உரைவேந்தர் தமிழ்த்தொகை 14 நற்றிணை - 1 (1- 100) உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 14 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 496 = 520 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 325/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற் களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர்.முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப் படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத் துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xx நூலடக்கம் முன்னுரை 1 அணிந்துரை 6 உரைநலம் 14 1. கபிலர் 29 2. பெரும்பதுமனார் 40 3. இளங்கீரனார் 44 4. அம்மூவனார் 49 5. பெருங்குன்றூர்கிழார் 54 6. பரணர் 60 7. நல்வெள்ளியார் 65 8. கண்ணகனார் 69 9. பாலைபாடிய பெருங்கடுங்கோ 74 10. குடவாயிற் கீரத்தனார் 80 11. உலோச்சனார் 88 12. கயமனார் 93 13. கபிலர் 97 14. மாமூலனார் 102 15. பாண்டியன் அறிவுடைநம்பி 108 16. சிறைக்குடி ஆந்தையார் 112 17. நொச்சி நியமங் கிழார் 118 18. பொய்கையார் 123 19. நக்கண்ணையார் 128 20. ஓரம்போகியார் 132 21. மருதன் இளநாகனார் 142 22. நல்வேட்டனார் 148 23. கணக்காயனார் 152 24. குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் 157 25. வடவண்ணக்கன் பேரிசாத்தனார் 161 26. சாத்தந்தையார் 166 27. குடவாயிற் கீரத்தனார் 171 28. முதுகூத்தனார் 174 29. பூதனார் 179 30. கொற்றனார் 183 31. நக்கீரனார் 188 32. கபிலர் 195 33. இளவேட்டனார் 199 34. பிரமன் காரி 203 35. அம்மூவனார் 207 36. மதுரைச் சீத்தலைச் சாத்தனார் 213 37. பேரிசாத்தனார் 217 38. உலோச்சனார் 220 39. மருதன் இளநாகனார் 223 40. கோமால் நெடுங்கோடனார் 227 41. இளந்தேவனார் 232 42. குடவாயிற் கீரத்தனார் 236 43. எயினந்தையார் 240 44. பெருங் கோசிகனார் 245 45. உலோச்சனார் 250 46. கோட்டம்பலவனார் 254 47. நல்வெள்ளியார் 258 48. பாலை பாடிய பெருங் கடுங்கோ 263 49. நெய்தற்றத்தனார் 266 50. மருதம்பாடிய இளங்கடுங்கோ 270 51. மதுரைப் பேராலவாயார் 275 52. நப்பாலத்தனார் 279 53. மிளைகிழான் நல்வேட்டனார் 284 54. சேந்தங்கண்ணனார் 287 55. பெருவழுதியார் 291 56. இளங்கீரனார் 296 57. பொதும்பில் கிழார் 300 58. உறையூர் முதுகூத்தனார் 303 59. கபிலர் 307 60. தூங்கல் ஓரியார் 311 61. சிறுமேலாதனார் 316 62. இளங்கீரனார் 320 63. உலோச்சனார் 325 64. உரோடகத்தனார் 328 65. கபிலர் 333 66. மிளைக்கந்தன் நாகனார் 336 67. பேரிசாத்தனார் 340 68. விரான் சாத்தனார் 344 69. சேந்தம் பூதனார் 348 70. வெள்ளி வீதியார் 353 71. வண்ணப்புறக் கந்தரத்தனார் 358 72. இளம்பூதியார் 362 73. மூலங்கீரனார் 366 74. உலோச்சனார் 370 75. மாமூலனார் 374 76. அம்மூவனார் 379 77. கபிலர் 383 78. கீரங்கீரனார் 389 79. கண்ணகனார் 393 80. பூதன் தேவனார் 399 81. அகம்பன் மாலாதனார் 405 82. அம்மள்ளனார் 409 83. பெருந்தேவனார் 414 84. பாலைபாடிய பெருங் கடுங்கோ 418 85. நல்விளக்குன்றனார் 422 86. நக்கீரர் 426 87. நக்கண்ணையார் 429 88. நல்லந்துவனார் 432 89. இளம்புல்லூர்க் காவிதியார் 438 90. அஞ்சில் அஞ்சியார் 444 91. பிசிராந்தையார் 450 92. பெருந்தேவனார் 454 93. மலையனார் 458 94. இளந்திரையனார் 463 95. கோட்டம் பலவனார் 467 96. கோக்குளமுற்றனார் 471 97. பாண்டியன் மாறன் வழுதி 476 98. உக்கிரப் பெருவழுதியார் 481 99. இளந்திரையனார் 486 100. பரணர் 490  முன்னுரை சங்கத் தமிழ் நூல்களுள் ஒன்றாகிய நற்றிணை, தமிழறிஞர் அனைவரும் நன்கறிந்த தொன்று. சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன், கும்பகோணத்தில் தமிழ்ப்புலமை நடத்திய சான்றோர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்களால் முதன் முதலாக அது வெளியிடப்பட்டது. அப்பொழுது தமக்குக் கிடைத்த ஓலையேடுகளைக் கொண்டு ஆராய்ந்து மூலத்தோடு, அதற்குத் தாம் எழுதிய புலமை நிறைந்த உரையையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் பயில்வோர் அனைவரும் அதனை விரும்பிப் படித்து வருகின்றனர். சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தார் சங்க இலக்கியத்தை வெளியிடமுற்பட்டபோது. அதற்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தவர், அந்நாளில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள், அப்பொழுது சமாசக் காரியதரிசியாய் அரும்பணிபுரிந்த திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் என்னைத் திரு. பிள்ளையவர்கட்கு அறிமுகம் செய்து வைத்தாராக, அவர் என்னை விரும்பி வரவேற்று, யான் வெளியிட்டிருந்த ஐங்குறு நூற்று உரையைப் பாராட்டித் தம்மிடமிருந்த நற்றிணை ஏடு ஒன்றைக் காட்டி, "இதனையும் நீங்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும்" என்று உரைத்தார்கள். அப்பொழுதே அதனை மேற்கொள்ள இசைந்து, அவ்வேட்டை என்னிடம் தருமாறு வேண்டினேன்: அது மதுரைத் தமிழ்ச்சங்க ஏடு என்றும், "இதனை நீங்கள் பல்கலைக் கழகத்தின் வழியாகப் பெற வேண்டும்" என உரைத்து அதற்கு உரிய முறையையும் தெரிவித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின், யான் திருப்பதி திருவேங்கடத்தான் கீழ்க்கலைக் கல்லூரியில் பணி மேற்கொண்டு சென்றிருந்தேன். அந்நாளில் இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்தமையின், சென்னை அரசினர் கையெழுத்து நூல்நிலையம் திருப்பதிக்கு மாற்றப்பட்டது. அதனை வாய்ப்பாகக் கொண்டு, அதன்கண் இருந்த நற்றிணை யேட்டினைக் கொண்டு ஒப்பு நோக்கிப் பாடவேறுபாடுகளைக் குறித்துக் கொண்டேன்; அந்நூல் நிலைய மேலாளரின் ஆதரவைத் திரு. பிள்ளையவர்களின் கடிதம் துணையாகப் பெற முடிந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறையில் யான் பணிபுரிந்து வருகையில், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களது முயற்சியால், அவர்கள் வைத்திருந்த "தமிழ்ச்சங்க ஏடு" கிடைத்தது. அங்கே என்னோடு பணி புரிந்தவரும் இப்பொழுது அங்கே ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக (Reader) இருப்பவருமான திரு. வெள்ளைவாரணனார் அவர்கள் அவ்வேட்டைக்கொண்டு நற்றிணையாராய்ச்சி செய்தற்குத் துணை புரிந்தார்கள். நூலோடு அமைந்த அவரது மதிநுட்பம் நேரிய பாடவேறுபாடுகளைக் கண்டு மேற்கொள்வதற்கு உறுதுணை செய்தது. பின்பு, யான் மதுரைத் தியாகராசர் கலைக்கல்லூரிக்கு வந்து பணிபுரிந்து வருகையில், மதுரைக் கல்லூரி மாணவர் ஒருவரால் மிகப் பழைய ஏடு ஒன்று கிடைக்கப்பெற்றேன். அதனைக்கொண்டு ஒப்பு நோக்கியபோது, எங்கள் கல்லூரியில் இப்போது என்னோடு பணிபுரிந்து வரும் என் இனிய நண்பர் பேராசிரியர் க. தி. சுந்தரம் அவர்களால் புதுப்பட்டியில் நகரத்தார் ஒருவரது பெருமனையில் ஏடு இருப்பது தெரிவிக்க, எங்கள் கல்லூரிச் செயலர், திரு. கருமுத்து, தி. சுந்தரம் செட்டியார் அவர்களுடன் சென்று அந்த நற்றிணை யேடு கைவரப் பெற்றேன். நற்றிணை ஆராய்ச்சிக்குத் துணை செய்த ஏடுகள்: 1. அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏடு. 2. மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஏடு. 3. டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு 4. புதுப்பட்டி சிவ. மு.முத்தையா செட்டியார் ஏடு இவ்வேடுகளை உடன் வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500க்கு மேற்பட்ட பாடவேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களின் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன். சில ஆசிரியர்களின் பெயர்கள் திருத்தமடைந்தன. அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும், ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசியலார் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன. அவற்றை ஆங்காங்கே குறித்துள்ளேன். ஆசிரியர் சிலருடைய பெயரில் தோன்றிய வேறுபாடு குறித்து ‘ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்ற தலைப்பிட்டுத் தமிழ்நாடு நாளிதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டேன்; மதுரைத் திருவள்ளூவர் கழக ஆண்டு விழாவில் சொற்பொழிவும் செய்தேன். ஏடுகளை ஒப்பு நோக்கியபோது காணப்பட்ட பாட வேறுபாடுகளால் பாட்டுக்கட்கு உரையே வேறு எழுதவேண்டிய இன்றியமையாமை பிறந்தது. அதனால், எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்கவுரை பெற்று வெளிவருகிறது. மேலும், இவ்வுரையைக் கண்ட தமிழறிஞர்கள், யான்புறநானூற்றுக்கு எழுதியது போல, ஒவ்வொரு பாட்டுக்கும் முன்னுரையும் விளக்கமும்வரை வேண்டு மென உரைத்தனர். தமிழறிஞராவார் மூன்னுரையும் பாட்டும் படித்துப் பயன் கொள்வரென்றும், தமிழ் பயில்வோர் பாட்டும் உரையும் படித்துப் பயன்பெறுவரென்றும் எடுத்துரைத்து வற்புறுத்தினர். அதனால், ஒவ்வொரு பாட்டும், முன்னுரையும் உரை விளக்கமும் பெற்றுள்ளது. சங்ககால வாழ்வுக்கும் இடைக்காலப் பல்லவ பாண்டிய சோழர் கால வாழ்வுக்கும் மிக்க வேறுபாடு காணப்படவில்லை. சங்ககாலத்தும் இடைக்காலத்தும் மக்கட் பெயர்களும் பழக்க வழக்கங்களும் ஓரளவு ஒத்து இயலுகின்றனவாதலால் இடைக் காலக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இந் நூலாராய்ச்சிக்குப் பெருந்துணை செய்துள்ளன. கிடைத்த ஏடுகளும், மிகப் பழமை வாய்ந்து, பாட்டுக்களைப் பாடிய புலவர்களின் பெயரை ஒவ்வொரு துறையின் இறுதியிலும் விடாது எழுதப்பெற்றிருந்தன; அஃது ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளித்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசச் சங்க இலக்கியப் பதிப்பும், தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம், யாப்பருங்கலம் இலக்கண விளக்கம், வீரசோழியம் முதலியவற்றின் உரைகளில் காட்டப்பட்ட நற்றிணைப் பாட்டுக்களும் செய்த உதவியை இங்கே குறிக்காமல் இருக்க முடியாது. இந்நூல் முடிந்து ஏழாண்டுக்கு மேலாகியும், வெளியிடுவோர் அச்சிடுவோர்கட்கு உண்டாகிய இடையூறுகளால், விரைந்து வெளிவருவது இயலாதாயிற்று. இப்போது முதல் இருநூறு பாட்டுக்கள் ஒரு தொகுதியாக வெளியிடப் பெறுகின்றன. எவ்வாற்றாலேனும் இதனை வெளியிட்டே தீர்வது என்ற துணிவு கொண்ட சென்னை அருணா பப்ளிகேஷன்சு உரிமை முதல்வர், சிவன் சேவடி மறவாச் சிந்தையும் செல்வ நிறைவும் பெற்ற தேவகோட்டை, திரு. கி. கரு. ராம. கரு. சாமிநாதன் செட்டியார் அவர்கட்குத் தமிழகத்தின் சார்பில் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன். இந்த ஏடுகளைப் பெறுதற்கும் ஆராய்தற்கும் துணை புரிந்த உயரிய நண்பர்களான திரு. க. வெள்ளைவாரணனார், கருமுத்து. தி. சுந்தரனார், திரு. கதி. சுந்தரனார் அவர்கட்கும் அவ்வப்போது கருத்துரைத்து ஊக்கிய தஞ்சைக் கரந்தை திரு. சிவகுப்புசாமிப்பிள்ளை அவர்கட்கும், என்னோடு பணிபுரியும் பேராசிரியப் பெருமக்கட்கும், உரையினைப் படித்து நலம் பாராட்டி எழுதிய பேராசிரியர் திரு. கண. சிற்சபேசன் ஆ.ஹ., அவர்கட்கும் என் மனம் கெழுமிய நன்றி என்றும் உரியதாகும். இதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் திருமதி. இராதா தியாகராசன் அம்மையார் அவர்கள், எங்கள் கல்லூரி நிறுவிய அருந்தமிழ்ப் பெரும் புலமைக் கலைத்தந்தை உயர்திரு. கருமுத்து. தியாகராசன் செட்டியார் அவர்களின் அருமந்த வாழ்க்கைத் துணைவியாவர்; ஆங்கிலம், கேரளம், தீந்தமிழ் ஆகிய மும்மை மொழியிலும் செவ்விய புலமை சான்ற செம்புலத் திருமகள்; அவர் என்னுடைய தமிழ் மாணவர் என்றாலும், அவர்களை என் உள்ளம் என்னைப் பெற்ற தாயினும் பெருமைமிக்க அன்னையாகவே கருதிப் போற்றுகிறது. பசித்த போதெல்லாம் குறிப்பறிந்து உண்டி கொடுத்தும், உடை பல நல்கியும், என் உள்ளமும் உடலும் ஓய்ந்து அயராதவாறு உறுபொருள் நல்கியும் பேணிப் புரக்கும் பெருந்தகைப் பெருமகள்; ஏழையெளியவர்க்குத் தாழ்விலாது அளித்து அவரது இன்முகம் காணும் செம்மனச் செல்வி. இன்ப அன்புருவாய் அறம்புரிந்தொழுகும் திருமதி. இராதா அம்மையார்க்கும் அவரது அருளறப் பெருங்கணவரான பெருங்கலைத் தந்தை உயர்திரு. கருமுத்து, தியாகராசனார்க்கும் இவ்வுரை நூலை உரிமை செய்கின்றேன். ஒன்றுக்கும் பற்றாத எளிய என்னை இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி, மயங்குங்கால் தெளிவு பிறப்பித்தும் மருளுங்கால் தெருள் நிறைவித்தும் அருள்புரியும் அங்கயற் கண்ணியோடு அமர்ந்த ஆலவாயண்ணலின் திருவடிகளை வணங்குகிறேன். “ ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி” ஒளவை சு. துரைசாமி  அணிந்துரை திருமதி இராதா தியாகராசன் அவர்கள், மதுரை சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர், ஒளவை, துரைசாமிப் பிள்ளையவர்கள், தாம் வெளியிடும் இந் நற்றிணைக்கு அணிந்துரை எழுதுமாறு என்னைக் கேட்டபோது, கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும் நிலைபெறக்கொண்ட அவரது நூலுக்கு, அவர்பால் தமிழ் பயின்ற யான் அணிந்துரையென்ற பாயிரம் கூறல் முறையாகுமா என்று ஓர் ஐயம் தோன்றி என்னை அலைக்கத் தொடங்கிற்று; அதனால் மறுக்கவும் செய்தேன். அந்நிலையில் அவர்கள், "தன்னா சீரியன் தன்னொடு கற்றோன் தன்மாணாக்கன் தகும்உரைகாரன் என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே" என்ற நூற்பாவை நினைவுபடுத்தி இதன்கண் "இயம்புதல் பொருந்தும்" என்னாது, "கடனே" என்பதனால், ஆசிரியர் எழுதும் நூலுக்கு மாணாக்கர் பாயிரம் இயம்புதல் முறையென்று தெளிவுறுத்தினார்கள். அவர் விரும்பிப் பணிப்பதைச் செய்வது, எனக்கு "அறத்தின் திரியாப் படர்ச்சி" யாதலால், இதனை எழுதுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். பேராசிரியர் ஒளவையவர்கள், சைவத் துறையிலும் தமிழ் இலக்கியவுலகிலும் மிக்க விளக்கம்பெற்ற நற்றமிழ்ச் சான்றோர். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார்அடிகள், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், திரு.வி.க. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு. வேங்கடாசலம் பிள்ளை, நாவலர். சோமசுந்தர பாரதியார் முதலியோருடைய நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர்; "சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான்" என்று அப் பெருமக்கள் பாராட்டும் புகழ் பெற்றவர். "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து" என்ற மெய்ம்மொழிக்கு ஒப்ப, நம் உரைவேந்தரது புலமை நலம் அப்பெரு மக்களிடையே ஒளிமிக்குத் திகழ்ந்தது. சங்கத் தொகை நூல்களான புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு என்ற மூன்றிற்கும் நிகரற்ற விளக்கவுரைகள் வரைந்த நன்மாண்பை வியந்து, மதுரைத் திருவள்ளுவர் கழகம் இவர்க்கு உரைவேந்தர் என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது. உயர்நிலைத் தமிழ் மாணவர்களும் பேராசிரியர்களும் இவருடைய விளக்கவுரை களையே விரும்பிப் படித்துப் பெரும்பயன் அடைகின்றனர். ஆகவே, நமது உரைவேந்தர்அவர்களைச் சமயவொழுக்கமும் தண்டமிழ்ப் புலமையும் அமையக் கொண்ட ஆசிரியப் பெருந்தகை என்பது சாலப் பொருந்தும். இப்பொழுது இவர் வெளியிடும் நற்றிணை, சங்க இலக்கியங்களில், எட்டுத்தொகையுள் அடங்கும் நூல்களில் தலையாயது. "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை" என்ற பழம்பாட்டால் இதனை அறியலாம். பன்னூறு ஆண்டுகள் பனையேட்டிலே இருந்த இந்த நற்றிணை, முன்னே பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்களால் உரையெழுதி வெளியிடப்பட்டது. எனினும், ஆசிரியர் ஒளவையவர்கள், தமக்குக் கிடைத்த ஏடுகள் சிலவற்றைக்கொண்டு ஆராய்ந்து, பாட வேறுபாடுகள் மிகப்பல தோன்றினமையின், மூலத்தோடு உரையும் எழுதி வெளியிடுகின்றார். பாடவேறுபாடுகள் ஒவ்வொரு பாட்டிலும் அடிக்குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன; பழைய பதிப்பில் பெரும்பாலும் பாடவேறுபாடுகளே காணப்படவில்லை. பாடிய புலவர்களின் பெயர் காணப்படாதிருந்த பல பாட்டுக்களுக்கு, ஆக்கியோர் பெயர் இப்பொழுது நமது உரைவேந்தரால் காணப்பட்டுளது. பாட்டின் நலம் கண்டு மகிழ்வோர், அதனைப் படைத்த புலவர் பெயர் காணாமல் எய்தும் மருட்சிக்கு இஃதொரு தெளி மருந்தாகும். நற். 8, 10, 22, 24, 84 முதலியன காண்க. நற்றிணையில் தோன்றும் புலவர் பெருமக்களின் பெயர்களும் இப்பதிப்பில் திருத்தமும் தெளிவும் பெற்றுள்ளன. ஐயரவர்கள் பதிப்பில் பிரமச்சாரி என்று காணப்படும் பெயர் பிரமன்காரி (நற். 34) என்றும், கோண்மாநெடுங்கோட்டனார் என்பது கோமால் நெடுங்கோடனார் (நற். 40) என்றும், சல்லியங்குமரனார் என்பது அரிசிலங்குமரனார் (141) என்றும் திருந்தியுள்ளன. இவ்வாறு திருத்தம் பெறுவன பல. இப்புலவர் பெயர்களை ஆராயுமிடத்து மூலங்கீரனார் என்ற பெயர் மூவன்கீரனார் என ஏட்டில் தோன்றக் காண்கின்றார் நமது உரைவேந்தர். "மூவன் என்பதும் மக்கட் பெயர் வகையுள் ஒன்றாதலின் உண்மைநிலை தெரிந்திலது" (பக். 286) என்று தமது கருத்தை உரைக்கின்றார். இளம்புல்லூர்க் காவிதியார் என்ற புலவர் பெயரைக் காண்கின்றார். இதன்கண், காவிதி என்பது, நாட்டு நன்மக்கட்கு முன்னாளைய வேந்தர் வழங்கிய சிறப்புப் பெயராகும். இக்காவிதிகளை. "நன்றும் தீதும் கண்டுஆய்ந் தடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. காவிதிமாக்கள் என்பதற்கு நச்சினார்க்கினியர் "காவிதிப்பட்டம் கட்டின அமைச்சர்" என்று உரை கூறுகின்றார். இப்பட்டம் சிறப்புடை மகளிர்க்கும் தரப்படுவதுண்டு எனப் பெருங்கதையால் அறிகின்றோம். காவிதி என்பது சிறப்புப் பெயராதலால் காவிதிப் பட்டம் பெற்ற சான்றோர், கிடங்கிற் காவிதி கீரங்கண்ணனார் என்று குறிக்கப்படுவது போலாது, இளப்புல்லூர்க் காவிதி என்பதோடு நிற்பதால், இயற்பெயர் யாதாகலாம் என்று ஆராய்ந்து, "ஏடுதோறும் இவ்வளவே காணப்படுதலால், இந்நூல் தொகுக்கப்பெற்ற காலத்தேயே இவரது இயற்பெயர் மறைந்து போயிற்றெனத் தெரிகிறது" (பக். 346) என்று குறிக்கின்றார். பாடவேறுபாடு காட்டுமிடத்து, இவர், "இது புதுப்பட்டிச் செட்டியார் ஏட்டில் காணப்பட்டது" (பக். 44) எனவும், "வருதுணையாகிய என்ற பாடம் புதுப்பட்டியேட்டில் காணப்படுகிறது" (பக். 121) எனவும், "இது தேவர் ஏட்டில் இல்லை" (ப;க. 351); "இது அச்சுப்பிரதியில் இல்லை" (பக். 262) எனவும், "இவ்வடிகள், அவல நெஞ்சின் அஞ்சினம் பெயர உயர்திசை யிடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பனொடு நுண்ணுகம் நுழைத்த மாவே" என ஏட்டில் மாறிக் காணப்படுகின்றன" (பக். 234) எனவும் காட்டுவன இவரது ஆராய்ச்சியின் நேர்மையைப் புலப்படுத்துகின்றன. இப்பாட்டின் "இறுதிப்பகுதி ஏடுகளில் சிதைந்துள்ளது" (பக்.280) என்றும் "இப்பாட்டு ஏனோ ஏடு தோறும் பாட வேறுபாடு பல பெற்றுள்ளது" (பக்.788) என்றும் கூறுவன, ஏடுகளை எத்துணை ஆர்வத்தோடு ஆராய்ந்துள்ளார் என்பதை நாம் அறியமுடிகிறது. பாட்டுக்கள் சிதைந்து காணப்படும் போது, உரைவேந்தரின் உள்ளம் எய்தும் வருத்தத்தையும் இக்குறிப்புகள் நன்கு வெளிப்படுத்தி விடுகின்றன. பாட்டுக்களுக்கு இவர் உரைகூறும் முறை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், "இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயம்படவரும் சிறப்புடையத்தலைக் கண்ட பாண்டியன் அறிவுடைநம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் (பக்.72) என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, "நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்" (பக். 301) என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களும் இனிது படிப்பதற்கேற்ப உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்துக்கு ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையில் இவ் வுரையும் அமைந்திருப்பதால், படிக்கும் போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. உரைக்கு விளக்கம் கூறும் பகுதியில், பாட்டின் சொற் புணர்ப்புக்களில் அமைந்த வினைமுடிபு காட்டிப் பொருளின் திட்பத்தை வரையறுத்து உணர்த்துவதும், அருஞ்சொற்களுக்குப் பொருளும் இலக்கண அமைதியும் கூறுவதும் மிக்க நயம் பொருந்தியுள்ளன. முருக்கமரம் "வேனிற்காலத்து மலர்வது பற்றி வேனில் முருக்கு எனப்பட்டது" (பக்.288) "வேணவா, வேட்கை அவா என்ற இருசொற்புணர்ச்சி" (பக்.299) என்பன உரைவேந்தரின் உரை விளக்கத்துக்குச் சான்று பகரும். இவ்வாறு விளக்குவது முன்னையோர் முறையே: ஆயினும், பாட்டின் இடையே பயிலும் இயற்கைப் பொருள்களின் இயல்புகளை இக்கால விஞ்ஞானக் கருத்துக்களை மேற்கொண்டு உரைப்பது ஒளவையவர்கள்பால் காணப்படும் புதுநெறியாகும். "அறுகாற்பறவை, தேன்வண்டு; வண்டுக்கும் கால் நான்கேயாயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டனையும் கூட்டி அறுகால் என்பது பண்டையோர் கொள்கை" (பக்.225) என்பது முதலியவற்றால் இது தெரிகிறது. இனிப் பாட்டின் பொருள்நலம் கண்டு கூறுமிடத்து நமது உரைவேந்தர் சொற்பொருளில் ஆழ்ந்து சென்று காணும் திறம், மிக்க வியப்பும் இன்பமும் தருகிறது. பொருள் குறித்துத் தன் மனைவியின்றும் பிரிந்து செல்ல வேண்டிய நிலையில் அதனைத் தான் விரும்பாதான் போலப் பேசும் தலைமகன், தான் சொல்லவிருக்கும் வழியின் இயல்பைக் கூறலுற்று, "பைங்காய் நன்னிறம் ஒரீஇய செங்காய்க் கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி" என்று உரைக்கின்றனான். இதனுட் பொதிந்திருக்கும் கருத்தை, "ஈந்து காயா வழிப் பசுமைநிறமும் காய்த்த வழிச் செந்நிறமும், கனியுமிடத்துக் கருநிறமும் பெறும் என்றது, பிள்ளைமையிற் பசுமையும், இளமையில் எழிலும் செம்மையும், முதுமையில் நரையும் திரையும் எய்திக் கழியும் யாக்கையின் நிலையா இயல்பு கூறியது எனக் கொள்க" (பக்.489) என நமது உரைவேந்தர் எடுத்துக் கூறுவர். பிரிந்துறையும் தலைமகன், வேனிற் பருவம் வரக்கண்டு, "நாட்பத வேனில் இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும், நெஞ்சம்" என்று கூறுகின்றான். இதனை விளக்கும் நமது உரையாசிரியர், "காவும் சோலையும் கவின்பெறு பொழிலும், புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாட மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற் காலம், காதலிற் பிணிப்புண்ட இளமையுள்ளங்கட்கு இன்பக்காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின் தேங்கோள் இன்னிசைக்கண், தலைமகனது கருத்துச் சென்றமையின், 'இணர்துதை மாஅத்த புணர்குயில்' என்றும், குயிலின் இன்னிசை, கேட்போர் உள்ளத்தில் வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல் இயல்பாதல் பற்றிப் புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சமென்றும் கூறினான் என்பர் (பக். 622). இவ்வாறு தொலி நீக்கியபின் பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் தெளிவுபடுத்துவதும், அத்தெளிவுரையைத் "தென்னுண் தேனில் தேக்கிய செஞ்சொற்களில்" தொடுத்து உரைப்பதும் உரைநடையின் மாண்பாகும். இவ்வுரையின் இடையிடையே சங்ககால மக்களிடையே நிலவிய கொள்கை களையும் வழக்காறுகளையும், கல்வெட்டுக்கள், வரலாறுகள் முதலியவற்றிலிருந்து சான்று காட்டி விளக்கம் செய்வது, பெரியதோர் வரலாறு படிப்பது போலும் உணர்வைப் படிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. மாலையில் மகளிர் மனைகளில் விளக்கேற்றி வழிபடுவது, பிறந்த மகனைத் தந்தை சென்று காண்பது, இளமகளிர் தைந்நீராடுவது முதலிய வழக்காறுகள் உரிய வகையில் விளக்கப்படுகின்றன. ஒளவையவர்கள், சமயநூற் புலமையால் "சித்தாந்த கலாநிதி" என்ற சிறப்புப் பெற்றவராதலால், அவரது சமயவுணர்வை இந்நூலின் காப்புச் செய்யுட்கு வரைந்துள்ள விரிவுரை நன்கு வெளிப்படுத்திவிடுகிறது. "மாநிலம் சேவடியாக" எனத் தொடங்கும் அப்பாட்டை முதலிற் கண்ட பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வடமொழிச் செய்யுளொன்றின் துணை கொண்டு திருமாலுக்கேற்றி உரை கூறினார். ஏனைத் தொகை நூல்கள் பலவற்றிலும், பாரதம் பாடிய பெருந்தேவனார் செய்து சேர்த்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பலவும் சிவநெறிக்கே உரியவாய் இருப்பதால், இது திருமாலுக்கேற்றியிருப்பதை இதுகாறும் அறிஞர் எவரும் ஆராயவில்லை. இதன்கண் "படர்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக" என்று ஏட்டில் காணப்பட்ட பாடவேறுபாடு, சிவனுக்கேற்றுவதை எடுத்துக்காட்டி, இச்செய்யுளின் கருத்து முற்றும், அப்பெருந்தேவனார் காலத்தவரான சேரமான் பெருமாளுடைய பாட்டு ஒன்றில் அமைந்திருப்பதை ஆதரவாகக் கொண்டு விரித்துரைப்பது, ஈண்டுக் குறிக்கத் தக்கதாகும். மேலும், "தீதற விளங்கிய திகிரியோன்" என்பதிலுள்ள தீது என்றது "செம்பிற் களிம்பு போல உயிரிற்கிடந்து அதனை அறியாமை இருளில் செறித்திருக்கும் மலம்" என்றது, "திகிரி என்றது திருவருளாகிய ஆணை" யென்றும் உரை கூறுவது சைவநூற் கொள்கை. உயிர்கள் மலவிருளின் நீங்கி அறிவொளி பெறுதற்கென்றே இவ்வுலகு இறைவனால் படைக்கப்பட்டது எனப் படைப்பின் நோக்கத்தையும், அந்நோக்கம் நிறைவுறல் வேண்டி, இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் இருக்கும் திறத்தையும் உரையிடைப் பெய்து கூறுவது மிக்க இன்பம் தருகிறது. சித்தாந்த நூல்கள் உரைக்கும் தத்துவக் கூறுகளைப் பொறிவட்டம் புந்திவட்டம் உயிர்வட்டம் என்று மூன்றாக வகுத்து விளக்குவதும், "மன-நினைவு எண்ணங்களையும், அவற்றுள் நிகழ்ந்தவை, நிகழ்பவைகளையும் ஆராய்ந்து காணும் உயிர், அறிவு வடிவாய் வீற்றிருக்கும் இடம் உள்ளம்" எனப்படுகிறது என்று தெரிவித்துத் திருவள்ளுவர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் நூல்களிலிருந்து ஆதரவு காட்டுவதும் ஒளவையவர்களின் சமயநூல் தெளிவை இனிது புலப்படுத்துகின்றன. இங்ஙனம், தெளிந்த சமயவறிவும், பரந்த புலமையும், சொற்பொருளை நுணுகிக் காணும் மதிமையும் ஒருங்கு உடையவராதலால், ஆசிரியர் ஒளவை அவர்கள் அளிக்கும் இவ்வுரைநூல் தமிழ் அறிஞர்க்கு அறிவு விருந்தும், மாணவர்களுக்குப் பெருந்துணையுமாகும் பெருநலம் உடையதென்றால் அது சிறிதும் மிகையாகாது. இத்தகைய பயனுள்ள பணிபுரிந்த உரைவேந்தர் அவர்கட்குத் தமிழுலகம் பெரிதும் கடப்பாடுடையதென்று சொல்லி, அணிந்துரை யெழுதும் சிறப்பை எனக்களித்த பேராசிரியர் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.  உரைநலம் திரு. கண. சிற்சபேசன், எம்.ஏ., தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை இனிமைசேர் தமிழ்மொழியில் எட்டுத்தொகை நூல்கள் ஏற்றம் மிக்கன. அவற்றுள், யாரும் உணர இயலாத அகத்தில் நிகழும் அரிய உணர்வுகட்குத் தெளிந்த வடிவங் கொடுக்கும் அகநூல்கள் நுண்மையும் நன்மையும் எழிலும் வாய்ந்தவை. தமிழ்ப்புலவர்கள், உலகினை, உலகுயிர்களை, வானை, நிலத்தை, நிலத்தில் வளரும் செடிகொடிகளை மரங்களை, மலரும் பூக்களை, தோன்றும் கனிகளை மட்டும் நுண்ணிய பார்வையால் பார்த்திருந்தால் பெருமையடைந்திருக்க மாட்டார்கள். இவற்றினையும், இவற்றின் உட்பொருள்களையும் கண்டதோடு, இவை மனித வாழ்விற்பெறும் அரிய தொடர்பினையே பெரிதும் கருத்திற் கொண்டார்கள். அவர்கள், தம் அனுபவங்களைப் பொதிந்து வைத்த பெரும் பேழைகளே அகநூல்கள். நூல்களைக் கற்று உணர்ந்து பெறும் பேரின்பத்தை உள்ளுதொறும் இனிக்கும் தூய காதலின்பத்திற்கு ஒப்பிடுவர் திருவள்ளுவர். அத்தகைய நூல் இன்பத்தை நேரிலுணர்வதே பெரும் பயனாம். ஆனால், நூல்களை நேரில் உணர இயலாத மக்களுக்கு உரைகள் இன்றியமையாதன. அவ்வுரைகள், நூலாசிரியரின் உட்கிடக்கைக்கு மாறாகாமல், உள்ளது விரிப்பனவாய் அமைதல் வேண்டும். உரைகள் மூலநூலின் உயிர்ப்பு ஒரு துளியும் குறையாமல் உரைக்கப்பட வேண்டும். பாடலைப் படித்துப் புரிந்து கொள்ளாத எளிமையோர்க்கு மட்டும் பொருள் கூறியமைவது உரையின் சிறப்பாகாது. கற்றறிந்த மதிநலம் வல்லார்க்கு மேலும் விளக்கந்தருவதாகவும், இயல்பிலேயே விளக்கமுடைய பெரும் புலவர்க்குக் கற்குந்தோறும் கழிபேருவகை தருவதாகவும் அமைவதே உரையின் இலக்கணமாம். இவ்விலக்கணங்கள் ஒருசேர அமைந்திலங்குவது இவ்வுரை நூல். இவ்வுரையை ஆக்கிப் புகழ்பூத்த முதுபெரும் புலவர் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் பழைய உரையாசிரியர்களோடு ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமையுடையவர். தமிழ் இலக்கிய பரப்பு முழுவதையும் ஆழ்ந்து உணர்ந்தவர். அவர் அவ்வப்போது தாமுணர்ந்த பெரு நயங்களைத் தமிழுலகிற்கு உரைகள் வாயிலாக உணர்த்தி வருகிறார். ஒரு நூலிற்கு உரையெழுதப் புகுமுன், அவர், தன் கல்வித்திறத்தைச் செம்மைப்படுத்தி, அனுபவப் புலத்தைத் தூய்மை செய்து, கருத்துவிதைகளை நாற்றி, ஒவ்வாத பழங்கருத்துக்களைக் களையெடுத்து, இனிமை நீர் பாய்ச்சி, செறிவுக் காவல் நிறுத்தி, உண்மைக்கதிர் விளைத்து உயர்தல் வேண்டுமென்ற திண்மையை எப்போதும் மறப்பதில்லை. இச்சிறப்புகள் அவர் தம் உரையில் தொட்ட இடந்தோறும் தோன்றி இன்புறுத்துவன. நற்றிணை என்னும் பெருநூலிற்கு விரிவான உரையொன்று பன்னெடுங் காலமாகத் தேவைப்பட்டது. இவ்வளவு காலமாக அவ்வுரை வெளிவாராமற் போனதும் தமிழ்பெரு மக்களின் தவப்பயனே எனலாம். தமிழறிவு வளராத யாரேனும் எழுதுவதைக் காட்டிலும், காலந்தாழ்த்துக் கிடைப்பினும், ஒளவை போன்ற மூதறிவுச் சான்றோர் எழுதுவதே தமிழுக்கு ஏற்றம் நல்கும். இஞ்ஞான்று அப்பயன் கனிந்து நம் கையகத்துக் கிடைத்துள்ளது. இக்காலத்தில் உரையெழுதுவோர் தம்முரையின் கண்ணேயே முன்னோரிடத்திற்குப் பின்னோரிடம் முரணுமாறு அமைப்பர். மூலநூலைப் பழுதறக் கல்லாமையே இதற்குக்காரணம். ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களோ, அச்சாகி வந்த நற்றிணை நூலைப் பார்த்துப் பாடல்களைப் பதிப்பிக்கவில்லை. பழைய ஏடுகளை நேரிற்கண்டு ஒப்பு நோக்கிச் சிறந்த பாடவேறுபாடுகளை ஆய்ந்து தெளிந்த பின்னரே பதிப்பித்திருக்கிறார்கள். சான்றாக, நற்றிணை 105-ஆவது பாடலைக் காண்க. பாடிய அரும்புலவரின் பெயர் முட்டத்திருமாறன் என்பது. இதுகாறும் தமிழுலகம் இவனை முடத்திருமாறன் எனவே கொண்டு அவன் முடமானமைக்குக் கதைகளையும் வழங்கி வரலாயிற்று. நம் பேராசிரியர் அவ்விழிவு அத்தலைவனை அணுகாவண்ணம் பாதுகாக்கிறார். அவர் பாதுகாப்பதற்கு அவரது நூலறிவு மட்டும் துணை நில்லாமல், வரலாற்றறிவும் வலிமை தந்துள்ளது. முட்டத் திருமாறன் என்பதே அப்பெயரென்பதை அழகுற நிறுவுகின்றார். 'முட்டம்' என்பது இராசராசன் காலத்தில் மும்முடிச் சோழநல்லூர் என மருவிற்று எனக்கூறி அதற்கு முன்னர் அவ்வூரில் வாழ்ந்த திருமாறன் "முட்டத்திருமாறன்" எனப் பெயர் கொண்டமையை இனிதே விளக்குகின்றார். இதனினின்றும் இவரது தெளிந்த வரலாற்று அறிவு மேம்பாடு துலங்குகிறது. தமிழ் மக்களது வரலாற்றினைப் பலர் திருத்தியும் திரித்தும் எழுதித் தமிழினத்துக்கு நயவர் போலவும் நல்லார் போலவும் கேடு சூழ்கின்றனர். இவ்விழிதகைமை யுடையோர் நமது உரையாசிரியரின் நுண்ணிய நோக்கிற்குத் தப்பிவிட முடியவில்லை. அதேபோலத் தமிழ் நூல்களுக்கு விளக்கமெழுதிய பழம் புலவர்களின் வஞ்சனையை நெஞ்சுரத்தோடு எடுத்துக்காட்டி மறுக்கும் வீறு இவ்வுரையில் பல இடங்களில் காணப்படுகிறது. காட்டாக, 35-வது பாடலுரையினைக் காண்க. அழகிய மணல் நிறைந்த கானல். ஆங்கு நின்ற நாவல் மரத்திலிருந்து பெருங் கனியொன்று வீழ்ந்தது. துணை தேடி அப்பக்கம் வந்த தும்பி நாவலினை அடுத்தது. இவ்விரண்டையும் நாவற் பழங்களே என நினைந்த நண்டொன்று தன் பல் காலால் இரண்டையும் சூழ்ந்தது. உள்ளே அகப்பட்ட வண்டு யாழ்போல ஒலித்தது. இவ்வொலியை இரைதேர்ந்து வந்த நாரை செவியேற்றுவர, நண்டோட, வண்டு பறக்க, நாவல் மட்டும் கிடந்தது. இந்நிகழ்ச்சி நிகழ்வுற்றது மாந்தையெனும் பட்டினத்தில். மாந்தையன்ன நலங்கொண்ட மங்கை, காதலன் அருகிருப்பவும் கண் பசந்தாள். இவ்வேறுபாட்டிற்கு இதுகாறும் காரணம் காட்டியவரெல்லாம் வேதவிதிப்படி அவட்குக் கூட்டம் நிகழாமையே ஏதுவெனக் கூறினர். வேதவிதிப்படி கூட்டம் என்பது மணந்து கொண்ட பெண்ணைத் தலைமகன் கதிவரனுக்கு முதல் நாளிரவும், கந்தர்வருக்கு இரண்டாவது நாளிரவும், மூன்றாம் நாளிரவு தீக்கடவுளுக்கும் இரவல் கொடுப்பதாம். இத்தகைய இழிந்த வழக்கம் தமிழரால் நினைந்து பார்க்கவும் முடியாதது. இதனை நன்குணர்ந்து தமிழ்நெறிகண்ட நம் உரையாசிரியர், மேற்கூறிய விளக்கதினைச் சாடுகிறார். இடைக் கால மக்கள் அவ்விளக்கத்தினை அவ்வாறே ஏற்றுக்கொண்டு பேதுற்றமையை எடுத்துக்காட்டி, அது முருகனை யொட்டி யதேயாயினும் போற்றுதற்கு உரியதன்று என்று உணர்த்துகின்றார். தமிழ்க்குடிப் பெண்களுக்குக் கணவனேயன்றி வேறு தெய்வமின்மையானும், கணவனே வேற்றுருக் கொண்டுவரின் அவனை ஏற்பது இழிவெனும் திண்மையுடையாராதலானும் அவர்தம் கற்புநெறிக்குத் தம் சொல்லால் தீது சூழும் உரைகாரர்களை நம்முரையாசிரியர் ஒறுப்பது பெரிதும் பாராட்டிற்குரியது. இதுபோன்ற உரைகள் வீறு கொண்டு எழுந்தால் போலி உரைகள் மாயும் என்பது உறுதி. இவ்வுரை, பாடல்களைக் கற்போர்க்கன்றி ஆராய்ச்சி யாளர்க்கும் பெரிதும் பயன்படுவது. முதற்கண் புலவரைப் பற்றிய விரிந்த குறிப்பொன்றை நமது ஆசிரியர் வரைகின்றார். புலவர் தம் பெயரும் பெயர்க் காரணமும், ஊரும் ஊரின் பழைய இருப்பும் இப்போது அதற்கு வழங்கப்பெறும் பெயரும், இருக்கு மிடமும் அவர் பாடிய பாடல்களும் அவரால் பாடப்பெற்ற அரசும் இம்முதற் குறிப்பில் இடம்பெறுகின்றன. பாடலைப் படிக்கு முன்னர்ப் புலவரைப் பற்றிய முழு ஓவியமும் நமக்குப் பலனாகின்றது. இதனால் விளையும் நன்மையொன்று உண்டு. இத்தகைய புலவரின் பாடலை விரைவில் நுகர வேண்டுமென்ற வேட்கை யெழுகிறது. அவ்வாறு பாடலைப் படிக்கும் பொழுது பாடல் பன்மடங்கு சுவை தருகிறது. அடுத்துப் பாடலைப் பாட வேறுபாடுகளோடு பதித்திருக்கிறார் ஒளவை அவர்கள். காட்டாக, 149ஆவது பாடலினைக் காண்க. "சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் ஊக்கி வாய்விரல் பொத்தி மறுகிற் பெண்டில் அம்பல் தூற்ற" எனப் பதிப்பித்துள்ளார். முன் வந்த பதிப்பிலே, "மூக்கின் கிச்சுக் கட்கு விரல் சேர்த்தி" எனும் பாடம் காணப் பெறுகின்றது. இரண்டு பாடல்களும் ஏடுகளிற் காணப் பெறுபவையே; ஆயினும் பாடங்களைத் தேர்ந்து அச்சிடும்போது உரையாசிரியர் நுணுகி ஆய்தல் வேண்டும். பெண்கள், பிற மகளிரின் காதலொழுக்கத்தை ஒருவர்க்கொருவர் கூறும் போது எவ்வாறு காட்சியளிப்பர் என்பதனை நன்குணர்ந்து எழுதுகிறார்கள் ஒளவையவர்கள். ஒருத்தி கூறவாள், மற்றொருத்தி வியப்பால் வாயில் கைபொத்தி பெருமூச்செறிந்து, அச்செய்தியின் தலைவியோ, அவள் உறவினரோ அவ்வழி வருவாராயின் பேசியிருந்த பெண்டிர் அனைவரும் பேசாத பெருநிலையுற்றுத் தம் கைகளால் வாய்பொத்தி மூக்கினின்றும் பெருமூச்செறிந்து தமது அலரைச் சொல்லாமற் சொல்வர். இக்காட்சியைத் தேர்ந்த தம் அனுபவத்தால் கண்ட உரையாசிரியரவர்கள் அதற்கொத்த பாடத்தினையே பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையினைப் படிக்குந்தோறும் ஒளவை அவர்களின் பன்னூற்பயிற்சி விளங்குகிறது. தேவார திருவாசகப் பெருநூல்களில் அவர் நன்றாகத் தோய்ந்தவர். சங்க இலக்கிய அகநூற்கு உரையெழுதுவார்க்கு சமய நூல்களில் நினைவு வருதல் அருமை. ஆயின், நமது உரையாசிரியரோ இவ்விதிக்கு விலக்காவர். 8ஆவது பாடலின் உரையினைக் காண்க: 'அல்குல்' என்னும் சொல்லிற்குப் பொருள் எழுதியவர்கள், ஆடவரும் பெண்டிருமாகச் சேர்ந்து கற்கவேண்டிய நூல்கள் சங்க இலக்கியமென்பதை மறந்து பெண்டிர்க்கு நாணுத் தரும் வகையில் பொருளுரைத்தனர். ஒளவையவர்கள் அந்நிலையை மாற்றியுள்ளார்கள். அல்குல் எனும் சொல் ஆடவர்க்கு முரியதென உணர்த்தி அதற்குத் துணையாக, "கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்" எனும் ஞானசம்பந்தரது தேவாரத்தை எடுத்துக் காட்டியுள்ளார். தீஞ்சொற்களால் இலங்கும் இவரது உரை, நயமும் விளக்கமும் கொண்டு விளங்குகிறது. இவர் மனிதனுக்கும், விலங்குட்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்த்துகின்றார். 108ஆவது பாடலின் முன்னுரையில் இயற்கையால் ஈர்ப்புண்டு - அடர்ப்புண்டு உடலின்பத்தில் தோய்வது விலங்கினத்திற்கும் பறவையினத் திற்கும் ஒத்ததே எனவும், ஆயினும் உடம்புதரு செயல் முடிந்ததும் அவை யொன்றினையொன்று விலகுவது இயல்பு எனவும் எடுத்துக் காட்டி மக்களினத்துள் மனவழியுறவு நிறைவுறுவதால் காதல்நெறி தோன்றுகிறதெனவும் உணர்த்துகின்றார். மற்றோரிடத்தில், 110ஆவது பாடலின் விளக்கவுரையில், "ஏவல் மறுத்த சிறு விளையாட்டி, ஒழுக்கமும் அறிவும் உணர்ந்த பெற்றியை"க் குறிக்கும்பொழுது, "கொண்டகொழுநன் என்றது கொழுநற்குக் கொளற் குரிமையும், கொடுத்த தந்தை என்றது தந்தைக்குக் கொடையுரிமையும் இயல்பாய்க் கிடந்தவாறு சுட்டினாள்" என இயல்பு தோன்ற உரையமைத்துள்னர். பாட்டின்கண் ஒவ்வொரு சொல்லும் அமைந்து கிடக்கும் சிறப்பினை உரையாசிரியர் அவற்றின் இயல்பும் சூழலும் தோன்ற விளக்குவது பாடலுக்கு மேலும் ஒளிகூட்டுகிறது. "விளையாடாயமோடு" எனத் தொடங்கும் 172-ஆவது பாடலின்கண் தலைமகள் விளையாட்டயர்கையில் பெண்களால், "வேண்டுமென்றே புதைத்ததன்று" எனும் விளக்கம் பாட்டினை மேம்பாடுறுத்துகின்றது. நமது உரையாசிரியரவர்கள் ஆங்கில நூற்பயிற்சி சான்றவர்கள். பறவைகளைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியும் வெளியான ஆங்கில நூல்களைக் கற்றதோடு அவற்றின் துணை கொண்டு சங்க இலக்கியத்திற்கு ஆக்கம் தருபவர்கள். ஐங்குறு நூறு எனும் பனுவற்கு இவர் யாத்த உரையே இதற்கு எழிலார்ந்த சான்று. அதுபோலவே இந்நூலிடத்தும் இடம் வாய்ப்புழி உரை வகுத்துள்ளனர். 181-ஆம் பாடல்: கார்காலம். குடம்பை தன்னுள் தாய்க்குருவியின் துணையுடன் குருவிக்குஞ்சுகள் பலவும் நின்றன. அம்மழையிலும் பிறபுலத்துத் துணையோடு வைகித் தன் பெடையினை நினைந்து குருவிச் சேவல் வந்தது. குழந்தைப்பேறு வாய்த்துப் பெருமையுற்ற பெடைக்குருவிக்குச் சேவலின் மீது சினம். ஆகவே கூட்டினை அடைத்து வாயில் மறுத்தது. ஆண் குருவியோ மாயம் வல்லது. அப்போது மெல்லத் தூரல் தொடங்கிற்று. கூட்டிற்குப் புறத்தே, பெடையும், பிள்ளைகளும் காண, தன்னை அவை கண்டு இரங்க வேண்டுமென்பதற்காக ஈரத்தில் நனைந்து இருந்தது. ஈர நெஞ்சினைக் கொண்ட பெடை நெடிது நினைந்து தன்வயின் அழைத்தது. இக்காட்சிக்கு உரைதரவந்த நமது பேராசிரியர் அவர்கள், சார்லசு டிக்சன் எழுதிய நூலினின்று எடுத்துக்காட்டுகள் நல்குகின்றார். அறிவியல் துறையில் வல்ல இன்றைய ஆராய்ச்சியாளர் கண்ட முடிபுகளை இலக்கியப் புலவர்கள் அன்றே இம்மியும் மாறாமல் உரைத்தமை, காண்டொறும் இறும்பூது தருகின்றது. பெண்மையை - பெண்மையின் மென்மையை, அதற்கு நேர்மாறான உள்ளத்திண்மையை நன்குணர்ந்தவர் நமது உரையாசிரியர். சங்க இலக்கியப் பயிற்சி வாய்த்தவர்கள். பெண்மையின் பேராட்சியினையும், பேருணர்வுகளையும், அவ்வுணர்வுகளுக்கு ஒப்பவும் மாறியும் விளங்கும் அவர்தம் உடற்கூறுகளையும், உலகினைக்காணும் அவரது கண்களையும், அவர்களைக் காணும் உலகக் கண்களையும், உலகம் அவர்களை எதிர்ப்பதனையும் தனியொருத்தியாக அவ்வுலகினை எதிர்க்கும் பெண்மையுரத்தினையும் காணாதிருக்க இயலாது. இவ்வகையில் துறை போகியவர் நமது உரையாசிரியர். 182-ஆம் பாடலின் முன்னுரையில் பெண்ணுள்ளத்தின் பெருந்தகைமையைக் குறிக்கின்றார். காதலால், உடம்பும் உயிரும் வாடியபோது உயிரினும் மேலான நாணிறந்து தலைமகள் சொல்லாடுகின்றாள். அத்தலைமகளது சொல்லாடற்கு ஆசிரியர் தரும் ஏற்றம் பெண்மைப் பெருவிளக்கினை மேலும் சுடர்தரச் செய்கின்றது. அவர் உரை: தலைவியது இக்கூற்றின் கண், காதலுணர்ச்சியாற் கைம்மிக்கு வெதும்பும் இளமையுள்ளம், கற்புச்சிறையிற் கிடந்து அலமரும் திறம் நன்கு விளங்குகிறது". ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் இயல்பிலேயே நகைச்சுவை வல்லவர். அவரது நகைச்சுவை நயந்தோன்றுமாறு நற்றிணையில் ஒருபாடல் கிடைத்தது. வான் பெயல் ஆனாது பொழிந்தது. தினை காக்கும் கொடிச்சி வெளியே வந்து குளிர் கொள் தட்டையால் கடியவில்லை; இதனைச் சாதகமாக்கிக் கொண்ட கடுவனொன்றும் அதன் மந்தியும் தம் கன்னங்கள் பொம்மென நிறையத் தினையை முக்கி வான் மழையில் நனைந்து தோன்றின. இக்காட்சி நோன்பியர் நீராடி நின்ற தோற்றம் போன்றது. இதனை நகைச்சுவை தோன்ற விளக்கந் தருகின்றார் உரையாசிரியர். மந்தியும் கடுவனும் அங்கை நிறையத் தினையை ஞெமிடிக் கொண்டது கையே கலனாக உண்ணும் நோன்பியரைப் போன்றிருந்தது. கொடுங்கவுள் நிறைய அத்தினையை அடைத்து நின்ற காட்சி, கையிடைக் கொண்ட சோற்றமலையை ஒரே முறையில் அடைத்துக் கவுள் புடைத்து நிற்கும் தவசியர் போல இருந்தது. மெய்ம்மயிர் பனிப்ப வான்பெயலில் ஈரங்கூர நின்றது, முடியுடை முனிவர் நீராடி ஈரம்புலராத தோற்றத்துடன் நின்றது போன்றிருந்தது. இவ்வாறு உவமையையும், பொருளையும் ஒன்றற்கொன்று முரணாகாமல் இரண்டின் ஏற்றமும் குறையாமல் உரை வகுத்த பெருமை பெரிதும் பாராட்டற்பாலது (பாடல் 22). இது போன்ற உரையெழுதுவார் உரை மட்டும் எழுதியமையால் பிறர் தமிழ் மொழிக்குச் செய்ய வேண்டுவன இவை என உணர்த்தவும் வேண்டும். ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தம் கூர்த்த மதியாலும், தேர்ந்த அனுபவத்தாலும் அறிவுரை பகரும் இடமொன்றுண்டு. "தமிழ் நாட்டின் வரலாற்றினைத் தமிழ் நன்கறிந்த தமிழுள்ளம் படைத்த தமிழ் நன்மக்களே முற்பட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிய நினைந்து எழுதுங் காலம் உண்டாயின்" நன்று என்று அவரது அருள்நிறை உள்ளம் வேட்கையுறுகின்றது. தமிழ் மாநில அரசு இதனை மேற்கொண்டு செய்ய வேண்டுமென்ற தம் ஆர்வத்தினையும் ஆசிரியர் குறிக்கின்றார். உரை முழுவதையும் நன்கு கண்ட எனக்கு ஒரே ஒரு குறையுண்டு. உரையைக் காண இரு கண்ணும், கருத ஒரு நெஞ்சமும், அறிய ஆறறிவும், எழுத ஒரு கையும் ஒரு போதும் போதா. கற்றார்க்குக் கழிநலம் சேர்க்கும் பாகினும் இனிய இவ்வுரை கருத்துக் கருவூலம், தமிழ் மரபின் புதிய திறவுகோல், உரைநடைச் செறிவின் உயர்ந்த தோற்றம். ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் தமிழ் நெல்லிக்கனியை உண்டவர். அவர் நெடிது வாழ்க. வளர்க அவர்தம் அரும்பணி! ஓங்குக அவர்தம் உழைப்பு.  நற்றிணை மூலமும் விளக்கவுரையும் கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்கம் மருவிய தொகை நூல்கள் தொகுக்கப்பெற்ற காலத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் நூன்முகப்பில் இல்லையென்றும், அவற்றுட் பெரும்பாலானவற்றிற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற சான்றோர் கடவுளைப் பரவும் இனிய பாட்டுக்களைப் பாடிச் சேர்த்தார் என்றும் சான்றோர் வழிவழியாகக் கூறிவருகின்றனர். பண்டைநாளில் தமிழில் பாரதம் பாடியோர் இருவர் என்றும் இருவர்க்கும் பெருந்தேவனார் என்பது இயற்பெயர் என்றும் கூறுப. இவ்விருவருள் பின்னையோரே இன்று அச்சேறி யுலவிவரும் பாரத வெண்பாவைப் பாடிய சான்றோர் என்பது யாவரும் அறிந்தது; இப்பாரத வெண்பா தெள்ளாறெறிந்த நந்திவன்ம பல்லவன் காலத்தது; அதனால் இவ்வாழ்த்தினைப் பாடிய பெருந்தேவனாரும் அப் பல்லவன் காலத்தவர் என்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளின் அடியில் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்ற பெயர்தான் ஏடுகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்துச் செய்யுட்களில் இவரது காலத்தை அறிதற்குரிய குறிப்பு ஒன்றும் காணப்படாமையின் இவரை இன்ன காலத்தவரெனத் துணிய முடியவில்லை; ஆயினும், பழைய பாரதம் பாடிய பெருந்தேவனாரது பாரதக் குறிப்பு யாதும் இதுகாறும் கிடைக்கவில்லை. இப்பாரத வெண்பாவிலுள்ள பாட்டுக்கள் சில பழையவுரைகாரர்களால் காட்டப்படுகின்றன. இதனை நோக்கின், பாரத வெண்பாவையுடைய பெருந்தே வனாரது புலமை உரைகாரர்களான சான்றோர் பரவும் பெருமை கொண்டு பிறங்குவது பற்றிப் பாரதம் பாடிய பெருந்தேவனார் இருவரல்லர், ஒருவரே என உரைப்பாரும் உண்டு. கடவுளை வாழ்த்தும் செய்யுள் வழக்குத் தொல்காப்பியர் காலத்தும் அவர்க்கு முன்னர் வாழ்ந்த சான்றோர் காலத்தும் இருந்தது உண்மை; அதற்குத் தொல்காப்பியமே சான்று. செய்யப்படும் ஒவ்வொரு நூலையும் கடவுள் வாழ்த்தை முதற்கண் நிறுத்தித் தொடங்குதல் வேண்டும் என்ற மரபு தொல்காப்பியர் காலத்தில் இல்லை. சங்கத் தொகை நூல்களில், கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு என்ற இத்தொகை நூல்களில் முதற்கண் கடவுள் வாழ்த்துக் காணப்படுகிறது. திருவள்ளுவனார் பாடிய திருக்குறள் கடவுள் வாழ்த்தைத் தலையாய, பொருளாகக் கொண்டே இயன்றுள்ளது. ஏனைத் தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு முதலியவற்றுள் கடவுள் வாழ்த்து இல்லை. இவற்றை நோக்கின், அக்காலத்தே நூன்முகப்பில் கடவுள் வாழ்த்து இருந்தேயாகல் வேண்டும் என்ற முறைமை அறுதியாக விதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதுபற்றியே சங்ககாலத்தை அடுத்துத் தோன்றிய இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும், தாம் பாடிய நூல்களில் முதற்கண் கடவுள் வாழ்த்தினைக் கூறவில்லை போலும். இவ்வாற்றால், இவ்விரு சான்றோரும் கடவுட் கொள்கையுடையரல்லர் என்பது கருத்தன்று. இவர்களுடைய நூலுக்குள், சிவன், திருமால், கொற்றவை, முருகன், அருகன், புத்தன் என்போர் கடவுள் நிலையில் வைத்துப் பாராட்டப் பெற்றுள்ளமை நாடு அறிந்த செய்தி. பிற்காலத்தே புத்தம் சமணம் வைதிகம் என்ற சமயங்கள் தமிழகத்தில் இடம்பெற்றபோது, நன்மக்களிடையே கடவுள் அன்புநெறி தோன்றி, மக்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முதலிடம் பெற வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கிற்று. எச்சமயத்தோரும் தாந்தாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தத்தம் சமயக் கடவுளை வாழ்த்தியே தொடங்கினர். சமண் சான்றோர்கள் தமிழ் இலக்கணத் துறையில் புதிய புதிய பணி செய்த போது, கடவுள் வாழ்த்தை நூற்பா பாயிரத்துக்கு உறுப் பாக அறுதியிட்டனர். அச்சூழ்நிலையில் தோன்றியவரான பாரதம் பாடிய பெருந்தேவனார், கடவுள் வாழ்த்து இல்லாத சங்கத் தொகை நூல்கட் கெல்லாம், அவற்றின் குறிக்கோட் கேற்பக் கடவுள் வாழ்த்துச் செய்து சேர்த்தார். இந்நற்றிணை ஒன்பதடிச் சிறுமையும் பதின்மூன்றடிப் பெருமையும் உடைய செய்யுட்களே தேர்ந்து தொகுக்கப்பட்டதாகலின், பெருந்தேவனார் பதின்மூன்றடிக்கு மிகாத வகையில் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளைச் செய்து இதன்கட் கோத்துள்ளார். கடவுள் வாழ்த்து எனப்படும் இதன்கண், கடவுள் என்பது, காணப்படும் உலகு உயிர்கட்கு வேறாய், அவ்விரண்டனோடும் முறையே ஒன்றாகவும் உடனாகவும் இருந்து, உயிர்கட்குரிய உலக வாழ்வு இனிதின் இயல அருளும் முழுமுதற் பொருளாகும். இஃது "அமரர்கண் முடியும் அறுவகை வாழ்த்தி1"னுள் அடங் காது தனித்துக் கூறப்படுவதாகிய கடவுள்வாழ்த்து, "கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே2" என்ற நூற்பாவில் "கடவுள் வாழ்த்தொடு" எனப் பிரித்துக் காட்டுவதால் இது தெளியப்படும். இதன்கண், ஆசிரியர் பெருந்தேவனார், உலகத் தோடு ஒன்றாய் அதுவே தனக்கு உடம்பாகவும் தான் அதற்கு உயிராகவும் நின்று இலகும் முழுமுதற்பொருளின் பெருநிலையைக் கூறுகின்றார். (நேரிசை யாசிரியப்பா) மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் 3படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத்4 தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே.1 இது கடவுள் வாழ்த்து. உரை மாநிலம் சேவடியாக - பெரிய நிலமே தன் செம்மையான திருவடியாகவும்; வளைநரல் தூநீர்ப் பௌவம் உடுக்கையாக - சங்குகள் முழங்கும் தெளிந்த நீர் நிறைந்த கடலே தனது ஆடையாகவும்; விசும்பு மெய்யாக - வானமே தனது உடம்பாகவும்; திசை கையாக - திசைகள் எட்டும் தன்னுடைய எட்டுத் தோள்களாகவும்; படர்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக - விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற மூன்றும் தனக்குக் கண்களாகவும்; இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய - இவ்வாறே அமைந்த உலகியற் பொருள்கள் எல்லாவற்றையும் தனக்கு உறுப்பாகக் கொண்டு அவற்றினுள் தானும் அவையும் அடங்க அடக்கிய; தீதற விளங்கிய திகிரியோன் - உயிர்கள் மலமாசு நீங்கி ஞான வாழ்வு பெறுமாறு இலங்குகின்ற திருவருளாகிய ஆணையை யுடையனாகிய முதல்வனை; வேதமுதல்வன் என்ப - வேதங்களில் கூறப்படும் முதற்பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர்; அதனால், நாமும் அவன் முதன்மையைத் தெளிந்து அவனை வழிபடுவோமாக என்றவாறு2. நிலம், பௌவம், விசும்பு, திசை, படர்கதிர், மதியம், சுடர் என இயன்ற எல்லாம் முறையே, சேவடி, உடுக்கை, மெய், கை, கண்ணாகப் பயின்று, அகத்து அடக்கிய, விளங்கிய திகிரியோனை வேதமுதல்வன் என்ப; எனவே, நாமும் அவன் முதன்மையை யுணர்ந்து வழிபடுவோமாக என எச்சவகையால் வேண்டும் சொல் பெய்து மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. எனவே நாமும் என்பது முதலாயின குறிப்பெச்சம். தூநீர்ப் பௌவம், வளைநரல் பௌவம் என இயையும். படர்கதிர், விரிந்த கதிர்களை யுடைய ஞாயிறு. ஏனைத் திங்களாலும் தீத்திரள்களாலும் போக்கமுடியாத உலகிருளைப் பகற்போதில் காலையில் ஞாயிறு தோன்றிப் பொழுது கழியக்கழிய வானமும் மண்ணும் எங்கும் கதிர்பரப்பிப் போக்குதலின் படர்கதிர் எனப்பட்டது. சுடுதற்றொழிலே சிறந்து நிற்பது பற்றித் தீயைச் சுடர் என்றார். வேதம், ஞானநூல்கள்; அவற்றால் முதற்பொருள் எனத் துணிந்து கூறப்படுதல் பற்றிக் கடவுளை வேதமுதல்வன் என்றார். வேதங்களும் அவன் அருளால் தோன்றியன என்பதுபற்றி இவ்வாறு கூறினாரென்றலும் ஒன்று என்ப என்றதற்கேற்ப மெய்யுணர்ந்தோர் என்பது வருவிக்கப்பட்டது. இப்பாட்டுத் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சேரமான் பெருமாளும், இதன் கருத்தையே சிறிது விளக்கமாக, "பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்கு, ஓதம் உடுக்கை உயர்வான்முடி விசும்பே உடம்பு, வேதம் முகம் திசை தோள் மிகுபன்மொழி கீதம்1" என்று கூறுவது ஈண்டு நோக்கத் தக்கது. வளை, சங்கு, நரல், பௌவம், வினைத்தொகை. பௌவம், கடல், திகிரி, ஆழி; ஆணையைத் திகிரியென்றல் வழக்கு. கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள், வாழ்த்து, வணக்கம், பொருள் இயல்பு உரைத்தல் என மூவகைக் கருத்துக்களையுடையன என்பர். அவற்றுள், இது கடவுளாகிய முழு முதற்பொருளின் இயல்பைக் கூறுவதனால் பொருளியல்பு உரைக்கும் வகையினதாகும். ஆதலால், இது கடவுட் பொருளை முன்னிலைப்படுத்தாது படர்க்கைக்கண் நிறுத்திப் பரவும் படர்க்கைப் பராவல் ஆயிற்று. சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை முன் கொணர்ந்து நிறுத்திய சைவவாதி, "இருசுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்" தங்கள் சிவன் என மொழிவது இப்பாட்டின் பொருளோடு ஒத்து நிற்பது காணுமிடத்து, இது சிவபரம்பொருளின் இயல்புரைக்கும் கருத்துடையது என்பது தோன்றும். தூயவல்லாத நீரெல்லாம் வந்து தன்பாற் கலந்தவழியும், கடல்நீர் தன் தெளிநிலை கெடாமைப்பற்றித் தூநீர்ப்பௌவம் என்றார்; எல்லாப் பொருளோடும் தான் கலந்து நிற்பினும், ஒடுங்குங்கால் எல்லாவகைப் பொருளும் தன்பால் ஒடுங்கினும், திரிதலின்றித் தன் 'திருநின்ற செம்மை' விளங்குமாறு தோன்ற நிற்பன் முதல்வன் என்பது குறிப்பு. செம்பிற் களிம்புபோல உயிரிற் கிடந்து அதனை அறியாமையிருளில் செறித்திருக்கும் மலம் தீது எனப்பட்டது; உயிர்கள் மலவிருளின் நீங்கி அறிவொளி பெறுதற்பொருட்டே உலகுயிர்கட்கு வேறான கடவுட்பொருள் உலகுடம்புகளைப் படைத்தளித்து உயிரில்லன ஒழுங்கு தவறாது இயலுதற்கு அவற்றோடு ஒன்றாயும், உயிர்ப் பொருள் அறிவொளி பெறற்கு உடனாயும் இலங்குவது பற்றி, தீதற விளங்கிய என்றும், வேத முதல்வன் என்றும், இதனை மெய்யுணர்ந் தோர் தெளிந்து கூறுதல் தோன்ற என்ப என்றும் கூறினார். 1. கபிலர் உலகில் வாழும் உயிர்கள் யாவும் இன்பமே விழையும் இயல்பின. "எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்பது தொல்காப்பியம். அவற்றுள், மக்களுயிர் அறிவையும் இன்பத்தையும் விழையும் மேன்மை யுடையது. மக்களுயிர், கண் முதலிய புறக்கருவிகளும், மன முதலிய அகக்கருவிகளும், கலை முதலிய உட்கருவிகளும் பொருந்திய உடம்பொடு கூடி உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து ஞானம்பெற்றுப் பிறவாப் பேரின்ப வாழ்வு பெறல் வேண்டுமென்ற அருள் உள்ளத்தால் இறைவன் உலகியல் வாழ்வைப் படைத்துள்ளான். அவர்கள், தம்மைப் பிணித்திருக்கும் மலம் காரணமாக அறிவும் இன்பமும் பெறும் முயற்சியில் தலைப்பட்டு மலமறைப்பால் வேறுபட்டுச் செய்யும் வினைவகையால் குணமும் குற்றமும் உடையராகின்றனர். அவரது வாழ்வு குணமும் குற்றமும் விரவி விடுகிறது. குணத்தால் விளையும் இன்பப் பேற்றினைக் கண்ட சான்றோர், மக்களினம் குணமே நிறைந்து, அறிவு விளக்கமும் இன்பப் பயனும் நல்கவல்ல உலகியல் வாழ்வு பெறுதல் முறையெனக் கருதிக் குணமே யுருவாய ஓர் ஆண்மகனையும் அவனோடு ஒப்பக் குணமே வடிவாய் ஒரு பெண் மகளையும் படைத்து அவர்களை முறையே தலைவனும் தலைவியுமாக நிறுத்தி, இருவரும், காதலால் ஓருயிரும் ஈருடலு மாகிய கணவனும் மனைவியுமாய் இயைந்து, மனைவாழ்வு நடத்தி, ஏனைக் குணமும் குற்றமும் விரவிய மக்களுக்கு வழி காட்டியாய் அமைதல் வேண்டுமெனத் துணிந்து அன்பின் ஐந்திணையை வகுத்துள்ளனர். மாசு மறுவற்ற குணமே வடிவாய் தலைமக்கள் தம்மில் ஒருவரை ஒருவர் கண்டு காதலுறல் கைக்கிளை எனவும், இருவரும் காதலுறவு சிறந்து ஒருவரை ஒருவர் இன்றி உயிர்வாழ்வு அமையாத அளவில் ஓருயிரும் ஈருடம்புமாக உணர்வால் இயைவது களவு என்றும், பின்பு இருவரும் நாடறிய நன்மணம் செய்து கொண்டு மனைவாழ்வு மேற்கொண்டு மக்கட்பேறு, விருந்தோம்பல், பொருளீட்டல், வினை செய்து வீறுபெறல், கல்வி பயின்று ஞானம்பெறல், தூதுசென்று போரும் பூசலும் நாட்டில் உள்வாகாமல் தடுத்தல் முதலிய நல்லற நல்வினைகளால் பேரின்பப் பெருவாழ்வின ராதல் கற்பு என்றும் தமிழ் முழுதறிந்த சான்றோர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டுரைத்தனர். மேலும் உலகவாழ்வின்கண், மக்களினம் செய்யும் பொருள் இவற்றின் வேறன்மையின், இவற்றைப் பொருள் என்றே முறை செய்தனர். மக்களுடைய நினைவு செயல் சொல் ஆகிய அனைத் தும் பொருளும் வினையுமாகிய இரண்டினுள் அடங்கும். பொருள் விளைவுக்கும் வினை செய்தற்கும் இடம் மனைக்குப் புறமாதலும் அவற்றைக் கொணர்ந்து பயன் நுகருமிடம் அக மாதலும் கண்டு, பொருள் அகமெனவும் புறமெனவும் வகுக்கப்பட்டது. ஒருவற்கு மனைவாழ்வாகிய அகப்பொருள் இன்ப அறநிலைய மாகாவிடின், புறத்தே சென்று பொருள்செய்யும் முயற்சி புகழ்பயக்கும் வெற்றி நல்காது; இன்பம் பயவாது; மனைவாழ்வு மாண்புணர்வுகுன்றிக் குற்ற நினைவும் தீச்செயலும் கெடுமொழியும் நிலவும் இடமாயின், அதனை அடியாகக் கொண்டு பெருகிப் பரந்து நிற்கும் மக்கட் சமுதாயம், இரக்கமற்ற அரக்கர் கூட்டமாய் உலகவாழ்வை நரக வாழ்வாக்கி விடும். மனைவாழ்வு மாண்புற வேண்டின், மனைக்குரிய கணவனும் மனைவியும், காதலுறவால் பிணிப்புண்டு உயிரும் உடம்பும் போல் ஒத்த கிழமையுடையராதல் வேண்டும். மனை யமைத்து வாழ்க்கை நடத்தற்குரிய ஒருவனும் ஒருத்தியும் கணவனும் மனைவியுமாகும் இயைபு இயற்கை, செயற்கை என இரு வகைப்படும். இருவரும் ஒருவரையொருவர் தாமே கண்டு காதலுறவு கொண்டு பின் கடிமணத்தால் கணவன் மனைவியராதல் இயற்கைப் புணர்ப்பு; இருவரும் ஒருவரை யொருவர் காணாமே கடிமணத்தால் புணர்க்கப்படுவது செயற்கை. மக்களினம், சாதியின் வேறுபாடு கொண்டு பிரிந்தகாலைச் சாதியும் இனமும் தனித்து வளர்ந்து பெருகுதற்குச் செயற்கைப் புணர்ப்பு வேண்டப்பட்டது. அத்தகைய சாதியின் வேறுபாடும் சமயவேறுபாடும் புகாத மக்களினத்தில் இயற்கைப் புணர்ப்பே உரிமை பெற்றது. சங்ககாலத் தமிழரினம் சாதியின் வேறுபாட்டால் சிதறிவிடாமல் ஒருமைச் சமுதாயமாய் நின்று விளங்கினமையின் மனைவாழ்க்கையின் தோற்றுவாய் இயற்கைப் புணர்ப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மனைவாழ்க்கை மேற்கொண்டு உலகியல்வாழ்வில் இறங்குதற் கேற்ற செவ்விபெற்ற ஒருவனும் ஒருத்தியும், முதலில் உள்ளம் ஒன்றிய காதலராகிப் பின்பு கணவனும் மனைவியுமாதல் வேண்டும். காதலராகும் நெறியில் உளவாகும் இடையூறு களையும் இடையீடுகளையும் தாங்கிக் காதலுறவு சிறந்து, ஒருவர் ஒருவரை யின்றி அமையாத ஒருமையுணர்வுற்று மணந்து கொள்ளுதல் களவொழுக்கமாகும். களவொழுக்கம் பொருளாக வரும் பாட்டுக்கள் இதற்கான கருத்துக்களையே தமக்கு உரிய பொருளாகக் கொண்டனவாகும். மணமானபின் அவ்விருவர் உள்ளங்களையும் பிணித்து நிற்கும் காதலுறவை அலைத்து, கருத்தொருமையைச் சிதைத்துப் பிளவுபடுத்தும் செயல்வகைகளைத் தோற்றுவிப்பது குணமும் குற்றமும் விரவிய உலகி யலின் பண்பு; அவற்றால் அவர்கள் உள்ளம் திரியாது பழைய ஒருமை நிலையில் நிற்பிக்கும் திறம் கற்பு வாழ்வின் குறிக்கோள். இவ்வாறு களவும் கற்புமாகிய காதலொழுக்கத்தால் மனைவாழ்க்கை திண்மையும் செம்மையும் நிறைந்து சிறப்புறுகின்றது; அறம் வளர்ந்து பொருளைப் பயந்து இன்பம் விளைக்கின்றது. இதுபற்றியே, புறவுலகில் ஈட்டப்படும் பொருள், புகழ், வினை, வெற்றி, கல்வி, அறிவு முதலியவற்றின் பயனை நுகரும் இடமாகிய மனை, ஒத்த அன்பும் ஒன்றிய உணர்வும் நிலவும் இன்ப நிலையமாதல் வேண்டுமென்ற நோக்கம் கொண்டே சங்கச் சான்றோர் இந்த நற்றிணை முதலாய அகப்பொருள் நூல்களைப் பாடியும் தொகுத்தும் உள்ளனர். உலகில் வாழ்ந்து தெரிந்துணர வேண்டிய கருத்துக்கள் பலவற்றையும் வாழாமலே எளிதில் அறிந்து, மக்களினம் குற்றமில்லாத நல்லினமாய் உயர்வது கருதிச் சுருங்கிய சொற்களால் விளங்க உரைத்த திருவள்ளுவ னார், உலகியற்குரிய அறமும் பொருளும் கூறலுற்று, தொடக்கத்தில் கணவனும், மனைவியுமாய் நிலவும் மக்களினத்தையே நோக்கித் தம் குறட்பாக்களைக் கூறி, முடிவில் தாம் கூறிய அறமும் பொருளும் மக்களுலகின் மனைவாழ்வை அடிப் படையாய்க் கொண்டிருப்பதை நினைவிற் கொண்டு, மனைக்குரிய கணவனும் மனைவியும், முதற்கண் ஒருவனும் ஒருத்தியுமாய் இருந்து காதலுனும் காதலியுமாகிப் பின் கணவனும் மனைவியுமாகி ஓருயிரும் ஈரூடம்புமாய் நின்று, அறம் செய்து பொருளீட்டி இன்புறும் நன்மக்களாகும் நலத்தைக் காமத்துப் பகுதியில் கூறியருளினார். அவர் கருத்துணரும் மதுகையில்லாத சிலர், திருவள்ளுவரை யுள்ளிட்ட சான்றோர்களைக் காமுகர் எனச் சொல்வதோடமையாது, மேடைகளிலும் செய்தி வெளியீடுகளிலும் உரைத்தும் எழுதிய தமது அறியாமையை வெளிப் படுத்துத் திரிகின்றனர். இதுகாறும் கூறியவற்றைச் சுருங்கக் காண்போமாயின் உலகியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள், தொடக்கத்தில் ஒருவனும் ஒருத்தியுமாய்த் தோன்றும் நிலை கைக்கிளை என்றும், காதலுனும் காதலியுமாய் இயலும் நிலை களவு என்றும், கணவனும் மனைவியுமாய் அமையும் நிலை கற்பு என்றும் அறியலாம். இவற்றுள் களவைக் களவொழுக்கம் எனவும், கற்பைக் கற்பொழுக்கம் எனவும் கூறுவது மரபு. இவற்றின்கண் தலைமக்களுடைய நினைவும் சொல்லும் செயலும் உரைக்கும் பாட்டு அகப்பாட்டு எனப்படும். இக்காதலொழுக்க நிகழ்ச்சிகளை உரைக்கக் கருதிய பண்டைத் தமிழ்ச் சான்றோர், அன்பினால் புணர்தல், அன்புடன் பிரிதல், கூடியும் பிரிந்தும் அன்புடன் இருத்தல், கூடியிருக்குங்கால் அன்பால் ஊடுதல், பிரிந்திருக்குங்கால் அன்பினால் இரங்கல் என ஐந்தாக வகுத்து, இவையொவ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அகப்பாட்டுக்களைப் பாடினர். அகப்பாட்டுக்கு மேலே கூறிய புணர்தல் முதலிய ஐந்தும் உரிய பொருளாதலால் உரிப்பொருள் எனப்பட்டன. பெரும் பிரிவுகளைத் திணை யெனக் கூறும் தமிழ் வழக்கப்படி இவை அன்பின் ஐந்திணை யெனப் பெயர் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடும் புலவர், குணவடிவினரான தலைமக்கள் இருவரைப் படைத்து நிறுத்தி அவர்பால் இவ் வைந்தும் நிகழ்வ தாகப் பாடுவர். கூடல் முதலிய ஐந்தும் செயல்வகை யாதலால், செயற்கு ஏற்ப இடமும் காலமும் படைத்து, அவ்விடத்து அக்காலத்தே அச்செயல் நிகழ்வதாக உரைப்பது முறை. அதுபற்றி, புணர்தல் முதலிய ஐவகை நிகழ்ச்சிக்கும், மக்கள் வாழும் நிலவுலகை, மலை, காடு, சுரம், வயல், கடற்கரை யென ஐந்தாகப் பகுத்து, அவற்றிற்கு முறையே குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனப் பெயரிட்டுக் குறிஞ்சித்திணை, முல்லைத்திணை யென வழங்கலாயினர். புணர்தல் பொருளாக மலைநிலம் இடமாக வரும் பாட்டைக் குறிஞ்சிப்பாட்டு என்றும், இரங்குதல் பொருளாகக் கடற்கரை யிடமாக வரும் பாட்டை நெய்தற்பாட்டு என்றும் கூறுவது வழக்க மாயிற்று. குறிஞ்சிப் பாட்டில் மலை நாடும் பாலைப்பாட்டில் சுரமும், முல்லைப் பாட்டில் காடும் காட்டப்படும். இவ்வாறே குறிஞ்சிப் பாட்டுக்குக் கூதிர்ப் பருவமும் நள்ளிரவுக்காலமும் முல்லைத் திணைக்குக் கார்காலமும் மாலைப்பொழுதும், மருதத்துக்கு விடியற்காலமும் கூறப்படும். இடத்தையும் காலத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து முதற்பொருள் என்பர்; ஐவகை நிலங்களையும் தனித்தனியே கூறும்போது ஆங்காங்குள்ள மாவும் புள்ளும் மக்களும் மரஞ் செடி கொடிகளும் எடுத்தோதப்படும். இவை கருப்பொருள் எனப்படும். புணர்தல் முதலிய அகவொழுக்கத்தை உரிப்பொருள் என்றமையின், அதன் நிகழ்ச்சிக்கு முதற்பொருள் இடமும் காலமும் காட்ட, கருப்பொருள் அந்நிகழ்ச்சிக்கு வேண்டும் இயற்கைச் சூழ்நிலையை அமைத்துக் காட்டும். இனி, சில பாட்டுக்களில் உரிப்பொருட்கென வகுத்த முதற்பொருளும் கருப்பொருளுமின்றி வேறு முதலும் கருவும் வரும். புணர்தலாகிய உரிப்பொருட்குரிய மலையும் நள்ளிரவும் கூதிர்காலமுமாகிய முதற்பொருள் வராமல், நெய்தல் நிலமும் இருள்மாலைப்பொழுதும் ஆகிய முதற் பொருள் வருதலும் உண்டு. அது திணைமயக்கம் எனப்படும். ஓர் அகப்பாட்டில் முதல் கரு உரி என்ற மூன்றும் வந்தே தீர்தல் வேண்டும் என்ற வரையறை கிடையாது; உரிப்பொருள் ஒன்றே வருவதும், உரிப்பொருளும் கருப்பொருளும் வருவதும், உரிப்பொருளும் முதற்பொருளும் வருவதும் உண்டு. உரிப்பொருள் இல்லாத பாட்டு அகப்பாட்டாகாது. இக்குறிப்பு, இப்பொருள்கட்கென இலக்கணம் வரையறுக்கப்பட்டிருப்பினும் சிறுபான்மை அவ் விலக்கண வரம்பு கடந்து செல்லும் உரிமை பாட்டுக்கட்கு உண்டென்பதையே காட்டும். இப்பாட்டுக்களில் குறிஞ்சிப் பாட்டில் தலைமகனை வெற்பன் என்றும், நெய்தற்பாட்டில் சேர்ப்பன், புலம்பன் என்றும், மருதப்பாட்டில் மகிழ்நன், கொண்கன் என்றும் குறிப்பதுண்டு. தலைவியைக் குறிஞ்சிப்பாட்டுக் கொடிச்சி என்றும், பாலைப்பாட்டு எயிற்றி என்றும் கூறும். பொதுவாகத் தலைவனை நாடன் என்றும் ஊரன் என்றும் குறிப்பது மரபு. தலைமைப் பண்பின் வடிவான தலைமக்களை இவ்வாறு வேறு பெயரிட்டுரைப்பினும், அவர்களைக் குணமும் குற்றமும் விரவிய வர்களாக எண்ணுவது கூடாது. இவ்வாறே தலை மக்களோடு உடன்வைத்துக் காட்டப்படும் தோழியை அன்பு அறிவு அறம் என்ற மூன்றும் திரண்ட நட்பின் குணவடிவமாகக் கோடல் வேண்டும். தலைமக்களும் தோழி தோழன் என்பாரும் குற்றமே சேராத குணவடிவினராகப்1 படைத்துக் கொள்ளப் பட்டவ ராதலால், இவர்கட்குப் பிணி, மூப்பு, சாக்காடு என்பன இல்லை; காமம், வெகுளி, மயக்கம் என்ற குற்றங்கள், தோழி தோழன் என்பவர்பால் தோன்றுவதில்லை. தோழிக்குச் செவிலியைத் தாயாகவும் செவிலியைத் தலைவியின் தாய்க்குத் தோழியாகவும் தொடர்புபடுத்துவர். இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சங்ககால அகப்பாட்டுத் தொகுதிகளில் ஒன்றாகிய இந்நற்றிணையின் கண்நிற்கும் முதற்பாட்டைப் பாடிய சான்றோர் கபிலர்ஆவர். இவர் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டில் விளங்கிய நல்லிசைச் சான்றோர்களில் முன்னணியில் இலங்குபவர். இவரது ஊர் மதுரைக்குக் கிழக்கிலுள்ள திருவாதவூர் என்பர். அவ்வூர் தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுளது1. பறம்புநாடு கபிலர் காலத்தில் வேள்பாரி என்னும் குறுநிலத் தலைவனது ஆட்சியில் இருந்தது. அவன் வரையாது வழங்கும் வள்ளன்மை சிறந்தவன். அதனால் நம்பியாரூரர் முதலிய சான்றோர்அவனையே கொடைக்கு எல்லையாகக் கூறினர். அவன் முல்லைக்குத் தேரீந்து எல்லையில்லாப் புகழ் கொண்டான்; கபிலர்க்கு உயிர்த் தோழன். அவன் இறந்தபின், அவன் மக்களை மலையமான் திருமுடிக் காரியின் தலைநகரான திருக்கோவலூரில் பார்ப்பாரிடையே கையடைப்படுத்துத் தான் மாத்திரம் சேரநாடு சென்று ஆங்கு அரசு புரிந்திருந்த செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடி, அவன் தந்த செல்வங்களைக் கொணர்ந்து கொடுத்து, அம்மக்களை மலையமான் புதல்வர்கட்கு மணம் செய்து கொடுத்தார். சேரவேந்தன் தந்த செல்வத்தைப் பெற்றுத் திரும்புகையில் வையாவி நாட்டை ஆவிநன் குடியில் இருந்து ஆட்சிபுரிந்த பேகன் என்னும் குறுநிலத் தலைவன் மயிலுக்குப் போர்வை யீந்து மங்காப் புகழ்பெற்று வாழ்வது கண்டார். அவன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து பரத்தை யொருத்தியின் கண்வலைப் பட்டு இன்பத்துறையில் எளியனாய் இருப்பது அவர்க்குத் தெரிந்தது. குற்றமின்றிக் குணமே நிலவும் மக்கட் சமுதாய அமைப்பையே நாளும் நினைந்தொழுகும் சான்றோர் இனத்தவராதலால், கபிலர், கண்ணகி பொருட்டு அவன்பாற் சென்று தக்க அறிவுரை வழங்கி நேரிய மனைவாழ்வில் நிற்கச் செய்தார். சேரநாட்டின் வடக்கில் இருந்த ஆரியநாட்டரசன் ஒருவன் தமிழரது அகவொழுக்கத்தை அறிய விரும்பினானாக, அவற்குக் குறிஞ்சிப் பாட்டைப் பாடி அதனை அறிவுறுத்தினார். முடிவில், பாரி மகளிரது மணவினை முடிந்ததும், அப்பாரியின் நட்பை நினைந்து திருக்கோவலூர்க்கு அருகில் ஓடும் தென்பெண்ணை யாற்றிடையே வடக்கிருந்து உயிர்நீத்தார். கபிலருடைய புலமை நலம் விளக்கும் பாட்டுக்கள் பல சங்கத்தொகை நூல்களில் உண்டு. இந்நற்றிணையிலும் பல பாட்டுக்கள் தொகுக்கப்பட்டுள்ளன; அவற்றுள் இப்பாட்டும் ஒன்று. தலைமைக் குணங்களின் உருவாய் அமைந்த ஆண்மகன் ஒருவன், அப் பெற்றியளான பெண்மகளொருத்தியைக் களவு நெறியிற் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு இல்லின்கண் இருந்து நல்லறம் புரிந்துவந்தான். அந்நாளில் பொருள் வினைகளாகிய கடமை குறித்து அவன் தன் மனைவியினின்றும் பிரிந்து செல்ல வேண்டியவனானான். தன் பிரிவுக் குறிப்பை முதற்கண் அவன் தன் மனைவியின் தோழிக்குத் தெரிவித்தான். அவளும் அவன் குறிப்பைச் செவ்விநோக்கித் தலைமகட்குப் பையவுரைத்தாள். எத்துணை இடுக்கண்கள் அடுக்கி வரினும், தன் கணவனது உள்ளம் ஒன்றிய காதல் தன்னைப் பிரிதற்கு ஒருப்படாது என்ற கருத்தினால், "நம் காதலர் நிலை பெற்ற சொல்லையே யுடையவர். நாளும் பெருகும் இனிமைப் பண்பினர்; உயர்ந்தோர் நட்பு, உயர்ந்த தன் பண்பிற் குன்றாது பெருகும் உயர்வு பொருந்தியது; நீரையின்றி அமையாத உலகம் போல, அவரையின்றி அமையாத நம்மை நயந்து கேண்மை தந்த அவர், தமது பிரிவால் நாம் நுதல் பசந்து துன்புறத் தகுவன செய்யார்; செய்யவும் அறியார்; அவர் பிரிவு கருதினர் என நீ உரைப்பினும் யான் அதனை மனம்கொள்ளேன்" என்ற கருத்துப்பட மொழிந்தாள். தலைமகள் உரைத்த கூற்றின்கண் அவட்குத் தலைமகன் பால் உள்ள காதலின் பெருமையும், அவனுடைய சொற்செயல்களில் அவட்கிருக்கும் உறுதியும் கண்டு வியந்த கபிலர், அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். இத்தகைய மனத்திட்பம் மனையவள்பால் அமைந்து விடின், மனைவாழ்வு மாண்பு மிகுந்து நல்லறம் வளர்ந்து குணமே நிறைந்த மக்களினம் தோன்றி உலகவாழ்வை இன்பம் பெருகும் பெருவாழ்வாக்கும் என்ற உணர்வு, சான்றோராகிய கபிலர் பெருமான் திருவுள்ளத்தில் சிறந்து விளங்குதல் காணலாம். இனி இவர் பாடிய பாட்டினுள் செல்வாம். 1நின்ற சொல்லர் 2நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்தின் 3தொடுத்த தீந்தேன் போலப் 4புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ 5செய்பறி யலரே இது பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. உரை நின்ற சொல்லர்-என்றும் பொய்யாத சொற்களை யுடைய ராகிய நம் தலைவர்; நீடு தோன்று இனியர் - நாளும் பெருகித் தோன்றும் இனிமைப்பண்புடையர்; என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எக்காலத்தும் என் தோள்களைப் பிரிந்துறைவதை நினையமாட்டார்; தாமரைத் தண்தாது ஊதி - ஆழ்ந்த பொய்கையிடத்து மலரும் தாமரையின் தண்ணிய தாதினை யூதி; மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போல - மிக வுயர்ந்த மலையிடத்து நின்ற சந்தனமரத்தில் வைக்கப்பெற்ற இனிய தேனைப்போல; புரையோர் கேண்மை புரைய மன்ற-உயர்ந்தோராகிய அவருடைய நட்புக்கள் உயர்ந்தனவாம். தெளிவாயாக; நீர் இன்று அமையா உலகம் போல-நீரையின்றி அமையாத உலகியல்போல; தம் இன்று அமையா நம் நயந்தருளி-தம்மையன்றி அமையாத நம்மை விரும்பித் தலையளி செய்து; நறுநுதல் பசத்தல் அஞ்சி-நமது மணம் கமழும் நுதல் பசந்து ஒளிகுன்றுதற்கு அஞ்சி; சிறுமையுறுபவோ-சிறுமை பயப்பனவற்றைச் செய்வரோ; செய்பு அறியலர்-செய்யார், காண் எ.று. சொல்லராகிய காதலர், நீடுதோன்று இனியர், பிரிபறியலர்; அவர் கேண்மை புரைய மன்ற; நம் நயந்தருளி, அஞ்சி, சிறுமை யுறுபவோ, செய்பு அறியலர் காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சொல்லுக்கு நிலைபேறும் இனிமைக்கு நீடுதலும் சிறப்பாதலால் நின்றசொல் என்றும் நீடுதோன்றினிமை என்றும் சிறப்பித்தார். பிரிபு, செய்பு என்பன தொழிற்பெயர்; முறையே, பிரிதல், செய்தல் எனப் பொருள் கொள்க. அறியலர், அறியார். 'மீமிசைச் சாந்தின்' என்றதற்கேற்ப ஆழ்ந்த பொய்கையிடத்துத் தாமரை என்று வருவித்தல் வேண்டிற்று. பொய்கையிடத்துப் பூக்களுள் தாமரையும், மலைமிசை நிற்கும் மரங்களுள் சந்தனமும் உயர்ந்தவையாதலின், புரையோர் கேண்மையின் உயர்வுக்குச் சந்தன மரத்தில் வைத்த தேனடை உவமமாயிற்று. தாமரைப்பூவின்கண் எடுத்த தேனை வண்டினம் சந்தனமரத்தில் இறால் அமைத்து ஈட்டும் செய்கை ஈண்டுக் கூறப்படுகிறது. இவ் வகையில் சந்தனமரம் இடமும், தேன் இடத்துநிகழ் பொருளாகவும் இயைந்து, தேன் இனிமையும் நறுமணமும் பெற்று உயரச்செய்தல் போலப் புரையோர் உள்ளம் இடமாகவும், கேண்மை இடத்து நிகழ்பொருளாகவும் இயைந்து, மேன்மை பெறும் என்பது கருத்து1. இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என வந்தது. "இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி, நின்ற இகரம் உகரம் ஆதல், தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே2" என்பது விதி. சிறுமை, நுதல் பசத்தற்கு ஏதுவாகிய பிரிவினைச் செய்து பெருமை குன்றுதல். மனைவாழ்வில் மாண்புடைய அறங்களைச் செய்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் தலைமக்கள், வாழ்வின்கண், பொருள், அறிவு, புகழ் முதலியவற்றால் சிறப்புறுவது கடனாகும். அது குறித்துத் தலைவன் தன் மனைவியினின்றும் பிரிந்து செல்வது இயல்பு. தலைமக்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் காதலுணர்வு, இப்பிரிவால் பெருங் கலக்கம் எய்தும். கடமை ஒருபுறம் ஈர்க்க, காதல் ஒருபால் நின்று மறிக்க, இருவர் உள்ளமும் அவ்விரண்டற்கும் இடையே பெரியதொரு போர்க்களமாகும், தலைமைப் பண்புடைய நன்மக்கட்குக் காதலினும் கடமையுணர்வு மிக்க திண்மை யுடைத்தா மாகலின், தலைமகன் கடமைவழி நின்று பிரிதலையே துணிந்து மேற்கொள்வன். ஆடவரது எல்லையினும் பெண்டிரது இயக்கவெல்லை குறுகியதாதலால், காதல் வேட்கையை அடக்கியாளும் வன்மை தலைமகன்பால் சிறந்து நிற்கும்; அதனால் அவன் கடமையைக் கடைப்பிடித்துக் காதலியிற் பிரிதல் இனி தின் இயலுகிறது; தலைமகள் காதலுணர்வின் வழிநின்று, தலைவன் பிரிந்தவழி வருந்துவது இயற்கையாய் விடுகிறது. இந்நிலையில், தலைமகன், பிரிவு கருதிய செய்தியைத் தோழி தலைமகட்கு அறிவித்தலும், தலைவி யுள்ளம் அவள் கூற்றை ஏலாதாக, காதலனுடைய உள்ளம் உரை செயல் ஆகிய மூன்றையும் நினைத்து, அவன் சொல்மாண்பை எடுத்துக் கூறுவாளாய் நின்ற சொல்லர் என்றும், மனநலத்தை நீடுதோன்று இனியர் என்றும் கூறினாள். களவின்கண் அவனைத் தலைப்பெய்த அன்று முதல் அவன் சொன்ன சொல் தவறியதில்லையாதலாலும், நாளும் அவனது நட்பு மேன்மேலும் பெருகி வளர்ந்து வதுவையைத் தோற்றுவித்து அழிவில் கூட்டத்து ஆரா இன்பத்தைப் பயந்தமையாலும் தலைவி இவ்வாறு கூறினாள்; அவள் உள்ளமும், அவன் ஒருகாலும் பிரியான் என எண்ணினமை தோன்ற என்றும் என் தோள் பிரிபறியலர் என்றும், பிரிபறியாமைக்கு ஏது அவனது கேண்மையின் பெருமை என்பாள், புரைய மன்ற புரையோர் கேண்மை என்றும் உரைத்தாள். தன்பால் வைக்கப்பட்ட தாமரைத்தேனைச் சாந்தம் தன் மணத்தை ஊட்டிச் சிறப்பிப்பது போலத் தன்பால் வைத்த புல்லிய என் அன்பை உள்ளத்திற்கொண்டு கேண்மையாம் பெருமை யுறுவித்தார் என்பாள் தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரையமன்ற என்றாள். சாந்தில் தொடுத்த தீந்தேன் நறுமணம் பெற்று உயர்ந்தாற்போல, அவர்பால் வைத்த என் அன்பு, புரையோனாதலின் கேண்மைபெற்று உயர்ந்தது என்றற்குத் தீந்தேன் போலப் புரைய மன்ற எனப்பட்டது. புரை, உயர்வு, புரையோர் என்றது அவர் என்னும் சுட்டுமாத்திரை யாய்த் தலைமகன்மேல் நின்றது. இச்சிறப்பால், நீரில்வழி உலகியல் அமையா தொழிவது போல, அவர் இல்வழியான் உயிர்வாழாத தொடர்புண்டாய்விட்டது என்றும், அதனையும் அவர் நன்கு அறிந்து தலையளித் தொழுகுகின்றார் என்பாள், நீரின்றி அமையா உலகம் போலத் தம்மின்று அமையா நம் நயந்து அருளி என்றும், பிரிந்தால் நுதல் பசந்து ஒளிகெடுதல் ஒருதலை யாதலாலும், பிரிவு என்ற சொல்தானும் தன் நாவில் எழக்கூடாது என்ற கொள்கையுடையளாதலாலும், பிரிதல் என்னாது நறுநுதல் பசத்தல் என்றும் பசப்பப் பிரிதல் அவர்க்குச் சிறுமை பயக்கு மாதலால், அதனைச் செய்தற்கு அவர் அஞ்சுவர் என்பாள், நறுநுதல் பசத்தல் அஞ்சித் சிறுமை உறுபவோ என்றும், பிரிவர் எனக் கூறுவது தவறு, அவர் பிரியார் என்பாள். செய்பு அறியலர் என்றும் கூறினாள். சிறுமை யுறுபவோ என்றதே அமையு மாயினும், தன் கூற்றை யாப்புறுத்தற்குச் செய்பு அறியலர் என மிகுத்துரைத்தாள் என அறிக. "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்1" என்ற நூற்பாவில் ஏற்றற் கண் நிகழும் தலைவி கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்; "இதனுள் தாமரைத் தாதையும் ஊதிச் சந்தனத் தாதையும் ஊதி வைத்த தேன் போலப் புரைய என்றதனால் ஏற்றற்கண் தலைவி கூறினாள்; பிரிவறியலர் என்றதும் அன்னதோர் குணக்குறையிலர் என்றதாம்; பிரிவுணர்ந்து புலந் துரைப்பின் நாணழிவாம்2" என்பர் நச்சினார்க்கினியர். மேலும், "நிகழ்தகை மருங்கின் வேட்கைமிகுதியின், புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே3" என்ற விடத்துத் "தகை யெனப் பொதுவாகக் கூறலின் குணத்தைக் கூறலும்கொள்க" என்று கூறி, இதனையே அவர் காட்டுவர். "அருள்மிகவுடைமை" என்ற மெய்ப்பாட்டுக்கும் இதனையே அவர் காட்டுகின்றார். 2. பெரும்பதுமனார் இச் சான்றோருடைய இயற்பெயர் பெரும் பதுமன் என்பது; பதுமனார் என வருவது இவரது நல்லிசைப் புலமை பற்றிய சிறப்பு, காரணப் பெயராயின், இவர் யாது காரணத்தால் பெரும்பதுமனார் எனக் குறிக்கப்படுகின்றார் என்பது தெரிந் திலது. இவரின் வேறாக மீளிப் பெரும்பதுமனார் என்றொரு சான்றோர் நல்லிசைப்புலவர் நிரலில் உள்ளார். சிலர் இவ்விருவரையும் ஒருவராகவே கொண்டு, வேறுபடுத்தும் அடை மொழியைக் கருதாமல் மகிழ்ச்சி கொள்வர். நாடோறும் புலவரை நாடிச் செல்லும் இரவலர் இயல்புபற்றி ஓர் ஆராய்ச்சி தோன்றிற்றாக, ஆங்கே இருந்த பெரும்பதுமனார், இரவலர் செய்கையும் புள்ளினத்தின் தொழிற் பண்பும் ஒத்த இயல்பின; ஆலமரம் பழுத்தபோது முன்னாள் போந்து அதன் பழங்களை உண்ட புட்கள், 'நெருநல் வந்து இதன் கனி யுண்டோம்; இன்று வேறு பழுமரம் நாடிச் செல்வோம்' என நினையாது வழி நாட்களிலும் அங்கு வரும்; அதுபோலவே இரவலரும் கொடைக் கடன் புரியும் புரவலர் உளராயின் அவரையே சூழ்ந்து ஒழுகுவர்; அச் செல்வரது உடைமைஅவ்விரவலர் உடைமை யாகும். ஆயினும், அவர்கள் அச்செல்வருடைய இன்மையையும் தமது இன்மையாகக் கொண்டு வருந்துவர்; இதுவே புட்களுக்கும் இரவலர்க்கும் உள்ள வேறுபாடு என இனிமையுறப் பாடினர். இவ்வாறு இவர் பாடியன பல ஏனைத் தொகை நூல்களில் உண்டு. இந் நற்றிணைக்கண் இரண்டு பாட்டுக்கள் உள்ளன. களவொழுக்கம் பூண்ட தலைமக்களது காதல் முறுகிப் பெருகி ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலையினை எய்தவும், தலைவன் வரைந்து கோடற்கு முயன்றான்; தலைவியின் பெற்றோர் வரைவிற்கு உடன்படாமை கண்டு உடன்போக்குத் துணிந்தான். இருவரும் ஒரு சுரத்தின் வழியாகச் செல்வதைப் பலர் காண்கின்றனர். சுரத்தின் கொடுமையையும் அவர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். தலைமகளைக் கொண்டு செல்லும் காளை அவளை முன்னுறச் செல்வித்துத் தான் பின்னே செல்கின் றான். அவனுடைய மனத்திட்பத்தை அவர்கள் நோக்குகின்றார்கள். காட்டின்கண் கொடிய விலங்குகள் வாழ்வதை நன்கு உணர்ந்தும், அவன் உள்ளத்தில் அச்சம் சிறிதுமே யில்லை; திண்மையே சிறந்து அவன் முகத்தில் முந்துற்றுத் திகழ்கிறது. காற்றும் மழையும் கலந்து நிலவுங்கால் மின்னித் தோன்றும் இடியினும் அவன் உள்ளத்தின் கடுமை சிறந்திருப்பதைக் கண்டோர் வியந்து கூறிக்கொண்டார்கள். கண்டோருடைய இக் கூற்றின்கண் கொண்டுதலைக் கழியுமிடத்துத் தலைமகன் உள்ளம் காமவுணர்ச்சிக்கு இரையாகாது, தலைமகளைக் காத்துக்கொண்டு உய்த்தற்கு உரிய வினைத்திட்பத்தில் வீறு பெற்று விளங்குவது நன்றாதல் கண்டு அதனை இப்பாட்டில் வைத்துப் பாடுகின்றார். அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவல் ஈந்தின் உலவை 1யங்காட் டாறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரனோக்கும்2 இண்டிவர் ஈங்கைய சுரனே வையெயிற் றையள் மடந்தை 3முன்னுய்ந்து எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம் கால்பொரப்4 பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமினும் 5கடிதே. இஃது, உடன்போகாநின்றாரை இடைச்சுரக் கண்டோர் சொல்லியது. உரை அழுந்துபட வீழ்ந்த - ஆழமாக வேர்வீழ்ந்த; பெருந்தண் குன்றத்து ஒலிவல் ஈந்தின் - பெரிய தண்ணிய கானம் போர்த்த குன்றத்தில் தழைத்து வலியுற்று நிற்கும் ஈத்த மரங்கள் பொருந்திய; உலவை யங்காட்டு - காற்று மோதியலைக்கும் காட்டின்கண்; ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த - வழிச்செல்லும் மாக்களைக் கொன்று தலையைப் பிளந்து உண்டதனால்; செம்மறுத்தலைய - குருதி படிந்து சிவந்த மறுப்பட்ட தலையையும்; நெய்த்தோர் வாய - குருதிக்கறை படிந்த வாயையுமுடைய; வல்லியம் பெருந்தலைக் குருளை - வலிய புலிகள் தம்முடைய பெரிய குட்டிகளுடனே திரியும், மாலை - மாலை தொடுத் தணிந்தாற் போல; மரன் ஓக்கும் இண்டு இவர் ஈங்கைய சுரன் - மரங்களில் ஓங்கிப் படரும் இண்டைக்கொடி பின்னிப் படர்ந்த ஈங்கை மரங்களை யுடையவாய் இராநின்றன காடுகள்; வை எயிற்று ஐயன் மடந்தை முன்னுய்த்து-கூரிய பற்களையும் மென்மைத் தன்மையையுமுடைய மடந்தையாகிய காதலியைற் படச் செலுத்தி; எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம் -பகற்பொழுது கழிதலை எண்ணி அதனிடையே தன்னூர் அடைதலைக் கருதி அவள் பின்னே செல்லும் இவ் விளையவனது உள்ளம்; கால் பொரப்பட்ட மாரி - காற்றால் மோதுண்டு இயங்கும் மழைமுகிலிடையே தோன்றி; மால்வரை மிளிர்க்கும் உருமினும் கடிது - பெரிய மலைப்பாறைகள் பிளந்துவீழ எறியும் இடியினும் கடிதாய் இராநின்றது எ.று. சுரன், தலையவும் வாயவுமாகிய வல்லியம் குருளையொடு திரியும் மரன் ஓக்கும் இண்டு அவர் ஈங்கைய; மடந்தையை முன்னுய்த்து நீங்கும் இளையோன் உள்ளம் உருமினும் கடிது எனக் கூட்டி வினை முடிவு செய்க. வீழ்ந்த ஈந்து என இயையும். திரியும், அவாய்நிலை. ஓங்கும், ஒக்கும் என வலித்தது. வல்லியம் குருளையொடு திரியும் சுரன், ஈங்கைய சுரன் என இயையும். ஆழ்ந்து என்பது அழுந்தென வந்தது; "அழுந்துபடு விழுப்புண்1" என்புழியும் இதனையே கூறிக் கொள்க. மரஞ் செடி செறிந்து பசுமைத் தோற்றம் பெற்று உயர்ந்து நிற்பது பற்றிப் பெருந்தண் குன்று என்றார். தலையைப் பிளந்து உள்ளீடாகிய மூளையைத் தின்பதில் புலிக்கு விருப்பு என்பது தோன்ற, சென்னி எறிந்த என்றும், குருதியும் நிணமும் படிந்து புலர்ந்து கறைப்பட்டிருப்பதால் புலியின் தலையையும் வாயையும் செம்மறுத்தலைய என்றும். நெய்த்தோர் வாய என்றும் கூறினார். புலிக்குட்டியின் தலை உடலினும் சிறிது பெருத்திருப்பது பற்றிப் பெருந்தலைக் குருளை எனப்பட்டது. பூனையைப் போல இரவில் இரை தேடும் இயல்பிற் றாதலின் புலி இருள்மாலைப் போதின் வரவு நோக்கிப் பகலில் இருள்படச் செறிந்த புதர்களின் ஒடுங்கி யிருக்கும் என அறிக. புணர்ந்துடன் போகும் தலைமக்களின் எழின்மிகு வனப்பும் இளமைச் செவ்வியும் கண்டார்க்கு, அவர் செல்லும் சுரத்தினது கொடுமை தோன்றி நெஞ்சினை அலைத்தலின், புலி வழங்கு சுரத்தின் அருமையை எடுத்தோதுகின்றனர். இளமைநலமும் மென்மைநடையும் உடைமை பற்றி வைஎயிற்று ஐயள் மடந்தை என்றனர். வை எயிறு கூறியது, அவள் உள்ளத்தில் நிறைந்த காதல் உவகையை, அவளுடைய முறுவலால் விளங்கத்தோற்றியது கண்டு. வையெயிற்று ஐயள் என்றதனால், அவள் காதற்கண்கட்குக் கடுமா வழங்கும் காட்டின் கொடுமையும் வழிவருத்தமும் புலப்படாவாயின என்பதாம். காதலியின் மேனி நலமும் நடைவனப்பும் கண்டு மகிழ்வதோடு கண்முன் நிறுத்திக் காவல் செய்து போதரும் தலைவனது காப்புமறம் புலப்பட மடந்தையை முன்னுய்த்துத் தான் பின்னே செல்கின்றான் என்பார், மடந்தை முன்னுய்த்து நீங்கும் இளையோன் என்றும், பகற்போது கழிதற்குள் தன் மனை சென்று சேரும் கருத்தினன் என்பது தோன்ற, எல்லிடை நீங்கும் இளையோன் என்றும், இளையனாயினும் நெறியிடை யுளவாகும் இடையூறுகட்கு அஞ்சாத தறுகண்மை மிக வுடைய உள்ளத்தன் என்பார், இளையோன் உள்ளம் கால் பொரப் பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமினும் கடிது என்றும் கூறினர். காற்றால் அளைப்புண்ட மழைமுகி லிடத்துத் தோன்றும் இடியேற்றுக்கு எதிரே மலைப்பாறைகளும் நிற்றலாற்றாது உடைந்து கெடும்; இவன் உள்ளத் திண்மை அவ்விடியேற்றினும் கடிது என்றது, இவர்கட்கு வெறியிடை நின்று ஊறு செய்வோம் ஒருவரும் உளராகார்; ஆதலால் இவர்கள் தமது ஊரை இனிது சேர்வர் என்றாராயிற்று. "பொழுதும் ஆறும்1" என்ற நூற்பாவில், "சேய்நிலைக் ககன்றோர் செலவினும்" என்றதற்கு இதனைக் காட்டி, இது செலவின்கட் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். "புணர்ந் தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு, அழிந்து எதிர் கூறி"2 விடுத்தற்குக் காட்டுவர் இளம்பூரணர். 3. இளங்கீரனார் இளங்கீரனார் என்ற இப்பெயர் சங்கத் தொகைநூல்களிற் காணப்படும் சான்றோர்களின் மூவர்பால் காணப்படுகிறது. ஒருவர் இளங்கீரனார் என்றும், ஒருவர் எயினந்தைமகனார் இளங்கீரனார் என்றும், ஒருவர் பொருந்தில் இளங்கீரனார் என்றும் குறிக்கப் பெறுகின்றனர். இவருள் சிறப்பிக்கும் அடைமொழி யொன்றும் இன்றி வெறிதே இளங்கீரனார் எனக் குறிக்கப்படுவதை நோக்கின், ஏனை இருவரின் இவர் வேறாவர் என்பது தெரிகின்றது; சிலர் இவரை எயினந்தையின் மகனார் எனக் கொள்கின்றனர். இவ்வாறு கோடற்கு உரிய காரணம் ஒன்றும் அவர்களாற் காட்டப்பட வில்லை. தன் மனம் கவர்ந்த காதலியின் கூந்தல் நலத்தை எடுத்தோதும் காதலன் கூற்றில் வைத்து, சோழ வேந்தர் தலைநகரான உறையூரிடத்துக் காவிரிப் பெருந்துறையைச் சிறப்பித்துக் கூறுவதால், இவரைச் சோழ நாட்டவராகக் கோடற்கு இடமுண்டாகிறது. இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. நன்மணம் புரிந்துகொண்டு கற்புவழி யொழுகும் தலைமக்களிடையே நிலவும் காதல், பிரிவின்கண் பெருகித் தோன்றும் திறத்தைப் பொருள்வயிற் பிரியக் கருதும் தலைவன் பால் வைத்துக்காட்டுவதில் இவ்விளங்கீரனார் விருப்புற்று நிற்கின்றார். ஒருகால், தலைவன் பொருள்வயிற் பிரிய வேண்டிய நிலைமை யுண்டாயிற்று; முன்பு ஒரு ஞான்று, அவன் தான் பிரிந்திருந்தபோது, மாலைப்பொழுது தோன்றித் தன் காதலியை நினைப்பித்துத் தன்னை வருத்திய வருத்தத்தை எண்ணினான். எடுத்த வினையை முடித்தவழிப் பெருங்கிளர்ச்சியும் இன்பமும் தோன்றி மகிழ்விப்பது யாவரும் அறிந்தது. அவனுக்கு வினை முடிவில் தோன்றிய இன்பம், காதலியை நினைப்பித்து அவளுடைய நினைவின்பத்தில் தோய்ந்துமகிழச் செய்தது. மாலைப் போதில் காதலி தன்னை நினைந்து வருந்துவ ளென்பதை எண்ணினான்; உள்ளம் பேதுறவுற்றது. ஒருவாறு தேறி, வினையை முற்றவும் முடித்துக் கொண்டு மனையகம் மீண்டு போந்தான். அதனால், பிரிவு நேரும் போதெல்லாம் பண்டைய நினைவு தோன்றினமை யின், அதனைத் தவிர்த்துக் கொண்டே வந்தான்; எவ்வழியும் பிரிந்தே தீரவேண்டிய நிலைமை எய்தவே, காதல் வருத்தமும் நெஞ்சின்கண் நிகழ்ந்தது. அதனால் அவன், தன் நெஞ்சை நோக்கித் தலைவி கேட்குமாறு, "நெஞ்சே, நீ பொருள்வயிற் பிரி வதைக் கருதுகின்றாய்; முன்பொருகால் யாம் பிரிந்திருந்தபோது, மாலைப்பொழுது தோன்றக் கண்டு, இனியளாகிய காதலி விளக்கேற்றி வைத்து நம்மை நினைந்து வருந்தும் காலம் இது என நினைந்தேமன்றோ; அப்போது நாம் பெரும்பேதுறவு எய்தியதை மறந்தனையோ?" என்று கூறினான். தலைவனுடைய இக்கூற்றின்கண், மனைவாழ்வுக்குரிய பொருள் வினைகளின் மேல் உள்ளம் செல்வதும், காதல் உணர்வு தோன்றி அவனைக் கலக்குவதும் புலப்படுத்தி, அக்காதல்வழி நிற்பான்போல் அவன் அதனை ஒடுக்க முயலும் அரிய சூழ்ச்சி அமைந்திருப்பது கண்டு வியப்புற்று இளங்கீரனார் இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை யன்ன 1வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை 2உள்ளினெ னல்லனோ யானே உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. இது, முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. உரை ஈன்பருந்து உயவும்-முட்டை யீன்ற பருந்து அடைகாத்திருந்து வருந்தும்; வான்பொரும் நெடுஞ்சினை -வானளாவி நிற்கும் நெடிய கிளைகளையும்; பொரிஅரை வேம்பின்-பொரிந்த அடியினையுமுடைய வேப்பமரத்தினது; புள்ளி நிழல்-புள்ளியிட்டாற் போன்ற நிழலின்கண்; கட்டளை யன்ன வட்டரங்கு இழைத்து-கட்டளைக் கற்போலும் வடிவினை யுடைய வட்டாடும் அரங்கு வகுத்து; கல்லாச் சிறாஅர்-தமக்கு உரிய தொழிலைக் கல்லாது திரியும் சிறுவர்கள்; நெல்லி வட்டாடும்-நெல்லிக் காய்களை வட்டாகக் கொண்டு விளை யாடும்; வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்-விற்றொழில் புரியும் வேட்டுவர் வாழும் வெவ்விய இடத்தினையுடைய சீறூர்கள் பொருந்திய; சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை - சுரத்தின்கண் தங்கி இருந்தபோது நமது உள்ளத்தின் திண்மை சிதையத் தோன்றிய மாலைப்போதினைக் கண்டு; உள்ளிய வினை முடித்தன்ன இனியோள் - செய்யக் கருதிய வினையைச் செய்து முடித்தவழிப் பிறக்கும் இன்பம் போலும் இனிமைப் பண்பினையுடைய நம் காதலி; மனைமாண் சுடரொடு படர்பொழுது என - மனையகம் இருள் நீங்கி விளங்க ஏற்றிய விளக்கின்முன் நின்ற நம்மை நினைந்து வருந்தும் பொழுது இஃது என்று; யான் உள்ளினென் அல்லனோ - யான் நினைந்து வருந்தினேனன்றோ; அதனால், நெஞ்சே, நீ பிரியக் கருதுதலை ஒழிக எ.று. நெஞ்சே, சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை எய்தக் கண்டு, இனியோள், சுடரொடு, படர்பொழுது என யான் உள்ளினெ னல்லனோ; அதனால் நீ பிரியக் கருதுதலை ஒழிக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. உயர்மரத்தின் நெடுஞ் சினையிற் கூடமைத்து அதன்கண் தான் ஈன்ற முட்டை பொரித்தல் வேண்டி அடை காத்திருக்கும் பருந்தினை வான் பொரு நெடுஞ்சினை ஈன்பருந்து என்றார். வேம்பின் இலை களினூடு ஞாயிற்றின் ஒளிக்கதிர் நுழைந்து நிழலிடத்தில் புள்ளியிட்டது போல ஒளிசெய்வது பற்றிப் புள்ளி நீழல் எனப்பட்டது. வட்டாடும் சிறார் இழைத்த அரங்கு சதுர வடிவில் தோன்றற்குக் கட்டளை யன்ன அரங்கு என்றும், அதுதானும் வட்டுக்களை வைப்பதற்கு என்று அமைத்த சிற்றரங்கு என்றற்கு வட்டரங்கு என்றும் சிறப்பித்தார். வட்டாடற்கு அரங்கு இன்றியமையாதென்பது, "அரங்கின்றி வட்டாடி யற்று1" எனத் திருவள்ளுவர் கூறுவதனால் அறிக. வில்லேருழவர் சிறார் தமக்குரிய விற்றொழிலைக் கல்லாது நெல்லிக்காய்களை வட்டாகக் கொண்டு விளையாடுவது பற்றிக் கல்லாச் சிறார் நெல்லி வட்டாடும் என்றார். கல்வி பயிலும் வேட்டுவச் சிறார், "சிறியிலை உடையின் சுரையுடை வான் முள், ஊக நுண்கோற் செறித்த அம்பின், வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப், பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும், புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்2" என்பதனால், வட்டாடாது விற்றொழில் புரிவர் என அறிக. பகைப்புலத்திலுள்ள சீறூர்கள் என்றற்கு வெம்முனைச் சீறூர் என்றார். மாலைப் போதில் மனையின்கண் மகளிர் விளக்கேற்றி வழிபடுவது மரபு; அதனால் அது மாண்சுடர் என்று சிறப்பிக்கப்பட்டது. 'எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தென3" என இளங்கோ அடிகள் உரைப்பது காண்க. காதலியின் இனிமைப் பண்பை "உள்ளிய வினைமுடித்தன்ன இனிமை" என்றாற் போல. "விட்டகன்றுறைந்த நட்டோர்க்கண்ட, நாளினும் இனியன்1" என்று பிறரும் கூறுதல் காண்க. பிரிவு கருதிய நெஞ்சினனாய்த் தலைமகளது ஆற்றாமையை எண்ணித் தனக்குள் கவன்றுறையும் தலைமகன், பிரிவின்கண் தன்னுள்ளம் அவளையே நினைத்து மிகும் பெருங்காதலால் பிறங்குவது என்பதை அவட்கு நேரே உரைக்கலாற்றாது, அவள் செவிப்படுமாறு, தனக்குள்ளே கூறுவான், வினைமேற் சென்ற காலை, பகற்போது முற்றும் வினையின்கண் ஒன்றி யிருந்தமையின், மறைப்புண்டிருந்த காதலுணர்வு. மாலைப்போது வந்தவழி உள்ளத்தின் திண்மையைக் கரைத்துத் தான் முந்துற்று நிற்றலால் உரன் மாய் மாலை என்றும், வினைமுடிவிற் பிறக்கும் இன்பத்தில் திளைக்குங்கால் அதுகாறும் வினையுணர்வால் மறைப் புண்டிருந்த காதலுணர்வு வெளிப்பட்டுக் காதலியின் மகிழ்ச்சி மலர்ந்த திருமுகத்தைக் காட்டி அவளை நினைப்பிப்பது தோன்ற, உள்ளிய வினை முடித்தன்ன இனியோள் என்றும், புறத்தே கண்முன் தோன்றும் மாலைப்போதும், அகத்தே மனக்கண்ணில் தோன்றும் காதலியுருவும் கண்டவனுக்கு, மாலையில் அவள் செய்யும் செய்வினைக் கண் நினைவு சென்றதாக, அவள் மாலைக்காலத்தில் மனை விளக்கும் மாண்புடைய ஒளி விளக்கேற்றி, அதன் முன்னே நின்று, தன்னை நினைந்து வருந்தும் காட்சி தோன்றினமை கூறுவான். மனைமாண் சுடரொடு படர்பொழுது என்றும், அதனை நினைந்து தான் வருந்திய திறத்தை உள்ளினென் அல்லனோ யானே என்றும் கூறினான். பிரிந்துறையும் மகளிர்க்கு மாலைப் பொழுதில் ஏற்றும் விளக்குக் காதலுணர்வை எழுப்பிக் கருத்தை வருத்தும் என்பதை, "கயலேர் உண்கண் கனங்குழை மகளிர், கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய சுடர் துயர் எடுப்பும்2" என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. காதலனைப் பிரிந்த மகளிர்க்கு மாலைப்போது அவனை நினைப்பிக்கும் இயல்பிற்று என்றற்குப் படர்பொழுது என்றான். திருவள்ளுவரும், "காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்3" என்பது காண்க. வேம்பின் நெடுஞ்சினைக்கண் அமைத்த கூட்டின்கண் முட்டை யீன்றமையால் அதனைப் பிரிய மாட்டாது அடையிருந்து பருந்து வருந்தாநிற்ப, அதனை எண்ணாது அவ் வேம்பின் நீழலில், கல்லாச் சிறார் நெல்லி வட்டாடி மகிழ்வர் என்றது, இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகள்பால் கொண்ட அன்பால் பிரியமாட்டாது யான் வருந்தா நிற்ப, அதனை எண்ணாது பொருட்பிரிவின்கண் என்னை யூக்கி அது நல்கும் பொருள் புகழ்களை நினைந்து மகிழ்கின்றாய் எனக் குறிப்பாய் நெஞ்சிற்குத் தலைவன் உரைக்கின்றவாறாகக் கொள்க. இதன்கண் "உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்" என வருவதை, "ஆங்கவை ஒருபாலாக" என்ற நூற்பாவுட் கூறப்படும் இன்புறல் என்னும் மெய்ப்பாட்டுக்கும், முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப்போகா தொழிந்ததற்கும் இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.1 நச்சினார்க்கினியர்2, "தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க." என இதனைக் காட்டுவர் "பிறப்பே குடிமை3" என்புழிக் குடிமைக்கு "உள்ளி..... படர்பொழுதெனவே" என்பது காட்டி "தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையின் குடிமையாயிற்று" என்பர் பேராசிரியர். 4. அம்மூவனார் மூவன் என்பது இச்சான்றோரது இயற்பெயர். அம்மள்ளன் அம்மெய்யன் என்றாற் போலச் சிறப்புணர்த்தும் அகர இடைச்சொற் புணர்த்து அம்மூவனார் எனச் சான்றோர்களால் இவர் பெயர் கூறப்படுகிறது. இவர் பாடியன பலவும் நெய்தற் பாட்டுக்களாகவே இருப்பதால், இவர் அந்நிலத்தே பிறந்து வளர்ந்து புலமை சிறந்தவர் என நன்கு கருதலாம். சேரநாட்டுத் தொண்டி, மரந்தை என்ற நகரங்களையும், பாண்டிநாட்டுக் கொற்கைப் பெருந்துறையையும், நடுநாட்டுக் கொடுங்காலூரையும் இவர் புகழ்ந்து பாடுவர். இதனால், இவர் தமிழக முழுதும் சென்று தமிழ் வேந்தர் மூவராலும் சிறப்புச் செய்யப் பெற்றவர் என்று அறியலாம். பூழிநாட்டவர் தம்முடைய ஆட்டு மந்தைகளுடன் போந்து பாண்டிநாட்டில் மேய்த்து வந்ததை இவர் ஒரு பாட்டில் குறிக்கின்றார். நடுகல்லிற்குப் பீலி சூட்டித் துடி கொட்டித் தோப்பிக்கள்ளும், துரூஉப்பலியும் கொடுத்து மறவர் வழிபடுபவர் என்றும், பரதவர் மகளிர் நெல்லுக்கு உப்பு மாறுவர் என்றும், கடலிலிருந்து கொணர்ந்த மீனைப் பரதவர் தம்மிற் பகுத்துக்கொள்வர் என்றும் இவர் கூறுகின்றார். வெள்ளாங்குருகு, நாரை முதலியவற்றின் இயல்பும், நெய்தற்பூ வைகறையில் மலரும் தன்மையும் இவராற் சொல்லோவியம் செய்யப்படுகின்றன. இவருடைய பாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. களவுவழி ஒழுகும் தலைமகன் அதனையே பெரிதும் விரும்பி யொழுகுவது கண்ட தலைவி, அதற்கு இடையீடும் இடையூறும் உண்டாகுமேயென அஞ்சுகின்றாள். தோழியும் பன்முறை தலைமகனைக் கண்டு வரைவு கடாவுகின்றாள். தலைவனோ காதல் சிறப்பது கருதிக் களவையே நயந்து நிற்கின்றான். பெற்றோரது மனநிலையை எண்ணுகிறாள் தோழி; ஊரில் அலர் தோன்றுமாயின் இற்செறிப்பு உண்டாகும் என்றும், அதனால் தலைமகனைக் களவில் எதிர்படுதல் அரிதாம் என்றும், அவ்வழித் தலைமகள் ஆற்றாளாவாள் என்றும், எனவே, தலைமகன் உடன் போக்கிற்கு ஒருப்படுவதல்லது வேறு செயலில்லை என்றும் தோழி எண்ணித் துணிகின்றாள். தன் கருத்தைப் பெருநாணினளாகிய தலைவி ஏற்பளோ என எண்ணி, அவட்கு அதனைப் பையத் தெரிவிக்க முயலுவாளாய், "தோழி, தலைமகனோடு நமக்கு உளதாகிய தொடர்பை அன்னை அறியின், இங்கே நமது வாழ்வு மிக்க துன்பமாய் முடியும்; இதனை நாம் நம் தலைவர்க்கு அறிவிப்பின், அவர் நம்மைக் கொண்டுடன் போகத் துணிகுவர் அன்றோ?" என்றாள். தோழி நிகழ்த்திய இக் கூற்றின்கண், தலைமக்களை உடன்போக்கு மேற்கொள்ளத் தூண்டும் மதிநுட்பம் அவள்பால் விளங்குதல் கண்ட அம்மூவனார், அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் நீனிறப் புன்னைக் கொழுநிறம் அசைஇத் தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி அங்கண் அரில்வலை உணக்கும் துறைவனொடு அலரே, 1அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை அரிய வாகும் நமக்கெனக் கூறின் கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக் கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம் மணல்மடுத் தூறும் ஓசை கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் இருங்கழிச் சேர்ப்பின்தம் 2உறைவின் ஊர்க்கே இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி அலரச்சம் தோன்றச் சொல்லி வரைவுகடாயது. உரை கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் - கானற் சோலைக்கண் ணுள்ள சிறுகுடியில் இருந்து கடல் மீன் வேட்டம் புரிந்து வாழும் பரதவர்; நீல்நிறப் புன்னைக் கொழு நிழல் அசை இ-நீல நிறத்தையுடைய புன்னைமரத்தின் கொழு விய நீழலில் தங்கி; தண் பெரும்பரப்பின் ஒண்பதம் நோக்கி - தண்ணிய பெரிய நீர்ப்பரப்பாகிய கடலில் மீன்கள் மிக்குத் தோன்றும் செவ்வியை எதிர்நோக்கி; அங்கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - அழகிய கண்களோடு கூடித் தம்மிற் பின்னிச் சிக்குண்டு கிடக்கும் வலையை மணலிற் பரப்பிச் செம்மை செய்யும் கடல்துறை நாட்டுக்கு உரியனாகிய நம் தலைவனொடு; அலர் - நமக்கு உண்டாகிய நட்பு ஏதுவாக இவ்வூரில் பரவி யிருக்கும் அலரை: அன்னை அறியின் - நம் அன்னை அறிகுவ ளாயின்; நமக்கு இவண் உறை வாழ்க்கை அரியவாகும் என - நமக்கு இவ்விடத்தே தலைவனைக் களவிற் கூடிப் பெறும் இன்பவாழ்வு இல்லையாம் என்று; கூறின் - அவற்கு நாமே முற்பட்டுத் தெரிவிப்பே மாயின்; தோழி-; உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி-உப்பு வாணிகர் வெண்மையான கல்போலும் உப்பை விலை கூறிக்கொண்டு; கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்-ஈர்த்தற் பொருட்டு உடன் கொண்டுசெல்லும் கூட்டமாகிய எருதுகளை யூக்கிச் செலுத்தும் நெடுவழிக்குரிய வண்டியின் சகடம்; மணல் மடுத்து உரறும் ஓசை - மணலின்கட் புதைந்து செய்யும் ஓசை கேட்டு; கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் - கழனிகளில் மேயும் கரிய கால்களையுடைய வெண்குருகுகள் அஞ்சி நீங்கும்; இருங்கழிச் சேர்ப்பின் - கரிய கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தின்கண் உள்ள; தம் உறைவு இன் ஊர்க்கு - தம்முடைய உறைதற்கு இனிதாகிய ஊர்க்கு; கொண்டு செல்வர்கொல்-நம்மை உடன்கொண்டு போவரன்றோ எ.று. துறைவனொடு உளதாகிய அலர், அன்னை அறியின், நமக்கு இவணுறை வாழ்க்கை அரியவாகும் எனக் கூறின், தோழி, தம் உறைவின் ஊர்க்குக் கொண்டு செல்வர்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பரதவர், அசைஇ, நோக்கி, வலையுணக்கும் துறைவன் என இயையும். உமணர், சாற்றி, கிளர்க்கும் சகடம் உரறும் ஓசை கேட்டு வெண்குருகு வெரூ உம் சேர்ப்பு என்க. மேவும் பரதவர் என்பது, ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் பரதவர் என வந்தது. மேவல், விரும்புதல். கானலம் சிறுகுடி, கடற்கானற் சோலையில் பரதவர் வீடமைத்து வாழும்சீறூர். "கானல் நண்ணிய காமர் சிறுகுடி1" என வருவது காண்க. மீன்வேட்டத்தின்கண் வலைகள் சிக்குற்று அறுபடுவது இயல்பாதலின், அவற்றை, மீன் படாக் காலத்தில் மனைமுன்றிலில் பரப்பிச் செம்மை செய்வராதலால், ஒண்பதம்நோக்கி அரில்வலை உணக்கும் என்றார். தண்பெரும்பரப்பு என்றது கடலை; "தண்பெரும் பௌவம்2" என்று பிறரும் கூறுவது காண்க. மீன்பாட்டமும் காலந்தோறும் வேறுபடுவது பற்றி அதற்குரிய பருவத்தை ஒண்பதம் என்றார். மீன் மிகுதியாகப் படும் காலம் நோக்காது முயலும் செயல் பயனில் உழப்பாகலான், படாக் காலத்தில் வலையை யுணக்கிச் செம்மை பார்த்தல் வேண்டப்படுகிறது. கழியிடத்துப் பெருகும் நீரால் உப்பு விளைவிக்கப்படுவது கொண்டு, இருங்கழிச் சேர்ப்பு என்றும், உப்புமூடை மிக்க எடையுடைத் தாதலாலும், அதனை யேற்றிச் செல்லும் சகடமும் நோன்மை பெரிதுடைமையாலும், செல்லும் வழி மணல் நிறைந்த நில மாதலாலும், பகடுகள் பலவற்றை உடன்கொண்டு போதல் உமணர்க்கு இயல்பாதலால், கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம் மணல்மடுத்து உரறும் ஓசை என்றும் கூறினார். "தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின், கொள்ளை சாற்றிய கொடுநுக வொழுகை, உரனுடைச் சுவல பகடுபல பரப்பிய உமண்1" என்று பிறரும் கூறுதல் காண்க. கொள்ளை, கொள்ளுதற்குரிய விலை. கொக்கு, நாரை முதலியன வெண்குருகு எனப்பட்டன. தலைமகன் விரைய வரைந்து கோடலை நினையாது களவின்பமே விழைந்து ஒழுகுவானாக, அவனது அழிவில் கூட்டத்தை விரும்பித் தலைமகள் எய்தும் மேனி வேறுபாடு அலர் தோற்றுவிக்கும் என்று நினைந்த தோழி, அச்சமுற்று அலமரும் உள்ளத்தளாகி, அவன் வரவை எதிர்நோக்கி யிருப்பத் தலைமகன் ஒருகால் சிறைப்புறத்தே நிற்பது கண்டு, அவன் செவிப்படுமாறு, அவனுடைய காதல் வேட்கையை உள்ளுறையால் குறித்து, அதனால் விளைவது அலர் என்பாள் அலரே என்றும், அதனை அவற்கு அறிவித்தல் முறை என்றும், அறிவியா தொழியின், தாய் அறிந்து இற்செறிக்கு மாற்றால் தனிமையிற் கூட்டத்துக்கு இடையீடு செய்வள் என்பாள், அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை அரியவாகும் என்றும் கூறினாள். பிறந்து வளர்ந்து காதல் பிறங்கி யிருக்கும் இடமாயினும், தலைமகனைக் கூடிப் பெறும் இன்பத்துக்கு இடையீடும் இடையூறும் செய்து வாழ்க்கையைத் துன்பவியல் பிற்றாக்குதல்பற்றி இவணுறை வாழ்க்கை அரியவாகும் என்றும் தலைமகனது மனையின் கண் உறைதல், அழிவில் கூட்டம் நல்கி அயர்வில் இன்பம் நுகர்விக்கும் அமைதி யுடைத்து என்பாள் உறைவு இன் ஊர் என்றும் கூறினாள். இவ்வாறு தன்னூரின்கண் இன்னாமையும், தலைமகன் ஊர்க் கண் இனிமையும் தோன்றக் கூறியது கேட்கும் தலைமகன், தலைமகள் உள்ளத்துக் காதற்சிறப்பை ஓர்ந்து, இனி வரைவொடு வருதலே செயற்பால தெனத் துணிதல் வேண்டும் என்பதை உள்ளுறுத்து உரைத்தலின், அதனை ஏலாது தலைவியின் பெற்றோர் மகட்கொடை நேராராயின், கொண்டுதலைக் கழிதற்கும் அவன் உள்ளம் கொள்ளல் வேண்டும் என்பாள், தோழி தலைமகளை நோக்கிக் கொண்டும் செல்வர் கொல் என்றாள், உம்மை எதிர் மறையாதலின், கொண்டுசேறலினும் சான்றோர் அறிய வரைந்துகோடல் தக்கது என்றவாறு. உமணர் கொள்ளை சாற்றிக் கிளர்க்கும் சகடத்தின் ஓசைகேட்டு வெண்குருகு வெரூஉம் என்றது, தலைமகன் வரவிடுக்கும் சான்றோர் மகட்பேசி வரைவுடன்பட எழும் மணமுரசு கேட்டு, அலர் கூறும் ஏதிலாட்டியர் வாயடங்குவர் என்றவாறு. ஏதிலார் அலர் கூறுவதைத் தலைமகன் ஓரளவு அறிந்திருந்தா னாயினும், தலைவியின் பெற்றோர் மகட் கொடை நேர்தற்கு அமைந்த செல்வி நோக்கி இருக்கின்றான் என்பாள் பரதவர் ஒண்பதம் நோக்கிப் புன்னை நீழல் அசைஇ அரில்வலை யுணக்கும் துறைவன் என்பதனால் உள்ளுறுத் துரைத்தாள். இனி, பின்னத்தூர், திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள், "பரதவர் புன்னையின் கீழிருந்து கடலிற் செல்லுதற்குப் பதம் நோக்கி அதுகாறும் வலையை உணக்கும் துறைவன் என்றது, தலைவன் சிறைப்புறத்திருந்து தலைவியைக் கூடுதற்கு யாருமில்லாத பதம் பார்த்து அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பன் என்பதாம்" என்பர். இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.1 5. பெருங்குன்றூர்கிழார் பெருங்குன்றூர் கிழார் என்ற இச்சான்றோரது இயற்பெயர் தெரிதிலது. பெருங்குன்றூர் என்ற பெயரால் பண்டைநாளில் இரண்டு ஊர்கள் புலமைச்சிறப்புற்று இருந்தமை தெரிகின்றது. ஒன்று பாண்டிநாட்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் எனவும், மற்றொன்று சேரநாட்டில் ஏறை நாட்டுப் பெருங்குன்றூர் எனவும் வழங்கும். ஆயினும் பாண்டி நாட்டுப் பெருங்குன்றூர் இரணிய முட்டத்துக் பெருங்குன்றூர் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்பட்டமையின், ஏறைப் பெருங்குன்றூர் வெறிதே பெருங்குன்றூர் எனக் குறிக்கப்பட்டது. இப்போது, அது கேரளநாட்டுப் பொன்னானி வட்டத்தில் பெருங்குன்னூர் என்று ஆகிவிட்டது; ஆங்கு நிலவிய தமிழும் கேரளமாகி யொழிந்தது. கிழார் என்பது கிழவர் என்ற சிறப்புப் பெயரின் வேறு வாய்பாடு. ஒரூரின்கண் இருந்து ஒருவர், தமது புலமையாலோ, ஆண்மையாலோ, செல்வத்தாலோ, பிறவற்றாலோ மன்னர் மதிக்கும் மாண்பு பெறுகுவராயின், முன்னாளில், அவர்க்குக் கிழார் என்ற சிறப்பு நல்கப்பட்டு வந்தது. அவ்வகையில் வந்தவரே இப் பாட்டுடைச் சான்றோரான பெருங்குன்றூர் கிழார். இவ்வழக்கு இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்திலும் இருந்துளது; இருஞ்சோ நாட்டுக் கூடற்குடி, குளத்தூர், துழாயூர், இருப்பைக்குடி, வெளியங்குடி, ஆலங்குடி என்ற ஊர்கட்குரியனாய் இருப்பைக்குடிக் கண் வீடுவாயில் கொண்டு விளங்கிய எட்டி சாத்தன் என்பான் செய்த அறச்செயலை வியந்த அந்நாளைய மன்னர். அவற்கு இருப்பைக்குடிக் கிழான் என்ற சிறப்பைத் தந்து மகிழ்வித்தச் செய்தியை இருப்பைக்குடிக் கல்வெட்டு1 ஒன்றும், கல்வெட்டுத் துறை ஆண்டறிக்கையும்2 எடுத்துக் காட்டுகின்றன. இவ்விருப்பைக்குடி கிழான் போலச் சிறப்புற்றவர்களே பெருங்குன்றூர்கிழார், அரிசில்கிழார், ஆலத்தூர்கிழார், ஆவூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், கோவூர்கிழார், மாங்குடிகிழார், மருதங்கிழார் என வரும் பலரும் எனக் கோடல் வேண்டும். இவ்வாறு நிலவும் வரலாறு நோக்காமல், கிழார் என்பது வேளாளர்க்கே உரிய மரபுப்பெயரெனக் கருதி இக்கிழார் பலரையும் வேளாளர் என உரைத்தோரு முண்டு. இறையனார் களவியல் உரை கேட்ட வேதியன் உருத்திரசன்மனும் வேள்விக்குடி பெற்ற வேதியன் காமக்காணி நற்சிங்கனும் முறையே உப்பூரிகுடி கிழான் மகன் எனவும், கொற்கைகிழான் எனவும் குறிக்கப்படுவது நோக்காமையால் இவ்வணம் முடிபுகொள்ளப்பட்டது என விடுக்க. இத்தொகைநூல்களில் பாடினோரும் பாடப்பட்டோருமாகிய சான்றோர் நிரலில், கிழார் என்ற சிறப்புடையோர் பலர் உளராயினும், அம்பர் கிழான் அருவந்தை, சிறுகுடி கிழான் பண்ணன் என்பார் போலப் பாடினோருட் பலர் கிழார் என்ற சிறப்புடன் இயற்பெயர் குறிக்கப்பட்டாரில்லை. அம்முறையில் பெருங்குன்றூர் கிழாரது இயற்பெயர் பெயரும் காணப்படவில்லை. இப் பெருங்குன்றூர்கிழார் காலத்தே சேரநாட்டில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும், பெருஞ்சேர லிரும்பொறையும், வையாவிநாட்டில் (பழனிவட்டத்தில்) வையாவிக்கோப் பெரும் பேகனும், சோழநாட்டில் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியும் ஆட்சிபுரிந்தனர். ஒருகால், பெருங்குன்றூர்கிழார் இளஞ் சேட் சென்னியைக் கண்டு "விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை யுற்று" அறிவுகெட வருந்தும் தமது நிலைமையைத் தெரிவித்து அதனை விரையக் களைதல் வேண்டுமெனக் கூறி, அவன் தந்த பரிசில்களைப் பெற்று இன்புற்றார். வையாவி நாட்டை யாண்ட பெரும்பேகன் புறத்தொழுக்கம் பூண்டமை பொறாது, அவன் மனைவி கண்ணகி யென்பாள் வருந்துவது, கண்டு அவள்பொருட்டு அவன்பாற் சென்று இனிய பாட்டொன்றைப் பாடி அவனை மகிழ்விப்ப அவன் பெருங்குன்றூர் கிழார்க்கு மிக்க பெரும் பரிசில் நல்கத் தலைப்படவும், அவர், கண்ணகியைச் சுட்டி, "மையிருங் கூந்தல், மண்ணுறு மணியின் மாசற மண்ணிப், புதுமலர் கஞல இன்று நீ பெயரின், அதுமன் எம் பரிசில், ஆவியர் கோவே" என்று உரைத்துத் தமது சான் றாண்மையைப் புலப்படுத்தினார். ஒருகால், அவர் குடக்கோச்சேரல் இரும் பொறையைக் கண்டு பாடவும், அவன் பரிசில்தர நீட்டித்தான்; "மன்பதை காக்கும், நின் புரைமை நோக்காது, அன்பு கண்மாறிய அறனில் காட்சியொடு, நும்ம னோரும் மற்ற இனையராயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ" என்று மனம் வருந்திச் சென்றார். அவன் தம்பி குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை அரசு கட்டில் ஏறியபோது பெருங்குன்றூர்கிழார் அவனைப் பாடினாராக, அவன் பெரிதும் மகிழ்ந்து, "மருளில் லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் பொன் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம்மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காவற்புறம் விட்டான்" எனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. இவரது மனமாண்பினை, "வயங்கு செந்நாவின், உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்" எனக் கபிலரைப் பாராட்டு வதால் நன்கு காணலாம். சேர நாட்டில் ஓடும் வானியாற்றைச் சிறப்பித்துச் சேரமானைச் "சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன்" என்று பரவுகின்றார். இவ்வானியாறு பொன்வானி எனப்படும். அதுவே இப்போது பொன்னானி என மருவி வழங்குகிறது. இது, பாலைக்காட்டுப் பகுதியில் வடமலைத் தொடரில் தோன்றி மாலம்புழை யாற்றொடுகூடி மேற்கு நோக்கி ஓடும் கல்பாத்தியாற்றொடு சேர்ந்து பாரதப்புழை எனப் பெயர் பெற்றுப் பொன்னானி நகர்க்கு அண்மையில் மேலைக்கடலில் வீழ்கிறது. இவரது பெருங்குன்றூரும் இவ்வானியின் கரையில் தான் உளது. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன், ஒருகால், தன் காதலியைப் பிரிந்து சென்று ஆற்ற வேண்டியதொரு கடமை உடையனானான். அவனது பிரிவாற்றாத தலைமகட்குத் தன் பிரிவைக் குறிப்பாய் அவன் புலப்படுத்தி விடுகிறான். கூர்த்த அறிவினளான தலைவியும் அதனை உணர்ந்து மேனி வேறுபடுகின்றாள். இருவர் நிலையினையும் அறிந்த தோழி, தலைவியை ஆற்றுவிக்கும் கருத்தை உட்கொண்டு, "நிலம் நீர் நிரம்ப, குன்றம் தழைத்து விளங்க, இவ்வாறே பிறவும் குளிர்ந்து திகழ, பெரும்பெயல் பொழிந்த மழைமுகில் தெற்கு நோக்கிச் செல்கின்றது; வருவது வாடைக்காலம்; அக்காலத்தே பிரிந்துறைவது காதலர்க்கு மிகவும் அரிதாகும். நின் மலைக்கண் கலுழ்ந்து சொரியும் நீரே நினது ஆற்றாமையைத் தலைவர்க்கு உணர்த்தும் தூதாயிற்று; மெல்லிதாய்த் தாழ்ந்து சொரியும் மழையைக் கொணரும் வாடைக்காற்று வந்துவிட்டது; அவர் செல்லா ராகலின், நீ வருந்துதல் ஒழிக" என்று மொழிகின்றாள். தோழியின் இக்கூற்றின்கண், உயிரில்லனவும் ஓரறிவுயிரும் ஆகியவை குளிர்தூங்க மகிழ்விக்கும் இக்காலத்தே, நாம் மாத்திரம் வெய்துயிர்த்து மேனி வேறுபட்டு வருந்தப் பிரியார் காதலர் எனத் தோழி தலைவியை வற்புறுத்துவதும், தலைமகன் அதுகேட்டுச் செலவழுங்குதல் தோன்றவுரைக்கும் மதிநுட்பமும் விளங்குதல் கண்ட பெருங்குன்றூர்கிழார் இதனை அப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். நிலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக் குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப பெரும்பெயல்1 பொழிந்த தொழில எழிலி தெற்கேர் பிரங்கும் அற்சிரக் காலையும் அரிதே காதலர் பிரிதல் இன்றுசெல2 3விகுபெயல் தரூஉம் வாடையொடு மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே இது, தலைவன் செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை நிலம் நீர் ஆர - நிலமானது நீரை நிரம்பப் பெற்றுக் குளிரவும்; குன்றம் குழைப்ப - குன்றங்கள் மரம் செடி கொடிகள் தழைத்துப் பசுமையுற்றுத் தோன்றவும்; அகல் வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப-அகன்ற இடத்தை யுடைய பசிய சுனைகள் நீர் பெருகி வழிந்து கால்வழியாக ஓடிக் குறவர் செய்த பயிர்களிற் பாய்து வளம் செய்யவும்; குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் - குறவர்களால் வெட்டி யெறியப்பட்ட துண்டங்களாகிய நறைக்கொடிகள் கிடந்தாங்கே வேர்வீழ்த்து வளர்ந்து; நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப-அருகே நிற்கும் காழ்ப்பேறிய நறிய சந்தன மரங்களைச் சுற்றிப் படர்ந்து தழைக்கவும்; பெரும்பெயல் பொழிந்த தொழில-பெருமழையைப் பெய்வதாகிய தொழிலைச் செய்து மாறிய; எழிலி- மேகம்; தெற்கு ஏர்பு இரங்கும்-தென்றிசை நோக்கி எழுந்து சென்று முழங்கும்; அற்சிரக் காலையும் - வாடைக் காலமும்; இகுபெயல் தரூஉம்-மெல்லிதாகப் பெய்து கழியும் பூமாரியைப் பெய்விக்கும்; வாடையொடு - வாடைக்காற்றும்; மயங்கிதழ் மழைக்கண் - ஒன்றோ டொன்று கூடுதலையுடைய பூவிதழ் போன்ற குளிர்ந்த நின் கண்களும்; தூது பயந்த-பிரிவு கருதிய காதலரைத் தம் பிரிவைக் கைவிடற்கு அமைந்த தூது உரைத்தன; காதலர் பிரிதல் அரிது - ஆகலான் நம் காதலர் நம்மைப் பிரிதல் என்பது அரிதாகும்; செலவு இன்று - ஆகவே அவர் செல்வது இல்லையாம்; நீ இனி வருந்துதல் ஒழிக எ.று. அற்சிரக் காலையும் வாடையும் மழைக்கண்ணும் தூது பயந்தன; ஆகலான் காதலர் பிரிதல் அரிது; செலவும் இன்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆர, குழைப்ப, கால்யாப்ப, அகைப்ப, பொழிந்த தொழில எழிலி தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலை என இயையும். மாரிக்காலத்திற் போல ஏனைக் காலங்களில் பெரும் பெயல் இன்மையின் நிலத்திற்கு ஆராமை இயல்பாதலால், நிலம் நீர் ஆர என்றார். செடி கொடி மரங்கள் தழைத்துக் குன்றங்கள் பசுமை பெற்றுக் கவினுடன் தோன்றுதற்கு ஏது மழையாதலால், குன்றத்தின் மேல் வைத்துக் குன்றம் குழைப்ப என்றார். குழை, இளந்தளிர். குழைப்ப என்றது பெயரடியாகப் பிறந்த வினை. நிலமும் குன்றும் மழைநீரை ஆரவுண்ட விடத்துக் கானம் குழைந்து கவின்பெறு வனப்பினை எய்தும் என்க; வளம்பெருகியவழி, வானத்து இயங்கும் மழை முகிலைத் தன்கண் ஈர்த்துப் படிவித்து மிக்க மழையைப் பெய்வித்துக் கோடல் கானத்துக்கு இயல்பு என அறிக. இவ்வுண்மை நோக்காது, இந்நாளில் குன்றங்களில் நின்ற காடுகளை யழித்துக் காப்பிக்கும் தேயிலைக்கும் எனப் புலங்க ளாக்கியதால்; நாடு மழைவளம் குன்றி உணவுக்காகப் பிற நாட்டவர்முன் இரந்து நிற்கும் இழிநிலை எய்தியுளது. கால்யாத்தல், நீர் கால்வாய்வழி யோடிப் பாய்வித்தல், வெட்டுண்ட நறைக்கொடி, குறைக்கொடி எனப்பட்டது; கைகால் முதலியன வெட்டுண்ட உடலைக் "குறையுடல்" என்பது போல, பவர், கொடி. நறைக் கொடி, நறவங்கொடி என்றும் வழங்கும். மாரிக் காலத்திற் பெய்து வறிதாகும் மழை முகில், அக் காலவிறுதியில் தெற்கு நோக்கிப் படரும் என்பதை, "குணகடல் முகந்துகுடக்கேர்பு இருளி....தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி, தென்புல மருங்கிற் சென்றற் றாங்கு1" என்று பிறரும் கூறுதல் காண்க. பெய்து ஓய்ந்த முகில் தெற்கு நோக்கிச் சேறற்கு அத்திசை நோக்கி வாடைக்காற்றுப் போந்து வீசுவது காரணம் என அறிக. காதல் சிறந்து ஒருவரை யொருவர் இன்றியமையாராய் மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள், தம் உயிர் தளிர்ப்பக் கூடி, உள்ளமும் உரையும் உடம்பும் வளம்பட வாழ்தற்கு ஆக்கமாகலின், மழைக்காலமும் வாடைக்காலமும் பிரிதற் காகா என்பாள், அரிதே காதலர் பிரிதல் எனப் பொதுப்படத் தோழி மொழிந்தாள். அரியது செய்தல் தலைமகற்கு உரிமை யாயினும், வாடையின் கொடுமையும், அதனை ஆற்றாத நின் கண்ணீரும் முற்படத் தோன்றி அவர் உள்ளத்தை மாற்றுமாகலின், அவர் நின்னைப் பிரிந்து போதலைச் செய்யார் என்பாள். இன்று செலவு என்றும் கூறினாள். தூதெல்லாம் ஒன்றனைச் செய்வதும் தவிர்வதுமாகிய இருபயன் கருதி இயல்வன; அற்சிரக்காலையும் வாடைக் காற்றும் நின் கண்ணீரும் தலைவன் செலவு மேற்கொள்ளாவாறு அழுங்குவிப்பனவாம் என்பாள், தூது பயந்தன என்றாள். தூதால் விளையும் பயனை இவை விளைவித்தமையின் இவ்வாறு கூறினாள் என்க. நிலம் குளிரவும் குன்றம் குழைப்பவும் பெய்த எழிலி, நறையின் குறைக் கொடி வேர்வீழ்த்து வளர்ந்து சந்தனமரத்தைப் பற்றிப் படர்ந்து அதன் நறுமை மிகுவித்தாற்போல, இவளும் தன் கற்பறம் நிறுவித் தான் கொண்ட கணவனது மனையை மாண்புறுத்தும் பெருமடைந்தை யாதல் வேண்டும் என்ற தலைவியின் வேட்கையைத் தலைமகன் உணரச் செய்தது என்பாள், அற்சிரக் காலையும் வாடையொடு போந்து தூது பயந்தது காண் என்றாள் என்க. தனி நிற்பதினும் நறைக்கொடி சுற்றிய சந்தன மரம் மிக்க நறுமணம் உடைத்து என்பது வழக்கு. 6. பரணர் சங்கச் சான்றோர் நிரலுள் தமிழ் மாணவர்கட்குப் பெரிதும் தெரிந்த பெயர் சிலவற்றுள் கபிலர் பரணர் என்று இருவர் பெயரும் சிறந்தனவாகும். தமிழ் இலக்கணத்துள் உம்மைத்தொகைக்கு இக் கபிலபரணர் என்ற தொகைநிலைத் தொடரே பழையவுரைகாரர்களால் காட்டப்படும். இதைக் கண்ட சிலர், கபிலரும் பரணரும் ஒரு காலத்தே ஒருங்கே இருந்த நண்புடைத் துணைவர் என்று கூறலாயினர்; உண்மை நோக்கிய போது இருவரும் வேறு வேறு காலத்து வேறு வேறு நாட்டவர் என்பது தெளியப்பட்டது. பரணரைப்பற்றிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலிலும், சென்னைப் பல்கலைக் கழகத்து வெளியீடாகிய பரணர் என்ற நூலிலும் விரிந்த ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; ஆதலால் ஈண்டுச் சுருக்கமாகச் சிலவே குறிக்கப்படுகின்றன. பரணரால், தமிழ் வேந்தர் மூவருள் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், மாந்தரம் பொறையன் கடுங்கோ, சோழன் கரிகாலன், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, பசும்பூண் பாண்டியன் என்போரும் வேறுசிலரும் பாடப் பெறுகின்றனர். குறுநில மன்னருள், அதியமான் நெடுமானஞ்சி, வையாவிக் கோப் பெரும் பேகன், வேள் எவ்வி, வேள் ஆய், ஓரி, நள்ளி முதலாயினாரும், அறுகை, ஆட்டனத்தி, ஆய் எயினன், ஆரியப் பொருநன், எயினன், கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், தழும்பன், திதியன், நல்லடி, நன்னன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், மலையன், மத்தி, மிஞிலி, விராஅன், வெளியன் வேண்மான் முதலியோரும், அகுதை, ஐயை, அன்னி மிஞிலி, மருதி, ஆதிமந்தி, வேண்மகளிர் முதலிய மகளிரும், வேளிர், கொங்கர், கோசர், பூழியர், ஆரியர் முதலாயினாரும் இவர் பாட்டில் இடம் பெறுகின்றனர். மேலும் தித்தனது உறையூரும், மத்தியின் கழாரும், கழுவுள் என்பவனது காமூரும், நன்னனுடைய பாழியும், ஆய்கானத்துத் தலையாறும், புகார் நகரும், பழையனது போரூரும், திதியனது அழுந்தூரும் வெண்ணியும் நீடூரும் அருமணமும் உறத்தூரும் அலைவாயும் மட்ட வாயிலும், நன்னன் ஆயினுடைய பிரம்பும், குட்டுவன் மரந்தை யும் வஞ்சியும் தொண்டியும், அழிசியினது ஆர்க்காடும், விரா அனது இருப்பையூரும், மிஞிலியின் பாரமும், வேளிரது குன்றூரும், தழும்பனுக்கு உரிய ஏர் என்னும் ஊரும், ஊணூரும் மோகூரும், குட்டுவனது முசிறியும் என்ற ஊர்களும், கொல்லி மலை. ஏழில்மலை, குதிரைமலை, வேங்கைமலை, கவிரமலை, இமயமலை என்ற மலைகளும், காவிரியாறும், தென்குமரியும், கழாஅர்ப் பெருந்துறை, கழாஅர் முன்றுறை வாகைமுன்றுறை, கானற்பெருந்துறை, காஞ்சிப்பெருந்துறை களும், கூடற்பறந்தலை, பாழிப்பறந்தலை, வாகைப்பறந்தலை களும் பரணராற் சிறப்பிக்கப்படுகின்றன. பூழியர் யானைகளை நீராட்டும் இயல்பும், ஆரியர் பிடி யானைகளைப் பார்வையாகக் கொண்டு காட்டில் வாழும் களிற்றியானைகளைப் பிடிக்கும் திறமும், கொல்லிமலையில் பூதம் புணர்த்த புதிதியல் பாவை பொலிவுமிக நிலைபெற்றிருப் பதும், கவிரமலையில் சூர்மகள் உறைவதும், தொன்முதுவேளிர் பாழிநகர்க்கண் தம்முடைய பொன்னை வைத்திருந்ததும், அன்னிமிஞிலியின் அவலக்கவலையும், நன்னன் பெண்கொலை புரிந்து பீடழிந்ததும் பிறவும் ஆங்காங்கே சிறப்புறக் காட்டப்படு கின்றன. ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி மருதி யென்பவள் கடல்புக்கு மாய்ந்த செய்தியை ஆசிரியர் பரணர் உரைக்கும் திறம் படித்து இன்புறத்தக்கது. பொருள் விளக்கத்துக்கு இவர் கையாளும் உவமங்களும் சொல்லோவியங்களும் வரலாற்றுக் குறிப்புக்களும் இனிமையும் எளிமையும் ஆழமும் அமைந்தவை. எதனையும் அழகமையப் பாடும் செஞ்சொற் புலமை வளம் இவர்பால் உற்ற பிறவிப்பண்பு என்பே மாயின், அது சிறிதும் மிகையாகாது; சேரமான் குட்டு வனைப் புகழ்ந்து இவர் பாடிய ஏர்க்களப்பாட்டு ஒன்றே இதற்கு ஏற்ற சான்றாகும். களவுக்காலத்தில் இரவின்கண் வந்து ஒழுகும் தலைமகன், ஒருகால் தன்குறி பொய்த்தமையால் தலைமகளைக் காணப்பெறாது வருந்திச் சென்றான். பின்பு அவன் பகலில் தலைமகளைக் கூடுதற்குரிய இடத்துக்கு வந்து தோழியைக் கண்டு தன் வரவைத் தலைவிக்குத் தெரிவிக்குமாறு வேண்டினான்; இரவுக்குறி வாராது பொய்த்தான் எனக் கருதி, "நின்வரவை யான் சென்று தலைமகட்கு உரைப்பின் அவள் ஏலாள்" என்பது பட ஐய வாய்பாட்டால் விடையிறுத்தாள். அதனால் தலைவன் மனக் கலக்கம் எய்தி, "தலைவியாகிய குறுமகளை அடைந்து, யாம் பெரிதும் வருந்தினம் என்று எவரேனும் சொல்லுவாராயின், வந்தவன் யாவர் என்பன முதலிய ஆராய்ச்சியில் அவள் தலையிடாள், அவள்பாற் சென்று சொல்லுவாரைப் பெற்றிலேம்; நெஞ்சே, இனி நீ கவல்வது என்?" என்று தன் நெஞ்சிற்குக் கூறுவான் போலத் தோழி செவிப்பட மொழிந்தான். தலைவனது கூற்றில் கனிந்து நிற்கும் காதலன்பு, அவனுடைய பெருமையும் உரனுமாகிய தலைமைப்பண்பு சரிந்து பிற்படினும் மேம்பட்டு நின்று, அவன் அறிவை அவலச் சூழலிற் கிடப்பிக்கும் திறம் கண்ட பரணர் அதனை இப்பாட்டிடைப் பெய்து பாடுகின்றார். நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் 1நாருரித் தென்ன மதனின் மாமைக் குவளை யன்ன எந்தெழில் மழைக்கண் திதலை யல்குல் பெருந்தோள் குறுமகட் கெய்தச் சென்று செப்புநர்ப் பெறினே இவர்யார் என்குவ ளல்லள் முணாஅது அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி 2தெறிமட மாற்கு வல்சி யாகும் வல்வில் ஓரி3 கானம் நாறி இரும்பல் ஒலிவருங் கூந்தல் பெரும்பே துறுவள்யாம் அலந்தனம்4 எனவே. இஃது, அல்லகுறிப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் - நீரிலே வளர்கின்ற ஆம்பலினது உள்ளே புழை பொருந்திய திரண்ட காலாகிய தண்டினது; நார் உரித் தென்ன - நாரை யுரித்து நீக்கினாற் போன்ற; மதனின் மாமை - அழகும் ஒளியும் பொருந்திய மாமை நிறத்தையும்; குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண் - குவளைமலர் போன்ற மிக்க அழகு பொருந்திய குளிர்ந்த கண்களையும்; திதலை அல்குல் - திதலை வரி பரந்த அல்குலையும்: பெருந்தோள் குறுமகட்கு - பெரிய தோள்களையு முடைய இளையவளாகிய தலைமகட்கு; எய்தச் சென்று செப்புநர் பெறின் - அணுக்கத்திற் சென்று சொல்லுவோர் உளரானால்; இவர் யார் என்குவள் அல்லள் - வந்துள்ள இவர் யார் என வினவாமல்; அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி-வழியின்கண் நிற்கும் குமிழமரத் தின் வளைந்த மூக்கினையுடைய முதிர்ந்து உதிரும் கனிகள்; முணாஅது தெறிமடமாற்கு வல்சியாகும் - வெறுப்பை விளைவியாது துள்ளியோடும் இளமான்களுக்கு உணவாகும்; வல்வில் ஓரி கானம் நாறி - வல்வில் ஓரி என்பானுடைய கொல்லிக்கானத்தின் நறிய மணம் கமழ்ந்து; இரும்பல் ஒலிவரும் கூந்தல் - கரிய பலவாய்த் தழைத்து அடர்ந்திருக்கும் கூந்தலையுடைய அவள்; யாம் அலந்தனம் என - யான் இரவிடைப் போந்து அல்ல குறிப்பட்டு வருந்தினேன் என்பதுகேட்ட மாத்திரையே; பெரும் பேதுறுவள் - பெருங்கலக்க முற்று வருந்துவள், காண் எ.று. குறுமகட்கு எய்தச் சென்று யாம் அலந்தனம் எனச் செப்புநர்ப் பெறின் ஒலிவருங் கூந்தலையுடைய அவள் பெரும்பேதுறுவள் என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. மாமையும் கண்ணும் அல்குலும் தோளுமுடைய குறுமகள் எனவும், நாறி ஒலிவருங் கூந்தல் எனவும் இயையும். ஆம்பல், எண்ணுப் பெயருமாதலின், நீர்வளர் ஆம்பல் எனச் சிறப்பித்தார். நார் உரிக்கப்பட்ட ஆம்பற்றண்டு மென்மையும் ஒளியும் பெற்றுத் திகழ்தல் மேனியின் மாமைநிறத்துக்கு ஏற்ற உவமமாதலின், நார் உரித்தென்ன மதனின் மாமை எனப்பட்டது. "பொய்கை ஆம்பல் நாருரி மென்கால் நிறத்தினும் நிழற்றுமன்னே இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே1" என்று ஓரம்போகியார் கூறுதல் காண்க. மதன், அழகு. ஏந்தெழில், மிக்க அழகு. திதலை, அடிவயிற்றில் உளவாகிய வரிகள். முணைவு, வெறுப்பு, குமிழ், குமிழ மரம். கொடுமூக்கு, வளைந்த மூக்கு. தெறித்தல், துள்ளி யோடுதல். இளமான்கள் துள்ளித் திரியும் இயல்பின வாதலால் தெறிமடமான் என்றார். வல்சி - உணவு. கொல்லிநாட்டுத் தலைவன் ஓரி; வல்வில் என்பது அவனது வில்வன்மையைச் சிறப்பித்து நின்றது; "வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி, பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப், புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக் கேழற் பன்றி வீழ அயலது, ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும் வல்வில்2" என ஓரியின் வில்வன்மை பாராட்டப்படுவது காண்க. ஒலிவருங் கூந்தல் என்றது கூந்தலை யுடையளாகிய அவள் எனச் சுட்டுப் பெயராய் நின்றது. இரவுக்குறிக்கண் அல்லகுறிப்பட்டுத் தலைமகளை எய்தாது வருந்திய தலைமகன், பகற்போதில் அவளையே நினைந்து, காட்சியாசை கைம்மிகக் குறியிடம் போந்தவன், நெஞ்சின் மிக்கு நிற்கும் தலைவியின் உருநலத்தை விதந்து, மதனின் மாமை ஏந்தெழில் மழைக்கண் திதலை யல்குல் பெருந்தோள் குறுமகள் என்றான். தோழியைத் தன் வேண்டு கோட்கு இசைவிக்க முயறல் பற்றி முன்னிலையாக்காமல் செப்புநர்ப் பெறின் எனப் படர்க்கைக்கண் வைத்து மொழிந்தான். தன் வரவையும் மெலிவையும் பிறரது செவிப்படாவாறு தலைமகட்கு உரைத்தல் வேண்டுமாதலின் எய்தச் சென்று செப்புநர் என்றும், எய்தச் சென்று இயம்புநர்ப் பெறின் என்னாது செப்புநர்ப் பெறின் என்றது, இயம்பியவழி அவள் ஆண்டு எழுப்பும் வினாக்கட்குத் தக்காங்கு விடையிறுத்து உடம்படுவிக்கும் நாநலம் தோழிபால் உண்மை புலப்படுத்தற்கும் அதன் அருமை சிறப்பித்தற்கும் என அறிக. இரவுக்குறி இடையீட்டால் தான் வருந்தியதனைப் பட்டாங்கு வெளிப்பட மொழியப் பெறின் தலைமகள் ஆற்றாள் என்றற்கு எய்தச் சென்று செப்புநர் வேண்டும் என்றும், அவன் கூறுவது கேட்ட தோழி, "நின் கூற்றை அவள்பால் உரைக்குமிடத்து நின்னைத் தெளியாது வெறுப்பளாயின் விளைவு நன்றன்றாம்" என்பாள் போல நோக்குதலும், நீ சென்று செப்புவையேல் இவர் யார் என்குவளல்லள் என்றும் கூறினான். துள்ளி யோடும் மடமானுக்குக் குமிழின் விளைகனி வல்சியாய்ப் பசி நீக்கி இன்பம் செய்தல் போல, யாம் அலந்தன மென நீ எய்தச் சென்று செப்புவது, எம்மை இன்றியமையாது அலமரும் தலைமகட்கு மேனி வேறுபாடு போக்கி மகிழ்ச்சி மலிவிக்கும் என உள்ளுறை கொள்க. இதனால் தலைவன் தோழியிற் கூட்டம் பெற்று இன்புறுவானாவது பயன். 