பரத்தை நிகழ்த்திய இக்கூற்றின்கண், தான் தலைமகனை இன்றியமையாளாதற்கு ஏது அவன் தன் நெஞ்சின்கண் நீங்காது உறைதல் எனத் தன் காதன்மையை அவனைப் புகழ்ந்த வாய் பாட்டாற் கூறும் நுட்பம் கண்டு வியந்த ஆலங்குடி வங்கனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். வாழை மென்றோடு வார்புறு பூக்கும் நெல்விளை கழனி நேர்கட் செறுவின் அரிவனர் இட்ட சூட்டயற் பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர நின்னின் றமைகுவெ னாயின் இவணின் றின்னா நோக்கமொ டெவன்பிழைப் புண்டோ மறங்கெழு சோழர் உறந்தை அவையத் தறங்கெட அறியா தாங்குச் சிறந்த கேண்மையொ டளைஇய நீயே கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே. இது, பரத்தை தலைவன் முன்பு தன்னைப் புகழ்ந்தது; முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், நின்னின் றமையாம் என்று சொன்னமையான் என்பது. உரை : வாழை மென்தோடு வார்பு உறுபு ஊக்கும் - வாழையின் மெல்லிய தோட்டிலை நீண்டு தாழ்ந்துற்றதனை உயர்த்தும்; நெல்விளை கழனி நேர்க்கண் செறுவின் - நெற்பயிர் விளையும் கழனியாகிய நேரிய இடம் பொருந்திய வயலின் கண்; அரி வனர் இட்ட சூட்டயல் - நெல்லரிவோர் அரிந்திட்ட சூட்டின் அருகே; பெரிய இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர - பெரிய கரிய பிடரியை யுடைய வாளைமீன் துள்ளிப் பாயும் ஊரனே; நின் இன்று அமைகுவேனாயின் - நின்னையின்றி வாழ்தல் அமைகுவேனாயின்; இவண் நின்று இன்னா நோக்க மொடு பிழைப்பு எவன் உண்டு - இவ்விடத்திப்பொழுது துன்புற்ற நோக்கத்துடன் உயிரிழத்தலாகிய குற்றத்தைச் செய்வதல்லது வேறு யாது உளது; மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - வீரமிக்க சோழர் தலைநகராகிய உறையூரில் உள்ள அறங்கூறவையின்கண்; அறம் கெட அறியா தாங்கு - அறம் நீங்காதவாறு போல; சிறந்த கேண்மை யொடு அளைஇய - சிறப்புப் பொருந்திய நட்புறவால் கலந்த; என்நெஞ்சத்தான் நீ கெடுவறியாய் - என் நெஞ்சின்கணின்றும் நீ நீங்குதல் இல்லை யாகலின் எ.று. ஊர, நின்னின்று அமைகுவெனாயின், இன்னா நோக்க மொடு உயிர் பிழைப்பு அல்லது எவன் உண்டு; உறந்தை அவையத்து அறம்கெட அறியாதாங்குச் சிறந்த கேண்மை யொடு அளைஇய நீ, என் நெஞ்சத்தான் கெடுவறியாய் ஆகலான் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வாழையின் தோட்டிலையை இக்காலத்தார் தாட்டிலை என்ப. வரம்பில் நின்ற வாழையின் தோட்டிலை நீண்டு தாழுங்கால், வயற்கண் வளர்ந்து நிற்கும் நெற்பயிர் அதனை உயருமாறு ஊக்குதல் தோன்ற மென்தோடு ஊக்கும் நெல் என்றார். வார்தல், நீளுதல். உறுதல், ஈண்டுத் தாழ்ந்து வார்பு உறுபு நெற்பயிரைத் தீண்டுதல். நேர்கண் செறு, நேர்கோட்டிடைக் கிடந்த செய். நேர்கோடு - நேரிதாகக் கிடக்கும் வரம்பு. சூடு, கதிர்களோடு அரிந்த தாட்கற்றை. பொறாமையுற்று வருந்துவோருடைய கட்பார்வைக்கண் இனிமை நோக்கம் இல்லா தொழிவது பற்றி, அதனை இன்னா நோக்கம் என்றும், அது குற்றமா கலின் பிழைப்பு என்றும் குறித்தார். ஓகாரம் அசைநிலை. உறையூர் உறந்தை யென வருவது மரூஉவழக்கு. அளைஇய - கலந்த. கெடுவறியாய் கெடு முதனிலைத் தொழிற் பெயர். கெடுதல், ஈண்டு நீங்குதல். பரத்தையர் பலருள்ளும் தலைசிறந்த நலமும் தலை மகன்பால் சிறந்த கேண்மையுமுடையளான பரத்தை, அவன் முன்னே நின்று தனக்குச் செய்த அருணலத்தை உள்ளுறை யால் கூறுதலின் நின்னின் றமையேன் என்றும், வார்பு உறுபு நின்ற வாழையின் மெல்லிய தோட்டிலையை தாங்கி யூக்கும் நெற்பயிர் விளையும் கழனியில் அரிவோர் இட்ட சூட்டின் மருங்கில் பெருமையுடைய வாளைமீன் பிறழுமாறு போல, நலம் சிறந்து தன்பால் தாழும் பரத்தையரைத் தாங்கி ஊக்கும் நின்முன் தொகுக்கப்பட்ட ஏனைப் பரத்தையர் மருங்கில் யான் மகிழ்ந்து இயலுகின்றேன். நின்னை யின்றி அமைகுவேனாயின் அச்சிறப்பைப் பெறாது அம்மகளிர் கண்டு அஞ்சத்தக்க நோக்கமும் இரங்கத்தக்க பிழைச் செயலும் கொள்வதல்லது வேறு யாது என்னிடம் உண்டாம் என்பாள், நின்னின் றமைகுவெ னாயின் இவணின்று இன்னா நோக்கமொடு பிழைப்பு எவன் உண்டு என்றும், மறத்துக்கும் அறமே துணை யென்பது பற்றி, மறம் மிக்க சோழ மன்னர் பேரவையில் அறம் நீங்காது நின்றது என்பாள், மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாது என்றும் அது போலவே. என்னிடம் நிலவும் கலைநலம் பலவும் வளம்பெற நினைந்து சிறந்த நண்பினைச் செய்த நீ என் நெஞ்சினின்றும் நீங்காயாயினை என்பாள், கெடுவறியாய் என் நெஞ்சத்தானே என்றும், நீ செய்த நட்பு மறக்க லாகாத அருட் சிறப்பு நிறைந்தது என்பது தோன்ற, சிறந்த கேண்மை அளைஇய நீ என்றும் கூறினாள். வாழையின் மென்தோடு வார்ந்து தாழ்ந்திருப்பது நலம் முதிர்ந்து தாழும் பரத்தையாகவும். அதனை ஊக்கும் நெல்லைத் தலைவனாகவும், அரிவனர் இட்ட சூட்டுக்கற்றை ஊரில் தொகுக்கப்பட்ட பரத்தையராகவும், அதன் அயலில் பிறழும் பெரிய வாளை அவர் பலரும் காண இயங்கும் தானாகவும் உள்ளுறை கொள்க. இவ்வாறு உள்ளுறை வாயிலாகத் தலைவன்பால் பரத்தையாகிய தான் நலம் பெற்ற சிறப்பும், அதனால் ஏனைப் பரத்தையர்முன் தான் இயலும் பெருமையும் எல்லாம் எனக்கு அருளுமாற்றால் சிறந்த கேண்மையோடு கலந்து என் நெஞ்சின்கண் நீங்காது உறைகின்றாயாகலின், நின்னை யின்றி அமையேன்; அமையும் இடம் தோன்றின் இன்னா நோக்கமொடு உயிர் பிழைத்துக் கெடுவதல்லது வேறு செயலில்லேன் என்று பரத்தை கூறுவது கண்டே, இப்பாட்டுப் பரத்தை தலைவன் முன்பு நின்று தன்னைப் புகழ்ந்தது என்றும், அது நின்னை யின்றி அமையேன் என்பதனால் வற்புறுத்தப்படுகிறது என்றும் துறை கூறிற்று. இதனாற் பயன், தலைவி தன் காதல்மிகுதி கூறி அயாவுயிர்ப்பாளாவது. இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பதின்மூன்றடி காறும் உயரப்பெற்றது. இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி . நற்றிணை மூலமும் விளக்கவுரையும் முடிந்தன.  