உரைவேந்தர் தமிழ்த்தொகை 11 மாவை யமக அந்தாதி உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 11 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 160 = 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா.115/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந் தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம்ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல் களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர் களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத் துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் நூலாசிரியரின் பெயர் 2 முன்னுரை 3 நூலாசிரியர் வரலாறு 6 தலவரலாறு 7 உரை வரலாறு 10 அணிந்துரை 14 உரையாசிரியர் கருத்துரை 16 மாவை யமக அந்தாதி மூலமும் உரையும் 31 பாட்டு முதற்குறிப்பு அகர நிரல் 157  யாழ்ப்பாணத்துத் தெல்லியம்பதி கொல்லங்கலட்டி வித்துவசிரோமணி திரு. பூ. பொன்னம்பலம்பிள்ளை அவர்களியற்றிய மாவை யமக அந்தாதி மூலமும் திருமலை - திருப்பதி ஸ்ரீ வேங்கடேசர் கீழ்த்திசைக் கலைக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையும் நூலாசிரியரின் பெயர் முதலியன அரசர்கை யால்இலங் கைநா யகமுத லிப்பெயர்க்கோத் திரவுரித் தாற்பெற்றோர் தம்பியாந் தாமோ தரமுதலி பிரபௌத் திரன்பூ தப்பிள்ளை சுதன்தெல்லிப் பொன்னம்பலம் பரகுக னாமம் புகன்மாவை யந்தாதி பாடினனே. - யாழ்ப்பாணம் – சின்னத்தம்பிப்பிள்ளை உ சிவமயம் முன்னுரை "உருவா யருவாய் உளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே." மாவிட்டபுரம் என்னும் திருத்தலத்திற் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானிடத்தில் எங்கள் குடும் பத்தினருக்கும், பொதுவாகஎமதூரவர்கள் யாவருக்கும் பெரும் பற்றுண்டு. 'மாவை யமக அந்தாதி' என்னும் இந்நூலின் ஆசிரியரும், சித்திரகவி செய்தலிற் சிறந்த விற்பன்னரும், தெல்லியம்பதியைத் தாயகமாகவுடையவரும், சென்னையிற் சிறந்த பேராசிரியருள் ஒருவராக விளங்கிய வரும், சிவாநுபூதிச் செல்வருமாகிய ஸ்ரீமத் பூதப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் எனது தாயாரோடுடன் பிறந்தவர்; மூத்தவர். இவர் நைட்டிகப் பிரமச்சாரியாகச் சென்னை மாநகரில் வாழ்ந்து 1889ஆம் ஆண்டு அந் நகரிலேயே தேச விநோக மெய்தினர். இவர் 'மாவை இரட்டைமணி மாலை' என்னும் நூலையும் இயற்றி யாழ்ப்பாணத்திலேயே சர்வசித்து (1887) ஆண்டு வெளியிட்டுள்ளார். இம் மாவை யமக அந்தாதி மூலம் மட்டும் இற்றைக்கு 88 ஆண்டுகளின் முன் சென்னபட்டணம், சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் சர்வதாரி (1889) ஆண்டு இவரால் அச்சிடுவித்து வெளியிடப் பெற்றது. பின்னர், இம்மூலம் 1940ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக கொழும்பு, மெய்கண்டான் அச்சியந்திர சாலையில் என்னால் அச்சிடுவித்து வெளியிடப்பெற்றது. "மாவை எல்பிகெம் கவுஸ்" கம்பெனியின் பங்காளர்களான நானும், எனது புத்திரர்களாகிய, திரு. அ.சி. கிருஷ்ணராசா, B.A., LL.B. (நியாய துரந்தரர்), திரு. சி. வரதராசா. (பிரபல வர்த்தகர்) என்பவர்களும் இந்நூலை, அது மறைந்தொழிந்து போகாவண்ணம் காத்தற் பொருட்டும், நூலாசிரியரின் தொண்டை நினைவு கூர்தற்பொருட்டும் அதனுரையுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். இந்த ‘மாவை யமக அந்தாதி’ மூலத்திற்கு உரை காண்பது கடினமானபடியால் இதற்கு நல்ல உரை எழுதுவிக்க வேண்டும் என்ற சிந்தனை இதன் மூலத்தை (செய்யுளை) வெளியிட்ட காலந் தொடக்கம் எம்மை வாட்டியது. இதனால் இந்தியாவிலுள்ள வித்துவான்களுடன் பழகி யிருப்பார் என்ற எண்ணத்தினால் எம்மூரைச் சேர்ந்த சித்தாந்தச் செம்மல் பொன். கருணாகரர் அவர்களைக் கண்டு ‘யாரைக்கொண்டாவது உரை எழுதுவித்துத் தரவேண்டும்’ என்று கேட்டேன். அவர் எமது வேண்டுதலை மறுக்காது உடன்பட்டு இந்தியா சென்று வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களைக் கொண்டு உரை எழுதுவித்துத் தருவதாகக் கூறினார். அவ்வண்ணமே செய்வித்து உரைப் பிரதி யையும் எம்மிடம் தந்தார். இதனைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி யுற்றேன். உரை கிடைத்துப் பல வருடங்களாகியும், மற்றவர்களுக்குப் பயன்படா திருக்கிறதே யென்று கவலை கொண்டு இதனை அச்சேற்றி வெளிப்படுத்த வேண்டிய கடமையையும் உரையை எழுதுவித்துத் தந்தவரிடமே ஒப்படைத்தேன். அவரும் இப்பணி யை ஏற்று ஓர் அச்சகமூலம் 1963ஆம் ஆண்டு அச்சிடுவித்தார். அவ் வெளியீட்டில் பிழைகள் மலிந்து காணப்பட்டமையால், அது வெளியிடப்படவில்லை. இப்பொழுது, சிறிது காலத்துக்குப் பின்னதாக, திருத்தங்களுடன் அச்சிடுவித்து வெளியிடு கின்றோம். இந்நூலுக்குத் தஞ்சிரமம் நோக்காது உரை எழுதி உதவிய சித்தாந்த கலாநிதி வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களுக்கு யாம் என்றும் மறவாத நன்றி செலுத்தும் கடப்பாடுடை யோம். இந்த உரை வெளிவருவதற்கு முக்கிய காரணராயிருந்தவர் எமதூரவராகும் சித்தாந்தச்செம்மல் திரு. பொன். கருணாகரர் அவர்களே. இவர்களுக்கும், (இவரே நூலாசிரியர் வரலாறு, உரை வரலாறு என்பனவற்றை எழுதி உதவியுள்ளார்.) இவர்களுடன் தொடர்புற்ற திரு. ம. பாலசுப்பிர மணிய முதலியார், அவர்களுக்கும், வித்துவான் அவர்களை ஆசீர்வதித்துத் தூண்டிய திருப்பாதிரிப் புலியூர், சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் அவர்களுக்கும், தல வரலாறு எழுதி உதவிய மாவை ஆதினகர்த்தா பிரம்மஸ்ரீ சு.து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்களுக்கும், ஆசீயுரை வழங்கிய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களுக்கும், அணிந்துரைகள் எழுதி உதவிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, பெரும்புலவர் கா.சி. தனக்கோடி, ஆகியோருக்கும், எமது வேண்டுகோளுக்கிணங்கி, பெரும்புலவர் கா.சி. தனக்கோடி அவர்களிடம் தம் சிரமம் பாராது அணிந்துரை பெற்று உதவிய முத்தீயாலுப்பேட்டை உயர் நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சங்கீதபூஷணம், புலவர் மு.கு. புண்ணியகோடி அவர்களுக்கும், இவ்வுரை நூலின் அச்சுப்பிரதியை ஒப்புநோக்கித் தந்த பண்டிதர் இ. நமசிவாயதேசிகர் அவர்களுக்கும், நூலைத் திருத்த முறவும், அழகுறவும் அச்சுவாகமேற்றி யுதவிய சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றி என்றும் உரித்தானது. இவர்கள் யாவருக்கும் மாவை முருகப்பெருமான் கருணை கைகூடுமாறு வேண்டுகின்றேன். தமிழ்ப் பற்றும் முருகப்பெருமான்மீது பற்றும் உடையோர் இந்நூலைப் பாராயணஞ் செய்து அவன் கருணையைப் பெற்றுய் வார்களாக, “எல்பிகெம் கவுஸ்”, அ. சின்னதம்பி மாவிட்டபுரம், தெல்லிப்பழை, 1-1-77. நூலாசிரியர் வரலாறு யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைக் கிராமத்தின் ஒரு பகுதியாகிய கொல்லங்கலட்டி என்னும் ஊரே வித்துவான் பூ. பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் பிறப்பிடமாகும். விசுவநாத முதலி கோத்திரத்திலே தோன்றிய பூதப்பிள்ளை என்பவரே இந்நூலாசிரியரின் தந்தையாராவர். தண்டிகைக் கனகராய முதலியின் வழித்தோன்றிய சுப்ப உடையாரின் மகன் சங்கரப் பிள்ளை என்பவரின் மகள் சின்னாச்சிப்பிள்ளையே வித்துவானின் தாயார் ஆவர். வித்துவான் அவர்கள் 1845ஆம் ஆண்டில் பிறந்தவர் என்று அனுமானிக்கப் படுகின்றது. மாவை யமக அந்தாதியைப் பாடிச் சென்னையில் சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889இல் அச்சிடுவித்து வெளியிட்டார். இவர் சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையிற் கல்வி கற்பித்துக் கொண்டிருந்து நாற்பத்தைந்தாவது வயதில் 1890ஆம் ஆண்டில் தில்லை நடராஜப் பெருமானின் திருவடி நீழலை அடைந்தார் என்று அறிகின்றோம். எங்கள் வித்துவான் பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சைவத்தையும் தமிழையும் வளர்த்துக்கொண்டிருந்த காலமாகும். இவர்யாரிடம் கல்வி கற்றார் என்பதை நன்றாக அறியமுடியவில்லை. 1887ஆம் ஆண்டு (சர்வசித்து வருஷம்) ‘மாவை இரட்டை மணிமாலை’ என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டார். சித்திரகவி பாடுவதிலும் மிகுந்த புலமையாளர் என்பதை இவர் பாடி வெளியிட்ட இரட்டை நாகபந்தம், தேர் வெண்பா, மாலைமாற்று ஆதியாம் செய்யுட்களால் அறியலாம். பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த ‘உதயபானு’ப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டுள்ளார். அவை கிடைக்கப்பெறாமை கவலையே. பொற்கலம்தம்பை, பொ. கருணாகரர் தெல்லிப்பழை தலவரலாறு மாவை ஆதினகர்த்தா, சிவகாம வித்தியாபூஷணம் பிரம்மஸ்ரீ சு.து. ஷண்முக நாதக் குருக்கள் அவர்கள், நீரகத் தேதனை நினையு மன்பினோர் பேரகத் தலமரும் பிறவி நீத்திடும் தாரகத் துருவமாந் தலைமை யெய்திய ஏரகத் தறுமுக னடிகள் ஏத்துவாம். வாயுதேவனால் பொன்மலையாகிய மகா மேருவினின்றும் பறித்தெறியப்பட்ட சிகரங்களுள் ஒன்று ஈழநாடு எனப்படுகிறது. ஈழம் - பொன். பலவளம் நிறைந்த ஈழம் எனப்படும். இலங்கை கந்தபுராணம், இராமாயணம், பாரதமாகிய புராணேதிகாசங் களாற் புகழ்ந்துரைக்கப்படுகின்றது.அது, குபேரன், இராவணன், விபீஷணன் ஆகியோரால் ஆளப்பட்டது. சைவமும் தமிழும் தனிநடமாடுதற் கிடமாயது. தேவாரப் பதிகப் பாடல்பெற்ற திருக்கோணமலை, திருக்கேதீச்சரம், திருப்புகழ்ப் பாடல்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைநலம் வாய்ந்த திருத்தலங்களைத் தன்னகத்தே கொண்டது. இவ்விலங்கையின் சிகரமெனச் சிறந்தது அதன் வடபாலுள்ள யாழ்ப்பாண மென்னும் திவ்விய நகர். அந்நகரின் வடபால் கடல் மருங்கில் ‘கண்டகி’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. அது இன்று கீரிமலை என வழங்கப்படுகிறது. அதில் நீராடி உடலுயிர்ப் பிணிகள் நீங்கினோர் பலர் என்பது வரலாறு. கீரிமுகமுடைமையால் நகுல முனிவர் எனப்படும் முனிசி ரேட்டர் ஒருவர் அத் தீர்த்தத்து நீராடி அதன் மருங்கிற் கோவில் கொண்டருளிய திருத்தம்பலேசுவரிசமேத திருத்தம்பலேசுவரப் பெருமானை வழிபட்டுத் தமது கீரிமுகம் மாறப்பெற்றார் என்பது வரலாறுகளில் ஒன்று. கீரிமலை என்னும் பெயர்க்குக் காரணம் இந்நிகழ்ச்சியே என்பது வழக்கு. அம்முனிவராற் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே நகுலேசுவரப் பெருமான் என்பர். திருத்தம்பலேசுவரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ள சிவாலயம் நல்லை நாவலர் பெருமான் கருத்தின்படி இற்றைக்கு நூறு வருடங்களின் முன் அமைக்கப்பட்டது. குன்மநோயும், குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங் கன்னி சோழநாட்டினின்றும்இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாக நோயும் நீங்கி முகமும் மாறப்பெற்றாள் என்பது மற்றோர் வரலாறு. அவள் தங்கியிருந்த இடம் ‘குமாரத்தி பள்ளம்’ என இன்றும் வழங்கப் படுகிறது. அவள் அரசிளங்குமரியாதலின் தான் சேமமாக வாழ ஓர் அரண்மனை அமைத்திருந்தாளென்றும் அவ்வரண்மனைக் கருகே அவள் தோண்டுவித்த தடாகமே மகா ஒளதாரியப் பிரபுவாகிய திரு. சர. சிவானந்தபிள்ளை அவர்களின் வீட்டின் கீழ்பால் தூர்ந்த நிலையில் இன்றும் காணப்படும் தாடாகம் என்றும் கூறுவர். எவ்விடத்தில் அவளது குதிரைமுகம் மாறியதோ அவ்விடம் மாவிட்டபுரம் என வழங்கப்படுகிறது. (மா - குதிரை. இங்கே அது குதிரை முகத்தை உணர்த்துகிறது. விட்ட - நீங்கிய, புரம் - நகரம்.) இளமை எழில் நலம் தனக்கு வாய்த்தபோது அவளுக்கு அந்நலம் என்றும் அமைந்த முருகப் பெருமானின் எண்ணம் வந்ததுபோலும். அதனால் முகம் மாறிய அவ்விடத்தில் முருகனுக்கு ஆலயம் எடுக்கக் கருதி அக் கருத்தைத் தன் தந்தைக்குத் தெரிவிக்க, அவன் மகிழ்ந்து, ஆலய அமைப்புக்கு வேண்டிய யாவற்றையும், விக்கிரகங்களையும், தொழிலாளர்களோடும், சிதம்பரம் தீட்சிதர் களாகிய பெரிய மனத்துள்ளார், சின்ன மனத்துள்ளார் என்னும் அந்தணப் பெரியார்களோடும் அனுப்பி வைத்தனன். ஆலயம் சிவாகம முறைப்படி அமைக்கப்பட்டது. அவளால் பிரதிட்டை செய்யப்பட்ட மூர்த்தியே இன்றும்நாம் வழிபாடு செய்யும் மூர்த்தி யாகும். அன்றிலிருந்து சிவாகம முறைப்படி நித்திய பூசைகளும், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் பொருந்தியநாள் ஆகிய காலங்களில் விசேட பூசைகளும், வருடந்தோறும் ஆடி அமாவாசி யன்று 25ஆம் திருவிழாவாகிய தீர்த்தத் திருவிழாவும், அதற்கு முதல்நாள் தேர்த் திருவிழாவும் அமைய 25 திருவிழாக்களும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. தீர்த்தத் திரு விழாவுக்கு முருகப்பெருமான் கீரிமலையிலுள்ள கண்டகி தீர்த்தத்திற்கு எழுந் தருளுவர். கலியுகவரதனாகிய மாவைக் கந்தப்பெருமான் அடியவர் களுக்கு இன்னருள் புரிந்து அவர்களை இரட்சித்து வருகின்றார். வழிவழிவந்தமாவைக்கந்தன் அடியார் பரம்பரையில் தோன்றியவரே இந்நூலாசிரியர். அவர் இளமையிலிருந்தே சிறந்த முருகபக்தர். அப் பக்தியின் வெளிப்பாடே ‘மாவை யமக அந்தாதி’ என்னும் இவ்வரிய நூலாகும். ஒளதாரியப் பிரபுவும், பரோபகாரியும், சித்தாந்தச் செல்வரும், தமிழபிமானியும், முருகபக்தரும், தொழீலதிபரும், நூலாசிரியரின் மருகரும் ஆகிய திருவாளர் அ. சின்னத்தம்பி அவர்கள் இந்நூலின் மூலத்தை அச்சிடுவித்த காலத்தில் உரைகாண்டற்கரிய இந்நூலுக்கு உரைகாணப்படின் யாவருக்கும் பயன்தரும் என்று கருதி தக்கார் ஒருவரைக்கொண்டு உரை செய்வித்துத் தருமாறு சித்தாந்தச் செம்மல் கருணாகரர் அவர்களிடம் வேண்டினர். அவர் அவர்களின் வேண்டு தலுக்கிணங்கி சென்னை சென்று அப்போது சைவ சித்தாந்த மகா சமாசக் காரியதரிசியாக இருந்த அன்பர் திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார், B.A,B.L., அவர்களிடம் தமது கருத்தினை வெளியிட்டார். முதலியார் அவர்கள் மனமுவந்து திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சைவப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளிடம் இதனை விண்ணப் பித்தனர். அவர்கள்இந்நூலை வாசித்து மகிழ்ந்து ‘இதற் குரைகாணத் தக்கவர் வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தான்’ என்று திருவாய் மலர்ந்தனர். ஞானியார் சுவாமிகளின் அருளாசி கொண்டு முதலியார் அவர்கள் வேண்ட வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் உரைகண்டு தவினார்கள். அவர்கள் செய்த உதவி நூலாசிரியர் குடும்பத்தினரால் மட்டு மன்றிச் சைவத் தமிழ் உலகத்தினராலும் என்றும் மறக்கற்பால தொன்றன்று. மாவைக் கந்தன் கருணை எங்கும் என்றும் நிலவுக. இந்நூலை வெகு அழகாகவும் சிறப்பாகவும் இவ்வையகமே பெரும் பயன் பெறத்தக்கதாக அச்சுவாகணமேற்றி வெளியீடு செய்து வைத்த எமது அன்பர் திரு. அ. சின்னத்தம்பி அவர்கட்கும், அவரது செல்வக் குமாரர்களான சட்டத்தரணி திரு. கிருஷ்ணராசா B.A., LLB., பிரபல வர்த்தகர் திரு. வரதராசா என்பவர்கட்கும் மாவை முருகனது திருவருள் அபரிமிதமாகப் சொரிய வேண்டு மென்பது எமது பிரார்த்தனையாகும். மாவை ஆதீனம் சு.து. ஷண்முகநாதக் குருக்கள் தெல்லிப்பழைஆதீன கர்த்தா கலியுகம் 5079 சித்திரை 1ஆம் நாள் உரை வரலாறு தென்னிந்தியாவில் தென்னார்க்காடு மாவட்டத்தில் முருகப் பெருமான் கோயில் கொண்டருளும் மயிலமலைப்பகுதியில் அதன் மேற்கில் ஐந்து கல் தெலைவில் ஒளவையார் குப்பம் என்று ஓர் ஊர் உளது. அதற்குக் கிழக்கில் அடுத்திருக்கும் ஊரான பந்தமங்கலம் சுமார் ஆயிரம் ஆண்டுகட்குமுன் பந்தன் என்ற கொடை வள்ளலுக்கு உரியது. அவனைப் பாட்டுடைத் தலை வனாகக் கொண்டு ஒளவையார் ‘பந்தனந்தாதி’ என்ற நூலை எழுதியது தமிழாராய்ச்சியுடையார்க்கு நன்கு தெரிந்தது. அதனால் அப்பந்தன் ஒளவையார்க்குத் தனக்குரிய குப்பம் என்ற ஊரை ஒளவையார் குப்பம் எனப் பெயரிட்டு அளித்தான். அவ்வூர் இன்றும்அப்பெயருடன் விளங்குகிறது. அவ்வூரிலிருந்து அரசியற் கணக்கராய்ப் பணிபுரிந்தோர் நிரலுள் சுந்தரம்பிள்ளை என்பார் தமது மனைவி சந்திரமதியுடன் வாழ்ந்து வந்தார். அவர் மயிலமலை முருகப் பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு சொல்லாலும், செயலாலும் பல நற்பணிகள் புரிந்து வருகையில் 1903ஆம் ஆண்டு ஜுலைத் திங்களுக்கு நேரான சோப கிருது ஆண்டு ஆனித் திங்களில் இந்நூல் உரைகாரரான துரை சாமிப்பிள்ளை அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். அவர் இளமையில் தமது ஊரிலும், பின்னர்த் திண்டி வனத்திலும் வேலூரிலும் தமிழும், ஆங்கிலமும் பயின்று தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சக்கத்திலும், வடவார்க்காடு மாவட்டக்கழக உயர்நிலைப் பள்ளிகளிலும், பின்பு திருமலை - திருப்பதிக் கீழ்த்திசைக் கலைக் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், தமிழ் ஆசிரியராகவும்,விரிவுரையாளராகவும் மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய ராகவும் பணிபுரிந்தார். இப்பொழுது திருமலை - திருப்பதி ஸ்ரீ வேங்கடேசர் கீழ்த்திசைக் கலைக்கல்லூரித் தமிழ் விரிவுரையாளராய் இருக்கின்றார், சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, புறநாநூறு (பின்பகுதி), நற்றிணை ஆகிய நூல்களுக்கும் மணிமேகலை இறுதிப் பகுதிக்கும், ஞான சம்பந்தர் அருளிய திருவோத்தூர், திருமாற்பேறு பதிகங்கட்கும், யசோதர காவியம் என்ற சிறு காப்பியத்துக்கும் விளக்கவுரைகள் எழுதினார். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற முப்பெருங் காப்பியங்களுக்கு இக்காலத் திறனாய்வு முறையில் தனித்தனி ஆராய்ச்சி நூல்கள் எழுதியிருக்கின்றார். சைவ இலக்கிய வரலாறு, சேர மன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை ஆராய்ச்சியுரை, ஞானாமிர்தம், சிவஞானபோதச் சிற்றுரை முதலியவற்றை ஆராய்ச்சிக் குறிப்புக் களுடன் வெளியிட்டுள்ளார். இவற்றின் வேறாக, மதுரைக் குமரனார், நந்தா விளக்கு, வரலாற்றுக் காட்சிகள், பெருந்தகைப் பெண்டிர், மத்தவிலாசம் முதலிய பல உரைநடை நூல்கள் எழுதியிருக்கின்றார். இம் ‘மாவை யமக வந்தாதி’ உரை காண வேண்டும் என்ற முயற்சி இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசச் செயலாளராக இருந்த சைவத் திரு. மா. பாலசுப்பிர மணிய முதலியாரவர்கள் மூலமாக மேற்கொள்ளப் பட்டது. அவர்கள் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளிடம் விண்ணப்பிக்க, அவர்கள் இவ்வுரையாசிரியரை அழைத்து உரை யெழுதுமாறு பணித்து முதல் ஐந்து பாட்டுக்களின் உரையைப் பார்வையிட்டுத் தொடர்ந்து எழுதுமாறு பணித்து வாழ்த்தினார்கள். உரையாசிரியர் ஓய்வு கிடைத்தபோது எழுதுவது என்ற முறையில் இப்பணியைச் செய்யலுற்று 1942ஆம் ஆண்டின் இறுதியில் உரையெழுதி முடித்தார். மாவைத் தல வரலாறு நன்கு விளங் காமையின் ஒரு சில பகுதிகளின் உரை விளக்கமில்லை. யமக முதலிய மிறைக்கவிகட்கு உரையெழுதுவது என்பது அரிய செயல். நூலாசிரியன் கருதுவது ஒன்றாகவும் பாட்டின் சொல்லமைப்பு ஒன்றாகவும் மாறிச் செல்வது இக்கவிகளின் இயல்பு. இதனால், மிறைக்கவி பாடுவோரே அதற்கு உரை யெழுதுவது மரபு. ‘மாவை யமக வந்தாதி’ பாடிய ஆசிரியரே உரைகண்டிருப்பரேல், விளங்காத சில பகுதிகள் நல்ல விளக்கம் பெற்றிருக்கும். அவ்வாய்ப்பு இல்லாமையின், இதன் உரையில் சில பகுதிகள் அவர் கருத்துக்கு வேறாகச் சென்றிருக்கலாம் என்று உரைகாரர் கருதுகின்றார்; ஆயினும் இத்தகைய கருத்து வேறுபாடும் உரை வேறுபாடும் தவிர்க்கவொண்ணாதன. மாவை முருகப் பெருமான் திருவருளையும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் அருள் வாழ்த்தையும் முதலாகக் கொண்டு இவ்வுரை நிகழ்ந்தமையின், இதன்பாற் காணப்படும் நலம் அனைத்தும் முருகப்பெருமான் திருவருட்கே உரியவாம். பொற்கலம் தம்பை, பொ. கருணாகரர் தெல்லிப்பழை மேற்கு உ ஸ்ரீ முகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ மடம் காஞ்சீபுரம் முகாம்: காரைக்குடி தேதி 3-3-1977 இலங்கையில் வரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்ட புரத்தில் மிகவும் தொன்மை யுடன் விளங்கும்ஆலயத்தில் ஸான்னித்யம் கொண்டிருப்பவரும் மாவிட்டபுரம் காங்கேய மூர்த்தி என்னும் பெயர் கொண்டவருமான முருகப்பெருமான் மீது எண்பத்தெட்டு வருஷங்களுக்கு முன் ஸ்ரீ பூ. பொன்னம்பலப்பிள்ளை என்னும் தமிழறிஞரால் இயற்றப்பட்டுள்ள மாவை யமக அந்தாதியை தமிழ்நாட்டுப் பேராசிரியர் ஸ்ரீ ஒளவை துரைசாமிப்பிள்ளையைக் கொண்டு உரை செய்வித்து இந்த மூலத்தையும் உரையையும் நூல் ஆசிரியரின் மருகரான ஸ்ரீ அ. சின்னத்தம்பி என்னும் தொழிலதிபர் வெளியிட முன்வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். பக்தர்கள் இவ்வுயர்ந்த நூலின் மூலம் முருகபிரானை பூஜித்துக் கொண்டு இப்பெருமான் அருளால் எல்லா மங்களங்களையும் அடைவார்களாக, நாராயண ஸ்ம்ருதி அணிந்துரை பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியது “சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மை”யின் இன்றியமை யாமை தொல்காப்பியப் பாயிரத்திற் சொல்லப்பட்டது. இவ்வன் மையை விருத்தி செய்யும்பொருட்டு நிகண்டு அந்தாதி சிலேடை என்றிவைகளைக் கற்பிப்பது பழைய வழக்கம். வித்து வான்கள் சொற்பஞ்சம் இல்லாதவர்களாயிருந்தார்கள். ஒரு காலத்தில் வித்துவான்கள் இயற்றிக் குவித்த அந்தாதிகள் எண்ணில் அடங்காதவைகள். திரிபு, யமகம், நிரோட்டம், நிரோட்ட யமகம் என அந்தாதி வகைகள் பல திறப்பட்டவை. அடிதோறும் முதலாம் எழுத்துத் தவிர இரண்டாமெழுத்து முதற் பல எழுத்துக்கள் ஒன்றுபட்டு வருவது திரிபு. முதலாம் எழுத்து முதற் பல எழுத்துக்கள் ஒன்றுபட்டு வருவது யமகம். சொல்லும் பொருளும் தம்முள் வேறுபட்டிருக்க வேண்டும். மாவை யமக அந்தாதி சின்னத்தம்பிப்புலவர் இயற்றிய கல்வளை அந்தாதியை ஒத்தது. கல்வளை என்ற சொல்லை யமகமாக அமைத்திருப்பது போல மாவை என்ற சொல்லை யமகமாக அமைத்திருப்பதை இவ்வந்தாதியிற் காணலாம். மாவைய மாவைய முப்புரஞ் செற்றவர் மைந்தரு மாவைய மாவைய தாக்கிற் கடிகை வரைநிலைக்கு மாவைய மாவைய மன்கொள வூண்ஞம லிந்நரிக்கா மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே. இவ் வந்தாதியைப் பாடியவர் மகாவித்துவான் பொன்னம் பலப்பிள்ளை அவர்கள். இவர்கள் பல வேறு சித்திர கவிகளும் இயற்றியிருக் கின்றார்கள். இவ்வந்தாதிக்கு நல்லுரை கண்டவர் பேரறிஞர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள். இதனை வெளியிட்டவர்களின் விபரங்களை முன்னுரையிற் காண்க. கலாசாலை வீதி, சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி. உரையாசிரியர் கருத்துரை சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர், பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் வழங்கியது. செந்தமிழ்ப் பனுவலுள் சிற்றிலக்கிய வரிசையில் அந்தாதிச் சொற்றொடர்நிலை சீர்த்தி இடம் பெறுவதாகும். இற்றைக்கு முப்பதாண்டு களுக்கு முன்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கலைக்கல்லூரியில் யான் தமிழ்ப்பணி ஆற்றியபோது, ஈழத்தைச் சார்ந்த நண்பர் திரு. கருணாகரர் தெல்லியம்பதி கொல்லங்கலட்டி வித்துவசிரோமணி திரு. பூ. பொன்னம்பலம்பிள்ளை இயற்றிய மாவை யமக அந்தாதி என்னும் செந்தமிழ் நூலை என்னிடம் வழங்கி உரை எழுதுமாறு வேண்டினார். புலவர் திலகராகிய பொன்னம்பலம்பிள்ளையின் கலை நலமும், கவித்திறமும், புலமை மாண்பும் கவினுறக் காட்சிதரும் இந்நூலின் பாடல்களை யான் ஓதி மகிழ்ந்து உரை வரைந்தேன். எமகம் பாடும் தனித்திறனோடு சிவநெறிச் செம்பொருளையும் சேர்த்துச் செய்யுள் இயற்றும் மதுகை இவ் ஆசிரியர்பால் செறிந்து கிடப்பதை, இந்நூல் நலம் நுகர்வார் நன்கறிவர். தளர்வொடு மூப்பெய்தி இருக்கும் என் முன்னர் இந்நூல் புதுப்பொலிவோடு இன்று வெளியிடப் பெறுவது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. ஈழநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் இன்றமிழ்ப் புலமையோடு சிவநலம் பேணும் செந்நெறி யுடையராய் விளங்குதல் வெள்ளிடைமலை. அன்பர் கருணாகரர் இவ்வுரை எழுதுமாறு என்னை ஊக்கிய பழைய நினைவுகள் என் நெஞ்சில் இன்றும் நடம் புரிகின்றன. செந்தமிழ்ப் பெருமானாகிய நாவலர் வழியினரான புலவர் திலகர் பொன்னம் பலம் பிள்ளையின் மருகராகிய திரு. சின்னத்தம்பி இதனை வெளியிடும் நற்பணி யாற்றுகின்றார். கன்றும் உதவும் கனி என்பதன்றோ முதுமொழி, ஈழமும் தமிழகமும் இந்நூலின் பயன்கொண்டு இன்புறுமாறு வேண்டுகின்றேன். ‘ஒளவை’ ஒளவை சு. துரைசாமி 33, இராசாசி சாலை,‘காந்திநகர்’, மதுரை. 1-8-77 அணிந்துரை சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர், சங்கீதபூஷணம், புலவர் மு.கு. புண்ணியகோடி அவர்கள் வழங்கியது. செந்தமிழ் நாட்டின்கண் தோன்றிய பைந்தமிழ்ப் பனுவலிலுள்ள தொண்Qற்றாறு வகையான பிரபந்தங்களுள் ‘அந்தாதி’யும் ஒன்றாகும். ஒரு செய்யுளின் ஈற்றிலுள்ள அடியையோ, சொல்லையோ, எழுத்தையோ அடுத்த செய்யுளின் முதலாகத் தொடுப்பது அந்தாதியின் இலக்கணமாகும். சுருங்கக் கூறின் அந்தத்தை ஆதியாகத் தொடுப்பது எனக் கொள்ளலாம். அந்தாதிகளுள் யமகம், திரிபு போன்றவற்றைப் பாடுவது அருமையும் பெருமையும் உடையதாகும். பன்னூற் பயிற்சியும், நுண்மாண் நுழைபுலமும், இறையருள் நலமும் இருந்தாலன்றி இந்நூலை இயற்றுவது என்பது அரிதினும் அரிதாகும். செயற்கருஞ் செயலைச் செய்து புலவர் பெருமக்களாற் போற்றப் பெறும் தகுதிவாய்ந்த மகாவித்துவான் பூ. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” என்னும் புறநானூற்றுப் பொன் மொழிக்குச் சான்றாக விளங்குகின்றார்கள். பல்வேறு சிறப்புக்களைத் தம்மகத்தே கொண்டு மிளிர்கின்ற இந்நூலைப் பின்வரும் சந்ததியினரும் படித்துப் பயன்பெற வேண்டு மென்னும் நன்னோக்கத்தால், புலவர் பெருமானின் மருகரும், ‘எல்பிகெம் கவுஸ்’ கம்பெனியின் உரிமையாளருமான திரு.அ. சின்னத்தம்பிப்பிள்ளை அவர்கள் இந்நூலை வெளியிடு கின்றார்கள். ஈழத்தைச் சேர்ந்த புலவர் பெருமானால் இயற்றப்பெற்ற இந்நூலுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த, சித்தாந்த கலாநிதி திரு. ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் உரை யெழுதியிருப்பது தாய்நாட்டிற்கும்சேய்நாட்டிற்கும் உள்ள உறவைத் தெள்ளத் தெளிய விளக்குவதாகும். தம் முன்னோர்களின் அறிவுக்கருவூலமாக விளங்கும் இன்னோரன்ன அருள் நூல்களை வெளியிட முன்வந்துள்ள திரு. அ. சின்னத்தம்பிப்பிள்ளை அவர்கள் எல்லா நலன்களையும் இனிது பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். வணக்கம். சென்னை மு.கு. புண்ணியகோடி 7-8-77 அணிந்துரை யாழ்,வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயப் பண்டித பாலபண்டித வகுப்புக்களின் தலைமையாசிரியர் பண்டித மணி, வித்துவான், ந. சுப்பையாபிள்ளை அவர்கள் எழுதியது. ‘மாவை யமக அந்தாதி’ என்னும் பெயர்க் காரணம்:. மாவை (மாவிட்டபுரம்) நகரின் கண்ணே கோயில் கொண்டெழுந்தருளிய முருகக் கடவுள்மீது யமகம் என்னும் சொல்லணி (மடக்கணி) பொருந்தப் பாடப்பட்ட அந்தாதி யென்னும் பிரபந்தம் (நூல்) என்ற காரணத்தால் இந்நூலுக்கு வந்த பெயராகும் இது. அப் பிரபந்தம் செய்யுளந்தாதித் தொடை பொருந்த நூறு கட்டளைக் கலித்துரையினாலாவது வெண்பாவினாலாவது பாடப் பெறுவதாகும்.இந்நூலாகிய பிரபந்தம் கட்டளைக் கலித்துறை யினாற் பாடப்பெற்றது. செய்யுளந்தாதித் தொடையாவது ஒரு செய்யுளின் இறுதி பின்வருஞ் செய்யுளுக்கு முதலாக வரத் தொடுக்கப்படுந் தொடையாகும். ஈண்டு இறுதி யென்றது செய்யுளீற்றிலுள்ள சீர், அசை, எழுத்து இவற்றுள் யாதேனும் ஒன்றனை. அன்றியும், இப் பிரபந்தத்தின் இறுதி மண்டலித்து வந்து நூலின் முதலாஞ் செய்யுளின் முதலோடு அந்தாதித் தொடையாகத் தொடுக்கப்படும்; இத் தொடைக்குப் பெயர் மண்டல அந்தாதி என்பர். மண்டலம் - வட்டம் (=வட்ட வடிவமாகச் சென்று பொருந்தும் அந்தாதித் தொடை). அது இந்நூலின்கண்ணே நூறாஞ் செய்யுளின் இறுதிச் சீராகிய ‘மகிழ்ந்திருமே’ என்றதில் இரண்டாம் அசையாகப் பிரியும் ‘திரு’ என்பது, இந்நூலின் முதலாஞ் செய்யுளின் முதற் சீராகிய ‘திருமா’ என்றதில் முதலாம் அசையாக வரத் தொடுக்கப் பட்டிருத் தலைக் காணலாம். இனி, இந்நூலின் அமைந்த மடக்கணியின் இயல்புகளைப் பற்றி ஆராய்வோம். அவை தமிழ்த் தண்டியலங்கார நூலிலே சொல்லணியியலில் விரித்துக் கூறப்பட்டுள. அவை வருமாறு:- ஒரு செய்யுளில் முன்வந்த எழுத்துக்கூட்டம் பின்னும் வந்து வேறு பொருள் தருதலுடையது மடக்கணியாகும். (தண்டியலங்காரம் - சூத்திரம் - 90) அம்மடக்கணி, தான் வரும் அடிபற்றி ஆதிமடக்கு முதலாக ஏழுவகைப்படும். (தண்டி. சூ. 92). இந் நூலில் அமைந்த மடக்கணி ‘இடையிட்டு வந்த முதல் முற்று மடக்கு’ என்பது. இதற்குத்தண்டியலங்கார உதாரணம்: “தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சோர் தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தந் தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை யிடைதோய்ந் தோடு தண்புன னித்திலந் துறைதொறுஞ் சொரியும்.” என்பது. அவ்வுதாரணத்தின் மடக்கணியினை ஒத்தனவே இந்நூலின் செய்யுளெல்லாம். இடையிட்டு வந்த முதல் முற்று மடக்கு:- நாலடியின்கண்ணும் வந்த முதல் மடக்கு எல்லாஅடிகளினதும் இறுதிப் பாகச் சீர்கள் மடக்கணியின்றி (இடையிட்டு) வந்தமை யால் இப்பெயர் பெற்றது. முதல் - அடி முதலிலே. முற்றும் - எல்லா அடிகளிலும். மேற்காட்டிய தண்டியலங்கார உதாரணத்திலே முதலாஞ் சீரில் மாத்திரம் மடக்கணி அமைந்துளது. இந்நூலிலோவெனில் முதல் 2 சீரிலும் (முதல் நாலு சீரிலுங்கூட) மடக்கணி அமைந் துள்ளது. முதல் நான்கு சீரில் அமைந்த மடக்கணிக்கு இந்நூலின் நாற்பத்தேழாஞ் செய்யுளைக் காண்க. ஏனைய செய்யுளெல்லாம் முதலிரு சீர்க்கண்ணே மடக்கணி அமையப் பெற்றவை. இனி, நூலின் பொருளமைப்புக்கள் பற்றிச் சிறிது ஆராய் வோம்- 57ஆம் செய்யுள் “புணர்ந்துடன் போகிய தலைமகற்குத் தலைமகள் மாவைநகரின் வளங்காட்டியது” என்னும் அகப் பொருட்டுறை அமைய இயற்றப்பட்டது. இதுபோல் வேறு பல அகப்பொருட்டுறைச் செய்யுள் உள. 93ஆம் செய்யுள் திருக்ஷேத்திர யமகப் பாவாகும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையிற் போல முருகப்பிரானது பல படை வீடுகளை விதந்து கூறுகின்றது. “கம்கொள் எருக்கு அம்பு அரங்கு அம்பரம் கூத்தாடி சேய்,இ(ல்)லக் காமங்கள்” என்றார்; (=சிரசில் அணிந்த வெள்ளெருக்கம் பூமாலையினையும் கங்கை நீரையு முடைய சிதாகாசமயமான நடனசாலையிலே நடனம் புரிகின்ற சிவபிரானது புதல்வராகிய முருகன் விரும்பிய க்ஷேத்திரங்களாகும்). கம்- சிரசு, அம்பு - நீர். அரங்கு - நடன சாலை (சபை). அம்பரம் (சின்மய) ஆகாசம். ‘உலகிற் பல இடங் களிலுள் ளமக்கள் ஆங்காங்கே தம்மைத் தரிசித்து வழிபட்டு உய்திபெறும் பொருட்டுப் பல க்ஷேத்திரங்களிற் கோயில் கொண்டருளிய பரமசிவன் போலவே முருகனும் கொண்டுள்ளார்; ‘தந்தை யானையர் மைந்தர் ஆதலின்’ என்னுங் கருத்து 4ஆம் அடியிற் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது, “வத்தாடிசேய்” என்ற தொடராற் குறிப்பிற்றோன்ற. இது பாவிலமைந்த விஷயத்தால் உவமையணி தொனிக்கப் பாடப்பட்ட காவிய நடை; இதனை ‘வஸ்துநா உபமாத் தொனி’ என்பர் வடநூலார். இந்த க்ஷேத்திர யமகப்பா நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையோடும், திருநாவுக்கரசர் பாடிய க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தோடும் ஒப்பிட்டு நோக்கத்தக்க பெருமை வாய்ந்தது. 100ஆம் செய்யுளில், ‘பக்தர்களே (உலகீரே), மாவை நகர்க் கோவிலிலே எம் பரமபிதா எம் தாய்மாராகிய வள்ளி தெய்வயானை யம்மையார்களின் மத்தியிலே வீற்றிருப்பதைத் தரிசித்தும் அவருடைய திருவருட் பரமானந்தமாகிய கடலில் மூழ்கித் திளைத்தும மகிழ்ந்திருப்பீராக’ என்று தரிசனத்தையும் அதன் பலனையும் விதந்து கூறி, நூலை மங்களகரமாகப் பூர்த்தி செய்கின்ற திறமை போற்றத்தக்கது. இப்படியெல்லாமமைய நூலியற்றுதல் கஷ்டசாத்தியமானது. இந்நூலை யியற்றிய யாழ்\தெல்லியம்பதி கொல்லங்கலட்டி வித்துவசிரோமணியாகிய திரு. பூ. பொன்னம்பலம்பிள்ளை அவர் களின் நூலியற்றும் வல்லமையைப்பற்றி விரித்துப் புகழ்ந்துரைத்தல் முடியாதாகும். இவ்வண்ணம் அருமை பெருமை வாய்ந்த சிறந்த நூல் இலகுவிற் பொருள் விளங்குந் தன்மையிலாதலின், அதற்குத் தக்க ஓருரையினை வித்துவான், ஒளவை துரைசாமிப்பிள்ளையவர் களைக் கொண்டு இயற்றுவித்து வெளியிட்டமை உலகினர்க்கு நல்ல ஒரு விருந்தாகும் என்னலாம். இந்நூலாசிரியரின் மருகராகிய திரு. அ. சின்னத்தம்பியவர் களும், அவருடைய புதல்வர்களாகிய நியாயதுரந்தரர் திரு. சி. கிருஷ்ணராசா அவர்களும், பிரபல வர்த்தகராகிய திரு. சி. வரதராசா அவர்களும் இந்நூலைச் சிறந்த உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு உலகினுக்கு உபகரித்தமைக்குத் தமிழுலகம் என்றும் நன்றி போற்றும் கடப்பாடுடையதாகும். வாழ்க மாவை முருகன் சீர்! இந்நூலை வெளியிட்ட வள்ளல்கள் மூவரும் இனிது நீடு வாழி! வாழி!! 20-2-77 வித்துவான், ந. சுப்பையபிள்ளை அணிந்துரை மயிலம் (தென்னார்க்காடு மாவட்டம்) ஸ்ரீமத். சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர், பெரும்புலவர், திரு. கா.சி. தனக்கோடி, M.A. அவர்கள் எழுதியது ஒரு நூலுக்கு உரை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்பதைப் பின்வரும் அடியார்க்கு நல்லார் உரைப் பாயிரச் செய்யுளால் நன்கு அறியலாம். “எழுத்தின் திறனறிந்தோ இன்சொற் பொருளின் அழுத்தந் தனிலொன் றறிந்தோ - முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் றெழுதத் துணிவதே யான்.” நூல்களுக்கு மக்களால் நன்கு பொருள் உணர்ந்து கொள்ளாத நிலைமை நேரும்போது, உரையாசிரியர்கள் தோன்றித் தம் கழிபேரிரக்கத்தின் காரணமாக உரை எழுதி நூலாசிரியர்களுக்கும், கற்போர்க்கும் அருந்தொண்டு புரிகின்றார்கள். நாம் எழுதும் உரையினால் மக்கள் படித்துப் பயன்பெறுதலினால் நூல்கள் அழியா வாழ்வு பெறுகின்றன. யாழ்ப்பாணத்துத் தெல்லியம்பதிக் கொல்லங்கலட்டி வித்வ சிரோமணி திரு. பூ. பொன்னம்பலம்பிள்ளையவர்கள் இயற்றிய மாவை யமக அந்தாதி என்னும் அரிய நூலுக்கு உரை வேந்தர், சித்தாந்த கலாநிதி, மகாவித்துவான் திரு. ஒளவை சு. துரைச்சாமிப் பிள்ளையவர்கள் நயமிக்க ஓர் உரை எழுதியுள்ளார்கள். மிறைக் கவிகளே கொண்ட இந்த நூலுக்கு அவரைப் போன்றவரை யல்லாமல் வேறு ஒருவராலும் உரை எழுத முடியாது. இரும்புக் கடலையைப் பதமாக வறுத்துத் தருவதுபோல் உரை அமைந் துள்ளது. சொற்களை மாற்றியமைத்துப் பொருள் சொல்லும் முறையினாலும், வினைமுடிவு காட்டுதலினாலும் பதசாரம் கூறுதலினாலும் தொட்ட தொட்ட இடமெல்லாம் உரைவளம் இனிக்கின்றது. உரைவேந்தரின் உரைநயத்தைப் புகழ்வது கொல்லன் தெருவில் ஊசி விற்கும் கதைபோலத்தான். இருப்பினும் இந்நூலிற்கு அவர் எழுதிய உரையின் திறத்தையும் நயத்தையும் குறிக்கும் கடப்பாடுடையேன். ஆதலால் ஒருசில கூற முற்படு கின்றேன். கடவுள் வாழ்த்துச் செய்யுளுக்குத் திருவாளர் ஒளவை அவர்கள் கூறிய உரைப் பகுதியிலேயே அவருடைய ஆழ்ந்த புலமைநயம் விளங்குகின்றது. “உலகு பரவு புகழ்” எனத் தொடங்கியது மங்கல மொழி முதலாக எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடித்தற் பொருட்டு, காப்பு, நூற்குச் சிறப்புப் பாயிரமாய் வணக்கம் அதிகாரம் என்ற இரண்டும் காட்டி நிற்பதாகலின், ‘அந்தாதி இசைக்க’ என அதிகாரமும், ‘நெஞ்சில் வைத்து, விருப்பால் புனைந்து, நாவில் வழுத்துவன்’ என வணக்கமும் கூறினார். இனிப் பதசாரம். புகழுக்கு ஆதாரம் உலகம் ஆதலாலும், அப்புகழும் எவ்விடத்தும் பரந்தோங்கும் இயல்பிற்றாதலாலும், ‘உலகு பரவு புகழ்’ என்றார். இனி, இதற்கு உலகத்தார் போற்றிப் பரவும் புகழ் என்று உரைப்பினும் ஆம். ஆக்கல், அழித்தல், அருளல் முதலிய கிருத்தியங்களுள் அழித்தல், அருளல் முதலியன கூறாது, ஆக்கலே கூறுவார். ‘மதி நிலவிய வேணி’ என்றார். எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறை வாகுவது கருத்தாதலின் ஆக்கம் கருதினார். இடையிடையே உண்டாகும் இடையூறு களைதற்கு ஆக்கவினை புரிந்த முதல்வன், யானைமுகக் கடவுளை அருளினாராதலின் அவ்வியைபும் தோன்ற, ‘வேணியருள் மதயானை’ என்றார். ஞானமதம் மொழியும் மதயானை யாதலின் யானைமுகப் பரமனை மதயானை என்றார். இடுக்கண் நீங்கும் தோறும் விருப்பம் பெருகுதலின் ‘மலர் விருப்பால்’ என்றார். குகனுக்குப் பாமாலை தொடுக்கலுற்ற எனக்குத் துணை செய்தல் வேண்டி யானைமுகக் கடவுளுக்குப் பூமாலை தொடுத்தணிவேன் என்றொரு கருத்தும் தொனிக்க, ‘மலர்விருப்பால் புனைந்து’ என்பது நிற்றல் காண்க. ‘நெஞ்சில் வைத்தல் மனத்தின் தொழிலும் புனைதல் மெய்யின் தொழிலும் வழுத்துதல் வாக்கின் தொழிலும் ஆதல் பெற்றாம்.’ இவ்வுரை விளக்கமாவது கற்குந்தோறும் கற்குந்தோறும் கற்கின்ற அடியார்தம் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப் பறுக்கும்அருமருந்தாக அன்றோ நிகழ்கின்றது. “The art of the artist is to hide the art and the business of the critic is to reveal it” என்று மேனாட்டறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இவ்வகையில் நூலாசிரியர் கலைஞர் ஆகவும், உரையாசிரியர் திறனாய்வாளராகவும் உள்ளனர். அந்த வகையில் உரையாசிரியர் ஒரு செய்யுளுக்கு வரைந்த உரைநயத்தை நோக்குவோம். “பல கம்பலன் ஆதி தர உண்டு காவல் செய் இக் கம்பலகு அம்பலம் ஆடிதன் மைந்தரின் காமமயக்கு (இன்) அம்பல் அகம் பலனாக்கும் திறம் கண்டும் கைக்கலையே மாவை வாசர் கருத்தின் உருக்கம் கம்பல கம்பல் ஆனார்.” (49) செய்யுளை முதலில் இவ்வாறு பொருள் கோள் செய்து கொள்ளல் வேண்டும். அருஞ்சொற்பொருள் சில: கம் - நீர்; அதனால் சோறும் உடன் கொள்ளப்பட்டது. பலன் - பழம்; தர - தன் ஐயர் அதாவது தந்தையர், தமையன்மார் முதலியோர் தர; இக் கம்பு அலகு - இச் செந்தினைக் கதிர்கள்; அம்பல் - (அலர்) அலரை விளைவித்து; அகம் - இற்செறிப்பு; பலனாக்கும் - பயப் பிக்கும்; கைக்கலை - விடவில்லை; கருத்தின் உருக்கம் - தம் மனதில் கொண்ட காதல் அன்பு; கம்பல - (கம் - நீர் - நீரையுடைய மேகம்) மேகம் பல திரண்டு; கம்பல் - முழங்குதல். பொழிப்புரை: பலவாகிய நீரும் சோறும் பழமும் பிறவும் நம் தன்னையர் கொணர்ந்து தரக் கொண்டு உண்டு. நாம் காத் தொழுகும் இச் செந்தினைக் கதிர்கள், அம்பலத்தில் ஆடும் சிவபெருமான் மகனாய முருகக் கடவுள் கொண்டொழுகிய காம ஒழுக்கம் போல அலர் விளைவித்து இற்செறிப்பையே பயப்பிக்கும் கூறுபாட்டினைக் கண்டிருந்தும் இக் களவொழுக்கத்தினை விடு கின்றாயில்லை. மாவைப் பதியில் வாசம் செய்பவரான நம் தலைவர் தம் மனத்தில் கொண்ட காதல் அன்பால் மேகங்கள் பல திரண்டு முழங்குதல் கண்டும் இங்கு வருவதைத் தவிர்க்கின்றார் இல்லை, இதற்கிடையே யான் செய்வகையறியாது வருந்துகிறேன். (தலைமகன் களவே விரும்பி யொழுகுதல் கண்டு ஆற்றா ளாகிய தோழி அவன் கேட்பத் தலைவிக்குச் சொற்றது.) அவரும் வருதலொழியார், நீயும் அவரை ஏற்றலை மறாய்; தினையும் முற்றி இற்செறித்தற்கு ஏதுவாயிற்று; அலரும் எழுவ தாயிற்று; இவற்றின் விளைவு என்னாகுமோ என்று அஞ்சுகின்றேன் என்றாளாயிற்று. “பல கம்பலனாதி தர உண்டு” இங்கு உறையும் கடப்பாடு உடைய நாம், அவர் வரையினராய் ஒழுக வேண்டியவராயுள் ளோம் என முதற்கண் தமது தன்னையர் உரிமை காட்டினாள். தினை முற்றினமையின் நம் தமர் நம்மை இனி இல்லகம் கொடு போவாராயினும், நம் ஒழுக்கம் அலர் பயந்து விட்டதனால் இல்லின் கண் நம்மைச் செறித்தலையே செய்வர் என்பாள், “காவல் செய் இக் கம்பலகு அம்பல் அகம் பலனாக்கும்” என்றும், இதனை அறிந்து வைத்தும் தலைவர் வரைய முயலாது களவே விரும்பி ஒழுகுகின்றனர் என்பாள், “அகம் பலனாக்கும் திறம் கண்டும்” என்றும், அவரை ஏலாது மறப்போமாயின், அவர் தெருண்டு வரைவதற்கு வேண்டுவன செய்வரெனின், நீ அவரை மறாது அவர் கூட்டமே விரும்பி மெலிகின்றாய் என்பாள், “கைக்கலை” என்றும், அவர் வரும் ஆற்றது ஏதம் கண்டும் அஞ்சாது வருதலைத் தவிர்க் கின்றிலர் என்பாள், “மாவை வாசர் கருத்தி னுருக்கம் கம்பல கம்பல் (கண்டும்) ஆனார்” என்றும் கூறினாள். “இக் கம்பலகு அகம் பலனாக்கும்” என்றது தினை முதிர்வு உரைத்து வரைவு கடாதல்; ‘அம்பல்’ அலர் அறிவுறீஇயது; ‘கைக்கலை’ என்றது இற்செறிப்பும் ஆற்றாமையும் கூறி வரைவு கடாயது; “கம்பல கம்பல்” என்றது நெறியருமை சாற்றி வரைவு கடாயது; தலைமகள் கேட்கு மிடத்துக் கைக்கலை என்றது இத்துணை இடையீடுண்மை கண்டும்,நீ வரையாது களவே விரும்புகின்றனை என்றாள். மெய்ப்பாடு மருட்கை; பயன் தலைவன் கேட்டு விரைவில் வரைவானாவது. உரைக் கருத்தைத் தெளிவுபடுத்த உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டல், இலக்கணக் குறிப்புக் கூறுதல், வினை முடிவு உரைத்தல், உள்ளுறை உணர்த்தல், குறிப்பால் சுட்டுதல், புராண வரலாறு கூறுதல், சமய உண்மைகளை விதந்து கூறுதல் முதலிய உத்திகளைக் கையாள்வர். அவற்றுள் சிலவற்றை இவ்வுரையின் மூலம் காணலாம். மேற்கோள் காட்டல்: (செய்யுள் 15) செல்வக் குறை பாடில்லாத பெருமக்கள் மாவைப் பதியில் நடத்தும் திருவிழாக் காட்சியின் பயன்கூறுவார், அவர்கள் நெடிது வாழ்ந்து முடிவில் உயிர் நீங்கும்போது முருகன் திருவடி நீழல் புகுவரேயன்றி எமனுலகு புகார் என்பார், “சாமந்தரம் அந்தரம் புகுதார்கள் தென்மாதிரமே” என்றார். திருவிழாக் காட்சியும் சிவபுண்ணியப் பேறாம் என்பது “மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதி சூடும், அண்ணலார் அடியார்தமை அழுது செய்வித்தல்,கண்ணினால் அவர் திருவிழாப் பொலிவு கண்டார்தல்” (பெரிய - ஞானசம். 1087) என வரும் திருவாக்காலும் உணர்க. (செய்யுள் 45) - கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாளில் நீர்விழா நடத்தலும், கடலாடுதலும், சுடர்க்காடு போல விளக் கேற்றி வைத்துப் பரவுதலும் நிகழ்வதாகிய கார்த்திகை விழா நிகழ்ச்சி இனிது தோன்ற நிற்கும் நயம் காண்க. இக் கார்த்திகை விளக்கீட்டு விழா இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பிருந்தே தமிழ் நாட்டவருக்குரிய விழாவாய் நடைபெற்று வருவதொன்று என்பது, “குறுமுயல் மறுநிறங் கிளரமதி நிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் படிவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் அம்ம.” (அகம் - 141) என்பதனால் இவ்வுண்மை துணியப்படும். இற்றை நாளில் பண்டைத் தமிழ் நெறியைக் கைநெகிழ்த்து, பிறநாட்டு விழாவும் நடையும் பெரிதும் மேற்கொள்ளல் வேண்டும் எனும் பேதைமை நாட்டவர் மனத்திற் பெரிதும் இடம்பெற்று நிற்பதால், இந்நாட்டிற் காணப்படாத விழாக்கள் பலவற்றில் செருக்கிக் களியாட்டயர் கின்றனர். ஏதங்கொண்டு ஊதியம் போக விடலன்றோ பேதைமை! இலக்கணக் குறிப்புக் கூறல்: (செ. 8) இமம் - சுடுகாடு, ஈமம் என்பது இமம் என்று குறுகியது; (செ. 15) கவுத்துவம் - கவுச்சமம் எனச் சிதைந்தது; (செ. 21) கோகனகம் - கொகனகம் என்று குறுகிற்று. (செ. 51) சத் என்னும் சொல் அடியாகப் பிறந்ததனால் சத்தியம் ஆயிற்று. சப்தம் என்னும் சொல்லடியாகப் பிறந்த சக்தி என்னும் வினைமுதல்நிலை வினையெச்சப் பொருட்டாய் சாற்றும் என்பதனோடு முடிந்தது. (செ. 52) அங்குருத்து - தோன்றுதல், அங்குரித்து என்பது எதுகையின்பம் நோக்கி அங்குருத்து எனத் திரிந்தது. (செ. 23) சன் - மனிதனாகப் பிறந்தவன், துவிசன் அநுசன் என்றாற்போல. உள்ளுறை கூறல்: (செ. 44) பக்கத்தே கிடக்கின்ற மணலைக் கிளைத்தவழி முத்துக்கள் தோன்றி ஒளி செய்யும் என்றதனால் ஈண்டு நாணழிவு குறித்துச் சிறிது தாழ்த்து நிற்போமாயின் தாயர் முதலியோர் கண் விழித்து இடையீடு செய்வர் என உள்ளுறுத்து உரைத்தாளாம். புராண வரலாறு கூறல்: (செ. 17) சிவபெருமானுக்குத் திருமுகம் ஐந்தாதலால் ஐயானனன் என்றார். ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ (கந்த. பு. 1) என வரும் கந்தபுராணத்திரு விருத்தம் காண்க. இவ் வைந்தும் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பன. இவை முறையே அனைத்தையும் ஆளுதல், காத்தல், அழித்தல், விளக்கல், தோற்றுவித்தல் என்ற இத் தொழில்கட்கு உரியவாம். இம் முகம் ஐந்தனோடு அதோ முகமும் ஒன்று கொண்டு அறுமுகத்தினும் தோன்றிய பொறியை வாயு தேவன் தாங்கிச் சென்ற வரலாற்றைக் கருத்துட் கொண்டு “வந்தன் மகாரத” என்றார். (வந்தன் மகாரத - காற்றாகிய பெரிய தேர்) சமய உண்மை கூறல்: (சித்தாந்த நெறியை உரைத்தல் செ. 84) பன்முறையும் அச்சு மாறிப் பிறந்திறந்து இளைத்த உயிர் கட்கு அவ்விளைப்பு நீங்கி ஞான வாழ்வு எய்துதற்கேற்ற பக்குவம் எய்துங்காறும் மறைந்து நிற்கும் திரோதான சக்தி நீங்கியதற் கேதுவாக, ஞான சக்திதரனாகிய முருகனை பத்தி பண்ணுதற் கேற்ற மனப்பான்மை உண்டாகிய துணர்ந்துரைத்தலின், “அன்பர் மாமகிழ் இமாவலி மாவலி யாவுமின்றே” என்றார். அன்பர் மகிழ்மா இமாவலி என மாற்றுக. மறைப்பு நிங்கிய பின் உயிர் ஞானத்தைத் தரிசித்து ஆண்டுச் சுரக்கும் இன்பத்தை மிக்க ஆர்வத்தோடு பருக விழைதலின் “நெஞ்சம் ஆவலிக்கும்” என்றார். நெஞ்சம் ஈண்டு உயிர்மேல் நின்றது “அறிவிக்க அன்றியா உளங்கள்” என்புழிப்போல. (சிவ ஞான போதம்) முருகனது ரதோற்சவம் தரிசிக்கும் ஆவலுடைமை கூறுவார், குறிப்பால் பரஞான தரிசனம் பெற விரும்பும் விருப்பத்தைப் புலப்படுத்துகின்றார். இத் தரிசனானந்தத்தை விரும்பக் கருதி ஒருப்பட்டு நிற்கும் தம் உள்ளம் புலன்களாகிய யானையால் ஈர்ப்புண்டு மறுபடியும் அஞ்ஞானமாகிய இருட் காட்டிற்குள் புகுந்து ஒளியிழந்து விடுமோ என்று அஞ்சுமாறுதோன்ற, “மாவலி மாவலி யாண்டறுமோ” என்றார். மறைப்பு நீங்கி மெய்யுணர்வைத் தலைப்பட்ட வழியும் பயிற்சி வாசனையால் உள்ளம் விட்டு நீங்கிய புலன்கள் மேல் செல்வது குறித்து இவ்வாறு கூறினாரென உணர்க. திருவேங்கடவன் கீழ்த்திசைக் கலைக் கல்லூரியில் நம் சித்தாந்த கலாநிதி பணியாற்றிய போது இந்நூலுக்கு உரை எழுதி னார்கள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உரை யெழுதப் பெற்ற இவ்வந்தாதி இப்போது வெளிவருவது ஈழமும் தமிழும் இணைந்து செய்த தவப்பேறாகும். சித்தாந்த ஞான நூல்களுக்கும், செந்தமிழ் நூல்களுக்கும் ஈழநாட்டு நாவலர் பெருமான் உரை யெழுதியும் பதிப்பித்தும் உதவிய தொண்டினை இன்றும் தமிழ் உலகம் உணர்ந்து போற்றுகின்றது. அச்செந்நெறியிலேயே ஈழத்துப் புலவர் திலகமாகிய பொன்னம்பலம் பிள்ளையவர்கள் இயற்றிய ‘மாவை யமக அந்தாதி’க்கு உங்கள் தமிழகத்து நாவலர் பெருமானாக விளங்குகின்ற உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை யவர்கள் உரை எழுதி உதவியது இன்பந்தருகின்றது. இத்தகைய நல்லிணைப்பு ஈழநாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நாளும் பெருகுமாக. புலவர் திலகராகிய பொன்னம்பலனாரின் அந்தாதித் திறமும், உரைவேந்தர் ஒளவை அவர்களின் புகழும், ஈழத்தாரின் இன்தமிழ்ப் பெருமிதமும் பெருகி வளர்க எனப் பிறையணிந்த பெருமானின் கழலணிந்த திருவடிகளை வணங்கிப் பரவுகின்றேன். யாழ்ப்பாணத்துப் பெரும் புலவராகிய வித்துவ சிரோமணி பொன்னம்பலம் பிள்ளை அவர்களின் மருகரும், எல்கிகெம் வாளி தொழிற்சாலையின் உரிமையாளரு மான திரு. அ. சின்னத்தம்பி அவர்கள் இந்நூலை வெளியிடுவதன் வாயிலாகத் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் சீரிய தொண்டினைச் செய்துள்ளார்கள். இப் பெரியார் அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இறைவன் அருளால் எல்லா நலன்களையும் சிறக்கப் பெற்றுப் பல்லாண்டு வாழ்க வென்று பல்லாண்டென்னும் பதங்கடந்த பெருமானை வேண்டுகின்றேன். கா.சி. தனக்கோடி உ சிவமயம் மாவை யமக அந்தாதி மூலமும் உரையும் திருச்சிற்றம்பலம் காப்பு (கலித்துறை) உலகு பரவு புகழிலங் காபுரத் துச்சியதாய் இலகுபொன் மாவைக் குகன்மே லந்தாதி யிசைக்கமதி நிலவிய வேணிய ருண்மத யானையை நெஞ்சில்வைத்து மலர்விருப் பாற்புனைந் தென்னாவி லென்றும் வழுத்துவனே. இதன் பொருள்: உலகு பரவு புகழ் - உலகு முழுதும் பரந்த புகழையுடைய, இலங்காபுரத்து உச்சியதாய் இலகு - இலங்கை நாட்டிற்கு முடிமணியாய் விளங்கும், பொன்மாவக் குகன் மேல் - அழகிய மாவிட்டபுரம் என்னும் திருப்பதியில் எழுந்தருளிய முருகக் கடவுள் பேரில், அந்தாதி இசைக்க - இந்த யமக வந்தாதியைப் பாடுதற்கு, மதி நிலவிய வேணி - பிறைச் சந்திரன் விளங்குகிற சடை முடியையுடைய சிவபெருமான், அருள் மத யானையை - அருளிய ஞானமதம் பொழியும் யானை முகக் கடவுளை, நெஞ்சில் வைத்து - மனதில் தியானித்து, மலர் விருப்பால் புனைந்து - விரிந்த அன்பால் இப்பாட்டினைப் புனைந்து, என் நாவில் - எனது நாவின்கண், என்றும் வழுத்துவன் - எப்பொழுதும் துதிப்பேனாயினேன், என்றவாறு. உலகு பரவுபுகழ் எனத் தொடங்கியது “மங்கலமொழி முதலாக” எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டு. அந்தாதி இசைக்க என்றது நுதலிப் புகுதல். ஆன்றோர் ஆசார மாதலின், குகன்மேல் அந்தாதி பாடுவார், யானைமுகக் கடவுளைக் காப்பாகக் கொண்டார். காப்பு நூற்குச் சிறப்புப் பாயிரமாய், வணக்கம் அதிகாரம் என்ற இரண்டும் காட்டி நிற்பதாகலின், அந்தாதியிசைக்க என அதிகாரமும் நெஞ்சில் வைத்து, விருப்பாற் புனைந்து, நாவில் வழுத்துவன் என வணக்கமும் கூறினார். புகழுக்கு ஆதாரம் உலகமாதலாலும், அப்புகழும் எவ்விடத்தும் பரந்தோங்கும் இயல்பிற்றாதலாலும் “உலகு பரவு புகழ்” என்றார் இனி இதற்கு, உலகத்தார் போற்றிப் பரவும் புகழ் என்று உரைப் பினுமாம். இந்திய நாட்டு மிகப் பழங்கால வரலாறுகளிலும், மகாவம்சம் ஜாதகக் கதைகள் முதலியவற்றிலும், மேற்கே யவன நாட்டு நூல்களிலும், கிழக்கே சீனநாட்டு நூல்களிலும், இலங்கை நாட்டின் புகழ் பரவிக் காணப்படுதலின், இலங்கையின் புகழ் “உலகு பரவு புகழ்” ஆயிற்று, “உச்சியதாய்” எனவும் “பொன் மாவை” எனவும் சிறப்பித்ததனால் உச்சிக் கண்ணதாய் ஒளிரும் பொன்முடி மணியென்பது எய்துதலின், முடிமணியாம் என்று ரைக்கப்பட்டது. ஆக்கல், அழித்தல், அருளல் முதுலிய கிருத்தியங் களுள், அழித்தல், அருளல் முதலியன கூறாது, ஆக்கலே கூறுவார் “மதி நிலவிய வேணி” என்றார். எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவாகுவது கருத்தாதலின் ஆக்கம் கருதினார். இடையிடையே உண்டாகும் இடையூறு களைதற்கு ஆக்கவினை புரிந்த முதல்வன் யானைமுகக் கடவுளை அருளினாராதலின், அவ்வியைபும் தோன்ற, “வேணியருள் மதயானை” என்றார். இனி வேணியர் உள் மதயானை யெனக்கொண்டு அதற்கேற்பப் பொருளுரைத்தலுமொன்று. ஞானமதம் பொழியும் முதல்வனாதலின், யானைமுகப் பரமனை “மதயானை” யென்றார். இவருடைய மதம்பற்றிய ஆராய்ச்சியை, ‘ஒரு கோட்டன் எனத் தொடங்கும் சிவஞான சித்தித் திருவிருத்த உரையிலும், தணிகைப்புராணக் காப்புச் செய்யுளிலும் காண்க. வைத்து, “வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொலிந்து” (குறள் 115) என்புழிப்போல இடை விடாது நினைத்தற்பொருட்டு, இடுக்கண்நீங்குந் தோறும் விருப்பம் பெறுகுதலின் “மலர் விருப்பால்” என்றார். குகனுக்குப் பாமாலை தொடுக்கலுற்ற எனக்குத் துணைசெய்தல் வேண்டி யானைமுகக் கடவுட்குப் பூமாலை தொடுத்தணிவேன் என்றொரு கருத்தும் தொனிக்க, “மலர்விருப்பால் புனைந்து” என்பது நிற்றல் காண்க. நெஞ்சில் வைத்தல் மனதின் தொழிலும் புனைதல் மெய்யின் தொழிலும் வழுத்துதல் வாக்கின் தொழிலுமாதல் பெற்றாம். நூல் 1 திருமா திருமா லருடொழின் ஞானந் திகழுருவத் திருமா திருமா சுதரே கலைகுரு சேதனக்க திருமா திருமாணடியே யடைந்தசிறியனுளந் திருமா திருமாவை யந்தாதி முற்றச் சிகாவளரே. இ-ள்: திரு - திருவும், மா திருமால் அருள் தொழில் - பெருமையுடைய விஷ்ணுமூர்த்தியானவர் செய்தருளும் காத்தல் தொழிலும், ஞானம் திகழ் உருவம் - ஞானமயமான திருமேனியு முடைய, திரு - சிறந்த, மாதிரு - தாயாகிய, உமாசுதரே - உமாதேவியின் புதல்வரே, கலைக்குரு - பிரணவக் கலையை உபதேசித்த குருவே, சிகாவளரே - மயில்வாகனரே, சேதனக்கதிர் - ஞானவொளி, உமா - பிரகாசிக்கின்ற, திருமாண்அடி - சிறந்த மாட்சிமைப்பட்ட திருவடியை, அடைந்த - சேர்ந்த, சிறியன் உளம் - அடியேனுடைய மனம், இரு மாவையந்தாதி முற்ற - பெரிய மாவையந்தாதியைப் பாடிமுடிக்க, திருமாது - இடுக்கட் பட்டுப் பின்னடையாது, எ-று. உமாதேவியார் திருமாலின் இயைபுடையாராதலின், அவர் தொழிலும் இவர்க்குண்மையின், “திருமால் அருள் தொழில்” என்றும், தேவியார் ஞானமேனியராதலின், “ஞானம் திகழ் உருவத் திருமா திருஉமா” என்றும் கூறினார்.மாத்ரு, மாதிரு எனத் திரிந்து வந்தது. “உறுநர்த் தாங்கிய மதன் உடைநோன்றாள்” என நக்கீரனாரும் முருகன் திருவடிக்கு அறியாமையை உடைத்தெறியும் ஞானவொளி யுண்மை கூறினாராதலின் “சேதனக் கதிர்உமா திருமாண் அடி” என்றார். திருவடி சேர்ந்தார்க்கு ஞானமும் அது காரணமாகப் பிறக்கும் வன்மையும் உளவாதல் ஒருதலையாதலின் “உள்ளம் திருமாது” என்றார். திருமாது என்னாது திருமா என்று கொள்ளின் இடுக்கண்களின் பன்மையும், அவற்றால் அழியாது உள்ளம் அவ்வப்போது ஊக்கி மேலெழுதலையும் உணர்த்தி நின்றதாகக் கொள்க. திருமுதல், திரும்புதல். உமாசுதரே, குருவே, அடியே அடைந்த சிறியன் உளம் அந்தாதி முற்றத் திருமாது என்று முடிக்க. 2 காவணங் காவணங் கார்கொடி மேழியர் கற்பகப்பூங் காவணங் காவணங் காற்றன் மறையே கமலைநெருக் காவணங் காவணங் காட்டிய மாவைக் கவிகுறையா காவணங் காவணங் காந்த மறைத்துங்க தாரகமே. இ-ள் காவணம் - பூங்கொடிப் பந்தர்களும், கா-சோலை களும், அணங்கு ஆர்கொடி மேழியர்-அச்சம்பொருந்திய கொடி களையேந்திய பூவைசியருடைய, கற்பகப் பூங்காவணம் - கற்பகத் தரு நிறைந்த பூஞ்சோலைபோலத் தம்மை. நயந்து வந்தார்க்கு வேண்டியன உதவும் சிறப்பை, காவு - தாங்கும், அணங்கால் - அழகினால், தன்மறை - தன்னை மறைத்து நிற்கும், ஏகமலை நெருக்காவணம் - ஒப்பற்ற மலையைக் கற்பக நாட்டிறைவன் வந்து நெருக்காதவாறு, காவணம் காட்டிய - காவலிட்டதுபோன்ற, மாவை - மாவைப்பதியை, கவி - பாடும் கவிகள், கறையா காவணம் - வழுவுறாதபடி, வணம் - அழகிய, காந்த - மயிலை வாகனமாகவுடையோய், மறைத்துங்க - வேத முதல்வனே, தாரகமே - அடியார்க்கு ஆதரவாகிய நீ, கா - காப்பாயாக, எ-று. காவணம் செறிந்த சோலைகளில் வாழும் வேளாளர்க்கு, கற்பகப் பூங்காவைப்போல அவை வேண்டிய வேண்டியாங்கு உதவுதலால், அக்கற்பகக்காவின் இறைவனான இந்திரன் அழுக்காறு கொண்டு, இதனைத் தான் அறியாதவாறு மறைத்து நின்ற மலையை நெருக்குவன் என்ற கருத்தால், மாவைப்பதியை “ஏகமலை நெருக்கா வணம் காவணம் காட்டிய மாவை” என்றார். நீ எழுந்தருளும் மாவைப்பதி மலையைக் காத்தலின் நீ நின்னைப் பாடும் கவிகள் குறையாகாவண்ணம் காத்தல் வேண்டும் என்றாராயிற்று. இந்திரனுக்குச் சயிலகோபன் என்னும் பெயருமுண்டாதலின் அந்த நயத்தையுட்கொண்டது இக்கட்டளைக்கலித்துறை யெனவுணர்க. ஏனைய போலாது இந்நூலிற் கவிகள் மிறைக்கவிகளாதலின், இவற்றைப் பாடுவதும், பாடியவை ஆழ்ந்த கருத்துடையவாதலும், கற்போர்க்குக் கவியின்பம் சுரத்தலும் அருமை பற்றி, மீட்டும் வணக்கமே கூறினார். 3 தாரகந் தாரகந் தோய்நீரிற் றானவர்ச் சாய்த்திடுவி தாரகந் தாரகந் தப்பொழின் மாவைத் தலையவனே தாரகந் தாரகந் தைக்கடந் தீச்சினஞ் சாய்த்துனடைந் தாரகந் தாரகந் தாழ்குக தாகழற் றாமரையே. இ-ள்: தாரகம் - சாதிலிங்கம், தோய்நீரில் - கலந்த நீர் போல, தானவர் - அசுரருடைய உதிரம் பெருக, சாய்த்திடு விதார - கொன்று கிழித்தெறியும் வீரனே, கந்தார கந்தப் பொழில் - வண்டினம் காந்தாரமென்னும் இசையைப் பாடும் வாசனை பொருந்திய சோலை சூழ்ந்த, மாவைத் தலையவனே- மாவைப் பதியின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, தார - மாலையுடை யாய் கந்துஆர் - உயிரை வெதுப்புதலைப் பொருந்திய, அகந்தைக் கடம் - அகந்தையாகிய காட்டையும், தீச்சினம் - சினமாகிய காட்டுத்தீயையும், சாய்த்து - கெடுத்து, உன் அடைந்தார் - உன் திருவடியை யடைந்தவர்களின், அகம் - மனத்திற்கு, தாரகம் - துணையாய், தாழ்குக - தங்குகின்ற குகனே, கழல் தாமரை - நின் திருவடித்தாமரை, தாரகம் - எமக்குக் கதியாதலால், தா - அதனைத் தருவாயாக, எ-று. காந்தாரம் - கந்தாரமெனவும், காந்து - கந்தெனவும் நின்றன. அடியார் மனமாகிய குகையில் தங்குபவன் என்னும் பொருள்பட வரும் குகன் என்னும் சொற்பொருளை விரித்து, “அடைந்தா ரகம் தாரகம் தாழ்குக” என்றார் இது சொற்பொருள் விரித்தல், அகந்தையை வெயில் வெதுப்பும் கடம் என்றாராகலின், அது காரணமாகக் கிளர்ந்து நிற்கும் சினத்தைக் கடத்திடைக் கிளரும் தீயாக்கி, “தீச்சினம்” என்றார். “அவனரு ளாலே அவன்றாள் வணங்கி” என மணிவாசகப் பெருந்தகையார் அருளிய நெறிபற்றி, மாவை முருகன் திருவடி புகழ்ந்து யமகவந்தாதி பாடக் கருதுதலின், அதற்கேதுவாகிய திருவடிஞானம் வேண்டி, “கழல் தாமரை தா” என்றார்; எனவே, அதனையும் அவன் அருளப்பெறுவதன்றி ஒருவர் தாமே பெறக் கூடியதன்று என்றாராயிற்று. 4 தாமரை தாமரை சந்தனச் சாரற் சயிலகற்பத் தாமரை தாமரை சாளச்செய் மாவைய சக்கிரியத் தாமரை தாமரை சானாய மால்விடைச் சந்த்ரமுடித் தாமரை தாமரை நாண்மலர் காட்டுஞ் சரண்முடியே. இ-ள்: தாமரை - தாவுகின்ற மான்இனம், தாம் - பரந்த, அரை - அடிமலையில், சந்தனச் சாரல் - சந்தன மரங்கள் நிறைந்த சாரலையுடைய, சயில - மலையையுடையவனே, கற்பத் தாமரை - கற்பகப் பூவால் தொடுத்த மாலையை யணிந்த இந்திரனை, அரைசு ஆளச் செய் - தான் இழந்த அரசை மீளப்பெற்று ஆட்சி செய்ய விடுத்த, அசக்கிரியத் தாமரை - பாம்புமாலையையுடைய வரும், தாம் அரைசு ஆனாய மால்விடை - பாய்ந்து செல்லும் அரச ரிஷபமாகிய பெரிய விடையையுடையவரும், சந்த்ரமுடித்தாமரை - பிறைச்சந்திரனைக் கண்ணியாக அணிந்தவருமான சிவபெரு மானுக்கு, ஐ - மறை முடிவான செம்பொருளுண்மையினை, தா - உபதேசித்த, மாவைய - மாவைப்பதியையுடையாய், மரை நாள்மலர் காட்டும் - தாமரையின் அப்போது மலர்ந்த பூவை நிகர்க்கும், சரண் - திருவடியே, முடியே - எமக்கு முடியிற் சூடும் பூவாம், எ-று. தாவும்மரை, தாமரையென வந்தது. அரை - அடிவாரம்; சாரல் - மலைப்பக்கம்; தாம் அரைசாள என்புழி. ‘தாம்’ அசை; அசக்கிரியத்தாமரையென்புழி. ஈற்று ஐகாரம் - அசை; காட்டு உவமவாசகம், சரண்முடியென்பது நினக்கு அடியாவது எமக்கு முடியாம் என்றொரு நயந்தோன்ற நின்றது. சிவனுக்கு உயர்பொருள் உரைத்த செய்தியை, “எதிருறுங் குமரனை யிருந்தவி சேற்றியங்கு. அதிர்கழல் வந்தனை யதனொடுந் தாழ்வயின், சதுர்பட வைகுபு தாவரும் பிரணவ, முதுபொருட் செறிவெலாம் பொழிதரக் கேட்டனன்” (வீரட்ட 117) என வரும் தணிகைப் புராணச் செய்யுளாலறிக. இந்திரர்க்கு அரசு நல்கியது. “இலகுவிண் ணுலக மாக்கி இந்திரற் கரசு நல்கிப், பலரையும் தத்தம் வைப்பிற் படர்தர ஏவிப் பூதர், குலவிய வீரர் சூழக் குறுகினன் கந்த வெற்பு” (சீபரி. 610) எனவரும் அப்புராணாத்தாலறிக. 5 சரணஞ் சரணஞ் சரவினின் றான்மயி றாங்கிடவஞ் சரணஞ் சரணஞ் சரந்தொடுத் தாரருள் சத்தியிற்குஞ் சரணஞ் சரணஞ் சரசூர னைத்தடிந் தாய்நினருட் சரணஞ் சரணஞ் சரசெழு மாவைய தத்தருளே. இ-ள்: நஞ்சு அரவில்நின்று - விடமுடைய பாம்பின் மேல் நின்று, ஆல் - ஆலுகின்ற, மயில் - மயிலானது, சரண் தாங்கிட - திருவடியைத் தாங்க, அம் சரணம் - அழகிய சரவணப் பொய்கையில், சரணம் - வணக்கம்செய்து, அம்சரந்தொடுத்தார் - அழகிய மாலை தொடுத்தணிந்து பரவிய வானவர்க்கு, அருள் - அருள் புரிந்த, சத்தியின் - உமாதேவியார் அளித்த சக்தி வேலால், குஞ்சு - வளைந்த, அரண் - மதில்கள், அஞ்ச - கெட்டழிய, ரணம் சூரனைத் தடிந்தாய் - போர்வல்ல வலிய சூரனை அழித்தவனே, சரசு எழு மாவைய - சுனைகள் பொருந்திய மாவைப்பதியில் எழுந்தருளி யிருப்போய், நின் அருட்சரணம் - நின் அருட் பாதத்தில், சரணம் - வணங்குகின்றேன். தந்தருள் - புகல் அளித் தருளுவாயாக, எ-று. சரண் நஞ்சு அடவானவர் பொருட்டுப் போருடற்றும் தேவர்களுக்கு என்று இயைக்க. சத்தியி ன்நீண்டவேல் - சத்தியாகிய உமாதேவியருளிய வேற்படை. சூரன் மாவுருக்கொண்டவனா தலின், அவனை வென்ற வெற்றி நலம் கூறுவார். “சூரனைத் தடிந்தாய்” என்றும் அவன் திருவடி தன்னை அடைந்தவர்க்குப் பேரின்பத்தைக் காட்டுவதாகக் கூறலின் நின் அருட்சரணம் என்றார், தந்தருள், ஒருவினை முடிபாம். சரசெழு மாவைய என்பதற்குச் சான்றோர் கூடிய நல்லவைகள் மிக்குள் ளமாவைப்பதியென்று உரைப்பினும் அமையும். சூரன் கடலிடத்தே நகரமைத்து, வலிய அரண்கம் சூழ அமைத்திருந் தமையின், அவற்றைக் “குஞ்சரணம்” என்றார். 6 தந்திர தந்திர டானவர் நேருஞ் சமரில்விண்ணோர் தந்திர தந்திர நாயக மாகித் தருவருக்குத் தந்திர தந்திர யாம்பக சாமி தருகுமர தந்திர தந்திர வாமாவை யிரென்றன் பானணுகே. இ-ள்: மாவையீர் - மாவைப்பதியிலுள்ள முருகக் கடவுளே, விண்ணோர்தம் - தேவர்களுடைய, திர - சலியாத, தந்திரநாயக மாகி - சேனாதிபதியாகி, தந்தி - யானையும், ரதம் - தேரும், திரள் - திரண்டெழுந்த, தானவர் நேரும் சமரில் - அசுரர் எதிர்த்த போரில், தருவருக்கு - இந்திரன் பொருட்டு, அதம் தந்தீர் - அவ்வசுரரைக் கொன்று வெற்றி வழங்கினீர், திரயாம்பகசாமி - முக்கண்ணோனாகிய சிவபெருமான், தருகுமர - தந்த மகனே, திரவா - மனம் சஞ்சலிக்கின்ற, என்தன்பால் - அடியேன்பால், இரதம் தந்து - இன்பம்தர, நணுகு - வந்தருள்வாயாக, எ-று. “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல்” (குறள் 770) என்பவாகலின் தானைக்கு இன்றி யமையாத தலைவனான சிறப்பை விதந்து, ‘விண்ணோர் தம்திர தந்திர நாயகமாகி’ என்றும் விண்ணவர் தானை நிலைமக்கள் சாலவுடைய தென்பதனை, “திரதந்திரம்” என விசேடித்தும் கூறினார். திர - ஸ்திரமென்னும் வடசொற் சிதைவு. திரவா என்றது, இச் சொல்லடியாகப்பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம். ஈறுகெட்டு என்றன்பால் என்பதனோடு முடிந்தது; இனி இதனை இரதம் என்பதனோடு முடித்தலுமொன்று. தரவென்பது தந்தெனத் திரிந்து நின்றது; “வினையெஞ்சு கிளவியும் வேறுபல்குறிய” (தொல். சொல். 457) என்பது விதி. திரயாம்பகம், வட நூன் முடிவு. அம்பகம், கண். தரு, கற்பகத்தின் மேற்றாதலின், தருவர் என்றது இந்திரனுக்கு ஒரு பெயராயிற்று. அதம், வெற்றி. முருகவேள் அசுரரொடு பொருதது இந்திரன் முதலிய தேவர் பொருட்டாதலின், “தருவருக்கு அதம் தந்தீர்” என்றார். முருகன் தோற்றமே இந்திரன் முதலிய தேவர் பொருட்டென்பது, “வலாரி யாதி விண்ணோர், இரப்பமரீஇய தொன்றாக மானொடும், நிலாவி நெற்றி விழிக்கணொவ்வொரு நீடிரும் பொறிகாற்றினன்.” (சீபரி. 20) என வரும் தணிகைப் புராணச் செய்யுளாலறிக. 7 பானலம் பானலம் பட்டிட னீக்கிப் படுத்ததுகோ பானலம் பானலம் பாதிய வாட்டிப் பணிதனைநம் பானலம் பானலம் போருகர் கீற்றுக்கப் பாலுமளிப் பானலம் பானலம் பாழிகொண் மாவைப் பரைமஞ்சனே. இ-ள்: பானல் அம்பான் - குவளை மலரை அம்பாக வுடைய மன்மதன், அல் அம்பு - மயக்கும் மலர்க்கணை கொண்டு, அட்டிடல் நீக்கி- பொருவதைக் கெடுத்து, படுத்தது - அவனையும் அழித்தது, கோபானலம் - கோபாக்கினியாகும். பால் நல் அம்பு ஆகிய ஆட்டி - நல்ல ஆன்பாலும் நீரும் பிறவும் கொண்டு அபிடேகித்து, தனைப்பணி - தன்னை வழிபடும், நலம்பால் - நல்வினைப் பகுதியை யுடைய, நம்பால் - நமக்கு, நல் அம்போருகர் கீற்றுக்கு - நல்ல தாமரையில் உள்ள பிரமனுடைய பதத்துக்கு, அப்பாலும் அளிப் பான் - மேற்பட்ட பதத்தையும் அருளுபவனும், அனல் அம்பு ஆழிகொள் - நெருப்பைக் கக்கும் அம்பும் சக்கரமும் கையிற் கொண்ட, பரை - பராசக்திக்கு, மாவை மஞ்சள் - மாவைப்பதி யிலுள்ள மைந்தனுமான முருகன், அலம்பான் - தயங்கான், எ-று. அம்பு ஆதிய ஆட்டி, பணி, நலம்பால் நம்பால் அம்போருகர் கீற்றுக்கு அம்பாலும் அளிப்பான், பரை மஞ்சன் அலம்பான் என இயையும். மலராகிய அம்புகொண்டு பொருத மன்மதனைச் சினத் தீயால் அழித்தவர் சிவபெருமானாயினும், முருகனும் அவரேயாதல் பற்றி முருகன் செயலாகவே கூறினார். கோபானலம் பிறந்த நெற்றி விழியே முருகற்கும் தோற்றுவாயாதலின், அவ்வியைபால் அவரை வழிபடுவாரிடத்தும், மன்மதன் சேட்டை செல்லாதென்பது கருத்து. பிரமனையும் அடக்கித் திருத்தும் தலைமையமைந்த வனாதலின் அவன் பதத்தை யருளுதலில் வியப்பொன்றும் இன்மை கண்டு, “அம்போருகர் கீற்றுக்கு அப்பாலும் அளிப்பான்” என்றார். பராசக்திக்கு அம்பும் ஆழியும் படையாதல், “சீரணி சிருக்கு மணிவடம் சங்கு திகிரிசூ லப்படையிலைவேல், போரணி பாசம் அங்குசம் கழைவில் பூங்கணை வேறுவே றணியா” (சிவசத்தி துதி) என்ற தணிகைப் புராணத்திருவிருத்தத்தால் உணர்க. 8 மஞ்சரி மஞ்சரி மால்வரை மங்கை மணாளர்முக மஞ்சரி மஞ்சரி தோலணி யாளர்க்கு மாமுடித்தா மஞ்சரி மஞ்சரி மாநே ரதிர்வரை மாவையர்ந மஞ்சரி மஞ்சரி நீபத்தர் தாண்முடி மாவணியே. இ-ள்: இமம்சரி - பனியுருகிச் சரியும், மால்வரை மங்கை மணாளர் - பெருமலையாகிய இமயமலையரசன் மங்கையாகிய உமாதேவியின் கணவரும், முகம் அஞ்சர் - முகம் ஐந்துடைய வரும், இமம்சரி - சுடுகாட்டில் சஞ்சரித்லையுடையவரும், தோல் அணியாளர்க்கு - யானைத்தோலை ஆடையாக அணிந்தவரு மாகிய சிவனுக்கு, மாமுடித்து ஆம் அம் - அழகிய முடியின் கண்ணதாகிய கங்கையின், மஞ்சர் - மகனாரும், சரிமஞ்சுஅரிமா நேர் - சஞ்சரிக்கின்ற மேகங்கள் சிங்கவேறுபோல, அதிர்வரை மாவையர் - முழங்குகின்ற மாவைப்பதியை யுடையவருமாகிய முருகக்கடவுள், நம்மஞ்சர் - நமக்குத் தலைவர், இமம்சரி - குளிர்ச்சி பொருந்திய, நீபத்தர் - கடப்பமாலை யணிந்த அவருடைய, தாள் - திருவடித் தாமரை, முடி மா அணி - நமது முடிக்கு அழகுதரும் அணியாம், எ-று. ஈமம் - இமம் எனக் குறைந்தது. சரி - முதனிலைத் தொழிற் பெயர். அம் - நீர்; இஃது இங்கே கங்கைக்காயிற்று. இமம் சரி நீபத்தர் சுட்டு மாத்திரையாய் நின்றது. மாமுடித்தா மஞ்சர். மாவையர், மஞ்சர், நீ பத்தர் என்பவற்றை “ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி” யாகக் கொண்டு (தொல். சொல். கிளவி42) முடிப்பினு மாம். மாவை முருகனை தலைவனாகக் கொண்டமையின் அவன் தாள் நிழலில் வாழும் நமக்கு அத்தாள்முடிக்கண் நின்று திகழும் சிறப்பை “நீ பத்தர் தாள் முடி மாவணி” என்றார். ஏனையணி போலாது பிறவி வெப்பம் தணித்து அந்தமிழ்இன்பத்தை வழங்குதலின் “மாவணி” என்றார். தாருகவனத்து முனிபுங்கவர் வேள்விக்கண் உண்டுபண்ணி விடுத்த யானையைச் சிவபெருமான் கொன்று அதன் தோலைத் தன்மேற் போர்த்துக்கொண்ட வரலாற்றை “தோலணியாளர்க்கு” என்பதனால் குறிப்பித்தார். 9 மாவரை மாவரை மாய்த்தெழு நீத்த மடித்தசய மாவரை மாவரை மாணுண வாகு மலைகொடெய்வ மாவரை மாவரை மாகணத் தார்சுதர் மாவையர்க்கே மாவரை மாவரை மாண்கவி போற்றி வணங்குவனே. இ-ள்: மாவரை மாய்த்தெழு நீத்த - பெரிய மலைகளை மூழ்குவித்து எழும் பெரிய கடலிடத்தே, மாவரை - மாமரமாய் நின்ற சூரனை, மடித்த - தடிந்த, சயமாவரை - வெற்றி குறித்து ஏறும்பிணிமுகமென்னும் யானையினை யுடையவர், மா - தினை மாவும், வரை - மூங்கில் நெல்லும், மாண் உணவாகும் - மிக்க உணவாகும், மலைகொள் தெய்வமாவர் - மலையிலே தங்கும் தெய்வமாவர், ஐ - தலைமைபொருந்திய, மா அரை மாகணத்தர் - சிறந்த அரையில் பெரிய பாம்பை அரை நாணாகக் கொண்ட சிவனுக்கு, சுதர் - மகனாகிய, மாவையர்க்கு - மாவைப்பதியில் எழுந்தருளிய முருகனை, மாவரு - அழகு கொண்ட, ஐமாவரை, (முடிமுதல்) கால்வரையும், மாண்கவி - சிறந்த கவிகளால், போற்றி - புகழ்ந்து ஏத்தி, வணங்குவன் - வணக்கம் செய்வேன், எ-று. சூரன் கடலிடத்தே மாமரவுருக்கொண்டு நின்றனனாக, அவனை முருகன் தடிந்த செய்தியை, “வெய்ய சூரன் மாவடி, வெடுத்து நீர்க் கடற்கண் வேர்களீண்டு சாகை கீழ்மிசை, அடுத்த வைப்பெலாம் அடர்த் தழன்று தேவர் தங்களைப் புடைத்து நிற்ப வங்கிகான்று போந்த வேல் தடிந்ததே” (சீபரி. 595) எனவரும் தணிகைப் புராணச் செய்யுளால் அறிக, “பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள்புக்கு, சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு. 45-6) எனவரும்நக்கீரர் வாக்காலும் நன்கு துணியலாம். “சேயோன் மேய மைவரை யுலகமும்” என ஆசிரியர் ஓதுப வாகலின் “மலை கொள் தெய்வமாவர்” என்றார். “ஐம்மா காணி கால்” ஆதலால், திருவடியாகிய காலை “ஐம்மா” என்றார். குமரக் கடவுள் ஊரும் யானைக்குப் பிணிமுகமென்பது பெயராதல் “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” (முருகு. 247) என்பதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையாலறிக. மாவையர்க்கு உருபுமயக்க்ம; “யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமை சாரும்” (வேற். மய. 23) என்பது இலக்கண விதி. 10 வணங்கு வணங்கு வளையார் வளையினர் மார்பினர்பூ வணங்கு வணங்கு திரையார் மருகரெம் மாலசல வணங்கு வணங்கு திகழ்வா ரெனுமுரை மாற்றல்செய்தி வணங்கு வணங்கு பரிவா னுளரென மாவைசென்றே. தலைவி தோழியைத் தூதுபோக்குவாள் சொல்லியது இ-ள்: வளையினர் - சங்கேந்துபவரும், பூ அணங்கு மார்பினர் - திருமகள் தங்கும் மார்பையுடையவரும், வணங்கு திரையார் - வளைந்துவிழும் அலைகளையுடைய பாற்கடலில் சயனிப்பவரு மாகிய திருமாலுக்கு, மருகர் - மருகராகிய முருகக் கடவுள், வணங்கு - தன்னை வணங்குதலையுடைய, அணங்கு - மகளிர் பொருட்டு, வளையார் - இரங்குவதில்லாதவர், (அதனால்) எம்மால் அசல அணங்கு - எம்முடைய பெரிய கொல்லிமலைப் பாவைபோலும் தலைவிக்கு, அணங்கு திகழ்வார் - வருத்தம் செய்கின்றார், எனும் - என்று தாயரும் பிறரும் கூறும், உரை - அலருரையை, மாற்றல் செய்தி - இனியேனும் உண்டாகாதவாறு மாற்றச்சொல்லி வருவாயாக, மாவை சென்று - (அவர் மாவைப் பகுதியில் உள்ளாராதலின்) நீ மாவைக்குச் சென்று, வணங்கு பரிவான் - (அங்கே) அடியார் செய்யும் வணக்க்ததை யேற்கும் அன்பினால், உளர் என - எழுந்தருளியுள்ளார் என்று மனத்தால் நினைத்து, வணங்கு - (வாயால் அவர் புகழைச் சொல்லி) மெய்யால் வணங்கி வருவாயாக, எ-று. மாவை சென்று வணங்கு என முடிதலின், இது விற்பூட்டு, தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் படமொழிதலின், “அணங்கு வணங்கு வளையார்” என்றாள்.அசலம் - ஈண்டுக் கொல்லி மலைமேற்று. கொல்லிப்பாவையின் இயல்பை “பொறையன், உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின் அகலிலைக் காந்தள் அலங்கு குலைப்பாய்ந்து, பறவை யிழைத்த பல்கண் இறாஅல், தேனுடை கொடுவரைத் தெய்வம் எழுதிய வினைமாண் பாவை”, “பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல்பாவை”, “கால்பொரு தடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநலங் கிளரினும் திருநல வுருவின், மாயாவியற்கைப் பாவை ” (நற். 185, 192, 201) என வருவனவற்றாலறிக. “ஆடவர்க்கு மிக்கணங்கு செய்கொல்லி மால்வரையில் பீடமைந்த வப்பாவை போல்பெண் பிறப்பினர்க்கு, நீடணங்கு செய்பாவை” (வள்ளி. 234) எனத் தணிகைப் புராணமும் கூறுதல் காண்க. கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்துப் பாடாண்டிணைத் தலைமகளாதலின், தன்வேட்கையைத் தாயரும் பிறரும் இனிதறியப் புலப்படுத்தி, அத்தாயர் முதலாயினார் தலைவனைப் பழித்துரைத்தவற்றைச் செவியிற் கேட்டாளாகத் தோழிபால் தானே யுரைத்துத் தூதுபோக்குகின்றாளாதலின், “எம்மா லசல அணங்கு அணங்கு திகழ்வா ரெனுமுரை மாற்றல் செய்தி” என்று மொழிகின்றாள். தனக்கு அவன்பாலுள்ள வேட்கை மிகுதி யால், தான் வகுத்துக்கூறும் தகுதிபடைத்த தோழியைக் கூறுவது கூறும் தூதாகக்கொண்டு மாவைக்குச் சென்று செயற்பாலன இவையென்பாளாய், “வணங்கு வணங்கு பரிவான் உளரென மாவை சென்றே” என்றாள். மெய்ப்பாடு, - அழுகை: பயன் - தூதுபோக்கு மாற்றால் அயாவுயிர்ப்பாளாவது. 11 மாவைய மாவைய முப்புரஞ் செற்றவர் மைந்ததரு மாவைய மாவைய தாக்கிற் கடிகை வரைநிலைக்கு மாவைய மாவைய மன்கொள வூண்ஞம லிந்நரிக்கா மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே. இ-ள்: மாவையம் - பெரிய பூமியாகிய, மாவையம் - பெரிய தேரை யூர்ந்து சென்று, முப்புரம் செற்றவர் - முப்புரத்தை யெரித் தழித்த சிவனுடைய, மைந்த - மகனே, தருமா - அறக்கடவுளே, அமா - நின் பக்கத்தே, வை - அடியேனை இருக்க வைத்தலை வேண்டுகின்றேன், ஐயது ஆக்கின் - அவ்வாறு வையாது மெலியச் செய்யின், கடிகைவரை நிலைக்குமா - ஒரு வினாடி நேரமேனும் உயிர் உன் உடலில் நிற்குமா? நில்லாதுகாண். ஐய - தலைவ, மாவை - ஆன்மாவாகிய என் உயிரை, யமன் - எமதருமன், கொள - கவர்ந்துவிடின், ஞமலி நரிக்கு ஊண் ஆம் - நின்ற உடம்பு நாய் நரிகட்கு உண்ணும் உணவாகும், நான் - இவ்வுடம்பெடுத்த நான், ஈதோ - பெறும் பயன் இதுதானோ? என்று - என்று நினைந்து, மாவைய - திருமகள் தங்குகின்ற, மாமாவைய - அழகிய மாவைப் பதியுடையாய், வருந்தினன் - வருந்துகின்றேன், எ-று. சாமீப்பியத்தை வேண்டுகின்றாராகலின், “தருமா, வை, அமா” என்றார். முப்புரஞ் செற்றவர் மைந்தர்க்கு, என்புரமாகிய உடம்பைத் தூய்தாக்கிப் பக்கத்தே வைத்துக் கோடல் அரிதன்று என்றற்கு, “முப்புரஞ் செற்றவர் மைந்த” என்றும் அச்செயல் பேரறம் என்றற்கு, “தருமா” என்றும் குறித்தார். தன் வேண்டுகோள் அப்பெருமானால் ஏற்கப்படுமேயன்றி ஏலாது கழிக்கப்படும் என்றும் கருத்திலராதலின், “ஐயதாக்கின்” என்றும், ஒருகால் அங்ஙனமாயின், உண்டாகும் பயன் இது வென்பார். “கடிகைவரை நிற்குமா” என்றும் கூறினார். உயிர்கழிந்த வழி, நின்றவுடம்பாற் பயனின்று என்றற்கு, “யமன்கொள, ஞமலிநரிக்கு ஊணாம்” என்றார். உடம்பெடுத்தன் பயன், உத்தமனாகிய நின்னைப் பெற்றுத் தரிசித்து, நின்பாற்பெறும்பேரின்பானுபவத்துக்கு ஏதுவாக நின் சமீபத்தில் இருப்பதே, ஊன் பெருக உடலை வளர்த்து நாய் நரிகள் பிடுங்கித் தின்பதற்குப் பயன்படுத்துவதன்று என்பார் “ஈதோ நான் என்று வருந்தினனே” என்றார். இனி ஈதோ நான் என்புழி ஓகாரத்தைச் சிறப்பாக்கி, நரிகட்கு ஊணாகும் இவ்வுடம்பையே நான் என்று கருதித் தருக்கியிருந் தேன், இப்பொழுதே இவ்வுண்மை யுணர்ந்தேன், என்னை நின்பால் வைத்து அருளுக, என்று உரைத்தலுமொன்று. மாவைய மாமாவை என்புழி, வைகிய என்னும் பெயரெச்சம், வைய என இடைக்குறை யெய்திற்று. மா - ஆன்மா, இது நாமைக தேச ரூபம் எனப்படும் வழக்காறு. தேகாத்ம விவேகத்தால் தேகத்தைக் கழித்து முருகப் பெரு மானின் சாமீபானந்தத்தை வேண்டியவாறு. 