உரைவேந்தர் தமிழ்த்தொகை 8 யசோதர காவியம் உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 8 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 344 = 368 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 230/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப் பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற் களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர் களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் முன்னுரை 1 உரிமையுரை 17 காப்பு 18 முதலாவது சருக்கம் 22 இரண்டாவது சருக்கம் 95 மூன்றாவது சருக்கம் 184 நான்காவது சருக்கம் 238 ஐந்தாவது சருக்கம் 273  யசோதர காவியம் முன்னுரை சமண முனிவர்கள் தமிழகத்திற் புகுந்து நம் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டுகள் மிகவும் போற்றற்குரியனவாகும். அவர்கள் செய்த தொண்டின் பயனே நாலடியார் முதலிய அறநூல்களும், சூளாமணி சீவகசிந்தாமணி முதலிய காவியங்களும், சின்னூல் நன்னூல் முதலிய இலக்கணங்களும் தோன்றுதற்குக் காரணமாகும். தமிழ் இலக்கியத் துறையில் வியந்து பேசப்படும் காவியங்கள் பெருங்காப்பியம், சிறுகாப்பியமென இருவகைப்பட்டு ஒவ்வொன்றும் ஐயைந்தாக விரித்துரைக்கப்படும். அவற்றுள் சிறுகாப்பியங்கள் இவ் யசோதரகாவியம் முதலாக ஐந்தாகும். அவை, யசோதர காவியம், சூளாமணி, உதயணகுமாரகாவியம், நாககுமார காவியம், நீலகேசியென விரியும். இவற்றுள் நாககுமாரகாவிய மொழிய ஏனை நான்கும் வெளியாகியுள்ளன. யசோதரகாவியம் சிறுகாப்பிய வகையுள் முதற்கண் வைத்து மொழியப்படுவது. எனினும், இவ்வகையுள் வைத்துக் கூறப்படும் சூளாமணி, நீலகேசி என்ற இரண்டையும் நோக்க, இஃது அத்துணை இலக்கிய நலம் உடையதாக இல்லை. ஆயினும் உதயண குமாரகா வியத்தினும் செய்யுட்பொலிவும் பொருணலமும் மிகவுடைய தென்பது ஒருதலை. இவ் யசோதரகாவியத்தின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இதன்கண் அடங்கிய யசோதரன் முதலாயினார் வரலாறு தமிழில் வேறு எந்நூலினும் காணப்படவில்லை. வடமொழிக் கண் இவ் வரலாறு பல ஆசிரியர்களால் எடுத்துக்கூறப்படுகிறது. வடநூல்களை நோக்கின், தமிழ்மொழியினும் வட மொழிக்குச் சமணச் சான்றோர் செய்துள்ள தொண்டுகள் மிகப் பலவாகும். அவற்றை ஆராய்ச்சியாளர் நான்கு வகைப்படுத்தி, முறையே பிரதமானு யோகம், கரணானுயோகம், திரவியானுயோகம், சரணானுயோகம் என்று கூறுவர். பிரதமானு யோகத்தில் பல்வகைப் புராணங்களும் அடங்குகின்றன. அவற்றுள், பத்ம புராணம், அரிவம்சபுராணம், மகாபுராணம், உத்தரபுராணம் முதலாயின சிறப்புடையனவாகும். மகாபுராண மென்பது சமண சமயத்து அறுபத்து மூன்று பெருமக்களைப்பற்றிக் கூறுவதாகும். இந்த *அறுபத்து மூவரையும் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதி வாசுதேவர் ஒன்பதின்மர் என வகுத்துரைப்பர். இவ்வாறு தொகை வகை விரியால் அறுபத்து மூவராயினும் ஆள் வகையில் அறுபதின் மரேயாகின்றனர். இவர்கள் வரலாறுகள் சுவேதாம்பரிகளால் சரித்திரம் என்று கூறப்படுமாயினும், திகம்பரிகளால் புராணமென்றே வழங்கப்படு கின்றன. மகாபுராணம் ஆருகதமாபுராணமென்றும் ஆதிபுராண மென்றும் வழங்குவதுண்டு. இதன்கண் நாற்பத்தேழு புராணங்கள் உள்ளன. இவற்றுள் முதல் நாற்பத்திரண்டினை ஜினசேனரும், ஏனை ஐந்தினை அவர் மாணவர் குணபத்திரரும் எழுதினர். இவர்கள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டென்பர். இனி, பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்தரென்பவரால் ஒரு மகாபுராணமும் பதினோராம் நூற்றாண்டில் மல்லிசேனர் என்பவரால் ஒரு மகாபுராணமும் எழுதப்பட்டிருக்கின்ற. இவருள் ஒருவரான ஜினசேனர் வேறு என்றும், அரிவம்ச புராணம் பாடிய ஜினசேனர் வேறு என்றும் * ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இனி, மகாபுராணத்தையடுத்து நிற்கும் உத்தர புராணத்தை ஜினசேனர்க்கு மாணவராகிய குணபத்திரர் ஒருவரே எழுதினார். இவரைக் குணபத்திர முனிவரென்றும் குணபர முனிவர் என்றும் கூறுப. இப் புராணத்திற்றான் முதற்கண் இவ் யசோதரகாவிய நிகழ்ச்சி கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வடநூற்கண் கூறப்பட்ட முறையே தமிழில் கூறப்படவில்லை. கூறப்பட்டிருப்பின், இந்நிகழ்ச்சி கற்றோர் நினைவில் சிறந்த இடம் பெற்றிருக்கும். சமணச்சான்றோருள் மிகப்பலர் இந்நிகழ்ச்சியில் பேரீடுபாடு உடையராய் இருக்கின்றனர். உத்தரபுராணத்திற் காணப்படும் இக்கதை பல சான்றோர்களால் தனித்தனி நூலாக உரைக்கப் பட்டிருக்கிறது. சோமதேவசூரி யென்பவரால் யசஸ்திலகம் என்ற பெயரால் சம்புநடையிலும், வாதிராசசூரி யென்பவரால் யசோதர சரிதம் என்ற பெயராலும், ஹரிபத்திர ரென்பவராலும், புட்பதந்த ரென்பவராலும் இவ்யசோதர காவியம் வடமொழியில் அழகுறக் கூறப்பட்டுள்ளது. இவையாவும் எழுந்த காலம் பத்தாம் நூற்றாண்டாகும். இவ்வடநூல்களுட் காணப்படும் யசோதரகாவிய நிகழ்ச்சிச்கும் தமிழிற் காணப்படும் காவிய நிகழ்ச்சிக்கும் வேறுபாடு பெரிதாக இருக்கின்றது. இதன்கண் வரும் மாரிதத்தன் வரலாற்றை யசஸ்திலகம் என்ற நூலின்கண் சோமதேவசூரி கூறும் முறையை வடித்துத் தருகின்றாம். மாரிதத்தன் என்பவன் இளமையிலே அரசு மேற்கொண்டு இன்பத் துறையில் இறப்பவும் எளியனாகின்றான். ஒருநாள் புரோகிதனுரைத்த உரையை மேற்கொண்டு சண்டமாரி யென்னும் குலதேவதைக்கு இரட்டையிரட்டையாக உயிர்ப் பலியிடத் தொடங்குகின்றான். தான் இரட்டை நரபலியிட நினைந்து, வீரரைச் செலுத்தி மக்களுள் இரட்டையராவார் இருவரைக் கொணருமாறு பணிக்க, அங்ஙனமே அவர் சென்று சிறுவனும் சிறுமியுமாகிய இரட்டையர் இருவரைக் கொணர் கின்றனர். அவ்விருவரும் இளமையிலே துறவு மேற்கொண் டொழுகுபவர். இவ்விருவரும் மாரிதத்தனுடைய தங்கையின் மக்களாய்ப் பிறந்து இளமையிலே துறவு பூண்டவர். இச்செய்தியை மாரிதத்தன் கேள்வி யுற்றிருந் தானேயன்றி நேரிற் கண்ட திலன். இப்போது நேரிற் கண்டதும் ஒரு கால் இவ்விரட்டையர் தன் தங்கையின் மக்களோ என்றெண்ணி அவர்தம் வரலாற்றினை மாரிதத்தன் கேட்கின்றான். அவர்கள் தம்முடைய பண்டைப் பிறவிகளின் வகையும், அவ்வவற்றின் காரணங்களையும் இடையிடையே சைன அறங்களையும் எடுத்துக் கூறுமுகத்தால் தாம் அவன் உடன்பிறந்தாள் மக்களே என்பது விளங்கக் கூறுகின்றனர். மாரிதத்தன் அது கேட்டு மனம் திருந்தித் துறவு மேற்கொண்டொழுகுகின்றான். இம் மாரிதத்தன் ஒதயநாட்டரச னென்றும், சண்டமாரி தேவதைக்குச் செய்யவேண்டிய பலியூட்டினை நகரத்தவர் கூறக்கேட்டுச் செய்யலுற்றானென்றும், இத்தமிழ்நூல் கூறுகின்றதேயன்றி, அபயருசியும் அபயமதியுமாகிய இரட்டையர் அவன் உடன் பிறந்தாள் மக்களே என்று கூறுகின்றிலது. இனி, மேலே கூறிய உத்தரபுராணத்தை முதலாகக்கொண்டும், ஹரிபத்திரர் எழுதிய வரலாற்றைப் பின்பற்றியும் வாதிராசர் என்பார் யசோதர சரிதத்தை மிக அழகு திகழக் கூறியுள்ளார். முதனூலாகிய உத்தரபுராணத்துக்கும், பின்னூலாகிய யசோதர சரித காவியங்கட்கும் விளக்கமும், வழிமுறையும், நிகழ்ச்சிநிரலும், வகுத்தும் தொகுத்தும் கூறிய பெருமை ஹரிபத்திரருக் குண்டு. அவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தவராவர். அவர் கூறும் யசோதர வரலாற்றை ஈண்டு வடித்துத் தருகின்றாம். யசோதர வேந்தன் ஒருநாள் தன் தலையில் மயிரொன்று நரைத் திருப்பதைக் கண்ணாடியிற் கண்டு துறவு பூணத் துணிகின்றான். ஒரு நாள் இரவு தன் மனைவி கூனிய முதுகுடைய காவற்காரனொரு வனுடன் தீநட்புக் கொண்டு கள்ளக்காமக் களியாட்டில் மயங்கி யொழுகுவதோடு, அவனால் அலைக்கழிக்கப்படவும் காண்கின்றான். அவனெஞ்சிற் பிறந்த துறவுணர்வு திண்ணிதாகிறது. தன் துறவுக்குரிய காரணத்தைத் தன் தாயிடம் வெளிப்படக்கூற நாணித் தீக்கனா வொன்றின்மேல்வைத் துரைக்கின்றான். அதன் உண்மைக் குறிப் புணரமாட்டாத அவன் தாய், தீக்கனாவின் விளைவைத் தவிர்த்தற்குத் துறவி வேடம் தாங்கிக் கூலதேவதைக்கு உயிர்ப்பலியிட்டு வணங்குமாறு வற்புறுத்துகின்றாள். அதனைச் செய்தற்கு அவன் விரும்புகின்றிலனாயினும், வேறு செய்வகையறியாது திகைத்தவன், ஒருவாறு தெளிந்து, மாவினாற் கோழியொன்று செய்து பலியிட்டு அம்மாவினை யுண்டொழிகின்றான். அவ்வினையின் பயனாக அவனும் அவன் தாயும் இறந்து, மயில், மீன், ஆடு, கோழி முதலிய பிறப்புக்கள் பிறந்து துன்புறுகின்றனர். இறுதியில் கோழிப்பிறப்பில் முனிவர் ஒருவர் உரைத்த சைனவறங் கேட்டு அரசனொருவனுக்கு ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மக்களாகப் பிறக்கின்றனர். இவர்களாலே மாரி தத்தன் சைனதரும நெறிபற்றி உய்திபெறு கின்றான். இத் தமிழ்நூல், யசோதரற்குத் தந்தை அசோகனென்றும், அவன்தான் தன்தலையில் மயிரொன்று நரைத்திருப்பக் கண்டு துறவு பூண்டானென்றும், யசோதரன் தாய் பெயர் சந்திரமதி யென்றும், மனைவி அமிழ்தமதியென்றும், அமிழ்தமதி கள்ள நட்புற்றுக்காமக் களிப்பில் நெறிதிறம்பி வழுவுற்றது யானைப்பாகனொருவனுட னென்றும், இறுதியில் யசோதரனும் சந்திரமதியும் அபயருசியும் அபயமதியு மென்ற இரட்டையராய்ப் பிறந்தது, யசோதரன் மகனான யசோமதி யென்பான் மனைவி வயிற்றி லென்றும் கூறுகின்றது. இனி, இத் தமிழ்நூலில், வடநூலுட் காணப்படும் வேறு நிகழ்ச்சிகள் காணப்படவில்லை. அவற்றைப் படிப்பவர் தெரிந்து கோடற் பொருட்டு ஈண்டுக் குறிக்கின்றோம். I. விலாசவதி யென்பாளொருத்தி சனற்குமாரனென்றொரு காளைபால் உழுவலன்பு கொண்டு காதற்காமவின்பந் துய்த்து மகிழ்ச்சி யெய்த, தன்பால் உண்மை யன்பு செலுத்திய தாரணன் என்பானை வஞ்சித்து, ஆறலைப்போன் ஒருவன்பால் அழிகாமங் கொண்டு, இலக்குமி யென்பவள் அலைந்து துன்புற்ற செய்தி ஒன்று. II. தான் செய்த கொலைவினைக் கீடாகத் தன் மனையிலே பன்றியாகப் பிறந்து தன் சிராத்தத்துக்கே தன் வீட்டுச் சமையற் காரனால் கொலை செய்யப்பட்ட வணிகனொருவன், பின் நாயாய்ப் பிறந்து, பன்றியாயிருந்தபோது தன்னைக் கொன்ற மடையனைக் கடிக்காதுவிட்ட நல்வினைப்பயனால், தன் மகனாய்த் தோன்றி, தன்மகனையும் மருகியையும் இன்ன முறைச்சொல்லால் அழைப்ப தென்றறியாது மூங்கையாய்க்கிடந்து, சைன முனிவரால் அறங்கூறப் பட்ட செய்தி ஒன்று. III. முன்னைப்பிறப்பில் தன் தோழிக்குக் காமக்கள்ளருத்திய குற்றத்திற் கீடாய், யானை, குரங்கு, பூனை முதலிய பல பிறவி யெடுத்து முடிவில் ஒரு சண்டாளப் பெண்ணாய்ப் பிறந்து உறவினரால் கை விடப்பட்டுக் காட்டில் அலைந்து சைனமுனிவர் அறங்கூறக் கேட்டு மறுபிறப்பில் வேந்தனொருவன் மனையிற் பிறந்து கோசல நாட்டு வேந்தனுக்கு மனையாட்டியாகிய சுசங்கதை யென்பவள், பெண்பேயொன்றின் சூழ்ச்சியால் அவனால் துறக்கப்பட்டுக் காடொன்றை அடைந்து முனிவர்பால் சைனவறங்கேட்டிருப்ப, கோசலவேந்தன் சின்னாட்குப் பின்பு உண்மையுணர்ந்து அவளைத் தேடிக்கண்டு, தானும் அறங்கேட்டு உய்திபெற்ற செய்தி ஒன்று. இத் தமிழ்நூலாசிரியர் இந்நிகழ்ச்சிகளை இக் காவியத் தின்கண் குறிக்காதொழிந்ததற்குக் காரணம் புலப்படவில்லை. புட்பதந்தரெழுதிய யசோதர சரிதத்தின்கண் கூறும் நிகழ்ச்சியைப் பின்பற்றியே இத்தமிழ் நூல் எழுதப்பட்டிருக்குமென்று சில அறிஞர் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக, *“புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத் திட்பமாய்ச் செந்தமிழிற் செப்பினான்-நட்புடையார் நண்ணா ரிவரென்ன நாடாக் கொடைக்கையார் வெண்ணாவ லூருடையார் வேள்” என வரும் இவ்வெண்பாவைக் காட்டுவர். புட்பதந்தர் என்பவர் கி.பி. 965-ல் மகாபுராணம் எழுதியவர். இதன்கண் ஆதிபுராணம் முப்பத்தேழு பகுதிகளாகவும், உத்தர புராணம் அறுபத்தைந்து பகுதிகளாகவும் உள்ளனவென்றும், இவரே நாககுமார சரிதத்தையும் யசோதர சரிதத்தையும் வடமொழியில் எழுதினாரென்றும் கூறும். இவ்வெண்பாவில் கூறப்படும் “பொருள் சேர் கதை” நாககுமார காவிய மென்றாதல் யசோதரகாவிய மென்றாதல் துணியாவாறு நிற்கிறது. கேள்விவழி யசோதர காவியத்தைச் சுட்டிநிற்பது கொண்டு, “வெண்ணாவலூருடையார் வேள்” என்பவரால் இந்நூல் இயற்றப்பட்ட தென்று ஒருவாறு கொள்ளலாம். இவருடைய இயற்பெயரும் பிறவும் தெரியவில்லை. சமண் சமயச் சான்றோர் சிலரை உசாவியதில், கன்னட நாட்டில்தான் இவ்விருநூல்களும் சிறப்பாகப் பரவியிருந்தன என்கின்றனர். இனி, இந் நூலாசிரியரைப்பற்றி வேறொன்றும் தெரிதற்கு வழி இன்று காறும் ஒன்றும் பிறந்திலதாயினும் இந்நூற் புணர்ப்புக்கண் இவரது அறிவு நுழைந்து செய்திருக்கும் வேலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம். முதற்கண், வேந்தனான மாரிதத்தன் சண்டமாரி தேவதைக்குப் பலியிடக்கருதும் கருத்தினை மேற்கொள்வதற்கு வசந்தகாலத்தையும் மக்கள் மனப்பான்மையையும் வாயிலாகப் புணர்க்கின்றார். சண்ட கருமன் இரட்டையரைக் கொணர்கையில், அவர்கள் நினைவு கருவியாக நால்வகைக்கதியினும் உயிர்கள் பிறந்து வளர்ந்து துன்புறும் திறத்தை வெளிப்படுக்கின்றார். வேந்தன் இரட்டை யரைக்கொல்லாது விடுத்து அவர்கள் வரலாற்றைக் கேட்க விழைவு கொள்ளற்கும், கேட்டற்கும் ஏதுவாக, அவர்களை அரசனை வாழ்த்துக என வற்புறுப்பதும், அவர்கள் புன்முறுவல் பூத்தலும் விதந்து கூறப்படுகின்றன. இவ்வாறே, யசோதரன் வரலாற்றிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க காரணத்தை முன்னிறுத்தி யுரைக்கும் திறம் மிக்க இன்பமாக வுளது. வடநூல்களில் யசோதரன் துறவுமேற் கோடற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அவன் தன் தலையில் மயிரொன்று நரைத்திருப்பதைக் காண்பது; இரண்டாவது அவன்மனைவி வேறொரு வன்பால் கள்ளக்காம நட்புற்றிருத் தலையறிவது. ஆனால், இத்தமிழ்க் காவியமுடையார் மயிர்நரைப்புக் கண்டு துறவுமேற்கொள்ளும் செய்தியை, யசோதரன் தந்தையான் அசோகன் துறவுக்குக் காரணமாகப் புணர்த்துவது மிக்க நயமாகவுளது. ஒருவன் துறவு பூண்பதற்குரிய காரணங்களுள் தன் மனைவியின் தீயொழுக்கமே போதிய காரணமாதலின், அதற்கு மேலும் ஒருகாரணம் மிகையாகும். அசோகன் துறவு பூண்பதற்கு வேறு தக்ககாரணம் கிடையாமையின், அதனை அவன்மேலேற்றியது மிகவும் பொருத்த மாகவேயுளது. இனி, யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் இழிந்தா னொருவனுடன் கள்ளக்காம நட்புற்றதற்குக் காரணம் காட்ட வேண்டி இசையினைப் பயன் கொள்கின்றார். சமண சமயத்தவர் இசையும் நாடகமும் காமத்தை விளைவிப்பன என்னும் கருத்துடைய ரென்றும்; அதனால் அவர் அவற்றை யூக்காது புறக்கணித் தாரென்றும் அறிஞர் கூறுப. அதற்குச் சான்றுண்டோ எனச் சமண சமய முனிவர்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுள் சீவக சிந்தாமணி, இசையும் நாடகமும் காமப்பைங்கூழை வளர்க்கும் துணைகள் என்ற கருத்துப்பட, “கிளைநரம் பிசையும் கூத்தும் கேழ்த் தெழுந் தீன்றகாம விளைபயன்” (இலக்கணை, 221) என்று கூறுவதைக் காண்கின்றோம். இவ்வாறே அவர்கள் செய்துள்ள ஏனை நூல்களிலும், காமக்களிப்பு நிகழுமிடங் கடொறும் இசை நாடகங்கள் மிகவும் தொடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாற்றால் இந்நூலாசிரியரும், தன் கணவனுடன் கூடி இன்புற்றிருந்த அமிழ்தமதி, அக்கூட்டத்தின் பயனாய் மகனொரு வனைப் பெற்றாளாயினும், அமையாது, தன்னின் மிகமிக இழிந்தா னொருவனைக் கூடிக்கள்ளத் தீ யொழுக்கம் மேற்கோடற்குக் காரணமாக இசையினைக் கொணர்ந்து நிறுத்துகின்றார். அக்கீழ்மகன் அட்டபங்கன் என்னும் யானைப்பாகனாவான். அவன் இசைத்துறையில் மிக்க வன்மையுடையனென்றற்குப் போதிய ஆதரவில்லை. ஆயினும் அவன் பாடியமாளவபஞ்சசமம் என்ற பண்ணிசை அமிழ்தமதியின் நெஞ்சை யுருக்கி நெறியல்லா நெறியில் செலுத்தி விடுவதாக இந்நூலாசிரியர் அறிவிக்கின்றார். அத் தீயொழுக்கத்தின் விளைவாக, அவள், தன் கணவனையும் மாமியான சத்திரமதியையும் நஞ்சூட்டிக் கொலை புரிந்துவிடுகின்றாள். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க காரணங்களை முன்னிறுத்தி இந்நூலை யமைத் திருப்பது நூற்புணர்ப்பு நெறிக்கு ஏற்ற சிறப்பை நல்குகிறது. இனி, இந்நூலின் செய்யுணடையை நோக்கின், இஃது ஏனைச் சிந்தாமணி, சூளாமணி முதலியவற்றைப் போல அத்துணை நலமமைந்த தில்லை யென்பதை முன்பே கூறினாம். ஆயினும், இந்நூற்செய்யுட்களில் சீவகசிந்தாமணியிலும் மேருமந்தர புராணத்திலும் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களுமே பெரிதும் பயில வழங்குகின்றன. அவை அவ்வவற்றிற்குரிய உரை விளக்கத்தே காட்டப்பட்டுள்ளன; இதனால், இந்நூலாசிரியர் இவ்விருநூல்களையும் நன்கு படித்து, உயர்நிலையின்றெனினும் நடுநிலையான தமிழறிவு பெற்றவரென்று அறிகின்றோம். இனி, இந்நூலரிசிரியர் இந்நூலைத் தாம் பாடுதற்குக்கொண்ட நோக்கத்தை நன்கு விளங்கவுரைப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். அறிவுடையனெவனும் எதைச்செய்யினும், அதனைச் செய்தற்குச் சிறப்பாகவுரிய நோக்கமொன்று டையனாவ னென்பது உண்மை. அதனை விளங்க வுரைப்பது அறிவுடைமையின் பயனாகும். இந்நெறியினைப் பல நூற்றாண்டுகட்குமுன் எடுத்தோதித் தெருட்டிய பெருந்தகை, ஆசிரியர் இளங்கோவடிகளாவர். அவர்க்குப் பின் மிகச்சிலரே இதனைப் பின்பற்றியவர். அவருள் இந்நூலாசிரியரும் ஒருவர் என்னலாம். புண்ணியம் போகம் விளைக்கும் என்றும், கொலை வினையாகிய பாவம் துன்பம் எய்துவிக்கும் என்றும் விளக்குவது தமது நோக்கமென்பார், “மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் பொருவில் புண்ணியம் போகம் புணர்ப்பதும், வெருவு செய்யும் வினைப்பயன் இற்றெனத், தெரிவு றுப்பதும் செப்புதலுற்றதே” (4) என்று கூறுகின்றார். இனி, இந்நூலாசிரியரால் பழிதூற்றப்பட்ட இசையினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற்பாலதொன்று. இசை யென்பது வழுத்த வாயும் கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப்பொருளாகும். உடலுட்சென்றியங்கும் காற்று மிடற்றுவழியாக வெளிப்படுக்கப்படுங்கால் உண்டாகும் ஓசையே இதற்கு அடிப்படை. ஓசை கொண்டும் கொள்ளாமலும் வெளிப்படுவது காற்றுக்கு இயல் பாயினும், ஒசைகொண்டு இனிமை தழுவி நீண்டெழுப்பப்படுகிற போதுதான் இசையுண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் இசை உயிர்கட்கு இன்றியமையாதது என்பர் அறிஞர். நிலவுலக வாழ்விற்கு நான்கு பொருள்கள் இன்றிய மையாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை யென்பனவாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர் 1 கூறுகின்றார். புலவர் மனமுவந்து இனிமை யமைந்த சொல்லோசை யமையத் தொடுத்துப் பாடப்படும் பான்மை யுடைமைபற்றி யன்றோ, ஒருவனது புகழுக்கும் இசையென்பது பெயராகப் பண்டைப் பெருமக்களால் வகுக்கப்படுவதாயிற்று. புகழ் விரும்பாதவர் இவ்வுலகத்தில் எக்காலத்தும் இருந்ததில்லையெனின், இசையை விரும்பாதவர் எவரும் இரார். அவ்வாறும் ஒருவர் இருப்பின் அவரை எவரும் விரும்பலாகாது என மேனாட்டுச் செகப்பிரியர் கூறுவது மிகவும் பொருத்தமாகவேயுளது. இவ்விசை உடலோடு கூடிவாழும் மக்கட்கு மிக இன்றியமை யாததென்பது மேற்கூறியவற்றால் தெளியப்படும். இதற்கு வேறும் ஒரு காரணம் உண்டு. நாடோறும் ஓய்வின்றியுழைக்கும் எந்திரமொன்று உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல, உடலோடி யங்கும் உயிரும் மனத்தத்கதே தளர்ச்சியும் - தூய்மையில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக்ககற்றப்படுவது போல மனமும் நாடோறும் தூய்மைசெய்யப்படவேண்டும். அதற்கு இசையே உரியதாகும்; இசை, மனத்திற்படியும் தீயவுணர்வு களைப் போக்கி நல்லுணர்வுகளை எழுப்புவதாகும். “ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை” என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந்தருளினர். சென்ற நூற்றாண்டில் செருமனியில் வாழ்ந்த ஆவர்பாச் (Auerbach) என்பவர், மனத்திற்படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை2 யென்று கூறினர். இவ்வாறே அறிஞர் பலரும் சொல்லியிருக்க, இதனைக் காமம் வளர்க்கும் தூய்மையில் பொருளாகக் கருதிக் கூறுவது குற்றமென்பது ஒருதலை. மக்களுயிர்க்குச் சீரிய துணையாமெனக் கருதிப் பேணப்பெற்ற விஞ்ஞானவுணர்வு, இந் நாளில் அம்மக்களுயிர்க்கே இறுதிவிளைக்கும் கூற்றாயிற்றென்று மெய்யாக அறிகின்றோம். அதனால், அதனை அறவே விலக்குவது அறமாகாகாதவாறுபோல இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து அதனை விலக்குவது அறமன்று. இவ்விசையின்பத்தில் ஈடுபட்டு இன்புறும் உள்ளம் எப்போதும் உணர்வுத் தொழிலைச் செய்வது பற்றியும், இசையானது உள்ளத்தைத் தூய்மைசெய்து அமைதிநிலவச் செய்வது பற்றியும் பண்டை நாளை அறிஞர் கடவுளுணர்வை இசைவாயிலாகப் புணர்த்துவது சிறப்பெனக் கருதுவாராயினர். இசைப்பாட்டுக்கள் பலவும் கடவுளுணர்வு கொளுத்தும் மொழிகளாகவே இருக்கத் தலைப் பட்டன. இவ்வுணர்வு தலைசிறந்த காலம் தமிழ் நாட்டில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளாகும். சைவ வைணவப் பெரியார் பலரும் இசைகலந்த இயற்பாட்டுக்கள் பல யாத்து இசைக்கத் தொடங்கினர். இதனால் நாட்டில் சமயக் கொள்கைகள் மிக விரைவாகப் பரவி வேரூன்றி விட்டன. இற்றை நாளிலும் வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த அரசியலுணர்ச்சிகளும் அரசியற் கட்சிக் கொள்கைகளும் இனிய இசைப்பாட்டுக்கள் வாயிலாக நாட்டில் நன்கு பரவி நிற்பதைக் காண்கின்றோமன்றோ? இசையின் பால் இத்தகைய இயல்பு இருத்தல்பற்றியே மேனாட்டவரும் கடவுட் கொள்கை பரவி நிலைபெறுதற்கு இசையே கருவியெனக் கருதி அதனைப் போற்றிப் பெருமை செய்வாராயினர். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்டின் லூதர் என்பவர், சமயவுணர்வுகளுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத்தகுவது இசையே யென்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள் தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற்கருஞ் செயல்களைச் செய்தனர்* என்று கூறுவாராயினர். இவ்வகையால் ஞானசம்பந்தர் முதலாயினாரும், “கோழைமிடறாக கவிகோளு மிலவாக இசைகூடும் வகையால், ஏழையடியாரவர்கள் யாவை சொன சொல் மகிழு மீசனிடமாம்” என்றும் “செந்தமிழ்க் கீதமும் சீரினால் இசைதர” என்றும், இசை கலந்த தமிழ்ப் பாட்டுக் களால், கடவுளுணர்வு ஒழுக்கங்களை நாட்டில் பரப்பினாராக, அது சமண சமய முனிவர்கள் மேற்கொண்டிருந்த சமயத் தொண்டிற்கு இடையூறாய் இருந்ததுபற்றி, இசையினை இவ்வாறு புறக்கணித் துரைத்தனரோ என எண்ணுதற்கிட முண்டாகிறது. மேலும், இம் முனிவர்கள் கருதுமாறு இசை மக்களைக் காமத்துறையில் எளியராமாறு செய்திருக்குமாயின், பண்டைத் தமிழ்மக்கள் புலவரைப் பேணித் தமிழ் இயலையும், பாணரைப் பேணித் தமிழிசையையும், கூத்தரைப் பேணித் தமிழ் நாடகத்தையும் போற்றிப் புரந்திருக்க மாட்டாரன்றோ? இனி, இவ்விசையில் மாளவபஞ்சமம் என்ற பண்ணிசை வாயிலாக யசோதரன் மனைவியாகிய அமிழ்தமதி யென்பாள் அட்டபங்கன் என்னும் கயவன்பால் கழிகாமம் கொள்கின்றாள் என்று இந்நூலாசிரியர் கூறுகின்றார். இப்பண், கானபாஸ்கரம் என்ற நூலிலும், சங்கீத சம்பிரதாய பிரதர்சனி என்ற நூலிலும் காணப்படுகிறது. இவை கருநாடக சங்கீத நூல்களாதலால், இப்பண்ணும் கருநாடக சங்கீதத்தைச் சார்ந்தது என்பது விளங்கும். மேலும், சம்பிரதாய பிரதர்சனி யெழுதிய சுப்பராம தீக்ஷிதர் அவர்கள் இது வேங்கடமதி யென்பார் எழுதிய சதுர்த்தண்டி பிரகாசிகையில் உள்ளது என்று கூறுகின்றனர். இதன் பிறப்பு மாயா மாளவகௌளம் என்றும், “சாடவசம்பூர்ண ராகம்” என்றும், இதன் ஆரோசை சுரம் ச, ரி, க, ம, ப, நி, ச (பண்ணியல்) என்றும், அமரோசை, ச, நி, த, ப, ம, க, ரி, ச (பண்) என்றும், பதினைந்தாவது மேளகர்த்தாவென்றும் கானபாஸ்கரம் என்ற நூல் கூறுகின்றது. இதற்கு இசை நிரவல் நெறி (இராக சஞ்சாரி) சுப்பராம தீக்ஷிதராலும், “வாசுதேவ” என்று தொடங்கும் கீர்த்தனை யொன்று முத்துசாமி தீக்ஷிதராலும் செய்யப்பட்டுள்ளன. இத்துணையும் கூறியவாற்றால் இம் மாளவபஞ்சமம் என்னும் பண், கருநாடக சங்கீதத்துள் அடங்கியுள்ளதென்பது தெளிவாகிறது. இனி, கருநாடக சங்கீத நூல்களுள் சதுர்த்தண்டி பிரகாசிகைக்கு முற்பட்ட சங்கீத சூரியயோதயம், சாரங்கதரபத்ததி முதலிய நூல்களில் இப் பண் காணப்படாமையால், இந்நூலாசிரியர் காலம் முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பது துணிவாகிறது. “இனி, இக்கருநாடக சங்கீதத்தைப்பற்றி ஒன்று ஈண்டுக் கூறுவது மிகையாகாது. இந்நாளில் இசை வரலாறு காணாத சிலர் கருநாடக சங்கீதமென்பது தமிழ் நாட்டுத் தண்டமிழ்க்குரிய தல்லாதது போலப் பிறழவுணர்ந்து தவறான கருத்துக்களைப் பிதற்றித் திரிகின்றனர்; புதினமுடையோமெனத் தருக்கிப் பொய் புனைந்தும், பதவி செல்வாக்கினைப் பயன்படுத்தியும் தமிழ் வளர்ச்சியில் அழுக்காறுற்றும் அவர் கூறுவன அத்தனையும் பொருளில் வறுங்கூற்று என்பதைச் சிறிது காட்டுதும்.” கருநாடக சங்கீதத்துக்கு ஆதரவாகக் கூறப்படும் வடமொழி முதலிய தமிழல்லாத பிறமொழிகளில் காணப்படும் சங்கீத நூல் களுடைய வரலாறு காணின், அவற்றுள் மிகப் பழமையானது கி.பி. நான்காம் நூற்றாண்டிலெழுந்த பரத நூலாகும். அதற்கு அடுத்த நிலையில் காணப்படுவன சங்கீத மகரந்தம், நாரதசிக்ஷை முதலியனவாகும். இவற்றிற்குப் பின்பே, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாரீசுவ தேவர் என்பவரால் சங்கீத சமயாசார மென்ற நூலும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னரே பிற நூல்களும் பிறந்துள்ளன. இவற்றால், கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்பெல்லாம் “அருமறைத் துழனி” தவிர திருந்திய இசை (சங்கீதம்) தமிழ் நாட்டிற்கு வடக்கிலுள்ளார்க்கு இல்லை யென்பது இனிது விளங்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் இசைநூல்களும் இசை வகைளும் இருந்தன என்பதற்குச் சிலப்பதிகாரம் நல்ல சான்றுபகருகிறது. சாரங்க தேவர் எழுதிய சங்கீதரத்னாகரம் ஒன்றே, தமிழிசையின் மாண்பை வடநாட்டவர் அறிந்து வியந்து போற்றி மேற்கொண்டதற்கு ஆதரவு நல்குகிறது. வடநாட்டவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நாடு போந்து இசைபயின்ற செய்திக்குக் குடுமியான்மலைக் கல்வெட்டும், அக் காலத்தே விளங்கிய ஞானசம்பந்தர், திருமறைக் காட்டுத் திருப் பதிகத்தே, ‘ஊறுபொரு ளின்தமி ழியற்கிளவி தேருமட மாதருடனா, வேறுதிசை யாடவர்கள் கூடியிசை தேறுமெழில் வேதவனமே ’ என்று கூறியருளுவதும் அசைக்கமாட்டாத சான்று களாகும். இக்காலத்துக்குப் பின்னே, தமிழ் மக்கள் பிறமொழி வேட்கையும், தமிழ்த்திறத்தைப் புறக்கணித்தலும் மேற்கொண்டதன் பயனாய், தமிழ்இசை ஒளிகுன்ற, வடவர் அதனைத் தாம் விரும்பியவாறு திரித்து அமைத்து வளர்க்கலுற்றனர். அவ்வளர்ச்சியின் விளைவே இப்போதைய கருநாடக சங்கீதமாகும். வடவர் கருநாடக சங்கீதத்தைக் தமிழினின்றும் திரித்துக் கொண்டது இருவகைப்படுகிறது. ஒன்று, தமிழ்ப்பண்ணின் மேல் நிலைக்குரிய சுரத்தை இலதாக்கி, ஆளத்திக்கு (ஆலாபனைக்கு) இடமில்லையாகச் செய்துவிடுவது*; இரண்டாவது, பண்களை (இராகங்களை) வக்கிரமாகப் பாடுவது; அஃதாவது பாஷாங்கம் எனப்படும் கலப்புச் சுருதிகளை யுடையதாகப் பாடுவது. தமிழ்ப்பண் களுக்கு வக்கிர மில்லாத நிலைமையே உரித்தாகும். சுருங்கச் சொன்னால், “வர்ஜியராகங்”களெல்லாம் தொன்றுதொட்டு வந்த தமிழ்ப்பண்கள் என்று இசைப்புலவர் பலரும் கூறுப. இதனால், கருநாடக சங்கீதத்துள் நிலவும் “வர்ஜியராகம்” பலவும் தமிழ்ப்பண்கள் என்றும், “வக்கிரராகம்” பலவும் வடவர் புணர்ப்பென்றும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். மாளவபஞ்சமம் என்பதை இந்நூல் பண்ணென்று கூற, ஏனைய வட நூல்கள் இராகம் என்று கூறுவது காண்மின். தமிழ் நிலத்துத் தமிழ் மக்கள் உள்ளத்தே பிறந்து அவர் வழங்கும் தமிழ் மொழியிலே வளர்ந்து தமிழின்பம் பயந்து சிறந்த தமிழ்ப்பண்களின் சுருதிகளைக் குறைத்தும் திரித்தும் வேறுபடுத்திக் கொண்ட தோடு நில்லாது, அதற்குரிய தாய்மொழியாகிய தமிழும் அவ்விசைக்குப் பொருந்தாது; தமிழ்மொழியில் அதனைப் பாடச் செய்வது சங்கீத வளர்ச்சிக்குக் கேடுதரும் என்று தகவில்லாத பொய்மொழி கூறுவோரும், அவர்வழி நிற்போரும் பெருங்குற்றத் தினைச் செய்தொழுகுகின்றனர். பொய், மெய்யை ஒருகாலும் வெல்லாது. இது நிற்க, இங்கே காட்டிய மாளவபஞ்சமம் என்ற பண், கருநாடக சங்கீதத்துட் காணப்படினும், “வர்ஜியராக” மாதலால், தமிழ்ப் பண்ணென்றே தெளியவேண்டும். இதனைப் பாடுதற்குரிய காலம் விடியற்காலமாகும். அமிழ்தமதி இதனை அட்டபங்கன் பாடக்கேட்ட காலமும் அதுவேயாகும். சுப்பராம தீக்ஷிதர் “காலநிர்ணயமில்லை” யென்று கூறுவர். தமிழிசைப் புலவர் வழக்காறு முறைப்படி பதினைந்தாவது மேளகருத்தா என்பர். இவ்விசை நெறியின் வரலாறும் வகையும் பிற இயல்புகளும் ஆராய்ந்து காண்பதற்கு இப்போது பேரறிஞர் முன்வந்துவிட்டனர். உயர்திரு. சுவாமி விபுலானந்தர் முதலாயினாரும், திரு. பொன்னையாப் பிள்ளை முதலாயினாரும் செய்த ஆராய்ச்சிகள் உருவாகி வருகின்றன. தமிழ் மக்களுக்கும் தங்கள் தமிழ் வாயிலாக இசையமுது பெறுதற்கு ஆர்வம் பொங்கியெழத் தொடங்கிவிட்டது. செட்டிநாட்டரசர் பெருமான் ராஜாசர். அண்ணாமலை செட்டியார் அவர்களும் “மலையே வந்து விழினும் மனிதர்காள், நிலையில் நின்றிர்” கலங்காதீர் என்று நாவரசர் மொழிந்த நல்லுரையை நயந்து மொழிந்து நல்லாதரவு புரிகின்றார். இனி, தமிழுக்கும் தமிழிசைக்கும் நல்ல காலமேயாம் ஆகவே; தமிழ் வாழ்க, தமிழிசை வாழ்க என வாழ்த்தி மேற்செல்கின்றாம். இனி, இந்நூல் முதன்முதலாக 1887- ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் பாகுபலி நயினார் என்பவரால் அச்சிடப்பட்டதென்று சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பின் தில்லையம்பூர் வேங்கடராம அய்யங்காரவர்களால் 1908-ஆம் ஆண்டில் இஃது அச்சிடப்பட்டது. திரு. அய்யங்காரவர்கள் அச்சிட்டு வெளியிட்ட காலத்தே இந்நூல் அச்சாகியிருப்பவும், எக்காரணம் பற்றி, அதனை அவர் தமது முன்னுரையிற் குறியா தொழிந்தனரென அறிய முடியவில்லை. இந்நூலை ஆராய்தற்குச் சென்னை, வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் பிரதியொன்றும், விழுக்கம் குப்புசாமி நயினார் அவர்கள் பிரதியொன்றும் திருநெல்வேலிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு.வ.திருவரங்கம் பிள்ளையவர்கள் பிரதியொன்றும் துணை செய்தன. இப் பிரதிகளால் பல திருந்திய பாடங்களும் அச்சுப் பிரதியிற் காணப்படாத சில செய்யுட்களும் கிடைத்தன. இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பு நோக்கிக் கோடற்குத் துணை புரிந்த என் நண்பர் திரு. சி.அரங்கநாதன்,எம்.ஏ. அவர்கட்கு இந்நிலையில்என் அன்பார்ந்த நன்றியுரியதாகின்றது. சீர் குலைந் திருந்த கைப்பிரதியிலிருந்து படியெடுத்துத் தந்தவர் வேலூர் மகந்து உயர் கலாசாலையில் தமிழாசிரியராய் இருக்கும் வித்துவான் கதிர்வேலருடைய இளவலாவார். இவ்வாறு இந்நூலை யான் செப்பம் செய்து உரையும் வகுத் திருந்த செய்தியையறிந்து இதனை விரைய அச்சிடுவது நலமென்று நண்பர் திரு. திருவரங்கம் பிள்ளையவர்கள் தம்பால் இருந்த பிரதி யொன்றினை உதவி யூக்கியது இப்போது இவ்வெளியீட்டிற்குச் சிறந்த காரணமாகும். நல்லஇனிய தமிழ்நூல்களை மிகச் செவ்விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு வழங்கும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சரும், தமிழ்ப் புலவர்பால் மெய்யன்பு பூண்டு, அவர்கட்கு வேண்டுவனவற்றைச் சலிப்பின்றிப் புரியும் தக்கோரும், தனித்தமிழ் வளர்ச்சியும் சித்தாந்த சைவச் சிறப்பும் ஆகிய இரண்டையும் தம் இருகண்ணெனப் பேணிப்புரந்த பேரறிஞருமாகிய அவர்கள் இவ்வெளியீட்டின் தொடக்கமுதலே பேரூக்கங் கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்போது இந்நூல் முழுதும் செவ்வே அச்சாகிக் கண்கவர்வனப்புடன் கட்டுற்றுக் காட்சி வழங்குவதைக் காணாது இறைவன் தாணிழலெய்தியது என்நெஞ்சில் பெருவருத் தத்தை விளைவிக்கின்றது. இந்நூலை ஆராய்ந்து உரைகாணும் முயற்சி முடிந்து ஓராண்டாகிக், காகிதம் முதலியன கிடைக்கும் அருமைப்பாடும் நினையாது அழகு திகழ அச்சிட்டு வெளியிட்டு வழக்கம்போல் என்னை யூக்குவிக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னோடு உடன் இருந்து அச்சுப்பிழை பார்த்தல், உரைத்திட்பம் காண்டல் முதலிய பணிகளில் சிறந்த துணைபுரிந்த என் நண்பர், திரு. வித்துவான், வெள்ளை வாரணர் அவர்களின் உதவி என் நெஞ்சில் என்றும் நிலை பெறும் பான்மைத்தாகும். தமிழறிவிலும் பிற செல்வாக்கு வகைகளிலும் மிக்க குறை பாடுடைய அடியேனையும் பொருளாக்கி, தமிழன்னைக்குச் செய்தற்குரிய இப்பணியினைப் புரிவிக்கும் அம்மையப்பனாய் ஆரருள் புரியும் ஆடலரசின் திருவடிகளை மன மொழி மெய்களால் முறையே நினைத்தும் வழுத்தியும் வணங்கியும் அமைகின்றேன். “தென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே” அண்ணாமலை நகர், 5-1944. ஒளவை சு. துரைசாமி. உரிமையுரை திருநெறித் தொண்டர் திருத்தொகை வழங்கிய அருந்தமிழ் நாவ லாரூரர் திருநாள் ஆண்டுதோ றாற்றும் அமைவும் தண்டமிழ்ப் புலவரை யோம்பும் புலமையும் திருவும் என்நலம் பேணும் இனிமையும் பொருந்தியோன் பாலியாற் றடைகரைப் பல்பொழி னடுவண் மாடமலி மறுகி னார்க்காட் டண்ணல் அறுவை வாணிகன் அருந்தமி ழன்பன் சச்சிதா னந்தச் சான்றோற் கினியன் பொன்னும் பொருளும் பூந்துகில் வகையும் மன்னும் புலவர்க்கு மாண வழங்குவோன் வரத ராசனென வருபெருஞ் செல்வன் செய்த வண்மைச் சிறப்பினால் இத்தமிழ்க் காவிய முரையுடன் காண்டலின் தாவில் சீர்மிகு மவன்றன் செழுங்குடி விளங்கப் புரிமனம் உவப்ப வவற்கே உரிமை செய்தனன்இவ் வொண்டமி ழுரையே. ஒளவை சு. துரைசாமி யசோதர காவியம் மூலமும் உரையும் காப்பு 1. உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத் தலகி லாத அனந்த குணக்கடல் விலகி வெவ்வினை வீடு விளைப்பதற் கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். உரை:- உலக மூன்றும் - மூன்று உலகங்களிலும் நிகழும் நிகழ்ச்சி முற்றும், ஒருங்கு உணர் - ஒருங்கே யுணர்ந்து கொள்ளுதற் கேதுவாகிய, கேவலத்து - கேவல ஞானத்தையுடைய, அலகு இலாத - அளவில்லாத, அனந்த குணக்கடல் - கடையிலாஞானம் முதலாகக் கூறப்படும் குணங்கள் நிரம்பிய கடலாகிய அருகபரமேட்டியின், இலகு மாமலர்ச் சேவடி - விளங்குகின்ற அழகிய பூப்போலும் திருவடியை, வெவ்வினை விலகி - கொடிய வினைகளின் நீங்கி, வீடு விளைப்பதற்கு - வீடு பேற்றினை எய்துவித்துக் கோடற்கு, ஏத்துவாம் - பரவிப்பணிவோம் என்றவாறு. குணக்கடல், அன்மொழித்தொகை. கேவலத்து என்பது தொகை யாற்பெறப்படும் அருகபரமேட்டியை விசேடித்து நின்றது. மூன்றுல கினும் நிகழ்வனவற்றை முற்றவும் ஒருங்கேயுணரும் ஞானக்காட்சி நல்குவதெனக் கேவலத்தின் தன்மை தோன்ற, “உலக மூன்றும் ஒருங்குணர் கேவலத்து” என்றார். “எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி”1 என்ற நீலகேசிச்செய்யுட்கு, “தானும் பிறிதுமாகிய திரவிய குண பரியாயங்களைப் பிரத்தியட்சமாக உணர்ந்த கேவல ஞானமும், அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிசன கேவலவீரிய கேவலசுகமு முடையானவனே சுவாமியாகத் துதித்து” எனவரும் உரை காண்க. “பன்மாண் குணங்கட்கு இடனாய்”1 எனத் திருத்தக்கதேவர் கூறினாராக, இந்நூலாசிரியர் அக்குணங்களின் பன்மையை, “அலகிலாத” என்றும், முடிவின்மையை “ஆனந்த” என்றும் விசேடித்து, “அலகிலாத அனந்த குணக்கடல்” என்றார். குணக்கடல் சேவடி, வீடு விளைப்பதற்கு ஏத்துவாம் என இயைக்க. வெவ்வினையின் விலகி யென மாறி இன்னுருபு விரித்துக் கொள்க. ஒருங்குணர் கேவலத்து என்றது நன்ஞானம்; அலகிலாத அனந்த குணக்கடல் என்று தெளிந்தது நற்காட்சி; அக்குணக்கடல் சேவடி யேத்துதல் நற்சீலம். இம் மூன்றன்பயன், வினையை வீட்டி வீடுபேறாகிய கடையிலாஅறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கும் எய்துவது. “கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல், நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட, வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு, ஆடெழில் தோளினாய் அநந்த நான்மையே”2 எனத் தேவரும் கூறுவர். இனி, வெவ்வினை விலகி வீடு விளைப்பதற்கு என்பதற்கு, வெவ்வினைகள் தாம் பற்றிநிற்கும் உயிர்களைவிட்டு நீங்குவதாகிய செம்மைநிலை உண்டாதற்கு என்று உரைப்பினுமாம். பாயிரம் 2. நாதன் நம்முனி சுவ்வதன் நல்கிய தீதுதீர் திகழ்தீர்த் தஞ்செல் கின்றநாள் ஏத மஃகி யசோதரன் எய்திய தோத உள்ளம் ஒருப்படு கின்றதே. உரை:- நம் நாதன் - நமக்குத் தலைவனாகிய, முனி சுவ்விதன் - முனி சுவ்விரத தீர்த்தங்கரர், நல்கிய - அருளிய, தீதுதீர்திகழ் - குற்றமின்றி விளங்கும், தீர்த்தம் செல்கின்ற நாள் - ஆகமோபதேசம் நடைபெறுங் காலத்தில், யசோதரன் - யசோதரன் என்பவன், ஏதம் அஃகி - வினைச்சார்பு அற்றுக்கெடுதலால், எய்தியது - வீடுபேறு எய்திய நிகழ்ச்சியை, ஓத - உரைப்பதற்கு, உள்ளம் ஒருப்படுகின்றது - நெஞ்சமானது விரும்பிச் செயற்கண் ஒன்றி நிற்கிறது எ-று. நாதன், தலைவன். ஞானச் செல்வமுடையவனென்றுமாம். தீர்த்தங்கரர் என்போரும் இந்நாதர்களே. இவர் இடப தீர்த்தங்கரர் முதல் ஸ்ரீவர்த்தமானர் ஈறாக இருபத்து நால்வராவர். இவருள் முனி சுவ்விரதர் இருபதாம் தீர்த்தங்கரர். தீர்த்தங்கரர், தீர்த்தகரர் எனவும் வழங்கும். தீர்த்தங்கரர்களின் இயல்பு