செய்யுள் முதற் குறிப்பு செய்யுள் எண் அடைகரை மா அத்து 118 அட்டரக்கு.உருவின் 193 அணிவரை மருங்கின் 344 அண்ணாந் தேந்தி 10 அத்த இருப்பைப் 111 அந்தோ தானே 324 அமர்க்கண் ஆமான் 165 அமுதம் உண்கநம் 65 அம்மவாழி... காதலர் 259 அம்மவாழி... கைம்மாறு 194 அம்மவாழி... நம்வயின் 158 அம்மவாழி... நன்னுதற்கு 388 அரவினார தேரும் 285 அரவுக் கிளர்ந் தன்ன 366 அரிகால் மாறிய 210 அருங்கடி அன்னை 365 அருந்துயர் உழுத்தலின் 381 அருவி... ஆளி அருவி... குருதி 399 அருவி... நண்ணி 213 அருவி... நெடுங் 288 அருளா யாகலோ 195 அருளிலர் வாழி 261 அல்குபட ருழந்த 8 அவ்வளை வெரிநி 25 அழிதக் கன்றே 372 அழிவில முயலு 9 அழுந்துபட வீழ்ந்த 2 அழுந்துபடு விழுப்புண் 97 அறவர் வாழி 86 அறிதலும் அறிதியோ 106 அறித்தோர் அறனிலர் 227 அறியாமையின் 50 அன்பினர் மன்னும் 224 அன்றை யனைய 48 ஆங்கனந் தணிகுவது 322 ஆடமை ஆக்கம் 178 ஆடிய தொழிலும் 131 ஆடியல் விழவின் 90 ஆய்மலர் மழைக்கண் 85 ஆழல் மடந்தை 391 ஆளில் பெண்டிர் 353 ஆனா நோயோடு 185 இஃதெவன் கொல்லோ 273 இகுளைத் தோழியிஃது 332 இசைபட வாழ்பவர் 217 இசையும் இன்பமும் 214 இடூஉ ஊங்கண் 246 இதுவே, நறுவீ 96 இருங்கண் ஞாலத்து 157 இருங்கல் அடுக்கத்து 122 இருங்கழி துழைஇய 127 இருங்கழி பொருத 145 இருங்செம் முடிய 141 இருநிலங் குறையக் 81 இரும்பின் அன்ன 249 இரும்புனிற்று எருமைப் 271 இரைதேர் எண்கின் 125 இலைமாண் பகழிச் 352 இலையில் பிடவம் 242 இல்லெழு வயலை 179 இவளே, காணல் 45 இவள் தன், காமம் 223 இழையணி மகளிரின் 302 இளமை தீர்ந்தனள் 351 இறவுப்புறத் தன்ன 19 இறுகுபுல் மேய்ந்த 266 இறையும் அருந்தொழில் 161 இனிதின் இனிது 134 ஈண்டுபெருந் தெய்வத்து 315 ஈன்பருந் துயவும் 3 உடும்பு கொரீஇ 59 உயிர்த்தன வாகுக 163 உரவுக்கடல் உழந்த 63 உரவுத்திரை பொருத 235 உருகெழு தெய்வமும் 398 உருகெழு யானை 299 உரையாய் வாழி 123 உலகம் படைத்த 337 உலகிற்கு ஆணி 139 உலவை ஓமை 252 உவர்விளை... உழாஅ 331 உவர்விளை... குன்றுபோல் 138 உழையணர்ந்து உண்ட 113 உள்ளார்... கொடுஞ்சிறை 241 உள்ளார்... துணையொடு 92 உள்ளிறைக் குரீஇக் 181 உள்ளுதொறு... பிடிபிளந்த 107 உள்ளுதொறும்... மாரிக் 100 உள்ளூர் மாஅத்த 87 உறைதுறந்து இருந்த 164 ஊசல் ஒண்குழை 286 எம்நயந்து உறைவி 176 எம்மூர் வாயில் 83 எய்ம்முள் அன்ன 98 எல்லை சென்றபின் 385 எழாஅ யாகலி 13 என்கைகொண்டு 28 என்ன ராயினும் 64 என்னா வதுகொல் 296 என்னெனப் படுமோ 228 ஐதேகு அம்மஇவ் 240 ஐதே காமம் 143 ஐய குறுமகட் 20 ஒண்ணுதல் மகளிர் 283 ஒருமகள் உடையேன் 184 ஒலியவிந்து அடங்கி 303 ஒள்யிழை மகளிரொடு 155 ஒன்றில் காலை 124 ஒன்றதும் என்ற 109 ஒன்றுதெரிந்து உரைத்திசின் 103 ஓங்கித் தோன்றுந் 323 ஓங்குமணல் உடுத்த 199 ஓங்குமலை நாட 55 ஓதமும் ஒலிஓ 319 கடலங்காக்கைச் 272 கடவுட் கற்சுனை 34 கடுங்கதிர் ஞாயிறு 338 கடுஞ்சுறா எறிந்த 392 கடுந்தேர் ஏறியுங் 349 கண்டல்... தெண்கடல் 363 கண்டல்... முண்டகம் 207 கண்டனென் மகிழ்ந 30 கண்ணி கட்டிய 200 கண்ணுந்... பழநலம் 219 கருங்கால்... செவ்வீ 222 கருங்கால்... நாளுறு 313 கருங்கோட்டுப் புன்னைக் 167 கருவிரல் மந்திச் 334 கல்லயல் கலித்த 383 கல்லாக் கடுவன் 233 கல்லூற்று ஈண்டல 186 கவர்பிரி நெடுந்தேர் 307 கவிதலை எண்கின் 325 கழுதுகால்கிளர 255 கழுநீர் மேய்ந்த 260 கழைபாடு இரங்கப் 95 கற்றை ஈந்தின் 174 காயாங் குன்றத்துக் 371 கானமுங் கம்மென் 154 கானல்அம் சிறுகுடிக் 4 கானல் கண்டல் 345 கானல் மாலைக் 382 கிழங்குகீழ் வீழ்ந்து 328 குணகடல் இவர்ந்து 215 குணகடல்... மண் திணி 153 குணகடல்... தண்கார் 346 குருதி வேட்கை 192 குறும்பை மணிப்பூண் 269 குறுங்கை யிரும்புலிக் 36 குறுநிலைக் குரவின் 56 கேளாய் எல்ல 61 கொக்கினுக்கு ஒழிந்த 280 கொடிச்சி காக்கும் 22 கொடியை வாழி 277 கொடுங்கண் காக்கைக் 367 கொடுங்குரல் குறைத்த 102 கொண்டல் ஆற்றி 89 கொண்டல் மாமழை 140 கொல்லைக் கோவலர் 266 கொழுஞ்சுளைப் பலவின் 326 கோட்சுறா வழங்கும் 78 கோடு துவையாக் 276 சான்றோர் வருந்திய 234 சிலம்பின் மேய்ந்த 359 சிலரும் பலரும் 149 சிறுகண் பன்றிப் 386 சிறுகண் யானைப் 232 சிறுமணி தொடர்ந்து 220 சிறுவீ ஞாழல் 191 சிறுவீ முல்லைத் தேங் 248 சிறுவீ முல்லைப் பெரிது 361 சிறுவெள்ளாங் குறுகே 70 சிறைநாள் ஈங்கை 79 சுடர்சினந் தணிந்து 369 சுடர்த்தொடிக் கோமகள் 300 சுரும்புண விரிந்த 168 சுனைப்பூக் குற்றும் 173 சூருடை... பெருவரை 7 சூருடை... மால்பெயல் 268 செந்தெல் அரிநர் 275 செலவிரை வுற்ற 308 சேயின் வரூஉம் 198 சேய்விசும் பிவர்ந்த 67 சேறும் சேறும் 229 சொல்லிய பருவம் 364 சொல்லிற் சொல்லெதிர் 39 ஞாயிறு