12 வருந்த வருந்த வனஞ்சாய் நிழற்பொழின் மாவையிற்றே வருந்த வருந்த வறார்பணி செய்தி திமைந்தர்கங்க வருந்த வருந்த யிலம்பர் கழன்மலர் வண்டின்நற வருந்த வருந்த வுற்றகண் ணேகண்ணிவ் வானிலத்தே. இ-ள் நிழல்பொழில் மாவையில் - இனிய நிழலைச் செய்யும் பொழில் நிறைந்த மாவைப்பதியில், தேவரும் தவரும்- தேவர் களும் தவத்தையுடைய முனிவர்களும், தவறார் வருந்த - இடை யூறுகளால் தவறுபடுதலின்றித் தாம் மேற்கொண்ட வேள்வி தவம் முதலியவற்றை இனிது செய்ய, வரும் தவன் - துணையாய் முன் வந்து நிற்கும்தவமுதல்வனாதலால், (நெஞ்சே) அஞ்சாய் பணிசெய் - நீ செய்யும் முயற்சிக்கண் இடையூறு வருங்கொல் என்று அஞ்சாமல் பணிசெய்வாயாக, திதிமைந்தர் திதிமைந்தர்களான தைத்தியர் களின், கம்கவரும் - தலையைக் கவர்கின்ற, தவர் - வில்லும், உந்து அயிர் - பகைவரை உந்திச் சென்ற தாக்கும் வேலும், அம்பர் - அம்பும் உடையவரான முருகக் கடவுளின், கழல் - திருவடியைத் தரிசித்து, மலர் - பூவின், நறவு அருந்து வண்டின் - தேனை யுண்ணும் வண்டுபோல, அவ் - அத்திருவடிக்கண் பெறும் திருவருளாகிய தேனை, அரும் - உண்ணும், தகவு உற்ற கண்ணே - தகுதிபெற்ற கண்களே; இவ்வான் நிலத்து - இந்த விண்ணிலும் மண்ணிலும் வாழும் உயிர்கள் பெற்ற, கண் - கண்களாம், எ-று. மாவையில் தேவரும் தவரும் தவறார் வருந்த வரும் தவன், அஞ்சாய், பணிசெய் என மாறிக்கூட்டுக. ஆதலால் என்பது எஞ்சி நின்றது. தவறார், முற்றெச்சம். அஞ்சாய் என்பது எச்சப் பொருட்டாய், பணிசெய்வதை வற்புறுத்தி நின்றது. வண்டின் நறவருந்து என்பதனை, நறவருந்து வண்டின் என மாறுக. அவ்வென்னும் சுட்டுப்பெயர், உவமத்துக்கேற்ற பொருளைச் சுட்டி நின்றது. ஆரும் - அரும் எனக் குறுகி நின்றது. தேவரும் தவரும் செய்யும் வேள்வி தவம் முதலியவற்றிற்கு அசுரர் முதலியோரால் இடையூறு நேராவகையிற் காத்தல் முருகக் கடவுட்கு இயல்பாதலின் “தவறார் வருந்த வரும் தவன்” என்றார். “ஒரு முகம் மந்திரவிதியின் மரபுளிவழாஅ, அந்தணர் வேள்வி யோர்க்கும்மே” (முருகு. 94-6) என ஆசிரியர் நக்கீரனாரும் கூறினர். தவரும் அம்பும் அயிலும் என்னாது, தவரும் அயிலும் அம்பும் என்றதனோடு, உந்து அயில் என விசேடித்தும் கூறியது, முருகவேட்கு வேற்படை மிக்க சிறப்புடையதென்பது வற்புறுத்திய வாறு. தேவர் முதலாயினார் செய்யும் வேள்வியாதி நல்வினை கட்குத் தீங்கு வாராது காக்கும் பரமன் இடையூறு வருங்கொல் என்று அஞ்சாது நீ பணி செய்யின், நின் கண்முன்னும் தோன்றி இடையூறு நீக்கி இன்பம் செய்வன் என்ற கருத்தால் “அஞ்சாய் பணிசெய்” என்றார். மலரின் தேனை நாடியுண்ணும் வண்டுபோல, அவன் திருவடியை நாடிக் கண்டு அவன் திருவருட் டேனையுண்டல் வேண்டும் என்பார். “கழல் மலர் நறவருந்து வண்டின் அவ்ஆரும் தகவு” என்றார். தேனை நாடியுண்டல் வண்டிற்குப் பிறப்பியல் பாதலின் நினக்கும் அவன் திருவடிக் காட்சியிற் பெறும் இன்ப நுகர்ச்சி பிறப்புக்கடன் என்றாராயிற்று. தேவரும் மக்களும் முறையே இமையாக்கண்ணும் மனக் கண்ணும் பெற்ற பயன் முருகக் கடவுளின் திருவடிக் காட்சி பெறுதலே யென்பார். “தகவுற்ற கண்ணேகண் இவ்வானிலத்தே” என்றார். 13 வானில வானில வும்பொழின் மாவையின் மாணருள்செய் வானில வானில யம்புகுந் தேத்தல்செய் வாய்மலர்க்கோ வானில வானில மால்குளிர் நீரெரி வன்னிசல வானில வானில யப்பொரு ளாமவன் மன்னடியே. இ-ள்: வான் நிலவு ஆன் - வானத்தேயுள்ள மதிமண்டலத்தின் கண், நிலவும் - அளாவி நிற்கும், பொழில் மாவையில் - சோலை சூழ்ந்த மாவைப் பதியின்கண், மாண் அருள் - மிக்க திருவருளை, செய்வான் - செய்பவனாகிய முருகனுடைய, நிலம் - இடமாகிய, ஆன் இலயம் - கோயில், புகுந்து - உள்ளே சென்று, ஏத்தல் செய்வாய் - அவன் திருவடிகளை ஏத்துவாயாக, மலர்க்கோவான் இலம் - தாமரை மலரில் இருக்கும் தலைவனாகிய பிரமதேவனது சத்தியலோகமுட்பட, நிலம் - நிலமும், மால் குளிர் நீர் - பெரிய குளிர்ந்த நீரும், எரிவன்னி - எரிகின்ற தீயும், சல அனிலம் - அலைகின்ற காற்றும், வான் - ஆகாயமும், அவன் மன் அடிகள் - அவனுடைய பெருமையுற்ற திருவடிகளில், இலயப் பொருளாம் - ஒடுங்கும் பொருள்களாகும். எ-று. நிலவு - மதிமண்டலம், இது சூரியமண்டலத்துக்கும் அப்பாற் பட்டது என்ப. ஆன் - இடப் பொருட்டாய சொல்; “ஆன்வந்தி யையும் வினைநிலை யானும்” (தொல். சொல். 234) என வருதல் காண்க. ஆலயம் என்ற சொல், ஆ - லயம் எனப் பிரித்துப் பசுக்களாகிய உயிர்கள்தற்போதம் கெட்டு ஒடுங்குமிடம் எனப் பொருளுரைப்பவாதலின், அதனையுட்கொண்டு ஆன் இலயம் என்றார். ஆலயம் புகுந்து அவன் திருவடிகளை ஏத்துதல் செய்க என்றது, அத் திருவடிகளின் சிறப்பையுணர்த்தற்கு, “வான்நிலம் மால்குளிர் நீர்எரி வன்னி சலவனில வான் இல யப்பொரு ளாமவன் மன்னடியே” என்றார். 14 மன்றன மன்றன தாழிநும் மேற்ற வருனசை மன்றன மன்றன மேமனங் கொண்ட மதியிலிர்கா மன்றன மன்றன லாக்கினர் சேய்சுர மாமயில்பொன் மன்றன மன்றன மாவையிற் போற்றுதிர் மந்திரமே. இ-ள்: அனமே - சோற்றையே, மனம்கொண்ட மதியிலிர் - பெரிதாக வெண்ணியுழலும் பேதைகளே, நசை மன்தனம் அன்று - நீவிர் ஆசைப்படும் செல்வந்தானும் நிலைபெற்ற செல்வமாகாது, மன்றல் - மாறுபடுகின்ற, நமன் தனது ஆழியால் - எமனுடைய ஆணையால், நும் ஏற்ற வருவன் - உங்களுயிரை வேறுலகிற் செலுத்துதற்கு வருவன், (ஆதலால்) காமன் தனம் - மன்மதனுடைய செல்வமாகிய அழகான உடம்பை, அன்று - அக்காலத்தே, அனலாக்கினர் - நெற்றி விரியால் சுட்டெரித்தவரான சிவபெரு மானுடைய, சேய்- மகனான முருகக் கடவுளையும். சுரமா - தேவயானையாரையும், மயில் - மயிலையும், பொன் - பொன்மான் பெற்ற வள்ளிநாயகியாரையும், மன்றுஅன - பெரு மன்றங்களை யொத்த, தனம் - செல்வ நிலையங்களான, மாடம் - மாளிகைகள், மன் - பொருந்திய, மாவையில் - மாவைப்பதியில், போற்றுதிர் - கண்டு வணங்கித் துதிப்பீர்களாக, மந்திரம் - இதுவே உங்கட்கு மந்திரமுமாம், எ-று. அனம் - அன்னம் என்பதன் விகாரம், ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது.நிசை - நச்சப்படும் பொருள்மேல் நின்றது; செல்வ நிலையாமை கூறியவர். யாக்கை நிலையாமையினையும் உடன் கூறுவார், காமதேவன் உடல் இழந்த வரலாற்றைக் காட்டி “காமன் தனம் அன்று அனலாக்கினர்” என்றார். உடம்பு என்னாது தனம் என்றார், அதுவும் முன்னை நல்வினைப் பயனாய் ஈட்டப்படுவ தாகலின், “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலுமரிதே” (சீவக. 2752) எனத் தேவரும் கூறுதல் காண்க. காமன் தனம் அழிந்த வரலாற்றால், நச்சப்படும் பெண்ணாசையின் புன்மையும், அதனைப் பொருளாகக் கொண்டொழுகுவது இறைநெறியா காமையும் பெற்றாம். வள்ளிநாயகியாரை ஈன்ற மான் திருமகளின் அம்சமாதலின், அதனைப் “பொன்” என்றார்; பொன் என்றது திருமகட்கும் பெயராதலின், மன்று அனதனம் என்புழித் தானம், தனம் எனக் குறுகிற்று. தானம், இடம். மன்று என வாளாது கூறவே சிறப்புடைய பொன்மன்று கொள்க. சான்றோர் மொழியும் பொருள்நிறைந்த சொற்களே மந்திர மாதலின், உறுதிப்பொருளாகிய முருகக் கடவுள் வணக்கம் கூறும் இம்மொழி நிறைமொழியாதலைத் தேர்ந்து. “மந்திரமே” என்றார், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல். பொருள். செய். 178) என்பது தொல்காப்பியம். 15 மந்தர மந்தர வோடிசைந் தானெரி வாய்க்கவுச்ச மந்தர மந்தர ளப்பந் திசையார் மகிழ்ந்தெறிசு மந்தர மந்தர மாவை விழவு வணங்கினர்சா மந்தர மந்தர கம்புகு தார்கடென் மாதிரமே. இ-ள்: மந்தரம் - மந்தரமலையை, மந்து - மத்தாகவும், அரவோடு - பாம்பைக் கயிறாகவும் பூட்டி, இசைந்தான் - கடைந்தவனான திருமாலினுடைய, எரிவாய்க் கவுச்சமம் - ஒளி வீசுகின்ற கவுத்துவமணியும், தரம் - மேன்மையான, ஆம் - அழகிய, தரளப்பந்து - முத்துப்பந்தும், இசையார் - விரும்பாது, மகிழ்ந்தெறி - விளையாட்டு விருப்பால் மகிழ்ந்து எறிகின்ற, சுமந்தர் - மங்கலம் பொருந்திய மக்கள் கூடிச் செய்யும், மந்தர மாவை விழவு - மந்தர மலைபோலும் மாவைப்பதியில் நடக்கும் திருவிழாவை, வணங்கினர் - வணங்கினவர்கள், சாமந்தரம் - சாகுங்காலத்தில், தென்மாதிரம் - தென்திசைக் கண்ணுள்ள யமனுடைய, அகம் அந்தர் - நாட்டின் நடுவணதாகிய நகர்க்குள், புகுதார் - புகமாட்டார்கள், எ-று. தேவர்கள் கடல்கடைந்த காலத்தில் அவர் பொருட்டுத் திருமால் மந்தரமலையை மத்தாகவும், வாசுகியென்னும் பாம்பை நாணாகவும் கொண்டு கடைந்தாரென்பது வரலாறு, “வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே” (சிலப். ஆய்ச்சி) என்று இளங்கோ அடிகளும் கூறினர். திருமால் மார்பிலணியும் கவுத்துவ மணியும் முத்தும் வெறுத்தொதுக்கும் பெருஞ் செல்வரென்பார், “எரிவாய்க் கவுச்சம் தரம் அந்தரளப்பந்து இசையார் மகிழ்ந்தெறி சுமந்தர்” என்றார், கவுத்துவம் - கவுச்சமம் எனச் சிதைந்தது. இசையார்- முற்றெச்சம். சுமந்தர் - சமாந்தர் என்பதன் விகாரம். சு - நன்மை; சுகம் முதலியவற்றைக் குறிக்கும் உபசர்க்கம்; சு - சாரியை. சாகும் அந்தரம் என்புழிப் பெயரெச்சம் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. அந்தர் - உள்ளிடம். செல்வக் குறைபாடில்லாத பெருமக்கள் மாவைப்பதியில் நடத்தும் திருவிழாக் காட்சியின் பயன் கூறுவார், அவர்கள் நெடிது வாழ்ந்து முடிவில் உயிர்நீங்கும்போது முருகன் திருவடி நீழற் புகுவரேயன்றி யமனுலகு புகார்என்பார், “சாமந்தரம் அந்தரகம் புகுதார்கள் தென்மாதிரமே” என்றார். திருவிழாக் காட்சியும் சிவபுண்ணியப் பேறாமென்பது, “மண்ணினிற் பிறந்தார்பெறும் பயன்மதி சூடும், அண்ணலா ரடியார்தமையமுது செய்வித்தல், கண்ணினாலவர் திருவிழாப் பொலிவுகண்டார்தல்” (பெரிய. ஞானசம். 1087) எனவரும் திருவாக்காலுமுணர்க. 16 மாதிர மாதிர டானவர் தேரணி வந்தெதிர்சூர் மாதிர மாதிர மாய்த்தவன் றீர்த்திகை வாரிவல மாதிர மாதிர வாடுறு மாவையெம் மான்முனவிம் மாதிர மாதிர யார்த்தமும் வீடுமுன் வந்திடுமே. இ-ள்; மாதிரம் - ஆகாயத்தே, மாதிரள் - பெரிய கூட்டமாக, தானவர் தேர் அணி வந்து - தானவரும் தேரும் அணியணியாக வர வந்து, எதிர் சூர்மா - எதிர்த்த சூரபன்மாவின், திரமா - பக்கமாய் நின்று வலிய துணைசெய்து, மாதிரம் - மாமரத்தின் மந்திரவாற்றலை, மாய்த்தவன் - போக்கினவனான முருகனது, தீர்த்திகை வாரி - தீர்த்தமான நதி, வலமாதிரமா - வலப்பக்கமாகச் சூழ்வந்து, திரம் - கரையை, ஆடுறு - அலைக்கும், மாவை எம்மான் முனம் - மாவைப் பதியிலுள்ள எம்பெருமானான அந்த முருகன் சந்நிதியில், விம்மா - அன்பு பெருகி நிற்கின், திரமா - நிச்சயமாக, திரயார்த்தமும் - அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளும், வீடும் - வீடுபேறும், முன்வந்திடும் - தாமே முன்வந்து நிற்கும், அவற்றை நாடிச்செல்ல வேண்டுவதில்லை, எ-று. மாதாள், யானைத்தாளுமாம். “அவுணரெல்லாரும் தம் முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே வந்து கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்ததொருமா” மரம் சூரன் பால் இருந்தமையின், அதனை “சூர்மாதிரமா” என்றார். அதனை முருகப்பெருமான் தடிந்த செய்தியை, “அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர், மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்துச், செவ்வேற் சேஎய்” (முருகு. 59-61) என நக்கீரனார் கூறியவாற்றாலும், இவ்வடிகட்கு நச்சினார்க்கினியார் உரைத்த உரையாலும் அறிக. தீர்த்திகை -* புண்ணிய நதி. உறுதிப்பொருள் நான்கினுள், அறம் முதலிய மூன்றும் இவ்வையத்தே பெறக்கடவனவாதலின், அவற்றைத் திரயார்த்தம் என்றும், இவற்றை விட்டு நீங்கிப் பெறக் கடவதாகலின் வீட்டினைப் பிரித்தும், “திரயார்த்தமும் வீடும் முன்வந்திடுமே” என்றார். “வடுவிலா வையத்து மன்னிய மூன்றின்” (நாலடி. 114) என்பவாகலின், அறமுதல் மூன்றும் வையத்தே பெறக்கடவன என்பது தெளியப்படும். “பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்பவீடு” என்பது ஒளவையார் திருவாக்கு. இதனால் மாவை முருகன் சந்நிதி தரிசனம் நால்வகை உறுதிப்பொருளையும் எளிதில் தர வல்லதெனக் கூறியவாறாம். 17 வந்தனை வந்தனை யானன னிந்த மகாரதநி வந்தனை வந்தனை யர்க்கக வெம்பசி மாற்றவுள்ளு வந்தனை வந்தனை யான்மாவை வாழும் வரதனுரு வந்தனை வந்தனை செய்முடி யும்பவ வல்லியதே. இ-ள்: ஐயானனன் ஈந்த - ஐந்து முகத்தோனாகிய சிவபெரு மான் தந்த, வந்தன் மகாரத - காற்றாகிய பெரிய தேரில், நிவந்தனை - உவர்ந்தனை, வந்தனை அனையர்க்கு வந்து - வழிபட்டு நின்ற கார்த்திகைப் பெண்களாகியதாயர்க்கு முன்னே வந்து, அக வெம்பசி மாற்ற - நின்னகத்தெழுந்த மிக்க பசியை அவர்தம் முலைப்பால் தந்து போக்க, உவந்தனை - மகிழ்ந்தனை, வந்தாய் - இன்று யாம் பரவ இம்மாவைப்பதிக்கு வந்தாய் என்று, உள் - மனமே, மாவை வாழும் வரதன் உருவந்தனை - மாவைப்பதியில் கோயில் கொண்டருளும் கலியுக வரதனான முருகன் உருவத்தை, வந்தனை செய் - வணங்கித் துதப்பாயாக, பவவல்லி - பிறவித் தொடக்கு, முடியும் - அற்றுப்போமாதலால், எ-று. சிவபெருமானுக்குத் திருமுகமைந்தாதலால், “ஐயானனன்” என்றார், “திகட சக்கரச் செம்முக மைந்துளான்” (கந்.பு.1) என வரும் கந்தபுராணத் திருவிருத்தம் காண்க. இவ்வைந்தும், ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தி யோசாதம் என்பன; இவை முறையே, அனைத்தையும் ஆளுதல், காத்தல், அழித்தல், விளக்கல், தோற்றுவித்தல் என்ற இத் தொழில்கட்கு உரியவாம். இம்முக மைந்தனோடு அதோமுகம் ஒன்று கொண்டு ஆறு முகத்தினும் தோன்றிய பொறியே ஆறு முகக் கடவுளாக மாறினமையின் தோன்றியவுடனே, வாயுதேவன் தாங்கிச்சென்ற வரலாற்றைக் கருத்துட்கொண்டு, “வந்தன் மகாரத” என்றார். சரவணப் பொய்கையில் சிறு குழந்தைகளாய் விளையாடிய காலத்துக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் போந்து முலை சுரந்து பாலூட்டி வளர்த்தனர் என்ற புராணக் கருத்தைக் குறிப்பார், “அனையார்க்கு வந்து அகவெம் பசிமாற்ற உவந்தனை” என்றார். அம்மகளிரும் அறுமுகக் குழவிக்குத் தாயாய்ப் பாலூட்டி வேண்டிய தவம் செய்தோராதலின், அவர்களை “வந்தனை அனையர்க்கு” என்றார். தனக்கென நாமரூபம் முதலிய ஒன்று மில்லாதான் இவ்வாறு உருக்கொண்டுவந்து கோயில்கொண்டது அடியார் சகளத்திற் கண்டு தரிசித்து உய்தி பெறும் பொருட்டா தலின் “வந்தாயென்று வந்தனைசெய்” என்றார். “ஓங்கொளியாய் விசும்பாதிதொறும் இயலும் தனதுருவை உருவின் மாட்டும், பாங்குபெறத் தெரித்ததுபோல்... தணிகையமர் பெருவாழ்வு” எனவரும் தணிகைப் புராணத் திருவிருத்தம் முருகக் கடவுள் எழுந்தருளும் திறம் கூறுதல் காண்க. வந்தன், காற்று. மாவை முருகனது உருவவழிபாட்டின் சிறப்பு இதுவென் பார். “பவவல்லி முடியும்” என்றார். வல்லி - கொடி; உயிர்களைப் பிணித்துப் பிறவிச் சூழலில் ஆழ்த்துதலின், “பவவல்லி” என்றார். தணிகை, காஞ்சி, ஏரகம், பரங்குன்றம் முதலிய இடங்களிற் போல, மாவையில் எழுந்தருளிய முருகன் உருவப்படம் வணங்கு வோர் பவப்பிணி தீர்க்கும் வாயிலாம் என்பது இதனால் தெரி வித்தவாறு, வெம்பசி என்புழி வெம்மை வேண்டற்பொருட்டு; கொடுமை மேற்றன்று. 18 வல்லியம் வல்லியம் பாற்றுரத் துங்குற மாதிதழ்செவ் வல்லியம் வல்லியம் பேர்முலை வள்ளி மணாளகுறை வல்லியம் வல்லியம் பாட்டெழில் காட்டிய மாவையகை வல்லியம் வல்லியம் பெற்றிடச் செய்வேன் மலர்க்கையனே. இ-ள்: வல்லியம் - புனமேயவரும் பன்றி, யானை முதலிய விலங்குகளை, வல்லி அம்பால் - மலைப்பக்கத்தே, துரத்தும் - உரப்பித் துரப்பும், குறமாது - குறமகளும், இதழ்செவ் வல்லியம் - வாயிதழ் செவ்வல்லியின் அகவிதழ்போல்பவளும், வல்இயல்பு ஏர்முலை - சூதாடு கருவியை ஒப்பாகக் கூறும் அழகிய முலையை யுடையவளுமாகிய, வள்ளி மணாள - வள்ளிநாயகியார்க்குக் கணவனே, வல் இயம் பாட்டு எழில்காட்டிய மாவைய - வலிய இசைக்கருவிகளின் பாட்டிசை பொருந்திய அழகிய மாவைப் பதியையுடையவனே, வல்லியம் - வலிய கால்களையுடைய புலிகளைப்போலும் அசுரர்கள், கைவல்லியம் பெற்றிடச் செய் - ஒருங்கே விண்பெறப் பொருதழிக்கும், வேல் மலர்க்கரனே - வேலேந்திய மலர்போலும் கையையுடையவனே, குறைவல்லியம் - குறை மிகவும் உடையேம், எம்மை ஆதரித்தல் வேண்டும், எ-று. வல்லியம்பால் துரத்தும் குறமாது என்பதற்குக் கொடிகளை நாணாகப் பிணித்த வில்லில் தொடுத்துச் செலுத்தும் அம்பால் துரத்தும் குறமகள் என்று உரைப்பினுமாம். குறவரும் அருகே முல்லை நிலத்தே யுறையும் ஆயரும் பாடும் பாட்டும், கடற்கரையில் இருத்தலால் பரதவர் தோணியியக்கும் பாட்டும், மருதவளமும் உடைமையின் உழவர் பாட்டும் நிரம்பியிருத்தலின், “வல்லியம் பாட்டெழில் காட்டியமாவைய” என்றார். “குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும், தொடுப்பேர் உழவர் ஓதைப் பாணியும், கோவல ரூதும் குழலின் பாணியும், வெண்டிரை பொருத வேலைவா லுகத்து... அஞ்சொற் கிளவியர் அம்தீம் பாணியும்” (சிலப். 27:241 - 50) என வருவனவற்றாலும் இப்பாட்டெழில் காணப்படும். குறைகளால் வலியராயுள்ளோம் திருவருள் பெருகவுடையே மல்லேம் என்பார், “குறைவல்லியம்” என்றார். இவ்வன்மை சிறப்பன்று என்பது கருத்து. 19 கரத்தங் கரத்தங் கிளர்கணை யோர்மங்கை காதலர்சூ கரத்தங் கரத்தங் கதமுடை யார்தந்த கந்தரஞ்சா கரத்தங் கரத்தங் கெழுமாவை யீசர் கதிர்மணிச்சே கரத்தங் கரத்தங் கொடுத்தா ரிலநர கங்கணமே. இ-ள்: அங்கு - குறிஞ்சி நிலத்தில் வாழும், கரத்து - கையில், அரத்தம் கிளர் கணையோர் - உதிரந் தோய்ந்த அம்பையுடைய வேட்டுவரின், மங்கை காதலர் - மகளான வள்ளி நாயகிபால் அன்புடையவரும், சூகரத்தம்கரத்து - வளையலணிந்த தம் தோளின் கண், அங்கதம் உடையர் - தலைமாலை யணிந்தவருமான சிவன், தந்த கந்தர் -தந்தருளிய கந்தரும், அம்சாகரம் தங்கு - அழகிய கடலிடத்துண்டாகிய, அரத்தம் - பொருள்கள், கெழுமாவை ஈசர் - நிரம்புகின்ற மாவைப்பதியையுடைய ஈசரும், கதிர்மணி சேகரத்து - ஒளிவிடுகின்றமணிகள் வைத்து இழைத்த முடியணிந்த, அங்கர் - தலையையுடையருமாகிய சண்முகக் கடவுள் திருப்பணிக்கு, அத்தம் கொடுத்தார் - பொருளுதவி செய்தவர்களுக்கு, கணம் - கணநேரமேனும், நரகம் இல - நரகவாழ்வுகள் இல்லையாம், எ-று. கரத்தில் அரத்தம் கிளர்கணையோர் எனக் குறவரைக் கூறினமையின், அங்கு - என்பதுகுறிஞ்சிநிலமாயிற்று. சூகரம், வளையல் கரத்து அங்கதம் உடையார் என்பதற்குக் கையில் பிரமகபாலம் உடையார் என்று உரைப்பினுமாம். கடலிடத் துண்டாகும் பொருள்கள் மணியும், முத்தும், பவளமும், பிறவுமாம். பிறநாடுகளிலிருந்து கடல் வரியாக வந்தனவும் கொள்ளலாம். அர்த்தம் என்னும் வடசொல் அரத்தம் எனச் சிதைந்தது. கதிர்மணி சேகரத்து அங்கம் என்றதனால் அங்கம் தலையாயிற்று. மாவை முருகன் திருப்பணி செய்தார்க்கு நரக வாழ்வு முன்னை வினைப்பயத்தால் உளதாயினும் கணநேரமும் இல்லா தொழியும் என்றது, அத்திருப்பணி புண்ணியம் முன்னை வினையைச் சார்பறக் கெடுத்து, நின்றதன் பயனையே நுகர்விக்கும் என்றவாறு, பிறாண்டும், மாவை முருகன் திருப்பணிக்குத் தத்தம் பொருளீந்த வர்க்கு, அப்பொருள் கடனாய் நின்று மறுமையில் இந்திரனால் திரும்பக் கொடுக்கப்படும் என்பார், “மகா மாவைக் கோவில்தனில் பணிக்காய்த் தத்தம தத்தம முந்தினர்க்கு ஊதியம் சால்கடன் வேதத்தமதத்து அமரேசரின் உண்டு” (80) என்று கூறுகின்றார். நரகம் பலவாதலின், ஆண்டைய வாழ்வுகளும் பலவாயின; அதனால் நரகம் இல என்றார். நரகங்கணமே என்பதற்கு, நரகமாகிய அங்கணத்துத் துன்பங்கள் என்று உரைத்தலுமொன்று, அங்கணம், சேறு; “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்” (குறள்) என வருதல் காண்க. 20 கங்கண கங்கண வென்றிரை மாவைக் கடல்குடைந்தா கங்கண கங்கண மாமுடிப் பூணரைக் கச்சுப்பன்ன கங்கண கங்கண காலாரி சேய்கழல் காணுமுங்கட் கங்கண கங்கண நீத்தெய்து மேலுல கத்தின்பமே. இ-ள்: கடல் குடைந்து - கடலானது கரையைக் குடைந்து, கங்கணகங்கண என்று இரைமாவை - கங்கண கங்கண என்று முழங்கும் மாவைப்பதியில் எழுந்தருளிய, ஆகம்கண்நகம் - உடலின் கண் யானைத்தோலும், கணம் மாமுடி - திரண்டபொன் போன்ற சடைமுடியும், அரைபூண் பன்னகம் கச்சு - அரையில் அணியப்படு கின்ற பாம்பாகிய கச்சினையும், கணகங்கண - திரண்ட பாம்பு களாகியகங்கணமும் உடைய, காலாரிசேய் - சிவனுடைய மகனான முருகக்கடவுளின், கழல் காணும் உங்கட்கு - திருவடி தரிசிக்கும் உங்களுக்கு, அம்கண் - அழகிய கண்களும், அகம் - மனமும், கணம் நீத்து - வினைக்கூட்டத்தின் நீங்குதலால், மேலுலகத்து இன்பம் எய்தும் - மேலையுலகத்துப் பேரின்பம் வந்து அடையும், எ-று. கடலலைகள் கரையில் மோதிக் குடைந்து அலைக்கும் ஒலியைக் கங்கணகங்கண என்று குறிப்பித்தார். நாகம் நகம் எனக் குறுகி, “முதலிற் கூறும் சினையறி கிளவி” யாயிற்று. கணமாமுடி யென்றது, சடையினது திரட்சி நோக்கியென்க. அரையிற் கச்சும், கையிற் கங்கணமும் பாம்பேயாதலின் “அரைக்கச்சுப் பன்னகம் கண கங்கண காலாரி” என்றார், “நாக கங்கணர் அமுத வாக்கு” (பெரியபு. கண்ணப். 183) என்ற திருவாக்கும் காண்க. காலனைக் காய்ந்தவனாதல் பற்றி சிவனுக்குக் காலாரி என்றொரு பெயரா யிற்று. திருவடிக் காட்சிக்கண் கண்ணும் மனமும் ஒன்றி நிற்றலின், “சாரக்கடவ வினைகட்குச் சார்பு அற்றொழிதலின், சார நிற்பது மேலுலகத் தின்பமே” என்பார், “கணம் நீத்து எய்தும் மேலுலகத் தின்பமே” என்றார். நீத்து, காரணப் பொருட்டாய வினையெஞ்சு கிளவி எய்துமென்னும் பிறவினை கொண்டது; நீத்து என்பதனை இன்பத்தின் தொழிலாக்கி முடித்தலுமொன்று; அது பொருந்து மேற் கொள்க. இனி திருவடிக் காட்சியே கண்ணையும் கருத்தையும் மறைத்துநிற்கும் மண்ணுலகத்துப் பிறவிக்கேதுவாகிய காட்சிப் பொருள்களையும், அவற்றின் வழிக் கருத்தின்கண் ஊறும் சிற்றின்பங் களையும் போக்கி, மேலுலகத்தே நிலவும் அழிவில் இன்பத்தை எய்துவிக்கும் என்றல் சீரிதாம். அதற்கு எய்தும் என்னும் முற்றுப் பிறவினைப் பொருட்டென்க. 21 கத்தின கத்தின வாயுழ னீக்கிக் கழற்கொகன கத்தின கத்தின நில்லா தருடி கறையுணவா கத்தின கத்தின லீவிலங் காரங் கணிசுனைநா கத்தின கத்தின மாமாவை யாசுரர் காவலனே. இ-ள்: கத்தின - வேட்கை மிகுந்து ஆவலித்த, கத்தின் - ஆசை வழியே செல்லும், அவாய் உழல் நீக்கி - அவாவி வருந்தும் வருத்தத்தை நீக்கி, கழல்கொகனத்தின் - திருவடித் தாமரைக் கண் நிற்பதன்றி, அகத்து - மனைவாழ்வின்கண் மோகங்கொண்டு, இனம் - இன்னமும், நில்லாது அருள்தி - நில்லாதொழியும் நிலையை அருள்வாயாக, கறை - கருங்காலியும், உணவாகத்தின் - வாகைமரமும், அகத்தின் - அரச மரங்களும், அல்ஈ - நெருங்கித் தழைத்து இருள் செய்யும், இலங்கு - விளங்குகின்ற, ஆரம் - சந்தரன மரங்களும், கணி - வேங்கை மரங்களும், சுனை - சுனைகளும், நாகத்தின் அகத்து - மலையிடத்தே, இனமாம் - கூட்டமாக வுடைய, மாவையா - மாவைப்பதியில் உள்ளவனும், சுரர்காவலன் - தேவர்களைக் காப்பவனுமாகிய முருகனே, எ-று. உணவகம் - உணவாகம் என நீண்டது; இஃது உணாவகம் எனவும் வழங்கும். அகம் - அகத்திமரமுமாம். அவா வழிச்சென்று உழலும் வருத்தத்தை, அவாய் உழல் என்றார். உழல் - முதனிலைத் தொழிற்பெயர். கோகனகம் - கொகனகம் என்று குறுகிற்று. கோகனகம் - தாமரை. மனைவாழ்வில் மேன்மேலும் உண்டாகும் தேவை காரண மாகப் பிறக்கும் அவாக்களம்,அவையேதுவாகச் செய்யும் முயற்சி களும், அவற்றை இடையீடு செய்யும் பிறவும் பெரு வருத்தமே செய்து துன்புறுத்துதலின், “அகத்து இனம் நில்லா தருள்தி” என்றார். யாதேனும் ஒன்றைப்பற்றியல்லது நில்லாவியல்பிற்றா தலின், உயிர்க்குப் பற்றுக்கோடு நின் திருவடியே யாதல்வேண்டும் என்கின்றார். மனைத்தொடர்பின் நீங்கி ஒருவன் ஏகிவிடுவது எளிதின் ஆகாத செயல் என்பதை, “ஓடி யுய்தலுங் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” (புறம். 193) என்பதனாலறிக. 22 காவிலங் காவிலங் கான்மர மார்வரை காவலவே காவிலங் காவிலங் கற்சிர நீரிற் கடலின்முழங் காவிலங் காவிலங் கோதோட்டுமாவைய காலன் முன்னே காவிலங் காவிலங் கிட்டா தொழிகழற் கஞ்சத்தினே. இ-ள்: கா - சோலைகளில், விலங்கு - விலங்குகளும், கால் - நீண்ட அடிப்பகுதி யுடைய, மரம் ஆர்வரை - பிற மரங்களும் பொருந்திய, வரை காவல - மலைநாட்டிற்கு இறைவனே, வேகா - வெயில் வெதுப்பாத, இலங்கா - விளங்குகின்ற, விலங்கல் சிரநீரின் - மலையுச்சியினின்று சொரியும் அருவி நீராலும், கடலின் - கடல் நீராலும், முழங்கா - முழங்குகின்ற, விலங்கா - குன்றாகிய, இலங்கா தோட்டு மாவைய - இலங்கா தோட்டம் என்னுமிடத் தேயுள்ள மாவைப்பதியில் எழுந்தருளிய முதல்வனே, காலன் முன் ஏகா இலம் - எமன்முன் நோக்கிச் செல்ல மாட்டாத வீடாகிய, கழற்கஞ்சத்தின் - நின் திருவடித் தாமரையை, காவிலம் - சிரத்தில் தாங்காதொழிந் தோமாயினும், கிட்டாதொழி - அந்த எமன் எம்மைக் கிட்டாதொழிப்பாயாக, எ-று. “சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோன்” (முருகு. 315-7) என்பவாகலின், “விலங்கல் சிரநீரின் முழங்கா” என்றும், கடற்கரையில் இருக்கும் பதியாதலின், “கடலின் முழங்கா இலங்கா தோட்டு மாவைய” என்றும் கூறினார். இலங்கா தோட்டம் என்பது இலங்கா தோட்டு என வந்தது; இஃது இலங்கையின் ஒரு பகுதி. முருகன் திருவடிநீழலடைந்தாரை யமன் வந்து பற்றற்கு அஞ்சுவனாதலின், “காலன்முன்னே காவலம்” என்றார். இலம் எனப் பொதுப்படக் கூறினமையின், அதனைப் பின்பு “கழற்கஞ்சம்” என விசேடித்தார். கழற்கஞ்சமாகிய திருவடியைத் தாங்கும் அடிமை நலம் தனக்கு இல்லையெனத் தன் பணிவுடைமை தோன்றக் “காவிலம்” என்றார், ஆயினும் என்பது இசையெச்சம்.இதனால் திருவடியடைந்தார்க்கு யமபயம் இல்லையென்றவாறு. 23 கஞ்சனங் கஞ்சனங் கட்குளுற் றட்டவன் காதன்மரு கஞ்சனங் கஞ்சனங் கொண்டோன் றிருவடி காணமயக் கஞ்சனங் கஞ்சனங் கொள்ளாதொழித்தவன் காதலன்காற் கஞ்சனங் கஞ்சனங் கொண்மாட மாவைநங் காமரனே. இ-ள்: கஞ்சன் அங்கம் - கம்சனுடைய உடலை, சனங் கட்குள் உற்று - அவனுடைய வீரர் நடுவே புகுந்து, அட்டவன் காதல் மருகன் - கொன்றவனான திருமாலுக்கு மருமகனும், சன் - ஆளுடைய பிள்ளையாராய்ப் பிறந்து, அம்கஞ்சனம் கொண் டோன் - அழகிய கைத்தாளம் பெற்றவனும், திருவடிகாண - திருவடியைக் காண்பதற்கு, மயக்கு அஞ்சன் - மயங்கிய திரு மாலாகிய பன்றி, அங்கு - அப்பொழுது, அஞ்சனம் கொள்ளாது - ஆணவம் கொள்ளாதவாறு, ஒழித்தவன் காதலன் - ஒழித்த சிவனுக்கு மகனுமாகிய முருகனுடைய, காற்கு - திருவடியைப் பரவுவதற்கு, அஞ்சல் - நெஞ்சே நீ அஞ்சுதல் ஒழிக, நம் - அச்சம் தருகின்ற, கஞ்சனம்கொள் - பொன் நிரம்பிய, மாட மாவை - மாட மாளிகைகள் நிறைந்த மாவைப்பதியிலுள்ள, நம்காமரன் - நாம் பாடும் பாட்டிசையை விரும்பியேற்று இரங்குபவனாகும், எ-று. திருமால் கண்ணனாய்த் தோன்றிய காலத்து அவற்குப் பல்லாற்றானும் தீங்கு செய்தலுற்ற கம்சனை அவன் நகரத்துட் புகுந்து, அவனைச் சார்ந்த துணைவரும் அசுரரும் பிறரும் சூழ்ந்து நிற்கவும் அஞ்சாது பொருது கொன்றானாதலின், அதனை வியந்து, “கஞ்சன் அங்கம் சனங்கட்குள் உற்று அட்டவன்” என்றார். சிறப்புடை வீரரும் துணைவரும் அன்மையின், கம்சன் உடனிருந் தாரை வாளா, “சனங்கள்” என்றொழிந்தார். மருகன்சன் என்பது மருகஞ்சன் எதுகைநோக்கித் திரிந்தது. சன் - மனிதனாகப் பிறந்தவன், துவிசன், அனுசன் என்றாற்போல. கஞ்சனம், தாளம். ஆகவே கஞ்சனம் கொண்டோன் என்றது ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்தரையாதலின் சன் - அவரைக் குறிப்பதாயிற்று. அவர் தாளம் பெற்ற வரலாற்றை, “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தனுக் குலகவர்முன், தளாம் ஈந்து அவன்பாடலுக்கிரங்கும் தன்மையாளனை” (சுந். தேவா.) எனச் சுந்தரமூர்த்திகளும் கூறுதல் காண்க. மயங்கு அஞ்சனன் எனற்பாலது மயக்கு அஞ்சன் என நின்றது. சிவன் திருவடி காண்டற்குத் திருமால் பன்றியுருக்கொண்டு நிலத்துட் குடைந்தேகினான் என்றும், பின்பு அவனே இரணி யாக்கன் பொருட்டுப் பன்றியாயப் பேராணவம் கொண்டு உலகுயிர் கட்குத் தீங்குசெய்துலவ, அதனைக் கொன்று, அதன் மருப்பைச் சிவன் அணிந்துகொண்டாரென்றும் புராணம் கூறுதலின், “திருவடி காண மயக்கஞ்சன் அங்கு அஞ்சனம் கொள்ளா தொழித்தவன்” என்றார். திருவடி காண்டற்கும். இரணியாக்கனைக் கோறற்கும் கொண்டது பன்றிப் பிறப்பாதலின், ஒன்றில் திருவடிகாண மயங்கியதும், மற்றொன்றில் ஆணவமொழிந்ததும் கருதி, “அங்கு” என்ற சொல்லைப் பெய்து பிரித்தார். அஞ்சனம் - ஆணவம். அச்சப் பொருட்டாய நாம் - என்னும் உரிச்சொல், நம்- மெனக் குறுகிற்று. “பேநாம் உருமென வரூஉம் கிளவி, ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” (தொல். சொல். 365) மாவைப்பதியின் சிறப்பும் காவலருமையும் காண்பார்க்கு அச்சம் தருதலின், “நம் கஞ்சனம் கொள் மாடமாவை” என்றார். காஞ்சனம் - கஞ்சனமெனக் குருகிற்று. கழற்கு, குவ்வுருபு, பொருட்டுப் பொருளில் வந்தது. முருகனது பெருமையும், தன் சிறுமையும், புன்மையும் நோக்க, மனம் அஞ்சுதலின், “அஞ்சற்க” என்றார். முத்தமிழால் வைதாரையும் வாழச் செய்யும் முருகனாதலின், நம் வழுவுடைய பாட்டையும் ஏற்றருள்வன் என்பார், “நம்காமரன்” என்றார். ஈண்டு நம் என்னும் சொல்லாற்றலால் பாட்டிசையில் நலமின்மை தோன்றிற்று. 24 காமரங் காமரங் கூரயிற் கண்ணார் கனியெழில்வாய்க் காமரங் காமரங் கந்திகழ் மாவைய கார்வடவா காமரங் காமரங் கேசர் மருகநின் கான்மலரே காமரங் காமரங் கந்தகித் தார்சுத காமகிழ்ந்தே. இ-ள்: காம் அரங்கா - காமக்குறிப்புக் குன்றாத, மரங்கூர் அயில்கண்ணார் - மரம்செறிந்த கூரிய வேல் போன்ற கண்ணை யுடைய மகளிரின், கனியெழில்வாய்க் காமரம் - கோவைக்கனி போலும் வாயிடத்தே யெழும் காமரப்பண்ணும், காமர் - அழகிய, அரங்கம் - நாடகவரங்குகளும் திகழ் - பொருந்திய, மாவைய - மாவைப்பதியை யுடையோய், கார்வடம் வாகு - பெரிய தோள் மாலை பூண்ட தோளோடு, ஆம்மரு அங்கு - நீர் சூழ்ந்த ஆற்றி டைக்குறையாகிய, அரங்கேசர் - சீரங்கத்தை இடமாகவுடைய திருமாலுக்கு, மருக - மருகனே, காமர் - மன்மதனுடைய, அங்கம் தகித்தார் - உடம்பையெரித்த சிவபெருமானுடைய, சுத - மகனே, நின்கால் மலரே - நினது திருவடித்தாமரையையே, காமரம் - யாம் விரும்புதலுடையோம், மகிழ்ந்து கா - அதனால் அதன்கீழ் எம்மையிருத்திக் காப்பாயாக, எ-று. காமம் - காம் என அம்முக் குறைந்து நின்றது; அரங்குதல், குறைதல், அழுந்துதல். மறம் - எதுகைநோக்கி மரம் என்றாயிற்று; தரை - தறையென்றாதல்போல. இடையினத்துக்கு வல்லினமும், வல்லினத்துக்கு இடையினமும் ரகர றகர எழுத்துக்கள் மாறிநிற்றல், இன்னோரன்ன மிறைக்கவிகட்கு இயல்பு. கருமை - பெருமை, வடம் - மாலை, ஆம் - நீர்; ஈண்டுக் காவிரியைக் குறித்துநின்றது. காமரம் - பன்மைத் தன்மைக் குறிப்பு வினைமுற்று. 25 காமலை காமலை யந்திகழ் மாவைய கன்னலொடே காமலை காமலை யன்புர சூதனன் கண்ணுதல்பா காமலை காமலை வந்தோய்நின் றாள்வணங் காவுடல்புக் காமலை காமலை யாதிய துன்பங் கரக்கவந்தே. இ-ள்: காமலை - சோலை சூழ்ந்த மலையின், காம் - அழகிய; மலையம்திகழ் - உச்சியில் விளங்குகின்ற, மாவைய - மாவைப்பதியில் உள்ளோய், கன்னலொடு காமலை - கருப்பஞ் சோலையுடன் ஏனைச் சோலைகள் மாறுபடுகின்ற, காமலை - திருவாரூரையுடையவனும், புரசூதனன் - முப்புரத்தை யழித்தவனும், கண்ணுதல் - நெற்றியில் கண்ணையுடையவனுமாகிய சிவனுடைய, பாக அமலை - பாகத்திலுள்ள பார்வதிதேவியார், காம் - கையில் தாங்கும், அலைவந்தோய் - சரவணப் பொய்கையில் வந்தவனே, நின்தாள் வணங்காவுடல் - நின் திருவடியை வணங்காத உடம்பில், காமலையாதிய துன்பம் - காமாலை முதலிய நோய்கள், கரக்கவந்து - மறைவாக வந்து, புக்கா - புகுந்து, மலை - வருத்தும்காண், எ-று. காமம் - காம் என நின்றது. கருப்பஞ் சோலையும் ஏனைச் சோலைகளும் உயர்வு குறித்துத் தம்முள் பிணங்குகின்றன என்பார், “கன்னலொடு காமலை” என்றார். மலைதல் - பிணங்குதல். கமலை, கமலையெனப் பிரித்து, கர்த்தனாகிய சிவனுடைய மலை யென்று கொண்டு கயிலைக் குரித்தாக்கலும் ஒன்று. பாக அமலை - பாகா மலை என்று ஆயிற்று. முருகக் கடவுள் சரவணப் பொய் கையில் ஆறு குழந்தைகளாய் நிலவும்போது, பரமன் பணிப்பப் போந்த தேவியார், அவ்வாறனையும் சேர்த்தெடுப்ப, ஓருடலும் ஆறுமுகமும் பன்னிரு கையுமாய் விளங்கின வரலாற்றையுட் கொண்டு. “பாகாமலை காமலை வந்தோய்” என்றார். பணிவார் பிணிதீர்க்கும் பரமனாதலின் முருகனை நோக்கி, “வணங்கா வுடல்... வந்தே” என்றார். 26 கவந்தங் கவந்தங் கொடுத்தான் மருக கடைப்பொழுதே கவந்தங் கவந்தங் கடிநடஞ் சோரி கறங்கிசையா கவந்தங் கவந்தங் கஞன்முடிச் சூர்ச்செற்ற கையெஃகிலங் கவந்தங் கவந்தங் கிடர்தீர நன்கு கணித்தருளே. இ-ள்: கவம்தங்கு - மந்தரமலையாகிய மத்துநிற்க வேண்டி, அவந்தம் கொடுத்தான் - முதுகு கொடுத்தவனான திருமாலுக்கு, மருக - மருகனே, கவந்தம் - நீர்ப்பெருக்குப் போல, சோரி - உதிரம் பெருகிப் பிணங்களை அலைத்தோடுதலால், கறங்கு இசை - உண்டாகும் முழக்கம் முழுவிசையாக, கவந்தம் - தலையிழந்த முண்டங்கள், கடிநடம் - அச்சம் பொருந்திய நடனத்தைச் செய்யும், ஆகவம் தங்க - போரைத் தாங்கிப் பொருதற்குவந்த, அத்தம் கஞல் முடிச்சூர் - பொன்னால் இயன்ற முடியணிந்த சூரபன்மாவை, செற்ற - அழித்த, கை எஃகு இலங்க - கையில் வேல் விளங்க, கடைப்பொழுது - மரிக்குங் காலத்தே, அங்கு வந்து - அவ்விடத்தே வந்து, அவம் தங்கு இடர் - நினைவு தடுமாறும் துன்பம்தருகிற இடர்களை, தீர - தீர்க்க, நன்கு கணித்தருள் - திருவுளம்பற்றி அருள்வாயாக, எ-று. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காலத்து நாட்டிய மந்தர மலையாகிய மத்து நிற்க வேண்டித் திருமால் ஆமையுருக்கொண்டு அதன் அடியில் தங்கித் தன் முதுகில் தாங்கிநின்றான் என்பது புராணவரலாறு. அவந்தம், பின்பக்கம்; ஈண்டு முதுகின் மேற்று. கடைப்பொழுது அவம்தங்கு இடர்தீர நன்கு கணித்தருள என இயைத்துக்கொள்க. கடைப்பொழுது, சாகுங் காலம். கவந்தம் சோரி கறங்கிசை கவந்தம் கடிநடம் ஆகவம் தங்க என இயைத்து, வந்த என ஒரு சொற்பெய்து சூர் என்பதனோடு முடிக்க. ஆகவம் - போர். கவந்தம் - நீர்ப்பெருக்கு. தாங்க - தங்க எனக் குறுகிற்று. “தார் தாங்கிச் செல்வதானை” (குறள். 767) என்றார்போலத் தாங்குதல், வரும்படையை எதிர்நின்று தாக்கித் தடுத்தல் என்னும் பொருட்டு. மரணத் துன்பத்தை, “அவம் தங்கு இடர்” என்றார். “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி, அலமந்து” வருந்தும் வருத்தத்தைச் சுட்டியென்க. 27 தருக்கந் தருக்கந் தகாரத்தி னாற்றினஞ் சாய்மடவா தருக்கந் தருக்கந் தரித்தார் சடிலந் தனில்வளரிந் தருக்கந் தருக்கந் தநன்மல ரார்சுதர் சாருருச்சித் தருக்கந் தருக்கந் தலமெழின் மாவையந் தானமதே. இ-ள்: தருக்கம் தருக்கு அந்தகாரத்தினால் - தருக்கஞானம் மிகவுடையே மென்னும் செருக்காகிய இருளினால், தினமும் - நாடோறும், சாய் - மெலியும், மடவாது அருக்கந் தருக்கு - மடமைபொருந்திய வாதிகளான சமணர்கட்கு, அந்தரித்தார் - இறுதியினைச் செய்தவர், சடிலம்தனில் வளர் இந்தர் - சடைக் கண்ணே வளர்கின்ற பிறையை யணிந்தவரும், உத்தரு கந்த நன்மலரார் - உயர்ந்த கொன்றை மரத்தின் நல்ல பூக்களை யணிந்தவருமான சிவனுடைய, சுதர் - மகனார், சார் உருச்சித்தர் - வேண்டியாங்கு உருமாறும் சித்தர்களால், உகந்தர் - உவந்து உபாசிக்கப்படுபவர், உகந்த தலம் - விருப்பமான இடமாவது, எழில் மாவை - அழகிய மாவையென்னும், அம்தானம் அது - அழகிய இடமாகும், எ-று. அகுக்கந்தர் - அருகந்தர்; சமணர். “வாதுசெய் சமணும் சாக்கியப் பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினை யாளர்” (சம். அச்சிறு) என்றும், “சாவாயும் வாதுசெய் சாவகர்” (சீகாழி) என்றும் ஆளுடைய பிள்ளையார் அருளினமையின், இவரும், “தருக்கம் தருக்கு அந்த காரத்தினால் தினம் சாய்மடவாது அருக்கந்தர்” என்றார்.அந்தரம் - முடிவு; அந்தரித்தாரென்பது அந்தரம் என்னும் பெயரடியாகப் பிறந்த தெரிநிலை வினையாவணையும் பெயர். அந்தரித்தார், நன்மலரார் சுதர், உருச்சித்தர் உகந்தர் என நின்ற “ஒருபொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி” என்ற பெயரெச்ச வினையோடு முடிந்தன. உக என்னும் உரிச்சொல் உக்க எனத் திரிந்தது; “உகப்பே உயர்தல்” (தொல். சொல். 305) உகந்த தலம் - உகந்தலம் என வந்தது; தழங்கு குரல் - தழங்குரல் (சீவ. 40) என வருதல் போல. சித்தர், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளிலும் வல்லவர். வேண்டியவாறே உருக்கொள்ளும் மேம்பாடுடை யாராதலின், “சார் உருச்சித்தர்” என்றும், அவர்கட்கு அச்சித்தி கைவரச் செய்யும் முதல்வராதலின், “உருச்சித்தர் உகந்தர்” என்றும் கூறினார். 28 தானசந் தானசந் தெய்துந் தருமணி தாமரைநந் தானசந் தானசந் தாமுள வாயினுந் தாபதரேத் தானசந் தானசந் தப்பரி யாக்கொண்ட சத்திகரத் தானசந் தானசந் தில்லாருக் கட்ட தரித்திரமே. இ-ள்: தான - தேவலோகத்து, சந்தான - அரிசந்தானமும், சந்து எய்தும் தரு - வேண்டுவார் வேண்டியவற்றை நல்கி அவர் மனதில் திருப்தியெய்துமாறு தரும் கற்பகமரமும், மணி - சிந்தா மணியும், தாமரை நந்து - பதுமநிதி சங்கநிதிகளும், ஆன் - சுரபியும், அ - ஆகிய அவற்றின், சந்தானசம் - சௌபாக்கிய சம்பத்துகள், தாம் உளவாயினும் - தம்பால் நன்கு வாய்த்திருப்பினும், தாபதர் ஏத்தான - தவசிகளான தேவர்கள் ஏத்தி ஓதுவனவாகிய, சந்தான சந்தம் - பாரம் பரியமாய் ஓதப்பட்டுவரும் சந்தசுகளையுடைய வேதங்களை, பரியாக்கொண்ட - குதிரையாகக் கொண்டருளிய, சத்திகரத்தான் - சத்திவேலைக் கையிலேந்திய முருகனுடைய, ந - மேம்பட்ட, சம் - அருளாகிய, தானசந்து - கொடையைப் பெறக் கூடிய தகுதி, இல்லாருக்கு - இல்லாத பேதைகட்கு, அட்ட தரித்திரம் - எண்வகைத் தரித்திரங்களே உடைமையாம், எ-று. தானம், இடம். வாளாது தானமென்றமையின் தேவலோக மாயிற்று. சாந்தம் - திருப்தி, இது சந்து எனச் சிதைந்தது. சந்தானசம் - வழிவழியாக வரும் சம்பத்து, தேவர்கள் தேவலோக பதமும் அரிச்சந்தான முதலிய எழுவகை நலங்களும் சேர எண்வகையான சுகசம்பத்துக்களை யுடையாராயினும், அவை குன்றாதிருக்க வேண்டி, வேதாத்தியயனம் செய்பவென்பார், “சந்தானசம் தாம் உளவாயினும்” என்றார். வேதத்தைக் குதிரையாகக் கொண்ட பரமனே முருகனாதலின், “சந்தப் பரியாக் கொண்ட சத்திகரத் தான்” என்றார். சந்தம் - வேதம். அது பாரம்பரியமாய் ஓதப்பட்டு வருவதாகலின், “சந்தான சந்தம்” என்றார். ந - மேன்மைப் பொருட்டாய இடைச்சொல்; நக்கீரன், நவ்வந்துவன், நக்கண்ணன் என்றாற்போல; “நச்சிலை வடிக்கண் நுதல் நங்கை” (கம்ப. பால. கோலங். 