7. நல்வெள்ளியார் நல்வெள்ளியார் என்ற இச் சான்றோர் பெண்பாலராக லாம் என்போரும் உண்டு. வெள்ளி வெள்ளிவீதி என்ற பெயருடைய சான்றோர் பலர் பண்டைநாளில் இருந்துள்ளனர். மதுரைநகர் வெளிவீதியை நோக்குவோர், ஒருகால் இது வெள்ளி வீதி யென்ற ஒருவர் பெயரால் தோன்றிய வீதியாம் என்றும் கருதுவதுண்டு. வெள்ளியார் பலரின் வேறுபடுத்தற்கு இவரைச் சான்றோர் நல்வெள்ளியார் என்றனர். இவர்பெயரை மதுரை நல்வெள்ளியார் என்றலும் உண்மையின், இவர் மதுரைநகரைச் சேர்ந்தவர் என்று கோடற்கும் இடமுண்டு; ஏனைத் தொகை நூல்களிலும் இவர் பாடியன உண்டு. களவுநெறியில் காதலுறவு கொண்ட தலைமக்கள் இருவரிடையே ஒருவரையொருவர் இன்றியமையாத நிலைமை எய்திற்றாக, தலைமகள் தனக்குத் தலைமகனோடு தொடர் புண்டாகிய திறத்தைத் தன் தாய்க்கு அறத்தொடு நின்று அறிவித்தாள். இனி நடைபெற வேண்டியது கடிமணமே; ஆயினும் தலைமகன் பொருள் கருதித் தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுடையனானான். கைக்கெட்டியது வாய்க்கெட்டாது வீழ்ந்தாற் போலக் காதலின்ப நுகர்ச்சியைக் கடமை போந்து விலக்கவும், கடமையின் பெருமை உணர்ந்தொழுகும் தலைமை மாண்புடைய அவன், அதனைத் தன் காதலிக்கு உரைத்துக் கார்கால வரவில் தான் மீளுவதாக வற்புறுத்திப் பிரிந்து சென்றான். காணும் பொழுதினும் காணாப்பொழுது காதலர்க்குப் பெருந்துயரைச் செய்யுமாதலின், அவனது பிரிவை ஆற்றாளாயினாள் தலைவி; அவட்கு, "தலைவன் சென்றிருக்கும் நாட்டிலுள்ள காடுகள் இப்பொழுது கார்மழை பெய்தலால் தழைத்து அவர் குறித்த பருவத்தை உணர்த்துவனவாம். ஆகவே, அவர் விரைந்து போந்து நின்னை வரைந்து கொள்வர்; வருந்தற்க" என்று சொல்லித் தோழி ஆற்றுவிக்கின்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண் தலைவனது வாய்மைக் கண் அமைந்த உறுதியை, அவன் குறித்த பருவத்தின் செயல்மேல் வைத்து உரைக்கும் அவளுடைய செம்மையும் செறிவும் கண்டு வியந்த நல்வெள்ளியார் அவற்றை இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப் பெருவரை அடுக்கத் தருவி ஆர்ப்பக் கல்லலைத் திழிதரும் கடுவரற் கான்யாற்றுக் 1கழைமாய் நீத்தம் 2காடலை அலைப்பத் தழங்குகுரல் ஏறொடு முழங்கி வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி வெண்ணெல்3 அருந்த அண்ணல் யானை 4கறிவளர் சிலம்பில் துஞ்சும் சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே இது, பட்டபின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை பெருவரை அடுக்கத்து - பெரிய மலைப்பக் கங்களில்; சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க - தெய்வம் உறையும் அகன்ற இடத்தின்கண் உள்ள சுனைகள் நீர் நிறைந்து வழிந் தோடவும்; அருவி ஆர்ப்ப - அதனால் அருவிகள் பெருகி வீழ்ந்து ஆரவாரிக்கவும்: கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்று-கற்களை அலைத்துக்கொண்டு இழிந்தோடும் கடுகிய செலவையுடைய காட்டாற்றினது; கழைமாய் நீத்தம் காடு அலை அலைப்ப-ஓடக்கோலும் நிலைபெறாத ஆழ்ந்த நீர்ப்பெருக்குக் காடு முற்றும் பரந்து அலைமோதியலைக்கு மாறு; தழங்கு குரல் ஏறொடு முழங்கி - முழங்குகின்ற பேரொலியை யுடைய இடியேற்றொடு முழங்கி; வானம் பெய்ய-வான்முகில் மழை பெய்யக் கருதி; இன்னே மின்னும் - இப்பொழுது மின்னுகின்றது காண். தோழி-; வெண்ணெல் அருந்த அண்ணல் யானை - வெண்மையான அரிசியையுடைய ஐவன நெல்லை யுண்ட பெருமையும் தலைமையு முடைய யானை களைப்பு நீங்க; கறிவளர் சிலம்பில் துஞ்சும் - மிளகுக் கொடி பரந்து வளரும் பக்கமலையில் கிடந்து உறங்கும்; சிறியிலைச் சந்தின - சிறிய இலைகளையுடைய சந்தன மரங்களையுடையவாய்; வாடு பெருங்காட்டு - கோடையால் வாடிக் கிடக்கும் காட்டின்கண் எ. று.தோழி, பெருவரை யடுக்கத்து நனந்தலைச் சுனைமல்கவும், அருவி ஆர்ப்பவும் இழிதரும் கான்யாற்று நீத்தம் காடு அலை அலைப்ப, வானம் முழங்கி, யானை துஞ்சும் பெருங்காட்டிற் பெய்ய, இன்னே மின்னுமால் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சூர், தெய்வம்; அச்சமுமாம். நனந்தலை, அகன்றஇடம். சுனை நிறைந்து வழியும் நீரேயன்றிப் பிறாண்டும் பொழியும் நீரும் தம்மிற் கலந்து அருவியாய் இழிதரும் என்பது பற்றிப் பிரித்துக் கூறினார். கடுவரல், விரைந்த செலவு, கழை, ஓடக்கோல்; ஆறுகளில் படகு செலுத்துவார் நெடிய மூங்கிலை ஆற்றில் ஊன்றி ஊக்குவராதலால், அக்கோலும் நிலைபெறாதுமாயும் அளவு பெருகி வரும் நீரைக் கழைமாய் நீத்தம் என்ப. "கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க1" என்றும் "கழைமாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை2" என்றும், "நாடார் காவிரிக் கோடு தோய் மலிர்நிறைக் கழையழி நீத்தம்3" என்றும் சான்றோர் கூறுவர். காட்டிற் பெருகிப் பரவி ஓடுங்கால் அலைகள் எழுந்து மரங்களையும் புதர்களையும் அலைப்பது பற்றிக் காடு அலைஅலைப்ப என்றார். தழங்குதல், முழங்குதல், ஏறு, இடியேறு, வானம், மழை முகில். ஆல் அசைநிலை. வெண் ணெல் என்றது, வெண்மையான அரிசியையுடைய மலைநெல்லை; இதனை ஐவனநெல் என்ப, செந்நெல்லும் உண்மையின், வெண்ணெல் எனல் வேண்டிற்று. ஆர்ந்த என்பது அருந்த என வந்தது. அண்ணல், நெருங்குதற்கரிய பெருமையும் தலைமையும் உடைமை. கறி, மிளகுக்கொடி, சிலம்பு, பக்கமலை, வெண்நெல்லை மேய்ந்துண்டு வயிறு நிரம்பியதனால் களைப்பு நீங்க யானை மிளகு படர்ந்த மலைப்பக்கத்தே கிடந்து உறங்கும், காடு, வாடு பெருங்காடு என இயையும், சந்து, சந்தனமரம், வானம் பெருங்காட்டிற் பெய்ய மின்னும்; பெய்தவழி, சுனைநீர் மல்கும்; அருவி ஆர்க்கும். கான்யாற்று நீத்தம் காடு அலையலைக்கும் என்க, அலையலைத்தல் என ஒரு சொல்லாகக் கொண்டு அலைக்கும் என்றலும் ஒன்று. இதனைக் காண்டலும், தாம் வற்புறுத்த கார்ப்பருவ வரவாதல் நினைந்து விரைவிற்போந்து வரைப வாதலின் இனி வருந்துதல் ஒழிக என்பது குறிப்பெச்சம். களவு வெளிப்பட்ட பின் வரைந்து கோடலே நிகழற் பாலதாக அதனை இடைவைத்துத் தலைவன் பிரிந்துறைவது, தலைமகட்கு மிக்க வருத்தம் பயந்தமை மேனி வேறு பாட்டாலும் பிறவாற்றாலும் உணர்ந்த தோழி. அவள் வருத்தத்தை தழீஇக் கூறுவாள், வெளிப்பட வுரைத்தற் காகாமையின், சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே என்றாள்; வரைவு நீடுதலால் வாடி வருந்தும் நின் வேறுபாடு கெடத் தலைமகன் இவண் பொருளொடு போந்து நின்னை வரைந்து கொள்வன் என்பது கருத்து. சுனைநீர் மல்கவும், அருவி ஆர்ப்பவும், கான்யாறு பெருகிக் காடு அலையலைப்பவும், வானம் ஏறொடு முழங்கிப் பெய்தற்கு மின்னும் என்றதனால், நண்பராயினார் கண்டு மகிழவும், தமராவார் உவந்து ஆரவாரிக்கவும், ஊரவர் திரண்டு கூடியின்புறவும், மணமுரசு முழங்க நின் நன்மணம் நாடறிய நிகழுங்காண் என்பாள் வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி என்றாள் சிலம்பிடை விளைந்த வெண் நெல்லை ஆர வுண்ட யானை அதன்கட் கிடந்து உறங்கும் என்றது, தலைவ னுடைய அன்பால் விளையும் இன்பத்தை ஆர நுகரும் நீ அவன் மார்பிடைக் கிடந்து இன்றுயில் கொள்வாய் என உள்ளுறுத் துரைத்தவாறு. இஃது இனிதுறுகிளவி. 8. கண்ணகனார் இச் சான்றோர் பெயர் அச்சுப்படிகளில் காணப்பட வில்லை; ஆயினும், புதுப்பட்டி ஏட்டிலும் தேவர் ஏட்டிலும் கண்ணகனார் என்ற குறிப்பு ஒன்று துறைக்கூற்றின் இறுதியில் காணப்படுகிறது; அது காண இச்சான்றோர் பெயர் கண்ணக னார் என இருக்கலாம் என்று கருதி இங்கே கொள்ளப் பட்டது. கண்ணகனார் என்ற சான்றோருடைய பாட்டு ஒன்று இந்நூற்கண் உளது; அதனால் இதுவும் அவர் பாட்டாகலாம் என்றற்குத் துணிவு தருகிறது. கண்ணகனார் என்ற இப்பெயர் கண்ணன் நாகனார் என்ற தொடரின் மரூஉவாகலாம். கண்ணகனார் என்பது கண்ணன் என்பார்க்கு மகனார் நாகனார் என்ற பொருளைத் தருவது. இனி, கண்ணகனார் என்றே கொண்டு அகன்ற கண்களையுடையவர் என்று கொள்ளுதலும் ஒன்று. இந்நாகனார் சேர நாட்டுப் பொறையனையும் அவனது தொண்டி நகரையும் சிறந்தெடுத்துப் பாடுதலின், இவர் சேரநாட்டு இன்றைய குறும்பொறை நாட்டில் உள்ளதாகிய தொண்டி நகர்ப்பகுதியினர் என்பது விளங்கும். தலைமை நலமெல்லாம் திரண்டு உருக்கொண்டாற் போலும் தலைமகன், தலைமைப் பெண்மை நலங்களின் ஒருங்கு திரண்ட உருவென்ன நின்ற ஒருத்தியை ஒருகால் ஓரிடத்தே தனித்துக்கண்டு அவளோடு காதற் காமத் தொடர்பு கொண்டான். மறுநாள், அவன் தான் முன்னை நாளிற் கண்டாற் போல அவளை மீளவும் காணலாம் என்னும் வேட்கையால் அவ்விடத்தே வந்து நிற்ப, அவளும் அக்கருத்தே யுடையளாய் ஆயமகளிர் உடன்வரப் போந்தாள். அவளைத் தனித்த ஓரிடத்தே கண்டு இன்பம் தலைநுகர்ந்த அத்தலைமகன், அவள் சென்று தன் ஆயத்தோடு சேரக்கண்டு, "யான் இதுகாறும் கண்டறியாத துயரத்தில் இவள் என்னை ஆழ்த்திவிட்டாள்; இவ்விளம் பெண் யாவர் மகளோ? அறியேன்; ஆயினும், இவளைப் பெற்ற தந்தை வாழ்வானாக; இவளை ஈன்று புறந்தந்த தாய், பொறையனது தொண்டி நகர் போலும் சிறப்பைப் பெறுவாளாக" என்று சொல்லி இன்புற்றான். நல்லதன் நலம் கண்டு பாராட்டும் ஒருவரது உள்ளம், உணர்ச்சி வயப்படாது அந்நலத்துக்கு உரியவரை முதற்கண் நாடுமாயின், அவ்வுள்ளத்தின் உயர்வு நல்லறிஞர் பாராட்டும் நயமுடையதாம்; இளமகளைத் தனித்துக் கண்ட காளையின் கருத்தில் எழுந்த இந்நயமிக்க எண்ணமே, கண்ணகனாரது புலமையுள்ளத்தில் இப்பாட்டுருவைப் பெற்று நிற்கிறது. அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண் பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல் திருமணி புரையும் மேனி மடவோள் யார்மகள் கொல்இவள் தந்தை வாழியர் துயரம் உறீஇயினள் 1எம்மே அகன்வயல் அரிவனர் அரிந்தும் 2தருவனர் பெற்றும் தண்சேறு 3தாஅய மதனுடை நோன்றாள் கண்போல் நெய்தல் போர்விற் பூக்கும் திண்டேர்ப் பொறையன் தொண்டி 4தன்திறம் பெறுகவிவள் ஈன்ற தாயே இஃது இயற்கைப்புணர்ச்சியது இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடுங் கண்ட தலைமகன் சொல்லியது. உரை அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்-தன்னாற் காணப்பட்டோர் நிலைத்த துன்ப முறுதற் கேதுவாகிய அரிபரந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும்; பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்-பலவாகிய நிறம் வேறுடைய பூக்க ளால் மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடை மேற்கிடந்து அசையும் மேகலையையும்; திருமணி புரையும் மேனி-அழகிய மணிபோலும் மேனியையுமுடைய; மடவோள்-இளமகள்; யார்மகள் கொல் - யாவர் மகளோ அறியேன்; இவள் தந்தை வாழியர்-இவளுடைய தந்தை வாழ்வானாக; எம் துயரம் உறீஇயினள்-எம்மைப் புதுவதாகிய இத் துயரத்திற்கு உள் ளாக்கினாளாயினும்; அகல் வயல் அரிவனர் அரிந்தும்-அகன்ற நெல் வயலின் கண் நெல்லரிவோரால் அரியப்பட்டும்; தருவனர்பெற்றும்-அறிந்த நெற்சூட்டைக் கொணர்வோரால் பிறிதோரிடத்தில் இடப்பட்டும்; தண்சேறு தாஅய மதனுடை நோன்றாள்-தண்ணிய சேறுபட்ட அழகிய வலிபொருந்திய தாளையுடைய; நெய்தல்-நெய்தலானது; போர்வில் கண் போல் பூக்கும்-நெற்போரின்கண் மகளிர் கண்போல மலரும்; திண்தேர் பொறையன் தொண்டி தன்திறம் பெறுக-திண்ணிய தேரையுடைய பொறையனாகிய சேரமானுக்குரிய தொண்டி நகர் பெற்ற பெருஞ்செல்வ மெல்லாம் பெறுவாளாக; இவள் ஈன்ற தாய் - இவளைப் பெற்றுப் புறந்தந்த நற்றாய் எ.று. கண்ணும் அல்குலும் மேனியுமுடைய மடவோள் எம்மைத் துயரம் உறீஇயினள்; யார் மகள் கொல்லோ, அறியேன்; ஆயினும், இவள் தந்தை வாழியர்; ஈன்ற தாய் பொறையன் தொண்டியின் திறம் எல்லாம் பெறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அல்குபடர், நீங்காத துன்பம். படர், உள்ளுதல்; பலகாலும் நினைந்து வருந்துதற்குரிய துன்பத்தின் மேற்று. உழந்த கண், பெயரெச்சம் பிறவினைப்பொருட்டு. அரி, கண்ணிடத்திற் பரக்கும் செவ்வரி. பல்வேறு நிறமுடைய பூக்களால் ஒன்றற்கொன்று மாறுபடத் தொடுக்கப்பட்ட தழை பகைத்தழை எனப்படும். "கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை1" எனப் பிறரும் கூறுதல் காண்க. மழைக்கண், குளிர்ந்த பார்வை; சிறப்பு நோக்கமும் ஆம். அல்குல் இடைக்கும் துடைக்கும் இடைப்பட்ட உடற்கூறு. இதுபற்றியே, அல்குல் என்னும் சொல், மகளிர் ஆடவர் என்ற இருபாலார்க்கும் நூல்களில் வழங்கப்படுகிறது. "கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்2" என்பது ஞானசம்பந்தர் திருப்பதியம். பலவேறு நூல்களையும் ஒப்ப வைத்து நோக்கும் வாய்ப்பின்மையால் பிற்காலத்தார் இதனை இடக்கர்ப் பொருள தாக்கி இடர்ப்பட்டனர். குஃறொடர்ந்த அன்மொழியென ஒதுக்கினோரும், நீக்கினோரும், அறியாமை புலப்பட நாணினோரும் உண்டு. இஃது, அவையல் கிளவி, இது மங்கல மொழி, இது தகுதி வழக்கு என்றெல்லாம் சொற்களைப் பகுத்துக் காட்டிய செந்தமிழ்ச் சான்றோர், அல்குல் என்பது இவர்கள் கருதுமாறு அவையல் கிளவியாயின் நூல்களிற் பயில வழங்கார் என்பதுதானும் இப் பிற்கால மக்கட்குப் புலப்படாதொழிந்தது தமிழர் தவக்குறை. இவ்வாறே புதுமை வெறிகொண்டு பழமைச் செல்வங்களைச் சிதைக்கும் புல்லியோர். நண்பர் அன்பர் என்ற போர்வையில் தோன்றித் தமிழ்க்குக் கேடுசெய்கின்றனர்; "உள்ளது சிதைப் போர் உளர் எனப்படார்1" என்ற அறவுரையைத் தமிழ் நன்மக்கள் மனங்கொளல் வேண்டும். மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று. அரிவனர் நெல்லரிபவர், தருதல், கொணர்தல், மதன், வலி, பொறையன், குட்டுவர் குடவர் பொறையர் கடுங்கோ என்ற சேரவரசர் குடிவகைகளில் ஒருவன். பொறைநாடு, மலையாள மாவட்டத்தில் குறும்பொறைநாடு பொன்னாணிநாடு பாலைக் காடு என்ற இப்பகுதிகளைத் தன்கண் கொண்டது. இடைக் காலத்தே இப் பொறைநாடு குறும்பொறைநாடு நெடும்பொறை நாடு என இரண்டாய்ப் பிரிந்தது; பின்பு தன் பெயர் மறைந்து வேறு வேறு சிறுநாடுகளை யுடையதாயிற்று. நெடும்பொறை நாட்டின் தென்கீழ் எல்லை பூழிநாடு என வழங்கிப் பின் மறைந்தொழிந்தது. தொண்டி, இன்றும் குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றூர் ஆக இருக்கிறது. இதனை நோக்காது, ஆராய்ச்சியாளர் சிலர் மனம்போனவாறு அறிந்தோர் நாணும் வகையில் பலப்பல ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். தொண்டி தன் திறமாவன: "தொண்டி யன்ன பணைத்தோள்2" என்றும், "தொண்டித் தண்ணறு நெய்தல் நாறும் பின்னிருங் கூந்தல்3" என்றும், "தொண்டி யன்ன பண்பு பல கொண்டு4" என்றும், "தொண்டி யன்ன இவள் நலம்5" என்றும் வருவன பலவும் கொள்ளினுமாம். இவ்வாறு தந்தை தாயரைப் பாராட்டுதல் பயந்தோர்ப் பழிச்சுதல் எனப்படும் நலம் பாராட்டு வகை. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் பெருஞ்சிறப்புப்பெற்ற குமட்டூர்க் கண்ணனார், "வயிறு மாசிலீஇயர் அவன் ஈன்ற தாயே6" என்பது காண்க. இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒத்த காதலுறவு தோன்றித் தான் வேறு அவள் வேறு என்னாவாறு உணர்வு ஒன்றி நின்றமையின், தன்னை மறந்திருந்த தலைமகன், தன்னின் நீங்கி ஆயவெள்ளம் சூழ்தர, விண்மீன் இடையிருந்த தண்மதி போல இலங்கக் கண்டதும், உள்ளத்தே வேட்கைநோய் தோன்றி வெதுப்பவே, அஃது அவளால் உண்டாயிற்று என்றும், அதனையும், அவள் கண்ணும் அல்குலும் மேனியும் கொண்டு தனக்குச் செய்தாள் என்பான், அரிமதர் மழைக்கண், தழை நுடங்கும் அல்குல், திருமணி புரையும் மேனி என்றும் சிறப்பித்தான். அல்குபடர் உழப்பித்த கண் என்றாற் போல, உழப்பித்த மேனி என எல்லாவற்றோடும் கூட்டுக, தன்னைப் பகைத்து மிகைசெய்தார்க்குத் துன்பம் செய்வதல்லது பிற ரால் துயரம் உறுவிக்கப்படாத என்னை எனத் தன் தலைமைப் பெருமிதம் தோன்ற எம்மை என்றும். என்னை இது செய்தற்குக் காரணம் மடமை என்பான் மடவோள் என்றும், தான் செய்த துன்பத்தால் தன்னை வெறாது, தன்னையே நினைந்து நினைந்து வருந்தச் செய்தலின், இவள், மண்ணுலகு இதுகாறும் பெற்றிராத பெருந்தக்க பெண்ணாதல் வேண்டும் என்பான், அல்குபடர் உழந்த மடவோள் யார் மகள் கொல் என்றும், துயரம் உறீஇயினள் எம்மே என்றும் கூறினான். தன்னால் அல்லது விளைவிக்கப்பட்டோரும், தன்னைப்பற்றி நல்லதே நினையப் பண்ணும் நன்மாண்புடைய நங்கையைப் பெறுவது பெருந் தவமுடையார்க்கன்றி யில்லை என்பான், யார் மகள் கொல் என்றும், அத் தவப்பெருமை யுடையார் உளராவது உலகிற்கு நலமென்பது பற்றி இவள் தந்தை வாழியர் என்றும், தன் பொருட்டு அவளை ஈன்று புறந்தந் தாளாகலின், தலைவியை ஈன்ற தாயும் பெருவாழ்வு பெறுக என்பான். தொண்டி தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாய் என்றும் கூறினான். தொண்டி நகரின் நலம் பலவற்றிற்கும் பொறையனது காவல் ஏதுவானாற்போலத் தாய் தந்தையர் பெறுதற்குரிய நலம் பலவற்றிற்கும் தலைமகளே காரணம் என்றானாயிற்று. அரிவனர் அரிந்து கொணர்ந்து தொகுக்கப்பட்ட நெற்போர்வின் கண், நெற்றாள் பட்ட பாடெல்லாம் தான் படினும் நெய்தல் கண் போல் மலரும் என்றது, கூர்வேல் இளையர் பலர் சூழ்தரப் போந்து அவரிற் பிரிந்து தனிப்பட்ட யான், இவண் இவளை எய்தியது போலவே ஆயமகளிர் பலர் சூழ்வரப் போந்து அவரிற் பிரிந்து தனிமையுற்று இவண் எய்தினா ளாயினும், தன் மலர்போன்ற கண்களை விழித்துப் பொதுவும் சிறப்புமாகிய இருநோக்கமும் எனக்கு அருளி மகிழ்வித்தாள் என்றதாக உள்ளுறை கொள்க. "புணர்தல் பிரிதல்1" என்ற நூற்பா வுரையின்கண், இப்பாட்டைக் காட்டி இது, "புணர்தல் நிமித்தம்" எனவும், "மெய்தொட்டுப் பயிறல்2" எனத் தொடங்கும் களவியல் நூற்பாவுரையில் இதனைக் காட்டி, "இது நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறியது" எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். 9. பாலைபாடிய பெருங்கடுங்கோ சங்ககாலச் சேரவேந்தருள் செல்வக் கடுங்கோ வாழி ஆதனுக்குப் பின் சில தலைமுறை கழிந்து ஒழியவும், கடுங்கோ நாடு என்றொரு சிறு நாடு தோன்றிற்று. அதனைக் கடுங்கோக்கள் ஆண்டுவந்தனர். அவரது ஆட்சி மீகொங்குநாட்டிற் பரவி விளங்கிற்று. கடுங்கோக்களிற் பலர் நல்லிசைச் சான்றோர்களாய்த் திகழ்ந்துள்ளனர். அவருள் மூத்தோர் பெருங்கடுங்கோ எனவும், இளையர் இளங்கடுங்கோ எனவும் குறிக்கப்படுவர். இக்கடுங்கோக்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும், மருதம் பாடிய இளங்கடுங்கோ என்றும் இருவர் சான்றோர் நிரலுள் உள்ளனர். இக்கடுங்கோக் குடியினர் பிற்காலத்தே குமரி நாட்டின் வடகீழ்ப் பகுதியான குடநாட்டில் தங்கிப் பாண்டிவேந்தர் குடிக்கு உரியராயினர் போலும். பாண்டியன் கடுங்கோ என ஒரு வேந்தன் வேள்விக் குடிச் செப்பேட்டில் குறிக்கப்படுகின்றான். பாலைபாடிய பெருங்கடுங்கோவின் காலத்தில் கொண் கான நாட்டில் நன்னன் என்பான் ஏழில்மலைப் பகுதியில் இருந்து ஆட்சி செய்து வாழ்ந்தான். அவனிருந்த இடம் பிற்காலத்தே ஏளிகோயிலகம் (ஏழில்கோயிலகம்) என மருவிற்று. இப்பெருங் கடுங்கோ, நன்னனுடைய கொண்கான நாட்டையும் ஏழில் மலையையும் பாராட்டிப் பாடியிருக்கின்றார். ஏழில்மலை பிற்காலத்தே தன்கண் வழங்கிய தமிழ்மொழி தேய்ந்து கெட்டபோது, தானும் கெட்டு எலிமலையாகி, வடக்கிருந்த ஆரியகநாட்டு (ஆரியநாடு வேறு) ஆரியர்அப்பகுதியிற் புகுந்து தங்கிய போது, அவர் மொழியில் மூஷிகமாக ஏறி நிற்பதாயிற்று. ஏளிகோயிலக வேந்தர் பிறகு மூஷிக வமிசத்தார் எனப் பட லாயினர். தமிழ்நாட்டு வரலாற்றை நேரிய முறையில் ஆராய்ந் தால் ஆரியமொழி வரவால் மக்கள் மாக்களாகவும் மாக்கள் மக்களாகவும் திணைநிலை மயங்கிய செய்திகள் பலவற்றைக் காணலாம். உலகியல் காட்சி யனைத்தும் மக்கட்கு அறிவு நல்கும் வகையில் அமைந்தவை யென்பது பெருங்கடுங்கோவின் கருத்து. வாடி இலையுதிர்ந்து நிழலின்றி வேர்முதல் வெம்பி இருக்கும் மரமொன்றைக் கண்டு, "வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழ லின்றி, யார்கண்ணும் இகந்த செய்து இசைகெட்டான் இறுதி போல், வேரொடு மரம் வெம்ப" என்று இவர் கூறுவ தொன்றே மேலே கூறியதனை நன்கு வற்புறுத்தும். தலை மக்கட்குக் காதலினும் கடமை பெரிதாம் என்பது அறநூல், "நோய் நாம் உழக்குவ மாயினும் தாம் தம் செய்வினை முடிக்க, தோழி" என்றும், "வினையே ஆடவர்க்குயிரே வாணுதல், மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென நமக்குரைத்தோரும் தாமே" என்றும் இவர் கூறுமாற்றால், பாட்டென்பது அறப்பயன் விளை விக்கும் அமைதியுடையதாகல் வேண்டுமென்ற கருத்தினர் இப்பெருங்கடுங்கோ என்பது இனிதுபெறப்படும். தலைமகளைப் பிரிந்தேகும் தலைமகற்கு அவன் செல்லும் வழியில் வாடிக் கிடக்கும் கானமே அவளை நினைப்பிக்கும் என மொழியும் இப்பெருங்கடுங்கோ, "ஆனாது இவைபோல் அருள் வந்தவை காட்டி, மேனின்று மெய்கூறும் கேளிர்போல் நீ செல்லும், கானம் தகைப்ப செலவு" என்பர். "செம்மையின் இகந்தொரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ" என்பது போலும் பொருண் மொழிகள் இவர் பாட்டில் பல்கிக் கிடக்கின்றன. சிவன் திரிபுரம் எரித்ததும், பாண்டவர் வரலாறும், இராவணன் செய்தியும் ஆங்காங்கே இவரால் காட்டப்படுகின்றன. சுருங்கச் சொன்னால், உயர்வற உயர்ந்த உள்ளமும், மயர்வற வயங்கும் மதிநலமும், நிகரற நிமிர்ந்த நினைவுவளமும் இச்சேரர் பெருமான் புலமையின் சிறப்பியல் என்றல் மிகையாகாது. களவுநெறியில் காதற்றொடர்புற்ற தலைமக்கள், ஒருவரையொருவர் இன்றியமையாத உயர்நிலைமை எய்தினர். தலைமகனது வரைவு முயற்சியும் தலைவியின் அறத்தொடு நிலையும், கருதிய பயன் விளைவியாமை கண்டு, உடன்போக்கின் கண் இருவரும் உள்ளம் வைத்தனர். சின்னாட்களில் உடன்போக்கும் நிகழ்வதாயிற்று. இருவரும் தமித்துச் செல்லுங்கால், அவர்களிடையே நடைபெறும் சொல்லாட்டு அவர்தம் உள்ளத்தின் உயர்வைப் புலப்படுத்தக்கண்டு, வியப்பு மிக்க பெருங்கடுங்கோவின் பேருள்ளம், அதனை ஒரு பாட்டு வடிவில் புலப்படுத்த முற்பட்டு, "இக் களவு ஒழுக்கம் என்னாய் முடியுமோ எனக் கலங்கியிருந்த நின் உள்ளம் தெளியுமாறு யாம் இன்று கூடிவிட்டோம்; இனி வருந்துதல் ஒழிக; நாம் செல்லும் வழியில் குயிலாலும் குளிர்பூம்பொழில்களும், சிறுசிறு ஊர்களும் நிறைய வுள்ளன; நிழல் காணுந்தோறும் நெடிது தங்கியும், மணற்றுறைகளில் வண்டலாடியும் இனிது செல்க" என்ற பொருள் தோன்றப்பாடுகிறது. இனி, அதனைக் காண்போம். 1அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் 2கட்கண் டாஅங்கு அலமரல் வருத்தம் தீர யாழநின் நலமென் பணைத்தோள் 3எய்தினம் ஆகலின் பொரிப்பூம் புன்கின் எழிற்றகை ஒண்முறி சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறும் நெடிய வைகி மணல்காண் டோறும் வண்டல் தைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி 4மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில கானம் குறும்பல் லூரயாம் செல்லு மாறே இஃது உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது. உரை அழிவில முயலும் ஆர்வ மாக்கள்-அழிவில்லன வாகிய உறுதிப் பொருள்களை நாடி முயலும் பேரன்புடைய பெரியோர்கள்; வழிபடு தெய்வம் கண் கண்டா அங்கு-அவற்றை எய்துவது குறித்து நாளும் தாம் வழிபடும் தெய்வத்தைக் கண்முன்னே தோன்றக் கண்டாற்போல; அலமரல் வருத்தம் தீர- களவின்கண் பலவகையில் அலைந்து வருந்திய நம் துயர் தீருமாறு; நின் நலமென்பணைத் தோள் எய்தினம்-நின்னுடைய நல்ல மெல்லிய தோள்களைப் பெற்றேம்; ஆகலின்-ஆகவே; பொரிப்பூம் புன்கின் எழில்தகை ஒண்முறி-பொரி போன்ற பூக்களையுடைய புன்கமரத்தின் அழகு மிக்க ஒள்ளிய தளிர்களை; சுணங்கு அணி வனமுலை அணங்கு கொளத் திமிரி-சுணங்கு பரந்த அழகிய முலை முற்றத்தில் தெய்வம் வீற்றிருக்குமாறு அணிந்து கொண்டு; நிழல் காண்தோறும் நெடிய வைகி-நிழல் மிக்க இடங்களைக் காணும் போதெல்லாம் அங்கே நெடிது தங்கி; மணல் காண்டோறும் வண்டல் தைஇ-தூய மணல் பரந்த இடங்களைக் காணுமிடத்தெல்லாம் இனிதுஇருந்து வண்ட லாடி; வருந்தாது ஏகுமதி-செலவு நீடும் என வருந்தாமல் செல்லுக; வால் எயிற்றோய்-வெள்ளிய பற்களையுடையவளே; மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்-மாவின் அரும்புகளைக் கோதி உண்டு மகிழ்கின்ற குயில்கள் பாடும்; நறுந்தண் பொழில கானம்-நறிய தண்ணிய பொழில் மிக உடையன இக்காடுகள்; யாம் செல்லும் ஆறு குறும்பல் ஊர-நாம் செல்லும் வழிகளும் சிறிய பல ஊர்களை யுடையன, காண் எ.று. எயிற்றோய், வருத்தம் தீர நின் தோள் எய்தினம்; ஆகலின், முறி திமிரி, வைகி, தைஇ, வருந்தாது ஏகுமதி; கானம் பொழில, ஆறு, குறும்பல் ஊர எனக் கூட்டி வினை முடிவு செய்க. அழிவில என்றும் நிலைபெறற் பாலவாகிய அறம் வீடுபேறு ஆகிய உறுதிப் பொருள்கள் பிறவெல்லாம் அழிதன் மாலையவாதல் பற்றி, அழிவில என்று கூறினார்; ஏனை அழிவனவாகிய பொருள் முதலியன செய்வார்க்கு அவற்றின் பொருட்டு உளதாகும் ஆசையினும் அழவில் நலம் பயக்கும் ஞானம் வீடுபேறு முதலியன குறித்து முயல்வார்க்கு அவற்றின்கண் மிக்க அன்பும் ஆர்வமும் உளவாதலின், அவர்களை அழிவில முயலும் ஆர்வமாக்கள் என்றார். பொதுவாக எல்லாப் பொருள் மேலும் வேட்கை பரந்து நிற்கும் மக்கள், சிறப்பாக அழிவில்லன நாடி அவற்றைப் பெறுதற்கண் ஒன்றிய உணர்வுடையராதல்பற்றி மாக்கள் என்றார். அழிவுடைய உலகியற் பொருட்டு முயல்வோர், ஆற்றலையுடைய மக்களைத் துணைநாடி வழிபடுதல் போல, அழிவில் பொருளாகிய ஞானமும் வீடுபேறும் வேண்டுவோர் தெய்வங்களைத் தமக்குத் துணையாகுமாறு வழிபடுவது இயல்பு ஆகலான், வழிபடு தெய்வம் என்றும், கண்ணுக்குத் தெரியாதிருந்தே துணை செய்யும் தெய்வம் தானும் கண்ணெதிரே தோன்றுமாயின் முயற்சி வென்றியுறல் அரிதன்று என்றற்குக் கண்கண்டாங்கு என்றும் கூறினார். கண் கண்டாஅங்கு என்புழின் மிகை, தெளிவுப் பொருட்டு, களவின்கட்பட்ட வருத்தம் அலமரல் வருத்தம் எனப்பட்டது. பணை, மூங்கிலுமாம். தன்மைப்பன்மை பெருமிதம் தோன்ற நின்றது. யாழ, அசைநிலை, வழி நடந்து செல்லும் இள மகளிர், வேம்பு புன்கு முதலியவற்றின் இளந்தளிரை மார்பிலும் இடையிலும் செருகிக் கொண்டு செல்வது இக்காலத்தும் நாட்டுப்புறங்களில் உள்ள மரபு; இவற்றை ஏந்திச் செல்லின் சிறு தெய்வங்களால் அவர்கள் அணங்கப்படார் என்பது கருத்து. இந்நாளில் நகரங்களில் மகளிர் தம்மைக் காண்போர் அணங்குறுமாறு காட்டாதன காட்டும் அணியும் ஆடையும் அணிந்து சேறலின், நட்புற இளமகளிர் முறியும் தளிரும் வேண்டுகின்றிலர் போலும். சுணங்கு, தேமல், திமிரி, செருகி, வண்டல், வண்டற்பாவை விளையாட்டு, தைஇ, அழகுறப் புனைந்து, ஏகுமதி, முன்னிலை வினைமுற்று. வாலெயிறு, வெள்ளியபற்கள், நனை, அரும்பு, தளிருமாம். கொழுதுதல், கோதுதல் எனவும் வரும். ஆறு, வழிகள், வருத்தம் இரண்டி னுள் முன்னது களவின்கண் தோன்றிய அலமரல் வருத்தம்; பின்னது, வழிநடை வருத்தம். களவின்கட் காதலுறவு கொண்ட தலைமகன், தலைமகளைத் தனக்கேயென வரைந்து கோடற்குச் செய்த முயற்சி, கருதிய பயன் விளைவியாமை கண்டு, உடன் போக்கினைத் துணிந்து, அவளைக் கொண்டு தலைக் கழியுமிடத்து, அவன் உள்ளத்தில் மகள் மறுத்த தமர்பாலும், இடையீடும் அலரும் விளைத்த பிறர்பாலும் செற்றமும், அவர் இடையிற் போதந்து இடர் விளைப்பர் என்ற எண்ணமும், இளமை மீதூர்தலால் பிறக்கும் களிப்பும் சிறிதும் இல்லையாகிய தலைமையும் மாண்பும் கண்டு, தன்னையின்றி அமையாமையால் தன் னையே பற்றுக் கோடாய் வந்தடைந்த தலைமகள்பால் அன்பு பெருகி நிற்றலின், இறப்பப் புகழ்பவன் போல, வழிபடு தெய்வம் கண்கண்டாங்கு நின்நலமென் பணைத்தோள் எய்தினம், என்றும், அல்ல குறி, அலருரை, இற்செறிப்பு, காவற்கடுமை முதலிய இடையீடுகளும், வேற்று வரைவு, மகண் மறுப்பு ஆகிய அல்லல்களும் தோன்ற இஃது என்னாகுமோ என அலைந்த மனவருத்தம் இனி இலதாய் ஒழிந்தது என்றற்கு அலமரல் வருத்தம் தீர என்றும், பெறற்கரியது பெற்ற வழிப் பிறக்கும் பெருமிதம் தலைவன் உள்ளத்திற் பிறங்கினமையின், நின் பணைத்தோள் எய்தினம் எனத் தனித் தன்மைப்பன்மை வாய்பாட்டிலும் கூறினான். தலைமகளைத் தெய்வ மாக்கினமையின், தன்னை, வழிபடுவார் நிலையில் வைத்து ஆர்வ மாக்கள் போல என்றும், அவர்களது ஆர்வம் அழிவில் பொருள்மேல் நின்றாற்போலத் தன் ஆர்வம் அழிவில் கூட்டத்தின்மேல் நிற்குமாறு விளங்க அழிவில முயலும் ஆர்வ மாக்கள் என்றும் கூறினான். தன்முன் காதலன் தன்னை வழிபடு தெய்வமெனவும், நின் நலமென்றோள் எய்தின மெனவும், அதனால் அலமரல் வருத்தம் தீர்ந்ததெனவும் கூறியது கேட்டாட்குப் பெருநாணம் தோன்றி வருத்தவும், அதனை மறைத்துக் கொள்வாளாய்ப் புன்கின் ஒண்முறியைக் கொய்து அணிந்து கொண்டாளாக, அதுதானும் காடுறை தெய்வங்கள் அணங்காவாறு தற்காக்கும் செயலாய் அமைவது ஒரு பாலாக, முலைமார்பில் இருக்கும் வீற்றுத் தெய்வத்துக்கு ஓராற்றால் வழிபாடு செய்வதாகவும் பொலிந்தமையின், பொரிப்பூம் புன்கின் எழிற்றகை ஒண்முறி சுணங்கணி வளமுலை அணங்கு கொளத் திமிரி என்றான். "வீற்றிருந்து அணங்கு சேர்ந்த வெம்முலை1" என்பதன் உரையால் வீற்றுத்தெய்வம் உண்மை அறியப்படும். வீற்றுத் தெய்வம் அழகுத்தெய்வம், நிழலிடங்களில் நெடிதிருந்து விளையாடலும், மணற்பரப்பில் வண்டல் பயில்வதும் தலைமகள் பெரிதும் விரும்புவன வாதலின், நிழல் காண்டோறும் நெடிது வைகி மணல் காண்டோறும் வண்டல் தைஇ என்றும், அக்காலத்தே அவன் உரைத்த பாராட்டுகளால் அவள் பெரிதும் உவகையும் நாணும் கொண்டு முறுவலித் தாளாக, அவளைக் கண்டு, பிறர் காண்பர்கொல் என மருண்டு நாணிய களவு போலாது, பிறர் காணின் வியத்தல் வேண்டுமென ஒழுகும் கற்பின்கண் நிற் கின்றேம் என்பான் வருந்தாது ஏகுமதி என்றும், வாலெயிற் றோயே என்றும் கூறினான். நிழலிடம் காண்பது இவண் அரிதன்று என்பான், மாநனைகொழுதி மாங்குயில் ஆலும் நறுந்தண் பொழில கானம் என்றும், இரவிடைப் படினும் யாம் தங்கிச்சேறற்கு ஏற்பப் பல ஊர்கள் வழியில் உள்ளன என்பான், குறும்பல் ஊர யாம் செல்லும் ஆறு என்றும் கூறினான். பெற்றோரது அன்புச்சூழலில் ஆயமும் தோழியும் பாராட்ட இருந்தவட்குப் போக்குடன்பட்டுப் போதரும் கானத்தும் காதற்சூழ்நிலையும் கலக்கம் தவிர்க்கும் பாராட்டும் குறைவற அமைத்துக் கொடுபோகும் தலைவனது காதல் திறம் இதனால் நன்கு விளங்குகிறது. உடன்போக்கில் தலைவன் இடைச்சுரத்திற் கூறுதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். "ஒன்றாத் தமரினும்1" என்று தொடங்கும் நூற்பாவுரையில் 'அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்' என்றதனானே தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவும் கொள்க" என்றுரைத்து, இப்பாட்டைக் காட்டி, "இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது" என்பர் நச்சினார்க்கினியர்; இனி "இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு, வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன்2" என்பதன் உரையுள் இப் பாட்டினைக் காட்டி, இதனுள், "வருந்தாது ஏகுமதி; எனவே வழிபடு தெய்வம் கட்கண்டால் விடுவார் இல்லாதது போல, நின்னை விடுதல் எனக்கு அறமன்று எனக் கூறி மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு காண்க" என்பர் பேராசிரியர். 10. குடவாயிற் கீரத்தனார் இவர் பெயர் அச்சுப்படிகளிலும் மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டிலும் இன்றி ஏனை ஏடுகளில் காணப்படுகின்றது. குடவாயில் என்பது சோழநாட்டுப் பழமையான ஊர்களில் ஒன்று; இக்காலத்தில் இது குடவாசல் என வழங்குகிறது. இவ்வூரினராதல் பற்றிச் சான்றோர் இவரைக் குடவாயிற் கீரத்தனார் என்று நூல்களிற் குறித்துள்ளனர். மேலும் இவர்க்குத் தமது ஊரின்பால் பேரன்பு உண்டு. இவர் பாடிய பாட்டுக்கள் தொகை நூல்களில் பல உள்ளன. ஒல்லையூர் என்னும் ஊரின்கண் இருந்து வள்ளன்மை புரிந்தொழுகிய பெருஞ்சாத்தன் என்பானை, "ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன்", என்று சிறப்பித்து அவன் இறந்த காலை, "முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே" என இரங்கிப் பாடியிருக்கும் இவரது பாட்டு மிக்க உருக்கமுடைய தாகும். வடவடுகர் வாழ்ந்த குன்றத்தை நெடும்பெருங்குன்றம் எனக் குறித்து, அங்கே அவர்கள் நாய்களை நன்கு பேணித் தமது தொழிற்குத் துணையாகக் கொண்டிருந்த சிறப்பை வியந்து பாடுவர். குடவாயிலாகிய தமது ஊரைக் குடந்தை வாயில் என்றும் குடந்தை என்றும், சோழர் பேரரசின் பெருநிதி வைக்கப் பெற்றிருந்தது இவ்விடத்தே என்றும் கூறிகின்றார். அதனைக் "கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரும் நிதி" என்று குறிப்பர். இடையிடையே கொங்கர் ஆனிரை பேணும் அமைதியும், மழவரது மறமாண்பும் இக்கீரத்தனாரால் கிளந்து கூறப் படுவதுண்டு. எவ்வியின் நீழல் என்னும் ஊரும், பெரும்பெயர் கொண்ட வழுதியின் கூடல் நகரும், பொறையரின் தொண்டியும், சோழர் உறையூரும் இவரது பாடு புகழ்பெற்றன. குன்றங்களில் ஏழில்மலை, பொதியில்மலை என்ற இரண்டையும் மிக்க நயம்படப் புகழ்கின்றார். நன்னன் ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்போர் தம்மிற் கூடிப் பெரும்பூண் சென்னி என்பவ னோடு போர் உடற்றிய காலையில், சென்னியின் தானைத் தலைவனான பழையன் என்பவன் இறந்துபட்டானாக, அதனால் அடங் கருஞ்சினம் கொண்ட சென்னி, அந்நன்னன் முதலியோரையும் அவரொடு போந்த கணையன் என்ற சேர நாட்டுச் செருமிகு தலைவனையும் ஒருங்கே வென்று வெருட்டி மேம்பட்டான். அப்போரின் விளைவால் சோழவரசின் கொற்றம் கொங்கு நாட்டிலும் சேர நாட்டிலும் சிறந்து பரவிற்று. கொங்குநாட்டுக் கழுமலம் சோழர் கைப்பட்டது. சேரநாட்டுக் கணையனூர் அக்கணையன் புகழையும், இப்போது பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள ஆனைமலை நன்னன் பெயரையும், ஈரோட்டுப் பகுதியிலுள்ள பூந்துறை புன்றுறையின் பெயரையும் விளக்கி நிற்கின்றன. ஈரோட்டைச் சூழவுள்ள பகுதியைக் கல்வெட்டுக்கள் புன்றுறை நாடு எனக் குறிப்பது இங்கே நினைவு கூரத்தக்கது. கங்கன் வழியினர் கங்கர் எனவும், கட்டி வழிவந்தோர் கட்டியர் எனவும் வழங்கினர். புன்றுறை பூந்துறையாக மருவி விட்டது. சென்னியின் அழும்பில் அம்புக் கோவில் எனச் சிதைந்தாற் போலக் கழுமலம் குழுமமாயிற்றுப் போலும். இகல்வேந்தர் இருவர் போர்முடிவில் தமராய் அமர்ந்த திறத்தை "வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும், தம் திறைகொடுத்துத் தமரராயினரே, முரண்செறிந் திருந்த தானை யிரண்டும் ஒன்றென அறைந்தன பணையே" என்பதும், கொடிச்சி யொருத்தியின் கையகத் திருந்த பாலைக் குரங்கு ஒன்று கவர்ந்து கொள்ள, அவள் அழுது நிற்கும் அவலநிலையைப் "புன்றலை மந்திக் கல்லா வன்பறழ், குன்றுழை நண்ணிய முன்றிற் போகாது, எரியகைந் தன்ன வீததை யிணர, வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய, தேம்பெய் தீம்பால் வல்வலின் கொடிச்சி, எழுதெழில் சிதைய அழுத கண்ணே.... ஈரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன, விரலே.... காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே" என்பதும் பன்முறையும் படித்து இன்புறத் தகுவனவாம். களவின்கண் ஒழுகிய தனது வரைவு முயற்சி பயன் விளையாமை கண்ட தலைவன், தலைமகளைக் கொண்டுதலைக் கழிதற்குத் துணிந்தானாக. தலைவி அவன் வரைப்பினளாதலின் போக்குடன்பட்டாள். குறித்த காலத்தில் தலைமகன் குறியிடம் போதரக் கண்ட தோழி, தலைமகளைக் கொணர்ந்து தலைவன் பால் கையடைப் படுத்துச் செல்ல விடுகின்றாள். உடனிருந்து உடன் விளையாடி உடன் பயின்ற உயிர்த் தோழியாகலின் போக்குடன் படுத்துச் செல்ல விடுங்கால், அவள் தலைமகனை நோக்கி, "நீ பிழையா நன்மொழியை யுடைய பெருந்தகை; நின் சொல்லைத் தெளிந்தே இவள் நின்னோடு வருகின்றாள்; இவளை வரைந்து கொண்ட நீ, தன் மார்பு தளர்ந்து கூந்தல் நரைத்த முதியளாகும் காலத்தும் இவளைக் கைவிடலாகாது" என அறிவுறுத்துகின்றாள். தோழியினது இக்கூற்றின்கண், வண்டோ ரனையர் ஆடவர் என்பது கொண்டு, எதிரது போற்றிப் பிரியாமைக்கு இயைந்தது தேர்ந்து கூறும் மதிநலம் கண்ட சான்றோராகிய கீரத்தனார். அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் 1பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர இன்கடுங் கள்ளின் இழையணி 2கொடித்தேர் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட் டியானைப் 3போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய இவட்கே. இஃது உடன் போக்கும் தோழி 4கையடைப்படுத்தது. உரை அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் - நிமிர்ந்து உயர்ந்த அழகிய இவள் மார்புகள் தளர்ந்து சாய்ந்த காலத்தும்; பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த - பொன் போன்ற மேனியின் கண் நீலமணியின் கரிய நிறத்தோடு தாழ்ந்து அசையும்; நல்நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் - நல்ல நெடிய கூந்தல் நரைத்து முடிக்கப்பட்ட போதும்; பூக்கேழ் ஊர - பூக்கள் நிறைந்த பொழில்களையும் பொய்கைகளையும் உடைய ஊரனே; நீத்தல் ஓம்புமதி - இவளைக் கைவிடா தொழிவாயாக; இன்கடுங் கள்ளின் - இனிய மிக்க களிப்பேறிய கள்ளினையும்; இழையணி கொடித்தேர் - பலவகை இழைகளால் அணி செய்யப்பட்ட கொடி கட்டிய தேர்களையு முடைய; கொற்றச் சோழர் - வெற்றியையுடைய சோழ மன்னர்கள்; கொங்கர்ப் பணீஇயர் - கொங்குநாட்டவரை ஒடுக்குதற்காகச் செய்த போரின்கண்; வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் - வெண்மையான கோடுகளையுடைய களிறுகளைத் தனக்கெனக் கொண்டு போஒர் என்னும் ஊர்க்குரியவனும் சோழர்கட்குத் தானைத்தலைவனுமாகிய பழையன் என்பான் எறிந்த; வேல் வாய்த் தன்ன - வேற்படை தப்பாமல் வெற்றி பயந்தாற்போல; நின் பிழையா நன்மொழி தேறிய இவட்கு - பொய்படுவ தில்லாத நின்னுடைய நல்ல சொற்களை உறுதியாகக் கொண்டு நின் னொடு போக்குடன்பட்டு வரும் இவளுக்கு, எ-று. ஊர, இவட்கு வனமுலை தளரினும், கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. அண்ணாத்தல், உயர்தல். பொன்னிடைப் பதிக்கும் நீலமணி காட்சிக்கு இனிதாதல் போலப் பொன் போலும் மேனியில் நீலமணி போற் கிடந்து இனிய காட்சி நல்குதலின் பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த கூந்தல் எனப் பட்டது. நீத்தல் ஓம்புமதி, நீத்தலை ஒழிக என்றவாறு; என்றது நீங்கற்க என்பதாம். பூக்கேழ் ஊர் எனப் பொதுப்பட மொழிந்தமையின் பொழிற் பூவும் பொய்கைப் பூவும் கொள்ளப் பட்டன. கடுங்கள், களிப்பு மிக்க கள்; அதன் இனிமைப் பண்பு குன்றாமை தோன்ற, இன்கடுங்கள் எனப்பட்டது. போர் மறவர்க்குப் போர்ச் செயற்கண் வேண்டப்படும் மறத்தீயைக் கிளர்ந்தெழச் செய்வது பற்றிக் கடுங்கள் மிக்க அளவில் உண்ணப்படுதற்கு இனிமைச் சுவையூட்டி நல்கப்பட்டது என அறிக, போர் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் அருந்தப்படுவது பற்றிப் பொதுப்படக் கூறினார். இழை, தேரின் உறுப்புகளை அழகு செய்யும் அணிவகைகள். இத்தேர் இவ் வேந்தற்குரியது என்பது தோன்ற மீன், புலி, வில் முதலிய அடையாளம் பொறிக்கப்பட்ட கொடி, இன்றியமையாமை பற்றிக் கொடியை விதந்து கொடித்தேர் என்றும், உற்ற போர்களில் வெற்றியே பெறும் மாண்பினர் என்றற்குச் சோழரைக் கொற்றச்சோழர் என்றும், கொங்கரொடு போர் தொடுத்தமைக்குக் காரணம் இது என்பார். கொங்கர்ப் பணீஇயர் என்றும் கூறினார். கொங்கர், கொங்குநாட்டவர்; காவிரிக்குத் தெற்கிலும் ஆன்பொருநை (அமராவதி)க்கு மேற்கிலும் மேலைமலைத் தொடரொடு மணந்து கிடக்கும் நிலப்பகுதி கொங்குநாடு; இதன் வடக்கெல்லை பவானி என இந்நாளில் வழங்கும் பூவானியாறு. பழையன், போஒர் என்னும் ஊர்க்கண் இருந்து சோழர்கட்குத் தானைத்துணை புரிந்த குறுநிலத் தலைவன். போர் என்னும் ஊர் இப்போது கோவிலடி என வழங்குகிறது. யானை யூர்ந்து போருடற்றும் தானைகாவலன் என்றற்கு வெண்கோட்டியானைப் போஓர் கிழவோன் பழையன் என்றார். இக்கொங்குப் போரில் சோழரே வென்றனர் என்றற்குக் கொற்றச் சோழர் என்று குறித்தார். வாய்த்தல், தப்பாமை நிகழ்தல். மொழியின் நன்மை, பிழையாமை மேற்றாதலின், பிழையா நன்மொழி எனல் வேண்டிற்று பிழைத்தல், சொல்வேறு செயல்வேறுபடுதல். போக்கு வலித்த தலைமகற்குத் தலைவியை யுடன்படுத்து அவன்பால் ஓம்படுக்கின்றா ளாதலின், தலைவியும், தலைமகனும் இனி மேற்கொள்வது கற்புவாழ்வென்பது உலகறிந்த உண்மையாதலாலும், அக்காலத்தே தலைமகன் தன் மனைவியிற் பிரிந்து, பொருள், வினை, புகழ், நாடுகாவல், தூது முதலிய பல்வேறு கடமை காரணமாகப் பிரிதலும், பிறவும் உளவா மாதலாலும், இவ்வாறு பிரிதல் பயில நிகழுமாயின். தலைமகள்பால் அவற்குள்ள காதல் அன்பு குன்றலாமாதாலும் தோழி கையடை கூறுகின்றாள். மக்களுடைய காதலுணர்வு, உடம்பின் புறத்தே மேனிக்கண் நிலவும் அழகொளியைப்பற்றிப் பின் உள்ளத்தைப்பற்றி முடிவில் உயிரொடு கலந்து ஒன்றுவது; ஆயினும், உடலளவாய் நிற்கும் காதலினும், உள்ளத்தில் ஊடுருவி நிற்பது சீரிது; உள்ளங் கடந்து உயிரோடு ஒன்றிப் பிறப்புத்தோறும் தொடர்ந்து செல்வது அருமையும் தலைமையு முடையது; உள்ளத்தோடு ஒன்றுவது நிலைபேறு இல்லது. உள்ளம் என்பது, உயிர்க்கும் உடற்கும் இடைநின்று அவற்றின் வன்மைமென்மைகட் கேற்ப அடங்கியும் அடக்கியும் இயலும் தன்மைத்து. உடலும் உள்ளமும் மாயையாகிய ஒரு கருவிலிருந்தே ஆகியவை என்ப; அதனால் பெரும்பாலும் உள்ளம் உடலின் வழியே நின்று அது நல்கும் பயனையே காணும். உடலோ எனின், ஏனை மக்களல்லாத பிறவுயிர்களைத் தாங்கி நிற்கும் உடம்புகளைப்போல இனம் பெருக்குதலையே தாங்கி நிற்கும் உடம்புகளைப் போல இனம் பெருக்குதலையே குறிக்கோளாக உடையது; அதனால் பொறிபுலன்களாகிய கருவிகளைக் கொண்டு உள்ளத்தை வேறே உடம்புதரு பணியின்கண் ஈடுபடுத்திக் காதலர்பால் உளதாகிய காதலுறவை வேறு பிறர்பால் மாற்றவும் ஆற்ற லுடைய தாகின்றது. அவ்வாறின்றி, உயிரோடு ஒன்றிவிடின், காதலுறவு, பிறமகளிர்பால் உள்ளம் செல்லாவாறு பிணித்துத் "தன்மனைக் கிழத்தி யல்லதைப் பிறர்மனைப் பெண்மை நோக்காத நன்ன ராண்மை1" பெற்றுப் பெருமை பிறங்குவிக்கும். மகப்பேற்றுக் காலத்தில் பெண்ணுடல் உள்ளத்தைப் பிணிக்கும் வலிகுன்றி விடுவதால், உயிரொன் றிய காதல் உணர்வு பிரிவரும் நிலையின்கண் ஊன்றிநிற்கிறது. ஆடவன் உடற்கு அன்னதொரு வீழ்ச்சி யின்மை இயற்கை அறமாதலின், அவன் உள்ளம் உயிருணர்வின் வழிநில்லாது உடல்வழி ஓடுதல் எளிதின் இயல்கிறது; அவ்வாறு ஓட விடாது நிறுத்தல் வேண்டும் என்பாள் காரியத்தின்மேல் வைத்து நீத்தல் ஓம்புமதி என்றாள். தாய்மையுணர்வின்கட்புலனாம் உருவமே மார்புகள்; அவை, கருவயிற்றிடையே தோன்றிப் பிறக்கும் உடம்பு, தானே உண்பனவுண்டு வளர்தற்கேற்ற வன்மை நல்குதற்குரிய ஆற்றல் பொதிந்த அமுதகுடம் போல்வன; நிறைகுடம் நிமிர்ந்து நிற்றலும் வெறுங்குடம் சாய்ந்து வீழ்தலும் போல அமுதம் சுரத்தற்கேற்ற வளமை பெருகிய நிலையில் பணைத்துப் பெருத்தல் இயல்பு; இளமார்பு அண்ணாந்தெழுவது குயவன் உருளையிற் பசுமட்குடம் தோன்றுவது போலும் தோற்றமுறை, மக்களுடம்பின் ஆக்கம் குறித்துப் பெருத்தலும் சுருங்கலும் உடைமையை நினையாது. அண்ணாந்த நிலையொன்றையே விழைந்து கூடியிருத்தலும், பின்னர்ப் பிரிதலும் உடல்வழி இயங்கும் உள்ளமுடையார்க்கே யுரியவை; அவை நின்பால் உளதாகல் கூடாது என்பாள், அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் நீத்தல் ஓம்புமதி என்று தோழி கூறினாள். மகளிர்க்குக் கருக்கோடற் குரிய செவ்விக்கண் கருங்கதிர் விரித்தொளிரும் கூந்தல், அச்செவ்வி மாறும் நிலையில், உண்ணின்று ஊக்கிப் போந்த காதற்காமவுணர்வின் காமப்பகுதி தேய்ந்து கெடும் திறத்தைக் காட்டி, உண்மைக் காதலுணர்வாய்க் காதலன் உயிரொடு தொடரும் ஒளியும் நிறமும் பெறுதலை நரைமுடி நன்கு உணர்த்துதலின், அக்காலத்தே பிரிதல் கூடாது என்பாள், தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி என்றாள்; "இம்மைமாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை1" என்று எண்ணிக் கூறுதற் கேதுவாவது உண்மைக் காதல் உணர்வு. தாழ்ந்த கூந்தல் எனவே அமையு மாயினும், நன்னெடுங் கூந்தல் எனச் சிறப்பித்தாள், நிற்புழித் தாழ்ந்து, புறங்காத்தும், கிடந்துழி நீண்டு காதலற்குப் பாயற்பயன் நல்கியும் உதவுமாறு வற்புறுத்தற்கு. இளமைக்கண் வளமுற்றுச் சிறந்து மிக விரைவில் சாய்ந்து முதுமையைத் தோற்றுவிக்கும் இயல்பினால் மார்பின் தளர்வை முற்படவைத்தும், அவ்வளம் பெரிதும் குறைந்தமை புலப்படுத்தும் நரையைப் பின்னர் வைத்தும் கூறினாள். உடன்போக்குத் துணிந்தகாலைக் குறித்த காலமும் இடமும் தப்பாமற் போந்து கொண்டுதலைக் கழிவதை அஞ்சாது மேற்கொண்டமையே நின் வாய்மையை வலியுறுத்தவ தாயிற்று என்று கூறுவாள், நின்பிழையா நன்மொழி என்றும், இஃது என்றும் தன் இயல்பு குன்றாமையே வேண்டும் என்பதுபடப் பழையன் செய்த வேற்போர் பண்டை நிகழ்ச்சியாயினும், அதன் வாய்மை இன்றும் புகழப்படுவது காண்க என்பாள் போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்ன என்றும் கூறினாள். இனி பூக்கேழ் ஊர எனப் பூக்களைக் காட்டி விதந்து கூறியது, பூக்கள் தேனை யுண்ணும் வண்டினத்தால் தேன் குன்றியதும் கைவிடப்படுதல் போல, நீயும் இவளது இளநலம் வாடியபோது இவளைக் கைவிடற்பாலையல்லை என்றற்கு. பூக்கேழ் ஊரனாகலின் நின்னூர்க்கண் பூவோரன்ன மகளிர்க்குக் குறையில்லை ஆகலின், நீ வண்டோ ரனையையாய் மாறுதல் கூடாது என்பது விளங்க நீங்கற்க என்னாமல் நீத்தல் ஓம்புமதி என வற்புறுத்தினாள் என்றுமாம். "இறப்பே நிகழ்வே எதிர தென்னும்1" என்று தொடங்கும் நூற்பா வுரையின்கண் இப்பாட்டைக் காட்டி, "நிகழ்காலம் இளமைப் பருவம் என்பது தோன்ற வந்தது; இதனுள் நீத்தல் ஓம்புமதி என்பது எதிர்காலம் குறித்து நின்றது" என்பர் இளம்பூரணர். "தானே சேறலும்2" என்று தொடங்கும் நூற்பாவுரையில் "கொற்றச் சோழர்... தேறிய இவட்கே" என்பதைக் காட்டி, "இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது" என்றும், "தலைவரு விழுமநிலை31" என்ற நூற்பா வுரையில் இதனைக் காட்டி, "இந் நற்றிணை தலைவியைப் பாதுகாக்க எனத் தோழி கையடுத்தது" என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 11. உலோச்சனார் ஏடுகளில் இவர் பெயர் உவோச்சனார் எனப் படிக்குமாறு அமைந்துள்ளது. எழுத்துக்களில் லகர வகர வேறுபாடு விளங்க எழுதாமையே இதற்குக் காரணம். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சோழநாட்டை ஆண்ட காலத்தில் அந்நாட்டில் வாழ்ந்தவர். "நாடு என மொழிவோர், அவன் நாடு என மொழிவர், வேந்தென மொழிவோர் அவனே வேந்தென மொழிவர்" எனச் சிறப்பித்து, அப்பாட்டில் "ஆங்கு நின்ற எற்காணூஉ" என்று குறிப்பதால், அவனால் உலோச்சனார் நேர்முகமாகச் சிறப்புச் செய்யப் பெற்றவரென்பது தெளிவாம். சோழநாட்டுக் கடற்கரைக்கண்ணதான பொறையாற்றைச் சிறந்துபாடி, ஆங்கேயிருந்து புலவர் பெருமக்களைப் பெரிதும் ஓம்பிய பெருஞ் செல்வன் பெரியன் என்பவனை நன்கு பாராட்டிப் பாடுவது இவரைச் சோழநாட்டுப் பொறையாற்றுப் புலவரெனப் புகலுதல் பொருந்துமெனத் தோன்றுகிறது. "நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு" என்பதும், "பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், பரியுடை நற்றேர்ப்பெரியன்" என்பதும் இவர்க்கு அவன்பாலுள்ள நன்மதிப்பை வெளிப்படுக்கின்றன. புறத்திணைக்கண் வீரர்களின் உண்டாட்டினையும், கைவேல் களிற்றொடு துறந்து தன்னையும் துறக்குவான் போல ஒரு மறவன் பொருது மேம்பட்ட மறத்துறையையும் இவர் வீறுமிகப் பாடு கின்றார்; இதனை நோக்க இவர் அறமும் மறமுமாகிய இருவகைச் சான்றாண்மையும் ஒருதலையாகத் தன்பாற் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அகத்திணையில் நெய்தற் கருப்பொருள்களையே பெரிதும் எடுத்தோதுதலால், மேலே நாம் கண்ட முடிவு உண்மையாகிறது. நெய்தல் நில மகளிருள் உணக்கிய மீனைக் காவல் புரிவோர், இருந்து காத்தற் பொருட்டுக் கடற்கரையில் மலைபோற் குவிந்துநிற்கும் மணன்மேல் நின்று காப்பதும், அப்போழ்து கடலில் இயங்கும் கலங்களை நோக்கி, 'எந்தை திமில் இது நுந்தை திமில் என, வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர்" திண்டிமில் எண்ணுவதும், அலர் தூற்றும் பெண்டிர் அது செய்யுங்கால், "சிலரும் பலரும் கட்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி" மொழியும் இயல்பும், தமது ஊர் நலத்தை விருந்தினர்க்கு உரைக்குங்கால், "ஒருநாள் உறைந்திசினோர்க்கும் வழிநாள் தம்பதி மறக்கும் பண்பினது எம்பதி" என்பதும், விருந்தோம்பற்கண் யாமும் எம்வரை அளவையிற் பெட்குவம், நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே" என்று மொழிவதும், மாலைப் போது வந்த விருந்தினை, "துறையும் மான்றின்று பொழுதே சுறவும், ஓத மல்கலின் மாறாயினவே, எல்லின்று தோன்றல் செல்லாதீம் என"ச் செலவு மறுத்துத் தம்மனைக்கண் தங்குவிப்பதும் பிறவும் கற்போர்க்குக் கழி பேரின்பம் நல்குவனவாம். இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. களவுவழி யொழுகும் காதல் வாழ்வில் இரவுக் காலத்தில் தலைவி மனைவரைப்பில் ஓர் இடம் குறித்துக் கொண்டு தலை மக்கள் தமித்துக் கண்டு பயிலும் நிகழ்ச்சி இரவுக்குறி எனப்படும். ஒருகால் தலைமகன் குறியிடம் போந்து தன் வரவைத் தலைமகள் அறியக் குறிப்பித்தான். அவனைச் சென்று கூடாதவாறு ஊரிடத்தும் தலைவி மனையிடத்தும் காவல் மிகுந்தது. அதனால் இருவருக்கும் கூட்டம் பெறுவது இயலாதாயிற்று. ஆயினும், தலைமகன் மறுநாள் குறியிடத்தே வந்து சேர்ந்தான். அதனைத் தோழி அறிந்து கொண்டாளெனினும், தலைமகள் சென்று சேராதவாறு தோன்றிய காவல் இடையீட்டால், அவள் ஆற் றாமை மிகுவது கண்டு மிக்க வருத்தமுற்றாள். இந்நிலையில் தலைவி நிலையைச் சிறைப்புறம் போந்துநிற்கும் தலைமகற்கும் தலைவன் வரவைத் தலைமகட்கும் உணர்த்தித் தலைவனை வரைவுகடாவும் குறிப்பினளாய், "காதலர் குறியிடத்தே வாராது பொய்த்தமையால் நீ பெரிதும் வருந்தி மெலிகின்றாய்; ஊரவர் கூறும் அலருரை கேட்டுத் தலைவர் வாராதொழிவரென்றும் கருதுகின்றாய்; இனி வருந்தற்க; அவர் வாராதிரார்" என்று கூறுகின்றாள். தோழியின் இக்கூற்றில் அமைந்த கள்ள மில்லாத வெள்ளைச் சொற்களில் பொதிந்து கிடக்கும் காதலுள்ளக் கட்டுரைகள் ஆசிரியர் உலோச்சனாருடைய புலமையுள்ளத்தைக் கவர்ந்தமையின் அவற்றை இப்பாட்டிற் பொதிந்து பாடுகின்றார். பெய்யாது1 வைகிய கோதை போல மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப உள்ளி2 நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல்3 ஒழிக மாளநின் நெஞ்சத் தானே புணரி பொருத பூமணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பாய்ந்து ஊர நிலவுவிரிந் தன்றால்4 கான லானே இது. காப்புமிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலை மகட்குத் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது5. உரை பெய்யாது வைகிய கோதை போல - கூந்தற்கண் பெய்து சூடாமல் வெறிதே எறியப்பட்ட பூமாலை போல; அவர் செய்குறி பிழைப்ப - காதலர் செய்த குறி பிழைத்துப் பொய்த்துப் போயினமையால்; மெய் சாயினை - மேனி மெலிந்து வருந்தாநின்றனை; நொதுமலர் ஏர்புரை உள்ளி - அயலார் எடுத்துரைக்கும் அலருரையை உட்கொண்டு; தெள்ளிதின் - தெளிவாக; நின் நெஞ்சத்தான் - நின்னுடைய நெஞ்சத்தின்கண்; வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக இனி காதலர் வாரார் எனப் புலந்து நினைக்கும் செயலைக் கைவிடுக; கானலான் கானல் துறையின்கண்; புணரி பொருத பூமணல் அடை கரை - அலைகளால் அலைக்கப்பட்ட பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மணல் பரந்த கடற்கரைக்கண்; ஆழி மருங்கின் அலவன் ஓம்பி - தான் ஊர்ந்து வரும் தேர்க்காலில் பட்டு அங்கே திரியும் நண்டுகள் நசுங்கி மடியாதபடி; வலவன் வள்பு ஆய்ந்து ஊர - தேர்ப்பாகன் குதிரையின் வார்களை ஆராய்ந்து ஈர்த்துப் பிடித்துச் செலுத்தற் கேற்ப; நிலவு விரிந்தன்று - திங்கள் நிலவைப் பொழிகின்றது. காண் எ-று. அவர்குறி, பிழைப்ப, கோதை போல, மெய் சாயினை; நிலவு விரிந்தன்று; ஆதலால், ஏர்புரை யுள்ளி வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. பெய்யாது வைகிய கோதை, பெய்தற்கு எனத் தொடுத்து வைத்துப் பெய்யப்படாது கிடப்பித்த கோதை எனவுமாம். துன்பத்தால் உள்ளம் வெதும்பி மேனி வேறு படும் மகளிர்க்குச் சூடப்படாது வெறிதே வாடிக்கிடக்கும் பூமாலையை உவமம் கூறுதல் மரபு; "பெய்யாப் பூவின் மெய்சாயினளே1" என்று சான்றோர் கூறுப. மகளிரைப் பொதுவாகப் பூமாலையாக ஒப்பித்தல் உவமத்துறைப் புலவர் இயல்பு ஆகலின், ஈண்டுப் பெய்யாது வைகிய கோதை என்றது பெரிதும் பொருத்தமேயாம். சாய்தல், மெலிதல், செய்குறி எனத் தொகைவாய்பாட்டாற் கூறினும் இரவிடைப் போந்து குறிசெய்தல் தலைமகன் செயலாதலின், இறந்த காலம் தொக்க வினைத்தொகையாகக் கொண்டு அவர் செய்த குறி என்றே கோடல் வேண்டும். உள்ளுதல், நினைத்தல். நொதுமலர் ஏர்புரை, அயற்பெண்டிர் முற்பட நின்று தம்முள் எடுத்துரைக்கும் அலர்; பழிப்புரையுமாம். புணரி, அலைகள்; "வெண்டலைப் புணரி2" என்றாற் போல, அலைகடற்கரையில் பரந்து கிடக்கும் மணற்றுகள் வெண்மைநிறமும் மென்மைப் பண்பும் உடைமைபற்றிப் பூமணல் எனப்பட்டது. அலவன் ஓம்பி என்றது, அலவனுக்கு ஊறுண்டாகாமை நோக்கி என்றவாறு, வள்பு, குதிரையிற் கட்டிய கடிவாள வார். வலவன் அலவனது வரவறிந்து தேரை விலக்குதற் கேற்ற ஒளியினை நிலவு கானற்கண் பொழிகின்ற தென்க. களவின்கண் பகலில் வந்தொழுகிய தலைமகனை அது மறுத்து இரவின்கண் வருக என்ற தோழியின் வழிநின்று, அவன் இரவுக்குறி வந்து தலைவியைத் தலைப்பெய்து இன் புற்று வருகையில், அதனையும் விலக்கித் தலைவியை விரைந்து வரைந்து கொள்க எனக் குறிப்பாய் வற்புறுத்தினாள் தோழி; அதனை யுணர்ந்தும் தலைவி யுள்ளத்துத் தோன்றி இருந்த காதல் நன்கு பெருகுதல் வேண்டி, அவன் இரவு வரும் களவொழுக்கத்தையே விரும்பி நின்றானாக, அல்ல குறியால் இரவுக்குறி இடையீடுபடுதல் காட்டியும் காப்புமிகுதி சுட்டி யும் அவனை வரைவுகடாவக் கருதியிருந்த தோழி, முன்னாள் இரவிற்போந்து அல்லகுறிப்பட்டு அலவுற்றுச் சென்றவன் மறுநாள் மாலைப்போதில் தலைவி மனையின் சிறைப்புறத்தே நிற்பது கண்டு, அவன் செவிப்படும் அளவில் நின்று, தலைவி யொடு சொல்லாடத் தொடங்கி, அழகு திகழ அணிந்து கொள்வான். தொடுத்த பூமாலை அணியப்படாது வெறிதே கிடந்து வாடினாற்போல, இரவுக் குறிக்கண் தலைவனைக் கண்டு இன்புறுவான் எண்ணி இருந்த நீ, அல்லகுறி இடையீட்டாலும் காவல் மிகுதியாலும் அது வாய்க்கப் பெறாது வருந்தி மேனி மெலிந்தனை என்பாள், பொய்யாது வைகிய கோதை போல மெய்சாயினை என்றும் அவர் செய்த குறி பிழைத்தமை யன்றி நின் மெலிவுக்கு ஏது பிறிதில்லை என் பாள், அவர் செய்குறி பிழைப்ப என்றும் கூறினாள். செய்குறி பிழைத்தமையால் தலைமகன் சென்றதும், காவற்கடுமையால் தான் குறியிடம் சேறல் அரிதானதும் எண்ணாது, வரைவு கடாவும் குறிப்பால் தலைமகன் ஊரவர் கூறும் அலர் உரைக்கு அஞ்சி வாராதொழிந்தனன் என்பாள், நொதுமலர் ஏர்புரை உள்ளித் தெள்ளிதின் வாரார் என்றாள். இஃது அலர் அறி வுறுத்து வரைவுகடாவும் ஒரு நெறி. இக்கூற்றுத் தோழியதே யாயினும், தலைவி கருத்தாக அவள் மேலேற்றி, அவ்வாறு வாராதொழியும் இரக்கமின்மை அவர்பால் இன்று; அலரால் காதல் சிறக்குமென்பது பற்றி அது விளைதலை விரும்பி ஒருகாலும் வாராதொழியார்; அவரைப் புலத்தல் கூடாது என்பாளாய், வாரார் என்னும் புலவி யுட்கொளல் ஒழிக நின் நெஞ்சத்தானே என்றும், யான் என் நெஞ்சில் அது கரு திற்றிலே னாதலின் நீயும் அவ்வண்ணமே செய்க என்பான், ஒழிக நின் நெஞ்சத் தானே என்றும், இவ்வண்ணம் உரையாடுகையில் திங்கள் தோன்றிக் கடற்கானல் இடமெங்கும் தண்ணிய தன் வெண்ணிலவைப் பொழியவும், அவ்விடத்தே தேர் செலுத்தும் வலவன் அங்குமிங்கும் திரியும் அலவனுக்கு ஊறுண்டாகாதவாறு வள்பினை ஆய்ந்து மாவினைச் செலுத்திச் சேறலைத் தலைவிக்குக் காட்டி, இதுபோலத் தலைவனும் இரவினும் பகலினும் களவு வழியொழுகும் நின் நலம் கெடாதவாறு வரைவுக்குரியன ஆராய்ந்து செய்வானாக என்பாள், ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள் பாய்ந்து ஊர நிலவு விரிந்தன்றால் கானலானே என்றும் கூறினாள். 12. கயமனார் கயமனார் என்னும் பெயர், கய என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த சொல்; பெரியவர் என்பது இதன் பொருள். இதுவே கயவன் என வருமாயின், மக்களினத்திற் கடைப்பட்ட கீழ்மகன் என்று பொருள்படும்; அக்காலை, கை என்னும் சொல்லடியாகப் பிறந்து மேலும் கையன், கையவன், கயவன் என வந்ததாகுமே யன்றிக் கயவென்னும் உரிச்சொல்லடியாக வந்ததாகாது. மதுரைத் தமிழ்ச்சங்க ஏடு ஒன்றில் தான் இது சயமனார் என இப்பாட்டின் இறுதியில் குறிக்கப்பட்டிருந்தது. இவர் பாடியவாகப் பல பாட்டுக்கள் தொகைநூல்களில் உள்ளன. திதியன் அன்னி என்ற இரு பெருந்தலைவர்களிடையே பகைமை தோன்றியது காரணமாக, குறுக்கை என்னுமிடத்தே இருவருக்கும் போருண்டாயிற்று; அப்போரில் திதியனது காவல்மரமாகிய புன்னையைத் தடிந்து அத்திதியனையும் வென்றான் அன்னி என்றும், எனினும் அவன் முடிவில் இறந்தான் என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இவர் பாட்டுக்களில் காணப்படுகிறது. வீரனொருவன் போர்ப்புண் பட்டு வீழ்ந் தானாக, அதனைக் கண்டோர் அவனுடைய தாயின் பேரன்பைச் சுட்டி, "இன்னனாயினன் இளையோன்" என்ற உரை அவட்குச் செல்லுமாயின், "நாளும் தன் மகன் நலத்தை ஆனாது புகழும் அன்னை யாங்கு ஆகுவள்கொல், அளியன்" என்பதாக இவர் பாடியிருப்பது மிக்க உருக்கமாகவுளது பண்டைநாளைச் செல் வர்கள் தங்கள் பெண்மக்களை வளர்த்த திறமும், அவர்கட்குப் பாலூட்டிய பாங்கும், அவர்கள் தக்க வளர்ச்சி எய்தும் போது தந்தையர் காத்தோம்பும் சிறப்பும் இவர் பாட்டில் அழகுறக் காட்டப்படுகின்றன. உடன்போகிய காலத்தில் தாயார் தமது தாய்மையன்பு புலப்பட வுரைக்கும் கருத்தமைந்த பாட்டுக்களையே கயமனார் பெரிதும் பாடியிருக்கின்றார். களவுவழி யொழுகும் காதலரிடையே, கொண்டுதலைக் கழிவதே செயாற்பாலது என்ற துணிவு தோன்றவும் தலைமகன் போக்குக்கு ஆவன செய்யலுற்றான்; தோழியும் உரிய துணையைப் புரிந்து, தலைமகனைக் கண்டு தன் மனையகத்தினின்றும் பிரிதல் வேண்டுதலால், மனவன்மை கரைந்து தலைவிதன் ஆயமகளிரின் அன்பை நினைந்து கண்ணீர் சொரிந்தாள் என்று கூறினாள். இதனை அவற்குக் கூறிய தன் கருத்து, இத்துணை மென்மையுடையாள் உடன்போக்கின்கண் வேண்டப்படும் வன்மையினை எங்ஙனம் உடையளாவள் என நினைந்து தலைவனும் உடன்பட்டு நெஞ்சம் அஞ்சுமாறு உரைப்பது. இதனைக் கயமனார் இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். விளம்பழம் கமழும்1 கமஞ்சூற் குழிசிப் பாசத் தின்ற தேய்கால் மத்தம் நெய்தெரி யியக்கம் வெனில்முதல் முழங்கும் வைகுபுலர் விடியல் மெய்கரந்து2 தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு3 வைஇய செல்வோள் இவைகாண் டோறும் நோவர் மாதோ அளியரோ அளியர்என் ஆயத் தோரென நும்மொடு வரவுதான் அயரவும் தன்வரைத் தன்றியும்4 கலுழ்ந்தன்று கண்ணே இது, தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது5. உரை விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி - விளாம்பழத்தின் மணம் நாறும் பெரிய சூல்வயிறு போன்ற பானையின்கண்; பாசம் தின்ற தேய்கால் மத்தம் - கடைகயிற்றால் அறைப்புண்டு தேய்ந்து சிறுகிய காலையுடைய மத்தினது; நெய்தெரி இயக்கம் - நெய் பெறும் பொருட்டுக் கடையும் ஓசை; வெனில் முதல் முழங்கும் - மன்றுவெளி காறும் முழங்கும்; வைகுபுலர் விடியல் - இரவிருள் புலர்ந்து கெடும் விடியற்காலத்தே; மெய்கரந்து - தன் மெய்யை மூடிக்கொண்டு; தன் கால் அரியமை சிலம்பு கழீஇ - தன் காலில் அணிந்த அரிகள் பெய்யப்பட்ட சிலம்பைக் கழற்றி; பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் - பலவாய் மாட்சிமைப்பட வரிந்து புனையப்பட்ட பந்தினைக் கையிற் கொண்டு சேமமான இடத்தே வைப்பான் செல்பவளாகிய தலைமகள்; இவை காண்டோறும் என் ஆயத்தோர் நோவர் - இவையிற்றைப் பார்க்கும் போதெல்லாம் என் ஆயமகளிர் அனைவரும் என்னை நினைந்து வருந்துவர் அன்றே; அளியரோ அளியர் என - அவர்கள் மிகவும் அளிக்கத்தக்கார் என்று; தான் நும்மொடு வரவு அயரவும் - தான் நும்முடனே வருதலுற்றாளாயினும்; தன்வரைத் தன்றிக் கண் கலுழ்ந்தன்று - அவளது கண் அவள்வழி நில்லாது கலங்கி நீர் சொரியா நின்றது, காண் எ.று. விடியல், மெய்கரந்து, சிலம்பு கழீஇ, வைஇய செல்வோள், நோவர், ஆயத்தோர், அளியர் எனத் தான் வரவு அயரவும், கண், வரைத்தன்றிக் கலுழ்ந்தன்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. பல்லாண்டுகளாய்த் தொடர்ந்து வெண்ணெய் கடைந்தெடுக்கும் பானை விளாம்பழத்தின் மணம் கமழும் என்னும் வழக்கு இன்றும் நாட்டுமக்களிடையே நிலவுகிறது. நாள்பட்டமையின் நிறம் கருத்துச் சூல் நிரம்பிய மகளிர் வயிறு போறலின், கமஞ்சூல் குழிசி என்றார். தயிர்கடையும் பானையில் அதன் நாற்றம் போக விளாம்பழம் பெய்து வைப்பதுபற்றி இவ்வாறு கூறினாரென்றலும் ஒன்று; அதன் உண்மை யாம் அறிந்த அளவில் தெளிய முடிய வில்லை. கடைகயிறு மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் சுற்றியும் திரிதலால் மத்தின் காம்பு தேய்த்தமை தோன்றப், பாசம் தின்ற தேய்கால் மத்தம் எனப்பட்டது. பாசம், கடை கயிறு; பசிய நாரால் திரிக்கப்பட்டுப் பசுமை நிறம் படிந்திருப்பது தோன்றப் பாசம் என்றார், கயிறு என்பது வடமொழியில் பாசம் எனப்படுதல் பற்றிப் பாசம் என்றார் என்பாருமுளர்; அது பொருத்தமாகத் தோன்றவில்லை. வடமொழியில் கடை கயிற்றைத் தாமம் என்றும் அதனால் கட்டுண்டமையின் கண்ணனைத் தாமோதரன் என்றும் வட மொழியாளர் கூறுப. வடசொல்லை வழங்குவது கயமனார் கருத்தாயின் கடைகயிற்றை யுணர்த்தும் சிறப்புடைய வடசொல்லையே வழங்குவர். இதனை யேலாது பாசம் என்றது வடசொல்லே எனப் பேசுவோர், பேச்சு என்ற சொல் ஸ்பீச் என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு என்பாரின் வேறல்லர் என விடுக்க. மத்து, ஈற்றில் அம்முப்பெற்று மத்தம் என வந்தது. வெளில், நாட் காலையில் ஊரானிரைகள் வந்து தொகும் வெளியிடம். இனி, இதனைத் தூண் எனக் கோடலும் உண்டு. மத்தினைத் தூணொடு பிணித்துக் கடைகயிற்றால் தயிர் கடைதல் பற்றி இவ்வாறு கூறினார் என்றுமாம். வைகுபுலர் விடியல், இருள் வைகிப் பையத் தேய்ந்து நீங்கும் விடியற் காலம். வெயில் தோன்றியபின் கடையலுறின், அதன் வெம்மையால் வெண்ணெய் திரளாது நெய்யாய் மோரொடு பிரிவரிதாய் இயைந் தொழியும். அரி, சிலம்புக்குள்ளே பெய்யப்படும் முத்து மணி முதலிய பரல். கழீஇ, கழித்து, பந்து மெல்லிய கயிற்றால் பல்வேறு வனப்புறச் சுற்றிப் புனையப் படுவது என்றற்குப் பன்மாண் வரிப்புனை பந்து எனல் வேண்டிற்று. அளியர், அளித்தக்கார்; இரங்கத்தக்கவர் என்பது கருத்து. கலுழ்ந்தன்று, மென்றொடர்க் குற்றுகரவீற்று அஃறிணை முற்றுவினைத் திரிசொல். கண் கலுழ்ந்தன்று என்றது, ஒருபாற் கிளவி ஏனைப் பாற்கண்ணும் வந்த வழக்கியல். கண்ணைப் பால்பகா அஃறிணை என்று ஒழிதலும் ஒன்று. வரைந்து கோடற்கு வேண்டும் வாய்ப்புக்கள் அமையாமையால் உடன்போக்குத் துணிந்து குறித்த காலத்தே தலைமகன் கொண்டு தலைக்கழிவான் கருதினமை அறிந்து தலைமகள் தோழியொடு சென்று; அவனை அடைந்தாளாக, அவற்குத் தக்க விடையளித்துப் போக்குத் தவிர்க்கும் தோழி, தலைமகள் மனையின்கண் போக்கு நினைந்து செய்த தொன்றினை எடுத்துரைப்பாளாய், தன் புறப்பாடு மனையவர் அறியாமை மறைத்தற்கு நெடிய போர்வையால் தன் மெய்யை மூடிக் கொண்டாள் என்பாள், மெய் கரந்து என்றும், தான் விரும்பி ஆடிய பந்தையும் காலில் இருந்து கழற்றிய சிலம்பையும் உரிய இடத்தில் வைத்தாள் என்பாள், அவை இரண்டையும் தன் கையிலேந்திக் கண்ணார ஒருமுறைக் கண்டு, யான் சென்றபின் என்ஆயத்தோர் இவைகளைக்காணுந் தோறும் என்னை நினைந்து கண்ணீர் சொரிந்து வருந்துவர் என்று எண்ணித் தான் அவர்களை நினைந்து கண்ணீர் விட்டாள் என்பாளாய், இவை காண்டோறும் நோவர் மாதோ என் ஆயத்தோர் என்றும், அவர் அளியரோ அளியர் என்றும், தன் வரைத்தன்றியும் கலுழ்ந்தன்று கண்ணே என்றும் கூறினாள். நின்னோடு செல்லும் உவகை மிகுதியால் கண் கலுழ்தற்பால ளல்ல ளாகலின் அதனை விலக்க முயன்றும், கண்கள் அவள் வரை நில்லாது கலுழ்ந்து நீரைச் சொரிந்தன என்றற்கு நும்மொடு வரவு தான் அயாவும் தன் வரைத்தன்றியும் கலுழ்ந்தன்று கண்ணே என்றாள். நின்பாலுள்ள காதலால் சிலம்பும் பந்தும் முதலியவற்றைத் துறக்கும் வன்மை கொண்டவள், உடன் இருந்து உடன் விளையாடி இன்புறுத்திய ஆயமகளிர் தன் பிரிவின் கண் தன்னை நினைத்து வருந்துவர் என்பது நினைந்தவழி நீராயுருகிக் கண்ணீர் வடிப்பாளாயின், இனிச் செல்லும் சுரத்தின்கண் நிகழ்வன காணின் என்னாவளோ தோழி அஞ்சிக் கூறிய கருத்தும் இதனால் புலப்படுதல் காண்க. "தலைவரு விழுமநிலை1" என்று தொடங்கும் நூற்பா வுரையின் கண் இதனைக் காட்டி, "இந் நற்றிணை போக்குத் தவிர்ந்ததாம்2" என்றும், "தாயத்தி னடையா3" என்ற நூற்பா வுரையில் "என்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண். வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் இவை காண்டோறும் நோவர் மாதோ" என்ற இப்பகுதியைக் காட்டி, "என்பதும் இதன்கண் அடங்கும்" என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இஃது உடன்போக்குத் தவிர்த்தற் பொருட்டுக் கூறியதென்பர் இளம்பூரணர். 13. கபிலர் பண்டைநாளிற் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள், தாம் புனங்களில் வித்திப் பயிர்செய்யும் தினைப்பயிர் விளைந்து கதிர்தாங்கி நிற்கும் காலத்தில், தினைக்கொல்லையிற் பரண் நிறுத்தித் தம் மனைகளில் வளரும் இளமகளிரை அங்கே இருத்தித் தினை காவல் புரியுமாறு விடுவது வழக்கம். அக்காலத்தே அம்மகளிர் தம் மனத்துக்கு இனியவரைக் கண்டு காதலுறவுகொள்வதுமுண்டு. இவ்வாறு செல்வத் தலைமகள் தினைப்புனத்தில் தனக்குரிய தோழியுடன் ஏனல் காவல் செய்து வருங் கால் செல்வத் தோன்றலான தலைவனுடன் காதலுறவு கொண்டு தோழி அறியாமல் ஒழுகல் உற்றாள். இவ்வுறவுக்கோளைச் செந்தமிழர் இயற்கைப் புணர்ச்சி என்பர். பின்னர்த் தோழியும் அதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்டாளெனினும், தலை மகட்குத் தான் அறிந்தமை புலப்படாத வகையில்அவள் மறைத்து ஒழுகினாள். இவ்வொழுக்கத்தால் தலைமகள்பால் வேறுபாடுகள் சில தோன்றலுற்றன. அந்நிலையில், தோழி, தலைமகளை நோக்கி, 'தோழி, மலையிடத்துக் கட்சியில் வாழும் மயில்கள் நின்று பார்க்கின்றனவே; அவ்வாறு இருக்க, அங்கே வாழும் பசுங்கிளிகள், தம்மை அவை பாரா எனக் கருதிப் புனத்திற் படிந்து தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்கின்றன; அதுபற்றி நீ அழுதல் வேண்டா; நீ விரைந்து எழாமையால் அக்கிளிகள் புனத்திற் படிதற்கு எளிதில் இடமுண்டாயிற்று; இவ்விடத்தே அயலாரும் உளராதலின், அவர்கள் நாம் புனங்காவலை நன்கு செய்கின்றிலேம் எனப் புறங்கூறுவர், காண்" என்று கூறினாள். அது கேட்டதும் தலைமகட்குக் கண்களில் நீர் துளிக்கலுற்றன. இச் சொல்லாட்டின்கண் தோழி கூற்றில் அமைந்து கிடந்த புலமைநலம், கபிலர் கருத்தைக் கவரவே, அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடியுள்ளார். 1எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய அழாஅ தீமோ நொதுமலர் தலையே ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்கண் நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற்2 பிதிர்வின் சிறுபல் காய வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி3 மயிலறி பறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே இஃது இயற்கைப்புணர்ச்சியிற் பிற்றைஞான்று தலைவியது வேறுபாடு கண்ட தோழி தலைவி மறைத்தற்குச் சொல்லியது4. உரை எழாஅய் ஆகலின்-கிளிகளின் வரவு கண்டதும் நீ எழுந்து செல்லா தொழிந்தமையின்; எழில்நலம் தொலைய அழாஅ தீமோ-நினது அழகிய மேனி நலம் கெடுமாறு அழுதலைச் செய்யற்க; நொதுமலர் தலை-இஃது அயலார் இருக்கும் இடம்; ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த-தினைக் கொல்லைக் காவலர்களான குறவர் மேய்ந்து அழிக்கவரும் காட்டுப்பன்றியைக் கொன்று அதன் உடலி னின்றும் பிடுங்கிய; பகழி யன்ன சேய் அரி மழைக்கண்-அம்பு போற் சிவந்த அரி பரந்த குளிர்ந்த கண்களையும்; நல்ல பெருந் தோளோய்-நல்ல பெரிய தோள்களையும் உடையவனே; கொல்லன் எறி பொன் பிதிர்வின்-கொல்லன் எறியுங்கால் பழுக்கக் காய்ந்த இரும்பினின்றும் சிதறிப் பரக்கும் தீப்பொறி களைப் போல; சிறுபல் காய வேங்கை வீயுகும்-சிறிய பல காய்களையுடைய வேங்கையின் பூக்கள் உதிரும்; ஓங்கும் மலைக்கட்சி-உயர்ந்த மலைப்பக்கத்தேயுள்ள கட்சிகளில் வாழும்; மயில் அறிபு அறியா மன்னோ-மயில்கள் தம் செயலைப் பார்த்துக்கொண்டிருத்தலை அறியாமல்; பைம்புறக்கிளி பயில் குரல் கவரும்-பசிய புறத்தையுடைய கிளிகள் முற்றிய கதிர்களைக் கவர்ந்து போகின்றன வாகலான் எ.று. அறியுமாயின் இவ்வாறு செய்யா என்பது ஒழியிசை. தோளாய், எழாஅய் ஆகலின், பைம்புறக் கிளி, மயில் அறிபு அறியாமல், பயில்குரல் கவரு மாகலினாலும், இது நொதுமலர் தலையாதலாலும், எழில்நலம் தொலைய அழாதீமோ என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க. எழில், மேனிக்கண் தோன்றும் உயர்ச்சி. அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது; "ஞாணுளர்தீயே1" என்றாற் போல, மோ. அசைநிலை, தொலைய என்னும் செயவெனெச்சம் காரணகாரியப் பொருட்டு, தலை, இடம்; நனந்தலை, மலர்தலை என்றாற்போல. மாவெனப் பொதுப்படக் கூறினமையின், தினைப்புனத்துக்குச் சிறப்புடைய பன்றி கொள்ளப்பட்டது; யானையுமாம். பகழி, அம்பு, சேயரி, சிவந்த வரிகள். பொற்பிதிர்வு வேங்கையின் பூவுக்கு உவமம். வேங்கை சிறுசிறு காய்களை யுடைய தாகுங்கால் பூக்கள் உதிருமாகலின், சிறுபல் காய வேங்கை வீயுகும் என்றார். அறிபு, அறிதல் என்னும் பெயர்ப்பொருட்டு, குரல்-தினைக்கதிர், கட்சி சேருமிடம்; "கட்சிமஞ்ஞை" "கட்சி காணாக் கடமா நல்வேறு2" என்புழிப் பழையவுரைகாரர் கூறுவது காண்க. அறியா, ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் கவரும் என்னும் வினை கொண்டது. மன், ஒழியிசை, ஓ, அசைநிலை, வயிற்றுப் புறத்தினும் கிளியின் முதுகு மிகப் பசந்திருத்தலின் பைம்புறக் கிளி என்றார். களவு நெறியில் தலைமகள் தலைவனொடு செய்து கொண்ட காதலுறவாகிய இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்ததனைப் பெருநாணத்தால் மறைத்தொழுகினா ளாயினும், உடனிருந்த உயிர்த்தோழி சில குறிப்புக்களால் உணர்ந்து கொண்டாளாக, தலைமகளோ உள்ளத்தே புதிதாக இடம் பெற்ற தலைமகனது நினைவு இடையறவின்றி நின்றமையின், அவளது நினைவிலும் சொல்லிலும் செயலிலும் அடிக்கடி மாற்றம் தோன்றி மயக்கின மையால், புனத்தின்கண் தினைகாவல் சிறிது வழுவுவதாயிற்று. பைங்கிளிகள் சேய்மையில் தோன்றும் போதே தட்டையும் குளிரும் கவணும் கொண்டு ஓப்பும் இயல்பினளாகிய தலைமகள், அச்செயற்கண், நினைவு வேறுபடுவதால் அயர்ந்தவழிக் கிளிகள் போந்து படிவதால் தோழியும் ஆயமும் முற்பட்டோட ஓடுவதும், ஓப்புமாறு தூண்டியவழி யன்றி ஓப்பாமையும் தலைமகள் செயல்களாயின. கிளியினம் பெருகி வருவது கண்டு, ஒருகால் தோழி, தான் ஒருபாற் செல்பவள், தலைவியைப் பிறிதொருபாற் சென்று கிளியை யோப்புமாறு சொன்னாள். தலைமகள் நினைவு தலைவன்பால் ஒன்றியிருந்தமையின் தோழி கூறியது. அவள் செவியிற் படவில்லை; அதனால் கிளியோப்பற்கு எழாது இருந்தொழிந்தாள்; அது கண்ட தோழி, எழாஅய் ஆகலின் என்றாள். என்றது, நீ கிளியோப்புதலை விரும்பிச் செய்கின்றலை; இனி, இதனை நின் தாய்க்கு அறிவித்தலன்றி வேறு செயலில்லை என்பது பட நின்றமையின், தலைமகள் உள்ளத்தே அச்சொற்கள் பெருங்கலக்கத்தை விளைவித்து அவள் மேற்கொண்டிருக்கும் காதலுறவுக்கு இடையூறு நேரும் என்ற எண்ணத்தை எழுப்பவே, மேனியில் வேறுபாடும் கருத்தில் கவலையும் கொண்டு கண்ணீர் துளிக்கலுற்றாள்; கண்ட தோழி, எழில்நலம் தொலைய அழாஅதீமோ என்றாள். தொலைய என்ற வினையெச்சம் தொலைதலால் எனவும், தொலையுமாறு எனவும் இருபொருள்பட நிற்ப தன்றோ? எழில்நலம் தொலைய என்றது, தனது காதலுறவு காரணமாகத் தன் மேனிநலம் குன்றினது போலும் என நினைந்து தலைவி வருத்தமுற்று அழுதல் மேவினள் என்றும். தலைவி கண்ணீரைக் கண்டு தோழி கூறியது "அழாதே, அழுதால்நின் நலம் கெடும், அயலார் அறியின் ஆராய்ச்சிக்கு இடனாகி நின் ஒழுக்கத்துக்கு ஏதமுண்டாம்" என்று ஒலித் தமையின் தலைவிக்கு அழுகை மிக்க தென்றும் கொள்க. நொதுமலர் தலை என்றது, அழாதே என்றற்கு ஏதுவாய் நின்றது. குளிர்ந்த கண்ணும் பெரிய தோளும் உடையை யாதலால், விரைந்து எழுந்து செய்வன செய்யாமை நன்றன்று என்பதுபட மழைக்கண் நல்ல பெருந் தோளோய் என்றும் அவள் கண் சிவந்திருப்பதையும், அதற்குரிய ஏது நிகழ்ச்சி யையும் தான் அறிந்திருக்குமாறு குறிப்பாள் ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழியன்ன சேயரி மழைக்கண் என்றும் கூறினாள். மாவுடலினின்றும் பறிக்கப்பட்ட பகழி, குருதி படிதலால் செம்மை நிறமும் உடலில் மூழ்கினமையின் வெம்மையும் உடையதாகலின், அதற்கேற்ப, மழைக்கண் என மாற்றினான். பகழி யன்ன சேயரி மழைக்கண், நல்ல பெருந் தோள் என நின்ற தொடர்கள். கண் சிவந்தும் தோள் மெலிந்தும் தான் மேனி வேறுபட்டதாகவும், அதற்கேதுவாகிய காதலன் உறவைத் தோழி அறிந்திருப்பதாகவும் தலைவி மனத்தில் நினையுமாறு செய்தன. சேயரி மழைக்கண் என ஒழியாது, காவலர் மா வீழ்த்த பகழி யன்ன கண் என விதந்தோதியது, தலைமகள் தன் கண்ணாகிய அம்பினால் தலைமகனைத் தாக்கி அவன் உள்ளத்தைக் கவர்ந்து உறவு கொண்ட இயற்கைப் புணர்ச்சியைச் சுட்டி நின்றது. பொற்பிதிர் போல ஒளிதிகழும் வேங்கைப்பூ காய் தோன்றும் காலத்தில் அம்மரத்தினின்றும் உதிர்ந்து நீங்கும் என்றது, பிறந்த மனைக்குத் தம் பொற்பால் அழகு விளங்கத் தோன்றிய மகளிர், காமச் செவ்வி எய்துங் காலத்துத் தம் பெற்றோரின் நீங்கிப் பிறர்பால் உள்ளத்தை விடுதல் தவறன்று. இயற்கையறம் எனத் தோழி தலைவியின் செயற்கு அமைதி கூறுவாளாய், பொற்பிதிர்வின் சிறுபல் காயவேங்கை வீயுகும் என்றதனால் உள்ளுறுத் துரைத்தாள். தம் களவை மயில்கள் அறிதலையறியாமல் பைங்கிளிகள் பயில் குரல் கவர்கின்றன என்பாள், ஓங்கு மலைக்கட்சி மயில் அறிபு அறியா பைம்புறக்கிளி பயில் குரல் கவரும் என்றாள்; என்றது, பரணின்கண் உடனிருக்கும் தோழியாகிய தான் அறிதலை எண்ணாது, தலைவி தன் களவு ஒழுக்கினை நிகழ்த்துகின்றாள் எனத் தோழி உரைப்பதாக அமைகின்றது. மயில் அறிபு கிளிகளின் செயற்கு இடையூ றாகாதவாறு போலத் தன் அறிவு தலைமகளது ஒழுக்கத்துக்கு இடையூறாகாது என வற்புறுத்தியவாறாயிற்று. மயில் அறி வதைப் பைங்கிளி அறியாது போந்து குரல் கவர்தற்கண் தோன்றும் காட்சியில் ஈடுபட்டதனால் நீ உடனே எழா அயாயினை; அதுபற்றி வருந்தற்க என்பாள் எழாஅய் ஆகலின் எழில் நலம் தொலைய அழாதீமோ எனத் தோழி தேற்றி வற்புறுத்தினாள் என்க. "நாற்றமும் தோற்றமும்1" என்று தொடங்கும் நூற்பாவுரையில், இப்பாட்டைக்காட்டி, "இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயும் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். 14. மாமூலனார் மூலன் என்பது இயற்பெயர்; பெரிய மூலன் என்ற பொருள் பட மாமூலன் என்றும் இப்பெயர் வரலாம்; மாமூலன் என்பதே இயற்பெயராதற்கு இடமுண்டு. இவ்வகையில் நோக்கின் இச்சான்றோரின் இயற்பெயர் மாமூலன் என்றும், இவரது புலமைச் சிறப்புப்பற்றி ஆர் விகுதி புணர்த்து மாமூலனார் என முன்னோர் வழங்கினர் என்றும் கோடல் சாலும். மூலங்கீரனார் என்றோரு சான்றோரும் புலமைப் பெருமக்கள் நிரலில் உள்ளனர். அவரை இம்மூலனார்க்கு மகன் என்கின்றனர்; மாமூலங்கீரனார் என்று கூறப்படாமையின் அக்கருத்து வலியுடையதாக இல்லை. மாமூலனார் பாட்டுக்கள் பல இதன் கண்ணும் ஏனைத் தொகை நூல்களின் கண்ணும் உள்ளன. மாமூலனார் ஒரு வரலாற்றாசிரியர்; அவருடைய பாட்டுக்களில் வரலாற்றுக் குறிப்புக்கள் பல்கியுள்ளன. தமிழ் மூவேந்தருள் சோழன் கரிகாற் பெருவளவனொடு போருடற்றிப் புண்ணுற்று வடக்கிருந்து இறந்த நெடுஞ்சேரலாதன் செய்திறம் கேட்ட அவன் நாட்டுச் சான்றோர் சிலர் உயிர் நீத்ததும், சேரமான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் அகப்பாவை யழித்து அதன் மதின்மேலிருந்து களவேள்வி செய்ததும், பெருஞ்சோற்றுதியன் நாடு கண்ணகற்றியதும்2, அவன் பெருஞ்சோறளித்த பெருவிழாச் செய்தியும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் விற்பொறித்ததும், கடம்பத்தீவு3 களிலிருந்து கடற்குறும்பு செய்து கடல்வாணிகத்துக்கு ஊறுசெய்த கடம்பரை வென்று வெருட்டியதும் வேறுபிற செய்திகளும் காணப்படுகின்றன. இப்போது பழனி என மருவி வழங்கும் பண்டைநாளைப் பொதினி நகர்க்கண் இருந்து நெடுவேள் ஆவி என்பான் ஆட்சிபுரிந்ததும், அக்காலத்தே ஆவி நாட்டிற் புகுந்து அரம்புசெய்த மழவர் என்ற குதிரைப்படை மறவர்களை வென்று அவன் ஒடுக்கியதும், வேங்கடமலையின் வடக்கிலுள்ள நாடுகளில் வேற்று மொழிகள் நிலவியதும், வேங்கட வரைப்பைத் தமிழ்வேந்தர் மூவரும் ஒருசேரக் காத்தோம்பியதும், அங்கேயிருந்து நாடுகாவல் புரிந்த புல்லி, கொண்கான நாட்டு நன்னன், முதுகுன்ற நாட்டுக் கண்ணன் எழினி, இவ்வாறே, அள்ளன், அதியன், கட்டி, பாணன் முதலியோர் தானைத் தலைவராய் விளங்கியதும் அவர் பாட்டுக் களிலிருந்து அறிகின்றோம். தமிழ் நூல்களின் குறிப்புக்களை நோக்காது, வடமொழியாளர், கங்கர் கட்டியர் கடம்பர் அதியர் ஆவியர் முதலாயினார் வரலாறுகளைப் பொய்புணர்த்துச் செப்பேடுகளிலும் பிறவற்றிலிலும் குறித்திருக்கும் புன்மை நன்கு தெளிவாகிறது" தடவர்களைத் தோடர், தொதுவர் (நீலகிரி மலைவாணர்) என்றும், முதியரை (மேலைமலைத் தொடரில் வாழும்) முதுவர் என்றும் வழுப்பட வழங்குதற்கு மேலே காட்டிய புன்மையே காரணமாகும். மழவர், கோசர், நந்தர், மோரியர், வடுகர் முதலியோரைப் பற்றிய குறிப்புக்களும் மாமூலனார் பாட்டில் மல்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றைத் தமிழ் நன்கறிந்த தமிழுள்ளம் படைத்த தமிழ் நன்மக்களே முற்பட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிய நினைந்து எழுதுங்காலம் உண்டாயின். தமிழின் நலத்தை - தமிழ்வாழ்வின் சிறப்பைத் தமிழரும் அவரல்லாத பிறரும் அறிந்து கோடற்குரிய வாய்ப்பு இனிது பிறக்கும். தமிழ் மாநில அரசு இதனை மேற்கொண்டு செய்யின் அரசியல் வரலாற்றிலே தமிழ்நாடு தலைமையான இடத்தைப் பெறும் என்பது ஒருதலை. களவுநெறிக்கண் ஒழுகும் காதலன், ஒருகால் கடமை பற்றிப் பிரிந்தேகுகின்றான். அவனது பிரிவாற்றாது தலைமகள் பெரிதும் வருந்தினாளாக, அவளை ஆற்றுவிப்பது கருதிய தோழி தலைமகனைப் பழித்துச் சில சொற்களை மொழிகிறாள். அது கேட்கப் பொறாளாய தலைமகள், "காதலர் நாம் மேனி வேறுபட்டு வருந்தவும் ஊரவர் அலர் கூறவும் நம்பால் அருளின்றிப் பிரிந்தாராயினும், அவர் நம்மொடு பெருநட்புற்றவ ராகலின், நமது வருத்தம் உணர்ந்து வருதல் தப்பார்" எனக் கூறுகின்றாள். தலைவியது இக்கூற்றின்கண் காதலன் தன் பிரிவால் தனக்கு வருத்தம் எய்துவித்த போதும், காதலியின் காதல் மிகுதி அவன்பால் துனி கொள்ளாவாறு செய்யும் மாண்பைக் கண்ட மாமூலனார், அதனை வியந்து இப்பாட்டின்கட் பொதிந்து பாடி யுள்ளார். தொல்கவின் தொலையத் 1தோள்நலம் சாய நல்கார் நீத்தனர் 2என்றி நல்குவர் நட்டனர் வாழி தோழி குட்டுவன் அகப்பா அழிய நூறிச் 3செம்பியல் 4மதிற்றீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது அலரெழச் சென்றன ராயினும் மலர்கவிந்து மாமடல் அவிழ்ந்த காந்தளஞ் 5சாரல் 6இனஞ்சால் வயக்களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் கடுமான் புல்லிய காடிறந் தோரே இஃது. 7இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. உரை தொல்கவின் தொலைய - நமது பழைய அழகு கெடவும்; தோள்கலம் சாய - தோளின் பெருமை மெலிந்து குன்றவும்; நல்கார் நீத்தனர் என்றி - இன்று நம்மை அருளாது காதலர் நம்மைக் கைவிட்டுப் பிரிந்தார் என்று சொல்லுகின்றாய்; நல்குவர் நட்டனர் - நாளைத் தமது அருளைச் செய்யா தொழியார், நம்மைப் பிரியேன் என்று சொல்லி நட்புச் செய்தாராகலின்; தோழி -; வாழி-; குட்டுவன் - பல்யானைச் செல்கெழு குட்டுவன்; அகப்பா அழிய நூறி - பகைவருடைய அகப்பா என்னும் நகரையழித்து; செம்பியல் மதில் தீ வேட்ட ஞாட்பினும் - அங்கே செம்பினால் இயன்றுள்ள மதிலைத் தீயிட்டழித்த போரில் எழுந்த ஆரவாரத்தினும்; மிகப்பெரிது அலர் எழச் சென்றனர் - மிகமிக அலருண்டாகப் பிரிந்தனர்; ஆயினும் - மலர் கவிந்து மாமடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரல் - மலர்கள் நிறைந்த பெரிய மடல்விரிந்த காந்தட்பூச் செறிந் திருக்கும் மலைச் சாரலில்; இனஞ்சால் வயக்களிறு - இனத்தோடு அமைத்த வலிய களிறு; பாந்தள் பட்டென - மலைப்பாம்பின் வாய்க்குள் அகப்பட்டொழிந்ததாக; துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் - கண்ணுறங்க லாகாத துக்கத்தால் அஞ்சிக் கதறிப் பிடியானை புலம்ப; நெடுவரை விடர் அகத்து இயம்பும் - நெடிய மலைப்பிளவில் அதன் குரல் எதிரொலிக்கும்; கடுமான் புல்லிய காடு இறந்தோர் - விரைந்த செலவினை யுடைய குதிரைகளுடைய புல்லி யென்பவனது வேங்கடநாட்டுக் காட்டைக் கடந்து சென்ற காதலராகிய தலைவர் எ.று. தோழி, கவின் தொலைய, நலம் சாய நல்கார் நீத்தனர் என்றி; காடு இறந்தோர் சென்றன ராயினும், நல்குவர் நட்டனர் ஆதலின் என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. தொலைய, சாய என்ற வினையெச்சங்கள் அடுக்கி நின்று நீத்தனர் என்னும் வினை கொண்டன. நல்கார், முற்றெச்சம். என்றி, முன்னிலை முற்றுவினைத் திரிசொல். நல்குவர் என்றது எடுத்த மொழி; நட்டனர் என்றது அதற்கு ஏது; ஆகலின் என்றது வருவிக்கப்பட்டது. குட்டுவன் என்றது, ஈண்டுப் பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேரமானை, அவன் அகப்பா அழிய நூறிய செயலை, "கடிமிளைக் குண்டு கிடங்கின், நெடுமதில் நிரைப் பதணத்து, அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ1" என்று சான் றோர் கூறுவது காண்க. செம்பியல் மதில், செம்பினாற் செய்யப்பட்ட மதில், "செம்புறழ் புரிசை2" எனப் பிறரும் கூறுப. இங்கே குறிக்கப்படும் அகப்பா மலையாள மாவட்டத்து வள்ளுவ நாட்டுப் பகுதியில் இருந்து மறைந்தது; அதன் நினைவுக்குறியாக, மீப்பா, மீப்பாயூர் என்ற பெயருடன் ஒருபகுதி நிற்கிறது. தீவேட்டல், களவேள்வி செய்தல். ஞாட்பு போர். களிறுகள் கூட்டமாக வாழும் இயல்பின வாதலின், இளஞ்சால் வயக்களிறு என்றார். பாந்தள், மலைப்பாம்பு, துஞ்சாத் துயரம் எனக்கொண்டு, துஞ்சாமைக்கு ஏதுவாகிய துயரம் என்றலும் ஒன்று, வயக்களிற்றை விழுங்கிய பாந்தட்குப் பிடியை விழுங்குதல் அரிதன்மையின், அஞ்சுதல் பிடிக்கு அமைவதாயிற்று. விடரகம், மலைப்பிளவு. இயம்புதல், ஈண்டு எதிர் ஒலித்தல், புல்லி, வேங்கடநாட்டுத் தலைவன்; இவன் களவர் மரபினன்; தமிழினத்தைச் சேர்ந்தவன்; இதனை யுணராத ஆராய்ச்சியாளர் சிலர் களவரைக் களப்பிரர் எனக் கருதிக் கூறுவாராயினர். களப்பிரர் பல்லவர்க்கு முன்பு வடபுலத்தினின்றும் போந்த நாடோடிகள்; அவர் எங்கும் அரசு நிலையிட்டு வாழ்ந்தது இல்லை என்பது வராகமிகிரர் குறிப்பாலும் விளங்குகிறது. அவர்கள் தமிழரல்லர். அவர்கள் காலத்தில்தான் தமிழகம், தமிழிலக்கியம் பண்பாடு சமயம் அரசியல் வாணிகம் முதலிய துறைகளில் சீரழிந்தது. இன்னோரன்னவற்றைச் சிறிதும் ஆராயாது சில வரலாற்றிஞர் களவரே களப்பிரரென நாகூசாது நவில்கின்றனர். களப்பிரன் என்ற சொல் தமிழ் நூல்களிலும் செப்பேடுகளிலும் எளிதில் வழங்கப்பட்டுள்ளது; தமிழ் நாவுக்கு இனிது வழங்கலாகாத போதன்றோ களப்பிரன் என்பது களவன் எனச் சிதையும். மேலும், களப்பிரன் என்ற சொல்லினும் களவன் என்ற வழக்கு மிக்க தொன்மை வாய்ந்தது; பழஞ்சொல் பிற்காலத்தில் தேய்ந்தொழியுமேயன்றி நீண்டு ஒலியாது. இது கிடக்க, புல்லியின் கொற்றம் வேங்கடமலைத் தொடரிலும், அதன் மேற்கில் மேற்குமலைத் தொடர்காறும் உள்ள நிலப்பகுதி யிலும் பரந்திருந்தது. சித்தூர் மாவட்டத்தின் மேலைப்பகுதியைக் கீழ்ப்புலி நாடு எனவும், மைசூர் நாட்டின் வடபகுதியை மீப்புலி நாடு எனவும் ஆங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பது இக்கருத்தை வலியுறுத்தும். இப்புலிநாட்டரசை மாய்த்த சிறப்புத் தோன்ற ஆந்திர வேந்தர்குல முதல்வன் புலிமாய் என்று சிறப்பிக்கப் பட்டான். அதனால் அவனை ஆந்திர கன்னட நாட்டுக்குறிப்புகள் ஸ்ரீ புளுமாயி என்று குறிக்கின்றன; இவ்வுண்மையை மறைத்தற்குப் பொய்க்கதைகள் பல வடமொழியில் புனைந்து கூறியதோடு செப் பேடுகளில் ஏற்றி எழுதிய பொல்லாங்கும் நிகழ்ந்துள்ளது. தெளிந்த தமிழறிவும் நடுநின்று நோக்கும் நேர்மையுணர்வும் இன்றிப் பழந் தமிழின் பெருமைகண்டு பொறாமையும் பொய்க்கோளும் கொண்டோர், ஆங்கிலத்தில் எழுதிய சில வரலாற்று ஆராய்ச்சியுரைகளில், குப்புறத் தள்ளியதோடு நில்லாமல் குதிரை குழியும் பறித்தது என்பது போல, உண்மையை மறைத்ததேயன்றிப் பொய்ம்மையும் பெய்து கூறியுள்ளனர். புல்லிய காடு என்றவிடத்து புகலிய என்றது ஆறன் உருபேற்றது. களவின்கண் காதலுறவு கொண்டொழுகும் தலைமகன் கடமை காரணமாகப் பிரிந்தானாக. அப்பிரிவின்கண் காதலன் விரைந்து மீளானாயவழித் தலைவி ஆற்றாது மெலிவது விலக்கி, அவன்பால் உளதாகிய காதற்பண்பை நினைந்து ஆற்றியிருத்தற்கு வேண்டும் சூழ்ச்சியை மனம் கொண்ட தோழி, தலைவன் நின் நலம் தொலையவும் தோள்மெலியவும் பிரிதல் நன்றன்று என இயற்பழித்தாள்; தன் கண் முன் நின்று தன் காதலன் இயலைத் தோழி கண்ணறப் பழித்தது கேட்கப் பெறாத தலைவி, அவள் கூற்றையே கொண்டெடுத்துத் தொல்கவின் தொலையத் தோள்நலம் சாய நல்கார் நீத்தனர் என்றி என்றாள். ஒரோவழித் தலைவியின் பக்கல் நின்று தலைமகனை "அன்பிலை கொடியை என்றலும் உரியள்1" ஆதலின், தோழி இவ்வாறு இயற்பழித்தாள். நல்காமை அன்பின்மையும் நீத்தல் கொடுமையும் சுட்டி நின்றன. மிகப்பெரிய அலரெழப் பிரிந்தாராயினும், நல்குவர், நட்டன ராகலான் எனத் தலைவி தோழியை மறுத்துக் கூறியது, இயற்படமொழிதல், தலைவர் நல்குவராயின் அலருண்டாகப் பிரியார் காண் எனத் தோழி கூறலும், மிகப்பெரிது அலரெழச் சென்றன ராயினும் என்றாள்; ஒருகால், சிறிது தணந்தவழி நீ கூறவதமையும், அன்புடையார் நெடுஞ்சேய்மையிற் பிரிகுவரல்லரோ காண் எனத் தோழி மேலும் கூறினாளாக, கடுமான் புல்லியுறையும் வேங்கட வரையைக் கடந்து சென்ற வழியும், நம்மை மறவாது வந்து சேரும் அன்புமிக வுடையர் என்பாள், கடுமான் புல்லிய காடு இறந்தோர் என்று கூறினாள். "நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு2" என்பது பற்றி, நட்டன ராகலான் என்று தலைவி ஏதுக் காட்டினாள். அலரெழுதலும் ஒராற்றால் காதலொழுக்கத்துக்கு ஆக்கமே என்பது குறிப்பு. "அலரின் தோன்றும் காமத்திற் சிறப்பே1" என்பர் ஆசிரியர். எனக்கு உயிர்த்தோழியாகிய நீ இவ்வாறு கூறல் கூடாது என்பாள், வாழி தோழி எனத் தலைவி மொழிந்தாள். களிறு பாந்தள் வாய்ப்பட்டமைக்கு ஆற்றாத பிடியானை அஞ்சியெடுத்த அழுகையொலி விடரகம் எதிரொலிக்கும் என்றது, பிரிவு வாய்ப்பட்டு நீத்தமை நினைந்து யாம் ஆற்றாது எய்தும் வருத்தத்தை அவரும் உணர்ந்து சிறிதும் நில்லாது வருகுவர் எனத் தன் உட்கோளைத் தோழி உணரத் தலைவி குறிப்பால் உரைத்தவாறு. 15. பாண்டியன் அறிவுடைநம்பி பாண்டியன் அறிவுடைநம்பி பாண்டிநாட்டை ஆண்டு வருகையில், சோழநாட்டில் உறையூரின்கண் இருந்து கோப்பெருஞ்சோழன் சோணாட்டு அரசு நடாத்தி வந்தான். அச்சோழன்பால் உயிரொன்றிய கேண்மை கொண்டு ஒழுகிய பிசிராந்தையார் இப்பாண்டியன் காலத்தவர்; பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர். நம்பி அரசு எய்திய தொடக்கத்தில் வரிசையறியாக் கல்லென் சுற்றத்தார் வயப்பட்டு இன்பத் துறையில் எளிமையுற்றான். அக்காலத்தே பிசிராந்தையார் போந்து இவனுக்கு நல்லறிவு கொளுத்தினார். அதனால் தெளிவு மிகப்பெற்ற இந்நம்பி அறிவுடைநம்பி எனச் சான்றோரால் சிறப்பிக்கப்பட்டான். இவனது ஆட்சி "வேந்த னும் அல்லவை செய்யான் காக்கும்" எனப் பிசிர்க்குடி ஆந்தை யார் பாராட்டும் பெருமை பெற்றது. இவனுடைய ஆட்சியில் சான்றோர் இனிது வாழ்ந்தனர். அறிவுடை நம்பியும் சிறந்த புலமை நிறைந்து விளங்கினான். மக்கட் செல்வத்தின் மாண்பை வியந்து பாடி, "மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே" என்று வற்புறுத்தும் இவனது பாட்டு மிக்க இன்பம் தருவது. அரசர் குடியிற் பிறந்த ஆண்டகை யாதலால், மகளிர் கூற்றாகச் சொல் நிகழ்த்துமிடத்தும் சிறிது வலிதாகக் கூறுமாறு இவன் பாடிக் காட்டுகின்றான். களவின்கண் ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாதலை அறிந்த தோழி தலை மகட்குக் கூறுவாளாய் அவ்வபோது எழுந்து சென்று தினை கவரும் கிளிகளைக் கடியாயாயின், "அன்னை, சிறுகிளி கடிதல் தேற்றாள் இவள் எனப் பிறர்த்தந்து நிறுக்குவள்;" அதனால், "உறற்கு அரிதாகும் அவன் மலர்ந்த மார்பு" என்பதும் இனி தினையும் விளைந்து விட்டது; இற்செறிப் புண்பது ஒருதலை; ஆகவே தலைமகன், இக்களவு நெறியைக் கைவிட்டு வரைந்து கோடலே செயற்பாலன் என்பாளாய், "கொய்யா முன்னுகும் குரல் வார்பு தினையே, அருவி யான்ற பைங்கால் தோறும், இருவி தோன்றின" என்று உரைப்பதும் யாம் மேலே கூறிய கருத்தை வற்புறுத்துவனவாகும். இந்த நம்பி பாடியவாக அகத் திலும் புறத்திலும் குறுந்தொகையிலும் இந்நூலின் கண்ணும் பாட்டுக்கள் உள்ளன. களவின்கண் ஒழுகும் தலைமகனிடையே விரைய வரைந்து கொள்ளும் குறிப்புண்மை தோழிக்குத் தோன்றவில்லை. அதனால் அவட்குக் கவலை பெரிதாயிற்று. தலைமகள்பால் சேட்படையும் குறியிடையீடும் பிறவுமாகிய முட்டுக்கள் வரைவு முயற்சியை விரைவுபடுத்துவதாகத் தோன்றாமையால், அவற்றின் இடையே பெறப்படும் இன்பத்தை விழைந்து வரைவை நீட்டிப்பது நன்றன்று என்று உணர்ந்த தோழி, தலைவன் மனம் வரைந்து கோடலில் செல்லுமாறு செய்யும் சூழ்ச்சி யமைந்த சொல்லாட்டினை மேற்கொண்டாள். ஒருநாள் இரவு, தோழி தலைவனைக் குறியிடத்தே கண்டு, "சேர்ப்பனே, நீ போந்து, பூப்போன்ற எம் புதுநலம் உண்டு இன்புற்றபோது இருந்த புதுமையும் அருமையும் இப்போது யாம் உடையேமல்லேம்; அதனால், கற்புடைய மகளொருத்தி ஈன்ற குழவியைப் பேயொன்று போந்து கைப்பற்றிக் கொள்ள, அவள் வருந்துவது போல, எமது நாணம் இழந்து யாமே வருந்துவே மாயினேம்; இவ்வூரும் அலர் செய்வதாயிற்று; இனி, இவ்வலருரை எத் துணைப் பெருகினும் பெருகுக; யாம் செய்வது ஒன்றும் இல்லை எனக் கையற்றொழிந்தேம், காண்" என்று கூறினாள். தோழியது இக்கூற்று, அறக்கழி வுடைய தாயினும் பொருட் பயம் படவரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு இவ்வுரை ஒத்தியல்வது தேர்ந்து இதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான். முழங்குதிரை 1கொழீஇய மூரி யெக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப பூவின் அன்ன2வெம் புதுநலன் உண்டு 3நீபுணர்ந் தனையேம் அன்மையின் யாமே நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி மாசில் கற்பின் மடவோள் குழவி 4பேஎய் வாங்கக் கைவிட் டாங்குச் சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்கஇவ் வூரே. இது, வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது. உரை முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் - முழங்குகின்ற அலைகளால் கொழிக்கப் பெற்ற பெரிய மணற்பரப்பை; நுணங்கு துகில் நுடக்கம் போல - நுண்ணிய நூலானாகிய ஆடை சுருண்டு ஓடுவது போல; கணங்கொள ஊதை தூற்றம் உரவுநீர்ச் சேர்ப்ப - திரட்சி யுண்டாக ஊதைக் காற்று விசும் பரந்த கடலைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவனே; பூவின் அன்ன எம் புதுநலம் நீ உண்டு புணர்ந்த அனையேம் அன்மை யின் - புதிது மலர்ந்த பூப்போன்ற எமது புதிய இளநலத்தை முதன்முதலாக எம்மிற்கூடி நீ நுகர்ந்தபோது இருந்த புதுமையும் அருமையும் இப்போது உடையேமல்லேம் ஆதலால்; யாம் - இப்போது யாங்கள்; நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி - செம்மைப் பண்பினையுடைய எம்முடைய நெஞ்சம் தாங்கும் அளவும் தாங்கி; மாசில் கற்பின் மடவோள் குழவி - குற்றமில்லாத கற்பையுடைய இளமகள் ஒருத்தி ஈன்ற குழ வியை; பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு - பேய்மகள் போந்து தனக்கெனப் பற்றி எடுக்க அவள் கைவிட்டாற் போல; சேணும் எம்மொடு வந்த - அறிவு தோன்றிய நாள் தொட்டே எம் மோடு ஒன்றி வந்த; நாணும் விட்டேம் - நாணத்தையும் கைவிட்டேம்; இவ்வூர் அலர்க - இனி இவ்வூரவர் எத்துணை அலர் கூறுவராயினும் கூறுக, யாம் செயற்பாலது ஒன்று மில்லை எ-று. சேர்ப்ப, புதுநலம் உண்டு நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாம், நெஞ்சம் தாங்கத் தாங்கி, மடவோள் குழவி கைவிட்டாங்கு நாணும் விட்டேம், இவ்வூர் அலர்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மூரி எக்கர், மேடும் பள்ளமுமாகத் திரண்டு குவிந்த நுண் மணற் பரப்பு, நுணங்கு துகில், சுருண்டு புரளும் நூலாடை, நுடக்கம், திரட்சி; சுருளுமாம். எக்கர் மணல் கணங்கொளத் தூற்றும் என இயைக்க. ஊதை, காற்று, உரவுநீர். பரந்த நீர் மிக்க கடற் பரப்பு; பரந்த கடல் என்றுமாம். பூவின் அன்ன புதுநலன் - பூவின் மணமும் மென்மையும் ஒளியும் போன்ற புதுநலம்; இளமைப் புதுநலம். புணர்ந்த அணையேம், புணர்ந்தனையேம்; அனையேம், அத்தன்மையேம். நேர்பு, நேர்மை. கணவன் போரிற் புண்பட்டு வீழ்ந்தவழி அவன் மனைவியின் கற்புமாண்பு பேய் நெருங்கித் தீண்டாதவாறு காக்கும் என்பாராய்த் தொல்காப்பியர், "இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன் துன்னுதல் கடிந்த1" செயல் கற்புடை மகளிரிடையே பயில இருந்தமை கூறலின் அதனை உவமம் செய்தார். "தாய்வாங்குகின்ற மகனைத் தனக்கென்னப், பேய்வாங்கி யன்ன தோர் பெற்றித்தே" என்று பிறர் கூறுவதைக் காட்டுவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர். சேண், அறிவு தோன்றிய காலம். நாணம் மகளிர்க்கு உயிரினும் சிறந்தது என்ப வாகலின், சேணும் எனச் சிறப்பும்மை தொடர்ந்தது. களவின் கண் ஒழுகும் தலைமகன் வரைவு மேற்கோடற் குரிய செவ்வி எய்தவும் அதனைக் கருதாமல் களவையே விரும்பியொழுகியது தோழிக்குக் கலக்கம் பயந்தது. அவனது ஒழுக்கம் ஊர்க்கண் அலர் உண்டாக்கி யிருப்பதை உள்ளுறையால் உரைக்கின்றாளாகலின், வெளிப்படையில் நீ முன்பு எம்மைத் தலைக்கூடி யின்புற்ற காலத்தில் நின்பால் தோன்றிய பெருவிதுப்பு இப்போதில் இல்லை; இதற்குக் காரணம் எமது புதுநலம் தொலைந்தமையென எண்ணினை; அத்தொலைவும் நின் நுகர்ச்சியால் ஆயினமையை நீ நினைத் தல் வேண்டும் என்பாள், சேர்ப்ப பூவின் அன்ன எம் புதுநலன் உண்டு நீ புணர்ந்தனையேம் அன்மையின் என்றும், என்றாலும், நேர்மை குன்றாத எம் நெஞ்சம் வேட்கை திரியா தாக நின்னையின்றி யமையே மாயினேம் என்பாள். நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி என்றும், புண்ணுற்று வீழ்ந்த தன் கணவன் பொருட்டுத் தன் குழவியைப் பேய் கைக்கொடுத்த கற்புடைய மடவோளைப் போல, நின்பால் உளதாய காதலின் பொருட்டு யாம் எம் நாணத்தையும் விட்டேம்; இனி இவ்வூரவர் எடுக்கும் அலர்க்கும் அஞ்சுதல் தவிர்ந்தேம் என்பாள், மாசில் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு நாணும் விட்டேம் அலர்க இவ்வூர் என்றும் கூறினாள். உயிர் நீப்பதாயினும் நீத்தலாகாத நாணம் என அதன் சிறப்புணர்த்தற்குச் சேணும் எம்மோடு வந்த நாணும் என்றாள். திரையால் கொழித்து ஒதுக்கப்பட்ட எக்கரை ஊதை தூற்றும் என்றது, நின் ஒழுக்கத்தால் எம்பால் உளதாகிய மேனி வேறுபாட்டை அலரெழுந்து தூற்றுவதாயிற்று எனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறு காண்க. இதனாற் பயன் தலைவன் தெருண்டு தலைவியை விரைய வரைந்து கொள்வானாவது. 16. சிறைக்குடி ஆந்தையார் சிறைக்குடி யென்பது மதுரையைச் சார்ந்த பகுதியிலுள்ளதோர் ஊர்; இது மதுரைப் புறஞ்சேரியை யடுத்த பகுதியிலுள்ளமை பற்றி இப்பெயர் பெற்றது போலும். புறஞ்சேரி புறஞ்சிறையெனவும் வழங்குவதுண்டு; ஆந்தை என்பது இச்சான்றோரது இயற்பெயர், இவருடைய பாட்டுக்கள் பலவும் காதல் வாழ்வுக்குரிய சிறப்புடைக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. தலைமகன் தலைவியைக் களவிற் கண்டு கருத்து ஒருமித்துக் கூடியின்புறுங்கால், அவள்பால் பெற்ற முயக்க இன்பத்தை வியந்து, காந்தளும் முல்லையும் குவளையும் விரவித் தொடுத்த மாலை போல, அவளது "மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிது" என்று இயம்புவதும், அப்புணர்ச்சி யிறுதிக் கண் காதலன் பிரிந்து போய்விடுவன் போலும் என அவள் அஞ்சுவது உணர்ந்து, "கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலென் யான் நின்னுடை நட்பே" என்று இசைப்பதும், தனித்திருக்குங்கால், "யாங்கு மறந்தமைகோ யானே" என அவன் சொல்லி வருந்துவதும், அவளது காதல் மிகுதி கண்டு, "யான் புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருவகுவள் போலும்" என்று துணிவதும், இக்களவின்கண் பிரிவு தோன்றிய போது, "சின்னீர் வளையுடைக் கையள் எம்மொடு உணீஇயர் வருகதில் அம்ம" என நினைந்து வருந்துவதும், பின்பு அவளை மணந்து இல்லிருந்து நல்லறம் செய்யுங்காலத்துப் பொருள்வயிற் பிரிய வேண்டிய கடமை யுண்டான போது, "மணத்தலும் தணத்தலும் இலமே, பிரியின் வாழ்தல் அதனினும் இலமே" என்று தலைவி தலைமகன் இனைவதும், களவுக்காலத்தில் தன் காதலனைக் காணமாட்டாதவாற்றால் காதல் மிகுவது கண்டு, "உடனுயிர் போகுக தில்ல இருவே மாகிய வுலகத்து, ஒருவேமாதல் புல்லிது", என்று கூறுவதும், பிரிவு தோன்றிய போது, "நாமுளேமாகப் பிரியலேம் தெளிமே" என்பதும் பிறவும் இவரது உயர்ந்த புலமைச் சிறப்பை உணர்த்துவன வாகும். இவர் பாடியனவாகக் குறுந்தொகை முதலிய தொகைநூல்களிலும் இதன்கண்ணும் பாட்டுக்கள் பல உள்ளன. தன் மனக்கினிய காதலியை மணந்து இல்வாழ்வு நடாத்தி வரும் தலைமகன், பொருள் குறித்துப் பிரிய வேண்டிய கடமை யுடையனானான். ஆயினும், காதலிபால் அமைந்த காதல் அவனைத் தடுக்கலுற்றது. அவனது நெஞ்சமோ, பொருளது நலம்பற்றிப் பிரிவை வற்புறுத்திற்று. அப்போது அவன் நெஞ்சினை நோக்கி, "செல்லினும் செல்லா யாயினும், நெஞ்சே, நீ நல்லது செய்தற்குரியயை; பிரியாதே காதலியைக் கூடி மனையிடத்து உறையின், பொருள் புணராது; பிரிந்த வழி மனை யிடத்துப் பெறும் இன்பம் எய்தாது; அப்பொருள்தானும் நீர் கிழிய ஓடும் மீனின் வழிபோல நிலைபேறின்றி மறைந்து கெடுவது; அதனைக் கருதிச் செல்லும் நம்மையும் காதலியின் கண்கள் துனித்து நோக்கும் நோக்கத்தால் செகுத்தன; ஆகவே விழுநிதி பெறினும் அவை என்னவாம்" என்று சொல்லிச் செலவழுங்குவா னாயினன். இக்கூற்றின்கண் தலைமகன் உள்ளத்தில் தங்கிய காதல் அன்பின் திட்பத்தைக் கண்ட ஆசிரியர், அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். புணரின் புணராது பொருளே பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே ஆயிடைச் 1செல்லினும் செல்லா யாயினும் நல்லதற்கு உரியை வாழிஎன் நெஞ்சே பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியிற் கெடுவ யானே 2விரிநீர் வியலகம் தூணி யாக எழுமாண் அளக்கும் விழுநிதி3 பெறினும் கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் 4நமைத்துனி நோக்கமொடு செகுத்தன5 6 இனைய வாரேன் வாழிய பொருளே இது, பொருள் கடைக் கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைமகன் செலவழுங்கியது. உரை புணரின் பொருள் புணராது - இல்லுறை மகளிரொடு உறைந்தொழுகின் பொருள் தானே வந்து கூடாது; பொருள்வயின் பிரியின் புணர்வு புணராது - பொருள் குறித்துப் பிரித்து செல்வேமாயின் மனையுறை மகளிரொடு கூடிப் பெறும் இல்லின்பம் வந்து நம்மை அடையாது; ஆயிடை - அவ்விரண்டிலும் கருத்தைச் செலுத்திச் சீர் தூக்கிப் பொருளே வேண்டுவதெனத் துணிந்து; செல்லினும் செல்லாயாயினும் - சென்றாலும் மனையுறை இன்பமே விழைந்து செல்லா தொழியினும்; நல்லதற்கு உரியை - நல்லது தேர்ந்து செய்யும் உரிமை நின்பாலே உளது; என் நெஞ்சே - எனது நெஞ்சமே; வாழி நீ வாழ்க; வாடாப் பூவின் பொய்கை நாப்பண் - வாடாத தாமரை முதலிய நீர்ப் பூக்களையுடைய நீர் நிறைந்த பொய்கையின் நடுவில்; ஓடும் மீன் வழியின் - நீரைக் கிழித் தோடும் மீனி னுடைய வழி மறைந்து கெடுவது போல; பொருள் கெடுவ - பொருள்கள் நிலை நில்லாது கெடும்; விரிநீர் வியலகம் தூணியாக - விரிந்த கடல் சூழ்ந்த நிலவுலகத்தையே அளவு கருவியாகிய தூணியாகக் கொண்டு; எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும் - எழுதூணியாக அளக்கக் கூடிய அத்துணைப் பெருஞ்செல்வம் எய்துவதாயினும்; கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண் - கனத்த குழையோடு பொருகின்ற சிவந்த அரி பரந்த குளிர்ந்த இவள் கண்கள்; நமைத் துனி நோக்கமொடு செகுத்தன - நம்பாற் கொண்ட துனி மிக்கு நோக்கும் நோக்கத்தால் நம் பொருள் வேட்கையைக் கெடுத்தொழிந்தன வாகலின்; இனைய வாரேன் - இவள் துனியால் தளர்ந்து வருந்துமாறு வாரேன்; பொருள் வாழிய - அப் பொருள் வாழ்க எ-று. நெஞ்சே, வாழி; புணரின் பொருள் புணராது; பொருள்வயிற் புணரின் புணர்வு புணராது; பொருள், ஓடுமீன் வழியிற் கெடுவ; நீ செல்லினும் செல்லா யாயினும், நல்லது செய்தற் குரியை; மழைக்கண் துனிநோக்கமொடு செகுத்தன; ஆகலின், விழுநிதி பெறினும் இவள் இனைய வாரேன், பொருள் வாழிய என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. உலகியல் இன்பத்துக்கு வாயில் அறமும் பொருளுமல்லது வேறு இல்லையாயினும், ஒன்றைப்பற்றி ஒன்றைப் புணராது விடுதல் இன்ப நிறைவுக்கு ஏதுவாகாது என்ற உண்மை உலகறிந்த தாகலின், புணரின் என்றதற்கு இல்லறத்து இன்பமே புணரின் என்று உரைக்கப்பட்டது. புணர்வு என்பதும் இக்கருத்தே சுட்டி நின்றது. அறத்தான் வருவது இன்பமே யாயினும், பொருள் செய்து புகழ் நிறுவிப் பிறரும் தானும் இனிது வாழ ஏதுவாகாவிடின் அவ்வின்பங்கள் புறத்தவும் புகழில்லனவுமாம் என்று திருவள்ளுவனார் கூறுவது காண்க. செல்லினும் செல்லாயாயினும் என்புழி ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. "பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்1" என்ற உத்தி நெறி நெஞ்சிற்கு உரிமையாதலின் நல்லதற்கு நெஞ்சம் உரியது என்றார். நீர்ப்பூ தேன் ஒழிந்த விடத்து மணமிழந்து அழுகிக் கெடுவதல்லது, நிலப்பூப்போல வாடுவ தின்மையின், வாடாப் பூவின் பொய்கை என்று சிறப்பித்தார். வியலகம், நிலப்பரப்பு, தூணியாகிய அளவை அமைதற்குக் கடல் பயன்படாமை பற்றி அதனை விரிநீர் என்று விலக்கினார். குறுணி இரண்டு கொண்டது பதக்கு; பதக்கு இரண்டு கொண்டது தூணி; தூணி மூன்று கொண்டது கலம்; சுண்ணாம்பு அளப்போர் பறை என்பது இத்தூணியையேயாகும்; சில நாடுகள் தூணியும் குறுணியும் கொண்டது பறையென வழங்குகின்றன. குறுணி என்பது ஒரு மரக்கால்; மரக்கால் நான்கு கொண்டது பறையெனவும் வழங்கும். மரக்கால் நான்கு கொண்ட பேரளவையாதலின், வியலகம் தூணியாக என்றார். விழுநிதி, மிக்க செல்வம், குழை, காதணி, துனிநோக்கம், புலந்து நோக்கும் நோக்கம். நமைத்தலையுடைய துனி நமைத் துனி என வந்ததாக நிறுத்தி, "நும்மால் நமைப்புண்ணேன்1" என்றாற் போல, வருத்துகின்ற துனி எனப் பொருள் கூறலும் ஒன்று. இனி, தமிழ்நூல்களை ஆயுமிடத்து உடலுக்கு வேறாக அதன் உள்ளிருந்து இயங்கும் அறிவுச் சூழலைப் பொறிவட்டம், புந்திவட்டம், உயிர்வட்டம் எனப் பழந்தமிழர் மூன்றாகக் கொண்டுள்ளனரென்பது தெளிவாகத் தோன்றுகிறது. மேனாட்டு அறிஞர்கள் மேற்கொண்ட கொள்கைகளே இன்றைய கற்ற அறிஞர் உள்ளத்தில் ஊறிவிட்டதனால், உண்மையாராய்ச்சி (தத்துவ ஆராய்ச்சி) நம் நூல்களில் செல்லுங்கால் குழம்பிவிடுகிறது. மேலே குறித்த பொறி வட்டம் நமது என்பு தோல் போர்த்த உடம்பைச் சார்ந்தது; உயிர்வட்டம் என்பது, அறிவு, விழைவு, செயல் என்ற மூவகை ஆற்றலுடைய உணர்வு வடிவாய் இயங்கும் உயிரை மாத்திரம் தனியாகக் கொண்டது. நடுநின்ற புந்திவட்டம் என்பது உடம்பும் உலகுமாகிய பொருளின் தோற்றத்துக்கு மூலகாரணமாய் அவ்வுடல் உலகுகள் தம் தோற்றம் ஒடுங்கி ஆற்றல் வடிவாய் மடங்குதற்கு அடிநிலையாய் நிற்கும் மாயை என்னும் தனிப்பொருளினால் ஆகியது என்பர். மேனாட்டவர், புந்தி வட்டம்2 உலகுடம்புகளும் ஆகாது. உயிருமாகாது, தனிநிலையாய் நிற்பது என்பர். மெய் வாய் முதலிய பொறியைந்தும், புலன் ஐந்தும் தற்பொருள் (தன்மாத்திரை) எனப் படும் ஐந்தும், பூதமைந்தும், செயற்கருவியைந்தும் தன்கண் கொண்டது பொறிவட்டம். புந்திவட்டத்தின்கண் நெஞ்சு, நினைவு, எண்ணம், உள்ளம் என்ற நான்கும் முறையே ஒன்றி னொன்று உண்முகமாக அமைந்துள்ளன; இவற்றின் செயலை வடமொழியில், முறையே, மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்று கூறுவதுண்டு. இதனால், வழக்கின்கண், மனத்தை நெஞ்மென்றும், நெஞ்சை மனமென்றும், நினைவென்றும், எண்ணமென்றும், உள்ளமென்றும் வேறுபாடு காட்டாது பொதுவாகவுரைப்பர். இவற்றுள், நான்காவதாக உள்ளே நிலவும் உள்ளம், மன நினைவு எண்ணங்களையும், அவற்றுள் நிகழ்ந்தவை நிகழ்பவைகளையும் ஆராய்ந்து காணும் உயிர், அறிவு வடிவாய் வீற்றிருக்கும் இடம் என்று கூறுப. அதனால், உயிரையே உள்ளமென்பது வழக்காயிற்று. "ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்1" என்ற குறட்பாவில் திருவள்ளுவனாரும், "என்னெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே" எனத் திருநாவுக்கரசரும், உயிரை உள்ளம் என்பது காண்க. மனவட்டத்தின் உள்ளே இயலுவது நினைவு என்பதை "மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட2" என மணிவாசகர் உரைப்பதால் அறியலாம். இவற்றால் இந்நூற்கண்ணும் ஏனைத் தொகை நூற்கண்ணும் நெஞ்சு என வருந்தோறும், அது புந்திவட்டத்தைப் பொதுப்பட நோக்கிக் கூறிய தெனக் கோடல் வேண்டும்" "புந்திவட்டத்து இடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனே3" என்பதனாலும் இவ்வழக்காறு இனிது உணரப்படும். இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் உள்ளத்தில் வாழ்க்கைக்கு இன்றியாமையாத பொருளின் சிறப்புத் தோன்றி அதனை ஈட்டுதற்குரிய வேட்கையைத் தூண்டிற்று. அவ்வேட்கைவழி நின்ற நெஞ்சம், தலைவனைத் தலைமகளிற் பிரிந்து பொருள் குறித்து நீங்கிச் செல்லுமாறு வற்புறுத்துவதாயிற்று. வற்புறுத்தும் நெஞ்சினை மறுக் கலுற்றவன், அதனால் காட்டப்படும் காரணத்தின் வலியின் மையைக் காட்டுவதே அமையுமாதலின், அதனையெடுத்து, நாளும் இல்லிருந்து மகிழ்வோர்க்குப் பொருள்வழி எய்தும் புகழும் இன்பமும் இல்லை என்பவாகலின் புணரின் புணராது பொருள் என்றும், பொருள் வினை குறித்துச் செல்வோர் மகளிரொடு சேறல் மரபன்மையின் பொருள்வயிற் பிரியின் புணராது புணர்வு என்றும் கூறினான். இல்லிருந்து மகளிரொடு கூடிப்பெறும் இன்பம் புணர்வு எனப்பட்டது. நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு நோக்கும் அறிவின்வழி நின்று நன்மையைக் கொள்ளுதலும் தீமையைத் தள்ளுதலும் நெஞ்சின் பொதுத்தன்மையாதல் பற்றி, பிரிவு, புணர்வு என்ற இரண்டினும் நல்லது செய்தல் வேண்டும்:. அதுவே நினக்கு உரிய செயல் என்பான் ஆயிடைச் செல் லினும் செல்லாயாயினும் நல்லதற்குரியை என் நெஞ்சே என்றான். பொருள் குறித்துப் பிரிதல், இன்பம் குறித்துப் பிரியாமை என்ற இரண்டன் சிறப்பையும் எண்ணி, நெஞ்சம் அலமருவது காண்டலின் வாழி என்றும், பொருட்பிரிவையே அது மேற்கொண்டமை பற்றிப் பொருளின் நிலையாமைப் பண்பை விதந்து பொய்கைக்கண் ஓடுமீன் வழியிற் கெடுவ என்றும், ஓடுநீரில் மீன் ஓடும் வழி கெடும் என்றாராயினும், ஓடாத பொய்கைக் கண்ணும் அதுவே இயல்பு என்றற்குப் பொய்கையென எடுத்தும் கூறினான். செல்வத்துக்கு நிலை யாமை இயல்பாகும். மகளிர் நோக்கங்களால் மலைபோன்ற செல்வங்களும் மாநில வளாகம் பொதுமையின்றி ஒருதாமாண்ட அரசுகளும் நிலைபேறு இழந்து மறைந்து ஒழிந் தமை சுட்டிக் கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண் நமைத் துனி நோக்கமொடு செகுத்தன என்றும், மறுக்கப்படும் செல்வத்தின் சிறுமை முடித்தற்குப் பெருமையை விதந்து விரிநீர் வியலகம் தூணியாக எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும் என்றும் உரைத்தான். இவ்வாற்றால் பொருளினும் புணர்வு வன்மையும் இனிமையு முடைத்தாதலால், புணர்வுக் குரிய தலைவி கண்கலுழ்ந்து வருந்த வருகிலேன் என்பான், இனைய வாரேன் என்றும், சிறுமைப்படுத்தப்பட்ட பொருட்கு இரங்குவான் வாழிய பொருள் என்றும் இயம்பினான். இவ்வாறு கூறினானாயினும், தன் கூற்றைத் தலைவி செவிப்படுமாறு சொல்லி அவளைப் பிரிவுக்குடன்படுமாறு வற்புறுத்திவிட்டுச் செல்வான் என அறிக. 17. நொச்சி நியமங் கிழார் நொச்சி நியமம் என்பது சோழநாட்டுக் காவிரியின் வடக்கில் திருச்சிராப்பள்ளி வட்டத்து உத்தமர் கோயில் என்னும் ஊர்க்கு அண்மையில் உளது. இதனை இப்போது நொச்சியம் என மருவி வழங்குகின்றனர். இவ்வூரினரான இச்சான்றோரது புலமை நலங் கண்ட சோழ வேந்தன் இவர்க்குக் கிழார் என்ற சிறப்பைத் தந்து பாராட்டினமையின் இவர் நொச்சி நியமங்கிழார் என விளங்கலுற்றார். ஒருகால், நாட்டில் போர் தோன்றியபோது, படைமறவர் போந்து போர்ப்பூப் பெறுகென வேந்தன் ஆணை பிறப்பிக்க, அவ்வழியே பூவிற்றற்குப் போந்த பூவிலைப் பெண்டு, போருக்கு ஆகார் என விலக்கப்பட்டோர் மனைகட்குச் செல்வது கண்டார், நமது நொச்சி நியமங்கிழார். ஆங்கு நின்ற மறமகள் ஒருத்தியை நோக்கி, உண்மை அறியலுற்றாராக, பூக்கோள் கேட்ட மறவர் வினைமேற்கொண்டு பிரிவராதலின், அவருடைய மனைமகளிர் அவர் பிரிவின்கண் தம்மைப் பூவால் ஒப்பனை செய்துகொள்ள ராகலின், அவண் செல்லாள் அப்பூவிலைப் பெண் என உரைத்தது நொச்சிநியமம் கிழார்க்கு மிக்க வியப்பைத் தரவே, அதனை அழகியதொரு புறப்பாட்டில் பாடியுள்ளார். மலர்ந்த வேங்கைப்பூவைப் பறிக்க விரும்பிய குறமகள் புலிபுலி யெனப் பூசலிடுவதும், இது "ஆகொள் வயப்புலி யாகும்" எனப் பிறழக்கொண்டு குறவர் வில்லும் அம்பும் கையேந்தி ஓடி வருவதும் பிறவும் இவர் பாட்டில் சிறப்பிக்கப் பெறுகின்றன. இவர் பாடியனவாக இந்நூற் கண்ணேயன்றி அகத்திலும் புறத் திலும் சில உள்ளன. களவின்கண் ஒழுகும் தலைமக்களிடையே, ஒருகால் தலைமகளைக் காணும் வேட்கையால், தலைமகன் அவள் பெருமனையின் சிறைப்புறத்தே வந்து நின்றான். அவனோடு பிரிவின்றிக் கூடியிருக்க வேண்டும் என்ற வேட்கை மீதூர்ந்த தலைவி, அவன் தானே தெருண்டு வரைந்து கொள்ள முயலுமாறு அவன் உள்ளத்தைத் தூண்டக் கருதினாள். இதனை அவற்கு நேரில் சொல்லவொட்டாது அவளுடைய பெண்மைப் பண்பு தடை செய்தது. குறிப்பால் உணர்த்திய வழியும், அவன் தன் கருத்திற் கொள்ளானாகவே, சிறைப்புறமாக வந்திருப்பதை அறியாள் போன்று, தோழியை நோக்கி, அவன் செவிப்படுமாறு, "குன்றத்தினின்றும் அருவிகள் ஒழுகுதலால் உண்டாகும் அழகை நோக்கியதால் என் கண்களில் சொரிந்த நீரைக் கண்ட அன்னை, உடனே என்னைத் தழுவி, "அருமை மகளே, நீ ஏன் கண்ணீர் விடுகிறாய்" என என்புருகுமாறு மெல்லிய இனிய சொற்களால் வினவினாள்; அன்பு வயப்பட்டு என் உணர்வை யிழந்து என் உயிரினும் சிறந்த நாணையும் கைவிட்டு, நம் காதலன் மார்பின்கண் உண்டாகிய வேட்கை மிகுதியால் வருந்தினேன் என வாய்விட்டுச் சொல்ல நாவெடுத்து, நல்ல காலமாக உணர்வு கொண்டு உய்ந்தேன்" என்று மொழிந்தாள். இம்மொழிக்கண் தலைவனை வரைந்துகொள்ளும் முயற்சியில் தோழியை ஈடுபடுமாறு செய்யும் தலைமகளின் சூழ்ச்சி நுட்பம் இனிது புலப்படக்கண்ட நொச்சி நியமங்கிழார் அதனை இப்பாட்டிடைப் பெய்து பாடுகின்றார். நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து மால்கடல் திரையின் இழிதரும்1 அருவி 2அகலிருங் கானத் தல்கணி நோக்கித் தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு 3ஏந்தெழில் 4மழைக்கண் கலுழ்தலின் அன்னை எவன்செய் தனையோநின் இலங்கெயி றுண்கென மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து உரைக்கல் உய்ந்தனனே தோழி சாரல் காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பின்5 முரலும் வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே இது முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை நாண்மழை தலைஇய நன்னெடுங்குன்றத்து -நாட்காலத்து மழைமுகில் பெய்த நல்ல நெடிய குன்றத்தின்கண்; மால்கடல் திரையின் - பெரிய கடலிடத்து எழுந்து முரிந்து விழும் அலைபோல; இழிதரும் அருவி - இழிந்தோடும் அருவிகள்; அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி - அகன்ற பெரிய காட்டிற் பரந்து ஓடியடங்கும் அழகைப் பார்த்து; தாங்கவும் தகைவரை நில்லா - தடுக்கவும் தடைப்பட்டு நில்லாது; நீர் சுழல்பு - நீர் நிறைந்து; ஏந்தெழில் மழைக்கண் கலுழ்தலின் - மிகவும் அழகிய குளிர்ந்த கண்கள் நீரைத் துளிப்பது கண்டு; அன்னை - எவன் செய்தனையோ நின் இலங்கெயிறு உண்கு என - யாது காரியத்தைச் செய்தாய் நின்பால் முத்தம் கொள்வேன் என்று; மெல்லிய இனிய கூறலின் - மென்மையும் இனிமையும் கலந்த சொற்கள் வழங்கக் கேட்டு அறிவு நிறை யிழந்தமையால்; வல் விரைந்து - மிக்க விரைவுடன்; உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து - உயிரினும் விடலரிதாய்ச் சிறந்த நாணத்தையும் அறவே மறந்து; உரைக்கல் உய்ந்தனன் - சொல்ல நாவெடுத்துச் சொல்லுதலினின்றும் தப்பினேன்; தோழி-; சாரல் காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி - சார லிடத்தே பூத்த காந்தட்பூவை ஊதிய நீலமணி போலும் நிறத்தையுடைய தும்பி; தீந்தொடை நரம்பின் முரலும் - தீவிய யாழிற் கட்டிய நரம்புபோல இசைக்கும்; வான்தோய் வெற்பன் மார்பு அணங்கு என - வானளாவிய மலையை யுடைய தலைமகனுடைய மார்பைப் பிரிந்ததனால் உளதாகிய வருத்தம், காண் என்று எ-று. தோழி கானத்து அல்கணி நோக்கி, மழைக்கண், தகைவரை நில்லா நீர் சுழல்பு கலுழ்தலின், அன்னை எவன் செய்தனையோ நின் இலங்கெயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின், வல்விரைந்து நாணும் மறந்து வெற்பன் மார்பணங்கு என உரைக்கல் உய்ந்தனென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நாள்மழை, காலைமழை; இரவிற் படிந்து விடியற்காலத்தில் மலைமுடியிற் பெய்யும் மழை முகில் நாண்மழை யென்றார். தலைஇய, பெய்த அருவியின் எழுச்சிக்கு உவமம் வேண்டலின் மால்கடல் திரையின் என்றார். அல்கு அணி, நிலவும் அழகு, அருவி கானத்து அல்கு அணி, அருவி தோன்றிக் கானத்திற் பரந்து ஒடுங்கும் அழகு. அவ்வணி, கான மெங்கும் பரவித் தோன்றாமைப் பற்றி, அல்கு அணி என்றார். அதனை யுரைத் தற்கு ஒரு கருத்துண்டு; அதனைப் பின்னர்க் கூறுதும். தாங்குதல், மீளத் தோன்றாவாறு துடைத்தல்; துடைத்தவழியும், கண்ணீர் நில்லாமை தோன்ற தாங்கவும் தகைவரை நில்லா நீர் என்றார். "துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடைத்தெழு வெள்ள மாகிய கண்ணே1" எனப் பிறரும் கூறுதல் காண்க. நில்லாது என்ற வினையெச்சம் விகாரத்தால் ஈறு கெட்டது. கண் சுழலும் போது சுரக்கும் நீர் கண்முழுதும் சூழ்ந்துகோடல் பற்றிச் சுழல்பு கலுழ்தலின் எனல் வேண்டிற்று. எயிறுண்டல், முத்தி கொடுத்தல்; இம்முத்தி பிற்காலத்தே முத்தம் என மருவிற்று. காதலர் கொள்ளும் முத்தியின் சிறப்பைப் "பாலொடு தேன்கலந் தற்று1" எனத் திருவள்ளுவரும், "முள்ளுறழ் முனையெயிற்று அமிழ்தூறும் தீநீரைக் கள்ளினும் மகிழ்செய்யும்2" எனப் பெருங்கடுங்கோவும் உரைப்பது காண்க. வல் விரைந்து, வல்லென்பது விரைவுக்குறிப்பு உணர்த்திற்று. நாணும் என்புழி உம்மை சிறப்பு உரைக்கல், தொழிற்பெயர், மணி, நீலமணி; "அம்ம வாழியோ மணிநிறத் தும்பி" என்பது காண்க. தொடை, தொடுக்கப்படும் பாட்டு, அணங்கு, அணங்குதலால், உண்டாகும் வருத்தம். "மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல3" எனப் பிறரும் கூறதல், காண்க. சிறைப்புறத்தானாய் நின்ற தலைமகன் செவிப்பட அவன் வரவறியாதாள் போன்று, தலைவி தோழியொடு சொல்லாடுகின்றவள், தன் ஒழுக்கத்தைத் தாய் அறிந்தமை கூறுவாளாய், நாட் காலையில் நிகழ்ந்த இதனைக் கேள் என்பாள், நாண் மழை தவழும் குன்றமும் கானமும் கடல் போன்று விளங்க, துள்ளி விழும் அருவி அக்கடற்றிரை போன்று தோன்றி யளித்த காட்சி இன்பம் செய்தமையின் அதனை உற்று நோக்கினேன் என்றற்கு, மால் கடல் திரையின் இழிதரும் அருவி அகலிருங் கானத்து அல்கணி நோக்கி என்றும், அவ்வாறு நோக்கியதனால் கண்ணீர் பெருகித் துடைக்குந் தோறும் சுரந்தொழுகிற்று என்றற்கு, தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு ஏந்து எழில் மழைக்கண் கலுழ்தலின் என்றும் கூறினாள். அதனை எவ்வகையாலோ அன்னை கண்டு என்பால் ஓடிவந்து புல்லி, மகளே, என் செய்கின்றனை என அன்புடைய நல்ல மென்மொழிகளை இனிமையுறக் கூறினாள் என்பாள், அன்னை எவன் செய்தனை நின் இலங்கு எயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின் என்றும், அன்னை சொல்லின் மென்மையும் இனிமையும் என் அறிவை மயக்கினமையின், உயிரினும் சிறந்த நாணத்தையும் மறக்கும் தன்மை எய்தினேன் என்பான், வல்விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து என்றும், என்னை நிகழ்ந்தது எனத் தோழி வினவுவாள் போல ஆர்வமொடு நோக்கவும், வெற்பனாகிய தலைவன் மார்பையே தான் நினைந்த வண்ணம் இருத்தலை உள்ளுறையாற் கூறுதலால், வெற்பன் மார்பு அணங்கு என உரைக்கலுற்று உய்ந்தனென் என்றும் கூறினான். காந்தளை ஊதிய தும்பி யாழ்நரம்புபோல இன்னிசை செய்யும் என்றது, காதலன் மார்பிற் படிந்து இன்புற்ற உவகையால் என் நெஞ்சம் அவன் திறமே நினைந்து ஒழுகுகின்றது என்றவாறு, குன்றிடத்து வீழும் அருவி கானத்திற் பரந்து ஒடுங்கும் காட்சி, பண்டு தலைவி தலைவனொடு அருவியாடிய போது அவன் மார்பின்கண் ஒடுங்கிய இன்பநிகழ்ச்சியை நினைப்பித்தமையின், அவள் அதனால் கண்ணீர் சொரிந்தாள் எனத் தலைமகன் உட்கொள்வானாவது, காதலர் இருவர் ஒருவரையொருவர் கண்டு மகிழ்ந்த இடத்தை மீண்டும் காணினும், கண்டு இன்புற்ற காலம் மறுவலும் எய்தினும், அவை அக்காதல் நிகழ்ச்சியை நினைவுகூர்விக்கும் இயல்பின வாதலின், அருவியின் அணி திகழ் காட்சி தலைமகளை அல்லல் உறுவித்தது எனவுணர்க. "உதுக்காண், தையால் தேறெனத் தேற்றி அறனில்லான் பைய முயங்கி யுழி1" என்று பிறரும் இதனைக் குறிப்பித்தல் காண்க. முன்னிலைப்படுத்திக் கூறற்குரிய தலைவனைப் படர்க்கைக் கண்ணிறுத்தித் தோழியை முன்னிலைப்படுத்துக் கூறலின் முன்னிலைப் புறமாயிற்று இக்கூற்று என்க. "மறைந்தவற் காண்டல்2" என்ற நூற்பா வுரையில், இப்பாட்டைக் காட்டி, "யான் அவனை எதிர்ப்பட்ட இடம் கண்டு அழுதேனாக, அதனைக் கண்டு நீ எவன் செய்தனை என வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேன் எனத் தாய் களவறிவுற்றவாறு கூறக் கருதி அவன் வயிற் பரத்தமை கூறிற்று" என்பர் நச்சினார்க்கினியர். 18. பொய்கையார் சேரநாட்டில் பொறைநாடு என்ற பகுதியை ஆண்ட இரும் பொறை மன்னர்கட்குத் தலைநகராக விளங்கிய தொண்டி நகரை "எம்மூர்" என்றும், இரும்பொறையை எமக்கு மன்னன் என்றும் பொய்கையார் கூறுகின்றார். சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சேரமான் கோக்கோதை மார்பனும் இவர் காலத்தில் ஆட்சி செய்துள்ளனர். சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் என்றவிடத்தே கடும்போர் நடந்தது; அப்போரில் இரும்பொறை சோழன் கைப்பட்டுச் சிறைப்பட்டான். உடனே பொய்கையார் செங்கணானை அடைந்து களவழி என்னும் இனிய நூல் ஒன்றைப் பாடி மகிழ்வித்துச் சேரமானுக்குச் சிறைவீடு பெற்று வந்தாராக, அதற்குள் அவன், சிறைப்பட்டமைக்கு நாணி உயிர் நீத்தான். அதனால் பெருவருத்தமுற்ற பொய்கையாரைத் தேற்றி அவற்குப்பின் சேரர் அரசுகட்டிலுக் குரிய கோக்கோதை மார்பனைச் செங்கணான் சேரமானாக முடிசூட்டிச் சான்றோர்களை மகிழ்வித்தான். "களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன், கால்வழித்தளையை வெட்டி யரசிட்ட பரிசும்" என்பதனால் இவ்வரலாறு ஓரளவு துணியப்படும். செங்கணான் கழுமலப் போரில் வெற்றிப் பெற்றதைக் களவழி என்ற நூலே கூறுகின்றது. இக்கழுமலம்தான் இப்போது குழுமம் என வழங்குகிறது. இப்போர் நிகழ்ந்த இடத்தை வேறு கூறுவதும் உண்டு. கோதையின் நாடு நானில வளமும் நன்கு பொருந்தியது; அதனை யுணர்த்தக் கருதிய பொய்கையார், "நாடன் என்கோ, ஊரன் என்கோ, பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ, யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை" எனப் பாராட்டி யுரைக்கின்றார். "ஆழி யிழைப்பப் பகல்போம் இரவெல்லாம், தோழி துணையாத் துயர்தீரும்-வாழி, நறுமாலை தாராய் திரையவோஓ என்னும், சிறுமாலை சென்றடையும் போது" என்ற பாட்டு இவர் பாடியது எனப்படுவதால், இவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிச் சிறப்புப்பெற்றது தெரிகிறது; இதற்குச் சான்றாகத் தொண்டை நாட்டில் இவர் பெயரால் பொய்கை என்றோர் ஊர்1 உளது; களவழி யென்ற நூலால் சோழன் செங்கணானை மகிழ் வித்த காரணத்தால் அவன் செய்த சிறப்புக்குச் சான்றாகச் சோழ நாட்டில் இவர் பெயரால் பொய்கை, பொய்கைக்குடி என ஊர்கள் தோன்றியுள்ளன. வடகரைப் பொய்கைநாட்டுப் பொய்கை என்று திருச்சோற்றுத்துறைக் கல்வெட்டுக்களும்2 பொய்கைக் குடியைத் திருக்கருகாவூர்க் கல்வெட்டுக்களும்3 குறிக்கின்றன. திருமால் அடியார்களான ஆழ்வார் நிரல்களுட் காணப்படும் பொய்கையார் இவரேயாகலாம் என்று சிலர் கருதுகின்றனர். பொய்கையாழ்வார் மறந்தும் புறந்தொழா மாந்தர்; ஆதலால், அவர் சேரமானையும் சோழனையும் தொண்டைமானையும் பாடார்; ஆதலால் இருவரையும் வேறுவேறாகக் கோடலே பொருத்தமாகிறது. இப்பொய்கையார் பாடியனவாகப் புறத்திலும் சில பாட்டுக்கள் உள்ளன. மனையறம் புரிந்தொழுகும் மாண்புடைய தலைமக்களில் தலைவன் கடமை காரணமாகப் பிரிந்தான்; தலைமகன் அவன் பிரிவாற்றாது மிகவும் வருந்தினாள். அப்போது, தலைமகளை ஆற்றுவிக்கும் கருத்தினளாகிய தோழி, ஒருகால் கணைக்கால் இரும்பொறை ஓரிடத்தே போர்ப் பாசறை யிட்டிருக்கையில் இரவில் படைக்களிறுகளுள் ஒன்று மதங்கொண்டு பாசறை வயவர்க்குத் தீங்குசெய்வான் முற்பட்டது; அதனை யறிந்த இரும்பொறை, விரைந்து சென்று அதனைத் தன் வன்மையால் அடக்கித் தன் தானை மறவர் இனிது கண்ணுறங்கச் செய்த அருஞ்செய்கையை எடுத்தோதி, அதுபோல் நீயும் தலைமகன் பிரிவால் கண்டுயிறல் இன்றி வருந்தும் வருத்தமெல்லாம் நீங்க அவர் விரைந்து வருவர் எனத் தேற்றி வற்புறுத்துவா ளாயினள். அதுகேட்டு வியப்புமிக்க பொய்கையார், தன்னைப் பகைத்த மூவன் என்பானை வென்று அவன் பல்லைப் பிடுங்கித் தொண்டிநகர் வாயிற் கதவில் அழுத்திய பொறையனது புகழைக் கூட்டி இப்பாட்டிற் பாடுகின்றார். இப்பாட்டின் இறுதிப்பகுதி ஏடுகளில் வேறுபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல வருவர் வாழி தோழி மூவன் முழுவலி முள்ளெயி றழுத்திய கதவின் கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல் தெறலருந் தானைப் பொறையன் பாசறை நெஞ்சு நடுக்குறூஉம் துஞ்சா மறவர் திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக் கடாஅங் கழீஇய 1கதனடங்கு 2தடவுநிலைக் களிறிலங்கு 3பொருகோட் டன்ன 4ஒளிறிலங் கருவிய குன்றிறந் தோரே. இது, பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத் தியது. உரை பருவரல் நெஞ்சமொடு-நெஞ்சின்கண் நிகழும் துன்பத்தோடு; பல்படர் அகல-பலவாகிய துயர நினைவுகள் நீங்கி யொழிய; வருவர்-வருகுவர்காண்; வாழி-; தோழி;-மூவன் முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்-மூவன் என்பவனுடைய மிக்க வலியை அழித்து முள்போலும் கூரிய அவன் பற்களைப் பிடுங்கிப் பதிக்கப்பட்ட கதவையுடைய; கானலந் தொண்டிப் பொருநன்-கானற் சோலை சூழ்ந்த தொண்டிநகர்க் குரியனான; வென்வேல் தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை-வெல்லும் வேற்படையுடைமையால் பகைவர்களால் வெல்லு தற்கரிய தானையையுடைய பொறைவேந்தனது பாசறைக்கண்; நெஞ்சு நடுக்குறூஉம் துஞ்சா மறவர்-நெஞ்சில் அச்சத்தால் நடுக்கம் மிகுந்து கண்ணுறங்காராயின தானை மறவர்கள்; திரைதபு கடலின் இனிது கண்படுப்ப-திரையவிந்த கடல்போல ஆரவாரம் அடங்கி இனிது உறங்குமாறு முற்போந்து அடக்கியதனால்; கதன் அடங்கு தடவுநிலைக் களிறு இலங்கு-சினம் தணிந்த பெரிய நிலைமையையுடைய யானையின்பால் விளங்கும்; கடாஅம் கழீஇய பொருகோட்டன்ன-மதநீர் கழுவப்பட்ட பொருகின்ற வெண்ணிறக் கோடுகளைக் கண்டாற் போல; ஒளிறு இலங்கு அருவிய குன்று இறந்தோர்-ஒளி விளங்குகின்ற அருவி களையுடைய குன்றுகள் மிக்க நாடுகளைக் கடந்து சென்ற காதலராகிய தலைவர் எ.று. தோழி, வாழி; குன்றிறந்தோர் பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல வருவர், நீ வருந்தற்க எனக் கூட்டி வினை முடிவு செய்க. பருவரல், துன்பம். படர், துயர நினைவுகள். மூவன் என்பவன், சேரரது குட்ட நாட்டில் வாழ்ந்த தலைவர்களில் ஒருவன்; ஒருகால் கொங்குநாட்டுப் பெருந்தலையூர்ச் சாத்தனார் அவனைக் கண்டபோது அவன் அவரை இகழ்ந்து நோக்க, அவர் பாடிய வசைப்பாட்டுப் புறநானூற்றில்1 உளது. அவன் ஒருகால் தன் செல்வச் செருக்கால் கணைக்கால் இரும்பொறையை இகழ்ந்தான். இரும்பொறை அவனை வென்று அடக்கி அவன் வாயிற்பல்லைப் பிடுங்கித் தொண்டிநகர் வாயிற் கதவில் அழுத்தி இழைத்துக் கொண்டான். வாயில் வாயாதலின் அதற்கேற்பக் கதவில் பல்லை வைத்தான் போலும். இது பழங்காலத்தில் வெற்றி வேந்தர் செயல்வகைகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. மத்தியென்னும் தலைவன் தன்னொடு மாறுகொண்டு பொர வந்த எழினி என்பவனுடைய பல்லைப் பிடுங்கித் தனது வெண்மணி என்னும் நகர்வாயிற் கதவில் அழுத்தினானென, "கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய, வன்கட் கதவின் வெண்மணி வாயில் மத்தி1" என்று மாமூலனார் கூறுகின்றார். தொண்டி, குறும்பொறை நாட்டுக் கடற்கரைக் கானற் பகுதியில் இருப்பதால் "கானலந் தொண்டி" என்றார். பொருநன், போர்ப்படைத் தலைவன். தெறல், அழித்தல். பொறையன், பொறைநாட்டு அரசர் குடியினன். நடுக்குறூஉம் என்ற பெயரெச்சம், நடுக்குறுதலால் எனக் காரணப் பொருட்டு. போரணியின்றித் திரண்டிருக்கும் மறவரிடையே ஆரவாரம் பெருகி யிருக்கு மாதலால், அவர் கண்ணுறங்கும் நிலையைத் திரைதபு கடலின் கண் இனிது படுப்ப என்றார். தலையிலும் கவுளிலும் ஒழுகும் மதநீர், செம்மையும் கருமையும் கலந்த நிறத்தோடு கோடுகளின் வழியாக ஒழுகிப் புலர்ந்தமையின், மதக்களிப்பால் உளதாகிய கதம் அடங்கிய போது, கழுவித் தூய்மை செய்தமை தோன்ற, கடாம் கழீஇய கதன் அடங்கு களிறு என்றும், அதன் தோற்றப்பொலிவு விளங்கத் தடவு நிலைக் களிறு என்றும், கழுவிய பின் அக்கோடு வெண்மை நிறத்தோடு மலையருவிபோல வளைந்து உயர்ந்து இருந் தமையைக் களிறு இலங்கு பொருகோடு என்றும் கூறினார். ஒளிறுதல், "ஒளிறுவான்" என்றாற் போல ஒளியுடைமை மேற்று. அருவிய, குறிப்புப் பெயரெச்சம். தடவுநிலைப் பொருகோடு என இயைத்து வளைந்து பொருதற்கமைந்த கோடு என்றலும் ஒன்று. கற்பு வாழ்வில் தலைமகன் பிரிந்தவழித் தலைமகள் ஆற்றாளாதலைப் பிறர் அறிதல் அவட்கு ஏதமாகா தாயினும், காதலுறவு அவள் உள்ளத்தைப் பிணித்து வேட்கையை எழுப்பி வெதுப்புதலால், பலவேறு நினைவுகள் தோன்றி வருத்துவது பற்றித் தோழி, பல்படர் அகல வருவர் என்றும், அவரும் நின்னைப் போலவே நின்னை நினைந்து வருந்திய நெஞ்சமுடையர் என்பாள், பருவரல் நெஞ்சமொடு வருவர் என்றும் கூறினாள். தலைமகனும் தன்போல் பருவர லுற்று நெஞ்சு நெகிழ்ந்து வருந்துவன் என்பது கேட்ட தலைமகள், அதனால் நெஞ்சயர்ந்தாளாக, அவளை வற்புறுத்தற்கு, கடாம் கழீஇய களிறிலங்கு பொருகோடு ஒளிறிலங்கு அருவி போலத் திகழும் என்று கூறுமாற்றால், தலைவன் பிரிவால் வேறுபட்டிருக்கும் நின் நுதலும் மேனியும் அவன் வந்து கூடுமாற்றால் வேறுபாடு நீங்கி ஒளிமிகும் என்றும், குன்றுகள் அருவியொடு தோன்றுவது காணின், கார்காலம் வந்தமை யையும், அதுதான் வற்புறுத்த காலமாதலையும் எண்ணித் தவிராது மீளுவர் என்றற்குக் குன்று இறந்தோர் என்றும் தோழி கூறினாள். 