ஞான்று 218 ஞான்ற ஞாயிறு 239 தடங்கோட் டாமான் 57 தடந்தாள் தாழைக் 270 தடமருப் பிறழ்சுவல் 330 தடமருப்... மடநடைக் 120 தண்ணிய கமழுந் 137 தண்புனக் கருவிளைக் 262 தந்தை வித்திய 306 தம்நாட்டு விளைந்த 183 தம்மலது இல்லா 189 தளிர்சேர் தண்தழை 204 தானது பொய்த்தல் 354 திங்களுந் திகழ்வான் 335 திருந்து கோல் எவ்வளை 136 தினையுண் கேழல் 119 தீமை கண்டோர் 116 தீயும் வளியும் 294 துகில்விரித் தன்ன 43 துய்த்தலைப் புனிற்றுக்குரல் 206 துனிதீர் கூட்டமொடு 216 தூங்கல் ஓலை 135 தேம்படு சிலம்பில் 243 தொடிபழி மறைத்தலில் 23 தொல்கவின் தொலையத் 14 தொன்றுபடு தும்பொடு 247 தோடமை செறிப்பின் 282 தோலாக் காதலர் 339 தோளும் அழியும் 397 தோளே தொடிகொட்பு 133 தோளே தொடி நெகிழ்ந் 197 நகுகம் வாராய் 250 நகைநன் குடையன் 150 நகையா கின்றே 245 நயனின் மையிற் 75 நயனும் பண்பும் 160 நனிமிகப் பசந்து 237 நன்னுதல் பசப்பினும் 151 நாடல் சான்றோர் 327 நாண்மழை தலைஇய 17 நிலநீர் ஆரக் 5 நிலந்தாழ் மருங்கில் 356 நிலவு மறைந்தன்று 182 நிலவே, நீர்நிற 348 நினைத்தலும் நினைதிரோ 318 நின்குறிப்பு எவனோ 357 நின்ற சொல்லர் 1 நின்ற வேனி 29 நீடுஇருஞ் சிலம்பில் 317 நீடுதினைப் புன்னை 375 நீண்மலைக் கலித்த 301 நீயுணர்ந்த தனையே 91 நீயும் யானுந் 27 நீயே, அடியறிந்து 156 நீயே, பாடல் சான்ற 257 நீரற வறந்து 99 நீர்நசைக்கு ஊக்கிய 171 நீர்பெயர்ந்து மாறிய 291 நீர்வளர் ஆம்பல் 6 நெகிழ்ந்த தோளும் 309 நெடுங்கடல் அலைத்த 175 நெடுங்கண் ஆரத்து 292 நெடுங்கழை நிவந்து 393 நெடுநா வெண்மணி 40 நெடுநீர் அருவிய 251 நெடுவான் மின்னிக் 274 நெய்தல் கூம்ப 187 நெய்யும் குய்யும் 380 நெறியிரும் கதுப்பும் 387 நொச்சிமா அரும் 267 நோகோ... நெகிழ்ந்தன 26 நோகோ... நோம்என் 312 நோயாலைக் கலங்கிய 94 நோயுங் கைம்மிகப் 236 நோயும் நெகிழ்ச்சியும் 82 நோவினி வாழிய 190 பகலெரி சுடரின் 128 பங்குசெறிந் தன்ன 196 படுகாழ் நாறிய 278 படுசுட ரடைந்த 33 படுதிரை கொழீஇய 49 படுநீர்ச் சிலம்பின் 188 பரந்துபடு கூரெரி 177 பருவரல் நெஞ்சமொடு 18 பல்கதிர் மண்டிலம் 69 பல்பூங் கானல் 258 பழனப் பாகல் 180 பாம்பளைச் செறிய 264 பார்பக வீழ்ந்த 24 பார்வை வேட்டுவன் 212 பிணங்கரில் வாடிய 37 பிணர்ச்சுவல் பன்றி 336 பிரசங் கலந்த 110 பிரசந் தூங்கப் 93 பிறைவனப்பு இழந்த 263 புணரின் புணராது 16 புதல்வன் ஈன்ற 355 புலிபொரச் சிவந்த 202 புல்லேன் மகிழ்ந 340 புள்ளுப்பதி சேரினும் 253 புறந்தாழ்பு இருண்ட 284 புன்தலை மந்திக் 379 பூம்பொறி உழுவை 104 பெயினே, விடுமான் 311 பெய்து போகு எழிலி 396 பெய்யாது வைகிய 11 பெருங்கடல் முழங்கக் 117 பெருங்களிறு... அட்டன 47 பெருங்களிறு... தாக்கலின் 144 பெருநகை கோளாய் 129 பெருந்தோள் நெகிழ 358 பெருமுது செல்வர் 58 பெரும்புனங் கவருஞ் 368 பேணுப பேணார் 72 பேரூர் துஞ்சும் 132 பைங்கண் யானைப் 41 பைங்காய் நல்லிடம் 126 பொங்குதிரை பொருத 35 பொருவில் ஆயமோ 44 பொன்செய் வள்ளத்துப் 297 பொன்னும் மணியும் 166 மடக்கண் தகரக் 170 மடலே காமந் 152 மடல்மா வூர்ந்து 377 மடவது அம்ம 316 மணிகண் டன்ன 221 மணிக்குரல் நொச்சித் 293 மணிதுணிந்து அன்ன 159 மரஞ்சாம் மருந்துங் 226 மரந்தலை மணந்த 394 மலர்ந்த பொய்கைப் 115 மலைகண் டன்ன 60 மலையமா ஊர்ந்து 77 மலையற் கலித்த 108 மலையிடம் படுத்து 209 மலையுறை குறவன் 201 மழைதொழில் உலந்து 333 மறத்தற் கரிதால் 42 மனையுறை புறவின் 162 மன்ற எருமை 80 மன்னாப் பொருட்பிணி 71 மாக்கொடி அதிரல் 52 மாசில் மரத்த 281 மாநிலஞ் சேவடி கடவுள் வாழ்த்து மாயிரும் பரப்பகந் 31 மாயோ னன்ன 32 மாவென மதித்து 342 மிளகுபெய் தனைய 66 முதிர்ந்தோர் இளமை 314 முயப்பிடிச் செவியின் 230 முரம்புதலை மணந்த 374 முரிந்த சிலம்பி 295 முருகுறழ் முன்பொடு 225 முல்லை தாய 343 முழங்குகடல் முகந்த 347 முழங்குதிரை... தடந்தாள் 203 முழங்குதிரை... நுணக்கு 15 முழவுமுகம் புலந்து 360 முளிகொடி வலந்த 105 முறஞ்செவி யானைத் 376 முற்றா மஞ்சள் 101 முன்றில் பலவின் 373 முன்னியது முடித்தனம் 169 மையற விளங்கிய 231 யாங்கா குவமோ 147 யாங்குச்செய்... பொன்வீ 259 யாங்குச்செய்... யோங்கு 51 யாஞ்செய் தொல்வினைக்கு 88 யாமமும் நெடிய 378 யாரை எலுவ 395 யார்க்குநொந் துரைக்கோ 211 யானஃது அஞ்சினென் 53 வங்கவரிப் பாறைச் 341 வடிக்கதிர் திரித்த 74 வடுநின்று நிறைந்த 130 வண்டல் தைஇயும் 254 வண்ணம் நோக்கியும் 148 வண்புறப் புறவின் 384 வம்ப மாக்கள் 298 வயல்வெள் ஆம்பல் 290 வரியணி பந்தும் 305 வருமழை கரந்த 76 வரையா நயவினர் 329 வளைநீர் மேய்ந்து 54 வறங்கொல வீந்த 238 வாரல் மென்தினைப் 304 வாராய் பாண 370 வாழைமென் தோடு 400 வாளை வாளின் 390 வானிகுபு சொரிந்த 142 விசும்புறழ் புரிசை 287 விதையர் கொன்ற 121 விருந்தெவன் செய்கோ 112 விரைப்பரி வருந்திய 21 வில்லாப் பூவின் 146 விழவும் உழந்தன்று 320 விழந்த மாரிப் 244 விளக்கின் அன்ன 310 விளம்பழங் கமழுங் 12 விளிவில் அரவமொடு 257 விளையாடு... அழுத்தி 172 விளையாடு... யாடாது 68 விறல்சாய் விளங்கிழை 208 வினையமை பாவையின் 362 வெண்கோடு கொண்டு 114 வெண்ணெல் அரிநர் 350 வேங்கை யும்புலி 389 வேட்டம் பொய்யாது 38 வேம்பின் ஒண்பழம் 279 வேர்பிணி வெதிரத்துக் 62 