உரைவேந்தர் தமிழ்த்தொகை 16 நற்றிணை - 3 (201- 300) உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 004. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 16 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 440 = 448 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 280/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரை வேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் உள்ளடக்கம் பதிப்புரை iii நூலடக்கம் முன்னுரை 1 201. பரணர் 5 202. பாலை பாடிய பெருங்கடுங்கோ 9 203. உலோச்சனார் 14 204. அம்மள்ளனார் 17 205. இளநாகனார் 22 206. ஐயூர் முடவனார் 26 207. ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் 31 208. நொச்சி நியமங் கிழார் 36 209. கச்சிப்பேட்டு நன்னாகையார் 40 210. மிளை கிழான் நல்வேட்டனார் 44 211. கோட்டியூர் நல்லந்தையார் 49 212. குடவாயிற் கீரத்தனார் 53 213. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 57 214. கருவூர்க் கோசிகனார் 61 215. மதுரைச் சுள்ளிப் போதனார் 68 216. மதுரை மருதன் இள நாகனார் 73 217. கபிலர் 77 218. கிடங்கிற் காவிதி கீரங்கண்ணனார் 81 219. தாயங் கண்ணனார் 85 220. குன்றின்கட் பாலி ஆதனார் 90 221. இடைக்காடனார் 95 222. கபிலர் 98 223. உலோச்சனார் 102 224. பாலை பாடிய பெருங்கடுங்கோ 106 225. கபிலர் 110 226. கணியன் பூங்குன்றனார் 114 227. பூதன் தேவனார் 120 228. முட்டத் திருமாறனார் 125 229. இளங் கண்ணனார் 130 230. ஆலங்குடி வங்கனார் 135 231. இளநாகனார் 140 232. முதுவெண் கண்ணனார் 144 233. அஞ்சில் ஆந்தையார் 148 234. ........................................... 152 235. வெள்ளிவீதியார் 152 236. நம்பி குட்டுவனார் 156 237. காரிக்கண்ணனார் 161 238. கருவூர்க் கந்தரத்தனார் 167 239. குன்றியனார் 172 240. நப்பாலத்தனார் 176 241. மதுரைப் பெருமருதனார் 182 242. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் 187 243. காமக்காணி நப்பசலையார் 190 244. கூற்றங் குமரனார் 196 245. அள்ளங் கீரனார் 200 246. காப்பியஞ்சேந்தனார் 205 247. பரணர் 210 248. காப்பன் கீரனார் 214 249. உலோச்சனார் 218 250. மதுரை மேலைக்கடையத்தார் நல் வெள்ளையார் 223 251. மதுரைப் பெருமருதன் இளநாகனார். 227 252. அம்மெய்யன் நாகனார் 233 253. கபிலர் 238 254. உலோச்சனார் 243 255. ஆலம்பேரி சாத்தனார் 248 256. பாலை பாடிய பெருங் கடுங்கோ 253 257. வண்ணக்கன் சேரிக் குமரங்குமரனார் 258 258. நக்கீரர் 263 259. கொற்றங் கொற்றனார். 267 260. பரணர் 271 261. சேந்தம் பூதனார் 275 262. பெருந்தலைச் சாத்தனார் 279 263. இளவெயினனார் 284 264. ஆவூர்க் காவிதி மாதேவனார் 288 265. பரணர் 293 266. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 298 267. கபிலர் 303 268. வெறிபாடிய காமக் காணியார் 307 269. எயினந்தை மகனார் இளங்கீரனார் 310 270. பரணர் 315 271. கயமனார் 319 272. முக்கில் ஆசான் நல்வெள்ளையார் 325 273. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார் 329 274. காவன் முல்லைப் பூதனார் 333 275. அம்மூவனார் 338 276. தொல் கபிலர் 342 277. தும்பைச் சொகினனார் 346 278. உலோச்சனார் 351 279. கயமனார் 354 280. பரணர் 358 281. கழார்க் கீரன் எயிற்றியார் 361 282. நன்பாலூர்ச் சிறு மேதாவியார் 366 283. மதுரை மருதன் இளநாகனார் 370 284. தேய்புரிப் பழங் கயிற்றினார் 373 285. மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் 378 286. துறைக்குடி மாவிற் பாலங்கொற்றனார் 381 287. உலோச்சனார் 385 288. குளம்பனார் 389 289. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தங் குமரனார் 393 290. மதுரை மருதன் இளநாகனார் 397 291. கபிலர் 401 292. நல்வேட்டனார் 404 293. கயமனார் 408 294. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் 412 295. ஒளவையார் 414 296. குதிரைத் துறையனார் 418 297. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 422 298. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் 427 299. வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 431 300. பரணர் 434  முன்னுரை சங்கத்தொகை நூல்களுள் எட்டுத் தொகையில் முதற்கண் எடுத்துக் காட்டப்படும் ஏற்றம் உடையது நற்றிணை. முதல் இரு நூறு பாட்டுக்கள் அடங்கிய முதற்றொகுதி சென்ற 1966-இல் வெளியாயிற்று. 201-400 அடங்கிய இரண்டாம் தொகுதி இப்பொழுது வெளிவருகிற தென்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். மேலும், இந்நற்றிணை முற்றும் விளக்கவுரையுடன் வெளியிடும் வகையில் எனது தமிழ்ப் புலமை வாழ்க்கையில் யான் மேற்கொண்ட குறிக்கோள் இனிது நிறைவேறுகிற தென்று மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன். சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறையுற்றிருந்தமை கண்டு, எங்ஙனமேனும் முயன்று நிறைவு செய்வது தமிழன்னைக்குச் செய்யத் தக்க பணி யென்ற கருத்தை உட்கொண்டதோடு, அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன். அந்நாளில் கரந்தைக் கவியரசு. ஆர்.வேங்கடாசலம்பிள்ளையவர்கள், சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராய் விளங்கிய டாக்டர் உ.வே.சாமிநாதையர் பால் என்னை விடுத்துத் தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச் சிலையார் உரை ஏட்டுச் சுவடியை வாங்கிவர விடுத்தார்கள்; டாக்டர். ஐயரவர்கள் என்பால் அவ்வேட்டைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, "நீங்களும் ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; உங்களிடம் உரிய தகுதியுளது" என்று பாராட்டினார்கள். அவர்களுடைய பாராட்டும் அன்பு மொழியும் எனது குறிக்கோளை வலியுறுத்தின. இவ்வாறு தமிழ்ப் புலமை வாழ்வை ஏற்ற காலத்தில், டாக்டர் ஐயரவர்களின் அரிய முயற்சியால், தமிழர் செய்த தவத்தின் நற்பயனாகப் புறநானூறு பழையவுரைவுடன் வெளி வந்திருந்தது. ஆயினும், அதன் பிற்பகுதிக்கு உரையில்லை; பல பாட்டுக்கள் சிதைவுற்றிருந்தன. அக்காலத்தில் தஞ்சை மாவட்டத்துப் பள்ளியூர்ப் புலவர் திரு.கிருட்டினசாமிச் சேனைநாட்டார் அவர்களிடமிருந்த புறநானூற்று ஏட்டின் துணை கொண்டும் அரசியலார் வெளியிட்டுள்ள கல்வெட்டுகள் செப்பேடுகள் ஆகியவற்றைக் கொண்டும் முறையே சிதைந்த பாட்டுக்களையும் பாடிய புலவர் பெருமக்களின் பெயர் வடிவங்களையும் செப்பம் செய்து உரையும் ஆராய்ச்சி விளக்கமும் எழுதி வெளியிட்டேன். சிலம்பும் மேகலையும் என்ற காப்பியம் இரண்டனுள் மணிமேகலையின் பிற்பகுதியில் காணப்படும் பௌத்த தத்துவக் கூறுகள் விளங்கவில்லை எனக் கைவிடப்பட்டிருந்தது. அப்போது திருமலை திருப்பதி திருவேங்கடத்தான் கல்லூரியில் யான் விரிவுரையாளனாகப் பணி புரிகையில் வடமொழிப் புலவர் களான திரு.பிரபாகர சாத்திரி, பாலி மொழிப் புலவர் திரு.ஐயாசாமி சாத்திரி ஆகிய இருவருடைய துணையும் ஆதரவும் பெற்றுப் பௌத்த நூல்களை ஆராய்ந்து விடுபட்டிருந்த அப்பகுதிக்கு விரிவான ஆராய்ச்சியும் விளக்கமும் எழுதினேன். அதனைக் கண்டு வியப்புற்ற நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய மணிமேகலையுரையில் அவர் விருப்பத்திற் கொப்பச் சேர்த்து வெளியிடப் பெற்றது. கற்றோர்க்கும் உணர்தற்கரிதாய்க் குறிப்புரையோடியிருந்த பதிற்றுப்பத்துக்கு விளக்கமான உரையில்லாமை ஒரு குறையாக இருந்தது. தமிழறிவின்கண் ஆர்வம் கொண்ட புலவர்களுக்கும் மாணவர்களுக்கும் அந்நிலை பெரிய இடர்ப்பாடு விளைத்தது. அதனால் அதற்கொரு விளக்கவுரையும், அதன்கண் காணப்படும் சேரமன்னர் வரலாறும் வேறு வேறாக எழுதித் தமிழன்னைக்கு இயன்ற பணியினைச் செய்தேன். இவற்றில் சேர மன்னர் வரலாறு ஒழிய ஏனையவற்றைத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். ஐங்குறுநூறு என்பது எட்டுத் தொகையுள் ஒன்று; இதன்கண் அடங்கிய ஐஞ்நூறு பாட்டுக்களுள் ஒரு சிலவற்றிற்குப் பழையோர் ஒருவர் எழுதிய குறிப்புரை உண்டு. எல்லாப் பாட்டிற்கும் விளக்கமான உரை வேண்டியிருந்தது. அதன் முதற்பகுதியான மருதம் என்ற பகுதியை யான் எழுதியவுரையுடன் இளமையில் என்பால் தமிழ் பயின்று இன்று தமிழக அரசு மன்றத் துணைத் தலைவராகச் சிறப்புறும் புலவர் கோவிந்தனார் வெளியிட்டார். பின்னர் அந்நூலுரை முழுவதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மூன்று பகுதிகளாக வெளியிட்டுளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறை விரிவுரையாளனாய்ப் பணிபுரிந்தகாலை, காலஞ்சென்ற பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளை அவர்கள் உதவியால் நற்றிணை ஏடு ஒன்று கிடைக்கப் பெற்றேன். அவ்வேட்டைத் தந்தபோது "இது மதுரைத் தமிழ்ச் சங்க ஏடு; இதனை நன்கு ஆராய்ந்து உரையுடன் வெளியிட வேண்டும்" என்று திரு.பிள்ளையவர்கள் பணித்தார்கள். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணிபுரிய வந்தபோது, கல்லூரி மாணவர் ஒருவராலும், கல்லூரி நிறுவிய கலைத் தந்தை கரு.முத்து தியாகராசனார் புதல்வர் திரு.சுந்தரம் செட்டியார் அவர்களின் ஆதரவாலும் ஏடுகள் கிடைக்கப்பெற்று ஆராய்ந்ததில் மூவாயிரத்துக்குக் குறையாத பாடவேறுபாடு காணப்பட்டமையின், அவற்றைச் செப்பம் செய்து விளக்கவுரை கண்டேன். தொகுதி யொன்றுக்கு இரு நூறு பாட்டாக இரு தொகுதிகளாக இப்போது நற்றிணை வெளி வருகிறது. இதற்கிடையில், சைவ சமய இலக்கியத் துறையில், "இரும்புக் கடலை" என்று முன்னோரால் சொல்லப்பட்டுக் கைவிடப் பட்டிருந்த ஞானாமிர்தம் என்ற தமிழ் நூலை ஏடுகள் பல கொண்டு ஆராய்ந்து அதன் பழையவுரைக்கு விளக்கக் குறிப்புத் தந்து ஒழுங்கு செய்தேன். அதன் அருமையை வியந்து அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தினர் வெளியிட்டனர். இந்த நற்றிணையை ஏடு தேடித் தொகுத்துச் சோர்வின்றி ஆராய்ந்து பொருளின்மை வாய்ப்பின்மை முதலிய இடையூறும் இடையீடும் தோன்றி வெளியிடும் பணி இடர்ப்படாதவாறு பொருளுதவி புரிந்த நன்மக்கள் பலர். அவருள், கலைத் தந்தை, கரு.முத்து.தியாகராசனார், அவருடைய துணைவியாரான செம்மொழிச் செல்வி திரு.இராதா, தியாகராசன் அம்மையார், பொள்ளாச்சி, வடலூர் வள்ளலையுள்ளக் கோயிலில் வைத்து வழிபடும் கொடைவள்ளல், நா.மகாலிங்கம் அவர்கள், திருச்சிராப் பள்ளி, திருக்குறள்வேள் G.வரதராசனார் அவரது இளவல் கனகசபைப்பிள்ளை, மதுரை விசாலாட்சி நூலாலை அதிபர், பணிமொழிச் செல்வர் லெ.நாராயணன் செட்டியார் அவர்களாவார். இந்நூல் வெளியீட்டில் பேரூக்கம் கொண்டு இனிய உதவி புரியும் செல்வர் தேவகோட்டை திரு.கி.கரு.ராம. கரு.சாமிநாதன் செட்டியார் சிறந்த சிவநெறியாளர். சென்னையில் உள்ள அருணா பதிப்பகத்தின் முதல்வர். சிவன் திருவடி மறவாச் சிந்தையும், திண்ணிய தமிழன்பும் உடையவர். இங்கே கூறிய செல்வர் பலர்க்கும் இதனை அன்போடு அச்சிட்டுதவிய மதுரை விஜயா அச்சக முதல்வர், திரு.கா.இராமன் அவர்கட்கும் செந்தமிழ்த் தாயின் திருவருள் மேன்மேலும் பெருக வேண்டுமென எல்லாம் வல்ல இறைவன் திருவடியைப் பரவுகின்றேன். இவ்வகையில் புலமை வாழ்வில் யான் மேற்கொண்ட குறிக்கோள் விரும்பியவாறு நிறைவுற்று எனது எளிய உள்ளம் மகிழ்வு கொள்ள அருள் புரிந்த மதுரை அங்கயற்கண்ணி யோடமர்ந்த ஆலவாய் அண்ணல் திருவடிகளை வாழ்த்தி வணங்குகின்றேன். “ஆடக மதுரை அரசே போற்றி கூடல் அமர்ந்த குருமணி போற்றி” “அவ்வை,” காந்தி நகர் மதுரை 16.9.1968 ஒளவை. துரைசாமி நற்றிணை மூலமும் விளக்கவுரையும் 201.பரணர் தலைமைசால் பண்பும் செயலுமுடைய தலைமகன் மலைச் சாரற் பூம்பொழிற்குள் தனித்துச் சென்று அங்கே பொழில் விளையாட்டு விருப்பாற் போந்திருந்த தலைமகளைக் கண்டு காதலுற்றான். அவளுடைய இனிய நோக்கத்தாலும் பிற குறிப்புக் களாலும் அவள் உள்ளத்தும் தன்பால் காதல் தோன்றினமை கண்டு இன்புற்று அவளுடன் இன்ப உறவுகொள்ள முயன்றான். முடிவில் இருவர் கருத்தும் காதலால் நட்புற்று ஒன்றுபட்டன. சிறிதுபோதில் அவள், அவண் போந்த ஆயமகளிருடன் கூடிச் சென்றாள். முன்னாள் உளதாய நட்பை வற்புறுத்தற்கு மறுநாள் அவன் அப்பொழிற்குச் சென்றானாக, அவனைப்போல அவளும் அவண் போந்து தன் காதல் நலத்தை உறுதிசெய்தாள். இது காறும் கண்டறியாத புத்துணர்ச்சி தலைக்கொண்ட தலைமகன் அவளை அரிதிற்பிரிந்து சென்றான். அவன் உள்ளக் கோயிலில் அவளும், அவள் உள்ளத்தில் அவனும் இடம் பெற்றனர். பெண்மை போல ஆண்மை, தன் உள்ளத் துணர்ச்சியை வெளிப்படாவகையில் மறைக்க வேண்டிய கடப்பாடுடைய தன்று; உள்ளத்துத் தோன்றிய உணர்வை உருவாக்குதற்குரிய முயற்சியும் தொழிலும் ஆண் மகனா யினான் மேற்கோடற்கு இப்பரந்த உலகு போதிய வாய்ப்புத் தந்துள்ளது. அதனால் அவன் தன் கருத்தைத் தன் மனத்துக்கினிய நண்பனுக்கு அறிவித்தான். பெண்ணொருத்தியின் விழிவலைப் பட்டுப் பேதுறுவது ஆண்மைக்குப் பெருமை தருவதன்று என நண்பன் அவனைக் கழறினான். பின்பு தலைமகன் உள்ளத்தின் உறுதி கண்ட நண்பன், தலைமகன் குறித்த இடத்துக்குத் தானே தனித்துச் சென்று தலைமகளை நேரே நோக்கினான். தலைமகளின் உருவும் நலமும் திருவும் செம்மையும் கண்டதும், அவனது உள்ளமும் பெருவியப்பெய்திற்று. விண்மீன் நடுவண் தண்மதி போலத் தலைமகள் இயங்குவதையும் அவள் தந்தையின் சால்பையும் பிற செல்வச்சிறப்புக்களையும் கண்டு தலைமகன்பாற்போந்து, “நின் உள்ளங் கொண்ட தலைமகள் பால் விளங்கும் தலைமைப் பண்பும் செயலும் நோக்க அவளைப் பெறுதல் அரிதென்றே யான் கருதுகின்றேன்;ஆதலால் அவள்பொருட்டு முயல்வது நன்றன்று’’ என்றான். அதுகேட்ட தலைமகன் முறுவலித்து “நண்ப, குன்றக்குறவன் மகளான அத்தலை மகள் பெறுதற் கரியள்; அரிய காவலமைந்த சூழ்நிலையினாள்; அவள் நின் வேண்டுகோளை ஏற்கமாட்டாத இளையள்; அவளை நினைத்தல் வேண்டா என்று மொழிகின்றாய்; நீ கூறுவன அனைத்தும் உண்மையே; ஆயினும் உருவும் நலனும் படைத்த அவள், கொல்லிக் குடவரையின்கண் நிற்கும் பொற்பாவை, பெருங்காற்று பெருமழை கடுவெயில் முதலியவற்றால் சிறிதும் அசைவின்றிப் பொலிந்து விளங்குதல் போல, என் நெஞ்சின்கண் நிலைபெற்று விட்டாள்; இனி அவள் அதனின் நீங்காள்” என்று கூறினாள். தலைமகனுடைய இவ்வுரையின்கண், இளமை யுள்ளத்துக் காதலுணர்வு பற்றித் தோன்றும் பெண்மையுரு, இளைஞன் ஒருவன் நினைவையும் சொல்லையும் தன்வரை நிறுத்திப் பிணித்து நிற்கும் திறம் விளங்கக் கண்டு வியந்த பரணர் அதனை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். மலையுறை குறவன் காதல் மடமகள் பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் சொல்லெதிர்1 கொள்ளா இளையள் அனையள் உள்ளல் கூடா தென்போய்2 மற்றும் செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட் டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும் உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும் பெருநிலம் கிளரினும் திருநல வுருவின் மாயா இயற்கைப்1 பாவையின் போதல் ஒல்லாள்என்2 நெஞ்சத் தானே. இது கழறிய பாங்கற்குத் தலைமகன் உரைத்தது. உரை : மலையுறை குறவன் காதல் மடமகள் - மலையிடத்தே வாழும் குறவனுடைய அன்பும் இளமையுமுடைய மகள்; பெறலருங் குரையள் - பெறுதற் கரியவள்; அருங்கடிக் காப்பினள் நெருங்குதற்கு அரிய காவலிடத்துள்ளாள்; சொல்லெதிர் கொள்ளா இளையள் - நீ கூறும் சொற்களை எதிரேற்றுக் கொள்ளலாகாத இளமையுடையள்; அனையள் உள்ளல் கூடாது என்போய்- அப்பெற்றியவளை விரும்பி நினைத்தல் கூடாது என்று கழறுகின்ற நண்பனே; செவ்வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி - செவ்விய வேர்ப்பலாவின் பழங்கள் பொருந்திய கொல்லிமலையில்; தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு - தெய்வத்தாற் காக்கப்படுதலால் குற்ற மில்லாத நெடிய முடியில்; அவ்வெள் அருவிக் குடவரை யகத்து - அழகிய வெள்ளருவியொடு கூடிய மேலைப் பகுதியில்; கால் பொருது இடிப்பினும் - காற்று மோதித் தாக்கினாலும்; கதழ்உறை கடுகினும் - பெருமழை கடுகிப் பெய்யுமாயினும்; உரும் உடன்று எறியினும் - இடி முழங்கித் தாக்கினாலும்; ஊறுபல தோன்றினும் - இன்னோரன்ன பல இடையூறுகள் வந்தாலும்; பெரு நிலம் கிளரினும் - பெரிய நிலம் நடுங்கி னாலும்; திருநல உருவின் மாயா இயற்கைப் பாவையின் - கண்டார் விரும்பும் உருவப் பொலிவு கெடாத இயல்பின தாகிய பாவையைப் போல; என் நெஞ்சத்தான் போதல் ஒல்லாள் - என் நெஞ்சினின்றும் நீங்குவா ளல்லள், ஆகலின் அவளை யான் எவ்வாறு மறப்பேன் எ.று. குறவன்மகள் பெறலருங் குரையள், சொல்லெதிர் கொள்ளா இளையள், அனையளை உள்ளல் கூடாது என்போய், கொல்லிக் குட வரையகத்து இடிப்பினும், கடுகினும், எறியினும், தோன்றினும்,கிளரினும், உருவின் மாயா இயற்கைப் பாவையின், நெஞ்சத்தான் போதல் ஒல்லாள், ஆகவே அவளை யான் எவ்வாறு மறப்பேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குரை, அசைநிலை. கடி, மிகுதி. சொல்லெதிர்கொள்ளல், சொல்லப்படும் சொற் பொருளை ஏற்றுத் தகுவன எண்ணியுரைக்கும் மனவுணர் வுடைமை மேற்று. உள்ளல், விரும்பி நினைத்தல்; காதலித் தலுமாம் வேர்ப்பலா, பலாவின்வகை. தீது இன்மைக்கு ஏது தெய்வம் காத்தல். கொல்லிமலையின் மேலைப்பகுதி குடவரை எனப்பட்டது. கதழுறை, விரைந்த மழை. எளிதிற்கிளராத பெருமை யுடைமைபற்றிப் பெருநிலம் என்றார். திரு. கண்டோர் விரும்பும் அழகு. நெஞ்சத்தான் என்றவிடத்து, ஐந்தாவதன்கண் மூன்றாவது மயங்கிற்று என்க. மற்று, வினைமாற்று. உம்மை இசைநிறை. மலையுறையும் குறவன் அரிதிற் பெற்ற தலைமகள் என்றற்கு மலையுறை குறவன் காதல் மடமகள் என்றும், குறவன் நயந்து கொடைநேர்ந்தா லன்றிப் பெறலரியள் என்றற்குக் காதல் மடமகள் பெறலருங் குரையள் என்றும். அவனை அறியாது களவிற் சென்று அவளைக் காண்டல் அரிது என்றற்கு அருங் கடிக் காப்பினள் என்றும், காவல் கடந்து ஒருகாற் சென்று அவளைக் காணினும் நாம் குறிப்பின் உணர்த்தும் சொற்களைக் கேட்டு உணர்ந்து மறுமாற்றம் தரும் அத்துணை மனவுணர்வு உண்டாகாத இளமைப்பண்பினள் என்பான் சொல்லெதிர் கொள்ளா இளையள் என்றும் அப்பெற்றியவளை நினைத்தலும் பெறற்கு முயறலும் பயனில் செயலாம் என்பான் அனையள் உள்ளல் கூடாது என்றும் பாங்கன் கூறினான். இத்துணையும் பாங்கன் கூற்று; இதனை மறுப்பது கருத்தாகலின் என்போய் எனத் தலைமகன் கொண்டெடுத்து மொழிந்தான். “கூற்றவண் இன்மை யின் ’’1 வந்த கொண்டுகூற்றன்று. பலவின் பழம் பொருந்தியது என்றும், தெய்வங் காத்தலால் தீது தீர்ந்தது என்றும், கொல்லி மலையைச் சிறப்பித்தான், தன் முயற்சியும் பயன்விளைவிக்கும் என்றும், தெய்வம் காத்தலால் தீதின்றா மென்றும் தலைமகன் குறிப்பால் பாங்கனைத் தெருட்டுதற்கு. மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே என்றது, அவளை மறத்தற்கு முயல்வதை விடுத்துப் பெறற்கு முயல்வதே செயற்பாலது எனத் தலைமகன் பாங்கற்குக் கூறினானாம். இது கேட்டுப் பாங்கன்கூட்டத்துக்கு உரிய முயற்சி மேற்கொள் வானாவது பயன். 202. பாலை பாடிய பெருங்கடுங்கோ தம்மிற்றாம் தனித்துக் கண்டு காதலுறவு கொண்டு களவு நெறிக்கண் ஒழுகி வருங்கால், தலைமகன் தலைமகளை நேரிய முறையில் வரைந்து கொள்ளலாகாதவாறு சூழ்நிலை இடையூறு செய்தது. தலைமகனையின்றி இமைப்போதும் உயிர்வாழ்தல் அமையாத அளவில் தலைமகள் உள்ளத்திற் காதல் முறுகிப் பெருகிற்று. அது கண்ட தலைமகன் தன்னுடன் கொண்டு செல்வானாயினன். காலைப்போதில் தலைமகட்குரிய நாட்டின் எல்லைக்கண்ணுள்ள காட்டினுள் புகுந்து நண்பகல் எய்துமுன் காட்டினையும் கடந்து சென்றனர். வெயிலின் வெம்மை தெரியா வாறு காட்டிடைத் தோன்றிய காட்சிகளும் பெரு மரங்கள் தந்த நிழலும் அவர்கட்கு இன்பம் செய்தன. காட்டின் நடுவே செறிந்த பசுந்தழை போர்த்த மலையொன்று நின்றது. அம்மலையின் பிளவுகளி லெல்லாம் இருள்படத் தழைத்த மரங்களும் செடி கொடிகளும் மிக்கிருந்தன. மரவகைகளுள் கோங்க மரங்கள் சிவந்த பூக்களைத் தாங்கி விளக்குகளைப் போலஒளிர்ந்தன. ஒருபுறம் களிற்றியானை யொன்று தன்னொடு பொருத புலியைக் கொன்று, புலால் நாறும் தன் மருப்பிடத்தே முத்துக்கள் ஒலிப்ப மறம் சிறந்து சென்று, உயர்ந்து தோன்றிய நிலப்பகுதியில் நின்ற வேங்கைமரத்தைக் கண்டு அதன் அடிப்பகுதியைத் தகர்த்துக் கீழே தள்ளி, தன்பால் வந்து கூடிய பிடிக்கும் அதன் கன்றுக்கும் வேங்கையின் பசுந்தழையைக் கவளமாகத் தந்து புறந்தந்து நின்றது. களிற்றி யானையின் செயலையும் கார்த்திகை விளக்குப் போல மலர்ந்து தோன்றும் கோங்கமரச் செறிவுகளையும் தலை மகன் தலைமகட்குக் காட்டி, “குறுமகளே களிறு பிடியையும் கன்றினையும் பேணிப் புறந்தந்து நிற்கும் மலையைத் தன்னகத்தே கொண்டு, மலர்ந்த பூக்களைத் தாங்கியொளிரும் கோங்கு மரங்களை யுடையதான இக்காடு நின் தந்தைக் குரியது; இதனைக் காண்பாயாக” என்று கூறினான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், களிற்றியானையின் செயன்மேல் வைத்துத் தான் பகைகடிந்து மனையறம் புரியும் மாண்பும் தகுதியும் உடையன் என்பதும், கோங்கம் கார்த்திகை விளக்குப் போலத் தோன்றும் காட்சிமேல் வைத்து தலைமகள் தன் மாண்புடைக் கற்பால் மனைக்கு விளக்காய்த் திகழ்வள் என்பதும், விளங்குதல் கண்ட பெருங்கடுங்கோ இப்பாட்டின் கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார். புலிபொரச் சிவந்த1 புலவுநா றிருங்கோட் டொலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து வன்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப் பொன்புரை கவளம் புறந்தரு பூட்டும் மாமலை விடரகம் கவைஇக் காண்வரக் கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே. இஃது, உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.3 உரை: புலிபொரச் சிவந்த புலவுநாறு இருங்கோட்டு - புலியைக் கொன்றதனால் சிவந்த புலால்நாறும் பெரிய கொம்பின்கண்; ஒலிபல் முத்தம் ஆர்ப்ப - உண்டாகிய பலவாகிய முத்துக்கள் ஒலிக்க; வலி சிறந்து - வன்கண்மை மிகுந்து; வன்சுவல் பராரை முருக்கி-வலிய மேட்டு நிலத்தில் நின்ற பருத்த அடிப்பகுதியைத் தகர்த்துத் தள்ளி; கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் - கன்றுடனேயுள்ள இளமைநலம் படைத்த தன் பிடி யானையொடு கூடிய பெரிய கையையுடைய களிறு; தேன் செய் பெருங்கிளை இரிய - தேனை யீட்டுதற்குக் கூடியிருந்த வண்டினத்தின் பெரிய கூட்டம் நீங்க ஓட்டி; வேங்கைப் பொன்புரை கவளம் - வேங்கையின் தழையும் பூவும் கலந்த பொன்போலும் உணவுக்கவளத்தை; புறம் தருபு ஊட்டும் - அன்போடு உண்பிக்கும் ; மாமலை விடரகம் கவைஇ - பெரிய மலையிடத்துப் பிளவிடங்களைத் தன்னகத்தேகொண்டு; காண்வரக் கண்டிசின் - அழகுண்டாகத் தோன்றுவதைக் காண்பாயாக; வாழி -; குறுமகள் - இளையவளே; நுந்தை - நின் தந்தைக்குரிய; அறுமீன் கெழீஇய அறஞ்செய் திங்கள் - கார்த்திகை மீன்களொடு கூடிய அறஞ்செய்தற் கமைந்த முழுத்திங்கள் விளங்கும் நாளின்கண்; செல்சுடர் நெடுங் கொடி போல - வரிசையாகச் செல்லுகின்ற ஒளி பொருந்திய நெடிய விளக்குகளின் ஒழுங்குபோல; கோங்கம் அணிந்த காடு - பலவாகிய பூக்களைத் தாங்கிநிற்கும் கோங்கமரங்களால் அணிபெற்று விளங்கும் காட்டினை எ.று. குறுமகள், வாழி; அறுமீன் கெழீஇய திங்கள் செல்சுடர் நெடுங்கொடி போலக் கோங்கம் அணிந்த நுந்தை காடு, மாமலை விடரகம் கவைஇக் காண்வரக் கண்டிசின் எனக் கூட்டி வினை முடிவு செய்க. புலியொடு பொருது அதனைக் கொன்றமையால் கோடு அதன் குருதி தோய்ந்து சிவந்திருத்தல் பற்றிப் புலிபொரச் சிவந்த புலவுநாறு இருங்கோடு என்றார். யானை மருப்பில் முத்து உண்டாம் என்பது கொண்டு ஒலிபல் முத்தம் ஆர்ப்ப என்றார். ஒலித்தல் - உண்டாதல். வலி வன்கண்மை. பராரை, பருத்த அடிமரம். வேங்கைமரம் பூநிறைந்து வேங்கைப்புலியை நினைப்பித்தலின், வேழம் அதனைத் தகர்த்த தென்றார். “கொடு வரி தாக்கி வென்ற வருத்தமொடு , நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை, நனவிற்றான் செய்தது மனத்த தாகலின், கனவிற் கண்டு கதுமென வெரீஇப், புதுவதாக மலர்ந்த வேங்கையை, அதுவென உணர்ந்ததன் அணிநலம் முருக்கிப், பே'82 முன்பின் தன்சினம் தணிந்து1” என்பது காண்க. வன்னிலத்து நின்றதாயினும் வேங்கை மரத்தை யானை வலிசிறந்தமையால் முருக்கிற்றென அறிக. பகைத்து ஊறு செய்வான் போந்த வேங்கைப்புலியை வென்று அதனை யொக்கும் வேங்கைமரத்தையும் தகர்த்துச் சினந்தணிந்த வேழம் கன்றொடு கூடியுறையும் தன் மடப்பிடியைத் தழுவி அன்புசெய்யும் என்பார், கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் வேங்கைப் பொன்புரை கவளம் புறந்தருபு ஊட்டும் என்றார். விடரகம் என்றது ஈண்டு மலைகட்கு இடையே உள்ள பிளப்பிடம்; இதனைப் பள்ளத்தாக்கு என்றல் இக்கால வழக்கு. கவைஇ - கவவு, அகத்திடல். ஓ அசைநிலை. அறுமீன் - கார்த்திகை. கார்த்திகை நாளும் முழுமதியும் கூடிய நாள் கார்த்திகைத் திங்கள்; மறுநாள் தொடங்குவது மார்கழித் திங்கள். அஃது ஆநிரை நாளும் முழுமதியும் கூடிய நாளொடு நிறைவுறும். முழுத்திங்களில் அறஞ் செய்தலும் நோன்பு மேற் கோடலும் மரபாதலின் முழுமதி நாளை அறஞ்செய் திங்கள் என்றார். இக்காலத்துத் தீபாவளிப் புதுநாளைப் போலச் சங்க காலத்துக் கார்த்திகை முழுத்திங்கள் தமிழர்வாழ்வில் சிறந்து விளங்கிற்று. பிற்காலத்தே பல்லவர் ஆட்சியில் பழந்தமிழ்க் கொள்கைகளை மாற்றி வட நூன் முறையில் அமைக்கவேண்டு மென்ற முயற்சி மறைமுகமாகத் தோன்றிப் பிற்காலப் பாண்டிய சோழ வேந்தர் காலத்தில் உருத்தெரியாமல் வளர்ந்து, விசயநகர வேந்தராட்சியில் வெளிப்பட முற்போந்து, ஊர்ப்பெயர், மக்கட் பெயர், கோயில்களிலுள்ள இறைவர்கள் பெயர் யாவும் வட மொழிப்படுத்திற்று; கோயில் நிகழ்ச்சிகள் சமயநிகழ்ச்சிகள் முதலிய பலவும் வடமொழிப் பெயர்பெற்றன; விழாக்களின் பெயரும் காலமும் மாறின; ஐரோப்பியர் காலத்தில் மக்கட் பெயரெல்லாம் பெரிதும் வடமொழியாயின; கோயில் நிகழ்ச்சி களும் விழாக்களும் யாவும் மாறின . முழுவதும் தமிழே நிலவிய கோயில்களிலும் சமய நிலையங்களிலும் அரசியல் வழக்கியல் களிலும் திருமணம் முதலிய சமுதாயத்துறைகளிலும் வட மொழியும் வடநூற் கொள்கைகளும் நன்கு பரவித் தமிழரது தொன்மையை மறைத்து இன்று வரலாற்றுச் சிறப்பு ஏதுமில்லாத ஒரு புதுச்சமுதாயம் போலக் காட்சிதரும் நிலையில் மாற்றி வெற்றி கண்டதுடன், பழந்தமிழர் தங்கள் நாட்டு நன்மக்கட்கு வழங்கிப் பாராட்டிய காவிதி முதலிய பெயர்களைச் சாதிப் பெயராக்கி, அதனையுடையாரைத் தாழ்ந்த மக்களாக்கிப் பழந் தமிழ்ச் சொற்களை எள்ளி நகையாடுதற்கேற்ற மனநிலையைத் தமிழரிடத்தே உண்டாக்கிவிட்டன. மேனாட்டவர் கூட்டுறவால் வரலாற்றுணர்வு சிறிது பெற்றதும், தமிழர் இந்த இழுக்கினை எண்ணி எரியெழ நோக்கத் தலைப்பட்டாராக, அரசியல் சூழ்நிலையும் சமுதாயப் பொருளாதார மாறுதலும் அவரது முயற்சியை ஒடுக்கிவிட்டன. கொடி, ஒழுங்கு. கோங்கம் பூ, சுடர்போல் திகழும் என்பர்; “கோங்கின் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும்’’1 என்று வரும். மழைகால் நீங்கிய மாக விசும்பிற், குறுமுயல் மறுநிறங்கிளர மதி நிறைந்து, அறுமீன் சேரு மகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு’’2 என நக்கீரர் இக்கார்த்திகை விழாவைக் கூறுதல் காண்க. இரவுப் போதில் தலைமகளைக் கொண்டுதலைக்கழியும் தலைமகன், பகற்போதில் காட்டின் வழியே அவளோடு செல்லுங்கால், வழிவருத்தம் தோன்றாதவாறு சொல்லாட லுற்று, அக்காட்டின்கண் வேழம் தன் கன்றுடைய மடப்பிடிக்கு வேங்கைப் பொன்புரை கவளம் தந்து புறந்தருவது காட்டுவான், யானையின் கோடு சிவந்து தோன்றுதற்குக் காரணம் கூறலுற்றுப் புலிபொரச் சிவந்த புலவுநாறு இருங்கோடு என்றும், அது பின்பு வேங்கை மரத்தைத் தகர்த்தமைக்கு ஏது, வன்கண்மை மிகுந்தமை என்பான், வலிசிறந்து வன்சுவற் பராரை முருக்கி என்றும் கூறினான். சுவல், மேட்டு நிலம். வன்சுவற் பராரை யென்றான், மென்னில மாயின் வேங்கையை வேரோடே வீழ்த்தியிருக்கும் என்றற்கு. இதனாற் பயன், வேழம் சினம் தணிந்தமைவது. வேழம் புலியோடு பொருதபோது மடப்பிடி தன் கன்றொடு சென்று காப்புடைய மாமலை விடரகத்தே ஒடுங்கி யிருந்த தென்றற்கு, புறந்தரு பூட்டும் மாமலை விடரகம் என முடித்தான். வேங்கைமரம் புதுப்பூ மலர்ந்து வண்டினம் தேனுண்டு பாடும் நலமுடைய தென்றற்குத் தேன்செய் பெருங்கிளை இரிய என்றும், வேங்கையின் தழையும் பூவும் குழைத்த கவளத்தைப் பொன் செய் கவளம் என்றும் சிறப்பித்துக் கூறினான். இவ்வாறு வேழத்தின் வினை யாண்மை கூறியது. யானும் இத்தகைய வினையாண்மையால் வீறெய்தி அவ்வினையிடத்துப் பெறும் பொருள்கொண்டு நின்னைப் புறந்தருவேன் எனத் தலை மகளைத் தெளிவித்த வாறு என்க. எனவே, நின்னைக் காப்பேன் என்பது சொல்லாமற் சொல்லியவாறாயிற்று. நுந்தையது காட்டில் கோங்கம் பலவாகிய பூக்களைத் தாங்கிக் கார்த்திகை விளக்குப் போலத் திகழுமென்றான், நீயும் நின் மனைக்கண் பல்வகைச் சிறப்புக்களால் நன்கு விளக்கம் பெறுவாய் என்பது வற்புறுத்தற்கு. இதனால் தலைவி மனம் மகிழ்வாளாவது பயன். 203. உலோச்சனார் களவுக் காதலாற் பிணிப்புண்டு ஒருவரை யொருவர் குறியின் கண் தலைப்பெய்து இன்புற்று வருகையில், அல்லகுறியாலும் வேறுபல இடையீடுகளாலும் தலைமக்களது கூட்டம் இடையறவு படுவதாயிற்று. ஆயினும், தலைமகன் உள்ளம் தளராமல் களவையே விரும்பியொழுகினான். தலைவியுள்ளத்து நிலவிய காதல் சிறந்து வளர்வது கருதித் தலைவன் அவ்வரைவினை நீட்டித்து வந்தான். இந்நிலையில் அவன் ஒரு நாள் இருள்மாலைப் போதில் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நின்றானாக, அதனைத் தோழி யுணர்ந்து, தலைமகன் நின்ற பகுதியில் அவன் அறியாவகையில் தலைமகளொடு சென்று நின்று, தான் கூறுவது அவன் செவியிற் படும் அளவில் தலைவியொடு சொல்லாடலுற்றாள்: “தோழி, முதற்கண் நாம் நம்மூர்க் கானற்சோலையிடத்தே தலைமகனைத் தலைப்பெய்து நட்புற்றோம்; அந்நட்புப் பெருகி ஒருவரை யொருவர் ஒருநாள் கா'82து கழியினும் உயிருய்தல் அரிதென்னு மாறு சிறந்து விளங்குகிறது. அதனையறியாமல், ஒருநாள் நம் காதலர் தேர் நம் மூர்ப் பக்கல் வந்தது கொண்டு இவ்வூர் பேரலர் எடுத்து மீண்டும் அவரைக் கா'82தவாறு நம்மை இல்லின்கண் நன்கு செறித்துவிட்டது; அதுவேயுமன்றி, இப்போழ்து நம்பால் உளதாய மெலிவு கண்டு நெஞ்சு வருந்துதலையும் செய்கின்றது; இஃது என்னாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன் ’’ என்று மொழிந்தாள். தோழியினது இக்கூற்றின்கண், தலைமகட்கும் தலைமகற்கும் கானற் சோலையிடத்து நிகழ்ந்த கூட்டத்தால் உளதாய காதல் சிறந்து, அவனை யின்றி உயிர் வாழ்த லமையாத அளவில் தலைவிபால் முறுகியிருப்பதும், அதனைத் தெருண்டு தலைமகன் வரைதல் வேண்டும் என்பதும், நீட்டித்தல் தீதென் பதும் விளங்குதல் கண்ட உலோச்சனார் அவளுடைய சொற் களை இப்பாட்டின்கண் அமைத்து அழகுறப் பாடுகின்றார். முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் தடந்தாட் டாழை1 முள்ளிலை நெடுங்கோட் டகமடற் பொதுளிய2 முகைமுதிர் பவிழ்ந்த கோடுவார்ந் தன்ன3 தோடுபொதி வெண்பூ எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலால் மறுக்கும் 4மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை ஒருநாள் 5கழியினும் உய்வரி 6தென்னாது கதழ்பரி நெடுந்தேர் 7வரவாண் டழுங்கச் செய்ததன் தப்பல் அன்றியும் உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே இது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் வரைவு கடாயது. உரை: முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் - முழங்குகின்ற கடல் அலைகளால் கொழித்திடப்பட்ட பெரிய மணல்மேட்டில் நிற்கும்; தடந்தாள் தாழை முள்ளிலை நெடுங்கோட்டு - பெரிய தாளையுடைய தாழையின் முள் பொருந்திய இலைகளை யுடைய நெடிய கிளையின்கண் பூத்த; அகமடல் பொதுளிய முகைமுதிர்பு அவிழ்ந்த - மடலின் அகத்தே தோன்றிய அரும்பு முற்றுதலால் முறுக்கவிழ்ந்த; கோடு வார்ந்தன்ன தோடு பொதி வெண்பூ - சங்கு நீண்டாற்போன்ற தோடு மூட்டப் பட்ட வெண்மையான பூ; எறிதிரை உதைத்தலின் - காற்றால் எறியப்பட்ட கடலலைகள் மோதுதலால்; பொங்கித் தாது சோர்பு - சிதைந்து தாது உதிர்ந்து; சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலால் மறுக்கும் - சிறுகுடிப் பாக்கத்துத் தெருக்களில் பரவும் புலால் நாற்றத்தை மாற்றும்; மணம்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை - நறுமணம் கமழும் கானற்சோலையிடத்து உண்டாகிய நம் காதலுறவு சிறந்தமையால்; ஒரு நாள் கழி யினும் உய்வரிது என்னாது-- ஒருநாள் காணாதொழியினும் நாம் உயிர் உய்தல் அரிது என்று நினையாமல்;கதழ்பரி நெடுந்தேர் வரவு - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டிய நம் காதலர் தேரினது வரவு; ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும் - தான் எடுத்துத் தூற்றிய அலரால் அவர் ஊரிடத்தே தவிரச் செய்த தவற்றோடமையாது; இவ்வழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடைய ஊர்; உயவுப் புணர்ந்தன்று - இவ்விடத்து நம் பால் உளதாகிய மெலிவு கண்டு வருத்தம் மேலிட்டுக் கொண்டு இரங்காநின்ற தாகலான் இனி என்னாகுமோ என்று அஞ்சுகின்றேன் எ.று. கானல் இயைந்த நம் கேண்மையால் நாம் உய்வரிது என்னாது, நெடுந்தேர் வரவு, ஆண்டு அழுங்கச் செய்ததன் தப்ப லன்றியும், இவ்வழுங்கலூர் உயவுப் புணர்ந்தன்று; ஆகலான் இனி என்னாகுமோ என்று அஞ்சுகின்றேன் என்று கூட்டி வினைமுடிவு செய்க. எக்கர்த் தாழை நெடுங்கோட்டு அகமடற் பொதுளிய முகை முதிர்பு அவிழ்ந்த வெண்பூ பொங்கித் தாது சோர்பு, புலால் மறுக்கும் கானல் என இயையும். சிறந்தமையால் என ஒரு சொற்பெய்து கொள்க. ஆகலான் இனி என்பது முதலாயின குறிப் பெச்சம். உயவு, வருத்தம். சுளகுகொண்டு கொழித்தாற்போலக் கடலலைகளால் நுண்மணல் ஒதுக்கப் படுதல்பற்றிக் கொழீஇய எக்கர் என்றும், உயரிய மணல்மேடு என்றற்கு மூரிஎக்கர் என்றும் கூறினார். தடந்தாள்: உரிச்சொற் புணர்ச்சி: தாழையின் இலை முள்ளுடைமைபற்றி முள்ளிலை யெனப்பட்டது. புறமடல் முள்ளுடை இலைகள் போறலின் அகமடல் கூறினார். முகை முதிர்ந்தாலன்றி இதழ் விரியாமையின் முகை முதிர்பு அவிழ்ந்த எனல் வேண்டிற்று. கோடு, சங்கு. வார்தல், நீளுதல். சிறுகுடிப் பாக்கம் - நெய்தல் நிலத்து ஊர். மறுகு - தெரு. மறுத்தல் ஈண்டு மாற்றுதல் மேற்று. தப்பல், தவறு. தலைமகள் உள்ளத்து நிலவிய காதல் சிறத்தல் வேண்டிக் களவின்கண் கானற் சோலைகளிடத்து அமைந்த குறியிடத்தே போந்து, தலைமகன் தலைப்பெய் தொழுகிய திறத்தை, மணங் கமழ் கானல் இயைந்த நம்கேண்மை என்றும். தான் விரும்பி யாங்குக் காதல் சிறந்தமை யுணர்த்துதற்கு ஒரு நாள் கழியினும் உய்வரிது என்றும், அதனை யுணராமல் ஒருவழித்தணப்பு முதலிய பிரிவை இடைப்பெய்து களவு நீட்டித்தமை பற்றி, உய்வரி தென்னாது கதழ்பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்க என்றும், தலைமகன் தேர் வரவு அழுங்கியதற்கு ஊரவர் எடுத்த அலர் காரணமெனக் கருதித் தலைவி வேறுபட்டாளா கலின் ஊர்மே லேற்றி, தேர்வரவு ஆண்டு அழுங்கச் செய்ததன் தப்பல் என்றும், நோய் செய்தமையே யன்றி, நோய் கண்டு இரங்கி ஊர் முதுபெண்டிர் வெறி முதலாயின எடுத்தல் கூறுமாறு தோன்ற உயவுப் புணர்ந்தன்று இவ் வழுங்கல் ஊர் என்றும், இனியும் வரைவு நீட்டிப்பின் இவள் உயிர்வாழாள் என்றும் தோழி கூறினாள். எக்கர்த் தாழையின் வெண்பூத் திரையுதைத்தலாற் பொங்கித் தாது சொரிந்து பாக்கத்து மறுகின்கண் உண்டாய புலால்நாற்றத்தை மாற்றுதல் போல, நீயும் கூட்டம் இடையீடு படுதலால் கிளர்ந்தெழுந்து வரைபொருளைச் சொரிந்து இவளை வரைந்து கொள்ளுமாற்றால் ஊரவர் எடுத்த அலர்க்குக் காரண மாகிய இவளது மேனி மெலிவைப் போக்குதல் வேண்டுமெனத் தோழி கூறிய தாக உள்ளுறை யுவமம் கொள்க. தலைமகன் விரைந்து வரைவு மேற்கொள்வானாவது பயன். 204. அம்மள்ளனார் அச்சுப்பிரதிகளில் இவர் பெயர் மள்ளனார் என்று காணப் படினும், ஏடுகளில் அம்மள்ளனார் எனக் காணப் பட்டமையின் அதுவே கொள்ளப்பட்டது. தலைமகன், தன் போலத் தலைமை மாண்புடைய தலை மகளைத் தனிமையிற் கண்டு காதலுறவு கொண்ட பின்னர் இடந்தலைப்பட்டும் பாங்கன்வழிச் சென்றும் அவ்வுறவை வற்புறுத்திக்கொண்டு அக்காதல் உயிர்ப் பிணிப்பாய்ச் சிறத்தல் வேண்டிக் களவொழுக்கத்தை மேற்கொள்ள நினைந்தான். அதற்கு உரிய துணையாகுபவள் தலைவியின் உயிர்த்தோழி யாகும். அவளுடைய நட்பினைப் பெற்றாலன்றித் தலைமகன் தலைமகளைத் தான் விரும்பியவாறு தனித்துத் தலைப்பெய்த லென்பது இயலாத ஒன்றாம். தலைமகளும் தனக்கு உறுதுணை யாய் நிலவும் தன் உயிர்த்தோழியைத் தக்க குறிப்புக்களால் தலைமகற்குக் காட்ட, அவனும் அவளைக் கண்டுகொண்டான். தலைமகனுக்கும் தனக்கும் உளதாகிய காதலுறவினை த் தலை மகள் தன் உயிர்த்தோழிக்கும் உரைத்திலள். தன் மனத்தில் தோன்றிய காதலுறவை வெளியே கண்ணன்ன கேளிர்க்கும் காட்டாத திண்மை பெண்மைக்கு இயல்பு; காதலுறவை வெளிப் படச் செய்து கடிமணத்தால் உலகறியச் செய்வது ஆண்மையின் அறமும் கடனும் பணியுமாகும். அதனால், தோழிக்குத் தலை மக்களிடையே தோன்றிய உறவு சிறிதும் தெரியாது; தலை மகனையும் அவள் அறியாள். இந்நிலையில் தலைமகன் தலை மகளுறையும் சூழலுக்குச் சென்று ஒருமுறைக்குப் பன்முறை தோழியோடு சொல்லாடி அவளுடைய நட்பைப் பெற முயல் வன். தோழியும் தலைமகளையொத்த அறிவும் அறமும் பெண்மையும் பெருமையும் ஒருங்கு உடையளாகலின் தலைமகனை நெருங்கு தற்கு அஞ்சுவள். ஆயினும் தோழி யென்ற முறையில் பிறரொடு நன்கு உரையாடி அறிவன அறிந்து ஆவன செய்தற்கண் அவட்கு உரிமை பெரிதுண்டு. அதனால் அவள் வெளியே தனித்து இயங்குதல் இயல்பாயிற்று. ஆகவே, தலைமகன் தோழியைக் கண்டு அவளது நட்பினைப் பெறல் வேண்டி ஒரு குறையுடையான் போல் நெருங்க வேண்டியவனானான். தலைமகளும் தோழியும் ஏனை ஆயமகளிரும் விளையாடியும் நீராடியும் பூக்கொய்தும் இன்புறும் இடங்கட்குத் தலைமகனும் சென்று அவர்கட்கு வேண்டுவன உதவித் தோழியோடு உரையாடற்கு இடம் பெற்று அவள்பால் ஓர் குறையுடையான் போல் இரந்து பின்னின்று ஒழுகுவன். நாளடைவில் தோழி தலைமகள் குறிப்பை அறிந்து கொள்வாள். தோழி வாயிலாகத் தலைமகளைப் பெறக் கருது தலின் தனக்கும் தலைமகட்கும் முன்பே காதலுறவுண்டென்பதை அவன் வாய்விட்டு உரையான். தலைமகளும் தன் தொடர்பைத் தோழியறியப் புலப்படுத்தாமையின், தோழி தலைவியின் அருமையும் பெருமையும் நோக்கித் தலைமகன் குறிப்பை உரைப்ப தென்பது பெண்மைக்கும் உலகியலுக்கும் ஒவ்வாமை உணர்கின்றாள். அதனால், தோழி தலைமகனைச் சேட்படுக் கின்றாள். தன் முயற்சி பயன்படாமை காணும் தலைமகன் ஆற்றாமை மீதூரத் தலைமகளுக்கும் தனக்கும் உளதாய உறவினைத் தோழியுணரப் பையக் குறிக்கின்றான். அவனுடைய ஒழுக்கமும் உரையும் குறிப்பும் கண்ட தோழி இருவர்க்கும் முன்பே உறவுண்டென உணர்கின்றாள்; ஆயினும் அதுவே பற்றுக்கோடாக அவள் தலைமகள்பால் தலைவன் முயற்சியையும் ஒழுகலாற்றையும் உரைத்து அவள் குறிப்பை ஆராய முற்படுவது அறமாகாமையின், அவள் சேட்படையினையே தொடர்ந்து செய்கின்றாள். “காதலியே, நீ சென்று கிளிகடியும் தினைப் புனத்துக்கு ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப் போதில் வரவோ? அன்றி, நாம் முதற்கண் தலைக்கூடிய மலைச்சாரலில் விளையாடுமிடத்து வரவோ? என் நெஞ்சு கொள்ளுமாறு இன் சொல்லொன்று வழங்குக. யான் நின் வாலெயிறு ஊறிய நீரை யுண்டுமகிழ்வேன் என யான் மொழிந்தேனாக, என்மொழிக் கிரங்கிப் போந்து தனக்கு அமைந்த குறியிடத்தே கொண்டு சென்று தன் இன்மொழியால் என்னை இன்புறுத்தி ஏற்றினைப் பிரிந்தேகும் பிணைமான்போல என்னை அன்பு கனிய நோக்கிக் கொண்டு தான் உறையும் சிறுகுடிக்கு நீ சென்றனை. சென்ற நின் செல்புறம் நோக்கி நின்னைச் செல்ல விடுத்தேன்;அங்ஙனம் விடுத்தற்குத் துணைசெய்த என் நெஞ்சம் நின்னை நினைத்தலை விடாதாகின்றது, என் செய்வேன்?’’ என்று இயம்பினான். தலைமகனுடைய இம்மொழியின்கண், தலைமகட்கும் தனக்கும் தனித்த நிலையில் தோன்றிய காதலுறவைத் தோழிக் குரைத்தல் வேண்டும் என்பது கருத்தாயினும், தனிமையில் தோன்றி உள்ளத்தே ஒடுங்கி நிற்றற்குரியதாகிய முன்னை யுறவைப் பிறர் செவிப்படுமளவில் வாய்விட்டுரைத்தற்கு ஆற்றாமை அவன்பால் நிலவுவதைப் புலப்படுத்தக் கண்ட தோழி விரைந்து மதியுடம்படுமாறு செய்யும் செயற்சிறப்பு நோக்கிய அம் மள்ளனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை 1குளிர்கொள் வியன்புனத் தெற்பட வருகோ குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ இன்சொல் 2மேவலின் இயலுமென் நெஞ்சுணக் கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து தான்செய் 3குறிவயின் இனிய கூறி ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட் டுறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி 1செல்புறம் நோக்கி 2விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. இது பின்னின்ற தலைமகன் ஆற்றானாய்த் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை: தளிர்சேர் தண்தழை தைஇ - தளிர்களையும் மலர் களையும் கொண்டு தொடுக்கப்பட்ட தண்ணிய தழையுடையை யுடுத்து; நுந்தை குளிர்கொள் வியன்புனத்து எற்பட வருகோ - நின் தந்தையினுடைய குளிரென்னும் கருவி கொண்டு கிளி கடிந்து நீ காவல்புரியும் அகன்ற தினைப்புனத்துக்கு ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப்போதில் வரவோ; குறுஞ்சுனைக் குவளை அடைச்சி - குறுகிய சுனையிடத்து மலர்ந்த குவளைப் பூவை அணிந்து; நாம் புணரிய நறுந்தண்சாரல் ஆடுகம் வருகோ- நாம் முதற்கண் தலைப்பெய்து கூடிய நறிய தண்ணிய மலைச்சாரலில் விளையாடுதற்கு வரவோ; இன்சொல் மேவலின் இயலும் என் நெஞ்சுண - நினது இனிய சொல்லை விரும்பியொழுகும் என் நெஞ்சு கொள்ளுமாறு; மடந்தை -மடந்தையே; இனி கூறு - இப்பொழுது கூறுக; நின் கூர் எயிறு உண்கு என - நின் கூரிய பற்களிடத்து ஊறும் அமுதினைப் பருகுவேன் என்று; யான் தன் மொழிதலின் - யான் தனக்கு உரைத்தலால்; மொழி எதிர்வந்து - அதற்கு விடைகூறுவாள் போல எதிரேவந்து; தான் செய் குறிவயின் இனிய கூறி - தான் கருதிய குறியிடத்தே என்னைக் கொண்டு சென்று இனிய சொற்களைச் சொல்லி; ஏறுபிரி மடப்பிணை கடுப்ப - ஆணாகிய கலைமானைப் பிரிந்தேகும் பிணை மானைப் போல; வேறுபட்டு - வேறாக நீங்கி; உறுகழைநிவப்பின் சிறுகுடிப் பெயரும் -மிக்க மூங்கில்கள் உயர்ந்த சிறுகுடி நோக்கிச் செல்லும்; கொடிச்சி செல்புறம் நோக்கி - கொடிச்சி யாகிய தலைமகளுடைய முதுகினை நோக்கி; விடுத்த நெஞ்சம்- விடை வழங்கிய என் நெஞ்சம்; விடல் ஒல்லாது - நினைத் தலைக் கைவிடாது ஆகலின் யான் என்செய்வேன்? எ.று. மடந்தை, புனத்து எற்பட வருகோ, சாரல் ஆடுகம் வருகோ, இன்சொல் மேவலின் நெஞ்சுண இனிக் கூறு. நின் எயிறு உண்கு என யான் மொழிதலின், மொழியெதிர் வந்து குறிவயின் இனிய கூறி, வேறுபட்டுச் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல்ஒல்லாது. என்செய்வேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பல்வகை மலர்களும் விரவித் தொடுக்கப்படு மாயினும் தழை யெனப்படுவதற்குச் சிறந்தமை யின் தளிர்சேர் தண்டழை என்றார். தழை தொடுத்து அணிந்து கொண்டு தினைப்புனத்தேயிருந்து கிளிகடிதலின், தண்டழை தைஇ என்றார். தழை தைஇ வருகோ என இயைத்து தழை தொடுத்துக் கொண்டு வருகோ என உரைப்பினு மாம். குளிர், கிளிகடியும் ஒருவகைக் கருவி. குளிரும் தட்டையும் கவணும் கொண்டு புனங்காப்ப வாகலின், குளிர்கொள் வியன்புனம் எனப்பட்டது; இனி, குளிர்ச்சி கொண்ட புனமென்றுமாம். எற்பட என்றவிடத்துப் படுதல், தோன்றுதல்; தழையுடை அணிதற்கும், தழைகொண்டு வருதற்கும் ஞாயிறு மறைந்த இருள்மாலைப்போது பொருந்தாமையின், இவ்வாறு உரைக்கப் பட்டது; அம்மாலைப் போது புனங்காவற்கும் இயையாமை அறிக. அடைச்சுதல், சூடுதல். மேவல், விரும்புதல். நெஞ்சுணக் கூறல், ஐயந் திரிபின்றித் தெளிய உணருமாறு கூறுதல்; “எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி’’1 எனப் பிறரும் வழங்குதல் காண்க. எயிறு உண்டல், முக்கி2 கொடுத்தல். குறியிடம் தலைமகளால் குறிப்பிடும் இயல்பிற்றாகலின், காண்செய் குறியிடம் என்றார். “களம்சுட்டு கிளவி கிழவிய தாகும்”3 என்ப. பிணை யென்றமை யின் ஏறு, அதன் ஆ'82கிய கலையின் மேற்று. மூங்கிற் புதர்கள் உயர்ந்து வேலிபோல் நிற்கும் சிறுகுடி என்றற்கு உறுகழை நிவப்பின் சிறுகுடி என்றார். சிறுகுடி குறிஞ்சி நிலத்து ஊர். இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைமகள் தினைப்புனத்தே தழையுடை தொடுத்தணிந்து புனங்காவல் புரிந்தொழுகினா ளாகலின், அதனைச் சிறப்பித்துத் தளிர்சேர் தண்டழை தைஇ என்றும், குளிர்கொள் வியன்புனம் என்றும், இரண்டாங் கூட்டத்தும் மூன்றாங் கூட்டத்தும் சுனைப்பூக்குற்று மாலை தொடுத்து மலைச்சாரலில் விளையாடி மகிழ்ந்தமையின் அதனை விதந்து குறுஞ்சுனைக் குவளை அடைச்சி என்றும், நறுந்தண் சாரல் என்றும் கூறினான். இயல்பாகவே இன்மொழி வழங்கும் திறத்தின ளாகிய தலைமகள், நாணமிகுதியால் மிகச் சிலவாய சொற்களை யுடையளாயினமையின் மொழிகேட்கும் வேட்கை மிக்கு நின்றமை விளங்க, இன்சொல் மேவலின் இயலும் என் நெஞ்சும் என்றும், இருபாற்பட்ட தன் வினாவுக்கு யாது விடை கூறுவளோ எனத் தன் நெஞ்சு ஐயத்தால் அலமந்தமையின், நெஞ்சுண இனிக் கூறு என்றும், புதிது தோன்றிய காமக்கிளர்ச்சி யால் மயங்கிய நோக்கமும் செயலும் உடையளானமை பற்றி மடந்தை என்றும், தனது வேட்கை மிகுதி தோன்ற, நின் கூரெயிறு உண்கு என்றும் உரைத்தான். இங்ஙனம் ஆராமையால் பல சொற்களை யுரைத்த தலைமகனுக்கு விடைகூறும் வகையில் நாணமிகுதியால் நாவெழாமையின் தன் கட்பார்வையால் குறியிடம் காட்டிச் சென்றனள் என்றற்கு, மொழி யெதிர்வந்து தான்செய் குறிவயின் இனிய கூறி யென்றும். ஏறுபிரி மடப்பிணை கடுப்பச் சென்றனள் என்றும் தோழிக்கு முன்னுற வுணர்த்திய வாறு காண்க. புணர்ச்சிக்கண் கண்ட மென்மை பிரிவின்கண் மாறி வன்மையுற்றுத் தோன்றினமைபற்றி வேறுபட்டு என்றும், செல்புறம் நோக்கி விடுத்த என் நெஞ்சம், மொழியெதிர்வந்து நின்ற இன்முகம் நோக்கிப் பெற்ற கூட்டத்தை மறவாதாயிற் றென்பான், விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாது என்றும் உரைத் தான். இதனைக் கேட்ட தோழி, பிறளாகிய என் செவிப்படக் கூறலுற்றவன், இனியும் சேட்படுக்கின், பழியாம் என்பதுணர்ந்து அவனை அருளி நோக்குவது பயனாம் என வுணர்க. “மெய்தொட்டுப் பயிறல்”1 என்னும் நூற்பாவில், “சொல்ல வட் சார்த்தலிற் புல்லிய வகையினும்” என்றவிடத்து. “வகை என்றதனானே, இதனின் வேறுபட வருவனவும் கொள்க’’ என்று உரைத்து இப்பாட்டைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 205. இளநாகனார் மனையறம் புரிந்துவரும் தலைமகன் கடமையாய வினை யொன்று குறித்துத் தன்மனைவியின் நீங்கிச் செல்லவேண்டிய வனானான். புது மணம் புணர்ந்தொழுகும் புதுவாழ்வில் இவ் வினைவயிற் பிரிவு தோன்றியதும், மனைவிபாற் கொண்டுள்ள காதலுணர்வு அவனது இளமையுள்ளத்தைத் தன்வரை நிறுத்தவே, பிரிவாலுளவாகிய துன்பமும் தலைவியது ஆற்றாமையும், அது வழியாக அவள் மேனிவேறுபடின் தோன்றும் கவின்கேடும் அவனைப் பெரிதும் வருத்தின. கடமை நெகிழின் வரும் குற்றமும் அவன்மனக்கண்ணில் தோன்றிற்று. கடமைக்கும் காதலுக்கும் போர் உண்டாயிற்று. போர் நிகழிடமாகிய அவனது உள்ளம் பெரிதும் குழம்பிற்று. அந்நிலையில் அவன், தன்னைக் கடமை வழிச் செல்லுமாறு கட்டுரைக்கும் நெஞ்சினை நோக்கி, “நீ ஆற்றக்கருதும் வினைநிகழ்ச்சிக்குக் கடத்தற்கரிய பெரிய காட்டி னூடே செல்லவேண்டும்; வினையே ஆண்மைக்கு உயிர்ப் பாதலின், அதனை யெண்ணுமிடத்து மனைவிபால் உளதாகும் காதல் பெரிதன்று என்பாயாயின், பிரிவின்கண் காதலுணர்வு விளைவிக்கும் வருத்தமிகுதியால் தலைவி மேனியில் விளங்கும் மாமைக் கவின் கெட்டதென்றே கோடல் வேண்டும்’’ என்று வருந்திக் கூறினான். அவன் கூற்றின்கண், வினையாண்மையைப் பழிக்காது. இடையில் கடத்தற்குரிய கானத்தின் அருமையும், தலைவியது மாமைக்கவின் கேடும் எடுத்தோதிக், காதலுணர்வினும் கடமை யுணர்வு சிறந்து நிற்கும் திறம் குறிப்பாய்ப் புலப்படுதல் கண்ட இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடு கின்றார். இளநாகனாரது புலமையுள்ளத்து இளமைநலம் காதலினும் கடமைக்கண் சிறந்து நிற்பது இதனால் நாம் உணரக் கிடப்பது காண்க. அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத் தாளி நன்மான் 2வேட்டெழுபு கோளுகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களி றீர்க்கும் துன்னருங் கானம் என்னாய் நீயே குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய ஆள்வினைக் ககறி யாயின் 3நின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமுள் ஈங்கை 1நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும்இவள் மாமைக் கவினே. இது தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியதூஉமாம். உரை: அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து - அருவிகள் முழங்கும் பெரியமலைப்பக்கத்தே; ஆளி நன்மான் வேட்டு எழுபு - ஆளியாகிய நல்ல விலங்கு இரைகுறித்து வேட்டம் சென்று; கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய - கொள்ளுதல் வல்ல உகிரையும் அழகிய பொறிகளையு முடைய புலியொடு பொருது அதனைக் கொன்ற; வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக்களிறு - மிகவும் கூரிய உயர்ந்த வெண்மையான கொம்புகளையுடைய வெற்றி மிக்க களிற் றினைக் கொன்று; ஈர்க்கும் - தன் முழைஞ்சிற்கு ஈர்த்துக் கொண்டு செல்லும்; துன்னரும் கானம் என்னாய் - புகுதற் கரிய காடு என்பது கருதாமல்; குவளை உண் கண் அவள் ஈண்டு ஒழிய - குவளை மலர் போலும் உண்கண்களையுடைய இவள் இங்கே தனிமையுற்றிருக்க; நீ ஆள்வினைக்கு அகறி - நீ ஆள்வினை கருதிப் பிரிந்து செல்லுகின்றாய்; ஆயின் -ஆரா யின்; நின்னொடு போயின்று - நின்னோடே உடன்சென்ற தாம்; படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் - படப்பையின்கண் உள்ள வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நெடிய அழகிய தளிர்; நீர் மலி கதழ் பெயல் தலைஇய - நீர்மிக்கு விரைந்து பெய்யும் மழையால் நனைந்தவழிப் பிறக்கும்; ஆய்நிறம் புரையும் இவள் மாமைக்கவின் - அழகிய தளிரின் நிறம் போலும் இவளுடைய மாமைக்கவின், எ-று. நீ துன்னரும் கானம் என்னாய்; அகறி; ஆயின், நின்னொடு இவள் மாமைக்கவின் போயின்று எனக்கூட்டி வினைமுடிவு செய்க. ஆளிநன்மான், அரிமாவகையுள் ஒன்று. உழுவை,புலி. வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களிறு என்றதனால், களிறு உழுவையை வென்றமை பெற்றாம். தொலைச்சிய, கொன்ற . என்னாய்: முற்றெச்சம். உண்கண், மை தீட்டிய கண். கொல்லும் ஓவும் அசைநிலை. தானே, கட்டுரைச் சுவைபட வந்தது. ஈங்கை முள்ளுடைய தென்பது, “முட்கொம்பீங்கை”1 எனவும் “கொடு முள் ஈங்கை”2 எனவும், நீரால் நனைந்த அதன் தளிர் மகளிர் மேனிக்கு உவமையாதலை, “மாரி ஈங்கை மாத்தளி ரன்ன அம்மா மேனி யாயிழை மகளிர்”3 எனவும் சான்றோர் கூறுதல் காண்க ஆய்நிறம், அழகிய நிறம். மாமைக்கவின். மாந்தளிரின் தன்மையை யுடைய நிறவழகு. ஒளியுடைமை புலப்படுதற்கு நீரில் நனைதல் வேண்டப்பட்டது. கூருகிரும் வாலெயிறுமுடைய பூம்பொறி யுழுவையைக் களிறு தன் வைந்நுதி வெண்கோட்டாற் கொன்றமை கூறினான், ஆளி நன்மானின் ஆற்றல் தோற்றுவித்தற்கு. அதனாற் பயன், தனது மனத்திண்மையை வென்று தன்வரை நிறுத்திப் பணி கொண்ட தலைவியது மாமைக் கவினின் மாண்பு சிறப்பித் துரைத்தவாறாம். அத்தகைய களிறாயினும் அஃது ஆளி நன் மானால் கொல்லப்பட்டமை கூறியதனால். தலைவியது மாமைக் கவின் தன் பிரிவிடத்துளதாகும் பசலையால் உண்ணப்பட் டொழியும் என்றும் கூறியவாறு. இவ்வாறு தலைமகள்கவின் பசலையால் கெடுவது இறைச்சியால் சுட்டப்பட்டமையின், வெளிப்படையாக இவள் மாமைக்கவின் நின்னொடு போயின்று கொல் என்று தன் துணிவும் விரைவும் தோன்ற இறந்தகால வாய்பாட்டாற் கூறினான். செல்லுதற்குரிய கானத்தின் கொடுமை யுணர்ந்தும் அஞ்சாது செல்வது கருதியது பற்றி நெஞ்சினை வியந்து துன்னருங் கானம் என்னாய் என்றும், எனினும் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலியை நினையாது ஆள்விணையைத் துணையாகக் கொண்டது குற்றமென்பான், குவளையுண்கண் இவள் ஈண்டொழிய என்றும், ஆள்வினைக்கு அகறி என்றும், இங்ஙனம் முன்னுக்குப்பின் முர'82ன செயல் நின்பால் நிகழ்தல் ஆராய்தற்குரிய தாயினமையின் ஆயின் என்றும், ஆராய்ந்த வழி இவளது மாமைக்கவின் நின்னோடே கழியு மென்பது தெளியப்பட்ட தென்பான், நின்னொடு போயின்று கொல்லோ இவள் மாமைக்கவின் என்றும் கூறினான், இவளை வாழ்க்கைத் துணையாகக் கோடற்கு முதலாய் நின்னை இவள் பாற் ஒன்றுவித்துப் பிணித்தது இம்மாமைக் கவின் என்பான் அதனையே விதந்து இவள் மாமைக்கவின் என்று எடுத் தோதினான். “ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை’’1 ஊக்கப் படும் தகுதி யுடைத்தன்று என்பது. மாமைக் கேடு குறித்து நெஞ்சு செலவழுங்கினும், செலவின்கண் தோன்றும் பசலை தலைமகன் புணரப் பிரிதலும் பிரியப் புணர்த்தலுமாகிய இயல்பிற்றாய், ஆள்வினைக்கேடு போல மாறாப்பழியும் வசையும் பயப்பதின்மை யின், தலைவன் அதனை நினைந்து பிரிதலையே செய்வான் என்று அறிக. “செலவிடையழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்”2 என ஆசிரியர் கூறுதல் காண்க. “கரணத்தி னமைந்து முடிந்தகாலை”3 என்ற நூற்பாவின்கண், “வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்” என்பதன் உரையில் “விழுமமாவன பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவோமோ தவிர்வேமோ என வருந்திக் கூறு வனவும், இவள் நலன் திரியுமென்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்” என்று கூறி இப்பாட்டைக் காட்டி, “இஃது இவள் நலனழியு மென்று செலவழுங்கியது” என்பர் நச்சினார்க்கினியர். 206. ஐயூர் முடவனார் இவர் பெயர் ஐயூர் மூவனார் என்றும் புறப்பாட்டு ஏடுகளிற் காணப்படுகிறது. முடவன் என்ற பெயரை நோக்க, மூவன் என்ற பெயரே உண்மையாகலாமென நினைத்தற்கு இடமுண்டு. ஆயினும் முடவனார் என்ற பெயரே ஏடுகள் பலவற்றிலும் ஏனைத்தொகை நூல்களிலும் காணப்படுவது பற்றி அதுவே ஈண்டுக் கொள்ளப்படுகிறது. ஐயூர் என்ற பெயருடைய வூர்கள் தமிழகத்தில் பலவுள்ளன. அவற்றுள் பாண்டி நாட்டில் ஐயூ ரென்றும், சிற்றையூர் என்றும் பேரையூர் என்றும் பல ஊர்கள் காணப்படுகின்றன. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி யென்பானையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் இவர் பாடியன எனச் சில பாட்டுக்கள் புறநானூற்றுள் கோக்கப்பட்டுள்ளன. அவருள் மாறன் வழுதியின் சிறப்பை நேரிற்கண்டு “நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலு மில்லை, வளிமிகின் வலியு மில்லை ஒளிமிக்கு, அவற்றோரன்ன சினப்போர் வழுதி என்று பாராட்டி யுள்ளார்; கிள்ளிவளவன் இறந்த பின்னும் இருந்தவராகலின், அவன் இறப்பின்கண் இவர் கையற்றுப் பாடுமிடத்து, “புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை, விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன, சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன், கொடி நுடங்குயானை நெடுமா வளவன், தேவருலக மெய்தினன்” என்று குறிக்கின்றார் . இனி மதுரை மாவட்டத்துத் திண்டுக்கல்லுக்கு மேற்கில் உள்ள மலைத் தொடரில் விளங்கும் தோன்றிக்குடியில் பண்டைநாளில் வாழ்ந்த தாமன் என்ற செல்வப்பெருமகனை இவர் பாடியிருக்கின்றார்; அவ்வூர்க்குத் தென்பகுதியில் நிலக் கோட்டை வட்டத்தில் ஐயூர் என்ற பழமையான ஊரொன்றும் உளது. தோன்றிக்கோன் இச்சான்றோரது நல்லிசைப் புலமைநலம் கண்டு செய்த வள்ளன்மையை வியந்து இவர் அவனைப் பாடிய பாட்டு அவனை, “அறவர் அறவன் மறவர் மறவன், மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்” என்றும் குறிக்கிறது. அவனை அவர் தாம் ஊர்ந்து செல்லும் வண்டியை ஈர்த்தற்கென ஒருபகடு வேண்டினராக, அவன் “விசும்பின் மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை, ஊர்தியொடு நல்கினான்” என்று பரிவுடன் பாடு கின்றார். இவற்றை நோக்க, இவரது ஐயூர் நிலக்கோட்டை வட்டத்து ஐயூர் என்று கோடல் வலியுடையதாகத் தோன்றுகிறது. செல்லிக்கோமான் ஆதன் எழினி பெரிய களிறொன்றின் நெஞ்சில் நெடுவேல் பாய்ச்சி வென்றவரலாறொன்றையும் இவர் தாம் பாடிய அகப்பாட்டொன்றில் குறிக்கின்றார். இவருடைய பாட்டுக்கள் ஏனைப் புறநானூறு குறுந்தொகை என்ற தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. காதலாற் பிணிப்புண்டு களவின்கண் குறியிடத்தே இரவினும் பகலினும் தலைப்பெய்து இன்புற்று வரும் தலைமக்களுள், தலைவிபால் காதல் சிறந்து நிற்றலைக் கண்டதோழி, தலை மகனுக்குக் களவின்கண் உளவாகும் இடையூறுகளைக் குறிப்பாக உணர்த்தித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு தெருட்டும் கருத்துடையளானாள். தலைமகனோ அக்காதல் பின்னும் பெருகி உயிர்ப்பிணிப் பாகுமளவு வளர்தல் வேண்டுமென்ற எண்ணத்தால் களவினையே விரும்பி யொழுகினான். ஒருநாள் தலைமகன் சிறைப்புறத்தானாக, அதனை உணர்ந்த தோழி, தலைவியொடு உரையாடுவாள் போன்று, தலைமகன் செவிப்படும் வகையில் சில கூறலானாள்: “தோழி, நம்புனத்தே நிற்கும் தினைக் கதிர்கள் விளைந்து பால்கொண்டு தலைசாயத் தொடங்கின என்றும், இனி அவற்றிற் கிளியினம் படிந்து கதிர்கவருமென்றும், அவ்விடத்தே தட்டையும் கவணும் கொண்டு சென்று கடிதல் வேண்டும் என்றும் நெருநல் தந்தை போந்து தாயிடத்தே உரைத்தான்; அதுகேட்டு, நன்னாள் காட்டும் வேங்கையும் இனிமலர்வதாம் என்று சொல்லி, யாய் ஆங்கேநின்ற என்முகத்தை யாது கருதியோ நோக்கினாள்; அதனால், அவள் நீவிர் தினைப்புனம் செல்க என்பாளோ? செல்லாது இல்லின் கண்ணே செறிப்புண்க என் பாளோ? தலைமகற்கும் நமக்குமுள்ள கேண்மையை அறிவாளோ? அவள் கருதியது யாதோ?தெரிந்திலேன்’’ என்று கூறினாள். தோழியின் இக்கூற்றின்கண், தங்கள் களவினைத் தாயறிந் தனள் என்பதும், அதனால் இற்செறிப்பும், வரைதற்கு முயலின் அஃது எளிதிற் கைகூடுந்திறனும் தலைமகற் குணர்த்தி வரைவு கடாவும் குறிப்பு அழகுற அமைந்திருத்தல் கண்ட ஐயூர்முட வனார் இப்பாட்டினைப் பாடியுள்ளார். துய்த்தலைப் புனிற்றுக்குரல் 1பால்கொள் பிறைஞ்சித் 2தோடுதலைப் பிரிந்தன ஏனல் என்றும் துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் செவ்வாய்ப் பாசினம் 3கவரும்என் றவ்வாய்த் தட்டையும் 4புடைக்க கவணும் தொடுக்கென எந்தைவந் துரைத்தன னாக அன்னையும் நன்னாள் வேங்கையும் அலர்கமா இனியென என்முக நோக்கினள் எவன்கொல் தோழி 5சென்றீ கென்னுங்கொல் 6செறிப்பல் என்னுங்கொல் கல்கெழு நாடன் கேண்மை 7அறியுநள் கொல்லஃ தறிகலென் யானே. இது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது உரை: துய்த்தலைப் புனிற்றுக்குரல் - தலையில் துய்யினை யுடைய மிக்க இளங்கதிர்கள்; பால் கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன ஏனல் என்றும் - பால்கொண்டு முற்றித் தலைசாய்ந்து மூடியிருந்த தோடுகள் நீங்கத் தலைப்பட்டன தினைப்பயிர்கள் என்றும்; துறுகல் மீமிசைக் குறுவன குழீஇ - துறுகற் பாறைகளின்மேல் தினைக் கதிர்களைக் கொய்தற் பொருட்டுக் கூடியிருந்து; செவ்வாய்ப் பாசினம் கவரும் என்றும் - சிவந்த வாயையுடைய பசிய கிள்ளையினம் தினைக் கதிர்களைக் கவர்ந்து கொண்டு போகும் என்றும்; அவ்வாய் தட்டையும் புடைக்க கவணையும் தொடுக்க என- அப்புனத் திடம் சென்று தட்டையைப் புடைத்தும் கவணையை எறிந்தும் கிளிகளைக் கடிதல் வேண்டும் என்றும்; எந்தை வந்து உரைத் தனனாக - எம் தந்தை போந்து தாய்பால் உரைத்தானாக அது கேட்டு; அன்னையும் - நம் தாயும்; இனிநன்னாள் வேங்கையும் அலர்கமா என என்முக நோக்கினள் - இனித் திருமணத்துக் குரிய நன்னாளைக் காட்டும் வேங்கையும் மலர்வதாம் என்று சொல்லி என் முகத்தை உற்றுநோக்கினாள்; தோழி எவன் கொல் - தோழி, யாது கருதியோ; சென்றீக என்னுங்கொல் - தினைப்புனம் சென்று வருக என்பாளோ; செறிப்பல் என்னுங் கொல்புனம் செல்லவிடுதல் நன்றன்று மனைக்கண்ணே செறிப்புண்க என்று சொல்லுவாளோ; கல்கெழு நாடன் கேண்மை அறியுநள் கொல் - மலைநாடனது நட்பினை அறிந்து கொண்டாளோ; யான் அஃது அறிகலென் - யான் அவள் அறிந்ததிறம் அறியேன், காண் எ.று. ஏனல் குரல் பால் கொள்பு இறைஞ்சித் தோடு தலைக் கொண்டன என்றும், பாசினம் குறுவன குழீஇக் கவரும் என்றும், அவ்வாய்த் தட்டையும் புடைக்க, கவணையும் தொடுக்க எனவும் எந்தை வந்து உரைத்தனனாக, தோழி, அன்னையும், இனி வேங்கையும் அலர்கமா என உரைத்து என்முகம் நோக்கினாள்; எவன்கொலோ; சென்றீகென்னுங் கொல், செறிப்பல் என்னுங் கொல், நாடன்கேண்மை அறியுநள்கொல், அஃது யான் அறிகலென் காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தினைக்கதிரில் தினை மணிகட்கு இடையே கூரிய மயிர்க்காம்பு போல் நிற்பனவே ஈண்டுத் துய்யெனப் படுகின்றன. தோடுமூடப்பெற்றுத் தோன்றும் கதிர் முற்றத் தொடங்கியதும் மெல்ல மெல்லத் தோடு விரிந்து நீங்கிய செவ்வியில் புனிற்றுக்குரல் எனப்படும். புனிறு, ஈன்ற அணிமையிலுள்ள செவ்வி. நன்கு முற்றுமிடத்துத் தினையின்கண் பால் காணப்படுதலின் பால்கொள்பு என்றும், முற்றிய தினை மணிகளைத் தாங்கமாட்டாத மெல்லிய கொம்பாதலின் அது தலைசாய்ந்துவிடுதல் பற்றி இறைஞ்சி யென்றும், முற்றிய கதிர் செவ்வே விளைதற்கு வெயிலும் காற்றும் நிறைய வேண்டியிருத் தலின் தோடுகள் உலர்ந்து உதிர்ந்து போவதனால் தோடுதலைப் பிரிந்தன ஏனல் என்றும் கூறினார். மலை குன்றுகளின் பக்கத்தே தோன்றும் கரிய பெரிய தனித்தனிப் பாறைகளைத் துறுகல் என்பர். குறுதல், கொய்தல், கிளியைப் பாசினம் என்பது வழக்கு; “வளைவாய்ப் பாசினம்”1 என்பது காண்க, தட்டை, நிலத்தில் தட்டியவழி மிக்க ஓசையெடுக்கும் ஒருவகைக் கிளிகடிகருவி கவணை, கவண். வேங்கை மலருங் காலத்தில் மக்கள் திருமணங் களை நிகழ்த்துவது பற்றி நன்னாள் வேங்கை என்று வழங்கினார். மா: வியங்கோள் அசைநிலை. சென்றீக: முற்றுவினைத் திரி சொல், கொல் : ஐயவிடைச்சொல். சிறைப்புறமாக வந்து நின்ற தலைமகனைக் கண்ட தோழி தலைமகளை அவ்விடத்துக்குக் கொண்டு சென்று அவளொடு உரையாடுபவள் போலத் தலைமகன் செவிப்படுமாறு, “தோழி, தினைப்புனம் சென்று போந்த தந்தை தினைவிளைவு கூறி அதனைக் கொய்தழிக்கும் வகையில் கிள்ளையினம் குழுமு கின்றன என்பானாய், குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன ஏனல் என்றும், செவ்வாய்ப் பாசினம் குழீஇக் கவரும் என்றும், அதனால் நாம் செய்ய வேண்டுவன இவை யென்பான் தட்டையும் புடைக்க கவணையும் தொடுக்க என எந்தை வந்து உரைத்தனன் என்றும் கூறினாள். புனங்காவற் போதன்றி வேறு காலங்களில் வேண்டப்படாது மனையின்கண் ஒடுக்கப்படுதலின், தட்டை கவண் முதலிய கிளிகடி கருவிகளைச் செம்மை செய்துவைத்தல் வேண்டித் தட்டையும் புடைக்க, கவணையும் தொடுக்க எனத் தாய்க்கு உரைத்தான் என்க. தினையறுத்தபின் புனவர்க்கு வேண்டிய விளை பொருளும் புனத்தே வேறு தொழிலின்மையும் உளவா தலின், அவர்கள் திருமணமுதலிய சிறப்புக்களில் கருத்தைச் செலுத்துப வாதலால், மணத்துக்குரிய செவ்வி எய்திய மகட்குத் திருமணம் செய்தல் வேண்டுமென்ற குறிப்பைத் தந்தைக்குக் குறிப்பாளாய் அன்னையும் நன்னாள் வேங்கையும் அலர்கமா இனி என்றாள். மணம் செய்து கோடற்குரியவள் மகளாதலின் அவளையும் அதற்கு மதியுடம்படுத்தல் வேண்டி, வேங்கை நன்னாள் அலர்க என்றமையின், அவள் குறிப்பறிவாளாய்த் தோழியை நோக்கினாள், தோழியொடன்றி மகளொடு அதனை நேரே யுரையாளாகலின். ஆயினும், தோழி, தலைமகற்கு அவ் வுரையாட்டினை அறிவிக்குமாற்றல் தலைவியொடு கூற்று நிகழ்த்துதலால் என்முகம் நோக்கினள் என்றும், என்னைநோக்கு தலின் நம் களவொழுக்கத்தை நம் தாய் அறிவள் போலும் என்று ஐயுற்றமை தோன்ற, எவன் கொல் தோழி என்றும் தோழி கூறினாள். தந்தையொடு உரையாடியது தினைப்புனத்துக்குச் செல்லவிடு வளென்ற குறிப்பும், என்முகம் நோக்கியது செல்லவிடாது இல்லிடத்தே செறிப்பள் என்ற குறிப்பும் தோன்ற நிற்றலின், சென்றீக என்னுங்கொல் செறிப்பல் என்னுங் கொல் என்றும், இற்செறித்தற்குக் காரணம் தலைமகனது நட்பினை அவள் அறிந்தாளாதல் வேண்டுமென்றற்குக் கல்கெழு நாடன் கேண்மை அறிந்தாளாதல் வேண்டுமென்றற்குக் கல்கெழு நாடன் கேண்மை அறியுநள்கொல் என்றும், அதனை அவள் அறிந்தவாறு தனக்குத் தெரியாது என்றற்கு அஃது அறிகலென் யான் என்றும் கூறினாள். இது கேட்டுத் தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 207. ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் ஆவூர் கிழார் புறநானூற்றிற் காணப்படும் சான்றோர்களுள் ஒருவர். ஆவூர் என்ற பெயருடைய வூர்கள் தஞ்சை வடவார்க் காடு ஆகிய மாவட்டங்களில் உள்ளன. ஆவூர் வடவார்க்காடு மாவட்டத்துத் திருவண்ணாமலை வட்டத்து ஆவூராக இருக்கலா மெனப் புற நானூற்றுட் கூறினாம். அவர் மகனாரான கண்ணனார் தம் தந்தையை யொப்பச் சிறந்த நல்லிசைப்புலவராக விளங்கு கின்றார். யானை உயிர்த்தலால் வேங்கையின் பொன்னிறப் பூக்கள் உதிர்தல், கொல்லன் உலைக்களத்திற் பழுக்கக் காய்ந்த இரும்பை அடிக்குமிடத்துத் தெறிக்கும் பிதிர்வுகட்கு ஒப்ப விளங்கும் என்று கூறுமுகத்தால் தமது நுண்மாண்புலமையைத் தாம் பாடிய அகப்பாட்டொன்றால் இவர் வெளிப்படுத்துகின்றார். இவர் பாடிய பாட்டு அகநானூற்றுள் கோக்கப்பட்டுள்ளது. களவின் கண், காதல் கைம்மிக்குத் தலைமகனை இன்றியமையாளாகிய தலைமகளது மேனிக்கண் தோன்றிய வேறுபாடு அவளுடைய செவிலிக்கு மனக்கலக்கத்தை உண்டுபண்ணிற்று. தலைவி யுள்ளத்தே முறுகியிருக்கும் காதலை யுணராமல் தலைமகனும் வரைவினை நீட்டித்து வந்தான். இந்நிலையில் நொதுமலர் சிலர் உண்மையறியாமல் தலைமகள் பெற்றோர்பால் மகட்கொடை வேண்டி வருவாராயினர். அதனை அறிந்த தோழிக்குத் தலைவி யின் தமர் தலைமகற்கு மறுத்து அவர்கட்கு மகட்கொடை நேர்வர் கொல் என்ற ஐயம் தோன்றிற்று. உடனே அவள் தலைவி குறிப்புணர்ந்து தன்தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நிற்பாளா யினள். தமிழ்மக்கள் வாழ்வில் பெண்டிர் ஒருவனை மணத்தல் தான் அறமென்று கண்டிருந்தனர்; “இருமணம் கூடுதல் இல்லியல் பன்று”1 என்பர் ஒருவற்குத் தமது உள்ளத்தை நல்கின் பின்பு அதனை மீட்டு வேறொருவன்பால் செலுத்தார்; தான் காதலித்த ஆண்மகனுக்கு வாழ்க்கைப் பட்டவள் அவனோடே உயிர் வாழ்ந்து அவன் இறப்பின் அவனோடு உயிர்விடுதலோ, அன்றிக் கைம்மை மேற்கொண்டு மறுபிறப்பில் அவனையே கணவனாகப் பெறுதற்கு நோற்றலோ செய்வதன்றி வேறொருவனை மணத்தல் இல்லை. இஃது அவர்கட்கு அறமாதலின், தாம் காதலித்த ஆண் மகனையன்றி வேறொருவன் தம்மை மனைவியாகப் பெறல் வேண்டிப் பெற்றோர்களை மகட்கொடை நேருமாறு கேட்பது தெரியுமாயின், உடனே அவர்கள் தமக்குரிய அறத்தின்கண் நின்று தாயர் முதலியோர்க்குத் தம் காதலை யுணர்த்துவர். அதுவே அறத்தொடு நிற்றல் என்பது; அஃது அறத்தொடுநிலை யெனவும் வழங்கும். அவ்வாறு நிற்குமிடத்து மகளிர் தமக்கும் காதலனாகக் கொண்ட ஆண்மகனுக்கும் தொடர்புண்டாய திறத்தை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் நிலைமைக் கேற்ப உரைப்பர். இம்முறையால் தோழி களவிற்குச் சிறந்த தாயாதல் பற்றிச் செவிலியை அணுகி, “அன்னாய், தலைமகளது உள்ளத்திற் கோயில்கொண்ட தலைமகனது தேர் நமது பாக்கத்துக்கு நாடோறும் வந்து கொண்டிருக்கிறது; அவனுக்கும் தலைமகட்கும் உளதாய காதலுறவை இவ்வூரவர் அலர் கூறுகின்றனர்; இனி அவர் நம் பாக்கத்துக்குப் போந்து வறிது பெயர்குவாரல்லர்; இதனை மனத்துட் கொண்டு மகட்கொடை வேண்டி வந்தோரை மறுத்தல் முறையாம்” என்பது படக் கூறலானாள். தோழியின் இக்கூற்று, தலைவி தலைமகன்பால் காதல் கொண்டு உறைதலை, அவன் தேர்வரவு காட்டியும் அவனது காதற்சிறப்பை அவனது தேர் வறிது பெயர்க்குவதன் றென்று ரைத்தும் புலப்படுத்தல் கண்ட கண்ணனார் அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். இப்பாட்டின் பிற்பகுதி ஏடுகளில் சிதைந்தும் வேறுபட்டும் காணப்படுகிறது. கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென நெடுந்தேர் பண்ணி வரலா னாதே குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோட்சுறா எறிந்தெனக்1 கீட்படச் சுருங்கிய 2முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல் 3தலைகெழு பெருமீன் முன்னிய கொலைவெஞ் சிறாஅர்க் 4கோட்பட் டனளே. இது, நொதுமலர் வரைவு வந்துழித் தோழி செவிலிக்கு அறத் தொடு நின்றது. உரை : கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை - கண்டல்களை வேலியாகவுடைய உப்பங்கழிகளால் சூழப்பட்ட தோட்டங் காலில்; முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை - முள்ளி களால் மேலே வேயப்பட்ட குறுகிய கூரையையுடைய வீடு களில் வாழும்; கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென - கொழுவிய மீன்களைப் பிடிக்கும் பரதவருடைய ஊர்முழு வதும் ஆரவாரிக்கும்படி; நெடுந்தேர் பண்ணிவரல் ஆனாது - காதலருடைய நெடியதேர் விரைந்த செலவிற்கமையப் பண்ணப் பட்டு நாளும் வருவது தவிர்வதில்லை; குன்றத்தன்னகுவவு மணல் நீந்தி - குன்று போல் நிற்கும் குவிந்த மணல் மேடுகளைக் கடந்து; வந்தனர் பெயர்வர்கொல் - இவண்வந்து செல்லும் காதலர் வறிது செல்வர்கொல்லோ; அற்றாயின்: அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ - இரவுப்போதில் இளையரும் முதியரும் தத்தம் சுற்றத்துடனே கூடி; கோட்சுறா எறிந்தெனக் கீட்படச் சுருங்கிய - கொலைவல்ல சுறாமீனை எறிந்தனராக, அதனால் துண்டாகக் கிழிக்கப்பட்டுச் சுருங்கிய தனால்; முடிமுதி வலை கைக்கொண்டு - முடிகள் மிகக் கொண்ட வலையைக் கையிற்கொண்டு; பெருங்கடல் தலை கெழு பெரு மீன் முன்னிய - பெரிய கடலிடத்தே பொருந்திய பெருமீன்களைக் கருதிச் சென்ற; கொலைவெஞ்சிறார்க் கோட்பட்டனள் - மீன்கொலை விரும்பும் இளையவரால் கொள்ளப்பட்டவளாம் எ.று. பாக்கம், கல்லென, தேர் பண்ணிவரல் ஆனாது. நீந்தி வந்தனர் பெயர்வர்கொல்; பெயர்வராயின், கிளையுடன் குழீஇ எறிந்தெனச் கருங்கிய முடிமுதிர் வலை கைக்கொண்டு, பெருங் கடல் மீன்முன்னிய சிறார்க் கோட்பட்டனளாவள் காண் என்று கூட்டி வினைமுடிவு செய்க. கழிக்கரைக்கும் படப்பைக்கும் இடையே கண்டல்கள் வேலியாக நின்றமை தோன்றக் கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை என்றார். படப்பை, தோட்டங்கால், முண்டகம், கழிமுள்ளி மருதவைப்புக்களிற் காணப்படும் வேழம் போல இம்முள்ளி வகை கழிக்கரையிலும் கடற்கரையிலும் காடு போல் வளர்ந்திருக்கும்; இவற்றை அறுத்து ஆண்டு வாழும் நுளையர் தம் வீடுகட்குக் கூரையாக வேய்வது இயல்பு. பாக்கம், நெய்தனிலத்து ஊர். பெருமணற்பரப்பில் விரைந்து செல்ல வேண்டியிருத்தலின், தேர்க்குப் பண்ணுதல் இன்றியமையாதா யிற்று. கொலை புரியும் கொடுமையுடைமை பற்றிக் கோட்சுறா என்றார்; கோள், ஈண்டுக் கொலை குறித்தது. கீள். கிழிப்புண்ட துண்டு. சுறாவால் அறுபட்ட வலையினை மிகப்பல முடியிட்டுப் பயன் கொள்ளுமாறு விளங்க முடிமுதிர்வலை என்றார். வலை யிற்பட்டதனை முதற்கண் கொலைபுரிவது இளஞ்சிறார் செயலா தலின், அவர்களைக் கொலைவெஞ்சிறாஅர் என்றார். கோட் பட்டனள், எதிர்மறைக் குறிப்பு மொழி. நெடுந்தேர் பண்ணி வரலானாது என்றும், குவவு மணல் நீந்தி வந்தனர் பெயர்வர் கொல் என்றும் நின்ற கூற்றுக்களால் இஃது அறத்தொடுநிலை கண்ணிய தென்பது பெறப்படும். தலை மகளைப் போலத் தலைமகனும் அவளை இன்றியமையாப் பெருங்காதலன் என்றும், அவன் தேரூர்ந்து வருதல் தவிரான் என்றும் கூறுவாள், பாக்கம் கல்லென நெடுந்தேர் பண்ணி வாலானாது என்றாள். அவன் வரைவொடு வருதல் ஒருதலை என்றற்குப் பாக்கம் கல்லென வரல் ஆனாது என்றாளுமாம். குறியின் கண் உளவாய இடையீடுகள் பலவற்றையும் நீந்திப் போந்து கூடிய அவனது காதன்மை புலப்பட, குன்றத்தன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் என்றும், அவர்க்கு மறுத்து நொதுமலர்க்கு மகட்கொடை நேர்விராயின் அவர் முன்போற் பெயர்குவாரல்லர் என்றும், உள்ளுறையால் நொதுமலர் வரையின் தலைமகள் உயிர்வாழாள் என்றும், தலைமகனும் இறந்து படுவதன்றி உயிர்தாங்கிக் கொண்டு வறிது செல்லான் என்பாள், வந்தனர் பெயர்வர்கொல் என்றும் கூறினாள். இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச் சென்று கோட்சுறா எறிந்தாராக, அதனால் வலை துண்டிக்கப்பட்டாற்போலச் சான்றோர் போந்து மகட்கொடை வேண்டினாராகத் தமர் மறுத்தமையால் வரைவு முறிந்ததென்றும், கீட்படச் சுருங்கிய முடிபல கொண்ட வலையைக் கைக்கொண்டு பெருங்கடலிடத்துப் பெருமீனை முன்னிச் செல்லும் சிறார் போல, மகள்மறுத்தமை வாயிலாக நொதுமலர் போந்து மகட்கொடை வேண்டுகின்றன ரென்றும், அச்சிறாஅர்க்குப் பெருமீன் அகப்படாவாறு போலத் தலைமகளும் அவர்களால் வரையப்படாள் என்றும், கொலைவெஞ்சிறார் ஆகலின், அவர் கைப்படுவன இறந்துபடுதல் போலத் தலைமகளும் இறந்து படுவாள் என்றும் தோழி உள்ளுறுத்துரைத்தமை காண்க. விளக்கம் : “நாற்றமும் தோற்றமும்”1 என்ற நூற்பாவின்கண், “பிறன் வரைவாயினும்” என்றதற்கு இதனைக்காட்டி, இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது என்றும்,” இதனுள் “பாற்பட்டனள் எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற். கூறினாள் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 208. நொச்சி நியமங் கிழார் நொச்சிநியமம் என்பது காவிரியின் வடகரை மழநாட்டு ஊர்களுள் ஒன்று. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரியின் வடகரையில் இவ்வூர் இன்றும் இருக்கிறது; இப்போது இதன் பெயர் நொச்சியம் என மருவியுளது. இச்சான்றோரது இயற் பெயர் இந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தேயே மறைந்து போயிற்று. நொச்சிநியமங்கிழார் என்ற சிறப்பு மாத்திரம் நின்ற மையின், தொகுப்பாசிரியர் அதனை மட்டும் குறித்துள்ளார்: அகத்துறை பொருட்டுறை என்ற இரு துறையிலும் இனிய பாட்டுக்கள் இவராற்பாடப் பெற்றுள்ளன. வேங்கைப்பூக் கொய்யும் மகளிர் புலிபுலி என்பதும், அதுகேட்டு மக்கள் அவர்பால் செல்வதும், அவரைக் கொண்டு மக்கள் எட்டாத பூக்களைக் கொய்து கொள்வதும் பிறவும் இவரால் குறிக்கப் படுகின்றன. சுருங்கச் சொல்லின் இவருடைய பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளம் செறிந்தவை யெனின் அது மிகை யாகாது. மனைவாழ்வில் தலைமகன் மனைவியிற் பிரிந்து சென் று பொருள்செய்ய வேண்டிய கடமையுடையவனானான். அதனைத் தலைமகள் அறியின் பிரிவாற்றாள் என்ற அச்சத்தால் அவட்கு நேரிற் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தினான். அதனை உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்கு அறிவித்து வருந்தினாள். செயற்குரியவற்றைச் செய்யாமை ஆண்மகற்கு இழுக்காதலின், தோழி தலைவி வருந்தல் நன்றன்றென்பதைக் கருத்துட்கொண்டு, “தோழி, நீ இளையளாதலின் வாழ்க்கையின் இயல்பும் தலைவன் மனமாண்பும் அறியாமல் பிரிவு நினைந்து கண்ணீர் சொரிந்து கையறவுபடுகின்றாய். காதலர் நின்னிற் பிரிந்து செல்பவரல்லர்; செல்ல நேரினும் செலவிடைத் தோன்றும் பிரிவுத் துன்பத்தை ஆற்றும் இயல்பினரல்லர். நின்னைப் பெரிதும் காதலிப்பவரா தலின் அவர் சிறந்த அன்பும் மென்மையும் உடையர்; மேலும் பிரிவாற்றாத நம்மினும் அவர் தாம் மிக்க இரக்கமுடையவ ராதலால், செல்லுமிடத்து மேற்கொண்ட பொருள், குறித்த பொழுதின்கண் முடியாதாயினும், அவர் தவிராது வந்து சேர்வர். ஒருகால் அவர் மறப்பினும், மழைமுகில் படர்ந்துசென்று அவர்க்குத் தாம் வற்புறுத்த பொழுதினை நினைப்பித்து உடனே வந்து கூடச்செய்யும்காண்” என்று தேற்றினாள். தோழியின் இத்தெளிப்புரையின்கண், தலைமகனது பிரியா மையும் பிரிவும் பிரிந்தவழி ஆற்றியிருத்தற்குரிய திறமும் ஒருங்கே கூறப்பட்ட ஒட்பங்கண்டு வியந்த நொச்சிநியமங்கிழார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்’. ‘1விறல்மிகு விளங்கிழை 2நெகிழச் சாஅய் 3அறலவிர் நுண்டுளி யிடைமுலை நனைப்ப விளிவில 4கலிழும் கண்ணொடு பெரிதழிந் தெவனினைபு வாடுதி சுடர்நுதற் குறமகள் செல்வா ரல்லர்நங் காதலர் 5செல்லினும் நோன்மா ரல்லர் நோயே மற்றவர் கொன்னும் நம்புங் குரையர் தாமே சிறந்த அன்பினர் 6சாயலும் உரியர் பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் முடியா தாயினும் வருவர் அதன்றலை இன்றுணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும்இப் பெருமழைக் குரலே. இது, செலவுக் குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொற்றது. உரை : விறல்மிகு விளங்கிழை நெகிழச் சாஅய் - வலிமிக்கு விளங்குகின்ற இழைகள் நெகிழ்ந்து நீங்குமாறு மெலிந்து; அறல் அவிர் நுண்துளி இடைமுலை நனைப்ப - விளங்குகின்ற நுண்ணிய கண்ணீர்த்துளிகள் முலையகம் நனையும்படி; விளிவில கலிழும் - நீங்காது சொரியும்; கண்ணொடு பெரிது அழிந்து - கண்களுடனே மிகவும் வருந்தி; எவன் நினைபு வாடுதி - எதற்காக நீ அவர் பிரிவரென நினைந்து வாடு கின்றாய்; சுடர்நுதல் குறுமகள் - ஒளிவிளங்கும் நெற்றியினை யுடைய இளையவளே; செல்வாரல்லர் நம் காதலர் - பிரிந்து செல்லுதலைச் செய்யார்காண், நமது காதலர்; செல்லினும் - செல்வாராயின்; நோன்மார் அல்லர் நோய் - நின்னைப் பிரிந்து சென்றவழி எய்தும் பிரிவுத் துன்பத்தை அவர் பொறுக்க மாட்டார்; அவர் கொன்னும் நம்பும் குரையர் - மேலும் நின்னைப் பெரிதும் காதலிப்பராவர்; சிறந்த அன்பினர் - நின்பால் மிகச் சிறந்த அன்புடையவர்; சாயலும் உரியர் - விரைவிற் சுருங்கும் மென்மைப்பண்பும் தமக்கு உரிமையாக வுடையர்; பிரிந்த நம்மினும் இரங்கி - அவரால் பிரியப்பட்ட நம்மிடத்தே பெரிதும் இரங்கி; அரும்பொருள் முடியாதா யினும் - மேற்கொண்டு சென்ற அரும்பொருள் குறித்த காலத்து முடியாதாயினும்; வருவர் - அதனைக் கருதாது தான் குறித்த பருவவரவு கருதி வந்து சேர்வர்; அதன்றலை - அதன் மேலும்; இன்றுணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் - இனிய துணையாயினாரைப் பிரிந்தவர் உறையுமிடத்தை நாடிச் சென்று அவரைக் கொணர்ந்து கூட்டுவது போன்று உளது; இப்பெருமழைக் குரல் - இப்பெரிய மழைமுகிலின் முழக்கம், எ-று. குறுமகள், இழைநெகிழச் சாஅய், நுண்டுளி நனைப்ப, கலிழும் கண்ணொடு பெரிதழிந்து, எவன்நினைபு வாடுதி; காதலர் செல்வாரல்லர்; செல்லினும் அவர் நோய் நோன்மா ரல்லர்; நம்புங்குரையர், அன்பினர், உரியர்; பொருள் முடியாதா யினும் வருவர், மழைக்குரல் தருவது போலும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எளிதில் நெகிழாத வலிமை யுடைமை பற்றி விறன்மிகு விளங்கிழை என்றார்; “விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்”1 சொட்டுகின்ற நீர் அறல் எனப்படும்; அந்நீர்த் துளியை அறலவிர் நுண்டுளி என்றார். நீர்வார்தல் இடைய றாமை தோன்ற விளிவில கலிழும் கண்ணெனப்பட்டது. மற்று, அசைநிலை, கொன், பெருமையாய மிகுதி குறித்து நின்றது. குரை: அசைநிலை. பெருமையும் உரனுமேயன்றிச் சாயலும் ஆடவர்க்குரிய பண்பு; “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை”1 என்பது காண்க. இன்றுணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் என்றது தூது சென்று தலைவரைக் கொணரும் இயல்பிற் றென்பதுபட நின்றது. தலைமகன் பிரியக் கருதுவதனைக் குறிப்பால் அறிந்த மாத்திரையே. தலைமகட்கு ஆற்றாமையும் அதனால் மேனியில் வேறுபாடும் அவலமும் தோன்றி வருத்தினமையின், அதனை விளங்கிழை நெகிழச் சாஅய் என்றது, உடம்புநனி சுருங்கல், அறலவிர் நுண்டுளி நனைப்ப என்றது, அழிவில் கூட்டத்து அவன்பிரிவாற்றாமை. தலைமகன் குறிப்பு நீ கருதியவாறு பிரிவு கண்ணிய தன்று என்றற்கு, செல்வாரல்லர் நம் காதலர் என்றும், செல்லாதாரைச் செல்வரெனக் கருதி நீ பெரிதும் வருந்துவது கூடாதென்றற்குப் பெரிதழிந்து எவன்நினைபு வாடுதி என்றும், இதற்குக் காரணம் நின் இளமை யன்றி வேறில்லை என்பாள் சுடர்நுதல் குறுமகள் என்றும் தோழி கூறினாள். தோழியை மறுத்துத் தலைமகள் காதலர் குறிப்புப் பிரிவுகண்ணிய தென்று வற்புறுத்தினாளாக, அவட்கு, தோழி, நீ கருதுமாறு அவர் செல்வராயின், அக்காலையில் தோன்றி வருத்தும் பிரிவுத் துன்பத்தை அவர் பொறாராகலின் இடையே மடங்கி மீள்வர் என்பது பட, சொல்லினும் நோன்மாரல்லர் நோயே என்றாள். அதுகேட்கும் தலைவி அவர் ஒன்றைத் தொடங்கின் இடையே மடங்குதல் இலரென்றாளாக, அவட்குத் தோழி “அஃது ஒக்கும்; ஆயினும் அவர்க்கும் நின்பாலுள்ள காதல் பெரிது என்பாள், அவர் கொன்னும் நம்பும் குரையர் என்றும், சிறந்த அன்பினர் என்றும், தன் கூற்றால் தலைமகன் ஆண்மைக்கு மாசுண்டாகாமை நோக்கி, வணங்கா ஆண்மையும் வணங்கிய சாயலும் உடைய ரென்பாள் சாயலும் உரியர் என்றும் கூறினாள். சாயலும் என்ற உம்மையால் ஆண்மையுரிமை தழுவிக்கொள்ளப்பட்டது. அஃது இயல்பாதலின், பொருள் கருதிச் சென்றமையின் அவர் பாலுள்ள அன்பும் சாயலும் அவர்செலவினைத் தடுத்து நிறுத்தும் மதுகை யுடையவாகா என்று தலைவி கருதினாளாக, பொருளினும் அவர்க்கு நம்பால் உளதாய அருள் பெரிதென்பாள், பிரிந்த நம்மினும் இரங்கி என்றும், அதனால் பொருள் முடியாதா யினும் வருவர் என்றும் கூறினாள். முடியாதாயினும் என்றது, மேற்கொண்ட பொருளை முடியாதொழியார் என்பதைப் பெறுவித்தது. எத்திறத்தாராயினும் தன்னை நாடியவழித் தனக்கு அடிமைப்படுத்தி அவரது உள்ளத்தைப் பிணிக்கும் பெருவன்மை பொருட்கு உண்டாதலின், அதனைச் செய்வோர் நினைவும் செயலும் அதன்பால் ஒன்றுதலின், அவர் தாம் குறித்த பொழுதில் தவறாது வருவதென்றற்கு வாய்ப்பில்லை என்று கூறிய தலைவிக்கு, ஒருகால் அவர் மறப்பாராயின், அவர் குறிக்கும் கார்ப்பருவ வரவை மழை முகில் எழுந்து சென்று தன் இடிக்குரல் காட்டிப் பிரிந்துறையும் அவருடைய காதலியை நினைப்பிக்கும் என்பாள், இன்றுணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் இப் பெருமழைக் குரல் என்று தோழி கூறினாள். எனவே, காதலர் பிரிவாரல்லர்; பிரியினும் குறித்த பொழுதில் வாராதொழியார்; ஒருகால் அவர் மறப்பினும் மழைமுகில் தூது சென்று அவரைக் கொணரும் என்று தோழி வற்புறுத்தியவாறு. இதனால் தலைவி ஆற்றியிருப்பாளாவது பயன். 209. கச்சிப்பேட்டு நன்னாகையார் இவர்பெயர் கச்சி நன்னாகையார் என்று தேவர் ஏட்டில் காணப்படுகிறது. அச்சுப்படியில் இப்பாட்டைப் பாடியவர் நொச்சிநியமங்கிழார் என்று குறிக்கப்பட்டிருப்பது, ஏடுபெயர்த் தெழுதப் பெற்றபோது நேர்ந்த பிழை யாகலாம். காஞ்சிமாநகரின் ஒரு பகுதிக்குச் கச்சிப்பேடு என்பது பெயர்; இஃது இடைக்காலக் கல்வெட்டுக்களிலும்1 காணப்படுகிறது. நன்னாகனார் என்பது ஆடவரைக் குறிப்பது போல, நன்னாகையார் என்ற இப்பெயர் பெண் பாலார்க்குரியதாகத் தோன்றுதலின் இவர் ஒரு நல்லிசைப் புலமை மெல்லியலார் என்று தெளிவாகிறது. இவர் பாடியன வாகச் சில பாட்டுக்கள் குறுந்தொகையில் உள்ளன. இயற்கைப்புணர்ச்சி வகையால் தலைவியின் காதலுறவு பெற்ற தலைமகன், அவளுடைய உயிர்த்தோழியின் நட்புப் பெற்றாலன்றித் தான் மேற்கொண்ட காதலொழுக்கம் இனிதின் இயலாதென்பது தெளிந்து அவளுடைய நட்பைப் பெற முயல் வானாயினன்; புனங்காவல் மேற்கொண்டு தினைக்கொல்லையில் தலைமகளும் தோழியும் இருப்பது கண்டு அங்கே சென்று தோழியொடு உரை நிகழ்த்துவானாய்த் தன் காதற்குறிப்பும் தலைவியின் இன்றியமையாமையும் குறிப்பாய் உணர்த்தினான். தலைவியின் மனக்குறிப்பைத் தான் அறியாமையாலும் தலை மகனது உள்ளத் துண்மையை நன்கு உணராமையாலும் தோழி நெஞ்சில் அச்சமெய்தித் தலைமகனை மறுத்துச் சேட்படுக் கலுற்றாள். அதனால் கையறவுற்றுக் கலங்கிய தலைமகன், தோழியின் அருகே நின்று அவள் செவிப்படுமாறு தன் நெஞ்சிற்குக் கூறுவானாய், “நெஞ்சே, நம் உயிர்வாழ்க்கைக்கு உறுதுணையும் நாம் எய்திவருந்தும் வேட்கைநோய்க்கு மருந்துமாகிய தலை மகள் சில விதைகளை வித்திப் பல விளைவித்துக்கொள்ளும் குறவருடைய தினைப்புனத்தே இருக்கின்றாள், அவளுடைய இனிய சொற்களை இங்குத் தினைகவர்வான் வரும் கிளிகள் நன்கு அறிந்துள்ளன; அவை என் செவிப்படின் என் வருத்தமெல்லாம் ஒழிந்துபோகின்றன; அவளுடைய சொல்லோசை என்செவி கேளாது ஒடுங்குமாயின், என் உயிரும் உணர்வும் செயலும் யாவும் ஒழிந்துபோகின்றன; இத் தோழி மாத்திரம் ஏன் இவற்றை உணரா தொழிகின்றாள்?” என உரைத்தான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், தலைமகட்கும் தனக்கும் உளதாய உறவினைப் புலப்படுத்தித் தான் அவளை இன்றியமை யானாதலையும் தோழி அதனையுணர்ந்து துணைபுரிதல் வேண்டு மென்பதையும் குறிப்பாகவும் தெளிவாகவும் தலைமகன் புலப் படுத்திய நயம் கண்ட கச்சிப்பேட்டு நன்னாகையார் இப் பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார். மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் தளிபதம்1 பெற்றுக் கானுழு குறவர் சிலவித் தகல2 வித்திப் பலவிளைத் திறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் மழலையங் குறுமகள் மிழலையந்3 தீஞ்சொல் கிள்ளையும் தாம்அறி பவ்வே எனக்கே 1படுங்காற் பையுள் தீரும் படாஅது தவிருங் காலை யாயினென் உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே. இது, குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றா னாய்த் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. 2தோழி கேட்டுக் குறை முடிப் பாளாவது பயன். உரை : மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லை - மலைப்பக் கத்தே இடம் கண்டு வரம்பிட்டு வளைத்துப் பண்படுத்திய கொல்லையில்; தளிபதம் பெற்றுக் கானுழு குறவர் - மழை பெய்தமையால் உழவுக்குரிய செவ்வி வாய்க்கப்பெற்று அதனை உழுது பயன்கொள்ளும் இயல்பினராகிய குறவர்; சில வித்து அகல வித்தி - சிலவாய விதைகளைக் கொண்டு வித்துக்கட் கிடையே இடமுண்டாகத் தூவி விதைத்து; (உடன்) பல விளைத்து இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் - உடனடி யாகப் பல தினைகளை விளைத்துக் கதிர் சாய்ந்து உயர்ந்து நிற்கும் தினைப்பயிர் வளர்ந்த புனத்தின்கண்ணே இருப்பவ ளாகிய; மழலையங் குறுமகள் - மழலை மாறாத இளைய வளுடைய; மிழலையந் தீஞ்சொல் - பேச்சிடைத் தோன்றும் இனிய சொற்களை; கிள்ளையும் தாம் அறிப - மேய்வான் வரும் கிளிகளும் நன்கு அறிந்துள்ளன; எனக்குப் படுங்கால் பையுள் தீரும் - என் செவியிற்படும்போது, என்பால் தோன்றி வருத்தும் வேட்கைநோய் நீங்கிவிடுகிறது; படாஅது தவிருங் காலையாயின் - செவியிற்படாது ஒடுங்குமாயின்; என் உயிரோடு எல்லாம் உடன்வாங்கும் - என் ஆருயிரோடு அறிவு சால்பு முதலிய ஆண்மைப்பண்புகள் அனைத்தும் நீங்காநிற்கும். இத்தோழி அறியாது சேட்படுக்கின்றாளாகலின் யான் எங்ஙனம் ஆற்றுவேன்? எ.று. குறவர், கொல்லையில் தளிபதம் பெற்றுச் சிலவித்து அகல வித்திப் பல விளைத்தலின், குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் குறுமகள்; அவளுடைய தீஞ்சொல் கிளியும் அறிப; எனக்குப் படுங்காற் பையுள் தீரும்; படாஅது தவிருமாயின் என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்;தோழி இதனை அறியாது சேட்படுக் கின்றாளாகலின் எங்ஙனம் யான் ஆற்றுவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மலையின்கண் தினை விளைதற்குரிய இடம்கண்டு கொல்லை யமைக்க வேண்டுதலின் மலையிடம் படுத்து என்றும், அவ்விடத்தை வரம்பிட்டு உழவேண்டுதலின் கோட்டிய கொல்லை என்றும் கூறினார். வரம்பிட்டு வளைப் பது பற்றிக் கோட்டிய என்றார். கோட்டம், வளைவு. மழை பெய்யினும் உழவுக்குரிய செவ்வி வேறு தோன்ற வேண்டு மாகலான் தளி பதம் பெற்றுக் கானுழு குறவர் என்றார். இடம்படுத்துக் கோட்டம் அமைத்தற்கு முன் அவ்விடம் கானமாக இருந்தமையின் கான் என்றார். இன்றும் பாண்டிநாட்டவரும் கொங்குநாட்டவரும் புன்செய்க் கொல்லைகளைக் காடு என்பதே பெருவழக்கு. அகல வித்தல், வித்திடும் முறை, வித்தினின்று தோன்றும் பயிர்கட்கிடையே காற்றும் ஞாயிற்றொளியும் நன்கு நிலவுமாறு அமைந்தாலன்றி விளைவு நலமும் பெருக்கமும் எய்தாமையின் அகல வித்தல் முறையாயிற்று; ஆழவுழுது அகல விதை என்பது உழவுபற்றிய உலகுரையாகும். ஒரு விதையில் தோன்றிய பயிர் பல மணிகளை விளைத்தலின், சிலவித்து அகலவித்திப் பலவிளைத்து என்றார். வித்தி, வித்தியதனால் என்க. கதிரிடத்தேயுள்ள மணிகளின் பொறையாற்றாது தலை சாய்தல் இயல்பு. மழலை, ஈண்டு மழலை மொழி வழங்குதற்குரிய இளமை குறித்து நின்றது. மிழலை, மிழற்றப்படும் சொல். அறிப, அகரவீற்றுப் பலவறிசொல். பையுள், வருத்தம். உயிர் என்றவழி அதற்குரிய அறிவு நிறை சால்பு முதலிய பண்புகளும் அடங்கு தலின், எல்லாம் என்று ஒழிந்தார். வாங்குதல், கொண்டுசேறல்; வளைத்தலுமாம். தோழியிற் கூட்டம் பெற முயலுகின்ற தலைமகன் தன்னாற் கருதிக் கூறப்படும் தலைமகளைத் தோழி நன்கு உணர்ந்து கோடற்பொருட்டு இறங்குகுரல் பிறங்கிய ஏனலுள்ளாள் என்றான். இயற்கைப் புணர்ச்சியினும் வழிநிலைக் காட்சியினும் தலைமகள் தனித்துத் தலைக் கூடியபோது அவள் உரைத்த சொற்கள் நாண மிகுதியால் அரைகுறையாய் அன்பு நிறைந் திருந்தமையின் மழலையங் குறுமகள் என்றும், புனத்தின்கண் கிளியோப்புங் காலத்து எழும் ஓசையின்கண் நாணமோ பிறர் காண்ப ரென்ற அச்சமோ இன்றி இயல்பாய் இனிமை மிக்கிருத் தலின் அதனை மிழலையந் தீஞ்சொல் என்றும், அவள் குரலெடுத்து ஓப்பியவழி அவள் சொல்லோசை கிளிகட்குத் தம்மினத்தின் ஓசைபோலத் தோன்றினமையின் அவை சிறிதும் அச்சமின்றி இனிதிருந்துண்டல் பற்றிக் கிள்ளையும் தாம் அறிபவ்வே என்றும் கூறினான். தட்டையும் கவணையும் கொண்டவழி நீங்குதலும், குரலெடுத்து ஓப்பியவழி நீங்காமை யும் கண்டு இங்ஙனம் கூறினான் என்றுமாம். அவளை மெய்யுறக் காட்டிச் செவியால் சொல்கேட்டு இன்புறுவித்தலின், காணா வழிப் பிறக்கும் துன்பம் நீங்குதலால், எனக்குப் படுங்கால் பையுள் தீரும் என்றும், உண்டல் உறங்கல் முதலிய காலங்களில் கிளியோப்பல் தவிர்தலின் அக்காலையில் புனத்துக்குப் போந்த வழித் தான் அவளைக் காண்டலின்றிப் பெருந்துய ருழந்து கையறவு படுதலை, படாது தவிருங்காலை ஆயின் என்றும், என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே என்றும் கூறினான். “இங்ஙனம் தலைவியது காட்சியும் சொல்லும் என் மனக்கவலை போக்கி இன்புறுத்துவதையும், காணாமையும் சொற்கேட்ட லின்மையும் என் அறிவு நிறை ஆண்மைகளோடு கூடிய என் உயிரை வாங்கி வருத்துதலையும் அறியாது இத்தோழி என்னை மறுத்துச் சேட்படுக்கின்றாள். இனி எங்ஙனம் ஆற்று வேன்” என்பது குறிப்பெச்சம். அதனாற்பயன், தோழி கேட்டுக் குறைமுடிப்பாளாவது. தளிபதம் பெற்றுக் கானுழு குறவர் சிலவாய விதையினை வித்துப் பலவாய தினையினை விளைத்துக் கோடல் போல, கட்டிளமையும் காமச் செவ்வியும் பெற்றுள்ள இவள் சிலவாய தன் சொற்களைச் சொல்லிப் பலவாய் மாண்புற்ற என் குணநலங்களையும் கவர்ந்துகொண்டாள் எனத் தலைமகன் உள்ளுறையால் தனக்கும் தலைமகட்கும் இடையே உண்டாகிய உறவை முன்னுற வுணர்த்தித் தோழியைக் குறையுற்று நின்றமை குறித்தவாறு காண்க. 210. மிளை கிழான் நல்வேட்டனார் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன்பால் புறத் தொழுக்க முண்டாகவே, மானம் பொறாத மாண்புடைய தலைமகள் பெரிதும் மனம் புழுங்கி மேனி வேறுபடலானாள். பரத்தையர் பால் தலைநின்றொழுகிய தலைமகன் உலகியல்பற்றித் தன் மனைக்கு வருவானாய்ப் பாணன் முதலிய வாயில்களைத் தலைமகள்பால் செலுத்தினான். அவர் அனைவரையும் தலைமகள் வாயின் மறுத்து ஓட்டினாள். முடிவில், தலைமகன் தானே தோழியைக் கண்டு தன் பொருட்டு வாயில் வேண்டுமாறு கேட்டுக் கொண்டான். தலைமகன் நேர்முகமாகப் போந்த விடத்து வாயின் மறுத்தல் தோழிக்கு அறமன்று; அவற்கு ஒருகால் தலைமகள் வாயின் மறுப்பளாயின் தோழி அவட்கு இல்வாழ்வின் நல்லறம் கூறித் தலைமகற்கு வாயில் நேர்விப்பதுதான் முறையும் கடமையு மாகும். தலைமக்களிடையே, அறிவும் அறமும் அன்பும் திரண்டு பெண்வடிவிற் போந்தாற் போலும் பெருந் தகவுடைய தோழி இருப்பது, இருவர் உள்ளங்களும் வேறுபட்டுப் பிணங்குமிடத்துப் பிணக்கு நீக்கி ஒன்றுபடுத்தி இன்பம் பெறு வித்தற் பொருட்டே என்பது அகநூற் கருத்து. அந்நெறிமைவழி யொழுகும் தோழி, தலைமகன் வாயில் வேண்டும் குறிப்பினனா தலை யுணர்ந்ததும், அவன் பெறற்கரிய மாண்புகளை உள்ளுறை யாற் குறித்து, வெளிப்படையாக மிக்க பெரிய செல்வனான அவனது செல்வத்தை விதந்து கூறி, “ஊரனே, நெடிய மொழி தலும் கடிய வூர்தலும் செல்வமல்ல; அவை அவரவர் செய்வினைப் பயன் என்றும், சேர்ந்தோர்க்கு உளவாகும் துன்பம் துடைத்து இன்பம்பெறத் துணைபுரிவதனையே செல்வம் என்றும் சொல்லுப சான்றோர்; அதனையே யான் கேட்டுளேன்; ஆகலான், நின்னை யின்றி அமையாளாய் நின்னைச் சேர்ந்துறையும் தலைமகள் நின்பிரிவால் எய்தும் துன்பத்தைத் துடைக்க நினையாதொழுகு தல் நன்றன்று” என்று கூறினாள். தோழியது இவ்வுரையின்கண் மிளிரும் அறவுரையைக் கண்டு வியப்புமிக்க மிளைகிழான் நல்வேட்டனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். அரிகால் மாறிய அங்கண் அகன்வயல் மறுகால் உழுத ஈரச்1 செறுவயின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர நெடிய மொழிதலும் கடிய வூர்தலும் செல்வ மன்று1தம் செய்வினைப் பயனெனச் 2சொல்லுப என்ப சான்றோர் சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் 3செல்வம் செல்வம் என்பதுவே. இது தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய்த் தோழி வாயில் நேர்வாள் கூறியது. உரை : அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் - நெல்லின் அரிகால் உழவால் நீக்கப்பட்ட இடமகன்ற நன்செய் வயலின் கண்; மறுகால் உழுத ஈரச் செறுவயின் - மறுசால் உழுத தனால் ஈரம் புலராத செறுவில் விதைத்தற்கு; வித்தொடு சென்ற வட்டி - உயர்ந்த விதைகளைக் கொண்டு சென்ற கூடைகள்; பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர - பலவேறு வகைப்பட்ட இழிந்த மீன்களைக் கொண்டு மீளும் புதுமை யறாத ஊரனே; நெடிய மொழிதலும் - சொல்லும் செயலும் வேறுபடாமை வற்புறுத்தும் ஆண்மை மொழிகளை வழங்கு வதும்; கடிய ஊர்தலும் - விரைந்த செலவையுடைய குதிரை தேர் முதலியன ஊர்ந்து செலுத்துவதும்; செல்வம் அன்று தம் செய்வினைப்பயன் என - செல்வமாகா எனவும் தாம் தாம் செய்த வினைப்பயனால் விளைவன எனவும்; சொல்லுப என்ப சான்றோர் - உயர்ந்தோர் சொல்லுவர் எனச் சான்றோர் கூறுவர்; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் - தம்மைச் சேர்ந்தோரது வருத்தங்கண்டு அஞ்சும் பண்பொடு கூடிய; மென்கண் செல்வம் - அருளுடைமையாகிய செல்வமே; செல்வம் என்பது - செல்வமென அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுவது, இதனை மறந்து நீ இவளை நின் புறத் தொழுக்கத்தாற் பிரிந்து வருத்துவது கூடாதுகாண் எ று. ஊர, மொழிதலும் ஊர்தலும் செல்வமன்று, செய்வினைப் பயன் எனச் சான்றோர் சொல்லுப என்ப; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வ மென்பது; நீ அதனை மறந்து புறத்திற் பிரிந்து இவளை வருத்துவது கூடாது காண் எனக் கூட்டி, வினைமுடிவு செய்க. அரிகால், நெல்லரியப் பட்டவழி நிலத்தில் நிற்கும் அதனுடைய அடிப்பகுதி. ஆழ வுழுமிடத்து அரிகால் வேரோடே பெயர்ந்து நீங்குவது பற்றி, உழுதவயல் அரிகால் மாறிய வயல் எனப்பட்டது. நெல் விளையும் நன்செய் வயல் என்பது தோன்ற அங்கண் அகல்வயல் என்றார். புழுதி படுமாறு ஒருகாலைக்குப் பலகால் உழுதல் வேண்டுதலின் மறுகால் உழுத செறுவயின் என்றும், அதன்கண் நீரால் உண்டாய ஈரம் விரைவில் மாறாதாகலின் ஈரச்செறு என்றும் குறித்தார். முற்றி விளைந்த நென்மணிகளுள் பதடியும் கருக்காயும் போக்கிச் சிறந்தனவாக வுள்ளவற்றை விதைக்கென்று கொள்பவாகலின் “உயர்ந்த விதை கொண்டு சென்ற வட்டி” என்றும், உயர்ந்த விதையை நோக்க மீன் இழிந்தமையின் “இழிந்த மீன்” என்றும் உரை கூறப்பட்டன. வட்டி, கூடை; கடகப்பெட்டி எனவும் வழங்கும். யாணர், புதுமை; ஈண்டுப் புதுவருவாய் மேற்று. நெடிய மொழிதல், நெடுமொழி கூறல்; “இன்னது செய்யேனாயின் இன்ன னாகுவல்” என ஆண்மை தோன்றக் கூறும் வஞ்சினம்; சொல்லியவாறே செய்வல் எனச் சொல்லும் செயலும் ஒப்ப ஒழுகும் திண்மையுடைமை யாப்புறுத்தற்கு வழங்கப்படும். கடி, விரைவு. அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் சிறந்தோர்பால் செல்வம் சேர்தலின், அவற்றையுடைமையே செல்வமாம் என்பது பற்றிச் செல்வம் என்றார். அன்றென்பதைத் தனித்தனிக் கூட்டுக. புன்கண், துன்பம்; மென்கண், அருள். அருளைச் செல்வமெனச் சிறப்பித்து “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏனைப் பொருட்செல்வம் உயர்ந்தோர்பாலேயன்றி இழிந்த கீழ்மக்கள்பாலும் உளதாகலும், அருட்செல்வம் உயர்ந்தோர்பாலன்றிப் பிறர் பால் உளதா காமையும் நோக்கி, அருளே செல்வமெனச் சிறப்பித்துக் கூறப்படுவ தாயிற்று என அறிக. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் புறத் தொழுகிப் போந்தகாலை அவற்கு முதற்கண் வாயில் மறுக்கப் பட்டதனால், முடிவில் அவனே போந்து தோழியை வாயில் வேண்டினானாக, அவற்கு நேர்தலையன்றி மறுக்கும் திறம் தோழிக்கு இல்லை; ஆயினும், அவனது பரத்தைமையை மறுத்தல் இன்றியமையாமையின், அதன் பயனின்மையை வெளிப்படக் கூறல் முறையன்மை கண்டு உள்ளுறுத் துரைத்தலின், வெளிப் படையில், ஆண்மை யேதுவாக நெடுமொழி புணர்த்தலும், பொருளுடைமை யேதுவாகக் கடியவூர்தலும் செல்வமாகா என்பாள். நெடிய மொழிதலும் கடிய வூர்தலும் செல்வமன்று என்றாள். “வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”1 என்றுணர்ந்து, அதன்கண் திண்ணியராய்2 நின்று, ஒல்லும் வாயெல்லாம் இருள் தீர எண்ணி3 இன்பமும் புகழும் பயப்பனவற்றைச் செய்வது ஈண்டுச் செய்வினை எனப்பட்டது. அறிவும் ஆண்மையும் பொருள் படைகளால் ஆகிய பெருமையு மாகிய மூன்றாலும் உளவாகும் செல்வம் ஏதுவும் பயனுமாய் இயைந்து நிற்றலின், செய்வினைப் பயன் என்று சான்றோர் கூறினர் என்க. பரந்து யர்ந்த அறிவுடையாள் போலத் தோழி தலைமகன் முன்னின்று கூறாளாதலின், சான்றோர்மேல் வைத்துச் சொல்லுப என்ப சான்றோர் என்றும், அவர்களாற் சிறப்பித்துக் கூறப்படும் அக்கூற்றினைத் தான் கொண்டு கூறுமாற்றால், தலைமகன் உளத்தே தலைவிபால் அன்பு சுருங்கினமை காட்டி, அதனை விலக்கி மிக்க அன்புடையனாதல் வேண்டுமென வற்புறுத்தி வாயில் நேர்கின்றாளாகலின், சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின், மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே” என்றும் கூறினாள். “பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடத்தகு கிழமை யுடைமை யானும், அன்பிலை கொடியை என்றலும் உரியள்”4 என்றும், “உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே”5 என்றும் ஆசிரியர் தோழிக்கு உரிமை வழங்குதல் காண்க. தலைவிபால் அன்பிலையாய்ப் பிரிந்து, பரத்தமையால் உள்ளம் கோடிய கொடுமையால் தலைமகட்குத் துன்பம் விளை வித்ததோடு அதனைக் காண்டலும் செய்யாயாயினை என்பாள், சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கண் இல்லையாயினை என்றாள். உலகியன்மேல் வைத்துப் பொதுப்பட மொழிதலின், சேர்ந்தோள் என்னாது சேர்ந்தோர் என்றாள். ஈரச் செறுவயின் உயர்ந்த வித்தொடு சென்ற வட்டி, அதனால் பெறலாகும் விளைபயனைப் பெறுமுன், இழிந்த பல் வேறு மீன்களைக் கொடுபோந்தாற் போல, உயர்ந்த தலைவியொடு கூடி இல்லின் கண் நல்லறஞ் செய்யப்புக்க நீ அதன் பயனைப் பெறுமுன் பரத்தையர் பலர்பாற் பெறலாகும் இழிந்த பயனைப் பெறாநின்றனை என உள்ளுறை கொள்க. ஈத்துழிப் புகழ் பயக்கும் நெல்போல, மீன், கொடைக்குரி மரபின் புகழ் பயவாமையின் இழிந்ததாம். குலமகளிர் போலப் பரத்தையர் மகப்பயந்து பயன்படாராகலின், இழிந்தவராயினர்; ‘அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்போடு, எம்பாடாதல் அதனினு மரிதே’1 என்று சான்றோர் கூறுதல் காண்க. தலைமகன் நெடிய மொழிந்தது, பரத்தையரொடு சூள்செய்து கூடியது; கடியவூர்ந்தது, பரத்தை யரைத் தேரிற் கொணர்ந்து கூடியது. 211. கோட்டியூர் நல்லந்தையார் இவர் பெயர் கொட்டியூர் நல்லெந்தையார் என்றும் கொடியூர் நல்வந்தையார் என்றும் காணப்படுகிறது. சேரமான் எந்தை என்றொரு சான்றோர் குறுந்தொகையுட் காணப்படுதலால், கொட்டியூர் நல்லெந்தையார் என்பதும் பொருத்தமாகவுளது. கோட்டியூர் பாண்டிநாட்டுச் சிறப்புடைய ஊர்களுள் ஒன்று. நல்லன் தந்தை என்பது நல்லந்தை என்று வந்தது என்பர். வேறு தொகைநூல்களுள் இவருடைய பாட்டுக்கள் காணப்பட வில்லை. தலைமகளைக் களவிற்கூடி இன்புற்றுவரும் தலைமகன் காதல் சிறத்தல் வேண்டி வரையாது நீட்டித்துவந்தான். அவன் உள்ளத்தே வரைவு பற்றிய நினைவு தோன்றுவது குறித்துத் தோழி குறிப்பாகத் தக்க சொற்களை வழங்கினாள். தலைமகனோ களவையே விரும்பியொழுகினான். தலைவியை அவளது நிழல் போல் தொடர்ந்து அவள் உள்ளக் குறிப்புக்களை உடனுக்குடன் உணர்ந்தொழுகும் தோழி தலைமகன் வரைவை நீட்டிப்பது தலைமகட்கு மிக்க ஆற்றாமை விளைவித்து வருத்துமென எண்ணி நெஞ்சில் நடுக்கமுற லானாள். நடுங்கிய நெஞ்சம் நடுவு பிறழ்ந்தது; ஆகாதன பல நினைவுகள் அவள் நெஞ்சை அலைத்தன. “தலைமகன் தலைமகளைக் களவிற் கண்டு நட்புற்று இன்புறுத்தி யவன் அதனை மறந்து அவளைக் கைவிட்டுத் துறந்தான் போலும்; அதனால் வரைந்து கோடலை நினையாது நீட்டிக்கின்றான்” என்று நினைத்தாள். உள்ளம் கலங்கிற்று. அந்நிலையில் தலை மகன் தலைவி மனையின் ஒருபுறத்தே வந்து நின்றான். அவன் தன்னைக் காணாதவாறு அவன் நின்ற சூழலில் தான் உரைப்பன அவன் செவியிற் படுமளவில் சென்று தோழி தனக்குத் தானே உரையாடலுற்று, “துறைகெழு கொண்கனாகிய தலைமகன் தலைவியை மறந்து துறந்தான் என்பதை யாரிடம் சொல்லி வருந்துவேன்? எவரைக் காணினும் உள்ளம் பெரிதும் அஞ்சு கிறது” என்று விளம்பினாள். அவ்வுரை தனது தலைவிபால் காதல் கைம்மிக்கு ஆற்றாமை மேம்பட்டு நின்றமை கண்ட தோழி, தலைமகனைப் பன்முறை வரைவுகடாவியும் அவன் அதனை நினையாது நீட்டித்தது அவளை அவன் துறந்தான் என்பதைக் காட்டினமையும், அதனால் தான் அதனைப் பிறர் எவரிடத்தும் உரைக்கலாகாமை நினைந்து வருந்தினமையும் வெளிப்படுத்தும் திறங்கண்ட நல்லந்தையார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். யார்க்குநொந் துரைக்கோ யானே ஊர்கடல் ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவில் கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த 1கருங்காற் குருகின் கோள்உய்ந்து போகிய முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை 2எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் 3துறுமடல் தலைய தோடுபொதி தாழை வண்டுபடு 4வான்போது வெரூஉம் துறைகெழு கொண்கன் துறந்தன னெனவே. இது, வரைவுநீட ஒருதலை ஆற்றாளாமென்ற தோழி சிறைப்புற மாகத் தன்னுள்ளே சொல்லியது. உரை : யார்க்கு யான் நொந்து உரைக்கோ - யாவர்பால் யான் தலைமகன் செயற்கு நொந்து உரைப்பேன்; ஊர் கடல் ஓதம் சென்ற உப்புடைச் செறுவின் - பரந்த கடலின் பெருக்குச் சென்று பாய்ந்ததனால் உப்பு விளையும் பாத்தியின்கண்; கொடுங்கழி மருங்கின் இரைவேட்டு எழுந்த - வளைந்த கழியிடத்தினின்றும் சென்று மேயும் மீன்களை வேட்டை யாடித் தின்றற் கெழுந்த; கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய - கரிய கால்களையுடைய நீர்க்குருகினுடைய பிடிக்கு அகப்பட்டுத் தப்பி உய்ந்துபோன; முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை - வளைந்த முதுகையுடைய இறாமீனின் நீண்ட வீசையையுடைய ஆற்றல்மிக்க ஆண்; எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டு - மோதுகின்ற அலைகளால் கொழிக்கப் பட்ட எக்கர் மணலின் நெடிய கரையில் வளர்ந்துள்ள; துறுமடல் தலைய தோடு பொதி தாழை - நெருங்கிய மட லிடத்து இதழ்களால் மூடப்பட்டுத் தோன்றும் தாழையின்; வண்டு படு வான்போது வெரூஉம்- வண்டு மொய்க்கும் வெண்மையான பூம்போதினைக் கண்டு வெண்குருகெனக் கருதி அஞ்சும்; துறைகெழு கொண்கன் துறந்தனன் என - துறைவனாகிய தலைமகன் எம்மைக் கைவிட்டுத் துறந்தான் என்று எ.று. குருகின் கோளுய்ந்து போகிய இறவின் ஏற்றை எக்கர் நெடுங்கோட்டுத் தாழை வான்போது வெரூஉம் துறைகெழு கொண்கன் துறந்தனன் என யார்க்கு நொந்து யான் உரைக்கோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. உரைக்கு, தன்மை வினைமுற்று. ஓ. அசைநிலை. ஊர்கடல், ஊர்தல், பரத்தல், ஓதம், கடற்பெருக்கு, குருகின் உடல் வெளுத்தும் கால் கறுத்தும் இருத்தலின், கருங்காற் குருகு என்றார். கோள், கோடல், இறாமீனின் மேற்புறம் வளைந்து முதுகு கோணலின் முடங்கு புற இறவு என்றார். “இருங்கழி முகந்த செங்கோ லவ்வலை. முடங்குபுற இறவோடு இனமீன் செறிக்கும்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. மோவாய், வீசை; தாடியுமாம். “புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை”2 என்பது காண்க. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாலை ஏற்றை என்றல் முறை என்பர் ஆசிரியர். வலிமிகச் செறிந்த மடல் என்றற்குத் துறுமடல் என்றார். வான்போது, வெண்மையான அரும்பு, தாழையின்பூ வெண்குருகு போலத் தோன்றுதலை, “தயங்குதிரை பொருத தாழை வெண்பூக், குருகென மலரும்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. என வென்னும் இடைச்சொல் ஈண்டு வினை யாயிற்று. “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும், கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி”2 என்று ஆசிரியர் உரைப்பது காண்க. தலைமகன் வரையாது, நீட்டித் தொழுகியது தோழியின் உள்ளத்தில், அவன் தலைவியை அன்பின்றித் துறந்தான் போலும், இன்றேல் வரைவினை நீட்டிப்பா னல்லன் என்ற எண்ணத்தை யெழுப்பிப் பெரிதும் வருத்திற்றாக, அதனால் மிகவும் ஆற்றாளா யினமையின், சிறைப்புறமாக நின்ற தலைமகன் அதனை உணரு மாறு கூறலின், யார்க்கு நொந்து உரைக்கோ யான் என்று எடுத்து மொழிந்தாள். யார்க்கு என்றது தலைமகற்கு முன்னிலைப் புறமொழி. யாம் எய்தும் துன்பம் கேட்டு விரைந்து துடைத் தற்குரிய நீ கேளாது அது பெருகுதற் குரியவற்றையே செய்வாயா யினமையின் யாம் இறந்துபடுவதல்லது வேறு களைகண் இல்லேம் என்பது தோன்ற யார்க்கு நொந்து உரைக்கோ என வெளிப்பட மொழிந்தாள். விரைய வரைந்துகோடற்குரிய பேரன்புடையாய் போல இதுகாறும் நீ ஒழுகியதனால், உண்டாய வேறுபாட்டுக்குப் பலவேறு காரணம் காட்டிக் களவு அலரா காமல் உய்ந்துபோந்த யாம், இனி நின்வரவு வரைவு கண்ணாது அலராகி இறந்து பாடு எய்துவிக்கும் என அஞ்சுகின்றேம் என்பாள், குருகின் கோளுய்ந்து போகிய இறவின் ஏற்றை தாழையின் வான்போது வெரூஉம் என்பதன்கண் உள்ளுறுத்து மொழிந்தாள். முன்பு ஊரவரும் காவலரும் அறியாமல் உய்ந்து போந்து இவளைத் தலைப் பெய்த நீ, இனி வருதற்கஞ்சி நின் மனைக்கண் ஒடுங்கினை எனத் துனி தோன்றக் கூறினாளுமாம்; “இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும், உவம மருங்கில் தோன்றும் என்ப”3 என்பர். இங்ஙனம் தோழி கூறுவது அறக் கழிவுடைய தாயினும், வரைவு பொருளாக நிகழ்தலின் அமையும் என்க; “அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப”1 என்று ஆசிரியர் உரைப்பது காண்க. பன்முறையானும் பல்லாற்றானும் வரைவுகடாவியும் உள்ளம் தெருளாது வரைவு நீட்டித்தது பொறாது, துறந்தான் எனத் தான் எண்ணியதை எடுத்து வற்புறுத்தலின் இறுதிக்கண் வைத்து, “துறந்தனன்” என்றாள். 212. குடவாயிற் கீரத்தனார் இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைவன், பொருள் குறித்து மனையின் நீங்கிச் செல்லும் கடமை யுடையனானான். தலைமகள் தலைமகன்பிரிவை ஆற்றாளாயினும், கடமை நோக்கி ஒருவாறு ஆற்றி மனையின்கண் இருந்துவரலானாள். தலைமகன் நாடும் காடும் இடையிட்ட வேறுநாடுகட்குச் சென்றான். அவன் பிரிந்திருந்தபோழ்து தலைமகட்குப் பிரிவுபற்றி எழுந்த மனக் கவலை அவளைப் பெரிதும் அலைத்தது. அதனால் அவளது உடலும் மெலிந்தது. அவள் செறிய அணிந்திருந்த தொடி நெகிழ்ந்தோடுவதாயிற்று. அவளுடைய புதல்வன் தொடி நெகிழ்ந் தோடுவது கண்டு அதனைச் செறித்து நோக்கி நில்லாது நெகிழ் தற்குரிய காரணம் வினவி இன்புறுத்துவன். தான் உற்ற மெலிவுக் குரிய ஏதுவை அவற்கு உரைக்க லாகாமையின் முறுவலித்து நோக்கி முத்தி தந்து அவனை மகிழ்விப்பள். ஒருகாலைக் கொரு கால் அவளுடைய உள்ளம் தலைமகன்பிரிவை நினைந்தவழிக் கலக்கமும் புதல்வன் மொழி கேட்டவழி உவகையும் மாறிமாறி எய்துவதாயிற்று. இவ்வாறு இருந்து வருகையில் தலைமகனோடு சென்ற இளையர் சிலர் போந்து குறித்த பொழுதில் தலைவன் பொருள்முற்றி மீண்டுவருவதைத் தோழிக்கு உணர்த்தினர். தோழி, தலைமகளை அணுகி, வடுகர் வாழும் நெடும் பெருங் குன்றம் கடந்து சென்ற காதலர், தமது பிரிவை நீட்டியாது இப்போது வந்தனர் காண் என்று மொழிந்தாள். தோழியினுடைய இக்கூற்றின்கண், கணவன் பிரிந்தவழி மனையுறையும் மகளிர்க்கு உளதாகும் வருத்தம் தீர்தற்கு அவர் பயந்த புதல்வரது இன்சொல் வாயிலாகும் இயல்பும், அதுவே பற்றுக்கோடாகக் கணவன்பால் உள்ள காதல் சிறக்கும் மாண்பும் இனிது விளங்குதல் கண்ட குடவாயிற் கீரத்தனார் இப்பாட்டின் கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார். 1படுவலை வேட்டுவன் பார்வையின் ஒரீஇ நெடுங்காற் 2கணந்துளம் புலம்புகொள் தெள்விளி 3சுரஞசெல் வம்பலர் 4துண்ணென இசைக்கும் அத்த நீளிடைச் சென்றோர் நத்துறந்து கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்றம் நீந்தி 5நீடின்று வந்தனர் வாழி தோழி கையதை செம்பொற் கழல்தொடி நோக்கிப் 6புதல்வன் கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் அவவுக்கொள் மனத்தேம் ஆகிய எமக்கே. இது பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த 7வாயில்களால் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை : படுவலை வேட்டுவன் பார்வையின் ஒரீஇ - புள்ளினத்தைப் படுக்கும் வலையை விரித்த வேட்டுவன் புள்ளினம் நோக்கி விடுத்த பார்வைப்புள்ளின் துணையினின்றும் நீங்கி; நெடுங் காற் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி - நெடிய கால் களையுடைய கணந்துள் என்னும் புள்ளின் தனிமையுற்று எடுக்கும் தெளிந்த ஓசை: சுரஞ்செல் வம்பலர் துண்ணென இசைக்கும் - சுரத்திடைப் புதியராய்ச் செல்வோர் நெஞ்சம் துணுக்குற்று அஞ்சுமாறு இசைக்கும்; அத்தம் நீளிடை நத்துறந்து சென்றோர்- பாலைநிலத்து நீண்ட வழியே நம்மிற் பிரிந்துசென்ற காதலர்; கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் - கடிய ஓசையையுடைய பம்பைப் பறையும் சினமிக்க நாயு முடைய வடுகர் வாழும்; நெடும்பெருங் குன்றம் நீந்தி - நெடிய பெரிய மலைகளைக் கடந்து; நீடின்று - குறித்த பருவம் நீட்டியாதவாறு; வந்தனர் - வந்து சேர்ந்தார்காண்; வாழி - ; தோழி - ; கையதை செம்பொற் கழல்தொடி நோக்கி - கையின் கண்ணதாகிய செவ்விய பொன்னாற் செய்த தொடி கழன் றோடுவது நோக்கி; கவவுக் கொள் புதல்வன் இன்குரல் கேட்டொறும் - நம்மைத் தழுவிக் கொண்டு, தொடி செறிய நில்லாமை என்னென வினவும் புதல்வனது இனிய சொல்லைக் கேட்குந்தோறும்; அவவுக் கொள் மனத்தே மாகிய நமக்கு - அவன்பாலும் தந்தைபாலும் அன்புமிகக் கொள்ளும் மன முடையோமாகிய நம்மிடத்து எ.