36) என்றார் கம்பரும், எண்வகைப் பெருமை, குணம், சம்பத்து, தானம், குலம், ரூபம் வித்தை, விவேகம், வயது என்ற எட்டினும் வறுமை. 29 திரவத் திரவத் தபூணூ ணிலைபூச் செயுள்விரைசந் திரவத் திரவத் தயலாஞ் சுகப்பெயர் செப்பிடுமு திரவத் திரவத் திவாவறி யாத குருட்டையுருத் திரவத் திரவத் திசங்கம மாவைய தீரத்தனே. இ-ள்: திர - நிலையாக, வத்திர அத்த பூண் ஊண் நிலை பூ செயுள் விரை - உடையும் பொன்னும் பூணாரங்களும் உணவும் உயர் பதவியும் பூமாலையும் பாமாலையும் வாசனைப் பொருளும், சந்திரவம் திரவத்து - தவளசத்திரமுதலிய இத்திரவியங்களுக்கு, அயலாம் - அயலாக, சுகப்பெயர் செப்பிடும் முதிரவத்து - சுகவாழ்விற்குஉரியவாகக் கூறப்படும் மனைவி, புத்திரர், பூமி என்ற மூவகைப் பொருள்களாலும் செருக்கி, இரவத்திவா அறியாத குருட்டை - இரவு பகலென அறியாது மயங்கிக் கிடக்கும் அஞ் ஞானத்தை, உருத்திர அத்திர - வெகுண்டு விடுக்கும் அம்பு களையுடையாய், அத்தி சங்கம மாவைய - கடலொடு கலந்தி ருக்கும் மாவைப் பதியையுடைய, தீரத்தனே - தீரமுடையோனே உன்னை வணங்குகிறேன், எ-று. ‘அத்திசங்கமமாவைய’ என்பதற்கு அத்திசம் கமம் மாவைய எனப் பிரித்துச் சங்குகள் நிறைந்திருக்கும் மாவைப்பதியையுடை யோய் என்றும், ‘அத்திர தீரத்தனே’ என இயைத்து அத்திரத்தைச் செலுத்தும் தீரமுடையோய் என்றும் உரைப்பினும் ஆம். வத்திரம் முதலாகக் கூறிய செல்வமனைத்தும் பெருகவுடை யனாய், இரவுபகலறியாது அஞ்ஞானத்தில் மூழ்கிக்கிடந்த சூரனுக்கும் நல்லறிவு காட்டிய முருகக் கடவுளின் சிறப்பினை யுட்கொண்டு, “இரவத்திவா வறியாத குருட்டை யுருத்திர வத்திர” என்றார். “விம்மிதத்தனாகி வெய்ய சூரநிற்ப மெய்யருள் செம்மல் சற்றளிப்ப, உண்மை கண்டு செப்பும்” (சீபரி. 586) எனவரும் தணிகைப்புராணம் காண்க. அறப்பகைத்து நின்ற சூரனுக்கும் மெய்யருள் காட்டிய வள்ளலாகிய முருகன், செல்வச் செருக்கினால் கண்மூடிக்கிடக்கும் மக்கட்கு அருள் செய்வன் என்பதும், எனவே செல்வர்களும் பிறரும் அவனை வணங்கி அருள்பெறுதல் நலமென்பதும் இதனால் அறிவுறுத்தினாராம். 30 தீரத்தந் தீரத்தந் தாவள மாமுகன் சிந்திடச்செய் தீரத்தந் தீரத்தந் துன்போத்து வானவர் சிந்தைவிபத் தீரத்தந் தீரத்தந் தேமாவை யீரெனச் சிந்தையுறுத் தீரத்தந் தீரத்தந் தத்துற்று நீப்பன்றென் றிக்கினலே. இ-ள்: தீர - தீரம்பொருந்திய, தந்தீர - தானைத் தலைவனான, தந்தாவள முகன் - யானைமுகத்தையுடைய தாருகன், சிந்திட - அழிய, செய்தீர் - செய்தவரும், அத்தம் தீர - செல்வநிலை நீங்க, தம் துன்பு ஒத்து வானவர் - தமக்குண்டாகிய துன்பத்தைச் சொல்லி முறையிட்ட வானவர்களின், சிந்தை விபத்து - சிந்தைத் துயர், ஈர - கெட, அத்தம் தந்தீர் - அபயாஸ்தம் கொடுத்தவரும், தேமாவையீர் - தெய்வத்தன்மை பொருந்திய மாவைப்பதியில் எழுந்தருளியிருப் பவருமான முருகப் பெருமானே, என - என்று, சிந்தை யுறுத்தீர் - மனதிலே தியானித்துப் பரவுவீர்களாயின், அத்து - உடல்வாழ்வில் எல்லையாகிய, தீரத்து அந்தத்து - மனவலியழியும் மரண நிலையில், உற்று - வந்து, தென்திக்கு இனல் - தென்திசைக்கு இறைவனானய மனால் உண்டாகும் துன்பத்தை, நீப்பன் - நீக்கிப் பாதுகாப்பான், எ-று. தந்திரம் - தந்தீரம் என விகாரம்; அஃதாவது சேனை. தாருகன் யானைமுகத்தோனாதலால் “தந்தாவளமுகன்” என்றார். தாருகன் முதலிய அசுரர்கள் சூரனுக்குத் துணையாயிருந்து தேவர் திருவெலாம் கவர்ந்து அவர்களையும் துன்புறுத்தினமையின் அவர்கள் பரமன் பால் முறையிட்டுக்கொண்டது குறித்து, “அத்தம்தீரத் தம் துன்பு ஒத்துவானவர்” என்றார். ஓது ஓத்து என்றாயிற்று. ஓத்து என்பதனைத் தொழிற் பெயராகக் கொண்டு ஓதுதலையுடைய வானவர், என்று உரைப்பினுமாம். அபயாஸ்தம், அஞ்சன்மின், யாம் நும்துயர் தீர்ப்பேம் எனக் கைகவித்தல். தந்தாவள மாமுகன் சிந்திடச் செய்தீர், வானவர் சிந்தை விபத்து ஈர அத்தம் தந்தீர், மாவையீர் என்று சிந்தித்துப் பரவுமின் என்பது உலகவர்க்கு உரைத்தது. இவ்வாறு சிந்திப்பதனால் வரும் பயன் கூறுவார், “தென்திக்கு இனல் நீப்பன்” என்றார். அத்து எல்லைப்பொருட்டு; இது அம்முச்சாரியை பெற்றது. அத்தம் தீர் அது அந்தத்து - எல்லையின் நீங்குவதாகிய அந்த முடிவுநிலை; அஃதாவது மரணம். 31 திக்கையத் திக்கையத் தார்மாவை யாதிப சேரிருட்டந் திக்கையத் திக்கையத் தங்கொண்ட வற்கொல்லி சேயவது திக்கையத் திக்கையத் தாதீர வந்தரு தீப்பவக்கொ திக்கையத் திக்கையத் தாதி நரக திமவட்டமே. இ-ள்: திக்கு ஐ அத்தி - திக்கனைத்தும் பரவியுள்ள கடலின், கையத்து ஆர் - பக்கத்தில் உள்ளதாகிய, மாவையாதிப - மாவைப் பதியிலுள்ள அரசே, இருள்தந்து சேர் - காமமயக்கந் தருதற்குப் போந்த, இக்கை அத்தம் கொண்டவன் - கரும்புவில்லைக் கையிற் கொண்ட காமனை, கையத்து - வெறுத்து, கொல்லி - கொன்ற சிவனுடைய, சேயவ - மகனே, அவம் தருதீப்பவக் கொதிக்கை - துன்பந்தரும் தீய பிறவி வெப்பத்தையும், அத்திக்கை - அது காரணமாகப் பிறப்பிக்கும் திகைப்பையும் அது ஆதி நரகதிம வட்டம் - அது முதலாக நரகலோகம் வரையிலுள்ள துன்பத்தையும், அத்தா - அத்தனே, தீர் - தீர்ப்பாயாக, அத்திக்கை - நீ எழுந்தருளி யிருக்கும் அத்திக்கு நோக்கி, துதிக்கை - துதிப்பதே எமக்குத் தொழிலாகும், எ-று. திக்கு ஐ அத்தி என்புழி, ஐகாரம் உடைமைப் பொருண்மை சுட்டிநின்றது. கை - பக்கம், கையத்தார் என்று கொண்டு அப்பக்கத்தில் வாழ்பவர் என்றுமாம். தந்து - தரவென்பதன் திரிபு. கைத்து என்பது அகரச்சாரியை பெற்று, கையத்து என நின்றது. கொல் + இ, இகரம் உடைமைப் பொருட்டு, வில்லி என்றாற் போல. சேயவ என்புழியும் - அகரம் சாரியை. திகைப்புப் பொருட்டாய திகை யென்னும் வினை முதனிலைத் தொழிற் பெயராய், விகாரத்தால் ககரம் இரட்டித்து நின்றது. திமவட்டம் - திசையெல்லை. அவம்தரு தீப்பவக் கொதிப்பையும் அது காரணமாக வரும் பிற துன்பங்களையும் போக்க முயல்வார், பவத்துக்குக் காரணமாக நிற்கும் காமவிருளைப் போக்கவேண்டும் என்னும் கருத்தை யுட்கொண்டு, “இருள் தந்து சேர் இக்கையத்தம் கொண்டவற் கொல்லி சேயவ” என்றார். பவத்தால் திகைப்புற்றவர், அதனின் நீங்க வியலாது நரகத்துக்கு ஏதுவாகிய தீவினைகளையே செய்ப வாகலின், “அது ஆதி நரகமதிவட்டம்” என்று முடித்தார். திக்கு நோக்கித் துதித்தலும், அவரைத் துதித்தலே யாம் என்ற கருத்தால், திக்கைத் துதிக்கை எம் தொழில் என்றார். எம்தொழில என்பது அவாய்நிலை. 32 வட்டக வட்டக மார்மா வையவருள் வாரிசெல்கு வட்டக வட்டக மாவோச்சு வள்ளிம ணாளவுரு வட்டக வட்டக சச்சூர வாரிதி மாவினைய வட்டக வட்டக நீக்கிக்கொண் மாமயில் வாகனனே. இ-ள்: வட்ட - வட்டமான, கவட்டு - மலைப்பிளவுகட்கு, அகமார்மாவை - நடுவிடத்தே பொருந்திய, மாவைய - மாவைப் பதியினை யுடையாய், அருள்வாரி - கருணைக்கடலே, செல் - மேகம் தவழும், குவட்டகம் - மலைக்குவட்டின்கண், கவண் - கவண்கல்லை, தக - ஏற்றவாறு சுழற்றியெறிந்து, மா ஓச்சு வள்ளி மணாள - தினைமேயவரும் விலங்குகளை யோட்டும் வள்ளி நாயகியின் கணவனே, உரு அட்ட - பலவேறு உருக்கொண்டு பொருத, கவட்ட - கயிறு கட்டப்பட்ட, கசச் சூர - யானை களையுடைய சூரவன்மாவாகிய, வாரிதிமா - கடலிடத்தே நின்ற மாமரத்தை, இனைய - வருந்துமாறு, அட்டு - தடிந்து, அக்கவரு அகம் நீக்கி - அவனது மாயத்தை அவன் மனத்தினின்றும் போக்கிய தனால், கொள் - அவன் கொண்ட வடிவமாகிய, மயில் - மயிலை, வாகனனே - வாகனமாகக் கொண்டவனே, அடியேன் மனத் திருளையும் போக்கித் திருவடிக்கு ஆட்கொள்வாயாக, எ-று. வள்ளிநாயகியார் கையிற் கவணேந்தித் தினை மேயவரும் விலங்குகளை அக்கவணிடத்துக் கல்லால் ஓச்சுங்கால், அவற்றின் வன்மை மென்மைக் கேற்ப எறிந்தார் என்பது தோன்ற, “கவண்தக மா ஓச்சு வள்ளி” என்றார். சூரன் பொருமிடத்து மாயப்போர் பல செய்தானாதலின், “உருவட்ட சூரன்” என்றார். கவடு, யானை கட்டும் கயிறு; இது புரசை என்றும் கூறப்படும். முருகக் கடவுள் எறிந்த வேற்படைக்கு ஆற்றாது அஞ்சிக் கடற்கண்ணே ஒரு மாமரமாய் நின்றானென்றும் புராணம் கூறுதலின், “சூர வாரிதி மா” என்றார். அவன் பொருமிடத்தே மாயம் பல செய்வதுகண்ட முருகன், அவன் மனமயக்கத்தைத் தம் மெய்யருளால் போக்கியதும், அவன் அவர் திருவுருவம் கண்டு பரவியதும் பிறவும் கந்தபுராணம், தணிகைப்புராணம் முதலியவற்றுட் காண்க. சூரனாகிய மாமரம் முருகனால் இருகூறாய்ப் பிளக்கப்பட்டதும், ஒருகூறு கோழி யாகவும், ஒருகூறு மயிலாகவும் உருக்கொண்டு நிற்ப, கோழியைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டான் என்பது குறித்து, “கவடு அகம் நீக்கிக்கொள் மாமயில் வாகனனே” என்றார். “இம்மையில் இரண்டு கூறும் எழுந்துகுக் குடம யூர, விம்மித வுருவங் கொண்டு விண்ணவர் மருள வையம், மும்மையும் சிதர்ப்ப தென்ன முழங்கிமே லெழுந்த வன்றே”; “அருள்விழி சேர்த்த லோடும் ஆணவ மாதி மூன்றும், ஒருவியுள்ளுருகி நிற்ப வூன்றலைப பொடித்தப் புள்ளை, மருவுதி கொடியாய் நந்தம் வாம்பரித் தேர் மேல் என்னாங், கிருவியூர் மஞ்ஞை நீத்தங் கெதிர்ந்தமா மயில் மேல் கொண்டான்” (சீபரி. 597.8) என்பது தணிகைப் புராணம். தன்னைப் பகைத்துப் பொருத சூரனது மனத்திருளையும் போக்கி அவன் கொண்டுபோந்த மயிலுருவத்தையும் ஏற்றுத் தனக்குப் பணிசெய்ய வமைத்துக்கொண்ட அருளாளனாதலின், நின்பால் அன்புற்றுப் பாமாலை சாற்றிப் பரவும் அடியேனையும் ஆட்கொள்ளவேண்டும் என்பது குறிப்பெச்சம். 33 கனகங் கனகங்கை மேல்வரை காவலன் கைத்தெனமிக் கனகங் கனகங்கை கொண்டவர் கூறக் கடவுளர்பு கனகங் கனகங் கணக்கைச்செண் டிற்செற்ற சேய்கழற்கோ கனகங் கனகங்கு லென்மாவைத் தாழ்திய கந்தருக்கே. இ-ள்: கனகம் - பொன், கன - அகன்ற, கம் - வெண்மையான பனியுறைந்த, கைவரை காவலன் - பக்கத்தையுடைய மலையரசன், கைத்து - கையிடத்தேயுளது, என - என்று, மிக்கன - மிகுந்துள்ளன வாகிய, கம் - பிரம கபாலமும் கன - அலைசெறிந்த, கங்கை - கங்கையாறும், கொண்டவர் - கொண்டவராகிய சிவபெருமான், கூற - கூறவே, கடவுளர் புகல் - முனிவர்கள் விரும்புகின்ற, நகம் - மேருமலையை, கனகக்கணம் - பொற்குவியல் குறித்து, கைச்செண்டில் - கைச்செண்டால், செற்ற சேய் - அடித்துக் கைக்கொண்ட வழுதியாகிய குமரனுடைய, கழற் கோகனகம் - திருவடித் தாமரையையும், கங்குல் என் கனமாவை - இருள்போல் கறுத்த மேகம் தவழும் மாவைப் பதியையும், (நெஞ்சே) தாழ்தி - தலைவணங்கி வழிபடுவாயாக, தருக்கு - தாழாது செருக்கித் தருதல், அகம் - பாவமாகும், எ-று. கனகங் கைமேல் வரை காவலன் என்பதற்குப் பெரிய கங்கையாறு மேலே ஓடுதலையுடைய இமையமலையரசன் என்றும், கங்கண கங்கை கொண்டவர் என்றதற்குப் பிரம கபாலமும் மாணிக்கக் கல்லையுடைய பாம்பும் கையிற்கொண்டவர் என்றும் உரைப்பினுமாம். வீரபாண்டியன் பாண்டிநாட்டை யாண்ட காலத்தில் பெரு வற்கடமுண்டாக, நாட்டிற்கு நலஞ் செய்வதற்கு வேண்டும் பொன் இல்லாது போனதால் வருத்தமுற்ற அவ்வழுதி கனவில் இறைவன் தோன்றி, “அடற்கதிர் வேலோய் மாரி யரிதிப் போததனை வேண்டி, இடர்ப்படல்; வரைக்கு வேந்தாய் இருக்கின்ற எரிபான் மேருத், தடப்பெரு வரையின் மாடோர் தனிப்பெரு முழையி லிட்டுக், கிடப்பதோர் எல்லை யில்லாக் கேடிலாச் சேம வைப்பு” (திருவிளை. மேரு. 10) என்று மொழிந்தார். இதனையே, “கனகம், கனகங்கைமேல் வரை காவலன் கைத்தென மிக்கனகங் கனகங்கை கொண்டவர் கூற,” என்றார். பின்பு அப்பாண்டியன் அவ்வண்ணமே சென்று மேருவைக் கைச்செண்டிற் புடைத்து அக்கனகத் திரளைக் கொண்டு வந்தானாதலின், “கடவுளர் புகல் நகம் கனகங் கணக்கைக் கைச்செண்டிற் செற்ற சேய்” என்றார். கனகக் கணத்தை எனற்பாலது விகாரத்தால் மெலிந்து அத்துச்சாரியை பெறாது முடிந்தது. திருவடியாகிய தாமரையை மறவாது பணிக என்பவர், அதனை எளிதிற்கண்டு பணிதற்குரிய இடமும் உடன் உணர்த்து வாராய், “கழற் கோகனகங் கனகங்கு லென்மாவைத் தாழ்தி” எனத் தன் நெஞ்சிற்குக் கூறுவாராய் உலகினர்க்கும் உரைத்தார். இவ்வாறு சொல்லக்கேட்டு வணங்காதிருப்பவர், அவ்வாறிருப்பது அவர்தம் சிந்தையில் செறிந்திருக்கும் செருக்கு என்றும் அதன் வழியே செல்வது பாவம் என்றும் கூறுவார் “தருக்கு அகம்” என்றார், தருக்கு முதனிலைத் தொழிற்பெயர். 34 கந்தவ கந்தவ நீள்பொழில் மாவைக் கடலினன்றி கந்தவ கந்தவ றாகவுற் றாடிக் கடிமணமு கந்தவ கந்தவ மேமற வாதுறை கன்னியருக் கந்தவ கந்தவ னாயுறல் பார்த்தணி கைதலைக்கே. இ-ள்: கந்த அகம் - நறிய மணம் கமழும் இனிய சோலை யுள்ள இடம், தவ - இனி வேறே எங்கும் இல்லையென்னுமாறு, நீள் பொழில் - மண்ணுலகைவிட்டு விண்ணுலகு நோக்கி நீண்ட மரங்கள் செறிந்த சோலை சூழ்ந்த மாவைப்பதிக்குச் சென்று, அன்று - தன்னொடு பொருதற்கு வந்தகாலத்தில், இகந்த - இளையவன் என்று இகழ்ந்த சூரபன்மாவினுடைய, அகம் - எண்ணம், தவறாக - தவறும்படியாக, கடலின் உற்று - கடற்குட்சென்று, ஆடி - அவனையும் அவன் சுற்றத்தையும் அறக்கெடுத்து வென்று, கடிமணம் உவந்து - திருமணம் செய்துகொள்ளக் கருதி, அ - அத்தகைய விருப்பமே, அகம் மறவாது - நெஞ்சில் மறவாமல், தவம் உறை கன்னியருக்கு - தவம் செய்துகொண்டிருந்த திருமால் மகளிரான இருவர்க்கும், அந்த - அழகிய, அகம்தவனாய் உறல் - மார்பு நல்குவதில் நீங்காதவனாயிருப்பது, பார்த்து - பார்த்தாயினும், கை தலைக்கு அணி - (நெஞ்சே) கையைத் தலையிலே குவித்துத் தொழுவாயாக, எ-று. பெய்துரைக்கப்பட்ட ஏற்புடைச் சொற்கள் இசை யெச்சத் தால் பெறப்பட்டன. அன்று, உற்று, ஆடி, உவந்து,தவனாயுறல், பார்த்து, மாவைக்குச் சென்று கைதலைக்கு அணியென வினை முடிவு செய்க, கடலின் உற்று ஆடி என இயையும். கன்னியர் இருவரும் சுந்தரி, அமுதவல்லி யென்போராவர்; இவர்களே பின்பு வள்ளிநாயகியாராகவும், தேவயானையாராகவும் தோன்றியவர். இவ்வரலாற்றைத் தணிகைப் புராணக் களவுப் படலத்தும், விடையருள் படலத்தும் விரியக் காண்க. அவ்விரு வரும் முருகவேளையே “மணப்பவுன்னித்” தவம்செய்தமையின், “அகம் தவமே மறவாதுரை கன்னியருக்கு” என்றார். வள்ளி தெய்வயானை சமேதராய் இருப்பதைப் பார்த்து வணங்குக என்பதாம். ஆகம் - அகமெனவும், தவானாய் என்பது தவனாய் எனவும் நின்றன. 35 தலைவி தலைவி சனத்திறந் தோர்பினுஞ் சார்ந்தனர்ம தலைவி தலைவி கசிதா னனமகிழ் தந்துபிணி தலைவி தலைவி பவமின நேசச் சழக்கிலுறத் தலைவி தலைவி தனமினு மாவை தொழாதவர்க்கே. பிரிவிடைத் தலைவியது ஆற்றாமை கண்ட தோழி தன்னுள் வருந்திக் கூறியது. இ-ள்: தலைவி தலைவிசனத்து இறந்தோர் - தலைவியிடத்தே விசனமுண்டாகப் பண்டுபிரிந்தொழுகிய தலைவர், பினும் - பின்னரும், விபவம் இனம் சார்ந்தனர் - செல்வம்வேண்டிச் சென்றொழிந்தார், மதலை - மகனுடைய, விது அலை - சந்திரனை யொத்த, விகசித ஆனனம் - மலர்ந்த முகம், மகிழ்தந்து - மகிழ்ச்சியைத் தருதலால், பிணிதலை - (ஒருவாறு ஆற்றினும் அவன் தந்தையை நினைப்பிக்கின்றமையின்) தலைவன்பால் அன்பு தோன்றி இவள் உள்ளத்தைப் பிணித்து வருத்துவதால், விதலை - நடுக்கமும், நேசச் சழக்கு - அன்பிலரெனக் கொடுமை கூறலும் மேற்கொண்டு, இல் உறு - மனையின் கண்ணே தங்கியிருக்கும், அத்தலைவிதலை - அத்தலைமகள்பால், மாவை தொழாதவர்க்கு - மாவைப்பதியைத் தொழாதவர்க்கு விசனம் மிக வுண்டாவது போல, விதனம்மினும் - விசனம் மிக்கு நிற்கிறது, இதற்கு யான் என்செய்வேன், எ-று. “இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்” எண்ணும் தலைமகன் முன்னே சென்றதுபோலப் பின்னரும் பொருள்வயிற் பிரிந்தமை தோன்றப் “பினும் விபவம் இனம் சார்ந்தனர்” என்றாள். அவன் பொருள் கருதிச் சென்றது ஒருபுறமிருக்க, இவளது ஆற்றாமை முன்னையினும் மிக்கிருப்பதை நினைந்து, “தலைவி தலைவிசனத்து இறந்தோர் பினும் சார்ந்தனர்” என்றாள். மகன் முகங்கண்டு ஒருகால் ஆற்றியிருக்கக் கருதினாட்கு, அவன் முகத்தழகு தலைவனை நினைப்பித்து நோய் மிகுவித்ததென்பாள், “மதலைவிது அலைவிக சிதானனம் மகிழ்தந்து பிணிதலை விதலையும் நேசச் சழக்கும்” உறுவித்ததென்றாள். “தந்தையர் ஒப்பர் மக்கள்என் பதனால்” (தொல். பொருள்) மகனும் ஆற்றாமைக்கே ஏதுவா யினான். நேசச் சழக்கு, தலைவன் பால் உள்ள அன்புகாரணமாக மகனைத் தெருட்டுவாளைப் போலத் தலைவன் கொடுமை கூறல்; “செம்மால் வனப்பெல்லாம் நுந்தையை யொப்பினும் நுந்தை, நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி, கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும், வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி, ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல், மென்றோள் நெகிழ விடல்; பால்கொள லின்றிப் பகல்போன் முறைகோடாகக், கோல்செம்மை யொத்தி பெருமமற் றொவ்வாதி, கால்பொரு பூவின் கவின்வாட நுந்தைபோல், சால்பாய்ந்தார் சாய விடல்; வீத லறியா விழுப்பொருள் நச்சியார்க்கு, ஈதல் மாட்டொத்தி பெருமமற் றொவ்வாதி, மாதர்மென் னோக்கின் மகளிரை நுந்தை போல், நோய்கூர நோக்காய்விடல்” (கலி. 86) என்றாற்போல வருவது, மிக்கு முடிய வேண்டியன விகாரத்தால் இயல்பாய் முடிந்தன. மினும் மிக்குத் தோன்றும். இத்துணையும் அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. மெய்ப்பாடு. அழுகை. பயன் - அயா வுயிர்த்தல், “ஒன்றித் தோன்றும் தோழி மேன” (தொல். பொருள்) என்ற விதியினால் இக்கூற்றுத் தோழிக்கு அமைவதாயிற்று. 36 தவங்க தவங்க மரனடி காட்டுஞ் சலதியிலா தவங்க தவங்க ளிறல்பார்க்கு மாவையன் சால்குடமா தவங்க தவங்க னயன்மா லிடையிருள் சார்தினமெய் தவங்க தவங்க ளடநோக் கிவாங்கறஞ் சக்கரமே. இ-ள்: சலதியில் - கடலில் செல்லும், தவ - மிக்க, கத- வலிய, வங்கம் - மரக்கலத்தின், மரன் - கொடிமரம், அடியில் காட்டும் - தங்கள் நிழலில் செல்லுமாறு உயர்ந்திருக்கின்ற, கதவங்கள் - ஆலமரங்கள், இறல் - சாய்ந்து இடம் விடுவதை, ஆதவம் பார்க்கும் - சூரியன் பார்த்திருக்கும், மாவையன் - மாவைப் பதியையுடைய முருகனது, தஞ்சக்கரம் - அருள்செய்யும் கையானது, சால்குடமா - பெருமை யமைந்த குடம் போலும் தலையையுடைய யானையும், தவம் கதவு அங்கன் - கோதமாமுனிவனுடைய சாபத்தீ வெதுப்பப் பெற்ற மேனியையுடைய இந்திரனும், அயன் - பிரமனும், மால் - திருமாலும், இருள்சார் தினம் - மயக்கமுற்ற அந்த நாளில், எய்த - தன்பால் சரணடைய, அங்கு - அப்பொழுது, அ - அந்த, தவம் - அவரது தாபம், அட - கெடுமாறு, நோக்கி - அருட்பார்வை செலுத்தி, வாங்கல் - அவர்களைத் துன்பத்தினின்று எடுப்பதாகும், எ-று. மாவைப்பதியிலுள்ள ஆலமரங்கள் வானளாவ உயர்ந்திருப் பதன் சிறப்பைக் கூறுவார், அதன் அடியில், மரக்கலங்கள் இனிது நிற்கவும் செல்லவும் கூடுமென்பார், “தவங்க தவங்க மரனடி காட்டுஞ் சலதியில் ஆதவம்” என்றும் சூரியன் மண்டலம் வரையில் உயர்ந்திருத்தலால், சூரியன் இம்மரத்தின் கிளைகள் காற்றில் அசைந்து தான் செல்லுதற்கு இடம் விடுவது நோக்கிக் காத்திருப்பன என்பார், “அலகு ஆதவம் இறல் பார்க்கும்” என்றும் கூறினார். கோதமன் மனைவியான அகலிகையைக் காதலித்துத் தீநெறிக் கண் சென்று கூடி அவனால் மேனியெங்கும் கண்ணாமாறு சாபம் பெற்றது குறித்து, அவனைத் “தவம்கதவங்கன்” என்றார். தவங்க தவங்கன் என்பதனை தவ அங்கத அங்கண் எனக் கொண்டு பெரிய வாகுவலயமணிந்த மேனியனான தேவேந்திரன் என்றும் தலை மாலையணிந்த சிவனென்றும் உரைப்பினுமாம். “இருள்சார்தினம்” என்றார்; முருகக் கடவுளேந்திய வேலுக்குரிய சத்தி முழுதும் தான் கொடுத்ததாக அயன் கூறக் கேட்டு அவன் ஆணவந்தீர - “மண்ணிடைச் செல்க” என அவர் அவனைச் சபித்த காலத்தில், படைப்புத்தொழில் நிகழாமையின் உலகில் பெருமயக்கமுண்டாயிற்றாகலின். இதனை, “பலர்புகழ் மூவரும் தலைவராக, ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித், தாமரை பயந்த தாவி லூழி, நான்முக ஒருவற் சுட்டி” (முருகு. 162 - 5) என்ற முருகாற்றுப் படைக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரைத்த உரையிற் காண்க. தாபம் என்பது தாவம் எனச் சிதைந்து தவம் எனக் குறுகிற்று. அத்தவம் கெடச் செலுத்திய அருட் பார்வையை அடியோங்கள் பாலும் செலுத்தவேண்டும் என்பது குறிப்பு. 37 சக்கரஞ் சக்கரஞ் செய்படை சூன்றணிந் தார்க்கருள்விஞ் சக்கரஞ் சக்கரஞ் சொல்வார் தமன்பர் தனையவெம்ம சக்கரஞ் சக்கரஞ் சால்கூற் றுறுமுனர்த் தாவருட்டஞ் சக்கரஞ் சக்கரஞ் சாரா திருவினை சார்பவத்தே. இ-ள்: அரஞ்செய்படை - அரத்தால் கூரிதாக்கப்பட்ட வாள்கொண்டு, சக்கு சூன்று அணிந்தார்க்கு - கண்ணைப் பிடுங்கி யருச்சித்த திருமாலுக்கு, சக்கரம் அருள் - சக்கரப்படையைக் கொடுத்தருளியவரும், விஞ்சு அக்கர் - நெற்றியில் மேம்பட்ட கண்ணையுடையவரும், அஞ்சு அக்கரஞ் சொல்வார்தம் அன்பர் - திருவைந்தெழுத்தை யோதும் அடியார்க்கு அன்பராவாருமான சிவனுக்கு, தனைய - மகனே, வெம் - கொடிய, மசக்கர் - மயக்குகின்ற தூதரையும், அஞ்சக்கரம் - பயங்கரத்தைச் செய் தலையும், சால் - பொருந்திய, கூற்று உறும் முன்னர் - நமன் உயிரைப் பற்றுதற்கு வருமுன்பே, சக்கரம் சாராது - அழிவுறாமல், இருவினை சார்பவத்து - இருவினையும் பொருந்திய பிறப்பிலிருந்து, தஞ்சக்கரம் - வரம் தரும் கையினால், அருள்தா - அருள் தருவாயாக, எ-று. திருமால் ஆயிரம் பூக்களைக் கொய்து சிவனுக்கு அர்ச்சனை செய்ய, அவற்றுள் ஒன்று குறையக்கண்டு தன் கண்ணைப் பிடுங்கி அருச்சித்த சிறப்புக் கண்டு சக்கரப்படை வழங்கினர் என்பது புராணம். “மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்” என்பர் சேந்தனார். “திருவாஞ்சியத் தடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே” (சம். தே. திருவாஞ்சி 9) என்பவாகலின், “அஞ்சக்கரம் சொல்வார் தம் அன்பர்” எனச் சிவபெருமானைச் சிறப்பித்தார், “கூற்று வருமுன் அருள் தா” என்றார் வந்தபின் அறிவு மயங்குதலின், அவனை நினைத்தல்கூடாமை பற்றி. “எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்” (குறள) என்பவாகலின் “சக்கரம் சாராது இருவினை சார்பவத்து” என்றார். சங்கரம் - சக்கரம் எனச் சிதைந்தது; சங்கரித்தல் - வினை. 38 பவநம் பவநம் பகன்றா ரவளர்ப் பரனருள்வி பவநம் பவநம் பனம்பிகை சேயருள் பண்பதுசோ பவநம் பவநம் பரற்காருஞ் செய்தலெப் பாலினுநீ பவநம் பவநம் வநந்நமம் மாவையிற் பஞ்சகமே. அக்கர சுதகம் இ-ள்: பவனம் - விண்ணில் இயங்கி, பவன் - காற்றிடைத் தவழ்ந்து, அம்பு - சரவணப் பொய்கையில் உருக்கொண்டு, அகன்று - அதனின் நீங்கி, ஆர - முருகனாம் நிலைமை நிரம்ப, வளர்ப்பரன் - வளர்தலையுடைய பரமனாகிய முருகக் கடவுளின், அருள் - திருவருளே, பவனம் - வீடாவது, விபவ - அருட்செல்வ முடையனாய், நம் - நமககு, பவ - மேலான, நம்பன் - கடவுளாய், அம்பிகைசேய் - பார்வதி தேவியாருக்குப் புதல்வனாகிய முருகக் கடவுள், அருள் - அடியார்க்கருளும் அழகே, வனம் - அழகாவது, சோபவனம் - பிரகாசமான தாமரைப் பூவைக்கொண்டு, பவம் - பிறப்பு, நம் - அச்சம் கொண்டு நீங்க, பரற்கு - முருகக் கடவுட்கு, ஆரும் - எத்திறத்தாரும், செய்தல் - அருச்சித்து வணங்குவதே, நம் - வணக்கமாவது, எப்பாலினும் - எவ்விடத்தும், நீபவனம் - கடப்பமரம் செறிந்த சோலைகளையுடைய, அம்மாவையில் - அம் மாவிட்ட புரமாகிய திருப்பதி, பஞ்சகம் - விண்முதல் பூதமைந்தின் கூட்ட மாகும், எ-று. இப்பாட்டு அக்கரசுதகமாதலின், பவனம் - வீடு; வனம், அழகு; நம் - வணக்கம் எனப் பிரித்துப் பொருள் காணும் வகையில் அமைந்துளது காண்க. முருகப்பிரான் ஐம்பூதங்களிலும் நிலவி யுலவிய செய்தியை, “தேங்கொளியாய் வெளியடர்ந்து வளி தொடர்ந்து ஒள்ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு, நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர் பெருவாழ்வை நினைந்து வாழ்வாம்” என வரும் தணிகைப் புராணச் சுப்பிரமணியர் துதி (கடவுள் வாழ்த்து) யிற் கண்டுகொள்க; முருகனாம் நிலைமையாவது கட்டினமை குன்றாது எஞ்ஞான்றும் நிலைபெற நிற்கும் இயல்பு. பரமன் நெற்றிவிழியில் தோன்றினும் அம்மையார் முலைசுரந் தூட்டவுண்ட மகனாராதலின், “அம்பிகைசேய்” என்றார். தேவியார் முலையமுதம் உண்ட செய்தியைத் தணிகைப் புராணத்து, “மலையான் மடந்தை மகிழ்ந்துறீஇப் - புல்லியோருருச்செய்து கொங்கை பொழிந்த தீம்பய முட்டினாள்” (சீபரி. 25) எனவரும் கவியால் உணர்க. 39 பஞ்சர பஞ்சர ணென்றுழைப் பார்யம பாசர்கைவெம் பஞ்சர பஞ்சர ணேலரி யாம்பகல் பற்றென்மது பஞ்சர பஞ்சர மார்பொழின் மாவைப் பதியகடப் பஞ்சர பஞ்சர சாசைநீக் கென்று பணிந்திலரே. இ-ள்: பஞ்சரம் - தம்முடம்பையே, பஞ்ச - இப் பிரபஞ்சத்தில், அரண் என்று - உயிருக்குப் பாதுகாப்பான இடமென்று கருதி, உழைப்பார் - அவ்வுடலைப் பெருக்குதற்குரியவற்றை நாடி யுழைப்பரேயன்றி, யமபாசர் - யமதூதருடைய, கை - கையிலுள்ள, வெம்பு அம் சரபம் - வெதுப்புகின்ற வலிய இருப்புச் சலாகை, சரண் - சென்று தாக்குதற்கு இலக்காம் (என்று). ஏலர் - கருதுவ தேயிலர், யாம்பகல் பற்று என் - யாம் பொய்யடியாரிற் பிரிந்து அவர்பால் அன்பு வைப்பதனால் பயன் என்னாம், மது பஞ்சர - வண்டினம் பஞ்சுரம் என்னும் இசையினைச் செய்யும், பஞ்சரமார் பொழில் - கிளிகள் நிறைந்த சோலைகளையுடைய மாவைப் பதியையுடையாய், கடப்பஞ்சர - கடப்பமாலையையணிந்தவனே, பஞ்சரச ஆசை - ஐம்புல ஆசையை, நீக்கு என்று பணிந்திலர் - நிக்குவாயாக என்று அன்னார் பணிவதும் இலர், எ-று. மாவைப்பதிய, கடப்பஞ்சர, உழைப்பார், ஏலர், பணிந்திலர், அவர்பால் யாம் பற்றுவைப்பது என்னாம். என இயைத்து முடிக்க. சரண், இலக்கு. உடலை உயிர்க்குப் பாதுகாப்பாகக் கருதி உழைக் கின்றனரேயன்றி, உயிர்க்கு உண்மைக் காப்பு நிலையமாகிய நின் திருவடியை நினைந்திலர் என்பார், “யமபாசர் கைவெம்பு அஞ்ச சரப சரண் (என்று) ஏலர்”என்றார். அவர் அது செய்தற்குக் காரணம் ஐம்புலன் கண்மேற் செல்லும் ஆசையாதலின், அதனை நீக்கென்று நின்னைப் பணிந்திலர் என்றற்கு “பஞ்சரச ஆசை நீக்கென்று பணிந்திலரே” என்றும், அவரோடு கூடியவழி அவர் தம்மையும் அவ்வாசைச் சூழலில் அழுத்திக் கெடுப்பரென்பார், “யாம் பகல் பற்றென்” என்றும் கூறினார். “பத்தரோடிணங்குக; அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவராகலான்” என்பது சிவஞானபோதம். 40 திலகந் திலகந் தவர்தொழு மாவையன் சீரலைச்செந் திலகந் திலகந் தருநுதன் மாமுகற் செற்றெனுளத் திலகந் திலகந்தொலைப்பா னமர்ந்தவன் சீரடிதாழ்ந் திலகந் திலகந் துகிறொலைப் பேயல தென்செயுமே. இ-ள்: திலகம் - மேலான, தில - குளிர்ந்த வெள்ளிமலை வாசிகளான, கந்தவர் - விச்சராதர் கந்தருவர் முதலியோர், தொழும் - வணங்குகின்ற, மாவையன் - மாவைப்பதியையுடையவனும், சீரலை - திருச்சீரலைவாயென்னும், செந்திலகம் - திருச்செந் தூரிடத்தே, திலகம் தரும், நுதல் மாமுகன் - புள்ளி பொருந்திய நெற்றியையுடைய யானை முகனான தாருகனை, செற்று - அழித்து, என் உள்ளத்து இலகு - என் உள்ளத்தே நிலவும், அகம் - பாவங் களை, தொலைப்பான் - தொலைத்தருளுபவனுமாகிய ஆறுமுகக் கடவுளை, அமர்ந்து - விரும்பி, சீரடி தாழ்ந்து - அவருடைய சிறப்புடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, இலகம் - விளங்கு வோமாக, அகம்துகில் - மனைமக்கள் வீடு மாடு முதலியனவும், ஆடையாபரணாதிகளும், தொலைப்பேயலது - கழித்தற் குரியன வேயன்றி, என்செயும் - என்ன பயனைச் செய்வனவாம். இறந்தால் உயிரோடு தொடர்ந்து வந்து உறதி நல்குவனவல்ல என்பது குறிப்பு. அந்தில், தில் என்பன அசை; மனை, மக்கள், வீடு, ஆடை, ஆபரணம் முதலியவற்றிற்காகப் பெரிதும் முயன்று கெடுவதை விடுத்து முருகன் திருவடிகளை வணங்கி இலகுவோமாக என்பதாம். எனவே நாம் நிலைத்தவையெனக் கருதும் பொன்னும், பொருளும் நிலையின்றிக் கழிவன என அவற்றது நிலையாமையுணர்த்துவார், “அகம்துகில் தொலைப்பேயலது என்செயும்” என்றார். தாருகன் முதலிய அசுரர்களை அழித்தருளிய முதல்வனுக்கு, என் மனத்திடைக் கலிக்கும் அழுக்கினைப் போக்குதல் அரிதன்று என்றற்கு, “திலகந் தருதல் மாமுகற் செற்று என் உளத்து இலகு அகம் தெலைப்பான் அமர்ந்தவன்” என்றார். இலகுவம் என்பது சாரியை பெறாது, இலகம் என முடிந்தது. குளிர்ச்சிப் பொருட்டாய சில் என்பது தில் என நின்றது. 41 தென்றலை தென்றலை யார்மா வையிலெற் றெறுதல்புரிந் தென்றலை தென்றலை விட்டா ரருள்வர்முன் சேர்வர்கருத் தென்றலை தென்றலை யன்னதுன் பாறல் சிகிமிசையிந் தென்றலை தென்றலை நோக்கின்றிப் போயநஞ் சிந்தையரே. தலைவி வன்புறை எதிரழிந்தது இ-ள்: தென்தலை - தெற்கின்கண்ணதான, தென்தலையார் - அழகிய இடத்திற் பொருந்திய, மாவையில் - மாவைப் பதியில், என்தெறுதல் புரிந்து - என்னை வருத்துவதை விரும்பி; என்தலை - என்னிடத்தே, தென்றலை விட்டார் - தென்றற் காற்றைச் செலுத்தி யுள்ளார், என்ற அலையன்ன - சூரியன் வெதுப்புவதுபோல வருத்துகின்ற, துன்பு - பிரிவுத் துன்பத்தை, ஆறல் - ஆற்றும் திறத்தையும், சிகிமிசை இந்து - மரத்தை மேலேயுடைய சந்திரன் என்தலை - என்னை, தென்றலை - தயருறுத் தலையும், நோக்கின்றி - நோக்காது, போய - பொருளே நோக்கிச் சென்ற, நம் சிந்தையர் - நம் மனத்தின் கண்ணரான காதலர், அருள்வர் - அருள்மிகச் செய்பவர் (ஆதலால்), முன் சேர்வர் - நம் முன் விரையவந்து சேர்வர், கருத்து - இதுவே அவர் கருத்து, என்றல் - என்று சொல்வதை விட்டொழிப்பாயாக, எ-று. தென் - அழகு. விட்டார் - விட்டுச்சென்றார் என்றுமாம். என்று - சூரியன்; ஒளிப்பொருட்டாய எல்லென்னும் சொல்லடி யாகப் பிறந்த பெயர்; இஃது என்றூழ் என்றும் வழங்கு. அலை - அலைத்தல். தென்றுதல் - வருத்துதல், என்றல், அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. தலைமகன் இளவேனிற் பருவம் குறித்துச் சென்றவன், அதற்குரிய தென்றல் வந்தும் அவன் வாராமை கண்டு ஆற்றா ளாகிய தலைவியைத் தோழி, தென்றல் அவர் வரவைத் தூதாக உரைக்கின்றது; அவர் விரைய வருவர், நீ வருந்துதல் ஒழிக என்றாளாக, எதிரழிந்த தலைவி அவள் கூற்றையே கொண்டெடுத்து மொழிந்து, “எற்றெறுதல் புரிந்து என்றலை தென்றலை தென்றலை விட்டார்” என்றாள். தென்றலால் தனக்கு உண்டாகும் வருத்தத்தை, “என்று அலையன்ன துன்பு” என்றும், மாலைப்போதில் திங்க ளெழுந்து குளிர்நிலவு பொழியக் கண்டு வருந்துபவள், “சிகிமிசை இந்து என்றலை தென்றல்” என்றும் கூறி, தலைவனைக் கொடுமை கூறுவாள், “நோக்கின்றிப் போய நம் சிந்தையர்” என்றாள். இவ்வாறு கூறக்கேட்கும் தோழி, அவர் அருளுடையர், முன்சேர்வர், கருத்து இது என்று வற்புறுத்தினாளாக. ஆற்றாமையால் எதிரழிந்து, “அருள்வர் முன்சேர்வர் கருத்து என்றல்” என்றாள். இஃது அழிவில் கூட்டத்தவன் பிரிவாற்றாமை. முழுத் திங்களின் களங்கத்தைக் காண்பவர். அதனை மரம் எனக் கூறுவதுண்மையின் அதுகொண்டு “சிகிமிசை யிந்து” என்றார் போலும்; எதிர்நின்ற மரத்தின் உச்சியில் சந்திரன் தோன்றக்கண்டு இவ்வாறு உரைத்தாள் என்றுமாம். 42 சிந்துர சிந்துர நேர்பல கூறுவர் தீநெறிந சிந்துர சிந்துர வாரனை மாவை யனையிமங்க சிந்துர சிந்துர னாற்பொழி வெற்பனைச் செஞ்சடைநோய் சிந்துர சிந்துர கத்தார் சுதற்பணி சேதனத்தே. இ-ள்: தீநெறி நசிந்து - தீ நெறியால் நல்லோர்களைத் துன் புறுத்தித் திரிந்த, உர - வலிய, சிந்துரவாரனை - யானை முகத்தை யுடைய தாருகனைக் கொன்றவனும், மாவையனை - மாவைப் பதியில் எழுந்தருளியவனும், இமம்கசிந்து - பனியுருகி, உர - பெருகி வரப்பெற்று, சிந்துரனால் - குள்ளனாகிய அகத்தியனால், பொழிவெற்பனை - நீர் பொரியப்பெறும் மலையினையுடைய வனும், செஞ்சடை - சிவந்த சடையில், நோய்சிந்து - உற்ற துயர் கெடுமாறு, உரசு இந்து - பொருந்திய சந்திரனையும், உரகத்தார் - பாம்புமுடைய சிவனுக்கு, சுதன் - மகனுமாகிய முருகனை, பணி - பணியும், சேதனத்தை - அறிவுடைமைகண்டு, சிந்து - மன மானது, ரசிந்து - இன்புற்று, உரம் நேர் பல - ஞான பலம் தருவனவாகிய பல மந்திர மொழிகளை, கூறுவர் - பெரியோர் நமக்கு உபதேசித்தருள்வர், எ-று. சிந்துர ஹரன் என்பது சிதைந்து திரிந்து சிந்துவாரன் என நின்றது. அறவோர், தேவர், முனிவர் முதலாயினார்க்குத் தீங்கு செய்வதே நெறியாகக் கொண்டிருந்தானாகலின். தாருகனை, “தீநெறி நசிந்து உர சிந்துன்” என்றார்; “பாரகத் துயிர்வாட்டும் பதகன்” (சீபரி. 53) என்று தணிகைப் புராணம் கூறுதல் காண்க. உரவு, பெருகுதல்; “ஊர்தொறும் உய்த்து உராய்வெள்ள நாடு மடுத்து விரைந்ததே” (சீவக. 3) என வருதல் காண்க. அகத்தியர் கங்கையிலிருந்து கொணர்ந்த நீரால் பொதியமலையில் தங்கி முருகனை வழிபட்டாரென்பது புராண வரலாறு. இதனையுட் கொண்டு, “இமம் கசிந்துர சிந்துரனால் பொழிவெற்பனை” என்றார். கங்கை இமம்கசிதலால் வரும் நீராதல் தோன்ற, “இமம் கசிந்துஉர” என்றார். உராய்வர எனற்பாலது உர என்றே நின்றது. தக்கன் தந்த சாபத்தால் மெலிந்து வந்த சந்திரனைச் சடையில் வைத்து ஆதரித்த பரமன் செயலை வியந்து கூறுவார், சந்திரனை, “செஞ்சடை நோய் சிந்து உரசு இந்து” என்றார். சிந்து எனும் முதல்நிலை, வினையெச்சப்பொருட்டு; “வரிப்புனை பந்து” என்புழிப்போல. முருகன் திருவடியைப் பரவும் வாய்ப்பு, நல்லறிவுடை யார்க்கன்றியாகாமையின், அதனை, “பணிசேதனம்” என்றும், அதனைக் கண்டு வியக்கும் சான்றோர், அம்முருகனது திருவருளை விரையப் பெறுவது குறித்து மந்திரம் பல உபதேசிப்பர் என்பார், “உரம் நேர் பல கூறுவர்” என்றார். சிந்தை - சிந்து என்றும், ரசித்து, ரசிந்து என மெலிந்தும் நின்றன. ரசித்து - ரசம் என்னும் சொல்லடி யாகப் பிறந்த வினையெச்சம். இதனால், முருகன் திருவடி பரவும் நற்பணி மேலோர்க்கு விருப்பம் பயந்து அவர் அருள் பெறுதற்கு ஏதுவாதலும் உணர்த்தப் பட்டது. 43 சேதகஞ் சேதகஞ் சந்திகழ் மாவைய தீயவுணஞ் சேதகஞ் சேதகஞ் செய்வேல ராவணற் செற்றதுரி சேதகஞ் சேதகஞ் சாய்த்தோன் மருகதித் தித்திடுநஞ் சேதகஞ் சேதகஞ் சாரா தருணன்றிற் செல்லுகைக்கே. இ-ள்: சேதகம் - சேறுடைய வயல்களில், சேதகஞ்சம் - செந்தாமரைகள், திகழும் - பூத்து விளங்கும், மாவையா - மாவைப் பதியிலுள்ளவனும், தீயவுணம் - தீய அவுணர் திரள், சேது அகம் - செய்து கொண்ட அரண்களை, சேதகம் செய் வேல - சேதம் செய்த வேற்படையை யுடையவனும், ராவணற் செற்று - இராவணனைப் பகைத்து, துரிசு தக - அவன் செய்த அக் குற்றத்துக்குத் தக்கவாறு, சேதகம் சாய்த்தோன் மருக - அவனையும் அவன் செயற்குத் துணை செய்தோரையும் அழித்து, அவர் தம் உதிரக் குழம்பு பெருக்கிட்டோடச் செய்த இராமனாகிய திருமாலுக்கு மருமகனு மாகிய முருகக்கடவுளே, தித்தித்திடும் நஞ்சே தகும் - தித்திப்ப தொரு விஷமே போலும், அஞ்சு - அஞ்சத்தக்க, ஏத - பிறவித் துன்பத்தைத் தரும், கம் சாராது - இந்திரலோக முதலிய போக லோகங்கட்குச் செல்லாமல், நன்றில் செல்லுகைக்கு - அந்தமில் இன்ப நிலையமாகிய வீட்டினை யடைதற்கு, அருள் - அருள் புரிவாயாக, எ-று. செம்மைகஞ்சம் - சேத கஞ்சம், கஞ்சம் - தாமரை. அவுணர் கூட்டத்தின் தொகுதியை “அவுணம்” என்றார். அவுணம் என்பது அவுணர் செய்கையையும் குறிக்கும். சேது - செய்யப்பட்டது; அணையுமாம். சேதம் - சேதகம் என வந்தது. செற்றத்துரிசு எனற் பாலது விகாரத்தால் செற்றதுரிசு என நின்றது. தகச் சேதகம் என்புழிச் சகரமெய் மெலிந்தது. இந்திரலோக முதலிய பதங்கள் போகம் தரும்கால், இன்ப மாய், முடிவில் பிறவிக்கே ஏதுவாதலின் நஞ்சாய் இருத்தலின், “தித்தித்திடும் நஞ்சே தகும்” என்றும், அவற்றை நினைத்த வழி, நெஞ்சு திடுக்கிடத்தக்க அச்சமும் அவலமும் உண்டாதலின் “அஞ்சு ஏதகம்” என்றும் கூறினார். ககரமெய் எதுகை யின்பம் குறித்துக் கெட்டது. அஞ்ச ஏது அகம் எனப் பிரித்து அஞ்சுதற்கு ஏதுவாகிய இந்திரலோகம் முதலியன என்று உரைப்பினுமாம். தித்திடு நஞ்சு என்றது. “பாலாகித் தோன்றிப் பருகினா ராவி கொளும் ஆலாலம்” (கந்தபு - வள்ளி) என்பதனோடு ஒப்பு நோக்குக. அந்தமில் இன்பத்து அழிவில் வீடு, அறப்பயனாதலின் “நன்று” என்றார். நன்று, அறமாதல், “விழ்நாள் படாஅமை நன்றாற்றின்” (குறள் 38) என்பதனால் உணர்க. இதனால், பதமுத்தியினும் பரமுத்தியே வேண்டப்படுவ தென வற்புறுத்தியவாறு காண்க. 44 கைக்கிளை கைக்கிளை யாழ்நீக்கிக் கஞ்சக் கழலுறுத கைக்கிளை கைக்கிளை யார்சாரன் மாவைக் கடவுளுண்ண கைக்கிளை கைக்கிளை யோன்பொருள் பேசிக் கனையிருளுற் கைக்கிளை கைக்கிளை முத்தொளிர் காலையிற் காத்தனனே; தோழி தலைவியைத் தலைமகனுடன் போக்குடன் படுப்பாள் கூறியது. இ-ள்: கஞ்சக் கழல் உறுதகைக்கு - தாமரை போலும் திருவடியில் வீரகண்டையணியும் பெருந்தகைகளின், கைக்கு இளை - வரையாது கொடுக்கும் கைகட்கு நிகராகாது பின்னிட்ட, இளை - மேகங்கள், ஆர் சாரல் மாவை - அக்குறை நீங்கத் தவம் கிடப்பனபோலப் படிந்து கிடக்கும் சாரலையுடைய மாவைப் பதியில் எழுந்தருளியிருக்கும், கடவுள் - முருகக்கடவுளுடைய, உள் நகைக் கிளை - உள்ளம் விரும்பும் அன்பரைப் போலும், கைக்கிளையோன் - ஒழுக்கமும் கேண்மையுமுடைய தலைவர், கை - கையால், கிளை - இயக்கப்படும், கைக்கிளை யாழ் - கைக்கிளை யென்னும் நரம்பினையுடைய கந்தருவரது நெறி போலும் களவு நெறியை, நீக்கி - இனிக் கைவிட்டு, வரை பொருள் பேசி வரைதலையே பொருளாகத் தெருண்டு, கனையிருள் - மிக்க இருட்காலத்தே, உற்கைக்கிளை - விண்மீன் கூட்டம், கை - பக்கத்தே கிடக்கும் மணலைக் கைகளால், கிளை - - கிளைத்த வழித் தோன்றும், முத்து ஒளிர்காலையில் - முத்துப்போல் ஒளி செய்யும் நடு வியாமத்தே, காத்தனன் - கொண்டுதலைக் கழியு முகத்தால் நம்மைக் காக்க வந்தனர், நீ இப்பொழுதே எழுவாயாக, எ-று. போர்த்திருவும் ஏனைத் திருவும் உடைமைதோன்ற, “கஞ்சக் கழலுறு தகை” என்றார். தகையெனவே, இவர்கள் வரையாது வழங்கும் வள்ளன்மையாகிய ஆண் தகைமையுடையர் என்பது பெற்றாம். இவற்கு இளைத்த மேகம் மாவைச்சாரலில் படிதலால், அப்பெரும் தகைகளை விஞ்சுதற்கியலாவிடினும் அவரை யொப்ப வேனும் நீர் வழங்குதற்குரிய தகைமைபெறல் வேண்டித் தவம் கிடப்பன போலும் என்று எண்ணுதற்கு இடமுண்டாகிறது. கடவுள் உள்நகைக்கிளை போலும் கைக்கிளையோன் என்று தோழி தலைமகனைக் குறித்ததனால், முருகக் கடவுளுடைய அன்பர், பிறவெல்லாம் பேரின்பப் பேற்றினை யெய்தாவாறு தகைத்துச் சிதைக்குமென்று தெளிந்து முருகன் திருவடிக்கண் அன்பு பூண்டு ஒழுகுவதுபோல தலைவரும் ஊரவர் எடுக்கும் அலரும், அது காரணமாகநின்பாலுண்டாகும் மெலிவும் நமது அறத்தொடு நிலையும் பிறவும் நாம் பெறுதற்குரிய இன்பத்தைப் பெறாதவாறு இடையீடு செய்யுமென்று உடன் போக்கினைத் தெருண்டு வந்தார் எனக் குறிப்பித்தாளாயிற்று. கைக்கிளை கைக்கிளை யாழ் என்பன யாழையே விசேடித்து நின்றன. யாழ் அடையடுத்த ஆகுபெய ராய்க் களவொழுக்கத்திற்காயிற்று. உற்கைக்கிளை முத்துப்போல் ஒளிர்கின்றன என்றதனால் திங்களில்லாத நள்ளிருட் காலமென்பது பெற்றாம். இஃது உடன் போக்கிற்கு உகந்த காலமாகும். பக்கத்தே கிடக்கின்ற மணலைக் கிளைத்தவழி, முத்துக்கள் தோன்றி ஒளிசெய்யுமென்றதனால், ஈண்டு நாணழிவு குறித்துச் சிறிது தாழ்த்து நிற்போமாயின் தாயர் முதலியோர் கண் விழித்து இடையீடு செய்வர் என உள்ளுறுத்துரைத்தாளாம். கிளைத்தல்- தோண்டுதல்; “மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குந் தாய்முலையொண் பால்” (திருவள். மாலை 31) என வருதல் காண்க. மெய்ப்பாடு - உவகை, பயன் - தலைவிகேட்டுப் போக்கொருப்படுவாளாவது. 