19. நக்கண்ணையார் கண்ணை என்ற பெண்பாற் பெயர், நச்செள்ளை நப்பின்னை என்பன போல நக்கண்ணை என வழங்கிய தூய தமிழ்ப்பெயராகும். இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்கள் கண்ணை என்ற பெயர் மக்கள் வழக்கில் இருந் தமையைக் காட்டுகின்றன. முதற் பராந்தக சோழனுடைய திருக்கண்டியூர்க் கல்வெட்டொன்று "பிராமணி மதிசூதன் கண்ணை1" என்ற ஒருத்தியைக் குறிப்பது போதிய சான்றாகும். வடமொழியில் சுலோசனா என்பது இதனொடு ஒருபுடை ஒப்பது கண்டு மருண்டவர் சிலர், நக்கண்ணை யென்பது அச்சுலோசனை யென்பதன் தமிழ்ப் பெயர்ப்பு எனக் கதறு வாராயினர். இம்மொழி பெயர்ப்பு வேலைகள் பலவும் சுமார் நானூறு ஐஞ்ஞூறு ஆண்டுகட்கு முன்புதான் தோன்றின. கண்ணிற் காணப்படும் தமிழ்ப் பெயர்களும் பிற சொற்களும் வட மொழியிலிருந்து பெயர்க்கப்பட்டன என்ற பொய்க்கருத்தை நாட்டில் பரப்பவேண்டி வடமொழி வெறியர்கள் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதெடுத்துப் பேசவும் எழுதவும் தலைப்பட்டனர். பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சேறி வெளிந் தமையும் மொழிநூற் புலமையது வளர்ச்சியும் இக்கூற்றுக்களின் பொய்ம்மையை வெளிப்படுத்திவிட்டன. தாமரைக்கண்ணி, குவளைக்கண்ணி, கயற்கண்ணி எனக் கண்பொருளாக வந்த பெயர்கள் இகர வீறு பெற்றிருப்பதும், நக்கண்ணை என்பது ஐகார ஈறு பெற்றிருப்பதும் ஓர்ந்து நோக்கத்தக்கன. நக்கண்ணை என்ற பெயருடைய சான்றோர் ஒருவர் வேறே இருந்தமையின் அவரின் வேறுபடுத்த இவரை நக்கண்ணையார் என்றும், அவரைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் என்றும் பண்டையோர் சிறப்பித்துள்ளனர். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி காலத்திலும், இவர் சோழநாட்டு ஆர்க்காட்டுக்கு உரியவனான சேந்தன் தந்தை அழிசி யென்னும் குறுநிலத் தலைவன் காலத்திலும் இருந்தவர்களாதலின் இருவரையும் ஒருவரெனக் கோடற்கு இடம் ஏற்படவில்லை. இனி, காட்டில் வாழும் யானையின் தலைமேற் பாய்ந்து அரிமா, தன் உகிராற் பிளந்து அதன் கோடுகளைப் புய்த்தெறியு மென்றும், உள்ளுர் மரத்தில் உறையும் வௌவால் (வாவல்) பகலில் தூங்கும் போது பெருங்காட்டிலுள்ள நெல்லிக்காயை உண்டற்குக் கனவும் என்றும் பாடுவன, இவரது இயற்கைக் காட்சிப் புலமையை நன்கு புலப்படுத்துகின்றன. இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு பாட்டுளது. தலைமக்கள் இருவருடைய களவுக்காதல் வாழ்வில், பகற் போதில் குறியிடம் போந்து தன் காதலியைக் கண்டு பயின்று இன்புற்றொழுகும் தலைமகனைத் தோழி காண்கின்றாள்; "இச்செயல் பிறர் அறிவரேல் நீ இரவில் வருதலை மேற்கொள்ள வேண்டியவனாவாய்; இரவு வருங்கால் ஏதங்கள் நிகழ்தற்கு இடமுண்டு; அதனை அறிந்தால் நின் காதலியாகிய தலைமகள் உயிர்வாழாள்; இப்போது வந்துபோகும் நீ சின்னாளில் வருவாய் என நின் பிரிவைக் கூறினாலும், அவள் அதனை ஆற்றாளாய் உயிர்விடுவாளே, என் செய்வது" என அவன் தெருண்டு வரைந்து கொள்ளத் துணியுமாறு அத்தோழி அவனைத் தூண்டுகின்றாள். இக்கூற்றில் அமைந்த அறவுணர்வும் அறிவு நலமும் நக்கண்ணையாரது புலமையுள்ளத்தை இப்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளன. இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதல் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பின் அன்ன 1அரும்புதிர்பு நன்மான் 2உழையின் 3ஏறெனத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறி யாயின் 4இரவே வருவை யாகிய சின்னாள் 5தெருளா ளாதல்நற் கறிந்தனை சென்மே இது, புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. உரை இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதல்-இறாமீனின் முதுகுப்புறம் போலச் சருச்சரை பொருந்திய பெரிய அடிப்பகுதியையும்; சுறவுக்கோட்டு அன்ன முள்இலைத் தாழை -சுறாமீனின் கொம்பு போல விளிம்பில் முட்கள் பொருந்திய இலையையுமுடைய தாழையின்; பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு உதிர்பு-பெரிய களிற்றியானையின் மருப்புப் போல் வெளிதாய் நீண்ட அரும்பு உதிர்ந்து; நன்மான் உழையின் ஏறு எனத் தோன்றி-நல்ல உழைமானின் ஆணாகிய இரலையின் கொம்பு போலத் தோன்றி; விழவுக்களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப-விழா எடுக்கும் களம் போல நறுமணம் கமழும் பரந்த கடல்நிலத்தை யுடைய தலைவனே; இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க-இனமான மணிகள் பல கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்த; செலீஇய சேறியாயின்-நின் ஊர்க்குச் சென்று எய்துவான் பிரிந்து போகின்றா யாதலால்; இரவு வருவையாகிய சின்னாள்-பகல்வரவைப் பிறர் அறிவரென நினைந்து இரவுக் குறிக்கண் வருவாயாகவும் குறித்த சிறிது போதுக்குள்; தெருளாளாதல் நற்கு அறிந்தனை சென்மே-இரவுக் குறியது ஏதம் ஆய்ந்தும் பிரிவை யெண்ணியும் நின் வாய்மை தெருளாது தலைவி உயிர்வாழாள் என்பதைத் தெளிய உணர்ந்துகொண்டு மேலே ஆவன செய்தற் பொருட்டுச் செல்வாயாக எ.று. சேர்ப்ப, பாகன், தேர், இயக்க, செலீஇய சேறி; ஆயின், இரவு வருவையாகிய சின்னாள் தெருளாளாதலை நன்கு அறிந்தனை சென்மே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தடவுமுதல் தாழையின் களிற்று மருப்பன்ன அரும்பு இதழ் உதிர்ந்து மான் ஏற்றின் கோடு போலத் தோன்றி விழவுக்களம் கமழும் சேர்ப்பு என இயையும். இறா, சுறா என்பன ஆகாரம் குறுகி உகரம் ஏற்றன. அரும்பு உதிர்ந்து அடி பருத்துத் தழைத்து நிற்கும் கழிக்கரைத் தாழையைச் சொல்லோவியம் செய்கின்றா ராகலின் அதன் ஒவ்வோர் உறுப்பினையும் தக்க உவமைகளால் விளக்குகின்றார். அரும்புதிர்ந்த தாழையின் கோடு, மான் இரலையின் கொம்பு போலத் தோன்றுவதும், பூக்கள் உதிர்ந்து மணம் கமழ்ந்து விளங்கும் இடம் பரதவர் சுறவுக்கோடு நட்டு விழா அயரும் இடம் போல்வதும் மனக்கண்ணிற் கண்டு இன்புறற்பாலன. அரும்புதிர்ந்து நிற்கும் கோடு பரவுக்கடன் ஆற்றும் பரதவர் கடற்றெய்வத்துக்கு உயிர்ப்பலி யிடுவான் கொணர்ந்து நிறுத்தும் ஆனேற்றினைக் காட்டுகின்றது. தடவுமுதல் என்ற விடத்துத் தடவென்னும் உரிச்சொல் உகரவீறு பெற்றுப் பெயராயிற்று. உழையின் ஆணை ஏறு என்றார்; அஃது ஆகுபெயரால் கொம்பினை யுணர்த்திற்று. உரவுநீர், நீர் பரந்த கடல். களவுக்காலத்துத் தலைமகன் தேரோடு வருதல், அவன் தலைமைக்குத் தகுதியாகலின் கொள்ளப்பட்டது. செலீஇய சேறி என்றதை ஒரு சொல்லாக வைத்துச் செல்கின்றாய் என்றலும் ஒன்று. இப்போது இப் பகற்போதில் நீங்குமவன் இன்றிரவு வரப்போகின்றான்; அவன் செலவுக்கும் வரவுக்கும் இடைப்படும் காலம் சின்னாள் எனக் குறிக்கப்படுகிறது; தெருண்டு தேறியிருத்தலை ஆற்றாள் என்பது தெருளாள் என நின்றது. பகற்குறிக்கண் தலைமகளைக் கண்டு நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு, சேர்ப்பனே, நின் பாகன் இயக்கத் தேர் செல்லா நிற்கும்; தேர் செல்லின் அதனிற் கட்டிய இன மணிகள் ஒலிக்கும்; அதுபோல, நீ முயன்றால் வரைதல் கூடும்; அது கூடின் என் தலைவி உயிர் தளிர்ப்பாள்; நின்பாற் பெறலாகும் அழிவில் கூட்டப் பேற்றின்கண் அவளது ஆர்வம் பெருகியுளது என்றற்கு, இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறி என்றாள். பகல் வருவானை இனிப் பகற்போது வாரற்க, இரவின்கண் வருக என்றற்கு இரவு வருவை என்றும், இப் பகற்போது கழிய இரவு வருவதற்குள் நின் பிரிவை இவள் ஆற்றாள்; நீ இங்கே இருந்தொழியின் வரும் ஏதத்தையும் எண்ணாள் என்பாள், நீ வருவையாகிய சின்னாள் தெருளாள் என்றும், ஆகவே அவளை நீயே தேற்றிச் செல்வதே வேண்டுவது என்றற்குத் தெருளா ளாதல் நற்கு அறிந்தனைசென்மே என்றும் கூறினாள். நாள், பொழுதின் மேற்று. நன்கு அறிந்தவழி இரவு வருதலையும் கைவிட்டு வரைவொடு வருவன் என்பது கருத்து. தாழை நின்ற கழிக்கானற் குறியிடம் விழவுக்களம் போலும் எனத் தோழி புனைந்து கூறியது. கானற்கண் உள்ள எமது மனை யகம் விரைவில் மணமனை யாதல் வேண்டு மெனத் தன் விழைவு குறித்தவாறு, "நாற்றமும் தோற்றமும்7" என்று தொடங்கும் நூற்பாவிற் கூறிய "வேண்டாப் பிரிவினும்" என்புழி நிகழும் தோழி கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி "இது தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது" என்பர் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும். 20. ஓரம்போகியார் இவரது இயற்பெயர் ஓரம்போகி என்பது. இவர் காலத்தில் சேர நாட்டில் ஆதன் அவினி என்பவனும் பாண்டி நாட்டு வடபகுதியிலுள்ள விராலிமலைப் பகுதியில் விராஅன் என்பவனும் சிறந்து விளங்கினர். சேரன் ஆதன் அவினியைச் சிறப்பித்து ஐங்குறுநூற்றில் மருதப்பாட்டு நூறும் பாடினா ராயினும், இவர் பாட்டுக்களில் பாண்டி நாட்டுத் தேனூரும், விராஅனுடைய இருப்பையூரும் சோழநாட்டு ஆமூரும் கழாரும் புகழ்ந்தோதப்படுகின்றன. இவற்றை நோக்கின் இவர் சேர நாட்டவ ரல்லர் என்பது தெளிவாகிறது. இவர் வாழ்வு சோழ பாண்டிய நாடுகளிலேயே பெரிதும் கழிந்திருக்கிறது. இவரு டைய பாட்டுக்கள் சில ஏனைக் குறுந்தொகை அகநானூறு களிலும் உண்டு. "விழையா வுள்ளம் விழையுமாயினும், என்றும் கேட்டவை தோட்டி யாக மீட்டு ஆங்கு அறனும் பொருளும் வழாமை நாடித் தன் தகவுடைமை நோக்கி மற்று அதன் பின்னாகும்மே முன்னியது முடித்தல்; அனைய பெரியோர் ஒழுக்கம்" எனப் பெரியோர் ஒழுக்கம் கூறுவதும், மனையறம் புரியும் மகளிர் எடுத்ததற்கெல்லாம் தம் கணவரொடு மாறு பட்டுப் புலத்தல் பொருந்தாது என்பதற்கு, புலந்தால் "செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத் தாம் அட்டுண்டு தமியராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந" ராவர்: அதனை அறிந்து வைத்தும் "அறியார் அம்ம அஃது உடலுமோரே" என்பதும், தலைவனது புறத்தொழுக்கத்தை மனத்திற் கொள்ளாமல், அவன் மனைக்குப் போந்தவழி அவனை வரவேற்று ஓம்பிய மனைவியை, "யாயாகியளே விழவு முதலாட்டி" என்றும், "ஊரன் கொடுமை கரந்தன ளாதலின் நாணிய வருமே" என்று கூறுவதும் பிறவும் அவரது அறிவுரை நலத்தைப் புலப்படுத்துவனவாம். எருமை பகன்றை சூடிச் செருக்கி வரும் காட்சியைப் "போர்செறி மள்ளரிற் புகுதரும்" எனவும், நண்டு சினை தோன்றுங்கால் இறக்கும் என்பதுபற்றித் "தாய் சாப் பிறக்கும் புள்ளிக் கள்வன்" எனவும், முதலை தன் பார்ப்பையே தின்னும் எனவும், யாமையின் இளம்பார்ப்புத் தன் தாய்முகம் நோக்கி வளரும் எனவும் கூறுவர். யாறுகள் கூதிர்க்காலத்தில் கலங்கி வேனிற்காலத்தில் நீர் தெளிந்தோடும் என்பதும், யானை கவள முண்ணும்போது பரிக்கோற்காரர் அதற்குச் சினமூட்டுவரேல் அக் கவளத்தைத் தன் மெய்யில் திமிரிக்கொள்ளும் என்பதும், மகளிர் தைந்நீராடும் சிறப்பும், போரில் தாம் ஏந்திய வாள் வளைந்துவிடின் மறவர் அதனை ஆங்கு வீழ்ந்து கிடக்கும் யானைகளின் மருப்புக்களிடையே தொடுத்து நிமிர்த்தும் திறமும் இவரால் அழகுறக் காட்டப்படுகின்றன. இல்லிருந்து நல்லறம் செய்தொழுகும் தலைமக்களிடையே, தலைமகன்பால் பரத்தையரிற் பிரிந்தொழுகும் புறத்தொழுக்கம் உளதாயிற்று. அதனை அறிந்த தலைமகள், தலைவன்பால் சினம் கொண்டு புலக்கலுற்றாள். "காதலியாகிய நின்னைத் தவிர வேறே யாரையும் யான் அறியேன், புலத்தல் வேண்டா" என அவன் இரந்து கூறினான். அவள் அவன் கூறுவது பொய்யென மறுத்துரைக்கத் தொடங்கி, "ஐய, நின் மார்பிற் கிடந்துறங்கி இன்புற்ற அந்த மடந்தையை யாங்கள் கண்டேம்; நீ சூட்டிய மரவம்பூவால் கூந்தல் மணம் கமழ, நின்னைக் கூடியதால் மேனியில் துவட்சி தோன்ற, ஆடை அசைய, வளைகள் ஒலிக்குமாறு தன் கையை வீசிக்கொண்டு இத்தெருவழியே சென்றாள்; செல்பவள், தன் பூப்போலும் கண்ணினது சிறப்புப் பார்வையை எம் பக்கல் பரப்பினாள்; அதுவே சாலும், அவள் நின் பெண்டு என்பதற்கு. சுணங்கு பூத்த அவளது மார்பின் அணிகள் கிடந்து அழகு செய்யினும் நின்னைப் பிரிந்ததனால் உண்டாகிய பிரிவு நோய் மிகுந்தமையின், கோதை சோரத் தோளில் தொய்யில் எழுதாது வருந்துகின்றாள்; அவளிடமே செல்க" என்று மொழிந்தாள். இக் கூற்றின்கண், ஊடல் மிக்க போதும் இனிய பண்புடைய சொற்களையே வழங்கிய அவளது காதல் மாண்பைக் கண்ட ஆசிரியர் ஓரம்போகியார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளார். ஐய குறுமகட் கண்டிகும் 1வைகிய 2மகிழ்நன் மார்பில்துஞ்சி அவிழிணர்த் தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச் செறிதொடி தெளிர்ப்ப 3வீசி மறுகில் பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச் சென்றனள் வாழிய மடந்தை நுண்பல் சுணங்கணி வுற்ற விளங்கு பூண்எழில் மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை பழம்பிணி 4வைஇய தோளிணைக் குழைந்த கோதைக் 5கொடிமுயங் கலளே இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், "யாரையும் அறியேன்" என்றாற்குத் தலைவி கூறியது; வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉமாம். உரை ஐய-ஐயனே; குறுமகள் கண்டிகும்-நின் காதலியான இளமகளைக் கண்டேம்; வைகிய மகிழ்நன் மார்பில் துஞ்சி-தன்பாற் போந்து வைகிய தலைவனாகிய நின் மார்பிடத்தே கிடந்து உறங்கி; அவிழ் இணர் தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்-மலர்ந்த பூங்கொத்துக்களை யுடைய தேன் சொரியும் மரவம்பூவின் மணம் நாறும் கூந்தல்; துளங்கியல் அசைவர-துவண்ட மேனிமேல் சரிந்து விளங்க; கலிங்கம் துயல்வர-உடுத்த ஆடை புறத்தே யசைய; செறி தொடி தெளிர்ப்ப வீசி-கையிற் செறிய அணிந்த தொடி ஒலிக்கக் கையை வீசி; பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி-பூப்போன்ற தன் மையுண்ட கட்பார்வையை நாற்புறமும் பரப்பிக்கொண்டு; மறுகில் சென்றனள்-மறுகிற் சென்றாள்; மடந்தை வாழிய-மடந்தையாகிய அவள் வாழ்வாளாக; நுண்பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூண் எழில்-நுண்ணிய பல சுணங்கு பரந்து ஒளிசெய்த மார்பின்கண் விளங்கும் அணிகலன்களால் அழகியளாய்; மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை-மார்பு பொருந்த முயங்கு தலாலே நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களும்; பழம்பிணி வைஇய தோளிணை-கூடிய காதலனைப் பிரிந்ததனால் உளதாகும் பழந்துயரால் ஒன்றாக மெலிந்த தோள்களும்; குழைந்த கோதை-கயங்கிய மாலையும் கொண்டு; கொடி முயங்கலள்-தொய்யிற்கொடி எழுதப் படாமையால் வருந்துவளாதலின் அவள்பாலே செல்க எ.று. ஐய, குறுமகள் கண்டிகும்; அவள் கூந்தல் அசைவர, கலிங்கம் துயல்வர, தொடி தெளிர்ப்பக் கையை வீசி, மறுகிற் கண்பெயர்ப்ப நோக்கிச் சென்றனள்; மடந்தை, தோளிணை, கொடி முயங்கலள், ஆகலின் அவள்பாற் செல்க, வாழிய என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. குறுமகள் என்புழிக் குறுமை இளமை சுட்டி நின்றது. கண்டிகும், தன்மை வினை முற்றுத் திரிசொல்; இகும், தன்மைக்கண் வந்த அசைநிலை. "இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும், தகுநிலையுடைய என்மனார் புலவர்1" என்பது காண்க; "கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே2" எனப் பிறரும் வழங்குப, மலர்ந்த பூங்கொத்து என்றற்கு அவிழ் இணர் என்றார். தேன்பாய் மராஅம் எனற் பாலது தேம்பாய் மரா அம் என வந்தது; "தேம்பா யோதி3" என்றாற் போல, கூந்தல் அசைவர என இயையும். துளங்கியல், துவட்சி, தொடி, தோளிலும் முன்கையிலும்அணிவது. தெளிர்த்தல், ஒலித்தல், கை, அவாய் நிலையால் வந்தது. கண்பெயர்த்தலாவது, கண்ணைப் பரக்க விழித்து நோக்குதல். மடந்தை, பெதும்பைப் பருவம் கடந்த பருவப் பெண். அணிவு, பரந்துநிற்கும் அழகு. ஞெமிர்தல், பரத்தல், வளியிடைப் போழாமுயக்கிடை நெருக்குண்டு பரந்து கிடக்கும் மென்றளிர் பூவிதழ் முதலியவற்றை முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை என்றார். பழம்பிணி, கூடினோரைப் பிரிதலால் உளதாகும் நோய். பன்முறை எய்தினமை தோன்றப் பழம்பிணி என்று குறிக்கப்பட்டது, பரத்தைக்கு அது புதிதன்மையின், வைஇய என்றது "வையா மாலையர்1" என்றாற் போல வகைப்படுத்தும் குறிப்பின்கண் வந்தது. கொடி, மகளிர் தோளில் எழுதப்படும் தொய்யிற்கொடி; கரும்பு போலவும் கயல் போலவும் சந்தனக் குழம்பு கொண்டு எழுதுவது. கற்புவாழ்வில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் செயல் கணவன் மனைவியரிடையே நிலவும் ஒருமையன்பைப் பிளக்கும் இயல்பிற் றென்பதை நன்குணர்ந்த தலைமகள், அவனது பரத்தமையை எடுத்துரைக்கவும், அவன் பரத்தையர் யாரையும் அறியேன் என்றானாக, அவனை மறுப்பாளாய் ஐய குறுமகள் கண்டிகும் என்றாள். நீ எனக்கும் பிற பரத்தையர்க்கும் தலைவன் என்பாள், ஐய என்றும், நின்னாற் கொள்ளப்பட்ட பரத்தை தனக்கும் நினக்கும் உளதாகிய தொடர்பை யான் அறியாவாறு மறைக்கும் திறனில்லாத இளமகள் என்பாள், குறுமகள் என்றும், அவளைப் பிறர் குறித்துக்காட்டு முன்பே யானும் தோழியும் பிற பாங்கா யினாரும் காணத் தானே காட்டினாள், யாமும் கண்டேம் என்பாள் கண்டிகும் என்றும் கூறினாள். தன் தொடர்பை அவள் எவ்வாறு காட்டினாள் என்று வினவுவான் போல, அவன் நோக்கலும், அதனைக் கூறலுற்ற தலைவி, அவள் துளங்கியல் மேனிக்கண் கூந்தல் அசைவர வந்தாள் என்றாள். தனக்கு மகிழ்ச்சி நல்கிய தலைமகனாகிய நின் மார்பிற் புல்லிக் கிடந்து உறங்கினமையின் மேனிக்கண் துவட்சி உளதாயிற்று என்பாள் மகிழ்நன் மார்பில் துஞ்சித் துளங்கினாள் என்றும், புல்லிக் கிடந்தமையின் அணிந்திருந்த பூந்துணர் கயங்கி யுதிரக் கூந்தல் முடி அவிழ்ந்து விரிந்து வீழ, அதன்கண் இருந்த மரவங்கள் மணம் கமழ்வன வாயின என்பாள், வைகிய மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கியல் அசைவர என்றும், கூட்டத்தால் ஆடை நிலை குலைந்திருந்தது என்பாள் கலிங்கம் துயல்வர என்றும் கூறினாள். கூந்தல் அசைவர என்றது, கூழை விரித்தல், கலிங்கம் துயல்வர என்றது, உடைபெயர்த்துடுத்தல். மேனி துளக்கத்துக்கு ஏதுவாகிய இல் வலியை மறைத்தற்குத் தன் கைவீசி வந்தாள் என்பாள் செறி தொடி தெளிர்ப்ப வீசி என்றாள். இஃது இல்வலி யுறுத்தல். கையில் அணிந்த வளையும் தொடியும் ஒலிக்க வீசியதே இதற்குச் சான்று என்பாள், செறிதொடி தெளிர்ப்ப என்றும், அவள் நினைக்குரிய ளென்பது தெரிந்தவாறு இஃது என்பாள், மறுகிற் கைவீசிச் செல்லுங்கால் என்னையும் என் பாங்காயினாரையும் தன் விழிகளைப் பரப்பி நோக்கிச் சென்றாள் என்பாள், மறுகிற் பூப்பால் உண்கண் பெயர்ப்ப நோக்கிச் சென்றனன் என்றும், அவள் நீ கூடற்கேற்ற மடந்தைப் பருவத்தள் என்பாள் மடந்தை என்றும் சொல்லி, அவள்பால் கழிபே ரிரக்கங் கொண்டு வாழி என்றும் தலைவி கூறினாள். இவற்றைக் கேட்ட தலைமகன் மனம் மருண்டு நோக்கலின், தலைவி, அம் மடந்தையை இனிப் பிரிவால் ஒளிவாட விடாது நீ ஓம்புதல் வேண்டும்; பூணாரம் அணிந்து எழில் மிக்குச் சுணங்கு பரந்து விளங்கும் அவள் மார்பில் முயக்கத்தால் நெருக்குண்டு படிந்து வாடிய குழை கிடந்து அவளது சோர்வை யுணர்த்துகிறது என்பாள், நுண்பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணெழில் மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை யென்றும் அவள் முன்பே நின்னைக் கூடிப் பின் நீ பிரிந்ததனால் எய்திய பழம்பிணி யுடையள் என்பாள், பழம்பிணி வைஇய தோளினள் என்றும், இன்றும் நீ சென்று கூடிக் கோதை சூட்டிக் கொடி யெழுதாய் ஆயினமையின் நின்னைத் தேடி அலமருகின்றாள் என்றற்குத் தோளிணைக் குழைந்த கோதைக் கொடி முயங்கலள் என்றும், அவள் இனி நின் பிரிவைச் சிறிதும் ஆற்றாளாகலின், அவள்பாலே செல்க, வாழ்க என்பாள், வாழிஎன்றும் கூறினாள். இங்கே, தலைமகன் பரத்தையைக் கூடிப் போந்தான் என்றும், அவனை அதுபற்றி வினவியபோது யாரையும் அறியேன் என்றானாக, அவன் கூடி மகிழ்ந்த பரத்தையைத் தலைவி கண்டாள் என்றும் கூறியன, தலை மக்களிடையே நிலவும் காதலின்பத்தை முறுகுவித்துக் கருத் தொருமையை இறு குவித்தற்கு வந்தன எனக் கொள்க. சங்ககாலத் தமிழ்நாட்டில் முடிவேந்தர்கட்கும் குறுநிலத் தலைவர்கட்கும் இடையே போர்நிகழ்ந்த போதெல்லாம், மகளிரையும் மகப்பெறும் தகுதியில்லாரையும் அதனை இழந்தாரையும் பிணியாளரையும் கொல்லலாகாது என்ற பேரறம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனால் மக்களிடையே ஆடவரினும் மகளிர் தொகை ஓரளவு பெருகியிருந்தது; அவர் பொருட்டே போரும் பூசலும் மிகுதியும் உளவாயின. ஒருத்திக்கு ஒரு கணவன் என்ற இயற்கை மனைவாழ்க்கை யறம் அக்கால மக்களினத்துக்குப் போதிய அரண் செய்ய வில்லை. அந்நெறியால் இளமகளிர் பலர்க்கு மணஞ்செய்து கோடற்குரிய வாய்ப்புத் தோன்றாதாயிற்று. தம்மை வரைந்து மனைவியாகக் கோடறகுரிய ஆடவர் இல்லா தொழிந்தமையின் அவர்கள் வரைவில் மகளி ராயினர். வேறு நாடுகளில் இந்நெருக்கடி தோன்றிய போது, அவர்கள் பெண்களைக் குழவிப் பருவத்தேயே கொன்றொழித்தனர்; சில நாட்டவர் பெண் களை "விக்கிரகங்களுக்கு" நரபலி என்ற பெயரால் கொலை செய்து மகிழ்ந்தனர். அத்தகைய தீச்செயல் தமிழர் வாழ்வில் என்றுமே தோன்றியது கிடையாது. மேலும், இவ்வரைவில் மகளிர் ஏனோரைப் போல உலகில் வாழப் பிறந்தவர்கள்; வாழ்தற்கு உரிமையும் உடையவர் என்பது கண்ட தமிழ்ச்சான்றோர், மகப்பேறு இல்லாதோர் அது குறித்து மண மாகாதாள் ஒருத்தியை மகப்பேறு மனைவியாக மணந்து கொள்ளலாம் என்றனர். அதனைத் தொல்காப்பியனார், பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை என்றனர். அவர் தாமும் மகப்பேறி லராயின் மேலும் சிலரை அது குறித்து மணந்து கொள்ளலாம். அத்தகைய கருத்தின்றிக் காமம் காரணமாகக் கொள்ளப்படும் வரைவில் மகளிர் காமக் கிழத்தியர் எனப்படுவர். இவர் அனைவரும் தமிழ்த்தலைவர் மனைவாழ்வின்கண் இடம் பெறுவர். இச்செயல் வகைகளால் மக்களினத்து ஆடவர் பெண்டிர் தொகை சமனிலை எய்தாதாகவே, மிக்குற்ற மகளிர்க்கு ஆடல் பாடல் அழகு என்ற கலைத்துறைகளைச் சான்றோர் உரிமை செய்தனர். அவற்றுள் தக்க புலமையும் தலைமையும் பெற்றோர் பரிசில் வாழ்க்கையராயினர். அவர்கள், ஏனோர் வாழும் ஊர்ப் புறத்தே சேரி அமைத்து வாழ்க்கை நடத்தினர். அதனால், அவர் சேரி, பரத்தையர் சேரி எனப்பட்டது. அவர்களிடையே நடைபெறும் அரங்கேற்றம், கூத்து, வேனில் விழா, புனலாட்டு முதலியவற்றைத் தலைமக்கள் முன்னின்று நடத்துவது சிறப்புடை மரபு. ஆடரங்குகளில் தலைவர்கள் அம்மகளிர்க்குத் தலைக்கை (தொடக்கம்) தந்து தொடங்கி வைப்பர். கற்ற கலைகளில் தலைமை பெறுபவட்குத் தலைக்கோலி என்ற பட்டமும் நல்குவர். இவ்வழக்காறு இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இருந்தது. இவ்வாறு ஆடல் பாடல் அழகு என்ற பல்வகைக் கலைத் தொழிலில் சிறப்புப் பெற்று வந்த மகளிர்ப் "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது பற்றிச் செல்வர் நட்புற்றுத் தம் நலத்தை அவர்கட்கு விற்கலுற்றனர். பொருள் மேற்படர்ந்த அவ்வரைவில் மகளிருள்ளம் அதனை யுடையார் பலர்பாலும் பரந்து இயலுவதாயிற்று; அதனால் அவர்கள் பரத்தையர் எனப்படுவாராயினர். ஒருவரை விட்டுப் பலர்பால் உள்ளம் செலுத்தும் செயல் பரத்தைமை என்றும் குறிக்கப் பட்டது. இவ்வழக்கினை இந்நூற்கண் பலவிடங்களில் காணலாம். பரம் என்ற சொல் மிகுதிப் பொருளை யுணர்த்துவது கண்டு, மிகை மகளிரான வரைவில் மகளிரைப் பரத்தையர் எனவும் பழந்தமிழ் உரைகாரர்கள் குறிக்கலுற்றனர். வரைவில் மகளிரென்றே வழங்கிய திருவள்ளுவர், பரத்தையராகிப் பொருள் வேட்கை கொண்டாரைப் பொருட் பெண்டிர் என்றும் பொய்ப் பெண்டிர் என்றும் கொண்டனர். தகுதியுடைமை யின்மையோ அன்புண்மை இன்மையோ நோக்காது, பொரு ளொன்றே நோக்குதலின், பரத்தையர் வரைவில் மகளிர் எனப்படுவரென்றலும் ஒன்று, வரைவு என்ற சொல், பழந்தமிழ் நூல்களில் இன்னார்க்குரியள் இவள் எனப் பெற்றோரும் சான்றோரும் கூடி வரையறுக்கும் மணவினை என்ற பொருளி லேயே யாண்டும் வழங்கலின், வரைவில் மகளிர் என்பதற்கு வரை வில்லாத மகளிர் என்பதே நேரிது. இடம் நோக்கி மேற்கூறிய பொருள் வகைகளைக் கொள்வதே இன்றைய நமது கடனாகும். இப்பரத்தையர் மனைக்குரியர் அல்லராதலின், இவர் களைப் புறப் பெண்டிர் என்றும், புறத்தோர் என்றும், இவரோடு கூடி இன்புறுதலும் இன்புறுவித்தலும் புறத்தொழுக்கம் என்றும் நூல்கள் குறிக்கின்றன. இப்புறப் பெண்டிர் போர்க்காலத்தில் பாசறைக்கண் இருந்து புண்பட்ட வீரர்க்கு மருத்துவம் புரியும் மாண்கடனும் உடையர். இக்கூறிய பரத்தையரொடு உளதாகும் புறத்தொழுக்கம் அன்பின் ஐந்திணையாகிய அகவொழுக்கத்துக்கு மாறானது; குணமே வடிவாய தலைமகற்கு ஆகாதது. ஆயினும் அப் பரத்தையர் கலைத்துறைகளில் சிறந்து மேன்மை எய்துங்கால் அவர்களது புலமையை வியந்து சிறப்புச் செய்தற்கும், சிறப்பு விழாக்கட்கும் வேத்தியல் பொதுவியல் என்ற கூத்து வகைகட்கும் தலைமை தாங்கியும், தலைக்கை தந்தும், தலைக்கோல் நல்கியும், பரிசு பல வழங்கியும் பாராட்டி மகிழ்வித்தல் "நல்லவை யெல்லாம் கடன் என்ப" என்ற தலைமகனுக்கு அறமாகும். மேலும், உலகியல் வாழ்வு ஒருவர்க்கொருவர் உதவியும் உதவி பெற்றும் இயலுவது; எவரும் பிறர் உதவி சிறிதுமின்றி வாழ்தல் என்பது ஒருகாலும் ஓரிடத்தும் இல்லை; இதனால் தானே செய்தற்கு வேண்டுவனவும் இயல்வனவும் ஆகிய எல்லாவற்றுக்கும் பிறரை நாட வேண்டு மென்பது கருத்தன்று; தானே செய்யக் கூடியவற்றின் எல்லையை விடப் பிறர் உதவி பெற்றுச் செய்வனவற்றின் அளவு பெரிது. இது பற்றியே பிறர் வாழ்ந்தாலன்றித் தனக்கு வாழ்வில்லை; பிறர் வாழ வாழ்தல் வேண்டும்; தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்க என்றெல்லாம் நல்லறிஞர் இடமும் காலமும் வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்துகின்றனர். குணமே வடிவாய நல்லாண்மகன், இந்த அறத்தின் வடிவாகலின், அவன் பரத்தை யர்க்கு உதவும் பொருட்டு, வாழ்வு தரும் பொருட்டு, அவரிடையே சென்று தலைமைப்பணி செய்தல் குற்றமாகாது; முறைமையேயாம். அங்ஙனம் தலைவன் பரத்தையர் சேரிக்குச் செல்வதும் அவரிடையே இருந்து சிறப்பிப்பதும் பரத்தையிற் பிரிவு எனப்பட்டன. இக்கருத்தை நன்கு புரிந்து கொள்ளாமையால், இடைக்கால அறிஞர்கள், குற்றமின்றிக் குணமே உருவாகிய தலைமகனைப் படைத்து அவனைப் பரத்தையிற் பிரிவின்கண் பெண்ணேவல் செய்தொழுகும் பேதை எனக் கருதுமாறு பல எழுதிவிட்டனர். இடைக் காலத்தில் தமிழ் வாழ்வுக்கு உண்டாகிய கேடுகளுள் இதுவும் ஒன்று. பரத்தையரோடு ஒழுகும் செயல், மனையுறையும் தலைமகள் உள்ளத்தில் பொறாமையும் புலவியும் ஊடலும் தோற்றுவிப்பது இயற்கை. அவற்றால், தலைமக்களிடையே புலவி தோன்றி அவர்களது காதலுறவை மிகுவித்து இன்பம் பெருகு விக்கும்; "உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது, மிக்கற்றால் நீள விடல்1" எனவும், "ஊடுதல் காமத்துக்கு இன்பம்2" எனவும் திருவள்ளுவர் தெருட்டுகின்றார்; அது பற்றியே சான்றோர், தலைமகற்குப் பரத்தையர் தொடர் புண்டானதாகப் படைத்துக் கொண்டு தலைவியும் தோழியும் பரத்தையும் புலந்தும் ஊடியும் உரைப்பனவாகப் பாட்டுக்கள் பாடி யுள்ளனர்; தலைமகன் ஒரு பரத்தையைக் கண்டு காதலுறுவதாகவோ, அவளோடு காதலுரை நிகழ்த்து வதாகவோ ஒரு பாட்டும் சான்றோர் உரையாமையே இதற்குச் சான்று. அன்பின் ஐந்திணை அல்லாத பெருந்திணை, குணமும் குற்றமும் விரவிய மக்களினத்திடை நிகழும் செயல்வகைகளைச் செப்புவது; புறத்திணையும் அப்பெற்றியது. இவ்வியல் புகளை நோக்காது, பிற்கால அகப்பொருள் நூல்களையும், கோவை உலா கலம்பகம் முதலிய சின்னூல்களையும் நோக்கித் தலைமகன் பரத்தைபால் அணைந்தான் எனத் துணிவது, ஆராய்ந்து அறிதற்கேற்ற அறிவும் கருவியும் சிறக்கப் பெற்று மகிழும் நமக்கு நீர்மையுமன்று, நேர்மையுமன்று. இதனாலன்றோ, தலைமைநலம் பெற்ற ஆண்மக்கட்குக் காதலின் பத்தினும், பொருள், வினை, அறிவு, நாடுகாவல், பகைதெறுதல் ஆகியவற்றால் தோன்றும் புகழும் வெற்றியும் நல்கும் இன்பம் பெரிது; ஆகவே அவை குறித்துப் பிரிதல் அறம் என்ற தொல் காப்பியரை யுள்ளிட்ட சான்றோர், இப்பரத்தையிற் பிரிவை, அப்பிரிவு வகைகளோடு ஒன்றாக வையாராயினர். "ஓதல் பகையே தூது இவை பிரிவே" எனவும், "தானே சேறலும் தன்னோடு சிவணிய, ஏனோர், சேறலும் வேந்தன் மேற்றே" எனவும் "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையால், பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும், இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே" எனவும், தொல்காப்பியனார் உரைக்க, பிற்காலத்தார், ஓதல் முதலிய வினையே, வேந்தற் குற்றுழிப் பொருட்பிணி பரத்தையென்று, ஆங்கவ்வாறே அவ்வயிற் பிரிவே3" என்றது காண்க. இனித் தலைமக்களது தூய காதல்சிறப்பது கருதிப் படைத்துக் கூறப்படும் பரத்தையிற் பிரிவாகிய புறத்தொழுக்கம், "வாயில் மறுத்தலும் வாயில் கூறலும், தோழி மாற்றலும் புலவி தோற்றலும், கிழவன் புலத்தலும் கிழவி புலத்தலும் விழையுநன் விழையான் இவனென விளம்பலும், தாய் கண்டுரைத்தலும் தாங்கிய காதலின், ஆயின பிறவும்1" என்ற இவ்வகையில் இயலும்; இங்கே தலைவன் பரத்தையைக் கண்டு அவளை முன்னிலைப்படுத்தி மொழிவதாக ஒரு கூற்றும் கூறப்படாமை நோக்கத்தக்கது. குணமும் குற்றமும் விரவிய மக்களினத்திடையே இருந்து வந்த பரத்தைமை யொழுக்கம், மகளிர்க்கு வேண்டும் உரிமை யெல்லை விரிந்தவழி வேண்டாமைபற்றி, இப்போது சட்ட வாயிலாக விலக்கப்பட்டுவிட்டது. பரத்தையிற் பிரிவு பற்றிய இக்குறிப்பு மேலே வருமிடங்களில் படிப்போர் மறவாமைப் பொருட்டு எடுத்தோதி வற்புறுத்தப்படும். 21. மருதன் இளநாகனார் இவர் பெயர் மதுரை மருதன் இளநாதனார் என்றும் சில ஏடுகளிற் காணப்படுகிறது; இதனால் இவர் மதுரையைச் சார்ந்த சான்றோர்களுள் ஒருவர் என்பது தெளியப்படும். மருதன் என்பார் இளநாகனார்க்குத் தந்தை. இளநாகன் என்றது இவரது இயற்பெயர். இவர் காலத்தே பாண்டி நாட்டைக் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதியும் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன் மாறனும் ஆட்சிபுரிந்திருக்கின்றனர். மாறன்வழுதி, ஒருகால் வடவரோடு போர்குறித்துச் சென்றது கண்ட இளநாகனார். அவன் செலவை வியந்து, புலியொன்று இரை கருதிச் சென்றதுபோல் இருந்தது என்றும், இலவந்திகைப்பள்ளித் துஞ்சியநன் மாறன் தன் காலத்தில் வாழ்ந்த அரசர் பலருள்ளும் மிக்கிருந்தான் என்பது பற்றி அவனை, "கறை மிடற்றண்ணல் காமர்சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார்மாறன்" என்றும் புகழ்கின்றார். அவன்பால் நம் இளநாகனார்அறமுரைக்கும் சான்றோராய் விளங்கி, படைவகை "நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என அறிவுறுத்துவது இன்பந் தருவது. நாஞ்சில் நாட்டுத் தலைவனான வள்ளுவனை, "வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே" என்பது நினைக்குந்தோறும் இறும்பூது பயக்கின்றது. மாறன் வழுதியை முன்னிலைக்கண் வைத்துப் பாராட்டிய இவர், படர்க்கைக்கண் நிறுத்தி, "ஒன்னார்ஓடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை வெல்போர் வழுதி" என்று சிறப்பித்து, "சினையலர் வேம்பின்பொருப்பன் பொருத முனையரண் போல உடைந்தன்று அக்காவில் துணைவரி வண்டின் இனம்" என்று பாடுகின்றார். அவனுடைய வையையாற்றை, "பொய்யா வாள் தானைப் புனைகழற்கால் தென்னவன், வையைப் புதுப்புனல்" என்றும், அதற்குத் தலைவனான சிறப்புப்பற்றி, "நண்ணார் அரண்தலை மதிலராகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்" என்றும் பரிந்து ஓதுகின்றார். இவ்வாற்றால் இவர்க்குப் பாண்டியர் குடிக்கண் இருந்த பற்று மிகுதி புலப்படுகிறது. இனி, குறுநில மன்னருள் நாஞ்சில்நாட்டு வள்ளுவனை இவர் பாடியிருக்கின்றார் என்பதனை முன்பே கூறினாம். பாண்டி நாட்டுச் சிறுகுடிக்குரியனான வாணனையும் சேர நாட்டுப் பிட்டங் கொற்றனையும் காமூர்த் தலைவனான கழுவுளையும், வேறுபல வேளிர்களையும் இவர் பாடியுள்ளார். பாபிலோனிய நாட்டுக் கிசிய பகுதியினின்றும் போந்து, சேர மன்னர்க்குத் தானைவயவராய்ப் பணிசெய்தொழுகிய கோசர்கள் தங்கிக் குடிசெய்து வாழ்ந்த செல்லூர், வாணனுடைய சிறுகுடி, தழும்பனது ஊணூர், கழுவுளின் காமூர், வேளிர்களின் வீரைநகர், செந்தில், பரங்குன்று, சாய்க்காடு முதலிய பேரூர்கள் இவர் பாட்டுக்களில் குறிக்கப்படுகின்றன. இறைவன் மூவெயில் முருக்கியதும், பரசுராமன் வேள்வி செய்ததும், கொங்கர் உள்ளிவிழாக் கொண்டாடியதும், யமுனையாற்றங்கரையில் கண்ணன் ஆயர்மகளிர்க்குத் தழையுடை யுதவியதும், ஏதிலாளன் உற்ற துயர்கண்டு திருமாவுண்ணி என்பவள் தன் மார்பின் முலையறுத்ததும், பிறவும் இடையிடையே இவர் கூறும் பழஞ் செய்திகள். இவற்றுள் திருமாவுண்ணியைக் கண்ணகியென மருள்வோரும் உண்டு. குடவோலை யெடுப்பதும், கடலிற் கலஞ் செலுத்துவோர் கரைக்கண் நெடுமனைகள் எடுத்த விளக்குகளைக் கண்டு தம் கலத்தைச் செலுத்துவதும், மகட்கொடை மறுப்பாரோடு அரசர் போர் தொடுப்பதும், தலைவன் பெற்ற மகனுக்குப் பரத்தையர் அணி யணிந்து மகிழ்வதும், பணிப்பெண்கள் அம்மகனைக் கோயில்கட்கு எடுத்துச் செல்வதும் பிறவுமாகிய வழக்காறுகள் பலவற்றை எடுத்துக் காட்டுவர். தலைமக்கள் குணமே நிறைந்து குற்றமே யில்லாதவர் எனப் புலனெறி வழக்கிற்காகப் படைத்துக்கொள்ளப்பட்டவராதலால் அவருள் தலைவி நலத்தை, "கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய, புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின், நன்னராட்டி" எனவும்; தலைவனது மாண்பை, "வல்லவர், செதுமொழி சீத்த செவி செறுவாக, முதுமொழி நீராப் புலனா வுழவர், புதுமொழி கூட்டுண்பவன் என்றும் குறிக்கின்றார். தலைமகன் கனாக் காண்டலும், குதிரையானை முதலியன ஏறி மகிழ்தலும், அவற்றைத் தலைமகள் அவன் புறத்தொழுக்கத்தின்மேல் ஏற்றிப் புலப்பதும் கற்போர்க்கு மிக்க இன்பம் தருவனவாகும். குடிக்கு முதல்வன் பெயரைப் புதல்வற்கு இடுவதைத் "தான் தன் முதல்வன் பெரும்பெயர் முறையுளிப்பெற்ற புதல்வன்" என்று இயம்புகின்றார். "வெந்தபுண் வேலெறிந்தற்று", "செருக் குறித் தாரை உவகைக் கூத்தாட்டும்", "ஆற்றும் பெரியோர்க்கு ஆற்றாதவர் அடியவர்", "யார்மேல் விளியுமோ கூற்று", "பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு", "மருந்தின்று மன்னவன் சீறின்", "முகந்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு" என்பன முதலியன இவர் காட்டும் பழமொழிகள். "ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே", "மக்கள் முரியே" "உழுந்தினும் துவ்வாக் குறுவட்டா" முதலியன இழிந்தோர் கூறும் வசை மொழிகள் மாவும் புள்ளும் வண்டும் பிறவும் செய்யும் செயல் வாயிலாக மக்கட் பண்புகளை உள்ளுறுத் துரைக்கும் இவருடைய புலமைமாண்பு. அவரவரும் தாந்தாமே படித்து இன்புறற்குரியது. இவர் பாடியன தொகை நூல்களில் பெருகவுள்ளன. தலைமகன் தன் மனைவியோடு கூடி மனையறம் புரிந்தொழுகுகையில், கடனாய் நின்றதொரு வினைகுறித்துத் தலைவியைப் பிரிந்து சென்றான். வினைமுடிவில், அவன் தன் மனைக்குத் திரும்புங்கால் வழியில் கானக் கோழி யொன்று விடியலில் தான் கொண்ட இரையை யெடுத்துக் கொண்டு தன் பெடையை நோக்கி விரைந்து போவதைக் கண்டான். கோழிச் சேவலின் காதலுள்ளம் அவனது உள்ளத்தைத் தொட்டது; உடனே அவன் தேர்மீது இவர்ந்து வலவனை நோக்கி "நம்மொடு வந்த இளையர் தாம் வேண்டியவாறு மெல்ல வருக; இதோ, இக் கானக் கோழியின் காதற் செய்கையைப் பார்; இனிச் சிறிதும் தாழாது நாமும் நம் மனைக்குச் சேறல் வேண்டும்; ஆதலின், முட்கோலால், நம் பரிகளைத் தூண்டி விரையச் செலுத்துக" என்றான். இக்கூற்றின்கண், வினைமுடிவில் காதலியை நினையும் காதலன் உள்ளத்தைச் சூழ்நிலைக் காட்சி தோன்றி முடுகும் திறத்தைக் கண்ட இளநாகனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். விரைப்பரி வருந்திய1 வீங்குசெலல் இளையர் அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ வேண்டமர் நடையர் மென்மெல வருக தீண்டா வைம்முள் தீண்டி நாம்செலற்கு ஏமதி வலவ தேரே யுதுக்காண் உருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன அரிக்குரல் மிடற்ற வந்நுண் பல்பொறிக் காமரு தகைய 2கான வாரணம் பெயனீர் போகிய வியனெடும் புறவில் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாளிரை கவர 3மாட்டித்தன் மாண்பெடை நோக்கிய பெருந்தகு நிலையே. இது, வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. உரை விரைப்பரி வருந்திய வீங்கு செலல் இளையர்-விரைந்த செலவினால் மெய்வருந்திய மிக்க செலவையுடைய ஏவலர்கள்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ-அரையில் கட்டிய கச்சையின் கட்டவிழ்த்து இளைப்பாறி; வேண்டு அமர் நடையர் மென்மெல வருக-விரும்பியவாறு நடந்து வருவோர் மெல்ல வருவாராக; தீண்டா வைம்முள் தீண்டி-இதுகாறும் தீண்டாத தாற்றுக்கோல் முள்ளால் குதிரையைத் தொட்டுத் தூண்டி; நாம் செலற்கு-நாம் விரைந்து ஏகும் பொருட்டு; வலவ-தேர்ப்பாகனே; தேர் ஏமதி-தேரைச் செலுத்துவாயாக; உதுக்காண்-அதோ பார்; உருக்குறு நறுநெய் பால் விதிர்த்தன்ன - உருக்கப்பட்ட நறிய நெய்யைப் பாலில் தெளித்தாற்போன்ற; அரிக்குரல் மிடற்ற-அரித்த ஓசையைச் செய்யும் கழுத்தையும்; அந்நுண் பல் பொறி-அழகிய நுண்ணிய பலவாகிய பொறிகளையும் உடைய; காமரு தகைய கான வாரணம்-விரும்பத்தக்க அழகு பொருந்திய கானக்கோழி; பெயல்நீர் போகிய வியல் நெடும் புறவில்-மழை பெய்து நீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிடத்தில்; புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி-ஈரம் புலராத மண்ணைக் கிளைத்து; நாளிரை கவர மாட்டி-நாட்காலையிற் பெற்ற இரையாகிய புழுவைக் கவர்ந்து தன் அலகிடைப் பற்றிக் கொண்டு; தன் மாண்பெடை நோக்கிய பெருந்தகு நிலை-தன் காதலால் மாண்புற்ற பெடையை நோக்கிச் செல்லும் பெரிய தகைமை பொருந்திய நிலையை எ.று. வலவ, வாரணம் புறவிற் கெண்டி நாளிரை மாட்டிப் பெடை நோக்கிய பெருந்தகு நிலையை உதுக்காண்; இதனைக் கண்டும் தாழ்த்துச் சேறல் நன்றன்று; ஆதலால், இளையர் அசைஇ வேண்டமர் நடையர், மென்மெல வருக; நாம் செலற்குத் தீண்டா வைமுள் தீண்டி ஏமதி என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. பரி, ஈண்டுக் குதிரைமேற் செல்லும் செலவின்மேற்று. விரைந்த செலவு இளையாரையும் இளைப்பெய்தச் செய்யு மாதலின் விரைப்பரி எனச் சிறப்பித்தான். பலராய்க் குழீஇ வரும் இளையாரை வீங்குசெலல் இளைய ரென்றார். குதிரைமேற் செல்லுவதால் உடை நெகிழாமைப் பொருட்டு இறுக்கிய கச்சையை அவிழ்த்து இளைப்பாறல் வேண்டுதலின் யாப்பு அவிழ்த்து அசைவு தீர்வு கூறப்பட்டது. கச்சை செறித்துத் தாவடி யிட்டு நடத்தல் மறவொழுக்க மாதலின், நடைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியவழி அவரவரும் தம் விருப்பம்போல் குந்தியும் குறுநடை யிட்டும் செல்லு தலை வேண்டமர் நடை என்றார். வைம்முள், ஆகுபெயரால் கூரிய முள் செருகப்பட்ட தாற்றுக்கோல் மேல் நின்றது; எருதுகளை இயக்கும் கோலிலும் இது மிகவும் குறுகி யிருக்கும். குருதி தோன்றக் குத்துதல் தீது என்றற்குத் தீண்டுதல் கூறினார். ஏமதி, மதி முன்னிலையசை. உருக்கிய நெய்யைப் பாலில் தெளித்தவழி, அஃது ஒளியும் கருநிறமும் கொண்டு கோடுகோடாய் ஓடும்; கோழியின் கழுத்தும் அது போல் இருக்கும் என அறிக. காமரு, காமம் மரு எனப் பிரித்து விரும்பத்தக்க எனப் பொருள் கொள்க. தகை, அழகு, கெண்டி, கிளறி. வாயலகின் இடையே குறுக்காகப் பற்றினமை தோன்றக் கவர மாட்டி என்றார். மாண்பெடை, காதல் மாண்புடைய பெடைக் கோழி. பெருந்தகு நிலை, பெருமித நிலை; ஆண்மை தோன்ற நிமிர்ந்த நடையுமாம். வினைமேற் சென்ற தலைவன் அது முற்றியதும் தன் இளையரைத் தேர்பண்ணுக, மீள்கம் என்றானாக, அனைவரும் உவகை உள்ளத்திற் கிளர்ந்தெழக் குதிரை இவர்ந்து விரைந்து மீள்கின்றனர்; இடையே தலைவன் போதரும் தேரைத் தொடர மாட்டாது பிற்பட்டமை கண்டு, இளையர் இனிச் சிறிது இளைப்பாறி வருக எனப் பணித்தமை தோன்ற, விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர் மென்மெல வருக என்றும், பரியூர்தலால் பிறக்கும் வருத்தமும் கச்சையின் இறுக்கமும் இளையரை விரைந்த செலவுக்கு இடையூறு செவ்வன எனக் கருதினமையின், விரைப்பரி வருந்திய என்றும், கச்சை யாப்பழித்து அசைஇ என்றும் கூறினான். இளையராகலின் கட்டுப்பாடின்றித் தாம் விரும்பியவாறு விளையாடி வருவர் என்பது உணர்ந்து வேண்டமர் நடையர் மென்மெல வருக, யாம் முற்பட்டுச் செல்கம் என்றும், வைம்முள்ளாற் குத்திப் பரியைச் செலுத்துவதைத் தலைவன் விரும்பு பவனல்லன் என்றற்குத் தீண்டாவைம்முள் என்றும், நாம் விரைந்து சேறல் வேண்டு மாதலால் இப்பொழுது அம் முள்ளாற் குதிரைகளைச் சிறிதே தூண்டுக என்பான், நாம் செலற்கு வைம்முள் தீண்டி ஏமதி என்றும், தேர் செலுத்துதலில் பாகனுக் குள்ள வன்மையைத் தான் அறிந்து பாராட்டுபவன் போலப் பாக என்னாது வலவ என்றும் இசைத்தான். கானக் கோழி மணல் மலிரக் கெண்டி நாளிரையை மாட்டிச் செல்வது, தான் போந்து வினை முற்றி மிக்க பொருளொடு மனைநோக்கி மீளுதலையும் பெடையின் காதல்மாண்பை நினைந்து செல்லும் சேவலின் செம்மாந்த நடை, வினைமுடிவில் தன் மனக் கிழியில் தோன்றிய தன் காதலியின் காதல் நலம் தன் உள்ளத்தை யூக்கத் தான் அதன் வழிச்செல்லும் சிறப்பையும் ஒத்திருப்பது உணர்ந்து உவகை மிகுதியால், உரையாடுவார் பிறர் இன்மையின், பாகனுக்குக் கானச்சேவலின் பெருந்தகு நிலையைக் காட்டி, உதுக்காண் என்றான். பாத்தூண் தொகுத்த ஆண்மைச் செயலாற் பிறந்த பெருமித மாகலின், அதனைப் பெருந்தகு நிலை என்றான். மேலும் "வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருகாலை, இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை1" என்பதுபற்றி விரைவையே விதந்து வேண்டினான். மழையால் நிலம் ஈரமுற்று மென்மை யெய்துங்கால், மண்ணின் அடியில் உறையும் நாங்கூழ்ப்புழு முதலியன வெளிப்படுவதும், வெயில் அவற்றிற்குக் கேடு விளைவிப்பதுபற்றி, நாட்காலையே அவை வெளிப்படுங்கால மாவதும் அறிந்து கூறுதலால் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாளிரை கவர மாட்டி என்றான். என்பில்தனை வெயில் காயும் என்று திருவள்ளுவர் கூறுவது அறிக. 22. நல்வேட்டனார் இப்பெயர் அச்சுப்பிரதியில் காணப்படவில்லை யாயினும் தேவர் ஏட்டிலும், செட்டியார் ஏட்டிலும் காணப்படுகிறது. இவர் மிளைகிழான் நல்வேட்டனார் என்றும் கூறப்படுவது நோக்குமிடத்து இவர் மிளையென்னும் ஊரினர் என்பது தெளிவு. இவ்வூர் சோழநாட்டில் பெருமிளை சிறுமிளை என இரு கூறாக இடைக்காலத்தில் பிரிந்திருக்கிறது; பெருமிளை இடைக்காலத்தேயே பெருமுளை யென மருவி சயங்கொண்ட சோழவளநாட்டு மிளைநாட்டுப் பிரமதேயமான பெருமுளை2 என வழங்கியது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் தெரிகிறது. மிளை நாடென்பது சில கல்வெட்டுக்களில் விளைநாடு எனக் காணப்படுகிறது. வேறு கல்வெட்டுக்களில் காணப்படும் விளைநாடு வேறு; இது வேறு. இச்சான்றோர் மிளைகிழான் எனப்படுதலின் இவர் வேந்தவைஅறியச் சிறந்த புலமை மிக்கவர் என்பதில் ஐயமில்லை. வேந்தர் போர் செய்து அழிந்த களத்தில் பெரும்புண்ணுற்று வீழ்ந்தோரைப் பேய் தொடருமென்றும், சான்றோர்கள் செல்வமெனச் சிறப்பித்து ஓதுவது நெடுமொழி கிளத்தலும் கடுமா ஊர்தலும் அன்று; தம்மைச் சேர்ந்தார் எய்தும் வருத்தம் அறிந்து இரங்கியருளும் அருளாகிய மென் கண்மையே என்றும், பெரியோர் தம் நெஞ்சிற் கொண்ட ஆண்மை நெறி கடவார் என்றும் கூறுவன இவ் வேட்டனாரு டைய மேதக்க சால்பினை விளம்புகின்றன. இவர் பாடியனவாகக் குறுந் தொகையிலும் சில பாட்டுக்களுண்டு. களவொழுக்கம் பூண்ட காதலரிடையே தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்தான்; அவன் குறித்த பருவ வரவில் வருவதாக வற்புறுத்திச் சென்று சிறிது தாழ்ப்பானாயினன்; அதனால் தலைமகட்கு வருத்தம் மிகுந்தது. தோழி தகுவன கூறித் தலைவியை ஆற்றுவித்திருக்கையில், அவன் மீண்டு வந்து சான்றோரை விடுத்துத் திருமணம் செய்து கொள்வது மேற்கொண்டான். அதனை யறிந்த தோழி தலைமகட்குத் தெரிவிப்பாளாய், வெயில் வெப்பத்தால் வாடிய நெற்பயிருக்கு, உரிய காலத்தில் இனிய மழை பெய்தது போல தலைமகன் வரைவொடு வந்துள்ளா னென்று சொல்லலுற்றாள். தோழியின் இச்சொற்களில் தலைமகளின் மனநிலையை நெற்பயிரோடு உவமித்து உண்மை யுணர்த்திய திறம் கண்டு வியந்த நல்வேட்டனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரற் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் 1கையூண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன் வாழி தோழி உலகம் கயங்கண் அற்ற பைதறு காலை 2அள்ளிலை திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. இது, வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை-குறமகள் காவல் புரியும் மலைப்பக்கத்து விளைந்த பசிய தினைப்புனத்தின்கண்; முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி-முற்பட விளைந்த பெரிய தினைக்கதிரைக் கவர்ந்து ஓடிய மந்தி; கல்லாக் கடுவ னொடு நல்வரை யேறி-அவ்வாறு கவர்தலை அறியாத ஆண் குரங்கோடு கூடி நல்ல பாறை யொன்றின் மேல் ஏறியிருந்து; அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு-தன் அங்கை யிற் பிசைந்து கடுவனுக்கு அளித்துத் தானும் கைக்கொண்டு; தன் திரையணல் கொடுங்கவுள் நிறைய முக்கி-தனது திரைத்த அண லிடத்து வளைந்த கவுள்நிறைய அடக்கிக் கொண்டு; வான் பெயல் நனைந்த புறத்த-மழைநீரால் முதுகு நனைந்து நீர்துளிக்க இருக்குமாற்றால்; நோன்பியர் கையூண் இருக்கையின் தோன் றும் நாடன்-நீர் மூழ்கிய விரதியர் அந்நீர் துளிக்க இருந்து கையில் உணவை ஏந்தி உண்ணுவது போலத் தோன்றும் நாடன்; வந்தனன்-வரைவொடு வந்துற்றான், காண்; தோழி-; வாழி-; உலகம் கயம் கண்ணற்ற பைதறு காலை-உலகத்தில் குளம் முதலிய நீர்நிலைகள் நீர்வற்றிப் பசையறப் புலர்த்த காலத்தில்; அள்ளிலை திரங்கிய நெல்லிற்கு-கூரிய இலை வாடிய நெற் பயிர்க்கு; நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கு-நள்ளிரவுப் போதில் மழை பொழிந்தாற் போல எ.று. தோழி, வாழி, நெல்லிற்கு மழை பொழிந்தாங்கு, நாடன் வந்தனன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மந்தி கடுவனொடு ஏறி ஞெமிடிக்கொண்டு, முக்கி, இருக்கையின் தோன்றும் நாடன் என இயையும். கொடிச்சி, குறமகள், அடுக்கல், மலைப்பக்கம். மலைப்பக்கத்தே யுள்ள காட்டையழித்துத் தினைப்புனம் அமைப்பது குன்றவர் செயலாதலின் அடுக்கற் பைந்தினை என்றார். வளம்பட விளைந்தமை தோன்றப் பெருங்குரல் எனப்பட்டது. முற்பட விளைந்து நிற்கும் கதிர் பருத்துக் காண்பார்க்கு எளிதிற் புலனாதலின் மந்தி அதனைக் கவர்ந்து செல்வதாயிற்று. ஆணினத்தினும் பெண்ணுயிர் இளமையிலேயே தாய்மைநிலை எய்த வேண்டுதலின், அதன் அறிவு விரைவிற் சிறக்குமென அறிக. அது பற்றியே மந்தியின் காதலனாகிய கடுவன் கல்லாக் கடுவன் என்று குறிக்கப்பட்டது. நல்ல காப்புடைய இடம் என்றற்கு நல்வரை என்றார். தினை, கம்பு, சாமை முதலியவற்றின் கதிர்களைப் பிசைந்து துய்யினைப்போக்கி மணிகளைக் கொள்ளும் செயல் ஞெமிடுதல் எனப்படும்; இக்காலத்தில் அது ஞெமிட்டுதல் என வழங்குகிறது. குரங்கின் இருகவுளிலும் உள்ளே பக்கத் துக்கு ஒன்றாக இரு பைகள் உண்டு; கைக்குக் கிடைத்ததனை விரைய வாயிலிட்டுக் கவுட்பையில் அடக்கிக் கொண்டு சென்று வேறொரு தக்க இடத்தேயிருந்து சிறிது சிறிதாக மென்றுண்பது குரங்கிற்கியல்பு. தினைவிளை காலம் மழை பெய்யும் காலமாதலின், மந்தி போந்து கதிர் கவர்ந்தாடிய போது மழை பெய்தமை தோன்ற வான்பெயல் நனைந்த புறத்த என்றார். மழை பெய்த போது குறமகள் பரணிலிருந்து வெளியே வாராளாதலின், மந்திக்குக் கதிர்களைக் கவர்தல் எளிதாயிற்று. கடுவனும் உடன் போந்து மழையில் நனைந்தமை விளங்க புறத்த எனப் பன்மையாற் கூறினார். நீர் பலகால் மூழ்கலும் ஓரிடத்தும் நிலைபெற நில்லாமையும் விரதியர் ஒழுக்கமாதலால், அவர்கள் ஓரிடத்தே இருந்து கொடுப்பார் கொடுக்கும் உணவைக் கையே கலனாக ஏற்று உண்பர்; இருந்துண்ணும் குரங்கு, நோன்பியர் புறத்தே நீர் ஒழுக இருந்துண்பது போறலின், நோன்பியர் கையூண் இருக்கையின் தோன்றும் என்றார். கண்ணறுதல், ஈரமின்றிப் புலர்தல். பைதறுகாலை, பசுமையின்றி வற்றியுலரும் கோடைக் காலம். புல்லிலையாதலின் நெல்லின் இலை அள்ளிலை எனப் பட்டது. பகன்மழையினும் இராமழையால் நிலம் மிகக் குளிரும் என்ப. அதனால் நள்ளென்யாமத்து மழை என்றார். களவின்கண் ஒழுகும் தலைமகட்கு அழிவில் கூட்டம் பெறுதற் பொருட்டு எழுந்த பெருவிதுப்புக் கண்டும் தலை மகனது வரைவு முயற்சி யறிந்தும், அவன் வரைவொடு வருதலை மிக்க ஆர்வத்தொடு எதிர்நோக்கி யிருந்த தோழி, அவன் வரவறிந்ததும் விரைந்து போந்து உரைக்குமாறு தோன்ற வந்தனன் என்றும், தலைமகட்கு உவகை மிகுதலின், வாழி தோழி என்றும், அவன் வருமுன் தலைவியின் உள்ளம் வேட்கை வெம்மையால் ஈரமற்று வாடியிருந்தமையும், உண்மையுணர்வு திரங்கிச் சுருங்கி யிருந்தமையும் சுட்டி, கயம் கண்ணற்ற பைதறு காலை அள்ளிலை திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கு என்றும் கூறினாள். தலைவன் வந்தமை யால் விளையும் பயன் கூறலுற்ற தோழி, அதனைப் பெருங்குரல் கவர்ந்த மந்தி கடுவனொடு நல்வரை ஏறி முக்கி இனிது தோன்றும் என்றாள்; நீயும் மணவாழ்வு மேற்கொண்டு தலை மகனோடு அவன் மனையகம் அடைந்து அவன் தாளாற்றித் தந்த பொருளைப் பாத்துண்டு இனிது வாழ்வாய் என்று உள்ளுறுத் துரைத்த வாறு. "நாற்றமும் தோற்றமும்"1 என்ற நூற்பாவின் "ஆங்கதன் தன்மையின் வன்புறை" என்ற பகுதிக்கு இதனைக்காட்டி, "இதனுள் தினைவிளை காலம் வதுவைக் காலமாயினும் வம்பமாரி இடையிடுதலன்றி யான் கூறிய வரைவு பொய்த்தன ரேனும் இன்று மெய்யாகவே வந்தனர் என்றாள்" என்பர் நச்சினார்க்கினியர். 23. கணக்காயனார் இவர் மதுரைக் கணக்காயனார் என்றும் குறிக்கப்படுவர். பண்டை நாளில் நம் நாட்டில் ஊர்தோறும் இருந்து மக்கட்குத் தமிழ்நெடுங்கணக்கும் பிறவும் கற்பித்து வந்த ஆசிரியர்கள் கணக்காயர் எனப்பட்டனர். கணக்காயர் இல்லாத ஊர் நன்மை பயவாது என்பது முன்னையோர் முதுபொருள். "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும், மூத்தோரை யில்லா அவைக் களனும்-பாத்துண்ணாத் தன்மையிலாளர் அயலிருப்பும் இம் மூன்றும் நன்மை பயத்தல் இல"2 என்று சான்றோர் குறிப்பது காண்க. இனிக் கணக்காயர் என்ற சொற்பொருளை நோக்கின், ஊரவரிடையே நிலவும் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பொய்ம்மை மெய்ம்மை கண்டு உரைக்கும் மதிநுட்பம் உடைய புலமையாளர் என்பது இதன் பொருளாதல் விளங்குகிறது. கணக்குவழக்குகளை ஆய்ந்து உரைப்பவர் கணக்காயர் என்றல் பொருத்தமாகத் தெரிகிறது. கணக்குகளை எழுதுவோர் கணக்கர் எனப்படுவராகலின், அவரின் வேறுபடுத்தற்கு இவர்கள் கணக் காயர் எனப்பட்டனர் போலும். நடைமுறைக் கணக்கும் முந்து நூல் வழக்கும் ஒருங்கடையராவது இவரது சிறப்பியல்பு. அவர் பால் தமிழ்ப் புலமையும் நற்குணச் சால்பும் சேர்ந்துவிடின், அது பொன் மலர் நாற்றம் பெற்றாற் போலப் பொதுமக்கட்கு மிக்க பயன் விளைப்பதாகும். இத்தகைய கணக்காயர் பலர் இருப்பவும், இப்பொதுப் பெயரைத் தமக்கே சிறப்பாகக் கொண்ட இச்சான்றோர், அந்நாளில் மிக்க பெருமையுடன் விளங்கினா ரென்பது சொல்ல வேண்டாததாகும். இவர், மதுரையில் சிறந்து விளங்கினமை பற்றி, இவரை மதுரைக் கணக்காயனார் என்பது வழக்காயிற்றுப் போலும்; இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஒருவர்க்குச் சிறப்புப்பெயர் தோன்றி நாட்டில் பெரிதும் பயிலப் பரவுமாயின், இயற்பெயர் மறைந்தொழிவது இயல்பு. அதனால், நம் கணக்காய னாரது இயற்பெயர் இறந்தது எனக் கொள்வது குறையாகாது. நக்கீரனாரை மகனாகக் கொண்ட நற்றவமும் இவர்க்கு உண்டு. நக்கீரனார், தம் தந்தையை யொப்பச் சான்றோர் பாராட்டும் சால்பு பெற்ற போது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அறிஞர் உரைக்கும் சிறப்புப் பெற்றார். மதுரைக் கணக்காயனார், மதுரை நகரத்தவராயினும் ஏனை யாதும் நாடே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் பெருங்கொள்கை தலை சிறந்தவர் அர் காலத்து வாழ்ந்த பசும்பூண் பாண்டியனை, "அறம் கடைப்பிடித்த செங்கோல் உடனமர், மறஞ்சாய்த் தெழுந்தவலனுயர் திணிதோள், பலர்புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்" என்றும், சேரமன்னனை, "ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும், துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன்" என்றும், சோழமன்னனை, "விண்பொரக் கழிந்த திண்பிடி யொள்வாள், புனிற்றான் றரவின் இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன்" என்றும் சிறப்பித்துப் பாடுகின்றார். எனினும், சிறப்பின்றிப் பொதுமையில்லை யென்னும் முறைமைக்கேற்பப் பாண்டிநாட்டு அரசியல்பற்றி அவரது சிறப்புணர்வு ஓரோ விடத்து வெளிப்படாமல் இல்லை. பாண்டியரது கொற்கையை, "மறப் போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கைப் பெருந்துறை" எனவும், பாண்டியர் "புரைகெழு சைய" மலையில் வாழும் யானையினும் வேங்கடநாட்டிற் பிறந்த யானைகளையே மிகவுடையர் என்பார் "வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டியானை, மறப்போர்ப் பாண்டியர்" எனவும் உரைப்பர். மேற்குக் கடற்கரையில் நிற்கும் மலைத்தொடரில், பாலைக்காட்டுப் பிளவிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் தொடரை வானமலை எயன்றும், தெற்கு நோக்கிச் செல்வதைப் பொருப்பு என்றும், வான மலையை யுடைய சேரனை வானவன் என்றும், பொருப்பையுடைய பாண்டியனைப் பொருப்பன் என்றும் பழந்தமிழர் வழங்கினர்; இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்து வடமொழியாளர் சஃகியமலை (தொடர்மலை) யென்றனர்: சஃகியம் சையமெனத் தமிழாயிற்று. சஃகியம் செல்வாக்குப் பெற்றதும், பொருப்பு, வானமலை யென்ற பெயர்கள் வழக்கிறந்து மறைந்து போயின. மகளிருடைய கண்களுக்கு வேற்படையை உவமம் கூறுபவாயினும், இவர், ஒருத்தி கண்ணின் அமர்த்த பார்வையை, "தெண்ணீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்துபட, வேத்தமர் கடந்த வென்றி நல்வேல் குருதியொடு துயல்வந்தன்னநின், அரிவே யுண்கண் அமர்த்த நோக்கே" என்பதும், வருபடையைத் தாங்கி நிற்கும் வீரமகனொருவன் சிறப்பை. "வேந்துடைத்தானை முனைகெட நெறிதர, ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகித் தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு ஆழி அனையன் மாதோ" என்பதும் கற்போருக்கு மிக்க இன்பம் தருவனவாகும். இவர் பாடியனவாக அகநானூற்றிலும் சில பாட்டுக்கள் உண்டு. களவின்கண் ஒழுகும் தலைவன் தலைவியை விரைய வரைந்து கொள்ள நினையாது காதல் சிறப்பது கருதிக் களவையே விரும்பி யொழுகினான். இடையீடின்றித் தலைமகனைக் கூடப் பெறாமையால் தலைமகள் வருத்தம் மிகுந்து ஆற்றாளாயினள்; கணவனும் மனைவியுமாகிய பின்பு உளதாகும் இடையீடில்லாத கூட்டம் அழிவில் கூட்டம் என்று வழங்கும். தலைவியின் வேட்கை அதுவாதலைத் தோழி தலைமகன் பால் தெரிவிப்ப, அவன் களவே விரும்பும் தன் குறிப்புப் புலப்பட ஒழுகினான். தலைவிபால் உளதாய மேனி வேறுபாடு அவற்கு இனிது புலப் படாமையால் அவன் இவ்வாறு ஒழுகுகின்றான் எனக்கொண்ட தோழி, தன் தொடியைச் செறிய அணிந்திருத்தலால், இவளது உடம்பு "நனிசுருங்கல் வெளிப்படாதாயிற்று; ஆயமகளிரொடு விளையாட்டு மேற்கொண்டு ஒழுகுதலால், மேனி நிறவேறுபாடும் மறைவதாயிற்று; காவல் மிகுவதால் நின்னைக் காண்டற்கு இயலாமல், கண்ணீர் சொரிந்து, பண்டைய நலம் சிதைந்து நீரில் நனைந்து தோன்றும் நெய்தற்பூப் போலக் கண்களே காமக்கலப்புண்டு என்பதைப் பிறர் அறியப் புலப்படுத்துகின்றன; இனி, இற் செறிப்பு மிகுவது ஒருதலை; ஆதலால் நீ விரைந்து வரைந்து கோடலே தக்கது" என்று குறிப்பாய் எடுத்துரைத்தாள். இக் கூற்றின்கண் உள்ளுறு கருத்தாய் ஒடுங்கி மிளிரும் பெண்மையின் ஒட்பம், கணக்காயனாரது நுண்மாண் நுழைபுலத்தைத் தொட்டுப் பணிகொள்ளவும். அவர் அதனை இவ்வழகிய பாட்டிடைத் தொடுத்துப் பாடியுள்ளார். தொடிபழி மறைத்தலின் தோளுய்ந் தனவே வடிகொள்1 கூழை ஆயமொடு ஆடலின் இடிப்பம்2 மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள அன்னை காக்கும் தொன்னலம் சிதையக் காண்டொறுங் கலுழ்த லன்றியும் ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்னுறைச் சிறுபா சடைய செப்பேர்3 நெய்தல் தெண்ணீர் மலரின் தொலைந்த கண்ணே காமம் கரப்பரி யவ்வே4. இது, தலைவி ஆற்றாமை யுணர்ந்த தோழி தலைமகனை வரைவு கடாயது. உரை தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தன-முன்கையில் அணிந்த தொடிகள் கழன்று உகாதபடி செறிக்கப்பட்டிருப்பதால் உடம்பின்கண் உளதாகிய மெலிவு மறைப்புண்டலின் தோள்கள் வாட்டம் தோற்றுவியாவாயின; வடிகொள் கூழை-வடுவகிர்ந்து வாரி முடிக்கப்படும் கூந்தலை யுடைய; ஆயமொடு ஆடலின்-ஆயமகளிருடன் விளையாட்டு விருப் புடையாள் போன்று ஒழகுதலால்; மெய்யது இடிப்பும் ஒன்று உடைத்து-மெய்யிடத்தே யுண்டாகிய வாட்டமும் புறத்தே தோன்றாவாறு மறைக்கப்படும் ஏது ஒன்றினை உடைய தாயிற்று; கடிக்கொள-காவல்மிகுதலால்; அன்னை காக்கும் தொன்னலம் சிதைய-அன்னையாவாள் பிள்ளைப் பருவ முதலே காத்துப் புறந்தந்த பழைய நலம் கெடவே; காண் டொறும் கலுழ்த லன்றியும்-அதனைக் காணுந்தோறும் கண்ணீர் சொரிந்து அழுவதே யன்றி; ஈண்டு நீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை-நீர் நிறைந்த முத்துண்டாகும் கடற்பரப்பையுடைய கொற்கைநகர் முன்றுறையின் கண்; சிறு பாசடைய செப்பேர் நெய்தல்-சிறு சிறு இலைகளையுடைய பூச்செப்புப் போலும் நெய்தலினுடைய; தெண்ணீர் மலரின்-தெளிந்த நீரில் நனைந்த மலரைப் போல்; தொலைந்த கண் காமம் கரப்பு அரிய-அழகிழந்த கண்கள் நின்னோடு உண்டாகிய காதலுறவையும் மறைந்து உய்விக்கும் திறமின்றிப் பசந்து பலர் அறியத் தூற்றுகின்றன, எ.று. என்றது, இனி, நின்னால் வரைந்து கொள்ளப்படுவதை யன்றி வேறே உய்தியில்லேம், காண் என்றாளாம். தோள் உய்ந்தன; இடிப்பும் ஒன்று உடைத்து; கண்கள் கலுழ்தலே யன்றிக் காமம் கரப்பு அரிய என இயைத்துக் கூட்டி வினை முடிவு செய்க. பழி, குற்றம், இதுகாறும் தனக்கும் தன்னை ஈன்று புறந்தந்தோர்க்கும் உள்ள அன்புக்குரியதாய் இருந்த உள்ளம் தலைமகற்கே சிறப்பிடம் தந்து அவன்பாலே நினைவு முற்றும் செலுத்திப் பேணத் தலைப்பட்டமையின், களவின் கண் தலைவியுடம்பு உண்டியிற் சுருங்கி மெலிவு தோன்றியது குற்றமாம் என்க. வடி, கூந்தல் வடு, கூழை, கூந்தல், இடிப்பு, உடலிடத் துண்டாகும் மெலிவு; உடல் சிறிது மெலிந்தாரைக் காண்போர் இடிந்து போனார் என்பது இன்றும் உள்ள வழக்கு. ஒன்று, மறைத்தற்குரிய ஏது. கடி, காவல். தான் ஈன்று புறந்தரும் மக்களது உடல் நலமே பேணி அதற்குச் சோர் வுண்டாகாது காப்பதே அன்னையின் தாய்மைப்பணியாவது பற்றி, மக்கள் மேனிநலம் தாய் ஓம்பு ஆய்நலம் எனப்படுகிறது; "பால் நினைந்து ஊட்டும் தாய்" என மாணிக்க வாசகர் கூறுவது ஈண்டு நினைவு கூரற் பாலது. கண்கள் கலுழ்தலேயன்றிக் காதற்கலப்பையும் கரத்தல் அரியவாயின என இயைக்க. எச்சவும்மை தொக்கது. கடலிடத்து எங்கும் படாது ஒரு சில பகுதிகளில் மாத்திரம் படுவதால், கொற்கைக் கடற்கறையை முத்துப் படு பரப்பு என்றார். செப்பு, பூக்களின் அரும்புகளை மலர வைக்கும் செப்புவள்ளம்; இது செம்பினால் செய்யப்படுதலின் செப்பாயிற்று. அச்செப்புப் போன்ற வடிவுடைமையின், நெய்தற்பூவைச் செப்பேர் நெய்தல் என்றார்; "செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நலமலர்1" என்று சான்றோர் கூறுவது காண்க. தோளும் மெய்யும் நீக்கலின், கண்ணே என்ற விடத்து ஏகாரம் பிரி நிலை. வரைவுகடாவும் கருத்தினளாதலின், தோழி தலைமகட்குக் கூறுவாளாய்ச் சிறைப்புறம் நின்ற தலைவன் செவிப்படுமாறு கூறுதலால், தோழி, தொடிநெகிழ்ந்து ஓடுமாயின் தோளின் மெலிவு வெளிப்பட்டு மறைபுலப்படுத்தி இற்செறிப்பை விளைவிக்கும் என்பாள், தொடி பழிமறைத்தலின் தோள் உய்ந்தன என்றாள். தோள் பழியுய்ந்தன என்க. நின் மேனிக்கண் சோர்வு தோன்றியுள்ளது; ஆயினும் அதனை நீ ஆய மகளிரொடு சென்று அயரும் விளையாட்டுக்கள் மறைத்தமையின், அன்னை முதலாயினார் அறிந்து ஆராய்தற்கு இடனின்றாயிற்று என்பாள் இடிப்பும் மெய்யது ஒன்று உடைத்து என்றும், ஆயமோடு ஆடலின் அதுதானும் மறைந்தது என்றும் கூறினாள். நாளும் நின் நலமே நோக்கி அதன் வளர்ச்சியே கருதிப்பேணி யொழுகுபவள் அன்னை யென்றும், அழிவில் கூட்டம் பற்றிய வேட்கை நின் உள்ளத்தை அலைத்தலால் பிறக்கும் வருத்தம் அந்நலத்தைச் சிதைக் கின்றது என்றும், அதனைக் கண்டு நின் கண்கள் பெருந்துயர் கொண்டு நீர் சொரியா நின்றன என்றும், அவற்றைப் பன்முறையும் துடைத்து மறைக்கினும், காதற் பசப்புத் தோன்றி வெளிப்படுத்துவது இற்செறிப்பும் காவன் மிகுதியும் பயந்து, நம் களவிற்கு இடையூறு தோற்றுவிக்கும் என அஞ்சுகின்றேன் என்பாள். அன்னை காக்கும் தொன்னலம் சிதையக் காண் டொறும் கலுழ்தலன்றியும் எனவும், நெய்தல் தெண்ணீர் மலரின் தொலைந்த, கண்ணே காமம் கரப்பு அரிய எனவும் உரைத்தாள். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரை வானாவது. 24. குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் இச் சான்றோர்க்குத் தந்தை சோழ நாட்டின் மேலைப் பகுதி யிலுள்ள ஊர்களுள் ஒன்றினைச் சார்ந்தவர். அவர் குன்றூர் கிழார் எனப்படுதலால், சோழவேந்தர் அவையறிய வாழ்ந்து சிறப்புப் பெற்றவர் என்பது இனிது விளங்குகிறது. தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதற்கேற்பக் கண்ணத்தனாரும் அந்நாளில் நல்லிசைச் சான்றோராய்ச் சிறந்து விளங்கினார். சோழநாட்டுக் காவிரி வடகரைப் பகுதியில் போந்தை யென்னும் ஊர்க்குரியனாய் நெடுவேள் ஆதன் என்பான் வாழ்ந்து வந்தான். "படுவண்டார்க்கும் பன்மலர்க் காவின் நெடுவேளாதன்" என, அவனையும் அவனது ஊரையும் கண்ணத்தனார் பாராட்டிப் பாடியுள்ளார். இப்போந்தையை மிறைக்கூற்றத்துப் போந்தை1 என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. மீயறைக்கூற்றம் என்பது இடைக்காலத்தில் மிறைக்கூற்றம் என மருவிற்று. முடிவேந்தர் மகள் கோடற்குரிய வேளிரது மறமாண்பை யுணர்த்தும் வகையால் திருமணச் செவ்வி எய்திய மகளொருத்தியைக் கண்டு இவளைக் கேட்போர் கொற்ற வேந்தராயினும், தந்தை தன்னை வணங்கார்க்கல்லது ஈயான் என்று இவர் பாடுவது மிக்க இன்பம் தருவது; இவரது பாட்டொன்று புறநானூற்றிலும் உளது. கற்புக்கடம் பூண்ட பொற்புடைய தலைமக்கள் வாழ்வில் தலைமகன் பொருள் குறித்துப் பிரியவேண்டிய கடமை யுடைய னானான். காதலியின் காதல் மிகுதிஅவனது கடமை யுள்ளத்தை அலைத்தது. பொருளின் இன்றியமையாமை நோக்கித் தலைவன் தோழிபால் தன் கருத்தைக் குறிப்பாய் உரைத்தான். அறங்கடைப் படாத வாழ்வும், பிறன்கடைச் செல்லாத செல்வமும் காதல் வாழ்வுக்கு அரணும் ஆக்கமுமாதலை யுணர்ந்த தோழி, அவற்கு உடன்பட்டுத் தலைமகள் உள்ளங் கொள்ளுமாறு உரைத்தாள். அது கேட்டதும் தலைவி, "தம் செலவைக் காதலர் கூறியது கேட்டு உடன்பட்டனை; அதனால் நீ நன்றே செய்தாயாகின்றாய்; ஆடவர் எப்போதும் வினையும் பொருளும் வேண்டியிருப்பர்; அவை குறித்து அவர் பிரிந்தேகுவர்; அவ்வினையும் பொருளும் நம்மை அவரிற் பிரிக்கும் வன்மையுடைய" என்றாள். அவளுடைய இக்கூற்றின்கண், கற்புடைய நன்மகட்குரிய வாழ்க்கைத் துணையாம் மாண்பு மிக்குற்றுத் திகழ்வது கண்டு வியந்த கண்ணத்தனார் அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். பார்பக வீழ்ந்த1 வேருடை விழுக்கோட்டு 2உடும்புபுறத் தன்ன நெடும்பொரி விளவின் ஆட்டொழி பந்தின் கோட்டுமூக் கிறுபு கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் 3வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் சேறும் நாம்எனச் சொல்ல 4நேரிழை 5நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே செயல்படு மனத்தர் செய்பொருட்கு 6அகல்ப ஆடவர் அதுவதன் பண்பே. இது 7பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி கூறியது. உரை பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு-நிலம் பிளவு படக் கீழ்ச்சென்ற வேர்களையடைய பெரிய கிளைகளையும்; உடும்பு புறத்தன்ன நெடும் பொரி விளவின்-உடும்பின் புறத்தோல் போல நெடிய செதில்களையுமுடைய விளா மரத்தினின்று; ஆட்டு ஒழி பந்தின்-ஆடுதல் ஒழிந்த பந்துபோல; கோட்டு மூக்கிறுபு-கொம்பில் ஒட்டிய காம்பற்று; கம்பலத்தன்ன பைம்பயிர் தாஅம்-கம்பலத்தை விரித்தாற் போன்ற பசுமையான பயிர் நின்ற வயலிலே உதிர்ந்து பரந்து கிடக்கும்; வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை-விளாம் பழங்களையே உணவாகக் கொள்ளும் வேற்று நாட்டு அரிய வழியின் கண்; நாம் சேறும் எனச் சொல்ல-யாம் செல்லுகின்றோம் என்று சொன்னாராக; நேரிழை-நேரிய இழையணிந்தவளாகிய தோழி; நன்று எனப் புரிந்தோய்-நல்ல தென விரும்பிச் செலவுடன்பட்டாய்; நன்று செய்தனை-நற்செயலே செய்தாய்; ஆடவர் செயல்படு மனத்தர்-ஆடவர்கள் வினை செய்தலையே நினையும் மனமுடையராதலால்; செய்பொருட்கு அகல்ப-செய்தற்குரிய பொருள் கருதிச் செல்வர்; அது அதன் பண்பு-அச்செலவு பொருள் கருதும் உள்ளத்தின் பண்பாகும், காண் எ.று. சேறும் நாம் எனச் சொல்ல, புரிந்தோய், நன்று செய்தனை; ஆடவர் மனத்தராகலின் அகல்ப, அது அதன் பண்பு என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. விளாமரத்தின் மேற் பட்டை உடும்பின் புறந்தோல்மேற் காணப்படும் செதில்களைப் போலப் பொரிந்திருப்பது பற்றி உடும்பு புறத்தன்ன நெடும் பொரி விளவு என்றார். பொரிந்தது போறலின் பொரி எனப்பட்டது. பச்சைப்பசேரெனத் தோன்றும் பயிர் நிறைந்த வயல் பசுங்கம்பலம் விரித்தாற் போலும் காட்சி யுடைத்தாதலின் கம்பலத் தன்ன பைம்பயிர் என்றார். விரிந்த கம்பலத்தின் மேல் ஆடாது கிடக்கும் பந்துபோலப் பசுமை நிறங்கொண்ட பயிர்நின்ற வயற்பரப்பில் விளாம்பழம் உதிர்ந்து கிடக்கும் என்பதாம். வெள்ளில், விளாம்பழம் வல்சி, உணவு, புரிதல், விரும்புதல், செயல்படும் மனம், செய்வினைக் குரிய காலம் இடம் கருவி வினைவகை முதலியவற்றையே எண்ணும் மனம். செய்வினையாலன்றிப் பெறலாகாமையின் செய்பொருள் எனச் சிறப்பிக்கப்பட்டது. தலைமகற்குத் தான் செலவுடன்பட்டதைத் தோழி தலை மகட்குக் குறிப்பாய் உணர்த்தலும், தலைமகள் வருந்துவளோ என அஞ்சி நின்றாட்கு, அவள், ஆண்மை தோன்ற வினை மேற் கொண்டு பொருள் செய்வதே உயிராய் அமைந்த ஆடவர் செயலாதலின், அதுவே எப்போழ்தும் நினையும் மனமுடையர் அவர் என்பாள், செயல்படு மனத்தர் என்றும், அது குறித்தவழிப் பிற யாதும் பொருளாக மதியார் என்பாள் செய்பொருட்கு அகல்ப ஆடவர் என்றும் கூறினாள். "வினையே ஆடவர்க்கு உயிர்"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. இல்லிருந்து மகிழ்பவர்க்குப் பொருளும் புகழும் இல்லை யாதலின் பிரிந்தொழுகுதல் பொருள்மேற் செல்லும் உள்ளத்திற்குப் பண்பு என்பாள் அது அதன் பண்பு என்றாள். அஃது என்று நிற்றற்குரிய ஆய்தம் விகாரத்தால் தொக்கது. "உண்ணாமை வேண்டும் புலாஅல் மற்றொன்றின் புண்ண துணர்வார்ப் பெறின்"2 என்றாற் போல. அதனை நன்கு தேர்ந்து நீ பிரிவுடன் பட்டது நன்றே என்பாள் நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனை என்றாள். இனி நன்று செய்தனை என்றதை எதிர்மறைக் குறிப்புமொழியாகக் கொண்டு, "தோழி, நீ பிரிவு உடன்பட்டமை கூடாது; தீது செய்தனை என்றும், நாளும் பொருள் செய்தலையே கருதும் பான்மையர் ஆடவர் என்றும், அதனால் அவர் அப்பொருள் குறித்துச் செல்லும் செலவையே விரும்புவர் என்றும், இவ்வாறு அவரால் விரும்பிச் செய்யப்படும் பொருள் தானும், யாண்டும் நில்லாது நீங்கும் பண்பிற்றாகவும் அதன்மேல் உள்ளம் செலுத்து வார்க்கு நம்பால் அன்பின்றிப் பிரிந்தேகும் கருத்து உண் டாவது இயல்பு; அதனை விலக்கி உயிரோடு ஒன்றி நின்று, அது செல்வுழிச் செல்லும் காதலின் மாண்பைக் கட்டுரைத்து அவர் செலவை மறுத்திருத்தல் வேண்டும்" என்றும் கூறினாள் என வேறு பொருள் கோடலும் ஒன்று பொருட்குரிய பண்பு அதனை விழையும் உள்ளத்துக்கும் ஆயிற்றென்பாள்அதுவதன் பண்பு என்றாள் என உரைக்க. "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" என்ற நூற்பாவிலுள்ள "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித் தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்துக்காட்டி, "இது நன்று செய்தனை யெனத் தலைவி உவந்து கூறியது" என்பர் நச்சினார்க்கினியர்1. 25. வடவண்ணக்கன் பேரிசாத்தனார் பேரி சாத்தனார் பொன்னின் ஓட்டம் காணும் வணிகர். பேரி, ஆலம்பேரி என்பன வணிகர் குடிப்பெயர்; இக்காலத்தும் பேரி என்பதைக் குடிப்பெயராகக் கொண்டோர் பேரி செட்டிகள் எனத் தொண்டை நாட்டில் வாழ்கின்றனர். பொன்னின் ஓட்டம் காணும் தொழில் வண்ணக்கம் எனப் பண்டைநாளில் வழங்கின மையின், இவர் வண்ணக்கன் பேரிசாத்தனார் எனக் குறிக்கப் படுகின்றார். மேலும், இவர் வடபுலத்தில் இத்தொழில் செய்தமை யால் இவரை வடவண்ணக்கன் எனச் சிறப்பித் துள்ளனர். தொண்டை நாட்டின் வடபகுதியில் வண்ணக்கன்பாடி, வண்ணக்கனூர் என ஊர்கள் இன்றும் இருப்பது இதற்குப் போதிய சான்று பகருகிறது. பொன்னின் ஓட்டம் பார்க்கும் வண்ணக்கர் இடைக்காலத்தும் இருந்தி ருக்கின்றனர்; திருவையாற்று முதல் இராசாதிராசன் கல் வொட்டொன்றில் வண்ணக்கன் சாத்தன் நின்றானான வீர சோழ அணுக்கன்1 என ஒருவன் காணப்படுவது இதற்குச் சான்றாகும். இந்நூல் ஆராய்ச்சிக்குக் கிடைத்த ஏடுகளில் எல்லாம் வடவண்ணக்கன் என்று காணப்பட்டதேயன்றி வடம வண்ணக் கன் என்று காணப்படாமை இங்கே குறிக்க வேண்டி யிருக்கிறது. இப்பேரிசாத்தனார் காலத்தே சேரநாட்டில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழ நாட்டில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பாண்டிநாட்டில் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் இருந்து ஆட்சிசெய்தனர். இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உள்ளன. தமித்துக் கண்டு காதலுறவு கொண்ட தலைமக்கள் தம் மிடையே தோன்றிய காதல் வளர்ந்து பெருகுதற்கு வாயிலாகிய களவுநெறியை மேற்கொண்டனர். தலைமகன் தலைமகளின் உயிர்த்தோழியது துணையைப் பெற முயன்று அவளைக் கண்டு தன் காதற்குறிப்பை அறிவித்தான். தலைவியின் கருத்தை அறியாமையால், அவள் தலைமகளை ஆராய்ந்து அவள் மனத்தில் அவன்பாற் கொண்ட காதலுண்மையை யுணர்ந்து கொண்டாள். எனினும், தலைமகள் அதனைத் தனக்கு அறிவியாமையால் ஒன்றும் அறியாள்போன்று ஒழுகலானாள். தலை வனது காதலன்பைத் தலைவிக் குணர்த்தி இருவரிடையே யுளதாகிய காதலுறவைக் களவின்கண் வளர்ப்பது முறை யென்பதுபற்றித் தலைவியை யடைந்து ஏற்ற செவ்வி நோக்கித் தலைமகன் வேண்டுகோளைத் தெரிவிக்கின்றாள். தலைமகளை நோக்கத் தோழி ஓரளவு நிலையில் வேறுபட்டவளாவள். அதனால், ஆணும் பெண்ணுமாகிய தலைமக்கள் உள்ளங் களைப் பிணித்து நிற்கும் காதல் நெறியில், இருவரின் வேறாய தோழி புகுந்து அதற்கு உதவி செய்தல் என்பது மிக்க அருமையும் நுண்மையும் பொருந்தியதாகும். இயற்கை மதிநுட்பமும், செயற்கையறிவொட்பமும் ஒருங்கே உருக்கொண்டார்க்கன்றி அஃது எளிதின் இயலுவதன்று; சிறிது வழுவினும் நாணழிவும் மானக்கேடும் பயந்து தலைமக்கள் வாழ்வுக்கே இறுதி விளை வித்துவிடும். நுட்பமும் திட்பமும் பொருந்திய மனத்தினளாகிய தோழி, அச்செயலை மேற்கொண்டு, தலைமகளோடு உரையாடலுற்று. "தோழி, நாம் நேற்றுப் புனத்தே கிளி கடிந்து கொண்டிருந்த காலை நமக்குத் துணையாய் அக்கிளிகளைக் கடிந்தானன்றோ ஒரு காளை; அவன் அப்போழ்து நம்மோடு உரையாடுவான் பெரிதும் முயன்றான்; நானோ சிறிதும் இடந்தரவில்லை; அவனும் ஒன்றும் உரையின்றி வெறிதே சென் றொழிந்தான்; அவன் அக்காலை எய்திய வருத்தத்தைப் பற்றி யன்று யான் இப்போது சொல்லெடுப்பது; அவன் சென்றபோது என்னைப் பார்த்த பார்வை என் தொடி கழன்று தானே உகும் நிலையை எனக்கு உண்டாக்கிற்று; அது பிறர்க்குத் தெரியாதவாறு தொடியைச் செறித்துக் கொண்டேன்; அவன் தேம்பூ இதுவெனத் தேர்ந்து ஊதாத வண்டு போல்பவனாயினும், அவன் பொருட்டு யான் தொடி செறித்துக் கொண்ட பண்பில் செய்கை நினைந்து என் நெஞ்சம் வருந்துகிறது, காண்" என்றாள். இக்கூற்றின்கண் புலப்படும் தோழியின் மதிநுட்பமும் அறிவொட்பமும் பேரிசாத்தனார் உள்ளத்தில் வியப்புத் தோற்றுவிக்கவே, அவர் அவள் கூறியவற்றை இப்பாட்டின்கட் பெய்து பாடுகின்றார். அவ்வளை வெரிநின் அரக்கீர்த் தன்ன செவ்வரி இதழ சேண்நாறு 1பிடவின் நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 2வளமலி வெற்பன் நெருநல் நம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளிகடித் தசைஇச் 3சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் 4பெயர்ந்த அல்லல் அன்றது காதலந் தோழி தாதுண் வேட்கையின் போதுதெரிந் தூதா வண்டோ ரன்னஅவன் தண்டாக் காட்சி கண்டும் கழல்தொடி வலித்தஎன் 5பண்பில் செய்தி 6நினைப்பா கின்றே இது, தலைமகனைத் தோழி குறைபயப்பக் கூறியது. உரை அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன-அழகிய வளையினது முதுகில் செவ்வரக்கினால் வரிகளைத் தீட்டினாற் போன்ற; செவ்வரி இதழ சேண்நாறு பிடவின்-சிவந்த வரி பரந்த இதழ்களையுடைய பிடவின் நெடுந் தூரத்திற் பரந்து மணம் கமழும் பூவினுடைய; நறுந்தாது ஆடிய தும்பி-நறிய தாதினைப் படிந்துண்ட தும்பி; பசுங்கேழ் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்-பசுமை நிறம் பொருந்திய பொன்னுரைக்கப்பட்ட கல்லினது நிறத்தை யடையும்; வளமலி வெற்பன்-வளவிய மலைநாடன்; நெருநல்-நேற்று. நம்மொடு-நம்மோடே யிருந்து துணைபுரியுமாற்றால்; கிளை மலி சிறுதினைக்கிளி கடிந்து அசைஇ-கிளைத்த கதிரிடத்தே நிறைந்த சிறு தினைமணிகளைப் படிந்து உண்ணும் கிளிகளை யோப்பியிருந்து; சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்-நம்பாற் சொல்லாடுதற்கு ஏற்ற இடம் கிடைக்கப் பெறாமையால் நீங்கினான்; அது பெயர்ந்த அல்லல் அன்று-இப்போது யான் கூறுமது அவன் சென்றதனால் உண்டாகிய வருத்தம் அன்று; காதலம் தோழி-காதலன்புடைய தோழியே; தாதுண் வேட்கையின்-தாதினை யுன்னும் விருப்பத்தால்; போது தெரிந்து ஊதா வண்டோரன்ன -ஊதுதற்கு உரியது உரியதல்லாதது எனப் பூக்களைத் தெரிந்துணர்ந்து ஊதாத களிவண்டைப் போலும்; அவன் தண்டாக்காட்சி-அவனது அமையாத தோற்றத்தை; கண்டும்-கண்டறிந்தும்; கழல் தொடி வலித்த என் பண்பில் செய்தி நினைப்பாகின்று-கழன்றோடும் தொடியைச் செறித்துக் கொண்ட என் நற்பண்பின்பாற்படாத செய்கை என் நெஞ்சின் நினைப்பாக இருக்கின்றது; ஈது ஓர் அல்லல் இருந்தவாறு என் எ.று. தோழி, வெற்பன் நெருநல் நம்மொடு கிளிகடிந்து அசைஇ, பெறாஅன் பெயர்ந்தனன்; அது பெயர்ந்த அல்லல் அன்று; அவன் தண்டாக் காட்சி கண்டும் வலித்த என் பண்பில் செய்தி நினைப்பாகின்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றது என்றவிடத்து அது என்பதைப் பகுதிப் பொருளதாகக் கோடலும் ஒன்று. பெயர்ந்த அது அல்லல் அன்று என் பண்பில் செய்தி அல்லல் தரும் நினைப்பாகின்று என மாறி இயைத்து முடித்தலும் ஒன்று. வெள்ளிய பிடவம் பூவின் அகவிதழ் சிவந்த நரம்பு ஓடினாற் போல வரி பொருந்தி யிருப்பது, சங்கின் முதுகில் செவ்வரக்கைக் கொண்டு கோடிட்டாற்போல வுளது என்றற்கு அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன என்றார். நெடுந்தூரத்தே நறுமணம் கமழும் மாண்பு பற்றிச் சேணாறு பிடவு எனப்பட்டது. பிடவு, பிடாமரம். கரிய நிறம் படைத்த தும்பி பிடவினது பொன்னிறம் கொண்ட தாது படிந்து தோன்றுவது பொன்னுரைத்த கட்டளைக் கற்போல வுளது என்பார், பொன்னுரை கல்லின் நல்நிறம் பெறூஉம் என்றார். அசைஇ, தங்கி. சொல்லிடம், சொல்லாடற்கு ஏற்ற இடமும் காலமும் வாய்ந்த இடம். வேட்கை மிக்கவிடத்துச் செய்வதும் தவிர்வதும் தெரிந்து செய்யும் அறிவு சோர்ந்தொழிதலின், தாதுண் வேட்கையின் எனல் வேண்டிற்று. தண்டாக் காட்சி, அமைதி பெறாது அலமரும் உள்ளத்தாற் பிறக்கும் தடுமாற்றத் தோற்றம். கழல் தொடி, தானே கழன்று ஓடி யுகும் தொடி பண்பு. பாடறிந் தொழுகும் செயற்பண்பு. நினைப்பாகின்று, நினைவின்கண் கொண்டுளது. தான் கூறுவனவற்றைச் செவியேற்றுத் தலைமகள் இணங்குமாறு அவள் மனநினைவைத் தன்னோடு ஒருப்படுக்கும் கருத்தினளாதலால் நம்மொடு என உளப்படுத் தினாள். நம்பால் குறையிரப்பான்போல் தோன்றி அதற்கேற்ற செவ்வி எய்தாமையின், ஆற்றாது பெயர்ந்தான் என்பாள் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் என்றாள். அதுகேட்ட தலைமகள், இவ்வாறு ஒழுகுபவன் தன் காதலன் எனத் தெருண்டு, ஆற்றாது பெயர்ந்தான் என்ற சொல்லைக் கேட்டதும் உள்ளம் பேதுறவு எய்தினாள். அதனைக் குறிப்பாய் உணர்ந்த தோழி, அதனை விலக்கும் கருத்தால் பெயர்ந்த அல்லல் அன்று என்றாள். எனவே, தலைவி பிறிதுமோர் அல்லல் அவற்கு உற்றது போலும் எனக் கையறவு பட்டுக் கலங்கித் தோழியை நோக்கினாள். அந்நோக்கம், தலைவியது காதல் மிகுதியைப் புலப்படுத்தவே, அவன்பால் பரத்தைமைபடக் கூறலுற்று, யான் ஓர் ஏவல்மகள் எனத் தெரியாது என்னைக் காதற் குறிப்போடு நோக்கினான் எனப் பொய்யொன்று படைத்துத் தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டோரன்ன அவன் தண்டாக் காட்சி என்றாள்; வண்டு போது தெரிந்து ஊதாமைக்குத் தாதுண் வேட்கை. ஏதுவாயினாற் போல, தன்னுள்ளத்துக் காதல் மிகுதியால் என்பால் தன் காதற் குறிப்பைக் காட்டினான் என்றாளாயிற்று. இதனால் தலைமக்களிடையே முன்னுறவுண்டு என்பதைத் தான் உணர்ந்து கொண்டதையும், தோழி குறிப்பாய் உரைத்தாளுமாயிற்று. இதனால் தலைமகள் உள்ளத்தில் அச்சமும் நாணமும் அடையத் தோன்றின. அவனது வண்டோரன்ன தண்டாக்காட்சி நிலைபேறின்றித் தடுமாறுவது கண்டு தனக்கும் அவன்பால் அன்பு உண்டாயிற்று என்பாளாய் கண்டும் கழல் தொடி வலித்த என் செய்தி என்றும், அதனால் தலைவி முகம் பொறாமையாற் சிவத்தல் கண்டு, அஃது எனக்குப் பாடறிந்தொழுகாத செயல் என்பதை யுணர்கின்றேன் என்பாள் என் பண்பில் செய்தி என்றும், அந்நிகழ்ச்சி என் நெஞ்சின்கண் மிக்குநிற்றலின் நின்பால் உரைப்பேனாயினேன் என்பாள் நினைப்பாகின்று என்றும் உரைத்தாள். "நாற்றமும் தோற்றமும்"1 என்ற நூற்பாவில் வரும், "மறைந்தவள் அருக, தன்னொடும் அவளொடும் முதன் மூன்றும் அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு நிலை யினும்" என்புழி வரும் பல்வேறு நிலையின்கண் இப்பாட்டைக்காட்டி இங்கே ஓதியவற்றின் வேறுபட வந்தது கொள்க என்பர் நச்சினார்க்கினியர். 26. சாத்தந்தையார் சாத்தந்தையார் என்ற இத்தொடர் சாத்தன் தந்தையார் என்று பொருள்படுவது; கீரன் தந்தை, கீரந்தை எனவும், ஆதன் தந்தை, ஆந்தை எனவும் பண்டைநாளில் பெயர்கள் மக்கள் வழக்கில் இருந்தன. நாளடைவில் கீரந்தை ஆந்தை என்பனவே மக்கட்கு இயற்பெயராய் வழங்கலுற்றன; அவ்வழக்காற்றின் அடிப்படையில் சாத்தந்தையார் என்பது இச்சான்றோர்க்கு இயற்பெயராயிற்று. இச்சொற்றொடரின் சொற்பொருளைக் கொள்வதாயின், சாத்தன் என்பவர் சிறந்த பெயர்பெற்று மக்களிடையே நன்மதிப்புடன் விளங்கினாரென்றும், அவருக்குத் தந்தையாகும் சிறப்பன்றி வேறொன்றும் இன்மையின் சாத்தன் தந்தை என நின்று சாத்தந்தை எனத் திரிந்து தமது இயற்பெயரையும் இழந்திருந்தார் என்றும் உணர வேண்டிய நிலைமை தோன்றி, நல்லிசைச் சான்றோரிடையே ஒருவரெனத் திகழும் இவரது சால்புக்கு மாறாக நிற்குமோர் பெயராய்விடும். சாத்தந்தையார் சோழன் போரவைக் கோப்பெருநற் கிள்ளியின் காலத்தவர். சிராப்பள்ளி வட்டத்தில் காவிரியின் வடகரையில் ஆமூர் என்னும் ஊரொன்றுண்டு; அதனை முக்காவல் நாட்டு ஆமூர் என்பது வழக்கு. அவ்வூரில் பெருநற் கிள்ளி காலத்தில் மல்லன் ஒருவன் சிறந்து விளங்கினான். பெரு நற்கிள்ளி இளையனாயினும் அம்மல்லனொடு மற்போர் செய்து அவனது பீடழித்து வெற்றிபெற்றான். அம்மற்போரை நேரிற்கண்டு வியந்தோருள் இச் சாத்தந்தையாரும் ஒருவர். அக்கிள்ளி ஒருகால் கரந்தைப்போர் செய்ய நேர்ந்தபோது அவன் விடுத்த நீண்மொழி, புலவர்பாடும் பொருட் பொருத்த முடைத்தாதல் கண்ட சாத்தந்தையார் இனிய பாட்டொன்றில் அமைத்துப் பாடினார். நிற்க. இவரைத் திணைமொழி ஐம்பது என்னும் நூலைச் செய்த கண்ணஞ் சேந்தனாருக்குத் தந்தை என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்; கண்ணஞ் சேந்தனார் என்ற பெயர், கண்ணன் மகனாரான சேந்தனார் என்ற கருத்தையுடையதாய் அவர்கள் கூற்றை மறுக்கின்றது. அவர்கள் கூறுவதும் உண்மையெனப்படுமாயின் இச்சாத் தந்தையார்க்குக் கண்ணனா ரென்றும் பெயருண்டென்று கொள்ளல்வேண்டும். இவர் பாடிய பாட்டுக்கள் புற நானூற்றிலும் உண்டு. கற்புடைய மனையறம் புரிந்தொழுகும் தலைமகனுக்கு மனைவியிற் பிரிந்து செல்லவேண்டிய கடமையொன்று உண்டாயிற்று. அதனை அவன் தலைமகட்குக் குறிப்பாய் உணர்த்தினான். பிரிவாற்றாது அவள் மேனி வேறுபடலானாள். பிரிந்து சேறற்கு முன்னமே இத்துணை வருத்தம் எய்துபவள் மெய்யாற் பிரிந்தவழி ஆற்றுவது எங்ஙனம் எனத் தோழி கருதி நெஞ்சம் அஞ்சி அவனை நேரிற் கண்டு செலவு அழுங்குவிக்கும் நோக்கத்துடன் சில கூறலுற்றாள். பிரிவின் இன்றியமை யாமையை அவன் நன்கு எடுத்தோதினான். அது கேட்ட தோழி, நினைத்தால் சில நாட்களுக்கு அவன் தன் பிரிவைத் தள்ளிவைக்கலாம் என்பதை அறிந்தாள். அதனால் அவள் அவனை நோக்கி, "பெரும, களவின்கண் இவளுடைய தமர் வரைவுமறுத்த போது நீ உடன்போக்கினைத் துணிந்தாய்; தாய்மனை மலைபோன்ற நெற்கூடு நிறைந்து பெருஞ்செல்வம் கொழிக்கும் பெருமனையாதலை நினையாது, வெயில் எறிக்கும் கடுஞ்சுரத்தின் வெம்மையையும் கருதாது நின்பாற் கொண்ட பெருங்காதலால் நினக்குக் கெடுதுணையாய் என் தோழியாகிய தலைமகள் வந்தாளன்றோ? அதனை நினைக்கும்போது அஃது அவளது தோள் செய்த தவறோ என என் நெஞ்சம் நினைக்கின்றது; நின் பிரிவுக் குறிப்புத் தெரிந்த மாத்திரையே இவள் தோள் மெலிந்தாள்; வளைகள் நெகிழ்ந்தன; இந்நிலையைக் காண என் மனம் வருந்துகிறது, காண்" என்றாள். இக்கூற்றின்கண், செலவழுங்குவிக்கும் தோழிபால் பண்டு நிகழ்ந்த காதற்செயலை நினைப்பித்துத் தலைவனது கலங்காவுள்ளத்தைக் கலக்கும் சூழ்ச்சி நுண்ணிதின் அமைந் திருப்பது கண்ட சாத்தந்தையார் அதனை இப் பாட்டின் கண் தொகுத்துப் பாடுகின்றார். நோகோ யானே நெகிழ்ந்தன வளையே 1செவ்வல் சேர்ந்த 2புள்ளி வெள்ளரை விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை யொழியச் சுடர்முழு தெறிப்பத் திரங்கிய3 செழுங்காய் முடமுதிர் பலவின் அத்தம் நும்மொடு கெடுதுணை4 யாகிய தவறோ வையெயிற்றுப் பொன்பொதித் தன்ன சுணங்கின் மின்னீ5 ரோதிப் பணைப்பெருந் தோளே. இது, பிரிவுக்குறிப்பு உணர்ந்து தலைவி வேறுபட்டமை சொல்லித் தோழி செலவழுங்குவித்தது. உரை செவ்வல் சேர்ந்த புள்ளி வெள்ளரை-செம்மண் பூசப்பட்டு நின்ற புள்ளி பொருந்திய வெற்றரையினை யுடைய; விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின்-மலைபோல ஒன்றன்பக்கல் ஒன்றாக அடுக்கிய நிலையுடைய நெடிய நெற்கூட்டின்கண் நிரம்பிய நெல்லினையுடைய; தாய்மனை யொழிய-தாய்மனை தனித்தொழிய; சுடர் முழுதெறிப்ப-ஞாயிற்றின் வெயில் நன்கு வெதுப்ப; திரங்கிய-வாடிய; செழுங்காய் முடமுதிர் பலவின் அத்தம்-செழுமையான காய்களையுடைய வளைந்து முதிர்ந்த பலா மரங்கள் நிற்கும் வழியில்; நும்மொடு கெடுதுணையாகிய தவறோ-கெடு துணையாய் நும்மொடு வந்ததனால் தவறுடையவாயினவோ; வை எயிற்று-கூரிய பற்களையும்; பொன் பொதிந் தன்ன சுணங்கின்-பொன்னைப் பொதிந்து வைத்தாற் போன்ற தேமலையும்; மின்னீரோதிப் பணைப் பெருந்தோள்-ஒளிர்கின்ற நறிய கூந்தலையுமுடைய இவளுடைய பெரிய தோள் கள்; மெலிந்தமையின்; வளை நெகிழ்ந்தன-வளைகள் நில்லாது கழன்று ஓடுகின்றன; யான் நோகு-யான் வருந்துகிறேன், காண் எ.று. மின்னீரோதி, தாய்மனை யொழிய, நும்மொடு அத்தம் கெடுதுணை ஆகிய தவறோ பணைப்பெருந்தோள் வளை நெகிழ்ந்தன; யான் நோகு எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நோகு, தன்மை வினைமுற்றுத்திரி சொல். செவ்வல், செம்மண். நெற்கூடுகளின் அடியில் செம்மண்ணும் சாணமும் கலந்து மெழுகிவைப்பது தோன்றச் செவ்வல் சேர்ந்த வெள்ளரை என்றும், வெள்ளிய வைக்கோற்புரிகள் நெருங்கச் சுற்றிப் பிணித்திருப்பதால் செம்மண் பூச்சின் இடையே புள்ளிகள் தோன்றுவது புள்ளியிட்டது போறலின், புள்ளி வெள்ளரை என்றும் கூறினார். நெற்கூட்டின் தலைபோலக் குவியாது வட்டமாய்க் கோக்கால்களின் மேல் நிற்றல்பற்றி வெள்ளரை எனப்பட்டது என்றலுமாம். விண்டு, மலைக் குன்று. "விண்டு அன்ன வெண்ணெற் போர்வின்"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. புணர்நிலை நெடுங்கூடு, ஒன்றுக் கொன்று நெருக்கமாகப் பக்கத்தே புணர்த்து அமைக்கப்பட்ட நெடிய கூடுகள். இக்கூடுகளைக் கரிசை யென்றலும் வழக்கு. பிண்டம், குவியல், சுடர், ஈண்டு ஞாயிற்றின் மேற்று. பலவின் செழுமையும், வெயில் மிகுதியால் வற்றித் திரங்கிக் கழிந்தமையும் தோன்ற நிற்கும் நெடுஞ்சுரத்தின் கொடுமையைச் சுடர் முழுதெறிப்பத் திரங்கிய செழுங்காய் முடமுதிர் பலவின் அத்தம் என்றார். கெடுதுணை, கெட்டார்க்கு வேண்டுவன உதவி அக் கேட்டினின்றும் எடுக்கும் துணைவர்; கெடுங்காலை வேண்டுவன உதவும் துணை யென்று மாம்; கெடாவாறு காக்கும் துணை கெடுதுணை எனப்பட்டது. துணையாதல் தவறன்மை புலப்படுத்தலின் ஓகாரம் எதிர்மறை. பணை, பெருமை; மூங்கிலுமாம். தலைவனைச் செலவழுங்குவிக்கும் கருத்தின ளாகிய தோழி, பிரிவு பற்றிய அவன் மனத்திண்மை கண்டு, பண்டை உடன்போக்கினை அவன் நெஞ்சின்கட் கொணர்ந்து நெகிழ் விக்கின்றாள். தலைமகன் உடன்போக்குத் துணிந்த போது தலைவி அதற்கு உடன்பட்டாளாக, அக்காலை அவள் பொருளாக மதியாது கைநெகிழ்த்துப் போந்த தாய் மனையின் செல்வ நிலையை விண்டுப்புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை என விதந்து கூறினாள்; பொருள் நச்சிப் பிரிவது நினக்குக் கருத்தாக, அதனினும் பெறற்கு அருமையும் சிறப்புமுடையதாக நின் காதலைக் கருதினாள் தலைமகள் எனத் தன் கருத்தை வற்புறுத்துவது தோழியின் சூழ்ச்சியாதல் காண்க. நின் பொருட்டுத் தன் இனிய உயிரையும் வழங்கும் உயர்கற்பினள் என்பாள், சுடர் முழுது எறிப்பத் திரங்கிய செழுங்காய் முடமுதிர் பலவின் அத்தம் நும்மொடு கெடுதுணை யாயினள் என்றும், இவ்வாறு கெடுதுணையாகிய தோள்கள் ஆக்கம் பெறாது மெலிவு எய்துவது கூடாது என்றற்குக் கெடு துணைாகிய தவறோ என்றும், தவறு செய்யாமையாற் பெருமை சிறந்தவை என்பாள் பணைப் பெருந்தோள் என்றும், தவறு செய்யாதார், அது செய்தார் துன்பம் எய்துவது காணுமிடத்து அவர்க்கு அது கையறவு பயத்தல் இயற்கையாதலின், யான் வருந்தா நின்றேன் என்பாள் நோகோ யானே என்றும், செறிந்திருந்த வளைகள் தோள் மெலிவுற்றமையின் கழன்றோடுதல் என் கருத்தை அழிக்கின்றது என்றற்கு நெகிழ்ந்தன வளை என்றும் கூறினாள். இந்நிலையில் நின் நெஞ்சமும் நெகிழ்ந்து கலுழ்தல் வேண்டும் எனக் குறிப்பாற் செல வழுங்குவித்தவாறு. 27. குடவாயிற் கீரத்தனார் களவுக் காதலொழுக்கம் பூண்ட தலைமகன், பகலினும் இரவினும் குறிவழிப் போந்து தலைமகளைக் கண்டு இன்புற்று நீங்குகிறான். அவன் சொல்லும் செயலும் களவு நீட்டிக்கும் குறிப்பிலே நிற்கின்றன. அதனை யறிந்த தோழி, அவன் முயற்சிக்கு இடையீடு விளைவித்து விரைய வரைந்து கொள்ளும் முயற்சியில் அவன் கருத்தைச் செலுத்துகின்றாள். ஒருநாள் அவன் தலைவி மனையின் சிறைப்புறத்தே வந்து நிற்பதைத் தோழி கண்டுகொண்டு தலைவியொடு சொல்லாடுபவள்போல அவன் கேட்குமளவில் நின்று, "தோழி, நம் கடற்கரைக் கழியருகே பூத்திருக்கும் பூக்களின் நுண்ணிய தாதினை வண்டினம் போந்து உதிர்ப்பது கண்டு, அவற்றை ஓப்பி விளையாடினோமேயன்றிப் பிறர் குற்றம் கூறற்குரிய செயல் யாதும் மறைவாகச் செய்ததில்லை; ஒருகால் மறைந்த செயலொன்று நிகழ்ந்திருக்குமாயின் அதனைப் பிறர் யாரும் கண்டிருக்க முடியாது; அவ்வாறிருக்க, கயந்தோறும் நெய்தல் நிறையப் பூத்திருப்பது கண்டும், நம் அன்னை இன்று நம்மை விடுத்து அவற்றைக் கொய்து விளையாடி வம்மின் எனக் கூறாளாயினள்; என்ன கருதிக் கொண்டு அவள் இவ்வாறு அமைந்தாள்" என்று கூறினாள். அன்னையோ பிறரோ கேட்பின் ஐயுறற் கிடமில்லாமலும், தலைமகன் கேட்பின், "இற்செறிப்பு உண்டாய்விட்ட தாகலான், இனிச் சான்றோர் அறிய மணம் செய்து கோடலே தக்கது" எனத் தெருண்டு முயலுமாறும் கூறுகின்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், களவுக் காதல் வாழ்வில் ஆடவரினும் பெண்மக்களே புரையறம் தெளிந்து நிற்கும் பொற் புள்ளம் பூத்து விளங்குவர் என்ற உண்மை இனிது பிறங்குதல் கண்ட ஆசிரியர் கீரத்தனார், அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார். நீயும் யானும் நெருநற் பூவின் நுண்டா 1துறைக்கும் வண்டினம் ஓப்பி ஒழிதிரை வரித்த வெண்மணல் அடைகரைக் கழிசூழ் கானல் ஆடிய தன்றிக் கரந்துநாம் செய்ததொன் றில்லை உண்டெனில் பரந்துபிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் எவன்குறித் தனள்கொல் அன்னை கயந்தோறு இறவார் இனக்குரு கொலிப்பச் 1சுறவார் கழிசேர் மருங்கில் கணைக்கால் நீடிக் கண்போற் பூத்தமை கண்டும் நுண்பல சிறுபா சடைய நெய்தல் 2குறுமோ சென்றெனக் கூறா தோளே. இது, தலைவன் சிறைப்புத்தானாகத் தோழி செறிப்பறிவுறீஇயது. உரை ஒழிதிரை வரித்த வெண்மணல் அடைகரை-கரையை அலைத்து நீங்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் பரந்த கடற்கரையிடத்து; கழிசூழ் கானல்-கழிகள் சூழ்ந்த கானற் சோலையில்; நெருநெல்-நேற்று; நீயும் யானும்; பூவின் நுண்தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி-பூக்களிலுள்ள நுண்ணிய தாதினை அவற்றிற் படியும் வண்டினம் காற்றில் உதிர்ப்பது கண்டு அவற்றை யோட்டி; ஆடிய தன்றி-விளை யாடிய தன்றி; நாம் கரந்து செய்தது ஒன்றும் இல்லை-நாம் பிறர் காணாவாறு மறைத்துச் செய்ததொரு செய்கையும் இல்லையே; உண்டெனில்-மறைவாகச் செய்த தொன்று உண்டெனின் ; நன்றும் பரந்து பிறர் அறிந்தன்றும் இலர்-அது பெரிதும் பரந்து பிறர் அறிய வெளிப்பட்டதும் இல்லை; அன்னை எவன் குறித்தனள் கொல்-அன்னை யாது கருதினளோ, அறியேன்; கயந்தோறு இறவார் இனக்குருகு ஒலிப்ப-குளங்கடோறும் சென்று ஆங்காங்கு வாழும் இறாமீன்களைக் கவர்ந்துண்ணும் கொக்கு நாரை முதலிய குருகுகளின் கூட்டம் ஆரவாரிக்க; சுறவார் கழிசேர் மருங்கில்-சுறாமீன்கள் உலவும் கழிசார்ந்த இடங் களிலே; கணைக்கால் நீடிக் கண் போல் பூத்தமை கண்டும்-திரண்ட தண்டு நீண்டு நம் கண்ணைப் போல் மலர்ந்திருப்பது கண்டும்; சென்று-அவையிருந்த இடங்கட்குச் சென்று; நுண்பல சிறு பாசடைய நெய்தல் குறுமோ எனக் கூறாதோள்-நுண்ணிய பலவாகிய சிறுசிறு பசிய இலைகளை யுடைய நெய்தலின் பூக்களைக் கொய்வீர்களாக என்று சொல்லி நம்மைச் செல்லவிடாளாயினாள் எ.று. தோழி, நெருநல் நீயும் யானும் வண்டினம் ஓப்பி ஆடிய தன்றிக் கரந்து செய்தது ஒன்றும் இல்லை; உண்டெனில் அது பரந்து பிறர் அறிந்தன்றும் இலர்; கழிசேர் மருங்கில் பூத்தமை கண்டும் சிறு பாசடைய நெய்தல் சென்று குறுமோ எனக் கூறாளாயினமையின், அன்னை எவன் குறித்தனள்கொல் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. உரையிடைப் பெய் துரைத்தன. இசையெச்சம், பூந்தாதுகளின் நுட்பம் தேறாது வண்டினம் சிறகுகளால் அத் தாது காற்றிற் பறக்கச் சிதைப்பதால், அவ்வண்டுகளை ஓப்புவது இம்மகளிர்க்கு ஒரு விளையாட்டு. ஒரு பூவின் தாது பிறிதொரு பூவினுள் சேரின் அப்பூ கருக்கொள்ளும்; அதுவே பூந்தாதின் அரிய செயல். அத்தகைய தாது சிதைதல் நன்றன்றென ஓப்புவது அறவினையாம். புது மணலை ஒதுக்கி மீளும் அலைகளால் அம்மணல் தூய்மையும் அழகும் ஒளியும் பெறுவது பற்றி ஒழிதிரை வரித்த வெண்மணல் அடைகரை என்றார். கானல், கானற் சோலை; இதுவே விளையாட்டிடமும் பகற்குறியிடமுமாம் என்க ஒன்று இல்லை என்றவிடத்துச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது இறவு, இறாமீன், சுறவு, சுறாமீன், வெள்ளத்தனைய மலர் நீட்டமாகலின், கணைக்கால் நீடி என்றார். நெய்தற்பூ மகளிர் கண்கட்கு உவமையாம் சிறப்புடைத்து; "நீனிற நெய்தலிற் பொலிந்த உண்கண்" என்று பிறரும் கூறுப. பாசடை, பசுமையான இலை. பாசடைய நெய்தல், குறிப்புப் பெயரெச்சத் தொடர். குறுமோ, மோ முன்னிலை யசை, கூறுதோள், செய்யுளாகலின், ஆ,ஓவாயிற்று. தலைமகன் சிறைப்புறத்தானாதலை உணர்ந்து அவன் செவிப்படுமாறு தலைவியோடு சொல்லாடும் தோழி. முன்னாள் பகற்குறியிடத்தே போந்து தலைமகனைக் கண்டு இன்புற்று மகிழ்ந்த நிகழ்ச்சியை, அவன் மனத்தே நினையக் கூறும் குறிப்பால் வண்டினம் ஓப்பிக் கானல் வெண்மணல் அடைகரைக்கண் விளையாடியது கூறினாள். இக்கூற்றுப் பிறர் செவிப்படின் முன்னாள் விளையாடிய திறத்தை இம்மகளிர் தம்முட் பேசிக் கொள்கின்றார்கள் என அயிரா தொழிவர். இனி, தமது களவொழுக்கம் அன்னைக்குத் தெரிந்துவிட்ட தென்பாள். எவன் குறித்தனள் கொல் அன்னையென்றும், யானும் நீயுமாக நாம் அன்னை அயிர்த்தற் கிடனாக யாதொன்றும் மறைத்துச் செய்ததில்லை என்பாள் கானல் ஆடியது அன்றிக் கரந்து நாம் செய்தது ஒன்றும் இல்லை என்றும், அத்தகைய கரவு ஒன்று நம்பால் உண்டா யின் அதனைப் பிறர் யாரும் பெரிதும் நாடி அறிந்துரைத் தனரோ எனின் அதுதானும் இல்லை என்பாள், உண்டெனில் நன்றும் பரந்து பிறர் அறிந்தன்றும் இலர் என்றும் கூறினாள். இவ்வாற்றால் தாய் அறிந்தமையும், அலர் கூறுவார் உளராதலையும் தோழி தலைமகற்குக் குறிப்பாய் உணர்த்திளாயிற்று. அவள் கூறியது செவியேற்ற தலைவியும் தலைமகனும் அன்னை செயல் யாதாம் என எண்ணலுற்றாராகத் தோழி தலைமகளை நோக்கி, 'நெய்தல் கண்போல் பூத்தமை கண்டும் அன்னை நம்மை நோக்கி நீவிர் சென்று நெய்தற்பூக்களைக் கொய்து விளையாடி வம்மின் என்று நம்மைச் செல்ல விடாளாயினாள்' என்பாள், கண்போற் பூத்தமை கண்டும் நுண்பல சிறுபாசடைய நெய்தல் குறுமோ சென்று எனக் கூறாதோளே என்றாள். பூக்கள் அழகுற மலர்ந்திருப்பது காணின் அவற்றைக் கொய்து அணிந்து கோடற்கண் மகளிர்க்கு ஆர்வமுண்டாதலும், அவர்களை அப்பூக்களைக் கொய்து அணிந்து இன்புறுமாறு உரியவர் விடுவதும் குற்ற மாகா; அன்னை அதனைச் செய்யாதொழிந்தது அவள் நெஞ்சில் கருதுவதொரு குறிப்பு உண்டு என்று காட்டுகிறது என்பாள், சிறுபாசடைய நெய்தல் குறுமோ சென்று எனக் கூறாதோள் என்றாள். எனவே, இனி, புறத்தே சென்று விளையாடாவாறு இற்செறிப்பு நிகழும் என்றாளாயிற்று. இனி, இறாமீனை உண்ணும் குருகினம் ஆரவாரிக்கச் சுறாமீன் கழியின்கண் உலவும் என்றது நம் நலம் காணும் அயற்பெண்டிர் அலரெடுத்து உரைக்குமாறு தலைமகன் குறியிடம் நோக்கிப் போக்குவரவு புரிகின்றான் என்றவாறு. எனவே வரைவு நினைந்திலன் எனத் துனியுறுகிளவியால் தோழி உள்ளுறுத் துரைத்தாளாயிற்று. 28. முதுகூத்தனார் இச்சான்றோர் பெயர் முதுகூற்றனார் எனவும் காணப்படுகிறது. உறையூர் முதுகூத்தனார் எனவும் இவர் குறிக்கப்படுவதால், இவர் சோழநாட்டு நல்லிசைச் சான்றோர்களில் ஒருவர் என்பது தெளிவாம். சோழநாட்டு வீரை வேண்மான் வெளியன் தித்தனையும் திண்டேர்ச் செழியனையும் இவர் தமது பாட்டுக்களில் குறிக்கின்றார். தித்தனது வீரை, காவிரியின் வட கரையில் திருப்பழனம் முதலிய ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட வீரைக் கூற்றத்துக்குத் தலைநகர். திருப்பழனத்துக் கல்வெட்டுகள் அதனை வீரைக் கூற்றத்துத் திருப்பழனம் எனவும், 'விக்கிரம சோழ வளநாட்டு வீரைக்கூற்றம்1 எனவும் குறிக்கின்றன. வீரைக் கூற்றத்துத் தித்தனைச் சோழன் போரவைக் கோப் பெருநற் கிள்ளிக்குத் தந்தை யென்றலும் உண்டு. இதற்கேற்பவே, இப்பகுதியில் இடைக்காலத்தில் சோழர் குடியில் தோன்றிய தலைவன் ஒருவன், 'சோழப் பெருமானடிகள் பெருநற்கிள்ளிச் சோழன்'2 என்று திருப்பழனத்துக் கல்வெட்டுகளில் சிறப்பிக்கப் பெறுகின்றான். இதனால் இக்கூற்றத்து வீரையே வேண்மான் வெளியன் தித்தனுடைய வீரையெனத் துணிதற்கு இட முண்டாகிறது. முதுகூத்தனார் உறையூரினராதலால், அது சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கும் திறங்கண்டு வியந்து, "வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் இன்கடுங்கள்ளின் உறந்தை" யென்று பாராட்டி, ஆங்கே காவிரியாற்றங் கரையில் நிகழும் பங்குனி விழாவைப், 'பங்குனி முயக்கம்' என்று இயம்புகின்றார். சீறூர்த் தலைவன் ஒருவனது செய்கை நலத்தைச் "சீறூர் மதவலி நனிநல் கூர்ந்தன னாயினும், குறிப்பின் இல்லது படைக்கவும்வல்லன்" என்றும் "சிற்சில வரிசையின் அளிக்கவும் வல்லன்" என்றும் "உரிதினின் தூவவும் வல்லன் தூவுங்காலே" என்றும் கூறுவர். இடையிடையே கல்லா இடையனையும், இற்பொலி மகடூஉவையும், மன்னர் கடைமுகத்து உகுக்கும் பலிச்சோற்றையும் எடுத்துக் கூறுவது மிக்க இன்பம் தருகிறது. இவர் பாடிய பாட்டுக்கள் சில ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. மணம்புணர்ந்து மனையறம் புரிந்து வருங்கால், தலை மகன் தன் மனைவியிற் பிரிந்து சென்று முடித்தற்குரிய கடமை யொன்றுடையனானான். தலைமகளது காதற் பெருமை கண்டு அவட்குத் தன் பிரிவைத் தெரிவிப்பின் செலவு அரிதாம் எனத் தேர்ந்து, பைய அதனைத் தோழிக்கு உரைத்துவிட்டுச் சென்றான். அவன் பிரிவாற்றாத தலைவி பெருவருத்தமுற்று ஆற்றாளா யினாள். ஆற்றுவிக்கும் கடமையளான தோழி எத்துணையோ முயன்றும் தலைவி ஆற்றாமை மிக்கு வருந்துதலை விடாளாகவே, தோழி, அவள் பக்கல் நின்று குணக்குறைவுடையன் எனத் தலைமகனை இயற்பழிக்க லுற்றால், மிகுகாதலுடையளாதலால், அப்பழிப்புரை பொறாது ஆற்றியிருத்தலை மேற்கொள்வல் என எண்ணினாள். ஒரு நாள், தலைவி தன் தலைவனை நினைந்து வருந்தி ஆற்றாமை மீதூரும் செவ்வி அறிந்து, தோழி போந்து "தோழி, நம் தலைவர் தாம் பிரிந்து செல்வதற்கு முன்னாள், என் கையைப் பற்றித் தன் கண்ணில் ஒற்றிக் கொண்டு, தன் கையால் என் நன்னுதலைத் தடவிக் கொடுத்து, ஈன்ற அன்னையே போல இனிய உரைகள் வழங்கினார்; எனக்கோ அவர் கருத்து இன்னது என விளங்கவேயில்லை; அவருடைய சொல்லும் செயலும் தான் பிரிந்து செல்லக் கருதிய குறிப்புணர்த்துவன என்பதைப் பின்னரே தெளிந்தேன்; இனிய கூறிப் பொருள் கவரும் கள்வன் போலும் கொடுமையுடையர் காண்" என்று கூறினாள். அது கேட்கப் பொறாத தலைவி, தன் ஆற்றாமையை மறைத்துத் தலைவன் குறித்த காலவரவு நோக்கி இனிதிருப்பாளாயினள். பிரிவுத் துன்பத்துக்கு இரையாகி உளம் மெலிந்து வன்மை குன்றியிருந்த தலைவிக்குப் பொறாமையும் மனவன்மையும் தோற்றுவித்தற்குத் தோழி தலைவனைக் கொடுமை கூறிப் பழித்த சூழ்ச்சித் திறம் கண்டு வியந்த முதுகூத்தனார் அதனை இப்பாட்டிடைப் பெய்து பாடுகின்றார். என்கை கொண்டு தன்கண் ஒற்றியும் தன்கை கொண்டென் நன்னுதல் நீவியும் 1அன்னை போல இனிய கூறியும் 2கள்வன் போலக் கொடியன் மாதோ மணியென இழிதரும் அருவிப் பொன்னென 3வேங்கை தாய ஓங்குமலை யடுக்கத்து 4அங்கழை நிவந்த பைங்கண் மூங்கில் ஆடுமழை5 கிழிக்கும் சென்னிக் கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே. இது, பிரிவின்கண் ஆற்றாளாய தலைவிக்குத் தோழி ஆற்றும் வன்மை பயப்பித்தது; குறைநயப்புமாம். உரை என்கை கொண்டு தன்கண் ஒற்றியும் - எனது கையைப் பற்றித் தன் கண்ணில் ஒற்றியும்; தன் கைகொண்டு என் நன்னுதல் நீவியும் - தன்னுடைய கைகளால் எனது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்தும்; அன்னைபோல இனிய கூறியும் - ஈன்ற தாயைப் போல அன்புடைய இனிய சொற்களை யுரைத்தும்; கள்வன் போலக் கொடியன் மாதோ - கள்வனைப் போலச் சொல்வேறு செயல்வேறுபடும் கொடியனாயிரா நின்றான்; மணியென அருவி இழிதரும் - மணிபோலத் தெளிந்த நீரையுடைய அருவிகள் வீழும்; பொன்னென வேங்கை தாய - பொன்னென்னுமாறு வேங்கையின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும்; ஓங்குமலை அடுக்கத்து - உயர்ந்த மலைப் பக்கத்தே; அங்கழை நிவந்த பைங்கண் மூங்கில் - அழகிய கழிகளால் உயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில்; ஆடுமழை கிழிக்கும் - அசைந்தேகும் மழை மேகங்களைக் கிழிக்கும்; சென்னிக் கோடுயர் பிறங்கல் மலை கிழவோன் - உச்சியையும் உயர்ந்த முடிகளையுமுடைய பெரிய மலைக்குரியனாகிய தலைமகன் எ-று. மழைகிழவோன், என் கை கொண்டு ஒற்றியும், தன் கைகொண்டு நீவியும், இனிய கூறியும் பிரிந்தானாகலின், கள்வன் போலச் சொல்வேறு செயல்வேறுபடும் கொடியன் காண் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. கண் ஒற்றுவதும், நுதல் நீவுவதும் பிரிவுக்குறிப்புகள். "என் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவது எவன்கொல் அறியேன் என்னும்1" எனப் பிறரும் கூறுதல் காண்க. அன்புடை இன்மொழி வழங்கற்கண் அன்னையின் மிக்கோர் உலகத்து இன்மையின், அன்னைபோல என்றும், நெஞ்சில் ஒன்றும் வாயில் ஒன்றுமாக ஒழுகுவது களவென்னும் காரறிவாண்மை யாதல்பற்றிக் கள்வன் போலக் கொடியவன் என்றும் கூறினார். வேங்கைப்பூ பொன்னிறத்த தாகலின் பொன்னென வேங்கை தாய என்றார். கழை மூங்கிலின் இருகணுக்களின் இடைப்பகுதி. கணுவிடமே பசிய முளையும் இலையும் தோன்றுமிடமாதலான் பைங்கண் எனப்பட்டது. சென்னி, முடி, கோடு, உச்சி, பிறங்கல், மலை. தலைவன் பிரிவு நினைந்து ஆற்றாது வருந்தும் தலைமகளை ஆற்றுவிக்கும் கருத்தினளாகிய தோழி, பிரியும் நாளில் அவன் செய்தவற்றை நினைப்பாளாய், என் கைகொண்டு தன்கண் ஒற்றியும் தன்கை கொண்டு என் நன்னுதல் நீவியும் என்றாள், "ஒன்றித் தோன்றும் தோழிமேன"1 என்றதனால் தலைவியின் கையையும் நுதலையும் என் கை எனவும் என் நன்னுதல் எனவும் மொழிந்தாள். ஆற்றுவிக்கும் நிலையில், நிகழ்ந்தது கூறலும் ஓர் ஏதுவாம் என்பதை ஆசிரியர். "நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே"2 என்பர். இனி, அவன் சொல்லிய சொற்களை நினைப்பிக்கலுற்று அவற்றிடைப் பொதிந்து கிடந்த அன்பினை விதந்து, அன்னை போல இனிய கூறினான் என்று சொல்லி, இவ்வாறு தலைவன் அன்புமிக்க சொல்லும் செயலும் உடையனாதல் காட்டி முடிவில் அஃது இல்லானாய்ப் பிரிந்தான் என்பாள். கள்வன் போலக் கொடியன் என்றாள். அப்பெற்றியோன் குன்றில் மணியென அருவி இழிதலும் பொன்னென வேங்கை மலர் தலும் எனக்கு வியப்பைத் தருகின்றன என்றற்கு மணியென இழிதரும் அருவிப் பொன்னென வேங்கை தாய ஓங்குமலை என்றான். மிக்க நீரைச் சுமந்து மலைமுடிவில் தங்க வரும் மழை முகிலை, மூங்கில் வயிறு கிழித்து அலைக்கும் என்பதனால், தன்பால் அன்பு மிகவுடையமாய்த் தன்னையின்றியமையே மாய் அடைந்த நம்மைத் தன் பிரிவால் வருத்துகின்றான் என்று தோழி கொடுமை கூறினாள். கண்ணொற்றியும், நுதல் நீவியும், இனிய கூறியும் தமது அன்பு மிகுதியைப் புலப்படுத்திய காதலர் அன்பின்மையும், கொடுமையும், உடையரல்லர்; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற பொருளுரைப் பற்றிச் சென்றன ராகலின், அவர் வருங்காறும் யான் ஆற்றி யிருப்பேன் காண் எனத் தலைவி கூறுவாளாவது இதனாற் பயன் என உணர்க. இனி, தோழி தலைவியைக் குறைநயப்பக் கூறியதாகக் கொள்ளின், இப்பாட்டுக் களவின்கண், தலைவன் தலைவி காட்டிய குறிப்பைக் கொண்டு தோழியையறிந்து, தன் காதல் தலைவியால் மிக்குநிற்பதனைத் தெரிவித்து, அவள் நட்பினைப் பெற முயலுங்கால், தோழி இருவர் கருத்தினையும் உணர்ந்து, தலைவி தன் காதலை மறைத்தொழுகும் மாண் புணர்ந்து, தான் அறியத் தன் களவொழுக்கத்தை அவள் நிகழ்த்துவது நன்றாம் என்பதுபட, ஒன்றும் அறியாள் போற் சொல்லாடலுற்று, "இப்பகுதியில் அடிக்கடி வந்து நீங்கும் ஒருவன் என்பாற் போந்து என் கையைக் கொண்டு தன்கண் ஒற்றியும் தன் கையால் என் நன்னுதல் நீவியும் அன்னை போல இனியன கூறியும், கள்வன் போல என் மனத்தையும் கவர்ந்து கொண்டு நீங்கினான்" என்று கூறுகின்றாள் என்பதாம். அது கேட்கும் தலைமகள், என்பால் கொண்ட காதலால் இது செய்தானாக இவள் அவனை வேறுபடக் கருதுகின்றாளென உற்றது கூறிக் குறைநேர்வாளாவது பயன். "அவனறிவு ஆற்ற அறிபு மாகலின்1" என்ற நூற்பாவில் வரும், "கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்" என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர். 29. பூதனார் பண்டைத் தமிழ் மக்களிடையே பெரிதும் பயில வழங்கிய இயற்பெயர்களில் ஆதன் பூதன் என்பவை சிறந்தவை; ஆசிரியர் தொல்காப்பியனாரால் சிறப்புற எடுத்து இலக்கணம் காட்டப் பெற்றவை. இவற்றை அடுத்து நிற்கும் பழம் பெயர்கள் சாத்தன், கொற்றன் என்பனவாகும். ஆதன் பூதன் என்ற இரண்டனுள் ஆதன் என்பது சேர நாட்டிலும், பூதன் என்பது பாண்டி நாட்டிலும் பெரும்பான்மையாகவுள்ளன. சான்றோர் பலர் இளம்பூதன், நப்பூதன், வெண்பூதன், பிள்ளைப்பூதன் எனவும், குன்றம் பூதன், சேந்தம் பூதன், சாத்தம் பூதன் எனவும் பலதிறமாகப் பெயர் பூண்டிருக்கின்றனர். பழமையும், பொதுமையும் சிறக்கவுடைமைப்பற்றி இவற்றைத் தனித் தமிழ்ப் பெயர்கள் எனக் கோடல் பொருத்தமாகிறது. பூதனார் என்ற பெயருடையார் பலரும் வேறு வேறு அடைமொழிகளால் சிறப்பிக்கப் பெற்றிருக்கவும், ஈண்டு இப்பூதனார் அடைபெறாது தனித்து நிற்பதை நோக்கின், இவர் ஏனைச் சான்றோர் பலரினும் முற்பட்டவர் என்று கொள்ளலாம். இவர் பாடியன இந்நற்றிணையில் மாத்திரம் காணப்படுவதே இம் முடிவுக்கு ஓரளவு ஆதரவு தருகிறது. பூதங்கண்ணனார், பூதம் புல்லனார், பூதன் தேவனார் என வருவோர் பூதனாரோடு தொடர்புடையர் என்பது ஒருதலை. சேரவரசர் குடியில் ஆதன் என்பது பெருக வழங்கியது போலப் பூதன் என்பது, பாண்டிய நாட்டு மன்னர் குடியில் பெருகக் காணப்படாதாயினும், பாண்டி வேந்தருள் தென்குமரி முதல் தென்வெள்ளாறு வரையிற்கிடக்கும் பாண்டி நாட்டை ஆண்டவனான பூதப்பாண்டியனது பெயர்க்கண் அது நின்று பொற்புறுகின்றது. காதலன்பு தோன்றி வளரும் களவுக் காலத்தில் தலைமகன் பால் காதல் மிக்கொழுகிய மகட் குறிப்பு உணர்ந்த பெற்றோர் அவற்கு மகட் கொடை மறுத்ததனாலோ, வேற்று வரைவு கருதியதனாலோ, அவள் அவனோடு பெற்றோர் அறியாவாறு உடன்போக்குத் துணிந்து போய்விட்டாள். பிள்ளமை நிலையி லிருந்தே அவளை வளர்த்தெடுத்த செவிலி பிரிவாற்றாது அவள் சென்ற வழியே தேடிக் கொண்டு போனாள். கண்டோர், தன் காதற் கணவனுடன் அவள் மகிழ்ந்து சென்ற திறத்தைத் தெரிவித்தனர். அதனை அச்செவிலி மகளைப் பெற்ற தாய்க்கு உரைத்தாள். நற்றாய் தன் மகள் தனக்குரிய காதலனுடன் போகியது பண்டைத் தமிழ்நெறிப்படி அறமேயென்று துணிந்தாளாயினும், தன் மகளது மென்மைப் பண்பு நினைந்த போது அவளது செலவு அவட்கு ஆற்றொணாத் துயரை விளைவித்தது. "யான் என் மகளை இறுகத் தழுவுங்கால், அவளது இளமார்பு நோமென அஞ்சிச் சிறிது கைந்நெகிழ்வேனாயின், யான் பிரிந்ததாக எண்ணிப் பெருமூச்சுவிட்டு வருந்துவள்; அத்துணைப் பிரிவரும் மென்மைப் பண்புடையாள், இன்று புலிவழங்கு கடுஞ்சுரத்து நெடுவழியை எவ்வாறு கடந்து செல்வள்? அதை நினைக்கும்போது என் நெஞ்சம் வருந்துகிறது" என்று தன் தாய்மை நிலையில் கட்டுரைத்து அவலிக்கின்றான். தாயது மிக்க அன்பும் மகளது மென்மைப் பண்பும் ஒருங்கு விளங்க நிற்கும் மாண்பு குறித்து இக்கூற்றினை இப்பாட்டிடை வைத்து ஆசிரியர் பூதனார் பாடுகின்றார். இதன்கண் தலைவியின் அன்பு நிலையும் அவள் போகிய வழியது அருமை நிலையும் ஒப்பக் காட்டி நம் அறிவைப் பணி கொள்ளும் இவரது புலமை நலம் நன்கு குறிக்க தக்கதாகும். நின்ற வேனில் உலத்த காந்தள் அழலவிர் நீளிடை நிழலிடம் 1பெறாஅது ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி யாங்கு வல்லுநள்கொல் தானே 2யான்றன் வனைந்தேத் திளமுலை 3நோவ கொல்லென நினைந்துகைந் நெகிழ்ந்த அனைத்தற்குத் தான்றன் பேரமர் மழைக்கண் ஈரிய கலுழ வெய்ய உயிர்க்கும் சாயல் மையீ ரோதிப் பெருமடத் தகையே. இது, மகட் போக்கிய தாய் சொல்லியது. உரை நின்ற வேனில் உலந்த காந்தள் - நின்று வெதுப்பிய வேனிலால் வாடிய காந்தள்; அழல் அவிர் நீளிடை - நெருப்பென விளங்கும் நீண்ட வழியில்; நிழலிடம் பெறாது - நிழல் பொருந்திய இடம் பெறாமையால்; ஈன்று - குட்டியீன்று இளைப்பட்டு; கான்மடிந்த பிணவு பசி கூர்ந்தென - காட்டிடத்தே மடிந்து கிடக்கும் பெண்புலி பசி மிக்க தென்று; மான்ற மாலை - இருள் மயங்கிய மாலைப் போதில்; வழங்குநர் செகீஇய-வழிச்செல்வோரைத் தாக்கிக் கொல்லும் பொருட்டு; புலி பார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி - புலியேறு அவர்தம் வரவு நோக்கி ஒடுங்கியிருக்கும் புற்கள் நிறைந்த வழியாகிய அகலமில்லாத சிறிய நெறியை நடந்து சேறற்கு; யாங்கு வல்லுநள் கொல் - எவ்வாறு வல்லமை உடையளா யினளோ, அறியேன்; யான் தன் வனைந்து ஏந்து இளமுலை நோவகொல் என நினைந்து - தன்னுடைய தொய்யில் எழுதிய உயர்ந்த இளமுலைகள் நோவுமே எனக் கருதி: கை நெகிழ்ந்த அனைத்திற்கு - தழுவிய என் கையைச் சிறிது நெகிழ்த்த அவ் வளவிற்கே; தன் பேரமர் மழைக்கஈரியண் கலுழ - தன்னுடைய பெரிய மதர்த்து குளிர்ந்த கண்கள் நீர் சுரந்து சொரிய; வெய்ய உயிர்க்கும் சாயல் - வெவ்விதாக உயிர்க்கும் மென்மையும்; மையீரோதிப் பெருமடத்தகை - கரிய குளிர்ந்த கூந்தலும் பெரிய மடப்பமும் அழகும் பொருந்திய என்மகள் எ-று. மடத்தகை, புல்லதர்ச் சிறுநெறி யாங்கு வல்லுநள்கொல் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. காந்தள் அழலென அவிர் நீளிடை இடம் பெறாது மடிந்த பிணவு என்க. என வென்பது எஞ்சி நின்றது. பிணவு பசி கூர்ந்தெனப் புலி செகீஇய பார்த்து உறையும் சிறுநெறி, புல்லதர்ச் சிறுநெறி என இயையும், நோவகொல் என நினைந்து நெகிழ்ந்த அனைத்தற்குக் கண் கலுழ உயிர்க்கும் என்று இயைக்க, சாயலும் ஓதியும் மடப்பமும் தகையு முடையாள் என விரியும். காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் ஒருதன்மையான வெம்மையைச் செய்யும் வேனில் என்றற்கு நின்ற வேனில் என்றார். மான்ற மாலை என்புழி, மான்ற என்றது மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம். புல்லதர், புற்கள் நிறைந்த அதர் புலி வழங்கும் அதராகலின், புல்லை மேயும் மாவீனம் அவண் வாரா ஆதலால் புற்கள் நன்கு வளர்ந்திருக்குமாறு தோன்றப் புல்லதர்ச் சிறுநெறி என்றார். புலியோ பசித்தாலும் புல்லைத் தின்னாது. வனைதல், தொய்யில் எழுதி அழகுறுத்தல். அனைத்து - அவ்வளவு, வெய்ய உயிர்த்தல், வெய்துயிர்த்தல், சாயல், மென்மை, மையீரோதி, கரிய நெய்ப்பினையுடைய தண்ணிய கூந்தல். மடம், ஈண்டு இளமைக் கண் உளதாகும் மடப்பம். தகை, பெண்மைக்குரிய நலம் பலவும் நிரம்பியவழிப் பிறக்கும் அழகு. மகட்போக்கிய தாய் அவளைத் தேடிச் செல்லுங்கால், கண்டோர், அவட்கு வழியின் இயல்பு கூறுவாராய், தலைமகள் சென்ற சுரம் மிக்க வெயில் வெம்மை யுடைத்தெனவும், அங்கே நிழலிடம் பெறுதல் அரிதெனவும் கூறினமையின், அதுகேட்டு ஆற்றாளாய், நின்ற வேனில் உலந்த காந்தள் அழல் என அவிர் நீளிடை நிழலிடம் பெறாது என்றும், அவ்வெயிலில் நிழலிடம் பெறாது வருந்தும் பெண்புலி, குட்டியீன்று மேலே செல்லுதற்கேற்ற வலியின்றி மடிந்து கிடப்பதோடு பசி மிகுந்து துயர்கின்றது எனவும், அதன் பசியைப் போக்கற்குப் புலியேறு மாலைப்போதில் அவ்வழியே வருவோரைத் தாக்கிக் கொல்வது கருதி ஒருபால் ஒடுங்கியிருக்குமெனவும் அவர்கள் கூறினமையின், உள்ளம் உடைந்து கலக்கம் மிக்க செவிலி, அவ்வழியே என் மகள் சென்று சேர்ந்தாள் என்று சொல்லுகிறீர்களே, அச்சம் சிறிதுமின்றிச் சேறற்கு அவள் எங்ஙனம் வல்லவளாயினாள் என்பாள், யாங்கு வல்லுநள் கொல் என்றும் கூறினாள். சுரத்தின் வெம்மையையும், நெறியின் கொடுமையையும், செலவின் அருமையையும் கண்டோர் உரைத்த கூற்று அவள் உள்ளத்தே அச்சமும் கலக்கமும் தோற்றுவிக்கவும், அவற்றை யெண்ணாது சென்ற தலைமகளின் வன்மையை நினைத்த அவள் நெஞ்சில், மகளது மென்மைப்பண்பே மேலெழுந்து நின்றமையின், அதனையே புல்லுநெகிழ்ந்த செயன்மேல் வைத்துப் புலம்பிக் கூறுவாளயினள், புலி முதலியன எதிர்ப்படின் ஓடி ஒதுங்குதற்குரிய பெருநெறி யன்று என்றற்குச் சிறுநெறி என்றும், புலி உறை தலால் மக்களும் மாக்களும் அவ்வழியில் வழங்காமை தோன்றப் புலி பார்த்து உறையும் புல்லதர் என்றும் கூறினாள். வழியின் அருமையும் கொடுமையும், அவள் நெஞ்சிடை நின்று வருந்தினமையின், தன் மகளை உடன்கொண்டு சென்ற தலைமகனை நினையாளாயினள். தலைமகள் உள்ளம் தலைமகற் காகாது அவள் தனக்கே உரித்தாய் நின்ற போது, செவிலியின் புல்லுச் சிறிது நெகிழினும் ஆற்றாது அழுதனளாக, இப்பொழுது அவள் உள்ளநிலை வேறுபட்டமை நினையாது பண்டை நிலையையே நினைந்து செவிலி தலைவியின் சாயல் முதலிய இயல்களை, சாயல் மையிரோதிப் பெருமடத்தகை என்று பரிந்தெடுத்துரைத்தாள். கண்டோர் சுரத்தின் கொடுமை கூறியது. செவிலியை மேலும் செல்லாவாறு தடுத்து மனைக்கே மீளுமாறு செய்தற்பொருட்டு. 30. கொற்றனார் வெற்றி எனப் பொருள்படும் கொற்றம் என்ற சொல்லடியாகப் பிறந்தது கொற்றன் என்ற பெயர். இதன் பெண்பால் கொற்றி என வரும். கொற்றவை யென்பதும் இவ்வாறு வந்ததே. இக்கொற்றனார், அடைமொழி யொன்றும் இன்றி வெறிதே நிற்பது இவர் மிக்க தொன்மையும் சிறப்பும் உடையவர் என்பதை உணர்த்துகிறது. இனிச் சிலர், செல்லூர்க் கொற்றனார் எனவும், செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார் எனவும் தொகை நூல்களில் காணப்படும் சான்றோரே இவர் என்று கூறுகின்றனர்; அவர் கூற்றை வற்புறுத்தும் மேதக்க சான்று ஒன்றும் காட்டப்படவில்லை. மனம் போனவாறு முடிவு கொள்வதும் அதற்கெற்பப் பாட்டுக்களைத் தொகுத்துக் கோடலும் ஆராய்ச்சி நெறிக்கு அறமாகாது. இக்கொற்றனார் தமது பெயரளவிலேயே கற்றவர் கூட்டம் இனிதறிந்து கொள்ளும் சீர்த்த புலமை படைத்து விளங்கியவரென அமைதல் முறையாகும். இவர் பாடியனவாகக் குறுந்தொகையிலும் சில பாட்டுக்கள் உள்ளன. பண்டைநாளில், இளமகளிர் கூடித் துணங்கை யென்னும் கூத்தினை யாடி விளையாடுவர். அக்காலை, அரசரும் செல்வருமாகிய பெருமக்கள் அதற்குத் தலைக்கை தந்து விளையாட்டயர்வர். ஒருகால், தலைமகன், பரத்தையர் சேரியில் தொடிக்கை மகளிர்க்குத் தலைக்கை தந்து விளையாடி விட்டுத் தன் மனைக்கு வந்தான். அவன் விளையாடியது மனைக்கண் இருந்த தலை மகட்குப் புலவியை உண்டுபண்ணிற்று. தலைவன்பால் பரத்தமை யுண்டாயிற்றென அவள் எண்ணினான். அவனோ உண்மையை யொளியாமல், "யான் யாரையும் அறியேன், நின் தோழியும் கண்டிருந்தாள்" என்றான். தலைக்கை தந்து விளையாடுங்கால், மகளிர் அவனைப் பற்றி ஈர்த்து விளையாடியது கண்டு வந்த தோழி, தலைவி பக்கல் நின்று, "மகளிர் விளையாட்டயரும் தெருவில், உடைகலப்பட்டோர் ஒரு பலகை கிடைப்ப அதனைத் தாந்தாமும் சேரப் பற்றுவதுபோல மகளிர் பலர், நின்னைப் பற்றி ஈர்ப்ப, அவரிடையே நீ கலங்கிய நிலையைக் கண்டேன்; அது விளையாட்டு மரபாதலின் யான் ஒன்றும் செய்தற்கில்லை" என்றாள். தோழியின் இக்கூற்றுத் தலைவிக்குச் சார்பாய்ப் புலத்தற்கு இடம் தந்து, அது தீர்தற்கு வாயிலாகவும் அமைந்திருக்கும் நயம் கண்ட கொற்றனார், அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். கண்டனென் மகிழ்ந கண்டெவன் செய்கோ பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும் 1ஏர்தரு தெருவின்நின் எதிர்ச்சி நோக்கி மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர் கவலே முற்ற வெய்துவீழ் அரிப்பனி காலே முற்ற 1பைதற் காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி யுடன்வீழ்பு பலர்கொள் பலகை போல வாங்க வாங்கநின் 2ஊங்கஞர் நிலையே. இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்றாற்குத் தோழி சொல்லியது. உரை மகிழ்ந - தலைவனே; கண்டனென் கண்டு எவன் செய்கோ - யான் மகளிரிடையே நின்னைக் கண்டேனாயினும், அது மரபாகலின் யாது செய்ய வல்லேன்; பாணன் கையது - பரத்தையரைப் புணர்க்கும் பாணன் கையில் உள்ளதாகிய; பண்புடைச் சீறியாழ் - குற்றமில்லாத பண்பினையுடைய சீறியாழ்; யாணர் வண்டின் இம்மென இமிரும் - புதுத்தேன் உண்ட வண்டு போல இம்மென்ற இனிய இசையைச் செய் கின்ற; தெருவின் - தெருவில் அமைந்த துணங்கைக் களத்தின் கண்; ஏர்தரு நின் எதிர்ச்சி நோக்கி - விளையாட்டு விரும்பி எழுந்தருளுகின்ற நின் எதிர்ப்பாடு கண்டு நின் தலைக்கையைப் பெற விரும்பி; மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் - நின் மார்பின் மாலையைப் பற்றிக் கொண்ட மாட்சிமையுற்ற இழைகளை யணிந்த மகளிர்; கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப்பனி - கவலை மிக்குக் கலக்க முற்றதனால் வெய் துயிர்த்து நுதல் வியர்க்கும் துளியுடன்; கால் ஏமுற்ற பைதல் காலை - காற்றுத் திரண்டு உயிர்கள் மயங்கி வருந்துதற் கேதுவாகிய புயல் மோதும் போது; மரம் கடல் கவிழ்ந்தென - ஏறிச் சென்ற மரக்கலம் கடலின்கண் கவிழ்ந்ததாக; கலங்கி - கலக்கமெய்தி; உடன் வீழ்பு - ஒருங்கேகூடி; பலர் கொள் பலகைபோல - பலரும் சேரப் பற்றி ஈர்க்கப்பட்ட மரக்கலப் பலகைபோல; வாங்க வாங்க - அவரவரும் பற்றி ஈர்ப்ப; நின் - அவர் நடுவே நினது; ஊங்கு அஞர் நிலை - முன்னும் பின்னுமாக அசைந்து வருந்திய நிலையினை எ-று. மகிழ்ந, பைதற்காலை, மரம், கடல் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு. பலர் கொள் பலகை போல, யாழ் வண்டின் இமிரும் தெருவில், நின் எதிர்ச்சி நோக்கி, மார்பு தலைக் கொண்ட மகளிர் அரிப்பனியுடன், வாங்க வாங்க, நின் ஊங்கஞர் நிலை கண்டெனன்; கண்டு, யான் எவன் செய்கோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சீறியாழ்க்கு உரிய குண மெல்லாம் நிறைந்தமை தோன்றப் பண்புடைச் சீறியாழ் என்றார், சீறியாழ், பேரியாழ் என்பன யாழ் வகை. யாணர், புதுமை; ஈண்டுப் புதுத்தேனாகிய வருவாய் மேற்று, சீறியாழ் இமிரும் தெரு, ஏர்தரு தெரு என இயையும், ஏர்தரல், தலைவன் எழுந்தருளுதல் மேற்று. எதிர்ச்சி, நேர்படுதல், தலைமக்களாகிய செல்வர், விறலியர் கூத்தியர் முதலிய ஆடன்மகளிர்க்குத் தலைக்கை தந்து கூத்து முதலியன தொடங்கிவைத்தல் பண்டையோர் மரபு. "மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து"1 என்று பிறரும் கூறுவர். இவ்வாறு தலைவர்கள் தலைக்கை தந்து விளையாடி வருவதும், அஃது அவர்தம் மனையுறை மகளிர் புலத்தற்கு ஏதுவாவதும், "சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன் றனளாகி, உயவும் கோதை ....... பேரியல் அரிவை"2 என வருதலால் உணரப்படும் தாம் அணியும் இழைகளாற் பிறக்கும் அழகைக் காட்டி, ஆடவர் நெஞ்சு கவரும் நீர்மையர் அம் மகளிர் என்றற்கு மாணிழை மகளிர் என்றார். முத்து முத்தாகத் துளிக்கும் நீர்த்துளி அரிப்பனி எனப்பட்டது. நீராடுவோர்க்குப் புணை போல விளையாடும் மகளிர்க்குத் தலைமக்களின் மார்பும் தோளும் பற்றுக்கோடாம் என்க; இதனை, "முழவு இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணையாதல்" என்ப. அக்கருத்தே தோன்ற, ஈண்டும் பலர் கொள் பலகை போல என்றார். கவல், கவலை. காற்றுப் பெரிய அளவில் திரண்ட பின்னரே புயலாய் மோதுமாதலின், அக்காலை, மக்களும் பிறவும் அதற்கு ஆற்றாது தாக்குண்டு மயங்கிப் பெருந்துன்பம் எய்துவது பற்றி, கால் ஏமுற்ற பைதற் காலை என்றார். ஏமுறுதல் மயங்குதல், பைதற்காலை, துன்பக்காலம், ஊங்குநிலை, அசைந்தாடும் நிலை. அஞர், துன்பம். செய்கோ, செய்கு, தன்மை யொருமை முற்று வினைத் திரிசொல். ஓகாரம் வினா. பரத்தையர் துணங்கைக்குத் தலைக்கை தந்து சிறப்பித்துப் போந்த தலைவன் செயல் தலைவி புலத்தற்கு ஏதுவாயின மையின், தலைவி, நீ பரத்தைமை பூண்டனை யாகலின் எம்மனை வாரற்க என வாயில் மறுத்தாளாக, தலைவன் பரத்தையர் துணங்கைக்குத் தலைக்கை தந்தமையல்லது, அம்மகளிருள் ஒருவரையும் அறியேன் என்று கூறலும், புலவியால் முகம் சிவந்து நிற்கும் தலைவி பக்கல் நின்று பேசலுற்ற தோழி, மகிழ்நனே, நீ துணங்கைக்குத் தலைக்கை தந்து சிறப்பித்தமை யான் கண்டேன் என்பாளாய், கண்டனென் மகிழ்ந என்றும், அவ்விடந்தானும் இது என்பாள், பாணனது சீறியாழ் இமிரும் தெரு என்பாள், பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும் ஏர்தரு தெருவின் என்றும், துணங்கைக்களம் தெருவாதலின், அவண் அவன் போந்தமையும், அவன் வரவைத் துணங்கை மகளிரான பரத்தையர் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தமையும் இனிது தோன்ற, ஏர்தரு தெருவின் நின் எதிர்ச்சி நோக்கி என்றும் கூறினாள். தலைமகன் தலைக்கை தந்து துணங்கையைத் தொடங்கியதும், அம்மகளிர் அவன் மார்பும் தோளும் பற்றி ஆடினர் என்றற்கு மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் என்றும், ஆடிய விடத்துக் காமவேட்கை மீதூர்ந்து நின் கூட்டம் பெறலாகாமையின் பிறந்த கவலையால் மயங்கி வெய்துயிர்த்து நுதல் வியர்த்துக் கண்ணீர் துளித்தனர் என்பாள், கவல் ஏமுற்ற வெய்துவீழ் அரிப்பனி என்றும் உரைத்தாள். கடுங்காற்று மோத நெடுங்கடலுள் கலம் உடைந்து கெடுவோர்க்கு அகப்படும் புணை உயிர்த்துணை யாதல் போலக் காமக் கடலுள் வீழ்ந்து கலங்கஞர் எய்தும் அம்மகளிர்க்கு நின் மார்பு தழூஉப் புணையாயிற் றென்பாள், கால் ஏமுற்ற பைதற்காலைக் கடல் மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு பலர்கொள் பலகை போன்றது எனவும், இரு மருங்கும் அம்மகளிர் ஈர்த்தமையால் இருபாலும் நீ அசைந்து கொடுத்து ஆடிய நிலையை யான் கண்டேன்; நினக்கு அவர்பால் காமக்குறிப்பு இல்லையாயினும், அம்மகளிர்பால் அது மிக்கிருந்தமை கண்டேன் எனவும், அவரது துணங்கைக்கு நீ தழூஉப் புணையாதலும், அவர்கள் நின்மார்பும் தோளும் தலைக்கோடலும் நின் தலைமைக்கு மாறன்மையின், யான் அவண் செயற்குரியது யாதும் இல்லை எனவும் கூறுவாள், வாங்க வாங்க நின்று ஊங்கஞர் நிலை கண்டனென் மகிழ்ந, கண்டு, எவன் செய்கோ எனவும் கூறினாள். தலைமகள் அது கேட்டுப் புலத்தலைக் கைவிட்டு நேர்தலே தக்கதெனத் துணிந்து வாயில் நேர்வாளாவது பயன். 