று. தோழி, கையதைத் தொடிநோக்கிப் புதல்வன் இன்குரல் கேட்டொறும், அவவுக்கொள் மனத்தேமாகிய நமக்கு, நத்துறந்து சென்றோர், வடுகர் குன்றம் நீந்தி, நீடின்று வந்தனர். வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புள்ளும் மாவுமாகியவற்றைப் படுத்தற்பொருட்டு அமைந்தமையின் படுவலை என்றார். பார்வை, பழகிய புள் பிற புள்ளினத்தையும் விலங்கையும் வளைத்துக் கொடுவருமாறு பயிற்சி செய்யப்பட்ட புள்ளும் மாவும் ஆகியவற்றைப் பார்வைப் புள்ளென்றும், பார்வை விலங்கென்றும் வழங்குவர். பார்வைப் புள்ளின் சூழ்ச்சி யறிந்து அதனின் நீங்கிச் சென்ற கணந்துள் ஓரிடத்தே தனித்திருந்து கூவுவது, சுரஞ்செல்லும் மக்கட்கு வேட்டுவர் உண்மை காட்டு தலின் அவர்கள் நெஞ்சில் அச்சம் உண்டாக்கிற் றென்க. சுரத்திடை வாழும் வேட்டுவர் மாவும் புள்ளும் மக்களுமாகிய எல்லா வுயிர்களையும் இரக்கமின்றிக் கொல்வர் என்பது பற்றி, ஆறு செல்வோர்ககு அவருண்மை அச்சம் பயக்குமென் றறிக; “ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை, நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ, ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. அம்: தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண் வந்த சாரியை. வடுகர் நாய்களை வளர்த்து வேட்டையாடும் இயல்பினராகலின் அவர்களைக் குறிக்கும் போதெல்லாம் அவர்தம் நாய்களைத் தமிழ்ச் சான்றோர் மறவாமல் குறிப்பது மரபு; “கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்”2 எனவும், “கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்”3 எனவும் வருதல் காண்க. இவ்வடுகர் கோடைமலை, நீலகிரி முதலிய மலைத்தடவுகளில் வாழ்பவர். தடவரென்ற பொதுப்பெயர் ஒரு சிலர்க்குச் சிறப்புப் பெயரானமை யின் *இவர்களை இப்போது படகர் என்றுகூறுகின்றனர் வேங்கடத் தின் வடபுலத்து வாழ்ந்த வடுகர் இவரின் வேறு என்பாரும் இருவரும் ஒருதிறத்தர் என்பாரும் உண்டு. பம்பை, ஒருவகை இசைக்கருவி; இசைப் பறையுமாம்: நீடின்று, இன்றி யென்னும் வினையெச்சம் இன்றென நின்றது; “இன்றி யென்னும் வினை யெஞ் சிறுதி, நின்ற இகரம் உகரமாதல், தொன்றியன் மருங்கின் செய்யுளுள் உரித்தே”1 என்பது காண்க. கையதை: ஐ, சாரியை. கவவு, அகத்தீடு. அவா என்பது அவவு என வந்தது: “அவவுறு நெஞ்சம் கவவுநனி விரும்பி2” என்பர் பிறரும். நமக்கு: ஏழாவதன் கண் நான்காவது வந்து மயங்கிற்று. தலைமகன் பிரிவின்கண் வருந்தும் தலைமகட்கு ஆற்றத் தகுவன கூறி வற்புறுத்தும் தோழி, “அன்புறு தகுந இறைச்சியுள்”3 சுட்டல் முறையாக, செல்லும் சுரத்தின் கொடுமை கூறல் நன்றன்மையின், தலைமகன் மீண்டுவந்தமை யுணர்ந்து கூறுமாறு தோன்ற, பார்வை ஒரீஇக் கணந்துளின் புலம்புகொண்டு எடுக்கும் தெள்விளி, சுரஞ்செல் வம்பலர் துண்ணென இசைக்கும் எனச் சுரத்தின் கொடுமையை விதந்து கூறினாள். அது கேட்ட தலைமகள் நெஞ்சு திடுக்கிடவும், நத்துறந்து சென்றோர், குன்றம் நீந்தி நீடின்று வந்தனர் வாழி என்றாள். சுரத்தின் கொடுமையும் குன்றத்தின் நெடுமை பெருமைகளும், தலை மகனது ஆண்மையைச் சிறப்பித்தலின் தோழி அவற்றைப் பாரித்துரைத்தாள்: தலைமகன் புணர்ந்துழிச் செறிதலும், பிரிந்துழி நெகிழ்ந்தோடலும் தொடிக்கு இயல்பாதல் புதல்வன் அறியானா கலின், கழல்தொடி நோக்கி என்றும், தாயைக் காரணம் கேட்கும் புதல்வன், அவளைக் கவவிக் கொண்டு நிரம்பாத மொழிகளால் வினவுதல் தோன்ற, கவவுக்கொள் இன்குரல் என்றும், அதனைக் கேட்குமிடத்துத் தலைவியுள்ளத்தே அவன்பால் பேரன்பும், அவன் வாயிலாக அவன் தந்தைபால் பெருங்காதலும் உள்ளத்தே எழுதலின், கேட்டொறும் அவவுக்கொள் மனத்தே மாயினம் என்றும் கூறினாள். இதனால் தலைவி மகிழ்ச்சி கூர்வாளாவது பயன். விளக்கம் : “பெறற்கரும் பெரும் பொருள்1” என்ற நூற் பாவின்கண், “பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும்” என்றவிடத்துப் ‘பிறவாவன தலைவன் வரவு மலிந்து கூறு வனவும், வந்த பின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன் றெனப் படைத்து மொழிவனவும், தூது கண்டு கூறுவனவும், தூது விடுவனவும், சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும் நிமித்தம் காட்டிக் கூறுவனவும், உடன்சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்’ என்று உரைத்து, இப்பாட்டைக் காட்டி, “இது தலைவிக்கு வரவு மலிந்தது” என்பர் நச்சினார்க்கினியர். 213. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் இவர் பெயர் பெருநச்சனார் என்றும் ஏடுகளில் காணப்படு கிறது. இயற்கைப்புணர்ச்சி வாயிலாகத் தலைமகளது காதலுறவு பெற்ற தலைமகன் வழிநிலைக் காட்சிகளால் அஃது உறுதி எய்துதலும், தலைமகள் தன் கட்பார்வையால் குறித்துக் காட்டிய உயிர்த்தோழியின் கருத்துத் தான் தலைவியொடு கூடி மேற் கொள்ளக் கருதும் களவொழுக்கத்துக்கு ஒத்தியலுமாறு அவளது நட்புப்பெற முயல்வானாயினான். தலைமகட்கும் தலைவற்கும் உளதாகிய காதலுறவை இது காறும் தோழி அறியாள். தோழி முன் தலைமகளும் ஒரு தொடர்பும் இல்லாதாள் போன்று நடந்து கொண்டாள். ஆடவர்போலப் பிறர்க்கு வாய்விட்டு உரைக்கும் நிலையில் பெண்மக்களது காதல் விரைவில் வெளிப்படும் திறத்ததன்று. தலைமகளின் தலைமை மாண்பும் தோழியின் தொழிற்பண்பும் காதலுறவை வெளிப்பட மொழிதற்கு இடந் தருவனவுமாகா. இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்தவனாகலின், தலைமகன் தோழிபால் எடுத்த எடுப்பிலே தன் கருத்தை யுரைப்ப தென்பதும் இயலாத வொன்று. தலைமகனுடைய பெருமையும் திண்மையும் காணும் தோழி, தன் பெண்மையாலும் தொழினிலை யாலும், அவன் நெருங்கிய வழியும் தான் சேட்படநின்று வேண்டு வன கூறி விரைந்து நீங்குவள். இவ்வாறு ஒழுகுகையில் தலை மகளும் தோழியும் புனங்காவலை மேற்கொள்கின்றனர். அங்கே தலைமகள் தன் உயிர்த்தோழியுடன் வேறுபல ஆயமகளிர் சூழ இருக்கின்றாள். அப்புனத்துக்குப் போந்து தோழியைக் கண்டு உரையாடும் போதெல்லாம் அவள் அவனைச் சேட்பட நிறுத்தி நீங்குவள். ஒருநாள் அவன், புனத்தின்கண் தலைமகளும் தோழியும் ஏனைமகளிர் கூட்டத்தின் நீங்கி ஒருபால் நிற்கக் கண்டு, அவர் முன் சென்று நிற்கின்றான். இருவரும் அவனைக்கண்டு அஞ்சினாற் போல் நாணித் தலையிறைஞ்சி நிற்கின்றார்கள். அவர்களோடு உரையாட விரும்பிய தலைமகன், “நீவிர் உறையும் சிறுகுடி எங்கே உளது?” என்று கேட்கின்றான். அவற்கு அவர்கள் விடை யொன்றும் கூறாது சிறிது அவ்விடத்துநின்றும் பெயர்ந்து நீங்கு கின்றனர். அவன், அதனால் அயர்ச்சி கொள்ளாது தொடர்ந்து சென்று பின்னே நின்று, ‘இங்கே விளைந்து நிற்கும் புனத்தைக் காப்பது நுங்கள் செயலோ?’ என்று வினவுகின்றான். தலைமகன் உரையைக் கேட்டுத் தலைமகளது காதலுள்ளம் துடிக்கிறது; அஃது அவள் முகத்திலும் கண்ணிலும் விளங்குகிறது. அதனைத் தோழி தலைமகளை யறியாமல் அறிந்து கொள்வதுடன், தலை மகன் உட்கோளையும் அவள் குறிப்பால் உணர்ந்து கொள்கிறாள். பின்னர்த் தலைமக்களிடையே நிலவவிருக்கும் கள வொழுக்கத் துக்குத் தோழி உறுதுணையாகின்றாள். இவ்வண்ணம் தலைமகனுடைய வினாக்கள் தோழியுள்ளத்தை அவன்வயப்படுத்தி, அவளைத் தனது ஒழுக்கத்துக்கு உறுதுணையாக்கும் திறம் கொண்டு விளங்குவது கண்ட பெருந் தச்சனாரது புலமையுள்ளம் அதனைத் தொகுத்து நமக்குத் தருகின்றது. அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேரிடைத் தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம் குழவிச் சேதா மாந்தி அயலது 1வேய்பயில் இறும்பின் ஆமறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் 2சொல்லலும் சொல்லீ ராயின் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கே ழாடிய 1செழுங்குரற் சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ 2மையெழில் உண்கண் 3மடநல் லீரே. இது மதியுடம்படுக்கும் தலைமகன் சொல்லியது. உரை : அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணி - அருவிகள் முழங்கும் பெரிய மலையை அடைந்து; கன்றுகால் யாத்த மன்றப் பலவின் - கன்றுகள் அடியிலே கட்டப்பட்ட மன்றத்திலே நிற்கும் வேர்ப்பலா மரத்தின்; வேரிடைத் தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும்பழம் - வேரின்கண் காய்த்துத் தொங்கும் கொழுவிய சுளைகளையுடைய பெரிய பழங்களை; குழவிச் சேதா மாந்தி- கன்றை யீன்ற செவ்விய ஆ தின்று; அயலது - பக்கத்தே யுளதாகிய; வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் - மூங்கில் வளர்ந்திருக்கும் பக்க மலையிடத்தே ஊறி யோடிவரும் தெண்ணீரை அருந்தும்; பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது - பெரிய மலையை வேலியாகவுடைய உமது சிறுகுடி யாது? அதற்குச் செல்லும் வழியை உரைமின்; என - என்று வினவினேனாக; சொல்லலும் சொல்லீர் - ஒரு சொல்லும் சொல்லாதொழிந்தீர்; ஆயின் - அஃது இயலாதாயின்; கல் லெனக் கருவி மாமழை வீழ்ந்தென - கல்லென்ற ஓசையுடன் மழைமுகில் திரண்டு தொக்கு மழை பெய்ததாக; எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறுதினை - தழைத்தெழுந்து செந்நிறங் கொண்ட செழுவிய கதிர்களைத் தாங்கிய சிறு தினை நிற்கும்; கொய்புனம் காவலும் நுமதோ - அறுத்துக் கொள்ளும் அளவில் விளைந்துள்ள இப்புனத்தைக் காப்ப தாகிய தொழில் உங்களுடையதுதானோ? கூறுமின்; மைஎழில் உண்கண் மடநல்லீர் - கரிய அழகிய மையுண்ட கண்களையும் இளமையையு முடைய மகளிரே எ.று. மடநல்லீர், பலவின் பெரும்பழம் சேதா மாந்தி அயலது இறும்பின் ஆமறல் பருகும் சிறுகுடி யாது என சொல்லலும், சொல்லீர்; ஆயின், சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ, கூறுமின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. படிப்படியாய் உயர்ந்து தோன்றும் பெரிய மலை பெருவரை எனப்படும். கால், மரத்தின் அடிப்பகுதி. மன்றம், ஊர்க்குப் பொதுவாய இடம்; இதனை மன்றவெளி என்று இக்காலத்தும் வழங்குப. இவ்விடங் களில் மா, பலா, வேம்பு முதலிய நிழல் தரு மரங்களை வளர்த்து விடுவதும், அந்நிழற்கீழ் இருந்து ஊர்வழக்கு ஆராய்வதும் பண்டையோர் மரபு. மன்றத்தே நின்ற பலா என்றற்கு மன்றப் பலவு என்றார். வேரின்கண் காய்க்கும் பலா வேர்ப்பலா; இது பலா வகையுள் ஒன்று. சேதா: செம்மை இளமை குறித்து நின்றது; இளங்கன்றினைச் சேங்கன்று என்றாற் போல. பெருங்கல், பெரும் பாறைகளையும் துறுகற்களையுமுடைய குன்று. குறிஞ்சி முதலிய நிலங்களிலுள்ள ஊர்களைப் பொதுவாகச் சிறுகுடி என்றல் வழக்கு. உண்ணலும் உண்ணேன் எனவும், அணியலும் அணிந் தன்று எனவும் வரும் வழக்குப் போல ஈண்டுச் சொல்லலும் சொல்லீர் என்றார். கருவி, தொகுதி. முற்றாத நிலையில் பசுமையும், முற்றி விளைந்த நிலையில் செம்மை நிறமும் கோடல் தினைக்கு இயல்பாதலால், செங்கேழாடிய சிறுதினை என்றார். சிறுதினை என்ற விடத்துச் சிறுமை, இனச் சுட்டில்லாப் பண்பு; செஞ்ஞாயிறு போல, கொய்புனம், நன்கு விளைந்து அறுவடைக் குரிய செவ்வி எய்தி நிற்கும் தினைப்புனம். மையெழில் உண்கண், மையினால் எழில் உண்டாகத் தீட்டப்பட்ட கண் என்றுமாம். கன்று, ஆன்கன்று. உள்ளுறையால் தான் இயற்கைப் புணர்ச்சி வாயிலாகத் தலைமகளது காதலுறவு பெற்றுள்ளதும், இப்பொழுது தோழியின் துணைமையால் அவ்வுறவு வலியுறப் பெறுதற்கு முயல்வதும் குறிப்பால் தோழியுணரக் கூறுதலின், வெளிப்படையில் தோழி யொடு சொல்லாடல் வேண்டிப் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என வினவினான். இருவர்க்கும் முன்பே காதலுறவு உண்டென்பதைத் தோழி தெளிய வுணராமையான், அவனோடு சொல்லாடுதல் விரும்பாளாய் ஒருசொல்லும் கூறாமையின் சொல்லலும் சொல்லீர் என்றும், ஊரைக் கூறுதற்கு விரும்பீ ராயின் புனங்காவல் மேற்கொண்டிருத்தலின், இப்புனம் நுமதோ என்று வினவுவான், சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ என்றும், தோழியின் பார்வையால் அதற்கும் விடை பெறல் அரிதென்று தோன்றினமையின், உரைமின் என்னாது, கட்பார்வையைச் சிறப்பித்து, கட்பார்வையால் குறிப்பிடுமின் என்பான், மையெழி லுண்கண் மடநல்லீர் என்றும் கூறினான். தோழியின் நோக்கம், தலைவியின் குறிப்பையும் தலைமகன் கருத்தையும் நுணுகியாராயும் இயல்பிற்றாதலைக் கண்டு அதன் விளைவை எண்ணி மடநல்லீர் என்றான். நுமது கண்ணோக்குப் பொழிந்த அருளால் எனது உள்ளம் நும் சொல் கேட்கும் இன்ப விளைவு பெறும் என்பான், கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினை என்றும், இப்புனமும் கொய்யும் செவ்வி எய்தினமையின், இனித் தாழ்த்தலாகா தென்பான் கொய்புனம் என்றும் குறித்தான். புனங்காவல் எமது என்பாளாயின், தினை விளைவு நோக்கிய நுமது காவல்போல, நுமது அருள்விளைவு நோக்கியது எனது ஆர்வம் என்றானாம். பலவின் பெரும்பழம் மாந்திய சேதா அயலதாகிய இறும்பின் ஆமறல் பருகும் என்றது, இயற்கைப் புணர்ச்சி வகையால் இவளது காதலுறவு பெற்றுள்ள யான், தோழியாகிய நின் துணைமையால், இவளை எய்தக் கருதுகின்றேன் எனத் தலை மகன் உள்ளுறுத் துரைத்தவாறு. இதனாற்பயன் தோழி மதியுடம் படுவாளாவது. விளக்கம் : “மெய்தொட்டுப் பயிறல்”1 என்று தொடங்கும் நூற்பாவின்கண், ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறின், தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்றதன் உரையில் இதனைக் காட்டி, இஃது ஊர்வினாய தென்பர் இளம்பூரணர்; “இஃது ஊரும் பிறவும் வினாயது”2 என்பர் நச்சினார்க்கினியர். 214. கருவூர்க் கோசிகனார் பண்டைத் தமிழகத்தில் மேலைக் கடற்கரையில் ஒரு கருவூரும், காவிரிக்கரையில் ஒரு கருவூரும் என இரு கருவூர்கள் சிறப்புற் றிருந்தன. இவற்றுள், காவிரிக் கரையிலுள்ளது, மேலைக்கடற் கரைக் கருவூர்க்குப் பின்னர்ச் சேரமன்னரது ஆட்சி கொங்கு நாட்டிற் புகுந்து ஆன்பொருநைக்கு மேற்கிலும் காவிரிக்குத் தெற்கிலுமாகப் பரவிய காலத்தில் தோன்றியதாகும். மேலைக் கடற்கரைக் கண்ணதாகிய கருவூரை நோக்காமையால், மேலை நாட்டு யவனர் குறிப்பைக் கண்ட ஆராய்ச்சியாளர், அவர்களால் குறிக்கப்பட்ட கரூரா (Caroura) என்பது இக்காவிரிக் கருவூரைக் கருதுவதாக எண்ணினர். அக்கருவூர் மேலைக் கடற்கரையிலுள்ள குட்ட நாட்டில் அதன் தலைநகராகிய வஞ்சி நகர்க்கு வடக்கில் ஏழெட்டுக்கல் தொலைவில் உள்ளது; அதனைக் கருவூர்ப் பட்டினம் என்றும் வழங்குவதுண்டு. சேரமன்னர் கொங்கு நாட்டிற் புகுந்து அரசு நிலையிட்டபோது, அங்கே கண்ட முதல் தலைநகர் கொங்கு வஞ்சி என்பது; அஃது இடைக்காலச் சோழர் காலத்தில் இராசராசபுரமென மாறி இப்போது தாராபுரம் என மருவி விட்டது. அதற்கு வடக்கில் ஆன்பொருநை (அமராவதி) யின் கரையிலுள்ள கருவூர், கருவூர்ப் பட்டினத்தின் நினைவாகக் காணப்பட்டது. அதனையும் பிற்காலக் கல்வெட்டுக்கள் கருவூரான வஞ்சி என்று குறிப்பனவாயின. சேரரது ஆட்சி குட்ட நாட்டுக்குத் தெற்கில் பரவியபோது திருவிதாங் கோட்டை அரசுநகராகக் கொண்டு அதனையும் வஞ்சி என்றனர்; அதற்கும் தெற்கில் பரவியபோது, அங்குள்ள நாகர்கோவில் என இப்போது வழங்கும் பேரூரையும் வஞ்சி யென்றனர். இவ்வகையில் நம் கோசிகனா ருடைய கருவூர் இன்னது என வரைந்து காணாநிலையில் உளது. இனி, கோசிகன் என்ற பெயர் பழந்தமிழ் நூல்களில் பயின்ற வழக்குடையது. கோசிகம் என்பது பண்டைநாளை ஆடை வகை களுள் ஒன்று; அதனை நெய்வோர் கோசிகராவர்; தேவாங்கம் என்ற ஆடை சமைப்போர் தேவாங்கராயது போல எனக் கொள்க. வடநூல்களுள் கௌசிகர் என்ற பெயருடையார் காணப்படுதலின் அவர் பெயரும் தமிழில் கோசிகர் எனத் திரிந்து வருதற்கு இடமுண்டு. சிலப்பதிகாரம் முதலிய தமிழ்நூல்களில் வரும் கோசிகன் என்னும் சொல் வடநூல் பயின்ற பண்டைநாளைப் பார்ப்பனரிடையே நிலவியிருந்த பெயராகலாம். அக்காலை அதனைக் கௌசிகன் என்ற வடமொழிப் பெயரின் சிதைவாகக் கோடற்குத் தடையிராது. இவ்வாற்றால் கோசிகனென்னும் பெயர் சேணியர்க்கும் பார்ப்பனர்க்கும் இயைபுடைய தாதல் பெறப்படும். கருவூர்க் கோசிகனாரது பெயர் அச்சுப் பிரதியில் கோசனார் என்று காணப்படுகிறது. இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில. தான் காதலித்த நங்கையைக் கற்புநெறியில் கடிமணம் புணர்ந்து மனையறம் புரிந்தொழுகும் மாண்புடைய தலைமகன், தன் காதலியிற் பிரிந்து பொருள் கருதிச் செல்லும் கடமையுடைய வனானான். யாக்கையும் இளமையும் பொருளும் நிலையா இயல்பின வாயினும், அவை உளவாய பொழுது ஒரு நொடிப் போதும் வீணிற் கழிக்காமல், செய்வன செய்து சிறப்பும் செல்வமும் பெறல் வேண்டும் என்பது பழந்தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்த நல்லறமாகும். கட்டிளமையும் காதற்காமச் செவ்வியும் சிறக்கப்பெற்ற தலைமகன், அவை காலத்தின் மேலவாகலின், அவை கழிவதன் முன் பொருள்செய்து, அதனால் ஈதலும் புகழும் புரிந்து இன்பம் பெறுதல் ஆண்மையின் அறமும் கடனுமாதலை உணர்ந்து, அவற்றைத் தலைமகட்குத் தெளியவுணர்த்தி அவள் பால் விடைபெற்றுச் சென்றான்; செல்லுங்கால் கார்ப்பருவ வரவில் தான் தாழாது வருவதாகக் கட்டுரைத்தான். கடலன்ன காமம் உழப்பினும் கணவன் வற்புறுத்த சொல்வழி நின்று கடிமனைக்குரிய கடன்களைச் செய்தொழுகல் கற்புடைய மனையாட்குக் கடன். அதனால், தலைமகள், அவன் சொல் புணையாக அல்லும் பகலுமென்ற அலை புரளும் காலக்கடலை மனைக்கண்ணிருந்து நீந்தி வந்தாள். இளமைக்கண், ஆண்மை, ஆள்வினைச் செயலில் விருவிருப்புடன் ஈடுபடுதல் போல, பெண்மை, உடம்பு தருபணியில் பெருவிதுப்புற்றுத் துடிதுடித்தல் இயல்பு. அத்துடிப்புவழி நிற்கும் தலைமகட்குத் தலைமகன் பிரிவு மனத்தின்கண் மிக்க நோயினைச் செய்து வருத்தாநிற்கும். வினைமேற்சென்ற தலைமகன் அவ்வினையை முடித்தல்லது மீளும் இயல்பினனல்லன்; முடியாது மீளுதல் அவனது ஆண்மைக்கு இழுக்கும் வசையுமாகும். அதனால் அவன் மீளுவதாகக் குறித்த காலம் சிறிது நீளுதல் உண்டு. அவன் குறித்த பருவம் நோக்கி யிருக்கும் தலைமகட்கு அவனையின்றிப் பருவம் எய்துவது காணின், கவலையும் கையாறும் அவள்பால் கைம்மிக்கு நிற்கும். அவளது ஆற்றாமை காணும் தோழி ஆற்றத் தகுவன கூறுவதில் அயர்ச்சியுறாள். தலைமகன் வாரானாயினும் அவன் வற்புறுத்த கார்ப்பருவம் வரக் கண்டாள் தலைமகள். ஆற்றத் தகுவன கூறும் தோழியை நோக்கினாள்; “தோழி, இசையும் இன்பமும் ஈகையும் இல்லின்கண் மடிந்திருப்போர்க்கு இல்லை யென்ற கருத்தால் பொருள்வயிற் பிரிந்த காதலர், மீண்டு போந்து மணியிருங் கூந்தலை மலர் அணிந்து மகிழ்வோம் என்று கூறிச் சென்றார்; அவர் சென்ற நாட்டில் மின்னும் இடியும் கொண்டு இங்கே நாம் காணத் தோன்றும் கார்மழை தோன்றுவதில்லையோ? தோன்று மாயின், அவர் அதன் வரவு தாம் குறித்த பருவமாதல் நினைந்து வருவர்” என்றாள். தலைவியது இக் கூற்றின்கண், தலைமகன் வற்புறுத்த, தகைசான்ற சொற்காத்துச் சோர்வின்றி ஒழுகும் கற்பு மாட்சி சிறந்து விளங்குதல் கண்ட கருவூர்க் கோசிகனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசைவுட னிருந்தோர்க்1 கரும்புணர் வினஎன வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை அரும்பவிழ் அலரிச் 2சுரும்புபடு பல்போது அணிய வருதும்நின் மணியிருங் கதுப்பென எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி 3மைதவழ் உயர்சிமை மலைபல இறந்து செய்பொருட் ககன்ற செயிர்தீர் காதலர் கேளார் கொல்லோ தோழி 4தோளார் இலங்குவளை நெகிழ்த்த கலங்கஞர் எள்ளி நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும்இக் 5கார்ப்பெயற் குரலே. இஃது உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் குறித்த பருவவரவு கண்டு தலைமகள் சொல்லியது. உரை : ஈதலும் இன்பமும் இசையும் மூன்றும் - ஈகையும் அதன் வழித்தோன்றும் இன்பமும் அவற்றால் உளதாகும் புகழு மாகிய மூன்றும்; அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர் வின என- மனையின்கண் மடிந்திருப்போர்க்கு எய்துவனவல்ல என்பதனால்; வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை - வினை குறித்து மனைவியிற் பிரிந்து செல்லுதற்குரிய வேறு பட்ட கொள்கையுடன்; அரும்பு அவிழ் அலரிச் சுரும்புபடு பல்போது - அரும்பு மலர்ந்து விரிந்த வண்டு மொய்க்கும் பலவாகிய பூக்களை; நின் மணியிருந் துப்பு அணிய வருதும் என - நின் கருமணி போலும் நிறமுடைய நெடிய கூந்தலில் அணிதற்கு வந்து சேர்வேம் என்று; எஞ்சாவஞ்சினம் நெஞ்சுணக் கூறி - பொய்யாத வன்புரையை நெஞ்சு கொள்ளுமாறு உரைத்து; மைதவழ் உயர்சிமை மலை பல இறந்து - மேகம் தவழும் உயர்ந்த உச்சியையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து; செய்பொருட்கு அகன்ற நம் செயிர்தீர் காதலர் - செய்யப்படும் பொருள் குறித்து நம்மிற் பிரிந்தேகிய குற்றமற்ற நம் காதலர்; கேளார் கொல்லோ - கேளா தொழிவரோ; தோழி - ; தோளார் இலங்குவளை நெகிழ்ந்த கலங்கஞர் - தோளில் அணிந்த விளங்குகின்ற வளைகள் கழன்றோடுமாறு உடலை மெலிவித்த உள்ளத்தைக் கலக்கி வருத்தும் பிரிவுத் துன்பத்தைக் காட்டி; எள்ளிநகுவது போல மின்னி - நம்மை இகழ்ந்து பல்தோன்ற நகைப்பது போல மின்னி; ஆர்ப்பது போலும் - ஆரவாரிப்பது போல முழங்கித் தோன்றும்; இக்கார்ப் பெயல் குரல் - இக்கார்ப்பருவ மழையைப் பெய்யும் முகிலின் ஓசையை எ.று. தோழி, அசைவுடன் இருந்தோர்க்கு, மூன்றும் அரும் புணர்வின என, பிரிந்த கொள்கையொடு வஞ்சினம் கூறி, மலை பல இறந்து அகன்ற, நம் காதலர் எள்ளி மின்னி, ஆர்ப்பது போலும் கார்ப்பெயற் குரல், கேளார் கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இசை, புகழ். இசை இன்பம் ஈதல் என்றா ரேனும், ஈதல் இன்பம் இசை என மாறுக. ஈகையைச் செய்யுங் கால் உடன் நிகழ்வது இன்பமும், பின்னர் விளைவது புகழு மாகலின்; “ஈத்துவக்கும் இன்பம்1” எனவும், “ஈவார்மேல் நிற்கும் புகழ்2” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. அசைவு, மடிமை; சோர்வுமாம். இருத்தற்கு இடமாகலின், மனையின்கண் என்பது வருவிக்கப்பட்டது. அரும்புணர்வின என்றவிடத்து அருமை இன்மை குறித்து நின்றது, “அருங்கேடன்3”, என்றும், “புணர்வி னின்னான் அரும்புணர் வினனே1” என்றும் சான்றோர் வழங்கு வது அறிக. வினையில்வழி மனையின்கட் கூடியிருத்தலும், அது தோன்றியவழிப் பிரிந்தேகுதலும் பற்றி வேறுபடு கொள்கை என்றார். மனைவயின் இருத்தற்கண் வினை பொருள் முதலிய வற்றை நினைத்தல் போல, வினைசெய்யிடத்து மனையினை நினைத்தல் நிகழாமையின், வேறுபடு கொள்கை யென்றா ரெனினுமாம். வினைமுடிவில் எய்தும் வெற்றிக்கண்ணே மனை பற்றிய நினைவு தோன்றுமென அறிக; “கிழவி நிலையே வினை யிடத் துரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்2” என்று ஆசிரியர் உரைப்பது காண்க. மலர்ந்து இதழ் விரிந்து நிற்கும் பூ அலரி எனப்படும். மணி, நீலமணி. எஞ்சா வஞ்சினம், தப்பாத வஞ்சினம், ஈண்டு வன்புறை மேற்று. நெஞ்சுணக் கூறல், ஐயத்துக் கிடமின்றித் தெளிய உரைத்தல். மை, முகில், உயர் சிமை, உயர்ந்த முடி. செய்பொருள், இன்றியமையாது செய்தற்குரிய பொருள், செயிர், குற்றம்; ஈண்டுப் பொய்ம்மைமேல் நின்றது. கலங்கஞர், கலக்கத்தைச் செய்யும் துன்பம். துன்பம் காரணமாக உடலிடத்தே தோன்றும் மெலிவால் கைவளைகள் தாமே கழன்றோடல் பற்றி, வளை நெகிழ்த்த கலங்கஞர் என்றார். நகுதல், பல்தோன்ற நகைத்தல், எள்ளி நகையாடுவோர் கை கொட்டி ஆர்த்தலும் இயல்பாதலின், ஆர்ப்பது போலும் என்றார். குரல், முழக்கம். காதலன் பிரிவின்கண், கடிமனைக்கண் அவன் சொல்காத் துறையும் கற்புடைமகளிர் அவன் குறித்த பருவ வரவு காணின், அவனையும் அவன் உரைத்த சொற்களையும் நினைபவாகலின், அம்முறையில் தலைமகன் தன் பிரிவு குறித்து உரைத்தவற்றைத் தோழிபால் எடுத்துரைக்கின்றா ளாகலின், இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும், அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர் வின என மொழிந்தானென்றாள். மக்கள் ஒருவனும் ஒருத்தியு மாக் கூடி வாழ்க்கை நடத்துமிடத்து இனப் பெருக்கம் ஒன்றே நிகழுமாயின், அஃது ஏனை விலங்கு புள் முதலிய உயிர்மாட்டும் அமைந்த பொதுச்செயலாய் மக்களுயிர்க்குச் சிறப்புத் தாராமை பற்றி, “ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு1” என்று அறநூல் கூறுதலை எடுத்துக் காட்டினானா கலின், அதனைக் கொண்டெடுத்துக் கூறினாள். ஈதல் ஏதுவாக இன்பமும் இசையும் உண்டாயினும், ஈதல் இனிது நிகழ்தற்குப் பொருள் இன்றியமையாமையாலும், அதுதானும் தாளாண்மை யும் ஆள்வினையும் தழைக்கின்ற உள்ளத்தோடு காடு மலை நாடு கடல் ஆகியவற்றைக் கடந்து சென்று செயற் பாற்றாகலினாலும், மூன்றும் அசைவுடனிருந்தோர்க்கு அரும்புணர்வின என அறம் கூறிற்றென்றாள். மனைவயின் இல்லாளொடு கூடிச் செய்யும் அறம்புரி கொள்கையின், வினைவயின் பிரிந்து சென்று மறம் துணையாகப் பொருள் புரிந்தொழுகும் கொள்கை வேறு படுதலின், வினை வயிற்பிரிந்த வேறுபடு கொள்கை என்றாள். மனைமேற் சென்ற உள்ளம் வினைமேற் சேறல் இழுக்கா காமையும், வினைவயிற் புகுந்த உள்ளம் மனைவயிற் புகுதல் வசையும் வழுவும் பயத்தலும் வேறுபாடு என அறிக. கணவன் பிரிந்தவழிக் கற்புக்கடம் பூண்ட பொற்புடை மகளிர் பூவும் புனைபொருளும் கொண்டு தம்மை ஒப்பனை செய்து கொள்ளா ராகலின் அரும்பு அவிழ் அலரிச் சுரும்புபடு பல்போது நின் மணியிருங்கதுப்பு அணிய வருதும் என மொழிந்தான்; தேனும் மணமும் சிறக்கவுடைய புதுப்பூ என்றற்கு அரும்பவிழ் அலரிச் சுரும்புபடு பல்போது என்றான்; இதனால் செல்வச் சிறப்பும் சுற்றம் தழுவலும் ஆகிய மனைமாண்புகள் குறிப்பாய்க் காட்டப்பட்டன. பூவிரி பாயலாய் புணர்ச்சியின்பம் பயத்தலின் மணியிருங்கதுப்பு எனச் சிறப்பித்தான். இன்றும் நம் தமிழகத்தில் பூச்சூட்டல் என்ற வழக்காறு பல இடங்களில் உளதெனினும், அது பிரிந்த தலைமகன் வந்தபோது நிகழ்ந்த பழைய நிலை மாறிக் கருவுற்ற மகளிர் அது முதிர்ந்த காலத்து நிகழ்கிறது. சொல்லும் செயலும் ஒவ்வாமையொழுகல் தன் காதலன்பால் இல்லையென்பாள், எஞ்சா வஞ்சினம் என்றும், அவன் வற் புறுத்த சொற்களைத் தான் ஐயுறாது ஏற்றமைந்த திறம் தோன்ற நெஞ்சுணக் கூறி என்றும், கூற்று நிகழ்த்துங் காலத்துத் தன் கண்ணிற் காணும் மலைமுடிகள் யாவும் மழைமுகில் படிந்து தோன்றுதலின் மைதவழ் உயர்சிமை மலைபல என்றும், அவன் எடுத்துக்காட்டி வற்புறுத்த அறவுரைகளால் பொருளிலார்க்கு வாழ்வில்லையெனவும், அதனைச் செய்தல் ஆண்மக்கள் செய் கடன் எனவும் தெளிந்துளாளாகலின், செய்பொருள் என்றும், அதனால், மனைவாழ்வில் உளவாகும் வறுமை முதலிய குற்றங்கள் நீங்குதலின், செயிர்தீர் காதலர் என்றும், கேட்பராயின் இத்துணையும் வாராது தாழ்ப்பாரல்லர் என்பாள், கேளார் கொல்லோ கார்ப்பெயற் குரல் என்றும் கூறினாள். காதலர் கேளார் கொல்லோ இக்கார்ப்பெயற் குரல் என்ற நினைவு தன் உள்ளத்தே எழுந்ததும், காதலன் காதலும் கேளாமை செய்யும் பிரிவின் கொடுமையும் தோன்றிப் பெருந் துன்பத்தை விளை விப்ப, உடல் மெலிந்து வளை கழன்றோடக் கண்டு வருத்தமே லீட்டால், தோளார் இலங்குவளை நெகிழ்த்த கலங்கஞர் என்றும், கூடியிருந்த ஞான்று தன்னை யாம் காண்டலும் கருது தலும் செய்யாமை காரணமாகக் கறுவுகொள் நெஞ்சமொடு எழுந்த இக்கார்முகில், என் மெலிவு கண்டு எள்ளி நகையாடுவது போல மின்னுகின்றதென்பாள் எள்ளி நகுவதுபோல மின்னி என்றும், மேனி வேறுபாடு நீங்குமாறு காதலர் வாராமை கண்டு கைகொட்டி ஆர்ப்பதுபோல முழங்குகிறது; யான் எவ்வாறு ஆற்றுவேன் என்பாள், ஆர்ப்பது போலும் இக்கார்ப்பெயற் குரல் என்றும் கூறினாள். இதனாற் பயன் தலைவி அயர்வு தீர்வாளாவது. 215. மதுரைச் சுள்ளிப் போதனார் இவர் பெயர் சுள்ளியம் போதனார் எனவும் சுள்ளம் போதனார் எனவும் ஏடுகளிற் காணப்படுகிறது. புதுப்பட்டி ஏட்டில் போதனார் என்ற பெயர் பூதனார் என்று திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. சுள்ளி என்பது இந்நாளில் சுருளியென மருவிவிட்டது. இப்போது கம்பம் கூடலூர்ப் பகுதி எனப்படும் பண்டைய அளநாட்டைச் சேர்ந்த இச் சுள்ளியிலிருந்து மதுரைமாநகர் போந்து வாழ்ந்தமை பற்றி இச்சான்றோர், மதுரைச் சுள்ளிப் போதனார் என்று குறிக்கப் பெறுகின்றார். முதல் இராசராசன் கல்வெட்டுக்களில் காணப் படும் சுள்ளியாறு சூழ்ந்த கொள்ளிப்பாகைப் பகுதியினராகவும் இவரைக் கருத இடமிருக்கிறது. இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில. தலைவியோடு இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன் இடந்தலைப்பட்டும் தோழனோடும் தோழியொடும் அளவளாவி அவர் துணைபெற்றும் காதல் வலியுறப் பெற்றான். பின்னர், தலைவி யுள்ளத்தில் தோன்றிய காதல் முறுகிப்பெருகிச் சிறத்தல் வேண்டிப் பகற்போதில் அவள் குறித்த கானற்பொழிலிடத்தே சென்று அவளைத் தலைப்பெய்து கூடி இன்புற்றுவந்தான். தலைமகனது தொடர்பு இவ்வாற்றால் நாளும் மாண்புற்று வருவது கண்ட தோழி, அவன் பகல்முற்றும் கானற்சோலையில் தலைவியொடு கூடி விளையாட்டயர்ந்து ஞாயிறு மறையும் மாலைப்போதில் தன்னூர்க்குச் செல்வது, பிரிவு தோற்றுவித்து வருத்தம்செய்வதனை உணர்த்துவாளாய், ஒருநாள் தலை மகனைப் பகற்குறியிடத்தே கண்டு உரையாடலானாள். “பெரும, நீ நாளும் இக் கானற்கண் எம்மோடு விளையாடிப் பகற்போது கழியுமிடத்து நீங்குகின்றனை: அவ்வாறு நீங்காது எம்மனைக்குப் போந்து யாம் செய்யும் விருந்தினை யேற்று இரவுப்போது முற்றும் இருந்து செல்வதனால் இழுக்கு யாதும் வேண்டா; முன்னாள் தாம் எறிந்த வலையிற்பட்ட கோட்சுறா அவ்வலையைக் கிழித்துக் கொண்டு சென்றதாக, அதனை விடாது தொடர்ந்து பற்றிக்கொண் டல்லது மீளலாகாதென்ற உள்ளத்தால் வேட்டமேற்கொண்டு சென்றுள்ளனர்; ஆகவே அவர்கள் இன்றிரவு எம்மனைக்கண் வந்தடைவர் என்பதற்கில்லை”என்று கூறினாள். தோழியினுடைய இவ்வுரையில், பகற்குறிக்கண் கூடிய தனால் தலைவியது காதல் மாண்புற்று இரவிடைப் பிரியும் இதனைப் பெரியதொரு பிரிவாக நினைந்து வருந்துமளவிற்குச் சிறந்துள்ளமையும், நின்னைப் பலரும் காண மனைக்கண் விருந் தேற்றுப் பேணும் பெருவிருப் புணர்த்துமாற்றல் அழிவில் கூட்டம் பெறுதற்குத் தலைவி பாலுள்ள ஆர்வமும், தலைவன் தமர் வரவு காண அஞ்சும் உள்ள முடைமையும் தோன்றக் கூறித் தலைவியை வரைந்து கொள்ளற்கு நினையுமாறு தூண்டும் செயல்நலம் கண்ட சுள்ளிப் போதனார் அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் 1பகல்செய் செல்வன் குடமலை மறையப் புலம்புவந் திறுத்த புன்கண் மாலை இலங்குவளை மகளிர் 2விருந்துடன் அயர மீனிணம் தொகுத்த 1நெய்விளக் குறுப்ப நீனிறப் பரப்பில் 2தயங்குதிரை உதைப்பக் கரைசேர் பிருந்த கல்லென் பாக்கத் தின்றுநீ இவணை யாகி எம்மொடு தங்கின் எவனோ தெய்ய செங்கோற் கொடிமுடி அவ்வலை பரியப் போகிய கோட்சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயா தெமர்வா ரலரே. இது பகற்குறி வந்து மீள்வானை, ‘அவள் ஆற்றும் தன்மை யலல்லள், நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்’ எனத் தோழி தலைமகற்குச் சொற்றது; இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதுஉமாம். உரை : குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பி - கிழக்குக் கடலில் எழுந்து தோன்றிச் சிவந்த கதிர்களைப் பரப்பிக் கொண்டு; பகல் செய் செல்வன் குடமலை மறைய - பகற் போதினைச் செய்த ஞாயிறு மேற்கு மலையில் மறையவும்; புலம்பு வந்திறுத்த புன்கண் மாலை - தனிமைநிலை வந்து பொருந்துதலால் வருத்தத்தைச் செய்தலையுடைய மாலைப் போது வரவும்; இலங்கு வளை மகளிர் விருந்துடன் அயர - விளங்குகின்ற வளையணிந்த பெண்கள் வருவிருந்தை முக மலர்ந்து நோக்கி வரவேற்கவும்; மீன்நிணம் தொகுத்த நெய் விளக்கு உறுப்ப-மீன்களின் கொழுப்பைக் காய்ச்சிப் பெற்ற நெய்யைப் பெய்த விளக்குகளை ஏற்றி மனைகளை விளக்கம் செய்யவும்; நீனிறப் பரப்பின் தயங்கு திரை உதைப்ப - நீல நிறமுடைய கடற்பரப்பில் அசையும் அலைகள் கரையிடத்தே அலைக்கவும்; கரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து - கரைசேர இருக்கின்ற கல்லென்ற ஆரவாரத்தையுடைய பாக்கத்தின்கண்; இன்று நீ இவணையாகி - இப்பொழுது நீ இவ்வூர்க்குரியனாய்; எம்மொடு தங்கின் எவனோ - எம் மோடே தங்குவையாயின் யாது குறையுண்டாம்; செங்கோல் கொடிமுடி அவ்வலை -செவ்விய கோலொடு பிணித்த வளை வாக இடப்பட்ட முடிகளையுடைய அழகிய மீன் வலை; பரியப் போகிய கோட்சுறா குறித்த முன்பொடு - கிழிந்து கெட அறுத்துக்கொண்டு சென்ற கொலைவல்ல சுறாமீனைப் பிடித்தற்கு வேண்டிய வலியுடைமையான்; வேட்டம் வாயாது - மேற்கொண்ட வேட்டையை வெற்றியுற முடித்தல்லது; எமர் வாரலர் - எம் சுற்றத்தார் மீள்வாரல்லர்காண் எ.று. செல்வன், இவர்ந்து, பரப்பி,மறைய, மாலை, மகளிர் விருந்துடனயர, நெய்விளக்குறுப்ப, திரைஉதைப்ப, பாக்கத்து, இவணையாகி, தங்கின் எவனோ, வேட்டம் வாயாது எமர் வாரலராகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குணகடல், கீழ்கடல், குரூஉக்கதிர், சிவந்த கதிர், பகல், பகற்போது, செல்வன், ஞாயிறு, மேலைக்கடல் குடமலையால் மறைக்கப் படுதலின், மேலைக்கடலில் மறையும் ஞாயிற்றைக் குடமலையில் மறைவதாகக் கூறினார். பகற்போதில் கூடியியங்குவோர் இரவில் தனித்தனியே சென்று ஒடுங்குவதுகொண்டு புலம்பு வந்திறுத்த மாலை என்றும் , ஓளிகுன்றி இருள் பரந்து தோன்றுதலால் புன் கண்மாலை என்றும் கூறினார். மாலைப்போதில் சுடர்விளக் கேற்றி மனைகளை ஒப்பனை செய்தல் மகளிர் இயல்பு; “கயலேருண் கண் கனங்குழை மகளிர், கைபுணையாக நெய்பெய்து மாட்டிய, சுடர் துய ரெடுப்பும் புன்கண்மாலை”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. நெய்தனிலத்தவர் மீனெய்பெய்து விளக்கெரித்தலை “மீனெய் யட்டிக் கிளிஞ்சில் பொத்திய, சிறுதீ விளக்கு”2 என்றதனாலு மறிக. செவ்விய கோலொடு பிணித்து வில்லைப்போல் வளைவுற முடிக்கப்பட்ட வலையை, செங்கோற் கொடிமுடி யவ்வலை என்றார்; ‘இருங்கழி முகந்த செங்கோ லவ்வலை’3 என்றும், ‘கொடுந் தொழில் முகந்த செங்கோ லவ்வலை’4 என்றும் கூறுவர் முடியெல்லாம் வளைந்தே இருத்தலின் கொடிமுடி நெடுவலை5 கொடிமுடி என்றாரென்றுமாம். ‘கோட்சுறா கிழித்த’ என்பது காண்க. கடலிடத்து இயங்குவோரை வாய்த்த விடத்துப் பற்றிக் கொலைபுரியும் இயல்பிற் றாகலின் சுறாமீனைக்6 கோட்சுறா என்றார். பகற்குறிக்கட் போந்து தம்மோடு கூடி விளையாட் டயர்ந்த தலைமகன், மாலைப்போது கண்டு நீங்கும் குறிப்பினனாதல் கண்ட தோழி தலைமகளது காதன்மாண்பு வழி நின்று, அவன் பிரிவை விரும்பாளாய் விலக்கத் தொடங்குதலின், புலம்புவந்து இறுத்த புன்கண் மாலை என்றும், பகற்போது முற்றும் தலைமகனோடு பிரிவின்றிக் கூடி விளையாடற்கு வேண்டும் ஒளிதந்து சிறப்பித்த நலம்பற்றி ஞாயிற்றைக் குரூஉக் கதிர் பரப்பிப் பகல்செய் செல்வன் என்றும், ஞாயிறு குடபால் மலைவாய் மறைந்தமை மாலை வரவுக்கு ஏதுவாயினமையின், குடமலை மறைய என்றும் கூறினாள். மலைக்கு ஒளியின்மை புன்கண்மை என்க. தாம் விரும்பும் காதலரைக் கூடுதல் பெற்ற மகளிர் மனையை ஒப்பனைசெய்து விளக்குறுத்து அவரை வரவேற்று விருந்தயரும் சிறப்பு விளங்க, இலங்குவளை மகளிர் விருந்துட னயர என்றாள். இலங்குவளை மகளிர் என்றது, காதல ரொடு கூடி யுறையும் மனைமகளிரைச் சுட்டிற்று. “வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து, மாலை அயர்கம் விருந்து” என்று மகளிர் கூறுதல் காண்க. கடலின் பேரலைகள் பொருதலால் கல்லென்ற முழக்கம் அதன்கரைக் கண் உள்ள பாக்கத்தில் இடையறாது முழங்கும் எனவும், அம்முழக்கத்திடையே நின் தேர் வரின் அதன் மணியொலி பிறர் செவிப்படாது என்றற்குக் கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கம் எனவும் கூறினார். இன்று இப்பாக்கத்தின்கண் எம்முடைய மனையில் விருந்தாய்த் தங்குதல் வேண்டும் என்றற்கு, இன்று நீ இவணையாகி என்றும் எம்மொடு தங்கின் என்றும், அதனால் யாம் நின்னை விருந்தாய் ஏற்றுப் பேணும் பெருமையுறுவேம் என்பாள் எவனோ என்றும் கூறினாள். தெய்ய, அசைநிலை, நின்வரவு எம்தமரால் விரும்பப் படாதெனக் கருதுவையாயின், அவர் இன்றிரவு வாராரென்பாள், வேட்டம் வாயாது எமர் வாரலரே என்றும், அவர் வாராமைக் கேது, அவர் எறிந்த வலை பரிந்து போகிய சுறாமீனை வேட்டம் புரிந்து கைக்கொண்டல்லது மீளாத மீளிமையுடையரென்பாள், வலைபரியப் போகிய கோட்சுறாக் குறித்த முன்பு என்றும் கூறினாள். ஓடு: ஆனுருபின் பொருட்டு “இன்று நீ இவணையாகி எம்மொடு தங்குக”என்றது, நின்னைப் பிரிவின்றிப் பெறும் அழிவில் கூட்டத்தை எம் தலைவி பெரிதும் விழைகின்றாள் என்றும், வரைதலை நினையாது களவே விரும்பிக் குறிவழிப் போந்து பெறும் கூட்டத்தை விரும்பின் அதுதானும் இனி வாயாதென்றற்கு வேட்டம் வாயாது எமர் வாரலர் என்றும் கூறியவாறாம் என்க. தலைமகன் தெருண்டு வரைவது பயன். 216. மதுரை மருதன் இள நாகனார் நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் பரத்தையரைப் பேணிப் புரக்குமாற்றால் புறத்தொழுக்க முடையனாகிறான். அவனால் சிறப்பிக்கப்பெற்ற பரத்தையின் பெயரும் பீடும் தலைமகள் அறிய வெளிப்படுகின்றன. தலைமகட்கு உள்ளத்தே பொறாமையும் வருத்தமும் பொங்கி யெழுகின்றன. ஆயினும் பரத்தையைப்போல் அவள் தலை மகனது பரத்தைமையைப் பலரறியக் கூறித் தூற்றும் பண்புடையளல்லள்; அதனால் அவள் தன்பால் மிக்கு நிற்கும் வெகுளித்தீயில் வெந்து கரிவாளாயினாள். பரத்தையர் சேரிக்கண் உறையும் பரத்தை, தலைமகன் தன்பால் அன்று சிறந்தொழுகுதலால் செம்மாந்திருந்தாள். எனினும் அவள் உள்ளத்தில் தலைவிபால் பொறாமை தோன்றவே தலைவிக்குப் பாங்காயினார் காணத் தன்னை அணிசெய்து கோடலிலும், தலைமகனது அன்பைச் சிறந்தெடுத்து மொழிதலிலும் அவள் ஈடுபட்டாள். அவளுடைய சொல்லும் செயலும் பாங்காயினார் கூறக் கேட்குந்தோறும் தலைமகட்குப் பொறாமை மீதூர்ந்தது. எனினும் அதனை அவள் தன் நிறையால் மறைத்து நீர்மை கெடாவகையில் மனையறத்தில் மாண்புற்று நின்றாள். தலைமகள் எய்தும் மனநோயின் மிகுதி பரத்தைக்குத் தெரிந்தது; அதனால் அவட்கு உள்ளத்தே உவகை மிக்கு நின்றது. ஒருநாள் தலை மகட்குப் பாங்காயினார் சிலர் அப்பரத்தை உறையும் சேரிக்குப் போந்தனர். அவர்களோடு பேச விரும்பாத அப்பரத்தை, அவர்கள் செவிப்படுமாறு, தன் மனையின் கண் தன்னோடு இருந்த பாணன் விறலி ஆகியோரைநோக்கி உரையாடலுற்று, “காதலர் நம்மையின்றி ஓர் இமைப்போதும் அமையார்; யாமும் அவரையின்றிச் சிறிதும் அமையேம்; இத்தகைய காதல்மிகுதி யால், ஒரோவழி நம்மைக் கூடுதல் இயலாவிடத்தும், அவர் மெய்யைக் காணும் அளவில் யானும் என்னைக் காணுமளவில் அவரும் அமைந்த தோர் இடத்தில் வாழ்தல் இனிதாகும்; அஃதாவது அவர் நமது மனைக்கண்ணே நீங்காது உறையப் பெற்று வாழ்வதுதான் சிறந்தது; ஒருகால் அவர் நம் மனைக் கண்ணின்றிப் புறத்தே செல்லுங்கால், கண்ணுக்கு வரும் இடரைக் கை சென்று தாங்குதல்போல், நாமுறும் இடரை உடனே போந்து களையாராயினும் நமது சேரிக்கண் அவர் இருப்பது ஒருவாறு இன்பம் தருவதாம்; இங்கே உள்ளார் பலரும் நம்மினத்தா ராகலின், அஃது ஒரு வகையில் அமைதி தருவதாகும், அவர் இச்சேரிக்கண் இல்லாவிடத்து நாம் இங்கே வாழ்தல் தீதாகும். ஏதிலான் ஒருவன் எடுத்த அலர்க்கு ஆற்றாது தன் மார்பின் ஒரு முலையை அறுத்துத் தன் கற்பை நிலை நாட்டிய திருமா மண்ணிக்கு, அவள் உரையைக் கேட்டிருந்த அவையோர் எத்துணை நேர்மையுடைய ராயினும், அவளை வேட்டோரை யல்லது பிறர் யாவரும் இனியராகார்; அவ்வாறே நமக்கு ஆடவராவார் பலர் உளராயினும் தலைமகனை யல்லது பிற ரெல்லாம் இனியராகார்காண்” என்றாள். பரத்தையினுடைய இக்கூற்றின்கண், தலைமகன் மேனியைக் காணுமளவில் இருந்து வாழ்தலையும் அவன் உறையும் சேரி யிடத்து இருத்தலையும் விரும்புமாற்றால் அவனை இன்றியமை யாத காதல் மிகுதி பரத்தைபால் உளதாவது இனிது புலப்படுதல் கண்டு வியந்த மருதன் இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும் இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் கண்ணுறு விழுமம் கைபோல் உதவி நம்முறு துயரம் களையா ராயினும் இன்னா தன்றே அவரில் லூரே எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் 1கழனி இதணத் தாங்கண் ஏதி லாளன் 2கவலை கவற்ற ஒருமுலை அறுத்த 3திருமா மண்ணிக் கேட்டோர் 4எனைய ராயினும் வேட்டோ ரல்லது பிறர்இன் னாரே. இது தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலை நின்றொழுகப்படாநின்ற பரத்தை, பாணற்காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது. உரை : துனிதீர் கூட்டமொடு துன்னாராயினும் - ஊடலுணர்த்திக் கூடும் கூட்டத்தால் நம்மைக் கூடாராயினும்; காணுநர்க் காண்புழி வாழ்தல் இனிது-ஒருவரையொருவர் நன்கு காணு மாறமைந்த இடத்தே வாழ்வது இன்பம் தருவதாம்; கண்ணுறு விழுமம் கைபோல் உதவி-கண்ணுக் கெய்தும் துன்பத்தை உடனே கைசென்று உதவிக் காப்பது போல; நம்முறு துயரங் களையாராயினும் - நமக்குற்ற துன்பத்தை நீக்காதொழிந் தாராயினும்; அவர் இல்லூர் இன்னாது அன்றே - அவரை இல்லாத இவ்வூரும் சேரியும் எமக்குத் துன்பம் தருவனவாம்; எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் - நெருப்புப் போலும் நிறமுடைய பூக்களையுடைய வேங்கைமரத்திடத்துக் கடவுள் இருந்து காத்தலைச் செய்யும்; குருகு ஆர் கழனி இதணத்து ஆங்கண்-குருகுகள் வாழும் கழனியிடை நிறுவிய பரணிடத்தே; ஏதிலாளன் கவலை கவற்ற - அன்பின்றி ஏதிலனாகிய ஒருவன் உண்டாக்கிய கவலை உள்ளத்தை வருத்தினமையால்; ஒரு முலை அறுத்த திருமாமண்ணி - தன்மார்பின் ஒரு முலையை அறுத்தெறிந்து உண்மை நிலை நாட்டிய திருமாமண்ணியின் உரையை; கேட்டோர் எனையராயினும்-கேட்ட அவையினர் எத்துணை நேர்மை மிக்கோராயினும்; வேட்டோரல்லது பிறர் இன்னார் - அவளை மணந்தோனல்லது பிறர் யாரும் இனியராக மாட்டார் அன்றோ; அதுபோல, எ று, துன்னாராயினும், காணுநர் காண்புழி வாழ்தல் இனிது; களையாராயினும், அவர்இல் ஊர் இன்னாதன்றே; கேட்டோர் எனையராயினும் வேட்டோர் அல்லது பிறர் இன்னாராவது போல எனக் கூட்டி வினைமுடிவு செய்க. துனி, துனியைப் பயக்கும் ஊடல். புலவி மிக்கவழி ஊடலும் ஊடல் மிக்கவழித் துனியும் தோன்றும் என்க. புலவியை இளைய கலாம் என்றும், ஊடலை முதிர்ந்த கலாம் என்றும் கூறுப. துனி, வெறுப்பு. உணர்ப்புவயின் வாரா வூடல் பரத்தைக்கின்மை பற்றித் துனிதீர் கூட்டம் என்றார். துன்னுதல், புணர்தல்; “துன்னலம்பெரும பிறர்த் தோய்ந்த நின் மார்பே”1 என்பது காண்க. காணமகிழ்தல் காமத்துக் கியல்பாதலின், காண்புழி வாழ்தல் இனிது எனப் பட்டது. “இன்னாது இனனில்லூர் வாழ்தல்”2 என்பவாகலின், “இன்னாது” என்றார். வேங்கையின்பூ நெருப்புப் போலும் நிறமுடைமை பற்றி எரிவேங்கை எனப்பட்டது: “விடர்வரை எரிவேங்கை யிணர்”1 என்றும், “தழற்சினை வேங்கை நிழற்ற விர்ந் தசைஇ”2 என்றும் சான்றோர் வழங்குதல் காண்க. வேங்கை மலரும்போது அதன்கண் கடவுள் உறையும் என்றும் அக்காலத்து அதன்மேல் யாரும் ஏறுதல் இல்லையென்றும் கூறுவர்.3 இதணம், பரண். ஏதிலாளன், ஈண்டு அன்பில்லாதான். திருமாமண்ணி என்ற நங்கை யொருத்திபால் காதலுற்றுக் களவின்கண் ஒழுகி வந்த ஒருவன் பின்னர்த் தான் அவளை ‘அறியே’னென அன்பின்றிச் சொல்லி நீங்கினான்; அதனால் மனக்கவலை மிக்க மாமண்ணி தனக்கும் அவற்கும் உண்டாகிய காதலுறவைச் சான்றோரவையில் அறத்தோடு நின்று முடிவில் தன் மார்பைத் திருகி எறிந்து கற்பை நிலைநாட்டினாள். உண்மையுணர்ந்த சான்றோர் அவற்கு அவளை மணம் செய்துதர, அவனைத் தனக்கு இனிய கணவ னாகக் கருதி அவள் மனையறம் புரிந்து மாண்புற்றாள் என்பது இதன்கண் குறிக்கப்படும் வரலாறு.சான்றோர் அவளது உண்மைக் காதலை யுணர்ந்து அவள் வேட்ட கணவனையே மணம் செய்து வைக்கும் மனநல முடையராகவும், அவட்கு அன்பின்மையைச் செய்த அவனே இனியனாதல் தோன்ற வேட்டோரல்லது பிறர் இன்னாரே என்றார். திருமாமண்ணி அறத்தொடு நின்ற அவை யின்கண் இருந்து கேட்டோருள், அவற்கு அவளை மணம் புரிதல் நன்றென்றோரும், அன்றென்றோரும் என இருதிறத் தோருண்மை யின், அவருள் மணம் புரிந்தோரே அவட்கு நலம் செய்தோராவர் என்பது தோன்ற வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே என்றார் என்றுமாம். தலைமகன் அன்பைப் பெற்று அவனொடு கூடி மகிழும் பரத்தை அவன் தனக்குத் துனிகலவாத இனிய கூட்டம் தந்து சிறப்பிக்கின்றான் என்பதைத் தலைமகட்குப் பாங்காயினார் கேட்பக் கூறுகின்றாளாதலின், துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும் என்றும், எனவே தலைவிபால் துனியுற்றுக் கூடுதல் தவிர்ந்தானென்றும், ஆயினும் அத்தலைவி அவன் தன் மனைக்குப் போதலும் வருதலும் புரிதலைக் கண்டு அமையற்பாலளென்றும் கூறினாளாம் இனி. தான் வேண்டுவவெல்லாம் வேண்டியாங்கு உதவித் தன்னைப் பெரிதும் போற்றுகின்றானென்பாள் கண்ணுறு விழுமம் கைபோல் உதவித் தானுறையும் சேரியினின்றும் நீங்குதலிலன் என்றாளாம்; எனவே இதனைக் கேட்கும் தலை மகள் தன்னிற்பிரிந்து தலைமகன் நீங்கின மனைக்கண் இருத்தல் இன்னாது என்று நினைத்து வருந்துமாறு கூறுவாள், இன்னா தன்றே அவர் இல் ஊரே என்றாளாயிற்று. திருமாமண்ணியின் கணவன் அவளை விரும்பாது நீங்கினான் ஆயினும், அவனை அவளோடு இணைத்தோர் இனியராகவும் ஏனையோர், இன்னாராகவும் தோன்றினாற்போல, தலைமகனைக் கொண்டு தலைவி மனைவயிற் சேர்க்கும் அவள் வாயில்கள் இனியரும் எம்பால் அவனைக் கொணர்ந்து கூட்டும் விறலியரும் பாணருமாகிய நீவிர் அவட்கு இன்னாதாரு மாயினிர் என நெருங்கிக் கூறுவாளாய், திருமாமண்ணிக் கேட்டோர் எனையராயினும், வேட்டோ ரல்லது பிறர் இன்னாரே என்றாள். இதனாற் பயன் தலைவி கேட்டுப் புலவி மிகுவாளாவது. 217. கபிலர் மனையறம் புரியும் தலைமகன் பரத்தைமை மேற்கொண்டு புறத்தொழுகலானான். அது தெரிந்த தலைமகட்கு வருத்தமும் பொறாமையும் உண்டாயின. சின்னாள்களில் தலைமகன், தலைவியது வேறுபாடும் மனவருத்தமும் கண்டு அவ்வொழுக் கத்தைக் கைவிட்டுத் தன் மனைக்கே வந்தான். ஆயினும் தலை மகன்பால் எழுந்த வெம்மையால் தலைமகள் அவற்கு வாயில் மறுத்தாள். அவனுடைய உள்ளம் வருந்திற்று. எனினும் தவறு தன் கண்ண தாகலின் அவன் தோழியைத் தன்பொருட்டுத் தலைவி பால் வாயில் வேண்டுவித்தான். தோழி தலைவியை அடைந்து தலைமகனுடைய காதல் மிகுதியைக் கட்டுரைக்கவும், அவள் அதனை உடன்படக்கண்டு, “அவற்கு வாயில்மறுத்துப் புலவி கொள்வது நன்றன்று ”என்று மொழிந்தாள். அது கேட்ட தலை மகள் முறுவலித்து “தோழி, காதலர் நம்பால் மிக்க பேரன்பினர் என்பது யான் நன்கறிந்ததே; ஆயினும் யான் புலந்து ஊடுவதற்குக் காரணம் ஒன்று உண்டு: ஊடியவிடத்து அவர் அது நீங்குமாறு உணர்த்துங்கால், அவருடைய சொல்லிலும் செயலிலும் தோன்றும் வள்ளன்மை சாலவும் பெரிதுகாண்; அந்த இன்பத்தின் பொருட்டே யான் மறுத்தலும் ஊடலும் செய்கிறேன்” என்றாள். தலைமகளுடைய கூற்றின்கண், அவள் உள்ளத்தில் மாண் புற்று விளங்கும் காதல்மிகுதியும், அவள் அன்பால் பிணங்கிய போது, தலைமகன் தன் தலைமையும் பெருமையும் நோக்காது, வணங்கிய மொழிகளால் அவள் உள்ளம் கரைந்து இணங்குமாறு செய்வதில் அவன் உரையும் செயலும் அமைந்து நல்கும் இன்ப வேட்கையும் சிறந்து விளங்கக் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் அழகுறத் தொடுத்துப் பாடுகின்றார். இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும் 1கதழ்வரல் வேழம் இருங்கேழ் வயப்புலி வெரீஇ அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் நனிபெரி தினிய னாயினும் 2துனிபடர்ந் தூட லுறுவேன் தோழி நீடு புலம்புசேண் அகல நீந்திப் புலவி 3உணர்த்தல் வண்மை யானே. இது தலைவி தோழிக்கு வாயின் மறுத்தது. உரை : இசைபட வாழ்பவர் செல்வம் போல - புகழுண்டாக வாழ்பவருடைய செல்வம் காண்பார்க்குச் சிறந்து விளங்குதல் போல; காண்டொறும் பொலியும் - காணுந்தோறும் சிறந்து விளங்கும்; கதழ்வரல் வேழம் - விரைந்து வருதலையுடைய யானை; இருங்கேழ் வயப்புலி வெரீஇ- பெரிய வலிமிக்க புலிக்கு அஞ்சி நீங்குவது; அயலது - அயலிடத்தே உளதாகிய; கருங்கால் வேங்கை ஊறுபட மறலி - கரிய அடியையுடைய வேங்கையைத் தன் உடம்பில் புண்ணுண்டாகுமாறு மோதித் தாக்கி; பெருஞ்சினம் தணியும் - தனது மிக்க சினம் தணிந் தேகும்; குன்றநாடன் - குன்று பொருந்திய நாடனாகிய தலை மகன்; நனிபெரிது இனியனாயினும் - மிக மிக இனியவற்றையே செய்யும் இயல்பினனெனினும்; துனிபடர்ந்து ஊடலுறு வேன்- புலக்கத் தகுவனவற்றையே உள்ளி அவனோடு ஊடுவேன் காண்; தோழி-; நீடு புலம்பு சேண் அகல நீந்தி - நீள நின்று வருத்தும் தனிமைத்துயர் சேய்மைக்கண்ணே நீங்கச் செய்து; புலவி உணர்த்தல் வண்மையானே - என் ஊடலைப் போக்கிக் கூடற்கண் அவன் சொல்லாலும் செயலாலும் காட்டும் அன்பு மிகுதியுடையனாகலான் எ.று. குன்ற நாடன், நனி பெரிது இனியனாயினும், புலம்பு சேண் அகல, நீந்திப் புலவியுணர்த்தல் வண்மையான், தோழி, துனி படர்ந்து ஊடலுறுவேன்காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. காண்டொறும் பொலியும் குன்றநாடன், வேழம் வயப்புலி வெரீஇ அயலது வேங்கை மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் என இயையும். வேழம் பரிய வுருவினதாயினும் விரைந்த செலவினையுடைய தென்பது பற்றி, கதழ்வரல் வேழம் என்றார். “கால் கிளர்ந்தன்ன வேழ மேல்கொண்டு ” என்று1 சான்றோர் கூறுவது காண்க. இருமை, பெருமை. வயப்புலி வலியுடையபுலி; “வய வலியாகும்”.2 யானைக்குப் பகை புலியாகலின் புலியைக் கண்டு அஞ்சி நீங்கும் அவ்யானை பூக் கொண்டு விளங்கும் வேங்கைமரத்தைப் புலியெனக் கருதித் தாக்குவதாயிற்றென்க. “நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த, குறுங்கை யிரும்புலி”3 என்று பிறரும் கூறுதல் காண்க. மறலுதல், எதிரிட்டுத் தாக்குதல். துனிபடர்தல், புலக்கத் தகுவனவற்றை நினைதல்; துனி, ஈண்டுப் புலவி மேற்று. ஊடலுறுதல், ஊடும் செயற்கண்மிகுதல். ஊடல் நீடியவழிப் புலம்பும் நீடுதலின், உணர்த்திக் கூடுங்கால் புலம்பு கெடுமாறுபற்றிப் புலம்பு சேண் அகல நீந்தி என்றார். புலவி, ஊடல். உணர்த்தல், ஊடியவழி அவ்வூடற்கு ஏதுவாயவற்றைத் தெளிவித்துப் போக்கிக் கூடல். வண்மை, அதற்கு ஏதுவாகிய அன்புமிகுதி சுட்டி நின்றது. காணும் போதெல்லாம் காண் பார்க்கு வேண்டுவ கொடுத்து மகிழ்விப்பது இசைபட வாழும் செயலாதல் போலக் காணுந்தோறும் புதுப்பூ மலர்ந்து அவற்றை நாடிவரும் வண்டினங்கட்குத் தேனளித்து மகிழ்விக்கும் சிறப்புத் தோன்ற, இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண் டொறும் பொலியும் குன்ற நாடன் என்றார். இசைபட வாழ்த லாவது “ஈத்த திரங்கான் ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும் நல்லிசை”1 உண்டாக வாழ்தல். அவரை யாவரும் காண விழைப வாதலின், காண்டொறும் பொலியும் என்றார்; இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க், கீதல் தண்டா மாசித றிருக்கை, கண்டனென் செல்கு வந்தனென்”2 எனச் சான்றோர் கூறுதல் காண்க. தலைமகனது புறத்தொழுக்கத்தில் பரத்தையர் பலர் நல முண்ண ஒழுகிய அவன் செயலை மனத்திற்கொண்டு, நாடோறும் அவர்களால் சூழப்பட்டிருந்ததைக் குறிப்பாய்ச் சுட்டுகின்றா ளாகலின், இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும் குன்றநாடன் என்றும், அருஞ்செவ்வியும் இன்னா முகமும் உடையான் செல்வம் கண்டார்க்குப் பேயைக்கண்டாற் போலும் துன்பம் தருவது போலாது, பரத்தையர்க்கு எளிய செவ்வியும் இன்முகமும் உடையனாய் இன்பந் தருகின்றா னென்றும் கூறினாள். உள்ளுறையால் தான் வாயில்நேருங் கருத்தினளாதலைக் குறித்தலின், வெளிப்படையில் தோழி வாயில் நேர்தற்பொருட்டுக் கூறியதனைக் கொண்டெடுத்து, நனிபெரிது இனியன் என்றும், ஆயினும், தான் வாயின் மறுப்பது ஊடலின் பாற்படும் என்பாள் துனிபடர்ந்து ஊடலுறுவேன் என்றும், அதனால் தோழி வெறாமைப் பொருட்டுத் தோழி என்றும், அதற்கும் ஏது இது என்பாள், நீடு புலம்பு சேண் அகல நீந்திப் புலவியுணர்த்தல் வண்மையானே என்றும் தலைவி கூறினாள். ஊடல் நீடியவழித் தனிமைதோன்றி வருத்துதலின் நீடு புலம்பு என்றும், இன்மொழியுரைத்தும் அடிவீழ்ந்திருந்தும் ஊடலு ணர்த்திக் கூடும் தலைமகனுடைய அன்புமிகுதி தனக்குக் கழி பேரின்பம் தந்தமையின் அதனைத் தான் விரும்புமாறு தோன்ற புலம்பு சேணகல நீந்திப் புலவியுணர்த்தல் வண்மையானே என்றும் கூறினாள். ஊடுங்கால் ஒருவரி னொருவர் அகன் றிருத்தலை ஈண்டுப் புலம்பு என்றும், அஃது உணர்த்த உணரு மிடத்துப் பைய நீங்கி இல்லையாய் விடுதலின் சேணகல நீந்தி என்றும், ஊடியவழி உணர்த்தா தொழிதல் “வாடிய வள்ளி முதலரிந்தற்று”3 என்பவாகலின், புலவியுணர்த்தலை வண்மை என்றும் உரைத்தாள். ஆகவே அவருடைய புலவியுணர்த்தும் வண்மையை நயந்து துனிபடர்ந்த ஊடலால் வாயில் மறுக் கின்றேன் எனத் தலைவி கூறினாளாயிற்று. ஊடற்கண் சிறுதுனி தோன்றல் அமையும் என்க; “ஊடலில் தோன்றிய சிறு துனி நல்லளிவாடினும்பாடு பெறும்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. வேழம் வயப்புலி வெரீஇ அயலதாகிய வேங்கையோடு ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் என்றது, வாயில் வேண்டிப்போந்த தலைமகன் யான் அதனை மறுத்தற்கஞ்சித் தன் வருத்தம் தோன்ற நினக்கு மாற்றம் வழங்கித் தன் கருத்துமுற்றுப் பெறுகின்றான் எனத் தலைவி உள்ளுறுத் துரைத்தவாறு. தோழி கேட்டு வியப்புறுவது இதன் பயன். 218. கிடங்கிற் காவிதி கீரங்கண்ணனார் இச்சான்றோர் தொண்டை நாட்டின் தென்பகுதியான ஓய்மாநாட்டுக் கிடங்கில் என்னும் ஊரினர். இப்போது தென் னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் என்னும் பேரூரின் தென்பிடாகையாக இருக்கிறது. இவ்வூர் சங்க காலத்தில் ஓய்மா நாட்டு வேந்தர்க்கு அரசிருக்கை நகராக விளங்கிற்று; இங்கே இருந்த பழங்கால மண்கோட்டை, யான் காண இருந்து நாற்பது ஆண்டுகட்கு முன்பே இடிந்து மறைந்துபோயிற்று. அகழும் மதிலும் மறைந்து தெருக்களும் வீடுகளுமாக மாறிவிட்டன. இவ்வூர்க்கண் சங்க காலத்தில் வாழ்ந்த காவிதி கீரன் என்பார்க்கு கண்ணனார் மகனாராவர். காவிதி என்பது பழந்தமிழ் வேந்தரது ஆட்சியில் வழக்கியல் துறையில் வீறு பெற்று விளங்கிய சான் றோர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. “நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்துப், பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த, செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று மாங்குடிகிழார் கூறுவர். மேலும் இப்பட்டம் பெற்ற மேலோர் முடிவேந்தர்க்கு மகட்கொடை வழங்கும் மாண்பினர் என்று நச்சினார்க்கினியரும், “எட்டி காவிதிப் பட்டம் தாங்கிய மயிலியல் மாதர்” என்பதனால் நற்பண்புடைய மகளிரும் இக் காவிதிப்பட்டம் பெறற்குரிய ரென்று கொங்கு வேளிரும் கூறுகின்றனர். தந்தையாகிய காவிதி கீரனார்க்கு நல்லிசைப் புலவர் நிரலில் இடம்பெறத் தக்க வகையில் கண்ணனார் சிறந்து விளங்குவது அரிய பேறாகும். கண்ணனார் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில. களவின்கண் ஒழுகும் தலைமக்களிடையே தலைமகன் வரைந்துகோடலை நினையாது நீட்டிப்பா னாயினன். பிரிவிடை யிட்ட கூட்டமே நிகழ்தலால் தலைமகட்கு ஆற்றாமை மிகுவ தாயிற்று. மாலைப்போது காணுந்தோறும் அவட்குக் காதல் கைம்மிக்கு வருத்தமுறுவித்தது. அவளது ஆற்றாமை கண்ட தோழி தலைமகனுடைய அன்பையும் மாண்பையும் வற்புறுத்திக் கூறிவந்தாள். ஆயினும் தலைமகள் ஆற்றாளாய், மாலைப்போதின் வரவு காட்டித் “தோழி, ஞாயிற்றின் ஒளியும் குறைகின்றது; இரவுப்போதும் பூவுதிர்ந்து பொலிவழிந்து தோன்றும் கொடி போல எய்துவதாயிற்று; வௌவால்களும் இரை வேட்டு அங்கு மிங்கும் பறக்கின்றன; ஆந்தைச் சேவல் தன் பெடையின் குரல் கேட்டுத் தானும் தன் அலறுகுரலை எடுக்கின்றது; காதலர் குறித்த பொழுதும் கழிந்தொழிகின்றது; கூகைகளும் இரவுப்போதின் வரவு கண்டு குழறுகின்றன. பனைமரத்தில் கூடுகட்டி வாழும் அன்றிலின் குரலை யான் தனித்திருந்து கேட்டு வருந்தாநிற் கின்றேன்; இந் நிலையில் நீ என்னை ஆற்றுவாயாக என்கின்றாய்; யான் எங்ஙனம் ஆற்றுவேன்?” என்று எதிரழிந்து மொழிகின்றாள். தலைவியது இக் கூற்று, மாலை மலரும் காதல் வேட்கையின் மாண்பு, மாலை மறைய வரும் இரவிடை நிகழும் நிகழ்ச்சிகளால் சிறந்து நிற்பது புலப்படுத்தி ஆற்றாமையை விளக்கிக் காட்டும் திறம் கண்ட கீரங் கண்ணனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே எல்லியும், பூவீ கொடியிற் புலம்படைந் தன்றே வாவலும் வயின்றொறும் பறக்கும் சேவலும் 1வளைவாய் இரும்பெடை நகுதொறும் விளிக்கும் மாயாக் காதலொ 2டதற்படத் தெளித்தோர் கூறிய பருவம் கழிந்தன்று 3பாறிய பராஅரை வேம்பின் படுசினை யிருந்த குராஅற் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோயட வருந்தி இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ 1அங்கட் பெண்ணை 2அன்றிற் குரலே. இது வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிரழிந்தது. உரை : ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று - ஞாயிறு மேற்றிசை யில் சாய்ந்து இறங்குதலால் வெயிலும் மழுங்கிவிட்டது; எல்லியும் பூவீ கொடியின் புலம்படைந்தன்று - இரவுப் போதும் பூவுலர்ந்த கொடியைப் போலப் பொற்பிழந்து விட்டது; வாவலும் வயின்தொறும் பறக்கும் - வௌவால்களும் இரை தேடி இடந்தோறும் பறப்பவாயின; சேவலும் வளைவாய் இரும்பெடை நகுதொறும் விளிக்கும் - ஆந்தைச் சேவலும் வளைந்த வாயையுடைய பெரியபெடை மகிழ்ந்து கூவுந் தோறும் எதிர்கூவி அழைக்கும்; மாயாக் காதலொடு அதற் படத் தெளித்தோர் - குன்றாத காதலால் நாமும் அத்தன்மை யெய்த வற்புறுத்திச் சென்ற காதலர்: கூறிய பருவம் கழிந்தன்று - குறித்தபொழுதும் கழிந்தது; பாறிய பராஅரை வேம்பின் படுசினை இருந்த குராஅற்கூகையும்-பட்டுப்போன பருத்த அடிமரத்தையுடைய பசுந்தழை யுதிர்ந்த கிளையின்கண் தாங்கிய கபிலநிறங் கொண்ட கூகையும்; இராஅ இசைக்கும்- இரவுப் போதுகண்டு மகிழ்ந்து குழறாநிற்கும். ஆனா நோய் அட வருந்தி - நீங்காத காதல்நோய் வருத்துதலால் வருந்தி; இன்னும் - இப்பொழுதும்; தமியேன் கேட்குவென் கொல்லோ- தமியளாய் இருந்து யான் கேட்டல்வேண்டும் போலும்; அங்கண் பெண்ணை அன்றில் குரல் - அழகிய இடத்தில் நிற்கும் பனைமரத்தில் வதியும் அன்றிலின் குரலை எ.று. ஞாயிறு கதிர் மழுங்கின்று, எல்லி புலம்படைந்தன்று, வாவல் பறக்கும், சேவல் விளிக்கும், பருவம் கழிந்தன்று, கூகை இசைக்கும், அன்றில் தமியேன் கேட்குவென் கொல்லொ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வானத்தினின்றும் மேலைக் கடலுக்குள் இறங்குதல் போறலின், ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று என்றார். ஞாலுதல், கீழே இறங்குதல். கதிர், வெயிலொளி, மழுங்குதல், குன்றுதல். புலம்பு, பொலிவழிவு. வாவல், வௌவால். வளைவாய் இரும்பெடை என்றதனால் சேவல் ஆந்தைக் காயிற்று. நகுதல், ஒலித்தல். அதற்படத் தெளித்தல், அக்காதலே யுற்றுத் தெளியுமாறு உரைத்தல். பருவம், ஈண்டுத் தலைமகன் குறிக்கும் பொழுதின் மேற்று. பாறுதல், பசையறப் புலர்தல். படுசினை, தழையுதிர்ந்த கொம்பு. இரவுப் போதில் கூகை இருள்படத் தழைத்த மரங்களில் தங்காது பட்டமரக் கொம்புகளில் தங்கி இரைதேடி நோக்கும் என அறிக. பெண்ணை, பனை மரம். களவின்கண் காதலனைத் தனிமையிற் கண்டு இன்புறும் காதல், இளமையுள்ளத்தில் புதுவது முளைத்து வளரும் இயல் பிற்றாகலின், உள்ளம் உணர்வு செயல் ஆகியவற்றைக் கவர்ந்து அடிப்படுத்தி மேலோங்கி அதனை மிகுவிக்கும். மாலைப்போது காணின் அமைதியின்றி நோய் செய்தலின், ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று என்றும். மாலைப்போதைத் தொடர்ந்துவரும் இரவுப்போது இருளை முந்துறச் செலுத்தி ஒளியின்றி வருதல் பற்றி எல்லியும் பூவீ கொடியின் புலம் படைந்தன்றே என்றும் கூறினாள். பகலொளியில் இயற்கைக் காட்சிகளால் உள்ளம் ஒன்றியிராது கண் முதலிய பொறிகளின் வாயிலாகப் பஃறலைப் பட்டு ஓடுதலின், காதலன் நினைவு மறைந்தொழியினும், இரவின் கண் உள்ளம் பொறிவழிச் சேறற்கின்றி மடங்கித் தன்னை நோக்கி ஆண்டு வீறுகொண்டு தோன்றும் காதலுணர்வைக் கிளரச் செய்வதனால், மாலையினையும் அதனை மருவிவரும் இரவினையும் எடுத்து மொழிந்தாள் என அறிக. இருள் பரவியபோது இனிது காணும் கண்ணுடைமையால் வௌவால் பறப்பது கண்டு தானும் அவ்வாறு காதலனைக் காணலாகாமை நினைத்து புழுங்குமாறு தோன்ற வாவலும் வயின்றொறும் பறக்கும் என்றும், ஆந்தையின் சேவல் பெடையின் குரல் கேட்டுத் தனது உண்மை தோன்றக் கூவுவது கண்டாட்குத் தலைமகன் அதுபோல் தன் வேட்கை நோக்கி வாராமைக்கு இரங்குமாறு தோன்றச் சேவலும் வளைவாய் இரும்பெடை நகுதொறும் விளிக்கும் என்றும் இயம்பினாள். எத்துணை மறக்க முயலினும் அவனுடைய காதலுரைகள் நினைவில் தோன்றுதலின் மாயாக் காதல் என்றும், பிரியுங்கால் பிரிவுத் துன்பம் தோன்றாதவாறு தேனும் பாலும் போலும் சொற்களைச் சொல்லிக் காதலுணர்விலே இருக்கச் செய்தமை நினைத்து தலைமகனை அதற்படத் தெளித்தோர் என்றும், அவன் வருவல் என வற்புறுத்தபொழுது வந்தும் அவன் வாராமையின், கூறிய பருவம் கழிந்தன்று என்றும் கூறினாள். ‘தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல், கானும் புள்ளும் கைதையு மெல்லாம் கரியன்றே1’, என்று பிறரும் கூறுதல் காண்க. இடையாமத் தொடக்கத்தில் கூகை குழறுதலின், அதுகாறும் தான் உறக்கமின்றி வருந்தினமை புலப்படக் குராஅற் கூகையும் இராஅ இசைக்கும் எனவும் அத்துணைப் பொழுது கழிந்தும் வேட்கைநோய் கழியாமை எண்ணி ஆனா நோயட வருந்தி எனவும், சிறிது போதில் அன்றிலின் குரல் கேட்டு ஆற்றாளாயினமை தோன்ற இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ அங்கட் பெண்ணை அன்றிற்குரலே எனவும் கூறினாள். இதனால் தலைவி அயர்வு நீங்குவாளாவது பயன். 219. தாயங் கண்ணனார் இத்தாயங் கண்ணனாரின் வேறுபடுத்தற்கே வெறொரு சான்றோர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எனக் குறிக்கப்படு கின்றார். தாயன் என்பார்க்கு மகன் என்பது தோன்ற இவர் தாயங் கண்ணனார் எனப்படுகின்றார். தாயன் என்பது பண்டை நாளைத் தமிழ் மக்களிடையே பெருக வழங்கிய பெயர். அரிவாள் தாயன் நாயனார் என்றொரு சான்றோர் திருத்தொண்டர் நிரலில் காணப்படுகின்றார். இப்பெயர் இக்காலத்தே தாயப்பன் என்று வழங்குகிறது. தலைவனான எழினி என்பானது ஏவலை மேற் கொண்டு செல்லும் மறவர் வேற்றுநிலம் சென்று ஆனினம் கவர்ந்து வரும் செயலையும், வேங்கடம் தொண்டையர்க்கும், கொல்லிமலை சேரர்க்கும் உரிய வென்பதையும் இவர் குறிக் கின்றார். இவர் சோழருடைய காவிரியையும், அதன் கரைக்கண் உள்ள உறையூரையும் சிறப்பித்துப் பாடுவார். வடுகரைப் பற்றிச் சில கூறலுற்ற இக்கண்ணனார் அவர்கள் நிணங்கலந்த சோறுண் பதை எடுத்து மொழிகின்றார். இவர் பாடிய பாட்டுக்கள் சில ஏனைத் தொகைநூல்களி லுண்டு. தம்மிற்றாமே தலைப்பெய்து காதலுறவு கொண்டு களவின் கண் ஒழுகிவரும் தலைமக்களில், தலைமகன், தலைமகளை வரைதல் குறித்துப் பொருள்வயிற் பிரிந்து சென்றான். பிரிவுத் துன்பத்தால் உண்டி சுருங்கியும் உறக்கமின்றியும் வருந்திய தலைவியின் வேறுபாட்டைக் கண்ட தோழி தலைமகனைப் புலந்து சில கூறுவாளாயினள். தோழியின் உரை தலைமகட்குச் சிறிது வருத்தம் தந்தது;அவள் தன் பொருட்டே அவ்வாறு ஆற்றாது மொழிகின்றாள் என்பது உணர்ந்து அவட்கு விடை கூறுவாளாய், “தோழி, யான் தனித்திருந்த கானற்சோலைக்கண் தானாகவே வந்து நட்புற்றானாதலால், இப்போதும் அவன் தானாகவே வந்துசேர்வன்; அதுபற்றிக் கவலல் வேண்டா. என் கண்ணும் தோளும் கூந்தலும் தொன்னலம் இழந்து வேறுபடினும் என் நன்னுதல் பசந்து ஒளிகுன்றியவழியும், என்னுயிரே ஆற்றாமை யால் இறந்துபடுவதாயினும் யான் சிறிதும் அவரைப் புலந்து கொள்ளேன்காண்” என்றாள். தலைவியின் இக்கூற்றால், அவள் உள்ளத்தெழுந்த காதல் மிகுதி, அவன் வற்புறுத்த சொல்லிடத்தே கொண்டிருக்கும் உறுதியைப் புலப்படுத்துமாற்றால், அவளது மனத் திண்மையின் மாண்பு விளங்கக் கண்ட தாயங்கண்ணனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் 1தொன்னலம் இழந்து நன்னுதல் பசப்ப இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்னதூஉம் புலவேன் வாழி தோழி சிறுகால் அலவனொடு பெயரும் 2புலவுத்திரை நளிகடல் பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர் முதிரா ஞாயிற் றெதிரொளி கடுக்கும் கானலம் பெருந்துறைச் சேர்ப்பன் 3தானே யானே புணர்ந்த மாறே இது, வரை விடை வைத்துப் பிரிய ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உரை : கண்ணும் தோளும் தண்நறும் கதுப்பும் - கண்களும் தோளும் தண்ணிய நறிய கூந்தலும்; தொன்னலம் இழந்து - பழைய அழகு கெடவும்; நன்னுதல் பசப்ப - நல்ல நுதல் பசப்பெய்தவும்; இன்னுயிர் பெரும்பிறிது ஆயினும் - எனது இனிய உயிர் இறந்துபடுமாயினும்; என்னதூஉம் புலவேன் - சிறிதும் புலத்தலைச் செய்யேன்காண்; வாழி- தோழி-; சிறு கால் அலவனோடு பெயரும்-சிறு சிறு கால்களையுடைய நண்டுகளுடனே நீங்கும்; புலவுத்திரை நளிகடல்-புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின்கண்; பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் - பெரிய மீன்களைப் பிடித்துவாழும். சிறுகுடியினராகிய பரதவர்; கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர் - இரவில் தம் படகுகளில் ஏற்றிய மிக்க கதிர்களை யுடைய ஒள்ளிய விளக்குகள்; முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்கும் - இளஞாயிற்றின் முற்படத் தோன்றும் கதிரவன் ஒளியை நிகர்க்கும்; கானலம் பெருந்துறைச் சேர்ப்பன் - கானற்சோலை நின்ற பெரிய துறையினையுடைய தலைவன்; தானே யானே புணர்ந்தமாறு - தானாகவே தமியனாய் வந்து என்னைக் கூடினானாதலால் எ.று. தோழி, சேர்ப்பன், தானே யானே புணர்ந்தமாறு, தொன்னல மிழந்து நன்னுதல்பசப்ப இன்னுயிர் பெரும் பிறிதாயினும் என்னதூஉம் புலவேன், வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கதுப்பு, கூந்தல். தொன்னலம், புணராமை முன்பிருந்த அழகு, நன்னுதல், நன்மை, ஒளிபொருந்தித் திகழ்தல், பெரும்பிறிது, சாக்காடு, பெரும்பிறி தின்மையின் இலேனு மல்லேன்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. நளி, பெருமை, ஈண்டுப் பரப்பும் ஆழமுடைமையும் சுட்டிற்று. கனை கதிர், பருத்த திரியோடு கூடிய சுடர்விளக்கு; நாட்காலையில் தோன்றும் இளஞாயிற்றை முதிரா ஞாயிறு என்றார். எதிரொளி, முற்படத்தோன்றும் கதிரொளி. மாறு: ஏதுப்பொருள்பட வருவதோர் இடைச் சொல். பண்டைத் தமிழர் வாழ்வில் தன் வாழ்க்கைக் குரிய துணையை நாடிக்கொள்ளும் உரிமை ஆண்மக்கள் பால் இருந்தமையின், அத்துணையை வரைந்துகொண்டு வதுவையிற் கூடி மனையறம் மேற்கோடற்கு வேண்டும் பொருளையும் தானே உடன்தேடிக் கோடல் ஆண்மக்கட்குச் கடனாக இருந்தது. பெற்றோர்க்கு அவர் பெறும் மக்களைப் பொருள் என்பது வழக்கே யன்றிப் பெற்றோர் ஈட்டிய பொருளை மக்கட்குரிய பொருள் என்பது இல்லை. பெற்றோர் இறந்தபின், பொருளாகிய இயைபினால் மக்கள், தம் பெற்றோர் ஈட்டிய பொருட்கு உரியராவர். பெற்றோர் வழிவழியாக வரப்பெறாது தமது தாளாண்மையால் ஈட்டிய பொருட்கு அவர் வாழுங் காலத்தே மக்கள் உரிமை பாராட்ட, இந்நாளைய வழக்கிலும் விதி குறியாதிருப்பது இந்த அடிப்படை பற்றியேயாகும். ஒரு தந்தை தான் ஈட்டிய பொருட்கு மகனுக்கு உரிமையின்றாயினும் அவன் வயிற்றிற் பிறக்கும் மக்கட்கு உரிமையுண்டென்பது பற்றி, அவனுக்குத் தன் பெயரை யிட்டுப் பெயரன் என்று சிறப்பிப்பது மரபாயிற்று. பண்டும் இம்மரபே இருந்தமை. “அகன்றுறை யூரனும் வந்தனன், சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே”1 என்பதனால் அறியப்படும். ஆண்மக்களை யின்றிப் பெண்களையே பெற்ற தந்தை தன் பொருளை மகட்கு அளிப்பதும், பின்னர் அஃது அவர்கட்கு உரியதாதலும் உண்டு. எனினும், தன்னைக் கொண்ட கணவனுக்குத் துணையாய் நின்று ஈட்டும் பொருளையே தனக்கு உரியதாய்க்கோடல் தமிழ்மகளிர் இயல்பு; “கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்”2 என்றும், “நம் படப்பைத், தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு, உவலைக் கூவற்கீழ் மானுண் டெஞ்சிய கலுழி நீரே”3 என்றும், பெற்றோர் அமைந்த வீட்டின் கண் வாழ்தல் பீடன்று என்ற கருத்துப்பட, “பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல்லிருப்பாய், கற்ற திலை மன்ற”4 என்றும் வருவனவற்றால் தந்தையின் பொருளைத் தாம் பெற விரும்பாத தன்மை தமிழ்மகளிர் பால் இருந்தமை உணரப்படும். படவே, மருமக்கள் தாயமுறை பண்டைத் தமிழ் மரபன்மை இனிது விளங்கும். ஆணின்றிப் பெண்ணே பெற்ற பெருஞ் செல்வப் பெற்றோராலும், பெண்ணினம் குன்றிய சமுதாயத் தாராலும் தோற்றுவிக்கப்பட்ட தாயமுறை மருமக்கள் தாய முறையாய்ச் சில மக்களினத்தே இருந்துவருவது கண்டு இதுவே மக்கள் தாய முறைக்கு முன்னே நிலவிய தென்று சில ஆராய்ச்சி யாளர் கருதுவாராயினர்.1 நிற்க. தன் வாழ்க்கைக்குத் துணை யெனத் தேர்ந்துகொண்ட தலைமகளை வரைந்து கொள்ளத் துணிந்த தலைமகன் வரைபொருள் வேண்டித் தலைவிபால் விடை பெற்றுச் சென்றானாக. அவன் பிரிவிடை வேட்கைமிக்குத் துடிக்கும் தலைவியின் இளமையுள்ளம் வருந்துதலால், கண் பசந்தும், தோள் மெலிந்தும், கூந்தல் கட்டவிழ்ந்தும் வேறுபடு தலின், அதனை விதந்து கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் தொன்னலம் இழந்து என்றும், வேட்கை வயப்பட்டு அது தணியப் பெறாதார்க்கு நுதல் ஒளி மழுங்குதல் பற்றி, நன்னுதல் பசப்ப என்றும் இவ்வேறுபாட்டால் இறந்துபாடு எய்துதல் இல்லை யாயினும் எய்துமாயின் என்பாள், இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்றும், தலைமகன் வற்புறுத்த சொல் மேல் வைத்த உறுதியால் அவன் வரவு தவிரான் என்பாள், என்னதூஉம் புலவேன் என்றும், அவள் வேறுபாடு கண்டு தோழி வருந்துதலின், அதனை விலக்கும் கருத்தினால் வாழி என்றும் தோழி என்றும், தலைமகன் தானாகவே போந்து என் உள்ளத்தைப் பிணித்துக் காதலுறவு கொண்டானாகலின் தன்னால் நிகழும் இம்மெலிவைத் தான் உணர்ந்து வருதல் தவிரான் என்பாள், தானே யானே புணர்ந்தமாறே என்றும் கூறினாள். சிறு குடியினராயினும் பரதவர் பெருங்கடற்கண் பெருமீன் கொள்ளும் பெருநோக்கினராதல் போல, நம் பெண்மையால் மேனி வேறுபடினும் பெருங்குடியில் தோன்றிய பெருமகன் தொடர்பு நோக்கி அமைதல் வேண்டும் என்றற்கு, நளிகடற் பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் என்றும், பரதவர் மாட்டிய கனைகதிர் இள ஞாயிற்றின் எதிரொளி தோன்று தல் போலத் தலைமகன் தன் பிரிவின்கண் வற்புறுத்த சொல் என் உள்ளத்தே உறுதியிழவாவாறு நின்று இலங்குகிற தென்பாள். கங்குல் மாட்டிய கனைகதி ரொண்சுடர், முதிரா ஞாயிற் றெதிரொளி கடுக்கும் என்றும் உள்ளுறுத்து மொழிந்தாள். 220. குன்றின்கட் பாலி ஆதனார் இச்சான்றோர் பெயர் குண்டுகட் பாலியாதனார் என்றும், குன்றுகட்பாலி யாதனார் என்றும் காணப்படுகிறது. புறநானூற்றிற் கண்ட திருத்தம் பற்றிக் குன்றின்கட் பாலி ஆதனார் என்று கொள்ளப்பட்டது. குன்றுகட்பாலி என்பது ஓர் ஊர்ப்பெயர். அஃது இப்போது பாலிக்குன்று என்று மாறிப் பாலிக்குன்னு என்ற உருவில் மலையாள மாவட்டத்துக் கோழிக்கோட்டுப் பகுதியில் உளது. இவர் காலத்தே சேரநாட்டின் முடிவேந்தனாய் இருந்தவன் செல்வக் கடுங்கோ வாழியாதனாவன். இவ்வேந்தன் காலத்தில் ஆன் பொருநைக் கரையில் இப்போது தாராபுரம் எனப்படும் கொங்குவஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்த சேரர் காலத்தில் ஆன்பொருநைக் கரையிலுள்ள வஞ்சிநகரான கருவூர் விளக்கம் பெற்றது. இனி, வாழியாதன் பெயரே பாளியாதனாகிப் பின் பாலியாதனாகியிருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். இவர் பாடிய பாட்டொன்று புறநானூற்றிற் காணப்படுகிறது. இயற்கைப் புணர்ச்சியால் தலைமகளது நட்புப் பெற்ற தலைமகன், வழிநிலைக்காட்சிகளால் அவளுடைய உயிர்த் தோழியை உணர்ந்து அவளை மதியுடம்படுத்து அவளாற் பெற லாகும் கூட்டம் பெற முயல்வானாயினன். தோழியின் துணையைப் பெற்றாலன்றித் தலைவனது நட்பு மேலே நிகழ்தற்குரிய ஒழுக்கப் பயனை நல்காது என்பது உலகறிந்ததொன்று. தலைமக்களிடையே இயற்கைப் புணர்ச்சி வாயிலாக நட்புத் தோன்றியிருத்தலைத் தோழி அறியாளாகலின், தலைமகன் தன்னை அணுகி யுரை யாடற்கு உடன்படாது அவனைச் சேட்படுக்கலுற்றாள். பன் முறை முயன்று தோழிபால் இடம் பெற்று இரந்து பின்னின்ற வழியும், தோழி தலைவியின் குறிப்புணர மாட்டாமையால் அவனை மறுத்தலே செய்வாளாயினள். அதனால் தலைமகன் ஆற்றாமை மீதூர்ந்து மடலேறுதலே தக்கது என்றும், தோழி தலைமகட்கு அயலாள் போன்று ஒழுகுவது நன்றன்றென்றும் தோழிக்கு உரைக்கக் கருதி அவள் தான் சொல்வது கேட்கு மளவில் நின்று தன்னுட் கூறுவானாய் “மணிகள் பல கோத்த கச்சினை இடையிற்கட்டி எருக்கங்கண்ணி” சூடி மடல்மா பண்ணி யான் இவர்தலுறின், அதனை ஈர்த்து மகிழும் இவ்வூர்க் குறுமக்கள் பெரிதும் சான்றோராவர்; எவ்வாறெனின், முழவு முழங்கும் விழாக்களையுடையது இவ்வூர்; இக்குறுமக்களை வினவின் அவர்கள், யாம் இவ்வூரவரேம் என்று சொல்லிப் பெருமகிழ்வு கொள்வதுடன், தோழியைச் சுட்டி இவர் யார் என்று வினவின், ஒப்புரவு என்னும் அறத்தை நன்கு அறிந்திருத் தலால்; இத்தோழியர் தேமொழியும் கயல்போலும் உண்கண்ணு முடைய இளையளாகிய தலைமகட்கு அயலோராவர் என்று எம் கருத்துக்கு ஒப்ப இசைக்கின்றாராகலான்” என்று கூறினான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், தான் மடலேறக் கருது வதையும், தோழியைத் தனக்கு உயிர்த்துணையாகத் தலைமகள் குறித்ததற்கு மாறாக அயலார் போன்று ஒழுகுதல் அவட்கு அறமன்றெனத் தலைவிக்கும் தனக்குமுள்ள முன்னுறவை உய்த் துணரவைத்து உடம்படுவிக்கும் திறத்தையும் கண்ட பாலி யாதனார் அவற்றை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின் றார். சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் குவிமுகிழ் 1எருக்கங் கண்ணி சூடி உண்ணா நன்மாப் பண்ணி 2எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள் பெரிதும் சான்றோர் மன்ற விசிபிணி 3முழவுக்கண் புலரா விழவுடை யாங்கண் ஊரேம் என்னும்இப் பேரே முறுநர் தாமே ஒப்புர வறியின் தேமொழிக் கயலேர் உண்கட் குறுமகட் 4கயலோ ராபஎன் றெம்மொடு படலே. இது பின்னின்ற தலைமகன் ஆற்றானாய்த் தோழி கேட்பச் சொல்லியது; குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கதூஉமாம்.5 உரை : சிறுமணி தொடர்ந்து - சிறிய பல மணிகளைக் கோத்து; பெருங்கச்சு நிறீஇ - பெரிய கச்சினை நிறுத்தி; குவிமுகிழ் எருக்கங்கண்ணி சூடி - குவிந்த அரும்புகளைக் கொண்ட எருக்கினால் தொடுத்த கண்ணி அணிந்து; உண்ணா நன்மா பண்ணி - பனைமடலாற் குதிரையொன்று பண்ணி; எம்முடன் மறுகுடன் திரிதரும் - அதன்மேல் இவரக் கருதும் எம்முடன் தெருவெல்லாம் அதனை ஈர்த்துத் திரியும்; சிறுகுறு மாக்கள் - சிறு பிள்ளைகள்; பெரிதும் சான்றோர் மன்ற - மிக்க சான்றோராவர் தெளிவாக; விசிபிணி முழவுக்கண் புலரா - விசித்துக் கட்டப்பட்ட முழவினது கண் ஓயாத முழக்கத்தைச் செய்யும்; விழவுடை ஆங்கண் - விழாவையுடைய ஊரின்கண்; ஊரேம் என்னும் இப்பேர் ஏமுறுநர் - யாவிரென வினவு வார்க்கு இவ்வூரினேம் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்; ஒப்புரவு அறியின் - ஒப்புரவு என்னும் அறத்தை அறிந்திருத்தலால்; தேமொழிக் கயல் ஏர்உண்கண் குறுமகட்கு அயலோராப என்று - தோழியைக் காட்டி, இவர் தேன்போன்ற மொழியும் கயல்மீன்போன்ற கண்ணுமுடைய இளமகளாகிய தலைமகட்கு அயலோராவர் என்று; எம்மொடுபடல் - எம் கருத்துக்கு ஒப்ப இயம்புகின்றன ராகலான் எ-று, மணிதொடர்ந்து, கச்சுநிறீஇ, கண்ணிசூடி, நன்மாப் பண்ணி, திரிதரும் குறுமாக்கள் பெரிதும் சான்றோர் மன்ற, ஏமுறுநராகிய அவர், அறிதலின், குறுமகட்கு அயலோராப என்று எம்மொடு படலான் எனக் கூட்டி வினை முடிவுசெய்க. எஞ்சிநின்ற சொற் கள் இசையெச்சத்தாற் பெறப்பட்டன. சிறு சிறு மணிகளைத் தொடர்ச்சியாக நிரல்படக் கோத்தமை தோன்ற, சிறுமணி தொடர்ந்து என்றார்; பனைமடலாற் செய்யப்பட்ட குதிரையா கலின் அதனால் எளிதில் அறுக்கப்படாமைப் பொருட்டுப் பெருங்கச்சு வேண்டப் பட்டது. எருக்கங்கண்ணி, எருக்கம் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணி; “குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப”1 என்றும், “எருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணி யார்ப்ப, ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து”2 என்றும் சான்றோர் குறித்தல் காண்க. உண்ணா நன்மா என்றது, ஏனைக் குதிரை களின் வேறுபடுத்து வெளிப்படுத்தற்கு. முழவின் கண் புலர்ந்த வழி எளிதிற் கிழிந்து கெடுமாகலின் முழவுகண் புலரா என்றும், விழாக்காலத்து முழா முழக்குதல் இயல்பாதலின் முழவுக் கண்புலரா விழவுடை ஆங்கண் என்றும் கூறினார். “விசிபிணி, மண்'82ர் கண்ணும் ஓம்பி”1 என்று பிறரும் கூறுதல் காண்க. ஏமுறல், மயங்குதல்; ஈண்டு மகிழ்ச்சி பற்றிய மயக்கின் மேற்று, ஏமம், ஏம் என நின்றது; “எலுவ, சிறாஅர் ஏமுறு நண்ப”2 என்றாற்போல. ஒப்புரவு, அவரவர்க்கு ஒத்த தறிந்தொழுகும் உலகநடை; படல், படுதல், அஃதாவது ஒத்தொழுகுதல். ஏமுறுநர், சுட்டுப் பொருள் பட வந்தது. அறியின்; அறியென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஏதுப் பொருட்டாய இன்னுருபேற்று நின்றதாம். தன் கருத்தை யுணராமல் தன்னைச் சேட்படுத்துவதே புரிந்தொழுகும் தோழியும் தலைமகளும் உணரத் தான் மடலேறக் கருதியதனைத் தலைமகன் குறிப்பாய் உணர்த்துகின்றானாகலின், மடலேறுவார் செய்யும் ஒப்பனைகளை முந்துற எடுத்து மணியும் கச்சும் கண்ணியும் என மொழிவானாயினன். மடலேறிச் செல்லு மிடத்து அதன் வரவு பிறர்க்குத் தெரிதல் வேண்டிச் சிறுமணி களைக் கோத்தமையால் சிறுமணி தொடர்ந்து என்றான்; பிறரும் “மணியார்ப்ப ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து”3 என்பது காண்க. மடலூர்தல் யாண்டும் வழக்கில்லையாயினும், இளமகளிரை அச்சுறுத்தற்பொருட்டுக் கூறப்படுதலின், ஒவ்வொன்ற னையும் சிறப்பித் துரைப்பானாயினான். மடலூர்வோன் தலை மகளின் உருவும் பெயரும் கிழியொன்றில் எழுதிக் கையிலேந்தி மாமேல் இருப்ப, அதனை ஊர்ச்சிறுவர்கள் ஈர்த்துத் திரிவர் என்பது பற்றி, எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள் என்றும், மறையும் மாயமும் இன்றித் தமக்குட் பட்டதைப் பட்டாங்கு மொழிதல் பற்றிப் பெரிதும் சான்றோர் மன்ற என்றும், தன் கூற்றுக்குரிய ஏதுவினைப் பின்னர்க் கூறுதலின் சான்றோர் என்றொழியாது மன்ற என்றும் கூறினான். விழா நிகழ்ச்சியைப் பலர்க்கும் சிறப்புற முழங்கித் தெரிவிப்பதுபற்றி விசிபிணி முழவு என்றும், விழாக் காலத்தில் வேற்றூர் மக்களும் வந்து கூடுபவாகலின், மடன்மாவை ஈர்த்துத் திரியும் சிறுவர்களை நோக்கி நீவிர் யாவிர் என்று வினாவ அவர்கள் யாம் இவ்வூர்ச் சிறுவர்களே என மிக்க மகிழ்ச்சியுடன் விடை யிறுத்தமையின், அதனைக் கொண்டெடுத்து, ஊரேம் என்றும் இப்பேரேமுறுநர் என்றும் கூறினான். எனவே, அவர்கள் கூறுவ யாவும் வாய்மையே என்பது வற்புறுத்தவாறாயிற்று. மிகவும் சிறியராயினும் உலக நடை அறிந்து அதற்கொப்ப ஒழுகும் ஒட்பமுடையரென்பது தோன்ற, ஒப்புரவு அறியின் என்றும், அவர்க்குத் தோழியைக் காட்டி, இவர் தலைமகட்குச் சிறந்தவரல்லரோ என்று வினவிய வினாவுக்கு வழுவின்றிச் செவ்வே விடையிறுத்தமையின், அதனைத் தேமொழிக் கயலேர்உண்கண் குறுமகட்கு அயலோர் ஆப என்று சொல்வாராயினர் என்றும், தலைமகட்கும் தனக்கும் முன்னுறவுண்மை புலப்படுத்தற்கு, தேமொழி என்றும், கயலேர் உண்கண் என்றும், அதனைத் தன் இளமையால் மறந்து மறைத் தொழுகுகின்றாளென்றற்குக் குறுமகள் என்றும், அவள் குறிப் புணர்ந்து தன்னை அவளொடு தலைப்பெய்தற் குரியவற்றைச் செய்யாமை பற்றித் தோழி அவட்கு உயிர்த்தோழி யாகாது அயலோர் ஆப என்று எம்மோடு படலான் என்று மொழிந் தான். உயிர்த் துணை எனக் கொள்ளப்பட்ட தோழி அவ்வாறு கொண்ட தலைமகளது உயிர்க்குயிராகிய என்னை அவளொடு கூட்டலுறாது சேட்படுத் தொழுகுவது அவட்கு ஆக்கமோ அறமோ ஆகாது என நெருங்கிக் கூறியவாறு. இதனை உய்த் துணரும் தோழி தலைமகற்குக் குறை நேர்வாளாவது பயன். இனி, இப்பாட்டுக் குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கதாயின், ஊரேமென்னும் இப்பேரேமுறும் இம்மாக்கள் ஒப்புரவு அறிவாராயின் அயலோராப என்று நமது அயலாந் தன்மையை அறிந்து கூறுவர்; அதனை அவர்கள் கூறுதலால் பெரிதும் சான்றோர் மன்ற என்று உரைக்க, அதனாற் பயன் தலைவி கேட்டு முகம்புகு வாளாவது. விளக்கம்: “முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ, நிற்ற லின்றே ஈற்றடி மருங்கினும்” என்பதனுரையில்1 “முழவு முகம் புலரா” என்று பாடங்கொண்டு அமைதி கூறுவர் பேராசிரியர். 221. இடைக்காடனார் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் இன்றியமையாத வினையொன்று குறித்துத் தன் மனையின் நீங்கிச் சென்றான். மனைக்குரியளாகிய தலைமகள், அவன் மீள்வதாகக் குறித்த பருவ வரவு நோக்கி இனிதிருந்து வந்தாள். பிரிந்து சென்ற தலைமகன் தான் மேற்கொண்ட வினைமுடிவில் தன் தலைவியை நினைத் தான். அவளுடைய சொல்லும் செயலும் அவன் நெஞ்சில் எழுந்தன; விரைந்து சென்று தன் மனைவியைக் காண்டல் வேண்டுமென்ற வேட்கை மிகுந்து எழுந்தது. அவன் மனக்கண்ணில் தான் கடந்து செல்ல வேண்டிய காட்டுநிலம் காட்சி தந்தது; கருவிளையும் தோன்றியும் புதல்கள்தோறும் பூத்து விளங்கின; கொன்றை மரங்கள் கொம்புதோறும் பொற்காசு போலும் பூக்களைத் தாங்கி நிற்கின்றன; செம்மண் பரந்த அப்புறவு நறிய பூக்களின் மணம் கமழ்ந்து விளங்கிற்று. அந்த அழகிய புறவு நிலத்தை விரைவிற் கடந்து சென்று தன் மனையை அடைய வேண்டும் என்று ஆர்வமுற்றான். அவன் மனைவியின் அன்புருவாய தோற்றம் அவன் உள்ளக்கிழியில் உருக்கொண்டு நின்றது. அக்காட்சியில் தன் தேர்வரக் கண்டு விருந்தாற்றும் விருப்புடன் அவள் உள்ளம் உந்திக்கொண்டு நின்றது. நடைபயிலும் அவளுடைய மகன் உறங்கி விழித்தெழும் காலத்தில் அவனருகே சென்று, “எந்தையே வருக வருக” என்று அழைத்தாள். தெளிவு பெற்றதும், அந்த அழகிய இனிய குரலைக் கேட்டல் வேண்டுமென்று தலைமகன் துடித்தான்; தன் பாகனை நோக்கி. “பாக, நின் தேரைச் செலுத்திக் கொண்டு விரைந்து செல்க” என்றான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், வினைமுடியுங் காறும் ஒடுங்கிக் கிடந்த காதலுணர்வு, அதன் முடிவில் தோன்றி மனை யாட்டியின் காதலன்பையும், இடைக்கிடந்த புறவின் இனிய காட்சியையும் புலப்படுத்தி இன்புறுத்தும் திறம்கண்ட இடைக் காடனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். மணிகண் டன்ன மாநிறக் கருவிளை ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப் 1பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க் கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் ஈரணிப் பெருவழி நீளிடைப் போழல் செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர் விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள் 1மின்னிழை அவிர்தொறும் விளங்க நன்னகர் 2நடைநாட் செய்த நவிலாச் சீறடிப் பூங்கட் புதல்வன் தூங்குவயின் ஒல்கி வந்தீ கெந்தை என்னும் அந்தீங் கிளவி கேட்கம் நாமே. இது வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. உரை : மணிகண்டன்ன மாநிறக் கருவிளை - நீலமணியைக் கண்டாற்போலும் கரிய நிறத்தையுடைய கருவிளையும்; ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணிய - ஒள்ளிய பூவை யுடைய தோன்றியும் மலர்ந்து தாம் பரந்த தண்ணிய புதர் களை அழகு செய்ய; பொன் தொடர்ந்தன்ன தகைய - பொற் காசுகளைத் தொடர்புறத் தொடுத்தாற் போலும் தோற்றத்தை யுடைய; நன்மலர்க் கொன்றையின் ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க - நல்ல பூவாகிய கொன்றையின் ஒள்ளிய கொத்துக்கள் கொம்புதோறும் தொங்க; வம்பு விரித்தன்ன செம்புலப் புறவின் - நறுமணத்தைப் பரப்பினாற் போன்ற செந்நிலமாகிய காட்டினூடு செல்லும்; ஈரணிப் பெருவழி நீளிடைப் போழ - குளிர்ந்த அழகிய பெருவழி இடையே நீளத் தன் ஆழியால் பிளவுபட; நின் செய்வினை நெடுந்தேர் செல்க - செய்வினை நன்கமைந்த நினது நெடியதேர் செல்வதாக; பாக -; விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் - தேர் வரவு கண்டு விருந்து அயர்தற்கு விருப்பம் மிக்கிருக்கும் பெரிய தோளை யுடைய இளையவள்; மின்னிழை அவிர்தொறும் விளங்க - மின்போன்ற இழைகள் ஒளிருந்தோறும் விளக்க மிக; நன்னகர் நடை நாள் செய்த நவிலாச் சீறடி - நல்ல மனையின் கண் நடத்தலைத் தொடங்கிய தரையிற் பொருந்தாத சிறிய அடி களையும்; பூங்கண் புதல்வன் - பூவைப் போன்ற கண்களையு முடைய மகன்; தூங்குவயின் ஒல்கி - உறங்குமிடத்துக்கு ஒல்கி நடந்து; வந்தீக எந்தை என்னும் - வருக எந்தாய் என்று மொழியும்; அந்தீங்கிளவி நாம் கேட்கம் - அழகிய இனிய சொல்லை நாம் கேட்கலாம் எ-று. குறுமகள், ஒல்கி வந்தீகெந்தை என்னும் கிளவி, நாம் கேட்கம்; ஆகலான், பாக, நெடுந்தேர், பெருவழி நீளிடைப் போழச் செல்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மாநிறக் கருவிளை என்றமையின், மணி நீலமணியாயிற்று. கருவிளை, கருங்காக்கணம்பூ. தோன்றிப்பூ ஒளியுடைமை பற்றி ஒண்பூ எனப்பட்டது. “சுடர்புரை தோன்றி” என்று பிறரும் கூறுதல் காண்க. பொற்காசுகளை நிரல்படக் கோத்தாற் போன்ற அழகு கொண்டு விளங்குதலால் பொன்தொடர்ந்தன்ன தகைய என்றார். வம்பு, நறுமணம். புறவு, முல்லைக்காடு. தேராழி செல்வதால் பெருவழி இடையே போழ்ந்தாற் போலத் தோன்றுதல் பற்றி, நீளிடைப் போழ என்றும், செய்யப்படும் வினைபற்றி நெடிது சேறல் வேண்டுதலின் அதற்கேற்ப வலியும் கட்டும் அமைந்த தேரைச் செய்வினை நெடுந்தேர் என்றும் கூறினார். தலைவன் தேர்வரக் காணின்,மனைமகளிர் விருந்தயர்தல் மரபு; ‘வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து, மாலை யயர்கம் விருந்து’1 என்று சான்றோர் குறிப்பது காண்க. தோள் பெருத்தல், மகளிர்க்கு அழகு, அணிந்துள்ள இழைகள் மின்னிட்டு ஒளிருங் கால், அவற்றின் ஒளி வெண்சுதை தீற்றிய மனைச்சுவரில் எதிரொளி யிட்டு இலங்குவது தோன்ற மின்னிழை யவிர்தொறும் விளங்க என்றார். நாட்செய்தல், தொடங்குதல். நவிலாச் சீறடி, நிலத்தில் நடந்து பயிலாத சிறிய அடி. ஒல்குதல், இடைநுடங்க அசைந்து நடத்தல். வந்தீக, வருக என்னும் பொருட்டாய முற்றுவினைத் திரிசொல்; செல்க என்பது சென்றீக என வருதல் போல; ‘வணங்கினர் வழிமொழிந்து சென்றீ கென்ப’2 என்று சான்றோர் வழங்குதல் காண்க. கேட்கம்; அம்மீறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று; ககரம் எதிர்காலம் பற்றி வந்தது என்பர் நச்சினார்க் கினியர்.3 வினைவயிற் பிரிந்து சென்ற தலைமகன் அதன் முடிவில், தன் மனக்கண்ணில் தோன்றிய காதலியாகிய தலைமகளை விரைந்து சென்று சேரக்கருதித் தன் தேர்ப்பாகனைத் தேரைச் செலுத்துமாறு பணிக்கின்றவன், இடையிற் கடந்து செல்லற் குரிய புறவு தான் குறித்த கார்ப்பருவ வரவு காட்டிப் பூத்துப் பொலிவுறும் திறத்தைக் கூறலுற்றுப் புதல்கள் கருவிளையும் தோன்றியும் கொண்டு அழகு திகழும் காட்சியை மணிகண் டன்ன மாநிறக் கருவிளை ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணிய என்றும், கார் காலத்து மலரும் கொன்றையை, பொன்றொடர்ந் தன்ன தகைய நன்மலக் கொன்றை யொள்ளிணர் கோடுதொறும் தூங்க என்றும், பூச்செறியும் கானம் நறுமணம் கமழும் நலத்தை விதந்து, வம்பு விரிந்தன்ன செம்புலப்புறவு என்றும் கூறினாள். கானம் கார்வரவு காட்டி மலரும் மணமும் கொண்டு விளங்குதல் காணத் தான் பிரியுங்கால் தலைமகட்கு வற்புறுத்த சொல்லை நினைத்து விரைந்து சென்று சேரக் கருதுதலான், செல்க பாக நின் செய்வினை நெடுந்தேர் என்றான். மனைவயின் இல்லாளொடு கூடிச் செய்யும் நல்லறத்துள் தலையாயது விருந்தோம்ப லாதலை நன்குணர்ந்து அதனை நாளும் ஆற்றுதலையே நயந்துறையும் மாண்பினள் தலைமகள் என்பது பற்றி விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் என்றும், தன் பிரிவால் விருந்து புறந்தரும் விழுமிய செயலை இழந்து, அதனை இனிது செய்தற்கு அவள் தன் வரவு நோக்கி யிருக்கின்றாளென்றும் இதனால் சுட்டினான் என உணர்க. பெற்றோர்க்குத் தாம் பெற்ற மக்கள் தளர் நடையிட்டு நடக்கும் காட்சி மிக்க இன்பம் தருவது1 பற்றித் தன்மகனை நினைபவன், நடைநாள் செய்த நவிலாச் சீறடிப் பூங்கட் புதல்வன் என்றும், நமது வரவு கண்டு மகன் உறங்குமிடத்துப் பெருமகிழ்ச்சியோடு சென்று எந்தாய் வருக என இசைக்கும் இன்பமொழியைச் செவிகுளிரக் கேட்க எழுந்த தன் வேட்கையைப் புலப்படுத்துவான், தூங்குவயின் ஒல்கி வந்தீக எந்தை என்னும் அந்தீங்கிளவி கேட்கம் நாமே என்றும் கூறினான். 222. கபிலர் தலைமக்கள் இருவர் தம்மிற்றாம் தமியராய்க் கண்டு காதல் நட்புற்று அது சிறத்தல் வேண்டிக் களவொழுக்கம் மேற் கொண்டனர். களவு நெறிக்கண் அவர்களது ஒழுக்கம் நாளும் சிறப்புற்று வந்தமையின், தலைவியுள்ளத்தில் முறுகிப் பெருகித் தலைமகனை இன்றியமையாத அளவில் காதல் மீதூர்ந்தது. அதனால் அவளது மேனிநிறமும் செய்வகை யியல்பும் வேறுபடக் கண்ட அவளுடைய பெற்றோர், இல் இகவா வண்ணம் மனைக் கண் அவளைச் செறித்தனர். அதனால், முன்போல் அருவியாடல், சுனை குடைதல், பொழில் விளையாடல் முதலிய நெறிகளில் தலைமகனைக் கூடி மகிழும் வாய்ப்புக் குன்றியது. அவளுடைய மனநிலையைத் தலைமகற்கு உணர்த்தி இனி வரைந்து கோடலே செயற்பாலது எனத் துணிந்து செயலாற்றுமாறு தலைமகனைத் தூண்டும் கடன் தோழிக்கு உண்டாயிற்று. தலைவியின் உள்ளக் காதலை உணராதான் போலத் தலைமகனுக்கு அதனைத் தெரிவித் துணர்த்தும் திறத்தைத் தோழி முற்படச் சொற்களாற் கூறல் முறையன்று; குறிப்பால் அவன் உய்த்துணர்ந்துகொள்ளுமாறு செய்வதே அவட்கு அறமும் சிறப்புமாகும். ஒருநாள் தலைமகன் தலைவியின் மனைப்புறத்தே வந்துநின்றான். அவனைத் தோழி பார்த்துத் தலைமகளை ஒருபுறமாய்க் கொண்டு சென்று, தான் அவட்குக் கூறுவது அவன் செவிப்படு மளவில் மறைந்து நின்று “தோழி, இற்செறிப் புண்டதனால் நீ தலைமகனைக் காணும் திறமின்றி வருந்தி அவனுடைய மலையைக் கண்ணாற் கண்டா யினும் சிறிது மனநோய் தணியலாம் என்கின்றாய்; அதற்கொரு வழி சொல்லுகிறேன், கேள்: இதோ நிற்கும் வேங்கைமரத்தின் வளைந்த கிளையில் கைபுனை கயிறொன்றால் ஊசல் அமைக் கின்றேன்; அதன்மேல் நீ இவர்ந்துகொள். பின்னர் அதனை மேலும் கீழும் போய்வர யான் ஊக்குவேன்; அக்காலை விசும் பாடும் மயில்போல நீ ஆடலாம். ஊசல் மேனோக்கிச் செல்லுங் கால் காதலருடைய சோலை சூழ்ந்த சேணெடுங் குன்றம் சிறந்து தோன்றும்; நீயும் அதனைக் கண்களாற் கண்டு ஆர்வம் தீரலாம்”, என்றாள். தோழியின் இக்கூற்றின்கண், இற்செறிப்பும் தலைவியது காதற்சிறப்பும் இனிது விளங்கக் கண்ட தலைமகன் உண்மை யுணர்ந்து வரைவு துணிவானாகப் பண்ணும் சொன்னலம் துளும்புவதை வியந்த கபிலர், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கருங்கால் வேங்கை செவ்வீ வாங்குசினை வடுக்கொளப் பிணித்த 1விடுபுரி முரற்சிக் 2கைபுனை சிறுகுணில் வாங்கிப் பையென விசும்பா டாய்மயில் கடுப்ப யானின்று பசுங்காழ் அல்குல் பற்றுவனென் ஊக்கிச் செலவுடன் விடுகோ தோழி பலவுடன் வாழை ஓங்கிய வழையமை சிலம்பின் துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் கா'82து பெருங்களிறு பிளிறும் 3சோலையவர் சேணெடுங் குன்றம் காணிய நீயே. இது, தோழி தலைமகன் வரவுணர்ந்து சிறைப்புறமாச் செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது. உரை : கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை - கரிய அடியை யுடைய வேங்கையின் கெவ்விய பூக்களையுடைய வளைந்த கிளையின்கண்; வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சி - வடுவுண்டாகுமாறு கட்டிய முறுக்கேறிய கயிற்றைச் சேர்ந்த; கைபுனை சிறுகுணில் வாங்கி - கையால் மெத்தெனப் புனைந்த சிறுகுணிலால் இருக்கை யமைய வளைத்து அதன் மேல் நீ இவர்ந்திருக்க; விசும்பாடு ஆய்மயில் கடுப்ப பையென - விசும்பின்கண் ஆடும் அழகிய மயில்போல நீ பைய ஆடுமாறு; யான்-; நின்று - இவ்விடத்தே நின்று; பசுங்காழ் அல்குல் பற்றுவனென் ஊக்கி - பசிய மணிகள் கோத்த மேகலையைப் பற்றி மேலே உயர்த்தி; உடன் செலவிடுகோ - உடனே அசைத்து பின்னே செல்லுமாறு விடலாமோ? கூறுக; பலவுடன் வாழை ஓங்கிய வழை அமை சிலம்பின் - பலவாகிய வாழைமரங்களும் ஓங்கிய சுரபுன்னை மரங்களும் பொருந்திய பக்கமலையில்; துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபட - உறங்குகின்ற பிடியானையின் பக்கத்தே பனிமுகில் படிந்து மறைத்தலால்; காணாது பெருங் களிறு பிளிறும் சோலை - காணமாட்டாது வருந்திப் பெரிய களிற்றியானை பிளிறித் திரியும் சோலைகளையுடைய; அவர் சேண்நெடுங்குன்றம் நீ காணிய - அவரது மிகவுயர்ந்த குன்றத்தை நீ காண்டற் பொருட்டு எ-று. தோழி, சிலம்பில், மஞ்சுபடக் காணாது, பெருங்களிறு பிளிறும், சோலையையுடைய அவரது குன்றம், நீ காணிய, முரற்சிக் கைபுனை சிறுகுணில் வாங்கி, யான் நின்று, பற்று வனென் ஊக்கிப் பையெனச் செலவுடன் விடுகோ, கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செவ்வீ, செவ்விய மலர். வாங்கு சினை: வாங்குதல், வளைதல். கிளையின்கண் அசையும் கயிற்றால் மேற்பட்டை தேய்ந்து வடுப்படுதலின், வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சி யென்றார். விடுபுரி முரற்சி, புரிகள் முறுக்குற்றுத் தோன்றும் கயிறு; “கூந்தல் முரற்சியின் கொடிதே”1 என்று பிறரும் கூறுதல் காண்க. குணில், குறுந்தடி; குறுந்தடியின் இருதலையும் பிணித்துத் தொங்கவிட்ட ஊசல் மேற்று. குறுந்தடியை யுள்ளிட்டு மேலே கயிற்றைச் சுற்றி இருக்கைபோல அமைத்தலின், கைபுனை சிறுகுணில் என்றார். ஊசலை ஊக்குவோர் ஓரிடத்தே நிற்றல் வேண்டுமென்பது பற்றி நின்று என்றார், ஊக்குதல், செலுத்துதல். ஈண்டுக் குணில் என்றாற் போலப் பிறரும் “கொடுங்கழித் தாழை வீழ்கயிற் றூசல்”2 என்பது காண்க. விடுகு: தன்மை வினைமுற்று. வழை, சுரபுன்னை, மஞ்சு, புகைபோலும் பனிமுகில். இன்றும், மலைமேற்படியும் பனிமுகிலை மஞ்சு என்றே யாவரும் வழங்குவர். தலைமகன்பொருட்டு எழுந்த காதல், உள்ளத்தை அலைப்ப, இற்செறிப்பால் அவனைக் காண்டற்கிய லாமையால் கலங்கஞர் உற்று வருந்தும் தலைவியின் மனக்கவலை, சிறிது மாறுதல் வேண்டிச் சில கூறுவாள் போன்று, மனைப்புறத்தே நிற்கும் வேங்கை மரத்தைக் காட்டி, வளைந்த கிளையில் ஊசல் தொடுப்பது கூறுவாள், கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கைபுனை சிறுகுணில் வாங்கி என்றாள். வேங்கைமரத்திற் பூக்கொய்து விளையாட்டயர்தல் மகளிர் இயல்பாதலின், காண்போர் நம் கருத்தை அயிரார் என்றும், தாயர் தன்னையரும் தடுக்கமாட்டா ரென்றும் உணர்த்துதற்குக் கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை எனவும், முன்பே பன்முறை ஊசற் கயிறுபட்டு வடுப்பட்ட கிளையாகலின், ஊசல் இனிது இயங்கி இன்பம் நல்கும் என்றற்கு வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சி எனவும், உள்ளே குணில் அகப்படப் புறத்தே மெத்தென்ற இருக்கை அமையக் கயிறு சுற்றப்பட்டது, கயிற்றால் நெருக் குண்டு வருந்தாவாறு என்றற்குக் கைபுனை சிறுகுணில் எனவும் சிறப்பித்துக் கூறினாள். இதனாற் பயன், வேங்கையின் வாங்கு சினை தலைவனாகவும், ஊசல் அவன்பால் தமக்குளதாய தொடர் பாகவும் தான் கருதிக் கூறுகின்றமை தோழி புலப்படுத்தினாளாம். வேங்கைச் சினையில் தொடுத்த ஊசன்மேல் தலைவி யிருந்து, விசும்பாடும் மயில் போல ஆடுமாறு தான் நின்று ஊக்குவதாகத் தோழி கூறுவாள், பையென விசும்பாடு ஆய் மயில் கடுப்ப யான் நின்று பற்றுவனென் ஊக்கிச் செலவுடன் விடுகோ என்றாள். தலைமகளோடு நினக்குக் காதற்றொடர் புறுத்த யான், நீ அவளைக் கொண்டுதலைச் சேறற்கு இவண் நின்றே துணைபுரிவேன் எனச் சிறைப்புறத்தே நின்ற தலை மகற்குக் குறிப்பால் தோழி உரைப்பாளாவது இதனாற் பயன் என உணர்க. தம்மாற் காதலிக்கப் பட்டாருடைய பொருளும் இடமும் பிறவும் காணின் காதலர்க்கு அவரைக் கண்டாற்போலும் இன்பம் சுரப்பது இயற்கையாதல்பற்றி அவர் சேணெடுங் குன்றம் காணிய நீயே என்று தோழி கூறினாள். சிலம்பின்கண் துஞ்சு கின்ற பிடியை மஞ்சு பரந்து மறைத்தமையின், களிறு அறியாது பிளிறி வருந்தும் என்றது, மனையின்கண் நின்னை நினைந் திருக்கும் தலைமகள் இற்செறிப்புண்டாளாகலின் அதனை அறியாது நீ கொன்னே இவண் போந்து நின்று வறிதே வருந்து கின்றனை என உள்ளுறுத்தவாறு. இதனால் இனி நீ விரைய வரைந்துகோடலே செயற்பாலதென்று தோழி குறிப்பால் வரைவு கடாயினாளென அறிக. 223. உலோச்சனார் காதலுறவில் மனங்கலந்து ஒழுகும் தலைமக்கள், பகற் போதில் மகளிர் விளையாட்டயரும் கானற் சோலையில் குறியிடம் அமைத்துக் கொண்டு, தோழி துணைசெய்யத் தம்மில் தலைப் பெய்து தம் காதலை வளர்த்துவருவாராயினர். அதனால் தலைவி தனது உடல் தளிர்ப்ப, மேனி இனிய வண்ணம்பெற, மொழியும் நடையும் முதுக்குறைவு காட்ட, மாமைக்கவின் மிக்கு மாண் புற்றுவருவாளாயினாள். நாளும் இம்மாண்பு சிறந்து வருதலைத் தோழி நோக்கினாள். இளமையுள்ளம், உடலின் துடிப்புக்கு இரையாகி, நீர்வழிச் செல்லும் புணைபோல் நிறை சாய்ந்து நெகிழில் வரும் ஏதத்துக்கு அஞ்சிக் குறிவழி வந்து பெறும் கூட்டத்தை விலக்கும் குறிப்பினளானாள். தோழி, ஒருநாள், பகற் குறிக்கண் தலைமகளைக்கண்டு நீங்கும் தலைமகனை எதிர்ப் பட்டு நிறுத்தி, “மெல்லம் புலம்ப,இவளது காதல் கடலினும் மிக்கு நிற்றலை நன்கறிந்து இவளைத் தலையளித்தற்குரிய பொழுது இஃது என்பது நினையாயாய்; அதனைச் செய்வ தொன்றையே பெரிதும் நினைந்து இக்கானற் சோலைக் குறியிடத் துக்குக் கடும்பகற் போதினும் வாராநின்றாய். நீவிர் இத்தன்மை யராக இருப்பது மிகவும் இனிதேயாகும். எனினும், இப்பகற்குறிக் கூட்டம் இற்செறிப்புண்ணச் செய்யும். அதனால் நீ இரவின்கண் வருதல் வேண்டும். ஆயினும் இக்கடற்றுறை போல அம்பல் தூற்றும் மகளிர் இவ்வூரிடத்தே உளர்; அவர்கள் இரவின்கண் உறக்க மின்றி அலர்கூறும் இயல்பினர்காண்” என்று தோழி கூறினாள். அவளுடைய இக்கூற்றின்கண், தலைவியது காதல் மாண்பு கூறி, அக்காதல் மாண்புறுவது குறித்துத் தலைமகன் மேற் கொண்ட களவொழுக்கம் தனக்குரிய பயனை விளைவித்தமை யுணர்த்தி, இனி வரைந்துகோடலே வேண்டுவது என்ற கருத்தைப் புலப்படுத்தும் நயம் கண்ட உலோச்சனார் அதனை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். 1இவடன் காமம் பெருமையிற் காலை 2என்னாய் அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப் பகலும் வருதி பல்பூங் கானல் 3இந்நீ ராகலோ இனிதே எனின்இவள் அவரின் 4அருங்கடிப் படுகுவள் அதனால் எல்லி வம்மோ மெல்லம் புலம்ப சுறவினம் கலித்த நிறையிரும் பரப்பின் துறையினும் 5துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்திவ் வம்ப லூரே. இது, பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது. உரை : இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாய் - இவள் உள்ளத்துக் காதற்காமம் மிக்கிருத்தலை நன்கறிந்து களவிற் கூடற்காகாதது காலைப்பொழுது என்பதையும் நினையாமல்; அன்பு பெரிது உடைமையின் - இவள்பால் மிக்குற்ற அன்பினால்; அளித்தல் வேண்டி - இவளைத் தலையளிப்ப தொன்றையே கருதி; பல்பூங்கானல் பகலும் வருதி - பலவாகிய பூக்களை யுடைய கானற்குறியிடத்துக்குப் பகற்போதும் வாராநின்றனை; இந்நீராகல் இனிதே - நீவிர் இத்தன்மை யினராவது இனிதே யாகும்; எனின் - எனினும்; இவள் அலரின் அருங்கடிப்படு குவள் - இவள் எய்தும் கூட்டத்தால் பிறக்கும் அலரால் அரிய காவலமைந்த இல்லின்கண் செறிக்கப்படுவள்; அதனால்-; எல்லிவம்மோ - இரவின்கண் இனி வருவாயாக; மெல்லம் புலம்ப - மென் புலமாகிய நெய்தல்நிலத் தலைவனே; சுறவினம் கலித்த நிறையிரும் பரப்பின் - சுறா மீன்கள் மிக்கு வாழும் நீர் நிறைந்த கடற்பரப்பினையுடைய; துறையினும் - நீர்த்துறையின் ஆரவாரத்தினும்; இவ்வம்பல் ஊர் - அலர்தூற்றுதலை யுடைய இந்த ஊர்; துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து - இரவின்கண்ணும் உறங்குத லில்லாத கண்களையுடைய பெண்டிர் பலரையும் உடையதாயினும் எ.று. புலம்ப, காமம் பெருமையின், காலை என்னாய், அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி, கானல் பகலும் வருதி; இந்நீராகலோ இனிது; எனின் இவள் அருங்கடிப் படுகுவள்; அதனால் இவ்வம்பலூர் துறையினும் துஞ்சாக் கண்ணரான பெண்டிரும் உடைத்தாயினும் எல்லி வம்மோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆயினும் என்பது அவாய்நிலை, காலை ஈண்டுப் பகற்போது என்பது பட வந்தது. தலைமகற்குத் தலைவி பால் உளதாய காதலை அன்பு என்றார், எனின் என்புழிச் சிறப்பும்மை தொக்கது, அலர், குறியிடத்தே தலைமகன் செய்யும் தலையளியால் தலைவிபால் மெய்ப்பட்டுக் கதிர்த்து விளங்கும் வேறுபாட்டால் அயல்மகளிர் கண்டு தூற்றும் அலர். அருங்கடி, இற்செறிப்பு, மெல்லம் புலம்பு, நெய்தனிலம், கலித்தல், மிகுதல். எல்லி, இரவு. இரும்பரப்பு, கடற்பரப்பு, நிறைதல், கடல்நீர் நிறைதல், துறை, கடற்றுறை. பெண்டிர், அயன்மனை மகளிர். பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு, முதற்கண் அவன் வரவினை விலக்கி, இரவுக்குறி வருமாறு குறிக்கும் கருத்தினளாதலின், அவன் வரவுக்கு மகிழ்ந்து அமைதி கூறுவாள், இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாய் என்றும், காதல் பெருகுதல்வேண்டிக் களவு மேற்கொண்டானா கலின், அது பெருகியவழி அன்பு மிகுந்து தலையளி செய்தல் அவற்குக் கடனாதல்பற்றி அன்பு பெரிதுடைமையின் அளித்தல் வேண்டி என்றும், பகற்குறி மறுக்கும் கருத்து விளங்கக் கூறு தலின், பகலும் வருதி பல்பூங் கானல் என்றும், இவ்வண்ணம் தன்பால் காதல் மிக்காரது காதன்மாண் புணர்ந்து அன்பாற் பேணித் தலையளிக்கும் பண்பு சாலவும் நலம் பயப்பதென்பாள் இந்நீராகலோ இனிதே என்றும், எனினும் பகற்போதில் பலரும் காண வருதலால் அலருண்டாதலின், தலைமகள் காவல் மிக்க தன் மனையின்கண் செறிக்கப்படுதல் ஒருதலை என்றற்கு எனினும் அவள் அலரின் அருங்கடிப்படுகுவள் என்றும், எனவே, இனிச் செயற்பாலது இரவின்கண் வருதலே என்பாள் எல்லி வம்மோ என்றும், இவ்வாறு யாம் வேண்டியவா றெல்லாம் வந்தொழுகும் நின்வண்மை, எமக்குப் பெரிதும் இன்பம் தருவதாம் என்பாள், மெல்லம் புலம்ப என்றும் கூறினாள். இரவுக்குறியாயின், வரும் வழியின்கண் நீர்த்துறையிடத்தே சுறாமீன்கள் மிக்குறைதலும், ஊரவர் உறக்கமின்றி ஆரவாரித் தொழுகுதலும் ஏதுவாகக் காட்டி, அவன் பகற்குறிக்கண் வருதலே நலமென வற்புறுப் பானாயின் தன் கூற்றுப் பயனின்றாமென எண்ணி, அதனைத் தானே முற்பட மொழிவாளாய், சுறவினம் கலித்த நிறையிரும் பரப்பின் துறை என்றும், துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து இவ்வம்பலூர் என்றும் தோழி எடுத்து மொழிந்தாள். சுறவினம் கலித்த நிறையிரும் பரப்பின் துறை என்றது, வாளேந்திய வீரர் பலர் சூழநின்று காக்கும் காவலருமையும், துஞ்சாக் கண்ணர் பெண்டிர் என்றது, தாயரும் ஆய மகளிரு மாகிய பிறரெல்லாம் உளப்படுத்து நிற்றலும் குறித்தற்கு. தலை வியது காதற்பெருக்கும் நினது அன்பு மிகுதியும் நோக்காது, அலர் கூறுவதே இவ்வூரவர் இயல்பு என்பாள், இவ்வம்பலூர் என்றாள். காதற்பெருக்கும் அன்புமிகுதியும் நும்மிருவரையும் ஒருவரினொரு வர்க் கின்றியமையா ராக்குதலின், நீ இனி வரைந்துகோடலே தக்க தென்றாள். இதனாற் பயன், தலைமகன் தெருண்டு வரைவு மேற்கொள்வானாவது. 224. பாலை பாடிய பெருங்கடுங்கோ இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் கடமை காரணமாகத் தலைமகளின் நீங்கிச் செல்ல வேண்டியவனானான். ஆயினும். தனது பிரிவு தலைமகளைப் பெரிதும் வருத்தும் என்பதை நன்கு அறிந்தவனாதலின், தன் பிரிவுக் கருத்தைத் தோழி வாயிலாகத் தலைமகட்குப் பைய வுணர்த்த முயன்றான். அவ் வண்ணமே தோழியும் நிகழவிருக்கும் பிரிவினைத் தலைமகட்கு உணர்த்தினாள். தலைவன் கருதியவாறே தலைமகட்கு அது மிக்க மனவருத்தத்தை விளைவித்தது. அதனைப் பொறாது அவள் பெரிதும் வருந்தினாள்; உடலும் வாடினாள்; உயிர் வாழ்க்கையையே வெறுத்தாள்போல் உரையாடினாள். சில நாட்கள் கழிந்தன; தலைவியின் மனநோய் கால வோட்டத்தால் சிறிது தணிந்தது; கண்கள் நீர் சொரிதல் ஒழிந்தன. அவ்வப்போது நிகழும் உரை களாலும் செயல்களாலும் உள்ளத்தில் ஓரளவு உவகையும் அரும்பிற்று; முகத்தில் மலர்ச்சியும் நுதலில் ஒளியும் தோன்றத் தலைப்பட்டன. இவற்றிற் கிடையே தலைமகன் பிரிந்து செல்லுதற் குரிய பொழுதும் நெருங்கிக்கொண்டிருந்தது. அதனை நினைத்த தோழி கடமையின் உயர்வை மொழிந்து தலைமகன் பிரிவுக் குறிப்பை மீண்டும் நினைவுறுத்துத் தலைமகளோடு உரையாட லானாள். அக்காலை, தலைமகள் “தோழி, நம் தலைவர் நம்பால் மிக்க அன்பினர்; மேலும் அவர் மிகவும் பெரியவர்; நாம் அவரது பெருமைக்கேற்ற அறிவுடையே மல்லேம். பின்பனி வரவு கருதிய குராமரம் முதலியன, இம்முன்பனிக் காலத்தே கொழுந்து விட்டுத் தளிர்த்து மலர்வது வேண்டி அரும்புகளைத் தாங்குவவாயின. அதனையடுத்து, மாமரங்களிலிருந்து, செங்கண் இருங் குயில்கள் புணர்ந்தீர் புணர்மின் என்ற பொருள்படக் கூவும் வேனிற் பொழுதும் மேவுவதாம். அவற்றை நோக்காது, பல்வகை மரங்கள் நின்ற நெடிய வழிகளைக் கடந்து அருஞ்சுரம் செல்வதே பொருளாகக் கொண்டவர்க்கு, “முன்பு மணந்தஞான்று, என்றும் பிரியலம் என்று மொழிந்தீர், அதனை மறந்தீர்போலும் என்ப தல்லது இப்போது யான் யாது கூறவல்லேன்? ” என்று இயம் பினாள். காதலாற் பிணிப்புண்டிருக்கும் பெருநலப் பெண்ணொருத்தி யின் உள்ளம் காதலன் பிரிவின்கண் எய்தும் வருத்தத்தை இக் கூற்று இனிது காட்டுவதும், தலைமகன் பிரிவுக்கு ஏதுவாகிய கடமையை நோவாது அவன் செல்லும் சுரத்தின் கொடுமை யையே பெரிதும் நினைத்து அவள் நெஞ்சு வருந்துவதும் கண்ட பெருங்கடுங்கோ அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார் அன்பினர் மன்னும் பெரியர் அதன்றலைப் பின்பனி யமையம் வரும்என முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவரும் பினவே புணர்ந்தீர் புணர்மி னோஎன இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று நம்வயிற் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத் 1தினியெவன் மொழிகோ யானே பயனறச் 2சினைபுலர்ந் துலறிய பன்மர நெடுநெறி 3வின்மூசு கவலைய மருங்கின் வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே.4 இது, தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொற் கடாவப்பட்டு அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாரா காரோ என்று சொல்லியது. உரை : மன்னும் அன்பினர் - தலைவர் நம்பால் பெரிதும் அன்புடை யவர்; மன்னும் பெரியர் - பெரிதும் ஆற்றல் படைத்தவர்; அதன்றலை - அதன்மேலும்; பின்பனி அமையம் வரும் என - பின்பனிப் பருவம் அடுத்து வாராநிற்குமென்பது குறித்து; முன்பனி - முற்பட வந்த முன்பனிக்காலத்தே; கொழுந்து முந்து உறீஇக் குரவு அரும்பின - தளிர்களை முந்துறத் தோற்றுவித்து அரும்புகளையும் குராமரங்கள் கொள்ளாநின்றன; புணர்ந்தீர் புணர்மினோ என - கிழவனும் கிழத்தியுமாய்க் காதல் கெழீ இயினீர் பிரிவின்றிக் கூடியிருப்பீர்களாக என்று கூறுவன போல; இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் - மாமரத்தின் இணர்தாங்கிய கொம்புகளில் தங்கிச் சிவந்த கண்களையுடைய கருங்குயில்கள் எதிரெதிர் இருந்து கூவாநிற்கும்; இன்ப வேனிலும் வந்தன்று - பின்பனியை அடுத்து எவ்வுயிர்க்கும் இன்பம் நல்கும் வேனிற்பருவமும் வருவதாயிற்று; நம்வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து - இனிப்பிரியேம் என்று நம்மை வற்புறுத்துத் தெளி வித்துப் பின்பு பிரியக் கருதுபவர்பால்; இனி எவன் மொழிகோ யான் - இப்பொழுது யான் யாது கூறவல்லேன்; பயன் அறச் சினைபுலர்ந்து உலறிய பன்மர நெடுநெறி - பசுமை சிறிது மின்றிக் கிளைகள் வற்றித் தழையே துமின்றி உதிர்ந்து நிற்கும் பலவாகிய மரங்களையுடைய நெடிய பெருவழியின்கண்; வில் மூசு கவலைய மருங்கின் - வில்லேந்திய மறவர்கள் மொய்த்து வழங்கும் கிளைவழிகள் பொருந்திய; வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கு - வெவ்விய பகைவரூர்களையும் செல்லுதற் கரிய காடுகளையும் கடந்து செல்லக் கருதிய தலைவர்க்கு எ.று. தோழி, நம் காதலர் மன்னும் அன்பினர். அதன்றலை மன்னும் பெரியர், அருஞ்சுரம் முன்னியோர் ஆகலான், குரவு கொழுந்து முந்துறீஇ அரும்பின; இருங்குயில் இணர்மிசை எதிர்குரல் பயிற்றும் வேனிலும் வந்தன்று என்பதல்லது தெளிந்தோர் தேஎத்து இனி எவன் மொழிகோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன்னும் என்பது முன்னும் கூட்டப்பட்டது. ஆகலான் என்பது அவாய்நிலை. தெளித்தோர், முன்னியோர் என்ற இரண்டனுள் ஒன்றனைச் சுட்டுப் பெயராக்குக. வேனிற்காலத்துக் கூவும் குயிலோசை ‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ற பொருள்பட நிற்றலை, “பன்மாணும், கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப், பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல, அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில், ஆனா தகவும் பொழுது”1 என்று பிறரும் கூறுதல் காண்க. வேனிற்போதில் தளிர்த்துப் பூந்துணரீன்று பொலியும் மாமரத்தில் குயிலிருந்து கூவுதல் பற்றி “இணர் மிசைச், செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் என்றார். “போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து, அந்தளிர் மாசுத் தயங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம், “இன்னிள வேனில்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. புதுத் தளிரும் புத்திலையும் புதுமலரும் கொண்டு நறுமணம் கமழும் சோலையும் தண்ணிய தென்றலும், மக்கட்கு இனிய காட்சியும் இன்பமும் பயத்தலின், இளவேனில் இன்பவேனில் எனப் பட்டது; “இன்னமர் இளவேனில்”2 எனப் பிறரும் கூறுப. எவன் மொழிகோ என்றது, வேறு கூறுதற்கில்லை; கூறினும் பய னில்லையென்பது குறித்து நின்றது. கூதிர்காலத்தில் மரஞ் செடிகள் இலையுதிர்ந்து புல்லென்று தோன்றுதலின், பயனறச் சினைபுலர்ந்துலறிய பன்மர நெடுநெறி என்றார்.வில்லென்றது, வில்லேந்திய மறவர் மேற்று. வெம்முனை, பகைப்புலம், பகைப் புலத்து ஊர்கள் ஈண்டு வெம்முனை எனப்பட்டன. நேரிய பகையில்லையாயினும், சுரத்தின்கண் வாழ்வோர், பிறர்பால் தோன்றும் வேற்றுமையைப் பகைமையாகக் கருதி அவர் கைப் பொருளையும் உயிரையும் கவரும் இயல்பினராதலின் இவ்வாறு கூறினார். “அற்றம் பார்த்தல்கும் கடுங்கண் மறவர்தாம், கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந் துயிர் வௌவலின், புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை”3 என்பது காண்க. தலைமகன் தோழி வாயிலாகத் தன் பிரிவுக் குறிப்பை உணர்த்தியபோது, பிரிவருமை நினைத்து தலைமகள் மறுத் தாளாக, தலைமகன் வேறோராற்றால் தகுவன கூறித் தோழியைத் தெருட்டிப் பிரியலுற்றான். ஆற்றாமை மீதூரக்கொண்ட தலை மகள் தோழியைப் பன்முறையும் வினவலானாள். சொற்பல் காமைப் பொருட்டுத் தோழி தலைமகட்குக் கூறுவாளாய், தலைவர் அன்பிலர் என்றும், சொல்லும் செயலும் ஒவ்வாத சிறுமையுடையரென்றும் கருதற்க என்பாள், மன்னும் அன்பினர் மன்னும் பெரியார் என்று மொழிந்தாள். அது கேட்ட தலைவி, மிக்க பெருமையுடையராயினும், பனிப்பருவம் போதரின் பிரிந்தாரை அது பெரிதும் வருத்தும் என்பதனை அவர் அறிந்திலர் காண் என்றாளாக, தோழி, தலைவர் செல்லும் நெறியின்கண் நிற்கும் குராமரங்கள் கொழுந்துவிட்டுப் பனிப்பருவ வரவினை நன்கு அறிவுறுத்துவதில் தவறா என்பாள், பின்பனி அமையம் வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பின என்றும் அதனைக் காணாராயின், புதுத்தளிர் தாங்கும் இணர் களின் இடையே இருந்து குயில்கள் இனிய குரலெடுத்துப் புணர்ந்தீர் பிரியாது புணர்மின் என்ற பொருள்பட இசைப்பதும் உண்டு என்பாள், புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும் என்றும், இவற்றை மக்கள் காண்பதும் கேட்பதும் செய்வராயின், அவர் கட்கு வேனிற்பருவம் தனது வரவு தோற்றி உள்ளத்தே காதலின் பத்தை நினைப்பித்து இன்புறுத்தும் என்பாள் இன்ப வேனிலும் வந்தன்று என்றும் கூறினாள். இவற்றைத் தெளிய வற்புறுத்தி யிருப்பின் அவர் பிரிதலை மேற்கொண்டிரார் என்று தலைமகள் வருந்தி யுரைத்தாளாக, கண்ணாற்கண்டும் காதாற்கேட்டும் தெருண்டார் போன்று, பிரியேன் என நம்மை மயக்கித் தெளியா தார் போன்று தலைவர் பிரிவராயின் அவர்க்கு யாம் கூறுவன ஒன்றும் பயன்படா என்பாள், தெளித்தோர் தேஎத்து இனி எவன் மொழிகோ யானே என்றும் கூறினாள். கண்டும் கேட்டும் தாமே தெளியாதார்க்குப் பிறர் கூறுவன ஒருபயனும் நல்காவாதலின், பிரிவாற்றி இருத்தலல்லது யாம் செய்வது பிறிதில்லை என்பது கருத்து. சினைபுலர்ந்து உலறிய பன்மர நெடுநெறி கடந்து அருஞ்சுரம் முன்னியோர்க்கு என்றாள். நெஞ்சில் ஈரமின்றி யாம் பசுமையின்றி வாடியிருத்தலை நோக்காது தலைமகன் சென்றான் என்ற தன் கருத்தை வலியுறுத்தற்கு இதனால் தலைவி அயாவுயிர்த்து ஆற்றியிருப்பாளாவது பயன் என்க. 225. கபிலர் கடிமணம் புரிந்துகொண்டு மனைவாழ்க்கை நடாத்திவரும் தலைமகன் ஒருகால் கடமை காரணமாகத் தலைமகளைப் பிரிந்து சென்றான். கட்டிளமை வாய்ந்த தலைமகள் காதற்பெருக்கால் அவன் பிரிவை ஆற்றாளாயினள். ஆற்றத்தகுவன கூறி அறநெறிக் கண் செலுத்தும் தோழி, “தலைவனது பிரிவு காதலன்பு குன்றியது போலத் தோற்றுவிக்கின்றது; ஆயினும், அவன் தன்னை நயந் தோர்க்கு உதவும் நற்பண்பு குன்றாதவன்; ஆதலின், நீ வருந்துதல் ஒழிக” என்றாள். தலைமகன்பால் கொண்ட உயிரொத்த காதலால் அவள் உள்ளத்தே மீதூர்ந்து நிற்கும் வேட்கைப் பெருக்கம் அவளது உண்மையறிவை விழுங்கிக் கொண்டமையின், அவன் பிரிவால் உளதாய துனியால் முனிவுகொண்டு, “தம்முடைய மார்பிடத் தெழுதப்பெறும் தொய்யில் வரிவனப்பு இன்றிப் பசலைபாய்வதால் மிக்க துயருற்ற அவனைப் பெரிதும் விரும்பி யுறையும் மகளிர்க்கு, அவன் போந்து தன் மார்பை நல்கி அவரது துன்பம் துடைப்பது பேருதவியாகும்; அதனைச் செய்வதற்குரிய அன்புதானும் அவன்பால் இல்லை. ஆகவே, அவன் மார்பை நயப்பது பயனில் செயல் என்பதை நன்கறிந்தே யான் அமைந் துள்ளேன். அற்றாக, அவனை யாவரோ நயந்தாற் போல எண்ணி, நீ அவனது நற்பண்பினை யெடுத்து நவிலுகின்றாய்; நயந்தார் ஒருவரும் இல்லை. அமைக”என்றாள். நயந்தோர்க்குதவும் நற்பண்பினையுடைய தலைமகனது அன்பினைத் தோழி வற்புறுத்தினாளாக, அவட்கு எதிரழிந்து மொழியுமாற்றால், தலைவி தனது காதற்பெருக்கையே புலப் படுப்பது கண்ட கபிலர், அதனை இப்பாட்டின்கண் அமைத்து இன்பம் கனிய இசைக்கின்றார். முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை 1 வெண்கோடு கடுப்ப வாழை யீன்ற வையேந்து கொழுமுகை மெல்லியல் மகளிர் ஓதி யன்ன 2பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை இரந்தோர் உளர்கொல் தோழி திருந்திழைத் தொய்யில் 3 வனமுலை வரிவனப் பிழப்பப் பசந்தெழு பருவரல் தீர நயந்தோர்க் குதவா 4நயனில் மார்பே இது வன்புறை எதிரழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில்கள் கேட்பச் சொல்லியதுஉமாம். உரை : முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கி - முருகனை யொத்த வலிமையுடனே மிக்க சினம்கொண்டு; பொருத யானை வெண்கோடு கடுப்ப - போரிட்டுப் போந்த யானை யின் வெண்மையான கோட்டினைப் போல; வாழையீன்ற வையேந்து கொழுமுகை - வாழைமரம் ஈன்ற கூரிய கொழுவிய அரும்பு; மெல்லியல் மகளிர் ஓதியன்ன - மெல்லிய இயல்பை யுடைய மகளிர் கூந்தல் போல; பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை - மலர்ந்து நிற்கும் ஏனை வாழைப்பூக்களுடனே அசையும் பெரிய மலைக்குரியவனான தலைவனை; இரந் தோர் உளர்கொல் - இரந்து கேட்டவர்உண்டோ? ஒருவரும் இலரன்றே; தோழி; திருந்திழை தொய்யில் வரிவனப்பு வன முலை இழப்ப-திருந்திய இழைகளுடனே தொய்யில் எழுது தலால் பிறக்கும் அழகை வனமுலைகள் இழக்குமாறு; பசந்து எழு பருவரல் தீர - மேனிமுழுவதும் பசலை பாய்வதால் உண்டாகும் துன்பம் நீங்கவேண்டி; நயந்தோர்க்கு உதவா நயனில் மார்பு - காதலித்தார்க்கு உதவாத அவனது அன்பில்லாத மார்பினை எ.