கூறுமிடத்து, “ஆப்தனம், உபாசக ஜனங்கட்கு, ஜபம், தியானம், அருச்சனை முதலிய பிரகாரங்களால் சுவர்க்க அபவர்க்க பலப்பிரதனாவன்; இவ்வண்ணம் நிக்கிர அனுக்கிரகங்கள் இன்றிப் பரமஉபேக்ஷா சாதனனாகிய பகவான் உபாசக ஜனங்கட்குச் சுகத்தினையும் பிரத்வேஷி ஜனங்கட்குத் துக்கத்தினையும் ஆக்குவனாகு மென்றறிக” 1 என்று அஷ்ட பதார்த்த சாரம் என்னும் நூல் கூறுகின்றது. முனி சுவ்விரத தீர்த்தகராருடைய காலத்தில், தன்னை வழிபடு வோர்க்குச் சுகத்தை நல்கி ஒழுகுதலால், அவர் கால இயல்பை, “முனி சுவ்வதன் நல்கிய தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்றநாள்” என்றார். திகழ்தல், விளங்குதல், தீர்த்தகரருடைய காலத்தைத் தீர்த்தம் என்றார். அஃகுதல், சுருங்கிக்கெடுதல். அவையடக்கம் 3. உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென எள்ளு கின்றன ரில்லை விளக்கினை; உள்ளு கின்ற பொருள்திறம் ஓர்பவர் கொள்வர் எம்உரை கூறுதற் பாலதே. உரை:- உள் விரிந்த புகைக்கொடி உண்டு என அனலுக் குள்ளே தொக்குநின்று மேலே விரிவதாகிய புகையொழுங்கு விளக்கிடத்தே உளது என்ற காரணத்தால், விளக்கினை - அவ்விளக்கை, எள்ளுகின்றனர் இல்லை - இகழ்பவர் யாவரும் இல்லை, உள்ளுகின்ற பொருள்திறம் - உள்ளுறுத்து உரைக்கப்படுகின்ற பொருட் கூறு பாட்டினை, ஓர்பவர் - ஆராய்ந்து மேற்கொள்ளும் அறிஞர். கொள்வர் - ஈண்டுக்கூறப்படும் இதனையும் ஏற்றுக் கொள்வர், (ஆதலால் எம் உரை - எமது இந்நூலும், கூறுதற் பாலதே - கூறப்படும் பான்மையுடைத்தே எ-று. கூறுவோர் தகுதி நோக்காது, கூறப்படும் பொருளினது தகுதி நோக்கிக் கொள்ளு வதும் தள்ளுவதும் அறிஞர் செயலாதலின், “உள்ளுகின்ற பொருள்திறமோர்பவர் கொள்வர்” என்றார். பொருளும் அறிஞர் ஏற்கும் தகுதி வாய்ந்ததென்பார், “எம்முரை கூறுதற்பாலதே” என்றார். இனி, பொருள்திறமோர்பவர், எம்முரை கூறுதற்பாலதே என்று கொண்டு மேற்கொள்வர் என்றார் என்றுமாம். நூற்பொருள் 4. மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் பொருவில் புண்ணியம் போகம் புணர்ப்பதும் வெருவு செய்யும் வினைப்பயன் இற்றெனத் தெரிவு றுப்பதும் செப்புத லுற்றதே. உரை:- வெவ்வினை மருவு வாயில் மறுத்து - கொடிய வினையானது வந்து பொருந்தும் வாயிலை அடைத்து, பொருவில் புண்ணியம் போகம் உடன் புணர்ப்பதும் - ஒப்பில்லாத அருளறத்தைச் செய்தல் வீட்டின்பத்தை உடனே யெய்துவிக்கும் என்பதையும், வெருவு செய்யும் வினைப்பயன் இற்று எனத் தெரிவுறுப்பதும் - உயிர்கட்கு அச்சத்தைச் செய்யும் தீவினையின் பயன் இத்தன்மைத்து என்று தெரிவிப்பதையும், செப்புதல் - இந் நூலின்கண் உரைப்பது, உற்றது - யாம் கருதியதாகும் எ-று. செயப்படும் வினையானது செய்பவனைச் சென்று சாரும் இயல்பிற்றாதலின், அதனை மறுப்பது அதன் சார்பினைக் கெடுப்பதாம் என்க. அஃதாவது “அருள்புரி மனத்தராகி ஆருயிர்க் கபயம் நல்கிப், பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு, இருள்புரி வினைகள் சேராது இறைவனது அறத்தை”1 எய்துவதாகும். எய்தினார்க்கு வீட்டின்பம் இடையீடின்றி எய்துதலின் “உடன் புணர்ப்பது” என்றார். பொருவில் புண்ணியம் போகம் புணர்க்குமெனவே வீட்டின்பமாயிற்று. வெருவு செய்யும் வினை, உயிர்க்கொலை; அதன் பயன் உயிரின்கட் கிடந்து அது புக்குழிப்புக்கு வருத்தும் என்பது, “உயிர்க் கொலை யினில் அருவினை நரகத் தாழ்ந்து, எய்தும் வெந்துயர் எனைப்பல கோடி கோடி ”2 எனப் பிறாண்டும் கூறுப. இக் கருத்தே, இந்நூல் முடிவிலும், “வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது, தருவது சுரகதி தந்து பின்னரும், பொருவரு சிவகதி புணர நிற்பது, திருவற நெறியது செவ்விகாண்மினே”3 என்று கூறப்படுவது காண்க. இக் காவியத்தின் வாயிலாக இந்நூலாசிரியர் தாம் மக்கட்கு உணர்த்தக் கருதுவது இஃது என இதனால் தெரித்துரைத்தாராயிற்று. நூல் முதலாவது சருக்கம் ஓதய நாட்டு இராசபுரத்து வேந்தனான மாரிதத்தன் என்பான் இனிது ஆட்சிபுரிந்து வருவதும், இளவேனிற் பருவம் எய்துவதும், அரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சோலைகட்குச் சென்று வேனில் விழா அயர்வதும், நகர மாந்தர் போந்து அரசனை அடிபணிந்து மாரிதேவிக்கு உயிர்க்கொலையோடு கூடிய சிறப்பினைச் செய்யா விடின் வரும் தீங்குகளை வகுத்தோதி உடனே சென்று அதனைச் செய்தல் வேண்டுமென்று அரசனை ஒருப்படுத்துவதும், அரசன், ஏனைமாந்தர் விலங்குகளை இரட்டை யிரட்டையாய்க் கொன்று பலியிட்டுத் தேவியை வழிபடின், தான் மக்களில் இரட்டையரைக் கொன்று பலியிட வேண்டுமெனக் கருதுவதும், அத்தகைய இரட்டையரைக் கொணருமாறு அவன் தன் தளபதி சண்டகருமன் என்பானைப் பணிப்பதும், அவன் சென்று தெருவில் பலி வேண்டித் திரிந்த அபயருசி, அபயமதி என்ற இரட்டையரைக் கொண்டு போதருவதும், வருங்கால் அவ்விரட்டையர் தம்முள் யாக்கை நிலையாமை, அச்சத்தின் புன்மை, சென்ற பிறவிகளில் எய்திய துன்பம், வினையின் செயற்பாடு முதலிய பலவற்றைப் பேசி மனத்திண்மை கோடலும், தேவி கோயில்முன் பலியிடுதற்காக இவ்விரட்டையரை நிறுத்தி, ஒரே கருத்துடன் தேவியைப் பரவி “அரசன் நீடுவாழ்க” என வாழ்த்துமாறு கூறுவதும், அவர்கள் மலர்ந்த முகத்துடன், “எவ்வுயிர்க்கும் தீங்கு நினையா மனத்தனாய், அருளறம் பூண்டு பிறவிப்பிணி போக்கு திருவறம் தழுவிப்புகழுடன் இவ்வுலகம் காத்து நீடுவாழ்க” என்பதும், அரசன் அவர்தம் முகமலர்ச்சியும் உவகை மொழியும் கண்டு வியந்து அவர் அஞ்சாமைக்குக் காரணம் வினவுவதும், அவற்கு அவர்கள் உயிர்க் கொலையின் தீமை மிகுதி புலப்படுத்தி, “அதனைச் செய்யும் வேந்தனை வாழ்த்தின் யாது விளையுமோ” எனத் தாம் நினைத்ததும், தம் வரலாறுகூற ஒருப்பட, அரசன் அவர் பண்டைப்பிறப்பு வரலாறு கேட்கத் தொடங்குவதும் பிறவும் இப்பகுதிக்கண் கூறப் படுகின்றன. ஓதய நாட்டுச் சிறப்பு 5. பைம்பொன் நாவற் பொழிற்பர தத்திடை நம்பு நீரணி நாடுள தூடுபோய் வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ திம்பர் ஈடில தோதய* மென்பதே. உரை:- பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை - பசிய பொன்னை விளைவிக்கும் நாவலந் தீவில் உள்ளதாகிய பரத கண்டத்தில், ஓதயம் என்பது - ஓதயமென்று உயர்ந்தோரால் சிறப்பித்துக் கூறப்படுவதாகிய, நம்பும் நீரணி நாடு-எவ்வுயிரும் விரும்பும் நீர்வளம் சான்ற நாடு ஒன்று, உளது-உண்டு, வம்பு வார்பொழில் - மணம்கமழும் நீண்ட சோலையானது. ஊடுபோய் மாமுகில் சூடுவது - நிலத்தின்மேல் உள்ள காற்றுமண்டலத்தின் உள்ளுருவி உயர்ந்து மேகமண்டலத்தை யடைந்து பெரிய மேகங்கள் தன்பால் தவழவிளங்குவது, இம்பர் ஈடு இலது - இம்மண்ணுலகத்தே ஒப்பில்லாததாகும் எ-று. மேருமலையின் தெற்கிலே நாவல்மரம் செறிந்த சோலை களையுடையது இந்நாவலந்தீவு என்றும், “இந்நாவல் பழத்தின் சாறொழுகி ஆறாய்ப்பரந்து அந்நிலத்தையும் பொன்மயமாக்கி மேருவின் மூலத்தையடையு மென்றும், அச்சா றூறிய பயனே பொன்விளைன” வென்றும் “நாவலோங்கிய மாபெருந் தீவு” என்றும் கூறவர். “நாவலந் தீவு தன்னுள் பரதத்து நடுவண்”1 என மேருமந்தர புராணம் கூறும். நம்பும் நீர் அணி நாடு என்பதற்கு நாடாவள முடைமையால் எவ்வுயிரும் தன்கண் வாழ்தற்கே விரும்பும் தன்மையினையுடைய நாடு என்றலுமாம். இந்நிலவுலகத்தைச் சூழ மூவகைக் காற்று மண்டல முண்டென்பது சமண்சமயக் கொள்கை. அம்மண்டலத்தின் மேல் உளது மேகமண்டலம். மேகமண்டலத்தை யளாவி நிற்கும் பொழில் காற்றூடு உயர்தல் வேண்டுதலின், “ஊடுபோய் முகில் சூடுவது” என்றார். ஓதயநாடு, யௌதய நாடு என்பதன் சிதைவு. ஒளதய நாடு என்றும் பாடம். இதனைத் தசார்ணம் என்றும், உசீநரன் மகனான நிருகன் வழியினோராண்ட நாடென்றும் கூறுப. பரதத்திடை ஓதயமென்பது, நீரணி நாடு, உளது; பொழில், போய், முகில் சூடுவது, ஈடிலது என இயைக்க. இராசபுரச் சிறப்பு 6. திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்* வசையி லாநகர் வானவர் போகமல்+ கசைவி லாஅள காபுரி தானலால் இசைவி லாத இராச புரமதே. உரை:- திசையுலாம் இசையும் திருவும் நிலாய் - நாற்றிசையும் பரந்த புகழும் செல்வமும் பொருந்துதலால், வசையிலா நகர் - குற்ற மில்லாத நகரம், வானவர் போகம் மல்கு - தேவருலகத்து நுகர்ச்சி முற்றும் நிரம்பிய, அசைவு இலா அளகாபுரி அலால் இசைவு இலாத - குறைவொன்றும் இல்லாத அளகா புரியையன்றி ஒப்புக் கூறற்கில்லாத, இராசபுரம் - இராசபுரமாகும் எ-று. நிலாய், வினையெச்சம் காரணப் பொருட்டு, திசையுலாம் இசை என்பது “ஏமாங்கத மென்று இசையால் திசை போய துண்டே”1 என்றாற்போல்வது. வசை, குற்றம்; “பிணியின்மை செல்வம் விளை வின்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”2 என்பவற்றிற்கு மறுதலையாய ஐந்து. அளகாபுரி, இந்திரன் நகர்; குபேரன் நகரம் என்றும் கூறுதலுண்டு. அசைவு, குறைவு; “அசைவிலாப்புரவி வெள்ளத் தரிஞ்சயன்”3 என வருதல் காண்க. இசைவு - உவமித்தல். தான் - அசை. இராசபுரமது என்றவிடத்து, அது பகுதிப்பொருட்டு. வசையிலா நகர் இராசபுரம் என்க. ஓதயமென்னும் நாட்டிற்கு இராசபுரம் என்பது தலைநகர் என்ற வாறாம். இதனைப் பின்பு மன்னகர் என்றே மொழி பெயர்ப்ப. உலாம் என்புழி, செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது. 7. இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சு லாமதி சூடின மாளிகை அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே. உரை:- இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது - நகரத்தின் மதி லானது மேகமண்டலத்தை யடைந்து அதன் மேலும் உயர்ந்தது, மஞ்சு உலாம் மாளிகை மதிசூடின - மேகங்கள் உலவும் மாளிகைகள் மதிமண்டலத்தை அளாவித் திங்கள் தவழ நின்றன, அஞ்சொலாரவர் பாடலொடு ஆடலால் - அழகிய சொற்களையுடையரான மகளிருடைய பாடல் ஆடல் என்பவற்றால், விஞ்சையார் உலகத்தினை வெல்லும் - (இந்நகரமானது) வித்தியாதரர் உலகத்திலும் மேம்படுவதாயிற்று எ-று. மஞ்சுலாம் மாளிகை மதிசூடின என்று இயையும், மஞ்சு, ஆகுபெயர். நகரமதிலினும் நகரத்து மாளிகைகள் உயர்ந்திருந்தன என்பர், “இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சுலாமதி சூடின மாளிகை” என்றார். மகளிர் அனைவரும் இசையும் கூத்தும் பயின்று தாம் இன்புற்றும் பிறர்க்கு இன்புறுத்தியும் இனிதொழுகினர் என்ப தாயிற்று. “ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக், கேடில் புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டும், ஊடலொடு கூடலுணர்வார் கள்புணர் வாராய்ச், சேடரொடு சேடியரும்”1 என்று பிறரும் கூறதல் காண்க. ஆடல் - விளையாட்டுமாம். அஞ்சொலாரவர் என்றது - சாத்தனவன் என்றாற் போல நின்றது. வெல்லுதல் - மேம்படுதல். வேந்தன் மாரிதத்தன் சிறப்பு 8. பாரி தத்தினைப் பண்டையின் மும்மடிப் பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் மாரி தத்தனென் பானுளன் மன்னவன். உரை:- பார் இதத்தினை - நிலத்து மக்கட்கு நலத்தினை, பண்டையின் மும்மடி பூரிதத்து - முன்னையினும் மும்மடங்கு மிகும்படி செய்து, ஒளிர்-விளங்குகின்ற, மாலை வெண்பொற்குடை - பொன்னாரமும், வெண்கொற்றக் குடையும், பொற்குடையும் கொண்டு, வாரிதத்தின் - மேகத்தைப் போல, மலர்ந்த கொடைக் கரன் - விரிந்த கொடையினைச் செய்யும் கையை யுடையவனான, மாரிதத்தன் என்பான் - மாரிதத்தன் என்று பெயர் கூறப்படுவான், மன்னவன் உளன் - ஒரு வேந்தன் உளனானான் எ-று. தன் குலத்து முன்னோரினும் மூன்று மடங்கு சிறப்புண்டாக ஆண்டானென்பது அவனது ஆட்சிநலம் குறித்து நின்றது. மும்மடி- மும்மடங்கு; பிறாண்டும் “முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்”1 என்று கூறுப. பூரிதம் - நிறைதல். மாலையும், குடையும், கொடைக்கரனும் உடைய மாரிதத்தன் என்பான் மன்னவன் உளன் என இயைக்க. வெண்குடை - அரசு கட்டிற்கு நிழலாகி வேந்தனது கொற்றமும் தண்ணளியும் சுட்டி நிற்பது; பொற்குடை - உலா வருங்கால் வருங்குடை. “பொன்னாங்குடை நிழற்ற”2 என்றதற்கு, “இது பனிக்குடையாதலின் பொற்குடையாயிற்று” என நச்சினார்க் கினியர் உரைத்தல் காண்க. வாரிதம் - மேகம். மலர்தல் - விரிதல்; “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்”3 என்றாற்போல. செல்வச் சிறப்பு 9. அரசன் மற்றவன் தன்னொடும் அந்நகர்* மருவு மானுயர் வானவர் போகமும் பொருவில் வீடு புணர்திற மும்மிவை தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். உரை:- அரசன் அவன் தன்னொடும் - அரசனாகிய அம்மாரி தத்தனுடன், அந் நகர் மருவும் மானுயர் - அவ்விராசபுர நகரத்தே வாழும் மக்கள், செல்வ மயக்கினால் - குறைவின்றி நிறைந்த செல்வக்களிப்பினால், வானவர் போகமும் - தேவருலகத்திலே பெறக்கூடிய இன்பமும், பொருவில் வீடு புணர் திறமும் - ஒப்பில்லாத வீடு பேற்றையடையும் நெறிகளும், இவை - ஆகிய இவற்றை, தெரிவது ஒன்று இலர் - ஆராய்வது ஒன்றும் இலராயினர் எ-று. மற்று, அசை. அரசனவன் என்பது சாத்தனவன் என்றாற்போல நின்றது. உம்மை - இசைநிறை, ஒடு - உயர்பின்மேற்றாகிய ஒரு வினை யொடு. அரசனெவ்வழி அவ்வழியினர் குடிகளாதலின், அவன் உயர்நெறி நின்று மக்களைச் செந்நெறிக்கட் செலுத்தற்பாலன் என்பது பட நின்றது. மானுயர் - மக்கள்; வடசொற் சிதைவு. “சிறுமானுயர்”1 என நீலகேசியும் கூறுதல் காண்க. வானவர் போகத்தைக் தோலா மொழித்தேவர், “இன்பமே பெரிதாகி இடையறவின் றிமைப்பளவும், துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம்”2 என்று கூறுதல் காண்க. வீடு புணர்திறம் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மூன்றும் ஒருங்கு நிகழ்வது; நற்காட்சி முதலியன தனித்தனியே வீடுபெறு நெறியாகா என்பர் நீலகேசி உரைகாரர். போகமும் வீடுபேறும் என்ற இவை யிரண்டுமே மக்கள் பெறற் குரியனவாதலின் “இவை” யெனத் தொகுத்தோதினார். “மானுய ரென்னப்படுவார் தாம் மா விதைய மென்னும், கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த், தானுய ரின்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார்”3 என்பதும் அதன் உரையும் காண்க. செல்வச் செருக்கினால் அறிவுக்கண் மூடப் பட்டமையின் மறுமை வீடு என்ற ஆராய்ச்சியுணர்வே இலராயினர் என்பதாம். ஒன்றும் என்புழிச் சிறப்பும்மை தொக்கது எ-று. வேனில் வரவு 10. நெரிந்த நுண்குழல் நேரிழை யாருழை சரிந்த காதல் தடையில தாகவே வரிந்த* வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் விரிந்த தின்னிள வேனிற் பருவமே. உரை:- நெரிந்த நுண்குழல் நேரிழையார் உழை நெறித்த நுண்ணிய கூந்தலையும் உயரிய அணிகலன்களையுமுடைய மகளிர் பால், சரிந்த காதல் தடையிலதாக - உண்டாகிய காதலின்பம் இடையீடின்றிப் பெருகிவராநிற்ப, விரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள் - வரிந்து கட்டப்பட்ட வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன் இன்பத்திலே மூழ்கிக் கிடக்கும் நாளில், இன் இளவேனில் பருவம் விரிந்தது - இன்பத்தைத் தரும் இளவேனிற் பருவம் வந்தது எ-று. மன்னவன், இழையாருழை, காதல் தடையிலதாக வைகும் நாள் இளவேனிற் பருவம் விரிந்தது என இயையும், நெறிந்த எனற்பாலது நெரிந்த என வந்தது; “நெறிதாழ் இருங் கூந்தல்,” “நெறிகூந்தல்”1 என வருதல் காண்க. நுண்குழல் நுண்மை மயிர்க் கேற்றுக. சரிதல் - உண்டாதல். தடை - துனி. புலவியும் ஊடலும் காம வின்பத்துக்குச் சிறந்தனவாதலின், துனியே பொருளாமாறு காண்க. “உப்பமைந் தற்றால் புலவி” என்றும், “ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம், கூடியார் பெற்ற பயன்”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. நாடு முற்றும் ஒரு காலத்தே விளங்கித் தோன்றுதலின் “விரிந்தது” என்றார். சோலை நலம் 11. கோங்கு பொற்குடை கொண்டுக வித்தன வாங்கு வாகை வளைத்தன சாமரை* கூங்கு யிற்குலம் இன்னியங் கொண்டொலி பாங்கு வண்டொடு பாடின தேனினம் உரை:- கோங்கு பொற்குடைகொண்டு கவித்தன - கோங்க மரங்கள் பொன்னாற்செய்த குடைபோலப் பூத்துத் தொங்கின. வாங்கு வாகை சாமரை வளைத்தன - வளைந்த வாகை மரங்கள் சாமரைபோலப் பூத்துச் சாய்ந்து கிடந்தன, கூம் குயிற் குலம் - கூவுகின்ற குயிற்கூட்டம், இன்இயம் கொண்டு ஒலிபாங்கு - இனிய முழவுபோல இசைக்கும் இடங்களில், வண்டொடு தேனினம் பாடின - வண்டினமும் தேனினமும் பண் பாடின எ-று. கோங்கம்பூவினைக் குடையோடு உவமித்தலின், அதற்கேற்பக் “கவித்தன” என்றார். வாங்குதல் - வளைதல். சாமரைபோல்வதனைச் சாமரை என்றார். கொண்டு, உவமப்பொருட்டு; “யாழ் கொண்ட இமிழிசை”1 என்றாற்போல. கோங்கு குடைபோல் மலர்தலை, “குடையவிழ்வன கொழுமலரின குளிர்களியன கோங்கம்”2 என்றும், வாகைப்பூ சாமரை போறலை, “ஓகைச் சாமரையூழ்த்தன வாகை”3 என்றும் சான்றோர் கூறுப. குயிலோசை முழவு போல்வதனை, “களிவாய்க் குயில்கள் முழவாக ”4 என்ப. வண்டு, தேன் என்பன வேறுவேறுவகை. கோங்கு குடைகவிப்ப, வாகை சாமரைவீச, குயில் முழவு முழக்க, வண்டும் தேனும் பண்மிழற்ற, இளவேனில் விரிந்தது என்று கொள்க. பாங்கு - பக்கம். 12. மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர் தலந்த லந்தொறும் ஆடினர் தாழ்ந்தனர் கலந்த காதன்மை காட்டுநர் போலவே வலந்த* வண்தளிர் மாவின மேயெலாம். உரை:- வார்கொடி பூஞ்சிகை மலர்ந்த - நீண்டகொடிகள் அழகிய தலையிலே பூக்களைப் பூத்தன, தலம் தலந்தொறும் மங்கையர் ஆடினர் தாழ்ந்தனர் - இடந்தோறும் மகளிர் விளையாடி யமர்ந்தனர், கலந்த காதன்மை காட்டுநர்போல - மனக்கினிய காதலரைக் கூடிய நலமுடைமையைக் காட்டுபவரைப்போல, மாவினம் எல்லாம் வண்தளிர் வலந்த - மாமரங்களெல்லாம் வளவிய தளிர்களை ஈன்றன எ-று. கொடிகள் இடையிடையேயன்றித் தலையிலே பூத்து விளங்கு தலின் “பூஞ்சிகை வார்கொடி” என்றார். “பூத்தலைப்பூங்கொடி” என்பர் கபிலர். பூவும் புதுத்தளிரும் செறிய இனிய நிழல் பயந்து வெண்மணல் பரந்து இனிது தோன்றும் இடங்கள் என்றற்கு, “தலந் தலந் தொறும்” எனப் பொதுப்படக் கூறினார். காதலரைக் கூடி மகிழும் மகளிர், மேனி மாமை நிறமுற்றுத் திகழ்பவாதலின், “கலந்த காதன்மை காட்டுநர் போலவே, வலந்த வண்டளிர் மாவினமே யெலாம்” என்றார். மாவினமே என்புழி ஏகாரம் இசை நிறை. தேமாவும் புளிமாவும் என இனமுண்மையின் “மாவினம்” எனப்பட்டது. எல்லாம், எஞ்சாமைப் பொருட்டு; இளவேனிலில் இவையாவும் ஒழியாது தளிரீனுமாகலின். இனி, கொடிபோலும் மங்கையர் ஆடினராய்த் தாழ்ந்தனராய்க் காட்டுநர் போல மாவினமெல்லாம் தளிரீன்றன என்றுமாம். வலத்தல் - சூழ்தல். வேனில் விழா 13. உயர்ந்த சோலைகள் ஊழெதிர்* கொண்டிட வயந்த மன்னவன் வந்தெனத் தென்றலின்† நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும் வயந்த மாடுவ கையின ராயினார். உரை:- உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர்கொண்டிட - உயர்ந்த மரம் செறிந்த சோலைகள் தளிரும் பூந்துணரும் ஈன்று கொள்ளுமாறு, வயந்த மன்னவன் தென்றலின் வந்ததென-வசந்த காலமாகிய வேந்தன் தென்றலுடன் வந்தானாக, நயந்த மன்னரும் நன்னகர் மாந்தரும் - வரவேற்று விரும்பிய வேந்தர்களும் அவ்விராசபுரத்துமக்களும், வயந்தமாடு வகையினர் ஆயினர் - வசந்த விழாக் கொண்டாடும் கூறுபாடுடை யராயினர் எ-று. வேனில் வரக்கண்ட பல்வகை மரம் செடி கொடிகள் புதுத் தளிரீன்று புதுமலர் பூத்து நறுமணம் கமழ, மன்றல் நாறும் தென்றல் தவழ, வண்டு தேனுண்டு பாட இனிய காட்சி வழங்குவது அதனை வரவேற்பது போறலின், “உயர்ந்த சோலைகள் ஊழ் எதிர் கொண்டிட” என்றார். “உயர்ந்த சோலை” என்றும், “எதிர் கொண்டிட”என்றும், “மன்னவன்” என்றும் நின்ற சொற்கள், மன்னன் தம் நகர் நோக்கி வந்தவிடத்து, நகரத்து உயர்ந்தோர் பூச்சொரிந்து எதிர்கொள்ளும் இயைபினைக் குறிப்பித்தல் காண்க. தென்றலின்நயந்த என்றற்குத் தென்றலால் அறிந்து மகிழ்ந்த என்று உரைத்தலுமொன்று. வேனில் வரவினைத்தென்றல் போந்து அறிவித்தலை, “இன்னிள வேனில் வந்தனன் இவணென, வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த, இளங்கால் தூதன் இசைத்தனன்”1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. வயந்தம் - வேனில் விழா; “குழவி வேனில் விழவுஎதிர் கொள்ளும், சீரார் செவ்வி”1 என வருதல் காண்க. வயந்த மாடு உவகையராயினார் என்று கொள்ளினுமாம். “வேனிலாடல் விரும்பிய போழ்தினில்”2 எனப்பிறாண்டும் கூறுப. மன்னர் என்று பன்மையாற் கூறினார், மாரிதத்தனும் அவன்கீழ் அரசுபுரியும் சிற்றரசரும், துணைபெற்று வாழும் ஏனையரசரும் அகப்பட. நகரமாந்தர் வேந்தற் குரைத்தல் 14. கானு லாவியும்* காவும் அடுத்துடன் வேனி லாடல் விரும்பிய போழ்தினில் மான யானைய மன்னவன் தன்னுழை ஏனை மாந்தர் இறைஞ்சுபு கூறினார். உரை:- மான யானைய மன்னவன் - பெருமை பொருந்திய யானைகளையுடைய மன்னவனான மாரிதத்தன், கான் உலாவியும் - காடுகளில் உலாவியும், கா உடன் அடுத்தும் - சோலைகளில் உடன் சென்று தங்கியும், வேனிலாடல் விரும்பிய போழ்தினில் - வேனில் விளையாட்டை விரும்பிச் சென்றிருந்தபோது, தன் உழை - அவன் பால், ஏனைமாந்தர் - ஏனை நகர மக்கள் சென்று, இறைஞ்சுபு கூறினார் - வணங்கி நின்று பின் வருமாறு கூறலாயினர் எ-று. மரம் செறிந்து குளிர்ந்த நிழல் பரந்து உலாவுவார்க்குத் தட்பம் பயந்து மாவும் புள்ளும் இனிய காட்சியும் இசையும் வழங்கி இன்புறுத் தலின். “கான் உலாவியும்” என்றும், தங்குதற்குரிய தூமணலும் பசும் புல்லும் அமைந்து நறுமலரால் மணம் கமழ்ந்து அமர்வார்க்கு இன்பம் நல்குதலின், “காவுடன் அடுத்தும்” என்றும் கூறினார். எண்ணும்மை பிரித்துக்கூட்டப்பட்டது. கானும் காவும் கூறவே, ஏனை யாறும் குளமும் படிந்து நீர்விளையாட் டயர்தலும் கொள்க. இனி, வேனிலாடல் என்பதை வேனிலும் ஆடலுமாகப் பிரித்து வேனில் விழவும் நீர் விளையாடலுமாகக் கொள்ளுலுமாம். யானைய, - குறிப்புப் பெயரெச்சம். சண்டமாரிக்கு வழிபாடாரற்ற வேண்டுமெனல் 15. என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச் சென்று தேவி சிறப்பது செய்துமஃ தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா† நன்ற லாதன நங்களை வந்துறும். உரை :- என்றும் - ஆண்டு தோறும், இப்பருவத்தினோடு - இவ்வேனிற் பருவத்து வேனிற்காலத்தும், ஐப்பசி - ஐப்பசித்திங் களிலும், சென்று - போய், தேவி சிறப்பது செய்தும் - காளி தேவிக்குச் சிறப்புச்செய்து வருவேம், அஃது ஒன்றும் ஓரலமாயினம் - இப்போது வேனில் விழா வயர்கின்றோமே யன்றித் தேவிக்குச் சிறப்புச் செய்வதாகிய அஃது ஒன்றுமட்டில் நினையேமாயினேம், ஒன்றலா - (அதனால்) ஒன்றல்லாத பல, நன்றலாதன - தீங்குகள், நங்களை வந்துறும் - நம்மை வந்தடைந்து வருத்தும் என்று அஞ்சு கின்றேம் எ-று. ஒடு - எண்ணொடு, ஐப்பசி கார்ப்பருவத்ததாகலின் அக்காலத்தே புதுநீர் விழவயர்த லுண்மையின், வேனில் விழாவும் புதுநீர் விழாவும் நகரமாந்தர் கொண்டாடுமிடத்துத் தேவிக்குச் சிறப்புச் செய்வர் என்பது எய்துதலின், “செய்தும்” என்கின்றனர். ஐப்பசித் திங்களில் இவ்விழா நிகழும் காலத்தை, பிறாண்டு, “ஐப்பசி மதிய முன்னர் அட்டமி பக்கந் தன்னில், மைப்படலின்றி நின்ற மங்கலக்கிழமை தன்னில், கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியின்காளை, மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பினளுவக்கு மென்றாள்”1 என்று கூறுதல் காண்க. வேனில் விழாவிற் சென்று இது கூறுதலின், அஃது என்பது தேவிக்குரிய சிறப்பாயிற்று. ஒன்றலா என்பது தீமையின் பல்வேறு வகைமை குறித்து நின்றது. அஞ்சுகின்றேம் என்பது கூற்றெச்சம். வழிபாடு தவறின் தீங்குண்டாமென நகரவர் கூறல் 16. நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும் ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் காவல் மன்ன! கடிதெழு கென்றனர். உரை:- காவல் மன்ன - எங்களைக் காத்தலில் வல்லுநனான அரசே, தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் - தேவியானவள் மனம் திரிந்து வெகுளுவாளாயின், நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும் - துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டு பண்ணுவாள், ஆவி கொள்ளும் அலாதனவும் செய்யும் - (நோய் பலவற்றால் நம்மை மெலிவித்தலே யன்றி) உயிரைக்கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், கடிது எழுக - (ஆதலால்) விரைய எழு வாயாக, என்றனர் - என்று வேண்டினர் எ-று. மன்ன, சீறுமேல், ஆக்கிடும், செய்யும்; அதனால் எழுக என்றனர் நகரமாந்தர் என இயையும். தேவி சினத்தால் நோயும் சாக்காடும் எய்தும் என்பார், “நோவு செய்திடு நோய்பல ஆக்கிடும், ஆவிகொள்ளு மலாதனவும் செயும் ” என்றார். நோவு செய்திடும், ஆவிகொள்ளும் என்பன முறையே நோயையும், அலாதனவற்றையும் விசேடித்து நிற்கின்றன. நோவு - வருத்தம். அலாதன - மழையின்மை, பெருங் காற்று, இடி, தீ முதலியவற்றால் உண்டாவன. உமை, எச்சவும் மை,சிந்தை திரிதலாவது, - அருள் இலராதல். நாடு காக்குந் தொழிலில் எத்துணை வலியனாயினும் அவள் செய்வனவற்றைத் தடுக்கமுடியா தென்றற்கு. “காவல் மன்ன” என்றார். அவர் கூறுவனவற்றைக்கேட்கும் அரசன் உள்ளத்தில் அச்சம் பிறத்தலின், “கடிதெழுக” என அவர்தாமே அரசற்குக் கூறலாயினர். மாரிதத்தன் தேவிக்குச் சிறப்புச் செய்யப்போதல் 17. என்று கூறலும் ஏதமி தென்றிலன் சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் நன்றி தென்றனன் நன்னக ரப்புறத் தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன். உரை:- என்று கூறலும் - என்று நகரமாந்தர் கூறியதும், நல் அறத்திற் சென்று தெளிவின்மையால் - அருளறமாகிய நன்னெறிக் கண் சென்று அறிவு தெளியாதவனாதலால், இது ஏதம் என்றிலன் - இச்செயல் தீது என்று கூறிற்றிலன், இது நன்று என்றனன் - இது நல்லதே என்று நகரமாந்தர்க்குச் சொல்லி, நல் நகரப்புறம் தென்சிசைக் கண் - நல்ல நகரத்தின் புறத்தே தெற்கின்கண்ணே யுள்ள தேவி கோயிலுக்கு சிறப்பொடு சென்றனன் - தனக்குரிய சிறப்புடன் சென்றான் எ-று. கூறலும்,- வினையெச்சம் விரைவுப்பொருட்டு; அக்கூற்று செவியிற் புகுதலும் அறவுணர்வுடையார் அஞ்சித் தம் செவியிற் பொத்திக் கொள்ளு வாராக, இவன் அவ்வாறன்றிச் செவிநிரம்பக் கேட்டு, மனத்திற்கொண்டு, நன்றென்று தெளிந்து வாயாலும் கூறுகின் றானாதலின், “ஏதம் இது என்றிலன், சென்று நல்லறத்தில் தெளிவின் மையால்” என்றும், “நன்றிது என்றனன்” என்றும் கூறினார். இது என ஒருமுறைக்கு இருமுறை ஆசிரியர் கூறியது, அச்சிறப்பின் கண் தமது அருவருப்புத்தோன்ற. சென்றென்னும் வினையெச்சம், தெளிவென்னும் வினைப்பெயர்க்கண் வினை கொண்டது. நல்லறத்திற் சேறலாவது, அருளறம் உணர்த்தும் நூல்களைத் துறைபோகக் கற்றுத் தெளிதல்; தெளிவுடையார்க் கன்றிக் கற்கும் நூற்பொருளும் செயல் வகையிற் பயன்படா தாகலின், “தெளிவின்மையால்” என்றார். சண்டமாரி யென்னும் தேவி கோயில் நகர்க்குத் தெற்கில் புறத்தே இருக்கிற தென்றற்கு, “நகரப்புறத்தென்றிசைக் கண் சென்றனன்” என்றாராயிற்று. ஏனைமாந்தரினும் தான் சிறப்பு வேறுடையனாதல் வேண்டு மென்பது மாரிதத்தனுடைய உட் கோளாதலின், அவன் செலவை, “சிறப்பொடு சென்றனன்” என விதந்தோதினார்; உயிர்ப்பலி கொடுக்கும் காலத்தில், ஏனை மாந்தரைப்போலாது தான் வேறு சிறப்புடைய பலியே கொடுக்கக் கருதுவதொன்றே (21) இவன் மனப்பான்மை இஃதெனத் தோற்று வித்து நிற்கிறது. சண்டமாரியின் இயல்பு கூறல் 18. சண்ட கோபி தகவிலள்* தத்துவம் கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத் தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை சண்ட மாரி தனதிட மெய்தினான். உரை:- சண்டகோபி - மிகுந்த கோபமுடையவளும், தகவிலள் - நடுவு நிலைமையில்லாதவளும், தத்துவம் கொண்ட கேள்வியும் - மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும், கூர் அறிவும் - நுண்ணிய நூல்களைக்கற்ற கல்வியறிவும், இலா - இல்லாத, தொண்டர் தொழும் துருத் தேவதை - கீழ்மக்கள் மேற்கொண்டு வழிபடும் கொடிய தேவதையாவாளும், சண்டமாரி தனது - சண்டமாரி என்று பெயர் கூறப்படுபவளுமாகிய தேவியினுடைய, இடம் - கோயில் எல்லையை, எய்தினான் - (சிறப்பொடுசென்ற மாரிதத்தன்) அடைந் தான் எ-று. உயிர்ப்பலி கொடாவிடின் “சிந்தை சிதைந்து சீறு” தலின், “சண்டகோபி” என்றும் ஓருயிரைத்தின்று பிறிதோருயிர்க்கு நலம் செய்தலின், “தகவிலள்” என்றும், கீழ்மக்களால் ஊனும் உயிரும் படைக்கப்படுதலின், “துருத்தேவதை” யென்றும் பழித்தார். தகவு, நடுவு நிமை; “தக்கார் தகவிலர் என்பது1” என்பதன் உரைகாண்க. தத்துவம், மெய்ம்மை. “கற்றலின் கேட்டலே நன்று 2” என்பவாகலின், கேள்வியை முற்கூறினார். கல்வி கேள்வியிலாத்தொண்டர் எனவே, பிறர்க்குத் தொண்டுபட்டுக் குற்றேவல் செய்தொழுகும் கீழ்மக்களையே ஈண்டுத் “தொண்டர்” என்றாராயிற்று. துருத்தேவதை, வடசொற் சிதைவு. இடம், கோயில் எல்லை. வேந்தன் தேவியை வணங்குதல் 19. பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் தேவி மாடம் அடைந்து செறிகழல் மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன் தேவி யெம்மிடர் சிந்துக என்றரோ. உரை:- பாவமூர்த்தி படிவம் இருந்த - பாவத்தின் வடிவமாகிய சண்டமாரியின் உருவச்சிலை இருந்த, அத்தேவிமாடம் அடைந்து - அவள் கோயிலை யடைந்து, செறிகழல் மாவலோன் - செறிந்த கழலையணிந்த குதிரை செலுத்துவதில் வல்லவனாகிய மாரிதத்தன், வலம் கொண்டு - வலம் வந்து, தேவி எம் இடர் சிந்துக என்று - தேவியே எமது இடர்களைக் களைவாய் என்று சொல்லித் துதித்து, வணங்கினான் - வணங்கி நின்றான் எ-று. தேவி, இரண்டனுள் ஒன்று சுட்டுமாத்திரையாயும், மற்றொன்று விளியாயும் நின்றன. மாவலோன் மாடம் அடைந்து, வலம்கொண்டு, சிந்துக என்று வணங்கினான் என இயையும், மாடம், திருக்கோயில். மாவலோன் என்றதனால், தேவி கோயிற்கு அரசன் குதிரைமேல் வந்தான்போலும். பிறாண்டும் (307) இவ்வாறே உரைத்துக்கொள்க. தேவிக்குப் பலியீடு குறித்து வந்துள்ள உயிர்த்திரள் 20. மன்னன் ஆணையின் மாமயில் வாரணம் துன்னு சூகரம் ஆடெரு மைத்தொகை இன்ன சாதி விலங்கி லிரட்டைகள் பின்னி வந்து பிறங்கின கண்டனன். உரை:- மன்னன் - அரசனான மாரிதத்தன், ஆணையின் - தான் இட்ட கட்டளைப்படி, மாமயில் தொகை-அழகிய மயிற் கூட்டமும், வாரணம் தொகை - கோழிகளின் கூட்டமும், துன்ன சூகரத்தொகை - நெருங்கிய பன்றிகளின் திரளும், ஆடு எருமைத் தொகை - ஆடு எருமை முதலியவற்றின் திரளும் என்ற, இன்னசாதி விலங்கில் - இந்த இனத்து விலங்குகளில், இரட்டைகள் பின்னி வந்து பிறங்கின - இரண்டிரண்டாகப் பிணிக்கப்பட்டுவந்து மிகுந்து நின்றவற்றை, கண்டனன் - கண்ணாரக் கண்டான் எ-று. தொகை யென்பதனை மயில் முதலிய ஏனையவற்றிற்கும் கூட்டுக. புள், விலங்கு என்ற இவற்றை ஆணும் பெண்ணுமாக இரண்டிரண்டாய்க் கொணர்ந்து நிறுத்தினமை தோன்ற “இரட்டை கள்” என்றார்; பின்னர் ஆணும் பெண்ணுமாகிய மக்களிரட்டையைக் கொணர்தலின், இவ் விரட்டை ஆணும் பெண்ணுமாதல் பெற்றாம். இவற்றைத் தனித்தனியின்றி இரட்டையாய்ப் பிணித்து வந்தனரென் றற்கு, “பின்னிவந்து” என்றார். பிறங்குதல் மிக்குத்தோன்றுதல், “கண்டனன்” என்றார், அவன் கருத்தில் அப்பெருந்தொகையான உயிர்களைக் கண்டு இவையனைத்தும் வறிதே கொலையுண்கின்றனவே என்ற அருட்கருத்துச் சிறிதும் பிறந்திலது என்பதை வற்புறுத்தற்கு. மாரிதத்தன், தான் நரபலியிடுவது தக்கதெனக் கருதுதல் 21. யானிவ் வாளினின் மக்களி ரட்டையை ஈன மில்பலி யாக இயற்றினால் ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா.* உரை:- இவ்வாளினின் - இந்த வாட்படையால், மக்கள் இரட்டையை - ஆணும் பெண்ணுமாகிய மக்களுள் இரட்டையரை, ஈனமில் பலியாக - தாழ்வில்லாத பலியாக, யான் இயற்றினால் - யான் வெட்டித் தருவேனாயின், ஏனை மானுயர் தாம் - ஏனைய மாந்த ரெல்லாரும், இவ்விலங்கினில் ஆனபூசனை - இவ்விலங்கு களைக் கொன்று செய்வதாகிய பலியீட்டினை, ஆற்றுதல் ஆறு எனா - செய்தல் முறையாம் என்று கருதி எ-று. தலைவனாகிய தான் தேவிக்குப் பலிகொடுத்த பின்பே, ஏனை மக்கள் தாம் கொணர்ந்த உயிர்களைப் பலியிடுதல் முறையென்று வரிசை வகுக்கின்றான் என்பார், இவ்வாறு கூறினார். தானும் விலங் கிரட்டையைப் பலிதரின், தன் தலைமைக்கு அமையாது என்ற கருத்தால், “மக்களிரட்டையை ஈனமில் பலியாக இயற்றினால்” என்றும் கூறியன, விலங்கு முதலியவற்றைப் பலியிடல் தனக்குத் தாழ்வு என்றும், உயிர்களைக்கொன்று பலியிடுவதுதான் தேவிக்குச் செய்தற் குரிய வழிபாடு என்பது அவன் கருத்தென்றும் உணர்த்தி நிற்கின்றன. இனி, “ஈனமில்பலி” என்பதனை, “ஈனமில் மக்களிரட் டையைப் பலியாக” எனப் பிரித்துக்கூட்டி, “உடற்குற்றம் சிறிது மில்லாத மக்களுள் இரட்டையரை” என்று கோடலும் அரசன் கருத்தாகும். அதனை வருஞ்செய்யுளுட் காண்க. நரபலிக்கு இரட்டைப் பிள்ளைகளை நாடிக்கொணர்க என வேந்தன் சண்டகருமனைப் பணித்தல் 22. வாட லொன்றிலர்* மக்களி ரட்டையர் ஈடி லாத இயல்பின ரிவ்வழி ஏட சண்ட கரும!தந் தீகென நாட ஓடினன் நன்னகர் தன்னுளே. உரை:- ஏட சண்ட கரும - ஏ, சண்ட கருமனே, வாடல் ஒன்று இலர் - மேனியில் குறை சிறிதும் இல்லாதவரும், மக்கள் இரட்டையர் - மக்களுள் இரட்டையரும், ஈடிலாத இயல்பினர் - நிகரில்லாத குணஞ்செயல்களை யுடையவரும் ஆகிய இருவரை, இவ்வழி தந்தீக என - இவ்விடத்தே சென்று தேடிக்கொணர்க என்று ஏவ, நல்நகர் தன்னுள் - அந்த நல்ல நகருக்குள்ளே, நாட - தேடிக் கொணர்வதற்காக, ஓடினன் - விரையத் திரும்பி வருவது குறித்து அச் சண்டகருமன் ஓடினான் எ-று. தான் “ஈனமில் பலி”யிட விரும்பினானாதலின், அவ்வீனமின்மை விளக்குவான், ஆண் பெண் என்ற இருபாலினும் முறையே உறுப்புக் குறைவின்மையும், இரட்டைப் பிறப்புடைமையும் ஈடிலாத இயல் புடைமையும் எடுத்தோதினான். ஈடின்மை, உருவாலும் குணத்தாலும் செயலாலும் ஒப்பில்லாமை. தந்தீக - வினைத்திரிசொல். நன்னக ரென்றார், ஆங்குக் காணப்படும் இரட்டையரால் இப்பலியாகிய தீவினை கடிந்து அரசன் அருளும் அறமும் கொண்டு ஓங்குகின்றானா தலின், அரசன் குறித்த இலக்கணமுடைய இரட்டையர் கிடைப்பதன் அருமை நினைந்து, “நாட” என்றும், “ஏட” என்றும் அது நினையாது விளித்த அரசன், தாழ்ப்பின் கண்ணோடாது ஒறுப்ப னென்ற அச்ச முடைமை தோன்ற, “ஒடின” னென்றும் கூறினார். சுதத்த முனிவர் உபாசகர் குழுவுடன் வருதல் 23. ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந் தூயமா தவத்தின் மிக்க உபாசகர் தொகையுஞ் சூழச் சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் மாயமில் குணக்குன் றன்ன* மாதவர்க் கிறைவன் வந்தான். உரை:- ஆயிடை - அந்நகர்க்கு அப்போது, சுதத்தன் - சுதத்தன் என்னும் முனிவன், ஐஞ்ஞூற்றுவர் அருந்தவர்கள் தொகை யோடு - அரிய தவத்தை யுடையவர் ஐந்நூறு பேர்களும், தூய மாதவத்தின் மிக்க - தூய்தான பெரிய தவத்தால் மேம்பட்ட, உபாசகர் தொகையும் - உபாசகர் கூட்டமும், சூழ - சூழ்ந்துவர, சேயிடைச் சென்று - சேய்மைக் கண் சென்று, ஓர் தீர்த்த வந்தனை செய்ய - ஆங்குள்ள ஒரு சைத்தியத் தில் எழுந்தருளிய அருக பரமேட்டியைக் கண்டு வழிபடுவதற்காக, செல்வோன் - செல்வானாய், மாயம் இல் - குற்றமில்லாத, குணக் குன்றன்ன மாதவர்க்கு - குணங்களையும் மலைபோன்ற பெரிய தவத்தையுமுடைய முனிவர்க்கு, இறைவன் - இறைவனாகிய அவன், வந்தான் - வந்து கொண்டிருந்தான் எ-று. தவமாவது, “வென்றவர் படிமம் தாங்கி, சித்தமெய் மொழிகள் மூன்றில் இரு தொடர்ப் பாட்டி னீங்கி, பத்தறம் பன்னி ரண்டாம் தவத்தொடு பயின்று தன்கண், உத்தமக்காட்சி ஞானவொழுக்கத்தை யழுத்தல்”1 என்று மேருமந்தர புராணம் கூறுவது காண்க. இத்தவத்தின் அருமையும் உடையோரது பெருமையும் தோன்ற, “அருந்தவர்” என்றும், “மாயமில் குணக்குன்றன்ன மாதவர்” என்றும் கூறினார். இவர்தாம் மாதவர், ஓசனர், மோனதரர், உக்கதவர், தித்ததவர், தத்ததவர், கோரதவர் எனப் பலராவர்; இவர் இயல்பினை மேருமந்தர புராணத்துட் காண்க. உபாசகராவார், உபவாசிகள். “அட்டமி பருவங்களில் தமது சக்திக்கு அனுகூலமாகத் தரும கதாசிரவணமும் பஞ்ச நமஸ்கார ரூபாதிகளோடு கூடிக் கிருஷியாதிகளை நிவர்த்தித்து உபவாசித்தலும் ஏகபுத்தி பண்ணு தலுமாகிய”2 இவற்றையுடையவர் உபாசகர். வாமனமுனிவரும் “பக்க இவர்களை, முதல் நோன்புடைய பரமதவர்”3 என்று உரைப்பர். தொகை யென்பதை அருந்தவர்க்கும் கூட்டுக. ஓடு, ஒருவினை யொடு. உபாசகரும் “பரமதவ”ராதலின், “தூயமா தவத்தின் மிக்க உபாசகர்” எனச் சிறப் பித்தார். அருக பரமேட்டியைத் “தீர்த்தன்” என்பது வழக்காதலின், அவனை வழி படுஞ் செய்கை, “தீர்த்தவந்தனை” எனப்பட்டது. “செய்தவப் பாவ மெல்லாம் தீர்த்திடும் தீர்த்தன்”4 எனத் தேவரும், “தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ”5 எனச் சமயதிவாகரரும் வழங்குதல் காண்க. மாயமில் குணமெனவும், குன்றன்னமாதவமெனவும் வகுத்துக்கொள்க. “மலையனைய நிலையுடைய மாதவர்களொருபால்”6 என வருதல் காண்க. “குணமென்னும் குன்றேறி நின்றார்”7 என்றாற்போலக் கொள்ளினுமாம். இறைவன், சுட்டுமாத்திரை யாய் நின்றது. வந்து நகர்ப்புறத்தே ஒரு பொழிலுள் தங்குகின்றானென வருஞ்செய்யுளுட் கூறுதலின், வந்தான் என்பதற்கு வந்துகொண்டிருந்தான் எனல் வேண்டிற்று. சுதத்தன் அனசனத் தவமமர்தல் 24. வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச் சிந்தையால் நெறிக்கண் தீமை தீர்த்திடும் நியம முற்றி அந்திலா சனங்கொண் டண்ண லனசனத் தவம மர்ந்தான் முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடும் மாதோ. உரை:- முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் வந்து - சுதத்தன் மேலேகூறிய அருந்தவரும் உபாசகரும் உடன்வர வந்து, மாநகர்ப்புறத்து ஓர் வளமலர் பொழிலுள் - அழகிய இராசபுரத்துக்கு வெளியேயுள்ள வளவிய மலர் நிறைந்த ஒரு சோலையில், விட்டு - தங்கி, நெறிக்கண் தீமைதீர்த்திடும் நியமம் - தான்வந்த நெறியின்கண் தன்னையறியாது நிகழ்ந்த பாவத்தைப் போக்குதற்குரிய நியமத்தை, சிந்தையால் முற்றி - மனத்தால் மந்திர தியானத்தால் போக்கிக் கொண்டு, ஆசனம் கொண்டு - ஓரிடத்தே இருந்து, அன சனத்தவம் அமர்ந்தான் - தவரும் உபாசகரும் உள்ளிட்ட அனைவருடன் உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்தான் எ-று. சுற்றம் முழுவதினோடும் வந்து, விட்டு, நியமமுற்றித் தவம் அமர்ந்தான் என இயைக்க. நெறியின் கண் தாம் வருங்கால் உடலாலும், சொல்லாலும், உள்ளத்தாலும் தம்மையறியாது நிகழ்ந்த குற்றத்தைப் போக்குதற் காகப் பஞ்சநமஸ்காரமந்திரத்தையுரைப்பது அப்பியந்தர தவம் எனப் படுகிறது. “செய்கை சொல் மனங்களால், மரிய மாசினைச் கெடுக்கும் அத்திவாரமாகிய பெரியவர் மனங்கொளப்........ பெருந்தவம்”1 என்று மேரு மந்தரபுராணம் கூறுதல் காண்க. அனசனத்தவம்,* உண்ணா நோன்பு; இதன் பயனை, “வினைகளுக் குதிர்ச்சி வேட்கை நீக்கி மெய் வசம்வரல், புனைவரும் பொறிச் செறிப்புயிர்க்கழிவு போற்றுதல், நினைவின் தொருக்கமும் நெறி விளக்கமும் செயும்”2 என்று அப்புராணம் கூறும். விடுதல், தங்குதல், கழுவாய் முறையாதலின் இத்தவத்தை “நியமம்” என்றார். “சிந்தையால் ” என்றதனால், ஏனைச் சொல்லாலும் செயலாலுமென்பது கொள்ளப்படும். அபயருசி அபயமதி யென்னும் இரட்டையர் உபாசகர் குழுவில் இருத்தல் 25. உளங்கொள *மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார் அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை† இளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்‡ துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார். உரை:- உளங்கொள மலிந்த கொள்கை - மனதிலே நிரம்பக் கொண்ட விரத வொழுக்கங்களையுடைய, உபாசகர் குழுவினுள்ளார் - உபாசகர்கூட்டத்தில் உள்ளவரும். அளந்தறிவரிய கேள்வி - அளந்து காண முடியாத கேள்வியையுடையவருமான, அபயமுன் உருசி யென்பானும் - அபயம் என்ற பெயரின் முன் ருசியென்பது. சேர்ந்த அபயருசி என்ற பெயர் சொல்லப்படுபவனும், தங்கை - அவன் தங்கையாகிய, இளம் பிறை யனைய நீராள் - இளம் பிறையை யொத்த இயல்பினையுடைய, அபயமாமதி யென்பாளும் - அபயமதி எனப்படு பவளும், துளங்கிய மெய்யர் - தளர்ந்த மேனியராய், உள்ள துளங்கலர் - தளராத உள்ளமுடையராய், தொழுது நின்றார் - சுதத்த முனிகளை வணங்கி நின்றார்கள் எ-று. புரோடோப வாசிகட் குரிய விரதமும் ஞானமும் நிரம்பி யிருத்தல் பற்றி, “உளங்கொள மலிந்த கொள்கை” என்றார். உளம் கொளமலிதலாவது ஐயந்திரிபற வுணர்ந்து செய்கையிற் கைவரப் பெறுதல். அளக்கலாகாத கலைத்துறை பலவும் கற்று நிரம்பியிருப்பது பற்றி, அபயருசியை “அளந்தறிவரிய கேள்வி” யென்றார்; இனி, இதற்கு அளவைகளைக் கொண்டு வாதம் புரிந்து வெல்லுதற்கரிய தருக்கநெறி முழுதும் நிரம்பக் கற்றும் கேட்டுஞ் சிறந்த அறிவு என்றுமாம். கலை நிரம்பியிருப்பது பற்றி அபயருசிக்குப் பிறாண்டும் முழுமதியை, உவமிப்பர். அபயமதி அத்துணையளவு அறிவு நிரம் பாமையின், “இளம்பிறையனைய நீராள்” என்றார். பசியால் மேனி வாடினாராயினும், “உளங்கொள மலிந்த கொள்கை” யில் வாட்ட முறாமையின், “துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர்” என்றார். அபய மாமதி என்புழி, மா, அசை; “அநங்கமாவீணை” என்றாற் போல. இரட்டையர் சரிதை போதல் 26. அம்முனி யவர்கள் தம்மை அருளிய மனத்த னாகி* வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் எம்முடன் உண்டி மாற்றா தின்றுநீர் சரிதை போகி நம்மிடை வருக என்ன நற்றவர்த் தொழுது சென்றார். உரை:- அம்முனி - அச்சுதத்த முனிவன், அவர்கள் தம்மை - அபயருசி அபயமதியாகிய இருவரையும் பார்த்து, அருளிய மனத் தனாகி - அருள்மேவிய உள்ளத்தனாய், வம்மின் வருக, நீர் பசியின் வாடி வருந்திய மெய்யரானீர் - நீவிர்பசியினால் வாடி வதங்கிய மேனியுடையீ ராயினீர், இன்று - இந்நாளில், எம்முடன் உண்டி மாற்றாது - எம்மோடு கூடி உணவு கொள்ளா தொழிவதை விட்டு, சரிதை போகி - பிச்சையேற்றுண்டு, நிர் நம்மிடை வருக - நீவிர் நம்பால் வருவீராக, என்ன - என்று பணித்தருள, நற்றவர்த் தொழுது சென்றார் - நல்ல தவத்தையுடைய முனிவர் கூட்டத்தை வணங்கி விட்டுச் சென்றனர் எ-று. தொழுது நின்ற இருவர்தம் மேனியும் குறிப்பும் கண்டமாத்திரையே முனிவற்கு அருள் நிறைந்து பொழிவதாயிற்றென்பார், “அருளிய மனத்தனாகி” யென்றார். வம்மின், வருக என்னும் பொருள தாய முகமனுரை. இளையராதலின், அவர் மேனியில் வாட்டமும் மனத்தில் வருத்தமும் முனிவன் கண்ணைக் கவர்ந்தன என அறிக. உணவு மறுத்தலை உணவு மாற்றுதலென்றும், உண்டலை, உணவு மாற்றாமை யென்றும் கூறுபவாதலின், அவ்வியல்பு வழுவாது “உண்டி மாற்றாது” என்றார். தனக்குச் சீலமன்மையின், உண்டுவருக என்றிலன். சரிதை, செல்லுதல்; வடசொற் சிதைவு. சரிதை போதலாவது, “விசுத்தராகிய ஜைன ஜனங்களது கிருகம் புக்குப் பிக்ஷாவிருத்தி பண்ணிப், பின்பு ஏகக்கிருகத்துள் புக்கிருந்து பாணி பாத்ரத்தா” * லுண்டல். விடைபெற்றுச் செல்வார் தலைமை வீற்றிருக்கும் சுதத்தனுடன், ஏனை முனிபுங்க வரையும் தொழுது விடை பெற்றமை தோன்ற, “நற்றவர்த் தொழுது சென்றார்” என்றார். நற்றவற்றொழுது - என்பது பாடமாயின், நற்றவனாகிய சுதத்தனைத் தொழுது என்று உரைக்க. அப்போது அது சுட்டுப் பொருட்டாமாறு காண்க. முனிவன் இவ்விருவரையும் சரிதை போகுமாறு ஏவுதற்கு ஏது, மாரிதத்தனது நல்வினையென அறிக. இரட்டையர் நகர்க்குட் சேரல் 27. வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய் வெள்ளிய துடையொன் றாகி வென்றவ ருருவ மேலார் கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருவப் புக்கார். உரை:- வள்ளிய மலரும் சாந்தும் மணிபுனைகலனும் இன்றாய் - வளவிய பூமாலையும் சந்தனமும் மணி முதலிய வற்றாலாகிய அணி கலன்களும் இன்றி, வெள்ளியது உடை ஒன்றாகி - வெள்ளாடை யொன்றை யுடுத்துக்கொண்டு, வென்றவர் உருவம் ஏலார் - புலன்களை வென்ற முனிவருடைய கோலத்தை ஏலாராயினும், கொள் இயல் அமைந்த - காண்பார் தகும் எனக் கொள்ளத்தகுந்த இயல்பு அமைந்த, கோலக் குல்லகவேடம் கொண்ட - அழகிய இளமைப் பருவத்துக்குரிய கோலம் கொண்ட, வள்ளலும் மடந்தை தானும் - வள்ளலாகிய அபயருசியும் அபயமதியும், வளநகர் மருள - வளவிய நகரத்தவர் கண்டு வியப்பெய்துமாறு, புக்கார் அந்நகர்க்குள்ளே சென்றார்கள் எ-று. இன்றாய், ஒன்றாகி, அமைந்த குல்லக வேடம் என இயைக்க, குல்லகம், இளமை; வடசொற் சிதைவு. கோலக் குல்லகம் என்கின்றா ராதலின் அதற்கேற்ப, மலரும் சாந்தும் புனைகலனும் விதந்து விலக்கினார். வென்றவர் உருவத்துக்கு வெள்ளாடையும் வேண்டா மையின், அதனை யுடையராய இவர்களை, “வென்றவருருவமேலார்” என்றார். கொள்ளியலமைந்த என்பதற்கு, கோலம் கோடற் கமைந்த என்றலு மொன்று. மேனியின் தோற்றமும் வனப்பும் இளமை யுடைமையினை மெய்ப்படுத்திக் காட்ட, உள்ளத்தே நிறைந்த முதுக்குறைவு விளங்கினமையின், அவர் கொண்டிருந்த தோற்றத்தைக் “குல்லக வேடம்” என்றார். தன்னைக் கொல்லலுற்ற மாரிதத்தனுக்கு உறுதி பயப்பன நல்குதலின், அபயருசியை ஈண்டு “வள்ளல்” என்றார். மடந்தை - பருவமன்று; பெண்பாற் பெயர். இருவரும் தெருவில் உண்டியேற்றல் 28. வில்லின தெல்லை கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி நல்லருள் புரிந்து யிர்க்கண் ணகைமுத லாய நாணி இல்லவர் எதிர்கொண் டீயின் எதிர்கொளுண் டியரு மாகி* நல்லற அமிர்த முண்டார் நடந்தனர் வீதி யூடே. உரை:- வில்லினது எல்லை கண்ணால் நோக்கி - செல்லும் போது எதிரே ஒரு விற்கிடைத் தூரம் கண்களால் கூர்ந்து நோக்கி, மெல்லடிகள் பாவி - அடிகளைமெல்ல வைத்து, உயிர்க்கண் நல்லருள் புரிந்து - ஒரறி வுயிர் முதல் அனைத்துயிர்க்கும் நல்ல அருளைச் செய்து, நகை முதலாய நாணி - நகை முதலிய குற்றம் தங்கண் நிகழாவாறு நீக்கி, இல்லவர் எதிர்கொண்டு ஈயின் - மனையவர் தம்முடைய வருகைகண்டு எதிர்கொண்டு மனமுவந்து ஈவாராயின், எதிர்கொள் உண்டியருமாகி - எதிரேற்றுண்ணும் உணவினையுடையராய், நல்லற அமிர்தம் உண்டார் - நல்லறமாகிய அமிர்தத்தையுண்ட இருவரும், வீதியூடு நடந்தனர் - தெருவழியே செல்வாராயினர் எ-று. வில்லினது எல்லை. நான்கு முழதூரம். நெடிது நோக்கின் இடையிலுள்ள சிற்றுயிர்கள் கட்புலனாகாமை குறித்து, ஒருவிற்கிடையே நோக்குதல் கூறினார். அடிவைத்தலாகிய தொழிலது தன்மையினை அடிமேலேற்றி “மெல்லடிகள் பாவி” என்றார்; அப்பண்பின் பயன் அத்தொழிலால் உறுதலின். பாவுதல், அடியிடுதல். நல்லருள் என்றார், ஓரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமையின். இளமையின் பயனாதலின், நகையினை விதந்தோதினார்; “எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப”1 என ஆசிரியர் ஒதுதல் காண்க. நகை, குற்றமாதலின், அது நிகழுங்கால் உயர்ந்தோர் செய்வது இதுவாகலின் “நாணி” யென்றார். மனமுவந்தீயின் என்பார், “எதிர்கொண்டீயின்” என்றார்; உவப்பில்வழி எதிர்கோடல் இன்றாகலின். அதனை விரைந் தேற்றனர் என்றற்கு, ‘எதிர்கொள் உண்டிய’ ரென்றார். அறத்தை அமிர்தென்றல் சைன நூலில் பயில வழங்கும் வழக்கு; “ஊட்டரும் அறவமிர் துலக முண்டதே”2 எனத் திருத்தக்க தேவரும், “மாண்புடை யடிகள தறவமிர் துண்ட வாற்றலான்”3 எனத் தோலாமொழித் தேவரும், “அறவியான்றானும் அறவமிர்தீந்தான்”4 என நீலகேசி யாசிரியரும் பிறரும் கூறுப. மக்களுள் இரட்டையரை நாடுவான் போந்த சண்டகருமன் இரட்டையாகிய இவ்விருவரையும் காண்டல் 29. அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க் கண்டனன் கண்ட * சண்ட கருமனும் மனங்க லங்காப் புண்டரீ கத்தின் கொம்பும் பொருவிலா மதனும் போன்று கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான். உரை:- கண்டால் - தம்மைக்காணின், அண்டலர் எனினும் - பகைவரே யெனினும், அன்பு வைத்து - தம்மனத்துட் கொண்ட பகைமை நீங்கி அன்புகொண்டு,அஞ்சும் - தீங்கு செய்தற்கு அஞ்சத் தக்க, நீரார் கண்டனன் - தன்மை யினையுடைய இருவரையும் சண்டகருமன் பார்த்தான், கண்ட சண்டகருமன் - பார்த்த அவன், மனம் கலங்கா - மனம் கலங்கி, புண்டரீகத்தின் கொம்பும் - தாமரைப்பூவிலிருக்கும் திருமகளையும், பொருவிலா மதனும் - ஒப்பில்லாத மன்மதனையும், போன்று - போல, இளம்பருவம் - இளமைப்பருவம், கொண்டு - பெண்ணுமாணுமாகிய இரண்டுருக் கொண்டு, இவண் - இந்நகருக்கு இப்போழ்தில், குழைந்து வந்தது - வாடிய மேனியுடன் வந்தது, என் கொல் - என்ன காரணமோ, என்றான் - என்று தனக்குள்ளே நினைத்தான் எ-று. இளமைச்செவ்வி யுடையோரைக் காணின் எத்துணைப் பகைமை யுடையோர்க்கும் நெஞ்சில் ஈரம் பிறக்குமாதலின், “அண்டலரெனினும் கண்டால் அன்புவைத்து” என்றார்; “செறுநரும் விழையுஞ்செயிர் தீர் காட்சிச் சிறுவர்”1 எனப் பண்டைச்சான்றோரும் கூறுதல் காண்க. அன்புவைப்பதன் பயன், அன்புற்ற பொருட்கு ஏதம் வருமோஎன அஞ்சும் அச்சம் பயத்தலாகலின், “அஞ்சும் நீரார்” என்றார். அரசன் ஏவலை மேற்கொண்ட உள்ளத்தனாய் வரும் சண்டகருமன் உள்ளத்திலும், அவ்வேவலைத் தம் காட்சியால் மறப்பித்து அன்பாற் குழையப் பண்ணுதலின் “அன்பு வைத்தஞ்சு நீரார்” என்றவர். மேனிவனப்பால் அன்பும், விரதத்தால் அச்சமும் பயப்பிக்கும் நீர்மையுடையார் என்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கண்டமாத்திரையே சண்டகருமன் இவ்விருவருடைய வனப்பாலும் வாட்டத்தாலும் தன்னை மறந்து வியந்துநின்றமை தோன்றக் “கண்டனன் கண்ட சண்ட கருமனும்” என்றார். உம்மை, சிறப்பு. அபயமதியை முன்பும் அபயருசியைப் பின்பும் அவன் கண்டமை விளங்க, “புண்டரீகத்தின் கொம்பும் பொருவிலா மதனும்” என்றார். அருவப்பொருளான இளமைச்செவ்வி உருவப்பொருளாய் ஆணும் பெண்ணுமாய் உருக்கொண்டு வந்ததென்னும் கருத்தினாய், உருக்கொண்டு என்பவன், உருவிலே தோய்ந்து நின்றமையின் கொண்டென்றே யொழிந்தான். இது பிறர்கட்டோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை. இவ்வாறு காண்போர்த் தடுக்கும் காட்சியுடைய இருவரும் பசியால் வாடியிருந்தமையின், அதனைத் தேறாது, “குழைந்திவண் வந்த தென்கொல்” என்று நினைக்கின்றான். சண்டகருமன் இருவரையும் உழையரால் கைப்பற்றிக் கொண்டு போதல் 30. எனமனத் தெண்ணி நெஞ்சத் திகலுடை* மன்ன னேவல் தனைநினைந் தவர்கள் தம்மைத் தன்னுழை யவரின் வவ்விச் சினமலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான் இனையது பட்ட தென்னென் †றிளையரு மெண்ணி னாரே. உரை:- எனமனத்து எண்ணி - சண்டகருமன் இவ்வாறு தன் மனத்தே நினைத்து, நெஞ்சத்து இகல்உடை மன்னன் ஏவல்தனை நினைந்து - நெஞ்சிலே மாறுபாட்டையுடைய வேந்தனது கட்டளை நினைவுவரவெண்ணி, தன் உழையவரின் - தன்னொடுபோந்த வீரர்களைக்கொண்டு, அவர்கள் தம்மை வவ்வி - அவர்களை வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான் - சினம் மிகக்கொண்டுள்ள சண்டமாரியின் கோயிலுள்ள திக்கு நோக்கிச் செல்வானாயினான், இளையரும் - இளையோராகிய அபயருசியும் அபயமதியும், இனையது பட்டது என் என்று எண்ணினார் - இது நிகழ்வது என்னோ வென்று திகைப் பாராயினர் எ-று. “இளம்பருவம் என்கொல் குழைந்திவண்வந்தது” என நினைத்து இரக்கமுற்ற சண்டகருமன், அரசன் ஏவலை நினைந்து இரக்கமிழந்து அச்சம் மிகுந்து, தானே சென்று பற்றுதற்கு எண்ணமின்றி உழைய வரால் பற்றிச்சென்றான் என்பார், “உழையவரின் வவ்வி” என்றும், அவரது மேனியழகும் வாட்டமும் தன்நெஞ்சின் திண்மையைக் குலைக்கு மென்ற கருத்தால் “தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான்” என்றும் கூறினார். அரசன் சினமேயன்றித் தேவியின் சினமும் அவன் நெஞ்சில் நின்று நிலவினமை தோன்ற, “சினமலிதேவி” யென்றார் போலும். நல்விரதம் பூண்டிருப்பினும் இளமைச் செவ்வி குன்றாமையின், “இளையரும்” என்று இரங்கிக் கூறினார். அபயருசி தங்கையான அபயமதி நெஞ்சில் அஞ்சுதலை யறிதல் 31. வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னோ டொன்றி தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல் அன்பினால் ஐயன் தங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில் தன்கையான் முன்கை பற்றித் தானவட் கினைய * சொல்வான். உரை:- மதியம் - முழுத்திங்களானது, ஓர் மின்னோடு ஒன்றி - ஒருமின்னலுடன் கூடி, தன் பரிவேடம் தன்னுள் - தன்னுடைய பரிவட்டத்தின் நடுவே, வருவது போல் - செல்வதுபோல, வன்சொல் வாய் மறவர் சூழ - கடுஞ்சொற்களையே சொல்லும் வீரர் சூழ்ந்துவரச், செல்லும் ஐயன் - மூத்தோனான அபயருசி, தன் தங்கை நெஞ்சில் அஞ்சுதல் - தன் தங்கையாகிய அபயமதி தன் மனத்தே அஞ்சுவதை யுணர்ந்து, அஞ்சி - அவள் கொண்ட அவ்வச்சத்தாற் பிறக்கும் குற்றத்துக்கு அஞ்சி, அன்பினால் - அன்போடு, அவள் முன்கை - அவளுடைய முன்கையை, தன்கையால் பற்றி - தன்னுடைய கையால் பற்றிக்கொண்டு, அவட்குத்தான் இனைய சொல்வான் - அவளுக்கு இவற்றைச் சொல்லுவானாயினான் எ-று. வன்சொல்லை யன்றிப் பிற நன்சொற்களைப் பயிலாதவ ரென்றற்கு “வன்சொல்வாய் மறவர்” என்றார். மறவரெனவே, அவ்வன்சொற் பிறத்தற் கேதுவாகிய நெஞ்சீரமின்மையும் கூறினாராம். கலை நிரம்பியிருத்தல்பற்றி அபயருசிக்கு மதியம் உவமமாயிற்று. மதியம்-முழுத் திங்கள். அஞ்சுதல் தெளிவிலார் செயலாதலாலும், அது வெளிப்படின் மறவர் துன்புறுத்துவராதலாலும், அபயருசி தன் தங்கையின் அச்ச முணர்ந்து அஞ்சினானென்பார் “அஞ்சி” யென்றும், அச்சத்தைப் போக்கும் கருத்தினனாதலின், “தங்கை முன்கைபற்றித் தானவட்கினைய” சொல்வானானான் என வறிக. உடம்பிற்கேயன்றி உயிர்க்கு ஏதமில்லையென அபயமதியை அவன் தேற்றல் 32. நங்கைநீ யஞ்சல் நெஞ்சில் நமக்கிவண் அழிவொன் றில்லை இங்குநம் உடம்பிற் கேதம் எய்துவ திவரின் எய்தின் அங்கதற் கழுங்கல் என்னை யதுநம தன்றென் றன்றோ மங்கையாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்த தென்றான். உரை:- நங்கை - நங்காய், நெஞ்சில் நீ அஞ்சல் - நின் நெஞ்சின் கண் நீ அஞ்சுவதொழிக, இவண் - இப்போது, நமக்கு அழிவு ஒன்றும் இல்லை - நமக்குத் தீங்கு சிறிதும் இல்லை, (எனினும்) இங்கு - இப்பிறப்பின்கண், நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது - நம் உயிர் நிற்றற்கு இடமாகிய உடம்பிற்கு உளதாகும் அழிவு என்றேனும் வரக்கடவ தாகும், இவரின் எய்தின் - அஃது இவரால் எய்துமாயின், அதற்கு - அதன் பொருட்டு, அழுங்கல் என்னை - அஞ்சி வருந்துவது என்னையோ, மங்கை - மங்கையே, அது - அவ்வுடம்பு, நமது அன்று என்று அன்றோ - நம் உயிரே போல் நமக்கே உரியதன்று என்று தெளிந்தன்றோ, யாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்தது - நாம் அவ்வுடம்பை சுதத்த முனிகளையடைந்தபோது அவர் தெளிவிக்கக் கேட்டு மனத்தால் அதன்பால் பற்று வையாது விட்டோம். என்றான் - என்று உரைத்தான் எ-று. நங்கை-மங்கை யென்பன அண்மைவிளி. மங்கை-பருவமன்று; பெண்பாற் பெயர். முதற்கண் அச்சத்தைப் போக்கவேண்டுதலின், “அஞ்சல்” என்றும், அதற்கு ஏதுவாக, “நமக்கு இவண் அழிவொன்றில்லை” என்றும் கூறினான். அழிவெய்துமெனக் கருதி அபயமதி யஞ்சுதலின், அவ்வழிவின் இயல்புணர்த்துவான், அஃது உயிரைப் பற்றாது உடலைப் பற்றி நிற்பது என்பான் “உடம்பிற்கேதம்” என்றும் உடலின் நிலையாமையைச் சுட்டி “எய்துவது” என்றும், அது வருங்கால் யாதானு மொருவாயில் வேண்டுதலின், இம்மறவரை வாயிலாகக் கொள்ளும் என்பான் “இவரினெய்தின்” என்றும் கூறினான். இவரின் எய்தின் என்றதனால், எய்தாமையினை அவட்குத் தெளிவித்தானாம். உடலழிவிற்கு அழுங்குதல் நன்றன்றென்பான், சுதத்த முனிகள்பால் கேட்டுத் தெளிந்த தெளிவினை நினைவுறுத்தி “அது நமதன் றென்றன்றோ அதனை முன்னே மனத்தினில் விடுத்தது” என்றான். அச்சத்தாற்பயன் துன்பமே என்று கூறல் 33. அஞ்சின மெனினும் மெய்யே யடைபவந் தடையு மானால் அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு* மன்றி அஞ்சுதல் துன்பந் தானே யல்லதும் அதனிற் சூழ்ந்த நஞ்சென வினைகள் நம்மை நாடொறு நலியு மென்றான். உரை:- அஞ்சினம் எனினும் - “எய்துவது” எண்ணி அஞ்சினோ மாயினும், அடைப - எய்தக்கடவனவாகிய துன்பம், மெய்யே வந்து அடையும் - ஒழியாது வந்து பற்றும், ஆனால் - ஆதலால், அஞ்சுத லதனின் - அஞ்சுவதால், நமக்க என்னை பயன் - நமக்கு யாதுபயன், அதுவுமன்றி - அதுவேயுமன்றி, அஞ்சுதல் துன்பம் - அச்சமும் துன்பத்தையே பயக்கும், அல்லதும் - அன்றியும், அதனின் சூழ்ந்த வினைகள் - அதன்பால் காரண காரியமாய்ச் சூழ்ந்திருக்கும் வினைகள், நம்மை நாடொறும் நஞ்சென நலியும் - நம்மை நாளும் விடம்போல வருத்தாநிற்கும் எ-று. எய்தக்கடவது குறித்து நாம் கொள்ளும் அச்சம் அதனை ஒருகாலும் தடுக்கும் நலமுடைத்தன்றென்றற்கு, “அஞ்சின மெனினும் மெய்யே அடைபவந்தடையும்” என்றான். எய்தக்கடவது நாம் அஞ்சுவதால் சிறிதும் தன்னியல்பில் திரியாது என்பது “மெய்யே” என்பதால் வற்புறுத்தப்பட்டது. தடுக்கும் நலமின்றாதலே யன்றி வருவதன் இயல்பைத் திரித்தலும் கூடாமையின், அச்சம் சிறிதும் பயனுடைத்தன் றென்பது எய்துதலால், “அஞ்சுத லதனின் என்னை பயன் நமக்கு” என்றான். அது, சாத்தனவன் என்றாற் போலச் சுட்டு மாத்திரையாய் நின்றது. அஞ்சுவது பேதைமை யென்றற்கு, “அஞ்சுதல் துன்பந்தானே” என்றான்; “பேதைமை யென்பதொன்றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்”1 என்று சான்றோரும் கூறுப. ஏகாரம் - தேற்றம். நஞ்சு, தன்னையுண்டானை நினைவு செயலிழப் பித்துத் துன்புறுத்துவது போல, அச்சமும் துன்புறுத்தலின், “நஞ்சென நலியும்” என்றான். எனவே, அச்சத்தைத் தீதெனக் கருதி நீங்குக என்பது குறிப்பு. விலங்குகதித் துன்பம் 34. அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னநேக வாரந் தொல்வினை துரப்ப ஓடி விலங்கிடைச் சுழன்ற போது நல்லுயிர் நமர்கள் தாமே நலிந்திட இறந்த தெல்லாம் மல்லன்மா தவனின் யாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. உரை:- அன்னை - அன்னாய், நின்னோடு யானும் - நீயும் யானும், முன் - முற்பிறப்புக்களில், அநேக வாரம் - அநேக காலம், தொல்வினை துரப்ப ஓடி - பழவினை செலுத்தச்சென்று, விலங்கிடைச் சுழன்றபோது - விலங்குகதியுட்பிறந்து வருந்தியபோது, நல்லுயிர் - நல்ல உயிர்களாகிய அவ்விலங்குகளை, நமர்கள்தாமே நலிந்திட - நம்மவரே கொல்ல, இறந்தது எல்லாம் - இறந்தும் பின்னரும் பிறந்து கொலையுண்டிறந்தும் பட்ட துன்பமெல்லாம், மல்லல் மாதவனின் - வளவிய பெரிய தவத்தையுடைய சுதத்த முனிகளால், யாம் - நாம், மறித்தும் உணர்ந்தனம் - அப்பிறவிகளில் உற்றுணர்ந்ததே யன்றி மீட்டும் கேட்டறிந்தோம், அன்றோ - அல்லவோ, அதனை மறந்து அச்சம் கொள்வது என்னை எ-று. இருவருயிரும் பிறப்புத்தோறும் இயைந்து வரும் உழுவலன் பால் பிணிப்புண்டு பிறந்திறந்து பிறந்துவருதல் தோன்ற, “நின்னோடி யானும்” என்றான். வாரம், காலப் பாகுபாட்டில் ஒன்று; அவை: கணம், ஆவளி, உயிர்ப்பு, தோவம், இலவம், நாளி, மூழ்த்தம், நாள், வாரம், பக்கம், திங்கள், இருது, அயனம், ஆண்டு, பணை, யுகம், பூவம், பல்லம், அனந்தம் என்பனவாகும். இவையிற்றைப் பதார்த்த சாரம் முதலிய நூல்களுட் காண்க. பல்வகைப் பிறப்புகட்கும் ஏது, ஊழ் வினை துரப்பவோடியொன்று மூழ்த்தத்தினுள்ளே, சூழ்குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து, வீழ்வன போல வீழ்ந்து”1 என்று தேவரும் கூறுதல் காண்க. விலங்கு கதியுட் பிறந்த உயிர்கள் படும் துன்பம், “வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினை செய்யாடவர்கள், வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரி போல், கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்டுபடுத்தும் இன்னணமே, நாளுலப்பித் திட்டார் நமரலா தாரெல்லாம்”2 எனச் சான்றோர் கூறுப. இவ்வாறே இந்நூலுள்ளும் பிறநூல்களிலும் விலங்குகட்கு மக்கள் செய்யுந் தீங்குகள் விரியக் கூறப்படுகின்றன; அவற்றை யாங்காங்கே கண்டு கொள்க. இறப்பெல்லாம் பிறப்பிற்கே எனல் 35. கறங்கென வினையி னோடித் கதியொரு நான்கி னுள்ளும் பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள்* பேச லாகா இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்† பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ் வியல்பிற் றேயாம். உரை:- வினையின் - வினையினால், கதியொரு நான்கினுள்ளும். நால்வகைக் கதிகளிலும், கறங்கு என ஓடி - கற்றாடி போலச் சுழன்று, பிறந்த நாம் - பலபிறப்பும் பிறந்த நாம், பெற்ற பெற்ற பிறவிகள் - மிகப் பலவாகப் பெற்ற பிறப்புக்கள், பேசல் ஆகா - சொல்ல முடியாதன வாகும், இறந்தன இறந்து போக - கழிந்தவை கழிய, எய்துவது எய்தி - எய்தக்கடவன எய்தப்பெற்று, பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம் - பின்னும் பிறப்பதற்கே இறந்த இறப்பெல்லாமாயின மையின், இதுவும் அவ்வியல்பிற்றேயாம் - இப்போது இறக்கும் இறப்பும் அத்தன்மைத் தேயாகும் எ-று. நால்வகைக்கதிகளாவன, நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு. பிறப்புக்கு வினை யேதுவாதலை. “அவாச்சார்ந்து பற்றாகும்! பற்றினால் வினைமுதிர்வாம், தவாதலில் வினைமுதிர்வாற் பிறப்பாகும்! பிறப்பினால், குவாவிய பிணிமூப்புச் சாக்காடின் கூட்டமாம், உபாயவித் தடுமாற்ற மொழிவின்றி யுருளுமே”1 என்பதனால் அறிக. இப்பிறப் பிறப்புக்களும் கறங்கெனச் சுழலுதற்கு, “உபாயவித் தடுமாற்றம் ஒழிவின்றி யுருளுமே” என்பதே சான்று பகர்கிறது. அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. பிறவிகள் மிகப்பல வென்றற்குப் “பேசலாகா” என்றார்; பிறவிகளில் எய்தும் கன்மப் பயன் வகையாற் பலவாயினும், பயன் என்ற விடத்துத் தொகையாய் ஒருமைப்படுதலின், “எய்துவ” தெனப்பட்டது. இறந்தது - தொழின் மாத்திரையாய் நின்றது. இப்போது எய்தும் இறப்பும் மீட்டும் பிறத்தற்கே என்பான், “அவ்வியல்பிற்றே” என்றான். ஏகாரம் - தேற்றம். இதுவும் என்புழி உம்மை, இறந்தது தழீஇயிற்று. அறம்புணர்ந்தோர் உடம்புற்றுப் பிறவார் என்று கூறல் 36. பிறந்தநாம் பிறவி தோறும் பெறுமுடம் பவைகள் பேணாத் துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய் சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யார் தாமே* இறந்தன‡ ரிறந்த காலத் தெண்ணிறந் தனர்க ளெல்லாம். உரை:- தோகாய் - மயில்போலும் தங்கையே, பிறந்த நாம் பிறவிதோறும் - மக்களிற் பிறந்த நாம் பிறப்பு தோறும், பெறும் உடம்பவைகள் - பெறுகின்ற உடம்புகள், பேணாத் துறந்து - பற்றுவை யாது துறந்து, அறம் புணரின் - பிறவாமைக்குரிய அறநெறியை மேற்கொள்வோமாயின், நம்மைத் தொடர்ந்தன வல்ல - நம்மைத் தொடராது ஒழியும், இது சிறந்ததை என்று எண்ணி - இந்நெறியே சிறந்ததாம் என்று துணிந்து, செம்மை செய்யார் - அறத்தைச் செய்யாராய், இறந்த காலத்து - முற்காலத்தே, எண்ணிறந்தனர்கள் - எண்ணில்லாத மக்கள், எல்லாம் - அனைவரும், இறந்தனர் - பலகாலும் பிறந்திடற்கே இறந்தார்கள் காண் எ-று. தோகை, மயில் - காதல்பற்றி உயர்திணைக்கண் வந்தது. இவ்வாறு பிறப்பது குறித்து முன்னைப்பிறவியில் இறந்தோம் என்பதை நினைப்பிக்கும் குறிப்பால் “பிறந்த நாம்” என்றான். உடம்பவை; அவை - சுட்டு. உடம்பை நமதென்னாது கழித்து அறம்புணர்தல் வேண்டுமென்றற்கு, “பேணாத் துறந்து அறம்புணரின்” என்றான், பேணாமைக்கு ஏது துறவுள்ளமாதலின், பேணாமையும் துறவும் உடன் கூறினான். புணரின் எனவே, புணர்தலின் இன்றிய மையாமை வற்புறுத்தப்பட்டதாம். அறம்புணர்ந்தார்க்குப் பிறவி யில்லை யென்றற்கு உடம்பின்மேல் “உடம்பவைகள் அறம்புணரின் தொடர்ந்தனவல்ல” என்றான். பிறவியாவது உடம்பெடுத்தலாதலின் உடம்பின்மேல் பற்றுவையின், அதுகாரணமாக வினைபலவும் வந்து கூடுமேயன்றி, அறம் கைகூடாதென்பது கருத்து அறத்தின் பயன் பிறவிகெடுதல்; இஃது உடனிகழ்ச்சியாதலின், “தொடர்ந்தன வல்ல” என இறந்த காலத்தாற் கூறினான். சிறந்ததை: ஐகாரம், சாரியை. பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. செம்மை, அறம். “செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்”1 என்புழிப்போல. தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. ஏகாரம், அசை; தேற்றமுமாம். உடம்பைத் துறந்து அறம்புணர்ந்தார் பெறும் நலன் கூறுவார், துறவாது அறம் புரியாதார் செயலால் விளக்கி, “இறந்த காலத் தெண்ணிறந்தனர்களெல்லாம்” என்றார். இது, “துறந்தார் பெருமை துணைக்கூறின்வையத் திறந்தாரை யெண்ணிக்கொண்டற்று”1 என்ற திருவள்ளுவப் பயனை உட்கொண்டிருத்தல் காண்க. நரககதியிற் பெற்ற உடம்பின் பெருமையும் அழிவும் கூறல் 37. முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய உருவ மெல்லாம் அழலினுண் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள் உழைவிழி நம்மோ டொன்றி யொருவின உணர லாமோ. உரை:- உழைவிழி - மான்போலும் கண்களையுடைய தங் கையே, முழம் ஒரு மூன்றில் தொட்டு-உடம்பின் உயரம் ஒரு மூன்று முழம் தொடங்கி, மூரிவெஞ்சிலைகள் ஐஞ்ஞூறு - வலிய வெவ்விய வில்லென்னும் அளவு ஐஞ்ஞூறு ஈறாக, எழுமுறை - ஏழ்நரகத்தும் ஏழுமுறை, மேன்மேல் - ஒவ்வொரு நரகத்து ஒவ்வொரு புரையிலிருந்தும் மேன்மேலாக, பெருகி - ஒன்றினொன்று இரட்டித்துப் பெருகுவதால், எய்திய உருவமெல்லாம் - உண்டாகிய உடம்புகளெல்லாம், அழலினுள் மூழ்கியன்ன - நெருப்பில் மூழ்கினாற்போன்ற. அருநவை நரகம் தம்முள் - பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும் நரகங்களில், நம்மோடு ஒன்றி - நம்முயிர் இருத்தற்கு இடனாயிருந்து, ஒருவின - ஒழிந்தன, உணரலாமோ - அவை இத்துணையவென்று உணர முடியுமோ, முடியாது எ-று. நரகவகை யேழ் என்றும், ஒவ்வொன்றிலும் முறையே பதின் மூன்றும், பதினொன்றும், ஒன்பதும், ஏழும், ஐந்தும், மூன்றும், ஒன்றுமாகப் புரைகள் உண்டென்றும், இவற்றுள் பதின்மூன்று புரையினையுடைத்தாகிய முதல் நரகம் எல்லா வற்றிற்கும் கீழாம் நரகமென்றும், அதன் மேல் ஏனைய படிப்படியாகவுளவென்றும் மேரு மந்தரம் முதலிய நூல்கள் கூறும். கீழாம் நரகத்துப் பதின் மூன்றாம் புரையிலுள்ளார் மூன்று முழவுயரமுள்ள வுடம்பினராய்த் தொடங்கி ஏழே முக்காலே வீசம் வில்லளவு உயர்ந்து, பின்பு அதற்கு மேற்பட்ட புரையை யடைந்து இரட்டித்த உயரம் பெற்று, இவ்வாறே புரைபுரையாக ஏழு நரகத்தும் எழுமுறை, ஐஞ்ஞூறு வில்லுயரம் எய்துங்காறும் உழலுவரென்றும் கூறுப. “முழமூன் றுயர்வாம் முதலாம் புரையின், முடிமூன்று வில்லேழ் விரலா றுளகீழ், எழுவாயி தைஞ்ஞூறு வில்லெய் தளவும், வழுவா திறுதொறு மிரட்டிய தாம்”1 என வருதல் காண்க. சிலையென்றதற் கேற்ப, “மூரிவெஞ்சிலை” என்றான்; “குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்” என்றாற்போல், பிறவரு மிடத்தும் இவ்வாறே கூறிக்கொள்க. இந்நரகத்துள் பொறுத்தற்கரிய வெப்ப முண்மையின், “அழலினுள் மூழ்கியன்ன யருநவை நரகம்” என்றார். “மேருநேரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தினுள்ளே, நீரென வுருக்கும் சீத வெப்பங்கள் நின்ற” 2 என்ப. இந்நரகத்துப் பட்டாரைத் தேவர்க்கும் மீட்டல் அரிதாதலின், அருநவை யென்றா ரென்றுமாம்; “வினையிலிரண்டாநரகில் வீழ்ந்தவுனை மீட்டல், முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்”3 என்றல் காண்க. பிறவிதோறும் எடுத்த வுடம்புகளும், அவற்றால் செய்துகொண்ட தீவினைகளும், அவற்றிற்காக நரகத்தில் வீழ்ந்து புரை புரைதோறும் எடுத்த வுடம்புகளும் எண்ணுக்கு அடங்காமையின். “உணரலாமோ” என்றான். அக்கதி நீங்கி விலங்குடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல் 38. அங்குலி யயங்கம் பாக மணு*முறை பெருகி மேன்மேல் பொங்கிய வோரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்க வீழ்ந்து நங்களை வந்து கூடி நடந்தன அனந்த மன்றோ. உரை:- அணு - எண்ணிறந்தனவாகிய அணுக்கள், அங்குலி யயங்கம் பாகம் - ஓர் அங்குலத்தின் கணிக்கமுடியாத ஒருபாகமாக, முறை பெருகி - குணங்களால் கட்டுண்டல் மூவகையாற்றலொடு நீங்காமை முதலியவற்றால் பெருகி, மேன்மேல் பொங்கிய - படிப் படியாக உயர்ந்த, ஓர் ஐஞ்ஞூறு புகைபெறும் - ஓர் ஐஞ்ஞூறு யோசனை யளவினதாகிய, முடையுடம்பு - முடைநாறும் உடம்பு, வெங்கனல் வினையின் - வெவ்விய நெருப்புப்போல வெதுப்பும் வினையினால், மேல் நாள் - முற்பிறவிகளில், விலங்கிடைப் புக்கு வீழ்ந்து - விலங்கு கதிக்குட் சென்று பல்வகை விலங்குடம்பாய்த் தோன்றி, நங்களை வந்துகூடி - நம்மை வந்து கூடியிருந்து, நடந்தன அனந்தம் அன்றோ - அழிந்தவை அளவில்லாதனவாகும் எ-று. அணுக்கள் அங்குலியயங்கம் பாகம் முறையே பெருகுந் திறத்தை, “அனந்தமா மணுக்கள் கூடி யங்குலி யயங்கம் பாகிற், குணங்களாற் செறியக் கட்டிக் குணங்களோ டாற்றல் மூன்றில்,”1 தணந்திடாது பெருகு மென்ப. புகை - யோசனை. ஏழாம் நரகத்திலுள்ள நாரகன், ஐஞ்ஞூறு புகை யுயரமுற்ற உடம்புபெற்று உலந்த பின் விலங்குகதியுட் பிறப்பனாதலின், “ஓரைஞ்ஞூறு புகைபெறும் உடம்பு” என்றார். “எழுதா நரகத்து இயல்பாய வைஞ்ஞூறு, ஒழியாது விழுந்தெழு மோசனையே”2 என்றார் பிறரும் எனவறிக. வினைகனல்போல பெதுப்பு மென்பதைத் திருவள்ளுவரும் “தீயவை தீயினு மஞ்சப் படும்”3 என்றல் காண்க. இதனால் நரககதிக்கண் பிறந்துழன்ற காலத்து வந்த உடம்பனைத்தும் ஐஞ்ஞூறு யோசனை உயரமுடையவாகியும் முடிவில் அழிந்தன என்றும், அதன் பின் விலங்குகதியுட்டோன்றிய காலத்தெய்திய விலங்குடம் புகளும் அவ்வாறே அழிந்தன என்றும் கூறி உடம்பின் நிலையாமையை வற்புறுத்தி, அபயருசி அபயமதியைத் தேற்று வானாயினன் என்க. மக்களுடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல் 39. ஓரினோர் முழங்கை தன்மே லோரொரு பதேச மேறி மூரிவெஞ் சிலைகண் மூவீ ராயிர முற்ற உற்ற பாரின்மேன் மனிதரி யாக்கை பண்டுநாங் கொண்டு விட்ட வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். உரை:- ஓரின் - ஆராயுமிடத்து, ஓர் முழங்கை தன்மேல் - ஒரு முழங்கை உயரத்திலிருந்து மேல்நோக்கி, ஓரொருபதேசம் ஏறி - ஒவ்வொரு பிரதேசமாக உயர்ந்து, மூரிவெஞ்சிலைகள் மூவீராயிரம் முற்ற உற்ற - பெரிய வெவ்விய வில்லென்னுமளவு ஆறாயிரங்காறும் உயர்ந்து சென்று பின் படிப்படியாகக் குறைந்து முழவுயரமே பொருந்திய, பாரின் மேல் மனிதர் யாக்கை - நிலத்தின்மேல் வாழும் மக்களுடைய உடம்புகளுள், பண்டு - முற்பிறவியில், நாம் கொண்டு விட்ட - நாம் எடுத்துக் கழித்த உடம்புகளின் அளவுக்கு, வாரிவாய் மணலும் - கடலிடத்து நுண் மணலின் தொகையும், ஆற்றாவகையின அல்லவோ - ஈடாகாவாம் எ-று. உச்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் இருவகைக் காலத்தும் மக்களுடம்பு ஒரு முழ உயரத்திலிருந்து பெருகிப் பெருகி ஆறாயிரம் வில்லளவு உயர்ந்து பின்னர் அதனினின்றும் குறுகிக் குறுகி ஒரு முழவு யரத்தை யடையு மென்று சைன நூல்கள் கூறும். முன்னைப் பிறவியில் எடுத்த உடம்புகட்கு வாரிவாய் மணலுமாற்றா என்றாற் போலத்திருத் தக்கதேவரும், “தொல்லைநம் பிறவி யெண்ணில் தொடுகடல் மணலு மாற்றா வெல்லைய”1 என்றார். பதேசம், பிரதேசம் என்பதன் திரிபு; “உயிர்ப்பதேசம்”2 என்புழிப்போல. தேவருடம்பு பெற்று அழிந்த செய்தி கூறல் 40. இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி வருசிலை* யிருபத் தைந்தின் வந்துறும் அங்க மெல்லாம் திருமலி தவத்திற் சென்று தேவர்தம் உலகிற் பெற்ற தொருவரால் உரைக்க லாமோ உலந்தன அனந்த மாலோ. உரை:- இருமுழமாதியாக - இரண்டு முழம் முதலாக, வகையின் ஓங்கி - மனிதர் பவணர் என்ற கூட்டத்துப் பல வேறு வகைகட் கேற்ப உயர்ந்து, வரு - வருகிற, சிலை இருபத்தைந்தின் வந்துறும் - இருபத்தைந்து வில்லளவாக உயர்ந்து வரும், அங்க மெல்லாம் - உடம்பெல்லாம், திருமலிதவத்தின் சென்று - செல்வமிக்க தவங் காரணமாக எடுத்து, தேவர்தம் உலகிற் பெற்றது - தேவருலகிற் சென்று பெற்றதாகிய உடம்பு, ஒருவரால் உரைக்கலாமோ - ஒருவரால் அளவிட்டுரைக்க முடியாது, உலந்தன அனந்தம் - அழிந்த தேவவுடம்புகளும் அளவில்லன வாகும் எ-று. மனிதர், ஆரியர் மிலேச்சர் என்னும் இருவகையர், இவருள் ஆரியராகிய நன்மக்கள், உத்தமபூமி, மத்திமபூமி, சகன்னியபூமி யென்ற மூன்றிடத்தும் வாழ்பவராய், தீக்காலத்து இருமுழ வுடம்பு பெற்று உயர்வர். பவணராவார்; அசுரர், நாகர், பொன்னர், தீவர், திசையர், தீயர், உதகர், வாயுவர், மின்னவர், மேகர் எனப் பலராய் மேகரிற் றொடங்கி, அசுரரீறாக இருபத்தைந்து வில்லுயர்ந்த உடம்பு பெறுவர். இவற்றின் விரிவை மேருமந்தர புராணத்துட் 1 காண்க. நன்மக் களாய்ப் பிறந்து பெற்ற உடம்பு களையே எடுத்தோதுதலின், அவர்கட்குரிய “இருமுழமாதியாக” என்று கிளந்தோதினான். இவ்வுயர்ச்சிக்கும் எது தவமாதலின், “திருமலி தவத்திற்சென்று” என்றான். இவ்வுடம் பெடுத்துக் கழித் துயர்ந்தவர் தேவருடம்பு பெறுபவென் றற்கு, “தேவர்தம் உலகில் பெற்றது” என்றார். பெற்றது உரைக்கலாமோ என இயைக்க. ஓ, எதிர்மறை. உரைத்தற் காகாமைக் கேது, இஃதென்பான், “உலந்தன அனந்த” மென்றான். “திருமலி..... அனந்தம்” என்பது, “பவங்க டோறும், மருவிநா மகிழ்ந்து சென்ற பிறப்புமற்றதனுக் கப்பால், ஒருவரா லுரைக்கலாகா வுலந்தன பிறவி மேனாள்”1 என்ற மேருமந்தர புராணச் செய்யுளடியை நினைப்பித்தல் காண்க. நரககதி முதல் தேவகதி யீறாகப் பெற்ற உடம்புகளின் அழிவைத் தொகுத்துக் கூறல். 41. துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுந் துஞ்சா அன்புறா நரகர் யாக்கை யவைகளும் அமரர் கற்பத் தின்பகா ரணமி தென்றே யெம்முடன் இயல்க என்றே அன்புசெய் தனகள் தாமும் அழியுநா ளழியு மன்றே. உரை:- இது துன்பகாரணம் என்று - இவ்வுடம்பு துன்பத்துக்கு ஏதுவாம் என்று கருதி, துடக்கு அறுக எனவும் - அதன் தொடர்ச்சி யில்லாதொழிக என்று முயற்சி செய்தொதுக்கப்படும், துஞ்சா - அழியாத, அன்புறா - எவராலும் விரும்பப்படாத, நரகர் யாக்கை அவைகளும் - நரகருடைய உடம்புகளும், அமரர் கற்பத்து - தேவருலகங்களில், இது இன்பகாரணம் என்று - இஃது இன்பத்துக்குக் காரணமா மென்றறிந்து, எம்முடன் இயல்க என்று - எம்மை விடாது தொடர் வனவாக என்று விரும்பி, அன்பு செய்தனகள் தாமும் - அன்பு செய்து ஈட்டப்படும் உடம்புகளும், அழியும் நாள் - தத்தம் எல்லை முடிவில், அழியும் - அழிந்தொழியும் எ-று. எழுவகை நரகத்துப் பல்வகைப் புரைகளிலும் நரகர் எத்துணை யோ துன்பத்துக்குட்பட்டு வருந்தியபோதும் இறத்தல் இலராதலின், “துஞ்சா” என்றும், துஞ்சாதாயினும் துன்பத்துக் கேது வாமெனத் தெளிந்தமை தோன்ற, “அன்புறா நரகர் யாக்கை யவைகளும்” என்றும் கூறினான்; “எறிவெம் படையா லிவர்வீழ்ந்தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. தேவர் பெறும் உடம்பு பேரழகும் பெருமணமும் பேரின்பமும் உடைய வாகலின் அவற்றை யனைவரும் விரும்புதல் பற்றி, “அன்பு செய்தனகள் தாமும்” என்றான். தேவராயவரும் முடிவில் இறந்து படுதலுண்மையின் இதனைக் கூறினான் என்க. இந்திரருடம்பும் அழிவதே யெனல் 42. வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுட கோடி தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக இந்திர விபவம் பெற்ற இமையவ ரிறைவ ரேனுந் தந்திரு வுருவம் பொன்றித் தளர்ந்தன ரனந்த மன்றோ* உரை:- உடன்வந்து வணங்கும் வானோர் - திரளாகக் கூடி வந்து வணங்கும் தேவர்களின், மணிபுனை - மணிகளால் இயன்ற, மகுட கோடி - முடிகளின் தொகை, தம் திருவடிகள் ஏந்தும் - தம் திருவடிகளைச் சுமக்கும், தமனிய பீடமாக - பொற் பீடமாக அமைய, இந்திரவிபவம் பெற்ற - இந்திர போகத்தைப் பெற்றுள்ள, இமையவர் இறைவரேனும்- தேவர்க்கிறைவராயினும், தம் திருவுருவம் - தங்களுடைய திருவும் உருவும், பொன்றித் தளர்ந்தனர் - தளர்ந்து அழிந்தவர், அனந்தம் - எண்ணில்லா தவராகும் எ-று. வானோர், இந்திரகற்பத்து வாழும் தேவர்கள், தேவராகிய போதும் பிற தேவர்களால் ஒறுக்கப்படுதலும், பிறரை வணங்கலும் பிறர்க்குப் பணிசெய்தலும் அவர்கட்கு இயல்பாதலின், “வணங்கும் வானோர்” என்றும், “மகுட கோடி தமனிய பீடமாக” என்றும் கூறினார். “தேவரே தாமுமாகித் தேவரால் தெழிக்கப்பட்டும், ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டும் அணிகமாப் பணிகள் செய்தும், நோவது”1 என்று தேவரும் கூறினர். இந்திரவி பவம், இந்திரபோகம், “இந்திர விபவ மேனும் நின்றதொன் றியார்க்கு மில்லை”2 எனப் பிறரும் கூறுதல் காண்க. திருவுருவம்,- உம்மைத் தொகை. திருவை உருவத்துக்கு அடையாக்கினுமமையும். “மகுடகோடி திருவடி களேந்துந் தமனிய பீடமாக ” என்றது, திருவடியில் முடிவைத்து வணங்க என்றவாறு. மண்ணாளும் வேந்தர் பெற்ற உடம்பும் அழிவதே எனல் 43. மக்களிற் பிறவி யுள்ளம் மன்னர்தம் மன்ன ராகித் திக்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்* ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே. உரை:- மக்களிற் பிறவியுள்ளும் - மக்களாய்ப் பிறந்தோருள்ளும், மன்னர்தம் மன்னராகி - அரசர்க்கரசராய், திக்கு எலாம் அடிப்படுத்தும் - எட்டுத் திக்கிலுமுள்ள வேந்தரை வென்று அடிபணிய வைக்கும், திகிரியஞ் செல்வரேனும் - ஆணை செலுத்தும் திருவுடைய பேரரசராயினும், அக்குலத்து உடம்பு தோன்றி - அவ்வரசர் குலத்திற் பிறந்து, அன்று தொட்டு இன்றுகாறும் - அன்று முதல் இன்றுவரை, ஒக்கநின்றார்கள் - ஒரு தன்மையாக அழிவின்றி இருந்தவர்கள், ஒருவரும் இல்லை - ஒருவரேனும் இல்லையாயினர், காண் எ-று. பிறவி - ஆகுபெயர். இன் - அல்வழிக்கண் வந்த சாரியை திகிரி - அரசியலாணை, “திகிரியஞ்செல்வரேனும்” என்றதனால், அத்தகைய செல்வராதல் மிகவரிதென்பது பெற்றாம். அக்குலத்து என்புழிச் சுட்டு அவ்வருமை குறித்து நின்றது. உடம்பு தோன்றி என்றது உடம்பொடு பிறந்து என்றவாறு. அரசர்க்குரிய உருவும் திருவுமமைந்த உடம்பு பெறல் அரிது, “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலு மரிதே”3 என்றார் தேவரு மென வறிக. ஒக்கநின்றார் - ஒருதன்மையாய் உடம்பழி யாது நிலைத்து நின்றவர். ஒருவரும் - உம்மை, முற்று. இச்செய்யுளை, “மலைமிசை மதியினீழல் பருதிபோல் மத்தயானைத், தலைமிசைக் குடையி னீழல் தரணியை முழுது மாண்டோர், நிலமிசையின்று காறு நின்றவரில்லை”1 என்பதனோடு ஒப்புநோக்குக. உடம்பெடுத்தலும் விடுத்தலும் இதுபோலும் எனல் 44. ஆடைமுன் னசைஇய* திட்டோ ரந்துகி லசைத்த லொன்றோ மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புகுத லொன்றோ† நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக என்றான். உரை:- நங்கை - நங்கையே, முன் அசை இயது ஆடை இட்டு - முன்னே உடுத்துப் பழையதாகிய ஆடையைக் கழித்துவிட்டு, ஓர் அம்துகில் அசைத்தல் - ஓர் அழகிய புத்தாடையணிவதும், முன்னது மாடம் - முன்னே வாழ்ந்ததாகிய பெருமனை, விடுத்து - நெடிதுநாள் கழிந்தமையின் நிலை தளர்ந்ததென்று அதனின் நீங்கி, வளமனை புகுதல் - வளவிய புதுமனை யொன்றின்கண்ணே சென்று வாழ்வதும், நாடின் ஆராயுமிடத்து, நமது இறப்பொடு பிறப்பும் - நம்முடைய இறப்பும் பிறப்பும், எவ்வகையும் – எல்லா வற்றாலும் ஒத்தனவாம், அஃது இனி பாடுவது என் - அதனை இனிப் பாட்டாற்பாடுவதால் உளதாகும் பயன் யாது? ஒன்றுமில்லை, பரிவு ஒழிந்திடுக - அவ்விறப்புக் குறித்து வருந்து தலையொழிவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. முன்னுடுத்த ஆடைகழித்துப் புத்தாடை யுடுத்தலும், பழைய மனையின் நீங்கிப் புதிய வளமனை புகுதலும் இறந்து பிறப்பார். ஒரு கதிக்கண்ணே ஓருடம்பு நீங்கிப் பிறிதோர் உடம்பு பெறுதற்கும், ஒரு கதிக்குரிய உடம்பை விட்டுப் பிறிதொரு கதிக்குரிய உடம்பு பெறு தற்கும் முறையே உவமமாம். ஒன்றோ - எண்ணிடைச்சொல். ஒத்தன என்பது அவாய்நிலையான் வந்தது. அஃதே என்பதை இறப்புக்கும் பிறப்புக்கும் தனித்தனியே கூட்டி முடிப்பினு மமையும். ஆடையுவ மத்தை இறப்புக்கும், மனையுவமை பிறப்புக்கும் கோடலுமொன்று. அபயமதி தன்பால் அச்சமின்மை கூறல் 45. அண்ணனீ யருளிற் றெல்லாம் அருவருப் புடைய மெய்யின் நண்ணிய நமதென் றுள்ளத் தவர்களுக் குறுதி நாடின் விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்து நின்ற கண்ணனாய் நங்கட் கெல்லாங் கட்டுரை யென்னை யென்றாள். உரை:- அண்ணல் - அண்ணலே, நீ அருளிற்று எல்லாம் - நீ உரைத்தவை யாவும், அருவருப்புடைய மெய்யின் - அருவருப்பை உண்டுபண்ணுகின்ற தேகத்தை, நமது என்று நமக்கே யுரிய பொருள் என்று கருதி, நண்ணிய உள்ளத்தவர்களுக்கு - அதன்மேல் மிக்க பற்றுவைத் திருக்கின்ற உள்ளத்தை யுடையோர்க்கு, நாடின் - ஆராயின், உறுதி - உறதிப்பொருளாகும், விண்ணின் மேல் இன்பம் அல்லால் - தேவருல கத்துக்கும் மேற்பட்ட உச்சிக்கண்ணுள்ள கேவலப் பேரின்ப மன்றி, விழை பயன் - இந்நிலவுலகத்தே புலன்களால் விரும்பப்படும் போகப் பொருள்களை, வெறுத்து நின்ற நங்கட்கெல்லாம் - வெறுத்துத் துறவு பூண்டிருக்கும் நமக் கெல்லாம், கண்ணனாய் - கண்போன்றவனே, கட்டுரை என்னை - வகுத்தும் விரித்தும் உரைப்பது ஏனோ, என்றாள் - என்று அபயமதி கூறினாள் எ-று. என்பும், நரம்பும், குருதியும், தோலும், அழுக்கும், புழுக்களும் சேரவிருக்கும் யாக்கையின் இயல்பைப் புறமறியாப் பார்த்து வெறுத் தொதுக்கினமை தோன்ற, “அருவருப்புடைய மெய்யின்” என்றாள். பிறரும், “என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்ந் திறைச்சி மெத்திப், புன்புறந் தோலின் மூடி யழுக்கொடு புழுக்கள் சோரும், ஒன்பது வாயிற்றாய வூன்பயில் குரம்பை”1 என்றார். இதனை இவ்வாறு உணராதார் இவ்வுடம்பே தாமெனக் கருதி யுழல்வர் என்றற்கு, “நமதென்று நண்ணிய உள்ளத்தவர்கள்” என்றாள். இவ்வுள்ளம் அறிவின் சிறுமை காரணமாகப் பிறப்பதாகலின், அவ்வுள்ள முடையார்க்கு அபயருசியின் சொற்கள் மிக்க பயன் தருவன என்றதைத் தெளிந்து, “உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடின்” என்றாள். “ஊன்பயில் குரம்பை தன்மேல் அன்பறா மாந்தர் கண்டாய் அறிவினாற் சிறிய நீரார் ”2 என்று சான்றோரும் கூறுதல் காண்க. மூவுலகத்துக்கும் மேற்பட்டதாகிய உச்சியிடத்தே இருந்து பேரின்பம் நுகர்தலைக் கேவல முத்தி யின்பம் என்பது “முனிவருமுலக மூன்று மிறைஞ்ச மூவுலகினுச்சி, கனைகழலரச நிற்றல் கைவல மாகுங் கண்டாய்”1 என்பதனா லறிக. கட்டுரை - கட்டுரைத்தல்; அஃதாவது கேட்பார் மனங்கொள்ளுமாறு வகுத்தும் விரித்தும் தெளித்துரைத்தல். அபயருசி, “நங்கை நீயஞ்சல்”(32) என்பது முதல் “ஆடை முன்னசைஇயது” (44) என்னும் செய்யுள்வரைப் பல்வகைக் கதிகளிலும் பிறந்திறந்து வந்த வரலாற்றை எடுத்தோதினமையின், “கட்டுரை யென்னை” யென்றாள். உடம்பை விடுதற்கண் தன்மனத்தே அச்சமின்மை கூறல் 46. அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும் வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறும் திருவுடை யடிகள் தந்த திருவறப் பயனுந் தேறி வெருவிதா* விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்டோ. உரை:- அருவினை விளையுளாய - போக்குதற்கரிய வினைகள் தோன்றுதற் கிடமாகிய, அருந்துயர்ப் பிறவிதோம் - பொறுத்தற் கரிய துன்பத்தைத் தருகின்ற பிறப்புக்கள் தோறும், வெருவிய மனத்து நம்மை - அவற்றிற்கு அஞ்சி மனம் முதலியவற்றைக் காத்தொழுகிய நம்மை, வீடு இலவிளைந்தவாறும் - விடாது தோன்றித் துன்புறுத்திய வகையும், திருவுடையடிகள் தந்த - கேவல ஞானமாகிய செல்வத் தையுடைய சுதத்த முனிகள் நமக்கு உரைத்தருளிய,திருவறப்பயனும் - சினதருமப் பயன்களும், தேறி - தெளியவுணர்ந்து, வெருவிதா - பயனற்றதாகக் கருதி, விடுத்த வாழ்க்கை - பற்றுவையாதுவிட்ட இவ்வுடம்பினை, விடுவதற்கு - இப்போது விட்டுவிடுதற்கு, அஞ்சல் உண்டோ - அஞ்சுவது ஆகாது எ-று. வினையானது தன்னைச் செய்த உயிரின்கட் கிடந்து அது புக்குழிப் புகுவதன்றி, உடம்பொடு நின்று, அஃதழியுங்கால் அழிவதன்றாகலின், “அருவினை” யென்றும், உயிர் உடம்பொடு கூடி யுலவுங் காலத்தே அவ்வினை யீட்டப்படுதலின், உடம்பை அதற்கு “விளையுள்” என்றும், அவ்வினைத் தொடர்பால் கதிதோறும் பெருந்துயர் எய்துதலின், “அருந்துயர்ப்பிறவி” யென்றும் கூறினாள். “பிறந்துநாம் கதிகள் நான்கிற் பெருந்துய ருழக்கும் போதும் துறந்திடா வினைகள்”1 என்றும் “தீக்கதிநான்கிற்சார்ந்து செல்வுழித் துணையுமில்லை” என்றும்2 பிறரும் கூறுதல் காண்க. வினைவிளைவுக் கஞ்சித் தம்மைக் காத்தொழுகிய போழ்தும் செய்தீட்டிய வினைப் பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின், பல பிறவிகளும் விளைந்தன என்பாள், ‘வீடில விளைந் தவாறும்’ என்றாள். வீடு - விகாரம். ஸ்ரீசினதருமத்தை - திருவறம் என்ப; “அரியது திருவறமல்லதில்லை”3 என்றார் பிறரும். வெறுவிதா எனற்பாலது எதுகையின்பங் குறித்து “வெருவிதா” என வந்தது. மனத்தால் வெறுத் தொழித்த வொன்றினை மெய்யே விடுவதற்கு - அஞ்சுவதில்லை யாதலின்” விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சலுண்டோ” என்றாள். வாழ்க்கை, ஆகுபெயரால் உடம்பிற்காயிற்று; “வாழ்தலுயிர்க்கன்னள் ஆயிழை”4 எனவரும் திருவள்ளுவப் பயனும் இச் சொற்குறிப்பைத் தெளிவித்தல் காண்க. ஓகாரம் - எதிர்மறை. அபயருசி கூறியதற்கு அபயமதி அமைதி காட்டல் 47. பெண்ணுயி ரளிய* தாமே பெருந்திற லறிவும் பேராத் திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற் காட்சி கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதாம். உரை:- பெண்ணுயிர் - பெண்ணுடம் பெடுத்த உயிர்கள், அளிய - அளிக்கத்தக்கன, பெருந்திறல் அறிவும் - பெருமை சிறக்கும் நுண்ணறிவும், பேராச் சிந்தையின் திண்மையும் - கலங்காத மன வன்மையும், உடைய வல்ல - உடையவையல்ல, என்பது - என்று சான்றோர் கூறுவதை, எண்ணி - கருதிக்கொண்டு, நீ அருளிச் செய்தாய் - நீ இவற்றை உரைத்தாய்போலும், அன்றி - அல்லதூஉம், நல்லறத்தில் - சினேந்திரதருமத்தில், கண்ணிய மனத்தர் - கருத்தூன்றித் தெளிந்த மனமுடையவர்கள், இம்மை - இப்பிறவியின்கண், காதல் உடையரோ - விருப்பத்தைக் கொள்ளார் எ-று. செய்த வினைக்கேற்ப உயிர்கள் ஆணாகப்பிறந்தன பெண்ணாகவும் பெண் ஆணாகவும் பிறக்குமாதலின், பெண்ணென்னாது வேற்றுமை நயந்தோன்ற, “பெண்ணுயிர்” என்றாள், “வினையெனுங்கு யவனம்மை வேற்றுருவியற்றல் கண்டாய், அனகனா முருவந் தன்னைப் பெண்ணுருவாக்கி யாங்கே, மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்தனாக்கி, நினைவினால் முடித்து நின்றார்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. “நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும் பேதைமைத்தே”2 என்றதுகொண்டு, “பெருந்திறல் அறிவும்” என்றும், “பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு மன்னோ, உண்ணிறையுடையவல்ல வொராயிர மனத்தவாகும்”3 என்றும். “மகளிர் மனம் போல வேறுபடும்”4 என்றும் சான்றோர் உரைப்பதால், “பேராத்திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது” என்றும் உரைத்தாள். மேலே, “கட்டுரை யென்னை” (45) என்றவள், அக்கட்டுரைக்கு அமைதியும் உடன் கூறலுற்று, தன்னைப் பிறர்போலக் கூறும் குறிப்பில்வைத்துப் பெண்ணுயிரின் இயல்பை எடுத்துரைக்கின்றாள். மூன்றுலகத்தும் துன்புறும் உயிர்களை, “ஈன்ற தாய் போல ஓம்பி இன்பத்துள் இருத்தி”5 அருகந்த பதவியையும் சித்த பதவியையும் கொடுத்து மகிழ்வித்தலின், இம்மைக்கண் காதலுண்டா காமையின், “நல்லறத்திற் காட்சி கண்ணிய மனத்தர் இம்மைக் காதலு முடைய ரோதாம்” என்றாள். அபயருசி கூறியதைப் பாராட்டித் தான் தனக்கு அவனை இறைவனாகக் கொள்வதுரைத்தல் 48. இன்றிவண் ஐய என்கண் அருளிய பொருளி தெல்லாம் நன்றென நயந்து கொண்டேன் நடுக்கமும் அடுத்த தில்லை என்றனக் கிறைவன் நீயே யெனவிரு கையுங் கூப்பி இன்றியா னியாது செய்வ தருளுக தெருள என்றாள். உரை:- ஐய - ஐயனே, இவண் - இவ்விடத்து, இன்று - இப்போது, என்கண் அருளிய பொருள் இது எல்லாம் - என்பால் உரைத்தருளிய உறுதியுரைகளெல்லாம், நன்று என நயந்து கொண்டேன் - நன்றென்று விரும்பியேற்று மனத்துட் கொண்டேன், நடுக்கமும் அடுத்தது இல்லை - அச்சத்தால் உளதாகும் மனநடுக்கமும் என்பால் இல்லாது கெட்டது, என்தனக்கு இறைவன் நீயே என - அடியேனுக்கு ஆசிரியனும் நீயே யாவாய் என்று, இருகையும் கூப்பி - இருகையும் எடுத்துத் தொழுது, இன்று - இப்போது, யான்செய்வது யாது தெருள அருளுக - யான் செய்யக்கடவது யாதோ அதனைத் தெளிய உரைத் தருளுவாயாக, என்றாள் - என்று வேண்டினாள் எ-று. பொருளிது எல்லாம், ஒருமை பண்மை மயக்கம். கொலை புரிதற்குச் சண்டகருமன் இவர்களைக் கொண்டேகுவதை அறிந் திருத்தலின், அச்சமும் எய்திற்றில்லை யென்கின்றாள். அதற்கு ஏது, அச்சம் நிகழ்தற்குரிய மனத்தின்கண் அறப்பொருள் நிறைந்து தெளிவு செய்தலைக் குறிப்பிப்பாள், “அருளிய பொருளிதெல்லாம் நன்றென நயந்து கொண்டேன்” என்றாள். தெளிவின் பயன் தெளிவித்தாரை வியந்து வழிபடுவதாகலின், “இறைவன் நீயே” என்றும், “இருகையும் கூப்பி”யும், “யாது செய்வது அருளுக தெருள” என்றும் கூறினாள். தெருள என எடுத்தோதியது, கொலைவினை நிகழுமிடத்து மீட்டும் மருட்சி யெய்தினு மெய்து மென அஞ்சி யெனின், திருவறப்பயனுக்கு முரணாதலின், அவ்வாறு கொள்ளாது, கேட்போர் தெருளுமாறுரைக்கும் அபயருசியின் சொல்வன்மையை வியந்து கூறியது என அறிக. பஞ்சபரமேட்டிகளை வணங்கித் தம் உடம்பை விடுவதென இருவரும் துணிதல் 49. ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி வென்றவர் சரணம் மூழ்கி விடுதுநம் முடல மென்றான் நன்றிது செய்கை யென்றே நங்கையு நயந்து கொண்டாள். உரை:- ஒன்றிய உடம்பின் - உயிரோடு ஒற்றுமையுற்றிருக்கும் உடம்பிலிருந்து, வேறாம் உயிரினது - உண்மையுணர்வால் நோக்கு மிடத்து வேறுபட்டுத் தோன்றும் உயிரினுடைய, உருவம் உள்ளி - அருவமாகிய இயல்பை யெண்ணி, நங்கள் நல்லறப் பெருமை நாடி - நாம் மேற்கொண்டிருக்கும் சைனதருமத்தின் பெருமையைத் தெளிய உணர்ந்து, நன்று என நயந்து - ஏனைய அறம் பலவற்றினும் இதுவே நலந்தருவதென விரும்பி, வென்றவர் - காதி கன்மப் பகையை வென்று யர்ந்தவரான பஞ்சபரமேட்டிகளின், சரணம் மூழ்கி - திருவடி நீழலில் எய்தும் இன்பம் நிறைந்து, நம் உடலம் விடுதும் என்றான் - நமது இவ்வுடம்பை விட்டொழிப்போம் என்று அபயருசி கூறினானாக, இது செய்கை நன்று என்று - இதனைச் செய்வது நல்லறமே என்று கருதி, நங்கையும் - நங்கையாகிய அபயமதியும், நயந்து - மனத்தால் விரும்பி, கொண்டாள் - அச்செய்கையை மேற்கொள்வாளாயினள் எ-று. உண்மையுணர்வால் நோக்குமிடத்தென்பது இசையெச்சம் வினையாகிய பகையை வெல்லக் கருதுவார்க்குச் சைன தருமம் நெறியும், நற்காட்சி முதலியன படையுமாய்ப் பயன்படுதலின், “நல்லறப்பெருமை நாடி” என்றும், “நன்றென நயந்து” என்றும் கூறினான். உருவம் என்றவழி அதன் இன்மையும் அடங்குதலின், “உயிரினது உருவம் உள்ளி ” எனல் வேண்டிற்று, “உண்மையு மின்மைதானு மொருபொருட்டன்மையாகும்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. மூழ்கி யென்ற குறிப்பால், சரணமாகிய இன்பக்கடல் என்று கொள்க. “அறிவரன் சரணமூழ்கி”2 என்றும், “அருகன சரண மூழ்கி”3 என்றும் இந்நூலுள்ளும் பிறாண்டும் வருதல் காண்க. மனத்தால் நினைத்தலும் செய்தலோடொக்கு மென்பவாயினும், செயலும் உடன் நிகழ்தலின், நயந்தென்றொழியாது “கொண்டாள்” என்றார். இதனை நன்றென்று தேறியுடன்பட்ட சிறப்புக் குறித்து, அபயமதியை “நங்கையும்” என்றார். உம்மை - சிறப்பு. இது வென்பதனைப் “பொருளோடு புணராச்சுட்டு” எனினுமாம். சினேந்திர துதி 50. அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் குறுகிய தடற்றொண் வாள்போற் கொண்டிய லுடம்பின்* வேறாய் இறுகிய வினையுமில்ல+ தெமதியல் பென்று நின்றார். உரை:- அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு - ஞானமும் காட்சியும் உள்ளிட்ட, அனந்தமாம் இயல்பிற்றாகி - அளவில்லாத இயல் பினையுடையதாய், அறிதலுக் கரியதாகி - அறிவாராய்ச்சிக்கு அடங்காததாய், அருவமாய் - உருவமில்லாததாய், அமலமாகி - தூயதாய், குறுகிய தடற்று - குறுகியதான உறையின்கண் அடங்கிய, ஒள்வாள்போல் - ஒளி பொருந்திய வாட்படைபோல, கொண்டு இயல் உடம்பின் வேறாய் - தன்கு இடமாகக் கொண்டு இயங்கும் உடம்பிற்கு வேறுபட்டதாய், இறுகிய வினையும் - எப்போதும் விடாது பிணிக்கும் வினைத்தொடர்பும், இல்லது - இல்லாத உயிராகிய, எமது இயல்பு - எம்முடைய இயல்பு, என்று - என்று தெளியக்கொண்டு, நின்றார் - அருகபதத்தில் நிலை பெற்றிருக்கும் பரமேட்டிகளே நமக்குச் சரணா வார் எ-று. இயல்பாகவுள்ள தூய வுயிர்கட்கு ஞானமும் தரிசனமும் இயற்கைக் குணமாதலின், “அறிவொடாலோகம் உள்ளிட்டு” என்றார். ஆலோகம் - ஒளி; ஈண்டுப்பொருள்களையுள்ளவாறு காணும் காட்சி. அளவின்றிப் பலவாய்ப் பல்வகை அணுக்களோடும் கூடி உலகம் முதலிய தத்துவங்களைச் செய்து தன்மாதன்மாத்திகளால் அளவுகடந்து அறிவாராய்ச்சிக்கும் எட்டாது போதலின், “அனந்தமாம் இயல் பிற்றாகி” யென்றும், “அறிவினுக் கரியதாகி” என்றும் கூறினார். “அளவின்றியத்தியாய் அமூர்த்தியாய் ஆதியாய், உளவென்ற பொருள்”1 “அளவில் ஆகாயத்தில் அணுக்களோடு உயிர் அள வளாவிப்”2 பல்கு மென்றும், “உலகினோடு உலக லோகமாந் தத்துவந் தனைச்செய்து, தன்ம தன்மமா மத்திகள் செலவொடு நிலையிற் கேதுவாம் ”3 என்றும் கூறுப. உயிர் அருவ மென்பது சினேந்திர சமயக் கருத்துமாதலின், “அருவமாய்” என்றும், தன் நிலையில் தூய்தாதலின், “அமலமாய்” என்றும் கூறினார்; “அத்தியாய் அமூர்த்தியாய் அளவில் தேசியாய்”4 என்று பிறரும் கூறுதல் காண்க. உயிர் உடலின்கண் நிறைந்து நிற்றற்குத் “தடற்று ஒள்வாள்போல்” என்று உவமித்தார். உள்ளுறையும் வாள் ஒளியுடைத் தாதல்போல் உடம்பின்கண் உறையும் உயிரும் ஒளியுடைத்தாதல் பெற்றாம். இன்றும் அதனாலே, தடற்றின் அளவும் வாள் நிறைந்திருப்பது போல உயிரும் உடம்பளவும் நிறைந்து நிற்பது பெறப்படும். “குடங்கையின் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்”5 என்றார் பிறரும். இக்கருத்தே பற்றி இந்நூலாசிரியரும், “தடற்று ஒள்வாள்போற் கொண்டியல் உடம்பு” என்றார் என உணர்க. வாள் தடறாகாதவாறு போல, உயிர் உடம்பா காமையின், “உடம்பின் வேறாய்” என்றும், உயிரைப் பிணித்து நிற்கும் ஞானாவரணீயம் தரிசனாவரணீயம் முதலிய காதிகன்மங்கள் வீடுபெறு தற்குச் சமைந்த உயிர்களை இறுகப் பிணித்து நிற்றல் இன்மையின், “இறுகிய வினையும் இல்லது” என்றும், இவ்வியல்புணர்ந்து பிற வுயிர்கட்கும் இதனைத் தெரிவித்தருளும் பரமேட்டியாதலின், “எமது இயல்பு” என்றும் உரைத்தார். நமக்குச் சரணாவார் என்றது எஞ்சி நின்றது. இதனை மேல் வருவனவற்றிற்கும் உரைத்துக்கொள்க. அருக பரமேட்டி வணக்கம் 51. உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப் பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருத லாறும் அறிவினிற் றெரிந்த மாட்சி யரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனர் பெரிது மென்றார். உரை:- உறுதியைப் பெரிதும் ஆக்கி - உயிர்கட்கு உறுதியா வனவற்றை மிகுதியும் உண்டாக்கி, உலகினுக்கு இறைமை நல்கி - உலகிற்குத் தான் இறைவனாம் தன்மையினைத் தெளிவித்து, பிறவி செற்று - பிறவி இனி வாராவகைக் கெடுத்து, அரிய வீட்டின் பெருமையைத் தருதல் ஆறும் - பெறுதற்கரிய வீட்டுலகத்தின் பெருமையைத் தெரிவிப்பனவாகிய அறுவகை நயங்களையும், அறிவினில் தெரிந்த மாட்சி - தூய அறிவினால் ஆராயப்படும் மாட்சியினையுடைத்தாகிய, அரதனத்திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம் - இரத்தினத்திரய மெனப்படும் பெறுதற்கரிய செல்வத்தையும், பெரிதும் பெற்றனம் - மிகுதியும் பெற்றேம், (இவற்றைப் பெறவளித்த அவரே நமக்குச் சரணாவார்) என்றார் - என்று தொழுதார்கள் எ-று. உயிர்க்கு உறுதியல்லாத பொருள்கள்மேல் விரைந்து இனிது செல்லும் உள்ளத்தை, உறுதிப்பொருளின்பால் கலங்காது சென்று பொருந்துவித்தமையின், “உறுதியைப் பெரிது மாக்கி” யென்றார். மூவுலகின் உச்சிக்கண் இருந்து உயிர் முதலிய பொருள் கட்கு எப் பொருளும் அருள் செய்தலின், “உலகினுக்கு இறைமை நல்கி” யென்றார். “இராகமின்றி யெழுந்தருளி வந்திருந்தெப்பொருளு மருளிய வெங்கள் இறைவன் நீயே”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. பிறவிக் கேதுவாகிய காதிகன்மங்களை வீட்டற்குரிய நெறியினை நல்குதலின், “பிறவிசெற்று” என்றும், பெறற்கரிய வீடுபேற்றுக்கு வாயிலாகிய அறுவகை நயங்களையும் அவற்றின் மேலும் வேண்டப்படும் “சப்த பங்கி நயங்களையும்” அருளிய சிறப்புக் குறித்து, “வீட்டின் பெருமை யைத் தருதலாறும்” என்றும் கூறினார்; ஆறு நயங்களாவன நித்தியம், அநித்தியம், அவாச்சியம், பின்னம், அபின்னம், சூனியம் என்பனவாம். சப்தபங்கி ஏழாவன; இருப்பது, இராதது, இருப்பது மிராததும், சொல்லொணாதது, இருப்பதுஞ் சொல்லொணாததும், இல்லையாஞ் சொல்லொணாதது, உள்ளது மில்லதுமாஞ் சொல்லொணாதது என்பன. இனி இவ்வேழனையுமே, அறிவினால் தெரிந்த மாட்சி யென்றாரென்றும், அறிவாராய்ச்சிக்கு மாட்சி தருதலின், இவற்றை மாட்சி யென்றா ரென்றும் கூறுப. இரத்தினத்திரயம் மூன்றுமாவன; நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்பன. இம்மூன்றும் வீடு பேற்றுக்கு நெறியாதலின், “பெறுதலுக் கரிய செல்வ” மென்றார்; “முத்தியி தற்குபாயம் இரத்தினத்திரயம்”2 என்றார் பிறரும். சித்தர்பரமேட்டி வணக்கம் 52. ஈங்குநம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார் நினைந்து மேலிவ் வோங்கிய வுலகத் தும்பர் ஓளிசிகா மணியி னின்றார் வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித் தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார். உரை:- ஈங்கு - இவ்விடத்தே, நம் இடர்கள் - நமக்குற்ற துன்பத்தை, நினைந்து - தமக்குற்றவை போலக் கருதி, தீர்க்கும் இயல்பினார் - போக்கும் இயல்புடையவரும், மேல் - மேலே, ஓங்கிய - உயர்ந்துள்ள, இவ்வுலகத்து உம்பர் - இவ்வுலகின் உச்சிக்கண்ணே, ஒளி சிகாமணியின் நின்றார் - ஒளியினையுடைய முடிமணிபோல விளங்குகின்றவரும், வீங்கிய கருமக்கேட்டின் - மிக்க காதிகன் மங்களின் வீழ்ச்சிக்கண்ணே, விரிந்த எண்குணத்தராகி - பெருகிய எட்டுவகைக் குணங்களையு முடையராய், தீங்கெலாம் அகற்றி நின்ற - குற்ற மெல்லாம் போக்கி மேம்பட்டுநின்ற, சித்தர் - சித்தர்கள், செல்லல் தீர்ப்பார் - இப்போதும் நம் துன்பத்தைப் போக்கு வராதலின் அவர்களும் நமக்குச் சரணாவார் எ-று. பிற உயிர்கட்குண்டாகும் துன்பத்தைத் தமக்கு நேர்ந்தன போலக் கருதி அதனை விரைந்து போக்கும் அருளறமே அவர்கட்கியல் பென்றற்கு, “இடர்கள் தீர்க்கும் இயல்பினார்” என்றார். நம் என்றது எல்லாவுயிர்களையும் உளப்படுத்தி நின்றது. கேவல ஞானிகள் என்றற்குச் சித்தரை “ஓங்கிய வுலகத்தும்பர் ஒளி சிகாமணியின் நின்றார்”என்றார். காதி நான்கும் அகாதி நான்கும் ஆகிய வினைகள் எட்டாதலின், “வீங்கிய கருமம்” எனப்பட்டன; அவை ஞானா வரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம், வேதனீயம், நாமிகம், சோத்திரிகம், ஆயுட்கம் என்ப. அகாதிகன்மம் எண்பத்தைந்து. இக்கன்மங்கள் கெட்டவிடத்து எண் குணங்களும் பொருந்து மென்று கூறுபவாதலின், “கருமக்கேட்டின் விரிந்த வெண்குணத் தராகி” என்றார்; “ஆயிடை யெண்பத் தஞ்சு வினைகெட்ட வக் கணத்தே, போயுல குச்சிபுக்கான் பொருந்தியெண் குணங்களோடும்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. வினையின் நீங்கிக் குணமெட்டும் நிறைந்தவழி, உலகுச்சியிற் பொன்போல் ஒளிர்பவாதலின், “ஒளிசிகா மணியின் நின்றார்” என்றார்; “மாற்றற வோட்டி வைத்த செம்பொன்னொத் தொளிருமே”2 என்று கூறுப. இவ்வண்ணம் உச்சிக்கண் நின்றொளிரு மிடத்துத் தேவர்பலரும் வந்து அடிவணங்கிப் பரவுபவாதலின், அப்பரவலால் உள்ளத்தே பெருமிதம், செருக்கு முதலிய தீக்குணம் சிறிதும் அணுகாமையின், “தீங்கெலா மகற்றி” என்றார். அகற்றியெனப் பிறவினையாற் கூறியது, தாம் நீங்கினாராயினும், நீங்காது தீ துற்று வருந்தும் பிறவுயிர்பால் அருள்கொண்டு நீக்குதல் பற்றி யென அறிக. தீர்த்தகர வணக்கம் 53. பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப் பெற்ற திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்ப ரேனும் உரிமையி னுயிர்கட் கெல்லாம் ஒருதனி விளக்க மாகித் திருமொழி யருளுந் தீர்த்த சுரர்களே துயர்கள் தீர்ப்பார். உரை:- பெருமலையனைய - பெரிய மலையையொத்த, காதிப் பெரும்பகை பெயர்த்து - காதிகன்மங்களாகிய பெரிய பகையைக் கெடுத்து, பெற்ற - அப்பொழுதே பெற்றனவாகிய, திருமலி - ஞானநலம் மிகுந்த, கடையில் நான்மைத் திருவொடு - அனந்த சதுட்டயங்களைக் கொண்டு பெறக்கடவ கேவலஞான மென்னும் திருவுடன், திளைப்பரேனும் - மகிழ்வாராயினும், உரிமையின் - முறைப்படி, உயிர்கட்கெல்லாம் - எல்லாவுயிர் களுக்கும், ஒரு தனி விளக்கமாகி - ஒப்பற்ற ஞானவிளக்கமாய், திருமொழியருளும் - முத்திநெறியைத் தெரிவிக்கும், தீர்த்தகரர்கள் – தீர்த்தங்கர சுவாமிகளே, துயர்கள் தீர்ப்பார் - நம் துன்பத்தை நீக்குவார்கள் எ-று. எளிதில் பெயர்த்த லருமை குறித்து, காதிகன்மங்களைப் “பெருமலையனைய” என்றும், கேவல ஞானத்தை எய்தலுறுவார்க்கு மனத்தில் நிகழற்பாலதாகிய சுக்கில தியானத்துக்கு ஆக்கமாகும் அனந்த சதுட்டயங்களை எய்தாவகைத் தகைத்து நிற்றலின், “பெரும்பகை” யென்றும் கூறினார். காதிகன்மக் கேட்டின்கண் அனந்த நான்மைகள் விளங்கித் தோன்றலின், “பெற்ற திருமலி கடையினான்மைத் திரு” என்றார்; நான்குமாவன: கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வின்பம், கடையிலா வீரம் என்பன. இந்நான்கும் நிறைந்த வழி எய்தக்கடவதாய் இருப்பது கேவலஞான மாதலின், அதனையே கடையிலா நான்மையொடு கூடிய திருவென்றார் என்று அறிக. திரு, திருமகள். “காதிகள் நான்கும் நீங்க மேலெலா முறங்கு நான்மை விழித்துல கனைத்துங் காண, மாலிலா மனத்துச் சிந்தை யருக்கன துதித்த தன்றே”1 என்றார் பிறரும். திருமொழி - பஞ்சநமஸ்காரமென் னும் மந்திரமொழி. தீர்த்தங்கரர், தீர்த்தகரர் என வந்தது; “சம்சார மாகிய கடலைத் தாண்டியவர்” என்பது இச்சொற்குப் பொருள் என்ப. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர்; முதல்வர் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர்; இறுதியில் இருந்தவர் ஸ்ரீ வர்த்தமான வீரர். ஆசிரியர் வணக்கம் 54. ஐவகை யொழுக்க மென்னும் அருங்கல மொருங்க ணிந்தார் மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார் பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித் தவ்விய மகற்றுந் தொல்லா சிரியரெம் அல்லல் தீர்ப்பார். உரை:- ஐவகை ஒழுக்க மென்னும் அருங்கலம் - ஐந்து வகையான விரத மெனப்படும் கிடைத்தற்கரிய அணிகலனை, ஒருங்கு அணிந்தார் – ஒவ்வொன்றாக வன்றி ஒருசேர அணிந்திருப் பவரும், மெய்வகை - தத்துவக் கூறுபாடுகளை, விளக்கம் சொல்லி - விளக்க முண்டாகுமாறு சொல்லி, நல்லறம் மிக அளிப்பார் - வீடுபேற்றிற் கேதுவாகிய அறநெறிகளை மிகவும் எடுத்தோதி ஆதரிப்பவரும், பவ்வியர் தம்மை - பக்குவமுற்றவர்களை, தம்போல் - தம்மைப் போலவே, பஞ்ச நல்லொழுக்கம் பாரித்து - ஐவகைப்பட்ட நல்லொழுக்கங்களை மேற்கொள்வித்து, அவ்வியம் அகற்றும் - குற்றத்தைப் போக்கும், தொல்லாசிரியர் - பழைமையான ஆசிரியர் களுமாகிய பரமேட்டிகள், எம் அல்லல் தீர்ப்பர் - நமது துன்பத்தைப் போக்குவார்கள் எ-று. நன்மக்கட்குரிய ஒழுக்கத்தைச் சைணர் “சாரித்திரம்” என்பவாகலின், அதற்குரிய விரதம் பன்னிரண்டனுள் சிறப்புடைய அணு விரதமைந்தனையும் ஈண்டு “ஐவகையொழுக்க மென்னு மருங்கலம்” என்றார் எனவுணர்க; அவை: கொலை, பொய், களவு, பிறர்மனை விழைவு, பிறர்பொருள் வௌவல் என்பனவாம். மெய்வகை - தத்துவங்கள். அவை: உயிர், உயிரில்லது, நல்வினை, தீவினை, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்ற ஒன்பதுமாம். கட்டுநீங்கி வீடு பெறுதற்குரிய நெறி நலம் பயக்கும் அறமாதலின், அதனை “நல்லறம்” என்றார். பவ்வியர், அறங்கேட்டு வீடுபெறுதற்குச் சமைந்தவர். முற்கூறிய ஐவகையொழுக்கத்தை மீட்டுங் கூறியது, அவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்துதற்கு ஆசிரியராதலின், “அவ்விய மகற்றும் தொல்லாசிரியர்” என்றார்; பரமேட்டிகள் ஐவருள் ஒருவராய் எனச் சிறப்பித்தார்.வழிபடுதற்குரியராதல்பற்றி, “தொல்லாசிரியர்” எனச் சிறப்பித்தார். உபாத்தியாயர் வணக்கம் 55. அங்கநூ லாதி யாவும் அரில்தபத் தெரிந்து தீமைப் பங்கமேழ் பங்க மாடிப் பரமனன் னெறிப யின்றிட் டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்தடைந்த நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார். உரை:- தீமைப்பங்கம் - துன்பமாகிய சேறுநிறைந்த, ஏழ்பங்கம் ஆடி - ஏழ்நரகத்தினும் வீழ்ந்துமூழ்கிக் கரையேறி (நன்மக்கட் பிறப்பில் வந்து), அங்கநூல் ஆதியாவும் - பரமாகமங்கட்கு அங்கமாகிய ஆகமங்கள் பலவற்றையும், அரில்தபத் தெரிந்து - குற்றமறத் தெளிந்து, பரமன் நன்னெறி பயின்றிட்டு - அருகபரமேட்டி ஆதியில் காட்டியருளிய அறநெறியைப் பயின்று, அங்கபூவாதி - அங்காகமம் பன்னிரண்டும் பூர்வாகமம் பதினான்குமாகிய, மெய்ந்நூல் அமிழ்து - பரமாகமத்து மெய்ப்பொருளாகிய அமுதத்தை, அகப்படுத்து - உணர்ந்து உட்கொண்டு, அடைந்த - இப்பிறப்பில் தம்மை வந்தடைந்த, நங்களுக்கு - நமக்கும் நம்போலியர்க்கும். அளிக்கும் நீரார் - அருள் செய்யும் தன்மையுடைய சான்றோர், நம்வினை கழுவும் நீரார் - நம்முடைய வினையாகிய அழுக்கைக் கெடுக்கும் அருளாகிய தூய நீரையுடையோ ராவர் எ-று. வீட்டுநெறியில் நில்லாத உயிர்கள் தாம் செய்யும் வினைகட் கேற்ப, மக்கள், விலங்கு, நரகர் என்ற நான்கு கதியானும் பிறந்திறந் துழலுமாதலின், எல்லாக்கதியினும் கீழ்ப்பட்ட கதியாகிய நரககதியை ஈண்டு எடுத்தோதுகிறார். அந்நரகம் எழுவகையாய் ஒவ்வொன்றும் பல்வகைப்புரைகளையுடையதாய் நினைத்தற்காகாத துன்பநிலைய மாயிருத்தல் பற்றி, “தீமைப்பங்கமேழ்பங்கம்” என்றார். நற்காட்சி நல்லொழுக்கம் முதலியவற்றால் நரககதி, விலங்குகதி, இரண்டினின்றும் ஏறிவரும் உயிர்கள் வீடுபெறுவதுகுறித்துக் கற்பன இவை யென்றற்கு, “கணதராதி குருக்களால் செய்யப்பட்ட திரவியாகமங் களானவை” ஈண்டு, “அங்க நூலாதியாவும்” என்று குறிக்கப்பட்டன. ஏனை அங்காகமமும் பூருவாகமமும் பரமாகமமாதலின், “அங்கபூவாதி மெய்ந்நூல்” எனப் பிரித்தோதப்பட்டன. இப்பரமாக மங்களைப்போல அவையும் பிரமாணநூல்களாதலின், “அரில்தபத்தெரிந்து” என்றும், அவற்றைத் தெரிந்து அறநெறிக்கட் பயின்று மனந் தூயரானாலன்றி ஒருவர்க்கு நன்ஞானம் வாயாதென்றற்கு இவ்வாறு பிரித்தும் முறை செய்தும் கூறினாரெனவுணர்க. இவற்றின் இயல்புகளை மேருமந்தர புராணத்தும் பதார்த்தசாரத்தும் கண்டு கொள்க. சாதுக்கள் வணக்கம் 56. பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு உருவுக் கேற்ற கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் அனைய ராகிச் சேதியி னெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யாச் சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார். உரை:- பேதுறு பிறவி போக்கும் - மயக்கத்தை யுண்டு பண்ணும் பிறப்பினைக் கெடுக்கும், பெருந்திரு உருவுக்கு - பெரிய அழகிய உருவத்துக்கு, ஏற்ற - ஏற்புடையனவாகிய, கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் - குற்றமில்லாத குணமாகிய அமிழ்தத்தைப் பெய்துவைத்த நன்கலத்தை, அனையராகி - போன்ற வராய், சேதியின் -ஒருவர் தம்மை உறுப்புறுப்பாக அரிந்தாலும், எறியின் - வாளால் போழ்ந்தாலும், சிறந்தது - சிறந்ததாகிய அறமொன்றையன்றி, வேறு சிந்தை செய்யா -வேறே எவ்வகைத் தீய நினைவும் கொண்டறியாத, சாதுவரன்றி - சாதுக்களையன்றி, நமக்கு உலகின் - நமக்கு இவ்வுலகத்தே, சரண் ஆவர் யார் - புகலளிப்பார் யாவர்? ஒருவரும் இல்லை எ-று. காதிகன்மங்களால் மறைப்புண்டு துன்பத்துக்கேதுவாவன செய்தற்கே பெரிதும் இடமாகலின், “பேதுறுபிறவி” யென்றார். சாதுக்களின் திருவுருவமே பிறவியைப் போக்கவல்ல பெருமையும் ஒட்பமும் உடையதென்பர், “பிறவிபோக்கும் பெருந்திருவுரு” என்றார். குணங்களுள்ளும், கோதுறுகுணங்களுள, அவை நன்மக்களில் உயர் நிலைப்பிறப்புக்கும், தேவகதிக்கும் ஏதுவாய் மீட்டும் பிறப் பினைத்தந் தொழிதலின், அவற்றின் நீக்குதற்கு, “கோதறுகுணங்கள்” என்று சிறப்பித்தார். உருவத்தைக் கொள்கல மென்றது போல, குணத்தை அமிழ் தென்னாமையின், இஃது ஏகதேசவுருவகம். “செஞ்சாந்தெறியினும் செத்தினும் போழினும்” நெஞ்சுநிறையழிந்து வெகுளல் முதலியன சாதுக்கட்கு ஆகா என்பார், “சேதியின் எறியின் வேறு சிந்தைசெய்யாச் சாதுவர்” என்றார். வெகுளல் முதலியவற்றை நினைத்தலும் கூடாதென்பார், “வேறு சிந்தைசெய்யா” என்றொழிந் தார். சிறந்தது, இன்னாசெய்த அவர்க்கு இனியவே நினைத்துச் செய்தல், “சிதைந்தின்னாதன செய்தார்க்குமினியவே செய்து, சிந்தைக் கதங்கடிந்தொழுகல்”1 என்றும் பிறரும் கூறுதல் காண்க. ஏகாரம் இசைநிறைத் தற்கண் வந்தது. சண்டகருமன் இருவரையும் தேவிகோயிலில் அரசன்முன் நிறுத்தல் 57. இனையன நினைவின் ஏகும் இளைஞரை விரைவிற் கொண்டு தனையர சருளும் பெற்றிச் சண்டன்அச் சண்ட மாரி முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திடுவான் நிற்பக் கனைகழ லரசன் ஓகை கைம்மிகக் கழறினானே. உரை:- இனையன நினைவின் - இவ்வாறு பஞ்சபரமேட்டி களை நெஞ்சால் வழிபட்டுக்கொண்டு, ஏகும் - செல்லும், இளைஞரை - அபயருசி, அபயமதி யென்ற இளையவர் இருவரையும், சண்டன் - சண்டகருமனான தளபதி, தனை அரசு அருளும் என்று - தன்னை மாரிதத்தனாகிய வேந்தன் பாராட்டி. மகிழ்வன் என்று நினைத்து, விரைவிற் கொண்டு - விரைவாக அழைத்துச் சென்று, அச்சண்டமாரி முனைமுக வாயிற் பீடம் முன்னர் - அந்தச் சண்ட மாரிதேவியின் போர்முனை போலும் திருவாயிலில் உள்ள பலிபீடத்தின் முன்னே, உய்த்திடுவான் நிற்ப - உய்த்து நிறுத்துதற்கு அரசன் குறிப்புநோக்கி நின்றானாக, கனைகழல் அரசன் - ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனாகிய மாரிதத்தன், ஓகை கைம்மிக - மகிழ்ச்சி மிக்கெழவே, கழறினான் - சண்டகருமனை நோக்கிக் கூறுவானாயினன் எ-று. “இனையன நினைவின் ஏகும்” எனவே, இருவரும் மனத்தே இவ்வாறு பஞ்சபரமேட்டிகளை நினைந்து வழிபட்டுச் சென்றமை பெற்றாம்; “வென்றவர் சரணம்மூழ்கி விடுதும் நம்முடலம்” (49) என்று அபயருசி கூறியதும் அபயமதி “நன்றிது செய்கை” என்று மனங்கொண்டாள் ஆதலின், ஈண்டு “நினைவின் ஏகும்” என்பாராயிற்று. முதற்கண், அரசன் சண்டகருமனை நோக்கி மக்களுள் இரட்டையரைக் கொணர்க எனப் பணிப்பான், தான் கருதியவாறு பெறலருமை நினையாது, “மக்களிரட்டையர், ஈடிலாத வியல்பினரிவ்வழி, ஏட சண்டகரும, தந்தீக”(22) என்று ஏவியது, இப்போது அவன் விரும்பியவாறே கொண்டுசெல்லின், அவன் மகிழ்ந்து தன்னை யருள்வன் என இச் சண்டகருமனை நினைப்பித்தது. அரசனது அருள் நோக்கிநிற்றலினாலும், தானே பலி பீடத்திற் கொண்டுய்ப்பின் அரசன் வெகுள்வானா தலினாலும் “பீடமுன்னர் உய்த்திடுவான்நிற்ப” என்றார். அப்பீடத்தே எண்ணிறந்த உயிர்கள் கொலை செய்யப்படுதலின், போர்முனையிடத்தை அதற்கு உவமித்தார். இளையர் இருவரைக் கண்டதும், தான் இடக்கருதிய நரபலி இனிது நடக்குமென்ற உணர்வுபிறத்தலின், “ஓகை கைம்மிக” லாயிற்று. மாரிதத்தன் இருவரையும் பலிபீடத்துய்க்க எனப் பணித்தல் 58. *முனைத்திற முருக்கு மாற்றல் மூரித்தேந் தாரி னாய்நின் வினைத்திற நன்றி யாமே விழைநர பலியீ தற்கின் றினையவர் தம்மைத் தேவி யிரும்பலி யிடத்துய்க் கென்றான் கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே. உரை:- முனைத்திறம் முருக்கும் ஆற்றல் - பகைவர் போர் முனையில் செய்யும் போர்வகைகளைக் கெடுத்தழிக்கும் வன்மையும், மூரித் தேன் தாரினாய் - பெரிய தேன்பொருந்திய மாலையு முடையாய், நின்வினைத்திறம் நன்று - நீ செய்தசெயல் நல்லது, யாம் விழை நரபலி - யாம் இடக்கருதும் நரபலியை, ஈதற்கு - தேவிக்கு ஈயும்பொருட்டு, இனையவர்தம்மை - இவ்விளையோர் இருவரையும், தேவியிரும் பலியிடத்து - அவளுடைய பெரிய பலி பீடத்திலே, உய்க்க என்றான் - கொண்டு நிறுத்துக என்று சொல்லி, கனை கழலரசன் - ஒலிக்கின்ற வீரக் கண்டையணிந்த அந்த மாரிதத்தன், கையில் - தன் கையினிடத்தே, வாள் உருவினான் - உடைவாளை