31. நக்கீரனார் சங்கநூற் சான்றோர் பெயர் நிரலைக் காண்போர், நக்கீரர், மதுரை நக்கீரனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்ற பெயர்கள் இருப்பதைக் காண்பர். இவை யாவும் ஒருவரைக் குறிப்பனவா பலரைக் குறிப்பனவா என்பதில் அறிஞர் கருத்து வேறுபடுகின்றனர். ஒருவரையே இவை குறிக்குமாயின் வேறு வேறிடங்களில் வேறுவேறு பெயர்களைக் குறித்தல் கூடாது. அவ்வப்போது வேறு பெயர்கள் குறிக்கப்படுவதால், நக்கீரர் ஒருவரல்லர். பலர் என்ற கொள்கையே வலிபெறுகிறது. வேறாகப் பகுக்குமிடத்து மதுரை நக்கீரனார் ஒருவராகவும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒருவராகவும் நிற்கின்றனர். இனி, நக்கீரர் என்ற பெயரே சில இடங்களில் நக்கீரனார் எனவும், நக்கீரர் எனவும் காணப்படும் படினும் நக்கீரர் நக்கீரனார் என்ற இரண்டும் ஒருவரையே குறிக்குமென்பதில் எவரும் வேறு படுவதில்லை. ஆகவே, சங்கச் சான்றோருடைய நிரலுட் காணப்படும் நக்கீரர்கள், மதுரை நக்கீரனாரும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இருவராவர் என்று கோடல் நேரிதாகும். இந்த மதுரை நக்கீரனார் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் பல இனிய வரலாற்று நிகழ்ச்சிகள் நிலவின. திதியன் என்பானோடு அன்னி யென்பவன் பகைகொண்டு அவனது காவல் மரமான புன்னையைக் குறைக்க முற்பட்டபோது, அதனை அறிந்த வேள் எவ்வி, அன்னிக்கு எத்துணையோ பல நயமொழிகளைக் கூறி அடக்கவும், அவன் திதியனொடு போர் தொடுத்து முடிவில் தோற்றழிந்தான்; மேலைக் கடற்கரையினின்றும் போந்து மீகொங்கு நாட்டில் தங்கி வாய்மொழி பிழையாதவர் என்ற புகழ்கொண்டு கோசர் என்பவர் விளக்க முற்றிருந்தனர்; அவர்கள் ஒருகாலத்தில் பாபிலோனியா நாட்டு வடபகுதியில் வாழ்ந்த கிசியரென்ற இனத்தவர்; அவர்கள் மேலைக்கடல் வழியாக வந்து தமிழகத்து மேலைக் கடற்கரையில் தங்கி வில்லேருழவராய் வாழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாலைக்காட்டுப் பிளவு வழியாக உள்நாட்டில் புகுந்து, சேரர்க்கும் பாண்டியர்க்கும் தானை மறவராய்ப் பணிசெய்து ஒழுகினர். ஒருகால், கோசரது குறும்பு மிக்க போது, சோழன் பொலம்பூண் கிள்ளி யென்பவன் அவர்கள் செருக்கினை முளையிலே கிள்ளி, என்றுமே அவர்கள் தமிழ் வேந்தர்க்குப் பணியாளராய் இருந்தொழியுமாறு செய்தான். அக்கிள்ளியின் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் இருந்து விளங்கிற்று. ஒரு காலத்தே தமிழ்வேந்தரை வென்று, அவர் நிலத்துள் ஒரு பகுதியைக் கைப்படுத்திக் கொண்ட தழும்பன் என்பவனது தலைநகர் ஊணூர் என்றும் அவ்வூணூர்க்ககு அப்பால் உள்ளது பாண்டி நாட்டு மருங்கூர்ப்பட்டினம் என்றும் மதுரை நக்கீரனார் கூறுகின்றார். அயிரியாறு வடுகவேந்தனான எருமையின் நாட்டில் (மைசூர் நாட்டில்) உளது என்பதும் தொண்டித்துறை சேரமான் குட்டுவற்குரியது என்பதும், தொண்டைமான் பொலம்பூண் திரையனுடைய பவத்திரி என்னும் நகரம் தொண்டை நாட்டில் சிறந்து விளங்கினமையும் இவரால் குறிக்கப்படுகின்றன. வேற்று நாட்டரசர் சிலர் தமிழரொடு பொருதற்கு எழுவ தறிந்த சோழன் கிள்ளிவளவன் எதிர்சென்று பொருது அவரை வலியழித்து மீண்டானாக. அவ்வெற்றி குறித்துப் பாண்டியன் மாறனும் சேரமான் கோதையும் கூடல்நகர்க்கண் வெற்றிகொண்டாடி யதும், தன் நாட்டுட் புகுந்து குறும்பு செய்தொழுகிய கொங்கரை வென்றமை குறித்துப் பசும்பூண் பாண்டியன் கூடல்நகர்க் கண் விழாவயர்ந்ததும் நக்கீரர் காட்டும் செய்திக் குறிப்புக்களாகும். இவராற் குறிக்கப்பட்ட மருங்கூர்ப்பட்டினம், பாண்டிநாட்டு முத்தூற்றுக் கூற்றத்துக் கடற்கரை ஊர்களுள் ஒன்று என இராமநாதபுரம் மாவட்டத்துத் திட்டாந்ததானபுரத்துக் கல் வெட்டுக்களால்1 தெரிகிறது; ஆயினும், இதற்கு வடபாலில் விளங்கிய ஊணூர் கல்வெட்டுக் காலத்தேயே மறைந்து போனதாக அறிகின்றோம்; ஒருகால் இனி வெளிவர இருக்கம் கல்வெட்டுக்களில் காணப்படுதலும் கூடும். கடலடையாது இலங்கை கொண்ட வளநாடு எனப்படும் கோனாட்டுப் பகுதி யிலுள்ள மருங்கூர்1 பட்டினமாகாமையின், அதனை ஈண்டுக் கோடற்கு இடமில்லை. எருமைநாட்டு அயிரியாறு இப்போது மைசூர் நாட்டு ஆசன் மாவட்டத்தில் உளது; குட்டுவனது தொண்டி, மலையாள மாவட்டத்துக் குறும்பர்நாடு வட்டத்தில் கடற்கரையில் இருக்கிறது. பவத்திரி நகரம் நெல்லூர் மாவட்டத்துக் கூடூர் வட்டத்துக் கடற்கரை நகராயிருந்து கடல் கோட்கு இரையாகி விட்டது; அதனை அம் மாவட்டத்து ரெட்டிபாளையம் கல்வெட்டுக்கள் "சயங்கொண்ட சோழ மண்டலத்துக் கடல்கொண்ட பவத்திரிக் கோட்டம்"2 என்று கூறுகின்றன. கரிகாற் சோழனது ஆட்சி மேற்கில் மலையமான் நாடுவரையில் பரந்திருந்தமையின், அந்நாட்டின் கீழ்ப் பகுதியான திருமுனைப்பாடிநாட்டு இடையாறு என்னும் ஊர் அக்காலத்தே சிறந்த நகரமாக விளங்கிய செய்தியை நக்கீரனார் குறிக்கின்றார். பாண்டிநாட்டு வையைக் கரையில் விளங்கிய திருமருதந் துறை போலத் தென்பென்னை கரையில் இவ்விடையாறு திரு மருதந் துறையாக விளங்கிற் றென்பதை அவ்வூர்க் கல் வெட்டுக்கள் திருமுனைப்பாடி நாட்டு இடையாற்றூர் நாட்டு இடை யாறுடைய திருமருதந்துறை3 என்று கூறுகின்றன. மதுரை மாவட்டத்துப் பெரியகுளம் பகுதியிலுள்ள குள்ளபுரத்துக் கல்வெட்டுக்கள் வையைத் துறையைத் "திருமருதந்துறை"4 என்று இயம்புகின்றன. இங்ஙனம் பாண்டிநாட்டுத் திருமருதந் துறை போலத் திருமுனைப்பாடி நாட்டுத் திருமருதந்துறை புலவர் பாடும் புகழ்பெற்றமை பற்றி, "பெரும்பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்றன்ன நல்லிசை வெறுக்கை"5 என்று அதன் செல்வமிகுதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அந்நாளில் தமிழர் கொண்டாடிய கார்த்திகை விழாவை, "குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழா" என்று பாராட்டிக் கூறுவர். இவர் காலத்தே குடபுலத்து விரைப்பொருளும், வடபுலத்துச் சந்தனக்கல்லும், வேங்கடமலையின் வேங்கை மரமும் தமிழகத்தில் தலைசிறந்து விளங்கின. இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல் களிலும் உள்ளன. களவின்கண் ஒழுகிவரும் தலைமகன், வரைவு நிகழ்தற்கு முன் தலைமகளைப் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுடையனாகி அதனை அவட்கும் தெரிவித்துவிட்டுச் சென்றான். ஆயினும், அவனது சின்னாளைப் பிரிவு, அவட்குப் பெரு வருத்தத்தைச் செய்தது. அவன் தான் குறித்த வண்ணமே சில நாட்களில் தன் கடமையை முடித்துக்கொண்டு மீண்டு போந்தான். அவன் தலைவி மனையின் சிறைப்புறத்தே வந்து நின்றானாக, தோழி அறிந்து கொண்டு தலைவிக்கு அறிவியாமல் ஒருபுறத்தே அவளை நிறுத்தித் தான் கூறுவது அவன் செவிப் படுமாறு உரையாடலுற்று "இதோ பார், கடலின்கண் இறா மீனைத் தேடிக் கொணர்ந்த நீர்க்காக்கை தன் பெடையை அழைத்து அதன் வாயில் அம் மீனைத் தருகிறது; இவ்வாறு புள்ளினம் தம்மிற் பிரிந்தும் பிரிவாற்றியும் பின்னர்க் கூடியும் இன்புறுதற்கு இடனாகிய இத்துறை எத்துணை இன்பமாக உளது; இதனைக் கண்டு நம் தலைவரும் விரைவிற் பொருள் தேடிக் கொணர்ந்து திருமணத்தால் பேரருள் செய்வர் எனக்கொண்டு ஆற்றியிருப்பதே நமக்கு நலமாவது" என்றாள். அது கேட்ட தலைவி, "நீ கூறுமாறு இத்துறை எனக்கு இன்பம் செய்தது, காதலனொடு களவுத் தொடர்பு உண்டாதற்கு முன்பு, காண்; இப்போது இத்துறையும் பிறவும் தரும் காட்சி ஆற்றாமையே பயக்கின்றது; என் செய்வேன்" என்றாள். இவ் வுரையாட்டால், காதற் கூட்டத் தொடர்பின்கண் இனிமை நல்கும் காட்சி பலவும், காதலர் பிரிவின்கண் அத் தொடர்பையே நினைப்பித்து வருத்தும் என்பது புலப்படக் கண்ட ஆசிரியர் நக்கீரனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். மாயிரும் புணரி1 துணிய நோக்கிச் சேயிறா எறிந்த சிறுவெண் காக்கை பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் தான்வீழ் பேடைக்குப் 2பயிரிடூஉச் சேக்கும் சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே பெரும்புலம் புற்ற நெஞ்சமொடு 3பலநினைந்து யானும் இனையேன் 4ஆனா துமணர் வேறுபன் னாட்டில் கால்தர வந்த பலவுறு பண்ணியம் இழிதரும் நிலவுமணல் நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு உரவுத்திரை யோதம் வெரூஉம் பெருதீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிரழிந்தது. உரை மாயிரும் புணரி துணிய நோக்கி - பெரிய கரிய கடலிடத்து அலைகள் கொந்தளிப்பின்றித் தெளிந்து நிற்கும் செவ்வி கண்டு; சேய் இறா எறிந்த சிறுவெண்காக்கை - செவ்விய இறாமீன்கள் மேய அவற்றை வேட்டையாடிய சிறிய வெண்மையான நிறத்தையுடைய நீர்க்காக்கை; பாயிரும் பனிக்கழி துழைஇ - பரந்த கரிய குளிர்ந்த கழியின் நீரைத் துழாவி; தான் வீழ்பைங்காற் பேடைக்கு - தன்னால் காதலிக்கப்பட்ட பெடைக் காக்கையை; பயிர் இடூஉச் சேக்கும் - பயிர்குரல் இட்டு அழைத்து அதன் பக்கல் தங்கித் தான் கவர்ந்து போந்த இரையை நல்கும்; சிறுவீ ஞாழல் துறையுமார் இனிது - சிறு பூக்களையுடைய ஞாழல் மரங்கள் நிற்கும் நீர்த்துறையும் இனிதாகவே இருந்தது; பெரும்புலம் புற்ற நெஞ்சமொடு ஆனாது - பெரிய தொரு தனிமைத் துயருற்ற நெஞ்சினோடு அமைந்தொழியாமல்; பல நினைந்து - பலப்பல எண்ணங்களைக் கொண்டு; யானும் இனையேன் - யானும் வருந்தி அழுதல் இல்லேனாகவே யிருந்தேன்; உமணர் வேறு பன்னாட்டில் கால்தர வந்த - உப்பு வணிகரால் வேறு பலவாகிய நாடுகளினின்றும் வண்டிகளில் ஏற்றிக் கொணரப் பட்டு வந்த; பலவுறு பண்ணியம் இழிதரும் - பலவாய் மிக்க பண்டங்கள் இறங்கும்; நிலவு மணல் நெடுஞ்சினைப் புன்னை- வெண்மணல் பரந்த துறையிடத்து நிற்கும் நெடிய கிளை களையுடைய புன்னை மரத்தில் தங்கும்; கடுஞ்சூல் வெண்குருகு - தலைச்சூல் கொண்ட வெண்குருகு; உரவுத் திரை ஓதம் வெரூஉம் - பரந்துவரும் அலைகளையுடைய கடற் பெருக்குக்கு அஞ்சி நீங்கும்; பெருநீர்ச் சேர்ப்பனொடு மணவா வூங்கு - பெரிய கடனிலச் சேர்ப்பனாகிய தலைவனொடு கூடி மகிழ்தற்கு முன்பெல்லாம், எ-று. சேர்ப்பனொடு மணாவா வூங்கு யானும் இனையேன்; துறையுமார் இனிது; மணந்த இப்போது யானும் ஆனாது இனைவேனாயினேன்; துறையும் வருத்தம் பயப்ப தாயிற்று என இசையெச்சத்தால் வேண்டுவன பெய்து கூட்டி வினை முடிவு செய்க. காற்றின் இயக்கம் குன்றியபோது அலைகள் இன்றித் தெளிந்து நிற்கும் நீர்ப்பரப்பில் இறாமீன் மேயும் என்ப. அக்காலமறிந்து நீர்க்காக்கை சென்று அவற்றை வேட்டையாடி உண்ணுமாதலின், மாயிரும் புணரி துணிய நோக்கிச் சேய் இறா எறிந்த சிறுவெண்காக்கை என்றார். அலைகளால் கலக்குறாத போது நீர் தெளிந்து தோன்றுதலால் புணரி துணிய எனல் வேண்டிற்று. புணரி, அலை. பெருங்காற்றால் அலைகள் எழுந்து அலைக்கும் காலத்து மீன்கள் பலவும் கடலின் அடியில் சென்றொளிக்கும்; சிறு குருகுகள் அக்காற்றுக்கு அஞ்சி அவ்விடம் செல்லா; ஆதலால் நீர்க்காக்கை அலையின்றி அமைதி சான்ற கடற் பரப்பை நோக்கும் என்று அறிக. துணிதல், தெளிதல். மீன் வேட்டம் சென்று மீண்ட நீர்க்காக்கை கழியிடத்து வாழும் மீன்களைத் தன் காதற்பெடையின் பொருட்டுக் கவர்ந்து கொண்டு வருகிற தென்பார் தான் வீழ்பைங்காற் பேடைக்குப் பாயிரும் பனிக்கழித் துழைஇ என்றார். கவர்ந்த மீனைத் தான் உண்ணாது தன் பெடைக்கெனக் கொணர்தலின், பெடையை அழைத்துத் தருவதாயிற்று என்றற்குப் பயிரிடூஉச் சேக்கும் என்றார். பயிர்தல், அழைத்தல், சேக்குதல், தங்குதல், வேறு வேறு வேந்தர் ஆளும் பலவா யுள்ள நாடுகள் என்பார், வேறு பன்னாடு என்றார். பண்ணியம், பண்டங்கள், கால் வண்டி, புன்னையின் நெடுஞ்சினைக்கண் இருந்ததாயினும் கடுஞ்சூல் உடைமையின், அஞ்சுவதாயிற் றென்பார். கடுஞ்சூல் வெண்குருகு உரவுத்திரை யோதம் வெரூஉம் என்றார். கடுஞ்சூல் தலைச்சூல்; புதுமைப் பொருட்டாய கடியென்னும் சொல் கடுஞ்சூல் எனத் திரிந்து முடிந்தது. பெருநீர், கடல் மணம் ஈண்டுக் காதலுறவின் மேற்று. வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்ட தலைமகன், தலைவி மனையின் சிறைப்புறத்தானானது அறிந்த தோழி, தலைவியது காதல்மிகுதியையும் ஆற்றாமையையும் அவற்கு நேரே காட்டி வரைவு கடாவலுற்றுத் தலைவியைத் தாம் நிகழ்த்தும் உரை கள் அவன் செவிப்படுமளவில் ஓரிடத்தே நிறுத்திச் சிறு வெண்காக்கை கடலிடத்தே இறாமீன் வேட்டம் புரிந்து போந்து கழியின்கண் துழாவித் தன் பெடைக்கேற்ற இரையைத் தேடிக் கொணர்ந்து அப்பெடையைத் தன்பால் வருவித்து நல்கும் இக்கடற்றுறை எத்துணை இனிமை தருகிறது காண் என்றும், அக்காக்கையைப் போலவே தலைமகனும் அகலிடத்தே பொருள்வயிற் பிரிந்து சென்று வரைவுக்குரிய பொருளைத் தந்து நின்னை வரைந்து கொள்ளச் சமைந்துள்ளான் என்பதை உள்ளுறுத்தும் கூறினாள். அது கேட்ட தலைமகள் உள்ளுறையைக் கொள்ளாமல் காக்கை தன் பெடையின்பால் அன்பு செலுத்தும் இனியகாட்சி அமைந்த இத்துறை, தலைமகனைக் கண்டு காதலுறவு கொள்ளுதற்கு முன்பெல்லாம் எனக்கு இன்பம் தந்து நின்றது என்பாள், மாயிரும் புணரி துணிய நோக்கிச் சேயிறா எறிந்த சிறு வெண்காக்கை பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் தான் வீழ் பேடைக்குப் பயிரிடூஉச் சேக்கும் சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே.... பெருநீர்ச் சேர்ப்பனொடு மணவா வூங்கே எனத் தோழி கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தாள். பெருநீர்ச் சேர்ப்பனொடு மணவாவூங்குத் துறை இனிதாயிருந்தது. எனவே மணந்தொழுகும் இப்போது அத்துறை தனக்கு இன்னாதாயிற்றெனத் தலைவி கூறினாளா யிற்று. தலைவி கூற்றாமிடத்துக் கடலின் அமைதி கண்டு சிறுவெண்காக்கை இறாமீன் வேட்டம் புரிந்ததுபோல ஆயமும் தோழியும் நீங்கித் தான் நின்ற தனிமை கண்டு போந்து, தலைமகன் தன்னைத் தலை மணந்து காதலுறவு நல்கி நலன் நுகர்ந்தான்; இன்று அவன் பிரிவால் யான் கையற்று வருந்துகின்றேன் என உள்ளுறை கொள்ளப்படும். அவனது பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இன்மையின், தனிமைத்துயர் என்னைப் பெரிதும் வருத்துகின்றமையின் யான் இடையறாத, அழுகையை மேவினேன் என்பாள், பெரும்புலம் புற்ற நெஞ்சமொடு பலபுலந்து யானும் ஆனாது இனைகு வேனாயினேன் என்றாள். மணவாவூங்கு இனையேன் எனவே, இப்போது ஆனாது இனைகுவேனாயினேன் என்பதாம். இனைதல், அழுதல், உவாநாளிற் பெருகி வரும் கடலோதத்தாலும் சிதைவுறாத மணல் மேடு என்றற்கு உமணர் வேறு பன்னாட்டில் கால்தர வந்த பலவுறு பண்ணியம் இழிதரும் நிலவுமணல் என்றும், அங்கு நின்ற புன்னையின் நெடுங்கோட்டில் இருப்பதால் வெண்குருகு ஓதத்துக்கு அஞ்சுதல் வேண்டா எனினும், வெருவுதற்கேது அது தலைச்சூல் கொண்டிருத்தலே என்றற்குக் கடுஞ்சூல் வெண்குருகு என்றும் கூறினாள். காதலர் பிரிவாற்றி யான் மனைக்கண் ணிருப்பினும் காதற்பெருமையால் என் மேனி எய்தும் வேறுபாடு கண்டு அயற்பெண்டிர் தூற்றும் அலர்க்கு அஞ்சு கின்றேன் என்ற கருத்து, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு உரவுத்திரை யோதம் வெரூஉம் என்றதன்கண் உள்ளுறுத்தப்பட்டு உளது. இஃது அலர் அறிவுறுத்துத் தலைவனை வரைவுகடாயது. 32. கபிலர் களவுநெறியிற் காதற்றொடர்பு கொண்ட தலைமக்கள், தோழியின் நட்பைப் பெற்றாலன்றி ஒருவரையொருவர் தனித்துக் கண்டு இன்புறுதற்கு வழியில்லை என்று தெளிந்தனர். அதுபற்றித் தலைவி காட்டிய குறிப்பால் தலைமகன் தோழியை அறிந்து கொண்டு அவளொடு சொல்லாடித் தன் காதற் கருத்தைத் தெரிவித்தான். அவ்வாறு தலைமகள் தன் காதல் உறவைத் தனக்குப் புலப்படுத்தாமையால், அவனைப் பலவகையால் ஆராய்ந்து தலைமகற்கும் தலைமகட்கும் இடையே முன்னுறவு உண்டென ஓர்ந்து கொண்டாள்; ஆயினும், அதனைத் தலைவிதான் அறியப் புலப்படுத்துவதன் முன் ஒன்றும் செய்தற்கு இன்மையின் அவள் அதனை வெளியிடற்கேற்ற வகையில் தோழி உரையாடலுற்றாள். தலைமகளோ நாணமிகுதியால் ஒன்றும் அறியாள் போலவே ஒழுகினாள். ஒருநாள் தலைவனது வரவு கண்ட தோழி, தலைமகளைத் தன்பால் அழைத்து, "அதோ தோன்றும் வெள்ளிய அருவியைக் காண்; அம்மலைக் குரியனாகிய தலைவன் நம்மை நயந்து இவ்விடத்துக்கு வந்து வருத்தத்தோடு செல்கிறான்; யான் அதனைப் பன்முறையும் நினக்குக் காட்டியுள்ளேன்; நீயோ என் சொல்லைத் தெளி இன்றாயில்லை; இனி, ஒன்று செய்க; நீயே சென்று அவன் வருத்தத்தைக் கண்டு நினக்கு உயிர்த்தோழராவாரோடு ஆராய்ந்து வேண்டுவன அறிந்து நட்புச் செய்துகொள்வது நன்று; உண்டாகிய பின்பு நட்புப் பிரிதற்கு அமைவதன்று; அதுபற்றியே நட்புச் செய்யும் பெரியோர், முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து தெளிவெய்திய பின்பு ஒருவர்பால் நட்புக் கொள்வரே யன்றி, நட்புச் செய்து கொண்ட பின்பு ஆராய்வது செய்யார்; செய்யின் அது பெருமை பயவாது என்பது கருத்து" என்று இயம்பினாள். அது கேட்ட தலைமகள் உவகையால் முறுவலித்து, "எனக்கு நின்னினும் சிறந்தார் பிறர் இன்மையின் இதனை நீயே செய்க" என்றாள். இக்கூற்றின்கண், பெண்மைப் பண்பால் நாத்தடைப்பட்டிருந்த தலைவிக்குச் சான்றோர் சான்றாண்மை கூறுமாற்றாமல் வாய்திறந்து பேசுமாறு செய்த தோழியின் மதிநுட்பம் விளங்குதல் கண்ட கபிலர் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடியுள்ளார். மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி அம்மலை கிழவோன்1 நந்நயந்து என்றும் வருந்தினன் 2என்பதோர் வாய்ச்சொல் தேறாய் நீயுங் கண்டு 3 நுமரொடும் எண்ணி அறிவறிந் தளவல் வேண்டும் மறுதரற்கு அரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டு நாடார் தம் 4 ஒட்டியோர் திறத்தே இது, தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. உரை மாயோன் அன்ன மால்வரைக் காவஅன் - மாயோனாகிய கண்ணன் போலும் தோற்றத்தையுடைய பெரிய மலைப்பக்கத்தில்; வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி - பலராமன் போல விளங்கும் வெள்ளிய அருவிகளையுடைய; அம்மலை கிழவோன் - அழகிய மலை நாடனாகிய தலைவன்; நம் நயந்து என்றும் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய் - நம்மை விரும்பி நாளும் பெருந்துயர் உழந்தனன் என்று சொல்லப்படுவதாகிய வாயுரையை நீ தெளிகின்றாயில்லை; நீயும் கண்டு - அதனை நீயும் நேரில் கண்டு; நுமரொடும் எண்ணி - நினக்குச் சிறந்த தமராயினாரோடு ஆராய்ந்து; அறிவறிந்து அளவல் வேண்டும் - அறிய வேண்டுவனவற்றை நன்கு அறிந்து அளவளாவிக் கொள்ளல் வேண்டும்; தோழி; வாழி; மறுதரற்கு அரிய - நட்பாற் கலந்தபின் பிரிந்து நீங்குதல் அரிதாகலான்; பெரியோர் - பெரியராயினார்; நாடி நட்பினல்லது - ஒருவரை முதற்கண் ஆராய்ந்து நட்புச் செய்தவரே யன்றி; நட்டு தம் ஒட்டியோர் திறத்து நாடார் - நட்புச் செய்த பின்பு தம்மொடு பொருந்தினோரிடத்து நலந்தீங்குகளை ஆராய்வது இலர். எ-று. கிழவோன் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய் ஆகலின், தோழி, நீயும் கண்டு, எண்ணி அறிந்து, அளவல் வேண்டும்; மறுதரற்கு அரிய, பெரியோர் நாடி நட்பினல்லது நட்டுத் தம் ஒட்டியோர் திறத்து நாடார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேய்மையில் தோன்றும் மலை பசுங்காடு போர்த்து நீலநிறங்கொண்டு தோன்றுவது பற்றி அதனை மாயோன் அன்ன மால்வரையென்றும், அதன்கண் வெள்ளை நிறத்துடன் இழியும் அருவிக்கு அக்கண்ணனொடு உடன் வைத்துக் கூறப்படும் பலராமனை உவமித்து வாலி யோன் அன்ன வயங்கு வெள்ளருவி யென்றும் கூறினார். என்பது, ஈண்டுச் செயப்படு பொருண்மைத்தாய் எனப்படுவது என நின்றது. வாய்ச்சொல், மெய்ம்மையுரை. தேறுதல், தெளிதல், நுமர், நினக்குச் சிறந்தவர். அறிவறிந்து அளவ லாவது, "குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்"1 மறுதரல், மீளுதல்; ஈண்டுப் பிரிந்து நீங்குதல் மேற்று பெரியோர், நற்குண நற்செய்கைகளால் பெருமை யுடைய ராயினோர். "நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு"2 என்பது இங்கு ஒப்பு நோக்கற்குரியது. வீடில்லை என்பது மறுதரற்கு அரிய என விளக்கப் பட்டது. வாழி, முன்னிலை அசை. மறுதரல், மீளுதல், பிரிதல். தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளை உடன்படுத்தற்கு முயலுகின்றா ளாகலின், தலைவியொடு சொல்லாடலுற்று, அவனது மலையையும், அருவியையும் காட்டி, அம்மலை கிழவோன் என்பவள், கவானும் அருவியும் கொண்டு பெருமைக்கு உரிய கண்ணனையும் பலராமனையும் நினைப்பிக்கும் திறம் சுட்டி, மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன், வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி அம்மலை கிழவோன் என்றும், அவன் நம்மை நயந்து இவண் போந்து, இடம் வாயாமையால் வருந்திச் சென்றனன் என்று சொல்லப்படுவது பொய்யன்று. மெய்யுரை என்பாள், நம் நயந்து என்றும் வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் என்றும், அதனை யான் உரைத்தவழி உள்ளங்கொள்ளாயா யினை என்பாள் தேறாய் என்றும் கூறினாள். என் வாய்ச் சொல்லைத் தேறாயாகலின் இனி நீயே நேரிற் கண்டும் நினக்குச் சிறந்த தமராயினாரை ஆராய்ந்தும் உண்மை தெளிந்து கொள்க என்பாள், நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்து அளவல் வேண்டும் என்றாள். அளவல் வேண்டும் என்பது, இது செயல் வேண்டும் என்னும் கிளவியாய்த் தோழி தலைவி என்ற இருபாலும் பொருந்த நின்றது1. அது கேட்டதும் தலைவிக்கு உள்ளத்தே அசைவு பிறந்தது. அவட்கும் தலைமகனுக்கும் உண்டான உறவினைத் தான் அறிந்துள்ளமையைத் தலைமகட்குத் தெரிவிப்பதன்றி வேறு செயலின்மையின், இவ்வாராய்ச்சியை இயற்கைப் புணர்ச்சிக்கு முன்பே செய்தற்குரிய நீ அதற்குப் பின்னர்ச் செய்வது பெருமை யாகாது என்று தெருட்டுவாளாய், பெரியோர் நாடி நட்பினல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே என்றாள். வருந்தினன் என்ற என் வாய்ச்சொல் என்னாது வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் என்றது, என்னை யொழித்து நுமரொடு எண்ணினும் இச்சொல் வாய்ச்சொல் என்றே தெளியப்படும் என்றற்கு தலைவனோடு உண்டாகிய காதலுறவைத் தனக்குத் தலைவி அறிவியாமையை உய்த்துணரும் பொருட்டுத் தன்னை அயன்மைப்படுத்தி நெருங்கி மொழிதலால் நீ எனவும் நுமர் எனவும் பிரித்தோதினாள். இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த கூட்டமும் நட்பும் பிரியத் தகுவனவல்ல என்பாள் மறுதரற்கு அரிய என்றும், அப்பிரிவு நிகழ்தலைத் தான் விரும்பாமை தோன்ற வாழி என்றும் தோழி என்றும் கூறினாள். ஒட்டியோர் என்றது முன்னுறவு உண்மை தான் அறிந்தமை தோழி புலப்படுத்தும் குறிப்பு. "நாற்றமும் தோற்றுமும்"1 எனத் தொடங்கும் நூற்பாவில் வரும், "மறைந்தவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்றளை இப்பின்னிலை நிகழும் பல்வேறு மருங் கினும்" என்னும் பகுதிக்கு இதனை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும்2 இப்பகுதிக்கேகாட்டுவர். 33. இளவேட்டனார் இளவேட்டனார் என்ற பெயருடைய சான்றோர் இருவர் தொகை நூல்களிற் காணப்படுகின்றனர்; அவருள் இச்சான்றோர் ஒருவர்; ஏனையோர் மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார் எனப்படுவர்; இங்ஙனம் சிறப்பிக்கப்படுவது நோக்காது இருவரையும் ஒருவராகக் கொள்வோரும் உண்டு. நல்வேட்டனார் என்றும் நாகன் வேட்டனார் என்றும் சான்றோர் பலர் காணப் படுதலின் வேட்டன் என்பது பண்டைநாளில் மக்களிடையே பயில வழங்கினமை நன்கு தெளியப்படும். இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் இப்பெயருடையார் பலர் காணப்படு கின்றனர். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்களும் உண்டு. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன்பால் கடமை காரணமாகப் பிரிவு நிகழ வேண்டியதாயிற்று. பிரியக் கருதியவன் தோழி வாயிலாகத் தலைமகட்கு அதனை உணர்த்தினான். உயிரொன்றிய காதலியாகிய தலைவிக்கு அவன் பிரிவு பெரிய வருத்தத்தைப் பயந்தது. காதலன் செல்லும் வழியின் கொடுமை அவள் கருத்தில் தோன்றிற்று. வழியிடையுள்ள நாடுகள் நிறைந்த மழைபெயல் அறியாமையால் குறைமிக்க மக்களே வாழ்வதும், அங்கு அக்குறையை நிரப்புதற் பொருட்டு அவர்கள் ஆறலைத்தொழுகுவதும் எண்ணினாள். அவர் வாழும் நாடுகளினூடே தன் காதலன் செல்ல வேண்டியிருப்பது தெரிந்ததும், ஆற்றாமையுற்று அவள் வருந்தினாள். கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. அது காணப்பெறாத தோழி, தலைமகனை அடைந்து தலைவி நிலை முற்றும் உள்ளவாறே எடுத்தோதினாள். தோழியின் கூற்று, தலைவியின் உள்ளம் காதலுக்கும் கடமைக்கும் நிகழும் போர்க்கு நிலைக்களமாக, அவள் ஆற்றாளாய், "நாம் மறுத்தல் வல்லுவம் கொல்லோ? மெல்லியல், என விம்முறு கிளவிய"ளாய் நின்றது காட்ட, இளவேட்டனார் இப்பாட்டின்கண் அதனை அழகுற அமைத்துக் காட்டுக்கின்றார். படுசுடர் அடைந்த1 பகுவாய் நெடுவரை முரம்புசேர் சிறுகுடிப்2 பரந்த மாலைப் புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக் கல்லுடைப் படுவில் கலுழி தந்து நிறைபெயல் அறியாக் குறைக்கூழ் நல்லில் துவர்செய் யாடைச் செந்தொடை மறவர் அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை இறப்ப எண்ணுவர் அவர்எனின் மறுத்தல் வல்லுவங் கொல்லோ மெல்லியல் நாம்என விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி நல்லக வனமுலை3 நனைப்ப 4மல்குபுனல் பரந்தனள் மலரேர் கண்ணே இது. பிரிவுணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. உரை படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை - மறைகின்ற ஞாயிறு சேர்ந்த அகன்ற பிளப்பையுடைய நெடிய மலைப் பக்கத்து; முரம்புசேர் சிறுகுடிப் பரந்த - முரம்புநிலத்தே அமைந்த சிறுகுடியில் பரவிய; மாலை-மாலைப்போதில்; புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து - தனித்தோர் கூடியிருந்து உண்ணும் பொலிவில்லாத மன்றத்தின்கண்; கல்லுடைப் படுவில் கலுழி தந்து - நல் நிலத்தில் அகழப்பட்ட குழியிண்கண் ஊறிய கலங்கற் சின்னீரைக் கொணர்ந்து; நிறைபெயல் அறியாக் குறைக்கூழ் நல்லில் - மிக்க மழையை அறியாத வறுமையாற் குறைந்த உணவை யுடைய மனைகளில் வாழும்; துவர் செய் ஆடை செந்தொடை மறவர் - துவர்நிறம் ஊட்டிய உடை அணிந்த வில்லேந்தும் மறவர்; அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை - வழிச்செல்வோரை ஆறலைத்தற்கு நோக்கியிருக்கும் அச்சம் பொருந்திய வழியை; இறப்ப எண்ணுவர் அவர் எனின் - கடந்து செல்வதைக் கருதினர் நம் காதலர் என்பதாயின்; மெல்லியல் - மெல்லிய இயல்பினையுடைய தோழி; நாம் மறுத்தல் வல்லுவம் கொல்லோ என - அவரது செலவை மறுத்து நம்மால் விலக்குதல் முடியுமோ என்று சொல்லி; விம்முறு கிளவியள் - துயர்மிக்குக் குழறும் சொற்களையுடையளாய்; என் முகம் நோக்கி - என் முகத்தைப் பார்த்து; நல்லக வனமுலை நனைப்ப - நல்ல தனது மார்பிடத்து அழகிய முலைகள் நனைந்து துளிக்க; மலரேர்கண் மல்கு புனல் பரந்தனள் - பூப்போன்ற கண்களில் நீர் நிறைந்து சொரிந்தாள்; எ.று. செந்தொடை மறவர் அல்கும் நெறியிடை, அவர் இறப்ப எண்ணுவர் எனின், மெல்லியல், மறுத்தல் வல்லுவம் கொல்லோ நாம் என, கிளவியள், நோக்கி, நனைப்பக் கண் புனல் பரந்தனள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கிளவியள் பரந்தனள் என்பன சினைவினை முதல்மேலும், இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேலும் நின்றன எனக்கொள்க. படுசுடர், வீழ்கதிர் ஞாயிறு. மலைமுடியிற் காணப்படும் இடைவெளி பகுவாய் நெடுவரை எனப்பட்டது. முரம்பு, பரற்கற்களும் செம்மண்ணும் விரவிய நிலம். புலம்பு தனிமை, மன்றம். பொதுவிடம் மலைநாட்டு ஊர்களில் உள்ள பொதுவிடங்களை மன்று என்பது இன்றும் உள்ள வழக்கு. பஞ்சாயதிமன்று தேவாரமன்று, ஊர்மன்று என்பன கற்காவான குடகு நாட்டில்1 வழங்குகின்றன. படு, மடுவெனவும் வழங்கும். நிறைபெயல் இன்மையால் நீரின்மையும் உணவுக் குறையும் தோன்றி, ஆங்கு வாழும் மக்களை ஆறலைக்கும் கள்வராக்கினமை தோன்ற நிறைபெயல் அறியாக் குறைக்கூழ் நல்லில் துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் அதர்பார்த்து அல்கும் என்றார். கூழ், பொருள். செம்மண் நிலமாதல் பற்றித் துவர் ஆடை உரியதாயிற்று. உழவுத் தொழிற்கு வாய்ப்பின்மையின், வில்லேந்தி வழிச்செல்வோரை அலைத்துக் கோறல் தொழிலா யிற்று. அறவர்க்குரிய இரக்கப்பண்பு இல்லையாகிய உள்ள முடைமையின் கள்வரை மறவர் என்றார். அதர், வழி. அல்குதல் தங்குதல். செந்தொடை, விற்படை, இறத்தல், கடந்து போதல், விம்முறல், துயர்மிகுதல். மலரேர்கண் என்ற விடத்து ஏர், உவமவாய்பாடு. தலைமகனது செலவுக்குறிப்பு உணர்ந்த தலைமகள், அவன் செல்லும் வழியின் கொடுமை நினைந்து மறுக்கும் கருத்தினளாயினமையைத் தோழி தலைமகற்கு உரைக்கின் றாளாகலின், தலைவி மறுத்தற்கு அமைந்த காரணத்தை விரியக் கூறுவாளாய் ஆறலைகள்வரின் சிறு குடியையும், மாலைப் போதில் அவர் கூடி உண்டலையும், படுவில் கலுழி நீரை உண்ணுநீராக் கோடலையும், கூழ் குறைபட்ட நல்லில் நீங்கி அம்மறவர் அதர் பார்த்து அல்குதலையும், அதனால் அந்நெறி செல்வோர்க்கு அச்சம் பயப்பதையும் எடுத் துரைத்தாள்; இதனை அறியும் எவரும் அவ்வயிற் சேறலை எண்ணராக, நம் தலைவர் எண்ணினார் என்பது உண்மையோ எனத் தலைவி ஐயுற்றுத் தெளிந்தாள் என்பாள் அஞ்சுவரு நெறியிடை இறப்ப எண்ணுவர் அவர் எனின் என்றாள் என்றும், எண்ணியது எண்ணியாங்கு முடிக்கும் திண்மையும், அஞ்சுவரு நெறியையும் அஞ்சாது செல்லும் ஆண்மை யுமுடைய காதலர் செலவை, அஞ்சும் இயல்புடைமையால், மெல்லியராகிய நாம் விலக்குதல் முடியுமோ என நினைந்து சொன்னாள் என்பாள் மறுத்தல் வல்லுவங்கொல்லோ மெல்லியல் நாம் என மொழிந்தாள் என்றும் மனத்தின்கண் மிக்குள்ள காதற்பெருக்கால் பிரிவுநினைந்து ஆற்றாமை மீதூர்ந்து, கண்களில் நீர் சொரிந்து காட்டினாள் என்பாள், நல்லக வனமுலை நனைப்ப மல்குபுனல் பரந்தனள் மலரேர் கண்ணே என்றும் கூறினாள். பெருகி வழியும் கண்ணீர் என்றற்கு மல்குபுனல் என்றும் அதனால், தொய்யி லெழுதி அழகுற வனையப்பட்ட மார்பகம் பொலிவழிந்தது என்பாள், நல்லக வனமுலை நனைப்ப என்றும், இவ்வாற்றல் மலர் புரையும் கண்களும் அவ்வனப்பு இழந்து வாடின என்றற்கு மலரேர் கண் என்றும் கூறினாள். இதனால் பயன் தலைவன் செலவழுங்குவா னாவது. 34. பிரமன் காரி இச்சான்றோர் பிரமன் என்பார்க்கு மகனாதலின் பிரமன் காரி எனப்பட்டனர். காரியென்பது இவரது இயற்பெயர். பிரமன் என்றும் காரியென்றும் பெயர் பூண்டவர் பலர், சங்க காலத்தும் இடைப்பட்ட கல்வெட்டுக் காலத்தும்1 இருந்துள்ளனர். புறநானூற்று ஆசிரியர்களுள் பிரமனார் என ஒருவர் உள்ளனர். அவர்க்கும் இக்காரியின் தந்தையான பிரமனுக்கும் தொடர்பில்லை யென்பதை அவர் பிரமனார் எனப்படுவதொன்றே வற்புறுத்துகிறது. இவர் பெயர் ஏடு பெயர்த் தெழுதினோரால் பிரமசாரி எனப் பிழைக்கப் பட்டுள்ளது; கிடைத்த ஏடுகளில் பிரமன் காரி எனக் காணப்படுவதே இதற்குச் சான்று. களவுக்காதல் தொடர்புற்ற தலைமக்களிடையே, தலைவன் களவொழுக்கத்தை நீட்டித்தான். முறுகிப் பெருகிய காதலால், தலைமகள் மேனியிலும் ஒழுக்கத்திலும் வேறுபாடு தோன்றுவதாயிற்று. உண்மையறியாத அவளுடைய தாயார், "இவட்கு இவ்வேறுபாடு முருகனால் உண்டாயிற்று" எனப் பிறழக் கொண்டு முருகவேட்கு வெறி எடுப்பாராயினர். வெறியாடும் வேலன் கடப்பம்பூவால் தொடுத்த கண்ணி சூடி முருகற்குரிய வேற்படையைக் கையில் ஏந்தி வெறி மனையின்கண் வெறி யாடலுற்றான். தன்மேல் முருகன் வந்ததாகவும், அவனே அவட்கு அவ்வேறுபாடு எய்துவித்ததாகவும் வேலன் கூறினான். அதனைக் கேட்ட தோழி வேலனுடைய பொய்யுரையைத் தலைமகட்குக் கூறுவாளாய், அப்போழ்தில் அவள் மனையின் சிறைப்புறம் வந்து நின்ற தலைவன் செவிப்படுமாறு, தலைவனது நட்பால் உண்டாகிய வேறுபாட்டை அறியாமல், "நின்னால் உண்டானதாக நினைத்து வேலன் எடுக்கும் வெறிமனைக்கு வந்த முருகனே, நீ கடவுளேயாயினும் இப்போது மடவையாவாய் என்று தெளிந்தேம்" என்றாள். இதனைக் கேட்கும் தலைமகன், பிறர் இனிது அறியத் தக்க அளவில் தலைமகட்குக் காதல் பெருகி வேறுபாடு பயந்து விட்டமையின், இனி விரைய வரைந்து கோடல் தக்கது எனத் தெளிந்து வரைவுக்கு வேண்டுவன முயல் கின்றான்; செவிலி முதலிய தாயர் கேட்டு வெறியாடல் முதலிய வற்றைக் கைவிட்டுத் தலைவி யுள்ளத்தில் வீற்றிருக்கும் தலை மகற்கு அவளை மணம் செய்விக்கும் கருத்தினராகின்றனர். இவ்வாறு நல்ல பல பயன் விளைக்கத்தக்க நெறியில் தோழி நிகழ்த்தும் இக்கூற்றுக் களவுக் காதல் வாழ்வின் மாண்புக்குச் சிறந்த காட்டாக விளங்குவது கண்ட பிரமன் காரியார் அதனை இப்பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். கடவுட் கற்சுனை1 அடைவிறந் தவிழ்ந்த பறியாக் குவளை2 விரைஇக் காந்தள் குருதி யொண்பூ3 உறழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச்4 சூர்மகள் 5அருவி இன்னியத் தாடும் நாடன் மார்புதர வந்த படர்மலி அருநோய் நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங்6 கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே. இது, தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது. உரை கடவுட் கற்சுனை - தெய்வம் உறையும் மலையிடத்துச் சுனையின்கண்; அடை விறந்து அவிழ்ந்த பறியாக் குவளை விரைஇ - இலைகளொடு செறிந்து மலர்ந்த பிறரால் பறிக்கப் படாத குவளைப் பூவை விரவி; காந்தள் குருதி ஒண்பூ உறழக் கட்டி - காந்தளினுடைய குருதிபோல் சிவந்த ஒள்ளிய பூ மாறுபடத் தொடுத்துக் கட்டி; பெருவரை அடுக்கம் பொற்ப - பெரிய மலைப்பக்க மெல்லாம் விளங்க; சூர்மகள் அருவி இன்னியத்து ஆடும் நாடன் - அருவியின் இனிய முழக்கத்துக்கு ஏற்பச் சூர்மகள் கூத்தாடி மகிழும் மலைநாடனாகிய தலை மகன்; மார்பு தர வந்த படர்மலி அருநோய் - மார்பு செய்யத் தோன்றிய இவளது படர்மலி காமநோயால் உண்டாகிய மேனி வேறுபாடு; நின் அணங்கு அன்மை அறிந்தும் - நீ அணங்குதலால் உண்டானதன்று என்பதை அறிந்து வைத்தும்; அண்ணாந்து - தலை நிமிர்ந்து; கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி - கார்காலத்து மலரும் நறிய கடம்பு மலரால் தொடுக்கப் பட்ட கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு; வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் - வெறியறியும் சிறப்பினையுடைய வேலன் வழிப்பட அதனையேற்று வெறியாடும் களத்துக்கு வந்தா யாதலால்; முருகே - முருகனே: கடவுளாயினும் ஆக - நீ கடவுளேயாகுக: ஆயினும்-; மன்ற மடவை - தெளிவாக நீ மடம் பொருந்தியவனாவாய்; வாழிய - வாழ்க, எ-று. நாடன் மார்பு தர வந்த நோய் நின் அணங்கு, அன்மை அறிந்தும், அண்ணாந்து, சூடி, வந்தோய் ஆதலின், முருகே, கடவு ளாயினும் ஆக. மடவை மன்ற, வாழிய எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மலையிடத்தும் சுனைகளிலும் கடவுள் உறையும் என்னும் உலகுரை பற்றிக் கடவுட் கற்சுனையென்றும், அதன் கண் மலர்ந்துள்ள குவளை முதலிய பூக்கள் கடவுட் குரியன என மக்கள் பறித்தல் இல்லையாகலின் பறியாக் குவளை என்றும் கூறினார். பூக்கள் பறிக்கப்படுவதின்மையும் இலையும் பூவும் செறிந்திருத்தலும் பற்றி அடை விறந்து அவிழ்ந்த குவளை என்றார். "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே"1 என்று ஆசிரியர் கூறுவது காண்க. காந்தட் பூவின் செம்மை நிறம் தோன்றக் குருதி யொண்பூ என்றும், அதனைச் சுனைக் குவளையொடு விரவி ஒன்றுக் கொன்று, மாறுபட்டுத் தோன்றத் தொடுத்து அணிந்தமை விளங்க உறழக்கட்டி என்றும் கூறினார். எனவே, குவளை செங்குவளை யாயிற்று. சூரரமகளிர் செம்மையையே விரும்பு வராதலின் "கோபத் தன்ன தோயாப் பூந்துகில்" உடுத்துச் செங்காந்தளும் செங்குவளையும் விரவித் தொடுத்து அணிவர் என்பது பெறப்படும். இம்மகளிர் மலையிடத்துச் சோலை களில் விளையாடுவது மரபு என்பது சான்றோர் பாட்டுக்களால் தெரிவது. அதனால் இவ்வாசிரியர் சூர்மகள் பெருவரை அடுக்கம் பொற்ப ஆடுதலைக் கூறினார். மேனியின் செம்மையும் உடுத்த ஆடையின் செம்மையும் மலையகம் எங்கும் ஒளிபரந்து சிறப்பித்தலின் அடுக்கம் பொற்ப என்றார். ஆடற்கு இன்னியம் வேண்டுதலின் அருவி முழக்கத்தை அருவி இன்னியம் எனல் வேண்டிற்று. படர்மலி அருநோய், நினைந்து நினைந்து வருந்துதலைச் செய்யும் அருநோய். மேனி வேறுபடுத்தித் தீர்தற்கு அரிதாகும் காதல்நோய் அருநோய் எனப் பட்டது. அருமை பிற மருந்து மந்திரங்களால் தீர்தற் கருமை. அண்ணாந்து, தலைநிமிர்ந்து; 'நண்ணார்நாண அண்ணாந் தேகி"1 என்றாற் போல. கார்காலத்தில் மலர்வதாகலின் கடம்பு கார் நறுங் கடம்பு எனப்பட்டது. வெறிமனை, வெறியாடுதற்கு அமைத்த களம். மடவை, அறியாமை யுடையை, முருகு, அரசு, வேந்து என்றாற்போல உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணை. களவு நீட்டித்து ஒழுகும் தலைமகற்கு வெறியச்சம் கூறித் தோழி வரைவுகடாவும் கருத்தின ளாகலின், சிறைப்புறத் தானாகிய தலைமகற்கு உரைப்பாளாய்த் தலைவிமுன் முருகனை நோக்கிக் கூறுகின்றாள். தலைவன் மார்பு, முயங்குதொறும் முயங்குதொறும் முயங்க முகந்துகொண்டு அடக்கி இன்பம் செய்யும் இயல்பிற் றாகலின், அதனையே நினைந்து ஏங்கி மேனி மெலிகின்றாள் தலைவி என்பாள் நாடன் மார்பு தர வந்த படர்மலி அருநோய் என்றும், அந்நோய்க்கு அவன் மார்பே மருந்தாவதல்லது பிறிது இல்லை என்றற்கு அருநோய் என்றும், அவனது பெருவரை யடுக்கம், சூர்மகள் குவளை விரைஇக் காந்தட்பூ உறழக் கட்டி அருவி இன்னியத்து ஆடி இன்புறுதற்கு இடமானாற் போலத் தலைமகள் பலகாலும் முயங்கி இன்புறதற்கிடனாவது அவன் மார்பு என்றும் கூறினாள். நீ கடவுளாதலின் அதனை நன்கறிகுவை என்பாள், அருநோய் நின் அணங்கு அன்மை அறிந்தும் என்றும், அதனை யறியாது வேலன் நீ அணங்கினை என்று நாணமின்றி வெறியாடிப் பொய்த்தலை நோக்காது, அவன் நினக்குரிய கண்ணி சூடி அண்ணாந்து நின்றுவேண்ட அவன் வகுத்த வெறிமனைக்கு வந்தோய் என்பாள், கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் என்றும், வந்தது அறிவுடையோர் செயலன்று; கடவுளாகலின் நீ இதனை அறிகுவை; அறிந்தும் வந்தமை நின் மடமையைக் காட்டுகிறது என்பாள், கடவுளாயினும் ஆக மடவை மன்ற என்றும், இம்மடமைச் செயல் நின் கடவுட்டன்மைக்கு இழுக்குத் தாராதொழிக என்பாள் வாழிய என்றும் கூறினாள். முருகன் தன்கண் மெய்யுற்று வந்திருப்பதாகச் சொல்லி, வேலன் கண்ணி சூடி வேலேந்தி ஆடுதலின் அவனை முருகனாகக் குறித்து முருகே என அவனை முன்னிலைப்படுத்தி மொழிந்தாள்; ஆகவே, இதனால் எய்தும் வசை வேலற்கே; முருக வேட்கு அன்று எனக் கொள்க. "அறத்தொடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப" என்பதற்கு இப்பாட்டைக் குறிப்பித்து, "இது வெறியாட்டு எடுத்தவழி அறத்தொடு நின்றது" என்றும், இது முருகற்குக் கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்1. இளம்பூரணர், இது முருகனை முன்னிலையாகக் கூறியது என்றும், ஆடிய சென்றுழி அழிவு தலைவரின் நிகழும் கூற்று என்றும் கொள்வர்2. 35. அம்மூவனார் தலைமக்கள் பிறர் அறியாமல் தம்மிற் கூடி ஒருவரை யொருவர் இன்றியமையாக் காதற்பிணிப்புண்டு ஒழுகும் நெறியாகிய களவின்கண், தலைமகன் ஒருவழித் தணத்தலும் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலும் செய்து ஒழுகுவது இயல்பு. அப்பிரிவுக் காலத்தே, தலைமகள், தோழியின் சிறந்த துணைமையால்அவன் பிரிவை ஆற்றியிருப்பாள். இத்தகைய களவின்கண் ஒழுகிய தலைமகன் தலைமகளை நாடறிய மணந்து கொண்டு கற்பொழுக்கமாகிய மனைவாழ்க்கை நடத்தத் தலைப் பட்டான். அவர்தம் புதுமண வாழ்வைக் காண்டற்கு ஒரு நாள் தலைவியின் உயிர்த்தோழி வந்தாள். தலைவியின் மேனிநலத்தில் சிறிது வேறுபாடும் காதற் கூட்டக் களிப்பு மிகுதியால் கண்களிற் பசலைக் கதிர்ப்பும் தோன்றி யிருந்தன. அவ் வேறுபாட்டைக் கண்டு உவகை மிகுந்த தோழியை நோக்கிய தலைமகன், "யான் பண்டு களவில் பிரிந்து ஒழுகிய ஞான்று நீ உடனிருந்தன்றோ இவளை நன்கு ஆற்றுவித்தாய்? இப்போது எனது உடனுறைவு, நின் உதவிக்கு இடையீடு செய்தமையின், இவள் கண்பசந்து தோன்று வாளாயினள்" என்று அவளைப் பாராட்டினான். அவற்கு விடை கூறலுற்ற தோழி, "பெரும, இவள் நலம் சேர மானுடைய மாந்தை நகர் போல என்றும் ஒரு தன்மை வாய்ந்தது; நீங்காமல் தழுவி நின்று தலையளி செய்யும் நின் கை சிறிது கவவு நெகிழினும் மெலிந்து வேறுபடுவது இவளது மேனிநலம்; கள்ளுண்டார்க்குக் களிப்பு நீங்குங்காறும் கண் சிவந்து வேறு படுவது போலக் காதற்காமக் களிப்பினாலும் கதிர்த்துப் பசந்து வேறுபடுவது புதுமண வாழ்வின் பொற்பு; களவுக் காலமாகிய பண்டும் இப்பெற்றியே இருந்தது, காண்" என்று கூறினாள். கற்பின் தொடக்கமாகிய மணப் புதுவாழ்வில், தலைவிபால் உளதாகிய வேறுபாடு கண்டு, ஆற்றானாகிய தலைமகன் உள்ளத்துத் தோன்றிய அசைவைத் தோழி உணர்ந்து தலைவியது காதற்காம நிலையினை எடுத்துரைத்துப் பிரியாது உறைதல் வேண்டும் என வற்புறுத்தும் நற்றிறம் அவள் கூற்றில் அமைந்திருப்பது கண்ட அம்மூவனார் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடு கின்றார். பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் 1புனகால் நாவற் 2பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கால் அலவன் கொண்டகோட்3 கசாந்து 4கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்திய விடுக்கும் துறைகெழு 5மாந்தை யன்ன இவள்நலம் பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய உழையிற் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த 6கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் 7தேங்களி செருக்கத் தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே இது, பிற்றை ஞான்று மணமனைப் புக்க தோழி நன்கு ஆற்று வித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது. உரை பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரை-பொங்கி எழுகின்ற அலைகளால் அலைத்து ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரந்த கரையில் நிற்கும்; புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி-புல்லிய காலையுடைய நாவல் மரத்தினின்று உதிர்ந்த பொதிபோலும் புறத்தையுடைய கரிய கனியைக் கண்டு; கிளைசெத்து மொய்த்த தும்பி - தன் இனத்து வண்டு என்று பிறழக் கருதிச் சூழ்ந்த தும்பி; பழம் செத்து-பழமென்றே நினைந்து; பல்கால் அலவன்கொண்ட கோட்கு அசாந்து-பலவாகிய கால்களையுடைய நண்டொன்று போந்து பற்றிக் கொண்டதனால் வருந்தி; கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்-யாழொடு கொள்ளாத நரம்பிசை போல இசைக்கும் இசையைக் கேட்டு; இரைதேர் நாரை எய்திய விடுக்கும்-இரைதேடித் திரியும் நாரை வரக் கண்டு அஞ்சித் தான் கொண்ட நாவற் கனியைக் கைவிட்டு நீங்கும்; துறை கெழு மாந்தை அன்ன-நீர்த்துறை பொருந்திய மாந்தை நகர் போன்ற; இவள் நலம் பண்டும் இற்று-இவளது மேனிநலம் முன் பொழுகிய களவுக் காலத்தும் இப்பெற்றியே யிருந்தது; கண்டிசின்-காண்; உழையிற் போகாது அளிப்பினும்-பக்கலினின்றும் பிரியாது தலையளி செய்து ஒழுகினும்; சிறிய ஞெகிழ்ந்த கவின்நலம் கொல்லோ-கவவுக்கை சிறிது நெகிழ்ந்ததனால் உளதாகும் மேனியழகின் வேறுபாடோ; மகிழ்ந்தோர் தேங்களி செருக்கத்தன்ன காமம் கொல்-கள்ளுண் டோர்க்கு அக்கள்ளால் உண்டாகும் களிப்பு நிற்குங்காறும் கண் சிவந்து காட்டும் வேறுபாடு போன்ற காதற் காமக் களிப்போ; இவள் கண் பசந்தது-இவள் கண் பசந்து தோன்று தற்குக் காரணமாகும். எ.று. கனியைக் கிளைசெத்து மொய்த்த தும்பி, அலவன் கொண்ட கோட்கு அசாந்து, இமிரும் பூசல் கேட்டு, நாரை எய்தியதனால், அலவன் விடுக்கும் துறைகெழு மாந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்று; கண்டிசின்; கண் பசந்ததற்குக் காரணம் அளிப்பினும் ஞெகிழ்ந்த கவினலம் கொல், தேங்களி செருக்கத்து அன்ன காமம் கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கறுத்துத் திரண்டிருக்கும் நாவற்கனி நீரில் வீழ்ந்து மிதப்பது வண்டு போலும் காட்சி நல்குதலின், தும்பி அதனைத் தன் இனமெனக் கருதிச் சூழ்ந்து மொய்த்து இசைத்தமை விளங்கக் கிளைசெத்து மொய்த்த தும்பி என்றார். செத்து என்பது உவமையுணர்த்தும் சொல்.1 பொதிப்புறம், பொதி யினது பக்கம். பொதி வாய்குவித்துக் கட்டப்பட்ட துணிமூடை. இரண்டிற்கு மேற்பட்ட கால்களையுடைமையின் பல்கால் அலவன் என்றார். கோள், கொள்ளுதல், அசாந்து, அயர்ந்து. தும்பி நரம்பின் இமிரும் பூசல் என இயையும். நாரை அவண் எய்துதற்குக் காரணம் காட்டுவார் இரைதேர் நாரை என்றார். நாரை எய்தக் கண்டதும் தும்பியும் அலவனும் அஞ்சி நீங்கின மையின் நாரை எய்திய விடுக்கும் எனப்பட்டது. எய்திய, செயவென் எச்சத்திரிபு. மாந்தை சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று: இடைக்காலத்தே அது மாதை யெனக் குறுகி மறைந்து இப்போது பழையங்காடி யென்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உளது. பண்டு, களவுக்காலம். கண்டிசின், முன்னிலை வினைமுற்றுத் திரிசொல். தெய்ய, அசை நிலை, நவின்நலம், மேனியழகு; ஈண்டுக் குறிப்புமொழியாய் அதன் வேறுபாடு தோன்ற நின்றது. மகிழ்தல், கள்ளுண்டல், தேங்களி செருக்கம், கள் மிக உண்டலால் எய்தும் மயக்கம். காமம், காதற்களிப்பு. கள் மிக உண்ணினும் காமக்கூட்டம் மிகினும் கண்சிவந்து காட்டும் என அறிக. மணமனை புக்க தோழிக்குத் தலைவன் புதுமணக் கூட்டத்தில் தலைவிபாற் பிறந்த வேறுபாடு காட்டிப் பண்டு களவின்கண் பிரிவு முதலிய பற்றிய வேறுபாடு தோன்றிய காலையில், தோழி உடனிருந்து ஆற்றுவித்த துணைநலத்தை வியந்து கூறிப் பாராட்டினானாக. இப்போது அவள் வேறுபாடு கண்டு தலைமகன் உள்ளத்துத் தோன்றிய அசைவைப் போக்கும் கருத்தினளாய்த் தோழி, பண்டு இவள் நலம் இற்றே கண்டிசின் என்றாள். காதற்காம நுகர்ச்சிக்கண் கவவுக்கை ஞெகிழினும் காமக் கலவி மிகினும் மேனி விளர்த்துக் கண்பசந்து காட்டும் என்பாள், உழையிற் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த கவினலம் கொல்லோ காமம் கொல்லோ இவள் கண்பசந்தது என்றாள். பிரிந்த வழிப் பிறப்பதாகிய பசப்புக் கூடியிருந் துழியும் தோன்றினமையே தலைவன் அசைவுக்கு ஏது என்க. அதனை உணர்ந்தே தோழி, உழையிற் போகாது அளிப்பினும் என்றாள். நாவற்கனி தலைவிக்கும், தும்பி தோழிக்கும், அலவன் செயல் பெற்றோர் செய்த இற்செறிப்புக்கும், நாரை தலைமகன் பொருட்டு மகட்கொடை வேண்டிவந்த சான்றோர்க்கும் உள்ளுறையாய்க் களவின்கன் நிகழ்ந்தது நினைப்பிக்கும் இனிதுறு கிளவியாயின. இனி, தலைவிபால் தோன்றிய வேறுபாட்டுக்குக் காரணம் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாகும் எனத் தோழி கூறினாள் என்பர். அது கருத்தாயின், அவள் தன் கூற்றிலே எடுத்து மொழிந்திருப்பள்; வேத வழக்கு எடுத்தோத்தாலின்றி உரையிற்கோடல் என்ற உத்தியால் உரைக்கக் கூடிய சிறுமையுடைய தன்று. வேதவிதியாவது, கரணத்தின் அமைந்து முடிந்த காலை, முதல் மூன்று நாளும் முறையே தண்கதிர்ச் செல்வற்கும் கந்தருவர்க்கும் அங்கியங்கடவுட்கும் அளித்து நான்காம் நாள் அங்கியங்கடவுள் தலைமகனுக்கு அளிப்ப அவன் துய்ப்பானாக என்பது என நச்சினார்க்கினியர் நவிலுகின்றார். ஒருவர் உண்ட மிச்சிலைப் பிறர் உண்பதென்பதும் உண்பிப்பதும் தேவர்கட்கும் ஒவ்வாது; தேவர்கட்கு ஒருகால் ஒக்கும் என்பாருளராயின், மக்களிடையே ஒருகாலும் உடன்படார். கணவனை யல்லது கற்புடைமகளிர் பிற தெய்வங்களையும் மனத்தால் தீண்டார்; அற்றாகத் தலை மகளைத் தலைவன் திங்கள் முதலிய தெய்வங்கள் நுகரக் கொடுத்து இறுதியில் தான் நுகரக்கொண்டான் என்பது சான்றோர் கனவிலும் நினையாத ஒன்று. வேதநெறியைப் பின்பற்றும் வைதிகர் இதனை நன்றெனக் கொள்வாரெனின், தமிழர் அதனை ஒருகாலும் ஏலார். "கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்"1 என்ற விடத்தும், "அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும்"2 என்ற விடத்தும் மேற் காட்டிய வேத விதியை நச்சினார்க்கினியர் காட்டினரெனின், அதற்குத் தமிழ்ச் சான்றோர் செய்யுட்களினின்று சான்றொன்றும் அவர் காட்டாதொழிந்தமையே அவர் கூறியது மரபொடு பொருந்தாவுரை என்று வற்புறுத்துகிறது; தொல் காப்பியர்க்கு இவ்வேதவிதி உடன்பாடாயின் அவரே எடுத் தோதுவர். நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட இளம்பூரணரும் இதனைக் கூறவில்லை, தொல் காப்பியர் கூறாதவற்றையும் கூறக் கருதாதவற்றையும் கூறியதாகக்கொண்டு இடைக்கால உரை காரர்களில் நச்சினார்க்கினியர் முதலியோர் தமிழ்க்கு ஊறு செய்யும் வகையில் தம்முடைய உரைகளில் புகுத்தியது குற்ற மாகும். இடைக்காலத்தில் வாழ்ந்த தமிழ் நன்மக்களில் சிலர் அவ் வேத நூற்களைத் தாமே நோக்கி ஆராயாது ஆரியர்க்கெனச் சிறப்பாய் அமைந்த இவ்வேதவிதியைப் பொதுவிதியென நம்பினர்; பிற்காலச் சான்றோர் முருகப்பெருமான் வள்ளிநாயகி யாரை மணந்தபோது, "விதித்தருள் மறையின் நீதி மேதினி வழக்கமாக, மதித்தனன் சோமனாகி வனமுலை திளைத்தான் பின்னாள், கதிர்த்த கந்தருவனாகிக் கலந்தனன் மூன்றா நாளில், கொதித்தெழும் அங்கியாகிக் குமரவேள் கூடினானால்" என்று பாடியதோடு அமையாது, "சென்ற முந்நாளும் வெவ்வேறு உருக்கொடு திளைத்தாய் என்னே, என்ற மாதுஉவப்ப அண்ணல் இறுக்கும்; அம் மூவர்மாட்டும் ஒன்றுவித்து உலகோர் மாதை உறுவது முறையால் யாமே, மன்றலங் குழலாய் அன்னார் வடிவெடுத்து அமர்ந்தாம் என்றான்"1 என்றும் பாடினர். தொல்காப்பியத்துக்கு உரை வகுக்கப் புகுந்த நச்சினார்க்கினியர் புணர்த்த இவ் "வேதவிதி" வள்ளிநாயகியாரின் கற்புக்கே குய்யம் உண்டாகச் செய்ததெனின் வேறு நாம் கூறுவதென்? வேதவிதி பற்றி முருகன், சோமன் முதலியோர் உருக்கொண்டது கண்டு வள்ளிநாயகி "முந்நாளும் வெவ்வேறு உருக்கொடு திளைத்தாய்; என்னே" என்ற வினவுவதே அவர் கற்புள்ளத்துக்கு முருகன் செயல் அருவருப்பை விளைவித்தமை புலப்படுத்துகிறது; அது கேட்டு அம்முருகன், "யாமே, மன்றலங் குழலாய், அன்னார் வடிவெடுத்து அமர்ந்தாம்" என்றான். வள்ளி தெய்வ மகளாயின மையின் அதனோடு அமைந்தொழிந்தாள். தமிழ்மகளிர்க்குக் கற்பு உயிரினும் சிறந்ததாகலின், இங்கே கூறப்பட்ட வேதவிதி, மகளிர்கற்பைச் சூறையாடற்கு அமைத்த வஞ்ச விதியென்று வெறுத்து விலக்குவர். "பெறற்கரும் பெரும் பொருள்"2 என்ற நூற்பாவில் வரும், "சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்" என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர். இந்நூற்பாவிலுள்ள, பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்ததெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும்" என்ற பகுதிக்கு இப்பாட்டைக் காட்டி. "இதனுள் தலைவி கனியாகவும், தும்பி தோழியாகவும், அலவன் தன் தவறிழைக்கும் தமராகவும், தலைவன் இரை தேர் நாரையாகவும் உள்ளுறையுவமம் கொள்வுழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகி னேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோ எனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க; பண்டும் இற்றே என்றது, பண்டையில் மிகவும் வருந்தினாள் என்றாள்; இவள் கண் ஈண்டுப் பசந்தது களவின்கண் நீங்காது அளியா நிற்கவும் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போலும் காம வேறுபாடோ அவ்விரண்டும் அல்லவே, இஃது ஓர் அமளிக்கண் துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையால் பிறந்த மிக்க வேறுபாடன்றோ; இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறு என்னை என்றாள் என்க" என்பர் நச்சினார்க்கினியர்.1 36. மதுரைச் சீத்தலைச் சாத்தனார் இச் சீத்தலைச் சாத்தனார் மதுரையின்கண் வாழ்ந்த சான்றோருள் ஒருவர். சீத்தலை என்பது மேலைக் கடற்கரைச் சேரநாட்டில் முன்னாளில் விளங்கிய பேரூர்களில் ஒன்று; இதனைக் குடகு நாட்டுக் கல்வெட்டுக்கள்3 சீத்தலை மாளிகை என்று குறிக்கின்றன. சாத்தனாருடைய முன்னோர் சீத்தலை யிலிருந்து போந்தமையின் இவர் இவ்வாறு குறிக்கப்படுகின்றார். புறநானூற்றுச் சான்றோர்களில் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றொருவர் சித்திர மாடத்துத் துஞ்சிய பாண்டியன் நன்மாறனைப் பாடியுள்ளார். இந்நூற்கண் எங்கும் இவர் கூல வாணிகன் என்று குறிக்கப்படாமையின், இவர் சீத்தலையார் குடும்பத்தில் தோன்றிய வேறொருவர் என்பது உணரப்படும். சீத்தலை என்பது ஓர் ஊரின் பெயர் என்பது தெரியாத காலத்தவர், சீழ்த்தலை யென்பதன் சிதைவாகக் கொண்டு அதற்கேற்ப ஓர் கதையும் கட்டிவிட்டனர். அடைமொழி வேறுபடுதலை நோக்காது மணிமேகலை பாடிய சாத்தனாரும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்துள் வரும் சாத்தனாரும் இச்சாத்தனாரும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரே எனக் கொண்டாரும் உண்டு. இச்சாத்தனார் பாடியனவாக மேலும் சில பாட்டுக்கள் இந் நூற்கண் உள்ளன. காதல் சிறப்பது குறித்துக் களவை நீட்டித் தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் வந்து தலைவியைக் காண்டல் வேண்டி அவள் மனையின் சிறைப்புறத்தே நின்றான். அதனை அறிந்த தோழி, அவனை விரைய வரைந்து கொள்ளுமாறு தூண்டும் கருத்தினளாய்த் தலைவியோடு சொல்லாடுபவள், "வெற்பனாகிய நம்முடைய காதலன் சொன்ன சொல்லைத் தெளிந்து கொண்டு அவனோடு நட்புற்றதனால் நாம் நமது மேனி நலத்தை இழந்தோம்; இது புறத்தார் அறியவரின் இற்செறிப்பும் அதனால் காதலரைக் காண வியலாமையும் உண்டாகும் என அஞ்சி நாம் வருந்துகிறோம்; அவர் கூறுவதையே தொழிலாகவுடைய ஏதிலாட்டியர் உரைக்கும் அலருரையுடன் உறக்கமின்றி இவ்வூரும் ஆரவாரத்தையுடையதாகின்றது; இதுவும் எதனை யேனும் இழந்து விட்டதோ? அற்றாயின் அஃது யாதாம்? என்று மொழிந்தாள். இரவின்கண் மனைப்புறத்தே தலைவியோடு சொல்லாடி வரும் தோழி தமது மறை புலப்படாவகையில், தமதுரை பிறர் செவிப்படினும் அயிர்ப்புண்டாகாவாறு உரைத்த அறிவுநலம் சீத்தலைச் சாத்தனார்க்கு இன்பம் செய்தமையின் அதனை இப்பாட்டிற் குறிக்கின்றார். குறுக்கை1 யிரும்புலிக் கோள்வல் ஏற்றை பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் கல்லக வெற்பன் சொல்லிற் றேறி யாமே1 நலனிழந் தனமே தாமேவு2 அலர்வாய்ப்3 பெண்டிர் அம்பலோ டொன்றிப் புரையில்4 தீமொழி பயிற்றிய உரையெடுத்து ஆனாக் கௌவைத் 5தாகத் தானென் இழந்ததிவ் வழுங்க லூரே. இது, சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. உரை குறுக்கை இரும்புலி கோள்வல் ஏற்றை-குறிய முன்கையை யுடைய பெரிய புலியினது கொலைத் தொழிலில் வல்ல ஆண்; தாழ்நீர் நனந்தலை-ஆழ்ந்த நீரையுடைய அகன்ற நீர்த் துறைக்கண் தங்கி; பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கி-அழகிய நெற்றியையுடைய பெரிய பிடியானை தனிமையுற்று வருந்துமாறு பின்னிருந்து தாக்கி; பெருங்களிறு அடூஉம்-பெரிய களிற்றினைக் கொல்லும்; கல்லக வெற்பன்-மலைநாட்டை யுடைய தலைமகன்; சொல்லின் தேறி-சொன்ன சொற்களைத் தெளியக் கொண்டதனால்; யாம் நலன் இழந்தனம்-நாம் மேனி வேறுபட்டு நலத்தையிழந்து கண்படை இல்லே மாயினேம்; மேவு அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி-விரும்பிய வாறெல்லாம் அலர் கூறும் இயல்பினராகிய ஏதில் பெண்டிர் எடுத்துரைக்கும் அம்பலுரையுடன் பொருந்தி; புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து-உயர்பில்லாத தீமை கலந்த பழிப்புரையை மேற்கொண்டு; ஆனாக் கௌவைத்தாக-பொருந்தாத அலருடையதாதற்கு; இவ்வழுங்கலூர் என் இழந்தது-இந்த ஆரவாரத்தையுடைய வூர் எதனை இழந்ததாம், இது நன்றன்று எ.று. கல்லக வெற்பன் சொல்லின் தேறி, யாம் நலன் இழந்தனம்; பெண்டிர் அம்பலொடு ஒன்றி, பயிற்றிய உரை எடுத்துக் கௌவைத்தாகற்கு இவ்வழுங்கலூர் என் இழந்தது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குறுங்கை, குறுக்கையென வலித்தது; "குறுக்கை யிரும்புலி பொரூஉம் நாட"6 எனப் பிறரும் கூறுவது காண்க. பெருங்களிற்றைத் தாக்கிக் கொல்லும் பெருவலி யுடைமைபற்றி இரும்புலிக் கோள் வல் ஏற்றை என்றார். ஏற்றை, ஆற்றலையுடைய ஆண்புலி. கோள், கொல்லுதல். நீர்த்துறைக்குக் களிறும் பிடியும் நிரல்பட வருவது தேர்ந்து அவ்விடத்தே இரும்புலி மறைந்திருந்து தாக்கிக் கொல்வது இயல்பாதலால் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம் என்றார். கல்லகம், மலைநாடு. தாம் மேவு அலர்வாய்ப் பெண்டிர் என இயையும். மேவுதல், விரும்புதல். அம்பல், செவிச்சொல்லாய் நிற்கும் பழிப்புரை. புரையில் தீமொழி, பொருளால் உயர்நலம் பயவாத தீச் சொற்கள். புரை, உயர்பு. கௌவை, ஆரவாரம், ஊர்க்கண் விழவுண்டாயினும் இழவு உண்டாயினும் எழும் ஆரவாரம் ஈண்டுக் கௌவை எனப்பட்டது. ஊரிடத்தே எழுந்த கௌவையில் அம்பலும் அலரும் புரையில் தீ மொழியும் கலந்து ஒலி யவியாது மேன்மேலும் பெருகுவ துணர்த்தற்கு ஆனாக் கௌவை, எனக் குறிக்கின்றார். அழுங்கல் பேரோசை. இரவுக்குறிக்கண் முன்னாள் கூட்டம் இடையீடு பட்ட மையால் வெறிதே மீண்டமையை உள்ளுறையாற் கூறலின் கல்லக வெற்பன் சொல்லின் தேறி என்றும், அதனால் உறக்கம் இன்மையும் மேனி மெலிவும் உற்று வருந்துமாறு தோன்ற யாமே நலன் இழந்தனமே என்றும் தோழி கூறினாள். இரவுக்குறி இடையீடு பட்டமையால் யாம் நலன் இழந்து வருந்துதற்கு இடமுண்டு; விழாவொன்றும் இல்லையாகவும் ஊரவர் உறங்காது ஆரவாரம் செய்தற்கு ஏதுவாகிய இழவு யாது? ஒன்றும் தெரிந்திலது என்பாள், தான் என் இழந்தது இவ்வழுங்கலூர் என்றாள். இதனால், நம்பால் உளதாகும் வேறுபாடு கண்டு அயற்பெண்டிர் எடுக்கும் அம்பலும் அலரும், அவர் உரையால் மனைக்கண் உளவாகும் இற் செறிப்பும் காவலும் மிக்குத் தலைமகனைக் கூடல் அரிதாகும் அவல நிலையைப் பயக்குமாறு தோன்றத் தாமேவு அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப் புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து ஆனாக் கௌவைத்தாக என்று கூறினாள். நீர் வேட்டு வரும் களிற்றை அதனைப் பெறவிடாது அதன் பிடி புலம்பப் புலி தாக்கும் வெற்பனாகலின், தலைவன் தலையளியை நயந்து மேவும் நாம் அதனைப் பெறாவாறு ஊரிடத்து ஆரவாரம் தோன்றி அவர் கூட்டமின்றி நாம் தனித்துப் புலம்ப வருத்துகிறது என இரவுக்குறி இடையீடு பட்ட திறத்தைச் சிறைப்புறத்தனாகிய தலைமகற்குக் குறிப்பாய் உள்ளுறுத்துரைத்தாள் எனக் கொள்க. "ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப"1 என்பதற்குக் "குறுங்கையிரும்புலிக் கோள்வலேற்றை" என்ற இப்பாட்டின் முதலடியைக் காட்டுவர் பேராசிரியர். 37. பேரிசாத்தனார் களவின் எல்லையாகிய வரைவு நிகழ்தற்கு முன்பே தலைமகனைப் பிரிந்து சென்று முடிக்கத்தக்க தொரு கடமையைத் தலைமகன் உடையனானான். அதனைத் தலைமகட்குத் தெரிவித்து நீங்குதல் வேண்டும் என்ற முறைமையால் குறியிடத்தே தோழியைக் கண்டு தனது கருத்தைத் தெரிவித்துத் தான் மீண்டு வருந்துணையும் அவளை ஆற்றுவிக்குமாறு வேண்டினான். காதலர்க்குப் பிரிவு என்பது இயல்பாகவே மிக்க துன்பம் தருவது; கற்புக் காலத்துப் பிரிவு போலாது அது மிகச் சுருங்கிய காலத்துப் பிரிவாயினும், அது விளைவிக்கும் துன்பம் அறம் திறம்பாத தலைவிக்கு ஆற்றவொண்ணாத தொன்றாம். அதனை நன்கு உணர்ந்தவளாதலின், தோழி, அதற்கு உடன்படாது, "பிரிவதே நினது கருத்தாயின், அஃது அன்பின்றிச் செய்யும் கொடுஞ் செயலாகும்; ஆகவே, தலைமகளை உடன்கொண்டு செல்வதன்றி அவட்கு நன்மை தருவது பிறிதில்லை; மேலும், இனி வருதற்கு அமைந்தது கார்காலம்; ஆதலின் அக்காலத்தே பிரிவுத் துன்பம் கைம்மிக்கு என்னால் ஆற்றுவிக்கப்படும் எல்லையைக் கடந்து விடும்" என்று மொழிந்தாள். இக்கூற்றின்கண், களவுக் காலத்தில் தலைமகன் பிரியக் கருதுவது மனத்தின்கண் அன்பின்மையைக் காட்டும் என்றும், அதன் உண்மையை எத்துணை வற்புறுத்தினும் அப்பிரிவு பயக்கும் வருத்தம், அதனை உட்கொள்ளாது என்றும், கார்காலத்தில் அவ்வருத்தம் எல்லை கடந்து இறந்துபாட்டினை எய்துவிக்கும் என்றும் தோழி தெளிவிக்கும் திறம் கண்ட பேரிசாத்தனார், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்கூன் ஆயத் தோரான் தெண்மணி 1பைய இசைக்கும் அத்தம் வையெயிற்று 2இவளொடும் செலினோ நன்றே குவளை நீர்சூழ் மாமலர் அன்ன கண்ணழக் கலையொழி பிணையிற் கலங்கி3 மாறி அன்பிலிர் அகறி ராயின் 4என்பாடு ஆகுவ தன்றிவள் அவலம் 5ஆனாது 6அணங்கரா அருந்தலை யுடலி வலன்ஏர்பு ஆர்கலி நல்லேறு திரிதரும் கார்செய் 7காலை வரூஉம் 8பொழுதே இது வரைவிடை வைத்துப் பிரியக் கருதும் தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை - தம்மில் பின்னிக் கொண்டு வாடிக் கிடக்கும் தூறுகளையும் பழமையான தோற்றத்தையுமுடைய அகன்ற இடத்தின்கண்; உணங்கு ஊண் ஆயத்து ஓரான் தெண்மணி - உலர்ந்த புல்லுணவு கொள்ளும் ஆனிரையின் ஒற்றை ஆவினுடைய தெளிந்த மணியோசை; பைய இசைக்கும் அத்தம் - மெல்ல இசைக்கும் வழியில்; வை எயிற்று இவளொடு செலின் - கூரிய பற்களையுடையஇவளையும் உடன்கொண்டு செல்வாயாயின், நன்று - நலமாம்; குவளை நீர்சூழ் மாமலர் அன்ன - குவளையினது நீர் நிறைந்த கரிய மலர் போன்ற; கண் அழ - இவள் கண் கலங்கி நீர் துளிக்கவும்; கலையொழி பிணையின் கலங்கி - கலைமானாகிய ஆணினை நீங்கி வருத்தும் பிணைமான் போல உள்ளம் கலக்க மெய்தவும்; மாறி - செயல்மாறி; அன்பிலிர் அகறிராயின் - அன்பின்றி இவளைப் பிரிந்து செல்வீராயின்; ஆனாது இவள் அவலம் என்பாடு ஆகுவது அன்று - நும்மையின்றியமையாமல் இவள் எய்தும் வருத்தம் என்னால் தீர்க்கப்படும் எல்லைக்கு அடங்காதாகும். அணங்கு அரா அருந்தலை உடலி - வருத்துதலையுடைய பாம்பினது அரிய தலை மோதுண்டு கெட; வலன் ஏர்பு ஆர்கலி நல்ஏறு திரிதரும் - நிறைந்த முழக்கத்தை யுடைய இடியேறு வலமாக எழுந்து திரியும்; கார்செய் காலை வரூஉம் பொழுது - கார் மழையைப் பெய்யும் பருவம் வருங்காலத்தில் எ-று. இவளொடு செல்லின் நன்று; மாறி, கலங்கிக் கண்ணழ, அன்பிலிர் அகறிராயின், இவள் அவலம், கார் செய் காலை வரூஉம் பொழுது என்பாடு ஆகுவ தன்று என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. பிணங்கு அரில், கொடிகள் தம்மிற் பின்னிக் கிடக்கும் தூறு. பழமை சிதையாமல் இருக்கும் நிலை பழவிறல் எனச் சிறப்பிக்கப்பட்டது. கலங்க எனற்பாலது கலங்கி எனத் திரிந்தது. நீர் நிறைந்து சொரியும் கண்ணுக்கு நீர்சூழ் குவளை மாமலர் உவமமாயிற்று. உணங்கு ஊண் ஆயம். உலர்ந்த புல் வைக்கோல் முதலியவற்றைத் தின்று வாழும் எருதும் பசுவுமாகிய ஆவினத்தைக் கட்டி நின்றது. கலையொழி பிணை, ஆணாகிய கலைமானிற் பிரிந்த பெண்மான். என்பாடு, என் அளவு. அருந்தலை அருமை, மணி யுடைமை, ஆர்கலி, மிக்க முழக்கம். மழை முகிலோடு வலன் எழுந்து முழங்குதல்பற்றி வலன் ஏர்பு திரிதரும் என்றார். வரைவு நிகழ்தற்கு இடையே தலைமகன் இன்றியமையாத கடமை கருதிப் பிரிகின்றானாகலின், அவன் தன் பிரிவுக் கருத்தை உரைப்பக் கேட்ட தோழிக்கு, அவன் வழியின் இயல்பு மனக்கண்ணில் தோன்றினமையின் அதனை விதந்து பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை என்றும், உணங்கு ஊண். ஆயத்து ஓரான் தெண்மணி பைய இசைக்கும் அத்தம் என்றும் கூறினாள். வேனிற் பருவத்தே தலைமகன் பிரியுமாறு; தோன்ற வெயில் வெம்மையால் செடி கொடிகள் வாடிக் கிடக்கும் வழியின் இயல்பைப் பிணங்கரில் வாடிய நனந்தலை எனவும், அவ்வாட்டம் பழமையானது என்றற்குப் பழவிறல் நனந்தலை எனவும் கூறினாள். அவ்விடத்தே உலர்ந்து கிடக்கும் தழைகளைத் தேடி மேயும் ஆனிரைகள் சிலவாய் ஆங் கொன்றும் ஈங்கொன்றுமாகச் சிதறித் தோன்றுதல் பற்றி, உணங்கு ஊண் ஆயத்து ஓரான் என்றும், மெலிவால் அதன் தலை பைய அசைதலால் அதன் தெண்மணி பைய இசைக்கும் என்றும் கூறினாள். நின் பிரிவு தரியாத அத்துணை இளையள் என்றற்குத் தலைவியை வையெயிற்று இவள் எனவும், உடன்கொண்டு சேறல் வேண்டுமெனற்கு உரிய ஏதுவைப் பின்னர்க் கூறுதலின் இவளொடும் செலினோ நன்றே எனவும் எடுத்து மொழிந்தாள். இவளோடு இன்றித் தனித்துச் சென்றவிடத்து இவள் ஆற்றாது புலம்புவள் என்பாள், குவளை நீர் சூழ் மாமலர் அன்ன கண் அழ என்றும், எய்தும் கையறவு இஃது என்பாள், கலையொழி பிணையின் கலங்கி என்றும், அந்நிலையில் இவளைப் பிரிந்தேகுவதாயின் நின் மனத்து அன்பு அறவே இல்லையாதல் வேண்டும்; அன்பு மாறவழி நின்பொருட் கருத்து நிறைவுறாது என்பாள், மாறி அன்பிலிர் அகளிராயின் என்றும், அவ்வாறு அகன்வழி இவளது அவலம் யான் ஆற்றுவிக்கும் எல்லை இறந்துவிடும் என்றற்கு என்பாடு ஆகுவதன்று இவள் அவலம் என்றும் கூறினள். நின் பிரிவினும் கார்வரவு இவட்குக் கையறவு மிகுவிக்கும் என்றற்குக் கார்செய் காலை வரூஉம் பொழுது என்றாள். பாம்பின் தலையைத் துமித்துப் பெருமுழக்கத்தோடு திரியும் இடியேறு போல. ஏதிலாட்டியார் தலைமடங்க முரசு முழங்க நீ இவளை வரைந்துகொள்வான் வருதல் வேண்டும்: அதற்குரிய கார் காலம் அடுத்து வருவதற்கு அமைந்தது என்பது குறிப்பு. 'நாற்றமும் தோற்றமும்'1 என்ற நூற்பாவின், "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" என்ற பகுதியில் இப்பாட்டினை எடுத்தோதிக்காட்டி, "இது வரைவிடைப் பிரிகின்றான் ஆற்று வித்துக் கொண்டிரு என்றற்குத் தோழி கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். 38. உலோச்சனார் தலைமக்கள் இருவரும் கற்புக்கடன் பூண்டு இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றனர். தலைமகன் சின்னாளில் இன்றியமையாத கடமை குறித்துத் தலைவியிற் பிரிந்து செல்கின்றான். காதலினும் கடமை சிறந்தமை கருதி அவன் தெளித்துரைத்த சொற்களைத் தலைமகள் தேறியிருக்கின்றாள். இருப்பினும், காதலனது பிரிவு அவள் உள்ளத்தில் ஆற்றாமை பிறப்பித்து அலைக்கின்றது. மேனி மெலிந்து வருத்தம் மிகுந்து தலைமகள் துயருழப்பதைக் கண்ட தோழி, "அன்னாய், நீ வருந்துவது நன்றன்று; பேராரவாரத்தையுடையது இவ்வூர்; நின் வேறுபாட்டை அறியின் ஊரவர் அன்பிலன் கொடியன் என நம் தலைவரைத் தூற்றுவர்" என்று இயம்புகின்றாள். அது கேட்கும் தலைவி, "இவ்வூர் அப்பெற்றித் தாயினும் காதலர் இல்லாமையால் எனக்குத் தனிமை தந்து பொலிவின்றித் தோன்றுகின்றது, என் செய்வேன்" என்று இசைக்கின்றாள். இக்கூற்றின்கண், காதலனைப் பிரிந்துறையும் தலை மகட்குத் தான் உறையும் ஊரும் சூழ்நிலையும் எத்துணைச் செல்வமும் சிறப்பும் கொண்டிருப்பினும் இன்பம் தாராதொழியும் என்ற நற்றிறத்தை எடுத்துக் காட்டுவது பற்றி இதனை ஆசிரியர் உலோச்சனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப் பாட்டம் பொய்யாது பரதவர் பகர இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும் ஆர்கலி யாணர்த் தாயினும் 1தேர்கெழு மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப் புலம்பா கின்றே தோழி கலங்குநீர்க் கழிசூழ் படப்பைக் 2கண்டல் வாயில் 3ஒலிதலை வேலின் முண்மிடை வேலிப் பெண்ணை இவரு மாங்கண் வெண்மணற் படப்பையெம் அழுங்க லூரே. இது, தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது. உரை வேட்டம் பெய்யாது வலைவளம் சிறப்ப - மீன் குன்றாமல் வலைஞர்க்கு மீன்வளம் சிறக்கவும்; பாட்டம் பொய்யாது பரதவர் பகர - காற்றும் மழையும் காலம் தப்பாமையால் பரதவர் கடல் வாணிபம் செய்து சிறக்கவும்; இரும்பணம் தீம்பிழி உண்போர் மகிழும் - கரியபனையிடத்துக் கொண்ட தீவிய கள்ளை உண்போர் உண்டு மகிழவும் அமைந்த; ஆர்கலி யாணர்த்து ஆயினும் - கடலின் புதுவருவாயினை யுடைய தாயினும்; தேர்கெழு மெல்லம் புலம்பன் பிரியின் - தேரையுடைய நெய்தனிலத் தலைவனாகிய நம் காதலன் பிரிந்துறை வதால்; தோழி-; புல்லெனப் புலம்பாகின்று - புல்லெனத் தோன்றி ஆற்றாமைக்குரிய தனிமைத் துன்பத்தையே நல்குகின்றது; கலங்குநீர்க் கழிசூழ்படப்பை - கலங்கிய நீரை யுடைய கழிசூழ்ந்த படப்பையினையும்; கண்டல் வாயில் - கண்டல் முள்ளி வளர்ந்த துறையினையும்; ஒலிதலை வேலின் முள்மிடை வேலி - தழைத்த தலையையுடைய வேலமரத்தின் முள் நெருங்கிய வேலி சூழ்; பெண்ணை இவரும் ஆங்கண் - பனைமரங்கள் நின்றுயரும் அவ்விடத்தே; வெண்மணல் படப்பை எம் அழுங்கலூர் - வெள்ளிய மணல் பரந்த படப்பையையு முடைய ஆரவாரம் மிக்க எம் ஊர். எ-று. தோழி, எம் அழுங்கல் ஊர், யாணர்த்தாயினும், புலம்பன் பிரியின், புல்லெனப் புலம்பாகின்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. சிறப்ப, பகர, மகிழும் யாணர்த்து என இயையும். கழிசூழ் படப்பையும், கண்டல்வாயிலும், வெண்மணற் படப்பையு முடைய ஊர் என்க நெய்தல் நிலத்து ஊர்களில் வாழ்வோருள் பலரும் மீன்வலைஞரும், மீனும் முத்தும் பவளமுமாகிய கடல்படு பொருளை விற்கும் பரதவரும், உப்புவிற்கும் உமணரு மாயினும் பெரும்பான்மை பற்றி வலைஞரையும் பரதவரையும் விதந்து வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப, பாட்டம் பொய்யாது பரதவர் பகர என்றார். வலைஞரும் பரதவரும் உமணரும் பிறரும் தாம் விற்றுப் பெற்ற பொருளைத் தந்து கள் வாங்கி உண்பவாகலின் உண்போர் எனப் பொதுப்பட மொழிந்தார். பாட்டம், பருவக் காற்று மழை; மழையின்றிக் காற்று மட்டும் அடிக்கு மாயின் அது வெண்பாட்டம் எனப்படும்; "வெண்பாட்டம் வெள்ளம் தரும்" என்பது முன்றுறையரையர் பழமொழி. பனையினின்றும் இறக்கி வடிக்கப்பட்ட சாறு பனம்பிழி எனப் பட்டது. நாளும் புதுவளம் மிகுதலால் ஊரின்கண் பேரொலி நிலைபெறுவது கொண்டு ஆர்கலி யாணர்த்து என்றார். கழி சூழ்ந்த படப்பையின் நீர்த்துறையில் கண்டல் வளர்ந்து அதற்கு வாயில்போல் காட்சியளித்தலின் கண்டல் வாயில் என்றார். கழிக்கரை முற்றும் கண்டல் நின்று வேலி போன்று இருப்பது பற்றிக் "கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை"1 என்று பிறரும் கூறுதல் காண்க. அடிப்பகுதி உயர்ந்து மேலே தழைத்திருக்கும் வேலமரம் ஒலிதலை வேல் எனவும், அதன் முள்மிடைந்த கொம்புகளைக் கொணர்ந்து வேலியிடுதல் இன்றும் உள்ள செயற்பண்பாதலின் முள்மிடை வேலி எனவும் கூறினார். "ஒலிதலையலங்குகழை"1 என்றார் பிறரும் கழிசூழ்ந்த நிலமும் கண்டல் வாயிலும் வேலின் முண்மிடை வேலியும் கொண்ட வெண்மணற் பரப்பில் பெண்ணை உயர்ந்தோங்கி நிற்கிற தென்பார் பெண்ணை இவரும் ஆங்கண் என்றார். தலைமகன் பிரிவின்கண் தன்னை ஆற்றுவிக்கும் தோழி பரதவர் பகர, இரும்பனம் தீம்பிழி யுண்போர் மகிழும் யாணர்த்து என்றாளாக, அதனைக் கொண்டெடுத்து மொழியும் தலைமகள், ஆர்கலி யாணர்த் தாயினும் தலைவனாகிய மெல்லம் புலம்பன் பிரிந்தமையின் புல்லெனப் புலம்பாகின்றே தோழி என எதிர் அழிந்து கூறினாள். நிலம் சூழ்ந்த கழியும் கண்டல் நிறைந்த வாயிலும் முள்மிடை வேலியும் கொண்ட வெண்மணற் பரப்பில் உள்ள பெண்ணை உயர்ந்தோங்கி நிற்குமது போல, வலைஞரும் பரதவரும் உமணரும் பிறரும் நிறைந்து இவ்வூர் ஆர்கலி யாணர்த்தாயினும், புலம்பன் பிரிவால் உளதாகிய தனிமைத் துயர் என் உள்ளத்தே மிகவுயர்ந்து நிற்றலால் ஆற்றேனா கின்றேன் என்பது தலைவி கூற்றின் குறிப்பு. 39. மருதன் இளநாகனார் தலைமைப்பண்புக ளெல்லாம் திரண்டு உருக்கொண்டாற் போலும் தலைமகன் தன்னொத்த தலைமைப் பண்புருவாகிய தலைவியை ஊழ்கடைக் கூட்ட ஓரிடத்தே ஒரு காலத்தே கண்டு அவள்பால் தன் கருத்தை இழந்தான்; அவளும் அவ்வாறே தன் மனத்தை அவற்கு இடமாக்கினாள். இருவர் உள்ளங்களும் ஒருவர் ஒருவரிற் கலந்து காதற் பிணிப்புற்றன. மறுநாளும் முன்னாள் தலைப்பட்டாற் போல் இருவரும் ஒருவரை யொருவர் நன்கு கண்டு இன்புற்றனர். பின்பு ஒருகால் அவன் தனித்த தோரிடத்தே அவளைக் கண்டான். காதல் கைம்மிக்கமையின், தலைமகள் பெருநாணத்தால் முகம் கவிழ்ந்து தன் இருகண்களையும் தன் கைகளால் புதைத்துக் கொண்டாள். அது கண்டவன், மெல்லிய இனிய சொற்களைச் சொன்னவிடத்தும், மாற்றம் ஒன்றும் தாராது கண்புதைத்த தன் கைகளை எடாமலே நாணித் தலைகவிழ்ந்து நின்றாள். அறந்திறம்பாத அண்ணலாகிய அத்தலைமகன், "யான் சொல்லும் சொல்லுக்கு எதிர் சொல் ஒன்றும் வழங்காமல் தலைகவிழ்ந்து கண்புதைத்து நிற்கின்றாய்; காதலன்பு மிக்கவழி அதனைத் தாங்குதல் அரிது; நின் கண் களாகிய வேல் என் மார்பிற் புண் செய்யாதவாறு நின் கைம் மலரால் அவற்றைப் புதைத்தது நன்றே; ஆனால் நின் கண்கள் மாத்திரமல்ல என்னைத் துன்புறுத்துவன; கரும்பெழுதப் பெற்ற நின் தோள்களும் என்னைத் தாக்கித் துன்பம் செய்கின்றனவே, என் செய்வேன்" என மொழிந்தான். அவன் உரைத்த இச்சொற்களில் விளங்கும் காதற் செம்மையும் தலைமை நலமும் இளநாகனா ருடைய புலமை யுள்ளத்தைப் பணி கொண்டமையின் அவர் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமம்1 கைம்மிகின் தாங்குதல் எளிதே கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய2 புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல நண்ணார் அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் அன்னநின் கரும்புடைத் தோளும்3 உடையவால் அணங்கே. இது, தலைவி நாணிக் கண்புதைத்துழித் தலைவன் சொல்லியது; இரண்டாங் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியதூ உமாம். உரை சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் - யான் ஒன்று சொல்லின் எதிராக ஒரு சொல்லும் சொல்லுதலை மேற் கொள்ளாயாய்; நின் திருமுகம் இறைஞ்சிக் கதுமென நாணுதி - நின் அழகிய முகத்தைத் தாழ்த்துக் கடிதாக நாணிப் புதைத்துக் கொள்ளுகின்றாய்; காமம் கைம்மிகின் தாங்குதல் உளிதே - காதல்வேட்கை கைம்மிகுமாயின் அதனைத் தடுத்து நிறுத்துதல் எளிதன்று, அரிதுகாண்; கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்தி - வளைந்த வரிகளையுடைய பெரிய முதுகிடம் நடுங்குமாறு தன் கோட்டாற் குத்தி; விளையாடிய புலவுநாறு வேழத்தின் - புலியை இலேசாகக் கொன்றதனால் புலால் நாறும் களிற்றியானையின்; மருப்புத் தலை ஏய்ப்ப - மருப்பின் நுனிபோல; கடைமணி சிவந்த நின் கண் கதவ வல்ல - கடைசிவந்து தோன்றும் நின் கண்கள் என்னை வருத்துமெனக் கருதி அவற்றை மறைத்தாயாயினும் என்னை வருத்து வன அவை மாத்திரமல்ல; நண்ணார் அரண் தலை மதிலராகவும் - பகைவர் தமது அரணின்கண் மதிலின் தலையிலிருந்து காவல் புரியாநிற்பவும்: முரசு கொண்டு - அவரை வென்று அவரது முரசையும் கைக்கொண்டு; ஓம்பு அரண் கடந்த அடுபோர்ச் செழியன்-அவர் தாம் விரும்பிக் காத்த அரண்களை வஞ்சியாது பொருது அழித்த போரினை யுடைய பாண்டியனது; பெரும் பெயர்க் கூடல் அன்ன - பெரிய பெயரையுடைய கூடல் நகரைப் போன்ற; நின் கரும்புடைத் தோளும் அணங்கு உடைய -கரும்பெழுதப் பெற்றநின் தோள்களும் என்னை வருத்துதலையுடைய வாதலை அறிவாயாக எ. று. சொல்லின் சொல் எதிர் கொள்ளாயாய், கதுமெனத் திருமுகம் இறைஞ்சி நாணுதி: காமம் தாங்குதல் எளிதே; குத்தி விளையாடிய வேழத்தின் மருப்பேய்ப்பக் கடைமணி சிவந்த நின் கண்ணே கதவ வல்ல; கூடல் அன்ன நின் கரும்புடைத் தோளும் அணங்குடைய; அறிவாயாக எனக்கூட்டி வினைமுடிவு செய்க. எதிர்சொல். மறு மாற்றம், யாழ, அசைநிலை எளிதே, ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு, இலேசாகச் செய்தமை தோன்ற விளையாடிய என்றார்; "ஐங்கலப் பாரம் தாங்குதல் சாத்தற்கு விளையாட்டு என்றாற் போல் புலியைக் கொன்றமையால் உளதாய புலால் நாற்றம் உடைமைப்பற்றிப் புலவு நாறு வேழம் என்றார். மருப்புத் தலை ஏய்ப்ப என மாறுக. கண்ணே, ஏகாரம் பிரிநிலை, கதவ, சினமுடைய தமிழால் புகழ் நிலைபெற்ற கூடல் என்றற்குப் பெரும் பெயர்க் கூடல் என்றார். தலைமகனும் தலைமகளும் தனித்த ஓரிடத்தே ஒருவரை யொருவர் நேர்பட்ட போது இருவருள்ளத்தும் முளைத்து உருவாகிய காதற் புதுவேட்கை கைகடந்து நின்ற தாயினும், பெருமையும் உரனும் நன்கு உடமைபற்றித் தலைமகன் அதனை ஓரளவு அடக்கி நின்றானாகத் தலைமகள் ஆற்றளாய்ப் பேசுந்திறம் இழந்து நாணம் மீதூர்ந்து நிமிர்ந்து நோக்க மாட்டாது தலைகவிழ்ந்து தன் இருகைகளாலும் கண்களை மூடிக் கொண்டது கண்டு சொல்லாடலுற்று, சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் என்றும், கதுமெனத் திருமுகம் இறைஞ்சி நாணுதி என்றும் கூறினான். சேய்மையில் அவன் வரவு நோக்கி உவகை மிகுந்து முகம் ஒளிதிகழ நின்ற தலைமகள், அவன் அண்மையில் நண்ணியதும் நாணடச் சாய்ந்து முகத்தைக் கையால் மூடிக் கொண்டமை பற்றிக் கதுமெனத் திருமுகம் இறைஞ்சி நாணுதி என்றும், இந்நிகழ்ச்சி காதல் கைம்மிகின் ஆற்றாமையால் உளதாகும் இயல்பு என்றற்குக் காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதன்று என்றும் இசைத்தான். நாணத்தின் நீங்கித் தன்னைக் கண்ணிற் காணக்கண்டு சொல்லாடி இன்புற வேண்டும் என்னும் வேட்கையனா தலால், கடைசிவந்த நின்கண் புலியைக் கொன்று சிறக்கும் புலவுநாறு வேழத்தின் மருப்பினது குருதி படிந்த நுனிபோலும் கூரிதென்று கருதி என்னை அது தாக்காவாறு மறைத்து என்னை அருளியது ஒக்கும்; நின் கண்கள் ஒருபாலாக அடுபோர்ச் செழியனது பெரும்பெயர்க் கூடல்நகர் போலும் நின் தோள்கள் என்னை வருத்துகின்றமையின் அவற்றை எங்ஙனம் மறைப்பாய்; மறைத்தல் கூடாமையின், என்னை அருளிப் பார்த்தலே செயற்பாலது என்பான், பெரும்பெயர்க் கூடல் அன்ன நின் கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே என்றான். தன்னுடைய ஆண்மைக் கூறுகளை வென்று பணிகொண்டமை தோன்றப் புலி விளையாடிய வேழத்தின் மருப்பைத் தலைவி கண்ணுக்கும், நண்ணார் அரண்டலை மதிலராகவும் வென்று மேம்பட்ட செழியனது கூடலை அவளுடைய தோளுக்கும் உவமம் கூறினான். மகளிர் தோளில் காமனது கரும்புவில்லைப்போல் சந்தனக் குழம்பால் உருவெழுதி அழகுறுத்துவது பண்டையோர் ஒப்பனைவகை. "கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன், செயலெழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்"1 என்பதனா லறிக. "முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் என்ற நூற்பாவில் "தன்னிலை யுரைத்தல்" என்றதற்கு இப்பாட்டினை யெடுத்துரைத்து இதனுள் வரும், "காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ...... கடை மணி சிவந்த நின்கண்ணே கதவவல்ல" என்பதைக் காட்டித் "தன்னிலை யுரைத்தவாறு காண்க" என்பர் இளம்பூரணர்1; இனி, "மெய்தொட்டுப் பயிறல்"2 என்னும் நூற்பாவில் வரும் "இடையூறுகிளத்தல் நீடுநினைத்திரங்கல் கூடுதலுறுதல்" என்னும் பகுதிகட்கு இப்பாட்டினை யோதிக் காட்டி, "மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக்கொண்டு கூறின் அதனை ஏற்றுக் கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தி யென இடையூறுகிளத்தல் கூறிக், "காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ" என நீடு நினைந்திரங்கல் கூறிப், புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடுபோல என்னிடைத் தோய்ந்து சிவந்த கண் எனக் கூடுதலும் கூறிற்று" என்பர் நச்சினார்க்கினியர். இனி, பேராசிரியர் "காமப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும்"3 என்ற நூற்பாவுரையில் இதனை எடுத்தோதி, இஃது இடந்தலைப்பாடு" என்பர். 40. கோமால் நெடுங்கோடனார் இப்பெயர் கோமான் நெடுங்கோடனார் எனவும், கோமால் நெடுங்கோடனார் எனவும் கொள்ளப்படும். பறம்பிற் கோமான், செல்லிக்கோமான் என இடஞ்சுட்டிக் கூறப்படாமையின் கோமால் நெடுங்கோடான் எனக் கோடல் பொருத்தமாக வுளது. கோமால் என்பது சோழநாட்டு ஊர்களில் ஒன்று; அதனைக் கல்வெட்டுக்கள், "சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவழுந்தூர் நாட்டுக் கோமாலான குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம்4 என்று கூறுவது நோக்கத்தக்கது. இந்நாளில் அது கோமல் என வழங்குகிறது. கோடன் என்ற பெயருடையார். பலர் தமிழகத்து இருந்துள்ளனர். கோடனூர் என்ற பெயருடைய ஊர்கள் இருப்பது அதற்குச் சான்று. கோமா னெடுங்கோடனார் என்பதுஅச்சுப்படியில் கோண்மா நெடுங்கோடனார் எனவுளது. புதுப்பட்டி ஏடும் தேவர் ஏடும் கோமா னெடுங் கோடனார் என்றே கூறுகின்றன. ஆகவே, கோமான் என்பது ஈற்றெழுத்து மாறிக் கோண்மா எனப் பிழைப்பட்டுத் திரிந்ததன் திரிபாய்க் கோண்மா என்று ஆகியதாம். இவர் பாடியவாக வேறே பாட்டுக் கள் கிடைத்தில. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகற்கு மகன் பிறந்தான். அக்காலத்தே அவன் பரத்தையர் சேரிக்கண் நிகழ்ந்த சிறப்பொன்றுக்குச் சென்று அவரிடையே தங்கினான். ஒருநாள் இரவு அவன் தனக்கு மகன் பிறந்தானைக் காண்டல் என்ற உலகியல் வழக்குப் பற்றித் தன் மனைக்குச் சென்றான். அவன் தன் மனை சென்றது பொருளாக ஏனைப் பரத்தையர் தன்னைப் புறங்கூறி இகழ்வதாக எண்ணிக்கொண்ட சிறப்புடைப் பரத்தை, "தலைவன் தன் மனைக்குச் சென்றது தனது நலத்தை உவர்த்து ஒழித்தமையன்று; மகப்பெற்ற தன் மனைவி பசுநோய் நீங்க நெய்யாடி யுறங்க, மகன் செவிலி பக்கல் கிடந்துறங்கக் காணும் வேட்கை பற்றியது; மனைவி கண்ணுறங்கும் போது இரவில் கள்வன் போல அவன் சென்று கண்டதே என்பால் அன்பு குன்றாமைக்குச் சான்று பகரும்" என்று பாங்காயின பரத்தையர் கேட்ப மொழிந்தாள். இக்கூற்றின்கண் தலைமகன் தம்பால் அன்புடையனாதலைப் பரத்தையர் பெருஞ்சிறப்பாகக் கருதுவதும், அவன் தம்பால் கொண்ட அன்பால் தம்வழி நின்று தன் மனைவிபாலும் அத்துணை யன்பிலன் என்பது பட மொழிவதும் அப்பரத்தையர் செயலாதல் விளங்குவது கண்ட நெடுங்கோடனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். நெடுநா ஒண்மணி கடிமனை யிரட்டக் குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் 1பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த் திருந்திழை மகளிர் 2இருந்தனர் நிற்ப வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் புளிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச ஐயவி யணிந்த நெய்யாட் டீரணிப் பசுநோய் 1கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை 2ஈரிமை பொருந்த நள்ளென் கங்குற் கள்வன் போல அகன்றுறை யூரனும் 3வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. இது பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. உரை நெடுநா ஒண்மணி கடிமனை இரட்ட - நெடிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் சிறப்புடைய மனையின்கண் ஒலிக்க; குரையிலை போகிய விரைவுமணல் பந்தர் - ஒலிக்கின்ற ஓலைகளால் வேயப்பட்ட புதுமணல் பரப்பிய பந்தரின்கண்; ஒருசார் பெரும்பாண் காவல் பூண்டென - ஒருபால் பெரும்பாணர் என்பார் காவல் புரியலுற்றாற் போல இருக்க; ஒருசார் திருந்திழை மகளிர் இருந்தனர் நிற்ப - ஒரு பால் திருந்திய7 இழையணிந்த மங்கல மகளிர் வரிசையுற நிற்ப; வெறியுற விரிந்த அறுவை மெல்லணை - நறுமணம் கமழ ஆடை விரிக்கப் பெற்ற மெல்லிய அணைமீது; புளிறுநாறு புதல்வன் செவிலியொடு துஞ்ச - ஈன்றணிமை மணம் கமழும் புதல்வன் செவிலியின் பக்கலிலே கிடந்து உறங்க; ஐயவியணிந்த நெய் யாட்டு ஈரணி - வெண்கடுகையப்பி எண்ணெய்தேய்த்தாடும் நெய்யணி கொண்டு; பசுநோய் கூர்ந்த மென்மையாக்கை - மகப்பேற்றால் உளதாய பசுமை நோய் பொருந்தி மென்மை மிக்குள்ள உடம்பையும்; சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த - கற்புச் சிறப்பையுமுடைய மடந்தையாகிய தலைமகள் குளிர்ந்த கண்ணிமைகளை மூடிக்கொண்டு கிடக்க; நள்ளென் கங்குல் கள்வன்போல - நள்ளிரவில் கள்வன் ஒருவன் வருவதுபோல; அகன்றுறை யூரனும் வந்தனன் - அகன்ற நீர்த்துறையையுடைய இவ்வூர்க் குரியனான தலைவனும் மனைக்கண் வந்தான்; சிறந்தோன் பெயரன் பிறந்த மாறு - தனக்குச் சிறந்தவனாகிய தந்தையின் பெயரைத் தாங்கிய மகன் பிறந்தமையால் எ-று. கடிமனைக்கண் மணியிரட்ட, ஒருசார் பெரும்பாண் காவல் பூண்டென இருக்க, மகளிர் நிற்ப, மெல்லணைச் செவிலியொடு புதல்வன் துஞ்ச, மடந்தை ஈரிமை பொருந்த, பெயரன் பிறந்தமாறு, ஊரனும் கள்வன் போல வந்தனன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. மகப்பேறு நிகழ்ந்த மனையைத் தூய்மை செய்து முற்றத்தே பந்தரிட்டுப் புது மணல் பரப்பி, மணி யிரட்ட, மங்கல மகளிர் மகப்பெற்ற தாய்க்கு நெய்யாட்டீரணி செய்வர். தலைமகன் அக்காலத்தே தூய நீராடிச் சீரிய உடை அணிந்து பிறந்த புதல்வனைக் காண்பன். மகன் பிறந்தானைக் காணப் போந்த அதியமான் நெடுமான் அஞ்சியை உடனிருந்த மகளிருள் ஒருவராகிய ஒளவையார் பாடிய புறப்பாட்டு1 இங்கே நினைவுகூரத் தக்கது. இஃது இடைக்காலத்தே புத்திரமுக தரிசனம் என மொழி பெயர்க்கப்பட்டு வழக்கில் இருந்து வந்தமை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள்2 வாயிலாக அறிகின்றோம். கையால் நாவைப் பற்றி அடிக்கும் மணியாதலின் நெடுநா ஒண்மணி என்றார். கடிமனை, சிறப்பு நிகழும் மனை. பச்சோலைக்கு ஒலியில்லை என்பது பற்றி உலர்ந்த ஓலை என வெளிப்படுத்தற்குக் குரை யிலை வேய்ந்த பந்தர் என்றார் என அறிக. பெரும்பாணர் யாழும் குழலுமாகிய இசைக்கருவிகளில் வல்லுநர்; "குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும், வழுவின்றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண்"3 என அடிகள் கூறுவர். அழுகுரலும் அமங்கலச் சொல்லும் நன்மக்கள் செவிப்படாவாறு காவல் பூண்டாற் போலக் கடிமனைப் பந்தர்க்கண் பெரும்பாணர் இருந்து யாழும் குழலும் இசைத் தனர் என்றற்குப் பெரும்பாண் காவல் பூண்டென என்றும், ஒருபால் திருந்திய இழையணிந்த மங்கல மகளிர் இருந்து மங்கல வினைகளைச் செய்தமை தோன்ற ஒருசார்த் திருந் திழை மகளிர் இருந்தனர் நிற்ப என்றும் கூறினார். இம் மகளிரை, "கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்தேந்து இளமுலை யமுதம் ஊறப், புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றம்"4 என்பர். வெறி - நறுமணம், மகப்பெற்ற தாய்க்கு அப்போதே பால் சுரவாதாதலின், புனிறு நாறு புதல்வன் செவிலியொடு துஞ்ச என்றார். சிறுதெய்வங்களும் பேய் முதலியனவும் அணங்காமைப் பொருட்டு ஐயவி அணிவது பண்டையோர் மரபு. மகப்பெற்ற மகளிர் எண்ணெயிட்டு நீராடுவதாகிய சிறப்பு நெய்யாட்டீரணி என்றும், நெய்யணி முயக்கம் என்றும் வழங்கும். பசுநோய் கூர்ந்த மென்மை யாக்கையை இக்காலத்தில் பச்சையுடம்பு என்பர். சிறந்தோன் என்றது தந்தையை. தந்தையின் பெயரைத் தான் பெற்ற மகனுக்கு இடுவது தமிழ் மரபாதலின் பெயரன் என்றார். தன் மனைக்கண் நிகழ்ந்த விழவுக் குறித்து வந்திருந்த தலைமகன், தனக்குப் பிறந்த மகன் முகம் காண்டல் என்ற உலகியல் நிகழ்ச்சி பற்றி மனைக்குச் சென்றதை அறிந்த பரத்தை யொருத்தி, அவன் அவள் நலத்தை உவர்த்து நீங்கினான் எனப் பிறர் புறனுரைத்தமை பாங்காயினார் கூறக்கேட்டு உள்ளம் பொறாது, தலைவன் மனைக்கண் நிகழும் நெய்யணியும் மகன் முகம் காண்டலாகிய சிறப்பும் விதந்து கூறலுற்றுத் தலைவனது மனைநிகழ்ச்சி ஊர்முற்றும் அறியுமாறு அங்கே கட்டியமணி யொலித்துக் காட்டுகிறது என்பாள். நெடுநா ஒண்மணி கடிமனை யிரட்ட என்றும், மனை முன்றிலில் பந்தரிட்டு வெண்மணல் பரப்பியிருக்கும் நலத்தைக் காணலாம் என்றற்குக் குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர் என்றும், ஒருபால் பெரும்பாணர் இருந்து குழலும் யாழும் இசைப்பதும் ஒருபால் மங்கலமகளிர் நிற்பதும் கூறுவாள், பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த் திருந்திழை மகளிர் இருந்தனர் நிற்ப என்றும் கூறினாள். பின்னர், தலைமகள் நெய்யாடுதற்கு முன்பு, புதல்வனுக்கு நீராட்டி நறுமணம் கமழும் ஆடையொன்றை விரித்து, அதன் மேல் அவனைக் கிடத்திச் செவிலியும் அவன் பக்கல் கிடந்து உறங்குவிக்கக் கண்ணுறங்கினான்அப்புதல்வன் என்பாள், வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் புலவு நாறு புதல்வன் செவிலியொடு துஞ்ச என்றாள். செவிலி உறங்கு விக்க உறங்கினமை தோன்றச் செவிலியொடு புதல்வன் துஞ்ச என்றாள். பின்பு ஐயவி கலந்த நெய்யாடி ஈரம் புலர்த்தப் பட்ட தலைவி மகப்பேற்றால் உடல் வன்மை குன்றலால் மென்மை மிக்கு அயர்ந்து கண்களை மூடிக்கிடந்த நிலையை நேரில் இருந்து கண்டமை தோன்ற உரைப்பாளாய், ஐயவி அணிந்த நெய்யாட் டீரணி என்றும், பசு நோய் கூர்ந்த மென்மையாக்கைச் சீர்கெழு மடந்தை ஈரிமை பொருத்த என்றும், இவ்வாறு ஒருபால் புதல்வன் உறங்க, ஒருபால் தலைமகள் அயர்ந்து கண்களை மூடிக் கிடக்க, அந்நிலையில் தலைமகன் திடீரெனத் தோன்றித் தன் மகன் முகத்தைக் கண்டான் என்பாள் நள்ளென் கங்குல் கள்வன் போல அகன்றுறை யூரனும் வந்தனன் என்றும் கூறினாள். மகன் முகத்தையும், மனைவி முகத்தையும் ஏனை மங்கலமகளிர் காண நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும், அதுவும் தன் தந்தை பெயரன் பிறந்தமையால், அவன் வந்தானே யன்றி என் நலம் உவர்த்தமை யன்று என்பாள் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே என்றும் இயம்பினாள். இதனாற் பயன் பாங்காயினார் கூறக் கேட்டுப் புறன் உரைத்தபரத்தை தலை மடங்குவாளாவது. 'பெறற்கரும் பெரும்பொருள்"1 என்ற நூற்பாவில் வரும்", "சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்" என்பதற்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்; "கரணத்தின் அமைந்து முடிந்த காலை"2 என்ற நூற்பாவில் வரும், 'செய்பெருஞ் சிறப்போடு சேர்தற் கண்ணும்" என்றதற்கு இதனை எடுத்துக் காட்டி, இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். தலையில் ஐயவியப்பி நெய்யணிதல் மகப்பெற்ற மகளிர்க்கே யன்றி இளஞ் சிறார்க்கும் செய்தல் பண்டையோர் மரபு என்பதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுவர்3. 41. இளந்தேவனார் இவ் விளந்தேவனாரின் வேறாக ஓர் இளந்தேவனார் என்ற சான்றோர் மதுரைக்கண் அந்நாளில் வாழ்ந்தார்; அவர் பண்டவாணிகம் புரிந்தார். இருவரும் நல்லிசைப் புலமை பெற்றவராதலால், வேறுபடுத்தல் வேண்டி, இவரை இளந்தேவனார் என்றும், அவரை மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனா ரென்றும் வழங்கினர். பெயரொற்றுமை ஒன்றே கண்டு இருவரையும் ஒருவரெனக் கருதினோரும் உண்டு. இளந்தேவனார் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் இந்நூற்கண் உளது. புதுப்பட்டி ஏட்டில் இவர் பெயர் ஈழந்தேவனார் என்று காணப்படுகிறது. அது பாடமாயின் இத்தேவனார் ஈழநாட்டவராம். குமரிக்குத் தெற்கில் இருந்து கடற்கிரையாகிய ஏழ்தெங்கு, ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்பின்பாலை, ஏழ்குன்றம், ஏழ்குணகாரை, ஏழ்பனை என்ற நாடுஏழும் ஏழெழுநாடு என்று நின்று பின்பு ஈழ நாடாயிற்று, கடல் கோட்குப்பின் அதன் எச்சமாக நின்ற இன்றைய இலங்கைத் தீவு ஈழநாடு என முன்னாளில் வழங்கியது. ஏழ்பனைநாடு யாழ்ப்பாணநாடாக மருவியது. மணம் புரிந்து மனையறம் பூண்டு ஒழுகும் தலைமகன் சிறந்த கடமை காரணமாகத் தன் மனைவியிற் பிரிந்து சென்றான். பிரியுங்கால் தான் மீண்டு போதரும் காலத்தை நன்கு வற்புறுத்திச் சென்றான். சின்னாட் கெல்லாம் தலைமகட்குக் காதலனைப் பிரிந்துறையும் நிலை வருத்தம் மிகுவித்து ஆற்றாமையை விளைவித்தது. தனது நிலையைத் தலைமகற்குத் தெரிவித்தல் வேண்டுமென்ற விழைவு, அவள் உள்ளத்தில் எழுந்தது. அப்போது தோழி போந்து, அவள் மனப் போக்கைக் கண்டு, "பண்டொரு நாள் நம் மனைக்கு இரவின்கண் விருந்தாக வந்த ஒருவர் பொருட்டு நல்லிசை நயந்து நெய் துழந்து நீ உணவட்ட போது நின் நெற்றியிற் குய்ப்புகை படிந்து நுண்ணிய வியர்பொடிப்பக் குறுகுறுவென விரைந்து நடந்து செய்வன செய்து சிறப்பித்த நின் செயல் கண்டு பெரிதும் பாராட்டி இன்புற்ற காதலர் நல்லிசை நிறுத்தல் வேண்டிக் கடமையை முன்னிறுத்திச் சென்றிருக்கவும், அவ்விடத்தே நினது ஆற்றாமை தெரிவிக்கப்படுமாயின், அவர் பெரிதும் வருந்துவர்; அவர் மேற்கொண்ட வினை நெகிழ்வுறும்; புகழ் குன்றும்; என்று கூறினாள். இங்ஙனம் மனைமாட்சியும் மாண்புகழும் காட்டித் தலைமகளை ஆற்றுவிக்கும் சிறப்புப்பற்றி இளந்தேவனாரது இப்பாட்டு நற்றிணைக்கண் இடம் பெறுகிறது. பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த வெண்புறக் களரி இடுநீ றாடிச் சுரன்முதல் வருந்திய வருத்தம் பைப்பயப் 1பரல்மலி ஊறல் கூவலின் தணியும் நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக் கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட 2விளரூன் நறும்புகை எறிந்த நெற்றிச் சிறுநுண் பல்வியர் பொறித்த குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே. இது, 1பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகட்குத் தோழி உலகியல் கூறி வற்புறீஇயது. உரை பைங்கண் யானை பரூஉத் தாள் உதைத்த - பசிய கண்ணையுடையயானையின் பருத்த கால்களால் புழுதி ஆக்கப்பட்ட; வெண்புறக் களரி இடுநீறு ஆடி -வெண்மையான நிறத்தையுடைய களர்நிலத்து எழுந்த நுண்ணிய துகள்படிந்து; சுரன் முதல் வருந்திய வருத்தம் - சுரத்திடத்தே செல்லுதலால் உண்டாகும் வருத்தம்; பைப்பய - மெல்ல; பரல்மலி கூவல் ஊறலின் தணியும் - பரல்கள் நிறைந்த முரம்பு நிலத்துத் தோண்டப்பட்ட கூவலிடத்து ஊறும் இனிய நீரால் நீங்கும்; நெடுஞ்சேண் சென்று வருந்துவர் - மிகவும் நெடிய சேய்மையான நாடுகட்குச் சென்று வருந்தாநிற்பர்; எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு - இரவுப்போதில் வந்த நல்ல புகழ் படைத்த மேலோராகிய விருந்தினர் பொருட்டு; கிளரிழை அரிவை - ஒளிகிளரும் இழை யணிந்த அரிவையாகிய நீ; நெய் துழந்தட்ட - நெய் பெய்து அடுதலால்; விளரூண் நறும்புகை எறிந்த - கொழுவிய தசையிடத்து எழும் நறிய புகை படிதலால்; சிறுநுண் பல்வியர்பொறித்த நெற்றி - சிறிய நுண்ணிய பல வியர்வை யுண்டாகிய நெற்றியையும்; குறுநடை - குறுகுறவென நடக்கும் நடையினையுமுடைய நினது; கூட்டம் வேண்டு வோர்-கூட்டத்தையே பெரிதும் விரும்பும் காதலர் எ-று. கூட்டம் வேண்டும் காதலர், நெடுஞ்சேண் சென்று வருந்துவராதலின், நீ ஆற்றாயாவது நன்றன்று என எச்ச வகையால் வேண்டுவன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. யானை நீறாடி வருந்திய வருத்தம் கூவல் ஊறலின் தணியும் எனவும், நறும்புகை எறிதலால் வியர் பொறித்த நெற்றி எனவும் இயையும். களர் நிலம் புறத்தே வெளுத்துத் தோன்றுவது பற்றி வெண்புறக்களரி என்றார். "அதள் எறிந்தன்ன நெடுவெண் களர்"2 எனப் பிறரும் கூறுதல் காண்க., யானை தன் பருத்த தாளால் உதைத்தலால் களர்நிலம் துகள்பட்டு நீறாகிப் பரந்து அவ்யானைமேலும் பிறவற்றின் மேலும் புழுதியாய்ப் படிந்ததெனக் கொள்க. "வெண்புறக் களரி இடுநீ றாடிய கடுநடை யொருத்தல்"1 எனப் பிறரும் கூறுப, களர் நிலத்து உவர்நீர் வேட்கை தணிக்கும் இயப்பிற்றன்மையின், யானை பரல் மலிந்த முரம்பு நிலம் அடைந்து அங்கே கூவல்களில் ஊறியிருக்கும் இனிய நீரை யுண்டு வேட்கை தணியும் என்பார் சுரன் முதல் வருந்திய வருத்தம் பைப்பயப் பரல்மலி கூவல் ஊறலின் தணியும் என்றார். களர் நிலத்தைக் கடந்து சுரத்திடை நடந்து வேட்கையுற்ற யானை கூவலின் ஊறலை யுண்டு தணியும் என்பதாம். இரவிடை வந்த விருந்து விலக்கப்படா தாகலின் எல்லி வந்த விருந்து என்றும், புகழ் விளைவிக்கும் நல் விருந்து என்றற்கு நல்லிசை விருந்து என்றும் சிறப்பித்தார். விளர் ஊன், நிண மிக்க வூன், கூட்டம் வேண்டுவோர், கூடி யிருத்தலைப் பெரிதும் விரும்புவர். பைய பைய என்பது பைப்பய என வந்தது மாது ஓ, அசைநிலை. தலைமகன் பிரிவாற்றாது வருந்தி யுறையும் தலைவியின் மெலிவு கண்ட தோழி, ஆற்றியிருக்குமாறு வற்புறுத்த எண்ணி, நெடுங்சேணில் சென்று உறையும் காதலர், நின் ஆற்றாமையும் மெலிவும் அறிவரேல் வருந்துவர்; அதனால் கொண்ட வினைக்குக் கேடும், புகழ்க்கு மாசும் விளையுமாதலால், நீ இனி ஆற்றியிருத்தலே தகவு என்பாள் நெடுஞ்சேண் சென்று வருந்துவர் என்றாள். நெடுங்சேண் சென்று தங்கி வினைக்கண் முயறலால் உளதாகும் வருத்தம், அது முற்றி மீண்ட வழிக் கெடாது விளங்கும் நின் நலம்திகழ் கூட்டத்தில் பிறக்கும் இன்பத்தால் தணிவர் என்பதைப் பரூஉத்தாள் உதைத்த வெண்புறக் களரி இடுநீ றாடிச் சுரன் முதல் வருந்திய வருத்தம், யானை பைப்பயப் பால்மலி கூவல் ஊறலின் தணியும் என்புழி உள்ளுறுத் துரைத்தாள். ஒருகால் இரவுப்போதில் வந்த நல்விருந்தை வரவேற்று நீ ஓம்பிய திறத்தைக் கண்டு பெருங்காதலுற்று வியந்து பாராட்டின ரன்றோ என்பாள், நெய்துழந்து அட்ட விளருள் நறும்புகை எறித்த நெற்றிச் சிறுநுண் பல்வியர் பொறித்த குறுநடைக் கூட்டம் வேண்டு வோர் என்றாள். எல்லிப் போதில் வந்த விருந்து இருந்தல்லது போதல் கூடாது என்று தேர்ந்து நீ ஓம்பிய திறம் நல்ல புகழ்விளைக்கும் செயலாயிற்று என்றற்கு எல்லி வந்த நல்லிசை விருந்து என்றும், இனிய ஊன்கறியை நெய்பெய்து நறும்புகை கமழ நீ அட்டு அளித்ததும், அச்செயலிடை யுளதாகிய உவகை, முகமலர்ச்சியாலும் நுதல்வியர்ப்பாலும் நன்கு விளங்கினதும், அவர்க்கு நின் கூட்ட மல்லது ஊதியம் வேறில்லை யெனும் உணர்வைத் தோற்றுவித்துவிட்டன என்பாள் கூட்டம் வேண்டுவோர் என்றும் கூறினாள். குறுநடை கூறியது விருந்தோம்பற்கண் உள்ள விரைவு குறித்து விருந்துக்கு வேண்டுவன செய்தற்கண் தலைவிபால் தோன்றிய விரைவு புலப்படுத்தற்குக் குறு நடை யென்றும், நல்விருந் தோம்பி நல்லிசை வளர்க்கும் மனைமாண்பு காண்பான் உள்ளத்திற் காதல் பெருகுதலின் கூட்டம் வேண்டுவார் என்றும் கூறினாள். "வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்"1 என ஆசிரியர் கூறுதல் காண்க. 42. குடவாயிற் கீரத்தனார் தலைமக்கள் கடிமணம் புணர்ந்து மனையறம் புரிந்துவரும் நாளில் வினையொன்று குறித்துத் தலைமகன் சென்றான். அவன், பிரிவு தலைமகட்கு மிக்க மனநோயை நல்கிற்று; சென்ற அவன் தான்மேற்கொண்ட வினையைக் குறித்த காலத்தே முடித்துக் கொண்டு மீளலுற்றான். முன்பொருகால் அவன் இவ்வாறு தன் மனையிற் பிரிந்து சென்று வினை முடித்து மீண்டமை அவன் நினைவில் எழுந்தது. அப்போது, கோடை மிகுதியால் வறண்டிருந்த பகுதிகளில் கார்மழையால் நீர்நிரம்பிற்று. ஆங்காங்கே தவளைகள் கத்தத் தலைப்பட்டன. அது கண்ட தலைமகன்,தான் ஏறிச் செல்லும் தேரிற் கட்டிய மணியோசை சென்று தலைவி செவியிற் படாவாறு தவளையொலி மிக்குளது என நினைந்து ஏவலிளையரை முன்னர்ச் சென்று தன் வரவினை அவட்கு அறிவிக்குமாறு பணித்தான். அவ்வாறே அவர்கள் சென்று தெரிவிக்கவும், தலைமகள் பெருமகிழ்ச்சி கொண்டு நீராடித் தன் கூந்தலில் எண்ணெய் நீவி ஒப்பனை செய்துகொள்வா ளாயினள். அவ் வொப்பனை முற்றுதற்குள் தலைமகன் சென்று மனை யடைந்து உள்ளே புகுந்தான். கண்டதும், தலைமகள் நிரம்பாத ஒப்பனையுடன் அப்படியே தாவிப் போந்து தன் காதலனைத் தழீஇக் கொண்டாள். அதனால், பேருவகைப் பெருங்கடற்குள் மூழ்கிய தலைமகன், அவளது அன்பு மிகுதியை வியந்து பாராட்டினான். அச்செயல் நினைவுக்கு வரவே, தனக்குள் நினைந்து இன்புறுவான் அதனைத் தன் தேர்ப்பாகற்குச் சொல்லி மகிழ்ந்தான். தலைவனது இக்கூற்றில் காதலரது காதலன்பு ஒருவரை யொருவர் காணா முன்பு பெருகிச் சிறப்பதும், கண்டு கூடுமிடத்து அறிவு நிறைகளைக் கைகடந் தொழிவதும் இனிது விளங்கக் கண்ட குடவாயிற் கீரத்தனார் இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். மறத்தற் கரிதால் பாக பன்னாள் 1வறத்தொடு 2வருந்திய 3உலகுதொழிற் கொளீஇயர் பழமழை பொழிந்த 4புதுநீர் அழுவத்து நாநவில் பல்கிளை கறங்க 5நாவுடை மணியொலி 6கேளாள் வாணுதல் அதனால் ஏகுமின் என்ற இளையர் 7ஒய்யென இல்புக் 8கறியுந ராக9 வல்லே மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை 10புகுதலின் 11மெய்வருத் துறாஅ 12அவிழ்பூ முடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே. இது, 13வினைமுற்றி மீளலுறும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. உரை பாக - தேர்ப்பாகனே; வறத்தொடு பன்னாள் வருந்திய உலகு தொழில் கொளீஇயர் - கோடையால் நீர் வற்றி வளங்குன்றிப் பன்னாட்கள் வருந்தியிருந்த நிலவுலகம் தனக் குரிய உழவு முதலிய தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு; பழமழை பொழிந்த புதுநீர் அழுவத்து - பழைய மழை பொழிந்தமையால் வந்து புதுநீர் நிறைந்த பள்ளங்களில்; நா நவில் பல்கிளை கறங்க - நாவால் ஒலித்தலையுடைய பலவாகிய இனம் சூழ வாழும் தவளைகள் ஒலித்தலால்; நாவுடை மணியொலி கேளாள்- நாக்கினையுடைய தேர்மணியின் ஓசையைக் கேட்கமாட்டா தொழிவாள்; வாணுதல் - ஒளி பொருந்திய நுதலையுடைய நம் காதலி; அதனால்-; ஏகுமின் என்ற இளையர்-முன்னர்ச் சென்று அறிவிப்பீராக என ஏவப்பெற்ற இளையர்; ஒய்யென இல்புக்கு அறியுநராக - நம் மனைக்கு விரைந்து சென்று நம் வரவை அறிவித்தாராக; வல்லே - விரைவாக; மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇ-ஒப்பனை செய்யப்படாது கிடந்ததன் கூந்தலை மாசு போக்கித் தூய்மை செய்து; சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய - மலர்ந்த சில பூக்களைக்கொண்டு பலவாகிய கூந்தலிற் சூடிக் கொண்டிருந்த; அந்நிலை புகுதலில் - அந் நிலையில் யாம் மனைக்குள் புகுந்தமையால்; மெய்வருத்து உறாஅ-மெய்யின்கட் கிடந்த மெலிவு புலப்படாவாறு; அவிழ்பூ முடியினள் - முடி யவிழ்ந்து பூவுதிர விழும் கூந்தலோடே ஓடி வந்து; கவைஇய - நம்மைப் புல்லிக்கொண்ட; மடமா அரிவை-இளமையும் மாமையு முடைய அரிவையாகிய அவளது; மகிழ்ந்து அயர் நிலை - கழிபேருவகையால் அவசமுற்ற நிலை; மறத்தற்கு அரிது-நம்மால் மறத்தற் கரிதாயினமையின், வினை முற்றி மீளும் இப்போதும் அந்நிகழ்ச்சி நினைவில் தோன்றா நிற்கிறது, காண் எ.று. பாக, வாணுதல் மணியொலி கேளாள்; அதனால் ஏகுமின் என்ற இளையர் இயல்புக்கு அறியுநராக, கூந்தல் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு, குரல் அழுத்திய அந்நிலை, யாம் சென்று புகுதலின், முடியினள் கவைஇய அரிவை மகிழ்ந்தயர் நிலை மறத்தற்கு அரிதாகலின், வினைமுற்றி மீளும் இப்போது அந்நிலை நினைவில் எழுகின்றது என எஞ்சியன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. வறம், கோடைப்பருவம், தொழில், உழவு முதலாயின. மழை பெய்யுங் காலத்து மேகத்தின்பால் உள்ள நீர் முன்னமே கடற்குச் சென்று முகந்து கொள்ளப் பட்டுப் பழமை பட்டமையின் பழமழை எனப்பட்டது. "பழ மழைக் கலித்த புதுப்புனவரகு"1 என வருதல் காண்க. இனி, "கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர், புதுநீர் கொளீஇய வுகுத்தரும், நொதுமல் வானம்"2 எனக் கூறலும் ஒன்று. அழுவம், ஆழமான இடம். நீரழுவத்து நாநவில் பல்கிளை என்றது தவளைகட்கு வெளிப் படை கறங்க என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு என்ற இளையர் என்புழி என்ற என்பது செயப்படு பொருண்மேல் நின்றது. "இல்வாழ்வான் என்பான்"3 என்றாற் போல, அறியுநர், பிறவினைப் பொருட்டு. மண்ணுதல். ஒப்பனை செய்தல், அழுத்திய அந்நிலை, அழுத்தாநின்ற அந்நிலை. வருத்தம், அம்முக்கெட்டு வருத்து என நின்றது; முதனிலைத் தொழிற்பெய ரென்றுமாம். உறுதல், வெளிப்படத்தோன்றல். கவவு, அகத்திடுதல். கவவிய என்பது குவைஇய என வந்தது. வினைமுற்றி மீளும் தலைமகற்கு, முன்பு தான் மீண்ட காலத்துத் தன் மனைக்கண் நிகழ்ந்தது நினைவில் தோன்றி இன்புறுத்தமையின், அதனைப் பாகற்கு உரைக்கின்றா னாதலால் எடுப்பிலேயே பாகனை நோக்கி, மறத்தற்கரிதால் பாக என்றான். மனத்தின்கண் உறையும் எண்ணங்களும் நிகழ்ச்சிக் குறிப்புக்களும் தம்மில் தொடற்புற் றிருப்பன வாதலால், வினை முற்றி மீளும் நிகழ்ச்சி ஒத்த இயல்பிற்றாய் முன்னைய நிகழ்ச்சியை நினைப்பித்தலின், மறத்தற்கு அரியதாயிற்று. அழுவத்துப் பல்கிளை கறங்குதலால், வாணு தலாகிய தலைவி தேரின் மணியொலி கேளாள், அதனால் ஏகுமின் என்றது, பண்டு ஏவலிளையர்க்குத் தலைமகன் பணித்ததனையே கொண்டு கூறியது. காதலன் மனையின் நீங்கியுறையுங் காலத்துக் கற்புடைய குலமகளிர் தம்மை ஒப்பனை செய்து கோடல் முறையன்மையின் மண்ணாக் கூந்தல் என்றும், மண்ணாது கிடந்த கூந்தலைக் காதலன் வரவு கேட்டுத் தூய்மைசெய்து ஒப்பனை செய்து கொள்வது தோன்ற மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇ என்றும், பலவாய்த் திரண்ட கூந்தலின்கண் பல பூக்களை யணிந்து கோடற்குப் போதிய காலமின்மை பற்றிச் சில்போது கொண்டு அணிவாளாயினள் என்றும் கூறினான். மாசற மண்ணிய கூந்தல் பூ முதலியன இன்றி வறிதிருத்தல் மங்கல மர பன்மையின் சிலவற்றை சூடிக் கோடல் இன்றியமையா தென அறிக. தலைவன் வரவு கண்டதும் காதல் மிகுதியால் அவசமெய்தித் தனியே நிற்றலாற்றாமையின் தாவித் தழீஇக் கொண்டாள் என்பான், அவிழ் பூமுடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலை என்று கூறினான். இதனாற் பயன், தலைமகனது வேட்கை நிலை யுணர்ந்து பாகன் தேரை விரைந்து செலுத்துவானாவது. "கரணத்தின் அமைந்து முடிந்த காலை"1 என்ற நூற்பாவில் வரும் "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்; இப்பகுதிக்கு இதனையே காட்டிய நச்சினார்க்கினியர்,2 "இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது" என்பர். 43. எயினந்தையார் கீரந்தை, நாகந்தை, சாத்தந்தை என்றாற்போல இச் சான்றோர் எயினந்தை என்ற பெயர் பூண்டுள்ளார். இச்சொல் எயினனுக்குத் தந்தை யென்று பொருள்படுவது பற்றி இவரை எயினன் என்பானுக்குத் தந்தை என்பாரும் உளர். பெயர்ப் பொருள் கொண்டு ஒருவரது இயல்புகாணும் வழக்காறு எப்படியோ கற்றோரிடையே உண்டாயிற்று. பல்கண்ணன் என்றொரு சான்றோர் உளர்; அவரது பெயர்க்குப் பொருள் பல கண்களையுடையன் என்பது; அது கொண்டு அவர்க்குக் கண் பல இருந்தமையின் பலகண்ணனாராயினார் என்பது எத்துணை நகைக்கு இடமாகும். இவ்வாறே கீரன் எயினன் முதலிய இயற்பெயர்கட்குப் பொருந்தாப் பொருள் கண்டு இடர்ப்படுவது சிலர்பால் இயல்பாக இருக்கிறது. இடைக்காலச் சோழர் காலத்தில் இராமாய ணத்தைப் பாடிய கம்பர் பெயர், அவர் காலத்தில் பலர்க்கு இயற்பெயராக அமைந்து வழக்கிலிருந்தமை நோக்காது கம்பங்கொல்லை காத்ததால் வந்த பெயர் என்றும், கம்பநாட்டிற் பிறந்தமையால் வந்த பெயர் என்றும் பொய்கூறி யுள்ளனர்; திருக்குறள் வழங்கி யருளிய வள்ளுவர் பெயர்க்கும் அவரவரும் தம் மனம் போனவாறு பொய்ப்பொருள் கண்டு உரைத்தும் எழுதியும் வந்தனர், வருகின்றனர். தொல்காப்பியவுரைகாரர் காலத்தேயே வள்ளுவன் என்பது அவரது இயற்பெயர் என விளங்கக் காட்டப்பட்டுளது. பழக்கம் கொடிது என்பதற் கேற்ப, தொல்காப்பிய வுரை பயின்ற அறிஞர்களும் இத் தீயவழக்கை விடாப்பிடியாகக் கொண்டுள்ளனர். நிற்க, சங்கச் சான்றோர் நிரலுள் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்றொரு சான்றோர் உளர். அவ் விளங்கீரனாருடைய தந்தை பெயர் எயினந்தை என இருப்பது கொண்டு, இவரை அவரெனக் கொள்பவரும் உளர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது போல எயினந்தையார் மகனார் இளங்கீரனார் என்று இருப்பின் அவ்வாறு கோடற்கு இடமுண்டு. அங்கே அவர் எயினந்தை மகன் என்றே குறிக்கப்படுகின்றார். அதனால் இந்த எயினந்தையார் வேறு, இளங்கீரனாரின் தந்தையான எயினந்தை வேறு எனக் கோடல் பொருத்தமாக வுளது. இனி, இவ் வெயினந்தையார் அரசியல் வாழ்வில் நன்கு பயின்ற பண்புடையர். பெருவேந்தரும் குறுநிலத் தலைவரும் ஒருவருக் கொருவர் உதவி வாழும் அரசியல் வாழ்க்கையில் எயினந்தையாரது உள்ளம் நன்றாக ஈடுபடுகிறது. இவர் பாடிய பாட்டு இந்நூற்கண் தொகுக்கப்பட்டுள்ளது. கற்பு வாழ்வில் தன் காதலியைப் பிரிந்து சென்று செய்ய வேண்டிய கடமை யொன்று தலைமகற்கு உண்டாகிறது. காதலியான தலைவியின் பிரிவருங்காதல் அவன் உள்ளத்தை அலைக்கின்றது. கடமை நிலையைத் தலைமகட் குரைக்க அவன் எண்ணினானாக, அவளது மென்மைச் சிறப்பு அவனைத் தடுத்தொழிந்தது. தோழியைத் தனித்துக் கண்டு தன் கருத்தை அறிவித்துத் தலைமகள் ஆற்றியிருத்தற் கேற்ற அமைதியை அவள் மனத்தில் விளைவிக்குமாறு பணித்தான். தோழி அச்செயலில் ஒருவாறு வெற்றி கண்டாள். ஆயினும், காதலின்பத்தினும் கடமையை ஆற்றற்கண் வரும் இன்பமே பெரிதென மகிழும் அவன் உள்ளத்தை, ஒருபால் அசைவிக்கக் கருதி, "பெரும, உணவின்மையும் வெம்மையும் நின்று வருந்தும் கடுஞ்சுரத்தைக் கடந்து சென்று சேர்வதில் நினக்கு வேட்கை சிறந்து உவகை தருகிறது; ஓர் எயில் மன்னன் ஒருவனுக்கும் வேறொரு மன்னனுக்கும் பகைமை யுண்டாக, ஓரெயில் மன்னனை அஞ்சல் என்று அவற்குத் தலைமையுற்ற பேரரசன் ஒருவன் ஊக்கினான்; அவ்விருவர்க்கும் போர் மூண்ட போது, ஓரெயில் மன்னன் எயிற்புறத்தே பகை மன்னன் முற்றுகை யிட்டான்; அந்நிலையில், அஞ்சல் என்று ஊக்கி வந்த பெருமன்னன் சட்டெனக் கை விட்டான்; ஓரெயிலான் உள்ளம் இடிபட்டு உடைந்தது; அவன் எய்திய கலக்கம் போல நின் பிரிவு கேட்டதும் தலைமகள் கலக்க மெய்தினாள்; யான் இந்நிலையில் செய்யக் கடவது யாது" என்று சொன்னாள். ஓரெயில் மன்னற்கு அவ்வெயில் போலத் தலைமகனை யல்லது தலைவிக்குக்குச் சார்பில்லை என்றும், அம்மன்னன் உலையா முயற்சியும் ஊக்கமும் கொண்டு எயிலைப் பேணிக் காப்பானாயின் வென்றி எய்தவும் கூடும் என்றும் உணர வைத்துப் பிரிவுக்கு விடை வழங்கும் நிலையில் அவள் கூற்று இருப்பதை எயினந்தையார் கண்டு அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். துகில் விரித்தன்ன1 வெயிலவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு அத்தம் செல்வோர்க்கு 2வல்சி யாகும் வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே மெய்ம்மலி யுவகை யாகின்று இவட்கே அஞ்சல் என்ற இறைகை விட்டெனப் பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின் களையுநர்க் 3காணாது கலங்கிய உடைமதில் ஓரெயில் மன்னன் போல அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவழுங் குவித்தது. உரை துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் - வெண்மை யான ஆடையை விரித்தாற் போல ஞாயிற்றின் வெயில் விளங்குவதால் உண்டான வெப்ப மிகுதியால்; என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்-மூங்கில்கள் நெடிது வளர்ந்த மலைப் பக்கத்தில்; ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி-மிக்க பசியினையுடைய செந்நாய் வாடிய மான் ஒன்றைக் கொன்று; ஆர்ந்தன ஒழிந்த மிச்சில்-உண்டு கழித்த மிச்சிலாகிய வூன்; சேய்நாட்டு அத்தம் செல்வோர்க்கு வல்சியாகும் - சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவாய்ப் பயன்படும்; வெம்மை ஆரிடை இறத்தல் - வெம்மை மிகுந்த அரிய வழிகளைக் கடந்து செல்லும் செலவு; நுமக்கு மெய்ம்மலி உவகை யாகின்று-உடல் பூரிக்கும் உவகையினை நுமக்குத் தருகின்றது; அஞ்சல் என்ற இறை கைவிட்டென-அஞ்சற்க எனத் துணைமை கூறி யூக்கிய தலைமை வேந்தன் கைவிட் டொழிந்தானாக; பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்-பசிய கண்களையுடைய யானைப் படையுடன் பகை வேந்தன் எயிற்புறத்தே முற்றுகையிட்டுத் தங்குதலால்; களையுநர்க் காணாது-துணை நல்கித் துயர் துடைக்கும் தக்கோரைப் பெறாமல்; கலங்கிய உடைமதில் ஓரெயில் மன்னன் போல- கலக்க முற்று உடைந்து வலியழிந்த மதிலாகிய அரண் ஒன்றே யுடைய ஒரு குறுநில மன்னன்போல; ஒழிதல் கேட்டு இவட்கு அழிவு வந்தன்று-நீ பிரிந்து சேறல் கேட்ட அளவிலேயே தலைமகளாகிய இவட்கு மனச்சிதைவு காரணமாகப் பொலி வழிவு எய்துவதாயிற்று, காண் எ.று. எனவே நின் பிரிவுக் குறிப்பைக் கேட்ட மாத்திரையே மனம் உடைந்து பொலிவு அழிபவள், பிரிந்தவழி உயிர் வாழாள் என்பது சொல்லாமலே விளங்கும் என்றாளாம். ஆரிடை யிறத்தல் நுமக்கு மெய்ம்மலி உவகையாகின்று; ஒழிதல் கேட்ட வளவிலேயே இவட்கு அழிவு வந்தன்று; இந்நிலையில் நீ பிரிதல் நன்றன்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மாசு மறுவில்லாத வானத்தில் ஞாயிறு நின்று ஒளி பரப்புங்கால், வேனில் வெயில் நிலத்தில் வெள்ளாடை பரப்பியது போறலின் துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பு என்றார். உருப்பு, வெப்பம், என்றூழ் மூங்கில்; ஞாயிறுமாம். கவா அன், மலைப்பக்கம். மிக்க பசியுண்டாகிய விடத்துச் செயல்வலி குன்றி உயிர்கள் ஓய்ந்து ஒடுங்குவது பற்றி, ஓய் பசி என்றார். செந்நாய், ஓநாயின் இனம். ஓய்பசி யுற்ற நாய்க்கு வலிய மான் அகப்படாமை தோன்ற உயங்குமரை தொலைச்சி என் பாராயினர். அத்தம், காட்டுவழி. வல்சி, உணவு. செல்லு தற்கரிய நிலம் ஆரிடை யெனப்பட்டது. இறத்தல், அரிதிற் கடந்து செல்லுதல். மெய்ம்மலி யுவகை, புறத்தே மெய்யின்கண் பூரித்து வெளிப்பட அகத்தே நிறைந்த உவகை; "விரும்பு மெய்பரந்த பெரும்பெயர் ஆவுதி"1 என்றாற்போல. ஆகின்று வந்தன்று என்பன இறந்தகால முற்று வினைத் திரிசொல். இறை, பல குறு நிலங்கட்குத் தலைவனாகிய பேரரசன். பைங்கண் யானை வேந்து, ஈண்டுக் கொலை குறித்த பார்வையினையுடைய வேழப் படையொடு போந்த பகையரசன் மேற்று. புறம், எயிற்புறம். எயில், வில்வீரர் நின்று பற்ற வரும் பகைவரை வென்றியுறத் தாக்கற் கேற்ற தலையகலமும் புறத்தோர் ஏணிக் கெட்டாத உயரமும் திண்மையுமுடைய மதில். காட்டரண், நீரரண், மலையரண் எனப் பல உளவாதலும், மதிலரணும் அகமதில் புறமதில் என இருவகையவாதலும் பற்றி உடைமதிலாகிய ஓர் எயில் என்றார். இறுக்கப்பட்ட மதில்தானும் இருவகைத் தாகாது ஓரெயிலாய்ப் பகைவரால் எளிதில் எறியப்படும் இயல்பிற்று என்றற்கு உடைமதில் ஓரெயில் எனச் சிறப்பிக்கப்பட்டது. அக்காலை மதிலகத்து வேந்தன் பிறர் துணை இல்வழி உய்தல் இன்மையின், களையுநர் உளரோ எனக் கையற்று வருந்துவது இயல்பென அறிக. ஓரெயில் மன்னனை உற்றவிடத்து உதவி புரிவல் என்பதுபட அஞ்சல் என ஊக்கிய பேரரசன். பகை புறத்திறுத்த காலைக் கைவிடுவது கொடுமைக்கு எல்லை. ஒழிதல், ஈண்டுப் பிரிதல் மேற்று. களைகுவென் எனக் கட்டுரைத்த இறை கைவிட்டமையின் கலக்கம் உண்டாயிற்று என்க. இடையற வில்லாத அழிவில் கூட்டத்துக்கு இடனாகிய கற்பின் கண், பிரிவின்றுறையும் பேரின்பமே நுகர்ந்து மகிழும் தலைமகட்குத் தலைவனது பிரிவு பெரியதோர் ஆற்றாமையை விளைவிப்பது கண்ட தோழி, அதனால், உளதாகும் குற்றத்தைக் குறிப்பாய்க் கூறுகின்றாளாகலின், வெளிப்படையால் சுரத் தருமை கூறலுற்று, துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் எனக் காலத்தின் கொடுமையையும், செந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் அத்தம் செல்வோர்க்கு வல்சி யாகும் வெம்மை யாரிடை என்ற சுரத்தின் கொடுமையையும் கூறினாள். இக்கொடுமை கூறற்கு எமது நெஞ்சம் அஞ்சி அலமரல் எய்த, நீ, இவையிற்றை யாம் கூறக் கேட்டு உவகை மிகுகின்றாய் என்பாள், வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கு மெய்ம்மலி யுவகை ஆகின்று என்றாள். நின் ஆண்மையுள்ளம் இக்கொடுமைகளைப் பொருளாகக் கொள்ளாது எனின், எமது மென்மையுள்ளம் மெலிந்து உருகுகின்றது என்பாள், களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓரெயில் மன்னன் போல அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே என்றாள். போரில் காலத்து அஞ்சல் என்று ஊக்கிய பெருநிலத்து இறைவன் பகைவேந்து புறத்தே இறுத்த காலை ஓரெயில் மன்னனைக் கைவிட்டாற் போலக் களவின்கண் பிரியேன் எனக்கூறி எம்மை ஊக்கிப் போந்த நீ, அதன் வழித்தாகிய கற்புக் காலத்துப் பிரிவாற்றாமை பிறங்கி நிற்கும் இப்போது, நீ பிரியக் கருதுதல் நன்றன்று எனவும், களையுநர்க் காணாமையால் ஓரெயில் மன்னன் மனம் கலங்கித் தனது உடைமதில் ஓரெயிலை இழந்தொழிவது ஒருதலையாதல் போலத் தலைமகளும் நின் கூட்டம் இன்மையின் ஆற்றாமை மீதூர்ந்து திண்மையிழந்து உயிர் விடுவள் எனவும் கூறினாள். கற்பின்கண் தலைவிபால் ஆற்றாமை மிக்கப் புறத்தார் அறியத் தோன்றுதல் குற்றமன்மையின் அதனைத் தோழி எடுத் தோதினாள். செந்நாய் உண் டொழித்த மிச்சில் அருஞ்சுரம் செல் வோர்க்கு வல்சியாதல் போல நின் பிரிவால் உளதாகும் இவளது மேனி வேறுபாடு புறத்தார் கண்டு அலர் கூறுதற்கு ஏதுவாம் என்றும், அப்புறஞ்சொல் களவின்கண் காமத்துக்குச் சிறப்புத் தந்தது போலாது. கற்பின்கண் நின் புகழ்க்கு மாசு தரும் சொல்லாய்ச் சிறவாது காண் என்றும் கூறியவாறாம் என்க. இது புறஞ்சொல் மாணாக் கிளவி. பிரிவருமை நினக்கும் ஒப்பதாயினும், ஓய்பசி யுடையதாகிய செந்நாய் உயங் குமரையைத் தொலைத்தாற் போல வினைசெயற்குரிய மனத் திண்மையால் இவளது ஆற்றாமையை எண்ணாயாயினை என்றதாகக் கொள்க. 44. பெருங் கோசிகனார் வடநூல் ஒழுக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திற் பரவிய போது, வடநூற் சான்றோர் பெயரைத் தம் மக்களுக்கு இட்டு வழங்குவது மரபாயிற்று. இந்நாளிலும் மேலை நாட்டார் ஒழுக்கங்களையும் கருத்துக்களையும் மேற்கொண்ட சிலர், மேலைநாட்டுச் சான்றோர் பெயர்களை மக்கட்கு இட்டி ருப்பதைக் காண்கிறோ மன்றோ? தமிழர் பண்டு தொட்டே புதுமை மேவலராயிருந்தமைக்கு இது தக்க சான்றாகும், வடநூல் கூறும் சான்றோர்களில் கௌசிகனார் என ஒருவர் உளர்; அவருடைய குணநலங்களை வியந்த இச்சான்றோருடைய பெற்றோர் இவர்க்குக் கோசிகன் என்ற பெயரை இட்டுள்ளனர். இளங்கோசிகன் என ஒருவர் இருந்தமையின் இவர் பெருங்கோசிகன் எனப்பட்டார். பத்துப்பாட்டில் உள்ள மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப் படையை ஒரு பெருங்கோசிகனார் பாடியிருக்கின்றார். அங்கே அவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கோசிகனார் என்று குறிப்பிடுகின்றார். இந்நூற்கண் எங்கும் இவர் பெயர் பெருங்கோசிகனார் என்றே காணப்படுகிறது. ஒரு கால் இவரின் வேறுபடுத்திக்காட்டவே அவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கோசிகன் எனப்பட்டார் போலும். இரணிய முட்டம் என்பது பாண்டி நாட்டு உள்நாடுகளுள் ஒன்று; இடைக் காலத்தில் இது மேல்இரணியமுட்டம், கீழ்இரணியமுட்டம் என இரண்டாகப் பிரிந்திருந்தது; மதுரை மாவட்டத்து அழகர் கோயிற்பகுதி கீழ் இரணியமுட்டத்தைச் சேர்ந்தது என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன, அவர் மலைபடுகடாம் பாடிய செய்தியைத் திருவண்ணாமலைக் 'கல்வெட்டு,1 "நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு" என்று குறிக்கின்றது. இதன்மேல், இப் பெருங்கோசிகனாரைப் பற்றிய வரலாறு ஒன்றும் கிடைத்திலது. களவுநெறியில் தலைமகளோடு காதலுறவு கொண்ட தலைமகன், அவள் காவல் பூண்டொழுகும் தினைப்புனத்துக்கு வந்து அவளைக் கண்டு இன்புற்றான். புனம் முற்றியதும் தலைமகட்குப் புனங்காவல் ஒழிந்தது. பெற்றோர் அவளைத் தமது மனைக்கண்ணே இற்செறித்தனர்; அவட்குத் தக்க காவலும் அமைந்தது. இற்செறிப்பு நிகழ்ந்த மறுநாள், தலைமகன் புனத்தில் குறியிடத்துக்கு வந்து தன் வரவு தெரிவிக்கும் குறிகளைச் செய்தான்; தலைமகள் வாராதொழியினும் அவண் போந்த தோழியால் தலைவி இற்செறிப்புண்டமை அறிந்தான். மீளுங் கால், அவன் மனம், பண்டு அவளைத் தலைப்பெய்த காட்சி யையும் அதன் சார்பான நிகழ்ச்சிகளையும் நினையலுற்றது. தன் ஆயத்தாருடன் தலைவி அருவியாடியதும், நெடிது ஆடி நீரலைத்தலால் அவள் கண்கள் சிவந்தமையும், அவ்விடத்தே அவளைத் தான் கண்டமையும், ஆய மகளிர் ஐயுறாமைப் பொருட்டு அவள் தன்னைப் பொதுநோக்கு நோக்கினமையும், தன் காதற்குறிப்பைச் செவ்வாயின் புன்முறுவலால் அவள் வெளிப்படுத்தினமையும் பிறவும் அவன் மனதில் இனிது தோன்றின. பின்பு அவன் அவள் இருந்த மனையை நோக்கினான். மனை முற்றத்தில் குன்றவர் பலர் குழீஇயிருந்து புனத்தில் விளைந்து கதிர் முற்றித் தலைசாய்ந்து நிற்கும் தினையைக் கொய்தற்குரிய பேச்சுகளை நிகழ்த்தினர். ஆசினிப் பலா வளர்ந்து நிற்கும் மனைப் படப்பையிலுள்ள மரங்களில் மின்மினிப்பூச்சிகள் படர்ந்து ஒளி செய்தன. அவற்றின் விளக்கம் கொண்டு வானத்தில் இயங்கும் மழைமுகிலைத் தலைவியின் தந்தை பார்த்து நிற்பது அவற்குத் தெரிந்தது. அது கண்டதும், இனி அவளைத்தான் எய்துவது அரிது என எண்ணி அவளைக் காண விழைந்த தன் நெஞ்சிற்குத் தன் எண்ணங்களை உரைப்பானாயினன். இவ் வுரையின்கண் தலைவனுடைய மனப்பண்பின் விரிவும் நன் மாண்பும் புலப்படக் கண்ட பெருங்கோசிகனார் அவற்றை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். பொருவில் ஆயமொ டருவி யாடி நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி மனைவயிற் பெயர்ந்த காலை 1நினைஇயர் 2இனிக்காண் பரியள்என் நெஞ்சே புனத்த நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக் கொழுங்குரல் 3கொண்மார் கோடல் கண்ணிப் பல்கிளைக் குறவர் அல்கயர் முன்றில் குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய பன்மா உயர்சினை மின்மினி விளக்கத்துச் சென்மழை இயக்கம்4 காணும் நன்மலை நாடன் காதன் மகளே. இஃது, இற்செறிப்பின் பிற்றைஞான்றை தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது. உரை பொருவில் ஆயமொடு அருவி ஆடி-ஒப்பற்ற ஆயமகளிரொடு கூடிச் சென்று அருவி நீரில் விளையாடி; நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் - நீரில் நெடிது ஆடி அலைப் புண்டமையால் சிவந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களால்; குறியா நோக்கமொடு முறுவல் நல்கி-பொது நோக்கம் செய்து புன் முறுவல் புரிந்து; மனைவயின் பெயர்ந்த காலை நினை இயர்-தன் பெருமனைக்குச் சென்ற போது அவள் நினக்கு எளியளாய் அமைந்ததனை நினைக்கின்றாய்; என் நெஞ்சே-எனது நெஞ்சமே; இனிக் காண்பரியன்-இனி நாம் காண்டற்கு அரியளாயினாள், காண்; புனத்த நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிர-புனத்தின்கண் நீண்ட இலைகளைத் தாங்கிக் கதிர் விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்து நிற்குமாறு; கொழுங்குரல் கொண்மார்-கொழுவிய கதிர்களைக் கொள்வோராகிய; கோடல் கண்ணிப் பல்கிளைக் குறவர்-காந்தட் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணி யணிந்த பலராகிய கிளைஞர்களையுடைய குன்றவர்; அல்கு அயர் முன் றில்-தங்கியிருந்து அயர்வு நீங்கும் முற்றத்திடத்தே; குடக்காய் ஆசினிப் படப்பை-குடம் போலும் காய்களை யுடைய ஆசினிப்பலா நிற்கும் படப்பையின்கண்; நீடிய பன்மர வுயர்சினை மின்மினி விளக்கத்து-நெடிது உயர்ந்த மரங்கள் பலவற்றின் உயர்ந்த கிளைகளில் தங்கி மிளிரும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில்; சென்மழை இயக்கம் காணும்-வானத்திற் செல்லும் மழைமுகிலின் இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும்; நன்மலை நாடன் காதல் மகள் - நல்ல மலைநாடனுக்கு அன்புடைய மகள் எ.று. நெஞ்சே, நாடன் காதல்மகள், அருவியாடி, நோக்கமொடு முறுவல் நல்கிப் பெயர்ந்த காலை நினைஇயர்; இனி, காண்பரியன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பெரியரும் சிறியரும் எனப் பலராதல் பற்றிப் பொருவில் ஆயம் என்றார். அலை, முதனிலைத் தொழிற்பெயர். குறியா நோக்கம், பொது நோக்கம். குரலின் கொழுமையால் தினைத்தாள் வளைந்து நிற்றலின், நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிர என்றார். கோடல், செங்காந்தள். அயர் முன்றில், தங்கி அயர்வு போக்கிக் கொள்ளும் இல்முற்றம். களவின்கண் தலைமகளைக் கண்டு இன்புறுவான் வந்த தலைமகன் அவள் இற்செறிப்புண்டமையின் காண்டல் கூடாமையால் ஏக்கமுற்று வருந்தும் தன் நெஞ்சிற்குக் கூறலுற்ற போது, முன்பு தலைக்கூடிய நிகழ்ச்சி நினைவில் தோன்று தலால், அக்காலை அவள் நீராடிச் சிவந்த தன் கண்களால் தன்னை நோக்கியதை விதந்து, பொருவில் ஆயமொடு அருவி யாடி என்றும், நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி என்றும் கூறினான். அவளைக் கண்டு இன்புறுதற்கண் வேட்கை யெழுந்து பெருவிதுப்பினைப் பயத்தலின், அதற்கு ஆறுதல் உரைப்பானாய், மனை வயின் பெயர்ந்தகாலை நினைஇயர் என்றும், இனிக் காண்பரியள் என் நெஞ்சே என்றும் கூறினான். இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொள்பவன் தலைவியைக் காண்டற் குரிய குறியிடத்தே நின்ற போது குன்றவர் கூடி அயர்வு போக்கிக் கொள்ளலைக் கண்டு புனத்த நீடிலை விளை தினைக் கொடுங்கால் நிமிரக் கொழுங்குரல் கொண்மார் பல்கிளைக் குறவர் அல்கு அயர்முன்றில் என்றும், தலைவி இருந்த பெருமனையின் படப்பையில் ஆசினிப்பலாமரங்கள் நெடிதுயர்ந்து நிற்றலைக் கண்டு வியந்து குடக்காய் ஆசினிப் படப்பை என்றும் உரைத்தான். தினையறுத்தல் பலர் கூடிச் செய்வதாகலின் பல்கிளைக் குறவர் எனவும், பகற்போதில் தினைகொய்த வருத்தம் நீங்க இரவில் தங்கி அயர்ச்சி போக்குவது கொண்டு அல்கயர் முன்றில் எனவும் சிறப்பித்தான். அருவியில் நெடுநேரம் ஆடினமை தோன்ற நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் எனவும், ஆயமகளிர் தன்னை அயிராமைப் பொருட்டு ஆங்கு வந்த தலைவனாகிய தன்பால் பொது நோக்கம் செய்து தன் காதற்குறிப்பை முறுவலாற் காட்டினமை பற்றிக் குறியா நோக்கமொடு முறுவல்நல்கி என்றும், அதனைத் தன் நெஞ்சம் நினைந்து அமைதல் வேண்டும் என்றற்கு நினைஇயர் என்றும் உரைத்தான். மின்மினி விளக்கத்தைக் கொண்டு செல்மழை இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும் மலைநாடனுக்கு மகளாதலின், இடம் சிறிது வாய்ப்பினும் அதுகொண்டு நமக்குத் தன் பெரிய இன்பத்தை நல்குவள் எனத் தெளிக எனத் தன் நெஞ்சினைத் தேற்றியதாகக் கொள்க. 45. உலோச்சனார் தலைமகளைக் கண்டு களவுக்காதலுறவு கொண்டு ஒழுகும் தலைமகன், தலைமகளுடைய தோழியைக் கண்டு அவளோடு உரையாடித் தன் கருத்தை அறிவித்தான். தலைமகனது பெருமையையும் தலைமகளது சிறுமையையும் காட்டி, இப் பண்பு இரண்டும் ஒன்றுபடுமாறு இல்லையெனக் கூறித் தலைவனைச் சேட்படுத்தும் குறிப்பினளாகிய அத்தோழி, "பெரும, என் தலைமகளாகிய இவள், கானலிடத்துள்ள சிறு குடியில் வாழும் மீன்வேட்டம் புரியும் பரதவருடைய அன்பு மகளாவள்; நீயோ கொடிகள் உயரப் பறக்கும் கடைத் தெருக்களையுடைய மூதூர்க்கண் வாழும் கடுந்தேர்ச் செல்வர் மகனாவாய்; யாம் இங்கே சுறா மீனை யறுத்த துண்டங்களை உணக் குவேமாய், அவற்றைக் கவர்தற்கு வரும் புள்ளினங்களை ஓப்பிக் காவல் புரிந்தொழுகுகின்றோம்; எம் மேனி மீன்புலவு நாறுவது; எமது நலன் நினது நிலைமைக்கு ஒவ்வாதன்றோ? எமது சிறுநல் வாழ்க்கை நும்மொடு ஒப்பதாகாது; எமது நிரலுக்கேற்ப எம்மிடையே தக்க செல்வமும் தலைமையு முடையோர் உளர் காண்; அதனால், நீ சிறிது சேய்மைக்கண் சென்று நிற்பது நன்று" என்றாள். இவ்வாறு தலைமகனை உயர்த்தியும் தம்மைத் தாழ்த்தியும் வேறுபாடு காட்டிச் சொல்லும் சேட்படையினும், தோழி, தமது வாழ்க்கையின் இயல்பைப் பெருமிதத்தோடு எடுத்துரைத்தது உலோச்சனாரது புலமையுள்ளத்தைக் கவர்ந்து மகிழ்விக்கவே இப்பாட்டின்கண் அவள் கூற்றைத் தொடுத்துப் பாடுகின்றார். இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் 1கலங்க உள்புக்கு மீன்எறி 2பரதவர் காதல் மகளே நீயே, நெடுங்கொடி 3நுடங்கும் நியம மூதூர் கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே நிணச்சுறா 4அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் 1ஓப்பும் எமக்குநலன் எவனோ புலவு நாறுதும் செலநின் றீமோ பெருநீர் விளையுள் 2எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ 3அன்றே எம்ம னோரில் செம்மலும் உடைத்தே. இது, குறைவேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்பட வுரைத்தது. உரை இவளே-எனக்குத் தலைவியாகிய இவளோ எனின்; கானல் நண்ணிய காமர் சிறுகுடி - கானற்சோலையிடத்தே பொருந்திய அழகிய சிறுகுடியில் வாழும்; நீல்நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு-நீல நிறத்தையுடைய பெரிய கடலகம் கலங்குமாறு அதற்குள்ளே சென்று; மீன் எறி பரதவர் காதல் மகள்-மீன் வேட்டம் புரியும் பரதவருடைய காதல் மகளா வாள்; நீயே-நீயோ எனின்; நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்-நெடிய கொடிகள் நின்று அசையும் கடைத் தெருக் களையுடைய மூதூர்க்கண் வாழும்; கடுந்தேர்ச்செல்வர் காதல் மகன்-கடுகிச் செல்லும் தேரையுடைய செல்வனுக்குக் காதல் மகனாவாய்; நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி - நிணம் மிக்க சுறாமீன்களின் அறுத்த தசைகளை உணக்குவது குறித்து; இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ-அவற்றைக் கவர்தற்கு வரும் புள்ளினங்களை ஓட்டிக் காவல் புரிந்துறையும் எம்பால் அமைந்த நலன் யாது பயன் தருவதாம்; புலவு நாறுதும்-எமது மேனி புலால் நாறுவது காண்; செல நின்றீமோ- ஆதலால் நீ சேய்மைக் கண்ணே சென்று நிற்பாயாக; பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை-பெருங்கடலில் விளையும் பொருள் கொண்டு வாழும் எமது சிறிய நல்வாழ்க்கை; நும்மொடு புரைவதோ அன்று - நும் உயரிய வாழ்க்கைக்கு ஒத்ததாகாதன்றோ; எம்மனோர்இல் செம்மலும் உடைத்து - எம்மவர் குடியின்கண் நிரல் அல்லோர்க்கு நேர்படாமை யாகிய செம்மையியல்பும் உண்டு, அறிக எ.று. பெரும, இவள் பரதவர் காதல் மகள்; நீ கடுந்தேர்ச்செல்வர் காதல் மகன்; புள்ளோப்பும் எமக்கு நலன் எவன்? புலவு நாறுதும், செலநின்றீமோ; எம் சிறுநல் வாழ்க்கை புரைவதோ அன்று; எம்மனோர் இல் செம்மலும் உடைத்து எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இவளே, நீயே என நின்ற சீர்கள் கூனாய்க் கட்டுரைச் சுவைபட வந்தன. "சீர் கூனாதல் நேரடிக்கு உரித்து"1 என்பது தொல்காப்பியம். காமர் சிறுகுடி, விரும்பத்தகும் சிறுகுடி. கடலலைகள் தம்மில் மோதி நுரைக்குமாறு கலஞ் செலுத்திச் செல்வது பற்றிக் கலங்க உள்புக்கு என்றார். நீனிறம் என்ற விடத்து நீலம் கடை குறைந்தது. நியமம், கடைத்தெரு, கடைகள் தோறும் பலவேறு கொடிகள் உயர்த்துவது பண்டையோர் மரபு. கடுந்தேர், விரைந்து செல்லும் வலிய தேர். பண்டி இரண்டு உருளையும், தேர் நான்கு உருளையும் கொண்டவை; பண்டியை இந்நாளில் வண்டி எனவும் பண்டையோர் சாகாடு எனவும் வழங்குவர். அறுத்த, அன்பெறாத அஃறிணைப் பலவறிசொல்: அறுக்கப்பட்ட துண்டங்கள் மேனின்றது. உணக்கல் உலரவைத்தல். நின்றீமோ, முன்னிலை யொருமை முற்றுவினைத் திரிசொல்; இகரவீறு நீண்டு மோ என்னும் முன்னிலையசை பெற்றது. பெருநீர், பெரிய கடல். கடலிடத்தே விளையும் மீன் முதலிய பொருள் கொண்டு வறுமையின்றி வாழும் நல்வாழ்வு என்றற்குப் பெருநீர் விளையுள் சிறு நல்வாழ்க்கை என்றார்: "வானம்வேண்டா வறனில் வாழ்க்கை"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. புரைதல் ஒத்தல் இல், குடிப்பண்பு செம்மல், செம்மை; தலைமையுமாம். களவின்கண் தோழியின் கூட்டம் பெற எண்ணிய தலைமகன், தலைவி போந்து விளையாட்டயரும் கானற் சோலையை அடைந்து, அவள் கண்ணாற் காட்டிய உயிர்த் தோழியைக் கண்டு அவளோடு தக்காங்கு உரையாடித் தன் காதற் கருத்தை அறிவித்தமையின், அவள் தலைவிக்கும் அவற்கும் உள்ள முன்னையுறவை அறிந்துகொண்டாளாயினும், காதலுறவு முறுகிப் பெருகுதல் வேண்டித் தலைவியை அருமை செய்து அவனை அயர்ப்பிக்கும் நெறி மேற்கொண்டு இருவர் பாலும் கிடக்கும் நிலைமை வேறுபாட்டைக் கூறி அவனைச் சேட் படுக்கின்றாள். சேட்படுத்தலாலது, நெருங்கவிடாது சொல்லாலும் செயலாலும் இருவரையும் சேய்மைப்பட நிறுத்தல். முதற்கண் நீயும் இவளும் பிறந்த இடத்தால் வேறுபட்டீ ராயினும், குடிவரவும் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு உடையன என்பாள், இவள் பிறந்தது கானற்கண் உள்ளதோர் சிறுகுடி, நீ பிறந்தது ஒரு பெரிய மூதூர் என்பாள் கானல் நண்ணிய சிறுகுடி என்றும், நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர் என்றும் கூறினாள். சிறுகுடி யாயினும் அழகிய இயற்கைச் சூழ்நிலையால் யாவர் மனத்தையும் ஈர்த்து இன்புறுத்தும் ஏற்றமுடைய தென்றற்குக் காமர் சிறுகுடி எனச் சிறப்பித்தாள். இவள் பெற்றோர் கலங்கொண்டு கலங்காக் கடலும் கலங்கு மாறு அதனுள் அஞ்சாது சென்று மீன் வேட்டம் புரியும் விறலினர் என்பாள், நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன்எறி பரதவர் என்றும், நின் பெற்றோர் கடற்குட் செல்ல மாட்டாத கால்வலிய நெடுந்தேரை நிலத்தில் கடிது செலுத்தும் செல்வர் என்பாள், கடுந்தேர்ச் செல்வர் காதல் மகன் என்றும் வேறுபடுத்தாள். "கடலோடா கால்வல் நெடுந்தேர்"1 என்பர் திருவள்ளுவர். இவ்வாறு குடிவரவும் தொழிலும் காட்டி வேறுபடுத்த தோழி, இனப்புள் ஓப்புதும் புலவுநாறுதும் என்றது. எமது நட்பு நினக்கு இன்பம் செய்யாது என ஒப்பின்மை காட்டிச் சேட்படுத்தது. நினது உயர்வை நோக்க எமது வாழ்க்கையின் சிறுமை ஆற்றவும் ஒப்பதன்று; எம்மில் உயர்ந்த கூட்டம் வேண்டப்படுமாயின், எம்மனோரில் அது கிடைக்கப் பெறும் என்பாள் எம்மனோரில் செம்மலும் உடைத்து என்றாள் தம்மனோரை மீனெறி பரதவர் என்றும், தமது வாழ்க்கையைப் பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை என்றும் கூறியது, செல்வ வுயர்வன்று யாம் பெரிதும் விழைவது, செம்மை சான்ற அன்பே என்றும், அதனைச் செயல் முறையில் நிறுவி வரைந்து கோடலை மேற்கொள்க என்றும் தோழி கூறினா ளாயிற்று. "நாற்றமும் தோற்றமும்"2 என்ற நூற்பாவின் "பெருமையிற் பெயர்ப்பினும்" என்ற பகுதிக்கு இப்பாட்டினை யோதிக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும்3 அதற்கே இதனைக் காட்டினர். "ஏனோர்பாங்கினும்" என்ற நூற்பாவுரையுள் "கடுந்தேர்ச் செல்வன் காதல்மகனே! என்றது அருமை செய்து அயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர். 