று தோழி, வனமுலை இழப்பப் பசந்து, எழு பருவரல் தீர, நயந்தோர்க்கு உதவா நயனில் மார்பை, மால்வரைநாடனை, இரந்தோர் உளர்கொல் என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. முருகு, முருகன்; ‘முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல1 எனப் பிறரும் கூறுதல் காண்க. முன்னியது முடிக்கும் முடிவிலாற்றல் உடையனாதலால் வன்மைக்கு எல்லையாக முருகனைக் கூறினார். முருகொத் தீயே முன்னியது முடித்தலின்2 எனச் சான்றோர் உரைப்பர். பகையொடு பொருத யானையின் வெண்கோட்டின் அடிப்பகுதி குருதிக்கறை படிந்து சிவந்து தோன்றுதலின் அதனை வாழையரும்புக்கு உவமம் செய்தார். வாழையின் கொழுமுகை அடிபருத்து நுனிகுவிந்து கூரிதாக இருத்தலின், வைந்நுதி யென்னாது வையேந்து முகை என்றார். வாழைக் கொழுமுகையைத் தாங்கும் கொம்பு கரிதாய் ஏனை வாழை மரங்களில் மலர்ந்து தொங்கும் பூக்களுடனே காற்றில் அசைவது, மகளிர் பின்னிவிட்ட கூந்தலிற் சுற்றிய பூமாலையோடு அசைவது போறலின், மகளிர் ஒதியன்ன பூவொடு துயல்வரும் என்றார். இரத்தல், ஈண்டு நல்குமாறு இரந்து கேட்டல். அழகிய இழை கிடந்து விளங்கும் மகளிர் மார்பிலும் தோளிலும் சந்தனக் குழம்புகொண்டு காதலரால் எழுதப்படும் ஒருவகைக் கோலம் தொய்யில் என்னும் நீர்க்கொடி போல அமைதலின் அதனைத் தொய்யில் என்பது வழக்காயிற்று, தொய்யில் எழுதுவதை வரித்தல் என்பவாகலின் தொய்யில் எழுதப் பிறக்கும் வனப்பைத் தொய்யில் வரிவனப்பு என்றார் “பெருந்தோள் தொய்யில் வரித்தும்”1 என்று சான்றோர் உரைப்பது காண்க. பசந்து என்றது காரணப் பொருளில் வந்த வினையெஞ்சுகிளவி. நயந்தோர்க்கு உதவுவது நயனுடையார் செயலாதல் பற்றி, அது செய்யாத மார்பு நயனில் மார்பு எனப்பட்டது. உதவா மார்பு என்றவிடத்துப் பெயரெச்சம் செயப்படுபொருள் கொண்டது; வழங்காத செல்வம் என்றாற்போல செயப்படு பொருண்மை, “எதிர் மறுத்து மொழி யினும் பொருணிலை திரியா”2 என்பதனாலறிக. தலைமகன் பிரிவால் மேனி வேறுபட்டிருந்த தலைமகட்குத் தோழி ஆற்றத் தகுவன பல கூறியும், அவள் ஆற்றாளாயினாள்; அதனால், தலைவனுடைய நல்லன்பையும் நயந்தார்க்கு வேண்டு வன நயனுடைமையையும் எடுத்தோதித் தலைமகளை அவனது பிரிவாற்றியிருக்குமாறு தோழி வற்புறுத்தினாள். அது கேட்டு உள்ளம் அழிந்த தலைமகள், தோழியை நோக்கி எதிர்மொழி யலுற்று, உள்ளுறையால் தலைமகற்குப் பொருள்மேற் சென்ற காதல் பெரிது என்கின்றாளாகலின், வெளிப்படையாக அவர்பாற் சென்று, விரைந்து மீண்டு நல்குமாறு தூது சென்று இரந்தார் உண்டோ என்பாள் நயந் தோர்க்குதவா நயனில் மார்பு இரந்தார் உளர் கொல் என்றும், அவள் அறிவின்றித் தோழி தூதுவிடாளாகலின் உளர் கொல் என்றும் உரைத்தாள். அவனையே நயந்துறையும் தன்னை அருளானாயினான் என்றற்கு நயந்தோர்க் குதவா நயனில் மார்பு என்றும், அதனால் தான் எய்திய வருத்தத்தைத் தொய்யில் வனமுலை வரிவனப் பிழப்பப் பசந்தெழு பருவரல் என்றும் கூறினாள். நயந்தோர் என்றது தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பு. பொருத யானையின் வெண்கோடு போலும் வன்மையும் செம்மையுமுடைய வாழைமுகை ஏனை வாழைகளின் மலர்ந்த பூக்களோடு துயல்வரும் என்றதனால், முன்னியது முடிக்கும் திண்மையும் அதனால் பொருண்மேல் ஒன்றிய உள்ளமுமுடைய ராயினும் ஏனை நயந்தார்க்கு அருளும் நயனுடையார் போல்வர் தம் தலைவர் என்றாளாம். எனவே அவர்க்கு வினையும் பொருளுமே காதலன்றி நம்முடைய நயப்பும் நாமெய்தும் பசப்பும் அல்ல என்றவாறாயிற்று. இதன்கண் பசந்தெழு பருவரல் கூறியது தன்வயின் உரிமையும், நயந்தோர்க்கு உதவாமை கூறியது அவன்வயின் பரத்தைமையும் தோன்ற நின்றமை அறிக. நாடனை மார்பை இரந்தோர் உளர்கொல் என்றது யானையைக் கோட்டைக் குறைத்தான் என்றாற் போல நின்றது. 226. கணியன் பூங்குன்றனார் கணியன் பூங்குன்றனார் எனப்படும் இச்சான்றோர் பறம்பு நாட்டுப் பூங்குன்றம் எனப்படும் ஊரினர். பூங்குன்றன் என்பது இவரது இயற்பெயர். இவர் தந்தை கணியன் எனப்படுகின்றார். அஃது அவரது இயற்பெயரோ, கணி கூறுவதால் வந்த சிறப்புப் பெயரோ தெரிந்திலது. இவ்வாறே பிறரும் “இவர்க்கு இப்பெயர் தொழிலாலும் இடத்தாலும் வந்தது போலும்” என்று இயம்பு கின்றனர். இப்போது இராமநாதபுர மாவட்டத்து மகிபாலன் பட்டி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டால்1 அதுவே முன்னாளைய பூங்குன்றமெனத் தெரிகின்றது. காலம் சென்ற பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்களுடைய ஊரும் அதுவே. பண்டிதமணியவர்களின் பரந்த புலமையும் சிறந்த நாவன்மையும் நோக்கின், இவ்வூர் பண்டுபோல் புலமை சிறக்கும் தன்மை குன்றாதிருப்பது மனத்துக்கு மகிழ்ச்சி தருகின்றது. நிற்க, நம் பூங்குன்றனார் தெளிந்த மதிநுட்பமும் விரிந்த புலமையும் உடையவர்; வாழ்க்கையில் தோன்றும் இன்பமும் துன்பமுமாகிய இருவகைப் பயன்களையும், அவை எய்துதற்கு வாயிலாக நிற்கும் மக்களின் இனிமை இன்னாமை ஆகிய பண்புகளையும் சீர் தூக்கி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “வாழ்தல், இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின், இன்னா தென்றலும் இலமே” என்றும் உரைக்கின்றார். மேலும், தமதுகுறிக்கோள் இதுவென் பார், “மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே” எனவும், “சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனவும் மொழிந்து, இதற்குக் காரணம் கூறுவாராய், “ ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது திறவோர், காட்சியில் தெளிந்தனம்” என்று விளக்கு கின்றார். இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமக்கள் வாழ்வில் இன்றி யமையாத கடமை யொன்றின் காரணமாகத் தலைமகள்பால் பிரிவாற்றியிருக்கும் வன்மை குறைகின்றது; அவள்மேனியில் மெலிவு தோன்றுகிறது. உண்டியிற் சுருங்கியும் உறக்கமின்றியும் உடம்பு மெலிந்து வரும் தலைமகளைக் கண்ட தோழி, “அன்னாய், உலகியல் வாழ்க்கையில் வறுமைப் பிணிக்கு மருந்தாகவும், இன்பப் பேற்றுக்குத் தவம் போலவும், மன்பெரும் அரசுக்குப் பொன் போலவும் ஏதுவும் பயனுமாய் இருப்பது பொருள்; அது குறித்து நம் தலைவர் சென்றுள்ளாராதலால், அதனை யுள்ளி அவரது பிரிவை ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்தினாள். அது தலைமகட்குப் போதிய ஆறுதல் அளிக்கவில்லை. அதனால், அவள் மதிநுட்பமும் நூலறிவும் மாண்புறக் கொண்டவளா கலான், “தோழி, மருந்தாகித் தப்பா மரம் ஒன்று காணப்பெறின் அம்மரம் சாகுமாறு அதன்பால் மருந்துகோடலும், மனத்தின்கண் திண்மையில் வழித் தவம் கடைபோகாமையின், தவம் செய் வோர் அத்திண்மை கெடுமாறு தவம் செய்தலும், நாடு பெரும் பொருளாற் பெட்டக்க தாகுமாறு நடப்பது அரசியலின் அறமாக இருப்ப, அப்பெரும்பொருளாகிய வளம் முற்றும் கெட மன்னர் நாட்டுமக்களிடத்திருந்து பொருள் கோடலும் இல்லை யன்றோ? என்பால் நலம் கெடாதிருந்தாலன்றி இல்லிருந்து பெறும் இன்பம் இலதாமாகலின், எனது இந்நலம் கெட்டு யான் சாமாறு பிரிந் தொழிதல் அவர்க்கு முறைமையாகாதே; நாம் அவரால் உள மாகும் இயைபினால் உயிர் வாழ்கின்றேம்; பொருளோ, தன்னை ஈட்டக் கருதுவோர் உள்ளத்தைப் பிணித்துத் தன்னையன்றி வேறு எதனையும் விழையாவாறு பிணிக்கும் வீறு கொண்டது. அதனால், அதனைப் பெறுதற்கண் முயல்வோரது அறிவு, ஒரு வரையறைக் கண் நில்லாது மேன்மேலும் பொருள் ஈட்டுவதிலேயே தோய்ந்து, தன்னை மறந்தொழிந்து போகும். அதன்மேற் சென்ற உள்ள மிகுதியால், நம் காதலர் வெயில் நின்று வெதுப்பும் வெவ்விய சுரத்து வழியே சென்றார்; சுரத்தின் வெம்மை நோக்காது சென்றமையே, பொருட்காதலின் வன்மைக்குப் போதிய சான்றாகும். இன்று மாத்திரையன்று; என்றுமே பொருட்காதல் இத்தன்மைத்து எனச் சான்றோர் கூறுப; அதுவேயுமன்றி இவ் வுலகின்கண் வாழும் எல்லா மக்களுமே இதனை அறிந்துள்ளனர் காண்” என்று நெஞ்சழிந்து கூறுவாளாயினாள். இதன்கண், தோழியது வன்புறையின் வலியின்மை காட்டி, எதிரழிந்து கூறும் தலைமகளின் உரையிடத்தே ஒளிரும் பொருளி யலறிவும், வாழ்க்கையின் பண்புணர்வும் உலகியல் மாண்பும் பூங்குன்றனாரது புலமையுள்ளத்துக்கு விருந்தாயினமையின், அதனை வியந்து இப்பாட்டின்கண் தொகுத்துப் பாடுகின்றார். மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரஞ்சாச் செய்யார் உயர்தவம் 1வளங்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல் நாந்தம் உண்மையின் உளமே அதனால் தாம் செய் பொருளள வறியார் தாம்கசிந்து என்றூழ் நின்ற இயக்கரு நீளிடைச்2 சென்றோர் மன்றநம் காதலர் என்றும் இன்ன நிலைமைத் தென்ப என்னோரும் அறிபஇவ் வுலகத் தானே.3 இது, பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. உரை : மாந்தர் மரம் சா மருந்தும் கொள்ளார் - மக்கள் மருந் தாய்ப் பயன்படும் மரம் சாக அதனை வெட்டிக் கொள்ள மாட்டார்கள்; மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் - தவம் மேற்கொள்ளும் சான்றோர் தமது மனத்திண்மை கெடுமாறு உயரிய தவத்தைச் செய்ய முற்படமாட்டார்கள்; வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் - நாடு வளம்கெடுமாறு குடிகளிடத்தே பொன்னும் பொருளுமாகிய செல்வத்தை வாங்கமாட்டார் வழிவழியாக நிலைபெற்றுவரும் மன்னர்கள்; நன்னுதல் - நல்ல நெற்றியையுடைய என் தோழி; நாம் தம் உண்மையின் உளம் - நாம் அவரால் உளமாதலால் உயிர் வாழ்கின்றோம்; அதனால் -; தாம் செய்பொருள் அளவு அறியார் - தாம் செய்யும் பொருளின் அளவும் பயனும் நமது வாழ்வும் அறமும் என்பது கருதாராய்; தாம் கசிந்து -பொருளீட்டமே கருதி அதன் பொருட்டு மனம் நெகிழ்ந்து; என்றூழ் நின்ற இயக்கரும் நீளிடை - வெயிலின் வெம்மை நிலைபெற்ற எவ்வுயிரும் இயங்குதற் கரிய நீண்ட சுரத்தின்கண்; சென்றோர் மன்ற நம் காதலர் - சென்று சேர்ந்து விட்டார் நம் முடைய காதலராகிய தலைவர்; என்றும் இன்ன நிலைமைத்து என்ப - எப்பொழுதுமே பொருட் காதல் இப்பெற்றித்தாய இயல்பினையுடையது என்று சொல்லுவர்; இவ்வுலகத்தான் என்னோரும் அறிப - இவ்வுலகின்கண் எல்லோருமே இதனை அறிந்துள்ளனர் காண் எ.று. நன்னுதல், சாக்கொள்ளார், சாச் செய்யார், கொள்ளார்; தம்மால் உண்மையின் நாம் உளம்; ஆயினும் காதலர் கசிந்து அறியார், அறிப எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சாவக் கொள்ளார். சாவச் செய்யார் என்பன சாக் கொள்ளார், சாச் செய்யார் என வந்தன; “சாவ என்னும் செயவென் எச்சத்து, இறுதி வகரம் கெடுதலும் உரித்தே”1 என்பது தொல்காப்பியம். மாந்தர் என்பது பின்னும் கூட்டப் பட்டது. உரம், திண்மை, உரம் இல்வழித் தவம் அவமாம் என்க. உயர்வுக்கு ஏது தவமாகலான் உயர்தவம் என்றார். பொன் இல்வழி மன்னர்க்கு நிலைபேறு இன்மையின் பொன்கோடல் வேந்தர்க்கு இன்றியமையாது; “பொன்னி னாகும் பொருபடை யப்படை, தன்னி னாகும் தரணி தரணியிற் பின்னையாகும் பெரும்பொருள் அப்பொருள், துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே”2 என்று பின்வந்தோரும் கூறுதல் காண்க. நாடு வளங்குன்றியவழிப் பொன்னும் பொருளும் இல்லையாம் என்றற்கு வளங்கெடப் பொன்னும் கொள்ளார் என்றார். மன்னர், வழிவழியாக நிலைபெற்று வரும் வேந்தர். செய்பொருள், ஈட்டப்படும் பொருள், கசிதல், ஈண்டு மனம் நெகிழ்தல் மேற்று, இயக்கு, இயக்கம். சென்றார் என்பது செய்யுளாகலின் சென்றோர் என வந்தது; மன்ற என்பது தேற்றப் பொருட்டு. காதலர் என்றதனால், காதல் இன்ன நிலைமைத்து என இயைக்கப் பட்டது. என்னோரும் என்பது எல்லோரும் என்பது பட நின்றது; “என்னுடைய ரேனும் இலர்”1 என்றாற் போல. களவுக் காலத்தில் தலைமகன் ஒருவழித்தணத்தல் வரை விடை வைத்துப் பிரிந்து சேறல் முதலியன செய்தபோது தலை மகட்கு வருத்தம் தோன்றியதுண்டு; அக்காலைத் தனது ஒழுக்கம் வெளிப்படுதற் கஞ்சி அதனைத் தாங்கி ஆற்றியிருத்தல் அவட்கு இன்றியமையாதாயிற்று. கற்பின்கண் அப்பெற்றித்தாய இடுக் கண் இன்மையின் தலைமகன் பிரிந்தவழித் தலைமகட்குளதாகும் வருத்தம் வரம்பின்றிப் பெருகுதலும் அதனை ஆற்றாது அவள் மேனி வேறுபட்டு இரங்குவதும் இயல்பாய் நிகழ்தலின், தலை மகன் மேற்கொண்ட பிரிவுக்குரிய காரணத்தைத் தோழி சிறப் பித்துக் கூறித் தலைமகளை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்துவது அறமாகிறது. அதனால், பொருள், வறுமை நோய்க்கு மருந்து என்று அவள் வற்புறுத்தினாளாக, தலைவி, யாம் இல்வழிப் பொருள் உடைமையும் இன்மையாய் இல்லறத்தின் பயன் நல்காமையின், அதனை எண்ணாது பிரிதல், நோய்தீரும் மருந்து பெற முயல்வார். அதனை நல்கும் மரத்தை அழித்துக்கொள்வதுபோலும் என்பாள் மரஞ்சா மருந்தும் கொள்ளார் என்றாள். “மருந்தாகித் தப்பா மரத்தற்றால்”2 என்பதனால் மரம் மருந்துக்கு முதலாதல் உணரப் படும். நாம் உடனிருப்பின் மேற்கொண்ட பொருட்பேற்றுக்கு உரிய வினைத் திட்பம் உறாது என்று கருதிப் பிரிவு கைக்கொண்டா ரெனின், நலங்கண்டவழித் தழுவியும் தீது கண்டவழிக் கழறியும் மனத்திட்பம் உறுவிக்கும் நம்மையின்றி அவர் பொருள் வினையை எங்ஙனம் கடைபோகச் செய்வர் என்பாள், மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் என்றாள். உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் தவக்கூறுகள்; தவம் பயனாகிய உயர்வு நல்குதற்கு மனத்திண்மை இன்றி யமையாது; “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்”3 என்பது அறநூல்; தவம் மேற்கொண் டார்க்குத் திண்மை போல மனையறம் புரிவோர்க்கு மனத் திட்பம் அமைந்திருத்தலின், அதனை உருவாக்கும் மனையாளைப் பிரிந்து சேறல், உரம் இன்றாகத் தவம் செய்வார் செயல் போல்வ தென்றற்கு மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் என்றாள் என அறிக. “தாய்போற் கழறித் தழீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”1 என்பதனால் ஆடவர்க்கு வேண்டப்படும் மனத்திட்பம் மனையாளால் உண்டாதல் துணியப்படும், நாட்டில் பகையிருள் கடிந்து இன்பவொளி பரப்பும் மன்னர்க்குப் பொன் இன்றியமையாதாயினும், அதற்கு ஏது அந்நாட்டின் நாடா வளமாவது போல, இம்மையிற் புகழும் மறுமையிற் பேரின்பமும் பயக்கும் மனைவாழ்க்கைக்கு மனை யாளின் துணைமை இன்றியமையாதாகலான், அவளைத் துறந்து சென்று செய்வது, நாட்டின் வளம் கெடுத்துப் பொன் கொள்ளும் மன்னர் செயல் போல் உலகியலுக்கு மாறுபடுகிற தென்பாள், வளம்கெடப் பொன்னும் கொள்ளார் என்றாள்; என்றது, அவ்வாறு பொன் கொள்ளும் மன்னர்க்கு மன்னுதல் இல்லாது ஒழிவது போல, நமது நலம் கெடச் செய்யும் பொருள் நன்பொரு ளாகாது என்றாளாம். அது கேட்ட தோழி, தலைவியின் மதி நுட்பம் கண்டு வியந்து நோக்கினாளாக. அவளோடு மேலும் உரையாடலுற்ற தலைமகள், நன்னுதல் என்றும், தான் இது காறும் கூறியதனால், மனையுறையும் தானே தலைமகனது தலைமைவாழ்வுக்கு முதல் என்பது தோன்றி நின்றமையின், அதனை விலக்கித் தனது உயிர் வாழ்க்கைக்குத் தலைமகனே முதல் என்பாள், நாம் தம் உண்மையின் உளம் என்றாள்; “வினையே ஆடவர்க் குயிரே வாணுதல், மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென, நமக்குரைத் தோரும் தாமே”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. ஒருவர் செய்யும் பொருள் அவருடைய அறிவு ஆண்மை முயற்சி முதலியவற்றின் அளவின் மேலதாயினும், எத்திறத்தோர்க்கும் அது பயன்படுமளவு அவரவர் மனை நலத்தின் மேலதாம்; மனைநலம் கெடாமைச் செய்யும் அளவே பொருள் அளவாகவும், அதனை எண்ணாது பிரிந்தனர் நம் காதலர் என்பாள், தாம் செய்பொருள் அளவு அறியார் சென்றோர் மன்ற நம்காதலர் என்றும், நாம் தம்மால் உயிர் வாழ்தல் உடையேமாதல் கண்டு நமது நலமும் உயிரும் தம்மை யின்றிக் கெடா என்று கருதினர் போலும்; அதனால் அவர் தாம் செய்பொருள் அறியார் சென்றார் என்பாள், அதனால் என்றும் கூறினாள். செயல் வகை நன்கு தெரிந்து காலம் இடம் கருவி முதலியன செவ்வையாக அமைந்தவழிச் செயல்அளவு சிறிதா யினும் பெருகிப் போந்து செய்பவன் அறிவைத் தன்வரை நிறுத்தித் தன்னையே நினைந்தொழுகப் பண்ணும் பொருளின் நலன் நயந்து சென்றார் என்பாள், தாம் கசிந்து என்றும், அதனால் செல்லும் சுரத்திடை நின்ற வெயில் வெம்மையையும் நெறியருமையையும் நோக்கிற்றிலர் என்றற்கு என்றூழ் நின்ற இயக்கரும் நீளிடைச் சென்றோர் மன்ற வென்றும், இவ்வாறு பொருட் காதலுற்றுச் செல்பவரை நாம் நம் காதலர் என்று உரைக்கும் பேதைமை இருந்தவாறு என்னே என்பது தோன்ற, நம் காதலர் என்றும் கூறினாள். “பொருளே காதலர் காதல்” என்று பிறரும் கூறுப. ஏனை எவ்வகைக் காதலையும் ஒடுக்கித் தானே மேம்பட்டு நிற்பது பொருட்காதலின் இயல்பு எனச் சான்றோர் கூறுவர் என்பாள், என்றும் இன்ன நிலைமைத்து என்ப என்றும், அதனை இவ் வுலகின்கண் எல்லோரும் அறிந்துள்ளனர், நீ அறியா தொழிதற் கில்லை யென அவளையும் உளப்படுத்தற்கு என்னோரும் அறிப இவ்வுலகத்தானே என்றும் இயம்பினாள். இதனால், தலைவி தனது ஆற்றாமை கூறி அயர்வு தீர்வாளாவது பயன் என அறிக. 227. பூதன் தேவனார் களவுக்காத லொழுக்கம் மேற்கொண்ட தலைமகன், தலை மகள் உள்ளத்தே தோன்றியுள்ள காதல் தன்னை இன்றியமையாத அளவிற் பெருகுதல் வேண்டுமெனக் கருதி, அவளை வரைந்து கோடலை விரைந்து கைக்கொள்ளாது களவுநெறியை நீட்டிப் பானாயினான். கற்பிற் போல இடையறாக் கூட்டம் பெறலின்றிப் பிரிவு இடையிட்ட கூட்டமே தலைமகள் பெற்றாள்; அதனால் அவள் ஆற்றாமை மிகுந்து மேனி வேறுபட்டு வருத்த மெய்த லானாள். தலைமகனைத் தலைப்பெய்யும்போதெல்லாம் தோழி அவனை வரைந்துகொள்ளுமாறு குறிப்பாகவும் வெளிப்படை யாகவும் தூண்டினாள்; தலைமகளும் பன்முறை அதனைக் குறிப்பாய் உணர்த்தினாள். வரைதற்குரிய செவ்வியைத் தலை மகன் அறிவானாகலின், அதுநோக்கி அவன் காலம் தாழ்த்தி வந்தான். தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது; அவனது நீட்டித்த ஒழுக்கம் தோழியுள்ளத்தையும் கலக்கிவிட்டது. ஒருநாள், தலைமகன் தலைவிமனையின் சிறைப்புறத்தே மாலைப்போதில் வந்தானாக, அவனைக் கண்டதும் தோழி பணிந்த மொழியின ளாய், “ஐய, நீ இடையிட்டுப் போதரும் அவ்வப்போதில் , தலை மகட்குச் செய்யும் தலையளிக்கு யான் பெரிதும் நன்றியறித லுடையேன். ஆயினும், நீ செய்யும் இத்தலையளி இவ்வூர் முற்றும் அலராய்ப் பரந்துவிட்டது; களவும் கற்புமாகிய கைகோள் இரண்டும் மகளிர்க்கு அறமாதலை அறிந்த சான்றோரும், இவ்வலர்க்கு ஏதுவாகிய களவு மேற்கொண்டோர் அறப்பண்பு இல்லாதவர் என்று இப்போது இயம்புகின்றனர். அதனால், எமக்கு உளதாகும் இப்பழிதானும் இன்னுயிர் நீங்காத பெருந் தீமையாக இருக்கின்றது. அதனால், யாம் உயிரோடு இருப்பதும் துன்பம், இறப்பதும் துன்பமாதல் கண்டு வருந்துகின்றோம் காண்” என்றாள். அது கேட்டதும், தலைமகன் தலைவிபால் காதல் பெருகிக் கையறவு பயந்தமை யுணர்ந்து கடிதின் வரைதற்குரியன செய்வானாயினன். தோழியின் இக்கூற்றினைக் கண்ட பூதன் தேவனார், அலர் தோன்றியவழி வரைதல் எளிதின் இயலுமெனத் தலைமகள் கருதுவதுணர்ந்து, அதனைக் கூறித் தலைவனை வரைவுகடாவு வதும், வரைவையும் நீட்டியாது விரைந்து செய்துகொள்ளி னன்றித் தலைமகட்கு வாழ்க்கை இனிதாகாது எனத் தலைவனை முடுகுவதும் நயமுறக் காட்டும் தோழியது திறம் வியந்து இப் பாட்டினைப் பாடுகின்றார். அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்தோர்1 இன்னுயிர் கழியினும்2 நனி இன்னாதே புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த3 பின்னீ ரோதிஎன் தோழிக் கன்னோ படுமணி யானைப் பசும்பூண் சோழர் கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட் டாங்கண் கள்ளுடைத் தடவிற்4 கைவண் செல்வர் தேர்வழங்கு தெருவின் அன்ன கௌவை யாகின் றைய5நின் அருளே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. உரை: அறிந்தோர் அறனிலர் என்றலின் - களவும் கற்புமாகிய கைகோளின் அறப்பண்பை அறிந்தவர்தாமும் இக்களவினை மேற்கொண்டோர் அறப்பண்பு இல்லாதவர் என்று கூறு தலால்; சிறந்தோர் இன்னுயிர் கழியினும் - அதனைச் சிறப் பாகக் கொண்டொழுகும் யாம் பழி பொறாது இனிய உயிரைத் துறந்தேமாயினும்; நனி இன்னாது - அது நீங்காத பெருந் தீமையினையுடைத்தாம்; புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த - புன்னைமரங்கள் நின்ற கானற்சோலையில் புணர்த்த குறியிடம் போந்து நின்னைத் தலைப்பெய்த; பின்னீர் ஓதி என் தோழிக்கு - பின்னலிடப்பட்ட குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; அன்னோ - ஐயோ; படுமணி யானைப் பசும் பூண்சோழர் - பக்கத்தே மாறி யொலிக்கும் மணி கட்டப்பெற்ற யானைகளையும் பசிய பூணாரங்களையுமுடைய சோழ வேந்தர்கட்குரியதான; கொடிநுடங்கும் மறுகின் ஆர்க் காட்டாங்கண் - கொடிகள் நின்று அசையும் தெருக்களை யுடைய ஆர்க்காடு என்னும் ஊரின்கண்; கள்ளுடைத் தடவின் கைவண் செல்வர் - கள்நிறைந்த குடங்களைக் கொண்டு இரவ லர்க்கு வரைவின்றிக் கள்வழங்கும் கைவண்மை பொருந்திய செல்வர்களின்; தேர் வழங்கு தெருவின் அன்ன - தேர்கள் இயங்கும் தெருக்களில் எழும் ஆரவாரம் போல; ஐய - ஐயனே; நின் அருள் அலராகின்று - நீ செய்யும் தலையளி அலராய்ப் பரந்துள்ளது காண் எ.று. அறிந்தோர் அறனிலர் என்றலின், சிறந்தோர் உயிர்கழியினும் பழி நனி இன்னாது; புணர்குறி வாய்த்த என் தோழிக்கு நின் அருள், ஐய, அலராகின்றுகாண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அறனிலர் என்பது பற்றி அறிந்தோர் என்றது அறம் அறிந்தோர் என்னும் பொருளதாயிற்று, களவும் கற்புமாகிய இரண்டினுள் களவொழுக்கத்தைச் சிறப்பாகக் கொண்டமை யின், தலைமகளும் தோழியும் சிறந்தோர் ஆயினர். சிறந்தோர் என்றது, தன்னைப் பிறன் போற் கூறும் குறிப்பு. அறிந்தோர் அறிந்துரைப்பன அறமாகலின், அவற்றிற்கு மாறாவன பழியென உணரப்படுமாகலான், பழியென்னும் எழுவாய் வருவிக்கப் பட்டது. புணர்குறி, வரைந்து கொள்ளப்பட்ட இடம். புன்னை யங் கானல் கூறினமையின் இது பகற்குறியென்க. ஆர்க்காடு எனப் பெயர் கொண்ட வூர்கள் தொண்டை நாட்டிலும் நடுநாட்டிலும் பாண்டி நாட்டிலும் பல இருத்தலின், இது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள ஆர்க்காடு என்பது தோன்றச் சோழர் ஆர்க்காடு என்றார். பாண்டிநாட்டு ஆர்க்காடு இரணிய முட்ட நாட்டது என அழகர்கோயில் கல்வெட்டு1 உரைக்கின்றது, தொண்டைநாட்டு ஆர்க்காட்டை ஈக்காட்டுக் கோட்டத்து ஆர்க்காடு எனத் திருப்பாசூர்க் கல்வெட்டும்,2 நடுநாட்டு ஆர்க் காட்டைப் பெண்ணை வடகரை விலையூர்நாட்டு ஆர்க்காடு என்று திருக்கோயிலூர் வட்டத்து ஆர்க்காட்டுக் கல்வெட்டும்3 கூறுகின்றன. இவற்றின் வேறாக, தொண்டை நாட்டில் பாலி யாற்றின் கரையில் முகமதியராட்சி நடத்திய ஆர்க்காடு ஒன்றும், குன்றவத்தனக் கோட்டத்து இலத்தூர் நாட்டு ஆர்க்காடு ஒன்றும் காணப்படுகின்றன. தடவு, குடம். கள்ளுடைத் தடவின் தெரு. செல்வர் தேர் வழங்கு தெரு என இயைப்பினும் அமையும். ஆகின்று என்பது அணிந்தன்று வீழ்ந்தன்று என்றாற் போலும் தெரிநிலை முற்றுவினைத் திரிசொல். “நகையாகின்றே தோழி”4 எனப் பிறரும் வழங்குதல் காண்க. வாழ்க்கைக்குரிய துணையை நாடித் தேர்ந்து கொள்ளும் ஆடவரும் மகளிருமாகிய இளையர், அதனைச் செய்து கோடற் கமைந்த களவும் கற்புமாகிய இருவகைக் கைகோளும், அறநெறி யாவதையும் அவற்றை அறநூல்கள் விதித்திருப்பதையும் கண்டறிந்த சான்றோர், களவொழுக்கம் அறமன்று என்னாராயினும், எம் குடியில் அறிந்தோர் எனப்படுவோர், களவொழுக்கினரை அறனிலர் என்று கூறுகின்றன ரென்பாள், தோழி தலைமகனுக்கு அறிந்தோர் அறனிலர் என்றலின் என்றாள். அறிந்தோர் வழியது மக்களினமாகலின், அவர்வழி நிற்கும் மக்களிடையே எமது ஒழுக்கம் பழியாய்த் துயர் செய்வதாயிற்றென்பாள், என்றலின் என்றும், அறமாவதை நன்கு அறிந்துவைத்தும் அதனை அறமன்று என்போர்வழி நிற்கும் மக்கள்முன், அறத்தைச் சிறப்பாக உணர்ந்து மேற்கொள்ளும் சிறந்தோர் அலகையென்று எண்ணப்படுதற்கு அஞ்சித் தமது இன்னுயிரைத் துறப்பதல்லது வேறு செயல்வகையிலர் என்றற்கு, சிறந்தோர் இன்னுயிர் கழியினும் என்றும், அங்ஙனம் அறமுணர்ந்து சிறக்கும் இனிய உயிரைத் துறந்தவழியும் மக்கள் பழிப்பது கைவிடார் என்றற்குப் பழிமேல் ஏற்றி இன்னுயிர் கழியினும் நனியின்னாது என்றும் கூறினாள். புகழ்க்கு மறுதலையாய பழியும், செய்தார் மேல் நில்லாது அவர் இருந்த உலகின்மேல் நிற்றலின், யாம் இருந்தவழி எய்தும் துன்பம் இறப்பினும் நீங்காது வருத்தும் என்பாள் நனியின்னாது என்றாள். இவ்வாறு தலைமகட்கு உயிர் வாழ்க்கை பெரிதும் இன்னாதாயிற் றென்பது கேட்டதும், தலைமகன் உள்ளம் திடுக்கிட்டுத் தடுமாறுவது காணும் தோழி, உண்மை நிலையை விளக்குவாளாய், தலைமகனைப் புன்னைக்கானலில் பகற்குறியிடத்தே தலைமகள் தலைப்பெய்தமையையும், அவட்கு அவன் செய்த தலையளியையும் உரைப்பாள், புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த பின்னீரோதி என் தோழிக்கு ஐய நின்னருள் கௌவையாகின்று என்றாள். நின் குறிப்பின்வழி பகற்குறியிடத்தே பொய்யாது வந்து கூடினாள்; அதனை ஒருகால் நீ மறைக்கினும் புன்னையங் கானல் மறையாது என்பது தோன்றப் புன்னையங்கானல் புணர்குறி வாய்த்த என்தோழி என்றும், அதனை வியந்து பாராட்டி நீ செய்தது அருளே எனினும், அஃது இன்பம் பயவாது துன்பம் பயக்கும் அலராய் விட்டது என்பாள், என் தோழிக்கு நின் அருள் கௌவையாகின்று என்றும் , தலைமகனை நோக்க அவனது கூட்டம் அருளாய் இலங்கினமை யின் அவனை ஐய என்றும், தலைமகட்கு அருட்பேறு துன்பம் பயந்தமை விளங்க, அன்னோ என்றும் தோழி கூறினாள். சோழரது ஆர்க்காட்டில் கைவண் செல்வர்கள் வழங்குதலாற் பிறந்த மகிழ்ச்சி யாரவாரம் ஊர்தொறும் நாடு தொறும் பரவிப் புலவர் பாடும் புகழ் பெற்றது போல நீ இவட்கு அருள் செய்தலாற் பிறக்கும் அலர், மனைதோறும், ஊர்முற்றும் பரவி உரைப்பார் உரைக்கும் பழிப்புரையாயிற்று என்பது பெறப்படும். படவே, இதனை நீ எண்ணாமலும் வரைதலை மேற்கொள்ளாமலும் நெடுங்காலம் களவே விரும்பி யொழுகுகின்றாய்; இனி அதனைக் கைவிட்டு விரைந்து வரைந்து கொள்வாயாக எனத் தோழி கூறினாளாயிற்று. இனி, புணர்குறி வாய்த்தல் என்ற பாடத்தைக் கொள்ளின், இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தோழி பகற்குறி காட்டி அதுவும் மறுத்து அலரச்சம் கூறி வரைவுகடாவியது கருத்தாய், அறிந்தோர் அறனிலர் என்றலின், நுமக்குச் சிறந்த இவள் இன்னுயிர் கழியினும் புன்னையங் கானற் புணர்குறி வாய்த்தல் நனியின்னாது, என் தோழிக்கு நின் அருள் அலராகின்று ஆகலான் என இயைத்துப் பொருள் உரைத்துக் கொள்க. தலை மகன் தெருண்டு வரைவானாவது பயன். 228. முட்டத் திருமாறனார் இவர் பெயர் முடத்திருமாறன் என்று அச்சுப்படிகளில் காட்டப்படுகிறது. புதுப்பட்டி ஏட்டில் இது முட்டத் திருமாறன் என்று காணப்பட்டது. முட்டம் என்பது, தொண்டைநாட்டுக் குரங்கணில் முட்டம், பாண்டிநாட்டுத் திருத்தியூர் முட்டம், இரணிய முட்டம் என்றாற்போல ஓர் இடத்தின் பெயராகும். முட்டம் என்ற பெயரையுடைய ஊர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உளது. அங்குள்ள சிவன் கோயில் கட்டிடங்கள் எல்லா வற்றிற்கும் மிகமிகப் பழமையான தென்றும், பல்லவர் காலத்துக்கு முன்னையதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அது பற்றியே அஃது இந்தியப் பேரரசின் நேரிய பாதுகாப்பில் வைக்கப் பட்டுளது. பழைய பல்லவ சோழர் காலங்களில் இவ்வூர் முட்ட மென்றே பெயர் குறிக்கப்பெற்றது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் தெரிகிறது. வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு இருங்கோளப்பாடி நாட்டு விளந்தைக் கூற்றத்துத் திரு முட்டம்1 என்பது பழைய சோழமன்னர் கல்வெட்டு. பிற் காலத்தே இங்கே திருமால் கோயில் ஒன்று தோன்றியதன் விளைவாக இவ்வூர் முடிகோண்டசோழ நல்லூர் என்ற பெயருடன் ஆதிவராக நல்லூர் என்ற பெயரும் பெற்றது,2 விசயநகர வேந்தர் நாளில் கோயில்களும் ஊர்களும் வடமொழியில் பெயர்க்கப் பட்ட போது, திருமுட்டம் என்ற பழந்தமிழ்ப் பெயர் திருமுஷ்ண மெனவும் ஸ்ரீமுஷ்ணமெனவும் மாறிற்று. இவ்வூரில் மானக் கஞ்சாறன் என்ற ஒருவன் திருப்பதியம் பாடி இங்குள்ள சிவன் கோயிலில் விண்ணப்பம் செய்துவந்தான் என்றும், அவன் இறந்தபின் அவனது உருவம் கோயிலில் அமைக்கப்பெற்றது என்றும் இவ்வூர்க் கல்வெட்டுக்கள்1 கூறுகின்றன, இத்துணை வரலாற்றுச் சிறப்பமைந்த இப்பேரூரில் திருமாறன் என்ற இச் சான்றோர் தோன்றியிருக்கலாமென எண்ணுதல் தவறாகாது, மாறன் என்னும் பெயர் பாண்டிவேந்தர்க்குரியதாயினும், நாட்டில் வாழ்ந்த மக்களும் அப்பெயர் தாங்கியிருந்துள்ளனர். பாண்டி நாட்டு இளையான்குடியில் வாழ்ந்த சைவ நாயனார் ஒருவர் மாறனார் என்ற பெயருடையவர். திருமுட்டம் இருக்கும் பகுதியில் மாறன்பாடி என்று ஓர் ஊரும் உளது. அப்பகுதியைக் கல்வெட்டுக்கள், விருதராசபயங்கர வளநாட்டு மேற்காநாட்டு இருங்கோளப் பாண்டிநாடு2 என்றும் கூறுகின்றன. இவ்வாற்றால் இப்பகுதி பாண்டி வேந்தர்வழி நின்ற தலைவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலங்களும் உண்டென்றும், எனவே, ஊர்ப் பெயர்களும் மக்கட்பெயர்களும் பாண்டிவேந்தர் தொடர்பு பெறும் வாய்ப்புக்கள் இருந்தன என்றும் தெரிகிறபடியால், திருமாறன் என்று பெயர் தாங்கிய சான்றோர் இம்முட்டத்தின் கண் இருந்திருப்பரென எண்ணுவது பொருத்தமாதலால் இம் மாறனார் திருமுட்டத்தைச் சேர்ந்தவரெனவே கொள்ளலாம். காதலாற் பிணிப்புண்ட ஒருவனும் ஒருத்தியும் களவின்கண் ஒழுகுமிடத்துத் தலைமகள் உள்ளத்து உளதாகிய காதல் பெருகி அவளை முடுகுதலால் தலைமகன் இரவுக்குறிக்கண் போந்து கூடுதலை மேற்கொண்டான். அவனுடைய உள்ளத்தில் தோன்றி நிற்கும் காதலை அறிந்த தோழி பெருகிவரும் ஆற்றுநீர் இடையில் உளவாகும் மேடுபள்ளங்களால் கடுவரவு பெறுதல்போல, இரவுப் போதில் உண்டாகும் மழை, விலங்குகளின் கொடுமை, காவல் மிகுதி முதலிய இடையூறுகளைக் காட்டி அவன் காதலைக் கடுமை மிகச் செய்வள். அம்முறையில், ஒருநாள் இரவு, தலை மகன் போந்து தலைவியது பெருமனையின் ஒருசிறையில் நின்றான். அவனது வரவைத் தோழி அவனை யறியாமலே தெரிந்துகொண்டு, இரவிற் கூடுதற்குப் புணர்த்த குறியிடத்தே தலைமகளைக் கொண்டு செல்லலுற்றாள். அப்போழ்து அவள் தலைவியோடு சொல்லாடுபவள் போலத் தலைவன் செவிப்படு மாறு பேசலுற்று, “தோழி, முகிலோ தன் கடனாகிய மழையைப் பொழிவது குறித்து வானமெங்கும் பரந்து மின்னி இடிக்கின்றது; நிலப்பரப்பு முற்றும் திண்ணிய இருள் படர்ந்து பார்க்கின்ற நம் கண்ணிடத்தையும் தூர்க்கின்றது; மேலும், இக்கனையிருள் பெருகிய நள்ளிரவில், வழியும் மறைந்து கொடுவிலங்கு திரியும் கொடுமையுடைய தாகும். இவையிற்றை நோக்க மனத்தில் அஞ்சுதல் சிறிதும் இன்றிப் போந்து நம்மை அருள்வானோ? அன்றி, அஞ்சிவாரா தொழிவானோ? இஃது என்னெனப் படுமோ? அறியேன்,” என்றாள், அதனால் தலைமகள் உள்ளத்தே அசைவு தோன்றவும், அவளது நடையில் தளர்ச்சி தோன்றுகிறது; தலைமகன் போந்து அவளை அன்பால் தழீஇக் கொள்கின்றான். இந்த இனிய காதற் காட்சியில், மாறனாரது புலமையுள்ளம் ஈடுபடுகின்றது. தோழியின் உரையாடல் தலைமகளது காதலுள் ளத்தைக் கலக்கிக் கையறவுபடுத்தி அரிதிற்போந்து கூடும் தலைமகன்பால் அடங்காக் காதல் பெருகச் செய்யும் நயம் வியப்புத் தருகிறது. அதன் வடிவாக இப்பாட்டு வெளிவருகிறது. என்எனப் படுமோ தோழி மின்னுவசிபு அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக் கண்தூர்பு விரிந்த1கனையிருள் நடுநாள் பண்பில் ஆரிடை2 வரூஉங்கொல் அஞ்சாது அருளான் கொல்லோ தானே கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் 3வரிகொள் வில்லிடத் தெறிகணை வெரீஇ 4அழுந்துபடு விடரகத் தியம்பும் எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே. இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது. உரை : என் எனப்படுமோ - என்னென்று கருதப்படுமோ, அறியேன்; தோழி - ; மின்னு வசிபு அதிர்குரல் எழிலி - மின்னலால் முகிலைப் பிளந்து முழங்கும் இடியையுடைய மழை; முதிர் கடன் தீர - பெயலால் தன் முதிர்ந்த கடனைத் தீர்க்க; கண்தூர்பு விரிந்த கனையிருள் நடுநாள் - காண்போர் கண்ணிட மெல்லாம் தூர்ந்துபோகுமாறு மிக்க இருள் பரவிய நள்ளிர வில்; பண்புஇல் ஆரிடை - நற்பண்பாடு இல்லாத அரிய வழி களைக் கடந்து; அஞ்சாது வரூஉங்கொல் - அஞ்சாமற் போந்து நம்மை அருள்வான்கொல்லோ; அருளான்கொல்லோ - அச்சத்தால் இவண் வருதலைத் தவிர்த்து அதனால் நம்மை அருளாதொழிவான் கொல்லோ; கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் - கானவேட்டுவனது முதுகு போலும் பெரிய கையையுடைய யானை; வரிகொள் வில்லிடத்து எறிகணை வெரீஇ - வரிந்து கட்டுதலைக் கொண்ட வில்லி னின்று எறியப்படும் அம்புக்கு அஞ்சி; அழுந்துபடு விடரகத்து இயம்பும் - ஆழ்ந்துள்ள மலைப்பிளவுக்குச் சென்று பிளிறும்; எழுந்துவீழ் அருவிய மலை கிழவோன் - மேலெழுந்து வீழும் அருவிகளையுடைய மலைக்குரியோனான தலைமகன். எ.று. மலைகிழவோன், நடுநாள், அஞ்சாது, ஆரிடை வரூஉங் கொல்; அஞ்சி, அருளான்கொல்லோ; அருளானாயின், அவன் என்னெனப் படுவனோ, அறியேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. வசிபு என்ற விடத்து வசிதல் பிளத்தல்; பிறரும் “மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும்1” என்பது காண்க. அதிர்குரல், நிலம் நடுங்குமாறு செய்யும் முழக்கம். எழிலி, மழை முகில். முதிர் கடன், செலுத்துதற்குரிய காலம். முதிர்ந்து தனிசு பெருகி நிற்கும் கடன்; காலம் வாய்த்தபோது நிலத்துக்கு மழை நீரைப் பொய்யாது பெய்து கொடுப்பதுபற்றி முதிர்கடன் என்றார். தீர்தல், கழித்தல், கண்தூர்தலாவது, தன்பால் உள்ள இயற்கையொளியும் இல்லாதவாறு மறைத்தல். இருளிடைச் சிறிதுபோது இருந்தவழி ஆண்டுள்ள பொருளும் இடமும் ஓர் அளவு விளங்குமாறு கண்ணிடத்தே தோன்றும் ஒளி, ஈண்டு இயற்கையொளி எனப்பட்டது. செல்வோர் இனிது வழங்குமாறு பண்படுத்தப்படாத சிறுவழியை ஈண்டுப் பண்பில் ஆரிடை என்றார். கொல் இரண்டிடத்தும் ஐயப்பொருட்டு. அஞ்சாது என்றமையின், அஞ்சியென்பது வருவிக்கப்பட்டது. கடுவெயிலும் கொடும்பனியும் தாக்கி நிறங்கறுத்துப் பிணர்படச் செய்தமையின், கானவன் சிறுபுறம் வேழத்தின் பெருங்கைக்கு உவமமாயிற்று. அம்பு தொடுக்குந்தோறும் வளைந்து நிமிர்தலின், அதனால் வன்மையும் கடுமையும் கெடாமைப்பொருட்டு வரிந்து கட்டப் பட்டிருப்பது பற்றி, வரிகொள்வில் என்றார்; “வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்டு1” என்று சான்றோர் கூறுவது காண்க. ஆழ்ந்தென்பது அழுந்தென நின்றது. விடர், இரு மலைகட்கு இடையேயுள்ள வெளியிடம்; மலையிரண்டினையும் நோக்க, இடைவெளி ஆழ்ந்திருத்தலின், ஆழ்ந்துபடு விடரகம் எனப்பட்டது. இயம்புதல், முழங்குதல். உயரத்திலிருந்து வீழ்ந்த நீர் மேலெழுந்து வீழ்தல் இயல்பாதலின், எழுந்துவீழ் அருவி என்றார். அருவிய; பெயரெச்சக் குறிப்பு. குறிஞ்சிவெற்பன் என்பது தோன்ற மலைகிழவோன் என்றார். காதலன் போந்து சிறைப்புறத்தே நின்றமை யறியாது, அவன் வருதலும் கூட்டம் நிகழ்தலும் ஒருதலையென்று கருதிச்செல்லும் தலைமகள் உள்ளத்தைக் கலக்கிச் சிந்தனைக்கண் செலுத்தும் கருத்தினளாகலின் தோழி என்னெனப்படுமோ தோழி என்றாள். களவொழுக்கின் கண் தலைமகளது உள்ளம் காமக்கிளர்ச்சி யால் கற்பும் பொற்பும் நற்பால் ஒழுக்கமும் சிதையாமைப் பேணுதற்கண் கருத்தூன்றியிருத்தல் இன்றியமையாமையால், அவளறிவைத் தூண்டியவண்ணமிருத்தல் தோழிக்குக் கடன் என வுணர்க; “உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே2” என ஆசிரியர் உரைப்பது காண்க. நடை பெறுவது இரவுக்குறியாகலின் அதன்கண் உளவாகும் இடையீடு களை எண்ணிக் குறிவரவை விலக்கி வரைந்து கொளற்குரிய நினைவும் சொல்லும் உடையளாதல் வேண்டிச் சொல் நிகழ்த்து வது பற்றி என்னெனப்படுமோ என எடுத்து மொழிந்தாள். அது கேட்டதும், யாது என அவாய்நிலை யெய்தி அவள் மனம் அலமரலுற்றதும், இரவின்கண் வரும் தலைமகனது வழியருமை காட்டலுற்று, வானம் மழை பெயலுறக் கருமுகில் பரந்து மின்னலும் இடித்தலும் செய்வது காட்டி, மின்னுவசிபு அதிர் குரல் எழிலி என்றும். அஃதவ்வாறு செய்தல் நம்பால் செற்றங் கொண்டன்று, தன் பழையதாய் வரும் கடன் தீர்த்தற்பொருட் டென்பாள், முதிர்கடன் தீர என்றும், தலைமகனது வரவருமை தோன்ற, கண்தூர்பு விரிந்த கனையிருள் நடுநாள் என்றும், வழியின் கொடுமை யுணர்த்தற்குப் பண்பில் ஆரிடை என்றும், இவ்வாற்றால் தலைவியின் உள்ளத்தே தலைமகன் இத்துணை இடையீடுகளையும் கடந்து வருதல் இயலாது போலும் என்ற நினைவெழுந்து தோழியின் உரையோடு இயைதலின், வரூஉங் கொல் அஞ்சாது என்றும், வாரானாயின் நன்று என்ற எண்ணம் எழுந்து தலைவியின் காமக்கொதிப்பைத் தணித்து அமைதியுறு மாறு செய்வது தேர்ந்து, வாராதொழிவது அருளுடைமை யாகாது என்பாள் வாரா னென்னாது அருளான் கொல்லோ என்றும் கூறினாள். தலைவி கருத்துக்கு மாறுபட்டாள்போலத் தோழி சொல் நிகழ்த்துவது, தலைவியது காதலை மறைமுகத்தால் பெருக்குமென உணர்க; அதனால், அவன் கனையிருள் நடுநாள் பண்பில் ஆரிடை நம்பால் வாராமையே அருளுடைமை எனத் தலைவி துணிந்துரைக்குமாறு என்னெனப்படுமோ என்றாள். இதனைச் செவிமடுக்கும் உள்ளத்தே தலைமகள் இரவுக் குறியை மறுக்கும் குறிப்புத் தோன்றுதலின், அதற்குக் காரணம் இது வென்பதை உள்ளுறையால் உரைப்பா ளாயினள். பெருங்கை வேழம் கானவன் எறிகணை வெரீஇ விடரகத்து இயம்பும் என்றது, இரவின்கண் வருங்கால் நெறியிடை உளவாகும் ஏதங்களே யன்றிப் பிறர் அறியின் வரும் அலர்க்கும் அஞ்சி வருந்தாநின்றேம் என்பதை அகப்படுத்து நிற்பது காண்க. தலைமகன் கேட்டு வரைவு மேற்கொள்வது பயன். 229. இளங்கண்ணனார் இளங்கண்ணனார் பெயர் ஏனை அச்சுப்படிகளில் இல்லை. இப்பெயருடைய சான்றோர் பலர் இருந்திருத்தலின், அவரெல் லாரினும் இவர் முன்னோராதல் பற்றி இவரின் வேறுபடுத்த அவர்கள் உம்பற்காட்டு இளங்கண்ணனார், நாமலார்மகன் இளங்கண்ணனார், வாயில் இளங்கண்ணனார் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். பெருங் கண்ணனார், இளங்கண்ணனார் என்பன போலும் இயற்பெயர்கள் இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் மக்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவருடைய ஊர்ப்பெயர் பெற்றோர் பெயர் முதலிய குறிப்பொன்றும் கிடைத்திலது. தலைமகளினின்றும் பிரிந்து சென்று செய்தற்குரிய கடமை யொன்று தலைமகற்கு வந்தெய்துகிறது. அதன் இன்றியமையாமை காட்டித் தலைமகளை ஆற்றுவிக்குமாறு தோழியைத் தலைமகன் வேண்டினான். அவள் தலைமகட்கு அதனை உணர்த்திச் செல்லுதல் நலம் என்றாளாக, அவனும் அங்ஙனமே செய்தவழித் தானும் உடனிருந்து தலைமகள் காண அவனுக்கு உரைப்பாளாய், “பெரும, நீயோ செல்லுதல் வேண்டு மெனப் பல்காலும் கூறா நின்றாய்; நும்மின் வேறுபட்டுப் புலந்து ஒருவாறு இசைந்து செல்க என மொழிதற்கு யானும் அஞ்சுகின்றேன்; செல்லற்க என்பேனாயின், கடமையைச் செய்தற்கண் தடை நிகழ்த்தினேன் என்று பலரும் இகழ்ந்துரைப்பதற்கு அஞ்சுகிறேன். இனி, என் செய்வது? செல்க; சென்று வினை முடிக்க; பின்னர் அவ்விடத் தவரேயாய் எம்மை மறந்தொழிவதைச் செய்யன்மின். இவளை முயங்கி உடனிருந்தீராயினும் ஆற்றாது நடுங்குபவளாகிய இவள் முன் வாடைக்காற்றுப் போந்து வீசுதலைக் காண்பீராக” என உரைத்தாள். தோழியினது இவ்வுரையாட்டின்கண், தலைவன் செலவுக்கு உடன்பாடு ஒருபாலும், அவனே வாடை வரவுணர்ந்து செல வழுங்குவது ஒருபாலும் அமைந்து, அவன் தானே தெளிந்து செலவு மேகொள்ளும் குறிப்பை மிக்க நயம்பெற உய்த்துணர வைத்த அவளது புலமை நலம் இளங்கண்ணனார்க்கு இன்பம் தந்தமையின், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடி யுள்ளார். சேறும் சேறும் என்றலின்1 வேறுபுலந்து சென்மின்2 என்றல் யான்அஞ் சுவலே செல்லா3 தீமெனச் செப்பின் பல்லோர் நிறத்தெறி 4புன்சொலின் திறத்தஞ் சுவலே அதனால், சென்மின் சென்றுவினை முடிமின் சென்றாங் 5கவணீ ராதல் ஓம்புமின் யாமத் திழையணி ஆகம் வடுக்கொள முயங்கி உழையீ ராகவும் பனிப்போள் இனியே கண்ணிடை வான்குழை தீண்டித் தண்ணென 2ஆடியல் இளமழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே. இது, தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல வுடன்பட்டது; செலவழுங்குவித்ததூஉமாம். உரை: சேறும் சேறும் என்றலின் - செல்வேம் செல்வேம் என்று பலகாலும் சொல்வதால்; வேறு புலந்து - நும்மின் இவள் வேறுபட்டுப் புலத்தலால்; சென்மின் என்றல் யான் அஞ்சுவல் - செல்வீராக என விடை தருதற்கு யான் அஞ்சுகின்றேன்; செல்லாதீம் எனச் செப்பின் - செல்லுதலை ஒழிவீராக என்று சொல்வேனாயின்; பல்லோர் நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவல் - பலரும் என்னை இகழ்ந்து கூறும் வசைமொழிக்கு அஞ்சாநிற்பேன்; அதனால் - ; சென்மின் - செல்வீராக; சென்றுவினை முடிமின் - சென்று மேற்கொண்ட வினையை முடிப்பீராக; சென்று ஆங்கு அவணீராதல் ஓம்புமின் - சென்று வினைமுடிந்த விடத்து அவ்வினைவயத்தரே யாதலைத் தவிர்க; யாமத்து இழையணி ஆகம் வடுக்கொள முயங்கி உழையீராகவும் - நடுவியாமத்தே இழையணிந்த இவளது ஆகம் வடுப்படுமாறு தழுவிப் பக்கத்தே இருந்தீராயினும்; பனிப்போள் - நடுங்குபவள் ஆகலான்; இனி கண்ணிடை வான் குழை தீண்டி - இப்பொழுது மரங்களின் கணுவிடத்தே தோன்றியுள்ள மெல்லிய தளிர்களைத் தீண்டி; தண்ணென ஆடியல் இளமழைப் பின்றை - தண்ணென்று அசைந்து வரும் இயல்பிற்றாகிய இளமழைக்குப் பின்னர் வருவதாகிய; வாடையும் வந்து நின்றது - வாடைக் காற்றும் வந்துவிட்டது; கண்டிரோ - காண்பீராக எ.று. சேறும் சேறும் என்றலின், புலந்து சென்மின் என்றல் அஞ்சுவல்; செல்லாதீம் எனச் செப்பின் புன்சொல் திறத்து அஞ்சுவல்; அதனால், சென்மின்; வினைமுடிமின்; அவணீராதல் ஓம்புமின்; உழையீராகவும் பனிப்போ ளாதலான், இனி, வாடையும் வந்து நின்றது, காண்மின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புலந்து காரணப் பொருட்டாய வினையெஞ்சுகிளவி. சொல்லினை அம்பெனக் கருதிக் கூறலின் அதனை ஏற்கும் மார்பினை நிறம் என்றார். புன்சொல், இகழ்ந்துரை; வசைமொழியுமாம். வினை முடிவின்கண் எய்தும் இன்பத்தால் மேலும் வினை செய்தற்கே உள்ளம் சென்று அதன்வயமாய் விடுதல் பற்றி அவணீராதல் என்றார். அவணீராதல், அவ்வினை வயத்தீராதல். ஓம்புதல், ஈண்டு விலக்குதற் பொருட்டு. முயக்கத்தின்கண் இடைப்படும் அணியால் மார்பு வடுப்படுதல் இயல்பாகலின் வடுக்கொள என்றார். வான்குழை: மிக்க பசுமையின்றி விளர்த்து மெல்லிதா யிருத்தல் பற்றிக் கண்ணிடைக் குழைக்கும் தளிர் வான்குழை எனப்பட்டது; “வான்புதர்”1 என்றாற்போல, இளமழை, கார் காலத்து இறுதியில் தோன்றும் பனிமுகில். இது பைய அசைந்து செல்லும் இயல்பிற்றாகலின், “ஆடியல் இளமழை” எனப் பட்டது. பிறரும், “ஆடியல் இளமழை சூடித் தோன்றும், பழந் தூங்கு விடரகம்”2 என்பது காண்க. வாடை, வாடைக்காற்று. மனைவாழ்க்கையில் தலைமகன் பிரிதல் வேண்டியவழித் தலைமகளது ஆற்றாமை அவன் நெஞ்சின்கண் தோன்றி வருத் தினமையின், தோழி களவுக்காலத்திருந்தே உயிர்த் துணைபுரிந்து வருதலால் அவள்பால் தன் பிரிவுக்குரிய ஏதுவினைச் சொல்லி வந்தானாதலால், சேறும் சேறும் என்றலின் என்றும், அக்குறிப் பறிந்த தலைமகள் ஆற்றாமையால் வேறுபட்டுப் புலந்தமையின் வேறுபுலந்து என்றும், இவ்வாற்றால் யான் நீவிர் சென்று வருக என்றற்கு அஞ்சுவேனாயினேன் எனக் கூறுவாளாய்த் தோழி, சென்மின் என்றல் யான் அஞ்சுவலே என்றும் கூறினாள். சேறும் எனப் பன்முறை கூறலால் நும்பக்கல் நின்றுசென்மின் என்பே னாயின், தலைமகள் வேறுபட்டுப் புலத்தலின் அவளை நோக்கி யான் அஞ்சுவேனாயினேன்; அவ்வச்சத்தால் நுமது செலவை மறுப்பது துணிந்து செல்லற்க என்று உரைக்கலுற்றேன் என்பாள், செல்லாதீம் எனச் செப்பின் என்றாள்; அவ்வாறு உரைப் பேனாயின், காதலரைப் பிரிந்து செய்யும் ஆள்வினையின் மேதக்கது பிறிதில்லையென்பது யாவரும் அறிந்த உண்மையாகவும், அதனை நினைவிற் கொள்ளாது தலைமகனது ஆண்மை மாசுறுமாறு இவள் செலவு மறுக்கின்றாள் எனப் பிறர் இகழ்ந்துரைக்கும் வசை மொழி ஒருபால் தோன்றி என்னை வருத்துகின்றமையின், யான் பெரிதும் அஞசுவேனாயினேன் என்பாள், பல்லோர் நிறத்தெறி புன் சொலின் திறத்து அஞ்சுவல் என்றாள். “நாளும் நாளும் ஆள்வினை மழுங்க, இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்”1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. இவற்றை எண்ணுங் கால் செல்கென விடுப்பதே தக்கது எனத் துணிந்து கூறுகின்றா ளாகலின், சென்மின் சென்று வினைமுடிமின் என்றும், வினைமேற்கொண்டு செய்வார்க்கு வினையான் வினையாக்கிக் கொள்ளும் வேட்கையும, வினைமுடிவிற் பிறக்கும் இன்பமும் புகழும் பெறும் நினைவும் அவர் நெஞ்சின்கண் நின்று வினை யாண்மைக்குரிய நினைவு செயல்களையே நிலைபெறுவித்து மனையிடத்துப் பெறும் இன்பங்களை மறப்பித்தலின் சென்றாங்கு அவணீராதல் கூடாதென உரைப்பாளாய், சென்றாங்கு அவணீ ராதல் ஓம்புமின் என்றும் கூறினாள். இவ்வண்ணம் தோழி செலவுடம்பட்டு உரைப்பது கேட்டதும் தலைமகட்கு வியப்பும் வருத்தமும் தோன்றி மெய்ப்பட்டுக் காட்டின; தலைமகற்கு உவகை மிகுந்தது. அதனால் அவன் தலைமகளை இறுக முயங்கி இன்புறுவானாக, அவள் அவன் பிரிவு நினைந்து வருந்தி நடுங்கு வது கண்டு மருளவும், தோழி, பள்ளியிடத்தே நடுவியாமத்தின் கண் மார்பில் அணிந்துள்ள இழைகள் அழுந்தி வடுப்படுமாறு இன்ப அன்பால் புல்லிப் புடையிருந்தபோதும் பிரிந்ததாக நினைந்து வருந்தும் இயல்பினளாகலின், தலைவி எய்தும் வருத்தம் என்னை மருட்டுகின்ற தென்பாளாய், யாமத்து இழையணி யாகம் வடுக்கொள முயங்கி உழையீராகவும் பனிப்போள் என்றும், இப்பெற்றியாள்முன் வாடைப் பருவமும் வந்து நின்றமை யின் யான் இவளை ஆற்றுவிக்குமாறு என்னை என அஞ்சு கின்றேன் என்பாள், ஆடியல் இளமழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே என்றும் கூறினாள். இதனால் சென்மின் சென்று வினைமுடிமின் என்றது செலவுடன் பாடும், வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே என்றது அச்செலவு மறுப்பும் வெளிப்படக் காட்டினவாயினும்,சென்று ஆங்கு அவனிராதல் ஓம்புமின் என்றதையே வற்புறுத்தினமையின், தலைமகன் மருட்சி நீங்கித் தெளிவுற்றான். கண்ணிடைத் தோன்றிய வான்குழையைத் தண்ணெனத் தீண்டி அசைக்கும் இளமழையைக் கூறியது, இவள் வயிற்றிடைத் தோன்றியுள்ள கரு, நின் பிரி வில்லாத பேரன்பாலும் முயக்கத்தாலும் சிறக்கும் செவ்வி யெய்தியுள்ளதாகலின், சென்றாங்கு அவணீராதலை ஓம்புமின் என்று பொருள்தந்து முன்பு கூறியதை வற்புறுத்துவதால் தலைவன் செலவு மேற்கொள்வானாவது பயன் எனவுணர்க. கருமுதிர்ந்த விடத்துப் பிரிதல் தலைமகற்கு அறமன்மையின், கருத்தோன்றிய அண்மையில் முன்பனிப் பருவத்து நிகழும் இப்பிரிவைத் தோழி உடன்பட்டாள், பனிப் பருவத்துப் பிரிந்தோர் வேனிற்பருவத்து மீள்வரென்பது பற்றி. ஓதற் பிரிவு ஒழிய ஏனைப் பிரிவுகட்கு மிக்க எல்லை ஓராண்டு எனவும், அவை பெரும்பாலும் பத்துத் திங்கட்கு மேற்படுவதில்லை யெனவும் உணர்க. 230. ஆலங்குடி வங்கனார் ஆலங்குடி என்ற பெயர் தாங்கிய ஊர்கள் பல நம் தமிழ கத்தில் உண்டு; எனினும் தொன்மைச் சிறப்பமைந்தவை சோழ நாட்டில் இரண்டு உள்ளன; அவை தஞ்சை மாவட்டத்து மேலைப் பெரும் பள்ளத்துக் கல்வெட்டில் காணப்படும் ஆலங்குடியும், புதுக்கோட்டை நாட்டு ஆலங்குடியும் ஆகும். மேலைப்பெரும் பள்ளத்து ஆலங்குடி திருஞானசம்பந்தர் முதலியோர் காலத்தில் திருவிரும்பூளை என்று வழங்கிவந்திருக்கிறது. அதனால் அவர் கட்குப் பின்னர்த் தோன்றிய சோழர் காலத்தில் அது சுத்தமல்லி வளநாட்டு முடிச்சோணாட்டு ஆலங்குடியான சனநாத சதுர் வேதமங்கலம்1 ஆயிற்று. அதுவே, இராமநாதபுர மாவட்டத்து இரணியூர்க் கல்வெட்டிலும்2 குறிக்கப் படுகிறது. பிறிதொரு கல்வெட்டில் இந்த ஆலங்குடியே குலோத்துங்க சோழ வள நாட்டு வேளாநாட்டு ஆலங்குடி3 யென்று கூறப்படுகிறது. மற்றைய ஆலங்குடியை இராசராச வளநாட்டுப் புன்றிற் கூற்றத்து ஆலங்குடி என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இவை யிரண்டனுள்ளும் புன்றிற் கூற்றத்து ஆலங்குடியே ஆலங்குடி யென்ற பெயரளவில் தொன்மையுடையதாகத் தெரிதலால், இதுவே, நல்லிசைச் சான்றோரான வங்கனாருடைய ஆலங்குடி யென்று கொள்ளற்கு இடம் தருகிறது. இந்த ஆலங்குடிப் பகுதி சோழநாட்டுக்கும் பாண்டிநாட்டுக்கும் இடையில் இருத்தலும், வங்கனார் பாட்டுக்கள், சோழரது உறையூரின் அறச்சிறப்பையும் பாண்டியருடைய கொடைச் சிறப்பையும் கூறுதலும் மேலே குறித்த முடிவை வற்புறுத்துகின்றன. வங்கனார் மருதத் திணையை மிக்க இன்பமாகப் பாடும் இயல்பினர். இவர் பெயர் சில ஏடுகளில் வாலங்குடி வங்கனார் எனக் காணப்படுவதுமுண்டு, வங்கனார் என்ற இவரது இயற்பெயரை நோக்குமிடத்து, பண்டை நாளில் கடலிற் கலஞ் செலுத்தி வாணிகம் புரிந்தொழுகும் குடியில் இவர் தோன்றியிருத்தல் கூடும் என்ற கருத்துப் புலனாகிறது. பெருங் கடல் செல்லும் கலம் வங்கம் எனப்படும்; “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம், புலவுத் திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ” என்பது காண்க. வங்கனாருடைய முன்னோன் ஒருவன் இத்தகைய வங்கம் செலுத்தி வங்கன் என்ற சிறப்புப் பெற்றானாக, அவன் வழிவந்த இவர் அச்சிறப்புப் பெயரையே தமக்கு இயற் பெயராகக் கொண்டாராதல் வேண்டும். வணிகர் திரளாகிய சாத்தினைச் செலுத்தியவன் சாத்தன் எனவும், நாவாய் செலுத்தி யவன் நாய்கன் எனவும் பெயர் பெற்றமை பண்டை நாள் வழக்கு. மேலும் முன்னாளில் செல்வர்கட்கும் தலைமக்களுக்கும் மிகை மகளிரான பரத்தையர்க்கும் தொடர்பிருந்தமை நூல்களில் பெரிதும் குறிக்கப்படுகின்றது. அத்தொடர்பால் பரத்தையர்க்குப் பிறக்கும் மக்களுக்கும் அவரது தொடர்புற்றொழுகும் செல்வர் கட்கும் இடையே உள்ள முறையை வங்கனார் நமக்கு அறிவிக் கின்றார். தாயராகிய பரத்தையர் பெற்ற பொருட்கு அவர் களுடைய மக்கள், உரிமை கொண்டிருந்தனரே யன்றித் தந்தைய ராகிய செல்வரது செல்வத்துக்கு உரிமை கொண்டிலர்; இதனைத் தோழிகூற்றாகப் “பரத்தையர் புன்மனத்து உண்மையோ அரிது; அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்போடு, எம்பா டாதல் அதனினும் அரிதே” என்று தலைவி கூற்றில் வைத்து விளக்குகின்றார். தலைமகன்பால் புறத்தொழுக்கம் உண்டாகவே, தலை மகட்குப் பொறாமையும் வருத்தமும் பொங்கித் தோன்றின. அவள் மனநிலையை யுணர்ந்த தலைமகன் தன் மனைக்குப் போந்தான்; மனைவியின் வெம்மை அவனை நெருங்கவிட வில்லை. அவன் தோழியை வாயில் வேண்டினான். அவள் தலைவியின் குறிப்பை யுணர்ந்து அவள்பக்கல் நின்று மறுக்க லுற்றாள். அக்காலை, அவள் தலைமகனை நோக்கி, “பொய்கை யில் உள்ள ஆம்பற் போதுகள், வைகறைப்போதில் கிழக்கே வானத்தில் தோன்றியொளிரும் வெள்ளிமீன் போல் மலர்ந்து தோன்றும். அப்பொய்கைகளையுடைய ஊரன் நீ; நீ தலைக் கொண் டொழுகும் பரத்தை எம்போல் நின்பால் முனிவுற மறுப்பாளல்லள். எம்மைத் துறந்து அவள்பாலே சென்று அவட்கே நினது அருளைச் செய்வாயாக; யாம் அவ்வப்போது நின்னைக் காணப்பெறின் அதுவே எமக்கு வெயில் வெம்மை மிக்க பெரு வறற் காலத்துத் தண்ணிய நீர் பெருகிப் பரந்தால் எத்துணைத் தண்மையும் இனிமையும் நல்குமோ அத்துணை இனிமை பயப்ப தாகும்” என்றாள். இக்கூற்றின்கண், தலைமகன்பால் உண்டான பரத்தமை பற்றிப் பரத்தைபால் முனிவின்மையும் தலைமகள்பால் அஃது உண்மையும் சுட்டி, அதனால் தலைமகட்குக் காட்சி யின்பத்தையும் பரத்தைக்கு எல்லா இன்பங்களையும் நல்கி முறைசெய்கின்றா யாகலின், “இனி, இவட்கு அவற்றை நல்குவதும் பரத்தையை அருளா தொழிவதும் முறையாகா” என முறைமை வழியாக வாயில்மறுக்கும் தோழியின் மதிநுட்பம் கண்டு வியந்த ஆசிரியர் வங்கனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். 1வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக்கணக் கொக்கின் அன்ன கூம்புமுகைக் கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் கயற்கணங் கலித்த பொய்கை யூர முனிவில் பரத்தையை எற்றுறந் தருளாய் நனிபுலம் பலைத்த2 காலை வேனில் 3பெருவறங் கூர்ந்த செறுவின் தண்ணென மலிபுனல் 4பரத்தந் தாங்கும் இனிதே தெய்யநிற் காணுங் காலே. இது தோழி வாயில் மறுத்தது. உரை : வயப்பிடிச் செவியின் அன்ன-வேட்கை பெருகி வருந்தும் பிடியானையின் செவியைப் போன்ற; பாசடை - பசிய இலையை யும்; கயக்கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை - குளங்களில் கூட்டமாக வாழும் கொக்குகளைப் போலக் கூம்பிய அரும்பு களையும்; கணைக்கால் ஆம்பல் - திரண்ட நாளத்தையு முடைய ஆம்பலின்; அமிழ்து நாறு தண் போது - தேன் மணம் கமழும் குளிர்ந்த பூக்கள்; குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் - கிழக்கில் வானத்தே தோன்றும் வெள்ளி யாகிய விண்மீன்போல இருள் கெடுமாறு விரிந்து ஒளிரும்; கயற்கணம் கலித்த பொய்கை யூர - கயல்மீன் கூட்டம் பெருகி யுள்ள பொய்கையையுடைய ஊரனே; முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய் - நின்பால் உளதாய பரத்தைமை பற்றி வெறுத்தலில்லாத பரத்தையை எம்மைத் துறந்து சென்று அருள்வாயாக; புலம்பு நனி அலைத்தகாலை - எம்பால் தனிமை நின்று மிகவும் வருத்தும் போழ்தில்; வேனில் பெரு வறம் கூர்ந்த செறுவில் - வேனில் வெம்மையால் பெரிதும் நீர்ப்பசையின்றி வறண்ட வயல்களில்; தண்ணென மலிபுனல் பரத்தந் தாங்கும் - தண்ணெனக் குளிருமாறு புனல் பெருகிப் பாய்ந்து பரந்தாற் போல; நிற்காணுங்கால் இனிது - நின்னைப் பார்க்கும்போது எமக்கு இனிதாகும் காண் எ.று. ஊர, முனிவில் பரத்தையை எற்றுறந்து அருளாய்; புலம்பு நனி அலைத்த காலை நிற் காணுங்கால் மலிபுனல் பரத்தந்தாங்கு எமக்கு இனிதாம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பாசடையும் முகையும் கணைக்காலுமுடைய ஆம்பல் என இயையும். வயா, வேட்கைமிகுதி; இது வயவெனநின்றது. “கடுஞ்சூல் வயப்பிடி1” எனப் பிறரும் கூறுதல் காண்க. ஆம்பல் தாமரை முதலியவற்றின் இலைகட்கு யானைகளின் செவியை உவமிப்பது பண்டையோர் மரபு; “களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கி2”, என்றும், “களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க3” என்றும் வருவன கண்டு கொள்க. கொக்கின் கூம்புநிலை போறலின், ஆம்பல் முகையைக் கொக்கின் அன்ன கூம்புமுகை என்றார்; பிறரும், “கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்4” என்றல் காண்க. கயம், குளம், கணம், கூட்டம், ஆம்பல் மலரின்கண் எழும் தேமணம் அமிழ்து போலும் என்றாற் போல நெய்தலும் அமிழ்து மணக்கு மென்ற கருத்துத் தோன்ற, “நெய்தல், கமழிதழ் நாற்றம் அமிழ் தென நசைஇ1” என்பது காண்க. குணக்கு, கிழக்கு. வெள்ளி விடியற்காலத்தே எழுந்து கிழக்கில் விளங்குமென்பதை, “வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியற் பகடுபல வாழ்த்தித், தன்கடைத் தோன்றிற்று மிலனே2” என்றும், “குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே3” என்றும் சான்றோர் உரைப்பர். பன்மீன் நாப்பண் வெள்ளிமீன் தோன்றுதல் குறித்தற்குக் கயற் கணம் கலித்த பொய்கை யென்றார். “ஒன்றித் தோன்றும் தோழி மேன4” என்பதனால் என் துறந்து என்றார். புலம்பு நனி அலைத்த காலை யென மாறுக. நீர்ப்பசை சிறிதுமின்றிப் புலர்ந்து வெடிப் புண்ட வயல் என்றற்குப் பெருவறம் கூர்ந்த செறு எனப்பட்டது. மலிபுனல், நீர்ப்பெருக்கு, பரத்தரல், பரவுதல். “பாலெனப் பரத்தரும் நிலவின் மாலை5” என வருதல் காண்க. பரத்தந் தாங்கும், உம்மை இசைநிறை; ஆக்கமுமாம். தெய்ய, அசை நிலை. தலைவனது பரத்தைமை யொழுக்கம் பொறாது வெய்துற்றி ருக்கும் தலைமகளின் குறிப்பறிந்து மொழிகின் றாளாகலின், தோழி, தலைவிபால் தோன்றிய வெம்மையைக் குறிப்பாய் உணர்த்துவாள், நீ போந்தவழி விரைந்து வாயில் நேரும் அன்புடை யளாய பரத்தைபாலே செல்க என்றற்கு முனிவில் பரத்தையை அருளாய் என்றும், அதனால் நீ எம்மைத் துறந்து சேறலை முனிவேமல்லேம் என்பது தோன்ற, எற்றுறந்து என்றும், துறந்த விடத்து எய்தும் தனிமை வருத்துமேயெனின், அதனை ஆற்றி யிருப்போம்; அதுமிக்கு வருத்துங்கால் நின்னைக் காணப் பெறுதல் அமையும் என்பாள், புலம்புநனி அலைத்த காலை என்றும், நிற் காணுங்கால் இனிதே தெய்ய என்றும் கூறினாள். நின் காட்சியொன்றே இனிதாம் என்றற்கு ஏதுக் கூறுவாளாய், நின்புலம்பு நனி யலைத்த காலை யாம் வேனில் பெருவறங் கூர்ந்த செறுவொப்பேம் என்றும், அதன்கண் தண்ணெனப் பரந்து பாயும் மலிபுனல் போல்வது நின்காட்சி என்றும் கூறினாள். காட்சி யின்பமும் அதன்கண் தம்பால் உள்ள விழைவும் புலப்பட வேனிற் பெருவறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலிபுனல் பரத்தந்தாங்கு என்று கூறினாள். ‘துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும், இனிதே காணுநர்க் காண்புழி இருத்தல்1’ என்ப வாகலின், இனிதே தெய்ய நிற் காணுங்காலே என்றாள். தலைமகன் வரவை மகளிர் நீர்ப் பெருக்குப் போலக் கருதி இன்புறுபவாகலின் மலிபுனலை எடுத்துரைத்தாள்; “காவிரி மலிர்நிரை யன்ன நின்மார்பு2” என்று சான்றோர் உரைப்பது காண்க. ஆம்பற்போது வெள்ளிமீன் போல இருள்கெட விரியும் என்று தோழி கூறியது,குலமகளிர் போல எல்லா இன்பங்களையும் பெறும் பரத்தையை யுடையனாவாய் என்பதை உள்ளுறுத்து நின்றது. வெள்ளியின் இருள்கெட விரியும் என்ற விடத்து இன்னுருபை ஏதுப் பொருட்டாக்கி, வெள்ளிமீன் நல்கும் ஒளி யினால் ஆம்பல் இருள் கெட விரியும் என்றுகொண்டு, நின் பரத்தைக்கு ஓரொருகால் நீ செய்யும் அருட்கு அவள் மகிழ்வ தல்லது முனிதல் இலளாதலின், எற்றுறந்து அவளை அருள்க என்றலும் ஒன்று. இதனால் தோழி வாயில் மறுத்தல் பயனாம். 231. இளநாகனார் களவின்கண் தம்பால் உளதாகிய காதலை வளர்த்து வரும் தலைமக்கள் இருவருள், தலைவன் ஒருகால் தலைவியுறையும் பெருமனையின் சிறைப்புறமாக வந்தான். தலைமகட்குத் தலை வனையின்றி இயற்கை நல்கும் எவ்வகைக் காட்சியும் இன்ப மாகத் தோன்றவில்லை. அவனது நினைவே அவளுடைய உள்ள முழுதும் நிறைந்து நின்றமையின், அவட்குக் கையறவும் கவலையுமே பெருகின; அதனால். அவள் விளையாட்டிலோ வேறு சொல்லா டிலிலோ விருப்பங் கொள்ளாளாயினள்; உண்டி சுருங்கினாள்; உறக்கமும் இழந்தாள். காதலனான தலைமகனோடு இடையற வின்றிக் கூடியிருத்தற்குக் களவொழுக்கம் இடந்தரவில்லை. செவ்வி வாய்த்தபோது வந்து காண்டலே தலைமகன் செயலாக இருந்தது. விரைய வரைந்து கொள்ளுதலன்றி இந்த நிலைமைக்கு வேறு வாயில் இல்லை என்பதைத் தோழி உணர்ந்தாள். தலை மகனைக் காணுங்கால் அவனது உள்ளம் வரைவை எண்ணுமாறு தக்க சொற்களால் தூண்டுதல் வேண்டுமென அவள் எண்ணி னாள். இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில் தலைமகன் சிறைப்புறமாக வந்து நின்றது அவட்குத் தெரிந்தது. தலை மகளோடு சொல்லாடுபவள் போல, அவனுக்குத் தன் கருத்தை யுணர்த்தக் கருதிய தோழி, தலைவியை நோக்கி, “தோழி, விசும்பிடைத் தோன்றும் மீன்கூட்டம் போல, நீனிறக் கடற் கரையில் சிறுவெண்காக்கைகள் ஆணும் பெண்ணும் பலவாய்க் கூடி இம்மாலைப்போதில் தமது புறம் நனையும் படி நீராடுகின்ற இனிய காட்சியமைந்த இத்துறை நினக்கு இன்பம் தருவதாக இல்லை. இதற்குக் காரணம் என்னையென நோக்கினேன்;6 இக்காக்கைகள் சேவலும் பெடையுமாய்க் காதலாற் பிணிப் புண்டு துறைக்கண் நீராடுவது, நாமும் காதலனொடு கூடி ஆடுவது நன்று என்ற நினைவை எழுப்பி வருத்துவதே” என்று துணிந்தேன். இப்பொழுதும் நாம் அவ்வாறே இன்பம் பெறாமைக்கு ஏது அவரது காதல் நம்மின் நீங்கிவிட்டதோ என்று எண்ணலாமோ எனின், அதுதானும் இல்லை. அவரும் வந்துள்ளார். காதல் நீங்காது நிலவுவதால் தான், இப்படி யெல்லாம் ஆர்வம் எழுந்து நம்மை அலைக்கின்றதுகாண்” என்றாள். சிறுவெண்காக்கைகள் பலவாய்க் கூடியிருந்து நீராடும் கடற்றுறை நல்கிய காட்சியின்பம் தலைமகட்குச் சிறவாமை பொருளாக, தலைமகனது உள்ளத்துக் காதல் நீங்கிற்றோ நீங்கிற் றன்றோ என்பன போலும் எண்ணங்கள் தலைமகள் நினைவில் எழுதற்கு இடமுண்மை காட்டி, விரைய வரைந்து கொள்ளுமாறு கடாவும் தோழியின் மதிநுட்பம் கண்ட இளநாகனார், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொழு மரபின்1 எழுமீன் போலப் பெருங்கடற் பரப்பின் இரும்புறம் தோயச் சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும் துறைபுலம் புடைத்தே தோழி பண்டும் உள்ளூர்க் குரீஇக் 1கருவுடைந் தன்ன பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னைக் கானலங் கொண்கன் 2காதல் 3தானம் மோடு நீங்கா மாறே இது, சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாயது. உரை : மையற விளங்கிய மணிநிற விசும்பில் - மேகங்கள் சிறிது மின்றி விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தின் கண்; கை தொழுமரபின் எழுமீன்போல - கண்டோர் கைகூப்பி வணங்கும் முறைமையினையுடைய சாலியென்னும் விண்மீன் கூட்டம் போல; பெருங் கடற்பரப்பின் - பெரிய கடற்பரப்பின் கண், இரும்புறம் தோய - தமது கரிய முதுகு நனையுமாறு; சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும் துறை - நீர்க்காக்கைகள் சேவலும் பெடையுமாகிய பலவும் கூடியிருந்து நீராடும் கடற்றுறை; புலம்புடைத்து - தனிமையுற்று நம்மை வருத்தா நின்றது; தோழி - ; பண்டும் - ; உள்ளூர்க் குரீஇ கருவுடைந் தன்ன - ஊருள் வாழும் ஊர்க்குருவியின் முட்டை உடைந்தாற் போலும்; பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னை - பெரிய அரும்பு விரிந்த கரிய அடியையுடைய புன்னைமரங்கள் நிற்கும்; கானலம் கொண்கன் - கானற் சோலையையுடைய தலைமகனது; காதல்தான் நம்மொடு நீங்காமாறு - காதல் தானும் நம்மினின்றும் நீங்காமையால் காண் எ.று. தோழி, துறை புலம்புடைத்தாதல், கொண்கன் காதல் தானும் நம்மொடு நீங்காமாறுகாண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. மை, முகில்கள். நீலவானத்தின் நிறமும் நீலமணியின் நிறமும் ஒன்றாதலின், மணிநிற விசும்பு என்றார். கற்புடைய மகளிரால் தொழப்படும் சிறைப்புடைமைபற்றிச் சாலி யென்னும் வடமீன் என்றற்குக் கைதொழுமரபின் எழுமீன் என்றார். எழுகின்ற மீன் என்னாது ஏழாகிய விண்மீன் என்று கோடலும் ஒன்று; இந்த வடமீன் தனித்துக் காணப்படாது ஏழாகிய மீன் கூட்டத்தோடே காணப்படுதலின் எழுமீன் எனப்பட்ட தென்றுமாம். இரும்புறம்: இருமை, கருமை. சிறு வெண்காக்கை, நீர்க்கோழி முதலியவற்றைப் போல நீர்நிலைகளில் மீன்பிடித் துண்டுவாழும் புள்ளினமாகும்; இதன் உடல்முற்றும் காக்கை போலக் கறுத்துக் கழுத்தின் கீழ்ப்புறமும் அடிவயிறும் வெளுத் திருப்பது பற்றிச் சிறுவெண் காக்கை எனப்படுகிறது. சேவலும் பெடையுமாய்ப் பலவாய்க் கூடியிருப்பது சிறுவெண்காக்கையின் இயல்பு. புலம்பு தனிமை. ஈண்டுத் தனிமை காரணமாகத் தோன்றும் வருத்தத்தின் மேற்று. ஊர்க்குரீஇ, ஊர்க்குருவி யென்றும் சிட்டுக்குருவி யென்றும் வழங்கும், ஊர்க்குள் மக்களுறையும் மனைகளின் இறைப்பில் கூடமைத்து வாழ்தல் இதன் இயல்பாதலின் உள்ளூர்க் குரீஇ எனப் பட்டது. “உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்1” என்று பிறரும் கூறுதல் காண்க. கரு, முட்டை. புன்னையின் மலர்ந்த பூ ஊர்க்குருவியின் முட்டை உடைந்தாற் போல்வதுபற்றி இவ்வாறு கூறினார். தான் என்ற விடத்து உம்மை விகாரத்தால் தொக்கது. களவின்கண் ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தே வந்தமை கண்ட தோழி அவன் செவியிற்படுமாறு குறியிடத்தே தலை மகளைக் கொண்டுய்ப்பவள், பண்டு தலைமகனைத் தலைப் பட்டுக் கூடி விளையாடிய கானல்துறை பொருளாகச் சொல்லாட லுற்று, மாசுமறுவற்ற நீலவானத்தில் நித்திலம் பதித்தாற் போல நீனிறக் கடனீர்ப்பரப்பில் சிறு வெண்காக்கைகளின் கூட்டம் இருந்து நல்கிய இனிய காட்சி தலைமகட்கு இன்பம் செய்யா மையை விதந்து, மையற விளங்கிய மணிநிற விசும்பில் கைதொழுமரபின் எழுமீன் போலப் பெருங்கடற் பரப்பின் இரும்புறம் தோயச் சிறுவெண்காக்கை பலவுடனாடும் துறை என்றாள். நீல நெடுங்கடற்பரப்பைக் கூறக் கருதலின், மையற விளங்கிய மணிநிற விசும்பு எனவும், கற்புடை மகளிரால் கைதொழுது பரவப்படும் சிறப்புடைய விண்மீனைக் கண்டு பயின்றவளாதலின் அதனையே எடுத்துக் கைதொழு மரபின் எழுமீன் எனவும் கூறினாள். ஆயமகளிர் புடைசூழச் சென்று பண்டு விளையாட்டயர்ந்த துறையாயினும் இப்போது அது செய்யாவாறு இற்செறிக்கப் பட்டதோடு, தலைமகனைத் தலைக் கூடல் அரிதாயினமையின், இப்போது ஆங்குச் சிறு வெண் காக்கைகள் கூட்டமாய் இருந்து நீராடுகின்றன என்பாள், இரும்புறம் தோயச் சிறு வெண்காக்கை பலவுட னாடும் என்றும், அது காணும் நமக்கு, யாமும் அவ்வாறு கூடி விளையாட கில்லேமாயினேம் என்ற நினைவு தோன்றி வருத்துதலின் துறை புலம்புடைத்தே என்றும், தலைமகளின் வருத்தமிகுதி தலை மகன் செவிப்படுமாறு தோழி என்றும் கூறினாள். பண்டெல்லாம் இவ்வாறு புலம்புடைத்தாகாத துறை, இப்போது அதனை உடையதாகி நமக்குத் துயர் நல்குதற்குக் காரணம், துறைக்கண் உள்ள புன்னைப் பொழில் தலைமகன் போந்து தனது இனிய காதலை நல்கிய இடம் என்பாள், பெரும் போதவிழ்ந்த கருந் தாட்புன்னைக் கானல் என்றும், அவனது இனிய கூட்டம் பெறாமல் நீங்கினேமாயினும், காதல் நீங்காது நெஞ்சின்கட் பெருகிய வண்ணம் இருக்கிறது என்பாள், கொண்கன் காதல் தானும் நீங்கா மாறே என்றும் கூறினாள். இதனாற் பயன், தலைமகன் விரைந்து வரைவு மேற்கொள்வானாவது. 232. முதுவெண் கண்ணனார் இவர் பெயர் அச்சுப்படியில் முறுவெங்கண்ணனார் எனவும், மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டில் முதுவெங் கண்ணனார் எனவும், தேவர் ஏட்டில் முதுவெண்கண்ணனார் எனவும் காணப்படுகிறது. வெண்கண்ணனாரென்ற சான்றோர் ஒருவர் அகநானூற்றில் உளராதலின் அவரின் வேறுபடுத்தற்கு முதுவெண் கண்ணனார் என இவர் குறிக்கப் பெறுகின்றனராதல் வேண்டும். நற்றிணை யுரைகாரரான திரு. நாராயணசாமி அய்யரவர்கள் இரு வரையும் ஒருவராகவே கருதுகின்றார். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில. களவொழுக்கம் பூண்ட தலைமக்கள் குறிஞ்சி நிலத்துத் தினைப்புனத்தும் அருவிப் புறத்தும் பகற்குறி கண்டு, அங்கே தமித்துக் கண்டு தமது உள்ளத்து முளைத்த காதற் பைங்கூழை வளர்த்துவந்தனர். அதன்கண் தலைமகனது காதல் தூயதாய் வளம் பெறுவது கண்ட தோழி, அதனைச் சிறப்பிப்பது கருதி, அதற் கொரு தடை தோற்றுவிப்பாளாய், அவனை இரவின்கண் வருமாறு உய்க்கின்றாள். இரவு வருதல் மிக்க ஆண்மையும் மேதக்க காதலன்பும் உடையார்க்கன்றி எளிதின் இயல்வதன்று. இருண்மிகுதியும், மழையும் காட்டாற்றுப் பெருக்கும், கொடு விலங்கு ஊர்க்காவல் முதலிய பிறவும், இரவுக் கூட்டத்துக்கு இடையீடாகும். இவற்றை முன்னுற எண்ணுவனாயின், தலை மகன் தெருண்டு வரைதலை மேற்கொள்வன் என்பது தோழியின் கருத்து. பகற்போதில் வந்து சேறல் பிறமகளிரால் அறியப்படின் அலர் தோன்றி வருத்தும் என்ற ஏதுவினைக் காட்டித் தோழி இரவு வருதல் நன்றெனத் தலைமகன்பால் குறிப்பாய் உரைத்தாள். அதுகேட்டுத் தலைமகன் இரவுக்குறிக்குரிய இடமும் வாய்ப்பும் எதிர்நோக்கி எண்ணமிட்டானாக, அவன் தன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டான் என்று துணிந்து, “நாடனே, எம்மூர் இக்கல் செறிந்த குன்றருகே உளது. அதன் முன்றில் வேங்கைமரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் இயல்பிற்று. அங்கே எம்மனைக்குப் போந்து இன்றிரவு தங்கிச் செல்குவையாயின் எங்கட்கு அது மிக்க சிறப்பாகும்; எமக்கு விருந்தாய் நல்குக” என்று கூறினாள். இவ்வாறு, பகல்வரும் தலைமகனை இரவின்கண் விருந்தாய் வருமாறு உரைக்கும் தோழி, உள்ளுறையால், இரவுக் குறிக்கண் கூடியொழுகும் ஒழுக்கத்தையும் மறுத்து, இனி வரைந்துகோடலே செயல்பாலதென அவன் தெருளுமாறு உரைக்கும் திறம் கண்ட முதுவெண் கண்ணனார், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் குளவித் தண்கயங் குழையத் தீண்டிச் சோலை1 வாழை முணைஇ அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலமரச்2 சாரற் பலவின்3 தீம்பழம் மிசையும் மாமலை நாட யாமே4 நல்கென வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை வீயுக விரிந்த முன்றில் கல்கெழு பாக்கத் தல்கினை சென்மே.5 இது, பகல் வருவானை இரவு வாவெனத் தோழி சொல்லியது. உரை : சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் - சிறிய கண் களையும் பெரிய கையையுமுடைய யானையினம்; தண்கயம் குளவி குழையத் தீண்டி - தண்ணிய குளக்கரையில் நின்ற காட்டு மல்லிகை குழையுமாறு மெய்யுறத் திமிரி; சோலை வாழை முணைஇ - மலைச்சோலையில் தழைத்திருக்கும் வாழையை விரும்பாது நீங்கி; அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலமர - அயலிடத்ததாகிய மூங்கில்வேலி சூழ்ந்த சிறு குடியிலுள்ளார் அஞ்சி அலமருமாறு; சாரற் பலவின் தீம்பழம் மிசையும் - சாரலிடத்தே பழுத்து நிற்கும் பலாவின் இனிய பழத்தையுண்ணும்; மாமலை நாட - பெரிய மலைநாடனே; நல்க என யாம் வேண்டுதும் - விருந்தோம்பும் சிறப்பை நல்குக என யாமே நின்னை வேண்டுகிற்பேம்; வாழிய - நீ நெடிது வாழ்க; எந்தை - எம் தந்தையது; வேங்கை வீ உக விரிந்த முன்றில் - வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் விரிந்த முன்றிலையுடைய; கல்கெழு பாக்கத்து அல்கினை சென்மே - மலையிடத்து எமது ஊரின்கண் இன்றிரவு தங்கிச் செல்வாயாக. எ.று. நாட, எந்தை கல்கெழுபாக்கத்து அல்கினை சென்மே; அச்சிறப்பை எமக்கு நல்குக என யாம் வேண்டுதும், வாழிய எனக் கூட்டி வினைமுடிவு செய்க. யானையின் உடற்பருமை நோக்கக் கண் இறப்பவும் சிறிதாய் இருத்தலின் சிறுகண் யானை எனப்பட்டது. ஈர்இனம், கரிய நிறமுடைய இனம் என்றுமாம். தண்கயத்துக் கரைக்கண் வளர்ந்திருத்தலின் தண்கயத்தைச் சிறப்பித்தார். “குளவி மொய்த்த அழுகற் சின்னீர்”1 என்று வருதல் காண்க. குளவியின் முற்றிய தழைகளையும் சருகுகளையும் யானை தன் கையால் உருவி யுதிர்த்தவழிப் புதுத்தளிர் விட்டுக் குழைகொண்டு விளங்குதல் பற்றிக் குழையத் தீண்டி என்றார். சோலையிடத்து வாழைக் கனியை வெறுப்ப வுண்டமை தோன்ற முணைஇ என்றார். “முணைவு முனிவாகும்”2 என்பது தொல் காப்பியம். சோலை வாழையின் கனி எப்போதும் கிடைக்கும் எளிமை பற்றி அதனை வெறுத்து என்றுமாம். வேரல், புதர் மூங்கில்; நெருங்க வளர்ந்து முண்மிடைந்து வேலியிட்டது போலச் சூழ்ந்து நிற்றலின் வேரல் வேலிச் சிறுகுடி என்றார்; யானைகள் வாழும் காடுகளின் இடையேயுள்ள சீறூர்களில், இவ்வேரல் வேலியை இன்றும் காணலாம். சாரற்குப் போந்த யானை ஊர்க்குட் போதருமென அஞ்சிச் சிறுகுடியினர் ஆர வாரிப்ப ராகலின், சிறுகுடி யலமர் எனல் வேண்டிற்று. அதனை மதியாது யானை பலவின் பழமுண்டலின் சாரற் பலவின் தீம்பழம் மிசையும் என்றார். நல்க: வியங்கோள், நல்க என என்பது நல்கென என நின்றது. எந்தை என்பதைத் தலைமகற்கேற்றி விளியாக்கலும் ஒன்று. குழைதல் இப்பொருட்டாதல், “நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய”1 என்பதனாலு மறிக. களவுநெறியில், பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைமகன், பகற்போது முற்றும் தலைமகளோடு சுனைப்பூக்குற்றும் பூமாலை தொடுத்தும், புனத்தே படிகின்ற கிளிகளை ஓப்பியும், அவட்கு உதவி செய்து கழித்தான்; மாலைப்போது நெருங்கவும் தன் நல்லகம் போதற் குரியனாய்த் தன் பிரிவுக்கருத்தைத் தலைமகட் குரைத்து விடை பெற முயன்றான். அவளுடைய காதன்மிகுதியை அறிந்திருந்தமையின், விடை நல்குமாறு வேண்டின் தலைமகள் ஆற்றாது வருந்துவள் என்பதை ஓர்ந்து, போகவும் மாட்டாது இருந்தொழியவும் இயலாது, ஊசலாடும் உள்ளத்தால் அவன் உலமருவதை உணர்ந்தாள் தோழி; அதனை அவள் பையத் தலைமகட் குணர்த்தலும் அவள் பெரிதும் வருந்தலானாள்; “நாடன், தோழி, சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும், தினைப்புன மருங்கின் படுகிளி ஓம்பியும், காலை வந்து மாலைப் போதின், நல்லகம் நயந்து தான் உயங்கிச், செல்லவு மாகாது அல்கி யோனே”2 எனத் தோழி தலைமகட்கு உரைப்பது காண்க. அதனால் அவனை இரவின்கண் வருமாறு கூறலுற்ற தோழி, வெளிப்பட மொழிதல் மகளிர் மாண்புக்கு ஒவ்வாமையின், மாமலை நாட யாமே நல்கென வேண்டுதும் என்றும், நல்குதலாவது எந்தை வேங்கை வீயுக விரிந்த முன்றில் கல் கெழுபாக்கத்து அல்கினை சேறல் என்றும், அதனால் தவறு யாதும் இன்று; அஃது எமக்கு விருந்தோம்பலாகிய சிறப்பை நல்கியவாறாம் என்றற்கு அல்கினை சென்மே என்றும், யாமே நல்கென வேண்டுதும் என்றும், இச்சிறப்பை அளித்தலால் நீ நெடிது வாழ்வாய் என்றற்கு வாழிய என்றும் தோழி கூறினாள். மணவினை முடித்து மனையறம் பூண்டார் மேற்கொண்டு ஆற்றற்குரிய விருந்தோம்பும் அறத்தைத் தலைவி மணமாகா முன் மேற்கொள்வது தவறு என உலகு கருதும் என்பது பற்றியே “தங்கினி ராயின் தவறோ”1 எனவும், “எல்லிச் செல்லாது, சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ”2 எனவும் “இன்றிவண், சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப”3 எனவும் கூறுவதாகச் சான்றோர் உரைப்பது காண்க. இரவுக்குறி நயவாது வரைவு கடாவுவதே தோழி கருத்தாயின், “எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன, செல்லல் ஐய உது எம் மூரே”4 என்றாற் போல்வன கூறுவள் என அறிக. யானையினம் தண்கயத்தின் கரைக்கண் நின்ற குளவி குழையுமாறு தீண்டிச் சோலை வாழையை முணைஇச் சிறுகுடி அலமரச் சாரற் பலவின் தீம்பழம் மிசையும் என்றது, புனத்தே யாம் நலம் கதிர்க்குமாறு எம்மைக் கூடிப் பின் பகற் குறியை விரும்பாமல் ஊரவர் அலர் கூற இரவிற் கூட்டம் பெற விழைகின்றாய் என்றாளென உள்ளுறை கொள்க. ஊரவர் அலர் கூற என்றது, அலரச்சம் கூறி வரைவுகடாயதென அறிக. தலை மகன் தெருண்டு வரைவு மேற்கொள்வானாவது பயன். 233. அஞ்சில் ஆந்தையார் அஞ்சில் என்பது ஓர் ஊர். இந்த அஞ்சிலூர் இடைக் காலத்தில் அஞ்சூர் என மருவிவிட்டது; இதனைத் திருக்கழுக் குன்றத்துக் கல்வெட்டுக்கள், சயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக் கோட்டத்துக் களத்தூர் நாட்டு அஞ்சூர்5 என்று குறிக்கின்றன. பண்டை நாளைப் பொதும்பில் பொதும்பு எனவும், விளம்பில் விளம்பி எனவும் அழும்பில் அம்புக் கோவில் எனவும் மருவியது காண்போர்க்கு அஞ்சில் அஞ்சியென மருவி அஞ்சூரா கியது வியப்பு நல்காது. ஆந்தை யென்பது இவரது இயற்பெயர். அஞ்சில் என்பதற்கு மாறாக அம்பில் என்றும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது. அஞ்சி லத்தியார் என்றும் ஒரு பாட வேறுபாடு புதுப்பட்டியேட்டில் காணப்படுகிறது. இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரு பாட்டு உளது. களவின்கண் பகற்குறி இரவுக்குறிகளின் ஒழுகிய காதல ரிடையே இடையீடும் இற்செறிப்பும் அலரச்சமும் தோன்றத் தோழி தலைமகனை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரைவுகடாவினாள். அவனோ அவள் கூற்றுக்களைத் தெருளாது, நெடுங்காலம் களவே விரும்பியொழுகலானான். அதனால் தலைமகட்கு ஆற்றாமை பெருகிற்று. அவனைக் காணும்போ தெல்லாம், தனது ஆற்றாமையைப் புலப்படுத்தாது, அவள் அவன்பால் தன் உள்ளத்தே மிக்கு நின்ற காதலன்பையே புலப் படுத்தினாள். அவன் பிரிந்தவழித் தலைமகள் எய்திய ஆற்றாமையும் மெலிவும் தோழி உள்ளத்தைப் பெரிதும் அலைத்தன. ஒருநாள். இருள் மாலை நெருங்கும் செவ்வியில், தலைமகன் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நின்றான். அதனைத் தோழி அறிந்துகொண்டு தலைமகளை அவ்விடத்தே கொண்டுய்த்து, அவன் கேட்குமாறு சொல்லாடலுற்றாள். அக்காலையில், தலைமகள் தனது காதலின் பெருமையை எடுத்து மொழிந்தாள். அது கேட்ட தோழி, “இனித் தலைமகனை எதிர்ப்படுவையாயின், நின் காதலன்பைப் புலப்படுத்தாதொழிவாயாக; அஃது ஒன்று தான் நின் அன்பை அவற்குப் புலப்டுத்து வரைவு மேற்கொள்ளச் செய்தற்கு ஏற்ற செயல்வகையாகும். வாளா ஒன்று கூறுகிறேன், கேள் : அவன் எதிரே நின் நெஞ்சத்தில் முற்பட்டு எழும் அன்புடைக் காதலை அவற்குத் தெரியா வகையில் மறைத்துக்கொண்டு, காதலன் ஆன்றோர் சென்ற நெறியின்கண் வழுவாமல் ஒழுகும் சான்றோன்தான் என்பதை இனிது சொல்லாடி நன்கு தெரிந்து கொள்க; இனி வெளிப்பட அன்பு செய்யும் நிலை கழிந்து போயிற்று” என்றாள். காதல் மிகுதியால் வரைவுகடாவியவழி வரைந்து கோடல் சான்றோர் சென்னெறியாகவும், அதனை மேற்கொள்ளாமையை வன்மொழியாற் காட்டித் தலைமகனை வரைதற்குத் தூண்டும் தோழியின் கருத்து நுணுக்கம் இச்சொற்களால் புலப்படக் கண்ட ஆந்தையார் இவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். கல்லாக் கடுவன் நடுங்க முள்ளெயிற்று மடமா மந்தி மாணா வன்பறழ் கோடுயர் அடுக்கத் தாடுமழை1 ஒளிக்கும் பெருங்கல் நாடனை அருளினை யாயின் இனியன2 கொள்ளலை மன்னே கொன்னொன்று கூறுவன் வாழி தோழி முன்னுற நாருடை நெஞ்சத் தீரம்3 போற்றி ஆன்றோர் சென்னெறி4 வழாஅச் சான்றோ னாதல்நற் கறிந்தனை தெரிமே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக இவள் ஆற்றாள் என்பதுணர்ந்து 5சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை : கல்லாக் கடுவன் நடுங்க - வேறு தொழிலைக்கல்லாத ஆண் குரங்கு அஞ்சி நடுங்குமாறு; முள்ளெயிற்று மட மாமந்தி - முட் போலும் கூரிய பற்களையும் இளமையையுமுடைய பெரிய மந்தி; மாணா வன்பறழ் - வளர்ச்சி நிரம்பாத தன் வலிய குட்டியோடு சென்று; கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும் - உச்சியுயர்ந்த மலைப்பக்கத்தே இயங்கும் மழை முகிலின் இடையே மறையும்; பெருங்கல் நாடனை அருளினை யாயின் - பெரிய மலைநாடனாகிய தலைமகன்பால் பேரன் புடையை யாயின்; இனி அன கொள்ளலை - இனி அவ் வன்பைப் புலப்படுத்தும் செயல்களை மேற்கொள்ளா தொழிக; மன் - அவ் வன்புக்குரிய நிலைமை கழிந்தொழிந்தது; தோழி -; வாழி - ; கொன் ஒன்றுகூறுவல் - வெறிதே ஒன்று கூறுகின்றேன், கேள்: முன்னுற - தலைமகன் முன்னே நீ உள்ளபோது; நாருடை நெஞ்சத்து ஈரம்போற்றி - அன்புடைய நின் நெஞ்சத்து மிக்கெழும் காதலை வெளிப்படாதவாறு மறைத்து; ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெரிமே - ஆன்றோர் சென்ற நெறியினின்றும் வழுவுதல் இல்லாத சால்புடையோன் என்பதை இனிது சொல்லாடி நன்கு தேர்ந்து தெளிவாயாக. எ.று. தோழி, வாழி; கொன்னொன்று கூறுவன் கேள் : நாடனை அருளினையாயின் இனி அன கொள்ளலைமன்; முன்னுற, ஈரம் போற்றி, ஆன்றோர் சென்னெறி வழாஅச் சான்றோனாதல் சொல்லாடி நற்கு அறிந்தனை தெரிமே; அன்புக்குரிய நிலைமை இனிக் கழிந்ததுகாண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தனக் குரிய தொழில் கல்லாது இளமை மிக்குடைய கடுவனைக் கல்லாக் கடுவன் என்றார். மடம், இளமை. வளர்ச்சி முற்றாத குட்டி மாணா வன்பறழ் எனப்பட்டது. விடாப்பிடியுடைமையால் அது வன்பறழ் எனப்படுகிறது. மழைமுகில் படிந்த விடத்து மலையின் கோடு மறைந்து விடவே, ஆண்டுப் பறழின் பின்னே தொடர்ந்த மந்தியும் அதனுடன் மழைமுகிலில் மறையக் கண்ட கடுவன், காதல் மிகுதியால் மந்தியைக் காணாது வருந்தும் திறத்தைக் கல்லாக் கடுவன் நடுங்க என்றார். அருளுதல், ஈண்டு மிக்க அன்பு செய்தொழுகல். அன, அன்னவை; அவையாவன, தலைமகன் குறித்த வண்ணம் குறியிடம் போந்து கூடல் முதலாயின. கொன் பயனின்மை நார், அன்பு. போற்றல், “போற்றின் அரியவை போற்றல்”1 என்றாற்போல விலக்குதற் பொருட்டு. ஆன்றோர் நற்குணங்களால் அமைந்தவர். சொல்லையும், செயலையும் தெரிந்து தெளிக என்றதற்கு நற்கு அறிந்தனை தெரிமே என்றார். தலைமகன் தெருண்டு வரைவானாவது பயன். வரைதலை மேற்கொள்ளாது களவையே விரும்பி நீட்டித் தொழுகினானாயினும், தலைமகனைத் தான் இயற்பழித்த வழி இயற்பட மொழிந்து அவன்பால் அன்பு சிறந்தொழுகுதல் பற்றித் தோழி, தலைமகளை நோக்கிப் பெருங்கல்நாடனை அருளினை யாயின் என்றும், அது செய்யினும் அவன் வரைதற்கு முயலாமை தோன்ற, இனி அனகொள்ளலை யென்றும் கூறினாள். அது கேட்ட தலைமகள், அவன் இல்வழி ஒருவாறு மனத்தே ஆற்றாமை யால் வன்கண்மை கொள்ளினும், அவனைக் கண்ணுற்றவழி ஓங்குநீர்க் கிட்ட உப்புச்சிறை போல அவ்வன்மை நீங்கி யொழிவது கூறுவாள் போலத் தோழியை நோக்கலும், தோழி அதற்கோர் எளிய வழி கூறுவேன், கேட்பாயாக என்பாள், கொன் ஒன்று கூறுவன் என்றும், அதனைச் செய்தலால் யாதொரு தீதும் உண்டாகாது என்றற்கு வாழி யென்றும் கூறினாள். இவ்வுரை யாட்டால் ஆற்றாமை மிக்குத் தலைவி கண்கலுழ்ந்து வருந்தினா ளாகவும், தோழி, உள்ளுறையால் அவளைப் பையத்தேற்றி அவனை நேரிற்காணுங்கால் மிக்குற்றெழும் காதலன்பு புறத்தே தோன்றாவாறு மறைத்துக் கொள்க என்பாள் நாருடை நெஞ்சத்து ஈரம் போற்றி என்றாள். “உறா அதவர் போற் சொலினும் செறாஅர்சொல். ஒல்லை யுணரப் படும்1” ஆதலால், போற்றல் அமையும் என்பாள் போற்றி என்றும், அவனோடு தக்காங்கு உரையாடி அவனது சான்றாண்மையைத் தெரிந்து கோடல் வேண்டும் என்பான் ஆன்றோர் சென்னெறி வழாஅச் சான்றோனாதல் அறிந்தனை தெரிமே: என்றும், இத்துணை முயன்றும் அவன் தெருளாமலும் களவையே நீட்டித்தும் ஒழுகுதல் சான்றோர் சென்னெறியாகாமையின் நற்கு அறிந்தனை தெரிமே என்றும் தோழி கூறினாள். தெரிமே, உம்மீற்று முன்னிலை வினை ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. கடுவன் நடுக்கம் காண மந்தியும் பறழும் மழை முகிலில் ஒளிக்கும் நாடனாதலால், தலைமகன் நடுக்கம் கண்டு, அவனது காதன்மை தெளிதற்கு அறக்கழிவுடைய இச் செயற்கண் நலம் மறைவது தீதன்று என உள்ளுறையால் தோழி தலைவியைத் தெருட்டுமாறு கொள்க. 234. ........................................... புதுப்பட்டி யேடு 233. ஆம் பாட்டின் இறுதியில் “இதனை அடுத்துவரும் பாட்டு இறந்தது” என்று கூறுகிறது. தேவர் ஏடு, “இப்பாட்டு இறந்தது” என்று குறிக்கிறது. 235. வெள்ளிவீதியார் இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டிலும் இல்லை. தேவர் ஏட்டில் இவர் பெயர் வெள்ளி விடியலார் என்று காணப்படுகிறது. வாழ்க்கைக்குரிய துணையைத் தேடிக் கோடற்கு வாயி லாகிய களவின்கண் ஒழுகும் காதலர்களிடையே, வரைவுக்குரிய முயற்சிகள் நிகழத் தலைப்பட்டன. மக்களுடைய பொருளும் வினையும் அவரைப் பெற்றோர்க்குச் செல்லுமேயன்றிப் பெற்றோ ருடையன அவர் பெற்ற மக்களைச் சேர்தல் பண்டைத் தமிழ் மரபன்று. அதுபற்றியே மக்களைப் பெற்றோர்க் குரிய பொருள் எனப் பழந்தமிழர் வழங்கினர். திருவள்ளுவனாரும் “தம் பொருள் என்ப தம்மக்கள் அவர் பொருள், தந்தம் வினையான் வரும்” என்று எடுத்தோதினார். இம்முறைமையால் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்துகொள்ளும் காதலன், அவளை வரைந்து கோடற்கு வேண்டும் பொருளைத் தானே தேடவேண்டியவ னானான்; அதுகுறித்து வரைவிடைவைத்துக் காதலியைப் பிரிந்தேகுவதும் அவற்கு இயல்பாயிற்று. இம்முயற்சிக்கண் வரைவு உடனே நிகழாது நீட்டித்தலும் உண்டு. ஒருகால் தலைமகன் வரைபொருள் பற்றிச் செய்த முயற்சியால் வரைவு நீட்டிக்கவே, தலைமகட்கு அவனது பிரிவாற்றாமை பெரிதாயிற்று. அதனால் அவள் மிக்க வாட்டமும் வருத்தமும் எய்தியபோது, தலைமகன் வரைபொருள் முற்றிச் சான்றோர் துணையாக மகட்கொடை வேண்டி வருதலைத் தலைவியின் பெற்றோர்க்குத் தெரிவித்தான். அவர்களும் அவனை யும் உடன்வந்த சான்றோரையும் வரவேற்று விருந்தோம்பி மகட்கொடை நேரச் சமைந்திருந்தனர். மதிமாண்புடைய தோழி அந்நிகழ்ச்சிகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டாள்; அவட்கு உவகை மிகுந்தது; ஓடிவந்து தலைமகளைக் கண்டாள். அவளோ, நிகழ்வதறியாமையால் கலக்கமும் கவலையும் மேற் கொண்டு கையற்றிருந்தாள். உடனே, தோழி மனம் வருந்தி உண்மையறிய விழைதலும், தலைமகள், “அன்று நம் காதலன் பகற்குறியிடத்தே நம்மைக் கண்டு விரைவில் வரைந்து கொள்வ தாகக் கூறி நீங்கினான்; இன்றுகாறும் வந்திலன்; யான் என் செய்வேன்?” எனக் கண்ணீர் சொரிந்தாள். கல்லென்ற நகையுடன் தோழி, அவளுடைய தோள்களைப் பற்றி அசைத்து, “ஈது அறியாயோ? நம் காதலன் வரைபொருளும் சான்றோரும் உடன்வர இன்று வருகின்றான். பகற்குறி வந்து நம் கவின் சிதையப் பெயர்ந்து போயினா னெனினும், இன்று வரைவொடு வருகின் றான்; அவன் வரும் திறத்தை அங்கே தோன்றும் மணற்குன்றில் ஏறிக் கண்டு வரலாம். வருக” என்றாள். தோழியது இக்கூற்றின்கண், களவுக் காலத்து ஒழுக்கத்தின் கண், தலைவியின் கற்பும் பொற்பும் காத்து, வருத்தம் எய்திய விடத்து ஆற்றுவித்த கவலை அவளின் நீங்குவதும், தலைமகள் தான் காதலித்த காதலனையே வாழ்க்கைத் துணையாகப் பெறு வதும் பொருளாகப் பிறக்கும் உவகை மிகுதியை அடக்கி நெறிப்படுத்துரைக்கும் நலம் கண்ட வெள்ளி வீதியார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் 1அரவாய் முள்ளிலைத் தாழை போதவிழ்ந்து பொன்னேர் தாதின் புன்னையொடு கமழும் பல்பூங் கானல் பகற்குறி வந்துநம் மெய்கவின் சிதையப் 2பெயர்ந்தன னாயினும் குன்றின் தோன்றுங் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி தண்டார் அகலம் வண்டிமிர் பூதப் படுமணிக் கலிமா கடைஇ நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே. இது, வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது. உரை : உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் - பரந்து வருதலையுடைய அலைகளால் அலைக்கப்பட்ட சருச்சரை பொருந்திய பெரிய அடியையும்; அரவாய் முள்ளிலைத் தாழை போது அவிழ்ந்து - அரத்தின் வாய் போல முட்கள் பொருந்திய இலையையுடைய தாழையின் அரும்பு முற்றி மலர்ந்து; பொன்நேர் தாதின் புன்னையொடு கமழும் - பொன் போலும் தாது நிறைந்த புன்னையின் பூக்களொடு விரவி நறுமணம் கமழும்; பல்பூங்கானல் பகற்குறி வந்து - பலவேறு பூக்கள் மலர்ந்துள்ள கானற்சோலையிடத்து நாம் செய்த பகற்குறி யிடத்தே வந்து நம்மைக் கூடி; நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும் - நம் மேனி நிறம்கெடப் பிரிந்து சென்றானாயினும்; குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறி - மலை போல் தோன்றும் உயர்ந்த மணன்மேட்டின் மேலேறி நின்று; கண்டனம் வருகம் சென்மோ - கண்டு வருதற்கு அங்கே செல்வேமோ; தோழி - ; தண்தார் அகலம் வண்டு இமிர்பு ஊத - தண்ணிய மாலையணிந்த தன் மார்பின் கண் வண்டு மொய்த்து இசைக்க; படுமணிக் கலிமா கடைஇ - ஒலிக்கின்ற மணிகள் கட்டிய வளவிய குதிரையைச் செலுத்திக் கொண்டு; நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறு - கடனிலத் தலைமகனான நம் காதலன் வருகின்ற திறத்தை எ.று. தோழி, சேர்ப்பன் பகற்குறி வந்து, கவின் சிதையப் பெயர்ந் தனனாயினும், அகலம் வண்டு இமிர்பு ஊதக் கலிமா கடைஇ அவன் வரூஉம் ஆறு கண்டனம் வருகம் சென்மோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. உரவுத்திரை, பரந்து வருதலையுடைய அலைகள்; “உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை”1 எனப் பிறரும் வழங்குதல் காண்க. பிணர், சருச்சரை. தாழை, கைதை. இதன் இலை அரத்தின் வாய் போல் சிறு சிறு கூரிய முட்களையும் இலை நரம்பின் பின்புறத்தே மிகக் கூரிய முட்களையுமுடைமையால் அரவாய் முள்ளிலைத் தாழை என்றார். புன்னையின் தாது பொன்னிற முடைமையின் பொன் னேர் தாது எனப்பட்டது. “முள்ளுடை நெடுந்தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப், படப்பை நின்ற முடத்தாட் புன்னைப் பொன்னேர் நுண்டாது நோக்கி”2 எனப் பிறரும் கூறுதல் காண்க. கானற் சோலையின்கண் புன்னையும் ஞாழலும் தாழை யுமே யன்றி வேறு பல கொடிப் பூக்களும் செடிப் பூக்களும் பல்கியிருத்தலின் பல்பூங்கானல் எனச் சிறப்பிக்கப்பட்டது. பூச் செறிந்த கானற்கு மகளிர் சேறல் பிறரால் அயிரப் படாமையின் அது பகற்குறிக்கு ஒப்பதாயிற்று, “பல்பூங்காற் பகற்குறி மரீகிச் செல்வல் கொண்க”3எனச் சான்றோர் கூறுதல் ஈண்டு நோக்கத் தக்கது. கவின் ஈண்டு மாமை நிறத்தின் மேற்று. புதுப்பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையாதலின் வண்டு இமிர்பு ஊத என்றார். நெடுநீர், கடல். ஆறு வழியுமாம். வரைவு நீடுதலால் ஆற்றாளாய தலைமகள், வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் தன் பிரிவுணர்த்தி விடைபெற்றுச் சென்ற இடம் நெஞ்சின்கண் நின்றமையின் அதனைச் சுட்டி, பல்பூங் கானற் பகற்குறி வந்து என்று கூறிப் பகற்குறியிடத்தே தன்னைக் கூடியிருந்து நீங்கினமையின் தன் மேனி நிறம் வேறு பட்டு மெலிந்தமை காட்டித் தலைவி வருந்தினாளாக, அவள் கூற்றைக் கொண்டெடுத்து மொழியும் தோழி, நம் மெய்கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும் என்றும், இனி அவன் வரைவொடு வருதலால் அச்சிதைவு தானே நீங்கும்; அது பற்றிக் கவலற்க என்பாள் போல அவளை நோக்கிக் குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ என்றும், தன் காதல் மிகுதி புலப்படத் தோழி என்றும், குவவு மணல் ஏறிக் கண்டனம் வருகம் என்றவிடத்து அவாய்நிலையால் உணர நிற்கும் தலைமகன் வரவை நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறு என்றும் கூறினாள். மார்பில் மாலையணிந்து ஊரவர் காணக் குதிரையூர்ந்து வருதல் கூறியது தலைமகன் வரைவொடு வருதலை யுணர்த்தி நின்றது. வரைவெதிர் கொள்ளாது தமர் மறுப்பர் கொல்லோ எனத் தலைவியுள்ளத் தெழும் ஐயத்தை உள்ளுறை யால் போக்குதலின் தலைவன் தண்டா ரகலம் வண்டிமிர்பு ஊதப் படுமணிக் கலிமா கடைஇச் சேர்ப்பன் வரூஉம் திறத்தையே விதந்து கூறினாள். பொன்னேர் தாதின் புன்னையொடு தாழை போது அவிழ்ந்து கமழும் என்றது. வரைபொருளோடு போதரும் தலைமகற்குத் தமர் வரவெதிர்ந்து மகட்கொடை நேர்ந்து மகிழ்வர் என உள்ளுறுத்துரைத்தவாறு. தலைவி உவகை மிகுவது பயன். விளக்கம் : “நாற்றமும் தோற்றமும்”1 எனத் தொடங்கும் நூற்பாவின்கண், “ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்பட” என்றதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, “இது தலைவன் வரைவொடு வருகின்றமை காண்கம் வம்மோ” என்றது என்பர் நச்சினார்க்கினியர். 236. நம்பி குட்டுவனார் காதற்கேண்மையால் களவின்கண் பகலினும்இரவினும் செவ்விநோக்கிப் போந்து கூடியொழுகும் தலைமகன், அதனிடைப் பெறலாகும் இன்பத்தையே விரும்பி யிருக்கின்றான். வேட்கை பெருகி விம்மி நிற்கும் தலைமகட்கு இடையறவுபடாத இன்பக் கூட்டத்தில் விழைவு மிகுகிறது. அவனைக் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெருகித் தோன்றி அவள் நெஞ்சை வருத்து கின்றது. மேனி மெலிகின்றது. முகத்தில் இளமைப் பொலிவுக்குரிய கிளர்ச்சியும் விளக்கமும் மழுங்குகின்றன. அவள் ஆற்றாது வெதும்புதல் கண்டு, தோழியும் எத்துணையோ கூறி அவளை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்துகின்றாள். காதற் புதுநோய் அவள் கருத்தை யழிக்கின்றது. அந்நிலையில் தலைமகன் அவள் மனை யின் ஒரு சிறையில் வந்து நிற்கின்றான். அதனை இத்தோழி அறிந்துகொண்டு தலைவி நெஞ்சு நெகிழ்த்து வாய் திறந்து ஒரு சில கூறுமாறு தூண்டுகிறாள். தலைமகளும், தோழியை நோக்கி, ‘தோழி, என் மனநோயும் மிகுந்து கைகடந்து நிற்கிறது; மெய்யும் தீயினும் பெரிதும் வெய்துற்று வெதும்புகிறது; நம் கைவளை நெகிழ்ந்து நம்மை இவ்வின்னலில் மூழ்குவித்த காதலரது குன்றத்து நெடுவரையில் சுழன்று அதன் அகன்ற பாறையில் தோய்ந்து வரும் காற்று, பசந்து ஒளி குன்றியிருக்கும் என் மேனியிற் படுமாறு, நிரயம் போன்ற நெஞ்சினையுடைய நம் அன்னைக்கு, மன்ற இருக்கையினும் சிறிதுயர்ந்த நம் மனை முன்றிலில் இவளைக் கிடத்தின் இவள் நன்றாகுவள் என உரைக்க மாட்டாயா? அதனால் குற்றமொன்றும் உண்டா காதுகாண்’ என்று சொல்லு கின்றாள். இக்கூற்றின்கண், தலைவியின் ஆற்றாமையும் இற்செறிப்பும் தோன்றத் தலைமகனைக் குறிப்பால் வரைவு கடாவும் கருத்து நுட்பமாக அமைந்திருப்பது கண்ட நம்பி சூட்டுவனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். நோயும் கைம்மிகப் பெரிதே மெய்யும் மீயுமிழ் தெறலின் 1வெய்தே ஒய்யென 2மன்ற இருக்கையிற் சிறிதாங்3 குயரிய முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண் டுரைஇனி வாழி தோழி4 புரையின்று நுண்ணேர் எல்வளை நெகிழ்ந்தோன் குன்றத் தண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென வியலறை1 மூழ்கிய வளிஎன் 2பயலை ஆகம் தீண்டிய சிறிதே. இது, தலைமகன் சிறைப்புறத்தானாக வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உரை : நோயும் கைம் மிகப் பெரிது - காதல் நோயும் எனக்குக் கை கடந்து பெருகியுள்ளது; மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்து - என் மெய்யும் தீயுமிழும் வெம்மையினும் வெய்தாய் உளது; ஒய்யென - விரைவாக; மன்ற இருக்கையில் சிறிது ஆங்கு உயரிய முன்றில் கொளின் - மனை முன்றிலின் எதிரேயுள்ள மன்று வெளியினும் சிறிது உயர்ந்த முன்றிலின் புறந் திண்ணையில் என்னை இருக்கவிடின்; நந்துவள் பெரிது என - இவள் மிகுதியும் நலம் பெறுவள் என்று; நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு இனி உரை - நிரயக்காவலர் போல என்னைச் செறித்து வருத்தும் அன்னைபாற் சென்று இப்பொழுதே அவட்கு உரைப்பாயாக; தோழி - ; வாழி - ; புரையின்று - அவ்வாறு உரைப்பதால் குற்றம் ஒன்றும் இல்லை, காண்; நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் - நுண்ணிய தொழிற் பாடு அமைந்த என் விளக்கமிக்க வளைகள் கழன்றோடுமாறு மெலிவித்த காதலனுடைய; குன்றத்து அண்ணல் நெடுவரை ஆடி - மலையின் பெரிய நெடிய உச்சியிற் படிந்து; தண்ணென வியல் அறை மூழ்கிய வளி - தண்ணிதாக அகன்ற பாறையிற் பரவித் தோய்ந்து வரும் காற்று; என் பயலை ஆகம் சிறிது தீண்டிய - பசலை பாய்ந்த என் மார்பகம் சற்றே தீண்டும் வண்ணம் எ.று. தோழி, நோய் பெரிது; மெய்யும் வெய்து; நெகிழ்ந்தோன் குன்றத்து நெடுவரை ஆடி, வியலறை மூழ்கிய வளி என் பயலை ஆகம் தீண்டிய, முன்றில் கொளின், நந்துவள் பெரிது என அன்னைக்கு உய்த்து, இனி, உரை; புரையின்று; வாழி எனக் கூட்டி, வினைமுடிவு செய்க, நோய், ஈண்டுக் காதல் வேட்கை பற்றி மனத்திடையுளதாகும் நோய். மனம் அமைதியிழந்து அலமருங்கால், மெய்ம்முழுதும் குருதி வெம்மைமிக்கு நரப்புக் கால் தோறும் பரந்து வெதுப்புதலால் தீயுமிழ் தெறல் உவமம் கூறப்பட்டது. தெறல், வெப்பம். இன்: உறழ்ச்சி. மன்ற இருக்கை, மனைமுன்றிலின் எதிரே பரந்திருக்கும் மன்றுவெளி; செல்வர் மனைகளில் இங்கே பந்தரமைத்துப் பூச்செடிகளையும் கொடி களையும் வளர்த்து மனைமுகப்புக்கு அழகு செய்வர். ஆங்குச் சிறிது உயரிய முன்றில் என்றது, மன்று வெளியினும் சிறிது உயரமாக அமைத்த புறந்திண்ணை. வேனிற் காலத்து வெயில் வெம்மை தெறுதலால் தண்ணிய காற்று விழைந்து மக்கள் இப்புறந் திண்ணை யமைந்த முன்றிலில் கிடப்பது மரபு. நந்துதல், வளம் பெறல். நிரயத்தில் கிடந்து துன்புறுதற் காற்றாது வெளிவர முயலும் நரகரை, இரக்கமின்றி ஒறுத்துச் செறிக்கும் நிரயக் காவலர் போலச் செறிக்கும் மனமுடைமை பற்றி நிரைய நெஞ்சத்து அன்னை என்றார். இவ்வாறே அலர் தூற்றும் பெண்டிரையும், “நிரையப் பெண்டிர்”1 என்பர். நிரையம், தீமை செய்து இறந்தோர் புகும் துன்பவுலகம். இன்பவுலகு துறக்கம் எனப்படும். ஆண்டு, அவள் என்னும் சுட்டு மாத்திரையாய் நின்றது. புரை, குற்றம். “புரை தீர்ந்த நன்மை”2 என்புழிப் போல. நுண்ணேர் எல்வளை என்றவிடத்து நுண்மை தொழிற்பாட்டின் அருமை யுணர்த்திற்று. நெகிழ்ந்தோடுதற்குக் காரணமான மெலிவையும் நோயையும் செய்தமை பற்றி நெகிழ்த்தோன் என்றார். அண்ணல், பெருமை. நெடுவரை, உயர்ந்த மலையுச்சி. மழையால் நனைந்து குளிர்ந்திருக்கும் கற்பாறை வியல் அறை எனப்பட்டது. பயலை, பசலை; “உண்கண் பயலைக் கொல்கா வாகுதல் பெறினே”3 எனப் பிறரும் வழங்குதல் காண்க. தீண்டிய: செய்யிய என்னும் வினையெச்சம். இருவகைக் குறியினும் இடையிட்டுத் தலைமகன் ஒழுகு தலால், ஆற்றாமை மிக்க தலைமகள் வரைவுவழிக் கடிமணத்தாற் பெறலாகும் அழிவில் கூட்டத்தை விரும்பி வேட்கை மீதூர்ந்து வருந்துகின்றாளாதலின், நோயும் கைம்மிகப் பெரிதே என்றும், அவளது வேறுபாடு கண்ட அன்னைஅவளை இற்செறித்தமை யான், புறத்தே சென்று அயாவுயிர்த்துக்கோடற்கின்றி உண்டியிற் சுருங்கி உறக்கமுமின்றி வருந்துமாறு தோன்ற, மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தே என்றும், காதலனுடைய மலையைக் காணின் அவனைக் கண்டாற்போலும் மனவமைதி பிறப்பது பற்றித் தன்னை முன்றிலிற் கிடத்தினால் அவனது வரையைக் காணலாம் என்ற வேட்கையால் ஒய்யென மன்ற இருக்கையில் சிறிதாங் குயரிய முன்றிற் கொளினே என்றும் கூறினாள். புறத்தே போகவிடாது இற்செறித்தற்கண் இரக்கமிலளாய் ஒழுகும் தன் தாயை வெறுத்துரைத்தலின், நிரைய நெஞ்சத்து அன்னை என்றும், அவட்குத்தான் நேர்பட நின்று உரைத்தற் காகாமையால் தோழியை விடுக்கக் கருதுதலின், வாழி தோழி யென்றும், தான் கூறும் இதனை மனத்திற் கொண்டு தாயைத் தனியே கொண்டு சென்று உரைத்தல் வேண்டும் என்றற்கு, அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை என்றும், அதனையும் இப்பொழுதே செய்க என்றற்கு இனி என்றும், உரைக்க வேண்டு வது இது வென்பாள், மன்ற இருக்கையில் சிறிதாங் குயரிய முன்றிற் கொளினே நந்துவள் பெரிது என உரை யென்றும், அதனால் யாதொரு குற்றமும் நிகழா தென்பாள் புரையின்று என்றும் தலைவி கூறினாள். சிறைப்புறத்தானாகிய தலைமகன் செவியில் இச்சொற்கள் வீழின், இற்செறிப்புண்மையை நன்கு அறிந்து கொள்வான் என்பது கருத்து. தலைமகன் தொடர்பால் தன் மேனியில் மெலிவும், அதனால் வளைநெகிழ்தலும் உண்டாயின மையின், அவனைத் தலைவி நுண்ணேர் எல்வளை நெகிழ்த் தோன் என்றும், அவன் மலைமிசை அசைந்தாடி வியலறை மூழ்கிவரும் தண்ணிய காற்றுத் தன் மேனியிற் படின் அஃது அவன் தோளைப் புல்லி மடிமிசைக் கிடந்து மகிழ்வது போலும் தட்பமும் இன்பமும் நல்கும் சால்புடையதாம் என்பாள், நெடு வரையாடித் தண்ணென வியலறை மூழ்கிய வளி என்றும், அஃது என் மேனிக்கண் சிறிதுபடினும் தீண்டினும் விளையும் இன்பப் பயன் பெரிதாம் என்பாள், என் பயலை யாகம் தீண்டிய சிறிதே என்றும் கூறினாள். இதனால் தலைமகன், தலைவியது காதல் மிகுதியும் தன்னை இன்றியமையாமையும் உணர்ந்து வரைந்து கோடலை மேற்கொள்வன் என்பது பயன். விளக்கம்: “வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்1” என்ற நூற்பா வின்கண் “வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்” என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் என்னும் தந்திர வுத்தி யாகக் கொண்டு, அதன்கண் வேறுபட வருவன வெல்லாம் கொள்க என்றுரைத்து, இப்பாட்டைக் காட்டி, “இதுவரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன் வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட் படினும் ஆற்றலாம் என்றது” என்பர் நச்சினார்க்கினியர். 237. காரிக்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் ஒருவர் ஏனைத் தொகை நூல்களுட் காணப்படுகின்றார். சிலர் அவரையும் இவரே எனக் கருதுகின்றனர். அவர் சோழன் பெருந்திருமாவளவனையும், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனையும் பாண்டியன் பெருவழுதியையும் பாடியுள்ளார். பொதியின் மலைப்பகுதிக் குரிய ஆய் அண்டிரனும் மேலைக் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த பிட்டன் கொற்றன் என்பவனும் இவரது புலமை நலத்தை இனிது துய்த்துள்ளனர். அவருள் பிட்டங் கொற்றனது வண்மையைப் பாராட்டி, அவன் பால் தமக்கிருந்த அன்பைப் புலப்படுத்தற்கு அவன் “உள்ளடி முள்ளும் உறாற்க தில்ல” என்று பரிந்துரைத்து “ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழஅவன் தாள்வா ழியவே” என்று வாழ்த்துவர். இப்பிட்டன்கொற்றன் வழியினர் இப்போது மலையாள மாவட்டத்து வயனாட்டுப் பகுதியில் குறிச்சியர் என்ற பெயருடன் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் குடித் தலைவனை பிட்டன்1 என்றே குறிக்கின்றார்கள். மலை வாணர்களுள் அவர்கள் உயர்ந்த இனமாகக் கருதப்படுவர்; அவர்கள், பார்ப்பனர் இல்லமொழியப் பிறர்மனைகளில் உணவு கொள்வது இலர். அவர்கள் வழிபடும் கடவுளைக் காரிக் கடவுள் என்று கூறுவர். மூங்கிற் குழாய்களில் தேன் பெய்து வைப்பது இவர் செயல் வகையுள் ஒன்று. இறந்தோரைப் புதைப்பது இவரது இயற்கை; ஆயினும் இறந்தோர் ஆடவராயின் அவரோடு ஓர் அம்பையும், பெண்டிராயின் அரிவாளையும் உடன் புதைப்பர். மேலைக் கடற்கரை நாட்டில் வாழ்ந்த தலைவர்பால் போர்மறவராக வாழ்ந்து சிறப்புற்ற கோசர் என்ற இனத்தவரின் குணஞ்செயல் களை நன்கு அறிந்து பாடிய சிறப்பு இக்காரிக்கண்ணனார்க்கு உண்டு. காவிரிப்பூம் பட்டினத்தவரான காரிக்கண்ணனாரும் காவிரியின் பிறந்த நாடாகிய வானவர் நாட்டுத் தலைவர்கள் அன்பு செய்து ஆதரிக்கும் புலமை நலம் பெற்றவர் என்பதாயின், வேறு கூறல் மிகையாம். இவர் பாடினவாகப் பல பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்புக்காலத்தில் தலைமகன் கடமை காரணமாகத் தலைமகளிற் பிரிந்து சென்றான். செல்லுங் கால் கார்ப்பருவ வரவில் தான் மீண்டு வருவதாகவும் அத் தலைவன் கூறினான். தலைமகளும் அவன் வற்புறுத்த சொல்வழி நின்று தனக்குரிய அறத்தைச் செய்து வந்தாள். அவ்வாறு இருக்கையில், ஒருநாள் வானம் மழை பெய்தலை நேர்ந்து விசும்பில் எழுந்து கால் வீழ்த்துவதாயிற்று. மக்கள் அனைவரும் மழைவரவு நோக்கி மகிழ்வாராயினர். அதனைக் கண்டாள் தோழி. மழை முகில் எழுவது காணின் கார்ப்பருவ வரவெனக் கருதித் தலைமகள், தலைவன் தான் சொல்லியவாறு மீளாமை நினைந்து ஆற்றாளாவள்போலும் என எண்ணினாள். அந்நிலையில், அவளை ஆற்றுவிக்கும் கடன் தோழியதாகலின், ஆற்றத்தகுவன கூறற்குச் சமைந்தவள் தலைமகளை நோக்கினாள்; அவள் உள்ளத்தே தான் நினைத்த ஆற்றாமை நிகழ்ச்சியொன்றும் தோன்றாமை கண்டாள்; ஆயினும், மழைமுகில் மிக்கெழுந்து பெயலைத் தொடங்குமாயின் தலைவி ஆற்றாது வருந்துவள் என நினைந்து, அவ்வாறு வருந்தாவண்ணம் மாறுபட்ட வாய் பாட்டால் உரையாடத் தொடங்கி, “தோழி, உயிர்போற் பிரிதற்கரிய காதலர், ஒருகாற் பிரிந்து குறித்த பொழுதில் வாராது நீட்டிப்பராயின், மகளிர் மேனி பசந்து தோள் மெலிந்து கண்ணீர் சொரிந்து பிரிந்து சென்ற காதலர் வாராது நீட்டித்தனர் எனப் புலந்து கூறி வருந்தும் உள்ளத்தராவர்; இங்கே காண்பாயாக” என்று சொல்லி, மழைவானத்தைக் காட்டி, “யானை நிரை போலக் கருமுகில்கள் உலகவர் மகிழுமாறு வேறுவேறு உருவுடன் எழுந்து மழை பெய்தற்கு நேர்ந்துள்ளன; இது கண்டும் நீ அம்மகளிர்போலப் புலவியுற்று உள்ளத்தால் ஊடுகின்றாய் இல்லை; ஆனால், நுதல் பசந்து தோள் மெலிந்து கண்கள் நீர் நிறைந்து பண்டுபோலின்றி ஒளி மழுங்கியுள்ளனை; எனக்கு இது மிக்க வியப்பை நல்குகின்றது காண்” என்று தோழி உரைத்தாள். தலைமகளும் உவகையால் முறுவலித்தாள். தோழியின் இக்கூற்றின்கண், காதலன் பிரிவின்கண் ஆற்றாமை யாற் கையற்று வருந்தற்பாலளாய தலைமகள் ஆற்றும் வண்ணம், அவளுடைய ஆறிய கற்பும் அடங்கிய சாயலும், ஊடினும் இனிய கூறும் ஒள்ளிய மாண்பும் சொல்லாமற் சொல்லி வியந்த வாய் பாட்டால் ஆற்றுவித்த திறம் கண்ட காரிக்கண்ணனார், அதனை இப்பாட்டின் கண் சொல்லோவியம் செய்கின்றார். நனிமிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனிமலி கண்ணும் பண்டு 1போலா இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண் 2டூடிற்றும் இலையே மடந்தை உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை 3இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல உலகம் உவப்ப ஏர்தருபு வேறுபல் லுருவின் 4நேர்தரும் மழையே. இது, 5பருவவரவு கண்டு ஆற்றாளாங்கொல் எனக் கவன்ற தோழி உரைமாறுபட்டது. உரை : நனிமிகப் பசந்து - நுதல் மிகவும் பசலை பாய்ந்து; தோளும் சாஅய் - தோள்களும் மெலிந்து; பனி மலி கண்ணும் பண்டு போலா - நீர் நிறைந்த கண்களும் முன்போல் இன்றி ஒளி மழுங்கவும்; இன்னுயிர் அன்ன பிரிவரும் காதலர் - இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர்; நீத்து நீடினர் என்னும் புலவி - நம்மிற் பிரிந்து சென்று வரவு நீட்டிப்பாராயினார் என மனைமகளிரால் உரைக்கப்படும் சொல் பிறப்பிக்கும் புலவியை; உட்கொண்டு ஊடிற்றும் இலை - வாயால் உரையா தொழியினும் உள்ளத்தே கொண்டு ஊடுகின்றாயும் இல்லை. இஃது என்ன வியப்பு; மடந்தை - மடந்தையே; உவக்காண் - ஊங்கே காணாய்; ஓங்கித் தோன்றுவ - விசும்பில் ஓங்கித் தோன்றுகின்றன; வியப்புடை இரவலர் வரூஉம் அளவை - வியக்கத்தக்க புலமைச் சிறப்புடைய இரவலர் வரும் செவ்வி நோக்கி; அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானைபோல - அண்டிரன் அவர்கட்கு அளிப்பது கருதித்தொகுத்துள்ள யானைகளைப் போல; உலகம் உவப்ப ஏர்தருபு - உலகவர் மகிழுமாறு எழுந்து; வேறு பல்லுருவின் நேர்தரும் மழை - வேறாகிய பல உருக்கொண்டு பெயலை நேர்ந்த மழை முகில்கள் எ.று. மடந்தை, மழை ஓங்கித் தோன்றுவ; உவக்காண்; பசந்து, சாஅய் கண்ணும் பண்டு போலாவாகவும், புலவி உட்கொண்டு ஊடிற்றும் இலை; இஃது என்ன வியப்பு எனக்கூட்டி வினைமுடிவு செய்க. நனிமிக: ஒருபொருட் பன்மொழி. நுதலும் கண்ணும் பண்டு இருந்தது போலின்றிப் பெரிதும் பசந்தமை தோன்றப் பண்டு போலா என்றார். போலா, போலாவாக என்க. இன்னு யிரன்ன காதலர், பிரிவரும் காதலர் என இயையும், என்னும் என்றதனால் எழுவாய் வருவிக்கப்பட்டது. உம்மை: எச்சப் பொருட்டு, மடந்தை, அண்மை விளி. வியப்புடை இரவலர், வியக்கத்தக்க புலமைநலம் வாய்ந்த பாணர் கூத்தர் புலவர் முதலாயினார். பாணரால் இசையும் கூத்தரால் நாடகமும் புலவரால் இயற்றமிழும் வளம் பெறுதலின் அவர்களை வியப் புடை இரவலர் என்றார். நல்லோர் அஞ்சுதற்குரிய இரத்தலை மேற்கொண்ட நல்குரவாளரின் நீக்குதற்கு இவ்வாறு கூறினார் எனினுமாம். அளவை, ஈண்டுச் செவ்வி மேற்று. அண்டிரன், பொதியில் மலையின் அடியில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த வேள் ஆய். அவன் நாடு ஆனிரைகள் போல யானைகள் மிக்குடையது: அவனுடைய யானைவளத்தை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாட்டால் நன்கு அறியலாம். அவன் இரவலர்க்கு வழங்கிய யானைக் கொடையை, “வாய்வாள் அண்டிரன், குன்றம் பாடின கொல்லோ, களிறு மிகவுடைய இக்கவின் பெறுகாடே” என்பதனால் அறிக. புரவு, புரத்தலாகிய கடன். ஏர்தருபு, எழுந்து, கருமுகில்கள் எழுங்கால் பல்வேறு தோற்றமும் இடியும் மின்னும் கொண்டு மழைபெயற்கு நேர்தலின் வேறு பல்லுருவின் நேர்தரும் என்றார். நேர்தல், ஒருப்படல். “நமர் கொடை நேர்ந்தனர்” என்றாற் போல. ஏ, வினாவுமாம். இஃது என்ன வியப்பு என்பது குறிப்பெச்சம். பசந்து, சாஅய். போலாவாகவும் என இயையும். ஏர்தருபு நேர்தரும் மழை ஓங்கித் தோன்றுவ என்க. தலைமகன் பிரிவின்கண் அவன் தெளித்த சொல்லைத் தேறியிருந்த தலைமகட்கு, அவன் பிரிவால் நுதலும் கண்ணும் பசந்திருந்தனவாக, அவன் குறித்த பருவ வரவு கண்டதும் அப்பசப்பு மிகுந்தமை பற்றி, நனிமிகப் பசந்து என்றும், நன்கு புலனாகாதிருந்த தோள் மெலிவு இப்பொழுது விளங்கித் தோன்றின மையின் தோளும் சாஅய் என்றும், பசப்புறு பருவரலால் நீர் நிறைந்த கண்கள் முன்னையினும் ஒளி மழுங்கித் திகழ்ந்தமை பற்றிப் பனிமலி கண்ணும் பண்டு போலா என்றும், இவ் வாற்றால், தலைமகள் உள்ளத்தே வாட்டமோ பிரிவு பற்றிய புலவிக்குறிப்போ, புலந்துறையும் மனைமகளிராற் கூறப்படும் பிரிவு பற்றிய புலம்புரையோ ஒன்றும் காணப்படாமையின் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடிற்றும் இலையே என்றும் தோழி கூறினாள். உடம்பால் எத்துணைத் துன்பம் எய்தினும், அதனை வெறாது காதலித்திருந்து இன்பம் செய்தல் பற்றி உயிர் இன்னுயிர் எனப்பட்டது. “துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்1” எனச் சான்றோர் உரைப்பது காண்க. உயிர் போலப் பிரிவரிதாகிய காதலுடையர் என்றற்கு இன்னுயிரன்ன பிரிவருங் காதலர் என்ப. உயிரன்ன காதலர் எனவும் பிரிவருங் காதலர் எனவும் இயைத்துக் கொள்க. மெய்ப் பட்டுத் தோன்றும் வேறுபாட்டுக்கொப்ப, உள்ளத்தே ஊடல் தோன்றல் இயல்பாகலின், அதற்குமாறாக, ஊடற் குறிப்போ, அதற்கு உரிய உரையோ தோன்றாமை தோழிக்கு மிக்க வியப்பைத் தந்தமையின் உட்கொண்டு ஊடிற்றும் இலையே என்று வினவினாள். மேற்கொண்ட வினைமுற்றியல்லது மீளாமை தலைமகற்குத் தலைமை நலமாவதும், “வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு2” என்பதனால் கணவன் வினைமுற்றி வருதலையே சால்புடை மகளிர் விரும்புவரென்பதும், வினைமுற்றியவழி இமைப் போதும் தாழாது மீள்வரென்பதும் மனத்தே எண்ணித் தலைமகள் அடங்கியிருந்தமையின் தோழிக்கு உவகையும் வியப்பும் ஒருங்கு தோன்றின என்று கொள்க. தன் மேனி வேறு பாடு காட்டித் தலைமகன் வாராமையை விதந்துரைத்தவழிப் புலவாத தலைமகள், மழை வரவு அவன் குறித்த பருவ வரவைக் காட்டி அது நோக்கி ஆற்றியிருக்கும் அவள் உள்ளத்தில் அவன் நினைவை யெழுப்பி வருத்துமாகலின், அப்போது அவள் யாதொன்றும் கூறா தொழியாள் என எண்ணிய தோழி, மடந்தை உவக்காண் ஓங்கித் தோன்றுவ மழையே என்றாள். புகழ் புரிந்த இல்லாளாய தலைவி மழையுரைக்கும் தூதினும் கணவன் வினையிடத்தே பெற்ற வெற்றியுரைக்கும் தூது அவனது முயக்க வின்பத்தினும் மிக்க இன்பம் நல்குதல் பற்றி அதனையே எதிர் நோக்கி யிருக்கின்றாளாதலின், தோழி கூறியதற்கு ஒன்றும் உரையாது முறுவற் குறிப்பு ஒன்றே நல்கினாள் என அறிக. வெற்றியுரைக்கும் தூது மிக்க இன்பம் தரும் திறத்தை வினைமேற் சென்ற தலைமகன் , “பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு, துனிதீர் முயக்கம் பெற்றோள் போல, உவக்குவள் வாழிய நெஞ்சே....... அமரோர்த் தட்ட செல்வம், தமர்விரைந் துரைப்பக் கேட்கும் ஞான்றே1” என்று கூறுதலால் அறிக. உலகம் உவப்ப ஏர்தருபு பெயல் நேர்தரு மழைக்குத் தோழி வியப்புடை இரவலர்பொருட்டு ஆய்அண்டிரன் தொகுத்த யானைத்திரளை உவமம் கூறியது, தலைமகன் உடனிருந்தவழிப் பெறலாகும் ஈத்துவக்கும் இன்பத்தை நினைவுறுத்தற் கென அறிக. இனி, மழை வரவு கண்டு “இது நம் காதலன் குறித்த பருவ வரவு குறித்தலின், அவன் தவிராது வருவன்” என்ற கருத்தால் உவகை மிக்கிருந்த தலைமகளைத் தோழி நெருங்கி, “மழை தோன்றுவ உவக்காண்; அதனால் தோளும் பசந்து, சா அய், கண்ணும் பண்டு போலாவாயின; காதலர் நீத்து நீடினர் என்னும் புலவியை ஏறட்டுக் கொண்டு ஊடற்பாலையாகிய நீ உட் கொண்டு ஊடிற்றுமிலை; இஃது என்” என வுரைத் தலுமொன்று. இதனாற் பயன் பிரிவாற்றுவாளாவது. 