வேனில் முருக்கின் 73 வைகல் தோறும் 46 சிறப்புப் பெயர் அகர முதலி (எண்:பாட்டெண்) செய்யுள் எண் அண்டிரன் 237:7 அழிசி 87:3 ஆர்க்காடு 190:6 ஓரி 52:9 265:7 320:5 கங்கை 369:9 காரி 320:6 குட்டுவன் 14:3 கொங்கர் 10:6 கொல்லி 263:7 தழும்பன் 300:10 திகிரியோன் 1:7 திருமாவுண்ணி 216:9 நன்னன் 270:9 செய்யுள் எண் பழையன் 10:8 பாரி 253:7 பெரியன் 131:7 பொறையன் 8:9 தொண்டி 8:9 மாந்தை 395:9 மலையன் 170:8 மருங்கூர் 258:10 மாந்தை 395:9 மிஞிலி 265:4 முள்ளூர் 18:2 வள்ளி 82:5 வேதமுதல்வன் 1:6 பாடினோரும் பாடல்களும் அ அகம்பன் மாலாதனார் 81 அஞ்சில் அஞ்சியார் 90 அஞ்சில் ஆந்தையார் 233 அம்மள்ளனார் 82 அம்மூவனார் 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397 அம்மெய்யன் நாகனார் 252 அல்லங் கீரனார் 245 அறிவுடை நம்பி 15 ஆ ஆலங்குடி வங்கனார் 230, 330, 400 ஆலம்பேரி சாத்தனார் 152, 255 ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் 264 இ இடைக்காடனார் 142, 221, 316 இளங்கீரனார் 3, 62, 113 இளந்திரையனார் 94, 99 இளந்தேவனார் 41 இளநாகனார் 151, 205, 231 இளம்புல்லூர்க்காவிதி 89 இளம்போதியார் 72 இளவெயினனார் 263 இளவேட்டனார் 33, 157 இனிசந்தநாகனார் 66 உ உக்கிரப்பெருவழுதி 98 உரோடகத்துக் கந்தரத்தனார் 306 உலோச்சனார் 11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398 உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 370 எ எயினந்தை மகன் இளங்கீரனார் 269, 308, 346 எயினந்தையார் 43 ஐ ஐயூர் முடவனார் 206, 334 ஒ ஒருசிறைப் பெரியனார் 121 ஓ ஓரம்போகியார் 20, 360 ஒள ஒளவையார் 129, 187, 295, 371, 381, 390, 394 க கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 266 கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 144, 213 கடுவண் இளமள்ளனார் 150 கண்ணகனார் 79 கண்ணகாரன் கொற்றனார் 143 கண்ணங் கொற்றனார் 156 கண்ணம் புல்லனார் 159 கணக்காயனார் 23 கணிபுன் குன்றனார் 226 கதப்பிள்ளையார் 135 கந்தரத்தனார் 116, 146, 238 கபிலர் 1, 13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376 கயமனார் 12, 198, 279, 293, 305, 324 கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 343 கருவூர்க் கோசனார் 214 கழார்க் கீரன் எயிற்றியனார் 281, 312 கள்ளம்பாளனார் 148 கள்ளக்குடிப் பூதம் புல்லனார் 333 கா காசிபன் கீரனார் 248 காஞ்சிப் புலவனார் 123 காப்பியஞ் சேந்தனார் 246 காமக்கணிப் பசலையார் 243 காரிக்கண்ணனார் 237 காவன் முல்லைப் பூதனார் 274 காவிரிப் பூம்பட்டினத்துச் செங் கண்ணனார் 389 கி கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் 218 கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் 364 கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேர கோவனார் 365 கீ கீரங்கீரனார் 78 கீரத்தனார் 42 கு குடவாயிற் கீரத்தனார் 27, 212, 379 குண்டுகட் பாலியாதனார் 220 குதிரைத் தறியனார் 296 குளம்பனார் 288 குறமகள் குறியெயினி 357 குன்றியனார் 117, 239 கண்ணத்தனார் 332 கூ கூடலூர்ப் பல்கண்ணனார் 200, 380 கூற்றங் குமரனார் 244 கொ கொள்ளம் பக்கனார் 147 கொற்றங் கொற்றனார் 259 கொற்றனார் 30 கோ கோட்டம்பலவனார் 95 கோக்குளமுற்றனார் 96 கோட்டியூர் நல்லந்தையார் 211 கோண்மா நெடுங்கோட்டனார் 40 கோவூர் கிழார் 393 கோளியூர்கிழார் மகனார் செழியனார் 383 ச சல்லியங்குமரனார் 141 சா சாத்தந்தையார் 26 சி சிறுமோலிகனார் 61 சிறைக்குடி ஆந்தையார் 16 சீ சீத்தலைச் சாத்தனார் 36, 127, 139 செ செங்கண்ணனார் 122 செம்பியனார் 102 சே சேகம்பூதனார் 69 சேந்தங்கண்ணனார் 54 சேந்தன்பூதனார் 261 த தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் 386 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 313 தனிமகனார் 153 தா தாயங்கண்ணனார் 219 து தும்பிசேர் கீரனார் 277 துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் 286 தூ தூங்கலோரியார் 60 தே தேய்புரிப் பழங்கயிற்றினார் 284 தேவனார் 227 தொ தொண்டைமான் இளந்திரையன் 106 தொல் கபிலர் 114, 276, 328, 399 ந நக்கண்ணயார் 19, 87 நக்கீரர், நக்கீரனார் 31, 86, 197, 258, 340, 358, 367 நப்பாலத்தனார் 240 நம்பிகுட்டுவன், நம்பிகுட்டுவனார் 145, 236, 345 நல்லந்துவனார் 88 நல்லாவூர் கிழார் 154 நல்லூர்ச் சிறுமேதாவியார் 282 நல்விளக்கனார் 85 நல்வெள்ளியார் 7, 47 நல்வேட்டனார் 53, 292 நற்சேந்தனார் 128 நற்றங் கொற்றனார் 136 நற்றமனார் 133 நி நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் 382 நெ நெய்தல் தத்தனார் 49, 130 நொ நொச்சிநியமங் கிழார் 17, 208, 209 ப பரணர் 6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356, பராயனார் 155 பா பாண்டியன் மாறன் வழுதி 301 பாரதம் பாடிய பெருந்தேவனார் (கடவுள் வாழ்த்துப் பாடல்) பாலத்தனார் 52 பாலை பாடிய பெருங்கடுங்கோ 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391 பி பிசிர் ஆந்தையார் 91 பிரமசாரி 34 பிரான் சாத்தனார் 68 பு புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் 294 பூ பூதங்கண்ணனார் 140 பூதன் தேவனார் 80 பூதனார் 29 பெ பெருங்கண்ணனார் 