46. கோட்டம்பலவனார் இவர் பெயர் அச்சுப்படியில் கொட்டம்பலவனார் என்று காணப்படுகிறது. கோட்டம்பலம் என்பது சேரநாட்டு ஊர்களுள் ஒன்று. இப்போது கொச்சி நாட்டு முகுந்தபுரம் பகுதியில் அம்பலக்கோடு என்ற பெயருடன் பழமைச் சிறப்புக் குன்றாமல் இருக்கிறது. சேர நாட்டை யாண்ட கோதையரசருள் மாக்கோதை என்பான் இறுதி நாளில் இவ்வூர்க்கண் இருந்து மறைந்தமை பற்றிப் பின்வந்த சான்றோர் அவனைக் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று குறித்தனர். மாக்கோதை என்ற பெயருடைய வேந்தர் வேறு இருந்தமையின், இவ்வாறு குறித் தனர். மாக்கோதையாகிய முதல்வன் பெயரால் வஞ்சிமா நகரின் ஒரு பகுதி மாக்கோதைப் பட்டினம் என்று வழங்கிவந்தது. வஞ்சிக்களம் வஞ்சிக்குளம் எனவும், அஞ்சைக்களம் எனவும் மருவியதுபோல, மாக்கோதைப் பட்டினம், மகோதையார் பட்டினம், மகோத்தியா பட்டினம் எனவும், மாக்கோதை மகோதை எனவும் மருவின. இவ்வாறே கோட்டம்பலமும் அம்பலக்கோடு என மாறியது. கோட்டம்பலத்தினின்றும் மதுரைக்குப் போந்து சான்றோர் நிரலில் இடம் பெற்ற போது இவர் கோட்டம்பலவனார் எனப்படுவா ராயினர்போலும். கோட்டம்பலவன் என்பதே இவர் இயற்பெயராகவும் இருந்திருக்கலாம். இவர் பாடியன இத்தொகை நூலுள் உண்டு. இன்ப மனைவாழ்வில் இனிதிருக்குங்கால், தலைமகன் தன் மனைவியிற் பிரிந்து சென்று செய்தற்குரிய கடமை கருதித் தோழியை நோக்கித் தன் பிரிவுக்குறிப்பை உணர்த்தினான். இல்லிருந்து நல்லறம் செய்வோர்க்குப் பொருள் ஈட்டுதல் கடன் என்பதுபற்றித் தலைவன் பிரிய வேண்டிய குறிப்பைக் கேட்ட தோழி. கூர்த்த மதியினளாதலால், "நீவிர் கருதும் பொருள் இன்பநுகர்ச்சிக்கு ஏற்ற வாய்ப்புடைய இளமைச் செவ்வியும் இன்பக் கூட்டமும் போலச் சிறப்புடைய தன்று; பொருளே போல இளமையும் இன்பமும் நிலையாமையுடைய வாயினும். அவற்றின் நிலையாமை, பொருளினும் மிக விரைந்த இயல்பிற்று; அதனை அறியாதீர் போல யான் எடுத்தோதல் வேண்டா; ஆயினும் மன்னாப் பொருள் கொண்டு மன்புகழ் நிறுவுதல் குறித்துப் பிரிகின்றீர் நீவிர் இவ்வாறு செல்வதனால், இவ்வுலகத்தில் இளமையும் இன்பமும் எய்கணையின் நிழல்போல மிகவிரைந்து கெடும் என்பதை அறிந்து அவற்றைப் பேணாதவராவீர்" என்று பேசினாள். தோழியது இக் கூற்றின்கண் பொருளும் இன்பமும் இளமையும் நிலையாமை யியல்பால் தம்மில் ஒத்தன வாயினும், நின்று கெடும், பொருளைப் பேணி நில்லாது விரைந்து கெடும் இன்பத்தையும் இளமையையும் நோக்காது பிரியக் கருதுவது நன்றன்று என்னும் வன்புறை மறைந்து கிடப்பது கண்ட கோட்டம்பல வனார் அத்தோழி கூற்றை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலின் கழியும்இவ் வுலகத்துக் 1காணீர் என்றலோ அரிதே அதுநனி பேணீ ராகுவீர் ஐய2 என் தோழி பூணணி யாகம் புலம்பப் பாணர் 3உயிர்ப்பின் நல்யாழ் உடைமருப் பன்ன ஊழுறுபு விளைந்த கொன்றையந் தீங்கனி பறையறை கடிப்பின் அறை4யறையாத் துயல்வர வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து நன்வா யல்லா வாழ்க்கை மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யாம் எனவே. இது, பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை வைகல் தோறும்-நாடோறும்; இன்பமும் இளமையும்-இல்லிருந்து செய்யும் நல்லறத்தால் விளையும் இன்பமும் அதனை நுகர்தற் குரிய இளமைச் செவ்வியும்; எய்கணை நிழலில் கழியும் இவ்வுலகத்து-எய்யப்பட்டு ஓடும் அம்பினது நிழல்போல விரைந்து மறையும் இவ்வுலகியற் பண்பினை; காணீர் என்றல் அரிது-நீவிர் அறியீர் என்பது பொருந்துவதன்று; அது நனி பேணீராகுவீர்-அதனை அறிந்தும் பேணுதலைச் செய்யாதீராகுவீர்; ஐய: என் தோழி பூண் அணி ஆகம் புலம்ப-என் தோழியாகிய தலைவியது சிறந்த பூணாரம் அணிந்த மார்பு அப்பூண் கழிந்து தனிமையுற்று வாட; பாணர் உயிர்ப்பின் நல்யாழ் உடை மருப்பு அன்ன-பாணரது நல்ல இசையினை நல்கும் யாழினின்றும் உடைந்து நீங்கின கோடு போல; ஊழ் உறுபு விளைந்த கொன்றையந் தீங்கனி-முறையாக முற்றி விளைந்த கொன்றையின் இனிய கனியின் நெற்று; பறை அறை கடிப்பின்-பறையை அடிக்கும் குறுந்தடி போல; அறை அறையாத் துயல்வர-பக்கத்தே நிற்கும் பாறையின்மேல் அறைந்துகொண்டு அசையுமாறு; வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து-வெவ்விய காற்று மோதி அலைக்கும் மூங்கில் நிறைந்த காட்டின்கண்; எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து-துன்பம் மிகுதற்கு இடமாகிய கடத்தற்கு அரிய சுரத்தைக் கடந்து; நன்வாய் அல்லா வாழ்க்கை-நல்ல இன்ப நுகர்ச்சிக்கு அமையாத வாழ்வாகிய; மன்னாப் பொருட்பிணி-நிலையாத பொருளைப் பேணிச் செல்லும் வாழ்வை விரும்பி; பிரிதும் யாம் என-யாம் பிரிந்து செல்கின்றேம் என்பதனால் எ.று. ஐய, என் தோழி ஆகம் புலம்ப, நன்வா யல்லா வாழ்க்கையாகிய மன்னாப் பொருட்பிணி விரும்பி யாம் பிரிதும் எனவே, இன்பமும் இளமையும் வைகல்தோறும் எய்கணை நிழலிற் கழியும் இவ்வுலகத்துப் பண்பை நீவிர் காணீர் என்றல் அரிது; மற்று, அது நனி பேணீ ராகுவிர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. வில்லின்கண் தொடுத்து எய்யப்பட்ட கணை என்றற்கு எய்கணை என்றார். கணைக்கு நிழலுண் டெனினும், அது செல்லலும் செலவின் கடுமையால் கட்புல னாகாது என அறிக. என்றலோ அரிதே என்றவிடத்து ஓகாரம் சிறப்பு; ஏகாரம் அசைநிலை. பிரிதும் யாம் எனவே என ஏதுக் கூறலின், பேணீராகுவிர் என ஆக்கவினை பெற்றது. உயிர்ப்பு, ஈண்டு யாழின் இசைமேற்று. கொன்றையிடத்துப் பழுத்த கனியின் நெற்று யாழினின்று உடைந்து வீழ்ந்த கோட்டுக்கு ஒப்பாதலை, "பாணர்கைதொழு மரபின் முன்பரித்திடூஉப் பழிச்சிய, வள்ளுயிர் வணர்மருப் பன்ன ஒள்ளிணர் சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. விளைந்த தீங்கனி எனவே, முற்றி யுலர்ந்த நெற்று என்பது பெற்றாம். வெவ்விய காற்று அலைத்தலால், கொன்றையின் நெற்று, பாங்கர் நிற்கும் பாறையிற் பட்டு ஒலிப்பது, கடிப்பு கொண்டு பறையினை அறைந்து ஒலிப்பதுபோல உளது என்பது கருத்து. விளைந்து தோன்றும் நெற்றுக்கு யாழ்க் கோடும், அது பாறையை அறைந்து துயல்வருங்கால் பறையறையும் கடிப்பும் உவமமாயின. வேய்பயில் அழுவத்தின்கண் வெவ்வளி தோன்றின் தீப்பிறந்து வழிச்செல்வோர்க்கு மிக்க துன்பத்தைச் செய்யுமாதலின் எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் என்றார். அழுவம் அடர்ந்த காடு. பொருட்பிணி பொருள்மேல் உளதாகிய பற்றுள்ளம்; பொருளின்கண் உள்ளம் பிணிப்புண்டு அதனைச் செய்தற்கண் அல்லது பிறவற்றின்கட் செல்லாமை பற்றிப் பொருட்பிணி எனப்பட்டது. "நிலையரும் பொருட்பிணி"2 எனப் பிறரும் வழங்குதல் காண்க. இல்வாழ்க்கைக்கண் பெறற்குரியன இன்பமும், அதற்கு உரிய செவ்வியாகிய இளமையு மாயினும், அவை கணந்தோறும் காலத்தால் குறைக்கப்படுவது உலகியலின் சிறப் புடைத் தொழிற்பண்பாதலின் வைகல் தோறும் இளமையும் இன்பமும் கழியும் இவ்வுலகத்து என்றும், கட்புல னாகாது விரைந்து கழியுமாறு தோன்ற எய்கணை நிழலின் கழியும் என்றும் தோழி தலைமகற்குக் கூறினாள். "நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாள துணர்வார்ப் பெறின்"3 எனத் திருவள்ளுவனார் குறிப்பது காண்க. பொருள் வேட்கையாற் பிணிப்புண்டு நாளும் அதனை ஈட்டலும் காத்தலுமாகிய செயல்வகையே நினைந்தொழுகுவாருடைய வாழ்வின்கண் பொருட்பயனாகிய இன்ப நுகர்ச்சி தக்க இடம் பெறாமையின், அதனை நன்வாய் அல்லா வாழ்க்கை யென்றும், இன்பம் வேண்டாது ஈட்டப்படும் அப்பொருளும் நிலைபேறுடைய தன்று என வற்புறுத்தற்கு, மன்னாப் பொருட்பிணி என்றும் எடுத்துரைத்தாள். பொருள்வேட்கை நல்குவது துன்பமே யாதலின் அதனைப் பொருட்பிணி என இகழ்ந்தாள். இன்பமும் இளமையும் வற்புறுத்தற்கு இவ்வுலகத்து இயல்பைக் காணாமையும் பேணாமையும் அறிவுடைச் செயல்களாகா என்பதை, "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்"1 எனச் சான்றோர் கூறுவதனால், அது நனி பேணீராகுவிர் என்றும், தலைமைப் பண்புடைய நீ இவையிற்றை அறியாய் எனக் கருதல் ஆகாது என்றற்குக் காணீர் என்றலோ அரிதே என்றும் இயம்பினாள். கணவன் மனையின்கண் இல்லாதபோது குலமகளிர் பூணாரங்களால் தம்மை ஒப்பனை செய்து கோடல் கற்புநெறி யன்மையின் பூணணி யாகம் புலம்ப என்றாள். எனவே, கழிவது தெரியாது கணந்தோறும் தானே தேயும் இளமையின்பம் நோக்காது, நின்று செலவிடத்தேயும் பொருள் நச்சிப் பிரியக் கருதுவது நன்றன்று எனத் தோழி செலவழுங்குவித்தவாறாம். 47. நல்வெள்ளியார் இவர்பெயர் மதுரை நல்வெள்ளியா ரென்றும் நல்லொளியார் என்றும், ஏடுகளில் காணப்படுகிறது. மதுரையொடு சேர்த்துக் கூறப்படுவதால் இவர் மதுரைக்கு உரியவர் என்பது தோன்றும். இவரைப் பெண்பாற்புலவர் எனக் கருதுவதுண்டு. இவருடைய பாட்டுக்கள் நல்ல ஓசை நயமும் பொருட்சிறப்பும் உடையன. தலைமகனது குறையை நயத்தல் வேண்டும் எனத் தோழி அவனுடைய உயர்வையும் தன்பால் அவன் நடந்துகொண்ட தன்மையையும் சுருங்கக் காட்டுவாளாய், "புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களில் பணிமொழி பயிற்றி"னான் என்றும், அவன் தன் முன் ஒழுகிய திறத்தையும், எய்திய உள்ளச் சிதைவையும் உண்மை நிகழ்ச்சிபோலப் படைத்துக் கொண்டு, "இகுபெயல மண்ணின் ஞெகிழ்பஞர் உற்ற என், உள் அவன் அறிதல் அஞ்சி உள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ, வெரூஉமான் பிணையின் ஒரீஇ" நின்றேன் என்றும் பிறாண்டு இவர் கூறுவனவும் பிறவும் உறாஅர் போன்று உற்றார் குறிப்பு இதுவெனக் காட்டி மிக்க அறிவின்பம் தருவனவாகும். இவர் பாடியன ஏனைக் தொகைநூல்களிலும் உண்டு. களவுக் காலத்தில் தலைமக்கள்பால் தோன்றிச் சிறக்கும் காதலன்பு பெருகி வளர்வது கருதித் தலைவன் களவொழுக்கத்தையே விரும்பி யொழுகுவன். அவனைக் காண்பது பல வகையிலும் இடையீடு படுவதால் தலைவி வருந்தி மேனி வேறுபடுவள். உண்மையறியாத தாயர் கட்டினும் கழங்கினும் அவ்வேறுபாட்டுக்குக் கழுவாய் காண முயலுவர்; முடிவில் இவட்கு இவ்வேறுபாடு முருகனால் ஆயது என நினைந்து மறி யறுத்து வெறி எடுக்கத் துணிவர். இந்நிலையில், தோழியும் தலைவியும் தம்முள் அளவளாவிக் கொள்ளுங்கால், தனக்குண்டாகிய மேனி வேறுபாடு இந்நிகழ்ச்சியால் நீங்கப் போவதில்லை; யாதலால் இதனைத் தலைவற்கு அறிவித்தல் வேண்டும் எனத் தலைவி துணிகின்றாள். அன்று மாலைப் போதில் மனையின் சிறைப்புறமாக அவன் வரக்கண்டு தோழி தலைவியை ஒரு பக்கத்தே நிறுத்தி, அவன் செவிப்படுமாறு, "இங்கே நம் மனைக்கண் தாயார் முதலியோர் செய்யும் கட்டும் கழங்கும் வெறியு மாகிய இவற்றை யான் கானநாடனாகிய நம் காதலற்குத் தெரிவித்தால் என்னாம்?" என்று அவளோடு சொல்லாடுகின்றாள். இதனைக் கேட்பின் தாயரது அறியாமை கண்டு நம் தலைவர் தம்முள் நகைப்ப ரென்பாள் போலத் தலைவி முறுவல் செய்கின்றாள். "இல்லை, நமது காதல் நிலையை உரிய நெறியில் நின்று கூறுவேமாயின், அவன் விரைய வரைந்து கொள்ளக் கருதுவன்" என்பாளாய் அவன் நாட்டுக் காட்டில் பிடியும் கன்றும் உடன்வர வந்த பெருங் களிற்றைப் புலியொன்று தாக்கிக் கொன்றொழித்ததாக, அது கண்டு அஞ்சிய பிடி, தன் கன்றைத் தழீஇக்கொண்டு போர்க் களத்தே பகைவரால் பெரும் புண் செய்யப்பட்டோர் வருந்திக் கிடப்பது போல் வருந்துவதாயிற்று என்ற நிகழ்ச்சி ஒன்றைக் காட்டினாள். இதனை இப்போது அவள் எடுத்தோதுவது எற்றுக்கு என எண்ணமிட்ட தலைவன் பெருங் களிறு என்றது தலைவியின் மேனி நலமாகவும், அதனைப் புலி கொன்றது, அந்த நலத்தைப் பசலை தோன்றி அழிப்பதாகவும், பிடி தன் கன்றைத் தழீஇக் கொண்டு வருந்துவது, தலைவன்பால் உளதாகிய காதலன்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு தலைவி வருந்துவதாகவும் தோழி தனக்கு உணர்த்தியதாகக் கொள் கின்றான். இவ்வண்ணம் தோழி நிகழ்த்திய கூற்றின்கண் அமைந்து கிடக்கும் அறிவுநுட்பமும் சொன்னலமும் கண்டு வியந்த ஆசிரியர் நல்வெள்ளியார் அக்கூற்றை இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதியப் பாடியிருப்பது அவரது புலமை நலத்தை விளக்கி நிற்பது கண்டு இன்புறத்தக்கது. பெருங்களி றுழுவை அட்டென இரும்பிடி உயங்குபிணி வருத்தமொ டியங்கள் செல்லாது நெய்தற் பாசடை புரையும் அஞ்செவிப் பைதலம் குழவி தழீஇ ஒய்யென அரும்புண் ணுறுநரின் 1வருந்துபு வைகும் 2கான நாடற் கிதுவென 3யான்றற் கூறின் எவனோ தோழி 4வேறுணர்ந்து அணங்கறி கழங்கிற் கோட்டம் காட்டி வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து அன்னை அயரும் முருகுநின் பொன்னேர் பசலைக் குதவா மாறே. இது, சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது. உரை உழுவை பெருங்களிறு அட்டென - புலியானது தன் காதற்பெருங்களிற்றைக் கொன்றதாக; இரும்பிடி - பெரிய பிடியானை; உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது - உடல் வாடுதற்கு ஏதுவாகிய உள்ளத்தைப் பிணித்து வருத்தும் துயரமிகுதியால் இயக்கமின்றி; நெய்தற் பாசடை புரையும் அஞ்செவி - நெய்தலின் பசிய இலைபோலும் அழகிய காது களையுடைய பைதலம் குழவி ஒய்யெனத் தழீஇ-இளைத்த தன் கன்றை விரைந்து தழீஇக்கொண்டு; அரும் புண்ணுறு நரின் வருந்துபு வைகும் - பெரிய புண்ணுற்று வீழ்ந்த போர் மறவர் போல வருத்தமுற்றுக் கிடக்கும்; கான நாடற்கு - காட்டையுடைய நாடனாகிய தலைமகற்கு; இது என யான் தன் கூறின் எவனோ - நேரிற் கண்டு இங்கு நிகழ்வது இஃது என்று தனக்கு எடுத்துக் கூறினால் என்னாம்; தோழி -; வேறு உணர்ந்து - அவனால் நினக்கு உண்டாகிய இவ் வேறுபாட்டைப் பிறிதொன்றாகப் பிறழவுணர்ந்து: அணங்கறி கழங்கின் - தெய்வம் அணங்கிற்றென உரைக்கும் கழங்குகொண்டு; வெறி என உணர்ந்த உள்ளமொடு - வெறியெடுத்தா லன்றி இவட்கு இவ்வேறுபாடு நீங்காது என்று உணர்ந்த உள்ளத்துடன்; கோட்டம் காட்டி மறியறுத்து அயரும் முருகு - வெறிக்களம் அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருகு வழிபாடு; நின் பொன்னேர் பசலைக்கு உதவாமாறு - நின் பொன்போலும் பசலை நீங்குதற்குப் பயன்படாதா தலால் எ. று. தோழி, வேறுணர்ந்து கோட்டம் காட்டி, வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து அயரும் முருகு, பசலைக்கு உதவாமாறு. நாடற்கு யான் இதுவெனத் தற்கூறின் எவனோ என மாறிக் கூட்டி வினைமுடிபு செய்க. பின்னர்க் கூறப்படும் வெறியாட்டினை முன்னர்ச் சுட்டி இது என்றார்; செய்யுளாகன் சுட்டு முற்பட வந்தது. புலியாற் கொல்லப்பட்ட களிற்றைப் பெருங்களிறு என்றமையின் அதற்கு ஒத்த பிடியை இரும்பிடி என்றார். உயங்குபிணி, உயங்குதற் கேதுவாகியபிணி; வேறு யாதும் நினையவிடாது உள்ளத்தைப் பிணித் தலின், களிற்றை யிழந்த பிடியின் துன்பத்தைப் பிணி என்றார். பாசடை பசுமையான இலை. பைதல், வாட்டம். எளிதில் தைத்து ஆற்றற் கொண்ணாத பெரும்புண் அரும்புண் எனப் பட்டது; விழுப்புண்ணுமாம். தற்கூறல், தலைவற்கு நேரே கூறல். தெய்வம் அணங்கிற்று என்று கூறலே கழங்கின் இயல்பாதல் பற்றி அணங்கறி கழங்கு என்றார். கோட்டம், வெறியாடுதற் கமைத்த களம். இனி அக்களத்தே முருகனுக்குரிய படையாகிய வேல் நடப்பட்ட இடம் கோட்டம் எனப்பட்டது எனினுமாம்; "உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்"1 என அடிகளும் குறிப்பது காண்க. "நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக், களம் நன் கிழைத்துக் கண்ணி சூட்டி"2 என்றும் "அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர்"3 என்றும் சான்றோர் குறிப்பர். முருகனை நோக்கிச் செய்யப்படும் வழிபாட்டை முருகாற்றுப்படுத்தல் என்பதும் வழக்கு; "முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்"1 எனச் சான்றோர் உரைப்பது காண்க முருகு என்றது. ஈண்டு முருகற்குச் செய்யப்படும் வெறியாட்டின் மேற்று. பசலை பொன்னிறத்த தென்றல் மரபு; 'மணியேர் மாணலம் சிதையப் பொன்னேர் பசலை பாயின்று மன்னே"2 என வருதல் காண்க மாறு, ஏதுப் பொருள்பட வந்ததோர் இடைச்சொல். தலைவி மனையின் சிறைப்புறமாக நின்ற தலைமகன் செவிப்படுமாறு தோழி தலைவியொடு சொல்லாடுவாள், அவன் உய்த்துணர்ந்து உரிய செயல் மேற்கொள்ளுமாறு உள்ளுறை வகையாற் கூறலின், தலைவியை நோக்கித் "தோழி, தலைவற்குக் கூறாமை ஆகாதாகலின் நேரே அவன் முன்னின்று நிகழ்வது இதுவெனக் கூறல் வேண்டும்; தலைவ னாகிய உயர்நிலை ஆடவன்முன் யான் நேர்நின்று பேசுதல் பெண்மைக்குக் குற்ற மாங்கொல் என வருந்துகிறேன்" என்பாள், கான நாடற்கு யான் தற்கூறின் எவனோ தோழி என்றும், அதனைச் செவியேற்கும் தலைவன், நிகழ்வது இது என்றது எதனை எனத் தனக்குள் வினாவலின் அதனை விளக்குவானாய், "நின்மேனி பசந்து வேறுபடுதற்கு முதல்வன் அவனாக அதனை அன்னை வேறுபடக் கொண்டாள்" என்பாள் வேறுணர்ந்து என்றும், அதன்மேல் அவள் கழங்கின் வாயிலாக நின் வேறுபாட்டுக்கு ஏது முருகணங்கு என்று அறிந்தார் என்பாள், அணங்கறி கழங்கின் என்றும், அறிந்தவள், அது வெறியானன்றித் தீராதெனத் துணிந்தனள் என்பாள், வெறியென உணர்ந்த உள்ள மொடு என்றும், வெறியெடுப்பவள் செய்வன இவையென விளக்கலுற்றுக் கோட்டம் காட்டி மறியறுத்து அயரும் முருகு என்றும், தலைவனது வரைவானன்றி இவ்வாற்றா லெல்லாம் நின் வேறுபாடு நீங்காது என்பாள் பொன்னேர் பசலைக்கு உதவாமாறு என்றும் கூறினாள். காதற் பெருங்களிற்றை உழுவை கொன்றதனால் பிடியானை வருத்தமொடு இயங்குதலின்றித் தன் கன்றைத் தழீஇக் கொண்டு வைகும் என்றது, தலைமகன் தொடர்பால் மேனி நலம் பசலையால் வேறுபட்டறியவே தலைவி அவனது காதலன்பொன்றையே தழீஇக் கொண்டு வேறு செயலற்றிருக்கின்றாள் என்றவாறு. 48. பாலை பாடிய பெருங் கடுங்கோ உடன்போக்கு வாயிலாகத் தலைமகளைத் திருமணம் செய்து கொண்டு மனையறம் புரிந்துறையும் தலைமகற்குத் தலைவியிற் பிரிந்து சென்று செய்யவேண்டிய தொரு வினை தோன்றிற்று. தன் பிரிவைத் தலைமகட் குணர்த்துமாறு அவன் தோழியிடம் உரைக்கவும், அவள், தலைவியது ஆற்றாமையை நன்கு அறிந்தவ ளாதலின், தலைவனுடைய செலவை விளக்கு வாள் போன்று, "நீவிர் செல்லக் கருதுங் காட்டின் வழியருமை நினைக்குங்கால் எனக்கு அச்சம் தருகிறது; முன்பு நீவிர் என் தோழியாகிய தலைவியை உடன்கொண்டு போனபோது காட்டில் நிகழ்ந்ததனை அவள் எனக்கு விளங்க உரைத்துள்ளாள்; காட்டில் கோங்கமரங்கள் மலர்ந்து விடியலில் தோன்றும் செம்மீன்போலச் சிறந்த காட்சி நல்க, நீவிர் அக்காட்டுவழியே சென்றுகொண் டிருக்கையில், முன்னே சென்ற வில்வீரராகிய மறவர் நும்மை வழிமறித்துப் போர் தொடங்கினராக, போர் உயிர்கொலையால் முடியாதவாறு நீவிர் அவர்களை வெருட்டி யோட்டியதும், அவர்கட்குப் பின்னே போந்த தலைவியின் தந்தையும் தன்னை யரும் நெருங்கியதும், அவரொடு போருடற்றின் அவர்கள் உயிர்க்கு ஏதமுண்டாமெனத் தலைவிபால் உள்ள அன்பால், மனம் இரங்கி அவர்கள் கண்ணிற் படாமல், நீர் மறைந்து கொண்டதும், இப்போது நினைத்தாலும் அன்று நிகழ்ந்தவாறே கண்ணெதிரே தோன்றாநின்றன. போரெனிற் புகலும் புகழ்மறவராகிய நீவிர் தலைவிபொருட்டுப் போரைத் தவிர்த்ததும் எமர் இடையூறுதரக் கண்டு புறங்கொடுப்பார் போல ஓடி ஒளித்ததும் நினையுங்கால் இப்போது நீவிர் பிரிவதாகக் கூறு வதும் அத்தகைய செயல்போலும் என என் உள்ளம் கருதுகிறது" என்று சொன்னாள். இவ்வாறு நிகழ்ந்தது நினைப்பிக்கு மாற்றால் தலைவன் செலவு தவிர்க்கும் தோழியின் சூழ்ச்சிநலம் கண்டு வியந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். அன்றை யனைய வாகி இன்றும்எம் கண்ணுள் போலச் சுழலும்1 மாதோ புல்லிதழ்க் கோங்கின் 2மெல்லவிழ் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு 3கடத்திடைக் கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் 4வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது அமர்இடை உறுதர நீக்கிநீ எமரிடை உறுதர 5ஒளித்த காடே. இது, பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை அன்றை அனைய வாகி - அன்று எவ்வாறு நிகழ்ந்ததோ அவ்வாறே; இன்றும் - ; எம் கண்ணுள் போலச் சுழலும் - எம் கண்ணெதிரே நிகழ்வது போலக் காட்சி தந்து நிலவா நின்றது; புல்லிதழ்க் கோங்கின் மெல் அவிழ்குடைப்பூ - புல்லிய இதழையுடைய கோங்கினது மெல்லிதாய் விரிந்த உட்குடைவான பூ; வைகுறு மீனின் நினையத் தோன்றி - விடியலில் தோன்றும் செம்மீன் என நினையுமாறு மலர்ந்து தோன்றி; புறவு அணிகொண்ட பூநாறு கடத்திடை - காட்டிடத்தை அழகு செய்தமையால் பூவின் மணம் கமழும் கானத்தின்கண்; கிடின் என இடிக்கும் கோற்றொடி மறவர் - கிடின் என்னும் ஓசையுண்டாக முழங்கி முற்பட வந்த திரண்ட தோள்வளை அணித்த மறவர்; வடிநவில் அம்பின் வினையர் - கூரியவாய் வடிக்கப்பெற்ற அம்புகளை யேந்திக் கொலைவினைக் குரியராய் வந்தாராக; அமர் இடையுறுதர அஞ்சாது நீக்கி - அவர்களை ஏறட்டுநின்று அவர்கள் நிகழ்த்த இருந்த போரை நிகழ்த்தமாட்டாதவாறு வெருட்டி யோட்டி; எமர் இடையுறுதர-அம்மறவர் பின்னே தொடர்ந்து தலைவியைத் தேடிப் போந்த எம் தந்தை தன்னையர் எதிரே வரக்கண்டு; நீ ஒளித்த காடு-அவரோடு போர் செய்வதை விரும்பாமல் நீ சென்று மறைந்து கொண்ட காடு எ-று. நீ ஒளித்த காடு அன்றை அனையவாகி இன்றும் எம் கண்ணுள் போலச் சுழலும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அவிழ்தல், இதழ் விரிந்து மலர்தல். குடைப்பூ, உட்குடைவான பூ. வைகுறுமீன், வைகறையில் தோன்றும் வெள்ளியாகிய செம்மீன். புறவு, முல்லைக் காடு. கோற்றெடி, ஈண்டு மறவர் தோளில் அணிந்த வளைமேற்று, வடிநவின் அம்பு வாய் கூரிதாக வடிக்கப்பட்ட அம்பு. வினையர், கொலைத் தொழிச்செய்பவர். அச்சுறுத்தி வெருட்டினமை தோன்ற நீக்கி என்றார். புறவணி கொண்ட கடம், பூநாறு கடம் என இயையும். இடிக்கும் மறவர் என்புழி இடித்தல் முழங்குதல். கிடின், ஓசைக் குறிப்பு. மணம் செய்து கொண்டு மனையறம் புரிந்தொழுகும் புது நாளில், தலைமகற்குப் பொருள்குறித்த பிரிவு முதற்கண் நிகழ்வது உணர்ந்த தோழிக்கு, அவன் செல்ல இருக்கும் காடு நினைவில் தோன்றியதும், உடன்போக்கும் அப்போக்கின்கண் காட்டிடத்தே நிகழ்ந்ததும் நினைவில் எழுதலும், அதனை அவற்கு உரைக்கலுற்ற தோழி அன்றை அனைய வாகி இன்றும் எம் கண்ணுள் போலச் சுழலும் மாதோ என்றாள். அதுகேட்டு மருண்டு நோக்கிய தலைவன் குறிப்பு. அதனை விளங்கக் கூறுக என்பது போலத் தோன்றவே, கொண்டுடன் போகிய காட்டின் நலத்தைக் கோங்கின் குடைப்பூ வைகுறுமீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடம் என்றாள். கோங்கின் பூக்களாலல் எங்கும் இனிய காட்சி கொண்டு திகழும் கடத்தின்கண், தலைவியைத் தேடுவான் தமர் விடுத்த மறவர் காண்போர்க்கு அச்சமுண்டாகுமாறு முழங்கிக் கொண்டு போந்தமை குறிப்பாள், கிடின் என இடிக்கும் கோற்றொடி மறவர் என்றும் அவர்கள் தலைவனோடு போர்விளைக்கும் கருத் தினராய் வந்தமைபற்றி வடிநவில் அம்பின் வினையர் என்றும், அவர்களைக் கண்டதும் தலைவியின் தமர் விடுப்ப முற்படப் போந்தவர் என்பது உணர்ந்து அவள் பொருட்டுப் பிறந்த அருளால், தலைவன் அவர் கட்குத் தீங்கு செய்ய விழையாமையின், தன் வின்மைத் திறத்தால் அச்சுறுத்தி அவர்களை வெருட்டி அவ்விடத்தினிறும் நீங்கி யோடச் செய்த செயலை வியந்து கூறுவாளாய் அமர் இடையுறுதர அஞ்சாது நீக்கி என்றும் தலைவியின் தமராயினார் அவளைக் கொண்டுதலைக்கழிந்தமை பற்றித் தலைவன்பால் உளதாய செற்றத்தால், நேர்ப்படின் கொடும் போர் விழைத்து உயிர்க்கு இறுதி விளைத்து கொள்வர் என்று கருதித் தலைவி பொருட்டால் தான் சென்று மறைந்து கொண்டான் என்பாள் எமர் இடையுறுதரநீ ஒளித்த காடு என்றும் கூறினாள். உடன்போக்கின்கண் தமர்போந்து நேர்படின், தலைவி பொருட்டுத் தலைமகன் ஒளித்துக் கொள்வதும், அப்போது அவற்குப் புகலிடம் தந்து உதவும் குன்று காடுகளைத் தலைமகள் வாழ்த்துவதும் இயல்பு. "அறஞ்சாலியரோ அறஞ்சாலியரோ, வறனுண்டாயினும் அறஞ்சாலியரோ, வாள்வனப் புற்ற அருவிக், கோள்வல் என்னையை மறைத்த குன்றே1" எனச் சான்றோர் பாடிக் காட்டுதல் காண்க. 49. நெய்தற்றத்தனார் இச்சான்றேருடைய இயற்பெயர் தத்தன் என்பது. நெய்தல் என்பது இவரது ஊர். நெய்தலங் கானல், நெய்தல் வாயில் என்பன போலும் பெயர் தாங்கிய ஊர்கள் பல தமிழகத்து உண்டு. அதனல், இவர் நெய்தல் தத்தனர் எனப்பட்டனர். நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியதனல் இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்றெனக் கருதுபவரும் உண்டு. அது கருத்தாயின் இவரைச் சான்றோர் பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்றற் போலவாதல், புறத்திணை பாடிய நன்னாகனாரைப் புறத்திணை நன்னாகனார் என்றாற் போலவாதல், நெய்தல் பாடிய தத்தனார் என்றோ நெய்தற்றிணைத் தத்தனார் என்றோ குறித்திருப்பர். அஃது இன்மையின் இவர் பெயரை அடுத்து நிற்கும். நெய்தல் என்ற சிறப்புப் பெயர், நெய்தல் என்னும் ஊரையோ நாட்டையோ குறிக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. களவொழுக்கம் பூண்ட தலைமக்களின் செயல்வகைகளில் குறிவழிக் கூடி யின்புறும் துறையொன் றுண்டு பகலினும் இரவினும் குறியிடத்தே ஒருவர் ஒருவரைக் கண்டு இன்புறுவர். இரவுக் குறிக்கண் ஒருகால் தலைவியின் தமர் கடல்வேட்டம் செல்லாது மனைக் கண்ணே தங்கினர். இதனை அறிந்த தோழி தலைமகட்கு முன்னரே தெரிவித்து, "நிகழ்ந்துள்ள இவ்விடை யீட்டைத் தலைவற்கு அறிவிப்பேமாக; இன்றேல் அவன் போந்து கூட்டம் பெறாது வருந்துவன்" என்பது தோன்றக் குறிப்பாய்க் கூறுகின்றாள். தலைவன் இரவுக் குறிக்கண் வருவது ஒருதலை யெனக் கண்ட தலைவி எவ்வகையாலேனும் தலைமகனைக் குறியிடத்தே காண்பதல்லது வேறு செயலில்லை யெனத் தன்னுள் ஒருப்படுவா ளாயினள். இவ்வுரையாட்டால் தலைவியது கற்புத் திட்பம் எய்துவது கண்ட தத்தனார், தனக்கு உண்டாகும் இடையீட்டினும் தலைமகன் உள்ளம் வருந்தவிடுவது நேரிதன்று எனத் தன் சொல்லால் தலைமகளை இரவுக் குறிக்கு இசைந்து ஒருப்படச் செய்யும் தோழியின் செயல்மாண்பை எண்ணி வியப்புற்றார். அவ்வியப்பின் சொல்லோவியமே இப்பாட்டு படுதிரை1 கொழீஇய பானிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே முடிவலை முகந்த முடங்கிறாப் பாவை படுபுள் ஓப்பலின் 2பகல்மாய்ந் தன்றே கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டமடிந் தெமரும் அல்கினர் ஏமார்ந் தனம்எனச் சென்றியாம் அறியின் ஏவனோ தோழி மன்றப் புன்னை மாச்சினை நறுவீ முன்றில் தாழையொடு கமழும் தெண்கடற் 3சேர்ப்பன் சிறுநல் லூர்க்கே இது, தலைமகளைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புற மாகத் தோழி ஆற்றாமை வியந்ததூ உமாம். உரை படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்-ஒலிக்கின்ற அலைகளால் கொழித்து ஒதுக்கப்பட்ட பால்போல் வெள்ளிய மணல் பரந்த; துறை-கடற்கானல் துறை; தொடியோர் மடிந்தென-வளை யணிந்த இளமகளிர் மடிந்து அடங்கின மையின்; புலம்பின்று-தனிமையுற்றுக் கிடக்கின்றது; முடிவலை முகந்த முடங்கிறா-முடிச்சுக்கள் பொருந்திய வலைகளால் பிடித்துக் கொணரப்பட்ட வளைந்த இறாமீன் உணங்கலை; படுபுள் பாவை ஓப்பலின்-கவர வரும் புள்ளினங்களைப் பாவை போலும் நீ ஓட்டும் செயலில் ஈடுபடுவதால்; பகல் மாய்ந்தன்று-பகற்போது கழிவதாயிற்று; கோட்டுமீன் எறிந்த உவகையர்-சுறாமீனைக் கொன்று கவர்ந்தமையால் உண்டான உவகையினை யுடையராய்; வேட்டம் மடிந்து-மீன் வேட்டைக்குச் செல்வதை விடுத்து; எமரும் அல்கினர்-எம்முடைய தந்தை தன்னையரும் மனையிடத்தே தங்கினர்; தோழி-; யாம் ஏமர்ந்தனம்-என இவ்வாற்றால் நாங்கள் காவலுடையேமாயினேம் என்று; அறியின் எவனோ - அறிவித்தால் என்னாம்; மன்றப்புன்னை மாச்சினை நறுவீ-ஊர்மன்றத்தின்கண் நிற்கும் புன்னையினது பெரிய கிளையிடத்துப் பூத்த நறிய பூக்கள்; முன்றில் தாழையொடு கமழும்-மனை முற்றத்தின்கண் உள்ள தாழைப்பூவொடு கூடி நறுமணம்கமழும்; தெண்கடற் சேர்ப்பன் சிறுநல்லூர்க்குச் சென்று-தெளிந்த கடலைச் சார்ந்த நெய்தல் நிலத் தலை மகனுடைய சிறிய நல்ல ஊர்க்கண் அவனுழைச் சென்று எ.று. தோழி, சேர்ப்பன் ஊர்க்குச் சென்று, துறை புலம்பின்று; பகல்மாய்ந்தன்று; எமரும் உவகையர் அல்கினர், யாம் ஏமார்ந்தனம் என அறியின் எவனோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. படுதிரை, ஒலிக்கின்ற கடல் அலை, வெள்ளிய நுண் மணல் பரந்த மேட்டிடம், பானிற எக்கர் எனப்பட்டது தொடியோர், புறத்துப் போய் விளையாடும் இளமகளிர். புலம்புதலாவது, மக்கள் வழக்காறின்றி இருத்தல். முதுகு வளைந்திருப்பது பற்றி முடங்கிறா என்றார்; "முடங்குபுற இறவோடு இனமீன் செறிக்கும்"1 எனப் பிறரும் கூறுப. இறா, ஆகுபெயர். பாவை, முன்னிலைப் பெயராயிற்று. இனி பாவை யென்றது இறாமீன் உணங்கலை என்பாரும் உண்டு; மணற்கண் உள்ள அறுகை முதலியவற்றின் தண்டுகளையும் கிழங்கு களையும் பாவை என்பதுண்டு: "அறுகைத் தழங்குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணுமணி யன்ன மாயிதழ்ப்பாவை2 எனவும் பதவின் பாவை முனைஇ மதவு நடை அண்ணல் இரலை"3 எனவும் சான்றோர் கூறுதல் காண்க. வரகின் தண்டினையும் பாவை யென்னும் வழக்கு, "புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை"4 என்பதனாலும் தெளியப்படும். இறாமீன் உணங்கல் இக்கூறிய பாவைபோன் றிருப்பது பற்றிப் பாவை யென்றார் எனக் கோடல் அமையும். கோட்டுமீன் சுறாமீன், மீன் இனத்துள் கோட்டுமீன் மிக்க வலியுடைமையும் கவர்தற் கருமையும் பற்றிக் கோட்டுமீன் எறிந்த உவகையர் என்றார். அறியின் என்றது பிற வினைப் பொருட்டு. தலைமகன் பொருட்டு இரவுக்குறி வேண்டும் குறிப்பினளாகிய தோழி, பகற்குறிக்கண் தலைமகனைக் கண்டு இன்புறுதற்கு ஏற்ற வாய்ப்புக்கள் நேரா தொழிந்தமை கூறலுற்று. மாலைப்போதில் இளமகளிர் மனைக்கண் மடிந்து ஒடுங்கு தலால் விளையாடற் கினிதமைந்த பானிற எக்கர் பரந்த கானற்றுறை தனிமையுற்ற தென்பாள், படுதிரை கொழீஇய பானிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்று என்றும், பகற்போதில் இறாமீன் உணங்கலைக் கவரும் புள்ளினங்களை ஓப்பும் தொழிலை நீ மேற்கொண்டிருந்த மையின் தலைவனைக் காண்டல் இயலா தொழிந்தது என்பாள், முடங்கிறாப் படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்று என்றும், எனவே, இனி இரவுக்குறியல்லது வேறு வழியில்லை என்றும் கூறினாள். இரவுக் குறியும் எளிதில் அமைவதன்று என்பாளாய், நமர் கோட்டுமீன் எறிந்த உவகையால் மேலும் வேட்டம் விரும்பாது மனைக்கண் தங்கின ராதலால் இதனை நாம் சென்று தலைமகற் கறிவித்தல் நன்றன்றோ என்றற்குக் கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் படிந்து எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனச் சென்று யாம் அறியின் எவனோ தோழி என்றும், அறிவியாதொழியின் இரவுக்குறி இடையீடு படும்; அறிவித்தல் நம் பெண்மைக்கு இயல்பன்று; செய்வகை அறியேன் என்பாள், சென்று நாம் அறியின் எவனோ என்றும் மொழிந்தாள். புன்னை மன்றத்தின்கண் நின்ற தாயினும் அதன் நறுவீ நம் முன்றிலிடத்துத் தாழையொடு கமழும் என்றது, தலைமகன் தன் சிற்றூரின்கண் உள்ளானாயினும் நின்னை இன்றியமை யானாய்க் குறியிடம் போதருதல் ஒருதலை யாகலின், தமர் மனைக்கண் தங்கினாராயினும் சென்று கூடுதலே செயற்பாலது என்று தோழி கூறியவாறு, இதனாற் பயன் தலைவி கேட்டு இரவுக்குறி நயப்பாளாவது. 50. மருதம்பாடிய இளங்கடுங்கோ பண்டைச் சேரர் குடியில் கடுங்கோக் குடி யென்பது ஒன்று; அவருள் செல்வக் கடுங்கோ வாழியாதன் முன்னோனாவன், அவர்களது நாடு மலையாள மாவட்டத்து வள்ளுவ நாட்டின் கீழ்ப்பகுதியில் இருந்ததென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் அவர்கள் தென்குமரிப் பகுதியில் தங்கிப் பாண்டியர் ஆதரவில் அரசுநிலையிட்டு வாழ்ந்தனராக, அப்பகுதி கடுங்கோ நாடு எனப்படுவதாயிற்று. தென்குமரிப் பகுதிக்கு வருமுன் கடுங்கோக்களில் சிலர் நல்லிசைப் புலவர்களாக விளங்கினர். பெருங்கடுங்கோ என்பவர் பாலைப் பாட்டுக்கள் பாடுவதில் சிறப்புற்று விளங்கினார். அவருள் இளங்கடுங்கோ மருதப்பாட்டுப் பாடிப் புகழ் மேம்பட்டனர். மருதம் பாடியவர் எனச் சான்றோர் புகழும் சிறப்புடைய இவர்தம் மருதப் பாட்டுக்களில் பல மறைந்து போயினமை வியப்புத் தருகிறது. சோழநாட்டில் வாழ்ந்த வேளிருள் ஒருவற்கு அஃதை என்னும் பெயருடைய மகளொருத்தி யிருந்தாள். அவளை மணக்க வேண்டிச் சேரபாண்டியர் குடியிற் பிறந்தார் இருவர் அவ்வேளை மகட்கொடை வேண்டினர்; மற்று, அவன் எக் காரணம் பற்றியோ மறுத்தான். அதனால், கடும்போர் ஒன்று பருவூர் என்னுமிடத்தே நிகழ்ந்தது. அப்போரில் மகட்கொடை வேண்டிய இருவரும் தோற்றோடவே, வேளிர்க்குத் துணையாய் நின்ற சோழர்குடித் தோன்றல் வெற்றி பெற்றான். இருவர் படையிலும் நின்ற களிறுகள் சோழற்கு உரியவாயின. இந்நிகழ்ச்சியைப் பாடிய இளங்கடுங்கோ தோற்ற வேந்தர் பெயரைக் குறியாது மறைத்தது, மன்னர் குடியின் மான மாண்பு காக்கும் அவரது இயல்பையே புலப்படுத்துகிறது. இந்நிலையில், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ, தமிழ் மூவேந்தர் சிறப்பை விதந்து கூறி ஒருவர் புகழ்க்கும் மாசு தோன்றா வகையில் தமது நூலை உரைத்திருக்கும் மரபு சேரர்குடியின் கருவிலே வாய்த்த திருவாம் என நினைத்தற்கு ஏதுவாகின்றது. ஒருவன்பால் எத்துணை உண்மையன்புடைய ராயினும், பரத்தையர் அவன் குடிவளர்ச்சிக் கேற்ற மகப்பயந்து பயன்படும் மனைமாட்சி யுடைய ராகார் என்றதொரு கருத்தை, "நின் காதலி, எம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே" என்ற கூற்றால் வெளியிடுகின்றார். நன்மகள் ஒருத்தியை மணந்து மனையறம் புரிந்தொழுகும் தலைவனது கற்பு வாழ்வில் அவற்குப் புறத்தொழுக்கம் உண்டாயிற்றெனக் கேள்வியுற்ற அவட்கு அவன்பாற் புலவியும் வருத்தமும் உண்டாயின. அதனை யறிந்த தலைவன் அவள் புலவி தீர்ந்து தன்னை வரவேற்கும் பொருட்டுப் பாணன் ஒருவனை அவளிடம் வாயில் வேண்டி விடுத்தான். அவன் வரவு தலைமகட்குச் சினம் மிகுவித்தது. அக்குறிப்பறிந்த தோழி அவளது சினத்தைமாற்றி அவன்பால் அன்பு செய்யுமாறு வற்புறுத்தும் கடமையுடைய ளாகலின், இயைந்து நின்றமைத்தல் என்ற சூழ்ச்சியால் தானும் சினமுடையாள் போன்று வாயில் வேண்டி நின்ற பாணனை மறுக்கலுற்றாள். பாணன் முன்னே நிற்க, தலைமகளை நோக்கி, நிகழ்ந்த தொன்றனைக் கூறுவாளாய் "அன்னாய், நம் ஊர்க்கண் நிகழ்ந்த விழாவில் மகளிர் துணங்கைக் கூத்தாடினர்; அதற்குத் தலைக்கை தருவான் சென்ற தலைமகன் குழையும் கோதையும் குறுந்தொடியும் கொண்டு சென்றான். கூத்து நிகழுங்கால் இப்பாணன் அதன் கொடுமிடையில் அகப்பட்ட என்னைக் கதுமெனக் கைப்பற்றி யீர்த்தனன்; உடனே, "நொதுமலாளன் என்னை இது செய்கின்றான், கேட்போர் உளர்கொல், இல்லை கொல்" என்று யான் கூவவும், "இதுகாண் நினக்குரிய குழை" என எதிர் மொழிந்தான். மொழியவும், என் சிறுமை மிகுதியால், "எலுவ, நாணிலை" என்று எனக்குட் சொல்லிக்கொடு போந்தேன்; பின்பு அவன் அது செய்தமைக்கு ஏது செறுநரும் விழையும் செம்மலோனாய தலைமகன் என்பது தெளிந்தேன் இவ்வாறு, நம் பெருமகற்கு யான் பிழை செய்தற்கு இடம் அவன் பரத்தையர் துணங்கைக்குச் செல்லத் துணை செய்த இப்பாணனால் உளதாயிற்று" என்று மொழிந்தாள். இக்கூற்றின்கண் தலைவியை வாயில் நேர்விக்குமாற்றால் தோழி பாணனை மறுத்துத் தலைவனை வரவேற்பிக்கும் மதிநுட்பம் இனிது விளங்கக் கண்ட இளங்கடுங்கோ அதனைப் பட்டாங்கே இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். அறியா மையின் 1என்னைக் கொழுமுறிக் குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கைத் 2தழூஉச் செல்வோன் 3நெடுந்திமி லேற்றின் கைதருபு கொடுமிடை நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் 4கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்றெனக் 5காணிது பாசிலை யென்றனன் 6அதனெதிர் நாணிலை எலுவ என்றுவந் திசினே செறுநரும் விழையும் செம்ம லோன்என நறுநுதல் அரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே இது, தோழி பாணற்கு வாயில் மறுத்தது. உரை கொழுமுறிக் குழையன் கோதையன் குறும் பைந்தொடியன் - கொழுவிய தளிரோடு கூடிய குழையும் கோதையும் குறுகிய பசிய தொடியு முடையனாய்; விழவயர் துணங்கைத் தழூஉச் செல்வோன் - சேரிக்கண் எடுத்த விழாவின் பொருட்டு ஆடப்படும் துணங்கைக் கூத்துக்குச் செல்லும் தலைமகன்; நெடுந்திமில் ஏற்றின் கைதருபு - நெடிய திமிலை யுடைய ஏற்றெருது போல நிமிர்ந்து தலைக்கை தந்து; நொதுமலாளன் - அக்கூத்திற் கலவாது அயலே நின்ற இப்பாணனை யுய்ப்ப; கொடுமிடைக் கதுமென அறியாமையின் என்னைத் தாக்கலின் - துணங்கைக் களத்தின் மிடைக்குள்ளே அறியாமையால் என்னைத் தீண்டி யீர்த்தமையின்; கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்ற என - இதனைக் கேட்போர் உளர்கொல்லோ இல்லைகொல்லோ விலக்குதற்கு என அரற்றினேனாக; இது காண்பாசிலை என்றனன் - நினக்கு வேண்டும் குழை இதுகாண் என்று குழை காட்டிக் கூறினன்; அதன் எதிர் நாணிலை எலுவ என்று வந்திசின் - அக்கூற்றுக்கு எதிராக நாணுடையை யல்லை. எலுவ என்று எனக்குட் சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்தேன்; நறுநுதல் அரிவை - நறிய நெற்றியையுடைய அரிவையே; செறுநரும் விழையும் செம்மலோன் எனப் போற்றேன் - அவனையுய்த்த முதல்வன் பகைவரும் விரும்பும் போர்ப்பீடு படைத்த நம் தலைவன் எனப் பேணேனாயினேன்; சிறுமைபெருமையின் காணாது துணிந்து - என் அறிவின் சிறுமை மிகுதியால் உண்மை காணாது துணிந்து - எ.று. அரிவை, குழையனாய்க் கோதையனாய்க் குறும்பைந் தொடியனாய்த் துணங்கைத் தழூஉச் செல்வோன், ஏற்றின் கைதருபு நொதுமலாளன் நின்றோன், அறியாமையின் என்னைக் கொடுமிடைக் கதுமெனத் தாக்கி ஈர்த்தமையின், கேட்போர் உளர்கொல் போற்ற என, குழை காட்டி இதுகாண் பாசிலை என்றனன்; அதன் எதிர், நாணிலை எலுவ என்று என்னுட் கூறிக்கொண்டு அக்கூத்தினின்றும் வந்திசின்; சிறுமை பெருமையிற் காணாது துணிந்து செம்மலோன் எனப் போற்றேன்; இத் தவற்றுக்கெல்லாம் காரணம் நம் தலை மகனைத் துணங்கைக்குக் கொண்டு சென்ற இப்பாணனே எனக் கூட்டி வினை முடிவு செய்க. இத்தவற்றுக்கு என்பது முதலாயின குறிப்பெச்சம். இடையிற் பெய்து கூறியன இசை யெச்சம். துணங்கையிற் கலந்து கொள்ளும் மகளிர்க்குக் குழையும் கோதையும் குறும்பைந் தொடியும் நல்குவது மரபாதலின் அவற்றொடு சென்றமை தோன்றக் குழையன் கோதையன் குறும்பைந்தொடியன் என்றார். கொழுமுறிக் குழை இளந்தளிரொடு கூடிய குழை, கோதை பூமாலை, மகளிரின் ஆடற்றகுதிக் கேற்பக் குழையும் கோதையும் தொடியும் நல்கப்படும். விழவுக் காலத்து ஆடுவதாகலின் விழவயர் துணங்கை என்றார். துணங்கைத் தழூஉ, துணங்கையாகிய கூத்து; "துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி"1 என்று பிறரும் கூறதல் காண்க. மகளிர் கூடியாடும் துணங்கைக்குத் தலைவராயினார்தலைக்கை தந்து தொடங்குவித்தல் பண்டையோர் மரபு; அதனால் நெடுந்திமில்ஏற்றின் கைதருபு என்றார். "முழவிமிழ் தலைக்கை தந்து"2 என்று சான்றோர் உரைப்பது காண்க. துணங்கை காணும் மகளிர்க்கென வளைத்த இடம் கொடுமிடை. ஏறுகோள் காணும் மகளிர்க்கென அமைக்கும் இடத்தையும் "மிடை" என்பர். மக்கள் மிடைதலின் மிடையாயிற்று. "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத் துடக்கிய நடையது துணங்கை" என்பர். நொதுமலாளன், துணங்கையிற் கலவாது அயல் நின்ற பாணன். தாக்கல், தீண்டியிர்த்தல். போற்ற என என்பது, போற்றென என வந்தது. எலுவன், தோழன், சிறுமை, பெருமை, சிறுமை மிகுதி. பாணற்குத் தலைவிபக்கல் நின்று வாயில் மறுக்கு மாற்றால் குறிப்பாய்த் தலைமகளை, வாயில் நேர்விக்கும் தோழி. பரத்தையர் சேரிக்கண் நிகழ்ந்த துணங்கையைத் தன்னையும் உளப்படுத்தி மொழிந்தாள், மிக்க சிறுமியரும் இளையருமாகிய துணங்கை மகளிர்க்கு அவரவர் வரிசைக் கொப்பத் தழையும், கோதையும் தொடியும் நல்கி ஆடச் செய்ப வாதலின் அதன் பொருட்டுக் கொழுமுறிக் குழை முதலாயினவற்றைப் பாணர் உடன்கொண்டு போதரத் தலைமகன் சென்றது கூறுவாள், கொழுமுறிக் குழையன் கோதையன் குறும்பைத் தொடியன் என்றும், அத்துணங்கையும் விழாக் காரணமாக நிகழ்ந்தமை தோன்ற விழவயர் துணங்கை யென்றும், அத்துணங்கையைத் தலைமக்களாயினார் முன்னின்று தலைக்கை தந்து தொடங்கி வைத்தல் முறைமை யாதலின் விழவயர் துணங்கைத் தழூஉச் செல்வோன் என்றும், அவன் தலைக்கை தந்தது கூறுவாள் நெடுந்திமி லேற்றின் கைதருபு என்றும் கூறினாள். குழை முதலாயினவற்றைப் பெற்ற மகளிர் தம்மிற் கைகோத்துத் துணங்கை தொடங்கியபோது, பாணன் மிடைக்கண் என்னை இன்னளென அறியாது கதுமெனப் பற்றித் துணங்கைக்கு ஈர்த்தனன் என்பாள், கொடுமிடை நொதுமலாளன் அறியாமையின் என்னைக் கதுமெனத் தாக்கலின் என்றும், என்னை அவ்வாறு தீண்டினமை பொறாது யான் கையற்று அரற்றினேன் என்பாள், கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்ற என என்றும், அது கேட்டு யான் குழை நல்கப் பெறாமைக்கு வருந்துவதாகக் கருதி, இதுகாண் பாசிலை எனத் தலைமகன் குறிப்பின்படி இப்பாணன் குழை நல்குவானாய்க் கூறினன் என்றும், அதனை ஏலாது மறுத்துப் பாணனே நீ நாணிலையெனக் கூறிக்கொண்டு போந்தேன் என்பாள், நாணிலை எலுவ என்று வந்திசின் என்றும், யான் கூறியது பாணனை யெனினும் அது தலைவனையே சாருமாகலின் என் தவற்றுக்கு யான் வருந்தினேன் என்பாள். நறுநுதல் அறிவை செறுநரும் விழையும் செம்மலோன் எனப் போற்றேன் என்றும், அதற்கு ஏது என் அறிவின் சிறுமை மிகுதியென்பாள் சிறுமை, பெருமையிற் காணாது துணிந்தே என்றும் கூறினாள். என்னை அறியாமையின் பாணன் தாக்கினன்; யானும் சிறுமை பெருமையின் காணாது துணிந்து நாணிலை எலுவ என்று வந்திசின் என்பதாம். இதனாற் பயன், செம்மலோனாகிய தலைமகனைப் போற்றாது நாணிலை எலுவ எனத்தோழி இகழ்தற்குக் காரணம் பாணன் அவனைப் புறத்தொழுக்கத்திற் செலுத்தினமை என்பது குறிப்பது. செறுநறும் விழையும் செம்மலோன் எனத் தலைமகனைப் புகழ்ந்தது, அவன் வருங்கால் தலைமகள் வாயில் நேர்தல் வேண்டும் என்பது சுட்டி நின்றது. பாடவேறுபாடுகளால் நச்சினார்க்கினியர் முதலியோர் இதற்கு வேறு பொருள் கண்டனர். "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" என்ற நூற்பாவின், "வரையா நாளிடை வந்தோன் முட்டினும்" என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி, "இதன்கண் என்றான் என ஒருசொல் வருவிக்க" என்றார் இளம்பூரணர்"1 "மனைவி முன்னர்க் கையறு கிளவி, மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே"2 என்ற நூற்பாவுக்குக் காட்டி, "இதனுள் என் அறியாமையாலே, அன்னாய், நின்னை அஞ்சி, யாம் கள்வன் துணங்கையாடும் களவைக் கையகப்படுப்பே மாகச் செல்லா நிற்க, அவன் குழை முதலியவற்றை யுடையனாய்த் தெருவு முடிந்த விடத்தே எதிர்ப்பட்டானாக அவ்வருளாமையின் யாண்டையது என்கட் பசலை யென்றானாக, அவனெதிரே என் சிறுமை பெரிதாகலான் ஆராயாதே துணிந்து, நாணிலை எலுவ வந்தேன் எனத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந் துரைத்தவாறு காண்க" என்றும், "அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின், சிறைப்புறம் குறித்தன்று என்பதற்கு இஃது உதாரணமாம்"3 என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 51. மதுரைப் பேராலவாயார் இச்சான்றோர் பெயர் வெறிதே பேராலவாயார் என்றும் காணப்படுகிறது. மதுரையில் முற்காலத்தில் சிவன்கோயில் இருந்த இடம் ஆலவாயில் எனப்படும்; கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டில் அஃது ஆலவாயில் என்ற பழம்பெயருடன் ஆலவாய் என்றும் வழங்கிற்று. அதனால் அங்கே கோயில் கொண்டிருந்த சிவனை ஆலவாயிலான் என்றும், ஆலவாயான் என்றும் சான்றோர் புகழ்ந்து பாடினர். அப்பெருமான் பெயர் மக்கட்கு வழங்கியபோது ஆலவாயார் என்பது வழக்காயிற்று. இவர் பெயரை நோக்கின், சங்கச் சான்றோர் காலத்தே மதுரை யிலுள்ளோர் ஆலவாயார் என்ற பெயரை மக்கட்கு இட்டு வழங்கினரென்பது தோன்றுகிறது. மேலும், இவர் பேராலவாயார் எனப்படுவது நோக்கின், இவர் தமது வாழ்நாளிலேயே நல்ல பெருமையுடன் விளங்கினவராதல் பெறப்படும். இவர் காலத்தே பாண்டி நாட்டில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சிறந்து விளங்கினான். அவன் இறந்தபோது அவன் மனைவியான பெருங்கோப்பெண்டு, அவன் பிரிவாற்றாது உடன்கட்டையேறிய செய்தியைப் புறநானூறு தெரிவிக்கின்றது. அவள் தீப்புகுந்த காலை அவள் மனநிலை இருந்த திறத்தை நேரிற்கண்ட இச்சான்றோர் மனம்உருகி "நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப் பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்ம தானே" என்று பாடியுள்ளார். இவர் பாடிய பாட்டுக்கள் சங்கத்தொகை நூல்களில் பலவுள்ளன. இவர் மதுரை நகரத்தவராதலால் அங்கே நிகழும் வையைப் புனலாட்டினை நினைவிற்கொண்டு "பெருநீர் வையை" என்று குறிப்பர்; பாண்டி வேந்தனை, "வென்வேற் கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்" என்றும், கூடல் நகரை, "மலைபுரை நெடுநகர்க் கூடல்" என்றும், பாண்டிநாட்டுக் கொற்கைத் துறையைப் "பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி நாரரி நறவின் மகிழ்கொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை" என்றும் பாராட்டிப் பாடுகின்றார். வறுமைமிக்க சீறூர் ஒன்றின் சிறுமையை விதந்து, "தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும், படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை நல்கூர் சீறூர்" என்பது இவர் அவலச் சுவையில் மிக்க ஈடுபாடுடையவர் என்பதைப் புலப்படுத்துகிறது. களவு நெறிக்கண் மழை வரவால் தலைவனது கூட்டம் அரிதாயினமையின், காதல் முறுகிப் பெருகவே தலைமகள் மேனி வேறுபடலானாள். வேறுபாடுகண்ட பெற்றோர் அது குறித்து வேலனை வருவித்து வெறியெடுக்க முயன்றனர். காதலன் இல்வழிக் கற்புடைமகளிர் தம்மை ஒப்பனை செய்து கோடலும் தலையிற் பூச்சூடிக்கொள்வதும் செய்யார். அதனால் தலைவி கூந்தலிற் பூச்சூடாது இருந்தாளாக வெறிக்களத்தில் பெற்றோர்க் கஞ்சி அதனை சூடிக் கொள்ள வேண்டிய இடுக்கண் அவட் குண்டாயிற்று. சூட மறுப்பின், இவள் களவுநெறியில் காதலன் ஒருவனை யுடையளாயினள் என ஏனையோர் அலர் தூற்றுவரென்ற அச்சம் ஒருபுடை வருத்த, சூடுவது கற்பு நெறிக்கு மாறாம் என்ற கலக்கம் ஒருபால் அலைக்க, மனவருத்தம் மிக்க அவள் தன் மனையின் சிறைப்புறமாகத் தலைவன் வரக்கண்டாள். நிகழ் வதனை அவற்குத் தெரிவித்து விரைவில் திருமணத்தால் தன்னை வரைந்து கொள்ளுமாறு அவன் உள்ளத்தைத் தூண்டும் குறிப்பின ளாகித் தோழியோடு சொல்லாடுபவள்போல அவன் செவிப்படுமாறு, "கூட்டத்துக்கு இடையூறாக வானம் மழை பெய்தலை ஒழியாதாயிற்று; வெறியெடுத்தற்கென வேலனும் வந்துவிட்டான்; இனி, என் கூந்தல் பூச் சூடிக்கொள்ள வேண்டிய தாகிறது; இந்நிலையில் காதலன் பொருட்டுச் செய்வதொன்றும் அறியாது கலங்குகின்றேன்" என்று தோழியை நோக்கிச் சொன்னான். இக்கூற்றில் மணமாகா முன்னரே ஒருவனை மனத்தில் காதலித்த அளவே கற்புக்குரிய நல்லொழுக்கத்தை மேற்கொண்ட மங்கையின் சால்பு புலப்படக் கண்ட பேராலவாயார் பெருவியப் புற்று அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளார். யாங்குச் 1செய்வாங்கொல் தோழி ஓங்குகழைக் காம்புடை விடரகம் சிலம்பப் பாம்புடன்று ஓங்குவரை மிளிர2 வாட்டி வீங்குசெலற் கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப் பெயலா னாதே வானம் பெயலொடு மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப் பின்னுவிடு முச்சி அளிப்பா னாதே பெருந்தண் குளவி குழைத்த பாவடி இருஞ்சே றாடிய 3நுதல பெருங்களிறு பேதை ஆசினி ஒசிக்கும் வீதா வேங்கைய மலைகிழ வோற்கே. இஃது ஆற்றது ஏதமஞ்சி வேறுபட்டாள் வெறியாடலுற்ற விடத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது. உரை தோழி-; யாங்குச் செய்வாங்கொல் - யாதனைச் செய்வேம்; ஓங்குகழைக் காம்புடை விடரகம் சிலம்ப - உயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் வளர்ந்துள்ள மலைப்பிளவுக ளெல்லாம் எதிரொலிக்க; பாம்பு உடன்று ஓங்கு வரை மிளிர வாட்டி - பாம்புகள் இடியால் தாக்குண்டு உயர்ந்த துறுகற்கள் மீது புரண்டு உழலுமாறு வருத்தி; வீங்கு செலல் கடுங் குரல் ஏறொடு - மிக்குச் செல்லும் கடிய முழக்கத்தையுடைய இடியுடனே; கனைதுளி தலைஇ - பெருமழையைப் பொழிந்து; வானம் பெயல் ஆனாது - மேகம் இடையற வின்றிப் பெய்யா நின்றது; பெயலொடு - அம் மழையுடனே தோன்றும்; மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென - வளைந்த மின்னலை நேர்பட நிறுத்தினாற் போன்ற ஒளி திகழும் வேலைக் கையிலேந்திய வேலன் வந்தானாகலின்; பின்னுவிடு முச்சி அளிப்பு ஆனாது - பின்னப்படுகின்ற கூந்தலிலே பூவைச் சூடுவது நீங்காதாயிற்று; பெருந்தண் குளவி குழைத்த பாவடி - பெரிய தண்ணிய பச்சிலை மரத்தை எற்றி உழக்கிய பரந்த அடியினையும்; இருஞ்சேறு ஆடிய நுதல - கரிய சேறுபடிந்த நெற்றியினையுமுடைய; பெருங்களிறு - பெரிய களிற்றியானை; பேதை ஆசினி ஒசிக்கும் - இளைதாகிய ஆசினிப் பலாமரத்தை முறித்து ஒழிக்கும்; வீதா வேங்கைய மலைகிழவோற்கு - பூக்கள் பரந்து தோன்றும் வேங்கை மரங்களையுடைய மலைநாடனாகிய தலைமகன் பொருட்டு எ-று. தோழி, விட ரகம் சிலம்ப, பாம்பு மிளர வாட்டி, கனைதுளி தலைஇ வானம் பெயலானாது; வேலன் வந்தென முச்சி அளிப்பு ஆனாது; குளவி குழைத்துச் சேறாடிய நுதலை யுடைய களிறு ஆசினியை ஒசிக்கும் வேங்கைய மலைகிழவோற்கு யாங்குச் செய்வாங்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கழை, கழியுமாம், காம்பு, மூங்கில், சிலம்புதல், ஈண்டு எதிரொலித்தல் மேற்று. இடிமுழக்கம் கேட்ட பாம்பு அச்சத்தால் கண் மழுங்கிப் பாறைகளின் மேல் புரண்டு வீழ்வது இயல்பு; "விரிநிற நாகம் விடருளதேனும், உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. கனைதுளி, பெருமழை, ஆன்றல், அமைதல், ஒழிதலுமாம். மின்னு நிமிர்ந்தன்ன வேல் என இயையும். குளவி, மலைப் பச்சை யென்னும் புதல், பேதைமை, இளமை. தலைமகன் சிறைப்புறத்தே நிற்பதறிந்து குறிப்பாய் வரைவு கடாவும் கருத்தால் தலைவி தோழியோடு சொல்லாடுபவள், தலைவன் வரும் வழியின் அருமை நிலையை எடுத் துரைப்பாள், மூங்கிற்காடு பரந்த மலைப்பக்கம் மிக்க எதிரொலி யுடைமைப்பற்றி அதனை விதந்து ஓங்குகழைக் காம்புடை விடரகம் என்றாள். மழையும் இடியும் கலந்த துன்பக் காலத்தில், வெளியில் மேயும் பாம்பு இடியேறுண்டு பாறை மேல் வீழ்ந்து கிடப்பது அவ்வழியே வருவோர்க்கு மிக்க அச்சத்தை விளைவிக்கும் என்றது, வழியின் கொடுமை கூறிய தாகும். இந்நிலையில் தலைவனது கூட்டம் பெறல் அரிது என்பாள், வானம் பெயல் ஆனாது என்றும், அதனால் தன் மேனி வேறுபாடு கண்ட பெற்றோர் வெறியெடுக்கலுற்றனர் என்பாள், மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தனன் என்றும், பின்பு அவன் அமைக்கும் வெறிக்களத்துப் பூச்சூட வேண்டிய நிலைமை எய்துவது ஒருதலையென்பாள், பின்னுவிடு முச்சி அளிப்பானாது என்றும் கூறினாள். இஃது அலரச்சம் கூறி வரைவுகடாயது. குளவியைக் குழைத்து இருஞ்சேறாடி ஆசினியொசித்த பெருங்களிறு, பூத்த வேங்கையைக் கண்டு நெருங்காதொழியும் என்றது, தலைவியின் நலன் நுகர்ந்து தன்னொழுக்கத்தால் அவள் மேனியில் வேறுபாடு பிறப்பித்து வெறியும் அலரும் விளைவித்து வருத்துதலல்லது வரைவு கருதாது ஒழுகுகின்றான் என்று தலைவி உள்ளுறுத் துரைத்தவாறு. 52. நப்பாலத்தனார் இவர் பெயர் அச்சுப்படியிலும் மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டிலும் பாலத்தனார் என்று காணப்படுகிறது. பாலப்பன், பாலம்மை என்றெல்லாம் இக்காலத்தும் மக்கட்குப் பெயரிட்டு வழங்குவதுண்மையின், பாலத்தன் என இவர் பெயர் இருப்பது வியப்புத் தாராது. அத்தன், அப்பன் என்பன ஒரு பொருளன, இவர் பாட்டுக்கள் இந்நூற்கண்ணே தொகுக்கப்பட்டுள்ளன. கொல்லிநாட்டுத் தலைவனான வல்வில் ஓரியைச் சிறப்பிப்பதால் இவர் அவனது ஆதரவு பெற்றவரெனத் தெளியலாம். தலைமகளை மணந்து மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் பொருள்வயிற் பிரிந்து செல்ல வேண்டிய கடமையுடைய னானான். இது தன்னைப் பிரிந்தறியாத காதலிக்குப் பெரு வருத்தத்தை விளைவிக்கும் என்று அவன் அஞ்சினான்; ஆயினும், காதலினும் கடமை பெரிதாதலைச் சீர்தூக்கி அவளை எவ்வகையாலேனும் ஆற்றுவித்துப் பிரிதல் வேண்டுமெனத் துணிந் தான். தன் நெஞ்சோடு உரையாடுவோன்போல் தலைவி செவிப் படுமாறு கூறலுற்று, பிரிவின்கண் தான் விருப்ப மில்லான் போலவும், தனது நெஞ்சே பொருள் விரும்பிப் பிரிவை வற்புறுத்துவது போலவும் நாட்டிக் கொண்டு, "நெஞ்சே, காதலியைக் கூடிப்பெறும் இன்பக் கூட்டத்தினின்றும் யான் பிரியகில்லேன்; ஆள்வினையைப் பெரிதாக எண்ணி மனையின் நீங்கி வாழும் வாழ்க்கையை நீ விரும்புகின்றாய்; இவ்வகையில் நீ என் கருத்தோடு இயையாமையின் என்பால் அன்பில்லாயாயினை; வாழ்க; விழைந்து சென்று செய்யும் பொருள் மழவர் பெருமகனான ஓரியின் கைவளம் அளவிற்றாயினும் எமக்கு அஃது ஐதேயாம்; ஆகவே நீ மாத்திரம் ஏகுக; யான் வாரேன்" என்றான். பிரிவுத் துன்பத்தை அறியாத காதலிக்குப் பிரிவுண்மையை யுணர்த்தி அவள் அறிவைத் தன்னோடு இசைவித்துக் கொள்ளும் வகையில் அவன் செலவழுங்கும் திறம் இக்கூற்றில் அமைந் திருப்பது கண்ட நப்பாலத்தனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித் தூத்தகட்1 டெதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணங்கமழ் நாற்றம் மரீஇ யாமிவள் சுணங்கணி யாகம் அடைய முயங்கி வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம் நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்துறை வாழ்க்கை2 புரிந்தமை கலையே அன்பிலை வாழியென் நெஞ்சே 3வெம்போர் மழவர் பெருமகன் மாவள் ளோரி கைவளம் இயைவ தாயினும் ஐதே கம்ம 4இயைந்துசெய் பொருளே. இது தலைமகன் செலவழுங்கியது. உரை மாக்கொடி அதிரல் பூவொடு - கரிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூவுடனே; பாதிரி தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் - பாதிரியினது தூய இதழையுடைய புதுமலர் அணியப்பெற்ற கூந்தலிடத்து; மணம்கமழ் நாற்றம் மரீஇ - நறுமணம் கலந்து வீசும் வாசத்தை ஏற்று; இவள் சுணங்கணி ஆகம் அடைய முயங்கி - இவளுடைய சுணங்கு பரந்த மார்பை நன்கு பொருந்தப் புல்லி; வீங்கு உவர்க் கவவின் யாம் நீங்கல் செல்லேம்-மிக்கெழும் இன்பம் பொருந்திய முயக்கத்தைப் கைவிட்டு யாம் பிரிந்து செல்வேல்லேம்; என் நெஞ்சே - எனது நெஞ்சமே; நீயே - நீயோ எனில்; ஆள்வினை சிறப்ப எண்ணி - முயற்சியால் பொருள் ஆவதை மிக நினைந்து; நாளும் பிரிந்துறை வாழ்க்கை புரிந்து அமைகலை - நாளும் மனையினின்றும் பிரிந்து சென்று பொருள் செய்தொழுகும் வாழ்வை விரும்பி என்னோடு பொருந்தாயாயினை யாகலான்; அன்பிலை - நினக்கு என்பால் அன்பில்லையாம்; வாழி-; வெம்போர் மழவர் பெருமகன் மாவள் ஓரி - வெவ்விய போரைச் செய்யும் மழநாட்டார்க்குத் தலைவனும் பெரிய வண்மையுடையவனுமாகிய வல்வில் ஓரி என்பானது; கைவளம் இயைவதாயினும் - கையகத் துள்ளது போலும் பேரளவிற்றாய செல்வம் எய்துவதாயினும்; இயைந்து செய்பொருள் - நின்னோடு கூடிச் சென்று செய்யும் அப்பொருள்; ஐது - மெல்லிதேயாகும்; ஏகு- ஆகவே, நீ மாத்திரம் செல்வாயாக; யான் வாரேன் எ-று. நெஞ்சே யாம் நீங்கல் செல்லேம்; நீயே எண்ணி புரிந்து அமைகலையாகலின் அன்பிலை; வாழி, செய்பொருள் ஓரி கைவளம் இயைவதாயினும் ஐது, ஏகு யான் வாரேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அம்ம, உரையசை. அப்பொருள் எனச் சுட்டு வருவிக்க. அதிரல், காட்டு மல்லிகை; புனலிக்கொடி என்பதும் உண்டு. இது வேனிற் காலத்து மலர்வதுபற்றி இதனை "வேனில் அதிரல்"1 என்பர். பாதிரியும் வேனிலில் மலர்வது; "வேனிற் பாதிரிக் கூனி மாமலர்"2 என்பது காண்க. இரண்டும் மலரும் காலத்தாலும் மிகுமணத்தாலும் ஒத்த சிறப்பினவாதலின், மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எதிர்மலர் என்றார். பிறரும் "நனை யதிரல் பரந்த அந்தண்பாதிரி யுதிர்வீ"1 என்று கூறுதல் காண்க. அதிரலின் கொடி நுண்ணிதென்றும், முகை பூனையின் பல்போலக் கூரி தென்றும் கூறுவர்; இதனை, "பார்வல் வெருகின் கூரெயிற்றன்ன, வரிமென் முகைய நுண்கொடி யதிரல்"2 என்பர். பாதிரியையும் அதிரலையும் மகளிர் கூந்தலில் அணிந்து கோடலை, "கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச் சில்லைங் கூந்தல் அழுத்தி"3 என்பதனாலும் அறிக. எதிர்மலர், ஒத்தமலர் என்றுமாம். அடைய முயங்கல், முழுதும் பொருந்த முயங்குதல். உவர், தணியா விருப்பின் மேற்று, தாகவிடாயுற்றோர் எத்துணையளவு உண்ணினும் உவர் நீர் அவ்வேட்கையைத் தணியாமை போல, எத்துணை முயக்கம் பெறினும் தணியா வேட்கை பயத்தல்பற்றி மகளிர் முயக்கினை வீங்குவர்க் களவு என்றார். சுணங்கு, தேமல், நீங்கல் செல்லேம் என்பது ஒரு சொல்லாய் நீங்கேம் என்பது பட நின்று செலவழுங்கும் பொருளதாயிற்று. "செலவிடையழுங்கல் செல்லாமையன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்"4 என்பர் தொல்காப்பியர். ஆள்வினை, முயற்சி. புரிதல், விரும்புதல். மழவர், காவிரியின் வடகரையிலே, கொல்லிமலையின் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள மழ நாட்டவர்; பண்டை நாளில் இம்மழவர் போர்த்துறையில் வன்மையும் சிறப்பும் பெற்றுத் தமிழகம் முழுவதும் போர்ப்பீடு பெற்று விளங்கினர். இம்மழவர்க்குத் தலைவன் ஓரி; அவன் தன் வள்ளன்மையால் புலவர் பாடும் புகழ்மிக்கு வரையா வள்ளல்களின் நிரலில் வைத்து எண்ணப்பட்டவன். அவனது வில்லாண்மையை வன்பரணர் என்னும் சான்றோர் அழகுறப் பாடியுள்ளார். ஈட்டப்படும் பொருட்கு எல்லையாக ஓரியின் கைவளத்தை இப்பாட்டுடைச் சான்றோரான நப்பாலத்தனார் குறித்திருப்பது மிக்க நயமாகும். ஐது, மெல்லிது; அஃதாவது அத்துணை அருமை யுடைத்தன்று என்பது. மணம் புரிந்து கொண்டு மனை வாழ்வில் இன்புற்றிருக்கும் தலைமகன் பொருள்வயிற் பிரிய வேண்டிய கடமை தோன்றிய போது, மனைவி பால் உளதாகிய காதல் அவன் பிரிதலை விரும்பாது தடுக்கலுற்றது. காதலும் கடமையும் நேர் நின்று போராடும் களமாகத் தலைமகன் உள்ளம் அமைகிறது. அவன் உடல் காதல் பக்கமும் நெஞ்சம் கடமையின் பாங்கிலும் நிற்கின்றன. நெஞ்சம் பொருட் பிரிவை வற்புறுத்தகாலைக் காதல் தோன்றித் தலைவியின் முயக்க இன்பத்தைச் சிறப்பித்துக் காட்ட, அம்முயக்கின்கண் தலைவியின் கூந்தல் நல்கும் இன்ப மணத்தை விதந்து, மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணங்கமழ் நாற்றம் மரீஇ என்றான். கூந்தலின் நறுமணத்தில் தலைவன் மனம் தோய்ந்து கிடத்தலைப் பிறாண்டும், "நன்முகை அதிரற்போதொடு குவளைத் தண்ணறுங் கமழ்தொடை வேய்ந்தநின், மண்ணார் கூந்தல் மரீஇய துயிலே, காதலர் நம்வயின் மறந்து கண்படுதல் யாவது1" எனத் தோழி தலை மகட்குக் கூறும் சொற்களால் நன்குணரலாம். பின்னர் முயக்கத்தின் சிறப்பை யுரைப்பவன், தலைவியின் மார்பு முற்றும் தன் அகன்ற மார்புக்குள் அடங்கியொடுங்கத் தன் இரு கைகளாலும் இறுகப் புல்லுமாற்றல் பிறக்கும் இன்பம் புல்லுந்தோறும் புதிதாய்த் தோன்றி உவரா மகிழ்ச்சியில் ஊக்கினமையின் யாம் இவள் சுணங்கணி ஆகம் அடைய முயங்கி வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம் என்றான். காதலினும் கடமை சிறப்புடையதாகலின், அதனை வற்புறுத்தும் நெஞ்சினை வேறு நிறுத்திக் காதலின்பத்துக்கு முதலாகிய அன்பினை நோக்காது பிரிந்திருந்து செய்யும் பொருளையும் அதற்குரிய ஆள்வினையையுமே பெரிதும் எண்ணுகின்றனை என்பான் நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்துறை வாழ்க்கை புரிந்து அமைகலை என்றும், ஆகவே நீ என்பால் அன்புடைய அல்லை என்பான், அன்பிலை என்றும், நெருங்கிக் கூறலின் வாழி என்றும் கூறினான். அன்பில்லாதாரோடு கூடிச் செய்யும் முயற்சி பெரும் பொருள் பயவாதென்பது பற்றி மாவள்ளோரி கைவளம் இயைவதாயினும் என்றும், முயற்சி பயன்தரா தொழியாது என்பதுபற்றி, நின்னொடு இயைந்து செய்யும் பொருள் சிறப்புடைத்தன்று என்பான் இயைந்து செய்பொருள் ஐது என்றும், எவ்வழியும் செல்வது கருத்தாகலின் ஏகு அம்ம என்றும் கூறினான். 53. மிளைகிழான் நல்வேட்டனார் களவின்கண் ஒழுகும் தலைமக்களிடையே வரைந்து கோடற் குரிய முயற்சி சிறிது காலம் தாழ்ப்பதாயிற்று; விரைந்து மணந்து கொள்ளாது தலைவன் நீட்டிப்பது கண்ட தோழி அவன் உள்ளம் திருமணத்திற் செல்லுமாறு சூழ்ச்சி செய்ய வேண்டியவளானாள். ஒரு நாள் மாலைப் போதில் தலைவி மனையின் சிறைப்புறத்தே தலைமகன் வந்து நின்றான். தோழி தலைமகளைக் கூட்டிக் கொண்டு அவன் காணாத, சொல்கேட்கு மளவினதான ஓரிடத்தே சென்று தலைவியொடு சொல்லாடலுற்று, "தோழி, நின் மேனியில் உண்டாகியிருக்கும் வேறுபாட்டை அன்னை அறிந்து கொள்வளே என அஞ்சி யான் மறைத்து ஒழுகி வந்தேன்; இப்போது அறிந்து கொண்டுதான் சொன்னாளோ, அன்பு மிகுதியாற் கூறினாளோ அதனை அறியேன்; மலையில் மழை பெய்தமையால் ஆற்றில் புதுநீர் வருகிறது; புதிது வரும் இனிய நீர் மருந்துமா மாதலால், அதனைக் கண்ணாற் கண்டு மனம் தண்ணென்னுமாறு உண்டு உடல்குளிர நீராடிவரின் இவட்கு உளதாகிய மேனி மெலிவு நீங்கும்; செல்க என்றாள்" எனக் கூறினாள். இதனால், தலைவிக்கு மேனியில் வேறுபாடு பிறந்ததும், அன்னை அறிந்து கொண்டதும், இனி இற்செறிப்புண்டாவதும், பின்பு கூட்டம் பெறல் அரிதென்பதும், ஆகவே தலைவன் விரைந்துவரைதலைச் செய்தல் வேண்டுமென்பதும் தோழி குறிப்பாய் உரைத்தது நல்வேட்டனாரது புலமையுள்ளத்தில் மகிழ்ச்சி தோற்றுவிக்கவே, அவர், அவள் கூற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். யானஃ தஞ்சினென் கரப்பவும் தான்அஃது அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ எவன்கொல்1 வாழி தோழி அன்னை வானுற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்தெனக் 2கானங் கல்லென்று முளியிலை கழித்தன 1முகிழிணர் கொளவரும் விருந்தின் தீநீர் 2மருந்து மாயின் கண்ணின் நோக்கித் தண்ணென வுண்டு முனியா தாடப் பெறின்இவள் பனியும் தீர்குவள் செல்கென் றோளே. இது, வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது. உரை தோழி-; யான் அஃது அஞ்சினென் கரப்பவும் - யான் நின் மேனியில் உண்டாகிய அவ்வேறுபாட்டை அன்னை அறிகுவளென்று அஞ்சி மறைத் தொழுகவும்; அன்னை-; அஃது அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ - அதனை அறிந்து கொண்டாளோ அன்பு மிகுதியால் உரைத்தாளோ; எவன் கொல் - அவள் கருத்து யாதோ, தெரிந்திலது; வாழி; வானுற நிவந்த பெருமலைக்கவாஅன் - வானளாவ உயர்ந்த மலைப்பக்கத்தே; ஆர்கலி வானம் தலைஇ - இடி முழக்கத்தையுடைய முகில் மழைபெய்யத் தலைப்பட்டு; நடுநாள் கனை பெயல் பொழிந்தென - நள்ளிரவில் மிக்க மழையைப் பெய்த தனால்; கானம் கல்லென்று முளியிலை கழித்தன - காடுகள் கல்லென உலர்ந்த சருகுகளை யுதிர்த்து; முகிழிணர் கொளவரும் - அரும்புகளோடு கூடிய பூங்கொத்துக்களைக் கொள்ளுமாறு பெருகி வரும்; விருந்தின் தீநீர் மருந்தும் ஆயின் - புதுவெள்ளமாகிய இனிய நீர்ப்பெருக்கு ஆடுவோர்க்கு மருந்தாய் நலஞ் செய்யுமாகலின்; கண்ணின் நோக்கி -அதனைக் கண்குளிரப் பார்த்து; தண்ணெனவுண்டு; - மனம் குளிரவுண்டு; முனியாது ஆடப் பெறின் - வெறாது உடல் குளிர்ப்பெய்த அதன்கண் மூழ்கி நீராடுவாளாயின்; இவள் பனியும் தீர்குவள் - இவள் தான் உற்ற வேறுபாட்டுக்கு ஏதுவாகிய மெய் வருத்தத்தினின்றும் நீங்குவள்; செல்க என்றோள் - ஆதலாற் சென்று வருக என்று கூறினாள் எ-று. தோழி, வானம் தலைஇப் பெயல் பொழிந்தென, கானம் கல்லென்று கழித்தன, முகிழிணர் கொளவரும் விருந்தின் தீநீர் மருந்துமாயின், நோக்கி, உண்டு, ஆடப்பெறின் இவள் பனியும் தீர்குவள் செல்க என்றோள்; ஆகலின், யான் அஞ்சினென் கரப்பவும் தான் அஃது அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ, எவன் கொல், வாழி எனக்கூட்டி வினைமுடிவு செய்க. அஃது என்ற சுட்டு, தலைவி மேனி வேறுபாடு குறித்த தாயினும், செய்யுளாதலின் முற்பட வந்தது. அருள், அன்பின் முதிர்ச்சி. ஆர்கலி வானம், இடி முழக்கத்தோடு கூடிய மழை முகில். நடுநாள், நள்ளிரவு, கனைபெயல், மிக்க மழை. முளியிலை, உலர்ந்த சருகு. புதுநீர்ப் பெருக்கால் தளிர்த்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிவது பயனாதலால் முகிழிணர் கொளவரும் என்றார். விருந்தின் தீநீர் புதுவது வந்த வெள்ளமாகிய இனிய நீர் விருந்தின் திநீர் மருந்துமாம் என்பது பழமொழி. பழந்தமிழர் வாழ்வில் புதுப்புனலாடல் சிறந்த நிகழ்ச்சியாகும். அக்காலை மன்னரென்றும் மக்களென்றும் வேறுபாடின்றி எல்லோரும் புனலாடல் மேவுவர்; "இறைவன் ஆணை ஈங்கெவன் செய்யும், புதல்வராணை புதுநீராட்டு"1 என்பது காண்க. "வேந்து பிழைத்தகன்ற வினைவராயினும், சேர்ந்தோர்த் தப்பிய செறுநராயினும், கலம் கவர்ந் தகன்ற கள்வராயினும், நிலம் பெயர்ந்துறைதல் நெடுந்தகை வேண்டான், தொகுதந்து ஈண்டிக் கிளைஞராகிப் புகுதந்தீக இப் புனலாட்டகத்து"2 என வேந்தரும் ஆணை பிறப்பிப்பார்; இளமகளிர் புதுப்புனலாடுவது சிறந்த இலக்கணமாகக் கருதப்பட்டது; "தலைப்புனல் மூழ்குதல் இலக்கணம்"3 என்பர். இளமகளிரைப் புதுப்புனலாடுக எனப் பணித் தலும் புதுப்புனலாட்டுதலும் முறைமை; "இளமகளிரைக் காமஞ்செப்பி, அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித்தாடும் இந்நங்கையர் நோற்ற பொங்கு புனற் புண்ணியம், நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி, நேரிழை மகளிரை நீராட்டயரும் பேரிளம் பெண்டிர்"4 என்பதனாலும் ஈதுணரப்படும். கலங்கியிருத்தலின், புது நீராடற்கண் தொடக்கத்தில் விருப்பம் எழாமையின், முனியாது ஆடப்பெறின் என்றார். பனி, வருத்தத்துக் கேதுவாகிய மேனி வேறுபாடு. களவின்கண் தலைவன் கூட்டத்தால் தலைவி மெய்யிற் கதிர்ப்பும் இடையீடுகளால் பசப்பும் தோன்றி மேனியில் வேறுபாடு பிறப்பித்தமையின் அதனை வெளிப்பட மொழிதல் கூடாமைபற்றி அஃது எனத் தோழி சுட்டி யொழிந்தாள். உண்மையறிதற் பொருட்டு, அறிந்தும் அறியாதார் போன்று ஒழுகுவது அறிவுடையோர் செயலாதலின், அறிந்தனள் கொல்லோ என்றும், அறிந்தவழி இற்செறித்தல் முதலிய காப்புச் செயல்களை மேற்கொள்ளாது நீராடச் செல்க என விடுத்தமைக்கு ஏது, தாய்மைப் பயனாகிய அன்பு மிகுதி யாதலால் அருளினள் கொல்லோ என்றும், சிறைப்புறத்தே நிற்கும் தலைமகற்குத் அறிந்தமை யுணர்த்தும் குறிப் பால், நிகழ்வது எண்ணி ஏற்பன செய்தல் அவற்குக் கடன் என்பது தோன்ற எவன்கொல் என்றும், அது கேட்டுத் தலைவி மருண்டு முகம் வியர்த்து வெய்துயிர்த்து வருந்துதலின்", "வருந்தற்க தீது ஒன்றும் இன்றாம்" எனத் தேற்றுவாள் வாழி என்றும் கூறினாள். இரவில் மலைத்தலைப் பெய்த மழைநீர் ஆற்றிற் புதுப்புனலாகப் பெருகிக் கானகத்தில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளைச் சுமந்து வருமாயினும் அதனால் விளையும் பயனையே விதந்து கானம் கல்லென்று முளியிலை கழித்து முகிழிணர் கொளவரும் என்றாள்; என்றது, விருந்தின் தீநீர் மருந்தாம் என்பதற்கு ஏதுவாய் அதனைச் சாதித்து நின்றது. கண்ணீல் இயல்பான வெள்ளை நோக்கமின்றிக் கள்ள நோக்கமும், மனத்தில் காமக் கொதிப்பாற் பிறக்கும் மென்மையும், மெய்யில் மாமைக்கதிர்ப்புக் குன்ற வரும் பசப்பு வேறுபாடும் தாய்க்குப் புலனாகி விட்டன என்பது குறிப்பாய்த் தோன்ற, கண்ணின் நோக்கித் தண்ணென உண்டு முனியாது ஆடப் பெறின் என்றும், எனினும் தன்னறிவு வெளிப்படுத்தாது, "பனிப்பு நீங்கற்குப் புதுப் புனலாடல் நன்று; சென்று ஆடிவருக" எனப் பணித்தாள் என்பாள், பனியும் நீங்குவள் செல் கென்றோள் என்றும் கூறினாள். செல்க என்றாள் என்பது செல்கென்றோள் என வந்தது. 54. சேந்தங்கண்ணனார் சேந்தன் என்பார்க்கு மகனாதல் தோன்ற இச்சான்றோர் சேந்தங்கண்ணனார் எனப்படுகின்றனர். இவர் பாண்டி நாட்டுச் சான்றோர்களுள் ஒருவர்; இனிய பாட்டியற்றும் பண்புடையவர். பாண்டி நாட்டுக் கொற்கைத் துறையில் பரதவர் முத்துக்குளிக்கும் செயலை, "இயங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்" என்று கூறுவர். பகற் குறி வந்து நீங்கும் தலைமகனைச் "சேந்தனை சென்மோ மணிர்ச் சேர்ப்ப" என்று சொல்லும் தோழி, கழியும் துறையும் தேரிற்பூட்டிய குதிரைகள் வழிச்செல்லுதற் காகாவாதலை நிரலே தொடுத்து ஓதுவதாக இவர் பாடியிருப்பது இனிய புலமை விருந்தாகிறது. களவொழுக்கத்தில் ஈடுபட்டுப் பகலினும் இரவினும் குறி வழிச் சென்று தலைமகளைத் தலைப்பெய்து கண்டு இன்புற் றொழுகும் தலைமகன், தன்பால் அவட்கு உண்டாய காதலன்பு பெருகி இன்றியமையாத நிலை எய்துதற் பொருட்டு, விரைய வரைந்து கொள்ளாது நீட்டித்தலைச் செய்வன், அஃது அவனது ஆண்மைப்பண்பு. அவ்வாறு ஒழுகுங்கால் தலைமகட்கு அவன்பால் உண்டாகிய காதல்வேட்கை மிகவும் பெருகி அவனையின்றி இமைப்போதும் அமையாத நிலையை எய்துவிக்கும். மாலைப் போது வரும்போது, கடலின்கண் மீன் தேர்ந்துண்டு வாழும் நாரை முதலிய வெண்குருகுகள் மாலை மறைவது கண்டு தத்தம் கூடு நோக்கிச் செல்வதைக் காண்பாள். தலைமகனையின்றித் தனித்திருக்கும் தனக்கு மாலைப்போது வேட்கை மிகுவித்தலை உணர்வாள்; தனது துன்ப நிலையைத் தலைமகற்குத் தெரிவிக்க வேண்டுமென்னும் விருப்பம் அவள் உள்ளத்தில் எழும். கூடுநோக்கிச் செல்லும் வெண்குருகை நோக்கி, "குருகே, நீ நின் கிளைக்குருகுகளோடு செல்கின்றாயெனினும் அவற்றோடே, சிறிதுபோது இங்கே தங்கி யான்கூறும் சொற்களைக் கேட்டு, ஏதிலார் போலவன்றி என்பால் அன்புடையையாய், நீ வாழும் நீர்த்துறை நாட்டுக்கு உரியவனான என் காதலனுக்கு எனது நிலையை அவன் உள்ளங்கொள்ளுமாறு எடுத்துச் சொல்லுவாயாக" என்று கூறுகின்றாள். காதற் பெருக்கால் கையற்று வருந்தும் ஒருத்தி காதலனுக் குரிய இடத்தையும் இடத்து நிகழ் பொருள்களையும் காணு மிடத்து அன்பு பெருகி நிற்கும் இயல்பு இக்கூற்றால் வலியுறுவது கண்ட சேந்தங் கண்ணனார் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். வளைநீர் மேய்ந்து 1கிளைமுதல் தழீஇ வாப்பறை விரும்பினை யாயினும் தூச்சிறை இரும்புலா அருந்துநின் பெடையொடு சிறிதிருந்து கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி பெரும்புலம் பின்றே சிறுபுன் மாலை அதுநீ அறியின் அன்புமா ருடையை நொதுமல் நெஞ்சம் கொள்ளா தென்குறை 2உய்த்தாங் குணர உரைமதி தழையோர் கொய்குழை யரும்பிய குமரி ஞாழல் தெண்டிரை மணிப்புறம் 3தைவரும் கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே இது காமமிக்க கழிபடர்கிளவியால் தலைவி சொற்றது. உரை வளைநீர் மேய்ந்து - சங்குகள் வாழும் கடலில் மீன் மேய்ந் துண்டு; கிளைமுதல் தழீஇ - சுற்றத்தோடு கூடிக்கொண்டு; தூச்சிறை வாப்பறை விரும்பினையாயினும் - தூய சிறகுகளை விரித்துத் தாவிப் பறந்து செல்வதை விரும்பினாயாயினும்; இரும்புலா அருந்து நின் பெடையொடு சிறிது இருந்து - மிக்க புலால் நாறும் இக்கழிஇ மீன்களையுண்டு நின் பெடையுடனே இங்கே சிறிது போது தங்கி; எனவ கேண்மதி - கூறப்படும் என் சொற்களைக் கேட்பாயாக; கருங்கால் வெண்குருகு - கரிய கால்களையும் வெண்மையான சிறகுகளையுமுடைய நாரையே; சிறுபுன் மாலை பெரும் புலம்பின்று - சிறிது போதிற் கழியும் இப்புல்லிய மாலைப் பொழுது தானும் எனக்குப் பெரிய தனிமைத் துயரைத் தருகின்றது; அது நீ அறியின் அன்புமார் உடையை - அதனை நீ அறிகுவாயாயின் என்பால் அன்புடையை யாகுவை; நொதுமல் நெஞ்சம் கொள்ளாது - நெஞ்சின் கண் அயலாள் என்னும் எண்ணம் கொள்ளாது; என் குறை உய்த்து ஆங்கு உணர உரைமதி - என் குறையினை ஏற்றுக் கொண்டு அவ்விடத்துக்குச் சென்று அவர் உள்ளம் கொள்ளுமாறு சொல்வாயாக; தழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் - தழையுடுத்த இள மகளிர் கொய்யுமாறு தழைத்துப் பூவரும்பிய இளைய ஞாழலையும்; தெண்டிரை தைவரும் மணிப்புறக் கண்டல்வேலி நும் துறைகிழவோர்க்கு - கடலினுடைய தெளிந்த அலைகள் தடவும் கரிய புறத்தையுடைய கண்டல்களையும் வேலியாகவுடைய கடல் துறைக்கு உரியவனாகிய தலை மகனுக்கு எ-று. வெண்குருகு கிளைமுதல் தழீஇ, பறை விரும்பினையாயினும், பெடையொடு சிறிது இருந்து எனவ கேண்மதி; மாலை பெரும்புலம்பின்று; அது நீ அறியின், அன்பு மாருடையை; நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை உய்த்து ஆங்கு துறை கிழவோற்கு உணர உரைமதி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வெண்குருகு என்றது அண்மை விளி, கடல் நீரில் மேய்ந்தமை தோன்ற வளைநீர் என்றார். வாப்பறை என்புழி வாவுதல் தாவுதலும், பறை பறத்தலுமாம். ஆர்ந்து என்பது அருந்தென வந்தது. புலவுநாறும் கழியை இரும்புலா என்றது, ஆகுபெயர். சிறிது போதிற் கழிதலும் ஒளிகுன்றி இருள் பரவிப் பெருகுதலும் உடைமைபற்றி மாலை சிறுபுன்மாலை எனப்பட்டது. களவின்கண் காதற் புதுவேட்கையால் காதலன் பிரி வாற்றாது கையற்று உறையும் தலைமகள் தனிமையுற்று மாலைப்போதில் கானற் சோலைக் கழிக்கரையைக் கண்டு வேட்கை மீதூர்தலால் கேட்கத் தகுவன இவை தகாதென இவையென்னும் தெரிந்துணர்வு மயங்கி வெண் குருகுகள் பறப்பனவற்றை நோக்கி அவற்றோடு உரையாடல் உறு கின்றாள், காதல்வேட்கை, பெருகினார்க்கும் கலங்கஞர் எய்திக் கையறவு எய்தினோர்க்கும் தனிமை நிலையில் மாவும் புள்ளும் மலையும் கடலும் யாவும் கேட்குந போலவும் கிளக்குந போலவும் தோன்றி உரையாட்டுக்குரிய பொருளாதல் இயல்பு, தனித்துறையும் தலைமகள், பகற்போதில் கடற்கண் மீன்களை மேய்ந்துண்டு மாலைப் போதில் கூடு நோக்கிச் செல்லும் வெண்குருகுகட்குக் கூறுவதால், கருங்கால் வெண்குருகு என்றும், வளைநீர் மேய்ந்து வாப்பறை விரும்பினையாயினும் என்றும் கூறினாள். கடற்கு மீன் மேயச் செல்லும் போதும் மாலையில் குடம்பை நோக்கி மீளும் போதும் கிளைக்குருகுகள் சூழ்வரச் செல்லும் இயல்பு பற்றிக் கிளைமுதல் தழீஇ என்றாள். பெடையுடன் கூடியிருத்தலால் சிறிது போது தங்கிச் செல்லலாம் என்றற்கு நின்பெடையொடு சிறிது இருந்து என்றும், அப்பெடை தானும் பசியின்றாமாறு கழிமீனை மிகவுண்டு இனிதிருக்கின்றமையின் விரைதல் வேண்டா என்பாள், இரும்புலா அருந்து நின்பெடை என்றும் கூறினாள். இனி, நீ நின் பெடையொடு சென்று கூறற்குரியன இவையென்பாளாய், காதலராகிய அவரையின்றித் தனித்திருக்கும் எனக்கு மாலைப்போதில் வேட்கைத் துன்பம் பெருகி வருத்துகிறது என்பாள், சிறுபுன் மாலை பெரும் புலம்பின்று என்றும், இதனை அறியின் நினக்கு என்பால் இரக்கமும் அது வாயிலாக அன்பும் உண்டாகும் என்பாள். அது நீ அறியின் அன்புமாருடையை என்றும், யான் கூறுவனவற்றைப் புறக்கணிக்காது கேட்டல் வேண்டும் என்பாள், நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என்றும், கேட்பனவற்றை நீ வாழும் துறைக்கு உரியனாகிய தலைமகன் பால் கொண்டுய்த்து அவன் உள்ளத்தில் நன்கு பதியுமாறு சொல்லி உடனே போந்து என்னைத் தலையளிக்கு மாறு செய்தல் வேண்டும் என்றற்கு, உய்த்து ஆங்கு உணர உரைமதி என்றும் இயம்பினாள். தழையோர் கொய்யுமாறு குழை யரும்பிய ஞாழல் என்றது, எத்துணை எளியோர் வரினும் அவர்க்கு எளிய செவ்வி யுடையனாதலின் துறைகிழவோன்பால் இனிது செல்லலாம் என்றும், பெருங்கடலாயினும் துறைக்கண் நிற்கும் கண்டலின் மணிப்புறத்தைத் திரைகளாகிய கையால் தைவரும் என்றது, துறைகிழவோன் தன் பெருமையை மதியாமல் நின்னை அருளி வரவேற்று அன்பு செய்வன் என்றும் உரைத்தவாறு எனக் கொள்க. 55. பெருவழுதியார் பெருவழுதி என்ற பெயரைக்கண்ட துணையே நம் மனதில் புறநானூற்றுச் சான்றோர் நிரலில் இடம் பெற்றுள்ள பெருவழுதியின் பெயர் நினைவில் தோன்றுகிறது. சிறிது இருந்து நோக்குவோமாயின் இருவரும் ஒருவரல்லர் என்பது தெளிவாம்; அவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றார்; இவர் வெறிதே பெருவழுதி எனப்படுகின்றார். மேலும் அவர் இளம் பெருவழுதி என்று தெரித்துக் கூறப்படுவது இவர் அவரின் மூத்தோர் என்பது தோன்ற நிற்கிறது. இருவரையும் ஒருவரெனக் கருதுவோர் என்ன காரணம் கொள் கின்றனரோ, தெரிந்திலது நிற்க. இப்பெருவழுதியார் தாம் பெற்ற புலமை நலத்தை இனிய நகைச்சுவை மலியப் பாடிப் புலப்படுத்தும் சிறப்புடையவர். தனிமையிற் கண்டு காதலுற்ற தலைவன் களவின்கண் தலைவியைக் குறியிடத்தே கண்டு பயின்றுவருங்கால் காதலன்பு முறுகிச் சிறப்பது பொருளாக வரைவினை நீட்டித்தான். அக்காதல் கைம்மிக்க தலைவி அவனை இன்றியமையாளாய் வருந்தவும், தோழி தலைவனை விரைவில் வரைந்து கொள்ளுமாறு கடவலுற்று "தலைவியின் களவு தாய்க்குப் புலனாய்விட்டது. இனி நீ விரைந்து வரைந்து கோடலே செயற்பாலது" என்று கூறக் கருதினாள். அன்று தலைவன் குறியிடம் போந்து நிற்கக் கண்டதும் தோழி, மனையின்கண் நிகழ்ந்ததாக ஒரு செய்தியைப் படைத்துக் கொண்டு, "தலைவ, குறிக்கும் குறி பொய்க்காமல் இரவுக் காலத்து இடையூறுகளைப் பொருளாக மதியாது வந்து இவளைக் கண்டு இன்புறுத்துகின்றாய்; அதனால் தலைவி மேனியில் மதநாற்றம் எழுதலால் அவளை வண்டினம் மொய்க்கின்றன; அதுகாணும் அன்னை அவளை உற்று நோக்கி, முன்பும் நீ இன்று போல் வண்டுமொய்க்கும் மணம் கமழ்ந்தனையோ? என வினவினாள்; அவட்குத் தலைவி தக்க விடையிறுக்கமாட்டாளாக, அன்னை மயங்கி என்னை நோக்கினாளாக, இவ்விடுக்கணிலிருந்து இவள் எவ்வாறு தப்புவள் எனச் சிறிது போது எண்ணி, அங்கே எரிந்துகொண்டிருந்த சந்தனக் கட்டையைக் கையிலேந்தி, "இதனாலன்றோ இவளை வண்டு மொய்க்கலுற்றன" என்று அன்னைக்குக் கூறினேன். சந்தனத்தின் புகைபடிந்த மேனியில் எழும் மணத்தைப் பூவின் மணமெனப் பிறழக் கொண்டு வண்டு மொய்த்தன போலும் என நினைந்துகொண்டு தாயும் சென்றாள்; இந்நிலையில் நீ விரைய மணந்து கோடல் நன்று" என்று குறிப்பாய்க் கூறினாள். இவ்வாறு மறை புலப்படாவகையில் சொல்லாடித் தலைவனைத் தோழி வரைவு கடாவிய நலம்கண்டு மிக்க வியப்புற்ற பெருவழுதியார் அவள் கூற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி 1உறுபகை பேணா 2திரவின் வந்திவள் பொறிகிளர் ஆகம் 3புல்லலின் வெறிகொள அறுகாற் பறவை அளவில மொய்த்தலின் கண்கோ ளாக 4நோக்கிப் பண்டும் இனையை யோவென 5வினவினள் அதனெதிர் வல்லிதிற் 6சொல்லா ளாகி அல்லாந் தென்முக நோக்கி யோனே 7அன்னை யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த சாந்த ஞெகிழி காட்டி ஈங்கா யினவால் என்றிசின் யானே. இது, வரைவிடை மெலிவாற்றுவிக்கும் தோழி தலைமகற்குச் சொல்லியது. உரை ஓங்குமலை நாட - உயர்ந்த மலையையுடைய நாட்டுக்குத் தலைவனே; நின் வாய்மை ஒழிக - நின் வாய்மையை விட்டொழிப்பாயாக; காம்பு தலைமணந்த கல்லதர்ச் சிறுநெறி - மூங்கில்கள் தம்மிற் பின்னி வளர்ந்திருக்கும் கற்கள் பொருந்திய சிறு வழிகளைக் கடந்து; உறுபகை பேணாது - இடையில் உண்டாகக் கூடிய தீங்குகளைப் பொருளாக மதியாமல்; இரவின் வந்து - இரவுப் போதில் குறியிடம் போந்து; இவள் பொறிகிளர் ஆகம் புல்லலின் - தேமல் பரந்த இவளது மார்பை முயங்குதலால்; வெறிகொள - இவள் மேனி மத நாற்றம் கமழ்தலின்; அறுகாற்பறவை அளவில மொய்த்தலின் - ஆறுகால்களையுடைய வண்டினம் அளவின்றி மொய்ப்பதனால்; கண் கோளாக நோக்கி - கண்களால் நேராகப் பார்த்து; பண்டும் இனையையோ என வினவினள் - முன்பும் இவ்வாறு வண்டு மொய்க்கப்பட்டனையோ என வினவவும்; அதன் எதிர் வல்லிதின் சொல்லாளாகி - அதற்கு நேரே விரைந்து ஒன்றும் விடைகூற மாட்டாளாக; அல்லாந்து - மயங்கி; அன்னை என்முகம் நோக்கியோள் - அன்னை என்முகத்தை நோக்கினாளாக; யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என - இவ்விடுக்கணான நிலையில் அறிவு தெளிந்து யாது கூறி உய்யப் போகின்றாள் என்று நினைத்து; மடுத்த சாந்த ஞெகிழி காட்டி - நெருப்பில் எரிந்து கொண்டிருந்த சந்தனக் கொள்ளிக் குறைக்கட்டையை எடுத்துக்காட்டி; யான் ஈங்காயினவால் என்றிசின்- இதனை யெறித்தலால் இவ்வாறு ஆயிற்றென்று யான் கூறினேன்; அன்னையும் மனம் அமர்ந்து போயினள் எ-று. மலைநாட, நின்வாய்மை ஒழிக, நிகழ்ந்தது கேள்; சிறுநெறியுறுபகை பேணாது இரவின் வந்து புல்லலின், வெறிகொள, அறுகாற் பறவை மொய்த்தலின், கண்கோளாக நோக்கி, பண்டும் இனையையோ என அன்னை வினவினள்; அதன் எதிர் சொல்லாளாக அவள் அல்லாந்து என்முகம் நோக்கியாள்; இவள் யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த சாந்த ஞெகிழி காட்டி, ஈங்காயினவால் என்றிசின் யான்; அதுகேட்டு அன்னையும் அமர்ந்து நீங்கினள்; இனி, தாழ்த்தலின்றி வரைந்து கோடல்வேண்டும் எனக் குறிப் பெச்சத்தால் ஏற்பன பெய்து வினைமுடிவு செய்க. காம்பு, மூங்கில், கல்லதர், மலைவழியுமாம். ஏதம் செய்வது பகையாதல் பற்றி உறுபகை என்றார். வெறி, ஈண்டு மதநாற்றத்தின் மேற்று. அறுகாற்பறவை, தேன்வண்டு, வண்டுக்கும் கால் நான்கே யாயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டினையும் கூட்டி அறுகால் என்பது பண்டையோர் வழக்கு; "அறுகால் யாழிசைப் பறவை யிமிர"1 எனக் கபிலர் கூறுவது காண்க. கண்கோளாக நோக்குதல், கண்களால் நேரேகாணுதல். வல்லிதின், விரைவாகச் சொல்லாளாக எனற்பாலது சொல்லாளாகி என வந்தது. அன்னை அல்லாந்து என் முகம் நோக்கியோள் என இயையும்; இனி, தலைவி சொல்லாளாகி அல்லாந்து என்முகம் நோக்கியோள் என இயைத்தலும் ஒன்று. அன்னை, அண்மைவிளி எனினுமமையும், என்றிசின், என்று சொல்லியுய்ந்தேன் என்றவாறு. களவே விரும்பிச் செய்குறி பிழையாது தலைமகன் வந்து போதலை உவந்து போற்றும் தோழி, அதனை மாற்றி வரைவின்கண் அவனது கருத்தைச் செலுத்தும் குறிப்பின ளாதலின், அவன் வரவை வாய்மையென்றும், இவ்வரவு வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்துக்கு ஆக்க மாகாமைபற்றி ஒழிக நின்வாய்மை யென்றும் கூறினாள். ஒழிக என்றது, அவன் உள்ளத்தில் ஆராய்ச்சி பிறப்பித்தது. உறுபகை பேணாமையும் இரவிற் போந்து கூடும் வாய்மையும் நின் சால்புக்கும் தலைமைக்கும் போதிய சான்று பகரினும், இரவு வரவின் ஏதம் எண்ணி வருந்தி மேனி வேறுபட்டு எய்தும் மெலிவினை எண்ணாயாயினை என்பது தோழி கூற்றின் குறிப்பு. நின் கூட்டத்தால் தலைவி மேனிக் கண் எழும் நாற்றம் அன்னையின் ஆராய்ச்சிக்கு உரியதாயிற்றெனத் தாயறிந்தமை புலப்படுத்து கின்றா ளாகலின், அறுகாற் பறவை அளவில மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப் பண்டும் இனையையோ என வினவினள் என்றாள், வண்டினம் அளவின்றி மொய்த் தற்கு ஏது இது என்பாள். இரவின் வந்து இவள் பொறி கிளர்ஆகம் புல்லலின் வெறி கொள என்றும் எடுத்துரைத்தாள். கூரிய மதிநுட்ப முடையவளாயினும், நின்பால் உளதாகிய காதல் கைம்மிகுதலால் கலங்குதுயர் கொண்டு அறிவு சோர்ந்து உடனே விரைந்து ஒரு சொல்லும் கூறமாட்டாளாயினள் என்பாள் அதன் எதிர் வல்லிதின் சொல்லாளாக என்றும், அதனால் மருட்சியுற்ற அன்னை வேறு வினவும் திறனின்று என்முகம் நோக்கினள் என்பாள், அல்லாந்து என்முகம் நோக்கியோளே அன்னை என்றும், அந்நிலையில் யாது நினைந்து எதனைச் சொல்லி இவள் இந்த இடுக்கணினின்றும் உய்குவள் என எண்ணினேன் என்பாள் யாங்குணர்ந்து உய்குவள்கொல் என எண்ணி என்றும், தான் பின்னர்ச் செய்தது இதுவென்பாள், மடுத்த சாந்த ஞெகிழி காட்டி ஈங்காயினவால் என்றிசின் யானே என்றும் கூறினாள். சந்தனக் கட்டையை எரித்தலால், அவண் எழுந்த நறும்புகை அவள் மேனியிற் படிந்து நறுமணம் கமழ, வண்டினம் அதனால் அவளை மொய்க்கலுற்றன என்றாளா யிற்று. ஆகவே, இம்மணம் இவட்குப் புதிது புணர்ந்த தொன்று என்றும், பண்டெல்லாம் இவ்வாறு நாறுதல் இல்லை யென்றும் எண்ணி அன்னை எழுப்பிய வினாக்களுக் கெல்லாம் விடையிறுத்தவாறாயிற்று. இதனைக் கேட்கும் தலைமகன், ஒன்றும் சொல்லாளாகிய தலைவியின் காதற்பெருமையும் அன்னையின் காவலருமையும் இந்நிலை நீடுமாயின் எய்தும் ஏதமும் எண்ணி வரைந்து கொள்வானாவது பயன். "களவலாராயினும்"1 என்ற நூற்பாவில் வரும் "தோழியை வினவலும்" என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி "இது செவிலி - வினாயினமையைத் தோழிகொண்டு கூறினாள்" என்றும், இன்னும் இந்நூற்பாவில் உள்ள "அன்ன பிறவும்" என்ற இலேசினால், "கண்கோளாக நோக்கிப் பண்டும் இனையையோ" என்றலும் போல்வன பிறவும் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறவர். 56. இளங்கீரனார் இப்பாட்டும் பெருவழுதி பாடியதென அச்சுப்படி கூறுகிறது; ஈண்டை ஆராய்ச்சிக்குக் கிடைத்த ஏடுகளில் இளங்கீரனார் பெயரே காணப்பட்டமையின் இதுவே கொள்ளப்பட்டது. முன்னைப் பாட்டைப் பாடியவர் பெருவழுதியாராதலின், அந்நினைவால் ஏடு எழுதினோர் இப்பாட்டின் இறுதியில் தவறாகப் பெருவழுதியென்று எழுதிவிட்டிருத்தல் வேண்டும். பெருவழுதியார் பாட்டாயின் "இதுவும் அவர் பாடியது" என்று குறிப்பிட்டிருக்கும்; அவ்வாறு எழுதுவதுதான் ஏடெழுது வோர் மரபு. ஒருவரை யொருவர் இன்றியமையாத அளவு காதல் பெருகிய நிலையில் தலைமகன் தான் வரைந்து கோடற்கெனப் பொருள் வயிற் பிரியும் கடமையுடையனானான். அக்காலை, தான் மீண்டு வருந்துணையும் தலைவியை ஆற்றுவிக்குமாறு தோழியைப் பணித்துச் சென்றான். காதலன் பிரிந்திருக்கும் பொழுது சிறிதெனினும், காதலுடையாட்கு அது மிகப் பெரிதாய்த் தோன்றுவது இயல்பாதலால் அவள் ஆற்றாமல் வருந்தலுற்றாள். அது கண்ட தோழி ஆற்றாமை மீதூருமிடத்து நெஞ்சினை அடக்கி ஆளுவதுதான் தலைமைப் பண்பு என்று தெருட்டினாளாக, தலைவி, "என் நெஞ்சு என்பால் இருப்பினன்றோ யான் அது செய்தல் கூடும்; அதுதானே இல்லை" என்றாள். "அஃது எங்கே போய்விட்டது" எனத் தோழி வினவ, "யான் ஆற்றாமையால் மெலிந்து வளை நெகிழ்ந்து வருந்துமாற்றைக் கண்டு எனது அல்லலைக் காதலர்க்கு அறிவுறுத்துதல் குறித்து அவர்பால் சென்ற என் நெஞ்சு இன்னும் என்பால் வந்திலது" என்றாள். "இன்னும் அது வாராமைக்குக் காரணம் யாதாகலாம்" என எழுந்த வினாவிற்குத் தலைவி, அவர்பால் சென்ற நெஞ்சம் அவர் வினைக்குச் சூழ்ச்சித் துணையாய் இருந்து வினைமுற்றியபின் அவரோடு உடன்வரக் கருதி நின்றொழிந்ததோ, அன்றி, காதலர் அதனை அருளாமையால் கருந்தழிந்து மீண்டு இவண் போந்து என்னை நோக்கி யான் நிறம் வேறுபட்டு மேனி மெலிந்து கிடப்பது கண்டு என்னைப் பிறன் எனப் பிறழக் கருதி வேறு எங்கேனும் போய் விட்டதோ, ஒன்றும் தெரிந்திலது" என்றாள். இச்சொல்லாட்டில் அமைந்த இலக்கிய நயம் கண்ட இளங்கீரனார் இதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடியுள்ளார். குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவி வண்டுதரு நாற்றம் 1வளிகலந் தீயக் கண்களி பெறூஉங் 2கவின்பெறு காலை எல்வளை நெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் சென்ற 3நெஞ்சம் செய்வினைக் குசாவாய் ஒருங்குவரல் நசையொடு 4வருந்தின்று கொல்லோ அருளா ராதலின் அழிந்திவண் 5மேஎய்த் தொன்னலன்6 இழந்தவென் பொன்னிறம் நோக்கி ஏதி லாட்டி இவளெனப் போயின்று கொல்லோ 7நோய்தலை மணந்தே இது, வரைவிடை மெலிவாற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது. உரை குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவி - குறிய அடியினையுடைய குராமரத்தின் சிறு சிறு தளிர்களையுடைய நறிய பூவினது; வண்டுதரு நாற்றம் வளி கலந்து ஈய - வண்டு கிளர்வதால் எழுந்த மணத்தைக் காற்றுக் கொணர்ந்து வீசுவதால்; கண் களிபெறூஉம் கவின் பெறு காலை - கண்கட்கு மகிழ்ச்சி நல்கும் இயற்கை யழகு பெற்ற மாலைப் போதில்; எல்வளை நெகிழ்த்தோர்க்கு - விளங்குகின்ற என் கைவளைகள் கழன்றோடுமாறு மெலிவித்த காதலர்க்கு; அல்லல் உறீஇயர் சென்ற நெஞ்சம் - எனது ஆற்றாமைத் துன்பத்தை அறிவுறுத்துவான் சென்ற நெஞ்சம்; அவண் செய்வினைக்கு உசாவாய் - அவர் மேற்கொண்டு அங்கே இருந்து செய்யும் வினைக்கு உசாத் துணையாய் இருந்து வினையை முற்றிவித்துக் கொண்டு; ஒருங்குவரல் நசையொடு வருந்தின்று கொல்லோ - அவரோடே உடன் வருவதற்கான விருப்பத்தால் அங்கே கிடந்து வருந்துகின்றதோ; அருளாராதலின் - காதலர் அருள் செய்யாமையால்; அழிந்து - கருத்தழிந்து; இவண் மேஎய் - இவ்விடம் யான் அறியாமற் போந்து; தொல்நலன் இழந்த என் பொன்நிறம் நோக்கி - பண்டைய மாமைநிறம் கெட்டுப் பசந்து பொன்மை நிறம் பெற்றுள்ள என்மேனி வேறுபாடு கண்டு; இவள் ஏதிலாட்டி என - இவள் பிற ளொருத்தி போலும் எனக் கருதி; நோய்தலை மணந்து போயின்று கொல்லோ - என்னைக் காணாமையால் வருத்தம் மிகுந்து வேறு எங்கேனும் என்னைத் தேடிக் கொண்டு போய் விட்டதோ, ஒன்றும் தெரியவில்லை எ-று. கவின் பெறுகாலை, எல்வளை நெகிழ்த்தோர்க்கு, அல்லல் உறீஇயர் சென்ற நெஞ்சம், அவண் உசாவாய், நசையொடு வருந்தின்று கொல்லோ, அருளாராதலின் அழிந்து, இவண் மேஎய், என் பொன் நிறம் நோக்கி, ஏதிலாட்டி இவள் என நோய்தலை, மணந்து போயின்று கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குராமரம், நெடிது உயராது அடிகுறுகிப் பருத்திருப்பதாகலின் அதனைக் குறுநிலைக் குரவு என்றும், அதன் தளிர் மிகவும் சிறிதாயிருப்பது விளங்கச் சிறுநனை என்றும் கூறினார். மலரும் செவ்வியிலுள்ள அரும்புகளை வண்டினம் அமர்ந்து கிளறுவதால் இதழ் விரிய எழும் மணத்தை வளிகலந்து எங்கும் பரப்புவது தோன்ற வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈய என்றார். இயல்பாக மலர்வதற்குள் வண்டு மலர்வித்து மணத்தை வெளிப்படுத்துவதால் வண்டு தரு நாற்றம் எனப்பட்டது. புதுத்தளிரும் பசுந்தழையும் போர்த்து இனிய மலர்கள் மலர்ந்து எம்மருங்கும் இனிய காட்சியும் நறுமணமும் பெற்றுக் காண்பார் கண்ணுக்கு மிக்க இன்பம் நல்குவது பற்றிக் கண்களி பெறூஉம் கவின்பெறு காலை என்றார். கவின், ஒருவர் கை செய்து பிறப்பியாத இயற்கையழகு; செயற்கையால் உளதாகும் அழகு வனப்பு எனப்படும்; இவ்வேறுபாட்டைக் "கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு"1 என்பதனாலறிக, எல்வளை என்புழி, எல் விளக்கம், உறீஇயர், உறுத்தற்கு; செய்யியர் என்னும் வினை யெச்சம், சென்ற என்ற வினை கொண்டது. உசா, உசாத்துணை; ஆராய்ச்சித் துணை, மேஎய் மேவுதல், வருதல், தலைமகளின் இயற்கை நிறம் மாந்தளிர் நிறமாகிய மாமை; அஃது ஈண்டுத் தொன்னலம் எனப்படுகிறது. பசந்த மேனி பொன்னிறம் பெறுவது பற்றிப் பொன்னிறம் என்றார். ஏதிலாட்டி, அயலாள். தலைமணத்தல், தலைக்கொள்ளுதல். தலைவனது வரைவிடை வைத்த பிரிவின்கண் தன்னை ஆற்றுவிக்கும் தோழியொடு சொல்லாடும் தலைவி, தன் உடலின் மெலிவு காட்டி, கைவளை நெகிழ்ந்து நீங்குதற் கேதுவாகிய இம்மெலிவு தலைவன் பிரிவால் உளதாயது என்பாள், அவனை எல்வளை நெகிழ்த்தோர் என்றும், அம்மெலிவினை அவற்கு எடுத்துரைப்பதோடு அவனை விரையப் போந்துகூடி அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன அறிவுறுத்தல் வேண்டித் தன் நெஞ்சம் அவன்பால் சென்றது என்பாள், அல்லல் உறீஇயர் சென்ற நெஞ்சம் என்றும், அங்கே அவர் தனியராய் மேற்கொண்ட வினையின்கண் ஒன்றியிருப்பது கண்டு, அவ்வினைக் கூறுகளை வகுத்து முறை செய்து உண்ணின்று உறுவன எண்ணி யுணர்த்திச் செயலை முற்றுவிக்கும் பெருந்துணை நெஞ்சமாதலின், அது தன் இயல்புக்கேற்ப அவர்க்குத் துணை செய்கின்றது போலும் என்பாள், செய்வினைக்கு உசாவாய் என்றும், வினைமுடித்தல்லது மீள்வது ஆள்வினையுடையார்க்கு அறமன்மையின், முடியுங்காறும் உடனிருந்து அவரோடு உடன் மீள்வது துணைமைக்கு இயல்பு என்று எண்ணி அங்கே தங்கியொழிந்தது போலும் என்பாள், ஒருங்குவரல் நசையொடு என்றும், அதுவரையும் யான் ஆற்றாது வருந்து மாற்றையும் உடன் எண்ணுதலின் வருந்தின்று கொல்லோ என்றும் கூறினாள். இஃது உடன்பாட்டு நிலை. இனி, எதிர்மறை முகத்தால் நினைக்கலுற்றவள், சென்ற என் நெஞ்சினை நோக்கி, வினைவழி யொழுகும் தன்மையால் நம்மை மறந்து அதன்பால் அருள் செய்திலராயின், தனது ஊக்கம் இழந்து அறிவு மயங்கி மீண்டு வந்திருக்கும் என்பாள், அருளாராதலின் அழிந்து இவண் மேஎய் என்றும், வந்திருக்குமாயின் அஃது என்பால் உளததால் வேண்டும்; இல்லாமையின் அதற்குக் காரணம் என் வேறுபாடு கண்டு ஏதிலாட்டி என மருண்டு நோய்மிகுந்து வேறு எங்கேனும் என்னைத் தேடிச் சென்றொழிந்தது போலும் என்பாள், தொன்னலன் இழந்த என் பொன்னிறம் நோக்கி ஏதிலாட்டி இவள் எனப் போயின்று கொல்லோ நோய் தலை மணந்து என்றும் கூறினாள். உடனிருக்கும் போதே எனது ஆற்றாமை கண்டு வருந்தும் நெஞ்சம், ஏதிலாட்டி யெனக் கருதி நீங்கும்போது கையறவு பெரிதுற்று வருந்தியிருக்கும் என்பாள், நோய்தலை மணந்து என்றும், புகுமிடம் வேறின்மையின் எங்கே சென்று வருந்துகின்றதோ என்பாள், போயின்று கொல்லோ என்றும் உரைத்தாள், இது கையற்று மொழிதல். "நோயும் இன்பமும்"1 என்று நூற்பாவுரையின்கண் இப்பாட்டினை யோதிக்காட்டி "இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று" என்பர் இளம்பூரணர். இனி, "மறைந்தவற் காண்டல்"2 என்ற நூற்பாவின்கண் குறிக்கப்படும் "பிரிந்த வழிக் கலங்கினும்" என்றதற்கும், "நோயும் இன்பமும்"3 என்பதன் உரையில் இப்பாட்டையே காட்டி, நெஞ்சினை உறுப்பும் உணர்வும் உடையது போல இளிவரல் பற்றிக் கூறுதற்கும் இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 57. பொதும்பில் கிழார் பொதும்பில் என்பது மதுரைக்கு வடக்கில் மிக்க அண்மையில் உள்ளதோர் சீறூர்; இப்போது அது பொதும்பு என வழங்குகிறது. இவ்வூர்ச் சான்றோராகிய இவர் கிழார் என்ற சிறப்புப் பெற்றதன் பயனாக, இவரது இயற்பெயர் இன்னது என அறியாதவாறு மறைந்து போயிற்று. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் என்றொரு சான்றோர் இந்நூற்கண் காணப்படுவதால், இவர் தம்மைப்போல் தம்முடைய மகனையும் புலமைச் சால்புடையராக்கிய தகவு பெரிதுடையவர் என்பது விளங்கு கிறது. புல்லாளங் கண்ணியார் என்றொரு சான்றோரும் இப்பொதும்பிலில் இருந்துள்ளார். இதனால் பண்டை நாளில் புலவர் பலர் தோன்றிய பொற்பு இப்பொதும்பில் என்னும் ஊர் பெற்றிருந்தமை தெரிகிறது. தினைப்புனம் காவல்பூண்ட தலைமகள் தன் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த தலைமகன்பால் காதல்கொண்டு களவொழுக்கம் மேற்கொண்டாள். தினை விளைவு முற்றியதும் அவள் தன் செல்வமனைக்கு மீண்டும் செல்ல வேண்டிய வளானாள். ஒருநாள் தலைமகன் போதரக் கண்ட தோழி, "தினைமுற்றினமையின் இனிக் காவல்விடுத்து யாம் எம் கடிமனை சென்று சேர்வேம்; இங்கே நின்னைத் தலைப்பெய்து இன்புற்றதுபோல அங்கே கூடாதாகலின், என் தலைவி மேனிநலம் தொலைந்து மிகவும் வருந்துவள்; யான் இந்நிலையில் செய்வதறியாது மயங்குகின்றேன்; ஆகலின், ஒருதலையாக நீ மணந்து கோடல் தக்கது" என்று கூறுகின்றாள். இக்கூற்றை நிகழ்த்தும் தோழி, இனிய காட்சி யொன்றைக் காட்டி அதன் வாயிலாகத் தலைவியை மணந்து இல்லுறை நல்லறம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவது கண்ட பொதும்பில் கிழார், அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். தடங்கோட் டாமான்3 மடக்கண் மாநிரை குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி 2வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியும் மாமலை நாட மருட்கை யுடைத்தே செங்கோற் கொடுங்குரற் சிறுதினை வியன்புனம் கொய்பதங் குறுகுங் காலையெம் மையீ ரோதி1 மாண்நலத் தொலைவே, இது, செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. உரை தடங்கோட்டு ஆமான் மடக்கண் மாநிரை - பெரிய கொம்புகளையுடைய ஆமான்களின் பெரிய நிரை; குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென - குன்றின்கண் நிற்கும் வேங்கை மரத்தின் நிழலில் கன்றுகளோடு தங்கினவாக; துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி - கன்றுகளை யூட்டி உறங்கும் செவ்வி கண்ட துய்போலும் தலைமயிரையுடைய மந்தி; கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி-கல்லென ஆரவாரிக்கும் ஏனைக் குரங்கினத்தைக் கைகவித்து அடக்கி உறங்கும் ஆமான்பிணையைக் குறுகி; வீங்கு சுரைஞெமுங்க வாங்கி-பருத்த மடிக்காம்பை அழுந்தப் பற்றி வளைத்து; தீம்பால் கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியும்-இனிய பாலைக் கல்லாத வலிய தன் குட்டியின் கைநிறையுமாறு பிழியும்; மாமலை நாட-பெரிய மலையையுடைய நாட்டின் தலைவனே; செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்-செவ்வே வளர்ந்த தண்டினையும் வளைந்த கதிரையுமுடைய சிறு தினைகள் நிற்கும் அகன்ற புனம்; கொய்பதம் குறுகுங்காலை-தினைக்கதிரை அரியும் காலம் எய்தும்போது; எம் மையீரோதி-கரிய குளிர்ந்த கூந்தலையுடைய எம் தலைமகள்; மாண்நலம் தொலைவு மருட்கை யுடைத்து-தனது மாண்புடைய நலம் கெடுமாகலின் அஃது எனக்கு மருட்சியை விளைவியாநின்றது, காண் எ-று. நாட, புனம் கொய்பதம் குறுகுங்காலை, எம் மையீரோதி மாண் நலம் தொலைவு மருட்கை யுடைத்து, காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மாநிரை வதிந்தென, துஞ்சுபதம் பெற்ற மந்தி, கைகவியாக் குறுகி, வாங்கி வன்பறழ் கைந்நிறை, தீம்பால் பிழியும் என இயையும். தடங்கோட்டு ஆமான் எனவே, காட்டுப்பசு என்பது பெற்றாம். தடங்கோடு, உரிச் சொற் புணர்ச்சி மேல்நிகழ்வது உணராது உறங்குதல்பற்றி மடக்கண் மாநிரை என்றார். வயிறார மேய்ந்த மாநிரை நண்பகற் போதில் வேங்கையின் நிழலில் இருந்து உறங்குமாறு தோன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென என்றார். கல்லென ஒலித்து வரும் ஏனைக் குரங்குகள் அவ்வாறே நெருங்குமாயின், உறங்கும் ஆமான் விழித்துக்கொள்ளும் என அஞ்சுதலின், மந்தி கல்லென் சுற்றம் கைகவியாக் குறுதி வந்ததெனக் கூறுகின்றார். பிறவற்றை ஒலி செய்யாவாறு பணிக்கும் தான் ஒலித்தல் கூடாதென்பது பற்றிக் கைகவியாக் குறுகிற்றென அறிக. கையில் வாங்கி உண்டறியாக் குட்டி என்றற்குக் கல்லா வன்பறழ் எனப்பட்டது. நலம் தொலைந்த வழி எய்தும் சிறுமைபற்றிப் பிறக்கும் மெய்ப்பாடாதலின் மருட்கை யுடைத்தாம் என்றார். தினைத்தாள் வளையாது நேர்பட நிற்பது கொண்டு செங்கோல் எனப்பட்டது. முற்றிய தினைக்கதிர் தலை சாய்ந்து நிற்குமாதலின் கொடுங்குரல் என்றும், அதன் மணிகள் சிறுத்திருக்கும் இயல்வு தோன்றச் சிறுதினை என்றும் கூறினார். பதம், செவ்வி, இளமைக் காலத்து எழில்நலம் என்றற்கு மாணலம் என்றார். களவின்கண் ஒழுகும் தலைமகற்குத் தினை காவல் ஒழிந்த வழி எய்தும் இற்செறிப்பும் காவலருமையும் கூட்டத்துக்கு இடையீடு செய்யுமாகலின், பெற்றோர் உறங்கும் செவ்வி நோக்கித் தலைவியைக் கொண்டு தலைக்கழிதலே செய் திறனாம் என உள்ளுறுத் துரைக்கின்றாளாகலின், தினை கொய்யும் காலம் குறுகினமை தோன்றத் தோழி, செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்பனம் கொய்பதம் குறுகுங்காலை என்றும், அக்காலத்தே காவல் வேண்டா மையின் தலைமகள்தன் கடிமனை சென்று ஒடுங்குவள் எனவும், காப்பு மிகுதியால் அங்கே புனத்திற் போலக் கூட்டம்பெறல் அருமையாதாதலால், தலைவி வருத்தம் மிக்கு மேனி வேறுபடுபவள் எனவும், மேல் விளைவன நினைக்கும் எம் அறிவு மருண்டு அயர்கின்றது எனவும் கூறுவாள், எம் மையீ ரோதி மாணலம் தொலைவு மருட்கை யுடைத்து என்றும் கூறினாள். ஆமான் உறங்கும் செவ்வி கண்டு தன் சுற்றத்தைக் கைகவியா அடக்கித் தன் பறழ்க்கு மந்தி வீங்குசுரை வாங்கித் தீம்பால் பிழிதல் போல, இவளைக் கொண்டுதலைக் கழியக் கருதுவையாயின், மனையவர் உறங்கும் செவ்வி நோக்கிக் காவலை யிகந்து இவளைக் கொணர்ந்து நின் கையடைப்படுத்துவேன் எனக் குறிப்பால் உணர்த்தியவாறு. இஃது உவமப் பொருளில் வந்த உள்ளுறை. 58. உறையூர் முதுகூத்தனார் களவு நெறியின்கண் காதல் அன்பால் கருத்துப் பிணிப்புண்ட தலைமக்கள் இருவரிடையே, தலைமகன் பகற்குறி வந்து ஒழுகுங்கால், ஒருநாள், தோழி, குறியிடைத் தலைவியைக் கண்டு நீங்கும் தலைமகனை அணுகி, "இவண் சிறிது தங்கிச் செல்வாயாக" என வேண்டினாளாக, அவன் தேர் செலவையே மேற்கொண்டது. அதனால் வருத்தமுற்ற தோழி அவன் தேரிற் பூண்ட குதிரைகள் கோல்கொண்டு அலைக்கப்படுக என்று கூறலுற்றாள். தோழி கூற்றைச் செவியேற்றுத் தகுவன சில கேட்குமுன், அவன் தேரிற்பூட்டிய குதிரைகள் விரைந்து சென்ற தனால் தோழி வெம்மை யுற்றுக் கூறியது அமைவதாயிற்று. இக்கூற்று, அறிவுடை மகளொருத்தி அன்பாற் சினந்து கூறும் இயல்புக்கு இனிய இலக்கிய எடுத்துக் காட்டாக இலங்குவது கண்ட முதுகூத்தனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். 1பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் கோல்கொண் டலைக்கப்2 படீஇயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் தித்தன் 3முரசுமுதற் 4கொளீஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து அவல5 நெஞ்சினம் பெயர உயர்திரைப் படுநீர்ப்6 பனித்துறைச் சேர்ப்பன் 7நெடுந்தேர் நுண்ணுகம் 8பூண்ட மாவே இது, பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கித்9 தோழி மாவின்மேல் வைத்துச் சொல்லியது. உரை பெருமுது செல்வர் பொன்னுடைய புதல்வர் - பெருஞ் செல்வமுடையராய் வாழ்வோருடைய பொற்றாலி அணிந்த சிறுவர்; சிறு தோள் கோத்த செவ்வரிப்பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல - சிறிய தோளிடத்தே மாட்டிய செவ்விய அரிப்பறையின் கண்ணிடத்தில் குருவியின் வடிவமைய அமைத்த கண் அவர்களால் ஒழிவற அடிபடுவதுபோல; கோல்கொண்டு அலைக்கப் படீஇயர் - சிறு கோலால் நன்கு அடிக்கப்படுக; வீரை வேண்மான்வெளியன் தித்தன் - வீரை நகர்க்குரியனாகிய வேண்மானான வெளியன் என்பானுடைய மகன் தித்தன் என்பவனது; முரசு முதற் கொளீஇய மாலை விளக்கின் - முரசு இருக்கும் கட்டிலிடத்தே ஏற்றி வரிசையுற வைத்த விளக்குகள் போன்ற; வெண்டுகோடு இயம்ப - வெள்ளிய சங்குகள் முழங்க; நுண்பனி அரும்ப - நுண்ணிய நீர்த்துளிகளைப் பனி துளிக்க; கையற வந்த பொழுதொடு - யாம் செயலற்று வருந்துமாறு வந்த இப்பனிப் பொழுதினால்; மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர - மெய் தளர்ந்து மெலியும் நெஞ்சினையுடையேமாய் இவ்விடத்தின் நீங்கச் சென்றமையால்; உயர்திரைப் படுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் - உயர்ந்த அலைகள் எழுந்து முழங்கும் குளிர்ந்த கடற்றுறை யினை யுடையனாகிய நம் தலைவனது; நெடுந்தேர் நுண்ணுகம் பூண்ட மா - நெடிய தேரின்கண் நுண்ணிய துளையிட்ட நுகத்திற் பூட்டப்பட்ட குதிரைகள் எ.று. சேர்ப்பன், நெடுந்தேர் பூண்ட மா, கோடு இயம்ப, பனி அரும்ப வந்த பொழுதினால், மெய் சோர்ந்து அவல நெஞ்சினமாய் யாம் நீங்கச் சென்றமையால், புதல்வர் தோட்கோத்த பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக் கோல்கொண்டு அலைக்கப்படீஇயர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. சென்றமையால் என்பது அவாய் நிலை. மாதும் ஓவும் அசைநிலை. புதியராய்ப் பெருஞ்செல்வம் பெற்றோர் கடும்பற்றுள்ளம் உடையராய் இருப்பராதலின், புதல்வரைப் பொற்றாலி முதலியன அணிந்து புறத்துப்போய்த் தெருவில் விளையாட விடார் என்பதுபற்றிப் பெருமுதுசெல்வர் என்றார். பொற்றாலி வழிவழியாகச் சிறுவர்க்கு அணியும் முறைமையுடைமைபற்றி முதுசெல்வர் என்றார் என்று மாம். தெருவில் ஓடி விளையாடும் சிறுவர்க்கு அழகுற அமைத்த அரிப்பறையைக் கொடுப்பது மரபு. அப்பறையினது கண் குருவிவடிவில் எழுதப்படும் இயல்பு தோன்றக் கண்ண கத்து எழுதிய குரீஇ என்றார். இக்காலத்தும் சிறுவர் விளையாடும் பறையில் குருவி கிளி முதலிய உருவங்கள் வரையப்படுவதைக் காணலாம். படீஇயர், வியங்கோள் வினை. தித்தன் நகர்க்கண் முரசு இருக்கும் கட்டிலிடத்தே வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் வரிசைக்குக் கடற் கரைக்கண் வரிசையுறக் கிடந்து முழங்கும் சங்குகள் உவமம். நாட்காலையிலும் அந்தி மாலையிலும் செல்வ நகரங்களில் சங்கு முழக்குவது பண்டை நாளை மரபு. பொழுதொடு, ஒடுவுருபு ஆனுருபின் பொருட்டு. வீரை வேண்மான் வெளியன் தித்தன் வேளிருள் ஒருவன்; வீரை அவனது ஊர், வெளியன் அவனுடைய தந்தை வேளிர். முடியுடை வேந்தர்க்கு மகட் கொடை வழங்கும் மாண்பினராதலின், தன் மகள் வயிற்று மகனாய்ச் சோழர் குடிக்குரியனான சோழன் இளையனாய் இருந்தமை காரணமாகத் தித்தன் உறையூர்க் கண் இருந்து நாடு காவல்புரிந்து புலவர் பாடும் புகழ் பெற்றானாக, உறையூர் அந்நாளைச் சான்றோர்களால் நொச்சி வேலித் தித்தன் உறந்தை" என்று குறிக்கப்படுவதாயிற்று. இயைபு நோக்காமை யால் இத்தித்தனையும் சிலர் சோழன் எனக் கருதிவிட்டனர். களவின்கண் பகற்குறியில் தலைமகளைக் கண்டு நீங்கும் தலைமகனை அது விலக்கி இரவின்கண் வருதல் வேண்டுமெனக் கூறக் கருதி, இவண் சிறிது தங்கிச் செல்வாயாக என்று சொல்ல வாயெடுத்தலும், தலைமகன் தேரிற் பூட்டிய குதிரைகள் விரைந்து சென்றமை கண்டு உள்ளம் வெம்மையுற்றளாகலின், தோழி பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக் கோல்கொண்டு அலைக்கப்படீயர் மாதோ என்றாள். சிறுவர் தோளிடைக் கோக்கப்பட்ட சிறுபறையைக் கோல்கொண்டு இடையறவின்றி அடிப்ப ராதலின் கோல்கொண்டு அலைக்கப்படீஇயர் என்றும், பகற்பொழுது கழிந்த மாலைப்போது வரின், கடற்கரைக்கண் வெள்ளிய சங்குகள் முழங்குதலும் நுண்ணிய பனியரும் புதலும் தனித்துறையும் தலைமகட்குக் காதல் வேட்கையை எழுப்பி வருத்துவதால், அவள் மேனி சோர்ந்து வருந்துவள் என்பாள், வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு என்றும், அவல நெஞ்சினம் பெயர என்றும் கூறினாள். உயர்திரைப்படுநீர்ச் சேர்ப்பன் என்றது, தலைமைச் செயல்களால் புகழ்மிக்க தலைவன் எனத் தலைவன் சிறப்புக் குறித்து நின்றது; அதனாற் பயன், அவன் என் குறிப்பறிந்து நிறுத்த முயன்றானாகவும், குதிரைகள் நில்லாது விரைந்து சென்றன என்பாள், நெடுந்தேர் நுண்ணுகம் பூண்டமா என்றும், நில்லாமையின் யாம் வருந்துவதுபோல மாவும் வருந்துதல் வேண்டும் என்றற்கு அலைக்கபடீஇயர் என்றும் கூறினாள். "நுண்பனியரும்பும் மாலையெனவே, கூதிர்ப்பொழுதெனக் கருதலானே இரவிடை முயக்கம் இன்றியமையாதாயிற்று; இரவில் வெளிப்படை யாகத் தங்க வேண்டின் வரைந்தன்றி இயலாமையின், வரைவு தோன்றக் கூறியவாறாயிற்று" என்பர். அ. நாராயணசாமி ஐயர். "நாற்றமும் தோற்றமும்1" என்ற நூற்பாவின்கண், "அன்பு தலையடுத்த வன்புறை" என்றதனால், இப்பாட்டைக் காட்டி, "இது பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது" என்பர் நச்சினார்க்கினியர். 59. கபிலர் மேற்கொண்ட வினையைமுடித்தலினும் தலைமகன் தலைமைக்கு வீறு பிறிதின்மையின் அது நோக்கித் தலைவியிற் பிரிந்து அவன் சென்றான். குறித்த காலத்தில் வினையும் முடிந்தது; வினைமுடிவில் தோன்றிய இன்பம் அவன் உள்ளத்தைத் தலைவிபாற் செலுத்திற்று. அவள் இருக்கும் ஊரும் அவளது காதலன்பும் அவன் மனத்தில் எழுந்தன. வினை முடிந்தமை கண்ட தேர்ப் பாகன் தலைவன் குறிப்பு நோக்கி நின்றான். பாகன் செவிப்படு மாறு தன் மனத்தில் நிகழ்ந்ததைக் கூறலுற்றவன், "நம்மையே நினைந்து அன்பால் உள்ளம் உருகி மெலியும் நம் காதலி இருக்கும் ஊர் வன்புலமாகிய காட்டு நாட்டின் கண்ணது; அங்கே வாழும் வேட்டுவன் உடும்பைக் கொன்று, நெடும்புற்றிலுள்ள ஈயலையும், பின்பு தான் கொன்ற முயலையும், தன் தோளில் தொடுத்த தூணியிற் பெய்துகொண்டு மனையகம் போந்து, அவற்றை எறிந்து விட்டு அங்குள்ள கள்ளை மிகவுண்டு மயங்கிக் கிடப் பான்; அதனைக் காணும் தலைமகள், வினை முடித்துப் பெரு வளத்தோடு நாம் மீண்டு மனையகம் போந்து இனிதிருக்கும் இன்பப்பயனை எண்ணுவள்; நம் பிரிவால் உளதாகிய துன்பத்தை இதுகாறும் பொறுத்திருக்கும் அவளுடைய உள்ளம், இனி நாம் விரைந்து செல்லேமாயின் மிகவும் வருந்தும், காண்" என்றான். கருத்தொருமித்த காதலரது கற்பு வாழ்வின்கண் வினை மேவிய வழிக் காதலன் மனம் அவ்வினைக்கண் தோய்ந்து நிற்பதும், அதுமுடிந்ததும் காதலியின் காதலின்ப நினைவால் கவின் பெறுவதும் ஆகிய உயர்ந்த பண்பாட்டினை இக்கூற்றுப் புலப்படுத்தக் கண்ட புலவர் பெருமானான கபிலர், அதனை இந்த அழகிய பாட்டின் கருப்பொருளாக அமைத்துப் பாடு கின்றார். உடும்பு கைக்கொளீஇ1 வரிநுணல் அகழ்ந்து நெடுங்கோட்டுப் புற்றத் தீயல் கெண்டித் 2துஞ்சுமுயல் எறிந்த வேட்டுவன் 3எற்பட அஞ்சுவல் கொண்ட தொடைதுறத் தில்லத்து இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் 4வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து நம்வயிற் புரிந்த கொள்கையோடு நெஞ்சத்து உள்ளினன் உறைவோ ளூரே 5நுண்முகைப் புறவிடை அவிழ்ந்த முல்லைப் பொறைதலை மணந்தன் றுயவுமார் இனியே. இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. உரை உடும்பு கைக்கொளீஇ - உடும்பினைக் கைக்கொண்டு; வரி நுணல் அகழ்ந்து - வரிபொருந்திய தேரைகளை அகழ்ந்து விலக்கி; நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி - நெடிய உச்சியையுடைய புற்றுக்களைத் தகர்த்து அங்கே யுறையும் ஈயல்களைத் திரட்டிக் கொண்டு; துஞ்சுமுயல் எறிந்த வேட்டுவன்; - புதர்களில் உறங்கும் முயல்களை வெருட்டி வேட்டையாடிப் போந்த வேட்டுவன்; ஏற்பட - பொழுது படுதலாலே; அஞ்சுவல் கொண்ட தொடை துறந்து - அழகிய தன் தோளிலே தொடுக்கப் பெற்றுள்ள அம்புப் புட்டிலுடன் அவ்வுடும்பு முதலியவற்றையும் இறக்கிவிட்டு; இல்லத்து இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் - தன் மனையிடத்தே யுள்ள கள்ளை மிகவும் உண்டு மயங்கிக் கிடக்கும்; வன்புலக் காட்டு நாட்டது - வன்புலமாகிய காட்டு நாட்டின்கண் உளது; அன்பு கலந்து நம் வயின்புரிந்த கொள்கையொடு - நம்பால் உளதாகிய அன்பால் மனம் கலந்து நம்மையே விரும்பியுறையும் கொள்கையால்; நெஞ்சத்து உள்ளினன் உறைவோள் ஊர் - நெஞ்சில் இடையறவின்றி நினைத்துக் கொண்டு இருப்பவளாகிய நம் காதலியது ஊர்; புறவிடை முல்லை நுண்முகை அவிழ்ந்த - புறவின்கண் நுண்ணிய முல்லைகளும் அரும்பு மலர்ந்தன; பொறை தலைமணந்தன்று - இதுகாறும் நமது பிரிவாற்றியிருந்தது அவளது உள்ளம்; இனி உயவும் - இப்பொழுது விரைந்து செல்லேமாயின் அது பெரிதும் வருந்தும், காண். எ-று. அன்பு கலந்து, புரிந்த கொள்கையோடு உள்ளினள் உறைவோள் ஊர் கைக் கொளீஇ, அகழ்ந்து, கெண்டி எறிந்த வேட்டுவன், ஏற்படத் தொடை துறந்து இல்லத்துக் கள்ளின் இன்களி செருக்கும் வன்புலக் காட்டு நாட்டது; முல்லையும் நுண்முகை அவிழ்ந்த; இதுகாறும் அவள் உள்ளம் பொறை தலைமணந்தன்று; இனி உயவும் காண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. வங்கினைப் பற்றிக் கொண்டு கிடக்கும் உடும்பினைக் கொன்று கைக்கொள்ளாமல் கையாற் பற்றி ஈர்த்துக் கொண்டமை தோன்ற உடும்பு கைக் கொளீஇ என்றார். வங்கினைப் பற்றிய உடும்பினை ஈர்த்துக் கொள்ளுதல் மிகுவலி படைத்தார்க்கும் அரிது என்பர். இதனால் வேட்டுவனது மெய்வலி சிறப்பிக்கப்பட்டது. புற்றின் ஈயலைப் பெறுவான் அகழுமிடத்து அங்கே உறையும் பெருந்தேரை வெளிப்படலால் அதனை விலக்கி விட்டு அதற்கும் ஆழத்திற் புதைந்து மிகப்பலவாய் இருக்கும் ஈயலைக் கையால் திரட்டித் தன் தூணியிற் பெய்து கொள்ளும் வேட்டுவன் செயலை, நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி என்றும், தேரையை வேட்டுவர் உண்ணாராகலின், அதனை விலக்கிய திறத்தை வரி நுணல் அகழ்ந்து என்றும் கூறினார். பகல் வெயிற்கு ஆற்றாது முயல்கள் புதர்த் தூறுகளில் ஒடுங்கி உறங்கிக் கிடப்பகை யோர்ந்து, அப்புதர்களை அலைத்து முயல்களை வெளிப்படுத்து வேட்டம் புரிந்தமை விளங்கத் துஞ்சுமுயல் எறிந்த வேட்டுவன் என்றும், இச்செயலால் பகற் பொழுது கழிந்தமையின் ஏற்பட என்றும் உரைத்தார். படுதல், மறைதல்; ஈண்டு மேற்றிசையில் ஞாயிறு மறைதல். அம்புப் புட்டிலின்கண் அம்புகளையே யன்றி வேட்டையாடிய பொருள் களையும் பெய்து கொள்பவாகலின் தொடையென்றார். தொடை, அம்புக்குப் பெயராதலின், புட்டிலுக்கும் தலைமை பற்றி அதன் பெயரையே வைத்துத் தொடை என்றார் என்க. உடும்பு, ஈயல், முயல் ஆகியவற்றால் புட்டிலாகிய தொடை கனம் மிகுந்தமையின் இல்லத்தையடைந்த வேட்டுவன் அதனைப் பொத்தெனத் தரையில் எறிந்தமை புலப்பட அஞ்சுவல் கொண்ட தொடை துறந்து என்றார். சுவல்தோள். வேட்டையால் களைத்து வந்தாற்கு, மனைக் கண்ணிருந்த கள்ளை அவன் மனைவி மடையிற் பெய்து உண்பித்தமையின் அதனை யுண்ட மயக்கத்தால் அவன் அயர்ச்சி நீங்குமாறு விளக்க, இல்லத்து இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் என்றார். வாயில் மடுத்துண்டற்கு ஏற்ப அமைந்தமையின் கள்ளுண்கலம் மடை எனப்பட்டது. வன்புலம், கல்லும் மண்ணும் கலந்த வன்னிலம் புரிதல், விரும்புதல். புறவிடை முல்லை நுண்முகை அவிழ்ந்த என இயைக்க. அவிழ்ந்த, அன்பெறாத அகர வீற்றுப் பலவின் பால் வினைமுற்று. தலைமணந்தன்று, முற்றுவினைத்திரிசொல். உயவுமார், ஆர் அசைநிலை. இனி என்றதனால் இதுகாறும் என்பது வருவிக்கப்பட்டது. வினைமேற் சென்ற தலைவன் உள்ளம் அது முடியுங்காறும் அதற்குரிய செயற்கூறுகளே நிரம்பிப் பிற நினைவுகட்கு இடமின்றியிருந்து, அது முடிந்ததும், வினைக்குரிய அந்நினைவுகள் நீங்குதலால், தலைவியின் நினைவுகளால் மீளவும் நிறைந்துவிடும் என அறிக. அதுபற்றியே தொல்காப்பியரும் "கிழவி நிலையே வினையிடத் துரையார்" என்று சொல்லி "வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்"1 என்று கூறுகின்றார். அதனால் வினைமுற்றிய தலைமகனும், புணர்ந்துறையும் போதினும் பிரிந்துறையும் போது, தன் உள்ளத்தில் அன்புபெருகி அதற்குரிய நினைவு செயல்களில் தன் மனத்தைப் பெரிதும் ஈடுபடுத்தும் இயல்புபற்றி அன்பு கலந்து நம்வயிற் புரிந்த கொள்கையொடு என்றும், நெஞ்சில் தன்னை நினைத்தலால் எழும் இன்பமன்றி வேறே பற்றுக் கோடின்றியிருக்கும் தலைவியது காதற்சிறப்பை நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் என்றும் கூறினான். தான் குறித்துப் போந்த கார்ப்பருவ வரவினை முல்லையும் முகையரும்பி மலர்ந்து காட்டின என்பான், புறவிடை முல்லை நுண்முகை அவிழ்ந்த என்றும், இதுகாறும் ஆற்றியிருந்த அவள் உள்ளம் இனித் தாழ்ப்பேமாயின் பெரிதும் வருந்தும் என்பான், பொறை தலைமணந்தன்று உயவுமார் இனியே என்றும் கூறினான். இதனாற் பயன், பாகன் தேரை விரைந்து பண்ணிச் செலுத்துவானாவது. வேட்டுவன் முயற்சியெல்லாம் உடும்பு கைக் கொளீஇ ஈயல் கெண்டி முயல் எறிந்து கொணர்ந்த தொடையினை இல்லத்துத் துறந்து, இல்லவள் தந்த கள்ளின் செருக்கிலே முடிந்தாற்போல, வினையிடத்துச் செய்வன செய்து பெறும் பொன்னும் பொருளும் புகழும் எல்லாம், மனையகத்தைச் சார்ந்து மனையவள் நல்கும் இன்ப அன்பிலே முடியும்; இதுவே வாழ்வியல் என்றவாறு. "மாயோன் மேய" என்ற நூற்பாவுரையில், "நால்வகை யொழுக்கத்திற்கும் நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க" என்பார், இப்பாட்டின்கண் முல்லை யொழுக் கத்துக்கு முல்லை நிலன் உரியதாதற்கு "வன்புலக் காட்டு நாட்டதுவே" என்ற இப்பாட்டடியைக் காட்டுவர் நச்சினார்க் கினியர். 60. தூங்கல் ஓரியார் தூங்கல் என்பது கொங்கு நாட்டு ஊர்களில் ஒன்றான தூங்கலூரைக் குறிப்பது. ஓரியென்பது இச்சான்றோரது இயற்பெயர். நல்லிசைப் புலமையால் சங்கச் சான்றோர் காலத்தேயே இவர் நன்மதிப்புப் பெற்றுத் திகழ்ந்தார். இவர் ஊணூர்க்குத் தலைவனான தழும்பன் என்ற தலைவனைப் பாடிய நலம்கண்டு வியந்த நக்கீரனார், இவரைத் தாம் பாடிய பாட்டுக்கள் ஒன்றில் தூங்கல் எனச் சுருங்கக்காட்டி, "தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்" என்று பாராட்டியுள்ளார். இவரது தூங்கலூர்தான் இடைக்காலத்தே திங்களூர் என மருவி விட்டதோ என அறிஞர் கருதுகின்றனர். ஊணூர்த் தழும்பன், பிடியால் மிதிக்கப்பட்ட வழுதுணைக்காய் போலும் தழும்பு பெற்றவன்; அதனால் அவனைப் பிடிமிதி வழுதுணைத் தழும்பன் எனப் பண்டையோர் கருதினர் என ந.மு. வேங்கடசாமி நாட்டார் கூறுவர். வழுதுணை-கத்தரிக்காய். காதல் வாழ்வு நடத்தும் தலைமகன் பொருள்வயிற் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை எய்தியது கண்டு காதலின்ப வாழ்வுக்குச் சிறந்தது இளமையாகலின், அதனைப் பொருளீட்டற்கண் கழிப்பது அவ்விளமைக்கு முடிவு காண்பதாகும் என்பதும், மனைவாழ்வின்கண் அவற்குப் புறத்தொழுக்கம் தோன்றிய தெனக்கொண்டு வாயில் மறுக்கும் தோழி, பரத்தையை, "ஓரான் வல்சிச்சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள்" என்பதும், பிறவும் இவரது புலமை நலத்தை விளக்குவனவாம். ஒருவரை யொருவர் தனித்துக் கண்டு காதல் தொடற் புற்றொழுகும் தலைமக்கள், தமது காதலன்பு மாண்புறுமாறு களவு மேற்கொண்டுஒழுகி வருகையில் தலைவி இற்செறிக்கப்பட்டாள். தலைமகனைத் தனித்துக் காணும் வாய்ப்புத் தடைப்பட்டமையின், தலைவி ஆற்றாளாவது கண்ட தோழி, தலை மகற்கு இற்செறிப்பை அறிவுறுத்தி, அவளை விரைய மணந்து கொள்ளுமாறு அவன் மனத்தைத் தூண்டும் எண்ணமும் செயலுமுடையளானாள். தலைவனது தலைமையை நோக்க இதனை வெளிப்படக் கூறல் நீர்மையன்று என்பதைத் தெளிந்து, ஒருகால் தோழி தமது மனையின் சிறைப்புறமாக அவன் நிற்பது கண்டாள். அப்போது வயல்கட்கு நாற்று நடச் செல்லும் உழவருள் ஒருவனோடு சொல்லாடு வாளாய்த் தலைமகன் செவிப்படக் கூறலுற்று, "உழவ, விடியற் காலத்தே பெருஞ் சோறுண்டு நாற்று நடுதற்கு நடுநரோடு வயற்குச் செல்கின்றாய்; அவ்விடத்துள்ள பைஞ்சாய்க் கோரையையும் நெய்தலையும் களையாது ஓம்புவாயாக; இப்போது எமது இல்லத்துறையும் தலைமகள் அவற்றை வளையாகவும் தழையாகவும் தொடுத்தணிந்து மகிழ்வாள்" என்று உணரக் கூறுகின்றாள். இவ்வுரையால் தலைவி இற்செறிப்புண்டதும், அதனால் அவள் வளை நெகிழ மெலிவுற்று வருந்துவதும், குறிப்பாய்த் தலைமகன் உணர நிற்கும் நலத்தைக்கண்டு வியந்த தூங்க லோரியார். அதனை இப்பாட்டிடை வைத்துப் பாடுகின்றார். மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் பெருநெற் பலகூட் டெருமை உழவ கண்படை பெறாது தண்புலர் விடியல் கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்தி நீருறு 1செறுவின் நாறுமுடி யழுத்தநின் நடுநரொடு சேறி 2யாயின் அவண சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில் மாயிருங் கூந்தல் 3மடந்தை ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. இது, சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறி வுறீஇயது. உரை மலைகண்டன்ன நிலைபுணர் நிவப்பின்-மலையைக் கண்டாற் போன்ற அடிபரந்த நிலைபொருந்திய உயர்ச்சியையுடைய; பெருநெல் பல கூட்டு எருமை உழவ-பெரு நெல்லி னத்துப் பலவாகிய கூடுகளையும் எருமையையுமுடைய உழவனே; கண்படை பெறாது-மறுநாள் செய்தற்கிருக்கும் வினைமேற் சென்ற உள்ளத்தால் போதிய கண்ணுறக்கம் இன்றி; தண்புலர் விடியல்-தண்ணிதாய்ப் புலரும் விடியற் காலத்தே எழுந்து; கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு-கரிய-கண்களையுடைய வரால் மீனினது பெரிய ஊனைச் சமைத்த குழம்புடனே; புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு-உண்டற்கு ஏற்பத் தீட்டப்பெற்ற அரிசியை வேகவைத்த மிக்க பெருஞ்சோற்றை; கவர் படுகையை கழும மாந்தி-விருப்புடனே கையகத்தேந்தி வாய்கொள்ள உண்டு; நீருறு செறுவின் நாறுமுடி அழுத்த-நீர் நிரம்பிய வயலின்கண் நாற்றுக்களை முடியவிழ்த்து நடுதற்பொருட்டு; நின் நடுந ரொடு சேறியாயின்-நின் சுற்றமாகிய நடுவாருடன் செல்கின்றா யாகலின்; அவண-அவ்விடத்தே வளர்ந்துள்ள; சாயும் நெய்தலும் ஓம்புமதி-பைஞ்சாயக் கோரைகளையும் நெய்தல் களையும் களையாதொழிக; எம்மில் மாயிருங்கூந்தல் மடந்தை - எம்மனையின் கண் செறிப்புண்டிருக்கும் கரிய கூந்தலையுடைய தலைமகட்கு; அவை ஆய்வளைக் கூட்டும் அணியும் ஆர்-அவை அழகிய வளையாகவும் தழையாகவும் தொடுத்தணிதற்குரியவாம் ஆகலான் எ-று. உழவ, நடுநரொடு சேறியாயின், அவண சாயும் நெய்தலும் ஓம்புமதி; மடந்தை ஆய்வளைக் கூட்டும் அணியும் அவையாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பெருமழை, கடுங்காற்று, மிகுவெயில்களால் கெடாதவாறு அடிப் பரப்பும் திண்மையும் பொருந்த அமைக்கப் பெற்றுக் குவிந்த தலையும் உயர்வும் கொண்டு மலைபோலும் தோற்றம் சான்ற நெற்கூடுகளை மலைகண்டன்ன நிலைபுணர் நிவப்பு என்று சிறப்பித்தார். சிறு சம்பா, பெருஞ் சம்பா என்றாற்போலச் சிறுநெல் பெரு நெல் என நெல்வகை யுண்மையின், பெருநெல் கூறப்பட்டது. இதன் அரிசி சிறிது பெருத்திருத்தலால், சோறும் பெருஞ்சோறு எனப் படுவதாயிற்று. அமைதியுடன் ஆழ உழுது செல்லும் நலத்தால், எருத்தினும் எருமை சிறப்புடையதாகலான், நாற்றங்கால் உழவுக்கு எருமை வேண்டப் பட்டது. நடவுப் பதம் வாய்த்தவழிக் காலம் தாழ்க்காது நாற்றுக்களை நடவேண்டு மாகலானும், அதுதானும் பலர் துணை கொண்டு நிகழ்த்துவதாகலானும், அந் நடவுபற்றியே நினைவு செல்லுதலின், உழவற்குக் கண்ணுறக்கம் குறைந்தமை கண்டு கண்படை பெறாது என்றும், நடவு முடியுங்காறும் இடையறவின்றி நடுநருடன் உடனிருக்க வேண்டுதலின், அவர்கள் புறப்படுதற்கு முன்னர்ச்சென்று அவர்களை ஒருங்கு திரட்டிச் செல்லும்பொருட்டு விடியலில் உணவு கொள்வது இன்றியமையாமையின், தண்புலர் விடியல் என்றும், வராற் குழம்பிட்டுப் பிசைந்த பெருநெற் சோற்றினை மென்று தின்றற்குக் காலம் இன்மையின் கைந்நிறையக் கொண்டு வாய்கொள்ள உண்டு விழுங்குமாறு தோன்றக் கவர்படு கையை கழும மாந்தி என்றும் கூறினார். தீட்டப்பட்ட அரிசியைப் புகர்வை யரிசி என்றார். பொம்மல், பெருமை. நாற்று நடுங்கால் வயலில் நீர் நிற்றல் வேண்டுதலின் நீருறு செறு எனல் வேண்டிற்று. நடுநர், நடுபவர். இவர் பலரும் மகளிர் எனக் கொள்க. சாய், பைஞ்சாய்க் கோரை, ஆய்வளை, அழகிய வளை. ஆர், அசைநிலை, ஆகலான் என்பது எச்ச வகையால் வருவிக்கப்பட்டது. தடி, ஊன் துண்டம். மிளிர்வை, குழம்பு. களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற்செறிப்புண்டு மேனி மெலிந்திருக்கும் திறத்தைச் சொல்லி, வரைவு கடாவும் கருத்தினளாகலின், தோழி, மறுநாட் காலையில் நாற்று நடுதற்கு நடுநரை நாடிச் செல்லும் உழவனை நோக்கிக் கூறுவாளாய், நெல்நாற்றின் மெல்லிய வேர்கள் இனிது பற்றுமாறு செறுவை எருமைகொண்டு ஆழவுழுது பண்படுத்தி மென்சேற்றைப் பரம்பிட்டுச் செம்மை செய்து நீர்தேக்கி வந்தமை தோன்ற எருமையுழவ என்றும், நடும்வினை முடியுங்காறும் பசியின்றி நடுநரொடு உடனிருக்க வேண்டிப் பெருஞ்சோறு உண்டு செல்கின்றனை என்பாள், பொம்மற் பெருஞ்சோறு கழும் மாந்தி நடுநரொடு சேறி என்றும் கூறினாள். வரால்மீன் குழம்பிற் பிசைந்துண்ட பெருஞ்சோறு எளிதில் செரிக்காது என்ப; அதனையும் மென்றுண்ணாது விழுங்கினமையின், பகற்போதில் வெயில் மிகினும் பசி கடுகாது என்பது அறிக. அதனைக் கேட்கும் தலைமகன், தலைவியைத் தன் காதல் மனைவியாக்கிக் கொள்ளும் முயற்சி வென்றி எய்துதற் பொருட்டு எண்ணத்தில் திண்மையும். வரைபொருளும், வரைவு பேசுதற்குரிய சான் றோரும் உடையனாதல் வேண்டும் என்றதாகக் கொள் கின்றான். நாற்று நடுமிடத்துக் களைகளையும் ஆங்காங்குக் களைபவாதலின், ஆங்ஙனம் கட்குமிடத்துச் சாயும் நெய்தலும் களையற்க என்பாள், சாயும் நெய்தலும் ஓம்புமதி என்றும், அவற்றை ஓம்புதற்குக் காரணம் கூறுவாள், மடந்தை ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே என்றும் கூறினாள். எம்மில் என்றது, தலைமகள் இற்செறிப்புற்றதைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது. இற்செறிப்புக்கு ஒப்பத் தலைவி மடந்தையாகித் தலைமயிர் முடிதற்கேற்ற வளர்ச்சி பெற்றமை சுட்டி மாயிருங் கூந்தல் மடந்தை என்றாள். "தலைமுடி சான்ற" என்றும், "பெதும்பைப் பருவத் தொதுங்கினை1" என்றும் இற்செறிப்புக்குரிய காரணமாகப் பிறரும் கூறுதல் காண்க. நடுபதம் நோக்கி உழவன் நடுநரொடு சேறல்போலத் தலைமகளின் காதற்பெருமையும் திருமணச் செவ்வியும் எண்ணிச் சான்றோரை விடுத்து வரைந்து கோடல்வேண்டும். என்பதும், சாயும் நெய்தலும், களையப்படாமை வேண்டியது, இற்செறிப்பும் அலரச்சமும் ஆற்றாமையும் காட்டித் தலை வனை வரைவு கடாவுவதும் தோழியின் உள்ளக் குறிப்பாதல் உணர்க. 61. சிறுமேலாதனார் அச்சுப்படியில் இச் சான்றோர் பெயர் சிறுமோலிகனார் என்று காணப்படுகிறது. கிடைத்த ஏட்டில் சிறுமேலா தனார் என்றும் சிறுமேலிதனார் என்றும் உளது. இப்பெயர் வேறு பாடுகளுள் ஓரளவு பொருள் விளங்க நிற்றலின், சிறுமேல் ஆதனார் என்ற இப்பாடம் மேற்கொள்ளப்பட்டது. ஐயன் ஆரிதனார் என்ற புறப்பொருள் வெண்பாமாலை யாசிரியர் பெயரும், காவிதி ஈதன்1 என வரும் கல்வெட்டுப் பெயரும், சிறுமேலிதனார் என்ற பெயர்க்கு ஆதரவு தருகின்றன. ஆதனார் என்பது பெருவழக்காதலால் ஏனை எல்லாவற்றினும் அது சிறந்ததாகத் தோன்றுகிறது. சிறுமேல் என்பதைச் சிறுமேலூர் என்ற ஊராகவும் ஆதனார் என்பதை இயற்பெயராகவும் கோடல் ஓரளவு பொருத்தமாகவும் உளது. சிறுமேலூர் மதுரையைச் சார்ந்த ஊர்களில் ஒன்றாதலை நோக்குங்கால், இச்சான்றோர் பாண்டி நாட்டுச் சான்றோருள் ஒருவராதல் தெள்ளிது. இவரைப் பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. களவு நெறியிற் காதலன்பாற் பிணிப்புண்ட தலைமகளது ஒழுகலாற்றில், தலைமகனை இன்றியமையாத நிலைமை அவட்கு எய்திற்று. அது கண்ட தோழி, அதனைத் தலைமகற் குணர்த்தி அவளை விரைவில் வரைந்து கொள்ளச் சொல் வாளாய் அவன் வரும் பொழுதினை எதிர்நோக்கியிருந்தாள். தலைமகன் தலைவியின் பெருமனைச் சிறைப்புறமாக வரக் கண்டதும், அவள், தலைவியுடன் சொல்லாடுவாள் போன்று அவன் செவிப் படக் கூறலுற்று, "தோழி, நேற்று இரவின்கண் தலைமகனை நினைந்து அம்பு ஏறுண்ட மான்பிணைபோல யாம் வருந்திக் கண்ணுறக்கம் பெறேமாக, அன்னை என்னை நோக்கி, நமது துயர்க் காரணத்தை அறியலுறுவாள் போன்று, "மகளே, நீ உறங்குவதில்லையோ?" என வினவினாள்; நம் நெஞ்சின்கண் தலைமகன் நினைவே மிக்கிருந்தமையின் என்னை அறியாது அதனைச் சொல்ல வாயெடுத்துப் பின்பு மறைத்து நெஞ்சிற் குள்ளேயே "கானநாடனை நினைந்தோர்க்குக் கண்ணும் படுமோ? என்று சொல்லிக் கொண்டேன்"என்றாள். இவ்வுரையால் தலைவியுள்ளத்துக் காதல், நெஞ்சு நிறைந்து வாய் சோரும் அளவிற் பெருகி யிருப்பதையும், அதனைத் தலைமகன் தெரிய உரைக்குமாற்றால் அவன் கருத்தை விரைய வரைந்து கொள்ளத் தூண்டும் குறிப்பு முற்பட்டு நிற்பதையும் கண்ட சிறுமேலாதனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். கேளாய் எல்ல தோழி அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா ஏமான் பிணையின்1 வருந்தினெ னாகத் 2துயர்மருந் தறிந்தனள் போல அன்னை துஞ்சா யோஎன் குறுமகள் என்றலின் சொல்வெளிப் படாமை மெல்லஎன் நெஞ்சின் படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வா யுற்ற தளவின் பரலவல் 3தண்கமழ் நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே. இது, தலைவன் வரவுணர்ந்து தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. உரை எல்ல தோழி-ஏடி தோழி; கேளாய்-கேட்பாயாக; அல்கல்-நேற்றைய இரவின்கண்; வேணவா நலிய-வேட்கை மிகுதியால் எழுந்த ஆர்வம் உள்ளத்தை வருத்த; வெய்ய உயிரா-வெய் துயிர்த்து; ஏமான் பிணையின் வருந்தினென்ஆக-அம்பு தைப்புண்ட மான்பிணை போல யான் உறக்கமின்றி வருத்திக் கிடந்தேனாக; துயர்மருந்து அறிந்தனள் போல-நம் துயர்க் குரிய காரணத்தையும் அதனை மாற்றுதற்குரிய திறத்தையும் நன்கு அறிந்தவள்போல; அன்னை-அன்னை போந்து; துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்-இளமகளே, நீ உறங்குவ தில்லையோ என்று கேட்டாளாக; சொல் வெளிப்படாமை-நெஞ்சில் மிக்கு இருந்த நினைவால் வெளிப்படவிருந்த சொற்களை வெளிப்படாவாறு அடக்கிக்கொண்டு; என் நெஞ்சின்-என்னுடைய நெஞ்சிற் குள்ளேயே; மெல்ல-பைய; படுமழை பொழிந்த பாறை மருங்கில்-ஒலிக்கின்ற மழை பொழிந்த கற்பாறையருகில்; சிரல்வாய் உற்ற தளவின்- சிரற் பறவையின் வாயலகு போன்ற தளவு முல்லை யையும்; பரல் அவல்-பரற் கற்கள் பொருந்திய பள்ளங்களையும் உடைமையால்; தண்கமழ்நாடன் படர்ந்தோர்க்கு-குளிர்ச்சி நிலவும் கான நாடனை நினைந்திருப்போர்க்கு; கண்ணும் படுமோ என்றிசின் யான்-கண்கள் உறக்கம் கொள்ளுமோ என்று யான் சொன்னேன், காண் எ-று. எல்ல. தோழி, கேளாய்; அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, வருந்தினெனாக, அன்னை அறிந்தனள் போல, துஞ்சாயோ என் குறுமகள் என்றலின், வெளிப்படாமை நெஞ்சில், நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ என்றிசின் யான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எல்ல, ஏடி என்னும் பொருளது. வேணவா, வேட்கை அவா என்ற இரு சொற் புணர்ச்சி; "செய்யுள் மருங்கின் வேட்கை யென்னும், ஐயென் இறுதி அவாமுன் வரினே, மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்" என்பது தொல் காப்பியம்1. வெய்ய உயிர்த்தல், வெய்து யிர்த்தல். ஏவுண்ட மான், ஏமான் என வந்தது; ஏ, அம்பு. துயர் மருந்து, துயர் தீர்த்தற்குரிய மருந்து. சொல் வெளிப்படாமை எனவே, வெளிப்பட இருந்தமை பெற்றாம். படுமழை, ஒலிக் கின்ற மழை. சிரல், சிச்சிலிப்பறவை. தளவு முல்லையின் அரும்பு சிரற் பறவையின் வாயலகு போன்று இருக்கும் என்ப; "பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை2" என்று பிறரும் கூறுதல் காண்க. தண்கமழ் நாடன், குளிர்ச்சி நிலவும் கானக நாடன். படர்தல், நினைதல் படுதல், உறக்கம் கொள்ளுதல். என்றிசின், தன்மைக்கண் வந்த இறந்த கால முற்றுவினைத் திரிசொல். களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்கு உரைப் பது கருத்தாகலின், முன்னாள் இரவு வேட்கை மிக்கு வருந்திய திறத்தைக் கூறும் தோழி, வெய்து உயிர்த்தமைக்கு வேணவாத் தோன்றி நலிந்தமை காரணம் என்பாள். வேணவா நலிய வெய்ய வுயிரா என்றும், தலைமகன் தொடர்பால் உண்டாகிய வேட்கை வழிப் பிறந்த அவா மிக்கு வருத்தினமை தோன்ற வேணவா நலிய என்றும் கூறினாள். வெய்துயிர்ப்பு உளதாய வழி உறக்கம் எய்தாமையின், வெய்ய உயிரா என்றது, கண்ணுறக்கம் இன்மை உணர்த்தி நின்றது. அவா நலிதலால் எய்திய வருத்தம் இப்பெற்றித்து என்பாள், ஏமான் பிணையின் வருந்தினெனாக என்றாள். மான்பிணை தலைமகட்கும், ஏ, தலைமகன் செய்த காதலுக்கும் உவமம். ஏவுண்ட மான் அதனைப் போக்கும் திறனின்றி வருந்தி மடிதல் போலத் தலைமகளும் காதல் வேட்கையைப் போக்கும் திறனின்றி வருந்தி மெலிகின்றாள் என்பது குறிப்பு. தலைவியது மேனி மெலிவு தாயாரால் ஆராயப்படுமாறு புலப்பட, அன்னை துயர் மருந்து அறிந்தனள் போலத் துஞ்சாயோ என் குறுமகள் என்றாள் என இசைக்கின்றாள். இது தாயறிவு அறிவுறுத்தி வரைவு கடாவுவது. களவின்கண் அன்னையென வருபவள் செவிலியென அறிக. "ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை சிறத்தலின், தாயெனப் படுவோள் செவிலியாகும்"1 என்பது தொல்காப்பியம். தலை மகன் மேற் சென்ற காதல் நினைவே நெஞ்சு நிறைந்திருந்த மையின், அன்னை எழுப்பிய வினாவிற்கு விடை இறுக்கும்போது வாய்சோர்ந்து மறைந்த ஒழுக்கத்தை வெளிப்படுக்கும் சொற்கள் தாமே வெளிப்பட நேர்ந்தமையின், சொல் வெளிப்படாமை எனவும், வெளிவந்த சொற்களை மீள உட்கொள்ளலாகாமை பற்றித் தன் நெஞ்சிற் குள்ளே சொல்லிக் கொண்டது கூறுவாள், மெல்ல என் நெஞ்சில் தண்கமழ் நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமா என்றிசின் யானே எனவும் கூறினாள். இது கண் துயில் மறுத்தல். பாறையிற் பெய்த மழையால் தளவு முல்லை மலர்தலும், பரலவல் நிறைதலும். தலைமகன் செய்யும் தலையளியால் கற்பு மேம்படுதலும், தோழி முதலிய வாயில் கள் அன்பால் இன்புறுதலும் உள்ளுறுத்து நின்றன. இதனாற் பயன், தலைவியது இன்றியமையாமை உணர்ந்து தலைவன் தெருண்டு வரைந்துகொள்வானாவது. குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு தோன்றி ஓரசையாய் அலகு பெறுந்திறம் கூறலுற்ற ஆசிரியர் தொல்காப்பியனார், "குற்றியலுகரமும், முற்றியலுகரமும், ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே"1 என்றாராக, அந்நூற்பாவுரையில், கண்ணும் படுமோ என்றிசின் யானே" என்ற இப் பாட்டடியைக் காட்டி இதன் கண் படும் என்பது குறித்து, "இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று" என்பர் இளம் பூரணர். இனி, "மறைந்தவற் காண்டல்"2 என்ற நூற்பாவின் கண்வரும் "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்" என்ற பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி, "இதனுள் துஞ்சாயோ எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந் தோர்க்கு என மறை யுயிர்த்தவாறும், கண்படாக் கொடுமை செய்தான் எனப் பரத்தைமை கூறியவாறும் காண்க" என்பர் நச்சினார்க்கினியர். 