238. கருவூர்க் கந்தரத்தனார் அச்சுப்பிரதிகளில் இவர் பெயர் கந்தரத்தனார் என்று காணப்படுமாயினும், ஏடுகளில் கருவூர்க் கந்தரத்தனார் என்றே காணப்படுகிறது. இதனால் இவர் கந்தரத்தனாரின் வேறு என்றே கொள்ளல் வேண்டும். அவரின் வேறுபடுத்தற் பொருட்டே இவர் ஊராகிய கருவூராற் சிறப்பிக்கப் படுகின்றார். ஆகவே இரு வரையும் ஒருவராகக் கோடல் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஊரோடகத்துக் கந்தரத்தனார் என்றும், காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் என்றும் பலர் பண்டை நாளில் இருந்திருக்கின்றனர். மேலைக்கடற்கரையில் ஒரு கருவூரும் ஆன்பொருநைக் கரையில் ஒரு கருவூரும் பண்டை நாளிலே சிறந்து விளங்கினமையின் இவரது கருவூர் இன்னது எனத் தெரிவதற்கு இடம் கிடைத்திலது. இவர் பாடியனவாக வேறே பாட்டுக்கள் காணப்படவில்லை. இல்லின்கண் அறம் புரிந்தொழுகும் தலைமகன் பொருள் வினை காரணமாகப் பிரிந்து சென்றான். அவன் பிரியுங் கால், கார்காலத்தே தான் வினைமுற்றி மீண்டு வருவதாகக் கூறிச் சென்றமையின், அவன் காதலியான தலைமகளும், அவனது வரவு நோக்கி மனைக்கண்ணே இருந்துவந்தாள். வேனிற்பருவங் கழியக் கார்காலம் வருவதாயிற்று. விசும்பில் மழைமுகில் தோன்றி மின்னி இடிக்கத் தலைப்பட்டது. அது கண்ட தலைமகட்குக் காதலன் வாராமை பற்றி ஆற்றாமை தோன்றிற்று. காதல் வேட்கையால் கருத்தழிந்தோர்க்குக் கடலும் கானமும், மலையும் மரமும், மாவும் புள்ளும், யாவும் உரையாடற்கு உரிய பொருளாம். உள்ளம் நிறைந்து போக்கிடம் காணாது அலமரும் காதற் பெருக்கு. உரையாட்டால் ஓர் அளவு அமைதியும் தெளிவும் பெறுமாகலின், காதல் மிக்குக் கையறும் மக்கட்கு, மேற்கூறிய கடல் கான முதலாயின உயவுத் துணையாகின்றன. அந்நெறியில் தலைமகள், தன் கண் முன்னே விசும்பிற் பரந்து மின்னியிடிக்கும் மழை முகிலை நோக்கி, “மழையே, கோடை வெதுப்புதலால் உலர்ந்து பொலிவழிந்த கானத்தின் வழியாக, வண்டு கிளர்தலால் இதழ் விரிந்து மலர்ந்த பிடவங்களின் மணம் கமழும் அந்தி மாலைப் போதில், காற்றோடு போந்து கார்ப்பருவத்தைச் செய்கின்றாய்; நின்னிற் பிரிந்து சென்று உறையும் நின் காதலர் நிலையை யான் கூறக் கேண்மோ என்பாய் போல, ஈங்கு வருதல் சான்றோர்க்கு ஒத்த சால்புடைமையாகாது. நாற்றிசையும் இருள்மயங்க இடித்து முழங்கும் தன்மையால், பாம்புகள் படம் அவிந்து அடங்குதல் ஒருதலை. அதனால், நின் இடிக்குரல், பாம்புகட்கேயன்றி, மனத்திண்மையால் என் தனிமையை எண்ணிக் கனியாத நெஞ்சினையுடைய என் காதலர்க்கும் இனிமை தருவ தன்று; ஆகவே, நீ ஈண்டுப் போந்து எனக்கு உரைத்தலினும், அவர் வயின் சென்று, நீ நின் காதலிக்கு வற்புறுத்திப் போந்த பருவங் காண், இது என்று கூறுதல் இனிது” என்று உரைக்கலானாள். கார்ப்பருவ மழை வரக் கண்டு “இம்மழை மேகம், தலை மகன் உறையும்இடத்தே சென்று முழங்குமாயின், அவன் தனக் குரைத்த பருவம் இதுவெனத் தேர்ந்து விரைந்து மீள்வன்” என்ற கருத்தால், காதல்வேட்கை பெருகிக் கையற்று உரைத்த தலைவியின் இக்கூற்றின்கண், சான்றோரது சால்பு காட்டித் தலைவன்பால் மழையைத் தூது போக்கும் குறிப்பு அழகுற அமைந்திருப்பது கண்ட கருவூர்க் கந்தரத்தனார் அதனை இப்பாட்டின்கண் நிறுத்திப் பாடுகின்றார். வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம் மாலை அந்திக் 1காலொடு நண்ணிப் பருவம் செய்த கருவி மாமழை அவர்நிலை அறிமோ ஈங்கென வருதல் சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்றுடன் உரவுரும் உரறும் நீரிற் 2பாந்தள் 3விரிநிறம் மழுங்க லன்றியும் 4உரனொடு கனியா நெஞ்சத் 5தோர்க்கும் இனிய அல்லநின் இடிநவில் குரலே. இது, தலைமகள் பருவங்கண்டு அழிந்தது. உரை : வறம் கொல வீந்த கானத்து - வேனில் வெதுப்புதலால் உலர்ந்துகெட்ட கானத்தின்கண்; குறும்பூங் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப - குறுகிய பூமாலையணிந்த மகளிர் குழுவின் வரிசையை யொப்ப; வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் - வண்டினம் கிளறுவதால் இதழ் முறுக்கவிழ்ந்து மலர்ந்த பிடவங்களையுடைய; மாலையந்திக் காலொடு நண்ணி - அந்தி மாலைப் போதில் காற்றொடு போந்து; பருவம் செய்த கருவி மாமழை - கார்ப்பருவத்தைச் செய்த பலவாய்த் தொகுதி கொண்ட மழை முகிலே! அவர் நிலை அறிமோ ஈங்கு என வருதல் - நின் காதலராகிய அவருடைய நிலையினை இங்கே யான் கூற அறிவாயாக என்ற குறிப்புடன் இங்கே நீ வருவது; சான்றோர் புரைவதோ அன்று - சான்றோர்க்கு ஒத்த சார்புடைச் செயலன்று; மான்றுடன் உரவுரும் உரறும் நீரின் - எங்கும் இருள் மயங்க வலிய இடி முழங்கும் இயல்பினால்; பாந்தள் விரிநிறம் அழுங்கலன்றியும் - பாம்புகளின் விரிந்த படம் அவிந்து அடங்குவதையன்றி; உரனொடு கனியா நெஞ்சத்தோர்க்கும் - திண்மையால் நெகிழாத மனமுடையா ராகிய காதலர்க்கும்; இனிய வல்ல - இன்பம் தருவனவல்ல; நின் இடி நவில் குரல் - நின் இடியாற் பிறக்கும் பெருமுழக் கங்கள் எ.று. கானத்து, பிடவம் மாலை யந்தியில் காலொடு நண்ணிப் பருவம் செய்த மாமழையே, அவர் நிலை அறிமோ ஈங்கு என வருதல் புரைவதோ அன்று; பாந்தள் நிறம் மழுங்கலன்றியும் கனியா நெஞ்சத்தோர்க்கும் நின் இடிநவில் குரல் இனிய அல்ல ஆகவே, அவள் நிலை அறிமோ என அவர்வயிற் சேறல் நினக்குப் புரைவதாம் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வறம், கோடைக் காலம். அக்காலத்தே வேனில் வெம்மை மிக்கு வெதுப்புதலால் புற்பூடுகளும் செடிகொடிகளும் பசுமையறப் புலர்ந்து கரிந்து கெடுதலால் கானம் வறம் கொல வீந்த கானம் எனப் படுவதா யிற்று. ஓரோர் இடத்தில் நின்ற பிடவுகள் வண்டு மொய்ப்ப நிரல்பட மலர்ந்து தோன்றும் காட்சி கூந்தலிடத்தே சிறு சிறு மாலையணிந்த மகளிர் குழுவின் நிரைபோறலின், குறும்பூங் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம் என்றார். மலரும் செவ்வி யெய்திய அரும்பின் இதழ்களை வண்டுகள் தம் கால்களாற் கிளறி மலர்வித்தல் பற்றி, வண்டு வாய் திறப்ப என்றார். வண்டு வாய் திறப்ப என்பதற்கு வண்டுகள் வாய் திறந்து தேனைப் பருகுமாறு என்று உரைப்பாரு முளர். பிடவம் மாலையில் மலர்வது பற்றி, மாலைப் போதினைப் பிடவமாலை என்பாராயினர். மாலையந்தி என்றது இருண் மாலைப் போதாகிய அந்திமாலையை என அறிக. “வைந்நுதிக் களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் கார்ப்பெயல் செய்த காமர் மாலை1” என்று பிறரும் கூறுதல் காண்க. கால், காற்று; ஈண்டுப் பருவக் காற்றின் மேற்று. கார்ப்பருவத்துத் தலைப்பெயல் என்றற்குப் பருவம் செய்த மழை என்றார். கருவி, இடி மின்னல் முதலாயவற்றோடு கூடிய மழைமுகிலின் தொகுதி. மாமழை, கருமுகில்; ஈண்டு அண்மைவிளி. அறிமோ: மோ, முன்னிலை யசை. என ஈங்கு வருதல் என மாறினுமாம். சான்றோர் என்ற விடத்து நான்கனுருபு விகாரத்தால் தொக்கது. புரைதல், ஒத்தல்; “மகன்றாயாதல் புரைவதாங் கெனவே2” என்றாற் போல: மான்று, மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம், நீர், தன்மை, பாந்தள், பாம்பு. நிறம், படம். உரன், வினை செயற்கு வேண்டும் மனத்திட்பம். கனிதல், உருகுதல். இடிக்குரல் பலதிறப் படுதலின் பன்மை வாய்பாட்டாற் கூறினார். இடிநவில் குரல், இடியினது முழக்கொலி. வேனிலின் வெம்மையால் விளைந்த தீமையைப் போக்கிக் கானம் தண்மையும் பசுமையுமுடையதாக்கும் கார்ப்பருவம் வருங்கால், அதன் பண்டை நிலைமை நினைக்கப்படுதலின் வறங்கொல வீந்த கானம் என்றும், அக்கானத்தின் வழியாகக் காற்றுச் செலுத்துதலாற் போந்தது பற்றி காலொடு நண்ணி என்றும், வீந்த கானத்தின்கண் ஓரொருசார் நின்ற பிடவங்கள் கார்ப்பருவத்து மாலைப் போதில் நிரை நிரையாக அரும்பி மலர்ந்து விளங்குதலின் அவற்றை விதந்து குறும்பூங் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப வண்டுவாய் விண்ட பிடவம் என்றும், மாலையந்தி என்றும் கூறினாள். தலைமகன் வரவு நோக்கி மனைக்கண் இருந்த தலைமகட்குக் கானப்பிடவத்துக் கடிமணம் கமழும் மாலைப்போதில் தோன்றும் கார்முகிலின் காட்சி மனத்தே மேலே கூறிய எண்ணங்களை எழுப்புவதாயிற்று. கருங்கூந்தலில் சிறு சிறு பூக்களையணிந்த மகளிர் குழுவின் நிரையினை எடுத்து மொழிந்தது, கணவரொடு கூடி மனை யுறையும் மகளிர் வண்டு தேன் உண்ண மலர்ந்து விளங்கும் பிடவங்களைப் போலச் சிறப்பது காணும் தலைவியது வேட்கை நிலை யுணர்த்துமாறு காண்க. கார்மழையின் வரவு கார்ப்பருவ வரவினைக் குறிப்பதுபற்றிப் பருவம் செய்த மாமழை என்றாள். இவ்வாறு அந்தி மாலைப் போதில் தோன்றிக் கார்ப்பருவ வரவுணர்த்தும் மழையின் குறிப்பு, “இப்பருவ வரவில் மீண்டு வருவதாக வற்புறுத்த நின் காதலர் அது வந்தும் வாராது நின்னை மறந்து தாம் சென்ற புலத்தே இருந்தொழிந்தனர்; என்னே அவரது காதலன்பு இருந்தவாறு” எனத் தன் காதலர் அன்பிலர் கொடியர் என இகழ்ந்துரைப்பது போல இருந்தமை தோன்ற, அவர்நிலை அறிமோ ஈங்கு என வருதல் என்றும், சான்றோராயினார், தனித்துறையும் மகளிர்பக்கல் செல்லாமையோ ஒருகால் செல்லின் அவரது தனிமைத் துயரை ஆற்றத் தகுவனவற்றைச் சொல்லு தலோ செய்தல் அவரது சால்புக்கு ஒத்ததேயன்றி காதலர் இல்வழி அவர் மனைப்பக்கல் போந்து அவரைப் பிரிந்துறையும் மகளிர்க்கு ஆற்றாமை மிகுவிக்கும் சொற்களைச் சொல்லுதல் சால்பாகாது என்பாள், சான்றோர்ப் புரைவதோ அன்றே என்றும், இனி நினக்குச் சால்பாவது பகலில் வேனில் வெம்மைக்கு ஆற்றாது ஒடுங்கிக் கிடந்து இருண்மாலைப் போதில் இரைதேடிப் புறப் படும் பாம்பின் படம் அவிய நின் வலிய இடிமுழக்கத்தால் அதனை அழுங்குவித்தல் அன்று என்பாள், உரவுரும் உரறும் நீரின் பாந்தள் விரிநிறம் அழுங்கல் அன்றியும் என்றும், வினைமேல் ஒன்றிய மனத்திண்மையால் பிறவற்றை நினைந்து நெகிழாத மாண்புடையர் என் காதலர் என்பாள், உரனொடு கனியா நெஞ்சத்தோர் என்றும், நினது தோற்றம் அவரது கருத்தை ஈராமைகண்டு மின்னியும் இடித்தும் முழங்குவை யாயினும், வினைமுற்றியல்லது மீளாத பூட்கையினராதலின், அவர் நெஞ்சு நெகிழார் என்றற்குக் கனியா நெஞ்சத்தோர் என்றும், அவர்க்கேயன்றி நினக்கும் இச்செயல் இன்பம் பயவாது என்றற்கு இனிய வல்ல நின் இடி நவில் குரல் என்றும் கூறினாள். உரவுரும் உரறும் நீரின் என்றவள் இடிநவில் குரல் எனப் பெயர்த்தும் கூறியது. உரவுரும் உடைமையால் இடிநவில் குரல் பயிற்றிப் பாம்பு மதன் அழியச் செய்வதையன்றி வேறே சால்புடையையல்லை என இகழ்ந்து, நினக்குப் புரைவதாவது, வினையிடத்து உறையும் என் காதலர் பக்கல் சென்று தோன்றி, “நீவிர் அவட்கு வற்புறுத்த பருவம் வந்தது. ஆங்கு அவள் நிலை அறிமோ” என அறிவித்தல் என்பது கூறியவாறாம். அயாவு யிர்ப்பது இப்பாட்டின் பயனாம். 239. குன்றியனார் தலைமக்களிடையே காதற்றொடர்புண்டாக, அதனை அவர்கள் களவொழுக்கத்தின் வாயிலாக வளர்த்து வருவா ராயினர். தலைமகள் குறித்த இருவகைக் குறியிடத்தும் தலைமகன் போந்து அவளைக் கண்டு பயின்று இன்புற்றான். ஆயினும், காவல் மிகுதியாலும், இற்செறிப்பாலும், பிறவற்றாலும் குறி யிடத்து எதிர்ப்பட்டுப் பெறும் இன்பம் அடிக்கடி இடையீடு பட்டது. இரவுக்குறிக்கண். அவன் போந்து செய்த குறிகள் பல அல்ல குறியாய்ப் பயன்படாது கழிந்தன. அதனால், தலைவி காதல் மாண்புற்றுத் தன்னையின்றி அமையாளாதல் பொருட்டு அவன் வரைவு மேற்கொள்ளாது நீட்டிப்பானாயினான். தலைவியின் உள்ளத்தே காதல் சிறந்தமையின் அவட்கு ஆற்றாமை பெரிதா யிற்று. அதுகண்ட தோழி, தலைமகனை வரைவு மேற்கொள்ளு மாறு குறிப்பால் தூண்டலுற்றாள். ஒருநாள் தலைமகன் சிறைப் புறத்தே வந்து நிற்பதைத் தோழி கண்டாள். தான் சொல்வது அவன் செவிப்படுமாறு தலைவியொடு உரையாடத் தொடங்கி, “தோழி, இன்றுகாறும் நாம் தலைமகற்கு இனியராய் அமைந்து, அவன் பணிக்கும் தொழில்களைச் செய்தோமில்லை. அதனால், அவன் நம்மை விரும்பி விரைவில் வரைந்துகொள்வான் என்பதற்கு இடமில்லை. இந்நிலையில் நாம் அவனைக் களவிற் கூடிக் கைவளை உடைய இறுக முயங்கி இன்புறாநின்றோம் என இவ்வூரவர் அலர் மொழிகின்றனர்; இனி, மெய்யாகவே நாம் அவனைக் கூடி, உடன்போக்கினைத் துணிவோமாயின், இவ்வூர் எத்தன்மையதாகுமோ? அறியேன்” என்று இயம்பினாள். தோழியினுடைய இக்கூற்றின்கண், அலரச்சம் கூறித் தலை மகனை வரைவு கடாவுபவள், வரைவு முட்டுப்படின் உடன் போக்குத் துணியுமளவிற்குத் தலைவியின் காதல் மாண்புற்றமை தலைமகற்கும், நாண மிகுதியால் போக்குடன்படாதாள் போல நோக்குதல் கண்டு உள்ளுறையால் தலைவன் வரைவொடு வந்து மணந்து கொள்வன் என்று தலைமகட்கும் உரைக்கும் நலம் கண்ட குன்றியனார், இவையனைத்தையும் இப்பாட்டின்கண் அமைத்து இனிமை மிகப் பாடுகின்றார். ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவுமணல் முன்றிற் 1கானலஞ் சிறுகுடிச் சென்னெறி 2ஆங்கண் ஆய்மணிப் பொதியவிழ்ந் தாங்கு நெய்தற் புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் மல்லல் இருங்கழி 3மாநீர்ச் சேர்ப்பற் கமைந்துதொழில் கேட்டன்றோ இலமே 4முன்கை வார்கோல் எல்வளை 5உடைய வாங்கி 6முயங்கல் மொழியும் இவ்வூர் 7எற்றா வதுகொல்யாம் மற்றொன்று செயினே. இது, தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. உரை : ஞான்ற ஞாயிறு குடமலை மறைய - மேற்றிசையிற் சாய்ந்த ஞாயிறு மேலைமலையில் மறையவும்; மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் - இருள் மயங்கிய மாலைப்போதில் கட்குடித்து மகிழ்ந்த பரதவர்கள்; இனிது பெறு பெருமீன் எளிதினின் மாறி - பகற்போதில் வருத்தமின்றி இனிது பெற்றுக் கொணர்ந்த பெருமீன்களை எளிதில் விற்றுவிட்டு; அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் - சிறு நண்டுகள் மேய்கின்ற புலால் நாறும் மணல் பரந்த முன்றில்களையுடைய; கானலஞ் சிறுகுடிச் சென்னெறி ஆங்கண் - கானற் சோலையிடத் தமைந்த சிறு குடிக்குச் செல்லும் வழியிடத்தே; ஆய்மணி பொதி அவிழ்ந்தாங்கு - அழகிய மணிகள் பெய்து வைத்த கிழியானது கட்டவிழ்ந்து சிதறியது போல; நெய்தல் புல்லிதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் - நெய்தலின் மணிநிறங்கொண்ட புறவிதழால் மூடப்பட்ட பூக்கள் செல்வோர் கால்களிற் பட்டு மிதியுண்டு கெடும்; மல்லல் இருங்கழி மாநீர்ச் சேர்ப்பற்கு - வளவிய கரிய கழி சேர்ந்த நீனிறக் கடல்நிலத் தலைமகனுக் கென; அமைந்து தொழில் கேட்டன்றோ விலமே - அமைந்து அவர் விரும்பும் தொழில் செய்தொழுகுவேமல்லேமாகவும்; முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி - எம் முன் கையில் அணிந்த நீண்டு திரண்டு விளங்கும் வளைகள் தம்மில் நெருங்கி யுடைந்து கெடுமாறு அவன் மார்பை வளைத்து; முயங்கல் மொழியும் இவ்வூர் - இறுக முயங்குதலையுடையேம் என்று அலர் எடுத்துரைக்கும் இவ்வூரவர்; யாம் மற்று ஒன்று செயின் - யாம் ஒருகால் அவற்குப் போக்குடன்பட்டுச் சென் றொழிவேமாயின்; எற்று ஆவதுகொல் - எத் தன்மை யராவரோ?, அறியேன் எ.று. பரதவர் பெருமீன் மாறி, சென்னெறியாங்கண் நெய்தற்பூத் தப மிதிக்கும் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ விலம்; ஆகவும், முயங்கல் மொழியும், யாம் அமைந்து மற்று ஒன்று செயின், இவ்வூர் எற்றாவதுகொல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஞான்ற, மான்ற என்பன ஞால், மால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சவினை. ஞாலுதல், தொங்குதல். உச்சிப்போதின் நீங்கி மேற்றிசை அடைந்த ஞாயிற்றை, ஞான்ற ஞாயிறு என்றார். தமிழகத்துச் சோழ பாண்டிய நாடுகட்கு மேற்கெல்லையாக நிற்பது வானமலை யாகும்; அஃது இந்நாடுகட்குக் குடபால் இருத்தலின் குடமலை எனவும் வழங்கும். குடமலைக்கு அப்பால் கடற்குள் மறைவ தாயினும், குடமலையில் ஞாயிறு மறைகிறதென்னும் நாட்டு வழக்கை மேற்கொண்டு குடமலை மறைய என்று கூறினார். இருள் விரவிய அந்திமாலை, மான்ற மாலை யெனப்பட்டது. மகிழ்தல், கள்ளுண்டுகளித்தல். கள்ளுக்கு மகிழ் என்பதும் பெயராதலின் அதனையுண்டுகளிக்கும் பரதவரை மகிழ்ந்த பரதவர் என்றார். “மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு1” என்று பிறரும் கூறுதல் காண்க. வலையை வீசிய துணையானே வருத்தம் சிறிதுமின்றி மீன் பெற்றமை தோன்ற இனிது பெறுமீன் என்றும், ஏனை மருதம் முல்லை முதலிய நாடுகட்கு எடுத்துச் செல்ல வேண்டாது பெற்றவிடத்தே விற்கப்பட்டமை விளங்க, எளிதினின் மாறி என்றும் குறித்தார். அலவன், சிறு நண்டுகள். கடல்நீர் நெடுந்திரைகளால் அடிக்கடி பாய்ந்து புலவு நாற்றம் கமழ்வித்தலின், மணல் பரந்த முன்றில் புலவு மணல் முன்றில் எனப்பட்டது. நெய்தற்பூ நீலமணியின் நிறமுடைமைபற்றி, பரதவர் காலடியில் மிதிப்புண்ட நெய்தற்கு ஆய்மணிப் பொதி யவிழ்ந்தாங்கு என உவமம் கூறினார். “மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்1” எனப் பிறரும் கூறுவது காண்க. மாநீர், கரிய கடல்நீர்; “மாநீர் முண்டகம்2” என்றாற்போல. அமைந்து தொழில் கேட்டல், விரும்பிப் பணிப்பன செய்தல். வார்கோல் வளை, நீண்டு திரண்ட வளை. தொடியினையும் இவ்வாறு சிறப்பித்தலுண்டு; “வார் கோல் செறிதொடி திருத்தி3” என்று சான்றோர் உரைப்பது காண்க. வாங்குதல் வளைத்தல். வாங்கி இறுக முயங்குமிடத்து வளைகள் நெருக்குண்டு உடைதல் இயல்பாகலின், உடைய வாங்கி என்றார். முயங்கல் மொழியும், முயங்குதலை உடையேம் என மொழியும். ஒன்று என்னாது மற்றொன்று என்றமையின், இயல்நெறிக்கு மாறாகப் பெற்றோரும் ஆயமும் அறியாத வகையிற் செல்லும் உடன்போக்குக் கொள்ளப் பட்டது. எற்று, எத்தன்மைத்து, ஊர் என ஆகுபெயராற் கூறினமையின் எற்றாவது என அதற்குரிய வாய்பாட்டாற் கூறினார். தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை யறிந்து கூற்று நிகழ்த்தும் தோழி, தலைமகட்கு உரைக்கின்றாளாகலின், அவள் மனம் துளங்காமைப் பொருட்டுத் தலைமகன் வரைந்து கொள்ளற் பாலன் என்பது முன்னுறக் கூறுவாளாய்ப் பரதவர் பெருமீன் எளிதினின் மாறிக் கானலஞ் சிறுகுடிச் சென்னெறி யாங்கண் நெய்தற் பூத் தப மிதிக்கும் மாநீர்ச் சேர்ப்பன் என்றும், அவன் இரவின்கட் போந்து செய்த குறியுணராது அல்லகுறிப்பட்டு அவனை எதிர்ப்படல் இலோமாயினோம் என்பாள் அமைந்து தொழில் கேட்டன்றோ விலமே என்றும், சிறைப்புறத்து நின்ற தலைமகற்கு அவரெழுந்தமை கூறி வரைவுகடாவுதலின் முயங் கன் மொழியும் இவ்வூர் என்றும், தமர் மறுப்பினும் வேற்று வரைவு நேரினும் போக்குடன்படுத லல்லது தலைமகட்கு உய்ந்துபோக்கினமையின் அதனை அறிவுறுத்துவாள் போன்று யாம் மற்றொன்று செயின் இவ்வூர் எற்றாவது கொல் என்றும் கூறினாள். பரதவர் இனிதிற் பெறும் பெருமீனை எளிதினில் மாறித் தம் சிறுகுடிச் சென்னெறிக்கண் நெய்தற் பூத்தப மிதிப்ப ரென்றதனால், தலைமகன் தான் இனிது பெற்ற வரைபொருளை நம் தமர்க்கு எளிதினில் தந்து மகட்கொடை நேரப் பெற்று அலர் கூறுவார் தலைமடங்க நின்னை வரைந்து கொள்ளற்பாலனாகவும், அவன் அது செய்யாமை ஒருபுறமிருக்க, நாமும் அல்ல குறியாலும் காவன்மிகுதி இற்செறிப்பு முதலியவற்றாலும் அவற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ விலமாகவும், இவ்வூரவர் கண்முன் கண்டாற் போல முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி முயங்கன் மொழிகின்றனர், இஃது என்? என்பாள், முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி முயங்கன் மொழியும் இவ்வூர் என்றாள். ஒன்று நிகழாமுன்பே நிகழ்ந்ததாக அலரெடுத்து உரைக்கும் இவ்வூர், அது நிகழ்ந்துவிடின் என்னாகுமோ என்றற்கு எற்றாவது கொல் யாம் மற்றொன்று செயினே என்றாள் என்றுமாம். இது கேட்டுத் தலைமகன் தெருண்டு வரைவொடு புகுவானாவது பயன். 240. நப்பாலத்தனார் “கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும்” பொருந்திய தலைமகளை மணந்து இல்லிருந்து நல்லறம் செய்தொழுகும் தலைமகன், பொருள் குறித்துத் தலை மகளின் நீங்கிச் செல்ல வேண்டிய நிலையினனானான். பொருளினது இன்றியமையாமை அவன் நெஞ்சில் தோன்றி அலைக்கத் தொடங்கியது. பொருளில்லார்க்கு இவ்வுலகில் வாழ்வில்லை என்பதை உணர்ந்திருந்தமையின், அவன் நெஞ்சு பொருள்பற்றிய பிரிவை வற்புறுத்துவதாயிற்று. பொருட்பிரிவை நினைக்கும் போது அவன் மனத்தில் தன் காதலிபால் பெறும் இன்பம் பெருகித் தோன்றிற்று. ஒருபால் அவன் செல்லுதற்குரிய கானத்தின் கடுமையும், பாலையின் கொடுமையும், வெயிலின் வெம்மையும் மிக்குத் தோன்றின; ஒருபால் புணர்வின் இன்பமும், ஒருபால் பிரிவின் துன்பமும் மாறி மாறி இயல்வது அவன் மனக்கண்ணில் புலனாயிற்று. புணர்ந்தார்க்குப் பிரிவும், இன்பத் துக்குத் துன்பமும், உடைமைக்கு இன்மையும், பகலுக்கு இரவு போல அமைந்திருப்பது கண்டான். இனியனவும், நல்லனவும் செய்து இன்புற்று வாழ்தற்கென்று உயிர்கள் இவ்வுலகில் தோன்றி யிருப்ப, அவ்வுயிர்கள்பொருட்டு அமைந்த இவ்வுலகம் துன்பம் விரவியிருத்தற்குக் காரணம் யாதாம் என அவனது இளமை யுள்ளம் ஏங்கித் துடிக்கலுற்றது. அவன் மனத்தில், “ஓரில் நெய்தல் கறங்க ஓரில், ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர், பைதல் உண்கண் பனிவார் புறைப்பப், படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்” என்ற பக்குடுக்கை நன்கணியார் பாட்டும் எழுந்தது. “இவ்வுலகைப் படைத்தோன் பண்பிலாளன்கொல்லோ?” எனப் பன்முறையும் தனக்குள்ளே வினாவினான். உலகைப் படைத்தோன் இன்ப வாழ்வின் பண் பறிந்திருப்பானாயின், இத்தகைய வேறுபாடும் மாறுபாடும் விரவப் படைத்திருப்பானல்லன் என்ற கருத்து ஒருபால் எழவும், உலகுபடைக்கும் தலைமை பெற்றோன் பண்பிலானாதல் கூடாது என்ற கருத்து ஒருபால் தோன்றிற்று. ஆயினும் தலைமை வாழ்வின் தகைமையால் கீழேயுள்ள இவ்வுலக வாழ்வின் கூறுகளை உற்று அறியானாதல் வேண்டும். உண்மைத் தலைமையின் இயல்பு, ஒவ்வோருயிரையும் ஓர்ந்து அதன் பாடறிந்தொழுகும் பண் புடைமை; அப்பண்பு இல்லாமையால் இவ்வுலகு படைத்தோன் இத்தவற்றினைச் செய்வானாயினான். அவன் யான் செல்லு தற்குரிய கானத்தைப் பைய நடந்து சென்று காண்டல் வேண்டும் என்று துணிந்தான். பிரிந்து சேறற் கமைந்த கானம் மனக்கண்ணில் தோன்றவும், மனைவிபாற் பெறும் காதலின்பம் ஒருபால் காட்சி நல்கவும், அவளுடைய கைகவர் முயக்கமும், மார்பிடைப் பெறும் துயிலும் அவன் நினைவின்கண் எழுந்தன. அப்பால் கானத்தின் வெயில் வெம்மையும், பரல் நிறைந்த வழியும், ஆன்வழிப்படும் கோவலர் தோண்டிய பத்தலை நீர்வேட்கை கொண்ட யானையினம் போந்து கவர்ந்துகொள்ளும் கொடுமை யும், திரைகளையுடைய கடல் போல் பரந்து கரையின்றித் தோன்றும் காட்சியும் எழுந்தன. இக்கானத்தை இவ்வுலகு படைத்தோன் பைய நடந்து சென்று காண்பானாயின் தன் படைப்பின் குறைபாட்டை இனிதுணர்வன் என்றான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், காதல் வாழ்வின்கண் பெறப்படும் இன்பச்சிறப்பும் அதற்கு இன்றியமையாத பொருள் கருதிய பிரிவினால் தனிமை நிகழ்தற்கிட னாகிய கானத்தின் கொடுமை மிகுதியும் சீர்தூக்கிக் காட்டப்படும் நலம் கண்ட நப்பாலத்தனார், புணர்வும் பிரிவும் தம்முள் ஒவ்வாமற் படைத்தோனது செயலிற் குறைகண்டு கூறும் நயத்தைச் சிறப் பித்து இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். ஐதே கம்மஇவ் வுலகுபடைத் தோனே வையேர் வாலெயிற் றொண்ணுதற் குறுமகள் கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி 1ஏங்குயிர்ப் பிட்ட வீங்குமுலை ஆகத்துத் 2துயில்கெட வரூஉம் தனிமைத் தாயினும் வெயில்வெய் துற்ற பரலவல் ஒதுக்கின் கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தர் யானை யினநிரை வௌவும் 3கானம் திரைய கடல்போன் றிசினே. இது, நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது; பிரிவிடை மெலிந்த தலைமகள் சொற்றதூ உமாம். உரை : அம்ம - பொருள் வலியுறுத்தும் நெஞ்சமே, இதனைக் கேள்; இவ்வுலகு படைத்தோன் ஐது ஏக - நாம் வாழும் இவ்வுலகினைப் படைத்தோனாகிய தலைவன், பைய நடந்து சென்று அறிவானாக; வையேர் வால் எயிற்று ஒண்ணுதல் குறுமகள் - கூரிய அழகிய வெண்மையான பற்களையும் ஒள்ளிய நுதலையுமுடைய இளையளாகிய இவளை; கைகவர் முயக்கம் - கைகளாற் சேரத் தழுவிப்பெறும் முயக்கத்திடை; மெய்யுறத் திருகி - மெய்யோடு மெய் நன்கு பொருந்துதலால்; ஏங்கு உயிர்ப்பிட்ட வீங்குமுலை யாகத்து - களித்து ஏங்கிப் பெருமூச்செறிய அமைந்த பருத்த முலை மார்பின்கண் பெற லாகும்; துயில்கெட வரூஉம் தனிமைத் தாயினும் - துயில் இல்லையாமாறு வரும் தனிமைக் கிடக்கையுடையதாயினும்; வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கின் - வெயில் வெம்மை மிக்க பருக்கைக் கற்கள் நிறைந்த பள்ளப் பாங்கான இடத்தில்; கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி - குந்தாலியால் வெட்டப் பட்ட குளத்தை அடைந்து; ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தர் - ஆனிரை மேய்க்கும் ஆயர் அந்நிரைகளின் பொருட்டு அதன்உள்ளே குடைந்து செய்த நீர்க்குழிகளை; யானை இனநிரை வௌவும் - யானைக் கூட்டம் நிரையாய்ச் சென்று தமக்கெனச் சூழ்ந்து கொள்ளும்; கானம் - சுரமாகிய காடு; திரைய கடல் போன்றிசின் - திரைகளையுடைய கடல்போலத் தோன்றாநின்ற தாகலான் எ.று. அம்ம, இவ்வுலகு படைத்தோன் கானம் ஐதேக, அது, துயில் கெட வரூஉம் தனிமைத் தாயினும், திரைய கடல் போன்றிசின் ஆகலான் என முடிக்க. ஐது. மென்மை. ஏக: வியங்கோள் முற்றுவினை, வை, கூர்மை. குறுமகள், இளமைச் செவ்வி நீங்காத பெண். கைகவர் முயக்கம் - இருகைகளால் சேரத் தழுவிப் பெறும் முயக்கம். திருகுதல், எய்துறல், புல்லுநீங்கி மூச்செறிதலை ஈண்டு ஏங்குயிர்ப்பு என்றார். கானம் தனிமைத்தாயினும் என இயையும். தனிமை, ஈண்டுத் தனித்து கிடத்தல் மேற்று. ஒதுக்கு - ஒதுங்கும் இடம். கூவல், குளம்; பள்ளமுமாம். கூவலின்கண் நின்ற நீர், வேனில் வெம்மையால் சுவறிவிடுதலால் நீர் வேண்டுவோர் கூவலின் அகத்தே அந்நீர் பெறும் அளவு குழி வெட்டுவர். ஆன் வழிப்படுநர், ஆனிரை பின் சென்று அவற்றை மேய்த்துத் திரியும் ஆயர். பத்தர், உட்குழி. இது பத்தல் எனவும் வழங்கும். “பயநிரை சேர்ந்த பாழ் நாட் டாங்கண், நெடுவிளிக் கோவலர் கூவற் றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி1” என்று பிற சான்றோரும் கூறுப. நீர் பெய்து வைத்தற்கு மரத்தாற் செய்யப் படும் தொட்டிகளையும் பத்தர் என்பர். வன்னில மாதலின் கணிச்சி வேண்டப் பட்டது. “பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச், சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தல்” என்றும், அதன் நீரை யுண்டற்கு வரும் விலங்கினத்துள் ஆனினம் நிரல்பட நில்லாது “மூயின மொய்க்கும்1”, என்றும் யானைகள் நிரல்பட நின்று உண்ணும் என்றும் அறிக. சேய்மைக்கண் நின்று நோக்கு வார்க்கு முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து தோன்றும் சுரம், நெடியவும் குறியவுமாகிய பதுக்கை களும் கள்ளியும் காரையும் பிறவுமாகிய மரங்களும் நீனிறம் பயத்தலின் அலை நிலவும் கடல்போலக் கண்ணுக்கு எட்டு மளவும் கரையின்றிப் பரந்து தோன்றுதல் பற்றி, கானம் திரைய கடல்போன்றிசின் என்றார். திரைய கடல் என்புழித் திரைய என்பது பெயரெச்சக் குறிப்பு; “கால குருகு2” என்றாற் போல. போன்றிசின், படர்க்கைக்கண் வந்தது : “இகுமும் சின்னும் ஏனையிடத் தொடும், தகுநிலை யுடைய என்மனார் புலவர்3” என்பது காண்க. இவ்வுலகியல் வாழ்க்கைக்குப் பொருளின் இன்றியமை யாமையை வற்புறுத்த நெஞ்சினைக் கழறலுற்ற தலைமகன் துறக்கவுலகைப் படைத்தது போலின்றி இவ்வுலகைப் பிரிவுத் துன்பமும் வேனில் வெம்மையும், பிறவும் விரவப் படைத்தமை பற்றி இவ்வுலகைப் படைத்த முதல்வன்பால் குறை கண்டு, அதற்கு அவன் தான் படைத்த சுரத்தின் தீங்கைத் தான் நேரில் விரையாது பையச் சென்று உற்றறியாமை காரணமாம் என நினைந்து அவனை அச்சுரத்திடைச் செல்க என்பான், ஐது ஏகம்ம இவ்வுலரு படைத்தோன் என்றான். இவ்வுலகு படைத்தோன் என்றமையால், மேலுலகாகிய துறக்கவுலகு இவ்வாறு துன்பம் விரவப் படைக்கப்படாமை யுணர நின்றது. பொருட்பிரிவை யெண்ணுங்கால் தன்பக்கல் இருந்து முயக்கின்பம் நல்கும் காதலியின் மார்பிடைப் பெறும் இன்றுயில் தோன்றி வருத்து தலின் அதனை விதந்து குறுமகள் கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்கு உயிர்ப்பிட்ட வீங்குமுலை யாகத்துத் துயில் என்று இயம்புகின்றான். பிறாண்டும் நெஞ்சாற் பொருள் வலியுறுத் தப்பட்டு வருந்தும் தலைமகன் தன் நெஞ்சிற்கு, “செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு, எய்திய கனைதுயில் ஏற்றொறும் திருகி, மெய்புகு வன்ன கைகவர் முயக்கின், மிகுதி கண்டன்றோ விலனே நீநின், பல்பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச், செலவு வலியுறுத்தனை1” என்று கூறுவது காண்க. பொருள்வினை குறித்துப் பிரிவோர் மகளிரொடு சேறல் இன்மையின், அவன் சென்று தங்கும் கானம் பிரியுமவர்க்குத் தனிமைத் துயர் தருதல் ஒருதலை யாதலால், துயில் கெட வரூஉம் தனிமைத்து என்றான். இத் தனிமைத் துன்பக் கடலை ஒருவாறு ஆற்றிக் கடக்கலாமெனத் துணியினும், கானம் கடத்தற்கரிய கடல்போல் கரையின்றி பரந்து கிடக்கின்றதுகாண் என்பான், ஆயினும் கானம் திரைய கடல் போன்றிசினே என்பானாயினன். சுரத்திடத்து நிலவும் வெயில் வெம்மையை வெயில் வெய்துற்ற என்றும், இனிது செல்லுதற்காகாத வழியென்றற்குப் பரல்அவல் ஒதுக்கின் என்றும் கூறினான். ஆங்கே ஆனினம் மேய்த் துழலும் கோவலரை ஆன்வழிப்படுநர் என்றான். ஆகாத் தோம்பும் ஆயர் என்னாது ஆன்வழிப்படுநர் என்றது, ஆனிரைகட்கு வேண்டும் நீரும் நிழலும் முன்சென்று காண்டற் காகாதவாறு வெயிலவிர் வெப்பம் தெறுதலின், அவைதாமே சென்று காண அவற்றின் பின் சென்று சேர்கின்றன ரென்றற்கு, நீர் நின்ற கூவல் வறந்தமையின் ஆண்டுச் சுவறிய நீரைக் கோடற் பொருட்டுப் பத்தர் தோண்டினராகலின், ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தர் என்றும், பத்தர் காணப்பட்ட கூவல்தானும் வன்னில மாகலின் பண்டு அவர்களால் கணிச்சி கொண்டு வெட்டப்பட்ட தென்பான், கணிச்சியிற் குழித்த கூவல் என்றும் கூறினான். பத்தரிடத்து நீரை ஆனினம் உண்ணக்கண்டு நீர்வேட்கை மிக்க யானையினம் போந்து, அந்நீர் தம்மினத்துக்கே உரிய தாமாறு கவர்ந்துகொள்ளும் என்றது, இல்லிருந்து அறம்புரிந்தொழுகு வோர் பெறுதற்குரிய இன்ப வாழ்க்கையைப் பொருட் பிரிவு தோன்றித் தனக்குரியதாக்கித் தனிமைத்துன்பம் தாராநின்றது; இவ்வுலகியலின் இயல்பைப் படைத்தோன் அறிந்திலன்; அவன் பண்பு இருந்தவாறு என்னே என இரங்கியவாறு. இதனைப் பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியதாகக் கொள்ளின், ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தரை யானை யினநிரை கவர்ந்துகொள்ளும் என்றது, தலைமகன் பொருட்ட மைந்த தன் மேனி நலத்தைப் பொருட்பிரிவால் உளதாகும் பசலை பாய்ந்து கவர்ந்து கொள்வதாயிற்றென இரங்கியவாறாகக் கொள்க. அப்பொருட்கண் குறுமகள் என்றது தோழியை என வுரைக்க. தலைமகள் அயர்வு நீங்குதல் இதனாற் பயன் என வுணர்க. 241. மதுரைப் பெருமருதனார் இவர் மதுரையின்கண் வாழ்ந்த சான்றோருள் ஒருவர். பெருமருதன் என்பது இவரது இயற்பெயர். மதுரைப் பெரு மருதன் இளநாகனார் என்றொரு சான்றோர் நல்லிசைப் புலவர் நிரலில் காணப்படுகின்றார். அவர் பெயரை நோக்குமிடத்து, அவர் இவர்க்கு மகனாகலாம் எனத் தெரிதலின், பெருமருதனார் உயர்ந்த சான்றோர் குடியில் தோன்றிய உரவோர் என்று அறிய லாம். அதனால், இவர் தம்முடைய மகனையும் சான்றோனாக்கிச் சிறந்து விளங்குகின்றார் எனின் அது புனைவுரையாகாது. இவர் பாடிய இப்பாட்டு ஒன்றுதான் கிடைத்துள்ளது. கற்புக் கடம்பூண்டு இல்லிலிருந்து நல்லறம் புரிந்து ஒழுகும் தலைமக்கள் வாழ்வில் கடமை காரணமாகப் பிரிவு நிகழ்கிறது. தலைமகன் செவ்விய வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் தேடுவது குறித்துத் தலைவிபால் விடைபெற்று நீங்கினான். மான மாண் புடைய நல்ல இல்வாழ்க்கைக்குப் பொருளது இன்றியமை யாமையும், கடமையுணர்வும் நன்கறிந்தவளாதலின் தலை மகளும் அது தக்கதே என விடை தந்து அவன் வரவுரைத்த காலம் நோக்கி மனைக்கண் இருந்து வரலானாள். அவன் சென்ற சின்னாட்கெல்லாம் அவனது பிரிவால் உளதாய தனிமை அவளுடைய இளமையுள்ளத்தை அலைக்கத் தொடங்கிற்று. இளமைக்கண் உடம்புதரு பணிக்குரிய வேட்கை மிக்கு நின்று உயிரறிவை வருத்தித் தன்வரை நிறுத்துதற்கண் பெருவலி கொண்டு நிற்கும். அதனால், தலைமகள் தன் பெண்மையால் அறிவுத்திண்மை நெகிழ்ந்து உண்டியிற் சுருங்கிக் கண்டுயில் பெறாளாயினள். அவளுடைய மெலிவு கண்ட தோழி, தலைமகனது வாய்மை யையும், பொருளினது சிறப்பையும், கடமையின் மாண்பையும், கற்பின் பொற்பினையும் எடுத்தோதித் தலைமகன் சொல்வழி நின்று ஆற்றியிருத்தல் வேண்டுமென உளங்கொள்ளுமாறு வற்புறுத்தினாள். வேட்கை மிகுதியால் வெய்துற்று மெலிந்த தலைமகள், “நீ கூறியது ஒக்கும்; ஆயினும் காதலர் கருதிச் சென்ற பொருள் கணமும் நிலைபெற நில்லா நிலைமையுடைத்து; அதுவே போல இளமையும் அது நல்கும் இன்பமுமாகும். அவற்றின் இயல்பை நோக்காது, பொருள் ஒன்றையே நோக்கி அவர் சென்றதனால், என் கண் கலுழ்ந்து நீர் பெருகச் சொரியா நின்றன. காரும் கூதிருமாகிய காலங்களில் கடிது வீசி வாடை, இளவேனிலில் மெல்ல வீசுதலால், வேழத்தின் வெண்பூக்கள் வேந்து வீசிய கவரிபோல விரிந்து தோன்ற, மழை பெய்து கழிந்த விசும்பின்கண் பரவித் திரியும் முகிற் கூட்டத்திடையே, ஞாயிறு கண்ணிமைப்பது போல விளங்குதலும் மறைதலும் செய்யும் பகற்போது நீங்கின், இரவுப்போதில் பனி பெயல் தொடங்குகிறது, அக்காலத்து உளதாகும் குளிர், பிரிந்த காதலரது கூட்டத்தை நினைப்பித்து வருத்துகின்றது. நம் காதலர் சென்ற நாட்டிலும் இப்பருவம் தானே நிலவும்? அவ்விடத்தே இருத்தலைச் செய்யும் காதலர் நம்மை நினையார்கொல்லோ? நினைகுவரேல் உடனே தேரேறி மீளாதிரார்” என்றாள். “நில்லா வியல்பிற்றாய பொருளாற் பிணிப்புண்டு பிரிந்த காதலர், அவ்வியல்பினதாய இளமையின்பத்தாற் பிணிப்புண்டு வருந்தியிருக்கும் நம் வருத்தத்தை நினைத்திலர்” எனத் தலைவி எதிரழிந் துரைத்தது பெருமருதனார் உள்ளத்துக்குப் பெருமிதம் விளைத்தமையின் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறைப் புள்ளடி பொறித்த 1வரியுடைத் தலைய நீரழி மருங்கின் ஈரயிர் தோன்ற வளரா வாடை உளர்புநனி தீண்டலின் வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல்லுறப் பனிக்காற் கொண்ட பையுள் யாமத்துப் பல்லிதழ் உண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. இது, தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. உரை : உள்ளார் கொல்லோ - நினையாரோ; தோழி - ; கொடுஞ் சிறைப்புள் அடிபொறித்த - வளைந்த சிறகுகளையுடைய நீர்க்குருகுகளின் அடி சுவடுபடுத்தலால்; வரியுடைத் தலைய - வரித்தாற் போலும் இடத்தினையுடைய; நீரழிமருங்கின் - நீர்வற்றிய பக்கங்களில்; ஈர் அயிர் தோன்ற - குளிர்ந்த நுண் மணல் தோன்றிப் பரக்க; வளரா வாடை உளர்பு நனிதீண்ட லின் - மெல்லிய வாடைக்காற்றுப் போந்து இதழ்கள் தனித் தனியே பிரிந்து விரியுமாறு மிகவும் அலைத்தலால்; வேழ வெண்பூ விரிவன - வேழத்தின் வெண்மையான பூக்கள் விரிந்து தோன்றுபவை; பலவுடன் - பலவாகிய; வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய - வேந்தர் மருங்கில் வீசப்படும் சாமரை போலப் புதர்களில் நின்று அசைந்து அழகிய காட்சி வழங்க; மழைகழி விசும்பின் - மழை பெய்து கழிந்த முகில்கள் இயங்கும் விசும்பின்கண்; ஞாயிறு மாறி விழித்து இமைப்பதுபோல் - ஞாயிறு மாறிமாறிக் கண்களைத் திறந்து மூடி இமைத்தாற் போல்; விளங்குபு மறைய - முகிலிடை மறைந்தும் வெளிப் பட்டும் வெயில் செய்ய; எல்லை போகிய பொழுதின் - பகற்போது கழிந்த அளவில்; எல்லுற- இரவுப்போது எய்தவும்; பனிக்கால் கொண்ட பையுள் யாமத்தும் - பனிபடிதலால் குளிர்மிக்க வருத்தம் பொருந்திய யாமத்தின்கண்ணும்; பல்லி தழ் உண்கண் கலுழ - பல இதழ்களையுடைய பூப்போன்ற மைதீட்டிய கண்கள் நீர் சொரிய; நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோர் - நிலை பேறில்லாத பொருள்மேற் சென்ற வேட்கையால் உள்ளம் பிணிப்புண்டு நம்மிற் பிரிந்து சென்றோ ராகிய காதலர் எ.று. தோழி, உண்கண் கலுழப், பிரிந்திசினோராகிய காதலர், பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, நம்மை உள்ளார் கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கொடுஞ்சிறை: கொடுமை, வளைவு; “அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை”1 என்ப பிறரும். நீர் சிறிதாயவழிக் குருகுகள் சேற்றில் அடிவைத்து நடத்தலால், அவற்றின் சுவடு படிந்த இடம் நீர் வற்றியபோது கோடு கோடாய்க் கோலமிட்டாற் போலத் தோன்றுதலின், புள்ளடி பொறித்த வரியுடைத் தலைய என்றார். தலை, ஈண்டு இடத்தின் மேற்று. சேறாகிய இடம், நீர் வற்றிப் புலர்ந்தவிடத்து வெயில் வெம்மையால் துகள் கூர்ந்து காற்றில் பரத்தல் பற்றி, நீரழிமருங்கின் ஈர்அயிர் தோன்ற என்பாராயினர். அயிர், நுண்மணல்; கருமணலுமாம், “சின்னீர் அறுதுறை அயிர்மணல்2” என்பது காண்க. இவ்வாடை கார்ப்பருவவரவில் தோன்றுவ தாகலின் பின்பனிப் பருவத்து வாடையை “வளரா வாடை” என்றார். தமிழகத்தில் மகளிர் கருக்கொள்ளுங் காலம் பெரும் பாலும் வாடைக்காலமாகலின், அது சிறப்பித்துக் கூறப்படுகிறது என அறிக. வேழம், கொறுக்கச்சி; அதன் பூ கரும்பின் பூப்போல வெளிதாய் இதழ் விரிந்து சாமரையை நினைப்பித்தலின் வேந்து வீசு கவரியின் என எடுத்தோதினார். மழைப் பருவம் கழிந்தபின் விசும்பின்கண் தோன்றும் முகில்கள் கருமையும் வெண்மையு மாய்ப் பரத்தலின், கருமுகிற் படலத்தால் மறைப்புண்ணும் ஞாயிறு கண்மூடுவது போலவும், அது நீங்கியவழி விளங்குவது, விழிப்பது போலவும் இருக்குமாறு தோன்ற, ஞாயிறு மாறி விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய என்றார். எல்லை, பகல். பனிபடியும் இரவுப் போதில் தனித்திருப்போர்க்கு வேட்கை மிக்கு நோய் செய்தல்பற்றி அதனைப் பனிக்கால் கொண்ட பையுள் யாமம் என்றார்; யாமத்து என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. பகற்போதில் உடல் வியர்க்க வருந்தி உழைப்போர்க்கு முன்னிரவில் பேருறக்கம் எய்துதலால், பின்னிரவே வேட்கை தோன்றிமிகும் காலம் என அகநூல்3 வல்லாரும் கூறுப. பொருள்வேட்கையைப் பொருட் பிணி என்றல் வழக்கு. தலைமகன் பொருள் கருதிப் பிரிந்தானாக, ஆற்றியிருக்கும் தலைமகள் உள்ளத்தில் வேட்கை தோன்றி வெதுப்புதலால், உடல்மெலிந்து உறக்கம் குன்றி அவள் வருந்துவது கண்ட தோழி, இளமையின் எழிலும், இன்பத்தின் அமைதியும், இல்வாழ்வின் சிறப்பும் பொருளாலல்லது வளம்பெறா எனத் தேர்ந்து காதலர் பிரிந்தாராகலின், நீ வருந்துதல் நன்றன்றென வற்புறுத்தவும், தலைமகள் மனம் தெளிவுறாது இளமையும் இன்பமும் போலப் பொருளும் நிலைபெறாது கழியும் நீர்மைத்தாகலின், பொருள் ஒன்றே கருதிக் காதலர் யாம் கண்கலுழ்ந்து வருந்தச் சென்றது வியப்புத் தருவதொன்று என்பாள், பல்லிதழ் உண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோர் என்றாள். இனித் தம்பால் உள்ள பொருளின் நிலையாமை நினைந்து, அது நிலை பெறும் வண்ணம் பெரும்பொருள் ஈட்டுவான் நெடிது சென்ற காதலர், பொருளின் நிலையாமை நினைந்தபோது, அவண், இளமையின் வளமை, இன்பத்தின் அமைதி ஆகியவற்றை நினையாராயினர்காண் என்பாள் உள்ளார் கொல்லோ என்றாள். பொருளின் நிலையாமை மேற்பட்டு நின்று அவர் உள்ளம் பிணிக்கொண்டமையின், இவற்றை நினையாராயினர் போலும் என்பாள் நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோர் என்று தோழி கூற்றைக் கொண்டெடுத்து மொழிவதாக அமைந்தமை நோக்குக. அவரது அகநிலை இதுவாயின், புறத்தே பகற்போது கழியத் தோன்றும் இரவின்கண், பனிபடுதலால் குளிர் மிக வுண்டாகும் வருத்தம், என்னை அவரை நினைப்பிப்பது போல, அவரையும் என்னை நினைப்பித்து விரைந்து மீளச்செய்திருக்கும்; அவர் மீண்டு வாராமையின் அவரது உள்ளம் என்னை நினைத் திலது போலும் என்பாள், பனிக்கால் கொண்டபையுள் யாமத்தும் என்றாள். பனிப்பருவத்து வளரா வாடையாயினும், கார்ப்பருவவரவில் தளவு கொன்றை முதலியவற்றை மலர்வித்துச் சிறப்பித்தாற் போல, வேழத்தின் வெண்பூவைத் தீண்டி மலர்த்திப் புதலணி செய்யவும், கார்ப்பருவத்தே மழைமுகில் கறுத்துத் திரண்டு ஞாயிற்றை மறைத்து அதன் வெம்மையை மாற்றினாற் போல இப் பனிப்பருவத்தில் மாறி மாறி மறைக்கவும், கார்ப் பருவக் கங்குல்யாமம், தன் குளிர்ப்பால் கைகவர் முயக்கம் பெறுவித்தாற் போல, அதனை நினைப்பித்தலில் தவிராதாகவும், நம் தலைவர் நினையாராயினவாறு என்னை என்பாள் உள்ளார் கொல்லோ தோழி என்றாள். நெஞ்சில் நிகழ்வன சொல்லி இதனால் அயாவுயிர்ப்பது பயன். 242. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் பெருங்கண்ணனார் என்ற இச்சான்றோர், மான் கன்றினை விழிக்கட்பேதை என்று சிறப்பித்த நயத்தால், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் என்று குறிக்கப் படுகின்றார். பெருங் கண்ணனார் என்ற பெயர் தாங்கிய சான்றோர் பிறர் உண்மையின், இவர் இவ்வாறு சிறப்பிக்கப் பெறுவது இன்றியமையாதாயிற்று, இவரது ஊர்ப் பெயரினும், இது மிக்க சிறப்புடைத்தாகலின், இந்நூலைத் தொகுத்த சான்றோர், இவருடைய பெயரை வேறு வகையால் சிறப்பியாராயினர் போலும். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் தொகை நூல்களிற் காணப்படவில்லை. இன்றியமையாத கடமை காரணமாகத் தலைவன் தன் மனையின் நீங்கிச் சென்றான். அப்போழ்து, அவன் தன் மனை யுறையும் காதலிக்குத் தான் மேற்கொண்ட வினை முடித்துக் கார்ப்பருவ வரவில் மீள்வதாக வற்புறுத்தியிருந்தான். அவளும் அவன் சொல்வழியே நின்று பிரிவாற்றியிருந்தாள். கார்ப்பருவம் தொடங்குமளவில் அவன் குறித்த வினையும் முடிவுற்றது; அவனது நெஞ்சமும் காதலிபால் கடிது செல்வதாயிற்று. வினை வழி நின்ற துணைவரும் இளையரும் உடன்வரத் தலைமகன் தன் மனை நோக்கித் தேர் ஏறினான்; தேர்ப்பாகனுக்குத் தேரை விரைந்து செலுத்துமாறு பணிக்கின்றான். அவன் கண்ணெதிரே நின்ற கானம், கார்கால வரவைப் புதிது மலர்ந்த மலராலும் தளிர்களாலும் காட்டிற்று. ஒருபால், களர் நிலத்தில் மானினம் மேய்ந்துகொண்டிருந்தன. வினைமுற்றி யேகும் துணைவர்களின் தேரரவம் கேட்டதும், அம் மானினம் மருண்டோடின. அவற்றுள் கன்றீன்ற மான் ஒன்று, தன் கன்றைத் தொடர்ந்து ஏனைத் தன் இனமான கூட்டத்தின் நீங்கி ஓடத் தலைப்பட்டது. அது கண்டதும், அதன் ஆணாகிய கலைமான் அதனைப் பின் தொடரவோ இனத்தின் நீங்கவோ மாட்டாது ஏமுற்று நின்றது. அவ்வாறு நின்ற அந்த ஆண்மானின் காதலன்பு, தலைமகன் உள்ளத்தைத் தொட்டு அலைத்தது. தானும் அவ்வாறே விரைந்து சென்று தன் காதலியைக் கூடி நிற்க வேண்டுமென்று எழுந்த வேட்கையால், அவன் தேர்ப்பாகனை நோக்கி, “கார் தொடங்கின்று; பாக, நின் தேர் விரைந்து செல்க” என்று சொல்லிக் கலைமான் நின்ற காதற் காட்சியையும் அவனுக்குக் காட்டினான். இந்த இனிய காட்சி யைக் கண்ட பெருங்கண்ணனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துச் சொல்லோவியம் செய்கிறார். இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் புதல்இவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து செல்க பாகநின் தேரே உவக்காண் கழிப்பெயர் 1 களரிற் போகிய 2 மடமான் விழிக்கட் பேதையோ டினன்இரிந் தோடக் காமர் நெஞ்சமோ டகலா 3தேமுறூஉ நின்ற இரலை யேறே. இது, வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார்கண்டு பாகற்குச் சொல்லியது. உரை : இலையில் பிடவம் ஈர்மலர் அரும்ப - இலையுதிர்ந்த பிடவங்கள் குளிர்ந்த மலர்களை நல்கும் அரும்புகளை ஈனவும்; புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழ - புதர்களிற் படர்ந் திருக்கும் கொடிமுல்லையின் அரும்புகள் மலரவும்; பொன் எனக் கொன்றை மலர-கொன்றைகள் பொன்போன்ற பூக்களைப் பூக்கவும்; மணியெனப் பன்மலர்க் காயா குறுஞ்சினை கஞல-மணியின் நிறத்தையுடைய பல மலர்களைத் தாங்கும் காயா குறுகிய கொம்புகளிடையே தளிர்கள் நெருங்கித் தோன்றவும்; காலை கார் தொடங்கின்று -இக்காலம் கார்ப்பருவத்தைத் தொடங்குகின்றது; பாக - பாகனே; நின் தேர் வல் விரைந்து செல்க - நின் தேரை மிக விரைவுடன் செலுத்துவாயாக; உவக்காண் - உவ்விடத்தே பார்; கழி பெயர் களரின் போகிய மடமான் - கழிநீர் பெருகிப் பரவும் களர் நிலத்தே சென்ற இளமான்; விழிக்கண் பேதையொடு இனன் இரிந்து ஓட - விழித்த கண்ணையுடைய பேதைப்பருவத்ததாகிய தன் கன்றுடனே இனமாகிய ஏனை மான்கூட்டத்தினின்றும் நீங்கி வேறிடம் நோக்கி ஓடவும்; காமர் நெஞ்சமொடு அகலாது - காதல் மிகுதியால் அழகுற்ற நெஞ்சமுடைமையால் இனத்தி னின்று நீங்கவும் மாட்டாது பிணையினைத் தொடரவும் மாட்டாது; ஏமுறூஉ நின்ற இரலையேறு -மயங்கி நிற்கும் கலைமானை எ-று. பாக, பிடவம் அரும்ப, தளவப் பூங்கொடி அவிழ, கொன்றை மலர, காயா குறுஞ்சினை கஞல, காலை கார் தொடங்கின்று; ஆகலின், நின்தேர், வல்விரைந்து செல்க; மடமான் பேதையோடு இனன் இரிந்தோட, அகலாது ஏமுறூஉ நின்ற இரலை யேற்றினை உவக்காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முதுவேனிலில் இலை பழுத்து உதிர்ந்த பிடவமரம் கார்கால வரவில் தளிரும் இலையும் அரும்பும் பெறுதலின், இலையில் பிடவம் ஈர்மலர் அரும்ப என்றார். தளவம், கொடிமுல்லை; இது தளவு என நிற்றலும் உண்டு. “புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை, நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்கு பிணியவிழ”1 எனப் பிறரும் கூறுவது காண்க. காயாம்பூ நீலமணியின் நிறமுடைமை பற்றி மணியெனப் பன்மலர்க் காயா” என்றார்;2 “மணிமருள் பூவை” என்ப. பிணைமானையும் இரலை யேற்றையும் ஏனை மானினத்தையும் சுட்டி நிற்றலின், உவக்காண் என்றார். “உவக் காண் தோன்றுவ”3 என்புழிப் போல. களர், உப்பு விளை நிலம் . இளம்பிணை என்றற்கு மடமான் என்றார். மானின் இளங் கன்றின் விழி மருண்ட நோக்கமும் சுழற்சியும் பெற்றிருத்தலால், விழிக்கண் எனவும். பிரிதற்காகாத இனத்தின் நீங்கி வேட்டுவர் கண்ணில் இனிது புலப்படுமாறு செடிகொடி இல்லாத களர் நிலத்தே துள்ளி யோடும் இளமை மிகுதிபற்றி விழிக்கட் பேதை எனவும் சிறப்பித்தார். இது பற்றியே பெருங்கண்ணனாரும் இதனாற் சிறப்பிக்கப் பெற்றார். பிணைமான் பாற் சென்ற காதலோடு இனந்தழுவும் இயல்பும் நிறைதல் நெஞ்சிற் கழகு தருதலின் காமர் நெஞ்சம் எனல் வேண்டிற்று. காதலொன்றே யுடையதாயின், தன்னலத்தின் பாற்பட்டு அழகமையாதென அறிக. காதலால் உள்ளம் பிணைமான்பாற் செல்கின்றமையும் இனம் பேணும் இயல்பால் நீங்கமாட்டாமையும் அலைத்தலால் மயங்கி மருண்டு நிற்கும் ஆண்மானின் நிலையை, காமர் நெஞ்சமொடு அகலாது ஏமுறூஉ நின்ற இரலையேறு என்று குறிக்கின்றார் கானத்தின்கண் பிடவமும் தளவமும் கொன்றையும் காயாவும் முறையே அரும்பியும் மலர்ந்தும் தளிரேந்தியும் கார்ப்பருவ வரவைக் காட்டக் கண்ட தலைமகன், அது தன் மனையாட்குத் தான் குறித்த பருவமாதலை நினைத்து வியந்து கூறுகின்றனனா தலின் கார் தொடங்கின்றே காலை என்றும், அதுகண்டவழித் தலைமகள் பெரிதும் வருந்துவளாதலால் விரைந்து சேறல் வேண்டுமெனப் பாகற் குணர்த்துவான், செல்க பாக நின் தேரே என்றும், ஒருபால், பிணைமான் ஒன்று, தன் பேதைக்கன்று களர்நிலத்தே துள்ளியோட, அதன் பின்னே நெடுந்தூரம் செல்வது கண்ட அதன் ஆணாய கலைமான், அதன்பாற் சென்ற காதல் தன்னுள்ளத்தை ஈர்ப்பவும், ஏனைத் தன் இனமான மான்திரளி னின்றும் நீங்குதல் அவற்றிற்கு அரணாகாமை நினைத்து அகலாமல் மயங்கிய மனத்தால் மருண்டு நிற்கும் காட்சி, தன் உள்ளத்தில் தலைவிபால் உற்ற பெருங்காதலைக் கிளர்வித்துத் தன்னை அவள்பால் செலுத்துவதைப் பாகற்குச் சொல்லால் உரைக்காது குறிப்பால் உணர்த்துவான் அதனைப் பாகற்குக் காட்டி உவக்காண் களரிற் போகிய மடமான், விழிக்கட் பேதையோடு இனன் இரிந்தோடக், காமர் நெஞ்சமொடு அகலாது, ஏமுறூஉ நின்ற இரலை யேறே என்றும் கூறுகின்றான். தேடூஉ நின்ற இரலை,யேறு என்று பாடங்கொண்டு “ஆண் மான், பெண்மானையும் கன்றையும் தேடாநின்றதனைப் பார். எனவே, யான் என் காதலியையும் புதல்வனையும் காண மிக விருப்பமுடையேன் என்பதைப் பிறிதொன்றன் மேல்வைத்து அறிவுறுத்தினான் என்பது முண்டு. பாகன் விரையச் செலுத்து வானாவது பயன். 243. காமக்காணி நப்பசலையார் நப்பசலையார் என்பது இவரது இயற்பெயர். நக்கீரன், நப்பூதன் என்றாற் போல இவரும் நப்பசலையார் எனக் குறிக்கப் பெறுகின்றார். காமக்காணி என்பது பண்டைநாளில் அரசர் களால் விரும்பித் தரப்பட்ட காணியாட்சிச் சிறப்புக்களுள் ஒன்று. கூத்தர்க்குக் கூத்தாட்டுக் காணி என்றும், தச்சர்க்குத் தச்சக்காணி என்றும் வழங்கினாற் போல, அரசன் விரும்புவனவற்றை அவன் விரும்பியவாறே செய்த செயல் நலம் கருதி வியந்து அவன் அளிக்க வரும் காணி யுரிமையாதலின் அது காமக்காணி எனக் கருதப்பட்டது. காமக்காணி என்ற இச் சிறப்புப் பெயர் சங்க காலத்தே யன்றி இடைக்காலச் சோழ பாண்டியர் அரசிலும் பிற்காலத்திலும் வழக்கில் இருந்துள்ளது. இச்சிறப்புப் பெற்றோர் வழிவழியாகத் தம்மைக் காமக்காணி சலாகன் திருமழுவாடி1 என ஒருவனையும், திருநாகேச்சுரம் கல்வெட்டு ஒன்று, காமக்காணி வடுகன் நாராயணன், காமக்காணி மாறன் விஷ்ணு, காமக்காணி மாதேவடிகள், காமக்காணி இளைய சீராமன் வடுகன்”2 என்பா ரையும், வேள்விக்குடிச் செப்பேடு3 ‘கொற்கை கிழான் காமக் காணி நற்சிங்கன்4” என்பானையும் குறிப்பது காண்க. ஏடு எழுதினோர் காமக்காணி என்பதைக் காமக்கணி எனப் பிழையாக எழுதிவிட, அதனைத் திருத்திக்கொள்ளாது காமக்கணி என்றது காமக்கண்ணி என்பதன் விகாரமாகக் கருதி, அது காமாட்சி என்ற வடசொல்லின் மொழி பெயர்ப்பு எனப் பொய் கூறிவிட்டனர். காமாக்ஷி என்ற வடசொல் தானும் மிக்க பிற்காலத்து விசயநகர வேந்தர் காலத்தில்தான் தோன்றிற் றென்பதையும் அவர் நோக்க வில்லை. இவர் மதுரைக் காமக்காணி நப்பசலையார் என்றும் ஏடுகளில் காணப்படுவதாகத் திரு. நாராயணசாமி அய்யர் குறிக்கின்றார். அஃதேல் இவர் மதுரையைச் சேர்ந்தவர் என்று கோடல் வேண்டும். நப்பசலையார் என்ற பெயரமைதி நோக்கி இவரைப் பெண்பாலராகக் கூறுகின்றனர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் உளது. மாண்புடைய மனைவாழ்க்கை புரிந்து வரும் தலைமக்க ளிடையே, தலைமகன் பொருள் குறித்துப் பிரிவானாயினன். அவனது பிரிவு தலைமகட்கு மிக்க வருத்தம் பயந்தது. கண் ணுறக்கமின்மையும் கையறவும் பெரிதாயினமையின் அவள் மேனி மெலிந்து வேறுபடலானாள். அது கண்டு வினவிய தோழிக்குத் தலைமகள், “வேனிற் பருவத்தில் புதுத்தளிர் ஈன்று பொலிவுற்று விளங்கும் மாம்பொழிலின்கண் குயில்கள் இருந்து கூவுவதுகாண்: இளமை கெழுமிய வாழ்க்கை உருண்டோடும் கவறு போல நிலையின்றிக் கழிந்து நீங்குவது; ஆகலான், ‘அறிவுடைய நன்மக்களே! கூடியுறையும் நீவிர் இனி நும் காதலியைப் பிரிந்து நீங்குவதைக் கைவிடுவீர்களாக’’ என்று அக்குயிலோசை குறிப் பதைக் கேட்பாயாக; இவ்வண்ணம் கூடினோரைப் பிரியற்க எனத் தெருட்டும் ஓசை தனியவரை வருத்துவதாகும். இதனை நம் காதலரும் நன்கறிவர். அறிந்துவைத்தும் அவர் பிரியலுற்றார் எனின், கூடியிருந்து செய்யும் அறத்தினும் பிரிந்து சென்று பெறும் பொருள் தலைவர்க்குச் சிறந்தது போலும், இன்றேல் பிரிந்து செல்லாரன்றோ?” என்றாள். தலைவியது இக்கூற்றின்கண், அறஞ்செய்யும் நோக்கமே வீறு கொண்டு விளங்குவதும், தலைவன் பிரிவுக்கேதுவாகிய பொருள், அறத்தை நோக்க அத்துணைச் சிறப்புடைத் தன்றென்பதும், அதனை விரும்பித் தலைமகன் சென்றது தன் மெலிவுக்கு ஏது வாயிற்றென்பதும் கண்ட நப்பசலையார்க்கு வியப்புப் பெரிதா யினமையின் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய துறுகல் அயல தூமணல் அடைகரை அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப் பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்ந் தன்ன நில்லா வாழ்க்கையிட் டகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய்யுற இருந்து மேவா நுவல இன்னா தாகிய காலைப் பொருள்வயின் பிரிதல் ஆடவர்க் கியல்பெனின் அரிதுமன் அம்ம அறத்தினும் பொருளே. இது, பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. உரை : தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய துறுகல் - தேன் உண்டாகும் மலையிடத்துத் தெளிந்த நீர்ச்சுனையைச் சார்ந்த பாறைக்கு; அயலது தூமணல் அடைகரை - பக்கத்தே தூய மணல் பரந்த கரையின்கண்; அலங்கு சினை பொதுளிய நறுவடி மாஅத்து- அசைகின்ற கிளைகளில் தளிர்த்துள்ள நறிய வடுக்களையுடைய மாமரத்தின்; பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில் - இலைச் செறிவுகளில் தங்கும் அழகிய கண்களை யுடைய கரிய குயில்கள்; கவறு பெயர்ந் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு - கவறு உருண்டோடுவது போல நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டு; அகறல் ஓம்புமின் -இன்பத்துணையாகிய மனையாளைக் கைவிட்டுப் பிரியன்மின்; அறிவுடையீர் என-அறிவுடை நன்மக்களே என்று; கையறத் துறப்போர்க் கழறுவ போல - பிரிவுத்துயரால் கையற் றொழியுமாறு பிரிவோர்க்குக் கடிந்துரைத்து விலக்கு வது போல; மெய்யுற இருந்து மேவர நுவல் - பெடையுடன் கூடியிருந்து கேட்போர் உள்ளத்தே விருப்பமுண்டாகக் கூவா நிற்கவும்; இன்னாதாகிய காலை-- நமக்குத் துன்பந்தருவதாகிய இக்காலத்தும்; பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின் - பொருள் குறித்து மகளிரைப் பிரிந்து சேறல் ஆடவர்க்கு இயல்பு என்று கூறப்படுமாயின்; அறத்தினும் பொருள் அரிது மன் - அறத்தைக் காட்டிலும் பொருள் பெரிதும் அருமை யுடைத்துப்போலும் எ.று. பொதும்புதோ றல்கும் குயில், துறப்போர்க் கழறுவபோல, மெய்யுற இருந்து. மேவர நுவலவும், இன்னாதாகிய காலைப், பொருள்வயின் பிரிதல், ஆடவர்க்கு இயல்பு எனின், அறத்தினும், பொருள் அரிதுமன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. மலை யிடத்துப் பெரும் பாறைகளில் தேனினம் கூடு அமைத்துத் தேனீட்டி வைப்பதுபற்றித் தேம்படு சிலம்பு என்றார். அடை கரை, கான்யாற்றங் கரையுமாம். மாவின் தளிர், மிக்க மென்மை யுடைத்தாகலின், மெல்லிய காற்றுக்கும் இனிது அசைந்து தோன்றுவதுபற்றி, அலங்குசினை என்றும், குறித்தார். வடி, மாவடு. பொதும்பு, ஈண்டு இலைச்செறிவு. மேற்று, கவறு சூதாடு கருவி, இஃது உருண்டு ஓடும் இயல்பிற்றாகலின் நில்லாது பெயர்தலுக்கு உவமமாயிற்று. “உருளாயம்”1 எனத் திருவள்ளுவ னாரும் கூறுவது காண்க. வாழ்க்கை, இளமையோடு கூடிய இன்ப வாழ்க்கை. நில்லா வாழ்க்கையின் நிலையாமை யறிந்து ஒழுகுவது அறிவுடைமையாதலின், அறிவுடையீர் எனல் வேண்டிற்று. கையறத் துறத்தல், கையற்று வருந்துமாறு பிரிதல். கழறுதல், இடித்துரைத்தல். பிறர்க்கு அறங்கூறுவோர், தாம் அதன்கண் வழுவுதல் கூடாமையால், கூவும் குயில் தன் பெடையுடன் கூடியிருக்குமாறு தோன்ற மெய்யுற இருந்து என்றார். குயில் கூவுந்தோறும் பிரிவு நிகழ்ச்சி தோன்றி வருத்தம் செய்தலின், அக்காலத்தை இன்னாதாகிய காலை என்றார். “கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப், பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல, அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில், ஆனா தகவும் பொழுது”1 என்று பிறரும் கூறுதல் காண்க. அருமை, ஈண்டுச் சிறப்புக் குறித்து நின்றது. மன்: பெரும்பான்மைப் பொருட்டு. மாவும் புள்ளும், தத்தமக்குரிய துணையொடு இன்புற்று மகிழும் வேனிற் காலத்தில், காதலன் பிரிந்ததனால் கையற்று வருந்தும் தலைமகட்கு, நறிய மாவடுவும் தளிரும் கொண்டு செழித்து நிற்கும் மாஞ்சோலையில் குயில்கள் துணையொடு கூடி இன்புறக் கூவும் இனிய ஓசை செவிப்படவும், பிரிவுத் துன்பம் தோன்றிப் பெருவருத்தம் செய்தலால், குயிலோசை வந்த மாம்பொழிலை நோக்கி அது தளிர்த்துத் தழைத்து நிற்பதும், அதற்குரிய இடம் தூய மணல் பரந்த அடைகரையாவதும் கண்டு, தூமணல் அடைகரை அலங்கு சினை பொதுளிய நறுவடி மா என்று புகழ்ந்து கூறினாள். கண்ணுக்கு இனிய காட்சியின்பம் நல்கும் மாம்பொழில், குயிலோசையால் செவிக்கு இன்பம் நல்கும் இயல்பிற்றாகவும், தலைமகட்கு அதனைப் பயவாது, அவளது அறிவுக் கண்ணைத் திறந்ததாக, உலகியல் வாழ்வின் நிலையாமை ஆங்கே விளங்கித் தோன்றலின், அதனை விதந்து, கவறு பெயர்ந்தன்ன நில்லா வாழ்க்கை என்றும், அங்ஙனம் நில்லா இயல்பினதாய வாழ்வு நிலையான பொழுதே அதனை ஆர நுகர்தல் வேண்டுமேயன்றி அதனை இடைவைத்துப் பிரிந்து ஒழுகுதல் அறிவுடைமையாகாது என்பது தோன்ற இட்டு அகறல் ஓம்புமின் அறிவுடையீர் என்றும், இத்தெருட்சியும் கையறத் துறந்தேகும் கன்மனவர்க்கே வேண்டுவதாகலின் அவர்களை நோக்கி உரைப்பது போலத் தோன்றினமையின், கையறத் துறப்போர் என்றும், அப்பெற்றியோர் கழறிக் கூறினன்றிக் கொள்ளாமை பற்றிக் கழறுவ போல என்றும் குயில்கள் கூவி யுரைப்பதாகக் கூறினாள். கூடியிருந்தோர்பால் பிரிவு நிகழின், பிரியப்பட்டோர் செயலற்றொழிதல் இயல்பா தலால், பிரிவோர் அதனை நோக்காது பிரிவதுபற்றிக் கையறத் துறப்போர் என்றும், அப்பெற்றியோர் கழறிக் கூறினன்றிக் கொள்ளாமை பற்றிக் கழறுவபோல என்றும் குயில்கள் கூவி யுரைப்பதாகக் கூறினாள். கூடியிருந்தோர்பால் பிரிவுநிகழின், பிரியப்பட்டோர் செயலற்றொழிதல் இயல்பாதலால் பிரிவோர் அதனை நோக்காது பிரிவது பற்றிக் கையறத்துறப்போர். என்றாள் பிறர்க்கு அறம் கழறும் தாம் அவ்வறத்தின் நீங்காமை இன்றியமை யாதாகலின், குயில்கள் துணையுடன் இருந்து கூவுமாறு தோன்ற, மெய்யுற இருந்து என்றும், கூடியுறைவோர்க்கு அக்குயிலோசை செவிச்சுவை யமுதமாய் இன்பம் தேக்குதலின், மேவர நுவல என்றும், பிரிவின்றிக் கூடியிருப்போர்க்கு வேனில் இனிமையும் பிரிந்தோர்க்கு இன்னாமையும் பயப்பதாயினும், இன்புறு வோர்க்கு விரைந்து சுருங்கிக் கழிதலும், பிரிவால் துன்புறு வோர்க்கு நெடிது நின்று விரையக் கழியாமையும் நோக்கி இன்னாதாகிய காலை என்றும் கூறினாள். அக்காலை, தோழி இடைமறித்து, அருளும் அன்பும் அறமும் இன்பமும். பொருளில் வழி இல்லையாகலின், பொருள்வினை குறித்துப் பிரிதல் ஆடவர்க்கு இயல்பென்றும், புறத்தே நெடிது சென்று பொருள்வினை செய்தற்கு ஏனைக் கார் கூதிர் முதலிய காலங்களினும் பின்பனியும் வேனிலும் சிறந்தனவாகலின் இளவேனிற் காலையில் பிரிந் துறைதல் தலைமகற்கு முறையே என்றும் கூறினாளாக, இன்னா தாகிய காலைப் பொருள் வயிற் பிரிதல் ஆடவர்க்கு இயல் பெனின் என்று அதனையே கொண்டெடுத்து மொழிந்து மறுப் பாளாய், ஆடவர்க்கு அறத்தினும் பொருள்தான் சிறந்தது போலும் என்பாள் அரிதுமன் அம்ம அறத்தினும் பொருளே என்றாள். அம்ம என்றது வியப்புக் குறித்து நின்றது. இதனால் பயன் அயாவுயிர்த்தல். 244. கூற்றங் குமரனார் கூற்றன் என்பார்க்கு மகனாதலால் இவர் கூற்றங்குமரனார் எனப்படுகின்றார். கூற்றன் கூற்றுவன் என்றாற் போலும் இயற் பெயருடையார் பலர் சங்க காலத்தேயன்றி இடைக்காலப் பாண்டிய சோழர் காலத்திலும் இருந்துள்ளனர். இதனைக் கல்வெட்டுக்களில் பரக்கக் காணலாம். இவர் பெயர் ஏடுகளில் கூத்தங்குமரனார் என்றும் காணப்படுகிறது. இவர் பாடியதாக இப்பாட்டு ஒன்றுதான் உளது; களவு நெறியால் காதற் பிணிப்புற்ற தலைமக்களில், தலை மகன் உள்ளத்துக் காதற் பெருமையைப் பல்லாற்றானும் தலை மகளும் தோழியும் ஆராய்ந்தறிந்து அவனை மணந்து கோடற் கண் பெருவிதுப்புடையராயினர். தோழியும் அவனை வெளிப் படையாலும் குறிப்பாலும் வரைவுகடாவி வந்தாள். தலைமகன், தலைவியுள்ளத்துக் காதலுண்மையை நன்கறிந்து கொண்டானா யினும், அக்காதல் பெருகித் தன்னையின்றி ஒரு நொடிப்போதும் அமையாத அளவுக்கு முறுகுதல் வேண்டி விரைந்து வரைந்து கொள்ளக் கருதாது குறிவயிற் கூடிப் பிரிந்தும், ஒருவழித்தணந்தும், களவே விரும்பி வரைவு நீட்டித்து ஒழுகினான். இதனால் தலைமகட்கு வருத்தம் மிகுந்து மேனி மெலிவுக்கு ஏதுவாயிற்று. அவன் கருத்துணராத தோழி, வரைவு வேண்டியவிடத்துத் தலைவியின் தமராயினார் மகள் மறுப்பரென்ற அச்சத்தால் அதற்கு முயலாது நீட்டிக்கின்றான் போலும் என எண்ணி, அவர்கட்குத் தலைமகளது காதலுறவை முன்னுறக் குறிப்பா யுரைத்து வரைவுடன்படச் செய்தல் வேண்டுமெனக் கருதுவாளா யினள்; தோழியின் அறத்தோடுநிலைக் கருத்தை உணர்ந்து கொண்ட தலைமகள், தன் உடன்பாட்டைப் பட்டாங்கு மொழிதல் பெண்மைக்கு ஒத்ததன்மையின் உள்ளுறையால் குறிப்பாற் காட்டி, வெளிப்படையில், தோழியைக் கொடுமை கூறுவாளாய், “தோழி, செயலைத் தளிர்போலும் என் மாமைக்கவினையும் அதனையுண்டு இப்போது பரந்திருக்கும் பசலையையும் நீ கண்டுள்ளாய், அவ்வாறு இருப்பவும், நீ என் வேறுபாட்டினைத் தலைமகனுக்கு உணர்த்துவதோ, என் மேனி மெலிவுக்குரிய ஏதுவினை அறியாமல் வேறு வகையில் முயன்று வருந்தும் அன்னைக்கு என் நோய்க்குரிய மருந்து இதுவென உரைப்பதோ ஒன்றும் செய்கின்றாயில்லை; நீ மிகவும் கொடியை” என மொழிந்தாள். தோழிக்கு ஒருபால் வியப்பும் ஒருபால் முறுவலும் தோன்றின. தலைமகளுடைய இக்கூற்றின்கண், அறத்தொடுநிலை கருதிய தோழிக்குத் தன்னுடன்பாட்டை விதிமுகத்தினும் மறை முகத்தினும் உணர்த்தும் திறம் கண்ட குமரனார், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். 1விழுந்த மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் 3உயர்மலை நாடற் குரைத்தல் ஒன்றோ துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யா யாதலின் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த 4செயலை அந்தளிர் அன்னஎன் மதனின் 2மாமைப் பசலையுங் கண்டே. இஃது, அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. உரை : விழுந்த மாரிப் பெருந்தண்சாரல் - மழை பெய்தமையால் மிகவும் குளிர்ந்த சாரலில் உள்ள; கூதிர்க் கூதளத்து அலரி நாறும் - கூதிர்ப் பருவத்தில் மலர்தலையுடைய கூதாளிப் பூவின் மணம் நாறும்; மாதர் வண்டின் நயவரு தீங்குரல் - அழகிய வண்டுகளின் இனிய இசையை; மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் - மணம் கமழும் சிலம்பிடத்தேயிருந்து அசுணப்புள் அமைந்திருந்து கேட்கும்; உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ - உயர்ந்த மலையையுடைய நாடனாகிய தலைமகனுக்கு உரைப்பதோ; துயர்மருங்கு அறியா அன்னைக்கு - நாம் எய்திய துயர்க்குரிய காரணம் அறியாத அன்னைக்கு; இந்நோய் தணியுமாறு இதுவென உரைத்தல் ஒன்றோ - இந்த நோய் நீங்குதற்குரிய வழி இதுவென அறத்தோடு நிற்பதோ; தோழி - ; செய்யாய் ஆதலின் - ஓன்றும் செய்கின்றாயில்லை யாதலின்; கொடியை - நீ கொடியை காண்; மணிகெழு நெடுவரை - மணிகள் கிடந்து மிளிரும் நெடிய மலையின்கண்; அணி பெற நிவந்த செயலையம் தளிர்அன்ன - அழகு உண்டாக உயர்ந்து நிற்கும் அசோகினது செவ்விய தளிர் போன்ற; என் மதனில் மாமை - வலியில்லாத என் மாமை நிறத்தினையும்; பசலையும் கண்டே - அதனைக் கெடுத்துப் பரந்த பசப்பையும் கண்டுவைத்தும் எ.று. மாமையும் பசலையும் கண்டும், நாடற்கு, உரைத்தல் ஒன்றோ, அறியா அன்னைக்கு, இந்நோய் தணியுமாறு இதுவென உரைத்தல் ஓன்றோ செய்யாய். ஆதலின், தோழி, நீ கொடியை எனக்கூட்டி வினைமுடிவு செய்க. ஆழ்ந்துபடு விழுப்புண் என்பது “அழுந்துபடு விழுப்புண் 1” என வந்தாற்போல, வீழ்ந்த மாரி என்பது விழுந்த மாரி என வந்தது. மாரியால் நனைந்து குளிர் மிகுந்த மலைச்சாரலைப் பெருந்தண் சாரல் என்றார். கூதளம், கூதாளி. அலரி, பூ, கூதாளிப் பூவின் தாதுண்டு வருதலின் கூதளத்து அலரி நாறும் வண்டு என்றார், நயவரல், இனிமையுறல். வேறு பூக்களின் மணமும் நிலவுதல் தோன்ற மணநாறு சிலம்பு எனப்பட்டது. சிலம்பு, மலைப்பக்கம், அசுணம், அசுணமென்னும் புள்; விலங்கு வகை யென்றலுமுண்டு; நல்லிசையின் நலம் கண்டு இன்புறும் இயல்பு இதற்கு உண்டென்பது வழக்கு. ஒன்றோ: எண்ணிடைச் சொல், செயலை, அசோகு. மதன், வலி. மாமை, மாந்தளிரின் தன்மை; அழகுமாம். கண்டென்புழி உம்மை தொக்கது. கூதளத்து அலரி நாறும் வண்டின் தீங்குரலை அசுணம் நயந்து கேட்கும் என்றதனால், மெய்ம்மையே மொழியும் நின் உரையைத் தலைமகனும் அன்னையும் விரும்பிக் கேட்பரென உள்ளுறுத்தமையின், உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ, அன்னைக்கு இந்நோய் தணியுமாறு இதுவென உரைத்த லொன்றோ செயற்பாலையாகிய நீ, ஒன்றும் செய்கின்றிலை என்பாள், செய்யாய் என்றும், ஆகவே நீ கோடிய நெஞ்சினை யுடையையாயினை என்றற்கு ஆதலிற் கொடியை என்றும், என்பால் தோழமை கொண்ட நீ இவ்வாறு ஒழுகியது நன்றன்று என்றற்குத் தோழி என்றும் கூறினாள். உயர்ந்தோனாகலின் நீ கூறுதலால் அவற்குச் சிறுமையுண்டாகா தென்பாள், உயர்மலை நாடன் எனத் தலைமகனைச் சிறப்பித்தாள், யான் எய்தி வருந்தும் நோய்க்குரிய காரணத்தை அறிய முயன்றும், அறியாது அலமரும் அன்னைக்கு அதனை நீ உரைத்தல் முறையன்றாயினும், நோய் தீரும் மருந்தாக. அவன் வரைவு வேண்டி வரின் மகட்கொடை நேர்தற்குரியவற்றையேனும் பொதுவாக மொழியற்பாலை யென்பாள், துயர்மருங்கு அறியா அன்னை என்றும். இந் நோய் தணியுமாறு உரைத்தல் செய்யாய் என்றும், என் மேனி நலமான மாமை என் தாய் முயன்று பேணியதாகலின், அது பசலையாற் கெடுவது கூடாது என்றும், கெடாமை ஓம்பும் கடப்பாட்டினளாகிய நீ மாமை கெடப் பசலை பாய்வது கண்டும் என் தாய்க்கு உரையாமை குற்றம் என்றற்கு மாமையும் பசலை யும் கண்டும் என்றும் கூறினாள். பசப்புற்றவழிக் கெட்டு நிறம் வேறுபடுதலின் மாமையை மதனில் மாமை என்றாள். தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே1 எனவும் , “அன்னை காக்கும் தொன்னலம்”2 எனவும் சான்றோர் உரைப்பது காண்க. என் மாமை பசலையாற் கெடுவது கண்டதும், நீ தலை மகனைக் கண்டு வரைவின்கண் முடுகியிருத்தல் வேண்டும்; அதனைச் செய்யாமை மேலும் அன்னையிடம் அறத்தொடு நின்றிருத்தல் வேண்டும்; அதனையும் செய்யா தொழிந்தனை என்பாள், செய்யாய் ஆதலின் கொடியை தோழி என்றாள். தலைமகனை வரைவின்கண் முடுகியது போல, அன்னைபால் அறத்தொடு நின்றிருத்தல் வேண்டும் என்றற்குத் தணியுமாறு இதுவென உரைத்தல் செய்யாய் என்பாளாயினள் என்க. விளக்கம் : “அறத்தொடு நிற்கும் காலத் தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி யென்ப”3 என்ற நூற்பா வுரையில் இப்பாட்டைக் காட்டி, இது “தலைவி அறத்தொடு நிற்குமாறு என்பர் இளம்பூரணர். இனி நச்சினார்க் கினியர், “உயிரினும் சிறந்தன்று நாணே”1 என்ற நூற்பாவுரையில் இதனைக் காட்டி, “இஃது அறத்தொடு நிற்குமாறு” தோழிக்குத் தலைவி கூறியது என்பர். 245. அள்ளங் கீரனார் அள்ளன் என்பது இவருடைய தந்தையது பெயர்; கீரனார் என்பது இச்சான்றோர்க்குரிய இயற்பெயர். அள்ளன் என்பது சில ஏடுகளில் அல்லன் என்று காணப்படுவதுண்டு. அள்ளனென்ற பெயர் சங்ககாலத்தும் இடைக்காலத்தும் தமிழ்மக்களிடையே வழங்கி வந்துள்ளது. “ஆடுநடைப் பொலிந்த புகற்சியின் ஆடும், அள்ளனைப் பணித்த அதியன்” என்று மாமூலனார் குறிப்பது காண்க. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் உளது. தலைமைப் பண்புகளே உருவாகக் கொண்ட தலைவியும் தலைவனும், இயற்கை நலம் சிறக்கும் ஓரிடத்தே, ஒருவரை யொருவர் கண்டு காதலுணர்வுற்றனர். மறுநாளும், முன்னாள் கண்டவிடத்தே இருவரும் நேரிற்கண்டு காதற் கருத்தால் ஒன்றினர். பின்பு இருவரும் ஒன்றிய காதலராயினர். ஒருநாள் அவன் அவளைக் கண்டு அளவளாவி அவளுடைய உயிர்த் தோழியை அறிந்துகொண்டான். அத்தோழியின் நட்புப் பெற்றா லன்றித் தன் காதலொழுக்கம் பயன் நல்காது என்பதை அத் தலைமகன் நன்குணர்ந்து அதற்காக முயல்வானாயினன். தோழியைக் கண்டு சொல்லாடிய காலையில், அவள் பின்விளைவு கருதி அவனை நெருங்கவிடுதற்கு முதற்கண் அஞ்சினாள். நாள்கள் சில கழியவும் தோழியொடு அவன் சொல்லாடித் தனது தூய அன்பைப் புலப்படுத்தினான்; தோழியின் நட்பை ஓரளவு பெற்றுத் தலை மகள்பால் தனக்குள்ள காதலை வெளியிட்டுத் தனது அன்பொழுக் கத்துக்குத் துணை புரியுமாறு தோழியை வேண்டினான். அவளும் அவனுடைய காதலுறவைப் பல்வேறு நெறிகளாலும் சொற் களாலும் ஆராய்ந்து தெளிந்தாள்.ஆயினும், தலைமகள் தனது உள்ளத்து நிலவும் காதற்குறிப்பைத் தோழியறியச் சொல்லாமை யின், அவளுக்குத் தலைமகனது காதலைக் கூறுவது மிக்க அச்சத்தைத் தந்தது. தலைமகளது தலைமை மாண்பு சிதைவு றாமற் காத்தற் கமைந்த அறிவுக்காவலாகிய தோழியே அதற்கு மாறுபட ஒழுகுவது நேர்மையாகாதன்றோ? தன் காதலைத் தலைமகளே முற்பட உணர்த்தினல்லது தோழி ஒன்றும் செய்ய கில்லாள். தலைமகனோ, நாடோறும் போந்து இரந்து பின்னிற் றலில் தவிரானாயினான். அவன் நாளும் போதருவதையும் அது காணும் தலைமகள் உள்ளத்தே உவகையும், முகத்தில் மலர்ச்சியும், கட்பார்வையில் குளிர்ச்சியும் கொண்டு மகிழ்வதையும் கண்டு கொள்கிறாள் தோழி. அதனால், தலைமகன்பொருட்டுத் தலை மகள்பால் தான் முயறல் தகும் என்னும் ஊக்கம் அத்தோழி மனத்தில் எழுகிறது, ஒருகால், தலைமகன் போந்து குறையிரந்து நீங்கவும், தோழி தலைமகளையடைந்து சொல்லாடலுற்று, “அன்னாய், எனக்குள் எழும் நகைப்பை அடக்க முடியவில்லை காண்” என்று எடுத்துமொழிந்தாள். ஒன்றும் புலனாகாமையால் முறுவலித்து, “என்னை செய்தி?” என்பாள் போலத் தலைமகள் அவளை நோக்குதலும், “முண்டகப் பூங்கோதையைக் குழலிற் சூடிக்கொண்டு நின் துணைவியுடன் சென்று கடலில் விளையாடி” என்றான். நகைப்பு அடங்காமையும் வெகுளியும் அடையத் தோன்றவே, யான் என் இடைமேற் கைவைத்து அவனை விழித்து நோக்கினேன்; அவன் வணங்கா ஆண்மை யனாயினும், வணங்கிய சாயல் கொண்டு, “கொடி நுசுப்பும் அகன்ற அல்குலும் உடைமைக் கேற்பத் தெளிந்த இனிய சொற்களையுடையாய்,” என்று சொல்லி, நின் திருமுகத்தையும், வண்டு மொய்க்கும் சுடர் நுதலையும் நோக்கி, தான் ஏறிவந்த நெடுந்தேர்ப்புரவியின் வாரை ஒரு கையில் தாங்கிக்கொண்டு என்னைத் தொழுது நின்று “பெறுதற்கரிய என் உயிரைக் கவர்ந்த நீ யார்? கூறுவாயாக” என வினவினான் என்று மொழிந்தாள். அது கேட்டதும், தலைமகள்பால் அசைவும் வருத்தமும் தோன்றின. அவள் வருத்தம் கண்டு இரங்கினாள் போலத் தோழி, “அவன்தான் நமக்கு வருத்தம் உறுவித்தானாக, அதனை எண்ணாது நாம் அவனை வருத்தியதாகக் கூறியது தான் எனக்கு மிக்க நகைப்பை விளைவித்தது” என்றாள். தலைமகள் நாணினள் போலத் தலையிறைஞ்சித் தோழியை நோக்கி முறு வலித்தாள். தோழியின் துடிக்கின்ற உள்ளம் ஒருவாறு அமைதி பெற்றது; அவள் கண்கள் தலைமகன் சென்ற திசையை நோக்கின. இந்நிகழ்ச்சியை ஆர்வத்தோடு கண்ட ஆசிரியர் அள்ளங் கீரனார், தலைமகட்கும் தலைமகற்கும் தோன்றியிருந்த காதற் றொடர்பைத் தலைமகளால் தான் அறியச் சொல்வித்தற்குத் தோழி நிகழ்த்தும் சொல்லாட்டு அறிஞர் அறிவுக்கு அயரா இன்பம் தருவதை எண்ணி, இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். நகையா கின்றே தோழி தகைய அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை மணிமருள் ஐம்பால் வண்டுபடத் 1தைஇத் துணிநீர்ப் பௌவம் துணையோ டாடி 2ஒழுகுநுண் ணுசுப்பின் அகன்ற அல்குல் தெளிதீங் கிளவி யாரை யோ என் 3அரிதுபெறல் இன்னுயிர் வௌவிய நீஎனப் பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான்நம் அணங்குதல் அறியான் நம்மின் தான்அணங் குற்றமை கூறிக் கானற் சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப் பெருங்கடற் சேர்ப்பன் 4தொழுதுநின் றதுவே. இது, குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது. உரை : தோழி-; நகையாகின்று - நகைப்பைத் தருகிறது காண்; தகைய அணிமலர் முண்டகத்து ஆய்பூங்கோதை - மிக்க அழகிய மலர்களையுடைய முள்ளியின் ஆய்ந்தெடுத்துத் தொடுத்த பூமாலையை; மணிமருள் ஐம்பால் வண்டு படத் தைஇ - நீலமணி போலும் கூந்தலிடத்தே வண்டு மொய்க்கச் சூடி; துணிநீர்ப் பௌவம் துணையோடு ஆடி - தெளிந்த நீர் நிறைந்த கடலில் துணைவர்களுடன் விளையாடி; ஒழுகு நுண் நுகப்பின் - நேரிதாய் நுணுகிய இடையும்; அகன்ற அல்குல் - அகன்ற அல்குலும்; தெளிதீங்கிளவி - தெளிந்த இனிய சொல்லும் உடையாய்! என் அரிதுபெறல் இன்னுயிர் வௌவிய நீ யாரையோ என- பெறுதற்கரிய என் இனிய உயிரைக் கவர்ந்த நீ யாவள் என்று வினவிக்கொண்டே; பூண்மலி நெடுந்தேர் புரவி தாங்கி - பூண் அணிந்த நெடிய தேரிற் பூட்டிய புரவி வாரைக் கையில் தாங்கிய வண்ணம்; தான் நம் அணங்குதல் அறியான் - தான் நம் மனத்தைக் கவர்ந்து வருத்தியதை அறியாமல்; நம்மில் தான் அணங்குற்றமை கூறி - நம்மால் தான் வருத்தப்பட்டதாகக் கூறி; கானல் - கானற்சோலைக்கண்; சுரும்பு இமிர்சுடர்நுதல்நோக்கி - வண்டு மொய்த்து இசைக்கும் ஒளி பொருந்திய நுதலைப் பார்த்து; பெருங்கடற் சேர்ப்பன் - பெரிய கடனிலத் தலைவன்; தொழுது நின்றது - கைதொழுது நின்றது எ-று. தோழி, கானல், புரவி தாங்கி, தான் அணங்குதல் அறியான், நம்மின் தான் அணங்குற்றமை கூறி, கோதை தைஇ பௌவம் ஆடி என் அரிது பெறல் இன்னுயிர் வௌவிய தீங்கிளவியாய், நீ யாரையோ எனச் சுடர்நுதல் நோக்கித் தொழுது நின்றது, நகையாகின்று, காண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. தகைய என்னும் பெயரெச்சக் குறிப்பிலுள்ள தகை என்ற முதனிலை அழகென்னும் பொருளது. பல்வகை நிறங்களுடன் பொலிவதால் முண்டகத்தின் மலர், அணிமலர் எனப்பட்டது. முண்டகம், கடல் முள்ளி. இதழ் வாடியும் ஒடிந்துமுள்ள பூக்களை நீக்கிப் புதியவும் அழகியவுமாகிய பூக்களைத் தேர்ந்து எடுத்துத் தொடுத் தமை தோன்ற ஆய்பூங்கோதை என்றார். ஐம்பால், ஐந்து வகையாக முடிக்கப்படும் கூந்தல் அதனால் கூந்தற்கு ஐம்பால், என்றொரு பெயரும் உண்டாயிற்று. கருமணி போன்ற நிறமும் ஒளியும் உடைமை பற்றிக் கூந்தலுக்கு மணி உவமமாயிற்று. புதுப் பூக்களின் தேனை யுண்டற்கு வண்டு மொய்த்தல் இயல்பாதல் பற்றி, வண்டு படத் தைஇ என்றார். தையல், ஒப்பனை செய்தல். துணிநீர்ப்பௌவம், தெளிந்த நீரையுடைய கடல். துணை, ஈண்டு ஆயமகளிரும் தோழியுமாம். ஒழுகுதல், நேர்மை. அகற்சி, அல்குற்குச் சிறப்பென அறிக. பொருள் விளக்கத்தால் தெளிவும், குரலால் இனிமையும் அமைந்த சொல்லென்றற்குத் தெளிதீங் கிளவி என்றார். ஈண்டு அன்மொழித்தொகைப் பெயராய் அண்மை விளியேற்று நின்றது. நெடுந்தேரை ஈர்த்தோடும் விரைந்த செலவும் வன்மையுமுடைய குதிரைகளாகலின் அவற்றின் வாரை ஈர்த்து நிறுத்தி மேலே செல்லாவாறு தாங்கி நிற்கின்றமை புலப்பட, நெடுந்தேர்ப்புரவி தாங்கி என்றார்.அணங்குதல் , வருத்துதல். அறியான்; முற்றெச்சம். திலகம் அணிந்து மணங்கமழ் கின்றமையின் நுதலை வண்டுகள் மொய்த்து ஒலித்தல் இயல் பாகலான், சுரும்பிமிர் நுதல் என்றும், அதன்கண் விளங்கும் ஒளியை விதந்து சுடர்நுதல் என்றும் சிறப்பித்தல் மரபு. “தேங்கமழ் திருநுதல்” திலகம் தைஇயும் 1எனவும், “திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்2”எனவும், “மாசறு சுடர்நுதல்”3 எனவும் சான்றோர் கூறுதல் காண்க. வணங்கா ஆண்மையன் என்பது தோன்றப் பெருங் கடற் சேர்ப்பன் என்றார். தொழுதல், கைகுவித்துத் தலை வணங்கல். இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடுமாகிய வற்றால், தலைமகனோடு தனக்குளதாகிய காதலுறவைத் தலைமகள் மறைத்தொழுகுதலால், அதனை அவள் பையப் புலப்படுத்தல் வேண்டித் தோழி மகிழ்ச்சிக் குறிப்புடன் சொல்லெடுக்கின்றாளா கலின், நகையாகின்றே தோழி என்றும், அந்நகைக்குரிய பொருளை அறிதற்கண் தலைவியுள்ளத்தெழுந்த அவாய்நிலையை நிறைக்குங் கருத்தால், கடற்கரைக்கண் தலைவி தன் துணையான ஆயமகளிருடன் முண்டகப் பூங்கோதை தொடுத்துக் குழலில் அணிந்துகொண்டு விளையாட்டயர்ந்ததை நினைவு கூர்விப்பாள், தகைய அணிமலர் முண்டகத்து ஆய் பூங்கோதை, மணி மருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத், துணிநீர்ப் பௌவம் துணையோடு ஆடி என்றும் கூறினாள். முண்டகப்பூக் கொண்டு கோதை தொடுத்ததற்குக் காரணம் இது என்பாள், தகைய அணிமலர் முண்டகம் எனவும், தொடுத்த அக்கோதை மணி போலும் கூந்தற்கு அழகு செய்தமை புலப்பட, மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇ எனவும் சிறப்பித்தாள். கடலாடிய விடத்தும் தனித்திராது ஆயமகளிருடன் கூடியாடியது தோன்ற, துணையோடாடி என்றும், ஆண்டுப் போந்தவன், ஆயமகளிர் நடுவண் இருந்த நின் நுசுப்பின் நுணுக்கமும், அல்குற் பெருமை யும் நின்மொழியின் தெளிவும் இனிமையும் கண்டு நின்பால் தன் கருத்தைச் செலுத்தினான் என்பது பட, ஒழுகுநுண் ணுசுப்பின் அகன்ற அல்குல், தெளிதீங்கிளவி என்றும், யாரையோ என வினாவினான் என்றும், அவ்வாறு வினாயதற்கு நேர்ந்த காரணம் இது வென்பான், அரிது பெறல் இன்னுயிர் வௌவிய நீ யென்றும் கூறினான் என்றாள். அவன் யாவன் கொல் என வினவுவாள் போலத் தலைமகள் நோக்குதலும், கானற் சோலைக் கண் நின் சுடர் நுதல் நோக்கித் தொழுது நின்ற பெருங்கடற் சேர்ப்பன் என்றும், அவ்வாறு நின்ற அவன் தோழிக்கு உரைத்து விட்டானோ? என நினைந்து வருந்தினாளாக, அதனைக் குறிப் பாலுணர்ந்து தான் நம் அணங்குதல் அறியான் நம்மில் தான் அணங்குற்றமை கூறினான் என்றும் உரைத்தாள். அதனால் ஏதம் யாது விளையுமோ என அவள் நினைத்து நா'82ல் பெருந்துன்பம் எய்தி உழவாவண்ணம் தன் உடன்பாடு தோன்ற சேர்ப்பன் தொழுது நின்றது நகையாகின்று என்றாள். இது கேட்டுத் தலைவி மதியுடம் படுவாளாவது பயன். 246.காப்பியஞ்சேந்தனார் காப்பியன் என்பார்க்கு மகனாதலின், இச் சான்றோர் காப்பியஞ் சேந்தனார் எனப்படுகின்றார். காப்பியன் என்ற பெயருடையார் சங்க காலத்தும் இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இருந்துள்ளனர். காப்பியாற்றுக் காப்பியனார் எனச் சங்கச் சான்றோரும், திருமழபாடிக் கல்வெட்டொன்றில்1 காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் என்பாரும் காணப்படு கின்றனர். தொல்காப்பியன், பல்காப்பியன் எனத் தொன்று தொட்டுப் பயில வழங்கிவரும் இத் தமிழ்ச்சொல்லை வட சொல்லாகிய காவியத்தோடு இணைத்துப் பிற்கால ஆராய்ச்சி யாளர் சிலர் குன்று முட்டிய குரீஇப் போல இடர்ப்படுகின்றனர். கீழ்க் கடற்கரையில் காப்பியக்குடியும் மேலைக் கடற்கரையில் காப்பியாறும் ஊர்க்குப் பெயர்களாய் இருத்தலையும் அவர்கள் நோக்கிற்றிலர். வடநாட்டு வட மொழிபோலத் தென்னாட்டுச் செந்தமிழ் மொழியும் பிற மொழிகளின் தொடர்பின்றித் தனித்து நின்றியலும் தகவுடைத்தென்னும் உண்மையுணர்வு இல்லாமை யால் அவர்கள் இவ்வாறு பேதுறவு மொழிகின்றனர். இச் சேந்தனார் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத் துள்ளது. புதுமண வாழ்க்கையில் இனிதிருந்த தலைமகன், இன்றியமை யாத ஒரு கடமை காரணமாகத் தலைமகளைப் பிரிந்து சென்றான். சென்றவன். தன்பிரிவாற்றாது வருந்தும் தலைமகட்குத் தான் மேற்கொண்ட வினையை முடித்துக் கொண்டு கார்ப்பருவ வரவில் மீள்வதாக வற்புறுத்திச் சென்றான். தலைமகட்கு அவனது செலவு வருத்தம் பயந்தது; ஆயினும் அவன் வரம்பு கடத்தல் அறம் அன்மையின் அவன் வற்புறுத்த சொல்லை நன்கு தேறிக் குறித்த பருவ வரவை எதிர் நோக்கியிருந்தாள். நாள்கள் கழிந்தன; இடை நின்ற பருவங்கள் இனிது கழியலுற்றன. அக்காலங்களில் அவளுடைய இளமையுடலின் வளம் வேட்கையுணர்வை எழுப்பி அவளை வெதுப்பி வாட்டிற்று. அதனால் அவளது மேனி வேறுபட்டது; உறக்கம் குறைந்தது; உணவிலும் அவட்கு உணர்வு செல்லாதாயிற்று; தோள் மெலிவால் தொடிகழன்றது; கைவளை சோர்தலும் கண்நீர் வடித்தலும் இயல்பாயின. அந் நிலையில் மெலிவாற்றுவிக்கும் தோழியின் கண்கள் இயற்கையைக் கூர்ந்து நோக்கலுற்றன. வானத்தில் நிலவிய வெண்முகில்கள் சிலவும் கருமுகில்கள் பலவுமாய் எழுவவாயின. வெயிலின் வெம்மையும் பையக் குறையலுற்றது. ஒருபால், கொன்றைகள் பொன்போன்ற பூக்களைப் பூக்கலுற்றன; பிடவமரம் அரும்பி மலரத் தொடங்கிற்று. மனையருகில் நின்ற மாமரங்களில் வாழ்ந்த குயிலினங்கள் கூவத் தொடங்கின. பருவ மாறுபாட்டில் குயிலினம் கூவுவது இயல்பாதல் தோழியின் நினைவில் தோன்றிற்று, தலைமகன் குறித்துச்சென்ற கார்ப்பருவம் வருகின்றது போலும் என அவள் எண்ணினாள்; இனி வினைமேல் மனம்வைத்துச் சென்ற தலைவர் பொய்யாது மீள்வர் என்று துணிந்தாள். அவள் எண்ணியதற்கேற்பப் பல்லியும் மனைச் சுவர்க்கண் இருந்து ஒலிக்கத் தொடங்கிற்று. ஆகவே, தோழிக்கு உவகை மிகுந்தது. தலைமகன் வரவு நினைந்து வருந்திய தலைமகட்கு அவள் இவற்றையெல்லாம் எடுத்தோதி அவர் குறித்த பருவமும் வந்து விட்டமையின், “இனி அவர் பொய்யாது வருவர், கவலற்க” என்று மொழிந்தாள். அவள் கூற்றைக் கேட்ட சேந்தனார் இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். 1இடூஉங்கண் இனிய படூஉம் நெடுஞ்சுவர்ப் பல்லியும் 2பாங்கர்த் தேற்றும் அன்றே மனைமாண் நொச்சி மீமிசை 3மாஅத்துச் 4சினைமாண் இருங்குயில் தீங்குரல் பயிற்றும் உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் செய்பொருட் ககன்றன ராயினும் 5பொய்யலர் வருவர் வாழி தோழி புறவிற். பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை அவிழ 6மின்னவிர் வானம் இரங்குமவர் வருதும் என்ற பருவமோ இதுவே.7 இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. உரை : இடூஉங்கண் இனிய படூஉம் - நாம் குறிப்பிட்ட இடத்தே இனிய சொல்லும் செயலும் நற்குறியாக நிகழாநின்றன; நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கர் தேற்றும் - நெடிய சுவர்க்கண் ஒட்டி மேயும் பல்லியும் நம்பக்கல் நலமுண்டாக நம்மைத் தெளிவிக்கின்றது; மனை மாண் நொச்சி மீமிசை - மனை யிடத்தே வேலியாக நின்ற நொச்சிக்கு மேலே உயர்ந்து நிற்கும்; மாஅத்துச் சினைமாண் இருங்குயில் தீங்குரல் பயிற்றும் - மாமரத்தின் சினைக்கண் மாண்புற இருந்து கருங்குயில் இனிய இசைபடக் கூவாநிற்கிறது; உரம்புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி - திட்பம் அமைந்த உள்ளத்தோடு சுரங்கள் பலவற்றைக் கடந்து; செய்பொருட்கு அகன்றன ராயினும் - செய்தற்குரிய பொருள் கருதிக் காதலர் பிரிந்து சென்றுள்ளா ராயினும்; பொய்யலர் - தவறாமல்; தோழி -; வாழி-; வருவர் - வந்து சேர்வர்; புறவின் - காட்டின்கண் நிற்கும்; கொன்றை பொன்வீ யொடு பிடவு தளையவிழ- கொன்றை மரங்கள் பொன் போலும் பூக்களை மலர்தலொடு பிடவ மரத்தின்கண் அரும்பு தோன்றி மலர்தலைச் செய்ய; மின்அவிர் வானம் இரங்கும் - மின்னலிட்டுத் தோன்றும் முகில்கள் பெயல்கருதி முழங்கு கின்றன; அவர் வருதும் என்ற பருவமோ இதுவே - ஆகவே, அவர் மீண்டு வருவேம் என்று வற்புறுத்த பருவமும் இதுவே யாகும் எ.று. தோழி, வாழி, புறவில் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ வானம் இரங்கும், அவர் குறித்த பருவமோ இதுவாகலின்; அன்றியும் இனிய படூஉம்; பல்லியும் தேற்றும். குயில் குரல் பயிற்றும்; அகன்றனராயினும் பொய்யலர், வருவர்; நீ இனி வருந்தற்க எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இடும் என்பது இடூஉம் என அளபெழுந்தது. நாம் கருதுவது நிகழ்வதாயின் இவ்விடத்தே இன்னது நிகழ்க என ஓர் இடத்தைக் குறித்து நோக்குவது நிமித்தம் கூறுவோர் மரபு. முடியில் வைத்த பூ இடத்தே வீழ்க, வலத்தே வீழ்க என்றும், ஒருபாற் குவித்த மணிகள் ஒற்றைப் படுக, இரட்டைப் படுக எனவும் காண்டல் இடூஉங்கண் எனப்பட்டது; இவைகட்குக் காணுமிடத்து நிகழ்வனவாம். வாய்ச்சொல் கேட்டலும் இவ்வகையில் அடங்கு தலின், எல்லாம் அகப்பட இடூங்கண் இனிய படூஉம் என்றார். நெடிய சுவர்களில் பல்லியினம் வாழ்தல் பற்றி நெடுஞ்சுவர்ப் பல்லி எனல் இயல்பு; “படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி1”எனப் பிறரும் குறிப்பது காண்க. பல்லி சொல்லுக்குப் பயனுண்டு எனப் பண்டையோர் கருதினமையின், பல்லியும் பாங்கர்த் தேற்றும் என்றார். மனையின்கண் நொச்சி, வயலை, மௌவல் முதலியவற்றை வளர்த்தல் மரபு; அதனால் மனை மாண் நொச்சி என்றார். “மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய2”என வருதல் காண்க. மா, மாமரம். குயில் மாமரத்தின்கண் தங்குதலின் அதனை மாங்குயில் என்பது பெருவழக்கு. உரம், திண்மை. செய்தற்கு உரிய பொருளைச் செய்பொருள் என்ப. பொய்த்தல். வற்புறுத்த காலத்தே வாரா தொழிதல். புறவு, காடு. கொன்றையும் பிடவும் பூக்கும் காலம் கார்ப்பருவம் என வுணர்க. மின்னும் இடியும் உடனிகழ்வன வாகலின் மின்னவிர் வானம் இரங்கும் என்றார்; இரங்குதல், முழங்குதல். ஓகாரம் அசை நிலை; ஏகாரம் தேற்றம். பிரிந்த தலைமகன் மீண்டு வருவதாகக் குறித்த பருவ வரவு கண்ட தோழி அதனைத் தலைமகட்குரைத்துத் தேறியிருக்குமாறு வற்புறுத்துகின்றாளாகலின், தொடக்க வுரையாக அண்மையில் தோன்றும் நன்னிமித்தத்தைத் தொகுத்துச் சுட்டி, இடூஉங்கண் இனிய படூஉம் எனவும், பக்கத்தே நிற்கும் நெடுஞ்சுவரின்கண் மேயும் பல்லி நன்னிமித்தத்துக்கேற்ற இடத்தேயிருந்து சொல்லு வது காட்டி, நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கர்த் தேற்றும் எனவும், இனிய படூஉம் என்ற நிமித்தத்தைப் பல்லியின் இசை தெளிவித்து வற்புறுத்தலின் தேற்றும் எனவும் கூறினாள். கண் இனிய படூஉம் என்றதற்குக் கண்ணும் நன்னிமித்தமாக ஆடும் என்றலும் ஒன்று. “மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே”1 என்று பிறரும் கூறுதல் காண்க. பின்னர் மனையின்புறத்தே நிற்கும் நொச்சியும், மாவும் காட்டி, அம்மாமரத்தின்கண் இருந்துவரும் குயிலோ சையை விதந்து மனைமாண் நொச்சி மீமிசை மாஅத்துச், சினைமாண் இருங்குயில் தீங்குரல் பயிற்றும் என்று கூறுமுகத்தால் பருவ நிகழ்ச்சியை உணர்த்தினாள். குயிலோசை கூடற்குரி யாரைப் பிரியன்மின் என உணர்த்தும் குறிப்பிற்றாதலின். அது தலைவனை நினைப்பிக்கவே, தலைமகள் அவனுடைய மன வன்மையையும், கடந்து சென்ற சுரத்தையும், பொருள்செய்தலின் அருமையையும் எடுத்துரைத்து வருந்தினாளாக, அவள் கூற்றையே கொண்டெடுத்து, உரம்புரி யுள்ளமொடு சுரம்பல நீந்திச், செய்பொருட்கு அகன்றன ராயினும், பொய்யலர் வருவர் வாழி தோழி என்றாள். வருவர் என்ற சொல் கேட்டு, வரும் திசையைத் தலைமகள் கண்கலுழ்ந்து நோக்கினாள். அந்நிலையில் தோழி சேய்மையில் தோன்றும் கானத்தைக் காட்டி, அங்கே கொன்றையும் பிடவும் பூத்து விளங்கும் பொற்பினை விதந்து, புறவில் பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை அவிழ என்றும், வானத்திற் கார்முகில் பரந்து மின்னலுடன் இடித்தலைக் காட்டி, மின்னவிர் வானம் இரங்கும் என்றும், இது தலைவர் குறித்த பருவமாதலின் அவர் தவறாமல் வருவர் என்பாள், அவர் வருதும் என்ற பருவமோ இதுவே என்றும் கூறினாள். பருவம் கூறியது தவறாது வருதலைச் சுட்டி நின்றது. இது கேட்டுத் தலைவி ஆற்றுவாளாவது பயன். 247.பரணர் காதலுறவு கொண்டு களவு ஒழுக்கம் பூண்ட தலைமக்கள் ஒருவரையொருவர் இன்றியமையாதவராகிய நிலையில், தலை மகன் கடனாகிய வினையொன்று குறித்துத் தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டியவனானான். அதனை யறிந்த தோழிக்கு அவனது பிரிவு பெரியதோர் மனக் கலக்கத்தை யுண்டு பண்ணிற்று. கடிமணம் செய்து கற்பறம் மேற்கொண்டொழுகுபவரிடத்தேயே பெருவருத்தத்தை விளைவிக்கும் பிரிவு, களவின்கண் வரைவு நிகழ்தற்கு முன்னரேயாயின், எத்துணை மனநோயைத் தரும் என்பதை ஒருவர் எடுத்துச் சொல்லவேண்டா. அவனது பிரிவுக் குறிப்புணர்ந்தவுடனே தலைமகட்கு உண்டான வருத்தத்துக்கு எல்லையில்லை. அவளது வேறுபாடு கண்டதும், தோழிக்கு அச்சமும் அவலமும் அடையத் தோன்றின. களவுத்தொடர்பு அறியின், வரையாது கைவிடுவனோ எனச் செவிலி முதலாயினார் ஐயுறுவரே என்றோர் எண்ணம் அவள் உள்ளத்தே எழுந்தது; எனினும், தலைவனது தலைமைப் பண்பினைத் தான் நன்கறிந் திருந்தாளாயினும், ஒரு வகையான வெகுளியும் அவட்குத் தோன்றிற்று. இனி, வெகுண்டு கூறுதலினும், அன்புடை மொழி களால் நயந்து பணிந்து உரையாடுவ தல்லது வேறு வழியின்மை தேர்ந்து, அவனை அணுகி, உள்ளுறையால் தமக்குத் தலைமகன் பால் உண்டாகிய காதல்நலம் வலியிழந்து கெடுவது கூறி, வெளிப்படையில் “நாடனே, நீ இனி எம்மை வரைந்து கொள்ளு முகத்தால் நல்குவாய் எனினும், நயனின்றி நீங்குவாயாயினும், என் தோழியாகிய தலைமகள் நின்வழியிலேயே நிற்பள்; அவள் நுதலிடத்தே பரந்த பசலை நோய்க்கு நின்னையல்லது வேறு மருந்தில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதன்பின் செல்வாயாக”என்று சொன்னாள். தோழியின் இக்கூற்றின்கண், வரைவிடைவைத்துப் பிரியக் கருதும் தலைமகன் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரியேனென வற்புறுத்தவன் பிரிவது மேற்கொண்டாற்போல, “வரைதற்குரிய நீ அதனைச் செய்யாதொழியினும், தலைமகள் என்றும் சலியாக் கற்பினளாய் நின்வழி நின்று இறந்துபாடல்லது வேறு செயல்வகை யிலள் ஆகலின் நீ விரைந்து வரைந்துகோடல் வேண்டும்” என்பதைச் சுருங்கிய வாய்பாட்டிற் கூறிய திறம் கண்டு வியந்த ஆசிரியர் பரணர் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். தொன்றுபடு துப்பின் 1 முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைக் 2 கோடுநனி கழாஅ 3 அழிதுளி பெரழிந்த 4 இன்குரல் எழிலி எஃகுறு பஞ்சின் 5 தாஅய் வைகறைக் கோடுயர் நெடுவரை ஆடும் 6 நாட நல்கா யாயினும் நயனில செய்யினும் நின்வழிப் படூஉம்என் தோழி நன்னுதல் இருந்திறை 7 கூரிய பசலை மருந்துபிறி தின்மைநற் கறிந்தனை சென்மே. இது, நீட்டியாமை வரைகெனத் தோழி சொல்லியது. உரை : தொன்றுபடு துப்பின் முரண்மிகச் சினைஇ-பழமையுற வந்த வன்மையுடனே மாறுபாடு மிகுதலால் சினங்கொண்டு; கொன்ற யானைக்கோடு நனிகழா-புலியைக் கொன்ற யானை யினுடைய கோட்டைக் குருதிக்கறை நன்கு நீங்குமாறு; அழி துளி பொழிந்த இன்குரல் எழிலி-இரவில் மிக்க மழையைப் பொழிந்த இனிய முழக்கத்தையுடைய முகில்; எஃகுறு பஞ்சின் தாஅய் - இருப்பு வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சிபோல் நொய்ம்மையுற்றுப் பரந்து; வைகறை -விடியற்காலத்தே; கோடுயர் நெடுவரை ஆடும் நாடே - உச்சியுயர்ந்த நெடிய மலைப்பக்கத்தே படிந்து தவழும் நாடனே; நல்காயாயினும் - நீ இவளை வரைந்து அருளாயாயினும்; நின்வழிப்படூஉம் என் தோழி-நின்னையின்றி யமையா தொழுகும் என் தோழியாகிய தலைவியின்; நன்னுதல் இருந்து இறை கூரிய பசலை - நல்ல நுதலின்கண்ணே நிலைபெறத் தங்குதல் கொண்ட பசலை நோய்க்கு; மருந்து பிறிது இன்மை - மருந்து வேறே யாதும் இல்லையென்பதை; நற்கு அறிந்தனை சென்மே - நன்கு அறிந்து உளத்திற் கொண்டு செல்வாயாக எ.று. நாட, நல்காயாயினும், நயனில செய்யினும், நின்வழிப் படூஉம் என் தோழியின் நன்னுதல் பசலைக்கு மருந்து பிறிது இன்மை, அறிந்தனை சென்மே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இளமைக்கண் வளர்ந்து முதிர்ந்த மெய்வன்மை ஈண்டுத் தொன்று படு துப்பு எனப்பட்டது. முரண், மாறுபாடு. யானைக்குப் பகை புலியாதலின், அது வருவிக்கப்பட்டது. மிக்குப் பெய்யும் மழைநீரால் குருதிக்கறை படிந்த கோடுகள் கழுவப்படுதலால், நனிகழாஅ என்றார், அழிதுளி, மிக்க பெயல் நீர்; “அழிபசி”1 என்றாற்போல. “குன்றம் முற்றி அழிதுளி தலைஇய பொழுதின்”2 என்றார் பிறரும். இடித்தல் இன்றிக் குமுறி நின்று பெய்யும் மழையோசை இங்கே இன்குரல் எனப்பட்டது, “இடியும் முழக்கும் இன்றிப் பாணர், வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன, இன்குரல் அழிதுளி தலைஇ நன்பலி, பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை3” எனச் சான்றோர் உரைப்பது காண்க. எஃகு, ஈண்டு ஆகுபெயரால், எஃகினாற் செய்யப்பட்ட பஞ்சி வில்லின்மேல் நின்றது. கொட்டை நீக்கிப் பஞ்சியிற் படிந்த தூசு போக்கித் தூய்மை செய்தற்குப் பண்டையோர் கையாண்ட கருவி இந்த இருப்புவில். இந்நாளில் கொட்டை நீக்கும் பொறிகளும் தூய்மை செய்யும் பொறிகளும்4 தோன்றிப் பெருகினமையின் இவ்விற்பொறிகள் அருகி மறைந்து வருகின்றன. பெய்து வறி தாகும் மழைமுகில் வெளுத்துப் பஞ்சி போலக் காற்றிற் பறந்து சென்று ஒரு பாற் பரந்து படிதல் இயல்பு; “பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை தூவல் கழிய”5 என்பது காண்க. நல்குதல், வரைந்து கொண்டு கடிமணத்தால் மனைக்குரிமை வழங்கல், “உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின் கண்ணும்”6 என்பது காண்க. கூடியிருந்து தலையளி செய்தல் என்றுமாம், நயன், தலைமைப் பண்புக்கு ஒத்த நடுவுநிலைச் செய்திகள். அவை, சொல்பிழையாமை, நேர்மை பிறழாமை, பழைமைபற்றிக் கைந்நெகிழாமை முதலியன. இறைகூர்தல், தங்குதல். அறிந்தனை: முற்றெச்சம். சென்மே: ஏகார ஈற்று முன்னிலை வினைச்சொல் மகரமெய்யூர்ந்து வந்தது. வரைவிடைவைத்துப் பிரியலுற்ற தலைமகனோடு சொல்லாடு கின்றாளாதலின், தோழி தான் தலைமகற்குக் குறைநேர்ந்து துயர்போக்கிய செய்தியை உள்ளுறையாற் குறிப்பாக வுணர்த்தி, வரைவு மேற்கொள்ளாது வினைமேற்கொண்டு பிரியக் கருதுவது பற்றி வெளிப்படை யாக உரைப்பாளாய், நல்காய் ஆயினும் என்றும், பண்டுதான் உற்ற வேட்கைநோய் நீக்கினமையும். “பிரியேன்; பிரியின் உயிர்தரியேன்” என்று அவன் வற்புறுத்தின மையும் மறந்து சேறல் நயனுடையார்க்கு ஆகாதன என்பாள், நயனில செய்யினும் என்றும், தலைமகள் மலைபோற் சலியாது நிலைபெறு கற்பினளாதல் காட்டி, நீ நின் தலைமையை மறந் தொழியினும், நின் குறிப்புவழி யொழுகும் பெருங்கற்பினளா தலின், நின்னை என்றும் மறவாத மாண்பினள் என்பாள், நின் வழிப்படூஉம் என் தோழி என்றும், நின்பிரிவுக் குறிப்பு அறிந்த மாத்திரையே வேறாயினள்காண் என்பாள். நன்னுதல் இருந்து இறை கூரிய பசலை என்றும், நின்னையல்லது தன் உயிர்க்குப் பற்றுக்கோடு பிறிதியாதும் இலளாகலின், நீ மறந்து கையொழி யின் இறந்துபடுதல் ஒருதலை என்பாள், மருந்து பிறிது இன்மை என்றும், இதனைத் தெளிவாக நின் மனத்திற் கொண்டு விரைந்து போந்து வரைந்துகொள்க என்பாள், அறிந்தனை சென்மே என்றும் கூறினாள். தான் கொண்ட நீரை மிகைபடச் சொரிந்து யானைக்கோட்டின் குருதிக்கறை நீங்க இரவிற் பெய்த மழை முகில் வைகறைப்போதில் பஞ்சிபோற் பரந்து மலை முடியில் தவழும் என்றதனால், தான் பேணி வளர்த்த நலமெல்லாம் களவின்கண் நின்குறை நீங்கக் கூடி நல்கிய யாம், வரைவால் மாண்புறுதற்குரிய செவ்விக்கண் பசலையால் விளர்த்து வருந்து வேமாயினேம் எனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறாகக் கொள்க. முன்பு, எம்பாற்கொண்ட பேரருளால் எம் தனிமைத் துயர் கெடக் கூடித் தலையளி செய்து, இப்போது அது புலர்ந்து வேற்றுநாட் டகவயின் சென்று தங்கக் கருதுவது நல்குதலுமாகாது நயனுடைமையுமாகாது எனத் தோழி கூறியதாக வுரைத்தலும் உண்டு. இதனாற் பயன், தலைவன் தெருண்டு வரைவானாவது. 248. காப்பன் கீரனார் காப்பன் என்பது கீரனாருடைய தந்தையின் பெயர். இப் பெயருடையார் பலர் முன்னாளில் இருந்துள்ளனர். முதல் இராசராசன் காலத்துக் கல்வெட்டுக்களில் காப்பனான இலக்குமண தாசன்1 என்பானும், இவ்வாறே பிற கல்வெட்டுக்களில் காப்பன் குமரன், காப்பன் தேவன் என்பாரும் காணப்படுகின்றனர். உணவைக் காப்பு என்றும், ஊர்க் காவலரைக் காப்பு என்றும் தொண்டை நாட்டவரும் அந்நாட்டுக் கல்வெட்டுக்களும்2 வழங்குவதாலும், சங்க நூல்கள் “காப்பாள்” “காப்பான்” காப்பன் என்பது பண்டைய எனக்குறித்தலாலும், காப்பன் என்பது பண்டைய மக்கட் பெயர்களுள் ஒன்றாதல் துணியப்படும். பிற்காலத்தே இப்பெயர் காத்தான் என்றும்; காத்தாயி என்றும் வழங்குவதாயிற்று. அச்சுப்படியில் இக் கீரனார் பெயர் காசிபன் கீரனார் என்று காணப்படுகிறது. காசிபன் என்பதைக் கீரனார் தந்தை பெயராகவோ கோத்திரப்பெயராகவோ கொள்ளல் வேண்டும்; எனினும், காப்பன், காவன் என வரும் சங்க காலத் தமிழர் பெயர்களை நோக்க இஃது எங்ஙனம் காசிபனாயிற் றென்பது ஆராய்தற் குரியதொன்று. சங்ககால மக்கட் பெயர் களையும், இடைக்காலக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டும் மக்கட் பெயர்களையும் காலமுறையில் வைத்து ஆராய்ந் தால் உண்மை புலனாகாதொழியாது. இக்கீரனார் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் கிடைத்துள்ளது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், இன்றியமையாத கடமை குறித்துத் தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை தலைமகற்கு உண்டாயிற்று. தலைவிபால் அதனை உணர்த்தி விடை வேண்டிய தலைவன், தான் அதனை முடித்துக் கார்ப்பருவ வரவில் மீண்டுபோதருவதாக வற்புறுத் தினான். புகழ் புரிந்த இல்லறத்தையே பெரிதும் விரும்பும் பெருங்கற்பின ளாதலின். தலைமகள் அவற்கு விடையளித்து அவன் வற்புறுத்த கார்கால வரவை எதிர்நோக்குவாளாயினாள். தலைமகனும் இனிது சென்று மேற்கொண்ட கடமையினை நன்கு ஆற்றிவந்தான். நாள்கள் பையக் கழிந்தன. அவன் குறித்த பருவமும் நெருங்கிற்று. வினை முற்றுதற்குரிய காலம் சிறிது நீட்டித்தது. எடுத்த வினை முற்றுதற்கு முன்பே அதனை விட்டு நீங்கல் ஆண்மைக்கு அறமன்மையின், அதுநோக்கி அவன் வரவு சிறிது தாழ்ப்பதாயிற்று. ஆயினும், காலம் என்றும் தப்பாத இயல்பிற்றாதலால், கார்ப்பருவத்துக்குரிய மழை முகில் எழுந்து வானத்தே பரந்து, மின்னும் இடியும் வயங்க வந்து நாற்றிசையும் வளைத்து முழங்கத் தலைப்பட்டது. கார்மழையின் வரவு கண்டதும், காட்டகத்தே வாழும் மயிற்கூட்டம் தம் கலவம் விரித்து ஆலு தலும் அகவுதலும் செய்வனவாயின. அவற்றால் கார்ப்பருவ வரவு தெளிவாக விளங்குதல் கண்டாள் தோழி; அது தலைமகன் மீள்வது குறித்த காலமாதல் நினைவுக்கு வரவும், அதனைத் தலைமகள் அறியின் ஆற்றாது வருந்தி மேனி வேறுபட்டு மெலிவள் என்பது உணர்ந்தவள், மழை வரவும், மயிற்கூட்டத்தின் எழுச்சியும், கார்ப்பருவம் குறித்தன அல்ல; பொய்யிடியும் வறுமின்னலும் கொண்டு பொய்யாகக் கார்ப்பருவம் போன்ற காட்சியை இம்மழையினம் காட்டி நம்மை மருட்டுகின்றன. நாம் அதனை மெய்யெனத் தேறி மருளுதல் கூடாது என்பாளாய், வான்முகிலை நோக்கி “மழை முகிலே, புதர்களில் முல்லை மலர்ந்து நன்மணம் கமழும் கார்ப்பருவம் தாம் வருதற்குரிய பருவம் என எம் தலைவர் வற்புறுத்தியுள்ளார்; அதனை யறியாது, கார்ப்பருவம் போல எமக்குக் காட்டி, எம்பால் அன்பின்றி நற்பண்பு இகந்து பொய்யாக மின்னி யிடித்து முழங்குகின்றாய்; பேதைமையால் உண்மைகாண மாட்டாத மயிலினம், பொய்யை மெய்யாகக் கருதி ஆலுகின்றன. அதுபோல யாமும் நின் தோற்றம் கண்டு மருண்டு வருத்துவோம் என நினைத்தனை; யாம் ஒரு காலும் நின் மருட்டலுக்கு உடைந்து மனம் மருளோம் காண்” என்று உரைக்கலுற்றாள். கார்காலத்தே பெய்யும் தலைமழையால் வேனில் வெம்மைக்கு வெம்பி வாடிய முல்லை குளிர்ந்து தழைத்துப் பூக்கும் இயல் பிற்றாதலின், அது பூத்து விளங்கும் பகுதியே கார்பபருவம் எனத் தலைவர் வற்புறுத்தியுள்ளமையின், முல்லை மலரும் செவ்வி நோக்குதல் வேண்டுமல்லது மழை வரவு நோக்குதல் கூடாதென்ற கருத்தை எடுத்துரைக்கு முகத்தால், தலைமகன் சொல்வழுவாமை மீளுதற்கு இடமும், தலைமகள் ஆற்றியிருத்தற்கு வாய்ப்பும் அமையத் தோழி உரைப்பது கண்ட கீரனார் அதனை இப் பாட்டின்கண் தொடுத்துப்பாடுகின்றார். சிறுவீ முல்லைத் தேங்கமழ் 1புறவின் பொறிவரி 2நன்மாப் புகர்முகம் கடுப்பத் தண்புதல் அணிபெற மலர வண்பெயற் 3கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பின் மையிற் பண்பில பயிற்றும் பொய்யிடி அதிர்குரல் வாய்செத் தாலும் இனமயில் மடக்கணம் போல நினைமருள் வேனோ வாழியர் மழையே. இது, பருவங்4 கண்டு ஆற்றாளெனக் கவன்ற தோழி மழை மேல் வைத்துப் பருவமறுத்துரைத்தது.5 உரை : சிறுவீ முல்லைத் தேங்கமழ் புறவின் - சிறுசிறு பூக்களை யுடைய முல்லையின் இனிய மணம் கமழும் புறவின்கண்; பொறிவரி நன்மா புகர்முகம் கடுப்ப - புள்ளியும் வரிகளும் அமைந்த நல்ல யானையின் புள்ளி பொருந்திய முகம் போல; தண்புதல் அணிபெற மலர - தண்ணிய புதர்கள் அழகுற மலர்ந்து விளங்க; வண்பெயல் கார்வரு பருவம் என்றனர் மன்-வளவிய பெயலைச் செய்யும் கார்முகில் எழுதரும் கார்ப் பருவத்தே யாம் வருவோம் என்று வற்புறுத்தினார்காண்; இனி - இப்பொழுது; பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் - பெருந்துன்பத்தால் எமது உள்ளம் நடுங்கும் திறத்தைக் காண்ப தற்காக; அன்பு இன்மையின் -எம்பால் நினக்கு அன்பு இல்லாமையால்; பண்பில பயிற்றும் பொய்யிடி அதிர்குரல் - பண்புடைமைக்கு ஒவ்வாத செயலாகும் பொய்யிடி இடித்துச் செய்யும் அதிர்குரல் முழக்கத்தை; வாய் செத்து - மெய்யாகக் கார்ப்பருவ மழை முழக்கமெனக் கருதி; ஆலும்-ஆரவாரிக்கும்; இன மயில் மடக்கணம் போல - இனஞ்சூழ வாழும் மயில் களின் அறிவில்லாத கூட்டத்தைப் போல; நினை மருள் வேனோ - நின்னைக் கண்டு கார்மழை யெனக் கருதி மயங்கு வேன் எனக் கருதற்க; யாம் ஒருகாலும் மருளமாட்டோம்; மழை வாழி - மழையே நீ வாழ்க எ.று. மழையே, புறவில் தண்புதல் மலரக் கார்வருபருவம் என்றனர் மன்; இனி எம் உள்ளம் நடுங்கல் காணியர் , அன்பு இன்மையின், பயிற்றும் பொய்யிடி அதிர்குரல் வாய் செத்து ஆலும் மடக்கணம் போல நினை மருள்வேனோ, மருளுவேனல்லேன், வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தேங்கமழ் புறவு என்றது, “தேங்கமழ் சிலம்பு”1 என்றாற் போல நின்றது, பொறி, புள்ளி. வரி, கோடு. வேறு வேறு இயல் பினவாகலின் பொறியும் வரியும் உடன் கூறினார். “பொறிவரி நன்மா மேனி”2 எனவும் “பொறிவரிப் பூநுதல் யானை”3 எனவும் சான்றோர் வழங்குதல் காண்க. மலர்ந்த புதல் அழகுற்றுத் திகழ்தலின் , அணி பெற மலர என்றார். மன், அசைநிலை. அஞர், வருத்தம், ஆனுருபு விகாரத்தால் தொக்கது. காணியர், செய்யியர் என்னும் வினையெச்சம். நடுங்கல் காண்டற்கு ஏது அன்பின்மை என்பார் அன்பின்மையின் என்றும், அறம் புரிந்தொழுகும் மழைக்கு அன்பு பண்பாதலின், பண்பில பயிற்றும் என்றும் கூறினார். வெறிதே யிடித்து மழை பொழியா தொழியும் இடியைப் பொய்யிடி என்றார். குரல். முழக்கம். வாய், உண்மை. மயிற் கூட்டம் மழைவரவு கண்ட விடத்து ஆலும் இயல்பின வாகலின் அவற்றை விதந்து கூறினார். “மழை வரவறியா மஞ்ஞையாலும்”4 என்று பிறரும் கூறுதல் காண்க. வாழி, குறிப்பு மொழி. தலைமகன் பிரிவின்கண் மனைக்கண் இருக்கும் தலை மகட்கு அவன் வற்புறுத்த கார்ப்பருவம் வந்தவழி அவன் வரத் தாழ்ப்பானாயின், அது மிக்க வருத்தம் பயந்து ஆற்றாமை பயப்பிக்கும் என்பது கண்ட தோழி, மனம் கவன்று அவள் ஆற்றும் திறம் நோக்கி, நம் தலைவர் குறித்த கார்ப்பருவத்தே புறவின் கண்ணுள்ள தண்புதல்கள் அழகுற மலரும் என்றும் அக்காலத்தே யாம் வருவோம் என்றும் உரைத்ததனை நினைத்தல் வேண்டும் என்பாள், சிறுவீ முல்லைத் தேங்கமழ் புறவின், தண்புதல் அணிபெற மலர வண்பெயற், கார்வரு பருவம் என்றனர்மன் என்றாள். முல்லைத் தண்புதல் மலர வருபருவம், தாம் மீளக் கருதும் கார்ப்பருவம் என்றார் என்றற்கு, அணிபெற மலரக் கார்வரு பருவம் என்றாள். இப்பொழுது அப்பருவம் வந்திலது என்பது தோன்ற என்றனர்மன் என எடுத்துரைத்தமை கண்ட தலைமகள், வானத்தே கார்முகில் பரந்து விளங்குவதும், இடி முழங்குவதும் அவற்றைக் கண்டு மயிற் கூட்டங்கள் ஆலுவதும் நோக்கிக் கண் கலுழ்ந்தாளாக, தோழி முகிலொடு முனிந்து கூறுவாளாய், “மழை முகிலே, உள்ளத்தில் வருத்தத்தை யுண்டு பண்ணி அதனால் யாம் அஞ்சி நடுங்குவது காண்பதற்காக நீ மின்னியிடித்து முழங்குகிறாய்; எம்பால் அது செய்தற்குநீ அன்பிலையாகி அறப்பண்பின் நீங்கி நிற்கிறாய்” என்பாளாய், பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பின்மையின் பண்பில பயிற்றும் செயல்மேற்கொண்டனை என்றும், அதனால் கார்ப்பருவத்து மழைமுகில் செய்யும் இடிக்குரல் போலப் பொய்யிடி அதிர்குரல் எழுப்புகின்றனை என்றும், உண்மை யுணரும் திறமில்லாத மடமை பொருந்திய மயிலினங்கள் மெய்யான கார்ப்பருவ மழை முழக்கென மருண்டு ஆலுவவாயின என்றற்கு, பொய்யிடி அதிர்குரல் வாய் செத்து ஆலும் இன மயில் மடக்கணம் என்றும், தண்புதல் அணிபெற மலரவரும் கார்ப் பருவ மழையன்மை யாம் நன்கு அறிவேமாதலின் மயிற்கணம் போல நின் பொய்ம் முழக்கிற்கு மனம் மருளுவே மல்லேம் என்பாள், இனமயில் மடக்கணம் போல நினைமருள் வேனோ என்றும், இங்ஙனம் பொய்த்தமைக்கு நீ பொய் கூறுவோர் எய்தும் துன்பம் எய்துதற் பாலை யாயினும், அஃது எய்தாதொழிக என எம் பண்பால் நின்னை வாழ்த்துவேம் என்பாள், மழையே வாழி என்றும் தோழி கூறினாள். இதனால் தலைவி தேறி ஆற்றியிருப்பாளாவது பயன். 249. உலோச்சனார் இப்பாட்டின்கண்ணும் இவர் பெயர் உவோச்சனார் என்றே ஏடுகளிற் காணப்படுகிறது களவின்கண் தலைவியுள்ளத்து நிலவிய காதல் சிறந்து முறுகிப் பெருகித் தன்னை யின்றி அமையாத அளவினை யெய்து வது கருதி வரைதலை நீட்டித்தான் தலைமகன். மிக்குப் பெருகிய காதலால் தலைமகட்கு அவனது அழிவில் கூட்டத்தைப் பெறுதற் கண் வேட்கை மிக்கது; அதனால் குறிப்பாலும் வெளிப்படை யாலும் பன்முறையும் அவனைத் தோழியும் தலைமகளும் வரைவுகடாவினர். அவன் களவையே விரும்பி நின்றது கண்ட தலைமகட்கு, ஆற்றாமையும் அதனால் மேனிக்கண் வேறுபாடும் பிறந்தன. அவனைச் சிறைப்புறத்தே கண்டு அளவளாவிய தோழி, அவன் தலைமகளுடைய காதன்மிகுதியும் ஆற்றாமையும் உணர்ந்து விரைந்து வரைதற்கு முயலும் திறத்தை நன்கு அறிந்தாள். அதனால், அவள் தலைமகட்குத் தலைவன் வரைவு குறித்து முயலும் திறத்தை அறிவித்து ஆற்றுவிக்கத் தலைப்பட்டு ஊரவர் எடுக்கும் அலரால் காதற்காமம் சிறப்பது பற்றிப் புன்னைப்பூ வுதிர்ந்த கானற் சோலையிடத்தே மூதூர் அலரெழத் தோன்றிச் சென்றான். ஆகவே, இனி அவன் வரைவொடு வருதல் ஒருதலை என வற்புறுத்தினாளாக, அலரெழத் தோன்றிய அவனது தேர், அலர் கூறுவார் வாயடங்க வரைவொடு வருதலை மேற் கொள்ளாது சென்றொழிந்தமை யன்றோ என்னை வருத்து கின்றது? எனத் தலைமகள் கூறினாள். இக்கூற்றின்கண், தலைமகன் வரைவு நிட்டித்தமை காரண மாகத் தலைமகள் தன் உள்ளத்தெழுந்த வேட்கைப் பெருக் கத்தைத் தலைவனது தேர்ச் செலவின்மேல் வைத்துக் காட்டிய நலம் கண்ட ஆசிரியர் உலோச்சனார் இப்பாட்டின்கண் அக் கூற்றை அழகுறத் தொடுத்துப் பாடுகின்றார். இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை நீலத் தன்ன பாசிலை யகந்தொறும் வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தா துதிரப் புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் வரிவண் டூதலிற் புலிசெத்து வெரீஇப் பரியுடை 1வயமான் பந்தின் 2தாஅய்த் தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண் மல்லலஞ் சேரி கல்லெனத் 3தோன்றி அம்பல் மூதூர் 1அலரெழச் சென்ற தன்றோ கொண்கன் தேரே. இது, வரைவிடை மெலிந்தது2 உரை : இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை -இரும்பு போன்ற கரிய கொம்புகளையுடைய புன்னையின்; நீலத்தன்ன பாசிலை யகந்தொறும் - நீலம் போன்ற பசிய இலையிடந் தோறும்; வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்-வெள்ளி போல் விளங்குகின்ற பூங்கொத்துக்களின் நடுவே; பொன்னின் அன்ன நறுந்தாது உதிர -பொற்றுகள் போல அதன் நறிய தாது உதிரவே; புலிப்பொறிக் கொண்ட -புலியினது பொறிபோலும் வரிகளைத் தாங்கிய; பூநாறு குரூஉச்சுவல் - பூவின் மணம் கமழும் நிறம் பொருந்திய மணல்மேடு; வரிவண்டு ஊதலின் - வரிகள் பொருந்திய வண்டினம் படிந்து இசைப்பதால்; புலி செத்து வெரீஇ - புலியெனக் கருதி யஞ்சி; பரியுடை வயமான் பந்தின் தாஅய் - விரைந்த செலவினையுடைய வலிய குதிரை கள் பந்துபோல் துள்ளித் தாவுதலால்; தாங்கவும் தகைவரை நில்லா- நிறுத்தவும் நிறைக்கடங்கி நில்லாது விரையும்; ஆங்கண் -அவ்விடத்தினின்றும் நீங்கி; மல்லல் அம் சேரி கல்லெனத் தோன்றி - வளவிய சேரியிலுள்ளார் கண்டு கல்லென் றொலிக்கப் போந்து; அம்பல் மூதூர் அலர் எழ - அம்பல் கூறுவோர் வாழும் மூதூரிடத்தே அலர் எழுமாறு; கொண்கன் தேர் சென்றது அன்றோ - நம் கொண்கனது தேர் சென்ற தன்றோ? கூறுக எ-று. பூநாறு குரூஉச் சுவலிடத்தே, வண்டூதலின், புலி செத்து, வெரீஇ, வயமான், தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கணின்றும், சேரி கல்லெனத் தோன்றி, மூதூர் அலர் எழ, கொண்கன் தேர் சென்ற தன்றே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடற்காற்றின் பேரலைப்புக்கு உலையாது நிற்றல் வேண்டி, வன்மை மிக்கிருக்கும் புன்னையின் கருங்கோடு, நிறத்தாலும் தன்மையாலும் இரும்பை ஒத்தலின், இரும்பினன்ன கருங்கோட்டுப் புன்னை யென்றார்; “நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறை, இரும்பினன்ன கருங்கோட்டுப் புன்னை1” எனப் பிறரும் கூறுதல் காண்க. புன்னையின் தளிர் நீலநிறங் கொண்டு விளங்குதலின் நீலத்தன்ன பாசிலை யகந்தொறும் என்றார். “பெருந்தாள் நீனிறப் புன்னை2” எனப் பிறரும் கூறினர். புன்னையின் அரும்பு முத்துப் போல் வெண்ணிற முடைமை பற்றி, வெள்ளியன்ன விளங் கிணர் எனப் பட்டது. அதன் தாது பொன்னிறத்ததாதலால், பொன்னின் அன்ன நறுந்தாது என்றார்; பிறரும் “முடத்தாட் புன்னைப் பொன்னோர் நுண்டாது நோக்கி”3 என்றார். புன்னை யின் பொன்னிறத் தாது உதிர்ந்த இடம் புலிவரி போலத் தோன்றலும், அங்கே வண்டினம் படிந்து தாதூதுதலும், “புலிவரி யெக்கர்ப் புன்னை யுதிர்த்த, மலிதா தூதும் தேனோடொன்றி, வண்டியிர் இன்னிசை”4 என பேரிசாத்தனார் கூறுவதனாலும் இனிது தெளியப்படுகின்றன. எதைக்காணினும் எளிதில் மருளும் இயல்புடைத்தாகலின், குதிரைகள் புன்னைத் தாது படிந்த மணற் குன்றினைக் கண்டதும் புலியென அஞ்சி மருண்டன என்க. வாதுவர் குதிரையின் கண்களுக்கு மூடியிடுவது இதுபற்றி யெனவும் உணர்க. குரூஉச் சுவல், புன்னைத் தாது படிதலால் நன்னிறம் கொண்டு தோன்றும் மணல்மேடு, பரி, செலவு வயமான், வலிமை மிக்க குதிரை நிலத்தெறிந்த பந்து மேனோக்கி எழுவது போலக் குதிரைகள் துள்ளித் தாவினமை தோன்றப் பந்தின் தா அய் என்றார். தாங்குதல், வேண்டுமளவுக்குக் குசை வாரைப் பிடித்து நிறுத்தல்; “நிமிர்பரிய மாதாங்கவும்” என்பதன் உரை காண்க புலியென மருண்டு குதிரைகள் அஞ்சித் துள்ளி நில்லாவாகவே, அவ்விடத்தினின்றும் தேரைச் சேரிக்கண் செலுத்தினமை பற்றி, நில்லா வாங்கண் மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி என்றார். மூதூரைச் சேர இருக்கும் தெருக் களையுடைய பகுதி சேரி எனப்படும். சேரிவழியாக மூதூர்க்குட் புகுந்து சென்றமையின் சேரி கல்லெனத் தோன்றி அம்பல் மூதூர் அலரெழச் சென்றது என்றார். சேரிக்கண் தோன்றிய தனால், கல்லென்ற ஆரவாரமும், மூதூர்க்குட் புகுந்து சென்ற தனால் அலரும் எழுந்தன என்று கொள்க. மல்லல், வளன். விரைந்து வரைதலை மேற்கொள்ளாது தலைமகன் களவையே விரும்பி நீட்டித்து வரைவிடைவைத்தும் ஒருவழித் தணந்தும் பிரிந்தொழுகுவதனால், உளம் குலைந்து வருந்தி மெலியும் தலைமகட்கு, அவன் வரைதற்குரிய வகையில் முயலும் திறத்தை யுரைத்து, அவனது தேர், சேரியிலும் மூதூர்க்கண்ணும் வந்து சென்றமையும், அதனால் ஊர்க்கண் அம்பலும் அலரும் எழுந் தமையும் எடுத்தோதித் தோழி தலைமகளை ஆற்றுவிக்கலுற் றாளாக, ஆற்றாமை மீதூர்ந்து நின்ற தலைமகள், தோழிக்கு அவனது தேர் சேரிக்கண் தோன்றியதற்குக் காரணம் இது வென்பாள், பொன்னின் நறுந்தாது உதிரப், புலிபொறிக் கொண்ட பூநாறு குரூஉச் சுவல்,வரிவண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரியுடை வயமான் பந்தின் தாய்த், தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண், மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி என்றாள். குரூஉச் சுவலின் நிறம்கண்டு மருண்ட குதிரைகள், தகைவரை நில்லாது பந்துபோல் துள்ளிச் சேரிக்கண் தோன்றலும், குதிரை வாதுவரும் வாண்மறவரும் பிறரும் வாழும் இடமாகலின், சேரி கல்லென்று எழுந்த தென்பாள், பந்தின் தாஅய்த் தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண் மல்லலஞ் செரி கல்லெனத் தோன்றி என்றும், பல்வேறு தொழிலாளர் உறைதலால், தொழில் வளம்மிக்கது சேரியிடம் என்றற்கு, மல்லஞ் சேரி என்றும், அவர்கள், குதிரைகளைப் பற்றிநிறுத்தி அச்சம்போக்கி அமைந்துசெல்லச் செய்தமையின், அங்கே ஆரவாரம் எழுந்தது என்பது தோன்ற, சேரி கல்லெனத் தோன்றி என்றும், காரணமின்றியே அம்பல் மொழியும் இயல்பினராகிய முதுமகளிர் வாழும் மூதூர்க்கண் நுழைந்து சென்றது, அலர் கூறுதற்கு ஏற்ற பொருளாயிற்றே யன்றி வேறில்லை என்பாள், அம்பல் மூதூர் என்றும், மூதூர் அலரெழச் சென்றது அன்றோ கொண்கன் தேர் என்றும் கூறினாள், பூநாறு குரூஉச் சுவலைக் கண்ட குதிரைகள், புலியென மருண்டு பந்துபோலத் துள்ளித் தாங்கவும் தகைவரை நில்லாத வாறு போலத் தலைமகனது தேர் வரவு கண்ட நீயும், அவன் வரைதற்பொருட்டு வருகின்றானென மருண்டு யான் உரைப்பன கொண்டு அமையாது மகிழ்வாயாயினை என்பது குறிப்பு. ஆகவே கொண்கன் தேர், மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி மூதூர் அலரெழச் சென்றது, புலிப்பொறிக் கொண்ட குரூஉச் சுவலாகிய ஆங்கண் குதிரை நில்லாமையானன்றி வேறில்லை; அதனை உணராது அவர் வரைதற் பொருட்டு வருவர் என்பது என்னை என்றாளாம்.. இதனால், தலைவன் தெருண்டு வரைவு மேற்கொள்வானாவது பயன் என்க. 250. மதுரை மேலைக்கடையத்தார் நல் வெள்ளையார் மேலைக்கடையம் என்பது திருநெல்வேலி மாவட்டத்துப் பழமையான ஊர்களுள் ஒன்று. கல்வெட்டுக் காலத்தேயே கடையம் என்பது மேலைக் கடையம் கீழைக் கடையம் என இரண்டாகப் பிரிந்திருந்த செய்தி கல்வெட்டுக்களால் தெரிகிறது. மேலைக் கடையத்தாரான நல்வெள்ளையார் மதுரையில் தங்கி வாழ்ந்தமை பற்றி மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார் எனப்படுவாராயினர் . இனி இவர் பெயர் ஓலைக் கடையத்தார் நல் வெள்ளையார் என்று அச்சுப்படியிற் காணப்படுகிறது. இவர் பாடியதாக வேறொரு பாட்டும் இந்நூற்கண் உளது. இல்லிருந்து அறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைமகள் தலைச்சூல் கொண்டு கருவுயிர்க்கும் செவ்வியில் இருந்தாளாகத் தலைமகன், இற்கிழமை நல்கி வரைந்து கொளற் குரிய ஆடவர் இன்மையின் பரத்தையராய மகளிர்க்கு, வேண்டும் அளிசெய்தலைக் கடனாகக் கொண்டு அவர் சேரிக்குச் சென்று, அவர் மேற்கொண்டொழுகும் ஆடல் பாடல் அழகுகளைக் கண்டு வியந்து, பொன்னும் பொருளும் உதவியொழுகினான்; அக்காலை, அவர்களோடு நெருங்கிய தொடர்பெய்தவே, அவற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று. தலைமகள் மகனைக் கருவுயிர்த்துப் பண்டைய நன்னலம் எய்த , மகனும் நடைகற்றுத் தெருவில் விளையாடும் செவ்வி எய்தினான். அதுகாறும் தலைமகன் பால் புறத்தொழுக்கம் நிலவிற்று. தலைமகளோடு உடனுறையும் காலம் போதரவும், தலைமகன் மனைக்கண் தங்கும் மாண்பு கைக்கொள்ளத் தலைப்பட்டான். ஆயினும், அவனுடைய பரத்தைமை யொழுக்கம் தலைவியுள்ளத்தே பொறாமை விளை வித்துப் புலத்தற்குரிய நினைவே மிகுவித்து நின்றது. பரத்தைமை மேற்கொண்ட தலைமகற்கு உறுதுணையாய் மகளிர் நிகழ்த்தும் ஊடலும் புலவியும் துனியாய் முனிவு விளையாதவாறு சந்து செய்வது பாணர் விறலியர் முதலாயினார் செயல்வகையாகும். அம்மரபிற் கேற்ப, ஒருநாள், தலைமகன் பாணன் உடன்வரத் தன் மனையகம் போந்து ஆங்கு விளையாடிக்கொண்டிருந்த தன் மகனை எடுத்துத் தன் மார்பிடைத் தழீஇ ஏந்திக்கொண்டு காதலன்புடைய தன் மனைக்கிழத்தியை அண்மினான். தலை மகன் வரவுணர்ந்ததும், புலவி மிகுதலால் அவனை நோக்காது வேறு பக்கல் நோக்கி அவள் நின்றாளாக, அவன் பையச் சென்று பின்புறத்தே நின்று அவள் கூந்தலைத் தன் கையால் நீவினான். உடனே, அவள், நுதல் வியர்ப்பக் கண் சிவந்து அவன் பக்கல் முகத்தைத் திருப்பிக் கண்களைப் பரக்க விழித்து மருண்டோடும் மான்போல விலகி “யாரையா நீவிர்?” என மொழிந்து ஒதுங்கி நின்றாள். அவளது செயல், அவனுக்கு மிக்க மகிழ்ச்சி நல்கவே, உடனே பாணனை நோக்கிப் “பாணனே, இவள் செயலைப் பார்; வா, இருவரும் நன்கு நகைத்து மகிழலாம் ” என்று நகைத்தான். நகையென்பது மக்களிடையே ஒருவரின் ஒருவரைப் பற்றிப் படரும் பான்மைத் தாகலின், அவன்நகைப்புக் கண்டு பாணன் நகைக்க, இருவரையும் பற்றிய நகை மகனைப் பற்றுதலால் அவனும் நகைத்தான். அந்த நகை தலைமகட்குப் பெருமகிழ்ச்சி தந்து அவளை மிகவும் நகுவித்தது, இவ்வாறு மனைமுற்றும் நகையும் உவகையும் பரவி இன்புறுத்தலும், தலைமகளுடைய வெகுளியும் புலவியும் தாமாகவே மறைந்தொழிந்தன. இந்நிகழ்ச்சியைக் கண்ட நல்வெள்ளையார், தலைமகளின் புலவிக் குறிப்புணர்ந்து தலைவன் தன் வெள்ளைநகையால் அவளது உள்ளத்து வெகுளியை மாற்றித் தன் மனையின்கண் நகையும் உவகையும் நிலவுவித்து, இன்பம் இனிதமையச் செய்த திறம் கண்டு பெருவியப்புற்றாராக, அதுவே பற்றுக்கோடாக அவரது புலமையுள்ளம் இந்நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே அடக்கிய இப்பாட்டைத் தோற்றுவித்தது, இனி, அதனைக் காண்போம். நகுகம் வாராய் பாண பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் 1சிறுதேர் உருட்டும் தேமொழிப் புதல்வன் 2செவ்வாய் சிதைத்த சாந்தமொ டவ்வாய்க் காமர் நெஞ்சம் துரப்ப 1யாந்தன் முயங்கல் விருப்பொடு குறுகினெ மாகப் பிறைவனப் புற்ற மாசறு 2திருநுதல் நாறிருங் கதுப்பின்எங் காதலி 3மாறுற்று வெரூஉமான் பிணையின் ஒரீஇ யாரை யோஎன் றிகந்துநின் றதுவே இது, புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது. உரை : நகுகம் வாராய் - நகைக்கலாம் வருக; பாண - பாணனே; பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப - உள்ளே பரல் இடப் பட்ட பிளந்த வாயையுடைய தவளைவாய்க் கிண்கிணி ஒலிக்க; தெருவில் சிறு தேர் உருட்டும்-தெருவின்கண் சிறு தேர் உருட்டி விளையாடும்; தேமொழிப் புதல்வன் செவ்வாய் சிதைத்த சாந்தமொடு-இனிய மொழிகளைப் பேசும் புதல் வனது சிவந்த வாயினின் றொழுகும் நீரால் சிதைந்த சந்தனப் பூச்சுடன்; அவ்வாய்-அகத்தின்கண் உறையும் காதலிபால்; காமர் நெஞ்சம் துரப்ப - காதலால் அழகிதாகிய எமது நெஞ்சம் செலுத்துதலால்;யாம்-; தன் முயங்கல் விருப்பொடு குறுகினெ மாக-அவளை முயங்கவேண்டிய விருப்பத்தோடு சென்று அணுகினேமாக; பிறைவனப் புற்ற மாசறு திருநுதல் - பிறையினது அழகினைக் கொண்ட குற்றமற்ற திருநுதலையும்; நாறு இருங் கதுப்பின் - மணம் கமழும் கரிய கூந்தலையும் உடைய; எம் காதலி-எம் காதலியாவாள்; மாறுற்று - எம் மொடு மாறுபட்டு; வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ - அஞ்சி நீங்கும் மான்பிணைபோல எம்மின் நீங்கி நின்று; யாரையோ என்று - யார் ஐயா நீவிர் என்று சொல்லி; இகந்து நின்றது - எம் கைவரை இகந்து நின்ற நிலையை எ.