137 பெருங்குன்றூர் கிழார் 5, 112, 119, 347 பெருங்கௌசிகனார் 44, 139 பெருந்தலைச் சாத்தனார் 262 பெருந்தேவனார் 83 பெரும்பதுமனார் 2 பெருவழுதி 55, 56 பே பேராலவாயர் 51 பேரிசாத்தனார் 25, 37, 67, 104, 199 பொ பொதும்பில் கிழார் 57 பொதும்பில் கிழார் மகன் வெண் கண்ணியார் 375, 387 பொய்கையார் 18 போ போதனார் 110 ம மடல் பாடிய மாதங்கீரனார் 377 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 297, 321 மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார் 344 மதுரை ஆருலவிய நாட்டு ஆலம் பேரி சாத்தனார் 303, 338 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 273 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 366 மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 250, 369 மதுரைக் காருலவியங் கூத்தனார் 325 மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் 285 மதுரைச் சுள்ளம்போதனார் 215 மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 352 மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் 322 மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் 317 மதுரைப் பெருமருதனார் 241 மதுரைப் பெருமருதிளநாகனார் 251 மதுரைப் பேராலவாயர் 361 மதுரைப் மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 329 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 388 மதுரை மருதன் இளநாகனார் 194, 216, 283, 290, 302, 326, 341, 362, 392 மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் 289 மருதம் பாடிய இளங்கடுங்கோ 50 மருதன் இளநாகனார் 21, 39, 103 மலையனார் 93 மள்ளனார் 204 மா மாங்குடி கிழார் 120 மாமூலனார் 14, 75 மாறன்வழுதி 97 மாறோக்கத்து நப்பசலையார் 304 மி மிளைகிழான் நல்வேட்டனார் 210, 349 மீ மீளிப் பெரும்பதுமனார் 109 மு முக்கல் ஆசான் நல்வெள்ளையார் 272 முடத்திருமாறன் முத்திருமாறனார் 105, 228 முதுகூற்றனார் 28, 58 முதுவெங்கண்ணனார் 232 முப்பேர் நாகனார் 314 மூ மூலங்கீரனார் 73 மோ மோசி கண்ணத்தனார் 124 மோசி கீரனார் 342 வ வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 299, 323, 378 வண்ணக்கன் சோருமருங் குமரனார் 257 வண்ணப்புறக் கந்தரத்தனார் 71 வன்பரணர் 374 வி விழிக்கட் பேதைப் பெருங் கண்ணனார் 242 விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் 298 வினைத்தொழிற் சோகீரனார் 319 வெ வெள்ளியந் தின்னனார் 101 வெள்ளிவீதியார் 70, 335, 348 வெள்ளிக்குடி நாகனார் 158, 196 வெறிபாடிய காமக்கண்ணியார் 268 பாடினோர் பெயர் காணாப் பாடல்கள் 8, 10, 22, 24, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160-186, 188-190, 192, 193, 195, 207, 229, 235, 271, 355, 385, 396 முற்றும் மறைந்து போன பாடல் 234 பாடப்பட்டோர் அஞ்சி (நெடுமான்) 381 அண்டிரன் 237 அருமன் 367 அழிசி 87, 190 அன்னி 180 ஆஅய் 167 இரு பெரு வேந்தர் (அன்னி, பெரியன்) 80 உதியன் 113 ஓரி 6, 52, 265, 320 காரி 320 கிள்ளி 141, 390 குட்டுவன் 14,105, 395 கொங்கர் 10 கொல்லிப்பாவை 185, 192, 201 செம்பியன் 14 செழியன் 39, 298, 340, 387 சென்னி 265 சேந்தன் 190 சோழர் 10, 87, 281, 379, 400 தழும்பன் 300 திகிரியோன் (கடவுள் வாழ்த்து) தித்தன் (வீரை வேண்மான் வெளியன்) 58 திருமாவுண்ணி 216 நன்னன் 270, 391 நெடுமான் அஞ்சி 381 பசும்பூட் சோழர் 227 பசும்பூண் வழுதி 358 பசும்பூண் வேந்தர் 349 பழையன் (போஒர்கிழவோன்) 10 புல்லி 14 பூழியர் 192 பெரியன் 131, 180 பொறையன் 8, 18, 185, 346 போஒர் கிழவோன் பழையன் 10 மலையன் 77, 100, 170 மழவர் 52 மாயோன் 32 மிஞிலி 265 முடியன் 390 முள்ளூர் மன்னன் 291 மூவன் 18 வடுகர் 212 வழுதி 150 வாணன் 340 வாலியோன் 32 விராஅன் 350 வீரை வேண்மான் வெயின் தித்தன் 58 வேளிர் 280 1. கிளிவிளியன்ன - பா 2. பலபா ராட்டின் - பா. பலபா ராட்டி - பா 3. யாய்மறல் பறியா - பா, யாமறப் பறியாள் பா. 4 சேட்படுத்துப் பிரிவின்கண் அன்பின் இயற்கையின் தருவதோர் ஆற்றாமை யினான் என்று தோழி தன்னுள்ளே சொல்லியது - பா. 1. குறுந் 3 2. நற் 252 1. அகம் 242 1. காடுகவின் பூத்த வாயி னன்றும் - பா 2. தேரலர்: தாரலர் - பா 3. கவிழ் மண் இடுநீறு - பா 4. பழங்காண் - பா 5. மறைக்கும் - பா. 1. நற். 296 1. A.R. No. 137 of 1919 1. தொன்றுறை கடவுள் -பா 2. பழன - பா 3. உயவுக்குரல் - பா 4. போக்கிக் - பா 1. தொல் சொல் 368 2. தொல். பொ. 111 1. S.I.I. Vol. VIII No. 445 - 59 1. புணரப் - பா 2. அசுணங் கொள்கை பேரல நன்றும் - பா 3. விறலவன் மார்பே - பா 1. தொல் பொ. 147 1. தோன்றத் - பா 2. தமியே கண்ட தண் டலையுந் தெறுவர - பா. தமியேன் கண்டகன் றலையும் - பா, 3. தவிர்ந்த -பா. 4. வென்வெல் விடலை - பா. 1. யிலைய - பா. 1. நற் 115 2. அகம் 275 1. தொல். பொ. 36 1. S.I.I. Vol. v. No. 881. 1. கையன் - பா 2. கொடுங்குரல் - பா 3. பெயல்பொறை - பா. 4. தெறுவர - பா 5. காண வைகல் - பா 6. வியன்களம் கடுப்பத் தெறுவரப் பைத லொருநிலை காண வைகல் யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் செறிதோட் டெல்வளை -என்ற பகுதி சில ஏடுகளில் இல்லை. 1. அகம். 