62. இளங்கீரனார் மனைவாழ்விற் பொருட்குறை உண்டாதலும், அதுபற்றி ஆண்மக்கள் மனையிற் பிரிந்து சேறலும் இன்றேபோல் பண்டும் மக்களிடை இயல்பாக இருந்திருக்கின்றன. தன் மனத்துக்கு இனிய சால்புடைய மனைவியொடு மனையறம் புரிந்துறையும் தலை மகன் பொருள் குறித்துத் தன் காதலியைப் பிரிந்து செல்லும் கடமை யுடையனானான். அப்போழ்து அவன் தன் மனைவியின் காதற் பெருமையை எண்ணிப் பிரிவருமை உணர்ந்தானாக, அவன் நெஞ்சில் பண்டொருகால் இவ்வாறு பிரிந்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று நினைவில் வந்தது. முன்பொருகால் அவன் பிரிந்திருந்தபோது முழுமதி வானத்தில் தோன்றி இனிய காட்சி வழங்கிற்று. அதன் தோற்றப் பொலிவும் தன் காதலியின் திருமுகப் பொலிவும் ஒத்திருப்பதைத் தன் மனக்கண்ணிற் கண்டான். "மதியமே, என்பாலும் நின்னைப் போல்வதொரு முழுமதியம் உண்டு; அது கூரிய பற்களையும் திலகம் அணிந்து மணங்கமழும் திருநுதலையும் கொண்டு என்னை இன்புறுத்தும் இயல்பிற்று; அஃது இப்போது இங்கே வெவ்வளியால் பசுந்தழை துறந்து நிழலின்றி வெறுங் கொம்பும் கிளையுமாகத் தோன்றும் மரங்களையுடைய பெருமலைகட்கு அப்பால் கிடக்கும் நாட்டின் கண் உளது" என்று சொல்லித் தன் காதலி நினைவால் ஒருபால் உவகையும், பிரிவால் ஒருபால் துயரும் எய்தினான். பொருள் குறித்துப் பிரியக்கருதும் தலைமகன் இப்போது அதனை எடுத்தோதிச் செலவழுங்குவது காணுங்கால், தலை மக்கள் வாழ்வில் பொருளினும் காதலின்பம் பெருகிநிற்கும் இயல்பும், அதுவே பின் பொருட்பிரிவுக்கு ஆக்கம் அளித்து நிற்கும் மாண்பும் அவன் கூற்றின் கண் அமைந்திருப்பது கண்ட இளங்கீரனார், அவை கற்போர் உள்ளத்தில் நன்கு விளங்கித் தோன்றுமாறு இப்பாட்டில் தொடுத்துப் பாடுகின்றார். 1வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரல்இசை கந்துபிணி யானை 2அயாவுயிர்த் தாஅங்கு என்றூழ் நீடிய 3குன்றகம் சிலம்பச் 4சென்றூர் மதியம் நோக்கி 5நன்றுநினைந்து உள்ளினெ னல்லனோ யானே முள்ளெயிற்றுத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் எமதும் உண்டோர் மதிநாட் டிங்கள் உரறுகுரல் வெவ்வளி யெடுப்ப 6நிழல்தப உலவை யாகிய 7மரத்த 8கல்பிறங்கு மாமலை உம்பாஃ தெனவே. இது, தலைமகன் பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. உரை வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரல்இசை-வேர்கள் நிலத்திற் பிணிப்புண்டு நிற்கும் மூங்கில்களின் இடையே காற்று மோதுதலால் உண்டாகிய ஓசை; கந்து பிணி யானை அயா உயிர்த்தாஅங்கு-தறியிடத்தே கட்டப்பட்ட யானை கொட்டாவி விட்டாற் போல; என்றூழ் நீடிய குன்றகம் சிலம்ப-கோடை நிலைபெற்ற குன்றிடத்தே முழங்க; சென்றூர் மதியம் நோக்கி;- அக்குன்றின் உச்சியில் ஊர்ந்து செல்லும் முழு மதியை நோக்கி; நன்று நினைந்து-பெரிதும் நினைவு கூர்ந்து; உள்ளினென் அல்லனோ யான்-உள்ளத்தாற் கண்டு உரைத்தே னன்றோ; முள் எயிற்றுத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்-முட்போல் கூரிய பற்களையும் திலகமணிந்து இனிய மணங் கமழும் அழகிய நெற்றியையுமுடைய; ஓர்மதி நாள் திங்கள்-கலைமுற்றும் நிறைந்த முழுத் திங்கள் ஒன்று; எமதும் உண்டு-எமக்கு உரித்தாய் எம்பாலும் உளது; உரறு குரல் வெவ்வளி எடுப்ப-முழங்குகின்ற ஒலியையுடைய வெவ்விய சூறைக்காற்று வீசுதலால்; நிழல் தப உலவையாகிய மரத்த- நிழலின்றாகத் தழையுதிர்ந்து வெறும் கொம்பும் கிளையுமாக நிற்கும் மரங் களையுடைய; கல்பிறங்கு மாமலை உம்பரஃது என-கற்கள் உயர்ந்த பெரிய மலைக்கு அப்பாலுள்ள நாட்டின்கண் அஃது உளது, காண், எ.று. வெதிரத்து நரல் இசை, குன்றகம் சிலம்ப, மதியம் நோக்கி, நன்று நினைந்து, திங்கள் எமதும் உண்டு; மாமலை உம்பரஃது என, யான் உள்ளினெனல்லனோ; அப்பெற்றியனாகிய என்னை, நெஞ்சே, இப்போது பொருட் பிரிவின்கண் வற்புறுத்துவது என்னை எனக் குறிப்பெச்சத்தால் வேண்டுவன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. மலையின்கண் மோதி யலைக்கும் காற்றின் கடுமையும் மூங்கிலின் மென்மையும் நெடுமையும் நோக்கு மிடத்து, மூங்கிலின் நிலைபேற்றுக்கு ஏது. நார்த்திரள் போல் நிலத்திற் புகுந்து பரந்து பிணித்து நிற்கும் வேரல்லது இன்மையின் வேர்பிணி வெதிர் என்றார்; வெதிர், மூங்கில். வெதிர், வெதிரமென அம்முப்பெற்று அத்துச்சாரியை கொண்டு முடிந்தது. காற்று அசைத்தலால் மூங்கிலிடத்து எழும் ஓசை, கால்பொரு நரல்இசை எனப்பட்டது. மூங்கிலானாய குழலிசைக்கு இந்நரலிசை அடிப்படையாதலின் ஓசை யென்னாது இசை என்றார். மூங்கில் நின்றாங்கு நின்று காற்றால் அசைந்து இசைத்தற்குக் கந்தொடு பிணிப் புண்டிருக்கும் யானை இயல்பாகவே அசையும் உடம் புடனே கொட்டாவி விடுங்கால் எழும் ஓசை உவமமாயிற்று. அயாவுயிர்த்தாங்கு நரலிசை சிலம்ப என இயையும். காற்று மோதி மூங்கிலை அசைக்குங் காலம் கோடையாதல்பற்றி, என்றூழ் நீடிய குன்றகம் என்றார். மதியத்தின் இயக்கம் ஊர்வது போறலின் சென்றூர் மதியம் எனப்பட்டது. நன்று, மிகுதி குறித்து நிற்பது. "நன்று பெரிதாகும்"1 என்பது தொல் காப்பியம். எமது-எமக்கு உரியது. முழுமதியம் தோன்றும் நாளே திங்கட்குப் பெயராதல் பற்றி, மதிநாள் திங்கள் என்றார்; சித்திரைத் திங்கள் சித்திரை நாளில் முழுமதியம் தோன்றுதல்பற்றியும், வைகாசித் திங்கள் விசாக நாளில் முழுமதியம் தோன்றுதல் பற்றியும், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் முழுமதியம் தோன்றுதல் பற்றியும் பெயர் பெறுதல் காண்க. மதிநாள், திங்கள் முழுமதியாய்க் கலை நிறைந்த திங்கள். உரறுகுரல் வெவ்வளி, முழக்கமிட்டு அலைக்கும் சூறைக்காற்று. உம்பரது என்பது, "தேர்ந்து செய்வஃதே முறை"2 என்புழிபோல ஆய்தம் விரிந்து முடிந்தது. "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது பற்றிப் பொருட்பிரிவு உலகியல் வாழ்க்கைக்குக் கடனாயினும், பிரிவஞ்சும் தலைவியுள்ளம் அதனை ஆற்றியிருத்தற்கேற்ற வன்மை பெறுவிக்கும் சூழ்ச்சியை மேற்கொண்ட தலைமகன், தன் நெஞ்சொடு கூறுவான்போல் தலைவி செவிப்படுமாறு சொல்லலுற்று, முன்பொருகால் பிரிந்திருந்த தான் முழு மதியம் கண்டு கூறியதை எடுத்துரைக்கலானான்; நிகழ்ச்சி யொன்றை நினைந்தவழி, அது நிகழ்ந்த இடமும் காலமும் நினைவில் தோன்றுவது இயல்பாகலின், அவ்விடத்தை வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரல்இசை என்றூழ் நீடிய குன்றகம் என்றான். கால் பொரலால் மூங்கில்கள் சிதையாமைக்கு ஏது இது என்பான், வேர்பிணி வெதிரம் எனச் சிறப்பித்தான்; எனவே அக்காலம் கோடைப் பருவமாதல் குறித்தானாயிற்று. கால்பொர எழுந்த இசையின் இயல்பு காட்டற்கு நரல் இசை என்றும், அது கந்துபிணி யானை அயாவுயிர்த் தாங்கு இருக்கும் என்றும் விளக்கினான். அந்நரலிசை யானை அயாவுயிர்த்தாற் போன்ற மையின், அங்கு நின்ற குன்றகமெங்கும் எதிரொலித்தது என்பான் குன்றகம் சிலம்ப என்றும், கோடை பசுமையின்றி இருந்தமை சிலம்புதற்கு வாய்ப்பாயிற்றென்றற்கு என்றூழ் நீடிய குன்றகம் எனச் சிறப்பித்தும் கூறினான். வெதிரத்து நரலிசையை எதிரொலிக்கும் குன்றகம் நோக்கிய போது, அதன் உச்சியில் முழுமதியம் தோன்றக் கண்டேன் என்பான், சென்றூர் மதியம் நோக்கி என்றும், அதனை நோக்கினேற்கு என் காதலியின் திருமுகம் நினைவில் எழுதலும், இரண்டையும் நன்கு ஒப்பு நோக்கினேன் என்பான், நன்று நினைந்து உள்ளினென் அல்லனோ யானே என்றும், அக்காலை அம்முழுமதிக்கு இல்லாத சிறப்புக்கள் பல தன் காதலியின் முகமதியின்கண் விளங்கக் கண்டு முள்ளெயிற்றுத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் எமது முண்டு ஓர் மதிநாள் திங்கள் என்றும் இயம்பினான். திருமுகத்து முறுவல் அவள் உள்ளத்து நிறைந்த காதலையும், திருநுதல் வியர்த்து வேட்கை மிகுதியையும் புலப்படுத்தி இன்புறத்தும் நலமிகுதி பற்றி அவ்விரண்டையுமே விதந்து மொழிந்தான். முதுவேனில் இறுதியில், மேற்கொண்ட பொருள்வினையை முடித்துக் கொண்டு, கார்வரவில் மீள்வது பெரும்பான்மையாதலால், வினைமுடியும் காலமாகிய முது வேனிற் காலத்து முழுத் திங்களில் காதலியை நினைக்கின்றான். வினைமுடியுமுன் காதலியை நினைந்து கருத்தழியும் காமநிலை ஆண்மைக்கு இழுக்கு. ஈண்டுக் காதல் நினைவு தோன்றும் காலம் முது வேனிலாதல் விளங்க, உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப உலவை ஆகிய மரத்த என்றான். பசுந்தழை நிறைந்த மரச் செறிவால் பசும்படாம் போர்த்தாற்போல் காட்சியளித் தற்குரிய மலை, கோடையால் மரங்கள் உலவை யாயின மையின் தன்பாலுள்ள கற்களே மிக்குத் தோன்ற நிற்கும் திறமே தோன்றக் கல்பிறங்கு மாமலை என்றான். கோடையால் மரங்கள் இலையுதிர்ந்து உலவையாதலும், கார்மழையால் நனைந்து புதுத்தளிரும் புத்திலையும் பெற்றுப் பூத்துக் காய்த்துக் கனிதலும் செய்யும் என அறிக. தன் காதலி திரு முகத்தை மதிநாள் திங்கள் என்றமையின், அஃது உறையு மிடத்தை உம்பரஃது என்றான். "நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவுமாகும்"1 என்ற நூற்பா வுரையின் கண், இப்பாட்டினை யெடுத்தோதி, "தலைவி கண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவ ழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க" என்பர் நச்சினார்க் கினியர். 63. உலோச்சனார் இச் சான்றோர் பெயர் இப்பாட்டின் இறுதியில் உவோச் சனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. களவின்கண் ஒழுகும் தலைமகன் தனது ஒழுக்கம் தன்னை இன்றியமையாத அளவில் தலைவியுள்ளத்தில் காதலைப் பெருகு விக்கும் மாண்பு கண்டு அக்களவையே விரும்பி நின்றான். அவனது இடையறாக் கூட்டம் பெறற்கு இன்மையின் தலை மகட்கு ஆற்றாமையும், மேனியில் மெலிவும் உண்டாயின. அவற்றைத் தலைமகற்குக் கூறி வரைவுகடாவும் கருத்துத் தோழிக்குத் தோன்றுகிறது. தலைவனது தலைமையும் தனது நிலைமையும் எண்ணி முதற்கண் குறிப்பாகச் சில சொற்களைச் சொல்லுகிறாள். ஆயினும், அவன் களவையே விரும்பினமையின் தலைவியின் வேறுபாடு மிகுதலையே செய்தது. ஊரவர் அவள் வேறுபாடு கண்டு அலர் தூற்றுவாராயினர். ஒருநாள் தலைமகன் சிறைப்புறத்தானாகக் கண்ட தோழி அவன் செவியிற் படுமாறு தலைவியோடு சொல்லாடுவாளாய், "தோழி, இவ்வூரவரோ அருளின்றி அலர் கூறுகின்றனர்; அன்னையும் இல் இகவாவாறு காவற்படுத்தலுற்றாள்; இனி நாம் தலை மகனைத் தனித்துக் காண்பது இயலாது; காதலரது காதற் றொடர்பால் நமது நுதல் ஒளி குன்றி மேனிநலம் கெட்டுப் பசலைக்கு இரையாகிக் கழியும் போலும்" என்று உரைப்பாளாயினள். இதனை ஆசிரியர் உலோச்சனார், இப்பாட்டின்கண் தொடுத்து, தோழியது அறத்தின் திரியாத அறிவுடை முயற்சியின் அருமை நமக்குப் புலப்படப் பாடுகின்றார். 1உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர் 2செதுமீன் உணக்கிய புதுமணல் 3ஆங்கண் கல்லென் சேரிப் 4புலவுகெடப் புன்னை விழவுநாறு விளங்கிணர் விரிந்துடன் கமழும் அழுங்கல் ஊரோ அறனின் றதனால் அறனில் அன்னை அருங்கடிப் படுப்பப் பசலை யாகி விளிவது கொல்லோ 1புள்ளுற ஒசிந்த பூமயங் கள்ளற் கழிச்சுரம் நிவக்கும் விரைப்பரி இவுளி திரைதரு புணரியிற் கழூஉம் 2துறைமலி சேர்ப்பனொ டமைந்தநம் தொடர்பே. இஃது, அலரச்சத்தால் தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீ இயது. உரை உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்-பரந்த கடலிடத்தே மீன்வேட்டம் புரிந்த பெரிய வலைகளை யுடைய பரதவர்கள்; செதுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்-இறந்த மீன்களை உலர வைத்த புதுமணற் பரப்பின்கண்; கல்லென் சேரிப் புலவுகெட-கல்லென்னும் ஆரவாரத்தையுடைய நுளைச் சேரிக்கண் அம்மீன்களின் புலால் நாற்றம் நீங்குமாறு; புன்னை விழவுநாறு விளங்கிணர் விரிந்து உடன் கமழும்-புன்னையினுடை விழாக்களம்போல விளங்கும் பூங்கொத்துக்கள் தாமும் உடன்மலர்ந்து நறுமணம் வீசும்; அழுங்கல் ஊர் அறனின்று-ஆரவாரத்தையுடைய ஊரவர் அருளின்றி அலர் கூறாநிற்பர்; அதனால்-அதுகொண்டு; அறனில் அன்னை அருங்கடிப்படுப்ப-அறவுணர்வில்லாத அன்னை அரிய காவலொடு கூடிய இல்லின் கண் நம்மைச் செறிப்பதால்; பசலையாகி விளிவது கொல்லோ-நம் மேனி முற்றும் பசலை பூத்துக் கெடும்போலும்; புள்ளுற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்-மீன் உண்ணும் குருகுகள் தங்குதலால் தாழ்ந்து உதிர்ந்த பூக்கள் விரவிய சேறு தம்மீது படிந்ததனை; கழிச்சுரம் நிவக்கும்-கழியிடமாகிய சேர்ப்பின்கண் தலை நிமிர்ந்து செல்லும்; விரைப்பரி இவுளி-விரைந்த செலவினை யுடைய குதிரை; திரைதரு புணரியின் கழூஉம்-கடலலையால் கழியிடை வந்து கலக்கும் நீரால் கழுவிக்கொள்ளும்; துறைமலி சேர்ப்பனோடு அமைந்த நம் தொடர்பு-துறைபொருந்திய நெய்தனிலத் தலைவனோடு நம்மிடை உண்டாகிய காதலுறவு எ.று. ஊரோ அறனின்று; அதனால் அன்னை அருங்கடிப் படுப்ப, சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு, பசலையாகி விளிவது கொல்லோ எனக் கூட்டி, இதற்கு யான் என் செய்வேன் எனக் குறிப்பெச்சத்தால் ஒரு தொடர் வருவித்து வினைமுடிவு செய்க விரிந்த கடலை, "உரவுநீர்7" என்றாற் போல, விரிகடல் உரவுக்கடல் எனப்பட்டது. உயிரிழந்த மீன்களைச் செதுமீன் என்றார். ஒளியிழந்த கண்ணைச் "செதுக் கண்2" என்றும், பொல்லாச் சொற்களைச் "செதுமொழி"3 என்றும் வழங்குவது போல, மீன் உணங்கலைக் கவர வரும் புள்ளினங்களை ஒப்புதல் இடையறாமை பற்றிக் கல்லென் சேரி என்றார். விழா அயரும் இடம் பலவகைப் பூக்கள் நிறைந்து மணம் கமழுமாறு போலப் பூமணங்கமழும் புன்னைச் சூழலைப் புன்னை விழவு நாறு விளங்கிணர் விரிந்துடன் கமழும் என்றார்; "விழவுக்களம் கடுப்ப நாளும், விரவுப்பூப் பலியொடு விரைஇ"4 எனப் பிறரும் கூறுதல் காண்க. ஊரோ என்புழி ஓகாரம் தெரிநிலை புள் மீனுண் குருகு கழியிடத்து நிலமும் உவர்மண்ணால் புல்பூடு இன்றிச் சுரம் போலக் கிடப்பதுபற்றிக் கழிச்சுரம் எனப்பட்டது. பரி, குதிரையின் செலவு. இவுளி குதிரை. களவின்கண் சிறைப்புறம் போந்து நிற்கும் தலைமகற்கு ஊரின்கண் எழுந்த அலரும், அது கேட்டு அன்னை தலை மகளை இற்செறித்தமையும் அறிவிக்கும் தோழி, உள்ளுறை யால், அவன் வரைவோடு வருதலை வற்புறுத்தலின், அலரச் சத்தை அழுங்கல் ஊரோ அறனின்று என்றும், அன்னை இற்செறித்த செய்தியை அதனால் அறனில் அன்னை அருங்கடிப் படுப்ப என்றும் கூறினாள். இயல்பாகவே ஆரவாரத்தையுடைய ஊராகலின் நின்தொடர்பால், இவட்கு உண்டாகிய வேறுபாடு கண்டதும் மிக்க அலரெடுத்துச் சிறிதும் இரக்கமின்றித் தூற்றத் தலைப் பட்டு விட்டது ஊர் என்றற்கு அழுங்கல் ஊர் என்றும், அறனின்று என்றும் கூறுவாளாயினள். "உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்" என்ற அறவுணர்வும், "இளையோர் இல்லிடத்து இற் செறிந்திருத்தல் அறனு மன்றே ஆக்கமும் தேயும்"5 என்ற அறிவுமின்றி அன்னை இற்செறித்தாள் என்றற்கு, அறனில் அன்னை அருங்கடிப் படுப்ப என்று தோழி சொன்னாள். இவ்வாற்றாற்பயன், இவளது நலம் முற்றும் பசலைக்கு இரையாகிக் கெடும்; நின் தொடர்பும் பயனிலதாம் என்பாள், சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு பசலையாகி விளிவது கொல்லோ என்றாள். பரதவர் செதுமீன் உணக்கிய மணற்பரப்பின் புலால் நாற்றம் கெடுமாறு, புன்னையின் விளங்கிணர் விரிந்து நறு மணம் கமழ்வது போல, தலைமகள் மேனி வேறுபாடு பொருளாக ஊரவர் கூறும் அலரை, வரைவொடு போதரும் நின்வரவால் கெடுத்தல் வேண்டும் என்றும், கழியிடத்துப் பூ மயங்கு அள்ளலை இவுளி திரைதரு புணரியிற் கழூஉம் என்ற தனால், அலராலும் இற்செறிப்பாலும் இவள் மேனியிற் பரந்த பசலை, நீ வரைந்தவழிப் பெறலாகும் அழிவில் கூட்டத்தால் நீங்கற்பாலது என்றும் தோழி தலைமகற்குக் குறிப்பாய்க் கூறினாள் என வுணர்க. 64. உரோடகத்தனார் இப்பெயரின் வேறாக அச்சுப்பிரதியில் உலோச்சனார் என்ற பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது. ஏடுகளில் உரோடகத்தனார் என்ற பெயரே காணப்படுகிறது. முன் பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம். இவ்வுரோடகத்தனாரின் வேறாக உரோட கத்துக் கந்தரத்தனார் என்றொரு சான்றோர் இந்நூற்கண் காணப் படுகின்றார். கந்தரத்தனார் பெயரே இவ்வாறு உரோடகத்தனார் எனக் குறிக்கப்பட்டிருக்கலாம்; ஆகவே இருவரையும் ஒருவராகக் கோடலே பொருத்தம் என்று கருதினனோரும் உண்டு. இவர் உரோடகத்தனார் என்றும், அவர் கந்தரத்தனார் என்றும் குறிக்கப் படுவதால், இருவரையும் வேறாகக் கோடல் வேண்டும் என் பாரும் உளர். உரோடக அத்தனார் என்பது உரோடகத்தனார் என மருவிற் றென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. உரோடகம் என்பது தொண்டை நாட்டு ஊர்களுள் ஒன்று இப்போது உரகடம் என வழங்குகிறது. செங்கற்பட்டு புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கில் மாபலிபுரத்துக்கு ஒன்பது கால் தொலையில் இவ்வூர் உளது; இங்கேயுள்ள பழமையான சிவன் கோயிலின் கல்வெட்டு இதனை உரோடகமான பல்லவ மல்லச் சதுர்வேதி மங்கலம் என்றும், சிவனைத் திருவாடா மாலையார் என்றும் குறிக்கின்றது. இதனைத் திருவாடாமல்லீச் சுரம் என்பதும் உண்டு. கடம்பத்தூர்க்கு அண்மையிலுள்ள சிவபுரத்தில் இருக்கும் இராசராசேச்சுரம் என்ற சிவன் கோயிலில் காணப்படும் முதல் இராசேந்திர சோழனது எட்டாம் ஆட்சி யாண்டுக் கால்வெட்டொன்று1 இதனைச் சயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்துப்புரிசை நாட்டு உரோடகம் என்று கூறுகிறது. இதனால், இவ்வுரோடகத்தனார். தொண்டை நாட்டு சான்றோர்களில் ஒருவராதல் விளங்குகிறது. உரோக டத்துக் கந்தரத்தனாரும் இவரே யாயின், கந்தர் என்பதை இவரது தந்தை பெயராகக் கொள்ளலாம். இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் கடமை குறித்துத் தலைமகளைப் பிரிந்து செல்கின்றான். அவன் குறித்துச் சென்ற காலம் வருதற்குள் தலைமகட்கு பிரிவாற்றாமை மிகுகிறது. மேனி பெரிதும் வேறுபட்டுச் சுருங்குகிறது. அது காணும் தோழி, தலைவியது ஆற்றாமை கண்ட பாணனைத் தூதுவிட்டுத் தலை வற்கு உணர்த்தக் கருதி அதனைத் தலைவிக்குத் தெரிவிக்கின்றாள். காதலன் சென்று தொடங்கிய வினை முடிதற்குள் இடையில் மடங்கி மீளச் செய்வது கற்புடைய மகளிர்க்குப் பொற்புடைய அறமாகாது என்பது ஒருபுடை நெருக்க, பிரிவாற்றாமையால் உள்ளத்திற் பிறந்த துனி ஒருபுடை வருத்தத் தலைமகள் தோழியை முனிந்து "காதலர் நமக்கு எத்துணைச் சிறந்தாராயினும், இப் பொழுது அவரை நினைத்தல் வேண்டா; நாம் இந்நிலையினை அடைய நாமைப் பிரிந்தகன்ற அவரது நட்பு என்னாம்? குறவர் அறுத்தமையால் தழையுதிர்ந்து பசுமை யிழந்து சாய்ந்து விழும் சந்தன மரம் போல், அறிவும் உள்ளமும் அவர்பாற் சென்ற மையின், என் யாக்கையும் வலியிழந்து நலம் மெலிந்து வீழா நின்றது; இப்பொழுது அவர் வந்தாலும் நாம் உற்ற நோய்க்கு மருந்தாகார்; அவர் ஆங்கே இருந்தொழிக; இங்கே நம்மை வருத்தும் நோயை அவர் காணாதொழிவாராக" என்று கூறு கின்றாள். இக்கூற்றின்கண், காதல் வேட்கை கையிகந்து பெருகுதலால் மிக ஆற்றாளாகிய போதும், அதனைக் காதலற்கு அறிவித்து அவனைக் கவல்விக்கு மாற்றால் அவனது வினையான்மைக்கு மாசுண்டாக்க லாகாது என்னும் நல்லறத்தால் தோழியைத் தூது விலக்கும் குறிப்பு. புலமைக்கு நல்விருந்தாதல் கண்ட உரோடகத்தனார், அதனை இப்பாட்டின்கண் அழகுற அமைத்துப் பாடுகின்றார். என்ன ராயினும் இனிநினை வொழிக அன்ன வாக இனையல் வாழியாம் இன்ன 1மாகநந் துறந்தோர் 2நட்பெவன் மரல்நார் உடுக்கை மலையுறை குறவர் அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுறு3 மென்சினை வாடுபு ஐயெனப் புனம்வறி தாகச் சோர்ந்துக் காங்கெம் அறிவும் உள்ளமும் அவர்வயிற் சென்றென வறிதால் இகுளைஎன் யாக்கை இனிஅவர் வரினும் நோய்மருந் தல்லர் வாரா தவண ராக காதலர் இவண்நம் காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தம் காணன்மார் 4அவரே. இது, பிரிவிடைத் தலைவியது 5ஆற்றாமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது. உரை தோழி-; என்ன ராயினும்-காதலர் நமக்கு எத்துணைச் சிறந்தாராயினும்; இனி நினைவு ஒழிக-இனி அவரை நினைத்தலை விட்டொழிவாயாக; அன்னவாக-யான் எய்திய மெலி வத்தனையும் அங்ஙனமே அமைக; இனையல்-அவற்றை எண்ணி வருந்துதல் வேண்டா; யாம் இன்னமாக நத்துறந்தோர் நட்பு எவன்-அவரைப் பிரிந்துறையும் நாம் இவ்வாறு வருந்த நம்மைக் கைவிட்டுச் சென்றோருடைய நட்புத் தானும் என்ன பயனுடைத்தாம்; மரல் நார் உடுக்கை மலையுறை குறவர்-மரலினின் மடலிலிருந்து உரித்தெடுத்த நாரால் நெய்யப்பட்ட உடையினை யுடுக்கும் மலைவாணராகிய குறவர்கள்; அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் - விளைவறியாது அடியறுக்கப்பட்ட சிறு சிறு இலைகளையுடைய சந்தன மரம்; வறனுறு மென்சினை வாடுபு-ஈரம் புலர்ந்து தன் மெல்லிய கொம்பும் கிளையும் வாட்டமுற்று; ஐயென-ஐயென இரங்கத்தக்க வகையில்; புனம் வறிதாக-தான் நின்ற கொல்லைப் புனம் வறிதாய்ப் பொலிவிழந்து தோன்றுமாறு; சோர்ந்து உக்காங்கு-நிலை தளர்ந்து வீழ்ந்தாற் போல; எம் அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென-நமது அறிவும் மனமும் அவர் பாலே சென்று சேர்ந்தமையின்; என் யாக்கை வறிது-என் உடம்பும் உள்ளீடின்றிச் சுருங்குவதாயிற்று; இகுளை-தோழி; இனி-இப்பொழுது; அவர் வரினும் நோய் மருந்தல்லர்-அவர் இங்கு வந்தாலும் என் நோய் தீர்தற்கு மருந்தாக மாட்டா ராகலான்; வாராது அவணர் ஆக காதலர்-இவண் வாராது அவ்விடத்தேயே இருந்தொழிவாராக நம் காதலர்; இவண்-இவ்விடத்தே; நம் காமம் படர்அட வருந்திய நோய்மலி வருத்தம்-நம்முடைய காதலும் அதனால் உள்ளத்தெழும் வேட்கையும் வருத்துதலால் நோய் மிக்க நம் துன்பத்தை; காணன் மார் அவர்-காணாதொழிவாராக அவர் எ.று. இகுளை, என்ன ராயினும், இனி நினைவு ஒழிக, அன்னவாக இனையல்; துறந்தோர் நட்பு எவன்; சாந்தம் உக்காங்கு, என் யாக்கை வறிது; இனி, வரினும் மருந்தல்ல ராகலான், அவணராக; இவண் நம் வருத்தம் அவர் காணன்மார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இனையல், காணல் என்பன அல்லீற்று எதிர்மறை வியங்கோள். வாழி அசைநிலை நந்துறந் தோர், நம்மைத் துறந்தோர்; "நப்புணர்வு இல்லா நயனிலோர்"1 என்றாற் போல. ஐயென, இரக்கக் குறிப்பு. அறிவு உயிரையும், உள்ளம் உடம்பையும் சார்ந்தன வாகலின் வேறுபடுத்துக் கூறினார். உடலுக்கு உள்ளால் இருத்தலின், மனம் உள்ளம் எனப்பட்டது. வறிதால் என்புழி ஆல், அசைநிலை. காமம் காதல் மேலும், படர் அதுபற்றி யெழும் வேட்கை மேலும் நின்றன. நோய், மன நோய். காணன்மார் என்ற மாரீற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு; "பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. மரல்நார் கொண்டு கண்ணிதொடுத்தலும்3 யாழ்க்கு நரம்பு முறுக்கு தலும்4 போல உடைநெய்துடுத்தலும் பண்டையோர் மரபு. தலைவியது ஆற்றாமை கண்ட தோழி தலைவன்பால் தூது விடும் கருத்தினளாய் வெளிப்பட மொழியாது, அவனுடைய காதலன்பின் மாண்புகளைப் பலபடியாகப் பாரித்துரைத்தா ளாதலின், தலைவி புலந்து என்ன ராயினும் இனி நினைவு ஒழிக என்றும், உண்டி வெறுத்தல் உடம்பு நனிசுருங்கல் கண்டுயில் மறுத்தல் முதலியன அவள் மெய்ப் பட்டுத் தோன்றுதலைக் காட்டித் தோழி வற்புறுப்பவும், துனி மிகுந்த தலைவி, அவை அவ்வாறே அமைக, அவற்றை நினைந்து கவலுதல் வேண்டா என்பாள், அன்னவாக இனையல் வாழி என்றும், இவ்வாறு யாம் துன்பத்துப் புலம்பித் துயர்மிக்கு ஆற்றேமாதலை எண்ணாது நம்மைத் துறந்து மறந்தாராகலின், அவரது நட்புத் துன்பத்துள் துப்பாகும் தொன்னலம் உடையதன்று என்பாள், இன்னமாக நத்துறந்தோர் நட்பு எவன் என்றும் கூறினாள். புனத்தின்கண் நின்ற சந்தன மரம் குறவர் அறுப்ப ஈரம் குன்றிப் பசுமை யிழந்து சோர்ந்து வீழ்ந்தாற் போல, இம்மனையகத்து நின்ற என் யாக்கையும் அவர் பிரிந்தமையால் அறிவும் உள்ளமும் இழந்து நலம் வறிதாயிற்று என்பாள், அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென வறிதால் இகுளை என் யாக்கை என்றாள். புனம் புல்லிதாக வீழ்ந்த சந்தனமரம் மீளத் தழைத்துப் பொற்புப் பயவாமை போல, வறிதாகிய என் யாக்கை நலம் பெறாதவாறு கெட்டமையின் அவர் வரவு பயன்படாது என்னும் கருத்துத் தோன்ற, வரினும் அவர் நமக்கு நோய் மருந்தல்லர் என்றும், வாராது அவணராக காதலர் என்றும் உரைக்கின்றாள். அது கேட்ட தோழி, துனியால் உளம் தளர்ந்து இவ்வண்ணம் இயம்புகின்றனை; நமது ஆற்றா மையைத் தூது வாயிலாகத் தக்காங்க அறிவிப்பின் அவர் தாழாது வந்தடைவர் என்றாளாகத் தலைவி அவளை மறுத்து அவர் நமது தூது கண்டு அவணின்றும் வருவாராயின், "வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு"1 என்றபடி மேற் கொண்ட வினை அவலம்பட்டு அவர் புகழ்க்கு மாசு விளை விக்கும்; வந்து நம் வருத்தமும் மெலிவும் காண்பரேல் உள்ளமும் ஊக்கமும் இழந்து அவரும் துயருறுவர் என்பாள், இவண் நம் காமம் படர்அட வருந்திய நோய்மலி வருத்தம் காணன்மார் அவரே" என்று உரைக்கின்றாள். "மறைந்தவற் காண்டல்"2 என்ற நூற்பாவில் வரும் "வழிபாடு மறுத்தல்" என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 65. கபிலர் களவின்கண் தலைமக்களிடையே தோன்றிய கதலுறவு இருபாலும் இனிது வளம்படுமாறு ஒழுகுங்கால், தன்னை இன்றியமையாத அளவிற் காதல் தலைவிபால் பெருகிநிற்பது உணர்ந்த தலைமகன் அவளை வரைந்து கொள்ளும் துணி வினனாய்ப் பொருள் குறித்துத் தலைவியிற் பிரிந்து சென்றான். பிரிவாற்றாத தலைமகள் மிக்க வருத்தமும் அதனால் மேனியில் வேறுபாடும் எய்தினாள். அது கண்ட அயலார் அலர் தூற்றவும் தொடங்கினர். அவளை ஆற்றுவிக்கும் கடமை பூண்ட தோழி தலைமகன் வரவு நோக்கி யிருக்கையில், அயல் மனைகளில் வாழும் மகளிர் தம்முள் உரையாடுவது அறிந்தாள். ஒருத்தியின் சொல்லாட்டில் "அவன் தவறாமல் வருகுவன்" என்ற தொடர், தோழி தலைவனை நினைக்கும் அந்நிலையில் வெளிப்பட்டது. அதனால் உவகை மிகுந்து அதனைத் தலைமகட்க்கு உரைக்கலுற்று தோழி, நம் அயலிலாட்டி மலை நாடனாகிய நம் தலைவனை 'வரும்' என்றாள்; ஆதலால், அவள் அமுதம் உண் பாளாக" என்று சொன்னாள். அச்சொல்லைச் செவியேற்ற கபிலர், செறுத்த செய்யுள் செய் செந் நாவின் வெறுத்த கேள்வியால் விளங்கு புகழ் படைத்த மேதக்கோராகலின், அச் சொல்லின்கண் புதைந்து கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டை எண்ணி இப்பாட்டால் வெளிப்படுகின்றார். அமுதம் உண்கநம் அயலி லாட்டி கிடங்கின்1 அன்ன இட்டுக்கரைக் கான்யாற்றுக் கலங்கும் பாசி நீரலைக் கலாவ 2ஒலிவெள் ளருவி 3உண்டுறை மடுத்த புலியொடு பொருத 4புண்கூர் யானை நற்கோடு நயந்த 5நன்பில் கானவர் விற்சுழிப் பட்ட நாமப் பூசல் உருமிடைக் கடியிடி கரையும் பெருமலை நாடனை வரூஉம்என் றோளே. இது, விரிச்சி பெற்றுப் புகுந்த தோழி தலைமகட்குச் சொற்றது. உரை அமுதம் உண்க நம் அயலிலாட்டி-சாவா மருந்தாகிய அமிழ்தத்தை உண்பாளாக நம் அயல்மனையில் வாழும் மனைக்கிழத்தி; கிடங்கின் அன்ன இட்டுக்கரை கான்யாற்று-அகழிபோல் ஆழ்ந்த சிறிய கரையையுடைய காட்டாற்றின்கண்; கலங்கும் பாசி நீரலைக் கலாவ-கலங்கிக் கிடக்கும் பாசி நீரால் அலைப்புண்டு நீர்ப்பெருக்கில் சிதர்ந்து ஓட; ஒலிவெள்ளருவி உண்துறை மடுத்த-முழங்கும் ஒலியினை யுடைய வெள்ளிய அருவி வீழும் நீர்த்துறையிடத்தே மறைந்திருந்து தாக்கிய; புலியொடு பொருத புண்கூர் யானை-புலியொடு போருடற்றி அதனை வென்று உடம்பெங்கும் புண்ணுற்று வருகின்ற யானையைக் கண்டு; நற்கோடு நயந்த நன்பில் கானவர்-அதன் நல்ல மருப்புக்களைப் பெறவேண்டு மென விரும்பிய நற்பண்பில்லாத வேட்டுவரது; விற்சுழிப்பட்ட நாமப் பூசல்-வில்லை வளைத்துத் தொடுத்த அம்புகட்கு இலக்காகி ஆற்றாது எழுப்பும் அச்சம் பயக்கும் அதன் பிளிறு குரல்; உருமிடைக் கடியிடி கரையும்-இடி விரவிய மின்ன லிடைத் தோன்றும் முழக்கத்தை யொக்கும்; பெருமலை நாடனை-பெரிய மலைநாடனாகிய நம் தலைவனை; வரூஉம் என்றோள்-தவறாது வருகுவன் என்ற சொல்லை வழங்கினா ளாகலான், எ.று. நம் அயலிலாட்டி அமுதம் உண்க, நாடனை வரூஉம் என்றாளாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கான் யாற்று உண்டுறை மடுத்த புலியொடு பொருத யானை என இயையும், இட்டுக்கரை, சிறுகரை. காட்டாறு பலவும் இடம் குறுகி ஆழ்ந்திருப்பவை யாதலால், இட்டுக்கரைக் கான் யாறு என்றார். "இட்டா றிரங்கும் விட்டொளிர் அருவி"1 எனவும், "பாம்புடை விடர பனிநீர் இட்டுத் துறைத் தேங்கலந் தொழுக யாறு நிறைந்தனவே"2 எனவும் சான்றோர் வழங்கு வது காண்க. கிடங்கு, நகர்ப்புறத்தே மதிலை மணந்து ஆழ்ந் திருக்கும் அகழி. மலைமேற் சுனைகளில் படிந்திருக்கும் பாசி நீர்பெருகி வழிந்தோடுமிடத்து மிகப்பெரிதும் கலங்கி அதனோடு ஓடி அருவியிற் கலந்து வீழ்தலால் சிதறுண்டு போதலைக் கலங்கும் பாசி நீர்அலைக் கலாவ என்றார். அருவி வீழ்வதால் ஆழ்ந்து பள்ளமாகிய குட்டத்துப் படிந்திருக்கும் பாசி, புதுநீர் பெருகி அருவி வீழுங்கால் கலங்கி அலைப்புண்டு சிதறி நீரொடு செல்வது இவ்வாறு கூறப்பட்டது என்றுமாம். உண்டுறை, மாவும் மாக்களும் இறங்கி நீருண்ணும் துறை. புலி முதலாய கொடுவிலங்குகள் நீர்த்துறைக்கண் ஒளித்திருந்து ஏனை மான் முதலியவற்றைத் தாக்கி யுண்பது இயல்பாதலால் உண்டுறை மடுத்த புலி என்றார். புலியொடு பொருது வென்றி மேம்பட்டு வரும் களிற்றின் கோடு திட்பம் மிகவுடையது எனக் கருதி அதனைக் கொல்வது வீறுடைத் தென்பது வேட்டுவர் உட்கோள் ஆதலால், புலியொடு பொருது புண்கூர் யானையின் நற்கோடு நயந்தனர் கானவர் என்றார். புலியொடு பொருது தன் வலிய கோட்டால் அதனைக் கொன்று மேன்மையுறும் களிற்றைக் கண்டவர், அதனை வியந்து பாராட்டுதலைச் செய்து இனிது செல்லவிடாது, புண்கூர்ந்து வரும் அதன் மெலிவையும் எண்ணாது பலராய்க் கூடி அதனைக் கொல்லக் கருதியதனால், கானவரை நன்பில் கானவர் என்றும், களிறு தான் வென்றி மேம்படுதற்கு நற்கருவி யாயினமையின் அதன் கோட்டை நற்கோடு என்றும் சிறப் பித்தார். உரும், மின்னலிடைத் தோன்றும் இடியேறு. இல்லா ளற்குப் பெண்பால் இல்லாட்டி என்க. நன்மொழி வழங்கினோர்க்குப் பொன்னும் பொருளும் தந்து போற்றுவது செல்வக்குடியின் சிறப்பியல் பாகலின், அமுதம் உண்க நம் அயலிலாட்டி என்று தோழி கூறு கிறாள். இவ்வாறு தலைமகன் வரவு கூறிய செவிலியை, "அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதமாகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை ஓங்குமலை நாடனை வருமென் றோளே"1 எனவும், "அமிழ்தம் உண்க நம் அயலிலாட்டி மலைகெழு நாடனை வருமென்றோளே"2 எனவும் சான்றோர் கூறுவது காண்க. அலர் கூறுவதே இயல்பாக வுடைய நம் அயலிலாட்டி இன்று நமக்கு ஆவன கூறினா ளாகலின், அது பொய்யாது என்றும் அதனால் அவள் நீடு வாழ்க என்றும், அதற்கு ஏதுவாகிய அமுதத்தை உண்பாளாக என்றும் கூறினாள். வினைசெய்தற்கண் அதற்குரிய காலமும் இடமும் கருவியும் பிறவும் ஆராய்வார். அது நன்கு முடிதலை விரும்பி எதிர்பாராத வகையில் கேட்கப்படும் நன்மொழிகளை உளங் கொள்ளும் வழக்குப் பண்டை நாளில் விரிச்சி என வழங்கிற்று. பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப, ஆய்மகள் பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, கோவலர் பின்னின்று உய்ப்ப, "இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்"1 என்பது காண்க, இனி மறைந்திருந்து தன்னைத் தாக்கிய புலியை வென்று வரும் புண்கூர் யானையைக் கானவர் வளைத்து வருத்துவர் என்றது, தலைவன் பிரிவின்கண் தாக்கி வருத்திய காதல்நோயைப் புறத்தே பிறர் அறியாவாறு அடர்த்தடக்கி மேம்பட்டொழுகும் தலைவியை அயலவர் அலர் கூறி வருத்துவ ரென உள்ளுறுத்து நின்றது. 66. மிளைக்கந்தன் நாகனார் இவர் பெயருள் மிளை என்பது ஓர் ஊர்; கந்தன் என்பது நாகன் என்ற இச்சான்றோருடைய தந்தை பெயர். மிளைக் கந்தனார் என்றொரு சான்றோர் குறுந்தொகைப் புலவர், பெருமக்களில் காணப்படுகின்றார். இங்கே நாகனாருடைய தந்தை கந்தனார் எனப்படாமையின், இவர் குறுந்தொகைக் கந்தனாரின் வேறோ என நினைத்தற்கு இடந்தருகிறது. தெளிதற்கேற்ற குறிப்புக்கள் கிடைத்தில. மிளை என்பது சோழநாட்டு ஊர்களில் ஒன்று என்பதை முன்பே2 கூறினாம். இச்சான்றோர் பெயர் ஏடுகளில் இளைக்கந்தன் நாகனார் என்றும், அச்சுப்பிரதியில் இனிச்சந்தனாகனார் என்றும் காணப்படுகிறது. புதுப்பட்டியேடு ஒன்றுதான் மிளைக்கந்தன் நாகனார் என்று குறிக்கிறது. களவொழுக்கம் பூண்ட தலைமக்கள், காதலன்பு முறுகிப் பெருகிய வழி, பெற்றோர் பால் மகட்கொடை பெறல் அரிது என்று தோன்றவும் உடன்போக்கினை மேற்கொண்டு சென்றனர். தலைவன் மனைக்கண்ணே சான்றோர் அறிய நன்மணமும் நடந்தேறியது. அச்செய்தி தலைவியின், பெற்றோர்க்குத் தெரியவும், தலைமகள் தனக்குச் சிறந்தானைத் தேர்ந்து வழிபடலுற்றாள் எனத் தெளிந்து அமைந்தனர் ஆயினும், தாய்க்கு மாத்திரம் மகளைப்பற்றிய நினைவு மிக்குற்றது. மகளின் மாண்பும், அவள்தன் காதலனோடு போகிய போக்கும், தாயின் மனத்தில் எழுந்து மருட்சி பயந்தன. அதனால் அவள் அவ்விரண்டையும் வாய்விட்டுக் கூறினாள். அக்கூற்றின்கண், மகள் மனம் தனக்கேற்ற காதற்றுணையை நாட, பெற்ற தாயின் பெட்புறு நெஞ்சம், தாய்மைப் பண்பினால் பலபட நினைந்து எய்தும் பேதுறவை உள்ளவாறு உணர்த்தும் ஒட்பம் சிறந்து விளங்குவது கண்ட மிளைக்கந்தன் நாகனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார். மிளகுபெய் தனைய சுவைய 1புன்கால் உலறுதலை உகாஅய்ச் சிதர்சிதர்த் துண்ட புலம்புகொள் நெடுஞ்சினை ஏறிப் 2பெடைநினைந்து பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப் புன்புறா உயவும் வெந்துகள் இயவின் நயந்த காதலற் புணர்ந்தன ளாயினும் சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும் 3காழ்பெய் அல்குற் காசுமுறை திரியினும் 4ஆய்நலம் கையறக் கலுழும்என் மாயக் குறுமகள் மலரேர் கண்ணே இது, 5மனையின்கண் தாய் மருண்டது; மனை மருட்சியுமாம். உரை புன்கால் உலறுதலை உகாஅய் - புல்லிய அடியையும் உலர்ந்த கோடுகளையு முடைய உகாய்மரத்தின்; மிளகு பெய்தனைய சுவைய - மிளகைச் சுவைத்தாற் போன்ற சுவை யினை யுடைய காயை; சிதர் சிதர்த் துண்ட - மொய்த்த வண்டுகளை விலக்கிச் சிதைத்து உண்ட; புன்புறா - புல்லிய புறாவினது சேவல்; புலம்புகொள் நெடுஞ்சினை ஏறி - தனித் துயர்ந்த நெடிய கிளையிடத்தே யிருந்து; பெடை நினைந்து - தன் பெடைப்புறாவை நினைந்து; பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகி - புள்ளி பொருந்திய கழுத்திடமெல்லாம் உகாய்க் காயின் மணமுண்டாகக் கோதி; உயவும் - வருந்தும்; வெந்துகள் இயவின் நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் - வெவ்விய துகள் படிந்த சுரத்தைக் கடந்து தன்னைக் காதலித்த தலைவனொடு கூடிச் சென்றாளாயினும்; சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ - வழிநடை வருத்தத்தால் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்துத் தோன்றுகின்றனவோ என்னவோ, அறியேன்; கோதை மயங்கினும் - தான் சூடிய மாலை சிக்குண்டாலும்; குறுந்தொடி நெகிழினும் - கையிலிட்ட சிறுவளை நெகிழ்ந்தாலும்; காழ் பெய் அல்குல் காசு முறை திரியினும் - கோவையாகத் தொடுத்துப் பெய்யப் பட்ட மேகலையிடத்துக் காசுநிரல் முறையில் சிறிது மாறினும்; ஆய்நலம் கையறக் கலுழும் - ஆயத்தாரால் ஒப்பனை செய்யப் பட்ட தனது அழகு குன்றியதாகக் கருதி வருந்தும்; என் மாயக் குறுமகள் - மாமை நிறமுடைய என் இளமகளின்; மலர் ஏர் கண் - மலர் போன்ற கண்கள் எ-று. மயங்கினும், நெகிழினும், முறைதிரியினும் ஆய்நலம் கையறக் கலுழும் என் குறுமகள் கண், இயவின் புணர்ந்தன ளாயினும், சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. புணர்ந்துடன் சென்றனள் என்பது புணர்ந்தனள் என நின்றது. புணர்ந்தன ளாயின் என நிறுத்திப் புணர்ந்து உடன்சென்றாளாகலின் என உரைத்து, உம்மையை இசைநிறை யெனக் கொள்ளினும் அமையும். உகாய் மரத்தின் இயல்பைப் "புன்கால் உகாஅய்"1" என்றும், "புல்லரை உகாய்2" என்றும் சான்றோர் கூறுப. உகாய்மரத்தின் நிறமும் புறாவின் நிறமும் ஒத்திருத்தலின், அஃது அம் மரத்தின்கண் இருப்பது அதற்குக் காப்பாகும். உகாயின் காய், குயிலின் கண் போற் சிவந்து, மணிக்காசு போன்று இருக்கும் என்பர். "குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றி மணிக்கா சன்ன மாநிற விருங்கனி, உகாய் மென்சினை யுதிர்வன கழியும், வேனில் வெஞ்சுரம்"1 எனச் சான்றோர் உரைப்பதால் அறியலாம். உகாயின் கனிந்த பழத்தை வண்டினம் மொய்த்துக் கிடத்தலின், அவ்வண்டுகளை விலக்கிக் கனியைப் புறா தன் வாயலகாற் சிதைத்து உண்பது பற்றிச் சிதர் சிதர்த் துண்ட புன்புறா என்றார். சிதர், வண்டு; "மலருண் வேட்கையிற் சிதர்சிதர்த் துகுப்ப"2 என்று பிறரும் வழங்குப. சிதர்த்துண்ட புறா, ஏறி, மறுகி, நினைந்து உயவும் என மாறி இயைக்க. உகாயின் காயைச் சிதர்த்துண்ணுங்கால், அதன் துகள் புறாவின் கழுத்தில் ஒட்டி மணம் கமழ்தலின், பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகி என்றும், தான் உண்ட உகாய்க் கனியைத் தன் பெடைக்கு நல்கும் விழைவு மீதூர்தலால் பெடை நினைந்து உயவும் என்றும் கூறினார். வெறி, மணம். இயவு, வழி, வெந்துகள் இயவு எனவே, சுரம் என்பது பெற்றாம். கோதை, பூமாலை, காழ், கோவை. மேகலையின் விளிம்பிலும் இடையிலும் காசு கோத்தல் மரபு. மாயமகள், மாமை நிறமுடையவள். மாமை நிறமுடையாளை மாயோள் என்றாற் போல. போக்குடன்பட்டு மகள் தலைவனுடன் சென்று சேர்ந்தமை அறிந்த தாய், அவள் பிரிவாற்றாமையால் மருண்டு உள்ளுறையால் தன் வருத்தம் கூறுதலின், வெளிப்படையில் காதலனுடன் புணர்ந்து சென்றாட்குச் சுரத்தின் வெம்மை தோன்றா தாயினும், வெவ்விய துகள் நிறைந்த சுரத்து வழியாதலின் அத்துகளால் கண் சிவத்தற்கும் அதனால் ஒளிமழுங்குதற்கும் வாய்ப்புண்மையின் வெந்துகள் இயவின் என்றும், சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ என்றும் கூறினாள். தன் நலத்தைக் குறிக்கொண்டு பேணும் கருத்தினள் என்பாள் கோதை முதலியன திரியின் நலம் குன்றியதெனக் கருதிக் கையற்றுக் கண் கலுழ்ந்து வருந்துவள் என்றாள்; இனி, திரியின் சிதைந்து கெடுமாறு அழும் பேதை என்றற்கு ஆய்நலம் கையறக் கலுழும் என்றாள் என்றலும் ஒன்று. ஆய்நலம், ஆய்ந்த நலம், ஆயத்தார் ஆய்ந்து செய்த ஒப்பனை நலம். இது தலைவியின் பண்பு நினைந்து மருண்டது. போக்குடன் பட்டுச் செல்லுதற் கேற்ற கற்பு வன்மை தன்பாற் பெருகியிருப்பது தாய் அறியாதவாறு மறைத்தொழுகியது பற்றித் தலைவியை மாயக் குறுமகள் என்றாள் என்றுமாம். உகாயின் கனியைச் சிதர் சிதர்த் துண்ட பின்னும் புறா ஒரு நெடுஞ்சினை ஏறித் தன் பெடையை நினைந்து உயவுதல் போல, நலம் விழைந்து வந்த வரைவு மறுத்து இல்லின்கண் செறித்துப் பேணி வந்தேனா யினும் இப்போது என் மகள் தன் காதலனுடன் போகியதனால் ஈண்டு யான் புலம்புற்று அவளை நினைந்து வருந்தா நிற்கின்றேன் என்பது உள்ளுறுத்த குறிப்பு. 67. பேரிசாத்தனார் களவு மேற்கொண்டு ஒழுகும் தலைமகன் பகற்குறிக்கண் தலைமகளைக் கண்டு நீங்கிச் செல்லலுற்றானாக, அவனைத் தோழி எதிர்ப்பட்டு அன்றிரவு அவ்வூர்க்கண் தங்கிச் செல்லுமாறு வேண்டலுற்றாள். ஞாயிறு இப்போது மேற்கிலுள்ள மலையில் மறைதலால் இந்த நீர்த்துறை மக்கள் வழக்கின்றித் தனிமைப்படுவதாயிற்று: பகற்போதில் கழியிடத்து இறாமீனை மேய்ந்துண்ட வெண்குருகுகள் மணற்குவட்டின் கண் நிற்கும் புன்னை மரத்தில் தங்குவவாயின; கழிக்கரை மருங்கில் சுறா மீன்கள் தம் இனத்துடன் போந்து உலவுதலைச் செய்யும்; எம் உறவினரும் விளக்கேற்றிக் கொண்டு கடலின்கண் மீன்பிடித்தற்குச் சென்றொழிந்தனர்; இந்நிலையில் நீவிர் எம் ஊர்க்கண் இன்றிரவு தங்கிச் செல்லின் குறையொன்றும் இல்லையாம் எனச் சொல்லு கின்றாள். இக்கூற்றின்கண் இரவின் வரவும், தலைவன் செல்லும் வழியில் சுறாமீன்களால் உண்டாகும் ஏதமும் எண்ணி எம் தலைமகள் வருந்துகின்றாள்; இவ்வாறு அவள் வருந்தாவண்ணம் நீ நாளும் வந்து போதலை விடுத்து வரைந்து கோடல் வேண்டும் எனக் குறிப்பாகத் தோழி வரைவுகடாவும் சிறப்பைக் கண்ட பேரிசாத்தனார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார். சேய்விசும் பிவர்ந்த 1செழுங்கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறைபுலம் பின்றே 2இறவருந் தெழுந்த கருங்கால் வெண்குருகு 3வெண்குவட் 4டொருசிறைத் தாஅய்த் 5தண்ணெனக் கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே கணைக்கால் மாமலர் 6கரப்ப மல்குகழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ எமரும் வேட்டம் புக்கனர் அதனால் தங்கின் எவனோ தெய்ய 1பொங்குபிசிர் 2உடைதரு முழவிசைப் புணரிப் 3படுகடற் படப்பைஎம் உறைவினூர்க்கே. இது, பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. உரை சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்-சேய்மையிலுள்ள வானத்தில் உயர்ந்து செல்லும் செழித்த கதிர் களையுடைய ஞாயிறு; மால்வரை மறைய-பெரிய மலை யிடத்தே மறையாநிற்க; துறை புலம்பின்று-கழிக்கானல் துறை மக்கள் வழக்கின்றித் தனிமை யுறுவதாயிற்று; இறவு அருந்து எழுந்த கருங்கால் வெண்குருகு-இறாமீனை மேய்ந்துண்டு செல்லும் கரிய கால்களையும் வெண்மை நிறத்தை யுமுடைய குருகுகள்; வெண்குவட்டு ஒருசிறை தாஅய்-வெண்மையான மணற்குவட்டின்கண் ஒருபால் பரந்து தங்கி; தண்ணெனக் கருங்கோட்டுப் புன்னை இறைகொண்டன-குளிர்ந்த இருள்மாலை வரவும் கரிய கோடுகளையுடைய புன்னை மரத்தில் தங்குவவாயின; கணைக்கால் மாமலர் கரப்ப-திரண்ட தண்டினையுடைய நெய்தல் முதலிய பூக்கள் நீரில் மறையுமாறு; மல்குகழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கும்-நீர்பெருகும் கழியிடத்தே சுறாமீன்கள் தத்தம் துணையுடன் வந்து உலாவுதலைச் செய்யும்; ஆயிடை-அவ்விடத்தே; எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ-இரவுப்போதில் முழங்குகின்ற குளிர்ந்த கடலின்கண் பலவாகிய விளக்குகளைக் கொண்டு; எமரும் வேட்டம் புக்கனர்-எமது சுற்றத்தாரும் மீன்பிடித்தற்குச் சென்றொழிந்தனர்; அதனால் தங்கின் எவனோ-அதனால் நீவிர் தங்கிச் சென்றால் ஒரு குற்றமும் இல்லையாம்; பொங்கு பிசிர் உடைதரு முழவிசைப் புணரி-சிறுசிறு திவலைகளாக உடைந்து பொங்கும் முழவு போலும் முழக்கத்தையுடைய அலைகளால்; படுகடல் படப்பை-ஒலிக்கின்ற கடலைச் சார்ந்த படப்பை களையுடைய; எம் உறைவு இன் ஊர்க்கு-தங்குதற்கினிய எமது ஊரின்கண் எ-று. மண்டிலம் மால்வரை மறையத் துறை புலம்பின்று; வெண்குருகு தாஅய்ப் புன்னை இறைகொண்டன; கழி, துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை எமரும் சுடர்க் கொளீஇ வேட்டம் புக்கனர்; அதனால் எம் உறைவுஇன் ஊர்க்கண் தங்கின் எவனோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. தெய்ய, அசைநிலை காலை மாலைகளில் அண்மையில் இருப்பதுபோல் பெருத்தும், நண்பகற்போதில் சேய்மைக்கண் சென்றது போல் சிறுத்தும் தோன்றுதல் பற்றி ஞாயிற்றைச் சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் என்றும், கீழ்கடற்கரைப்பகுதியிலிருந்து பாடுதலால் மேற்கிலுள்ள மலைவாய் மறையும் ஞாயிற்றை மால்வரை மறைய என்றும் கூறினார். ஆர்ந்து என்பது அருந்தென வந்தது. கொக்கு, நீர்க்கோழி, நீர்க்காக்கை முதலியவற்றைக் குறித்தற்குக் கருங்கால் வெண்குருகு என்றார். பகல் முழுதும் நீரில் இருந்த ஈரம் புலர்தற்கு மாலைவெயிலில் மணற்குவட்டில் தங்கிப் பின் இருள் மயங்கு போதில் தத்தம் சேக்கைகட்குச் சேறல் நீர்க்குருகுகட்கு இயல்பாதலால் வெண்குவட்டு ஒரு சிறைத் தங்கித் தண்ணெனப் புன்னையில் இறை கொண்டன என்றார். இருள்மாலைப் போது குளிர்ச்சி பொருந்தியதாதலால் அதன் வரவைத் தண்ணென என்று குறித்தார். உவாநாட்களில் கடல்நீர் பொங்கு மாதலால், அக்காலத்துக் கழிகள் நெய்தல் முதலிய மலர்கள் நீரில் மூழ்கி மறையுமாறு பெருகும் என உணர்க. அக்காலத்தே கடற் சுறவுகள் கழிக்கண் போதருதல் உண்டு. பகற்போதிலும் சென்னைக் கடற்கரையில் நீராடுவார்க்குச் சுறாமீன்கள் தீங்கு விளைத்த செய்தி பலரும் அறிந்த தொன்று. வழங்கலும் வழங்கும் என்பது, "அணியலும் அணிந்தன்று1" என்றாற் போல்வது, இரவுக் காலங்களில் கடற்பரப்பில் வந்து மேயும் மீன்கள் விளக்கொளி காணின் பலவாய் வந்து நெருங்குதல் இயல்பாதலால், அக்காலை வலைஞர் வலைவீசி அவற்றை எளிதிற் பிடித்துக் கொள்வது இன்றும் நடைபெறும் செயல் என அறிக. கடற்கானல் துறைக்கண் அமைந்த பகற்குறியிடத்தே வந்து நீங்குகின்றா னாகலின், இனி இவண் நீட்டித்து இருத்தல்கூடாது; இவண் வழங்கிய ஆயமகளிரும் தத்தம் மனை சேர்ந்தமையின் யாமும் போதல் வேண்டும்; துறையும் மக்கள் வழக்கற்றது என்பாள், துறை புலம்பின்று என்றும், அதற்கு ஏது ஞாயிற்று மண்டிலம் மேற்கு மலைவாய் மறைவது என்பாள் செழுங்கதிர் மண்டிலம் மால்வரை மறைய என்றும் கூறினாள். போகக் கருதும் தலைமகற்கு வழியினது ஏதம் கூறுவாளாய் வெண்குருகு வெண்குவட்டு ஒருசிறைத் தாஅய்த் தண்ணெனக் கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டன என்றும், செல்லுங்கால் குறுக்கிட்டு நிற்கும் கழியின் கொடுமை கூறலுற்று, மல்கு கழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கும் என்றும், அதன் நீர்ப் பெருக்கை விளக்குதற்குக் கணைக்கால் மாமலர் கரப்ப மல்கும் என்றும், எமர் மனைக்கண் இருப்பின் நீவிர் அவர் துணைபெற்றுச் சேறல் எளிது எனினும், இப்போது அவரும் மீன்வேட்டம் சென்றனர் என்பாள், எமரும் வேட்டம் புக்கனர் என்றும், இரவுப் போதில் எம்மூர் தங்குதற்குரிய இனிமை குன்றியதன்று என்பாள் எம் உறைவு இன் ஊர் என்றும் கூறினாள். செழுங்கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறை புலம்பின்று எனவே, பகற்குறிக் கூட்டம் இனி நீட்டித்தல் ஆகாது என மறுத்தவாறும், வெண்குருகு தண்ணெனப் புன்னை இறை கொண்டன எனவே, பல்வேறு தொழில் காரணமாக வெளியே சென்றிருந்த மக்கள் தத்தம் மனையகம் அடைந்தமையின் இரவுக்குறி வேண்டியவாறும், மல்குகழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கும் எனவே, இரவுக் குறிக்கண் வரும் ஏதம் கூறி அதுவும் விலக்கியவாறும், எமரும் வேட்டம் புக்கனர் எனவே, அவர் இல்வழி எமது மனைக்குப் போதரு வதும் நன்றன்று எனவும், தங்கின் எவனோ எனவே வரைந்து கோடற்கு முன் தலைவி மனைக்கு வருதல் அறனன்று என்றவாறும், ஆகவே இனி நினக்கு வரைவன்றி வேறு வாயில் இல்லை என்றவாறு மாயிற்று. "நாற்றமும் தோற்றமும்1" என்ற நூற்பாவின்கண் வரும் "புணர்ச்சி வேண்டினும்" என்ற பகுதிக்கண் இப்பாட்டினை எடுத்தோதி "இஃது இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி உடன்பட்டுக் கூறிது" என்பர் நச்சினார்க்கினியர். 68. விரான் சாத்தனார் விரான் என்பவன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்து விராலி மலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு பெருஞ்செல்வன். அவனைக் "கைவண் விராஅன்"1 என்றும், "தேர்வண் விராஅன்"2 என்றும் சான்றோர் பாராட்டிக் கூறுவர். அவற்குரிய ஊர்களுள் ஒன்றான இருப்பையூர் புலவர் பாடும் புகழ்பெற்றது. விராஅனது மலை விராலி மலை யென இப்போது வழங்குகிறது. அப்பகுதியில் அவன் பெயரால் அமைந்த விரான்குடி இடைக்காலத்த விரையான்குடி3 என்றாகி, இப்போது திரு விளாங்குடி யென வழங்குகிறது. இச்சாத்தனார் அவ்விராஅன் குடியிற் பிறந்தவ ராதலின் விரான் சாத்தனார் எனப்படுகின்றார். அச்சுப்பிரதியில் இவர் பெயர், பிரான் சாத்தனார் என்று காணப்படுகிறது. இவருடைய பாட்டு ஏடுகளில் பெரிதும் வேறுபட்டிருப்பதைக் காணும் போது, இவருடைய பெயர் வேறுபட்டிருப்பது வியப்பாகத் தோன்றவில்லை. களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகன், காதல் முறுகிப் பெருகுவது குறித்துக் களவையே விரும்பினான். அந் நிலையில் தலைவியின் பெற்றோர் அவளைப் புறஞ் செல்லாத வாறு இற்செறித்தனர். சிறைப்புறமாக வந்தொழுகும் தலைவற்கு அறிவுறுத்தி அவளை வரைந்து கொள்ள நினையுமாறு அவனைத் தூண்டும் செயலைத் தோழி கருத்திற் கொண்டாள். ஒருகால் அவன் சிறைப்புறம் வந்து நின்றமை யறிந்து தலைவியொடு சொல்லாடுவாள் போன்று தன் கருத்தை அவன் செவிப்பட உரைக்கலுற்றாள். "தோழி, அவர் மலைமுடியில் இடியும் மின்னலும் கூடிய மழைமுகில் தங்கி யிருத்தலின், நாளை அம்மலையினின்று இழிந்தோடி வரும் யாறு புதுநீர் பெருகி வருவது ஒருதலை; நம் அன்னையைக் கண்டு இளமகளிர் ஏனை ஆயமகளிருடன் கூடி ஓரை முதலிய விளையாட் டயர்தலின்றி மனைக்கண் செறிக்கப்பட்டிருப்பது அறனுமாகாது; ஆக்கமும் தேயும் என வணங்கிய மொழிகளால் வற்புறுத்திச் சொல்வோர் உளராயின், அவள் நம்மைச் செல்க என விடுப்பாள்; நாமும் புதுநீரில் நெஞ்சு மகிழக் குடைந்தாடலாம்" என்று உரைத்தாள். இவ்வுரையின்கண், புறத்தே செல்லாவாறு தலைமகள் இற்செறிப்புற்றமையும் நீராட்டு விருப்பத்தை வெளிப்படுக்கு முகத்தால் தலைமகனைத் தலைப்பெய்து மகிழ்தற்கண் உள்ள வேட்கை மிகுதியையும் தலைமகற்கு அறிவிக்கும் திறப்பாடு கண்டு வியப்புற்ற விரான் சாத்தனார் அதனை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். விளையா டாயமோ டோரை ஆடாது இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்மென வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் 1பெறினே குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் 2பொங்குகவர் புதுநீர் நெஞ்சுண ஆடுகம் செல்கென3 விடுநள்கொல் யாயே 4எல்லுமிழ்பு உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் கொடி நுடங் 5கிலங்கிய மின்னின் ஆடுமழை இறுத்தன்றவர் கோடுயர் குன்றே6 இது, சிறைப்புறமாகத் தோழி தலைவிக் குரைப்பாளாய்ச் செறிப்பறிவுறீஇயது.7 உரை விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது - உடன் விளையாடும் ஆயமகளிரொடு கூடிச் சென்று ஓரை முதலியன விளையாடாமல்; இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்-இளமகளிர்மனையின்கண்ணே செறிப்புண்டிருத்தல்; அறனும் அன்று - அறமாகாது; ஆக்கமும் தேய்ம் என - அதுவேயுமன்றி அம்மகளிரது இளநலத்துக்கு ஆக்கமும் ஆகாது என்று; வணங்கி வல்லிதின் சொல்லுநர் பெறின்-வணங்கிய சொற்களால் வற்புறுத்திச் சொல்லுதல் வல்லோரை இப்போது யாம் பெறுவேமாயின்; குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கு கவர் புதுநீர்-சிறுசிறு நுரைகளைத் தாங்கி நறிய பூக்களைத் தள்ளிக் கொண்டு மிக்க விருப்பத்தைத் தோற்றுவித்து வரும் புதுவெள்ளத்தில்; நெஞ்சுண ஆடுகம்-நெஞ்சு குளிரக் குடைந்தாடி இன்புறலாம்; செல்கென விடுநள்கொல் யாய் - நீவிர் சென்று புதுநீர் விளையாடி வருக என்று விடுவாள் நம் தாய்; எல்லுமிழ்பு-ஒளிசெய்து; உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள்-வலிய இடி முழங்கும் இரவின் இருள் பரவிய நடுவியாமத்தில்; கொடி நுடங்கு இலங்கிய மின்னின் - கொடி நுடங்கினாற் போலவிளங்கும் மின்னலொடு; ஆடுமழை இறுத்தன்று அவர் கோடுயர் குன்று - அசைகின்ற மழைமுகில் தங்கியுளது காண் அவருடைய உச்சி யுயர்ந்த குன்றின்கண் எ-று. அவர் குன்று மழை இறுத்தன்று; இளையோர் ஓரை ஆடாது இற்செறிந் திருத்தல் அறனுமன்று, ஆக்கமும் தேய்ம் என வணங்கி வல்லிதின் சொல்லுநர்ப் பெறின், யாய் செல்கென விடுநள்; யாமும் புதுநீர் நெஞ்சுண ஆடுகம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க ஆயம், சூதாடற்கும் உரிய சொல்லாதலின் விளையாடாயம் என்று சிறப்பித்தார். ஓரை என்பது நீர்விளையாட்டு வகையுள் ஒன்று; இக்காலத்தில் அதனை ஓரி யென்பர். விளையாடற்குச் சமைந்த இளையோர் பலரும் கரையில் நிற்க ஒருவர் ஒரு சிறு குச்சியைக் கால்விரலின் இடையிற் செருகிக்கொண்டு நீர்க்குள் குதித்து மூழ்கி விட்டுவிடுவர்; அது நீர்ப்பரப்பில் வெளிப்பட்டு மிதக்கக் காண்பவர் தாம் நீரிற் குதித்து நீந்தி அதனை எடுத்துவந்து கரையவர்பால் சேர்ப்பர்; தவறுவோர் பலருடன் நீரில் இறங்கி ஒவ்வொரு வரையும் தீண்ட முயல்வர்; நீந்துதல் வல்லவர்கள் அவர் கைப்படாமல் நெடிது செல்வதும் நெருங்கியவழி நீர்க்குள் மூழ்கிப் பின் வேறிடத்தில் வெளிப்படுவதும் செய்வர்; இஃது இக்காலத்து ஓரையாட்டு. இல்லிடத்து என வேண்டாது கூறியது இற்செறிப்பின் கடுமை யுணர்த்தற்கு. உம்மை, எச்சப்பொருட்டு. தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய் யொழித்துக் கெட்டது. வணங்கிச் சொல்லுதல், வணங்கிய சொற்களால் உரைத்தல்; அஃது கேட்போரைத் தம் கருத்துக்கு இணங்குவிக்கும் என்பது குறிப்பு. கவர்வு, விருப்பம். விடுநள், விடும்பான்மையளாவள் என்பது பட நின்றது. கொல், அசைநிலை. கொடி நுடங்குவதுபோல நுடங்கி இலங்கும் மின்னினைக் கொடி நுடங்கு இலங்கிய மின் என்றார். மழை யிறுத்தமையின் நாளைப் புதுநீர் பெருகி வருதல் ஒருதலை என்பதாம். கோடு, உச்சி, குன்று என்புழிக் கண்ணுருபு தொக்கது; "ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகாஅ இறுதியான1" என்பது தொல்காப்பியம். சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற் செறிப்புண்டு இருத்தலைத் தெரிவிக்கும் கருத்தினளாகிய தோழி புறம் போகாது செறித்த அன்னையின் திறத்தைக் கூறுகின்றாள்; நீர்க்கு அடியில் இருக்கும் பாறைகளாலும் மரக்கொம்புகளாலும் சில போதுகளில் நீராடுவோர்க்கு இன்னலுண்டாவதுபற்றி முதியோர் இவ்விளையாட்டுக் கூடாதென விலக்குவதுண்மை யின், அதனை யுட்கொண்டு அன்னை ஓரையாட விடாளாயினும், நீரில் நீந்தி விளையாடல் உடல்வளர்ச்சிக்கு ஆக்கமாதலையும், இளையவர் உடலும் உள்ளமும் வளம் பெறற்கு விளையாட்டு அறமாதலையும், அறிவோர் மிகச் சிலரே யாதலின், விளையாடாயமோடு ஓரைஅடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல் அறனும் அன்று ஆக்கமும் தேயும் எனச் சொல்லுநர்ப் பெறினே என்றாள். உண்மை யுணர்ந்து விளையாட விடுதற்கு ஏற்ப அன்னையின் உள்ளம் சமைய வேண்டுதலின் வல்லிதின் வணங்கிச் சொல்லுதல் வேண்டும் என்றும், இளமையில் உண்டாகும் விளையாட்டுப் பயிற்சி முதுமையில் வினைசெய்தற்கு வேண்டும் மனத் திட்பத்தையும் அறிவுநுட்பத்தையும் பயப்பது என்பதற்காகவே முன்னோர் விளையாட்டே வினையாம் என்றனர் என்றும், "தண்புனலாடித் தன் நலம் மேம்பட்டனள்"2 என்றாற் போலும் சான்றோர் உரைகளை எடுத்துக்காட்டியும் வற்புறுத்த வேண்டும் என்றற்கு வல்லிதின் சொல்லுநர்ப் பெறின் என்றும் கூறினாள். அவருடைய குன்றின் கண்ணிருந்து இழிந்தோடி வரும் புதுநீராதலின், அதன்கட் படிந்தாவது அவரொடு கூடி யாடுவது போலும் இனிமையுடைத்து என்பது பற்றி நெஞ்சுண ஆடுகம் என்றும், சொல்லுநர்ப் பெற்றவழி அன்னையும் செல்கென விடுநள் என்றும் கூறினாள். "நாற்றமும் தோற்றமும்"3 என்ற நூற்பாவில் வரும் "அன்புதலையடுத்த வன்புறை" என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதி, இது வரைவுநீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத் தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின் எனக் கூறி வற்புறுத்தது" என்பர் நச்சினார்க்கினியர். 69. சேந்தம் பூதனார் சேந்தம் பூதன் என்ற தொடர் சேந்தன் மகனான பூதன் என்று பொருள்படும். இவர் பெயர் அச்சுப்பிரதியில் சேகம் பூதனார் என்று இருக்கிறது. இதுபற்றிக் கூறவந்த திரு. அ. நாராயணசாமி ஐயரவர்கள், "பிரதிகளில் சேகம்பூதனார் என்று இருத்தலானே இருந்தவாறே பதிப்பிக்கப்பட்டது; சேந்தம் பூதனார் என்பவரும் மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் என்பவரும் இவரே என்பர்". சேந்தம் பூதன் என்ற பெயருடையார் கழுகுமலைப் பகுதியிலுள்ள கல்வெட்டுக்களில்1 காணப்படு கின்றார்கள்; ஆயினும், சேந்தன் பூதன் என்ற பெயர் இடைக் காலத்தும் தமிழகமெங்கும் மக்களிடையே வழங்கிய துண்டு என்பதை நினைவிற் கொள்ளல் வேண்டும். இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமக்களிடையே தலை மகன் ஒரு வினைகுறித்துத் தலைமகளைப் பிரிந்து சென்றான். அவன் குறித்த காலம் வருந்துணையும் ஆற்றி யிருத்தற் குரிய ளாகிய தலைவிக்கு ஆற்றாமை மிகுந்தது. காதல் வேட்கையின் இயல்பு கூற வந்த திருவள்ளுவனார், "காலை யரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்2" என்றார். அதனால் மாலைப்போது எய்தும் போதெல்லாம் இந்த நோயும் மலர்ந்து தலைமகளைத் துயருழக்கச் செய்தது. நோய் மிக்கவழி, அறிவும் நினைவும் அதன் வயப்பட்டுச் செயலறுதலும், உள்ளம் தளர்வதால் உணவின்பால் வெறுப்பும் உறக்கமின்மையும், உடலில் வெம்மையும் தோன்றுவதைத் தலைவி தேர்ந்துணர்ந் தாள். இவ்வாற்றால் நோயுற்றார்க்குத் தாம் செய்யக்கடவ செய்கைகளில் தெளிவின்மையும் மடிமையும் பிறந்து கேடுவிளை விப்பதையும் அவள் கண்டாள். இதனால் அவட்குக் கையறவு பெரிதாயிற்று. ஆகவே, அவள் தன் காதலனை நினைந்தாள். அவனோ தான் மேற்கொண்ட வினை யிடத்தே உறைப்புற்று நின்றானாகலின், அவற்கு இந் நோயுண்டாயின் செய்வினையை விரைந்து முடித்து மீள்வன், அவன் புகழ்க்கும் அஃது ஆக்கமாம் என எண்ணினாள். அப்போது தோழி போந்து, ஆற்றுதற் குரியன கூறத் தொடங்கவும், அவள், "தோழி, பகற்போது முற்றும் வெயிலொளி தந்து உதவிய செஞ்ஞாயிறு மலைவாய் அடைந்து மறைந்தது; பறவைகள் தத்தம் பார்ப்புக்களை நினைந்து சேக்கை கள் சேர்ந்தன; கலைமான் பிணையொடு கூடி இன்புறுகின்றன; முல்லையரும்புகள் முறுக்கவிழ்ந்து வாய் திறந்து மலர்கின்றன; தோன்றிப்பூக்கள் இருள்படப் பொதுளிய புதர்களிடையே மலர்ந்து சுடர்விளக்கெனத் துலங்குகின்றன; ஆனினங்கள் கழுத்திற் கட்டிய மணியோசையும் அவற்றைப் புறந்தந்தோம்பும் ஆயர்களின் குழலோசையும் ஒன்றுபட்டு நம் செவியில் வந்து இசைக்கின்றன. இத்தகைய இனிய சூழ்நிலையை அமைத்துக் கொண்டு வரும் இம்மாலைக்காலம் காதலனைப் பிரிந்துறையும் என் உள்ளத்தில் அவனையே நினைப்பித்து வேட்கையைக் கிளர்வித்து எனது திண்மையைச் சிதைக்கின்றது. ஆள்வினை குறித்துச் சென்ற நம் காதலர் உறையுமிடத்தே இம்மாலைப்போது இவ்வண்ணம் தோன்றுமாயின், அவர் உள்ளமும் இந்நோய்க்கு இடமாம்; அவர் மேற்கொண்ட வினையும் வீறு பெறாது, காண் என்று சொல்லி வருந்தினாள். தலைவியின் இக்கூற்றின்கண், காதலன் சொல்வழி நிற்கும் கற்புடை நங்கை, அவனது பிரிவின்கண் துயருழந்து வருந்துங்கால் தான் எய்தி வருந்தும் அவ்வருத்தம் தலைவற்கு உண்டாயின் வினைசெய்தற்கண் வேண்டும் மனத்திட்பம் கெடும்; வினை செயல் மாட்சியே பொருளும் புகழும் பெறுதற்கு வாயிலாதலின், காதலன் அவற்றை விரைந்து ஆற்றி எய்துதலே வேண்டுவது என்று கருதுதலால், வாழ்க்கைத் துணையாம் மாண்புடைய அவளது நலம் விளங்குதலின், அதனைச் சேந்தம் பூதனார் இப்பாட்டின்கண் சொல்லோவியம் செய்து இன்புறுத்து கின்றார். பல்கதிர் மண்டிலம் 1பகல்செய் தாற்றிச் சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப் பறவை பார்ப்புவயின் அடையப் புறவின் மாயெருத் திரலை மடப்பிணை தழுவ முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் தோன்றி 2தோன்றுபு புதல்விளக் குறுப்ப மதர்வை நல்லான் மாசில் தெண்மணி கொடுங்கோற் கோவலர் 3குழலோ டொன்றி ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை ஆள்வினைக் ககன்றோர் 4சென்ற நாட்டும் இனைய வாகித் தோன்றின் வினைவலித் தமைதல் ஆற்றலர் மன்னே. இது, வினைவயிற் பிரிவின்கண் ஆற்றாளாய தலைவி சொல்லியது. உரை பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி-பலவாகிய கதிர் களையுடைய ஞாயிறு பகற்காலத்தைச் செய்து; சேயுயர் பெருவரைச் சென்று அவண் மறைய - மிகவும் உயர்ந்து நிற்கும் பெருமலையின் முடியை யடைந்து அப்பால் மறையவும்; பறவை பார்ப்புவயின் அடைய - புள்ளினங்கள் தத்தம் பார்ப்புக்கள் இருக்கும் கூடுகளைச் சென்று அடையவும்; புறவின்-காட்டின்கண்; மா எருத்து இரலை மடப்பிணை தழுவ-பெரிய கழுத்தையுடைய ஆண்மான் தன் பெண் மானைக் கூடி இன்புறவும்; முல்லை முகை வாய்திறப்ப-முல்லையரும்புகள் இதழ் விரிந்து மலர்ந்து மணம் கமழவும்; தோன்றி தோன்றுபு புதல் விளக்குறுப்ப- பலவிடங்களிலும் இருள்படத் தழைத் துள்ள புதர்களில் தோன்றிக் கொடிகள் பூ மலர்ந்து அவற்றின் கண் ஒளி திகழவும்; மதர்வை நல்லான் மாசில் தெண்மணி - மதர்த்த நடையினையுடைய நல்ல ஆனிரைகளின் கழுத்திற் கட்டிய குற்றமில்லாத மணி யினுடைய தெளிந்த ஓசை; கொடுங் கோற் கோவலர் குழலோடு ஒன்றி - வளைந்த கோலை யேந்தும் கோவலரது குழலோசையோடு ஒன்றுபட்டு; வந்து ஐது இசைக்கும்-போந்து செவியின்கண் மெல்லென இசைக்கும்; அருளில் மாலை - நம்பால் அருளில்லாத இம் மாலைப்போது; ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் - ஆள்வினை குறித்து நம்மிற் பிரிந்த காதலர் சென்றுறையும் நாட்டிலும்; இனையவாகித் தோன்றின் - இவ்வியல்பே கொண்டு தோன்று மாயின்; வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன் - வினையை முடித்தற் கண் ஒன்றித் திண்மையுற்றிருக்கும் அவர் அது கரைந்து மெலிவெய்தி அவண் இருத்தலாற்றாது மீண்டிருப்பர்; அவர் வாராமையின் ஆங்க இனையவாகித் தோன்றாது போலும் எ-று. மண்டிலம் பகல் செய்தாற்றிச் சென்று, மறைய, பறவை அடைய, இரலை மடப்பிணை தழுவ, முல்லை முகைவாய் திறப்ப தோன்றி புதல் விளக்குறுப்ப, தெண்மணி குழலோடு ஒன்றி வந்து இசைக்கும் மாலை, அகன்றோர் சென்ற நாட்டும் இனைய வாகித் தோன்றின், வினைவலித்து அமைதல் ஆற்றலர்மன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அமைதல் ஆற்றாது மீண்டிலராதலால், இனைய ஆகித் தோன்றாது போலும் என்பதுபட நீற்றலின், மன், ஒழியிசை. மறைய, அடைய, தழுவ, திறப்ப, விளக்குறுப்ப என அடுக்கிநின்ற செயவெ னெச்சங்கள் இசைக்கும் என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. "பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி, சொன்முறை முடியாது அடுக்குந வரினும், முன்னது முடிய முடியுமன் பொருளே7" என்பது தொல்காப்பியம். வட்ட மாய்த் தோன்றுதல் பற்றி ஞாயிறு மண்டிலம் எனப்பட்டது. அது, பகற் போதினைச் செய்வதாகிய தன் தொழிலைச் செய்யு மாற்றால் ஏனை மாவும் புள்ளும் மக்களும் பிறவும் தத்த மக்குரிய தொழிலைச் செய்யுமாறு உதவுதலால் செய்து என்று ஒழியாது செய்தாற்றி என்றார். செயற்குரியவற்றைச் செவ்வனம் செய்தாற்றுவோர் புகழ்க்குன்றேறிப் பொலிவு றுவர் என்ற குறிப்பும் தோன்றச் சேயுயர் பெருவரைச் சென்று அவண் மறைய என்றார். ஞாயிறு வரையிடத்தே ஒடுங்காது அப்பால் மறைதலின், சென்று அவண் மறைய எனல் வேண்டிற்று. சேய்மையிடம் சேய் என நின்றது. வலிய கொம்புகளைத் தாங்க வேண்டுதலால் இரலையின் வலிய கழுத்து, மாயெருத்து எனச் சிறப்பிக்கப்பட்டது. மா எருத்து, மாயெருத்து என வந்தது, மாயிருஞாலம் என்றாற் போல. பசும்புல் தேர்ந்து மேய்தலிலும் பகைப்பொருட்கு அஞ்சித் தற்காத்தலிலும் பகற்போது கழிதலின், இரலை பிணை தழுவி இன்புறுங் காலம் மாலைப் போதாயிற்று. முல்லை யரும்பு முறுவலை யொத்தலின், அதன் மலர்ச்சி வாய்திறப்பது போறல் கண்டு முல்லை முகை வாய்திறப்ப என்றார். நெய்தல் மலர்வது கூற வந்த அம்மூவனார், "பசுவாய் திறக்கும் பேதை நெய்தல்1" என்பது காண்க. "சுடர்ப்பூந் தோன்றி2 எனப்படுதலின், தோன்றி தோன்றுபு புதல் விளக்குறுப்ப என்றார். தழை மேயும் நிரைகட்கு மரக்கிளைகளைத் தாழ்த்திப் பிடித்தற்கு வளைந்த கோல் துணை செய்தலின், கொடுங் கோல் கோவலர்க்கு உரியதாயிற்று. காட்டில் ஆங்காங்குச் சென்று மேயும் ஆனிரைகளை மாலை வரக்கண்டு ஒருங்கே தொகுக்கும் கருத்தால் ஆயன் குழலோசை செய்தல் மரபு. நிரைகள் சென்று மேயும் இடம் புலப்படுதற்கு அவற்றின் கழுத்தில் நன்மணிகளைத் தேர்ந்து கட்டுவர். நாட்களின் பன்மைபற்றி மாலைப் போதினையும் பன்மையில் வைத்து, இனையவாகி என்றார். வினைவலித்து அமைதலாவது, வினைமுடித்தல்லது மீளலா காது என்ற திண்ணியவுள்ளத்துடன் கண்ணுங் கருத்துமாய்ச் செயற்கண் ஒன்றியிருத்தல். "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்"3 என்று சான்றோர் கூறுவது காண்க. ஆற்றலர் என்றது, ஆற்றற்குரிய திண்மை கரைந்து மெலிவுறுவர் என்றவாறு. தலைமகன் வினைவயிற் பிரிந்தானாக அவன் தெளித்த சொல்லைத் தேறியிருந்த தலைமகள், மாலைப்போது எய்தக் காண்கின்றாள்; ஞாயிறு சேயுயர் பெருவரை சென்று அவண் மறைவதும், புள்ளினங்கள் தம் பார்ப்புக்களை நினைந்து கூடுசென்று அடைவதும் ஒருபால் தோன்றுகின்றன; இரலைகள் தம் பிணை தழுவி இன்புறுவதும், அவை நின்ற காட்டிற் புதர்களில் தோன்றி மலர்ந்து ஒளி திகழ்வதும் பகற்போதில் மேய்ந்து மாலை வரக் கண்ட கோவலர் குழலோசையால் ஆனிரைகள் தொகுவதும், அவற்றின் கழுத்திற்கட்டிய மணி களின் ஓசையும் குழலிசையும் பைய வந்து இசைப்பதும் ஒருபால் நிகழ்கின்றன. ஏனை மாவையும் புள்ளையும் இவ்வாறு இன்புறுவிக்கும் மாலைப்போது தன்னுள்ளத்தே வேட்கையை எழுப்பித் துன்புறுத்துவது பற்றி அதனை அருளில் மாலை என மொழிகின்றாள். தன்பாற் காதல் செய்யாது வினையே காதலித்துத் தலைமகன் பிரிந்துள்ளான் என்ற கருத்தால் தலைமகனைக் காதலர் என்னாது ஆள்வினைக்கு அகன்றோர் என்றும், அவர் சென்றுறையும் நாட்டில் மாலைப்போது தோன்றி இவ்வாறு காதற் காம நோயை எழுப்பும் காட்சியொடு பொருந்தாது போலும் என்பது எண்ணி, இனைய ஆகித் தோன்றின் என்றும் கூறுகின்றாள். தோன்றின் என்றமையால் தோன்றாது என்பது உட்கோளாயிற்று. தோன்றியிருக்குமாயின், அவர் தெளித்த சொல்லைத் தேறியிருக்கும் தன்மனத் திண்மையைச் சிதைத்து வேட்கை மிக்குக் கையற்று வருந்தச் செய்வது போல, வினைக்கண் ஒன்றித் திட்பமுற்றிருக்கும் அவர் மனத்தையும் சிதைத்து இவண் மீளச் செய்திருக்கும் என்பாள் வினைவலித்து அமைதல் ஆற்றலர்மன் என்றாள். இதனாற் பயன், தோழி தலைவியின் பொறை மாண்பு கண்டு மலிவாளாவது. 70. வெள்ளி வீதியார் வெள்ளிவீதி என்ற இப்பெயரில் உள்ள வீதி என்னும் சொல் சங்க நூல்களில் காணப்படாத தொன்று; தெருவைக் குறிக்கும் இச் சொல் பிற்கால நூல்களில் பெருக வழங்குவது; எனவே இச் சொல் சங்க காலச் சான்றோராகிய வெள்ளிவீதியார் பெயரில் எவ்வாறு இடம் பெற்ற தென்பது தெரிந்திலது. ஒளவையார் பாட்டொன்றில் "நெறி படு கவலை நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே1" என இவர் குறிக்கப்படுவது நோக்க, வீதி யென்ற இச்சொல் இவர் பெயரில் சங்க காலத்தேயே சேர்ந்திருப்பது மாத்திரம் தெரிகிறது. இதுபற்றி ஒருகால் பேச்சு நிகழ்ந்தபோது, தாழையின் வெள்ளிய வேரை வெள்ளிவீழ்து என்றாராக அது வெள்ளிவீதி யென மருவிற்றாகலாம் எனக் கருதினர் நாவலர் வேங்கடசாமி நாட்டார். இவ்வெள்ளிவீதியார் பாடியன சில ஏனைத் தொகை நூல் களிலும் உள்ளன. அன்னி யென்னும் தலைவனொருவன் குறுக்கைப் பறந்தலையில் திதியன் என்பவனோடு பொருது அவன் காவல் மரமாகிய புன்னையைத் தடிந்த செய்தியையும், கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் கணவனைக் காவிரிப் பெருக்கிற் கெடுத்து ஊரூராய்த் தேடித் திரிந்த செய்தியையும் வான வரம்பனது போர்ச் சிறப்பையும் இவர்தம் பாடல்களிற் குறிக்கின்றார். பிரிந்த காதலன் பொருட்டுத் தலைவி அலமந்து வருந்தும் நிலையைக் "காதலற் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று, அலந்தனென் உழல் வென் கொல்லோ" என இவர் கூறுவது இவரது வாழ்க்கைக் குறிப்பாம் என்பர். கழிந்த நாட்களில் இரவுக்குறி இடையீடு பட்டுக் கூட்டம் பெறாது சென்ற தலைமகன் போந்து சிறைப் புறத்தானாகத் தோழி தலைவிக்குக் காரணம் கூறுவாளாய், "எவன்கொல் வாழி தோழி நம் இடைமுலைச் சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும், சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பின், இலங்குவெள் ளருவி போலவும், நிலங் கொண்டன வால் திங்க ளங்கதிரே" என்பதும், தலைமகன் கூட்டம் பெறாது சென்ற செய்தியை, "எல்லிற்று என்னான் வென்வே லேந்தி நசைதர வந்த நன்ன ராளன், நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின், இன்றிப் பொழுதும் யான் வாழலனே" என்பதும் வரைவு கடாவும் குறிப்பால் மிக்க சூழ்ச்சியும் உருக்கமும் பொருந்தி யுள்ளன. இவ்வாறே இவர் பாட்டனைத்தும் நல்லோர் நட்புப் போல நவில்தொறும் இன்பம் சுரக்கும் நயமுடையவாம். களவின்கண் ஒழுகும் தலைமக்களில், காதல் மாண்புறுவது கருதித் தலைவன் களவொழுக்கத்தையே விரும்பி வரைவு நீட்டித்து ஒழுகலுற்றான். அவனை யின்றி இமைப்போதும் இருத்தலாற்றாத அளவு காதல் பெருகியது. அவளுடைய நினைவும் சொல்லும் செயலும் யாவும் அவன்பாலே ஒன்றி நின்றன. ஒருநாள் மாலைப்போதில் நீர்த்துறையில் நிற்கும் தலைமகள், தன் காதலன் வரவை எதிர்நோக்கினாள்; அவன் வரவில்லை; அவனது ஊர்ப்பக்கம் சென்று வரும் வெள்ளாங் குருகுகள் கூட்டமாய் வந்து அந்நீர்த்துறைக்கண் தங்கின. கையிகந்த காதல் உணர்ச்சி யால் கருத்திழந்து நின்ற அவள், "வெள்ளாங் குருகே, காதலன் ஊர்ப்புறத்துக் கழனிகளிற் பாய்ந்து கழிந்தோடிவரும் புனல் இவ்வூர்க்கண் பரந்து வயல்கட்குப் பயன்படுகிறது; ஆங்கும் ஈங்குமாகப் பறந்து திரியும் நீ, இங்கே யான் காதற்றுன்பத்தால் கையற்று உடல்மெலிந்து இழை நெகிழ்ந்தோடு மளவு எய்த்துள்ள செய்தியை இதுகாறும் அவருக்குச் செப்பாதொழிந்தனை; இப்போது எம்மூர்க்குப் போந்து நீர்த்துறையில் சினைகளோடு கூடி யுறையும் கெளிற்றுமீன்களை மேய்ந்து உண்டபின் அவரது ஊர்க்குச் சென்று எனது நிலையினை அவர்க்கு எடுத்துரைப் பாயாக; முன்பே இதனை உரைத்தற் கேற்ற அத்துணை அன்புடையை யல்லையோ, அன்றி மறந்தொழிந்தனையோ, அறியேன்" எனக் கூறுவாளாயினள். இக்கூற்றின்கண் அமைந்து கிடக்கும் தலைவியது அவலநிலையும் பெண்மையுள்ளத்தின் இயல்பும் இனிது விளங்கக் கண்ட வெள்ளி வீதியார் இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார். சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே துறைபோ கறுவைத் தூமடி யன்ன இறங்கிணர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே எம்மூர் வந்தெம் 1உண்டுறைத் துழைஇ இனக்கெடிற் றார்கையை அவர்ஊர்ப் பெயர்தி 2அனைய அன்பிலையோ பெருமற வியையோ ஆங்கண் தீம்புனல் ஈங்கண் 3பரத்தரும் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழைநெகிழ் 4பருவரல் செப்பா தோயே இது, காமமிக்க கழிபடர்கிளவி உரை சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே - சிறிய வெள்ளாங்குருகே; துறைபோகு அறுவைத் தூமடி யன்ன - நீர்த் துறைக்கண் அலைத்துவிடப்பட்ட வெள்ளிய ஆடை யினது தூய மடியைப் போன்ற; இறங்கிணர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே - வெண்ணிறம் பொருந்திய சிறகுகளையுடைய சிறுவெள்ளாங்குருகே; எம்மூர் வந்து - எம்முடைய ஊர்க்குப் போந்து; எம் உண்டுறைத் துழைஇ - எமது நீர்த்துறையில் வாழும் மீன்களைத் தேடி; இனக் கெடிற்று ஆர்கையை-கூட்டமாக வாழும் கெளிற்றுமீன்களை மேய்ந்து உண்டனையாய்; அவர் ஊர் பெயர்தி - என் காதலராகிய அவருடைய ஊர்க்குச் செல்கின்றாய்; அனைய அன்பிலையோ - அவ்வளாவிற்றாய அன்புடையை யல்லையோ; பெருமற வியையோ நீங்கிய அக்கணத்தே மறக்கும் பெருமறதியை உடையையோ; ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரத்தரும் - ஆங்கு அவருடைய ஊர்க்கண்ணிருந்து வரும் தீவிய தண்ணீர் இங்கு இவ்வூரிடத்தே பாய்ந்து பரந்து பயன்படும்; கழனி நல்லூர் மகிழ்நர்க்கு-கழனிகளையுடைய நல்ல ஊர்க்குரியராகிய தலைவர்க்கு; என் இழைநெகிழ் பருவரல் செப்பாதோய்-என் இழைகள் கழன்றோடுதற்குக் காரணமாகத் தோன்றிய என் வேட்கை நோயைச் செப்பா தொழிகின்றனை யாகலான் எ-று. சிறுவெள்ளாங்குருகே, வந்து, உண்டுறைத் துழைஇ கெளிற்று ஆர்கையை; பெயர்தி; அற்றாக பருவரல் செப்பா தொழிகின்றனையாகலான் அனைய அன்பிலையோ, பெரு மறவியையோ கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வெள்ளாங்குருகினை இக்காலத்தில் உள்ளாங்குருவி என வழங்குவர். இஃது உருவிற் சிறிதாதல் பற்றிச் சிறுவெள்ளாங் குருகு எனப்பட்டது; பிறர் வாலாட்டி1 என்பதும் இதனையே, நீர்க்குள் மூழ்கித் திரிந்து மீன்பிடிப்பது தோன்றத் துழைஇ என்றார். பரத்தரல், பரந்து பாய்தல். "தண்ணென மலிபுனல் பரத்தந்தாங்கு2" என்றும், "பாலெனப் பரத்தரும் நிலவின் மாலை3" என்றும் சான்றோர் இச்சொல்லைப் பயில வழங் குவர். கெடிறு, இக்காலத்திற் கெளிறு என வழங்கும் மீன்வகை. ஆர்கையை என்னும் முன்னிலைக் குறிப்பு முற்றுவினையை ஆர்கையையாய் என எச்சமாக்குக. பருவரல், துன்பம், உண்டுறை, உண்ணும் நீர் கொள்ளும் துறை. காதல் வேட்கையின் கடுமையால் கேட்கத் தகுவன இவை, கிளக்கத் தகுவன இவை என உணரும் உண்மையறிவு அறைபோகியதால் நீர்த்துறைக்கண் மேயும் வெள்ளாங் குருகினை நோக்கிச் சிறுவெள்ளாங்குருகே சிறுவெள்ளாங் குருகே என்றவள், அதன் வெண்மை நிறத்தையும் தூவியையும் சிறப்பித்து, துறைபோகு அறுவைத் தூமடியன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே என மறுபடியும் மிகுத்துக் கூறினாள். எம்மூர்க்கண் உள்ள எமக்குரிய உண்டுறையில் மீன் மேய்ந்துண்ணுதலின் எம்பால் அன்புடையை யாதல் வேண்டும் என்பாள், எம்மூர் வந்து எம் உண்டுறைத் துழைஇ இனக் கெடிற்று ஆர்கையை என்றும், அவர் ஊர்க்கு நீ போகின்றா யாதலின், எனது நிலையை அவர்க்கு உரைத்தல் எளிது என்றற்கு அவர் ஊர்ப் பெயர்தி என்றும் கூறினாள். தலைமகனது ஊர்ப்புறத்து நன்செய்க் கழனிகளில் கழிந்து வரும் நீர் பெருகி வந்து தலைவியது ஊரிலுள்ள நீர்த்துறைகளில் பரவிப் பாய்கின்றமை தோன்ற, ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரத்தரும் கழனி நல்லூர் என்றாள். எனவே இருவர்க்கும் தொடர்புண்மை தெளிய உணரப்படுவ தொன்று என்றவாறாம். செறிய அணிந்துள்ள தொடியும் வளையுமாகிய அணிகள் பருவரல் மிகுதியால் உடம்புநனி சுருங்கலின் தாமே நெகிழ்ந்து ஓடா நின்றன என்பதுபட இழைநெகிழ் பருவரல் என்றாள். பெண் ணுயிர் அவலம் நோக்குவோர் யாரும் இரக்கமின்றிச் செல் லாராக, நீ என்னை நேரிற் கண்டும் என் பருவரலைக் காதலர்க்குச் செப்பாதொழிந்தனை என்பாள், இழைநெகிழ் பருவரல் செப்பாதோய் என்றும், நாளும் அவர் ஊர்க்குச் செல்லும் நீ அவரிடம் உரையா தொழிதற்குக் காரணம், என்பால் அன்பின்மையாதல். நின்பால் பெருமறதி யுண்மையாதல் வேண்டும் என்பாள், அனைய அன்பிலையோ பெரு மறவியையோ என்றும் இயம்பினாள். மறவி பெரிதா காவழி, அவரது ஊரை அடைந்ததும் என் நினைவு தோன்றுமாகலின், நாளும் ஒழியாது சென்றும் பருவரலை உரையாமை பற்றிப் பெருமற வியையோ என்றாள் என்க. ஈங்கண் எம் உண்டுறைக் கண் நீர் பரத்தருதற்கு, அவரூர் ஆங்கட் கழனி ஆதார மானாற் போல, ஈங்கு உறையும் யான் உயிர்தாங்கி வாழ்தற்கு ஆங்கு அவர் வரவு ஆதாரம் என்றாளாயிற்று; ஆகவே எம் உண்டுறைக்கண் இனக்கெடிறு ஆர்ந்ததற்கு நன்றியாக அவர்க்கு என் பரு வரலைச் செப்புவாயாக என்பது குறிப்பு. "மறைந்தவற் காண்டல்"1 என்ற நூற்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறுகிளவி என்பர் நச்சினார்க்கினியர். 71. வண்ணப்புறக் கந்தரத்தனார் கந்தரத்தனார் என்ற பெயருடையார் பலர் அந்நாளில் இருந்தமையின், இவர் வண்ணப்புறக் கந்தரத்தனார் என்று குறிக்கப்பட்டனர். புறாவின் சேவலை "வண்ணப் புறவின் செங்காற் சேவல்" என இப்பாட்டின்கட் சிறப்பித்துப் பாடி யிருக்கும் நலன் கண்டு இவ்வாறு இவரைச் சான்றோர் வழங்கினர் எனக் கூறுதலும் உண்டு. வேறு காரணம் புலப் படாமையின் அதனை அவ்வாறே கொள்வது பொருத்தமாகும். இவருடைய பாட்டு அகநானூற்றிலும் உளது. தலைமகள் தலைவனொடு போக்குடன்பட்டுச் சென்றாளாக, நிகழ்ந்தது கூறி வருந்தும். செவிலி, அவளுடைய வேறுபாட் டொழுக்கத்தை விதந்து, "கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள், அளியும் அன்பும் சாயலும் இயல்பும் முன்னாள் போலாள்" என்றும், அவள் உடன்போக்குத் துணிந்ததைக் குறிப்பாய் அறிவித்த முறையை, "என்மகள் நன்ன ராகத் திடைமுலை வியர்க்கப் பல்கால் முயங்கினள் மன்னே" என்றும், இக்குறிப்பைத் தான் வெளிப்படையாக முன்பே அறிந்திருந்தால் இன்னது செய்திருப்பேன் என்பாள், "கலியுடை வியனகர்க்கண், செல்வுழிச் செல்வுழி மெய்ந் நிழல் போலக் கோதை யாயமோடு ஓரை தழீஇத் தோடமை அரிச்சிலம் பார்ப்ப அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே" என்றும் கூறுவன கந்தரத்தனாரது கட்டுரை வன்மையைப் புலப்படுத்துகின்றன. இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் தன் காதலியைப் பிரிந்து சென்று பொருள் செய்தற்குரிய கடமை யுடையனானான். அவன், ஒருகால் தோழியை நோக்கித் தான் பிரியவேண்டியிருப்பதைத் தெரிவித்தான். தலைவியின் பிரி வரிதாகிய தண்டாக் காதலை எடுத்தோதிச் செலவு கருதிய அவன் உள்ளத்தில் அழுங்கல் உண்டாக்கக் கருதி, "ஐயனே, பொருட்பயன் கருதிய உனது பிரிவைத் தலைமகட்கு உணர்த்துக என என்னைப் பணிக்கின்றாய்; அதனை நீயே அவட்குச் சொல்லி விடை வேண்டுவையாயின் அவள் இசைதலும் செய்வள்; ஆயினும் புறவின் சேவல் தன் துணைப்புறாவை அழைக்கும் குரலைக் கேட்குந் தோறும் நும்மொடு நுமது இல்லின்கண் உறையும் போதே காதல் வேட்கை கைம்மிகக்கொண்டு பெரு விதுப்புறும் அவளை நீவிர் எங்ஙனம் பிரிதல் இயலும்?" என்று கூறினாள். இக்கூற்றின்கண், தலைமகளது பிரிவருங் காதலைச் சுருங்கிய சொற்களால் தலைமகற் குணர்த்தும் திறமும், அவளது காதலின் பத்தினும் சிறந்த இன்பத்தை ஏனைப் பொருளும் பிறவும் தாரா என உய்த்துணர வைக்கும் திறமும் நுண்ணிதின் அமைந்திருப்பது கண்ட வண்ணப்புறக் கந்தரத்தனார் அதனை இப்பாட்டின்கண் அமையப் பாடியுள்ளார். 1மன்னாப் பொருட்பிணி 2முன்னி இன்னதை வளையணி முன்கைநின் 3இகுளைக் குணர்த்தெனாப் பன்மாண் இரத்தி ராயின் சென்மென விடுந ளாதலும் உரியள் விடினே கண்ணும் நுதலும் நீவி முன்னின்று பிரிதல் வல்லிரோ 4ஐய செல்வர் 5வகையமை நல்லில் அகவிறை உறையும் வண்ணப் புறவின் செங்காற் சேவல் வீழ்துணைப் பயிரும் 6தாழ்குரல் கேட்டொறும் 7நும்மிலள் கையறுபு புலம்பும் பொம்ம லோதி 8பெருவிதுப் புறுமே இது, தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது. உரை மன்னாப் பொருட்பிணி முன்னி-நிலை பேறில்லாத பொருளை ஈட்டுவது நன்றென்று எண்ணி; இன்னதை-எனது இப்பிரிவை; வளையணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனா-வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்கு உணர்த்துக என்று என்பாற் சொல்லுதலை விட்டு; பன்மாண் இரத்திராயின்-தலைமகள்பாற் சொல்லிப் பன் முறையும் இரந்து கேட்பீராயின்; சென்மென விடுநளாதலும் உரியள்-சென்று வருவீ ராமின் என ஒருகால் விடைதரினும் தருவள்; விடின்-அவ்வாறு விடை நல்கி விடுவ ளாயினும்; கண்ணும் நுதலும் நீவி-அவளுடைய கண்களையும் நெற்றியையும் தைவந்து; முன்னின்று பிரிதல் வல்லிரோ-முன்பு நின்று பிரிவு சொல்லி நீங்கவல்லிரோ, ஒருபோதும் மாட்டீர்; செல்வர் வகையமை நல்லில்-செல்வர் கட்டிய பலவேறு வகைகள் அமைந்த நல்ல வீட்டின்; அகவிறை உறையும்-இறைப்பகத்தில் அமைந்த கூட்டில் வாழும்; வண்ணப் புறவின் செங்காற் சேவல்-வண்ணப் புறாவினது சிவந்த காலையுடைய ஆண்; வீழ்துணை பயிரும் தாழ்குரல் கேட்டொறும்-தான் காதலிக்கும் பெடைப் புறாவை அழைக்கும் தாழ்ந்த ஓசையையுடைய குரலைக் கேட்குந்தோறும்; நும்மிலன் கையறுபு புலம்பும்-நும்மோடே நுமது இல்லத்தே கூடியிருந்தா ளாயினும் வேட்கைமிக்குச் செயலற்றுத் தனிமைத் துயர் உழக்கும்; பொம்மல் ஓதி-பொற்பு மிக்க கூந்தலையுடைய தலைமகள்; பெருவிதுப்புறும்-நின்னைக் கூடற்கண் பெரிதும் விரைகுவள் ஆகலான் எ.று. ஐய, பொருட்பிணி முன்னி, இன்னதை இகுளைக்கு உணர்த்து எனாச் சொல்லுதலை விடுத்து இரத்திராயின், சென்மென விடுந ளாதலும் உரியள்; விடின், பொம்மலோதி பெருவிதுப்புறு மாகலான், நீவிர் முன்னின்று பிரிதல் வல்லிரோ? மாட்டீர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பொருளின் இன்றியமையாமை பற்றி அதனை ஈட்டற்கண் ஒன்றி நிற்கும் விருப்பத்தைப் பொருட்பிணி என்றார். எனாது என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறுகெட்டது. சென்மென என்றவிடத்துச் செல்லும் என்னும் ஏவல் கண்ணிய முன்னிலை வினை, ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெட்டது. ஆதலும் என்புழி உம்மை எதிர்மறை. செல்வர் கட்டும் பெருவீடுகளில் புறாவினம் இனிது வாழ்தற் கேற்ப வகைவகையான மாடங்கள் இறைப்பில் அமைக்கப்படுவது தோன்றச் செல்வர் வகையமை நல்லில் எனச் சிறப்பித்தார். செல்வர் மனைகளில் வாழும் புறாவினம் கருமை, நீலம், வெண்மை முதலிய பல வண்ணங் களை யுடைய வாகலின் வண்ணப் புறவின் செங்காற் சேவல் என்றார். இச்சிறப்பால் இப்பாட்டைப் பாடிய கந்தரத்தனார் வண்ணப்புறக் கந்தரத்தனார் எனப் படுவா ராயினர் போலும். புறாவின் பயிர்குரல் தாழ்ந்த ஓசை யுடைமை பற்றித் தாழ்குரல் என்றும், அதனைக் கேட்குங்கால் கேட்போர் உளத்தில் காதலுணர்ச்சி எழுதலின் கேட்டொறும் என்றும் கூறினார். பொம்மல், பொற்பு, விதுப்பு, விருப்ப மிகுதியாற் பிறக்கும் உள்ளத் துடிப்பு. "அவர் வயின் விதும்பல்1" என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை காண்க. மனைவாழ்க்கைக்குப் பொருளின் இன்றியமையாமையை வற்புறுக்கு முகத்தால் தலைமகன் தன் பிரிவுக்குறிப்பை உணர்த்தினமையின், தோழி அதனை உடன்பட்டு மறுக்கும் கருத்தினளாதல் தோன்ற, மன்னாப் பொருட்பிணி முன்னி என்றும், பிரிவுச்சொல்லைத் தான் வாயாற் சொல்ல விரும் பாமை புலப்பட இன்னதை என்றும், அவன் கூற்றைக் கொண்டெடுத்து மொழிதலின், வளையணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என்றும், இதனை யான் உரைக் ககில்லேன், நீயிரே அவட்குச் சொல்லி விடைபெறல் நலம் என்றும், அதனையும் ஒருமுறைக்குப் பன்முறை சொல்லி இரந்தால் அன்றி விடை பெறல் அரிது என்றற்குப் பன்மாண் இரத்திராயின் என்றும், அக்காலை அவள் உடன்பட்டு விடைநல்குவள் என்றும், பன்மாண் இரந்தவழி அவள் நும் கூற்றின் வாய்மையை உணர்ந்து விடை நல்குவள் என்பது ஒருதலையன்று; மறுத்தலும் கூடும் என்றற்குச் சென்மென விடுநள் ஆதலும் உரியள் என்றும் கூறினாள். வளையணி முன்கை நின் இகுளை என்றது, வளையணியும் இள மகளாதலின் அவள் பொருளின் சிறப்பை அறியாள்; அவட்கு உளங்கொளச் சொல்லி விடைபெறுதல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற நின்றது. "வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பல்2" என்புழிப் பழையவுரைகாரர், வளைமகள் என்றது விளையாட்டு மகளிரை எனக் கூறுவது ஈண்டு நினைவுகூரத் தக்கது. பிரிவு கேட்ட மாத்திரையே அவள் எய்தும் மெலிவையும் பேதுறவையும் காணுமிடத்து, வணங்கா ஆண்மையை யாயினும் அவள்பால் வணங்கிய சாயல்3 உடையை யாதலின் பிரிதலை மேற்கொள்ளற்கு நீயே அஞ்சித் தவிர்குவை என்பாள், சென்மென விடினே முன்னின்று பிரிதல் வல்லிரோ ஐய என்றாள். பிரியக் கருதும் காதலன் காதலியின் கண்ணும் நுதலும் நீவிப் பாராட்டுதல் மரபாதல்பற்றிக் கண்ணும் நுதலும் நீவி என்று கூறினாள். "நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே1" என்றும், "ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவது எவன்கொல் அறியேன்2" என்றும் வருவன காண்க. இதனால், கண்ணும் நுதலும் நீவி இரந்து பின்னின்று விடைபெறக் கருதும் தலைவனுடைய சூழ்ச்சியையும் தான் அறிந்துகொண்டமை வெளிப்படுத்தினா ளாயிற்று. நும் இல்லத்தே நும்மொடு கூடி உடனுறையும் பொழுதே, புறவுச் சேவலின் தாழ்குரல் கேட்டுக் கையற்றுப் புலம்பிப் பெருவிதுப்புறுபவள், நீவிர் பிரிந்து செல்லின் ஆற்றாமை மீதூர்ந்து பிறிதுபடுவள் என்பாள், வண்ணப் புறவின் செங்காற்சேவல் வீழ்துணைப் பயிரும் தாழ்குரல் கேட்டொறும் கையறுபு புலம்பும் என்றாள், எனவே, இப்பெற்றியாளைப் பிரிந்து சென்று பொருளீட்டல் கருது வது சிறப்புடைத் தன்று எனத் தோழி செலவழுங்குவிப்பது பயனாதல் காண்க. 72. இளம்பூதியார் இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் தமிழ்ச்சங்க ஏட்டிலும் இளம்போதியார் என்று காணப்படுகிறது; ஏனை ஏடுகளில் இளம்பூதி என்பதே உளது. மேலும், பூதி என்னும் பெயர் சங்க காலத்திலும் அதனை யடுத்துப் போந்த கல்வெட்டுக்கள் காலத் திலும் தமிழர்களிடையே மக்கட் பெயராகப் பயில வழங்கின மையின், பூதி யென்ற பாடமே பொருத்தமாக உளது; வெண் பூதியார், வெண்மணிப் பூதியார், அப்பூதியார் எனப் பலர் இருந்திருப்பதைத் தமிழ்பயின்றோர் நன்கு அறிவர். போதி யென்ற பாடத்தைக் கண்டு இவர் புத்த சமயத்தவர் என்று சொல்லி மகிழ்பவரும் உண்டு; புத்தம் சமணம் என்ற இரண்டும் சங்க காலத்தில் தமிழகத்தில் அத்துணைச் செல்வாக்குப் பெற வில்லை என்பதை அவர்கள் நினைதல் வேண்டும். களவு மேற்கொண் டொழுகும் தலைமகள் இற்செறிப்புண்டு மனையகத்தே இருந்து வருகையில், தலைமகன் சிறைப்புறமாக வந்து அவள் நிலையினை அறிவதும், தோழியும் தலைவியும் சொல்லாடுவது கேட்டு மகிழ்வதும் உண்டு. தலைமக்கள் தம்மிற் கூடல் அருமையாவது காணும் தோழி, அவன் உள்ளத்தில் வரைவு பற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தகுவனவற்றைக் கூறுவள். இவ்வாறு தோழி வரைவு கடாவியவழியும் காதல் மாண்புறுவது கருதித் தலைவன் களவையே விரும்பி ஒழுகுவன். ஒருகால் தலைமகன் சிறைப்புறம் வந்தானாகத் தோழி தலைவியொடு சொல்லாடுவாள் போல, "பேணத் தகுவனவற்றைப் பெரிய ராயினார் பேணுதல் செய்யார் என்பது ஆராயுமிடத்து நாணத் தக்கதாகவுளது, காண்" என்றாள். அது கேட்டுத் தலைமகள் தோழியின் முகம் நோக்கினாளாக, அவள், "நாம் உயிரொத்த நண்பர்களாதலின் நான் அதனை வெளிப்படக் கூறாது மறைப்பது பெருங் கேட்டினை விளைவிக்கும்; ஆகவே, கூறுவல் கேள்: தலைமகனை முதற்கண் தலைப்பெய்து அவனது நட்பைப் பெற்று ஒழுகிய காலத்தில் நமது ஒழுக்கத்தை அன்னை அறியாதவாறு பேணி, அவனை நேர்படுந்தோறும் அதனைத் தெரிவித்தேம்; ஆயினும் அவன் அதனைப் பேணாது நம்மை நீத்தொழுகுதலைச் சிறிதும் நினையாதே வந்து கொண்டிருந்தான். இப்பொழுது பகற்குறிக்கண் அவனை எதிர்ப்பட்டு இவ்வொழுக்கம் இக்கானற் சோலையிடத்து விளையாடும் ஆயத்தார் அறியாதவாறு பேணப்பட வேண்டுமென அறிவிப்பினும், அதனைப் பேணுத லின்றி 'அலராயிற்றுப் போலும்' என நகையாடுகின்றான். வேறோராற்றால் அவன் நெஞ்சுகொளக் கூறக் கருதின், அவனது நட்புக் கெட்டொழியுமோ என நெஞ்சில் அஞ்சுகின்றேன் என்று வருத்தம் தோன்றக் கூறினாள். அதுகேட்டுத் தலைமகன் தெருண்டு வரைவு மேற்கொள்ள லானான். இக்கூற்றின்கண், பெரியோர் பெருமையிற் சிறுமை கண்டாற் போலத் தொடங்கி அதனைத் தலைமகன் செயலில் வைத்து விளக்கி, அதுகாணுங்கால் நாணுத்தக வுடைத்து என்றும், அதனை முன்கூட்டி எண்ணிச் செய்வன செய்யாவழி, அது மிகப்பெரிதும் வருத்தத் தக்கதாம் என்றும், அது நட்புக்கேட்டுக்கு ஏதுவாம் என்றும் தோழி எடுத்துரைத்த மதிநுட்பம் கண்டு வியந்த இளம்பூதியார் இப்பாட்டின்கண் தொடுத்துரைக்கின்றார். இளம்பூதியார் இளையராயினும் உள்ளம் புலமைநலம் முதிர்ந்து விளங்குவதுபற்றிச் சான்றோர் இவரது பாட்டினை இந்நற்றிணைக் கண் கோத்தனார் போலும். 1பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலே உயிரோ ரன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரிது அழிதக் கன்றால் தானே கொண்கன் யான்யாய் அஞ்சுவல் எனினும் 2தான்எற் பிரிதல் சூழான் 3மன்னே இனியே கானல் ஆயம் அறியினும் 4ஆனாது 5அலர்வந் தன்றுகொல் என்னும் அதனால் புலர்வது கொல்அவன் நட்பெனாஅ அஞ்சுவல் தோழிஎன் நெஞ்சத் தானே இது, 6தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது. உரை பேணுப பேணார் பெரியோர் என்பது-பேணப்படுவன வற்றைப் பேணமாட்டார் பெரியோர்கள் என்று சொல்வது; நாணுத்தக்கன்று-நாணத்தகுவதாய் உளது; அது காணுங்கால்-அதனை ஆராயுமிடத்து; உயிர் ஓர்அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கு - உயிரொத்த குற்றமில்லாத நட்பினை யுடைய நின்பால்; யான் மறைத்தல் யாவது-யான் மறைத் தொழுகுவது யாது பயனைச் செய்வதாம்; மிகப்பெரிது அழிதக் கன்று - அது மிகமிக வருந்தத் தகுவதாம்; யான் யாய் அஞ்சுவல் எனினும்-யாயது அறியாமையைப் பேணி யான் என் தாய் அறிகுவள் என அஞ்சுகின்றேன் என்று உரைத்தவிடத்தும்; கொண்கன் தான் என் பிரிதல் சூழான்மன்-அதனைத்தானும் உணர்ந்து தலைமகன் என்னைப் பிரிந்தேகுவதை எண்ணி னானில்லை, அஃது ஒழிய; இனி-இப்பொழுது; கானல் ஆயம் அறியினும்-கானற் சோலைக்கண் நம்மொடு கூடி விளையாடும் ஆய மகளிர் அலர் கூறாமையைப் பேணி அவர் அறியின் தீதாம் என்று அறிவித்தவிடத்தும்; ஆனாது அலர் வந்தன்று கொல் என்னும்-அதனையும் பேணாது அலர் தோன்றிவிட்டது போலும் என நகையாடிச் செல்லாடாநின்றான்; அதனால்-; புலர்வதுகொல் அவன் நட்பு எனா - வேறு வகையாற் சேட் படுக்கின் அவனது நட்புக் கெடுமோ என்று; தோழி-; அஞ்சுவல் யான் என் நெஞ்சத்தான் - யான் அஞ்சுகின்றேன் என் நெஞ்சிற்குள் எ.று. பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்று; அது காணுங்கால், உயிரோரன்ன நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது; அழிதக்கன்று; யாய் அஞ்சுவல் எனினும் கொண்கன் தான் பிரிதல் சூழான்மன்; ஆயம் அறியினும் ஆனாது அலர் வந்தன்றுகொல் என்னும்; அதனால் அவன் நட்புப் புலர்வதுகொல் எனா. நெஞ்சத்தால், தோழி, யான் அஞ்சுவல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நாணுத்தக் கன்று, நாணத் தக்கது. யாவது, யாது பயன் என்பதுபட நின்றது. எனினும், என்ற விடத்தும். பிரிதல் ஈண்டு விடுதல் மேற்று. சூழ்தல் எண்ணுதல். அறியினும், அறிவிப்பினும் எனப் பிறவினைப் பொருட்டு என்னும், வினைமுற்று. பேணப்படுவனவற்றைப் பேணுவது பெரியோரது பெருமையாம்; அதனை விடுத்துப் பெரியராயினார் அவற்றைப் பேணார் என்பது பொய்யுரை யாதலின், பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்று என்று தோழி கூறினாள். பெருமையுடையார்பால் இப் பேணாமை தோன்றின் அதனை நன்கு ஆராய்ந்தல்லது கூறலாகாமையின், அது காணுங்கால் என்றும், காணுமிடத்துக் காண்பார்க்கும் காணப் படும் பெரியோர்க்கும் பெருநாணம் தோன்றுதலின் நாணுத் தக்கன்று என்றும் கூறினாள். பெரியோர் எனப் பொதுப்படக் கூறினா ளாயினும், அது தலைமகனைக் குறித்து நிற்பதும், அவன்பால் பேணுப பேணாமை யாகிய குற்றம் கண்டமை கூறுவதும் தோழி உட்கோளாதல் விளங்கும். அதனைத் தலைமகட்கு உரைக்கக் கருதுகின்றா ளாதலின் தன்னை வெறாமைப் பொருட்டுத் தனக்கும் தலைமகட்கு முள்ள நட்பினை விதந்து, உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கு என்றாள் பிறாண்டும் தோழி "நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன்"1 என்பது காண்க. உயிரொத்த நண்பரிடையே ஒருவரின் ஒருவர் மறைந்த கருத்துடையராதல் நட்புக்குக் குற்றம் என்பது பற்றித் தனது நட்பினைச் சிறப்பித்து உரைத்த தோழி, நினக்கு யான் மறைத்தல் யாவது என்றும், நீ அறிய வேண்டுவதொன்றனை யான் மறைத்தவழி, அதனை அறியாமையால் நீ எய்தும் துன்பத்தை யான் செய்தேனா வேன் என்பதுபற்றி மிகப்பெரிது அழிதக்கன்று என்றும் கூறினாள். தாய் அறியின் வரும் ஏதம் கூறி இக்கள வொழுக்கினை விடுத்தல் வேண்டும் என்றேனாக. அவன் அதனைப் பேணாது ஒழுகுகின்றான் என்பாள். யான் யாய் அஞ்சுவல் எனினும் கொண்கன் தான் பிரிதல் சூழான் என்றும் பகற்குறி சுட்டிக் கானற் சோலைக்கு நீ வருதலின் ஆயம் அறியின் ஏதமாம் என்றேனாக, அவர் அறிதலால் அலர் தோன்றிவிட்டது போலும் என நகையாடுகின்றான் என்பாள், இனியே கானல ஆயம் அறியினும் ஆனாது அலர் வந்தன்று கொல் என்னும் என்றும் கூறினாள். பிரிதல் சூழாமையும் ஆனாமையும் தலை மகன்பால் பேணாமை என்னும் குற்றமாயின் தாயறிவு கூறியும், ஆயமறிவு கூறியும் சேட்படுத்தமை பயன் விளைக்காமையின், வேறுவகையாற் சேட்படுக்கின், அவனது நட்பை இழக்க நேருமோ என என் நெஞ்சம் அஞ்சுகிறது என்பாள், புலர்வது கொல் அவன் நட்பு எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே என்றாள். இதனாற் பயன் வெளிப்படையாக வரைவு கடாதலே இனிச் செயற்பாலது எனத் தோழி குறித்தாளாவது; சிறைப் புறம் நின்று கேட்கும் தலைமகன் தெருண்டு வரைவானாவது. "மறைந்தவற் காண்டல்"2 என்ற நூற்பாவின்கண் தான் காட்டும் எண்வகை மெய்ப்பாட்டினுள் அச்சத்தின் அகறல் என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதுவர் இளம்பூரணர். "உயிராக் காலத்து உயிர்த்தல் வகையாக இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 73. மூலங்கீரனார் இவரது இயற்பெயர் கீரன் என்பது. மூலன் என்பார்க்கு மகனாதலின் இவர் மூலங்கீரனார் எனப்படுகின்றார். சில ஏடு களில் மூவன் கீரனார் என்று இப்பெயர் காணப்படுகிறது. மூவன் என்பதும் மக்கட்பெயர் வகையுள் ஒன்றாதலின் உண்மை நிலை தெரிந்திலது. மனைவாழ்வில் இன்புற்றிருக்கும் தலைமக்களிடையே தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டிய கடமையைத் தலைமகன் உடைய னானான். அதனைக் குறிப்பாய் உணர்ந்த தலைமகள் அவனைப் பிரிந்துறைதல் ஆற்றாளாய்த் தோழிபால் தன் கலக்கத்தைச் சொல்லலுற்று, "தோழி, யான் தலைமகனோடு கூடி உறையும் நாளிலும் மாலைப்போது வரின் வேட்கை மீதூர்ந்து மெய்விதிர்த்து வருந்தும் இயல்பினேன்; இப்போது நம்மைப் பிரியக் கருதுகின்றனர் என வாயில்கள் உரைக்கின்றனர்; அவர் பிரியின், மாலைப்போது போந்து செய்யும் வன்றுயர் மேலும் பசலை பாய்ந்து என் நுதலொளியைக் கெடுப்ப, அயலோர் அம்பலும் அலரும் தூற்றித் துன்பம் விளைப்ப ராகலான் யான் எவ்வாறு ஆற்றுவேன் என மொழிந்து வருந்தினாள். அவள் கூற்றின்கண், மனைவாழ்க்கையில் காதலனொடு கூடி வாழும் கற்புடையமகள், கணவன் கண்ணுக்கு ஒள்ளிய காட்சி வழங்கும் நுதற்பொலிவு கெடாமையும், காதலன்பு கண்டு பிறர் பாராட்டும் பெருமித முடைமையும் குறிக்கொண்டு பேணும் மாண்பினள் என்பதும், அவற்றிற்கு ஊறு செய்யும் வகையில் காதலனது பிரிவு அமைகிறது என்று எண்ணி வருந்தும் இயல் பினள் என்பதும் இனிது விளங்கக் கண்ட மூலங்கீரனார், அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது தொன்றுதொட்டு வரும் மரபாதல் இதனால் அறியலாம். வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன மாணா 1விரல வல்வாய்ப் பேஎய் மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய மன்றம் 2போதரும் புன்கண் மாலை தம்மொடும் அஞ்சும் நம்இவண் ஒழியச் செல்ப என்ப தாமே செவ்வரி மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச் செந்நெலஞ் செறுவின் அன்னம் துஞ்சும் பூக்கெழு படப்பைச் சாய்க்கா டன்னஎன் 1பயலையும் நுதல்கவின் அழிக்கும் அயலோர் தூற்றும் அம்பலும் 2அளித்தே இது, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி தோழிக்குச் சொற்றது. உரை வேனில் முருக்கின் விளை துணர் அன்ன-வேனிற் காலத்தில் மலரும் முருக்கமரத்தின்கண் தோன்றும் பூங்கொத்துப் போன்ற; மாணா விரல - பொலிவில்லாத விரல்களையும்; வல்லாய்ப் பேஎய்-வலிய வாயையுமுடைய பேய்கள்; மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய-வளவிய மூதூரவர் மாலையில் சொரியும் பூவாகிய பலியை உண்டற்கு; மன்றம் போதரும் புன்கண் மாலை - மன்றம் நோக்கி வரும் இருள் விரவிய மாலைப்பொழுது எய்துமாயின்; தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய - காதலராகிய அவர் தம்மொடு உடனுறை யினும் அஞ்சும் இயல்பினையுடைய நாம் இவ்விடத்தே தனித்து ஒழிய; செல்ப என்ப - நம்மின் நீங்கிச் செல்லக் கருதுகின்றார் தலைவர் என உழையர் உரைக்கின்றனர்; செவ்வரி மயிர் நிரைத்தன்ன - செவ்வரி நாரையின் மயிரை நிரல்படவைத்தாற் போல; வார்கோல் வாங்குகதிர்ச் செந்நெல் அம் செறுவில் - நீண்டு திரண்ட தண்டொடு வளைந்த கதிர் களையுடைய செந்நெல் விளையும் வயலின்கண்; அன்னம் துஞ்சும் - அன்னப்பறவைகள் உறங்கும்; பூக்கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன - தாமரை முதலிய நீர்ப்பூக்களையுடைய தோட்டக் கால்கள் பொருந்திய சாய்க்காடு என்னும் ஊர் போன்ற; என் நுதல் கவின் அழிக்கும் பயலையும் - என் நெற்றியிற் பரந்து அதன் அழகைக் கெடுக்கும் பசலையையும்; அயலோர் தூற்றும் அம்பலும் அளித்து - அயலவர் பழித்துரைக்கும் அம்பல் மொழியினையும் தந்து எ.று, புன்கண்மாலை தம்மொடு உறையினும் அஞ்சும் நம் இவண் ஒழிய நீத்து பயலையும் அம்பலும் அளித்துச் செல்ப என்ப; எனவே, யான் எங்ஙனம் ஆற்றுவேன் எனக், குறிப் பெச்சத்தால் உரியன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. வேனிற் காலத்து மலர்வது பற்றி முருக்கமரம் வேனில் முருக்கு எனப்பட்டது. அரும்பு முற்றி இதழ் விரிந்து மலர்ந்து தொங்கும் அதன் பூங்கொத்தினை விளைதுணர் என்றும், குறியவும் நெடியவுமாய்க் கூரிய இதழ் கொண்டு தொங்கும் முருக்கின் துணர்களைக் கொண்டு பேயின் கைவிரல்களை காட்டுகின்றா ராகலின் முருக்கின் விளைதுணர் அன்ன மாணா விரல என்றும், இதழ் தொங்கப் பற்கள் நீண்டு அங்காந்த வாயொடு தோன்றும் பேயை வல்வாய்ப் பேய் என்றும் கூறினர். இப்பேய்கள் பகல் ஒளி தேய்ந்து இருள் பெரிதும் மயங்கும் மாலைப்போதில் மன்றம் நோக்கித் தெருக்களிற் போதரும் என்ற கொள்கையால், மனைமகளிர் தெருக்களில் விளக் கேற்றிப் பூச்சொரிதல் மரபு. அப்பூப்பலியை இப்பேய்கள் ஏற்றுண்ணும் என்பது கொண்டு, மலர்ப்பலி உணீஇய மன்றம் போதரும் புன்கண் மாலை என்பாராயினர். செவ்வரி, நாரையினத்துள் ஒன்று. சாய்க்காடு, காவிரி கடலொடு கலக்கும் இடத்திலுள்ள காவிரிப்பூம் பட்டினத்தின் மேலைப்பகுதி. இதனை இப்பாட்டில் மூலங்கீரனார் சிறப் பிப்பது போல, மருதன் இளநாகனார், "நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானம்1" எனப் புகழ்வர். இடைக்காலத்துப் பல்லவர் ஆட்சி நிலவிய போது விளங்கிய திருஞான சம்பந்தர், "மொட்டலர்ந்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப் பூம்பட்டினத்துச் சாய்க்காடு2" என்றும், ஏனைச் சான்றோர் பாராட்டிய குறிப்பை, "ஏனையோர் புகழ்ந்தேத்திய எந்தை சாய்க்காடு3" என்றும் பாடியுள்ளார். அம்பல், அலர் என்பன அயலவர் தூற்றும் பழிப்புரை. மாலைப்போதின்கண், பேய்கள் மன்றம் நோக்கித் தெருக்களில் உலவும் என்ற கொள்கைநிலவிய சூழ்நிலையில் வளர்தலின், இளமகளிர் தம் காதலரொடு கூடி உறையினும் மாலைப்போதில் வெளியில் வர அஞ்சுவது இயல்பாதல் பற்றித், தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய என்றும், காதலன் பிரிந்தவழி மகளிர் நுதல் பசத்தலும் அது காணும் அயற்பெண்டிர், கவவு நனிவிரும்பும் காதல் வேட்கையள் எனவும், காதலியைக் கையிகந்து நீங்கும் கண்ணறையன் இவள் கணவன் எனவும் தூற்றுவர் எனக் கொண்டு நுதல்கவின் அழிக்கும் பயலையும் அயலோர் தூற்றும் அம்பலும் அளித்து என்றும், தலைமகன் குறிப்பாலும் உழையோர் உரையாலும் அவனது செலவுக் குறிப்பை உணர்ந்தமை தோன்றச் செல்ப என்ப என்றும் கூறினாள். நுதலது கவின் கேடும் அயலவர் எடுக்கும் அலருரையும் மனைமாண்புக்கு ஆகா என்பது தலைமகள் கருத்து என உணர்க. 74. உலோச்சனார் கற்பு மிக்க மனைவியொடு கூடி நல்லறம் செய்துவரும் தலைமகன் பரத்தையர் சேரிக்கண் நிகழும் சிறப்புக்கட்கும் விழாக்கட்கும் தலைமை தாங்கியும் தலைக்கை தந்தும் இன்னபிற செயல்களைச் செய்தும் ஒழுகுகின்றான். அகவாழ்வுக்குப் புறம் பான இப் புறத்தொழுக்கம், அவன் மனைக்கிழத்தியின் மனத்தில் பொறையருமையையும் உள்ளத்திற் புலவியையும் தோற்று விக்கின்றது. அந்நிலையில் பரத்தையர் சேரியில் தங்கிய தலைமகன் தலைவியின் நினைவியல்களை நன்கு அறிந்தவனாதலின், வாயில் வேண்டிப் பாணனைத் தன் மனைக்குச் செலுத்துகின்றான். அவனைக் கண்டதும், தலைவியின் மனத்தில் மானம் பொறாது எழுந்த வெம்மை மிகுகின்றது. மலர் போன்ற முகம் சிவக்க, வாயிதழ் துடிக்கக் கண் சிவப்பேற நோக்கி, "தலைவன் மிக்க அன்புடையன் எனக் கூறும் பாணனே, இவ்வூரவர் கூறு வதனைக் கேட்டனையோ? தன் மனையின் கண் உறைதலை விரும்பாமல் பரத்தையர் மனையை நயந்துறையும் ஏதிலாளன் என்றும், பரத்தை யொருத்தியைக் காட்டியும் நோக்கியும் அவள் அவற்குப் பெண்டாயினாள் என்றும் கூறுகின்றனர்; அற்றாக, அவள் பொருட்டு நீ வாயில் வேண்டுவது என்னை? என்று வாயில் மறுக்கின்றாள். தலைமகளது இக்கூற்றின்கண், தனக்குரிய மனையின் கண் இருந்து தனக்குப் பண்பும் பயனுமாகிய அறமும் அன்பும் பேணும் இல்லாளனாகாது, ஏதிலாளன் எனப் பிறர் பழித்துரைக்க வாழ்வது, மனைவாழ்வுக்கு மாண்பாகாது எனத் தலைவி மறுப்பது, அவளது தலைமைப் பண்பை விளக்குவதும், சினம் மிகுதற்குரிய வகையில் பாணன் உரையாடிய போது அவள் உரைத்த சொற்களில் அவளது ஆறிய கற்பு வெளிப்படுவதும் கண்ட ஆசிரியர் உலோச்சனார் இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். வடிக்கதிர் திரித்த 1வன் ஞாண் பெருவலை இடிக்குரற் புணரிப் பௌவத் திடுமார் நிறையப் 2பெய்த அம்பி காழோர் சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யும் சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை 3ஏதி லாளனும் என்ப போதவிழ் புதுமணற் கானற் புன்னை நுண்டாது கொண்டல் அசைவளி 4தூக்குதொறும் குருகின் வெண்புறம் மொசிய 5வரிக்கும் தெண்கடற் கண்டல் வேலிய ஊர்அவன் பெண்டென 6அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே. இது, தலைவி பாணற்கு வாயில் மறுத்தது. உரை வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை - கூரிய கதிர் கொண்டு திரித்த வலிய நூற்கயிற்றால் செய்யப்பட்ட பெரிய வலையை; இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார்-இடி போலும் முழக்கத்தையுடைய அலைகள் பொருந்திய கடலில் மீன் பிடித்தற்கு எறியும் பொருட்டு; நிறைய பெய்த அம்பி-உள்ளகம் நிறையுமாறு ஏற்றப்பட்ட தோணியை; காழோர் சிறை அருங்களிற்றின்-பரிக்கோற்காரர் பக்கத்தே நின்று செலுத்தச் செல்லும் களிற்றியானையைப் போல; பரதவர் ஒய்யும் - பரதவர் செலுத்தும்; சிறுவீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை - சிறிய பூக்களையுடைய ஞாழல் மரங்கள் வளர்ந்து நிற்கும் பெரிய நெய்தல்நிலத் தலைவனை; ஏதிலா ளனும் என்ப - பரத்தையராகிய அயலார் மனையிடத்தே உறைகின்றான் என்று கூறுகின்றனர்; புது மணல் கானல் - புதிய மணல் பரந்த கானற்சோலையில்; போதவிழ் புன்னை நுண் தாது - பூக்கள் மலர்ந்த புன்னையின் நுண்ணிய தாது; கொண்டல் அசைவளி தூக்குதொறும் - கீழ்க்காற்றுப் போந்து அசைக்குந்தோறும்; குருகின் வெண்புறம் மொசிய வரிக்கும் - குருகுகளின் வெண்மையான முதுகிடம் நெருங்க உதிர்ந்து படியும்; தெண்கடல் கண்டல் வேலிய ஊர் - தெளிந்த கடற்கண்டல்களை வேலியாகவுடைய இவ்வூரவர்; அவன் பெண் டென அறிந்தன்று - அவன் தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையை அவற்குப் பெண்டு என்பது அறிந்து உரைக்கின்றனர்; பெயர்த்தல் அரிது - அதனை நின் பொய்ம்மொழிகளால் மறைத்தல் இயலாது; ஆகவே அவன் பொருட்டு இங்கே வாயில் வேண்டுவதை விடுத்து அவன்பாலே சொல்க எ.று. பௌவத்து இடுமார், பெருவலை நிறையப் பெய்த அம்பியைப் பரதவர் ஒய்யும் பெருங்கடற் சேர்ப்பனை ஏதிலாளன் என்ப; ஊர் அவன் பெண்டு என அறிந்தன்று, பெயர்த்தலோ அரிது; ஆகலான், அவன் பொருட்டு இவண் வாயில் வேண்டி வருவதை விடுத்து அவன்பாலே செல்க எனக் கூட்டிக் குறிப்பெச்சத்தால் தகுவன பெய்து வினை முடிவு செய்க. நூல் நயம் கருதிக் கூரிதாக அமைந்த கதிர் என்றற்கு வடிக்கதிர் என்றார். இக்கதிரை இக்காலத்தார் கதர் என்பர். ஆடைகட்கு அமைவது போலாது, வலிய மீன்களைப் பிடிக்கும் வலைக்கெனத் திரிக்கப்படுவதுபற்றி நூல் என்னாது வன்ஞாண் என்றார். பேரலைகள் எழுந்து தம்மில் மோதுங் கால் எழும் முழக்கம் இடிக்குரல் எனப்பட்டது. இடிக்குரல் போல்வதனை இடிக்குரல் என்றார்; பாவை போல் வாளைப் பாவை என்பது போல, ஒன்றையொன்று தொடர்ந்து வரும் கடல் அலைகளைப் புணரி என்ப. இடுமார் என்றும் மாரீற்று முற்றுவினை பெய்த என்றும் வினைகொண்டது; "மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு முடியும் என்ப7" என்பது காண்க. வன்ஞாண் பெருவலையின் பெருமை புலப்படுத்தற்கு நிறையப் பெய்த அம்பி என்றார். அம்பியின் இருமருங்கும் இருந்து துடுப்புக்களை வெளியே கடற்கண் செலுத்தி இயக்கும் பரதவர் காழோர்க்கும், துடுப்புக்கள் பரிக்கோற்கும். அம்பி களிற்றுக்கும் உவமம். ஒய்யும் என்னும் பெயரெச்சம் கடல் என்னும் இடப்பெயர் கொண்டது. சிறுவீ ஞாழல் என்பதும் பெருங்கடல் என்பதும் சேர்ப்பன் என்பதிலுள்ள சேர்ப்பினைச் சிறப்பிக்கின்றன. ஞாழலின் பூ சிறிதாதலைச் "சிறுவீ ஞாழல் தேன்றோய் ஒள்ளிணர்1" எனப் பிறரும் கூறுதல் காண்க. ஏதிலாளனும் என்புழி உம்மை, இசைநிறை. போதவிழ் புன்னை, புதுமணற் கானற் புன்னை என இயையும். கொண்டல், கீழ்க்காற்று; கொண்டல் இடுமணற் குரவை முனையின்2" என்றாற் போல. தாழ்ந்து கிளைவிரிந்து நிற்கும் புன்னையைக் கொண்டற் காற்று உயர்த்தும் தாழ்த்தும் அசைக்குமாறு தோன்றத் தூக்கு தொறும் என்றார். வெண்குருகு கொக்கு முதலிய நீர்ப்பறவைகள் புன்னையின் கொம்பும் குழையும் மேலே உரிஞுதலால் வெண்குருகின் முதுகிடம் முழுதும் நுண்ணிய தாது படிவது விளங்க, மொசிய வரிக்கும் என்றார்; "வீங்கு சுவல் மொசிய தாங்குநுகம் தழீஇ"3 என வருதல் காண்க. கண்டல், நீர்முள்ளி, வேலிய வூர், குறிப்புப் பெயரெச்சத்தொடர். பெயர்த்தல், ஈண்டு மறைத்தல் மேற்று; மாற்றுதலுமாம்; "மறுமொழி பெயர்த்த லாற்றாள்4" என்று பிறரும் கூறுதல் காண்க. தலைமகன் விடுக்கப் போந்த பாணன் பொய்ம் மொழி களால் ஆகிய சொல்வலை எறிந்து தன்னைப் படுக்க வந்த குறிப்பைத் தான் அறிந்து கொண்டமையை உள்ளுறையால் எடுத்தோதுகின்றா ளாகலின், யான் கூறும் இதனினும் இவ் வூரவர் நன்கறிந்து அலர் தூற்றுகின்றார்கள் என்பாள். பெருங்கடற் சேர்ப்பனை ஏதிலாளன் என்ப என்றும், கொண்டல்வளி தூக்குதொறும் புன்னையின் நுண்தாது வெண்குருகின் புறத்தை வரிக்கும் என்றதனால், தலைவனது தேர் இயங்குந்தோறும் பரத்தை சிறப்புப் பெறுவது கண்டு ஊரவர் அலர் தூற்றுகின்றனர் என்பாள், ஊர் அவன் பெண்டென அறிந்தன்று என்றும், ஆகவே நீ இவண் போந்து அதனை நின் பொய்ம்மொழிகளால் மறைத்தல் இயலாது, காண் என்பாள். பெயர்த்தலோ அரிதே என்றும் கூறினாள். பரதவர் பௌவத்து இடுமார் பெருவலை பெய்த அம்பியைக் கடற்கண் ஒய்தல் போல, என்னைத் தன்பாற் படுப்பது கருதி நிற்பாற் பொய்கள் பல சொல்லி இவண் விடுக்க வந்தனை; அதனை யான் நன்கு அறிவேன் என உள்ளுறை கொள்க. இனி, இதனைப் பாணற்கு வாயில்மறுக்கும் பரத்தை கூற்றாகக் கொண்டு, தலைவனது ஒழுக்கம் கண்டு ஏதிலாளனுமாம் என்ற இவ்வூரவர், என் காதன்மையும் மேனி வேறு பாடும் நோக்கி இவள் ஓர் ஏதிலாட்டி என்னாது, இவள் அவற்கு உரிய கிழத்தி, இவளை அன்பின்றிந் பிரிந்து போய்ப் பிற பரத்தையரைப் பற்றி ஒழுகுகின்றான் எனக் கூறாநிற்பர்; அதனை நீ மறைத்தல் முடியாது என்பாள் ஊர் அவன் பெண்டு என அறிந்தன்று, பெயர்த்தலோ அரிது என்றாள் என்றலும் ஒன்று. 75. மாமூலனார் தலைமக்கள் இருவர் காதலையும் நன்குணர்ந்து அக்காதல் அறநெறியில் மாண்புறல் வேண்டி இடைநின்று, அவர்தம் உள்ளங்கள் அறவரம்பு கடவாது காதலன்பு பெருகுதற் கேற்ற வகையில் தோழி ஒழுகி வரலானாள். தோழியின் துணைமையால் தலைவன் தலைவியின் கூட்டம் பெற்றுக் களவுக் காட்சியின்பமே விரும்பி நின்றான். தலைவியைத் தனக்கே யுரியளாக வரைந்து கொண்டு வதுவையால் மணம் புணர்ந்து மனைக்கண் ணிருந்து செய்யும் மாண்புடை அறத்தில் அவன் மனத்தைச் செலுத்த வேண்டும் எனத் தோழி கருதி, அவன் தலைவியைக் காணப் போதரும் செவ்வி நோக்கி இருந்தாள். கருதிய வண்ணம் அவன் வரக் கண்டவள், "ஐய, தலைமகள் இப்போது காண்டற்கரியள்" என அவனைச் சேட்படுத்தாள். தலைமகளும் தோழியும் ஒருகால் ஒருங்கே கூடி யிருக்கையில், தலைமகன் அவண் வந்தான். தோழி, அவனைநோக்கி, "நீ நினைக்கும் போதெல்லாம் நின்னைத் தலைப்பெய்து கூடற்கு எம் தலைமகள் அத்துணை எளியளல்லள், செல்க" என இடையீடு செய்தாள். இவ்வாறு தோழி செய்த சேட்படைகளால் தலைமக்கள் உள்ளத்தில் காதல் மேன்மேலும் பெருகுவதாயிற்று. பிறிதொரு கால் தலைவியைக் காண்டற்கு அவன் வந்த போது, தோழி கண்முன் அவனை வரவேற்க நாணிய தலைவி, தன் காதல் நோக்கால் அதனைச் செய்ய, தோழி கண்டு நகைத்து, இப்பொழுது நீவிர் தனித்துச் சொல்லாடி மகிழ வாய்ப்பில்லை என மறுத்துப் போக்கினாள். தலைமகளை இன்றியமையாத பெருங்காதல னாயினமையின், தலைவற்கு ஆற்றாமை பெரிதாயிற்று. அதனால் தோழியின் உள்ளக்குறிப்பை அவனால் உணரமுடியவில்லை. அவன் தோழியை நெருங் கினான். தலைமகள் நீங்கி வேறோர் இடம் சென்றாள். தலைவன் தோழியை நோக்கி, "என்பால் நின் உள்ளத்தில் இரக்கம் தோன்றாமையால் விளையும் பயன் இஃது என ஆராயாமல் நகைக்கின்றனை; இந்த நகை நன்றன்று; நீ முகமலர்ந்து செய்யும் இந்நகை, ஒரு பாம்பு தன் அழகிய படத்தை விரித்துச் சீறி நஞ்சை உமிழ்ந்து உயிர்களைக் கொல்வது போன்று உளது; தலைவியின் காதற்பார்வையாற் புண்ணுற்று வருந்தும் என் நெஞ்சம், நினது நகையால் உடைந்து உயிர்க்குக் கேடு விளைவிக்கும்" என்று மொழிந்தான். கடல்போற்பெருகிக் கையிகந்து நிற்கும் கழிகாதலனாகிய தலைமகன், தன்னைப் பலகாலும் சேட்படுத்துக் காதற் கூட்டத்துக்கு இடையீடு செய்து நகையாடும் தோழிபால், தன் உள்ளத்தில் எழும் சினத்தை அறக்கெடுத்து அறிவு சிறக்க, அன்புநெறி வழுவாது அவளை மதியுடம் படுக்கும் மாண்பு, அவன் கூற்றில் விளங்குவது கண்ட மாமூலனார் அவன் உரை யினை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். நயன் இன்மையிற் பயன்இது என்னாது பூம்பொறிப் பொலிந்த அழல்உமிழ் 1அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது 2உரைமதி உடையும்என் உள்ளம் சாரற் 3கோடைப் பொருநன் கோட்டுமா 4தொலைச்சிய 5பண்ணி எய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்கம் உற்றஎன் 6உய்யா நெஞ்சம் உய்யு மாறே. இது சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் 7தோழிக்குச் சொல்லியது. உரை நயன் இன்மையின் பயன் இது என்னாது நகுதல் - நின் உள்ளத்தில் இரக்கம் இல்லாமையால் விளையும் பயன் இஃது என்று நினையாமல் நகுவது; பூம்பொறி பொலிந்த அழல் உமிழ் அகன்பைப் பாம்பு - அழகிய புள்ளி பெற்று விளங்கு கின்ற நஞ்சாகிய தீயைக் கக்கும் அகன்ற படத்தையுடைய பாம்பு; உயிர் அணங்கி யாங்கும் - எதிர்ப்பட்ட உயிர்களைச் சீறித் தீண்டி வருத்துவது போல்வதாம்; ஈங்கு - இவ்விடத்தே; இது - என்னை முகமலர்ந்து நோக்கி நகையாடும் இச்செய்கை; தகாது - நினக்கு அறமாகாது; வாழி - ; குறுமகள் - இளம் பெண்ணே; நகாஅது உரைமதி - இனி நகுதலைச் செய்யாது உரைப்பாயாக; என் உள்ளம் உடையும் - உரையாயாயின் என் நெஞ்சம் உடைந்து கெடும், யானும் உயிர்வாழேன்; சாரல் - மலைச் சாரலில்; கோடைப் பொருநன் கோட்டுமா தொலைச்சிய - கோடைமலைப் பொருநனாகிய கடியன் நெடுவேட்டுவனது உயர்ந்த கொம்புகளையுடைய யானையைக் கொல்லுதற்கு; பண்ணி எய்த பகழி போல - பண்ணி என்பவன் எய்த அம்புபோல; ஆயிழை சேயரி பரந்த மழைக்கண் உறாஅ நோக்கம் உற்ற - ஆய்ந்த இழையணிந்த இவளுடைய செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களிடத்துப் பிறந்த பொதுநோக்கத்தைப் பெற்று வருந்தும்; என் உய்யா நெஞ்சம் உய்யுமாறு - துன்பத்துக்கு ஆற்றாத என் நெஞ்சம் ஆற்றி உய்யுமாறு எ.று. குறுமகள், பயன் இது என்னாது நகுதல் பாம்பு உயிர் அணங்கி யாங்கும்; ஈங்கு இது தகாது; ஆகலின், என் உய்யா நெஞ்சம் உய்யுமாறு நகாது உரைமதி; உரையாயாயின் என் உள்ளம் உடையும் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. நகாது என்றதனால் நகுதல் வருவிக்கப்பட்டது. ஆங்கும் என்புழி உம்மை ஆக்கப்பொருட்டு, தீண்டிய பொருளை அழிக்கும் இயல்பு பற்றிப் பாம்பின் நஞ்சு அழல் எனப்படுவதாயிற்று; "அழலென வுயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு1" என நக்கீரனார் கூறுவது காண்க. அணங்குதல் வருத்துதல். இது என்னும் சுட்டு நகுதல் குறித்து நின்றது. கோடை, மதுரை மாவட்டத்திலுள்ள கோடைமலை. கோடைப்பொருநன் மதுரை மாவட்டத்தில் கோடைக்கானல் என வழங்கும் பேரூர் உள்ள பகுதியில் சங்ககாலத்தில் வாழ்ந்த பெருஞ்செல்வத் தலைவன். கடியன் நெடுவேட்டுவன் என்பது அவன் பெயர். பொருநனுக் குரிய மாமலை இப்போது பெருமாமலை, பெருமாள்மலை என மருவி வழங்குகிறது. இப்பொருநன் சங்ககாலப் புலவர் பாடும் புகழ்பெற்றவன்; பெருந்தலைச் சாத்தனார் என்ற சான்றோர், "விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி, உறுவர் செல்சார் வாகிச் செறுவர் தாளுளம் தபுத்த வாள்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருந" என்றும், "மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய், நோன்சிலை வேட்டுவ1" என்றும் பாடியுள்ளார். பண்ணி என்பான் இந்நாளில் கோடைமலைக்குச் செல்லும் பெருவழியில் உள்ள, பண்ணைக்காடு என்ற மூதூர்க் குரியனாய்ச் சங்ககாலத்தே வாழ்ந்து சிறந்த வள்ளியோன். கோடை மலையிலிருந்து திண்டுக்கல் வரையில் தொடர்ந்து நிற்கும் மலைத்தொடர் பண்ணிக் குரியது என்பதுபற்றி அது பண்ணிமலை என வழங்கிற்று; பண்ணிமலை கோடை மலையின் தொடர்ச்சியாதல் கண்ட சங்கச் சான்றோர். "கோடைப் பொருநன் பண்ணி2" என்றும், அவன் பாண்டியற்குப் படைத்துணைவன் என்றும், மிக்க வள்ளன்மையும் வேள்வி பல செய்த மேன்மையும் உடையன் என்றும் பெருஞ் சித்திரனார் கூறுகின்றார். இங்கே காட்டிய சான்றோர் இருவரும் இக்கோடைமலையை அடுத்துள்ள முதிரமலைக் குரியனாய்ச் சிறந்து விளங்கிய குமுணன் என்னும் வள்ளலைப்பாடி அவன் அன்பை நேரிற் பெற்றவர்க ளாதலால், அவர் சொற்கள் இன்றைய நாம் தடையின்றி ஏற்கத்தக்க சிறப்புடையனவாம். பண்ணி என்ற சொல்லுக்கு ஒப்பனை செய்யப் பட்டவன் என்பது பொருள். நமது தமிழகத்திற்குப் போந்த வேற்று நாட்டவர் அனைவரும் இங்குள்ள இடப்யெர், பொருட்பெயர், தெய்வப்பெயர் ஆகிய பலவற்றைத் தமது மொழியில் எழுதும் போது அவற்றின் தமிழ்ப் பெயர்களை அப்படியே தங்கள் மொழியொலிக் கேற்ப எழுதிக்கொள்ளும் இயல்புடையர்; அதனால் அவர்கள் நூல்களைக் காணும் போது நமக்கு அவர்கட்கும் இருந்த தொடர்பை நாம் அறிவது எளிதாகிறது. ஆனால் வடமொழியாளர்பால் இந்த நற்பண்பு காணப்படுகிறதில்லை; தமிழ்ப் பெயர்களை உருத் தெரியாத படி மொழிபெயர்த்துக் கொள்வர். முதுகுன்றத்தை விருத்தாசலம் என மாற்றுவதும், தமிழ் முத்தினை முக்தம் எனக் திரிப்பதும், கயற்கண்ணியை மீனாட்சி எனப் பெயர்ப்பதும் அவர்களின் இயல்பு; இதனோடு நில்லாமல் சிலகாலம் கழித்ததும், கயற்கண்ணி என்ற பெயர் மீனாட்சி யென்ற வடசொல்லின் மொழி பெயர்ப்பென்றும், முதுகுன்று என்பது விருத்தாசலம் என்னும் வடசொல்லின் தமிழ்ப் பெயர்ப்பு என்றும் நாகூசாது பொய் கூறி, மக்களை மயக்கும் செயலும் அவர்கள்பால் உண்டு; இச்செயலால் வடமொழி நூல்களில் உள்ள வேற்றுமொழிக் கருத்துக்களைப் பகுத்துக் காண்பது அருமையாய்ப் போகவே, பழந்தமிழ் நூற் கருத்துக்கள் பலவும் வடமொழியிலிருந்து கொள்ளப்பட்டன என வேற்றவர்க்கு விளம்பி வட மொழியே தமிழ் முதலிய மொழிகட்குத் தாய்மொழி எனப் பொய்ப்பறை சாற்றலாயினர்; உண்மை தெரியாத மக்கள் அவர் கூறுவனவற்றை மெய்யெனவே கருதுவாராயினர். இவ்வியல்பால் பண்ணியினது மலையாகிய பண்ணிமலையை வராகமலை என மொழிபெயர்த் துரைத்தனர்; இன்று பலரும் அதனை வராகமலை யெனவே கூறுகின்றார்கள். கோடைப் பொருநனது கோட்டுமாவைப் பண்ணியென்பான் தொலைத்த வரலாறு பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. கோட்டுமா, யானை; "கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. உறாஅ நோக்கம் பொதுநோக்கம். களவுநெறியிற் கூட்டம் வேண்டி வரும் தன்னை முன்பெல்லாம் சேட்படுத்தது போல, இன்றும் சேட்படுத்த தோழி, அதனோடு அமையாது தனது ஆற்றாநிலையைக் கண்டு நகுவது, தலைமகன் உள்ளத்தே மிக்க வருத்தத்தைப் பயந்தமையின், அவள் தன்பால் இரக்கமின்றி நகுகின்றாள் என நினைத்தமை புலப்பட நயன் இன்மையின் என்றும், அதனால் விளையும் பயனைத் தான் பின்னர் விளங்கக் கூறுதலால், பயன் இது என்னாது என்றும், பயன் இதுவாம் என்பதை எண்ணாது நகுகின்றனை; நினது நகையின் தன்மையும் பயனும் இதுவாம் என்பான், பூம்பொறிப் பொலிந்த அழல்உமிழ் அகன்பைப் பாம்பு உயிர் அணங்கியாங்கு ஆகும் என்றும், எனவே, அது செய்யத் தக்க தன்று என அறிவுறுத்தும், குறிப்பால் ஈங்கு இது தகாது என்றும், விளைவு நோக்கும் திறமில்லா இளமகளாதலால் நீ இது செய்தனை, இனிச் செயற்க என்பான், வாழியோ என்றும், குறுமகள் என்றும் கூறினான். தலைமகட் குரிய ஆயமகளிருள் உயிர்த் துணையாய்ச் சிறந்தவள் அத்தோழி யாதலாலும், அவளுடைய துணைமை இன்றியமையாது எனத் தலைமகளாற் காட்டப்பட்டவ ளாதலாலும், தலைவியைத் தான் குறியிடத்தே தலைப்பெய்து மகிழ்தற்குத் துணைபுரிந்தவளாத லாலும், அவளையல்லது களவுக் கூட்டத்துக்குத் துணையாவார் பிறர் இன்மையாலும், உள்ளத்தே அவள்பால் வெறுப்போ சினமோ ஒரு சிறிதும் கொள்ளாது, அவளது நட்பைத் தான் இன்றியமையானாதல் தோன்ற, நகாஅது உரைமதி என்றும், உரையாவழி எய்தும் ஏதம் இதுவாம் என்றற்கு, உடையும் என் உள்ளம் என்றும், தலைவியின் சிறப்பு நோக்கம் பெறாமையால் தன் உள்ளம் எய்தி வருந்தும் வருத்தத்தை உறாஅ நோக்கம் உற்ற என் உய்யா நெஞ்சம் என்றும், தலைமகளை எய்துதற்கு ஏற்ற நெறியல்லது வேறே யான் உய்யும் நெறி இல்லை காண் என்பான், உய்யுமாறு என்றும் தோழி தெளியுமாறு இனிது கூறினான், இதனால் தோழி குறை நேர் வாளாவது பயன் என அறிக. "பண்பிற் பெயர்ப்பினும்1" என்ற நூற்பாவின் கண் வரும் "அன்புற்று நகினும்" என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர். "இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது2" என்பர் நச்சினார்க்கினியர். 76. அம்மூவனார் களவுநெறியிற் காதலுறவு கொண்டு ஒழுகிய தலைமக்கள் ஒருவர் ஒருவரை யின்றி உயிர்வாழ்தல் அமையாத பேரன்பு சிறக்கவும், தலைமகன் தலைமகளை வரைந்துகொள்ளக் கருதிச் சான்றோர்களை அவள் பெற்றோர்பால் மகட்கொடை வேண்டி விடுத்தான்; பெற்றோர் யாது காரணத்தாலோ மறுத்தனர். அதனால், தலைமகளைக் கொண்டு தலைக்கழிவதன்றி வேறு வாயில் இன்மை கண்டு, அதனைத் தோழிக்கு உரைத்து உடன்போக்கு மேற்கொண்டான். குறித்த நாளில் தோழி துணைபுரியத் தலைவன் தலைவியைத் தன்னுடன் கொண்டுசெல்வானாயினன். போக்கு நிகழ்ந்த காலம் நல்ல வேனிற்காலம். தலைவியது ஊர்கடற் கானலிடத்து நெய்தல் நிலத்தது. அந்நிலத்து மணல் பரந்த கானற்சோலைகளையும் கரம்பும், முரம்பும் பொருந்திய நிலப் பகுதியையும் கடந்தே தலைமகனது ஊரை அடைதல் வேண்டும். மணற் பரப்பாகிய மென்னிலம் கடந்து வன்னிலம் புகுந்த போது, வெயிலின் வெம்மை மிகுவதாயிற்று; தலைவி மேனியில் தளர்ச்சியும் தோன்றிற்று. அது கண்ட தலைவனது காதலுள்ளம் கனலிடை மெழுகெனக் கரைந்து, "இளையோய் இதுகாறும் நும்மூர்ப் புன்னைகள் நின்ற கானற்சோலையின் நுண்மணலில் நடந்து போந்த நீ, இனி வன்மை பொருந்திய கரம்புநிலத்திற் சிறிது நடத்தல் வேண்டும்; வேனில் வெம்மையாற் சிவந்த நின் மெல்லிய அடிகள் கன்றி வருந்தாமைப் பொருட்டு, ஆண்டுத் தோன்றும் ஆலமரத்தின் நீழலில் ஏற்ற இடத்தே தங்கிக் களைப்பாறி, தமர் முதலாயினார் போந்து வளைப்பர் என்ற அச்சமின்றி, கையில் வளைகள் ஒலிக்க இனிது செல்வாயாக" எனத் தேனும் பாலும் போன்ற சொற்களைத் தலைவியின் சிந்தையும் செவியும் இனிக்க உரைத்து மகிழ்வித்தான். மகள் மறுத்த (தலைவியின்) பெற்றோர்பால் வெறுப்பும் வெகுளியும் கொள்ளாது, போக்குடன்பட்டுத் தன்னொடு போதந்த தலைமகளின் காதல்மாண்பையும் கற்புநலத்தையும் வியந்து சொல்லாடும் தலைமகன், தன் தலைமைக்கு ஒப்ப நிகழ்த்தும் இக்கூற்றின்கண், வழிநடையால் தன் காதலி மேனி நலம் வருந்துவது கண்டு ஆலநீழலில் அசைவுழி அசைஇத் தளர்ச்சி போக்கிக் கொள்ளுமாறு தலைமகள் உரைப்பதும், தன் தமர் தன்னைத் தொடர்ந்து வருவர்கொல் என்ற எண்ணத்தால் தலைவி உள்ளத்தில் தோன்றி அலைக்கும் அச்சத்தைக் குறிப்பால் உணர்ந்து அவன் தன் ஆண்மையுரையால் அதனைப் போக்கு வதும், வெயில் வீற்றிருந்த வேனற்கொடுமை தோன்றாதவாறு தலைவியிருந்த நெய்தல் நிலத்துப் புன்னை நின்ற கானற் சோலையை நினைப்பித்து உரைப்பதும் கண்ட சான்றோராகிய அம்மூவனார், வியப்பு மிகுந்து, அத்தலைமக்கள் உள்ளத்தில் அறத்தில் திரியாது காதலன்பு தொழிற்படும் நலம் இனிது விளங்க இப்பாட்டினை அமைத்துப் பாடுகின்றார், 1வண்மழை மாறிய வானிற விசும்பின் நுண்டுளி 2வறந்த உருப்பவிர் அங்காட்டு ஆல 3நீழல் அசைவுழி அசைஇ அஞ்சுவழி அஞ்சா தெல்வளை தெளிர்ப்ப வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள் இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை 4வீமலர் உகுத்த 5தேன்இமிர் பல்பூங் கானல் ஆர்மணல் மரீஇ 6வேனற் சிவந்த மெல்லடி உயற்கே இது, புணர்ந்துடன் போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகட்கு உரைத்தது. உரை வண்மழை மாறிய - வளவிய மழைப்பருவம் மாறியதால்; வானிற விசும்பின் நுண்டுளி வறந்த - நிறம் வெளுத்த முகிலிடத்து நுண்ணிய பிசிரும் இல்லாதவாறு வற்றியதால்; உருப்பு அவிர் அங்காட்டு - வெயிலின் வெம்மை விளங்கும் காட்டகத்தே; ஆல நீழல் அசைவுழி அசைஇ - ஆலமரத்தின் நீழலில் வெப்பத்தால் உளதாகிய தளர்ச்சியை ஏற்றவிடத்தில் தங்கிப் போக்கிக்கொண்டு; அஞ்சுவழி அஞ்சாது-தமர் போந்து விலக்குவரென அஞ்சுமிடம் இது என்று அஞ்சாமல்; எவ்வளை தெளிர்ப்ப-கையில் அணிந்த வளைகள் ஒலிக்க வீசி; வருந்தாது ஏகுமதி - வருந்தாமற் செல்வாயாக; வாலிழைக் குறுமகள் - நேர்த்தியான இழைகளை அணிந்த இளையவளே; இம்மென் பேரலர் நும்மூர் - இம்மென்ற பெரிய அலர் தூற்றும் நும்முடைய ஊரிடத்து; புன்னை வீமலர் உகுத்த - புன்னையின் பூக்கள் உதிர்ந்த; தேன் இமிர் பல்பூங்கானல் ஆர்மணல் மரீஇ-தேனுண்ணும் வண்டினம் ஒலிக்கும் பல்வகைப் பூக்களையுடைய கானற் சோலையிடத்துப் பரந்த மணற்பரப்பிலே நடந்து; வேனல் சிவந்த மெல்லடி உயற்கு - வேனில் வெப்பத்தால் சிவந்த நின் மெல்லிய அடிகள் கன்றி வருந்தாமைப் பொருட்டு எ.