45 கார்த்திகை கார்த்திகை யார்குமி டோன்றி கவினநிலக் கார்த்திகை கார்த்திகை நீர்விழ வோங்கும் கடல்குடைந்துங் கார்த்திகை கார்த்திகை மீனல வன்சுடர்க் காடுதிருக் கார்த்திகை கார்த்திகை மாவையற் காண்முத்தி கண்டனையே. இ-ள்: கார்த்திகை - காந்தளும், கார் - பெரிய, திகை - வேங்கையும், ஆர்குமிழ் - அரிய குமிழ மரமும், தோன்றி - தோன்றியும், நிலம் கவின - நிலம் அழகுபெறுமாறு பூத்து அழகு செய்ய, கார்த்து - கார்காலத்து, கார் - கரிய மேகம், திகை - திசையெங்கும் பரவி, இகு ஐ நீர்விழ - சொரியும் மேன்மையான மழைநீர் பொழிதலால், ஓங்கும் கடல் குடைந்தும் - பெரிய கடலில் மூழ்கிக் கிடந்தும், கார் - மழைக் குளிருக்கு, திகை - திகைத்த, கார்த்திகைமீன் - ஆரல்மீனும், அலவன் - நண்டும், சுடர்க்கு ஆடு - வெயிலொளியில் கரையில் விளையாட்டயரும், திருக்கார்த்திகை - அழகிய கார்த்திகை நாளில், கார்த்த - கரிதாகிய, இகை - கற்றிரள் களையுடைய, மாவையன் - மாவைப் பதியிலுள்ள முருகப் பெருமானை, காண் - (நெஞ்சே) காண்பாயாக, முத்திகண்டனை - காணின் முத்திபெற்றாயாகுவை, எ-று. “கோடல் குவிமுகை யங்கை அவிழ, தோடார் தோன்றி குருதி பூப்ப” (முல்லை 95-6) என்றும், “இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் பொன்செய் குழையின்துணர் தூங்க” (கார். 28) என வருவனவற்றால் இப்பூக்கள் கார்காலத்தே மலர்வனவாதல் தெளியப் படும். திகை - தீகையென்பது; அஃதாவது குறிப்பு மொழியாய் வேங்கை மேற்று; “தீத்தீண்டு கையார்” (திணைமா. 5) என்றாற் போல. கார்காலத்து மழைபொழியுமிடத்து ஆரலும் நண்டும் மிக்க களிப்புற்றுச் செருக்கித் திரியுமாயினும், ஈண்டுக் குளிர் மிகுதியால் கரையேறி வெயிலில் விளையாட்டயர்தலும் உண்மையின், அதனைக் கூர்ந்து நோக்கி இவ் யமகத்து அமைத்துப் பாடியது நோக்க; இப்புலவர் இயற்கைக் காட்சியில் மிக்க ஈடுபாடுடையவர் என்பது புலனாகிறது. கார்த்திகை நீர்விழ வோங்குங் கடல் குடைந்தும் என்ற தொடர், கார்த்திகை மாதத்தில் நீராட்டு விழாவின்கண் கடலாடியும் என்பதொரு நயந் தோன்றிற்று. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் மாவைப் பதியில் முருகனைக் கண்டு தரிசிக்கும் பயன் பெரிதென்பார். “கார்த்திகை நாளில் மாவையனைக் காண்க” என்றும், காணும் பயனை, “முத்தி கண்டனை” என்றும் கூறினார். சுடர்க்காடு - திருக்கார்த்திகை, “கார்த்திகை மாவையற்காண்” என்ற தொடரை, மேலைக் “கார்த்திகை நீர்விழ வோங்கும் கடல் குடைந்தும்” என்பதனோடு உடன் வைத்து நோக்குமிடத்து. கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாளில், நீர்விழா நடத்தலும், கடலாடுதலும் சுடர்க்காடுபோல விளக்கேற்றி வைத்துப் பரவுதலும் நிகழ்வதாகிய கார்த்திகை விழா நிகழ்ச்சி இனிது தோன்ற நிற்கும் நயம் காண்க. “கார்த்திகை நீர்விழ வோங்கும் கடல் குடைந்து”, “சுடர்க்காடு திருக்கார்த்திகை கார்த்திகை மாவையற்காண்”. முத்திகண்டனை யாம் என நயப் பொருட் கேற்ப இயைத்து, திருக்கார்த்திகை கார்த்திகை என்ப வற்றிற்கு, கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் மாவையனைக் காண்க என உரைத்துக்கொள்க. இக்கார்த்திகை விளக்கீட்டு விழா இரண்டாயிரமாண்டுகட்கு முன்பிருந்தே தமிழ் நாட்டவர்க்கு உரிய விழாவாய் நடைபெற்று வருவதொன்று என்பது, “குறுமுயல் மறுநிறங் கிளரமதி நிறைந்து, அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மருகுவிளக் குறுத்து மாலை தூக்கிப், படிவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதில் அம்ம” (அகம் 141) என்ப தனால் இவ்வுண்மை துணியப்படும். இற்றைநாளில் பண்டைத் தமிழ் நெறியைக் கைநெகிழ்த்து பிறநாட்டு விழாவும் நடையும் பெரிதும் மேற்கொளல் வேண்டும் எனும் பேதைமை, நாட்டவர் மனதில் இடம்பெற்று நிற்பதால், இந்நாட்டில் காணப்படாத தீபாவளியில் செருக்கிக் களியாட்டயர் கின்றனர். “ஏதம்கொண்டு ஊதியம் போகவிடலன்றோ பேதைமை.” இகை, கற்றிரள்; இஃது - இகுப்பம், இகுப்பு, இகையென வழங்கும். இகை யென்பது அருகிய வழக்கிற்றாய், கொங்கு நாட்டு மலைவாணரிடையே காணப் படுகிறது; “இகையிகையாயிருக் கிறகல்” என்பது அவர் வழக்கு. “இருங்கல் இகப்பத் திறுவரை சேராது குன்றிடம் பட்ட வாரிட ரழுவம்” (மலைபடு. 367-8) எனச் சான்றோர் கூறுதல் காண்க. கார்த்த இகை - கார்த்திகையெனப் பெயரெச்சத்தகரம கெட்டு முடிந்தது. இனி, திருக்கார்த்திகையைத் திங்களாகவும், கார்த்திகையைக் கார்த்திகைநாள் விழாவாகவும் கொள்ளினு மமையும். 46 கண்டன கண்டன மார்கடன் மாவையைக் காவிசையங் கண்டன கண்டன மென்மொழி மாப்புனங் காவல்வள்ளி கண்டன கண்டன கந்தொலைத் தானைக் கடப்பமலர்க் கண்டன கண்டன மையனைக் காண்டிமோக் கந்தருமே. ஐயமறுத்தல் இ-ள்: கண் - உயர்வாகக் கருதப்படும், தனமார் கடல் மாவையைக் கண்டனகா - முத்தும் மணியும் பவளமுமாகிய செல்வம் நிறைந்த கடல்சூழ்ந்த மாவைப் பதியைக் கண்டவை யாகிய சோலைகள், விசையம் கண்டன - சூரியமண்டலத்தைக் கண்டன, (ஆதலால்) கண்டு அன - கண்டசர்க்கரைபோலும், மென்மொழி - மிருதுவாகப் பேசும் சொற்களையும், மாப்புனம் காவல் - பெரிய தினைப்புனத்தைக் காத்தலுமுடைய, வள்ளி கண்ட - வள்ளிநாயகியார் கண்டு வெருவிய, அல்நகு அண்டன் நகம் - இருள்போலும் மேனியோடு போந்து அச்சுறுத்துவான் போன்று பிளிறி யுதவிய விநாயகக் கடவுளாகிய யானையை, தொலைத்தானை - தொலைத்து வெருட்டுவான் போலத் தோற்றி அவ்வள்ளி நாயகியாரின் அச்சத்தைத் தொலைத்துக் கூடியவனும், கடப்பமலர்க் கண்டன் - கடப்பமாலையணிந்த கழுத்தினையுடைய வனும், அகண்டன் - அளவுபடாத முதல்வனும், நம் ஐயன் - நமக்குத் தலைவனுமாகிய முருகப் பெருமானை, காண் - சென்று காண்பாயாக, மோக்கம் தரும் - அக்காட்சியே வீடுபேற்றினைத் தரும், எ-று. மாவைப்பதியைக் கண்ட சோலையிலுள்ள மரங்கள் சூரிய மண்டலத்தைக் கண்டனவாதலின், அம் மாவைப்பதியில் எழுந் தருளியுள்ள முருகப்பெருமானைக் காணின் வீடுபேறு பெறுவது திண்ணமென்றாராயிற்று. மேலே திருக்கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் மாவை முருகனைக் காணின் முத்திகண்டா யாகுவை என்றது கேட்டவழி, அந்நாளில் அன்றி வேறு நாட்களில் காணின் அம்முத்தி யெய்தாது போலும் என்றெழுந்த ஐயத்தினை, அந்நாளேயன்றி வேறு எந்நாளில் காணினும், அக்காட்சி மோக்கந் தரும் என ஐயமறுத்தாராயிற்று. இதனைச் சாதிப்பதற்கு அவர் காட்டும் ஏது, “மாவையைக் கண்டனவாகிய காவிசையம் கண்டன” என்பதனால் கூறினார். விசையம் - சூரிய மண்டலம். கண்டன என இறந்த காலத்தாற் கூறவே, சூரிய மண்டலம் கடந்து அதற்கு மிக அப்பாற்பட்டதாகிய திங்கள் மண்டலத்தைச் சேர நின்றன என்பது பெற்றாம். வள்ளிநாயகியார்முன் தோன்றிய விநாயகக் கடவுளாகிய யானையைக் கண்டு, அவர் தம் மனத்துக்கொண்ட வெகுளி நீங்கி, அச்சம் மிகுந்து போமிடம் வேறு காணாது அலமரக் கண்டு, முருகன் அவர் முன்னே சென்று நின்று அவரைத் தாங்கி, அக்கடவுள் யானையைத் தாம் தொலைத்தது போல அவர் காணக்காட்டி வணங்கினானாக. அவ் யானை மீண்டது என்னும் செய்தி, “அஞ்சலை யஞ்ச லென்னா வணைத்தொரு கரத்தின் மாதைக், குஞ்சர மடுத்துச் சீறக் குமைப்பவன் போல வேற்கை, குஞ்சியின் மேக்க தாக்கிக் கும்பிடக் களித்து வேட, மஞ்சனை யஞ்சிற்றென்ன மறைந்தது தெய்வ வேழம்” (களவு. 177) எனவரும் தணிகைப்புராணத் தீஞ்சுவைக் கவியால் தெளிக. 47 கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காயொலிநே கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுமாவைக் கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காண்கிலக்கீ கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுவரே. இஃது அடிதோறும் முதல் நான்கு சீரும் ஒரு சொல்லே வரத் தொடுத்த யமகம். இ-ள்: கந்து - பலவாச்சியங்கள் முழங்கும், அரங்கு - தேவசபையில், அந்தரம் கந்தரம் - தேவகாந்தாரமென்னும் இசையை, கந்தர் - கந்தருவர், அங்கு ஆய் ஒலி - அவ்விடத்தே ஆராயும்இசையோசைகள், அநேகம் - பலவாகவுடைய, தரங்கம் - அலைகள், தரம் - மலைபோல் எழுந்து, கம்தரங்கு - வான் செல்லுதற்கு வழியிது என்று, அந்தரம் காட்டும் - மேனோக்கிக் காட்டும், மாவைக் கந்தர் - மாவைப்பதியில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுள், அங்கம் - உடல் முதலியனவும், தரம் - மனை, நிலம், பொன் முதலியனவும், கந்து - கெடுகின்ற, அரு அங்கு - அரிய நிலைமையாகிய அப்பொழுதில், அந்தரம் - நிலையாது கெடு வதை, காண்கில் - கண்டு தம்மை நிரந்தரமாக அடையின் அடைப வர்க்கு, அக்கு - உருத்திரக் கண்மணியும் கம் - தேவர் பொருட்டு, ஈ - அவர்கள் கொடுத்த, தரம் - நஞ்சினையுண்டு தரித்த, கந்தர் - கழுத்தையுமுடைய, கந்தர் - எப்பொருட்டும் கருத்தராயுள்ள சிவபெருமான் உபதேசிக்கப்பெற்ற, அந்தரம் - மறைமுடிவான நுண்பொருளை, காட்டுவர் - காட்டியருளுவர், எ-று. கந்தர் அந்தரம் சுந்தரம் அங்கு ஆய் ஒலி அநேகமுடைய மாவையெனவும், தரங்கம் சும்தரங்கு (என்று) காட்டும் மாவை யெனவும் இயையும். கத்து - கந்து என மெலிந்தது. காந்தாரம், கந்தரம் எனக் குறுகிற்று. தரங்கு, வழி; கந்துதல், கெடுதல். கருத்தர் என்னும் சொல்லின் சிதைவாகிய கத்தர் என்பது கந்தர் என மெலிந்தது. கந்தர் என்றே கொண்டு எப்பொருட்டும் பற்றுக் கோடாயுள்ள இறைவர் என்று உரைப்பினுமாம். இதனாற் சொல்லியது: மாவைப்பதி வானுலகிற்கு வழியிது என்று காட்ட மாவைப்பதியிலுள்ள முருகப்பிரான், முத்தி பெய்து தற்குரிய மூலப்பொருளைக் காட்டுவன் என்பதாம். 48 காடியங் காடியங் கஞ்சூடி மைந்தனி காயமிலங் காடியங் காடியங் காட்டிய மாவைக் கடலின்முழுக் காடியங் காடியங் கைதொழு தேத்திக் கழிக்குதிர்சாக் காடியங் காடியங் கச்செலுங் கூற்றுவன் கம்பலையே. இ-ள்: காடி - காடுகிழாளாகிய துர்க்கையுடன், அங்கு - அப்பொழுது தானும் கூடி, ஆடி - ஆடுபவனும், அங்கம் சூடி - எலும்பை யணிந்தவனுமாகிய சிவனுக்கு, மைந்தன் - மகனான முருகனை, நிகாயம் இல் - ஒப்பில்லாத, அங்கு - அத்தேவருலகத்து அமராவதி நகருக்கு, ஆடி - மண்ணிடத்தே பிரதிபிம்பிக்குமாறு வைத்த கண்ணாடிபோல, அம்காடு - அழகிற்குக் காட்டாக, இயம் - சொல்லும் சிறப்பை, காட்டிய - காட்டுவதாயுள்ள, மாவை - மாவைப்பதியில், கடலில் முழுக்காடி - கடலில் நீராடி, அங்கு ஆடி - அங்க முழுதும் திருநீறணிந்து, அங்கே தொழுது - அழகிய கைகளால் தொழுது, ஏத்தி - துதித்து, சாக்காடு இயம் - சாதலைப் பொருளாகக் கொண்டு, காடு இயங்க - பிணப்பறை முழங்க, செலும் - செல்லச் செய்யும், கூற்றுவன் கம்பலை - யமனால் உண்டாகும் நடுக்கத்தை, கழிக்குதிர் - போக்கிக் கொள்வீர்களாக, எ-று. சிவபெருமான் காளியோடு தானும் உடனிருந்து வாத நடனம் செய்த வரலாற்றை யுட்கொண்டு, அவரைக் “காடி இயங்கு ஆடி” என்றார். சருவசங்காரத்தில் செத்த தேவர்களின் எலும்புகளைத் தேகத்தில் அணிந்துகொண்டு திருநடனம் புரிவ ரென்ப வாகலின், “அங்கம் சூடி” என்றார். அங்கம் - ஆகுபெயர். “செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்” (நாகைக் காரோணம்) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுவது காண்க. வானுலகத்து அமராவதி நகரைப் பிரதிபிம்பித்துக் காட்டுதற்கு மண்ணிடையே வைத்த கண்ணாடிபோல, தேவருலகத்துச் செல்வமும் பிற நலங்களும் நிறைந்திருக்கும் சிறப்பால் மாவைப்பதியை, “அங்கு ஆடியம் காடு இயம் காட்டிய மாவை” என்றார். வானகர் பிரதிபிம்பித்துக் காட்டுதல், “மடுவில் வானக ருருவுகாட்டியது போல் மதில்சூழ் கடிகொள் மாநகர்” (நைடதம் - நகர. 1) என்பதனாலறிக. காட்டு - எடுத்துக்காட்டு; இஃது இடைக் குறைந்து காடு என நின்றது. அங்கம் என்பது கடை குறைந்து அங்க என நின்று ஆடி என்பதனோடியைந்து அங்காடி யென நின்றது. கடலில் முழுக்காடி என்றவர் மீட்டும் அங்கம் ஆடி என்பதனால் நீராடியபின்பு ஆடுவது திருநீறாதலின், திருநீறாடி யென்று கூறப் பட்டது. இதனால் மாவைப்பதிக்குச் சென்று கடலில் நீராடி, மேனி முழுதும் திருநீறணிந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனைக் கையால் தொழுது வாயால் துதித்து மனத்தால் தியானித்து வழிபடின், யமபயத்தைப் போக்கிக்கொள்ளலா மென்பார், “சாக்காடு இயம்காடு இயங்கச் செலும் கூற்றுவன் கம்பலை கழிக்குதிர்” என்றார். இனி நிகாயம் இல் அங்காடி என்பதற்கு ஒப்பில்லாத கடை வீதிகளில், அம்காடு - அழகிய வண்டிகளின், இயம்காட்டிய மாவை - போக்குவரவுகளால் உண்டாகும் முழக்கம் இடையறா திருக்கும் திறத்தைத் தன்கண் உளதாகக் காட்டிய மாவைப்பதி என்று உரைப்பினுமாம். வண்டிகளைக் கூறவே, உபலக்கணத்தால், பல்வேறு தேய மக்களின் வரவு செலவும், அவர் செய்யும் பண்ட மாற்றும் என்று இன்னோரன்ன செயல்களால் பெரு முழக்கம் உண்டாதலும் கொள்ளப்படும். அன்றியும் மாவைப்பதி கடற் கரைக் கண்ணதாகலின், காலின் வரும் மக்கட் கூட்டமேயன்றிக் கலத்தில்வரும் பல்வேறு தேயமக்ளின் தொகைக்கு அளவின்றாம் என்க. இவ்வங்காடியில் எழும் ஒலி எழுத்துக்ககப்படாத பேரொலி யாதலின், பலவாச்சியங்களின் திரண்ட ஓசையை ஒப்பாக்கி, “இயம் காட்டிய மாவை” யென்றார் என்க. “பாய தொன்மரப் பறவைபோல் பயன் கொள்வான் பதிஎன தேய மாந்தரும் கிளந்தசொற் றிரட்சிதான் தூய மாயை காரிய வொலியன்றி வான்முதற் கருவின் ஆய காரிய வோசையே யாய்க்கிடந் தன்றே.” (திருவிளை. மதுரை 67) எனப் பிறசான்றோரும் கூறுதல் காண்க. நீராடியபின் திருநீறாடுவதே சைவச் சான்றோர்கள் மரபு என்பதனைச் சேக்கிழார் பெருமான், “புலரி யெழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணீற் றினுமூழ்கி” (சேரமான் பு. 8) என ஓதிய திருவாக்காலுணர்க. 49 கம்பல கம்பல னார்மாவை வாசர் கருத்தினுருக் கம்பல கம்பல னாதி தரவுண்டு காவல்செயிக் கம்பல கம்பல மாடிதன் மைந்தரிற் காமமயக் கம்பல கம்பல னாக்குந் திறங்கண்டுங் கைக்கலையே. தலைமகன் களவே விரும்பியொழுகுதல்கண்டு ஆற்றா ளாகிய தோழி அவன் கேட்பத் தலைவிக்குச் சொற்றது. இ-ள்: பலகம்பலன் ஆதி - பலவாகிய நீரும் சோறும் பழமும் பிறவும், தரஉண்டு - நம் தன்னையர் கொணர்ந்து தரக் கொண்டு உண்டு, காவல் செய் இக்கம் பலகு - நாம் காத்தொழுகும் இச்செந் தினைக் கதிர்கள், அம்பலமாடி தன் மைந்தரின் - அம்பலத்தில் ஆடும் சிவபெருமான் மகனான முருகக் கடவுள் கொண் டொழுகிய, காம மயக்கின் - காம வொழுக்கம்போல, அம்பல் - அலர்விளைவித்து, அகம் - இற்செறிப்பையே, பலனாக்கும் - பயப்பிக்கும், திறம் கண்டும் - கூறுபாட்டினைக் கண்டிருந்தும், கைக்கலை - இக் களவொழுக்கத்தை விடுகின்றாயில்லை, மாவை வாசர் - மாவைப் பதியில் வாசம் செய்பவரான நம் தலைவர், கருத்தின் உருக்கம் - தம் மனத்திற் கொண்ட காதலன்பால், கம்பல - மேகங்கள் பலவாய்த் திரண்டு, கம்பல் - முழங்குதல் கண்டும், அனார் - இங்கு வருவதைத் தவிர்கின்றாரில்லை, இதற்கிடையே யான் செய்வகை யறியாது வருந்துகின்றேன், எ-று. அவரும் வருதலொழியார்; நீயும் அவரை ஏற்றலை மறாய்; தினையும் முற்றி இற்செறித்தற்கு ஏதுவாயிற்று; அலரும் எழுவ தாயிற்று; இவற்றின் விளைவு என்னாகுமோ என்று அஞ்சுகின்றேன் என்றாளாயிற்று. சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பவாகலின், பெரிதினைப் பல என்றார். நீரும், சோறும், பழமும், பிறவும் எனப் பொருள்கடாம் பலவாதலின் “பல” என்றாரென்றுமாம். “பலகம் பலனாதி தரவுண்டு” இங்கு உறையும் கடப்பாடுடைய நாம் அவர் வரையினராய் ஒழுகவேண்டியவராயுள்ளோம் என முதற்கண் தமது தன்னையர் உரிமை கட்டினாள். தினைமுற்றினமையின் நம் தமர் நம்மை இனி இல்லகம் கொடுபோவாராயினும், நம் ஒழுக்கம் அலர் பயந்து விட்டதனால் இல்லின் கண் நம்மைச் செறித்தலையே செய்வர் என்பாள், “காவல் செய் இக்கம்பலகு அம்பல் அகம் பலனாக்கும்” என்றும் இதனை அறிந்துவைத்தும் தலைவர் வரைய முயலாது களவே விரும்பி யொழுகுகின்றனர் என்பாள், “அகம்பல னாக்கும் திறம் கண்டும்” என்றும், அவரை ஏலாது மறுப்போமாயின், அவர் தெருண்டு வரைதற்கு வேண்டுவன செய்வரெனின், நீ அவரை மறாது அவர் கூட்டமே விரும்பி மெலிகின்றாய் என்பாள், “கைக்கலை” என்றும் அவர் வரும் ஆற்றது ஏதம் கண்டும் அஞ்சாது வருதலைத் தவிர்கின்றிலர் என்பாள், “மாவைவாசர் கருத்தினு ருக்கம் கம்பல கம்பல் (கண்டும்) அனார்” என்றும் கூறினாள். இக் கம்பலகு அகம்பலனாக்கும் என்றது தினைமுதிர்வுரைத்து வரைவு கடாதல் அம்பல் அவர் அறிவுறீஇயது; “கைக்கலை” என்றது. இற்செறிப்பும் ஆற்றாமையும் கூறி வரைவு கடாயது; “கம்பல கம்பல்” என்றது நெறியருமை சாற்றி வரைவு கடாயது. தலைமகன் கேட்குமிடத்துக் கைக்கலை யென்றது இத்துணை இடையீ டுண்மை கண்டு நீ வரையாது களவே விரும்புகின்றனை என்றாள். மெய்ப்பாடு- மருட்கை, பயன் - தலைவன் கேட்டு விரைவில் வரைவானாவது. 50 கைக்கவி கைக்கவி பார்தாங்கு பாண்டிக் கரையொடிலங் கைக்கவி கைக்கவி தாசரிற் செல்லக் கடனெடுத்தோ கைக்கவி கைக்கவி னாரணை செய்தவன் காதன்மரு கைக்கவி கைக்கவி யாற்புகழ் மாவையன் கைச்சத்தியே. இ-ள்: கை - ஒப்பனையமைந்த, கவிகைக்கவி - குடை யேந்திய கவிஞர் துணையாக, பார்தாங்கு - பூமியை யாள்கின்ற, பாண்டிக்கரையொடு - பாணடியர் நாட்டுக் கடற்கரையுடன், இலங்கைக்கு - இலங்கைநாட்டுக் கரைக்கு, அவிகைக் கவிதாசரின் - தேவர்க்கு உணவாகிய அமுதம் கடைந்து தந்த சுக்கிரீவன் துணையால், செல்ல - தான் செல்வதற்காக, கடல் - கடலில், நெடு - நெடிய, தோகைக்கவி - வாலையுடைய குரங்குகள், கை - தம் கைகளால், கவினார் அணை செய்தவன் - அழகிய சேதுபந்தனம் பண்ணிய திருமாலின், காதல் மருகை - அன்புடைய மருமகனான முருகக் கடவுளை, கவிகைக் கவியால் - கேட்டார் நல்லவை யெனக் கைகவிக்கும் பாக்களால், புகழ் - புகழ்தற்கு ஏது, மாவையன் - மாவைப்பதியிலுள்ள முருகனது, கைச்சத்தியே - கையிடத்ததாகிய சத்திவேலின் துணையேயாகும், எ-று. பண்டைநாளிற் புலவர்கள் உயரிய உடையுடுத்து, கையிற் குடையேந்தி, அடைப்பைக்காரர் சூழ்ந்துவர மிக்க சிறப்புடன் அரசவை முதலிய இடங்கட்குச் சென்று மேம்பட்டிருந்தனராதலின், அவ்வுண்மைக் குறிப்புத் தோன்ற அவர்களைக் “கைக் கவி கைக்கவி” என்றார். பரமன் புலவர் உருக்கொண்டு தருமியின் பொருட்டுச் சங்க மண்டபம் போந்த திறம் கூறிய பரஞ்சோதியார், “முத்தாற் புரிமதிக் குடைக்கீழ்ப் பொற்காற் கவரிபால் புரண்டு துள்ள” வந்தார். (திருவிளையாடல். 52: 100) என்று கூறுதல் காண்க. மேலும் சங்ககாலத்திலிருந்த பாண்டி வேந்தர், நக்கீரர், மாங்குடி மருதனார் முதலிய புலவர்களைத் துணையாகக் கொண்டு நாடாட்சி புரிந்த நலத்தைப் புறநானூறு முதலிய தொகை நூல்கள் கூறுதலால் “கவிகைக் கவி பார்தாங்கு பாண்டி” என்றார். இதற்குக் கவிந்த குடை நிழற்கீழ் இருந்த வேந்தர் என்றும் கூறலாம். பண்டு, தேவர் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தே வலிகுறைந்து மெலியவே சுக்கிரீவனும் வாலியும் அவர்க்குத் துணை செய்து அமுதம் பெறுவித்தனர் என்பவாகலின், “கவிகைக் கவிதாசர்” என்றும், இச்சுக்கிரீவன் முதலாயினார், இராமனுக்குத் தாசராய்த் தொண்டாற்றியதுபற்றி, “கவிதாசர்” என்றும் கூறினார். நெடுந்தோகை என்பது நெடுத்தோகையென விகாரமாயிற்று. தோகை - வால். “வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்” (அகம். 122) என வருதல் காண்க. மருகு - மருகன். கவிதைக் கவி - கேட்டார் நன்றென்று மகிழ்ந்து உவகைக்குறியாகக் கைகவித்தற்கு ஏதுவாகிய கவி; எனவே குற்றமில்லாத கவியென்றாராயிற்று. “அரியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங் கால், இன்மை அரிதே வெளிறு” (குறள் 503) என்பவாகலின் குற்றமேயில்லாத கவிபாடல் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினார்க்கு இயலாதென்பது பெறப்படும்; “குற்ற மேதெரி வார் குறு மாமுனி, சொற்ற பாவினும் ஓர்குறை சொல்குவ” (கந்தபு. பாயிரம்) எனப் பெரியாரும் கூறினர். அற்றாக அடியேன் குற்றம் சிறிதுமே இல்லாத கவிகளைப் பாடுதற்குக் காரணம் என் சிற்றறிவின் சத்தியன்று; எம்பெருமான் முருகக்கடவுளின் திருக்கைவேற் சத்தியே யென்பார், “மாவையன் கைச்சத்தியே” என்றார். தன்னறிவைப் பிரித்துக்கொண்டமையின் ஏகாரம் பிரிநிலை; தேற்றமெனினும் ஒக்கும். புகழ், முதனிலைத் தொழிற் பெயர். 51 சத்தியஞ் சத்தியஞ் ஞானத்தி னால்விர சாசைசுகஞ் சத்தியஞ் சத்தியஞ் சாற்றொழின் மாவையைச் சார்ந்திடுமா சத்தியஞ் சத்தியஞ் சாத்தினர் சேய்மலர்த் தாள்பணியாய் சத்தியஞ் சத்தியஞ் ஞான்றிடு ஞானந் தயங்குருவே. இ-ள்: அஞ்ஞானத்தினால் - அறியாமையால் உண்டாகும், விரச ஆசை - சுவையில்லா ஆசாபாசங்கள், சத்தி - மாயையின் சம்பந்தமாகையால், சத்தியம் என்று - அவை சாத்தேயம் என்று, சுகம் - கிளிகள், சத்தி - சப்தித்து, சத்தியஞ் சாற்றும் - சத்தான வற்றையே சொல்லும், எழில் மாவையைச் சார்ந்திடு - அழகிய மாவையைச் சென்று சார்வாயாக, மாசு அத்தி அஞ்ச - கரிய யானையை அஃது அஞ்சுமாறு பற்றி, அத்தியம் சாத்தினர் - அதன் தோலைப் போர்த்துக்கொண்டவரான சிவனுக்கு, சேய் - மகனாகிய முருகனது, மலர்த்தாள் பணியாய் - திருவடித் தாமரையைப் பணிவாயாக, (நெஞ்சே) அஞ்ஞான்று - அப்போது, சத்தி - ஞானசத்தி, இடு - அருளும், ஞானம் தயங்கு உரு - ஞானம் விளங்கும் திருவுருவம் எய்துவது, சத்தியம் - நிச்சயமாகும், எ-று. அஞ்ஞானம் காரணமாக உண்டாகும் ஆசைகளும் அவற்றாற் பிறக்கும் இன்பமும் நற்சுவையுடையவல்லதாதலின், “அஞ்ஞானத் தினால் விரச ஆசை” என்றும் அந்த அஞ்ஞானமும் மாயையின் சத்திகாரியமாதலின், “சத்தியஞ் ஞானத்தினால்” என்றும் கூறினார். சத்தி சம்பந்தமுடையவை சாத்தேயமாதலின், “சத்தியம்” என்றார். சாத்தேயம், சத்தியமெனச் சிதைந்தது. ஆசாபாசங்கள் மாயா சத்தியின் காரியம்; அவற்றைப் பொருளென்று கொள்ளன்மின் எனக் கிளிகள் எப்போதும் சொல்கின்றன என்பார், “சுகம் சத்தி சத்தியம் சாற்றும்” என்றார். சத்தியம் என்றார். அவற்றின் சொற்கள் நிலைத்த பயன் தருவனவாகலின், சத் என்னும் சொல்லடியாகப் பிறந்ததனால் சத்தியமாயிற்று. இவ்வாறு கிளி முதலிய பறவைகளும் சத்தியத்தைச் சொல்லி, மாவைப் பதியைச் சார்வோரைத் தெருட்டு தலின், “எழில் மாவையைச் சார்ந்திடு” என்றார். நெஞ்சொடு கூறலின் “சார்ந்திடு” எனப் பணிக்கின்றார். சப்தம் என்னும் கொல்லடியாகப் பிறந்த சத்தியென்னும் வினை முதனிலை, வினையெச்சப் பொருட்டாய்ச் சாற்றும் என்பதனோடு முடிந்தது. தாருக வனத்து முனிவர் சிவனைக் கோறற்கென்று வேள்வியிற் படைத்துவிட்ட யானையாதலின், அதனை “மாசு அத்தி” யென்றார். மாசு ஈண்டுக் கருமை மேற்று. தன்னை யஞ்சுவித்துக் கொல்லவந்த அது தானே யஞ்சுமாறு பற்றிச் சிவபெருமான் கொன்றமை தோன்ற, “மாசு அத்தி அஞ்ச” என்றும் அதன் தோலை அவர் தாமே போர்த்துக்கொண்டா ராதலின், “அத்தியம் சாத்தினர்” என்றும் கூறினார். அத்தியின் சம்பந்த முடையதனை “அத்தியம்” என்றார். முருகக் கடவுள் ஞான வடிவினராதலின், இவர் திருவடி பணிபவர்க்கு ஞான சக்தியின் அருளால் ஞானம் விளங்குமாதலின், “சத்தியஞ் ஞான்றிடு ஞானம் தயங்குரு சத்தியம்” என்றார். 52 குருத்தங் குருத்தங் கழல்புனைந் தார்சொற் குரவர்நல்வெங் குருத்தங் குருத்தங் குணவமிர் தம்மை கொடுத்தமறைக் குருத்தங் குருத்தங் குருமணத் தார்சொற்ற கோமகன்சிக் குருத்தங் குருத்தங் கிமண்செய் செயுமாவைக் கோகத்தனே. இ-ள்: குருத்தங்கு - நிறம் அமைந்த, உருத்து - உட்குப் பொருந்திய, அம்கழல் புனைந்தார் - அழகிய வீரகண்டை யணிந்த வரும், சொல்குரவர் - தேவாரத் திருப்பாட்டுக்களைத் திருவாய் மலர்ந்தருளிய சமயாசாரியரும், நல்வெங்குருத்து - வளவிய சீகாழிப் பதியிடத்தே, அங்குருத்து - சிறு பிள்ளையாய்த் தோன்றி, அங்கு உணவமிர்து - அவ்விடத்தே அவர்க்கு உணவாக ஞானப் பாலை, அம்மை கொடுத்த - பார்வதி தேவியார் கொடுப்பவுண்ட, மறைக்குருத்து - வேதியர் குலக் கொழுந்தானவரும், குருதங்கு - பெருமைதங்கிய; உரு - அழகிய, மணத்தார் - நறுமணம் கமழும் மாலையணிந்த, கோமகன் - உக்கிர குமர பாண்டியனுமான முருகன், சிக்கு - தன்பால் சிக்குண்ட, உருத்து - இடியேற்றினை யுடைய மேகம், உருதங்கி - நெடிது தங்கி, மண்செய் - மழைபெய்து மண்ணவர் இனிது வாழச் செய்தனை, செயும் - செய் தருளிய, மாவைக் கோகத்தன் - மாவைப்பதியில் எழுந்தருளும் அரசர்பிரானாவான், எ-று, ஞானத்தின் துருவுருவினராதலின், “குருத்தங்கு” என்றார். பரசமய கோளரி என்பது எய்த, “உருத்தங் கழல் புனைந்தார்” என்றார். உருத்து உட்குதலையுடையது. அவர் கூறிய திருப் பாட்டுக்களைத் “திருநெறிய தமிழ்” என்றும், “சொல்” என்றும் அவரால் வழங்கியருளப் பட்டமையின் “சொல் குரவர்” என்றார். குரவர் - சமயக்குரவர். நல்ல வளம் செறிந்த திருப் பதியாதலின், “நல்வெங்குரு” என்றார். வெங்குரு - சீகாழி; சீகாழிப் பதிக்குரிய திருப்பெயர் பன்னிரண்டனுள் வெங்குரு என்பது ஒன்று. இந்நகர்க்கண் தருமன் என்னும் யாவரும் விரும்பும் நல்லரசன் ஒருவன் இருந்து ஆட்சிபுரிந்தமையான், இந்நகர்க்கு வெங்குரு என்னும் பெயர் உண்டாயிற்று; இதனை ஞானசம்பந்த சுவாமிகளே பல்பெயர்ப்பத்து என்னும் பதிகத்துள், “செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய்தெரிய, வெங்கோத் தருமன் மேவியாண்ட வெங்குரு” (பா. 4) என்று விளக்கியருளி யுள்ளார்கள். இத்திருப்பதிக்கண் பிள்ளையார் பிறந்தருளியதால், “வெங்குருத்து அங்குருத்து” என்றார். அங்குரித்து என்பது எதுகை யின்பம் குறித்து, “அங்குருத்து”எனத் திரிந்தது. உண்டலிலும் கொடுத்தல் பெரிதாதலின் அதனை வியந்து “அம்மை கொடுத்த மறைக்குருத்து” என்றார். மறைக்குருத்தை வளரச் செய்வது மறை முதல்வர் கடனாதலின், மறை முதல்வி அமிர்து கொடுத்த மறைக் குருத்து என்றொரு நயந்தோன்றல் காண்க. உக்கிர குமாரனாய்த் தோன்றிப் பாண்டிநாட்டை யாண்டு வருகையில், நாடு மழையின்மையால் நலிவெய்த, அக்காலை, இந்திரனுடைய மேகங்கள் மேயவந்தவற்றை உக்கிர குமர பாண்டி யனான நம் முருகக்கடவுள் பற்றி மழை பெய்வித்துக் கொண்ட வரலாற்றை, “கோமகன் சிக்கு உருத்தங்கு உருத்தங்கி மண்செய் செயுமாவைக் கோகத்தன்” என்றார். இவ் வரலாற்றைத் திருவிளை யாடற் புராணத்துட் காண்க. உருமணத்தார் என்பதற்கு மணவூரார் பெண்கொடுப்ப மணந்து கொண்ட அவ்வுக்கிரகுமாரன் வரலாற்றைக் குறித்துக் கோடலும் ஒன்று. முருகக்கடவுளே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமார பாண்டியனாகவும் பிறந்தருளினார் என்று கூறும் வரலாறு பிறப்பும், இறப்பும் இல்லாத முதல்வன் முருகன் என்று கூறும் உண்மை மொழிக்கு மாறாதலைக் கண்டு தெளிக. 53 கோகன கோகன கர்க்கன லாற்புரங் கொன்றபெம்மான் கோகன கோகன கச்சடை யான்றன் குமரனுலாக் கோகன கோகன கந்தொலைத் தான்மாவைக் கோட்டமருங் கோகன கோகன கப்பூவும் பொன்னிற் கொளுஞ்சந்தமே இ-ள்: கோகன கோகனகர்க்கு - தலைமையான மேகத்தின் நிறத்தையுடைய திருமால், தாமரையை இடமாகக் கொண்ட பிரமன் முதலிய தேவர்பொருட்டு, புரம் அனலால் கொன்ற பெம்மான் - முப்புரத்தைக் கண்ணின் தீயால் சுட்டெரித்த பெருமானும், கோ - ஆகாயத்திலுள்ள, கன - பெரிய, கோ - நீராகிய கங்கையைத் தாங்கிய, கனகச்சடையோன் - பொன் போலும் சடையையுடையவனுமாகிய சிவனுடைய, குமரன் - மகனான முருகன், உலாக்கோ - ஐம்பெரும் பூதங்களிலும் உலாவி வரும் தலைவனாவான், கனகோ - மேகங்கட்குத் தலைவனான இந்திரனது, கனகம் - பொன்முடியை, தொலைத்தான் - வளை யெறிந்து தொலைத்தவனும் மாவைக் கோட்டமரும் - மாவிட்டபுர மலையுச்சியிலிருக்கும், கோகன் - அழகிய புயத்தை யுடையவனுமாகிய அப்பெருமான், கோகனகப் பூவும் - கடம்பின் பூமாலையும், சந்தம் - சந்தனமும், பொன்னிற் கொளும் - பொன் போல ஏற்றுக்கொள்வன், எ-று. சிவபெருமான் தேவர்பொருட்டுத் திரிபுரம் எரித்த வரலாற்றைக் காஞ்சிப்புராணக் கயிலாயப் படலத்துட் காண்க. கோகன கோகனர்க்கு என்பது உம்மைத் தொகை; நான்கனுருபுகு பொருட்டுப் பொருளது. முருகக் கடவுள் ஐம்பூதங்களினும் உலாவந்த திறத்தை அக்கரசுதகப் பாட்டிற் காட்டினாம். சூரனுக்குச் சிங்கமுகன் முருகனைப்பற்றிக் கூறுமிடத்து, “ககனம் கால் அழல்நீர் மண்ணேர் மருவுதலானும் மாயை தோய்விலா அவனே வெல்லும்” (சீபரி 176 -7 ) என்று கூறுதலாலும் ஈதறியப்படும். இந்திரன் முடிமேல் வளையெறிந்த வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்து இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்துட் காண்க.” முருகப் பெருமான் கடப்பமாலையும் சந்தனக்காப்பும் மிக விரும்புபவனாதலின் “கோகனகப் பூவும் சந்தமும் பொன்னிற் கொளும்” என்றார். 54 சந்திர சந்திர ளன்னாதி மாமலர் தாம்புலங்க சந்திர சந்திர ணஞ்செய் மதனம்பிற் சார்ந்துளத்தச் சந்திர சந்திர மார்மாவை யாதிப தண்மைகுன்றாச் சந்திர சந்திர வுற்றார் தவிர்த்தித மப்பவமே. இ-ள்: சம் - இன்பம், திரமார் - நிலைக்கப் பொருந்திய, மாவையாதிப - மாவைப்பதியிலுள்ள அரசே, சந்து - சந்தனமும், இரசம் திரள் அன் ஆதி - சுவை பலவும் திரண்ட சோறு முதலி யனவும், மாமலர் - அழகிய பூமாலைகளும், தாம்புலம் - வெற்றிலை பாக்கு முதலியனவும், கசந்து - கைத்து, இரசம் - அவற்றின் சுவையும், திரணம்செய் - துரும்பினும் புல்லிதாகக் கருதி வெறுத் தொதுக்கச் செய்யும்,மதன் அம்பின் - மன்மத மயக்கத்தால் மயங்கி, சார்ந்து - பிறர் மனையைச் சாரலுற்றால், உளத்தில் அச்சம் - மனதில் பிறர் காண்பரோ என்று அலைக்கும் அச்சம், திர - தீர, தண்மை - குளிர்ச்சி பொருந்திய, சந்திரன் குன்றா - சந்திரன் குன்றிய, சந்து - அமரபக்கக் காலமாகிய, இரவு - இரவுக்காலத்தில், அடைந்தார் - சென்றவர், தமப்பவம் - தாம் பின்பு பிறர் காணப் பட்டு இம்மையில் எய்தும் பழிபாவமும் மறுமையில் நரகத் துன்பமும், தவிர்தி - என்னைச் சாராவகை தவிர்ப்பாயாக, எ-று. பிறர் மனையை நயந்து ஒழுகுவார்க்குத் தம்மனையிற் பெறும் சந்தன முதலிய விரைப் பொருள்களும் அன்ன ஆகாராதிகளும் வெறுப்பாய் இருத்தலின், “சந்திர சந்திர ளன்னாதி மாமலர் தாம்புலம் கசந்து இரசம் திரணம் செய்” என்றார். சந்திரன் குன்றிய இரவும், அச்சமும், சார்தலும் கூறினமையின், காம மயக்கத்தால் பிறர்மனை நயத்தலாகிய குற்றம் கூறப்பட்டதாம். இனப் பொருளால் எய்த வைத்தவர் எடுத்தோதாமைக்கு ஏது அதனைத் தாம் கூறற்குக் கூசினார்போலும், “ஒழுக்கமுடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்” (குறள் 139) என்பவாகலின், மதன் அம்பு என்புழி. அம்பு ஆகுபெயர். தீர என்பது திர எனக் குறுகிற்று குன்றா - குன்றிய. இனி, குன்றா என்பதனைத்தன்மையின் வினை யாக்கி, குன்றிய என மறுதலை வினையை வருவித்துச் சந்திரற்கு ஏற்றி யுரைப்பினுமாம். சந்திரன் குன்றிய சந்து, அமரபக்கக் காலம். தமபவம் என்றிருக்கற்பாலது தமப்பவம் என முடிந்தது செய்யுள் விகாரம். 55 தமரத் தமரத் தமரத் தமரத் தகுவனடத் தமரத் தமரத் தமரத் தமரத் தயலர்பிர தமரத் தமரத் தமரத் தமரத் தலைவரெற்குத் தமரத் தமரத் தமரத் தமரத்த மாவையரே. இதுவும் அடிதோறும் முதனான்கு சீரும் ஒரு சொல்லே வரத் தொடுத்த யமகம். இ-ள்: தமர - ஆரவாரத்தையுடைய, தமரத்து - சுற்றத்தா ராகிய சேனாவீரர், அமர - தன்னைத் தொடர்ந்து நிற்க. அதம் மரு - அழிவைப் பொருந்திய, அத்தகுவன் - அச்சூரபன்மா, நடத்து - நடத்திய, அமரத்து - போரின்கண், அமரத்தமர் - சாவாது வெற்றி மேம்பட்ட சிவகணத்து, அமர் - ஒருவராயிருக்க விரும்பும், அத்து - அதற்கு. அயலர் - அயலவராகிய ஏனையோர், பிரதமர் - தமககுத் தலைவர் எனக் கருதப்படுமவர், அத்தம் மரு - இறத் தலைப் பொருந்திய, அத்தமர் - அதமராவர், அத்தம் - (அப்பிரத மரும்) சூறைக்காற்று மோதும் நெடுஞ் சுரத்தில் நின்ற, மரத்து - மரம்போல,அலைவர் - பிறப் பிறப்புக்களால் அலைப்புண்டு வருந்துவர், எற்கு உத்தமர் - எனக்கு உத்தமத் தலைவராவார், அ - அந்த, தமரத்து அமர் - கடற் கரையில் உள்ள, அத்தம் - அழகிய, மரத்த - மாமரங்களையுடைய, மாவையர் - மாவைப்பதியிலுள்ள முருகக் கடவுளாவார், எ-று. சூரபன்மனுடன் செய்த போரில் முருகக் கடவுட்கு ஆளாய்ச் சென்று போருடற்றிய தமர் ஏனை எத்தகைய அடியாரினும் மேம்பட்டவராதலின் அவர் கூட்டத்திருக்கும் அச்சிறப்பினையே இந்நூலாசிரியர் விரும்புகின்றாராதலின், “அமரத்தமர் அமர் அத்து” என்றார். அமர் அது என்புழி அது, அத்து என நின்றது. அடியார்களாகிய கணத்தை “அமரத்தமர்” எனவே ஏனையோர் “மரிப்பவர்” என்றும் எனவே அவர்க்குத் தலைவரும் மரிப்பர் என்பது பெறப்படுதலின், அவரை, “அத்தம்மரு அத்தமர்” என்றார். அந்தம் அத்தம் என வலித்தது. “மற்று அத்தெய்வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும் மேல் வினையும் செய்யும்” என்ற சிவஞானசித்தித் திருவிருத்தம் காண்க. அதமர் - அத்தமர் என நின்றது. உத்தமர் எனவே தலைவர் என்பது பெற்றாம். தமரத்து, ஆகுபெயராய்க் கடற்கரைக் காயிற்று; கங்கையின்கண் இடைச் சேரி யென்பது கங்கைக் கரையின்இடைச்சேரி என்று பொருள் படுவதுபோலும் இலக்கணையெனினும் அமையும். அந்தம்- அத்தம் என விகாரமாயிற்று. அத்தகுவன் என்புழிச் சுட்டு பண்டறி சுட்டு. மராத்த - மரத்த எனக் குறுகிற்று. இனி, மரத்த என்றே கொண்டு பல வகை மரங்களையும் உடைய என்று கோடலும் ஆம். மரத்த என்னும் பெயரெச்சக் குறிப்பு மாவையென்னும் இடப்பெயர் கொண்டது. இதனால் பிற அடியார்கள் தமக்குத் தலைவர்கள் எனக் கருதி வழிபடும் தலைவராவார், இறத்தல் பிறத்தல்களைச் செய்தலின் அதமரேயாவர்; எனக்கு உத்தமத் தலைவராவார் மாவைப் பிரானாகிய முருகர் என்றாராயிற்று. “பெம்மான் முருகன் பிறவான் இறவான்” என்ற அநுபூதி வாக்கு ஈண்டு நினைவுகூர்தற் குரித்து. 56 வையக வையக சேந்திரன் பாவை மணாளவுக வையக வையக லாபிகள் பூவைகள் வன்னிகள்கு வையக வையக மால்குளிர் காரணி வான்பொழின்மா வையக வையக நின்கட் பிணித்தி மலங்கெடவே. இ-ள்: வைய - கூரிய, கவைய - இணையிணையாய் இரு மருங்கும் கவைத்த, கசேந்திரன் பாவை - ஐராவத யானையை யுடைய இந்திரன் மகளான தெய்வ யானையாரின், மணாள - கணவனே, உகவைய - மகிழ்ச்சியையுடையோய், கவைய - காட்டிடத்தே வாழ்வனவாகிய, கலாபிகள் - ஆண் மயில்களும், பூவைகள் - நாகணவாய்ப் புட்களும், வன்னிகள் - கிளிகளும், குவை - கூடியிருக்கும் கூட்டம், அகவையக - உள்ளுறையும் இடமாகக்கொண்ட, மால் குளிர் கார் - மிகக் குளிர்ந்த கரிய மேகம் படிய நிற்கும், வான்பொழில் - உயர்ந்த சோலைசூழ்ந்த, மாவைய - மாவைப்பதியையுடையோய், கவை அகம் - நெறி நில்லாது கவர்த்தோடுதலையுடைய என் மனத்தை, மலம்கெட - என்னைப்பற்றிய மலவாதனை கெட, நின்கண்பிணித்தி - நின்பாலே நிற்கப் பிணிப்பாயாக, எ-று. பாவைமணாள, உகவைய, மாவைய என் கவை அகத்து மலம்கெட,நின்கண் பிணித்தி என முடிவுகாண்க. மருங்குக் கிரண்டாக நான்கு மருப்புக்களையுடையதாகலின், ஐராவதத்தைக் “கவையக சேந்திரன்” என்றார். கசேந்திரன், இரட்டுற மொழிதலால், ஐராவதத்துக்கும், ஐராவதத்தையுடைய இந்திரனுக்கும் ஆதல் காண்க. தேவயானையார் ஐராவதத்துக்கும் இந்திரனுக்கும் உரிய மகளாவார். இதனை முருகன் தேவயானை யார்க்குக் கூறும் கூற்றாக: “நீயொரு குழவியாய்த் தவழ்ந்து நேர்செலக் காயிலை வயிரவேற் கடவுள் நாயகன் பாயிருங் கடம்பொழி பகட்டை யேவலும் ஆயிடை யதுநினை வளர்த்த தாயிழாய்.” (விடை 14) என வரும் தணிகைப்புராணச் செய்யுளாலறிக. அயிராவதம் நான்கு மருப்புடைமை. “ஈரிரண் டேந்திய மருப்பின் எழில்நடை - தார்பெருந் தடக்கை, உயர்த்த யானை” (முருகு 157-58) என்பதனாலறியப்படும். அகவை - உள்ளிடம். மனம் ஒரு நெறிக்கண் நில்லாது பல வழியினும் சென்ற லைந்து தீது விளைத்தற்கு ஏது அனாதியே பற்றிநிற்கும் மல மாகலின், அதனை வெல்லுமுபாயமாக, நின்கண் பிணித்துக் கொளல்வேண்டு மென்பார், “கவையகம் மலங்கெட நின்கண் பிணித்தி” என்றார்; மனத்தை நின்பாற் பிணித்தவழி மலத்திற்குப் பற்றுக்கோடின்மையின் கெடுமென்பார், “மலம் கெட” என்றார். இதனால் சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதற் குபாயம் கண்ட வாறு. 