32 1. அகம் 38 2. புறம் 28 3. ஐங் 196 1. பெயர்பட விலங்கிய - பா. 2. கடலாடு வியலணி - பா 3 பொலிந்த நறுந்தழை - பா 1. நிறைபட வாங்கிய - பா நிற்பட வாங்கிய - பா. 2. காணா - பா; காணாதவன் - பா 3. காண்க நாம் - பா. 4. வல்லரும் படரே - பா. வல்லரும் படர - பா. 1. தொல். சொல் 362 2. சிலப் கடலாடு 76 - 108. 3. தொல். பொ. 120 1. சீவக. 1632. 1. தொல். பொ. 112 2. மேற்படி மேற்படி 114 1. செலவிரைவுற்ற - பா. 2. பனிவரவாளிழை - பா 3. நெடிது நினைந்து - பா 4. பசுமட்செய்கை நீர்படு நன்கலம் - பா 1. புணர்ந்து வந்தன்றே - பா. 1. கலி 3 1. குறள். 660 1. கலாவும் - பா 2. விழுமமாக வறியுந ரின்றெனக் - பா 3. ஞெகிழ்ந்த தோளும் - பா 4. நின்றிறனும் நோக்கி - பா 5. யாஞ்செய்வ தன்றிவன் துயரென - பா 6. அழாஅல் வாழி - பா. 1. முருகு. 143 - 3. 1. தொல். பொ. 113. 1. Eugenics & Sex Relationship by Dr. M.H. Frank. P.71. 1. பொதிந்த - பா 2. மறங்கெழு பெண்டே - பா 3. உடம்பட் டோரார் தாய ரொழிபுடன் - பா 4. வல்லே - பா. 1. அகம் 186 1. மேற்படி 178 2. குறுந் 398. 3. அகம் 325 4. மேற்படி 385. 1. தொல் பொ 156 1. விடுமா னுழையினும் வெறுப்பத் தோன்றி - பா 2. றாதார்ந்து - பா 3. ழுதவவர் - பா. 1. குறள். 541. 2. தொல் பொ. 163 1. குறுந் 73. 2. பைதல் வெண்குருகு - பா. 1. அமர்ந்தனள் உழைய மாகவும் - பா. 2. திங்களும் பனிப்போள் - பா 1. A.r. No. 564 of 1922 2. A.R. No. 546 of 1922. 1. கண்ணியன் - பா. கண்ணழி - பா 2. மீன்குவம் போலத் தோன்றும் - பா. 1. முருகு 17. 1. இந்த அடி தேவர் ஏட்டிலும் புதுப்பட்டி ஏட்டிலும் இல்லை. அச்சுப் படியிலும் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலும் காணப்படுகிறது. 2. கழிய வாக - பா 3. மொழியல வன்மையிற் - பா. 1. நற் 97 1. முருகு 213 2. குறள் 664 3. அகம் 47. 1. ஐங் 14 2. அகம் 23. 1. தொல் பொ 41. 1. வைத்தென - வாய்ததென - பா 2. யெம்வயின் - பா 3. விழுமம் - பா 4. மலர்தீர்ந் தனையர் - பா. 1. தொல் சொல் 58 1. குறள் 1068. 2. தொல் சொல் 21. 1. தொல் பொ 151. 1. நந்நசை - பா தந்நசை - பா. 1. தலைநீங்கிய - பா 2. யுண்ணும் - பா 3. அறிகுவ தாயின் - பா 1. நினைக்கலும் - பா 2. பனைத்தா ளோமை - பா. 1. பிறிதோ ரறியிடை யிட்ட - பா 2. பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் தோழிக்கு “நினைக்கலும் நினைத்திரோ வைய புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே என்பது சொல்லாமோ” எனச் சொல்லியது - பா. 1. தொல் பொ. 39 1. குராஅ லேறி - பா. குராலோ டேறி - பா 2. கால்பெயரு மாங்கண் - பா. 3. உன்னி - பா. 4. துஞ்கிலன் - பா துஞ்சின் - பா. 1. குறள் 1144 2. மதுரை 170 3. புறம் 280. 1. அகம் 98. 1. தொல் பொ 103. 1. முழந்தன்று - பா 2. என்றி யாயின் - பா 3. தெருவிற் - பா 1. மறைத்தே - பா. 1. புறம் 248 2. க்ஷ 341 1. புறம் 125 1. அகம் 209 2. தொல் சொல் 358. 1. சாரற் புறத்து சார்ப்புறத்து - பா 1. சென்றிக - பா 2. பயிற்ற - பா 1. அகம் 134 2. அகம் 114 3. மேற்படி 304. 1. யாங்கணும் - பா 2. உடற்பசி - பா 3. தன்கமழ் - பா 4. பெறாஅன் - பா 5. சிதறியர் - பா. 1. அகம் 10. 1. நயந்தோள் - பா 2. காடுபின்னிறைதர : காடுபின் னொழிதர - பா 3. ஆடுபந்து - பா. 4. தலைமகன் பாங்கற்குச் சொல்லியது எனக் காணப்படும் துறைக் குறிப்புச் சில ஏடுகளில் இல்லை. 1. தோடு புனைந்தெடுத்த - பா. 2. மொழிய - பா 3. புதுநலம் புலம்ப - பா. 4. வீங்குநீர் - பா 1. பெரும்பாண். 99. 1. நினக்கு முரைத்தல் - பா 2. பீரத்தின் உழுறுபூ - பா. 3. பன்னாள் - பா 1. புறம் 158 2. கலி. 53 3. ஐங் 452. 1. யல்ல வாயினும் - பா 2. துண்டன - பா. 3. மாகலு முரித்தே - பா 1. குறள் 791 2. க்ஷ 230 1. தொல் பொ 147. 2. பொருந 132 1. தேவாரம் 295 : 5 1. மதுரை. 584 2. கலி 39. 1. நாவினர் - பா 2. பேணாது - பா 3. னடுபிணன் - பா 4. புனிறுநிரை - பா 5. கதித்த - பா 6. திட்ட - பா 1. பெரும்பாண். 39-41 2. நற் 2 1. அகம் 69. 1. இருள்படு மருதின் - பா 2. தந்தனை யாயினும் - பா எம்மனை வதுவை யயரினும் - பா. 3. பிரிதே - பா 1. அகம் 316 1. புறம் 243 2. அகம் 46 3. குறன் 409. 1. ஒப்பி - பா 2. மடநோக் காயமொ டுடனுப் பேறி - பா 3. தமர்தம் மறியாச் சேரியு - பா. 4. தமர்தம் மறியாச் செம்மலு முடைத்தே - பா. 1. நாளுடன் கலவவும் தோளே - பா 2. வழீஇயநின் தொடியென - பா. 3. விருங்கோள் - பா. 1. பரிக்கும் - பா 2. செறிவே - பா. இப்பாட்டின் இடையில் உள்ள சில அடிகள் சில ஏடுகளில் இல்லை. 1. குலுந் 178 2. குறள் 1062. 1. லுழந்து - பா லுலந்து - பா. 2. உரனழிந்து - பா 3. உண்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி - பா 4. பெறுகுநர் - பா. 1. அகம் : 155 1. கலி 11 . 1. அகம் 278 1. மேற்படி 18. 1. இளநீர்ப் - பா இமிழ்நீர் - பா 2. குடவயிற் - பா. 1. என்புறம் - பா 2. கவர்ந்துழந்த - பா 3. யாமுய் யாமை - பா 4. மீதூர்ந்த - பா. 1. அகம் 335. 1. யொல்கிக் - பா. 1. தொல் பொ. மரபு : 50. 1. அறிந்சி னோரே - பா, 2. குருமயிர் - பா 3. தனர்நறும் கற்துப்பி பையென முழங்கும் - பா. 4. பெரும்பயம் வழங்கும் - பா 5. மரபின் - பா 1. புறம். 269 2. அகம் 191 3. மேற்படி 257 4. மேற்படி 261 5. மேற்படி 145. 