உரையினின்றும் எடுத்து உருவினான் எ-று. சண்டகருமன் தளபதியாதலால், அவன் மகிழுமாறு, அவனுடைய ஆற்றலை விதந்தோதினான். மூரி - பெருமை. தான் விரும்பிய வாறே பலியிடுதற்கேற்ற இரட்டையரை விரைவிற் கொணர்ந்தமையின், “நின்வினைத்திறம் நன்று” என்றான். எனவே, தான் செய்யக் கருதும் வினைத்திறம் தீதென்பதை அவன் நினைந்திலன் எனவறிக. நினையாமைக்கு ஏது இஃதென்பார், “விழைநரபலி” என்றார். நெஞ்சில் விழைவு நிலவுங்கால், நன்று தீது காணும் நல்லறிவு ஆங்குத் தொழிற்படாது. ஈதற்கு என வேண்டாது கூறினான், நெஞ்சில் ஆராய்ச்சியின்மையின் எனவுணர்க. இனையவர், இவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. எண்ணிறந்த உயிர்க் கொலை கண்டும் இருத்தல்பற்றி, பலிபீடத்தை, “இரும்பலியிடம்” என்றார். என்றான், முற்றெச்சம்; பெயர்ப்படுத்து, என்றவனாகிய அரசன் என இயைப்பினுமாம். வாளை மனக்கண்ணாற் கண்டு அஞ்சியும் இளையர்பால் அருள்மிகுந்தும், இனைகின்றாராதலின், ஆசிரியர், “ஐயோ” என்றார். இஃது இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல், அன்னோ என்பதுபோல, இஃது பிற்காலவழக்கு; வீரர், வாளை உறையினின்று கழித்ததும் முதற்கண் அதனை உருவுதல் இயல்பு. பின்னர், பலியீடு தவிர்ந்து போதலின், தனக்குரிய செயல் இல்லாதுபோம் வாள் என்னும் நயம், “கையில் வாள்” என்புழி அமைந்திருத்தல் காண்க. அருகிலுள்ளோர் அரசனை வாழ்த்துமின் என்றல் 59. கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் குணங்கள் தம்மால் இலக்கண மமைந்த மெய்யர் இருவரு மியைந்து தம்நிற்ப நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார் மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். உரை:- இருவரும் கொலைக்களம் குறுகிநின்றும் - இளையர் இருவரும் பலிபீடத்தையடைந்து அதனிடத்தே நின்றாராயினும், குலுங்கலர் - மனநிலை குலையாராய், குணங்கள் தம்மால் - குணங்களாலும், இலக்கணம் - உடலழகாலும், அமைந்த மேனியர் - நிறைந்து பொருந்திய மேனியுடையாராய், இயைந்து நிற்ப - உயிர்கொடுத்தற்கு ஒருப்பட்டு நிற்க, இறை மன்னன் - தங்கட்கு இறைவனாகிய வேந்தன், நிலத்து நெடிது வாழ்க என உரைமின் - நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று சொல்லுமின், என்றார் - என்று அருகே நின்ற தளபதி முதலாயினார் கூறினாராக, மலக்கிலா மனத்தர் குற்றமில்லாத மனத்தினையுடையராகிய இளையரிருவரும், தம் வாய் - தமது வாயிடத்தே, வறியதோர் முறுவல் செய்தார் - சிறியதொரு புன்னகை புரிந்தார்கள் எ-று. எத்துணைத் திட்பமுடைய மனத்தராயினும்,. உயிர்க்கொலை புரியும் இடத்தைக் காணில் அவர் உளத்தே சிறிது அசைவுதோன்றி மெய்ப்பட்டுக் காட்டுமாயினும், இவர்பால் அதுதானும் இல்லை யென்றற்கு, “கொலைக்களங் குறுகிநின்றும் குலுங்கலர்” என்றார். ஒருவரொருவர்க் குளதாகும் தீங்கு குறித்து, “தானாடா விடினும் தன் தசையாடும்” என்பது பற்றி நோக்கினும், சிறிதும் வேறுபடாராயின ரென்றற்கு, ‘இலக்கணம மைந்த மெய்யர்’ என்றார். இயைதல், சாதற்கு உடன் படல். தன்கீழ் வாழ்வார்க்கு முறை செய்பவனாதலின், “இறை” என்றனர். நிலத்திறை மன்னன் என்றே கொண்டு நிலத்தவர்க்கு முறைசெய்தலால் இறைவனாகிய வேந்தன் என்றுரைப்பினுமாம். உயிர்ப்பலியாவார் தேவியால் நயக்கப் படுதலின், அவர் உரை பொய்யாவண்ணம் தேவியருள் புரிவள் என்ற கருத்தால், அருகு நின்றவர், “மன்னன் வாழ்க நெடி தெனவுரைமின்” என்றார்கள். அரசன் செயல் அறமன்மையின் உவவாராயினும், அருகிருந்தவர் கூறும் மடமைமொழி நினைந்து முறுவலித்தனராதலின், “தம் வாயில் வறியதோர் முறுவல் செய்தார்” என்றார். “வாயில்” என்று விதந்த தனால், நகை முதலியன அவித்தொழுகும் அவ்விருவருடைய ஒழுக்கத்தின் விழுப்பம் பெறப்பட்டது; “உயிர்க்கண் நகை முதலாய நாணி ” (28) என்று முன்பே கூறியிருத்தல் காண்க. மலக்கு - அழுக்கு. இருவரும் அரசனை வாழ்த்துதல் 60. மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச் சிறையன பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார். உரை:- வையத்து மறவியின் மயங்கி - தான் உலகுயிர்கட்கு உயிராவதை மயக்கத்தால் மறந்து, உயிர்களை வருத்தம் செய்யாது - அவ்வுயிர்களை வருத்தாமல், அறவியல் மனத்தையாகி - அருளறம் நிறைந்த மனமுடையனாய், உயிர்க்கு - எல்லா உயிர்களுக்கும், ஆர் அருள்பரப்பி - நிறைந்த அருளைச் செய்து, சிறையன பிறவி போக்கும் - உயிர்க்குச் சிறைக்கோட்டம் போல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும், திருவறம் மருவி - சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து, சென்று - ஒழுகி, புகழ்நிறை உலகம் காத்து - அழியாப்புகழை நிறுவி உலகத்தை இனிது காத்தளித்து, நீடுவாழ்க என்று - நெடிது வாழ் வாயாக என்று சொல்லி, நின்றனர் - பலிபீடத்தில் உயிர்கொடுப்பான் நின்றனர் எ-று. மறவிக்கு ஏது மயக்கமாதலின், மயக்கத்தால் மறந்து என மாறிஇயைத் துரைத்தாம். வருத்தம்செய்யாது என்பது ஒரு சொல்லாய் உயிர்களை என்பதற்கு முடியாயிற்று. இரண்டாவதன்கண் நான்காவது மயங்கியதாகக் கொண்டு வருத்தத்தைச் செய்யாது என விரித்துரைப் பினுமமையும். “மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம், அதனால், யானுயிர் என்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே”1 என்பவாகலின், அதனை மயக்கத்தால் மறந்த உலகுயிர் கட்குத் தீங்கு செய்தலாகாது என்றாராயிற்று. அரசன்பால் அறமும் அருளும் இல்லையென்பது அவன் செய்யும் கொலைத்தொழிலால் விளங்குதலின், அவை யுண்டாதல் வேண்டுமென்னும் கருத்தால், “அறவியல் மனத்தையாகி” யென்றும், “ஆருயிர்க் கருள் பரப்பி” என்றும் கூறினார். ஆரருள் எனல் வேண்டிற்று, அறவியல் மனமில்லா தார்பால் இருத்த லின்மையின். “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட் செல்வம் பூரியார் கண்ணுமுள”2 என்பது பொதுமறை முடிபு. ஓரறிவுயிர் முதல் பல்வகையுயிரு மடங்குதற்கு “உயிர்கள்” எனப் பொதுப்படக் கூறினார். செய்தென்னாது, பரப்பி யென்றது, உயிர்களின் பன்மை குறித்து நிற்றல் காண்க. உயிர்க்கு உடல் சிறை போறலின், “சிறையன பிறவி” யென்றார். சினேந்திர தருமம் பிறவிப்பிணி போக்குமென்பதை, “வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்குமெய்யே, நம்பிநல்லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின், கம்பமில் நிலைமையாகித் திருவறங் கைக்கொளென்றேன்”3 என்று பிறரும் கூறுதல் காண்க. புகழ் நிறுத்தற்கு உலகம் இடமாதலின், “புகழ் நிறை யுலகம்” எனல் வேண்டிற்று. நிறைபுகழ் என்றே கொண்டு பெற்றென வொருசொல் வருவித்து முடிப்பினுமாம். இவ்வாறு தாம் கூறிய சொற்கள் அரசன் செவிக்குட் சென்று அவனது மனமயக்கத்தை மாற்றாநிற்க, இவர்கள் கொலைக்குடன் பட்டு நின்றமை தோன்ற, “நின்றார்” என்றார். இருவரையும் கண்ட வேந்தன் தன் மனத்துக்குள் வியத்தல் 61. நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர் நீதி* மன்னன் மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணு ளார்கொல் அன்றியிவ் வுருவ மண்மே லவர்களுக் கரிய தென்னா† நின்றிவர் ‡ நிலைமை தானும் நினைவினுக் கரிய தென்றான். உரை:- நின்றவர் தம்மை நோக்கி - அவ்வாறு நின்ற இருவரையும் கண்ணாரக் கண்டு, நிலைதளர் - நரபலியிடுவது குறித்த மனநிலை தளர்ந்த, நீதி மன்னன் - நீதியைச் செய்யும் வேந்தனாகிய மாரிதத்தன், மின்திகழ் மேனியார் - ஒளிவிளங்கும் மேனியையுடைய இவர்கள், விஞ்சையர்கொல் - வித்தியாதரரோ, விண்ணுளார்கொல் - தேவருலகத்துத் தேவர்களோ, அன்றி - விஞ்சையரும் விண்ணவருமல்லர் மக்களே என்பதாயின், மண்மேல் அவர்களுக்கு - மண்ணின் மேல் வாழும் மக்களுக்கு, இவ்வுருவம் - இவ்வழகிய உருவம், அரியது - எய்துவது இல்லையாம், என்னா - என்றிவ்வாறு நினைந்து, நின்று - அசைவற நின்று, இவர் நிலைமை தானும் - இவரது தன்மையும், நினைவினுக்கு அரியது - நினைத்தற்கு அருமையாகவுளது, என்றான் - என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் எ-று. அபயருசியும், அபயமதியும் கொலைக்குடன்பட்டு நின்றநிலை அரசற்குச் சூழ்ச்சி பயப்பித்தமை தோன்ற, “நின்றவர்” என்று மீட்டும் எடுத்தோ துவாராயினர். இளையோர் நிலைதளராராக, அவரைக் கண்ட மாரிதத்தனே நிலைதளர்ந்தான் என்பார், “நிலைதளர் நிதி மன்னன்” என்றார். இக்கணம்முதல் அவ்வேந்தன் நீதிமானாகும் செந்நெறித் தலைப்படலை ஊழ்கூட்டுதலின், அவ்வியைபுபற்றி, “நீதிமன்னன்” என்று சிறப்பித்தார். சம்மியஞான சம்மிய தரிசனங்களுடன் சம்மிய சாரித்திரமும் உடையராதலின், “மின்திகழ் மேனி யார்” என்றார். விஞ்சையரும் விண்ணவருமல்ல ரெனவும், மக்களாம் எனவும் துணிந்தவழியும், மனநிலை தளர்ந் தொழிந்தானாதலின், மாரிதத்தன், “இவ்வுருவம் மண்மேலவர் களுக்கரியது” என்றும், மேலும் நினைவு செல்லாமையின், “நினை வினுக்கரியது” என்றும் தன்னுட் கூறிக்கொள்வானாயினன். வேந்தன், இருவரும் நகைத்தற்குக் காரணம் என்னென அபயருசி காரணம் கூறல் 62. இடுக்கண்வந் துறவும் எண்ணா தெரிசுடர் விளக்கி னென்கொல் நடுக்கமொன் றின்றி நம்பால் நகுபொருள் கூறு கென்ன அடுக்குவ தடுக்கு மாயின் அஞ்சுதற் பயனின் றென்றே நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்.* உரை:- இடுக்கண் வந்துறவும் - உங்கள் உயிர்க்கே இறுதி வந்திருப்பவும், எண்ணாது - அதனை நினையாதது, என்கொல் - என்ன காரணம், எரிசுடர் விளக்கின் - சுடர் விட்டெரியும் விளக்குப் போல, நடுக்கம் ஒன்றும் இன்றி - நெஞ்சில் சிறிதும் துணுக்கமின்றி, நம்பால் நகுபொருள் - நம்மைப் பார்த்து நீவிர் நகுதற்குரிய காரணம், கூறுக- யாதோ அதனைக் கூறுக, என்ன - என்று மாரிதத்தன் கேட்க, அடுக்குவது - எம்மை வந்தடைய வேண்டுவது, அடுக்குமாயின் - வந்தடையுமானால், அஞ்சுதல் பயன் இன்று - அஞ்சுவதால் பயன் யாதும் இல்லை, என்றே - என்று நினைத்தே, நடுக்கமது இன்றி - மனத்தும் மெய்யிடத்தும் அசைவின்றி, நின்றாம் - நிற்பேமாயினேம், நல்லறத் தெளிவு சென்றாம் - சினேந்திரனுரைத்த நல்லறத்தைத் தெளிய அறிந்திருக்கின்றோமாகலான் எ-று. கொலைவினைக்கு வினைமுதலாகிய தானும், கருவியும், இடமும், காலமும் ஒருங்குதொக்கமையின், “இடுக்கண் வந்துறவும்” என்றும், அதனை எண்ணியவழி எத்திறத்தார்க்கும் உடலில் நடுக்கந் தோன்றுமாதலின், “எண்ணாது” என்றும், இருவரது இளமைக்கும் செயற்கும் ஒவ்வாமையின் “என்கொல்” என்றும் கூறினான். எண்ணா தது எனற்பாலது “எண்ணாது” என நின்றது. காணும் போதே, அவர்தம் மேனியின் ஒளிகண்டு “மின்திகழ் மேனியர்” என்றவன், அஃது இப்போதும் ஒளி குன்றாது திகழ்தலின், “எரி சுடர் விளக்கின்” என்றான். “இடுக்கண்வந்துற்ற காலையெரிகின்ற விளக்குப்போல, நடுக்கமொன்றானுமின்றி நடுக”1 என்றார் தேவரும். உயிரை ஒளியுடைப் பொருளோடு உவமித்தல் நூல்மரபு. “குடங்கையில் விளக் கெனக் கொண்ட, கொண்டதன் உடம்பின தளவுமாம்”2 என்று பிறரும் கூறுதல் காண்க. அவரோடு சொல்லாடுங் கருத்தினனாதலின், அவர் தோற்றுவித்த வறிது நகைக்கு வெகுண்டான் போல், “நடுக்க மொன்றின்றி நம்பால் நகுபொருள் கூறுக” என்றான். அதனைப் பொருள் செய்யாமை தோன்ற, நடுக்கமின்மைக்குக் காரணங் கூறலுற்று, “அடுக்குவதடுக்கு மாயின் அஞ்சுதற் பயனின்றென்றே, நடுக்கமதின்றி நின்றாம்” என்றும், “நல்லறத் தெளிவு சென்றாம்” என்றும் கூறினர். நடுக்கமது என்புழி, அது பகுதிப்பொருட்டாகாது சுட்டு மாத்திரையாய், நடுக்கத்தின் புன்மை தோற்றி நின்றது. இச் செய்யுளால் மாரிதத்தன் மிக்கெடுத்தோதிய இடுக்கண், நடுக்கம் என்ற இரண்டினையும், தாம் இருவரும், மதியாமையும் அதற்கே துவாகிய நல்லறத்தின் பெருமையும் அபயருசி எடுத்துரைத்தானா யிற்று. வருஞ் செய்யுளால் நகுதற்கேது வாயதனை உரைக்கின்றான். இதுவுமது 63. முன்னுயி ருருவிற் கேதம் முயன்றுசெய் பாவந் தன்னால் இன்னபல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த வந்தோம் மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு மாற்றம் என்னதாய் விளையு மென்றே நக்கனம் எம்மு ளென்றான். உரை:- முன் - முன்னைப் பிறப்புக்களிலே, உயிர் உருவிற்கு - உருவில்லாத உயிர்க்கு உருவுபோல் நிலவும் உடம்பு கட்கு, ஏதம் முயன்று - தீங்கு நினைந்து, செய் பாவம் தன்னால் - செய்த கொலை முதலிய பாவத்தால், இன்ன பல்பிறவிதோறும் - இத்தன்மையாகப் பெற்ற பல பிறப்புக்களிலும், இடும்பைகள் தொடர்ந்த - துன்பங்கள் எம்மைத் தொடர்ந்து வந்தன, வந்தோம் - அதனால் இப்பிறப் பெடுத்து வருவோமாயினோம், மன்உயிர்க் கொலையினால் - மிக்க பல உயிர்க்கொலை புரியும் செயல் காரணமாக, இம்மன்னன் வாழ்க - இந்த மாரிதத்தனாகிய வேந்தன் நெடிது வாழ்க, என்னும் மாற்றம் - என்று சொல்லும் அறத்திற்கு மாறான சொல், என்னதாய் விளையும் - எத்தன்மைத்தான பாவத்தை விளைவிக்குமோ, என்றே - என்று நினைத்தே, எம்முள் நக்கனம் - எங்களுக்குள் யாங்களே நகுவே மாயினேம், என்றான் - என்று அபயருசி விடையிறுத்தான் எ-று. உயிர் அருவப்பொருள் என்றும், அஃது எடுத்த உடம்பு தோறும் அவ்வுடம்பளவிற் பரந்து நிறைந்து நிலவுமென்றும், அதன் உண்மை காண்டற்கு உருவமாகிய உடல் கருவியென்றும் கூறுப. அருவப் பொருளாய உயிர்க்கு ஒருவரும் ஒரு தீங்கும் செய்தலாகா மையின், “உயிர்க்குத் தீங்கு செய்தா”னென்றவழி, உயிர் ஆகுபெயராய்த் தனக்கு இடமாயும் உருவமாயும் இருக்கும் உடம்பையே குறித்து நிற்பது குறித்து, “உயிர் உருவிற் கேதமுயன்று” என்றான். முன் உயிருருவில் கேதம் முயன்று என்று பிரித்து, முன்னைப் பிறவிகளில் எடுத்த உடம்பிலிருந்துகொண்டு, பிற வுயிர்கட்குத் தீங்கு செய்ய முயன்று என்று உரைத்தலுமொன்று. முன்னைப் பிறவிகளில் எடுத்த உடம்பிலிருந்துகொண்டு, முன்னைப் பிறவியிற் செய்த பாவப்பயனே பின்னே பல துன்பமிக்க பிறவிகளை யெடுத்தற்குக் காரணமாயிற்று என்பான், “பல் பிறவி தோறும் இடும்பைகள் தொடர்ந்த” என்றும், “வந்தோ” மென்றும் காரிய வாய்பாட்டாற் கூறினான். மன் - பெருமை; ஈண்டு மிகுதி குறித்து நின்றது . மாற்றம் - சொல்; ஆற்றலால், அறத்திற்கு மாறான சொல்லெனப்பட்டது. முன்னைப்பிறவியிற் செய்த பாவம் காரணமாகப் பின்னே மிகப்பல பிறவி பிறந்து பெருந்துன்பமுற்று இப்பிறப்பில் இவ்வாறு வந்தோம்; இனி, இப்பாவம் மேலே எத் துணைப்பிறவி பயந்து துன்புறுத்துமோ என்று நினைந்து நகைத்தேம் என்றானாயிற்று. “எம்முள் நக்கனம்” என்றது, நீ அதனை நின்பால் செய்ததாகக் கருதுவது பேதைமை யென்றானு மாயிற்று. இருவருரையும் கேட்டோர் வியத்தல் 64. கண்ணினுக் கினிய மேனிக் காளைதன் கமல வாயிற் பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். உரை:- கண்ணினுக்கு இனிய - காண்பதற்கு இனிமையா யிருக்கின்ற, காளைதன் - காளையாகிய அபயருசியினுடைய, கமல வாயின் - தாமரைப் பூவைப்போலும் வாயிலிருந்து வந்த, பண்ணினுக்கு இனிய சொல்லை - பண்ணிசையை யொத்த இனிமை வாய்ந்த சொற்களை, படியவர் - பலிபீடத்தின் கீழே நின்ற மக்களனைவரும், முடியக்கேட்டு - முற்றவும் கேட்டிருந்து, அண்ணலுக்கு - அண்ணலாகிய அபயருசிக்கு, ஆண்மை அழகிது - இத்திண்மை அழகியதேயாகும், அழகினுக்கு அமைந்ததேனும் - இவன் பெற்றுள்ள அழகுக்கும் இவ்வாண்மை நன்கு அமைந்திருக்கின்ற தென்றாலும், பெண்ணினுக்கு அரசி - மங்கையர்க்கு அரசி போல விளங்குகின்ற அபயமதி யின், ஆண்மை - மனத்திட்பம், பேசுதற்கு அரியது - சொல்லும் தரத்தன்று, என்றார் - என்று தம்முள் பேசிக்கொள்வாராயினர் எ-று. எனவே, ஈண்டு நாம் வேறு கூறுவது வேண்டாவென்பது குறிப்பெச்சம். “அண்டல ரெனினும் கண்டா லன்புவைத் தஞ்சும் நீரார்” (29) என்று இவர்தம் மேனியழகை முன்பே சுருக்கமாய்க் கூறினாராதலின், அம்முறையே “கண்ணினுக்கினிய மேனிக்காளை” என்றார். பலி பீடத்தின் மேலேயிருந்து அபயருசிகூற, கீழே தரைமீது நின்றவர் அவன்கூறியன முற்றும் செவியாரக் கேட்டமை தோன்ற, “பாடியவர் முடியக் கேட்டே” என்றார். ஆண்மை - திண்மை; ஈண்டு அஞ்சாமையைச் சுட்டிநின்றது. சிறப்புடைய ஆண்மகனாதலின், அபயருசிபால் அழகும் ஆண்மையும் விளங்கித் தோன்றுவதில் வியப்பில்லை; மண்ணுலகத்து மகளிரனைவர்க்கும் கற்புப் பொற்பு முதலிய நற்பண்பு களெல்லாவற்றாலும் மேம்பட்டு நிற்கும் அபய மதியின் மென்மைத் தன்மையை நோக்கினார்க்கு அவளது மனத் திண்மை பெருவியப்பைப் பயந்தமையின் “பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற்கரிய” தென்றார். மாரிதத்தன் முன்னைப்பிறவி வரலாறு கூறுக எனக் கேட்டல் 65. மன்னனும் அதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி என்னைநும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில் என்னை நீ ரினைய ராகி வந்ததும் இயம்பு கென்றான். உரை:- மன்னனும் - மாரிதத்தனாகிய வேந்தனும், அதனைக் கேட்டு - அபயருசி கூறியதைக்கேட்டு, மனம் மகிழ்ந்து - மனத்தில் களிப்புற்று, இனியனாகி - அன்புடையனாய், நும் - உங்களுடைய, முன்னர் பிறவி இறந்தன என்னை - முற்பிறப்புக்களுள் கழிந்தனயாவை, பிறந்து நின்ற - நீவிர் பிறந்திருக்கும், மன்னிய குலனும் என்னை - நிலைபெற்ற குலம் யாது, வளர் இளம்பருவம் தன்னில் - மேலும் வளர்தற்குரிய இளமைப்பருவத்தே, நீர் இனையராகி வந்ததும் என்னை - நீவிர் இத்தன்மையையுடையராய் வந்தது எதற்காக, இயம்புக - எனக்குச் சொல்வீராக, என்றான் - என்று அவ்விருவரையும் கேட்டான் எ-று. தான் குறித்த பொருளை நன்கு வகுத்து ஒன்றும் விடாது விடையிறுத்த அபயருசியின் சொற்றிறங்கண்டு, தன் கருத்து மாறி அன்பு செய்யத் தொடங்கினானாதலின், “கேட்டு மனமகிழ்ந்தினியனாகி” என்றார். இனியனாதல், மனத்தன்பினை மலர்ந்த முகத்தால் இனிமையுறக் காட்டல். முன்னைப் பிறப்பும் இம்மையில் பிறந்த குலமும் இளமைக் கண் துறவுபூண்ட காரணமும் அறியும் வேட்கை யனாதலின், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து வினவலுற்றான். இருவரது இறமைச் செவ்வியைக் காணுந்தோறும் அவன் கருத்து அவன்பால் நெகிழ் தலினாலும், துறவுநிலை வியப்பை மிகுவித்து உண்மையறியக் கடவுதலினாலும், “வளரிளம் பருவந்தன்னில் என்னை நீர் இனையராகி வந்தது” என்றான். இளமையினை “வளரிளம் பருவம்” என்றான். துறவுக் கோலத்தை “இனையராகி என்றும் கூறினான், மேன்மேலும் வளர்ச்சிக்குரிய இளமைக்கண் துறவு பொருந்தா தென்பது தன் கருத்தாதல் தோன்ற. அருள் நிலவிய உள்ளத்துடன் கேட்க என அரசற்கு அபயருசி கூறல் 66. அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால் மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற் சென்று பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல் அருளியல் செய்து* செல்க ஆகுவ தாக என்றான். உரை:- புரவல - அரசே, அருளுடைமனத்தராகி - அருள் பொருந்திய மனமுடையவராய், அறம் புரிந்தவர்கட்கு அல்லால் - நல்லறத்தைச் செய்பவர்க்கன்றி, மருள் உடை மறவருக்கு - மயக்கம் பொருந்திய நெஞ்சினையுடையராய் உயிர்க்கொலை முதலிய பாவத்தைச் செய்பவர்க்கு, எம் வாய்மொழி - யாம் உரைக்கும் மெய்ம் மொழிகள், மனத்திற்சென்று - மனதிற்படிந்து, பொருள் இயல்பாகி நில்லா - அவர் விரும்பும் பொருளாய் நிலைபெறா வாதலால், கருதிற்றுண்டேல் - இவ்வறவுரையை நீ கேட்கக் கருதினையாயின், அருள் இயல் செய்து - நெஞ்சில் அருள் நிலவப் பண்ணிக் கொண்டு, செல்க - கேட்டு அறநெறியே ஒழுகுவாயாக, ஆகுவதாக - வரக்கடவது வருக அது குறித்து நீ கவலல் வேண்டா, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. அது குறித்து என்பது முதலாயின கூற்றெச்சம். புரிதல், எப்பொழுதும் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் செய்தல். அருளறம் பூண்ட வர்க்கன்றி நின்போல் கொலைமேற்கொண் டொழுகுவோர்க்கு எம்முரை பொருளாகத் தோன்றா என்றற்கு, “எம்வாய்மொழி மனத்திற் சென்று பொருளியல்பாகி நில்லா” என்றான். மருளுடை மறவர் எனப் பொதுப்படக் கூறினானாயினும், மாரிதத்தன் அதனை முன்னிலைப்புற மொழியாகக் கொள்வானாவது கருத்தென்க. மாரிதத் தன், தான் கூறலுறும் அறத்தைக் கேட்டற்கு வேட்கையுடையனாதலை அவனுடைய குறிப்புக்களால் அறிந்தானாயினும், “மருளுடை மறவ”னாதல்பற்றி, “கருதிற்றுண்டேல்” என்றான். தான் கூறுதற்குமுன், பலியீடு குறித்து ஆங்கு நிறுத்தப் பெற்றிருக்கும் உயிர்களைக் கொல்வது தவிர்த்தல் வேண்டியும், தான் கூறவிருக்கும் அறத்தைக் கேட்டற்கு அவன் மனம் செம்மையுடைத்தாதல் வேண்டியும் “அருளியல்செய்து செல்க” என்றும், பலியீடுநிற்பின் சண்டமாரியால் தீங்கு நிகழும் என்பது நினைந்து ஒருகால் அரசன் மயங்குவன் என்பதையுட்கொண்டு, வரக்கடவது வந்தேதீரும், அதனைத்தவிர்த்தல் தேவர்க்கும் ஆகாதென் பான், “ஆகுவதாக” என்றும் கூறினான். மாரிதத்தன் அருள் நிலவும் மனத்துடன் பணிந்து கேட்டல் 67. அன்னணம் அண்ணல் கூற அருளுடை மனத்த னாகி மன்னவன் தன்கை வாளும் மனத்திடை மறனும் மாட்றிறி இன்னினி யிறைவன் நீயே யெனக்கென இறைஞ்சி நின்று பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். உரை:- அன்னணம் அண்ணல் கூற - அவ்வாறு அண்ணலாகிய அபயருசி கூறலும், மன்னவன் - அரசனாகிய மாரிதத்தன், தன் கைவாள் மாற்றி - தன்னுடைய கைவாளை உறையில் செருகிக் கொண்டு, மனத்திடை - மனத்தின்கண் நிலவிய, மறனும் மாற்றி - பாவக்கருத்தையும் மாற்றி,அருளுடை மனத்தனாகி - அருள் நிலவும் மனமுடையனாய், இன்னினி - இப்பொழுது, எனக்கு இறைவன் நீயே - எனக்கு அறமுரைக்கும் ஆசிரியன் நீயே யாவாய், என - என்றுரைத்து, இறைஞ்சி நின்று - அவனை வணங்கி நின்று, குமர - குமரனே, நுங்கள் பவத்தொடு பரிவும் பன்னுக - உங்களுடைய முன்னைப்பிறவி வரலாறும் அப்போது நீவிர் உற்ற துன்பமும் உரைப்பாயாக, என்றான் - என்று வேண்டினான் எ-று. கைவாளை உறையில் மாற்றியது மனத்திடை மறத்தை மாற்றியதைத் தோற்றுவித்த தாயினும், அம்மறம் மீட்டும் தோன்றாவகை யவித்தற்கு, “அருளுடை மனத்த” னானானென்றார். இவ்வண்ணம் அருள்மேற் கொண்டவன், அறங்கேட்டற்கு உள்ளம் சேறலின், “இன்னினி இறைவன் நீயே எனக்கு” என்றான்; இறைவன் நீயே என வாயாற் சொல்லியதைச் செயலிலும் மெய்ப்பிப்பான், “இறைஞ்சி ” நின்றான் என்க. முன்னர், “மன்னுயிர்க் கொலையினாலிம் மன்னன் வாழ்கென்னு மாற்றம், என்னதாய் விளையுமென்றே நக்கனம்” (63) என்று அபயருசி கூறியசொல், நெஞ்சில் நின்று கொலைப்பாவத் தின் பயனறிதற்கண் வேந்தனை முடுகுதலின், “பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்” என்றார். இறைவவென்னாது, குமர வென்றான், இறைவனாகக் கருதும் கருத்தினும், குமரனாகக் கண்டு கொண்ட கருத்து ஊறியிருத்தலின். “இனியினி என்பது இன்னினி என மருவிற்று, “இன்னினி வாராமாறு கொல்”1 என்றாற்போல. அபயருசி கூறத் தொடங்கல் 68. மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்க பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவ தேபோல் அன்னமென் னடைய னாளின் அருகணைந் துருகும் வண்ணம் மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான். உரை:- மேகம் - மேகமானது, மின்னொடு தொடர்ந்து - மின்னலுடன் கூடி, மேதினிக்கு ஏதம் நீங்க - நிலத்திலுள்ள உயிர்களின் துன்பம் நீங்குமாறு, பொன்வரை முன்னர் நின்று - பொன்மலையின் முன்பு நின்று, புயல் பொழிந்திடுவதுபோல் - மழையைப் பெய்வது போல், அன்னமெல்நடையனாளின் - அன்னம்போல மெத்தென்ற நடையினையுடைய அபயமதியின்; அருகு அணைந்து - அருகிற் சென்று, உருகும் வண்ணம் - கேட்போர் நெஞ்சு நீராய் உருகுமாறு, மன்னவகுமரன் - அரசகுமரனாகிய அபயருசி, மன்னற்கு - மாரிதத் தனுக்கு, அறமழை - அறவுரை யாகிய சொற்பொழிவை, பொழிய லுற்றான் - நிகழ்த்தத்தொடங் கினான் எ-று. அபயமதியையும் சேரவுவமம் செய்தலின், மின்னொடு “தொடர்ந்து” என்றார். “பொன்வரை முன்னர்” என்றது, மாரிதத்தன் முன்னர் நின்றதையுட்கொண்டு. நடையனாள், நடையினாள் போல இன் பெறாது அன்பெற்று முடிந்தது. அருகணைந்து எனவே, இருவரும் இதுகாறும் தனித்தனி வேறு நிறுத்தப்பட்டிருந்தமை பெற்றாம். அபயருசி அரசகுமரனே யாதலின், “மன்னவ குமரன்” என்றார். யசோமதி யரசனுக்கும் அவன் மனைவி புட்பாவலிக்கும் பிறந்த இரட்டைமக்களாதலை, “அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன்னுருசி தங்கை, யன்னமென்னடையினாளு மபயமுன்மதியென்பாளாம்”1 என்பதனாலறிக. அறவுரையை மழை யென்றமையின், “பொழியலுற்றான்” என்றார். அபயருசி நிரைசெய்து கூறுவல் என்றல் 69. அரைசநின் னகத்து மாட்சி யதுபெரி தழகி தாயிற் றுரைசெய்தா லுறுதி யாய துணர்ந்துகொண் டுய்தி* போலும் விரைசெய்தார் வரைசெய் மார்ப † வினவிய பொருளி தெல்லாம் நிரைசெய்தே புகல்வன் யான்நீ நினைவொடு கேளி தென்றான்.‡ உரை:- அரைச - அரசே, நின் அகத்து மாட்சியது - நின் மனத்தின் மாண்பானது, பெரிது அழகியதாயிற்று - மிகவும் அழகாகவுளது, உரைசெய்தால் - யாம் எம் முன்னைப் பிறவி வரலாற்றைச் சொல்ல லுற்றால், உறுதியாயது - நினக்கு உறுதியாகும் பொருளினை, உணர்ந்து - தேர்ந்தறிந்து, கொண்டு - அதனையே மேற்கொண்டு, உய்திபோலும் - உய்திபெறுவாயாக, விரை செய்தார் - மணம் கமழும் மாலையணிந்த; வரை செய் மார்ப - மலைபோலும் மார்பையுடையோய், வினவிய பொருள் இது எல்லாம் - நீ கேட்ட இப்பொருள் அனைத்தையும், யான் நிரைசெய்து புகல்வன் - யான் வரிசைப்படுத்தி முறையாக வுரைப்பேன், நினைவொடு - ஒரு முகமான கருத்துடன், இதுகேள் - இதனைக் கேட்பாயாக; என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. அரைச. மொழியிடைப்போலி. “இன்னினி இறைவன் நீயே எனக்கு” (67) என்று வாயாற் சொல்லி, மெய்யால் “இறைஞ்சி நின்று,” முன்னைப் “பவத்தொடு பரிவும்” மொழிக என்று வேண்டியது கண்டு, அபயருசி மனம் கனிந்து அரசன் கேட்டது கூறலுறுகின்றானாக, அவ்வரசனது மனவேட்கையின் மிகுதி அவன் முகத்தே திகழக்கண்டு பாராட்டுவானாய், “நின் அகத்து மாட்சியது பெரிது அழகிதாயிற்று” என்றும், முன்னைப் பவமும் பரிவும் மொழிந்து செல்லுங்கால் இடையிடையே உறுதியாய பொருள்கள் விரவிவருமாதலின், அவற்றை அறிவால் தேர்ந்து மேற்கொண்டு உய்தல் வேண்டும் என்பான், “உறுதியாய துணர்ந்து கொண்டுய்தி” என்றும் கூறினான். போலும், உரையசை; இதனை வடநூலார் வாக்கியாலங்காரம் என்ப. விரைசெய்தார் வரை செய்மார்ப என்பது இணை எதுகை தார்மார்ப, வரைசெய் மார்ப என இயையும். இதற்கப் பிறவாறும் கூறுப. நிரை செய்துரையாவழி, இடையிடையே விரவப்படும் உறுதிப் பொருள்கள் இனிது தேர்ந்து கொள்ளப் படாவாதலின், “நிரை செய்தே புகல்வன்” என்றான், ஏகாரம், தேற்றம். உறுதியாய கேள்வியால் தோட்ட செவியனல்லனாதல் தோன்ற, “நினைவொடு கேள்” என வற்புறுத்தினான். கேள்வியாலாம் பயன் கூறல் 70. எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார் அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும் மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை யெய்துஞ் செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. உரை:- வேந்தே - அரசே, இதனை எவ்வளவு கேட்பார் - யாம் கூறும் இவ்வறவுரையை ஒருவர் எவ்வளவு கேட்கின்றாரோ, இருவினை கழுவும் நீரார் - அவர் இருவகை வினைகளாகிய அழுக்கினைக் கழுவிக்கொள்ளும் தன்மையுடையராவர், அவ்வளவு - அவ்வளவும், அவருக்கு ஊற்று செறித்து - அவருக்கு உறுகின்றன வாகிய - ஊற்றுகளையும் அடைத்து, உதிர்ப்பை உடன் ஆக்கும் - நன் ஞானத்தைப் பெறுவிக்கும், மெய்வகை தெரிந்து - உயிர் முதலிய தத்துவக் கூறுகளை யாராய்ந்து, மாற்றை வெருவினர் வீட்டை - உலக வாழ்க்கையை யஞ்சித் துறவுபூண்டோ ரெய்தும் வீடு பேற்றினை, எய்தும் - எய்தக் கூடிய, செவ்வியராகச் செய்து - தகுதியுடையராக்கி, சிறப்பினை நிறுத்தும் - முத்திச்சீவனாகிய சிறப்பை நிலைபெறுவிக்கும் எ-று. இச்செய்யுகளால், இவ்வறங்கேட்டலால் வரும் பயன் கூறுகின்றானாதலின், “எனைத்தானும் நல்லவை கேட்க அனைத் தானும் ஆன்ற பெருமை தரும்”1 என்ற கருத்தையுட்கொண்டு, முதற்கண் இக்கேள்வி இருவினைகளாகிய அழுக்கைக் கழுவித் தூய்மை செய்து கொள்ளும் தகுதியை யுண்டுபண்ணும் என்றற்கு, “கேட்பார் இருவினை கழுவும் நீரார்” என்றான். ஊற்று - இருவினையும் உயிரையுறுவது; உறுவது, ஊற்று - இரும்பைப் பழுக்கக் காய்ச்சிய விடத்து அதனிடத்தே உற்றுத்தோன்றும் நீர்போல உயிரிடத்தே இருவினையும் தோன்றுதலால் ஊற்றாயிற் றென்பர், “ஓதிய விரண்டும் (நல்வினை தீவினைகள்) உயிரினை யுறுதல், ஊற்றாம், தாதுறக் காய்ந்த போழ்தில் தானுறும் நீரை யொத்தே”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. இஃது ஈனம், அதிகம், ஈராபதகம், சாம்பராயம், ஞானம், அஞ்ஞானம், புண்ணியம், பாவம், தவியம், பரிணாமம் எனப் பத்து வகையாகும். இவ்வூற்றுக்கள் தவத்தால் அடைக்கப் படுவனவாம்; “ஊனந்தீர்தவத்தினூற்றுச் செறித்த மாதவனை யேத்தி”3 என வருதல் காண்க. அடைத்தலாவது குப்தி, சமிதி, தருமம், சிந்தை, அடக்கம், தாபனம் என்பனவற்றால் “பரிசை வெல்லும் தன்மை”4 என்பர். இவற்றுள் அடக்கம், தாபனம், பரிசை வெற்றி என்ற மூன்றும், நன்னினைவு, நல்லுணர்வு இரண்டும்கூடி முத்தி நிலையை யுண்டுபண்ணும் என்பவாகலின், “ஊற்றுச் செறித்துடன் உதிர்ப்பை யாக்கும்” என்றான். அடைப்பு, செறிப்பெனப் படுதலின், ஊற்றுச் செறிப்பு உதிர்ப்பை யாக்கும் என்றானாயிற்று, “நின்ற வந்தத்தின் மூன்றும். (அடக்கம் முதலிய மூன்றும்) நினைப்பு உணர்வு உதிர்ப்பை யாக்கும்” என்று பிறரும்5 கூறுதல் காண்க. இவற்றின் விரிவெல்லாம் பதார்த்த சாரம் மேருமந்தரபுராணம் முதலிய நூல்களுட் கண்டு கொள்க. உலக வாழ்வின் பொய்ம்மையும் முத்தி வாழ்வின் மெய்ம்மையும் வேறுபடுத்து நோக்குமிடத்து, உடலோடு கூடிச் செய்யும் உலக வாழ்வு துன்ப ஏதுவாவது தோன்றுதலின், அறிவுடையோர் முத்தி வாழ்வைத் தெரிந்துணர்ந்து, உலக வாழ்விற்கு அஞ்சித் துறவு பூண்டு வீட்டு வாழ்வை உரிமை செய்துகொள்வர் என்றற்கு, “மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர்வீட்டை” யென்றான். மெய்வகை தெரியாதார் உலக வாழ்வில் துன்பமும், தெரிந்தார் வீட்டு வாழ்வில் இன்பமும் நுகர்வர் என்ற கருத்தேபட, “மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டு மாம், சென்ற தத்துவந்தெளியாமை தேறலால்”1 என்று வாமன முனிகளும் உரைத்தல் காண்க. மெய் - தத்துவம். வீட்டின்ப வாழ்வை நோக்க, உலக வாழ்வு துன்பமாய் மாறுபட்டிருத்தலின் “மாற்று” என்று சமண் சான்றோர் கூறுகின்றனர். வீட்டுயிரின் சிறப்பாவது, “வெவ்வினையெண்மையின், கேட்டில் எண்குண மெய்தியோர் கேடிலா, மாட்சியால்”2 உலகந்தொழ விளங்குவது. கேட்பதனால் உளதாம் பயன் தெரியாவழிக் கேட்போர்க்குக் கேள்விக்கண் மனம் செல்லாது என்னும் கருத்துப்பற்றி இவ்வளவும் அபயருசி தொகுத்துக் கூறினானென வுணர்க. இதுவுமது 71. மலமலி குரம்பை யின்கண் மனதெழு விகற்பை மாற்றும் புலமலி போகத் தின்கண் ணாசையைப் பொன்று விக்கும் கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோலச் சிலைமலி நுதலி னார்தங் காதலில் தீமை செய்யும். உரை:- மலம் மலி குரம்பையின்கண் - (மேலே கூறிய கேள்வி) மலம் நிறைந்த உடம்பின்கண்ணதாகிய, மனத்து எழு விகற்பை மாற்றும் - மனத்தில் எழுகின்ற திரிபுணர்ச்சிகளைப் போக்கி உண்மையுணர்வு களாக்கும், புலம் மலிபோகத்தின்கண் - ஐம்புலன்களாலும் நுகரப்படும் நுகர்ச்சிக்கண் உண்டாகும், ஆசையைப் பொன்றுவிக்கும் - ஆசையைக் கெடுத்து வீட்டின் பத்தில் வேட்கை நிகழப் பண்ணும், கொலை மலி கொடுமை தன்னைக் குறைத்திடும் - கொலை முதலிய தீவினைக் கேதுவாகிய தீயவுணர்ச்சிகளைத் தழையாவாறு வெட்டி வீழ்த்தும், கோலச் சிலைமலி நுதலினார் தம் காதலின் - அழகிய வில்போலும் புருவத் தினையுடைய மகளிர்பால் உண்டாகும் காமவிச்சைக்கு, மனத்தில் தீமை செய்யும் - மனத்திடத்தே கொடிய வெறுப்பினை யுண்டு பண்ணும் எ-று. மலம், அழுக்கு, குரம்பை, உடம்பு; “பொல்லாப் புழுமலி நோய் புன் குரம்பைப்”1 என்று ஒளவையாருங் கூறுதல் காண்க. இவ்வுடம்பை இடமாகக் கொண்ட மனம், பொருள், இடம், காலம், பாவம், பவம், உருவம், பெயர் என்ற இவற்றால் திரிபுணர்ச்சி கொள்வதாதலின், அவ்வுணர்ச்சி இவ்வறவுணர்வால் செம்மை யெய்தும் என்றற்கு, “மனத்தெழு விகற்பை மாற்றும்” என்றான். போகத்தின்கட் பிறக்கும் ஆசை ஒன்று பலவாய்ப் பெருகிப் பிறவிக் கேதுவா தலின், “அசையைப் பொன்றுவிக்கும்” என்றான். விகற்பவுணர்வும், போகத்தின்கண் ஆசையும் கொலை முதலிய பெருந்தீவினையாகிய மரத்தை வளர்த்து மேலும் பல வினைகளாகிய கனிவகைகளை விளைவித்தல் பற்றி, “குறைத்திடும்” என்றான். மகளிர் பால் உண்டாகும் காம விச்சை மனத்தின்கண்ணதாகலின், அவ்விடத்தே ஏழாதவாறு கெடுத்தழிக்கும் என்றற்குத் “தீமை செய்யும்” என்றான். நுதல் - ஆகுபெயர். நெற்றிக்கே யுரைப்பினுமாம். இதுவுமது 72. பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லால்* இறந்தனர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென் றறைந்தன †ரறிவில் லாமை யதுவிடுத் தறநெ றிக்கண் சிறந்தன முயலப் பண்ணும் செப்புமிப் பொருண்மை யென்றான். உரை:- பிறந்தவர் - மண்ணில் உடம்பொடு பிறந்தவர்கள், பெறுபயன் - பெறுதற்குரிய நலங்களை, முயற்சியால் - தத்தம் முயற்சியினால், அடைவர் என்று - பெறுவார்கள் என்றும், அல்லால் - அல்லாமலும், இறந்தனர் பிறந்ததில்லை என்று - இறந்தவர்கள் பிறந்தது கிடையாதென்றும், இருவினைதானும் இல் என்று - இருவினை என்பவைகளும் இல்லையென்றும், அறைந்தனர் - சொல்பவர்கள், அறிவில்லாமை அது விடுத்து - அவ்வாறு தாம் சொல்வதற்கேதுவாகிய அறியாமையைப் போக்கி, அறநெறிக்கண் - அறநெறியின் கண்ணே செலுத்தி, சிறந்தன - வீடுபேற்றுக் குரிய வற்றைக் குறித்து, செப்பும் இப்பொருண்மை - யாம் இப்போது சொல்லுகின்றதாகிய இவ்வறப் பொருள், முயலப்பண்ணும் - முயற்சி செய்விக்கும் எ-று. இப்பொருண்மை, அறிவில்லாமை விடுத்து, அறநெறிக்கண் செலுத்தி, சிறந்தன முயலப்பண்ணும் என்று முடிக்க. செலுத்தி, யென்பது எஞ்சி நின்றது. இப்பொருளின் தன்மை இது வென்பான், பொருண்மையென் றொழிந்தான். அறைந்தவர் தாமே அறியாமை விடுத்து அறநெறிக்கண் நின்று சிறந்தன முயலுமாறு செய்யு மென்றுமாம். வினைத்தொடர் பென்ப தொன்று வேண்டா, பிறந்தவர் பெறும் பயனுக்கு அவர் முயற்சியே காரண மென்பார், “முயற்சியாலே பெறுபயனடைவ” ரென்கின்றனர். மறுபிறப்பில்லை, இருவினையில்லை என்பன முதலாயின பிறர் கூறுவதைக் கொண்டு கூறியனவாம். என்று என்பது எங்கும் கூட்டப்பட்டது. “வினைபகை யென்றிரண்டினெச்சம்”1 என்புழிப்போல. தான் அறமுணர்ந்த வரலாறு கூறல் 73. அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப் பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட திறப்பவு மதன்கண் தேற்றம் இனிதுவைத் திடுமி னென்றான் உறப்பணிந் தெவரு முள்ளந் துவந்தனர் கேட்க லுற்றார். உரை:- அறப்பொருள் விளைக்கும் காட்சி - யான் கூறும் அறமாகிய பொருள் விளைவிக்கும் பயனை, அருந்தவர் அருளிற்றன்றி - அரிய தவத்தையுடைய முனிவரர்கள் உரைத் தருளியதனாலுமன்றி, பிறப்புணர்ந்ததனின் - பழம் பிறப்பு வரலாறுகளை யறியு மறிவு டைமையால், யாமே - எம்மால் பெயர்த்தும் உணர்ந்திடப்பட்டது - மறுபடியும் உணரப்பட்ட தாகும், அதன்கண் - அதனால் அவ்வறப் பொருளின்கண், தேற்றம் - கருத்தை, இறப்பவும் - மிகவும் தெளிவாக, இனிது வைத்திடுமின் - இனிது வைத்துக் கேட்பீராக, என்றான் - என்று அபயருசி கூறினானாக, எவரும் - ஆங்கிருந்த யாவரும், உறப்பணிந்து - மிகவும் பணிந்து, உவந்தனர் கேட்கலுற்றார் - விருப்பத்துடன் கேட்பாராயினர் எ-று. அறமாகிய பொருளால் விளையும் பயன் கருவிகளால் காணப்படுதலின் காட்சி யெனப்பட்டது. கோழியாயிருந்த காலத்து அகம்பன முனிகளும், இரட்டையராய்ப் பிறந்தபின் சுதத்த முனிகளும் பழம்பிறப்பினை யுணர்த்தினமையின், “அருந்தவர்” என்றான். திருவறம் உணர்ந்து திருந்திய அறிவின ரானபோது தாமாகவும் உணர்ந்து கொண்டது என்பான், “பெயர்த்துணர்ந்திடவும் பட்டது” என்றான். உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. இறப்பவும் இனிது என்பன வன்புறை குறித்து நின்றன. இவ்வாறு உபதேச முகத்தாலும் காட்சி வகையாலும் உணர்ந்தது எனவே, யாவர்க்கும் அப்பொருளைக் கேட்டற்கு நாட்ட முண்டாயிற்றென்பார், “உறப்பணிந்து எவரும் உள்ளத் துவந்தனர் கேட்கலுற்றார்” என்றார். உவந்தனர், முற்றெச்சம். அரசன் முதல் ஆங்கிருந்த மக்களனைவரும் என்றற்கு “எவரும்” என்றார். முதற் சருக்கம் முடிந்தது. இரண்டாவது சருக்கம் இப்பகுதிக்கண், அவந்திநாட்டு உஞ்சயினி நகரத்தே அசோகன் என்னும் வேந்தன் சந்திரமதியென்பாளை மணந்து யசோதரனென்னும் மகனைப்பெற்று இனிதிருப்பதும், அவன் ஒருகால் தனக்கு நரையுண்டானது கண்டு வருந்தி, யசோதரனை அரசனாக்கிவிட்டுத் தவமேற் கொள்வான் குணதரனென்னும் முனிவன்பால் அறங்கேட்டுத் தவம் புரிந்திருப்பதும், யசோதரன், அறத்தை நெகிழ்த்துப் பொருளின்பங்களில் தோய்ந்து கிடப்பதும், அவற்கும் அவன் மனைவி அமிர்தமதியென்பாட்கும் யசோமதியென்னும் மகன் பிறந்திருப்பதும், சில யாண்டுகட்குப்பின் ஒருநாள் அமிர்தமதி கணவனோடு பள்ளியில் கண்ணுறங்குபவள், அட்டபங்கனென்னும் யானைப்பாகனொருவன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணைப் பாடக்கேட்டு மனமுருகி அவன் பாற் கள்ளக் காமங் கொள்வதும், குணவதி என்னும் தோழி பலவாறு எடுத்தோதி அவள் செயலை விலக்கவும், அமிர்தமதி ஏலாது, அட்டபங்கனைக் கூட்டுவிக்க வேண்டுமென அக்குணவதியை வற்புறுத்துவதும், அவள் இசைந்து சென்று அட்டபங்கனை மதியுடம் படுப்பதும், அமிர்தமதியும் அட்டபங்கனும் கள்ளக்காம நுகர்ச்சி பெற்றுவருவதும், அவட்கு யசோதரன்பால் முனிவு முறுகுவதும், அரசன் ஐயுற்று அவளது கள்ளவொழுக்கத்தை யறிந்து முதற்கண் கொலை புரிய நினைந்து பின் மாறுவதும், அரசவைக்கண் அமிர்த மதியுடன் அசதியாடிக் கறிப்புரையால் இகழ்வதும், தனக்குள்ளே மகளிர்போகமும் அரசியற்போகமும் வெறுத்து, அமிர்தமதியின் கள்ளவொழுக்கத்தை ஒரு கனவின்மேல் வைத்துத் தாயாகிய சந்திர மதிக்கு உரைப்பதும், அவள் சண்டமாரிக்கு உயிர்ப்பலி தந்து வழி பட்டுக் கனவுகாட்டிய தீங்கு ஒழிக என்பதும், அவன் உடன்படா தொழிவதும், அவள் சினந்து மாவினால் கோழியொன்று செய்து பலியிட்டுவழி படுகவென்பதும், அவன் அவ்வாறே செய்தபோது மாக்கோழி உயிருடையதுபோல் கூவி விழுதலும், அவன் வருந்தித் துறவு பூண்பதும், அமிர்தமதி அவனுக்கும் சந்திரமதிக்கும் நஞ்சுணவு தந்து கொல்வதும், இருவரும் விலங்குகளாய்ப் பிறப்பதும், யசோமதி அரசனாதலும் பிறவும் கூறப்படுகின்றன. அவந்திநாட்டு உஞ்சயினி நகரம் 74.