று. பாண, புதல்வன் செவ்வாய் சிதைந்த சாந்தமொடு அவ்வாய் நெஞ்சம் துரப்ப, விருப்பொடு குறுகினெமாக, எம்காதலி மாறு உற்று, பிணையின் ஒரீஇ, யாரையோ என்று இகந்து நின்றது நகுகம், வாராய் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. பாணனையும் உளப்படுத்தலின், நகுகம் என்றது பன்மைத்தன்மை, பகுவாய் அரிபெய் கிண்கிணியைத் தவளைவாய்க் கிண்கிணி என வழங்குப. இது செல்வச்சிறுவர் காலில் அணிவதாகும். “செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண் கிணி1” என்பது காண்க. அரையிற் கட்டுவது குரும்பை போல்வது; “குரும்பை மணிப்பூண் புதல்வன் 2” என்பது காண்க. மக்கள் மொழியும் சொல், கேட்கும் செவிக்கு இன்பம் செய்தலின் தேமொழிப் புதல்வன் என்றார். செவ்வாய், சிவந்த வாயினின் றொழுகும் உமிழ்நீர்; ஆகுபெயர். வாய் நீரால் நனைந்த மகன் மார்பு, தலைவன் மார்பின் சந்தனப்பூச்சு நனைந்து கெடச் செய்தலின், செவ்வாய் சிதைந்த சாந்தம் என்றார். சாந்தம், சந்தனப் பூச்சு. அவ்வாய், அவ்விடம் ; அஃதாவது மனையின் அகம், மாறு, கருத்து மாறுபாடு; பிணக்கமுமாம். மான்பிணை, பெண்மான். இகத்தல், கையகப்படாது விலகி நிற்றல். புறத்தொழுக்கம் மேற்கொண்டு பரத்தையர் சேரிக்கண் தங்கிய தலைமகன் தன் மனைக்குப் போதருவான், தலைவியின் ஊடற் குறிப்புணர்ந்து, அதற்குரிய வாயிலாகிய பாண்மகன் உடன்வர வந்தானாகலின், அவனை நோக்கித் தன் காதலியின் ஊடலைக் கூறி நகைத்தல் மேயினமை தோன்ற, நகுகம் வாராய் பாண என்றான். அது கேட்டு வியப்பும் உவகையும் ஒருங்கு கொண்ட பாணன், மேலே தலைமகன் கூறுவதைக் கேட்கும் விருப்பினனாய் ஆர்வமுடன் அவன் முகம் நோக்கி முறுவலித்து நிற்ப, தன் மனையின் தெருப்புறத்தே நிகழ்ந்தது கூறலுற்று, அங்கே தன் புதல்வன் தன் காலில் கிண்கிணி யொலிப்பச் சிறுதேர் உருட்டித் தளர்நடையிட்டுச் சென்றதும், அப்போது தீவிய மழலை மொழிந்து வாயில் நீரூறி ஒழுகி மார்பு நனைய விளை யாடியதும் விதந்து, தெருவிற் சிறு தேருருட்டும் தேமொழிப் புதல்வன் செவ்வாய் என்றும், அவனுடைய மேனியழகும் மொழியின் இன்சுவையும் தன்னுள்ளத்தைப் பேரின்பத்தில் ஆழ்த்தினமையின், தான் ஆராமையால் அவனைத் தூக்கித் தன் சாந்தணிந்த மார்பில் தழீஇக் கொண்டதும், அதுபோழ்து அவன் செவ்வா யினின்றொழுகிய தீநீர் தன் மார்பின் சந்தனப்பூச்சினைச் சிதைத்ததும் எடுத்துச் செவ்வாய் சிதைத்த சாந்தமொடு என்றும் கூறினான். புதல்வனது நலம் புகன்று உரைப்பக் கேட்டு எழுந்த உவகையால் முகமலர்ந்து தன்னைத் தலைமகள் நோக்கி யதும், சாந்து சிதைந்தமை கூறக் கேட்கப் பிறந்த வெகுளியால் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிமறைத்துக் கொண்டதும், அவன் உள்ளத்தே பெருங்காதல் தோன்றி அவள்பால் செலுத்தின மையின், காமர் நெஞ்சம் துரப்ப என்றும், அக் காதலின் வெம்மை இறுக முயங்கும் முயக்கத்தாலன்றித் தணியாமைபற்றி யாம் தன் முயங்கல் விருப்பொடு குறுகினெமாக என்றும் கூறினான், அது கேட்டதும் வெகுளியால் முகஞ்சிவந்து வெட்டென மறுபக்கம் திரும்பி அவள் நீங்கினாள் என்பான் , நாறிருங் கதுப்பின் எம் காதலி மாறுற்று வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ என்றும், யான் விடாது தொடர்ந்து பற்றிக் கவவாமை எண்ணி, வெடித்த சொல்லொன்றை விளம்பினள் என்பான், யாரையோ என்றும், இகந்து நின்றது என்றும் எடுத்துரைத் தான். தன் காதலியின் காதலினும் வெகுளியின் மாண்பு மேதக்கது என்பான் போல மொழிந்து நகைத்தது, பாணற்கும் மகற்கும் மனைவிக்கும் நகை விளைவித்தமையின் ஊடல் தணிந்ததென உணர்க. விளக்கம் : “கரணத்தினமைந்து முடிந்த காலை1” எனத்தொடங்கும் நூற்பாவில், “அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும், தானவட் பிழைத்த பருவத் தானும்” என்றதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர். நச்சினார்க்கினியர், இந்நூற்பாவில் வரும் “ஏனைவாயில் எதிரொடு தொகைஇ2” என்றதற்கு இதனைக் காட்டி, “இஃது ஏனை வாயிலாகிய பாணற் குரைத்தது” என்பர். 251. மதுரைப் பெருமருதன் இளநாகனார். இவருடைய பெயர் மதுரை மருதன் இளநாகனார் என்றும் மதுரைப் பெருமருதனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது . அச்சுப்படியோ, மதுரைப் பெருமருது இளநாகனார் என்று குறிக்கிறது. மதுரைப் பெருமருதனார் என்றொரு சான்றோர் தொகைநூலிற் காணப்படுகின்றார். பெருமருதன் இளநாகனார் எனப்படுதலை நோக்கின் இவர் பெருமருதனார்க்கு மகனாதல் பெறப்படுகிறது. மருதன் இளநாகனார் என்றொரு சான்றோர் வேறே இருத்தலின், அவரின் வேறுபடுத்தற்கு என அறியலாம். இவர் பாடியதாக இவவொரு பாட்டுத்தான் தொகைநூல்களுட் காணப்படுகிறது. இப்பாட்டின் முதலிலும் இடையிலும் சில அடிகள் ஏடுகளில் சிதறிக் கிடக்கின்றன. காதலுறவுகொண்ட தலைமக்கள், அக்காதல் வளர்ந்து ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாம் வண்மை பெறுவது குறித்துக் களவொழுக்கத்தை மேற்கெண்டனர். தலைமகள் குறிஞ்சிப் புனத்தே பெற்றோர் எடுத்த தினைக் கொல்லையில் இருந்து புனங் காவல் புரியும் செயலினளாய்த் தன் உயிர் த் தோழியுடன் அப்புனத்தின்கண் நிறுத்தப்பட்ட பரணிடத்தே இருந்து வரலானாள். அதனை அறிந்த தலைமகனும் அப்புனத் திற்குப் போந்து அவளுடன் கூடிக் கிளிகடிந்தும் கா விளை யாடியும் சுனைப்பூக் குற்றும் ஒழுகிவந்தான். நாள் செல்லச் செல்லத் தினையும் கதிர் முற்றி விளையும் செவ்வியை எய்த நின்றது. தினைக்காவல் நீங்கின் தலைமகள் மனையிடத்தே செறிக்கப்படுவாள்; பின்னர் இருவரும் தலைக்கூடலாகாவாறு அவரது ஒழுக்கம் இடையீடுபடும் என்று கண்டாள் தோழி. தலைமகற்கு அதனை வெளிப்படவுரைத்து வரைந்துகொள்ளு மாறு மொழிவது தன் நிலைமைக்கு மிக்க செயலாம் என்பதையும் அத்தோழி எண்ணினாள். அதனால் அதனைக் குறிப்பு மொழியால் அவன் தானே உய்த்துணர்ந்து ஆவன செய்யுமாறு உணர்த்து வாளாயினாள். ஒருநாள் தலைமகன் தினைப்புனத்தின் ஒரு சிறையிலே வந்து நின்றான். அதுகண்ட தோழி, அவனைக் காணாள் போல ஏறட்டுக்கொண்டு தினைப்பயிரை நோக்கிக் கூறுவாளாய், “தினையே, யான் கூறுவதனைக் கேட்டு எனக்காக ஒன்று செய்தல் வேண்டும். இக்குறிஞ்சி நிலத்து நன்மலை நாடன்பால் எமக்கு உண்டாகிய பேரன்பினை நீ நன்கு அறிவாய்; அதனால் யாம் அவன்அன்பைப் பாடி மகிழ்வோம்; ஆயினும் நீ ஏந்திய கதிர்மணிகளைப் புள்ளினம் போந்து கவராதவாறு யாம் நின்னைப் புறங்காத்தொழுகுதலையும் நீ நன்றாகக் கண்டுள்ளாய்; கதிர் முற்றி விளைந்த வழி யாம் இப்புனத்தினின்றும் பிரிதல் வேண்டிய நிலைக்கு வருந்தி மேனிவேறுபடுகின்றேமாக, அதனை உணராமல், எம் தாயர், கடவுட்குப் பலிதூய் வழிபடும் பொருட்டு எம்மை மனைக்குக் கொண்டு சென்று இற்செறிப்பராயின், இங்கே காப்போர் இலராதலின், நின் கதிர்களைப் புள்ளினம் படிந்து கவர்ந்து போதல் ஒருதலை; ஆதலால் கதிர் முற்றித் தலைசாய்ந்து காட்டாது நிமிர்ந்து நின்று நின் விளைவினை நீட்டிப்பாயாக; இதுவே யாம் வேண்டுவது” என்று மொழிந்தாள். இக்கூற்றின்கண், தலைமகன்பால் தலைமகட்கு உளதாகிப் பெருகியிருக்கும் அன்பினையும், தினை விளைதற்குள் அவன் அவளை வரைந்துகோடலின் இன்றியமையாமையினையும் குறிப்பாய் உணர்த்தி வரைவு கடாவும் சிறப்பைக் கண்ட இளநாகனார், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். தினைவிளையுங்காலம் திருமணத்துக்குரிய காலமாகலின், அதனைக் குறிக்கொண்டே தோழி தலைமகன் விரைந்து முயலு மாறு இதனால் உய்த்துணரவைக்கின்றாள். நெடுநீர் அருவிய1 பெருங்கல் 2ஆங்கட் 3கடும்பாட் டீரத்துத் தடந்தாள் வாழைக் கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் நன்மலை நாடனை 4 நயவா யாம்அவன் நனிபே ரன்பின் இன்குரல் ஓப்பி நிற்புறங் காத்தலுங் காண்போய் நீயென் தனிரேர் மேனித் தொல்கவின் அழியப் பலிபெறு கடவுட் 5 பேண்மார் செறிப்பின் 6இடங்கொள் புள்ளினம் உடங்குகுரல் கவரும் தோடுதலைக் கோடாய் கிளர்ந்து நீடினை விளைமோ வாழிய தினையே. இது, சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇயது. உரை : நெடுநீர் அருவிய பெருங்கல் ஆங்கண் - மிக்கநீர் பெருகிய அருவியையுடைய பெரிய மலைப்பக்கத்து; கடும்பாட்டு ஈரத்து - மிக்க ஈரமுடைய சாரற்கண் நின்ற; தடந்தாள்வாழை - பெரிய அடியையுடைய வாழையின்; கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் - கொழுவிய பருத்த இனிய கனிகளை மந்திகள் கவர்ந்துண்ணும்; நன்மலைநாடனை - நல்ல மலைநாடனாகிய தலைமகனை; நயவா - நயந்து; அவன் நனிபேரன்பின் - அவன் செய்த மிக்க கருணையுடன் கூடிய பேரன்பினை வியந்து; இன்குரல் ஓப்பி- இனிய குரலெடுத்துப் பாடிக் கதிர்களைப் புள்ளினம் கவராதபடி ஓப்பி விலக்கி; யாம் நிற்புறங்காத்தலும் காண்போய் - யாம் நின்னைக் காவல் புரிந்து வருதலையும் கண்டிருக்கின்றாய்; என் தளிர் ஏர் மேனித் தொல்கவின் அழிய -என் மாந்தளிர் போன்ற மேனியின் பழைய அழகு வேறு படவே; பலிபெறு கடவுள் பேண்மார் செறிப்பின் -பலியுண் கடவுட்கு வழிபாடு செய்வாராய்த் தமர் இல்லின்கண் செறிப்பாராயின்; இடங்கொள் புள்ளினம் உடங்கு குரல் கவரும் - புனத்தை இடமாகக் கொண்டு புள்ளினம் ஒருங்கு கூடிக் கதிர்களைக் கவருமாகலின்; தோடு தலைக் கோடாய் - தோடுபோர்த்த கதிர் தலைசாயாய்; கிளர்ந்து - நிமிர்ந்து நின்று; தினை - தினையே; நீடினை விளைமோ -உடனே விளையாது நீட்டித்து விளைவாயாக எ.று தினையே, யாம் நாடனை நயவா அவன் நனிபேரன்பின் இன்குரல் ஓப்பிப் புறங்காத்தலும் காண்போய்; என்மேனித் தொல்கவின் அழியக் கடவுட் பேண்மார் செறிப்பின், புள்ளினம் குரல் கவரும்; ஆதலால் தோடு தலைக் கோடாய், கிளர்ந்து நீடினை விளைமோ, வாழிய எனக் கூட்டி வினை முடிவு செய்க. நெடுநீர், மிக்கநீர் பெருங்கல், பெருமலை. கடும்பாட்டீரம், மிகவுண்டாகிய ஈரம்; என்றும் குன்றாத மிக்க ஈரமுடைய இடமாதலின் அதனைக் கடும்பாட்டீரம் என்றார்.கடுமை, மிகுதி குறித்தும், படுதல் உண்டாதல் சுட்டியும் நின்றன. கடும் பாடு, அரும்பாடு பெரும்பாடு என்பன போல்வதென்றலு மொன்று. தடந்தாள் வாழை யென்றது ஈண்டு மலைவாழையினை. தட: உரிச்சொல். ஏனை வாழைவகைக் கனிகளிலும் இவ்வகை சிறுத்து இனிமை மிக்கிருப்பது பற்றி ஆய்கனி என்றார். கவரும் எனவே, மந்தி களவிற் சென்று காவலர் அறியாமைப் பறித் துண்ணுதல் பெற்றாம். நயவா என்றது நயந்தென எச்சப் பொருட்டு. இன்குரல் ஒப்பி, இனிய குரலெடுத்துப் பாடும் பாட்டிசையால் ஒப்பி என விரித்துக் கொள்க. தளிர், மாந்தளிர்; “மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர்1” என்பதனாலறிக. தொல்கவின், பழைய இளமைக்கவின். “பலிபெறூஉம் உருகெழு தெய்வம்2” என்று பிறரும் கூறுதல் காண்க. கடவுள் வழிபாட்டில் அக்கடவுட்கென வகுக்கப்பெறும் நீரும் பூவும் உண்பொருளும் ஊனும் பிறவும் பலியென வழங்கும். அவை முறையே நீர்ப்பலி, பூப்பலி, உண்பலி, ஊன்பலிஎன வழங்கிவருகின்றன; “கடவுட் பேண்மார், நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத், தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்3” என வருதல் காண்க. புள்ளினம் எனப் பொதுப்படக் கூறினாராயினும், சிறப்புடைய கிளிகளே ஈண்டுக் கொள்ளப்படும். உடங்கு, உடன் என்னும் பொருட்டு, தோடு, இளங்கதிர்களை மூடியிருக்கும் தோகை. கோடுதல், தலை வளைதல்; விளைமோ என்ற விடத்து, மோ; முன்னிலையசை. வாழி, அசை நிலை. களவிற் கண்டு காதலுறவு கொண்ட தலைமகன், தலை மகளது கருத்தொருமை யறிந்து துணிந்தவன், கடிதின் வரைந்து கோடலை முயலாது களவிற் கூட்டத்தையே விரும்பியொழுகு வதும், தினை விளையும் செவ்வி யெய்தியவழி நீட்டித்தலும் நன்றல்ல எனத் துணிந்த தோழி, தினை விளையுங் காலம் திருமணத்திற்குரிய செவ்வி யாதலையும், விளைந்தவழிப் புனங் காவலின் நீங்கி மனைக்கண் செறிப்புண்டலையும், பின்னர்த் தலைக்கூடலின் அருமைப் பாட்டையும் தலைமகற்குணர்த்தி வரைவு கடாவுகின்றாளாகலின், உள்ளுறையால் களவிற்போந்து அவன் பெறும் இன்பத்தின் சிறப்பின்மையைச் சிறைப்புறத்தே நின்ற தலைமகன் தெருளுமாறு, குறிப்பால் உரைத்து வெளிப் படையாகத் தினைப்பைங்கூழ்க்கு உரைப்பாளாய், முதற்கண் தலைமகன்பால் தமக்குள்ள அன்பு மிகுதி தோன்ற அவன் மலையைப் பாடிய திறத்தையெடுத்து, நன்மலைநாடனை நயவா யாம் அவன் நனிபேரன்பின் இன்குரல் ஒப்பி என்றாள். இனிய குரலில் பாடிய பாட்டுத் தலைமகனது நன்மலை பொருளாக அமைந்ததாயினும், அவனது மிக்க பேரன்பைச் சிறப்பித்தற்கும், தினை கவர வரும் புள்ளினங்களை ஓப்புதற்கும் ஏற்புடைத்தானமை புலப்பட, நன்மலை நாடன் என்றும். நனி பேரன்பின் இன்குரல் என்றும் விதந்து கூறினாள். நாடனது நனி பேரன்பினைப் பாடினேமாயினும், நின்னைப் புறங்காக்கும் பணியிலும் யாம் வழுவிற்றிலேம் என்பது நீ நன்கறிந்தது எனத் தினைக்குக் கூறுவாள், யாம் நிற்புறங் காத்தலும் காண்போய் என்றும், எமது காவலால் நீ பெறுதற்குரிய விளைவுப்பயனைப் பெறும் செவ்வி யெய்தியது போல, யாமும் எமது களவொழுக்கப் பயனாகிய அழிவில் கூட்டம் பெறுதற்குரிய வாய்ப்பினை எய்திற்றிலேமாகலின் எமது மேனிநலம் கெடுகின்ற தென்பாள், என் தளிரேர் மேனித் தொல்கவின் அழிய என்றும், அதனைக் காணின், எம் தாயர் எம்மை இல்லின்கண் செறிப்பரென்றும், அதனோடமையாது முருகவேள் முதலிய கடவுளர்க்கு மறி முதலியவற்றைக் கொன்று உயிர்ப் பலியிட்டுத் தாம் வருந்து வதுடன், எமது மறைந்த வொழுக்கம் புலப்படுமாறு எம்மை வருத்துவதும் செய்வர் என்பாள், பலிபெறு கடவுட் பேண்மார் செறிப்பின் என்றும் இவ்வண்ணம் யாம் இற்செறிக்கப்படின், நின்னைப் புறங்காப்பார் இலராதலால், நின்புனத்தையே இடமாகக்கொண்டு புள்ளினம் நீ பெறும் கதிர்களையும் கவர்ந் தொழியும் என்பாள், இடங்கொள் புள்ளினம் உடங்குகுரல் கவரும் என்றும், இதற்கு யான் செயற்பாலது யாது என்பாயாயின், நீ நின் தோட்டிடைப் பொதிந்து தாங்கி நிற்கும் கதிர்களை விளைந்து தலைமடங்கவிடாது நீட்டித்தல் வேண்டும்; அப் போழ்து நம் நன் மலைநாடனும் தன் முயற்சி முற்றி வரைவொடு வருதலால், எம்களவின் முடிபயனாகிய கடிமணப் பயனை யாமும் பெறுவோம்; எமது காவல் நீங்காமையின் நீயும் விளை பயனைப் பெறுவாய் என்பாள், தோடுதலைக் கோடாய் கிளர்ந்து நீடினை விளைமோ என்றும், தான் கூறும் குறிப்பைச் சிறைப்புறத்தானான தலைமகன் கேட்டுத் தெருண்டவுள்ளத்தால் மலர்ந்த முகத்தனாவது ஓர்ந்து மகிழ்கின்றாளாகலின் வாழி என்றும் கூறினாள். தலைவியின் மேனியைத் தோழி என் தளிரேர் மேனி என்றது, “ஒன்றித் தோன்றும் தோழிமேன1” என்பத னாலமையும். பெருங்கல் ஆங்கண் கடும் பாட்டீரத்துத் தடந்தாள் வாழையின் ஆய்கனியைப் பிறர் அறியா வகையில் மந்தி கவர்ந் துண்ணும் என்றது, பெருமைமிக்க குடியில் தந்தை தன்னையரின் பேரன்பால் வளர்ந்து சிறக்கும் தலைமகளின் அரிய நலத்தை “நாடறி நன்மணம்” செய்து கோடலை நாடாது, மறைந்த நெறியில் இனியும் போதந்து நுகர்தல் சிறப்பன்று என உள்ளுறுத் துரைத்தவாறு. தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 252. அம்மெய்யன் நாகனார் நாகனார் என்ற பெயருடையார் பலர் இருத்தலின், அவரின் வேறுபடுத்தற்குத் தந்தை பெயராகிய அம்மெய்யன் என்பதைப் புணர்த்துச் சான்றோர் குறித்துள்ளனர். இப்பெயர் இரண்டு ஏடுகளில் அம்மையன் என்று காணப்படுகிறது. அதனை நோக்கு மிடத்து அம்மெய்யன் என்ற பழம் பெயரே பிற்காலத்தே அம்மையன் எனவும் அம்மையப்பன் எனவும் மருவிவிட்டதோ என நினைத்தற்கு இடமுண்டாகிறது. மெய்யன் மெய்யப்பனென வழங்கினாற்போல அம்மெய்யன் அம்மையப்பன் என வழங்கு தற்கு இடமுண்டன்றோ! இவர் பாடியதாக வேறுபாட்டொன்றும் காணப்படவில்லை. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலை மக்களிடையே பிரிவரிதாகிய தண்டாக் காதல் நின்று, இருவர் உயிரையும் ஓருயிரெனப் பிணித்திருப்பதைக் கண்டு மகிழ்ந்திருந்தாள் தோழி. அவ்வாறு நாள்கள் சில கழியவும், தலைமகன் பொருட்பேறு கருதி வேறுநாடு செல்லும் கடமையுடையனானான். அவ்வப் போது தலைமகன் தலைமகளின் தலைமைப் பண்புகளையும் தலைமைச் செயல்களையும் கண்டு பேரின்பம் எய்துவதோடு, தோழிபால் அவற்றைச் சொல்லி வியந்து பாராட்டுவதும் செய்தொழுகினான். நற்பண்பும் நற்செய்கையுமுடையார் யாவரா யினும், அவருடைய பண்பு செயல்களின் நலம் விளங்கித் தோன்றுமிடத்துக் காண்போர் பாராட்டுவது பண்புடைமை யாகும்; ஆகவே, தலைமகன் தலைமகளின் தலைமை நலம் வெளிப்படுந்தோறும் பாராட்டுதலில் தவறில்லை . அவன் தலைமகளின் நீங்கிச் செல்லவேண்டிய நிலைமை தோன்றிய போது, ஒருகால் தன் ஆண்மையால் பிரியக் கருதிச் செல்லினும், உள்ளத்தே நிலவும் காதல், பொருள் மேற்சென்ற அவன் நெஞ்சினை வலியழித்துப் பிரிவை இடையிற் கைவிடுவிக்கும் என்றும், அவன் அடிக்கடி தன்பால் பாராட்டியுரைத்த தலைவி யின் குணநலங்கள் அவன் நெஞ்சில் தோன்றி அவளைப் பிரியா வாறு பிணிக்கும் என்றும் தோழி நினைந்திருந்தாள். தொடங்கின் இடையில் மடங்காத ஆண்மையன் தலைமகன் என்பதை அறிந்துவைத்தும், தோழி தன் பெண்மையால் இவ்வண்ணம் எண்ணியிருப்ப, அவன் பொருள்வயிற் பிரிவதே துணிந்தான். தலைமகட்கு அவன் பிரிவுத் துணிபு மிக்க வருத்தத்தைப் பயந்தது. ஆனால், தோழி, அன்பும் அறமும் அறிவு மாகிய மூன்றும் உருக் கொண்டாற் போலும் மாண்பினளாதலின், தகுவன கூறி அவளை ஆற்றுவித்தாள். ஆயினும் அவளது உள்ளத்தில் தலைமகன் பிரிந்த திறம் பேராராய்ச்சியை நிகழ்த்துவதாயிற்று. “பிரிவின்கண் தலைமகன் நெஞ்சம், மேற்கொண்ட பொருளைச் செய்தற்குரிய நினைவுகளே நிறைந்திருத்தலால், காதல் நினைவு தோன்றுதற்கு இடமின்மையின், அவற்குச் சேறல் இனிது இயல்வதாயிற்று,” என்றாள். அந்நிலையில் வேறொரு நினைவு தோன்றி அவளை வருத்துவதாயிற்று. அவன் செல்லும் வழியில், நெஞ்சின்கண் இடையறவின்றி நிலவும் பாவைபோன்ற தோற்றமும் அகன்ற அல்குலிடமும் மலர் பிணைத்தன்ன மழைக்கண்ணும் செந் நாயின் சிவந்த நாவைப் போன்ற சீறடியும் உடைய இவளுடைய இனிய குணஞ் செயல்கள் தோன்றி அவனது செலவை விலக்கி யிருத்தல் வேண்டுமே? கருதிய பொருளைக் கடிதின் முற்றி வரைந்து மீளுதல் வேண்டுமென முடுகும் அவனது உள்ளத்து எழுச்சியின் முன் இவள் குணஞ்செயல்கள் மேனின்று தோன்றும் மதுகை இலவாயின போலும் என்று எண்ணித் தலைமகளைத் தேற்றுவாளாயினள். இவ்வாறு தலைமகளின் ஆற்றா நெஞ்சினைத் தன்னோடு சேர்த்தி நுண்ணிய ஆராய்ச்சியிற் புகுத்தி, ஆறுதல் பெறுமாறு செய்த தோழியின் செயல் நுட்பம் தேர்ந்து வியந்த சான்றோரான அம்மெய்யன் நாகனார் அவள் கூற்றினைப் பட்டாங்குத் தமது இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். உலவை ஓமை ஒல்குநிலை ஒடுங்கிச் சிள்வீடு கறங்கும் சேய்நாட் டத்தம் 1திறம்படர் கொள்கையோ டிறந்துசெயி னல்லது அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க் கில்லென 1வல்லா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப் பாவை யன்ன பழிதீர் காட்சி ஐதேந் தகன்ற அல்குல் மைகூர்ந்து மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் நன்னாப் புரையும் சீறடிப் பொம்மல் ஓதிப் புனையிழை குணனே. இது, பொருள் வயிற் பிரியுமெனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை : உலவை ஓமை ஒல்குநிலை ஒடுங்கி -கொம்புகளையுடைய ஓமை மரத்தின் ஒடுக்குற்ற இடங்களிலே ஒடுங்கிக் கிடந்து; சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் - சிள் வண்டுகள் ஒலிக்கும் சேய்மையிலுள்ள நாட்டுக்குரிய வழிகளை; திறம் படர் கொள்கையோடு இறந்து செயின் அல்லது -செய்தற் குரிய கூறுபாடுகளையே நினைந்த முறைமையுடனே கடந்து சென்று செய்தாலல்லது; அரும்பொருட் கூட்டம் - அரிய பொருள்களின் தொகுதியானது; இருந்தோர்க்கு இல்லென-மனைக்கண் மடிந்திருப்போர்க்கு எய்துதல் இல்லையா மென்பது கருதி; வல்லா நெஞ்சம் வலிப்ப- காதலால் பிரியும் வன்மையில்லாத நெஞ்சினை வலியுறுத்திச் செலுத்துதலால்; சூழ்ந்த வினையிடை விலங்கல போலும்- துணிந்து மேற் கொண்ட வினையிடையே தோன்றித் தடுத்திலபோலும்; புனைசுவர்ப் பாவையன்ன பழிதீர் காட்சி - அழகிய சுவரிடத்தே புனையப்பட்ட பாவை போன்ற குற்றமில்லாத தோற்றத் தையும்; ஐது ஏந்து அகன்ற அல்குல் - மென்மையுறப் பொருந்தி அகன்ற அல்குலையும்; மைகூர்ந்து மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் - மைதீட்டப்பெற்று மலர்பிணைத்தாற் போன்ற கரிய இமை பொருந்திய குளிர்ந்த கண்களையும்; முயல்வேட்டெழுந்த முடுகு விசைக் கதநாய்-முயலைப் பிடித் தற்கு விரும்பி யெழுந்த முடுகிய செலவும் சினமுமுடைய வேட்டை நாயின்; நல்நா புரையும் சீறடி - நல்ல நாவை யொக்கும் சிறிய அடியையும்; பொம்மல் ஓதிப் புனையிழை குணன்-திரண்ட கூந்தலையும் புனைந்த இழையையு முடைய இவளுடைய நற்குணங்கள் எ.று. பழிதீர் காட்சியும், அகன்ற அல்குலும், மழைக்கண்ணும், சீறடியும், ஓதியும், இழையுமுடைய இவளுடைய குணன், சேய்நாட்டத்தம் இறந்து செயினல்லது, அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென, நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த வினை யிடை விலங்கல போலும் எனக் கூட்டிவினை முடிவு செய்க. ஓமை மரத்தின் கொம்பு நீங்கிய இடங்களில் உண்டான ஒடுக் கங்கள் ஒல்குநிலை எனப்பட்டன. இவற்றைப் பொந்து என்றும் புரை யென்றும் வழங்குப. இவற்றுள் பல்வகைப் பூச்சிகள் வாழ்தல் இயல்பாகலின், இந்த ஓமையின் பொந்துகளில் ஒலி மிக்குத் தோன்றும். சேய்நாடு, சேய்மையிலுள்ள நாடுகள். அத்தம், வழிகள். திறம், மேற்கொண்ட வினையைச் செய்தற் குரிய கூறுகள் . படர்தல் , நினைத்தல். இறத்தல், கடந்து சேறல். பொருளின் தொகையைக் கூட்டம் என்றார். கூட்டம், கூட்டுதலு மாம். இருத்தல், மனைக்கண் இருத்தல், “நாளு நாளும் ஆள்வினை யழுங்க. இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையாற் புகழ்1” என்று பிறரும் கூறுதல் காண்க. மென்மைப் பண்பு சிறக்கும் நெஞ்சினை வல்லா நெஞ்சம் என்றார். சூழ்ந்த வினை, எண்ணித் துணிந்த வினை. சுவரிடத்தே புனைந்து செய்யப்பட்ட பாவையைப் புனை சுவர்ப்பாவை என்றார். “காழ்புனைந் தியற்றிய வனப் பமை நோன்சுவர்ப் பாவை2” எனச் சான்றோர் குறிப்பது காண்க. உயரவேண்டுமிடம் மெல்லிதாக உயர்ந்து அழகுற அமைதலின் ஐதேந்தல்குல் என்றார். ஐது ஏந்துஅல்குல், ஐது அகலல்கல் என இயையும். மாயிதழ், கரிய கண்ணிமை. மகளிரின் காலடிக்கு நாயின் நாவை உவமங்கூறுதல் மரபு; “வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி3” என்று பிறரும் கூறுப. தலைமகனுடைய பிரிவுக் குறிப்புணர்ந்து வருந்திய தலை மகள் உள்ளத்தை அறிவாராய்ச்சியிற் செலுத்தி, ஆற்றியிருத்தற் குரிய வன்மை பெறுவிப்பான் கருதிய தோழி, பொருட்பிரிவின் மாண்பை முதற்கண் எடுத்தோதுவாள், சேய் நாட்டத்தம் இறந்து செயினல்லது அரும்பொருட் கூட்டம் இருந் தோர்க்கு இல் என்றாள். அத்தம் இறப்போர், ஆற்றிடை யுளவாகும் அருமைகளை எண்ணாமல் மேற் கொண்ட பொருளைச் செய்தற்குரிய வினைக்கூறுகளைத் திறம்பட நினைத்தல் இன்றி யமையாது என்றற்குத் திறம்படர் கொள்கையொடு இறந்து செயினல்லது என்றும், பிறவாற்றால் பெறலருமை தோன்ற அரும்பொருட் கூட்டம் என்றும், மனைக்கண் மகிழ்ந்திருப் போர்க்குப் பொருட்பேறு இல்லை என்றற்கு இருந்தோர்க்கு இல் என்றும், அதனை நம் தலைவர் அறிகுவரெனினும் , நின்பால் உளதாகிய காதல் மிகுதியால், அவரது நெஞ்சினை வற்புறுத்தும் அளவுக்கு அதன் மென்மைப் பண்பு குன்றிற்றன் றென்பாள் வல்லா நெஞ்சம் என்றும், அதனைக் கண்டு பொருட்கூட்டம் பற்றிய உணர்வு எழுந்து அந்நெஞ்சினை வலியுறுத்திற் றென்பாள், வல்லா நெஞ்சம் வலிப்ப என்றும், அதனால் நம் காதலர் செலவினைத் துணிவாராயினர் என்பாள், சூழ்ந்த வினை என்றும் கூறினாள். நெஞ்சம் என்புழி இரண்டாவது விகாரத்தால் தொக்கது. நெஞ்சம் பொருணசை மிக்குப் பிரிவு வலியுறுத்துமாயின், பொருளின் நிலையாமை முதலிய சிறப்பின்மைகாட்டி மறுத் தொழிவன் என உணர்க. “செல்வே மாயின்எம் செலவு நன்று என்னும், ஆசை யுள்ளம் அசைவின்று துரப்ப, நீ செலற் குரியை நெஞ்சே வேய்போல், தடையின மன்னும் தண்ணிய திரண்ட, பெருந்தோள் அரிவை யொழியக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல், இழந்த நாடு தந்தன்ன, வளம்பெரிது பெறினும் வாரலென் யானே1” எனப் பொருள்வலித்த நெஞ்சினைத் தலைமகன் மறுத்தலைக் காண்க. நின் பழிதீர் காட்சியும் ஐதேந் தகன்ற அல்குலும் மாயிதழ் மழைக்கணும் பிறவும் நிலைபெற வீற்றிருக்கும் அவர் நினைவின்கண், பொருள்செய் வினைக்குரிய சூழ்ச்சிகள் இடம் பெற்றுவிட்டமையின், நின் குணநலங்கள் தோன்றி அவர் செலவினைத் தவிர்க்கமாட்டாவாயின போலும் என்பாள், புனையிழைகுணன் சூழ்ந்த வினையிடை விலங்கல போலும் என்றாள். ஆகவே, இனி நாம் அவரது பிரிவாற்றி இருத்தலன்றி வேறு யாதும் செயற்பாலேமல்லேம் என்றவாறா யிற்று. ஓமையின் ஒல்குநிலை யொடுங்கிச் சிள்வீடு கறங்கு மென்றதனால், இனி நாம் நம் மனைக்கண் ஒடுங்கி நமக்குரிய அறம் புரிந்தொழுகுவதே கடன் என உள்ளுறுத் துரைத்தலின் , புனையிழை குணன் விலங்கலபோலும் என்றதனோ டமைவாளா யினள் என்க. 253. கபிலர் களவொழுக்கம் பூண்ட தலைமகள் தன் பெருமனைக்கண் செறிப்புண்டாளாக, காதல் மாண்புறுவது கருதித் தலைமகன் களவையே நீட்டித்து ஒழுகுவானாயினன். புறத்துப் போகாவாறு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தலைமகனைப் பண்டுபோல் தலைக்கூடி இன்புறும் வாய்ப்புக் குன்றினமையின் பெரிதும் வருந்தினள். தோழிக்கு அவளது வருத்தம், மிக்க அவலத்தை விளைவிக்கவே, தலைமகனைக் கண்டு விரைய வரைந்து கொள்ளு மாறு வேண்டுவாளாயினள். தலைமகனும் தலைமகளைக் குறியிடத்தே காணும் வேட்கை மீதூர்ந்து முயன்றான்; ஆயினும், பன்முறையும் அவன் முயற்சி இடை யீடுபட்டதனால், வேறு செயல்வகை தெரியாமல் கலக்கமுற்றான். ஒருகால், அவன் தலைமகளது மனையின் சிறைப்புறத்தே வரவும், தோழி கண்டு அவனோடு சொல்லாடத் தலைப்பட்டாள். அப்போழ்து மாலைக் கால மாகலின், புள்ளினம் தத்தம் துணையுடன் கூடுநோக்கிச் சென்றன. அவற்றைக் கண்டதும், தானும் தன் காதலியுடன் இனிதிருக்கும் வாய்ப்புப் பெறாமை நினைத்துத் தலைவன் பெருமூச்செறிந்தான்; ஒருபால், கணவனும் மனைவியுமாகிய இருவர் தம்மிற் கூடியிருந்து சொல்லாடி யின்புறுவது கண்டான்; உடனே படுத்துக் கிடக்கும் யானையின் பெருமூச்சுப் போலத் தலைமகனிடத்தும் வெய்துயிர்ப்பு உண்டாயிற்று. அவன் செயலைக் கண்டு பெரிதும் இரக்கமுற்ற தோழி, “பெரும, புள்ளினத்தையும் புணர்ந்த காதலரையும் கண்டு வெறிதே வெய்துயிர்க்கின்றனை; வரைந்து கோடலல்லது இனிச் செயற் பாலது வேறில்லை யென யான் குறிப்பாயும் வெளிப்படையாயும் பன்முறையும் கூறினேன்; என் சொற்களை நீ கொள்ளாயாய் வருந்துகின்றனை; நின்னைப் போலவே தலைமகளும் நின்னை நினைத்தொறும் உளம் துடித்து இனைகின்றாள்; அவளுடைய அழகின் கதிர்ப்பு மிகுதி கண்ட பெற்றோரால் அரிய காவலில் வைக்கப்பட்டுள்ளாள்; ஆதலால் யானும் செயல்வகையின்றி வருந்துகின்றேன்” என்று சொல்லித் தன் மனக்கவலை மெய்ப் பட்டுத் தோன்ற நின்றாள். தலைமகனை விரைந்து வரைந்துகொள்ளுமாறு முடுக்கும் கருத்தினால், தோழி, அவன் மனத்தைப் பெருங்கவலையில் ஆழ்த்தித் தன் கருத்தை முடித்துக்கொள்ளும் சதுரப்பாட்டை நினைத்து வியந்த கபிலர் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை 1கழிபடர்க் கலங்கிய எவ்வமொடு பெரிதழிந் 2தெனவ கேளாய் 3இனையினை நினவ 4உள்ளுதொறும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் பேரிசை உருமொடு மாரி முற்றிய பலகுடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி பலவுறு குன்றம் போலப் பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே இது, தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. உரை : புள்ளுப்பதி சேரினும் -புள்ளினம் தத்தம் துணையுடன் கூடு நோக்கிச் செல்லினும்; புணர்ந்தோர்க் காணினும் - கணவன் மனைவியாய்க் கூடியிருக்கும் காதலரைக் கண்டாலும்; பள்ளி யானையின் வெய்ய உயிரினை - படுத்துக்கிடக்கும் யானைபோலப் பெருமூச்செறிந்து; கழிபடர்க் கலங்கிய எவ்வமொடு - மிக்க நினைவால் நிறை கலங்கிய வருத்தத் துடனே; பெரிது அழிந்து - மிகவும் உள்ளமழிந்து; எனவ கேளாய் - என் சொற்களையும் செவியிற் கொள்ளாது; இனை யினை - வருந்துகின்றாய்; நினவ உள்ளுதொறும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் - நின் சொல்லும் செயலுமாகியவற்றை நினைக்குந்தோறும் கண் கலுழ்ந்து புலம்பும் ஒள்ளிய இழையையுடைய இளையவளாகிய தலைமகள்; பேரிசை உருமொடு மாரி முற்றிய - பெரிய முழக்கத்தையுடைய இடி யொடு கூடிய மழைமுகில் சூழ்ந்த; பல குடைக்கள்ளின் வண்மகிழ்ப் பாரி -பலவாகிய பனங்குடையிற் பெய்து உண்ணும் கள்ளுணவால் வண்மை மிக்க வேள் பாரியின்; பலவுறு குன்றம் போல - பலாமரங்கள் நிறைந்த பறம்புமலை போல; பெருங்கவின் எய்திய அருங்காப்பினள் - கண்டார் மனம் கவர்க்கும் பேரழகு பொருந்தியதனால் உளதாகிய அரிய காவலையுடையளாயினாள் காண் எ-று. பெரும, வெய்ய வுயிரினை, எவ்வமொடு பெரிதழிந்து, எனவ கேளாய், இனையினை; நினவ, உள்ளினும் பனிக்கும் குறுமகள், பாரி குன்றம் போலப் பெருங்கவின் எய்திய அருங்காப் பினள்; ஆகவே நீ ஒருதலையாய், வரைந்து கொள்வதல்லது வேறு வழியில்லை என எஞ்சி நிற்கும் குறிப்பெச்சத்தைப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. பதி, கூடு. புணர்ந்தோர் எனவே, கணவனும் மனைவியுமாய்ப் பலர் அறியக் கூடியிருக்கும் காதலர் என்பது பெற்றாம். பள்ளி, படுக்கை, வெய்ய உயிர்த்தல், வெய்துயிர்த்தல். கழிபடர், மிக்க நினைவுக்கேதுவாகிய வருத்தம். கழிபடரால் மனநிறை கலங்குதலின், கழிபடர்க் கலங்கிய எவ்வம் என்றார்; “கழிபடர்க் கலங்கி, நா நடுக்குற்ற நவிலாக்கிளவி1” என்று பிறரும் கூறுதல் காண்க. எனவ, நினவ என்றவிடத்து அகரம் விரிக்கும் வழி விரித்தல்; எழுத்துப் பேறுமாம் ; “நினவகூறுவல் எனவ கேண்மதி 2”எனச் சான்றோர் வழங்குதல் காண்க. பனித்தல் துன்பமிகுதியால் கண்கலுழ்ந்து உடல் நடுங்குதல். பனைமடலால் உட்குடைவாகச் செய்யப்படுவது பற்றிக் குடையெனப்பட்டது3”. இதனை மண்டை என்றலுமுண்டு கள்ளுண்போர் பனைமடலாற் செய்யப்பட்ட குடையில் கட் பெய்து உண்பது பற்றிப் பலகுடைக் கள் என்றும், வருவோர்க்கு இக்கள்ளை வரையாது நல்கும் வேள்பாரியின் வண்மையினை விதந்து வண்மகிழ்ப் பாரி என்றும் கூறினார். “ஒரு சார் அருவியார்ப்ப வாக்க,வுக்க தேக்கட்டேறல், கல்லலைத் தொழுகு மன்னே”4 என இவ்வாசிரியரே பாரியின் வண்மகிழ்ச் சிறப்பைக் கூறுதல் காண்க “வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, இரும்பனங் குடையின் மிசையும், பெரும்புலர் வைகறை5” என்பர். பறம்புமலை பலாமரங்கள் நிறைந்த வளமுடைய தென்பதைப் பறம்பு “உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே; ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே, இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே”1 என்பதனாலும் அறிய லாம். தீஞ்சுளைப் பலவும் வள்ளிக்கிழங்கும் தேனும் மிகுந்து, ஏனைவேந்தர் பலர் சூழ்ந்து பன்னாள் முற்றினும் வளங்குன்றாத சிறப்புடைமை பற்றி அதனைக் கைப்பற்றும் கொள்கையால், பறம்பு நாட்டைச் சூழ்ந்திருந்த முடிவேந்தரும் குறுநிலத் தலை வரும் பாரியின் அற்றம் நோக்கியிருந்தனர் என்பது வரலாறு; அதனால் அதற்குப் பிறர் எளிதில் கொள்ளற்காகாத பெருங்காவல் இருந்து வந்தமையின், அதனையே இங்கு விதந்து, பலவுறு குன்றம் போல என உவமம் செய்தார். எய்திய காப்பு, எய்திய தனால் உளதாகிய காப்பு என விரியும்; உண்ட களைப்பு என்றாற் போல. களவொழுக்கம் பூண்ட தலைமகன் தலைமகளைத் தலைக் கூடப் பெறாது பன்முறையும் இடையீடுபட்டு வருந்துகையில், பகற்போதில் இரைதேர்ந்து போகிய புள்ளினம், மாலைப்போதில் தத்தம் துணையுடன் கூடுநோக்கிப் பெயர்வது காணுங்கால், தலைவனும் தன் காதலியுடன் இருந்து பெறுதற்குரிய அழிவில் கூட்டத்தை நினைத்து வருந்துமாறு கண்ட தோழி, அவன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுப்பாளாய்ப், புள்ளுப் பதி சேரினும் என்றும், தன்னைப்போல் களவுவழிநின்று, பின்பு அதன் வழித்தாகிய கற்புநெறியாற் கடிமணம் புணர்ந்து இனி துறையும் காதலரைக் காணும்போதெல்லாம், தலைமகன் உள்ளமும் அப்புணர்நிலை வாழ்க்கையின்பத்தை யெண்ணி ஆராமை யெய்தியது கண்டு, புணர்ந்தோர்க் காணினும் என்றும், பள்ளி யானையின் வெய்ய உயிரினை என்றும் கூறினாள். வேண்டியது முடிக்கும் வீறுடைய யானையொன்று மடிமையால் பள்ளியிற் கிடந்து வெய்துயிர்த்தலைத் தோழி காட்டியது, கருதியது முடிக்கும் கட்டாண்மை சிறந்த காளை யாகிய தலைவன், இவ்வாறு கையறவு படுவது முறைமையன் றென்பது தெரித்தற்பொருட்டு. இவ்வண்ணம் தலைமகனைத் தோழி நெருங்கிக் கூறுதல் இயல்பே; பிறாண்டும், “குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக், குவளைத் தண்டழை யிவள்ஈண்டு வருந்த, நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந்தலைப்படாஅப் பண்பினை யெனினே”1 எனத் தோழி நெருங்கிக் கூறுதல் காண்க. அவலமும் கவலையும் அழுங்கலும் மிக்கவழி, யாவர்க்கும் அறிவு அற்றப் படும் என்பதற்கொப்ப, யான் கூறுவனவற்றைக் கேளாயாயினை என்பாள், கழிபடர்க் கலங்கிய எவ்வமொடு பெரிதழிந்து எனவ கேளாய் இனையினை என்றாள். தலைமகளோ எனின், நீ வரைவு மேற்கொள்ளாது குறியிடம் போந்து இடையீடுபட்டு வருந்துவதையும் தலைப்பெய்த காலத்து நீ கூறியவற்றையும் நினைந்து நினைத்தொறும் கண்ணீர் சொரிந்து கையறவு படு கின்றாள் என்பாள், நினவ உள்ளுதொறும் பனிக்கும் என்றும், அவள் மிகவும் இளையளாதலின், அஃது அவட்கு அமையும்; நீ அறிவற்றப்பட்டு அயர்ந்து வரைவு நீட்டித்தல் கூடாதென்பாள், ஒள்ளிழைக் குறுமகள் என்றும் உரைத்தாள். இளமை காரணமாக அவள் மேனிக்கண் கதிர்த்து விளங்கும் பெருங்கவின், காண்போர் உள்ளத்தைக் கவர்தலை நீ அறிதல் வேண்டும் என்றாள். வண் மகிழ்ப் பாரீயின் பலவுறு குன்றம் போல என எடுத்தோதியது, பறம்பின் பெருவளம் கண்டிருந்த தமிழ்வேந்தர் அனைவரும் அதனைத் தாந்தாம் கைக்கொள்ள விரும்பியது போல, அவளுடைய பெருங்கவின் நொதுமலர் வரைவுக்கு இலக்காகியுள்ளது. அதனால் அவட்குப் பெருங்காவல் அமைக்கப்பட்டுள்ளது என்பாள், பெருங்கவின் எய்திய அருங்காப்பினள் என்றாள், நொதுமலர் தலைமகளை வரையக் கருதுகின்றனரென வெளிப்பட மொழிதல் மிகையாதலின், அதனைக் குறிப்பாய் உவமையாற்றலாற் பெற வைத்தாள்; பிறாண்டும் “சிறுநனி வரைந்தனை கொண்மோ” என்று கூறலுறும் தோழி, நொதுமலர் வரைவு வேண்டியிருத்தலை. “பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப், பறைதபு முதுகுரு கிருக்கும், துறைகெழு தொண்டி யன்னஇவள் நலனே2” என உள்ளுறையால் உணர்த்துமாறு காண்க. தலைமகன் இது கேட்டுத் தெருண்டு வரைவானாவது பயன். 254. உலோச்சனார் நெய்தல் நிலத்துக் கானற் சோலைக்கண் தலைமகளைத் தனித்துக் கண்டு காதலுறவு கொண்ட தலைமகன், இயற்கைப் புணர்ச்சியி னிறுதியில், அவளால் குறிக்கப்பெற்ற உயிர்த் தோழியைக் கண்டு அவளை மதியுடம்படுத்தான். ஆயினும், தன் களவு வெளிப்படுவதற்கு நாணித் தலைமகள் தோழி முன்னர்த் தலைமகனைப் பண்டு அறியாதாள்போல ஒழுகலானாள். அதனால், அவனது குறையைத் தலைமகட்குணர்த்தித் தோழியிற் கூட்டம் பெறுவிக்கும் முயற்சியில் தோழி ஈடுபடலானாள்; தலைமகளும் ஆயமகளிரும் கூடி விளையாட்டயரும் இடங் கட்கு அவனை வருவித்து உடன் விளையாடற்கு இடம் அமைத் தாள். அவனும் அவர்களுடன் வண்டல் பயின்றும், வரிமணல் அயர்ந்தும், கொடியடும்பு கொய்தும், இனியன கூறியும் விளை யாட்டயர்வானாயினான். இவ்வாறு பகற்போது கழிக்கும் தலைமகன், மாலையில் தன்மனைக்குச் செல்வான். இவ்வண்ணம் பயின்றவழியும், தலைமகள் அவன் சொல்லும் சொற்களுக்கு எதிரொன்றும் மொழியாமலே இருந்தாள். இனியும் நீட்டித்தல் கூடாதெனக் கருதிய தோழி, ஒரு நாள் மாலையில், அவன் அவரின் நீங்கிச் செல்லத் தொடங்கவும், தலைவி காண அவனை எதிர்ப்பட்டு நிறுத்தி வண்டலாட்டு முதல் நிகழ்ந்தன அனைத்தும் சொல்லி, நீ மொழிந்த நன்மொழிகட்கு எதிர்மொழி யொன்றும் பெறாமையால் மனைக்குச் செல்வான் தலைப்பட்டனை; இக்கானற் சோலையிடத்தேயுள்ள எம் சிறுகுடியில் தங்கி , நின் குதிரையொடு நீயும் யாம் தரும் விருந்துண்டு தனிமையின்றி இரவிருந்து செல்ல மாட்டாயோ?” என்றாள். இக்கூற்றின்கண், தோழி, தலைமகனைத் தம் மனைக்கண் வரவேற்று விருந்தோம்பும் சிறப்பு இலளாயினும், தானே படைத்துக்கொண்டு மொழிவதும், அவன் தன் மனைக்கு வரின், விருந்தாய் வந்தார்க்கு முகமலர்ந்து நோக்கியும் இன்சொல் வழங்கியும் இனியன நல்கியும் ஓம்புதல் தலைமகளாய தனக்குக் கடனா தலினாலும், விருந்தினரை மறுத்தல் அறமன்றாகலானும், வாய் நிறையத் தேன்பெய்து கொண்டாரைப் போல மறுக்கவு மாட்டாது ஏற்கவும் இயலாது தலைவி முறுவல் காட்டி முகமலர்ந் தமையுமாறு தோழியின் மதிநுட்பம் மாண்புறுதல் கண்ட உலோச்சனார்க்கு வியப்பு மிக்குற்றெழுந்தது. அதனை அவரது நல்லிசைப் புலமையுள்ளம் இப்பாட்டு வடிவில் நல்குவதாயிற்று. 1வண்டல் தைஇயும் 2வரிமணல் அயர்ந்தும் குன்றோங்கு வெண்மணற் கொடியடும்பு கொய்தும் துனியில் நன்மொழி இனிய கூறியும் சொல்லெதிர் பெறாஅ யாகி மெல்லச் செலீஇய செல்லும் 3ஒலிகடற் சேர்ப்ப உமணர் தந்த உப்புநொடை நெல்லின் 4அயினி நின்மா அருத்த5நீயிவண் 6கணவிரி பெருந்தொடை புரளும் மார்பின் துணையிலை தமியை சேக்குவை யல்லை நேர்கட் சிறுதடி நீரின் மாற்றி வானம் வேண்டா 7வாழ்வின்எம் கானலஞ் சிறுகுடிச் சேர்ந்தனை 8செலினே இது, தோழி படைத்து மொழிந்தது. உரை : வண்டல் தைஇயும் - வண்டல் மனையில் பாவை வைத்து விளையாடியும்; வரிமணல் அயர்ந்தும் - வரி வரியாகத் திரைக்கப்பட்ட மணலின்கண் விளையாடியும்; குன்று ஓங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்-குன்று போல் உயர்ந்த மணன்மேட்டிற் படர்ந்து பூத்திருக்கும் அடும்பங் கொடியிற் பூக்களைக் கொய்தும்; துனியில் நன்மொழி இனிய கூறியும் - வெறுப்பை விளைக்காத இனிய சொற்களையே சொல்லியும்; சொல்லெதிர் பெறாஅயாகி - அச்சொற்களுக்கு மறுமொழி யொன்றும் பெறாது ; மெல்லச் செலீஇய செல்லும் - ஊர்க்குச் செல்லக் கருதி மெல்ல இவ்விடத்தின் நீங்கும்; ஒலி கடல் சேர்ப்ப - முழங்குகின்ற கடல் சார்ந்த நெய்தனிலத் தலைவனே; உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் அயினி - உப்பு வாணிகர் அவ்வுப்பை விற்றுக் கொணர்ந்த நெல்லினால் சமைக்கப் பெற்ற உணவை; நின்மா அருந்த - நின்தேர்க் குதிரைகள் உண்ண; நீ இவண் கணவிரி பெருந்தொடை புரளும் மார்பின் -நீ இவ்விடத்தே அலரிப்பூவால் தொடுக்கப்பட்ட பெரிய மாலை புரளும் மார்புடன்; துணையிலை தமியை சேக்குவை யல்லை - துணையின்றித் தனியையாய்த் தங்குவாயல்லை; நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி - நேர்நேராக வகுக்கப்பட்ட இடம் பொருந்திய சிறு சிறு உப்புப் பாத்திகளில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிக்கும்; வானம் வேண்டா வாழ்வின் - மழையை நாடாத வாழ்க்கையையுடைய; எம் கானல் அம் சிறு குடிச்சேர்ந்தனை செலின் - கானற்சோலை சூழ்ந்த எம் சிறுகுடியில் தங்கிச் செல்குவையாயின் எ.று. சேர்ப்ப, சிறுகுடி சேர்ந்தனை செலின், நின்மா அயினி அருந்த, நீ இவண் துணையிலை தமியை சேக்குவையல்லை காண் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வண்டல், கடற்கரை வண்டல் மண்ணால் சிறுவீடுகட்டிக் கோலம் செய்து பாவை வைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு. வரிமணல், கடல் அலை போந்து உலாவுதலால் திரை திரையாகப் படியும் நுண் மணல்; இம்மணலில் இருந்தும் கிடந்தும் ஓடியும் விளையாடல். அலைவாய்க்குச் சிறிது சேய்மையில் கடற்காற்றால் பல ஆண்டு களாகத் தொகுக்கப்பட்டுக் குன்றுபோல் உயர்ந்து நிற்கும் மணற்குன்றினை, வெண்மணல் என்று ஒழிந்தார். அம்மணற் குன்றின்மேல் அடும்பங் கொடிகள் படர்ந்து பூத்திருத்தலால் அப்பூக்களைக் கொய்து விளையாடுவது நெய்தனிலச் சிறுவர் இயல்பு. இந்த அடும்பு, அடம்பு எனவும் அடம்பங்கொடி யெனவும் வழங்கும் . இன்றும் அப்பகுதியில் வாழும் பரதவர் அதனை அடப்பங்கொடி யென்று குறிக்கின்றனர். துனி, வெறுப்பு. கேட்போர் உள்ளத்தே உவகையும், மேலும் கேட்டற்கு வேட்கையும் தோற்றுவிக்கும் மொழிகள் என்பார், துனியில் நன்மொழி என்றார். எதிர்சொல், மறுமாற்றம், செல்லக் கருதிப் பைய அடிபெயர்க்கும் நிலையைச் செலீஇய செல்லுதல் என்று குறிக்கின்றார். நொடை, விலை. அயினி, உணவு; “முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு, வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித், திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக், கண்டோர் மருளக் கடும்புட னருந்தி”1 என வருதல் காண்க. கணவிரி, அலரி; தொடை, மாலை, நேர்கண் சிறுதடி, நேரிய சதுரமாக அமைக்கப் பெற்ற உப்புப்பாத்தி. நேர்கண், சதுரம். நீர், கடல்நீர், வானம் வேண்டா வாழ்வு, மழையை விரும்பாத உப்பு விளைவித்து வாழும் வாழ்வு. மழை பெய்த வழி உப்புக் கரைந்து கெட்டொழி வதால், உப்பு விளைவிப்போர் வாழ்வு வானம் வேண்டா வாழ்வு எனப்பட்டது; “வானம் வேண்டா வறனில் வாழ்க்கை2” எனப் பிறரும் கூறுதல் காண்க. தலைமகற்கும் தலைமகட்கும் களவு நெறியில் உளதாகிய காதலுறவு தோழி யறிய வளர்ந்து சிறக்க வேண்டியிருத்தலால், தோழிபால் தன் கருத்தையுணர்த்தி உடம்படுவித்தவன், அவள் குறிப்பின்படியே வந்து பயிலுகின்றானாகலின், தோழி தலை மகளைத் தானறிய அவன்குறையை நேர்ந்து களவொழுக்கத்தை மேற் கொள்விக்க முயல்வாளாயினாள்; தலைமகள் பெருநாணி னளாதலின், விரையாது பையச் சொற்களைத் தொடுத்துத் தோழி அவளை மதியுடம்படுப்பாள், தமது விளையாட்டின்கண் ஆய மகளிரிடையே பகற்போதினைக் கழித்த தலைமகன், சோர் பொழுது கண்டு ஒருநாள் தன்னூர்க்குச் செல்லச் சமைவது காண்கின்றாள்; உடனே, தலைமகள் உடன்வர அவன் முன் சென்று நின்று, பகன் முற்றும் அவன் செயல்வகைகளில் தம் கருத்து ஒன்றியிருந்தமை தோன்ற, வண்டல் தைஇயும் வரி மணல் அயர்ந்தும், குன்றோங்கு வெண்மணற் கோடியடும்பு கொய்தும் என அவன் விளையாட்டிடத்துச் செய்த உதவிகளை நிரல்பட எடுத்தோதுகின்றாள்; அவற்றைத் தானும் கண்டிருந் தமை தோன்றத் தலைவி முகமலர்ந்தும் கண்குளிர நோக்கியும் முறுவலித்தும் புலப்படுத்தினாளாக, இந்த இனிய சூழ்நிலையில் பிரியக் கருதும் நீ பைய அடிபெயர்த்தல் என்னையென ஆராய்வாள் போலச் சிறிது எண்ணித் தலைமகள் குறிப்பையும் கண்டு, துனியில் நன்மொழி இனிய கூறினை; சொல்லிலும் குறை யில்லை; வேறு என்னையோ குறை என வினவி, துனியில் நன்மொழி இனிய கூறியும், சொல்லெதிர் பெறாஅ யாயினை யன்றே; அதனாற் செலவு கருதினைபோலும் என்பாள், துனியில் நன்மொழி இனிய கூறியும், சொல்லெதிர் பெறாஅ யாகி மெல்லச், செலீஇய செல்லும் சேர்ப்ப என்றாள். ஒருவர்பால் ஒன்று பெறக் கருதுவோர் முதற்கண் யாதேனும் ஒன்றைச் செய்தற்பாலர்; எதிர்மொழி பெறுவது நின் கருத்தாதலின் அதற்கு ஏற்ப நீயும் மொழிவழங்கினை; அம்மொழியிடத்து எதிர்மொழி வழங்கற்குரியோர் மறுத்தற்குரிய வெறுப்புத் தன்மையுளதோ எனநோக்கின், அஃது இல்லை என்பதைத் துனியில் நன்மொழி எனச் சிறப்பித்தும், நன்மொழியும் சொல்வோரது மாட்டாமை யால் துனி பயக்குமாதலின், நீ அவ்வாறு சொற்சோர்வு பட்டிலை யென்பாள், இனிய கூறியும் என்று விதந்தும், இனி நின்பால் குறையின்மையின், சொல்லெதிர் நல்காமை எமது குறை என்று தலைமகளை நோக்கி முறுவலித்துச் சொல்லெதிர்பெறா அயாகி மெல்லச் செலீஇய செல்கின்றனை என்று அவனை நயந்தும் கூறினாள். அவ்வழி, தலைமகள் உள்ளத் தெழுந்த உவகை மீதூர்ந்து, மேனி நலம் கதிர்த்து விளங்க. அவன் அகன்ற மார்பினைத் தன் நீண்ட கண்களால் அளந்து அங்கே கிடந்த மாலையில் ஒன்றி நிற்கக் கண்டாள் தோழி. அக்குறிப்புணர்ந்த தோழி நீ வரைவொடு வரின் எம் தலைமகள் நின்மார்பினைத் திருமணத்தால் சேர்வள் என்பாள், நின்மா அயினி அருந்த என்றும், நீ இவண் துணையிலை தமியை சேக்குவையல்லை என்றும் , கானலம் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே என்றும் கூறினாள், சிறுகுடிச் சேர்ந்தனை என்றது, தலைமகனை வரைவொடு வருதல் வேண்டும் என்னும் குறிப்பிற்று. சொல் லெதிர் பெறும் குறிப்பினையாயின், இப்போது செலவினைத் தவிர்ந்து எமது சிறுகுடிக்கண் வந்து தங்கிப் போதல் வேண்டும் என்பாள், எம் சிறுகுடி சேர்ந்தனை செலினே என்றும் , அங்கே யாம் நினக்கேயன்றி நின்மாவுக்கும் இனிய உணவு தந்து ஓம்பு வதுடன் துணையில்லாத் தனிமை நீங்க இனிய சொல்லாடி மகிழ்விப்போம் என்றற்குத் துணையிலை தமியை சேக்குவை யல்லை என்றும் கூறினாளாம். வானம் வேண்டா வாழ்வின் எம் கானலம் சிறுகுடி என விதந்தது, கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டதாகலின் வானத்தின் உதவி வேண்டாதது எமது வாழ்வு; அதுபோல, எம் சொல்லெதிர் பெறுவான் வண்டல் தைஇயும் வரிமணல் அயர்ந்தும், கொடியடும்பு கொய்தும், துனியில் நன்மொழி இனிய கூறியும் உதவிய நினக்கு யாம் நீ விரும்பியன உதவுவேம் எனக் குறிப்பித்தவாறு. தலைவன் தெருண்டு வரைவது பயனாம். 255. ஆலம்பேரி சாத்தனார் தோழியிற் கூட்டம் பெற்றுக் காதலுறவு சிறந்துவரும் தலைமகன், தலைமகளை இரவுக்குறியிடத்தே எதிர்ப்பட்டு அளவளாவி இன்புறுகின்றான். இவ்வாறு, இரவின்கண் தனியனாய் வந்து தலையளி செய்வது கண்டு பெருமகிழ்ச்சி யெய்தும் தலைமகட்கு, அதனை விலக்கித் தலைமகனை மணந்துகொண்டு பெறும் அழிவில் கூட்டத்தில் பெருவேட்கை கிளர்ந்தெழுந்தது. அதனால், அவள் தோழிபால் தலைமகன் உள்ளத்தை வரைதற் கண் செலுத்துமாறு குறிப்பாளாயினள். இதனை வரைவு கடாதல் என்பது வழக்கு. தலைமகள் குறிப்பின்படி யொழுகும் கடப் பாட்டினளாகிய தோழியும், அவள் கருத்தின் மாண்பு கண்டு, அதுவே தக்கது என இசைந்தாள். தலைமகனை நோக்கத் தோழியின் நிலை சமனன்றாகலின், அவள் தலைமகன்பால் வரைவு பற்றிய சொற்களைப் பட்டாங்கு வெளிப்பட மொழிதல் முறையன்று. அதனால், அவள் தலைமகற்கு அதனைக் குறிப் பாகவே பெரும்பாலும் மொழிவள். மேலும், ஒன்றனைச் செய்யுமாறு அறிவுடையோர்க்கு உரைக்க நேருமாயின், அக் காலை, அதனை அவர்கள் தாமே உய்த்துணர்ந்து கொள்ளுமாறு உரைப்பதுதான் சிறப்பும் தகுதியுமாகும், மேதக்க அறிஞனா கலின், தலைமகற்கு அதனைக் குறிப்பாக வுணர்த்துதலும் மிகை எனினும், அவன், தலைமகள் உள்ளத்தில் தன்மேல் உளதாகிய காதல் முறுகிப் பெருகித் தன்னையின்றிக் கணமேயும் அமையாத நிலையினை எய்துவித்தல் வேண்டிக் களவே விரும்பியொழுகு கின்றான்; அதனைத் தiலமகளும் தோழியும் அறிந்துகோடல் அரிதாகலின், தம் உள்ளத் தெழுந்த வேட்கை மிகுதியால் அவர்கள் குறிப்பாகத் தங்கள் வேட்கைநிலையை வரைவு கடாவும் வகையாற் புலப்படுத்துகின்றனர். வேட்கையின் மிகுதி, தமது ஒழுக்கத்தால் தலைமகற்கு ஏதமுண்டாகுமோ என்ற அச்சமாகத் தோன்றி, அவ்வேதம் எய்தாமை விலக்கும் சொல்லும் குறிப்புமாக வெளிப்படும். இதனை ஆசிரியர் தொல்காப் பியனார். “பொழுதும் ஆறும் காப்பும்என் றிவற்றின், வழுவி னாகிய குற்றம் காட்டலும் , தன்னை அழிதலும் அவன்ஊறு அஞ்சலும், இரவினும் பகலினும் நீவரு கென்றலும், கிழவோன் தன்னை வாரல் என்றலும், நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும், புரைபட வந்த அன்னவை பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப” என்பர். அவர், “என்ப” எனத் தமக்கு முன்னுள்ள தொல்லாசிரியர் மேல்வைத்து ஓதுதலால், இக்குறிப்புக்கள் தொல்காப்பியர்க்குப் பன்னூறாண்டுகட்கு முன்பிருந்த சான்றோர் களால் வகுத்துக் காணப்பட்டமை பெறப்படும். இம்முறையில், தலைமகள் குறிப்புவழித் தோழியே அறிந்து தலைமகனை வரைவுகடாவுவள். இங்கே தலைமகளு ள்ளத்திற் பெருகிய வேட்கை, தலைமகனது காதலுரிமையை ஒருதலையாகத் தான் பெற்று அழிவில் கூட்டப்பேற்றினை விரைந்து எய்துதல் வேண்டு மென அவளை முடுகுதலின், அவளே முற்பட்டுத் தோழிக்கு உரைக்கலுறுகின்றாள். “ஒருதலை யுரிமை வேண்டியும் மகடூஉப், பிரிதல் அச்சம் உண்மை யானும், அம்பலும் அலரும் களவு வெளிப் படுக்கும் என்று, அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும், போக்கும் வரைவும் மனைவிக்கண் தோன்றும்” என்று ஆசிரியர் தலைமகட்கு அமைதி காட்டுகின்றார். மேற்கூறியவாற்றால் வரைவுக் குறிப்பு ணர்த்தற் கிடம்பெற்ற தலைமகள், தோழியை நோக்கி, “ஊரவர் உறங்குகின்றனர்; கானவர் தமக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு உறக்கமிலராயினர்; களிற்றொடு பொருத வேங்கை சிலம்பில் முழங்காநிற்கும்; இடியும் மின்னும் மழையும் பாம்பும் மிக்குள்ள இன்றிரவு, அவர் வாராதொழிதல் நன்று; அவர் வாராமையால் நமது நலம் குன்றுமாயினும் அமைகுவம்” என்று சொல்லுகின்றாள். தலைமகளது வேட்கை பெருகித் தன் காதலற்கு ஏதம் நிகழாமையைக் குறிக்கொண்டு பேணுமளவில் மிக்கு நிற்பதைத் தலைவியின் இக்கூற்று வெளிப்படுத்துவது கண்ட சாத்தனார், அவளது காதலன்பு, தன்னலமே நோக்கும் இளமையின் மடமை யிகந்து, புதியனாய்ப் போந்த தலைமகன்பால் படர்ந்து, மனை யறம் ஓம்பற்கு வேண்டும் மாண்புடைய வளர்ச்சி நலத்தை எய்தினமையைத் தமது புலமைக்கண்ணால் நோக்கி இப் பாட்டினைப் பாடுகின்றார். கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே உருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க்1 காவலர் துஞ்சார் வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை கன்முகைச் சிலம்பிற் 2குழுமும் அன்னோ மென்றோள் நெகிழ்ந்துநாம் வருந்தினும் இன்றவர் வாரா ராயினோ நன்றுமன் தில்ல உயர்வரை யடுக்கத் 3தொளிறுபு மின்னிப் பெயல்கான் மயங்கிய பொழுதுகழி பானாள் திருமணி யரவுத்தேர்ந் 4துழல உருமுச்சிவந் தெறியும் ஓங்குவரை யாறே. இஃது, ஆறு பார்த்துற்றது5. உரை : கழுது கால் கிளர - பேயினம் காற்றிற்கலந்து இயங்க; ஊர் மடிந்தன்று - ஊரவர் உறங்கினாராயினும்; உருகெழு மார்பின் குறிஞ்சி பாடி - கேட்டார்க்கு உட்குத் தரும் முறையினை யுடைய குறிஞ்சிப்பண்ணைப் பாடிக்கொண்டு; கடியுடை வியனகர் கானவர் துஞ்சார் - காவலமைந்த பெரிய மனையின் கண் உறையும் காவலரும் உறங்காராயினர்; வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை - வலிமிக்க யானையோடு பொருது வென்ற ஒளியுடைய வரி பொருந்திய வேங்கைப் புலி; கன் முகைச் சிலம்பில் குழுமும் - மலையிடத்துக் கன்முழைஞ் சினுட் கிடந்து முழங்கும்; அன்னோ - ஐயோ; மென்றோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் - மெல்லிய தோள் மெலிந்து நாம் வருந்துவேமாயினும்; இன்று அவர் வாராராயின் நன்றுமன் - இன்று இந்த இரவின்கண் அவர் வாராதொழிகுவாராயின் மிகவும் நன்றுதான்; உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி - உயர்ந்த மலைப்பக்கத்தே விளக்கமுடன் மின்னி; பெயல்கால் மயங்கிய பொழுது கழி பானாள் - மழையும் காற்றும் கலந்து பெய்தமையால் நெடும்பொழுது கழிந்த நள்ளிரவில்; திருமணி அரவு தேர்ந்து உழல - முழக்கத்தால் அஞ்சித் தான் இழந்த மணியைப் பாம்பினம் தேடி யுழலாநிற்ப; உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறு - இடிகள் மிக முழங்கி அதிரும் உயர்ந்த மலைப்பக்கத்து வழியைக் கடந்து எ.று. ஓங்குவரை ஆறு கடந்து, யாம் வருந்தினும், இன்று அவர் வாராராயின் நன்றுமன்தில்ல; ஊர்மடிந்தன்று, ஆயினும் கானவர் துஞ்சார்; வேங்கை குழுமும், ஆகலின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கழுது, பேய், கால் கிளர்தல், கால் பெயர்ந்து இயங்குதல். ஊர்:ஆகுபெயர். முருகயர்தற்கும் வேட்டம் போவதற்கும் கானவர் சமையுங்கால் இக்குறிஞ்சிப்பண் பாடப்படு மாகலின், இதனை உருகெழு மரபின் குறிஞ்சி என்றார்; வில்யாழிலிட்டு இக்குறிஞ்சிப்பண் பாடப்படின் வண்டினம் தம் இனமென மயங்குமெனவும், யானைகள் இப்பண்ணிசை கேட்கின், நின்றாங்கு அமைந்து உறங்குமெனவும் சான்றோர் கூறுப. உயரிய மதிற்சுவர் களாலும் வேலிகளாலும் காவலமைக்கப்பட்ட பெருமனை யாகலின், கடியுடை வியன்நகர் என்றும் வாயில்தோறும் நின்று காவல் புரிவோரைக் காவலர் என்றும் குறித்தார். அரும்போர் உடற்றி வென்றமையால் வேங்கை முழைஞ்சினுள் கிடந்து குழுமுதல் தோன்ற,வயக்களிறு பொருத வேங்கை என்றார். குழுமுதல், முழங்குதல்; “மறப்புலி ஒளிறேந்து மருப்பின் களி றட்டுக் குழுமும்”1 எனச் சான்றோர் கூறுவது காண்க. பெயல் கால்மயங்கிய பொழுது, பெயலும் காற்றும் கலந்து பெய்யும் காலம். பெயல் கான்மயங்கிய பொழுது எனக் கொண்டு, காடு முற்றும் மழைநீர் கலந்தபொழுது என வுரைத்தலும் ஒன்று. மிக முதிர்ந்த பாம்புகள் மணியுடையவாம் என்றும், இரவின்கண் அம்மணியை உமிழ்ந்து, அதன் ஒளியில் தனக்குரிய இரைதேடிச் செல்லும் என்றும், மணியை இழந்த நாகம் மிகவும் அலமந்து வருந்துமென்றும் பண்டையோர் கருதினர்; அதனால், திருமணி அரவுத் தேர்ந்து உழல என்றார். ஓங்கு வரை ஆறு - உயர்ந்த மலையூடு வரும் வழி. தலைமகன்பால் தனது உரிமை ஒருதலையாக அமைய வேண்டுமென எழுந்த வேட்கை மிகுதியால், அவன் உள்ளத்தை வரைதற்கண் செலுத்துமாறு தலைமகள் தோழிக்குக் கூறலுற்று, அவன் இரவிற் போந்து பெறும் கூட்டத்தை மறுத்தல் வேண்டி, அவன் வரும் நள்ளிரவில் கழுதினம் இயங்கும் என்பாள் கழுது கால் கிளர என்றும், ஊரவர் ஒடுங்கி யுறங்கும் போதறிந்து கழுதுகள் இயங்கும் என்பது பற்றி ஊர்மடிந்தன்று என்றும், எனினும், ஊர்க்காவலர் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு உறக்கமின்றி நகர்க்காவல் புரிகின்றனரென்றற்கு, குறிஞ்சி பாடிக் கடியுடைவியனகர்க் காவலர் துஞ்சார் என்றும் கூறினாள். குறிஞ்சிநிலத் தெய்வங்கள் விரும்பும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியவழி, அவை அவ்விடம் போந்து சூழ்ந்துறை யுமாதலின், அப்போழ்து அங்கே போதரின் அத்தெய்வங்கள் அணங்கி வருத்துமென்ற அச்சத்தால் உருகெழுமரபின் குறிஞ்சி என்றாள். இனி, இவ்வூரைச் சூழ்ந்திருக்கும் காட்டை நோக்கின், அங்கே வாழும் வலிமிக்க யானைகளும் வேங்கைப் புலிகளும், தம்மிற் பொருது முழங்கும் கொடுமையும், களிற்றை வென்ற வேங்கை மலைமுழைஞ்சினுள் முழங்கும் முழக்கமும், அவ் வழியாக வரும் தலைமகற்கு அச்சமும் ஊறும் விளைவிக்கும் என்று எண்ணி வருந்துகின்றாளாகலின், வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை கன்முகைச் சிலம்பில் குழுமும் என்றாள். இன்னோரன்ன இடையூறு குறித்துத் தலைமகனை வாரற்க எனின் தன் மேனிநலம் குன்றுமென நிகழும் தடையை எண்ணி, என் தோள் இயல்பாகவே மென்மையு டைத்தாகலின், அது மேலும் மெலிய யாம் வருந்துவே மெனினும், அவர் வரும் வழியின் ஏதம் நோக்க என்தோள் இறப்பப் புல்லிதாம். என்பாள் , மென்றோள் நெகிழ்ந்து யாம் வருந்தினும் என்றாள். வருந்தினும் என்றது, அவ்வருத்தம் ஒரு பொருளாக மதிக்கப்படாது என்றவாறு. யாம் இவ்வண்ணம் எண்ணி வருந்துவது ஒருபுறமிருக்க, அவர் வாரா தொழியார்காண் என்பாள் வாராராயின் நன்றுமன் என்றாள். மன், பெருமை குறித்தது. தில்ல, அசைநிலை. விலங்கு முதலிய உயிரினங்கள் செய்யும் ஏதத்திற்கு அஞ்சாது அவை எதிர்ப் படினும் அவற்றை வென்றுபோதரும் வீறு மிகவுடையராயினும், மழையும் இடியும் செய்யும் கொடுமையினை முன்னறிந்து தற்காக்கும் வன்மை மக்களுயிர்க்கு இன்மையின், அக்கொடுமை மிக்க உயரிய மலையூடு வரும் வழியாக வாராராயின் மிகமிக நன்று என்றற்கு, உருமுச் சிவந்து எறியும் ஓங்குவரை யாறு என்றாள். பயன் சேட்படை. “நாற்றமும் தோற்றமும்1” என்ற நூற்பாவில், “ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்” என்றதற்கு இதனைக் காட்டி, “இரவுக்குறி வரவால் தலைவி வருந்துவள் என்றது”என்பர் நச்சினார்க்கினியர். 256. பாலை பாடிய பெருங் கடுங்கோ மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்ல வேண்டிய கடமையுடையனானான். அவனது செலவுக்குறிப்பைத் தலைமகள் உணர்ந்து அவன்பிரிவை ஆற்றா ளாய் வருந்தலுற்றாள். தன் உயிர்த்துணையாய் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாளாய்த் தன்னோடு ஒன்றியிருந்து உறுகண் ஓம்பியும் உயர் அறம் பேணியும் சுற்றந்தழுவியும் தொல்கடனாற்றும் பெருமையில் திரியாதொழுகும் தலைமகள் கண்கலுழ்ந்து வருந்துவது கண்டதும், அவற்குக் கையறவு உண்டாயிற்று. தனது காதலுள்ளம் அவளைத் தனிப்பவிட்டுப் பிரிதற்குச் சமழ்க்கின்றது என்ற குறிப்பை அவன் அவட்கு உணர்த்தினான். அவளும் தேறிக் கண்ணீரை மாற்றி முகமலர்ந்து அமிழ்து பொதிந்த சொற்களால் அவனை மகிழ்வித்தாளாக, அவன் அவளுடைய நுதலை நீவி, “நீயோ சிறிய அடிகளையும் மலர்களைப் பிணைத்தாற் போன்ற பெரிய கண்களையுமுடை யாய்; யாம் செல்லுதற்கமைந்த காடுகளோ எனின், வெயிலின் வெம்மையால் மரங்கள் கரிந்து இலையுதிர்ந்து நிழற்கவின் இழந்து தனித்து நின்று நலம் குன்றிப் பொலிவிழந்தொழிந்தன; இந்நிலையைக் கண்டே னாகலின், யான் இப்போது போதலைக் கைவிட்டேன் காண்” என்றான். அது கேட்ட தலைமகட்கு உவகை மிகுந்தது; உள்ளத்தே உடனே ஓர் உணர்வு தோன்றவும், தன் பார்வையை அவன் முகத்திற் செலுத்தி, “இப்போது நிலவுவது வேனிற் பருவமன்றோ? இக்காலத்தே வெம்மை மிகுவதும் போக்கு அரிதாவதும் இயல்பே; அடுத்துவரும் கார்காலந்தானே நலந்தருவது.” என்றாள், வேனிற் பருவத்திற் செலவு தவிருமாயின், கார்ப்பருவத்து அஃது இனிதாம் எனக் கருதுகின்றனை கொல்லோ? கூறுவல்கேள் என்பானாய், “கார்ப்பெயல் பொழிந்தவழி, களவுச் செடி மலர்ந்து நறுமணம் கமழ்வதாலும், பிடவங்கள் மலர் தலாலும் கானமெங்கும் இனிய காட்சி தோன்றி இன்பம் செய்வது ஒருதலை. ஆங்காங்கு நிற்கும் வேலமரங்களின் தாழ்ந்த கிளைகள் இனிய நிழலை நல்குதலின், பிணை தழுவி மகிழும் கலைமான்கள் காதலாற் பிணிப்புண்டு அந்நிழலில் தங்கியிருக்கும் இன்பக் காட்சியும் கானத்தின் தட்பமும், அவ்வழியே செல்வோருடைய பிரிவை விலக்கி மேற்செல்லாவாறு தடுக்கும்; அதனால், கார்ப் பருவத்தும் யாம் செலவைத் தவிர்வேமாயினோம்” என்றான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், தலைமகள் நினைத் தஞ்சும் பிரிவை அவள் நினைவின்கண் நின்று வருத்தாவண்ணம் போக்கி, அறிவும் அறமும் அவ்விடத்தே நிலவுவித்துத் தன் போக்கிற்கு அவள் உடன்படுதற்குரிய வழியமைத்துக் கொள்ளும் திறம் சிறந்திருப்பது கண்ட பெருங்கடுங்கோ அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நீயே, பாடல் சான்ற பழிதபு சீறடிப் 1பிணைமலர்ப் பெருநலத் தமர்த்த கண்ணை காடே, நிழல்கவின் இழந்த அழல்கவர் 2மரத்த புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக் 3களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் 4கார்ப்பெயல் பொழிந்த காண்பின் காலை மடப்பிணை தழீஇய மாஎருத் திரலை காழ்கொள் வேலத்துத் தாழ்சினை பயந்த கண்கவர் வரிநிழல் வதியும் தண்படு கானமும்5தகைந்தன செலவே. இது, பொருள்வயிற் பிரிந்தானென்று ஆற்றாளாகிய தலை மகளைத் தலைமகன் ஆற்றுவித்தது. உரை : நீயோ-; பாடல்சான்ற பழிதபு சீறடி - புகழமைந்த குற்ற மில்லாத சிறிய அடிகளையும்; பிணைமலர் பெருநலத்து அமர்ந்த கண்ணை - பிணைக்கப்பட்ட மலர் போல மிக்க அழகமைந்து அமர்த்த கண்களையும் உடையாய்; காடே-; நிழல்கவின் இழந்த அழல்கவர் மரத்த-நிழலால் உண்டாகும் அழகு இல்லையாக வேனில் வெம்மையால் கரிந்த மரங்களை யுடையவாய்; புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன - மாவும் மாக்களும் வழங்குதலின்றித் தனிமையுற்றிருத்தலால் பொலி வழிந் தொழிந்தன; இந்நிலை தவிர்ந்தனம் செலவு - இந்த நிலைமையைக் கண்டதனால் எமது போக்கினைக் கை விட்டேம், காண்; வைந்நுதிக் களவுடன் கமழ - கூரிய நுனியை யுடைய களாவின் அரும்பு மலர்ந்து மணம் கமழவும்; கார்ப் பெயல் பொழிந்த காண்பின் காலை - கார்காலத்து மழை பெய்த காட்சிக்கினிய காலத்தில்; மடப்பிணை தழீஇய மா எருத்து இரலை - இளைய பிணைமானைக் கூடிய பெரிய கழுத்தையுடைய ஆண்மான்; காழ் கொள் வேலத்துத் தாழ்சினை பயந்த - வயிரம் ஏறிய வேலமரத்தின் தாழ்ந்த கிளைபயந்த; கண்கவர் வரி நிழல் வதியும்-காண்பார் கண்களைக் கவரும் அழகிய வரிகளையுடைய நிழலிடத்தே தங்கும்; தண்படு கானமும் தகைந்தன செலவு-குளிர்ச்சி பொருந்திய காடுகளும் எம் செலவைத் தடுத்தொழிந்தன; ஆகலான் யாம் நின்னிற் பிரிந்து சேறல் யாங்ஙனம் அமையும் ? எ.று. நீயே கண்ணை; காடு புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன; இந்நிலை தவிர்ந்தனம் செலவு; களவுடன் கமழ, பிடவுத் தளை யவிழ, கார்ப்பெயல் பொழிந்த காண்பின் காலை, இரலை, வேலத் தாழ்சினை பயந்த வரிநிழல் வதியும் தண்படு கானமும் செலவு தகைந்தன; ஆகலான். யாம் நின்னிற் பிரிந்து சேறல் யாங்ஙனம் எனப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. பாடற்குப் பொருளா வது புகழாகலின் பாடல் எனப்பட்டது; “உரைப்பார் உரைப் பவை யெல்லாம் இரப்பார்க்கு ஒன்று, ஈவார்மேல் நிற்கும் புகழ்1” எனச் சான்றோர் கூறுதல் காண்க.பழி, குற்றம். கண்ணிரண்டும் மலர் போல்வது பற்றிப் பிணைமலர் பெருநலம் என்றார்; பிறரும். “மலர்பிணைத் தன்ன மாயிரு மழைக்கண்2” என்பது காண்க. அமர்த்தல், மதர்த்தல். அழல், வேனில் வெம்மை மேற்று; வெம்மையாற் பிறக்கும் காட்டுத் தீயுமாம். வளங்கெழுமித் தழைத்த காட்டில், மரங்கள் தம்மிற்கூடிச் செறிந்து நிற்றல் போலாது, வளங்குன்றித் தழை முதலியன கரிந்து உதிர்ந்து உலவை யாய் நிற்கும் மரங்கள் தனித்தனியே விளங்கித் தோன்று தலின் புலம்பு வீற்றிருந்து நலஞ்சிதைந்தன என்றார். புலம்பு தனிமை வீற்றிருத்தல், ஈண்டு வீற்று வீற்றாய் நின்று காட்சிதருதல். களவின் அரும்பும் மலரின் இதழும் மிகக்கூரியவாய் முட்போறலின் வைந்நுதிக் களவு எனச் சிறப்பிக்கப்பட்டன. தளை, அரும்பு. கார்ப்பெயல், கார்காலத்துப் பெருமழை. பெருமழையால் காடுகள் தளிர்த்துப் பசுமைநிறம் போர்த்து இனிய காட்சி வழங்குதலின் கார்ப்பெயல் பொழிந்த காண்பு இன் காலை என்றார். காண்பு, காட்சி; “கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள், ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை, வான்றோய் உயர்வரை யாடும் வைகறைப், புதலொளி சிறந்த காண்பின் காலை1” “வான்றளி பொழிந்த காண்பின் காலை”2 என்று சான்றோர் வழங்குப. காணும் கண்கட்குப் பசுமைநிறக் காட்சி நலம் செய்யுமென்பது கண் மருத்துவ நூல் கூறும் சிறப்புப்பற்றி இவ்வாறு கூறினர் என்றலுமொன்று. கலைமான் நெடிய வலிய கொம்புகளைத் தாங்கவேண்டியிருத்தலின் அதன் கழுத்து வன்மைமிக்கிருத்தலை விதந்து மாஎருத் திரலை என்றார். எருத்து, கழுத்து; இரலை, ஆண்மான். வேலமரம் நெடிதுயர்ந்து வளரும் இயல்பின்றிச் சினைதாழ்ந்து நிற்பது பற்றி, காழ்கொள் வேலத் தாழ்சினை என்ப. வரிநிழல் அழகிதாகலான் கண்கவர் வரிநிழல் எனப்பட்டது வதிதல், தங்குதல். தகைத்தல், தடுத்தல். தன் பிரிவுக் குறிப்புணர்ந்து வேறுபட்டு ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன், பிரிவு உளதாயின் நின்னையும் உடன்கொண்டல்லது சேறல் இல்லை என ஆற்றுவிப்பான், பாடுவார் பாடற்கமைந்த பொருளாகிய நின் திருவடிகள், இடையிட்ட காடுகளைக் கடத்தற்கேற்ற வன்மை சிறிது மில்லாத சிறுமையுடைய என்பான், பாடல் சான்ற சீறடி என்றும் வடிவிற் சிறிய வெனினும் அவற்றிற்குரிய இலக்கணங்களுள் ஒன்றும் குறையாத உயர்வுடைமை தோன்றப் பழிதபு சீறடி என்றும் பாராட்டினான். மலர்பிணைத்தாற் போன்ற பெருநலத்தால் ஒளிரும் நின் கண்கள், பொலிவில்லாத தோற்றம் எதிர்ப்படின் அருவருத்துக் காண்டற்குக் கூசி மழுங்கும் என்பான், பிணை மலர்ப் பெருநலத் தமர்த்த கண்ணை என விதந்து கூறினான். உடன் வருதற்கமைந்த நினது நிலை இதுவாக, கடந்து செல்லுதற் குரிய காட்டது நிலையை நோக்கின், அங்கே மழையின்றிக் கோடை வெதுப்புதலால் மரங்கள் தழையுதிர்ந்து உலவையா யினமையின், காடு நிழல் கவின் இழந்தது என்றும், நின்ற மரங்களின் கிளையும் கொம்பும் வெப்பத்தால் கரிந்தமையை அழல் கவர் மரத்த என்றும், அதனால் மாவும் புள்ளுமாகிய எவ்வுயிருமின்றிக் காடு புல்லெனத் தோன்றும் திறத்தைப் புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன என்றும், இவ்வாறு நின் நிலையும் நின்னொடு சேறற்குரிய காட்டின் நிலையும் கண்டேனுக்கு, இச்செலவினைத் தவிர்ப்பதொழிய வேறு செயலின்மையின், இந்நிலை தவிர்ந்தனம் செலவே என்றும் கூறினான். இவ்வாறு வேனிற் பருவத்து வெம்பலை அருஞ்சுரக் காட்சியை எடுத் தோதக் கேட்ட தலைமகள், வேனிலில் கடைநாள் போதரும் கார்ப்பருவத்தில் செலவு மேற்கொள்வீர் போலும் என ஐயுற்றாளா கலின், அதனையும் மறுக்கலுற்று, கார்காலத்தில் களவும் பிடவும் மலர்ந்து கானம் தண்ணிதாய்க் கமழ்ந்து இனிய காட்சி வழங்கு வது ஒருதலையென்பான், வைந்நுதிக் களவுடன் கமழப் பிடவுத் தளையவிழக் கார்ப்பெயல் பொழிந்த காண்பின் காலை என்றும், எனினும் அவ்விடத்தே முள் நிறைந்து காழ் கொண்டு நிற்கும் வேல மரத்தின் தாழ்சினை பயந்த வரிநிழற்கண் இரலைமான் மடப்பிணைத் தழுவிக் காதலுறவால் களித்திருக்கும் காட்சி, செல்வோர் உள்ளத்தில் வினைக்குரிய சூழ்ச்சிகள் தோன்றாதவாறு பேதுறுவித்தலின், அக்காலத்தும் பிரிவு இல்லை யாம் என்பான், மடப்பிணை தழீஇய இரலை வேலத் தாழ்சினை பயந்த கண்கவர் வரிநிழல் வதியும் என்றும், இன்னோரன்ன காட்சிகளைப் பொருளாகக் கொள்ளாது செல்வே மாயினும், தண்ணிதாய் இன்புறுத்தும் கானமே செல்வோரது திண்மையைச் சிதைத்து மனையிடையிருப்பை நினைவித்து அவரது செலவினை விலக்கிவிடும் என்பான், தண்படு கானமும் தகைந்தன செலவே என்றும் கூறினான். தகைதல் ஒருதலை யென் பான், தகைப்ப என்னாது தகைந்தன என இறந்த காலத்தால் எடுத்துக் கூறினான். இதனாற் பயன் தலைவி ஆற்றியிருப்பாளாவது. 257. வண்ணக்கன் சேரிக் குமரங்குமரனார் வண்ணக்கன் என்பது பொன்னின் ஓட்டம் காண்பானுக்குப் பெயர்; பின்னர் அது பலர்க்குச் சிறப்புப் பெயராகவும் அமைந்து வழங்குவதாயிற்று. வண்ணக்கன் பேரி சாத்தனார் என்றொரு சான்றோரும் இத்தொகை நூலுள் காணப்படுகின்றார். வண்ணக்கர் பெயரால், சேரி, குடி, அம்பலம் என்பன பெயர் தாங்கியிருந்த தற்குச் சோழ பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன, முதற் குலோத்துங்கன் கல்வெட்டொன்றில் 1 வண்ணக்கன்குடியான தியாகசமுத்திர சதுர்வேதி மங்கலம் என்றோர் ஊர் காணப்படுகிறது;வேறொரு கல்வெட்டில் 2 அதுவே, “உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பிரமதேயம் வண்ணக்குடியான தியாகசமுத்திர சதுர்வேதி மங்கலம்” என்று காணப்படுகிறது. ஆயினும் வண்ணக்கன் குடியென்பது வண்ணக்குடி எனப் பிழைக்கப்படுவது இயல்பு. தஞ்சை மாவட்டத்துத் திருநாலூர் மயானத்துக் கல்வெட்டு ஒன்று3 “சேற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயமான் நாலூர் மகாசபையார் வண்ணக்கனார் அம்பலத்துக் கூடியிருந்து” என்று குறிக்கின்றது. வடவார்க்காடு முதலிய மாவட்டங்களிலும் வண்ணக்கன்பாடி வண்ணக்கன்குளம் எனப் பெயரிய ஊர்கள் உள்ளன. இவ் வாற்றால் வண்ணக்கன் சேரி என்பது ஊராதல் இனிது விளங்கும். இவர் குமரன் என்பார்க்கு மகனாதலால் குமரங்குமரனார் எனப்படுகின்றார்; கொற்றங் கொற்றனார் என்பாரும் இவ்வாறு பெயர் பெற்றோராவர். இவர் பெயர் வண்ணக்கன் சொருமரங் குமரனார் எனச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது; தேவர் ஏட்டில் இவர் பெயர் வண்ணக்கன்சேரிக் குமரங் குமரனார் எனக் காணப் பட்டமையின், மேலே குறித்த வடிவம் உணரப்பட்டது. இச்சான்றோர் பாடிய இந்த ஒரு பாட்டுத்தான் இத்தொகை நூலின்கண் காணப்படுகிறது. களவுநெறியில் காதலுறவு கொண்டு பகற்போதில் குறி யிடத்தே போந்து கூடியொழுகிய தலைமகற்குத் தலைமகள் புறத்தே போகாதவாறு இற்செறிக்கப்பட்டபின், இரவின்கண் அவளது பெருமனையின் ஒரு சிறையில் குறியமைத்து ஆங்குப் போந்து தலைப்பெய்து மகிழும் நிலைமை உண்டாயிற்று. அவள்பால் அவனுக்குண்டாகிய காதல் பெருகி நின்றமையின், அவற்கு இரவின்கண் வருமிடத்து உளவாகும் ஏதங்கள் பொருளாகத் தோன்ற வில்லை. கார்காலத்துப் பெருமழை பொழியும் நள்ளிரவும், மக்கள் வழங்குதலில்லாத சிறுநெறி பற்றிக் கொடிய விலங்குகள் உலவும் கானத்தினூடு செல்லும் செலவும் அவன் உள்ளத்தில் தோன்றி அவனுடைய செயலருமையைப் புலப் படுத்தவேயில்லை. இரவிடைப் போந்து குறியிடத்தே தலை மகளைக் கண்டு இன் புறுவதொன்றே அவன் நெஞ்சத்துக் குறிக்கோளாயிற்று. ஆயினும், அவன் செயலின் அருமையையும், காதற் பெருமையையும், அவன் வரும் நெறியின் கொடுமையை யும் உணர்ந்த தோழிக்கு இனி அவ்வொழுக்கத்தைக் கைவிட்டு அவன் வரைந்துகோடலே தக்கதென்பது தெளிவாயிற்று. அவன் கருத்தை வரைவின்கண் செலுத்துவது தவிர வேறு வழியின்மை யின், அதனை அவற்கு உணர்த்துவாளாய், ஒரு நாள் அவனை எதிர்ப்பட்டு, உள்ளுறையால் நீ வரைந்து கொள்க என வற்புறுத்தி வெளிப்படையில், “நன்மலை நாட, நீ எம்மை நயந்து அருள் செய்கின்றாயில்லை; எங்ஙனமெனின், மக்கள் வழங்குதல் இல்லாத, மழைநீர் நிறைந்து நிற்கும் சிறுநெறிகளில் கொடிய விலங்குகள் இயங்குவதறிந்தும் நள்ளிரவில் வருகின்றாய்; அவ்வாறு நீ வரும் செயல் எமக்கு இன்பம் நல்காது, நெறியின் ஏதம் நினைந்து பெரிதும் வருந்துதற்குரிய துன்பத்தையே நல்குதலால்” என்றும், “நும் இருவர்க்கும் இடைநின்று புணர்த்தமையான், இத்துன்ப நிலைமைக்குக் காரணம் யானேயாதலால் யான் பெரிதும் வருந்துகின்றேன். காண்”என்றும் கூறினாள். தோழியின் இக்கூற்றின்கண், இரவின்கண் நெறியிடையுள வாகும் ஏதங்களை எண்ணாது போந்தெய்தும் தலைமகனது காதற்பெருக்கை வியந்து பாராட்டாது, தீது செய்வதாகப் புனைந்து அவன் உள்ளத்தை வரைவின்கட் செலுத்தும் அவளது மதிநுட்பம் விளங்கிநிற்பதுகண்ட குமரங்குமரனார், அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். விளிவில் அரவமொடு தளிசிறந் துரைஇ 1மழைசேர்ந் திறுத்த நளிர்தூங்கு சிலம்பிற் கழையமல்பு நீடிய வான்உயர் நெடுங்கோட் டிலங்குவெள் ளருவி வியன்மலைக் கவாஅன் அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் பொன்மருள் நறுவீ கன்மிசைத் தாஅம் நன்மலை நாட நயந்தனை அருளாய் இயங்குநர் மடிந்த அயந்திகழ் சிறுநெறிக் கடுமா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி நோகோ யானே. இது, தலைமகற்கு ஆற்றினது ஏதம் சொல்லித் தோழி வரைவு கடாயது. உரை : விளிவில் அரவமொடு தளிசிறந்து உரைஇ-கெடாத முழக்கத்துடனே மழைத்துளி மிகப்பெய்து எங்கும் பரந்து; மழை சேர்ந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் - மழைமுகில் திரண்டு சூழ்ந்து கொண்டதனால் குளிர்மிகுந்த பக்க மலை யினையும்; கழை அமல்வு நீடிய வானுயர் நெடுங்கோட்டு - மூங்கில் செறிந்து நெடிதோங்கிய வானளாவும் நெடிய உச்சியினின் றிழியும்; இலங்கு வெள்ளருவி வியன்மலைக் கவாஅன் - விளங்குகின்ற வெள்ளிய அருவியையுமுடைய பெரிய மலையின் அடிவரையின்கண் உள்ள; அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கை - அரும்புகள் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கைமரம்; பொன் மருள் நறுவீ கன்மிசைத் தாஅம்- தனது பொன்போலும் நறிய பூவினைக் கற்பாறை மேல் உதிர்க்கும்; நன்மலை நாட - நல்ல மலை நாட்டுத் தலைவனே; நயந்தனை அருளாய்-எம்மை விரும்பினை யாயினும் அதற்கமைய அருளுகின்றாயில்லை; இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறுநெறி - இயங்குவோர் இல்லாது ஒடுங்கிய நீர்பெருகி நிற்கும் சிறுவழியாக; அறிந்துவைத்தும்; நடுநாள் வருதி - நள் இரவில் வாராநின்றனை யாகலான்; யான் நோகு - அதுகண்டு யான் வருந்துகின்றேன் காண் எ.று. நன்மலை நாட, நீ எம்மை நயந்தனை அருளாய், அயந்திகழ் சிறுநெறி கடுமா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதியாகலான், யான் நோகு எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இடைவிடாது முழங்கும் இடியோசையை விளிவில் அரவம் என்றும், பெரிய பெரிய மழைத் துளிகளை நிலப்பரப் பெங்கும் பரந்து பெய்யுமாறு தோன்றத் தளி சிறந்து உரைஇ என்றும், இவ்வண்ணம் பெய்து ஓய்ந்த வெண்மழை வானத்தே சென்று மலைமுகட்டில் திரண்டு அதனைச் சூழ்ந்து தங்குவது பற்றி மழை சேர்ந்து இறுத்த சிலம்பின் என்றும்,மழைமுகில் சூழ்ந்து முற்றிக் கொண்டதனால் எவ்வாயும் குளிர் தூங்கினமை விளங்க, நளிர்தூங்கு சிலம்பு என்றும் கூறினார். தளி, மழைத் துளி; அது வரவரப் பெருகினமை தோன்றத் தளி சிறந்து என்றார். உரைஇ-பரந்து, உலாவி; “மேயினை யுரைஇயரோ பெருங்கலி யெழிலி1” என வருதல் காண்க. சேர்தல், திரளுதல்; “சேரே திரட்சி”2 என்பது தொல் காப்பியம் நளிர், குளிர்ச்சி, சிலம்பு, பக்கமலை. அமலுதல், செறிதல்; நெருங்குதலும் ஆம். “களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர3” என வருதல் காண்க. கவாஅன், அடிமலை. வாய் அவிழ்தல், இதழ் முறுக்கவிழ்ந்து விரிதல். கருங் கால், வலிய கால் என்றுமாம். வேங்கையின்பூ பொன்னிற முடைமை “தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை4” என வருதல் காண்க. தாஅம்,பரக்கும்; உதிரும். நயந்தனை அருளாய், நயந்தாய் ஆலினும் அருள்செய்தாயல்லை; முற்றெச்சமாகக் கொண்டு நயந்தருளாய் என்றலும் ஒன்று. அயம், நீர். சிறுவழி ஆழ்ந்திருத்தலின் அதன்கண் நின்று அதனை மறைத்து விளங்கு தலால் அயந்திகழ் சிறுநெறி எனப்பட்டது. கடுமா, கொலை வேட்டுத் திரியும் புலி முதலியன. நோகு: செய்கென்னும் தன்மை வினை. ஓகாரம், அசைநிலை. களவொழுக்கம் தோன்றியது முதல் தலைமகன் விருப்பினை யேற்றுச் சிறிதும் மாறாது ஒழுகிவந்த தோழி, அவனை விரைய வரைந்து கொள்ளுமாறு தூண்டும் செயலை மேற்கொண்ட மையின், இரவின்கண் போதருவானை எதிர்ப்பட்டுக் குறிப்பால் இவளை வரைந்துகொள்க என்று கூறுதலால், வெளிப்படையாக அவன் வரும் நெறியின் ஏதத்தை எடுத்து ஓதலுற்றாள்; அதற்கு முன்னுரையாக, அவனை எதிர்ப்படும்போதெல்லாம் முக மலர்ந்து இன் சொற்களால் வரவேற்று வந்த நெறியினை மாற்றி, கார்மழை பொழியும் நள்ளிரவில் மெய் வருத்தம்பாராது போதரும் நின்வரவு எம்பாற் கொண்ட பெருநயப்பால் உளதாயது என்பாள், நயந்தனை என்றும்,எனினும், இதனால் நீ எமக்கு மிக்க அருள் செய்வது போலத் தோன்றினும், உற்று நோக்கின் அருள் சிறிது மின்றி எம்மை மிகவும் துன்புறுத்துகின்றாய் என்பாள், அருளாய் என்றும் மொழிந்தாள், தோழியின் உள்ளக்கிடையை உடனே உணரமாட்டாமையால் தலைமகன் அதுகேட்டுத் திகைத்து நின்றானாக, நீ இப்போது போந்த நெறியினை எண்ணினால் அது மக்கள் வழக்கற்று, தேய்ந்து ஆழ்ந்து, தண்ணீர் நிறைந்துநின்று போக்குத் தெரியாதபடி மறைந்துளது என்பாள், இயங்குநர் மடிந்த அயம்திகழ் சிறுநெறி என்றும், அவ்வழியில் கொடிய விலங்குகளான புலிமுதலியன இயங்குவதை நீ நன்கு அறிகுவை; அறிந்து வைத்தும், அவற்றால் நினக்கு ஊறுண்டாயின் எம் பொருட்டு வருதலால் அஃது எமக்கு இறந்துபடு பெருந்துயரைச் செய்யும் என்பதை உணர்ந்து வைத்தும் இந்த நள்ளிரவில் வாராநின்றனை என்பாள், கடுமா வழங்குத லறிந்தும் நடு நாள் வருதி என்றும், இத்தகைய நின்வரவு எமக்கு வேண்டும் இன்பத்தை நல்காது எண்ணுந் தோறும் பெரிய மனநோய் தந்து துன்பத்தையே நல்குவதால் யான் மிகவும் வருந்துகின்றேன் என்பாள், நோகோ யானே என்றும், எம்மை நீ அருளுவதென்பது உண்மையாயின், இவ்வொழுக்கத்தைக் கைவிடுக என்றும் கூறினாள். தலைமகற்கு அவன் வரும் நெறியின் ஏதம் கூறி இரவு வருவானை வாரற்க என மறுக்கும் தோழி, இவ்வொ ழுக்கத்தைக் கைவிடின் கூட்டம் பெறுமாறு யாங்ஙனம் என எழும் வினா வுக்கும் விடையாக வியன்மலைக் கவானிடத்து நின்ற வேங்கை மரம், பொன்போல் மலர்ந்த பூக்களைக் கன்மிசைச் சொரிந்து அதனைப் பொலிவிக்கும் நன்மலை நாடன் என்றதனால்,நீ நின் பொன்னும் மணியுமாகிய பொருளைக் கொணர்ந்து இவள் பெற்றோர்க்குத் தந்து வரைவால் இவளை மகிழ்விப்பாயாக என உள்ளுறுத் துரைத்தாளாம். இதனால், தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 258.நக்கீரர் தோழியிற் கூட்டம் பெற்றுப் பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைமகனது காதல் பெருகிச் சிறந்து நிற்பதும், தலைமகட்கும் அதுவே நிலைமையானதும் கண்டாள் தோழி. இருவர்பாலும் உண்மைக்காதல் நிறைந்து ஒருவரை யொருவர் இன்றியமையா ரானபின் வரைந்துகோடல் தலைமகற்கு முறையாதலின், அவற்குத் தலைமகளின் காதற்பெருக்கை யுணர்த்தி வரைவு கடாவுவது தோழிக்கு அறமாயிற்று, அதனால், அவள் ஒருநாள் தலைமகன் பகற்குறியிடத்தே வந்தமை கண்டு ஆண்டுச் சென்று அவனைத் தனியே எதிர்ப்பட்டாள். அவளோடு தலைமகள் வாராமை கண்ட தலைமகனுக்கு வியப்புப் பெரிதாயிற்று. அதனைக் குறிப்பால் உணர்ந்த தோழி, “கொண்கனே, யான் பகற்குறியிடத்துக்குச் சென்று வருகின்றேன்; தலைமகள் என்னோடு வாராமைக்குக் காரணம், அவளது மேனிவேறுபாடும் கைவளை கழன்றோடும் உடல் மெலிவும் அன்னை கண்டமை யாகும்; அதனால் அவளைப் புறத்தே போகாதபடி இற்செறித்தனள்; இனி அவளைக் களவிற்கண்டு இன்புறும் வாய்ப்பு இலதாயிற்று, காண்”என்றாள். தோழியினுடைய இக்கூற்றின்கண், வரைந்து எய்துவதன்றித் தலைமகற்கு வேறு இன்பப்பேற்றுக்கு வாயில் இல்லை என்ற கருத்தைக் குறிப்பெச்சத்தாலும், அவன் வரைவு கருதாது களவே விரும்பும் குறிப்பை உள்ளுறையாலும் உணர்த்தும் மதிமாண்பு கண்ட நக்கீரர் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடு கின்றார். பல்பூங் கானற் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க செறித்தனள் யாயே இன்னாள் 1காய்கதிர் வெம்பிய கடும்பகல் ஞாயிற்றுத் திருவுடை வியனகர் வருவிருந் தயர்மார் பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட அகலங் காடி அசைநிழற் 1குவைஇய பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் மருங்கூர்ப் பட்டினத் தன்னஇவள் 2நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே இது, தோழி செறிப் பறிவுறீஇயது. உரை : பல் பூங்கானல் பகற்குறி மரீஇ - பலவாகிய பூக்களை யுடைய கானலிடத்தே செய்த பகற்குறியிடம் சென்று; செல்வல் - மனை நோக்கிச் செல்கின்றேன்; கொண்க - கொண்கனே; யாய் செறித்தனள் - நற்றாய் எம்மை இல்லின்கண் செறித்தாள்; காய்கதிர் வெம்பிய கடும்பகல் ஞாயிற்று-காய்கின்ற வெயிற் கதிர்களால் வெய்துற்ற கடும்பகற் போதினைச் செய்யும் ஞாயிற்றுக்கு அஞ்சி; திருவுடை வியனகர் வருவிருந்து அயர் மார்- செல்வம் மிக்க தம் பெரிய மனைக்கண் வரும் விருந் தினரை ஓம்புதற்கு; பொன் தொடிமகளிர் புறங்கடை உகுத்த - பொற்பணியும் தொடியும் அணிந்த மகளிர் புறங்கடையில் எறிந்த; கொக்கு உகிர் நிமிரல் மாந்தி - கொக்கின் கால்நகம் போலும் சோற்றை யுண்டு; எற்பட - பொழுது மறையும் மாலையில்; அகல் அங்காடி அசை நிழல் குவைஇய - அகன்ற அங்காடித் தெருவில் அசைந்தேகும் நிழலிடத்தே குவிக்கப் பெற்றுள்ள; பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை - பச்சை இறாமீனைக் கவர்ந்து உண்ட பசிய கண்களையுடைய காக்கை யினம்; தூங்கல் வங்கத்துக் கூம்பின் சேக்கும்-கடற்கரையில் அலையால் அசைந்து கொண்டிருக்கும் கலத்தின் கூம்பி னிடத்தே தங்கும்; மருங்கூர்ப்பட்டினத் தன்ன - மருங்கூர்ப் பட்டினம் என்னும் பேரூரையொத்த; இவள் நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டு - இவளுடைய நெருங்க அணிந்த விளக்கமுடைய வளைகள் கழன்றோடுவது கண்டு எ.று. கொண்க, விருந்து அயர்மார் உகுத்த நிமிரல் மாந்தி, அங்காடி குவைஇய பச்சிறாக் கவர்ந்த காக்கை சேக்கும் மருங் கூர்ப்பட்டினத் தன்ன இவள் எல்வளை ஓடுவ கண்டு, யாய் செறித்தனள்; ஆகலின், பகற்குறி மரீஇச் செல்வல் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. பலவாகிய பூக்களைப் பூக்கும் பலவேறு வகைப் பூஞ்செடிகளையும் கொடிகளையுமுடைய கானல் என்றற்குப் பல்பூங் கானல் என்றார்; “பல்பூங்கானற் பவத்திரி1” எனப் பிறரும் கூறுதல் காண்க. பகற்குறி, பகற்போதின்கண் தாம் சென்று விளையாட்டயரும் பொழிலிடத்தே ஆயத்தார் அறியா வகையில் தலைப்பெய்தற் பொருட்டுத் தலைமக்கள் குறித்துக் கொள்ளும் இடம். குறிஞ்சி நிலமாயின் மலையருவிச் சாரலும், முல்லையாயின் கான்யாற் றடைகரைப் பொழிலும், மருதமாயின் பொய்கைப் பூம்பொழிலும், நெய்தலாயின் கானற்சோலை யிடமும் பகற்குறிக்கு அமையும் இடமாம் என அறிக. இக் குறியிடத்தைப் பகற்புணர் களன் என்பதும் வழக்கு; “பகற்புணர் களனே புறன் என மொழிப2”என்பது காண்க. ஞாயிற்றின் வெவ்விய கதிர்கள் ஈண்டும் காய்கதிர் எனப்பட்டன, தலை மகளின் செல்வ மிக்க பெருமனையைத் திருவுடை வியனகர் என்றார்.விருந்தினர்க்குப் படைக்கும் உணவில் ஒரு சிறிது எடுத்துக் காக்கைக் கிடுதல் பண்டையோர் வழக்கு; இனஞ் சூழ இருந்துண்ணும் இயல்புபற்றி விருந்தோம்பும் விருப்பினராய பண்டைத் தமிழர் நாளும் காக்கையை வருவித்து உணவிட்டோம் புவது மரபாகக் கொண்டனர். பின்னர் வரவிருக்கும் விருந்தைக் காக்கை முற்படப் போந்து கரைந்து காட்டும் என்பதும் ஒன்று. “விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே3” எனப் பிறரும் கூறுவது காண்க. திருவள்ளுவனாரும் ‘ காக்கை கரவா கரைந்துண்ணும் 4” என்பர். நிமிரல், சோறு; கொக்கின் கால்நகம் போறலின், கொக்குகிர் நிமிரல் என்றார். “பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்5” எனப் பிறரும் வழங்குதல் காண்க. நாட்காலையில் மீன் வேட்டம் சென்ற பரதவர் பொழுது சாயும் மாலைப்போதில் திரும்பி வந்து தாம் கொணர்ந்த மீன்களை அங்காடியில் தொகுத்து விற்பது தோன்ற அகல் அங்காடி அசை நிழல் குவைஇய பச்சிறா என்றார். இவ்வாறு பலரும் குவித்து வைத்தற் கேற்ப அகன்றிருத்தலின் அகல் அங்காடி என்றும்,அங்கே நிழல் தரும் மரங்கள் மிக்கு இருக்குமாறு புலப்பட அசை நிழல் என்றும் கூறினர். அசை நிழல் என்றதனால், மாலைப்போது பெறப்பட்டது. பசுங்கண் என்றவிடத்துப் பசுமை கொடுமைகுறித்து நின்றது; “சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்”1 என்புழிப் போல. தூங்கல், அசைதல் . மருங்கூர்ப் பட்டினம், கீழ்க் கடற்கரையில் இருந்ததோர் ஊர்; இதனை மருங்கையெனவும் வழங்குப2 இவ்வூர் பாண்டியர்க்குரிய தென்றும், இதனை அடுத்த மேலிடத்தில் தழும்பன் என்பா னுடைய ஊணூார்3 உளது என்றும் கூறுவர். திருச்செங்காட்டங் குடியிற் காணப்படும் கல்வெட்டுக்களுள் ஒன்று மருங்கூர் ஒன்றைக் குறிப்பிட்டு “மருங்கூரான இராச நாராயணச் சதிர்வேதி மங்கலம்”4 என்று உரைக்கின்றது. களவின்கண் ஒழுகும் தலைமகன் பகற்குறிக்கண் ஒருகால் வந்தபோது, அவனைத் தோழி எதிர்ப்பட்டுத் தலைமகள் ஆண்டு வந்திலள் எனவும், அவள் இல்லின்கண் செறிக்கப்பட்டமையே அதற்குக் காரணம் எனவும் கூறலுற்றாள். தன் கூற்றுக்குத் தோற்றுவாயாக அவள் தலைமகனைக் கண்டதும், கொண்கனே, இக்கானற் சோலைக்கண் யாம் அமைத்துக் கொண்ட குறியிடத் துக்குச் சென்று அங்கே நின்னைக் கண்டு தெரிவிக்கும் கருத்தால் சென்று வருகின்றேன்” என்பாளாய், பல்பூங்கானல் பகற்குறி மரீஇச் செல்வல், காண்க என்றும், அவளுடன் தலைமகள் வந்திருப்பாள் என்ற ஆர்வத்தால் அலமந்து நோக்கிய அவன் குறிப்பைக் கண்டு, “அவள் என்னோடு வரவில்லை; மனையின் கண் இற்செறிக்கப்பட்டாள்” என்பாள் செறித்தனள் யாய் என்றும் கூறினாள்.அது கேட்ட தலைமகற்குத் தலைவியைக் காண்டல் இயலாமையாற் பிறந்த ஏமாற்றம் ஒருபுறம் அலைப்ப, ஒரு புறம் அவள் இற்செறிக்கப்படுதற்குரிய ஏது யாது என அறிய விழைவான் போலத் தோழியை நோக்கலும், அவள் தலைமகள் உள்ளத்தே தோன்றி நிலவும் காதல் பெருகி அவனை இன்றி யமையாத நிலையினை எய்தியிருப்பதும், அதனால் உண்டியிற் சுருங்கி உடம்பு நனிமெலிந்து வருந்தினமையும் தோன்ற, இவள் நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டு என்றாள். பிறாண்டும் தோழி, தலைமகனை நோக்கி, “தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில்செவித் தாகிய புணர்ச்சி யலரெழ, இல்வயிற் செறித் தமை யறியாய் பன்னாள், வருமுலை வருத்தா அம்பகட்டு மார்பின், தெருமரலுள்ளமொடு வருந்தும் நின்வயின், நீங்கு கென்றியான் யாங்ஙன மொழிகோ”1 எனக் கூறுதல் காண்க. “வளை ஓடுவ கண்டுயாய் இற்செறித்தனள்; நீ அவண் போந்து வெறிது சேறல் நன்றன்று என்னும் கருத்தால், யான் பகற்குறி மரீஇச் செல்வல்” எனத் தோழி கூறியது, இனி நீ செயற்பாலது வரைதற்கு முயறலே எனக் குறிப்பாய் உரைக்கின்றமை பற்றி. காய்கதிர் வெம்பிய கடும்பகற் போந்த விருந்தின் பொருட்டுப் பொற்றொடி மகளிர் உகுத்த நிமிரல் மாந்திய காக்கை அங்காடி நீழற்கண் குவிக்கப்பட்ட இறால்மீனைக் கவர்ந்துண்டு சென்று வங்கத்துக் கூம்பிற் சேக்கும் என்றது, வேட்கைமிக்கு வருத்து தலால் குறையிரந்து போந்த நின் குறை முடியுமாற்றால் இவளது கூட்டம் பெற்ற நீ, குறியிடம் போந்து இவளது நலனை இனிது உண்டு சென்று நின்னூர்க்கண் மடிந்தொழிகின்றனையேயன்றி வரைதற்கு முயல்கின்றாயில்லை எனத் துனியுறு கிளவி உள்ளுறுத்து வரைவு கடாயினவாறு. தலைமகன் தெருண்டு வரைதல் பயன். 259. கொற்றங் கொற்றனார். இக் கொற்றனார், கொற்றன் என்பவர்க்கு மகனாதலால் கொற்றங் கொற்றனார் எனப்படுகின்றார். இவ்வாறே தந்தை பெயரையே தமக்கும் பெயராகக்கொண்ட சான்றோர் பலர் பண்டைநாளில் இருந்துள்ளனர். சாத்தஞ் சாத்தனார், சேந்தஞ் சேந்தனார், குமரங்குமரனார் என்ற பெயருடையோர் சங்கத் தொகை நூல்களிலும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றனர். இக்கொற்றனார் பாடி யனவாக இந்நூலில் இப்பாட்டும் அகநானூற்றில் ஒன்றும் உள்ளன. இளமை வளம் கனிந்த செல்வத் தமிழ்த் தலைமக்கள் இருவர் காதற் கலப்பால் களவொழுக்கம் மேற்கொண்டனர். தலைமகள் அந்நாளை வழக்கிற் கேற்பத் தினைப்புனங்காவல் பூண்டு தோழி யுடன் பரணிடத்தேயிருந்து, புனத்திற் படியும் கிளிமுதலிய புள்ளினங்களை ஓப்பிவந்தாள். தலைமகனும் அப்புனத்துக்குப் போந்து தலைமகளோடு கூடிப் புள்ளோப்பியும், சுனைநீராடியும் அருவியிற் குளித்தும் விளையாடி இன்புறுவன். இவ்வகையில் தலைவியுள்ளத்தே உண்டாகிய காதல் பெருகிச் சிறப்பதாயிற்று. நாள் செல்லச் செல்லத் தினையும் விளையும் செவ்வி எய்திற்று. கொய்யும் பருவம் எய்தின் பெற்றோர் தலைமகளை இல்லின்கண் செறிப்பர்; அக்காலை. அவள் தலைமகனை எதிர்ப்படுவது அரிதாகலின், அவன் அந்நிலையில் சான்றோரொடு போந்து அவளை வரைந்துகொண்டு நாடறி நன்மணம் புணர்தல் வேண்டு மென்று தோழி துணிந்தாள்; இதனைத் தலைமகற்கு உணர்த்தி விரைய வரைந்துகொள்ளத் தூண்டுவாளாயினள். இதனை வெளிப்படையாக உரைப்பது பெண்மைக்கு அறமன்மையின், குறிப்பாகவே தோழி தலைமகற்கு உணர்த்துவாளாய், ஒருநாள் தலைமகன் செவிப்படுமாறு தலைமகளை நோக்கிச் சொல்லாட லுற்று, “தோழி, பெருங்கல் நாடனாகிய நம் தலைமகனோடு புனத்திடைத் தங்கிக் கிளி கடிந்தும் அருவியாடியும் விளையாடி இன்புற்ற நமது கேண்மை இனி அரிது என்று எண்ணுகின்றேன்; என்னையெனின், கடல் போற் பரந்து தோன்றிய தினைப் புனம், நிறம் பெயர்ந்து தினைவிளைவு முற்றியதனால் புலர்ந்து மடியும் செவ்வியை எய்திற்றாகலான்” என்று கூறினாள். தோழியின் இக்கூற்றின்கண், தினைப்பைங்கூழ் கதிர் தாங்கியது போலே நமது உள்ளம் தாங்கிய காதல், தினைவிளைவுமுற்றி அறுத்துப் பயன்கொள்ளும் செவ்வி எய்தியது போலத் தலைமகன் வரைந்து கொள்ளும் செவ்வி எய்திற்றென்ற கருத்தைத் தலைமகன் குறிப்பாய் அறிய வுரைக்கும் நுட்பம் கண்ட கொற்றனார் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். யாங்குச்செய் வாங்கொல் தோழி பொன்வீ வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரற் பெருங்கல் நாடனொ டிரும்புனத் தல்கிச் செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி அவ்வாய்ப் பெருவரை அடுக்கத் தருவி ஆடிச் 1சாரல் ஆரம் வண்டுபட நீவிப் பெரிதமர்ந் தியைந்த கேண்மை 2சிறுநனி 3அரிய போலக் 4காண்குவென் விரிதிரைக் கடல்பெயர்ந் தனைய வாகிப் புலர்பதம் கொண்ட ஏனற் குரலே. இது, தோழி தலைமகனைச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. உரை : தோழி; யாங்குச் செய்வாங்கொல் - என்ன செய்யலாம்; பொன்வீ வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல் - பென்னிறமான பூக்களையுடைய வேங்கைமரம் நிற்கும் தேன்மணக்கும் சாரலை யுடைய; பெருங்கல் நாடனொடு - பெரிய மலை நாடனுடன் கூடி; இரும்புனத்து அல்கி -பெரிய புனத்தின்கண் தங்கி; செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி- சிவந்த வாயையும் பசிய நிறத்தை யுமுடைய கிளிகளை ஓட்டியும்; அவ்வாய்ப் பெருவரை அடுக்கத்து அருவி ஆடி - அவ்விடத்தேயுள்ள பெரிய மலைப் பக்கத்தே வீழும் அருவியில் நீராடியும்; சாரல் ஆரம் வண்டு பட நீவி - சாரலிடத்துப் பெற்ற சந்தனத் தேய்வையை வண்டு மொய்க்கப் பூசியும்; பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை - மிகவும் விரும்பிச் செய்து கொண்ட நட்பு; சிறுநனி அரிய போலக் காண்குவென் - சிறிது போதில் தேய்ந்து இல்லது போலத் தோன்றக் காண்கின்றேன்; விரிதிரைக்கடல் பெயர்ந் தனையவாகி -விரிந்த அலைகளையுடைய கடல் நீர்வற்றி நிறம் பெயர்ந்தாற் போல; ஏனல் குரல் புலர்பதம் கொண்ட -தினைப்பைங்கூழ் ஏந்திய கதிர்கள் விளைவு முற்றிக் காய்ந்து புலரும் செவ்வியை எய்தினவாகலான் எ.று. தோழி, ஏனல் குரல் புலர்பதம் கொண்ட; ஆகலான், நாடனொடு இயைந்த கேண்மை சிறுநனி அரிய போலக் காண்குவென்; ஆகவே, யாங்குச் செய்வாங்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வளவிய மலைகளில் வேங்கை மரங்கள் வளர்ந்திருப்பது பற்றிப் பொன்வீ வேங்கை ஓங்கிய சாரல் என்றும், வேங்கை முதலிய பல்வகைப் பூக்களின் நறுமணம் கமழ்வது பற்றித் தேங்கமழ் சாரல் என்றும் எடுத்துக் கூறினார். பெருங்கல், பெருமலை. மிகப்பரந்த தினைப்புனம் என்றற்கு இரும்புனம் என்றார். அவ்வாய்: வாய், இடம். மலைச்சாரலில் நிற்கும் சந்தனமரத்தின் கட்டைகொண்டு தேய்த்தெடுத்த தேய்வை புதுப்பூவின் நறுமணம் கமழ்தலின், அதனை வண்டு மொய்க்கும் என்பார், சார லாரம் வண்டுபட நீவி என்றார்.நாளும் பெருகிச் சிறந்த அன்பால் இயைந்த காதல் உறவு பெரிதமர்ந்து இயைந்த கேண்மை எனப்பட்டது. சுருங்கிய காலத்தைச் சிறுநனி எனக் குறித்தார்; “பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறுநனி ஆன்றிக என்றி தோழி1” எனப் பிறரும் குறித்தல் காண்க. அருமை, இன்மை சுட்டிநின்றது. களவு நெறியில் தினைப்புனத்தின்கண் பகற்குறியிடத்தே தலைமகனைத் தலைப்பெய்து கூடுதலில் ஒருவகை இடையீடும் இடையூறும் இன்றி இனிது ஒழுகும் தலைமகனது இன்ப வொழுக்கத்தில், இடையூறு காட்டி, அவன் உள்ளத்தை ஆராய்ச்சிக் கண் செலுத்தும் கருத்து உடையளாதலால், புனத்தின் ஒருசிறைக் கண் நின்ற தலைமகன் கேட்பத் தலைமகளோடு உரையாடும் தோழி, எடுத்த எடுப்பில் யாங்குச் செய்வாங்கொல் தோழி என்றாள். அது கேட்டதும் இருவர் உள்ளத்தும் ஒரு சேர ஆராய்ச்சி எழுந்தது; இருவர் நோக்கங்களும் அவள் மேலே கூறவிருப்பதை எதிர்நோக்கின. அவள், தலைவிக்குத் தலை மகனது சிறப்பை விதந்து, பொன்வீ வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல் பெருங்கல் நாடன் என்றும்,அவன் செய்த தலையளியைச் சிறப்பித்து, இரும்புனத்து அல்கிப் பைங்கிளி யோப்பி என்றும், பெருவரை அடுக்கத்து அருவியாடி என்றும், ஆரம் வண்டுபட நீவி என்றும் கூறினாள். இவ்வாறு நிகழ்ந்தது நினைந்து கூறுதலின் இனி இவ்வின்பப் பேறு எய்தா வகை இடையீடுபடும் போலும் என்ற நினைவு கேட்போர் மனத்தில் எழுமாறு, பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி அரியபோலக் காண்குவென் என்றாள்.பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை என்றதனால், இனி அது மறக்கப் படின் தலைமகள் உயிர் வாழாள் எனவும், சிறுநனி அரிய போலக் காண்குவென் என்றதனால், கேண்மைக்கு மிகவும் அணிமையில் இடையூறு தோன்றும் எனவும் கூறினாளாம். ஆராய்ச்சியில் தோய்ந்து, தோழி கூறுவனவற்றிற்குக் காரணம் காண்பதில் தலைமக்கள் அறிவு ஈடுபடவும், தோழி, விரிதிரைக் கடல் பெயர்ந் தனைய வாகிப் புலர்பதம் கொண்ட ஏனற் குரலே என்றாள். கொண்ட என்றது, அன் பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். ஏனற் கதிர் முற்றி விளைந்தமையின் இனி நம் தமர் போந்து நம்மை இல்வயிற் செலுத்திச் செறிப்பரெனத் தலை மகட்கும், இனிக் குறிவயின் கூட்டம் பெறாமை யேயன்றி இற்செறித்த வழித் தலைமகளைத் தலைப்பெய்து பெறும் இன்பம் இல்லையாமாகலின் வரைந்து கொள்ளலன்றி வேறு வழியில்லை எனத் தலைமகற்கும் குறிப்பாய் உரைத்தாளாயிற்று. தலைவன் தெருண்டு வரைவது பயன். 260. பரணர் சங்க காலத்துக்கும் அதற்கு முன்பும் நிலவிய பழந்தமிழ் வாழ்வில் பரத்தையர் இருந்தமை முன்னர்க் கூறினாம். அவர், வரைவில் மகளிர் எனவும் குறிக்கப்பெற்றனர். வாழ்தல் ஒன்றையே கருத்திற் கொண்டு பொதுவாகத் தம்மை விரும்பும் ஆடவருள் ஒருவரிடத்தே உரிமை கொள்ளாது பொருள் நல்கும் செல்வர் பலரிடத்தும் பரந்த உள்ளத்தராதலின் அவரைப் பரத்தையர் என்றனர்; மணமில்லாத மகளிர் இவ்வுலகில் ஏனோரைப் போல இனிது வாழ்தல் குறித்து அவர்க்கு வேண்டுவன நல்கிப் புறந் தருதல் செல்வமிக்க தமிழ்ச்செல்வர் கடனாக அந்நாளில் கருதப்பட்டது. அவ்வகையில் அவர்கட்கும் புரவுக் கடன்பூண்ட செல்வர்கட்கும் காமக் காதற்றொடர்பு உண்டாதற்கு இட மிருந்தது. ஆயினும், அவருள் ஒருவர்க்கே யுரியராகும் பரத்தை யரும் உண்டு. அவர்களை இற்பரத்தை என்பர்; ஒருவர்பாலும் நிலைத்த தொடர்பின்றித் தமித்துவாழ்வோர் சேரிப்பரத்தைய ராவர். பரம் என்ற சொல் மிகுதிப் பொருள் உணர்த்துவது முண்மையின் பரத்தையரை, ஆடவர் தொகையினும் மிக்க மகளிர் என்றும், பதியிலார் என்றும், பரம் என்பதற்குப் பொறுப் புடைய பொருள் என்பதும் பொருளாதலின் இம்மகளிர் தமிழினத் தாற் புரக்கப்படும் பொறுப்புக்குரிய ரென்ற கருத்துப்படப் பரத்தையர் எனப்படுவ ரென்றும் உரைப்பதுண்டு. பிற்காலத்தே இம்மகளிர் நாடக மகளிராகவும் கணிகையராகவும் மாறி வழிவழியாக வரத் தலைப்பட்டனர். அவரது பரத்தைமை, மக்களினத்தின் நல்லொழுக்கிற்கும் இன்ப வாழ்வுக்குமிடை யூறாய்ப் பழிபாவங்கட் கேதுவாய்ச் சீரழிவு பயந்தமையின், இந்த நூற்றாண்டில்தான் அரசியற் சட்டவாயிலாக அது துடைக்கப் பட்டது. இத்தொகை நூற்காலத்தே பரத்தைமை வாழ்வு தமிழரிடையே இடம் பெற்றிருந்த தாயினும், தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய சான்றோர், அவர்பாற் சென்று கூடி யொழுகுவதை நல்லொழுக்கமாகக் கூறிற்றிலர். மனைவாழ்வின் கண் ஒரோவழி ஆடவர்பால் இவ்வொழுக்கம் தோன்றுமாயின் அதனை இல்லுறை மகளிரின் ஊடலும் புலவியுமாகிய செயல் மேல் வைத்து மறுத்ததுண்டேயன்றி அமைதி கூறி விதித்தது கிடையாது. ஒருகால் தலைமகன் பால் பரத்தைமை யொழுக்கம் தோன்றவே அது குலமகளான தலைமகட்குத் தெரிதல் கூடா தென அவன் அதனை மறைத்தொழுகினான். ஆயினும், அது தலைமகட்குத் தெரிந்துவிட்டது; அவள் அதனை அறியாள் என்ற கருத்துடன் தலைமகன் தன் மனைக்குவந்தானாக. அவள் அவனைப் புலந்து மறுக்க லானாள். பணிந்த மொழிகள் பல கூறி அவன் அவளை முயங்கலுறவும், அவனது புறத்தொழுக்கத்தை உள்ளுறை யாற் காட்டி “ஊரனே, என்பால் பேரன்புடையை போல என்னை முயங்குகின்றனை; இப்போது நின் முயக்கம் அன்புடைமை தோற்றுவித்து நிற்பினும், சின்னாட்கு முன்பு, என் கூந்தலிடத்தே அழகுறப் புனையப் பெற்ற பூமாலை வாடி யுதிருமாறு பிரிந்து வருத்திய பகைவனாய் ஒழுகியதை யான் மறக்ககில்லேன், காண் “என்று கூறினாள். இல்லிருந்து செய்யும் நல்லற வாழ்வுக்குப் புகழ் விளைக்கும் பொருள் வினை கல்வி முதலியன காரணமாகப் பிரியாது, பரத்தைமை மேற்கொண்டு பிரிந்த தலைமகன் செயல் புகழ் பயப்ப தன்மையின், அதனை வாயால் வெளிப்படக் கூறாமல், உள்ளுறையால் மறைத்துக் காட்டி, இப்போது எம்பால் பெருங் கேண்மை யுடையை எனப் புறத்தே தோன்றுமாறு முயங்கு கின்றாய்; ஆயினும் நின் அகத்தே யாம் சூடிய கோதை வாடியு திரப் பிரிந்து அன்பின்மை செய்தமையின், இம்முயக்கம் “செப்பின் புணர்ச்சிபோற் கூடினும்” கூட்டமாகாதுகாண் என்ற நயம் பொருந்தத் தலைவியது இக்கூற்று நிற்பது கண்ட ஆசிரியர் பரணர் இதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ 1வென்றெறி மள்ளரின் இயலி அயலாது குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர வெய்யை போல முயங்குதி2 ஐயெனத் தெவ்வர்த் தேய்த்த 3செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை யன்னஎன் ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த முகையவிழ் கோதை வாட்டிய 4பகைவனை மன்யான் மறந்தமை கலனே. இது, ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது. உரை : கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை - கழுநீரை மேய்ந் துண்ட கரிய கால்களையுடைய எருமை; பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ - பழனங்களில் மலர்ந்துள்ள தாமரையின் குளிர்ந்த பூக்களைத் தின்று வெறுத்து; வென்று எறிமள்ளரின் இயலி - வென்று சிறக்கும் போர்மறவரைப் போல நடை யிட்டுச் சென்று; அயலது குன்று சேர் வெண்மணல் துஞ்சும் - அயலிடத்தே யுள்ள குன்று போல் உயர்ந்த வெள்ளிய மணலிடத்தே கிடந்து உறங்கும்; ஊர - ஊரனே; வெய்யை போல முயங்குதி - எம்பால் பெருவிருப்புடையாய் போலப் புறத்தே தோன்றுமாறு முயங்குகின்றாய்; ஐயென - கண்டார் வியக்குமாறு; தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் - பகை வரை ஒடுக்கிய சிவந்த வேற்படையையுடைய வெற்றிவீரனாகிய விராஅன் என்பானுடைய; மலிபுனல் வாயில் இருப்பை அன்ன - மிக்க நீர்நிலை பொருந்திய இருப்பையூரை ஒத்த; என் ஒலியல் கூந்தல் - தழைத்த பலவாகிய என் கூந்தலிடத்தே; நலம் பெறப் புனைந்த - அழகுண்டாக அணிந்த; முகையவிழ் கோதை வாட்டிய - அரும்புமலர்ந்த புதுப்பூவால் தொடுக்கப் பட்ட மாலை வாடும்படிப் பிரிந்த; பகைவனை மன்-உட்பகை வனாயினை; யான் மறந்து அமைகலன் - யான் அதனை மறந்து அமையேன்காண் எ.று. ஊர, வெய்யை போல ஐயென முயங்குதி; வயவனான விரானுடைய இருப்பை அன்ன என் கூந்தல் நலம் பெறப் புனைந்த கோதை வாட்டிய பகைவனைமன்; யான் அதனை மறந்து அமைகலன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. கழுநீர், தாமரை ஆம்பல் நெய்தல் முதலியன போலும் நீரில் வளரும் கொடிவகை. “ஈரணிப் பொலிந்த தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறம்1”என வருதல் காண்க. பழனம், நீர்நிலை. முணைதல், வெறுத்தல்; “முணைவு முனிவாகும்2” என்ப. மிகைபட வுண்ட மையின் எருமை வெறுத்தமை தோன்ற முணைஇ என்றார். போரில் வெற்றிமிகும் வீரர் நடக்கும் பெருமித நடையை எருமையின் நடைக்கு உவமம் கூறுவது சான்றோர் மரபு; அதனால் வென்றெறி மள்ளரின் இயலி என்றார். “அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப், பீர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்துக் குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப், போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன்3”எனப் பிறரும் கூறுதல் காண்க. வெய்யை: வேண்டற் பொருட்டாய வெம்மை என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த முன்னிலை வினைக்குறிப்பு முற்று. கழுநீர் மேய்ந்த எருமை தாமரையின் பனிமலரை வெறுக் கவுண்டு கழித்துக் குன்று சேர் வெண்மணலை யடைந்து உறங்கினாற் போலக் குலமகளாய என் மனைக்கண் இனிதிருந்த நீ, இற்பரத்தையரைப் பற்றி அவர் மனைக்க ண்ணே தங்குவாயா யினை என உள்ளுறையால் தலைவனது பரத்தைமையைக் குறித்துரைத்தாளாகலின், அவன் மனத்தின்கண் தன்பால் அன் பின்மையை வெளிப்பட வுரைப்பாள், நீ பெருங்காதலால் ஆற்றாய்போல என்னை முயங்குகின்றாய்; இது பொய்ம்மையே யன்றி உண்மை யன்பொழுக்கமன்று என்றற்கு வெய்யைபோல முயங்குதி என்றாள். இருப்பையூர், இப்போது விராலிமலைக்கு அணிமையில் உள்ளது; விராஅனது இம்மலை இன்று விராலி மலை என வழங்குகிறது. பிறாண்டு “தேர்வண் விரா அன் இருப்பை1” என்று விதந்து கூறுதலின், ஈண்டுத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் எனப் பொதுப்படக் கூறினார். இருப்பையூரின் நன்செய்வளத்தை, “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்2” என்று பரணரும், “விண்டு வன்ன வெண்ணெற் போர்வின், கைவண் விரா அன்3” என்று ஓரம்போகியாரும் உரைப்பதால் அறியலாம். கூடியிருக் குங்கால் தலைமகன் தலைமகட்குப் பூச்சூடி அவள் நலம் இனிது பெறப் புனைதல் வழக்காதலின். என் ஒலிபல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை யவிழ் கோதை என்றும், அவன் இல்வழிக் குலமகளிர் தம்மைப் பூ முதலியவற்றால் புனைதல் இலராகலின், அத்தூய நெறிமை தோன்ற வாட்டிய என்றும், அஃது உள்ளும் புறமும் ஒத்த அன்புடையார் செயலன்று; புறம்நட்டு அகம் வேறுபடுவது உள்ளத்தே பகைமையுடையார் செயல் என்பது பற்றிப் பகைவனைமன் என்றும், அஃது உள்ளுந் தோறும் உள்ளத்தே வெம்மை தோற்றுவித்து ஆறாதுநிற்கும் இயல்பிற்றாதலின் யான் மறந்து அமைகலன் என்றும் கூறினாள். இதனால் தலைவி தன்வயின் உரிமை காட்டிப் புலத்தல் பயன். 261. சேந்தம் பூதனார் தலைமகள் இற்செறிப் புண்டதனால், பகற்குறிக்கண் ஒழுகிய தலைமகன் இரவின்கண் தலைவியின் பெருமனை யெல்லைக்குள் குறிக்கப்படும் குறியிடத்தே அவளைத் தலைப்பெய்து இன்புறும் நெறியினை மேற்கொண்டான். இரவுக்காலத்தே இருள்செறிந்து மின்னியிடித்து மழை பொழிவதும், அவன் வரும் காட்டு நெறியின் கொடுமையும், கொடிய விலங்குகளின் இயக்கமும், ஊர்காவலின் கடுமையும் பிறவும் இரவு வரும் தலைமகற்கு ஏதம் விளைவிக்கும் என்ற அச்சம் தலைமகளையும் தோழியையும் வருத்தின. இவற்றையெல்லாம் நல்ல முறையில் கடந்து இனிது போந்து கூடும் தலைமகன் உள்ளத்தின் திண்மையும் முயற்சி யொருமையும் அவனது காதலின் மாண்பை நன்கு வற்புறுத்தின. அஃது உணர்ந்த தோழி அவன்கருத்தை வரைவின்கண் செலுத்துவது நன்றெனக் கண்டாள். அதற்கேற்ற வகையில் சொற்களைத் தொடுக்கலுற்ற தோழி, ஒரு நாள் தலைமகன் தலைவிமனையின் ஒரு புறத்தே போந்து நிற்பது அறிந்து அவன் செவிப்படுமாறு தலைவியொடு உரையாடுவாளாய், “தோழி, தாம் போதரும் இரவின்கண் கார்முகில் எழுந்து வானமுற்றும் பரந்து இருள் செய்ய, மழை பெய்யாநிற்ப, பெரும்பாம்பு யானையை விழுங்கிக் காழ்கொண்ட மரத்திற் பின்னிப் பிணித்துத் தன்னுடலை இறுக்கி ஈர்க்குமாற்றால், விழுங்கப்பட்டது நசுங்கிக் குழைவுற்றது நன்கு செரிக்குமாறு புரளும் மலைப்பக்கத்தே யுள்ள குறுவழியின் இருமருங்கும் கொறுக்கச்சி நின்று பூத்து விளங்கச் சந்தனமரத்தின் நறுமணம் கமழும் சிறுவழியை அவர் நடந்துவருகின்றார்; அதனை நினைக்கும்போது நமது உயிர் அச்சத்தால் வருந்து கின்றது. இவ்வாறு நம்மை வருத்துதலால், அவர்க்கு நம்பால் மெய்யாகவே அன்பில்லையெனத் தெரிகிறது; உண்மையாகவே அன்புடையராயின், நம்மனம் வருந்தாவாறு தக்க சான்றோரைக் கொண்டு நம்மை வரைந்துகொள்வர். அது தன்னையும் அவர் தெருண்டு செய்கின்றாரில்லை; இதற்கு என் செய்வேன்?” என்று மொழிந்தாள். தோழியினது இக்கூற்றின்கண், தலைமகனது காதல் மாண்பைத் தாம் உணர்ந்துகொண்டதும், அவற்கு ஏதம் நிகழின் தலைமகள் உயிர்வாழாத காதலளாகியிருப்பதும். ஆகவே இனித்தலைமகன் வரைந்துகோடலே தகுதி யென்பதும் காட்டிச் சிறைப்புறம் நிற்கும் தலைமகன் கேட்டு வரைதற்குரிய முயற்சியில் தலைப்படு மாறு செய்யும் அறிவமைதி கண்டு வியந்த சேந்தம் பூதனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். அருளிலர் வாழி தோழி காதலர் இருள்தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு 1கனைகடல் முகந்த கமஞ்சூல் வானம் நெடும்பெருங் குன்றத்துக் குறும்பல மறுகித் 2தண்பெயல் தலைஇய நள்ளென் யாமத்துக் களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் வெளிறில் காழ்மரம் 3பிணித்துநனி மிளிர்க்கும் சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி வருத லானே. இது, சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;1 தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம். உரை : தோழி-;வாழி - ; காதலர் அருளிலர்-காதலர் நம்பால் அருளில்லாதவராக இருக்கின்றார்; இருள் தூங்கு விசும்பின் - இருள் உண்டாகக் கறுத்துப் பரந்த வானத்தின்கண்; அதிரும் ஏறொடு-முழங்குகின்ற இடியேற்றுடனே; கனைகடல் முகந்த கமஞ்சூல் வானம் - ஒலிக்கின்ற கடல்நீரை முகந்து போதரு தலால் நீர் நிறைந்த மழைமுகில்; நெடும் பெருங்குன்றத்துக் குறும்பல மறுகி - நெடிய பெரிய மலையின்கண் குறுகிய பல படலங்களாக இயங்கி; தண் பெயல் தலைஇய நள்ளென் யாமத்து - குளிர்ந்த மழையைப் பொழிந்த நள்ளென்ற நடுவி யாமத்தின்கண்; களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்-களிற்றை விழுங்கிய பெரிய சினம் பொருந்திய மலைப்பாம்பு; வெளிறில் காழ்மரம் பிணித்து நனி மிளிர்க்கும் - வெளிறே யின்றி முற்றும் காழ்ப்பேறிய மரத்தைப் பின்னிப் பிணித்துக் கொண்டு இறுகித் திமிரும்; சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை - சந்தன மரங்கள் ஓங்கி வளர்ந்த இனிய மணம் கமழும் மலைப்பிளவின்கண்; எருவை நறும்பூ நீடிய - கொறுக் கச்சியின் நறிய பூக்கள் மலர்ந்துள்ள; பெருவரை சிறு நெறி வருதலான் - பெரிய மலையகத்துச் சிறிய வழியைக் கடந்து வருதலால் எ.