1. யீங்கென் - பா; மால்கொள - பா 2. தருத்து - பா 1. அகம் 80. 1. தோயாக் காதலர் - பா 2 . ஆவ தென்சொல் இதுவென்று - பா 3. புலவா நெஞ்சமொடு - பா 1. பெறீஇ - பா 2. மின்னே ரோதி - பா. 3. வேலித் - பா 4. மகளைநின்பா - பா. 1. நற். 337 2. மேற்படி 398. 1. படைமாண் பெருங்குளம் - பா. 2. அன்னலள் கழனி - பா 3. புரளும் - பா. 1. மிலனே - பா. 2. கோனே ரெல்வளை - பா. 1. அகம் 126 2. மேற்படி 117 3. மேற்படி 204 4. மேற்படி 269 1. குறள் 1302. 2. தொல் பொ 145 3. மேற்படி மேற்படி 147. 1. வங்கவரி - பா 2. வட்டுநா வடிக்கும் - பா 3. இப்பாட்டின் 3, 4 ஆம் அடிகளின் ஈற்றுச்சீர் அச்சுப்படியில் மாறியுள்ளன. 4. சிலகிளையா - பா 1. சொல் 386 2. நற் 193. 1. பதிற் 70 2. தொல் பொ. 41 1. மதிலென மதித்து - பா 2. சேரிற் சேரா - பா 1. கோட்டியும் - பா 2. எல்வளை யசத்த கானல் - பா 3. படுங்கொல் - பா 4. தொல் பொ 152 நச்சினார்க்கினியர் உரை 1. அகம் 395 1. அடையாதிருந்த - பா 2. தொகுவிரற் காக்கை - பா 3. சினைவயிற் - பா 1. நத்துறந்து அரும்பொருள் கூட்டம் வேண்டி என்ற அடிப்பகுதிகள் தேவர் ஏட்டில் இல்லை 1. கலித் 61 2. குறள் 1224 3. மேற்படி 1228 1. செல்வன் செல்லுங்கொல் தானே - பா. 2. இன்பல் யரணர் - பா. 1. குறுந் 335 1. மேற்படி 380 2. மேற்படி 198 1. யுடம்பட வீழ்ந்தெழ - பா. 2. பெரியோர் கேண்மை - பா 3. செம்மை பொருத்தி - பா 4. தீதினெஞ்சம் கையறுபு வாடி - பா 1. அகம் 301 2. குறள் 1. தொல்தொல் பொ 239. 1. தொல். பொ. 114 1. போலா வேன்றும் - பா. 2. வலிதாகிய - பா 3. வனிதை - பா. 1. நெடுமொழி - பா 1. நாலடி. 164. 1. கனையிருட் கங்குலும் - பா. 2. னலமரு நெஞ்சே - பா அவலமுலு நெஞ்சே - பா. 1. நற் 400. 1. தூக்கியும் - பா 2. முனியாநம்மை யோரான் என்னுங் கொல் - பா 3. பெரும்புண் ணுறுநர்க்கு - பா. 1. தொல். பொ 79 1. தொல் மேற்படி 102. 1. பழ 66 2. தொல்கவின் - பா. 3. தொலையச் - பா 4. தடைஇய - பா 5. மதுகையங் குவவுமுலை - பா 1. கலங்கொழீஇ யற்றுமன்; - புதுப்பட்டி ஏடு. கலங்கழீஇயற்றும்மன் - கலந்தழீ இயற்றுமன் - பா. 2. வாழியகவைஇ நின்றோனே - பா. ஆசிலகலம் தழீஇயற்று என்று திருத்திக் கொள்வாரு முளர் 1. புறம் 348 2. அகம் 204 3. தொல் சொல். 357 1. அகம் 196. 1. குவட்டிடை - பா 1. அகம் 48 1. அகம் 7 1. சிலையார் வல்வில் - பா 2. வெம்பரல் அருஞ்சுரம் - பா 3. அளிய வாயின - பா 1. அகம். 69. 2. நற். 84. 3. அகம். 54 1. கணங் கொள - பா 2. கல்கெழு குறவர் - பா. 3. பெருங்களியானை - பா. 1. அகம். 91. 1. கானல் - பா 2. வீழ்கா ஓலை - பா 3. வார்மணல் - பா 1. கொதித்த - பா. 2. களவை யாசின்ற றைய - பா. 1. ஞானசம். 43-7. 1. நோட்டுயில் - பா 1. குறள். 580. 1. குறள். 572. 2. பதிற். 22 1. மேவலாரும் - யா 2. செவ்வர - பா. 3. யுழையவாகவும்; யுழையளாகலும் - பா 1. புறம் 39. 1. யவன்குறிப்பு - பா 2. கெடலறியாதே - பா 3. யகவுஞ் சொலை - பா 4. வேறுபட்டாள் - பா. 1. இன்னே மாக - பா 2. தெளிந்தன ராயினும் - பா 1. கணங்கெழு கடவுட்ரு - பா 2. மருங்கை யன்ன வரும்பெறல் - பா 3. ஆற்றாளாயினாள் - பா 1. நற். 31 2. மேற்படி 21 3. அகம் 338 1. மேற்படி 253 2. குறுந் 393 3. அகம் 231 4. மேற்படி 227 1. யாயஞ் சுவமே - பா 2. கேடு நீயுமஞ்சுதியே - பா 3. யவன்மலைப் - பா. 1. களத்திற் பாவை - பா 2. கசிந்தளர் - பா. 3. கையிடைல் கவனம் - பா. கையிடை வைத்த - 4. கவளம் போல - பா 5. உவப்பன் - பா. 6. கூடுமால், கூடும் - பா. 1. பெரிது கமழலரி - பரி 2. கலிமாப் - பா 3. சிறந்திசைப்ப - பா 4. நின்ற - பா. 1. சிலப் 16:72-3 1. தகன்புறம் பரந்த - பா அன்புறப் பரந்த - பா. 2. மொழிந்த - பா. 1. துறைமணற் கொண்டு - பா 2. தோழி - பா 3. ஞெமிர்ந்தெனவே - பா 1. A.R. No. 134 of 1925 1. நீர்பொழிந்து - பா 2. பனியின் வாடை - பா 3. முனிவுவந் திறுப்ப - பா. 4. லூர்நளி யியம்ப - பா 5. மன்றுதோ றியம்ப - பா 6. துனை தருமாலை - பா 7. பிரிவிடை - பா 8. தூதுவிடுவது பயன் என்ற தொடர் ஒன்று தமிழ்ச் சங்க ஏட்டில் உளது. 1. தொல் பொ 218 2. வாய்விட்டு - பா 3. யவரூர் வினவிச் - பா 4. சென்றுமோ - பா 5. இதுகேட்ட தலைமகன் வரைவது பயன் என்றொரு தொடர் புதுப்பட்டி ஏட்டில் உளது. 1. தொல். பொ. 203 1. குறுங்காலலரி - பா 2. முதுக்குறை குரீஇ - பா. 1. பேரிற் - பா 2. குழுவின விருக்கும் - பா; குழீஇயன விறுக்கும் - பா 3. இவ்வடி அச்சுப் பிரதியில் இல்லை 4. பல்லிருங் கதுப்பிற் - பா 1. குடிவந்தனர் - பா 1. குறுந் 293 1. இனிது முண்டோ - பா 2. கார்முதிர் பிரிந்த - பா 3. வெளிகமழ்பு நறிய - பா. 1. யவிழும் - பா 2. அறியேன் - பா 3. வானினிழி தரும் - பா 4. கரையிறந் திழிதரும் - பா 5. சிறையடு கடும்புனல் - பா 6. நிறையடுங் காமம் - பா 1. குறள். 71 1. விளங்குநகர் - பா 2. மெல்லஞ்சி லோதி - பா 3. யுன்னினெ னுறையு மெற்கண்டு மெல்ல - அச்சுப் பிரதியிற் காணப்படும் பாட வேறுபாடு 1. அச்சுப் பிரதியில் இது, “ஊடல்தீட ஆற்றானாய் நின்றான் பாணற்குச் சொல்லியது” என்றும், “முன்னிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியதுஉமாம்” என்றும் இரண்டு பட்டுக் கிடக்கிறது. 1. புறம் 296. 