வளவயல் வாரியின் மலிந்த பல்பதி அளவறு சனபத மவந்தி யாமதின் விளைபய னமரரும் விரும்புநீர் மைய துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. உரை:- வளவயல் வாரியின் - வளவிய வயல்களாகிய வருவாயால், மலிந்த - செல்வம்நிறைந்த, பல்பதி - பலநகரங்கட்கு இடமாகிய, அவளறு சன பதம் - அளவில்லாத மக்களையுடை நாடு, அவந்தியாம் - அவந்திநாடாகும், அதின்விளைபயன் - அதன்கண் வாழ்வார்க் கெய்தும் போகம், அமரரும் விரும்பும் நீர்மையது - தேவரும் விரும்பத் தக்க தன்மைத்தாகும், ஒரு நகர் உளது - அந்நாட்டிற்குத் தலையாய நகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று பெரியோர் கூறுவார்கள் எ-று. வயல்வளத்தால் மிக்க விளைபொருளும், அதன் வாயிலாகப் பெருஞ்செல்வமும் பெருகுதலின், வளவயலை “வாரி” யென்றார். வாரி, வருவாய்; “புயலென்னும் வாரி” (14) என்ற திருக்குறட்குப் பரிமேலழகியார் கூறும் உரை காண்க. சனபதம், நாடு. உம்மை, சிறப்பு. அஃதென்னல் வேண்டும். ஆய்தம் - விகாரத்தால் தொக்கது. உஞ்சயினி, வடசொற்சிதைவு. என்ப வென்றதனை அசையாக் கினுமமையும். நாட்டரசன் அசோகன் எனல் 75.கந்தடு களிமத யானை மன்னவன் இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் சந்திர மதியெனும் மடந்தை தன்னுடன் அந்தமி லுவகைய னமர்ந்து வைகுநாள். உரை:- கந்துஅடு களிமத யானை - கட்டுத்தறியை அலைக்கும் மதக்களிப் பினையுடைய யானைகளையுடைய, மன்னவன் - அரசனா வான், இந்திரன் எனும் திறல் - துறக்கவேந்தனான இந்திரனேயென்று சொல்லத்தக்க திறல்படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன் என்று பெயர் கூறப்படுவான் உளன், சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் - சந்திரமதியென்னும் மங்கைநல்லாளுடன் கூடி, அந்தம் இல்உவகையில் - முடிவில்லாத இன்பத்தையுடையனாய், அமர்ந்து வைகும்நாள் - அதனை விரும்பிவாழும் நாட்களில் எ-று. வறிதேயுள்ள யானை கந்தினை அலைப்பதற்குக் காரணம் மதக்களிப்புடைமை யென்றற்கு, “காந்தடு களிமதயானை” என்றார். பொழிகின்ற மதமுடைமை தோன்றற்கு, “களிமதயானை” எனல் வேண்டிற்று. போகப்பேற்றாலேயன்றி வலியாலும் இந்திரனை யொப்பான் என்பார், “இந்திரனெனுந் திறல் அசோகன்” என்றார். மடந்தை - பருவத்தாலும் பொதுவியல்பாலும் கூறியது. சந்திரமதியின் கூட்டம் கூடுந்தோறும் புத்தின்பம் பயந்துவந்தமையின், “அந்தமில் உவகையன்” என்றார். அந்தமின்மை அமர்ந்து வைகற்கு ஏது. யசோதரன் பிறப்பு 76.இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே சந்திர மதியொரு தனயன் தந்தனள் எந்துயர் களைபவ னிசோ தரன்னென நந்திய புகழவன் நாம மோதினான். உரை:- இந்து - முழுமதியானது, ஓர் இளம்பிறை பயந்த தென்ன. ஓர் பிறைச்சந்திரனைப் பெற்றாற்போல, சந்திரமதி - சந்திர மதியாகிய அரசி, ஒரு தனயன் தந்தனள் - ஒரு மகனைப் பெற்றாள், எம் துயர் களைபவன் - எங்கள் துன்பத்தைத் துடைப்பவனான அசோகமன்னன், நந்திய புகழ அவன் - மிக்கபுகழையுடைய அந்த மகனுக்கு, இசோதரன் என- யசோதரனென்று, நாமம் ஓதினான் - பெயர் வழங்கினான் எ-று. சந்திரமதி யசோதரனைப்பெற்றது, முழுமதி இளம்பிறையை ஈன்றதுபோல என்றார், சந்திரமதியின் அறிவே யசோதரன் மதியைத் தன்வழி யொழுகுவித்த தாதலின். முழுமதி இளமதியையீனல் - இல்பொருளுவமை. எம்மைப்போல் பிறவித்துயர்களையும் நல்லொழுக்க முடையனென்பான், “எம்துயர் களைபவ” என்று அபயருசி கூறுகின்றான். எம் துயர் களைபவன் என்றதை யசோதரற்கே யேற்றி, துயர்களை பவனாதலால் யசோதரனெனப் பெயரிட்டான் என்றுமாம். யசோதரன் இளவரசனாய் அமிர்தமதியென்பாளை மணந்து மகிழ்தல் 77.இளங்களிற் றுழுவையி* னேத மின்றியே வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியான் உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான். உரை:- இளங்களிற்று உழுவையின் - ஆண்புலிக்குருளை போல, ஏதம் இன்றி - நலிவு சிறிதும் இன்றி, வளம்கெழு குமரனும் - வலிபொருந்திய யசோதரனும், வளர்ந்து - வளர்ச்சிபெற்று, மன்னனாய் - இளவரசனாகி, விளங்குஇழை அமிழ்தமுன்மதியை - விளங்குகின்ற அணிகலன்களை யுடைய அமிர்தமதியென்பவளை, வேள்வியான் - திருமணத்தால், உளங்கொள - மனம் இன்பம் நிறைய, புணர்ந்து - கூடி, உடன் உவகை எய்தினான் - உடனெய்தும் இன்பத்தை நுகர்ந்து வரலானான் எ-று. களிறு - விலங்கின் ஆண்பாற்பெயர்; “ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்”1 என ஆசிரியர் கூறுதல் காண்க. இக் களிறென்னுஞ் சொல் வேழம்,கேழல் என்ற இரண்டற்கும் சிறப்பவெய்துவிப்பவாயினும் ஈண்டு இது பொதுவிதியான் அமைந்ததென வுணர்க. “இளங்களி றுழுவையின் ஏதமின்றியே” என்று பாடங் கொள்ளின், புலியால் தீங்கின்றி இளங்களிறு வளர்ந்தாற்போல என்று பொருள் கொள்க. அசோகனாட்சியிலாதல், யசோதரனாட்சியிலாதல் உழுவை போலும் பகையுண்மை கூறப்படாமையின், அது பாட மன்மையறிக. வளம் - ஈண்டு மெய்வன்மை மேற்று. “மன்னனாய்” என்று ஈண்டுக்கூறியது, பிறாண்டு, “யசோதரன் னெனுந்தனயனை நிலமகட்டலைவனா கென”(83) முடிசூட்டல் கூறப்படுதலின், இளவர சனாதலைக்குறித்து நிற்பதாயிற்று. புணர்ச்சி நிகழுமிடத்தே இன்பமும் உடன்நிகழ்தல்பற்றி, “உடன் உவகையெய் தினான்” என்றார். புணர்ச்சி யின்பமே நெஞ்சில் எஞ்ஞான்றும் நிலவப் புணர்ந்தனரென்றற்கு, “உளங்கொளப் புணர்ந்து”எனச் சிறப்பித்தார்; இதனாற்பயன், நல்லறிவு காட்டும் நன்னெறியைக் கடைபோகச் செல்லும் கடைப்பிடி அவன்பால் இன்மை யுணர்த்துவது. யசோதரனுக்கு யசோமதியென்னும் மகன் பிறத்தல் 78. இளையவள் எழில்நலம் ஏந்து கொங்கையின் விளைபய னிசோதரன் விழைந்து செல்லுநாள்* கிளையவ ருவகையிற் கெழும ஈன்றனள் வளையவ ளிசோமதி மைந்தன் தன்னையே. உரை:- இசோதரன் - யசோதரனாகிய இளவரசன், இளை யவள் – இளமை யுடையளான அமிழ்தமதியின், எழில் - அழகையும், நலம் - குணஞ்செய்கைகளின் நலத்தையும், ஏந்து கொங்கையின் விளைபயன் - உயர்ந்த முலையிடத்தே பெறும் இன்பத்தையும், விழைந்து - விரும்பி, செல்லும் நாள் - இனிதிருக்குங்காலத்தில், கிளையவர் - சுற்றத்தார், உவகையின் கெழும - மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, வளையவள் - வளையணிந்த அவ்வமிர்தமதி, இசோமதி மைந்தன் தன்னை - யசோ மதியென்னும் மகனை, ஈன்றனள் - பெற்றாள், எ-று. யசோதரன் அமிழ்தமதியின் இளமை, எழில், ஏந்து கொங்கை என்ற இவற்றின் நலத்தை விழைந்து இன்புற்றொழுகியதும், அவ் வொழுக்கத்தின் பயனாக, யசோமதியைப் பெற்றதும் இதன்கட் கூறினார். காமவின்பத்துக்குச் சிறப்புத்தருவது இளமையாதலின், “இளையவள்” என்றெடுத்து, அமிழ்தமதியின் பிற எழில் நலங்களையும் கொங்கைப்பயனையும் விதந்தோதினார். யசோமதியின் பிறப்பு அசோகனது வழியெஞ்சாமைக்கு ஆக்கமாதலின், “கிளையவர் உவகையிற் கெழும வீன்றனள்” என்றார். இவ்வாறு மனைக்கு விளக்காகிய அமிழ்தமதி தனக்கு விளக்கந் தரும் மகனைப் பெற்றா ளென்றற்கு, “வளையவள் இசோமதிமைந்தன் தன்னை யீன்றனள்” என அவள்மே லேற்றினார். அவளுடைய எழில்நலச் சிறப்பை, யசோதரன் மேலும், மகற்பேற்றினை அவள்மேலும் கூறியது, பின்னர் அவள் தன் நலத்தைப் பொருந்தா வொழுக்கத்தில் ஈடுபடுத்திக் கெடுவதும், யசோமதி சிறப்புற்று மேம்படுவதும் குறிக்கொண்டு போலும். வளையவள் - சுட்டு. அசோகன் தனக்கு முதுமை வரவு காண்டல் 79. மற்றொர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி பற்றுவா னடிதொழப்* படிவ நோக்குவான் ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை உற்றுறா வகையதை யுளைந்து கண்டனன். உரை:- ஒருநாள் - இவ்வாறு செல்லுங்காலத்து ஒரு நாள், மன்னவன் - வேந்தனாகிய அசோகன், கண்ணடி பற்றுவான் - கண்ணாடி யேந்திக்காட்டுவோன், அடிதொழ அடிபணிந்து அதனைக் காட்ட, படிவம் மகிழ்ந்து நோக்குவான் - தன் வடிவத்தைக் காணவிரும்பி அதிற் காண்பவன்- வார்குழல் ஒற்றைமயிர் - நீண்ட கடைகுழன் றமயிரொன்று, உச்சி - நுனியில், வெண்மையை உற்று - வெள்ளை நிறத்தைப் பொருந்தி, உறாவகையதை - புறத்தே நன்கு தோன்றாவகை மறைந்திருப்பதை, உளைந்து கண்டனன் - மனம் வருந்திப் பார்த்தான் எ-று. பண்டையரசர்பால் அடைப்பை தாங்குவோர், அடியீடேந்து வோர், கண்ணடியேந்துவோர் எனக் குற்றேவல் செய்வார் பலர் இருந்தமையின் ஈண்டுக் கண்ணடியேந்துவோனைக் குறிப்பித்தார். தன்னை நன்கு ஒப்பனை செய்துகொள்ளக் கருதிக் கண்ணாடி நோக்குங்கால்; மகிழ்ச்சி பிறத்தல் இயல்பாதல்பற்றி, “மகிழ்ந்து நோக்குவான்” என்றார். அவன் மகிழ்ச்சி முற்றும் வருத்தமாய் மாறிற் றென்பது, “உளைந்து கண்டனன்” என்பதனால் பெற்றாம். ஒரு மயிர் நுனியில் நரைத்துத் தன் நரைப்புத் தோன்றாவகை மறைத் திருப்பினும் அதனைக் கண்டு களைந்தவன், மனத்தே வருத்தமுற்றானென வறிக. அதற்குரிய காரணத்தை மேல்வரும் பாட்டுக்களால் உரைக் கின்றார். அசோகன் தன்மனத்தே பலபட நினைத்தல் 80.வண்டளிர் புரைதிரு மேனி மாதரார் கண்டக லுறவரு கழிய மூப்பிது உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன் வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன் உரை:- வண்தளிர்புரை - வளவிய மாந்தளிர்போலும், திரு மேனிமாதரார் - அழகியமேனியுடையமகளிர், கண்டு - பார்த்தவுடன், அகலுற - அருவருத்து நீங்கும்படியாக, வரு - வருகின்ற, கழியமூப்பு - ஆண்டு மிகுதியையுடைய முதுமைப் பருவமானது, உண்டுஎனில் - உளதாயின் அது வரையிற்றான், உளைந்து - மனம்திரிந்து, இகல் - மாறுபாட்டினையுடைய, உருவ வில்லிதன் - அழகிய வில்லினை யுடைய மன்மதனது, வண்டுஉள கணை - வண்டுமொய்க்கும் பூவாகிய அம்பு, மனிதர்க்குப் பயன் - மக்கட்குக் காமவேட்டையாகிய பயனை விளைவிக்கும், என்றனன் - என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் எ-று. தளிரெனப் பொதுப்படக்கூறினமையின், சிறப்புடைய மாந்தளிர் கொள்ளப்பட்டது; “மாவின் அவிர்தளிர்போலும் மேனியர்”1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. கண்டார் மனம் கவரும் அழகு திகழும் மேனியைத் “திருமேனி” யென்றார். மிக்க காதலராயினும், மூப் பெய்தியவழி அக்காதலாற் பெறும் காமவின்பம்குன்றுதலின், அவர் காமக் காதலும் நீங்கும் என்பார், “கண்டு அகலுற” என்றும், யாண்டு மிகமிக மூப்புமிகுதலின், “கழிய மூப்பு” என்றும் கூறினார். எனில்-என்றால். காமவேட்கையுற்றார்க்கு மனத்துன்பம் இயல்பாதலின் “உளைந்து” என்றார். காமன் உருவிலியாயினும், அவன் வில் உரு வுடைத்தாய, சான்றோர்க்கு அச்சம் தருவதாதலின், “உருவவில்லி” என்றார். வண்டுள கணை - வண்டு தங்கியிருக்கும் பூங்கணை. மலர்க் கணை, காம வேட்கையைக் கிளரச் செய்வது, பயனாதலின், அதனை, “வண்டுளகணை பயன்” என்றான். அசோகன் இளமையின் வளமையின்மையைத் தன்னுள் நினைத்தல் 81.இளமையி னியல்பிது வாகு மென்னினிவ்* வளமையி லிளமையை மனத்து வைப்பதென் கிளைமையு மனையதே கெழுமு நம்முளத் தளைமையை விடுவதே தகுவ தாமினி. உரை:- இளமையின் இயல்பு இதுவாகும் என்னின் - இளமைப் பருவத்தின் இயல்பு இத்தன்மைத்தாகுமாயின், இவ்வளமையில் இளமையை - இவ்வளப்பமில்லாத இளமைப் பருவத்தை, மனத்து வைப்பது என்-மக்கள் தம் மனத்தே பொருளாக மதித்துக்கொள்வது எற்றுக்கு, கிளைமையும் அன்னதே - ஏனையோர் உறவுமுறைமையும் அத்தன்மைத்தேயாகும், இனி-இனிமேல், நம் உளம் கெழுமும் தளைமையை - நம்மனத்தே எழும் அன்பினை, விடுவது தகுவதாம் - பற்றறவிட்டொழிப்பதே சால்பாகும் எ-று. இளமைகுன்றாது இன்பத்திற் செம்மாந் திருக்கின்றேமெனத் தருக்கிய வுணர்வால் மகிழ்ச்சியுற்றுக் கண்ணாடி நோக்கிய வேந்தற்கு மயிரின் நரைதோன்றி அவ்விளமையின் கழிவினைக் காட்டக்கண்டு, அதன் நிலையாமையினையும் தேர்ந்து கூறுகின்றானாதலின், “இளமையினியல்பிதுவாகும் என்னின்” என்றான். இளமையே வளமை யென்றும், “இளமையிற் சிறந்தவளமையுமில்லை”1 என்றும் கூறப்படுவன கொண்டு, அதனைப் பேணுதலும் உலகியலாதலின், அதனை முனிந்து, “இவ்வளமையில் இளமையை மனத்து வைப்பது என்” என்றான்; எனவே, இளமையின் வளமையாவது, நிலை பேறுடைத்தாய் இன்ப நுகர்ச்சித்தாய் இருத்தலென்பதும், அதுகழிந்த வழிச் செல்வமும் இன்பந்தாரா தென்பதும் பெற்றாம் “இளமை கழிந்த பின்றை வளமை, காமம் தருதலுமின்றே”2 என்று பிறரும் கூறுதல் காண்க. மனைவி மக்கள் அடியாகப் பிறக்கும் கிளைஞர் உறவும், அரசு, செல்வம் முதலிய பற்றுக்கோடாக, “உறின் நட்டு அறின்” ஒருவும் இயல்பிற்றாதலை யுணர்ந்து நிற்றலின், “கிளைமையும் அனையதே” என்றான். அன்பின் பயன், அதனைச் செய்வோரும் செய்யப்படுவோரும் பிணிப்புண்டு நிற்றலாதலின், அதனைத் “தளைமை”யென்றும், அதுகாரணமாக வேண்டுதல் வேண்டாமை தோன்றித் துன்பம் விளைவித்தலின், “விடுவது தகுவதாம்” என்றும் கூறினான். ஏகாரம் - இரண்டும் தேற்றம். புண்ணியமே செயற்பாற்றென அசோகன் நினைந்து தெளிதல் 82.முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலைச் சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம் முந்தையின் மும்மடி முயலிற்* புண்ணியம் இந்திர வுலகமும் எய்தலா மெனா† உரை:- முந்து செய் நல்வினை - முன்னைப் பிறவியிற் செய்த நல்வினையானது, இத் தலை முளைப்ப - இப்பிறவியில் தன் பயனைத் தோற்றுவிக்க, சிந்தைசெய் பொருளொடு - உயர்ந்தோர் மதிக்கத்தக்க நல்லறிவுடன்; செல்வம் எய்தினாம் - அரச போகத்தையும் அடைந்துள்ளோம், முந்தையின் முன்னையினும், மும்மடி புண்ணியம் முயலின் - மூன்று மடங்கு மிகுதியாக நல்வினையைச் செய்யின், இந்திர வுலகமும் எய்தலாம் - தேவருலகத்துப் பெறும் போகத்தையும் பெறலாம், எனா - என்று எ-று. ஒருவன் செய்யும் வினை அவன் உயிரின்கட்கிடந்து, அவன் புக்குழிப்புகும் இயல்பிற்றென்பவாதலின், “முந்துசெய்நல்வினை முளைப்ப வித்தலை” என்றார். “முளைப்ப” என்ற குறிப்பு, நல்வினை யாகியவிதை உயிராகியநிலத்து விதைக்கப்பெறுதலை யுணர்த்தி நின்றது; “வெவ்வினை செய்யுமாந்தர் உயிரெனும் நிலத்துவித்தி அவ்வினைவிளையுளுண்ணும் அவ்விடத்து”1 என்று பிறரும் கூறுதல் காண்க. ஒருவன் சிந்தைசெய்வன, இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் புண்ணியமும் வீடுபேறுமாதலின், அவற்றிற் கேதுவாய புகழும் உறுதிப் பொருளறிவும் கூறுவார், “சிந்தை செய் பொருளொடு செல்வம் எய்தினாம்” என்றார். செல்வத்தினும் பொருள்சிறந்து நிற்றலின், “பொருளொடு ” என்றார். பிறந்த பிறப்பால், இறந்த பிறவியிற் செய்த வினையினைத் தெரிந்து கொண்டானாதலின், “சிந்தைசெய் பொருளொடு செல்வமெய்தினா” மென்றும், “முந்து செய்நல்வினை” யென்றும் கூறினானெனவுணர்க. மீட்டும் முன் செய்த அளவாதல், இருமடியாதல் நல்வினை செய்யின், மறுமையில் மண்ணுலகத்தே அரசர்போகமும், அவர் எல்லாருள்ளும் தலையாய போகமுமே எய்துமெனத் தெளிதலின், “மும்மடி புண்ணியம் முயலின்” என்றும், அதனாற்பயன் விண்ணுல கத்துப்பெறும் இந்திரபோகம் எய்துமென்று கண்டு, “இந்திரவுலகமும் எய்தலாம்” என்றும் தனக்குள் தெரிந்துரைப் பானாயினன். இவ்வாராய்ச்சி யுடையவன், நிலையில்போகமாகிய இந்திரவுலக போகத்தையும் பின்னர்த் துறந்து வீடுபேற்றிற்கே முயல் வான் என்றறிக. அசோகன் துறவு 83.இனையன நினைவுறீஇ யசோத ரன்எனுந் தனயனை நிலமகள் தலைவ னாகெனக் கனமணி வனைமுடி கவித்துக் காவலன் புனைவளை மதிமதி புலம்பப் போயினான். உரை:- காவலன் - வேந்தனான அசோகன், இனையன நினை வுறீஇ - இத்தன்மையானவற்றை நினைந்து, யசோதரன் எனும் தனயனை யசோதரன் எனப்படும் தன் மகனை, நிலமகள் தலைவன் ஆக - நிலத்துக்கர சனாகுக, என - என்று சொல்லி, கனமணி வனைமுடி கவித்து - பெரிய மணிகளைக் கொண்டு செய்யப்பட்ட முடியைச் சூட்டி, புனைவளை மதிமதி புலம்ப - வளையணிந்த சந்திரமதியாகிய தன்தேவி தனித்து வருந்த, போயினான் - அரசியல் தொடர்பு துறந்து சென்றான் எ-று. “முந்தையின் மும்மடி முயலிற் புண்ணியம், இந்திரவுலகமும் எய்தலாம்” (82) என்பதனோடு, இம்மை மறுமை வீடுபேறுகட்கு ஏதுவாகும் இயல்புடைய வினைத்திறமும், அவற்றின் கட்டும், அக்கட்டின் நீங்குந் திறமும், நீங்காவழிப்படும் துன்பமும் என்ற இவற்றையும் பல்வேறு நிலையாமைகளையும் பிறவற்றையும் நினைத்தமை தோன்ற, “இனையன நினைவுறீஇ” என்றார். நாட்டு வேந்தனை, நாடாகிய மகட்குக் கணவனென்பவாகலின், வேந்தனா வானை, “நிலமகட்ட லைவனாக” என்றான். சொல்லி யதனோடு அமையாது, மந்திரிச்சுற்றத் தாரோடு கலந்து திரு முடியும் யசோதரர்க்குச் சூட்டினான். என்றார். பின்பு அசோகன், அரசியற் றொடர்பு நீங்கி, மனைவியாகிய சந்திர மதியையும் துறக்க வெண்ணியபோது, அவள் பிரிவாற்றாமை கூறி வருந்தவும் அவட்கு இணங்காது துறவேபூண்டு சென்றான். என்பார், “புனை வளைமதிமதி புலம்பப் போயினான்” என்றார். வளைவுனை மதி மதியென்பது எதுகை நோக்கி “புனைவளைமதி என வந்தது” புனைவளை” என வளையை என வளையை விதந்தோதியது, அசோகனது துறவு மொழி செவியிற் பட்டமாத்திரையே அவள் முன்கையின் நில்லாது கழன்றோடி அவளது பிரிவாற்றாமையை மெய்ப்படுத்திக் காட்டிற்றாதலின். இஃது உடம்பு நனி சுருங்கல். மதிமதி - சந்திரமதி. அசோகன் குணதர முனிகள்பால் அறங்கேட்டுத் தவம் செய்வான் வனத்துக்குச் செல்லுதல் 84. குரைகழ லசோகன் மெய்க்குணதரற்பணிந் தரைசர் களைம்பதிற் றிருவர் தம்முடன் உரைசெய அருந்தவத்* துறவு கொண்டுபோய் வரையுடை வனமது மருவி னானரோ. உரை:- குரைகழல் அசோகன் - ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த வேந்தனான அசோகன், மெய்க்குணதரன் பணிந்து - மெய்யறி வினையுடைய குணதர முனிகளை வணங்கி அவர் உரைத்த அறங்களைக் கேட்டு, அரைசர்கள் ஐம்பதிற்றிருவர் தம்முடன் - துணையாய் வந்த அரசர் நூற்றுவருடன், உரை செய அருந்தவத்து - சொல்லுதற்கரிய தவக்கோலம் பூண்டு, வரையுடை வனமது - மலையையுடைய காடொன்றை, போய் மருவினான் - போய்ச் சேர்ந்தான் எ-று. மெய்யறிவுபெற்றுத் தவவொழுக்கம் சிறந்துநிற்றலின், குணதர முனிகளை, “மெய்க்குணதரன்” என்றார். இவர்பால் அசோகன் சைன தருமமும், சைன தீக்கையும் பெற்றான் என்றற்குப் “பணிந்து” என்றார்; தீக்கையும் அறமும் பெறுமுன்பும் பின்பும் பணிதல்வினை நிகழ்தலின், “பணிந்து ” என உரைக்கப்பட்டன; இத்தருமமும் தீக்கையும் ஆசா ராங்கமென்னும் நூலுட்கூறப் படுகின்றன; அவை பஞ்சபரமேட்டிகளின் பதமுபதேசித்தல், மயிர் பறித்தல் முதலாயின. பேரரசனாதலின், சிற்றரசர் நூற்றுவர் உடன் சென்றாரெனவறிக. தவத்துருவு, தவவேடம்; “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறு கண் செய்யாமை, அற்றே தவத்துக்குரு”1 என்றபடி, நோன்பையும் உறுகண்செய்யாமையையும் கொள்ளலு மொன்று. வரையுடைவனம், மலையைச் சார்ந்த காடு; மூங்கில் களையுடைய காடுமாம். யசோதரன் நாடாட்சி மேற்கொள்ளல் 85. எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்தாட்* கொருமணித் திலகம் போலு முஞ்சயி னிக்கு நாதன்† அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த குருமணிக் குடையின் நீழற் குவலயங் காவல் கொண்டான். உரை:- எரிமணி இமைக்கும் பூணான் - விளங்குகின்ற மணி களாலாகிய ஒளிவீசும் அணிகலன்களையுடையனாகிய, இசோதரன் - யசோதரன், இருநிலத்தாட்கு - பெரிய நிலமாகிய மடந்தைக்கு, ஒரு மணித்திலகம் போலும் - ஒப்பற்ற அழகிய திலகம் போல்வதாகிய, உஞ்சயினிக்கு நாதன் - உச்சயினி நகரத்துக்கு அரசனாய், அருமணி முடிகொள் சென்னி அரசு - அரிய மணிகளால் இயன்ற முடியணிந்த தலையினை யுடைய அரசர்களை, அடிப்படுத்து - தன்னடி வணங்கச் செய்து, உயர்ந்த - ஓங்கிய, குருமணிக் குடையின் நீழல் - நிறமுடைய மாணிக்கங்கள் வைத்திழைத்த கொற்றக் குடையின் நீழலிலே, குவலயம் - உலகம் தங்க, காவல் கொண்டான் - ஆட்சிபுரியத்தலைப் பட்டான் எ-று. அசோகன் துறவுபூண நினைந்தவுடனே யசோதரனை முடி சூட்டி அரசனாக்கிவிட்டானாதலால், “உஞ்சயினிக்குநாதன்” என்றார். இருநிலத்தாள் - நிலமகள், பெரியநகரங்களை நிலமகட்குத் திலகமாகக் கூறுவது கவிமரபு; “நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ”1 என்று கம்பரும் கூறுதல் காண்க. நாடுகாக்கும் வேந்தர் ஏனையரசரைத் தன் அடிப்படுத்தி உயர்தலே தன் அரசியற்குச் சிறப்பென்றும், வலிக்கு மாண்பென்றும் கருதுபவாதலின், அதனைச் செய்தான் யசோதரன் என்றாராயிற்று. கொற்றக்குடை வெள்ளிதாயினும் மாணிக்கங்களும் இழைக்கப் பெறுதல்பற்றி, “குருமணிக்குடை” என்றார். குவலயம் - நிலமாகிய வட்டம். பூணாணாகிய இசோதரன் நாதனாய்க் காவல்பூண்டான் என்க. குவலயங்காவல் - விகாரம். யசோதரன் செல்வச் செருக்கால் அறத்திறம் நெகிழ்த்தல் 86. திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்கப் பட்டே மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகி உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய்ம் மொழியோ டொன்றி அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத்து றந்தான். உரை:- திருத்தகு குமரன் - திருமகளின் விருப்பம் தக்கிருக்கின்ற அரசகுமரனான யசோதரன், செல்வச்செருக்கினால் - செல்வமிகுதியால் உளதாகும் மயக்கத்தால், நெருக்குப்பட்டு - அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின் - காற்றால் மோதப்பட்ட கடல் பொங்கி அலமருவதுபோல, பொங்கி மறுகிய மனத்தனாகி - அவாமுதலியவற்றால் பொங்கிக் கலங்கிய மனமுடையனாய், உருத்து எழு சினத்தின் - மிக்கு எழுகின்ற சினமுதலியவற்றின்கண், சென்ற - படர்கின்ற, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி - மனம், உடல், சொல் என்ற மூன்றும் ஒருப்பட்டு நிற்க, அருத்த காமத்து அருத்தி செய்து - பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு, அறத்திறம் அறத் துறந்தான் - அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான் எ-று. புண்ணியமுள்ளளவும் ஒருவனைப்பற்றி நின்று, அது நீங்கிய வழி நீங்கு மியல்புடைய திருமகள், புண்ணியமுடைமையால் அரசபோகந் துய்க்கும் யசோதரன்பால் நீங்காதிருக்கின்றமை தோன்ற “திருத்தகு குமரன்” என்றும், தான் பெற்ற செல்வத்திற்குத் தான் மேற்பட்ட தலைவனாதலை யுணராது, அதற்கு அடிமையாய்த் தன் இயற்கையறிவை யிழந்தானென்றற்குச் “செருக்கினால் நெருக்குப்பட்டு” என்றும் கூறினார். “புண்ணியமுலந்தபின் பொருளிலார்களைக், கண்ணிலர் துறந்திடுங் கணிகைமார்கள் போல், எண்ணிலள் இகழ்ந்திடும்”1 என்றும், “பற்றினர் பாலள்”2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தன்னையுடையான் எளியனாயின், அவனை மயக்குவது செல்வத்தின் சிறப்பியல்பாதலின், “செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டா” னென்றுமாம்; “மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மையுறுக்கும் புரையில் அரும்பொருள்” என்று வளையாபதியும் கூறிற்று. “மருத்தெறிகடல்” என்ற உவமையால், அவா முதலியவற்றால் யசோதரன் அலைக்கப் பட்டமை பெறுதும். சினத்தை விதந்தோதி யதனால், அதற்கேதுவாய காமமும், பயனாகிய மயக்கமும் கொள்க. காமவெகுளி மயக்கங்களே அதற்கு நெறியாயின மையின், அந்நெறிக்கண் அவனுடைய நினைவும் செயலும் சொல்லும் ஒருப்பட்டு நிலவின என்பார், “சினத்திற்சென்ற உள்ள மெய்ம்மொழியோடொன்றி” என்றார். இவ்வியல்புடையார்க்கு வேண்டப்படுவன காமவின் பமும், அதனை இனிது நுகரத் துணை செய்யும் பொருளுமேயாதலின் அவற்றை, “அருத்தி செய்து”, “அறத்திறம் அறத்துறந்தான்” என்றார். அருத்தி - ஆர்வம். பொருளின்பங்களை அருத்தி செய்தொழுகும் திறம் கூறல் 87. அஞ்சுத லிலாது தெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில் துஞ்சுத லிலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான். உரை:- தெவ்வர் அவிய - தனக்கு அஞ்சிப் பணிந்தொழுகாத பகைவேந்தர் வலி கெடுமாறு, அஞ்சுதல் இலாது - அச்சம் சிறிது மின்றி, மேல்சென்று - படையுடன் மிக்குச் சென்று பொருது, வஞ்சனை பலவும் நாடி - அவர் செய்யும் வஞ்சனை பொருட்டுத் தானும் வஞ்சனைகள் பலவற்றையும் நாடிச் செய்து, புஞ்சிய பொருளும் - அவருடைய மிக்கதாகிய பொருளும். நாடும் - அதற்கு வருவாயாகிய நாடும், புணர்திறம் - தான் கவர்ந்து கோடற்குரிய சூழ்ச்சித்திறங்களை, நெஞ்சில் புணர்ந்து - மனத்தே ஆராய்ந்து கொண்டு, துஞ்சுதல் இலாத கண்ணன் - நாளும் கண்ணுறக்கம் இல்லானாய், துணிவன துணிந்து - செய்யத்தகுவனவற்றைச் செய்து, நின்றான் - அத்துறையிலே தெளி வின்றி யொழுகுவானாயினான் எ-று. பகை வேந்தரை வென்று ஒடுக்கி நாட்டில் நலக்குறைவு நிகழா வகையிற் காத்தல் வேந்தர்க்கு இயல்பாயினும், அச்செயற்கண் அறமல்லது நிகழ்வது எண்ணி யஞ்சுவது நல்வேந்தர் மனப்பண்பாக, இவன், அதற்கு அஞ்சினானில்லை யென்றற்கு, “அஞ்சுதலிலாது” என்றும், அப்பகையரசர் வஞ்சனை செய்தாராயினும், அஃது அறமன் றென வொழியாது தானும் அவற்றைச் செய்தமை தோன்ற, “வகுப்பன வகுத்து” என்றும், அவர்க்குரிய பொருளும் நாடும் கவரும் திறமே நினைந்து, தன் பொருளும் நாடும் மிகுதற்கேற்பன வற்றை நினைந்தில னென்றற்கு, “புணர்திறம் நெஞ்சிற் புணர்ந்து” என்றும், நினைவொடு நில்லாது செயற்கண்ணும் செய்தொழுகினா னென்பார். “துணிவன துணிந்து நின்றான்” என்றும் கூறினார். இதனால், “அறத்திறம் அறத்துறந் தான்” பொருள் செயல் கூறப்பட்டது. 88. தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத்த வின்பப் பாடலொ டியைந்த பண்ணின் இசைச்சுவை பருகிப் பல்கால் ஊடலங் கினிய மின்னின் ஒல்கிய மகளி ராடும் நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான். உரை:- தோடு அலர் கோதைமாதர் - இதழ்களையுடைய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த கூந்தலையுடைய பாடல் மகளிர், துயரியின் தொடுத்த - யாழ்நரம்பினால் தொடுத்துப் பாடும், இன்பப் பாடலொடு இயைந்த பண்ணின் - இன்பத்தைத் தரும் பாடலொடு இயைந்து நிற்கும் பண்ணிடத்து எழும், இசைச் சுவை பருகி - இசையாகிய அமுதத்தைப் பருகி, பல்கால் - பன்முறையும், ஊடல் அங்கு இனிய - ஊடிய விடத்தும் புணர்ந்தாற் போலும் இன்பத்தைத் தருகின்ற, மின்னின் ஒல்கிய - மின்ன லைப்போல அசைந்தாடும், மகளிர் ஆடல்மகளிர், ஆடும் நாடகம் நயந்து கண்டும் - ஆடுகின்ற நாடகங் களை விரும்பிப் பார்த்து மகிழ்ந்தும், நாள் சில செல்ல - நாட்கள் சில கழிய, சென்றான் - ஒழுகிவரலானான் எ-று. இதனால் இன்பத்தை அருத்திசெய்து ஒழுகும் திறம் கூறுகின்றார். தோடு - பூவிதழ். துயரி - யாழ்நரம்பு; “தூமம் கமழும் கோதை தொடுத்ததுயரிமுலையாத், தேமென்கீதம் பாலாச் சுரந்து”1 எனப் பிறரும் கூறுதல் காண்க. “பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல்”2 என்பவாகலின், “பாடலொடியைந்த பண்ணின்” என்றார். காமக்காத லுடைய மகளிர் ஊடுதலும் காமத்திற் கின்பமாதலின், “உடலங்கினிய மகளிர்” என்றார்; “ஊடினும் புணர்ந்த தொத்தினியவள்”3 என்று பிறரும் கூறுவர். பருகி யென்புழி - எண்ணும்மை விகாரத்தால் தொக்கது. யசோதரன் அமிர்மதியொடு கூடி யின்புறும் சிறப்பு 89. மற்றொர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்து மாலைக் கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூட மொன்றிற் சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிற் சேக்கை துன்னிக் கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான். உரை:- மற்று ஓர் நாள் - வேறொருநாள், மன்னர்தம்மை - அரசவைக்கண் வந்திருந்த அரசர்களை, மனைபுகவிடுத்து - தத்தம் மனைக்குச் செல்லவிடுத்து, மாலை கொற்றம் - மாலையும் வெற்றியு முடைய, வேலவன் - வேலேந்திய வேந்தனாகிய யசோதரன், தன் கோயில் - தன் அந்தப்புரத்தேயுள்ள, குளிர்மணிக் கூடம் ஒன்றில் - குளிர்ந்த ஒளிவீசும் மணிகளால் இயன்ற ஒரு கூடத்தில் அமைக்கப் பட்டிருந்த, சுற்றுவார் திரையின் - சுற்றிலும் நீண்ட திரைகளை யுடைய, தூமம் கமழ் - நறும்புகையின் மணம்கமழும், துயில் சேக்கை துன்னி - பள்ளி யணை யையடைந்து, கற்றைவார் கவரி வீச - கற்றையாகவுள்ள சாமரையை மகளிர் வீச, களிசிறந்து - காமக்களிப்பு மிகுந்து, இனிது இருந்தான் - அமிர்தமதியின் வரவுநோக்கி இனி திருந்தான் எ-று. “மன்னர்தம்மை மனைபுகவிடுத்து” எனவே, இரவுப்போதின் வரவு குறித்தவாறு பெற்றாம். பகற்போதில் மகளிர் தொடுத்த பாட்டும், ஆடிய நாடகமும் கண்டு காமம் சிறந்து அந்தப்புரத்தையடை கின்றானாதலின், நேரே பள்ளியறையைத் துன்னினான் என்றார். “குளிர்மணிக்கூடம்” என்றார், காமவெப்பத்தால் வெதும்பிவருமாறு தோன்ற. களி - காமக்களிப்பு. மகளிர் கவரி வீசியது, காமவெப்பத்தைக் தணித்தற்கு. இனிதிருந்தான் என்றார், அமிர்தமதிபால் தான் நுகர விருக்கும் காமவின்பமே நினைந்திருத்தலின். 90. சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக் கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப நலங்கலந் தினிய* காமர் நறுமலர்த் தொடைய லேபோல் அலங்கலங் குழல்பின் தாழ அமிழ்தமுன் மதிய ணைந்தான். உரை:- தேனும் - தேனினமும், திருமணி வண்டும் - அழகிய நீல மணிபோலும் வண்டினமும், பாட - பாட்டிசைக்க, கலம் பல - அணிகலம் பலவற்றோடு, அல்குல் அணிந்த கலையொலி - அல்கு லிடத்தே யணிந்த மேகலையின் ஒலியானது , சிலம்பொடு கலவி சிலம்பியார்ப்ப - சிலம்பொலியொடுகலந்து மிக்கொலிக்க, நலம் சலந்து - பெண்மைநலம் முதிர்ந்து, இனிய காமர் நறுமலர்த் தொடையல் போல் - இனிய அழகிய மணங்கமழும் பூமாலை வருதல்போல, அலங்கல் - பூமாலை சூடிய, அம் குழல் பின்தாழ் - அழகிய கூந்தலானது முதுகிடத்தே தாழ்ந்தசைய. அமிழ்தமுன்மதி அமுதமதி, அணைந்தாள் - யசோதரனிருந்த பள்ளியை யடைந்தாள் எ-று. தேனும் வண்டும் பாட, கலையொலி, சிலம்பொடு கலவி, சிலம்பியார்ப்ப,குழல் பின் தாழ. அணைந்தாள் என இயையும், இனிக்,கிடந்தபடியே, தேனும் வண்டும் சிலம்பிப்பாட, கலையொலி ஏனைக்கலன்களுடன் கல்வியார்ப்ப, குழல் பின்தாழ அணைந்தாள் எனினுமாம். தேன், வண்டினத்துள் ஒன்று, “வண்டுகாள் மகிழ் தேனினங்காள்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. கலை, மேகலை. நறுமலர்த் தொடையல் அணைவதுபோல அணைந்தாள் என்க; “மருவளர்மாலையொர் வல்லிbனால்கி யனநடை வாய்ந், துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே”2 என்று திருக் கோவையாருள்ளும் வருதல் காண்க. 91. ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசில் தந்த பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித் தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்து விள்ளார். உரை:- ஆங்கு - அவ்விடத்திற்கு, அவள் அணைந்த போழ்தின் - அவள் வந்தடைந்தபோது, ஐங்கணைக் குரிசில் - ஐவகைப் பூக்களாலாகிய அம்புகளையுடைய மன்மதன், தந்த - விடுத்த, பூங்கணைமாரி - மலரம்பு மழைபோல் வந்து வீழ, வெள்ளம் பொருது வந்து அலைப்ப - காமவெள்ளமானது அறிவு முதலிய கரைகளை அலைத்துக்கொண்டு வந்து அவர்தம் நெஞ்சை வருத்த, இருவரும் புல்லி - இருவரும் தம்மில்தழுவி, நீங்கலர் - நீங்காராய், ஒருவர் உள் ஒருவர் புக்கு - ஒருவர் உடற்குள் ஒருவர் புகுந்து, ஒருவராகி - இருவரும் ஒருவரேயாய், தேம்கமழ் அமளி தேம்ப - தேன்மணக்கும் படுக்கையசைந் தொலிக்க, செறிந்தனர் - புணர்ந்து, திளைத்து விள்ளார் - ஒருவரொருவரைப் பிணித்த கை நெகிழாது அணைமீதே கிடந்தனர் எ-று. மலரம்புகளை மழைபோலச் சொரிந்ததனால், அதன் பயனாகிய காமவேட்கை வெள்ளமாய்ப் பெருகுதலின், “பூங்கணை மாரிவெள்ளம்” என்றார். காமம் கைம்மிக்கவழி அறிவும், நிறையும், பிறவும் நீங்குதலின், அவற்றைக் கரையாக்கி, “பொருந்துவந்தலைப்ப” என்பாராயிற்று. ஒருவருள் ஒருவர் புக்குப் புணரும் புணர்ச்சியை நாகர் புணர்ச்சி யென்பர். “நஞ்சுற்ற காமம் நனிநாகரிற்றுய்த்த வாறும்”1 என்றவிடத்து, “நாகரோடுவமை ஒருடம்பாதலும் நீங்கல்வன்மையும் பற்றி” என வரும் அதன் உரை காண்க. விள்ளல் - நீங்குதல். 92. மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம் அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற் படங்கலந்* தகன்ற வல்குற் பாம்பணை †புணைய தாக இடங்கழிந் தொழிவி லின்பக் கடலிடை மூழ்கி னானே. உரை:- மடம் கனிந்து - இளமை மிகுந்து, இனிய - இனியளாகிய, நல்லாள் வனமுலைப் போகமெல்லாம் - நல்ல அமுதமதியின் அழகிய முலையிடத்தே பெறும் இன்ப முழுதும், அடங்கலன் அயர்ந்து - அடங்காத ஆர்வத்தோடு நுகர்ந்து, தேன்வாய் அமிர்தமும் பருகி - எயிற்றிடத்தூறிய தேன்போலும் நீரைப்பருகி, அம்பொன் பாம்பு படம் கலந்து - அழகிய பாம்பின் படத்தையொத்து, அகன்ற அல்குல் அணை - அகன்ற அல்குலாகிய படுக்கையையே, புணையதாக - தெப்பமாகக் கொண்டு, இடம் கழிந்து - நெஞ்சிடம் நிரம்பி வழிந்தும், ஒழிவில் - நீங்குதலில்லாத, இன்பக்கடலிடை - காமவின்பக் கடற்குள்ளே, மூழ்கினான் - வீழ்ந்து கரையேற மாட்டாது அதனுள்ளே மூழ்கி விட்டான் எ-று. மடம் - இளமை; அழகுமாம். முன்னேகூடி, யசோமதி யென்னும் மகனைப் பெற்றுளானாயினும், யசோதரன் அவள்பால் வேட்கை யடங்கானாயினானென்றற்கு, “அடங்கலனயர்ந்து” என்றார். கழி காமத்தனென்பது கருத்து. எயிறூறியநீர், “பாலொடு தேன்கலந்தற்று”1 எனச் சான்றோர் கூறுதலின், “தேன்வாயமிர்தம்” என்றார். பருகுதலை, அதரபானம் என்பர். பாம்பணை என்பது பிரித்துக்கூட்டப்பட்டது; அல்குலாகிய பாம்பணையென்று கோடலு மொன்று. பாம்பின் படமும் புணையும் முறையே உருவும் தொழிலும் பற்றி வந்தன. இடம்கழிதல் - நெஞ்சகம் நிரம்பித் துளும்புதல், “இடங்கழிகாம மொடடங்கானாகி”2 என்று பிறரும் கூறுப. புணர்ச்சி வசத்தால் இருவரும் கண்ணுறங்கல் 93. இன்னரிச் சிலம்புந் தேனும் எழில்வளை நிரையு மார்ப்பப் பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருது பொங்க மன்னனும் மடந்தை தானும் மதனகோ பத்தின்* மாறாய்த் தொன்னலந் தொலைய உண்டார் துயில்கொண்ட விழிக ளன்றே. உரை:- இன் அரிச் சிலம்பும் - இனிய ஓசை செய்யும் பரல்களை யுடைய காற்சிலம்பும், தேனும் - வண்டினமும், எழில் வளைநிரையும் - அழகிய வரிசையுற்ற வளையல்களும், ஆர்ப்ப - ஒலிக்க, பொன் அவிர்தாரோடு - யசோதரனணிந்த பொன்னாலி யன்ற மாலையும், ஆரம் - அமுதமதி யணிந்த முத்துமாலையும், புணர்முலை பொருது பொங்க - புணர்ச்சி நிகழுமிடத்து, முலையால் தாக்குண்டு மேலெழு, மன்னனும் மடந்தைதானும் - யசோதரனும் அமுதமதியும், மதன கோபத்தின் - காமக் களிமயக்கினால், தொல்நலம் மாறாய்த் தொலைய - புணராதமுன்பிருந்த மேனிநலம் மாறுபட்டு மெலிய, உண்டார் - காமவின்பத்தைத் துய்த்து ஆய்ந்தாராக, விழிகள் துயில் கொண்ட - அவருடைய கண்கள் உறங்குவனவாயின எ-று. தார், மார்பிலணியும் மாலை; இஃது ஆடவர்க்கு உரித்து, தார் எனப் பிரித்தமையின், ஆரம் அமிர்தமதி யணிந்த முத்துமாலைக் காயிற்று. “மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்”3 என்புழித்தார் ஆடவர்க்குரித்தாகக் கூறப்படுதல் காண்க, காமவேட்கையால் நெஞ்சு கலங்குதல்பற்றி, “மாறாய்” என்றாரென்றுமாம். “தொன்னலம் தொலையவுண்டார்” என்றார் மீட்டும் அவர் இவ்வின்பம் நுகரா தொழிவது கருதி. உறக்கத்தை அவர் வினையாக்காது, விழிமேல் ஏற்றியதனால், உடல் அயர்ந்தனரேயன்றி, உள்ளத்தால் காமநுகர்ச்சிக் கண் அயர்வுற்றிலரென்று கொள்க. அட்டபங்கன் இசைத்த இசையால் அமிர்தமதி அறிவு திரிதல் 94. ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச் சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும் வேயிடைத் தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்காத் தீயிடை மெழுகி னைந்த சிந்தைய† ளுருகி னாளே. உரை:- ஆயிடை - அப்போது, அத்திகூடத்து அயல் எழுந்து - யானை கட்டுமிடத்தின் புறத்தே எழுந்து, அமிர்தம் ஊற - கேட்போர் உளத்தே இன்பமுண்டாகுமாறு, சேயிடைச் சென்ற - நெடுந்தொலைவு படர்ந்து மக்கள் இசைக்கின்ற, ஒர் கீதம் - ஒரு பாட்டு, செவிபுக விடுத்தலோடும் - செவிக்கட்சென்ற தன் இசையின் பத்தையூட்டவே, வேயிடைத்தோளி - மூங்கில்போலும் தோளை யுடைய அமிர்தமதி, மெல்ல விழித்தனள் - தன் கண்களை மெல்லத் திறந்து, வியந்து நோக்கா - அவ்விசையின் பத்தை வியப்போடு கேட்டு மருண்டு நாற்றிசையும் பார்த்து, தீயிடை மெழுகின் - நெருப்பிலிட்ட மெழுகுபோல, நைந்த சிந்தையள் - மெலிந்த மனத்தையுடையளாய், உருகினாள் - உருகலானாள் எ-று. ஆயிடை - சுட்டு நீண்டு யகரம் பெற்றது. யானைக்கூடத்தின் கண் இருந்த அட்டபங்கன் எடுத்திசைத்த பாட்டு எங்கும் பரந்து, கேட்போர் செவிவழிச் சென்று இன்பத்தை யுண்டுபண்ணிற்று என்பதாம். சென்ற என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இன்னிசை சென்று அமிர்தமதியின் செவியிடையிசைத்தலும் அவள் துயிலுணர்ந் தாளாகலின், “மெல்ல விழித்தனள்” என்றார். விழித்தாட்கு அவ்விசையின் இன்பம் நெஞ்சினை யுருக்கி மெலிவித்த தென்றற்கு, “தீயிடை மெழுகின்நைந்த சிந்தையளுருகினாளே” என்றார். அமிர்தமதி மதிமயங்குதல் 95. பண்ணினுக் கொழுகு நெஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்வாய் அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க் குரிய போகம் விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்லாள் மண்ணினுக் கரசன் தேவி மதிமயக் குற்றி ருந்தாள். உரை:- பண்ணினுக்கு - பாட்டின் பத்துக்கு, ஒழுகும் நெஞ்சின் பாவை - நீராய் உருகி யோடும் நெஞ்சினையுடைய பாவை போன்ற அமுதமதி, இப்பண்கொள் செவ்வாய் அண்ணலுக்கு - இவ்விசைய முதத்தைச் சொரியும் சிவந்த வாயையுடைய பெரிய வனிடத்தே, அரிவையர்க்கு உரியமகளிர் பெறுதற்குரித்தாயுள்ள, அமிர்தமாய போகம் - பேரின்பத்தைத் தரவல்ல காமபோகம், விண்ணினுக்கு உளது - விண்ணுலகத்தே பெறும் போகமாகும், என்று எண்ணி - என்று தனக்குள்ளே நினைத்து, வெய்துயிர்த்து - பெருமூச்செறிந்து, உய்தல் செல்லாள் - உய்வகையறிய மாட்டாளாய், மண்ணினுக்கு அரசன் தேவி - அவந்திநாட்டுக் கரசனாகிய யசோதரற்கு மனைவியாகிய இவள், மதிமயக்கு உற்று - அறிவு கலங்கி, இருந்தாள் - கையறவு பட்டிருந்தாள் எ-று. ஒழுகுதல் - நீரா யுருகி வழில்; “ஒழுகுநீர் ஆரல்பார்க்கம் குருகு”1 என்புழிப்போல். முன்னைச் செய்யுளில் “உருகினாள்” என்றாராதலின், ஈண்டு “ஒழுகும் நெஞ்சின்” என வாளாமொழிந்தார். நாண்வழி யொழுகும் பாவைபோல, பண்ணின் சுவைவழியோடும் நெஞ்சினளாதல்பற்றி, “பாவை” யென்றார். இதனால் மனவுணர் வின்மையும் பெற வைத்தாராயிற்று. செவிச்சுவை யமுதமாகிய இசையினை வழங்கும் சிறப்பு நோக்கி, “செவ்வாயண்ணல்” என அட்டபங்கனைக் கருதுகின்றாள். அண்ணலுக்கு, விண்ணினுக்கு என்புழி ஏழாவதன்கண் நான்காவது வந்து மயங்கிற்று. அமிர்தமாய போகம், அரிவையர்க்குரிய போகம் என இயையும். உளது - உளதாகிய போகம். விண்ணினுக் குளதென்று எண்ணிய துணையே, பெறுதற் கரிதுபோலும் என்று உட்கொண்டு வருந்தலுற்றாள் என்பார், “வெய்துயிர்த் துய்தல் செல்லாள்” என்றார். மண்ணினுக் கரசன் தேவியாய் இன்பக்குறை பாடின்றியே இருந்தாளாயினும், அறிவறை போகி அட்டபங்கன்பால் பொல்லாக் காமவேட்கை கொண்டு மனம் புழுங்கும் புன்மைகண்டு இகழ்வார், “மண்ணினுக் கரசன் தேவி” என்று விதந்தோதினார். பெண்மையின் புன்மை கூறல் 96. மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவும்* துன்னிடு மினத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்† பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்ப் பெருமை பேணா தென்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே. உரை:- பெண் - பெண்கட்கு, உள்ளம் - மனமானது, மின்னினும் நிலையின்று - மின்னலைக்காட்டிலும் நிலையில்லாதது, விழை வுறின் - எவற்றையேனும் விரும்புமாயின், விழைந்த - அவ்விரும்பியவற்றைப் பற்றிய, யாவும் துன்னிடும் - நினைவு செயல்களையே பொருந்தியிருக்கும், இனத்தின் தூய்மை - துணையா யினார் கூறும் தூய்மையும், சூழ்ச்சியும் - ஆராய்ச்சியுரையும், ஒழிய - கெட, நிற்கும் - தான் செல்லக்கருதிய நெறியிலேயே ஊன்றி நிற்கும், பின்னுறு பழியிற்கு அஞ்சா - பின்னே எய்துகின்ற பழி பாவங்கட்குச் சிறிதும் அஞ்சாது, உயிர்ப்பெருமை பேணாது - பெண்ணுயிராகிய தான் பிறந்த குடிப்பெருமையும் கருதாது, என்னும் இம்மொழிகட்கு - என்று அறிந்தோர் அறிந்துரைத்த இவ்விலக்கணங்கட்கு, இலக்கிய மாயினாள் - சிறந்த எடுத்துக்காட்டாயினாள், அந்தோ - ஐயோ, இவ்வமுதமதியின் இயல்பு இருந்தவாறு என்னே எ-று. “பெண்ணுயிர்..... பேராத்திண்மையும் உடையவல்ல” (47) என முன்பே கூறினமையின், ஈண்டு வாளா உவமமுகத்தால், “மின்னினும் நிலையின்றுள்ளம்” என்றும், ஒரு பொருண்மேற் செல்லும் விழைவினை நீக்கிநிறுத்தும் மதுகையில்லை யென்பதையும் முன்னர், “பெருந்திற லறிவும் உடையவல்ல” (46) என்றதனை விளக்கி, “விழைவுறின் விழைந்தயாவும் துன்னிடும்” என்றும் கூறினார். விழைவு தோன்றிய விடத்து, அவ்விழைவினை நிறைவு செய்து கோடற்கேதுவாய நினைவு செயலே அவர் உள்ளத்திற் பொருந்தி வேறு எவ்வகைச் செயற்கண்ணும் செல்லாதொழிதலின், “விழைந்த யாவும் துன்னிடும்” என்றார்; விழைந்த வென்னும் பெயரெச்சம் கருவியொடு முடிந்தது. துணையாய் ஒழுகும் குணவதி யென்பாளது தூய்மையும் அறிவுரையும் கெடச் செய்யும் இவளது செயல் மேல்வரும் நிகழ்ச்சிகளால் உணரப்படும். அஞ்சாதென்பது- ஈறு கெட்டு நின்றது. உயிர்ப்பெருமை, ஈண்டுக் குடிப்பிறப்பின் மேற்று, இவ்வமுதமதியின் - என்பது முதலாயின குறிப்பெச்சம். குணவதி என்னும் தோழி உற்றது வினவுதல் 97. துன்னிய இரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி இன்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த எல்லைத் துன்னினள் தோழி துன்னித் துணைவரில் தமிய ரேபோன் றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள். உரை:- துன்னிய இரவு நீங்க - பொருந்தியிருந்த இராப்போது கழிய, துணைமுலை தமியளாகி - இரண்டாகிய முலைகளையுடைய அமுதமதி ஓரிடத்தே தனித்திருந்து, இன்னிசை யவனை - இனிய இசையையுடையனாகிய அட்டபங்கனை, நெஞ்சத்து இருத்தினள் - மனத்தே காமக்காதலனாகக் கொண்டு, இருந்த எல்லை - வேறுசெயல் மறந்து இருந்தபோது, தோழி துன்னினள் - உயிர்த்தோழியாகிய குணவதி அவளையடைந்தாள், துன்னி - (அடைந்தவள்) அமுதமதியை நெருங்கி, இறைவி - அரசியே, துணைவர்இல் தமியர் போன்று - மனக்கினிய காதலர் உடனில்லாமையால் தனித்துப்புலம்பும் மகளிரைப் போல, இது - வேறுபட்டிருக்கும் இச்செயல், என் - என்னை, நீ உள்ளத்து நினைந்தது - நீ நின்மனத்தில் கருதியதனை, அருளுக - அடியேனுக்குத் தெரிவித்தருள்க, என்றாள் - என்று வேண்டினாள் எ-று. “துன்னிய இரவு நீங்க” என விதந்தோதியது, அஃது அவட்கு ஓர் ஊழியாய்த் தோன்றி நெடிது கழிந்தமை யுணரநின்றது. யசோதரனோடு கூடியிருப்பவும், நெஞ்சிலே “இன்னிசையவனை” இருத்திக்கொண்டமையின், அவனையின்றி யிருக்குமது அவட்குத் தனிமையாயிற் றென்றற்குத் “தமியளாகி” என்றார். யசோதரனையும் ஏனைத்தோழிமார்களையும் நீங்கித் தனித்திருந்தமை தோன்ற, “தமியளாகி” என்றாரென்றலுமாம். துன்னி யென்ற மிகையால், குணவதி போதரக்கண்டும் அவளை வரவேற்காது தான் வாடிய முகத்துடன் சாம்பியிருந்தமையும், அவள் திடுக்கிட்டு நின்று நோக்கி மெல்ல அருகணைந்தமையும், அமுதமதியின் மறுகிய நெஞ்சமும் மையல்நோக்கமும் மெய்ப்பட்டுத் தோன்றினமையும் பெற்றாம். இறைவனாகிய யசோதரனுடன் பிரிவின்றிக் கூடியிருத்தலின், “இறைலி” யென்றும், பிரிவால் மெலியும் மகளிர்க்குரி மேனி வேறுபாடுகொண்டலின், “துணைவரில் தமியர் போன்று” என்றும், காரணம் காணமாட்டாமையின், “என்னிது” வென்றும் கூறினாள். அமிர்தமதி உற்றது உரைத்தல் 98. தவளவாள் நகையாய்* தண்டார் மன்னவன் தகைமை யென்னுங் கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை பவளவாய் மணிக்கை கொண்ட பண்ணியல் தோட்டி பற்றித் துவளுமா றொருவன் எல்லித் துடக்கினான் றுயர† என்றாள். உரை:- தவளவாள் நகையாய் - வெள்ளிய ஒளிபொருந்திய பற்களையுடையாய், தண்தார் மன்னவன் - குளிர்ந்த மாலையணிந்த வேந்தனாகிய யசோதரனுடைய, தகைமை யென்னும் - காதலன் பென்னும், கவளம் ஆர் - கவளத்தையுண்கின்ற, அகத்து - இன்ப வொழுக்கத்தையுடைய, என்உள்ளம் - என் மனமாகிய, கருங்களி மதநல்யானை - கரிய மதக்களிப்பினையுடைய நல்லயானையை, ஒருவன் - எவனோ வொருவன், பவளவாய் மணிக்கை - பவளம் போலும் தன்வாயாகிய அழகிய கையிடத்தே, கொண்ட - வைத்துள்ள, பண் இயல் தோட்டி - இசையாகிய அங்குசத்தால், பற்றி - கைப்பற்றி, துவளுமாறு - மெலியுமாறு, எல்லி - நேற்றிரவு, துயரத்துடக்கினன் - வருந்த வணக்கிப் பிணித்துக் கொண்டான் எ-று. சொல்லாடலின்றித் துயருற்றிருந்த அமிர்தமதி சில சொல்லத் தொடங்கியதும் குணவதி முகமலர்ந்து முறுவலித்துக் காட்டின மையின், “தவளவாணகையாய்” என்றாள். இப்போது அமுதமதியின் உள்ளம் யசோதரனிற் பிரிந்து நீங்கினமையின், பிரியாமை முன்னிருந்த நிலைமையினை, “தண்டார் மன்னவன் தகைமையென்னும் கவளம்,” என்றாள். கவளம் - யானையுண்ணும் உணவு. ஆர்தல், உண்டல்; “ஆர்ந்தோர் வாயிற்றேனும் புளிக்கும்” (குறுந். 354) என்புழிப்போல. அகம், ஆகுபெயராய் இன்பவொழுக்கத்தைக் குறித்து நின்றது. இசையவன் பால் களவினால் காமவின்பம் துய்க்கக் கருதுகின்றாளாதலின், அவள் உள்ளத்தைக் “கருங்களிம தநல்யானை” யென்றார். யானையின் கருமையை உள்ளத் துக்கும் கொள்க, களவினால் தீய காமம் நுகரக் கருதுதலின்; “கள வென்னும் காரறிவாண்மை”1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. இசையவன் வாயை முன்பு, “பண்கொள் செவ்வாய்” (95) என்றாளாதலின், ஈண்டு, “”பவளவாய் என்றாள். யானை நல்லிசைக்கு வணங்குதல் பற்றி, நெஞ்சினை யானையொடு உருவகம் செய்தார், உள்ளத்தை மதயானை யென்றும், அதனை இசையால் ஒருவன் வணக்கினன் என்றும் கூறியதனால், யசோதரனால் அதனை வணக்க மாட்டாமையும், “இன்னிசையவன்” வழியே செல்வதையும் குறித்தாளாயிற்று. இசை யிசைத்தவன் அட்டபங்கன் என்பது அறியாமையால், “ஒருவன்” என்றாள். “துவளுமாறு” என்றும், “துயர” வென்றும் கூறியது, அவனது இன்றியமையாமையும் தனது ஆற்றாமையும் உணர்த்திநின்றது. கண்டது கனவெனக் குணவதி கழறல் 99. அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன ளல்ல ளேபோல்* கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி யுறழ்ந்து† கூறும் நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண் டினைய‡ லென்றாள். உரை:- அங்கு - அவ்விடத்து, அவள் அகத்துச்செய்கை - அமுதமதி தன்மனத்தே கருதியிருக்கும் செய்கையை, அறிந்தனள் - தெரிந்து கொண்டாளாயினும், அல்லள்போல - தெரியாதவள் போல, கொங்கு அவிழ் குழலி அக்குணவதி - தேன்பொருந்திய பூச்சூடிய கூந்தலையுடை யளாகிய அக்குணவதி யென்னும் தோழி, உறழ்ந்து கூறும் - அவளோடு மாறுபட்டுக்கூறுவாளாயினள், நங்கை - நங் கையே, நின் பெருமை - நினக் குள்ள பெருமையோ, நன்று - பெரிதாகும், கனவினால் - கனவின்கண், நனவெனக் கண்டபங்கமது - நனவுபோலத் தோன்றக் கண்ட இழிதக்க நிகழ்ச்சியை, உள்ளி - நினைந்து, உள்ளம் பரிவுகொண்டு - மனத்தில் வருத்தமுற்று, இனையல் - வருந்தாதே கொள்; என்று உரைத்தாள் எ-று. நினைவுவடிவாகவே நின்றொழியாது செய்கைக்கண்ணும் ஒன்றி நிற்றலின், எண்ணமென்னாது, “அவளகத்துச் செய்கை” யென்றார். அமுதமதியின் கருத்தறிந்தும் அதன் தீமைகருதி விலக்கும் கருத்தினளாதலின், “அறிந்தனளல்லளேபோல் உறழ்ந்து கூறும்” என்றார். “உயர்மொழிக் குரிய வுறழுங்கிளவி”1 என ஆசிரியர் தோழிக்கும் உரித்தென்றலின், தோழி ஈண்டு தேவியை உறழ்ந்து கூறுகின்றாள். நன்றே என்புழி ஏகாரம் எதிர்மறையாகக்கொண்டு, இது நின்பெருமைக்குத் தீது என்று உரைப்பினுமாம். பங்கம் - இழிவு; ஈண்டு இழிதக்க கனவின்மேற்று, இனைவது பேதையார் செயல் என்பாள், “இனையல்” என்றாள். மற்று - அசைநிலை. அமுதமதி சொற்கேட்டுக் குணவதி அஞ்சுதல் 100. என்மனத் திவரு மிந்நோய்* இவளறிந் திலள்கொ லென்றே தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற்† றென்கொல் சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள். உரை:- என் மனத்து - என் நெஞ்சில், இவரும் - மேன் மேன்மிகும், இந்நோய் - இக்காமநோயை, இவள் அறிந்திலள் - இவள் இன்னும் அறியவில்லை, என்று - என்று அமுதமதி நினைத்து, தன்மனத்தினை - தன் மனத்திருந்த எண்ணங்களை, அவட்கு - அக்குணவதிக்கு, தான் - தானே வாய்விட்டு, உரைத்திடுதலோடும் - உரைத்தலும், சில்மலர்க்குழலி - சிலவாகிய பூக்களை யணிந்த கூந்தலையுடையாய், நின்மனத்து இலாத - நின்நெஞ்சில் இல்லாத இச்சொற்களை, நீபுனைந்து - நீயே படைத்துக் கொண்டு, அருளிற்று - உரைத்தது, என்கொல் - என்னை, என்று – என்று சொல்லி, செவி புதைத்து - தன் இருகாதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு, இனிது சொன்னாள் - அறவுரையைக் குணவதி சொன்னாள் எ-று. இவர்தல் - மேலும் மிகுந்தேகுதல். “இவர்தந்தென் மேனி மேலூரும் பசப்பு” 1 என்புழிப்போல. கொல்லிரண்டனுள் முன்னது ஐயம், பின்ன தசைநிலை. குலமகளிர்க் கொவ்வாத சொல்லை அமுதமதி கூறுதலின், “நின்மனத்து இலாத சொல்” என்றும், அது மெய்யன் றென்றற்கு “நீ புனைந்தருளிற்று” என்றும், அது நகையேயும் வேண்டற்பாற் றன்றாகலின், “என்கொல்” என்றும் கூறினாள். “புனைந்துரை யன்று; மெய்யே” என அமுதமதி வற்புறுத்தினமையின், குணவதி பொறாது அஞ்சினமை தோன்றச் “செவிபுதைத்து” என்றும், அறவுரை பகர்ந்தமை விளங்க, “இனிது சொன்னாள்” என்றும் கூறினார். அறவுரை இன்பம் பயப்பதாதலின், “இனி” தென்றார்; அங்கணத் துளுக்க வமிழ்துபோல் பயன்படா தொழிந் தமையின், இனிதென்றே யொழிந்தார். அமுதமதி தனது ஆற்றாமை கூறல் 101. மாளவப் பஞ்ச வப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் கேளல மாயி னாமுங் கேளல மாது மாவி நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை வாளள வுண்கண்* மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.† உரை:- வாள் அளவு உண்கண் மாதே - ஒளிகலந்தமையுண்ட கண்களையுடைய அன்புள்ள தோழி, அவன் அமுதவாயில் - அந்த இன்னிசையோனுடைய அமுதம் பொருந்திய வாயால், மாளவப்பஞ்ச வப்பண் - மாளவ பஞ்சமம் என்ற பண்ணின் இசையை, மகிழ்ந்து கேளலமாயின் - அவனைக் கூடி மகிழ்ந்து கேளாதொழிவோ மாயின், நாமும் கேளலமாதும் - நாமும் தோழமையினின்றும் நீங்கிவிடு வோம், மறுத்து உரைமொழியின் - நீ என்விருப்பத்தை மறுத்துமாறு கூறுவாயாயின், நாள் - உயிரோடு கூடிவாழும் வாழ்நாளும், அவமாகி - பயனற்றதாகி, இன்னே ஆவிநடந்திடும் - இப்பொழுதே உயிர் நீங்கிவிடும், நடு ஒன்று இல்லை - இதற்கிடையே நம்மை வாழ்விப்பது வேறொன்றும் கிடையாது எ-று. மறுத்துரை மொழியின், நாள் அவமாகிய ஆவி இன்னே நடந்திடும் என இயைத் துரைத்துக் கொள்க. மாளவபஞ்சமம் என்பது ஒருவகைப் பண்; மாளவ கௌளம், கேதார கௌளம் என்ப போல்வது, இஃது அட்டபங்கன் பாடியது. கேளாவழிப்படும் பயன் இது வென் பாள், “நாமும் கேளலமாதும்” என்றும், மறுத்து மொழியின் வரும் பயனை, “அவியின்னே நடந்திடும்” என்றும் கூறுகின்றாள். ஒன்று - நாள் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கன. வாள் - ஒளி, அளவு - அளவுதல், கலத்தல். இவ்வாறு அறந்திறம்பிய நெறியொழுகுபவள் கேண்மையும் உயிர்வாழ்வும் பெறுதலினும் பெறாதொழிவது பெண்ணுலகிற்குச் சிறப்பாமென்று கருதி மறுப்பினும் மறுப்பளென்ற எண்ணத்தால், வரும் பாட்டில், குணவதியுடன் மிகநயமாக இவ் வமுதமதி பேசுதலைக் காண்மின். அவ்விசையவன் யாவனென்றறியக் குணவதி துணிதல் 102. என்னுயிர்க் கரணம் நின்னோ டின்னிசை புணர்த்த* காளை தன்னின்மற் றொருவ ரில்லைத் தக்கது துணிக தாழ்க்கின்† என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றாள்‡ துன்னும்வா யவளோ டெண்ணாத் § தோழியு மெண்ணி னாளே. உரை:- என் உயிர்க்கு அரணம் - என் உயிர்க்குப் பாதுகாப் பாவார், நின்னோடு - உன்னோடு, இன்னிசை புணர்த்த காளைதன்னின் - இனிய இசையைப்பாடிய அக்காளையேயன்றி, மற்று - வேறே, ஒருவர் இல்லை - ஒருவரும் இல்லை, தக்கது துணிக - செய்யத்தகுவது யாதோ அதனைச் செய்க, தாழ்க்கின் - காலம் நீட்டிப்பின், என் உயிர்க்கு ஏதம் - என் உயிர்க்கு இறுதியுண்டாகும், எய்தின் - அவ்வா றஃது உண்டாயின், இது - இத்தாழ்க்கையினால், பழி பெருகும் - பெண்பழி தோன்றி நின்வழிவழிப் பெருகிநிற்கும், என்றாள் - என்று அமுதமதியுரைத் தாளாக, தோழியும் - தோழியாகிய குணவதியும், அவளோடு - அவ்வமுதமதியுடன், துன்னும் வாய் - அவ்விசைய வனைத் தேடி யடைதற்குரிய நெறிகளை, எண்ணி - ஆராய்ந்தறிந்து, எண்ணினாள் - அவன் இருக்குமிடத்தைத் தேடிச் செல்லத் துணிந்தாள் எ-று. “உயிர்க்கு அரணமாவார் அதற்குக் கேடு செய்யார்” என்பது பற்றி, “என்னுயிர்க்கரணமாவார்” என்றெடுத்து “நின்னோடு” என்று உயர்பின்வழித்தாகிய ஒடுக்கொடுத்துச் சிறப்பித்தாள்; ஒடு - ஓடென விகாரம். தோழிவாயிலாக இசையவனைப் பெறும் இயைபு பற்றி, அவட்கு உயர்பு தந்தாள் என வறிக. பலரறிய இசையவனைத் தேடிக் காண்டல் அமுதமதியின் கருத்து நிறைவேறற்காகாமையின், “தக்கது துணிக” என்றும், அதனையும் விரைந்து செயல்வேண்டுமென்றற்கு “தாழ்க்கின் ஏதம்” என்றும், “பழிபெருகும்” என்றும் கூறினாள். இரவுப் போதில் உறங்குங்காலத்தே அவ்வின்னிசையை அமுதமதி கேட்டாளா தலின், இசை வந்த பக்கம், இசையவனுறைவிடம், அதன் அணிமை சேய்மைநிலை, அவனைக் காணுந்திறம், அவனை யுடன்படு வித்தற்கு வேண்டும் சொற்பொருள்கள் என்று இன்னோ ரன்னவற்றைத் தோழி அமுதமதியோடு கலந்தே யாராயவேண்டி யிருந்தமையின், “துன்னும் வாய் அவளோ டெண்ணா” என்றும், எண்ணியபின் எண்ணியாங்குச் செய்வன செய்யத் தொடங்கினா ளென்றும் கூறினார். எண்ணுவதன் பயன் இயற்றலே யாதலின், “எண்ணினாள்” என்று உபசரித்தார். எண்ணா - செய்யா வென்னும் வாய்பாட்டு வினை யெச்சம். இசை பாடியவன் அட்டபங்க னென்று குணவதி மகிழ்ச்சியுடன் மீளுதல் 103. மழுகிரு ளிரவின் வைகி மாளவப் பஞ்ச வத்தேன் ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவ னியாவ னென்றே கழுதுரு வவனை* நாடிக் கண்டனள் கண்டு காமத் தொழுகிய வுள்ளந் தையற் கொழியுமென் றுவந்து மீண்டாள். உரை:- இருள் மழுகு இரவின் வைகி - நள்ளிருள் நெகிழும் கடையாமத்தில் தன் இருக்கையிலே இருந்து, மாளவப் பஞ்சவத்தேன் - மாளவபஞ்சமம் என்ற பண்ணாகிய தேனை, ஒழுகிய மிடற்று - சொரிந்த கண்டத்தையுடைய, காளையுள்ளவன் - காளைப்பரு வத்தான், யாவன் என்று - யாவனோ என்று, நாடி - தேடிச் சென்று, குழுது உரு அவனை - பேயின் வடிவத்தையுடைய அவனை, கண்டனள் - குணவதி தன்கண்களால் பார்த்தாள், கண்டு - அவ்வாறு கண்ட தனால், தையற்கு - தையலாகிய அமுதமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கழிகாமத்துறையில் பெருகியோடும் மனமானது, ஒழியும் - இனி அதனின்றும் நீங்கும், என்று உவந்து - என்று நினைந்து மகிழ்ந்து, மீண்டாள் - அமுதமதிபால்வந்து சேர்ந்தாள் எ-று. நடுவியாமத்தே செறிந்திருக்கும் திணியிருள், கடையாமத்தே கட்டுவிட்டு நெகிழ்ந்து மழுகியிருத்தலின், அதனை “மழுகிருளிரவின்” என்றார். அவள் அச்சமின்றிச் சேறற்கும் அது நன்றாதலின், மழுகிருளை எடுத்தோதினார். பண்ணினைத் தேனாக வுருவகஞ் செய்தமையின், அதற்கேற்பப் பாடுதலை ஒழுகுதலென்றார். ஓர் - அசை. காளையுள்ளவன் யாவன் என்பதற்கு, காளை போல்வானாய் உள்ளான் ஒருவன், அவன் யாவன் என்று கூறலு மொன்று. கழுது - பேய். யாவன் என்று நாடிக் கண்டனள் என இயைக்க. காணப்போந்த குணவதிக்கு அமுதமதியின் காமவொழுக்கத்தின்கண் விருப்ப மின்மையின், அட்ட பங்கனது பேய்போலும் காட்சி அருவருப்பை விளைத்ததாயினும் ஒருபால் மிக்க மகிழ்ச்சியே விளைத்ததென்பார், அதற்கு ஏதுவின் மேல்வைத்து, “காமத்தொழுகிய வுள்ளம் தையற் கொழியும் என்று உவந்து” என்றும், “மீண்டாள்” என்றும் கூறினார். “மீண்டாள்” என்றதனால், இனித் தனக்கு இத்தகைய வினை நிகழாது; இஃது இவ்வளவில் முடிந்தொழிந்தது என்ற கருத்துடையளாய்க் குணவதி திரும்பினமை பெற்றாம்; எடுத்த வினை முற்றினல்லது மீளுதல் வினை செய்வார் தொழிலன்றாதலின். குணவதி தான் கண்டதனை அமுதமதிக்குக் கூறல் 104. மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த* கீதத் தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் தன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன் என்னை நீ முனிவை யென்னா விசைக்கில† னவற்கீ தென்றாள். உரை:- மன்னன்மாதேவி - அரச மாதேவி; நின்னை வருத்துவான் - நின் நெஞ்சு வருந்தும்படியாக, வகுத்த கீதத்து அன்னவன் - பாடிய இசையினை யுடையவன், அத்திபாகன் - ஓர் யானைப்பாகனாவான், அட்ட மாபங்கன் என்பான் - அட்டபங்கன் என்று பெயர் கூறப்படுவான், தன்னை - அவனை, மெய்தெரியக் கண்டு - உடல் முழுதும் நன்கு கண்டு, தளர்ந்து - மனம் சோர்ந்து, கண்புதைத்து மீண்டேன் - கண்களை மூடிக் கொண்டு திரும்பினேன், என்னை நீ முனிவை என்னா - சென்ற கருமத்தை அவற்கு உரைப்பின் என்னை நீ வெகுள்வாய் என்று அஞ்சி, ஈது அவற்கு இசைக்கிலன் - இதனை அவனுக்கு யான் சொல்லவில்லை, என்றாள் - என்று குணவதி கூறினாள் எ-று. மன்னன்பால் ஒன்றி அவற்கு உரிமைப்பட்டிருந்த மனம் நீங்கி, அயலான் ஒருவன்மேற் சென்றமையின், அமுதமதியை, அரசன்தேவி யென்னாது, “நங்கை” (99) என்றும், “சின்மலர்க்குழலி” (100) என்றும் கூறிப்போந்தவள், இனி, அவ்வாறு செல்வதொழிந்து அரசற்கே யுரித்தானமையின், “மன்னன் மாதேவி” என்றாள். அட்டபங்கன்பால் தனக்குண்டான அருவருப்பைக் குணவதி, அவனிசைத்த பண்மே லேற்றி, “வருத்துவான் வகுத்த கீதம்” என்றாள். பலவேறுபண்களாக வகுக்கப்படுதலின், “வகுத்தகீதம்” என்றார். அத்தி- யானை - மா - அசை. அட்டபங்கன் வடிவு முழுதும் விளங்கக்கண்டமை தோன்ற, “மெய் தெரியக்கண்டு” என்றும், அவ்வடிவின் பொல்லாங்கினைத் “தளர்ந்து கண்புதைத்து” என்று குறித்தும், அதனைக் காணின் அமுதமதி அறவே அவனை வெறுப்ப ளென்னும் துணிவால், “என்னை நீ முனிவை யென்னா விசைக்கில னவற்கீ” தென்றும் கூறினாள். தளர்ச்சி அமுத மதியின் பொருட்டு. அட்டபங்கன் வடிவைக் குணவதி கூறல் 105. நரம்புகள் விசித்த மெய்யன் நடையினிற் கழுத ணைந்தோன் திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவன் சீறிற்* குரங்கினை யனையன்† கூனன் குழித்துபுக் கழிந்த கண்ணன் நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள். உரை:- நரம்புகள் விசித்த மெய்யன் - நரம்புகள் புறத்தே தோன்றுமாறு எழுந்த மெய்யினையுடையவன், நடையினில் கழுது அணைந்தோன் - நடையால் பேய்க் கோட்பட்டானை யொப்பன், திரங்கிய விரலன் கையன் - தோல்சுருங்கித் தேய்ந்த விரலையும் கையையுமுடையவன், சிறுமுகன் - சிறுத்த முகத்தையுடையவன், சினவன் - முன்கோபி, சீறின் குரங்கினையனையன் - சினந்தவழி முகம் குரங்கினை யொப்பன், கூனன் - கூனிய முதுகை யுடையன், குழிந்து புக்கு - குழிந்து உட்சென்று, அழிந்தகண்ணன் - இதழ் புண்ணுற்று அழுகிய கண்களையுடையவன், நெருங்கலும் நிரலும் இன்றி - நெருக்கமும் வரிசையுமின்றி அங்கொன்றும் இங்கொன்று மாக, சிலபல் நிமிர்ந்து - சிலபற்களே மிக நீண்டு, உள - அவன் வாயில் உள்ளன, என்றாள் - என்று எடுத்துரைத்தாள் எ-று. நரம் பெழுந்து விசித்தது போலத் தோன்றலின், “விசித்த மெய்யன்” என்றாள். புழுதி யளைந்த மேனியும் மருண்டநோக்கமும் தள்ளாடுநடையும் உடைமையின், “நடையினிற் கழுதணைந்தோன்” என்றாள். திரங்கிய என்பதனைக் கையன் என்புழியும் கூட்டுக. தலைக்கும் உடற்கும் ஒவ்வாது சிறுத்திருத்தலின், “சிறுமுகன்” என்றும், அச்சிறுமை விரைவில் வெகுளும் இயல்பினைக்காட்டலின் “சினவன்” என்றும். சினந்து சீறுங்கால் முகம் பெறும் வடிவினை “சீறிற் குரங்கினை யனையன்” என்றும் கூறினாள். குழிந்தெனவே யமையுமாயினும், “புக்கு” என்றது, நெடி தாழ்ந்து கிடந்தமை தோன்ற. இதழ்புண்ணூற்று மயிருதிர்ந்து சீயும் பீளையும் நீரும் ஒழுகுதல் பற்றி, “அழிந்த கண்ணன் என்றாள்; “சிலபல்” என்றும் “நிமிர்ந்துள” என்றும் கூறியதனால்; இருகடைவாயிலும் முன்னும் மேலும் கீழும் இவ்விரண்டு பற்களுள வென்றும், முன்னுள்ளவை மிக நீண்டு புறத்தே வெளிப்பட்டுத் தோன்றின வென்றும் கொள்க. இன்ன இயல்பினனான இவனை நீ வேண்டற்க எனக் குணவதி கூறல் 106. பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் நீதவிர்ந் திடுக நெஞ்சின் நிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிதழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே. உரை:- பூதி கந்தத்தின் - புழுதி நாற்றமும், மெய்யிற் புண்களும் - உடலிடத்தேயுள்ள புண்களும், கண்கள் கொள்ளா - கண்கள் தாமும் பார்த்தற்கு உடன் படா, சாதியும் தக்கதன்று - அவனுடைய குடிப்பிறப்பும் தகுதியுடை யதன்று, அவன் வயின் தளரும் உள்ளம் - அவன் பொருட்டு வருந்தி மெலியும் நின்மன விருப்பத்தை, நீ தவிர்ந்திடுக - நீ விட்டொழித்து, நெஞ்சின் - அவன்பாற்செல்லும் நின் நெஞ்சத்தை, நிறையினை - நினக்கு இயல்பாயுள்ள நிறையைக் கொண்டு, சிறைசெய்க - தடுத்து நிறுத்திக் கொள்க, என்றாள் - என்று பரிவோடு கூறினாள், கோது அவிழ்ந்திட்ட - குற்றம் இல்லாத, உள்ளக் குணவதி - மனத்தை யுடைய குணவதி யென்னும், கொம்பன்னாள் - பூங்கொம்பு போலும் தோழி எ-று. பூதி - புழுதி. கந்தம் - நாற்றம். காண்டற்கு நம் நெஞ்சு ஒரு கால் விரும்பினும், கருவியாகிய கண்கள் அதற்கு உடன்படா எனப் பார்த்தற்கு மிக்க அருவருப்புடைய அவனது உடல் வடிவை யுணர்த்து வாள், “கண்கள் கொள்ளா” என்றாள். மெய்யிற் புண் கூறவே, அவ் வட்டபங்கன் குட்ட நோயால் வருந்துதல் பெற்றாம். சாதி, ஈண்டு இற்பிறப்பின் மேற்று. நெஞ்சின் என்புழி ஐயுருபு, சாரியை நிற்கத் தான்நிலையாதாயிற்று. நிறையினை யென்புழிக் கொண்டு என்று ஒருசொல் வருவிக்க. நிறையினை யென்புழி ஐயுருபைப் பிரித்து நெஞ்சோடு கூட்டி, நெஞ்சினை நிறையினால் சிறை செய்க என்றுரைப் பினுமாம். இனி, நெஞ்சு இல் நிறையினைச் சிறை செய்க என்று கொண்டு, நெஞ்சிடத்தே நில்லா தொழுகும் நின் நிறையினை நிறுத்துச் சிறை செய்கை எனினுமமையும். கோது, குற்றம். குணவதியைக் “கொம்பனாள்” என விசேடித்ததனால், அமுதமதியாகிய பூங்கொடிக்குக் கொழுகொம்பாய் நின்று, அக்கொடி படர விரும்பும் இடத்திற்குக் கொம்பு துணைசெய்து நிற்குமாறு போல, அமுதமதி விரும்பும் அட்ட பங்கனை அடைந்து மகிழ்தற்கு இக்குணவதி துணையாவது பெற்றாம். குணவதி கூறியவற்றை அமுதமதி மேற்கொள்ளாது மறுத்தல். 107. என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம் சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும் ஒன்றிய அழகுங்* கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ. உரை:- என்றலும் - என்று குணவதி கூறினதும், இறைவளை - இறைபொருந்திய வளையுடையாய். இவற்றினால் என் - நீ கூறிய இக்குறைபாடுகளால் வரும் கேடு என்னை, அவன்கண் ஆர்வம் சிறந்து முன்னே சென்றது - அவ்வட்டபங்கன்பால் என் நெஞ்சம் காமக்காதல் மிகுந்து முன்னமே சென்றொடுங்கிவிட்டது. திருவொடுதிறலும் - செல்வத்தோடு கூடிய வலியும், தேசும் - புகழும், ஒன்றிய அழகும் - உடலோடு ஒன்றுபட்டுத் தோன்றும் வனப்பும், கல்வி - கல்வியறிவும், ஒளியமை குலத்தோடு - புகழ் நிறைந்த குடிப்பிறப்போடு, எல்லாம் - கூறப்படாத பிறவுமெல்லாம், நின்று - எஞ்சாமல் நின்று, செய்பயனும் - ஒருவர்க்குவிளைக்கக் கூடிய பயன்தானும், நல்லார் நெஞ்சமும் - அழகிய மகளிரின் மனமும் அதன் வாயிலாக எய்தும் அவரது போகமும், பெறுதல் - பெறுவதாம் , என்று சொல்லி மேலும் கூறுகின்றாள் எ-று. குணவதி கூறிய குற்றங்களைக் கேட்ட அமுதமதி, அவளை மறுக்குமாற்றால், குணமெனக் கருதப்படுவனவற்றுட் சிலவற்றைக் கூறலுற்று, திருவும், திறலும், தேசும், அழகும், கல்வியும், ஒளியும், குலனும், பிறவுமெல்லாம் ஒன்றி நின்று ஒருவர்க்குச் செய்யும் பயன் அழகிய மகளிர் நெஞ்சும் அவர் தரும் போகமும் பெறுதலேயாம்; பெறாவழி அவையும் குற்றமாம்; குற்றமென்று கூறப்பட்டன தாமும் அப்பயனை எய்துவிக்குமாயின், குணமாம் என்பது குறிப்பால் உரைத்தாளாயிற்று. எல்லாம் என்றது, கூறப்படாத குணமெல்லாம் எஞ்சாமல் தழுவி நின்றது. பயனும் - என்புழி உம்மை சிறப்பு; நெஞ்சமும் - என்புழி உம்மை, எச்சப் பொருட்டு; பிற எண்ணுப்பொருளில் வந்தன. அன்றோ - அசை. 108. காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் யாருழை யருளைச் செய்யு மவனமக் கைய னாக* நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். உரை:- நேரிழை - நேரிய இழையினையுடைய தோழி; காரியம் முடிந்த பின்னும் - ஒருவன் எடுத்த காரியம் முடிந்த பின்னரும், காரண முடிவு காணல் - அக்காரியம் தொடங்கு முன் காணவேண்டிய காரணமும் பயனும் ஆராய்தல், காரிய மன்று என்று - செய்யத்தகு வதன்று என்றும், இது என்றும் - இதுவும் அதுபோல்வதே யென்றும், கருதிடு - உணர்வாயாக, கடவுள் காமன் - கடவுளாகிய காமதேவன், யாருழை அருளைச் செய்யும் - எவன்பால் தன் அருளைச் செய்கின்றானோ, அவன் நமக்கு ஐயன் - அவனே நமக்குக் காமக் கழிவனாவான், ஆக - ஆதலால், நினைந்து போகி - இதனை நினைத்துக் கொண்டு சென்று, நீடலை - நீட்டியாது, இது முடி - இதனை முடித்துக் கொண்டு வருக, என்றாள் - என்று அமுதமதி சொன்னாள் எ- று. ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டின், தொடக்கத்தே அக்காரியத்துக்குரிய காரணங்களையும் அவற்றால் அது முடிவதையும், அதனாலாம் பயனையும் சீர்தூக்கிக் காண்டல் வேண்டுமென்றும், முடிந்தபின் காண்டலால் ஒரு பயனும் விளையாதென்றும் பொருள் நூல் கூறுதலின், “காரிய முடிந்த பின்னும் காரண முடிவு காணல், காரிய மன்று” என்றாள். என்று என்பதனை அன்றென்பதனோடும் கூட்டுக. இது வென்புழி எச்சவும்மையை விரித்து அன்னதே என ஒரு சொல் வருவித்து முடிக்க. இனி, தான் மேற்கொண்டிருக்கும் செயற்கு ஓர் அமைதி கூறுவாளாய், மகளிர் ஆடவர்பால் காமவின்பந் துய்த்தலே பொருளாகவுடைய ரென்றும், அக்காமவின்பத்தை நியமிக்கும் காமக்கடவுள் யாவர்பால் அதனைக் கூட்டுகின்றானோ, அவர்பால் அம்மகளிர் அதனைப் பெறற்பாலர் என்றும் சொல்வாள், ‘கடவுட் காமன் யாருழை அருளைச் செய்யும் அவன் நமக்கு ஐயன்’ என்றாள். முன்பு வேறு நினைவொடு சென்றமையின் முடித்திலை; இப்போது இக்கருத்தை நினைந்து சென்று முடிக்க வென்பாள், “நினைந்து போகி” என்றும் , விரைந்து செய்தல் வேண்டுமென்றற்கு, “நீடலை” யென்றும், முடித்துக்கொண்டன்றி வறிது மீளலாகா தென்பாள், “முடி” விரைவு தோன்ற “யிது” என்றும் கூறினாள். குணவதி மனம் நடுங்கி நிற்றல் 109. தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனை யென்னா நாவினா லுளைந்து கூறி நடுங்குபு வொடுங்கி நின்றாள். உரை:- தேவி - அரசமாதேவி, நீ கமலையாவாய் - நீ தாமரை மேலிருக்கும் திருமகளை யொப்பாய், திருவுளத்து - நின் அழகிய மனத்தால், அருளப்பட்டான் - விரும்பப்பட்டவனோ, ஆவி செல்கின்ற - உயிர் போதற்கேதுவாகிய, வெந்நோய் அருநவை - கொடிய குட்ட நோயால் உற்ற தாங்கமுடியாத துன்பத்தையுடைய, ஞமலி யாகும் - நாயினை யொப்பான், பூவின்வார் கணையன் - பூவாகிய நீண்ட அம்பினையுடைய காமக்கடவுள், இதனைப் புணர்த்தவாறு - நின்னை அவனுக்கு நியமித்த வகைதான். என்னே - என்னென்பது, என்று நடுங்குபு - என்று மனங்கலங்கி, நாவினால் உளைந்து கூறி - நாவால் வருந்திச் சொல்லி, ஒடுங்கி நின்றாள் - உடல் சுருங்கி நின்றொழிந்தாள் எ-று. கமலை, கமலத்தை இருக்கையாகவுடையவள்; கமலம் - தாமரை. புண்ணிய முடையாரை யருளுவதே திருமகளின் உளப்பண்பு என்றற்குத் “திருவுளம்” என்றும், நின் உளத்தால் விரும்பப் பட்டவன் அன்னனாகாது பெரும் பாவத்தின் பயனாக வெய்தும் குட்ட நோயும் கொடுந்துன்பமும் உடையானென்பாள், “அருளப் பட்டான் ஆவி செல்கின்ற வெந்நோய் அருநவை ஞமலியாகும்” என்றும் கூறினாள். அருவருப்பு மிகுதி தோன்றற்கு, “ஆவி செல்கின்ற வெந்நோய்” என்றாள். “பூவின்வார் கணையன் இதனைப் புணர்த்த வாறு என்னே” என்றது, திருமகளை ஒரு நாயிடத்தே காமவின்பந் துய்க்குமாறு நியமிக்கும் காமக்கடவுளை இகழ்ந்த வாறாம். இவ்வாறு காமக் கடவுளை இகழ்ந்தும், தேவியின் செய்கையை வெறுத்தும், தான் அவள் செய்கைக்குத் துணையாக நேர்ந்ததற்கு வருந்தியும் வெறுப்புத் தோன்றும் சொற்களை வழங்குதலின், “நாவினாலுளைந்து கூறி” யென்றும், பின்விளைவு நினைந்து அஞ்சி உளங்குலைவது தோன்ற, “நடுங்குபு வொடுங்கி நின்றாள்” என்றும் கூறினார். குணவதி அட்டபங்கனிடம் செல்லுதல் 110. ஆடவரன்றி மேலா ரருவருத்* தணங்க னாருங்† கூடலர் துறந்தார்‡ நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப் பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென் றெண்ணித்§ தோடலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள். உரை:- அணங்கனாரும் - திருமகளை யொத்த மகளிர் தாமும், ஆடவரன்றி - தாம் விரும்பும் ஆண்மக்களை யன்றி, மேலார் - மணந்து கூடுதற்கமைந்தவர் மிக்க மேலோராயினும், அருவருத்து - அவரை வெறுத்து, கூடலர் - கூடுவதொழித்து, நோன்மைக் குணம் புரிந்து - தவமும் விரதமும் மேற்கொண்டு, உயர்தற்காக - தேவராய்த் தாம் விழைந்த போகத்தைத் துய்ப்பது குறித்து, துறந்தனர் - துறவு பூண்டனர், பீடுடை அயனார் - பெருமை பொருந்திய பிரமனால். தந்த - படைக்கப்பட்ட, பெருமகள் இவள் - பெருமையினையுடையவள் இவ்வமுதமதி, ஆதலின் இவள் துறத்தலின் இறத்தலே தவறாது செய்வள், என்று எண்ணி - என்று தனக்குள்ளே ஆராய்ந்து, துணிந்தனள் - அட்டபங்கன் பாற்சென்று தேவி விரும்பிய காரியத்தை முடித்துத்தர மனம் துணிந்து, பெயர்த்து - மறுபடியும், தோடு அலர் குழலி தோழி - பூக்களை யணிந்த கூந்தலையுடைய அமுதமதிக்குத் தோழியாகிய குணவதி, சென்றாள் - அட்டபங்கன் இருக்கு மிடத்திற்குச் சென்றாள் எ-று. ஆடவர், மெய்வன்மையும் இளைமைச் செவ்வியும் உடைய ஆண் மக்கள், உம்மை - சிறப்பு. எத்துணை மேலோராயினும் தம் மனம் செல்லாவழி மகளிர் அருவருப்பரென்பது உலகறிந்த செயலாதலின், “அருவருத்து அணங்கனாரும் கூடலர்” என்றும், அவர் கருத்தறியாது அம்மேலோரைப் புணர்த்தவழி அம்மகளிர் செய்யும் செய்கை கூறுவாள், “துறந்தார் நோன்மைக்குணம் புரிந்துயர்தற்காக” என்றும், அழகும் திருவும் இளமையும் அடைய மிக்கிருத்தலின், பிரமன் சிறப்பாக முயன்று படைத்த பெருமையுடையள் இவ்வமுதமதி யென்றற்கு, “பீடுடையயனார் தந்த பெருமகள்” என்றும், கணவனோடு கூடியிருத்தலின், துறவு பூண்பதை விடுத்து இறத்தலையே செய்வள் என்பாள், “பெருமகள் இவள்” என்றும் குணவதி எண்ணினாளாயிற்று. “இறப்பாள்” என்று கூறிற்றிலள், நெஞ்சினுள் அதனைத் தெளிய வுணர்ந்து கொண்ட மையின். குணவதியும் அமுதமதியின் கருத்துக்கு நேர்ந்த உடம் பட்டமையின், “தோடலர் குழலி தோழி” என்றும், துணியாதிருந்தவள், இப்போது அட்டபங்கன் பால் செல்வது தக்கது என்று துணிந்தாளென்பார், “துணிந்தனள்” என்றும், இடையறவின்றி உடனே செல்லுதல் தோன்ற, “துணிந்தனள் சென்றாள்” என்றும், முன்னொருகாற் சென்றிருத்தலின், “பெயர்த்து” என்றும் கூறினார். நோன்மை, தவம். குணம், விரதம். தவமுடையார்க்கு விரதம் பண் பாதலின், அதனைக் “குணம்” என்றார். சீவகனை மணக்கக் கருதியிருந்த குணமாலைக்கு வேற்று வரைவு பேசப்பட்டபோது, “காளைக்கு எந்தையும் யாயும் நேராவிடின் இறத்தலொன்றோ, சிந்தனை பிறி தொன்றாகிச் செய்தவம் முயறலொன்றோ”1 எனக் கூறுதல் காண்க. சமண் சமயத்தவர், மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்ப வாகலின், உயர்தல் என்பதற்குத் தேவராய் இன்புறுதல் என்று உரை கூறப்பட்டது. “விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து, அருகன சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து, கருது நற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தி நீங்கிக் கற்பத் துத்தம தேவராவார்” (739) என்றும், “மாதவந் தாங்கி வையத்தையராய் வந்து தோன்றி, ஏதமொன்றின்றி வீடு மெய்துவர்” (740) என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. தேவர் பெறும் இன்பத்தை, “ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர் ஏடார்ந்த தொங்கலராய் இன்பநீர்ப் பெருவெள்ளம் நீடாரக் குளித்தாடும் நிலைமையரே யவரெல்லாம்” (துறவு 211) எனத் தோலாமொழித் தேவர் கூறுவது காண்க. குணவதி அட்டபங்கன்பால் தேவியின் விழைவைத் தெரிவித்தல் *111. முடைப்படு நாற்ற மேனி முழுதழுக் காடை போர்த்துக் கடைப்படு துகளு மண்ணுங் கஞலிய கூடத் தாங்கோர் புடைக்கிடந் துறங்கு வானைப் புழுங்கிய மனத்தோ டண்மி விடைப்பருந் தானை வேந்தன் றேவியின் விழைவு சொன்னாள். உரை:- முடைப்படு நாற்றம் மேனி - முடைநாற்றம் நாறுகின்ற வுடம்பு, முழுது - முழுதும், அழுக்காடை போர்த்து - அழுக்கேறிய ஆடையால் போர்த்துக்கொண்டு, கடைப் படுதுகளும் - தூய்மையற்றதாகக் கருதப்படும் கூளமும், மண்ணும் - மண்பொடியும், கஞலிய கூடத்து - நிறைந்த யானைக் கூடத்தில், ஓர் புடை - ஒரு புறத்தே, கிடந்து உறங்குவானை - படுத்துறங்கிய அட்டபங்கனை, புழுங்கிய மனத்தோடு அண்மி - அருவருத்த மனத்துடன் அருகே சென்று, விடைப்பு அருந் தானை வேந்தன் தேவியின் விழைவு - வேறுபடுத்தற்கரிய தானை யினையுடைய வேந்தனான யசோதரனுக்கு மனைவியாகிய அமுதமதியின் விருப்பத்தை, சொன்னாள் - சிலவாய சொற்களால் குணவதி மெல்லச் சொன்னாள் எ-று. மேனி முழுதும் புண்ணுற்றுத் தீநாற்றம் நாறக் கிடத்தலின், “முடைப்படு நாற்ற மேனி முழுதும்” என்றார். “மெய்யிற் புண்களும் கண்கள் கொள்ளா” (106) என்று குணவதியும், “புண் பெற்ற மெய்யன்” (113) என்று அவனேயும் கூறுதல் காண்க. முடைப்படு