று. தோழி, வாழி; காதலர் அருளிலர்; கனைகடல் முகந்த கமஞ்சூல் வானம், அதிரும் ஏறொடு, குன்றத்துக் குறும்பல மறுகித் தண்பெயல் தலைஇய, நள்ளென் யாமத்து, விடர்முகைப் பெரு வரைச் சிறுநெறி வருதலான் எனக்கூட்டி வினை முடிவு செய்க. மழைமுகில் பரந்து விண்மீன்கள் தோன்றாவாறு மறைத்தலின் திணிந்த இருள் பரந்தமை தோன்ற இருள் தூங்கு விசும்பு என்றார். ஏறு, இடியேறு. கமஞ்சூல் வானம், நீர் நிறைந்த முகில். கமம், நிறைவு. கனைகடல் முகந்தமையின் கமஞ்சூல் வானமா யிற்று; “கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை1” எனப் பிறரும் கூறுதல் காண்க. நெடும்பெருங் குன்றம் என்றவிடத்து நெடுமை உயரத்தையும் பெருமை நீளம் பரப்பு முதலியவற்றையும் குறித்து நின்றன. முகில்கள் சிறு சிறு படலங்களாகத் தம்மில் அடுக்கியும் தொடர்ந்தும் இயங்குதலால் குறும்பல மறுகி என்றார். களிறு, ஆண்யானை; காட்டுப் பன்றியுமாம். மாசுணம், மலைப்பாம்பு. உயரிய பெரிய மரக்கிளைகளில் பின்னிக்கொண்டு தலையைக் கீழே நாலவிட்டுக்கொண்டு அவ்வழியே வரும் எத்தகைய விலங்குகளையும் அகப்படுத்தித் தனது அகன்ற வாயைத் திறந்து விழுங்கும். பற்றிய விலங்கின் உடலளவுக்கு ஏற்ப விரிந்து கொடுக்கும் இயல்பு அப்பாம்பின் உடலுக்கு உண்டு. விழுங்கப் பட்டது தன் உடற்குள் ஓரளவு சென்றதும். அது தன் உடம்பைப் பெருமரம் ஒன்றிற் சுற்றி இறுகச் சுருக்கி ஈர்க்கும். இச்செயலால் உள்ளே இருக்கும் விலங்கின் உடல் நொறுங்கிச் செரித்துவிடும். அதன் இச்செயலுக்குத் தன்வன்மையைப் பொறுக்கக்கூடிய வலியமைந்த மரத்தைத் தேர்ந்து கொண்டமை தோன்ற, வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும் என்றார். பெருமூச்செறிதல் பற்றிப் பெருஞ்சின மாசுணம் என்றார். பெருஞ்சினம் என்றது இலக்கணை. சாந்தம், சந்தனமரங்கள். மாசுணம் மிளிர்க்கும் விடர்முகை, தேங்கமழ் விடர்முகை என இயையும். குன்றுகள் மலைகள் ஆகியவற்றின் இடையிடையே காணப்படும் இடை வெளிகள் விடர் எனவும், மிகக் குறுகிய ஆழ்ந்த விடர்கள் விடர் முகை2 எனவும், மிக அகன்ற இடைவெளியுடையவை கவான்3 எனவும், மற்றவை விடர் எனவும்வழங்குவது தமிழ்மரபு. தமிழறிவு சுருங்கிய நிலையில் ஆட்சியும் கல்வியும் நிலைமாறியதனால் இந்நாளில் இத்தகைய சொற்கள் அரியவாய்விட்டன. விடர் முகைகளில் ஓடும் சிற்றாற்றுக் கரையில் கொறுக்கச்சி நின்று பூத்திருப்பது கூறுவார், எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறு நெறி என்றார். பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம், பகற்குறி ஆகிய வற்றால் காதல் சிறந்து இரவுக்குறி வந்தொழுகுதலின், தலை மகனைக் காதலர் என்றும், காதலொன்றையே நோக்குவதல்லது நாம் உயிர் வாழ்தல் வேண்டுமென்பதை நோக்கும் அருள் அவர்பால் இல்லையென்பாள், அருளிலர் என்றும், தான் இவ்வாறு துணிந்து கூறுவது கேட்டுத் தலைமகள் வருந்தாமைப் பொருட்டு வாழி என்றும் தோழி கூறினாள். தோழியின் இக் கூற்று, கேட்ட தலைமகன் உள்ளத்தில் ஆராய்ச்சியையும் தலை மகள் உள்ளத்தில் அசைவையும் தோற்றுவிக்கவும், அவள் தன் கூற்றுக்கு ஏதுக் கூறுவாளாய், கூதிர்யாமத்தின் கொடுமையை விதந்து, கனைகடல் முகந்த கமஞ்சூல் வானம், இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு, நெடும் பெருங்குன்றத்துக் குறும்பல மறுகித், தண்பெயல் தலைஇய நள்ளென் யாமம் என்றாள். மாசுணம் கிடந்து உயிர்க்கு ஏதம்செய்யும் நெறியின் கொடுமை கூறுவாள், மாசுணத்தின் வன்மை புலப்ப டுத்தற்குக் களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் என்றும், அதன் செயற் கொடுமையை வெளிறில் காழ்மரம் பிணித்து நனி மிளிர்க்கும் என்றும், இவற்றை நினைக்கும் போதே வருந்தும் நம் உள்ளம், அவர் அந்நெறியின் கண் வருதலால் பெருந்துன்பம் எய்தி உழக்கின்றது என்பாள், பெருவரைச் சிறுநெறி வருத லானே என்றும் கூறினாள். காதலர் அருளிலர் என்பது மேற் கோள்; பெருவரைச் சிறுநெறி வருதலான் என்பது ஏது. இவ்வாறு ஏதமும் கொடுமையும் இன்னாமையுமுடைய சிறுநெறியின்கண் வருதலால் தாம் வருந்துவதோடு நம்மையும் இன்னற்படுத்து வருத்துதலினும், வரைந்து கோடல் நேரிது என்றற்கு இது கூறினாள் என அறிக. தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 262. பெருந்தலைச் சாத்தனார் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் இன்மையது இளிவு நோக்கிப் பொருள்வயிற் பிரிய வேண்டிய கடமையுடைய னானான்; அவன் அதனைப் பையத் தலைமகட்கு உணர்த்தக் கருதிய போது அவள் எத்துணையும் பிரிவாற்றாத பெருங் காதலளாதலைக் கண்டான். அவன் உள்ளக் குறிப்பை ஓராற்றல் நுண்ணிதின் உணர்ந்த தலைமகளும் ஆற்றாமை மீதூர்ந்து வருந்தலுற்றாள். மனையோள் காதலின் மாண்பையும் பொருட் பிரிவுக்குரிய ஆள்வினைச் சிறப்பையும் ஒருங்கே வைத்து அவன் தன் தலைமையறிவால் சீர்தூக்கி ஆராய்ந்தான். காதலர் காதலும் கேளிரது கேண்மையும் இன்மை பயக்கும் இளிவரவாற் கெடும் என்பது நன்கு புலனாயிற்று; அதனை மாற்றற்குரிய பொருளின் இன்றியமையாமையும் அதற்குரிய வினையின் வீறுடைமையும் நோக்க, மனையின் நீங்கிப் பிரிந்து சேறல் நன்று என அவற்குப் பொருள் அறிவு உணர்த்திற்று . “சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது , ஒழிந்தவ ரெல்லாரும் உண்ணாதும் செல்லார், இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார், வளமை விழைதக்க துண்டோ” என்றும், “உளநாள், ஒரோஒ கை தம்முள் தழீஇ யொரோஒ கை, ஒன்றன் கூறு ஆடையுடுப்பவரே யாயினும், ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிதரோ சென்ற இளமை தரற்கு” என்றும் கூறும் இன்பநூற் கருத்தையும் ஒருபால் நோக்கி னான். இவ்வாராய்ச்சி முடிவைத் தனக்குள் உரைப்பான் போல் தலைமகள் செவிப்பட உரைக்கலுற்று, “நம் பிரிவின்கண் வாடை போந்து வருத்தும்நடுவியாமத்தே ஊரவர் உறங்கவும் தான் உறங்காது வேட்கைநோய் வெதுப்ப மேனிநலம் குன்றி, யாதனையும் வெறுத்த வுள்ளமொடு தனிமைத் துயர்மிக்கு நம் காதலி வருந் துவள்; இன்ன தன்மையளாய இவளின் நீங்கி ஆள்வினையையே நயந்து பொருள்வயிற் பிரிவு நன்று என்று துணியப்படுமாயின், அதற்கேதுவாகிய இன்மையின் இளிவு மிகவும் பொறுத்தற்கரிய தொன்றே காண்”என்றான். தலைமகனது இக்கூற்றின்கண், பிரிவு வற்புறுத்தும் பொருள் நலமும், அஃது இல்வழித் தோன்றும் இன்மையது இளிவும், பிரிவு அழுங்குவிக்கும் தலைமகளது காதல் மாண்பும், அது பற்றியுள தாகும் ஆற்றாமைச் சிறப்பும் முறையே ஆராய்ந்து தலைவியின் உள்ளத்தை எய்தவிருக்கும் பிரிவு பற்றிய நினைவுக்கு இட மாக்கிப் பயிற்றும் நுட்பங்கண்ட பெருந்தலையூர்ச் சாத்தனார் அதனை இப்பாட்டிடைப் பெய்து பாடுகின்றார். தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர் ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர உறைமயக் குற்ற ஊர்துஞ் சியாமத்து நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த் துனிகூர் மனத்தள் தனிபடர் உழக்கும்1 பணைத்தோள் அரும்பிய சுணங்கிற் கணைக்காற் குவளை நாறுங் கூந்தல் தேமொழி இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப் 2பிரிவுநன் றென்னு மாயின் அரிதுமன் றம்ம3 இன்மைய திளிவே. இது, தலைமகள் ஆற்றாக் குறிப்பறிந்து பிரிவிடை விலக்கியது. உரை : தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் - தண்ணிய புனத்தின்கண் வளர்ந்த கருவிளவின் கண்போல மலர்ந்த பெரிய பூ: ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர - ஆடுகின்ற மயிலின் பீலிபோல வாடைக்காற்றால் அசைய; உறைமயக்குற்ற ஊர் துஞ்சுயாமத்து - மழைத் தூவலும் அதனொடு கலந்து வீச ஊரவர் தத்தம் மனையிடத்தே ஒடுங்கி யுறங்கும் நடுவியாமத்தின்கண்; நடுங்கு பிணி நலிய - குளிர் நடுக்கத்தோடு கூடிய காமவேட்கை வருத்த; நல்லெழில் சாஅய் - நல்ல அழகு குன்றி: துனிகூர் மனத்தள்-எப் பொருளையும் வெறுத்த மனப்பான்மை யுடையளாய்; தனி படர் உழக்கும் - தனிமை நினைவு மிக்கு வருத்துமாயினும்; பணைத்தோள் - பருத்த தோளும்; அரும்பிய சுணங்கின் - தோன்றியிலகும் தேமலும்; கணைக் கால் - திரண்ட காலும்; குவளை நாறும் கூந்தல் - குவளைமலரின் மணம் கமழும் கூந்தலும்; தேமொழி இவளின் தீர்ந்தும் - இனிய சொற்களு முடைய இவளின் நீங்கி; ஆள்வினை வலிப்ப - செய்வினை பற்றிய முயற்சி உள்ளத்தை வலித்து ஈர்த்தலால்; பிரிவு நன்று என்னுமாயின் - பிரிவு நன்றே என்று துணியப்படுமாயின்; இன்மையது இளிவு - அதற்கு ஏதுவாகிய இன்மையாற் பிறக்கும் இளிவரவு; அரிது மன்ற - அப்பிரிவினும் பொறுத்தற் கரியதாம், தெளிவாக எ.று. தோளும் சுணங்கும் கணைக்காலும் கூந்தலும் தேமொழியும் உடைய இவள், பிரிவின்கண், கருவிளமலர் வாடையொடு துயல்வர, ஊர் துஞ்சுயாமத்து நடுங்குபிணி நலிய, எழில் சாஅய், மனத்தள் தனி படர் உழக்கும்; ஆயினும் இவளின் தீர்ந்து ஆள்வினை வலிப்பப் பிரிவு நன்று என்னுமாயின் இன்மையது இளிவு அரிது மன்ற எனக்கூட்டி வினைமுடிவு செய்க. அம்ம: உரையசை. கருவிளை, காக்கணம். அதன் பூ மகளிர் கண்போன்றி ருத்தலின், கருவிளைக் கண்போன் மாமலர் என்றார்; “காதலர்ப் பிரிந்த கையறு மகளிர், நீர்வார் கண்ணிற் கருவிளை மலர1” என்று பிறரும் கூறுதல் காண்க. மயிலாடும்போது தோகையை விரித்துப் பீலிக்கண் தோன்ற நிறுத்தி ஆடுதலால், கருவிளவின் பூ வாடையால் ஆடுவது உவமமாயிற்று. வாடைக்காற்றும், மழையும் கலந்த கூதிர்யாமம் ஆகலின் உறைமயக்கு என்றார். ஊர், ஆகு பெயர். நடுங்குபிணி- குளிர் நடுக்கத்தோடு காதல் வேட்கையால் மனத்தே நோய் தோன்றுதலின் நடுங்கு பிணி எனப்பட்டது. நடுங்குதலைப் பயக்கும் காமநோய் என்றுமாம். காதலனுடன் இனிதுஉறையும் மகளிர் மேனிக்கண் திகழும் வனப்பின் கதிர்ப்பு நல்லெழில் எனப்பட்டது. மனம் விரும்பும் காதலன் இல்வழி, மகளிர்க்கு எப்பொருள்பாலும் வெறுப்பு மிக்கு நிற்குமாகலின், துனிகூர் மனத்தள் என்றார். துனி,வெறுப்பு. தனிபடர், தனித் தலால் உண்டாகும் நினைவுகள். தனிப் படர் எனற்பாலது எதுகை நோக்கித் தனிபடர் என வந்தது. பணைத் தோள் என்பதற்கு மூங்கில் போலும் தோள் எனினுமமையும். அரும்புதல், புதிது தோன்றுதல். மகளிர் துயல்வரல், அசைதல், மழைத்துளி, கூந்தல் குவளையின் மணம்கமழும் என்பதைப் பிறகும் “குவளை நாறும் கூந்தல் குவையிருங் கூந்தல்”2 என்பது காண்க. ஆசிரியர் கபிலர், “பனிமலர்க் குவளை, உள்ளகம் கமழும் கூந்தல்”3 என்பர். பிரிவு நன்று என்னும் ஆயின் என்றதனை, என்னும் பிரிவு நன்று ஆயின் என இயைத்து எவ்வாற்றானும் பிரிவு நன்று ஆயின் என வுரைப் பினும் அமையும். ‘மன்ற அம்ம’ என்புழி. அகரம் விகாரத்தால் தொக்கது. மனையறம் புரியும் இன்பத்தில் மாண்புற்று ஒழுகும் தலைமகன் உள்ளத்தில் பொருளுடைமையின் உயர்ச்சியும், இன்மையது இளிவும் தோன்றி அவற்றிற்குரிய வினையின் கண் ஊக்கமும் எழுச்சியும் கொண்டு தலைமகளிற் பிரியக் கருதுதலும், அவன் நினைவில், தான் பிரிந்தவழித் தன் காதலியின் தனிமைத் துயர் புலப்படவே, அதற்குச் சிறந்த காலமும் இடமும் முதற்கண் நினைவு கூர்ந்து கூறுவான், கருவிளவின் மாமலர் ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர எனவும் , உறை மயக்குற்ற ஊர்துஞ்சு யாமத்து எனவும் கூறினான். மழைமுகில் எழுந்தவழி மயிற்சேவல் தோகையை விரித்துப் பீலியும் கண்ணும் இனிது விளங்க ஆடுதல் இயல்பாகலான், அதனையே விதந்து உவமித் தான். வாடையும் மழையும் கலந்து உலவுதலின், ஊரவர் தம் மனையின்கண் ஒடுங்கி உறங்க, தலைமகள் உறக்கமின்றித் தனிமை நிலையை எண்ணிக் குளிர்நடுக்கமும் காதலன் நினைவு பற்றியெழுந்த காமநோயும் ஒருங்கெய்தி மேனிநிறம் கருகி மெலிந்து தோன்றுதலின் நடுங்கு பிணி நலிய நல்லெழில் சாஅய் என்றும், அவளது அத்துயர் போக்கற்குத் தோழியரும் பிறரும் வழங்கும் இன்சொல்லும் தண்ணிய பொருளும் யாவும் அவள் உள்ளத்தில் வெறுப்பை விளைவித்தலின் துனிகூர் மனத்தள் என்றும், அவளுடைய நினைவு முற்றும் தன் தனிமையும் தன்னைப் பிரிந்துறையும் தலைமகனது தனிமையும் பொருளாகச் சூழ்ந்து வருத்துதலால் தனிபடர் உழக்கும் என்றும் கூறினான். இவ் வண்ணம் தன் உயிர்க்காதலி புலம்பு துயர்மிக்கு நலம் வேறுபடத் தான் பிரிதல் நன்றன்று என்னும் எண்ணம் தலைமகன் மனத்தே எழுதலும், அவளுடைய நலங்கெழுமிய தோற்றம் மனக்கண்ணில் தோன்றக் கண்டு. பணைத்தோள், அரும்பிய சுணங்கு, கணைக் கால், கூந்தல், தேமொழி என அவளுடைய உருநலங்களைச் சிறப்பித்துக் கூறினான்; இத்துணை நலம் சிறந்த காதலியைப் பிரிந்து சென்று செய்தரிவ ஆண் வினைக்குச் சிறப்பு என்ற உணர்வு தோன்றி அவனது ஆண்மைப் பண்பை எழுப்பிப் பிரிவை வற்புறுத்தினமையில், இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப என்றும், அவ்வழியே மேலும் சிந்தித்தாற்குப் பொருளறிவு கிளர்ந்து நின்று பிரிதல் நன்று என வற்புறுத்தினமையின் பிரிவு நன்று என்னும் என்றும், தன் காதலி துனிகூர் மனத்தளாய்த் தனிபடர் உழப்பளாயினும் பிரிவு நன்றே எனப் பொருள்வினை பற்றிய அறிவு துணிதற்கு அமைந்த ஏதுவாவது யாது என ஆராயலுற்றானாக; உடைமைக்கு மறுதலையான இன்மையும் அதனால் விளையும் இளிவரவும் ஒருசேறத் தோன்றி வறுமையின் கொடுமையைப் பாரித்துக் காட்டினமையின், அரிது மன்றம்ம இன்மைய திளிவு என்றும் உரைத்தான். இதனால், தலைமகன் செலவழுங்கு வானாவது பயன். 263.இளவெயினனார் எயினன் என்பது இச்சான்றோரது இயற்பெயர். பண்டைத் தமிழ்மக்களிடையே எயினன். எயிற்றி என்ற பெயர்கள் பெரு வழக்காக இருந்துள்ளன. எயினர் என்பது பாலைநிலத்து மறவர் இனத்துக்குப் பொதுப்பெயர். இது கொண்டு எயினனாரை வேட்டுவ இனத்தவரெனக் கருதுவோரும் உண்டு; ஆயரினத் தலைவனான கண்ணனுக்கு ஆனிரை வளர்த்த காரணத்தால் கோவலன் என்றும் பெயருண்டு; அப்பெயரே ஏனையினத்த வரிடையே வழங்கும்; அதுகொண்டு கோவலன் என்ற பெயருடையாரை ஆயரினத்தவ ரெனல் எவ்வாறோ, அவ்வாறே எயினன் என்ற பெயருடையாரை எயினர்இனத்தவரெனல். அது பொருந்தாது. மூதெயினன், இளவெயினன் என்பனவும் மக்கட் பெயர்களாம். கடுவன் இளவெயினனார் என்பார் இவரின் வேறாவர். இவர் பாடியவாக வேறுபாட்டுக்கள் காணப்பட வில்லை. களவின்கண் காதலுறவுகொண்டு குறியிடத்தே தலைப் பெய்து இன்புற்றொழுகும் தலைமகள் இற்செறிக்க ப்பட்டு மனையிடத்தே ஒடுங்கினமையின், கூட்டம் இடையீடுபட்ட தனால், அவள் மேனி வேறுபட்டு உடம்பு நனிசுருங்கி வருந்தினாள். தலைமகனது வரவால் ஊர்க்கண் அலரும் எழுந்தது. இந்நிலை மிகுமாயின் ஏதமுண்டாமென்ற அச்சம் தோன்றித் தோழியை வருத்துவதாயிற்று. இனித் தலைமகனைக் கண்டு வரைவு கடா வுவதே செயற்பாலது என்று துணிந்தாள் தோழி, அத் துணிபினை வெளிப்படக் கூறுதலினும் தலைமகனை உய்த்துணருமாறு செய்வதே சிறப்பெனத் தேர்ந்து அவன் வரவு நோக்கியிருந்தாள். ஒரு நாள் தலைமகன் போந்து மனைப்புறத்தே சிறைப்புறமாக நின்றான். அதனை யுணர்ந்த தோழி தலைமகளோடு உரையாடு பவள்போல, அவன் கேட்குமளவில் நின்று, நாம் நுதல் பசந்தும் வளை கழன்றோட மெலிந்தும், வேறுபடுவதைப் பிறர் அறியா வாறு மறைத்தலைச் செய்தும், ஊரவர் எடுக்கும் கௌவைக்கு நாணியும் ஒரு சொல்லும் நாம் உரையே மாயினோம்; அவ்வாறு இருப்பவும், நம்முடைய மை தீட்டிய கண்கள் தலைமகனைக் கண்டதும் நின்றாங்கு நில்லாது யாம் பலகாலும் கையால் துடைக்கினும் கைகடந்து நீர் சொரிந்து நீ வரைய வரைந்து கோடல் வேண்டுமென உரையாநின்றன காண்”என்று உரைத் தாள். தோழியினது இக்கூற்றின்கண், தலைமகள் மெலிவும் ஊரவர் கௌவையும் நாண்மிகுதியும் எடுத்தோதித் தலைமகனை வரைவு கடாவுபவள், நீட்டிப்பின் வேற்று வரைவு தோன்றித் தலைமகட்கு இறந்துபாடு எய்துவிக்கும் என வற்புறுத்தும் நுட்பம் கண்ட இளவெயினனார், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். பிறைவனப் பிழந்த நுதலும் யாழநின் இறைவரை நில்லா வளையும் 1மறையா ஊரலர் தூற்றுங் கௌவையும் 2நாணி உரையவற் குரையாம் ஆயினும் இரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முடமுதிர் நாரை கடன்மீன் ஒய்யும் மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் கரப்பவுங் கைம்மிக் 3குரைத்த தோழி யுண்கண் நீரே. இது, சிறைப்புறமாகத் தோழித் தலைமகனை வரைவு கடாயது. உரை : பிறை வனப்பு இழந்த நுதலும்- பிறைபோலும் அழகு குன்றிய நெற்றியும்; நின் இறை வரை நில்லா வளையும் -தங்குதற்குரிய இடத்தே நில்லாது கழன்றோடும் நின் வளையும்; மறையா - பிறர் அறியாவாறு மறைத்து; ஊர் அலர் தூற்றும் கொளவையும் நாணி - ஊர்மகளிர் தம்மில் கூடி உரைக்கும். அலர் உரைக்கு நாணியும்; உரை அவற்கு உரையாம் - ஒரு சொல்லும் யாம் அவற்கு உரையேமாயினேம்; ஆயினும் -; இரை வேட்டும் - பசி மிகினும்; கடுஞ்சூல் வயவொடு - தலைச்சூலால் தோன்றிய வயவுற்று; கானல் எய்தாது - கானற்கழிக்குச் செல்லாமல்; கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு - கழனிக்கண்ணே தங்கி யொழிந்த வளைந்த வாயையுடைய பெடைநாரையின் பொருட்டு; முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும் - உடல்வளைந்த நாரைச் சேவல் கடலிடத்து மீனைக் கவர்ந்து போந்து நல்கும்; மெல்லம் புலம்பன் கண்டு - நெய்தனிலத் தலைவனான தலைமகனைக் கண்டதும்; நிலை செல்லா - நின்றாங்கு நில்லாது; கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு - துடைக்குந்தோறும் கைகடந்து; தோழி; உண்கண் நீர் உரைத்த - மையுண்ட கண்கள் நீரைச் சொரிந்து நமது வேட்கைநோயைத் தூற்றுவனவாயின எ.று. தோழி, நுதலும் வளையும் மறையா, கௌவை நாணி, மெல்லம் புலம்பற்கு உரையாம், ஆயினும், அவனைக் கண்டதும், உண்கண் நிலை செல்லா கரப்பவும் கரப்பவும் நீர் கைம்மிக்கு உரைத்தகாண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிறை வனப்பு, பிறைத்திங்களைப் போன்றிருக்கும் அழகு. யாழ. அசைநிலை: இறை, ஈண்டு முன்கையில் வளை நிற்கும் இடம். மறையா: செய்யாவென்னும் வினையெச்சம். ஊரலர் தூற்றும் கௌவை, ஊரவர் அலர் தூற்றுவதால் எழும் ஆரவாரம். உரை, சொல். இரை வேட்கை பசிகாரணமாகத் தோன்றுவதாகலின், பெடைநாரை யின் பசியை இரை வேட்டல் என்றார். கடுஞ்சூல், தலைச்சூல். வயவு, வேட்கைப் பெருக்கம். கானல், கானலிடத்துக் கழியின் மேற்று.தோடுவாய் - வளைந்த வாயலகு. உடல் கோடியிருப்பது பற்றி. நாரை முடமுதிர் நாரை எனப்பட்டது. முடம், வளைவு. கரத்தல், ஈண்டுத் துடைத்தல் மேற்று. “துடைத்தொறும் கலங்கி உடைத்தெழு வெள்ள மாகிய கண்ணே1”என்று பிறரும் கூறுவது காண்க. செல்லா தென்பது செல்லா என ஈறு கெட்டது. மறுவின்றி விளங்கும் பிறைத்திங்கள் போன்று ஒளி திகழும் தலைமகளது நுதல் பசப்பால் மழுங்கினமை தோன்றப் பிறை வனப் பிழந்த நுதல் என்றும், உடல் மெலிந்தமையின் கைவளை இறையின் கண் நில்லாது கழல்வது பற்றி இறைவரை நில்லா வளை என்றும், இந்நிலை புறத்தார் அறிவரெனப் பிறந்த அச்சத்தால் அடிக்கடி நுதல் நீவியும் கைவளை செறித்தும் மறைத்தமை புலப்பட மறையா என்றும், அலர் பிறந்தமைக்கு அஞ்சிப் பிறர் காணப்படாமல் மனைக்கண்ணே ஒடுங்கினமை தோன்ற ஊரலர் தூற்றும் கௌவை நாணி என்றும், தலை மகனைத் தலைப்பெய் யுமிடத்து இந்த நிலைமையினை எடுத் தோதி மனக்குறை தீர்தற்குப் பெண்மை தடுத்தலின் உரையவற்கு உரையாம் என்றும் கூறினாள்; “காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும், யாமே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்க1”என்றும், “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை2”என்றும் சான்றோர் கூறுதல் காண்க. எனினும், தலைமகனைக் காணுமிடத்துப் பசுமட் கலத்துட் பெய்த நீர் புறத்தே பொசிந்து காட்டுதல் போல, உள்ளத்தே நிறைந்த காதலைப், பெருகிச் சொரியும் கண்ணீர் வெளிப் படுத்தாநின்றது என்பாள், மெல்லம் புலம்பற் கண்டு நிலைசெல்லாக் கரப் பவும் கைம்மிக்கு உரைத்த தோழி உண்கணீரே என்றாள். உரைத்த என நின்ற அன்பெறாத அஃறிணை வினைமுற்று வெளிப்படுத்தன என்னும் பொருட்டாய் நின்றது. உள்ளுறையால் வரைவு கடாவுதலின், தலைமகளின் வேட்கை மிகுதியால் உளதாய வேறுபாட்டையே வெளிப்படையாக மொழிந்தாள். தலைச்சூல் கொண்டமையின் கானற்குச் செல்லாது கழனிக் கண்தங்கிய பெடைநாரையின் பசிக்கு நாரைச்சேவல் கடல் மீனைக் கொணர்ந்து நல்கும் என்றதனால், நாணமிகுதியால் தன் வேட்கை மிகுதியை மறைத்து ஒடுங்கிய தலைமகள்பொருட்டு வரைபொருள் கொணர்ந்து தந்து இவளை மணந்துகோடல் வேண்டுமெனத் தோழி தலைமகனுக்கு உள்ளுறுத் துரைத்தவாறு. “மறைந்தவற் காண்டல்3” எனத் தொடங்கும் நூற்பாவில் வரும் “நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல்” என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, “இஃது யாம் உரையா மாயினும் கண் உரைத்தன என்றலின் இரண்டும் கூறினாள்” என்பர் நச்சினார்க்கினியர். 264. ஆவூர்க் காவிதி மாதேவனார் இச் சான்றோருடைய பெயர் ஆவூர்க் காவுதி கண்மா தேவனார் என்றும், காவுதி மாசாத்தவனார் என்றும் ஏடுதோறும் வேறுபட்டுக் காணப்படுகிறது; மதுரைத் தமிழ்ச் சங்க ஏடும் அச்சுப் பிரதியும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்று குறிக் கின்றன. சாத்தனார் என்ற பெயர் சாத்தவனாரெனவும் சாதேவனா ரெனவும் பிழைபட்டிருக்கலாம். அகநானூற்றுச் சான்றோர்களில் ஆவூர்க் கவுதமன் சாதேவனார் என்று ஒருவர் பெயர் காணப் படுகிறது; கௌதமன் என்ற வடமொழிப் பெயர் தொடர்தலால், சாத்தனார் என்ற தமிழ்ப்பெயரை வடமொழிப்படுத்த முயன்றார் சாதேவனார் எனமாற்றி எழுதியிருக்கலாம். சாத்தனைச் சாஸ்தன் என வடசொல்லாக்கிய முயற்சியே இதற்குப் போதிய சான்று, அகத்தில் ஆமூர்க் கவுதமன் என்பது ஆவூர்க் கவுதமன் என்று பாடவேறுபாடு காட்டப்பட்டுளது. இச்சான்றோர் ஆவூர்க் காவிதி யெனவும் அவர் ஆவூர் கவுதமன் எனவும் குறிக்கப் படுவதால் இருவரும் வேறுவேறாவர். ஆவூர்க்காவிதி கண்மா தேவனார் என்ற பெயரைக் கண்ட தமிழறிஞர் ஒருவர், இது காவிதிக்காணி மாதேவனார் என இருக்குமோ என ஐயுற்றார். ஆவூர் எனப் பெயரிய ஊர்கள் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் உண்டு. இடைக்காலச் சோழ பாண்டியர் காலம் வரையில் சோழநாட்டு ஆவூர், ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்று விளங்கியிருந்தது; அது பிற்காலத்தே பசுபதி கோயில் என்ற பெயரை மேற்கொண்டமையின், ஆவூர் என்ற பழம் பெயர் மறைந்தொழிந்தது, அதனை அவ்வூர்க் கல்வெட்டுக்கள், நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூர்1 என்று குறிக்கின்றன. பழந்தமிழ் அரசில் செல்வர்களில் நற்பணியால் உயர்ந்தோர்க்கு எட்டி, ஏனாதி, காவிதி முதலிய சிறப்புப் பட்டங்கள் வழங்கினர். பட்டம் வழங்கும் மரபு இன்று நிலவும் மக்களாட்சியிலே உளதென்றால் வேறு கூறுவது மிகை. ஆவூர்ச் சான்றோரான மாதேவனார் காவிதிப் பட்டம் பெற்றவராதல் பற்றி ஆவூர்க் காவிதி மாதேவனார் எனக் குறிக்கப்படுவாராயினார். காவிதி கணி மாதேவனார் என்று கொள்வதாயின், காமக்காணி நப்ப சலையார் என்றாற்போல இவர் காவிதிக் காணி பெற்ற சான்றோர் என்பதாம். Rவிதிக்காணியுடைமை இடைக்காலத்தும் இருந் தமை கல்வெட்டுக்களால்1 அறியப்படுகிறது. இவர் பாடியதாக இவ்வொருபாட்டுத்தான் காணப்படுகிறது. களவொழுக்கம் பூண்ட தலைமக்களிடையே நிலவிய காதலுறவு பெருகி முறுகி ஒருவரையொருவர் இன்றியமையாத அளவில் உயர்ந்து சிறந்தது. தலைமகனோடு இடையறவில்லா உடனுறைவின்கண் தலைமகட்கு வேட்கை மிகுந்தது. தலை மகற்கும் அந்நிலைமையே தோன்றிற்று. அதனால் அவன் சான்றோர் துணையாகத் தலைமகளின் பெற்றோர்பால் மகட் கொடை வேண்டி முயன்றான். அப்பெற்றோர் வேற்றோர்க்கு அவளை நல்கும் கருத்தினராய் மகண்மறுத்துரைக்கும் குறிப் புடையராயினர். அவருடைய கருத்துணர்ந்த தலைமகள் செவிலிக்கு, தலைமகனோடு உளதாகிய தொடர்பை அறத்தொடு நின்று உரைக்குமாறு தோழியைச் செலுத்தினான், அவளும் கெவிலியும் தலைவியின் காதல்நிலையை நற்றாய்க்கு அறத்தொடு நின்று அறிவுறுத்தினர். தலைமகளின் தந்தையும் தன்னையரும் அறிந்து ஆவனசெய்தற்குள், தலைமகன் தலைமகளைத் தன்னோடே உடன்கொண்டு சென்று தன்மனைக்கண் வைத்து மணம் செய்து கொள்ளத் துணிந்து தோழிக்கும் தலைமகட்கும் தெரிவித்தான். அவனையின்றி இமைப்பொழுதும் இருத்தலாற்றாத பெரு வேட்கையளான தலைமகள் உடன் போதற்கு ஒருப்பட்டாள். ஆயினும், ஓர்ஆடவனுடன் தனித்துச் செல்வதற்கண் அவளுடைய பெருநாணம் தடை செய்தது; ஆயினும், உயிரினும் சிறந்தது நாணம் எனினும், கற்பென்பது அதனினும் மிகச் சிறந்தமை யுணர்ந்து போக்குக் குறித்த நாள் இரவில் தலைமகன் போதரவும், தோழி கையடைப்படுப்பத் தலைமகன் பெருமகிழ்வுடன் அவளை வரவேற்றுத் தன்னோடு கொண்டுதலைக்கழிவா னாயினன். இருவரும் தலைவியின் ஊரும் நாடும் கடந்து தலை மகனது ஊரெல்லையைக் குறுகுவாராயினர்; அவர் கண் ணெதிரே தலைவனது இனிய ஊரும் தோன்றிற்று. அதனைத் தலைமகட்குக் காட்டி மகிழ்விக்கும் தலைமகன், வழிநடையால் பகற்போது கழிவது உணர்த்தி அவளைச் சிறிது விரைந்து நடக்குமாறு இன்சொல்லால் ஊக்குபவன், “மடந்தையே! தண்ணிய பெருமழையால் காடும்” செடியும் கவின் பெறத் தழைத்தமையால் இனிய காட்சி எங்கும் நிலவும்போது, மயில்கள் தம் தோகையை விரித்துக்கொண்டு நடப்பது போல, நின் கூந்தல், இந்த மென்காற்றால் மயிற்கலாவம் போல் விரிந்து விளங்க, நீ முன் செல்வாயாக; பொழுதும் கழிந்தது; மூங்கில் செறிந்த மலைப்பக்கத்தே, கோவலர், கழுத்தில் மணிகட்டி மேயவிடுத்த ஆனிரைகள் மாலைப்போது கண்டு மனைநோக்கி வருதலை அவற்றின் மணியோசை ஒலித்துக் காட்டுகிறது; நமது சிறிய நல்ல ஊரும் நம் கண்முன்னே தோன்றுகிறதுகாண்” என்று மொழிந்தான். தலைமகன் இக்கூற்றின்கண், தான், தலைவியின் பெற்றோர் கருத்துக்கு மாறாய் அவளை உடன்கொண்டு போந்துளோம் என்ற தருக்கோ, காதலியோடு தனித்து இன்புடன் வருகிறோம் என்ற பெருமிதமோ, யாது மின்றித் தலைமகளது கற்புநெறிக்கு நன்மதிப்பளித்துக் காமக்கொதிப்பின்றிக் கனிந்த அன்பு நிறைந்த உள்ளத்தனாதல் இனிது விளங்கக் கண்ட மாதேவனார் அச் சிறப்பை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். பாம்பளைச் செறிய முழங்கி வலன்ஏர்பு வான்றளி பொழிந்த காண்பின் காலை அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின் வீபெய் கூந்தல் வீசுவளி உளர ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே வேய்பயில் இறும்பிற் கோவலர் யாத்த ஆபூண் தெண்மணி இயம்பும் உதுக்காண் தோன்றும்எம் சிறுநல் லூரே. இஃது, உடன்போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தராநின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதுமாம். உரை : பாம்பு அளைச் செறிய முழங்கி - பாம்புகள் கேட்டு அச்ச முற்றுத் தாம் உறையும் புற்று வளையின்கண் ஒடுங்குமாறு முழங்கி; வலன் ஏர்பு - வலமாக மேலெழுந்து; வான் தளி பொழிந்த காண்பு இன் காலை - வானம் மழையைப் பொழிந் தமையால் நிலப்பரப் பெங்கும் மரஞ்செடி கொடிகள் தழைத்துக் காண்டற்கு இனிதாகிய பருவத்தில்; அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் - அழகிய தன் தோகையைப் பைய விரித்து ஆடும்; மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல - நீலமணியின் நிறம் பொருந்திய கழுத்தையுடைய மயில்போல; நின்வீ பெய் கூந்தல் வீசுவளி யுளர - பூச்சூட்டப் பெற்ற நின் கூந்தல் வீசுகின்ற காற்றால் விரிந்து விளங்க; மடந்தை - மடந்தையே; ஏகுதி - முற்படச் செல்வாயாக; பொழுது எல்லின்று - பொழுதும் ஒளிகுன்றி மறையத் தொடங்குகிறது; வேய்பயில் இறும்பில் - மூங்கில் வளர்ந்த குறுங்காடுகளில்; கோவலர் யாத்த ஆ பூண் தெண்மணி இயம்பும் - ஆயர் ஆனிரையின் கழுத்தில் அணிபெறக் கட்டிய தெளிந்த ஓசையையுடைய மணியின் ஓசையும் ஒலியாநின்றது; உதுக் காண் - உவ்விடத்தே காண்பாயாக; எம் சிறு நல்லூர் தோன்றும் -எமது சிறிய நல்ல ஊரும் தோன்றுகின்றது எ.று. மடந்தை, பொழுதும் எல்லின்று; ஆ பூண் தெண்மணியும் இயம்பும்; உதுக்காண், சிறுநல்லூரும் தோன்றும்; ஆகவே, வானம் தளி பொழிந்த காண்பின் காலை, கலாவம் விரித்து இயலும் மஞ்ஞைபோலக் கூந்தல் வளியுளர ஏகுதி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பாம்பு இடிமுழக்கம் கேட்கின் அஞ்சி யொடுங்குவது இயல்பாதலின், பாம்பு அளைச் செறிய முழங்கி என்றார்; “விரிநிற நாகம் விடருள தேனும், உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் 1”எனப் பிறரும் கூறுவர். ஞாயிற்றைப் போல முகிலும் வலமாக எழும் முறைமை பற்றி வலனேர்பு என்றார்; “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென2” எனச் சான்றோர் உரைப்பது காண்க. காண்பு இன்காலை என்ற விடத்துக் காட்சி காண்பு என நின்றது; காட்சி இனிதாகிய காலம் என்க “புதலொளி சிறந்த காண்பின் காலை3” எனவும் . “காண்பின் கழையமல் சிலம்பு4” எனவும் சான்றோர் பயில வழங்குமாறு அறிக. கலாவம், தோகை. மயிலின் கழுத்து நீலமணி போல்வது பற்றிச் சான்றோர் அதனை மணிநிற மஞ்ஞை1 என்பர். தோகை விரித்த மயிலைக் கூந்தல் விரிய விளங்கும் மகளிர்க்கு உவமம் கூறுவது சான்றோர் வழக்கு; அதனால் மஞ்ஞைபோல வீபெய் கூந்தல் வீசுவளி உரை ஏகுதி என்றார். “கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும்2” எனப் பிறரும் கூறுவர். கூந்தலில் காற்றடிக்கச் செல்வது மகளிர்க்குச் சிறப்பு. “விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக். கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி3” என வருதல் காண்க. பகற்பொழுது மறைவது குறிக்கும் சான்றோர் எல்லின்று என்பர்; எல், பகல்ஒளி. “செல்க பாக எல்லின்று பொழுது4” எனவும், “எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூற5” எனவும் வருதல் இயல்பு. இறும்பு, குறுங்காடு. குறுங்காட்டில் மேயும் ஆனிரைகளை ஆயர் மாலைப்பொழுது மறைவது கண்டு ஊர்நோக்கிச் செலுத்துதலின், மனையுறையும் கன்றுகளை யுள்ளிக் கனைத்துக்கொண்டு மகிழ்வொடு திரும்புமாறு காட்ட ஆபூண் தெண்மணியைச் சிறப்பித்தார். உதுக்காண என்றது, ஊரினது அணிமை தோன்ற நின்றது; “உதுக்காண் அவல நெஞ்சமொடு செல்வல்6” என்றாற் போல. தலைமகளைக் கொண்டுதலைக் கழிவதன்றி வேறு செய லின்மை கண்ட தலைமகன்,அதற்குக் கடுங்குளிரும் நடுங்கு பனியும் மிக்க வெயிலும் பொருந்திய கார் கூதிர்முன் பனி முதுவேனில் என்ற பெரும்பொழுதுகள் ஒவ்வாமை யுணர்ந்து, நன்மழை பெய்தமையால் , செல்லும் வழி நீரும் நிழலும் இனிதாய்ப் புதுத்தளிரும் நறும்பூவும் தாங்கிக் காண்டற்கு இன்பந்தரும் பொழுதாகிய பின்பனியும் இளவேனிலும் தேர்ந்து அக்காலத்தே உடன்போக்கினை மேற்கொள்ளல் முறை. அம் முறை பற்றித் தலைமகளை உடன்கொண்டுபோகும் தலை மகன், கார்மழையால் கானம் கவின்பெறத் தழைத்துக் காண்டற் கினிய காட்சி வழங்கினமையின் அதனை விதந்து, வான்தளி பொழிந்த காண்பின்காலை என்று தான் செல்லும் நெறியின் இயல்பைத் தலைமகட்குக் கூறினான். அக்காலத்தே கானத்தின் கண் வாழும் மயிலினம் கோலக் கலாவத்தைப் பைய விரித்து ஆடி மகிழ்தலைக் கண்டு, அம்மயில் போலும் சாயலையுடைய தலைமகளின் நலம் வியந்து கூறலுற்று, அணிகிளர் கலாவம் ஐது விரிந்து இயலும் மஞ்ஞைபோல நின் கூந்தல் வீசுவளி உளர ஏகுதி என்றான்.வேண்டிய வேண்டியாங்குப் பெற்ற இளமகளிர் பெருமித நடையிட்டுச் செல்லும் பெற்றியராதலின், அதனை நன் குணர்ந்த தலைமகன், தன் இயல்பாகிய நாணத்தால் தடை யுண்டும் தந்தை தன்னையராகிய தமர் போந்து மறிப்பரென்ற அச்சத்தால் துவண்டும் தோன்றும் தலைமகளை அவை யெல்லாம் இன்றிக் கானக் களிமயில் போல் தன் கண்முன் நடக்க வேண்டு வானாய், நின் வீபெய் கூந்தல் வீசுவளி யுளர ஏகுதி மடந்தை என்றும், உடன் வருபவளை ஏகுதி என எடுத்து மொழிந்தது, விரைந்து நடத்தல்வேண்டு மெனக் குறித்தமையின், அதற்கு ஏது இதுவென்பான், பொழுதும் எல்லின்று என்றும், அக்காட்டிடை எழுந்த ஓசையால் அவள் உள்ளத்தே அசைவு பிறவாவாறு கோவலர் யாத்த ஆபூண் தெண்மணி இயம்பும் என்றும், மணியொலியும் பலவாய்த் தொக்கிருந்தமையின் அவற்றைப் பூண்ட ஆனிரைகள் தம்மிற் சேர்ந்து ஊர் நோக்கிச் செல்வது காட்டவே, ஊர் சேய்த்தோ அணித்தோ எனத் தலைவியுள்ளத் தெழுந்த நினைவை அவள் குறிப்பால் உணர்ந்து, எதிரே இனி தாய்க் கண்முன் நேர்பட்டுத் தோன்றும் ஊரைக்காட்டி, உதுக் காண் எம் சிறுநல்லூர் என்றும் கூறினான். இதனைக் கேட்டுத் தலைவி உவகை மிகுவது பயன். 265.பரணர் கானவேட்டம் புக்க காளையொருவன், கடிமலர்ச் சோலை யொன்றில் கவினுறப் பூத்துக் குலுங்கிய வேங்கை மரத்தில் மயிலொன்று வீற்றிருப்ப, ஒருபால் தென்றல் தவழ, ஆண்டுத் தோன்றிய கண் கொள்ளாக் காட்சியில் கருத்தைச் செலுத்தி நின்ற நங்கையொருத்தியை, அவள் நின்ற சூழலிற் புகுந்து கண்களிக்கக் கண்டு காதலுற்றான். மலைபோலு யர்ந்த அவன் மார்பும் வில்லேந்திய தோளும் ஏறு நடக்கும் பீடு நடையும் பெருமிதத் தோற்றமும் அவள் கண்வழி நுழைந்து களங்கமில்லாத நெஞ்சினைக் கவர்ந்து அவன்பால் கருத்தை யிழப்பித்தன. இருவருடைய செல்வத் தோற்றமும் செவ்விய ஒழுக்கமும் தலைமைப் பண்பும் சான்றாண்மையும் இருவர் உள்ளங்களையும் ஒன்றுபடுத்தின. அத்தலைமகன் அவள்பால் தனக்குண்டாகிய காதலுறவை அவளுடைய உயிர்த்தோழியின் துணைபெற்றுக் களவுநெறிக் கண் வளர்க்கக் கருதி, ஒருநாள் அவளும் தோழியும் இருக்கும் சூழலை நண்ணித்தோழியின் கருத்தையறிந்து நட்புப்பெற்று அவளை மதியுடம்படுத்தற்கு முயல்வானாயினான். அவற்கும் அவட்கும் உளதாய இயற்கைக் காதற்றொடர்பைத் தோழி யறியாள்; அதனால் தலைமக்கட்கு வேண்டுமிடத்து அறிவும் அறமும் வழங்கும் அன்பின் உருவாக விளங்கும் அத்தோழி அவனை நெருங்கவிடாது சேட்படுத்தாள், அவர்கள் பால், யாதோ ஒரு குறையுடையவன் போலத் தலைமகன் போந்து நிற்பதும், தோழி உண்மை காணாது சேட்படுப்பதும் தலைமகள் கண்ணெதிரே நிகழ்ந்தன வாயினும் , தன் மனக்காதல் சிறிதும் புலப்படா வகையில் அவள் தன்னைக் காத்தொழுகினாள். அச்செயல் அவனது மனத்திட்பத்தை அசைவித்தது, “இவளை நாம் முன்னர்க் கண்டு கருத்தொன்றியது கனவு போலும்” என ஏங்கினான்; அதனை யுணர்ந்த தலைமகள் தோழியின் செய்கை கண்டு வியப்பாள் போல அவன்பால் மனம் நிறைந்த காதலின் மாண்பு விளங்க அவனை நோக்கினாள்; அந்நோக்கம், தன் கருத்து விரையக் கைகூடாமையாற் கையற் றயர்ந்த அவன் உள்ளத்துக்கு ஊக்கமளித்தது. அவன் ஒருபால் தனித்து நின்று தன் நெஞ்சொடு கூறுவானாய், “நெஞ்சே, செங்கோன்மையாற் சிறந்த சோழவேந்தன் தன்னை யடைந்த நல்லரசரை அருளொடு நோக்கி அன்பு செய்தல் போல, நம்பால் அன்புடைமை தோன்ற நோக்கு தலின், இவளது மயிற்றோகை போல் நீண்ட கூந்தல் நமக்கு உரியவாம்; கவலற்க” என உரைக்கலானான். தலைமகனுடைய இக்கூற்றின்கண், செற்றார் போல நோக்கி யும் உறார் போன்று ஒழுகியும் தோழியும் தலைமகளும் தன்னை அயன்மை செய்தது கண்டு அயர்வுற்ற அவனது நெஞ்சம், திண்மை சிதையாமல், தோழி யறிய அவள் தன்னை அன்பு கனிய நோக்கினமை பற்றுக்கோடாகத் தன் முயற்சியின் பயனை யுணர்ந்து தெளிவு பெற்ற நலம் கண்ட ஆசிரியர் பரணர், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். 1இரும்புனம் மேய்ந்த கருங்கோடு முற்ற அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை 2மான்பிணை வெரூஉங் கானப் புறவின் வீளை அம்பின் வில்லோர் பெருமகன் 3பொலந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத் தன்ன 4பேரமர் மழைக்கண் 5செங்கோற் சென்னி அரசேற் றன்ன 6நங்கண் நயவர நோக்கலின் நெஞ்சே மாரி வண்மகிழ் ஓரிக் கொல்லிக் 7கலிமயிற் கலாவத் தன்னஇவள் ஒலிமென் கூந்தல் நம்வயி னானே. இது, பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது. உரை : -- இரும்புனம் மேய்ந்த கருங்கோடு முற்ற-கரிய புனத்தின் கண் மேய்ந்தமையால் வலிய கோடு முற்றும்; அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை - சேறுபடிந்து புள்ளியும் வரியுமுடையதான ஆண்மானை;மான்பிணை வெரூஉம் - அதனால் விரும்பப் பட்ட பெண்மான் கண்டு அஞ்சும்; கானப்புறவின் - முல்லைக் காட்டின்கண்; வீளை யம்பின் வில்லோர் பெருமகன் - வீளை யொலியையுடைய அம்பும் வில்லும் ஏந்திய வேட்டுவர்க்குத் தலைவனான; பொலந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் - பொன்னாற் செய்யப்பட்ட தோள் வலய மணிந்த மிஞிலி என்பானால் காவல் செய்யப்படும்; பாரத்தன்ன - பாரம் என்னும் நகரத்தைப்போன்ற; பேரமர் மழைக்கண் - தன் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களால்; செங்கோற் சென்னி அரசு ஏற்றன்ன -செங்கோன்மையாற் சிறந்த சோழனான சென்னி யென்பான் தன்னையடைந்த அரசர்களை வரவேற்று இனிய நோக்கத்தால் தலையளித்தாற் போல; நங்கண் நயவர நோக்க லின் - நம்மை அருளி நோக்குதலால்; நெஞ்சு - நெஞ்சமே; மாரி வண்மகிழ் ஓரி கொல்லி - மழைபோலக் கள்ளை வழங்கும் ஓரி யென்பானுடைய கொல்லிமலையில் வாழும்; கலிமயில் கலாவத்தன்ன - தழைத்த மயிலினது தோகை போன்ற; இவள் ஒலி மென்கூந்தல் நம் வயினான் - இவளுடைய வளவிய மெல்லிய கூந்தல் நமக்கே உரியவாம் எ.று. நெஞ்சம், பாரத்தன்ன இவள் மழைக்கண், நங்கண் நயவர நோக்கலின், கலிமயில் கலாவத்தன்ன கூந்தல் நம் வயினான; ஆகலின் நீ வருந்தற்க என உரைத்துக்கூட்டி வினை முடிவு செய்க. கருங்கோடு, கரிய நிறமுடைய கொம்பு என்றுமாம். அள்ளல், சேறு. கலை, ஆண்மான். தன்னால் விரும்பப்பட்ட தாயினும் சேறுபட்டு மேனி வேறுபட்டமை காண்டலின் மான்பிணை வெருவுவ தாயிற்றென்க. வில்லினின்று செல்லும் அம்பு எழுப்பும் ஓசைபற்றி வீளையம்பு என்றார். “வீளை யம் பின் விழுத்தொடை மறவர்1” என்றும், “வீளை யம்பின் இளையர்2” என்றும் சான்றோர் குறிப்பது காண்க. வில்லோர், வில்லேந்திய வேட்டுவர்; வில்வீரருமாம். கானத்து வில்லோர் என இயைத்தலுமொன்று. தோள்யாப்பு, தோளிற் கட்டும் அணிவகை; இடைக்காலத்தார் இதனை வாகுவலயம் என்ப. இது பொன்னாற் செய்யப்படுவ தனால் பொலந்தோள் யாப்பு என்றார். மிஞிலி என்பான் கொண்கான நாட்டு ஏழின்மலைப் பகுதியில் வாழ்ந்த நன்னன் என்பான்கீழ் இருந்த தானைத்தலைவருள் ஒருவன். இம்மிஞிலி, வெளியன் வேண்மானான ஆய்எயினன் என்பானொடு பொருது பெருவென்றி யெய்தினான். அச்செய்தி பரணருடைய பாட்டுக்கள் பலவற்றில் குறிக்கப்படுகிறது. பாரம் என்பது மிஞிலி இருந்து நாடுகாவல் புரிந்த நகரம்; இது மேலைக்கடற்கரையில் கொண் கான நாட்டில் உளது. அந்நாடு முழுவதும் நன்னற்கு உரிய தாகலின், அவனைக் கூறும்போது, “பாரத்துத் தலைவன் ஆர நன்னன்3”என்று கூறுவது முண்டு. பரணர், கொங்கு நாட்டிலும், சேர நாட்டிலும் நன்கு பயின்றவராதலின், அந்நாட்டு வரலாறுகள் பல அவர் பாட்டுக்களிற் காணப்படும். சோழ வேந்தருள் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பான் இவரால் பாடப்பட்டமை புறநானூற்றால் அறிகின்றோம். இப் பாட்டின்கண் சிறப்பிக்கப் படுவோன் செங்கோற் சென்னி யெனப்படுவது நோக்குமிடத்து, இவன் அந்த இளஞ்சேட் சென்னியாகலா மென்பது தெரிகிறது. இவன் சோழன் கரிகாலனுக்குத் தந்தை; செங்கோன்மையாற் சிறந்தமைபற்றி அவனைச் செங்கோற் சென்னி யென்றார். சோழவரசர் குடியில் ஒற்றுமையும், அமைதியும் குன்றி யிருந் தமையின், இச்சென்னி ஏனை யரசர் பலருடைய நட்பையும் செங்கோன்மையாற் குடிகளின் அன்பையும் பெற்று ஆட்சி நடத்தினா னாகலின் அதனை விதந்து செங்கோற் சென்னி அரசேற்றன்ன என உவமம் செய்தார். நயவரவு என்பதில் நயம் இன்பத்தின் மேற்றாகலின், நயவர நோக்கல், இன்பமுண்டாக நோக்குதலாயிற்று; ‘மெய்புகு வன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே நயவர1” எனச் சான்றோர் இக்கருத்தே எய்த வுரைப்பது காண்க. மகிழ், கள். மழைபோல் வரைவின்றி வழங்கும் வண்மை பற்றி மாரிவண் மகிழ் ஓரி என்றும், கொல்லிமலை அவற்குரியதாகலின், ஓரிக் கொல்லி என்றும் கூறினார். மகளிர் கூந்தற்கு மயிலின் கலாவத்தை உவமம் செய்தல் மரபு. “சீறூ ராங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம் பால் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பின், களிமயிற் கலாவத் தன்ன2” என்பது காண்க. புனங்காவல் மேற்கொண்டிருந்த தலைமகளை இயற்கைப் புணர்ச்சியால் எய்திய தலைமகன், அவளுடைய தோழியை மதியுடம்படுத்துக் கூட்டம்பெற முயலுகையில், முன்னுறவு அறியாமையால் அவள் அவனைப் பலவகையாலும் மறுத்துச் சேட்படுத்தக் கண்டும், தலைமகள் ஒன்றும் அறியாள்போல ஒழுகினாளாக, தலைமகனுடைய நெஞ்சு தடுமாற்ற மெய்திக் கலக்கமுற்ற செய்தியைத் தானே நினைந்து கூறுவான், இப் புனத்தின்கண்ணே இயற்கைப் புணர்ச்சி வழிநிலைக்காட்சி களால் நம்மொடு தலைமகள் கொண்ட முன்னுறவு அறியாமை யால் வேறுபட நினைத்துத் தோழி நம்மை வெருவி மறுக்கின்றாள் என்ற குறிப்புத் தோன்ற இரும்புனம் மேய்ந்த கருங்கோடு முற்ற அள்ள லாடிய புள்ளி வரிக்கலை தானமர் மான் பிணை வெரூஉம் என்றான். பன்முறையும் தோழி சேட் படுத்தமை கண்டு பின்னிற்றலை வெறுத்த நெஞ்சிற்கு இக் கூற்றினை நிகழ்த்துகின்றனாக லான், இயற்கைப்புணர்ச்சி முதலியவற்றால் நம்மோடு நீ கவலற்க என்பாள் இவ்வாறு கூறினான் என்றலும் ஒன்று. இவ்வகையில் வரிக்கலை தானமர் மான்பிணை வெரூஉம் என்றதற்கு, வரிக்கலையாகிய ஆண்மான் தான் விரும்பும் பெண்மான் தன்னைக் கண்டு வேறுபடுமென அஞ்சாநிற்கும் எனப் பொருள்கூறுக. தோழியோடு போந்த தலைமகள் தன் கண்களைப் பரக்க விழித்துக் காதற்குறிப்புத் தோன்றக் குளிர நோக்குவது பற்றிப் பேரமர் மழைக்கண் என்றும்,நங்கண் நயவர நோக்கலின் என்றும் கூறினான்.மகளிர் கூந்தல் அவரை மணக்கும் கணவற்கே உரிய தென்பதும், பிற ஆடவர் அதனைத் தீண்டற்கு உரியவரல்ல ரென்பதும், அதனால் அவன் இறந்தபின் கைம்மை கொண்டு வாழ்வோர் தம் கூந்தலைக் கொய்தொழிப்ப ரென்பதும் பழந்தமிழர் கொள்கை . “குறுந் தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து1” எனவும். “கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே2”எனவும் , “ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னைவெரூஉதும் காணுங் கடை3” எனவும் , “வென்வேல் விடலையின்மையின் புலம்பிக் கொய்ம்மழி தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல் மகடூஉ4” எனவும் வருவன காண்க. இம்மரபு பற்றியே, இவளைப் பெறுதல் அரிதன்று; நமக்கே உரியளாம் எனத் துணிந்து, பின்னிற்றலை வெறுக்கும் நெஞ்சினை ஓருப்படுத்துகின்றானாகலின், இவள் ஒலிமென் கூந்தல் நம் வயினானே என்றான். இதனால் தலைவன் அயர்வு தீர்வானாவது பயன். 266. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் சங்ககாலத் தமிழர் வாழ்வில் இந்நாளில் காணப்படும் சாதிவேறுபாடுகள் இல்லை; சாதி என்ற பெயரே தமிழ்ச் சொல் லன்று; இதற்கு நேரான சொல்லும் தமிழில் கிடையாது. ஈதொன்றே இதற்குச் சான்று பகரும். எத்தொழிலையும் எவரும் செய்வர். இது பற்றியே திருவள்ளுவனாரும் தொழிலால் உள வாகும் சிறப்பும் வேறுபாடும் தமிழர்க்கு உடன்பாடேயன்றிப் பிறப்பு வகையில் வேறுபாடு கருதுவது ஒத்ததன்று என்பார், “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா, செய்தொழில் வேற்றுமையான்” என்றார். இவ்வாறு சிறப்பால் வேறுபட்ட தொழில் வகைகளில் எவரேனும் ஒரு தொழிலில் மிகவும் உயர்ந்து பெருஞ்சிறப்பு எய்துவராயின், அவர்க்கு அந்நாளை நன்மக்கள் பட்டப் பெயர் தந்து பாராட்டினர். மட்பாண்டம் செய்பவர் வேட்கோவர்; அத்தொழிலில் மேன்மை பெறுபவர் குயவர் என்ற சிறப்பைப் பெற்றனர். “சாதக னென்னும் குலாலற் கேற்பப் பெருங்குயம் அருளி” எனக் கொங்குவேளிர் கூறுவது காண்க. அம்முறையே தச்சுத் தொழில் செய்வோர்க்குத் தச்சன் என்ற சிறப்பளித்தனர்.அச்சிறப்புப் பெற்றோர்க்கு இடைக்காலத் தமிழ்வேந்தர் தச்சக்காணி என நிலம் தந்தமை கல்வெட்டுக்களால்1 அறியப்படுகிறது. அதனால் இப்பாட்டைப் பாடிய சான்றோர் தச்சனார் என்ற சிறப்புப் பெற்றவர் என்பது பெறப்படும். சங்கச் சான்றோர் நிரலுள் இச்சிறப்புடையார் இளையரும் முதியருமாய் இருவர் இருந்தமையின், அவர்கள் இளந்தச்சனார் பெருந் தச்சனார் எனக் குறிக்கப்பட்டனர். சிறப்புப் பெயர் பெருவழக் காகும்போது இயற்பெயர் மறைந்துபோகும் இயல்புபற்றி இச்சான்றோரது இயற்பெயர் இறந்துபட்டது. பிற்காலத்தே இச்சிறப்புக்களாலே குயவர் தச்சர் எனச் சாதிப் பெயர்கள் தோன்றின. காஞ்சிமா நகர்க்கண் ஒருபகுதி கச்சிப்பேடு என்ற பெயருடையது; ஒருபகுதி காஞ்சியென நின்றது. பிற்காலத்தே காஞ்சி என்ற பெயர் பெருவழக்கில் வரவே, கச்சிப்பேடு மறைந் தது. கச்சிப்பேட்டின்கண் இருந்து தச்சுத் தொழிலில் சிறப் பெய்தினமை தோன்ற இவர் கச்சிப்பேட்டு இளந்தச்சனார் எனப்பட்டார் என்க. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. தனியே மனையின்கண் இருந்து நல்லறம் புரியும் தலை மக்களில் தலைவன், இன்றியமையாத கடமை குறித்துப் பிரிந்து செல்லக் கருதினான். அவனது கருத்தறிந்த தோழி கடமையின் பெருமையையும் காதலின் சிறப்பையும் சீர் தூக்கி, அவன்பிரிவின் பயனைத் தலைமகட்கு உணர்த்தி அவளை உடம்படுவித்தான்; பின்னர்த் தலைமகனோடு சொல்லா டலுற்று, “ யாம் வேட்ட தெல்லாம் நின்னோடு கூடி நின் ஊரில் நின் மனைக்கண் இருந்து நீ விரும்பும் அறமும் பணியும் புரிந்தொழுகுவதாகும்; அதுவே எமக்குச் சாலும். இப்போது நீர் எம்மின் பிரிந்து செல்லக் கருதுகின்றீர்;நுமக்கு ஒன்று கூறுவேன்: தாயர் தன்னையர் சூழ இருந்த இவளை மணந்து வேறுபட நும் மனைக்கண் இருத்திய காலை நீவிர் பிரிதல் கூடாது; பிரிவு இன்றியமையாதவழி, அதனால் எய்தும் துன்பத்தை ஆற்றியிருப்பதே பெருமகளாகிய இவட்குப் பெருமையாகும். பெருங்குடியிற்பிறந்த பெரியவர் இயல்புகள் எக்காலத்தும் எவ்விடத்தும் பெருமையுடைய வாகவே இருக்கும் அல்லவோ?”என்றாள். தோழியினது இக்கூற்றின்கண், இல்வாழ்க்கை யென்பது அழிவில் கூட்டத்து அயராக் காமநுகர்ச்சி யொன்றே கண்ணியதன்று; நன்பொருள் நயந்தும் அறவினை மேற்கொ ண்டும் காதலியிற் பிரிந்து சென்று ஒழுகுவதும் ஆம் என்ற கருத்தை யுட்கொண்டு, யாம் நீ வகுத்த இம்மனைக் கண்ணிருந்து எமக்குரிய அறத்தைச் செய்வது எமக்குக் கற்பும் பொற்பு மாயினும், இன்ப நுகர்ச்சி யொன்றே கருதி யாம் நின்னை விலக்குவதும், நீ அது கருதாது பொருள்வினை களையே விழைந்து எம்மிற்பிரிந் தொழுகுவதும் பெரியோர் பெருமைக்கு ஒத்தனவாகா எனக் கூறும் நலம் கண்ட இளந்தச் சனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த சூறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் அகலுள் ஆங்கட் சீறூ ரேமே அதுவே1 தெய்ய சாலும்எங் காமம் எம்விட் டகறி ராயின் நும்ஒன்று2 கூறுவல் வாழியர் ஐய வேறுபட3 இரீஇய காலைப் பிரியின்4 பெரிய வல்லவோ பெரியவர் நிலையே. இது, தலைமகனைத் தோழி செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பிற் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி நும்மாலே ஆயிற் றென்று சொல்லியதுஉமாம்5 உரை : கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த - புன்செய்க் காட்டில் வாழும் கோவலருடைய குறுகிய புனத்தயல் நின்ற; குறுங்கால் குரவின் குவியிணர் வான்பூ-குறுகிய அடிமரத்தை யுடைய குராவின் குவிந்த கொத்தாகிய வெண்மையான பூ; ஆடு உடை இடைமகன் சூடப் பூக்கும் -ஆடுகளை மேய்க்கும் இடையன் தலையில் சூடிக்கொள்ளுமாறு பூக்கும்; ஆங்கண் அகலுள் சீறூரேம் - அவ்விடத்த தாகிய அகன்ற உள்ளிடங் கொண்ட மனைகளையுடைய சீறூரின்கண் இருப்பேம்; அதுவே எம் காமம் சாலும் - அதுவே எம் உயிர் வேட்கை யாதலின் எமக்கு அமைவதாம்; எம்விட்டு அகறிர் - எம்மை இவண் தனிப்பவிட்டுப் பிரியக் கருதுகின்றீர்; ஆயின் - அற்றா யின்; நும் ஒன்று கூறுவல் - நுமக்கு ஒன்று சொல்லுவேன்; ஐய-; வாழியர் -வாழ்க; வேறுபட இரீஇய காலை - தாயரும் ஆயமும் கூடிய பிறந்தகத்துச் சூழலினின்று வேறாகக் கொணர்ந்து நின் மனைக்கண் எம்மைத் தனிஇருத்தியபோது; பிரியின் - பிரிவு இன்றியமையாதாயின்; பெரியவர் நிலை பெரிய அல்லவோ -பெருங்குடிப் பிறந்த பெருமக்கள் இயல்புகள் எவ்விடத்தும் எக்காலத்தும் பெருமை குன்றுவன அல்லவாம் எ.று. ஐய, வாழியர், யாம் சீறூரேம்; அதுவே சாலும்; எம் காமமாகலின் எம் விட்டு அகறிர்; ஆயின், நும் ஒன்று கூறுவல்: வேறுபட எம்மை இரீஇய காலை பிரியின், பெரியவர் நிலை பெரிய அல்லவோ: ஆகவே, சென்று வினை முடிக்க எனச் சில சொற்பெய்து கூட்டி வினை முடிவு செய்க. கொல்லை, முல்லை நிலம், கோவலர் , ஆயர். புனம், புன்செய் நிலம். தேக்கும் திமிசும் மாவும் மருதும் போல நெடிய அடிமரம் உடையதன்மையின் குறுங்காற் குரவு என்றார். வான்பூ, வெண்ணிறமுடைய பூ. ஆடு மேய்க்கும் இடையனை , ஆடுடை இடைமகன் என்ப. ஆடு மேய்க்கும் இடையர் காட்டில் மலர்ந்திருக்கும் முல்லை குருந்து பிடவம் குரவம் முதலிய பூக்களைச் சூடிக்கொள்ளும் இயல்பின ராதலின் குரவின் குவியிணர் வான்பூ இடைமகன் சூடப் பூக்கும் என்றார். முல்லை நிலத்துச் சீறூராகலின் ஆங்கண் அகலுள் சீறூர் எனப்பட்டது.ஆங்கண் அகலுள் என மாறுக. அகலுள், ஊர்; மேலே சீறூர் கூறப்பட்டமையின்,ஈண்டு வீடுகள் மேலதாயிற்று. தெய்ய, அசைநிலை. காமம், வேட்கை; விருப்பமு மாம். வேறுபடல், தனிமையுறல். பெரியவர், பெருங்குடியிற் பிறந்த பெருமக்கள். அல்லவோ என்புழி எதிர்மறை ஓகாரம் புணர்ந்து உடன்பாட்டுப் பொருள் பயப்பித்தது. ஐய, வாழியர், யாம் சீறூரேம் என்க. ஆட்டிடையன் எளிதிற் கொய்து அணியத் தக்க அளவில் குறுங்கால் கொண்டு நிற்றலின் குராமரம் குறுங் காற் குரவு எனக் குறிக்கப்பட்டது. மணந்த அணிமைக்கண்ணே தலைமகன் இன்றியமையாத வினைவயிற் பிரியக் கருதியதனை அறிந்து ஒரு பால் மறுத்தும் ஒருபால் உடன்பட்டும் உரையாட லுறுகின்றாள் ஆதலின், இடைமகன் எளிதிற் கொய்து சூடுமாறு குறுங்கால் கொண்டு குரவு குவியிணர் வான் பூ பூக்கும் என்று தோழி கூறினாள் . அதுபோல நெடும்பிரிவால் அருமை செய் யாது இவள் தான் விழைந்த இன்பத்தை எளிதிற் பெறுமாறு அருளல் வேண்டும் என்பது குறிப்பு. தான் விரும்பிய குரவம் பூவை இடைமகன் எளிதிற் பெறும் சிறப்புடையேம் என்றற்கு ஆங்கண் அகலுள் சீறூரேம் என்றும், வேட்டது வேட்டாங்கு எளிதிற் பெறப்படுதலின் யாம் வேறே விரும்பத்தகுவன இல்லை யென்பாள் அதுவே தெய்ய சாலும் என்றும், அதுவே எம் காமம் என்றும் கூறினாள். இவ்வாறு மனைக்கண் தலைமகள் பெறும் அழிவில் கூட்டத்தின் மாண்பு கூறிய தோழி, தலைமகனது பிரிவுக் கருத்து இனிது விளங்க. எம் விட்டு அகறிர் என்றும், அது விலக்கத் தகுவதன்றாயினும், அது குறித்து அடியேன் கூறுவதனைக் கேட்டருளல் வேண்டுமென்பாள் ஆயின் நும் ஒன்று கூறுவல் என்றும், அஃது என் நிலைமைக்கு மிக்க செயலாயினும் பொறுத்தருள்க என்பாள், வாழியர் என்றும் ஐய என்றும் பணிந்த மொழியினாற் கூறுவாளாயினள். புதரிடைத் தோன்றிய பூங்கொடியைப் பெயர்த்துக் கொணர்ந்து ஒரு கொழு கொழும்புடன் புணர்ந்து நட்டாற்போலத் தாயரும் ஆயமுமாகிய சூழலிடைத் தோன்றிய தலைமகளை அவரின் வேறுபடக் கொணர்ந்து நின் மனைக்கண்ணே இருத்தினை யென்பாள் வேறுபட இரீஇய காலை என்றும், அப்பூங்கொடி தான் பற்றிப் படர்தற்குரிய கொழுகொம் பைப் பிரித்து அதனைத் தனிப்ப விடுதல் போல, இவளை இம்மனைக்கண் தனிமையுற விடுத்துச் சேறல் கூடாது என்பாள் பிரியின் என்றும், பிரிவு இன்றி யமையாதவிடத்து அதனை ஆற்றியிருத்தலினும் பெருமை தரும் செயல், கற்பால் பெருமை மிக்க பெருங்குடி மகளிர்க்குப் பிறிது யாதும் இல்லை யென்பாள், பெரிய வல்லவோ பெரியவர் நிலையே என்றும் கூறினாள். “பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின், அருமை யுடைய செயல்”1 என்று திருவள்ளுவனார் கூறுவது காண்க. தலைவன் உவகை மீதூர்வானாவது பயன். 267. கபிலர் களவின்கண் காதலுறவை வளர்த்து வரும் நாள்களில், தலைமகள் மேனியில் உண்டாகிய வேறுபாடு கண்ட தாயர் தன்னையர் அவளைத் தமது கடிமனையில் செறித்தனர். அதனால், அவள் இல்வரை இகந்து சென்று தலைமகனைக் கண்டு இன்புறும் வாய்ப்பு இலளானாள். இதனை யறியாமையால் தலைமகன் அக்குறியிடம் போந்து அவளைத் தலைக்கூடப் போந்தானாக, அவ்விடத்தே தோழி மாத்திரம் தனியே வந்திருந்தாள். அவளது முகவாட்டங் கண்ட தலைமகன் திடுக்கிட்டு அவளைக் காரணம் உசாவினான். “என் தோழியாகிய தலைமகளையின்றித் தனியே வருதல் எனக்கு வருத்தம் தருகிறது” என்று அவள் அவனுக்கு உரைத்து, “தலைமகள் உடன்வாராதபடி இற்செறிக்கப் பட்டாள் என்றும், “அதனால் அவள் எய்தும் துன்பம் சொல்லளவுக்கு அகப்படாதாயிற்று” என்றும் உரைத்தாள். அவனும் வருத்த முடன் அவ்விடத்தினின்றும் அகன்றான். ஒரு நாள் அவன் தலைவியின் மனைக்கண் ஒரு சிறையில் வந்து நின்றான். அதனை அறிந்துகொண்ட தோழி அவன் செவிப்படுமாறு, தலைவியோடு சொல்லாடலுற்றாள். காதலனைக் காணப்பெறாமையால் கையறவு மிக்கு வருந்திய தலைமகட்கு அதற்குக் காரணம் காப்புமிகுதி என்பாளாய்த் தான் ஒருநாள் கானற்சோலையில் தலைமகனைக் கண்டது கூறினாள். “கானற்சோலை, துறைவ னாகிய தலைமகற்கும் நமக்கும் காதற்றொடர்பு உண்டாக்கிய தாகலான், அங்கு நின்னையின்றிச் சேறல் எனக்கு வருத்தம் தருவது பற்றிப் பன்னாள் யான் செலவு ஒழிந்திருந்தேன்; ஆயி னும், ஒரு நாள் யான் அங்கே சென்றேனாக. தேர்மணிக்குரல் ஒன்று கேட்க, இது தலைமகன் தேர்மணியோசை போலும் என நினைந்து நோக்கினேன்; அவ்வளவிலே அவன் போந்து என் முன்னே நின்றான். அத்துணைக் காலன்புடையானை இற்செறிப்பு மிகுதலால்இனி யானும் சென்று காணும் திறமும் இலதாயிற்று” என்றாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைமகள் இற்செறிக்கப் பட்டுக் காமமிக்க கழிபடரால் கையற்று வருந்திக் கிடப்பதும், அதனால் தோழியும் தனிப்படப் போந்து தலைமகனொடு உரையாடற்கு இயலாமையும், தலைவனது காதல்மாண்பும் உரைக்கு மாற்றால், இனி இந் நிலையினைத் தெருண்டு தலை மகன் வரைவொடு வருதலன்றிச் செயற்பாலது வேறில்லை என்ற கருத்து விளங்கி நிற்கும் ஒட்பம் கண்டு வியந்த கபிலர் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். நொச்சி மாவரும் பன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி இலங்கெயிற் றேஎர் இன்னகை மகளிர் உணங்குதினை துழவுங் கைபோன் ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன்னமர் கானல் 1தனியான் வருதல் நனிபுலம் புடைத்தென 2வாரேன் மன்ற வந்தனென் தெய்ய சிறுநா ஒண்மணித் தெள்ளிசை கடுப்ப இனமீன் ஆர்கைய ஈண்டுபுள் ளொலிக்குரல் இவைமகன் என்னா அளவைமன்3 வயமான் தோன்றல் வந்துநின் றனனே4 இது, காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; வரைவு கடாயதூஉ மாம். உரை : நொச்சி மா அரும்பன்ன கண்ண -நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய; எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி-எக்கரில் வாழும் நண்டினது பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்; இலங்கு எயிற்று ஏஎர் இன்நகை மகளிர் - விளங்குகின்ற பற்கள் ஒளிரும் அழகிய இனிய நகையினையுடைய மகளிர்; உணங்கு தினை துழவும் கைபோல்- உலர்கின்ற தினையைத் துழவும் முன்கைபோல; ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்கும் - ஞாழலின் மணங்கமழும் நறிய பூக்கள் உதிர்ந்தவற்றை வரிவரியாகக் கோலம் செய்யும்; துறை வன் தன்னொடு புணர்த்த இன்னமர் கானல் - துறையினை யுடைய தலைமகனோடு நட்புறுவித்த இனிமை பொருந்திய கானற் சோலைக்கு; யான் தனி வருதல் நனிபுலம்புடைத்தென-யான் நின்னையின்றித் தனியே போதருதல் மிக்க வருத்தம் தருவதாம் என்று கருதி; வாரேன் மன்ற-போதலைச் செய்யேன் தெளிவாக; வந்தனென்-ஆயினும் ஒரு நாள் அங்கே போந்தே னாக; சிறுநா ஓண்மணித் தெள்ளிசை கடுப்ப -சிறிய நாவை யுடைய ஒள்ளிய மணியின் தெளிந்த ஓசை போல; இனமீன் ஆர்கைய ஈண்டு புள் ஒலிக்குரல் - கூட்டமாகிய மீன்களை உண்ணுவனவாய் நெருங்கிய புள்ளினங்களின் குரலோசையைக் கேட்டு; இவை மகன் என்னா அளவை - இவை தலைமக னுடைய தேரிற் கட்டிய மணிகளின் ஒலி போல்கின்றன என்று நினைத்த அளவில்; வயமான் தோன்றல் வந்து நின்றனன்மன் - வலிமிக்க குதிரையையுடைய அவன் தானே வந்து நின்றான்; இனி அத்தலைப்பாடு நிகழாவாறு காப்புமிகுதலால் கழிந்தது காண் எ-று. துறைவனொடு புணர்த்த கானற்கு, யான் தனி வருதல் நனிபுலம் புடைத்தென வாரேன் மன்ற; ஒருகால் வந்தனென்; தெள்ளிசை கடுப்ப, புள்ளொலிக் குரல் கேட்டு, இவை மகன் என்னா அளவை, தோன்றல் வந்து நின்றனன்மன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன்ற: தெளிவுப் பொருட்டாயனென்ற இடைச்சொல். தெய்ய அசைநிலை. ஒழியிசைப் பொருட்டாய மன்னென்ற இடைச்சொல் நின்றனன்மன் என மாறிக்கூட்டப் பட்டது. மா, கருமை. ஏஎர், அழகு. புணர்தற்கு இடமாயினது பற்றிப் புணர்த்த கானல் என அதன் மேலேற்றிக் கூறப்பட்டது. இன்னமர் கானல், இனிமை மேவிய கானல்; “இன்னமர் கேளிர்1”என்றாற் போல. புலம்பு, தனிமைத் துயர். சிறுசிறு நாப் புணர்த்த பலவாய மணிகளின் தெளிந்த ஓசை என்றற்குச் சிறுநா வொண்மணித் தெள்ளிசை என்றார்.ஆர்கைய: முற்றெச்சம். தலைமகன் தேரிற்கட்டிய மணியொலி என்றற்கு மகன் என் றொழிந்தார். வயமான் தோன்றல் என்றது வாளா சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. இற்செறிப்பால் தலைமகனைத் தலைக்கூட மாட்டா மையின், காதல் கைம்மிக்கு வருந்தும் தலைமகள் கடிமனைக்கண் செறிக்கப்பட்டமையைத் தலைமகற்கு உணர்த்திய திறத்தை அவட்குக் கூறலுற்ற தோழி, தான் கானற்குச் சென்றதன் காரணம் இதுவென்பாள், அது தலைமகள் தலைமகனைத் தலைக்கூடிய இடமாகிய சிறப்புடைத் தென்பாளாய், துறைவன் தன்னொடு புணர்த்த கானல் என்றும், அது காணுந்தோறும் அப்புணர்ச் சியை நினைவுறுத்தி இன்பம் செய்வது பற்றி இன்னமர் கானல் என்றும், எனினும் தலைமகளை இன்றித் தான்மாத்திரம் தனித்துச் சென்றவழி, இற்செறிப் புண்டமையால் அவள் உடன் வர மாட்டாமை நினைத்து வருந்தச் செய்வது தோன்ற தனியான் வருதல் நனிபுலம் புடைத்து என என்றும், அதனால் அங்கும் பன்னாள் செல்லாமை விளங்க வாரேன் மன்ற என்றும், ஒருநாள் புலம்பினும் கானல் புணர்த்த இன்பம் மிக்கு நின்றமையின் சென்றது கூறுவாள் வந்தனென் தெய்ய என்றும் கூறினாள். இனி, சிறைப்புறம் நின்ற தலைவன் பொருட்டு, தலைவி போந்து அவனைத் தலைப்பெய்ய மாட்டாமைக்கு ஏதுவாகிய காப்பு மிகுதி யுணர்த்துபவள், அதற்குக் காரணமாக ஊரவர் அலர் கூறுவதை உள்ளுறையால் குறிப்பாள், ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்கும் என்றாள். என்றது, உதிர்ந்து பரந்து கிடக்கும் ஞாழலின் நறுவீயை ஞெண்டினம் வரித்தல் போல இல்லின்கட் செறிப்புண்டிருக்கும் தலைமகளை ஊரவர் கூறும் அலருரை தோன்றி வருத்துகின்றது என்றவாறு. அலர் காப்பு மிகுதிக்கும், தலைவியின் மேனி வேறுபாடு இற்செறிப்புக்கும் ஏதுவாயின என்க. இனித் தலை மகனது காதலின் மாண்பு கூறுவாள், கானற்கண் புள்ளினம் எடுத்த குரலொலி கேட்டுத் தலைவனது தேர் மணிக்குரலென நினைத் தமையை ஈண்டு புள்ளொலிக் குரல் இவைமகன் என்னா அளவை என்றும், நினைந்த அப்பொழுதே அவன் தோன்றின மையை வயமான் தோன்றல் வந்து நின்றனனே என்றும் கூறினாள். இத்துணைப் பெருங்காதலுடையான், இற்செறிப்பாலும், காப்பு மிகுதியாலும் இனிப் போந்து களவிற் கூட்டம் பெறல் ஒழிந்தது; அவன் இனித் தலைவியை வரைந்துகோடல் ஒன்றே செய்யற் பாலன் என்றற்கு மன் என்றாள் என அறிக. இதனால் தலைமகன் தெருண்டு வரைவது பயன். 268. வெறிபாடிய காமக் காணியார் இச் சான்றோரது இயற்பெயர் தெரிந்திலது. காமக்காணி என்பது தமிழர் வாழ்வில் அரசர் நல்கிய காணியாட்சிச் சிறப்புக்களுள் ஒன்று. இதனைப் பற்றிய குறிப்புக்களைக் காமக்காணி நப்பசலையார் பாட்டின் முன்னுரைக்கட் கூறினாம். வெறிபாடு வதிற் சிறந்தமை காரணமாக இவர் வெறிபாடிய காமக்காணி எனச் சிறப்பிக்கப்பட்டாரெனக் கோடல் நேரிது. இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. தமது களவுக்காதலைப் பகற்குறி இரவுக்குறிகளில் எய்தும் கூட்டங்களால் வளர்த்து ஒருவரி னொருவர் காதல் சிறந்து விளங்கும் தலைமக்களில், அது மேலும் பெருகி உயிர்த் தொடர் பாய் முறுகி ஒருவரை யொருவர் இன்றியமை யாராவது குறித்துத் தலைமகன் களவொழுக்கினையே நீட்டிப்பானாயினன்; அத னால் அவனது வரவு நாளும் தொடர்ந்து நிகழாமல் நாள் சில இடையிட்டு இயன்றது.காதலுறவால் தலைமகளது மேனி கதிர்த்து உடல் தளிர்த்து வேறுபாடு எய்தக் கண்ட அவள் பெற்றோர், அவளைத் தம் கடிமனையில் இற்செறித்தனர். அவள் தலைமகனை எளிதிற் கண்டு இன்புறுதற்கு அதுவும் ஓர் இடை யீடாயிற்று. இதற்கிடையே தோழி பன்முறையும் தலைமகளை வரைந்துகொள்ளுமாறு அவனைத் தூண்டினாள். தலைமகனும் காதற்பெருக்கால் செவ்வி வாய்க்குந்தோறும் தலைவி மனையின் சிறைப்புறம் போந்து அவளைத் தலைப்பெய்து போதலில் தவறானாயினன். எனினும், அவனை மணந்து பெறும் அழிவில் கூட்டத்தில் தலைமகட்கு வேட்கை மிக்கு நின்றது. அதனை உணர்ந்த தோழி ஒருநாள் தலைமகன் சிறைப்புறத்தே நின்றது கண்டாள்; தலைமகளின் வேட்கை மிகுதியை அவற்கு உரைப் பாளாய்த் தலைவியொடு சொல்லாடலுற்று, உள்ளுறையில் அதனைக் குறிப்பாய்க் காட்டி, வெளிப்படையில், “நாடனாகிய தலைமகன்பால் யாம் இனிய காதல் செய்தொழுகவும், நம்பால் அவன் காதல் இலனாதற்குக் காரணம் யாது எனத் தெரிகின்றிலது; மனைமுற்றத்தைப் புதுமணல் பெய்து சிறப்பித்து வேலனை வருவித்துக் கழங்கிட்டு அதனைக் காண்பேம்கொல்லோ? கூறுக” என்று சொன்னாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைமகன் தலைமகளை வரைந்துகோடற்கண் உளவாகிய இடையூறுகளையோ இடை யீடுகளையோ எடுத்தோதி மறுத்தல் யாதுமின்றித் தலைவியின் வேட்கைமிகுதி யொன்றையே வற்புறுத்திக் கூறுதலினும், அத் துறையின் எல்லைக்கண் வேறு கூற்றின்மை தேர்ந்து உரைத்த நயம் கண்ட காமக்காணியார் அதனை இப்பாட்டிற் பொதிந்து காட்டுகின்றார். சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க 1கார்ப்பெயல் தலைஇய 2கவின்பெறு குன்றத்துக் கருங்கோற் குறிஞ்சிப் 3பெருஞ்சினை வான்பூ ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த நாறுகொள் பிரசம் 4ஊறும் நாடற்குக் 5காதல் செய்தலும் காதல மன்மை யாதனிற் கொல்லோ தோழி வினவுகம் பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே. இது தோழி தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், “அவன் வருவா னாகவும் நீ வேறுபட்டாய், வெறியெடுத்துக் கொள்ளும் வகையான்” என்றதூஉமாம். உரை : சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க - அச்சம் பொருந்திய இடத்தின்கண் உள்ள சுனைகள் நீர் நிறையுமாறு; கார்ப் பெயல் தலைஇய கவின்பெறு குன்றத்து- கார்காலத்து மழை பெய்தமையால் கூதிர்ப் பருவத்து அழகுபெற்ற குன்றத் தின்கண் நின்ற; கருங்கோற் குறிஞ்சிப் பெருஞ்சினை வான்பூ - கரிய கொம்புகளையுடைய குறிஞ்சியின் பெரிய கிளைகளிற் பூத்த வெள்ளிய பூவின் தேன்; ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த - ஓவியத்திற் கண்டாற் போலும் அழகிய மனை யகத்துக் கட்டப் பெற்ற; நாறுகொள் பிரசம் ஊறும் நாடற்கு - மணம் கமழும் தேனடை தேன்கசியும் நாடனாகிய தலை மகன்பால்; காதல் செய்தலும் - யாம் காதல் செய்தொழுகவும்; காதலம் அன்மை - அவனாற் காதலிக்கப்படாமை; யாதனின் கொல் - யாது காரணத்தாலாம்; தோழி -; வினவுகம் - வினாவி யறிவோம்; பெய்ம் மணல் முற்றம் கடிகொண்டு - மனை முற்றத்தில் புதுமணல் பரப்பி விளக்க முறுவித்து; மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்து - மெய்ம்மை தேர்ந்துரைக்கும் வேலனை வருவித்து எ.று. தோழி, நாடற்குக் காதல மாகவும், காதலமன்மை யாதனிற் கொல்லொ என , முற்றம் கடிகொண்டு வேலன் தந்து கழங்கின் வினவுகம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க, கொல்: அசைநிலை. ஓகாரம்: வினா. மாவும் மாக்களும் சேரற்கரிய நெடுமுடியிடத்து அகலிடம் அச்சம் தருவது பற்றிச் சூருடை நனந்தலை எனப் பட்டது: “சூர்புகல் நனந்தலை மாயிருங் கொல்லி1” என்று பிறரும் கூறுவது காண்க. சுனைநீர் நிறைந்து வழியுமாறு கார்காலத்துப் பெருமழை பெய்தமை தோன்றக் கார்ப்பெயல் தலைஇய என்றார். கார்ப் பெயலால் கூதிர்ப் பருவத்தில் காடும் குன்றும் தழைத்து இனிய காட்சி வழங்குவது இயற்கை யாதலின், கார்ப்பெயல் தலைஇய கவின்பெறு குன்றத்து என்றார். குறிஞ்சி மரத்தின் பூ வெண்ணிறத்த தாகலின் வான்பூ எனப் பட்டது. இது பன்னீரியாண்டுக் கொருமுறை பூப்பது என்பர். இதன் பூ பெரிதாய்த் தேன்மிக்கு இருக்கும். மனைகளில் சிறப் புக்கள் நடைபெறும் போதெல்லாம் பழமணல் மாற்றிப் புது மணல் கொணர்ந்து செய்யப்படு மாகலின் பெய்ம்மணல் முற்றம் என்றார். கடி, விளக்கம். வேலன், முருகவேளின் வேலையுடைமை பற்றி வேலன் என்பர்; இவன் வெறியாட்டுக் குரிய செயல்முறையாவும் நன்கறிந்தவன். அதனால் இவனை “வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்2” என்று தொல்காப்பியர் கூறுவர். வெறியாடும் வேலன் நிகழ்வன கூறற்குக் கழங்கைக் கருவியாகக் கொள்வது பற்றிக் கழங்கு சிறப்பித்துக் காட்டப் பட்டது. கழங்கு, கழற்சிக்காய். “ஆகுவ தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்1” என்று சான்றோர் உரைப் பது காண்க. களவின்கண் ஒழுகும் தலைமகன், பலபடியாலும் கூடியும் பிரிந்தும் அதனை நீட்டிப்பது, தலைவி யுள்ளத்துத் தோன்றிய காதல் வளர்ந்து சிறந்து தன்னை இன்றியமையாத உயிர்த் தொடர்பாய் முறுகுவது குறித்ததாகலின், அஃது, அவன் விரும்பி யாங்குப் பெருகி நிற்பவும், வரைவை நீட்டித்தல் செய்கின்றான். அவன் அது செய்தற்குக் காரணம் யாதென அறிதல் வேண்டு மென்பாள், நாடற்குக் காதலமாகவும் காதலமன்மை யாதனிற் கொல்லோ என்றும், காப்புமிகுதியால் யாம் அவனைத் தலைப்பெய்து கேட்டறிதல் கூடாமையின், வேலனை வருவித்துக் கழங்கினால் அறிகுவம் என்பாள், வேலன் தந்து மெய்ம்மலி கழங்கின் வினவுகம் என்றும் கூறினாள். வேலன் கழங்கு பொய்யாதென யாப்புறுத்தற்கு மெய்ம்மலி கழங்கு எனவும், அதற்குரிய முன்னணிச் செயல்களை முறையே செய்யின், வேலனது கழங்கு மெய்ம்மை குன்றாது என்பது தோன்ற, பெய்ம்மணல் முற்றம் கடி கொண்டு எனவும் உரைப்பாளாயினள். குன்றத்துக் குறிஞ்சிப்பூவின் தேன், இல்வரைப்பில் தேனீக் கொணர்ந்து அமைத்த தேனடையில் ஊறும் என்றது, இல் லிடத்துச் செறிப்புண்டிருக்கும் தலைவியுள்ளத்தில் தலைமகன் தோற்றுவித்த காதல் பெருகிச் சிறந்துளது என உள்ளுறுத் துரைத்த வாறு, தலைமகன் கேட்டு வரைதலை மேற்கொள்வானாவது பயன். 269. எயினந்தை மகனார் இளங்கீரனார் பொற்புடைய மனையறம் புரிந்தொழுகும் தலைமகற்குப் பரத்தையர்கூட்டமும் அவர்வயிற் பிரிந்துறையும் புறத்தொழுக் கமும் உளவாயின. அதனால், தலைமகள் உள்ளத்திற் புலவி மிக்கு நின்றது. இந்நிலையில் அவன் தன் மனைக்கு வருதலை விரும்பித் தன் ஒழுக்கத்துக்குத் துணைவராகிய வாயில்களை மனைவிபால் விடுத்தான். வாயில் மறுக்கும் குறிப்பினளாய்த் தலைமகள் இருப்பதை உணர்ந்த தோழி, தானும் அதுவே செய்யக் கருதி, வாயிலாய் வந்தாரை நோக்கி, “முன்பொருகால் தலைமகன் இம்மனைக்கண் இருந்தானாக, கிண்கிணி யணிந்த காலும் பாலருந்தும் சிவந்த வாயுமுடைய புதல்வன், மாலை அணிந்து கண்ணுக்கு இனிதாக விளங்கிய அவன் மார்பின் மேல் ஏறி விளையாட்டயர்ந்தான். அதனால், மாலையறுபட்டு மார்பு பொலிவு குன்றக் கண்ட தலைமகட்கு உள்ளத்தே பொறாமை தோன்றிற்று. அவளுடைய திருமுகத்து ஒளிரும் கண்கள் சிவந்து மகனையும் தலைமகன் மார்பினையும் மாறி மாறி நோக்கின. அவள் முகத்தில் தோன்றிய வெண்ணகை, அவளது உள்ளத்துப் புலவிக்குறிப்பைப் புலப்படுத்திற்று. அவள்பால் தோன்றிய காதல்நோக்கம் பெருமரத்தைச் சுற்றிப் பிணிக்கும் பூங்கொடி போல் அவன் உள்ளத்தைப் பிணித்தது. ஆயினும் அவன் அதனைப் பொருளாகக் கருதாது சிறிய பல குன்றங்களைக் கடந்து சேணிடைப் பிரிவது துணிந்தான். அப்பெற்றியோன் இப்போது பரத்தையிற் பிரிந்துள்ளான்; ஆகவே அவனுடைய கருத்துக்களின் இயல்பினை அறிவது அரிதாகலின், அவன் பொருட்டு நீவிர் வாயில் வேண்டுவது பயனில் செயல்” என மறுத்தாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைமகளின் காதலுரிமையும் தலைமகனுடைய பரத்தைமையும் இனிது விளக்கமுறல் கண்ட இளங்கீரனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடு கின்றார். குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் பாலார் துவர்வாய்ப்1 புதல்வன் தந்தை மாலைக்2 கட்கின் மார்பூர் பிழிய அவ்வெயி றொழுகிய3 செவ்வாய் வெண்ணகைச் செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி திருமுகத் 4தலமரும் கண்இனைந் தல்கலும் பெருமர 1வள்ளியிற் பிணிக்கும் என்னார் சிறுபல் குன்றம் இறப்போர் அறிவார் யார்அவர் முன்னி யவ்வே. இது, தோழி வாயில் மறுத்தது; செலவழுங்குவித்ததூ உமாம். உரை : குரும்பை மணிப்பூண் பெருஞ்செங்கிண்கிணி - குரும்பை போன்ற மணிகள் கோத்த பூண்களையும் பெரிய செவ்விய கிண்கிணியையும்; பாலார் துவர்வாய்ப் புதல்வன் - பால் பருகும் சிவந்த வாயையுமுடைய புதல்வன்; தந்தை மாலைக் கட்கின் மார்பு ஊர்பு இழிய - தந்தையின் மாலையணிந்து கண்ணுக்கு இனிதாகத் தோன்றிய மார்பின்மேல் ஏறியும் இறங்கியும் விளையாட்டயரவும் பொறாது; அவ்வெயிறு ஒழுகிய செவ்வாய் வெண்ணகை - அழகிய எயிறுகள் நிரல்பட வளர்ந்த சிவந்த வாயிடத்தே குறுநகை தோற்றுவித்த; செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்காதலி - குற்றமில்லாத கற் பொழுக்கத்தையுடைய நம் உயிர்போல் விரும்பப்பட்ட காதலியின்; திருமுகத்து அலமரும் கண் இனைந்து - அழகிய முகத்தின்கண் உலவும் கண்கள் கலுழ்ந்து; அல்கலும் பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார் - நாளும் பெருமரத்தைச் சுற்றிப் பிணித்திருக்கும் கொடிபோல் தம்மை மேலே செல்ல விடாது பிணிக்கும் என்று கருதாராய்; சிறுபல்குன்றம் இறப் போர் - சிறியவாகிய குன்றங்கள் பலவற்றையும் கடந்து செல்வாராகலின்; அவர் முன்னிய அறிவார் யார் - அவர் கருதுவனவற்றை அறியவல்லார் யார்? அறிந்தோர் போல நீவிர் வாயில் வேண்டுவது என்னை? எ.று. மணிப்பூணும் கிண்கிணியும் துவர்வாயுமுடைய புதல்வன், தந்தை கட்கின் மார்பு ஊர்பு இழியவும், பொறாது வெண்ணகை தோற்றுவித்த கொள்கையையுடைய நம் காதலியின் திருமுகத்து அலமரும் கண், அல்கலும் இனைந்து வள்ளியிற் பிணிக்கும் என்னார், சிறுபல் குன்றம் இறப்போர். ஆகலின், அவர் முன்னிய அறிவார் யார்? அறிந்தோர் போல நீவிர் போந்து வாயில் வேண்டுவது என்னை? எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குரும்பை, தென்னையின் பூவிடத்தே தோன்றும் சிறுகாய். குரும்பை போலும் மணி என்க. மணிப்பூண், மார்பிலும் இடை யிலும் சிறுவர்க்குக் கட்டும் மணிமாலை. கிண்கிணி, காலில் அணிவது. துவர்வாய், சிவந்த வாய். கட்கின் மார்பு, கண்ணாற் காண்டற்கு இனிதாகிய மார்பு; “சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர்1” என்று பிறரும் கூறுப. எயிறு ஒழுகுதலாவது, பற்கள் ஒழுங்காய் நிரல்பட வளர்ந்திருத்தல். ஒழுகுதல், வளர்தல்; “ஒழுகுபொற்கொடி மூக்கு2” என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைக்கும் உரை காண்க. இழிய என்புழி உம்மை விரிக்கப் பட்டது. செவ்வாய் வெண்ணகை: சொன்முரண். வெண்ணகை, குறுமுறுவல். வெண்மை, ஈண்டு உள்ளீடி ன்மை மேற்று; “வறி தகத் தெழுந்த வாயல் முறுவலள்3” என்றாற் போல. செயிர், குற்றம். மகளிர்க்குக் குற்றமில்லாத கொள்கை கற்பாதலின், அதனைச் செயிர்தீர் கொள்கை என்றார். “நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று4” எனத் தொல்காப்பியனாரும் உரைப்பது காண்க. உயிர் வெங்காதலி, உடலளவாய் நில்லாது உயிரோடு ஒன்றிய காதலையுடையவள். கண் இனைதல், கண்கள் நீர் நிறைந்து சொரிதல். “கண்ணீர் பூசல் தரும்5” “கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும்6” எனக் கூறும் மரபு பற்றி ஈண்டுக் கண் இனைந்து பிணிக்கும் என்றார். மரத்திற்குப் பெருமை, வெயில் காற்று மழைகட்குச் சலியாது நிற்கும் திண்மை. வள்ளி, கொடி; “வாடிய வள்ளி முதல் அரிந்தற்று7” என்று வருதல் காண்க. வடமொழியாளர் இதனை வல்லி எனத் திரித்துக் கொள்வர். குன்றம் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. காதலர் பிரிந்தவழி அவருடைய காதல் மனக்கண்ணில் மிக்குத் தோன்றுவது இயல்பாகலின், தலைமகன் பிரியுங்கால் அவன் உள்ளத்தே தலைமகளது காதல் மாண்புற்றுத் தோன்று வதை எடுத்தோதப் புக்க தோழி, மகன் தனக்குத் தந்தை யென்ற முறைமை பற்றிச் செய்த செயல் கண்டு, அத்தந்தை தன் காதற் கேள்வன் என்ற இயல்பினால் தலைமகள் பொறாது புலந்த செயலை முதற்கண் விதந்து கூறுகின்றாள். மகன் செய்த செயல் இதுவென்பாள், புதல்வன் தந்தை மாலைக் கட்கின் மார்பு ஊர்பு இழிய என்றும், தலைவி மார்பிற் பாலை யூட்டிக் கைசெயப்பட்ட புதல்வன் என்பது தோன்றக் குரும்பை மணிப் பூண் பெருஞ்செங் கிண்கிணிப் பாலார் புதல்வன் என்றும், எனினும், அவன்பாற் செல்லும் தாய்மை யன்பினும், தலை மகட்குக் காதலன்பாற் செல்லும் காதலன்பு பெரிதா யிருத்தல் தோன்ற, புதல்வனைப் புலந்து வெண்ணகை தோற்றுவித்த சிறப்பை அவ்வெயி றொழுகிய செவ்வாய் வெண்ணகை யென்றும், அஃது அவட்கு இழிவாகாது மாண்பேயாம் என்றற்குச் செயிர்தீர் கொள்கை என்றும் சிறப்பித்தாள். “கற்பும் காமமும்” தலைமகட்கு மாண்பாம் என்று ஆசிரியர் தொல்காப்பியர்1 கூறுவர். மாலையணிந்து காணும் தன் கண்கட்கு இன்ப வுணர்வு பயந்து விளங்கிய தலைமகன் மார்பில் ஏறித் தன் புதல்வன் விளையாடியதனால் பொலிவு சிதைந்த மார்பையும் சிதைத்த மகனையும் மாறிமாறி நோக்குதலின், திருமுகத்து அலமரும் கண் என்றாள். இவ்வாறு காதலால் மாண்புறும் தன் காதலியைப் பிரிந்து செல்லின், அவளுடைய கண்கள் நாளும் தன் மனத்தில் தோன்றி நீர் நிறைந்து நின்று தன்னை மேலே செல்ல விடாது பிணிக்கும் என்று தலைமகன் நினைத்தற்குரியன் என்பாள், திருமுகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும் பிணிக்கும் என்றும், அப்பிணிப்பும் பெருமரத்தை ஒரு பூங்கொடி பிணித்தாற் போல்வதாம் என்றற்குப் பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்றும் கருதி மேற்கொண்ட செலவைத் தவிர்த்தற்குரிய அவன், தவிராது சென்ற கொடுமை யுரைத்தற்கு வள்ளியிற் பிணிக்கும் என்னார் சிறுபல் குன்றம் இறப்போர் என்றும் தோழி கூறினாள். “இப்பெற்றியோர் இன்று பரத்தையிற் பிரிந்திருத்தல் அவர்க்குப் பெரிதன்று; அவர் நும்மை வாயில் விடுத்த வாற்றால் யாது கருதினரோ, யாம் அறியேம்; அவர்பாலே செல்வீராமின்” என்பாள், அறிவார் யார் அவர் முன்னியவ்வே என்றாள். தலைமகன் பிரிந்துழி அவன் பிரிவெண்ணி இரங்கியிருத்தல் அல்லது, அவன் வயின் சென்று கொணர்தல் தலைமகட்கு இயல்பன்மையின், அவர் முன்னியது இன்னதென எமக்கு விளங்கவில்லை என்றாள். “கன்னெறிப் படர்குவ ராயின், செயிர்தீர் கொள்கைச் சின்மொழித் துவர்வாய், அவிர்தொடி முன்கை ஆயிழை மகளிர், ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்றுபடு விறற் கவின் உள்ளி என்றும், இரங்குநரல்லது பெயர்தந்து யாவதும் தருநரு முளரோ இவ்வுலகத்தான் எனப்1” பிறாண்டு தலைமகள் கூறுதல் ஈண்டு நோக்கத் தக்கது. இதனாற் பயன் வாயில்கள் கேட்டு நீங்குவாராவது. 270. பரணர் மனையறம் புரிந்தொழுகிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று. அக்காலத்தே, பரத்தையர் சேரிக்கண் வாழ்ந்த ஏனோர்க்கும் அவன் அருள் செய்தான். அது கண்ட அவன் காதற்பரத்தைக்குப் பொறாமை மீதூர்ந்தது. அதுவே ஏதுவாக அவள்பால் தோன்றிய ஊடலை யுணர்த்தற்குச் சென்ற வாயில் களை அவள் மறுத்தொழிந்தாள். முடிவில் தலைமகன், தானே சென்று புலவி தீர்ப்பான் அவள் மனையை அடையவும், அவ ளுடைய தோழி முற்படப் போந்து வாயில் நேர்வாளாய் அவனை எதிர் கொண்டாள். அப்பரத்தையும் உடன்போந்து நிற்ப, உடனிலைக் கிளவி வகையால் தோழி அவனொடு உரை யாடலுற்று, “தாழையின்கண் அமைந்த கூடு இடங்கொள்ளாமை யால் வண்டினம் தண்டலையிற் சுழன்று பரந்து பூக்களிற்படிந்து மணத்தை எழுப்பித் தாதூதித் துகள் உதிர்ந்தன. அக்காலத்தே அங்கே உதிர்ந்த பூந்துகள் எமது கரிய கூந்தலிற் படிந்தன. எனினும், நின் அருள் பெற்றுப் பொலியும் சிறப்பினைப் பொருந் தாமையால் எம் மனைக்கண்ணே யாம் ஒடுங்கி வருந்துவே மாயினேம். இழையும் தொடியும் வளையுமாகிய அணிகளால் தகை பெறுதலன்றி நின்னைப் பிரியா வகையிற் பிணிக்கும் திறமை பெறாத பெரிய தோளாகிய செல்வத்தையுடைய இவ ளினும் என் வேண்டுகோட்கு இரங்கி இவண்போந்து அருளினை. இந்நிலையில் நன்னன் செய்த கூந்தல் முரற்சியினும், நின் விறற் றகைமை கொடிதாயினும், யான் அதனை மனத்திற்கொள்ளாது மறந்தொழிவேன்; எம்மிற் பிரியாது அருளுவாயாக” என்றாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைவன் பரத்தை மனையின் நீங்கி ஒழுகிய கொடுமை கூறலுற்று, அதனை அவன் அருளிய வாய்பாட்டில் வைத்துப் பரத்தைக்குச் செய்த அருளினும் அவள் தோழியாகிய தனக்குச் செய்தது பெரிது எனப் பாராட்டுதல் போலக் கொடுமையின் முடித்த நயம் கண்ட ஆசிரியர் பரணர், நன்னன் என்பானுடைய கொடுமையை எடுத்துரைத்தற்கு இதனைச் சீரிய கருவியாகக் கொண்டு பாடுகின்றார். தடந்தாட் டாழைக் 1குடம்பை நோனாத் தண்டலை உலமரும் வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தற் 2பூந்துகள் ஆடி 3அருள்பொலி பொல்லேம் எம்மனை வருந்த அணித்தகை யல்லது 4பிணித்தகை தேற்றாப் பெருந்தோட் செல்வத் திவளினும் எல்லா எற்பெரி தளித்தனை நீயே பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தன் முரற்சியிற் கொடிதே 5மறக்குவென் மாதோநின் விறற்றகை மையே. இது, 6பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் காணப் பொறாத காதற்பரத்தை வாயின் மறுப்ப, அவள் தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது, உட னிலைக் கிளவி வகையால். உரை : தடந்தாள் தாழைக் குடம்பை நோனா - பெரிய காலை யுடைய தாழையின்கண் அமைத்த கூடு தாங்கமாட்டா மையால்; தண்டலை உலமரும் வண்டுபடும் நாற்றத்து - சோலையிடத்தே சுற்றித் திரியும் வண்டினம் ஊதுதலால் எழும் மணம் பொருந்திய; இருள் புரை கூந்தல் பூந்துகளாடி - இருள்போற் கரிய கூந்தலில் பூந்தாது படிதலால்; அருள் பொலிபு ஒல்லேம் - நின் அருள் பெற்றுப் பொலியும் சிறப்புப் பெறேமாய்; எம்மனைவருந்த - எம்முடைய மனையின் கண்ணே ஒடுங்கிக் கிடந்து வருந்த; அணித்தகையல்லது பிணித்தகை தேற்றா - இழையும் தொடியும் வளையுமாகிய அணிவகைகளால் அழகு செய்து கோடலல்லது நின்னை நீங்காதவாறு பிணித்துக்கோடலை அறியாத; பெருந்தோள் செல்வத்து இவளினும் - பெரிய தோளாகிய செல்வத்தை யுடைய இவளை அருளலினும்; எல்லா - தலைவ; நீ என் பெரிது அளித்தனை - நீ என்பால் பெரிதும் அருள் செய்தனை; பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் - அழகிய விரிந்த உளைமயிராற் பொலிவுற்ற நல்ல செலவை யுடைய குதிரைகளை யுடைய; வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன் - வேந்தர்களைப் போரில் வென்று வெருட்டிய உயர்ந்த வேற்படையையுடைய நன்னன்; கூந்தல் முரற்சியின் கொடிது - அவ்வேந்தர்களின் உரிமை மகளிர் கூந்தலைக் கயிறு திரித்துக்கொண்ட செயலினும் கொடுமையுடைத் தாயினும்; நின்விறல் தகைமை மறக்குவென் - நின் மிக்க தன்மையை யான் இன்றே மறந்தொழிவேன் காண் எ.று. எல்லா, கூந்தல் துகளாடி அருள் பொலிபு ஒல்லேமாய் எம்மனை வருந்த, இவளினும் நீ எற்பெரிதளித்தனை; இது, நன்னன் முரற்சியிற் கொடிது; ஆயினும் நின் விறற் றகைமையை இன்றே மறப்பன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தடந்தாள் என்றவழித் தடவென்பது உரிச்சொல்; வளைந்த தாள் என்றுமாம். குடம்பை ஈண்டு வண்டினம் அமைத்த கூட்டின் மேற்று. நோனாமை, இடமின்மையாற் பொறாமை. தண்டலை, சோலை. உலமரல், சுழற்சி. கூடு முற்றும் வண்டுகள் நிறைந்தமையின் மிகப்பல இடமின்மையின் சோலை முற்றும் சுற்றித் திரிந்தமை தோன்றக் குடம்பை நோனாத் தண்டலை நாற்றம் எனப் பட்டது. தண்டலைக் குரம்பை நோனாது உலமரும் வண்டு என்க. நோனாது என்பது ஈறு குறைந்தது. நாற்றத்துப் பூந்துகள் என இயைக்க. பூக்களின் இதழும் தாதுமாகிய துகள் பூந்துகள் எனப்பட்டது. ஒல்லேம்: முற்றெச்சம். அணித்தகை, அணிகளாற் பிறக்கும் அழகு. பிணித்தகை, பிணிக்கும் திறம். பெருந்தோள் செல்வம், மகளிர்க்குத் தோள் பெருத்தல் சிறப்பாதல்பற்றிப் பெருந்தோட் செல்வம் என்றார். எல்லா, இருபாற்கும் பொதுவாய் வரும் முறைப் பெயர். “முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்று முரித்தே1” என்ப. இச்சொல்லைத் தோழி தலைவற்குக் கூறல் வழுவமைதி. பொற்புடை உளை என இயைத்து, அழகிய தலையாட்டம் எனினுமாம். பரி, விரைந்த செலவு. வேந்தர், பிண்டன் முதலியோர்2. கூந்தல் முரற்சி, கூந்தலால் திரிக்கப் படும் கயிறு; “வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங் கூந்தன் முரற்சியால், குஞ்சர வொழுகை பூட்டி3” என வருதல் காண்க. பரத்தையரும் ஏனோரைப் போல இவ்வுலகில் வாழ்தற் குரியராகலின், அவர்க்கு வேண்டுவன உதவுதல் தலைமக்கள் கடனாகும்; அதனால் பரத்தையரிடை நிலவும் விழாக்களிலும் கூத்து இசை முதலியவற்றிலும் தலைமக்கள் இருந்து தலைக்கை தந்து சிறப்பிப்பர். அவ்வகையில் பரத்தையர் பலரும் தலைமகன் அருட்கு உரியராதலின், புறத்தொழுக்கம் பூண்டு ஏனைப் பரத்தையர்க்கு அருள் செய்வான் பிரிந்தது கண்ட காதற்பரத்தை அன்பாற் பொறாது பிணங்குவாளாயினள்; அப்பிணக்கை நீக்கும் பொருட்டுப் பாணர் விறலியராகிய வாயில்களை அவன் அவள்பால் விடுப்ப, அவள் அவர்கட்கு வாயின் மறுத்து ஒழுகி னாள். எத்துணை மறுப்பினும் கையொழியாது தலைமகன் தன்மனைக்கண் சென்று சேர்தல் தகுமே அன்றிப் பரத்தைமனைக் கண் சேறல் தகவன்மை நினையாது, காதற்பரத்தை கழிபெரும் பிணக்குறுவது நன்றன்று என்பதை நன்கறிந்த அவள் தோழி, தலைமகனைக் கண்டு பரத்தையாகிய தன்தலைவி மனைக்குப் போதரல் வேண்டுமென, அவனும் அவ்வண்ணமே அவள் மனைக்கு வருதலும், பரத்தையுடன் முற்படப் போந்து வாயில் நேரும் கருத்தினளான தோழி, அவன் பிரிவால் தன் தலைவி எய்திய வருத்தத்தை யுரைப்பாளாய், “நின்னாற் பூச்சூட்டப் பெறாது வண்டினம் படிந்து உதிர்த்தலால், இருள்புரை கூந்தல் பூந்துகளாடி அருள் பொலிபு ஒல்லேம் எம்மனை வருந்த என்றும், அவட்கு அவன் தான் வாயில் விடுத்ததும், அவள் மறுத்ததும் குறிப்பாயுணர்த்தினானாக, அவற்கு விடை கூறு வாளாய், அவளுடைய இளமைத் தருக்கைச் சுட்டி, அணித்தகை யல்லது பிணித்தகை தேற்றாப் பெருந்தோள் செல்வத்து இவள் என்றும் கூறினாள். ஊடிய இவளை உணர்த்தற்கு வாராமையாகிய கொடுமையை நோக்க, வாயிலாய் வந்த என் பொருட்டு அருள்வாயாய் வந்தது கொடுமை பெரிதாயிற்று என்பாள், பெருந்தோள் செல்வத்து இவளினும் எற்பெரிது அளித்தனை நீயே என்றும், இச்செயல் , பாரத்துத் தலைவனாகிய நன்னன், பிண்டன் முதலிய வேந்தரை வென்று பரிசழித்ததோடு நில்லாமல், அவருடைய உரிமை மகளிரைப் பற்றிக் கூந்தல் களைந்து, அக்கூந்தலாற் கயிறு திரித்துக்கொண்ட கொடுமை மறக்கப்படாதவாறு போல, நின் கொடுமையும் மறக்கப்படாது எனக் கருதற்க; யான் இன்றே அதனை மறந்தொழிவேன் என்பாள் மறக்குவன் மாதோ என்றும், தலைவன் கொடுமை நன்னனது முரற்சி வடிவிலின்றி அளிவடிவில் அமைந்தமையின், நின் விறற்றகைமை என்றும் கூறினாள். தன் தலைவியாகிய பரத்தை உடனிற்ப வுரைத்தலால் இஃது உடனிலைக் கிளவி வகையாயிற்று. இதனாற் பயன்வாயில் நேர்தல். 271.கயமனார் களவின்கண் ஒழுகிய தலைமக்கள் வாழ்வில், தலைமகளை மணம்செய்துகோடற்கு வேற்றவர் மகட் பேசுவாராயினர். தலைமகனோ அவளை வரைந்துகோடற்கு வேண்டுவன முயன்று கொண்டிருந்தான். வேற்று வரைவு வரக்கண்ட தோழியும் தலைமகளும் அறத்தொடுநிலையால் தமக்கும் தலைமகற்கும் உண்டாகியிருக்கும் காதலுறவை உணர்த்துமுன்பே, பெற்றோர் அவர்க்கு மகட்கொடை நேர்வர் என்னும் குறிப்பு அவர்கட்குத் தெரிந்தது. உடனே அவர்கள் அதனைத் தலைமகற்கு அறிவிப்ப, அவனும் தலைமகளை உடன்கொண்டு போதற்குத் துணிந்தான். மணமாதற்கு முன்பே தலைமகன் கொண்டு தலைக்கழிதற்குத் தலைமகள் நாணத்தால் முதற்கண் உள்ளம் சுருங்கினளாயினும், வேறு வழியின்மையின் உடன்பட்டாள். குறித்த நாளிரவு தலை மகன் போதரவும், தோழி அவளை அவன் கையடைப்படுத்து வாழ்த்தி வழிவிட, தலைமக்கள் இருவரும் புறப்பட்டுத் தலை மகன் ஊர் சென்று சேர்ந்தனர். தலைமகளின் காதல்மாண்பை அறியாத தாயரும் பிறரும் அவளைக் காணாது வருந்தினர்; அவளைத் தேடிச் சென்றோரும் அவளை எதிர்ப்படலின்றி மனைதிரும்பினர். பின்னர், தலைமகள் தலைமகனோடு உடன் போயினாள் என்ற செய்தி தெரிந்தது. அவர்கள் சென்ற சுரத்தின் இயல்பைத் தலைவியின் தாய் அறிந்து, தன் மகளின் மென்மை நினைத்து வருந்தினாள். அக்காலை அவள், “நமது செழுந்தண் மனையின் கண் நம்மை வருந்தவிட்டுத் தன்னோடு உடன் போதரும் காளையாகிய தலைவன் உரைக்கும் பொய்யுரையை மெய்யென விரும்பிச் சேய்மையிலுள்ள நாட்டுக்குச் சென்று சேர்ந்தாள் என்பர். அவள் செல்லும் வழியில் இருமருங்கும் நெல்லி மரங்கள் காய்த்து நிற்கும்; அவற்றினின்றும் உதிர்ந்த காய்களைத் தின்று நீர்பருகினால் அந்நீர் இனிமை மிக்கிருக்கும். அக்காய்களை அவளும் அவனோடு தின்று, சுனையின்கண் இருக்கும் குறைந்த அளவிற்றாய நீரைப்பருகிச் சென்றாள். தேனும் பாலும் கலந்துண்டு தேக்கெறியும் செல்வப் பெரு மகளாகிய என்மகள், சிறியிலை நெல்லித் திரள்காய் தின்று சுனையின் சின்னீர் பருகிச் செல்லக் கண்டும், என் உயிரைக் கொண்டு போகாத கூற்றம் கொடிதாகும், பகைவர் தன் விளை நிலத்தைப் பாழ்செய்து விளைபொருளைக் கவர்ந்தேகக் கண்டு வெய்துயிர்த்து வருந்தும் துயர்வினையாளன் போல், யான் என் மகள் செல்வது கண்டு கையற்று வருந்தச் செயதலால், அக்கூற்றம் பெரிய தாழியிலிட்டுப் புதைக்கப் படும் சிறப்பின்றி இறந்து படுவதாக”எனத் தன் மனம் நொந்து உரைத்தாள். தலைமகளின் தாய் மொழிந்த இக்கூற்றின்கண், மகட் போக்கிய தாயது தாய்மையுள்ளம், தலைவிபால் குற்றம் காணாது, தலைமகன் உரையில் பொய்ம்மை யேற்றிப் பழித்து, கூற்றம் தனது உயிரைக் கொண்டு செல்லாமை குற்ற மெனவும் அதனைச் செய்த கூற்றம் சிறப்பில்லாத சாக்காட்டைப் பெறல் வேண்டு மெனவும் உரைக்கும் சிறப்பு நோக்கி அதனை இப் பாட்டின்கண் அமைத்து ஆசிரியர் கயமனார் பாடுகின்றார். இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தா தெருவின் வைகுதுயின் மடியும் செழுந்தண் மனையோ டெம்மிவண் ஒழியச் 1செல்பெருங் காளை பொய்மருண்டு சேய்நாட்டுச் 2சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் 4தின்றலின் 3ஆழ்சுனைச் சின்னீர் குடியினள் கழிந்த குவளை யுண்கண்என்5 மகளே ஒன்னார் 6செய்பாழ் படுப்ப வெய்துயிர்த் தயரும் 7துயர்வினை யாளனிற் பெயர்புறங் காண்டற்கு மாயிருந் தாழி கவிப்பத் தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே. இது, மகட்போக்கிய தாய் மனைமருண்டு சொல்லியது. உரை : இரும்புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி - ஈன் றணிமை மிக்குடைய எருமையின் பெரிய காதுகளையுடைய கன்று; பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும் - பசிய துகளும் சாணமும் பொருந்திய குப்பையிற் கிடந்து உறங்கும்; செழுந்தண் மனையோடு - வளமையும் தண்மையும் உடைய மனையையும்; எம் இவண் ஒழிய - எம்மையும் இவ்விடத்தே விட்டு; செல்பெருங் காளை பொய் மருண்டு - தன்னுடனே செல்கின்ற பெரிய காளையாகிய தலைவனுடைய பொய்ம் மொழிகளை விரும்பி; சேய்நாட்டு - சேய்மையிலுள்ள நாட்டின்கண்; சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் - சுவைபொருந்திய காய்களையுடைய நெல்லிமரங்கள் செறிந்து இனிது செல்லுதற்கு அரிதாகிய சோலையில்; வீழ் கடைத் திரள் காய் ஒருங்கு உடன் தின்றலின் - வீழ்ந்து கிடக்கும் கடைதிரண்ட காய்களை இருவரும் ஒருங்கிருந்து தின்பதால்; ஆழ்சுனைச் சின்னீர் குடியினள் கழிந்த - ஆழ்ந்த சுனை யிடத்தேயுள்ள சிறிதாயிருக்கும் நீரைக் குடித்துச்சென்ற; குவளை யுண்கண் என்மகள் - குவளைபோல் மையுண்ட கண்களையுடைய என்மகளை; ஒன்னார் செய் பாழ்படுப்ப - வலிமிக்க பகைவர் போந்து தன் விளைபுலத்தைப் பாழ்செய்து அதன் விளைபயனைக் கொண்டு செல்லப் பார்த்திருந்து; வெய்துயிர்த்து அயரும் துயர்வினையாளனின் - மாட்டாமை யால் பெருமூச் செறிந்து வருந்தும் துயர்மிக்க உழவனைப் போல; பெயர்புறங் காண்டற்கு - பெயர்ந்து போவதை யான் மனைக்கண் இருந்து கண்டு வருந்துமாறு செய்தலால்; மா இருந்தாழி கவிப்ப - பெரிய தாழியிலிட்டுக் கவித்துப் புதைக்கு மாறு; தாவின்று கழிக - தன் வலியிழந்து கெடுவதாக; எற் கொள்ளாக் கூற்று - என் உயிரை உடனே கொண்டு போகாத கூற்றம் எ.று. செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழிய, காளை பொய் மருண்டு, காய் தின்றலின் சின்னீர் குடியினள் கழிந்த என் மகள், பெயர்புறம் காண்டற்குத், துயர்வினையாளனின் என்னைக் கொள்ளாக் கூற்று, தாழி கவிப்பத் தாவின்று கழிக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எருமைக் கன்று ஈன்றணிமை மிகவுடைமை பற்றிக் குழவி எனப்பட்டது. யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் எருமையும் மானுமாகியவை கன்று எனற்குரியவை என்ற ஆசிரியர் தொல்காப்பியனார். “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை1”என விதித்து, “ஆவும் எருமையும் அவை சொலப்படுமே” என எருமைக்கும் கொள்ள வைத்தமை யால், எருமைக்குழவி யெனல் அமையும் என்க. குழவிப் பருவத்தே எருமைக்கன்றின் காது நீண்டு தோன்றுவது பற்றிப் பெருஞ்செவிக் குழவி என்றார். தாது புல் வைக்கோல் முதலிய வற்றின் கூளங்கள். எரு, சாணம். வைகுதுயில், நீக்கமின்றிக் கிடந்து உறங்குதல். செழுந்தண் மனை, செழுமை, செல்வவளம், மனையோடு என்புழி ஒடு ஓடு என நீண்டது; மனையின் கண்ணென ஏழாவது விரித்தலு மொன்று. பொய்யுரையை மெய்யெனக் கோடலைப் பொய் மருண்டு என்றார். பொங்கர் ஈண்டுப் பெருமரங்கள் செறிய நின்ற சோலை; மரச்செறிவுமாம். “கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்2” எனவும், “இருஞ் சினை மாஅத்து, இணர்ததை புதுப்பூ நிரைந்த பொங்கர் 3” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது தமிழ் நூன்மரபு. ஒன்னார் வலி மிக்கவிடத்து, தமது மாட்டாமையும் இழப்பும் மனத்தை வெதுப்புதலின் வெய் துயிர்த்து அயர்தல் மக்கட்கு இயல்பு. துயர்வினையாளன் என்றார், துயர்தலாகிய வினையல்லது வேறு யாதும் இன்மையின். பெயர்புறங் காண்டல், செல்வோர் முற்படச் செல்லப் பின் னிருந்து அவர்களைக் காண்டல். மாயிருந்தாழி, முதுமக்கள் தாழி; இதனை ஈமத்தாழி எனவும் முதுமூத்தார் தாழி எனவும் வழங்குப. தவஞ்செய்து உயர்ந்தோர்க்கும் இத்தாழி கவிக்கப் படுதலின் இதனைத் தவத்தாழி என மலைநாட்டார் வழங்குவர். “தாழி கவிப்பத் தவஞ் செய்வோர்1” என்பது காண்க. தவமேற்கொண்டோர் ஓரிடத்தேயிருந்து தமது உடலை ஒரு தாழியால் மூடிக்கொண்டு அத்தவத்தைச் செய்வது பண்டை நாள் வழக்காம். இவ்வாற்றால் உயர்ந்தோர்க்கும் மூத்தோர்க்கும் இத்தாழி கவித்தல் முறை என்பது பெறப்படும். தா- வலி, உடன்போக்கு நிலையில் மகள் தனக்குச் சிறந்த காதலனுடன் அவனூர்க்குத் தாயும் தமரும் அறியாமல் சென்றது பற்றி, அவளுடைய தாய், அவ்வாறு சேறல் “அறந்தலைப் பிரியா ஆறு” என்று அறிந்திருந்தா ளாயினும், தாய்மை யன்பின் சலியாத் தன்மையால் பிரிவாற்றாது அறிவு பேதுற்று வருந்துதலின், மனையகம் தாதும் எருவும் ததைந்து புழுதி நிறைய யாவரும் அவளைத் தேடி யலமந்தாராக, எருமையின் இளங்கன்று அப் புழுதியிடை மடிந்து கிடப்பது கண்டு, அதுபோல் தன் மனைக் கண் இருத்தற்குரிய மகள் இல்லாமை உள்ளத்தை வருத்த, இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும் செழுந்தண் மனை என்றும், தான் பிறந்து வளர்ந்த இடமும், விரும்புவன எல்லாம் பெற்று இனிது இருத்தற்கேற்ற செல்வமும் பொருந்திய மனையை விட்டுத் தன்மகள் நீங்கல் கூடாது என்ற கருத்தால் செழுந்தண் மனை யென்றும், தன்னை யீன்று, அறியாப் பருவத்தே தனக்கு இனிய உணவும் எழில் தரும் உடையும் பிறவும் நல்கிப் புறந்தந்த தாயரையும் தமரையும், அறியும் பருவத்தே நன்றி மறந்து நீங்கல் தகாது என்ற நினைவால் எம்மிவண் ஓழிய என்றும், பெற் றோர்க்கு அடுத்தபடியாக ஒருவர் உள்ளத்தை அன்பாற் பிணிப்பது பிறப்பிட மாதலின், செழுந்தண் மனையோடு என ஒடுக்கொடுத்து உயர்த்தும் கூறினாள். பெற்றோராய தம்மினும், மகள் கண்ணுக்கு இனிய காதலனாகிய காளை பெருமை யுடையன் எனக் கருதினாள் போலும் என்பாள், பெருங்காளை எனவும், அவன் தன் பொய்யுரைகளால் அவள் அறிவை மருட்டித் தன் பெருமை பிறங்கச் செய்தான் என்பாள், பொய் மருண்டு எனவும், தன் மனைக்கண் இருக்குங்கால் பாலுடை யடிசில் பொழுது மறுத்துண்ணும் அவளது உணவுநிலை பற்றிய நினைவு தன்மனத்தே தோன்றக் கண்டு, இப்பெற்றியோள் சேய்நாட்டிற் சிறியிலை நெல்லியின் திரள்காய் உண்டு சுனைநீர் குடித்துத் தீர்தல்வேண்டும் என்பது கேட்டும், வருத்தம் மிகுதலால் அதனைத் தன் வாயாற் சொல்லிக் கண்ணீர் வடித்து, அவள் கண்களை நினைந்து குவளை யுண்கண் என்மகள் எனவும் உரைத்தாள். நெல்லிமரம் செறிந்த காவை, போக்கரும் பொங்கூர் என்றது, தன் மகள் அதனுள் நுழைந்து செல்லற்கு அரிது என்றற்கு, மற்று. தலைமக்கள் அதனை யடைந்தது பிறர் தம்மை அறிந்து தொடராமைப் பொருட்டு. மக்கள் போதற் கருமையின் நெல்லியின்காய்கள் உதிர்ந்து ஊறின்றி மிக்கிருக்கும் என்பது பற்றி எனினுமமையும், ஒருவர்க்கொருவர் அளித்துண்பது பற்றி ஒருங்குடன் தின்றலின் என்றாள். ஆழ்சுனையாகலின், மாவும் மாக்களும் போந்து உண்டு கலக்கா என அறிக. சிறிது நீரே இருந்த தாயினும் நெல்லிக்காயை உண்ட வாய்க்கு அஃது இனிதாயிற்றென்பாள் குடியினள் கழிந்தாள் என்றாள். இவ்வாறு மகளது போக்கினை மனக்கண்ணிற் கண்டு வருந்தி யுரைக்கும் தாய், தன்னிலையை எண்ணுவாளாய் தான் அறியத் தலைமகன் தலைமகளைக் கொண்டுடன் செல்லும் செலவைத் துயர்வினையாளன் ஒருவனோடு உவமம் செய்து, ஒன்னார் செய் பாழ்படுப்ப வெய்துயிர்த் தயரும் துயர்வினை யாளனின் என்று கூறினாள். இதனால் தலைமகளைத் தேடிச் சென்றோர் அவளைக் காணாது மீண்டமை பெற்றாம். மகள் பிரிந்தவுடன் தன்னுயிரையும் கூற்றுக் கவர்ந்து போதல் வேண்டும்; அது செய்யாமையின் தான் அவள் பெயர்புறம் கண்டு வருந்த நேர்ந்தமையால் வெகுண்டு கூறுவாள், பெயர்புறம் காண்டற்கு எற் கொள்ளாக் கூற்று என்றும், இக் குற்றத்தால் அது வலி யிழந்து தாழி கவிக்கப்பெறாது இறத்தல் வேண்டும் என்பாள், மாயிருந்தாழி கவிப்பத் தாவின்று கழிக என்றும் கூறினாள். இதனாற் பயன் தாய் அயர்வு தீர்வாளாவது. 172.முக்கில் ஆசான் நல்வெள்ளையார் முக்கில் என்பது தொண்டை நாட்டுப் பழமையான ஊர் களில் ஒன்று; இப்போது தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் வட்டத்தில் பெருமுக்கல் என்ற பெயருடன் இருக் கிறது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே இவ்வூர் பெரு முக்கில் சிறுமுக்கில் என இரண்டு ஊர்களாகப் பிரிந்துள்ளது. கோவிராச கேசரிவன்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசாதிராச தேவர் காலத்தில் இப்பெருமுக்கில் கங்கை கொண்ட சோழ னல்லூர்1 என்ற பெயரையும், எதிரிலி சோழனல்லூர்2 என்ற பெயரையும் பெற்றிருந்தது; பின்னர், எதிரிலி சோழனல்லூர் சிறு முக்கில் என வழங்குவ தாயிற்று. முதற்குலோத்துங்க சோழன் முதலிய பெருவேந்தர் காலத்தே இந்த முக்கில் சிறந்த புகழ் பெற்று விளங்கியுள்ளது. இங்கேயுள்ள குன்றின்மேல் அழகிய குகைக் கோயிலும் இனிய சுனையும் உள்ளன. இக்குன்றின் அடியில் இருக்கும் இவ்வூர்க்கண் இருந்து தமிழ் கற்பிக்கும் ஆசிரியனாக இருந்து சிறந்தமை பற்றி நல்வெள்ளையார், முக்கில்3 ஆசான் நல்வெள்ளையார் என்ற பெயருடன் பிறங்கினார் இவர் பெயர் நல்வெள்ளியார் எனத் தேவர் ஏட்டில் காணப்படுகிறது. தமிழாசிரியர் என்று குறிப்பதனால் இவரை ஆசான் என்பதன் கருத்து விளங்கும். இங்ஙனம் இருக்க, திரு அ. நாராயணசாமி ஐயரவர்கள், “ஆசான் என்றதனால் அந்தணராவார்” என எடுத்துக் கூறுவது பொருத்தமாக இல்லை. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் காணப்படுகிறது. களவுநெறியில் தலைவியுள்ளத்துத் தோன்றிய காதல் மாண் புறுவது கருதித் தலைமகன் கடிதின் வரைந்து கொள்ளாது நீட்டித் தொழுகுகிறான். அதனால் தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது. ஒருநாள் தலைமகன், தலைவி மனையின் சிறைப்புறத்தே வந்து நின்றான்; அதனை அறிந்துணர்த்திய தோழிக்கு உரைப்பாள் போலத் தலைவி தன் வருத்தமிகுதி புலப்பட உள்ளுறையால் தலைவன் வரைபொருட்கு முயலும் திறத்தைக் குறிப்பாய் உணர்த்தி, அதனால் அவன் போந்து தன்னை அருளாமையால் வேட்கை பழுதாயிற்று என்றும், அதுவே ஏதுவாகப் பெரிதும் செயலற்று வருந்தும் தன் சிறுமை, மூதூரிடத்தே பலரும் அறியப் பட்டமையின் மிக்க நோயினைச் செய்தது என்றும், அதுவே பின்னர் அலராய் நோய் செய்தமையின் யான் ஆற்றேனாகின்றேன் என்றும் கூறினாள். தலைவியது இக்கூற்றின்கண், அவள் தலைமகன் வரைவு முயற்சியையறிந்து அமைந்தொழுகும் காதற்சிறப்பும், ஊரவர் கூறும் அலரெடுத்துக் காட்டி விரைய வரைந்து கொள்ளுமாறு ஊக்கும் நுட்பமும் கண்டு வியந்த ஆசான் நல்வெள்ளையார் அவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். கடலங் காக்கைச் செவ்வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடிகொய் தழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக் கிருஞ்சேற் றயிரை தேரிய தெண்கழிப் பூவுடைக் குட்டம் துழவுந் துறைவன் நல்கா மையின் நசைபழு தாகப் பெருங்கை யற்றவென் சிறுமை 1அலர்வாய் அம்பல் மூதூர் 2அறிந்தன்று நோயா கின்றது நோயினும் பெரிதே. இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலை மகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொற்றதூஉமாம். உரை : கடலங் காக்கைச் செவ்வாய்ச் சேவல்-கடற் காக்கை யினத்துச் சிவந்த வாயையுடைய சேவல்; படிவ மகளிர் கொடி கொய்து அழித்த - நோன்பு மேற்கொண்ட மகளிர் கொடியைப் பெறுதற்பொருட்டுக் கொய்து கழித்த; பொம்மல் அடும் பின் வெண்மணல் ஒருசிறை - தழைமிகுந்த அடும்பங்கொடி படர்ந்த வெண்மையான மணலில் ஓரிடத்தே; கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு - தலைச்சூலால் தங்கியிருந்த அழகிய பெடைக்காக்கையின் பொருட்டு; இருஞ்சேற்று அயிரை தேரிய - கரிய சேற்றிற் புதைந்திருக்கும் அயிரை மீனைத் தேடிப் பிடித்தற்கு; தெண்கழிப் பூவுடைக் குட்டம் துழவும் - தெளிந்த நீரையுடைய கழியின்கண் பூக்கள் மலர்ந்துள்ள ஆழமான குட்டத்துள் மூழ்கித் துழவும்; துறைவன் - துறைவனாகிய தலைவன்; நல்காமையின் நசை பழுதாக - அருளாமையால் எமது வேட்கை பயனின்றிக் கெடுதலின்; பெருங்கையற்ற என் சிறுமை - பெரிதும் செயலற்று வருந்தும் என் மெலிவை; அலர் வாய் அம்பல் மூதூர் அறிந்தன்று - ஆரவாரத்தோடு அலர் கூறும் இயல்பினராகிய இவ்வூரவர் அறிந்து கொண்டமை யின்; நோயாகின்று - எனக்கு வருத்தம் தருவதாயிற்று; அது நோயினும் பெரிது - அது யான் உற்ற வேட்கை நோயினும் மிக்கதாம் எ.று. துறைவன் நல்காமையின் நசை பழுதாக, கையற்ற என் சிறுமையை மூதூர் அறிந்தன்று; ஆகலின், நோயாகின்று; அது நோயினும் பெரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. கடலங் காக்கை, “கடலங்கானல் 1” என்றாற் போல, அம்முச்சாரியை பெற்றது; கடலிடத்து வாழும் அழகிய காக்கையினம் என்றுமாம். “சேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவணும், மாயிருந்தூவி மயிலலங் கடையே2” என்பதனால் காக்கையின் ஆண் சேவல் எனப்பட்டது. படிவம், நோன்பு; ஈண்டுக் கைம்மை நோன்பெனக் கொள்க. கைம்பெண்கள் பரல் பெய்து பாயின்று வதியும் படிவத்த ராதலின், பரல் இல்வழி அடும்பின் கொடியைப் பரப்பி அதன் மேற் கிடப்பரென அறிக. பொம்மல், பொங்குதல். பொம்மல் அடும்பு என்ற விடத்து அடும்பின் தழை மிக்க குப்பை மேற்று. கடுஞ்சூல், தலைச்சூல், சூல்கொண்டவழிப் பெடையின் மேனி அழகுமிக்கு விளங்குமாறு தோன்றக் காமர் பேடை என்றார். குவ்வுருபு, பொருட்டுப் பொருளது. அயிரை, அயிரைமீன். தேரிய, செய்யிய என்னும் வினையெச்சம். குட்டம், ஆழ்ந்த இடம். “பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்3” என்பது காண்க. கையறுதல, செயலறுதல். அலர்வாய் மூதூர், ஆர வாரத்தையுடைய மூதூர். சிறுமை நோயாதற்கு, அறிந்தமை ஏதுவாயிற்றென்க. நோய்,முன்னது வருத்தமும் பின்னது காம நோயும் சுட்டி நின்றன. இது சொற்பின் வருநிலை. அம்பல், பிறர் கேளாவாறு ஒருவரைப் பழித்து மொழியும் செவிச்சொல். அலர், பலர்கேட்கப் பிறர் பழியை வாய்விட் டுரைக்கும் சொல். அலர் வாய் அம்பல் என்றதற்கு அலர் பயக்கும் அம்பல் என்றலும் ஒன்று1. தலைமகன் கடிதின் வரைந்துகோடலைச் செய்யாது கள வொழுக்கத்தை நீட்டித்தலாலும். புறம்போகாவாறு தான் இற்செறிப்புண்டிருத்தலாலும், ஆற்றாமை மீதூர்ந்த தலைவி, அவன் சிறைப்புறத்தானாதல் கண்டு, அவன் செவிப்படுமாறு தோழியொடு சொல்லாடுவாளாய், உள்ளுறையால் ஏதுவைக் குறிப்பாய் உணர்த்தி வெளிப்படையில் துறைவன் நல்காமை யின் நசை பழுதாக என எடுத்து மொழிந்தாள். கடிமணத்தாற் பெறற்குரிய அழிவில் கூட்டத்தையே நச்சியிருந்த தனக்கு அது கருதாது அவன் நீட்டித்தது பெருந்துயரைச் செய்தமை தோன்ற நசை பழுதாக என்றும். அதனால் பெரிதும் கையறவு தோன்றி மேனி நலங்குன்றி மெலிவித்த தென்பாள் பெருங்கையற்ற என் சிறுமை என்றும், இல்லகத் தொடுங்கித் தனது மெலிவை ஊரவர் அறியாவாறு மறைத்தவழியும், பிறர்குறை கண்டு அம்பலும் அலரும் எடுத்துரைக்கும் இயல்பினராகிய அவர்கள் அறிந்து தூற்றுவாராயின ரென்பாள், அலர்வாய் அம்பல் மூதூர் அறிந்தன்று என்றும், அதனால், என்பால் தோன்றிய சிறுமை நோயாய் மாறிவிட்டதென்றற்கு நோயாகின்று என்றும், அந் நோய் தலைமகனது காதலுறவால் உண்டாகிய காம நோயினும் பெரிது என்பாள் அது நோயினும் பெரிது என்றும் கூறினாள். காமநோயைப் பற்றிக் கூறலுற்ற தலைமகனே, “பரந்தன்று இந்நோய் நோன்று கொளற் கரிதே2” என்பதும், தலைமகள் “பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல3” என்பதும் நோக்குமிடத்து, அக்காம நோயினும், பெரிதும் வருத்தும் இந்நோய் இறந்துபாடு பயத்தல் ஒருதலை யென்றா ளாயிற்று. காக்கைச் சேவல் பொம்மல் அடும்பின் வெண்மணற்கண் தங்கிய தனது கடுஞ்சூற் பேடைக்கு அயிரை மீன் கொணரும் பொருட்டுக் குட்டம் துழவும் துறைவனாயினும், பெருவேட்கை கொண்டு இல்லின்கண் செறிப்புண்டிருக்கும் தலைவிபொருட்டு வரைபொருள் முயலாது தலைமகன் மடிந்தொழுகுகின்றான் என உள்ளுறை கொள்க. இது துனியுறுகிளவி. காக்கைப் பெடை, மகளிர் கொய்தழித்த அடும்பின் பொம்மல் கிடந்த மணலில் தங்கிற்றென்றது, தந்தை தன்னையர் வேட்டம் புரிந்து கொணர்ந்து குவித்த செல்வமிக்க மனைக்கண் தலைமகளாகிய தான் இருப் பதும், கடுஞ்சூல் வயாவுக்கு அடும்பு பயன்படாதவாறு போல, இம்மனைச் செல்வம் தனக்குப் பயன்படாமை காட்டிக் கடி மணத்தால், தான் செய்யக் கருதும் கற்புவாழ்வின்மேல் தனக் கிருக்கும் வேட்கையைத் தலைமகள் வற்புறுத்துமாறு அறிக. இதனால் தலைமகன் தெருண்டு வரைவானாவது பயன். 273. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார் களவொழுக்கம் பூண்ட தலைமகன் விரைவில் வரைந்து கொள்ளாது நீட்டித்தான்; ஆயினும், காலம் வாய்த்த போதெல்லாம் தலைவி மனையின் ஒரு சிறைக்கண் போந்து அவளைத் தலைப்பெய்து இன்புறுவன். இவ்வகையில் ஒருநாள் அவன் வந்து சிறைப்புறத்தே நின்றானாக, அவ்வரவுணர்ந்த தோழி அவன் கேட்குமாறு வெறியறி வுறுத்து வரைவுகடாவும் கருத்துடன் உரைக்கலுற்று, “தோழி, நின் மேனியின்கண் தோன்றிய வேறு பாடு கண்ட நம் அன்னை, வேலனை வருவித்து அதற்குரிய காரணத்தை ஆராய்ந்தாள்; அவட்கு அவன், இம்மெலிவு முருகனால் ஆயிற்று எனவும், அது வெறியெடுத்தால் தீரும் எனவும் கூறினா னென்பர். அவன் கூறியாங்கு நின் மெலிவு நீங்குமாயின், நமக்கும் தலைமகற்கும் உளதாகிய காதற்றொடர்பு காரணமாகாதொழியும். அதனால், தலைமகனை நினைக்கும் போது அவனுடைய குணஞ் செயல்கள், அத்தொடர்பை வலியுறுத்தும் மதுகை யிழந்து கெடுவது, என் நெஞ்சிடைத் தோன்றி மிக்க வருத்தத்தைத் தருகின்றது; இஃது என்னாய் முடியுமோ? அறியேன்காண்” என்று இயம்புகின்றாள். அவளுடைய இக்கூற்றின்கண், தலைமகன் வரைவு நீட்டித்த லால் தலைவிபால் உளதாய மெலிவுக்கு வெறியாட்டால் வேறு காரணம் காணப் பெறுவதும், அதனால் அவனது தொடர்பு பொய்படுவதும் கூறி, வரைவினை விரைந்து செய்யுமாறு முடுகும் அறிவுநலம் கண்ட சேந்தங் கூத்தனார்க்கு வியப்புப் பெரி தாகவே, அதனை இப்பாட்டால் வெளிப்படுத்துகின்றார். இஃதெவன் கொல்லோ தோழி மெய்பரந் தெவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம் வெம்மையின் தான்வருத் துறீஇ நம்வயின் அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென வேலன் உரைக்கும் என்ப ஆகலின்1 வண்ண மிகுத்த அண்ணல் யானை நீர்கொள் நெடுஞ்சுனை 2நீடிதழ் தலைஇய கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும் குன்ற நாடனை உள்ளுதொறும் நெஞ்சுநடுக் குறூஉம்அவன் பண்புதரு படரே. இது, தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட் குரைப் பாளாய், நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறியயரும் என்பதுபடச் சொல்லியது. உரை : இஃது எவன் கொல்லோ - இஃது என்னாகுமோ? அறியேன், காண்; தோழி -; மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் - மேனிமுழுவதும் பரவித் துன்பம் உறுவித்த நம் வருத்தம் கண்டு; வெம்மையின் தான் வருத்துறீஇ - நம்பால் உள்ள அன்பால் தானும் வருத்தம் மிகுந்து; நம்வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு - அதற்குரிய காரணத்தை நம்பால் ஆராய்ந் தறியாது கழங்கு வைத்து நோக்கிய அன்னைக்கு; வெறியென வேலன் உரைக்கும் என்ப - முருகு அணங்கிற் றெனக் காரணம் கூறி வெறியயர்தல் வேண்டுமென வேலன் உரைக்கின்றானெனக் கூறுகின்றனர்; ஆகலின் - ஆகவே; வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நிறம் மிக்க பெரிய யானை; நீர் கொள் நெடுஞ்சுனை - நீர் அருந்தும் நெடிய சுனையின்கண்; நீடிதழ் தலைஇய - நீடிய இதழ் பொருந்திய; கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும் - கண்போலப் பூக்கும் நீலமலர் தண்ணிய மணம் கமழும்; குன்ற நாடனை உள்ளு தொறும் - குன்றுகளையுடைய நாடனாகிய தலைமகனை நினைக்குந்தோறும்; நெஞ்சு நடுக்குறூஉம் - நெஞ்சம் நடுங்கு மாறு செய்கின்றது; அவன் பண்புதரு படர் - அவனுடைய நற்பண்பால் உளதாகிய தொடர்பு பற்றிய எண்ணம் எ.று. தோழி, நம்வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு வேலன் வெறியென உரைக்கும் என்ப; நாடனை யுள்ளுதொறும், அவன் பண்புதரு படர் நெஞ்சு நடுக்குறூஉம்; இஃது எவன்கொல்லோ, அறியேன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. மேனிவேறு பட்டமை பற்றி மெய் பரந்து என்றார். எவ்வம், துன்பம். ஏமுறு துயரம்,அறிவு மயங்குதற் கேதுவாகிய மிக்க துயரம்; “ஏமுறு துயரமொடு யாம்இவண் ஒழிய1” எனப் பிறரும் கூறுதல் காண்க. வெம்மை, விருப்பம். வருத்தம், வருத்தெனக் கடை குறைந்தது. அயர்ந்த என்றதனால் கழங்கு கொண்டு ஆராய்ந்தமை பெற்றாம். வண்ணம், ஈண்டுக் கருமை நிறத்தின் மேற்று, சுனையிடத்து நீலம் கண்போல் மலர்ந்திருத்தலைக் “கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்2” என்பதனாலு மறிக. பண்பு, காதல் செய்தொழுகும் நற்பண்பு. படர், நினைவு; “படரே உள்ளல்3” என்று ஆசிரியர் உரைப்பது காண்க. விரைந்து வரைந்துகோடலைச் செய்யாது நீட்டித் தொழுகும் தலைமகன் போந்து, சிறைப்புறத்தே நின்றமை யுணர்ந்து, அவன் செவிப்பட தலைமகளோடு உரையாட லுற்ற தோழி, கேட்கும் இருவர் உள்ளத்தும் ஆராய்ச்சி தோற்றுவிக்கும் குறிப்பினால், இஃது எவன் கொல்லோ தோழி என்றாள். இஃது என்ற சுட்டு முற்படப் பொருளை விளக்காமையின், இருவர் கருத்தும், அவள் மேலே கூறுவனவற்றை எதிர் நோக்கின. பல்வேறு வகையால் வரைவு கடாவியும் தலைமகன் களவே நீட்டித்தமையின், நின் மேனி முழுவதும் வேறுபட்டு மெலிதற் கேதுவாகிய துயரம் அன்னை யறியப் புலப்பட்டுவிட்ட தென்பாள் மெய்பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் என்றும், அது கண்ட அன்னை காரணம் அறியமாட்டாளாய் நம்பால் உள்ள அன்புமிகுதியால் தானும் மிக வருந்துவாளாயினள் என்பாள். வெம்மையின் தான் வருந்துறீஇ என்றும், மனம் சிறிது தெளிந்த மாத்திரையே நின் வேறுபாட்டுக்கான காரணத்தை நம்மைக் கேட்டறியாது கழங்கு முதலியன வைத்துக் காணப்புக்கு உண்மையறியாது அயர் வாளாயினள் என்பாள், நம்வயின் அறியாது அயர்ந்த அன்னை என்றும், பின்னர் அவள் வேலனை வருவித்து ஆராய வும், அவன் இவ்வேறுபாடு முருகனால் ஆயது எனச் சொல்லி வெறியயர்ந்தால் தீருமென்றான் என்பாள், அன்னைக்கு வேலன் வெறியென வுரைக்கும் என்ப என்றும், இதனை அறிந்தோர் பலரும் உரைக்கின்றன ரென்பாள் என்ப என்றும் கூறினாள். வேலன் முதற்கண் கழங்குவைத்து ஆராய்ந்த பின்பே வெறியென வுரைப்பது மரபு; “பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத்து அன்னைக்கு, முருகுஎன மொழியும் வேலன்1” எனச் சான்றோர் உரைப்பது காண்க. இனி, வேலன் வெறியயர்தலால் இம் மெலிவும் அதற்கேதுவாகிய ஏமுறு துயரமும் நீங்குமாயின், தலைமகன் செய்தொழுகும் காதற்றொடர்பு பொய்படுதல் ஒருதலையாகலின், அவனை நினைக்குந்தோறும் என் நெஞ்சம் நடுங்குகிற தென்பாள், குன்றநாடனை உள்ளுதொறும் நெஞ்சு நடுக்குறூஉம் என்றும், அவனுடைய காதலொழுக்கமும் பண்பும் என் உள்ளத்தில் நின்று வருந்துகின்றன என்பாள், அவள் பண்பு தரு படர் என்றும் உரைத்தாள். “முதுவாய் வேலன், கிளவியின் தணியின் நன்றுமன், நாடுகெழு வெற்பனொடு அமைந்தநம் தொடர்பே2” எனப் பிறரும் கூறுதல் காண்க. தலைவி யுள்ளத்தில் தலைமகனையன்றி வேறு எத்தகைய தெய்வமும் பற்றப்படாமை யின் வேலன் முருகென மொழியுமாயின், அவள் பொறாது வருந்துவள் என அறிக. “நோய்க்கு மருந்தாகா, வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப், பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல், நோதக்கன்றே தோழி3” என்பது காண்க. சிறைப்புறத்து நின்ற தலைமகற்கு, உள்ளுறையால், வரைந்தவழிப் பிறக்கும் நலம் கூறுதலின், ஈண்டு வெளிப்படையால் வெறியெடுத்தவழித் தலை மகற்கும் தலைமகட்கும் உளவாகும் ஏதத்தை இவ்வாறு எடுத்து மொழிந்தாள். யானை நீர்கொள்ளும் சுனையிடத்து நீலம் தண்கமழ் சிறக்கும் என்றது, தலைமகன் தலைமகளை வரைந்து கோடற் கமைந்த எம் குடியிலுள்ளார் மகிழ்சிறப்பர் என உள்ளுறுத் துரைத்தவாறு. “தலைமகனோ வரைவு நீட்டிக்கின்றான்; அன்னையோ வெறியெடுக்க முயல்கின்றாள்; வெறியயர்ந்த வழித் தலைமகட்கு நோதகவும், தலைமகற்குப் பண்பின்மையும் தோன்றி ஏதம் செய்யும்; இந்நிலையில் நமது ஒழுக்கம் என்னாய் முடியுமோ?” என அறிவயர்கின்றேன் என்பாளாய்த் தோழி இஃதுஎவன் கொல்லோ தோழி என்றாள் என்று கொள்க, தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 274. காவன் முல்லைப் பூதனார் பூதனார் என்பது இச்சான்றோரது இயற்பெயர். இவரது வரலாறு கூறவந்த திரு. நாராயணசாமி ஐயரவர்கள், “காவன் முல்லை புறத்திணைக்கட்பட்ட ஒருதுறை; புறப்பொருள் வெண்பா மாலை வாகைப் படலத்துட் கண்டுகொள்க; அத்துறையைப் பாடினமையின் காவல் முல்லைப் பூதனார் எனப்பட்டார்” என்று உரைத்துள்ளார். புறத்திணை வாகைப் படலத் துறை வகைகளுள் ஒன்றான இது வேந்தன் தன் நாடு காத்தலைக் கடன் எனக் காத்ததைக் கூறுவதெனப் புறப்பொருள் வெண்பாலையுடைய ஐயனாரிதனார் கூறுகின்றார். அவரும் அவருக்குப் புறத்திணைத் துறைவகைகளைக் காட்டிய பன்னிரு படல முடையாரும், தொல்காப்பியர்க்கும் சங்கச் சான் றோர்க்கும் காலத்தாற் பிற்பட்டவ ரென்பது அறிஞர் நன்கறிந்தது, அதனால் சங்கச் சான்றோரான இப்பூதனார் காவல் முல்லைத் துறையைப் பாடி இச்சிறப்பைப் பெற்றார் என்பது வரலாற்று நெறிக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. முல்லை என்பது மக்கட் பெயரன்மையின் ஊர்ப்பெயராதல் வேண்டும். முல்லை யூர், முல்லைப்பாடி எனப் பெயர் தாங்கிய ஊர்கள் நம் தமிழகத் தில் பண்டுதொட்டே இருந்துள்ளன. சங்கச் சான்றோரான பெருந்தலையூர்ச் சாத்தனார் பெருந்தலைச் சாத்தனார் எனவும், பாலையூர்க் கோதமனார் பாலைக் கோதமனா ரெனவும் வழங்கி னாற் போல, முல்லையூர்ப் பூதனாராகிய இவர் முல்லைப் பூதனார் எனப்பட்டனராதல் வேண்டும். முல்லையூர் பாண்டி நாட்டு ஊர்களில் ஒன்று. இங்கே மாறவன்மன் சுந்தர பாண்டியனுக்கும் சோழன் இராசாதிராசனுக்கும் போர் நடந்ததாகச் சோழ வேந்தனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது. இனி, காவன் என்பது இவருடைய தந்தை பெயராகவோ குடிமுதல்வன் பெயராகவோ இருத்தல் வேண்டும். தந்தையார்க்கும் மகன் பெயர்க்கும் இடையில் ஊர்ப்பெயர் வருவது நமக்கு வியப்பை அளிக்கும்; ஆயினும், சங்கச் சான்றோரான மதுரைக் குமரனார் பெயர் எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனக்காணப்படுவது நாடறிந்ததொன்று, மாடலன் என்பது குமரனார் தந்தை பெய ராகும். மாடலன் குமரன் மதுரையில் வாழ்ந்தமையான் மாடலன் மதுரைக்குமரன் ஆனார். எறிச்சலூர் மாடலனுக்கு வாழிட மானாற் போலக் குமரனார்க்கு மதுரை புக்கிடமான குறிப்புப் பற்றி இவ்வாறு கூறப்பட்டாராயின், பூதனார்க்கு முல்லையூர் புக்கிடமானது பற்றிக் காவன் முல்லைப் பூதனார் என்பது பொருத்தமாகும். காவன் என்னும் பெயர் மாவன் மூவன் என்றாற் போலும் மக்கட்பெயர். இப்பெயர்கள் இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் மக்களிடையே வழங்கி வந்தன. சங்க காலத்தே திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு தென் பெண்ணையாற்றின் இருமருங்கும் பரவிச் சேலம் மாவட்டத்து ஆற்றூர்ப் பகுதி வரையில் நிலவியிருந்த நாடு மலாடு என வழங்கிற்று ஆற்றூர்ப் பகுதியில் உள்ள தடவூரில் இருக்கும் கோயில் கல்வெட்டு, அப்பகுதியின் பழம்பெயரையும் இடைக் காலத்துத் தோன்றிய புதுப்பெயரையும் கூட்டி, மலாடான சனநாத வளநாட்டு ஆற்றூர்க் கூற்றத்து மேல் கங்கபாடி, நாட்டுத் தடவூர்1 என்று கூறுகிறது. இதனால் சங்ககாலப் பெயர் வழக்கு இக்கல்வெட்டுக் காலத்தும் மறையாமை விளங்கும். ஊரும் நாடும் போலவே மக்கட் பெயரும் அந்நாளில் சங்ககால வழக்கை முற்றவும் கைவிட்டுவிடவில்லை என்பது தோன்றும். அத்தடவூர்க் கோயிலுக்கு நிருமாலியத் தொட்டி யொன்றை நிறுவினான் ஒருவணிகன்; அவன் யெயர், வணிகன் காவன் கூத்தாண்டான்2 என்பது. இவ்வாறே செங்கற்பட்டு மாவட் டத்தில் காவன் என்ற செல்வன் ஒருவன் தண்டலம் என்னும் ஊர்க்கு உரியனானது பற்றி அவ்வூர் காவன் தண்டல மென்ற பெயர் பெற்றது. அவ்வூர்ச் சோழீச்சுரத்தில் முதற் குலோத்துங்கன் விக்கிரமசோழன் முதலியோருடைய கல்வெட்டுக்கள் உண்டு. இது போலவே அப்பகுதியில் காவனூர் எனப் பெயரிய ஊரும் உண்டு. இவற்றால் காவன் என்பது மக்கட் பெயர்களுள் ஒன்று என்பது தெளிவாகிறது. ஆகவே, நாம் எடுத்துக்கொண்ட பூதனார் காவன் என்பானுக்கு மகனாரும் முல்லையூர்க்கு உரியவருமாவர் எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. இவருடைய பாட்டுக்கள் மிக்க பொருள் நலம் வாய்ந்தவை. பரல்மண் நிறைந்த வலிய முரம்பு நிலத்தில் கோவலர் நீர்விரும்பி அகழ்ந்த குழியில் நீர் ஊறாமை கண்டு கைவிட்டுச் செல்ல, பின்பு அவ் விடத்தே போந்த யானை, “வெண்கோடு நயந்த அன்பில் கானவர், இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து” அதனைத் தூர்க்கும் என்றும், நெல்லியின் இனிய திரண்ட காய்களைப் பொறுக்கி வட்டுக்கழங்கெனக் கொண்டு செம் முகமந்தி விளையாடும் என்றும், வேனில் வெம்மையால் தீய்ந்து இலை உதிர்ந்து நிற்கும் மராமரத்தில் தோன்றியதோர் இணரைக் கண்ட தும்பி அதனை ஊதிப் பெற்ற சிறுதேனையுண்டு ஆராது செல்லும் என்றும் கூறுவர். இவர் எடுத்துக்காட்டும் உவமை களுள், புதர்மேற் படர்ந்த சிலந்திக் கூடு வெயிலில் விளங்குவது, துகில் நெய்வோர் நூலாராய்தற்குப் பா விரித்தாற் போன்று தோன்றுமென்பார், “சிலம்பி சூழ்ந்த புலங்கெடு வைப்பின், துகிலாய் செய்கைப் பாவிரிந் தன்ன, வெயிலவிர்பு நுடங்கும்” என்பதும், பனிக்காலத்து நீர்த்துளி பரந்த தாளியிலையைக் காலையில் ஆனினம் மேயுங்கால் பனித்துளி யுதிர்வது முத்து மாலைநூல் அறுபட்டு விழுவது போலும் என்பதும், பொரு ளுடையார்க் குள்ள நலங்கள் நல்கூர்ந்தார்க் குளவாகா எனச் சொல்லித் தாம் நயந்த “இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதலாற்றார் நல்கூர்ந்தோர்” என்பதும் மிக்க இன்பம் தருவன. இவர் பாடினவென ஏனைத் தொகை நூல்களிலும் பாட்டுக்கள் உள்ளன. காதலுறவு சிறந்து கடிமணம் புரிந்துகொண்டு கற்புப் பொற்பமைந்த மனையறம் செய்தொழுகும் தலைமக்கள் வாழ் வில் தலைமகன் பொருள்வயிற் பிரிந்து சென்றான். பிரியா விடை நல்கிய தலைமகள், அவன் செல்லும் நெறியின் வெயில் வெம்மை யும் கொடுமையும், கருதிய பொருள் விரைவிற் கைகூடாது காலம் தாழ்க்குமெனும் அச்சமும் கொண்டு வருந்துவாளாயினாள். அவளது வருத்த மிகுதி தெரியின் தலைவன் தான் மேற்கொண்ட வினையைக் கடைபோக முடியாமல் அவல முறுவன் என உணர்ந்த தோழி, “கானம் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந் துள்ளது; அங்குள்ள குமிழமரம் மான்பிணை போந்து தன் உடலை அதன் மேல் சிறிது திமிருமாயினும் பழங்களை மிகுதியாக உதிர்க்கும்; நீயும் எம்மொடு வருதியோ?” என்று அவரே நமக்குக் கூறினரன்றோ; சுரம் நாம் கருதுமாறு கொடுமையும் அருமையு முடையதாயின் அவ்வாறு கூறார்காண்” என்று மொழிந்தாள். அவளுடைய கூற்றின்கண், தலைவி கருதியதற்கு மாறு கூறுமாற்றால் அவர் வேண்டும் பொருள் வேண்டியவாறே பெற்றுக் குறித்த பருவத்தே நீட்டியாது வருவர் என்ற கருத்தைத் தோழி கூறுவது அறிவுக்கு இன்பம் தந்ததனால், அதனைப் பூதனார் இப்பாட்டின்கண் தொடுத்து அழகொழுகப் பாடு கின்றார். நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத் துழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் எம்மொடு வருதியோ பொம்மல் ஓதியெனக் கூறின்றும் உடைய1 ரன்றே மாறுகொண் டிரும்புலி வழங்கும் சோலைப் பெருங்கல் வைப்பின் சுரன்இறந் தேரரே. இது, தோழி பருவம் மாறுபட்டது. உரை : நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇ - நெடிய முகில்கள் மின்னிட்டுக் குறுகிய மழைத் துளியாய்த் தொடங்கி; படுமழை பொழிந்த பகுவாய் குன்றத்து - முழங்கும் பெருமழை பொழிந்த அகன்ற பிளவுகளையுடைய குன்றின்கண் வாழும்; உழைமான் அம்பிணை தீண்டலின் - உழையாகிய மான்பிணை யின் உடல் உராய்தலால்; இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் - இழையணிந்த பெண்ணொருத்தியின் பொற்காசு போலும் நிறமுடைய ஒள்ளிய பழங்கள் உதிரும்; குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்- குமிழமரங்களும் பிறவும் கலந்து நிற்கும் குறுகிய பலவாகிய கடந்து; எம்மொடு வருதியோ - எம்முடன் வருவாயோ; பொம்மல் வழிகளைக் கடந்து; எம்மொடு வருநியோ - எம்முடன் வருவாயோ; பொம்மல் ஓதி - அடர்ந்த கூந்தலையுடையாய்; எனக் கூறின் றும் உடைய ரன்றே - எனக் கூறியதும் உண்டன்றே; மாறு கொண்டு இரும்புலி வழங்கும் சோலை - தம்முள் மாறு கொண்டு பெரிய புலிகள் உலாவும் சோலைகளையுடைய; பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோர் - பெரிய மலை நாட்டை ச் சார்ந்த நிலமாகிய சுரத்தைக் கடந்து சென்ற காதலர்; அவ்வாறு இருப்ப நீ அங்கு வேனில் நின்று வெதுப்பி வருத்துமென வேறுபடுதல் வேண்டா எ.