1. பொய்யா வானம் - பா 2. தழங்குரல் - பா “பெய்யா வானம் நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ வேங்கி அழல்தொடங்கினளே ஆயிழை அதனெதிர் குழல் தொடங்கினரே” என்ற இவ்வடிகள் மதுரை தமிழ்ச்சங்க ஏட்டில் இல்லை. 1. தொல். எழுத்து 231 1. டன்ன வெண்மணற் றகவயின் வேட்ட - பா 2. டமர்ந்தினிது நோக்கி - பா 1. டுலைந்தாங்கு நோத லஞ்சி - பா டுலைந்தாங் குகுதலஞ்சினை - பா 2. திருங்கழி துழவும் - பா இப்பாட்டிடையே ‘’டமர்ந்தன ணோக்கி’ யென்பது முதல் ‘மனையிருந்’ என்பது வரை மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் இல்லை. 1. படுசுளை யுரீஇ - பா 2. துர்ப்பத் - பா. 3. கனிவாய் வேங்கை - பா. 4. மேளிப் - பா, 5. கடியப் - பா. 1. “சங்ககாலப் பரணர்கள்” - செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23 பக்கம் 481 1. களரிக் கள்ளியிற் - பா 2. காய்செவி - பா 1. முற்றையு முடைய மல்லமோ பிற்றை - பா. 2. வீழ்மா மணி - பா. 3. யாகநனைப்ப - பா 4. விருப்பின ளருத்தும் - பா. 1. குறள் 81. 1. அன்பிலை யாதலிற் றன்புல நயந்த - பா. 2. பெயர்ந்தென - பா 3. யெறிவன - பா 4. வெரூஉம்; வெழுஉம் - பா 5. முறைவினூர்க்கே - பா 6. தலைமகளது - பா. 1. நன்னெறி 18 2. புறம் 1440 1. செற்றமை வில்லன் - பா 2. அறிந்தனரில்லிரோ - பா 3. இத்துறை அச்சுப் பிரதியில் இல்லை. இதன்பிற் கூறே துறையாகக் குறிக்கப்படுகிறது 1. நற் 206 1. அகம் 328. 1. யரிதுற் - பா 2. தகனிலாப் போல - பா 3. கழறு மெலிக்கும் - பா 1. குறுந் 17. 2. அகம் 10. 1. குறுந் 129 1. சிறைஇ - பா 2. தொட்ட - பா 3. பாடிமிழ் பனிநீர் - பா. பாடான் றிமிழ்நீர்ப் பனிக்கடற் சேர்ப்பனொடு - பா 1. பதிற். 2 1. குறள் 791. 1. மன்றிற் போகாது - பா 2. வழுத கண்ணே - பா 1. மலர்ந்தப் - பா 2. றலைத்தனவானா - பா. 3. பொதியிலின் - பா 1. அகல் 106 2. நற் 216 3. தொல் எழுத்து 132 1. மாசுபட்டின்றே - பா 2. பனிற்றப் - பா 3. நாறுவமே - பா 1. யாயினும் - பா 2. “கொண்டுசெல்பாண” என்பது தொடங்கி. “வேட்டதில் வழியே” என்பது இறுதியாக உள்ள அடிகட்கு வேறாக, “புரையோ ரன்ன புரையு நட்பின், இளையோர் கூஉம்புகை மருள வோராங்கட், டாங்காது விட்டா கிசைத்து” என்ற அடிகள் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் உள்ளன. இவற்றின் பொருளும் விளங்கவில்லை; தொடர்பும் புலனாகவில்லை. 3. பாடுமனைப்பாடல் - பா 4. நீடுநிலை - பா 5. முனிகுவ - பா. 1. குறன் 214. 1. தொல் பொ. 1. குழந்தலன் புண்மை சான்மெனின் - பா சான்மென - பா 2. திழிதரும் - பா 3. மோடிச் சேண்விளங்கத் - பா 4. யிரீஇ - பா. 1. மதுரை - 425 2. அகம் - 327 3. குறள் - 767. 1. பொருந்த - பா. 2. கடல் மீனருந்து - பா கடலே மீனகுந்து - பா. 1. வயப்புனிற் றிரும்பிணப் - பா 2. உருமிசை யுரறும் - பா 3. போல - பா. 4. றிரிக்கும் - பா. 1. வண்புறப் - பா. 2. குடம்பையீன் - பா. 3. டதசிடை - பா. 4. படாஅ - பா. 1. பதிற் - 19. 2. குறள் - 1102. 1. பார்த்தோடு - பா 2. கொடுங்கழை - பா 3. றவியை - பா 4. புதுப்பட்டி ஏட்டில் “எழுதெழில் மழைக்கண்” என்பதன் இறுதியில் “எஞ்சிய அடிகள் இறந்தன” என்ற குறிப்புக் காணப்படுகிறது. 1. தருகுவன் - பா 2. வியந்தேன் - பா 1. பொதும்பில் கிழார் நக்கனார் எனப்து மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டில் கண்டது. 2. நீண்ட தோளும் - பா 1. செருவரைந்து - பா. 1. அகம் 42 2. முல்லை 42. 1. கடுநடை - பா 2. நெடுநாள் - பா 3. தகல்வறியேனே; தகல்வறியானே - பா 1. A.R. 419 of 1921. 2. A.R. 119 of 1908 3 . A.R. 122 of 1908 1. யம்புலி - பா 2. வருவியும் - பா 3. தேம்படு நெடுவரை - பா 4. அமர்ந்து - பா 5. பட்டென - பா 6. சேவலொடு - பா 7. சிலம்பிறிபோகிய - பா 8. பூழி - பா. 9. மமைந்த நம் தொடர்பே - பா 1. அகம் 48 2. பரி 9; 12 - 4. 1. வெண்ணி சூழ்ந்த - பா. வெண்ணில் வாயில் - பா. 1. ஐங் 63 1. A.R. No. 403 of 1938. 2. A.R. No. 388 of 1938. 3. A.R. No. 401 of 1938 4. A.R. No. 409 of 1938. 1. ஐங்குறு 17 2. குறள் 1330 1. நன்ன ணாஅய் நாட் - பா . 1. அகம் 15 1. அகம் 152. 2. அகம் 173. 3. இதுபற்றிய வரலாற்றினை இவ்வுரைகாரர் எழுதிய சோமன்னர் வரலாறு என்ற நூலிற் பரக்கக் காணலாம். 1. கடுஞ்சுறாவெறிந்த கொடுங்கோன் தந்தை - பா 2. துணையரின் முயன்ற - பா 3. பாடபெற்துவக்கும் - பா 4. யுழைகட்சீறுர் - பா 5. நன்மனை - பா. 1. நிலைகிளர் மின்னின் - பா; மலைகிளர் மின்னின் - பா 1. இனிய தெவிர்ப்ப - பா 2. வன்பால் முரம்பின - பா 3. சாந்தின் - பா 1. புறம் 11 1. இவ்வடி அச்சுப் பிரதியில் மாறிக் கிடக்கிறது. 2. மயக்கத்து -பா 3. யார்ந்த - பா 1. தொல். சொல் 400 2. குறள் 34 1. வேங்கை தந்த வெற்பணி நன்னாள் - பா 2. நாடன் - பா 3. ஏமமென்றருளாய் - பா 4. முத்தூற்று மூதெயினன் - பா. 1. சென்றென - பா 2. பேரும் - பா 3. கழார்க்கீரனெயிற்றியார். 1. புறம் 27. 2. திருநாவு. தேவா 3. திருஞான. தேவா. 1. குறள் 230 2. குறுந் 49. 1. மூரெய்தினரே - பா 2. யாமுன் - பா 3. யென்றனமதனெதிர் - பா. 4. மெல்லியல் - பா 5. நனைப்ப - பா 6. மழைக்கண் - பா 7. முன்னுறவுணர்ந்து பகற்குறி - பா. 1. பாழியஞ்சிலம்பிற் - பா 2. கொண்ட - பா. 3. பெருமையு டைவன் என்பது - பா 4. தகுமே. தருமோ - பா 1. குறுந் 1 1. பதிற் 66