57 மலங்க மலங்க நிறைகடல் பார்த்தி மனமயலா மலங்க மலங்க லிழிசுனை காணிவ் வனநின்றுவிம் மலங்க மலங்க லணிந்தார் வரைதெரி மாவையிற்பொம் மலங்க மலங்க ளலர்கய நோக்குதி மாதரசே. புணர்ந்துடன்போகிய தலைமகட்குத் தலைமகன் மாவையின் வளம் காட்டியது. இ-ள்: மாது அரசே - மங்கையர்க்கு அரசியே, அங்க நிறை - உறுப்பிலக்கணம் முப்பத்திரண்டும் குறைவற நிறைந்தவளே, மலங்கு - மலங்கென்னும் ஒருவகை மீன், அமல் - செறிந்த, கடல் பார்த்தி - கடலைக் காண்பாயாக, மனம் மயலாம் மலம் - மனத்திற் படிந்திருக்கும் அழுக்காகிய மலத்தை, கம் - கழுவும் நீர், அலங்கல் இழி சுனை - அசைந்தொழுகும் சுனையை, காண் - காண்பாயாக, இவ்வனம் நின்று - இவ் வனத்திலிருந்து, விம்மல் - மிக்குயர்கின்ற, அம் - அழகிய, கமல் - செறிந்த, அம் கல் அணிந்த - அழகிய வயிரக் கற்கள் பொருந்திய, ஆர்வரை தெரி - அரிய மலையைக் காண்பாயாக, மாவையில் - மாவைப்பதியில், பொம்மல் - செறிதலையுடைய, அம் கமலங்கள் - அழகிய தாமரைகள், அலர் கயம் நோக்குதி - மலரும் குளத்தையும் பார்ப்பாயாக, எ-று. இப் பாட்டினை, தலைமகளைக் கூடியுறையும் தலைமகன் அவளொடு காவும் பொய்கையும் காட்சி விருப்பாற் செல்பவன், மாவைப்பதியின் கடலையும், சுனையையும், தாமரைக் குளத்தையும் காட்டி மகிழ்வித்ததாகக் கூறினும் அமையும். “புறநகர்க் கணவனொடு போகிச் செறிமலர்ச் சோலையுங் காவு மாலையங் கழனியும், மாலைவெள் ளருவியும், மலையுங் கானமும், கண்டுவிளை யாடலும் கடும்புனல் யாறும், வண்டிமிர் கமல வாவியும் குளனும், ஆடிவிளை யாடலும், கூடும்கிழத் திக்கு” (இ.வி. 90) என வரும் சூத்திரத்தானும் இதனைத் தெளிக, மலங்கு - விலாங்கு என வழங்கும் மீன். அலங்கல் - அசைதல். கம்மல் - கமல் என நின்றது. 58 மாதங்க மாதங்க வையத்தர் சூரை வணிகனொளிர் மாதங்க மாதங்க ரத்தயி லாற்செற்று வானவர்விம் மாதங்க மாதங்க மாற்றிய சேயெல்லி வையத்துற மாதங்க மாதங்க ணொன்றுதன் மாவையின் மாடறியே இ-ள்: மாதங்கம் - யானை, மா - குதிரை, தங்கு அவையத்து ஆர் - பொருந்திய கூட்டத்தையுடைய (வணிகர் தலைவனான); சூரை வணிகன் - சூரையென்னும் நகரின்கண் வாழ்ந்த வணிகனுடைய, ஒளிர் - விளங்குகின்ற, மாது அங்க - பெண் மகளின் உடம்பும், மா - குதிரை முகமும் உடைய மகளை, தம் கரத்து அயிலால் - தமது கரத்திலுள்ள வேலின் சத்தியால், செற்று - தலையைப் போக்கி, வானவர் விம்மா - தேவர் கண்டு வியப்புக் கொள்ளுமாறு, தங்கமாது - பொன் மகளான இலக்குமியின், அங்கமா - வடிவாகுமாறு, மாற்றிய சேய் - மாற்றியருளிய முருகப்பெருமான், எல்லி வையத்து - உண்மை யறிவின்மையாகிய இருள்படிந்த உலகத்து மக்கள், உற - நன்கு உற்றுக் கண்டறிய வேண்டி மாது - வள்ளி தெய்வானையாகிய இரு மாதர்கள், தம்கண் அமர - தமது பக்கத்தே அமர்ந்திருப்ப, ஒன்றுதல் - அவரிடையே பொருந்தியிருப்பதை, மாவையின் மாடு - மாவைப் பதியின்கண், அறி - நெஞ்சே, நீ தரிசித்து உண்மை ஞானத்தைப் பெறுவாயாக, எ-று. இதன்கட் குறித்துள்ள வரலாறு தெரிந்திலது. அவையம் - கூட்டம். யானையும் குதிரையும் பிறவும் நிரை நிரையாய்த் தனித்தனி கூடியிருப்பது பற்றி, அவற்றின் கூட்டம் அவையெனப் பட்டது. அங்கம் மாது என்றதனால், தலை, மாவின் (குதிரையின்) தலையென்பது குறிக்கப்பட்டது. சூரை வணிகன் மகளின் குதிரை முகம் மாறுதல்வேண்டி முருகன் ஏந்தும் சத்தி வேலை வழிபட, அது முருகன் திருவருளால் குதிரை முகத்தை மாற்றித் திருமகள் போலும் வனப்பினை நல்கியது போலும். வரலாறு அறிந்து அதற் கேற்ப வேண்டும் திருத்தங்களைச் செய்து கோடலே வேண்டுவது. முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை, வேல், என்ற இவற்றுடன் வீற்றிருப்பது இச்சை, ஞானம், கிரியை, என்ற மூவகைச் சத்திக ளோடிருக்கும் முதற் பொருளின் உண்மையை விளக்குதலின், “மாவையின் மாடு அறி” என்றார். சகளத்தைக் கண்டு அகள நிலையை உள்ளத்தால் உணர்தல் வேண்டுமாதலின், “காண்” என்னாது “அறி” என்றார். 59 மாடக மாடக வார்மொழிப் பன்மலர் மாலைதொழு மாடக மாடக வீமாவை நாதர் வரையரற்கா மாடக மாடக மாவேங்கை பொன்சொரி வார்சுனைத்தா மாடக மாடக லாவோரை மேவு மகத்துறையே. வரைவு மலிந்தது. இ-ள்: மாடகம் ஆள் - வீணையிசைகொண்டு பாடும், தகவார் - இசைத்தகுதியுடைய நன்மக்கள், மொழிமாலை - இசைமாலையும், பல் மலர் மாலை - பல பூக்களால் தொடுக்கப் பட்ட மலர் மாலையும் கொண்டு; தொழும் - தொழுகின்ற, ஆடகமாடம் - பொன்மாடங்கள், கவீ - நிறைந்து நிழல் கவிந் திருக்கும், மாவைநாதர் - மாவைப்பதியில் எழுந்தருளியிருக்கும் நாயகரான முருகக் கடவுளுடைய, வரையர் - வெற்பினரான நம் தலைவர், அல் கா மாடு - இருண்ட சோலையில், ஆடு அகம் - நாம் விளையாட்டயரு மிடத்தேயுள்ள, மாவேங்கை - பெரிய வேங்கை மரம், பொன் சொரி - பொன்போலும் பூக்களைச் சொரியும், வார் சுனை - நீண்ட சுனையில், தாம் ஆடு - தாம் இடையறவின்றி நம்முடன் கூடியாடற்குரிய, அகம் - நினைவால் (வரைதலைத் தெருண்டு செய்யும்), மாடு அகலா - செல்வக் குறைபாடில்லாத, மகத்துறை - திருமணத்துறைக்கு வேண்டும், ஓரை - நன்முகூர்த்தம், மேவும் - எய்துவதாயிற்று, காண், எ-று. இன்னிசைகொண்டு சொன்மாலை பாடும் தகுதி எல்லார்க்கும் அமைவதின்மையின், “மாடகமாள் தகவார் மொழி” என்றார். மாலையை மொழிக்கும் கூட்டுக. சொன்மாலையுடன் பூமாலையும் சூட்டி வழிபடுகின்றமை தோன்ற, “பன்மலர் மாலை”யும் உடன் கூறப்பட்டது. இத் தொடர், “சொன்மாலை பயில்கின்ற குயிலினங் காள் சொல்லீரேல், பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத் தான்” எனவரும் திருவாக்கை நினைப்பித்தல் காண்க. சோலைகள் செறியத் தழைத்துப் பூத்திருத்தலின், வெயில் நுழையமாட்டா மையின் இருண்டிருத்தலின் “அல்கா” என்றார். “வெயில்கண்டறியா வீங்கிருட் பிழம்பின், புயல்கண் படுக்கும் அந்தண் பொதும்பர்” (திருவாரூர் நான்மணி) என்றார் பிறசான்றோரும். வேங்கைப் பூக்கள் பொன் போறலின் “பொன்” என்றார். வரைந்துகொண்ட பின் தலைமகனோடு இடையீடின்றிக் கூடி மகிழ்தல் எளிதாகலின், “பொன்சொரி சுனைத்தாம் ஆடுஅகம் மகத்துறை” என்றார். மகம் - திருமணம். திருமண நிகழ்ச்சிகளுள் நல்லோரைப் பார்த்து மணமக்களை மணவறைப் புணர்த்தல் வழக்காதலின், “மகத்துறை” யென்றும், “மாடகலா வோரை மேவும்” என்றும் கூறினார். 60 மகத்து மகத்து மிகுதன்ம மீது மனங்கொழுமே மகத்து மகத்துய ருஞ்சிந்துமாவையன் வாரிசென்மா மகத்து மகத்து நோக்கிடப் போனபொன் மீண்டிடில்ய மகத்து மகத்து மடங்குவ தோபடி வார்வித்தமே. நற்றாய் கூறியது. இ-ள்: மகத்துவம் - தென்புலத்தார் கடன் முதலிய ஐவகை யாகத்திலும், அகத்தும் - மனை மாட்சியிலும், மிகு தன்மமீது - மிகுதற்குரிய தருமத்தின் மேல், மனம் கொழும் - சொல்லாத மனத் தடிப்பும், ஏம் அகத்து - பொன் முதலிய பொருளிடத்து எழும், மகத்துயரும் - மகத்தான துன்பமும், சிந்தும் - கெடுக்கும், மாவையன் - மாவைப்பதியிலுள்ள முருகக் கடவுட்கு எடுக்கும், வாரி செல் மாமகத்து மகத்துவம் - கடற்குச் சென்று முழுக்காடும் மாசி மக விழாவின் பெருமையை, நோக்கிட - கண்டு முருகனது மாலையை வாங்கிவர, போன பொன் - சென்ற என் தோழி, மீண்டிடில் - விழவு கண்டு அவன் மாலையும் பெற்றுத் திரும்பு வாளாயின், படிவார் - அங்கே கடலாடும் மக்கள், வித்தம் - கண்டெய்தும் அதிசயம், யமகத்தும் - இந்த யமகப் பாட்டி டத்தும், அகத்தும் - அவர் மனத்தகத்தும், அடங்குவதோ - அடங்கி விடுவதொன்றோ, அன்று காண், எ-று. மகம் - பிதுர்க்கடன் முதலாகக் கூறப்படும் ஐவகை வேள்விகள், அவற்றை “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்றாங்கு, ஐம்புலத்தா றோம்பல் தலை” (குறள்) என்ப. மனைமாட்சியாவது அன்புடைமை, அடக்கமுடைமை, ஈகை, புகழ் என்பன முதலிய அறங்களைச் செய்தமையும் மாண்பு. மனக் கொழு எனற்பாலது மனம் கொழும் என நின்றது; கொழு - கொழுப்பு; ஈண்டு அறத்தின் மேல் நாட்டஞ் செல்லாத மனத் தடிப்பு; தொழிற்பெயர். ஏமம் - ஏம் எனக் கடை குறைந்தது. ஏமம் - பொன். பொன்னை ஈட்டலும், காத்தலும் முதலிய பல வழிகளால் உண்டாகும் துயரம் பெரிதாதலின் “மகத்துயரும்” என்றார். மகத் - பெருமை, அறத்தின்மேற் செல்லாத மனக் கொடுமையினையும், பொருள் காரணமாக எய்துகின்ற துன்ப மிகுதியையும் போக்கும் முதல்வனாதலின் முருகனை, “மனக் கொழுப்பும் ஏமகத்து மகத்துயரும் சிந்தும் மாவையன்” என்றார். மாசித்திங்களில் மகநாளில், மாவைப்பதியில் கடல் நீராடி மக்கள் முருகப்பெருமானை வழிபடும் திருவிழா மிக்க சிறப்புடன் நடைபெறுவதாகலின், அதனையே விதந்து, “மாசிமகத்து மகத்துவம்” என்றும், அதுபோது தன் மகளையும் செல்ல விட்டாளாதலின், “மகத்துவம் நோக்கிடப் போய பொன்” என்றும் கூறினாள். அம் முருகப்பெருமான் தோள்மாலை வாங்கி வருவதே குறிக்கோளாதல் உட்கருத்தாக, மகத்து விழாவைக் காண்பது குறித்துச் செல்வாள் போலும் குறிப்புத் தோன்றச் சென்றமையின் அதனைச் சிறப்பித்து “மாசிமகத்து மகத்துவம் நோக்கிட” என்றும், அவள் வேறுபாடு கண்டோர் பலரும் முருகனது மாலை பெறுவ தரிதென்றமையின் “மீண்டிடில்” என்றும், காண்பார் பெரு வியப்பு எய்துவர் என்றற்கு, “படிவார் வித்தம்” என்றும், அஃது இப்பாட்டிலும் அவர் மனத்திலும் அடங்காது மிகும் என்பாள், “யமகத்தும், அகத்தும் அடங்குவதோ” என்றும் கூறினாள். இது பெருந்திணை. 61 வித்துரு வித்துரு மோற்பல மாவையர் மேன்மருண்டா வித்துரு வித்துரு வத்துய ராட்கறு மோபலகு வித்துரு வித்துரு வைக்கொலை செய்தரி மின்னிசிநா வித்துரு வித்துரு வப்பாம் வெறியின் மிகுமையலே. வெறி விலக்கியது. இ-ள்: வித்துரு - பவளக்கொடிகளும், வி - சிறந்த, துருமோற் பலம் - கோங்கு மரங்களும் பொருந்திய, மாவையர் மேல் -மாவைப்பதியிலுள்ள முருகக்கடவுள் பேரில், மருண்டு - காமுற்று, ஆவி - உயிர், துருவி - உடல் மதனம்பால் துளை பட்டும், துருவ - நிலைகலங்கியும் நீங்காத, துயராட்கு - துயரையுடைய இவளுக்கு, அறுமோ - துயர் நீங்குமோ, பல குவித்து - வெறியெடுத்தற்கு வேண்டிய பொருள்களைக் குவித்து, உருவி - வாளையுருவி, துருவை - ஆட்டுக் கடாக்களை, கொலைசெய்து - கொன்று, பாம் - பாடிப்பரவும், வெறியின் - வெறியாட்டால், நிசி - இரவில், அரிமின் - மின்மினிப் பூச்சியின் ஒளி கொண்டு, நாவி - கத்தூரிப் பூனையை, துருவி - தேடிச்சென்றால், துருவப் பாம் - அஃது அகப்படாது நெடுந்தொலைவு செல்வதுபோல், மையல் - காம மயக்கம், மிகும் - மிகுமேயன்றிக் குறையாது. காண், எ-று. ஆவி கூறவே, அது நிற்றற்குரிய இடமாகிய உடம்பு வருவிக்கப் பட்டது. உயிர்நிலை என்றும் அதற்குப் பெயருண்டு. மதனம்பிற்கு இலக்கு உடம்பாதலின், அது துளைபட்டு வருந்திய வழி, உயிர் நிலை கலங்கிற்றேயன்றி நீங்காதாயிற்று; காலம் நிரம்பாமையின் மையல் நீங்குமாறு வெறியெடுக்கின்றாராதலின், “துயர் அறுமோ” என்றாள். மதனவேகத்தைத் தணிக்கும் முருகனது மாலையே வேண்டுவது என்பாள், வெறி யெடுத்தலை விலக்கலுறுகின்றாள். வெறியாட்டுக்குரிய பொருள்களை, “முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி, மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇத் தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையுற வறுத்துத் தூங்க நாற்றி........ .............................................. உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணி னருட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்” (முருகு - 230 - 44) என வருவதால் அறிக. ஆட்டுக்கடாக்களைப் பலியிடுதலு முண்மையின், “துருவைக் கொலை செய்து” என்றாள். இவ்வெறி யாட்டால் முருகன் நினைவே இவட்கு மிகுந்து, உற்றிருக்கும் மையலை மிகுவிக்கும் என்பதனை “நுவலா நுவற்சி”யால் நுவல் வாள், “அரிமின் நிசிநாவித் துருவித் துருவப்பாம்” என்றாள். அரி, மின் என்னும் விசேடணத்தால் மின்மினிப் பூச்சியாதல் பெற்றாம். அது மிகச் சிறிதாகிய விட்டுவிட்டொளிரும் ஒளியினை யுடை மையின், நாடலுறும் பூனையைக் காண்டல் இயலாதாம். பூனைக் கிரவில் கண் தெரிதலின், சிறிதேனும் பொருந்தாத மின்மினியின் துணைகொண்டு ஆராயின் அப்பூனை எளிதில் ஓடியுய்ந்துவிடும் என்பார், “நிசிநாவித் துருவித் துருவப் பாம்” என்றாள். பாவுதல் - பரவுதல். இதனால் இவட்கு மனவேதனை மிகுவது சரதமாதலின், “வெறியின் மிகும் மையலே” என்றாள். 62 மையனம் மையனம் பாலாதி மாற்ற வனமலர்க்கா மையனம் மையனம் புங்குறி மாண்டென்று வன்றுயர மையனம் மையனம் பாய்வயன் மாவை வளநகரெம் மையனம் மையனம் போருகத் தாட்குச் சிவைகரமே. இ-ள்: மை - எருமைக்கு, நம் - அஞ்சிய, அனம் - அன்னப் புட்கள், வயல்பாய் - வயலிடையே பாய்ந்தோடும், மாவை வளநகர் எம் ஐயன் - மாவைப்பதியில் எழுந்தருளிய நம் தலைவனும், அம்மையன் - அழகனுமாகிய முருகப் பெருமான், அம்போருகத் தாட்கு - தாமரைபோலும் திருவடிக்கு, உச்சி - தலைமேல், கரம்வை - கைகுவித்து வணக்கம் செய்வாயாக, (அதனால்) நம்மை - நம்பால் வந்து மயக்கும், மையல் - பசிதாகங்களாலுண்டாகும் மயக்கத்தை, அனம் பால் ஆதி - சோறும் பாலும் முதலியவற்றினால், மாற்ற - போக்கவும், வனமலர்க்கா - அழகிய பூக்களையுடைய சோலையும், மை - மலரின் தேனையுண்டு பாடும் வண்டிசையும், அனம் - கள்ளும், மையன் - கரிய நிறத்தையுடைய காமனது, அம்பும் - பாணங்களும், குறிமாண்டு - காமக்குறிப்புச் சிறந்து, தென்று - தென்றல் வருத்தவும், வன்துயர் அமையல் - உண்டாகும் வலிய துயரத்தை யொழித்துக் கொள்க, எ-று. நாம் என்னும் உரிச்சொல் நம் எனக் குறுகிநின்றது. வயலிடை மேய்ந்துநிற்கும் எருமைகட்கு ஆங்குள்ள அன்னங்கள் தாமும் அஞ்சி அயல் வயல்களிற் பாய்ந்தோடுதலால் “அனம் பாய் வயல்” என்றார். அம்மை - அழகு; முத்தியுலகெனினுமாம். உச்சிகரம் வைத்தலாவது, தலைமேல் கை குவித்து வணங்கல்; “உச்சிக் கூப்பிய கையினர்” (முருகு) என்றார் பிற சான்றோரும். தென்றல் எனற்பாலது தென்று எனத் திரிந்தது. அமையல் - எதிர்மறை வியங்கோள் முற்று. பசி தாகங்களைப் போக்குதற்குச் சோறு, நீர்முதலியவற்றைத் தேடற்கும், இன்பநுகர்ச்சி குறித்து எழும் வேட்கைத்தீயை யவித்துக் கோடற்குரியவற்றைத் தேடற்கும், காம வேட்கையால் பிறக்கும் தாபத்தைத் தவிர்த்துக் கோடற்கும், அறிவு ஒருநெறிப்படாது மயங்கி அலமருதலின் உண்டாகும் துயர் பெரிது என்றும்; அத்து யரிடையே மயங்கி அழுந்துவோரே பெரும்பாலராயிருப்பது நோக்கின் அத்துயர் மிக்க வலியுடைத்தென்றும் நன்கு விளங்கு தலின், “வன்துயர் அமையல்” என்றார். மையன் அம்பும் குறிமாண்டு என்று வன்துயர் என்று பிரித்துக் கொண்டு, காமனது பூங்கணையும் வில்லும் குறிதவறாது தாக்கும் வலிய விரகவேதனையும் என்று உரைப்பினுமாம். எற்று என்றாயிற்று. 63 வைகறை வைகறை யங்கிரி யாற்குற மாதணைத்து வைகறை வைகறை யார்வேலர் புட்கண மாத்துயிலேல் வைகறை வைகறை முன்றிரி மாவையர் மால்பிடித்தாய் வைகறை வைகறை மேற்பக லாவுறு மானிசமே. தோழி பெண்மைகூறி விலக்கியது. இ-ள்: வைகறை - வைகறை யாமத்தில், வைகு அறை - இடையறவின்றிச் செறிந்த கற்களையுடைய, அம் கிரியால் - அழகிய மலையின்கண், குறமாது - குறமகளாகிய மனைவியை, அணைத்து - தழுவிக்கிடந்து, வைகறை - உறங்குவதை விட்டு எழுந்து, வை - கூரிய, கறையார் வேலர் - உதிரக் கறை படிந்த வேலையுடைய குறவர், புள் - பறவைகளும், கணமா - கூட்டமான விலங்குகளும், துயில் ஏல்வை - துயிலுங் கால மறிந்து, கறைவை - கன்றீன்ற மான், கறை முன் - தன் கன்றை அழைத்தேகு முன்னே (சென்று பற்றுதற்காக), திரி - திரிகின்ற, மாவையர் - மாவைப் பதியையுடைய முருகக் கடவுள்பால், மால் பிடித்து - காமப் பித்துக் கொண்டு, ஆய்வை அவனைக் கூடுதற்குரிய நெறி ஆராய்கின்றனை, (அதனால்) கறை - நின்பால் பெண்மைக்காகாத குற்றம், வைகறை மேல் பகலா - வைகறைக்குப் பின்னர்த்தாகிய பகற்போது போல, நிசம் - நிச்சயமாக, உறும் - வந்து சேரும், ஆகவே இனி அம் முருகன்பால் காதல் பூண்டொழுகும் இத்திறத்தை விட்டொழிப்பாயாக, எ-று. கடவுள் மாட்டு நயப்புற்ற மானுடப் பெண்டிருள் ஒருத்தி யாய இவள் பெண்மை வரம்பு கடந்து தீரா வேட்கையால் பேதுற்று வாய் வெருவி மெலிதலைக் கண்ட தோழி ஆற்றாளாய்த் தலைவனான முருகக் கடவுளைக் கூடும் நெறிகள்மிக்க அரிய வாகும். அதனால் அவனை விரும்புதலையொழிக என்கின்ற மையின், இது விலக்குதற் பொருட்டாயிற்று. இரவுப்போதில் தன் மனக்கினிய குறமகளுடன் இனிதிருந்த குறவன் மானினம் தம் கன்றையும் கலையையும் அழைத்தேகுமுன் சென்று அவற்றை வதைக்கின்றான் என்றதனால். தன் மனத்துக்கினிய தேவிமாராகிய வள்ளி தேவயானை என்பாருடன் இனிதிருக்கும் முருகேசன், தாயாருடன் இனிதிருக்கும் நின்னுள்ளத்தைப் பிணித்து அலைக் கின்றான். அவனது கொடுமை இருந்தவாறு இது. இதனையறியாது அவன்பால் காமப்பித்துக் கொளல் நாண்துறவா நன்மகளாகிய உனக்கு நலமன்று என்றாளாயிற்று. வைகு அறை - வைகுதல் அறுதல் விழித்தெழுதல் என்றவாறு. ஏல்வை, காலம், கறவை யென்றதனால் கன்றையுடைய மான் என்பது கொள்ளப்பட்டது. கரைதல் - கறைதல் என்று நின்றது. ஆய்வை என்றாள்; குறத்தியை யழைத்துக் குறிபார்த்தலும் தூதுவிடக் கருதுதலும், தார் வேண்டலும் பிறவும் செய்கின்றமை தோன்ற, பெண்மை - நாணமுடைமை. “பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி” (நற். 94)எனச் சான்றோர் கூறுதல் காண்க. வைகறைக்குப் பின் பகற் போது எய்துதல் ஒருகாலும் பிழையாதவாறு போல, நாணின்மை யாகிய குற்றம் வாரா தொழியா தென்பாள், “கறைவை கறைமேற் பகலா வுறுமால் நிசமே” என்றாள். ஆல் - அசை. 64 மானிய மானிய மிக்கத் தனையைநன் மாவையில்விண் மானிய மானிய மஞ்செய்து மற்றி மறமுகப்பாய் மானிய மானிய லாராடச் செய்தின மாதியின்று மானிய மானிய மார்விழ வேத்துமெம் மைக்குநன்றே. இ-ள்:மானியம் - கொல்லை நிலத்தே வாழும், மான் நியமிக்கு - மான்பெறப் பிறந்த, அத் தனையை - அந்த மான் மகளாகிய வள்ளிக்கும், விண்மான் - தேவயானைக்கும், இயமான் - உயிர் போன்ற கணவனும், நியமம் செய்து - அடியார் துயர் தீர்த் தலையே நியமமாகக் கொண்டு, மறம் - அவர் தம் பாவங்களை, உகமற்றி - அறக்கெடுமாறு மாற்றி, பாய்மானி - பாய்ந்தோடும் குதிரையூர்தியுடையவனும், அம்மான் - அழகிய பெருமானுமாகிய முருகக்கடவுள்பால், இயலார் ஆடச் செய்து - அன்புற்றொழுகும் இயல்புடையோர் உண்டு மகிழ்ந்தாடச் செய்து, இன்று - இப்பொழுதே, இனம் ஆதி - அவ்வியல்பினர் கூட்டத்தே சேர்வாயாக, மானியம் - பெரியோர் குழாமும், மான் - குதிரை யானை முதலியனவும், இயம் - வாத்தியக் கூட்டமும், ஆர் - நிரம்பிய, விழவு ஏத்தும் - திரு விழாவைக் கண்டு துதிப்பீர்களாக, (இஃது) எம்மைக்கும் - இம்மை, மறுமை, அம்மை என்ற எல்லா நிலைகட்கும், நன்று - நலந்தருவதாம், எ-று. மானியம் - கொல்லை நிலம், பிறர் எவர்க்கும் உரிமை யாகாது கிடக்கும் கொல்லைப்பகுதி. இயமான், உயிர், எஜமானன் என்பதன் சிதைவாகக் கோடலும் பொருந்தும். மாற்றி - மற்றி எனக் குறுகிற்று. மானி - இகரம் உடைமைப் பொருண்மைவிகுதி. இயல் - குணம் செயல் நலம், இயற்பழித்தல் - இயற்பட மொழிதல் என வரும் வழக்காறுகளை நோக்குக. ஆடல் - உண்டு மகிழ்ந்தாடல், அடியார்க்குத் தம்பால் உள்ளன தந்து உண்பித்து அவர் மகிழ்ந் தாடச் செய்தல். இஃது அடியார் பூசனை. இனமாகுக என்றார்; அவர்தம் கூட்டம் மனமாசு கழுவி அப்பரமன் திருவடியைப் பெறுவிக்கு மாதலின், “பத்த ரினத்தாய்ப் பரனுணர்வினாலுணரும் மெய்த்த வரை மேவாவினை” (சிவ.ஞா. போதம் சூ. 12, அதி. 2 மேற்) என வரும் திருவாக்கானுணர்க. மகனீயர் கூட்டம் மானியம் என்றாயிற்று. மகனீயர் - பெரியோர். “பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத், துணிந்தவன்” (ஐயாறு 1) என ஞானசம்பந்தப்பெருமான் அருளுதலால், “நியமம் செய்துமற முகமாற்றிப் பாய்மானி” என்றார். பண்டையில் வள்ளி நாயகியார் முருகனை நோக்கித் தவங்கிடந்த காலத்தில், அவர் ‘நீ சென்று மான்வயிற்றிற் பிறந்து வேடரிடத்தே வளர்க’ என நியமிப்ப, அந்நியமப்படியே அவரும் மான் மகளாயினராதலின், “மான் நியமிக்கு அத் தனையை” என்றார். 65 மைக்கண மைக்கண வேர்த்தோண் மடமயிலேமருளா மைக்கண மைக்கண யப்புறத் தந்தவர் மாவைவரு மைக்கண மைக்கண ணைபூங் குழல்கண்டு மான்றனவி மைக்கண மைக்கண வுச்சிகீழ் வீழ்வன வாரணமே. இடையூறு கிளத்தல். இ-ள்: மருளாமை - மருண்டு இருளுதலையில்லாத, கண் - நெற்றி விழியினையுடைய, நம் ஐ - நம் தலைவராகிய சிவபெரு மான், கண் - தம் முகமைந்தனுடன் அதோ முகம் ஒன்றைத் தோற்றுவித்து ஆறுமுகத்தும் நின்ற ஆறு நெற்றிக் கண்களினின்றும், நயப்பு உற - தம் திருவடியில் வீழ்ந்து இறைஞ்சிய தேவர் முதலா யினார்பால் பிறந்த அருள்மிகுதலால், தந்தவர் - தரவந்த அறுமுகக் கடவுளான முருகனுடைய, மாவை - மாவைப்பதியில் வாழ்கின்ற, மைக்கண் - மை தீட்டிய கண்ணும், அமைக்கு அணவு ஏர் தோள் - மூங்கிலின் நடுவை யொத்த அழகிய தோளுமுடைய, மடமயிலே - இளமையான மயில் போன்றவளே, வரும் மைக்கணம் - இம் மலைச்சாரலிடத்தே வந்தெய்தும் கருமேகக் கூட்டம், ஐக்கண் - மல்லிகை மொட்டுக்கள், அணைபூங்குழல் - அணியப்பெற்ற பூங்குழலைக் கண்டு. மான்றன - மயங்கிவிட்டன, மைக்கண - கரிய கண்களையுடையவாகிய முலையைக் கண்டு, வாரணம் - இம்மலையிடத்தே வாழும் யானைகள், உச்சிகீழ் வீழ்வன - தாமும் மயங்கித் தலைகீழாக வீழ்வனவாயின, (ஆதலால்) இமைகண் - கண்களை இமைத்துப் பார்த்தருள்வாயாக, எ-று. நெற்றிவிழி தீவிழியாதல் வெளிப்பட, “மருளாமைக்கண்” என்றார். கண, குறிப்புப் பெயரெச்சம். கண் நயப்புறத் தந்தவர் என்புழி. உற - உறுவென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினை யெச்சம்; “துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும்” (குறள் 94) என்புழிப்போல. தேவர் முதலாயினார் செய்த வேண்டுகோட் கிரங்கி, பரமன் முருகனைக் கண்வழியே தந்த வரலாற்றை, “வலாரி யாதிவிண் ணோரிரப்ப மரீஇய தொன்முக மாறொடும், நிலாவி நெற்றி - விழிக்கண் ஒவ்வொரு நீடிரும் பொறி காற்றினன்” (சீபரி. 20) எனவரும் தணிகைப் புராணத்தா லுணர்க. அணவு - நடுவு. ஏர் - உவமவுருபு; அழகுமாம். தலைவியது கூந்தற் கருமை கண்ட கருமுகிற் கணம் தமக்கு முன்பே தம்போலும் பிறமுகிற் கூட்டம் படிந்தனவென்று மருண்டு வேறு போக்கிடம் நாடாது சாரலிடத்தே படிந்தொழிந்தன என்பான், “வரும் மைக் கணம் மான்றன” என்றான். மான்றன - மால் என்னும் சொல்லடி யாகப் பிறந்த வினை முற்று. மால் - கருமைக்கும் பெயராதலின் மான்றன என்பது கறுத்தன என்னும் பொருட்டாய், “வரும் மைக்கணம் கறுத்திருக்கின்றன நின்குழல்போல, நீ அவற்றைக் காண்பாயாக” என்பதொரு நயந்தோன்ற இடையூறு கிளந்த குறிப்பும் பெறப்படுதல் காண்க. நின் முலைக்கோட்டைக் கண்டு இனமெனக் கருதிப்போந்த யானைக்கூட்டம், நீ அவற்றை மறையாமையின் கண்தாக்குற்று மருண்டு தலைகீழாக வீழ்ந்தன என்பான், “மைக்கண வாரணம் உச்சிகீழ் வீழ்வன” என்றான். இனி, இவற்றைத்தம் இனமெனக் கருதிய இவ் யானைக் கூட்டம், இவையிச்சாரலிடத்தே வாழ்தலின் தாமும் இவ்விடத்தினின்றும் நீங்கமாட்டாவாய், இம்மலை யுச்சியின் கீழே வாழ்தலை விரும்புவனவாய் வாழ்கின்றன என்ப தொரு நயந் தோன்றக் கூறினானாம். இவ்வண்ணம் முகிலை மயக்கி, யானைக் கூட்டத்தைத் தலைகீழாக வீழ்த்தி நிற்கும் நின் செயலை நீயே நின் கண்ணே இமைத்துக் காண் என்பான், “இமைகண்” என்றான். 66 வாரணம் வாரணம் பாற்பகை சாய்த்தவர் மாவையுறை வாரணம் வாரணம் பங்குடை யார்தமை மார்கழித்தெய் வாரணம் வாரணம் பாலெங்கு மார்கவிர் மானுமுடி வாரணம் வாரணம் பாடேல்வை யேத்திடின் மாலறுமே. இ-ள்: வாரணம்பால் - கடலிடத்தே, வாரணம் - கவச மணிந்த, பகைசாய்த்தவர் - பகைவராகிய அசுரரை யழித்தவரும், மாவையுறை வாரணம் - மாவைப்பதியில் வாழும் காவலரும், வாரணம் பங்கு உடையார்தமை - தேவயானையாரைப் பங்கிலே யுடையவருமான முருகக்கடவுளை, மார்கழி - மார்கழி மாதத்தில், தெய்வ ஆரணம் - தெய்வ மறைகளும், வாரணம் - சங்குகளும், பால் எங்கும் - எப்பக்கத்திலும், ஆர் - முழங்கும், கவிர்மானும் - முருக்கம்பூப்போலும், முடி வாரணம் - கொண்டையையுடைய கோழி, வார் அணம்பாடு ஏல்வை - நீண்ட அலகைத் திறந்து கூவும் விடியற்போதில், ஏத்திடின் - ஏத்தித் தொழுவோமாயின், மால் அறும் - அஞ்ஞானமாகிய மயக்கம் நீங்கும், எ-று. கடலகத்தே வீர மகேந்திரம் என்னும் நகரமைத்து அதன் கண் இருந்தே சூரன் முதலிய அசுரர் தீங்கு புரிந்தனராகலின், அவர் களை அக்கடலகத்தே சென்று முருகன் பொருத சிறப்பை வியந்து, “வாரணம் பால் வாரணம் பகைசாய்த்தவர்” என்றார். தெய்வ ஆரணம் - தெய்வாரணம் என முடிந்தது. ஆரணம் வாரணம் பாலெங்கும் முழங்கும் ஏல்வை, வாரணம் வார் அணம் பாடும் ஏல்வை என இயையும். மால் - பிறப்பேதுவாக வந்த மயக்கம் என்றுமாம். “மையல் மானுட மாய்மயங்கும்வழி, ஐயனே தடுத் தாண்டருள் செய்யெனை” (பெரியபு. திருமலை 28) என வரும் திருவாக்காலும் இப்பொருண்மை துணியப்படும். 67 மாலைய மாலைய னீறழ லாடிசேய் மாவைமரு மாலைய மாலைய கத்தளித் தாய்தென் வளியொடன்றின் மாலைய மாலைய னாழி குயில்வெண் மதிவருத்து மாலைய மாலைய தீந்திடின் மாறு மனச்சலமே. தார் வேண்டல். இ-ள்: மாலையம் - சருவமும் ஒடுங்கும் மகா சங்காரத்தில், மால் - திருமால், ஐயன் - பிரமன் முதலிய தேவர்களை யுள்ளிட்ட அனைத்துயிர்களையும், ஈறு - சங்கரிக்கும், அழலாடி - அனலில் ஆடுபவனான சிவனுடைய, சேய் - மகனான முருகனே, மாவை - மாவைப்பதியில், மரு - பொருந்தியிருக்கும், மாலைய - இயல்பினை யுடையோய், மாலை அகத்தளித்தாய் - தீராத வேட்கையை என் மனத்தே விளைவித்துவிட்டாய், (அதனால்) தென் வளியொடு - தென்றற்காற்றும்,அன்றிலொடு - அன்றிற் பறவையும், மாலை யொடு - மாலைக்காலமும், அ- அந்த, மால் - பெரிய, ஐயனொடு - அழகனான மன்மதன் விடுக்கும் அம்பும், ஆழி - கடலும், குயில் - குயிலும், வெண்மதி - வெள்ளிய சந்திரனும், வருத்தும் - என்னை மிகவும் வருத்துகின்றன, ஐய - தலைவனே, மாலையது - நீ தோளிலணிந்திருக்கும் மாலையை, ஈந்திடின் - தந்தருள்வாயாயின், மனச்சலம் - மனக்கலக்கம், மாறும் - நீங்கும், எ-று. மாலயம் என்பது மாலையம் என வந்தது. அயன் - ஐயன் என்றாயிற்று, எழுத்துப்போலி; அழல் - ஆகுபெயரால் சுடுகாட்டிற் கேற்றினுமாம். மாலை - விரகவேட்கை, ஓடு - எண்ணொடு. இதனை ஏனையவற்றோடும் ஒட்டுக. “என்றும் எனவும் ஒடுவும் தோன்றி, ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே” (தொல். சொல்.) என்பது தொல்காப்பியம். காம நோயுற்றார்க்கு இக் கூறிய அனைத்தும் நோய் மிகுவிப்பனவாதலின், இவற்றை எடுத் தோதினார். ஐயன், அழகன், மன்மதன், இவன் விடுக்கும் மலரம்பு ஏனைய அனைத்தினு மிக்க துன்பம் செய்வது எய்த, “அம்மாலையன்” என்றாள். வருத்துமால் என்புழி, ஆல் - அசை, மாலையது என்புழி, அது, பகுதிப் பொருள் விகுதி. மாலை என்னா - மாலையது என மிகுத்துரைத்தது, தரக்கூடாத அத்துணைச் சீரிய பொருளன்று என்பதனைச் சாதித்து நின்றது. ஈதல் கூறினாள், அதனை வேண்டி நிற்கும் தனது சிறுமை தோன்ற, சலம் - வருத்தம், 68 சலசஞ் சலசஞ் சரிகஞ்சொன் மாவைத் தரங்கத்துமா சலசஞ் சலசஞ் சரப்பரி யாக்கொ டலைவவந்தா சலசஞ் சலசஞ் சிதைத்தருள் வாயெனத் தாளிணைக்கி சலசஞ் சலசஞ் சிதமற நோக்கநிச் சம்பணியே. இ-ள்: சலசம் - தாமரையில், சல - மொய்க்கும், சஞ்சரிகம் - வண்டினம், சொல் இசைபாடும், மாவை - மாவைப் பதியில் தரங்கத்து - அலைகளையுடைய, மாசல - பெரிய கடலின் கண் இயங்கும், சஞ்சல - காற்றுப் போல் செல்கின்ற, சஞ்சரம் - யானையை, பரியாக்கொள் தலைவ - ஊர்தியாகக்கொண்ட தலைவனே, அந்த அசல - யமனுடைய, சஞ்சலம் - மரண வேதனையால் உண்டாகும், சம் - கலக்கத்தை, சிதைத்தருள்வாய் - போக்கியருள்க, என - என்று வேண்டி, தாள் இணைக்கு - திருவடிகளைப் பெறுதற்கு. இசல் - இயலாதவாறு தடை செய்யும் அசஞ்சல - நிலை கலங்காத, சஞ்சிதம் - வினை, அற - தொடர் பற்று ஒழியுமாறு, நிச்சம் நோக்க - தினமும் தரிசிக்க, பணி - என்னைப் பணித்தருள்வாயாக, எ-று. சொல்லோசை பொருளாக நிலவுவது இசையாதலின், இசையைச் சொல்லென்றார். தரங்கம் - அலை. கடலின்கண் மலை போலும் திரையெழுதற்குக் காரணம் அங்கே பெருங் காற்றுண் மையே. முருகப்பெருமான் ஏறும் பிணிமுகமென்னும் பட்டத்தி யானையும் பகைவர் படைக்கடலின் நடுவண் பெருங் காற்றுப் போற் செல்வதென்றற்கு, “தரங்கத்து மாசல சஞ்சல சஞ்சரம்” என்றார். “கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு” (முருகு 82) என நக்கீரனாரும் கூறுதல் காண்க. மலைபோலும் மேனியும், உயிர் கட்கு அந்தத்தைச் செய்யும் தொழிலும் உடைமையால், யமனை “அந்தாசலம்” என்றார். அருணகிரியாரும் இவ்வண்ணமே கூறுவர். இசல் - தடுத்தல், ஒருவன் செய்தவினை, அவனை எவ்வழியினும் விடாது பற்றி நின்று தன் பயனை ஊட்டாது கழியாதாகலின், அத் திண்மை பற்றி, அதனை, “அஞ்சல சஞ்சிதம்” என்றார். எடுத்த பிறவியின் நுகரப்படாது எஞ்சிநிற்கும் கன்ம வினை சஞ்சிதமாகும். இச்சஞ்சிதம் இனி எடுக்கும் பிறவிக்கும் தொடர்ந்து சென்று பிராரத்த கன்மமாய்ப் பயனுகர்விக்கும் பான்மையுடையது. நாளும் தரிசித்துவரின், பிறவியறுதலின், சஞ்சிதம் பற்றுக்கோடின்றிக் கெடுமாதலால், “சஞ்சிதமற நோக்க நிச்சம் பணியே” என்றார். அவன் திருவடியைப் பணிதற்கும் அவனுடைய திருவருள் முன்னின்று துணைசெய்யவேண்டியிருத்தலின் இவ்வாறு கூறினார். “அவனரு ளாலே அவன்றாள் வணங்கி” என்பது மணிவாசகத்துத் திருவாசகம். 69 சம்பகஞ் சம்பகஞ் சார்சோலை கீலஞ் சலத்துறழ்பா சம்பகஞ் சம்பகஞ் சாறட மாவைய தானவரஞ் சம்பகஞ் சம்பகஞ் சாரயன் மான்மறை தாகனன்றுஞ் சம்பகஞ் சம்பகஞ் சேர்த்தோ யருள்வர சாகரனே. இ-ள்: சம்பகம் - சண்பகமும், சம்பு - நாவல் மரமும், அகம்சார் சோலை - அகத்தே பொருந்திய சோலையும், கீலம் சலத்தோடு - அச்சொலையிற் கசியும் பிசின் நீருடன், உறழ் பாசம் - கலந்துகிடக்கும் நீர்ப்பாசியும், பகம் - கொக்கும், சம்பகம் - சண்பங்கோழியும், சால் - நிறைந்த, தடம் - நீர் நிலைகளும் பொருந்திய, மாவைய - மாவைப்பதியையுடையவனே, தானவர் அஞ்சு அம்ப - அசுரர் அஞ்சும் அம்பினையுடையவனே, கஞ்சம் பகம்சார் - தாமரையின் நடுவிலே இருக்கும், அயன் - பிரமனுக்கு, மால்மறை - மயக்கந்தந்த மறைமுடிவான பிரணவப் பொருளை, தா - உபதேசித்த, கனனே - பெருமையுடையவனே, அம்பகம் - வள்ளிநாயகியார் கண்கள், துஞ்சு - இனிது உறங்குதலைச் செய்யு மாறு, சம்பகம் - சம்பு என்னும் புல்வேய்ந்த அவருடைய மனையை, சேர்த்தோய் - சென்று சேர்ந்தவனே, வரசாகரனே - வேண்டுவார் வேண்டும் வரங்களை நல்கும் கடல்போன்றவனே, அருள் - அடியேனுக்கு அருள் செய்வாயாக, எ-று. சோலையும் தடமும் உடைய மாவைய என இயைக்க. மாவைய, தானவர் அஞ்சு அம்ப, மால்மறை தாகனனே, சம்பகம் சேர்த்தோய், வரசாகரனே, அருள் என வினைமுடிவு செய்க. கீலச் சலம் எனற்பாலது கீலஞ்சலம் என மெலிந்து நின்றது. உறழ்தல் - கலந்திருத்தல்; மாறுபட்டிருத்தலுமாம். அஃதாவது கீலச்சலம் மிதப்ப, பாசிகள் அதனோடு படிந்து கிடத்தல், சேர்ந்தோய் என்பது சேர்த்தோய் என வலிந்து நின்றது. சிறைவீடு பெற்ற பிரமன் தணிகைப்பதியில் பிரமதீர்த்தம் அமைத்து முருகனை நோக்கித் தவம்புரிந்து மறுவலும், படைப்புத் தொழிற்குரிய வன்மையும், தகுதியும் பெற்ற காலத்துத் தான் அறியாது விழித்த மறைப்பொருளையும் ஏனை வரங்களுடன் பெற்றது குறித்து, “கஞ்சம் பகம்சார் அயன்மால் மறை தாகனனே” என்றார். இனி, அவர் வள்ளிநாயகியார் இற்செறிப்புண்டு முருகப் பெருமானைக் கூடவியலாமை கருதிக் கண்ணுறக்கமின்றி வருந்துங் கால், அவர் இருந்த மனைக்கு இரவுப்போதில் அப்பெருமான் இரவுக்குறி பிழையாது போந்து கூடி அவர் இனிதுறங்கச் செய்தா ராதலின், “சம்பகம் சேர்த்தோய்” என்றார். “முன்னும் தனிநின்ற சூழலின் பேரின்பம் முற்றுவித்தார்; பின்னும் தறுகண்க டாங்கவிழ் வேழம் பெயர்த்தளித்தார்; என்னும் தமக்கியல் பில்லேற் கிரவினும் இன்றிறுத்தார்; கொன்னுந்திருவுள மின்னுமென் கொள்ளினும் கூற்றமின்றே.” (களவு. 393) எனவரும் தணிகைப் புராணச் செய்யுளால் உணர்க. 70 சாகரஞ் சாகரஞ் சாந்திசெய் வார்பவஞ் சாய்த்தலினுற் சாகரஞ் சாகரஞ் சாதநடேசர் சடைகளநி சாகரஞ் சாகரஞ் சாத்தினர் சேய்குக சண்முகவி சாகரஞ் சாகரஞ் சான்மாவைத் தாளம்பு சாதரென்னே. இ-ள்: பவம் சாய்த்தலின் உற்சாகர் - பிறவித் துன்பத்தைப் போக்கிக்கொள்ளவேண்டு மென்ற முயற்சியில் மிக்க உற்சாக முடையவர்கள், சாகரம் - இருகைகளாலும், சாகரம் - பதினாயிரங் கோடி, சாந்தி செய்வர் - சாந்திகளைச் செய்வார்கள், அஞ்சாகரம் - அஞ்சாத தன்மையையுடைய, சாத - பூதப்படைகள் சூழ, நடேசர் - திருநடனம் புரியும் ஈசனும், சடைகளம் - சடையிலும் கழுத்திலும், நிசாகரம் சாகரம் - (முறையே) சந்திரனையும் சாக்காடு பயக்கும் விடத்தையும், சாத்தினர் - அணிந்துகொண்டவருமான சிவபெரு மானுக்கு, சேய்- மகனாரும், குக - குகனாரும், சண்முக - ஆறுமுகமுடையவரும், விசாகர் - விசாகநாளை யுடையவருமாகிய முருகக் கடவுளுடைய, அம் - அழகிய, சாகரம் சால்மாவை - கடல் சார்ந்த மாவையப் பதியில், தாள் - தரிசித்து அவர் திருவடியை முடியில் சூடிக் கொண்டோர், அம்புசாதர் என் - பிரமபதத்துக்கு உரியவர் என்க, எ-று. பற்பல சாந்திகளைச் செய்வதனால் பவத்துன்பம் போக்கிக் கொள்ளலாம் என்று கூறலும் செய்தலும் உடையாரது பேதமையை இகழ்ந்து கூறுகின்றாராகலின், “பவஞ் சாய்த்தலி னுற்சாகர்” என்றும், அவருடைய அச் செய்கை அவர் கருதும் பயனைத் தாராது என்று இகழ்வார், “அம்சாகரம் சாந்தி செய்வார்” என்றும் கூறினார். உ-உலகறிசுட்டு. ச+கரம், சாகரம் என வந்தது. கரம் - தன்மை; பயங்கரம் என்புழிப்போல, சடைகளம் நிசாகரம் சாகரம் என்பது நிரனிறையணி. பிரமனுக்கே அப்பிரமபதம் எம்பெருமான் முருகனால் அருளப்பட்டதாகலின், அப்பெருமான் திருவடியை முடிசூடுவார்க்கு அப்பதம் எய்துதல் மிகமிக எளிதென்பார், “தாள்பணிந்தார் அம்பு சாதர் என்க” என்றார். 71 சாதனி சாதனி யாமா லுகுமென் றலையினம்பு சாதனி சாதனி தார்க்குரைப் பேனன்பர் தம்முள்வன சாதனி சாதனி லாமாவை நேசத் தலைவன்பாக சாதனி சாதனி கத்தாற் கிலையித் தலைமண்டலே. காமமிக்க கையறு கிளவி. இ-ள்: நிசா - இரவில், தனி - காதலரையின்றித் தனித் திருத்தல், சாதலாம் - சாவதே போல்வதாகும், (ஆதலால்) உகும் என் தலையின் - உயிர் விடுதற்குரிய என் தலையில், அம்பு சாதனி - பிரமன், சாதன் இது - எழுதிவைத்த சாசனமாகிய இதனை, ஆர்க்குரைப்பேன் - எவர்க்குச் சொல்வேன், அன்பர் தம் - அன்பருடைய, உள்வனசாதனி - உள்ளக் கமலத்தில் உறைபவனும், சாதனி இலா - சதனிரோக முதலிய நோய்களே இல்லாமல் மக்கள் வாழ்கின்ற, மாவை - மாவைப்பதியிலுள்ள, நேசத் தலைவன் - அன்புடைய தலைவரும், பாகசாதனி - இந்திரன் முதலிய தேவர் களோடு, சாத அனிகத்தார்க்கு - சிவகணமாகிய பூதப்படையினை யுடையவருமாகிய முருகப்பெருமானுக்கு, இத்தலைமண்டல் - இவ்விடத்து என்பால் வந்தருள்வது, இலை - இல்லையே, எ-று. “இன்னாது இனனில்லூர் வாழ்தல் அதனினும், இன்னாது இனியார்ப் பிரிவு” (குறள் 1158) என்பவாகலின் “நிசாதனி சாதலாம்” என்றாள். ஆல் - அசை. எனக்கும் என்னால் காதலிக்கப் பட்டார்க்கும் உயிர்போல உடம்பையும் ஒன்றாக விதியானாயினமையின், அவர் பிரிவால் என் உயிரும் உகுகின்றதென்பாள், “உகும் என் தலையின் அம்பு சாதனி சாதன் இது” என்றாள். “நான்முகத்தோன் ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே”(தஞ்சை. கோ.) எனப் பிறரும் கூறுதல் காண்க. சாதனம் என்பது கடை குறைந்து நின்றது. “இது ஆர்க்குரைப்பேன்” என்பது கையறு கிளவி. சதனரோகம், சாதனி வியாதியென்றும் வழங்குவதுண்மையின், சாதனி யென்றார். சாதனி இலா என்பது சாதனிலா என இயைந்தது. சாத அனிகம் - சாதானிகம் என வரற்பாலது, சாதனிகம் என நின்றது. மண்டல் - நெருங்குதல். அனிகத்தான் என்றாளாதலின், அதற்கேற்ப மண்டு தலைக் கூறினாள். மெய்ப்பாடு; அழுகை, பயன்: அயாவுயிர்த்தல். 