று. குறுமகள், நும்மூர் கானல் மணல் மரீஇச் சிவந்த நின் மெல்லடி உயற்கு, விசும்பின் நுண்டுளி வறந்த, உருப்பவிர் காட்டு ஆலநீழல் அசைவுழி அசைஇ, அஞ்சுவழி அஞ்சாது, வளை தெளிர்ப்ப வருந்தாது ஏகுமதி எனக் கூட்டி வினை முடிவு செய்க. பெருநீரைச் சொரிந்து வயலும் காடும் பிறவும் வளமுறச் செய்வதுபற்றி, வண்மழை என்றும், நீர் நிறைந்து நிறம் கருத்து வந்த முகில், அந்நீரைப் பொழிந்து மழைப்பருவம் மாறியவழி வெண்முகிலாய்ப் பரந்து நுண்ணிய துளி தாங்கும் பனிப்பருவம் நீங்கும் போது, வேனில் வெப்பம் தோன்றி எங்கும் வெதுப்புதலின், வண்மழை மாறிய வானிற விசும் பின் நுண்டுளி வறத்த உருப்பு அவிர் அங்காடு என்றும் கூறினார். விசும்பு, ஆகு பெயராய் முகில்மேல் நின்றது; "விசும்பின் துளி வீழி னல்லால்"7 என்புழிப் போல, பனியைப் பெய்யும் புகை வடிவிற்றாய வெண்முகிலும் இன்மை தோன்ற நுண்துளி வறந்த எனல் வேண்டிற்று. எனவே, மழைக்காலமும் பனிக்காலமும் நீங்க எய்தும் வேனிற்காலம் குறித்த வாறாம். உருப்பு, வெப்பமும்; "உருப்பவிர் அமையம்"2 எனப் பிறரும் கூறுதல் காண்க. அகலமும் தட்பமும் பொருந்திய நிழலிடம் நல்குதல் ஆலமரத்துக்கு இயல்பாதலால், ஆலநீழல் விதந்து காட்டப்பட்டது. அசைவழி, தங்குமிடம். மதி, முன்னிலையசை, வாலிழை, தூய இழை. வெள்ளிய முத்து மாலையுமாம். குறுமகள், குறுமை இளமை மேற்று வீமலர், மலர்ந்து புலர்ந்து உதிரும் செவ்வி மலர். வேனில், வேனல் எனவும் வழங்கும். "கான விருப்பை வேனல் வெண்பூ3" எனச் சான்றோர் வழங்குதல் காண்க. புணர்ந்துடன் செல்லும் தலைமகள், புன்னை செறிந்த கடற்கானற் சோலையில் பரந்துள்ள நுண்ணிய மெத்தென்ற மணலில் கால் சிவக்க நடந்து, தலைமகன் ஊர்க்கு இடையே வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரத்தையும் வெள்ளியமுகில் பரந்து விளங்கும் விசும்பையும் பார்த்து வெய்துயிர்த்தாளாக, அவற்றைக் காட்டி, இதுகாறும் இத்தகைய வெவ்விய நிலத்தையும் வெயில் தெறும் விசும்பையும் கண்டிலை ஆதலின் தளர்ந்தனை; ஆண்டுத் தோன்றும் ஆலமரத்தின் நிழலில் நெடிது தங்கி அசைவு போக்கிக் கொள்ளலாம் என்பான், ஆலநீழல் அசைவுழி அசைஇ என்று தலைவன் கூறினான்; "நிழல்காண் டோறும் நெடிய வைகி, மணல்காண் டோறும் வண்டல் தைஇ, வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே"1 எனப் பிறாண்டும் தலைவன் போக்குடன் போதரும் தலைமகட்குக் கூறுதல் காண்க. அது கேட்டு உவந்த உள்ளத்தளாகிய தலைவி, தலைமகனைக் கண்ணால் நோக்கவும், அந்நோக்கத்திடைத் தமர் போந்து தமது போக்கினை விலக்குவர் என நின்ற அச்சம் புலப்படவே, அதனை யுணர்ந்த தலைமகன் அவளைத் தேற்று வானாய், அஞ்சுவழி அஞ்சாது என்றும், எல்வளை தெளிர்ப்ப என்றும் இசைத்தான். இவ்வாறே பிறாண்டும், நீ "நின் வீபெய் கூந்தல் வீசு வளி யுளர ஏகுதி மடந்தை"2 எனத் தலைவன் கூறுகின்றான். அச்சமும் நாணமும் மாறிமாறித் தோன்றித் தலைமகள் உள்ளத்தை அலைத்தலின், அவளைத் தேற்றிப் பாராட்டுவானாய், வாலிழைக் குறுமகள் என்றான். போக்குத் துணிவதன்முன் ஊரவர் எடுத்த அலர்க்கு அஞ்சி வருந்தித் தோழியால் கடாவப்பட்ட வரைவு, இப்போது கைகூடியது காட்டி மகிழ்விக்கும் கருத்தால் இம்மென் போலர் நும்மூர் என்றும், கானற் சோலைவழியே வந்தமை யின் தன் அடிச்சுவடு பற்றித் தமர் பின் தொடர்வரென எண்ணி வருந்தும் தலைமகட்கு "நின் மெல்லடிச் சுவடு தோன்றாதவாறு புன்னை தன் பூக்களை உதிர்த்து மறைக்கும்" என்பான், புன்னை வீமலர் உகுத்த தேன்இமிர் பல்பூங் கானலார் மணல் என்றும், மணற் பரப்பில் கடந்தமையால் சிவந்து தோன்றும் அடிகளைப் பாராட்டி, வேனற் சிவந்த மெல்லடி என்றும் கூறினான். இது கேட்டுத் தலைவி உவகை மிகுவாளாவது பயன். 77. கபிலர் ஒருவரை யொருவர் அறியாமே தனித்ததோர் இடத்தில் நேர்பட்டுக் காதலுற்ற தலைமக்கள், முன்னம் கண்ட விடத்தே இருவரும் கண்ணுற்றுக் கரைகழி காதலைக் கட்டுரைத்துக் கருத்தொருமித்தனர். பின்னர் அவள், அவனின் நீங்கிச் சிறிது சேய்மைக்கண் விளையாட்டயர்ந்த ஆயமகளிரொடு கூடிக் கொண்டாள். அக்கூட்டத்திடையில் தன் உயிர்த் தோழியைக் கண்ணாற் காட்டியும் அவளொடு அடிக்கடி நெருங்கிப் பயின்றும் அவளது நட்பினைப் பெற்றா லன்றித் தாம் இருவரும் களவுநெறியில் தம் காதற்றொடர்பை வளர்த்துக் கொள்ளல் இயலாது என்பதனை வாயாற் சொல்லாது கண்ணோக்கால் அவனுக்குத் தலைவி உணர்த்தினாள். அவள் குறிப்பைத் தலை மகனும் தெளிய உணர்ந்து தோழியை மதியுடம்படுக்கும் முற்சியை மேற்கொண்டான். பெருஞ்செல்வத் தலைமைப் பெருமகளாகிய அவட்கு அமைந்த தோழியும் தலைமை மாண் புடைய அவ்விருவர்க்கும் வேண்டும் அறிவு அறம் அன்பு ஆகிய மூன்றையும் முறையே நினைவு செயல் சொற்களாகக் கொண்ட திருவுடை நங்கை யாதலை உணர்ந்து, அவளை அணுகி யாதோ குறையுடையான் போலச் சின்னாள் ஒழுகினான். பின்பு அவளோடு உரையாடற் கேற்ற பயிற்சி பெற்றுத் தன் குறையை அத்தோழி யுணர்தல் வேண்டி அவளை இரந்து பின்னிற்க லுற்றான். அவனுடைய செயல்வகைகளையும் சொற்குறிப்புக்களையும் கண்டும் கேட்டும் கருத்தூன்றத் தலைப்பட்ட தோழி இரு வர்க்கும் உள்ள முன்னுறவை ஆராய்வாளாயினள். தலைவியின் குறிப்பு அவன்பால் தோய்ந்திருப்பதை அவள் தானே வாய்விட்டு உரையாளாயினும், அவன்முன் அவள் நடந்துகொள்ளும் திறத்தையும், அவனுடைய போக்குவரவுகளைக் காணுங்கால் அவள்பால் நிகழும் குறிப்புக்களையும் நுனித்து நோக்கி, உண்மை துணிய வேண்டியவ ளாயினமையின், அவளது ஆராய்ச்சி பையவே நிகழ்வதாயிற்று. ஆயினும், மறந்தும் பிறரை வணங்காத ஆண்மையனாகிய தலைமகற்குத் தலைமைநிலையில் ஒவ்வாத தோழிப்பெண் ஒருத்தியை வணங்கிக் குறையிரந்து நிற்றற்கண் மனம் அமைதியுறவில்லை. வேறு வழியின்மையான் அது செய்கின்றா னாயினும், அவன் உள்ளத்தில் உண்டாகிய துன்பம் பெரிதாயிற்று. அந்நிலையில் மிகவும் வருந்திய நெஞ்சிற்கு உரைப்பானாய், "பகைப்புலம் படர்ந்து பகைவரது அரணை யழித்து வென்றி சிறந்த தேர்வண் மலையன், தன் துணைவனான சோழனது அயர்ச்சியைப் போக்கினாற் போலத் தலைவி யினுடைய இனிய மகிழ்ச்சி மிகும் கட்குறிப்பு இவள்பாலே நம்மைச் செலுத்தி ஊக்குகின்றது, அதனால் அயர்வு கொள்ளற்க" என்று தனக்குள் கூறிக்கொண்டான். இக்கூற்றின்கண், தன்னையும் தன் தலைமையையும் நோக்கித் தோழிப்பெண் ணொருத்திபால் பணிந்து இரந்து நின்று ஒழுகுவது தனக்கு ஆகாத தொன்று என எண்ணி இம்முயற்சியைக் கைவிடற்கமைந்த நெஞ்சின் நிலையைச் செம்மைசெய்து, தலைவியின் குறிப்பையும் நல்லொழுக் கத்தையும் சீர்தூக்கி நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன்னுடைய ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலை வனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர், இப்பாட்டின்கண் அவற்றை உள்ளு றுத்துப் பாடுகின்றார். தன் நினைவு செயல்கட்கு எய்தும் இடையீடுகளையும் இடையூறு களையும் எதிர்த்துத் தகர்த் தேகும் இளமையின் இயல்பு, அந் நிலையினும் அறிவு அறைபோகாது அறத்தின்வழிச் செல்வது புலவர் பாடும் புகழ்க்குரிய தாகும். 1மலையன் மாவூர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர் அருங்குறும் பெருக்கி 2அயாவொழித் தாஅங்கு உய்த்தன்று மன்னே நெஞ்சே செவ்வேர்ச் சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின் சுளையுடை முன்றில் மனையோள் கங்குல் 3ஒளிறுவெள் ளருவி ஒலியில் துஞ்சும் ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன் வாளரம் பொருத கோள்நேர் எல்வளை அகன்றொடி செறித்த முன்கைக் 4குறுமகள் 5அவவின் அகன்ற அலகுற் குவளை யுண்கண் மகிழ்மட நோக்கே இது, பின்னின்ற தலைவன் நெஞ்சிற் குரைத்தது. உரை மலையன் மா வூர்ந்து போகி - தேர்வண் மலையன் என்பான் தன் களிற்றின்மேல் இவர்ந்து போய்; புலையன் பெருந்துடி கறங்க - புலையனாகிய துடியன் பெரிய துடியை முழக்க; பிற புலம் புக்கு - பகைப்புலத்தே சென்று; அவர் அருங்குறும்பு எருக்கி-அவர்களுடைய அரிய காவலை யுடைய அரண்களை அழித்து; அயா ஒழித்தாஅங்கு -அது மாட்டாமையால் தளர்ச்சி யுற்றிருந்த சோழனது அயர்ச் சியைப் போக்கி அவனை வெற்றிக்கட் செலுத்தியது போல; நெஞ்சே; உய்த்தன்றுமன் - நம்மை இவள்பாற் செலுத்தா நின்றது; செவ்வேர் சினைதொறும் தூங்கும் - சிவந்த வேர் களிடத்தே சினைதோறும் பழுத்துக் கிடக்கும்; பயங்கெழு பலவின் சுளையுடை முன்றில் - பழங்களையுடைய வேர்ப் பலாவின் சுளைகள் பரந்து கிடக்கும் முன்றிலையுடைய; மனை யோள் - மனைக்குரியவள்; கங்குல் ஒளிறு வெள்ளருவி ஒலியில் துஞ்சும்-இரவுப்போதில் விளங்குகின்ற வெள்ளிய அருவியின் ஒலியை இன்னிசையாகக் கொண்டு இனிது கண்ணுறங்கும்; ஊரலஞ்சேரிச் சீறூர் - பரந்த சேரிகளை யுடைய சீறூரின்கண் வாழும்; வல்லோன் வாள் அரம் பொருத கோள்நேர் எல்வளை - வேளாப் பார்ப்பானாகிய வல்லுநன் அரத்தால் அறுத்துச் செய்த கைக்குப் பொருந்திய நேரிய ஒளி திகழும் வளையும்; அகல் தொடி செறித்த முன்கை - வளை யினும் சிறிது அகன்ற தொடி செறியப்பட்ட முன் கையினையும்; அவவின் அகன்ற அல்குல் - அவாப்போல் அகன்ற அல்குலை யுமுடைய; குறுமகள் குவளை உண்கண் மகிழ் மடநோக்கு-இளையவளாகிய தலைவியின் மையுண்ட கண்களால் செய்த காதற்களிப்பினையுடைய அழகிய நோக்கம் எ-று. நெஞ்சே, வளையும் தொடியும் செறித்த முன்கையையும், அல்குலையுமுடைய குறுமகள் மகிழ்மடநோக்கு, மலையன் மாவூர்ந்து போகி, பிற புலம் புக்கு, குறும்பு எருக்கி, அயா வொழித் தாங்கு, நமது அயா வொழித்து இத் தோழிபால் நம்மை உய்த்தன்றுமன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இனி, நாம் பின்னிற்றலை முனியல் வேண்டா; விரைவில் கருதியது முடிக்கலாம் என்பது ஒழிந்து நின்றமையின் மன் ஒழியிசை. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருத காலத்தில், போரைக் கடைபோகச் செய்யமாட்டாது சோழன் தளர்ச்சியுற்றானாக, தேர்வண் மலையன் சோழற்குத் துணை யாய்க் களிறூர்ந்து சென்று இரும்பொறையின் அருங் குறும்பை அழித்துச் சோழற்கு வெற்றி தந்த செய்தி ஈண்டுக் குறிக்கப்படுகிறது. தேர்வண் மலையன், தென் பெண்ணைக் கரையிலுள்ள திருக்கோவலூரில் இருந்து அதனைச் சூழ விருந்த நாட்டைக் காவல் புரிந்த குறுநிலமன்னன்; அவனது நாட்டை மலாடு என்றும், அவனை மலாடர் கோமான் என்றும் கூறுவர். மலையன் நாடு மலாடு என மருவிற்றென்பர். அவன் வழிவந்தோர் மலையமான்கள் எனப்பட்டு இடைக் காலச் சோழபாண்டியர் காலத்தும் இருந்து மறைந்தனர்; அவர்களிற் பிற்காலத்தோர் கிளியூர் மலையமான்கள் எனப் பட்டமை அத் திருக்கோவலூர்ப் பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்களால்1 தெரிகிறது. மேலே குறித்த போரின்கண் மலையமான் கொற்றத்தை வியந்த சான்றோர் அவனைச் சோழமன்னன் "வெலீஇயோன் இவன்" எனவும், தோல்வி எய்திய சேரமான், "விரைந்து வந்து சமரம் தாங்கிய வவ்வேல் மலைய னல்லனாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் (நமக் கெனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே)2" எனவும் புகழ்ந் துள்ளனர். புலையன், புலால் உண்பவன் புலையனாகிய துடியன். போர்க்களத்தே பெருந்துடி கொட்டி முழக்கிப் படைமறவரைப் போர்க்களத்தே ஊக்குவது பண்டைப் போர்முறையாதலின், புலையன் பெருந்துடி கறங்க என்றார். மலையன் களிறு ஊர்ந்து இரும்பொறையின் களிறுகளைக் கொன்று குவித்தமையின் மலையன் மாவூர்ந்து போகி என்றார். மா, குதிரையுமாம். ஆயினும், "குன்றத் தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோன்" என்று மேற்காட்டிய புறப்பாட்டே கூறுதல் காண்க. பகைவர்நாடு பிறபுலம் எனப்பட்டது. குறும்பு, அரண். எளிதிற் கொள்ள லாகாமை தோன்ற. அருங்குறும்பு என்றார். எருக்குதல், அழித்தல்; "களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பு"3 என்பது காண்க. மலையமான் சோழனது அயாவினை ஒழித்திலனேல், சோழன் முந்துற்றுச் சென்று வெற்றி பெறுதல் இல்லையா மாகலின் அயாவொழித் தாஅங்கு என்று ஒழிந்தார். அயா ஒழித் தாங்கு என்பது அயா ஒழித்து உய்த்தாங்கு என விரியும். பிறரும், "வல்வேல் மலையன் அல்லனாயின் நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு எனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே" என்பது காண்க. வேர்ப்பலவின் வேர் செம்மைநிற முடைமையின் செவ்வேர்ப் பலவு எனப்பட்டது. "செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி1" எனவும், "செங்காற் பலவின் தீம்பழம்2" எனவும் சான்றோர் குறிப்பது காண்க. வேர் தொறும் பழம் நிறைந்து விளங்கும் வேர்ப்பலவின் காட்சி கண்டு வியந்த சான்றோர், "வேரும் முதலும் கோடும் ஓராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவு3" என்று பாடுவது ஈண்டு நோக்கத் தக்கது. "பாடின் னருவிப் பனிநீர் இன்னிசை, தோடமை முழவின் துதைகுர லாக4" என அருவியொலியைக் குறித்தலின், ஈண்டு அவ்வருவி இசையில் மனையோள் உறங்குவள் என்றார். ஊரல், பரப்பு; "உரைத்த சாந்தின் ஊரல் இருங்கதுப்பு5" என்பது காண்க. ஆங்கொன்றும் ஈங்கு ஒன்றுமாக மனைகள் பரந்த சேரி என்றற்கு ஊரலஞ்சேரி என்றார் என்க; இனி, இதற்கு ஊரொடு சேராது தனியே அமைந்த சேரி என்று உரைத்தலும் ஒன்று. சங்கினின்றும் வளையறுக்கும் தொழிலை வேளாப்பார்ப்பனர் செய்தமை. "வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்து6" என்பதனால் அறியப்படும். அறுக்கப்படும் வளை சிறிது தவறின் உடைந்து கெடுமாகலின், அறுத்தல், வல்லோர்க் கன்றி இயலாமை தோன்ற வல்லோன் என்றார், வளைகட்கு அரணாக முன்கையில் செறிக்கப்படுவது பற்றி அதன்றொடி வேண்டப்பட்டது. அவா, அவவு என நின்றது. பன்முறையும் தோழியால் குறைமறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் எய்திய வாட்டத்தைக் கண்ட தலைவியது நோக்கம், அவளது காதலை நன்கு புலப்படுத்திற்றாக அதனால் அவன் தன் நெஞ்சினை நோக்கிக் குறுமகள் குவளை யுண் கண் மகிழ்மட நோக்கு உய்த்தன்று மன் என்றான். இவள் நம்பாற் காதலளாதலின் இவள் குறிப்பின்வழி ஒழுகும் தோழி இனி நம் குறைமறாது ஏற்று உடம்படுவள் எனத் துணிந் தமையின் உய்த்தன்றுமன் என்று நெஞ்சினை வற்புறுத்தினான். மலையன் சோழற்குத் துப்பாகி வந்து பகைவர் அருங்குறும்பு எருக்கி அவனது அயர்வினைப் போக்கியது போலத் தோழியாற் குறைமறுக்கப்பட்டு ஆற்றாமையால் எய்திய நின் தளர்ச்சி போக்கி மேலும் முயன்ற தோழியை மதியுடம் படுத்தற்குத் தலைவியது சிறப்பு நோக்கம் துப்பாகியது என்பது உவமையாற் பெறப்பட்டது. பகலும் இரவும் இடையறவின்றி முழங்கும் அருவியின் ஒலி, கங்குற் போதில் மனையோள் உறங்குதற்குத் துணையாம் என்றது, தலைவியது இந்த நோக்கத்தின் குறிப்பு உணர்ந்து தோழியும் இனி நம் குறையுற வுணர்ந்து நம் களவுக்குத் துணையாவாள் என ஆற்றுவானாவது. 78. கீரங்கீரனார் கீரங்கீரனார் என்ற இச்சான்றோரது பெயர் கீரன் என்பார்க்கு மகனார் என்னும் பொருள் தருகிறது. கீரனார் என்னும் பெயருடைய சான்றோர் பலரின் நீக்கிச் சிறப்பித்தற்கு இவர் இவ்வாறு குறிக்கப்படுகின்றார். களவு நெறிக்கண் ஒழுகிய தலைமக்கள், ஒருவரை யொருவர் இன்றியமையாத அளவில் காதலன்பு பெருகவும், தலைமகன் தன் காதலியை வரைந்து கோடற் பொருட்டுப் பொருள் கருதிப் பிரிந்து சென்றான். அவன் குறித்துச் சென்ற காலம் எய்தியும் அவன் வாராது சின்னாள் தாழ்க்கவும், காதலியாகிய தலைமகட்கு ஆற்றாமை பெருகுவதாயிற்று. தோழிக்கும் உள்ளத்தில் கவலை மிகுந்தது. சின்னாளில் பொருள் குறித்துப் பிரிந்த தலைமகன் தேரின் மணியொலி எங்கும் கேட்க வருவானாயினன். பொருள்கொண்டு மீண்ட தலைமகனது தேர்வரவு வரைவு குறித்து நிகழ்வது தோழிக்குத் தெரிந்தது. வரவு தாழ்த்தியமையால் எய்திய வருத்தம் வரைவொடு தலைவன் வந்தமை அறியப் பறந்து போயிற்று. உவகை மீதூர்ந்த தோழி தலைமகளை நோக்கி, "தோழி, இதுகாறும் மாலைப்போதில் கானற் சோலைக்கண் தலைமகன் பிரிவால் உளதாய வருத்தம் மிகுந்து நாம் உழந்தோமன்றோ? இனி நாம் வருந்தல் வேண்டா; தலைமகன் வரைவொடு வருகின்றான் என்பதை அவனுடைய தேரிற் கட்டிய மணியொலி இசைப்பதைக் கேட்பாயாக" என்று உரைக்கலுற்றாள். இக்கூற்றின்கண், தலைமகனது தேரிற் கட்டிய மணியொலி கேட்பது கொண்டு, அவனுடைய வரவுக்குறிப்பும் பின்னர் நிகழவிருக்கும் வரைவு மலிவும் சுருங்கக் காட்டிப் பிரிவு பயந்த வருத்தத்தைப் போக்கி அழிவில் கூட்டத்து அயாரா இன்பம் பெறலாமென உரைக்கும் தோழியின் சொல்வன்மை விளங்குவது கருதி இப்பாட்டின்கட் கீரங்கீரனார் பாடிக் காட்டுகின்றார். கோட்சுறா வழங்கும் மாக்கேழ் இருங்கழி1 மணியேர் நெய்தல் மாமலர் நிறையப் பொன்னேர் நுண்டாது புன்னை தாஅம் 2வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல் படர்வந்து நலியும் சுடர்சென் மாலை நோய்மலி பருவரல் நாம்இவண் உய்கம் கேட்டிசின் வாழி தோழி3 நாட்பட வள்வாய் ஆழி யுள்வாய்4 தேயினும் புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா வலவன் 5கோலுற வறியா 6மலிநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே இது, தோழி வரைவு மலிந்தது. உரை கோள் சுறா வழங்கும் மாக்கேழ் இருங்கழி-கொலை செய்யும் சுறாமீன்கள் உலவும் கரிய நிறமுடைய பெரிய கழிக்கரையில்; மணியேர் நெய்தல் மாமலர் நிறைய- மணி போலும் நிறத்தையுடைய நெய்தலின் பெரிய பூ நிறையுமாறு; பொன்றேர் நுண்தாது புன்னை தாஅம் - பொற்றுகள் போலும் நுண்ணிய தாதினைப் புன்னைமரம் உதிர்க்கும்; வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல் - வீழ்து தாழ்ந்த தாழையின் பூ நறுமணம் கமழும் கானற் சோலையில்; படர்வந்து நலியும் சுடர்செல் மாலை-காதல் நினைவைத் தந்து வருத்தும் ஞாயிறு மறையும் மாலைப்போதின்கண்; நோய்மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நோய் மிக்க பிரிவுத் துன்பத்தினின்றும் நீங்கி ஈண்டு நாம் இன்புறலாம் ஆகலின்; தோழி-; கேட்டிசின்-கேட்பாயாக; வாழி-; நாட்பட வள்வாள் ஆழி உள்வாய் தேயினும்-நாடோறும் இடையறவின்றி இயங்குதலால் கூரிதாகிய வாயையுடைய தேர்க்காலின் உள் ஆழி தேய்ந்து வாய் அகன்றொழியினும்; புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா-புள்ளினம் சென்றாற் போன்ற செலவினையுடைய பொன்னாற் செய்ப்பட்ட அணிகளை யணிந்த குதிரைகள்; வலவன் கோலுறவு அறியா-பாகனது முட்கோல் செலுத்தப்பட் டறியாத; மலிநீர்ச் சேர்ப்பன்-கடல் சார்ந்த நெய்தல்நிலத் தலைவனது; தேர்மணிக் குரல் - தேரிற் கட்டிய மணி யினது ஓசையை எ.று. பூக்கமழ் கானலில் சுடர்செல் மாலைப் போதில் நோய்மலி பருவரல் நாம் இவண் உய்கம்; ஆகலான், தோழி, சேர்ப்பன் தேர்மணிக்குரல் கேட்டிசின், வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தன்னாற் கொள்ளப்பட்ட பொருள் பிழைத்துப் போகாவண்ணம் பற்றும் வன்மை சிறந்தமை பற்றிச் சுறாமீன், கோட்சுறா எனப்பட்டது; "கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை7" எனச் சான்றோர் கூறுவது காண்க. இனி, எதிர்ப்பட்ட மக்களைக் கொல்லும் இயல்பு பற்றிக் கோட்சுறா எனப்பட்டது என்றுமாம். கரிய கழிக்கரையில் நெய்தலின் நீலமணி போலும் பூக்கள் மலர்ந்து விளங்குதலின், மாக்கேழ் இருங்கழி மணியேர் நெய்தல் என்றார்; "மணிமருள் நெய்தல்2" என்ப மிக்க ஆழமுடைமையின் மாக்கேழ் இருங்கழி எனச் சிறப்பித்தார். கரைக்கண் நின்ற புன்னையின் பூந்தாது உதிர்ந்து கீழே மலர்ந்திருக்கும் நெய்தற் பூக்களிற் படிதலின் நெய்தல் மாமலர் நிறையப் பொன்னேர் நுண்தாது புன்னை தாஅம் என்றார். "புன்னை நுண்தாது உறைதரு நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்3" என்பது காண்க. தாழையின் அடியில் வேர்கள் வீழ்துபோல் இறங்கியிருத்தலால் வீழ்தாழ் தாழை எனப் பட்டது. "வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை4"என்ப; இவ்வீழ்துகளை அறுத்துக் கயிறாக முறுக்கி ஊசல் தொடுத்துக் கானற் சோலையில் இளமகளிர் விளைாடுவது வழக்கம்; "கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கி5" என்பதனால் ஈது அறியப்படும். உள்ளாழி தேய்ந்து வாய் அகன்றுவிடின், வண்டியில் அசைவு மிகுந்து இனிய செலவுக்கு இடையூறாம் என்பதனால் உள்வாய் தேயினும் என்றார்; தேய்ந்தவழி வேறே ஆழி கோக்கப்படுங்காறும் தேர் செல்லாது நின்றொழியும் என அறிக. தேர், நான்கு உருளைகள் பூண்டது; சாகாடு, வண்டி என்பன இரண்டு உருளைகளை யுடையன. ஆழியின் உள்வாய் தேய்ந்த வழித் தேரை ஈர்த்தற் கண் குதிரைகள் பொதுவாக மிக்க வருத்தம் எய்துமாயினும் தலைவன் குதிரைகள் அவ்வருத்த முணராது விரைந்து செல்லும் பெருவலியுடைய என்பது, புள்ளு நிமிர்ந்தன்ன என்றும். வலவன் கோலுறவு அறியா என்றும் கூறுமாற்றால் பெறப்பட்டது. குதிரைகளைத் தலைவன் பேரன்புடன்பேணுமாறும், அவையும் முட்கோல் உறாமலே மிக்க உணர்ச்சியும் வன்மையும் கொண்டு இயங்குமாறும் தோன்ற வலவன் கோல் உறவு அறியா என்றார். நாட்பட்டமையால் உள்வாய் தேய்ந்து அகன்ற தாயினும் பொருள் மிக ஏற்றியவழி இயக்கம் இனிதின் இயலும் என்ப; தேர் இனிது போதருவது, பண்டம் பெரிது சுமந்து போதருதல் குறித்தவாறு, கோல், முட்கோல், "தீண்டா வைம்முள் தீண்டி நாம் செலற்கு ஏமதி வலவ1" என்றமை காண்க. மலிநீர் மிக்க நீரையுடைய கடற்குப் பெயர்; "வம்மோ வாழி மலிநீர்ச் சேர்ப்ப2" என வருதல் காண்க. காதற்காமத் தொடர்புடையார்க்கு நறுமணம் கமழும் சோலையும் மாலைப்போதும் வேட்கைநோயை மிகுவிக்கும் இயல்பின வாயினும், ஒருவர் ஒருவரின் பிரிந்திருக்குங்கால் அவர்க்கு அந்நோய் இறப்பவும் மிகுதல்பற்றிப் பூக்கமழ் கானல் என்று சிறப்பித்த தோழி, மாலைப் போதினைப் படர்வந்து நலியும் சுடர்செல் மாலை என்று விதந்து கூறினாள்; "மாலை மலரும் இந்நோய்3" என்று திருவள்ளுவர் கூறுவது காண்க. குறித்த காலம் எய்தியும் தான் வாரா னாயினமையின் தலைவி யுள்ளத்தில் நின்று வருந்தும் தலைவனைப்பற்றிய நினைவுகள் பலவாய்ப் பெருகிப் பொறுத்தற் கரிய துன்பத்தைத் தோற்றுவித்தமை புலப்பட நோய்மலி பருவரல் என்றும் அவற்றினின்றும் உய்யுந்திறம் காணாது உலமரும் தலைமகள் நிலையை நன்கு அறிபவளாதலின் நாம் இவண் உய்கம் என்றும் கூறுவாளாயினாள். உய்கம் என்ற சொல் உய்யும் நெறி தோன்றியுள்ள குறிப்பைக் காட்டியதனால் அதனைக் கேட்டற்கண் தலைவிக்கு உள்ளம் விரைவது உணர்ந்து கேட்டிசின் என்றும், அதனால் எய்த இருக்கும் இன்பச்சிறப்பைக் குறிப்பாக உணர்த்துவாள் வாழி என்றும் தோழி உரைத்தாள். தலைமகன் குறித்த காலத்தில் வாராமைக்குக் காரணம் கூறுவாள் போல அவனது தேரின் இயல்பு கூறலுற்று நாட்பட வள்வாய் ஆழியுள்வாய் தேயினும் என்றாள்; என்றது உரியவாய் அமைந்த நாட்களினும் பல கழிந்தமையின் தேரின் ஆழி தேய்ந்து வாய் கூரிதாயிற்றென்பாள் வள்வாய் ஆழி என்றும், உள்வாய் தேய்ந்து அகலமானதால் விரைந்த செலவுக்கு ஆகாதொழிந்தமை தோன்ற உள்வாள் தேய்ந்தது என்றும் கூறியவாறு; நாட்கள் கழிய, உள்வாய் தேயச் சென்று பொருள் முற்றிய காதலர் மிக்க பொருளுடன் வருகின்றா ராகலின், அவரது தேரின் மணிக்குரல் ஊரவ ரெல்லாரும் கேட்க ஒலிக்கின்றமை நீ கேட்பாயாக; இனி அவர் நின்னை ஊரவர் அறிய வரைதல் ஒருதலை; இனிது நெடிது வாழ்வாயாக என்றற்குக் கேட்டிசின் வாழி தோழி என்றாள். மாக்கேழ் இருங்கழிக்கண் மலர்ந்துள்ள நெய்தற்பூ நிறையப் புன்னையின் பொன்னேர் தாது படியும் என்றது, இவ்வூர்க்கண் நின் பெற்றோர் மனையகம் நிறைய நின்னை வரைதற் பொருட்டுக் கொணர்ந்த பொருள்களைத் தலைமகன் நிறைப்பன் எனவும், எனவே வரைவு ஒருதலை எனவும் உள்ளுறுத் துரைத்தவாறு, புன்னை தாஅம் கானற்கண் தாழையின் பூ மணம் கமழும் என்றது பொன் நிறைந்த நின் மனைக்கண் நிகழும் நின் கடிமணம் ஊர் முழுதும் சிறந்து விளங்கும் என்றவாறு. 79. கண்ணகனார் இச்சான்றோரது பெயர் கண்ணன் நாகனார் என்பதன் மரூஉவாகலாம் என்று முன்னர்க் 1கூறினாம்; பி.அ. நாராயணசாமி ஐயரவர்களும் இவ்வாறே கருதுகின்றார். மற்று, இப்பெயர், புறநானூறு, பரிபாடல் என்ற தொகைநூல்களிலும் இவ்வாறே காணப்படுவதால் கண்ணகனார் என்று கோடலே பொருத்தமாகத் தோன்றுகிறது. கோப் பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், சோழன் வடக்கிருந்து உயிர் துறந்து நடுகல்லானது கண்டும் பிசிராந்தையார் தாமும் அவ்வாறே உயிர் துறந்ததையும் கண்டு வியந்து, "என்றும் சான்றோர் சான்றோர் பால ராப, சாலார் சாலார் பால ராகுபவே1" என்று இக்கண்ணகனார் பாடியிருப்பது மிக்க உருக்கம் வாய்ந்ததாகும். "ஊர்ந்ததை எரிபுரை யோடை இடையிமைக்கும் சென்னி" என்று தொடங்கும் பரிபாடற்குப் 2பண்காந்தாரம் என இசைவகுத்தவர் கண்ணகனார் என்ப. அவரும் இவரேயாயின் இக்கண்ணகனார் இசையிலும் சிறந்த புலவர் என்பது தெள்ளிதாம். இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்களது கற்பு வாழ்வில் தலைமகன் ஒருகால் தலைமகளிற் பிரிந்து தான் செய்தற்குரிய வினையொன்று குறித்துச் சென்றான். பிரிவறியாக் காதலால் பிணிப்புண்டிருந்த தலைமகட்கு அப்பிரிவு பெருந் துன்பத்தைச் செய்தது; உடல் மெலிந்து மேனி வேறுபட்டது. உண்டி சுருங்கியும் கண்டுயில் பெறாமலும் அவள் எய்திய கையறவு பெரிது. இந்நிலையில் தலைமகன் குறித்த காலத்தே திரும்பி வந்தான். பிரிந்த காதலர் மீண்டதனால் தலைமகள் பண்டுபோல் உயிர் தளிர்ப்ப உடல் நலம்சிறக்க இனிது வாழ்ந்து வரலானாள். சில நாட்களுக்குப்பின் மறுபடியும் தலைமகன் மனையினின்றும் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுடையனானான்; தலைவியது பிரிவாற்றாத அருநிலையை முன்பே அறிந்துளா னாதலால், தன் பிரிவை வாய்விட்டுரையாது தன்மனத்துக்குள்ளே எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் அதனைத் தலைவி குறிப்பாய் அறிந்து கொண்டாள். பிரிவுத் துன்பத்தால் அவளது அறிவு பேதுறத் தொடங்கிற்று. காதல் வேட்கையின் வயப்பட்ட இளமை, காதலனது கடமையின் சிறப்பைக் கருதா தொழியவில்லை; ஆயினும் அப்பிரிவைத் தவிர்ப்பதற்கு வழி யாதேனும் உளதுகொல் என ஆராயலுற்றாள். தோழியை நோக்கி, "பண்டு நிகழ்ந்த பிரிவால் நாம் இழந்த நலம் மீளவும் வந்து எய்துமாறு கூடியிருக்கும் காதலர், இனியும் பிரியக் கருதுவர்கொல்லோ? கருதுவராயின், அதனை விட அரிய செயல் இல்லை; பிரிவுத்துன்பம் கெடப் புணர்ந்த காதலர் மேலும் அத்துன்பம் எய்தி வருந்துமாறு நம்மைப் பிரியக் கருதுவதினும் மிக்க செயல் வேறு இல்லை என்னும் இதனை அவர்க்கு நாமே எடுத்துச் சொன்னால் என்னாம்? செப்பா தொழியின் எய்த இருக்கும் பிரிவு, அவரோடே நில்லாது நமது உயிரோடு அன்றோ, வந்துளது? அவரது பிரிவைத் தவிர்த்தற்கு வேறு வழி யாது? கூறுக; தோழி என் உள்ளம் வருந்துகிறது" என உரைத்தாள். இக்கூற்றின்கண், தலைமகனுடைய புணர்வு பிரிவுகளால் தனக்கு உளவாகும் நலந்தீங்குகளை முறையே எண்ணிப் பிரிவால் உளவாகும் தீங்கினைத் தவிர்த்தற் பொருட்டுத் தலைவி தோழியொடு சூழுந்திறம் கற்புடை மங்கை யொருத்தியின் செய்வினைத் திறத்தைப் புலப்படுத்தும் நலமுடைமை கண்ட கண்ணகனார் இப்பாட்டின்கண் அமைத்து அழகுறப் பாடுகின்றார். 1சிறைநா றீங்கை 2உறைநவில் திரள்வீ கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர் மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் ஏர்தரல் உற்ற இயக்கருங் கவலைப் பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்றுநாம்3 கூறின் எவனோ காமம் செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று அம்ம வாழி 4தோழி நம்மில் யாதனின் 5தவிர்க்குவங் கொல்லோ நோதகும் உள்ளம் காதலர் செலவே இது, பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை சிறைநாறு ஈங்கை உறைநவில் திரள்வீ-சிறைப்புறத்தே தோன்றி வளர்ந்துள்ள ஈங்கையின் நீர்த்துளி போலத் திரண்ட உருவினையுடைய பூக்கள்; கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்-கூரை வேய்ந்த நல்ல வீடுகளில் வாழும் குறிய தொடிய யணிந்த மகளீர்: மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம்-மணலைப் பெய்து கழங்காடுதற்கிட்ட கற்பாறைமேல் உதிரும்; ஏர்தரல் உற்ற இயக்கருங் கவலை-எழுச்சியைப் பொருந்தி யிருத்தலால் செல்லுதற் கரிதாகிய கவர்த்த வழிகளை நடந்து; பிரிந்தோர்-முன்பு நம்மைப் பிரிந்து சென்ற காதலர்; நப்புணர வந்து புணர்ந்தோர்-அவர் பிரிவால் நம்மின் நீங்கித் தொலைந்திருந்த மேனிநலம் பண்டு போல் தோன்ற வந்து கூடினார்; பிரிதல் சூழ்தலின் அரியதும்உண்டோ என்று நாம் கூறின் எவன்-அதனை அறிந்து வைத்தும் பின்னும் அப்பிரிவே கருதுவராயின் அக்கருத்தினும் செயற்கரிய கொடுமை வேறே உளதோ என்று நாம் அவர்க்குக் கூறினால் யாது குற்றமாம்; காமம் செப்பாது விடின்-நமது விருப்பத்தைச் சொல்லா தொழியின்; உயிரொடும் வந்தன்று-எய்தும் பிரிவு அவரோடே யொழியாது நம் உயிரொடும் பொருந்தித் தீங்கு செய்தல் ஒருதலை; தோழி-; அம்ம-கேட்பாயாக; வாழி-; நம்மில் யாதனில் தவிர்க்குவம் கொல்லொ-நம்மில் வேறு எவ் வகையால் தவிர்த்தல் கூடும்; காதலர் செலவு-காதலர் கருதும் பிரிவை; உள்ளம் நோதகும்-என்னுள்ளம் நோவாநின்றது. காண் எ.று. பிரிந்தோர் நப்புணரப் புணர்ந்தோர்; அதனை அறிந்து வைத்தும் பிரியச் சூழ்தலின் அரியதும் உண்டோ என்று கூறின், எவன்; காமம் செப்பாதுவிடின் பிரிவு உயிரொடும் வந்தன்று; தோழி, காதலர் செலவு நம்மில் யாதனில் தவிர்க் குவம்; உள்ளம் நோதகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஈங்கை முள்ளுடை மரமாகலின் மனைப்புறத்தே வேலியாக நிற்பது பற்றிச் சிறைநாறு ஈங்கை என்றும், அதன் பூ வெண்மை யாய் நீர்த்துளிபோல் திரண்டிருத்தலால் உறை நவில் திரள்வீ என்றும் கூறினார். "கொடுமுள்ளீங்கை சூரலொடு மிடைந்த வான்முகை1" எனவும், அதன்பூ நீர்த்துளி போல்வது என்பதை, "ஈங்கை ஆலி யன்ன வால்வீ தாய்"2 எனவும், "ஈங்கை முகைவீ தெண்ணீர்க் குமிழியின் இழிதரும், தண்ணீர்ததைஇ நின்ற பொழுதே3" எனவும் சான்றோர் உரைப்பது காண்க. உறை, ஈண்டு நீர்த்துளி மேற்று; "உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றோரே1" என்றாற்போல, மகளிர் கழங்காடும் பொருட்டு மனைமுன்றிலில் கற்பாறைகளை யிட்டு அவற்றின்மேல் வரிசைக்கு எவ்வேழாகக் குழிகள் அமைந்திருப்பர்; இன்றும் மலைநாட்டுச் சீறூர் மனைகளின் முற்றத்தில் இக்கற்பாறைகள் இருப்பதும், மகளிர் கழங்காடுவதும் காணலாம். ஈங்கை திரள்வீ, கழங்கின் அறைமிசைத் தாஅம் என இயையும். ஏர்தரல், எழுதல்; ஏர்தரல் கூறியதனால் இழிதரலும் கொள்க. ஏற்றிழிவுகளை யுடைமையால் செல்லும் நெறிகள் இனிய வாகாமையின் இயக்கருங், கவலை எனப்பட்டன. பிரிந்தார் புணர்ந்தார் என்புழிச் செய்யுளாகலின், ஆ ஓவாயிற்று. புணரப் புணர்ந்தோர் என்புழிப் புணர என்றதற்கு வினைமுதலாகிய மேனிநலம் வருவிக்கப்பட்டது. பிரிதல் அவர்பாலே யன்றி நம் உயிரின்பாலும் நிற்பதாயிற்று என்பதுபட வந்தமையின் உம்மை எச்சப் பொருட்டு; வந்தன்று என இறந்த காலத்தாற் கூறியது விரைவுபற்றி. கொல்லும் ஓவும் அசைநிலை; இரக்கப் பொருட்டுமாம். நோதகும் வருந்தா நிற்கும்; "நோகோ யானே நோதகும் உள்ளம்2" என்றாற் போல. மனைவாழ்வில், ஒருகாற் பிரிந்து போய் மீண்டு வந்த தலைமகன் பின்னும் பிரிதற்குரிய கடமை எய்தக்கண்டு அதுபற்றி முன்கூட்டிச் செய்வனவற்றை மேற்கொண்டானாக, அதனைக் குறிப்பாய் உணர்ந்ததலைவி, பிரிவு நினைந்து ஆற்றாது மேனி வேறுபட்டுத் தோழியொடு சொல்லாடுவாளாய். பிரிந்தகாலையில் நெறியின்கட் கண்டவற்றை அவன் சொல்லக் கேட்டுளாளாகலின், அவற்றுள் ஒன்றனை வரைந் தெடுத்து, சிறை நாறு ஈங்கையின் திரள்வீ மகளிர் கழங்காடு அறை மிசைத் தாஅம் இயக்கருங் கவலை என்று மொழிந்தாள். இதனை எடுத்தோதும் தலைவியின் கருத்தை உள்ளத்தே எண்ணி நின்ற தோழிக்கு அவள் மேலும் கூறுவாளாய், பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர் என்றாள். என்றதும், தலைவன் பிரியக் கருதுவதும், அதனால் தலைவி யுள்ளம் வருந்துவதும் தோழிக்கு நன்கு விளங்கின; எனினும், உள்ளது உவத்தல் என்னும் பெண்மையியல்பால், புணர்ச் சியிற் பிறக்கும் இன்பம் ஆறாமையால் இவ்வாறு தலைவி யுரைக்கின்றாள் போலும் எனத் தோழி நினைந்து அவளை நோக்கலும், சின்னாட்குமுன் பிரிந்து வந்து கூடிய நம் காதலர், இப்போது பிரியக் கருதுவதனாலன்றோ என் மனம் வருந்து கின்றது என்பாளாய். பிரிதல் சூழ்தலின் என்றும், பிரிவுக்கும் புணர்ச்சிக்கும் இடையிலுள்ள காலத்தினும் புணர்ச்சிக்கும் பிரிவுக்கும் இடைப்பட்ட காலம் நெடிதாதல் அறமாதலின் அதனை, நீட்டியாது சுருக்கிப் பிரிவு கருதுதல் இன்ப வாழ்வுக்குக் கேடு செய்வதொன்றாகலான், செயற்குரிய செயல் வகைகளுள் அது மிகக் கொடிதாம் என்பாள் அரியதும் உண்டோ என்றும், காதற் பிணிப்பினும் ஆடவர்க்குக் கடமை கடைப்பிடி பெரிதாதல் வேண்டும் எனத் தோழி குறிப்பாய் உணர்த்தினள். அவ்வாறு கூறுவது, பெண்மைக்குரிய தாய்மை வேட்கையின் மாண்பு நினையாது கூறுவதென்றும், கடலன்ன காமம் உழப்பினும் மகளிர் அதனை ஆடவர்க்கு எடுத்துரைத்தல் அறமன்று, அஃது ஆடவர்க்கு அமையும் எனப் பாற் பாகுபாடு வகுப்பது நன்றன்று என்றும் நாம் எடுத்துரைக்கின் செலவு தவிர்வ ரன்றோ என்பாள் என்று நாம் காமம் கூறின் எவனோ என்று தலைவி கூறினாள். "தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை1" என்றும், "நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்2" என்றும் சான்றோர் கூறுப. நாம் கூறின் எவனோ என்றவள், கூறுதலன்றி வேறு வழியில்லை யெனத் தான் கருதுவதை மறைமுகத்தால் யாப்புறுத்தற்குச் செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று என்றாள். இவ்வாறு விதி மறை இரண்டானும் கிழவோன்முன் காமம் செப்பிச் செலவு தவிர்த்தல் தீதாமோ என வினவிய தலைமகட்கு, அஃது, அன்பு ஒழுக்கத்துக்கும் பெண்மை யறத்துக்கும் மாறாதல் குறித்துத் தோழி உடன்படாளாக, அவளை உடம்படுவித்தல் வேண்டி அம்ம வாழி தோழி என்றும், காதலர் செலவினைத் தவிர்த்தற்கு யாதேனும் சூழ்ச்சி யொன்றினை நாம் செய்தல் வேண்டும் என்பாள் நம்மில் யாதனின் தவிர்க்குவம் கொல்லோ காதலர் செலவே என்றும் நோதகும் உள்ளம் என்றும் கூறினாள். பெண்மையறத்துக்கு மாறாகத் தலைவி கருதுவது அறமாகாதாயினும், "அறக்கழி யுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப3" என்பதனால் அமையும் எனக் கொள்க. ஈங்கையின் திரள்வீ மகளிராடும் கழங்கறையின் மேல் உதிர்ந்து அதை மறைத்தாற் போலத் தலைமகனோடு கூடி யுறையும் இன்பவாழ்வில் பிரிவு நிகழ்ச்சிகள் போந்து இடையூறு செய்கின்றன என்பது குறிப்பு. 80. பூதன் தேவனார் பூதன் தேவன் என்பது சங்ககாலத்தும் இடைக்காலப் பல்லவ பாண்டியசோழர் காலத்தும் தமிழ் மக்களிடையே நிலவிய மக்கட்பெயர் வகையுள் ஒன்று. ஈழத்துப் பூதன் தேவனார் என ஒருவர் நற்றிணை பாடிய சான்றோர் நிரலுட் காணப்படுகின்றார். இச்சான்றோரின் வேறுபடுத்திக் காட்டற்கு முன்னோர் அவரை ஈழத்துப் பூதன்தேவனார் எனச் சிறப்பித்துள்ளனர். களவின்கண் ஒழுகும் தலைமகன், தலைமகள் குறித்துக் காட்டிய தோழியின் துணை பெற்றுக் கூடி யொழுகுகையில், தலைவியின் தலைமையையும் உயர்வையும் சிறப்பித்து அவளை அடைவது அரிது என்பது தோன்றச் சொல்லாலும் செயலாலும் தோழி தடைசெய்து சேட்படுத்தாள். அச்சேட்படையின் குறிப்பைத் தலைமகன் ஒருவாறு உணர்ந்தானாயினும் களவுக் காதல்வளம் பெற்று ஒருவரை யொருவர் இன்றியமைாத அளவினை எய்துதல் வேண்டி அக்களவையே விரும்பினான். அந்நிலையில் ஊரில் தைந்நீராட்டுத் தொடங்கிற்று. இளமகளிர் விடியலில் எழுந்து நீர்த்துறைக்குத் தத்தம் தாயரொடு சென்று பாவை வைத்து வழிபாடாற்றி நீராடினார்கள். ஒருநாள் விடியலில் தலைமகன் தோழியைக் கண்டு அவளுடைய துணையால் தலைவியொடு உரையாட விழைந்தான். தலைமகள் தன் தாயருகே நின்று பாவை வழிபாடாற்றி முனித் துறைமகளிர் முதலாயி னார்க்கு வேண்டுவன நல்கி நீராடினள். ஏனை ஆயமகளிரும் அவளோடு கூடி நீராடினர். ஆங்கே தலைமகன் போந்து நிற்க அவனைக் கண்டதும் தலைவிக்கு நாணம் தலைக்கொண்டது. அவனே தனக்குக் கணவனாதல் வேண்டும் என்று மனத்தால் வழிபட்டுத் தைந்நீராடினாட்கு அவன் வரவு பேரின்பம் செய்தது; ஆயினும் ஏனை மகளிரது சூழ்வும் பெண்மைக்கு இயல்பாகிய நாணமும் அவளைத் தடுத்து நீராட்டில் நிறுத்தின. தலைமகன், தோழி கேட்குமளவில் நின்று அவள் தன்னைச் சேட்படுத்தினமை ஆற்றானாய்த் தனக்குள் சொல்லிக் கொள்வான் போன்று, "இப் பெரும்புலர் விடியலில் இந்நீர்த்துறைக்குப் போந்து ஆயமகளிர் சூழ இருந்து தைந் நீராடும் குறுமகள், தழையும் தாரும் தந்த துணைவன் என என்னையே நினைந்து இத் தவத் தைந்நீராடு கின்றாள்; யான் உற்ற வேட்கை நோய்க்கு இவளை யல்லது வேறே மருந்து இல்லை" என்று சொன்னான். இக்கூற்றின்கண் தைந்நீராட்டைப் பொருளாக நிறுவித் தனக்கும் தலைமகட்கும் உளதாய காதற்சிறப்பைப் புலப்படுத்திச் சேட்படுக்கும் தோழியை மதியுடம்படுக்கும் தலைவனது சூழ்ச்சி இனிது விளங்கல் கண்ட பூதன்தேவனார்அதனைஇப்பாட்டிற் பெய்து பாடுகின்றார். மன்ற எருமை மலர்தலைக் காரான் இன்றீம் பாற்பயங் கொண்மார்கன்றுவிட்டு 1ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும் 2பெரும்புலர் விடியல் விரும்பிப் போத்தந்து தழையுந் தாரும் 3தந்தனன் இவண்என இழையணி ஆயமொடுதகுநாண் தடைஇத் தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமக ளல்லது 4மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே இது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை மன்ற எருமை மலர்தலைக் காரான் - தொழுவின்கண் உள்ள விரிந்த தலையையுடைய கரிய பெண்ணெருமையை; இன்தீம் பாற்பயம் கொண்மார் - இனிய தீவிய பாலாகிய பயனைக் கோடற் பொருட்டு; கன்றுவிட்டு - கன்றுகளை மனையின்கண் நிறுத்திவிட்டு; ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் - ஊரான் மேய்க்கும் சிறுவர்கள் அவற்றின் முதுகின் மேல் அமர்ந்து ஓட்டிச் செல்லும்; பெரும்புலர் விடியல் - இருள் மிக நீங்கிய விடியற்காலத்தே; விரும்பிப் போத்தந்து - விருப்புடனே தாயரும் ஆயமகளிரும் உடன்வரப் போந்து; தழையும் தாரும் தந்தனன் இவண் என - உடுக்கும் தழையும் சூடும் மாலையும் கொணர்ந்து காதலனாகிய தலைமகன் தந்தான் இத்துறையிடத்தே என நினைந்து; தகுநாண் தடைஇ - அந்நினைவாற் பிறந்த வேறுபாட்டைத் தன் பெண்மைக்குத் தகத் தோன்றும் நாணத்தால் மறைத்துக் கொண்டு; இழையணி ஆயமொடு - இழை யணிந்த ஆயமகளிருடன்; தைஇத் திங்கள் தண்கயம் படியும் - தைத் திங்களில் தண்ணிய நீர்நிலையிற் படிந்தாடுவதாகிய தவத்தைச் செய்யும்; பெருந்தோள் குறு மகள் அல்லது - பெரிய தோளை யுடைய இளமகளை யன்றி; யான் உற்ற நோய்க்கு மருந்து பிறிது இல்லை-யான் எய்தி வருந்தும் வேட்கை நோய்க்கு மருந்தாவது பிறிதியாதும் இல்லை, காண் எ.று. பெரும்புலர் விடியல், விரும்பிப் போத்தந்து ஆயமொடு தண்கயம் படியும் குறுமகள் அல்லது நோய்க்கு மருந்து, பிறிது யாதும் இல்லையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. போத்தந்து இவண் என, நாண் தடைஇப் படியும் குறுமகள் என இயையும். எருமை முதலிய நிரைகளை நிறுத்தும் தொழு மன்றம் எனப்பட்டது; "கன்றமர் விருப்பொடு மன்றுநிரை புகுதர1" என்பது காண்க. எருமைக்கன்றின் மென்மை கருதி மனைக்கண் நிறுத்திக் கோடல் உண்டு எனினும், பாற்பயன் கோடல் பெருநோக்காதல் தோன்ற இன்றீம் பாற்பயம் கொண்மார் என்றார். நல்லான் பாலினும் காரான்பால் மிக்க வெண்ணெயும் தயிருமாகிய பயனுடைமை பெரிதாதலின் இன்றீம் பாற்பயம் எனச் சிறப்பித்தார். கொண்மார், மாரீற்று முற்றுவினை. குறுமாக்கள், சிறுவர்; ஊரானிரைகளை மேய்க்கும் சிறுவர்களை ஊர்க்குறுமாக்கள் என்றார். ஊரிலுள்ள சிறுவர்களை ஊர்க் குறுமாக்கள்என்றாற் போலச் சிறுமியரை ஊர்க்குறு மகளிர் என்பது வழக்கு; "ஊர்க் குறுமகளிர் குறுவழி2" என்பது காண்க. பெரும்புலர் விடியல், இருள் நீக்கத்துக்கும் ஞாயிற்றின் தோற்றத்துக்கும் இடைப்பட்ட காலம்; "புறநானூற்றுப் பழைய வுரைகாரர், "பெரிய புலர்ச்சியை யுடைய விடியற்காலம்3" என்பர். இவ்விடியற் காலம் மக்களும் மாவும் புள்ளுமாகிய உயிர் வகை பலவும் உறக்கத்தின் நீங்கி மனம் தெளிவுற்று உழைப்புக்கு வேண்டும் ஊக்கமும் கிளர்ச்சியும் ஒருங்கு பெறும் சிறப்புடைக் காலமாதல் பற்றிப் பெரும்புலர் விடியல் என்று சான்றோர் சிறப்பிப்பர். "பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப"1 என்று உரைப்பது காண்க. ஊர்க் குறுமாக்கள் எருமையைக் கொண்டு கழிதலும் தைந் நீராடலும் விடியற் காலையில் நிகழ்வன. தழை, இளமகளிர் இடையில் அணிவது; தார் இளைஞர் மார்பில் அணிவது, விரும்பிப் போத்தந்து ஆயமொடு படியும் தண்கயம் என இயைக்க. போத்தந்து என்றது போந்து என்னும் பொருட்டு; "வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் தெருவில் தவிர்ப்ப2" என்றாற்போல, கார் கூதிராகிய காலங்களில் மழைநீர் பெருகிப் பாய்தலால், தண்ணீர் கலங்கி வரும் யாறுகள், பனிக் காலத்தில் தெளிவுற்று வேனிற் காலத்தில் மணிநிறம் கொள்ளும் மாண்பு பற்றி, "கூதிராயின் தண்கலிழ் தந்து வேனிலாயின் மணி நிறம் கொள்ளும் யாறு3" எனச் சான்றோர் கூறுப. யாறு தரும் நீர் பெற்று விளங்கும் கயங்களும் குளங்களும் பிற நீர்நிலைகளும் பனிக் காலத்தே தெளிந்து தண்ணென் றிருப்பது பற்றித் தைஇத் திங்கள் தண்கயம் என்றார். "தைஇத் திங்கள் தண்கயம் போல4" எனச் சான்றோர் விதந்து கூறுப, மணமாகாத மகளிர் தாம் மனத்திற் காதலித்த ஆடவனையே மணாளனாகப் பெறற் பொருட்டும், மணமான மகளிர் இம்மையே யன்றி மறுமைப் பிறப்புக்களிலும் தாம் பெற்ற கணவனே கணவனாக வாய்த்தற் பொருட்டும் மார்கழித் திருவாதிரை நாள் முதல் தைப்பூச நாள் முடியப் பெரும்புலர் விடியலில் தாயரும் ஆயமகளிரும் உடன்வர நீர்த்துறைக்குச் சென்று பாவை நிறுவி அதனையே பெரும்பெயர்க் கடவுளாகக் கருதி வழிபாடாற்றும் தவநெறி, தைந்நீராட்டு எனப்படும்; பாவை வைத்து வழிபட்டு நீராடுவதுபற்றிப் பண்டையோர் இதனை அம்பா வாடல் என்றனர்; ஆயினும் தைந்நீராடல் என்பதே பெருவழக்கு. இடைக் காலத்தே, அம்பாவாடல் என்பது அம்பாவை யாடல் என்றதன் மரூஉ என்பதறியாது. அம்பா என்பது இறைவன் தேவியைக் குறிப்ப தெனக் கொண்டு பாவையைத் தேவியாக எண்ணி வழிபட்டனர். இக்காலத்தே இந்நீராட்டுப் பெரும்பாலும் வீழ்ந்து போயிற்று என்னலாம். இந் நற்றிணை முதலிய நூல்கள் தோன்றிய காலத்தில் மார்கழித் திருவாதிரையின் மறுநாள் தொடங்கும் தைத்திங்கள் பூசநாளோடு முடியும்; அன்று முழுமதி நாளாகும்; ஒவ்வொரு திங்களும் முழுமதி நாளன்று முடிந்தது. பின்பு வராகமிகிரர் என்பார் தோன்றி ஒவ்வொரு திங்களையும் ஞாயிறு மேடம் முதலிய இராசிவீடுகளிற் புகும் காலத்தைக் கொண்டு வகுத்துரைக்கவும், அதுமுதல் பழைய தமிழ் முறை மறைந்து போயிற்று. மார்கழித் திருவாதிரை யன்று தொடங்கிய நீராட்டுத் தைத்திங்கள் முழுதும் நடைபெற்றமையின், தைந்நீராட்டு எனப்பட்டது; திங்களை ஞாயிற்றின் அடியாகக் கொண்ட காலத்த வராதலின் மாணிக்கவாசகர் "மார்கழி நீர்1" என்று பாடினார். இத்தைந் நீராட்டினை, குறிஞ்சி நிலத்தவர் அருவிகளிலும் சுனைகளிலும் ஆடினர்; முல்லையார் ஆறுகளிலும், மருதத்தவர் கயம் மடு முதலிய நீர்நிலைகளிலும் நெய்தல் நிலத்தவர் கடற்றுறையிலும் இத்தைந்நீராடினர். தடைஇ, கோடுதல் என்னும் பொருளதாகிய தட வென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம்; அது படியும் என்னும் வினை கொண்டது பெண்மகட்கு நாணம் உயிரினும் சிறந்த தாகலான் தகுநாண் என்றார். நோய்க்கு மருந்தாவன அதற்கு மாறாய பிற பொருளாதலின் மருந்து பிறிதில்லை எனல் வேண்டிற்று; "பிணிக்கு மருந்து பிறமன்2" என்பது காண்க. களவின்கண் தலைமகள்பால் உயரிய காதல்கொண்டு ஒழுகும் தலைமகன் உள்ளத்தை வரைவின்கட் செலுத்தும் கருத்தினளாய்த் தலைவியின் அருமையும் பெருமையும் கூறித் தோழி அவனைச் சேட்படுத்தாளாக, தலைவியைக் காண்டற் கண் எழுந்த வேட்கை மிகுதியால் அவன் ஆற்றானாய் அவள் தைந்நீராடற்குச் சென்ற தண்கயத்துக்குத் தானும் சென்று, அங்கே தோழியைக் கண்டு, அவள் கருத்தைத் தான் உணர்ந்து கொண்டதனை உள்ளுறையாற் புலப்படுத்துவான், எருமைக் காரான் பாற்பயம் கொண்மார் கன்றுவிட்டு ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும்புலர் விடியல் என்று சிறப்பித்துக் கூறினான். இருள் புலரவும் ஒருவரை யொருவர் நன்கு கண்டு குறிப்பறியும் அளவில் ஒளி பரவிய விடியற்காலம், மணப்பருவத்து மகளிர்மனையின் நீங்கிப் புறத்தே போதற்கு ஏற்றதாதல் பற்றிப் பெரும்புலர் விடியல் தைந்நீராட்டுக்கு வரைந்து கொள்ளப் பட்டது. களவின்கண் தன்னைக் கண்டு காதலுற்றுக் கருத்து ஒருமித்து ஒழுகும் தலைமகட்குத் தன் கருத்தை முற்றுவிக்கும் தைந்நீராட் டாகிய தவம் பெரிதும் விருப்பம் தருவது என்பான், விரும்பிப் போத்தந்து என்றும், தண்கயம் கண்ட தலைமகட்குப் பண்டு இக்கயத்துறையில் விளையாடிய போது தலைமகனாகிய தான் போந்து தழையும் தாரும் தந்து இன்புறுத்தியது நினைவின்கண் எழுதலால், அதுவே பற்றுக்கோடாக அவள் உள்ளத்துக் காதல்மிக்கு எழுதலும் அதனால் தன்கண் தோன்றும் வேறுபாட்டைத் தன்னோடு சூழவுள்ள தாயரும் பிறரும் அறியா வண்ணம் நாணத்தால் மறைக்கின்றான் என்பாள், தழையும் தாரும் தந்தனன் இவண் எனத் தகுநாண் தடைஇ என்றும், இப்பொழுது என்னையே கணவனாகப் பெறுவது கருதித் தைந்நீராடுகின்றாள் என்பான், இழையணி ஆயமொடு தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்றும், ஆயமொடு கூடி யாடுதல் இயல்பு என்றற்கு இழையணி ஆயமொடு என்றும், தைந்நீராடலாகிய தவத்துக் குரிய பெருமையும் தெளிவும் அவள்பால் நன்கமைந்தன என்பான், பெருந்தோட் குறுமகள் என்றும், யான் அத்தெளிவின்றி நோயும் கலக்கமும் எய்தி வருந்துகின்றேன் என்பான் யான் உற்ற நோய்க்கு என்றும், இவை அவள் தர வந்தன வாகலின் இந்நோய் தீரும் மருந்து அவளல்ல தில்லை என்பான், மருந்து பிறிதில்லை என்றும் தோழி செவியிற்படுமாறு கூறினான். "நின்முகம் தான்பெறின் அல்லது கொன்னே, மருந்து பிறிது யாதும் இல்லேன் திருந்திழாய் என்செய்வாங்கொல் இனி நாம்1" எனப் பிறாண்டுத் தலைவன் கூறுதல் காண்க. அவளைப் பெறேனாயின் எனக்கும் உய்தி இல்லை; தைந்நீராடும் தவந் தானும் அவட்கும் பயன்படுமாறில்லை எனத் தலைவன் கூறியவாறாம். "மருளியான் மருளுற, வையெயிற்றவர்நாப்பண் வகையணிப் பொலிந்துநீ, தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ2" எனத் தலைவன் கூற்றாக வருவது காண்க. பாற்பயம் கொண்மார் கன்றைவிட்டுக் காரானைப் புறத்தே செலுத்தினாற் போலத் தலைவியை அருமை செய்து என்னைச் சேட்படுத்தி வரைவாகிய பயன்கொள்ளக் கருது கின்றனை எனவும், கன்றை மனைக்கண் விட்டு ஊர்க்குறு மாக்களை மேற்கொண்டு கழியும் காரான் போலத் தலைவியை நின்னொடு விடுத்து வேட்கைநோயும் கலக்கமும் உள்ளத்திற் கொண்டு செல்கின்றேன் எனவும் தலைவன் தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தியவாறாகக் கொள்க. 81. அகம்பன் மாலாதனார் அகம்பன் மாலாதனார் என்ற இச்சான்றோ ருடைய பெயரில் முதற்கண் நிற்கும் அகம்பன் என்பது மக்கட் பெயர் வகையுள் ஒன்று; சிதம்பரம் பகுதியிலுள்ள உடையார்குடிக் கல்வெட்டொன்றில்1 இடையளநாட்டு அகம்பன் திட்டை யுடையான் என ஒருவன் காணப்படுகின்றான். இதனால் இம் மாலாதனாரை அகம்பன் என்பார்க்கு மகனாகவோ, அகம்பன் என்பானுடைய குடிப்பிறந்தா ராகவோ கோடல் பொருத்தமாக வுளது. இனி, பி.அ. நாராயணசாமி ஐயரவர்கள் அகம்பல் என்பது பாண்டி நாட்டு ஊர் என்றும், அவ்வூர் இப்போது அகமலை என மருவி வழங்குகிற தென்றும், எனவே, இச்சான்றோர் அகம்பல் என்னும் ஊரவர் என்றும் உரைக்கின்றார். அகம்பன், அசையாதவன். தலைமக்களிடையே, நல்லறம் புரிந்து வாழும் தலைமகன் தன் துணைவனான வேந்தன் பொருட்டு மனையின் நீங்கி வினை மேற்கொண்டு சென்றான். குறித்த காலத்தில் வினையும் முடிந்தது. வேந்தனும் பகை தணிந்து மீளுதற்குச் சமைந்தான். வினைமுடிவில் தலைமகன் உள்ளத்தில் தோன்றிய இன்பம் மனையின் கண் தன் பிரிவால் வருந்தித் தனது வரவு நோக்கி இருக்கும் தலைமகளை நினைப்பித்தது. பிரிவுத்துன்பத்தை ஆற்றாமல் அவள் கண்ணீர் சொரிந்து நிற்கும் கவலையுருவம் அவன் மனக்கண்ணில் தோன்றிற்று. அதனைக் காணப் பொறாமல், அவள் மகிழ்ந்த நிலையில்முகம் விளங்குதலைக் காண விரும்பித் தன் பாகனை நோக்கித் தன் பிரிவாற்றாது தலைவி கண்ணீர் மார்பகம் நனைப்ப அழுது கொண்டு உறைவது கூறி விரையத் தேரைப் பண்ணுக எனவும். வேந்தன் பகை தணிந்தமையின் விரைந்து சென்று மனையவள் விருந்தயரும் விருப்பத்தால் முகம் மலர்ந்து இன்னகை செய்யும் இனிய காட்சியைக் காணலாம் எனவும் கூறுவானாயினன். இக்கூற்றின்கண் வினைமேற் சென்ற தலைமகன் உள்ளத்தில் வினை முடியுங்காறும் மனைவியைப் பற்றிய காதல் நினைவு தோன்றாமையும், துணைவனான வேந்தன் பொருட்டு மேற் கொண்ட வினை முடிந்தவழிப் பிறக்கும் இன்பத் திடையே மனைவியின் நினைவு தோன்றுதலும், அதன் கண்ணும் அவளுடைய தோளைச் செறிதலாற் பிறக்கும் இன்பநினைவு எழாது தனக்குரிய மாண்புடைச் செய்கையான விருந்தினைச் செய்யுமிடத்து எய்தும் அவளுடைய மகிழ்நகை தவழும் முகம் காண்டற்கண் பெறலாகும் காட்சியின்பத்தை நினைத்துச் செலவு மேற்கோடலும், தலைமகனுடைய செய்வினை மாண்பும் விருந்தோம்பும் பேரறமும் விளங்கித் தோன்றக் கண்ட அகம்பன் மாலாதனார் அவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார். இருநிலங்குறையக் 1கொட்புறு பருதியின் ஆதி போகிய 2அசைவில் நோன்றாள் மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி 3கொய்ம்மயிர் எருத்திற் 4பெய்ம்மணி ஆர்ப்பப் பூண்கதில் பாகநின் தேரே பூண்தாழ் ஆக வனமுலைக் 5கரைவலந் தெறிப்ப அழுதனள் உறையும் அம்மா அரிவை விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம் உறுபகை தணிந்தனன் 6உரவுவாள் வேந்தே இது, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. உரை இருநிலம் குறைய - பெரிய நிலவுலகின் பரப்புத் தன் செலவெல்லைக்கு உட்சுருங்கி யொடுங்குமாறு; கொட்புறு பருதியின் ஆதி போகிய அசைவில் நோன்றாள்-சூழ்ந்து செல்லும் ஞாயிற்றின் நெறியிலே சென்ற தளர்ச்சி யில்லாத வலிய கால்களையும்; மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி-மன்னர்களால் மதிக்கப்படும் மாட்சி பொருந்திய போர் வினையையுமுடைய குதிரைகளை; கொய்ம்மயிர் எருத்தின் பெய்ம் மணி ஆர்ப்ப-கொய்யப்பட்ட பிடரிமயிரைஉடைய கழுத்திற் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்க; பாக-பாகனே; நின் தேர் பூண்கதில்-நின் தேரிற் பூட்டிச் செல்லுதற்குப் பண்ணுக; பூண் தாழ் ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப-பூணாரம் கிடந்து தவழும் மார்பிடத்து அழகிய முலை முகட்டின்கண் துளிக்கும்படி; அழுதனள் உறையும் அம்மா அரிவை-கண்ணீர் சொரிந்து அழுதுகொண்டிருக்கும் அழகிய மாமைநிறத்தை யுடைய அரிவையாகிய காதலி; விருந்தயர் விருப்பொடு-வருவிருந்தை ஓம்பும் விருப்ப மிகுதியால்; வருந்தினள் அசைஇய - பெரிதும் உழந்து செய்யும் உண்டி வினைத் தளர்ச்சியால் அதன் முடிவில் விளங்கும்; முறுவல் இன்னகை காண்கம்-பற்கள் சிறிதே தோன்ற முறுவலிக்கும் இனிய நகைமுகத்தைக் காண்பாம்; உரவு வாள் வேந்து உறுபகை தணிந்தனன் - வலிய வாட்படையை யுடைய வேந்தனும் பகைவரது மிக்க வலியைக் கெடுத்து வெற்றி கண்டானாகலான் எ.று. வேந்து, உறுபகை தணிந்தனன்; ஆகலான், பாக, நின் தேர், மணி யார்ப்பப் புரவி பூண்கதில்: வனமுலைக் கரைவலம் தெறிப்ப, அழுதனள் உறையும் அம்மா அரிவை விருப்பொடு, வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஞாயிறு கிழக்கில் எழுந்து நிலவுலகை வலமாகச் சூழ்வருகிற தென்பது பண்டையோர் கொள்கை; ஞாயிற்றின் செலவு எல்லையை நோக்க நிலப் பரப்பின் எல்லைகுறைந்து விடுதலின் இருநிலம் குறையக் கொட்புறு பருதி என்றார். கொட்புறுதல், சுழலுதல்; ஈண்டுச் சூழ்வருதல் மேற்று வண்டிகளின் இருசக்கரங்கட்கும் இடை வெளியை நாட்டவர் ஆதி என வழங்குவர். ஆதி போதல், ஈண்டு வழியே போதல், பருதியின் ஆதி போதலாவது. ஞாயிறு செல்லும் நெறியில் அதனோடு ஒப்பச் செல்லும் செலவு; என்றது, ஞாயிற்றின் தேரிற் பூட்டிய குதிரை போலச் செல்வது என்பதாம். இமைப்போதும் தாழ்த்தலும் ஓய்தலும் இன்றிச் செல்லும் பருதியைக் கூறினமையின் அசைவில் நோன்றாள் என்று சிறப்பித்தார். நோன்மை, வலிமை. முடிமன்ன ரன்றிப் பிற குறுநிலத் தலைவரும் செல்வரும் மதிப்பிடற் கரிய கதியும் சாரியும் வன்மையும் வினைசெயல் திறமும் உடைமையால் மாண்புற்ற குதிரை என்றற்கு மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி என்றார். மன்னர் மதிப்பு மாண்வினை மேல தன்றி மெய்வனப்பின் மேற்றன்று என்பது இதனாற் குறிக்கப் படுதல் காண்க; பிறரும்; "வினைநவில் புரவி1" என்பர். "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி யுள்ளப் படும்2" என்பது காண்க. குதிரையின் பிடரிமயிர் ஓர் அளவுபட நிறுத்திக் கத்தரிக்கப்படுவது பற்றிக் கொய்ம்மயிர் எனப் பட்டது; "கொய்சுவற் புரவி3" என்பதும் இதுபற்றியே. தில், அசைநிலை; விழைவுமாம், வலம், ஏழனுருவின் பொருள் பட வந்த இடைச்சொல். மனையறத்துக்குச் சீரிய மாண்பு தருவது விருந்தோம்ப லாதலால், அது விதந்து கூறப்பட்டது. விருந்தயர்தற்கு முன்னும் பின்னும் அதன்பால் உறும் விருப்பு, விருந்தயர் விருப்பு எனப்பட்டது. "அரும்படர் அகலநீக்கி விருந்தயர் விருப்பினள் திருந்திழையோளே4" என்று பிறரும் கூறுவது காண்க. பிரிந்த தலைவன் மீண்டு போந்தவழி அவற்கும் அவனொடு வந்த பிறர்க்கும் விருந்தயர்தல் பண்டை யோர் வழக்கு; "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து, மாலை அயர்கம் விருந்து5" என்பது காண்க. வினை கலந்து வீறுகொண்டு முற்றிய தலைமகன் உள்ளத்தில் வினைப்பய னாய இன்பநுகர்ச்சிக் குரிய தலைவி நினைவு எழுந்ததும் தேரைப் பண்ணி விரைவில் தன்னை மனைக்கண் சேர்க்க வேண்டும் என்ற கருத்தால் பாகற்கு உரைக்கின்றா னாகலின், அவன் தேரிற் பூட்டும் குதிரைகளின் செலவைப் பாராட்டுவானாய் இருநிலம் குறையக் கொட்புறு பருதியின் ஆதி போகிய அசைவில் நோன்றாள் மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி என்றான்; "விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலிமா6" என்று பிறரும் கூறுதல் காண்க. பாக நின்தேர் புரவி பூண்கதில் என்பவன் அதற்குரிய காரணம் கூறலுற்றுத் தலைவியது துயர்நிலை நெஞ்சின்கண் மிக்கு நிற்றலின் அதனையே முதற்கண் விதந்து, பூண்தாழ் ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம்மா அரிவை என்றான். பண்டு, மனையின் நீங்கிப் போதருங்கால் விடை கொடுத்த தலைமகளின் நிலை அதுவாதலினாலும், அதனைப் பாகன் அறிந்துளானாகலினாலும் "பூண்கதில் பாக நின் தேரே" என்றது கேட்ட பாகன் தேர்பண்ணுதற்கு எழுச்சி கொண்டா னாயினும், மனைகுறித்ததோமுனைகுறித்ததோ என்ற குறிப்பு விளங்காமையின் அது நோக்கினானாகத் தலைவன், பண்டு தான் பிரிந்திருந்து மீண்டு சென்றவிடத்துத் தலைமகள் விருந்தயர் விருப்பினளாய் வேண்டுவன செய் ததும், அந்நிலையில்அவள் அவன் முகநோக்கி மகிழ்நகை செய்ததும், இன்மொழிகூறியதும் நெஞ்சின் கண் நிலவுதலின், அதனை எடுத்து விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசை இய முறுவல் இன்னகை காண்கம் என்றான். "உள்ளிய, விருந்து ஒழிவறியாப் பெருந்தண் பந்தர், வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத் தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல், வீழித ழலரி மெல்லகம் சேர்த்தி, மகிழணி முறுவல் மாண்ட சேக்கை, நம்மொடு நன் மொழி நவிலும், பொம்ம லோதிப் புனையிழை குணனே"1 என்று பிறாண்டும் கூறுதல் காண்க. விருந்தயர்தற் பொருட்டுச் செய்யப்படும் உண்டிவினைக்கண் ஓய்தலும் சாய்தலும் இன்றி உழத்தலால், மகளிர்மனத்துக்கண் தோன்றும் விருப்பத்தால் மேனியில் விளங்கும் அசைவு அவர்கட்கு அழகு தருதலின் விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை என்றான். பிறரும் "புனைநெடுங் கூந்தல், நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப, விருந்தயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே2" என்பது காண்க. முனைமுகத்து வினை குறித்துப் போந்தவன், வினை முற்றினும் வேந்தன் பகைத்தீத் தணியாவழி மீளுதல் இல்லை யாதலின், அதுபற்றிப் பாகன் உள்ளத்து ஐயம் எழாவாறு உறுபகை தணிந்தனன் உரவுவாள் வேந்தே என்றான். எனவே, தலைவன் வினைவல பாங்கனாய் வந்தவாறு பெறப்பட்டது. 82. அம்மள்ளனார் மள்ளனார் எனவும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் எனவும் சான்றோர் பலர் இருத்தலின், அவரின் வேறுபடுத்த இவர் அம்மள்ளனார் எனப்படுகின்றார். நக்கீரனார், நப்பசலையார் நச்செள்ளைார் என்பன சிறப்புணர்த்தும் நகரவிடைச்சொற் புணந்தாற்போல, இவர் பெயரும், அம்மூ-வனார், அம்மெய்யனார் என்பன போலச் சிறப்புணர்த்தும் அகரவிடைச்சொற் புணர்ந்து நின்றதெனக் கோடல் வேண்டும். அகரமும் நகரமுமாகிய இடைச்சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்த் தோன்றியனவாதல் வேண்டும்; ஆதலாற்றான், இவற்றைப்பற்றித் தொல்காப்பியம் ஒரு குறிப்பும் உரையாதாயிற்று. போர்க்காலத்தில் வேந்தர்க்குப் படைமறவராகவும் ஏனைக்காலத்தில் பொருள் விளைவிக்கும் வேளாண் மக்களாகவும் வாழும் குடிகளைப் பொதுவாக மள்ளர் என்பது வழக்கு. அப் பொதுப் பெயர். தொடக்கத்தில் இயற் பெயராகத் தோன்றியது என்றற்கு இச்சான்றோர்களின் பெயர்கள் சான்று பகர்கின்றன. தலைவனும் தலைவியும் தம்மிற்றாம் தனித்துக் கண்டு காதலுற்றுக் களவின் கண் ஒழுகி வருகையில், ஒருநாள் துணைபுரிவாளாகிய தோழி தலைமகளைக் குறித்த தோர் இடத்தே நிறுத்தித் தலைமகற்கு உணர்த்த அவனும் அக்குறியிடம் சென்று அவளைக் கண்டு இன்புற்றான். அழிவில் கூட்டம் பெறுதற்குக் களவொழுக்கம் ஏற்ற தன்மையின், இருவர் உள்ளத்திலும் சிறந்து நின்ற காதலன்பு, மேலும் பெருகிப் பெருவேட்கையைக் கிளர மிக்க ஆர்வமும் அமைதியின்மையும் தோன்றி அவர்தம் உடலில் தளர்ச்சியைப் பயந்தன. பெருமையும் திண்மையும் துணை செய்யக் கழிகாமத்துக்கு இரையாகாதவன் தலைமகனாதலின், தலைவியின் மெய்தொட்டுப் பயிறலும் அவளுடைய மென் மொழி கேட்டு இன்புறுதலுமே அவன் களவின்கண் இன்புறும் செயல்வகையாகும். அவ்வழிப் பிறக்கும் இன்பத்தை விழைந்து குறியிடத்தே தலைவியைக் காண்டலில் அவன் உள்ளம் பெரிதும் ஈடுபட்டது. ஆயினும், ஆராமை மிகுதியால் தலைமகளை நோக்கி, "நின்னைக் காணாவழி என் உள்ளத்தில் தோன்றி வருத்தும் வேட்கையும், அதனால் என் உடலில் தோன்றும் மெலிவும் நின்னை இங்கே கண்டு நின் தோளைத் தழுவுதலால் ஒழிந்தன. இனி, நீ நின் மனையைச் சேர்தற் குரிய பொழுது ஆயினமையின், நின் சிறு குடிக்கு என்னுடன் வருகுவையோ? முருகனொடு கூடிச்சென்ற வள்ளி போல நீ என்னுடன் கூடிச் செல்வது இன்பம் தருவ தொன்றாம்; நினது திருவுருவின் அழகொளி என் கண்ணிடை ஒளி செய்தலின் நின்னைத் தனியே விடுதற்கு யான் ஆற்றேனாயினேன்" என்றான். இக்கூற்றின்கண், தன்னுடைய உள்ளத் தெழுந்த பெரு வேட்கையைத் தலைமகள் நன்கு உணரவும், அவளது உள்ளத்தில் தன்னை இன்றியமையாளாகும் அளவில் காதல் பெருகவும், தன் வேட்கை நோய்க்கு அவள் மருந்தாகும் சிறப்பையும், முருகு புணர்ந் தியன்ற வள்ளி அம்முருகனுடன் போக்குடன்பட்டுச் சென்று புகழ் பெற்றாற் போலத் தன்னொடு போக்குடன் படுதற்குரிய காதற்கற்பையும் தலைவன் தலைமகட்கு அறி வுறுத்தும் திறம் விளங்குதல் கண்ட அம் மள்ளனார் அதனை அமைத்து இப்பாட்டினைப் பாடுகின்றார். நோயும் 1தெகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய்வனப் புற்ற தோளை நீயே 2என்னுடன் வருதியோ நன்னடைக் கொடிச்சி முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின் உருவுகண் எறிப்பப் 3போக்கலாற் றலனே போகிய 4நாவற் போக்கருங் கவலைச் சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் சேறா டிரும்புறம் நீறொடு சிவண வெள்வசிப் படீஇயர்மொய்த்தவள் பழீஇக் கோணாய் கொண்ட கொள்ளை கானவர் 5பெயர்க்குஞ் சிறுகுடி யானே இது, தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது. உரை நோயும் தெகிழ்ச்சியும் வீட-யான் உற்ற வேட்கைநோயும் உடல் தளர்ச்சியும் நீங்க; நீ-; சிறந்த-என் உயிர் தளிர்க்குமாறு சிறந்த; வேய் வனப்புற்ற தோளை-மூங்கிலினது அழகைக் கொண்ட தோள்களை உடையை; நன்னடைக் கொடிச்சி-நல்லொழுக்கத்தையுடைய குறிஞ்சிநிலத் தலை மகளே; என்னுடன் வருதியோ-யான் உடன்வரச் செல்குவாய் கொல்லோ; முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல-முருகனுடன் கூடிச்சென்ற வள்ளியைப் போல; நின் உருவு கண் எறிப்பப் போக்கல் ஆற்றலன்-நினது அழகுதிகழ் உருவம் என் கண்களில் ஒளிசெய்தலால் நின்னைத் தனித்துச் செல்ல விடுதற்கு ஆற்றேனாகின்றேன்; போகிய நாவல் போக்கருங் கவலை-உயரிய நாவல் மரங்கள் நிற்கும் போதற் கரிய கவர்த்த வழிகளில்; சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்-சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினத்தை யுடைய ஆண்; சேறாடு இரும்புறம் நீறொடு சிவண-சேறுபட்ட கரிய பக்கம் புழுதி படிந்து அதன் நிறத்தைப் பெற; வெள்வசிப் படீஇயர் மொய்த்த-கண்ணி வைக்கப்பெற்ற வெறுநிலத்து வெடிப்பின் கண் வீழ்ந்து வலையிற் படுமாறு வளைத்த; கோணாய் கொண்ட கொள்ளை-வேட்டை நாய்களின் துணையால் கொன்று கொள்ளப்பட்ட அதன் உடலை; வள்பு அழீஇ-சூழ்ந்திருக்கும் வலையின் வாரிலிருந்து விடுவித்து; கானவர் பெயர்க்கும் சிறுகுடி யான்-கானவர் கொண்டு போகும் சிறுகுடிக்கு எ.று. கொடிச்சி, நோயும் தெகிழ்ச்சியும் வீட, நீ, சிறந்த தோளை யுடையை; நின் உருவு கண்ணெறிப்பப் போக்கலாற்றலன்; ஆகலின், சிறுகுடிக்கு முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோல என்னுடன் வருதியோ என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. நோய், வேட்கை மிகுதி, தெகிழ்ச்சி, தளர்ச்சி; "பகர்ச்சி மடவார் பயில நோன்பாற்றல் தெகிழ்ச்சிதரும் நெஞ்சத் திட்பம்1" எனப் பிற்காலத்து ஆன்றோர் இச்சொல்லை வழங்குதல் காண்க. சிறத்தல், ஈண்டுத் தளிர்த்தல் மேற்று; "உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்2" என்பது காண்க. ஓகாரம், வினா, நடை, ஒழுக்கம்; "நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே3" என்பதனாலும் அறிக. கண்ணெறித்தல், கண்கூசுமளவு ஒளி செய்தல், பன்றியின்கண் உடற் பெருமைக் கேற்ப இராது சிறுத்திருத்தலின் சிறுகண் எனப் பட்டது. பெருஞ்சினம் என்றவிடத்துப் பெருமை மிகுதி மேற்று. "வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன4" என்ற தனால் ஒருத்தல் என்றார் எருமைபோலப் பன்றியும் வெயில் வெம்மைக்கு ஆற்றாது சேற்றிடைக் கிடத்தலும், புழுதியிற் கிடந்து புரளுதலும் இயல்பாதலின் சேறாடு இரும்புறம் என்றும், நீறொடு சிவண என்றும் கூறினார். நீர்ப்பசை யற்ற நிலப்பிளவு என்றற்கு வெள்வசி என்றும், அகன்ற நிலப்பிளவின் வாயில் வார்களால் பின்னப்பட்ட கண்ணியும் வலையும் அமைத்து, வேட்டை நாய்களை ஏவித் துரத்திய வழிப் பன்றி அப்பிளவில் வீழ்ந்து வலையிற் சிக்குண்டதும் நாய்கள் தாக்கிக் கொன்று கொணர்தலின் கோணாய் கொண்ட கொள்ளை என்றார். வள்பு, வார், வெள்வசிப் படீ இயர் மொய்த்த கோணாய் என்றும், கொள்ளையைக் கானவர் வள்பு அழீஇப் பெயர்க்கும் என்றும் இயையும். பெயர்க்கும் என்னும் பெயரெச்சம் சிறுகுடி என்னும் இடப்பெயர் கொண்டது. பெயர்த்தலாகிய வினைநிகழ்ச்சிக்கு இடமாகலின். இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் முதலிய வற்றாற் பெற்ற இன்பத்தால் பெருகிய காதல் வேட்கை, தோழியாற் பெறும் கூட்டத்தின் கண் மீதூர்ந்து நிற்ப, அவளை மதியுடம்படுக்கும் முயற்சிக்கண் வருத்தமும் தளர்ச்சியும் தோன்றிப் பின்னர் எய்தும் புணர்ச்சியால் நீங்குதலின், நோயும் தெகிழ்ச்சியும் வீட என்றும், தோளைச் செறிதலால் வருந்திய உயிர் மெலிவு நீங்கி இன்பத்தால் கிளர்ந் தெழுதலின் சிறந்த வேய்வனப்பு உற்ற தோளை என்றும் கூறினான். தலைவியின் தோள் இரண்டும் தன் அகன்ற மார்பிடை மூழ்கப் புல்லினமை தோன்ற வேய் வனப் புற்ற தோளை எனச் சிறப்பித்தான். புல்லுமிடத்துப் பெரு நாணத் தால் தலைமகள் நுடங்குதல் கண்டு வியக்கின்றமை தோன்ற நன்னடைக் கொடிச்சி என்றும், பொழுது நெடித்தலின் தோழியும் ஆயமும் அறிவர்கொல் என்ற அச்சத்தால் அவள் பால் தோன்றும் அசைவினை அறிந்து என்னுடன் வருதியோ என்றும், குற மகளிருள் தலைமையும் கடவுட்டன்மையு முடைய வள்ளியம்மையார் முருகனுடன் புணர்ந்து தோழியும் ஆயமும் காணத் தன் சிறுகுடிக்குச் சென்ற வரலாறு காட்டித் தன் கூற்றை வற்புறுத்துவானாய் முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல என்றும், தனக்கு அவளது இன்றியமையாமை தோன்ற நின் உருவு கண்எறிப்பப் போக்கலாற்றலன் என்றும் உரைத்தான். வெள்வசிப் படுவித்து மொய்த்த கோணாய் கொண்ட கொள்ளையாகிய பன்றி யொருத்தலைக் கானவர் வள்பு அழீஇச் சிறுகுடிக்குப் பெயர்க்குவர் என்றது, நின் தோளிடைப் படுவித்து உருவாகிய வலையிற் பிணித்துக் கொண்ட என் உள்ளத்தை, நின் சிறு குடிக்குக் கொண்டு போகா நின்றனை எனத் தலைமகன் தன் வேட்கை மிகுதியை உள்ளுறையாற் கூறியவாறு. முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல என்றது கேட்டுத் தலைமகள் தலைவனைக் கானவர் முருகு எனக் கொள்ளாது வெகுளுவர் என நினைந்து, அவனோடு உடன் வருதற்கு அஞ்சி அவனை நோக்கினாளாக, உள்ளுறையால் தன் வேட்கைமிகுதி யுணர்த்தினமையின், நின் உருவு கண்ணெறிப்பப் போக்கலாற்றலன் என்றான் எனக் கொள்க. "கடம்பு சூடி யுடம்பிடி யேந்தி, மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர், அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை, குறமகளில்லை செறிதோளில்லை, கடம்பூண் தெய்வமாக நேரார், மடவர் மன்ற இச் சிறுகுடி யோரே1" என்று தோழி கூறுமாறு காண்க. "பண்பிற் பெயர்ப்பினும்2" என்ற நூற்பாவின் கண் "பரிவுற்று மெலியினும்" என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 83. பெருந்தேவனார் பெருந்தேவன் என்ற பெயரைத் தாங்கியோர் சங்க காலத்திலும் இடைக்காலச் சோழபாண்டியர் காலத்திலும் பலர் இருந்திருக்கின்றனர். சங்கத்தொகை நூற்களில் காணப்படும் பெருந்தேவனாருள். சிறப்புடை அடையின்றி வழங்கப்படுவதனால் இவர் ஏனையோர் பலரினும் தொன்மை வாய்ந்தவர் என்பது விளங்குகிறது. காதலன்புடைய தலைமக்கள் இருவர் களவின்கண் ஒழுகுமிடத்து இரவுக்குறியில் ஒருநாள் தலைவன் போந்து சிறைப்புறத்தே நின்றான். அவன் வரவைப் பிறர் அறியின் அவற்கு ஏதமாம் என்பதை எண்ணி அவனுக்குக் குறிப்பாய் உணர்த்தித் தலைவியை வரைந்துகோடற்கு அவன் உள்ளம் செல்லுமாறு தோழி கடாவுவா ளாயினள். ஊரருகேயுள்ள நீர்த்துறைக்கண் நின்ற முதுமரத்தில் கூகைகள் வாழ்ந்தன. அவற்றை நோக்கிக் கூறுவாள் போலத் தன் கருத்தைத் தலைமகற்கு அறிவிக்க முற்பட்ட அவள், "முதுமரத்துக் கூகையே, ஆட்டிறைச்சியும் நெய்யும் கலந்த சோறும் எலியூனும் தருவேம். எம் காதலர் வரவு விரும்பி யாம் வருந்தி யுறையும் இப்போழ்து நீ கேட்டார் அஞ்சத் தக்க நின் குரலை யெடுத்துக் கூவா தொழிவாயாக" என்றாள். இக்கூற்றின்கண் இரவுக்குறி மறுத்து வரைவுகடாவும் கருத்தினளான தோழி, தன் மறுப்புக்குக் காரணம் பிறர் அறியின் வரும் ஏதம் என்பதும், தான் தலைவன் வரவினை விரும்புவதும் தோன்றக் கூறிய நயம் கண்ட பெருந்தேவனார் இப்பாட்டில் அதனைப் பெய்து பாடுகின்றார். எம்மூர் வாயில் உண்டுறைத்1 தடைஇய கடவுள் முதுமரத் துடனுறை 2முனியாது தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாப்பறை அசாவா 3வலிமுந்து கூகை மையூன் 4பொரித்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதல் எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத் துஞ்சா 5தலவுறு பொழுதில்நின் 6அஞ்சுவரு கடுங்குரற் பயிற்றா தீமே இஃது, இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. உரை எம்மூர் வாயில் உண்டுறைத் தடைஇய - எம்முடைய ஊரின் முகப்பிலுள்ள நீர்த்துறைக்கண் பெருத்து உயர்ந்து நிற்கின்ற; கடவுள் முதுமரத்து உடனுறை முனியாது - கடவுள் உறையும் முதிய ஆலமரத்தின்கண் தானும் உடனுறைதலை வெறாமல் சுற்றத்தோடு கூடி உறையும்; தேயா வளைவாய் தெண்கண் கூருகிர் - தேயாமல் வளைந்த வாயையும் தெளிந்த கட்பார்வையையும் கூரிய நகங்களையு முடைய; வாப்பறை அசாவா வலிமுந்து கூகை - பறக்கும் சிறகு தளராத வலி மிக்க கூகையே; மையூன் பொரித்த நெய் வெண்புழுக்கல் - ஆட்டின் இறைச்சியை எண்ணெயிற் பொரித்த வெண்மையான சோற்றை; எலி வான் சூட்டோடு மலியப் பேணுதும் - எலி யினது வெண்மையான தசையைச் சுட்டு நினக்கு மிகவும் தருகுவேம்; எஞ்சாக் கொள்கை எம் காதலர் - கெடாத கொள்கையையுடைய எம் காதலர்; வரல் நசைஇ - வருகையை விரும்பி; துஞ்சாது அலவுறு பொழுதில் - கண்ணுறக்கம் இன்றி யாங்கள் வருந்துங் காலத்து; நின் அஞ்சுவரு கடுங்குரல் பயிற்றாதீமே - கேட்டார் அஞ்சத்தக்க நின் பெருங்குரலைக் காட்டா தொழிவாயாக எ-று. கூகை, காதலர் வரல் நசைஇ, அலவுறு பொழுதில் நின் கடுங்குரல் பயிற்றாதீமே, வெண்புழுக்கல் சூட்டொடு மலியப் பேணுதும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. ஊர் என்று பெயர் பெறுவன, அருகே நீர்நலமும் நெல்வயலும் பொருந் தியன வாகலின் ஊர்வாயில் உண்டுறை என்றார். நீர்நிலை ஊர்க்கு வாயில் போறலின் வாயில் என்றார். உண்டுறை, உண்ணும் நீர் கொள்ளும் துறையிடம்; படித்துறையுமாம் தடைஇய, பெருமைப் பொருளதாகிய தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. முதுமரங்களிற் கடவுள் உறையும் என்பது பண்டை மக்களின் கொள்கை யாதலின் கடவுள் முதுமரம் எனப்பட்டது. முதுமரம் எனப் பொதுப்படக் கூறினா ராயினும் சிறப்புடைய ஆலமரம் கொள்ளப்படும். சிவனை, "ஆல்கெழு கடவுள்" என்பது வழக்கு. கடவுள் உறையினும் தான் வெறாது சுற்றத்தோடே உறைதல் கண்டு உடனுறை முனியாது என்றார். கூகை, அண்மைவிளி, மையூன், ஆட்டிறைச்சி. எலியூனைக் கூகை விரும்புவதுபற்றி எலிவான் சூட்டொடு என்றார். "இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை1 "என்று பிறரும் கூறுதல் காண்க. கூகையினது குரல் கேட்போர்க்கு அச்சம் பயப்பது பற்றி அஞ்சுவரு கடுங்குரல் எனப் பட்டது." "பொத்த வரையுட் போழ்வாய்க் கூகை சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்"2 என்பதால் கேட்போர்க்கு அச்ச முண்டாதல் இயல்பாயிற்று; "வல்வாய்க் கூகை, கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்"3 என வருதல் காண்க. பயிற்றாதீமே, முன்னிலை யெதிர்மறை முற்றுவினைத் திரிசொல். இரவுக்குறி நோக்கி வரும் தலைமகன் உண்டுறை கடந்தே ஊர்க்குட் புக வேண்டுதலின். ஆங்கு நிற்கும் முதுமரத்தில் உறையும் கூகையை நோக்கி, "கூகையே, நின் கடுங்குரலால் எம் காதலர் வரவைப் பிறர் அறியப் புலப்படுத்தல் கூடாது என வேண்டுகின்றா ளாகலின் நீ உறையும் முதுமரத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பறிந்து எம்பால் அன்பு கொண்டு அமைதி கொள்ளல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற எம்மூர் வாயில் உண்டுறைத் தடைஇய முதுமரம் என்றார். உண்டுறையும், அதன் கரைக்கண் நிற்கும் முதுமரமும் எமக்கு உரியன; அங்கே உள்ள கடவுள் யாம் வழிபடுவது; அங்கு உறையும் நீ நின் கடுங்குரலால் எம்மை அச்சுறுத்த லாகாது என்றாளாயிற்று. தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர் வாப்பறை அசாவா வலிமுந்து கூகை என்று கூகையைச் சிறப்பித்தாள், வேறு எங்கேனும் சென்று இரை பெறுவதை யொழித்து இம் முதுமரத்தே தங்கிக் கடுங் குரல் எடுக்க வேண்டா என்னும் தன் கருத்தை வற்புறுத்தற்கு, தன் வேண்டுகோளை ஏற்றுக் கடுங்குரல் பயிற்றாவிடின் கூகைக்குத் தான் நல்கும் பரிசு இது என்பாள். மையூன் பொரித்த நெய் வெண்புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எனத் தோழி கூறினாள். இல்லங்களில் கூரையில் வாழும் எலிகளைப் பிடித்து உண்பதில் கூகைகட்கு வேட்கைமிகுதி பற்றி எலிவான் சூட்டொடு எனப் பிரித் தோதினாள். குறி மறுப்பினும், பிழைப்பினும், இடையீடுபடினும், வெளிப்படை குறிப்பு என்ற இருவகையாலும் சேட்படுப் பினும், களவே விரும்பி ஒழுகுகின்றமை பற்றித் தலைமகனை எஞ்சாக் கொள்கை எம் காதலர் என்றும், அவர் வருதல் ஒருதலை யென்பது உணர்ந்து வரவு நோக்கிக் கண்ணுறங்காது வருந்தும் தலைமகள் நிலையினை வரல் நசைஇத் துஞ்சாது அலவுறு பொழுதில் என்றும், அக்காலைக் கூகையின் கடுங் குரல் தனித்து உறைவோர்க்கு அச்சம் பயத்தலின் அஞ்சுவரு கடுங்குரல் என்றும் தோழி கூறினாள். "இவள் தான், மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந்து அரணம் சேரும்"1 என்று பிறரும் கூறுதல் காண்க. "நாற்றமும் தோற்றமும்"1 என்ற நூற்பா வுரையில் இப்பாட்டினை எடுத்தோதி, "இஃது இரவுக்குறி: வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். 84. பாலைபாடிய பெருங் கடுங்கோ உழுவல் அன்பினால் பிணிப்புண்டு இனிது வாழும் தலை மக்கள் வாழ்வில், பொருள் குறித்துத் தலைமகளை மனையில் விட்டுத் தலைமகன் செல்வானாயினன். இன்பமே அன்பின் பயனாகக் கருதி இருந்த தலைமகட்கு இப்பிரிவால் இன்பம் இடையறவு படுதலால் ஆற்றாமை மிகுந்தது. அது கண்ட தோழியும், ஆற்றாளாய்த் தலைவன் உள்ளத்தின் திண்மை யையும் பொருட்காதலையும் எடுத்தோதித் தலைவியை ஆற்று விப்பாளாயினள். அவள் கூற்றுக்களைச் செவி யேற்ற தலைவி, தலைவனுடைய அன்புமிகுதியையும் பொருளது இன்றியமை யாமையையும் உரைத்து, அதனால் தான் ஆற்றுதல் இயலும் என்பதுபட மொழிந்தாள். "நெருநல் நம் காதலர் பிரிவின்றி இவண் இருந்த போது, என் கண்ணும் தோளும் கூந்தலும் பிறவும் பாராட்டி இன்புறுத்தினார்; இன்று அவர்வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம் கடந்து செல்கின்றார்என உழையர் உரைக்கின்றனர்; அவர் அங்ஙனம் செல்வது பொருள் வேட்கை பற்றியன்று; தம்பால் ஒருவர் போந்து இல்லை யெனச் சொல்லி இரப்பாராயின் அவரது இன்மை தீர்த்து இனிது வாழ வைப்பது தலைவரது தலைமைக்கடன் என்பது பற்றியாம்" என்று கூறினாள். இக்கூற்றின்கண், தலைவியது மனையறமாண்பும் அறிவு நலமும் தலை மகனது உள்ளத்து இயல்பும் விளங்குவது கண்ட பெருங்கடுங்கோ, இப்பாட்டின்கண் இவற்றை அமைத்து நாம் இன்புறுமாறு பாடுகின்றார். அச்சுப்பிரதியின் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பெயர் காணப்படவில்லை. கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் திதலை அல்குலும் பலபா ராட்டி நெருநலும் இவணர் மன்னே இன்றே பெருநீர் ஒப்பின் 1பேஎய் வெண்டேர் மரனில் நீளிடை 2மான்நசைஇ யுறூஉம் சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன உவரெழு களரி ஓமையங் காட்டு வெயில்வீற் றிருந்த 3வெம்பலை அருஞ்சுரம் ஏகுவர் என்ப தாமே தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா 4இல்லோர் வாழ்க்கை வல்லா தோரே. இது, பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி சொல்லியது5. உரை கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் - என் கண்ணையும் தோளையும் தண்ணிய மணம் கமழும் கூந்தலையும்; திதலை அல்குலும் பல பாராட்டி - திதலைவரி பரந்த அல்குலையும் பலபடப் பாராட்டி; நெருநலும் இவணர்மன்-நேற்றும் இவ்விடத்தோராய் இருந்தார்; இன்று-; பெருநீர் ஒப்பின் - பெரிய நீர்நிலை போலத் தோன்றுதலால்; பேஎய் வெண்டேர் - பேய்த்தேராகிய கானலை; மரன் இல் நீளிடை - மரஞ்செடிகள் இல்லாத நெடிய வெள்ளிடையில் திரியும்; மான் நசைஇ உறூஉம் - மானினம் கண்டு நீரென விரும்பி யோடும்; சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற உருப்பிடத்துப் பிறவா வெண்ணெய் அன்ன - சுடுமட் பானையில் வைத்து மத்தாற் கடையப் பட்டு வெப்பத்தால் வெண்ணெய் திரளாது சிதறித் தோன்றினாற் போன்ற; உவர் எழு களரின் - உவர்மண் மிக்கிருக்கும் களர்நிலத்தையும்; ஓமையங் காட்டு-ஓமை மரங்கள் நிற்கும் குறுங்காட்டையு முடைய; வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரம் - வெயில் மிகுந்து வெதுப்பும் வெம்மையையுடைய அரிய சுரத்தின்கண்; ஏகும் என்ப - செல்குவர் என உழையர் உரையாநின்றனர்; தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா - தம்பாற் போந்து இரந்தவரது இன்மையைப் போக்கமாட்டாத; இல்லோர் வாழ்க்கை வல்லாதோர் - இல்லின்கண் வறுமையுற்று வாழும் வாழ்க்கையை விரும்பாதார் ஆகலான். எ.று. கண்ணும் தோளும் அல்குலும் பல பாராட்டி, நெருநலும் இவணர்; இன்று, களரியையும் காட்டையுமுடைய அருஞ்சுரம் ஏகுவர் என்ப, இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லோர் வாழ்க்கை வல்லாதோர் ஆகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. எண்ணெயும் பூவும் கூடிய கதுப்பூ என்றற்குத் தண்ணறுங்கதுப்பு என்றார். மகளிர் நலம் விளங்கித் தோன்றும் உறுப்புக்களாதலின் கண் முதலியவற்றைச் சிறப்பித்தார்; "கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் பழநலம் இழந்து பசலை பாய"1 எனப் பிறரும் கூறுதல் காண்க. திதலை மகளிர் அடிவயிற்றில் தோன்றும் வரிகள். திதலை பரந்த அல்குலைத் திதலையல்குல் என்பது வழக்கு "திதலை யல்குல் நின்மகள்"2 என வருதல் காண்க. மன், கழிவுப் பொருட்டு, பெருநீர், பெரிய நீர்நிலை, ஒப்பின், ஒப்பத் தோன்றலால் என ஏதுப்பொருட்டு. மான் நசைஇ உறூஉம் களரி, உவர்எழு களரி என இயையும். சுடுமண் தசும்பு, மண்ணாற் செய்து சுடப்பட்ட குடத்தில் வெயில் வெம்மை மிகாத காலைப்போதிற் கடையினன்றி வெம்மை விளங்கும் போதில் தயிரைக் கடையின் வெண்ணெய் திரண்டு வராமையால் உருப்பிடத்து வெண்ணெய் பிறவாது என்றார். "பாசம் தின்ற தேய்கால் மத்தம். நெய்தெரி யியக்கம் வெளின்முதல் முழங்கும் வைகுபுலர் விடியல்"3 எனப் பிறரும் கூறுதல் காண்க. வெயில் வெம்மை நிலவுங்காற் கடைந்தவழி வெண்ணெய் சிதைந்து உவர்மண் பூத்த நிலம் போல தோன்று தலால் வெண்ணெய் உருப்பிடத் தன்ன உவரெழு களரி என்றார். கானலை நீரென நினைந்து மான்கூட்டம் திரியும் இடம் உவரெழு களர்நில மாதலால், மான் நசைஇ உறூஉம் களரி எனச் சிறப்பிக்கப் பட்டது. ஓமை, பாலை நிலத்தில் நிற்கும் மரவகை அதன் இலை சிறிதா கலின் போதிய நிழல் தரும் இயல்பு அதற்கு இல்லை. இதுபற்றியே பிறாண்டும் "பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர் நிழல்1" என்றார். வீற்றிருத்தல், சிறப்புற இருத்தல், வீறு, பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. வெம்பல், வெதும்புதல்; ஐ. சாரியை; "வெம்பலை யருஞ்சுரம் நலியாது2" என வருதல் காண்க. இரந்தோர்பால் உள்ளது இன்மையாதலின், மாற்றற் குரியது அதுவாயிற்று. அறிவு ஆண்மை பொருள் ஆகிய மூவகை யாற்றலும் செல்வர்பால் உளவா வது, பிறர்க்கு அவர் பயன்படும் பொருட்டா மாதலால், அச்செல்வரைத் தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்ற இல்லோர் வாழ்க்கை வல்லாதோர் என்றார். இல்லோர் வாழ்க்கை என்றவிடத்து ஓர் என்பதை அசைநிலை யாக்கி இல்வாழ்க்கை எனப் பொருளுரைத்தலும் ஒன்று. இரப்போர் இன்மையை மாற்றலாவது. அவர் வேண்டும் பொருளை நல்கி இனிது வாழ்வித்தலாகும். அது செய்ய இயலாத இல்வாழ்வு நல்வாழ் வாகாமையின் வல்லா தோர் என்றார். "தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி நீ ஆகன்மாறே3 "என்று பிறரும் கூறுவது காண்க. தலைமகன் பிரிவின்கண் தலைவியது ஆற்றாமையை, உணர்ந்த தோழி, ஆற்றுவிக்கு முகமாகத் தலைவன்பால் அன்பின்மை கூறினாளாக, அதனை மறுக்க லுற்ற தலைமகள் அவனுடைய காதல்மிகுதியை வற்புறுத்துவாளாய், கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் திதலையல்குலும் பல பாராட்டி நெருநலும் இவணர்மன் என்றாள். மன்னே என்ற தனால் தலைவன்இன்றுகாறும் தலைவியைப் பிரிந்த தில்லை என்பது பெறப்படும். இன்றே வெம்பலை அருஞ்சுரம் ஏகுவர் என்ப என்றாள், அருஞ்சுரத்தின் கொடுமையை எனக்கு உரைப்பின் யான்ஆற்றாது வருந்துவேன் எனக் கருதி அதனை உரையா ராயினும், உழையர் கூறுதலின் ஆற்றாது யான் மேனி வேறுபடுவேனாயினேன் என்றற்கு. வருந்தும் திறமாவனவற்றை உழையர் கூறாராகலான், காதலர் விரைந்து மீள்வாராக என நினைந்து ஆற்றி இருப்ப தல்லது, வேறு ஒன்றும் செய்தற் கில்லேம் என்றா ளாயிற்று. "அருஞ்சுரம் இறப்ப என்ப, வருந்தல் வாழி வாய்க்க அவர்செலவே"4 எனப் பிறாண்டுத் தோழி கூறுதல் காண்க. நெருநல்காறும் பிரிவு கருதா தொழுகிய காதலர் இன்று பொருள்வயிற் பிரிவு மேற் கோடற்குக் காரணம் இது என்பாள். தன் வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லோர் வாழ்க்கை வல்லாதோர் ஆகலான் என்றாள். இதனால் தலைவிபால் புரையறம் தெளிதல் என்ற மெய்ப்பாடு வெளிப்படுதல் காண்க. 85. நல்விளக்குன்றனார் நல்விளக்கனார் எனஅச்சுப்பிரதியிற் காணப்படும் இப்பெயர் ஏடுகளில் நல்விளக்குன்றனார் என்று இருக்கிறது. பி. அ. நாராயணசாமி ஐயரவர்கள் நல்விளக்கு என்பது ஓர் ஊர் என்று கூறுகின்றார். பூங்குன்றன், முதுகுன்றன் என்றாற் போல விளக் குன்றன் என்பது மக்கட் பெயர் வகையுள் ஒன்றாகவும் இருக்கலாம்; ஆனால் விளங்கோடு, விளத்தூர், விளக்குடி, விளக்குன்று என ஊர்கள் தமிழகத்தில் உண்டு. "இவ்விளக் குன்று மலைமண்டலத்தது" எனத் திருவெள்ளறைக் கல்வெட்டுக்களில் பொதுப்படக் குறிக்கப்படுகிறது. விளக்குன்றன் என்ற பெயரையுடைய இவர் நல்லிசைப் புலமையால் நல்விளக்குன்றனார் ஆயினர்; ஏடெழுதினோர் நல்விளக்கனார் எனப் பிழைத்திருக்கலாம். களவின் கண் ஒழுகும் தலைமக்களில், தலைவன் இரவுக் குறிக்கண் வருதலை மேற்கொண்டான். அவன் வரும் நெறியின் கொடுமையையும் இரவு வரவின் அருமையையும் நினைந்த தோழி, தலைவன் வரவை மறுத்து வரைந்து கோடற்கண் அவன் உள்ளத்தைச் செலுத்த முயன்றாள். ஒரு நாள் தலைவன், தலைவி மனையின் சிறைப்புறம் வந்து நின்றானாக, தோழி அதனை யுணர்ந்து தலைவியொடு சொல்லுவாளாய், "தோழி, நெறியருமையும் பிரிவருமையும் நினைந்து நீ கண்கலுழ்ந்து வருந்துகின்றாய்; மேனி மெலிவால் நீ அணிந்த வளையும் தொடியும் நெகிழ்ந்து நீங்குகின்றன; அது கண்டு ஊரவர் அலர் தூற்றுகின்றனர்; அவன் வரும் நெறியை எண்ணின், புலி வழங்குவது அறிந்து அஞ்சிய பிடியானை, தன்னொடு விரைந்து வரமாட்டாத கன்றின்பொருட்டு அது நின்ற விடத்தே தானும் நின்று அதனைச் சூழ்ந்து காவல் புரியும் அருமையுடைத்தாகும்; ஆயினும், தலைமகன், நின்பால் உளதாகிய காதலன்பால் வருதலைத் தவிர்கின்றானில்லை; இனி இரவின்கண் வருதலை அவன் கைவிடுதல் நன்று என்ற கருத்துப்பட மொழிந்தாள். இக்கூற்றின்கண், தலைவியின் காதல் மிகுதியும், அழிவில் கூட்டம் பெறற் கின்மையின் மேனி மெலிவும், ஊரவர் அலர் கூறலும், நெறியின் அருமையும் எடுத்துக் கூறித் தலைமகனை வரைவு கடாவிய தோழியின் மதிநுட்பம் நல்விளக்குன்றனாரது புலமையுள்ளத்தைக் கவர்ந்தமையின் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். ஆய்மலர் மழைக்கண் தெண்பனி1 உறைப்ப வேய்மருள் பணைத்தோள் விறலிழை2 நெகிழ அம்பல் மூதூர் அரவ மாயினும் 3கொடுவரி இரும்புலி 4அஞ்சிக் கடுநடைக் கன்றுடை வேழம் நின்றுகாத் தல்கும் ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி வாரற்க தில்ல தோழி சாரற் கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி 5மகிழும் காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் ஓங்குமலை நாடன்நின் நசையி னானே இது தலைவன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்ப - அழகிய மலர் போன்ற குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைத் துளிக்கவும்; வேய் மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழ - மூங்கில் போலும் பருத்த தோளிடத்துச் சிறந்த தொடியும் முன்கையிடத்து வளையும் நெகிழ்ந்து வீழவும்; அம்பல் மூதூர் அரவம் ஆயினும் - அம்பல் மொழியும் பழமையான ஊரிடத்து அலர்மிக்கு எழுமாயினும்; கொடுவரி இரும்புலி அஞ்சி-வளைந்த வரிகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சி; கன்றுடைக் கடுநடை வேழம் நின்று காத்து அல்கும்-கன்றொடு வரும் கடியநடை யினையுடைய வேழம் அதற்குத் துணையாய் நின்று காத்தொழுகும்; ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி-திணிந்த இருள் பெருகி அச்சம் பொருந்திய சிறுவழியில்; வாரற்க தில்ல-வாரா தொழிவாராக; தோழி-; சாரல்-மலைச்சாரலிடத்தே; கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை-கானத்துவேட்டுவன் வீழ்த்திய முள்ளம் பன்றியின் கொழுவிய ஊனை; தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி-தேன்மணம் கமழும் கூந்தலையுடைய குறமகள்; மகிழும் காந்தளம் சிறுகுடி பகுக்கும் - அவ்வூன் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் காந்தள் வளர்ந்துள்ள சிறுகுடியில் வாழும் ஏனைக் குறவர்க்குப் பகுத்தளிக்கும்; ஓங்குமலை நாடன் நின் நசையினான்-உயர்ந்த மலைநாட னாகிய காதலன் நின்பாற் கொண்டகாதலால் எ.று. நாடனாகிய காதலர், நின் நசையினால், கண்பனி உறைப்பவும், தோள் இழை நெகிழவும். மூதூர் அரவமாயினும், இருள் கடுகிய சிறுநெறி வாரற்க தில்ல எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கண்ணீர் துளிதுளியாக வீழ்தலைக் குறிக்கக் கண்பனி உறைப்ப என்றார். வேய்மருள் தோள் என்றமையின் பணைத்தோள் என்பது பருத்த தோள் என்று பொருள்படுவ தாயிற்று. தொடியும் வனையும் ஏனை அணிவகையிற் சிறந்தமை விளங்க. விறலிழை என்றார். அம்பலும் அலரும் காதலொழுக்கத்துக்குச் சிறந்தமையின் அம்பல் மூதூர் என்றும் அரவமாயினும் என்றும் கூறினார். புலியின் மேனியிற் கிடக்கும்வரிகள் வளைந்திருப்பதுபற்றிக் கொடுவரிஎன்ப; பிறரும் "கொடுவரி இரும்புலி1'' என்பது காண்க. வேழம் கடுநடை யுடைய தாயினும் கன்றுடன் வருதலால் கடுமை மேற்கொள்ளாது அக்கன்று நின்றாங்கு நின்று காத்து அல்கும் என்றார். ஒருபால் புலியும் ஒருபால் கன்றுடைவேழமும் வழங்கும் சிறுநெறி யாதலால் அஞ்சுவரு சிறுநெறி யெனப்பட்டது. தில் விழைவின் கண்வந்தது. மனைக்கிழமை கொடிச்சிக்கு உரிய தாகலின், கானவன் கொணர்ந்த முளவுமான் கொழுங்குறையைச் சிறுகுடியி லுள்ளார்க்கு மனைவி பகுத்தளிக்க லுற்றாள் என அறிக. களவின்கண் தலைவன் வாரா தொழிகுவ னாயின் தலைமகட்கு உளதாகும் மனத்துயரை அவளது மேனி மெலிவினும் கண்ணீர் முந்துற்று வெளிப்படுத்தலின். ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்ப என்றும் மேனியின்கண் உண்டாகிய மெலிவை இழைகள் நெகிழ்ந்தோடிக் காட்டுதலால் வேய்மருள் பணைத்தோள் விறலிழை நெகிழ என்றும், கண்கலுழ்ச்சியும் மேனிமெலிவும் புறத்தோர் காணின் அலர் கூறுதற்கு ஏதுவாதலால் அம்பல் மூதூர் அரவ மாயினும் என்றும் தோழி கூறினாள். வாராவிடின் வரும் வருத்தத்தினும் இரவின் கண் வரும் நெறியின் ஏதம் பெரி தென்பது தோன்ற வாரற்க தில்ல தோழி என்றாள். இது தலைவியை நோக்கிக் கூறிற் றாயினும், தலைமகற்கே சிறப்பாக உரைத்தவாறு, நெறியின் ஏதம் இது என விளக்குவாளாய், கொடுவரியிரும்புலி யஞ்சிக் கடுநடைக் கன்றுடை வேழம் நின்றுகாத் தல்கும் ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி என்றாள். "பரியது கூர்ங்கோட்ட தாயினும்" புலி தாக்குறின் களிறு அஞ்சு மென்ப வாயின், பிடி யானைக்குக் கோடு இன்மையின் அது பெரிதும் அஞ்சும் என்றற்கு இரும்புலி யஞ்சி என்றாள். கடுநடையுடைய தாயினும் கன்றுடைப் பிடி யாதலால் கடுகிச் செல்லாது கன்றினைக் காத்தற் பொருட்டு அது நின்றுழி நின்று நோக்குவ தாயிற் றெனவும், அந்நிலையில் எதனைக் காணினும் அச்சத்தால் தாக்கித் தீங்கு செய்தல் ஒருதலை யெனவும் எடுத்துரைத்தாள். இரவின்கண் வருவோற்கு எதிரிலும் பக்கலிலும் உள்ளவை இன்னவை என்று முன்னறிந்து கொள்ளாவாறு திணிந்த இருள் சூழ்ந்திருப்பது குறிப்பாள். ஆரிருள் என்றும், ஒருகால் தீங்கு புரியும் விலங்கும் பிறவும் எதிர்ப்படின் ஒதுங்குதற் கேற்ற அகல மில்லாத நெறி என்பாள் அஞ்சுவரு சிறுநெறி என்றும் தெளிவித்தாள். கன்றின் பொருட்டு உயிரைப் பொருள் எனக் கருதாது பிடியானை நின்று காத்து அல்கும் என்றது, தலைவி தலைவனிடத்துக் கொண்ட காதலின் பொருட்டு மேனி வேறு பாடும் அலரு மாகியவற்றைப் பொருளாகக் கருதாது மனைக்கண் உறையுமாறு கூறியதாகக் கொள்க. கானவன் கொணர்ந்த முளவுமான் கொழுங்குறையைக் கொடிச்சி யேற்று அது கண்டு மகிழும் சிறுகுடியில் உள்ளார்க்குப் பகுத்தளிப்பள் என்றது. தலைவன் வரைவு வேண்டி விடும் சான்றோரைத் தலைவியின் பெற்றோர் வரவேற்று ஊரவர்க்குத் தெரிவித்து மணன் அயர்வர் என்றவாறு; ஆகவே, இரவுவருதலை விடுத்து வரைவொடு வருவாயாக எனத் தலைமகனைக் குறிப்பாய் வரைவு கடாயவாறு பெறப்படும். 86. நக்கீரர் மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் தலைமகன் அறம் செய்தற்கு வேண்டும் பொருள் குறித்துத் தலைமகளின் நீங்கிச் செல்ல வேண்டியவ னானான். அவன் பிரிவுக்குறிப்பை உணர்ந்த தலைமகள் அவன் மீண்டு வருதற்குரிய காலத்தை அறிய விழைந்தாளாக, அவன் தான் பிரியுங் காலமாகிய அற்சிரத்தைக் காட்டி, யான் இளவேனிற் பருவ வரவில் வருகுவல்" என்று சொல்லிப் பிரிந்தான். அவன் குறித்த பருவம் நோக்கித் தலைவியும் பிரிவாற்றி இருந்தாள். தலைமகனும் தான் குறித்தவண்ணமே செய்வினையை முற்றுவித்துக் கொண்டு மீண்டான். அது கண்ட தோழி பேருவகை யுற்றுத் தலைமகளை நோக்கி, "தோழி, அற்சிரக்காலத்தில் பனி மிகுதியால் உடல் நடுங்கி யாம் இவண் இருந்து வருந்தப் பிரிந்து சென்ற காதலர், கோங்கம் முகைஅவிழ ஈங்கையின் தளிர் நுடங்கும் இந்த இளவேனிற் பருவத்தில் தாம் குறித்த பருவம் இது என எண்ணிப் பொய்யாது வந்து சேர்ந்தனர்; ஆதலால், தெளிவாக அவர் அறவோரே யாவர்" என்று கூறினாள். இக் கூற்றின்கண், குறித்த பருவமாகிய இளவேனில் வரவில் வந்தது கண்டு உவகை மிக்க தலைமகள் உள்ளத்தில் எதிரொலி யாகத் தோழி. மகிழ்ச்சி மிகுந்து, தலைவனை அறவரெனப் பாராட்டித் தலைமக்களது இல்வாழ்வு அறநெறியில் இயங்கும் திறம் புலப்படக் கூறுதல் கண்டு வியந்த நக்கீரனார் இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். அறவர் வாழி தோழி மறவர் வேலென விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம் நடுங்கக் 1கண்டோர் கைவல் 2கம்மியன் தையுபு சொரிந்த 3வயந்தக உருவின வாகிப் பயந்த கோங்கம் குவிமுகை அவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் 4முன்னிவந் தோரே. இது, குறித்த பருவத்தில் வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. உரை தோழி -; வாழி -; அறவர்-நம் காதலர் அறவோரே யாவர்; மறவர் வேல் என விரிந்த கதுப்பின் - மறவர் ஏந்தும் வேற் படையின் இலைபோலும் கதுப்பினையும்; தோல - தோலை யுமுடைய; பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் - பாண்டில் போலப் பகன்றையின் பூக்கள் மலரும்; கடும்பனி அற்சிரம் நடுங்கக் கண்டோர் - மிக்க பனிப்பைச் செய்யும் அற்சிரக் காலத்தில் குளிரால் நாம் உடல் நடுங்குதலைக் கண்டு வைத்தும் பிரிந்து சென்ற காதலர்; கைவல் கம்மியன் தையுபு சொரிந்த வயந்தக உருவினவாகி - பொற்பணி செய்வதில் வல்லுநனாகிய பொற்கொல்லன் ஒப்பனை அமைய மணிகளைச் சொரிந்து செய்த வயந்தகம் போலும் உருவினை யுடையவாய்; கோங்கம் பயந்த குவி முகை அவிழ - கோங்குமரம் ஈன்ற இதழ் குவிந்த முகைகள் மலர்ந்து விளங்க; ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கும் - ஈங்கையின் அழகிய தளிர்கள் மெல்ல அசையும்; முற்றா வேனில் முன்னி வந்தோர் -இளவேனிற் பருவத்தின் வரவுகண்டு வந்து சேர்ந்தா ராகலான் எ.று. கண்டோர், கோங்கம் முகையவிழ, ஈங்கை நற்றளிர் நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோ ராகலான், தோழி, அறவர், காண், வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அடி சிறுத்து இடை அகன்று நுனி கூரிதாய் விளங்கும் பகன்றைப் பூவின் இதழ்க்கு மறவர் ஏந்தும் வேலின் இலை உவமமாயிற்று. அகவிதழ் வேலின் இலை போலவும் புறவிதழ் தோல்போலவும் இருப்பதுபற்றி வேல் என விரிந்த கதுப்பின் என்றும் தோல என்றும் கூறினார். இதழின் இடையகன்ற பக்கம் கதுப்பு எனப்பட்டது. பாண்டில், வள்ளம், பகன்றை, சிவ தைக்கொடி; இதனைக் "குரூஉக்கொடிப் பகன்றை1" எனச் சான்றோர் குறிப்பது காண்க. மேலும், இப்பகன்றையின் தோற்றத்தைப் "புதல் தொறும் பகன்றை நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின் வாலிய மலர"2 எனவும், "பேரிலைப் பகன்றை வான்மலர் பனி நிறைந்தது போல், பால் பெய் வள்ளம் சால்கை பற்றி3" எனவும் சான்றோர் கூறுவர். கடும்பனியில் தனித்திருப்போர்க்கு உடல் நடுங்குதல் இயல் பாதலால் கடும்பனி அற்சிரம் நடுங்க என்றார். கம்மியன், ஈண்டுப் பொற்கொல்லன் மேற்று, தையல், ஒப்பனை செய்தல் பன்னிற மணிகளைச் சொரிந்து அழகுறச் செய்தமைத்த வயந்தகம் என்னும் அணியினைக் கூறுதலின், தையுபு சொரிந்த வயந்தகம் என்றார். சொரிந்த என்றதனால் மணிகள் வருவிக்கப்பட்டன. வேனிற் காலத்திற் கோங்கம் மலர்தலும், ஈங்கை தளிர்த்தலும் இயற்கை யாதலால் கோங்கம் குவிமுகை அவிழ என்றும், ஈங்கை நற்றளிர் நயவா நுடங்கும் என்றும் கூறினார். நயவர நுடங்குத லாவது மெல்லஅசைந்து வருடுதல். முற்றா வேனில், இளவேனில். அறவர் என எடுத்து மொழிதலின், முன்னி வந்தோர் என்றது ஏது வாயிற்று. மனைவாழ்வில் தலைவன் பிரிந்திருக்கும் காலத்துத் தலைவியிடம் அவனைப்பற்றிச் சொல்லாடும் தோழி, தலைவி யெய்திய மெலிவும் வேறுபாடும் சுட்டிக் கொடுமை யுரைக்கும் இயல்பினளாகிய தான் அவ்வாறின்றி மகிழ்ந்து கூறும் குறிப்புத் தோன்ற அறவர் வாழி தோழி என்றாள். தோழி யென்றது தலைவியை, தலைவனொடு பிரிவின்றிக் கூடி யுறைந்தபோது நிகழ்ந்ததனை எடுத்தோதி அவனது காதல் மிகுதியை நினைப்பிப்பாளாய்ப் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம் நடுங்கக் கண்டோர் என்றும், அற்சிரக்காலத்து வாடைக்கு ஆற்றாது கவவுக் கடியளாய்த் தலைவி இருந்ததை நேரிற் கண்டு பெருங் காதலாற் பிணிப் புண்டு தலைமகன் உடன் உறைந்த செயற் சிறப்பை விதந்து நடுங்கக் கண்டோர் என்றும் இயம்பினாள். அறவர்வாழி தோழி என முன் மொழிந்த தோழி அடுத்தபடியாக நடுங்கக் கண்டோர் என்றது. தலைவி உள்ளத்தில் வியப்பை உண்டு பண்ணவும், அவட்குத் தலைவனது வரவுக் குறிப்பு விளங்க, ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் என்றும், கோங்கம் மலரும் வேனில் எனத் தலைவன், தான்மீண்டுவருதற்கெனக் குறித்த பருவம் வருமுன்பே வந்தமை தோன்ற முற்றா வேனில் முன்னி வந்தோர் என்றும் மொழிந்தாள் கோங்கை முகை அவிழ்தலும் ஈங்கை தளிரீன்று நுடங்குதலும் கூறியது. தலைவன் வரவால் தலைவி மெய்தளிர்த்தலும் மேனிநிறம் கிளர்தலும் சுட்டி நின்றன. இது கேட்டுத் தலைவி உவகை மிகுவாளாவது பயன். 87. நக்கண்ணையார் தலைமைப்பண்பும் இளமைநலமும் கட்டழகும் பொருந்திய ஆணும் பெண்ணுமாகிய தலைமக்கள், களவிற் கண்டு உணர்வு கலந்து ஒருவரை யொருவர் இன்றியமையாத காதலன்பு பெருகி மணந்து கோடற் குரிய செவ்வி எய்தினர். அந்நிலையில், தலைமகன் கடமை காரணமாகத் தலைமகளைப் பிரிந்து வேற்றூர்க்குச் சென்றான். பிரிவுத்துயர் மிக்கு வருத்தவும் தலைவி அதனை ஆற்றாளாயினள். அவளது நினைவெல்லாம் அவனொடு கூடி இன்புற்ற கானற்காட்சியிலும் கடற்கரையில் வாழும் பரதவர் எய்தும் மகிழ்ச்சியிலும் ஒன்றியிருந்தன; அவள் கண்ட கனவிலும் அந்நிகழ்ச்சிகளே தோன்றின. ஒருநாள் அவள், கண்ட கனவு நனவு போல இருந்தமையால் விழித்தெழுந்தாள்; அவட்கு வருத்தம் மிகுந்தது. அதனால், அவள்பால் மெய்ப்பட்ட மெலிவை நோக்கிய தோழி நனவின்கண் காதலனைக் காணா தொழியினும் கனவிற் கண்டு இன்புறலாம்; அந்நலம் குறித்தன்றோ கனவு நிகழ்கின்றது; ஆகலான், நீ வருந்தி மெலிவுறல் வேண்டா என்றாளாக, தலைமகள், "நனவின்கண் நல்காத காதலரைக் கனவின்கட் காண்பது உண்டு; ஆயினும் சோழர் குடிக்குரிய அழிசி என்பானுடைய காட்டில் நிற்கும் நெல்லிமரத்தின் பழச்சுவையை நினைந்து, அதனை உண்பது போலக் கனவு கண்ட வௌவால், கண் விழித்தவுடன் அது பொய்யாய்க் கழிந்தமைக்கு வருந்துவது போல, யான் கண்ட கனவும் கழிந்து மறைந்தமையின் வருந்தி மெலிவேனாயினேன்" என்றாள். இக்கூற்றின்கண் களவுநெறியில் தலைமகள், தலை மகனோடு கூடியிருந்த இன்பத்தைக் கனவிற் கண்டு எய்திய மெலிவைத் தோழியோடு நிகழ்த்திய சொல்லாட்டின்கண் புறத்தோர் அறியாத வாறு இனிது உரைக்கும் நயம் கண்ட நக்கண்ணையார் இப் பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். உள்ளூர் 1மாஅத்த முள்ளெயிற்று வாவல் ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின் வெல்போர்ச் 2சோழன் அழிசியம் பெருங்காட்டு நெல்லியம் புளிச்சுவை கனவி யாஅங்கு அதுகழிந் தன்றே தோழி அவர்நாட்டுப் பனியரும் புடைந்த பெருந்தாட் புன்னை துறைமேய் இப்பி 1ஈர்ம்புறத் துறைக்கும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்தஅப் பகலே. இது, வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது. உரை உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்று வாவல் - ஊர்நடுவே நின்ற மாமரத்தின்கண் தங்கும் முட்போன்ற பற்களை புடைய வௌவால்; ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில் பொழுதில் - உயர்ந்த கிளையில் தொங்கிக்கொண்டே உறங்கும் காலையில்; வெல்போர்ச் சோழன் அழிசியம் பெருங்காட்டு - வெல்லு கின்ற போரையுடைய சோழனாகிய அழிசியது பெரிய காட்டில் வளர்ந்திருக்கும்; நெல்லியம் புளிச்சுவை கனவியாங்கு - நெல்லிமரத்தின் கனியினது புளிச்சுவையை நுகர்வதாகக் கனாக்கண்டு கண்விழித்து வருந்திய பகல்போன்று; அது கழிந்தன்று - அந்நுகர்ச்சிதானும் இலதாய்க் கழிந்தது; தோழி; அவர் நாட்டுப் பனியரும்பு உடைந்த பெருந்தாள் புன்னை- தலைவருடைய நாட்டில் அரும்பு மலர்ந்த பெரிய அடியை யுடைய புன்னையின் தாது; துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும் - நீர்த்துறைக்கண்ணே மேயும் இப்பியினது ஓட்டின் புறத்தே படிந்து அதனை மறைக்கும்; சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்-சிறுகுடிக்கண் வாழும் பரதவர் நறவுண்டு மகிழும் மகிழ்ச்சியையும்; பெருந்தண் கானலும் - பெரிய தண்ணிய கானற்சோலையையும்; நினைந்த அப்பகல் -நினைந்து கனவிற் கண்டு இன்புற்ற அப்பொழுது எ-று. தோழி, அவர் நாட்டுப் பரதவர் மகிழ்ச்சியும், பெருந்தண் கானலும், நினைந்து கனவிற்கண்டு இன்புற்ற அப்பகல், வாவல் தூங்குதுயில் பொழுதின் நெல்லியம் புளிச்சுவை கனவியாங்கு. அது கழிந்தன்று எனக்கூட்டி வினைமுடிவு செய்க. ஊர்நடுவே நின்ற பெருமரங்களில் வௌவால்கள் வாழ்வது இயல் பாதலின், ஊர் நடுநின்ற மாமரத்தை ஈண்டுச் சிறப்பித்து ஓதினார். வாவல், புள்ளினம் போலப் பறக்கும் இயல்பிற் றாயினும், விலங்கினம் போலக் குட்டி ஈன்று பால் கொடுத் தலும் வாயிற் பல்லும் உடைமைப்பற்றி முள்ளெயிற்று வாவல் எனப்பட்டது. பகற்போதில் மரத்தில் உயர்ந்த கிளைகளைப் பற்றித் தலை கீழாய்த் தொங்கிக் கொண்டே உறங்குவதனால் தூங்குதுயில் என்றார். பகற் போதில் உறங்குவதும் இரவுப் போதில் உணவுதேடிச் சேறலும் வாவற்கு இயல்பாகலின், பொழுது என்றது பகற் போதாயிற்று. அழிசி என்பான் சோழர்குடித் தோன்றல்களுள் ஒருவனாய்ப் போர்ப் புகழ் பெற்று விளங்கினவனாதலால், வெல் போர்ச் சோழன் அழிசி என்றும், அவன்நாட்டுக் காட்டைப் பெருங்காடு என்றும் கூறினார். அழிசியைச் சேந்தன் என்பானுக்குத் தந்தை யென்றும். அவனது ஊர் காவிரி நாட்டு ஆர்க்காடு என்றும் இவ்வாசிரியரே பிறிதோரிடத்தில்1 கூறுவர். பிற்காலத்தே அழிசியின் பெருங்காடு ஊராயிற்று; ஆயினும் அதன்பெயர் மாறாது அழிசிக்காடு என இருந்து பின் அசிக்காடு என மருவியதை உடையார் பாளையப் பகுதியிலுள்ள கோவிந்த புத்தூர்ச் சிவன் கோயில் கல்வெட்டால் அறிகின்றோம். "இராசநாராயண வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டு அசிக் காடு2" என அக்கல்வெட்டுக் குறிக்கிறது. கனவிய ஆங்கு என்பது கனவியாங்கு என வந்தது. பகற்போதுகளில் பெருமரங்களின் நெடுஞ்சினைகளில் தங்கும் வாவல் இரவுப்போதிற் சென்று மேய்ந்துள்ள நெல்லியின் புளிச்சுவையைக் கனவும் என்றது களவுக் காலத்தில் குறியிடத்தே தலைமகனைக் கண்டு இன்புற்ற அவனது மார்பின் முயக்கத்தை அவன் பிரிந்திருக்கும் இப் பொழுதில், தலைவி கனவிற் கண்டமை புலப்படுத்தி நின்றது. புளிச்சுவையை நினைந்தவழி நாவில் நீரூறி இன்பம் செய்தல் போலக் காதலன் மார்பும் நினைந்தவழித் தலைமகட்கு இன்பம் செய்தலின் நெல்லியின் புளிச்சுவையை விதந்து கூறினாள். "ஊர, புளிங்காய் வேட்கைத்தன்று நின் மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே3 எனப் பிறரும் கூறுதல் காண்க. துறையிடத்து மேயும் இப்பியின் புறத்தே புன்னைத் தாதினை உதிர்க்கும் என்றது, கானற்றுறைக்கண் விளையாடி யிருந்த தனக்குத்தலைமகன் போந்து பூவும் தழையும் தந்து செய்த தலையளியைக் குறிப்பாக உணர்த்திற்று. சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சி காண வந்த விடத்துத் தலைமகனை எதிர்ப் பட்டமையும், அதுவே வாயிலாகக் கானற் சோலைக்கண் குறிசெய்து கூடி யொழுகிய திறமும் சுட்டி அவ்விரண் டினையும் எடுத்து மொழிந்தாள். இந்நிகழ்ச்சிகளைக் கனவிற் கண்டு இன்பம் ஆரப் பெறாமையால் மயங்கி மொழிபவள் இவ்வாறு கூறினாள். இது கனவொடு மயங்கல். 88. நல்லந்துவனார் நல்லந்துவனார் என்னும் பெயர் நவ்வந்துவனார் என்று கொள்ளுமாறு ஏட்டில் காணப்படுவதும் உண்டு. இது பற்றியே கலித்தொகைப் பதிப்பாசிரியரான இ. வை. அனந்தராமையர் இவர் பெயரை நவ்வந்துவனார் என்றே கொண்டார். அந்துவன் என்பது இவரது இயற்பெயர். இவரைமதுரையாசிரியர் எனச் சிறப்பித்து உரைப்பதும் உண்டு, மதுரை திருப்பரங்குன்றம் வையை முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுதலால், அக்கூற்றுப் பொருத்தமாகவே யுளது. ஆசிரியர்எனச் சிறப்பிக்கப்படுவதால் இவர்அந்தணராதல் வேண்டும் எனச் சிலர் உரைக்கின்றனர்; அவர்கள் அந்தணர் என்ற சொல்லின் வரலாறு அறியார். பண்டைநாளில் அந்தணர்என்ற சொல் துறவிகட்கே வழங்கிற்று. பார்ப்பனர்முதல் வேளாளர் ஈறாக எல்லாரும் துறவு பூண்டு அந்தணராக விளங்கினர்; பிற்காலத்தில் துறவு பூண்ட பார்ப்பனத் துறவுகளிடையே வழங்கிய அந்தணர் என்ற சொல் பாாப்பனச் சாதிக்கும் ஏறிற்று. இவ்வரலாறு காணாமல் அந்தணர் என்பது பார்ப்பனர்க்கே உரிய பெயராய்த் தொன்றுதொட்டு வருவதாக எண்ணிப் பேசுவதும் எழுதுவதும் உண்மை யறிவுடையார் செய்வனவல்ல. ஆசிரியர் என்ற சிறப்பு அந்தணர்க்கே உரிய தென்பது உண்மை யன்று; அந்தணராகிய கபிலரைச் சான்றோர் எவரும் ஆசிரியர் என்று சிறப்பித்ததே இல்லை; மேலும், ஆசிரியர் என்ற பெயர் தொழிற் சிறப்புணர்த்தும் பெயரே யன்றிச் சாதியைக் குறிக்கும் பெயராகத் தமிழில் முன்னாளில் வழங்கினதில்லை; வழங்குவதும் இல்லை. உண்மைக்கு மாறாய இக்கருத்துக்கள். தமிழர் தமிழை மறந்திருந்த அற்றம் நோக்கிப் புகுத்தப்பட்டவை. பார்ப்பனர் முதலிய நால்வருள்ளும் துறவு பூண்டு அறம் உரைக்கும் தொழிலராகிய அனைவர்க்கும் அந்தணர் என்ற சொல் உரியதென்பதும் ஆசிரியர் என்பது சாதிப் பெயரன்று என்பதும் தெளிய உணர்ந்து கொள்ளற் குரியனவாம். இந்த நல்லந்துவனார் என்ற நல்லிசைச் சான்றோ ருடைய பாட்டில், சிவன், முருகன், திருமால், திருமகள், கண்ணன், பிரமன் ஆகிய தெய்வங்களும், வேதியர் வேள்வியும், அந்தணர் யோக நிலையும், மகளிர் தைந்நீராட்டும் பிறவும் காணப் படுகின்றன. சான்றோர் இருந்த பேரவையின் சால்பையும் தவத்தின் மாண்பையும் வினையின் இயல்பையும் இயற்கைக் காட்சியினையும் மிக்க இன்ப முண்டாகக் கூறுவதில் நல்லந்துவனார் ஏற்றம் மிக்க இலங்குகின்றார். வானம்பாடி மழைத்துளி பெற்று வருத்தம் நீங்குவதும், யாழிசைத்து மான்களை வஞ்சிப் பதும் வானநூற் செய்திகளும் நீர் விளையாட்டு வகைகளும் இவர் பாட்டுக்களில் இனிய இடம் பெறுகின்றன. தலைமக்கள் தம்முட் காதலன்பால் உறவுகொண்டு களவொழுக்கம் மேற்கொண்டனர். அவ்வொழுக்கத்தின் விளைவாக இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாத உண்மைக் காதல் நிலையை எய்த வேண்டுமன்றோ? அதுகுறித்துத் தலைமகன் தலைமகளை விரைவில் வரைந்து கொள்ளாது களவை நீட்டித்தான். தலைமகள் உள்ளத்துக் காதல் இவ்வாற்றால் பெருகி அவனையின்றிச் சிறிது போதும் அமைதலாற்றாத வளர்ச்சி எய்திற்று. அதனை எதிர்நோக்கி யிருந்த அத்தலைமகன் ஓர் இரவுப்போதில் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நின்றான். அதனை உணர்ந்த தோழி, தலைமகளைக் குறியிடத்தே கொண்டு செல்பவள், சிறைப்புறத்தே நின்ற அவன் செவிப்படுமாறு அவளோடு உரையாடலுற்று, "தோழி, நாம் எய்தி வருந்தும் கலக்கம் பற்றிப் பழவினையை நொந்து மயங்குவது என்னை? பெருமழையிற் பட்ட உப்புக் குவியல் கரைந்து உருகிக் கெடுவதுபோல, நின் மேனி நலம், தலைவனது காதற்றொடர்பால் எழுந்த வருத்தத்தால் மெலிந்து கெடுவது நினைந்து யான் பெரிதும் அஞ்சுகின்றேன்; ஆகலான், நீ வருந்துதல் வேண்டா; நாம் நேரே காதலர்பால் சென்று நமது மிக்க வருத்தத்தைத் தெரிவித்து வருவோம்; அவரும் நம்பால் அருள் சிறந்து தலையளி செய்வர்; என்னை யெனின், அதோ பார்; தம்மையுடைய தலைவனான நம் காதலரது அன்பில்லாத ஒழுக்கத்தால் நம்பால் உளதாகிய மெலிவைக் காணப் பொறாது நடுவு நிற்றலை மிகவுடையன வாதலால், அவருடைய பழமுதிர் குன்றுகள் அருவியே கண்ணீராகச் சொரிந்து அழாநின்றன" என்றாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், தலைமகட்குத் தலை வனது இன்றியமையாமை தனக்குரிய எல்லையை முற்றி மெலிவு தோற்றியிருப்பதை, அவனுடைய குன்றங்கள் கண்டு கண்ணீர் சொரிந்து காட்டுகின்றன. ஆகலான், நாம் நாண் வரம்பு இகந்து செல்வேமாயினும், அவன் தலையளி செய்வன் என அறக்கழி வுடையன கருதுமாற்றால் விரைந்து வரைவு மேற்கொள்ளுமாறு தலைவனைத் தூண்டும் திறம் விளங்குவது கண்ட நல்லந்துவனார் அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். யாம்செய் 1தொல்வினைக் கெவன்பே துற்றனை வருந்தல் வாழி தோழி 2யாஞ்சேர்ந்து உரைத்தனம் வருகம் எழுமதி 3புணர்திரைக கடல்விளை யமிழ்தம் பெயற்கேற் றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் 4உதுக்காண் தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி நயம்பெரி துடைமையின் உயங்கல் 5தாங்காது கண்ணீர் அருவி யாக 6அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப் புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது. உரை யாம் செய் தொல்வினைக்கு எவன்பேதுற்றனை-பண்டு நாம் செய்த பழவினை போந்து வருத்துதற்கு மயங்கி வருந்துவது என்ன பயனுடைத்தாம்; தோழி-; வாழி-; வருந்தல்-அஃது அறிவிலார் செயலாதலால் இனி நீ வருந்துதல் ஒழிக; யாம் சேர்ந்து உரைத்தனம் வருகம் எழுமதி-நாமே அவர்பாற் சென்று நமது வருத்தத்தை உரைத்து வருவேம், எழுவாயாக; புணர்திரைக் கடல்விளை அமிழ்தம் பெயற்கேற் றாஅங்கு-ஒன்றை யொன்று தொடர்ந்து வரும் அலைகளையுடைய கடல்நீரால் விளைந்த உப்புக் குவியல் மழைநீரை யேற்றுக் கரைந்து கெடுவதுபோல; உருகி யுகுதல் அஞ்சுவல்-நீ உள்ளம் உருகி உருக்குலைதற்கு யான் அஞ்சுகின்றேன்; உதுக்காண்-அதோ பார்; தம்மோன் நம்வயின் கொடுமை ஏற்றி-தம்மை உடையனாகிய தலைமகன் நம்பாற் செய்த கொடுமையைத் தமக்குச் செய்ததாக ஏற்று; நயம் பெரிது உடைமையின்-தகுதியாகிய அருள் மிகவுடைமையான்; உயங்கல் தாங்காது-வருத்தம் பொறாமல்; அருவி கண்ணீராக அழும்-அருவி நீரையே கண்ணீராகக் காட்டி அழாநிற்கின்றது; தோழி-; அவர் பழமுதிர் குன்று-பழவகைகள் கனிந்து உதிரும் சோலை நிறைந்த அவரது குன்றம் எ.று. தோழி, தொல்வினைக்கு எவன் பேதுற்றனை; வாழி, வருந்தல்; உருகி யுகுதல் அஞ்சுவல்; யாம் சேர்ந்து உரைத்தனம் வருகம், எழுமதி; உதுக்காண்; தம்மோன் நம்வயிற் கொடுமை தம்மேல் ஏற்றி, நயம் உடைமையின், தாங்கல் செல்லாது. அருவி கண்ணீராக அவர் குன்று அழும்; ஆகலான் அவர் தவறாது அருளுவர் எனக் கூட்டி வினை முடிவு செய்க. தொல்வினை, பழவினை; அஃது இப்பொழுது செய்யப்படாது முன்பு எப்பொழுதோ முற்பிறவியிலோ செய்த வினை என்பதாம். ஒருவன் ஒருவினையைச் செய்யின், அவ்வினையின் விளைவாகிய நலம் தீங்குகளை நுகர்தற் குரியவன் அவனேயாகும்; நலந்தீமைகளாகியஅப்பயனை அவன் நுகர்ந்தாலன்றி அவ்வினையின் தொடர்பு நீங்காது. வினைப்பயன் உடனே நுகரப்படுவதும் பின்னர் நுகரப்படுவதும் உண்டு. வினை நிகழும் போதேபயனும் உடன்தோன்றி உருப்படுத்தலால், அப்பயன் விளைந்து முற்றும் போது அவ்வினை பழமையாகிறது. வினை செய்யும் ஒருவன் உடம்பு, அதன் பயன் நுகர வருதற்குள் வலிகுன்றி இறந்து போமாயின், அவனது உயிர் எடுக்கும் மறுவுடம்பின்கண் அப்பயன் நுகரப்படும். வினை செய்த உயிரை அதன் பயன் தானே அடைய முடியாதாகலின். அதனை உயிர் நுகருமாறு கூட்டுபவன் எல்லாம் வல்ல இறைவன்; அவன் நீதி பலவும் தன்னுருவாக உடைய வனாதலால், வினை செய்த உயிர் எடுக்கும் உடம்பையும் அவ்வுடம்பொடு கூடி அப்பயனை நுகர்தற் குரிய இடம் கால முதலியவற்றையும் அவன் முன்கூட்டியே அறிந்து நுகர் விப்பன். அப்பயன் தானும் உடனே நுகரப்படாது பின்னர் ஒருகால் நுகரப்படுமிடத்து, பழவினைப் பயன் எனப்படும். பழவினை, தொல்வினை எனப்படுவதும் இதுபற்றியே. வினை யின்றிப் பயன் இல்லை ஆதலால், பயனை வினை யென்பது பெருவழக்கு, வினையொடு பிறந்து வினை வளர வளர்ந்து அது முடியுங்கால் தோன்றுதலின் பயனை, ஊழ் என்றும், ஊழ்வினை என்றும் சான்றோர் கூறுவர். ஊழ்த்தல் வளர்ந்து முற்றுதல். ஊழ்மலர், ஊழ்கனி என்பது போல ஊழ்வினை யென்பது வினைத்தொகை, ஆக்கம் தருமிடத்து ஊழ்வினை ஆகூழ் என்றும், கேடு தருங்கால் போகூழ் என்றும் வழங்கும். ஊழ்வினை ஊழ் என்றும் வழங்கும். பேதுறவு, அறிவுமயக்கம், உரைத்தனம், முற்றெச்சம், கடல் நீரில் தோன்றி நிலத்திடை விளைவது பற்றிக் கடல்விளை அமிழ்தம் என உப்பைக் கூறினர். உயிர்கட்கு இன்றியமையாத உடலிலும், ஏனை உலகியற் பொருள்களான நீர் நிலம் காற்று ஆகியவற்றிலும் கலந்து நின்று உயிர்கட்கு உலகவாழ்வு நெடிது நிலைபெறச் செய்தலின், உப்பை அமிழ்தம் என்று சிறப்பித்தார். நிலத்திலும் ஏனை மரஞ்செடி கொடிகளிலும் பிற பொருள்களிலும் உப்பு உண்டு எனினும், பெரும்பான்மையான உப்புக் கடல் நீரால் பெறப்படுதல் பற்றிக் கடல் விளை அமிழ்தம் எனல் வேண்டிற்று. "ஒலிதிரைக் கடல்விளை யமிழ்தின் கணஞ்சால் உமணர்7" எனப் பிறரும் கூறுப பொருளின் வினை உவமைக்கும் கூட்டப்பட்டது. உதுக்காண், ஐகார வேற்றுமைத் திரிபு கூறுமிடத்துச் சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும்2 என்றதனால் சாரியை பெறாது பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிக்கு முடிந்தது. தம்மோன் நம்வயின் செய்த கொடுமை தம்மேல் ஏற்றி என இயைக்க. நயம், தகுதி; அருணிலையுமாம். தலைவியின் வருத்தமிகுதி கண்டு உரைப்பாளாய்த் தோழி சொல்லெடுக்கின்றாள்; ஆகலின், வினைசெய்தார் அவ் வினையின் பயனை நுகர்ந்தே தீர வேண்டு மென்பது இயற்கை யறம் ஆதலால், அது வந்து நுகர்விக்குமிடத்து வினைக்கு முதலாகிய நாம் வருந்துவது தெளிந்த அறிவுடைச் செயலன்று என்பாள், யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை என்றும், இப்பொழுது எய்தி வருந்தும் வருத்தம் நாம்முன்னர்ச் செய்த வினையின்பயன் என்றற்கு யாம் செய் தொல்வினை என்றும் கூறினாள். வருந்துவதால் நுகர்தற்குரிய வினைப்பயன் நுகரப்படாது கழியாது என்றற்கு வருந்தல் வாழி தோழி எனல் வேண்டிற்று. வருந்தாது ஏற்குமாற்றால் தொல்வினைப்பயன் நுகரப்பட்டுக் கழிகின்றமையின் இனித் துன்ப மின்றாம் என்பது பட வாழி என்றாள். இன்பப் பேற்றுக் குரிய வினையும் முதலும் இடமும் காலமும் கருவியும் ஒருங்கே அமைந் திருப்பவும், அவ்வின்பம் பெறப்படாது நீட்டிக்குமாயின் அதற்குக்காரணம் பழவினைப்பயன் எனத் துணிவது தமிழர்மரபு. இஃது அவர் வாழ்விடையே தொன்று தொட்டு நிலவும் கொள்கைகளுள் ஒன்று, யாம் செய்வினை, தொல்வினை என இயையும். எய்திய வருத்தம் நாம் செய்த தொல்வினையின் விளைவு என அமைவதேயன்றி அஃது இனிதாயின் பெருக் கவும், தீதாயின் சுருக்கவும் முயல்வது இன்பமே விழையும் உயிர்ப்பண் பாகலின், இவ்வருத்தத்தைப் போக்கற்கு முயல்வதே இனிச்செயற்பாலது; அதனைச் செய்வாம் என்ற குறிப்புத் தோன்றவே தோழி என்றாள். யாம் எய்திய வருத்தம் அவர்க்குத் தெரியாமையின் அவர் வரைவினை நினைந்திலர்; ஆதலால், நாம் நேரே அவர்பாற் சென்று தெரிவித்து வருவேம் என்பாள், யாம் சேர்ந்து உரைத்தனம் வருகம் எழுமதி எனத் தோழி கூறுவாளாயினள். "உடம்பும் உயிரும் வாடியக்காலும், என்னுற் றனகொல் இவையெனின் அல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை1" என்றாரேனும், "ஒரு சிறை நெஞ்சமொடு உசாவுங்காலை, உரியதாகலும் உண்டு2" என்று ஆசிரியர் கூறுதலால், நெஞ் சொத்த தோழியும் தலைவியும் கலந்து உரையாடுங்கால் இவ்வாறு உரைப்பன அமையும் எனக் கொள்க. இது நமது பெண்மைக்கு மாறாயினும் உள்ளம் உடைந்து உடலுருகி நீ மெலிவது காணமாட்டாமையால் இதனைக் கூறுவே னாயினேன் என்பாள், உருகி யுகுதல் அஞ்சுவல் என்றாள். மழையினை ஏற்ற உப்புக் குவையை உவமம் கூறியது, தலைவியின் நலம்தலைவனது ஒழுகலாற்றால் விரைந்து தொலைவதை வெளிப்படுத்தற்கு, இவ் வண்ணம் நீ நலம் தொலைவது எண்ணாது வரைவு நீட்டிக்கும் தலைவனது கொடுமையை அவனது குன்றமே கண்டு ஆற்றாது அருவியாகிய கண்ணீரைச் சொரிந்து இரங்குகின்றது காண் என்பாள், உதுக்காண் என்றும், தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றிக் கண்ணீர் அருவியாக அழுமே தோழி அவர் பழமுதிர் குன்று என்றும் கூறினாள். திண்மையும் சலியாமையும் உடையதாயினும், நம் துயர் கண்டு ஆற்றாது இரங்குகின்றது என்றற்கு உயங்கல் தாங்காது என்றும், தம்மை உடைய தலைவனாயினும் நம்வயின் கொடுமை செய்தொழுகுதல் முறைமை யன்று என்றற்கு நம்வயின்கொடுமை தம்மேல் ஏற்றி என்றும், விழைவு வெறுப்புக்களால் நடுவுநிலை பிறழாத பெருமையுடைமையால் பழமுதிர் சோலைகளாற் பிறங்குகிற தென்பாள், நயம் பெரிதுடைமையின் என்றும், பழமுதிர் குன்று என்றும் கூறினாள். கொடுமையுடையோன் குன்றின்கண் அருவி நீர் சொரிதல் இல்லை; தோன்றுவது அதன் கண்ணீர் என்பாள் கண்ணீர் அருவியாக அழும் என்றாள். இதனாற் பயன் தலைவன் தெருண்டு வரைவு மேற் கொள்வானாவது. "நாற்றமும் தோற்றமும்1" என்ற நூற்பாவின்கண், "என்பு நெகப் பிரிந்தோள் வழிசென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும்" என்றதற்கு இப்பாட்டை எடுத்தோதி2 "இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது" என்பர் நச்சினார்க்கினியர். 89. இளம்புல்லூர்க் காவிதியார் சங்ககாலப் பாண்டி நாட்டு ஊர்களுள் இளம்புல்லூர் என்பது ஒன்று; இளங்கோக்குடி, இளவெண்பைக்குடி, இளஞ்சேரி என ஊர்ப் பெயர்கள் இளமைப் பெயரால் சிறப்பிக்கப்படுவது மரபு. இச்சான்றோரது ஊரான இளம்புல்லூர், இடைக்காலத்தே மிழலைக்கூற்றத்து நடுவிற் கூறான இளம்புல்லூர்க்குடி3 என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றது. நல்லொழுக்க நற்செய்கைகளால் உயர்ந்த நன்மக்கட்குப் பண்டைத் தமிழரசர். காவிதி, எட்டி முதலிய சிறப்புப்பெயர் தந்து பாராட்டுவது வழக்கம், "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த, செம்மை சான்ற காவிதி மாக்கள்1" என்று மாங்குடி மருதனார் உரைப்பது காண்க. அந்நாளில் இச்சிறப்புப் பெயர், புகழுடை ஆடவர்க்கே யன்றி மகளிர்க்கும் வழங்கப்பட்டுள்ளது. இடைக்காலக் கல்வெட்டுக் களில் காவிதிப்பட்டம் பெற்றோர் பலர் காணப்படுவதால் இது சுமார் முந்நூறு நானூறு ஆண்டுகட்கு முன்புவரை வழக்கி லிருந்தமை தெரிகிறது. வடஆர்க்காடு மாவட்டத்தில் காவிதிப் பாக்கமாக விளங்கிய பேரூர், இப்போது காவிரிப்பாக்கம் என மருவி வழங்குகிறது. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகட் கிடையே தமிழர் வாழ்வில் மிகப் பெரிய மாறுதல்கள் உண்டாயின. அரசியலிலும் சமயத்துறையிலும் அவரவர் தாங்கி யிருந்த பதவிப்பெயரால் பலப்பல இனமும் சாதியும் தோன்றின; மக்கட்பெயர்களுள் பெருமாற்றம் எய்திற்று. வேற்று நாட்டான் ஒருவன் இடைக்காலச் சோழபாண்டியர்களின் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் காணப்படும் மக்கட்பெயர்களையும் இன்று வாழும் மக்கட்பெயர்களையும் ஒப்ப நோக்குவனாயின், இன்றைய தமிழரினம் இடைக்காலத்தே இந்நாட்டில் வாழ்ந்த தமிழர் வழிவந்தோர் தாமா? என ஐயுறத் தக்க அளவில் இம் மாற்றங்கள் மிகுந்து போயின எனின், அது மிகையாகாது. புதியவாய்த் தோன்றிய சாதிகளுக் குரியோர் ஐயர், ஐயங்கார், முதலியார், செட்டியார், நாயக்கர், பிள்ளை என்பன முதலிய சிறப்புப் பெயர்களை மேற்கொண்டனர். மயிர்களையும் தொழிலோர், பண்டிதர் பட்டர் எனத் தம்மைச் சிறப்பித்துக் கொண்டனர்; மலையாளநாட்டில் அவர்கள் தம்மைக் காவிதி என்று கூறிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் உயர்வுடைய பெருமக்கட்கு வேந்தர் மகிழ்ந்து பாராட்டித் தந்த சிறப்புக்கள், இந்நாளில் பெருமை இழந்து இழிபொருளில் வழக்கம் பெறுவது தமிழினத்தில் எய்திய தலைதடுமாற்றங்களுள் ஒன்று. சங்ககாலம், தமிழர் தமிழ் வாழ்வில் திளைத்து இன்புற்று வாழ்ந்த கால மாதலால், அந்நாளை வேந்தர் காவிதி முதலிய சிறப்புப் பெயர்களை நல்கி நன்மக்களை மகிழ்வித்த நிலையில், இளம்புல்லூர்ச் சான்றோராகிய இப்பாட்டின் ஆசிரியர், காவிதி என்ற சிறப்புப் பெற்றனர். இளம்புல்லூரில் தோன்றிய நல்லிசைச் சான்றோர் நிரலில் இடம்பெற்றதனாலோ என்னவோ, இவரது இயற்பெயரைக் குறிக்காமல் இளம்புல்லூர்க்காவிதியார் என்றே இந்நூலில் எழுதியுள்ளனர். கிடங்கிற் காவிதி கீரங்கண்ணனார், கிடங்கிற் காவிதிப் பெருங்கொற்றனார் எனவரும் சான்றோர் பெயரில் கிடங்கில் என்ற ஊர்ப்பெயரும், கீரங்கண்ணனார் பெருங்கொற்றனார் என்ற இயற்பெயரும் காவிதி யென்ற சிறப்புப் பெயரும் காணப்படுவதுபோல இவர் பெயரில் இளம் புல்லூர் என்ற ஊர்ப்பெயரும் காவிதி யென்ற சிறப்புப் பெயரும் காணப் படுகின்றனவேயன்றி இயற்பெயர் காணப்பட்டிலது. ஏடு தோறும் இவ்வளவே காணப்படுவதால், இந்நூல் தொகுக்கப் பெற்ற காலத்தே இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று எனத் தெரிகிறது. மனைக்கண் ணிருந்து அறம்புரிந்து உறையும் தலைமக்கள் வாழ்வில் பொருள்வயிற் பிரிந்து செல்லும் கடமை தலைமகற்கு உண்டாயிற்று. தலைமகள் உள்ளத்துக் காதல் ஆற்றாமை தோற்று வித்து வருத்துவதாயிற்று. அறிவின் வடிவாய்த் தோழி ஆற்றுவதற் குரிய அறங்களைச் சொல்லி அவளைத் தேற்றினாள். ஆயினும், காதல் வெம்மையால் வெதும்பும் இளையர்க்குப் பனிக்காலம் மிக்க துன்பத்தைச் செய்யும்; அப்போது வந்து அலைக்கும் வாடைக்காற்றுக் குளிர் மிகுவித்துத் தனிமையில் வெறுப்பும் புணர்வின்கண் வேட்கையும் விளைவித்து அவர்தம் உள்ளத்தை வருத்தும். கவவுக்கை நெகிழாத முயக்கத்திடைப் பிறக்கும் வெம்மை அக்குளிரைப் போக்கி இன்பம் செய்வதால், வாடை வரவில் காதலர்கள் ஒருவரை யொருவர் மிக நினைந்து வருந்துவது பனிக்காலத்தின் பண்புடை நிகழ்ச்சியாகும். தலைமகட்கு மாலைப் போதும் வாடைக்காற்றும் தனிமைநிலையும் பெருந் துன்பத்தை நல்கின. அதனை நன்குணர்ந்த காதலன், பனியும் வாடையும் படர்ந்து வரும் அப்பருவம் எய்துமுன்பே பொருள் முற்றி மீண்டு வந்தான். அவனுடைய வரவை ஏவலர் முற்படப் போந்து தோழிக்கு உரைத்தனர். மகிழ்ச்சி மீக்கூர்ந்த தோழி அதனைத் தலைமகட்கு உரைத்தற்குரியளாயினும், உரைக்கும் வகையில் வெளிப்படை குறிப்பு என்ற இரண்டனுள், குறிப்பால் தலைவி உய்த்துணருமாறு கூறலுற்று. வித்தியது விளைந்து பயன்தரும் பொழுது பனிக்கால மாதலால் அதனை முன் வைத்துப் பிரிந்த காதலர், பிரிவின்கண் பனியும் வாடையும், தலைமகளை வருத்துமாற்றை உள்குவித்து, "தமது வன்கண்மையால் குறித்த பொழுதின்கண் வாராவிடத்து வந்து அலைக்கும் இயல்பினையுடைய மாலைப்போதினையும் புலம்புறு தனிமையையும் முற்படச் செலுத்திக்கொண்டு, இப்பொழுதும் பெரிய யானை யொன்று பெரு மூச்சு விட்டாற்போல வாடைக்காற்று வரப் பார்க்கிறதே. அதன் அறியாமை இருந்தவாறு என்னே!" என்று மொழிந்தாள். தோழியினது இக்கூற்றின்கண், காதலன் பிரிவாற் கையற்று வருந்தும் காதலிக்கு அவனுடைய வரவினும், துன்பம் துடைத்து மகிழ்ச்சி தருவது பிறிதுயாதும் இன்மையின் அதனை உரைப்பவள், வெளிப்பட மொழியின், தலைவியின் கலங்கிய வுள்ளம், அதனை மெய்யெனக் கொள்ளாது ஐயுற்று அலமரும் என எண்ணி, அவள் தானே உய்த்துணர்ந்து இன்பம் எய்த உரைப்பது இளம்புல்லூர்க் காவிதியார்க்குக் கழிபேருவகை நல்கவே அதனை இப்பாட்டிடைப் பெய்து பாடியுள்ளார். கொண்டல் 1ஆற்றின் விண்டலைச் 2செறீஇத் 3திரைப்பிசிர் கடுப்ப முகடுகந் தேறி 4இமைத்துநிரை கொண்ட கமஞ்சூல் மாமழை அழிதுளி கழிப்பிய 5வழிநாள் அடைஇய இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் 6உழுந்தின் அகலிலைக் 7கலாவ வீசி அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை 8அண்ணல் யானை அயாவுயிர்த் தாஅங்கு இன்னும் வருமே தோழி 9என்னே 10வன்க ணாளரோ டியைந்த புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே. இது, பொருள்முற்றி மறுத்தந்தான் எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. உரை கொண்டல் ஆற்றின் விண்டலைச் செறீஇ-கீழ்க்காற்றுச் செலுத்தும் நெறியின்கண் இயங்கி விசும்பின்கட் செறிந்து; திரைப்பிசிர் கடுப்ப முகடு உகந்து ஏறி-அலைகள் தம்மில் மோதி உடைதலால் எழும் நீர்த்துளிப்புகைப் படலம் போலப் பரந்து உயர்ந்து மலை முடியை அடைந்து; இமைத்து நிரைகொண்ட கமஞ்சூல் மாமழை-இமைப்பது போல மின்னி நிரைநிரையாகப் படர்ந்து நின்ற நீர் நிறைந்த மழைமுகில்; அழிதுளி கழிப்பிய வழிநாள்-மிக்க பெயலைப் பொழிந்த பிற்றைநாள்; அடைஇய இரும்பனிப் பருவத்த-வந்தடைந்த பெரிய பனிக்காலத்தே காய்க்கும்; மயிர்க்காய் உழுந்தின் அகலிலை கலாவ வீசி-மயிர் போன்ற துய்யினையுடைய காயாகிய உழுந்தின் அகன்ற இலை கிழிந்து எங்கும் சிதறிக் கிடக்குமாறு வீசி; அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை-நீங்காமல் நாடோறும் வருத்தும் காதலரைக் கொணர்ந்து நல்காத வாடைக்காற்று; அண்ணல் யானை அயா உயிர்த்தாஅங்கு- பெருமை பொருந்திய யானை ஒன்று அயர்ச்சியால் பெருமூச்சு விட்டாற்போல; இன்னும் வருமே-இப்பொழுதும் வாராநின்றது; தோழி-; என்னே-அதன் பேதைமை இகுந்தவாறு என்னென்பது; வன்கணாளரோடு இயைந்த-காதலின் மென்மைப்பண்பு கருதாமல் வன்கண்மையே மிக்குடையா ரோடு ஒத்த பண்புடைய; புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்து-துன்பத்தைச் செய்யும் மாலைப் போதினையும் தனிமைத் துயரையும் முற்படச் செலுத்தி எ.று. தோழி, மாமழை கழிப்பிய வழிநாள், அடைஇய இரும் பனிப் பருவத்த, உழுந்தின் இலை கலாவ வீசி, அல்கலும் அலைக்கும் வாடை மாலையும் புலம்பும் முந்துறுத்து இன்னும் வரும்; என்னே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆற்றின், செறீஇ, உகந்து, ஏறி, இமைத்து நிரைகொண்ட மாமழை என்க. கொண்டல், கீழ்க்காற்று, மேல்காற்று, கோடை எனப்படும். உச்சி வானம், விண்டலை எனப்பட்டது. கீழ்க்காற்றுச் செலுத்துதலால் உச்சிவானத்திற் செறிந்து, நீர் அலைகள் தம்மில் மோதிப் பிசிராய் உடைந்துழி வெண் புகைப் படலம் போல் மேலெழுந்து மலையுச்சியிற் படரும் திறம் தோன்றத் திரைப்பிசிர் கடுப்ப முகடு உகந்து ஏறி என்றார். பிசிர், பனியினும் நுண்ணியதாகிய நீர்த்திவலை. "வரையருள் புணரி வான்பிசி ருடைய, வளிபாய்ந் தட்ட கமஞ்சூல்1" என்பது காண்க. உகத்தல், உயர்தல், மலை முகட்டிற் படிந்த முகிற் கூட்டம் மின்னுவது கண்ணிமைப்பது போறலின் இமைத்து நிரைகொண்ட மாமழை யென்றும், நீர் நிறையக் கொண்ட முகிற்படலத்தே இந்த மின்னல் காணப் படுவது பற்றிக் கமஞ்சூல் மாமழை என்றும் கூறினார். ஒன்றன்மேல் ஒன்றாகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் முகிற்கூட்டம் அடுக்கி நிறுத்தியது போல்வதால் நிரைகொண்ட எனல் வேண்டிற்று. அழிதுளி, மிக்க பெயல். "பெரும் பெயல் அழிதுளி2" எனப் பிறரும் கூறுப. கீழ்க்காற்றால் முகில்கள் மிக்க பெயலைச் செய்வது கார்கால மாதலால், அதன் வழிநாள் என்றது. வாடை போந்து அலைக்கும் பனிக்காலமாயிற்று. அதனால், அழிதுளி கழிப்பிய வழிநாள் அடைஇய இரும்பனிப் பருவம் என்றார்; "கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத் தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது3" எனச் சான்றோர் உரைப்பது காண்க. உழுந்து முதலிய பயறுகள் பனிப்பெயற பருவத்துக்குளிரில் விளைவன என அறிக பனிப்பருவத்தில் வாடைக்காற்றுப் போந்து அலைத்தல் இயற்கை யாதலின் அலைக்கும் என நிகழ்காலத்தாற் கூறினார். தலைமகன் பிரிந்திருந்த காலையில், தனிமை யாற்றாது வருந்திய தலைமகட்கு வாடைக் காற்று நல்கிய வருத்தத்தை உழுந்தின் அகலிலைக் கலாவ வீசி அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை என்று குறித்தாள். உழுந்தின் அகலிலையை வாடை அலைத்தது. தனித்திருந்த தலைமகள் உள்ளத்தை ஆற்றாமை தோற்றுவித்து அலைத்தவாறு என்றும், அக்காலத்தே தலைமகன் பொருள்முற்றி வாராமையால் நல்கா வாடை என்றும் தோழி கூறினாள். பொருள் மேற்சென்ற உள்ளத்தால் தலைமகளை நினையாது பிரிந்திருப்பது பற்றித் தலைமகனை வன்கணாளர் என்றும், அவன் பிரிந்திருந்த போது தோன்றிய மாலைப்போதும் தனிமையும் மென்கண்மை யின்றித் தலைவியைத் துன்புறுத்தினமை தோன்ற வன்கணாளரோடு இயைந்த புன்கண் மாலையும் புலம்பும் என்றும் கூறினாள். மாலையும் புலம்பும் தலைவன் வாராக் காலத்தில் அவனையே நினைந்து வருந்தச் செய்தமை பற்றி வன்கணாளரோடு இயைந்த என்று விதந்து கூறினாள். தலைவன் தனது வாராமையால் துன்பம் செய்யாநிற்ப, மாலையும் புலம்பும் வந்து அத்துன்பத்தை மிகுவித்தலின் இயைபுண்மை கண்டு இவ்வாறு கூறலானாள் என்க. அண்ணல் யானை அயா உயிர்த்தாங்கு என்றது. வாடையை இகழ்ந்து கூறியவாறு. தலைவன் பிரிவின்கண் வந்து வருத்திய வாடை அவன் மீண்டுபோந்து கூடியிருக்குங் காலத்து வருதலால் அதன் செயல் செல்லாது என்றற்கு இன்னும் வருமே என்றும், தான் மாத்திரம் வாராது புன்கண் மாலையும் புலம்பும் வந்து பரிசழிவது பேதைமை என்றற்கு இன்னும் வருமே தோழி என்னே என்றும் இயம்பினாள். இது, தலைவன் பொருள் முற்றி மீண்டமை அறிந்து தோழி கூறுகின்றாள் எனத் தலைவி உய்த்துணரக் கிடக்குமாறு காண்க. இதனாற் பயன், தலைவன் வரவு உணர்ந்து தலைமகள் மகிழ்வாளாவது. 90. அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் என்பது இப்போது அஞ்சூர் என்ற பெயருடன் தொண்டை நாட்டில் உளது; அதனைக் கல்வெட்டுக்கள் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு அஞ்சிலூர்1 என்றும், அஞ்சூர் உடையான் வண்டன் சாந்தராயன்2 என்றும் குறிக்கின்றன. அஞ்சி என்பது இச் சான்றோரது இயற்பெயர்; இவரது அஞ்சிலூர் அஞ்சியூர் என மருவிப் பின் அஞ்சூர் எனைத் திரிந்தது போலும். இனிப் புதுப்பெட்டி யேடு, இவரை அம்பில் அஞ்சியார் என்று குறித்துளது. அம்பில் என்பதே பாடமாயின், அம்பில் அன்பில் என்பதன் திரிபாம். அன்பிலும் பழமையான ஊர் என்றற்குக் கல்வெட்டுக்கள் அதனை வடகரை இராசராச வளநாட்டு மழநாட்டுக் கீழைமுறிப் பிரமதேயமான அன்பில்3 என்றும், இவ்வன்பில் ஆலந்துறைக்கண் கோயில் கொண்ட இறைவனைப் பாடிய திருநாவுக்கரசர் "அள்ளலார் வயல் அன்பில் ஆலந்துறை"4 என்றும் கூறுவது சான்றாகும். அஞ்சி என்ற பெயருடையார் பலர் சங்ககாலத்தும் இடைக்காலத்தும் இருந்துள்ளனர். இவர் வரலாறு பற்றிய குறிப்பொன்றும் வேறே கிடைத்திலது. மனையறம் புரியும் தலைமக்கள் வாழ்வில் தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாயிற் றென நினைந்த தலைமகள் அவற்கு வாயில் நேராளாயினள். அதனால், அவன் பாணனை அவள்பால் வாயில்வேண்டி விடுத்தான். அவன் வரவு கண்ட தோழி தலைவி யொடு சொல்லாடுபவள் போலப் பாணன் செவிப்படுமாறு "தலைமகன் பரத்தையர் சேரியில் வினையாட்டு அயருங்கால் வறன் அறியாத வாழ்க்கையை யுடைய வண்ணாத்தி வெளுத்துத் தந்த உயரிய ஆடையை அணிந்த இளம்பரத்தை யொருத்தி ஊசலாட்டில் தலைமகனோடு புலந்து, ஆயமகளிர் போந்து தனது ஊசலை ஊக்குவது பொறாது ஊசலும் ஆடாது நல்கூர் பெண்டுபோல அழுதுகொண்டு சென்றாள்; அவளுடைய புலவி தீர்த்துத்தலைமகனோடு கூட்டுதற்குரிய பாணன் முதலியோர் அது செய்யாது நீங்கினர்; ஊடியவரை உணர்த்தாது கழிதல் தீது என்பதையும் அவர்கள் நினைந்திலர்; அத்தகைய நயனில் மாக்களைச் சூழவுடைய தலைமகன் இருக்கையை அடைந் தோர்க்கு ஒரு பயனும் இல்லையாம்; அதனை நினையாது பாணன் அவன்பொருட்டு வாயில் வேண்டி வருவது நன்றன்று என்று கூறினாள். தோழி நிகழ்த்திய கூற்றின்கண், தலைவன்பால் தவறு தோன்றாதவாறும், ஊடியோரை யுணராமை நீங்கும் வேந்தன் அவையைச் சேர்ந்தவன் எனப் பாணன்பால் தவறுண்மை காட்டி வாயில் மறுக்குமாறும் விளங்குதல் கண்ட அஞ்சியார், அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். இப்பாட்டு ஏடுதோறும் வேறுபாடுற்றுக் கிடக்கிறது. ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் 1உடைதேர் பான்மையிற் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லித்2 தோய்த்த புகாப்புகர் கொண்ட3 புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க1 ஊங்காள் 2நல்கூர் பெண்டின் அழுதனள் 3பெயரும் அஞ்சில் ஓதிச் 4சில்வளைக் குறுமகள் ஊசல் உறுதொழிற் 5பூசற் கூட்டா நயனின் மாக்களொடு 6கெழீஇப் பயனின் 7றம்ம வேந்துடை அவையே இது, தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின் மறுத்தது. உரை ஆடியல் வாழ்வின் அழுங்கல் மூதூர்-வெற்றி தோன்றிய வழி இயலுகின்ற விழாக்களால் ஆரவாரம் மிக்க மூதூரின் கண்; உடை தேர் பான்மையின் பெருங்கை தூவா-அவரவர் மனைக்குச் சென்று உடையைத் தேர்ந்து பெற்று வெளுத்துத் தரும் முறைமையில் பெரிதும் கையொழிதல் இல்லாத; வறனில் புலைத்தி-வறுமைத் துன்பம் அறியாத வண்ணாத்தி; எல்லித் தோய்த்த-பகற்போதில் வெளுத்த; புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு-சோற்றுக் கஞ்சி தோய்க்கப் பெற்றதனால் மென்மை நீங்கிப் புல்லெனத் தோன்றும் அழகிய ஆடையொடு; வாடா மாலை துயல்வர ஓடி-பொன்னாற் செய்யப்பட்ட மாலை மார்பிடைக் கிடந்து அசைய ஓடி; பெருங்கயிறு நாலும்- பெரிய கயிற்றிடத்தே தொங்கும்; இரும்பனம் பிணையல் - பெரிய பனைநாராற் பின்னிப் பிணைக்கப்பட்ட ஊசலிடத்தேயிருந்து; பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள் - பூப்போலும் கண்களையுடைய ஆயமகளிர் ஆட்டுதலின் ஆடாளாய்; நல்கூர் பெண்டின் அழுதனள். பெயரும்- வறுமையால் வருந்தும் பெண்மக ளொருத்தி போல அழுதுகொண்டு ஏகும்; அஞ்சில் ஓதிச் சில்வளைக் குறுமகள் - அழகிய சிலவாகிய கூந்தலையும் சிலவாகிய வளைகளையு முடைய இளமகளாய பரத்தையை; ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா - ஊசலாடும் மிக்க விளையாட்டு ஆரவாரத்தில் தேற்றி மீளப் புணர்க்கா தொழிந்த; நயன் இல் மாக்களொடு கெழீஇ - அன்பில்லாத மக்களொடு பொருந்தி யிருப்பதால்; அம்ம - கேட்பாயாக; வேந்துடை அவை பயனின்று - வேந்தனாகிய நம் தலைவனது சுற்றம் பயன் தருவதன்று; ஆகவே அச்சுற்றத்துள் ஒருவனாகிய இப்பாணற்கு வாயில் நேர்வது பயன்படாது எ.று. கலிங்கமொடு மாலை துயல்வர, ஓடி, ஆயம் ஊக்க ஊங்காள், அழுதனள் பெயரும் குறுமகளைப் பூசற் கூட்டா மாக்களொடு கெழீஇ இருத்தலால், வேந்துடை அவை பயனின்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆகவே, அச்சுற்றத்துள் என்பது முதலாயின குறிப்பெச்சம். ஆடு, வெற்றி, "வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பை1" என்றாற் போல. போர் வெற்றியால் மேன்மையுற்ற மறச்சான்றோர் வாழும் மூதூர் என்றற்கு ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் என்றார். போரிடத்துப் பெற்ற வெற்றி காரணமாக நிகழும் விழா ஆடியல் விழவு எனப்பட்டது. நாட்காலையில் மனைதோறும் சென்று அழுக்குற்ற உடைகளைக் கொண்டு சென்று ஒலித்துத் தூய்மை செய்து தருதலை முறைமையாக உடையளாதலால், உடை தேர் பான்மையின் என்றும், அப்பெரிய செய்கையை ஒழீவின்றி நாளும் செய்தொழுகுமாறு தோன்றப் பெருங்கை தூவா என்றும், அம்முறைமையால் மனைதோறும் அவட்கு வேண்டுவன நல்கப்படுதலால், அவள் வாழ்க்கையில் உணவுக்கும் உடைக்கும் வறுமை இல்லாமை பற்றி வறனில் புலைத்தி என்றும் குறிக்கின்றார். அழுக்குடைகளை உவர்மண் ஏற்றி நன்கு துவைத்துக் கஞ்சியில் தோய்த்து வெளுத்த விடத்து மென்பூங் கலிங்கம் மென்மை இழந்து சிறிது வன்மை பெறு தலால், அதனைப் புன்பூங் கலிங்கம் என்றார். பூங்கலிங்கம், பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை, புகா, உணவாகிய சோறு; "புகாக் காலைப் புக்க விருந்து2" என ஆசிரியர் வழங்குதல் காண்க. புகாப்புகர், சோறு வடித்த கஞ்சி, பொன்னாற் செய்யப்பட்ட பூமாலை வாடாமாலை என்று கூறப்பட்டது; "வாடா மாலை ஓடையொடு துயல்வர3" என்பது காண்க. பனைமடலைக் கருக்கு நீக்கிப் பல கையிணைப்புப் போல் பரப்பிப் பிணித்து அமைத்த ஊசலைப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் என்றார். ஊக்குதல், ஊசலில் இருத்தி ஆட்டுதல்; ஊங்குதல் அசைந்து ஆடுதல்; இதுபற்றியே ஊசல் இந்நாளில் ஊஞ்சல் என மருவுவதாயிற்று. நல்கூர் பெண்டு, வறுமையுற்ற பெண்மகள். ஊசலாட்டின்கண் மகளிர் எழுப்பும் மகிழ்ச்சியாரவாரம், ஊசல் உறுதொழிற் பூசல் எனப்பட்டது. நயன், இரக்கம்; மனநலமுமாம். கெழீஇ, காரணப் பொருளில் வந்த வினையெஞ்சு கிளவி. தலைமகனை, ஈண்டு வேந்து என்றாள், பரத்தையர்க்கும் தலையளியும் காவலும் புரிதலின், பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது. அவையில் இருக்கும் சிறப்புப் பற்றிப் பாணன் என்னாது அவை என்றார். மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் மனையவரோடும் பரத்தையரோடும் யாறும் குளனும் காவும் கானலும் பொழிலும் பொய்கையுமாகிய இடங்கட்குச் சென்று விளையாடி இன்பம் நுகர்தல் இயல்பு. ஏனை ஊரவரும் நாட்டவரும் போலப் பரத்தையரும் தலைமகனுடைய தலையளிக்கும் காவல் நலத்துக்கும் உரியராதலின், அவரும் அவ்விடங்கட்குச் செல்லும் உரிமையுடையராயினர். மேற்கூறிய இடங்களில் தலைமகன் பலரோடும் விளையாடிய போது பூம் பொழிலிற் பரத்தையரொடு தலைவன் விளையாட் டயர்ந்தான் என்பது கேட்டுப் புலந்த தலைவிபால் வாயில் விடுத்தானாக, அவள் அவர்களை மறுத்துப் போக்கினாள்; அவன் பின்பு தன் விளையாட்டுச் சுற்றத்துள் சொலல் வல்ல பாணனை வாயில் வேண்டி விடுத்தான். அவன் வரவை முற்பட உணர்ந்து தலைமகட்கு உரைக்கும் தோழி, பொழில் விளையாட்டின்கண் நிகழ்ந்தது கூறுவாளாய், பரத்தையருள் மிக்க இளமை யுடையவள் ஒருத்தி, தன்னின் வேறாய பரத்தையர் இருந்தாடும் ஊசற்குத் தலைவன் துணைபுரிவது கண்டு பொறாது புலந்தாளாக, அவளுடைய புலவியைத் தீர்த்தற்கு அவளைச் சூழ இருந்த மகளிர் எத்துணையோ வழிகளால் ஊக்கவும், அவள் சினம் மாறாமல் ஊசலைக் கைவிட்டு வேற்றிடம் விரைந்து ஓடினாள் என்பாள். பூங்கண் ஆயம் ஊக்க ஊங்கான் நல்கூர் பெண்டின் அழுதனள் பெயரும் என்று கூறினாள். அவள் அவ்வாறு ஓடிய போது அவள் அணிந்திருந்த ஆடை கஞ்சி தோய்ந்து புலர்ந்து இருந்தமையின் ஒலித்து அரவம் செய்தமையும், மார்பிற் கிடந்த பொன்னரிமாலை வலமும் இடமும் அசைந்து ஒளிசெய்தமையும். அங்கே அவளைப் பார்த்து நின்ற ஏனைமகளிர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன என்றற்குப் புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடாமாலை துயல்வர ஓடி என்றும், தன் இளமை மிகுதியால் செய்வதறியாது பிணங்கி யோடினா ளாயினும் அவளுடை புகாப்புகர் கொண்ட ஆடை, அவளது புலவிக் குறிப்பைப் பிறர் அறியப் புலப்படுத்திய புன்மையை இகழ்ந்து புன்பூங் கலிங்கம் என்றும், அவள் கொண்ட வெம்மைக்கு வேறு பூமாலையாயின் ஆற்றாது வெந்து கரிந்து உதிர்ந்து போம்; பொற் பூவாலாகிய மாலையாதலால் அஃது இங்கு மங்கும் அசைந்து காட்டிற் றென்பாள் வாடாமலை துயல்வர ஓடி என்றும் கூறினாள். தனக்கு இன்றியமையாத தலைவன் தன்பால் இல்லாது நீங்கினமையின் தான் அவனுடைய தலையளியை இழந்த தாகவும் அதனைத் தான் பெறல் அரிதாகவும் எண்ணிப் பேரவலம் உற்று அழுது நீங்கினள் என்றற்கு நல்கூர் பெண்டின் அழுதனள் பெயரும் என்றாள். அதனைக் கேட்டதும், தலைவி உள்ளத்தில் அப்பரத்தைபால் இரக்க முண்டாக, அக்குறிப்பு உணர்ந்த தோழி அவளுடைய இளமைப் பண்பை அஞ்சில் ஓதிச் சில்வளைக் குறுமகள் என்று புலப்படுத்தினாள். முடித்தற்குரிய அளவு அவட்குக் கூந்தல் வளராமை தோன்ற அஞ்சிலோதி என்றாள்; அதனால் அவள் மிகவும் இளையள் என்பது பெறப்படும். காமம் சான்ற பருவத்தில் மகளிர்க்குக் குழல் வளர்ச்சி மிகும் என்பதை "முள்ளெயிறு இலங்கின தலைமுடி சான்ற1" என்று சான்றோர் கூறுவது காண்க. அத்துணை இளமையுடையாளை ஆயத்தார் சிவப்பாற்றி அவ்வூசல் விளையாட்டில் மீளப் புணர்த்திருக்க வேண்டுமே என எண்ணிய தலைமகட்குத் தோழி அவர் அதனைச் செய்திலர் என்பாள், ஊசல் உறுதொழிற் பூசற் கூட்டா நயனில் மாக்கள் என்றும். அவர் சூழ இருந்தமையின் தலைமகன் தானும் அது செய்யானாயினன் என்றற்கு, நயனில் மாக்கள் கெழீஇப் பயனின்று அம்ம வேந்துடை அவையே என்றும் கூறினாள். இவ்வண்ணம் நயனில் மாக்கள் கெழீஇ யிருக்கும் தலைமகன் விடுப்ப வரும் பாணனும் நயனில் மகன் ஆதலால் அவற்கு வாயில் நேர்வது பயன் விளைவியாது என்பாள், பொதுவாகப் பயனின்று அம்ம வேந்துடை அவையே என்றாள். நயனில் மாக்களைச் சுற்றமாக வுடைய வேந்தன் போல, நம் தலைவற்கு இப்பாணன் முதலிய நயனில் மாக்கள் சுற்றமாய்ச் சூழ்ந்துள்ளனர் என்றும், அவ்வேந்தன் நாடு அவனது அன்பும் காவலும் இழந்து அலமருவது போல, தலைவன் அன்பும் காவலும் பெறாது நாம் வருந்துதல் கூடும் என்பது குறிப்பு. இதனால் தலைவிக்குப் பாணன்பால் வெறுப்பும் தலைமகன்பால் விருப்பும் தோற்றுவித்துப் பாணற்கு வாயில் மறுக்குமாற்றால் தலைவனை நேரே வருவிக்கும் சூழ்ச்சி தோழியுரையில் அமைந்திருப்பது காண்க. "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்1" என்ற நூற்பாவின் கண் வரும், "வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப" என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி. "இது பாங்கனைக் குறித்துக் கூறியது" என்பர் இளம்பூரணர்; "இது பாணனைக் குறித்துக் கூறியது2" என்பர் நச்சினார்க்கினியர். 91. பிசிராந்தையார் பிசிராந்தையார் பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஊர்களுள் ஒன்றான பிசிர்க்குடியைச் சேர்ந்தவர். ஆந்தை யென்பது இவரது இயற்பெயர்; அதனால் இவரைப் பண்டைச் சான்றோர் பிசிர் ஆந்தையார் என வழங்கினர். இவர் காலத்தே பாண்டியன் அறிவுடை நம்பி யென்பான் ஆட்சி புரிந்தான். அவன் இளையனாய் இருந்த காலத்தில்அவனைச் சூழ்ந்திருந்த "வரிசை யறியாக் கல்லென் சுற்றத்" தை விலக்கி அறிவுடை நம்பியாய் அவனை விளங்கச் செய்தார். ஆந்தையார் அவன்பால் நன்மதிப்புக் கொண்டு அவனது அரசியலைப் பாராட்டினார். அந்நாளில் சோழநாட்டைக் கோப்பெருஞ் சோழன் என்பவன் உறையூரிலிருந்து ஆண்டான். அவனுடைய குணஞ் செயல்களைக் கேள்வியுற்ற பிசிராந்தையார் அவன் பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டார். சோழனும் ஆந்தை யாரின் சான்றாண்மையைக் கேள்வியுற்று அவர்பால் அன்பும் ஆன்ற மதிப்பும் கொண்டான். ஒருவரை யொருவர் நேரிற் காணாமலே இருவரும் தூய நண்பராயினர். அதனால், ஆந்தையார் தமது பெயரைக் கூறும்போ தெல்லாம் "பேதைச் சோழன்" என்று கூறுவர்; அவனும் அவ்வாறே தன் பெயரை ஆந்தையார் பெயரோடு இணைத்துக் கூறுவன். தன் மக்களுடைய பொருந்தாச் செயலால் சோழன் மனம் உடைந்து வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான் அவனது அரசவைக்கண் இருந்த சான்றோரும் நல்லமைச்சரும் அவனோடே வடக்கிருந்தனர். அந்நாளில் சோழன் ஆந்தையாரைக் காணவிழைந்தான்; ஆந்தையார் உள்ளத்திலும் அவனைக்காண வேண்டும் என்ற விருப்பம் தோன்றிற்று. முடிவில், சோழனைக் காண வேண்டும் என்ற வேட்கை மீதூரவே ஆந்தையார் உறையூரை நோக்கிப் புறப் பட்டார். அவர்க்கு வயது மிக முதிர்ந்திருந்த தாயினும் மனம் முதுமைத் தளர்ச்சி எய்தாது வன்மை பெருகி யிருந்தது. அவர் உறையூர் சென்று சேர்வதற்குள் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்து நடுகல் ஆயினன். அவண் போந்த பிசிராந்தையார், சோழன் தனது வரவு நோக்கி இருந்தமையும் தன்பால் பேரன்பு கொண்டு பிறங்கினமையும் அங்கே இருந்தோர் சொல்லக் கேட்டு மனம் உருகித் தாமும் அவ்விடத்தே வடக்கிருந்து உயிர் நீத்தார். இருவர்பால் உண்டாகும் தூய நட்புக்குக் காரணங்களாகக் கூறப்படும் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்குக் கோப் பெருஞ் சோழற்கும் பிசிராந்தையார்க்கும் உண்டாகிய நட்பைச் சான்றோர் மேற்கோளாகக் காட்டுவது வழக்கம். களவு நெறிக்கண் காதலுற் றொழுகிய தலைமக்கள் கடி மணத்தால் கற்புக்கடன் பூண்டு மனைமாண் நல்லற இன்பவாழ்வு தலைப்படச் சமைந்தனர். இத்துறைக்கு வேண்டும் பெருமையும் உரனும் இயல்பாக வாய்க்கப் பெற்ற தலைமகன், பகலே பலரும் காணச் சான்றோருடன் மகட்கொடை வேண்டி வருவானாயினன். வரைதலை முயலாது காதற் பைங்கூழ் வளர்ந்து கனியு மாறு களவொழுக்கத்தை நீட்டித்து வந்தமையின் ஆற்றாது அழுங்கி யிருந்த தலைவிக்கு, ஆற்றத் தகுவன கூறி அறத்தில் திரியாதவாறு துணைசெய்து போந்த தோழி, அவன் வரும் குறிப்பை முற்பட அறிந்து தலைமகட்குத் தெரிவிப்பாளாய்த் "தோழி, நம் சிறுகுடிக்குக் காதலனாகிய சேர்ப்பன் கடுமாப் பூண்ட தேரேறி இன்று பகற்போதில் பலரும் கண்டு மகிழ வந்தான்; அதனை நீ கண்டனையோ? என்று உரைக்கலுற்றாள். களவின்கண் பிறர் கண்படாது குறிவழி வந்து தலைவியைக் கண்டு சென்ற தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தமையும், அதனால், தலைமகள் ஆற்றாது மெலிந்தமையும், இப்போது பலர் அறியப் பொருளுடன் போந்து மகட்கொடை வேண்டினமையும் குறிப்பாய் உணர வைத்த நலம் இக்கூற்றின்கண் விளங்கக் கண்ட ஆந்தையார் இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். நீயுணர்ந் தனையே தோழி வீயுகப்1 புன்னை பூத்த இன்னிழல் உயர்கரைப்2 பாடி மிழ் பனிக்கடல் துழைஇப் 3பெடையொடு உடங்கிரை தேரும் தடந்தாள் நாரை ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத் தாய்பயிர் பிள்ளை வாய்படச் சொரியும் கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப் பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப் புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர்4 மணித்தார்க் கடுமாப் பூண்ட நெடுந்தேர் நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே. இது, தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. உரை நீ உணர்ந்தனையே-நீ கண்டு உணர்ந்தா யன்றோ; தோழி-; வீயுகப் புன்னை பூத்த இன்நிழல் உயர்கரை-பூக்கள் உதிருமாறு புன்னைகள் பூ மலர்ந்திருக்கும் இனிய நிழல் பரந்த உயர்ந்த கரைக்கண் இருந்து; பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ-ஒலிக்கின்ற குளிர்ந்த கடலில் மீன்களைத் தேர்ந்துண்டு; பெடையொடு உடங்கு இரைதேரும் தடந்தாள் நாரை-தன் பெடையுடனே ஒருங்கு கூடி இரை தேடுகின்ற பெரிய கால்களையுடைய நாரை; ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் - மெல்லிய தோல் போர்க்கப்பட்ட சிறிய கண்ணையும் சிவந்த செதிலையு முடைய சிறு மீன்களைப் பிடித்துக் கொண்டு; மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பை-மேற்பட உயர்ந்த கிளையின் மேலே கட்டிய கூட்டின்கண் இருந்து; தாய் பயிர் பிள்ளை வாய்படச் சொரியும்-தாய்ப் புள்ளின் வரவு நோக்கி அழைக்கும் தன் பார்ப்புக்களின் வாயிற் பெய்யும்; கானலம் படப்பை-கானற் சோலைகளையும்; ஆனாவண்மகிழ்ப் பெருநல் ஈகை நம் சிறுகுடி பொலிய-குறையாத வளவிய கள்ளைப் பெரிதும் நன்முறையில் கொடுத்தலையுடைய சிறுகுடி முழுதும் தெரிய; புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்-புள்ளினம் ஒலித்தெழும் சுழற்சி போல வாரினது ஓசையுடன் மணிகள் மாலை போலக் கட்டப்பட்ட; கடுமா பூண்ட நெடுந்தேர்- விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டிய நெடிய தேரை இவர்ந்து; நெடுநீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவு- நெடிய கடல்நிலத் தலைவன் பகற்போதில் இங்கே வந்தமையை எ.று. தோழி, சேர்ப்பன், சிறுகுடி பொலிய, பகல் இவண் வரவு நீ உணர்ந்தனையே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நாரை, பெடையொடு கடல் துழைஇக் கொணர்ந்த சிறுமீனை, குடம்பை பிள்ளை வாய்படச் சொரியும் கானல் என இயையும், உணர்ந்தனையே என்றவிடத்து ஏகாரம் வினா; எதிர்மறைப் பொருளும் கண்ணி நிற்றலின் உணர்ந்தாய் அல்லையோ என உரை கூறப்பட்டது. இதனை மாறுகோள் எச்சம் என்பர் தொல்காப்பியர்1. பூத்த பூக்களில் முதிர்ந்தன உதிர்வது பற்றி வீயுக என்றார். பூத்து விளங்கும் மரத்தின் நிழல் இனிதாதல் பற்றி இன்னிழல் எனப்பட்டது. பாடு, ஒலி, கடல் நீரில் மூழ்கி மீன்களைப் பிடித்து உண்டலால் துழைஇ என்றார்; "நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்2" என்று பிறரும் கூறுதல் காண்க. உடங்கு, உடன் என்னும் பொருட்டு". இடங்கொள் புள்ளினம் உடங்குகுரல் கவரும்3" எனப் பிறாண்டும் வருதல் காண்க. மீன்களின் கண்மேல் ஒருவகை மெல்லிய மீந்தோல் மூடியிருத்தலால், அவை தண்ணீரில் இனிது காண்டல் இயலுகிறது; அதுபற்றியே மீன் கண்ணை ஐய சிறு கண் என்றும், சில சிறு மீன்களின் வாற்புறத்தும் செதில் மருங்கும் செம்மைநிறம் இருத்தலால் செங்கடைச் சிறுமீன் என்றும் கூறினார். மேக்குயர்தல், மேலோங்கி உயர்தல்; "வேங்கை மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை1" என்றார் பிறரும். குடம்பை, கூடு. "மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பைசேர1" என்ப தனாலும் அறிக. பயிர்தல், அழைத்தல், விரைந்து செல்லும் குதிரையின் செலவுக்குப் புள்ளொலியைக் கூறல் மரபு; "புள்ளியற் கலிமா"2 என்பர் தொல்காப்பியர். "புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் புரவித்தேர்" என இக்கருத்தையே பின்னோரான திருத்தக்க தேவர்3 மேற்கொண்டு ஆளுதல் காண்க. காதலுறவு சிறப்பது குறித்து வரைவு நீட்டித்து ஒழுகும் தலைமகன் கருத்தை உணராது வருந்திய தலைமகட்கு, அவன் வரைதற் பொருட்டு வருதலினும் இன்பம் தரும் செயல் பிறிது இன்மையின் அதனைக் குறிப்பால் உரைக்க லுறும் தோழி, நீ உணர்ந்தனையே தோழி என்றாள். இவ்வாறு தலைமகள் உள்ளத்தில் தலைமகன் வரவை அவாய் நிலை வகையால் ஈற்றில் உரைப்பாளாய் இயைபுடைய சில கருத்துக்களை இடையே உள்ளுறுத் துரைக்கின்றாள். தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தமை தலைமகள் அறிந்த தொன்று ஆகலின், அதனை உள்ளுறைப் படுத்துப் பாடுஇமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு இரைதேரும் தடந்தாள் நாரை என்றும், அங்ஙனம் பிரிந்தவன் தலைமகளின் தமர் விரும்பும் பொன்னும் பொருளும் கொணர்ந்து தரும் சிறப்பைத் தாய் பயிர் பிள்ளை வாய்படச் சொரியும் என்றும் கூறினாள். தலைமகன் வரைவொடு வந்தமை ஊர் முழுதும் நன்கறிந்த தொன்று என்பாள். நம் சிறுகுடிப் பொலிய என்றும், அவளுடைய தமரும் மகட்கொடை மறாது நேர்ந்தனர் என்பதைப் பெருநல் ஈகை நம் சிறுகுடி என்றும், களவின்கண் மறைந்த வருகையைப் புரிந்து வந்தவன் இப்போது பலரும் காணக் கடுமாப் பூண்ட நெடுந்தேர் ஏறி வந்தனன்; அதனை ஊரார் பலரும் கண்டு மகிழ்ந்தனர் என்பாளாய், நெடுநீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே என்றும் எடுத்துக் கூறினாள். இதனால் தலைமகள் உவகைமிகுவது பயன். 92. பெருந்தேவனார் மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைவன் வினை வயிற் பிரிந்து செல்லும் கடமை உடையனானான். அவனது பிரிவால் தலைமகள் ஆற்றாமை கொண்டு மேனி மெலிந்து வருந்தலுற்றாள். அக்காலத்தே, தோழி, மென்மொழி யாலும் வன்மொழியாலும் ஏற்பன கூறித் தலைவியை ஆற்று வித்தல் இயல்பு. அதனால், பிரிவாற்றாது மேனி வேறுபட்டிருக்கும் தலைமகட்குத் தலைவன்பால் அன்பின்மை ஏற்றி வன்மொழி மேற்கொண்டு, "சுரத்திடை நிகழும் காட்சிகளை நம் தலைவர் மனம் கொள்ளாத வன்கண்மை மிகவுடையர் போலும்; அங்கே மாவும் புள்ளும் தத்தம் துணையின்பால் அன்பு கொண்டு வாழும் காட்சி, காண்போர் கருத்தில் அவரவர் துணையை நினைப்பிக்கும்; நம் காதலர் சென்ற சுரத்தின்கண் ஆனிரைகளின் பொருட்டு அமைத்த நீர்ப் பத்தர்களின் மேலே நிறுவிய விற்பொறியை எடுத்தெறிந்துவிட்டுத் தன் பிடியும் கன்றும் உண்ணுமாறு செய்யும் களிற்றின் செயலை உள்ளம் ஒன்றிக் கண்டிருப்பா ராயின், நின்னை நினைந்து விரைந்து வந்திருப்பர்; அவர் வராமையின் அன்பின்மையின் அதனைத் தம் மனத்திற் கொள்ளா தொழிந்தனர், காண்" எனத் தோழி கூறினாள். தோழியின் இக்கூற்று, தலைவன்பால் அன்பின்மை கூறுமாற்றால் தலைவி யுள்ளத்துப் பொறாமை தோற்றுவித்து, "சுரத்திடைக் காட்சியை அவர் உள்ளாராதற்கு ஏதுஅன்பின்மை யன்று; வினைமேற் சென்ற உள்ளமிகுதி; அவர் வருந்துணையும் ஆற்றியிருப்பல்" என உரைத்து, அவள் தானே ஆற்றியிருக்கும் திறம் பயப்பிக்கும் சூழ்ச்சி கண்ட பெருந்தேவனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். உள்ளார் கொல்லோ தோழி துணையொடு வேனில் ஓதிப் பாடுநடை1 வழலை வரிமரல் நுகும்பின் வாடி அவண வறன்மரன் பொருந்தும் குன்றத்துக்2 கவாஅன் வேட்டச் சீறூர்3 அகன்கட் கேணிப் பயநிரைக் கெடுத்த 4மணிநீர்ப் பத்தர் புன்றலை மடப்பிடி கன்றொ டார வில்கடிந் 5தூட்டின பெயரும் கொல்களிற் றொருத்தல சுரன்இறந் தோரே. இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. உரை தோழி-; உள்ளார் கொல்லோ- மனத்திற் கொள்ள மாட்டார் போலும்; வேனில் ஓதிப்பாடுநடை வழலை- வேனிற் காலத்து வெளிப்படும் ஓணானாகிய ஓசையிட்டுச் செல்லும் நடையினையுடைய ஆண்ஓந்தி; துணையொடு-தன் துணையாகிய பெடையோந்தியுடன்; வரிமரல் நுகும்பின் வாடி-வரிகளையுடைய மரலினது குருத்தைப் போல வாடி; அவண வறன் மரன் பொருந்தும் குன்றத்துக் கவாஅன்-அவ்விடத்தனவாகிய வற்றிய மரங்களிற் பொருந்திவாழும் மலைப்பக்கத்தே யுள்ள; வேட்டச் சீறூர் அகன்கண் கேணி-வேட்டுவர் வாழும் சிறிய ஊரிலுள்ள அகன்ற இடத்தையுடைய கேணிக்கரையில்; பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர்-பாற்பயன் நல்கும் ஆனிரைகளின் பொருட்டுக் கட்டப்பெற்றுத் தெளிந்த நீர் நிறைக்கப்பட்டுள்ள தொட்டியின்மேல் பொருத்தி யிருக்கும்; வில் கடிந்து-விற்பொறி அமைக்கப்பெற்ற மேன்மூடியைத் தகர்த்தொழித்து; புன்றலை மடப்பிடி கன்றொடு ஆர ஊட்டின பெயரும்-புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றோடே யிருந்து நன்கு நீர்உண்பித்து நீங்கும்; கொல்களிற்று ஒருத்தல - கொல்லுதல் வல்ல களிற்றியானைகளையுடைய; சுரன் இறந்தோர்-சுரமாகிய காட்டைக் கடந்து சென்றவராகிய நமது காதலர் எ.று. தோழி, கொல்களிற்று ஒருத்தல வாகிய சுரன் இறந்தோர் உள்ளார் கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உள்குவ ராயின் இதுகாறும் நம்மை நினைந்து வாராதிரார் என்பது குறிப்பு. வேனிற் காலத்தில் மரஞ்செடிகள் புதுத்தளிர் ஈன்று நறும்பூ மலர்ந்து தேங்கனி தாங்கிச் சிற்றுயிர்கள் போந்து மேயுமாறு விளங்குதலால், அக்காலத்தே ஓந்தியினம் வெளிப்போந்து அச்சிற்றுயிர்களைப் பிடித்து உண்பது குறித்து வேனில் ஓதி என்றார். ஓந்தி ஓதியெனவும், அதன் ஆண் வழலை எனவும் வழங்கும். வேனில் வெப்பத்தால் உலர்ந்து கிடக்கும் சருகுகளின்மேல் சலசல என்ற ஒலியுடன் பாம்புபோற் சீறிக் கொண்டு செல்வதுபற்றிப் பாடுநடை வழலை என்றார். பாடு, ஒலி, இவ்வோந்தியைப் பச்சோந்தி என்பது வழக்கு வெப்பமிகுதியால் வாடிய ஓந்தி மேனி முழுதும் வரிபெற்று வற்றிய மரலின் மடல் போறலால் வரி மரல் நுகும்பு உவமையாயிற்று. ஏனை ஓந்திகட்குப் பாடுநடை யின்மை வேறுபாடு என அறிக. தழைத்த மரங்களில் தனக்கு ஊறுசெய்யும் வேருயிர்கட்கு அஞ்சி இவ்வோந்திகள் வற்றிய மரத்தின்கட் காணப்படும் பொந்து களைப் பொருந்தி வாழும் இயல்பு நோக்கி, வறன்மான் பொருந்தும் என்றார். வேட்டுவர் வாழும் சீறூர், வேட்டச் சீறூர் எனப்பட்டது. பலராய்ப் போந்து ஒருங்கு நீர் இறைக்கும் கேணி என்றற்கு அகன்கட் கேணி என்றும், ஆனிரைகள் நீர்உண்டற் பொருட்டுக் கல்லிற் குடைந்து செய்த தொட்டியைப் பத்தர் என்றும், அதன்கண் நிறைக்கப்பட்ட நீர் தெளிந்து மணிநிறம் பெற்று விளங்குதலின் மணிநீர்ப் பத்தர் என்றும் கூறினார். பத்தர் போறலின், கல்லிற் குடைந்த தொட்டியைப் பத்தர் என்றார். பத்தராவது, நீர் நிறைக்கும் ஏற்றத்திற் கட்டப்படும் தோல்முகவை; பன்றித் தோலால் தைக்கப்படுவதால் இதனைப் பன்றிப்பத்தர் என்றும் கூறுவர்; பண்டை நூல்களில் ஆம்பி எனப்படுவதும் இதுவே. "ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பி"1 என்பது காண்க. "பயநிரை சேர்ந்த பாழ்நாட் டாங்கண், நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடுவாய்ப் பத்தர்"2 என்று பிற சான் றோரும் கூறுவர். பத்தர்க்கண் உள்ள நீரைக் காத்தற் பொருட்டு மேலே விற்பொறி அமைத்த மூடியிட்டு வைப்பது மரபு. விற்பொறி வில்லெனப் பட்டது. நீர் வேட்கை மிக்கு வருந்திய மடப்பிடி தாழாது உண்ணும் பொருட்டு உடன்வந்த களிறு விற்பொறியைச் சிதைத்து நீக்கிப் பத்தரிடத்து மணி நீரை உண்பித்தும் உண்டும் நீங்கும் திறத்தைப் புன்றலை மடப்பிடி கன்றொடு ஆர வில்கடிந்து ஊட்டின பெயரும் என்றும், அக்காலையில் தன் செயலைத் தடுக்கும் உயிர் யாதாயினும் அதனைக் கொல்வதல்லது பிறிது செயல்வகை நினையாத களிறு என்பார். கொல்களிற்று ஒருத்தல் என்றும் கூறினார்; "ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தர் யாடின இனநிரை வௌவும்"3 எனப் பிறரும் கூறுவர். தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் கருத்தினளாதலால், கொல்களிற்றின் அன்புடைச் செய்கையை விதந்து கூறினாள். "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே4" என ஆசிரியர் உரைப்பது காண்க. காதல் மடப்பிடியின் நீர் வேட்கையின் பொருட்டுக் கொல்களிறு பத்தரின் வில் கடிந்து உண்பித்துப் பெயர்தலைச் சுரத்தினைக் கடந்து சென்ற காதலர் கண்டிருத்தல் வேண்டும்; காணினும், அச்செயல் நலத்தை மனத்திற் கொண்டிலர்; கொண்டிருப்பின் இதுகாறும் இவண் வாராதிரார் என்பாள். உள்ளார் கொல்லோ என்று தோழி கூறினாள். மடப்பிடியது வருத்தம் கண்ட களிறு விற்பொறியைத் தகர்த்தலால் வரும் ஏதம் நினையாது அதனைச் சிதைத் தொழித்துப் பெயர்ந்தாற் போலச் சுரன் இறந்து சென்ற காதலர் நாம் எய்தும் வருத்தம் நினைந்து வாராராயினமை என்னே என்றலும் ஒன்று. ஓதியின் வழலை வேனில் வெம்மையால் வாடித் தன் துணையொடு வறன்மரன் பொருந்தினாற் போல, வேட்கை மிகுதியால் வாடிய நீ நின் துணையுடன் இருக்கற்பாலை என்பது நினையாமையே யன்றித் தன்பிடியின் வேட்கையைக் காணப்பொறாது வேட்டுவர் அமைத்த பத்தரின் நீரை உண்பிக்கும் களிற்றி யானையின் அன்புடைச் செயலைக் கண்ணிற் கண்டும் உள்ளம் கொள்ளா தொழிந்தது கொடுமை என்றாள் என்றுமாம். இதனாற் பயன், தோழி கூற்றைக் கேட்கப் பொறாது, "உள்ளா ரல்லர்; உள்குவர்; ஆயினும், மேற்கொண்ட வினைமுடித்தல்லது இடையில் மடங்கி மீள்வது ஆண்மை அன்மையின், அவர் வினை மேவிய உள்ளத்தராயினர்; அவர் தெளித்த சொல் தேறி யிருத்தல் நமக்குக் கடனாதலால் யான் ஆற்றுவல் காண்" என்பாளாவது. 93. மலையனார் பண்டைத் தமிழ்மக்கள் வாழ்வில், இன்று போலப் புராணப் பயிற்சியும் வடமொழி நூற்கருத்துக் கலப்பும் பெருக இல்லாமையால், இயற்கையோடு இயைந்து அதன்கண் காணப்பட்ட சிறப்புடைப் பொருள்களால் அவர்கள் மக்கட்குப் பெயரிட்டு வழங்கினர். மலை குன்று கடல் முதலியவற்றால் ஆண்மக்களை மலையன், குன்றன், கடலன் என்பன முதலிய பெயர்களாலும், குயில் கிளி தாமரை ஆம்பல் முதலியவற்றால் பெண்மக்களைக் குயிலி, செந்தாமரை என்பன முதலிய பெயர்களாலும் வழங்கி யதைக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டுகின்றன. பிற்காலத்தே இப்பெயர்கள் வடமொழியில் மாறத் தலைப்படவும், இவையாவும் முறையே பருவதம், கிரி, சாகரன் எனவும், கோகிலம் அஞ்சுகம் கமலம் குமுதம் எனவும் வடமொழிப் பெயர்களாக மாறி வழங்கத் தலைப்பட்டன. பின்னர்ச் சமயச் செல்வாக்கு மிகவும் சைவத் திருமுறைகளும் ஆழ்வார்களின் திருமொழி திருவாய்மொழி களும் மக்கள் வழக்கிற் பரவவே அவற்றுட் காணப்படும் தெய்வப் பெயர்கள் மக்கட்கு இடப்பெற்றன; அப்பெயர்கள் பின்பு வடமொழியில் பெயர்க்கப்பட்டதனால் இன்று பெரும்பாலும் வடமொழித் தெய்வப்பெயர்களும் இடப்பெயர்களும் மக்கட்கு இடப்படுகின்றன. இவ்வரலாற்றறிவு இல்லாமையால் மலையன் முதலிய தனித்தமிழ்ப் பெயர்கள் இன்றைய மக்கட்குப் புதுமையாகத் தோன்று கின்றன. பண்டைத் தமிழ்நூலறிவு உண்டாகத் தொடங்கியதும் இக்கால இளைஞர்கள் பழந்தமிழ்ப் பெயர்களைப் புதுக்க முயல்கின்றனர். மலையனார் என்ற இச்சான்றோர்க்கும் மலாடர் கோமானான மலையமான் குடிக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. மலையமான் குடிமுதல்வன் மலையன் என்ற பெயர் பூண்டவன் என்பதைப் புறநானூற்றால் அறிகின்றோம். மலையன் என்ற பெயர் தாங்கிய மக்கள் பலர் உண்மையின் இவர் வேறு, மலையமானான மலையன் வேறு எனக் கோடல் நேரிது. களவின்கண் காதலுறவு பூண்டு ஒழுகும் தலைமகனை மலைப்பக்கத்துக் குறியிடத்தே கண்டு நீங்கும் தலைவியொடு போந்த தோழி, தலைமகன் இக்களவினை நீட்டித்தல் கூடாது என்ற குறிப்புத் தோன்ற நோக்கினாளாக, அதனை உணர்ந்த தலைமகன், "இம்மலையிடத்துப் பகற்குறிப்புணர்ச்சி மிக்க இன்பம் தருவதொன்று; இம்மலை தானும் பெருவளம் உடையது" என்றான். அதுகேட்ட தலைமகள் பெருநாணத்தால் வாட்ட முற்று வருந்த, "நாடனே, யாங்கள் சென்று வருவேம்; எமக்கு அருள் செய்த நீ வாழ்க" என்பாளாய், "என் தலைவியாகிய இவள் இப்பொழுது நாணட எய்தும் வருத்தமும் மேனி யெங்கும் மாமைநிறமும் பெற்றுப் பொலிகின்றாள்; நீ சென்றவழித் தன் மாமையை இழந்து பசந்து ஒழிவள்; அது பின்னர் நின் மணமுரசு கேட்குமிடத்துத்தான் மீளப் பெறப்படும்; நீ இவளை வரையாது நீட்டிப்பாயேல் நீங்குவ தாகிய இவளுடைய உயிர் குறியெதிர்ப்பைப் போல நின் மணமுரசால் பெறலாவ தன்று. காண்" என்றாள். இக்கூற்றின்கண் களவே விரும்பும் உள்ளத்த னாவது கண்டு தலைமகட்கு அதனால் நீங்கும் மாமையும் உயிருமாகிய இரண்டனுள் மாமை போல உயிர் மீளப் பெறப்படுவதன்று என இறந்துபாட்டைக் காரணம் காட்டி வரைவுகடாவும் தோழியின் சொன்னலம் வியந்த மலையனார் அதனை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். பிரசம் தூங்கப் பெரும்பழம் துணர வரைவெள் ளருவி மாலையின் இழிதாரக் கூல மெல்லாம் புலம்பெற1 நாளும் மல்லற் றம்மஇம் மலைகெழு வெற்பெனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட செல்கம் எழுகமோ2 சிறக்கநின் ஊழி 3மருங்குமறைத் திருந்த திருந்திழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியற் குறுமகள் பூண்தாழ் ஆகம் நாண்டர4 வந்த பழங்கண் மாமையும் உடையமன் தழங்குரல் மயிர்க்கண் 5முரசி னோரும் உயிர்க்குறி யெதிர்ப்பைப் பெறலருங் குரைத்தே இது தோழி வரைவுகடாயது, 6பகற்குறி உரை பிரசம் தூங்க-மரக்கிளைகளிலும் பெரும் பாறைகளிலும் தேனிறால்கள் தொங்க; பெரும் பழம் துணர-பலாவின் பெரிய பழங்கள் கொத்துக்கொத்தாய்ப் பழுக்க; வரை வெள்ளருவி மாலையின் இழிதர-மலையிடத்து வெள்ளிய அருவிகள் மாலைபோல் விழாநிற்க; கூலம் எல்லாம் புலம் பெற - கூலவகை பலவும் புலங்கள் விளைவிக்க; நாளும் இம்மலை கெழு வெற்பு மல்லற்று - என்றும் பக்கமலைகள் பொருந்திய மலைத்தொடர் வளமுடையதாகும்; அம்ம என - கேட்க என்று சொல்லி; பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட - பிரிந்து செல்வோர் நினைந்து வருந்துதற் கேதுவாகிய பெரிய மலை களையுடைய நாட்டுக்குத் தலைவனே; செல்கம் எழுதும்-யாம் எம் சிறுகுடிக்குச் செல்வேமாய் எழுகின்றேம்; நின் ஊழி சிறக்க-எம் பொருட்டுப் போந்து இத்தலையளியைச் செய்யும் நின் வாழ்நாட்கள் பல்லூழி நீடுவனவாகுக; மருங்கு மறைத்திருந்த திருந்திழைப் பணைத்தோள்-பக்கம் தெரியாதவாறு மறைத்தாற் போன்று இருந்த திருந்திய இழைகளை அணிந்த பெரிய தோள்களும்; நல்கூர் நுசுப்பின்-சுருங்கிய இடையும்; மெல்லியல் குறுமகள் - மென்மையான இயல்புமுடைய இளையளாகிய தலைமகளின்; பூண்தாழ் ஆகம்-பூணாரம் அணிந்த மேனியின்கண்; நாண் தர வந்த பழங்கண் மாமையும் உடையமன்-நாணத்தால் விளைந்த உள்ளச் சுருக்கமும் மாந்தளிர் போலும் நிறமும் மீளப் பொருந்துதல் உடையவாம்; தழங்குரல் மயிர்க்கண் முரசின்-முழங்குகின்ற ஓசையையும் மயிர்சீவாது போர்த்த கண்ணையுமுடைய நின்மணமுரசு கொண்டு; உயிர்க் குறியெதிர்ப்பை-உயிரைக் குறியெதிர்ப்பையாக; பெறல் அருங்குரைத்து-பெறுதல் அரிது காண் எ.று. நாட செல்கம் எழுகம்; சிறக்க நின் ஊழி; தோளும் நுசுப்பும் இயலுமுடைய குறுமகள் ஆகத்துப் பழங்கணும் மாமையும் மீளப் பெறுதல் எளிதின் உடைய; முரசின் உயிரைக் குறியெதிர்ப்பையாகப் பெறல் அருங்குரைத்து எனக் கூட்டி வினை முடிவு செய்க. பிரசம், தேன்; ஈண்டுக் கொம்புகளிலும் கற்பாறைகளிலும் கட்டப்பெற்றிருக்கும் தேனிறால் மேற்று, பெரும்பழம் எனப் பொதுப்பட மொழிந்தமையின் சார்பு பற்றிப் பலாவின் பெரும்பழம் கொள்ளப்பட்டது. துணர், கொத்து, கூலம்; தினை - வரகு, அவரை, துவரை முதலிய பதினெண் வகைப் புன்செய் நில விளைபொருள்கள், புலம், கொல்லைகள். சிறியவும் பெரியவு மாகிய குன்றுகளும் மலைகளும் சேர்ந்த மலைத்தொடர், மலைகெழு வெற்பு எனப்பட்டது. மல்லல், வளம், அம்ம, உரையசை, நாளும் இனிய பொருள்தந்து இன்பம் செய்தலால், பிரிந்தோர் வெற்பினை நினைந்து வருந்துதல் இயல்பாதல்பற்றிப் பிரிந்தோர்இரங்கும் பெருங்கல் நாடு என்றார். வேள்பாரி இறந்தபின் அவனது பறம்பின் நீங்கிச் சென்ற கபிலர், அவனுடைய பெருங்கல் நாட்டை நினைந்து இரங்கிய திறத்தைப் புறநானூற்றுப் பாடல்களால் அறிக. செல்கம் எழுகமோ என்புழிச் செல்கம் என்பது முற்றெச்சம். ஓகாரம், அசைநிலை, ஊழி, ஈண்டு வாழ்நாள் மேற்று. கையிலும் கழுத்திலும் அணிந்த இழை பக்கத்தை மறைப்பதுபற்றி மருங்கு மறைத்திருந்த திருந்திழை என்றார். பூண், மார்பின்கண் அணியப்படும் பூணாரம், அகம், மேனி. நாணம் மிக்கவழி உள்ளம் சுருங்கித் தோன்றுவது பற்றி, நாண் தரவந்த பழங்கண் என்பாராயினர். மாமை, மாந்தளிரின் நிறம். அருங்குரைத்து, அரிது. குரை, ஓர் என்பன அசைநிலை, மன், ஆக்கப்பொருட்டு. முரசின் என்புழி, இன்னுருபு ஏதுப்பொருட்டு. குறி யெதிர்ப்பை, "ஓர் அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே கொடுப்பது"1 என்பர்; இந்நாளிற் கொங்கு நாட்டில் இது குறியாப்பை என மருவி வழங்குகிறது. தலைமகனைக் குறியிடத்து எதிர்ப்பட்ட தோழி, அவனைக் கூடிப் பெற்ற இன்பத்தால் அவனையே நினைந்து வருந்தும் தலைவியின் ஆற்றாமையைப் புலப்படுத்துவாள். நாளும் மல்லற்று அம்ம இம்மலைகெழு வெற்பு எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட என்றாள். பிரசமும் பெரும்பழமும் பிரிந்தோர் இரங்குதற்கு ஏதுவாயது போல, நின் பிரிவின்கண் தலைவி ஆற்றாமைக்கு நீ செய்யும் தலையளி ஏதுவாம் என்ற வாறு. குறியிடத்துப் பெறும் கூட்டம் நீட்டியாது உடனிகழும் பிரிவாற் சிதையுமாறு தோன்றச் செல்கம் எழுகமோ என்றும், இப்பிரிவால் ஆற்றாது இறந்து படுவே மாயினும் நீ அயராது போந்து அருள் செய்கின்றனை யாகலின் நீடு வாழ்க என்பாள், சிறக்க நின் ஊழி என்றும் தோழி கூறினாள். குறுமகளாகிய தலைமகள் பணைத் தோளும் நுசுப்பும் இயலும் நன்கு உடைய ளாயினும், நீ வரைவு நினையாது களவே விரும்பிப் பிரிந்து ஒழுகுதலால், மேனி மெலிவும் கவின்கேடும் எய்தி முடிவில் உயிரையும் இழப்பள்; இன்னே வரைவுமேற்கொள்வையாயின் மேனிநலமும் மாமைக்கவினும் எளிதின் பெறப்படும் என்பாள், குறுமகள் பூண்தாழ் ஆகம் நாண் தர வந்த பழங்கண் மாமையும் உடையமன் என்றும், தாழ்த்து வருகுவையாயின், நின் மணமுரசு முழக்கத்தாலும் நீங்கின இவள் உயிரைக் குறியெதிர்ப்பை யாகவும் பெறல் கூடாது என்பாள். மயிர்க்கண் முரசினோரும் உயிர்க் குறி யெதிர்ப்பை பெறலருங்குரைத்து என்றும் இயம்பினாள். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. 94. இளந்திரையனார் இச்சான்றோர் தொண்டை நாட்டை ஆண்ட சங்ககால மன்னருள் ஒருவர். தொண்டைநாடு, வடபெண்ணை தென் பெண்ணை என்ற இரண்டு ஆறுகட்கும் இடையில் மேற்கில் பவளமலையையும் கிழக்கிற் கடலையும் எல்லையாகக் கொண்டது. இளந்திரையன் என இவர் குறிக்கப்படுவதால் திரைவன் என ஒருவர் இருந்திருத்தல் இனிது விளங்கும். திரையன் என்பான் சோழவேந்தன் ஒருவனுக்கும் நாக நாட்டு நங்கை யொருத்திக்கும் தோன்றியவன் என்றும், சோழநாட்டின் வடபகுதியான இத்தொண்டைநாட்டை வேறாகப் பிரித்துத் திரையனைத் தொண்டை மானாக்கி நாடு காவல் புரியுமாறு செய்தான் தந்தையான சோழன் என்றும் வரலாறு ஒன்று கூறுகிறது. மற்று, திரையனுடைய பெயரால் ஊர்கள் இன்றும் உண்டு; செங்கற்பட்டு மாவட்டத்துத் தென்னேரி என்ற ஊர் திரையனூர் என்பதன் மரூஉவாகும். அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள், அதனை ஊற்றுக்காட்டுத் கோட்டத்துத் "தியாகவல்லி வறநாட்டு திரையனூர்1 என்று பெயர் குறிக்கின்றன. இத்திரையர் காலத்தில் காஞ்சிமாநகர் தொண்டை நாட்டுக்குத் தலைநகராகவும், பவத்திரி என்ற பேரூர் கடற்றுறை நகரமாகவும் விளங்கின. இப்பவித்திரியைச் "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங்கானற் பவத்திரி2" என நக்கீரர் குறித்துள்ளார். சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினம் கடற்கோட் பட்டபோது இப்பவத்திரியும் கடற்கு இரை யாயிற்று. பிற்காலக் கல் வெட்டுக்கள் அக்கடல்கோளை மற வாமல், "இராசேந்திர சோழமண்டலத்துக்கடல் கொண்ட பவத்திரிக் கோட்டத்துக் காகந்தி மாநகர்"3 என்று காட்டுகின்றன. இந்த இளந்திரையனாருடைய ஆட்சிநலத்தையும் பிற நலங்களையும் எடுத்தோதிய கடியலூர் உருத்திரங் கண்ணனார். "முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்" என்றும், "வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின், அல்லது கடிந்த அறம்புரி செங்கோல், பல்வேல் திரையன்" என்றும், "ஓடாத்தானை ஒண்டொழிற் கழற்கால், செவ்வரை நாடன்" என்றும், "குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும். வேண்டுப வேண்டுப வேண்டுநர்க் கருளி, இடைதெரிந் துணரும் இருள்தீர் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா" உள்ளத்தன் என்றும் சிறப்பித்துள்ளார். இவற்றுள் செவ்வரை என்றது. தொண்டை நாட்டின் மேல் எல்லையாக நிற்கும் பவளமலையை; இதனைச் செம்மலை என்பதும் வழக்கு. பவள மலை இக்காலத்திற் சவ்வாது மலை என்றும் செம்மலையை வடமொழிப்படுத்து அருணாசலம் என்றும் வழங்குகின்றனர். நாடாளும் நன்மக்கட்கு அரசியலறிவு நன்கு அமையவேண்டும் என்றும், அந்த நன்மகன், நாடுகாவ லாகிய வண்டியை "உய்த்தல் தேற்றானாயின், வைகலும் பகைக்கூழ் அள்ளற்பட்டு மிகப் பல் தீநோய்" தலைத்தலை உற்று வருந்துவன் என்றும் கூறுவ தொன்றே இத்திரையனாரது அரசியற் புலமை நலத்தைத் தெரிவிக்கும் சான்றாகும். காதலாற் கருத்துப் பிணிப்புண்ட தலைவனும் தலைவியும் களவின்கண்ஒழுகி வரும் நாளில், காதல் பெருகியதால் ஆற்றாளாகிய தலைவி விரைவில் வரைந்து கொள்ளுதலை விழைந்தாள். காதல் வேட்கை மிக்கு அறிவு கலக்கமுறும் பொழுதில் ஆண்மக்க ளாயினார் தமது வேட்கையைத் தக்கோர்க்கு எடுத்துரைப்பதற்கு ஏற்ற தலைமையும் முறைமையும் உடையர். பெண்மக்கள் பெண்மையியல்பால் அதுசெய்தற்குரிய ரல்லர். கடலன்ன காமம் உழப்பினும் அதனைத் தாங்கி அமைவதே அவர்கட்கு இயல்பு. தன் மார்பு தரும் வேட்கை நோயால் வருந்தும் மகளிர் இயல்பை அறியாமலும் தன் இயல்பை உணராமலும் ஒழுகுபவன் என்ன இயல்பையுடைய ஆண் மகனோ, எனக்குத் தெரிந்திலதே எனத் தலைவி ஒரு நாள் அவன் சிறைப்புறமாக வந்து நிற்பதை உணர்ந்து தோழியொடு சொல்லாடி உரைக்கலுற்றாள். இக்கூற்றால் தலைவியினுடைய மனவுணர்வின் நுட்ப மிகுதியும் கடமையுணர்வின் சிறப்பும் விளங்கித் தோன்றுவது கண்ட இளந்திரையனார் அவற்றை இப் பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின் காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும் 1யாமே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்க2 அவனே, கைவல் கம்மியன் கவின்பெறக்3 கடைஇ மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப் புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன் என்ன மகன்கொல் தோழி தன்வயின் ஆர்வம் உடைய 4ராகி மார்பணங் குறுநரை அறியா தோனே இது, தலைமகன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய் சொல்லியது. உரை நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதின் - காதல் நோய் அலைத்தலால் கலக்கமுற்று வலியழிகின்ற போது; காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்-தான் கொண்ட காதலை வாய்விட்டுக் கூறுவது ஆண்மகனுக்கு அமைவதாகும்; யாம்-; பெண்மை தட்ப நுண்ணிதீன் தாங்க-பெண்மைக்குரிய நாணுடைப் பண்பு தடுத்தலால் அதனை நுண்ணிதாகத் தாங்கி நிற்ப; அவன்-; கைவல் கம்மியன் கவின் பெறக் கடைஇ-தொழில் வல்ல கம்மியனால் அழகுண்டாகக் கடையப்பட்டு; மண்ணாப் பசுமுத்து ஏய்ப்ப-கழுவாத பசிய முத்தைப் போல; குவியிணர்ப் புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்-குவிந்த பூங்கொத்துக் களையுடைய புன்னைமரம் அரும்புகளைத் தாங்கி நிற்கும் புலால் நாறுகின்ற கடல் நீரையுடைய நெய்தல் நிலத் தலைவனான நம் காதலன்; என்ன மகன்கொல்-எத்தகைய இயல்பினையுடைய ஆண் மகனோ தெரியேன்; தோழி-; தன் வயின் ஆர்வமுடையராகி-தன்பாற் பேரன்புகொண்டு; மார்பு அணங்குறுநரை அறியாதோன்-தனது மார்பு தோற்றுவிக்கும் வேட்கையால் வருத்தம் எய்தும் மகளிர்இயல்பை அறியாது ஒழுகுகின்றான் ஆகலான் எ.று. மதனழி பொழுதின் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; யாமே பெண்மை தட்ப, தாங்க, அவனே, சேர்ப்பன், என்ன மகன்கொல், தோழி, தன்வயின் ஆர்வமுடைய ராகி அணங்குகுறுநரை அறியாதோ னாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க, நோய், காதல்வேட்கை அலைக்கலங்கிய என்றவிடத்து அலை என்பது முதனிலைத் தொழிற்பெயர்; அதன் ஈற்றில் மூன்றனுருபு தொக்கது,மதன்; மனவலி; அறிவுமாம் யாமே, அவனே என நின்ற சீர் இரண்டும் கூன்; "சீர் கூனாதல் நேரடிக் குரித்தே" என்பது தொல்காப்பியம்1 பெண்மை ஈண்டுப் பெண்மைக்கு உரிய நாணத்தின் மேல் நின்றது. கவின்பெறக் கடைதலின், கைவல் கம்மியன் என்றார். மண்ணுதல், தேய்த்துக் கழுவுதல், கழுவாத முத்தைப் பச்சை முத்து என்னும் வழக்குப்பற்றி பசுமுத்து எனப்பட்டது; "மண்ணா முத்தம் அரும்பிய புன்னை2" என்றார் பிறரும் பெருகிய காதலன்பினை ஆர்வம் என்றார்; திருவள்ளுவனாரும், "அன்பீனும் ஆர்வமுடைமை3" என்பது காண்க. ஆடவர் மார்பு மகளிர்க்கு வேட்கை நோய் தந்து வருத்தும் என்பதை, "மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்4" என்று பிறரும் கூறுதல் காண்க. அறியாதான் என்றவிடத்து ஈற்றயல் ஆகாரம், செய்யுளாகலின் ஓகாரமாயிற்று. என்ன மகன் கொல் என்ற மேற்கோளை முடித்துத் தருதலின், அறியாதோன் என்றது ஏது மொழியாயிற்று. தலைமகன் களவே விரும்பி விரைய வரைந்துகோடலை நினையானாகத் தலைமகட்குக் காதல் கைம்மிக்குக் கழிபடர் நல்க வருந்துகின்றாளாகலின், நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின் என்று எடுத்தோதினாள். உடம்பினுள் துச்சில் இருக்கும் உயிர்க்கு உடலோடு தொடர்புடைய கருவி மனமாகும். இருபாலாரிடத்தும், வேறு உடம்பு படைக்கும் செவ்வி எய்தியவழிப் பிறந்து மிளிரும் காதல் வேட்கை மீதூர்ந்து மனத்தைத் தன்வழிப் படுத்துங்கால், உயிரறிவு செயற்பாடு இன்றி அலமரல் எய்தும்; அறிவொடு கலவாது, வேட்கைவழி நிற்கும் மனம் வளியிடைப்பட்ட தூறுபோல அலையுமாகலின், அதனை மதனழி பொழுது என்றாள். "பெருமையும் உரனும் ஆடூஉ மேன"5 என்பவாகலின், காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் என்றும், "தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை"6 என்பதால், யாமே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்க என்றும் கூறினாள். கடற்புலவை மாற்றுதற் பொருட்டுப் புன்னை முத்து அரும்பும் சேர்ப்பன் என்றது, ஊரவர் எடுக்கும் அலரை மாற்றுதற் பொருட்டு வரைவொடு வருதற் குரியன் என்றவாறு. இதனை முன்னுற உணர்ந்து வரைதற்கு முயல்கின்றிலன் என்பாள், என்ன மகன் கொல் என்றும், இதனை நீ பல்லாற்றான் உணர்த்தியும் அவன் நினைந்திலன்காண் என்பாள், தோழி என்றும், அவனையின்றி இமைப்பொழுதும் அமையாத அளவில் காதல் கைம்மிக்கு உள்ளமை உணர்த்துவாள், தன்வயின் ஆர்வ முடையராகி என்றும், தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பால் மார்பு அணங்குறுநரை அறியாதான் என்றும் கூறினாள். இது காதல் கைம்மிகல். "மறைந்தவற் காண்டல்"1 என்ற நூற்பாவின்கண் வரும் "ஏமம் சான்ற உவகைக் கண்ணும்" என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி, "மண்ணாப் பசுமுத் தேய்ப்ப நுண்ணி தின் தாங்கிப் பெண்மை தட்ப" எனவே, "கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையால் தகைத்துக் கொள்ளும் படியாகத் தன்மார்பால் வருத்த முற்றாரைக் கண்டு அறியாதோ னாகிய சேர்ப்பனை என்ன மகன் என்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள்; ஆர்வமுடையராக வேண்டி மார்பு அணங்குறுநரை அறியாதோன் என்க; அலராமற் குவித்த கொத்தை யுடைய புன்னைக் கண்ணே புலால் நாற்றத்தை யுடைய நீர் தெறித்து அரும்பிய சேர்ப்பன் என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால்நாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறு போல, வரைந்துகொண்டு வந்த குற்றம் வழி கெட ஒழுகுவன் என்பது உள்ளுறை" என்பர் நச்சினார்க்கினியர். 95. கோட்டம் பலவனார் கலைத்துறை போகிய கட்டிளங் காளையாகிய தலைமகன், ஒருகால் ஒரு குன்றகத்த தாகிய சீறூர்ப்பக்கம் சென்று ஆண்டுத் தோன்றிய இயற்கைக் காட்சியில் ஈடுபட்டு இருக்கையில், மகளிர்க்குரிய அழகும் தலைமைப் பண்பும் உருவெடுத்தாற் போன்ற செல்வத் திருமகளாகிய தலைமகளைக் கண்டு அவள் பால் தன் கருத்தை இழந்து காதற் காமக் கதிர்ப்புற்றுக் கையறவு படலானான். அவன் மெலிவு கண்ட பாங்கன் அவற்கு உற்றது யாது என வினவினானாக. பாங்கன் கேட்க உரைப்பானாய், குன்றச் சாரலில் கழைக்கூத்தாடும் மகள் ஒருத்தி, கயிற்றின் மேல் நின்று ஆடல் பயின்று, அக்கயிற்றை அங்ஙனே விட்டுச் சென்றாள்; குரங்கின் மந்தி யொன்று அவள் ஆடியது கண்டு தானும் அக் கயிற்றின் மேல் ஆடிற்று; மந்தியின் ஆட்டத்தைப் பார்த்த குறவர் சிறுவர், அதன் ஆடற்கு ஏற்ப அருகிலுள்ள பாறைமீது ஏறி யிருந்து கையால் தாளங் கொட்டுவது கண்டு வந்தேன்; வழியில் குன்றத்துச் சீறூர்க்கண் வாழும் சீரிய இளநங்கை ஒருத்தியைக் கண்டேன்; அவளும் என்னைக் கண்டாள்; என் நெஞ்சம் அவளாற் பிணிப்புண்டு அவள் கையகப் பட்டொழிந்தது; இனி அருள் கூர்ந்து அவளே விடுத்தா லன்றிப் பிறரால் விடுவிக்கப்படாத நிலையில் அது கிடக்கின்றது என்றான். இக்கூற்றின்கண், புதிது தோன்றும் காதற்காமக் கலப்புணர்ச்சியால் இளமையுள்ளம் எய்தும் துடிப்பும் கையறவும், அதுபற்றி எழும் சொல்லும் இயங்கும் திறம் வெளிப்படக் கண்ட கோட்டம் பலவனார் அவற்றை இப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார். கழைபா டிரங்கப் பல்லியம் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி யன்ன1 செம்முகத் 2துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க 3வரைக்கண் இரும்பொறை ஏறி4 இரைத்தெழுந்து குறக்குறு மாக்கள் 5தாளம் கொட்டும்அக் குன்றகத் ததுவே 6கொடுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி 7கையகத் ததுவே விடுத்தற் காகாது பிணிந்தஎன் நெஞ்சே இது தலைமகள் பாங்கற்கு இவ்விடத்தது இத்தன்மைத்து என உரைத்தது. உரை கழை பாடு இரங்க-குழல்கள் பக்கத்தே இசைக்க; பல்லியம் கறங்க-பலவகை வாச்சியங்களும் முழங்க; ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று-ஆடல் பயிலும் கழைக்கூத்தி யொருத்தி ஏறி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றின் மேல்; அதவத் தீங்கனி அன்ன-அத்தியின் இனிய பழம் போல; செம்முகத் துய்த்தலை மந்தி-சிவந்த முகத்தையும் துய் போன்ற மயிர் பொருந்திய தலையையு முடைய பெண்குரங்கு; வன்பறழ் தூங்க-வலிய குட்டி தன்னைப்பற்றிக்கொண்டு தொங்க ஆடுவது கண்டு; வரைக்கண் இரும்பொறை ஏறி-மலைப்பக்கத்தே யுள்ள பெரிய பாறை மீது ஏறி; இரைத்து எழுந்து-ஆரவாரித் தெழுந்து; குறக்குறுமாக்கள் தாளம் கொட்டும்-குறவர் சிறுவர்கள் கை கொட்டித் தாளம் போடும்; அக் குன்றகத்தது-அக்குன்றின் கண்ணே உளது; கொடுமிளைச் சீறூர்-வளைந்த காவற்காடு சூழ்ந்த சிறிய ஊர்; சீறூரோள் நாறுமயிர்க் கொடிச்சி-அச்சீறூர்க்கண்ணே உள்ளாள் நீண்ட கூந்தலை யுடைய குறிஞ்சிச் செல்வமகள்; கொடிச்சி கையகத்தது-அச் செல்வமகளது கையிலே யுளது; விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சு-பிறர் சென்று விடுவிக்கமாட்டாதவாறு அவளாற் பிணிக்கப்பட்ட எனது நெஞ்சம் எ.று. குன்றகத்து சீறூர்; சீறூரோள் கொடிச்சி; விடுத்தற் காகாது பிணித்த என் நெஞ்சு அக்கொடிச்சி கையகத்தது எனக் கூட்டி வினை முடிவு செய்க. கழை, ஈண்டு மூங்கிலால் ஆய குழல்மேல் நின்றது; நெடிய மூங்கிலிடத்து அறுக்கப்படுவது பற்றி வேய்ங்குழல். கழை எனப்பட்டது. கயிற்றின் புரிகள் நன்கு முறுக்கேறி வளையம் கோத்தது போல அமைந்திருப்பது தோன்றக் கொடும்புரி என்றும், அதன் வன்மைமிகுதி தோன்ற நோன்கயிறு என்றும் கூறினார். அதன்மேல் கழைக் கூத்தி ஏறிநின்று நடத்தலின் கயிற்றுக்கு நோன்மை வேண்டப்பட்டது. அதவம், அத்தி; "ஆற்றய லெழுந்த வெண்கோட்டதவம்"1 என வருதல் காண்க அதவத் தீங்கனி யன்ன தலை என இயைக்க குறக்குறுமாக்கள், குறவர்களின் சிறுவர்கள், பறழ், குட்டி வரை ஈண்டு மலைப்பக்கத்தின்மேல் நின்றது. குறிஞ்சி நில மகளைக் கொடிச்சி என்பது வழக்கு. பிணித்த, செயப்படு பொருளைச் செய்தது போலக்1 கூறியது. இருபெருமரங்கட் கிடையே நோன்கயிறு கட்டி அதன்மேல் ஏறி இனிய குழலிசையும் பிற வாச்சியங்களின் ஒலியும் முழங்க, மன நிலை குலையாமல் கழைக்கூத்தி நின்றும் நடந்தும் ஆடுவதுபற்றிக் கழை பாடு இரங்கப் பல்லியம் கறங்க ஆடுமகள் என்றார். குன்றின்கண் தங்கிய கழைக்கூத்தர் கயிற்றின்மேல் நடந்து ஆடல் பயிலுதற்கு அமைத்திருந்த கயிற்றின்மேல் கழைக்கூத்தி ஆடுதலைக் கண்டிருந்த மந்தி, தன்னின் நீங்காத பறழ் தன்னைப் பற்றிக் கொள்ள அக்கயிற்றின் மேல் நடந்து ஆடுவதும், குறக்குறுமாக்கள் தாளம் கொட்டுவதும், தலைமகற்கு இனிய காட்சியாய் இன்பம் பயந்தமையின், அதனைக் கண்டு நின்றான் என்றது, அவன் தலைமகளைத் தனித்துக் காண்டற்கு வாயில் கூறியவாறாயிற்று. மந்தியின் செயலைக் கண்டு குறக்குறுமாக்களும் மகிழ்ந்து தாளம் கொட்டுவ ராயின், மனவுணர்வும் மாண்பும் மிக்க தலைமகன் வியந்து காண்டல் இழுக்கன்மை தோன்ற குறக்குறுமாக்கள் தாளம் கொட்டும் என்றார். கொடுமிளை என்றான், சீறூர் வாழும் இளையர் இனிது சென்று பயிலும் சோலை உண்மை உணர்த்தற்கு, மக்கள் வழக்காறு பெருக இன்றித் தலைமகன் தலைவியைத் தனித்துக் காண்டற்கு ஏற்ற சூழ்நிலை தோற்றுவித்தவாறு, தலைமகட்குப் பின்னே சென்று அவளுடைய கூந்தலையே முதற்கண் கண்டமை தோன்ற, நாறுமயிர்க் கொடிச்சி என்றான். கொடிச்சி கையகத்ததுவே என்றது. அவள் தன்னைக் கண்டதும் இருவர்க்கும் கருத்து ஒத்ததும் குறித்து நின்றது. தலைவனது மெலிவு கண்ட பாங்கன் நிகழ்த்திய கழற்றுரை யாவும் பயன்படாமை புலப்பட, விடுத்தற் காகாது என்றும், அவளையின்றித் தான் அமையாமை விளங்கப் பிணித்த என் நெஞ்சு என்றும் கூறினான். இவ்வாற்றால் இடமும் தலைவியின் இயலும் கூறப்பட்டமை காண்க. "மெய் தொட்டுப் பயிறல்2" என்ற நூற்பாவின்கண் வரும் "குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்" என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்; "இஃது இடங்கூறிற்று1" என்பர் நச்சினார்க்கினியர். 96. கோக்குளமுற்றனார் இச்சான்றோர் பெயர் ஏடுகளில் கோக்குழமுற்றனார் என்றும் கோக்குடிமுற்றனார் என்றும் காணப்படுகிறது. குளமுற்றம் என்பது சோழநாட்டு ஊர்களில் ஒன்று. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றொரு சோழன் புறநானூற்றிற் காணப்படு கின்றான். அவ்வளவன் இவ்வூரிடத்தே யிருந்து துஞ்சியது பற்றி இவ்வூர் கோக்குளமுற்றம் என வழங்கிற்றாக. இவ்வூரவர் என்பது விளங்க இச்சான்றோர் கோக்குளமுற்றனார் எனப்பட்டார் போலும், குழமுற்றம் குடிமுற்றம் என்பன ஏடெழுதினோரால் நேர்ந்த பிழையாகலாம். குடிமுற்றம் என்பதே பாடமாயின், கோக்குடிமுற்றம் என்றோர் ஊர் உண்டு போலும் எனல் வேண்டும். களவின்கண் தலைக்கூடிக் காதலித் தொழுகும் தலைமக்கள் இருவரிடையே, காதலன்பு முறுகிப் பெருகிச் சிறப்பது குறித்துத் தலைமகன் களவிற் கூட்டத்தை நீட்டித்தான்; தலைமகள் இயற்கைப் புணர்ச்சிக் கண் தலைமகனை முதலில் தலைப்பெய்து இன்புற்ற பொழிலிடம், விளையாட்டயர்ந்த நீர்த்துறை, தழை தொடுத்து அணிந்து மகிழ்ந்த கானல் ஆகியவற்றைக் காணும்போ தெல்லாம் தலைமகனைக் கண்டாற் போன்று நினைந்து உள்ளம் உருகி மெலிவாளாயினள். அதனால், அவளுடைய கண்ணும் நுதலும் பையப் பசந்தமையின் மேனி வேறுபடுவதாயிற்று. அதனைக் கண்ட தோழி தலைவியது வேறுபாடு புறத்தார்க்குத் தெரியின் அலர் விளையும் எனவும், தமர் அறியின் இற்செறிப்பு மிகும் எனவும், அவ்வாற்றால், தலைமகனைக் காண்டல் அரிதாயின் தலைவி ஆற்றாள் எனவும் எண்ணி அதனைத் தலைமகற்கு உணர்த்தி வரைந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டுதலே செயற்பாலது எனத் துணிந்தாள். ஒருகால், தலைமகன் தலைமகளைக் காண்டல் வேண்டிச் சிறைப்புறமாக வந்து நின்றானாக, அதனைத் தோழி முற்பட உணர்ந்து அவன் கேட்குமாறு தலைமகட்குத் தன் மனவருத்தத்தை எடுத்துரைப்பாளாய், "தோழி, இஃது அவரொடு புதுவதிற் புணர்ந்த பொழிலிடம்; உதுவே, நம்மொடு நீராடி நம் ஐம்பாலை அவர் துவர்த்தி யருளிய நீர்த்துறை; அதுவோ எனின், தழை தொடுத்து நம்மை அணி வித்துத் தமியராய்ச் சென்ற தண்ணிய கானல் என்று ஒவ்வொன் றையும் நினையுந்தோறும் நெஞ்சுருகிக் கண்ணும் நுதலும் பசந்து வேறுபட்டனை; இதன் விளைவு நினைந்து செய்வகை அறியாது யான் வருந்துகின்றேன், காண்" என்றாள். தோழியினது இவ்வுரையின்கண் தலைவியினுடைய காதற்பெருமையும் தோழியின் நினைவுவளமும், தலைவன் கேட்டு வரைவு மேற்கொள்ளத் துணிவிக்கும் சால்பும் இனிது அமைந்திருப்பது கண்ட கோக்குளமுற்றனார் அவற்றை இப்பாட்டிடைப் பெய்து அழகுறப் பாடுகின்றார். இதுவே, நறுவீ ஞாழன் மாமலர் தாஅய்ப் புன்னை ததைந்த1 வெண்மணல் ஒருசிறைப் புதுவது2 புணர்ந்த பூமலி பொழிலே உதுவே, பொம்மற் படுதிரை நம்மொ டாடிப் புறந்தாழ் பிருளிய பிறங்குகுரல் ஐம்பால் துவரினர் அருளிய3 தூநீர்த் துறையே அதுவே, கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற4 தண்பெருங் கானல்என் றுள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் 5பல்லிதழ் உண்கண் பைஇப் பசந்தனையே இது சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலை மகனை வரைவு கடாயது. உரை இதுவே - : நறுவீ ஞாழல் மாமலர் தாஅய் - நறிய மணம் கமழும் பூக்களையுடைய ஞாழலின் மிக்க மலர்கள் உதிர்ந்து பரந்து; புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறை - புன்னை மரங்கள் செறிந்த வெண்மையான மணல் பரந்த ஒரு பகுதி யாகிய; புதுவது புணர்ந்த பூமலி பொழில் - புதுத்தளிரும் புதுமலரும் செறிந்து புதுமைக் காட்சி வழங்கும் பொழிலிடமாகும்; உதுவே - அதன் பின்னது; பொம்மல் படுதிரை நம்மொடு ஆடி - பொங்கி யெழுந்து முழங்கும் கடலலையில் நம்மொடு கூடிக் கடலாடி; புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் துவரினர் அருளிய தூநீர்த் துறை - முதுகிடத்தே தாழ்ந்து கரிதாய்த் தோன்றும் நீண்டு திரண்ட கூந்தலைத் துவர்த்திப் புலருமாறு ஒப்பனை செய்து அருளிய தூய நீர் நிறைந்த துறையாகும்; அதுவே-; கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல் - வளைந்த கழியின்கண் உயர்ந்த நெடிய அடியையுடைய நெய்தலின் பூவோடு; அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ - வேறு நிறங்களையுடைய பூவும் தளிரும் கொண்டு தொடுத்த தழையுடையை நம்மை அழகுற அணிவித்து; தமியர் சென்ற தண்பெருங் கானல் என்று - நம்மின் நீங்கிக் காதலர் தமியராய்ச் சென்ற தண்ணிய பெரிய கானற்சோலையாகும் என்று; உள்ளுதோறு உள்ளுதோறு உருகி - இவை ஒவ்வொன்றையும் நினையுந்தோறும் நினையுந்தோறும் நெஞ்சம் உருகி; பல்லிதழ் உண்கண் பைஇப் பசந்தனை - பலவாகிய இதழ்களையுடைய பூப்போலும் உண்கண் பையெனப் பசலை பூத்தனை யாகலான் யான் செய்வகை அறியாது வருந்துகின்றேன் எ.று. இது, ஞாழன்மலர் தாஅய்ப் புன்னை ததைந்த ஒருசிறைப் புதுவது புணர்ந்த பூமலி பொழில்; உது, படுதிரை ஆடி, துவரினர் அருளிய நீர்த்துறை; அது, தழைஇ, சென்ற கானல் என்று உள்ளுதோறு உள்ளுதோறு உருகிப் பைஇப் பசந்தனை யாகலான், யான் செய்வகை அறியாது வருந்துகிறேன் எனக் குறிப்பெச்சம் பெய்து கூட்டி வினை முடிவு செய்க. ஞாழலின் பூ நறுமணம் கமழ்வ தாகலின், நறுவீ ஞாழல் மாமலர் என்றார்; "எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர் நறிய கமழும் துறைவற்கு1" எனப் பிறரும் கூறுப. புதுப்பூவும் புதுத் தளிரும் தோன்றி நறுமணம் பரவிய பொழில் என்றற்குப் புதுவது புணர்ந்த பூமலி பொழில் என்றார்; "புதுவது பொன்வீஞாழலொடு புன்னை வரிக்கும் கானலம் பெருந்துறை2" எனப் பிறாண்டும் வருதல் காண்க, புறம், முதுகிடம், பிறங்குகுரல் என்ற விடத்துப் பிறங்குதல் நீண்டு அடர்ந்திருத்தல் மேற்று. நீராட்டால் நிறம் பெயராத இளமை நலம் விளங்க இருளிய குரல் எனப்பட்டது. குரல், மயிர்க்கற்றை, துவர்த்தல், நீரில் நனைந்த ஈரம் போக்குதல்; தானே துவர்த்திக் கொள்ள மாட்டாத இளமையும் செல்வச் சிறப்பு முடைய செல்வத் தலைமகள் என்றற்குத் துவரினள் என்னாது துவரினர் என்றார். புதுவெள்ளம் போலாது தெளிந்த தூய நீர் நின்ற துறை, தூநீர்த் துறை என்று சிறப்பிக்கப்பட்டது. தழையுடைக்கு நெய்தல் சிறந்தமை பற்றி, நெய்தல் அம்பகை நெறித்தழை என்றார். பகை, ஈண்டு நிறம் மாறுபடுதல், பல்லிதழ், ஆகுபெயரால் தாமரை குவளை முதலிய பூக்களின்மேல் நின்றது. பிறர்க்கு எளிதிற் புலனாகாவாறு பையப் படர்வது பற்றிப் பைஇப் பசந்தனை எனல் வேண்டிற்று. உண்கண் பசந்தனை என்ற விடத்துச் சினைவினை முதன்மேல் நின்றது, கடற்கரையை அடுத்துவளைந்து கிடப்பது கொண்டு கொடுங்கழி என்பது வழக்கு. களவின்கண் குறியிடத்தும் சிறைப்புறத்தும் தலைமகனைக் கண்டு காதல் செய்தொழுகும் தலைமகட்கு அது கைம்மிகுதலால் அவனது அழிவில்கூட்டம் பெறுதற்கு ஆர்வம் மிகுகின்றது; அதனால் அவனைக் காணும் பொழுதினும், காணாப் பொழுது ஊழியின் நெடிது நீண்டு ஒழியாத துன்பம் பயந்து கையறவு உறுவிக்கின்றது; அந்நிலையில் உடைகலப் பட்டு உயிர்க்கு உலமருவோர், ஒரு மரத்துண்டு கிடைக்கினும், கரையேறினாற் போன்ற மகிழ்ச்சிஎய்துவது போலக் கழி பெருங்காதல் வேட்கையால் கையற்று வருந்தும் தலைமகட்குக் காதலனைத் தலைப்பெய்து இன்புற்ற பொழிலது காட்சி, அவனையே கண்டாற் போன்ற இன்பம் தருதலின், அதனைச் சுட்டிக்காட்டி, இதுவே, நறுவீ ஞாழல் மா மலர் தாஅய்ப் புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப் புதுவது புணர்ந்த பூமலி பொழிலே எனத் தோழி கூறினாள். ஞாழல் நறுவீ கொய்தற்குத் தலைமகளும், புன்னையம்பொழில் சார்ந்து வெண்மணல் ஒருசிறைக்கண் இருந்து மகிழ்தற்குத் தலைமகனும் தனித் தனியே போந்தமை தோன்ற நறுவீ ஞாழலையும் புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப் பூமலி பொழிலையும் விதந்து கூறினாள். புதுப்பூவின் நறுமணமும் புன்னைப் பொழிலின் வெண்மணல் ஒருசிறையும் தலைமக்கள் உள்ளத்தில் இன்பம் பயந்து இதுகாறும் இருவரும் கண்டிராத காதலுணர்வைத் தோற்றுவித்து இருவர் மனத்தையும் ஒன்றுவித்து ஈருடலும் ஓருயிருமாக இயைவித்து இன்பம் புணர்த்தமை பற்றி அந்நிகழ்ச்சியைப் புதுவது புணர்ந்த பூமலி பொழில் என உணர்ச்சி பொங்க உரைத்தாள். இதனால், இயற்கைக்காட்சியும் இடந்தலைப் பாடும் பெற்று இருவரும் இன்புற்றது கூறினாளாயிற்று. பின்னர்த் தலைமகன் காட்டிய குறிப்புவழி நின்று, தோழியை அறிந்து, அவளை மதியுடம்படுத்து, அவள் வாயிலாகத் தலைவியின் கூட்டம் பெற்று ஒழுகிய தலை மகன், அவளொடு நீர்த்துறையில் விளையாடி இன்புற்றது இருவர்க்கும் உளதாய தொடர்பை வற்புறுத்திச் சிறப்பித்தமையின், அதனை உதுவே பொம்மற் படுதிரை நம்மொடு ஆடிப் புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் துவரினர் அருளிய தூநீர்த் துறை என அடுத்துக் கூறினாள். பேரலை யெழுந்து முழங்குமாறு நீர்த் துறைக்கண் இருவரும் படிந்து விளையாடிய செய்தியைப் பொம்மற் படுதிரை நம்மொடு ஆடி என்றும், நீராட்டில் குழல் சரிந்து முதுகிடத்தே கிடந்து நீர் துளிக்க நின்ற தலைவிக்கு ஈரம் புலர்த்தி அணியிழை திருத்தி உரிய ஒப்பனைகளையும் ஒழுங்காகச் செய்து மகிழ்வித்த தலைவன் செயலைப் புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் துவரினர் அருளிய தூநீர்த் துறை என்றும் கூறினாள். தோழியிற் கூட்டத்தால் இருவர்பாலும் வேரூன்றி நின்ற காதற்பைங்கூழை வளர்க்கத் தலைப்பட்ட தலைமகன், தன் காதல் மாண்பை வற்புறுத்தி இருவகைக் குறியினும் எய்தி இன்புறுதற்கு வாயிலாகக் கண்ணியும் தழையும் தொடுத்து அளித்தமை விளங்க, அதுவே கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற தண்பெருங்கானல் என்று இயம்பினாள். கானற் சோலையில் இருந்தகாலைத் தலைவன் நெய்தற்றழை கொணர்ந்து ஏற்பித்து அழகுற அணிவித்துக் கண்டு இன்ப மிக்குப் பெயர்ந்து சென்றானாக. அப்பெயர்ச்சி தனிமையுற்று நின்ற தலைமகட்கு மிக்க வேட்கைநோய் பயந்தமை புலப்படத் தமியர் சென்ற தண்பெருங்கானல் என்றாள். இங்ஙனம் பொழிலும் துறையும் கானலும் காணுந்தோறும் ஆங்காங்கு நிகழ்ந்தன நெஞ்சக் கிழியில் நேர்பட நின்று உணர்ச்சி உறுவித்துத் தலைவியுள்ளத்தை நீராய் உருக்கி மேனி மெலியச் செய்தமையின் உள்ளுதோறு உள்ளுதோறு உருகி என்றும், கண்ணீர் சொரிந்தமை குறிக்கப் பல்லிதழ் உண்கண் என்றும், பசலைமிக்குப் பரந்தமையைப் பைஇப் பசந்தனையே என்றும் கூறினாள். இவற்றை எப்போதும் நினைந்து நீ எய்தும் வருத்தத்தை உணராமமையால் தலைவன் களவையே விரும்பி ஒழுகுவானாயினன்; நின்னை விரைய வரைந்து கோடலை நினைத்தில னாதலால் யான் செயல்வகை அறியாது தேம்புகின்றேன் என்பதைக் குறிப் பெச்சத்தால் உய்த்துணர வைத்தாள், வாயாற் சொல்லுதலினும் உய்த்துணர வைப்பது மறவாது செயற்படும் வன்மை யுடைத்து என்பதனால், நிகழ்ந்தவை அனைத்தும் நிரல்பட உரைத்தது அதனை யாப்புறுத்து நின்றது. இதனாற்பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. 97. பாண்டியன் மாறன் வழுதி மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலும் புதுப்பட்டி ஏட்டிலும் மாறன் வழுதி என்றே இவர் பெயர் காணப்படுகிறது. பாண்டி நாட்டை ஆண்ட பண்டைத் தமிழ்மன்னர்களைப் பாண்டியர், தென்னவர், வழுதியர், செழியர், மாறர் எனப் பல பெயர்களாற் குறிப்பது சான்றோர் வழக்கம். ஏனைச் சேர சோழர்களை நோக்க இவர்கள் பழையர் என்பது பற்றிப் பாண்டியர் எனவும், தென்புலம் காவலர் என்பதனால் தென்னவர் எனவும் கூறினர். பொதியின் மலைப்பகுதிகளிலுள்ள முடிகளுள் ஒன்றான கவிரம் என்ற மலையை உடைமைபற்றிக் கவிரியர் எனவும் கூறுப. கவிரியர் என்பது பிற்காலத்தே கவுரியர் என மருவிற்று. இவ்வாற்றால் தென்னவர்குடி, வழுதியர்குடி, செழியர்குடி, மாறர்குடி, கவிரியர் குடி எனப் பாண்டியர்குடி ஐவகைப்பட்டு, பின்பு ஒரு குடியாய் உயர்ந்தோங்கவே, பாண்டியர்களைப் பஞ்சவர் என்பதும் வழக்காயிற்று. "செருமாண் பஞ்சவர் ஏறே" எனவரும் காரிக்கண்ணனார் பாட்டாலும் அறியலாம். பின்பு தென்னவன் வழுதி முதலியன பாண்டியர்க்குப் பொதுப் பெயராயின. அவற்றுள் மாறன் என்பது தொடக்கத்தில் ஒருவற்குச் சிறப்புப் பெயராய்த் தோன்றிப் பின் பழையன் மாறன் என்றாற் போலப் பொதுப்பெயராய் மாறியது. வேள்விக்குடிச் செப்பேட்டிற் காணப்படும் பாண்டியருள் தேர்மாறன் என ஒருவன் இருப்பது மேற்குறித்ததனை வலியுறுத்துவதாம். இவ்வகையில் மாறன் என்பதை இயற்பெயராகவும், வழுதியென்பதைச் சிறப்புப் பெயராகவும் கொண்டவர் மாறன்வழுதி என்னும் இச்சான்றோர் எனக் கோடல் வேண்டும். அன்பின் ஐந்திணை நெறியில் மணம் செய்துகொண்டு இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் இன்றியமையாக் கடமை காரணமாகத் தலைமகன் மனையின் நீங்கிச் சென்று உறைந்தான். தன் மனைவிபால் விடைபெற்ற காலை வேனிற்பருவத்தில் மீள்வதாக மொழிந்து சென்றானாகலின், அப்பருவம் வரத் தொடங்கவும் அவன் வரவின்மேல் அவளுடைய கருத்துச் செல்வதாயிற்று. தலைவன் வாராமை ஒருபுறம் வருத்த, பருவவரவு அவள் உள்ளத்தில் காதல் நினைவை எழுப்பியது. குளிர்ந்த பொழிலின்கண் இருந்து குயில் கூவத் தொடங்கிற்று; அதன் இனிய இசை அவளுடைய மனத்தை வெதுப்பிற்று. பொழிலைச் சார்ந்து ஓடிய யாற்றுநீர் கலக்கமின்றித் தெளிந்து வேனில்வரவை வற்புறுத்திற்று. மாலைப்போது நெருங்கவும் தண்டலையுழவர் குடியிற் பிறந்த மகளொருத்தி குருக்கத்தி மலரும் பித்திகைப்பூவும் கையிற்கொண்டு மலர் கொள்ளீரோ எனத் தெருவில் விற்பாளாயினள். வண்டு மொய்க்கும் மலரின் காட்சியும் மணமும் தலைவி உள்ளத்தை அலைத்தன. தன் கண்ணிறைந்த கணவன் கண்குளிரக் கண்டு மனமகிழுமாறு தான் அப்பூவை வாங்கி அணிந்து கோடற்கில்லையே என எண்ணி, அதுவே பற்றுக் கோடாகத் தன் காதலன் மார்பிடைப் பெறும் இன்பநினைவு மிகுந்து காதல் கைம்மிகலால் கையறவுபட்டுத் தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைப்பாளாயினள். இவ்வுரையின்கண், காதலனைப் பிரிந்துறையும் கற்புடை மடந்தையர் மனையில் கணவன் இல்லாமையால் தம்மை ஒப்பனை செய்து கோடல் அறமாகாமை பற்றி அவனை நினைந்து வருந்தும் திறம் இனிது அமைந்திருப்பது கண்ட மாறன்வழுதியார் அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். அழுந்துபடு விழுப்புண் 1வழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்குப் 2பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே அதனினும் கொடியள் தானே மதனில் துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென வண்டுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனிமட மகளே. இது, பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. உரை அழுந்துபடு விழுப்புண் எவ்வ நெஞ்சத்து வழும்பு புலரா வாய் - ஆழமாக வுண்டாகிய விழுப்புண் பட்டு நோயுற்ற மார்பின் கண் சீயும் நிணமும் தோன்ற ஆறாத அப்புண்ணின் வாயில்; எஃகு எறிந்தாங்கு - எஃகினால் இயன்ற வேலைப் பாய்ச்சினாற்போல; பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் - துணையிற் பிரியாதிருந்தே தனித்து அமர்ந்து கூவும் குயிலோசையினும்; தேறுநீர் கெழீஇய யாறு நனி கொடிது - தெளிந்த நீர் பெருகி வரும் யாறு கொடிதாய் இராநின்றது; அதனினும் கொடியள் - அவ்யாற்றினும் கொடியளாய் உள்ளாள்; மதனில் துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு - வலியில்லாத மேலே துய் பொருந்திய இதழையுடைய பசிய கொடியாகிய குருக்கத்தியின் பூவுடனே; பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என - பித்திகைப்பூ விரவிய பூக்களைக் கொள்வீர்களோ என்று கூவிக் கொண்டு; வண்டுசூழ் வட்டியள் திரிதரும் - வண்டு மொய்க்கும் குடலையை யுடையளாய்த் தெரிவில் விலைகூறித் திரியும்; தண்டலை உழவர் தனிமடமகள் - பூஞ்சோலைகளை யுழுது பூஞ்செடி நட்டுப் பயிர் செய்யும் உழவருடைய தனி இளம் பெண் எ-று. நெஞ்சத்து அழுந்துபடு விழுப்புண் வழும்பு புலராவாய் எஃகு எறிந்தாங்கு, நுவலும் குயிலினும் யாறு நனி கொடிது; மலர் கொள்ளீரோ எனத் திரிதரும் மடமகள் அதனினும் கொடியள்; ஆகலான் யான் எவ்வாறு ஆற்றுவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க ஆகலான் என்பது முதலாயின குறிப்பெச்சம். ஆர்ந்து என்னும் சொல் அருந்து என வருதல் போல, ஆழ்ந்து என்பது அழுந்து என வந்தது. வழும்பு புலரா வாய் என மாறுக. விழுப்புண், மார்பிற்பட்ட பெரிய புண். வழும்பு, நிணம் கலந்த சீ வழும்பு புலராமை கூறியது, ஆறாது அகன்று புடைகொண்டு துன்பம் செய்தல் குறித்து நின்றது. எவ்வம், நோய் நெஞ்சம், மார்பின் மேற்று எஃகு, ஆகுபெயரால் வேற்படையைக் குறித்தது; கூர்மையுமாம், துணை யொடு கூடியிருப்பினும் இசைக்குங்கால் தனித்திருப்பது குயிற்கு இயல்பு; அதனால் பிரிவில புலம்பி நுவலும் என்றார்; இனி, பிரிவில என்றது புணர்ந்தீர் பிரிவின்றிப் புணர்மின் என்ற கருத்துடை இசைகளை என்றலும் ஒன்று; "புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச், செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும்1" என்றும், பன்மாணும், கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப், பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல, அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில் ஆனாது அகவும்2" என்றும் சான்றோர் குயிலிசைக்குப் பொருள் கூறுதல் காண்க தேறுநீர், தெளிந்தநீர்; "தேறுநீர் உடையேன்3" என்று பிறரும் கூறுதல் காண்க. காரும் கூதிருமாகிய காலங்களில் மழை மிகுதியாற் கலங்கி வரும் யாற்றுநீர் பனியும் வேனிலுமாகிய காலங்களில் தெளிந்து மாவும் மக்களும் படிந்து நீராடி மகிழ்தற் கேற்பத் தட்பமும் தெளிவும் சிறக்கப்பெற்று இன்புறுதற்கு இனிய வாயிலாதலால் தேறுநீர் கெழீஇய யாறு எனச் சிறப்பித்தார். "கூதி ராயின் தண்கலிழ் தந்து, வேனி லாயின் மணிநிறம் கொள்ளும் யாறணிந் தன்று"4 என்று சான்றோர் கூறுப. குருக்கத்தி, மாதவி எனவும் வழங்கும், இப்பூவின் மேல் உள்ள தூய், மிக்க மென்மை யுற்றுக்காற்றுச் சிறிது கடுகி அசையினும் உதிர்ந்துவிடும் ஒட்பமுடைமையின் மதனில் துய்த்தலை இதழ பைங்குருக்கத்தி என்றார். பித்திகை, முல்லை யினத்துள் ஒன்று; இது பித்திகம் என்றும் பித்தி என்றும் நூல்களில் வழங்கும்; உலக வழக்கில் பிச்சி என்பர். பூவின் மணம் கருதி வண்டு மொய்த்தலால் வண்டுசூழ் வட்டியள் என்றும், தெருக்களில் வீடுதோறும் சென்று உள்ளிருக்கும் மகளிர் செவிப்படுமாறு வினவுதலால் திரிதரும் என்றும் கூறினார். வட்டி, கடகப்பெட்டி; பூ எடுக்கும் குடலையுமாம். தண்டலை, குளிர்ந்த சோலையிடம். தனித்துத் திரிதலின் தனிமடமகள் எனப்பட்டாள். காதலன் பிரிவால் உளதாகிய வருத்தம் அழுந்துபடு விழுப்புண்ணாய் அவலம் விளையாநிற்ப, அவன் மீள்வன் எனக் குறித்த வேனிற் பருவவரவு காட்டும் குயில் தளிர்ந்த மாவின் சினைமிசை யிருந்து தன் துணையுடன் கூடிக் கேட்கும் உள்ளத்தே வேட்கை மிகுமாறு கூவுதலின் எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப் பிரிவில புலம்பி நுவலும் குயில் என்றாள். குயிலிசை கேட்போர்க்கு வேட்கை தோற்றுவித்தலை, "அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச், செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம், இன்னிளவேனில்1" என்பதனால் அறிக. பிறரும், "இணர்ததை மாஅத்த புணர்குயில் விளித்தோறும், நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக், கேட்டொறும் கலுழுமாற் பெரிதே2" என்று குறிப்பது காண்க. தெளிந்த நீரோடும் யாற்றில் புனலாடற்கு வேட்கை கொள்ளுபவாயினும், இளையர்க்கு அது பெருவேட்கை பயந்து இன்பம் செய்வ தாகலின் குயிலினும் தேறுநீர், கெழீஇய யாறு நனிகொடிது என்றாள். "தண்புன லாடித் தன்நலம் மேம்பட்டனள்3" என்பதனால், புனலாடல் மகளிர்க்கு மிக்கநலம் செய்வதென்று அறியலாம். அதுவும் மனக்கினிய காதலனோடு கூடி ஆடுவதாயின் பேரின்ப மாதல்பற்றி நனிகொடிது என்பாளாயினள். பொற்புடைய மகளிர்க்குப் புனலாடுதலும் பூச்சூடிக் கோடலும் மிக்க இன்பம் தருவன; புனலாட்டிற் போலப் பூச்சூடுமிடத்தும் அதனைக் கணவன் கண்டு மகிழ்தற்பொருட்டே செய்ப வாதலின் காதலன் பிரிவின்கண் புனலாட்டினும் பூச்சூட்டு மிக்க கவலை உறுவித்தலின் பூவிலைப் பெண்ணின் வருகையை அதனினும் கொடியள் தானே பைங்குருக்கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளீரோ எனத் திரிதரும் தனிமடமகளே என்று விதந்து கூறினாள்; "புதுமலர் தெருவு தொறும் நுவலும், நொதும லாட்டிக்கு நோமென்னெஞ்சே"4 எனவும், "வினையென்பப் பிறர்மனைப் புகுவள் கொல்லோ அளியள் தானே பூவிலைப் பெண்டே5" எனவும் சான்றோர் எடுத்தோதுவது காண்க. இனி, அ.நாராயணசாமி ஐயரவர்கள், "குயிலோசை செவியளவே இன்பம் செய்ய, ஏனைப் புலன்கள் இன்பம் பெறாமையின் குயில் கொடிது என்றாள்; யாற்றுநீர் குளிர்ச்சி செய்தலின் அக்குளிருக்குத் தனிக்கிடை வருத்துவதே என யாறு கொடிது என்றாள்; ஆடவனது மெய் தோயப்பெற்று அம்மெய்ம்மணம் நுகர்ந்தவழி நறுமலரின் மணம் சிறக்கு மாகலின் அது காரணமாகப் பூவிலை மடந்தை கொடியள் என்றாள்" என்று உரைப்பர். 98. உக்கிரப் பெருவழுதியார் பாண்டியரது வழுதிகுடியில் தோன்றிய வேந்தருள் உக்கிரப் பெருவழுதி ஒருவராவர். பாண்டியநாட்டு உக்கிரன் கோட்டை இந்த உக்கிரப் பெருவழுதியின் பெயரால் தோன்றிய தாகுமோ எனச் சிலர் ஐயுறுகின்றனர்; உக்கிரன் கோட்டையின் பழம்பெயர் கரவந்தபுரம் என்பது; ஆனால் அதுதானும் கரவாண்டபுரம் என்றும் கவிரியாண்ட புரம் என்றும் பலவகையாக வழங்கியுளது; அதனால் உக்கிரன் கோட்டைக்கும் உக்கிரப்பெருவழுதிக்கும் தொடர்பின்மை விளங்கும். உக்கிரப்பெருவழுதி ஆண்டபோது சேரநாட்டில் மாவண்கோவும் சோழநாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஆட்சிபுரிந்தனர். அந்நாளில் கானப் பேர் என்னும் மூதூரிலிருந்து அப்பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநிலத்தலைவன்காவல் புரிந்தான். அவன் பாண்டி நாட்டிற் புகுந்து குறும்புசெய்து பெருவழுதியின் பகையைத் தேடிக் கொண்டான். பெருவழுதி பெரும்படையுடன் சென்று அவனை வெருட்டி யோட்டிவிட்டுக் கானப்பேரைப் பாண்டி நாட்டோடு சேர்த்துக் கொண்டான். தோற்றோடிய வேங்கை மார்பன், பெருவழுதியின் பேராற்றலை வியந்து, "அருங்குறும் புடுத்த கானப்பேரெயில் கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புண் நீரினும் மீட்டற்கரிது" எனச் சொல்லி வருந்தினான் எனப் புறப்பாட்டொன்று கூறுகிறது. இதனால் உக்கிரப்பெரு வழுதியின் புகழ் தமிழகமெங்கும் பரவிற்று. அதுகண்டு மகிழ்ச்சி மிக்க மாவண்கோவும் பெருநற்கிள்ளியும் பெருவழுதியைக் கண்டு பாராட்டி அவன்பால் அளவளாவி இருந்தனர். அக்கூட்டத் திடையே இருந்த சான்றோருள் ஒளவையார்க்குத் தமிழ் மூவேந்தரும் அன்புற்று ஒருங்கு கூடியிருந்த காட்சி பேரின்பம் தந்தது. அவர்களை நோக்கி, "வேந்தர்களே, நீங்கள் ஒவ்வொரு வரும் எய்தியுள்ள அரசுரிமை நீங்கள் இவ்வுலகின் நீங்குங்கால் உடன் வருவதன்று; வேற்றவ ராயினும் நோற்றவர்க்கே சென்று சேரும்; ஆதலால், நீங்கள் செய்வன செய்து இரவலரை ஓம்பிப் புகழ்நிறுவி, வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினையல்லது ஆழுங்காலைப் புணை பிறிதில்லை" என்று அறிவுறுத்தி, "உயர்ந்துமேந்தோன்றிப் பொலிக நும்நாளே" என்று வாழ்த்தினார். இங்ஙனம் புலவர் பாடும் புகழ்பெற்ற பாண்டியன் பெருவழுதியும், நல்லிசைப்புலவர், நிரலுள்வைத்து எண்ணப்படும் ஒருவராவர். இப்பெருவழுதியின் அவையில் திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேறிற்று என்றொரு செய்தி கூறப்படுகிறது; ஒழுக்கம் தவறிய பார்ப்பனன் ஒருவனுக்கும் புலைச்சி யொருத் திக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் எனக் கூறும் பொய்க்கதையின் இடையே இச்செய்தி காணப்படுவதால், ஏற்றுக்கோடற்கு நம் உள்ளம் இடந்தருகின்றிலது. உப்பூரிகுடி கிழான் மகன் உருத்திரசன்மனைக் கொண்டு அகநானூற்றைத் தொகுப்பித்தவன் உக்கிரப் பெருவழுதி என்பது நினைவுகூரத் தக்கது; அதன் கண் இவ்வேந்தனுடைய பாட்டொன்றும் உளது. புறத்தொழுகிப் போந்த தலைமகன் வாயில்வேண்டத் தோழி அது மறுத்தாளாக, ஆற்றாமை மீதூர்தலால் தலைமகன் மனைக்குட் புகுதலும், தலைமகள் சாந்தணிந்த அவனது கேழ்கிளர் மார்பினை முயங்குவான் நெருங்கலும், அவன் சிறிது விலகினான். உடனே, அவள் அவனை நோக்கி, "நீர் பரத்தையர்க்கு ஒத்து ஒழுகுகின்றீர்; யான் என் மகற்கு ஒத்தவளாவேன் என ஓடித் தன்மகனை எடுத்தலும், யாமும் அவன்பாற் காதலுடையேம் என்று சொல்லிக் கொண்டு வந்து அவள் முதுகின் புறத்தே தழுவிக் கொண்டான்; அவளும் நெஞ்சு நெகிழ்ந்து அவன்வழியினளானாள். இதனை அவள் தன் தோழிக்கு உரைக்குமுறையில் உக்கிரப்பெருவழுதி பாடியுள்ளார். களவுநெறியில் காதலுறவு கொண்டு தலைவியின் மனைப் புறத்தே குறியிடத்தில் அவளைக் கண்டு நீங்கும் தலைமகன், வரைவு நினையாது அக்களவின்பத்தையே விழைந்து ஒழுகியது தோழிக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. மனையின் காவன் மிகுதியும் காவலர் கண்ணுறங்காது செய்யும் காவற்சிறப்பும் நெறியின் அருமையும் பிறவும் அவள் உள்ளத்தைப் பெரிதும் அலைத்தன. இரவில் அவன் வரும் போதெல்லாம் உறக்கமின்றி விழித்திருந்து குறியிடம் சென்று காண்டற்கு அவளது நெஞ்சம் துடித்தது. தலைவனுடைய பெருமையும் செயலுரனும் காணத் தோழியாகிய தான் வரைவு மேற்கொள்ளுமாறு நேரே சொல்வது நன்னீர்மையாக அவள் மனத்துக்குத் தோன்றவில்லை. அதனை வெளிப்படையாக மொழிவதினும் தலைமகன் உள்ளம் உய்த்துணர்ந்து கொள்ளும் வகையில், குறிப்பாக உரைப்பது தக்கது எனத் துணிந்து "என்பால் அன்பில்லாத என்நெஞ்சம், இக்கண்கள் உறங்காமையாலன்றோ, ஏதம்மிக்க இவ்விரவுக்குறி யொழுக்கத்துக்கு உடன்பட்டு ஒழுக வேண்டியுள்ளது என்று என் கண்களோடு பொருகின்றது. இதற்கு யான் என் செய்வேன்" என்று தலைவிக்குக் கூறுவாளாய்த் தலைவன் செவிப்படுமாறு தோழி மொழிந்தாள். தோழியது இக்கூற்றின்கண் அடங்கிய மதிநுட்பமும் சொல் மாண்பும் உக்கிரப் பெருவழுதியின் புலமையுள்ளத்தை மகிழ்விக்கவும் அவற்றை இப்பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார். எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் 1செய்ம்ம் மேயற் சிறுகட் பன்றி ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி நூழை நுழையும் பொழுதில் தாழாது 2பாங்கர்ப் பல்லி பட்டென ஆங்கே மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன் கல்லளைப் பள்ளி வதியும் நாடன் எந்தை ஓம்பும் 3கடியுடை வியனகர்த் துஞ்சாக் காவலர், 4சோர்பதன் ஒற்றி இரவின் வரூஉம் அதனினும் கொடிதே வைகலும் பொருத்தல் ஒல்லாக் 5கண்ணொடு பொரூஉம் என் 6கண்ணில் நெஞ்சே. இஃது இரவுக்குறி வந்தொழுகும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. உரை எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் - எய்யப்படும் முட்போன்ற பருத்த மயிர் பொருந்திய கழுத்தினையும்; செய்ம்ம் மேயல் சிறுகட்பன்றி - புன்செய்ப் பயிர்களை மேய்வதையும் சிறிய கண்களையுமுடைய பன்றி; ஓங்குமலை வியன்புனம் படீஇயர் - உயர்ந்த மலைப் பக்கத்திலுள்ள தினைப்புனம் சென்று மேய்தற்கு; வீங்குபொறி நூழை நுழையும் பொழுதில் - புனவர் வைத்துள்ள பொறியினது சிறிய வாயிலின்கண் நுழையுங்கால்; தாழாது - விரைந்து; பாங்கர்ப்பல்லி பட்டென - பக்கத்தே யிருந்து பல்லி சொல்லிற்றாக; ஆங்கே - அப்பொழுதே; மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து - மெல்ல மெல்லப் பின்னே வந்து; தன் கல்லளைப் பள்ளி வதியும் நாடன் - பெருங்கற்களுக்கு இடையேயுள்ள தன் முழைஞ் சினுள் தங்கும் நாடனாகிய தலை மகன்; எந்தை ஓம்பும் கடியுடை வியனகர் - எம்முடைய தந்தை புரக்கும் காவலையுடைய அகன்ற மனையின்கண்; துஞ்சாக் காவலர் சோர்பதன் ஒற்றி - கண்ணுறங்காது திரியும் காவலர் சோர்வுறும் அற்றம் பார்த்து; இரவின் வரூஉம் அதனினும் கொடிது - இரவுப் போதில் குறியிடம் வந்தெய்தும் அச்செயலினும் கொடுமையுடைத்தாகும்; வைகலும் பொருந்தல் ஒல்லா - நாடோறும் துயிலுதலைச் செய்யாத; கண்ணொடு பொரூஉம் என் கண்ணில் நெஞ்சு - கண்ணோடு பொருதலைச் செய்யும் என்பால் இரக்கமில்லாத நெஞ்சு இதற்கு என் செய்வேன். எ-று. கண்ணில் நெஞ்சு, நாடன் நகர்க்குச் சோர்பதன் ஒற்றி வரூஉம் அதனினும் கொடிது; இதற்கு என்செய்வேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. நெடிய கோலின் தலையில் இரும்பால் ஆன நீண்ட முள்ளைச் செருகியிருப்பது எய்ம்முள்; இஃது எறியூசி எனவும் வழங்கும். மூங்கிலைப் பிளந்து முள்போற் கூரிதாய்ச் சீவி வில்லிற் றொடுத்து எய்வது முள்ளம்பு எனப்படும். எறியூசி பெரும்பாலும் மீன் வேட்டுவர் கையாளுவது. இவையாவும் எய்ம்முள் எனப்படும். எய்யென்பது முள்ளம் பன்றியையும் குறிக்கு மாகலின், அதன் முள்ளும் எய்ம்முள் என வழங்கும். "எய்போற் கிடந்தான் என் ஏறு1" எனப் பிறரும் கூறுதல் காண்க. செய், புன்செய் வயல், செய்மம் மேயல் என மகரம் மிக்கு முடிந்தது. "அவற்றுள் மெல்லெழுத் தியற்கை உறழினும் வரை யார், சொல்லிய தொடர்மொழி இறுதி யான1" என்ற நூற்பாவின் கண் 'சொல்லிய' என்ற தனால் அமையும். வீங்குபொறி, பெரிய பொறி இது, வலிய பன்றி புலி முதலிய கொடுவிலங்குகளை அகப்படுத்தற்கு அமைத்த எந்திரப்பொறி, நூழை, சிறுவழி; நுழைவோர் உடலைச் சுருக்கி யல்லது நுழையாவாறு அமைவது பற்றி நூழை எனப்பட்டது. "நூழை நுழையும் மடமகன் யார்கொல்2" என்பது காண்க. படுதல், ஒலித்தல், சோர்பதன், சோர்ந்திருக்கும் அமையம். "அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றி3" எனப் பிறரும் கூறுப. கண்ணில் நெஞ்சு என்புழிக் கண், இரக்கப்பொருட்டு; "கண்ணின்று கண்ணறச் சொல்லினும்4" என்றாற் போல. காப்புமிகுதி கூறி வரைவு கடாவும் குறிப்புத் தோன்ற எந்தை ஓம்பும் கடியுடை வியனகர் என்றும், காவலரது காவல்நலம் விளங்கத் துஞ்சாக் காவலர் என்றும், அயராக் காவலிடை ஒரோவழித் தோன்றும் சோர்வு நோக்கியிருந்து, அஃது எய்தியதும் காவலைக் கடந்து போதரும் அருமை புலப்படச் சோர்பதன் ஒற்றி என்றும், தலைவன் வரும் வழியின் கொடுமை விளங்க இரவின் வரூஉம் அது என்றும், இரவும், பகலும் தலைவியைத் தான் கண்ணைக் காக்கும் இமைபோலக் காத்தல் வேண்டுதலின், கண்கள் உறங்கிவிடின் இரவிற் குறி இடையீடுபட்டுக் குறித்த இன்பம் பெறாது தலைவன் வறிது பெயர்க்குவனே என்ற அச்சத்தால் நெஞ்சம் கண்ணோடு பொருந்தாதாயிற்று என்பாள் வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண்ணொடு பொரூஉம் என் கண்ணில் நெஞ்சு என்றும் தோழி கூறினாள். பகற்போதில் நெஞ்சு உறக்கத்தை விரும்புங்கால், கண்கள் பொருந்தா தொழிவதும், இரவுப் போதில் கண்கள் உறக்கத்தைப் பொருந்துங்கால் நெஞ்சு பொருந்தாதொழிவது மாறிமாறி நிகழ்தலின் கண்ணொடு பொரூஉம் என்றாள். இவ்வாறு கூறுபவள், இரவு வரவு இடையீடு படுதற் கிடனுண்டு என்பதை உள்ளுறையால், வியன்புனம் படிவான் வந்த பன்றி பொறியின் நூழைக்கண் நுழையுமிடத்துப் பல்லி சொல்லுக்கு அஞ்சி வறிது பெயர்ந்து தன் கல்லளைப் பள்ளியை அடைவது போல, தலைமகன் அல்லகுறிப்பட்டும் பிறர் அறிவது அஞ்சியும் வறிது பெயர்தலையுடையன் என்றாள். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. 99. இளந்திரையனார் காதல் வேட்கை கிளர்ந்து நிற்கும் காளைப்பருவத்தில் நங்கையின் காதற் கண்கள், அவளைக் காதலிக்கும் காளையின் மனநிறையைக் கலக்கிக் கட்டழிக்கும் இயல்பின. "இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே" எனக் காதற்பிணிப் புண்ட காளையொருவன் கூறுவதை இளங்கோவடிகள் எடுத்தோதுவது இதற்குத் தக்க சான்றாகும். பெருஞ்செயல் ஆடவர்க்கு அமைந்த அகன்ற மார்பும் உயர்ந்த தோளும், அவரைக் காதலிக்கும் மங்கையின் மனத்தைக் கலக்கி மயக்குறுத்தும் மாண்பினவாம். இந்நிலையில் அவர் நினைவு செயல்களை வேறு நெறிப்படுத்துவது எளிதில் இயலுவதன்று, காதலுணர்ச்சியால் கலங்கிய அறிவு, நெடுநீரில் மூழ்கினார்க்குச் சிறுமரமும் பற்றுக் கோடாகத் தோன்றுதல் போல, அக்காதல் நெறிக்கு ஆக்கமோ அரணோ ஆகாத பொய்யுரைகள் நிகழினும் அவற்றையும் உடனே ஏற்று அமையக் கொள்வதன்றித் தெளிவுக்காட்சி திகழப் பெறுவது பெரும்பான்மையன்று. அதனை நன்குணரும் அறிவரும் தோழரும் காதலர் அறிவை நெறியறிந்து உய்த்து நன்னீர்மை பெறுவித்தல் கடனாகும். காதல் அன்பாற் பிணிப்புண்டு அது நல்கும் இன்பத்தில் மூழ்கியிருந்த தலைமக்களது மனைவாழ்வின் கண் ஒருகால் தலைமகன் தலைவியிற் பிரிந்து சென்றான்; சென்றகாலை, அவன், தான் கார்காலவரவில் மீள்வன் எனக் கூறினான். அங்கே அவன் மேற்கொண்ட வினைக்கடன் முற்றி மீளுதற்குச் சிறிது காலம் தாழ்த்தது, அவன் வரவையே, எண்ணியிருந்த தலைமகட்கு அக்காலக்கழிவு மிக்க வருத்தத்தைப் பயந்தது. அவன் வரவுக்காகக் கார்வரவு தாழ்க்கா தன்றோ? காரும் வந்தது. மழையும் நன்கு பெய்யத்தலைப்பட்டது. அக்காலத்தே மலர்தற்குரிய பிடவும் கொன்றையும் மலர்ந்தன. அது கண்ட தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது; கார்வரவு காட்டியும், காதலன் வாராமை சுட்டியும் கையற்றுக் கண்ணீர் சொரியலுற்றாள். அவளுடைய அறிவு வலி இழந்து அலமரும் திறத்தைக் கண்டாள் தோழி. பொய்மையும் புரைதீர்ந்த நன்மை பயக்குமாயின் வாய்மையாய் இன்பம் நல்கும் என்ற உண்மையை மனத்திற் கொண்டு, "தோழி, நம் காதலர் குறித்த கார்காலம் இதுவன்றோ? எனக் கேட்கின்றாய்; கார்முகில் நம்போல் காலம் கருதியிருக்கும் உணர்வுடைய தன்று; காலமன் றாயினும் இது கடற்குச் சென்று கடல்நீரை முகந்து வந்தொழிந்தது; கார் வருங்காறும் இந்த நீரைச் சுமந்து கொண்டு இருக்கமாட்டாமையின் மழையைப் பெய்தொழிந்தது; அதனை உணராமல் பிடவும் பிறவும் கார் கால வரவென்று மயங்கி மலர்ந்துவிட்டன; அறிவிலா இவற்றின் செயல் கண்டு நாமுங் கார் வந்ததெனக் கருதி வருந்துவது குற்றம்" என்றாள். காதல்வேட்கைக் கலக்கத்தால் தெளிவுக்காட்சி இழந்த தலைவியும் அதுகேட்டுப் பெரிதும் அமைந்தாள். தோழி நிகழ்த்திய இக்கூற்றின்கண், காதல்வேட்கை கைம்மிகுங் கால், தலைமைப் பண்புகளால் சான்றவரிடத்தும் ஓர்ந்துணரும் ஒட்பம் செயலின்றி ஒடுங்கி விடும் என்ற உண்மை விளங்குதல் கண்ட இளந்திரையனார் அதனை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார். நீரற வறந்த நிரம்பா நீளிடைத் துகில்விரித் தன்ன 1வெயில்அவிர் உருப்பின் 2நஞ்சரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் தாம்வரத் தெளித்த பருவம் 3காண்வர இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று 4இமிழ்கடல் முகந்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லா 5திறுத்தன்று வண்பெயல் காரென் றயர்ந்த உள்ளமொடு 6தேர்வில பிடவும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன 7பலவே. இது, பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்றென்று வற்புறுத்தியது. உரை நீர் அற வறந்த நிரம்பா நீளிடை - நீர் சிறிதும் இல்லையாய் வறண்ட குறிஞ்சியின் பண்போ முல்லையின் சால்போ ஒன்றும் நிரம்பாத நீண்ட சுரத்தின் கண்ணே; துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் - வெள்ளிய ஆடையை விரித்தாற் போல் பரந்த வெயில் மிக்கு வருத்தும் வெம்மையால்; நஞ்சு அரப் பனிக்கும் - நஞ்சுடைய பாம்பு புரண்டு துடிக்கும்; வெஞ்சுரம் இறந்தோர் - வெவ்விய அச்சுரத்தின் வழியே சென்ற காதலர்; தாம் வரத் தெளித்த பருவம் - தாம் மீண்டு வரும் காலமாக நம்மைத் தெளிவுறுத்திய கார்காலம்; காண்வர இதுவோ என்றிசின் - நாம் காண வந்துள்ள இக்காலமோ என்று கேட்கின்றாய்; மடந்தை - இளையவளே; மதியின்று - நல்லறிவு இல்லாமையால்; இமிழ்கடல் முகந்த கமஞ்சூல் மாமழை - முழங்குகின்ற கடலின் நீரைக் குடித்து நிறைவுற்ற கரிய முகில்; பொறுத்தல் செல்லாது - கார்காலம் வருங்காறும் தாங்கியிருக்க மாட்டாமல்; வண்பெயல் இறுத்தன்று - வளவிய மழையைப் பெய்வதாயிற்று; கார் என்று அயர்ந்த உள்ளமொடு - இது கார்காலம் எனப் பிறழக் கருதிய உள்ளத்தால்; தேர்வில - உண்மை தெளியாவாய்; பிடவும் கொன்றையும் கோடலும் - பிடவமும் கொன்றையும் காந்தளும்; மடவ ஆகலின் - மடமையுடையன வாதலால்; பல மலர்ந்தன - பலவாய்ப் பலவிடத்தும் மலர்ந்தன; எனவே, இதனை உண்மையென்று கொண்டு நீ ஆற்றாயாகின்றது நன்றன்று எ-று. மடந்தை, இறந்தோர் தெளித்த பருவம் இதுவோ என்றிசின்; மாமழை பொறுத்தல் செல்லாது பெயல் இறுத்தன்று; மடவவாகலின் பிடவும் கொன்றையும் கோடலும் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில் பல மலர்ந்தன எனக்கூட்டி வினைமுடிவு செய்க. முல்லையும், குறிஞ்சியும் தமக் குரிய நல்லியல்பு இழந்து நிற்கும் நிலப்பகுதி யாகலின் நெடுஞ்சுரம் நிரம்பா நீளிடை எனப்பட்டது; "பரூஉப்பரல், சிறுபல் மின்மினி கடுப்ப எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீளிடை1" எனப் பிறரும் கூறுதல் காண்க. பசும்புல்லும் இன்றி வெள்ளைவெளேரென உவர்மண் பரந்து கிடக்கும் பாலை, வெயில் வெம்மையால் வெள்ளாடையை விரியப் பரப்பினாற்போலும் நிறமும் ஒளியும் கொண்டு திகழ்தலால் துகில்விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் என்றார். "துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்1" என்று பிறரும் கூறுவர். அரா என்பது அர என வந்தது; "இருவிசும்பு அதிர முழங்கி அர நலிந்து, இருபெயல் அழிதுளி தலைஇ2" எனச் சான்றோர் வழங்குதல் காண்க. தெளித்த, தெளிவித்த என்னும் பொருட்டு; "தெளிந்த சொல் தேறியார்க்குண்டோ தவறு3" என்றாற்போல, என்றிசின், சின் முன்னிலையசை, மடம் உடையாளை மடந்தை என்றாள்; குடம் முடம் என்பன குடந்தை முடந்தை என வருதல் போல, பொறுத்தல் செல்லாமைக்கு ஏதுக் கூறுவார். கமஞ்சூல் மாமழை என்றார். மா, கருமை, கோடல், காந்தள், ஒன்றிரண் டன்றிப் பலவும் பலவிடத்தும் மலர்ந்தமை தோன்ற மலர்ந்தன பலவே என்றார். குடங்கருள் ஒடுங்கிக் கிடக்கும் நஞ்சுடைய பாம்பும் வெம்மைக்கு ஆற்றாது துடித்து வருந்தும் வெஞ்சுரம் என எடுத்து மொழிந்தாள், அதனை மதியாது சென்ற தலை மகனது உரனுடைமையைச் சிறப்பித்தற்கு, உரன், திண்மை. இத்துணைத் திட்பமுடைய காதலர் குறித்த பருவத்துப் பொய்யாது வருவர் என்பது தோன்ற வெஞ்சுரம் இறந்தோர் தாம் வரத் தெளித்த பருவம் இதுவோ என்றாள். குறித்த பருவம் அன்றென மறுக்கும் கருத்தினளாதலால், தலைவி கூற்றைக் கொண்டெடுத்து மொழியும் தோழி, இதுவோ என்றிசின் மடந்தை என்றாள். இவ்வாறு நீ ஐயுறுதற்கு ஏது அறியாமை என்ற குறிப்பும் தோன்ற மடந்தை என்றாள் எனக் கொள்க. அற்றேல், மாமழை வண்பெயல் பொழிதற்குக் காரணம் யாது என எழும் வினாவுக்கு விடையிறுப்பாள், மதியின்று இமிழ் கடல் முகந்த மாமழை என்றும், பிடவு முதலாயின மலர்தற்குக் காரணம் அதுவே என்பாள். மடவ வாகலின் என்றும் கூறினாள். "கானம் கார் எனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே4" என்று தலைவி கூறுவது உண்மையின், தலைவன் வாராமை யொன்றையே கொண்டு, பருவ வரவு காட்டித் தலைவி உரைத்த எல்லாவற்றையும் தோழி மறுத்தாள். இவ்வாறே பிறாண்டும், "நிறைநீர் மாமழை பொறை மெலிந்து உகுத்தென, வம்பத் தண்பெயல் உணராள் கண்டே, காரென வருந்தும்1" எனத் தோழி கூறுதல் காண்க. இது கேட்டுத் தலைவி வேறு மாற்றம் உரைத்தலின்றி ஆற்றியிருப்பாளாவது பயன். 100. பரணர் பெருமையும் உரனும் சான்ற பெருந்தகையாகிய தலைமகன் கற்புநலம் சிறந்த தலைவியுடன் மனையறம் புரிந்து வருகையில் அவட்கு மகப்பேறு உண்டாயிற்று. பிறந்த மகன் வளர்ந்து நடக்கும் செவ்வி எய்தும் வரையில் மகப்பேற்றுக்குரிய மெய்யுறு புணர்ச்சி தலைமக்களிடையே நிகழ்வதில்லை. அக்காலத்தும் தலைவனது அருள் பெற்று வாழும் பரத்தையர் சேரி நிகழ்ச்சிகளில் அவன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதில்லை. மகப்பயந்த மனைவி உடங்கியை கிடக்கைக்கு உரியளாகுங்கால், தலைமகன் பரத்தையர் சேரியில் இருப்பானாயின், மனைவியின் நிலையை அவற்கு உணர்த்தல் வேண்டித் தோழிக்குச் செவ்வணி அணிந்து மனையவர் அச்சேரியிடைச் சென்று வரவிடுப்பது அந்நாளைய உலகியல் பண்பாடு. அது காணும் தலைமகன், பரத்தையரின் நீங்கித் தன்மனையை அடைய வேண்டும் என்பது முறை, தோழியின் செவ்வணி கண்ட தலைவன் தன் மனையைச் சென்று சேர்ந்தான். தான் இதுகாறும் பெற்றுப் போந்த இன்பம் இடையறவு பட்டதனால் பரத்தைக்கு அவனது பிரிவு மிக்க பொறாமையை விளைவித்ததனால், தலைவிக்குப் பாங்காயினார் கேட்குமாறு, தலைவன்பால் போக்குவரவு புரியும் வாயில்களான பாணன் விறலி முதலாயினாரோடு தலைவனுடைய விளையாட்டுக் குறிப்புகள் சிலவற்றை அவள் எடுத்துரைத்தாள்; அவ்வாறு உரைக்கப்படுவனவற்றுள் இல்லது புனைந்து கூறலும் உண்டு. அச்செய்தியைத் தலைமகள் அறியின் அவள் தலைவனொடு புலந்து ஊடுவள்; இவ்வாற்றால் தலை மக்களது காதலின்பம் இடையீடுபடச் செய்வது பரத்தையின் பொறாமைப் பயனாகும். தலைமகட்குப் பாங்காயினார் செவிப் படுமாறு விறலியொடு உரையாட லுற்ற பரத்தை, "விறலியாகிய தோழி, தண்டுறை ஊரனாகிய தலைவன் என் கூந்தலைத் தீண்டி என் கையைப் பற்றி வளை நெகிழுமாறு சிறுகுறும்பு செய்தான்; புறத்தே சினமுற்றேன் போல அவற்குக் காட்டி, உனது இச் செய்கையை இப்பொழுதே சென்று உன் மனையாட்டிக்கு உரைக்கப் போகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டேன்; என் செய்கையை மெய்யென மருண்டு நல்லியல்புடைய அத்தலைமகன் உச்சி முதல் உள்ளங்கால்வரை நடுக்கமுற்றான்; அந்த நடுங்குநிலையை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பெரிய நகையுண்டாகிறது, காண்" என்றாள். இக்கூற்றின்கண் தலைவன் தன் மனை அடைந்தது, காதலன்பால் அன்று; தலைவிபாற் கொண்ட அச்சத்தால் எனப் பரத்தை விறலிக்கு உரைத்துத் தலைமக்களின் மனையின்பத்தைக் கலைக்க முயலும் சூழ்ச்சியும் பரத்தைமையின் புன்மையும் விளங்குதல் கண்ட பரணர் அவற்றை இப்பாட்டில் நகைச்சுவை தோன்றத் தொகுத்துப் பாடுகின்றார். உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் 1கூரல் அன்ன குண்டுநீர் ஆம்பல் தண்டுறை ஊரன் தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின் 2வார்கோல் எல்வளை வௌவிய பூசல் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட் குரைப்பல் என்றலின் 3முளையூர்ப் பல்லான் நெடுநிரை 4வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன் 5முள்ளூர்ப் பேரிசைப் புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே இது, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை விறலிக்கு உடன்படச் சொல்லியது. உரை தோழி; உள்ளுதொறும் நகுவேன் - நினைக்குந் தோறும் நகைப்பேனாயினேன்; வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூரல் அன்ன - மழையில் நனைந்த கூரிய நகங்களையுடைய கொக்கினது கூம்புநிலை போன்ற; குண்டுநீர் ஆம்பல் - ஆழ்ந்த நீரில் உள்ள ஆம்பலின் முகைகளையுடைய; தண்துறை ஊரன் - தண்ணிய நீர்த்துறையையுடைய தலைமகன்; தேங்கமழ் ஐம்பால் பற்றி - தேன்மணம் கமழும் என் கூந்தலைத் தன் கைகளாற்பற்றி; என்வயின் வார்கோல் எல்வளை வௌவிய பூசல் - என்னுடைய நீண்டு திரண்ட ஒளி பொருந்திய வளைகள் நெகிழ்ந்து நீங்குமாறு செய்த கௌவையால்; சினவிய முகத்துச் சினவாது சென்று - முகத்திற் சினம் கொண்டாற்போலக் காட்டி மனத்தே சினமின்றி விருப்புடன் சென்று; நின் மனை யோட்கு உரைப்பல் என்றலின் - இதனை நின் மனையவள் அறியச் சொல்லுவேன் என்றுயான் கூறியதால்; முளையூர்ப் பல்லான் நெடுநிரை வில்லின் ஒய்யும் - பகைப்புலத்து ஊர் களிலுள்ள பலவாகிய நெடிய ஆனிரைகளை விற்படையால் வென்று கவர்ந்து செல்லும்; தேர்வண் மலையன் முள்ளூர் - தேர்வண் மலையன் என்பானுடைய முள்ளூரின்கண்; பேரிசைப் புலம்புரி வயிரியர் - பெரிய இசையினது புலமையையே விரும்பும் கூத்தருடைய; நலம்புரி முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் - நன்கு அமைக்கப்பட்ட முழவினது மார்ச்சனை அமைந்த கண்போல் அதிர்ச்சியுறும்; நன்னராளன் நடுங்கஞர் நிலை - நற்பண்பினையுடைய தலைவன் மனநடுக்கத்தால் எய்திய துன்பநிலையை எ-று. ஊரன், என்வயின் ஐம்பால்பற்றி எல்வளை வௌவிய பூசல், சென்றுநின் மனையோட்கு உரைப்பல் என்றலின், முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் நன்னராளன் நடுங் கஞர் நிலையைத் தோழி, உள்ளுதோறும் நகுவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உள்ளுதல், நினைத்தல், மாரிக்காலத்து மழையில் நனைந்து கூம்பியிருக்கும் கொக்கை, மாரிக் கொக்கின் கூரல் என்றார். கூரல், கூம்புதல், கொக்கின் கூரலன்ன ஆம்பல் என இயையும், ஆம்பல், ஆகுபெயரால் முகையினை உணர்த்திற்று; "கொக்கின் கூம்புநிலையன்ன முகைய ஆம்பல்1" என்று பின்னரும் கூறுதல் காண்க. மகளிர் கூந்தலைக் கணவனல்லது பிறர் தீண்டல் குற்றம் என்பது பண்டைத் தமிழ் மரபு. "ஒரூஉநீ எம் கூந்தல் கொள்ளல்"1 என்றும், "கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற, முடியுதிர் பூந்தாது மொய்ம் பினவாகத், தொடிய எமக்கு நீ யாரை"2 என்றும் மகளிர் பிணங்கிக் கூறுதல் காண்க. கோல், திரட்சி; கோற்றொழிலு மாம். "வார்கோற் செறிந்திலங் கெல்வளை"3 எனச் சான்றோர் வழங்குதல் காண்க. பூசல், ஆரவாரம், முகத்திற் சினக்குறிப்பும் அகத்தில் உவகைக்குறிப்பும் நிலவினமை புலப்படச் சினவிய முகத்துச் சினவாது சென்று என்றார். முனையூர், பகைப்புலத்து ஊர், தேர்வன் மலையன், தென்பெண்ணைக் கரையில் திருக்கோவலூரில் இருந்து நாடுகாவல் செய்த மன்னன், இவனது நாடு மலாடு எனவும் வழங்கும், பிற்காலத்தே இது சேதி நாடு எனவும் மகதைநாடு எனவும் வழங்கியது என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழமாதேவியின் தாய் முள்ளூர் நங்கையார் எனக் கல்வெட்டுக் கூறுவது"4 முள்ளூரின் சிறப்பைக் குறிக்கிறது. இது மலையமானுக்கு உரிய பேரூர், குடநாட்டின் வடக்கிலுள்ள ஆரியக நாட்டு ஆரியர் சிலர் முள்ளூர்க்குட் புகுந்து குறும்பு செய்தாராக, மலையமான் அவர்களை வெருட்டிய செய்தியைப் பரணரே பிறிதோரிடத்தில் குறிக்கின்றார். புலம், புலமை, பேரிசைப் புலம்புரி வயிரியர் என்றதற்குச் செல்வத் தால் மிக்க புகழ் படைத்த நாடுகளை விரும்பிச் செல்லும் கூத்தர் என்று உரைத்தலும் ஒன்று. அஞர், துன்பம் நடுங்குதற்கு ஏதுவாய அஞர் நடுங்கஞர் எனப்பட்டது. பாங்காயினார் வாயிலாகத் தலைமகள் அறிந்து புலக்குமாறு சொல் லெடுக்கின்றா ளாதலால், பரத்தை தனக்குத் தோழியாகிய விறலியை நோக்கி, உள்ளுதோறும் நகுவேன் தோழி என்றும், தன்பால் உள்ள நெருங்கிய தொடர்பால் தலைமகன் தன் கூந்தலைப் பற்றியதும் எல்வளை நெகிழ்த்ததும் பரத்தையர் சேரிமுற்றும் அலராய்ப் பரந்தமை தோன்ற ஐம்பால் பற்றி என்வயின் வார்கோல் எல்வளை வௌவிய பூசல் என்றும் பரத்தை மொழிந்தாள். அவனுடைய அச்செயல் உரிமை மிகுதியால் நிகழ்ந்ததாகலின், அதுபற்றித் தான் மனத்தின்கண் வெகுளி கொள்ளாமையும் அச்சுறுத்தற் பொருட்டுப் புறத்தே சினமுற்றாற்போல முகம் சிவந்து காட்டியதும் விறலி உணரக் கூறுவாள், சினவிய முகத்துச் சினவாது என்றும், சென்று நின் மனையோட்கு உரைப்பல் என்றலின் என்றும் கூறினாள். அவளது அவ்வுரையைக் கேட்டுத் தலைவன் எய்திய வேறுபாட்டை விளக்க, வயிரியர் கருதிய அளவாய முழக்கத்தை எழுப்பி அதிர்தலைச் செய்யும் முழவை உவமம் கூறினாள். தான் கருதிய அளவிற்றாய அச்சத்தை அவன்பால் உண்டாக்கி மேனியில் நடுக்கம் தோன்றச் செய்தமை விளம்புதற்கு பரத்தையின் தொடர்பு கொண்டதோடு அமையாது, அவளுடைய சிறு சொல்லுக்கு அஞ்சி மெய்ந் நடுங்கினான் தன் காதற் கேள்வன் என்பது தலைவி யுள்ளத்தே தோன்றி மிக்க பொறாமையும் வெகுளியும் பயந்து தலைமகற்கு வாயில் மறுக்குமாறு செய்யும் எனப் பரத்தை நினைக் கின்றாள். தலைவன் ஊரது தண்டுறை கூம்பிய ஆம்பல்களையுடையது என்றது. அவன் பிரிவால் உள்ளம் கூம்பிய மகளிர் பலரை யுடையன் என்றவாறு, இதனாற் பயன்பரத்தை தன் போற் பரத்தையர் பலரை யுடையன எனத் தலைவனது பரத்தைமையைப் புனைந்து கூறுவது என்க. "ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப1" என்ற நூற்பாவுரையின்கண் இப்பாட்டை எடுத்து ஓதிக்காட்டி, "இஃது ஊடல் குறித்து வந்தது" என்பர் இளம்பூரணர். "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்2" என்னும் நூற்பாவின்கண் "பிறவும்" என்றதனால், "நின் பரத்தைமை யெல்லாம் நின் தலைவிக்கு உரைப்பல் எனக் கூறுவனவும் கொள்ளப்படும்" என உரைத்து இப்பாட்டை எடுத்துக்காட்டி "இது மனையோட்கு உரைப்பல் என்றலின் நடுங்கினான் என்றது" என்பர் நச்சினார்க்கினியர்.  1. தொல். பொ. 80, 2. மேற்படி. மேற்படி 88. 3. பசுங்கதிர் - பாடம் 4. தடக்கி- பாடம் 1. இப்பாட்டுக் குறைந்த அளவு ஒன்பதடியும் மிகுந்து பதின்மூன்றடியும் இருத்தல் இந்நூலமைதிக்கு முறையாகும், மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டிலும் அச்சுப்படியிலும் இந்த ஏழடிகளேயுள்ளன. "வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே" (தொல்.பொ.421) என்ற நூற்பாவின் உரையில் இதனைக் காட்டி இது தெய்வ வாழ்த்து என்பர் பேராசிரியர். "ஆசிரியப் பாட்டின்" எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவுரையில் இப்பாட்டைக் காட்டி இஃது ஏழடியான் வந்தது என்பர் பேராசிரியர். திரு. அ. நாராயணசாமி ஐயர், "ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்றமையின் வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்று" என்று உரைக்கின்றார். 2. இனி, பாடவேறுபாடு என்பது பா என்றும், என்றவாறு என்பது எறு என்றும் குறிக்கப்படும். 1. பொன்வண். 19. 1. Ideal man, Ideal woman, Ideal friends 1. A.R. No.30 of 1916 1. நின்றசொல்லின்-பா. 2. நீடுதோறினியர்-பா. நெடிதுதோன்றினியர்-பா. 3. கொண்ட - பா. 4. புரையமன்று- பா. 5. செய்யறியவர் - பா. 1. திருக்கோவை. 301 2. தொல். எழுத். 237 1. தொல். பொ. 145 2. மேற்படி 147. 3. மேற்படி 228. 1. யந்நாம்-பா 2. மரனோக்கீண்டிவர்-பா 3. முன்னூற்று-பா 4. காலொடுபட்ட-பா 5. கொடிதே-பா 1. நற். 97. 1. தொல், பொ. 40. 2. தொல்-அகத், இளம். 1. விட்டரங்கிழைத்து-பா. 2. உள்ளினமல்லமோ-பா. 1. குறள். 401 2. புறம் 324. 3. சிலப். 4:19-20. 1. தொல், பொ, மெய், 12 இளம் மேற். 2. குறுந். 398 3. குறள் 1227 1. தொல். பொ. அகத். இளம். 47. 2. மேற்படி அகத் 43. 3. மேற்படி 272 1. அன்னை யறியி னிவணுறை வரிய வாகு மன்னெனக் கூறின்-பா 2. மிறைவ னூர்க்கே-பா 1. நற், 45 2. குறுந், 228 1. அகம் 159 1. தொல், பொ, களவு 22 1. A, R, No.334 of 1929 - 30 2. Annual Report of the Madras Epigraphy 1936-37 Para 73-4 1. பெரும் புயல்-பா 2. லின்று செல்-பா 3. இருளையர்த் தரூஉம்-பா 1. நற். 153 1. நாருரத்தன்ன-பா 2. யெறிமடமாற்கு-பா 3. ஓரிக்கானம்-பா 4. யாம் வந்தன மெனவே-பா 1. ஐங் 35 2. புறம் 152 1. கழைபாய் நீத்தம்-பா 2. காடலையார்ப்பத்-பா 3. வெண்ணெலருந்திய: வெண்ணெலார்ந்த வரிநுதல் யானை-பா 4. தண்ணறுஞ் சிலம்பின்-பா 1. அகம் 72 2. மேற்படி 123 3. மேற்படி 341 1. நம்மே-பா 2. அரிவனவரிந்தும் தருவன-பா 3. தாஅய்-பா 4. தண்டிறம்-பா. 1. நற்.96 2. ஞான. தே.54 3. குறுந். 283 2. ஐங் 171 3. மேற்படி 173 4. மேற்படி 175 5. மேற்படி 180 6. பதிற் 20 1. தொல். அகத் 14 2. மேற்படி களவு 11 1. அழிவிலர் - பா 2. கண்ண்டஅங்கு - பா இப்பாடல் புதுப்பட்டிச் செட்டியார் ஏட்டில் காணப்பட்டது. 3. எய்தினமாக - பா 4. மாங்குயிவாலும் - பா 1. சீவக. 606 1. தொல். பொ. 41 2. க்ஷ செய் 195-6 1. பொன்னேர்மேனி மணியிற்றாழ்ந்து - பா. 2. நெடுந்தேர் - பா. இழையணிந்தெடுத்த கொடித்தேர்ச் சோழர்- பா. 3. போர் கிழவோன் - பா. 4. கையடுத்தது - பா. 1. ஞானா : 24 . 39 - 40 1. குறுந். 49 1. தொல். பொ.503 2. மேற்படி. 27 3. தொல். பொ. 39 1. மெய்யாது - மா 2. நொதுமலோருரை - பா. 3. உட்கொளாஅல் - பா. 4. விரிந்தன்றே - பா 5. இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது. 1. குறுந் 9. 2. பதிற் 11 1. கருஞ்சூற்குழிசி - பா கடுஞ்சூற் குழிசி - பா 2. என்கால் - பா 3. கலைஇய - பா 4. கலுழ்ந்தனள், கவிழ்ந்தன, கலுழ்ந்தன - பா 5. கயமனார் - பா 1. தொல்.பொ.39 2. ஷெ ஷெ 221 3. ஷெ அகத். இளம் 42 1. எழாஅ வாகலின் - பா 2. பிதிரிற் சிறுபலதாய - பா 3. வேங்கை வியுக வோங்குதலைக் கட்சி - பா 4. தோழி தலைவிக்குச் சொல்லியது 1. கலி - 7 2. புறம்- 60, 157 1. தொல் பொ.114 2. Territorial Expansion 3. Kadmut Islands in the West Coast 1. தொலைந்து தோணலஞ் சாஅய் - பா 2. ராயினு நல்குவர் - பா 3. யருமிளைச் செம்பியன் - பா 4. பகற்றிவேட்ட பா 5. சாரலின் - பா சாலையின் பா 6. ஞால்வாய்க் களிறு - பா 7. இது தலைவி இயற்பட மொழிந்தது 1. பதிற் 22 2. அகம் 375 1. தொல் கற்.17 2. குறள். 791 3. தொல் கற்.22 1. கெழீஇய-பா 2. நலம் புதிதுண்டு - பா 3. நீ யுணர்ந்தனையேம் -பா 4. யொய்ய வாங்க - பா 1. தொல் புறத், 24 1. சேர்பினும் - பா 2. விழுநீர் - பா 3. விழுநெறி - பா 4. ணமர்ந்தினது - பா 5. செகுத்தனன் - பா, செருத்தனென் - பா 6. எனையவாகுக- பா 1. தொல் மரபு 1. நாவு. தே. 241:3 2. பொறிவட்டம் - Physiological Zone; புத்திவட்டம் - Mental Zone; உயிர் வட்டம் - Spiritual Zone 1. குறள் . 357 2. திருச்சத 3 3. திருநாவு தேவா 212:6:114:5 1. அருவியின் - பா 2. யதிருங்கானத் தகலணி நோக்கலின் - பா 3. போதெழின் மழைக்கண் - பா 4. மழைக்கண் ஈரிய கலுழ்தலின் அன்னை - பா 5. இமிரும் - பா 1. ஐங். 358 1. குறள் 1121 2. கலி. 4 3. குறுந் 392 4. அகம் 22 1. கலி 144 2. தொல். பொ. களவு 20 1. S.I.I. No.1.i. No.61. 2. A.R. 200 of 1930-31 3. A.R. No.426 of 1918 1. சுதனடங்கியானை-பா. 2. தடவுநிலைப் பொருகோட்டன்ன -பா; 3. யொருகோட்டன்ன-பா. 4. ஒன்றிலங்கருவிய-பா. 1. புறம். 209 1. அகம். 211 1. S.I.I. Vol. V. No.571 1. வரும்பு முதிர்பு-பா 2. னுனையின்-பா 3. வேறுபடத் தோன்றி 4. ளிவளே-பா 5. வாழாளாதல்-பா 1. தொல்.பொ. களவு-23. மேற்படி அனம் 24 1. வைகி-பா 2. மகிழ்நநின்-பா 3. தெளிப்ப-பா, தெழிப்ப-பா 4. வைகிய-பா 5. கொடிப்பிணையலளே-பா 1. தொல்,சொல். 277 2. ஐங். 121 3. அகம் 240 1. பதிற் 32 1. குறள் 1302 2. மேற்படி 1330 3. இ.அ.பொ. 35 1. த.நெறி.வி.25 1. லிங்கு செலவிளையர்-பா. 2. கானக்கோழி-பா 3. மாட்டித்தன்பெடை நோக்கிய-பா 1. தொல் கற், 53 2. A.R. No.210-4 of 1917 1. தையூ ணிருக்கையின்-பா 2. பிவொடு திரங்கிய-பா 1. தொல் பொ. களவு 23 2. திரிகடுகு 10 1. வடுக்கொள் கூழை-பா 2. இழப்பு-பா. 3. செப்பூர் நெய்தல்-பா 4. காப்பரி யவ்வே-பா 1. சிலப் 22: 121-2 1. A.R.No.5 of 1920 1. வேருடை நெடுங்கோட்டு-பா  2. உடும்படைத்தன்ன-பா 3. வெள்ளிரவல்கி-பா. வெள்ளி-பா 4. சேயிழை-பா 5. நன்றே புரிந்தோய்-பா 6. அகல்வராடவர்-பா 7. பொருட் பிரிவுக்குடன்பட்ட தோழியை யுவந்து தலைவி-பா 1. குறுந். 135 2. குறள் 257 1. தொல்.பொ.கற்பு 6 1. S.I.I. Vol. V. No.520 1. நறவின்-பா. 2. வளமலை நாடன்-பா. 3. சொல்லெதிர்பெறான்-பா., செல்லிடம்பெறான்-பா 4. பெயர்த்ததல்லல்-பா 5. பண்பிலி செய்தி-பா 6. நினைப்பாய் நின்றே-பா 1. தொல். பொ. களவு 23 1. செவ்வ - பா 2. பொன்னல் வெள்ளரை-பா, புள்ளி வெள்ளரை-பா 3. திரங்கிச் - பா. 4. வருதுணையாகிய என்ற பாடம் புதுப்பட்டியேட்டில் காணப்படுகிறது 5. இருஞ் சூழோதி பெருந்தோளோட்கே-பா 1. ஐங். 58. 1. திறக்கும் - பா 2. றவங் - பா, சுறாஅத் - பா 3. குறமே - பா 1. A.R. No. 134, 182 of 1927 - 28 2. A.R. No. 143 of 1927 - 28 1. அன்னையர் போல - பா 2. கள்வர்போல - பா 3. வேங்கைகளிதரு மோங்குமலை - பா 4. ஆடுகழை - பா 5. ஓடுமழை - பா 1. கலி. 4 1. தொல் அகத் 39 2. ஷெ அகத் 14 11. தொல். பொ. கற்பு 6 1. பொறாஅ - பா 2. யானே - பா 3. நோங்கொல் லெனாஅ-பா 1. ஏர்தரு தெருவினெதிர்ச்சி - பா 1. பைதறுகாலை - பா 2. றூங்கஞர் - பா 1. புறம்- 24 2. பதிற். 52 1. A.R. No. 597 - 603 of 1926 1. P.S. Ins. No. 2. Nel Ins. Gudur No.87 3. A.R. No. 278 of 1928 - 9. 3. A.R. No. 146 of 1908 5. அகம் - 111 1. மாயிரும் பரப்பகம் - பா 2. பயிரிடூஉச் சுரக்கும் - பா 3. பலபுலத்து - பா 4. மினையே னாயி னானாது - பா 1. நண்ணயத்தென்றும் - பா 2. னென்பதென் வாய்ச்சொல் தேறாய் - பா 3. நுமரோ டெண்ணி - பா 4. ஒள்ளியோர் - பா 1. குறள் 504 2. குறள் 791 1. தொல். சொல். 245 1. தொல். பொ. இளம் களவு 24 2. மேற்படி 114 1. பருவாய் நெடுமலை - பா விடுவாய் நெடுவரை - பா 2. பசத்தமாலை - பா 3. வனமுலைக் கரைசோர்பு - பா 4. மல்குபுனல் பரந்தன - பா 1. Imperial Gazetteer Mysore and Coorg 1, 300 1. S.I.I. Vol. V. No.648 1. யடையிறந்து. பா. 2. மலரொடு-பா. 3. வுருகெழுக்கட்டி பா. உறழக்காட்டி. பா. 4. குறமகள். பா. 5. அருவிகொள் னின்னியத். பா. 6. கானறுங்-பா. 1. தொல். இடை. 51 1. புறம். 47 1. தொல்.பொ. களவு 23 2. தொல் பொ இளம்: களவு 24-5 1. புன்காய் நாவற்-பா 2. புகர்ப்புற-பா 3. கூர்ந்து-பா 4. கொள்ளை-பா 5. மரந்தை-பா 6. கவினது-பா. கவிழ்நலங்கொள்ளே-பா. விவணலங்கொல்லோ-பா 7. கட்சுழி-பா. கட்கவி-னா. 1. தொல். பொ. உவம. 11 1. தொல். பொ. 146 2. ஷெ ஷெ 146 1. தணிகை புரா. வள்ளி 257-62 2. தொல். பொ. 150 1. நச்சினார்க்கினியார் உரைக்கம் இவ்வேத நெறியை, வேதகால ஆரியர் மேற்கொண்டு இருந்த நிறத்தை. Since primitive times, the bride, when she came to her new home, was led around the sacred fire and therefore Agni is also called “the lover of maiden the husband of women (R.V.1.68.8)” and in a marriage benedictions it is said that Agni is the husband of the maidens and that the bridegroom receives the bride from Agni” என்று வின்டர் நிட்க கூறுகின்றார். (A History of Indian Literature Vol.1 P.88) 2. Coorg Ins. Vol. I No 10. 1. குறுங்கை - பா. 1. யாமெந்நிலனிழந்தனமேயாகத் -பா 2. தலைவாய்ப் பெண்டிர் - பா 3. புரையாத் தீமொழி - பா 4. தாஅய் என்னிழந்தன்றின் வழுங்கலுரே-பா 5. ஜங். 286 1. பைப்ப, பைப்பய இரைக்கும் - பா 2. இவளோடு செலினோ 3. கையற - பா 4. என்பாம் - பா 5. தாகத்து - பா 6. அணங்குடை யருத்தலை - பா 7. மாலை - பா 8. போழ்தே - பா 1. தொல். பொ. 114 1. தோடுகெழு - பா 2. காண்டவாயில் - பா 3. ஒலிகா வோலை 1. நற். 369 1. அகம் 1. கைம்மிக்கு ஆற்றுதல் எளிதோ - பா 2. புகர்முக வேழத்தின் - பா 3. தோள்களும் - பா 1. சீனப் - காவல், 11 1. தொல், களவு இளம் 10 2. தொல். பொ. 102 3. ஷெ ஷெ 498 4. A.R. No. 40 of 1925 1. பெரும்பரண் - பா 2. விரிச்சிநிற்ப - பா - விரிந்தனர் -பா 1. பசிஷநோய் - பா, பசு நெய் - பா 2. யூரிமை - பா 3. மகிழ்ந்தனன் - பா 4. தலைவிக்குப் பாங்காயினார் - பா 1. புறம் 100 2. P.S. Ins. No. 67 3. சிலப் 5; 35-7 4. மதுரை ;600-2 1. தொல் பொ.118 2. தொள் பொ.118 3. மணி. 3: 134 - 141 1. பார்மலி சிறு கூவலின் - பா, பரன்மலி கூவலுறலின் - பா 2. விளரூணரும் பகை - பா 1. பிரிவுணர்த்தப் பட்டு - பா 2. புறம் 193 1. நன் 136 1. தொல். பொ. 151 1. அறத்தோடு-பா 2. பொருந்திய-பா 3. அல்கு தொழிற்-பா, உலகு தொழிற் கொளீஇய-பா 4. புதுநீரவல-பா; மழைதலைப் பொழிந்த புதுநீர்வல்வர-பா 5. கறங்க மாண்வினை 6. கொள்ளாள்-பா 7. வல்லே-பா 8. கறியுணர்வாக-பா 9. மெல்லென-பா 10. அமையாம் புகுதலின்-பா 11. மெய்ந்நிலையா-பா, மெய்வகுத்துரூஅய்-பா 12. வீழ்பூ முடியள்-பா 13. வினைமுற்றி மீள்வாம் என்ற பாகற்கு-பா 1. குறுந். 220 2. ஷெ. 251 3. குறள். 41. 1. தொல். பொ. 144. 2. ஷெ. ஷெ. 146 1. துயில் விரிந்தன்ன-பா. 2. வல்கி யாரும்-பா 3. காணான் களங்கி-பா 1. பதிற் 21. 7. 1. S.I. Vol. VIII no.69 1. நினைஇய-பா 2. நினக்கோ வறியுந ணெஞ்சே-பா 3. கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல-பா 4. காணிய-பா 1. தீர்ற்புக்கு-பா 2. பரதவர் மகளே நீயே-பா. 3. நிழற்றும்-பா. நுடங்குமூதூர்-பா. 4. வறுந்தனவுணங்கல்-பா 1. ளோப்புதும்-பா 2. னெஞ்சிறு வாழ்க்கை-பா 3. நன்றே-பா. 1. தொல். பொ. 460 2. அகம் 186 1. குறள் 496 2. தொல். பொ. 112 3. மேற்படி. 114 1. காணீராதலோ - பா, 2. பேணினிராகுவீர் ஐய - பா 3. அச்சுப்படி சில சொற்களை விடுத்து “அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றையத் தீங்கனீ” எனக் கொண்டுளது 4. னறையறைத் துயல்வர - பா 1. அகம் - 115 2. ஷெ - 271 3. குறள் - 334 1. ஷெ - 833 1. கருத்தின வரும்-பா 2. கானகநாடற்-பா 3. யாவது-பா 4. வேறுணந்து-பா 1. சிலப் 9:11 2.அகம் 22 3. புறம் 299 1. அகம் 22 2. ஷெ 132 1. சுழலுமாலோ-பா 2. மெல்லிதழ்க் குடைப்பூ-பா 3. கடற்றிடை-பா 4. வடிநல்லம்பின்-பா 5. வொழித்த-பா 1. ஐங். 312 1. கொழீஇப் பானிற - பா 2. பகல் சாய்ந்தன்றே - பா 3. சேர்ப்பன்வாழ் நிறுநல்லூர்க்கே - பா 1. அகம் 220 2. ஷெ.136 3. ஷெ.23 4. குறுந் 220. 1. னன்னையஞ்சிக் - பா 2. தழூஉகஞ்செல்ல - பா தழுவுகம் செல்வோன் - பா 3. நெடு நிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை கொடுமுடி - பா 4. கேட்டோருளர் கொல் - பா 5. யாணது பசலை - பா யானது பசலை - பா 6. அதனெதீர்ந்தூணிலை யெலுவ - பா யாண்டைய யாசிலை - பா 1. மதுரை, 329 2. பதிற். 52 1. தொல். பொ.110 2. ஷெ. பொ.166 3. ஷெ.பொ.கற்பு. 179 1. செல்வாங் கொல் - பா 2. மாட்டி - பா 3. கொழுங்கவுட் கொல் களிறு - பா 1. நாலடி - 164 1. டெழின் மலர் - பா 2. புரிந்தமையலையே - பா 3. வெல்போர் - பா 4. விழைந்து - பா 1. அகம் 393 2. ஷெ. 257 1. ஷெ. 393 2. ஷெ. 361 3. ஷெ. 261 4. தொல்.பொ.185. 1. அகம் 261 1. எவன்கொல் தோழியன்னை கண்ணியது - பா 2. கானக் கல்யாற்று - பா 1. முகிழிண ரொடுவரும்; முகிழ்மலர் கொளவரும் - பா 2. மருந்துமாகும் - பா 1. பெருங் - 1:38:22-3 2. ஷெ. 1:38:94-9 3. ஷெ. 1:42:122 4. ஷெ. 1:41:101-6 1. கிளைமுதற் கெழீஇ - பா கெழுமுத வினைஇ - பா 2. இற்றாங்குணர - பா 3. தைஇய - பா 1. யொருபகை - பா 2. திரவிவண் - பா 3. புல்லவெறிகொண்டு - பா - புல்லாத் தோள் சேர்பு - பா 4. கண்கோலா - பா 5. யாயே - பா 6. யதனெதிர் சொல்லாளாகி - பா 7. யன்னாய் - பா அன்னோ - பா 1. அகம் 332 1. தொ.பொ.115. 1. அளிகலந் தீய - பா 2. காண்பின் காலை - பா 3. என்னெஞ்சம் - பா 4. வருந்தும் கொல்லோ - பா 5. வந்து - பா 6. னழிந்தவென் - பா 7. நேர்தலையிழந்தே - பா 1. முருகு. 17 1. தொல்.பொ. 194 2. மேற்படி. 111 3. மேற்படி. 196 1. மடங்கண் மாநிரை, மடங்கன் மானிரை-பா 2. விங்குமுலை ஞெமுங்க-பா 3. மாநலம் - பா 1. பெறுமுதிர் செல்வர் -பா 2. டலைப்பப் - பா 3. முரசுமுற் - பா 4. கெழீஇய - பா 5. இவ்வடிகள், “அவலநெஞ்சின் அஞ்சினம் பெயர, உயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பனொடு நுண்ணுதல் நுழைந்த மாவே” என மாறிக் காணப்படுகின்றன. 6. நீடுநீர்-பா 7. ஓடு தேர் - பா 8. நுழைத்த மாவே - பா 9. நோக்கி மாவினை வைது. சொல்லியது .பா 1. தொல்.பொ.114 1. கொரீஇ: கொலீஇ - பா 2. யெல்லுமுய - பா 3. அஞ்சுவல் பலவுறு பண்டத் தொடை மறந்து - பா 4. யாணர்க் காட்டு - பா 5. முல்லை நுண்முகை யவிழ்ந்த புறவின் - பா 1. தொ. பொ.45 1. செருவினொடு-பா 2. யாவயின்-பா 3. மடந்தைக் காய்வளை-பா 1. அகம் 7 1. P. S. Ins No.1 1. வருந்தினெமாக-பா. 2. துயர்மருங் கறிந்தனள்-பா 3. கான்கெழுநாடற்-பா. 1. தொல் எழுத். 288 2. ஐங். 447 1. தொல். களவு 33 1. தொல். பொ. 308 2. ஷெ.ஷெ.111. 1. வேர்பயில் வெதிரத்து-பா 2. யயர் வுயிர்த்தன்ன-பா 3. வேய்பிறங்கழுவத்து-பா 4. குன்றூர் மதியம்-பா 5. நின்று நினைந்து-பா 6. நிழற்பல பா 7. மாஅத்த-பா 8. கல்பிறங்குயர்மலை-பா 1. சொல் 348 2. குறள் 641 1. தொல்.பொ. 43 1. உலவுக்கடல்-பா 2. மிகுமீன்-பா 3. புதுமல ரலங்கும்-பா 4. புலவற் புன்னை-பா, புலவுமுதற் புன்னை-பா 1. இருஞ்சிறை யிவுளி-பா. 2. மலிதுறைச் சேர்ப்பனொடு-பா 1. நற். 19 2. புறம். 267 3. கலி. 68 4. அகம் 232 5. நற் 68 1. S.I.I. Vol. v. No. 881. 1. இன்ன மாகவுந் துறந்தோர் - பா 2. நட்பே மானா ருடுக்கை - பா 3. மறனுற்றா முருக்கி - பா; வறனாற் றொன்கினை யாடிப் பையெனப் புலம் வறிதாக - பா 4. எமரே - பா 5. அருமை கண்டு - பா 1. நற். 165 2. புறம் 375 3. மலைபடு 430-1 4. பெரும்பாண் 181-2 1. குறள் 612 2. தொல்.பொ. கனவு 20 1. கிடங்கி லன்ன - பா 2. ஒளிறூ வெள்ளருவி - பா 3. யொண்டுறை - பா 4. புணர்கூர் யானை - பா 5. வன்பிற் கானவர் - பா 1. அகம் - 288 2. ஷெ. 362 1. குறுந் 83 2. ஷெ. 201 1. முல்லை 11- 7 2. நற். 22 1. புன்காய் - பா 2. பெடைநினைந்துதன் - பா 3. காசுபெய் யல்குற் காழ் முறை-பா 4. மாணலங் கையற-பா 5. இஃது அச்சுப்பிரதியில் இல்லை 1. குறுந் 274 2. ஷெ 363 1. அகம் 293 2. அகம் 317 1. செங்கதிர் மண்டிலம்-பா 2. இறவருந்தி யெழுந்த-பா 3. வெண்கோட்டருஞ்சிறை-பா 4. டருஞ்சிறை-பா 5. கரைய - பா; யக்கரை-பா 6. கணைப்பு-பா 1. பொங்குபிதிர்-பா 2. குழவிசைப்புணர் யெழுதரும்-பா 3. உடைகசுட படப்பை-பா. உழைகடற் படப்பை யெம்மிறைவனூர்க்கே-பா 1. புறம் கட 1. தொல். பொ. 114 1. ஐங் 58 2. நற். 350 3. P.S. Ins. No.89 1. பெறிவியாம்-பா 2. பொங்கிவருபுது புதுநீர்-பா 3. விடுநண்மன் யாயே-பா, விடுநள் கொல்லோ-பா 4. யெல்லுமிழ்ந்து-பா 5. கிலங்கின மின்னி யாடுமழை-பா 6. ஏடுகளில் இப்பாட்டு அடிபிறழ்ந்துளது 7. இது சிறைப்புறம் 1. தொல். சொல். வேற். மயங் 11 2. ஐங் 76 3. தொல். பொ. 114 1. S.i.i. vob v. 710. 307 2. குறள். 1227 1. பகல்செய் தாங்குச்-பா 2. தோன்றிப் புதல்விளக்குறாஅ-பா 3. குழலோ டன்றி-பா 4. அகன்ற நாட்டுளும்-பா 1. தொல் வினை 36 1. நற் 275 2. குறிஞ்சி 90 3. குறள் 661 1. அகம் 147 1. மொண்டுறை-பா 2. அனைய வன்பினையோ-பா 3. பரக்கும் - பா 4. செல்லல்-பா 1. Wagtail 2. நற். 230 3. அகம். 259 1. தொல். பொ. 111. 1. இப்பாட்டின் இறுதிப் பகுதி ஏடுகளில் சிதைந்துளது 2. முன்னினி சின்னதை-பா 3. நின்னின் நினைக்குணர்ந்தெனப்-பா 4. நெய்ய-பா 5. வகையமர்-பா 6. கையறு முரல்குரல்-பா 7. நும்மிலன் புலம்பக் கேட்டொறும்-பா 8. பெருவிதுப்புறவே-பா 1. குறள், அதி 127  2. பதிற் 28 3. ஷெ 70 1. கலி. 21 2. ஷெ 3 1. பேணுவ-பா 2. தானே-பா 3. முன்னே-பா 4. அதனாலாவதன்றால்-பா 5. அவர்வதன்றால் என்னும்-பா 6. குறை நேர்ந்த தோழி தலைவி குசூறை நயப்பக் கூறியது-பா 1. நற். 128 2. தொல். பொ.169 1. விரவி லெரிவாய்ப் போய் - பா 2. போழும் - பா 1. நுதல் கவினழிக்கும் 2. பயலையும் அயலோர் - பா 1. அகம். 220 2. ஞானகம், 177:4. 3. க்ஷ 174:11 1. நுண்ஞாண்-பா. 2. சேர்த்த-பா. 3. ஏதிலாள னென்ப-பா. 4. யூக்குதொறும்-பா. 5. வார்க்கும்-பா. 6. வுரைத்தன்று-பா. 1. தொல் சொல் 209. 1. நற். 191 2. அகம். 20 3. க்ஷ 400 4. நற். 109 1. வான்பைப்-பா. 2. உணர்மதி-பா. 3. கொண்டற் பொருநன்-பா. கொடுவிற் கானவன்-பா. 4. தொலைச்சிப் பண்ணி-பா. 5. பச்சூன் பெய்த-பா. 6. பைத நெஞ்சம்-பா. 7. தோழிக்குத் தலைவி கேட்பச் சொல்லியது-பா. 1. முருகு. 149-50. 1. புறம். 205. 2. அகம். 13 1. ஐங் 282 1. தொல். பொ. 100. 2. க்ஷ க்ஷ. 103. 1. வன்மழைமாறிய-பா; வருமழை கரந்த-பா. 2. றுண்டுளி கரந்தவுலவையங் காட்டு-பா. 3 .நீழ லசைவு நீக்கி-பா. நீழல தசைவுழி யசைஇ-பா. 4. வியுகமலர்ந்த-பா. விமல ருதிர்ந்த 5. தேனாறு புறவில்-பா 6. கல்லுறச் சிவந்த-பா 1. குறள். 16 2. நற். 305 3. குறுத். 329 1. நற். 9 2. க்ஷ 264 1. மலையமா பா 2. யயாவுயிர்த் தாஅங்கு பா 3. ஓலிவெள் வருவி பா 4. யொண்ணுதல் பா 5. தீதலையல்சூற் குறுமகன் பா 1. A.R. No.223 of 19336-37 2. புறம் 125 3. அகம் 57 1. ஷெ 209 2. நற் 232 3. குறுந். 267 4. அகம் 3 5. ஷெ 102 6. ஷெ 24 1. வாட்கெ ழிருங்கழி-பா 2. வீழ்தாட்டாழை-பா 3. தெண்கழி-பா 4. தோயினும்-பா 5. கோலுறலறியா-பா 6. உறுநீர்ச்சேர்ப்பன்-பா 1. அகம். 340 2. மதுரை 282 3. ஐங். 189 4. குறுந். 228 5. அகம் 20 1. நற் 21 2. ஷெ 339 3. குறள் 1227 1. நற் 8 1. புறம் 218 2. பரி 21 1. சிறைநாவீங்கை-பா 2. யுறைநவி திரள்வீ-பா 3. கூறிக் காமம் செப்புதும்-பா 4. தோழியாதினிற்-பா 5. தவிர்க்குவம் காதலர் செலவே-பா 1. அகம் 357 2. ஷெ 125 3. நற் 124 1. புறம் 35 2. அகம் 153 1. தொல். பொ.118 2. நற். 94 3. தொல். பொ. 218 1. அறைக்குறு மாக்கள் பா 2. பெரும்புலர் விடியலின் பா 3. நந்தனனிவனென பா. 4. மருந்தி வணில்லை பா 1. கலி 119 2. அகம் 288 3. புறம் 177 1. அகம் 63 2. க7லி 84 3. ஐங். 45 4. புறம் 70 ஐங் 84 1. திருவாச. திருவெம். 20 2. குறள் 1102 1. கலி 60 2. ஷெ 59 1. E. A.R. No.561 of 1920 1. கொட்டிப் பரிந்தின்று பா. 2. அசையி னோன்றாள் பா. 3. கொப்பமணியெருத்தின் பா 4. செம்மணி யார்ப்ப பா 5. குரைவத் தெறிப்ப பா. 6. உரவுவாள் வேந்தே பா. 1. அகம் 254 2. குறள் 665 2. அகம் 4 4. நற் 361 5. குறள் 1268 6. நற் 361 1. அகம் 353 2. நற் 374 1. நெகிழ்ச்சியும் -பா. மகிழ்ச்சியும்-பா 2. என்னுள்-பா 3. நோக்கலாற்றலனே-பா 4. நாகப்போக்கருங்கவலை-பா 5. பெயர்கம்-பா 1. நன்னெறி 23. 2. குறள் 1106. 3. புறம் 312. 4. தொல். பொ. 590. 1. சிலப். 24. 2. தொல். பொ. 103. 1. உண்டுறை-பா. 2. பழகிய-பா. 3. யஎஅம்-பா 4. தெரிந்த-பா 5. தலமரு பொழுதின்-பா 6. அஞ்சுவரக் கடுங்குரல்-பா. 1. அகம் 122. 2. புறம் 240. 3. ஆகம் 122. 1. அகம் 158. 1. தொல் பொ 114. 1. பேஎய்த் தேலர்-பா. 2. மானரையுறுஉம்-பா. 3. வெம்பலகுஞ்சுரம்-பா. 4. இல்லின் வாழ்க்கை - பா. 5. பாலைபாடிய பெருங்கடுங்கோ - பா. 1. நற். 219 2. ஐங். 29 3. நற். 12. 1. க்ஷ. 318 2. ஐங். 325 3. பதிற். 38 4. நற். 148. 1. யுரைப்பவும் -பா 2. நெகிழவும் - பா 3. குறிவரி-பா 4. யஞ்சிய-பா 5. மகிழந்து கொடு -பா 1. அகம் 27 1. காண்டக-பா 2. வினைவன்-பா 3. சுமிதக வுருவினவாகிப் பெரிய -பா 4. முற்றிவந்தோரே-பா 1. அகம் 316 2. ஷெ 217 3. ஷெ 219 1. மராஅத்த-பா 2. சோழரழிசு-பா 3. யிரும்புறத் - பா 1. நற் 196 2. A.R. 182 of 1928-29 3. ஐங் 51 1. தொல்வினை யெவன்பே துற்றனை-பா 2. யாஞ்சேர்ந் துணர்த்தினம், யாம்சென்றுரைத்தனம்-பா 3. விரிதிரைப்-பா 4. அதுகண்டு-பா 5. தாங்கல் செல்லாது-பா 6. கலூழ்மே தோழி-பா 1. அகம் 165 2. தொல் எழுத்து 157 1. தொல். பொ. 203 2. ஷெ ஷெ 204 1. தொல். 114 2. A.R. No.130 of 1908 1. மதுரை, 496-9 1. லாற்றி-பா 2. செறீஇயர், செலீஇ-பா 3. திரைப்பிதிர்-பா 4. திரைத்து-பா 5. வழிபெயற் கடைநாள்-பா 6. யுழுஞ்சின்-பா 7. கலவ-பா, யகல-பா 8. பரும யானை-பா 9. வாரா-பா 10. யெண்கணாள-பா 1. பதிற் 11 2. அகம் 214 3. ஷெ 178 1. A.R.No.171 of 1932-3 2. Do.No. 174 of 1932-3 3. Do. No. 149 of 1937-38 4. திருநாவு 191 - 6 1. உடையோர்-பா 2. எல்லிற் றோய்த்த-பா 3. புனைபூங் கலிங்கமொடு-பா 1. முயங்க வூங்கான்-பா 2. யல்கூர் பெண்டின் அழுதனள் பெயரும்-பா 3. அழுதனள் பெயரும் சில்வளைக் குறுமகள்-பா 4. அழுதனள் பெயரும் அஞ்சி ஸோதி என்பது சிக்கன் தேவர் ஏட்டில் இல்லை 5. பூசலுட்டா-பா 6. குழீஇப்-பா 7. நம்மவின் வேந்துடை யவ்வே-பா 1. புறம். 21 2. தொல். பொ. 107 3. குறுகு 79 1. அகம்-7 1. தொல். பொ. 145 2. ஷெ ஷெ 145 1. வீயுகும்-பா 2. லுயர்திரைப்-பா 3. பேடையோ-பா 4. என்புயிர் மணித்தார்க்-பா 1. தொல் எழுத்து 275 2. அகம் 320 3. நற். 251 4. குறுந் 26 2. அகம் 40 3. தொல். பொ. 194 4. சிவசு 768 1. பாடுடை வழலை-பா 2. வறன் பொருந்து குன்றத் துச்சிக் கவா அன்-பா 3. ராங்கட் கேணி-பா 4. மணிநீர்ப் பத்தர்-பா 5. தூட்டிய பெயரும்-பா 1. மதுரை 90-1 2. அகம். 155 3. நற் 240 4. தொல். பொ. 231 1. புலம்புக-பா 2. எழுமோ-பா 3. மருங்குமறைந்த திருந்திழை-பா 4. நாண்ட வருந்திய-பா 5. முரசி னோருமுன்-பா 6. இது சில ஏடுகளில் இல்லை 1. குறள் பரிமே 224 1. A.R.No. 230 of 1922 2. அகம் 340 3. A.R.No.541 of 1908.Nel. In. No.87-105 1. யானென்-பா 2. மூங்கிக்கைனல்-பா 3. கழுவா-பா 4. ராகிய-பா 1. தொல்.செய். 49 2. அகம் 30 3. குறள் 74 4. அகம் 22 5. தொ.பொ. 98 6. ஷெ ஷெ 118 1. ஷெ ஷெ.111 1. யான்ற - பா 2. துயவுத் தலைமந்தி- பா 3. கழைக்கண், அணைக்கண் - பா 4. விசைந்தெழுந்து - பா 5. தாலங் கொட்டுங் குறக்குறு மாக்கள் - பா 6. கொழு மீனை -பா 7. கையகத்ததுவே பிறர்விடுத்தற் காகாது -பா 1. குறுந் 21 1. தொல். சொல், வினை - 49 2. தொல். பொ.99 1. மேற்படி 102 1. தழைந்த - பா 2. புதுவதிற் புணர்ந்த பொழிலே - பா 3. நடுவியதுறையே - பா 4. சென்ற கானலென் குங்கு - பா 5. பைஇப் பையப் பசந்தன பசப்பே-பா 1. ஐங் - 146 2. அகம் 70 1. வழும்பு புலரா - பா 2. பிரிவிற் புலம்பின - பா 1. நற் 224 2. கலி 92 3. ஷெ. 20 4. ஐங் 45 1. அகம் 220 2. நற். 157 3. ஐங் 76 4. நற் 118 5. புறம் 293 1. செய்ம்மேவற் - பா 2. பாங்கர்ப் பக்கத்துப் பல்லிபட்டென - பா 3. கடிப்புடை வியனநர் - பா 4. இகழ்பதனோக்கி - பா 5. கண்ணொடுவாரா - பா 6. வெண்ணீனெஞ்சே-பா 1. பு.வெ.மா.170 1. தொல் எழுத். இளம் - 146 2. கைதி - 59 3. அகம் - 2 4. குறள் - 184 1. வெயிலவிர் நெடுந்தேர் - பா 2. அஞ்சுவரப் பளிக்கும் - பா 3. தான்வர - பா 4. மறந்து கடன்முகத்தே 5. நிறுத்த வண்பெயல் - பா 6. நெரிவில - பா 7. மன்னே - பா 1. அகம் - 291 1. நற் 43 2. அகம் 274 3. குறள் 1154 4. குறுந் 21 1. த.நெறி.வி. மேற். 157 1. கூரல கன்ன - பா 2. வான்கோலெல்லளே - பா 3. மூனியூப் - பா 4. வல்லிநீனொய்யும் - பா 5. முந்தை- பா 1. நற். 280 1. கலி. 87 2. ஷெ. 88 2. அகம் 98 4. A.R. No. 107 of 1930 - 3 1. தொல். பொ. 208 2. ஷெ ஷெ 151