று. சுரன் இறந்தோர், பொம்மலோதி, குன்றத்து மான்பிணை தீண்டலின், ஒண்பழம் தாஅம் குறும்பல் அத்தம் எம்மொடு வருதியோ எனக் கூறின்று முடையரன்றே; அவ்வாறு இருப்ப, நீ அங்கு வேனில் நின்று வெம்மை செய்து வருத்துமென வேறு படுதல் வேண்டா எனச் சில சொல்பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. வான், மழைமுகில். தலைஇ, தொடங்கி. படுமழை; படுதல், முழங்குதல். குன்றங்களின் முகட்டிலும் இடையிலும் உளவாகும் பிளவுகளும் விடர்களும் மலை வாய்திறந்தது போற லின் பகுவாய்க்குன்றம் என்றார். உழைமான், உழையாகிய மானினம். பிணை, பெண்மான். தீண்டல், ஈண்டுத் தினவுபோக்க உராய்தல் மேற்று. பொற்காசினை உவமம் கூறுதலின், இழை மகளை எடுத்து மொழிந்தார். குமிழ், குமிழ மரம். தலைமயங்கல், ஓரிடத்தே விரவியிருத்தல். பொம்மல், பெருத்தல்; பொங்குதல் வீங்குதல் முதலிய மிகுதிப் பொருட்டாய உரிச்சொல். ஓதி, கூந்தல். “பொம்மலோதி நீவிய காதல்1” என்று பிறரும் கூறுதல் காண்க. பொருட் பிரிவில் கலத்திற் பிரியும் பிரிவின்கண் “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை2” என விலக்கினமையின், ஏனைக் காலிற் பிரியும் உண்ணாட்டுப் பிரிவின்கண் இடமும் காலமும் வாய்த்தவிடத்து மகளிரொடு சேறல் அமையுமென்பது கொண்டு எம்மொடு வருதியோ என்றார் போலும். கூறிற் றெனற்பாலது கூறின்றென மெலிந்தது. மலையிடத்து அடர்ந்த காடுகள் சோலை எனவும் கானல் எனவும் வழங்கும். கோடைக்கானல், பொருநன் கானல் என இன்றும் உள்ளன காண்க. பெருங்கல் வைப்பு என்றமையின் மலையைச் சார்ந்த பாலைப் பகுதி கொள்ளப்பட்டது. பொருள்வயிற் பிரிந்த தலைமகன் சென்ற சுரத்தின் கொடுமை, மாறுகொண்டு இரும்புலி வழங்கும் சோலைப் பெருங்கல் வைப்பிற் சுரம் என்றதனால் சுரத்தின் இயல்பு அறிந்து வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தற்குத் தோழி, சுரத்திடை நிலவுவது வேனிலன்று என மறுப்பாள், நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகு வாய்க் குன்றம் என்றாள். மின்னும் இடியும் ஒருங்கு தோன்று வனவாக மின்னலை மாத்திரம் கூறியது, இடிகூறின் தலைமகள் அஞ்சுவ ளென்பது பற்றி. கோடை மழை பருத்த துளிகளைச் சொரிந்து தொடங்கு மாகலின், அதனை விலக்கற்குக் குறுந்துளி தலைஇஅப் படுமழை பொழிந்த குன்றம் என்றும், இடை யிடைப் பிளவும் விடரும் இல்வழி அவண் நிலவும் காற்று வெவ்விதா மாகலின், பகுவாய்க் குன்றம் என்றும் கூறினாள். இவ்வாற்றால், வேனில் வெதுப்பு மெனக் கருதிய தலைமகட்குத் தோழி பருவம் மாறுபட் டுரைத்தவாறு. சென்றோர் முகந்து கொள்ளுமாறு பொருள் கிடவா தென்பது பற்றி வேறுபட்ட தலைமகட்கு, அற்றன்று; சிறு முயற்சியால் பெரும் பொருள் பெறுவர் தலைவர் என்பாள், உழைமான் அம்பிணை தீண்ட லின் ஒண்பழம் தாஅம், குமிழ் தலைமயங்கிய குறும்பல் அத்தம் என்றாள். “சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது1” என்று சான்றோர் உரைப்பது காண்க. செலவினும், பொருள் செயல் வகையினும் அருமை இன்மையானன்றே காதலர், எம்மொடு வருக என்றார் என்பாள், எம்மொடு வருதியோ பொம்ம லோதியெனக், கூறின்று முடைய ரன்றே என்று தோழி கூறினாள். இதனாற்பயன் தலைமகள் ஆற்றியிருப்பாளாவது. 275. அம்மூவனார் களவொழுக்கம் மேற்கொண்ட தலைமகன் வரைவு மேற் கொள்ளாது அக்களவையே நீட்டித்தான். தோழியும் தலை மகளும் அவனைப் பன்முறையும் குறிப்பாலும் வெளிப்படை யாலும் வரைவு கடாவினர். வரைவுக்குரிய செவ்வி எய்தா மையின், அவன் காலம் தாழ்த்தனன். அவன் கருத்தறியாது தலைமகள் பெரிதும் வேறுபடலானாள். ஒருநாள், தலைவன், தலைவி மனையின் ஒரு சிறைக்கண் வந்து நின்றான். அவன் வரவுணர்ந்த தோழி தலைமகட்கு அவனுடைய காதலை மிகுத்துக் கூறுவாளாய் அவனுடைய அறப் பண்புகளை எடுத் தோதி வற்புறுத்தி,அத்தகைய அறவோனைப் புலந்து வேறுபட்டு வருந்துதல் கூடாது என்றாள். அதனால் தலைவி மனவமைதி பெறாளாயினும், “தோழி, அவன் அறப் பண்பின்றி என்னை மறந்தொழுகு வானாயினும் யான் அவனை நினைந்து வருந்துவே னல்லேன்; ஒருகால் அவனே நேரிற் போந்து என்னைப் புகழ்ந்தா னாயினும், யான் அதனாலும் புலவியுற்று வருந்துதலைச் செய்ய மாட்டேன் காண்” என்றாள். தலைவியது இக்கூற்றின்கண், வரைவிடை வைத்த காலத்து வருந்திக் கூறும் தலைவி, “தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும்” பட இனிதுரைக்கும் நயம் கண்ட ஆசிரியர் அம்மூவனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். செந்நெல் அரிநர் கூர்வாட் புண்ணுறக் 1காணா முதலொடு போந்தெனப் 2பூவோ 3டடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் 4தன்னுறு விழுமம் அறியா மென்மெலத் தெறுகதிர் இன்றுயிற் பசுவாய் திறக்கும் பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பற் 5கியான்நினைந் திரங்கினே னல்லேன் நோயிகந் தறனி லாளன் 6புகழப் பெறினும் வல்லேன்மன் 7தோழியஃ தியானே. இது, சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப வன்புறை எதிரழிந்தது. உரை : செந்நெல் அரிநர் கூர்வாள் புண்ணுற - செந்நெல்லை அரியும் உழவருடைய கூரிய அரிவாளால் அறுப்புண்டு; காணா முதலொடு போந்தென - அவர் கண்ணிற் படாமல் நெற் சூட்டுடனே போந்தமையின்; பூவோடு அடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை - பூவும் இலையுமாகிய வற்றோடு நெற்கதிரொடு கலந்த சூடாகிய அடுக்கின்கண் (கட்டுப் போர்வின்கண்); தன்னுறு விழுமம் அறியா - தனக் குற்ற துன்பத்தை அறியாமல்; இன்றுயில் தெறுகதிர் பசுவாய் மென்மெலத் திறக்கும் - இனிய துயில்கொண்டு வெதுப்புகின்ற ஞாயிற்றொளியால் பசிய இதழ்களைப் பைய விரித்து மலரும்; பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பற்கு - பேதைமையுடைய நெய்தல் நிறைந்த பெரிய கடல் நிலத் தலைமகன்பொருட்டு; யான்நினைந்து இரங்கினென் அல்லேன் - யான் அவனது அருளாமையை நினைந்து வருந்தினேனில்லை; அறனிலாளன் புகழப் பெறினும் -அறப்பண்பில்லானாகிய தலைமகன் ஒரு காற் போந்து என்னைப் புகழப்பெற்றேனாயினும்; தோழி - ; நோய் இகந்து - அவன் செய்த நோயை மறந்து; அஃது யான் வல்லேன்மன் - அதனால் மனநிறை யிழவாது ஆற்றியிருத் தலினும் வல்லேன் காண் எ.று. தோழி, சேர்ப்பற்கு யான் நினைந்து இரங்கினெ னல்லேன்; அறனிலாளன் புகழப் பெறினும். நோய் இகந்து, யான் அஃது வல்லேன்மன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வெண்ணெல் லென வேறுண்மையின் செந்நெல் என்றார்; “விண்டு வன்ன வெண்ணெற் போர்வின்1” எனவும் “முடங்குபுறச் செந்நெல்2” எனவும் வருதல் காண்க. இவற்றின் அரிசி முறையே வெண்மை யும் செம்மையுமாகிய நிறம் உடைமைபற்றி இவ்வாறு சிறப் பிக்கப்பட்டன. கூர்வாள், கூரிய வாயையுடைய அரிவாள். காணப்பட்டவழி அதனை நெற்சூட்டினின்று களைந்தெறி பவாக லின், காணா முதலொடு போந்தென என்றார். செய்தென வென்னும் வினையெச்சம், மழை பெய்தெனக் குளம் நிறைந்த தென்றாற் போலக் காரணப் பொருளில் வந்தது. நெற்சூடு அடுக்கிய அடுக்கின் இடையே கிடந்தமை பற்றி, பூவோடு அடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை என்றும்; இரவெல்லாம் குவிந்து கிடந்து வைகறையில் எழுஞாயிற்றின் வெயில் தோன்ற இதழ் விரிந்து மலர்வதாகலின் நெய்தலை மென்மெலத் தெறுகதிர் இன்றுயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தல் என்றும் கூறினார். “வைகறை மலரும் நெய்தல்”1 என்ப பிறரும். தான் வேர் அறுக்கப்பட்டு அடித்தண்டோடு நெற் சூட்டிடையே கொண்டுவரப் பட்டமை அறியாது இதழ் குவிந் திருந்து மலர்வதுபற்றி, தன்னுறு விழுமம் அறியாது எனவும், பசுவாய் திறக்கும் பேதை நெய்தல் எனவும் கூறப்பட்டது. பெருநீர், கடல். சேர்ப்பன், நெய்தனிலத்தையுடைய தலைவன். சேர்ப்பற்கு என்றவிடத்துக் குவ்வுருபு பொருட்டுப் பொருளது. அறனிலாளன், அறன் இன்மையை ஆள்பவன்; ஈண்டு இது சேர்ப்பனொடு இயைதலின், சுட்டு எனக் கொள்க. பெறினும் என்புழி உம்மை எதிர்மறை. வரைவு நீட்டித்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானா னது உணர்ந்து உரையாடும் தோழி, தலைவியது வேறுபாடும் வருத்தமும் அவன் அறியுமாறு எடுத்துரைத்து வருந்தற்க என வற்புறுத்தினாளாக, பொறாத தலைமகள் உள்ளுறையால் தன் மேனி நலம் சிதையாமையைக் குறிப்பால் உணர்த்தி, வெளிப் படையில், அவன் தன்னைத் தெருண்டு வரைந்து கொள்ளாமைக்குத் தான் வேறுபட்டு வருந்தவில்லை யென்பாள், சேர்ப்பற்கு யான் நினைந்து இரங்கினென் அல்லேன் என்றும், தலைவன் தன்னை வரைந்து கொண்டு தன்மனையின்கண் வைத்துத் தான் செய்தற் குரிய அறத்தைச் செய்தற்கண் விருப்பின்றி ஒழுகுமாறு தோன்ற அறனிலாளன் என்றும், அப்பெற்றியோன் போந்து என் நலத்தைப் புகழ்ந்த காலத்தும், அவன் செய்த நோயை மறந்து அவனைப் புலந்து வருந்துதல் செய்யாது அமைந்தொழுக வல்லேன் என்பாள், அறனிலாளன் புகழப் பெறினும் நோயி கந்து அஃது வல்லேன்மன் என்றும் கூறினாள். அரிநர் நெல்லை யறுப்ப, அறுப்புண்ட முதலொடு அவர் கண்ணிற்படாது நெற் சூட்டோடு போந்து, பூவும் இலையும் நெற்கதிரும் மயங்கிய கட்டுப்படுக்கையில் கிடத்தலின் தனக்குற்ற துன்பம் நினையாது துயின்று வெயில் தோன்ற நெய்தல் மலரும் என்றதனால், தாயர் தன்னையரால் இற்செறிக்கப்பட்டுக் காப்பு மிகுதியும் அலரு மாகியவற்றால் நெருக்குண்டு ஒடுங்கிக் கிடப்பினும் தலைமகன் வரவு காணின், என் மேனி, நலம் பெற்றுத் திகழுமாகலின் யான் நினைந்து இரங்குதல் இல்லேனாயினேன் என உள்ளுறுத் துரைத்த வாறு காண்க. இதனால் தலைவன் தெருண்டு வரைவு மேற் கொள்வன் என்பது பயன். 276. தொல் கபிலர் களவின்கண் தோழியிற்கூட்டம் பெற்ற தலைமகன் தலை மகளைக் குறியிடத்தே கண்டு இன்புற்று வருவானா யினன். நாளும் அவன் அவ்வாறு வருதல் கண்ட தோழி அது பிறர் அறியின் ஏதமாம் என எண்ணி இரவு வருமாறு குறித்தாள்; பின்னர் இரவினும் பகலினும் மாறிவரச் செய்தாள். அவள் கருத்தறியாது, தலைவனும் இருவகைப் பொழுதினும் செவ்வி நோக்கி வந்தொழுகினானாக, தோழி. அவனுடைய காதல் மாண்புறுவது கண்டு அவன் உள்ளத்தை வரைந்துகோடற்குரிய முயற்சிக்கண் உய்க்க நினைத்தாள். ஆயினும், அவனோ, தலைவி யுள்ளத்துக் காதல், தன்னையின்றி அமையாத அளவு பெரு குங்காறும் வரைவு கருதுவது இலனாயினான்; பெருமழையும் காரிருளும் கொடுவிலங்கும் கடுங்காவலும் பிறவுமாகிய இடை யூறு நிறைந்த நெறியிலும் காலத்திலும் போந்து தலைமகளைக் காணுமாற்றால், அவன் தன் காதல் மாண்பைப் புலப்படுத் தினான். அதனைக் கண்டுணர்ந்த தலைமகளும் தோழியும் அவனை வரைவுகடாவினர். அவன் ஒருவழித்தணந்தும் பொருள் வினைகளிற் பிரிந்தும் ஒழுகுமாற்றால் காதலை மாண்புறுத் தினான். இம்மாண்பு சிறந்த காலை, தலைவனைக் காணும் தோழி, அவனைத் தலைவி மனைக்கண் வருவித்து அவனுடைய தலைமையும் சிறப்பும் பெற்றோரும் பிறரும் அறியச் செய்தலை விழைந்து, விருந்தாய்ப் போந்து தம்மனையில் இரவில் தங்கிச் செல்லுமாறு வேண்டுவாளாயினள். வரைந்து கொண்டன்றித் தலைவி யுறையும் மனையின்கண் தங்குதற்குத் தலைவனது தலைமைப்பண்பு உடன்படாதாயிற்று. ஆயினும், முயற்சி வடிவினளாய தோழி, ஒருகால் அவன் மாலைப்போதில் பகற் குறியிடத்துத் தலைவியைக் கண்டு நீங்கும்போது, அவனை எதிர்ப்பட்டு “எம் நட்பை விரும்புகிற நீவிர் எம்மூர்க்கு வரு திரோ?” என்று வேண்டினள். “நீவிர் மான்வேட்கும் வயவர் மகளிரன்றோ? உம் மனைக்கண் தங்குதல் ஆமோ?” என நகை யாடி அவன் விடையிறுத்தான். அவற்கு, “பெரும, எம்மை வயவர்மகளிர் என்கின்றாய்; ஆராமிடத்து யாம் குறவர்மகளிர்; கொடிச்சியெனவும் கூறப்பெறுவோம். எம்மூர் ஈண்டுத் தோன்றும் கல்லகத்தது; இவ்விருள்மாலைப்போதில் செல்லாது இரவு எம்மூர்க்கண் தங்கி யாம் தரும் நறவுண்டு யாம் ஆடும் குரவையை யும் கண்டு செல்வீராக” என்று தோழி அன்புடன் மொழிந்தாள். அவளுடைய கூற்றின்கண், தலைவனைத் தம்மவனாக ஏற்றற்கண் தமக்கிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்தி விரைய வரைந்து மனையறம் புரிதற்குச் சூழுமாறு சொல்லும் குறிப்பு விளங்குதல் கண்ட ஆசிரியர் தொல்கபிலர் அதனை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். கோடு துவையாக் கோள்வாய் நாயொடு காடுதேர் நசைஇய வயமான்1 வேட்கும் வயவர் மகளிர் என்றி ஆயின் குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் சேணோன் இழைத்த நெடுங்காற் கழுதிற் கான2 மஞ்ஞை கட்சி சேக்கும் 3கல்லகத் ததுஎம் ஊரே செல்லாது 4சேந்தனை சென்மதி பெரும நீயே வாங்கமை பழுனிய நறவுண்டு வேங்கை முன்றிற் குரவையும் கண்டே. இது, பகற்குறி வந்து பெயரும் தலைமகனைத் தோழி உலகியல் சொல்லியது. உரை : கோடு துவையா - கொம்புகளை ஊதி; கோள்வாய் நாயொடு - கொள்ளுதல் வல்ல வேட்டைநாயுடனே சென்று; காடுதேர் நசைஇய வயமான் வேட்கும் - காட்டின்கண் இரை நாடித்திரியும் விருப்பத்தையுடைய வலிமிக்க விலங்குகளையே வேட்டம் புரிந்தொழுகும்; வயவர் மகளிர் என்றி - வேட்டுவர் மகளிர் என எம்மைக் கருதுகின்றாய்; ஆயின்- ஆராயுமிடத்து; குறவர் மகளிரேம் - யாம் குறிச்சிகளில் வாழும் குறவர் மகளிராவேம்; குன்றுகெழு கொடிச்சியேம் - குன்றுகளில் வாழும் குன்றவர் மகளிரான கொடிச்சியரெனவும் கூறப் படுவோம்; சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின் - சேணிடத்தேயிருந்து தினைக்காவலன் செய்து நிறுத்த நெடிய கால்களையுடைய பரணிடத்தே; கானமஞ்ஞை கட்சி சேக்கும் - காட்டில் வாழும் மயில் தனக்கு வேண்டும் ஒதுக்கிடமாகக் கருதித் தங்கியுறையும்; கல்லகத்தது எம்மூர் - மலைக்கண்ணது எமது ஊர்; பெரும -; செல்லாது - இப்பொழுதிற் செல்லு தலைத் தவிர்த்து; சேந்தனை சென்மதி - எம்மூர்க்கண் தங்கிச் செல்வாயாக; வாங்கமை பழுனிய நறவுண்டு - வளைந்த மூங்கிற் குழலிற் பெய்து நன்கு விளைவித்த தேனையுண்டு; வேங்கை முன்றில் குரவையும் கண்டு - வேங்கை மரம் நின்ற மன்றத்து முன்றிலில் யாம் ஆடும் குரவைக் கூத்தையும் கண்டு எ.று. பெரும, எம்மை, வயமான் வேட்கும் வயவர் மகளிர் என்றி; ஆயின், யாம் குறவர் மகளிரேம், கொடிச்சியே மாவோம்; கல்லகத்தது எம்மூர்; செல்லாது, சேந்தனை, நறவுண்டு குரவையும் கண்டு சென்மதி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கோடு, கொம்பு என்னும் இசைக் கருவி; “கோடுவாய் வைத்துக் கொடு மணி யியக்கி1” என்பது காண்க. துவைத்தல், ஒலித்தல். குறித்த விலங்கைப் பிழையாது வளைத்துப் பற்றுதல் பற்றி வேட்டை நாயைக் கோள்வாய் நாய் என்றார். காட்டில் வாழும் மான், ஆமா, கடமை, யானை முதலிய விலங்குகளை வேட்டுண்ணும் புலி முதலிய கொடுவிலங்குகளைக் காடுதேர் நசைஇய வயமான் என்றார். நசைஇய என்றதனால், உண்டு கழித்தமை யின் பழமைத் தாகிய ஊனை யுண்ண விரும்பாமை பெறப்படும். வயவர், வலிமிக்க கானவர். என்றி: முன்னிலை முற்றுவினைத் திரிசொல். குறிஞ்சி நிலத்தவருள், கானத்து வாழ்பவர் கானவர் எனவும், குறிச்சியில் வாழ்வோர் குறவர் எனவும், குன்றுகளிலும் கொடுமுடியிலும் வாழ்வோர் குன்றவர் கொடிச்சியர் எனவும் கூறப்படுவர்; அதனால் குறவர் மகளிரை உயர்த்துக் கூறுமிடத்துக் கொடிச்சியென்பதுமுண்டு. “கோணாய் கொண்ட கொள்ளைக் கானவர்1” என்பதனால் வயவர், ஈண்டுக் கானவர் மேற்றாயிற்று. தினைப்புனத்தே மிக்க நெடிய கால்களை நிறுத்தி அவற்றின்மேல் அமைத்த பரண் மிக உயரத்திற் காணப்படுதலின் தினைக் காவலன் சேணோன் எனப்பட்டான். “வயமான் துப்பின் ஏனலஞ் சிறுதினைச் சேணோன்2” என்ப. அவன் உறையும் பரண் கழுது போறலின் கழுது எனப்பட்டது. “கல்லுயர் கழுதிற் சேணோன்3” என்பது காண்க. கட்சி, காட்டுள் ஒதுக்கிடம். “கமழ்பூம் பொதும்பர்க் கட்சி4”எனவரும், இது மலையிடத்தும் அமைவது பற்றி, “மணிவரைக் கட்சி மடமயி லாலும்5” “வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி6” எனச் சான்றோர் குறிக்கின்றனர். இக் கட்சிகள் பெரும்பாலும் மயிலுக்கே சார்த்திக் கூறப்படுகின்றன. தேனை மூங்கிற் குழாய்களிற் பெய்து களிப்பு மிகுவித்தல் குறவர் இயல்பு; “நீடமை விளைந்த தேக்கட் டேறல்7” எனவுரைப்பது காண்க. குன்றவர் நறவுண்டு குரவை யயர்ப என்பதை, “குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள், வாங்கமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, வேங்கை நீழல் குரவை யயரும்8” எனச் சான்றோர் விரும்பிப் பாடிக்காட்டுவர். சேத்தல், தங்குதல்: மதி. முன்னிலையசை. பழுனிய என்பது பழுநிய எனவும் எழுதப்படும். வரைந்த பின்னன்றித் தங்குதல் செய்யாத தலைமகனை அது செய்யுமாறு வேண்டுமுகத்தால் வரைவு கடாவுகின்றா ளாகலின், தோழி, “நீவிர் வயவர் மகளிர்” என்ற தலைமகற்கு அவரும் தாழ்விலர் என்பாள், வயவரது சிறப்பைக் காடுதேர் நசைஇய வயமான் வேட்கும் வயவர் என்றும், மற்று யாம் வயவர் மகளிரே மல்லேம்; ஆராயுமிடத்து அக்கானத்தின் உயர்ந்த குன்றவர் மகளிர் என்பாள், ஆயின் குறவர் மகளிரேம் என்றும், அவருள்ளும் யாம் கொடிச்சி யென அன்பால் உயர்த்திக் கூறப்படுவோம் என்றற்குக் குன்றுகெழு கொடிச்சியேம் என்றும் கூறினாள். அது கேட்டு முறுவலித்த தலைமகற்கு மேலும் கூறலுற்று, எம்மூரும் சேய்த்தன்று; ஈண்டுத் தோன்றும் குன்றின் கண் உளது என்பாள், கல்லகத்தது எம்மூரே என்றும், இருண் மாலை யாயினமையின் நும் ஊர்க்குச் செல்வதை விடுத்தல் வேண்டு மென்பாள், செல்லாது என்றும், எம் ஊர்க்கண்ணே தங்குக என்றற்குச் சேந்தனை சென்மதி யென்றும், தங்குவை யாயின், உண்டற்கினிய உணவும் காண்டற் கினிய குரவைக் கூத்தும் பெறுகுவை என்பாள், வாங்கமை பழுனிய நறவுண்டு வேங்கை முன்றிற் குரவையும் கண்டு சென்மதி என்றும் கூறினாள். பிறாண்டும் தோழி, “பெரும, நீ எம்மூர்க்கு வரின், “எல்லின்று தோன்றல் செல்லா தீமென, எமர்குறை கூறத் தங்கி ஏமுற, இளையரும் புரவியும் இன்புற நீயும், இல்லுறை நல்விருந் தயர்தல் ஒல்லுதும்1”எனத் தொகுத்தும், “இன்று இவண் சேப்பின் எவனோ, பூக்கேழ் புலம்ப, பசுமீன் நொடுத்த வெண்ணெய் மாஅத், தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே, வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவம்2” என விரித்தும் கூறுவது காண்க. இதனால் தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 277.தும்பைச் சொகினனார் தும்பையூர்ச் சொகினனாராகிய இவர் பெயர் தும்பிசேர் கீரனார் என உருமாறிவிட்டது. தும்பையூர் தும்பியூராகிப் பின் தும்பியென நிற்ப, சொகினனார், சொகிரனாரென வழுப்பட்டுச் சேர்கீரனாரெனப் படிக்கப்பட்டு அச்சுப்படிகளில் தும்பிசேர் கீரனாரென வெளியிடப் பட்டுள்ளது. இதன் விரிந்த ஆராய்ச் சியைச் செந்தமிழ்ச் செல்வி3 யில் காண்க. சொகினன் என்பது கணியன் என்றாற்போல நிமித்தம் கூறுபவன் என்னும் பொருளது. ஈண்டு, இஃது இவர்க்கு இயற்பெயர் போல நிற்கிறது. திரு வேங்கடத் திருப்பதிக் கணிமையில் பொன்முக லியாற்றின் வடகரையில் இப்போது திருச்சானூர் என விளங்கும் ஊரின் பழம் பெயர் திருச்சொகினூர் (சொகினனூர்) எனக் கல்வெட்டுக் களில்4 காணப்படுவது, சொகினன் என்பது இயற்பெயரென்று துணிதற்குச் சான்று காட்டுகிறது. தும்பையூரும் அத்திருப்பதிக்கு அணிமையில் இருக்கும் ஊர் என்பதைத் தும்பையூர்க் கொண்டி யென்பவள் வரலாற்றால்5 காணலாம். இவருடைய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. களவின்கண் தலைமக்களிடையே உண்டாகிய காதலுறவு பல வழியாலும் வளர்ந்து வருகையில், வேற்றவர் தலைமகளின் தமரையடைந்து மகட்கொடை வேண்டினர், அவர்கள் மகட் கொடை நேர்தற்குச் சமைந்தாராக, அதனை யறிந்த தோழி தலைமகட்குணர்த்தித் தன் தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நின்றாள்; அவள் அதனை நற்றாய்க் குரைப்ப, அவள் தமர்க்கு உரைக்கவும் வேற்றுமணம் விலக்குண்டது; தலைமகற்கு மகட் கொடை புரிவது துணியப்பட்டது. அதனை யுணர்ந்ததும் தலைமகன் வரைபொருள் குறித்துப் பிரிந்து சென்றான். ஆயினும், அவன் மீண்டுவருவது தாழ்ப்பதாயிற்று. அதனால் தலைமகள் உள்ளத்து வேட்கை பெருகி மிக்க நோய் செய்யலுற்றது. “சொல்லா மரபின வற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து” உரைக்குமளவு தலைவி அறிவு பேதுற்றாள். ஒருநாள் அவள் ஒரு பூம்புதரருகே நிற்கையில், தேனுண்ணும் தும்பியொன்று தன் பெடையோடு போந்து ஆங்குப் படர்ந்திருந்த பீர்க்கின் பூவை யூதி அவள் கண்ணெதிரே. பறந்து, பின் ஒரு பூவில் தங்கித் தன் பெடையைக் கூடி யின்புற்றது. அதனைக் கண்டதும், அவள் அத்தும்பியை நோக்கி, “தும்பியே, நீ என் காதலர் சென்ற இடம் கண்டு அவர்க்கு என் காதற் பெருக்கை உரைத்து வருக” எனப் பைய மிழற்றினாள். உடனே அது பறந்தோடிவிட்டது. அதன் செலவு அவட்கு வருத்தத்தையும் வெறுப்பையும் உண்டு பண்ணவே, “என் காதலர் இருக்கும் இடம் அடைந்து, என் நிலையை அவர்க்குத் தூதுரைத்து வருக என்றேனாக, நீ அது செய்கின்றாய் இல்லை. நீ மிகவும் கொடியை. நின் உடல்தான் கரிது எனின், அறமில்லாத நினக்கு அறிவும் கரிதுபோலும்; பீர்க்கின் மலர்ந்த பூவை ஊதிய நீ, அதுபோல் என் நெற்றியிற் பூத்திருக்கும் பசலையை மணமின்மை தேர்ந்து ஊதா தொழிந் தனையோ? அன்றி, நின் பெடையுடன் கூடி அதன் நெஞ்சு நெகிழச் செய்ததன் விளைவாக அதன் பின்னே சுழன்று திரி கின்றனையோ? கூறுக”என்றாள். காதலர்க்கு, அக்காதற்பயன் துய்த்தற்கு இடையே நிற்கும் தடைகள் நீங்கியதும், காதல் பெருகிக் கைம்மிகுவதும், அக்காலை அவரது அறிவு ஒளி மழுங்கித் தக்க இன்ன தகாதன இன்ன என ஒக்க நோக்கும் ஒட்பமின்றி மாவும் புள்ளும் மரமும் வண்டுமென வேறுபாடு நோக்காது தம் காதல் நினைவுகளை யுரைப்பதும் இயல்பாய்த் தோன்றக் கண்ட கீரனார், தலைவி தும்பியொடு சொல்லாடும் கழிபடர் நிலையை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். கொடியை வாழி 1தும்பி இந்நோய் படுகதில் அம்ம 2யான்நினக் குரைத்தென் மெய்யே 3கரியை அன்றியும் செவ்வன் அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே 4மனைப்புறங் காக்கும் மாண்பெருங் கிடக்கை நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையிற் பசலை ஊதாய் சிறுகுறும் பறவைக் கோடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் 5வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க் கென்னிலை உரையாய் சென்றவண் வரவே. இது, பட்டபின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது. உரை : கொடியை - கொடியையாய் இராநின்றாய்; தும்பி - தும்பியே; வாழி -; இந்நோய் படுகதில் - யான் எய்தி வருந்தும் இந்நோயை நீயும் படுவாயாக; யான் நினக்கு உரைத்து என் - யான் நினக்கு உரைத்துப் பெற்ற பயன் யாது? மெய்யே கரியை - நினக்கு உடல்தான் கரியது; அன்றியும் -; செவ்வன் அறிவும் கரிதோ- இயல்பாகவே செவ்விதாக இருக்கும் அறிவும் நின்பால் இருண்டு கரிதாயிற்றோ; அறனிலோய் நினக்கு - அறவுணர் வில்லாத நினக்கு; மனைப்புறங் காக்கும் மாண் பெரும் கிடக்கை - மனையகத்தைப் புறத்தே சூழ்ந்து கிடக்கும் மாண்பும் பெருமையும் பொருந்திய இடத்திலுள்ள; நுண்முள் வேலி - நுண்ணிய முட்களாலாகிய வேலியிற் படர்ந்த; தாதொடு பொதுளிய - தேனும் தாதும் பொருந்தப் பூத்துத் தழைத்த; தாறுபடு பீரம் ஊதி - தாறுபோல் காய்களையுடைய பீர்க்கினது பூவை யூதி; வேறுபட நாற்றம் இன்மையின் பசலை யூதாய் - வேறுபாடு விளங்கத் தனித்த மணம் இல்லாமையால் என் நுதலிற் பூத்திருக்கும் பசலையை ஊதாதொழிந்தாய்; சிறுகுறும் பறவைக்கு விரைவுடன் ஓடி - சிறிய குறுகிய பறவையாகிய நின் பெடையின் பொருட்டு அதன்பின்னே விரைந்து சுழன்று; நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ - அதன் நெஞ்சு நெகிழுமாறு முயன்றதன் பயன்கொல்லோ; அன் பிலர் - நெஞ்சில் அன்பு இன்றி; வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு - வெவ்விய மலைப் பக்கத்தே அமைந்த கடத்தற்கரிய சுரநெறிகளைக் கடந்து சென்ற காதலர்க்கு; அவண் சென்று - அவர் இருக்கும் அவ்விடத்துக்குச் சென்று; வர - அவர் விரைந்து வருமாறு; என்நிலை உரையாய் - எனது மிக்க கையறு நிலையை உரையாயாயினை எ.று. தும்பி, வாழி; யான் நினக்கு உரைத்து என்; பீரம் ஊதி, நாற்ற மின்மையின் பசலை ஊதாய்; அன்பிலர் அருஞ்சுரம் சென் றோர்க்கு அவண் சென்று அவர் விரைந்து வர, என்நிலை உரையாய்; அறனிலோய் நீ மெய்தான் கரியை; நினக்கு அறிவும் கரிதுதானோ? யான் படும் இந் நோயை நீயும் படுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாழி, தில், அம்ம என்பன அசைநிலை. வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி என்பன வண்டின் வகை. எவன் என்னும் வினாப்பெயர் என் என்றாகிப் பயன் சிறிதும் இல்லை என்னும் பொருள்பட நின்றது. உரைத்து என்னும் வினை யெச்சத்தைப் பெறலாகும் பயன் என வருவிக்கப்படும் பெய ரெச்சத் தொடரின் வினையொடு முடிக்க. அறிவுக்குக் கருமை கோட்டமுடைமை; செப்பமுடைய அறிவு, செவ்வன் அறிவு எனச் சிறப்பிக்கப்பட்டது. மனைப்புறங் காத்தல், மனையகத்தைச் சூழவிருந்து மதில்போல் காத்தல். புறத்தோர் கடக்கலாகாத உயரமும், அகத்தேயுள்ளவற்றை அவர்க்குத் தெரியாமை மறைக்கும் செறிவும் முறையே மாண்பும் பெருமையுமாம் என அறிக. தாறுபடு பீரம், “தாறுபடு நெல்” என்றாற் போலக் காய்த்தலைச் சுட்டி நின்றது. வண்டினைத் “தாதுண் பறவை1” என்னும் வழக்குப் பற்றி, பெடையைச் சிறுகுறும் பறவை என்றார்.தாழ்த்தவழிப் புலவிமிகு மென்று கருதித் தும்பி குறும் பறவைக்குப் பின்னே நின்று பறந்தமை தோன்ற, விரைவுடன் ஓடி என இயைந்தது, நெகிழ் செய்தல், நெகிழ்வித்தல்; அஃதாவது கூட்டத்துக்கு இயைவித்தல். நெகிழ்: முதனிலைத் தொழிற் பெயர். மரஞ்செடி முதலியனவின்றி முற்றும் கற்கள் நிறைந்து வெயில் வெம்மை மிகுவிக்கும் மலையை வெம்மலை என்றார். சென்று அவணின்றும் அவர் வர என் நிலை உரையாய் என மாறுக. காதல் கைம்மிக்கமையின் தலைமகள் கழிபடர் கூர்ந்து தன் கண்காணப் பறந்து திரியும் தும்பியை நொந்து கூறலின், கொடியை தும்பி என்றும், என் தனிமை கண்டும் இரக்கமின்றி நின் பெடையுடன் கூடி இன்புறுதல் நினக்கு அறமாகாது என்பாள், அறனிலோய் என்றும், யான் எய்தி வருந்தும் வேட்கை நோயை எண்ணாது தலைமகன் நெடுஞ்சுரம் சென்றமை பற்றி அவனை அன்பிலர் என்றும், அவர்பாற் சென்று விரைந்து வருமாறு என் காதற்பெருக்கை நீ எடுத்துரையாதொழிந்தாய் என்பாள், அருஞ்சுரம் இறந்தோர்க்கு என்நிலை உரையாய் சென்றவண் வரவே என்றும், இக்குற்றத்தால் நீயும் தனிமையுற்று வருந்தல் வேண்டு மென்பாள், இந்நோய் படுகதில் அம்ம என்றும், யான் நின்பால் முறையிட்டதன் பயன் ஈதன்று என வருந்துவாள், யான் நினக்கு உரைத்து என் என்றும் கூறினாள். தான் பன்முறைக் கூறியும் தும்பி செல்லாமைக்குக் காரணம் ஆராய்ந்து அது தன் பெடையின் புலந்த நெஞ்சினை நெகிழ்க்கு மாறு முயன்று கொண்டிருந்தமை என எண்ணினமை தோன்றச் சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ என்றும், பீர்க்கின் பூவை ஊதிய தும்பி தன்பால் போந்து தன் பசலையை ஊதாமைக்குக் காரணம் மணமின்மை போலும் என்று கூறுவாள், தாறுபடு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை யூதாய் என்றும், இங்ஙனம் பொருள் வேற்றுமை யுணர்ந்துகொள்ளும் நின் அறிவு என் துயர்நிலை யறியாதொழிதல் இல்லையாகவும், அதனைச் செலுத்தாமை நினக்கும் நின் அறிவுக்கும் குற்றம் என்பாள். மெய்யே கரியை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ என்றும் வெகுண்டு கூறினாள். இவ்வாறு கூறுவது ஒருவகை ஆறுதலாகையால் ஆற்றியிருப்பது பயன் என்க. 278. உலோச்சனார் தலைமகள் உள்ளத்துக் காதல், பெருகித் தன்னையின்றி இமைப்பொழுதும் உயிர் வாழ்தல் அமையாத நிலையினை எய்தக் கண்டான் தலைமகன். இனி, அவளை வரைந்து கோட லன்றி வேறு செயல் வகையின்மை துணிந்து வரைபொருள் கருதிப் பிரிந்து சென்றான். செல்லுங்கால் அவன் மீளவருதற்குக் குறித்த காலவரவையே தலைமகளும் நோக்கி யிருந்தாள்; காலம் நெருங்கவும் அவனது வரவு பற்றிய நினைவு அவட்கு மிகுந்தது; ஆயினும் அவன் வரவுக் குறிப்புத் தோன்றவில்லை. அதனால் அவள் மனம் அலையத் தொடங்கிற்று; ஆற்றாமையும் மிகுந்தது. சின்னாட்குப் பின் தலைவன் பொருளொடு போதரலும் ஊர் முழுவதும் அவன் வரவும் வரைவும் முயற்சியும் பரவின. அதனை அறிந்தாள் தோழி.உவகை மீதூரத் தலைமகள்பால் வந்து, “தலை மகனான துறைவன், அத்திரி யிவர்ந்து போந்தான். அதன் குளம்பெல்லாம் இறாமீனும், அவன் அணிந்த மாலை முற்றும் நுண்மணலும் படிந்துள்ளன. இவற்றால் அவன். மிக விரைந்து போந்தமை இனிது விளங்குதலின், அவன் நினக்குக் கொண்க னாதலை இப்பொழுது நன்கறிந்தேன்; இனி, நீ கவலற்க”என்றாள். தோழியின் இக்கூற்றில், தலைமகன் விரைந்து வருவதால், அவன் மனத்து நிலவும் வரைவு வேட்கையும் பொருட் பெருக்க மும் குறிப்பாய் அமைந்திருத்தல் கண்ட ஆசிரியர் உலோச்ச னார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். படுகாழ் நாறிய பராரைப் புன்னை 1அடுமால் மொக்குளின் அடும்புவாய் அவிழ பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் 2சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் நெய்கனி பசுங்காய் தூங்கும் துறைவனை இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல் கழிச்சே றாடிய கணைக்கால் அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே இது, தோழி தலைமகட்கு வரைவு மலிவுரைத்தது. உரை : படுகாழ் நாறிய பராரைப் புன்னை - தானாக வீழ்ந்த விதையிடத்து முளைத்து வளர்ந்த பருமையான அடியை யுடைய புன்னையின்; அடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழ - அடுத்து வளர்ந்த மரலின் பழம் போன்ற அரும்புகள் மலர்ந்து இதழ்விரிய; பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் - பொற்றூள் போலும் தாது தோன்றிய பலவாகிய பூக்களுள்; சூடுநர் தொடுத்த மிச்சில் - சூடுவோர் சூடுதற்குக் கொய்யப் பட்டன போக எஞ்சியவை; கோடுதொறும் நெய்கனி பசுங் காய் தூங்கும் துறைவனை - கொம்புதோறும் நெய்கனிந்த பசிய காய்களாகக் காய்த்துத் தொங்கும் துறையினையுடைய தலை மகனை; இனி - இப்பொழுது; கொண்கனாகுதல் அறிந்திசின் - நினக்குரிய கணவனாதலை அறிந்து கொண்டேன்; கழிச் சேறு ஆடிய கணைக்கால் அத்திரி -கடற்கழியின் சேறுபடிந்த திரண்ட காலையுடைய கோவேறு கழுதையின்; குளம்பினும் சேயிறா ஒடுங்கின - குளம்பெல்லாம் செவ்விய இறாமீன்கள் ஒடுங்கியுள்ளன; கோதையும் எல்லாம் ஊதை வெண்மணல் - அவன் இவர்ந்த அத்திரிமேலும் அணிந்த உடைமேலும் மார்பிற் கோதைமுற்றும் ஊதைக் காற்றுத் தூவிய நுண்மணல் படிந்துள்ளனவாகலான் எ.று. அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின; கோதையும் எல்லாம் வெண்மணல்; ஆகலான். துறைவனைக் கொண்கனாதல் இனி அறிந்தேன்காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சிறப்பாக எடுத்து நடப்படுதலு முண்மையின், படுகாழ் நாறிய புன்னை யென்றார். படுதல், ஈண்டுத் தானாகத் தோன்றுதல். பருவரை, பராரை என வந்தது. நாறுதல், முளைத்தல். அடுத்துள்ள மரற் புதரை அடுமரல் என்றார். மரற்பழம் நீர்மொக்குள் போறலின், மொக்குள் எனப்பட்டது ‘மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்1”என்பது காண்க. படுகாழ்ப் புன்னையாகலின், பூக்கொய்வோரால் வரையப்படாமை பற்றி சூடுநர் தொடுத்த மிச்சில் என்றார். புன்னைக்காயிலிருந்து எண்ணெய் எடுப்பது இயல்பாதலின், நெய்கனி பசுங்காய் என்றார். புன்னை, முத்துப் போல் அரும்பிப் பொன்போல் மலரினும், அதன் காய் பசுமை நிறமுடைமை தோன்றப் பசுங்காய் எனப்பட்டது. கொண்கன் என்பது பொதுவாக நெய்தல்நிலத் தலைவனைக் குறிக்கும் பெயராயினும், கோடற்குரியன் என்னும் பொருள்பட அமைந் திருத்தல் பற்றிக் கொண்கன் ஆகுதல் என்றார் போலும், அத்திரி, கோவேறு கழுதை. இவ்வியல்பு பற்றிப் பிற்காலத்தார் இதனை வடமொழிப் படுத்தி அரச வாகனம் என்றனர். வரைபொருள் குறித்துப் பிரிந்த தலைமகன் வரத் தாழ்த்தது கண்டு வருந்தி மேனிவேறுபட்ட தலைமகளை ஆற்றிவந்த தோழிக்கு அவன்வரவு மிக்க இன்பத்தைச் செய்தமையின், அவள் உள்ளுறையால் தலைமகள் எய்த இருக்கும் இன்பத்தை யுரைத் தலின், தலைமகன் வரைவொடு வந்ததைச் சுருங்க வுரைப்பாள் இனி அறிந்திசினே கொண்கனாகுதல் என எடுத்து மொழிந் தாள். தன்னை நயந்தோர் புன்கணைத் துடைப்பது தலைவர் தலைமைச் செயலாதலால், தலைமகள் எய்தி வருந்தும் வருத் தத்தை வரைவால் போக்கற் கமைந்தான் என்ற குறிப்பு இனிது தோன்ற இவ்வாறு கூறினாள் என்றுமாம். இனி, இதனை வற் புறுத்தற்கு அத்திரியின் இயல்பும் கோதையின் அமைதியும் கூறுகின்றாள். அத்திரி இயல்பாகவுள்ள நடையில் வந்திருக்கு மாயின், அதன் கால்குளம்பில் இறாமீன் ஒடுங்காமையின் அதன் விரைந்த செலவு அம்மீன் ஒடுங்குவதற்கு ஏதுவாயிற்று என்பாள் அத்திரிகுளம்பிற் சேயிறா ஒடுங்கின என்றும், அவன் அணிந்த கோதை முற்றும் ஊதையில் வெண்மணல் நிறைந்ததற்கும் அவன் விரைந்து வந்தமையே ஏது என்பாள், கோதை யெல்லாம் ஊதை வெண்மணல் என்றும் கூறினாள். விரைந்த வரவு நின்னைக் கடிதின் வரைந்து கோடல் வேண்டுமெனும் காதன்மிகுதி பற்றிய தென்பது கருத்து. சூடுவோர் வரையாது தொடுத்த மிச்சில் புன்னைக் கோடுதொறும் காய்த்துத் தூங்கும் என்றது, நின்பால் விருந்தினர் வரையாது உண்ட மிச்சில் நின்மனை முற்றும் செல்வமாய் நிறைந்து இன்பம் தரும் என உள்ளுறுத் துரைத்த வாறாம். தலைமகள் கேட்டு மகிழ்வாளாவது பயன். 279.கயமனார் தலைமக்களிடையே களவின்கண் தோன்றிச் சிறந்த காதல் தலைவிமேனியில் வேறுபாடு தோற்றுவிப்ப, தந்தை அவளை இற்செறித்தான். அதனை யறிந்த தலைமகன் அவளை வரைதல் வேண்டி முயறலுற்றான். வேற்றவர் மகட்கொடை விரும்பித் தலைமகளுடைய பெற்றோரை அணுகினர். அவர்களும் மகட் கொடை நேர்வான் சமைந்தனர். தலைமகன் பொருட்டு முயல் வோர்க்கு மகட் கொடை மறுக்கப்படுதற்குரிய குறிப்புக்களும் தோன்றின. அந்நிலையில் தலைமக்கட்கு உடன்போக்கு ஒழிய வேறு செயல்வகை இல்லையாயிற்று. தோழியும் நன்கு தெளிந்து தலைமகளைப் போக்குக்குடன்படுவித்தாள். குறித்த நாளிரவில், தோழி கையடைப்படுப்பத் தலைமகன் தலைமகளைத் தன் னூர்க்குக் கொண்டுபோயினான். பெற்றோர் அறியா வகையில் தன் மகள் தலைவனுடன் போயினமையால் தாய்க்கு மனநோய் மிகுந்தது. அழுதாள், அவலித்தாள்; ஓரிரு நாள்களில் அவளைத் தேடிச் சென்றோர் தலைமகனூரில் அவட்குத் திருமணம் நிகழும் சிறப்பை எடுத்துரைத்தனர். அச்சிறப்பைத் தன் மனைக்கண் வைத்துக் காண்டற்கில்லையே எனத் தாய் கையற்றுக் கண்ணீர் சொரிந்து கதறிப் புலம்பினாள், மகளின் இளமையும் காலடிகளின் மென்மையும் அவள் மனக்கண்ணில் ஒருபால் தோன்றி மாளாத் துயர் தந்தன. ஒருபால் அவள் சென்ற காட்டு வழியின் கொடுமை யும் அவள் நினைவில் எழுந்தது. மகள் சென்ற காலம் பின்பனிப் பெரும்பொழுது, வேம்பு பழுக்க இருப்பைப் பூவும் பழமும் தாங்கும் காலம். வேம்பினை உண்டு வெறுப்புற்று இருப்பையின் பூமணம் தேர்ந்து வௌவால் பனியிரவில் சென்று அதன் கிளை தோறும் நாடித் திரிவதால் மரத்தடி யெங்கும் பனித்துளிகள் சிதறலுற்றன. யானைகள் இரவில் காட்டில் திரியும்போது ஓமை முதலிய மரங்களின் பட்டைகளைக் காலால் எற்றி உரித்து உண்பது இயல்பு. பட்டை நீங்கிய ஓமையின் அடியில் பனித்துளி வீழ்ந்து நனைப்ப, அதன் வெண்மையான தூய ஒளி காட்டில் வெயில் காய்வது போன்றிருக்கும். அக்காட்சி யெல்லாம் அவள் நினைவில் தோன்ற அவற்றை முறையாகச் சொல்லி, இத் தகைய காட்டைத் தன் காலால் நடந்து கடந்த என் மகளுடைய காலடிகள் எவ்வாறு நொந்தனவோ? என்று வருந்தினாள். அந்த நிலைமையில் அங்கே தன் மகட்கு நடைபெறும் திருமணத்தை நினைப்பவள், முதற்கண் நடக்கும் சிலம்புகழீஇ என்னும் சடங்கு காணும் இன்பத்தைத் தான் பெறலாகாமை நினைந்ததும், துயர் மிகுந்தது; கண்ணீர் பெருக்கெடுத்தது; அதனை வாய்விட் டுரைத்து வருந்தினாள். அவளுடைய துன்பக்காட்சி ஆசிரியர் கயமனாரது புலமை யுள்ளத்தை அசைக்கவும், அவர் வாயினின்றும் அஃது ஒரு பாட்டாய் வெளிவந்தது. அது வருமாறு: வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத் 1தேம்போ துற்ற தீம்பழன் நசைஇ 2வைகுபனி உறந்த வாவல் சினைதொறும் நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்டாள் ஏய்ப்பப் பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை வெயில்காய் 3அமையத்தின் இமைக்கும் அத்தத் ததருழந் தசையின கொல்லோ 4ததர்கொடிச் சிலம்பு கழீஇச் செல்வம் பிறருணக் 5கழித்தஎன் ஆயிழை அடியே. இது, மகட்போக்கிய தாய் சொல்லியது. உரை : வேம்பின் ஒண்பழம் முணைஇ - வேம்பினுடைய ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து; இருப்பைத் தேம்போது - இருப்பை யின் இனிய பூக்களையும்; உற்ற தீம்பழன் நசைஇ - மிகவும் இனிய பழங்களையும் விரும்பி; வைகுபனி உறந்த வாவல் - நீங்காத பனி செறிந்த இரவிலே திரிந்த வௌவால்; சினை தொறும் - கிளைகள்தோறும்; நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப - நெய்யில் தோய்த்தேடுக்கப்பட்ட திரியின் அடியில் எண்ணெய் துளிப்பது போலத் தண்ணிய பனித்துளிகள் ஒழுகித் துளிக்க; நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையோடு - விடியற் காலையில் சுரத்திடைத் திரிந்த ஒளிபொருந்திய நிறத்தையுடைய ஆண்புலியுடனே; பொருத யானை புண்தாள் ஏய்ப்ப- போரிட்டு மீண்ட யானையின் புண்பட்ட காலடி போல; பசிப்பிடி உதைத்த ஓமைச் செல்வரை - பசித்து வந்த பிடியானையின் காலால் எற்றப்பட்டுப் பட்டை நீக்கிய ஓமை மரத்தின் சிவந்த அடிப்பகுதி; வெயில்காய் அமையத்தின் இமைக்கும் அத்தத்து - வெயில் காயும் அமையம் போல ஒளிரும் காட்டிடத்தே; அதர் உழந்து அசையின கொல்லோ - வழி நடந்து வருந்தினவோ; ததர் கொடிச் சிலம்பு கழீஇச் செல்வம் - நெருங்கிய கொடிபோல் தொழிற்பா டமைந்த சிலம்பு கழிக்கும் திருமணச் சடங்காகிய செல்வத்தை; பிறர் உணக்கழித்த -பிறர் கண்டு இன்புறுமாறு கொண்ட; என் ஆயிழை அடி-என் அழகிய இழையணிந்த மகளுடைய அடிகள் எ.று. சிலம்பு கழீஇச் செல்வம் பிறர் உணக்கழித்த என் ஆயிழை யாகிய மகளின் காலடிகள் அதர் உழந்து அசையின கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முணைவு, வெறுப்பு. இருப்பைப்பூ இனிமைச்சுவை யுடைமை பற்றித் தேம்போது எனப்பட்டது. வைகுபனி, இடையறாத பனி. உறத்தல், செறிதல். வாவல், வௌவால். சிதர், நீர்த்துளி. புலியின் வரிநிறம் ஒளி யுடைமைபற்றி வாட்கேழ் என்றார். கேழ், நிறம். ஓமையின் பட்டை நீங்கிய செவ்வரைக்கு யானையின் புண்பட்டதாள் வடிவுவமம். வெயில்காய் அமையம், நிறவுவமம். அதர், வழி. ததர், நெருக்கம். சிலம்பின்மேல் பூவும் இலையும் ஏந்திய பூங்கொடி போன்ற ஒப்பனை பொறிக்கப்பட்டமை தோன்றத் ததர்கொடி சிலம்பு என்றார்; இதுபற்றியே இத்தகைய வேலைப் பாடமைந்த நன்கலன்களை “வினைமாண் நன்கலம்”1 எனச் சான்றோர் குறிக்கின்றனர். பெற்றோர், மணமாகா முன்னர் அணிந்திருந்த சிலம்பும் வளையுமாகிய கலன்களைக் கழித்து மணமகன் அளிக்கும் சிலம்பும் வளையும் அணியும் சடங்கு சிலம்பு கழீஇ என்றும், சிலம்புகழி செல்வமென்றும் பண்டை நாளில் வழங்கிற்று. சிலம்பு கழீஇ என்பது செவியறிவுறூஉ என்றாற்போல இயல்பின் அளபெடுத்து நின்றது. இதனை இக்காலத்தே கன்னிமை கழித்தல் என வழங்குப. அதனை மணமான மங்கலமகளிர் மணமகளின் தாயார் காணச் செய்தல் சிறப்பு. போக்குடன்பட்டுச் சென்றொழிந்த தலைமகளது பிரிவால் பெருந்துயர் உழக்கும் தாய்க்கு அவளுடைய மென்மையும், சென்ற வழியின் கொடுமையும் மிக்குத் தோன்றலின், அவற் றையே விதந்து கூறிப் புலம்புகின்றாள். தன்மகள் சென்றது பின்பனிக் காலத்து இரவுப் பொழுதாதலின். அப்பொழுது வாவல் வேம்பு இருப்பை முதலிய மரங்களில் சினைதோறும் மேய்தலால் பனிமிக்குத் துளித்தலை, வைகுபனியுறந்த வாவல் சினை தொறும் நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப என்றும், இரவின்கண் பசிமிக்குத் திரியும் பெண்யானை ஓமை மரத்தின் அடியைக் காலால் எற்றிப் பட்டையை நீக்கித் தின்றலின், பட்டை நீங்கிய அடிப்பகுதியின் செந்நிறமும் வெண்ணிறமும் யானையின் புண்பட்ட அடிபோலத் தோன்றி அவ்வழியே செல்வோர்க்கு அச்சம் பயக்கும் என்ற நினைவால், வாட்கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்டாள் ஏய்ப்ப என்றும், எனினும் அதன் ஒளி வெயில்காய் அமையம் போறலின் இனிது சென்றிருப்பள் என நினைத்தலின், அதனை எடுத்தும் மொழிந்தாள். அவ்வழியில் விரைந்து செல்லுங்கால் தலைமகளின் மெல்லிய அடிகள் நடத்த லாற் சிவந்து கன்றுமோ என நினைந்து மனம் வருந்துமாறு தோன்ற, அத்தத்து அதர் உழந்து அசையின கொல்லோ என்றும், அடியை நினைந்த அவள் மனம், அதன்கண் அணியப் பெற்ற சிலம்பின்மேற் சென்றதும், தலைமகனுடன் சென்ற தன்மகட்கு அவன் மனைக்கண் பிறமகளிர் கூடிச்செய்யும் சிலம்புகழீஇச் சிறப்பை நினைத்தலின் ததர்கொடிச் சிலம்பு கழீஇச் செல்வம் என்றும், அதனைத் தன் கண்காணச் செய்யும் பேறு இல்லா தொழிந்ததற் கிரங்கிப் பிறர் உணக் கழித்த என்றும், வகைவகையான இழைகளால் மணமகளைக் கைபுனையும் நினைவும் தன் மகட்குத் தான் எல்லா இழைகளையும் அணிந்து எழில்பெற வளர்த்த நினைவும் அவள் உள்ளத்தில் தோன்றவும், மகளென்னாது என் ஆயிழை என்றும் கூறினாள். உள்ளுறை யால் மகளது போக்கும் தனது கையறவும் கூறலின், வெளிப் படையாக அவள் அடியின் மென்மையையும் சிலம்பு கழீஇச் செல்வத்தையும் சிறந்தெடுத்து மொழிந்தாள். வேம்பின் பழத்தை வெறுத்து இருப்பையின் தேம்போதும் தீம்பழமும் நச்சிய வாவல் பனியுறப்பச் சினைதொறும் மேயும் என்றது, தந்தை செல்வத்தை வெறுத்துத் தலைமகன் செல்வத்தை நச்சி இப்பனியுறைக்கும் இரவில் மகள் நடந்து சென்றாள் எனவும், பசிப்பிடியால் பட்டை நீக்கப்பட்ட ஓமையின் செவ்வரை வெயில்காய் அமையத்தின் விளங்கும் என்றது தலைமகனால் மகள் பிரிக்கப்பட்டு வருந்தும் தான் கண்டோர் இரங்கும் கையறவு எய்தியமை கூறியவாறு எனவும் உள்ளுறை கொள்க. இதனால் நற்றாய் ஆற்றாமை தீர்வாளாவது பயன். 280.பரணர் கற்பு வழிப்பட்ட மனைவாழ்வின்கண் தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகவே, தலைமகட்குப் பொறாமையும் புலவியும் மிகுந்தன. தலைமகன் தன்மனைக்குப் போதரல் குறித்துப் பாணன் முதலாயினாரை வாயில் வேண்டி விடுத்தான். அவர்கள் அனைவரும் தலைமகளால் மறுக்கப்பட்டனர். அது கண்ட தோழி, மிகுதிக்கண் மேற்சென்றுரைக்கும் முறைமை பற்றித் தலைமகளை நெருங்கித் தலைவனது பரத்தைமைக்குரிய வாய்ப்புக்களை விரியக் கூறி, “இனி, அவன் வரின் நீ புலவா தொழிக” என்றாள். அதனால் மனவமைதி பெறாத தலைமகள், தோழியை நோக்கி, “ஊரன் பரத்தைமை பற்றிப் புலவாதே என்று புகன்றுரைக்கின்றாய்; நளிமனைக்கண் நல்விருந் தயர்தற் பொருட்டுக் கைதூவாத யான், அஃது எய்தாமையால் மனையறம் குன்றுதற் பொருட்டன்றே புலக்கின்றேன்?” என்று கூறினாள். தலைமகளுடைய இக் கூற்றின்கண், மனையறத்தின் மாண்பு அவள் உள்ளத்தில் நின்று உயர்வு தருவது கண்ட ஆசிரியர் பரணர் அதனை இப்பாட்டின்கண் அழகுற அமைத்துப் பாடுகின்றார். கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின் கூம்புநிலை அன்ன 1முகைய ஆம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என வீழும் தண்டுரை ஊரன் தண்டாப் பரத்தைமை புலவாய் என்றி தோழி 1புலக்குவென் பழன யாமைப் பாசறைப் புறத்துக் 2கழனி யுழவர் 3சுடுநந் துடைக்கும் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னஎன் 4நளிமனை நல்விருந் தயரும் 5கைதூ வின்மையான் எய்தா மாறே. இது, வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம், உரை : கொக்கின் உக்கு ஒழிந்த தீம்பழம் - மாமரத்தினின்று காம்பற்று வீழ்ந்த இனிய பழம்; கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல் - கொக்காகிய புள் கூம்பிநின்ற நிலைபோலும் அரும்புகளையுடைய ஆம்பல்; தூங்குநீர்க் குட்டத்துத் துடும் என வீழும் - அலையுடன் அசைகின்ற நீர்நிலைக்கண் துடும் என்ற ஓசையுண்டாக வீழும்; தண்துறைஊரன் தண்டாப் பரத்தைமை - தண்ணிய துறையையுடைய தலைவனது நீங்காத பரத்தைமை யொழுக்கத்தின் பொருட்டு; புலவாய் என்றி - புலத்தலைச் செய்யற்க என்று கூறுகின்றாய்; தோழி -; புலக்கு வென்-புலத்தலைச் செய்கின்றேன்; பழன யாமைப் பாசறைப் புறத்து - பழனங்களில் வாழும் யாமையின் பசிய முதுகாகிய ஓட்டின்மேல் வைத்து; கழனியுழவர் சுடு நந்து உடைக்கும் - கழனிகளை உழுதலைச் செய்யும் உழவர் தாம் சுட்ட நத்தையை உடைக்கின்ற; தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன - பழமையாய் முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போலும்; என் நளிமனை நல்விருந்தயரும் - என் பெரிய மனைக்கண் வரும் நல்ல விருந்தினரை ஓம்பும்; கைதூ இன்மை - கைகூ தூவாமையை; யான் எய்தாமாறு - யான் எய்தாமையால் காண் எ.று. தோழி, ஊரன் பரத்தைமை புலவாய் என்றி; நளிமனை நல்விருந்தயரும் கைதூவின்மை எய்தாமையால் புலக்குவென் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. கொக்கு. முன்னது மாமரம், பின்னது கொக்காகிய புள். “முழுமுதற் கொக்கின் தீங்கனி யுதிர்ந்தன”1 எனச் சான்றோர் உரைப்பது காண்க, ஆம்பற்குக் கொக்கை உவமித்தலைக் “கொக்கினன்ன கூம்புமுகைக் கணைக் கால் ஆம்பல்2” என்றதனாலும் நினைவு கூர்க. நீர்மேல் நிற்கும் ஆம்பல் நீர்அலை அசைதலால் தானும் அசைவதனால் ஆம்பல் தூங்குநீர்க் குட்டம் என்றார். தண்டாமை. நீங்காமை, என்றி: முன்னிலை யொருமை முற்று வினைத்திரிசொல். யாமையின் முதுகிலுள்ள ஓடு பசுமை நிறம் பெற்று விளங்குதலின் பாசறைப் புறம் எனப்பட்டது, யாமையோடு கல்போறலின் அறை என்றார்; “கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்3” என்பது காண்க. வேளிரது குன்றூர், மேலைக்கடற்கரைக்கண் கொண்கான நாட்டில் உள்ளதோர் ஊர்; இப்போது அதனைக் குன்னூர் என வழங்குகின்றனர். தோகைக்கா, பாழி என்ற ஊர்களும் இதனைச் சார்ந்துள்ள நாட்டில் உள்ளன. நளி, பெருமை. கைதூவின்மை, கைதூவாமை; அஃதாவது கையொழி யாது செய்த வண்ணமிருத்தல்; “மனையோள், பாணர் ஆர்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூவாளே” எனவும், “பரிசில் பரிசிலர்க் கீய, உரவுவேற் காளையும் கைதூ வானே4” எனவும் வருவனவற்றால் அறிக. மாறு: மூன்றாம் வேற்றுமை ஏதுப்பொருள்பட வந்த சொல்லுருபு. தலைமக னுடைய பரத்தைமை பொறாது வாயின் மறுத்தொழுகும் தலைமகட்குத் தோழி வாயில் வேண்டும் குறிப்பினாற் போந்து அவனுடைய பரத்தைமைக் குரிய ஏதுவை உள்ளுறையாற் சுட்டி, வெளிப்படையால் புலவாய் என வுரைத்ததனையே கொண் டெடுத்து மொழிகின்றாளாகலின், ஊரன் தண்டாப் பரத் தைமை புலவாய் என்றி என்றும், அவளைத் தான் மறுத்தமை பற்றித் தன்னை வெறாமைப் பொருட்டுத் தோழி என்றும், தலைவன் பரத்தைமைக் கொடுமையை உள்ளுறுத்தும், மனை யறம் குன்றுதலை வெளிப்படையாகவும், ஏதுவாக்கி யுரைத்தலின் புலக்குவென் என எடுத்து மொழிந்தாள்.கழனியுழவர் ஆமை யின் ஓட்டைக் கல்லெனக் கருதித் தாம் சுட்ட நத்தையை யுடைப்பர் என்றதனால் தலைமகன் பரத்தையரைக் கற்புச் சிறப்புடைய குலமகளிராகக் கருதி அவரைக் கூடி யொழுகு கின்றான் எனத் தலைமகள் உள்ளுறுத்துரைத்தாள் என்க. அவனது இச்செயலால் தான் மனைக்கண் இருந்து செய்தற்குரிய விருந் தோம்பும் நல்லறம் குன்றினமை தோன்ற, நளிமனை நல்விருந் தயரும் கைதூ வின்மையான் எய்தாமாறு என்று உரைத்தாள். தலைமகன் பரத்தைமை பூண்ட விடத்துத் தலைமகட்கு விருந் தோம்பும் திறம் குன்றுதலை,” அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும், துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின், விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”1 எனக் கற்புடை மடந்தை கண்ணகியார் பொற்புடை மொழியிற் புகலுமாறு காண்க. மாமரத்தின் பழம் காம்பற்ற விடத்து நெடுநீர்க் குட் டத்துத் துடும் என வீழும் எனத் தோழி கூறியது, நினக்குரிய தலைமகன் நின்னால் மறுக்கப்பட்ட வழிப் பரத்தையர் அவனை ஆரவாரத்தோடு ஏற்றுக் கொள்கின்றனர் என்றவாறாகக் கொள்க. வாயில் மறுத்தல் பயன். உழவர் சுடுநத்தை ஆமை முதுகில் உடைப்பர் என்ற இக் கருத்தை வச்சத் தொள்ளாயிரம் என்ற பிற்கால நூலுடையார், “வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுள், தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை, வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை, இன்புறுத்த வல்லமோ யாம் “என மேற் கொண்டு பாடியுள்ளார். “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்2”என்று தொடங்கும் நூற்பாவின்கண் வரும், “வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ” என்பதற்கு இப்பாட்டைக் காட்டி “இந்நற்றிணை ‘தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போ?’ என்ற தோழிக்கு ‘விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலே னல்லது புலவேனோ?’ என்றவாறு” என்பர் நச்சினார்க்கினியர். 281.கழார்க் கீரன் எயிற்றியார் கீரன் எயிற்றியார் என்ற இச்சான்றோர் சங்கத்து நல்லிசைப் புலமை மெல்லியலாருள் ஒருவர். எயிற்றியார் என்பது இவரது இயற்பெயர்; இதன் ஆண்பாற்பெயர் எயிற்றியன் எனவரும். புல்லாற்றூர் எயிற்றியனார் என ஒரு சான்றோர் புறநானூற்றுப் புலவர் நிரலுட் காணப்படுகின்றார். எயிற்றியர் என்பது பாலைத் திணைநிலைமக்கட்குப் பொதுப் பெயராக வழங்குமாயினும், மக்கட்குரிய இயற் பெயராகவும் இது வழங்குவது விலக்கப் படவில்லை. கீரன் என்பது இவரது கணவன் பெயர்; கழார், இவர்களின் ஊராகும், இதனால் அவர் கழார்க் கீரன் எயிற்றியார் எனப்படுகின்றார். கழார் என்னும் ஊர் சோழநாட்டுக் காவிரியின் வடகரையில் இருந்தது. இப்போது அது மறைந்து போயிற்று. இடைக்காலச் சோழ பாண்டியராட்சியிலும் இவ்வூர் திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் காவிரியின் வடகரை நாட்டின் ஒரு கூற்றத்துக்குத் தலைமைப் பேரூராய்ப் பிறங்கிற்று. ஆயினும் கழார் என்ற பெயர் மாத்திரம் களார் எனச் சிதைந்தது. அப் பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்கள் பலவும், களார்க் கூற்றம் என்றே கூறுகின்றன. “உலகுடை முக்கோக் கிழானடி வளநாட்டுக் களார்க் கூற்றம்1”எனவும் “வடகரை இராஜராஜ வளநாட்டுக் களார்க் கூற்றம் 2” எனவும், “இராசாசிரிய வளநாட்டுக் கழார்க் கூற்றும்”3 எனவும், “வடகரை மழநாட்டுக் கழார்க் கூற்றம்”4 எனவும் “திரிபுவன முழுதுடை வளநாட்டுக் களார்க்கூற்றம்5” எனவும் குறித்துள்ளன. இக்கழார் காவிரியின் வடகரைத் துறைகள் ஒன்றில் இருந்தமையின், இவ்வூர்ப் பெயரால் அத்துறை, கழார் முன்றுறை என்றும் கழார்ப் பெருந்துறை என்றும் சான்றோரால் குறிக்கப்படுகின்றது. இக்கழார் ஒரு காலத்தே மத்தி யென்னும் குறுநிலத் தலைவனுக்கு உரியதாய் இருந்தது. சோழராட்சியில் அவன் சிறந்த கைவண்மையுடையனாய்ப் பரதவர் கோமானாய் விளங்கினான். காவிரிக் கரையில் வெண்மணி யென்னு மிடத்தில் இந்த மத்தி ஒரு பனித்துறை அமைத்தான். ஆதலால், இக்கழார் நகரைக் குறிக்கும்போதெல்லாம், மத்தியின் பெயரை இணைத்தே சான்றோர் குறிக்கின்றனர். இக்கழார் முன்றுறையில் ஒரு கால் சோழன் கரிகாலன் புதுநீர் விழாக் கொண்டான். தீடீரெனப் பெருவெள்ளம் பெருகிவரவே, அவன்மகள் ஆதிமந்தியின் கணவனான ஆட்டனத்தி அதனாற் கொண்டுபோகப்பட்டான்; அவனைத் தேடித் தேடி அவள் அலைந்து வருந்தினாள் என்பர். இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிகவுடைய இக்கழார்தான் கீரன் எயிற்றியார் முதலியோர்க்கு உரிய ஊராகும். எயிற்றியார் பெண்பாலராயினும் புலமையில் ஏனை ஆண்பாலரோ டொத்த பெருமையுடையர். பகன்றைப்பூ மலர்ந்திருக்கும் இயல்பை, “பகன்றை நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின் வாலிய மலர” என்று கூறுவதும், மழையில் நனைந் துள்ள கரும்பின்பூவை, “கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ, மாரியங் குருகின் ஈரிய குரங்க” எனவும் “சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் பன்ன, கனைத்த கரும்பின் கூம்பு பொதிய விழ” எனவும் கூறுவதும் ஏற்ற சான்றுகளாகும். உழுவலன்பாற் பிணிப்புண்ட காதலரை நோக்கி, “எப்பொருள் பெறினும் பிரியன் மினோ எனச், செப்புவல் வாழியோ துணையுடை யீர்க்கே” என்றும், கடமையாற் பிரிந்த காதலனைக் குறைகூறும் மகளிர்க்கு, “தோழி, பொருள்புரிந்து உள்ளார் கொல்லோ காதலர், உள்ளியும் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ” என்றும் கூறுவன இவரது மனவிரிவை மாண்புறக் காட்டுகின்றன. இவர் பாடியனவாகப் பல பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல் களிலும் உண்டு. மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் தலைவன் இன்றியமையாக் கடமை குறித்துப் பிரிந்தான். அவன் குறித்த பருவத்தை எதிர்நோக்கிப் பிரிவாற்றியிருந்த தலைமகள், அவன் வாராமை பற்றி மிகவும் வருந்துவாளாயினள். அது கண்ட தோழி, தலைமகன் பிரிவினது இன்றியமையாமையை விளக்கி ஆற்றியிருக்குமாறு தலைவியை வற்புறுத்தினாள். அவட்குத் தலைவி, “தோழி, மழை மிகப்பெய்த காலத்து நள்ளிரவில் அவர் நம்மோடு உடனிருப்பவும், பனி மிகுதி பொறாமல் யாம் உறக்க மின்றி வருந்தினோம்; அவர் அதனை நன்கறிவர். அவ்வா றிருந்தும், நம் காதலர் பிரிந்திருப்பது அவர்க்கு நம்பால் அன்பின் மையைக் காட்டுகிறதன்றோ? அங்ஙனம் இருக்க, அவரை அன்பு மிகவுடையர் என்றும், அவரது பிரிவை ஆற்றியிருப்பது நன்று என்றும் நீ வற்புறுத்துவது எனக்கு வியப்பைத் தருகிறது” என்றாள். இதனால், தலைமகன் பிரியாது உடனுறைந்தவழியும், பிரிந்த வழியும் தலைவியது காதலன்பு பெருகி அவனது பிரிவரும் கூட்டத்தையே பேணிக்கிடக்கும் மாண்பினைக் குறிப்பால் வெளிப்படுத்தி, தோழியை மறுப்பாள் போன்று உரைக்கும் நயம் கண்ட எயிற்றியார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். மாசின்1 மாஅத்த பலியுண் காக்கை வளிபொரு நெடுஞ்சினைத் தளியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல்வகை மிகுபலிக்2 கொடையென உகுக்கும் அடங்காச் சொன்றி3 அறாஅ யாணர் விடக்குடைப் பெருஞ்சோ றுள்ளுவன3 இருக்கும் மழையமைந்5 துற்ற மாலிருள் நடுநாள் தாநம் முழைய ராகவும் நாநம் பனிக்கடு மையின் நனிபெரி தழுங்கித் துஞ்சா மாகவும் 6பிரிவோர் அன்பிலர் தோழிநங் காத லோரே. இது, வன்புறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; ஆற்றாளெனக் கவன்ற தோழி தலைமகட் குரைத்ததூஉமாம். உரை : மாசில் மாஅத்த பலியுண் காக்கை - குற்றமில்லாத மாமரத்தின்கண் தங்கும் மனையோர் இடுகின்ற பலிச் சோற்றை யுண்ணும் இயல்பிற்றாகிய காக்கை; வளிபொரு நெடுஞ்சினை தளியோடு தூங்கி - காற்றால் அலைக்கப் பட்ட நெடிய கிளையின்கண் ஒட்டிய மழைத் துளியுடனே அசைந்து; வெல்போர் சோழர் கழாஅர்க் கொள்ளும் - வெல்லுகின்ற போரையுடைய சோழர்க்குரிய கழார் என்னும் நகர்க்கண் மக்களால் நல்கப்பெறும்; நல்வகை மிகுபலிக் கொடை என உகுக்கும் - நல்ல வகையில் மிகுதியாக அமைந்த உண்பலி போலுமாறு வழங்கப்படும்; அடங்காச் சொன்றி - பலிவகையில் அடங்காத சோறாகிய; அறாஅ யாணர் - நீங்காத புதுமையையுடைய; விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருக்கும் - ஊன் கலந்த மிக்க சோற்றை நினைந்து கொண்டிருக்கும்; மழை அமைந்து உற்றமால் இருள் நடு நாள் - மழைமேகம் பரந்துள்ளதனால் மிக்க இருள் செறிந்த நள்ளிரவில்; தாம் நம் உழையராகவும் - தாம் நம்மோடு உடனிருந்தாராகவும்; நம் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி - நமக்குக் குளிர் மிக்கதனால் மிகப் பெரிதும் வருந்தி; தாம் நம்மோடு உடனிருந்தாராகவும்; நாம்உறங்கா தொழிந்தே மாகவும்; பிரிவோர் - பிரிந்தேகும் பான்மையரான விடத்து; தோழி -; நம் காதலோர் அன்பிலர் - நம் காதலராகிய தலைவர் நம்பால் அன்பில்லாதவரேயாவர் காண் எ.று. தோழி, நம் காதலோர், நடுநாள் உழையராகவும், பனிக் கடுமையின் அழுங்கித் துஞ்சாமாகவும் பிரிவர்; ஆகலின் அன்பிலர்காண் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. மாசில் மா, தீங்கு செய்யும் பாம்பு முதலியன வாழ்தற்கேற்ற புரையாகிய குற்றம் இல்லாத மாமரம். மக்களிடும் சோற்றையுண்டு வாழ்தல் பற்றிப் பலியுண் காக்கை யென்றார். “செஞ்சோற்ற பலிமாந்திய கருங்காக்கை1”என்ப. தளி, மழைத்துளி. வேறற்கேற்ப வலி மிக்கபோதன்றிப் போர் தொடுக்காத பண்புடைமை பற்றிச் சோழரை வெல்போர்ச் சோழர் என்றார். பச்சையூனும் பசிய நிணமுங் கலந்த சோற்றை மிக்க அளவில் கொடுக்கும் பலிக் கொடை நல்வகை மிகுபலிக்கொடை யெனப்பட்டது. கழார் என்னும் ஊரில் நல்கப்படும் பலியுணவை மேல் கூறப்படும் விடக்குடைப் பெருஞ்சோற்றுக்கு உவமமாகக் கொள்க. அடங்காச் சொன்றி, பலியுணவு வகையில் அடங்காத சோறு. சொன்றியாகிய பெருஞ்சோறு என இயைக்க. மழை பெய்தற் கமைந்த முகில் கறுத்திருக்குமாகலின் மழைய மைந்து என்றும், அதனால் பரவும் இருள் நள்ளிரவில் “கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய்” ச் செறிவது பற்றி மாலிருள் நடுநாள் என்றும் கூறினார். கடுமை, மிகுதி. பிரிந்திருக்கும் தலைமகனை நினைந்து அன்பின்மை கூறி ஆற்றாளாகிய தலைமகட்கு, அவனுடைய அன்பு மிகுதி யுரைத்து வற்புறுத்திய தோழியை நோக்கி உள்ளுறையால் தன் காதலின் மிகுதியைக் குறிப்பித்தலின், தலைமகனை நம் காதலோர் என்றும், தோழியை மறுப்பது பற்றி அவள் வருந்தாவாறு தோழி என்றும் சொல்லி, அவன் அன்பிலன் என்பதை அன்பிலர் என எடுத்தோதினாள். எடுத்தோத்து, ஏதுவால் நிறுவப்படல் முறை யாதல் கண்டு, அதனை விரித்துரைக்கின்றாள். மாலிருள் நடுநாள் தாம் நம்முழையராகவும் நாம் நம் பனிக் கடுமையின் நனிபெரிது அழுங்கித் துஞ்சாமாகவும் பிரி வோர் என்றாள். மிக்க பேரிருள் என்றற்கு மாலிருள் என்றா ளாயினும், காம மயக்கத்தை மிகுவிக்கும் இருள் சூழ்ந்த நடுநாள் என்ற கருத்தும், அதன்கண் அமைய வுரைத்தாள் என்றல் பொருந் தும். பனிமிக்கவிடத்துக் காதலரைக் கூடியிருக்கும் மகளிர்க்கு முயக்கத்தின்கண் வேட்கை மிகுவதும், கவவு நெகிழாத கைகவர் முயக்கம் பெறினும், ஆராமையான் அழுங்குவதும் செய்த குறிப்பைப் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கித் துஞ்சாமாகவும் என்றும், கூடியிருந்த வழியும் இவ்வாறு நனி பெரிது அழுங்குபவள் பிரிந்தவழி இறந்துபடுவள் என எண்ணாது பிரிந்தார் என்பாள் பிரிவோர் என்றும் கூறி, இவ்வாற்றால் நம்காதலர் அன்பிலர் காண் எனச் சாதித்தாளாயிற்று. பலியுண் காக்கை தளியொடு தூங்கினும் அடங்காச் சொன்றியாகிய பெருஞ்சோறு உள்ளுவன இருக்கும் என்றது, அழிவில் இன்ப நுகர்ச்சிக்குரியயான் தனிமைத் துயரால். நடுங்கினும் என் னுள்ளம் “முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்கும்1”அவரது மார்பின் முயக்கத்தையே நோக்கி இறந்துபாடின்றி ஆற்றி யிருப்பேனாயினேன் என்றாளாகக் கொள்க. இதனாற் பயன் ஆற்றாமை தீர்வாளாவது. 282.நன்பாலூர்ச் சிறு மேதாவியார் இவர் பெயர், ஏட்டில் நற்பாலூர்ச் சிறுமேதாவியார் எனவும், நற்பலூர்ச் சிறுமேதையார் எனவும், வேறு வேறு வகையாகக் காணப்படுகிறது. அகநானூற்றில் இவர் பெயர் நன்பாலூர்ச் சிறுமேதாவியார் எனக் காணப்படுகிறது. நல்லூர், பாலூர் என்ற பெயர் தாங்கிய ஊர்கள் பல தமிழ் நாட்டில் உள்ளமையின், இவரது உண்மையான ஊர்ப்பெயர் இன்னது என வரையறுத்தல் அரிதாகவுளது. சங்க இலக்கியம் என்ற தொகுப்பை ஆராய்ந்த திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள்,அகநானூற்றுச் சிறு மேதாவியாரை நன்பலூர்ச் சிறுமேதாவி யென்றும், நற்றிணையிற் கண்ட சிறு மேதாவியாரை நல்லூர்ச் சிறு மேதாவியார் என்றும் கூறினர். இதன் உண்மைவடிவம் விளக்கம் பெறுங்காலம் வரை நன்பாலூர்ச் சிறு மேதாவியார் என்று கொண்டொழி வோமாக. இவர் முல்லை நிலத்தில் பிறந்து அதன் சூழ்நிலையிற் பயின்று சிறந்த புலமையுடையர் ஆயினர். மாலைப்போதில் ஆட் டினத்தைத் தொகுத்துக்கொண்ட இடையன், நரி உலவும் இருளில் தான் அவற்றிற்குக் காவலாக இருப்பது நன்கு விளங்கு தற்காக நெடுவிளி பயிற்றுவதும், காட்டுப்பன்றிகள் தாம் பண் படுத்திய புனத்தை அழிக்காதபடி, புனங்காவலர் கருங்கோடு கொண்டு ஊதுவதும், நெடுவிளி கேட்ட குறுமுயல் ஓடிப் புதர்க்குள் ஒளிப்பதும் மிக்க நயம்படக் கூறப்படுகின்றன. தலைமகன் தலைவி மனையின்கண் தங்கின், அவற்குச் செய்யப் படும் விருந்தின் சிறப்பைக் கூறும் தோழி, அவனோடு வரும் இளையர்க்கு வரகரிசிச் சோற்றோடு ஆட்டுத்தயிரும் புற்றீயலும் கலந்த புளிச்சோறு வெண்ணெய் பெய்து தரப்படும் என்றும், தலைமகற்குப் பாலுடையடிசில் தருவரென்றும் உரைப்பது மிக்க இன்பம் தருவதாகும். இவருடைய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. களவு நெறியிற் காதலுறவு கொண்டு பல்வேறு நெறியினும் அதனை வளர்த்து வரும் தலைமக்களிடையே , தலைவியுள்ளத்துக் காதல் மாண்புறுவது கருதி, அதனை நீட்டித் தொழுகுகிறான் தலைமகன். அவளுடைய மேனி வேறுபாடு கண்ட பெற்றோர் அவளை இல்லிகவாதபடிச் செறிக்கின்றனர். அதனால் தலை மகனை ஓரொருகால் தலைவி மனைப்புறத்தே கண்டு அளவ ளாவி இன்புறுதல் அவளது செயல் வகையாகிறது. ஒருநாள் அவன் தலைவி மனையின் ஒரு சிறைக்கண் வந்து நிற்ப, அதனை அறிந்த தோழி, அவனுக்கு இற்செறிப்பை உணர்த்தி வரைவு கடாவும் கருத்துட்கொண்டு தலைவியொடு உரையாடுவாள் போன்று, “தோழி, நின் கைவளை நெகிழவும் அல்குல் அவ்வரி வாடவும் நுதல்பசக்கவும் மேனி வேறுபடுதற்குக் காரணமான இந்நோய் காதலனால் உண்டாயது என்பதை அறியாமல் அன்னை வேலனை வினவுகின்றாள். அவன் கழங்கிட்டுக் கண் டுரைக்குமாற்றால் நம் தலைவன் தொடர்பு தர வந்த இந்த நோய் தணியுமாயின் அத்தொடர்பின் மெய்ம்மை இனிது துணியப் படும்; ஆகவே அன்னை செய்வது நன்றே”என்று இசைக் கின்றாள். இதனால், தலைமகள் எய்திய வேறுபாடும், அது காரணமாக அன்னை முருகயர்தலும், அது தலைவியின் கற்பு நெறிக்கு மாறாய் ஏதம் விளைவிப்பதுமாகிய கருத்துக்களைக் குறிப்பாய் உணர்த்தித் தலைமகனை விரைவில் வரைந்து கொள்ளுமாறு தூண்டும் ஒட்பம் நன்கு வெளிப்படக் கண்ட ஆசிரியர் சிறுமேதாவியார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளார். அதனை இனிக் காண்போம். தோடமை செறிப்பின் இலங்குவளை நெகிழக் கோடேந் தல்குல் அவ்வரி வாட நன்னுதற் பாய படர்மலி அருநோய் காதலன் தந்தமை அறியா 1துரைத்த அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் கிளவியின் தணியின் நன்றுமன் சாரல் அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை ஆடுமழை மங்குலின் மறைக்கும் நாடுகெழு வெற்பனொ டமைந்தநம் தொடர்பே. இது,சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. உரை : தோடமை செறிப்பின் இலங்குவளை நெகிழ - தொகுதிப் படச் செறிதலை யுடையவாய் விளங்குகின்ற வளைகள் நெகிழவும்; கோடு ஏந்து அல்குல் அவ்வரி வாட - பக்கம் உயர்ந்த அல்குலிடத்து அமைந்த அழகிய வரிகள் சுருங்கவும்; நன்னுதல் பாய படர்மலி அருநோய்-நல்ல நுதலின்கண் பசலை பரவவும் தோன்றிய வருத்தம் மிகும் பொறுத்தற்கரிய வேட்கை நோய்; காதலன் தந்தமை அறியாது உரைத்த - காதலனாகிய தலைமகன் தர வந்தது என்பதை அறியாமல் சொல்லிய; அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் - தெய்வத் தன் மையையுடைய கழங்கும் உலகியலறிவு முடைய வேலனது ; கிளவியின் தணியின் - சொல்லால் நீங்குவதாயின்; நன்றுமன் - மிகவும் நன்றாம்; சாரல் அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ்புகை - மலைச்சாரலிடத்தே அகில் கட்டையை எரிக்கும் குறவன் சருகுகளைக் கொளுத்துதலால் எழும் மணமிகும் புகை; ஆடுமழை மங்குலின் மறைக்கும் - அசைகின்ற மழை மேகம் போலப் பரந்து மறைக்கும்; நாடுகெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பு - மலைசூழ்ந்த நாடனாகிய அத் தலைவனொடு உண்டாகிய நமது காதலுறவு எ.று. படர்மலி அருநோய் காதலனாகிய நாடுகெழு வெற்பன் தந்தமை அறியாது உரைத்த வேலன் கிளவியின் தணிகுவதாயின், அவனோடு அமைந்த நம் தொடர்பு நன்றுமன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க . தோடு, தொகுதி. ஒன்றிரண்டன்றிப் பலவாய் அணியப்படுதலின், தோடமை செறிப்பு என்றார். கோடு, பக்கம். வரிகள் வாடுதலாவது சுருங்குதல். நுதற்கண் பரந்து நிலவுவது பசலையாதலின், அது வருவிக்கப்பட்டது. படர், வருத்தம். பொறுத்தற் கருமை தோன்ற அருநோய் என்றார்; மாறான மருந்து மாயங்களால் நீங்கும் உடலுறு நோய் போலாது காதற்கூட்டத்தால் நீங்கும் அருமையுடைமைபற்றிக் காமநோயை அருநோய் என்றார் என்றுமாம். வேலன் தெய்வம் பராவிக் கழங்கு கருவியாகக் கொண்டு கூறுதல் பற்றி, அணங்குறு கழங்கு எனப்பட்டது. தன்னை வினவுவோர் மனக்குறிப்பறிந்து அவர் உடன்படத் தகுவனவே தேர்ந்து சொல்லும் அறிவு வழிவழியாகப் பெற்றவனாதலின் வேலனை முதுவாய் வேலன் என மொழிப. வெறியயர்தற்குரிய நெறி முறைகளைச் சிறப்புற அறிந்துள்ளமை தோன்ற இவ்வாறு கூறினாரென்றுமாம். தணியின் எனவே தணியாமை பெற்றாம். கள்ளிமரத்தைச் சுட்டு அகில் எடுக்கப்படுதலின், அது செய்யும் கானவனை, அகில்சுடு கானவன் என்றும், அதனையும் அவன் சருகுகளைப் பெய்து சுடுமாறு தோன்ற, உவல்சுடு கமழ் புகை என்றும் கூறினார். மங்குல், கருமையும் வெண்மையும் கலந்த நிறமுடைய மேகம். மன், மிகுதிப் பொருட்டாய பெருமை மேற்று; இடைச்சொல். நெகிழ, வாட, பாய, உளதாகிய நோய் என இயைக்க. தலைமகன் வரைவு நீட்டித்தலால் உடம்பு சுருங்கியும் உறக்கமின்றியும் பசலைபாய்ந்தும் வருந்தினமை குறித்தலின் இலங்கு வளைநெகிழ அவ்வரிவாட, நன்னுதற்பாய என்றும், தலைமகனையே நினைந்து நெஞ்சுருகும் தலைமகளின் ஆற்றா மையை விளங்கக் காட்டும் குறிப்பினளாகலின் படர்மலி அருநோய் என்றும், அது தாயறியத் தோன்றி வேலனால் காரணம் ஆராயப்படும் அளவு மிக்கது என்றும் கூறினாள். தலைமகற்கும் தலைமகட்கும் தனக்குமல்லது நோய்க்காரணம் பிறர்க்குத் தெரியாதென்றற்குக் காதலன் தந்தமை அறியாது எனவும், வேலன் அதனை ஆராயத் தொடங்கிக் கழங்கிட்டும் காணானாயினன் என்பாள், அறியாதுரைத்த அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் எனவும், ஆகவே அவன் சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் பயன்படா என்பதைக் கிளவியின் தணியின் எனவும், தணியுமாயின்,தலை மகனோடு உளதாகிய காதலுறவின் திட்பம் இனிது விளங்குமாகலின் வெற்பனொடு அமைந்த நம்தொடர்பு நன்றுமன் எனவும் கூறினாள். சுட எழுந்த புகை மழை முகில் போல வானத்திற் படர்ந்து மறைக்கும் என்றது, வேலன் உரைக்கும் கிளவி இவளுற்ற நோய் தீரு மருந்து போல் பரவி, அது தலைமகனால் உளதாயிற் றென்பதை மறைக்கும் என்றவாறு. அகிலைச் சுடுதற் கிட்ட தீயாகலின் அதனா லெழும் புகை மணம் கமழ்வதாயிற்றென்க. இதனாற் பயன் தலைமகன் கேட்டுத் தலைவியின் காதல் மாண்புணர்ந்து வரைந்து கொள்வானாவது. 283.மதுரை மருதன் இளநாகனார் களவின்கண் தோழியிற்கூட்டம் பெற்று அவள் துணையால் பகற்குறிக்கண் தலைமகளைத் தலைப்பெய் தொழுகிய தலை மகன் அதனையே நீட்டித்தான். அதனால் தலைமகட்கு ஆற் றாமை மிகுந்தது. அது கண்ட தோழிக்கு அவனை வரைவு கடாவல் கடனாயிற்று. ஒருநாள் பகற்குறிக்கண் வந்து நீங்கும் போது அவனைத் தோழி எதிர்ப்பட்டு, “கடலின்கண் உலகு தொழத் தோன்றும் ஞாயிறு போல வழுவாத வாய்மை நின்பால் உளது. இருப்பினும் நின் சொல்லை நயந்து நினக்கு உரிய ராயினோர் ஏங்கி வருந்துமாறு நீ நீட்டித்தல் தகவன்று” என்று கூறினாள். தோழியின் இக்கூற்றின்கண், தலைமகனை வரைவுகடாவு பவள் அவனுடைய வாய்மையைப் பாராட்டித் தன் கருத்தைச் சாதிக்கும் திறம் கண்ட ஆசிரியர் மருதன் இளநாகனார்1 அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற கண்ணேர் ஒப்பின் கமழ்நறு1 நெய்தல் அகல்வரிச் சிறுமனை அணியும் துறைவ 2நல்லை யல்லைஎம் சின் மெல் லோதி வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய இன்னை யாகுதல் தகுமோ ஓங்குதிரை முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்றநின் 3சொல்நயந் தோர்க்கே. இது, பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று வேறுபடாது ஆற்றினாயென்று சொல்லியதூஉமாம். உரை : ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற-ஒள்ளிய நெற்றியை யுடைய பெண்கண் உயர்ந்த கரையையுடைய கழியின்கட் பறித்த; கண்நேர் ஒப்பின் - கண்களை நேராக ஒத்திருத்தலை யுடைய; கமழ் நறுநெய்தல் - நறிய மணம் கமழும் நெய்தற் பூக்களைக் கொண்டு; அகல்வரிச் சிறுமனை அணியும் துறைவ-அகன்ற வரிகள் பொருந்த மணலால் அமைந்த சிறுவீட்டை அணி செய்யும் துறையையுடைய தலைவனே; நல்லையல்லை - நீ நற்பண்பு உடையையல்லை போலும்; எம் சில் மெல்லோதி - சிலவாகிய மெல்லிய கூந்தலையுடைய எம் தலைவியின்; வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய - ஒப்பனை வல்லுநர்களால் ஆராய்ந்து காணப்பட்ட பழமையான அழகு கெடுமாறு; இன்னை ஆகுதல் தகுமோ - இத்தகைய தன்மையை உடையையாவது நினக்குத் தகுவதாகுமோ; ஓங்குதிரை முந்நீர்மீமிசை - உயர்ந்த அலைகளையுடைய கடலின்மேல்; பலர் தொழத் தோன்றி-பலரும் கண்டு தொழா நிற்பத் தோன்றி; ஏமுற விளங்கிய சுடரினும் - உயிர்கள் இன்புற விளங்கும் ஞாயிற்றினும்; வாய்மை சான்ற நின் சொல் நயந் தோர்க்கு - மெய்ம்மை யமைந்த நின் சொல்லைத் தேறி மேற்கொண்டவர்க்கு எ.று. துறைவ, நல்லையல்லை; நின்சொல் நயந்தோர்க்குத் தொல் கவின் தொலைய இன்னையாகுதல் தகுமோ? தகாது அன்றே எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இயற்கையாகவே ஒளிமிக்குத் திகழும் நெற்றியென்றற்கு ஒண்ணுதல் என்றார். மகளிர் என்றது, விளையாடும் பருவத்து இளமகளிரை என்க. குறுதல், கொய்தல். நிறத்தாலும் வடிவத்தாலும் கண்ணை நிகர்த்தலின், கண்ணேர் ஒப்பின் நெய்தல் என்றார்; “இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்1” என வருதல் காண்க. இருகையாலும் மணலைக் குவித்து மனைவகுக் குங்கால் உள்ளும் புறமும் அகன்ற வரி பெறுதலின், அகல்வரி என்றும், மணல் வீடு என்பது தோன்றச் சிறுமனையென்றும் சிறப்பித்தார். அணிதல், ஒப்பனை செய்தல். தொல்கவின், கைசெய்யப் பிறவாத இயற்கையழகு; செயற்கை யழகு தொல்கவின், எனப்படாது. காலையில் ஞாயிறு கடலின் கண் எழும்போது சமயவொழுக்கினர் பலரும் வழிபட்டுத் தொழுதல் இயல்பாதலின் பலர் தொழத் தோன்றி என்றார். “தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி, வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்2”. வாய்மைக்கு ஞாயிற்றை எடுத்துக் காட்டல் மரபு “காலை யன்ன சீர்சால் வாய்மொழி3” என்று சான்றோர் கூறுப, தலைமகனைப் பகற்குறிக்கண் எதிர்ப்பட்டுத் தலைவியது வேறுபாடு கூறி வரைவுகடாவும் தோழி, உள்ளுறையால் தகுதி கூறி வற்புறுத்துகின்றாளாகலின், வெளிப்படையில் நல்லை யல்லை என்றும், தலைமகளது மெலிவை விதந்து வல்லோ ராய்ந்த தொல்கவின் தொலைய என்றும் தகவுடையாரைச் சேர்ந்தோர் தமது நலமழியக் கண்டிருத்தல் அவர் தகைமைக்குப் பொருந்தா தென்பாள், இன்னை யாகுதல் தகுமோ என்றும் கூறினாள். ஞாயிற்றினும் வாய்மை சான்றமை பற்றியே யாம் நின் சொல்லைத் தேறி மேற்கொண்டேம் என்பாள், சுடரினும் வாய்மை சான்ற நின்சொல் நயந்தோர்க்கு என்றாள்.இது தன்னைப் பிறன் போற் கூறும் குறிப்பு. தொல்கவின் தொலைய என்றது, உடம்பு நனி சுருங்கல். கழியிடத்துக் குற்ற நெய்தல் மலரை ஒண்ணுதல் மகளிர் தமது சிறுமனைக்கண் சேர்த்து அணி செய்யும் துறைவ என்றது, நீயும் இவளை வரைந்துகொண்டு சென்று நின் மனையை விளக்குதல் நினக்குத் தகுதியாகும் என வற்புறுத்தியவாறு. “மனைக்கு விளக்கம் மடவார்”. “மனைக்கு விளக்காகிய வாணுதல்1” எனப் பிறரும் கூறுதல் காண்க. இது கேட்டுத் தலைவன் வரைவு மேற்கொள்ளுவானாவது பயன். 284.தேய்புரிப் பழங் கயிற்றினார் மனையறம் புரிந்தொழுகும் தலைமக்களுள் பொருள்வயிற் பிரிந்து செல்ல வேண்டிய இன்றியமையாமை ஒருகால் தலை மகற்குண்டாயிற்று. அதனை அவன் தலைமகட் குணர்த்திய போது அவள் அவனது பிரிவாற்றும் மதுகையின்றி வருந்தினாள். அவளது காதற்பெருமையும் கலங்கிய தோற்றமும் அவன் கருத்தில் நன்கு பதிந்தன; ஆயினும், கடமை சிறந்தமை யெண்ணி அவளை ஒருவாறு தேற்றி விடைபெற்றுச் சென்றான். சென்றவன், பொருட்குரிய வினைவகைகளுள் ஈடு பட்டிருக்கும்போது, அவன் உள்ளத்தில் தலைவியின் காதல் தோன்றி அவன் அறிவை அலைக்கத் தொடங்கிற்று, ஒருபால், நிறையுணர்வு எழுந்து வினையைக் குறைபடச் செய்து நீங்குதல் ஆண்மகற்கு அறமா காது என்றும், அதனால்அவற்கு இளிவரவே எய்தும் என்றும் அறிவுறுத்தியது. இவ்வாறு, காதலும் நிறைஉணர்வும் இரண்டும் ஒன்றுக்கொன்று மாறி நின்று பிணங்கியது. அவன் உயிர்க்கு மிக்க நோயைச் செய்தது. அதனால் அந்நிலையில் அவனுடைய நெஞ்சம், காதலி பக்கல் நின்று. இன்னே சென்று அவள் துய ரத்தைப் போக்குவதே செய்யத்தக்கது என்றது; உடனே, அறிவு முற்பட்டு நின்று, உள்ளத்தில் உறுதியோடு ஆராய்ந்து மேற் கொண்ட வினையை முடிக்காமற் சேறல் எய்யாமையையும் இளிவரவையும் பயந்து உலகோர் இகழுமாறு செய்யும் என்று இசைத்தது. இவற்றைத் தனக்குள்ளே கண்டு நின்ற தலைமகன், நெஞ்சமும் அறிவும் நிகழ்த்தும் போர் ஒரு பழங்கயிற்றின் இருதலையும் முறையே ஒவ்வொன்றாக இரு கயிறுகள் பற்றி ஒன்றினொன்று மாறாக ஈர்ப்பது போல்வது கண்டான். இரு களிறும் ஈர்த்தலால் பழங்கயிறு புரி யறுபட்டுச் சிதைவது போல, என் உயிரும் வலியிழந்து கெடும்போலும் என மொழிந்தான். தலைவனுடைய இக்கூற்றின்கண், தன்னின் வேறாக உள்ளத்தை நிறுத்தி, அதன்கண் நெஞ்சமும் அறிவும் உறுதி முதலியனவுமாகிய உணர்வுகள் நின்று மக்கள்வாழ்வை இயக்கும் திறங்கள் வெளிப்படக் கண்ட இச்சான்றோர், அவற்றை இனிய ஒரு சொல்லோவியம் செய்து, தேய்புரிப் பழங்கயிற்றைப் பற்றி யீர்க்கும் இருகளிறுகளை உவமித்து இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். நெஞ்சுக்கும் அறிவுக்கும் இடைப் பட்ட தன் உயிர்க்கு, இருகளிறுகட்கும் இடைப்பட்ட தேய்புரிப் பழங்கயிறு ஒன்றை உவமித்துரைத்த இவ்வாசிரியரது புலமை நலம் கண்ட சான்றோர் இவரைத் தேய்புரிப்பழங்கயிற்றினார் எனச் சிறப்பித்துக் கூறுவாராயினர். அச்சிறப்பு நாடெங்கும் பரவினமையின், அவரது இயற்பெயர் மறைந்தது; சிறப்புப் பெயரே இன்றும் நிலவுகிறது. இவர் போலவே மீனெறி தூண்டிலார், பதடி வைகலார், அணிலாடு முன்றிலார் எனப் பலர் தமது சொன்னலத்தாற் பெற்ற சிறப்பையே இயற்பெயராகப் பெற்றுள்ளனர். புறந்தாழ் பிருண்ட கூந்தல் போதின் 1நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியா தெவ்வம் செய்தல் எய்யா மையோ டிளிவுதலைத் தருமஎன உறுதி தூக்கத் தூங்கி அறிவே 2சிறுநனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்என் வருந்திய3 உயிரே4 இது, பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது. உரை : புறம் தாழ்பு இருண்ட கூந்தல் -முதுகிடத்தே தாழ்ந்து கிடக்கும் கரிய கூந்தலையும் ; போதின் நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண் - நெய்தற்பூவின் நிறம் பொருந்திய குளிர்ந்த இதழ்களால் பொலிந்த மை தீட்டிய கண்களையு முடையாளாய்; உள்ளம் பிணிக் கொண்டோள்வயின் -உள்ளத்தைப் பிணித்துக்கொண்டவளாகிய காதலியிடத்து; செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் நெஞ்சம் - தோன்றி வருத்தும் வருத்தத்தைத் தீர்ப்பது குறித்து மீள்வாம் என்று சொல்லுகின்றது நெஞ்சம்; செய்வினை முடியாது எவ்வம் செய்தல் - மேற்கொண்ட வினையை முடிக்காமல் குறைபட விடுவது; எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என - நமக்கு அறியாமையைப் பயப்பதுடன் மானக் குறைவையும் உண்டு பண்ணும் என்று; உறுதி தூக்க -உறுதி பயக்கும் நல்லுணர்வு உயர்த்திக் கூறலால்; தூங்கி - தெளிவுபெறாது கலங்கி; அறிவு சிறுநனி விரையல் என்னும் - அறிவானது விரைந்து துணிவு செய்தலைச் சிறிது தவிர்க்க என்று உணர்த்தாநிற்கின்றது; ஆயிடை - அவ்விடத்தே; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறுபற்றிய - விளங்குகின்ற உயர்ந்த மருப்புக்களையுடைய களிறுகள் இரண்டு இருதலையும் தனித்தனியே பற்றி ஈர்த் தலால்; தேய்புரிப் பழங்கயிறு போல - தேய்ந்து புரியறுபடும் பழைமையான கயிற்றைப் போல; வீவது கொல்-அற்றுக் கெடுவது போலும்; என் வருந்திய உயிர் - எனது வருந்தி மெலிந்த உயிர் எ.று. நெஞ்சம் செல்வாம் என்னும்; அறிவு உறுதி தூக்கத் தூங்கி விரையலென்னும்; ஆயிடை, என்உயிர், களிறு மாறுபற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல, வீவதுகொல் என மாறிக் கூட்டி வினைமுடிவுசெய்க. நீண்டு வளர்ந்த கருங்கூந்தல் முதுகிடத்தே வீழ்தலின், அதனைப் புறந் தாழ்பு இருண்ட கூந்தல் என்றார். மையுண்ட கண் நெய்தல் மலரின் தண்ணிய இதழ் போறலால் போதின் நிறங்கிளர் ஈரிதழ் எனப்பட்டது . “நீனிற நெய்தலிற் பொலிந்த வுண்கண்1” என்று சான்றோர் குறிப்பது காண்க. பிணிக்கொண்டோள், பிணித்துக் கொண்டவள். செய்யுளாகலின், ஆவோவாயிற்று, செல்லல், இன்னாமை; ஈண்டுப் பிரிவுத் துன்பத்தின் மேற்று. தீர்க்கம் முற்றெச்சம். செய்வினை, செய்தற்கு மேற்கொண்ட வினை. எவ்வம் செய்தல்,முற்ற முடியாது குறை பட விடுதல். எய்யாமை அறியாமை. ‘வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு1” என்பது பற்றி இளிவு தலைத்தரும் என்றார். இளிவு எள்ளப்படுதற்குரிய இழிநிலை. “எள்ளின் இளி வாம்2”என்பது காண்க. உறுதியாவன காண்பதே அறிவின் செயலாதலின், உறுதி தூக்க என்றும், தெளிவு பிறவாமையின் கலங்கினமை தோன்றத் தூங்கி என்றும், கூறினான். அறிவு இனிது செயற்பட்டுத் தெளிவு பெறல் வேண்டின், அதற்கு அசைவு சிறிதுமின்றி அமைதி சான்ற சூழ்நிலை வேண்டுதலின், சிறுநனி விரையல் என்று அறிவு கூறுவதாயிற்று, ஒளியும் உயர்ச்சியும் ஒருங்கமைந்த மருப்பினையுடைய களிறு என்றற்கு ஒளிறு ஏந்து மருப்பின் களிறு என்றார். பிறரும், “ஒளிறேந்து மருப்பின் நும் களிறும் போற்று மின்3” என்பது காண்க, கயிற்றைக் கருவி கொண்டு அறுக்காமல் ஈர்த்தவழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றி,தேய்புரிக் கயிறு என்றும், வன்மையின் கழிவு தோன்றப் பழங்கயிறு என்றும் கூறினார். பிரிவு மேற்கொண்ட தலைமகன் தலைவிபால் விடை பெற்றபோது வருத்த மிகுதியால் அவள் கூந்தல் முடியவிழ்ந்து முதுகிடத்தே கிடந்தமையின், அதனையே விதந்து புறந்தாழ்பு இருண்ட கூந்தல் என்றும், பின்பு அவள் தன்னை நோக்கிய போது கண்கள் நீர் சொரிந்தமையின் மையுண்ட இதழ்கள் நீரால் நனைந்திருந்தமையின், போதின் நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த வுண்கண் என்றும், பிரிந்த விடத்து அக்கண்களும் கூந்தலும் அவன் நெஞ்சில் நிலைபேறு கொண்டமை பற்றி உள்ளம் பிணிக் கொண்டோள் என்றும், கூறினான். “நீரொடு பொருத வீரிதழ் மழைக்கண், இகுதரு தெண்பனி யாகத் துறைப்பக் கானிலை செலாது கழிபடர்க் கலங்கி, நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு, அறல்மருள் கூந்தலின் மறையினள்4” எனப் பிறரும் கூறுதல் காண்க. நெஞ்சின்கண் நிகழும் நினைவெல்லாம் தலைவியின் உருநலம் குணநலம் செயல் நலங்களேயாக இருப்பது பற்றி நெஞ்சை , உள்ளம் பிணிக்கொண்டோள் என்றான். “நெஞ்சு பிணிக் கொண்ட அஞ்சிலோதி1” எனப் பிறாண்டும் தலைமகன் கூறுதல் காண்க. பொருணோக்கிச் செல்கின்ற தன்னை மேலும் செல்லாவாறு பிணித்து மீளுதல் வேண்டும் என்றற்கு நெஞ்சு காட்டும் காரணம் இது வென்பான், நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் என்றும், செய்தற்கென மேற்கொண்ட வினையை முற்ற முடியாது இடைக்கண் முரிந்து மடங்கியவழி, அதற்குரிய துணையும் கருவியும் பிறவும் பயனின்றி ஒழிதலால், அதனைச் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் என்றும், செய்வினையை முடியாமையால் செய்முதலாகிய தலைமகன் செய்திறன் இலன் எனவும். அறிவிலன் எனவும், மானமிலன் எனவும் கூறி உலகவர் இகழ்வர் என்பது பற்றி எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என்றும் எண்ணுவானாயினான். நெஞ்சம் உடல்வழி நின்று அதன் செயலாகிய உடம்புதரு பணிக்கண் இயைந்தொழுகு மாகலின், வினைமாண்பு நோக்காது, செல்லல் தீர்க்கம் செல்வாம் என்று சொல்லுவதாயிற்று. உடலையும், அதன் பணியையும், அதனை இயக்கும் உயிரையும், அதற்கு வேண்டும் உறுதியாகிய மான மாண்புகளையும் சீர் தூக்கி நெறிப்படுத்துவது உயிரறிவாகலின், செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத் தரும் என வுரைத்து, சிறுநனி விரையல் என்று அறிவு எழுந்து வற்புறுத்துவ தாயிற்று. அறிவும் நெஞ்சும், உயிர்க்கு இருமருங்கும் நின்று அதனை ஈர்த்தலால், அது வலியிழந்து கையறவுபட்ட திறத்தை, ஆயிடை ஒளிறேந்து மருப்பின் களிறு மாறுபற்றிய தேய் புரிப் பழங்கயிறுபோல வீவது கொல் என் வருந்திய உயிர் என்று கூறினான். காதல் வாழ்வில் கடமைவழித் தோன்றிய பிரிவாற் பேதுற்ற தலைமகன், தன் நெஞ்சினையே நோக்கி “விருந்தின் வெங்காட்டு வருந்தும் யாமே, ஆள்வினைக் ககல்வாம் எனினும், மீள்வாம் எனினும் நீ துணிந்தது,ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே2”என்று ஆராய்வது ஈண்டு நினைவு கூரத் தக்கதாம். இதனாற் பயன் விரைந்து மீள்வானாவது. “நோயும் இன்பமும் இருவகை நிலையில்3” எனத் தொடங்கும் நூற்பா வுரையில், இப்பாட்டைக் காட்டி, “இஃது உணர் வுடையது போல இளிவரல்பற்றிக் கூறியது” என்பர் நச்சினார்க் கினியர். “ஞாயிறு திங்கள் அறிவே நாணே1” என்ற நூற்பா வுரையில் இப்பாட்டின், “உறுதி தூக்கத் தூங்கி யறிவே, சிறுநனி விரைய லென்னும்” என்ற அடிகளைக் காட்டுவர் இளம்பூரணர். 285. மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் எனவும், மதுரைப் பொன்செய்கொல்லன் வெண்ணாகனார் எனவும் இச்சான்றோர் பெயர் ஏடுகளில் காணப்படுகிறது. தண்காற் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்றொரு சான்றோர் பெயர், சங்கச்சான்றோர் நிரலுட் காணப்படுகிறது. அவர் இவரின் வேறல்லர் என்று கருதுவோருமுண்டு. அஃது உண்மையாயின், தண்கால் அவரது ஊரென்றும், மதுரைக்கண் தங்கித் தொழில் செய்தது பற்றி மதுரைத் தண்காற் பொற்கொல்லன் வெண்ணாகனார் எனப் பட்டா ரென்றும் கோடல் வேண்டும். வெண்ணாகன் என்பது இயற்பெயர். இவர் பாடியதாக ஒரு பாட்டு அகநானூற்றில் உளது. தண்கால், இப்பொழுது திருத்தங்கால் என வழங்குகிறது. இவ்வூர்க் கல்வெட்டுக்கள், “இராசராசப் பாண்டி வளநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால்1” என்று கூறுகின்றன. தலைமகளோடு தனக்குளதாகிய களவுக் காதலுறவு சிறக்குமாறு தலைவன் வரைவை நீட்டித் தொழுகி னான். அதனால் தலைமகட்கு ஆற்றாமை மேலிட மேனி மெலிந்து அவள் வேறுபடலா னாள். அஃது ஊரவர்க்குத் தெரிந்து அம்பலாய்ப் பின்னர் அலர் பயப்பதாயிற்று2, அதனை அறிந்த தோழி, இது பெற்றோர்க்குத் தெரியின் செறிப்பு மிகுதியும் காவற் கடுமையும் விளைவித்து முடிவில் தலைமகட்கு ஏதம் எய்து விக்கும் என்ற அச்சத்தால், தலைவனது வரவு நோக்கி யிருந்தாள் தோழி; ஒருநாள் அவன் சிறைப்புறத்தே வந்து நிற்பது உணர்ந்து அவன் செவிப்படத் தலைமகளோடு உரையாடுவாள் போன்று, “தோழி! காதலன் அரவுகள் இரைதேடும் இருள் மிக்க நள்ளிரவில் வருகின்றான்; அதுவேயன்றி அயலவர் எடுத்த அம்பலும் அலரும் கேட்டும் பொருள் செய்யாது , பகற்போதினும் வாராநின்றான்; இவ்வகையால் அவன் தனக்கேயன்றி நமக்கும் ஏதம் செய்கின்றா னாதலால், அவன்தொடர்பு நமக்கு நலம் செய்வதன்று” என்றாள். தோழியின் இக்கூற்றால், அலரச்சமும் காப்பு மிகுதியும் அறிவுறுத்தித் தலைமகனைத் தோழி வரைவுகடாவும் நயம் விளங்குதல் கண்ட வெண்ணாகனார் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள் இரவின் வருத லன்றியும் உரவுக்கணை வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு 1வளைவாய் ஞமலி ஒருங்குபுடை யாட வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட நடுகாற் குரம்பைத்தன் குடிவயின் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே நன்றால் வாழி தோழி என்றும் அயலோர் அம்பலின் அகலான் பகலின் வரூஉம் எறிபுனத் தானே. இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்ப அம்பலும் அலருமாயின என்று சொல்லியது. உரை : அரவு இரை தேரும் ஆரிருள் நடுநாள் - பாம்புகள் தமக்குரிய இரையை நாடித் திரியும் இருள்பரந்த நள்ளிர வாகிய; இரவின் வருதல் அன்றியும் - இரவுக் காலத்தில் வருவதேயன்றி; உரவுக்கணை வன்கைக் கானவன் - வலிய அம்புகளையும் வன்மை பொருந்திய கையினையுமுடைய கானவன்; வெஞ்சிலை வணக்கி - வெவ்விய வில்லை வளைத்து; உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு - நெஞ்சின் கண் தைத்துத் தங்குமாறு அம்பு செலுத்தி வீழ்த்தப்பட்ட முள்ளம்பன்றியுடனே; வளைவாய்ஞமலி ஒருங்கு புடையாட - வளைந்த வாயையுடைய நாய்கள் பக்கத்தே கூடிக் குரைத்துக் கொண்டு வர; வேட்டு வலம்படுத்த உவகையன் - வேட்டை யாடி வென்றதனால் உண்டான மகிழ்ச்சியுடையனாய்; காட்ட நடுகால் குரம்பை தன் குடிவயின் பெயரும் - காட்டின் கண்ணிருந்து வெட்டிக் கொணர்ந்த கால்களை நட்டுக் கட்டிய குச்சிவீடுகளையுடைய தன் ஊர்க்குச் செல்லும்; குன்ற நாடன் கேண்மை - குன்றுகள் பொருந்திய நாடனாகிய தலைமகனுடைய நட்பு; நமக்கு நன்று - நமக்கு நலம் தருவதாக; தோழி-; வாழி-; என்றும்- எப்போதும்; அயலோர் அம்பலின் அகலான் - அயலார் எடுத்துரைக்கும் அலர்கேட்டு அஞ்சி நம்மை நீங்குவது இலனாதலோடு; பகலின் வரூஉம் எறிபுனத் தான் - பகற்போதில் குறியிடத்து வருதலில் தவிர்தலும் இலன் காடு எறிந்து செய்யப்பட்ட தினைப்புனத்துக்கு தோழி, குன்றநாடன் கேண்மை நமக்கு நன்று; அம்பலின் அகலான்; எறிபுனத்தான் வரூஉம் அகலான் எனக்கூட்டி வினை முடிவு செய்க. நள்ளிரவில் இரைதேடித் திரியும் இயல்பு மலைப் பாம்பு களிடத்தே பெரும்பாலு முண்மை யின், அரவு என்றது, அவற்றை யென்க. நடுநாள், நள்ளிரவு. உரவுக்கணை, வலிய அம்பு. கொலைக் கருவியாதல் பற்றி, வில் வெஞ்சிலை எனப் பட்டது. உளம், மார்பு. பாய்ந்து ஊடுருவி யோடாது உடற் கண்ணே நிற்குமாறு செலுத்திய அம்பு அங்கே தங்கி மிக்க நோயினைச் செய்யுமென்பது பற்றி உளமிசைத் தவிர்த்த என்றார். முளவுமா, முள்ளம்பன்றி. “தண்புதல் குருதியொடு துயல்வர முளவுமா தொலைச்சும் குன்றநாடன்1” என்பது காண்க. ஏற்றை, ஈண்டு ஆண்பன்றி. வேட்டை நாயின் பற்கள் உட்புறமாக வளைந்து, பற்றிய பொருள் எளிதின் நீங்காதவாறு அமைந் திருப்பது பற்றி வளைவாய் ஞமலி என்றார். ஞமலி, நாய். வலம்படுத்தல், வலத்தே வீழச் செய்தல். வலம்பட வீழ்த்தல் புலிக்கன்றோ இயல்பு என்பதாயின், வலம்படுத்தலாவது தாக்கப் பட்ட விலங்கின் வலியை யழித்தல் என்று உரைக்க. குரம்பை, வீடு. குடி, ஊர்; சிறுகுடி, வேள்விக்குடி என்றாற்போல. நன்றால்: ஆல் அசைநிலை. அயலோர், அயலேயுள்ள மனைகளில் வாழும் பெண்டிர். எறிபுனம், தினையறுக்கப்பட்ட கொல்லை. சிறைப்புறத்தே தலைமகன் போந்து நிற்பதுணர்ந்து, அவன் செவிப்படுமாறு தலைவியோடு சொல்லாடலுற்ற தோழி, அலரச்சம் கூறி அவனை வரைவுகடாவும் கருத்தினளாயினும், இரவுக்குறிக்கண் போதரும் அவனது நெறியின் கொடுமையைச் சுட்டி, அரவு இரை தேரும் ஆரிருள் நடுநாள் என்றும், இத்துணைக் கொடுமையுடைய நெறியாயினும் நம்பொருட்டு வருதல் தவிர்வதிலன் என்பாள், இரவின் வருதலன்றியும் என்றும், பகற்குறிக்கண் வருதலால் உண்டாகும் அலரச்சம் கூறுகின்றாளாதலின், என்றும் அயலோர் அம்பலின் அகலான் என்றும், எறிபுனத்துக்கண் அவன் வரவு யாவர்க்கும் தெரிய நிகழ்தலின், அயலோர் அலர் கூறுதல் எளிதாயிற்றென வற் புறுத்தற்கு எறிபுனத்தான் என்றும் கூறினாள். இங்ஙனம் இரவி லும் பகலிலும் தன் வரவால் ஏதம் நிகழுமாயினும், நம் பொருட்டு வருதலால் அவனது கேண்மை நலம்பயப்பது என் பாள், நாடன் கேண்மை நமக்கே நன்றால் என்றும், ஏத மெண்ணித் தலைவி வருந்துமாறு பற்றி ஆற்றுவிப்பாளாய்த் தோழி வாழி என்றும் கூறினாள். நாய் ஒருங்கு புடையாடப் பன்றியை வேட்டுவலம்படுத்த நாடன் என்றது , அயலவர் கூடி அம்பலும் அலரும் கூற நின்னைத் தன்பாற் படுத்த தலைமகன் மிக்க உவகையனாய் நின்னை வரைந்து கொண்டு தன்னூர்க்குச் செல்லற்பாலன் என்று தோழி உள்ளுறுத்துரைத்தவாறு. இதனை உள்ளத்தே கொண்டு தலைவன் விரைந்து வரைவு மேற்கொள்வா னாவது பயன். 286.துறைக்குடி மாவிற் பாலங்கொற்றனார் துறைக்குடி என்பது இச்சான்றோரது ஊர்; சில ஏடுகளில் துறுகுடி என்றும் இது காணப்படுகிறது. மாவிற் பாலன் என்பார் இச் சான்றோரின் தந்தை. பெரிய வில்லேந்தினமைபற்றி பாலனார்க்கு மாவிற்பாலன் என்ற சிறப்பு உண்டாயிற்றுப் போலும். வல்வில் ஓரி என வில்லாற் சிறப்புற்றவரும் அந்நாளில் உண்டு. பாலன் என்ற பெயர் பண்டைச் சான்றோரிடையே வழங்கினமை மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் என அக நானூற்றுச் சான்றோர் நிரலுள் காணப்படும் புலவரால் அறி கின்றோம். அச்சுப் படியில் இவர் பெயர் துறைக்குறு மாவிற் பாலங் கொற்றனார் என்று குறிக்கப்படுகிறது. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத் தான் கிடைத்துள்ளது. மனையறம் புரிந்தொழுகும் தலைமக்களிடையே, தலைவன் பொருள்வயிற் பிரிய வேண்டிய கடமை தோன்றவே, அதன் இன்றியமையாமையைத் தோழிக்கும் தலைமகட்கும் அமையச் சொல்லி அவர்பால் விடைபெற்று நீங்கினான். ஆயினும், தலைமகட்கு அவன்பிரிவை ஆற்றுதலென்பது அரிதாயிற்று. அவள் தலைமகன் சென்ற சுரத்தின் அருமை நினைந்து, ஆங்குள்ள குன்றம் குமிழ மரத்தின் பூவும் பழமும் உதிர்ந்து பொலிவிழந்து தோன்றும் திறத்தைச் சொல்லிக் கண்ணீர் சொரிந்து, “அவர் நீங்கினமையான் என் உயிரும் நீங்கும் நிலையை எய்தியுளது” எனப் புலம்பினாள். அது கேட்ட தோழி, “நீ இவ்வாறு எல்லாம் சொல்லிக் கண்கலுழ்ந்து அழுதலைச் செய்கின்றாய்; அவர் செலவினை ஆராயுங்கால் நட்டோர் ஆக்கம் வேண்டியும் அன்பால் ஒட்டிய நீ உயரிய அணிகளாற் சிறப்பது வேண்டியும். சென்றுள்ளமை தெளிவாகிறது; அற்றாக, நீ ஆற்றாயாய் வருந்து வது கூடாது காண்” என்றாள். அவளுடைய இக்கூற்றின்கண், நட்டோரை உயர்த்தலும் செற்றோரை வழிதபுத்தலும் நல்லாண்மை யுடைய தலைமகற்குக் கடனாதல் காட்டி, அறிவுறுத்தும் நயம் கண்ட கொற்றனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். ஊசல் ஒண்குழைக்1 காசுவாய்த் தன்ன அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் சென்றோர் மன்ற செலீஇயர்என் உயிர்எனப் 2புனையிழை நெகிழ விம்மி நொந்துநொந் தினைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ தோழிஅவர் சென்ற திறமே இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. உரை : ஊசல் ஒண்குழைக் காசு வாய்த்தன்ன - ஊசல்போல் காதில் அசைகின்ற ஒள்ளிய குழை பொற்காசுடனே கூடித் தோன்றினாற்போல; அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி - வழிக்கரையில் நிற்கும் குமிழமரங்களின் அழகிய இத ழொடு கூடிய பூக்களும் பொற்காசுபோலும் பழங்களும்; கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் - கல்லென்ற ஓசையுடன் உதிர்ந்து கிடத்தலால் புல்லெனப் பொலிவிழந்து தோன்றும் குன்றங்கள் பொருந்திய சுரநெறியைக் கடந்து; சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிரென - தெளிவாகச் சென்றா ராகலின் என் உயிரும் உடன் கழிவதாக என்று; புனையிழை நெகிழ விம்மி நொந்து நொந்து - அணிந்துள்ள இழைகள் நெகிழ்ந்து கழன்றோட மனம் வருந்தி மிகவும் மெலிந்து; இனைதல் ஆன்றிசின் - அழுதலைச் செய்கின்றனை; ஆயிழை - ஆய்ந்து செறிய அணிந்த இழைகளையுடையவளே; நினை யின் - ஆராயுமிடத்து; நட்டோர் ஆக்கம் வேண்டியும் - நண்பராயினார்க்கு வெற்றியும் பொருளும் உண்டாதல் குறித்தும்; ஒட்டிய நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ - உயிரோடு கலந்த காதலியாகிய நின்தோள்கள் உயரிய அணி கலன்களால் வனப் பெய்வது குறித்தும் அன்றோ; தோழி -; அவர் சென்ற திறம்- தலைவர் இப்போது சென்றதன் கருத்து எ.று. ஆயிழை, புல்லென் குன்றம் சென்றோர்; ஆகலான் செலீ இயர் என் உயிர் என இழை நெகிழ விம்மி நொந்து நொந்து இனைதல் ஆன்றிசின்; தோழி, அவர் சென்ற திறம் நினையின். நட்டோர் ஆக்கம் வேண்டியும், நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ? அற்றாக நீ இனைதல் நன்றன்று, அதனை இன்னே கைவிடுக எனச் சில சொற்பெய்து கூட்டி வினை முடிவு செய்க. குமிழின் பூ மகளிர் காதில் அணியும் குழை போன்றலின் ஊசல் ஒண்குழை என்றார். காதிலணிந்த குழையின் அசைவைப் “பூங்குழை யூசற் பொறைசால் காதின1”என்று பிறரும் குறித்தல் காண்க. குமிழின் பழம் மகளிர் அணியும் பொற்காசு போலும் என்பதை, “இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்2” எனப் பிறாண்டும் சான்றோர் உரைப்பதனால் அறிய லாம். கல் விழுந்தாற் பிறக்கும் ஓசையைக் கலலென என்றார் போலும். மன்ற: இடைச்சொல். சென்றார் என்பது சென்றோர் என ஆ ஓவாயிற்று. அடுக்கு, மிகுதிப் பொருட்டு. இனைதல் ஆன்றிசின், ஒரு சொல்லாய் இனைகின்றனை என்னும் பொருள தாயிற்று; “முயங்க லான்றிசின்1” என்றாற் போல. ஒட்டுதல், ஈண்டுக் காதலால் ஒன்றுதல். அற்றாக என்பது முதலாயின குறிப்பெச்சம். சின்: முன்னிலை யசைச் சொல்; “மியாயிக மோமதி இகும்சின் னென்னும், ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்”2 என்று ஆசிரியர் கூறுவது காண்க. தலைமகன் பிரிவின்கண் அவன் சுரம் கடந்து சென்றான் என்பது வந்தோர் சொல்லக் கேட்டுத் தலைவி ஆற்றாமை மீதூர்ந்து வருந்தியது எடுத்தோதும் தோழி, அவள் சுரத்தின் கொடுமை கூறிய பகுதியை ஊசல் ஒண்குழைக் காசு வாய்த் தன்ன, அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி, கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் என்றாள். சுரத்திடை நிற்கும் குமிழ மரங்கள் மலர்ந்த பூக்களையும் பழுத்த பழங்களையும் உதிர்த்தலால் குன்றங்கள் பொலிவிழந்து தோன்றும் என்றது, சுரத்தின்கட் செல்வோர் தாம் ஈட்டக் கருதிய பொருட்குரிய செயல்வகை களையும் ஈட்டிவரும் பொருளையும் கையுதிர்த்து வருந்தும் கொடுமைக்குள்ளாவர் என்பது குறிப்பு. இதனால் ஆற்றாமை மீதூர்ந்து இச்சுரத்தின்கட் சென்றமையின் என் உயிரும் நீங்கற் குரிய தாயிற்றெனத் தலைமகள் கூறியதைக் கொண்டெடுத்து மொழிவாள், குன்றம் சென்றோர் மன்ற; ஆகலின் செலீஇயர் என் உயிர் எனமொழிந்தாள். இவ்வாறு கொண்டெடுத்துக் கூறுமாற்றால் அவளை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்தக் கருது தலின், ஆற்றாமையால் அவட்கு உளதாய வேறுபாட்டை, புனையிழை நெகிழ விம்மி நொந்து நொந்து இனைதல் ஆன்றிசின் என்றும், மகளிர்க்கு நேரிய இழையணிதலில் விருப்ப மிகுதி இயல்பாதல் பற்றி அதனை விதந்து புனையிழை என்றும் ஆயிழை என்றும் ஒரு முறைக்கு இருமுறை பன்னிக் கூறினாள். மகளிர்க் கெய்தும் மேனி மெலிவை இழைகள் முற்பட எளிதில் காட்டுதல் பற்றி இவ்வாறு கூறினாள் என்றுமாம். இங்ஙனம் இழையணிந்து செல்லலுற்று நீ இனைகுவையாயின், நட் டோர்க்கு ஆக்கமாவன செய்து உலவுதல் ஆடவர்ஆண்மைக்கு மாண்பாதலும், இழையணிந்து இலங்கும் நின் எழில் கண்டு இன்புறுதல் காதல்மாண்பாதலும் நினைந்து ஆற்றியிருத்தல் மனையுறை மகளிர்க்குக் கடனாதலின், இனைதல்கூடா தென் பாள், நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெற வரற்கு மன்றோ அவர் சென்ற திறம் என்றாள். “கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும்,” எனவும், “ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகழ்சிறந்து, பெறலரு நன்கலம் எய்தி நாடும் செயலரும் செய்வினை முற்றினம்”1 எனத் தலைமகன் மகிழ்ந்து கூறுவது தோழியின் வன்புறையைச் சிறப்பித்து நிற்றல் காண்க. தலைவி அயர்வு தீர்வாளாவது பயன். விளக்கம் : “மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய2” என்ற நூற்பாவுரையில், “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய நின்றோள் அணிபெற வரற்கு மன்றோ, தோழியவர் சென்ற திறமே” என்பதனைக் காட்டி, இதனுள், “அணி யென்றது பூணினை” என்பர் நச்சினார்க்கினியர். 287.உலோச்சனார் களவினால் காதலுறவுகொண்ட தலைமக்களிடையே தலைவியின் மேனியிற் கதிர்ப்புக்கண்ட பெற்றோர் அவளை இற்செறித்தனர். அதனால் தலைமகனை எளிதிற் கண்டு பயிலும் வாய்ப்புத் தடைப்பட்டமையின், தலைமகட்கு வருத்தமும் ஆற்றாமையும் மிகுந்து தோன்றின. தலைமகனும் குறியிடம் போந்து அவளைக் காணமாட்டாது வெறிதே தன் மனைக்குத் திரும்பினான். ஒருநாள் அவன் போந்து தலைவி மனையின் சிறைப்புறத்தே நிற்பது கண்ட தோழி தலைமகட்குணர்த்த, அவள், அவன் செவி கேட்குமாறு உரையாடலுற்று , “வானுற வுயர்ந்த மதிற்புறத்தே வேந்தன் போந்து முற்றுகையிட்டிருப்ப, அதனை விடாது காக்கும் வயவர் பலரையுடையேம் எனப் பெருமிதத்தோடு இருக்கும் அகமதில் பெருமறவன்போலத் தலைமகன் கழிக்கண் வாழும் முதலையாகிய பகைக் கஞ்சாது வந்தபோ தெல்லாம் வரவருமை கருதி யுருகாது உறைப் புண்டிருந்த என்நெஞ்சம், இப்போது புள்ளினத்தின் ஒலியைக் கேட்கும்போது நம் தலைவன் தேரிற் கட்டிய மணிகளின் ஒலியெனக் கருதி நள்ளிரவினும் கண்ணுறக்கம் பெறாது வருந்து கிறது” என்றாள். தலைவியின் இக்கூற்றில் இரவுக்குறிக்கண் தலைமகன் போந்ததும் அவனை மறாது ஏற்று அன்பு செய்ததும் இற் செறிப்பால் இப்போது ஏற்றற்கின்மையும் இவ்வாற்றால் அவன் வரைந்துகொண்டு அழிவில் கூட்டம்பெற முயல்வதே செயற்பால தென்பதும் உய்த்துணரவைத்தமை கண்டு வியந்த ஆசிரியர் உலோச்சனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். 1விசும்புதவழ் புரிசை வெம்ப முற்றிப், 2பசுங்கண் யானை வேந்துபுறத் திறுப்ப நல்லெயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப் பாசடை நெய்தற் பனிநீர்ச் சேர்ப்பன் நாம முதலை நடுங்குபகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை 3உருகா தாகிய 4வன்கண் நெஞ்சம் நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும் தேர்மணித் தெள்ளிசை கொல்லென ஊர்மடி கங்குலும் துயின்மறந் ததுவே இது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது. உரை : விசும்பு தவழ் புரிசை வெம்ப முற்றி - முகில்கள் தவழும் உயரிய புறமதிலைச் சூழ்ந்து பகைவெம்மை தோன்ற முற்றுகை யிட்டுக் கொண்டு; பசுங்கண் யானை வேந்து புறத்திறுப்ப - பசிய கண்களையுடைய யானைப்படையையுடைய வேந்தன் புறத்தே தங்கவும்; நல்எயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல - வலிய எயிலைப் பகைவர் பற்றாவாறு தாங்கிக் கொள்ளும் வெல்போர் வீரர் பலரை யாம் உடையம் எனப் பெருமிதத்தோடு உறையும் பெரிய தகைமையினையுடைய மறத்தலைவன் போல; கொடுங்கழிப் பாசடை நெய்தற் பனிநீர்ச் சேர்ப்பன் - வளைந்த கழிக்கண் வளர்ந்த பசிய இலைகளையுடைய நெய்தல்கள் மிக்குள்ள குளிர்ந்த கடனிலத் தலைவன்; நாம முதலை நடுங்குபகை அஞ்சான் - கழியின்கண் வாழும் அச்சந்தரும் முதலையாகிய நடுக்கந் தரும் பகைக்கு அஞ்சானாய்; காமம் பெருமையின் - நம்பால் காதல் மிகுதியால்; வந்த ஞான்றை - இரவின்கண் வந்த போது; உருகாதாகிய வன்கண் நெஞ்சம் - அன்பால் அவன் வரும் நெறியின் ஏதம் நினைந்து இரங்காமல் வரவேற்றற்கண் உறைப்புண்டு நின்ற என் நெஞ்சம்; நள்ளென் கங்குல் புள் ளொலி கேட்டொறும் - நள்ளென்னும் நடுவிரவில் புள்ளினம் செய்யும் ஒலியைக் கேட்குந்தோறும்; தேர்மணித் தெள்ளிசை கொல்லென - தேரிற்கட்டிய மணியின் தெளிந்த ஓசை போலும் என்று; ஊர்மடி கங்குலும் துயில் மறந்தது- ஊரவர் உறங்கும் இரவுப்போதுகளிலும் கண்ணுறங்குதலை மறந்தொழிந்தது, எ.று. சேர்ப்பன், அஞ்சான் வந்த ஞான்றை, உருகாதாகிய என் வன்கண் நெஞ்சம், புள்ளொலி கேட்டொறும், கங்குலும் துயின் மறந்தது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விசும்பு, முகில். பகைவெம்மை மிகுதலால் புறமதிலை முற்றினமை தோன்ற வெம்ப முற்றி என்றார். அதனால் அகமதிலோரும் பகைமை மிக்குக் கண்ணும் கருத்துமாய் மதிலைக் காவல் செய்வர் என்க. இறுத்தல், தங்குதல். எயிலுக்கு நன்மை, புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும் அகத்தோர்க்கு நின்று வினை செய்தற்கேற்ற தலையகலமும் பொறிகளால் அணுகுதற் கருமையுமாம். பகைவ ரால் அழிவெய்தாவகை உதவிக் காக்கும் நல்ல வீரரையுடைமை பற்றி நல்லெயில் உடையோர் உடையம் என்னும் பெருந் தகை என்றார். அடற்றகையும் படைத்தகையும் ஒருங்குடைமை தோன்றப் பெருந்தகை மறவன் என்றார். உப்புநீரும் அழுகிய சேறும் கொண்டு தீ நாற்றம் நாறும் கடற்கழிகளில் முதலைகள் பல்கி வாழ்தல் இயல்பாலின் கொடுங்கழிப் பாசடை நெய்தற் பனிநீர்ச் சேர்ப்பு என எடுத்தோதினார். அங்கு வாழும் முதலைகள் நன்கு வளர்ந்து கொடுமை மிகுதியால் மக்கட்கு அச்சம். விளைவிப்பது பற்றி அவை நாமமுதலை எனப்பட்டன. நாம் அச்சம் நடுங்குபகை, அச்சத்தால் நடுங்குதற்கேதுவாகிய பகை. காமம் பெருமையின் என்ற விடத்துப் பெருமை மிகுதி மேற்று. புள்ளொலியும் தேரிற் கட்டிய மணியொலியும் ஒத் திருத்தல் இயல்பு. “நீனிறப் பெருங்கடற் புள்ளி ஆனாது, துன்புறு துயர நீங்க, இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே1” என்று பிறரும் கூறுப. நெஞ்சம் கண்டுயில் மறந்தது என இயையும். துயிறற்குரியது கண்ணாதலின் வருவிக்கப்பட்டது. களவின்கண் தோன்றிய காதலுறவு தம்மிடையே சிறந்து பெருகியிருப்பதைத் தலைமக்கள் ஒருவரினொருவர் நன்குணர்ந்த பின்னரும், களவொழுக்கினை நீட்டித்தல் நன்றன்று என்றதனால், தலைமகள் தனக்குள் எழுந்த வரைவு வேட்கையைச் சிறைப் புறத்தே நின்ற தலைமகற்கு உணர்த்தும் வகையில் தோழியொடு சொல்லாடலுற்று, இரவின்கண் தலைமகன் வரும் நெறியின் கொடுமையை விதந்து, சேர்ப்பன் நாம முதலை நடுங்குபகை யஞ்சான் என்றும், அது நினைத்தவழி அன்பால் மனமுருகி அவன்வரவை மறுத்தலை விடுத்து மேன்மேலும் அவனை இரவுவரவின் ஏதத்துக்கு உட்படுத்திய தனது கொடுமைக்கு வருந்துமாறு விளங்க, உருகாதாகிய என் வன்கண் நெஞ்சம் என்றும், இற்செறிப்பாலும் காப்பு மிகுதியாலும் தான் அவனை எளிதிற் சென்று தலைப்பெய்து இன்புறமாட்டாமையால் , அவன் வரவு நினைத்துக் கண்ணுறக்க மின்றி வருந்துமாற்றை, நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும் தேர்மணித் தெள்ளிசை கொல்லென ஊர்மடி கங்குலும் குயின் மறந்ததுவே என்றும் கூறினாள். புரிசை வெம்ப முற்றி வேந்து புறத்திறுப்ப, எயிலுடையோர் உடையேம் எனச் செம்மாந்திருக்கும் அகமதில் அரசன் போலக் காமம் பெருமையின் தலைமகன் இரவுக்குறியிடத்தே யிருப்பவும் காவல் மிகுதியால் யாம் மனைக் கண்ணே ஒடுங்கி அவன் காதலையுடையே மென்ற கருத் தொன்றே கொண்டு உறைவே மாயினேம்; இதனாற் காதலுறவு மாட்சியெய்தா தாகலின் தலைமகன் தெருண்டு வரைந்து கோடலே வேண்டற்பாலது என்பது வெளிப்படையுவமத்தின் கருத்து. இனி, புறத்தே வேந்தன் முற்றியிருக்கவும், அகமதிலோன் எயிலுடையோர் உடையேம் எனத் தருக்கித் திரிவது போலப் புறத்தே நெறியின்கண் முதலையும் மனையின்கண் காவலும் இருப்பவும் தலைமகன் கற்பும் காதலும் உடைய நமது நட்பை யுடையேமென்ற செம்மாப்பால் இரவின்கண் வந்தொழுகு கின்றான் எனினுமாம். அகத்திணைக்குரிய பொருள் காணுதற்கு “உள்ளுறையுவமம் ஏனை யுவமமெனத், தள்ளாதாகும் திணை யுணர் வகையே1” என ஆசிரியர் உரைப்பது காண்க. தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். 288. குளம்பனார் குளம்பன் என்பது இச்சான்றோரது இயற்பெயர். நல்லிசைப் புலமையாற் சிறந்தமையின், குளம்பனார் எனப்பட்டார். தொண்டை நாட்டு ஊர்களில் குழப்பந் தாங்கல் என்றோர் ஊரும் உண்டு; குளம்பன் என்பது குழம்பன் எனவும் வழங்கும்; இப் பெயர் இடைக்காலத்தே பிராமணரிடையேயும் இருந்துள்ளது. “சிவப்பிராமணன் பாலாசிரியன் சாத்தன் சிவப்பிரியனான குழம்பன் நாயக்கன்2 எனக் கல்வெட்டுக் கூறுவது காண்க. குளம்பந் தாயனார் என்றொருசான்றோர் புறநானூற்றிற் காணப் படுகின்றார்; ஆனால், குளம்பனார் மகனார் தாயனாரெனப் படாமையின் அவர் இவரின் வேறாதல் விளங்கும். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத்துள்ளது. களவு நெறியிற் காதலுறவு கொண்ட தலைமக்களில் தலைவன் வரைவு கருதாது அதனை நீட்டித் தொழுகினான்; அதனால் தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது; அவள் மேனி வேறுபட்டு நுதல் பசந்தாள். “இனி உண்மை யுணராத அன்னை அவளுடைய மெலிவு கண்டு நோய்முதல் அறிந்து அது தணிக்கும் வாய் நாடுவாளாய், முதுபெண்டிரைக் கொண்டு கட்டுக் காண்பள்” என அறிந்த தோழி, சிறைப்புறத்தே வந்து நின்ற தலைமகன் செவிப்படுமாறு அதனைத் தலைமகட்கு உரைக்க லுற்று, “அக்கட்டுவிச்சி, தினைகாவல் குறித்து யாம் புனம் சென்றிருந்த காலையில் நம்மை முருகவேள் அணங்கினான் என உரைப்பளோ?” என்றாள். இக்கூற்றின்கண், தலைமகள் மேனி மெலிந்து வருந்துவதும், அதுகண்டு அன்னை கட்டுக் காணக் கருதுவதும், அக்காலை முருகு அணங்கிற்றெனக் கட்டுக் கூறுமாயின் அது தலைமகளது கற்புணர்வுக்கு ஏதம் பயக்குமென்பதும் தோழி தலைமகற் குரைத்து வரைவு கடாவும் நயம் கண்ட குளம்பனார் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப் பீலி மஞ்ஞை பெடையோ டாடும் குன்ற நாடன் 1பிரிவிற்கு நன்றும் நன்னுதற் பரந்த பசலைகண் டன்னை செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக் கட்டிற் கேட்கு மாயின் வெற்பில் ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரற் 2சிறுகிளி கடிகம் சென்றுழி நெடுவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே. இது, தலைவன் சிறைப்புறமாகத் தோழி தலைமகட் குரைப் பாளாய் வெறியறிவுறீஇ வரைவுகடாயது. உரை : அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு - அருவி யொலிக்கும் அணங்குகள் உறைதலையுடைய நெடிய மலை யினது உச்சி மறைத்தலால்; ஞாங்கர் இளவெயில் உணீஇய - அதற்கு மேலே எழுந்து வரும் ஞாயிற்றின் இளவெயிலைப் பெறும்பொருட்டு; ஓங்கு சினைப் பீலி மஞ்ஞை பெடையொடு ஆடும் குன்ற நாடன் - உயர்ந்த மரத்தின் கிளையிலிருந்து தோகையையுடைய மயிற்சேவல் பெடை காண நின்று ஆடும் குன்றுகளையுடைய நாடனாகிய தலைமகன்; பிரிவிற்கு - பிரிந்ததன் பொருட்டு; நன்றும் நன்னுதல் பரந்த பசலை கண்டு - நல்ல நெற்றியிற் பெரிதும் பரந்த பசலையைக் கண்டு; அன்னை - தாயானவள்; செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇ - செம்மை மனமுடைய முதுபெண்டி ரொடுகூடிக் கட்டுவிச்சிபால் சென்று சுளகில் நெல் முற்படச் சிதறி; கட்டிற் கேட்குமாயின் - கட்டின் வாயிலாக நீ எய்தும் வேறுபாட்டுக் குரிய காரணத்தைக் கேட்பாளாயின்; வெற்பில் ஏனல் செந் தினைப் பாலார் கொழுங்குரல் - மலைப்பக்கத்துத் தினைப் புனத்து நின்ற செந்தினையின் பால்கொண்ட கொழுவிய கதிர்களைப் படிந்துண்ணும்; சிறுகிளி கடிகம் சென்றுழி - சிறு கிளிகளை ஓப்புவான் சென்றவிடத்து; அது நெடுவேள் அணங்கிற்று என்னும் கொல் - அக்கட்டுக் குன்றுறையும் கடவுளான நெடுவேளால் அணங்கப்பட்டாள் என்று கூறுமோ?, கூறுக எ.று. குன்ற நாடன் பிரிவிற்கு, நன்னுதல் நன்றும் பரந்த பசலை கண்டு, அன்னை, நென்முன் நிறீஇக் கட்டுக் கேட்குமாயின், அது, சிறு கிளி கடிகம் சென்றுழி, நெடுவேள் அணங்கிற்று என்னுங்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அணங்கு,தெய்வம். மலை யுச்சிகளிலும் நீர்த்துறைகளிலும் தெய்வம் உறையுமென்பது உலகுரை. “அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதரும் கணங்கொள் அருவி1” என்றும், “அணங்குடைப் பனித்துறைக் கைதொழு தேத்தி2” என்றும் பிறர் கூறுவது காண்க. நாட்காலை யில் தோன்றும் எழு ஞாயிற்றின் ஒளியை இளவெயில் என்ப. அவ்வெயில்பட இருப்பதை வெயில் உண்டல் என்றனர்; இதனைப் பச்சை வெயில்3 என்பர் அடியார்க்கு நல்லார். பிரிவிற்கு, பிரிந்து சென்றதன் பொருட்டு, நன்று, பெரிது. செம்முது பெண்டிர்4 - செம்மைமனமுடைய முதுமகளிர். இவர்களை முதுகெம்பெண்டிர் எனவும் குறிப்பர். கட்டு, சுளகில் நெல்லெறிந்து குறி பார்க்கும் வகை. கட்டுக் காண்டல், விரிச்சி யோர்த்தல் முதலியன பண்டையோரிடத்து நிலவிய குறி வகைகள். இவற்றின்கண் மிக்க நம்பிக்கையுடையோர் முது பெண்டிராதலின், அவரை விதந்து கூறினார். “நெல்லொடு நாழிகொண்ட நறுவீமுல்லை, அரும்பவிழலரி தூஉய்க் கை தொழுது பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப5” என்பது காண்க. தினைக்கதிர் முற்றும் செவ்வியில் பால் கட்டி நிற்பது பற்றி, செந்தினைப் பாலார் கொழுங்குரல் என்றார். கற்புடை மகளிர்க்குத் தெய்வம் ஏவல் செய்வதன்றி அவர்களைத் தீண்டி வருத்துதல் இல்லை என்பது பழந்தமிழர் கொள்கை. “காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேணுறு நறுநுதற் சேயிழை6”எனவும் தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்“1 எனவும் சான்றோர் உரைப்பது இதற்குப் போதிய சான்றாகும். தலைமகன் உள்ளத்தை வரைவின்கட் செலுத்தும் கருத்தின ளாகிய தோழி, அவன் சிறைப்புறம் போந்து நிற்பது கண்டதும், அவற்குத் தலைமகள் வேட்கை மிகுதியால் மேனி வேறுபட்டுப் பசந்து மெலிந்தமை யுணர்த்துவாளாய், குன்றநாடன் பிரிவிற்கு நன்றும் நன்னுதல் பரந்த பசலை கண்டு என்றும், கட்டுவிச்சி யாம் தினைப்புனத்தே புள்ளோப்புவான் சென்றிருந்ததனைப் பற்றுக்கோடாகக் கொண்டு அங்கே தலைமகளைக் குன்றுறை கடவுளான முருகவேள் அணங்கினானெனக் கூறுவாள் போலும் என்பாள், வெற்பில் ஏனற் செந்தினைப் பாலார் கொழுங் குரல் சிறுகிளி கடிகம் சென்றுழி நெடுவேள் அணங்கிற் றென்னும்கொல் அதுவே” என்றும் கூறினாள். இளவெயிலை உண்பது கருதி மஞ்ஞை பெடையோடு ஆடும் என்றதனால், இவள் வேறுபாடு நீங்குதல் கருதி வேலன் குறமகளிரொடு முருகாற்றுப்படுத்து வெறியயர்வன் என உள்ளுறுத்தமையின், நெடுவேள் அணங்கிற் றென்னுங் கொல் என்று ஒழிந்தாள் . தலைமகனைத் தனிமையிற் கண்டு காதலுறவு கொண்டு அவன் வரம்பு இகத்தல் தனக்கு அறமன்றென்னும் கற்புவழி யொழுகும் தலைமகளைப் பிறதெய்வங்கள் தீண்டுதலில்லையாகவும், தீண்டின எனப் பொய்கூறி அவற்றிற்கு வழிபாடு செய்தால் தலைமகட்கு மிக்க ஏதம் உண்டாகும் என்பது பற்றி வெறி யச்சத்தைத் தோழி எடுத்து மொழிந்தாள். இது கேட்டுத் தலைவன் தெருண்டு வரைவானாவது பயன். இனி, வரைவு கடாவும் நிலையினளாய தோழி, தமர் அவண் மறுப்புழி நிகழ் தற்பாலதாகிய உடன்போக்கினை உள்ளுறுத்து உரைத்தான் என்பர் சிலர். அது நேரிதன்று; ஒத்துப் பொருள் முடிய நிற்பது உள்ளுறை; “உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள் முடிகென, உள்ளுறுத் திறுவதை உள்ளுறையுவமம்” என்பது தொல் காப்பியம்2 289.மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தங் குமரனார் மருங்கூர்ப் பட்டினம் பாண்டிநாட்டுக் கடற்கரை நகரங் களுள் ஒன்று. மதுரை மாவட்டத்துத் திருவாடானைப் பகுதியில் ஒரு மருங்கூரும், குமரி மாவட்டத்துப் பகுதியில் ஒரு மருங்கூரும் உள்ளன. இரண்டும் கடற்கரையைச் சார்ந்தனவே யெனினும், குமரக் கடவுள் கோயிலொன்று பெற்று இன்றும் ஓரளவு சிறந்து நிற்பது குமரி வட்டத்து மருங்கூர். ஒருகால் இம்மருங்கூர் பண்டைய மருங்கூர்ப் பட்டின மாகலாம் என நினைத்தற்கு இடமுண்டாகிறது. இப்பட்டினத்தில் வாழ்ந்த சேந்தன் என் பார்க்கு மகனாதல் பற்றி இச்சான்றோர் சேந்தங் குமரனார் எனப்பட்டனர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் தொகை நூல்களுள் காணப்படுகிறது. மாமணம் புணர்ந்து மனையறம் புரிந்தொழுகும் தலை மக்கள் வாழ்வில், தலைமகன் கடமை காரணமாகத் தன் மனைவி யிற் பிரிந்தொழுக வேண்டியவனானான். பிரிவாற்றாத தலை மகள் பெரிதும் வருந்தினாள். எனினும் அவன் கடமையின் இன்றியமையாமையை வற்புறுத்தித் தான் கார்ப்பருவ வரவில் கடமை முற்றி வருவதாக உறுதி கூறிப் பிரிந்தான். அவன் உரைத்த சொல்லைத் தேறியிருந்த தலைமகள் அவன் குறித்த பருவத்தை எதிர்நோக்கி அவன் பிரிவையும் ஒருவாறு ஆற்றியிருந்தாள். நாள்கள் கழிந்தன. கார்ப்பருவமும் வருவதாயிற்று. ஆயினும் தலைமகன் மேற்கொண்ட வினை சிறிது நீட்டித்தது, கார் காலத்து மழை முகில்கள் எழுந்து வான முற்றும் பரந்து மின்னும் இடியும் கலந்து மழை பொழியலுற்றன. அது கண்டு தலைவி ஆற்றாளாக, வற்புறுத்தும் தோழியை நோக்கி, “தோழி நம் காதலர் நிலம் திறம்பினும் சொல் திறம்பாத வாய்மையுடையர். அவர் குறித்த பருவத்தில் தோன்று தற்குரிய மழைமுகில் போந்து நிறம் கறுத்துப் பெருமழையைப் பெய்யாநின்றது. இரவுப் போதில் காட்டிடத்தே கோவலரால் தீக்கொளுவப்பட்ட மரம்போல வேட்கைமிக்குத் தணியுமாறின்றி உடல் முழுவதும் வெந்து கரிவேனாயினேன் காண்” என்றாள். இக்கூற்றின்கண், தலைவனது சொல்லுறுதியையும் அவன் குறித்த பருவவரவின் தப்பாமையையும் எடுத்து ரைத்துத் தான், தலைவனாலும் தோழியாலும் அளிக்கப் படாமை கூறிய நயம் கண்ட சேந்தங்குமரனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். அம்ம வாழி தோழி காதலர் நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே வானம் நளிகடல் முகந்து செறிதக இருளிக் கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் கார்செய் தென்னுழை யதுவே ஆயிடைக் கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெருமார வேரடிப் போல அருளிலேன் அம்ம அளியென் யானே. இது, பிரிவிடைப் பருவங் கண்டு சொல்லியது. உரை : தோழி-; வாழி-; அம்ம - யான் கூறுவதைக் கேட்பாயாக; காதலர் - நம்முடைய காதலர்; நிலம்புடை பெயர்வதாயினும் - இந்நிலமானது தன் நிலையிலிருந்து திறம்புமாயினும்; கூறிய சொல் புடை பெயர்தலோ இலர் - தாம் கூறிய சொல் திறம்புவது இல்லாதவர்; வானம் நளிகடல் முகந்து செறிதக இருளி - மேகம் பெரிய கடலுக்குச் சென்று நீரை முகந்து செறிவுறத் தொகுதி கொண்டு விசும்பு முழுவதும் இருள்படப் பரந்து; கனைபெயல் பொழிந்து - மிக்க மழையைப் பொழிந்து; கடுங்குரல் பயிற்றி - பெரு முழக்கத்தைச் செய்து; கார் செய்து என்னுழையது - கார்ப்பருவத்தைச் செய்து என்முன்னே தோன்ற நின்றது; ஆயிடை - அவ்விடத்தே; கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய - புன்செய்க் காட்டுக் கொல்லை களில் நிரை மேய்க்கும்இடையர் இரவின்கண் தீக்கொளுவப் பட்ட; பெருமர வேரடி போல - பெரியமரத்தின் வேர் தோன்றிய அடிப்பகுதி போல; அருளிலேன் - வேட்கைத்தீத் தணிவிக்கும் அருளுடை யோரை இலேனாயினேன்; அளி யென் யான் - யான் அளிக்கத் தக்கேன் காண் எ.று. தோழி, காதலர் நிலம்புடைபெயர்வதாயினும் சொல் பெயர்தல் இலர்; வானம் கார்செய்து என்னுழையது; யானோ, கோவலர் மாட்டிய பெருமர வேரடிபோல அருளிலென்; அளியென் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. அம்ம: முன்னது கேட்க எனும் பொருளது; பின்னது அசைநிலை, நிலம்புடை பெயர்வதாயினும் என்றது, புடைபெயராது என்பது கருத்தாகக் கோடல் வேண்டும். நிலவுலகும் அதனைச் சூழ்ந்து தோன்றும் விண்மீன்களும் கோள்களும் யாவும் சுழன்றோடுவன என்பது இன்றைய விஞ்ஞானவுணர்வின் முடிவு; நிலவுலகின் கூறாகிய ஒவ்வோர் அணுவினும் விசும்புலகு போன்ற இயக்கமும் புடை பெயர்தலும் உண்டென்பதும் இன்றைய விஞ்ஞான நூலோர் முடிவு; இந்நிலையில் புடைபெயர்ச்சி யில்லாத பொருள் ஒன்றும் இன்றாயினும், நிலவுலகின் பெருமையும் அதன்கண் வாழும் மக்களின் கட்பார்வையின் சிறுமையும் நோக்க, நிலத்தின் புடை பெயர்ச்சி விளங்கித் தோன்றாமையின், நிலம் புடைபெயர்வ தாயினும் என்றார். புடை, பக்கம், புடை பெயர்ச்சி, இயக்கம். அணுவும் அணுவை யுள்ளிட்ட ஒவ்வொரு பொருளும் இயக் கத்தைப் பண்பாகக் கொண்டிருத்தல் பற்றி இயக்கத்தைத் தொழிற்பண்பு எனவும், இயக்கத்தின் வேறான பொருண்மைக் கூற்றினைப் பொருட் பண்பு எனவும் தமிழ்நூலோர் கண்டு, பொருளைப் பெயர் எனவும், தொழிற்பண்பை வினையெனவும் வகுத்தனர். இவ்வகையால் பொருள்மேல் நிற்கும் சொல்லையும் பெயர், வினை என இரு கூறாகவே பண்டையோர் கண்டனர். “சொல்லெனப் படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப அறிந்திசி னோரே”1 என்று ஆசிரியர் தொல்காப்பியனார் உரைப்பது காண்க. புடைபெயர்ச்சியாகிய வினைமேல் நிற்கும் சொல்லுக்கும் புடைபெயர்ச்சி யுளவாகலாம் என்பது பற்றிச் சொல் புடைபெயர்தல் இலர் என்றார்.சொற்புடை பெயர்த லாவது தனக்குரிய பொருளை யுணர்ந்தாது பொய்படுதல். வானம், மழைமுகில்; “சிறப்பொடு பூசனை செல்லாது வானம், வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”2 என்றாற் போல, நளி, பெருமை. செறிவுதக எனற்பாலது செறிதக என நின்றது. மேகம் இருண்டவழி மின்னும் இடியும் தோன்றுவது இயல்பு என்க. என்னுழையது, இப்பால் என் முன்னே நிலவுகின்றது. கார் செய்தல், கார்ப்பருவத்தைத் தோற்றுவித்தல். அவ்விடை ஆயிடை எனச் சுட்டு நீண்டது . கொல்லை புன்செய்க் காடு. தாம் மேய்க்கும் நிரைகட்குக் கொடிய விலங்கினம் போந்து ஊறு செய்யாமை நினைந்து பெருமரங்கட்குத் தீக்கொளுவி இரவு முற்றும் ஒளிவிட்டு எரியச் செய்வது கோவலர் செயல் வகை. நிலப்பரப்பின் மேல் வேர் தடித்துத் தோன்றும் பெருமரத்தின் அடிப்பகுதியில் தீவைத்த வழி அது பையப் பற்றிக் கனிந்து தொடர்வது பற்றிப் பெருமர வேரடி கூறினார். உயிர் தாங்கிய பெரிய பசுமரம் எரிகிறதென்று இரக்கங் கொண்டு பிறர் நீரும் மண்ணும் பெய்து தணியாமைப் பொருட்டு, இரவில் தீக்கொளு வினரென அறிக. அருளிலேன், அருள் செய்வோரை இல்லேன். அளியென், அருளப்படும் தகுதியுடையன். களவின்கண் ஒழுகிய ஞான்று தலைமகன் உரைத்த சொல் பிழையாது போந்து தலையளி செய்த வாய்மை தலைமகள் நெஞ்சின்கண் நிலை பெறுதலால், கற்புடை மனை வாழ்வின்கண் பிரிந்து சென்ற அவன் குறித்த கார்ப்பருவத்தின் வரவும் அவனது வாராமையும் கண்டு ஒருபால் வருத்தமும் ஒருபால் வியப்பும் மீதூர்தலால், அம்ம வாழி தோழி என்றும், காதலர் நிலம்புடை பெயர்வதாயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலர் என்றும் தலைமகள் கூறினாள். கார்ப்பருவ வரவில் வருவல் என்ற காதலர் வாராமையின், இது கார்ப்பருவம் அன்றாதல் வேண்டு மெனத் தோழி கூறினாளாக, அவட்குத் தலைவி, இது கார்ப் பருவமே என்பாள் வானம் நளிகடல் முகந்து செறிதக இருளிக் கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் கார்செய்து என்னுழையது என அதன் செயல் ஒவ்வொன்றனையும் சிறப் பித்துக் கூறினாள். பின்னர்த் தலைமகட்கு அவன் வாராமையால் வேட்கை மிக்கு வருத்தினமையின் கோவலர் எல்லி மாட்டிய பெருமர வேரடி போல அருளிலேன் அம்ம என்றும், அருளாளராகிய காதலர் குறித்த போதில் வாராதொழியா ராகலின் வருந்தற்க எனத் தோழி வற்புறுத்தவும், அவளும் தன்பால் அன்பிலனென வெகுண்டு எதிரழிந்து கூறுவாள், அளியென் யானே என்றும் கூறினாள். இங்ஙனம் கூறுதலால் தலைவி அயர்வு தீர்வாளாவது பயன் 290. மதுரை மருதன் இளநாகனார் மனைக்கண் இருந்து மாண்புடைய அறம்புரிந் தொழுகும் தலைமக்களில் தலைமகற்கு ஒருகால் புறத்தொழுக்கம் உள தாயிற்று. பண்டை நாளில் தலைமகன் புறத்தொழுக்கம் மேற் கொண்டு பரத்தையொடு கூடி அவர் சேரிக்குச் சென்றொழுகுதல் கடன் என்றோ முறையென்றோ தொல்காப்பியர் முதலிய சான்றோர் விதித்தது இல்லை; அந்நிலையில் பரத்தைமையை அவர்கள் குற்றமென எடுத்தோதி விலக்கவும் இல்லை. பரத்தை யர் வயிற்றிற் பிறக்கும் மக்கட்குத் தலைமகன் ஈட்டும் பொரு ளிடத்தே உரிமை சிறிதும் இல்லை யென்பது சங்கச்சான்றோர் உரைகளால் இனிது காட்டப்படுகிறது. இதனால், பரத்தையர், பண்டை நாளில், தம்மை வரைந்து கொண்டு மனையறம் படுத்தும் ஆடவர்க்கு ஓரொருகால் காமக்கருவிகளாய் இருந் தமையும், அவர்களும் உலகில் வாழப் பிறந்தமை பற்றி அவரைக் கூடியுறைதல் குற்றமெனக் கடியப்படாமையும் பண்டையோர் பாட்டிடையே காண்கின்றோம். இப்பெற்றித்தாய பரத்தைமை யொழுக்கம் தலைமகற்கு உளதானமை யறிந்த தலைமகள் மனம் பொறாது வேறுபட்டாள். அவளுடைய புலவிக் குறிப்பைப் பரத்தைக்குப் பாங்கராயுள்ளோர் அறிந்து போந்து அவட்கு உரைத்தனர். தலைமகளிடத்தும் பரத்தையரிடத்தும் தோன்றும் புலவியைப் போக்கித் தலைவிபாலும் பரத்தைபாலும் முறையே தூதுசென்று தலைமகனைக் கூட்டுவிப்போர் சிலர் உண்டு. அவர்களை வாயில் என்பர். வாயில்களாவார், “தோழி தாயே பார்ப்பான் பாங்கன், பாணன் பாடினி இளையர் விருந்தினர், கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர், யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”1 இவர்களுள் தலைமகட்கு வாயிலாகிய விறலி ஒருகால் பரத்தையர் சேரிக்கு வந்தாளாக, அவள் கேட்ப உரைப்பன தலைமகளைச் சென்று சேரும் என்ற கருத்தால் அவளுடன் உரையாடலுற்ற பரத்தை, “விறலி, ஊரனது காதலுறவை நீ விரும்புகின்றாய் ; ஆயின், யான் சொல்லுவதைக் கேட்பாயாக; நீ மிகவும் நலமுடையை; நடுநாட்காலத்தே பொய்கையிடத்துப் புதுமலர் ஊதும் வண்டு என அவனை யாவரும் மொழிவரே யன்றி, மகன் என்று அறிந்தோர் சொல்லார்; ஆகவே அவனை உனக்கே உரியன் எனக் கருதுதல் கூடாதுகாண்”என்றாள். பரத்தையின் இக்கூற்றில் பரத்தையர் சூழல் தலைமகனை மலரூதும் வண்டு என்றும் தம்மை மலரென்றும் கருதிப் பேணும் கருத்து நிலவக் கண்ட ஆசிரியர் மருதன் இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். வயல்வெள் ளாம்பற் 4சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் 2ஓய்நடை முதுபக டாரும் ஊரன் 3நண்புநீ வெஃகினை யாயின் என்சொல் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகன்என் னாரே. இது, பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்பத் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். உரை : வயல் வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூ - வயல்களில் வளர்ந்துள்ள வெள்ளாம்பலினது மலர்ந்து மக்களால் சூடப் படும் புதிய பூவை; கன்றுடைப் புளிற்றா தின்ற மிச்சில் - கன்றையுடைய ஈன்றணிமை நீங்காத பசு மேய்ந்த மிச்சிலை; ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் -ஓய்ந்த நடையுடைமையின் தொழிலுக்காகாத முதிய எருதுகள் மேய்ந்துண்ணும் ஊர னாகிய தலைவனது; நண்பு நீ வெஃகினையாயின் - நட்பை நீ விரும்பினையாயின்; என் சொல் கொள்ளல் - என்னுடைய சொற்களை ஏற்றுக் கொள்வாயாக; முள்ளெயிற்றோய் - முட்போல் கூறிய பற்களையுடைய விறலியே; நீ பெரு நலத்தகை - நீயோ மிக்க பெண்மை நலம் உடையையாயினை; அவன் - நின்தலைமகனோஎனின்; நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி - ஆழ்ந்த நீரையுடைய பொய்கைக்கு நடு வியாமத்திற்சென்று; தண்கமழ் புது மலர் ஊதும் - தண்ணி தாய் மணம் கமழும் புதியவாய் மலர்ந்த பூக்களிற் படிந்து தேனுண்டு பாடும்; வண்டு என மொழிப - வண்டு எனக் கூறுவரேயன்றி; மகன் என்னார் - மகன் என்று சொல்ல மாட்டார்காண் எ.று. முள்ளெயிற்றோய், ஊரன் தொடர்பு வெஃகினையாயின், என் சொல் கொள்ளல்; நீயோ பெருநலத்தகையை; அவனை வண்டென மொழிபவேயன்றி மகன் என்னார்காண் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. கொள்ளல்: அல்லீற்றுவியங்கோள்முற்று; அல்லீற்று எதிர்மறை வியங் கோளாகக் கொண்டு, என் சொல்லைக் கொள்ளற்க; பிறர்கூறுவன கேட்டமைக என வுரைப்பினுமமையும். செவ்வாம்பல் உண்மையின் வெள்ளாம் பல் எனத்தெரிந்து மொழிந்தார். வெள்ளாம்பலின் தழை உடைக்கும் பூ கூந்தலிற் சூடுதற்கும் கொய்யப்படுவது பற்றி வெள்ளாம்பற் சூடுதருபுதுப்பூ என்றார்” அளிய தாமேசிறு வெள்ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே”1 என்று பிறரும் கூறுப. புனிறு ஈன்றணிமை. உழவு முதலிய தொழிற்கு உதவாத முதுமைமிக்க பகடாதலின் ஓய் நடை என்றும். அதனால் அது வெறிதே விடப்பட்டமை தோன்ற முது பகடு என்றும் கூறினார். கன்றினை ஈன்ற பசு விரைந்த செலவினையு டைத்தாகலின், ஓய்நடைப் பகடு உண்டற்கு அமைந்தது மிச்சிலே என அறிக. முள்ளெயிறு, முட்போல் கூறிய பற்கள். பெருநலத்தகை, மிக்க நல முடைமையாற் பிறக்கும் அழகு. நடுநாள் என்றும் தண் கமழ்மலர் என்றும் கூறினமையின், நள்ளிரவாயிற்று. நண்பகலில் மலரும் பூவுக்கு அழகிய நிறமுண்டேயன்றி மணமின்றென அறிக. வண்டென மொழிப என்றதனோடு ஒழியாது மகன் என்னார் என மிகுத்துக் கூறியது, வன்புறை குறித்து நின்றது. மாது; ஓ: அசைநிலை. தலைமகனது பரத்தைமையைப் புலந்து தலைவி கூறிய மாற்றம் பரத்தையின் பாங்காயினார் அறிந்து போந்து உரைப்பக் கேட்ட பரத்தை, தலைவி மனைக்கு வாயிலாய்ச் செல்லும் சிறப்புடைய விறலியொடு சொல்லாடுவாளாய்த் தலை மகட்குக் கூறுகின்றாளாகலின், அவளுடைய இளமையை விதந்து, முள்ளெயிற்றோயே என்றும், வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிர் என வழங்கும் வழக்கினை எடுத்தோதுதற்கு முகம்புகும் கருத்தால் ஊரன் நண்பு நீ வெஃகினையாயின் என் சொற் கொள்ளல் மாதோ என்றும், நின்பால் நலமும் அழகும் பெருகவுண்மையின் அவன் தானே நும்மை நாடி வருவன், அவனைத் தேடியலைதல் வேண்டா என்பாள். நீயே பெரு நலத்தகையே என்றும் அவனைத் தண்கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப என்றும், அவன் குலமகளிரென்றும் பொதுமகளிரென்றும் வேறுபாடு நோக்காது புதுநலம் ஒன்றே நோக்குவன் என்றும் கூறுவாள். மகன் என்னார் என்றும் கூறினாள். பரத்தையாகிய தனது அமைதியை உள்ளுறுத்துரைத்தலின், தலைமகன் இயல்பை எடுத்துக் கூறி, இவ்வாறு உலகவர் கூறுதலை யறியாமல் எம்மொடு புலத்தல் நன்றன்று என்பதைக் குறிப்பாற் பெறவைத்தாள். மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல், அன்னதாகலும் அறியாள், எம்மொடு புலக்குமவன் புதல்வன் தாயே1 என்று பிறாண்டும் பரத்தை கூறுவது காண்க. வயல் வெள்ளாம்பலின் புதுப்பூவை கன்றீன்ற புனிற்றாவும் ஓய்நடை முதுபகடும் மேய்ந் துண்ணும் என்றதனால் தலைமகனைக் குலமகளாய தலைமகள் நுகர்வதேயன்றிப் பரத்தையரும் நுகர்வர் என்றவாறாகக் கொள்க. தலைமகள் புதல்வனைப் பயந்து விளங்கும் திறத்தைக் கன்றுடைப் புனிற்றா எனச் சிறப்பித்தல் பரத்தைக்கு ஒக்கு மாயினும், தன்னை ஓய் நடை முதுபகடு என இழித்துக் கூறல் ஒவ்வாமையின், இருவரும் ஒப்ப நுகர்தற்பொருண்மை தோன்ற உள்ளுறை கோடலே நேரிது என்க. ஓய்நடை முதுபகடு பரத்தை யரைச் சுட்டியதெனின் அவர்கள் மணக்கும் ஆடவரின்மையான் வரைவிலாப் பொதுமகளிரான திறம் வெளிப்படுமாறு காண்க. “தாய்போற் கழறித் தழீஇக் கோடல்2 எனத் தொடங்கும் நூற்பாவுரையில் இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர். “புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்3” எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, “இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன் றெனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ. அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப் போல வேறுபட்டுக் கொள்ளாதே, கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்ப தன்றி மகனென்னா ராதலின் இவன் கடப்பாட்டாண்மை அது வென்றும் கூறினாள்” என்றும் “என் சொற் கொள்ளன் மாதோ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க” என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 291.கபிலர் தலைமக்கள் மாண்புடைய மனையறம் புரிந்து வருகையில் தலைவி மகப்பேற்றால் மாண்புறுவாளாயினள். அப்போழ்து தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாயிற்று. அவன் பரத்தைய ரிடத்தனாய் இருக்கவே, தலைமகள் பொறாது புலவி மீதூர்ந் தாள்; அவனது பரத்தைமைப் பிரிவால் அவளுடைய மேனி நலம் குன்றியது. தலைமகனும் தலைவியின் சால்புணர்ந்து தனக்கு வாயிலாகிய பாணனை அவன்பால் வாயில் வேண்டி விடுத்தான். தலைவனது புறத்தொழுக்கத்துக்குத் துணையாய் நலம் புதியராய பரத்தையரை அவனொடு புணர்த்தலும், தலைமக்கள் புலந்த விடத்து ஆவன கூறி அவர்தம்முள் இணங்குவித்தலும் வாயி லாகும் பாணனுடைய வளவிய தொழில் வகையாகும். அதனை நன்கறிந்தவளான தலைமகள், பாணன் வாயில் வேண்டி வரக் கண்டதும் அவட்கு வருத்தம் மிகுந்தது. அக்குறிப்பை அறிந்த தோழி பாணற்கு வாயில் மறுப்பாள் போன்று, “பாணனே, முள்ளூர் மன்னனான காரியென்பான் கொல்லிக் கூற்றத்தை யாண்ட வல்வில் ஓரி என்பானொடு பகைமை கொண்டான்; அது காரணமாக அவன் கொல்லிநாட்டுட் புகுந்து அங்கு வாழ்ந்த மக்களுடைய ஆனிரைகளைக் கவர்ந்து பல்லான் கிழவர் பலர் பரிசழிந்து வருந்துமாறு செய்தான். அக்கிழவர்களைப் போலத் தலைமகளும் தன் நலன் இழந்து வருந்துகின்றாள்; அதனை நீயும் காண்கின்றனையன்றோ? இனி நீ நேரே தலை மகன்பாற் சென்று கண்டாங்கு உரைப்பாயாக; இங்கே நிற்பதில் பயனின்று” என்று சொல்லித் தலைமகனை இன்னே கொணர்க என்று குறித்தாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைவனது பரத்தைமை யால் தலைமகள் மெய்ந்நலமும் விருந்து புறந்தரும் மனை யறமும் குன்றியதனால் எய்திய வருத்தமிகுதியை வாயாற் கூறாது கண்டாங்குரைமோ என்ற நயம் கண்டு வியப்புற்று ஆசிரியர் கபிலர் இப்பாட்டின்கண் அது விளங்கப் பாடியுள்ளார். 1பெயல்தலைஇ மாறிய செறிசேற் றள்ளல் நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் 2தெண்டிரைப் பௌவத் தண்டுறைச் சேர்ப்பற்குக் கண்டாங்3 குரைமோ பாண நீயே மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந் தெல்லித் தரீஇய இனநிரைப் பல்லான் கிழவரின் அழிந்தஇவள் நலனே. இது, வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப் பறிந்து நெருங்கிச் சொல்லியது. உரை : பெயல் தலைஇ மாறிய செறிசேற்றள்ளல் - மழை பெய்து நீங்கியதனால் செறியும் சேற்றின்கண்; நெய்த்தலைக் கொழு மீன் அருந்த இனக்குருகு - நெய்ப்பசையை யுடைய கொழுவிய மீன்களையுண்ட குருகுகளின் கூட்டம்; குப்பை வெண்மணல் ஏறி - குவிந்த வெண்மையான மணல் மேட்டில் ஏறி; அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் - அரசர் களின் ஒள்ளிய படைக் கூட்டம் போல விளங்கித் தோன்றும்; தெண்டிரைப் பௌவத் தண்துறைச் சேர்ப்பற்கு - தெளிந்த அலைகளையுடைய கடலின் தண்ணிய துறையையுடைய தலைமகற்கு; கண்டாங்கு உரைமோ நீ - கண்டது கண்டவாறே உரைப்பாயாக நீ; பாண-; மாயிரு முள்ளூர் மன்னன் - மிகவும் பெரிதாகிய முள்ளூர்க்கு மன்னனாகிய காரி என்பான்; மாஊர்ந்து - குதிரையேறிச் சென்று; எல்லித் தரீஇய இனநிரை - இரவின்கட் கவர்ந்து கொணர்ந்த ஆனிரைகளின் கூட்டத் துக்கு உரியராகிய; பல்லான் கிழவரின் - ஆயர் தலைவர்கள் பரிசழிந்து வருந்தினாற் போல; அழிந்த இவள் நலன் - மேனி வேறுபட்டு இழந்த இவளுடைய நலத்தை எ.று. பாண, பல்லான் கிழவரின் அழிந்த இவள் நலனைத் தண் டுறைச் சேர்ப்பற்குக் கண்டாங்கு உரைமோ எனக்கூட்டி வினை முடிவு செய்க. மழை பெய்யுங்கால் உண்டாகும் சேறு மழை நீர்ப்பெருக்கால் கொண்டு போகப்படுதலின், பெய்து நீங்கிய போது குழம்பித் தோன்றும் சேற்றைப் பெயல் தலைஇ மாறிய செறிசேற் றள்ளல் என்றார். நீருட்கிடப்பினும் நீர்ப்பசை ஒட்டாதபடி நெய்ப் புற்றிருத்தலின் மீன், நெய்த்தலைக் கொழு மீன் எனப்பட்டது மீனின் நிணத்திலிருந்து நெய் இறக்கப்படுதலு முண்மையின் இவ்வாறு கூறினாரென்றுமாம், ஆர்ந்த என்பது அருந்த என வந்தது. குப்பை, குவியல். நிரைநிரையாகத் தங்குதலும் செல்லுதலும் பற்றி அரைசரது ஒண்படைத் தொகுதி உவமமாயிற்று, மோ, முன்னிலையசை; “என்னிலை யுரைமோ நெஞ்சே”1 என்றாற்போல. முள்ளூர்க்குரிய மன்னன் மலையமான் திருமுடிக் காரி என்பதைச் “செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம்”2 என்றும் , அவன் ஓரியொடு பொருத குறிப்பை” “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி”3 என்றும் வருவனவற்றால் அறிக. காரியின் குதிரையும் காரி யெனப்படுதலால் மாவூர்ந்து என வாளா கூறினார் போலும். தலைமகனது புறத்தொழுக்கத்தால் வருத்தம் மிக்குற் றிருக்கும் தலைமகள், பாணன் போந்து இல்லாததும் காணாதது மாய பலவற்றைப் பாரித்துரைத்து நிற்ப, அவற்கு வாயில் நேரும் கருத்தினளான தலைவியின் குறிப்பைத் தோழி யுணர்ந்து பாணற்கு வாயில் மறுப்பாள் போன்று, கொழுமீன் ஆர்ந்த குருகினத்தின் இருப்பு, அரசர் படைத்தொகுதியின் இலங்கித் தோன்றுதல் போல, தலைமகன்பால் உள்ள அன்பும் பண்பும் பலவும் எடுத்துரைக்கும் நீ, அவற்கு உயர் துணைவன் போலத் தோன்றுகின்றாய் என்றும், எனினும், குருகினத்தின் தோற்றம் படைப்பயன் நல்காதவாறு போல, நின் துணைமை அவனைப் புறத்தொழுக்கத்திற் படுத்தியதும் அன்றித் துணைமைப் பயனாக உளதாகற் பாலதாகிய இவள்நலன் அழிவுற்றதையும் யான் கூறல் வேண்டா, நீயே காண் என்பாள், கண்டாங் குரைமோ பாண நீயே என்றாள். இதனை நின் பொய்ம்மொழி கேட்டொழுகும் தலைமகற்கு நீ நன்கு உரைத்தல் வேண்டும்; ஆங்கும் பொய் புணர்க்காது உள்ளது கூறல் வேண்டும் என்றற்குச் சேர்ப்பற்குக் கண்டாங் குரைமோ என்றாள். அது கேட்டு நாணி நிற்கும் பாணனை நோக்கி, முள்ளூர் மன்னன் கவர்ந்து கொண்டதனால் ஆனிரை இழந்து வருந்தும் பல்லான் கிழவர் போலத் தலைமகன் காதலன்பு நின்னால் புறத்தொழுக்கத்திற் செலுத்தப்பட்டமை யால், இவள் தன்நலன் அழிந்து வருந்துகின்றாள் என்பாள். பல்லான் கிழவரின் அழிந்த இவள் நலனே என்றாள், எனவே இனி இவண்நின்று பல சொல்லுதலினும் விரைந்து அவண் சென்று தலைமகனைக் கொணர்க என்பது குறிப்பு, இதனாற் பயன் பாணற்கு வாயில் மறுத்தல். 292. நல்வேட்டனார் களவின்கண் தோழியிற் கூட்டம் பெற்றுத் தலைவியொடு உளதாகிய காதலுறவைப் பேணி வளர்த்துவரும் தலைமகன், பகற்போதில் தலைவி போந்து விளையாட்டயரும் பொழி லிடத்தே அவள் குறித்த இடத்தில் அவளைத் தலைப்பெய்து கண்டு இன்புற்று ஒழுகினான். அவனது தொடர்ந்த வரவு மறைவெளிப்படுக்குமென எண்ணிய தோழி இரவு வருமாறு அவனைத் தெருட்டவும், அவன் அவ்வண்ணமே இரவின்கண் தோழி குறித்த இடத்தே போந்து தலைவியது கூட்டம் பெற்று இன்புற்றான். இவ்வாற்றால் அவனுடைய காதலின் மாண்பு சிறக்கக் கண்டாள் தோழி; அவனை இனித் தலைமகளை வரைந்துகொள்ளுமாறு தூண்டும் எண்ணம் கொண்டு, இரவு வருதலை மறுக்கலுற்றாள். ஒரு நாள் இரவு அவன் வரக் கண்டதும் தோழி, அவனை எதிர்ப்பட்டு. “ஐயனே, முசுண்டை முதலிய கொடிகள் நெருங்கிப் படர்ந்த சந்தன மரங்களை யுடையது எதிரே தோன்றும் காடு; அம்மரங்களிற் கட்டப் பெற்றிருக்கும் தேனைக் கொள்ளக் கருதும் கானவர், அக் கொடிகளின் வளமையும் பசுமையும் கருதாது அறுத்தெறியும் இயல்பினர். அக்காட்டை இரவுப்போதிற் கடந்து வருதல் அரிது என்பதைச் சிறிதும் நீ கருதுகின்றாயில்லை; காட்டாற்றுக் கரைகள் நீரருந்துவான் போதரும் யானைகளால் இடிந்து ஆழ்ந்து அகன் றுள்ளன. ஆழ்ந்த மடுக்களில் முதலைகள் பல வாழ்கின்றன. அவற்றையும் அஞ்சாமல் நீ இரவில் வருதல் செய்கின்றாய். நீ வரும் நெறியின் ஏதங்களை நன்கறிந்தமையால் என் தோழியாகிய தலைமகள் பெரிதும் வருந்துகின்றாள். இனியும் நீ இரவில் இக்கானத்தையும் காட்டாற்றையும் கடந்து வருகுவையா யின், ஆற்றாமையால் அவள் உயிர்விடுவள்; ஆகலின் ஏற்பன எண்ணிச் செய்வாயாக” என்று இசைத்தாள். இக்கூற்றின்கண், தலைவியுள்ளத்து நிலவும் காதல் பெருகி அவனையின்றி அமையாததாயின திறத்தை எடுத்தோதித் தோழி தலைமகனைக் குறிப்பால் வரைவு கடாவும் நயம்கண்ட நல் வேட்டனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். நெடுங்கண் ஆரத் தலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடி1 முசுண்டைத் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பிற் கானம் என்னாய் களிறுபொரக்2 கரைந்த கயவாய்க் குண்டுநீர் ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும் கராஅம் பேணாய்3 இரவரின் 4வாழாள் ஐயஎன் தோழி இனியே. இஃது இரவுக்குறி மறுத்தது. உரை : நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த - நெடிய கணுக்களையுடைய சந்தன மரத்திற் படர்ந்து அசைகின்ற கிளைகளிற் பின்னிக்கிடக்கும்; பசுங்கேழ் இலைய நறுங்கொடி முசுண்டை - பசிய நிறம் பொருந்திய இலைகளையுடைய நறிய முசுண்டைக் கொடிகள்; தீந்தேன் கொள்பவர் - தீவிய தேனைக் கொள்ளும் கானவரால்; வாங்குபு பரியும் - வளைத்து அறுக்கப் படும்; யாணர் வைப்பின் கானம் என்னாய் - புதுமையான இடங்களையுடைய கானம் என்பது கருதாயாய்; களிறு பொரக் கரைந்த - களிற்றியானைகள் வழங்குதலால் இடிந்த கரையிடத்தே; கயவாய்க் குண்டு நீர் - வாய் அகன்ற ஆழ்ந்த நீர்நிலையின்கண்; ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும் - விளங்குகின்ற பெரிய பளிங்குக் கற்களும் செவ்விய பொற்றுகளும் மின்னியொளிரும்; கருங்கல் கான்யாற்று அருங்சுழி வழங்கும் - இடையிடையே கரிய பாறை களையுடைய காட்டாற்று அரிய நீர்ச்சுழிகளில் வாழும்; கராஅம் பேணாய்- முதலைகட்கு அஞ்சாமல்; இரவரின் - இரவுப் போதுகளில் நீ வருகுவையாயின்; ஐய-; என் தோழி இனி வாழாள் - என் தோழியாகிய தலைமகள் இனி உயிர் வாழாள் காண் எ.று . ஐய. நீ கானம் என்னாய், பேணாய், இரவரின், என்தோழி இனி, உயிர் வாழாள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மின்னும் கான்யாறு எனவும், வழங்கும் கராஅம் எனவும் இயையும். சந்தனத்தின் கணுக்கள் நெருக்கமாக இன்மை பற்றி நெடுங்கண் ஆரம் என்றார். நெருங்கிய கணுக்களின்மை பற்றி மூங்கிலையும் சான்றோர் “நெடுங்கண் ஆடமை1”என்பது காண்க. வலத்தல், வலைபோற் பின்னிக்கிடத்தல். முசுண்டையின் கொடி மண முடை மையின் நறுங்கொடி எனப்பட்டது. தேன் கொள்ளற்கு மரத்தில் ஏறுங்கால் இம்முசுண்டை இடைநின்று தடுத்தலால் அதனை ஈர்த்து அறுத்தொழித்தல் பற்றித் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் என்றார். பரிதல் ஈண்டுக் களைதல் மேற்று. யாணர், புதுமை. நீர்வேட்ட யானைகளின் போக்குவரவால் இடிந்து கரைந்தமை பற்றி வாயகன்று ஆழ்ந்துள்ள நீர்நிலைக் கான்யாற்றைக் களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுநீர் என்றார். கய, பெருமை. கண்ணாடி போல்வ தாகலின் ஒளிறு வான் பளிங்கு என்றும், மண்ணிடையே பொற்றுகள் கிடத்தல் இயல்பாதலின் செம்பொன் மின்னும் என்றும் கூறினார். பெரிய பெரிய கற்பாறைகளால் நீர்ப்பெருக்குத் தடைப்பட்டுச் சுழித்த லால், அவ்விடங்களை அருஞ்சுழி என்ப. சுழிகள் ஆழ்ந்தும், தன்னிடை யகப்பட்டதனை வெளியேற விடாது சுழல்வித்தும் வருத்துமாகலின் அருஞ்சுழி எனப்பட்டன. அங்கே, நீரோட்டம் தடைப்பட்டுப் பழஞ்சேறு மிக்குத் தீநாற்றம் கமழ்தலின் அவண் முதலைகள் வாழ்வது இயல்பாதல் கண்டு, அருஞ்சுழி வழங்கும் கராஅம் என்பாராயினர். கொண்டது விடாக் கொடுமை யுடைமையாற் கராஅம் அஞ்சத்தகு பொருளாயிற்று, கராஅம், முதலை. இரவுவரின் என்பது இரவரின் என வந்தது. இர என்றே கொண்டு இரவு எனப் பொருள்கோடலும் முறை. தோழி, ஈண்டுத் தலைவி மேற்று. களவொழுக்கத்தின்கண் தலைமகன் இரவுக் குறியிடத்து வருதலை மறுத்து உள்ளுறையால் வரைவுகடாவலுறும் தோழி, இரவுக்குறிக்கண் அவனைத் தலைப்பெய்து அவன் வரும் கானத் தின் இயல்பை விதந்து, தேன் கொள்பவர் முசுண்டையின் நறுங்கொடியை அறுத்து எறிதலின், புதுப்புது நெறியறிந்து வருதல் அரிதென்பாள், பசுங்கேழ் நறுங்கொடி முகண்டைத் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் என்றும் , கான் யாற்றங்கரைவழி, களிற்றியானைகளின் இயக்கத்தால் இடிந்து செம்மையிழந்துள்ளமை கூறுவாள் களிறு பொரக் கரைந்த கயவாய் என்றும், யாற்றிடையும் கற் பாறைகளும் அருஞ்சுழிகளும் நிறைந்து கடத்தற கரியவாம் என்பாள், கருங்கற் கான்யாற் றருஞ்சுழி யென்றும், அவற் றிடையே சிக்கி விடின் அங்கே வாழும் முதலைகள் பெரிய ஏதத்தை விளைவிக்கும் என்றற்கு அருஞ்சுழி வழங்கும் கராஅம் பேணாய் என்றும், இவற்றை என் தோழியாகிய தலைமகள் அறிவளாதலால், இனிநீ இரவுப்போதில் வருவை யாயின் ஆற்றாது உயிரை விடுவள் என்பாள், இரவரின் இனி வாழாள் என்றும், இரவு வருதலை மறுப்பது கருத்தாதலின ஐய என்றும், அவள் இறப்பின் யானும் இறந்துபடுவேன் என்றற்கு என் தோழி என்றும், எனவே இனிநீ இவ்வயினின்றும் மீண்டு போதலையும் அவள் விரும்பாள் என்பது தோன்ற இனி என்றும் கூறினாள். தேன் கொள்ளக் கருதும் கானவர் பசுங்கேழ் இலையவாயினும் முசுண்டையின் நறிய கொடியை வாங்குபு பரிவது போல, இவளது நலம் பெறக் கருதும் நீ பகலினும் இரவினும் வருதலைத் தவிர்த்து இவளை வரைந்துகோடல் வேண்டும் என உள்ளுறுத் துரைத்தவாறு. இதனால் தலைமகன் தெருண்டு வரைவு மேற் கொள் வானாவது பயன் என அறிக. 293.கயமனார் களவொழுக்கத்தால் காதல் சிறந்தமை கண்ட தலைமகன், தலைமகளை நேரிய முறையில் வரைந்துகொள்ள முயன்றான். அக்காலத்தே தலைவியை வேண்டி நொதுமலர் சிலர் மகட் கோடலை விழைந்து முயல்வாராயினர்; பெற்றோரும் அவர்க்கே கொடை நேர்வார் போலத் தோன்றினமையின், தோழியும் தலைமகளும் பெற்றோர்க்கு அறத்தொடு நிற்கக் கருதினும் ஏற்ற செவ்வி வாய்க்காமையால் உடன்போக்குத் துணிந்தனர்; தலை மகனும் நன்றென உவந்து தலைமகளை அவளுடைய பெற் றோர் அறியாவாறு கொண்டுதலைக்கழிந்தான். தலைமகளைக் காணாமையால் பெற்றோர் பெரிதும் வருந்தினர்; தோழியும் ஆயமகளிரும் தலைமகள் தம்மை மறந்து உடன்போயினமை பற்றி மிகவும் வருந்தி மனம் கலங்கினர். மகட்பிரிவை ஆற்றாத நற்றாய் புலம்புவது காணச் செவிலி முதலாயினார்க்கு ஒருபால் வருத்தமும் ஒருபால் வெகுளியும் பொங்கி யெழுந்தன. ஆயினும், அறிவு அறைபோகாத பெண்மையால் தலைமகனையாதல் தலைமகளையாதல் நோவதை விடுத்து மகளை யீன்ற தன்னோடு ஒத்தவள் தலைமகனைப் பெற்ற தாயாதலால், தான் வருத்த முறுவது போல அவளும் வருத்த முறல் நேரிது எனத் துணிந்து, “ஒன்றுமறியாப் பேதையைத் தன் சொல்வழிக் கொண்டு தன் போக்குக் குடன்படுமாறு செய்து கொண்டுதலைக்கழிந்த காளை யாகிய தலைமகனை யீன்ற தாயும், அவனுடைய ஆயத்தாரைக் காணும்போ தெல்லாம் பெருந்துன்பம் என்போல் எய்துவாளாக” என்று மொழிந்தாள், அவளுடைய இக்கூற்றின்கண், மகளது செயலின்கண் அமைந்த அறத்தையும் மனத்தின் மென்மையையும் உணர்ந்து வெம்மையுறாத தாய்மையின் தண்ணிய பண்பும், உடன் போக் குக்கு வேண்டிய வன்மையை அவட்கு ஊட்டிய தலைமகனது வன்கண்மைக்கு வருந்தி அவனைப் பெற்ற தாயின் தீமையை எண்ணிச் சினக்கும் சிறுமையும் புலனாகும் திறம் கண்ட கய மனார் அவற்றை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப் 1பனிக்கள் ஆர்கைப் பார்முது குயவன் இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து விழவுத்தலைக் கொண்ட பழவிறன் மூதூர்ப் பூங்கண் ஆயம் காண்டொறும்2 எம்போற் பெருவிதுப் புறுக மாதோ3 எம்மிற் பொம்ம லோதியைத் தன்மொழிக் கொளீஇக் கொண்டுடன் போக வலித்த வன்கட் காளையை ஈன்ற தாயே. இது, தாய் மனை மருண்டு சொல்லியது; அவர் இடத்தாரைக் கண்டு சொற்றதூஉமாம். உரை : மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி-நீலமணிபோலும் கரிய கொத்துக்களையுடைய நொச்சி மாலையைச்சூடி; பனிக்கள் ஆர்கைப் பார்முது குயவன் - பனிக்கின்ற கள்ளுண் டலை யுடைய பாரகத்து முதுகுடி மகனான குயவன்; இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து - இடப்படுகின்ற பலியை எடுத்துரைக்கும் அகன்ற இடத்தையுடைய ஊர்மன்றத்தின் கண்; விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் - விழா எடுத்தலை மேற்கொண்ட பழமைச் சிறப்புடைய மூதூரின் கண்; பூங்கண் ஆயம் காண்டொறும் - பூப்போலும் கண்களை யுடைய ஆயத்தாரைக் காணுந்தோறும்; எம்போல் பெரு விதுப்புறுக - எம்மைப் போலத் தானும் மிக்க மனநடுக்கத்தை எய்துவாளாக; எம்மில் பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇ - எம்முடைய இல்லின்கண் இருந்த பெரிய கூந்தலை யுடைய தலைமகளை எம்மினின்றும் நீக்கித் தன் சொல் வலைப் படுத்திக்கொண்டு; கொண்டு உடன்போக வலித்த - தன்னோடு உடன்போக்கிற்கு ஒருப்படுத்திக் கொண்டுகழிந்த; வன்கண் காளையை - வன்கண்மையை யுடைய காளை போன்ற தலைமகனை; ஈன்ற தாய் - பெற்றெடுத்தவளாகிய தாயும் எ-று. முதுகுயவன் நுவலும் மன்றத்தையுடைய மூதூர் ஆயம் காண்டொறும் காளையை ஈன்ற தாய் எம்போற் பெருவிதுப்புறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நொச்சியின் பூங்கொத்துக் கரிதாய்த் தோன்றுதலின் மணிக்குரல் நொச்சி என்றார்; “மாக் குரல் நொச்சி”1 எனப் பிறரும் கூறுப. தெரியல், மாலை.ஆர்கை, உண்டல். பாரில் மக்களினத்துள் தோன்றிய முதுகுடிகளுள் குயவன் உண்கலம் சமைத்துத் தருதலால் சிறந்தமையின் பார்முது குயவன் என்றார். குயவன், குயம் என்ற சிறப்புப் பெற்றவன்; இயற்பெயர் கலஞ்செய்கோ, வேட்கோ என வழங்கும். ஊரவர் கூடிப் பலியிட்டுக் கடவுள் வழிபாடு செய்யும் மன்றம் இடுபலி நுவலும் மன்றம் எனப்படும். “பலிபெறு வியன்களம்” எனச் சான்றோர் குறிப்பதும் இதனையே யாம். பண்டை நாளில் ஊர்கள் தாம் எடுக்கும் விழாக்களால் ஒன்றினொன்று மேம் பட்டமை பற்றி, மிக்குநின்ற ஊர்கள் “விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்”2 என்று சிறப்பிக்கப்பட்டன. அம்மரபு பற்றி விழவுத் தலைக் கொண்ட பழவிறன் மூதூர் என்றார். பூப்போலும் கண்களையுடைமையின், இளஞ்சிறார்களைப் பூங்கணாயம் என்றார். “பூங்கட் புதல்வன்3” என்பது காண்க. மகளிரையும் “புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை4” எனக் குறித்த லுண்டு. விதுப்பு, நடுக்கம், “என்போற் பெருவிதுப் புறுக5” என்று பிறரும் கூறுதல் காண்க. வலித்தல், வற்புறுத்தல். மாது, ஓ: அசைநிலை. மகட்போக்கிய தாய் மனைக்கண்ணிருந்து தன்மகள் இருந்து விளையாடிய இடத்தையும் பொருளையும் காணும்போதெல் லாம் மகளது நினைவு எழுதலால் வருத்தம் மிகுபவள், அவ ளுடைய விளையாடாயத்தைக் கண்டு பெருங்கலக்க முற்று, தன்னைப்போலவே தலைமகனை யீன்ற தாயும் மனநடுக்கமுற்று வருந்துதல் வேண்டும் என்பாள், பூங்கண் ஆயம் காண் டொறும் எம்போற் பெருவிதுப்புறுக என்றாள். தலை மகனுடைய தாயைத் தான் வெகுண்டு கூறுதற்குக் காரணம் கூறுவாள், அவன் தன் மகளைத் தன் மொழியால் வளைத்துக் கொண்டமை தோன்ற எம்மிற் பொம்ம லோதியைத் தன் மொழிக் கொளீஇ என்றும், பின்னர் அவளை யுடன்கொண்டு போயின செய்தியைக் கொண்டுடன் போக வலித்த காளை என்றும், தம்பால் அன்புடைய மகள் மனத்தைத் தம்மிற் பிரித்துத் தன் வயமாக்கிக் கொண்டானா தலின் அவன் மனம் மிகவலிது என்பாள் வன்கட்காளை என்றும், மேன்மையின்றி வன்கண்மை யுடையானைப் பயந்த குற்றத்துக்காக அவள் வருந்தல் வேண்டும் என்றற்கு ஈன்றதாய் என்றும் கூறினாள். இளையோரது இளமை யுள்ளத்துக் கிளர்ச்சியும் மலர்ச்சியும் ஊரில் எடுக்கும் விழாச் செய்தி கேட்ப எழுந்து, அது நிகழ மலர்ந்து விளங்குமாதலின், பிறர் மக்கள்பால் அது காணுங்கால் பெற்றோர்க்கு மறைந்த தம் மக்களைப் பற்றிய நினைவு தோன்றி வருத்துவது இயல்பாதலால், விழாச் செய்தி, முதற்கண் விதந்து பார்முதுகுயவன் பலி நுவலும் மன்றத் தின்கண் விழவெடுத்தலையுடைய பழவிறல் மூதூர் என எடுத்துக் கூறப்பட்டது. நற்பண்புடைய மக்களது நற்செயல் விளங்கித் தோன்றுமிடத்து, “இவன் தந்தை என் நோற்றான் கொல்1” எனப் பாராட்டுவோர், “வயிறு மாசிலீஇயர் அவன் ஈன்ற தாயே2” என வாழ்த்துதல் போல வன்கண்மை மிக்குத் தோன்றிய விடத்து அதனால் வருத்தப்பட்டோர், என்போற் பெருவிதுப் புறுக மாதோ வன்கட் காளையை ஈன்ற தாயே என்று வெகுண்டு ரைத்தல் முக்காலத்தும் ஒத்தியலும் உலகியல் என அறிக. இதனால் நற்றாய் வெகுண்டு உரைத்து ஆற்றாமை தீர்வாளாவது பயன். 294. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் இச்சான்றோரது இயற்பெயர் தெரிந்திலது. கம்பூர் என்னும் ஊரிடத்தே புலமை சிறந்து மன்னர் மதிக்கும் நற்பணியால் கம்பூர்கிழான் ஆயினார். அதனால் அவரது இயற்பெயர் மறைந் தொழிந்தது. புதுக்கயம் என்பது இவரது பிறந்தவூர்; ஆங்கே இவர் பொன்னோட்டம் பார்க்கும் தொழில் வல்லராய் விளங் கினமையின் புதுக்கயத்து வண்ணக்கன் எனப்படுவாராயினர். வண்ணக்கராவார் இக்காலத்தே பொன் வயிர நகைவாணிகம் செய்பவராவர். இவர் வண்ணக்கமே யன்றி நல்லிசைப் புலமை யும் நன்குபெற்றவர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டே கிடைத்துள்ளது கடிமணம் செய்து கொண்ட தலைமக்கள் தனி மனைக்கண் தம்முடைய அறத்தை இனிது செய்யத் தொடங்கிய அணிமைக் கண் தலைவியின் தோழி வந்து காண்பாளாயினாள். களவின்கண் அவன் வரைவை நீட்டித் தொழுகினமையின் அழிவில் கூட்டம் பெறாமையால் மேனி மெலிந்து நிறம் வேறுபட்டு வேட்கைநோய் மிக்குத் தலைவி உழந்ததனை நேரிற்கண்டு வருந்தினவளாதலின். தோழி, யாது குறையும் இன்றித் தலைவி இன்பம் நிறைந்து மேனி கதிர்த்துக் கவின் மிக்கு விளங்குவது கண்டாள். அவட்கு வியப்பும் உவகையும் மேம்பட்டுத் தோன்றின. அதனால் அவள், தாயர் முதலாயினார்க்குத் தான் கண்டதனை விதந்து கூறலுற்று, “நாட னாகிய தலைவனது மார்பு விசும்பு போல்வது” என்றும், விசும்பானது தீயும் வளியும் தோன்றுதற்கு இடமாவது போலத் தலைவன் மார்பு அவட்குப் பிரிவால் நோயும் புணர்வால் இன்பமும் தோன்றுதற்கு இடமாயிற்று என்றும் கூறினாள். அது கேட்டவர், அவள் கூறுவன புனைந்துரை யோவென ஐயுற்று நோக்கினமையின், யான் கூறுவது மாயமன்று என்று வற்புறுத்தினாள். தீப்பயந்த விசும்பு வளி பிறத்தற்கும் இடமானாற் போல வேட்கைநோய் விளைத்தொழுகிய தலைவனது மார்பு அழிவில் கூட்டத்து அயரா இன்ப நுகர்ச்சிக்கு இடமாதலின், அஃதல்லது கற்புடை மடந்தைக்கு உயிர்நிலைக்களமாவது பிறிதில்லை என்ற நற்கருத்துத் தோழியின் இக்கூற்றின்கண் அமைந்திருப்பது கண்ட கம்பூர்கிழார் அதனை இப்பாட்டில் தொடுத்துப் பாடியுள்ளார். தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ மாயம் அன்று தோழி வேய்பயின்று 1எருவையின் நீடிய பெருவரை அடுக்கத்துத் 2தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைக் கோடுகண் டன்ன செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள் சிலம்புடன் கமழும் சாரல் 3விலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே இது, மணமனை புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது. உரை : தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு - தீயும் காற்றும் விசும்பின்கண் தோன்றினாற்போல; நோயும் இன்பமும் ஆகின்று - துன்பமும் இன்பமும் முறையே உளவாயின; வேய் பயின்று - மூங்கில்கள் மிகுந்து; எருவையின் நீடிய பெருவரை யடுக்கத்து - கொறுக்கச்சி போல நெடிது வளர்ந்த பெரிய மலைப்பக்கத்தே; தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇ- தொன்றுதொட்டு வருகின்ற பகையாகிய புலியுடனே மாறுபாடு மிகுதலால் சினம் சிறந்து; கொன்ற யானைக் கோடுகண்டன்ன - அதனைக் கொன்று சிவந்த யானையது கோட்டினைக் கண்டாற்போன்ற; செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள் - சிவந்த புறவிதழையுடைய கொழுவிய அரும்பு மலர்ந்த காந்தட் பூக்கள்; சிலம்புடன் கமழும் சாரல்-மலையிடமெங்கும் மணம் நாறும்; விலங்கு மலைநாடன் மலர்ந்த மார்பு - நாட்டிற் குறுக்கிட்டு நிற்கும் மலையையுடைய நாடனாகிய தலைவனது அகன்ற மார்பு; தோழி - மாயம் அன்று - யான் கூறும் இது பொய்யன்றுகாண் எ.று. விலங்குமலைநாடன் மலர்ந்த மார்பு, விசும்பு தீயும் வளியும் பயந்தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று; தோழி, இது மாயமன்று எனக்கூட்டி வினைமுடிவு செய்க. மாதும் ஓவும் அசைநிலை. வேய், மூங்கில். எருவை, கொறுக்கச்சி. இன், ஒப்புப்பொருட்டு. தொன்று, பழைமை. துப்பு, ஆகுபெயராற் பகைவிலங்காகிய புலியின் மேற்று, காந்தட்பூவின் இதழ் விளிம்பு சிவந்து இடைப் பகுதி வெளுத்துத் தோன்றுதலின், குருதி படிந்த யானைக்கோடு உவமமாயிற்று. “மறமிகு வேழம்தன் மாறுகொள் மைந்தினால், புகர்நுதல புண்செய்த புய்கோடு போல, உயர்முகை நறுங்காந்தள் நாடோறும் புதிதீன”1 என்று பிறரும் கூறுதல் காண்க. மலர்ந்த மார்பு, விரிந்த மார்பு. களவின்கண் தோழியிற்கூட்டம் தொடங்கிய நாள் முதல் தலைமகட்கு அழிவில் கூட்டத்தின்கண் வேட்கை மீதூர்ந் தமையும், அதனைப் பெறாவகையில் இரவுக்குறி, ஒரு வழித் தணத்தல், வரைவு நீட்டிப்பு, வரைபொருட்பிரிவு, வேற்றோர் வரைவு முதலிய நிகழ்ச்சிகளால் தலைவி பெருந்துயர் உழந் தமையும் நெஞ்சின்கண் நிலைபெற்றி ருத்தலின், நோய் ஆகின்று என்றாள். விசும்பிடை வளியும் வளியிடைத் தீயும் பிறக்குமென்ப வாயினும், பொதுவகையில் அவ்விரண்டற்கும் விசும்பு இட மானாற் போலத் தலைமகன் பிரிவால் நோயும் புணர்வால் இன்பமும் உளவாயினும் இரண்டற்கும் அவன் மார்பு இடமாம் என்பது கருத்தாகக் கொள்க. நோய் செய்வ தொன்று இன்பம் தாராதென்றும் இன்பந் தருதற்குச் சமைந்த தலைமகன் துன்பம் செய்யானென்றும், ஐயுற்றுநோக்கிய தலைவி முதலாயினார்க்குத் தான் கூறியது மெய்யென்று வற்புறுப்பாள், தோழி மாயமன்று என்றாள். பகைவென்று சிவந்த யானைக்கோடு போன்ற காந்தள் சிலம்பகமெங்கும் மணங்கமழும் என்றது, அலர் கூறுவார் தலை மடங்கத் தலைமகளை மணந்து கொண்ட தலைவனது அன் பொழுக்கம் மனையகம் முழுவதும் பரவி மாண்புறுத்து கின்ற தென்றவாறாகக் கொள்க. யாவரும் இன்புறுவாராவது பயன். 295.ஒளவையார் களவின்கண் தோழியிற் கூட்டம் பெற்ற தலைமகன் விரைந்து வரைந்துகோடலைக் கருதாமற் குறியிடத்தே தலைமகளைத் தனிமையிற் கண்டு அளவளாவி மகிழ்ந்து வந்தான். தோழி வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரைவு கடாவி வந்தாள். தலைமகனோ வரைதலைத் தெருளாது களவே நீட்டித்தொழு கினான். ஒருகால் அவன் தலைவிமனையின் சிறைப்புறத்தே வந்து நிற்பது கண்ட தோழி, இற்செறிப்புரைத்து வரைவுகடாவும் கருத்தினால், தலைவியோடு சொல்லாடுவாள் போன்று அவன் செவிப்படுமாறு, “தாழ்ந்த கரிய கூந்தலையுடையாய், இற்புறத்தே சென்று விளையாடுதலைக் கையொழிந் தமையின், நமது ஆய மகளிர் தனிமையுற்று வருந்தாநின்றனர்; நமது ஒழுக்கத்தை அன்னையும் அறிந்து அரிய காவலுட் படுத்தி விட்டனள்; நமது இளமைநலம் இற்புறத்தே ஒழிய யாம் மனம் உடைந்து மனைக் கண்ணே மூத்து முதிர்ந்தொழிவதையன்றி வேறு செயலில்லேம்” என மொழிந்தாள். அவளது கையறவு உணர்ந்து தலைமகன் தெருண்டு வரைவதற்கு ஆவன முயல்வானாயினன். தோழியின் இக்கூற்றின்கண், அன்னையறிவும் அருங்கடிக் காப்பும், தலைவன் வரைவு நீட்டிக்கும் கொடுமையும் சுட்டிக் காட்டி வரைவு விரைவில் நிகழ்தற்கு முயலும் அவள் நலம் கண்ட ஒளவையார் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் 1புறன்அவிழ்ந் தொலிவரும் தாழிருங் கூந்தல் ஆயமும் 2அழுங்கின்றி 3யாயும்அஃ தறிந்தனள் 4அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை வேறுபன் னாட்டிற் கால்தர வந்த 5அருவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம் இளநலம் இற்கடை ஒழிய உளமெலிந் திவணம் முதிர்கம் யாமே. இது, தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது; சிறைப்புறமுமாம். உரை : முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின்-பாறைகள் சரிந்து வீழ்தலால் முடிசரிந்த மலைப்பக்கத்தில் தீயாற் கருகிய கொடி போல; புறன் அவிழ்ந்து - முதுகிடத்தே முடியவிழ்ந்து வீழ்ந்து கிடக்கும்; ஒலிவரும் தாழிருங்கூந்தல் - தழைத்த கரிய கூந்தலை யுடையாய்; ஆயமும் அழுங்கின்று - ஆயமகளிர் பலரும் துணைமையிழந்து வருந்துவாராக; யாயும் அஃது அறிந்தனள் - நம் அன்னையும் நம் ஒழுகலாற்றினை அறிந்துகொண்டு; அருங்கடிக்காப்பு அயர்ந்தனள் - கடத்தற்கரிய காவலையும் அமைத்துவிட்டாள்; எந்தை - எம் தந்தையும்; வேறுபல் நாட்டில் - வேறாகிய பல நாடுகட்குச் சென்று திரும்பி வருதலால்; கால் தரவந்த அருவினை நாவாய் தோன்றும் - காற்றால் தள்ளப்படும் அரி யதொழிற்பாடமைந்த அவ னுடைய கலங்களும் நம் கண்காணப் போந்து தங்கும்; பெருந் துறை - பெரிய நீர்த்துறைக்கண் விற்கப்படும்; கலிமடைக் கள்ளின் சாடியன்ன - மேன்மேலும் உண்ணப்படும் கட் குடமாகிய சாடி போன்ற; எம் இளநலம் இற்கடை ஒழிய - எமது இளமையும் அழகும் இல்லின்கண்ணே இருந்துகெட; உளம்மெலிந்து இவணம் யாம் முதிர்கம் - உள்ளமிழந்து இவ்வண்ணமே மூத்து முதிர்வேமாக எ.று. கூந்தல், ஆயம் அழுங்கின்று; யாய் அறிந்து அருங்கடிக் காப்பு அயர்ந்தனள்; எந்தையது நாவாய் தோன்றும்; பெருந் துறைக்கட் சாடியன்ன எம் இளநலம் இற்கடையொழிய, உளம் மெலிந்து இவணம் யாம் முதிர்கம் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வெயிலாலும் காற்றாலும் மழையாலும் அணுச்செறிவு குலைதலின் பாறைகள் தம்மிற் பிளந்து முடிசரிந்து வீழ்ந்தமை தோன்ற முரிந்த சிலம்பு என்றும், காட்டுத் தீயால் வெந்து கரிந்த கொடிகளை எரிந்த வள்ளி என்றும் கூறினாள், கரிந்து வாடிக் கிடக்கும் கொடிபோலத் தலைமுடி யவிழ்ந்து முதுகிடத்தே கிடத்தல் கூறியவாறு. ஆயம், அஃறிணைச் சொல்லாய் நின்றமை யின் அழுங்கின்று என அதற்கேற்ற வினைமுடிவு கொண்டது; “வல்லது அரசு” என்றாற்போல. அறிந்தனள் : முற்றெச்சம். அருங்கடிக்காப்பு, கடத்தற்கரிய காவல்; இற்செறிப்பு. அரு வினை நாவாய், கடலகத்து மோதும் காற்றாலும் அலைகளாலும் கட்டும் கோப்பும் கெடாவகையில் இறுகப் பிணிக்கப்பட்டு அழகிய தொழிற்பாடு அமைந்த மரக்கலம். கட்சாடிகள் நிறைந் திருக்கும்போது புறத்தே தூய்மையும் ஒப்பனையும் செய்து வைத்து, இல்லாதபோது இற்புறத்தே வெயிலிற் புலருமாறு போகடப்படுதல் இயல்பு. அதுபோல மகளிரும் இளமையும் நலமும் நிறைந்துள்ளபோது மனைக்கண் வைத்துக் காப்பிட்டு ஓம்பப்படுவதும், அவை கழிந்தபோது ஒரு காவலும் இன்றிப் புறத்தே விடப்படுவதும் உலகியல். வரைவுமேற்கொள்ளாது களவினை நீட்டித்தொழுகும் தலைமகன் செயல்கண்டு வருந்தும் தோழிக்கு, பெற்றோர் செய்த இற்செறிப்பு மிக்க வருத்தம் பயந்தமையின். அதனைச் சிறைப் புறத்து நின்ற தலைமகன் செவிப்படுமாறு சொல்லுதலின், கோடையால் வெம்பிப் பொலிவின்றித் தோன்றும் குன்றின் காட்சியை விதந்தெடுத்து முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் என்றும், காதலனொடு தலைப்பெய்தலின்மையின் நெய்யும் பூவுமாகிய ஒப்பனையின்றி வெறிதே தாழ்ந்து கிடக்கின்றமை தோன்றக் கூந்தலைப் புறன்அவிழ்ந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல் என்றும் கூறினாள். புறத்தே ஆயவெள்ளம் சூழ்வரச் சென்று விளையாடி இன்புறும் திறம் இன்றி மனைக்கண் செறிக்கப்பட்டமை தோன்ற, ஆயமும் அழுங்கின்று என்றாள். எனவே, இனி பகற்போதில் குறியிடத்தே தலைமகனைக் காண்டல் இல்லை என்றாளாம், இரவுக் குறிக்கும் இனி இடம் உண்டாகாவாறு அன்னை புறக்காவலும் மனைக்காவலும் நன்கு அமைத்து விட்டனள் என்றும், அவட்கு நமது ஒழுகலாறு தெரிந்து விட்டதென்றும் கூறுவாள் யாயும் அஃது அறிந்தனள் அருங்கடி யயர்ந்தனள் காப்பு என்றாள். அருங்கடி, நகர்க் காவல்; காப்பு, மனைக்காவல். இதுகாறும் இல்லாதிருந்த தந்தை காவலும் இப்பொழுது அவன் தன் நாவாயுடன் போந்தமையின் நிறைந்தது என்பாள், எந்தை அருவினை நாவாய் தோன்றும் என்றாள். கலங்களின் போக்குவரவு மிகுதியால் மக்கள் நிறைந்த பெருந்துறைக்கண் கட்கடைகள் மிக்கிருக்கும் எனவுணர்க. இற்புறத்தே நிறுத்த கட்சாடிகள் வற்றிப் புறத்தே ஒப்பனை யிழந்து பொலிவிழந்து கிடப்பது போல இளமை நலம் வறிதே இழந்து மூத்து விளிவெய்தக் கடவேம் என்பாள், கலிமடைக் கள்ளின் சாடியன்ன எம் இள நலம் இற்கடை யொழிய உளம் இழந்து இவணம் முதிர்கம் என்றாள். விரைந்த வரவைத் தலைமகன் மேற்கொள்ளாமை பற்றி உளம் இழந்து இவணம் முதிர்கம் என்றாள்; இதனாற்பயன், தலைமகன் தெருண்டு வரைவானாவது. 296.குதிரைத் துறையனார் இச்சான்றோருடைய பெயர் குதிரைத் திறையனார் எனவும் குதிரைத் தறியனார் எனவும் காணப்படுகிறது. குதிரைத்துறை யென்பது தென்கன்னட மாவட்டத்துக் கடற்கரைச் சீறூர்களில் ஒன்று; இப்போது நாலைந்து வீடுகளைக் கொண்டு மாப்பிள்ளை யெனப்படும் சோனகர் வாழும் மிகச் சிறிய வூராகக் காட்சி வழங்குகிறது. ஒரு காலத்தே இவ்வூர் மேலைநாட்டினின்றும் கலத்தின் வந்த குதிரை வாணிகத்தால் இப்பெயர் பெற்றிருக் கலாம். இனி, குதிரைத் துறையென்பது பண்டைய காவிரிப் பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாகலாம் என்றும், “நீரின் வந்த நிமிர்பரிப் புரவி”யிறங்குமிடமென்றும் சிலர் கருதுகின்றனர். இச்சான்றோர் அப்பகுதிக் குரியரானது பற்றி ஏனையோர் பலரும் இவரைக் குதிரைத் துறையனார் என வழங்கினமையின் இயற்பெயர் மறைந்தொழிந்தது. இவர் பாடிய தாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத்துளது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் வாழ்தல் வேண்டிச் செய்தற்கமைந்த கடமை காரணமாகத் தலைமகன் தலைவியின் நீங்கிச் சேறற்குரிய னானான். உண்டலும் மக்களைப் பெருக்கலுமே வாழ்க்கையின் குறிக்கோளன்று. உண்டன் முதலியவற்றோடு தம்மோரன்ன மக்களும் வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றித் தமக்கு வாழ்வில்லை யென்று கருதி அது குறித்துப் பொருளீட்டலும் காத்தலும் வகுத்தலும் துய்ப்பித்தலும் துய்த்தலும் தலைமை வாழ்வின்கண்ணவாகும். அத்துறையில் தலைமகன் தலைவியிற் பிரிந்து சேணிற் செல்லுதல் இயல் பாதலின், பொருளீட்டுவான் சேறல் பொருட்பிரிவு எனவும் பொருளைத் தொகுத்தல் வகுத்தல் காத்தல் துய்த்தல் துய்ப்பித்தல் முதலிய கடமை குறித்துப் பிரிதல் வினையாதலின் வினைவயிற் பிரிவு எனவும் பொருள்நூல்கள் கூறுவது இயல்பு. அவ்வாற்றால் ஒருகால் தலைமகன் வினைவயிற் பிரியும் கடமையுடைய னானான். பிரிவு கடமையாயினும், கூடியிருந்து இன்புறு வோர்க்கு அது மிக்க வருத்தமே நல்கும்; ஆகவே, அவன் பிரிவுக் குறிப்பினை யறிந்து தோழி போந்து தலைமகட்கு உரைக்கவும், அவட்கு ஆற்றாமை மிக்கது. தலைமகனும் தோழியும் தகுவன கூறி அவளை ஆற்றுவிக்க முயன்றபோது “வினைவயிற் பிரிதல் ஆண்மைக்கு இயல்பு; பிரிவாற்றி மனைக்கண் உறைதல் பெண்மைக்குச் சிறப்பு” என்றெல்லாம் உரைத்தனர். அதுகேட்ட தலைமகள், “இஃது என்ன கொடுமை1 பிரிந்து வருந்துதல் ஆண்மைக்கியல்பும் இருந்து வருந்துதல் பெண்மைக் கியல்பு மாம். பிரிவுக் கேதுவாகிய வினையும், “வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும்”என்பர்; இப்போது கொன்றை மலரும் கார்காலம் நிலவுகிறது; இது பிரியாது இருந்து மகிழ்தற்குரியது; பிரிந்தோரும் பிரிவு தவிர்ந்து மீடற்குரியது. அற்றாக. நம் தலைவர் வினைவயிற் பிரிவர் என்பதும், யாம் பிரிவெண்ணி வருந்தியுறைதல் வேண்டும் என்பதும் இயனெறிக்கு மாறுபடுகின்றனவே” என்று கூறினாள். இக்கூற்றின்கண், தலைமகள் வினை நிகழ்ச்சிக்கு இன்றி யமையாத காலக் கூற்றின் பொருந்தாமை காட்டி வினைவயிற் பிரிவை மறுக்கும் மதிநுட்பம் கண்ட குதிரைத் துறையனார்க்கு வியப்பு மிக்கதனால், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். 1என்னா வதுகொல் தோழி மன்னர் வினைவல் யானைப் புகர்முகத் தணிந்த பொன்செய் ஓடைப் புனைநலம் கடுப்பப் புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர் ஏகன் மீமிசை மேதக மலரும் பிரிந்தோர் இரங்கும் 2அரும்பெறற் காலையும் வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் செல்ப என்ப காதலர் ஒழிதும் என்பநாம் 3அருந்துயர் உழந்தே. இது, தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது. உரை : தோழி-; என்னாவது கொல் - என்னவாய் முடியுமோ; மன்னர் வினைவல் யானைப் புகர்முகத்து அணிந்த - வேந்தர் களின் வினை யறிந்து செய்தல் வல்ல அரச யானையின் புள்ளி பொருந்திய முகத்தில் அணியப்பட்ட; பொன்செய் ஓடை புனைகலம் கடுப்ப- பொன்னாற் செய்யப்பட்ட பட்டத்தின் கண் ஒளிரும் ஒப்பனை யழகு போல; புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்- உள்ளே புழையுடைய காய்களைக் காய்க்கும் கொன்றையின் கொம்பினிடத்தே கொடிபோல் அழகுறப் பூத்திருக்கும் பூங்கொத்து; ஏகல் மீமிசை மேதக மலரும் - உயர்ந்த பாறைமேல் சிறப்பாக மலர்ந்து தோன்றும்; பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும் - காதலரைப் பிரிந்தோர் தனித்திருந்து வருந்துதற் கிடனாகிய பெறற்கரிய கார் காலத்திலும்; வினையே நினைந்த உள்ளமொடு - வினை செயல் வகைகளையே நினைந்து செல்லும் உள்ளத்துடனே; காதலர் துனைஇச் செல்ப என்ப - நம் காதலராகிய தலைவர் விரைந்து செல்குவர் எனக் கூறாநிற்பர்; நாம் அருந்துயர் உழந்து ஒழிதும் என்ப - நாம் பொறுத்தற்கரிய பிரிவுத்துயரைத் தாங்கி இங்ஙனே இருந்தொழிதல் வேண்டும் என்பர் ஆக லான் எ.று. தோழி, யானைமுகத் தணிந்த ஓடைப் புனைநலம் கடுப்பக் கொன்றைக் கொடியிணர். கன்மிசை, மேதக மலரும், அரும் பெறற் காலையும், காதலர், வினையே நினைந்த உள்ளமொடு, துனைஇச் செல்ப என்றும், நாம் அருந்துய ருழந்து ஒழிதும் என்றும் கூறுவராகலின், இஃது யாதாய் முடியுமோ? அறியேன் காண். எனக் கூட்டி வினைமுடிவுசெய்க. வினைவகை பலவும் நுண்ணிதாக அறிந்து நன்கு செய்து உயர்ந்த யானைகளையே அரசர்கள் பேணிப் போற்றுவதோடு மிகச்சிறந்த ஒப்பனை யமைந்த ஓடைகளையே அணிவராதலின மன்னர் வினைவல் யானை என்றார். வன்மை சிறந்த யானையின் முகம் புள்ளி மிக்கிருப்பது பற்றிப் புகர்முகம் என்றும், முகப்பட்டம் உயர்ந்த பொன்னாற் செய்யப்படுமாறு தோன்றப் பொன்செய் ஓடை என்றும், சரக்கொன்றையின் இணர்போல் அஃது ஒப்பனை செய்யப்பட்டிருப்பதைப் புனைநலம் என்றும் சிறப்பித்தார். புழற்காய், உள்ளே புழையையுடையதாய், புழல் - புழை. “புழற்கால் ஆம்பல்”1 என வருவது, “புழைக்காலாம்பல்”2 எனப்படுவதால் ஈதுணரப்படும். “பொரியரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை”1 எனப் பிறரும் கூறுவர். கொன்றையின்பூ கொடியிடைக் கோத்தது போல, ஒழுங்குபடப் பூத்திருத்தலின், கொன்றைக் கோடணி கொடியிணர் என்றார்; பிறரும் “கொம்புசேர் கொடியிணர்”2 என்றும், “கொன்றைக் கொடி யிணர் ஊழ்ப்ப”3 என்றும் கூறுப. ஏ : உயர்ச்சிப் பொருட்டாகிய உரிச் சொல்.4 மேதகவு, மிக்க அழகு. காதலாற் கூடியிருப் போர்க்கு மிக்க இன்பத்தையும் பிரிந்தோர்க்கு ஆற்றற்கரிய தனிமைத் துன்பத்தையும் தரும் பருவமாதலின் கார்ப்பருவத்தைப் பிரிந்தோர் இரங்கும் காலையெனவும், பிறர் உளதாக்க உண்டாகாது இயற்கை நெறியில் தானே தோன்றுதல் பற்றி அரும்பெறற்காலை எனவும் கூறினார். “நல்லார் மனங்கவலத் தோன்றிப் பணிமொழியைக், கொல்வாங்குக் கூர்ந்தது இக்கார்”5 எனப் பிறரும் கூறுதல் காண்க. இன்பத்தை விலக்குதலின் வினையே என்புழி ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம். அருந்துயர் என்றார், மேன்மேலும் பெருகி நின்று வருத்தல் பற்றி. மனையறத்தில் கருத்திருத்தி ஆவனசெய்தொழுகும் தலை மகட்குத் தோழி போந்து தலைமகனது பிரிவுக்குறிப்பை உணர்த் தியதும், அவள் திடுக்கிட்டுத் திகைப்புண்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தாள். புணர்வின்கட் பெறும் இன்பத்தினும் பிரிவின்கண் உளதாகும் துன்பம் பெருகித் தோன்றவே, அவள் உள்ளத்தே அப்பொழுது நிலவிய கார்காலக் காட்சியும் காதலர் வாழ்வும் மாறி மாறிப் புலனாயின; அதனால் வேட்கையால் வெதும்பித் தோழியை நோக்கி, இஃது யாதாய் முடியுமோ அறியேன் என்பாளாய், என்னாவதுகொல் தோழி என்றாள். அது கேட்டு மருண்ட உள்ளமொடு மயங்கிநோக்கிய தோழிக்குக் கண் ணெதிரே காட்சி நல்கிய கார்ப்பருவத்தைக் காட்டி இப்பருவம் பெறற்கரியது; அரியது இயைந்தவழி நெகிழவிடாது அதனை விரைந்து பயன்கோடல் அறிவுடைமை யென்ற கருத்தால் அரும் பெறற் காலை என்றும், இக்காலத்தே மனைக்கண் இருந்து அதற்குரிய அறஞ்செய்வோர் அதனிற் பிரிந்து சென்று பொருள் செய்தலை நினையார் என்பாள், அரும்பெறற் காலையும் என்றும், மனையுறைந்து மாணறம் புரிந்தொழுகும் மகளிர் பெறற் குரிய பொருளாகிய இன்பப் பேற்றுக்கு அமைந்த தாகலின், இக்கார்காலத்தே காதலர் பிரிந்து செல்லு முகத்தால் தனிமை யுறுவரேல் இயற்கையின் ஒறுத்தலால் வருந்துவரென்பாள், பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும் என்றும் மொழிந்தாள். உம்மை பிரிவு கூடாதென்பதை வற்புறுத்தலின் எதிர்மறை. பின்னர் அவர் பிரிவு நினைதற்குக் காரணம் யாதா மென நினைவாள் வினை மேற்கொண்டவழி இன்பமும், இன்ப நுகர்ச்சிக்கண் வினையும் நினைத்தல் பொருள்செயல்வகைக்குப் பொருந்தாதாக, தலைவர் அவ்வாறு மாறி நினையும் உள்ளத்த ரென்பாள், வினையே நினைந்த உள்ளமொடு என்றும், இங்ஙனம் தடுமாறியதனால் விரைவு தோன்றி முடுகுகிற தென் பாள், துனைஇச் செல்ப என்றும், இந்நிலையிற் பிரிவரேல் காதல் நிறைந்திருத்தற்குரிய அவருள்ளம் வினைக்குரிய நினைவுகட்கு இடமாம் என்றற்குக் காதலர் என்றும் கூறினாள். காதலர் எதிர்மறைக் குறிப்புமொழி. அக்காதல் பற்றுக்கோடாக வாழும் நாம் துயர்மிகுதியால் வருந்தியொழிவதன்றி வேறு செயலிலம் என்பாள் ஒழிதும் என்ப நாம் அருந்துயருழந்தே என்றாள். என்ப, இருவழியும் அசைநிலை என்றுமாம். அவர்பாற் பிரிந்து செலவும் நம்பால் இருந்தொழிவும் அமையுமாயின் வாழ்க்கை பயனின்று என உள்ளுறையாற் குறித்தலின் என்னாவதுகொல் தோழி என்றாள். யானையின் முகத்தணிந்த ஓடையின் புனை நலம் கடுப்பக் கொன்றைக் கொடியிணர் மேதக மலர்ந்து புழற் காய் காய்க்கும் என்றது, தலைமகன் குடிக்கு மங்கல மனைவியாய் மாண்புறும் யான் இன்பவுள்ளீடில்லாத வாழ்க்கையளானேன் காண் என உள்ளுறுத்தவாறு. தலைவன் செலவழுங்குவானாவது பயன். 297.மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் இச்சான்றோர் பெயர்க்கண் உள்ள ஞாழலார் என்பது ஞாழார் எனவும் குறிக்கப்படுகிறது. அளக்கர் ஞாழலார் என்பது இப்பாட்டின் ஆசிரியரான மள்ளனார்க்குத் தந்தை பெயர். அவரும் சிறந்த சான்றோராதலின் ஞாழலார் என்று சிறப்பிக்கப் பெறுகின்றார். கழிக்கரைக் கண்ணின்ற ஞாழல் மரத்தை அளக்கர் ஞாழல் எனப் பாடிய சிறப்புப்பற்றியோ அளக்கர் என்னும் ஊரிடத்தே தோன்றி, ஞாழல் என்ற பெயர் பூண்டகாரணத் தாலோ அவர் அளக்கர் ஞாழலார் என்ற சிறப்பெய்தி முடிவில் மதுரைக்கண் வந்து தங்கினமைபற்றி, மதுரை அளக்கர் ஞாழலார் எனப்படுவாராயினர். மள்ளன் : இயற்பெயர். சிறுகுடிகிழான் ஆன பண்ணன் என்பவன் இம் மள்ளனார் காலத்திற் சிறப்புற்று விளங்கினான். முடிவேந்தனான குளமுற்றத்துத் துஞ்சிய சோழன் கிள்ளிவளவனுக்கு அவன் யாத்த நண்பன். வளவனே அவனைப் புறப்பாட்டொன்றில் “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”என வாழ்த்தியுள்ளான். சான்றோரான கோவூர்கிழார் முதலியோர், “கைவள் ளீகைப் பண்ணன்”எனவும், “தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” எனவும் பாராட்டுவர். அப்பெற்றியோனை மள்ளனாரும் பாடியுள்ளார். அதன்கட் செந்நாப்புலவர்களை “நுண்Qல்தடக்கையின் நாமருப் பாக, வெல்லும் வாய்மொழிப் புலவர்” எனச் சிறப்பித்து அவர்கட்குப் “புல்லுடைய விளைநிலம் பெயர்க்கும் பண்ணன்” என இவர் பாடியிருப்பது இன்பம் தருவதொன்று. இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. களவுக் காதலொழுக்கம் பூண்ட தலைமக்களில் தோழியிற் கூட்டம் பெற்ற தலைமகன் வரைந்துகோடற்கண் விரையாது காதல் மாண்புறுவது கருதி நீட்டித் தொழுகுகிறான். அவளது காதல் பெருகி அவனை இன்றியமையா அளவினை யடைந்தது கண்ட தோழி, அவனைக் குறிப்பால் வரைவு கடாவலானாள். ஒருகால் தலைமகன் போந்து தலைவி மனையின் சிறைப்புறத்தே வந்துநிற்பது கண்டு தலைவியோடு சொல்லாடுபவள் போன்று அவன் செவிப்படுமாறு ஒரு புதர் அருகே நின்று, நின்னை உண்பிக்கக் கொணர்ந்த பால் பொன்வள்ளத்தில் கட்டிலின் கீழிருப்ப அது நின்மேனி போலும் பொன்னிறம் பெற்றது; நீயும் கட்டிலின் இறங்கிச் சிறிதும் நடக்கின் றாயில்லை; படுக்கையை யும் வெறுத்தாய் போல எழுந்து உட்கார்ந்து கள்ளுண்டு மகிழ்ந்தாற் போலக் கண் சிவந்துள்ளனை; இவ்வேறுபாடு என்னையெனவும் நீ நினைத்திலை; நின் உள்ளத்துக் குறிப்பும் மிகப் பெரிதாக உளது. தலைவனாகிய காதலன் போந்து நின் நல்ல உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமை யுணராமையின், அன்னை யும் மையலு றாளாயினும் பிறர் ஐயுறாவாறு கடுங்குரலெடுத்து அழைக்கின்றாள்; காதலரோ நம் நிலை யுணர்ந்து வரைகின்றா ரில்லை; யான் செய்வதறியாது வருந்துகின்றேன்” என்று சொன் னாள். தோழியினது இவ்வுரையின்கண், தலைவியின் காதற் சிறப் பும் தாயறிவின் நுட்பமும் வேற்றுவரைவுக் குறிப்பும் அடங்கி நிற்கும் நயம் கண்ட மள்ளனார் அவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய் பன்மாண் சேக்கை 1பகைகொள நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை2 போன்றனை எவன்கொல் என்று நினைக்கலும்3 நினைத்திலை நின்னுள் தோன்றும் குறிப்புநனி பெரிதே 4செதுநனை முணைஇய சிதர்கால் வாரணம் 5முதிர்கறி யாப்பில் துஞ்சும் நாடன் மெல்ல வந்துநின் நல்லகம் பெற்றமை 6மைய லுறாஅள் அன்னை ஐய மின்றிக் கடுங்கூ வினளே. இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது; தோழி தலைமகளை அறத்தொடு நிலை வலிப்பித்ததூஉமாம். உரை : பொன்செய் வள்ளத்துப் பால் கிழக்கிருப்ப- பொன்னாற் செய்யப்பட்ட கிண்ணத்திற் பெய்து கீழே வைத்திருக்கும் பால்; நின் ஒளி ஏறிய - நின் மேனியின் பொன்னொளி கொண்டன; சேவடி ஒதுங்காய் - சிவந்த நின் அடியெடுத்து நீ நடக்கின்றா யில்லை; பன்மாண் சேக்கை பகைகொள நினைஇ-பலவாய் மாட்சிமைப்பட்ட படுக்கையும் வெம்மையுற்றுப் பகை செய் தலால் யாதோ நினைந்து; மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை - கள்ளுண்டாரெய்தும் மையல் நோக்கிற்கு இடமின்றாகவும் அதனை உண்டாற் போலும் நோக்கமுடை யாயினை; எவன் கொல் என்று நினைக்கலும் நினைத்திலை - என்னை காரணமெனவும் நீ நினைக்கின்றாயில்லை; நின்னுள் தோன்றும் குறிப்பும் நனிபெரிது - நின்பால் தோன்றும் குறிப்புக்களும் மிகப் பெரியவாகும்; செதுநனை முணைஇய சிதர்கால் வாரணம் - வாடிய அரும்புகளை மேய்ந்து வெறுத்த சிதர்ந்த இறகு பொருந்திய கால்களையுடைய கோழி; முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன் - முதிர்ந்த மிளகுக்கொடிக்கு வகுத்த பாத்தியில் கிடந்து உறங்கும் நாடனாகிய தலைவன்; மெல்ல வந்து - பையப் போந்து; நின் நல்லகம் பெற்றமை - நின் நல்லவுள்ளத்தைக் கவர்ந்து கொண்டமை யறியாமையின்; மையல் உறாஅள் அன்னை - அறிந்துழி யெய்தும் மயக்கத்தை உறாளாகிய அன்னை; ஐயம் இன்றிக் கடுங் கூவினள் - ஐயக் குறிப்பொன்றும் தோன்றா வகையில் மிக்க குரலெடுத்து அழையாநின்றனள்காண் எ.று. பால் இருப்ப ஏறிய; சேவடி ஒதுங்காய்; பகைகொள நினைஇ மகிழ்ந்தனை போன்றனை, நினைக்கலும் நினைத்திலை; குறிப்பு நனி பெரிது; பெற்றமை மையலுறாஅள் அன்னை கடுங்கூவினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பால் நெய் முதலிய நீரியற் பொருள்களைப் பன்மையாற் கூறும் வழக்குப் பற்றிப் பால் கிழக்கிருப்ப என்றார். கிழக்கு, கீழ். நன்கு காய்ந்த பால் நிறஞ் சிவந்து ஏடுபடியக் குளிர்ந்தவழி விளங்கித் தோன்றும் இயல் பிற்று; அது பொன்வள்ளத்திற் பெய்து வைத்தவழிச் செந்நிறம் மிகுதலின், ஒளிஏறிய என்றார். ஒதுங்குதல், நடத்தல். பஞ்சு, பீலி முதலிய பல்வகை மென்பொருளால் அமைந்த படுக்கை யாதலின் பன்மாண் சேக்கை எனப்பட்டது. படுக்கையும் வெம்மையுற்று இருத்தற் காகாவாறு மாறுதலால் பகைகொள என்றார். செய வெனெச்சம் காரணப்பொருட்டு. கள்ளுண்டலாற் பிறக்கும் மையல் மகிழ்தல் எனப்படும்; “மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு1” என்பது காண்க. மகிழ்ச்சியால் தோன்றும் மையல் நோக்கம் மகிழ்ந்த நோக்கம் என்றும், மையலின்றித் தெளிந்த பார்வை மகிழா நோக்கம் என்றும் கூறப்படும். “உண்ணலும் உண்ணேன்”1 என்றாற் போல நினைக்கலும் நினைத்திலை எனவந்தது. செதுநனை “செதுமொழி”2 செதுக்கண்3 என்றாற் போலப் பயனில்லாமை சுட்டி நின்றது. சிறகுகள் சிறுகிச் செதிள் பல்கிச் சிதறினாற் போலத் தோன்றுதலின் கோழியின் கால் சிதர்கால் எனப்பட்டது. யாப்பு, பாத்தி, “யாப்பினுள் அட்டிய நீர்”4 என்பது காண்க. கறிக்கொடி முதிர்ந்த விடத்து நீர் சொரிதல் வேண்டாமையின், அதன்கண் வாரணம் துஞ்சுவதாயிற்று என்க. நல்லகம், நல்ல மனத்தெழும் காதலன்பு. மையல், ஈண்டு வெகுளி மேற்று, கடுங்கூ, மிக்க கூப்பீடு; இரைச்சலுமாம். சிறைப்புறத்தே நின்ற தலைமகன் செவிப்படுமாறு தோழி தலைவியொடு சொல்லாடுவாள், அவள் வேட்கை மிக்கு உண்டி வெறுத்து நிறம் வேறுபட்டமை புலப்பட, பொன்செய் வள்ளத்துப் பால் கிழக்கிருப்ப நின் ஒளி ஏறிய என்றும், அதனால் உடம்புநனி சுருங்கினமையின் நடத்தல் மெலிந்தனை என்றற்குச் சேவடி யொதுங்காய் என்றும், நெடி திருத்தலின் படுக்கையும் வெய்துற்று வெம்மை செய்தலின் இருக்கமாட்டாது மருண்டு நோக்குகின்றனை என்பாள், பன்மாண் சேக்கை பகைகொள நினைஇ மகிழா நோக்கமொடு மகிழ்ந்தனை போன்றனை என்றும் கூறினாள். கூட்டமின்மையின் மகிழா நோக்கத்தை விதந்தோதிக் காதல் கைம்மிகல் தோன்ற மகிழ்ந்த நோக்கத்தைக் கூறினாள், இவ்வேறுபாட்டால் பயன் யாது மில்லை; காதலர் தெருண்டுவரைதலை நினைத்திலர் என்பாள், எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை யென்றும், தாயறிந்து இற்செறிப்பு மிகுவிப்பினும் தலைமகனைக் காண்டல் அரிதாயினும் உடன்போக்கு முதலியன மேற்கோடற்கு ஏற்ற வன்கண்மைக் குறிப்பும் நின்பால் விளங்கித் தோன்றுகிறதென் பாள், நின்னுள் தோன்றும் குறிப்பு நனிபெரிது என்றும், உள்ளுறையால் வேற்றோர் மகட்கொடை வேண்டி வந்து இருப்பதை யுணர்த்துதலின் நினக்கும் தலைமகற்கு முளதாகிய காதலுறவை யறியாமையின் அன்னை வெகுளிமயக்கமின்றி வேறொன்று நினைத்தொழுகுகின்றாள் என்பாள் மையல் உறாஅள் அன்னை யென்றும், எனினும், அவட்கு அஞ்சி அவள் ஆணைவழியொழுகும் நின் அருஞ்செயல் மாண்பை அயலவர் அறியவும், நின் களவு மேலும் நீட்டியவாறு தொடர்பறுமாறும், பேராரவாரம் செய்தொழுகுகின்றாள் என்றும், எனவே தலை மகன் இனியும் தெருளானாயின் வேற்றவர் வரைவும் ஏதம் பலவும் எய்துமென்றும் கூறினாள். செதுநனை முணைஇய சிதர்கால் வாரணம் முதிர்கறி யாப்பில் துஞ்சும் என்றது, பிறவயின் மகட் கோடல் வெறுத்துப் போந்த நொதுமலர் அது விழைந்து வந்துள்ளனர் என்று உள்ளுறுத்தவாறு, தலைமகன் தெருண்டு வரைவானாவது பயன். 298.விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் பலக்கனூற்று, தாழையூற்று என்றாற்போல விற்றூற்று என்பது ஓர் ஊர்; இது பாண்டி நாட்டின்கண் இருந்து மறைந்து போயிற்று. தத்தனார் என்ற இச்சான்றோர் இவ்வூர்க்கண் வண்ணக்கர் தொழில் புரிந்து வந்தவர். அதனால் இவர் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் என்ற பெயர் பெறுவாராயினார். இவ்வூர் நல்லிசைச் சான்றோரான மூதெயினனார் என்ற சான்றோர்க்கும் உரியதாகும். ஆகவே, இவ்வூர் சான்றோர் தோன்றும் சால் புடையதென்பது இனிது விளங்கும். இத்தத்தனார் பாண்டியனது கூடல்நகரைப் பாராட்டுதலால் இவர்க்கு அந்நகர் பாலுள்ள ஈடுபாடு நன்கு தெரிகிறது. இவர் பாடியதாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில. வதுவை மணம் புணர்ந்து மனையறம் மேற்கொண்ட தலைமக்கள் வாழ்வில், தலைவன் பொருள் செய்யக் கருதித் தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டிய கடமையுடை யனானான். பொருளின் இன்றியமையாமையும் காதலியின் பிரிவருமையும் அவன் உள்ளத்தை அலைத்தன. இவ்விரு கருத்துக்களும் தம்முன் நேர் நின்று போராடுதற்கு அவன்மனம் நிலைக்களமாயிற்றே யன்றி ஒருதலையாகத் துணிதற்குத் துணைசெய்யவில்லை. அதனால் கலங்கஞர் எய்திக் கையற்ற அவன் உள்ளத்தில், காதல்வழி நின்ற ஒரு கருத்துத் தோன்றிற்று; தலைமகளை முதற்கண் தான் தலைப்பெய்த ஞான்று, “பிரியேன்; பிரியின் உயிர் தரியேன்” என்று மொழிந்த ஒருமையுரையையும் அதனை மனங் கொண்டு மகிழ்ந்து நோக்கிய தலைவியின் காதற்பார்வை யையும் அது நினைப்பித்தது. நம் பிரிவின்கண் இடையிற் கடந்து செல்லும் பெருமலைகளை நோக்கிக் கண் கலிழும் காதலியின் அவலப் பார்வையைப் பெறுதல் காதல் வாழ்வுக்குப் பொருந்துவ தன்று என்பது தலைவன் நெஞ்சின்கண் தோன்றிய புதுக்கருத்து. அதனை யவன் தலைவி கேட்குமாறு தன் நெஞ்சிற்குக் கூறுவான் போல் எடுத்துரைத்தான். அது கேட்டு அவளும் ஒருவாறு தெளிந்து தேறினாள். இக்கூற்றின்கண், தலைமகன் தான் உரைத்த மொழி யொருமையையும் காதலியின் பிரிவருமையையும் எடுத்தோதிப் பிரிவு விழையாதான் போல உரைத்து உள்ளுறையால் பிரியினும் உள்ளம் பிரியாது பெயர்ந்து போந்து தலைமகளைக் கூடும் திறம் கூறிச் செலவழுங்கும் நயம் கண்ட நம் வண்ணக்கன் தத்தனார் அது பொருளாக வைத்து இப்பாட்டைப் பாடுகின்றார். வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் செங்கணை தொடுத்த செயிர்நோக் காடவர் மடிவாய்த் தண்ணுமை தழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் 1 கிளைவயிற் பெயரும் அருஞ்சுரக் கவலை அஞ்சுவரு நனந்தலைப் பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள் கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம் பற்றாய் வாழிஎம் நெஞ்சே நற்றார்ப் பொற்றேர்ச் செழியன்2 கூடல் அன்ன ஒருமை செப்பிய அருமை வான்முகை இரும்போது கமழும் கூந்தல் 3பெருமலை தழீஇயநோக் 4கியையுமோ மற்றே இது, பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சிற்கு நெருங்கிச் சொல்லித் தலைமகன் செலவழுங்கியது. உரை : வம்பமாக்கள் வருதிறம் நோக்கி - புதுவோராய் வருகின்ற மக்களுடைய அமைதியைப் பார்த்து; செங்கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் - செவ்விய அம்பு தொடுத்து வருத்தும் சினந்த பார்வையையுடைய மறவர் முழக்கும்; மடிவாய்த் தண்ணுமை தழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் - தோல் மடிக்கப்பட்ட வாயையுடைய தண்ணுமையின் முழக்கத்தைக் கேட்ட பருந்தின் ஆண்பறவை; கிளைவயின் பெயரும் - தன் கிளையாகிய பெடையும் பிறவும் வாழும் இடம் நோக்கிச் செல்லும்; அருஞ்சுரக் கவலை அஞ்சுவரு நனந்தலை - கடத்தற் கரிய சுரத்திலுள்ள கவர்த்த வழிகளால் செல்வோர்க்கு அச்சம் தரும் அகன்ற இடத்தே நிற்கும்; பெரும்பல் குன்றம் உள்ளியும் - பெரிய பலவாகிய குன்றங்களை நினைந்தும்; இவள் கரும் புடைப் பணைத்தோள் நோக்கியும் - இவளுடைய கரும் பெழுதிய பெரிய தோளைப் பார்த்தும்; ஒரு திறம் பற்றாய் -ஒரு பாலும் துணியாது மயங்குகின்றாய்; எம் நெஞ்சே -; வாழி -; நற்றார் பொற்றேர்ச் செழியன் கூடல் அன்ன - நல்ல வேம்பின் மாலையணிந்த பொற்றேர்ச் செழியன் என்பா னுடைய கூடல்நகர் போன்ற; ஒருமை செப்பிய அருமை - பண்டு யாம் ஒருதலையாய்த் தெளிய வுரைத்த அரிய மொழி யினை நினைந்து; வான்முகை இரும்போது கமழும் கூந்தல் - வெண்மையான அரும்புகள் பெரிய பூக்களாய் மலர்ந்து மணம் கமழும் கூந்தலையுடைய நம்தலைவி ; பெருமலை தழீஇய நோக்கு இயையுமோ - நாம் கடந்து சென்ற பெருமலை களை நோக்கிக் கலிழும் கட்பார்வையை நாம் காண்டல் காதலுறவுக்கு அமையுமோ? கூறுக என்று. நெஞ்சே. உள்ளியும் நோக்கியும் பற்றாயாயினை; கூடலன்ன ஒருமை செப்பிய அருமை நினைந்து கூந்தல் தழீஇய நோக்கினை யும் பொருள் செய்யுமிடத்துப் பெறல் அமையுமோ, கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வம்பமாக்கள், புதியராய் வருவோர். பிறைவாய்க் கணையின் நீக்குதற்குச் செங்கணை என்றார். குருதிக் கறை படிந்தமையாற் சிவந்த அம்பு என்றுமாம். வெகுளற் குரிய காரணமின்றாகவும் வெகுண்டார்போற் சிவந்த கண்களை யுடைமையின், செயிர்நோக் காடவர் என்றார். ஆடவர், போர் மறவர் என்னும் பொருட்டு. வாய் கூரிதாயவழித் தண்ணுமையில் போப்புறும் தோல் எளிதிற் கிழிந்தொழியுமாதலின் தண்ணு மைக்கு மடிவாய் வேண்டப்பட்டது. தழங்குகுரல் , வினைத் தொகை; இது தழங்குரல் எனவும் வரும். எருவை, பருந்து. கவலை, கவர்த்த வழி. கரும்புடைத்தோள், பணைத்தோள் என இயையும். மகளிர் தோள்களில் கரும்பு போல எழுதுவது பண்டையோர் மரபு; இதனைத் தொய்யில் எழுதுதல் என்றலு முண்டு. பற்றுதல், ஈண்டுத் துணிதல் மேற்று. பெற்றோர்ச் செழியன், பண்டை நாளைப் பாண்டிமன்னருள் ஒருவன்; வேள்விக்குடிச் செப்பேடுகளிற் காணப்படும் தேர்மாறன் என் பான் போல்பவன். கூடல், மதுரை நகரின் மேலைப்பகுதி, மதுரைக்கும் வையைக் கரைக்கும் இடைப் பகுதி ஆலவாயில். ஒருமை, உறுதிமொழி. முகை, அரும்பு , போது, மலரும், செவ்விப்பூ. “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்” இந்நோய்1”என்பது காண்க. கூந்தல் , கூந்தலையுடைய தலைமகளைச் சுட்டிற்று. பிரிதல் வேண்டிய கடப்பாட்டினை மேற்கொண்ட தலை மகன் தலைமகளை அதற்கு உடம்படுத்தல் விரும்பித் தன் நெஞ்சோடு கூறுவான் போல அவட்குக் கூறலுற்று, முதற்கண் தான் செல்லும் சுரத்தின் அருமையை யெண்ணிச் செலவு தவிாப்பானாய், “நெஞ்சே, நீ சுரத்தின்கண் வாழும் மறவரது கொடுமையும் அவரால் விளையும் ஏதமும் நினைந்து அழுங்கு கின்றனை” யென்பான், செயிர் நோக்காடவர் மடிவாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் பெரும்பல் குன்றம் உள்ளியும் என்றான்.சுரத்தின்கட் போந்து பயின்ற பழையோராயின் அங்கு வாழும் மறவரினும் மிக்க வலியுடன் வருவராதலின் வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி என்றும், நேர்நிற்றலின்றி மறைந் திருந்து செலுத்துதலின் செங்கணை தொடுத்த ஆடவர் என்றும், அறம் நோக்காது நேர்பட்டார் யாவரையும்அருளின்றிக் கொல்லும் வன்கண்ணர் என்றற்குச் செயிர் நோக்கு ஆடவர் என்றும், அவருடைய தண்ணுமை முழக்கம் கேட்பின் வானிற் பறக்கும் எருவைச் சேவலும் அஞ்சித் தன் கிளைப்புட்கள் வாழும் இடநாடிச் செல்லும் என்றதனால் மண்மேற் செல்லும் மக்கள் சொல்லற்கரிய துணுக்குற்று அலமருவர் என்றும், எனவே அவர் உறையும் குன்றங்களைக் கடந்து சேறலின் அருமை நினைக்கு மாறு தோன்ற அருஞ்சுரக் கவலை அஞ்சுவரு நனத்தலைப் பெரும்பல் குன்றம் உள்ளியும் என்றும் கூறினான். ஒரு பால் தலைமகளது தோட் பெருமையும் அதனாற் பெறப்படும் முயக் கின்பமும் தோன்றிப் பிரிவின்பாற் செல்லும் உள்ளத்தைப் பேதுறுவித்து அவள்கூட்டத்தொடு பிணிக்கின்றமையின் இவள் கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் என்றும், இவ் வாற்றால் பிரிவு பிரியாமை என்ற இரண்டனுள் யாதேனும் ஒன்றை ஒருதலையாத் துணியாமை பற்றி, ஒருதிறம் பற்றாய் எம் நெஞ்சே என்றும், இதனால் நீ இகழற்பாலையல்லை என்பான் வாழி என்றும் கூறினான். வினை ஆடவர்க்கு உயி ராதல்பற்றிப் பிரிவே பற்றினையாயின், பண்டு களவின்கண் முதன்முதல் தலைப்பெய்தபோது “பிரியோன் பிரியின் உயிர் தரியேன்” என்ற தன் ஒருமைமொழியைத் தலைவி நினைந்து வருந்துவள் என்பான் ஒருமை செப்பிய அருமை நினைந்து என்றான். நினைந்து என்பது சொல்லெச்சம். பிரிந்தவழித் தான் கடந்து சென்ற பெருமலைகளை நோக்கித் தன்னைக் காண மாட்டா மையின் தலைவி வருந்திக் கண்ணீர் சொரிந்து வருந்து வள் எனவும், காதல்வாழ்விற்கு அது பொருந்தாதெனவும், எனவே பிரிதல் கூடாதெனவும் கூறுவான், பெருமலை தழீஇய நோக்கு இயையுமோ மற்றே என்று செலவழுங்கினான், செயிர் நோக்கு ஆடவரது தண்ணுமை முழக்கம் கேட்ட எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் என்றது, பிரிவின்கண் காதலியின் கண் கலுழ்ந்து செய்யும் பூசல் எனக்குத் தெரியின் என் உள்ளம் உடனே செய்வினையைக் கையிகந்து அவள்பாற் சென்றொழியும் என்பது உள்ளுறுத்துரைத்தவாறு. தலைவி கேட்டுச் செல வுடன்படு வாளாவது பயன். 299. வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் களவு நெறிக்கண் தோழியிற் கூட்டம் பெறும்வகையில் குறை மறுக்கப்பட்டும் சேட்படுக்கப்பட்டும் பெருந்துய ருழக்கும் தலைமகன் அது பெற்ற பின் தலைவியுள்ளத்துக் காதல் மாண் புறுதற் பொருட்டு அக்களவு ஒழுக்கத்தை நீட்டிப்பன். பகற் குறிக்கண் போதருவோனை மறைவெளிப்படுதற்கஞ்சித் தோழி இரவுக்குறிக்கண் வருமாறு தூண்டுவள். காவன்மிகுதியாலும் அல்லகுறியாலும் பிறவாற்றாலும் இரவுக்குறியொழுக்கம் இடை யீடுபடும்; இரவு வரவில் நெறியின் கொடுமையும் கார்மழை மிகுதியும் காட்டாறுகளின் கடுவரவும் கொடுவிலங்குகளின் இயக்கமும் காவலருமையும் ஆகிய இன்ன பிற இடையூறுகளை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தோழி தலைமகற் குரைத்து இரவு வருவோனைப் பகல் வருக என்பள். இரவும்பகலும் பயின்று வருவானாயின் இருபோதும் வாரற்க என மறுப்பாள், இவ்வண்ணம் வருந்துதலை நீக்கி இவளை வரைந்துகொள்க என்பாள். இவ்வாறு தோழி வரைவு கடாவியவழியும், தலைமகன் அதனை மேற்கொள்ளாது பகற் போதுகளில் தலைவிமனையின் ஒரு சிறைக்கட் போந்து நின்று தன் காதற் பெருக்கைக் குறிப்பால் உணர்த்துவன். அக்காலத்தே தோழியோ தலைமகளோ அவ னுக்கு நேரே உரையாடாமல் பிறர் கேட்பின் அயிராத சொற் களால் கூடுதலருமையுணர்த்தி வரைந்து கொள்ளுமாறு அவனைக் கடாவுவர். ஒருநாள் தலைமகன் போந்து சிறைப்புறத்தே நிற்பது தோழிக்குத் தெரிந்தது. தோழி தலைமகளை அப்பக்கத்தே கொணர்ந்து நிறுத்தித் தான் கூறுவன அவன் செவிப்படுமாறு உரையாடலுற்று, “தோழி, தலைமகற்கும் நமக்கும் உளதாகிய தொடர்பு எங்ஙனமோ இவ்வூரவர்க்குத் தெரிந்து விட்டது. நாம் தனித்திருப் பக்காணின் அவரது அலர் பெரிதாயுளது; தலை மகனொடு இத்தொடர்பை நாம் கொள்ளாமுன்பு இவ்வூர் நம்மைத் தூற்றியதுமில்லை; அலருரைக்கு நாம் பொருளானது மில்லை” என்றாள். இக்கூற்றின்கண், ஊரில் அலரெழுந்தமையும் தலைமகன் தெருண்டு வரைந்து அருளாத கொடுமையும் கூறி வரைவு மேற்கொள்ளுமாறு தோழி கடாவிய நயம் கண்ட பேரி சாத்த னார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார். 1உருகே ழியானைக் 4குடைகொண் டன்ன ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர் தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்டாது வயங்கிழை மகளிர் 2வளையின் தாஅம் காமர் சிறுகுடிப் புலம்பினும்3 அலர்காண் நாம்இல மாகுதல் அறிதும் மன்னோ வில்லெறி பஞ்சி போல மல்குதிரை வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் நளிகடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. இது, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. உரை : உருகேழ் யானைக் குடைகொண்டன்ன - நன்னிறம் பொருந்திய யானை தன்மேல் குடைவிரியக் கொண்டு நின் றாற்போல; ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர் - நெருங்கிய இதழ்ப்பிணிப்பு விரிய மலர்ந்து விளங்கும் தாழையின் பெரிய புதர்; தயங்கு இருங்கோடை தாக்கலின் - அசைகின்ற பெரிய கோடைக்காற்று மோதுதலால்; நுண்டாது - நுண்ணிய வெண்பொடியானது; வயங்கிழை மகளிர் வளையின் தாஅம் - விளங்குகின்ற இழையணிந்த மகளிருடைய கைவளை போல உதிரும்; காமர் சிறு குடி புலம்பினும் - அழகிய இச்சீறூர்க்கண் யாம் தனிமையுற்று வருந்திய விடத்தும்; அலர் நாம் இல மாகுதல் அறிதும் காண் - அலர் கூறப்படுதலை நாம் இல்லே மாய் இருந்தமை நாம் நன்கு அறிவோம்; வில் எறி பஞ்சிபோல - வில்லிடத்து எறியப்பட்ட பஞ்சித்துய் போல; மல்கு திரை வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் - அடுத்தடுத்து வரும் அலைகளைக் காற்றுப் பொருது அலைத்தலால் ஓளிரும் நீர்த்திவலைகள் பொங்கி யெழுகின்ற; நளிகடற் சேர்ப்ப னொடு நகாஅ வூங்கு - பெரிய கடல்நிலத் தலைவனொடு கூடி மகிழ்வதற்கு முன்பு எ.று. சேர்ப்பனொடு நகாஅ வூங்குச் சிறுகுடிப் புலம்பினும் நாம் அலர் இலமாகுதல் அறிதும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. காண், முன்னிலை யசை. மன்னும் ஓவும் அசைநிலை. கேழ் சாரியை; கெழு வென்னும் நிறப் பொருட்டாய உரிச்சொல்லின் திரிபெனக் கொள்ளினுமாம். ததர்பிணி, நெருங்கிய இதழ்ப் பிணிப்பு, கோடை, கோடைக் காற்று. தாழைப் பூவின் அடிப் பகுதி மகளிர் அணியும் வளைபோறலின் வளையின் தாஅம் என்றார்; இன் ஒப்புப் பொருட்டு, புலம்பு, தனிமை. அறிதல், நினைவிற் கோடல். கொட்டையும் கோது மாயவற்றின் நீக்கு தற்குப் பயன்படும் கருவி வில்போறலின் வில்லெனப்பட்டது. அலைகள் பிசிர்பிசிராக வுடைந்து வில்லிடை யெறியப்பட்டுப் பொங்கும் பஞ்சி போறலின் வில்லெறி பஞ்சி போல என்றார். “வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்1 எனப் பிறரும் கூறுப. நளி, பெருமை. நகாஅ வூங்கு,நகுதற்கு முன்பு: வான்றோய் வெற்பன் மணவா வூங்கு”2 என்றாற் போல. சிறைப் புறத்து நின்ற தலைமகன் கேட்க உரையாடு கின்றாளாகலின், அவற்கு ஊரலர் உரைத்து வரைவு கடாவலுறும் தோழி அலர்க்குரிய காரணத்தை உள்ளுறையாற் கூறலின், அலருண்மையை எதிர்மறை வாய்பாட்டால் சேர்ப்பனொடு நகாஅ வூங்குச் சிறுகுடிப் புலம்பினும் அலர் நாம் இல மாகுதல் அறிதும் மன்னோ என்றாள். தாழை மடல் விரிந்து நிற்பன யானை குடை கொண்டாற் போலத் தோன்றினும், உதிர்கின்ற இதழ்கள் மகளிர் வளை உதிர்ந்தாற் போலும் என்றது, தலைமகனது ஒழுக்கம் நமக்குப் பெருமை தந்து அருளுவது போலத் தோன்றினும் அவனுடைய போக்குவரவு நமக்கு வளை நெகிழுமாறு உடம்பு நனி சுருங்கும் நோய் செய்தன. அதனால் அலர் எழுவது எளிதாயிற் றென்றாளாம். வளி பொருதலால் எழும் பிசிர் வில்லெறியப் பட்ட பஞ்சு போலப் பொங்கிப் பரவும் என்றது, வேட்கை நோய் அலைத்தலால் உளதாய வேறுபாடு பற்றிய ஊர் முழுதும் பரவி விட்டது என உள்ளுறுத்தவாறு. இதனாற் பயன் தலைவன் தெருண்டு வரைவானாவது. 300.பரணர் கற்புக்கடம்பூண்டு பொற்புடை அறம்புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைமகள் தலைச்சூற்கொண்டு மகற் பயந்து உடனுறை வாழ்க்கைக்கு ஒல்லாளாய காலத்துத் தலை மகற்குப் பரத்தைமை பொருந்திய புறத்தொழுக்கம் உண் டாயிற்று. பரத்தையர் சூழலில் அவன் ஒழுகிய ஞான்று தலைக் கொண்டொழுகிய பரத்தை பிற பரத்தையரின் பிரிந்தொழுகு கின்றானென அவற்கு வாயின் மறுத்தாள். தான் விடுத்த வாயில் களால் அப்பரத்தையின் சினம் தணியாமை கண்ட தலைமகன் தன்னொடு போந்த பாணனையும் தேரையும் அவள் மனைக் கண்ணே நிறுத்திச் சென்றான். பாணன் அவள் வாயில் வேண்டி மனைப்புறத்து அட்டிற்காலையின் அருகே சென்று நின்றான். அவன் வரவுணர்ந்த பரத்தை அவனை நோக்கி வரலும், முகம் காண நாணினான் போல அட்டிலின் கூரையாகிய பனை யோலையை நிமிர்த்து அதனைப் பற்றிக்கொண்டு நின்றான். அவற்கு அப்பரத்தை வாயில் மறுக்கும் கருத்தினளாய், “பாண, நின் தலைவனாகிய ஊரன், என் கையிலுள்ள சிறுவளைக்கு விலையாகப் பெரியதொரு தேரை ஒப்பனை செய்து கொணர்ந்து என் மனைமுன்றிலில் நிறுத்திவிட்டு வேறு பரத்தை மனைக்குச் சென்றொழிந்தான். அவன் தேரொடு போந்த நீயும் அவன் பின்னே செல்லாது தன் உடலைச் சூழப் பிச்சமணிந்து நிற்கும் பெருங்களிறு போல அட்டிற் கூரையின் பனையோலையைத் தொடுத்துக் கொண்டு நிற்கின்றனை; அங்ஙனே நிற்பாயாக” என்றாள். பரத்தையின் இக்கூற்று, தலைவனது பரத்தைமையைச் சிறப்பித்துப் பாணனை வாயில் மறுத்த வாய்பாட்டால் தலை மகனைத் தருமாறு பணிக்கும் நுட்பம் கண்டு வியந்த ஆசிரியர் பரணர் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மடத்தகை ஆயம் கைதொழு தாஅங் குறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக் கிறைஞ்சும் தண்டுறை யூரன் சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே நீயும், தேரொடு வந்து போதல் செல்லாது நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின் இரும்பாண் ஒக்கல் தலைவன் 1பெரும்பூண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 2பிச்சைசூழ் பெருங்களிறு போலஎம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே. இது, பரத்தைத் தலைவி பாணற்கு வாயின் மறுத்தது; வரைவு கடாயதுஉமாம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு. உரை : சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென - ஒளிர்கின்ற தொடியணிந்த அரசமாதேவி சினந்து கொண்டாளாக; அதன் எதிர் - அதற்கு அஞ்சி நிற்கும்; மடத்தகை ஆயம் கைதொழு தாஅங்கு - இளம்பெண்களாகிய ஏவல்மகளிர் கூட்டம் கைகூப்பித் தொழுதாற் போல; உறுகால் ஒற்ற ஒல்கி - மிக்க காற்று அசைத்தலால் தளர்ந்து; ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் - ஆம்பற் பூக்கள் குவிந்து, மலர்ந்து விளங்கும் தாமரையின் எதிரில் சாய்ந்தொழுகும்; தண்துறை ஊரன் - தண்ணிய துறையினையுடைய ஊரனாகிய தலைமகன்; சிறு வளை விலையென - முன்கைச் சிறுவளைகட்கு விலையாக; பெருந்தேர் பண்ணி - பெரிய தேரை ஒப்பனை செய்து; எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோன் - எம்முடைய இல்லின் முன் நிறுத்திவிட்டுச் சென்றனன்; நீயும் தேரொடு வந்து போதல் செல்லாது - நீயும் அத்தேரோடு போந்து அவ னோடே சென்றொழியாமல்;நெய்வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின் - நெய்யொழுகினாற் போன்ற துய்யாகிய பிசிர் போக்கி இசைக்கு அடங்க அமைத்த நரம்பினையுடைய யாழை இசைக்கும்; இரும்பாண் ஒக்கல் தலைவன் - பெரிய பாண் சுற்றத்தார்க்குத் தலைவனும்; பெரும்பூண் ஏஎர் தழும் பன் ஊணூர் ஆங்கண் - பெரிய பூணார மணிந்த ஏற்றத்தை யுடைய தழும்பன் என்பானுடைய ஊணூர் என்னும் ஊரின் கண்; பிச்சை சூழ் பெருங்களிறு போல; உடம்பு சூழ்வரப் பக்கம் அணிந்து நிற்கும் பெரிய களிற்றைப் போல எம் அட்டில் ஓலை தொட்டனை - எம் மனையின் அட்டிற் கூரையின் ஒலையைத் தாங்கி நிற்கின்றனை; நின்மே - அங்ஙனே நிற்பாயாக எ.று. ஊரன், சிறுவளை விலையெனத் தேர்பண்ணி நிறீஇச் சென்றிசினேன்; நீயும் தேரொடு வந்து போதல் செல்லாது களிறு போல அட்டில் ஓலை தொட்டனை, நின்மே எனக்கூட்டி வினைமுடிவு செய்க. சுடர்த் தொடி, ஒளி பொருந்திய தொடி. அதன் எதிர் என்புழி அது, சினத்தின் மேல் நின்றது. மடத்தகை ஆயம், இளமகளிர் கூட்டம். மடத்தகை என்புழி மடம் இளமை யும் தகை அழகும் குறித்தனவெனினும் அமையும். கைதொழு தல், கைகூப்பித் தொழுதல். இரவில் மலரும் ஆம்பல், தாமரை மலர்ந்து விளங்கும் பகற்போதில், இதழ் குவிந்து துவண்டு தாழ்தற்குக் கோமகள் சினத்தின் முன் ஆயமகளிர் கைதொழுது தாழ்தல் உவமமாயிற்று. பரத்தையர்க்கு நல்கப்படும் பரிசம் வளைவிலை எனவும் விறலியர்க்கு நல்குவது பூவிலையெனவும் வழங்கும். பண்ணுதல், செப்பமும் ஒப்பனையும் அமையச் செய்தல், சென்றிசினோன்: இசின் படர்க்கைக்கண் வந்தது, ஆ ஓவாயிற்று, செய்யுளாதலின். நரம்பு , ஆகுபெயர். ஏஎர், எழுச்சி. ஊணுர், பாண்டிநாட்டு மருங்கூர்ப் பட்டினத்துக்கு அணிமையில் இருந்த ஊர். “ஊணூரும்பர் விழுநிதி துஞ்சும், வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து”1 என்றும், “மீன் சீவும் பாண்சேரி வாய்மொழித் தழும்பன் ஊணூர்”2 என்றும் தழும்பன் பாராட்டப்படுவன். பிச்சம், அம்முக் கெட்டு ஐகாரம் பெற்றுப் பிச்சை என நின்றது. பிக்கம் - மயிற்பீலியால் செய்யப் படுவது. பிச்சை சூழ் பெருங்களிறு - பிச்சங்கள் சூழ நின்ற களிறு. பிச்சங்களின் கூட்டம் பனைமரங்களின் கூட்டம் போலக்காட்சி தருதலின், பனையோலைகளின் பக்கல் நின்ற பாணற்கு அஃது உவமமாயிற்று. “மடற்பனைக் குழாத்திற் பிச்சம் நிறைந்தன”3 எனத் தேவரும் எடுத்தோதுதல் காண்க. “முன்னிலை முன்னர் ஈயு மேயும், அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே”4 என்பதனால் நின்மே என முன்னிலை ஏகாரம் மகர மெய்யூர்ந்து நின்றது. தலைமகள் பொருட்டு வாயில் வேண்டிவந்த பாணற்கு முதற்கண் பரத்தை வாயில் மறுத்துரைக்கின்றாளாகலின் தண்டுறையூரன் பெருந்தேர் பண்ணி எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோன் என்றும் , எனவே அவன்பொருட்டு வாயில் வேண்டும் கருத்தொடு வந்திலை; அவன் தேரோடு போந்து அதுநிற்ப நின்றனையன்றி வேறில்லை எனப் பாணனை மறுப் பாள், நீயும் தேரோடுவந்து போதல் செல்லாது எம் அட்டில் ஓலை தொட்டனை என்றாள். என்றது, தேரின்வழி நிற் கின்றனையேயன்றி, தேர் தந்த அவன் வழி நின்று அவன் செல் வழிச் சென்று அவனைக் கொணராயாயினை யாதலின், எம் மனைக்குட் போதராது அங்ஙனே நிற்க என்பாள் நின்மே என்றாள். காற்றால் அலைப்புண்டமையால் ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் ஊரன் என்றதனால், புலவியால் அலைப்புண்டவழி மகளிர்க்குத் தாழ்ந்து வணங்குவனாகலின் பிற மகளிர்பாற் சென்றான் என உள்ளுறுத்தமை காண்க. கோமகள் சினந்தென மடத்தகை ஆயம் கைதொழுதாங்கு என நின்ற வெளிப்படை யுவமம் உள்ளுறையுவமத்தைச் சிறப்பித்தமையின், திணைப் பொருள் கோடற்குத் தள்ளாதாயிற்று. விளக்கம் : “இரவுக் குறியே இல்லகத் துள்ளும்”1 என்ற நூற்பா வுரையில் இப்பாட்டின் “அட்டில் ஓலை தொட்டனை நின்மே” என்ற அடியைக் காட்டி, இது “மனையோர் கிளவி கேட்கும் வழியது” என்பர் நச்சினார்க்கினியர்.  1. கொள்ளாளினையள் - பா, 2. தென்றோய் - பா, 1. பாவை போல - பா, 2. னெஞ்சத்தானே - பா. 1. தொல். பொ. 501 1. புலாஅமிருங்கோட்டு; புலா அலஞ்செங்கோட்டு - பா. 2. பயந்த மறுவிளங்கு திங்கள் - பா. 3. இதன்பின் மருதன் இளநாகனார் என்று ஓர் ஏட்டில் குறிக்கப்படுகிறது. 1. கலி 49. 1. அகம் 153 2. மேற்படி 141 1. முள்ளுடை நெடுந்தோட்டு - பா. முள்ளி நெடுங்கோட்டு - பா. 2. முகைமுதிர் வான்பூ - பா. 3. வெண்பூத் தாழை - பா. 4. மணங்கமழ் கானலி னியைந்த - பா. 5. பிரியினும் - பா. 6. தென்றாக் - பா. 7. வரவிவ ணழுங்க; வரவுகண் டழுங்க - பா. 1. குளிர்வாய் - பா; குளிரியின் - பா. 2. மேவலைப்பட்ட வென் - பா 3. குறியில் - பா. குறிநிலை - பா 1. புல்புறம் - பா. 2. விடுத்தமட நெஞ்சம்வீடு பொல்லாதே - பா 1. நற். 214 2. Kiss 3. தொல். பொ. 120 1. தொல். பொ. 102 1. வேட்டெழு - பா. 2. ஏந்துவெண் கோடு வயக்களி றிழக்கும் - பா 3. னின்னொடு - பா. 1. நெடுமாலந்தளிர் - பா. 1. அகம் 306 2. மேற்படி 357 3. மேற்படி 206 1. குறள் 463 2. தொல். பொ. 185 3. மேற்படி மேற்படி 146 1. பால்வார் பிறைஞ்சி - பா. 2. தோடலைக் கொண்டன - பா. 3. கவருமின்றவ் வாய் - பா. 4. புடைத்தனை - பா. 5. செல்வாளன்று கொல் - பா. 6. லென்றுகொல் ளன்றுகொல் - பா 7. அறிந்தவன் கொல் - பா 1. நற் 376 1. கலி 110 1. சுருங்கிய நரம்பின் - பா. 2. முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகன் - பா. முடிமுதிர் வலையினர் கொண்டு - பா. வலையும் துண்டிலும் பற்றிப் பெருங்காற் றிரை யெழு பௌவ முன்னிய - பா 3. தலைகொள் பெருமீன் முன்னிய - பா 4. பாற்பட்டனனே - பா 1. தொல். பொ 144 1. விறல்சாய் விளங்கிழை - பா. 2. நெகிழவிம்மி - பா 3. அறல்போல் தெண்மணி - பா. 4. கலுழும் - பா. 5. செல்வோர் - பா. 6. சேறறுமுரியர் - பா. 1. அகம் 218 1. பதிற் 48 1. A.R. No. 474 of 1925; 239 of 1931. 1. பெற்ற - பா 2. லிட்டேன் - பா 3. வீறியின்வாய்த் தீங்குரல் - பா 1. படூஉமாயிற் பையுமீரும் படாஅது -பா 2. அச்சுப் பிரதியிலும் மதுரைத் தமிழச் சங்க ஏட்டிலும் இக்குறிப்பு இல்லை. 1. செறுவின் - பா 1. தன் செய்வினைப் பயனே - பா 2. சான்றோர் செல்வ மென்பது -பா 3. செல்வர் - பா 1. குறள். 231 1. குறள். 651 2. மேற்படி 666 3. மேற்படி 675 4. தொல்.பொ. 158 5. மேற்படி 240 1. நற். 330 1. கருங்கால் வெண்குருகு - பா, 2. நுடங்குதிரை - பா. 3. துறுகடற்றலைய - பா. 4. வெண்போது - பா. 1. அகம் 220 2. மேற்படி 133 1. குறுந். 226 2. தொல். சொல். 200 3. தொல் பொ 303. 1. மேற்படி 218. 1. பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ - பா 2. கணந்துள் புலம்புகொள் - பா. 3. “சுரஞ்செல்கோடியர் கதுமெனவிசைக்கும் நரம்போடு கொள்ளு மந்தத் தாங்கண் என்ற பாடம் அச்சுப் பிரதியிற் காணப்படுகிறது. கதஞ்செல் கோடியர் - பா. 4. தொகைநிலை பெயர்க்கும் - பா 5. நம்வயின் - பா 6. மாமகன் - பா. 7. வாயில்கள் வாய் - பா. 1. குறுந். 350 2. அகம். 107 3. மேற்படி 333 * தடவரை மேனாட்டவர் டோடாஸ் (Iodas) என்றமையின், இந்நானையோர் அதனைத் திரித்துத் தொதுவர் என்று உரைக்கின்றனர். 1. தொல். எழுத்து 237 2. ஐங். 360 3. தொல். பொ. 231 1. தொல். பொருள். 150. 1. வேர்க்கொண்டு தூங்கும் பா 2. வெயில் பயிலிறும்பி னுவீறல் பருகும் - பா. இறும்பி னாமுறல் பருகும் பா. 1. சொல்லவுஞ் சொல்லீராயின் - பா செல்லீ ராயின் - பா செங்குரற் - பா 2. கொடேந் தல்கு னீடோளீரே - என்பது அச்சுப் பிரதியிற் கண்டது. 3. மடந்தை மீரே - பா 1. தொல். பொ. 99 2. மேற்படி மேற்படி 102 1. கரும்புணர் வின்மென - பா. கரும்புணர் வின்றென - பா. 2. கரும்பணி பல் போது - பா. 3. கைசூழ் வெற்பின் - பா. 4. தாளவீரிலங்குவனை - பா 5. கார்மழைக் குரலே - பா. 1. குறள் 2. மேற்படி 3. மேற்படி 1. ஐங். 150 2. தொல். பொ. 186 1. பகல் கெழு செல்வன் - பா. பகல்வெஞ் செல்வன் - பா 2. வியனக ரயா - பா. 1. வூனெய் யொண்சுடர் - பா. 2. றயங்குதிரை யுடற்ற; றயங்குதிரை யுலவ - பா. 1. குறுந் 398 2. நற். 175 3. அகம். 220 4. மேற்படி 60 5. மேற்படி 340 6. Sbark 1. கழனி யினிதணத் - பா. 2. கவலை தூற்ற - பா. 3. திருமா வுண்ணிக் - பா. 4. ரனைய ராயினும் - பா 1. ஐங். 62 2. குறள் 1158 1. கலி. 45 2. அகம் 398 3. குறுந். 341 1. கதழ்வாய் வேழம் - பா. 2. துனிமிகுந்து - பா. 3. யுணர்தல் - பா 1. முருகு 82 2. தொல் சொல் 366 3. குறுந் 11 1. பதிற் 61 2. மேற்படி 76 3. குறள் 1304 1. மேற்படி 1322 1. நகைவாய்க் கொளீஇ - பா 2. டதர்ப்பட - பா 3. பாரிய - பா. 1. பரியரைப் பெண்ணை - பா 2. யன்றிலின் குரலே - பா. 1. தொல். சொல். 51 சேனா. மேற்படி 1. பழநல மிழந்து பசலை பாய - பா. 2. புலவுநாறு நளிகடற் - பா 3. தானே தானே - பா 1. நற். 334 1. நற். 40 2. நற் 110 3. ஐங். 203 4. கலி. 111 1. Dr. Taylor and other British Anthropologists 1. குறுமுகிழ் - பா 2. யெம்மொடு -பா 3. முழவுமண் புலரா - பா; முழவுமுகம் புலரா -பா, 4. கயலோ ராகலென் றெம்மொடு - பா 5. இது குறைநேர்ந்த தோழி தலைமகனை முகம்புக்கது என்றும், பின்னின்ற தலைமகள் தோழி கேட்பத் தலைமகனை ஓம்படுத்த தூஉமாம், தான் ஆற்றானாய்ச் சொல்லியதூ உமாம் என்றும் அச்சுப்படியினும் மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டினும் காணப்படுகிறது. 1. குறுந். 27 2. கலி 130 1. மலைபடு. 381-2 2. குறுந். 129 1. தொல். பொ. 321 1 பொன்னடர்ந் தன்ன - பா. 1. மின்னவி ரொள்ளிழை விளங்க நன்னகர் -பா. மின்னொளி ரவிரிழை விளங்க நன்னகர் - பா 2. நடுநாட்செய்த -பா 1. குறள். 1268 2. அகம் 124 3. தொல் சொல். நச்சி 204 உரை 1. இனியவை நாற்பது. 1. விடுமுரி - பா 2. சிறுநெறி - பா. 3. சோலைச் சேணெடுங் குன்றம் - பா. 1. நற். 270. 2. அகம் 20. 1. இவளே - பா 2. யென்னான் - பா யென்னாணின் -பா 3. இன்னா ராகுதல் இனிதா லெனினிவள் -பா. 4. அருங்கடிப் படுக்குவள் - பா. 5. துஞ்சாக் கண்ண -பா. 1. பரிந்தெவன் மொழிகோ யானே கயனற -பா 2. கண்ணழிந் துலறிய பன்மா நெடுநெறி - பா, 3. வினைமூசு கவலை விலங்கிய -பா 4. இப்பாட்டின் பிற்பகுதி ஏடுகளிற் சிதைந்துள்ளது. 1. கலி 92 1. அகம் 229 2. கலி. 34 3. கலி 4 1. புண்கோடு, புன் கோடு - பா 2. போதொடு -பா 3. வனைகுலை -பா 4. நாகின் மார்பே -பா 1. நற். 32 2. புறம். 56 1. அகம் 386 2. தொல். சொல். 108 1. A.R. 162 of 1936 P.S. Ins no. 1027, 1032 1. குறுதவம் - பா. குயிர்தவ - பா 2. என்றூழ் நிறுப்ப நீளிடை யொழியச் -பா 3. என்னோடு மறிபரா விவ்வுலகத் தானே -பா. 1. தொல் எழுத். 209 2. சீவக. 1923 1. குறள் 430 2. மேற்படி 217 3. மேற்படி 666 1. தொல் பொ. 173 2. குறுந். 135 1. சிறந்தோன்; சிறந்த - பா. 2. கழிப்பினும் - பா. 3. வாய்த்தல் - பா 4. புள்ளாலித் தோவாத் - பா 5. யாகின்ற தைய - பா. 1. A.R. No. 290 of 1930 2. A.R. No. 190 of 1930 3. A.R. No. 49 of 1936 4. நற். 245 1. A.R. No. 230 of 1916 2. A.R. 233 of 1916 1. A.R. No. 255 of 1916 2. A.R. No. 211 of 1928-29 இக்கல்வெட்டில் இருங்கோளப்பாடி நாடு எனற்பாலது இருங்கோளப் பாண்டிநாடு எனப் பிழைபட்டுள்ளது என்றற்கும் இடமுண்டு. 1 ணகுநாள் - பா 2. வரூஉநந் திறத்து - பா 3. வெறிகொள் சாபத் தெறிகணை -பா 4. அழுந்துபடர் விடரகத்து - பா 1. நற் 261 1. அகம். 48 2. தொல். பொ. 44 1. பலபுலந்து - பா. 2. கேண்மின் - பா. 3. சொல்லா தீமென -பா. 4. புன்சொலென் - பா. 5. கவணிடாத - பா. 1. பனிப்போ டமியே - பா. 2. குழைவான் கண்ணிடத் தீண்டி - பா. 3. வாடிய லினமழை - பா 1. நற். 290 2. அகம். 271 1. சிற்றட்டகம் 1. A.R. No. 496 of 1920 2. Ibid No. 6 of 1926 3. Ibid. No. 222 of 1925 1. வயவுபிடிச் - பா; முயப்பிடி - அச்சுப்படியிற்கண்ட பாடம்; 2. வேலை நீங்க - பா. 3. புதுவறங் கூர்த்த - பா 4.பரத்தந் தாங்கு - பா. 1. நற் 393 2. குறுந். 246 3. நற். 310 4. மேற்படி 280 1. அகம். 170 2. புறம். 385 3. நற். 356 4. தொல். பொ. 39 5. அகம். 259 1. நற். 216 2. ஐங். 42 1. னொருமீன் போல - பா 1. கருவுடைத்தன்ன - பா 2. தந்த - பா, 4. காதல் நம்மொடு நீங்காமாறே - பா 1. குறுந். 85 1. சாரல் வாழை - பா. 2. யலறச் - பா 3. செங்காற் பலவின் - பா 4. நாம நல்கென - பா. 5. செலினே - பா 1. குறுந். 56. 2. தொல், சொல். 336. 1. புறம் 380 2. குறுந் 346 1. குறுந் 345 2. அகம். 120 3. மேற்படி 340. 4. குறுந். 179. 5. A.R. No. 171 of 1933 1. தாடுகழை - பா. 2. இனியென - பா. 3. பொத்தி - பா. 4. வாழார் - பா. 5. என்பதுணர்ந்து தோழிசொல்லியது - பா. 1. குறள் 1306 1. குறள். 1996 1. அரவுவாள் வாய முள்ளிலைத் தாழைப், பொன்னேர் தாதிற் - பா. 2. பிரிந்தன னாயினும் - பா. 1. குறுந். 175 2. அகம். 180 3. நற். 258 1. தொ. பொ. 114. 1. வெய்தாகின்றே - பா. 2. யொய்யெனச் சிறிதாங்கு - பா. 3. குயிரியர் பெரிதென - பா. 4. புரையில் - பா. 1. பசலையாகம் -பா. 2. முள்கிய - பா. 1. அகம் 95 2. குறள். 3. ஐங். 35 1. தொல் பொ. 112 1. Malabar series - Wynad-C. Gopalan Nair p. 59-64 1. போலாது - பா. 2. டூடின்றுமிலையோ - பா 3. இயவர் - பா. 4. மேற்கு மழையே - பா பா. 5. பருவவரவுகண்டு ஆற்றாளாங்கொல்லெனக் கவன்ற என்பது அச்சுப்பிரதியில் இல்லை. 1. குறள். 340 2. மேற்படி 612 1. அகம் 144 1. மாலதர் நண்ணிய -பா. 2. பரந்த - பா. 3. பாம்பு பை மழுங்க - பா. 4. மாண்ட - பா. 5. நெஞ்சத்தானும் - பா. 1. நற். 256 2. அகம் 16 1. காமர் சிறுகுடி - பா. 2. வழியின் - பா 3. மலிநீர்ச் சேர்ப்பற் - பா 4. மென்கை - பா 5. வடிப்ப வாங்கி - பா. 6. குயங்கெனக் கலுழ்ந்த - பா. முயங்கின மொழியும் - பா. 7. யாங்காவது கொல் - பா. 1. குறுந் 165 1. ஐங். 96 2. நற் 311 3. அகம் 300 1. ஏங்குயிர்ப்பட்ட வீங்குமுலையாகம் - பா. 2. துன்பிடை வரூஉம் தனிமைத் தாயினும் - பா. துயிலிடைப்படூஉந் தன்மையதாயினும் -பா. 3. கானந்திண்ணிய மலை - பா. 1. அகம் 155 1. பதிற். 22 2. குறுந். 25 3. தொல் இடை. 27 1. அகம். 379 1. வள்ளற் செறி கால் - பா. 1. குறுந். 92 2. அகம் 133 3. Science of Engenics 1. கழிபெயர் மருங்கிற் களரிபோகிய -பா. 2. மடமான் என்ற சீர் தேவர் ஏட்டில் இல்லை 3. தேடூஉ நின்ற - பா. 1. அகம். 23 2. மேற்படி 304 3. நற். 237 1. S.I.I Vol V. No. 572 2. Ibid Vol. VI No. 33 3. Ep. Indi. Vol. XVII. No 16 4. Ibid No. 660 1. குறள். 933 1. கலி. 92 1. வீழ்ந்தமாரி - பா. விழுந்தண்மாரி - பா. 2. மாமெய்ப் பயலையுங் கண்டே -பா 3. உயர்வரை நாடற்கு - பா. 4. செயலை மருதளிரன்ன - பா. 1. நற். 97 1. அகம். 146 2. நற். 24 3. தொல். பொ. 203. 1. மேற்படி 113. 1. ததைஇத் - பா. 2. ஒழுகுகொடி நுசுப்பின் - பா. 3. அரிதுபுணரின்னுயிர் - பா 4. பேதுற்றதுவே - பா 1. அகம் 389 2. முருகு. 24 3. அகம். 192 1. S.I. i. Vol. V. No. 660 1. இடூஉ வூங் க ணினிய - பா. 2. பாங்கிற் றேற்றும் - பா 3. மனைமர நொச்சி - பா 4. வினைமா ணிருங்குயில் பயிற்றலும் பயிற்றும் - பா 5. மற்றவர் - பா. 6. வின்னிசை வானம் - பா. 7. இப்பாட்டின் முதல் நான்கடிகள் ஏடுகளில் சிதைந்து காணப்படுகின்றன. 1. நற். 169 2. அகம் 367 1. கலி. 11 1. துப்பொடு - பா. 2. யானைச் செங்கோடு -பா 3. வழிதுளி - பா. 4. வடுகுரலெழிலி - பா. 5. றாகி- பா. 6. நாடநீ - பா. 7. திறைகூடிய - பா. 1. குறள். 226 2. நற். 347 3. அகம் 374 4. Ginning and Carding Machines 5. அகம். 217 6. தொல்.பொ. கற் 6. 1. Nell. Ins. Gud. No 30. 2. Ibid Atm. No. 25. 1. முல்லை - பா. 2. நன்மான் - பா. 3. கார்வரு பருவம் வருவமென் றனரே - பா 4. கண்டாற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவமறுத்தது -பா. 5. மறுத்துரைத்தது என்பதன்பின் காப்பன் கீரனார் என்ற குறிப்பு ஏடுகளில் காணப் படுகிறது. 1. நற். 104 2. அகம் 229 3. மேற்படி 108 4. ஐங். 208 1. வயங்குதாள் - பா. 2. றாவத் - பா. 3. தோன்றிய - பா. 1. ரலரெனச் - பா. 2. உவோச்சனார் - பா. 1. யா. வி 38. மேற் 2. நற். 163 3. அகம் 180 4. நற். 323 1. தேர்நடை பயிற்றும் - பா. 2. புதல்வன் பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு - பா 1. யாந்தம் -பா. 2. சுடர்நுதல் -பா. இங்கே கொண்டுள்ள பாடம் செட்டியார் தேவர் ஏடுகளில் கண்டது. 3. வேறுணர்ந்து -பா 1. குறுந் 148 2. நற். 269 1. தொல்.பொ. 144 2. தொல்.பொ. 146 1. கடூம்பாட்டாங்கன் -பா. 2. லடுக்கத்துக் கடும்பாட் - பா. 3. பிணி முதலரைய பெருங்கல் வாழை - பா. 4. நயவர -பா 5. பேண்மார் செறிதலின் - பா; பேணிக் கலிசிறந்து பா. 6. தொடங்கு நிலைப்பறவை - பா. 1. முருகு 143-4 2. அகம் 166 3. மேற்படி 35 1. தொல். அகத் 59 1. திறம்புரி கொள்கை -பா 1. வலியா - பா 1. தமிழ்நெறி. 24. மேற் 2. அகம். 369 3. பொருந். 42 1. அகம் 199 1. கழிபட வருந்திய -பா 2. தென்வாய்க் கேளாய் - பா. 3. நினையினை நீ நனி - பா 4. உள்ளினும் -பா. 1. அகம் 299 2. புறம். 35 3. மேற்படி 352 4. மேற்படி 115 5. மேற்படி 177 1. மேற்படி 109 1. குறுந் 342 2. ஐங். 180 1. வண்டல் தைஇயும் என்றது முதல் துனியினன்மொழி என்றது ஈறாகவுன்ள அடிகள் தேவர் ஏட்டில் இல்லை. 2. வருதிரை யுதைத்தும் - பா. 3. மொலியிரும் பரப்ப - பா. 4. அயினிமானின்றருந்தா - பா. 5. நீவீக் -பா. 6. கணநாறு பெருந்தொடை - பா 7. வுழவினெங் -பா. 8. சென்மே -பா. 1. மலைபடு, 465-8 2. அகம். 186 1. கானவர் துஞ்சார் -பா அன்னை துஞ்சாள் -பா. 2. கழூஉமன்னோ -பா குழூஉ மன்னோ -பா. 3. தொளிறி -பா 4. துழலும் -பா. நெறிய -பா. 5. ஆறுபார்த் துற்ற அச்சக்கிளவியாற் சொற்றது. 1. அகம். 112 1. தொ. பொ.114 1. பல்குறப் -பா. 2. மராஅத்த - பா. 3. கடவுள் - பா. 4. கார்ப்பெயல் செய்த காமர் காலை - பா; கார்ப்பெயல் பொழிந்த கட்கின் காலை -பா. 5. தகைப்பருஞ்செலவே -பா. தவிர்ந்தனம் செலவே -பா. 1. குறள் 232 2. நற். 252 1. அகம். 139 2. நற். 264 1. A.R. No. 272 of 1907 2. Ibid. No. 273 of 1907 3. Ibid No. 308 of 1910 1. மழையெழுந் திறுத்த -பா. 1. நற். 139 2. தொல். சொல். உரி 65 3. மதுரைக். 172 4. மலைபடு. 305 1. கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் - பா. 1. குவிந்த -பா 2. நெருங்கூர் எல்வளை -பா. 1. அகம். 340 2. தொல் களவு 41 3. குறுந் 210 4. குறள் 527 5. புறம். 395 1. முருகு. 48 2. நற். 358 3. அகம் 227 4. A.R. No. 63 of 1913 1. அகம். 90 1. தண்கம ழாரம் -பா 2. சிறிதினி-பா 3. அரிது போல -பா 4. காண்பென் -பா 1. அகம். 301 1. தண்டுசேர் மள்ளரின்-பா 2. முனையெழத் -பா 3. வெள்வேல் வய வன்-பா வெள்வேல் என்ற பாடம் வென்வேல் எனப் படிக்குமாறு உளது 4. பகைவன்மன் - பா 1. அகம். 59 2. தொல். சொல். உரி. 88 3. அகம் 316 1. நற் 350 2. மேற்படி 350 3. ஐங். 58 1. வெஞ்சுடர் கரந்த -பா. 2. தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்து - பா 3. பிணித்துடன் மிளிரும் -பா 1. இத்துறை சில ஏடுகளில் காணப்படவில்லை. மூன்றாமடியும் ஐந்தாமடியும் சிதறிக் கிடக்கின்றன. 1. முருகு. 7 2. Gorge. 3. Valley 1. முனிபடருழக்கும் -பா 2. பிரிவனெஞ் சென்னு மாயின் -பா. 3. னிளமையதினியே -பா. 1. அகம் 294 2. குறுந். 300 3. ஐங். 225 1. மறையாது -பா 2. நாணிட்டு -பா; நண்ணி-பா உள்ளி-பா 3. குரைக்குமால் தோழி -பா. (தேவர்-ஏடு) 1. ஐங். 358 1. நற். 94 2. தொல். களவு. 27 3. தொல். பொ. 111 1. A.R. 81 of 1911 1. A.R. No. 229 of 1927 1. நாலடி. 164 2. நெடுதல் 1-2 3. அகம் 139 4. மேற்படி 177 1. மேற்படி 272 2. ஐங். 300 3. புறம். 133 4. மேற்படி 300 5. அகம் 220 6. புறம் 210 1. இறுகுபுன் மேய்ந்த வறுகோட்டு முற்றல் -பா. 2. இந்த அடி சில ஏடுகளில் இல்லை. 3. பூந்தோள் யாப்பின -பா 4. வார மார்பின் -பா 5. சிறுகோற் சென்வியாரேற் றன்ன -பா. 6. இது அச்சுப்படியில் இல்லை 7. கவிமயிற் -பா 1. அகம் 131 2. மேற்படி 182 3. மேற்படி 152 1. அகம் 11 2. மேற்படி 152 1. புறம் 113 2. குறுந். 225 3. கலி 87 4. புறம். 261 1. S.I.I. Vo. V No. 990 1. அதுவே சாலுவ காம மன்றியும் -பா அதுவே தெய்ய வெங்காமம் சால -பா 2. கொன்னொன்று -பா 3. வேறுபட்டு -பா. 4. யிரியின் -பா. 5. இது சில ஏடுகளில் இல்லை. 1. குறள் 975 1. தனியே வருதல் -பா. 2. வாரேன் மன்யான்-பா 3. அளவை வயமான் -பா 4. வந்துநின் றோனே -பா 1. அகம். 151 1. மால் பெயல் -பா 2. மன்னெடுங் குன்றத்தூ -பா. 3. மதனில -பா. 4. முதுநாடற்குக் -பா 5. காதலமாகவும் -பா 1. அகம். 303 2. தொல். புறத். 5 1. அகம். 195 1. பசும்பூட் புதல்வன் -பா. 2. கட்டின் -பா 3. வெவ்வாய் வெண்ணகை -பா. 4. தமர்ந்த -பா 1. வள்ளியி னலமரும் -பா. 1. குறுந். 202 2. சீவக. 165 3. அகம். 5 4. தொல். களவு. 22 5. குறள். 71 6. குறள் 555 7. மேற்படி 1304 1. தொல். பொ. 152 1. அகம். 75 1. குரம்பை - பா. 2. பொங்குதுகளாடி - பா. 3. உருள்பொலிபோல வெம்முனை வருத்த -பா. 4. பிணித்த றேற்றாப் -பா. 5. மறப்பன் -பா. 6. பரத்தையர் பலரோடு என்பது தொடங்கி வாயின் மறுப்ப என்ப தீறாக வுள்ள பகுதி மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டிலும் அச்சுப்பிரதியிலும் இல்லை. 1. தொல். பொ. 220 2. அகம் 152 3. பதிற். ஐந். பதி. 1. சேர்பெருங்காளை -பா. 2. சிறியிலை நெல்லி -பா 3. வீசுனைச் சிறுநீர் -பா. 4. மகளோரன்ன- பா 5. செய்போழ் வெட்டிப் பெய்தலாய - பா. 6. மாலைவிரிநிலவிற் பெயர்பு புறம் - பா. 7. றன்று- பா 1. தொல். மரபு. 19 2. அகம். 152 3. மேற்படி 97 1. தொல் புறத் 3 மேற் நச்சி 1. A.R. No. 39 of 1905 2. A.R. No. 46 of 1905 3. அச்சுப் படிகள் முக்கல் என்று குறிப்பினும் ஏடுகளில் முக்கில் என இருப்பது கண்டு கல்வெட்டுக்களை நோக்கிய போது அதுவே வழக்கு என்பது நெரிந்தது. 1. நோக்கி - பா, 2. ரலர்தந்து - பா 1. குறுந் 245 2. தொல். மரபு, 48 3. அகம் 280 1. மேற்படி 282 2. குறுந். 58 3. மேற்படி 57 1. ஆர்கலி -பா 2. யமைந்துவார்ந் துறைத்தென் -பா 1. அகம். 318 2. முருகு. 75 3. தொல். உரி. 42 1. ஐங். 249 2. நற். 85 3. குறுந். 263 1. A.R. No. 461 of 1913 2. A.R. No. 464 of 1913 1. கூறின் றுடையரோ மற்றே வேறுபட்டு -பா 1. அகம் 311 2. தொல். பொ. 34 1. கலி. 16 1. காணார் முதலொடு -பா 2. பூவே -பா, 3. படையொடும் -பா 4. தம்முறு விழுமம் -பா. 5. கியானினைந் திரங்கே னாக -பா. கிரங்கினெ னல்லேன் யானே -பா. 6. புகழவெற் -பா. 7. றோழியானே -பா, 1. ஐங். 58 2. அகம். 303 1. ஐங். 188 1. வேட்டு -பா. 2. மஞ்ஞையிற் -பா. 3. கல்லகத்ததுவே யெம்மூர் -பா. 4. சேர்ந்தனை சென்மதி நீயே பெரும -பா. 1. முருகு. 246 1. நற் 82 2. அகம் 73 3. மேற்படி 392 4. நற் 117 5. ஐங் 250 6. நற் 13 7. முருகு 195 8. புறம் 120 1. அகம் 300 2. மேற்படி 340 3. Vol. xxiii- பக். 152 4. A.R. 452 of 1924 5. பிள்ளை லோகஞ்சீயர் - ராமாநுஜார்ய திவ்ய சரிதை பக். 174 1. நும்ம -பா 2. யானினக் குரைத்தென -பா. 3. கருமை -பா. 4. மனையுறக் காக்கும் -பா. 5. வெம்பலை -பா. 1. அகம் 1. அடைமரன் மொக்குளின் -பா 2. சூடுநர் விடுத்த மிச்சில் -பா 1. பொருநர். 45 1. தேம்பால் செற்ற -பா 2. வைகுபனி யுழந்த பா 3. யமையத் திசைக்கும் -பா. 4. தகுரல் வாய்ச் -பா. ததர்வினைச் -பா 5. கழிந்த -பா. கொண்டவென் -பா . 1. அகம் 149 1. தகைய- பா. 1. புலவேன் -பா. 2. கழனி காவலர் -பா. 3. சூடுந் தொடைக்கும் -பா 4. நன்மனை நனிவிருந்தயரும் -பா . நல்விருந்தயர்மார் -பா 5. கைதூவின்மையின் -பா. 1. குறிஞ்சி 188 2. நற். 230 3. புறம். 379 4. மேற்படி 334 1. சிலப் 16; 71-3 2. தொல். பொ. 147 1. A.R. 243 of 1929-30 2. 245 of 1929-30 3. 246 of 1929-30 4. 251 of 1929-30 5. 254 of 1929-30 1. மரத்த, மராஅத்த -பா 2. கொடையோடுகுக்கும் -பா, 3. யம்பல்யாணர் -பா 4. விருப்ப -பா. 5. மழை மைந்துற்ற -பா. 6. மாகலும் பிரிவோர் -பா. 1. பொருந 183-4 1. அகம் 328 1. துணர்த்த -பா; துணர்ந்த -பா 1. தேவர் பிரதியில் இளநாகனார் என்ற பெயர் இளங்கண்ணனாரெனக் காணப்படுகிறது 2. இது புதுப்பட்டியேட்டில் காணப்பட்டது. 3. சொன்னயந் தோட்கே -பா. 1. அகம். 170 2. மேற்படி 263 3. பதிற் 21 1. புறம் 314 1. நிறம்பெறு மீரிதழ் 2. சிறிதுநனி 3. வுடம்பே 4. இப்பாட்டின் முதலிரண்டு அடிகள் நச்சினார்க்கினியர் உரையில் காணப்படவில்லை. 1. புறம். 144 1. குறள். 612 2. மேற்படி 1293 3. புறம். 301 4. அகம். 299 1. குறுந் 280 2. நற். 103 3. தொல். பொ. 196 1. மேற்படி மேற்படி 501 2. A.R. No 564 of 1922 1. மனைவாய் ஞமலி -பா 1. அகம் 182 1. யுடைவியத்தன்ன -பா. 2. புனைதொடி -பா 1. பொருந. 30 2. நற். 274 1. புறம் 151 2. தொல்.இடை 26 1. அகம் 93 2. தொல். பொ. 28 1. விசும்புறழ் வரிசை -பா 2. பைங்கண் யானை -பா 3. யருகா தாகிய -பா. 4. வென்கண் டுஞ்சாது -பா. 1. ஐங். 102 1. தொல். பொ. 46 2. S.II. Vol. VIII No. 330 1. பிரிவிற் சென்று -பா பிரிந்தென நன்றும் -பா 2. குறுகிளி கடிகஞ் சென்றுழிந் - பா 1. அகம் 22 2. மேற்படி 240 3. சிலப். 4, 5-8 4. அகம் 86 5. முல்லை 8-11 6. பதிற் 65 1. குறள் 65 2. தொல். பொ -48. 1. தொல் சொல் பெயர் - 4 2. குறள் 18 1. ஓய்விடு நடைப்பகடு -பா 2. ஓய்நடைப் பெரும்பகடு -பா ஓய்வுடை முதுபகடு -பா . ஓய்நடை விடுபகடாரும் -பா. 3. தொடர்பு நீ -பா. 4. சூடு தெரி புதுப்பூ -பா 1. புறம். 248 1. ஐங். 90 2. தொல். பொருள் 171 3. மேற்படி 151 1. நீர்பெயர்ந்து -பா 2. தண்பெரும் பௌவ நீர்த்துறைவற்கு நீயும் -பா 3. குரையாய் குணமோ பாண -பா குரையாய் கொண்மோ பாண-பா 1. அகம் 131 2. குறுந். 312 3. அகம் 209 1. நறுங்கொடித் தமாலம் -பா 2. கலைந்த -பா. 3. யிரவுவரின் -பா 4. வாழேனைய மைகூர் பனியே -பா இப்பாட்டின் ஆசிரியர் மீளிகிழான் வேட்டனார் என்று புதுப்பட்டி ஏடூ குறிக்கிறது. 1. அகம் 348 1. பலிக ளார்கை -பா 2. மெம்மிற் -பா 3. வெம்பொற் -பா 1. பெரும்பாண் 233 2. மேற்படி 411 3. அகம் 66 4. நற் 355 5. புறம் 291 1. குறள் 70 2. பதிற் 20 1. எருவை நீடிய பெருவரை யகந்தொறும் -பா 2. தொண்டுறை துப்பொடு -பா 3. இலங்குமலை நாடன் -பா 1. கலி 53 1. புறனழிந்து -பா 2. மழுங்கின -பா 3. யாயும தறிந்தனள் - பா 4. அருங்கடி யயர்ந்தனர் -பா 5. பலவினை நாவாய் - பா. 1. என்னோவது -பா 2. மற்சிரக் காலையும் -பா 3. நாம் வருந்து படருழந்தே -பா. 1. புறம் 266 2. ஐங். 34 1. நற் 147 2. குறுந். 66 3. பரி. 8:24 4. தொல். உரி 3 5. ஐந். ஐம். 4 1. பகைகொள்பு நினைஇ -பா 2. போறி -பா 3. நினைத்தி -பா 4. சிதர்நனை -பா 5. முதிர்கதிப் பிறவும் துஞ்சும் -பா 6. மைய லுறுகுவ ளன்னை -பா மையலுறாஅ வன்னை -பா 1. குறுந் 165 1. கலி 23 2. மேற்படி 84 3. புறம் 261 4. குறள் 1093 1. கிளையிற் பெயரும் - பா. 2. கூடலாங்கண் - பா. 3. பெருமலை தழீஇயும் - பா, 4. சுமையுமோ - பா 1. குறள் 1227 1 உருகெழு யானை யுடைகொண் டன்ன - பா 2. வண்டிற் றாஅம் - பா 3. அவர்காண் - பா 4. யூர்கொண் டன்ன - பா 1. அகம் 133 2. குறுந் 357 1 பெரும்புண் - பா 2. இதனைப் பொச்சை எனத் திருத்திக்கொள்வர் “பரணர்” என்ற நூலுடையார் பக் 44 1. அகம் 227 2. புறம் 348 3. சீவக 2524 4. தொல் சொல் எச்ச 55 1. தொல். பொ. 131