72 மண்டவ மண்டவ றொன்றிற்பல் வேறுசெய் வார்குணந்தே மண்டவ மண்டவ னந்தெறச் சார்பல்சன் மத்தரின்னு மண்டவ மண்டவ தைக்கொடி யார்ப்பாவனைச் சொலட்டே மண்டவ மண்டவ மார்மாவை யன்கா லரவிந்தமே. இ-ள்: மண் - மண்ணவர் செய்யும், தவம் ஆண்டவன் தவத்தையாதரித்து வேண்டும் பயனை நல்குபவனும்,மண் தவம் - மாட்சிமைப்பட்ட காடும், மண்டவம் - மண்டபங்களும், ஆர் - பொருந்திய, மாவையன் - மாவைப் பதியிலுள்ளவனுமாகிய முருகப்பெருமானுடைய, கால் அரவிந்தம் - திருவடித் தாமரை யைப் பூசிக்கும் நல்லறிவினால், ஒன்று இல் - தாமும் பிரமமும் ஒன்றே என்ற உணர்வால், பல்வேறு செய்வார் - பல்வேறு வகையான செயல்களைச் செய்பவரும், குணம் - குடங்குடமாக, தேம்மாண் - கள்ளையுண்ணும், தவம் - வேட்கையாகிய, மாண் தவனம் - பெரிய நெருப்பானது, தெற - வெதுப்புவதால், சார்பல் சன்மத்தர் - பல்வேறு பிறப்புக்களை எடுத்தற்குரியராயினாரும், இன்னும் - மேலும், மண்டவ - மாட்சிமைப்பட்ட உயிர்களை, அவம் மண்ட - துன்பமுண்டாக, வதைக்கொடியார் - வதைத் தலையுடைய கொடியவர்களும் கூறும், பாவனைச் சொல் - மெய்யறம்போலத் தோன்றும் பொய்மொழிகளை, அட்டேம் - கேளாது உய்ந்தோம், எ-று. மண் - ஆகுபெயர் மண்ணவர் தன்னை நோக்கிச் செய்யும் தவத்தை இடையூறு வாராமைக் காத்துக் கடைபோக ஆதரித்து முடிவில் அவர் வேண்டும் வரங்களை மிகத் தருபவனாதலின், “மண்தவ மாண்டவன்” என்றார். தவம் - காடு. மாண்தவம் என்பது மண்தவம் எனக் குறுகிற்று. திருவடியைப் பூசிக்கும் ஞானம் நன் ஞானமாதலின், அதனால் பிறர் கூறுவனவற்றைக் கேளாது ஒழிதற்கு ஏதுவுண்டாதல் குறித்து அத்திருவடியை விதந்து, “கால் அரவிந்தம்” என்றார். திருவடி வழிபாடு ஞானம் தருவதைச் சேக்கிழார் பெரு மான், “சிறியேன் அறிவுக் கவர்தம் திருப்பாதந்தந்த, நெறியே சிறிதியான் அறிநீர்மை கும்பிட்டே னன்பால்” (திருஞான. 844) என்றருளிய திருவாக்கானுணர்க. பல்வேறு செய்வார் ஏகான்ம வாதிகள். மதுபானமும் தம் சமயக் கிரியைகட்கு ஒத்ததே என் றோதும் கிறித்து சமயத்தவரும் பசு முதலியவற்றை வதைத்தலும் சமய நெறியே யென்னும் முகமதியரும் இந்நூலாசிரியர் காலத்துச் சமயத்தவராதலின் இவர்களைக் குறித்தார் போலும். தாவம் - தவம் என நின்றது. மாண்டவ எனற்பாலது மண்டவ என நின்றது. அவர் சொல்வனவற்றைச் சிறிதும் ஏலாது கழித்தமையின் “அட்டேம்” என்றார். 73 விந்தர விந்தர நாதஞ் சிவஞ்சத்தி விண்டுயர்கோ விந்தர விந்தர வார்சடை யார்திரி வேடசிவ விந்தர விந்தர சாமாவை யீரென்ன விச்சமற விந்தர விந்தர விச்செற்ற வர்க்கிட்டிர் மெய்வசமே. இ-ள்: அநாதம் - ஆதாரமற்றதாகிய, சிவம் - சிவமும், சத்தி - சத்தியும், விண்டு - இவற்றின் நீங்கி, விந்து - வட்டமான, அரவிந்தர் - தாமரையிலுள்ள பிரமனும், உயர் கோவிந்தர் - அவரின் உயர்ந்த விஷ்ணுவும், அ- ஆகிய அந்த மூர்த்தங்களே யன்றி, இந்து - பிறைச்சந்திரனையும், அரவு - பாம்பையும், ஆர் - பொருந்திய, (உயர்) சடையார் - சடையினையுடைய அவரின் உயர்ந்த சைவ மூர்த்தமும், திரி - கொண்டு திரியும், வேட - திருவேடம் உடையீரே, சிவவிந்தர் - சிவனது நேத்திரவிந்துவில் தோன்றியவரே, அவிந்த அரசாம் மாவையீர் - உண்மை ஞான பரிபாலனம் பண்ணும் மாவைப்பதியை யுடையீரே, என்ன - என்று சொல்லி வேண்டி, விச்சம் மறு - வேதப் பொருளறிவில் விஞ்சினோமென்னும் செருக்காகிய குற்றம், அவிந்து - அவித்து, அரவிந்தர் - அப்பிரமனுடைய, அவிசெற்றவர் - ஆவி கலங்கக் குட்டிச் சிறையிட்ட முருகப் பெருமானை, கிட்டிர் - அன்பு பூண்டு அடைவீராக, (அடையின்) மெய் - உண்மை ஞானமானது, வசம் - உங்கள் வசத்ததாய் விடும், எ-று. வேடரே - சிவவிந்தரே, மாவையீரே, என்ன, கிட்டிர்; கிட்டின் மெய் வசமாம் என வினை முடிவு செய்க. சிவமும் சத்தியும் நிராதாரங்களாதலின், “அநாதம் சிவம் சத்தி” என்றார். பிரமனும் திருமாலும் ஈசனுமாகிய மும்மூர்த்தியாகவும் நின்று தொழில் புரியும் முதல்வனாதலின், “திரிவேட” என்றார். உயர்தலைச் சடையார் என்புழியும் கூட்டுக. இக்கருத்தினையே, “சிவமா துடனே அனுபோ கமதாய்ச் சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்த் திகைலோ கமெலாம் அனுபோகி இவனே எனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவேய் இயல்வே லுடன்மா அருள்வாயே.” (திருப்புகழ் 673, சமாசப்பதிப்பு) எனவரும் அருணகிரியார் திருவாக்கானுமுணர்க. அவித்தம் - அவிந்தமென மெலிந்தது. ஆவி, அவியென்று குறுகிற்று. 74 வசந்த வசந்த முறுமுன் முனிக்கு மறைசொல்குர வசந்த வசந்த னுடலளித் தார்சுத மாமகத்தா வசந்த வசந்த தனிகலமுற் றோயிறை வாசததி வசந்த வசந்த மலரணி மாவைய வாமவென்னே. இ-ள்: தம்வசம் - தம்பால், வசந்தம் உறும் - தென்றற் காற்றுப் பிறந்தேகும், முன் - முன்றிலையுடைய, முனிக்கு -அகத்திய முனிவருக்கு, மறைசொல் குரவ - வேதப்பொருளாகிய சிவதன்மத்தை யுபதேசித்த தேசிகனே, சந்த - அழகிய, வசந்தன் - மன்மதனுக்கு, உடலளித்தார் சுத - உடம்புதந்த சிவனுக்கு மகனே; மாமகத்து ஆவசம் - பெரிய யானங்களைச் செய்யும் இடங்கட்கு, தவ - அசுரர் முதலிய பகைவரால் உண்டாகும் இடையூறு கெட, சந்ததன் நிகலம் - பெரிய தன்னுடைய தோளில் காக்குந் தொழிலை, உற்றோய் - மேற்கொண்டுள்ளவனே, இறைவா - இறைவனே, சததிவசம் - பல நாளும், தவ - மிகுந்த, சந்தமலர் - வாசனைபொருந்திய பூக்களை, அணிமாவைய - அணியும் மாவைப் பதியில் உள்ளவனே, வாம - அழகனே, என்னே - என்றுசொல்லி, வணங்குவாயாக, எ-று. தென்றல் மலயமலையில் தோன்றுகிற தென்றல் தமிழ்நூல் மரபாதலின் “தம்வசம் வசந்தம் உறும்முன் முனிக்கு” என்றார். “பிறந்த தெங்கள் பிரான்மலை யத்திடை” (பெரியபுரா. தடுத்தாட். 167) எனவரும் திருவாக்கான் உணர்க. சிவதன்மோத்தரத்தை முருகக்கடவுள் குறுமுனிக்கு உபதேசித்தார் என்பதைத் தணிகைப் புராண அகத்திய னருள்பெறுபடலத்தானும், “ஆதிநடு வந்தமிலா னமலனுயிர்க் கழுக்கறுக்க வறைந்த வாய்மை, வேதமுத லுணர்ந்த குகன் விரைமலர்த்தா ளகத்தியன்றான் வியந்து போற்றி, போதகனே அனைத்துயிர்க்கும் புலமாக்கும் நெறிபுகலா யென்னக் கந்தன், ஓதியருள் சிவதருமோத் தரநூலைத் தொகைசெய்து முரைப்பா மோர்ந்தே” (பாயி. 7) என வரும் சிவ தருமோத்தரச் செய்யுளானு முணர்க. நெற்றிவிழியா லிறந்த மன்மதனுக்கு அவன் மனைவி இரதிதேவி வேண்டியதற்கு இரங்கிப் பரமன் தான் உமாதேவியை மணந்துகொண்ட ஞான்று உடலளித் தாதரவு செய்தாரெனக் கந்தபுராணம் கூறுதலின், “சந்தவசந்தன் உடலளித்தார்” என்றார். ஆவசதம் என்பது ஆவசம் என நின்றது. ஆவசதம் - வேள்வி செய்யுமிடம். “ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட் டன்றே” (முருகு. 98-100) என்பது கொண்டு “மாமகத் தாவசம் தவசந்த தன் நிகலம் உற்றோய்” என்றார். சத்திவசம், நூறு நாள், மற்று இது நூற்றின் மேலும் செல்லுமாதலின் இதனை அனந்தவாசியென்பர் தக்கயாகப் பரணி யுரைகாரர். இதனால், மாவை முருகனைத் துதிக்கும் நெறியுணர்த்தி யவாறு. 75 வாமத்த வாமத்த லோகதெய் வத்திர்நம் மாவையர்தே வாமத்த வாமத் தயலரன் சேய்மகிழ் மாவெற்புரு வாமத்த வாமத்த மாவுள தோவென்கை வாளியிற்போழ் வாமத்த வாமத்த கக்கறை சோர்ந்திங்கு வாவியதே. கெடுதிவினாதல் (அ) வேழம் வினாதல் இ-ள்: வாமத்தவாம் - செல்வத்தையுடையவாகிய, அத்த லோக - பொன்னுலகத்து, தெய்வத்திர் - தெய்வமகளிரைப் போல்பவர்களே, நம் மாவையர் - நம்முடைய மாவைப் பதியில் வாழ்பவரும், தே - தெய்வத்தன்மை பொருந்திய, ஆம் - கங்கையும், மத்தம் - ஊமத்தம் பூவும், வாமத்தின் - வாமபாகத்தின்,அயல் - பாகத்தே (வலப்பக்கத்தே) உடைய, அரன்சேய் - சிவபெரு மானுக்கு மகனுமான முருகக்கடவுள், மகிழ் - விருமபும், மாவெற்பு உருவாம் - பெரிய மலையை யொத்த உருவத்தையும், மத்த - மதத்தையும் வாமத்த - மாறுபாட்டையுமுடைய, மா - யானையொன்று, உளதோ - வந்ததுண்டோ, என் - கைவாளியல் - என் கையிடத்து அம்பினால், போழ் - பிளவுண்டு, வாமம் - தீமை, தவா - குறையாத, மத்தகம் - தலையில், கறைசோர்ந்து - உதிரம் சொரிய, இங்கு வாவியது இவ்விடத்தே கடுகி வந்தது. எ-று. வாமம் - செல்வம், ஒளியுமாம். வாமபாகம் உமாதேவி யாருக்குரியதாகலின் அதனையடுத்த வலப்பாகத்தே கங்கையும் மத்தமும் கூறினார். “மங்கையங்கொர் பாகமாக வாழ்நிலவார் சடைமேல், கங்கையங்கு வாழவைத்த கள்வன்” (காவிரி. பல். 3) என ஞானசம்பந்தர் குறித்தோதுமாற்றால் உணர்க. மத என்பது மத்த என விரிந்து நின்றது. “வாவியது” என்றான், தன் மனத்திடைக் கூற்று நிகழ்த்தும் தலைவன் வேறு கருத்துடையன் என்பது தோன்ற. 76 வாவிய வாவிய வாரலா ரால்வளர் வாலவுரு வாவிய வாவிய லாழி யரியருள் வள்ளியுள்ள வாவிய வாவிய வல்லவ வாழவிவ் வூரருளால் வாவிய வாவிய லோர வுரையருள் வாயவுள்ளே. வேற்றினம் விரவாது இடையின வெழுத்துக்களே விரவிவந்த இடையின யமகம். இ-ள்: வாவி - சரவணப் பொய்கையிடத்தே, அவாவிய - விருப்புற்ற, ஆரலரால் - கார்த்திகைப் பெண்களால், வளர் - வளர்க்கப்பட்ட, வாலவுருவா - இளமைநலமே கனியும் உருவுடை யோய், வியவா - பெரியோய், இயல் ஆழி அரி அருள் - அழகிய சக்கரப்படையையுடைய திருமால் பெற்ற, வள்ளி - வள்ளி நாயகியாரை, உள் அவாவியவா - மனத்தில் காதலித்தோய், இயவல்லவா - இசைவல்லவனே, இவ்வூரர் - இம்மாவைப் பதியினரது, உள்ளால் - உள்ளத்தில், வாழ - தங்குதற்கு, வாவியவா - விரைந்து சென்றவனே, அருள்வாய - நினது திருவருள் எங்கட்கு வாய்க்குமாறும் இயல் - நின்னுடைய இயல்புகளை, உள் ஓர - எங்கள் உள்ளம் உணருமாறும், உரை - உரைத்தருள்வாயாக, எ-று. சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் போந்து விருப்பத்தோடு முலைப்பால் தந்து வளர்த்தாரென்பது கருதி, “வாவி அவாவிய ஆரலரால் வளர்வால வுருவா” என்றார். “ஞால மேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் வருவோனே” (திருப்பு. 143) என அருணகிரிநாதர் ஓதியருளுதல் காண்க. “என்றும்இளையாய் அழகியாய்” என்று பெரியோர் போற்றிப் பரவும் சிறப்புக் குறித்து, “வாலவுருவா” என்றார். திருப்புகழும், “சம்பரம மயூர துரகக்கார, என்று மகலாத இளமைக்கார” (635) என்கின்றது. மாவையென்ற பெயர் மெல்லினம் மேவுதலால், அதனை விலக்கி, “இவ்வூரர்” என்றார். தன்னை நினைந் துருகும் அடியார்க் கருளும் பொருட்டு விரைந்து வருபவனாதலின் முருகனை, “உள்ளால் வாவியவா” என்றார். இயல் ஓர உரை என்று கொண்டு, நின் இயல் நலங்களை அடியோம் உணர வுரைத்தருள் என்றும், அருள்வாய் உள் உனக் கொண்டு அருள்வாய்க்கும்படி திருவுள்ளம் பற்றுவாயாக என்றும் உரைப்பினும் அமையும். 77 வாசந்தி வாசந்தி சாந்தஞ்செல் சோலையில் வள்ளிதன வாசந்தி வாசந்தி யைய்ந்தபெம் மானங்கண் மாவையிறை வாசந்தி வாசந்தி ரோதய மாலை மலையமலை வாசந்தி வாசந்தி யானாதி மாற்றன் மனங்கணியே. மாலையம்போது கண்டிரங்கல், இ-ள்: வாசந்தி வாசம் - வசந்த மல்லிகையின் நறுமணம், திசாந்தம் செல் சோலையில் - திசையெல்லைகாறும் சென்று கமழும் சோலையிடத்தே, வள்ளிதனம் - வள்ளிநாயகியின் கொங்கையில், வாசம் - அன்புற்று, திவாசந்து - அந்திப்போதிற் சென்று, இயைந்த பெம்மான் - கூடிய பெருமானே, அங்கண் மாவை இறைவா - அழகிய இடத்தையுடைய மாவைப்பதியின்கண் எழுந்தருளிய இறைவனே, சந்து - தூதுபோலவந்து, இவா - இகழ்கின்ற, சந்திர உதயமாலை - சந்திரன் உதயமாகும் இம்மாலைப் போதில், மலையமலை - மலைமயமலையிலுள்ள, வாசந்தி - குருக்கத்திப் பூவின், வாசம் - வாசனை விரவிய தென்றல் போந்து, தியானாதி - தியானம் செபம் முதலியவற்றைப் புரியும், மனம் - தவசிகளின் மனத்தையும், மாற்றல் - கலைக்கும் தன்மையுடைத்தாயிருப்பதை, கணி - திருவுள்ளத்தே எண்ணியருள்வாயாக, எ-று. வாசந்தி, வசந்த மல்லிகை, சோiன் நறுமணம் நாற்றிசையும் நெடுந்தொலைவு சென்று பரவுதல் குறித்து, “வாசந்தி வாசம் திசாந்தம்செல் சோலை” என்றும் அச்சோலையிடத்தே மாலைப் போதில் அவளாற்றாமையும் தனது ஆராமையும் ஏதுவாகச் சென்று கூடினானென்பது தோன்ற, “வள்ளிதனவாசம் திவாசந்து இயைந்த பெம்மான்” என்றும் கூறினார். அடியார் பலரும் முருகனது இச் செயலையே பெரிதும் வியந்தோதிப் பரவுவர். அருணகிரி யார், “புனக்குன்றம் தினைக்குஞ் செந்தினைப் பைம்பொன் குறக்கொம்பின், புறத்தண் கொங்கையிற் றுஞ்சும் பெருமாளே” (திருப்பு. 406) என்று கூறுவர்; நக்கீரனாரும், “ஒருமுகம், குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே” (முருகு) என்றார். முருகன்பால் தீரா வேட்கை கொண்டாள், மாலைப்போது எய்தக்கண்டு ஆற்றாது மெலிவாள். இத்தகைய மாலைப்போதில் வள்ளி தனத்தில் காதலுற்றுச் சென்று கூடிய நீ இன்றும் இம் மாலைப்போதில் வந்து இயைதல் தக்கதே என்பது குறிப்பு. இனி, மாலைப்போதில்தான் ஆற்றாளானதற்கு ஏது கூறுவாள், மலையமலைத் தென்றல் மாதவி மணம்கமழப் போந்து தன் மனத்தைக் கலைக்கின்றதென்றும், திங்களெழுந்து தண்ணிலவைப் பொழிவதுபோல வெம்மைசெய்து வெதுப்புகிறதென்றும் கூறுவாள். “மலையமலை வாசந்தி வாசம்” என்றும், “சந்து இவா சந்திரோதய மாலை” யென்றும் கூறினாள். தென்றலை முன்பு கிளவாது முறைமாற்றியது விரகமயக்கம். தென்றலின் வரவு வாசந்தி மணத்தால் சிறந்து தோன்றலின், அதனை “வாசந்தி வாசம்” என்றாள். தியானாதிகளைப் புரியும்தவத்தோர் உள்ளம் மிகத் திண்ணிதாக, அதனையும் மாற்றும் வன்மையுடையது இத்தென்றல் என்றற்கு, “மலையமலை வாசம் தியானாதி மனம் மாற்றல் கணி” என்றாள். எனவே, இதனால் மிக்க மெல்லியலான என்னை இறந்துபடுவிக்கும் வன்மை யுடைத்தாயிற் றென்பது குறிப்பெச்சம். மனம் என்புழி, சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. இன்னபொழுது தனியவரை முனிவுசெய்யும் கொடும்பொழு தாகலின், இன்னே வந்து கூடியருள வேண்டுமென்பாள், “கணி” என்றாள். 78 கணியார் கணியார் கலியரி பாடலர் கண்கண்மயக் கணியார் கணியார் புகல்வரொத் தேங்குகன்மாவைகடைக் கணியார் கணியார் கருத்தின்று முற்றிற்றுக் காதினெருக் கணியார் கணியார் வலர்யா மிவண்விலக் காந்தினமே. தோழி தினைமுதிர்வு கூறி வரைவு கடாதல். இ-ள்: காதின் - காதின்கண் அணிந்த, அணியார் - குழை யொடு பொருந்தும், கணி - நீண்ட கண்களையுடையாய், கணியார் - வேங்கை மரமானது, கணியார் - அன்பு கருதாது பூத்து, கலி அரி - சப்திக்கின்ற வண்டினம், பாடலர் - மொய்த்துப் பாடும் பாட்டி னையுடையதாயிற்று, கண்கள் - கண்களை, மயக்கு அணியார் - மயக்கக்கூடிய அழகு நிறைந்த, கணியார் - கண்ணியரான தலைவ ரால், புகல்வர் ஒத்தேம் - விரும்பப்படுவதற் கமைந்தேம், குகன் மாவை கடைக்கு அணியர் - குகப் பெருமானுடைய மாவைப் பதியிற் கோயிற்கடைத்தலையணுகினோர் - கருத்து முற்றுப் பெறுதல்) போல, கணியார் கருத்து - வேங்கை மரத்தின் கருத்தும், இன்று முற்றிற்று - இன்று முற்றுப் பெற்றது, இவண் - இவ்விடத்தே, ஆர்வலர்யாம் - தலைவரால் காதலிக்கப்பட்ட யாம், தினம் - இத்தினத்தில் விலக்காம் - இப்புனத்திற்கு விலக்காயினோம், எ-று. கண்கள் அகன்று காதளவாய் நீண்டிருத்தல் மகளிர்க்குச் சிறப்பாதலின், “காதின் நெருக்கணியார் கணி” என்றாள். வேங்கை மரத்தை நொந்து கூறுகின்றாளாகலின், “கணியார்” என்றாள். கணியார் - முற்றெச்சம். வேங்கை மலர்தலும் தினை முற்றுதலும் ஒரு காலத்து நிகழ்ச்சியாதலின், அதன் மலர்ச்சியை, “கலியரி பாடலர்” என்றாள். எனவே, வேங்கை நன்கு மலர்ந்து வண்டினம் மொய்த்துப் பாட்டிசைப்ப நின்றதனைக் கண்டு பொறாது உரைத் தாளாகக் கொள்க. வேங்கை பூத்தது கூறவே தினைமுற்றி அறுக்குங் காலம் எய்தியது குறித்தாளாயிற்று. கணியார் என உயர்த்தியதற் கேற்ப, “கலியரிபாடலர்” என்றாள். தலைமகனது கண்கொள்ளாப் பேரழகும் தலைமைப் பண்பும் நினைந்து “கண்கள் மயக்கணியார் கணியார்” என்றாள். கண்ணியர்- கணியார் என நின்றது. அவரால் விரும்பப்படுதற் கமைந்தோமேயன்றி இன்னும் அவரால் தெருண்டு வரைந்துகொள்ளப்பட்டே மில்லையென இரங்கி, “புகல்வரொத் தேம்” என்றாள். ஒத்தல் - அமைதல். மாவைக்கடை எனற்பாலது மாவைகட எனத் தொகுத்தல் விகாரமெய்திற்று. மாவை, ஆகுபெயராய் மாவைப்பதியிலுள்ள முருகன் திருக்கோயிற்காயிற்று. அத் திருக்கோயில் தலைக் கடையில் நின்று வழிபடுவோர்க்கேயன்றி, அதன் அருகே நின்று வழிபடுவோர் கருத்து முற்றும் இனிது கைகூடப் பெறுமென்பார், “குகன்மாவை கடைக்கு அணியார்” என்றார். அணிமை - அருகு. உவமவுருபு விரித்துக்கொள்க. தன்பால் அன்பு பூண்டு, நிழலில் அமர்ந்து இனிதிருந்த நம்பால் அன்புகொள்ளாது நம்மை இப்புனத்தினின்று விலக்க வேண்டும் என்ற கருத்தே கருதியிருந்த இவ்வேங்கை, தான் பூத்தலால் தினைவிளைவு காட்டி நம்மை இப்புனத்திருந்து நீங்கு வதாயிற்றென்பாள், “கணியார் கருத்தின்று முற்றிற்று” என்றாள். “தீத்திண்டு கையார் பிரிவித்தல் காண்” (திணை மா. 150) எனப் பிறசான்றோரும் கூறுதல் காண்க. ஆர்வலர் - அன்பு செயப்பட்டோர்; “ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” (குறள் 71) என்புழிப்போல. பாங்கியிற் கூட்டம் வேண்டி அவன் ஒழுகிய ஒழுக்கத்தின்கண் தான் குறைமறுத்தும் சேட்படுத்தும் குறிமறுத்தும் அவன் தலைவியை இன்றியமை யானாயிருத்தலை நன்கு உணர்ந்துளாளாதலின் அவனால் காதலிக்கப்பட்ட தம்மை “ஆர்வலர் யாம்” என்பாள். எனவே தலைவியும் அவனை யின்றியமையாளாதல் பெற வைத்தாளாம். தலைவியின் தான் வேறல்லளாதலின், தோழி தன்னோடு உளப்படுத்தி “யாம்” என்றாள். “விலக்காம் தினமே” என்றது. இனி நம் தலைவனை இவ்விடத்தே தலைப்பெய்தல் ஒழிந்ததென்றும், மனையிடத்தும் காவலருமையும் இற்செறிப்பும் கூட்டம் எய்தாவாறு இடையீடுபடுக்குமாதலின், மனையிடத்தும் இவ்வாறு கூடல் அரிதென்றும் கூறினாளாயிற்று. இதனாற் பயன், தலைமகன் களவு நெளிவிட்டுத் தெருண்டு வரைந்து கொள்வானாவது. 79 காந்தனங் காந்தனங் கொண்டழித் தான்குறக் கன்னியழ காந்தனங் காந்தனங் கம்பிணித் தின்னயங் காட்டியசீர்க் காந்தனங் காந்தனங் கொண்டொளிர் மாவைக் கடவுடார காந்தனங் காந்தனங் கேட்பன வீவனங் கைத்தத்தமே. இ-ள்: காந்தன் - பிரகாசத்தையுடையவனும், அங்கு - அம்மேருமலையிடத்தே, ஆம் - உண்டாகிய, தனம்கொண்டு - பொன்னைக்கொண்டு, அழித்தோன் - அம்மலையரசன் செருக்கை யழித்தவனும், குறக்கன்னி - குறமகளான வள்ளிநாயகியின், அழகாம்தனம் - அழகிய கொங்கையை விரும்பினவனும், அம் - அழகிய, கம் - மேகத்தை, பிணித்து - கட்டிவைத்து, இன்னயம் காட்டிய - இனிய மழைவளத்தை நாட்டில் நிலை பெறுவித்த, சீர்க்காந்தன் - புகழையுடைய உக்கிரகுமரனான இறைவனும், அம் - அழகிய, கா - சோலையும், தனம் - இடப்பரப்பும், கொண்டு - தன்பாற்கொண்டு, ஒளிர்மாவைக் கடவுள் - விளங்கும் மாவைப் பதியில் எழுந்தருளிய கடவுளும், தாரகாந்தன் - தாரகாசுரனைக் கொன்றவனுமாகிய முருகப் பெருமான், நம் காம் தனம் - நமக்கு விருப்பமாகிய செல்வங்களாக, கேட்பன - நாம் கேட்குமவற்றை, ஈவன் - வரையாது கொடுப்பன், (அதனால்) அத்தம் - இனி, பொருளென்பது, அங்கைத்து - நம் அகங்கையிடத்ததாம், எ-று. காந்தம் - பிரகாசம். மேருமலைக்குச் சென்று பொன் கொண்டு அதன் செருக்கழித்த வரலாற்றைக் “கனகங்கன கங்கை”, (33) என்ற பாட்டின்கண்ணும் கூறியிருக்கின்றார். குறக்குடியிற் பிறந்து வளர்ந்த சிறப்புக் குறித்து, “குறக்கன்னி” யென்றார். மேகத்தைப் பிணித்து நாட்டில் மழை பெய்வித்துக் கொண்ட வரலாறு, “குருத்தங் குருத்து” (52) என்ற பாட்டின்கட் கூறப் பட்டுளது. அப்பாட்டின்கண் நாட்டில் மழைவளம் செய்து கொண்ட செயலை “மண்செய்”தல் என்றாராக, அதனால் பற்பல நாட்டவரும் விரும்பத்தக்க நலமுண்டாதலை, “இன்னயம்” என்றும், அது நிலைபெறச் செய்தார் எனற்கு “காட்டிய” என்றும் கூறினார். தானம் தனம் எனக் குறுகிற்று. தாரகாந்தன் என்றார், கிரவுஞ்சிவெற்பில் இருந்துகொண்டு தேவர் முதலாயினார்க்குத் தீங்குசெய்த இவன் சூரனுக்குத் துணைவனாய் அவன் செய்த தீமைக்கு ஆக்கம் செய்தவனாதலானும், முருகப் பெருமானால் முதற்கண் சங்கரிக்கப்பட்டமையாலும், முருகற்கு அவனால் “தாரகாந்தன்” என்றொரு பெயருண்டாயிற்று. காமம் - காம் எனக் கடைகுறைந்தது. முருகனைப் பரவித் தாம் வேண்டுவவற்றை நினைந்தவழி, அவையனைத்தும் வேண்டியவாறே வந்து கைமேற் பொருளாகச் சேருமென்பார். “அங்கைத்தத்தமே” யென்றார்; “முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார்” (கந்தரலங். 33) எனச் சான்றோர் கூறுதல் காண்க. “வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட” என்பது முருகாற்றுப்படை. 80 தத்தம தத்தம காமாவைக் கோவி றனிற்பணிக்காய்த் தத்தம தத்தம முந்தினர்க் கூதியஞ் சால்கடன்வே தத்தம தத்தம ரேசரி னுண்டது சார்கிலர்கைத் தத்தம தத்தம ரூஉமேனு மிங்கெனல் சங்கையதே. இ-ன்: தத்தமது அத்தம் - தத்தம்முடைய செல்வத்தை, மகாமாவைக் கோவில் தனில் - பெரிதாகிய மாவைப்பதியிலுள்ள கோயிலில், பணிக்காய் - திருப்பணியின் பொருட்டு, தத்தம தத்தம - தத்தம்முடைய செல்வமே முதலில் உரியன என்று, முந்தினர்க்கு - முந்துகின்ற செல்வர்களுக்கு, ஊதியம் சால் கடன் - இலாபம் நிறைந்த கடனாக, வேதத்தமதத்து - வேதத்திடத்தே விருப்ப முடைய, அமரேசரின் உண்டு - தேவேந்திரனால் கொடுபடக் கூடியதாய் உளது, அதுசார்கிலர் கைத்து - அச்செயலில் ஈடுபடாதவருடைய கையிடத்ததாகிய, அத்தமது - செல்வமானது, அத்தம் மரூஉமேனும் - கையில் பொருந்தியிருப்பினும், இங்கு எனல் - இங்கே இதோ உளது என்று சொல்வதும், சங்கையது - ஐயப்படுவதற்கு உரித்தாம், எ-று. என்றது, திருப்பணியில் ஈடுபடுத்தாதார் செல்வம் கைமேல் இருப்பினும் இல்லையாகவே முடியும் என்பதாம். மண்ணிடயே, ஒருவர் பெற்ற பெருவளம் இறைவன் அருளிய தெனக் கொண்டு, அவன் திருக்கோயிற் திருப்பணிக்கு அதனை மனமுவந்து கொடுப்பதனால், அச் செல்வப் பயனை மறுமையில் இந்திரபோகம் துய்க்குமுகத்தால் பேரூதியமாகப் பெறுவர் என்று பெரியோர் கூறும் நல்லுரையை வற்புறுத்துமாற்றால், “தத்தம தத்தம முந்தினர்க் கூதியஞ் சால்கடன்வே தத்தமதத்து அமரேசரின் உண்டு” என்றார். வேதத்தை விரும்பும் வேந்தனாதலின், இச் செல்வத்தை எவ்வகையானும் கொடுத்தற்குரிய கடனாகக் கருதி, ஊதியம் பெய்து கொடுப்பான் என்பார், “வேதத் தமதத்து அமரேசர்” என்றார். தமதம் - விரும்பும். அப்புண்ணியத்தைச் சாராதார், புண்ணியப் பயனாய்த்தாம் எய்தியிருக்கும் செல்வத் தையும் கணத்தே இழப்பர் என்பார். “அதுசார்கிலர்” என்றும், அவர்பால் உள்ள அந்நன்றியில் செல்வம், அவர் கைம்மேல தாயினும் உளதென்று கருதப்படாது என்பார், “அத்தம் மருஉ மேனும் இங்கெனல் சங்கையது” என்றும் கூறினார். பொருளுடையார் தம் பொருளை முருகன் திருப்பணிக்குச் செலவிடாராயின், அஃது அவர் கையகத்திருப்பினும் கழிந்து விடும் என்றாராயிற்று. 81 சங்கர சங்கர நாசன் மருமகன் றாசர்சலச் சங்கர சங்கர வின்றன் றுரைவர சாகரன்வா சங்கர சங்கர காமாவை மாத்திரங் கங்குரைமா சங்கர சங்கர னன்னயச் சாகர ரத்தியங்கே. உபயநாகபந்தம் இ-ள்: சங்கு அரசு - சங்கேந்திய அரசனும், அகரநாசன் - அந்த முதலையைக் கொன்றவனுமான திருமாலுக்கு, மருமகன் - மருமகனும், தாசர் - அடியார்களாகிய புலவர்கள், சல - கலக்க மெய்தியபோது, சங்க - சங்கச் சபையிலே, ரசம் - பொருட்சுவை, கரவின்று - மறையாதபடி, அன்று உரை செய்தவன் - அக்காலத்தே அகப்பொருட்கு உரை விரித்தவனும், வரசாகரன் - வரத்தைக் கொடுக்கும் கடல் போன்றவனும், சங்கர - சுகத்தைச் செய்கின்ற, சம் - அழகிய, கர - கைகளையுடையவனுமான முருகனது, கரசம் - யானைகள், வாசம் - வாசம்பண்ணும், கரு அம் காமாவை - செறிந்த மரங்களால் இருண்ட அழகிய சோலைகளையுடைய மாவைப்பதியில், மாத்திரம் - நாற்றிசையிலும், கம் - மேகக் கூட்டம், குரை - முழங்கும், மா - பெரிய, நல்நய - நல்ல நயத்தைச் செய்கின்ற, சாகரர் அத்தி - சகர புத்திரர் தோண்டிய கடல், அங்கே - அவ்விடத்தே உளது, அதன் கண் அவ்விடத்தே மூழ்கி மாவைப் பரமனை வழிபடுக, எ-று. திருமால் சங்கேந்தும் முதல்வனாதலின் “சங்கரசு” என்றார். கசேந்திரன் என்னும் யானையைக் கொல்ல முயன்ற முதலையை, அவ் யானையின் வேண்டுகோட் கிரங்கிப் போந்து கொன்று, காத்த செயலை வியந்து “அங்கரநாசன்” என்றார். அங்கர நாசன் என்பது மெலிந்துநின்றது. “மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு மதகரி கூப்பிட வளையூதி மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே” (திருப்பு. 20) என்று அருணகிரியாரும் கூறுதல் காண்க. இறையனார் அகப்பொருட்கு உரைகாணாது கலங்கிய சங்கப் புலவர்க்கு, அக்கலக்கந்தீர உண்மைப் பொருளைத் தெரி வித்தருளினாரென்று களவியலுரை வரலாறு கூறுதலால், “தாசர் சலச் சங்கர சங்கர வின்றன் றுரைவர சாகரன்” என்றார். இதனை அருணகிரியார், “....................மெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் தியில்ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா” (திருப்பு. 344) என்று ஓதுகின்றார். கரசம் - யானை. மாதிரம், மாத்திரமென விரிந்து நின்றது. சகரபுத்திரர் தோண்டியதால், கடற்குச் சாகரம் என்ற பெயரும் எய்திற்றென்ப. சாகரர் வடமொழித் தத்திதாந்த நாமம்; தசரதன் மகன் தாசரதியென்று ஆயதுபோல. சகரர் புத்திரர் சாகரர் என்றாயிற்று. 82 தியங்கந் தியங்கந் தநமவென் றோதுமுன் சேர்ந்திடுஞ்சத் தியங்கந் தியங்கந் தருபொழில் சூழுஞ் சினகரநித் தியங்கந் தியங்கந் தரமுரண் மாவையன் செஞ்சடையிந் தியங்கந் தியங்கந் திருநீ றணிந்த சிவநந்தனே. இ-ள்: கந்து - கத்துகின்ற, இயம் - முழாவைப்போல, கம் - மேகம் தவழும், தருபொழில் - மரங்கள் செறிந்த சோலை, சூழ - சூழவுள்ள, சினகரம் - கோபுரத்தில், நித்தியம் - நாடோறும், கம் - ஆகாயத்தே, தியங்கு - திரிகின்ற, அந்தரம் - தேவ சாரணர்கள், முரண் - தேவலோகமோ என மயங்கி மாறுகின்ற, மாவையன் - மாவைப்பதியில் எழுந்தருளி யிருக்கும் முருகப் பெருமான், செஞ்சடை - சிவந்த சடையின்கண், இந்து இயங்கு - சந்திரன் தவழும், அந்தி அங்கம் - அந்திவானம்போலும் திருமேனியில், திருநீறு - விபூதியணிந்த, சிவநந்தன் - சிவபெருமானுக்குத் திரு மகனாவான், (இப்பெருமான்) தியங்கு - பொறி புலன்கள் தடைப் படுகின்ற, அந்தியம் - மரண காலத்தில், அந்தநம என்று ஓதுமுன் - கந்தனே நம என்று மனதில் தியானித்து வாயால் ஓதுமுன்பே, சேர்ந்திடும் - நம் முன்பே வந்து தோன்றுவன், சத்தியம் - இது முக்காலும் உண்மையாகும், எ-று. மேலே, “மன்றன மாவையிற் போற்றுதிர் மந்திரமே” (14) என்று கூறினவர், ஈண்டு அம் மந்திரத்தை எடுத்தோதி உபதேசிக்கு முகத்தால், “கந்தநம” என்று கூறினார்; ‘ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி’ (முருகு. 186) என நக்கீரனார் கூறிய திருவாக்கிற்கு நச்சினார்க்கினியர், “நமோகுமராய” என்று பொருள் கூறினார். அருணகிரியார், இதனையே, அநுபூதியில், “நாதாகுமராநம” (36) என்று உரைத்தருளினர். இதனால், கந்தநம என்பதும் மந்திரமாதல் காணலாம். மந்திர மோதும் முறை மானசம், மந்தம் - உரை யென மூவகைப்படும்; மானசம் - மனத்தில் தியானிப்பது; மந்தம், தன் செவிக்கே புலனாகுமாறு ஓதுவது; உரை - பிறர் செவிக்கும் புலனாகுமாறு ஓதுவது. ஈண்டு இவர் மானசம், உரை இரண்டாலும் ஓதப்பணிப்பார். “கந்தநம என்று ஓதும்” என்றார், “உயிர் போமுன், சிலபுகழ் கற்றுச் சொற்கள் பயிற்றித், திருவடியைப் பற்றித் தொழு துற்றுச், செனன மறுக்கைக் குப்பிரபத்திக் கருள்தாராய்” (திருப்பு. 768) என வரும் திருவாக்கு இவர் கூறும் உண்மைக்குச் சான்றாதல் காண்க. தேவலோக சாரணர் வானத்தே யுலவுமிடத்து மாவைச் சினகரத்தைக் கண்டு தேவலோகமோ என ஐயுற்றுப் போந்து, முருகப்பெருமான் சினகரமெனத் தெளிந்து வழிபட்டு, இவ் வழியே போந்தது தவறென்றுணர்ந்து அஞ்சி நீங்குவர் என்பார், “தியங்கு அந்தரம் முரண் மாவையன்” என்றார். முருகப்பெருமானும் செம்மேனியும் திருநீறும் திருவக்க மணியும் அணிந்து சிவபரம்பொருளோடு தனக்குள்ள இயை பினைத் தோற்றுவித்தல் கொண்டு, “செஞ்சடை இந்து இயங்கு அந்தியங்கந் திருநீறணிந்த சிவநந்தன்” என்றார். நந்தன் - மகன், முருகக் கடவுளும் திருநீறும் அக்கமணியும் அணிதலை “நாயகாபுய அட்சமாலாதரா குற மங்கை கோவே” (631) எனத் திருப்புகழ் கூறுவது காண்க. 83 நந்தன நந்தன யந்தோன் மருக ஞமலிசெறி நந்தன நந்தன மார்தட மாவைய நாதசதா நந்தன நந்தன ரிப்பரி கூட னடாத்தியவர் நந்தன நந்தன மேதரு வாய்நய மாவதுவே. இ-ள்: நந்தனநந்தனன் - முல்லைநிலத்தே வாழும் நந்தன் என்னும் இடையனால், நயந்தோன் - விரும்பி வளர்க்கப்பட்ட திருமாலுக்கு மருமகனே, ஞமலிசெறி நந்தனம் - மயில்கள் செறிந்த சோலைகளும், நந்து - சங்குகளும், அனம் - அன்னங்களும், ஆர் - நிறைந்த, தடமாவைய - நீர்நிலைகளு முடைய மாவைப்பதியில் எழுந்தருளினவனே, நாத - எவர்க்கும் தலைவனே, சதாநந்தன் - எப்போதும் ஆனந்தமாயிருப்பவனும், அநந்தன் - முடிவில்லாத வனும், கூடல் - மதுரையில் நரிபரி நடாத்தியவர் - நரியைப் பரியாக மாற்றி நடத்தியவருமாகிய சிவனுடைய, நந்தன - மகனே, நம் தனமே - எங்கள் செல்வமே, நயமாவது - என்றும் குன்றாத இன்பம் சுரத்தலால் விரும்பப்படுவதாகிய முத்திநெறியை, தருவாய் - உபதேசித்தருள்வாயாக, எ-று. நந்தன், யசோதையார் கணவன், அவன் மனையின்கண் இடைச் சிறுவனாய்க் கண்ணனான திருமால் வளர்ந்ததை யுட் கொண்டு, “நந்தனநந்தன்” என்றார். சோலைகட்கு மயிலும், நீர்நிலைகட்கு அன்னமும் அழகு தருவன என்பதனால் “ஞமலி செறி நந்தனம்” என்றும், “நந்து அனமார் தடம்” என்றும் கூறினார். நந்தனம் என்பதை வினைத்தொகையாக்கி மிகுகின்ற அன்னம் எனக் கூறினுமாம். சங்கமும் அன்ன முறையும் பதுமமும் கூறியது, குறிப்பால் மாவைப்பதியில் இருவகை நிதியமும் பொருந்தி யிருப்பது உணர்த்தியவாறுமாம். மும்மூர்த்திகளும் வணங்கும் முதன்மையுடைமைபற்றி முருகனை “நாத” என்றார். சிவபெரு மான் பிறப்பிறப்புக்கள் இல்லாதவனாதலின், “அனந்தன்” என்றார். “பிறவா யாக்கைப் பெரியோன்” என இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. சிவபெருமான் மணிவாசகர் பொருட்டு நரியைப் பரியாக்கிய செய்தியைக் குறித்து, “கூடல் நரிப்பரி நடாத்தியவர்” என்றார். கூடல் - மதுரை. “நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளத் தொடுபிடித் தெதிர்நடத் திடுமீசன்” (திருப்பு. 389) என அருணகிரி யாரும் கூறுதல் காண்க. “நடாத்தியமர்” என்னும் பாடம் பொருட் பேறின்று. உறுதிப்பொருள் என உயர்ந்தோர் எடுத்த அறம், பொருள், இன்பம் என்பன அழிவில் இன்பம் தராமையான், அவற்றைத் துறந்து பெறும் வீடு பேற்றுக்குரிய ஞானமே அறிவுடையோர் நயக்கும் பொருளாதலின் அதனை வேண்டுவார், “நயமாவது தருவாய்” என்றார். இக்கருத்தை, அருணகிரியார், “விண்ணாள் பதமும் விரிநீர் புடைசூழ் மண்ணாள் பதமும் மகிழேன் மகிழேன், தண்ணா ரமுதே சயிலப் பகையே, கண்ணா ருனருள் கனியைப் பெறினே” (அநுபூ. 55) என்பதனால் உணரலாம். 84 மாவலி மாவலி யாண்டறு மோவன்பர் மாமகிழி மாவலி மாவலி யாவுமின் றேநெஞ்ச மாவலிக்கு மாவலி மாவலி மாரதம் வந்தின்று மாவையனான் மாவலி மாவலி யாழ்த்தோன் மருகன்றன் மாதலத்தே. இ-ள்: மாவையன் - மாவைப்பதியில் எழுந்தருளியவனும், ஆன்மாவலி மாவலி - ஆன்மபோதமே மேலிட்டிருந்த மாபலி யென்னும் வேந்தனை, ஆழ்த்தோன் மருகன்தன் - பாதலத்தில் அழுத்திய திருமாலுக்கு மருகனுமான முருகனுடைய, மாதலத்து - பெரிய தலத்தின்கண், அன்பர்மகிழ் - அன்பர் மகிழுமாறு வேண்டும் வரங்களை நல்கும், மா - பெரிய, இமாவலி - மலையரசன் மகளாகிய கொடிபோன்ற உமாதேவியின், மாவலி உயிர்கட்குப் பாகமுண்டாதற் பொருட்டுச் செலுத்தப்படும் திரோதாயிசத்தியின் மறைப்பு வன்மை, யாவும் - முழுதும், இன்று - இல்லையாய் ஒழிந்தது, நெஞ்சம் - மறைப்பு நீங்கிய மனமும், ஆவலிக்கும் - விளங்குகின்ற ஞானானந்தத்தைப் பெற ஆவல் கொள்வதாயிற்று, மாவலி - மிக்க வலியோனாகிய முருகப் பெருமானது, மா - குதிரையால், வலி - இழுக்கப்படும், மா - அழகிய, ரதம் - தேர், வந்தின்று - இன்னும் வந்திலது, மாவலி - மிக்க வலியுடைய, மா - புலன்களாகிய யானையால், வலி - ஈர்க்கப்படும் துன்பநிலை, யாண்டு அறுமோ - எப்போது நீங்குமோ, எ-று. தற்போதத்தால் செருக்கித் தன்னையும் தன்னையுடைய தலைவனையுமுணர்ந்து அடங்கியொழுகாது தீவினையே புரிந்த மாபலியைப் பாதலத்தில் அழுத்திய திருமால் மருகன் என்றது, தன்பால் முனைத்துநிற்கும் பசுபோதத்தைக் கெடுத்து அதனைப் பாதலத்தே அழுத்தியருள்வன் என்று குறித்துரைத்தவாறு: பன் முறையும் அச்சுமாறிப் பிறந்திறந்து இளைத்த உயிர்கட்கு அவ்விளைப்பு நீங்கி, ஞானவாழ்வு எய்துதற்கேற்ற பக்குவம் எய்துங்காறும் மறைத்து நிற்கும் திரோதான சத்தி நீங்கியதற் கேதுவாக, ஞானசக்திதரனாகிய முருகனைப் பத்திபண்ணுதற் கேற்ற மனப்பான்மை உண்டாகிய துணர்ந்துரைத்தலின், “அன்பர் மாமகிழ் இமாவலி மாவலி யாவு மின்றே” என்றார். அன்பர் மகிழ்மா இமாவலி என மாறுக. அன்பர் மகிழ்மா மாவலி என்றற்கு, அன்பராகிய சிவபெருமானுடன் பிரிவின்றி யிருந்து மகிழும் பெரிய உமாதேவியார் என்றுமாம். “இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இயைந்தாரும்” (ஆலங்காடு: 7) எனத் திருஞான சம்பந்த சுவாமிகள் கூறுதல் காண்க. மறைப்பு நீங்கியபின் உயிர் ஞானத்தைத் தரிசித்து ஆண்டுச் சுரக்கும் இன்பத்தை மிக்க ஆர்வத்தோடு பருக விழைதலின், “நெஞ்சம் ஆவலிக்கும்” என்றார். நெஞ்சம், ஈண்டு உயிர்மேல் நின்றது; “அறிவிக்க அன்றியா உளங்கள்” (சிவ.ஞா.போ.) என் புழிப்போல. மாவலி மதவலி என்ற முருகற்குரிய பெயரின் பரியாயம். முருகனது ரதோற்சவம் தரிசிக்கும் ஆவலுடைமை கூறுவார், குறிப்பால் பரஞான தரிசனம்பெற விரும்பும் விருப்பத் தைப் புலப்படுத்துகின்றார். இத் தரிசனானந்தத்தை விரும்பக் கருதி ஒருப்பட்டு நிற்கும் தம் உள்ளம் புலன்களாகிய யானையால் ஈர்ப்புண்டு மறுபடியும் அஞ்ஞானமாகிய இருட்காட்டிற்குட் புகுந்து ஒளியிழந்துவிடுமோ என்று அஞ்சுமாறு தோன்ற, “மாவலி மாவலி யாண்டறுமோ” என்றார். மறைப்பு நீங்கி மெய்யுணர்வைத் தலைப்பட்ட வழியும், பயிற்சி வாசனையால் உள்ளம் விட்டு நீங்கிய புலன்கள் மேற் செல்வது குறித்து இவ்வாறு கூறினாரென வுணர்க. 85 மாதவ மாதவ னூறிட நோற்றசெம் மாசுணந்தேண் மாதவ மாதவ வுண்பகற் கோளுடு வாய்த்தறவிம் மாதவ மாதவ றின்னார்க்க மூழ்கி மருவினமான் மாதவ மாதவ ணான்மாவை யான்முன் மயற்பங்கமே. இ-ள்: நோற்ற மாதவம் - செய்த பெரிய தவத்தை, மாதவன் - குறுமுனிவன், நூறிட - கெடுத்தழிக்கவே, செம் மாகணம் - தவம்செய்த அந்தச் செவ்விய பாம்பாகிய நகுடன், தேள்மாத - கார்த்திகை மாதத்தில், அ - அந்த, மாதவம் - பெரிய தவப்பயனை, உண்பகல் - நுகர்ந்த காலத்தில், கோள் உடு வாய்த்தும் - அதற்குரிய கோள்களும் நாள்களும் நன்கு பொருந்தியிருந்தும், அற - அந்நுகர்ச்சியில்லாது போக, இம் மாதவ மாதவறின்னார்க்கு - இந்தப் பெருந்தவப் பயனாகிய இந்திர போகத்தை இழந்த இன்னலை யுடைய வேந்தர் பொருட்டு, அகம் மூழ்கி - பொய்கையில் மூழ்கி, அவண் - அவ்விடத்தே, மாது பெண்ணொருத்தி, ஆன்மாவையான் முன் - தவம்செய்த மாமுருகன் திருமுன், மாதவம் மருவினம் - நல்ல தவப்பயனைப் பொருந்தினோம், மயல் - இனி நம்மைப் பற்றக் கடவ மயக்கமும், பங்கம் - கெட்டதாம், எ-று. குறிப்பு: இவ்வுரை இப்பாட்டின் சொல்லமைதிகண்டு ஒருவாறு கூறியதாகலின், மெய்யுரையென்றோ அன்றென்றோ துணிதற்கில்லை. தலபுராண வரலாறுகண்டு அதற்கேற்பப் பொருள் செய்வதே வேண்டுவதாம். இதன்கட் குறிக்கப்படும் வரலாறுகள் தெரியவில்லை. 86 பங்கச பங்கச தானந்த மாமலர்ச் சாபகருப் பங்கச பங்கச மம்புரிந் தார்சுத பண்ணவர்நம் பங்கச பங்கச வீகாட்டு மாவயை பாலநெருப் பங்கச பங்கச வாதுளம் வாகிரு பாகரனே. இ-ள்: பங்கு - எவர்க்கும் கேட்டைச் செய்து திரிந்த, அசம் - ஆட்டினை, பங்க - பங்கப்படுத்தி ஊர்தியாக்கிக்கொண்டவனே, சதானந்த - மெய்யான ஆனந்தத்தையுடையவனே, மாமலர் - அழகிய பூக்களை அம்பாகவும், கரும்பு சாப - கரும்பினை வில்லாகவுமுடைய, அங்கச - மன்மதனை, பங்கம் - தோல்வியுறு மாறு, சமம்புரிந்தார் - நெற்றிவிழிப் பார்வையால் விழித்தெரித்த சிவபெருமானுக்கு, சுத - மகனே, பண்ணவர் - தேவர், நம்பு - விரும்பும், அம்கச - அழகிய யானையையுடையவனே, பங்கசவீ காட்டு மாவைய - தாமரைப்பூ, காடுபோல் பூத்திருக்கும் மாவைப் பதியில் உள்ளவனே, பால நெருப்பு அங்கச - நெற்றி விழியிலுள்ள நெருப்பிற் பிறந்த குமரனே, பங்கம் - பவமாகிய சேற்றில், சம் - பிறப்பதாகிய, வாது - வாதத்தில், உளம் - சிக்கிக் கிடக்கின்றோ மாதலால், கிருபாகரனே - அருளுக்கு உறைவிடமானவனே, வா - அடியேங்களாகிய எங்கள் முன் வந்தருள்வாயாக, எ-று. நாரத முனிவன் வேள்வியிற் பிறந்து அண்டமுழுதும் நடுங்கக் கத்தியலைத்துப் போந்த ஆட்டுக்கிடாவை யடக்கி யூர்தியாகக் கொண்ட செய்தியைக் குறிப்பார். “பங்கு அசபங்க” என்றார். “முனிதழல் வருதகர் இவர்வல, அங்கங் கஞ்சம் சங்கம் பொங்கும் கயல்நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே” (562) என்பது திருப்புகழ். “நாரதன் வேள்விவந்த நாமவான் தகரை யூர்ந்து வீரரோ டமரும் நாளில்” (சீபரி. 35) என்பது தணிகைப்புராணம். வில்லும் அம்பும் கொண்டு பொருத மன்மதனை வெகுண்டு நெற்றிவிழித் தீயால் எரித்தழித்தாராதலின், சிவபெருமானை, “மாமலர்ச் சாபகரப் பங்கச பங்கச மம்புரிந்தார்” என்றார். முருகப்பெருமான் பிணி முகம் என்ற யானையையுடையராதலின், “பண்ணவர் நம்பு அம்கச” என்றார். தேவர்க்கு நேர்ந்த இடுக் கணைத் தவிர்க்கக் கருதிய வழி, அவர்க்கு ஊர்தியாய் நின்று அச்செயற்கு ஈடுபட்டதனால், அவ்யானை தேவரால் விரும்பப் பட்டதென்றறிக. பரமனது நெற்றி விழியிற் பிறந்த தீப்பிழம்பில் தோன்றிய முதல்வனென்பதனை, “பாலநெருப்பங்கச” என்றார். பாலம் - நெற்றி. ஆகுபெயர். பங்கச வீகாட்டும் மாவை யென்பதற்குத் தாமரைப் பூக்கள் மிகுந்துள்ள மாவையென்றுரைப்பினுமாம். பங்கம், ஆகுபெயராய்ப் பவத்தை யுணர்த்தி நின்றது. 87 பாகரன் பாகரன் சேய்மாவை யின்மண்பொன் பங்குசன்னி பாகரன் பாகரன் றன்றுவந் தேகப் பணிந்தகிரு பாகரன் பாகரன் றூர்தே ரிவண்வரப் பண்ணல்வியப் பாகரன் பாகரன் னம்புரை கம்பு பணித்தனரே. கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் இ-ள்: பாகரன் - அழகிய கைகளையுடையவனும், பாக அரன் சேய் - மங்கையைப் பாகமாகவுடைய சிவபெருமானுக்கு மகனும், மண் - அலங்கரிக்கப்பட்ட, பொன் - பொன்னால் செய்த, பங்குசன் - தலைக்கோலமுடையவனும், நிபாசரன் - கடப்மாலை யணிந்தவனும், பாகர் - அன்பு நெறியில் பக்குவமுற்ற அடியார்கள், அன்றன்று வந்து ஏக - நாடோறும் வந்து தரிசித்துச் செல்ல, பணிந்த - எளியனாகிய, கிருபாகரன் - அருளுக்கு உறைவிடமான வனும், பாகர் - அழகிய தோளையுடையவனுமாகிய முருகக் கடவுள், அன்று ஊர்தேர் - அன்று தாம் ஏறிவந்த தேர், இவண்வர - இவ்வீதியில் இவ்விடத்தே வர, பண்ணல் - பண்ணியது காணின், நல் வியப் பாகர் - நல்ல வியக்கத்தக்க தேர் செலுத்துபவராக வுள்ளார், (ஏனெனில்) அன்பு ஆகு - அவர்பால் அன்பு கொண்ட வளாகிய, அரு அன்னம் - அரிய அன்னத்தையொத்த என் மகளின், புரை - நலம் உயர்ந்த உடம்பில், கம்பு - நடுக்கத்தை, பணித்தனர் - உண்டு பண்ணிவிட்டார், எ-று. முருகனை உலாவில் கண்டு சிந்தை திரிந்து வேறுபட்ட மகள் மெலிவுகண்டு ஆற்றாளான தாய் இரங்கிக் கூறியது. பா - அழகு. அரன் எனவே, பாகம் மங்கை பாகமாயிற்று. பங்குசம் - தலைக் கோலம். நீபாகரன் - நிபாகரன் என்று நின்றது. நீபம் - கடப்பமரம். பாகம் - பக்குவம். முருகனுக்கு அடியார்க்கு நல்லார் என்னும் பெயருண்டாதலின், “பாகரன்றன்று வந்தேகப் பணிந்த கிரு பாகரன்” என்றார். “அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்கவல்ல அடியவர்க்குநல்ல பெருமாளே” என்றும், “அடியார்க்கு நல்ல பெருமாளே” என்றும் பலமுறையும் சான்றோர் ஓதுதல் காண்க. முருகன் ஊர்ந்துவந்த தேர் தன் மகள் மனம் சிதைந்து வேறுபடுதற்கு ஏதுவாயிற்றென்பாள், பாகர் “அன்று ஊர் தேர் இவண் வரப்பண்ணலால் வியப்பாகர்” என்றாள். தேரைக் காண் பார்க்குக் காட்சியின்பம் நல்குவதேயன்றிக் காணும் இளமகளிர் உள்ளத்தைச் சிதைத்து மேனியில் வேறுபாடு எய்துவித்தமையின் “வியப்பாகர்” என்றாள். புரை - உடல். கம்பு - நடுக்கம். 88 பணியம் பணியம் புலியன் புலியன் பரதமுடன் பணியம் பணியம் பரர்க்களிப் போன்சுதன் பண்ணவர்நாப் பணியம் பணியம் பகத்தோகை வாசி பரித்தவநட் பணியம் பணியம் பொருமாவையின் மலர்ப் பாதத்தினே. இ-ள்: பணி - பாம்பும், அம்பு - கங்கையும், அணி - அணியாகச் சூடும் பிறைச்சந்திரனையும் உடையவனும், புலியன் - புலித்தோலையுடையவனும், பரதமுடன் - நடனவின்பத்தோடு, பணி - பணிகின்ற, அம்பரர்க்கு - தேவர்களுக்கு, அம்பணியம் - அழகிய அமுதத்தை, அளிப்போன் -- அளித்தருளுபவனுமாகிய சிவனுடைய, சுதன் - மகனும், பண்ணவர் நாப்பண் - தேவர் நடுவே, இயம்பு - அவரால் துதிக்கப்படும், அணி - அழகிய, அம்பகத்தோகை - அழகிய கண்களையுடைய மயிலாகிய, வாசி - ஊர்தியை, பரித்தவ - செலுத்துபவனாகிய முருகக்கடவுளே, அம்பணியம் - அழகிய பல்வகைப் பண்டங்களின் தொகுதி, பொரும் - ஒன்றினொன்று மிக்கிருக்கும், மாவையின் - மாவைப் பதியில், மலர்ப்பாதத்தின் - திருவடித் தாமரையில், நட்பு அணி - அடியோங்களுக்கு அன்புண்டாக அருள்வாயாக, எ-று. பிறைச்சந்திரன், முடிச்சடையில் வைத்த அழகியதொரு அணிபோல இருத்தல்பற்றி, “அணியம்புலியன்” என்றார். கடல் கடைந்தபோது நஞ்செழக்கண்டு அஞ்சிப்போந்து பணிந்தா ராகலின், “பணியம்பார்க்கு” என்றும். அவர் பணிவு அமுதம் குறித்ததாகலின், “அம்பணியம் அளிப்போன்” என்றும் கூறினார். பண்ணியம், பணியம் என நின்றது. மயில்வாகனன் என்றற்கு, “அம்பகத் தோகை வாசி பரித்தவ” என்றார். பண்ணியம் - பலவகைப் பண்டங்கள். அவர் திருவடிக்கண் அன்புண்டாதற்கும் அவர் திருவருளே ஏதுவாதலின் “மலர்ப்பாதத்தில் நட்பணி” என்றார். 89 தத்திமி தத்திமி ழின்னிசை காட்டுஞ் சபையரமிழ் தத்திமி தத்திமி லானுடை யார்சுதர் தந்தனர்சீ தத்திமி தத்திமி சைமீ னுறைகடன் மாவைமதத் தத்திமி தத்திமி சார்வரை யாளர் தயாமிகவே. இ-ள்: தத்திமிதத்து - தத்திமிதத்தென, இமிழ் - முழா முழங்கும், சபையர் - பொற்சபையில் திருநடனம் புரிபவரும், திமிதத்து - பெரு முழக்கத்தையுடைய, அமிழ்த - வெண்மையான, இமில் ஆன் உடையார் சுதர் - கொண்டையையுடைய எருதையூர் தியாகவுடைய சிவனுடைய மகனாரும், சீததி மிமிசை - குளிர்ந்த நீர்த்துளியைத் துளிக்கின்ற அலைமீது, மீன் தத்தியுறை - மீன்கள் துள்ளியுலாவி வாழும், கடல் மாவையர் - கடலைச்சார்ந்த மாவைப் பதியையுடைய, மத - மதத்தையுடைய, தத்தி - யானைகள் வாழும், மிதத்திமிசார் - மிதமான குளிர்ச்சிபொருந்திய, வரையாளர் - மலை நாட்டுக் கிறைவருமாகிய முருகக்கடவுள், தயா - திருவருளை, மிகத் தந்தனர் - மிகவும் செய்கின்றார், எ-று. தத்திமிதத்து, இசைக்கேற்ப முடிக்கும் முழா முதலியவற்றின் இசை வாய்பாடு. சிவபெருமான் திருநடனம் புரிந்த காலத்தில் நந்தி முதலியோர் முழா முழக்கின செய்தியை நினைந்து, “தத்திமி தத்திமிழ் இன்னிசை காட்டுஞ்சபையர்” என்றார். திமிதம் - பெருமுழக்கம். அமிழ்தம் - தூய்மை; வெண்மையுமாம். தரும விடையாதலின் “அமிழ்தத் திமிதத் திமிலா னுடையார்” என்றார். கடல்சார்ந்த மாவைப்பதிக்கண் இருக்கும் முருகர், ஏனை மலை நாட்டிற்கும் உரிய கடவுளாதலின் அது குறித்தே, “கடல் மாவைமதத் தத்திமி தத்திமி சார்வரை யாளர்” என்றார். தந்தி- தத்தியென வலிந்துநின்றது, தயா - தயவு. 90 யாமினி யாமினி கேதன மாவையர் கின்னலுரை யாமினி யாமினி யத்தரி யார்திறற் கின்னல்புரி யாமினி யாமினி லத்துகு மான்மகிழ் வென்றுமொழி யாமினி யாமினி யெல்லினுஞ் சீருறு மெம்மக்கமே. தோழி வரைவு மலிந்தது. இ-ள்: யாமினியாம் - தெற்கின் கண்ணதான, இன் - இனிய, நிகேதன மாவையர் - கோயில் பொருந்திய மாவைப் பதியினை யுடைய முருகக்கடவுளின் (புகழையோதும்), கின் - கிளியைப் போலும், நல் உரை யாமினி - நல்ல சொற்களை மொழியும் அன்னாய், யாம்இனி - நாம் இனிமேல், அத்தரியார் திறற்கு - நம்மை யின்றியமையாத தலைவருடைய தோள் வலிக்கு, இன்னல் புரியாம் - வருத்தத்தைச் செய்யோம், மினி - மேகங்கள் மின்ன லைச் செய்து. ஆம் - மழையை, இந்நிலத்து உகுமால் - மழையின்றி வாடிக்கிடந்த நிலத்திடத்தே சொரிவதால், மகிழ்வு - அவர் வரைவொடு வருதல் ஒருதலையாகலின் இன்பம், என்றும் ஒழியாம் - எப்பொழுதும் குறையோம், இனி - இப்பொழுது, எம் மக்கம் - நம் மனையிடத்துச் செல்வம், யாமினி - இரவிலும், எல்லினும் - பகலினும், சீர் உறும் - சிறப்புறும், எ-று. யாமினியம், யாமினியாம் என நின்றது. மாவையர் என்புழி, ஈற்று அர் என்பதனை ஆர் என்பதன் திரிபாகக் கொண்டு, மாவைப் பதியில் பொருந்திய என்று உரைப்பினும் அமையும். கின் - கிளி, கின்னரப்புள்ளுமாம். யாமினி - அன்னை; கற்புடையாள். வரை விடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த பருவ வரவு கண்டு மகிழ்ந்து, அவன் வரைவொடு வருதல் ஒருதலையாதலின், தலைவி கற்பொழுக்கம் மேம்படல் காணும் விரைவால் “யாமினி” என்றாள் என்க. தலைவனை நினைக்கும் போதெல்லாம், அவன் பண்டு தன்னை மதியுடம்படுப்பான் தன்னை மதியுடம்படுப்பான் போந்து நின்றகாலை, தனது இன்றி யமையாமை தோன்ற நின்றதே நெஞ்சில் நிலவுதலின், “அத்தரி யார்” என்றாள். களிற்றிடை யுதவிய நன்றியால் “திறற்கு” என்றாள். இரலினும் பகலினும் ஒழுகுமிடத்து உளவாகும் இடையீடு களால் வருந்தவேண்டிய வருத்தம் வரைவுக்குப்பின் இல்லையாம் ஒழிதலின், “இன்னல்புரியாம்” என்றாள். பிரிந்த தலைவன் குறித்த கார்ப்பருவம் வந்துவிட்டதென்பாள் “மினி ஆம் இல் நிலத்து உகுமால்” என்றாள். மின்னி - மினியென நின்றது. மழையின்றிப் புலர்ந்து கிடந்த நிலம் நீர்பெற்றுக் குளிரப்பெய்கின்றதென்றது, அழிவில் கூட்டம் பெறாது ஆற்றாளாயின தலைவிக்கு, இனி, அஃது இனிது எய்துகின்றதெனக் குறித்தவாறு இது குறிப்பு. இனி தலைவன் வரைவொடு வருதல் ஒருதலையாதலின், ஏதுவாகிய “வருவர்” என்னாது, பயனாகிய “மகிழ்வு என்றும் ஒழியாம்” என்றாள். செல்வக் குறைவின்றி எப்போதும் இன்பவாழ்வு சிறக்கு மென்பதனை “யாமினி யெல்லினும் சீருறும் எம்மக்கமே” என்றாள். இது மலிந்துரைத்தல். 91 மக்கட மக்கட லான மயல்செற் றவன்னிவெங்கா மக்கட மக்கட மாறரு மாறெங்ஙன் மாவையன்சே மக்கட மக்கட லைப்பொடி பெண்செய் வரனையுரு மக்கட மக்கட ரன்பினின் றேத்த வரும்வித்தமே. இ-ள்: மக்கள் - மனிதருடைய, தமக்கடலான மயல் - இருட்கடல்போலும் மயக்கத்தை, செற்ற - போக்கின, வன்னி - பிரமசரியம் பூண்ட ஒருவனுக்கு, வெம் காமக்கடு - வெவ்விய காமமாகிய விடத்தை, அம்மக்கள் தம்மால் - காமிகளாகிய அந்த மக்களால், தருமாறு எங்ஙன் - கொடுக்கும் திறம் யாது உளது, மாவையன் சேமக்கள் - மாவை முருகனுடைய உயர்ந்த அடியார் கள், தமக்கடலை - சுற்றத்தாராகிய கடல்போலும் கூட்டத்தை, பொடிபு - துகளாக தமக்கு, எண் செய்வர் - கருதி நீங்குவர், அனை - தாயிடத்தும், உருமக்கள் - தமக்கு அழகிய மைந்தரிடத்தும், அடர் - நிரம்புகின்ற, அன்பின் நின்று ஏத்த - அன்பு கொண்டு ஏத்திய வழி, வித்தம் வரும் - உண்மை ஞானம் சித்திக்கும், எ-று. மக்கட்கூட்டத்தின் பெருக்கமே காமமயக்கம் காரணமாக. வந்த காரியமாதலின், அம்மயக்கத்தை அவர்க்கு உடைமையாக்கி, “மக்கள் தமக்கடலான மயல்” என்றார். இனி, மக்கள் தமக்கு அடலான மயல் எனக்கொண்டு, நன் மக்களால் கெடுத்தழிக்கப் படுவதான காம முதலிய மயக்கம் என்றுரைப்பினுமாம். இம் மயக்கத்தின் கொடுமை யுணர்ந்து அதனைச் செற்றுப் பிரமசரியம் பூண்ட ஒருவனுக்கு மீட்டும் அம்மயக்கத்தைத் தருதல் ஒருகாலும் இயலாமையின், “வெங்காமக்கடு அம்மக்கள் தம்மால் தருமாறு எங்ஙன்” என்றார். பிரமசரியம் பூண்டவனை வன்னியென்ப தனாலே, அவனைக் காம இருள் பற்றாமை தானே விளங்குமாறு காண்க. வன்னி - ஒளி. ஒளியின்முன் இருள் நில்லாமையின், இருள் பற்றுமாறு இல்லையாதல் காண்க. சே - உயர்வு. மாவையன் சேவடிப்பேறே சேமமாகக் கருதுபவராதலின், அடியாரை, சேமக்கள் என்ற நயம் ஓர்க. காமக் கடலைச் செற்ற வன்னியர் போல, முருகனடியார் தமர்க்கடலைச் செற்றவராவர் என்பார், “சேமக்கள் தமக்கடலைப் பொடிபெண் செய்வர்” என்றார். தமர்க்கடல் “சில விகாரமா முயர்திணை” என்பதனால் தமக்கடல் என்றாயிற்று. தமர்க்கடலைப் பொடியாகக் கருதுதற்குக் காரணம் கூறுவார், அத் தமருட் சிறந்த தாய் தந்தை மனைவி மக்கள் என்ற இவர்பால் செலுத்தும் அன்பை முருகன் பால் செலுத்தின் உண்மைஞானம் எய்திப் பிறவித் துயரைக் கெடுக்கு மென்பார், “அனையுரு மக்கள் தமக்கு அடர் அன்பினின் றேத்த வரும் வித்தமே”என்றார். ஞானானந்தம் பிறவற்றைத் துவர்ப்பிக்கு மென்பதை அருணகிரியார், “பரமானந்தம் தித்தித் தறிந்தவன்றே கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே” (கந். அலங். 6) என்று ஓதுதல் காண்க. இதனால், முருகன் திருவருட் பேற்றில் ஈடுபட்டு ஞான வின்பம் நுகர்வோரும், பிரமசரியம் பூண்டு பிரமஞானவின்பம் பெற்றோர்போல மீட்டு உலக விச்சைகளில் ஈடுபட்டு உழல மாட்டார் என்பதும் ஓராற்றால் ஓதினாராயிற்று. 92 வித்தக வித்தக வாதிய மித்தை விடுத்தருண்மே வித்தக வித்தக மாற்றவுற் றேனினை வீட்டலையேல் வித்தக வித்தக ராமாவை யாதீனர் வெந்துயர்சாய் வித்தக வித்தக ரம்வெறி தன்னமி கைக்கம்பமே. இ-ள்: வித்தக - பல்வகைச் சதுரப்பாடும், இத்தகவு ஆதிய - இதுபோன்ற தகுதியும் பிறவும், மித்தை - பொய்யென்று, விடுத்து - துறந்து, அருள்மேவி - நின் திருவருளை விரும்பி, தக -அதற் கேற்ப, வித்து அகம் - மேல் விளைவுகட்குக் காரணமாகிய அறிவு, மாற்ற - என்னைப் பிறதுறைகட்குச் செல்லாது மாற்றவே, நினை உற்றேன் - நின்னைச் சரணமடைந்தேன், ஈட்டு அலை - பலவாய்த் திரண்டு வந்த அலைகடலை, ஏல்வித்த - ஏற்று மேலெறிந்து வென்ற, கவித்த - அடியார்க்கு அருள் வழங்குதற்குக் கவித்த, கரா - கைகளையுடை யோய், மாவையா - மாவைப்பதியில் எழுந் தருளியவனே, தீனர் - எளியவர்களை வருத்தும், வெந்துயர் சாய்வித்த - வெவ்விய துன்பத்தைப் போக்கினவும், கவித்த - அவர்க்கு வேண்டுவன கொடுத்தனவுமாகிய, கரம் - கைகளே யாயினும், வெறிது - (நின்னை வணங்கித் தொழாதார் கைகள்) வீணே, அன்னம் இகை - சோற்றையள்ளியெறியும் அகப்பையின், கம்பம் - கைப்பிடிக் கொம்புக்கு ஒப்பாகும், எ-று. திருவடி ஞானமன்றிப் பிறவற்றாற் பெற்ற ஞானமனைத்தும் பொய்யுணர்வாய் நலம்பயவாதொழிவன என்பார், “வித்தக வித்தக வாதிய மித்தை” என்றார். இக்கலைஞானம் பயனற்ற தென்பதனை அருணகிரியார், “நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமரம் நிபிடமிட வந்து கைக்கு மோதிரம் நெடுகியதி குண்ட லப்ர தாபமும் உடையோராய் முகமுமொரு சம்ப மிக்க நூல்களும் முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு நிறமாகி முறியுமவர் தங்கள் வித்தை தானிது, முடியுவுனை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே.” (திருப்பு. 881) என்று உரைப்பது காண்க. மேலே விளையத் தகுவனவாகிய இன்பதுன்பங்கட்கு ஏது உயிரறிவேயாதலின் அதனை “வித்து அகம்” என்றும், அஃது இதுகாறும் பற்றியிருந்த பற்றின் நீக்கி முருகன் திருவடியைப் பற்றச் செயின், பிறவிக்கு ஏது இன்றிக் கெடுமாதலின், “தகவித்து அகம்மாற்ற நினைஉற்றேன்” என்றார். கடலலை திரண்டுவந்தவழி அதனை வேலெறிந்து சுவறச்செய்த செய்தியை உட்கொண்டு, “ஈட்டலையேல் வித்த கரா” என்றார். அலையேல்வித்த கரா, கவித்த கரா என இயையும். இதனைத் திருவிளையாடற் புராணத்துக் கடல்கவற வேல்விட்ட படலத்துட் காண்க. எளியோர் பலர்க்கும் தம்பால் உள்ளன ஈத்துப் பெரும் புகழ் படைத்தோராயினும், அவர் முருகன் திருவடி தொழாராயின், அவர் கைகள் சிறடநானவாகா என்பார், “கரம் வெறிது அன்னம் இகைக் கம்பமே” என்றார். ஏகாரம் தேற்றம்; ஈற்றசையன்று. “தீனர் வெந்துயர் சாய்வித்த கவித்த கரம்” என்றது, “விரிநீர் வியனுலகம்” (குறள். 13) என்றாற் போலப் பயனின் றென்பது உணர நின்றது. 93 கம்பரங் கம்பரங் கொண்மாவை செந்தி கதிரைநல்லே கம்பரங் கம்பரங் குன்றா வினன்குடி காமரேர கம்பரங் கம்பரங் காரார் வரைபிற கங்கொளெருக் கம்பரங் கம்பரங் கூத்தாடி சேயிலக் காமங்களே. திருக்ஷேத்திரயமகம் இ-ள்: கம் - நீர், பரங்கு - பரந்த, அம்பரங்கொள் - கடல் சூழ்ந்த, மாவை - மாவிட்டபுரமும், செந்தி - செந்தூரும் கதிரை - கதிர்ாமமும், நல்ஏகம்பர் அங்கம் - நல்ல ஏகம்பர் வாழும் கச்சிக் குமரக் கோட்டமும், பரங்குன்று - திருப்பரங் குன்றமும், ஆவினன் குடி - பழனியும், காமர் ஏரகம் - அழகிய திருவேரகமும், பரம் - வானத்தே, கம்பரம் - சஞ்சரிக்கின்ற, காராார்வரை - மேகம் பொருந்திய மலைகளும், பிற - ஏனையவும், கம் - தலைமாலையும் எருக்கு - எருக்கம் பூவும், அம்பர் - கங்கையுமுடைய, கூத்தாடி சேய் - கூத்தாடு சிவன் மகனான முருகப் பெருமான், இல - கோயிலாக, காமங்கள் - விரும்பிக்கொண்ட தலங்களாகும், எ-று. மாவை முருகன் பேரில் இவ்வந்தாதி பாடப்பெறுதலின் சிறந்தமைபற்றி, மாவையை முதற்கட் கூறினார். இங்கே கூறப் படாத பிற தலங்களும் அடங்க, “பிற” என்றார். 94 காமரு காமரு கற்பக மாவைய காந்தையலார்க் காமரு காமரு டற்களித் தார்சுத கண்ணபிரான் காமரு காமரு வாரிச பாதவெங் காலன்முன்னே காமரு காமரு ளீதிமுந் நான்கு கரத்தங்கனே. இ-ள்: காமரு - விரும்பப்பட்ட, கா - சோலையில், மரு - பொருந்திய, கற்பக - கற்பகங்களையுடைய, மாவைய - மாவைப் பதியில் எழுந்தருளியவனும், காம் - காதலிக்கும், தையலார்க்கா - இரதிதேவிக்காக, மரு - அழகிய, காமர்க்கு உடல் அளித்தார் - காமதேவனுக்கு உடம்பு கொடுத்தருளிய சிவனுடைய, சுத - மகனும், கண்ணபிரான் - கரிய திருமேனியனான திருமாலுக்கு மருமகனும், மரு - வாசனை பொருந்திய, வாரிசபாத - தாமரை போலும் திருவடிகளையும், முந்நான்கு கரத்து - பன்னிரண்டு திருக்கைகளையுமுடைய, அங்கத்தனே - திருமேனியுடையனு மாகிய முருகப்பெருமானே, வெங்காலன் வருமுன்னே - கொடிய எமன் வருமுன்பே, கா - காத்தலை, மரு - பொருந்திய, காம் அருள் - அழகிய திருவருளை, ஈதி - அடியேனுக்குத் தந்தளிப்பாயாக, எ-று. மாவைப்பதியில் உள்ள சோலை, கற்பகச் சோலையென்பார், “காமரு காமரு கற்பக மாவைய” என்றார். காமர்க்கு உடலளித்தது இரதிதேவியார் பொருட்டாதலின், “காம்தையலார்க்கா மருகாமர் உடற்களித்தார்” என்றார். குவ்வுருபைப் பிரித்துக் காமர் என்புழிக் கூட்டுக. கண்ணபிரான், கரிய திரு மேனியையுடைய தலைவனான திருமால், திருமாலின் அவதாரமான கிருஷ்ணன் என்றாலும் அமையும். காலன் வந்துவிடின் அவன் தோற்றமும் செயலும் பொறி புலன்களைக் கலக்கி அறிவை மழுப்பி விடுதலின், நின் திருவருளை மறந்து போயினும் போவேனாதலின், அவன் முன்பே வந்தருள்க என்பார், “வெங்காலன் முன்னே காமரு காமருள் ஈதி” என்றார். ஈதி என்றார், தனது சிறுமையும் முருகனது பெருமையும் தோன்ற. 95 தங்கம் பதங்கம் படங்கமுங் காட்டிடுந் தையலர தங்கம் பதங்கம் படாசையிற் றாழ்த றவிர்த்துறநித் தங்கம் பதங்கம் படேர்மாவை யிற்குளிர்ச் சந்திரமா தங்கம் பதங்கம் படோற்சவந் தாழ்த றகுபுத்தியே இ-ள்: தங்கம் - பொன்போலும் மேனியும், பதங்கம் - களபப் பூச்சும், படங்கம் - மேலாடையும், காட்டிடும் - காட்டி மயக்கும், தையலரது - பெண்களினுடைய, அங்கம் - முலை மேலும், பதங்கம் - நிதம்பத்திலும், படு ஆசையில் - உண்டாகும் ஆசைக் கடலுள், தாழ்தல் தவிர்த்து - மூழ்கிவிடுதலைத் தவிர்த்து, கம் - மேகம், பதங்கம்படு - விதானமிட்டாற்போல் படிந்திருக்கும், ஏர்மாவையின் - அழகிய மாவைப் பதியில், குளிர் - குளிர்ந்த, சந்திர - கண்கள் பொருந்திய, அங்கம் - தோகையையுடைய, பதங்கம்படு - மயில்வாகனாரூடராய் வரும், உற்சவம் - திரு விழாவைக் கண்டு, தாழ்தல் - வணங்குதல், தகுபுத்தி - தக்க அறிவுடைமையாகும், எ-று. பெண்களின் மேனியழகில் ஈடுபட்டு அவர் தரும் காமவின்பச் சேற்றில் மூழ்குதலைவிடுத்து முருகப்பெருமான் மயில்மீது எழுந் தருளும் உற்சவக்காட்சியில் ஈடுபட்டு அதன்கண் சுரக்கும் பேரின்பப் பௌவத்தில் மூழ்கி இன்புறுக என்றாராயிற்று. இம் மயில்வாகனா ரூடராய் வந்து நல்கும் காட்சியினை அருணகிரிநாதர், “உததி யிடை கடவுமர கதவரண குலதுரக உபலளிதகனகரத, சதகோடி சூரியர்கள் உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை உகமுடிவி னிருளகல ஒருசோதி வீசுவதும்” (சீர்பாத) என ஓதுதல் காண்க. அங்கம், ஆகுபெயராய் மயிலின் தோகைக்காயிற்று. திருவிழாக் காட்சியில் இன்புற்றுத் தாழ்தலே புத்திக்குத் தகுதியெனவே, தையலரது ஆசையில் தாழ்தல் தகாது என்பதாம். 96 புத்திரி புத்திரி பான்மயங் காது பொருந்திவிருப் புத்திரி புத்திரி தோடமின் றேத்தணி போரவுணர் புத்திரி புத்திரி யச்செய்த மாவையன் பொன்னிமவெற் புத்திரி புத்திரி கச்சாமி தாளணி பூதியையே. இ-ள்: புத்இரி - புத்தென்னும் நரகத்தில் வீழா வகையில் பெற்றோரை நீக்குகின்ற, புத்திரிபால் - மகளிடத்தே, மயங்காது பொருந்தி - மகளென்னும் உணர்வு திரியாமலே பொருந்தி யிருந்தும், விருப்புத்திரி - காம விருப்பத்தால் தன் புத்திரி யென்னும் உணர்வு திரிந்து புத்திரிதோடம் - புத்திரி கலங்கிப் புணர்ந்த பெருங் குற்றமும், இன்று - இல்லையாகும், போர் அவுணர் - போர் செய்யும் அசுரர்களின், புத்திரி - மகளாகிய அசமுகியிருந்த, புத்து - பாம்பின் புற்றுப்போலும் இடம், இரியச் செய்த - கெடுத்தழித்த, மாவையன் - மாவைப் பதியில் எழுந் தருளியவனும், பொன் இம வெற்புத்திரி - பொன்மயமான குளிர்ந்த மலையரசன் மனையாட்டியாகிய மேனை பெற்ற, புத்திரி கச்சாமி - களான உமாதேவிக்கு மகனுமான முருகக் கடவுளின், தாள் அணி பூதியை - திருவடிக்கண் அபிடேகிக்கப்படும் விபூதியை, ஏத்து - துதித்து, அணி - சென்னியில் சூடிக் கொள்வாயாக, எ-று. அசமுகியென்பாள் இந்திராணியைப் பற்றிக்கொண்டுபோக முயன்றபோது, வீரவாகுவால் கைதுணிக்கப்பட்டு இருந்த இடமும் எரிக்கப்பெற்று வீரமாகேந்திரத்துக்குத் துரத்தப் பட்டாளாதலின், “போரவுணர் புத்திரி புத்து இரியச்செய்த மாவையன்” என்றார். கொடியோர் இருக்கும் இடம் புற்றெனப் படுதல் மரபாதலின் அசமுகியிருந்த இடத்தைப் “புத்து” என்றார்; செற்றம் முதலிய தீக்குணம் இருக்கும் நம்முடலையும் புற்று என்றே மணிமே கலையாசிரியர் கூறுவார். “புற்றடங்கரவின் செற்றச் சேக்கை” என்பது காண்க. புற்று, புத்து என வந்தது. வெற்புத்திரி என்புழி. திரி, வடசொற் சிதைவு. “உருக்காயத் திரிமயக்கால் உயர்காயத் திரிமறந்தான்” என்று குற்றாலத்தல புராணம் கூறுதல் காண்க. புத்திரிகன், மகள் வயிற்றுப் பெயரன், சாமி, முருகனுக்கு ஒரு பெயர். புத்திஇரி என்பது, புத்திரி என நின்றது. தோடம் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 97 பூதியம் பூதியம் பந்துரம் பல்வகை போமதிறும் பூதியம் பூதியம் புந்தித்துன் பேகும் புரிவினையூண் பூதியம் பூதியம் பாரத் தறுமனந் தப்பொருளார்ப் பூதியம் பூதியம் பார்மாவைத் தாளம் புயாதரன்பே இ-ள்: பூதியம் உடலும், பூதி செல்வமும், அம் பந்து - அழகிய உறவினர் கூட்டமும், உரம் - திண்மையும் பல்வகை - பலவேறு வகையாக, போமது - நிலையின்றிப்போகும் அச்செயல், இறும்பூது - மிக்க வியப்பைத் தருவதாகும், அனந்தப் பொருள- எல்லை யில்லாது ஈட்டிய பொருள்கள், அம்பாரத்து - அம்பாரம் போல் திரண்டிருப்பினும், அறும் - கணம்போதில் நீங்கிப்போய் விடும், (இவற்றால் நமக்கு ஊதியம் யாதும் இன்மையின்) பூதி - பூமியிலே, அம்பர் மாவை - கடல்சூழ்ந்த மாவைப் பதியை, இயம்பு - எடுத்தேத்திப் பரவுக, ஊதியம் - அதனால் உண்டாகும் ஊதியம் யாது எனின், புத்தித்துன்பு ஏகும் அது - மனத்துயரம் போகுமதுவாம், புரிவினை - நாம் செய்யும் வினையும், ஊன் - உண்ணும் உணவும், (ஆகிய இவற்றால் உண்டாகும்) பூதி - கொடுமை, அம்பூதி - பெருஞ் சமுத்திரம்போல் விரிவதாம், (ஆதலால்) ஆர்ப்பு ஊதியம் - மாவை முருகன் திருநாமத்தைச் சொல்லி யாரவாரிக்கும் ஊதியம், தாள் அம்புயாதர் - திருவடி யாகிய தாமரையையுடைய முருகக் கடவுளின், அன்பு - அன்பைப் பெறுவதாகும், எ-று. எனவே, மாவைப்பதியை ஒருவன் வாயாரப் புகழ்ந்து பேசுவதும் பாராட்டுவதும், முருகன் திருப்புகழை யோதி ஆரவாரித் தலும் ஊதியமான செயல் என்றும், அவற்றால் உண்டாகும் ஊதியம் முறையே மனத்துயர் போதலும், வினை முதலியன கெடுதலும், முருகன் திருவருளைப் பெறுதலுமாம் என்றும் கூறினா ராயிற்று. இவ்வாறு புகழ்பாடிப் பரவும் செய்கை ஊதியந்தருஞ் செய்கையாம் என்பதைச் சேக்கிழார் பெருமான், அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் புகழ்பாடிப் பரவியது ஊதியச் செயலென விதந்து “அன்பால் என்றும், செப்பூதியம் கைக்கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்” (அப்பூ. 43) எனப் பேசியருளியது காண்க. உடல் செல்வம் முதலியன நிலையுள்ளனபோல் தோன்றி நின்றே கெடும் வகை தெரியாது பல்வகையால் நிலையின்றிக் கெட்டொழிதலைக் கூறுமுகத்தால் அவற்றின் நிலையாமையும் அவற்றிற் பேணியாரவாரிக்கும் செயலின் புன்மையும் உணர்த்து வார், “பூதியம் பூதியம் பத்து உரம் பல்வகை போமது இறும்பூது” என்றார். உணவு உடை முதலியன குறித்துச் செய்யும் வினையும், உண்ணும்போதும் பல உயிர்களை வதைத்துத் தின்றலும் ஆகிய இவற்றால் செய்யும் கொடுமை கடலினும் பெரிது என்றற்கு “புரிவினை வூண்பூதி அம்பூதி” யென்றார். 98 யாதனை யாதனை யாற்றேட வேண்டு மிதயத்தம்பு யாதனை யாதனை வாக்கினை தாளன் பியைந்துபணி யாதனை யாதனை யாயருண் மாவை யிறையவதுய் யாதனை யாதனை யொப்பிலர்க் கென்ற லெலாந்தருமே. இ-ள்: யாதனை - எதனையும், யாதனையால் - வருந்தி முயன்று துன்புற்றுத்தான், தேடவேண்டும் - தேடிப்பெற வேண்டும், (ஆனால்) இதயத்து அம்புயாதனை - மனத் தாமரையில் எழுந் தருளுபவனும், ஆதனை - ஆப்தனுமாகிய முருகப் பெருமானை, வாக்கு - சொல்லுக்கு, இணை - எட்டாத. தாள் - திருவடிக்கண், அன்பு இயைந்து - அன்புகூடி, பணியாதனை - பணியாதவனையும், யாது - விரும்புவது யாதாயினும், அனையாய் - தாய்போல் தலை யளித்து, அருள் - அருள்புரியும், மாவை இறையவ - மாவைப் பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே, துய்யா - தூயவனே, தனை ஒப்பிலர்க்கு - தனக்கு ஒப்பிலாத சிவபெருமானுக்கு, தனைய - மகனே, என்றலே - என்று பரவுதல் ஒன்றே, எலாம் தரும் - கருதுவன யாவற்றையும் கருதியவாறே பெறத் தருவதாகும், எ-று. யாதனையும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. “உண்டோ முயன்றால் முடியாப் பொருள்” என்பவாகலின், எப்பொருளையும் முயற்சியால் பெறலாம் என்ற கருத்தை, “யாதனை யாதனை யால்தேட வேண்டும்” என்றார். யாதனை - முயற்சித் துன்பம், “வருந்தி முயன்றாலும் வாராத வாரா” என்பவாகலின், முயற்சியும் கருதியவற்றைக் கருதியவாறே நல்காது கருதியது சிறிதும் துன்பம் பெரிதுமே நல்கும் என்பதற்கு, பெறல்வேண்டு மென்னாது, “யாதனை யாதனையால் தேட வேண்டும்” என்றார். இன்னும் இதனால், சில முயற்சிகள், முயற்சித் துன்பமேயன்றிக் கருதுவது சிறிதும் எய்தாது கழிதலுமுண்டென்பதும் பெறப்படும். இவ்வாறு நம் முயற்சி யனைத்தும் துன்பமாகவே யிருத்தல்பற்றி, “யாதனையால் தேடவேண்டும்” என்றார் என்பதும் உணர்க. இனி, இத்துன்பம் சிறிது மின்றிக் கருதுவனவற்றைக் கருதிய வாறே இனிது பெறுதற்கு உபாயம் கூறுவார், “மாவை யிறையவ, துய்யா, தனையா, தனை ஒப்பிலர்க்கு என்றல் எலாம் தருமே” என்று ஓதினார். தருமே என்புழி ஏகாரத்தைப் பிரித்து என்றல் என்புழிக் கூட்டித் தேற்றப் பொருள் கூறிக் கொள்க. “யாதனை யாதன யால்தேட வேண்டும்” என்றவர் “எல்லாம் தருமே” என்றதனால், தேடற்கண் உள்ள குற்றம் ஈண்டைக்கு இல்லை யென்பது வற்புறுத்தியவாறாயிற்று. மாவப் பதியிலுள்ள முருகன் இயல்பினை ஓதுமிடத்தும், தன்னைப் பணிபவர், பணியாதார் என்ற இரு திறப்பாலும் வேறுபாடின்றித் தாய்போல் தலையளிக்கும் தகவுடையோன் என அவனது பெருந்தன்மையை “தாள் அன்பு இயைந்து பணியா, தனையாது அனையாய் அருள் மாவை யிறையவ” என்றார். பணியாதானை யெனற்பாலது பணியாதனை யென நின்றது. “மிடுக்கி லாதானை வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்று, கொடுக்கி லாதானைப் பாரியே யென்று கூறினும் கொடுப்பாரிலை” எனச் சுந்தர மூர்த்திகளும் ஓதியருளிய வாறு காண்க. இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அன்னையாய் என்புழி ஆக்கம் உவமப்பொருட்டு; “தாயாகித் தலையளிக்கும் தண்டுறையூர” என்புழிப்போல, யாது என்புழிச் சிறப்பும்மை தொக்கது. இனி இதனைப் பணியாதாற்கு ஏற்றி ஒருநாளும் பணியாதானை யென்றுரைப்பினு மமையும். இவ்வாறு, முருகன் தாளைப் பணியாதாரும் உளராதற்கு ஏது கூறுவார், வாக்குக்கு எட்டாத தாள் என்றார். வாக்குக்கு அத்தாள் எட்டாமையின், அஃது இனைவதாயிற்று என்பார், “வாக்கு இனைதாள்” என்றார். இனைதல் - வருந்துதல், வாக்கு இனையும் எனவே, மனத்துக்கு எட்டாமையும் உடனெய்திற்று. “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்” என்பவாகலின், மனத்துக் கெட்டா மையும், அது காரணமாகத் துதியாமையும் பணியாமையும் கல்லார்க்கு உண்டாதல் பெற்றாம். இனி, அம் முருகப் பெருமான் கற்றவர் நெஞ்சில் நிற்கும் திறம் கூறுவார், “இதயத்தம்பு யாதனை” என்றார். ஞானசம்பந்தப் பெருமான் கூறியது போல, பரமன், “ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” என வுணர்க. முருகன் சிவமே யென்பதைத் தணிகைப் புராணத்துட் காண்க. அடியார்க்கு அருள்நெறி உபதேசிக்கும் ஞானதேசிகனாதலின், “ஆதன்” என்றார். ஆதன் - ஆப்தன் என்பதன் திரிபு. அருணகிரி யாரும், “அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக்கார” (திருப்பு. 630) என்பதறிக. இனி இதனைச் செஞ்சொலாகக் கொண்டு ஆதரவு செய்வோன் என்றுரைத்தலும் ஒன்று. 99 தருமந் தருமந் திருவறு நாளினிற் சாயுமிட்டத் தருமந் தருமந் தமிக்கெழு நாளிற் றணையருமா தருமந் தருமந் தொலைவென்றெண் ணாளினிற் சாய்குவர்ம தருமந் தருமந் திபாய்மாவைச் சேய்பத மானந்தமே. இ-ள்: அம் தருமம் - இம்மையிற் செய்யும் புண்ணியங்கள், தரும் - மறுமைக்கண்ணே போக பூமியில் நல்கும், திரு - துறக்கச் செல்வங்கள், அறும் நாளில் - புண்ணியங்கள் கழிகின்ற காலத்தில், சாயும் - அழிந்துவிடும், அந்தம் - இம்மையில் செல்வமானது, மிக்கு எழும் நாளில் - மிகவுண்டாகும் காலத்தில் கூடும், இட்டத் தரும் - நண்பர்களும், மந்தரும் - ஏனை மக்களும், தனையரும் - மக்களும், மாதரும் - பெண்டிரும், அந்தருமம் - அந்தத் தருமப் பயனான செல்வம், தொலைவு என்று - தொலைந்து போயிற் றென்று, எண்நாளில் - எண்ணி வருந்தும் காலத்தில், சாய்குவர் - தொடர்பு சிறிதுமின்றி நீங்கி விடுவர், (ஆனால்) மதரும் அம்தரு - தழைத்துச் செருக்கி நிற்கும் அழகிய மரங்களில், மந்தியாய் - குரங்குகள் ஏறித் தாவிப் பாய்ந்து விளையாட்டயரும், மாவை - மாவைப்பதியில் எழுந்தருளிய, சேய் - முருகக் கடவுளுடைய, பாதம் - திருவடி, ஆனந்தமே - பரமானந்தத்தையே, தரும் - கொடுக்கும் அது பின்பு ஒருகாலும் நீங்காது, எ-று. ஒருவன் இம்மையிற் செய்யும் நல்வினை புண்ணியமாய் மறுமைக்கண் அவற்குத் துறக்கவின்பத்தைத் தவறாது நல்கு மாகலின், அவ்வின்பத்தை, “அம்தருமம் தரும் திரு” என்றார். தரும் என்பது பின்னும் கூட்டப்பட்டது. மீட்டும் பிறவிக் கேது வாயினும், உள்ளளவும் இன்பமே தருதலின், “அம்தருமம்” என்றார், வஞ்சப் புகழ்ச்சியெனினுமாம். “அறும் நாளினில்” என்றதனால், இப்புண்ணியம் பிறவிக்கேதுவாதல் விளங்கும். இதுபற்றியே திருவினைக் கணிகைக்கு உவமையாக்கி “புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக், கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல், எண்ணிலள் இகந்திடும்” (முத்தி. 15) என்றார். அத்தம், அந்தமென விகாரம். பொருள் உள்வழி, மனைவி மக்கள் உற்றார் உறவினர் எனப் பலரும் தொடர்புற்றுக் கூடி ஒருவன்பால் நெருங்கியிருத்தல் உலகில் நாளும் காணப்படும் நிகழ்ச்சியாகும். “முட்டின் றொரு வருடைய பொழுதின்கண், அடிற்றுத்தின்பவர் ஆயிரவராம்” என்பது பழமொழி. உள்ள செல்வம் “நீரிற் சுருட்டும் நெடுந்திரை” போல நீங்குமாகலின், அது நீங்குங் காலத்தில், அது காரணமாக வந்த மனைவி முதலிய பலரும் நீங்குதல் ஒரு தலையாதலின், “தொலைவென்று எண் நாளினில் சாய்குவர்” என்றார். எழுநாளிற் கூடினவர், தொலைவென்று எண் நாளில் நீங்குவர் என்றார்; எண்ணமே அவர் நீங்குதற்குச் சாலும் என்றற்கு. முதன் - மூன்றடியிலும், அறுநாள், எழுநாள், எண்நாள் எனவரும் நயம் காண்க. மாந்தர்- மந்தரென நின்றது. வளமுடைமையால் மரங்கள் இருள்படத் தழைத்து வண்டு படப் பூத்து மரகதம் காய்த்துப் பொன்படக் கனிந்து, வாழும் மந்தி முதலியன இனிதுண்டுவாழும் ஏற்றம் பெற்றிருக்கின்றன என்பார், “மருதம் அம்தரு மந்திபாய் மாவை” என்றார். இத்தருமங்களைப் போலாது, முருகன், திருவடிப் பேற்றினை வழங்கும் புண்ணியம் பதிபுண்ணியமாதலின், அதனாற் பெறும் இன்பம் முடிவிலாப் பேரின்பமே என்றற்கு, “மாவைச் சேய்பதம் ஆனந்தமே” என்றார். பதிபுண்ணியம் ஏனையபோலாது மேன் மேலும் வளர்ந்து செல்லுமேயன்றி முடிவெய்தியதில்லை யென்பதைச் சேக்கிழார் பெருமான், “எல்லையில்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்” (கண்ணப். 42) என்பதனால் உணர்த்துதல் காண்க. அருணகிரியாரும், இத் திருவடிப்பேற்றை வியந்து, கனியார் முருகன் கழல் பெற்றிடுவார், இனியார் இனியார் இவருக் கிணையே (அநு. 99) என்றல் காண்க. 100 மானந்த மானந்த னந்தா மரைநன் மணியெழில்வி மானந்த மானந்த மாரம ராவதி மாவையினெம் மானந்த மானந்த னையர்தந் நாப்பண் வதிதல்கண்டு மானந்த மானந்த மாக்கட லாடி மகிழ்ந்திருமே. இ-ள்: மானம் - பெருமையும், தமானம் - புலமையும், தனம் - செல்வமும், தாமரை நன்மணி - பதுமம் சங்கம் என்ற இருநிதிகளும், விமானம் - ஏழ் நிலைமாடங்களும் பிறவும் பொருந்திய, தமான் - இந்திரனுடைய, அந்தமார் அமராவதி - அழகார்ந்த அமராவதி போன்ற, மாவையின் - மாவைப்பதியின்கண் எழுந் தருளிய, எம்மான் - எம்பெருமானான முருகப் பெருமான், நந்தம் - நமக்கு, மான் நந்து அனையார் - மானை யொத்த தாய்மார்களாகிய வள்ளி தெய்வயானையார் இருவருக்கும், நாப்பண் - நடுவே, வதிதல் கண்டு - எழுந்தருளியிருப்பதைக் கண்டு தரிசித்தும், மால்நந்த - மனத்திற் படிந்திருக்கும் பசுபோதமாகிய மயக்கம் கெட்டொழிய, ஆனந்தமாக் கடல் ஆடி - அவனுடைய திருவருட் பரமானந்தமாகிய கடலில் மூழ்கியும், மகிழ்ந்திரும் - மகிழ்ந் திருப்பீர்களாக, எ-று. மேலே “நந்தன நந்தன” என்ற பாட்டில், இருவகை நிதி களையும் குறிப்பாகக் கூறினார். ஈண்டு வெளிப்படையாக “தாமரை நன்மணி” என்று எடுத்தோதினார். இவ்வந்தாதியைப் பொருளறிந்து படிப்போர்க்கு முடிவில் மங்கலமும் ஆனந்தமும் பெருகவுண்டாக வேண்டும் என்ற தூய எண்ணத்தால், முருகப் பெருமான் வள்ளிநாயகி தேவயானை சமேதராய் அமர்ந்து அளிக்கும் இன்பஞானக் காட்சியைக் காட்டுவாராய் “மான் நந்து அனையார் நாப்பண் வதிதல்” காட்டினார். நந்துதல் உவமப் பொருட்டு. மாவையின் எம்மான் அந்தமான் நந்து அனையார் என்று பிரித்துக்கோடலும் அமையும். அன்னையார், அனையர் என நின்றது. அன்னையர் நாப்பண் நம் ஐயன் எழுந்தருளும் காட்சியால், மனத்திற் படிந்து கிடக்கும் பசுபோத இருள் கெட்டழியும் என்பார், “மால் நந்த” என்றும், அது கெட்ட வழி, பசு கரணங்களெல்லாம் பதிகரணமாக மாறுதலின், பரமானந்தக் கடலில் திளைத்து மகிழ்ந்திருக்கும் வாய்ப்பு நன்கு எய்துதலின், “ஆனந்த மாக்கட லாடி மகிழ்ந்திருக்கும்” என்றும் கூறினார். “ஆணவ வழுக்கடையும் ஆவியை விளக்கியது பூதியடை வித்ததொரு பார்வைக்காரன்” (வேளை. வகுப்.) என அருணகிரிநாதர் அருளியவாறு காண்க. கண்டும் என்புழி நின்ற எண்ணும்மையை ஆடியென்புழியும் கூட்டிக்கொள்க. ஆடியென்புழித் தொக்க தெனினுமாம், மகிழ்ந்திரும் என்பது, அதுதவிர நீங்கள் அப்போது செய்தற்குரிய செயல் வேறு இல்லை; எல்லாம் அவன் செயலேயாகும் என்று தெருட்டி நிற்பது காண்க. இனி, இவ்வந்தாதியின் முதற்பாட்டில் முதற்சீர் “திருமா” என்று தொடங்கினாராதலின், அதனொடே முடிந்தாலன்றி அந்தாதி நிரம்பாதென்னும் இயைபுபற்றி, “மகிழ்ந்திருமே” என்று முடிப் பாராயினர். தெல்லியம்பதி திரு. பூ. பொன்னம்பலம்பிள்ளை பாடிய மாவையமகவந்தாதிக்கு திருப்பதி, ஸ்ரீவேங்கடேசர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரை முற்றும். Thirupathi 5-11-42 Avvai S. Doriaswamy Pillai Image 5. தேர் வெண்பா பொன்கொண்ட சீருலகம் போத மிலக்கச்செ லின்போ தயபரிதிக் கிந்நிலம்மீ - தன்பொல்லை தெத்தவிய னட்டமுற்றன் பர்க்களித்த பொற்பூத்தே வைத்தபய மீயக் கடன். இந்நூலாசிரியர் இயற்றிய பிற பாடல்கள் 1. மாலைமாற்று ஈறு தொடங்கியும் வாசிக்குக. கானே கயநா விதவேத நாகுதய பானு தனைமதமா வானையா - யானைவா மாத மனைத னுபாய தகுநாத வேத விநாயகனே கா. 2. கரந்துறைச் செய்யுள் ஏமநிதி மாவையா வேளணியா நம்மறதி பாபவினை யாப்பே புரைகழலு - மாதகைய நீபா தனுசவினப் பாப மதினயிலின் கோவா கழிநாயே மை இதனுட் கரந்த செய்யுள் ஒவ்வோரெழுத்து விட்டுப் படிக்குக. மதிவை வேணிந மதிய னைப்புக லுதய பானுவிப் பதியின் வாழியே. 3. நிரோட்டம் தாயா யெனையளித்த சங்கரநற் றில்லையிறை காயா நிறத்தனயன் காணாதான் - சேயான கந்தனளி தந்தெனையாள் கந்தனயிற் கையனடி சிந்தனைசெய் தின்னலினைத் தீர். 4. இரட்டை நாகபந்தம் தேவச் சிலம்பனை மாவே லெனையனைத் தேன்வரைவண் மாவைப் பதியினைச் சின்மய மங்கை தினையுற்றதேன் பாகத் தவன்வரப் பாதத் தரும்வினை யாம்பகைசா வேகுற் றவனைத் தவம்வரு மார்வத் தியம்புவனே. பாட்டு முதற்குறிப்பு அகர நிரல் கங்கண கங்கண 20 சஞ்சனங் சஞ்சனங் 23 கண்டன கண்டன 46 கணியார் கணியார் 78 கத்தின கத்தின 21 கந்தரங் கந்தரங் 47 கந்தவ கந்தவ 34 கம்பரங் கம்பரங் 93 கம்பல கம்பல 49 கரந்தங் கரந்தங் 19 கவந்தங் கவந்தங் 26 கனகங் கனகங் 33 காடியங் காடியங் 48 காந்தனங் காந்தனங் 79 காமரங் காமரங் 24 காமரு காமரு 94 காமலை காமலை 25 கார்த்திகை கார்த்திகை 45 காவணங் காவணங் 2 காவிலங் காவிலங் 22 குருத்தங் குருத்தங் 52 கைக்கவி கைக்கவி 50 கைக்கிளை கைக்கிளை 44 கோகன கோகன 53 சக்கரஞ் சக்கரஞ் 37 சங்கர சங்கர 81 சத்தியஞ் சத்தியஞ் 51 சந்திர சந்திர 54 சம்பகஞ் சம்பகஞ் 69 சரணஞ் சரணஞ் 5 சலசஞ் சலசஞ் 68 சாகரஞ் சாகரஞ் 70 சாதனி சாதனி 71 சிந்துர சிந்துர 42 சேதகஞ் சேதகஞ் 43 தங்கம் பதங்கம் 95 தத்தம தத்தம 80 தத்திமி தத்திமி 89 தந்திர தந்திர 6 தமரத் தமரத் 55 தருக்கந் தருக்கந் 27 தருமந் தருமந் 99 தலைவி தலைவி 35 தவங்க தவங்க 36 தாமரை தாமரை 4 தாரகந் தாரகந் 3 தானசந் தானசந் 28 திக்கையந் திக்கையந் 31 தியங்கந் தியங்கந் 82 திரவத் திரவத் 29 திருமா திருமா 1 திலகந் திலகந் 40 தீரத்தந் தீரத்தந் 30 தென்றலை தென்றலை 41 நந்தன நந்தன 83 பங்கச பங்கச 86 பஞ்சர பஞ்சர 39 பணியம் பணியம் 88 பவநம் பவநம் 38 பாகரன் பாகரன் 87 பானலம் பானலம் 7 புத்திரி புத்திரி 96 பூதியம் பூதியம் 97 மக்கட மக்கட 91 மகத்து மகத்து 60 மஞ்சரி மஞ்சரி 88s மண்டவ மண்டவ 72 மந்தர மந்தர 15 மலங்க மலங்க 57 மன்றன மன்றன 14 மாடக மாடக 59 மாதங்க மாதங்க 58 மாதவ மாதவ 85 மாதிர மாதிர 16 மாலைய மாலைய 67 மாவரை மாவரை 9 மாவலி மாவலி 84 மாவைய மாவைய 11 மானந்த மானந்த 100 மானிய மானிய 64 மைக்கண மைக்கண 65 மையனம் மையனம் 62 யாதனை யாதனை 98 யாமினி யாமினி 90 வசந்த வசந்த 74 வட்டக வட்டக 32 வணங்கு வணங்கு 10 வந்தனை வந்தனை 17 வருந்த வருந்த 12 வல்லியம் வல்லியம் 18 வாசந்தி வாசந்தி 77 வாமத்த வாமத்த 75 வாரணம் வாரணம் 66 வாவிய வாவிய 76 வானில வானில 13 வித்தக வித்தக 92 வித்துரு வித்துரு 61 விந்தர விந்தர 73 வைகறை வைகறை 63 வையக வையக 56