நாற்றம், முடையுண்டாகும் நாற்றம். சீவடிதலின் ஈ முதலியன மொய்க்கா வண்ணம் போர்த்துக் கிடந்தான் என்பார், “மேனி முழுதும் அழுக்காடை போர்த்து” என்றார். யானை தின்று கழிந்த புற்றுகளும் - வைத்துகளும் அதன் சிறுநீரால் நனைந்து அதன் மலம் அளைந்து புலர்ந்து கிடத்தலின், “கடைப்படுதுக” ளென்றார். காண்டற்குத் துணிந்து போந்தாளாயினும், அவனது மேனியும், ஆடைப் போர்வையும் இடத்தின் இழிவும் காணக்காண அவட்கு அருவருப்பு நெஞ்சி லெழுந்தமையின், “புழுங்கிய மனத்தோடு” அணுகினாள். பகைவரால் வேறுபடுத்தற்கரிய தானையாதலின், விடைப்பருந் தானையாயிற்று; “விடைப்பருந் தானை வேந்தன் வேண்டு வெறுப்ப நல்கி”1 என்று தேவரும் கூறுதல் காண்க. சில வாய சொற்களால் தம் கருத்தை மெல்லச் சொல்லுதல் இளைய மகளிர்க்கு இயல்பாதலின், அதனை எடுத்தோ தாது “விழைவு சொன்னாள்” என்றொழிந்தார்; அன்றி, எடுத்தோதற்கு நாணியது தோன்ற உய்த்துணர வைத்தாரெனினுமாம். வேறுபடுத் தற்கரிய தானை கொண்டு நாட்டுக்கு வேண்டும் காவலை நன்கு செய்யும் வேந்தனாயினும், அவன் தேவிக்கு அக்காவல் பயன்படா தாயிற்றென்பார், “விடைப்பருந்தானை வேந்தன் தேவி ” என்றார். அட்டபங்கன் உடன்படாது வெகுளுதல் 112. கேட்டலு மஞ்சு நெஞ்சன் கேடெனக் கெய்திற் றென்றே வாட்டமும் நடுக்கு முற்றே மாண்பில மொழிந்தாய் மன்னன் வீட்டிடுஞ் செல்கென் றேவ வேய்புரை தோளி தோழி காட்டுவ காட்டி யன்னான் கருத்தையுங் கலைத்திட் டாளே. உரை:- கேட்டலும் - குணவதி சொல்லியது கேட்டமாத்திரையே, அஞ்சும் நெஞ்சன் - அஞ்சுகின்ற மனமுடையவனான அட்டபங்கன், எனக்குக் கேடு எய்திற்று என்று - எனக்கு நாசகாலம் வந்தது என்று நினைத்து, வாட்டமும் நடுக்கம் உற்று - மனவாட்டமும் நடுக்கமு மடைந்து, மாண்பு இல மொழிந்தாய் - தேவியின் பெருமைக்குத் தகாதவற்றைச் சொல்கின்றாய், மன்னன் வீட்டிடும் - இதனை யறிந்தால் வேந்தன் கொன்றுவிடுவான், செல்க - நீ இப்போதே இவ்விடத் தினின்றும் போய்விடுக, என்று ஏவ - என்று சினந்து கூற, வேய்புரை தோளி தோழி - மூங்கில்போலும் தோள்களையுடைய அமுதமதியின் தோழியாகிய குணவதி, காட்டுவகாட்டி - அவன் ஐயுறாது ஏற்கத்தக்க சான்றுகளை எடுத்துக்கூறிக்காட்டி, அன்னான் கருத்தையும் கலைத் திட்டாள் - அவனுடைய மனக்கருத்தைக் கலைத்துத் தேவியின் விருப்பத்துக்கு இசைவித்துக் கொண்டாள் எ-று. இயல்பாகவே அச்சமுடையனாதலின், குணவதி கூறியதனால் அது மிகுந்து வருத்துவதுபற்றி “அஞ்சும் நெஞ்சன்,” என்றார்; “அச்சமே கீழ்களது ஆசாரம்”1 என்பதனால், அச்சம் அட்டபங்கற்கு இயல் பாதலறிக. அரசன் கோயிலிற் பணிபுரிவோர் அடங்கிய மனமில ராயின், கேடெய்தல் ஒரு தலையாதலின், “கேடெனக் கெய்துமென்று வாட்டமும் நடுக்கமும்” கொண்டான்; “மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே”2 என்று திருதக்கதேவர் கூறுதல் காண்க. தேவிக்குத் தோழியாவாள் அவள் மாண்பிற்கு இழுக்குத் தருவதனைச் சொல்வது தீ தாதலின், “மாண்பில மொழிந்தாய்” என்றும், அவளை அச்சுறுத்திப் போக்கும் கருத்தால், “மன்னன் வீட்டிடும் செல்க” என்றும், என்றதனோடமை யாது, அவன் சொல்லக்கேட்டும் குணவதி புடைபெயராமையின், அவனே அவளைப் போக்கக் கருதினானென்பார் “ஏவ” என்றும் கூறினார். வேய்புரை தோளி தோழியென்றது, தான் கருதியது முடித்துக் கொண்டல்லது ஏகாத இயல்பினளாதலை யுணர்த்திற்று. இவ்வாறு அவன் மனந்திறம்பானாதலைக் கண்ட குணவதி அவன் ஏற்கத்தக்க சொற்களையும், அவற்றிற்குச் சான்றாகக் காட்டத் தகுவனவும் வழங்கி, அவனை மதியுடம்படுத்தாள் என்பார், “காட்டுவ காட்டி யன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே” என்றார். பேதையாதலின், பிறனில் விழையும் இத் தீவினைக்கு அவனும் இசைந்தானென வறிக. அட்டபங்கன் மனங்கலைந்து மகிழ்ந்துரைத்தல் 113. பண்பெற்ற மொழியாய் யானும் பண்பெற்ற பயனும் பெற்றேன் புண்பெற்ற மெய்யன் பொல்லாப் புழுதியிற் றுளையுங் கையன் மண்பெற்ற இறைவன் தேவி மனம்பெற்று மகிழ்வே னென்னின் எண்பெற்ற தவமியார் பெற்றார் யான்பெற்ற பேறி தென்றான். உரை:- பண் பெற்ற மொழியாய் - பண்ணிசைபோலும் சொற்களையுடையவளே, பண்பெற்ற பயன் - பண்பாடும் அறிவு பெற்றதனாலடையும் பயனை, யானும் - பெறற்காகாத யானும், பெற்றேன் - இன்று பெற்றேன், (எவ்வாறெனில்) புண்பெற்ற மெய்யன் - புண்கள் நிறைந்த உடம்பினையுடையேன், பொல்லாப் புழுதியில் - நல்லதல்லாத புழுதியிலே, துளையும் கையன் - புரண்டுகிடக்கும் சிறுமையுமுடையேன், மண்பெற்ற இறைவன் தேவி - மண்ணுல கத்தையாளும் அரசனுக்கு மனைவியினுடைய, மனம் பெற்று மகிழ் வேன் - காதலன்பு பெற்று மகிழ்கின்றேனாதலால், எண்பெற்ற தவம் - யாவரும் எண்ணி விரும்பத்தக்க தவப்பயனை, என்னின் - என்னைப் போல, யார் பெற்றார் - யாவர் பெற்றார், இது யான் பெற்ற பேறு - இது யான் அரிதாகப் பெற்ற பேறாகும், என்றான் - என்று அட்டபங்கன் குணவதிக்குக் கூறினான் எ-று. உம்மை - சிறப்பு. “புண்பெற்ற மெய்யன்”, “புழுதியிற் றுயையுங் கையன்” எனத் தன் நிலைமையை யுணர்ந்திருத்தலின், “யானும் பெற்றேன்” என்றும், தொடக்கத்தே பண்பிலவாய்த் தோன்றிய மொழிகள் இறுதியில் இன்பப் பயன் தந்தமையின், “பண்பெற்ற மொழியாய்” என்றும் கூறினான். தன் நிலைமையை நோக்க அரசமா தேவியின் இன்பப்பேறு தனக்கு வாய்த்ததற்குத் தன் தவமேயன்றிப் பிறிதொரு காரணமும் காணமாட்டாமையின், “என்னின் எண் பெற்ற தவமியார் பெற்றார்” என்றான். அரிதிற் பெற்ற பேறு என வியந்துரைத்தலின், “யான் பெற்ற பேறிது” என விதந்தோதப்பட்டது. குணவதி போந்து அரசியைக் காண்டல் 114. இவ்வகை மொழிவோன் றன்னை யிறையவன் தேவி மேவும் செவ்வியுங் குறியுஞ் செப்பிச் சென்றவ ளெய்த லோடும் கவ்விய காமத் தீயாற் கயங்கிய மாலை யொப்பாள் நவ்விநேர் விழியாய் நன்றோ நவில்கநின் கரும மென்றாள். உரை:- இவ்வகை மொழிவோன் தன்னை - இவ்வாறு சொல்லி மகிழும் அட்டபங்கற்கு, இறையவன் தேவி - அரசன் மனைவியாகிய அமுதமதி, மேவும் செவ்வியும் குறியும் செப்பி - வரக்கூடிய காலமும் இடமும் உரைத்துவிட்டு, சென்றவள் - தேவிபாற் சென்ற குணவதி, எய்தலோடும் - அமுதமதியை நோக்கி யணுகவருதலும், கவ்விய காமத்தீயால் - பற்றி வருத்தும் காமத்தீயினால், கயங்கிய மாலை ஒப்பாள் - சாம்பிய பூமாலையை யொப்பவளான அமிர்தமதி; நவ்விநேர் விழியாய் - மான்போலும் கண்களையுடையாய், நின்கருமம் - நீ மேற்கொண்டு சென்ற காரியம், நன்றோ - நலந்தந்ததோ, நவில்க - சொல்லுக, என்றாள் - என்று கேட்டாள் எ-று. செவ்வி- காலம். குறி - குறிக்கும் இடம். “செப்பி” யென்றதனால், அவற்றை யவன் வினவினமை பெற்றாம். யானைக்கூடத்தின் நீங்கி அமிர்தமதியிருந்த அந்தப்புரத்தை யடைந்தாளென்றற்கு, “சென்றவள் எய்தலோடும்” என்றும், குணவதி மேற்கொண்டு சென்ற காரியம் முடியுமோ முடியாதோ என்ற ஐயம் ஒரு புடையலைப்ப, அவன்பாற் சென்ற காமவேட்கை ஒருபுடையலைப்ப உணர்வும் உடம்பும் வாடியிருத்தலின், “கவ்விய காமத்தீயால் கயங்கிய மாலை யொப்பாள்” என்றார். தீதோ என்னாமை, அதனையவள் விரும்பாமையாலாம். குணவதி நிகழ்ந்தது கூறக்கேட்டு மகிழ்தல் 115. பட்டது நலங்கா ணென்பாள் பாகனைக் கண்ட வாறும் அட்டமா பங்கன் சீறி யழன்றிட்ட வாறுந் தேவி இட்டத்திற் கவனை யாங்கே யியைவித்த வாறுங் கூடற் கொட்டிய குறியுஞ் சொன்னா ளொள்ளிழை யுவப்புற் றாளே. உரை:- நலம்பட்டது என்பாள் - நலமாகவே முடிந்தது என்று சொல்லித் தொடங்கிய தோழி, பாகனைக் கண்ட வாறும் - தான் சென்று அவ்யானைப்பாகனைக் கண்டதும், அட்டபங்கன் சீறி அழன்றிட்டவாறும் - அட்டபங்கனென்னும் பெயரினனாகிய அவன் சீறிச் சினந்ததும், தேவி இட்டத்திற்கு - அரசமாதேவியாகிய அமிர் தமதியின் விருப்பத்துக்கு, அவனை இயைவித்தவாறும் - அவனை யுடன்படுவித்ததும், கூடற்கு ஒட்டிய குறியும் - அவனைச் சென்று கூடுதற்கு நியமித்த காலமும் இடமும், சொன்னாள் - குணவதி கூறினாள், ஒள்ளிழை - ஒள்ளிய இழையணிந்த அமுதமதி, உவப் புற்றாள் - மகிழ்ச்சி மிகுந்தாள் எ-று. “நன்றோ நவில்க நின்கருமம்” என்று வினவினாட்கு நீட்டியாது விடையிறுப்பாள், “பட்டது நலம்” என்றாள்; காண்-அசைநிலை. மா-அசை. அழலுதல்-வெகுளுதல். இட்டம்-வடசொற்றிரிபு. ஆங்கு என்பது உரையசை. குறியினைத் தானே குறித்தாளாதலின், அட்ட பங்கற்கேயன்றி அமிர்தமதிக்கும் தோழி கூறினாள். உற்றாள்- உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த முற்றுவினை. அமிர்தமதி அரசன்பால் முனிவு கொண்டொழுகல் 116. தனிவயி னிகுளை யானை தரப்படு சார னோடு கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து சென்றாள் முனிவினை மன்னன் றன்மேன் முறுகின ளொழுகு முன்போல் இனியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே. உரை:- கனிபுரை கிளவி - கனிபோலும் சொற்களை யுடைய அமுதமதி, இகுளை - தோழியாகிய குணவதிபால், தரப்படு யானைச் சாரனோடு - கூட்டப்பட்ட யானைப்பாகனாகிய அட்ட பங்கனுடன், தனிவயின் - தனியான ஓரிடத்தே, காமங்கனிந்து - காமவேட்கை சிறந்து, கலந்தனள் சென்றாள் - புணர்ந்துடனொழுகி வருபவள், மன்னன் தன்மேல் - மன்னனாகிய யசோதரன்பால், முனிவினை முறுகினள் ஒழுகும் - வெறுப்புமிகக் கொண்டொழு கலுற்றாளாக, முன்போல் இனியவள் அல்லள் என்கொல் என - முன்போல் இவள் நம்பால் இன்புறுகின்றாளில்லை இதற்குக்காரணம் யாதாகும் என்று, மனத்து எண்ணினான் - யசோதரன் தன்மனத்துக் குள்ளே சிந்திக்கலானான் எ-று. தனிவயின், தோழி குறித்த குறியிடம். இகுளைதரப்படுயானைச் சாரனோடு தனிவயின் காமங் கனிந்து கலந்தனள் சென்றாள் என இயைத்துக்கொள்க. காமங்கலந்தனள் கனிந்து சென்றாள் என்றே கொண்டு காமப்புணர்ச்சி பெற்று அதன்கட்கன்றி யொழுகுபவள் என்றுரைப்பினுமாம். சாரன்பால் மனத்தெழுந்த அன்பு சென்றமையின், அரசன்பால் வெறுப்பு மிகுவாளாயினாளென வறிக. அம்மிகுதி அரசனுளத்தே ஐயத்தை யெழுப்பினமையின், “முன்போலன்பில ளென்கொல்” என்றான்; இதனைப் பிறர் பால் கூறி யாராயாது தன்மனத்தகத்தே யெண்ணி ஆராயத் தொடங்கினா னென்பார், “மனத்தெண்ணினான்” என்றார். மன்னன் பொய்யுறக்கம் கொண்டு அமுதமதியின் களவொழுக்கினைக் காண்டல் 117. அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லென்று காமத் துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. உரை:- அவை அரசு விடுத்து - அரசவைக்கண் வந்திருந்த அரசர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லவிடுத்து, மெய்யால் அறுசினன் ஒப்ப - புறத்தே மனத்துட் சிறிதும் சினம் இல்லான் போலக் காட்டி, உரையலன் - யாவரோடும் ஏதும் சொல்லாடலின்றி, அமளி தன்மேல் - தன்னுடைய படுக்கையின்மேல் கிடந்து, மன்னன் உறங்குதல் புரிந்த போழ்து - மன்னனாகிய யசோதரன் பொய்யுறக்கங் கொண்டிருக் கையில், விரைகமழ் குழலி - மணம் கமழும் கூந்தலை யுடைய அமிர்தமதி, மேவி - அவனருகே போந்து, மெய்த்துயில் என்று - மெய்யாகவே உறங்குகின்றான் என்று கருதிக் கொண்டு, காமத் துறையினள் - காமவின் பந்துய்க்கும் களவு நெறியினளாய், பெயர்ந்து - பள்ளியறையினின்றும் நீங்கி, தோழி குறிஇடம் துன்னினாள் - தோழி குறித்த குறியிடத்தை யடைந்தாள் எ-று. அமிர்தமதியின் ஒழுகலாற்றிற் பிறந்த ஐயம் நாளுக்குநாள் மிகுந்து யசோதரன் நெஞ்சை யலைத்தமையின், அரசவைக்கண் இருந்து செய்யும் முறைமைக்கண் கருத்துச் செல்லாமையின், “அரசவை விடுத்து” என்றும், விட்டானாயினும், பிறர் அயிராமைப் பொருட்டு வெகுளியைப் புறத்தே காட்டாதொழுகின னென்றற்கு, “மெய்யாலறு சினனொப்ப” என்றும் கூறினார். அறுசினன் என்பது, “அருங்கேடன்”1 என்றாற் போல்வது. பொய்யுறக்கங் கொண்டா னென்பார். உறங்கினா னென்னாது, “உறங்குதல் புரிந்த போழ்து” என்றார்; “புரிந்த” என்றதனால், காண்பவர் மெய்யாகவே உறங்கு கின்றானென உணரத் தோற்றினா னென்பது பெற்றாம். மணங்கமழும் குழலியாதலின், அமிர்தமதி வந்து தான் உறங்குதலைக் கண்டெழு வதைக் கண்ணாலன்றி மனத்தா லறிந்துகொண்டமை தோன்ற, “விரைகமழ் குழலி” யென்றார். களவுக் காமத் துறையில் ஒழுகுகின் றாளாதலின், உடனே அவ்விடத் தினின்றும் நீங்குவது தோன்ற, “பெயர்ந்து” என்றும், “குறியிடம் துன்னினா” ளென்றும் கூறினார். யசோதரன் அவளைப் பின்தொடர்ந்து சென்று அக்குறியிடத்தே மறைந்து நிற்றல் 118. துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி மயலுழை* வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் கயல்விழி யவள்தன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். உரை:- மன்னன் - அமிர்தமதி செல்லக்கண்ட யசோதரன், துயிலினை யொருவி - தான் கொண்டிருந்த பொய்யுறக்கத்தை விடுத்து, சுடர்க்கதிர்வாள் - சுடருகின்ற ஒளிக்கதிர்களை வீசும் வாட்படையை, கையேந்தி - கையில் ஏந்திக் கொண்டு, மயல் உழைவழி - மயங்கியோடு கின்ற மானொன்றைப் பின்பற்றி, செல்கின்ற வாள் அரிஏறு போல - செல்லுமொரு சிங்கவேறு போல, கயல்விழியவள்தன் பின்னே - கயல்மீன் போலும் கண்களையுடைய அமிர்தமதியின் பின்னே, கரந்தனன் ஒதுங்கி - மறைந்து சென்று, ஆங்கண் - அக்குறியிடத்தே, செயலினையறிதும் என்று - நிகழும் நிகழ்ச்சியைக்காண்பாம் என்று நினைத்துக்கொண்டு, செறிந்தனன் மறைந்து நின்றான் - யாரும் அறியாவகையில் ஒடுங்கி மறைந்து நின்று நோக்கினான் எ-று. நிகழ்ச்சியினைக் காண்டல் வேண்டு மென்றே பொய்யுறக்கங் கொண்டானாதலின், அமுதமதி செல்லக்கண்டதும் அதனை யொரு வினான் எனவறிக. உழை-மான். காமத் துறையினளென்றா ராகலின், அதற்கேற்ப, அவட்கு மயங்கிய மானை உவமம் கூறினார். வாள் அரியேறுபோல என்று உவமையாற்றலால் யசோதரன் மிக்க சினத்துடன் செல்கின்றமை பெற்றாம். பிறர் காண்பரென்ற அச்சத்தால் அடிக்கடி சுற்றுமுற்றும் பரக்க விழித்துப் பார்த்துக்கொண்டே சென்றா ளென்றற்கு, அமிர்தமதியைக் “கயல் விழியவள்” என்றார். தன்னிருப்புப் பிறர்க்குத் தெரியாமல், பிறர் மெல்லப் பேசுவதும் தான் நன்கு கேட்கக்கூடியதாயுள்ள இடத்தையடைந்த மறைந் திருந்தானாதலின், “செறிந்தனன்” என்றார். அமிர்தமதி தாழ்த்துவரக்கண்ட அட்டபங்கன் அவளைத் துன்புறுத்தல் 119. கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் இடைநிலஞ் செல்ல ஈர்த்திட் டிருகையி னாலு மோச்சிப் புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க என்னாத் துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட் டானே. உரை:- கடையன் - கீழ்மகனாகிய அட்டபங்கன் எதிர் நோக்கி வந்து, அக்கமலப்பாவை - திருமகளைப் போல்வாளாகிய அவ்வமிர்த மதியின், கருங்குழல் கையால்பற்றி - கரிய கூந்தலைத் தன்கையால் பற்றி, இடைநிலம் செல்ல ஈர்த்திட்டு -அவ்விடத் திற்கும் குறியிடத்திற்கும் இடைக்கிடந்த நிலத்தில் அவளை இழுத்துக்கொண்டு சென்று, துடியிடை துவள நிலத்திடை வீழ்த்து - உடுக்கைபோலும் இடையினையுடைய அவளை நிலத்தில் தள்ளிக்கிடத்தி, இருகை யினாலும் ஓச்சி - இருகைகளாலும் ஓங்கி, புடை - வலமிடமாகிய இருகன்னத்திலும், பல புடைத்து - பலமுறையும் அடித்து, தாழ்த்த பொருளிது புகல்க - காலந் தாழ்த்துவந்த காரணத்தைச் சொல்லுக, என்னா - என்று, துகைத் திட்டான் - உதைத்து வருத்தினான் எ-று. “கமலப்பாவை” யைக் காண்பவன், அன்புடன் வழிபட்டு அவளருளைப் பெறாது அவளருமையு முணராது வருத்துதல் பற்றி, அட்டபங்கனைக் “கடையன்” என்றும், கமலப்பாவையாயினும் கடையனைச் சார்வாளேல், இத்துன்பத்தையே யடையற்பாலள் என்றற்கு, “கமலப்பாவை” என்றும் கூறினார். குறித்த காலத்து வாராது தாழ்த்தமையின், குறியிடத்தினீங்கி வெளியே போந்து அவளது வருகை நோக்கிச் சினந்திருந்தவன், கண்டமாத்திரத்தே சீறிப்பாய்ந்து அவள் கூந்தலைப்பற்றி ஈர்த்துக்கொண்டு அக்குறியிடத் துக்குச் சென்று, நிலத்திற்றள்ளிப் புடைத்து உதைத்து வருத்தினானென் பதாம். துடியிடை- சுட்டுமாத்திரையாய் நின்றது. இதுபோலும் வருத்தம் எவராலும் எப்போதும் அவ்வமிர்தமதிக்கு நிகழ்ந்த தின்மையின், “துவளத் தகைத்திட்டானே” என ஆசிரியர் வருந்திக் கூறுகின்றார். புடை- கன்னம். பொருள், காரணம். அமிர்தமதி ஆற்றாது அயர்தல் 120. இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல வெருளியான் மிதிப்புண் டைதே* விம்மிய மிடற்ற ளாகித் தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்ட மருளியான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். உரை:- இருளினால் அடர்க்கப்பட்ட - இருட்கூட்டத்தால் நெருக்கப்பட்ட, எழில்மதிக் கடவுள்போல - அழகிய முழுமதியம் போல, தேவி - அரசமாதேவியாகிய அமிர்தமதி, வெருளியால் மிதிப்புண்டு - அட்டபங்கன் பாற்சென்ற கழிகாதலால் நெஞ்சடைப் புண்டு , ஐது விம்மிய மிடற்றளாகி - மெல்லிதாக வீங்கிய கழுத்தினை யுடையளாய், தெருள்கலாள் - தன் தீயொழுக்கத்தின் தீமையை யுணராளாய், உரையுமாடாள் - ஒரு சொல்லும் சொல்லாது, சிறிது போது அசைய - சிறிது நேரம் அயர்ந் திருந்தாளாக, கண்ட - பார்த்த, மருளியான் - மனமருட்கையுடையனான அட்டபங்கன், மயங்கி - தான் ஆராயாது வருத்தியதற்கு மனம் வருந்தி, மாதர் மலரடி - அமிர்தமதியின் தாமரைப்பூப் போன்ற பாதத்தை, சென்னிவைத்தான் - தலையில் வைத்து வணங்கினான் எ-று. “இருளினால் அடர்க்கப்பட்ட எழின்மதிக் கடவுள் போல” என்ற உவமம், வெருளியால் மீதூரப்பட்ட அமிர்தமதியைச் சுட்டி நின்றதென வறிக. வெருளி - கழிகாமத்தால் பிறக்கும் மனமயக்கம். மனத்தே அவன்கட் சென்ற கழிகாமத்தால் வேறுபடாளாயினும், அவன்தன் குழல்பற்றி யீர்த்துப் புடைத்து விழ்த்தித் துன்புறுத்திய தாற்பிறந்த ஆற்றாமையால் மிடறுவிம்மி அசைவு கொண்டாள் என்க. ஐது-சிறிது. ஆற்றாது பெருவருத்தமும் நோயுமெய்தற் பாலாள், வெருளி மீதூர்ந்தமையின், சிறிதே விம்மினாள் என்பார், “ஐதே விம்மிய மிடற்றளாகி” என்றும், இத்துணைத்துன்பமெய்தியும் தன் தவற்றினையவள் உணர்ந்தில ளென்பார், “தெருள்கலாள்” என்றும், தன் வருத்தத்தைப் புலப்படுத்தியோ, அவனோடு காதலன் பால் புலந்தோ ஏதேனு மொன்றுகூறின், அவன் வேறுபட்டு நீங்குவனென்ற அச்சத்தால் வாளாவிருந்தாளென்றற்கு, “உரையு மாடாள்” என்றும், அவனை வணக்கும் வாயிலாதலின் “சிறிது போதசைய” என்றும் கூறினார். நெடிதசைந்திருப்பின், அட்டபங்கன் அஞ்சி அவ்விடத்தினின்றும் ஓடிவிடுவனாதலின், “சிறிது போது” என்றார். தான் செய்த துன்பத்தையும், அதனால் அமிர்தமதி ஆற்றாது அசைவுற்றதும் நினைந்து கண்டு, மனம் மருண்டு, தெளிந்த அறிவின்மையின் அவள் காலில் வீழ்ந்து வணங்கினான் என்றுணர்க. வணங்கக் கண்டதும் அவள் அசைவு நீங்கி அவன்பால் ஆராக்காதல் கொண்டாளென்பார். “மாதர்” என்றார். சென்னிவைத்தான்- வணங்கினான். அமிர்தமதி தான் தாழ்த்து வந்தமைக்குக் காரணம் கூறுதல் 121. தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி வெய்யநீ முனிவு செல்லன் மேதினிக் கிறைவன் றன்னோ டையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் வெய்யபா வங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்த தென்றாள். உரை:- தையலாள் - புணர்ச்சி வேட்கையளாகிய அமிர்தமதி, தேறி - அசைவுநீங்கி, மகிழ்ந்து - அட்டபங்கன் செயல் கண்டு மனம் மகிழ்ந்து, மெல்லநோக்கி - தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்து, ஐய - ஐயனே, வெய்யநீ - என்னால் விரும்பப்பட்டநீ, முனிவு செல்லல் - யான் காலம் தாழ்த்து வந்தது குறித்து வெறாதேகொள், மேதினிக்கு இறைவன் தன்னோடு - மண்ணரசனான யசோதரனுடன், அரசவை - அரசர் வந்திருக்கும் அவைக்கண்; ஆசனத்தின் உம்பர் - அரசு கட்டிலின் மேல், இருந்து - திருவோலக்கமிருந்து, வெய்ய பாவங்கள் செய்தேன் - நீ வெம்மை கொள்ளத்தக்க குற்றங்களைச் செய்துவிட்டேன், விளைந்தது - நிகழ்ந்தது இதுவே, விளம்பலன் - இதனை முன்னரே தோழிவாயிலாகத் தெரிவியா தொழிந்தேன், என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன், என்றாள் - என்று சொன்னாள் எ-று. தையலென்னுஞ்சொல் புணர்த்தலென்னும் பொருட்டு மாதலின், புணர்ச்சி வேட்கையுடையாளென்றுரைக்கப்பட்டது. “மெல்ல நோக்கினாள்” தான் மெய்யே அசைவுற்றுத் தெளிவுறுவது போல அட்டபங்கன் காணும்பொருட்டு. அட்டபங்கனால் அமிர்தமதியுற்ற வருத்தம் திருட வந்தோனைத் தேள்கொட்டியது போல்வதாகலின், மெய்யே யசைவுற்றாள் என்று கோடல் அவட்குப் பொருந்தாமை காண்க. தான் இழைத்த துன்பத்தால் தன்பால் முனிவுற்றுத் தன்னை வெறுத்து ஒறுப்பாளோ என அஞ்சி யலமந்து நோக்கும் அட்டபங்கற்கு அவ்வச்சத்தைப் போக்குங் கருத்தினளா தலின், “மகிழ்ந்து” நோக்கினா ளென்றார். வெய்ய நீ என்புழி, வெய்ய வென்பது வேண்டற்பொருட்டாய வெம்மை யென்னும் உரிச்சொல் லடியாகப்பிறந்த பெயரெச்சம், “தாழ்த்த பொருளிது புகல்க” (119) என்று வெகுண்டு புடைத்தானாதலின், அவ்வெகுளி நீங்க, “முனிவு செல்லல்” என்றாள்; தன்னை வெறுத்தஞ்சி நீங்காமற் பொருட்டு இது கூறினா ளென்றுமாம். “மேதினிக்கு இறைவன்” என்றாள். தனக்கு அவன் அன்னனல்ல னென்பது தோன்ற. அட்டபங்கன் அரசவைக்கண் அரசரிருக்கும் திருவோலக்கக் காட்சியினைக் கண்டறி யாதவனாதலின், அவற்கு அது விளங்க, “ஆசனத்தின் உம்பர் அரசவையிருந்து” என்றாள். கண்டாய் - முன்னிலையசை. அவன் தன்னைத் துன்புறுத்தியது நினைந்து வருந்தாமைப் பொருட்டு, “யான் செய்தன பெருங் குற்றங்கள், அவற்றிற்குத் தகவே நீ ஒறுத்தனை” யென்பாள், “வெய்ய பாவங்கள் செய்தேன்” என்றாள்; அட்டபங்கனுடன் கூடி அவனிருக்கு மிடத்தில் இருக்கும் இருப்புத் தனக்குப் புண்ணியப் பயனாகக் கருதுவது தோன்ற இது கூறினா ளென்றுமாம். விளைந்தது இதுவாயினும் இதனை முன்னறிந்து தோழிவாயிலாகத் தெரிவிக்கவேண்டுவது நெறியாகவும், அது செய்யாது குற்றப்பட்டே னென்பாள், “விளம்பலன்” என்று கூறினாள். இதனைக் குணவதிக்கும் உரைத்திலள், உரைத்திருப்பின் அவளாயினும்போந்து விளம்பியிருப்ப ளென்றற்கு இது கூறினா ளென்றுமாம். அமிர்தமதி தன் அயராக்காதலை உரைத்தல் 122. பொற்பகங் கழுமி யாவும்புரந்தினி தரந்தை தீர்க்குங் கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் சொற்பகர்ந் தருளு காளை துணைவரு மிவண முண்டோ* உரை:- பொற்பகம் கழுமி - தேவர்வாழும் அழகுமிக்க பொன்னுலகத்தே பொருந்தியிருந்து, யாவும் புரந்து - பல்வகையுயிர் களையும் காத்து, அரந்தை இனிது தீர்க்கும் கற்பகம் - அவற்றிற் குண்டாகும் துன்பத்தைத் தீர்த்து இன்பம் நிறைவிக்கும் கற்பகமரத்தை, கரந்து கண்டார் - மறைந்து சென்று கண்ணிற்கண்டு கையுறப் பெற்றவர், கையகன்றிடுதலுண்டோ - அதனைக் கைவிட்டு விடுவரோ? விடாரன்றே, எற்பகம் காதல் கொண்ட எனக்கு - உடல் முழுதும் நின்பா லெழுந்த காதலே நிரம்பியுள்ள எனக்கு, காளை - காளை போல்வாய், இனி - இப்பொழுது, இவ்வணம் - இவ்வுலகத்தே, நின்னின் - கற்பகம் போல் கிடைத்துள்ள நின்னைக்காட்டிலும், வேறு ஓர் துணைவரும் உண்டோ - வேறே சிறந்த காதலர்தாமும் உண்டோ, சொற்பகர்ந்தருளு - நீயே நினைந்து ஒருசொல் சொல்லியருள்வாயாக எ-று. கற்பகமரம் தேவருலகத்திருப்பதாகலின், பொற்பகம், தேவர் வாழும் பொன்னுலகமாயிற்று, அரந்தை-துன்பம். அதனை இனிது தீர்த்தலாவது, அதனை அறப்போக்கி, அதற்கு மாறான இன்பத்தை நிறைவித்தல். பெறற்கரிதாதல் பற்றி, “கரந்து கண்டார்” என்றும், அதனைக் கைப்பற்றித் தமக்கே உரிமை செய்துகொள்வதன்றி இழந்து விடுதற்கு எவரும் விரும்பாரென்றற்கு, “கையகன்றிடு தலுண்டோ” என்றும் கூறினாள். எனவே, தானும் அவனைக் கைவிடாமையின் அமிர்தமதி வற்புறுத்தியவாறும், அதற்கு ஏதுவாக, அட்டபங்கன் தான் துன்புறுத்தியதுகொண்டு அவள் தன்னைக் கையகன்றி டுவளென அஞ்சியவாறும், அதனை இவ்வமுதமதி யுணர்ந்து கொண்டவாறும் பெற்றாம். என்பு - ஆகுபெயர். காதல், காமவேட்கை; “காதல்மிக்குழிக் கற்றவும் கைகொடாவாதல்”1 என்புழிப்போல. காளை - அண்மை விளி. இவண் என்பது அம்முப் பெற்றது. “சொற்பகர்ந்தருளு” எனக் குறையிரந்து நின்றாள், அவனது காதலுரையினைக் கேட்டற்கெழுந்த காமவெறியால் வேறு என்பதனைத் துணைவர்மேலேற்றி, ஓர் என்பதனைச் சொன்மேலேற்றலுமொன்று. ஓகாரம் - வினா. இனி, வெற்பகங்கொண்ட காதலெனக்கு என்று கொண்டு, மலை போலெழுந்த காதலையுடைய வெனக்கு என்றுரைப்பினுமமையும். கண்ட வேந்தன் உள்ளத்தே இருவரையும் கோறற்கு உணர்வெழுந்து அடங்குதல் 123. என்றலு மேய* மன்னன் எரியெழ விழித்துச் சீறிக் கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே ஒன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது † கரத்து வாளும் சென்றிடை விலக்கி நின்றோர் தெளிந்துணர் வெழுந்த தன்றே. உரை:- என்றலும் - என்று அமிர்தமதி அட்டபங்கற்கு உரைத்ததும், மேயமன்னன் - ஆங்குப் போந்துநின்று கேட்ட மன்னன், சீறி - வெகுண்டு, எரிஎழ விழித்து - கண்ணில் தீப்பொறி பறக்க நோக்கி, இவர்தம்மை - இவ்விருவரையும், வாள்வாய் கொன்று - வாட்படையால் கொலைசெய்து, கூற்றுண இடுவல் - யமனுக்கு இவர் உயிரை உணவாக்குவேன், என்று ஒன்றினன் - என்று கொல்லற்கும் ஒருப் பட்டானாக, கரத்துவாளும் - கையிற்பற்றியிருந்த வாட்படையும், உள்ளத்து உணர்ந்தது - அவன் உள்ளக்கருத்தை, உணர்ந்தது - உணர்ந்து கொல்லுதற்கு மேலெழுந்தது, இடைசென்று விலக்கி - இடைப்புகுந்து அதனை மறித்து, நின்று - கீழே விழாது நிற்குமாறு, ஓர் தெளிந் துணர்வு - ஒருதெளிந்த வுணர்வு, எழுந்தது - பிறந்து அக்கொலை வினையைத் தவிர்த்தது எ-று. காரியம், காரணமாக உபசரிக்கப்பட்டது. தொடக்கத்தே இருவரையும் கொல்லற்கெழுந்த சினத்தோடு கூடிய உணர்வினால், வாளை உறையினின்றும் கழித்து ஓச்சினான், இடையிலெழுந்த நல்லுணர்வால் தடைப்பட்டு அவ்வாளை உறையிடைச் செருகிக் கொண்டானென்பதாம், உள்ளத்துணர்ந்தது உணர்ந்தது என்புழி, ஒன்று பெயர், ஒன்று வினைமுற்று,. தெளிந்த உணர்வு என்புழிப் பெய ரெச்சத்தகரம் விகாரத்தால் தொக்கது. நிற்ப. நின்றெனத் திரிந்து நின்றது. தெளிந்துணர்வின் திறம் 124. மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்றுண் டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளின் தீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். உரை:- மாதரார் எனையரேனும் - மகளிர் எத்துணைக் கொடிய குற்றம் புரிந்தாராயினும், வதையினுக்கு உரியர் அல்லர் - கொல்லுதற்கு உரியராகார், பேதை இவனும் - பேதையாகிய இவ்யானைப்பாகனும், பெண்ணின் அனையன் - ஆண்மகனாயினும் பெண்மகளையே யொப்பன், பிறிதும் ஒன்று உண்டு - வேறொன்றும் உண்டு, ஏதிலார் மன்னர் - பகைவராய்வந்த வேந்தருடைய, சென்னி இடுதலுக்கு உரியவாளின் - முடியைத் துணித்தற்குரிய வாளினால், தீதுசெய்சிறுபுன்சாதி - குற்றமே செய்கின்ற அறிவின்மையையுடைய அற்பவினத்தாரை, சிதைத்தலும் திறமன்று - கொல்வது மறவேந் தர்க்குத் தகுதியன்று, என்றான் - என்று நினைத்தான் எ-று. மிக அத்துணைத் கொடிய குற்றம் புரிந்து அதனால் உயிர் இழத்தற்குரிய தீமையுடையராயினும் என்பான், “எனையரேனும்” என்றான். வதை-கொல்லுதல். பிறற்குப் பொருளாயினாளைக் காதலித் தொழுகுதலின், அட்டபங்கனைப் “பேதைதான் இவனும்” என்றும், பிறன்மனை நயவாமை ஆண்மையாதலின், நயக்குமிவன் பால் ஆண்மையில்லை, யென்றற்கு “பெண்ணின் அனையனே” என்றும் தனக்குள் கூறிக்கொண்டான். பகைவேந்தர், ஏதிலாராயினரேயன்றி, ஆண்மையிலும் மறத்திலும் குறைந்திலராதலின், அவரைத் தீண்டற் குரிய இவ்வாள், சிறுமையும், புன்மையும் சேரக்கொண்டுள்ள இவரைத் தீண்டிக் கொல்லுதல் அதற்குத் தீதாம் என்பான். “சிதைத்தலும் திறமன்று” என்றான். சிறுமை- அறிவின்மை. புன்மை- ஈண்டுக் கீழ்மை மேற்று. வேந்தன் மகளிர்போகத்தை வெறுத்துச் சென்று தனித்திருந்து நினைத்தல் 125. இனையன பலவுஞ் சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற் புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே கனவரை யனைய மார்பன் கடிகம ழமளி யேறித் தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான். உரை:- கனவரை யனைய மார்பன் - பெரிய மலைபோன்ற மார்பையுடைய வேந்தனான யசோதரன், இனையனபலவும் சிந்தித்து - இவை போல்வன பலவும் எண்ணி, இழிப்பொடு பழித்தும் - இருவரையும் இகழ்ந்தும் பழித்தும் அமையாது, வளைபுனையவர்கள் போகம் - வளை யணியும் மகளிரது இன்பத்தை, நெஞ்சில் புறக்கணித்து - மனத்தால் அருவருத்து வெறுத்து, மீண்டு - திரும்பத் தன் பள்ளியறைக்குப் போந்து, கடிகமழ் அமளி ஏறி - மணங்கமழும் அணைமீது கிடந்து, தனி முனி களிறுபோல - தனித்துச் சினங் கொண்டிருக்கும் யானை போல, தான் நினைவெய்துகின்றான் - தானே தனக்குள் எண்ண மிடலானான் எ-று. முன்பாட்டிற் கூறிய கருத்துப்போல்வன பலவற்றை ஒன்றன் மேலொன்றாக நினைந்தமையின், அவன் உள்ளம் கொலைவினை மேற்செல்லாதாயிற்று. அந்நினைவுகட்கிடையே அமிர்தமதியின் செய்கையை இழித்தும், அவளது மனப்புன்மை காணாது அன்புற்றொழுகிய தன்னைப் பழித்தும் தனக்குள்ளே நொந்து கொண்டானென்பார், “இழிப்பொடு பழித்தும்” என்றும், அதுவே யேதுவாக ஏனையெல்லா மகளிரது இன்பத்தையும் நெஞ்சில் வெறுத்தான் என்பார், “புனைவளை யவர்கள் போகம் நெஞ்சிற் புறக்கணித்திட்டு” என்றும் கூறினார். “புனைவளையவர்கள்” என ஏனையெல்லா மகளிரையும் புறக்கணித்தது, அமிர்தமதியை விலக்கி வேறு மகளிரை மணத்தற்கென ஓர் எண்ணம் எழுந்தமை தோன்ற நின்றது. புனைவளையவர் என்பதனை வளைபுனை யவர்கள் எனமாறுக. இதனாற்பயன், வளை முதலியன புனைதலால் பிறக்கும் அழகேயன்றி மனத்தூய்மையாகிய அழகிலர் என்பது. தனியென்னும் வினை முதனிலை யெச்சப் பொருட்டு; “வரிப்புனை பந்து” என்புழிப்போல. காமத்தால் விளையுங்கேட்டினை நினைத்தல் 126. எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் மண்ணியல் புகழை மாய்த்து* வருபழி வளர்க்கு மானத் திண்மையை யுடைக்கு மாண்மை திருவொடு சிதைக்குஞ் சிந்தை கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படு காம மென்றான். உரை:- இக்கடைப்படுகாமம் - இந்த இழிவான காமவேட்கை யானது, எண்ணமது அலாமை பண்ணும் - நெஞ்சில் நிகழும் எண்ணங் களை நல்லவையாகாவாறு செய்யும். இற்பிறப்பு இடிய நூறும் - குடிப்பிறப்பென்னும் குன்றம் இடிந்து துகளாமாறு செய்யும், மண்ணியல் புகழை மாய்த்து - மண்ணுலகத்தே நிற்கும் புகழைக் கெடுத்து, வருபழி வளர்க்கும் - அது நின்றவிடத்தே வந்தடையும் பழியை மிகுவிக்கும், மானத்திண்மையையுடைக்கும் - மானமாகிய திண்மை நிலையைத் தகர்த்தெறியும், ஆண்மை திருவொடு சிதைக்கும் - ஆண்மையினையும் செல்வத்தினையும் அழித்துவிடும். சிந்தை கண்ணொடு கலக்கும் - மனத்தையும் கண் முதலிய பொறிகளையும் நிலைகலங்கச்செய்யும், என்றான் - என்று எண்ணினான் எ-று. ஒருவர்க்குளதாகும் கேட்டுக்கு முதற்காரணம் அவர் நெஞ்சினிகழும் எண்ணமே யாதலின், அதனையே முதற் கண்ணெடுத்து, இக்காமம் அவ்வெண்ணம் நல்லெண்ணமாகாவாறு செய்யும் என்பார், “எண்ண மதலாமை பண்ணும்” என்றார்; “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்”1 என்றும், “மறந்தும் பிறன்கேடு சூழற்க ”2 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. “இடிய நூறும்” என்றதனால், இற்பிறப் பாகிய குன்றம் என்று கொள்க. நூறுதல், பொடியாகச் செய்தல். ஒருவர் செய்யும் புகழ்க்கு அவரன்றி அவர் வாழிடமாகிய மண்ணுலகு ஆதாரமாதலின், “மண்ணியல் புகழ்” என்றும், பழி பாவம் வந்தாலன்றி, அப்புகழ் மாயாதாகலின், “அப்புகழ் நின்ற விடத்தே வந்து நிற்கும் பழி” யென்றார். ஒடுவினை ஆண்மைக்கும் கூட்டுக. காமம் கதுவிய மனத்தார்க்கு அதனால் நுகரப்படும் இன்ப நினைவும் அதற்க அரணும் ஆக்கமாவனவுமன்றிப் பிற நலந் தீங்கு காணும் நல்லாராய்ச்சி நிகழாமையின், “சிந்தை கலக்கு” மென்றும், பொருள்களின் உண்மை நிலையைக் காணும் கண்ணறிவும் சொல்வார் சொல்லின் தூய்மையும் நலமும் கேட்கும் செவியறிவும் பிறவும் நிகழாமையின், “கண்ணொடு கலக்கும்” ‡என்றும் கூறினான். ஒடு- எண்ணொடு. அமிர்தமதிக்கும், அட்டபங்கற்கும் நிகழும் காமக்கூட்டம் இக்குற்றமனைத்தையும் விளைவிக்குமாறு காண்க. காமத்தைத் துறக்கத் துணிதல் 127. உருவினொ டழகு தானு மொளியமை குலனும் பேசின் திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீரிற்* கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்யுந்† துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான். உரை:- உருவினொடு அழகுதானும் - நிறமும் அழகும், ஒளியமை குலனும் - புகழ்பொருந்திய குடிப்பிறப்பும், பேசின் - ஆராயுமிடத்து, திருமகளனைய மாதர் இவளையும் - திருமகளை யொப்பவளாகிய இவளையும், சிதைய - தன்மனம் கெடும்படிச் செய்து, சீர் இல் கருமலி கிருமியன்ன - சிறப்பில்லாத பலபிறப்புக் கட்குரித்தாகிய புழுவையொத்த, கடைமகற்கு அடிமைசெய்யும் - கீழ்மகனொரு வனுக்கு அடிமைப் பணிசெய்யப்பண்ணும், துருமதி மதனன் செய்கை - தீய புத்தியையுடைய காமன் சேட்டையை, துறப்பதே - துறந்து நீங்குவதே, சிறப்பது - மேன்மை, என்றான் - என்று நினைத்தான் எ-று. உரு, நிறம். ஈண்டு மாந்தளிர்போலும் நிறமென வுணர்க. உரு முதலியவற்றால் அமிர்தமதி திருமகளை யொப்பாள் என்பது. சிதைத் தென்பது சிதைய வெனத் திரிந்து நின்றது. பல்வகைப் பாவங்களை யுடைமைக்கு அட்டபங்கனுற்ற குட்டநோய் அறிகுறி யாதலின், அவன் பல பிறப்புக்கட்குரியனாதல் பெறப்படுதலின், “சீரில் கருமலி கிருமியன்ன கடைமகன்” என்றான். இழிவு கருதிக் “கிருமி” யென்றான். செய்யும், பிறவினைப்பொருட்டு. துருமதி, வடசொற்றிரிபு; இது துன்மதி யென்றும் வழங்கும். பெண்மக்களில் மிகச் சிறந்தாளொருத்தியை ஆண்மக்களுள் இறப்பவும் கடைப் பட்டானொருவனை விரும்பியவற்கு அடிமையாக்கலின், காமனை, “துருமதி மதனன்” என்று இகழ்ந்தான். ஏகாரம், தேற்றம். அரசபோகத்தை வெறுத்தல் 128. மண்ணியன் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் பெண்ணிய லனைய தன்றோ* பெயர்கள்மற் றிவர்கள் யாமும் கண்ணிய விவர்கள் தம்மைக் கடப்பதே கரும மென்றான். உரை:- மண்ணியல் மடந்தைதானும் - மண்ணாகிய அழகிய நிலமகளும், மருவினர்க்கு உரியளல்லள் - தன்னைச் சேர்ந்தவர்க்கே உரியவளல்லள், புண்ணியமுடைய நீரார் புணர்ந்திட - புண்ணிய முடையோர் போந்தவழி, புணர்ந்து - அவரையடைந்திருந்து, நீங்கும் - பின்பு அவர் மாட்டும் தங்காது நீங்குவள், பெண் இயல் - பெண்களின் இயற்கையும், அனையதன்றோ - அத்தன்மைத்தேயாகும், இவர்கள் பெயர்கள் மற்று - இவர்கட்குப் பெயர்வகைதான் வேறு, கண்ணிய இவர்கள் தம்மை - இயல்பால் ஒருதன்மையராகக் கருதப்படும் இவர்களை, யாமும் கடப்பதே - நாமும் துறந்து போவதே, கருமம் - செயற்பாலது, என்றான் - என்று தனக்குள்ளே முடிவுகொண்டான் எ-று. தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. தானும் - உம்மை, சிறப்பு; எச்சமெனினுமாம். உரிமை - உடையானொடு உடனிருந்து உடனழிதல். புண்ணியமுடையாரைப் பொருந்தி அவர்பால் அப்புண்ணிய மிருக்குந் துணையும் இருந்து, அது புலர்ந்தபின் அவரை விட்டு நீங்குதலின், “புண்ணியமுடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்” என்றான்; “வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மொடும், உற்றதோ ருரிமையளல்லள் யாரொடும், பற்றிலள் பற்றினர் பாலள் அன்னதால், முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் ணீர்மையே”1 என்று பிறரும் கூறினர். “பெண்ணிய லனையதன்றோ” என்றான், அமிர்தமதியின் செயலில் வைத்துக் காட்சியளவையிற் கண்டானாகலின். “பள்ளமுதுநீர்ப் பழகினும் மீனினம், வெள்ளம் புதியதுகாணின் விருப்புறூஉம், கள்ள விழ் கோதையர் காமனொடா யினும், உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ” என்றார் வளையா பதியுடையாரும் என வறிக. நிலமகள், பெண்மகள் எனப்பெயரால் வேறுபாடுண்டேயன்றி, இயல்பு ஒத்திருத் தலின், “பெயர்கள் மற்றிவர்கள்” என்றான். கடத்தல் - துறத்தல். மறுநாள் யசோதரன் அமிர்தமதியுடன் திருவோலக்கமிருத்தல் 129. மற்றைநாள் மன்னன் முன்போன் மறைவுலப் படாமை யின்பச் சுற்றமா யவர்கள் சூழத் துணிவிட* னிருந்த வெல்லை மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள். உரை:- மற்றைநாள் - மறுநாள், மறைபுலப்படாமை - முன்னாளிர விற்போந்து மறைந்திருந்து கண்டதும் பின்பு மனத்தே துறவு கொள்ளக் கருதியதும் பிறரறியாவகை மறைத்துக்கொண்டு, முன்போல் - வழக்கம்போல, இன்பச் சுற்றமாயவர்கள்சூழ - இன்பந்தரும் உரிமை மகளிரும் ஏனை மகளிரும் சூழ்ந்துவர வந்து, துணிவிடன் - அரசவையின் கண், இருந்த எல்லை - அரசு கட்டிலில் வீற்றிருந்தபோது, மா மன்னன்தேவி - பேரரசனாகிய அவனுடைய தேவியான, கற்றைவார் குழலி - கற்றையாய்த் திரண்டு நீண்ட கூந்தலையுடைய அமிர்தமதி, வருமுறை மரபின் - ஓர் அரசியாவாள் வருதற்குரிய முறைப்படியே, மெல்ல வந்து - மெத்தென வந்து, காவலன்பால் இருந்தாள் - அரசன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் எ-று. முன்நாளிரவில் அமிர்தமதியின் தீச்செய்கையைக் கண்டு மனத்தே மிக்க அருவருப்பை யெய்தினானாயினும், அது வாயிலாக உலகவின் பத்தில் உவர்ப்புக் கொண்டானாயினும், அவற்றை வெளியிடற்குரிய செவ்வி வாயாமையின், “மறை புலப்படாமை” ஒழுகினான் என்றார்; “இகல்வெல்லல் வேந்தற்கு வேண்டும் பொழுது”1 என்பது அரசுமுறை. முன்னிருந்த முகமலர்ச்சியும் செவ்வியெளிமை யுமுடையனாயிருந்தா னென்றற்கு “முன்போல்” என்றார். முன்போலென வேண்டாது கூறியதன்பயன், அகத்தின் கண் நிகழும் உவப்புக் காய்ப்புக்களை முன்னறிந்து காட்டிவிடும் முதுக்குறைவுடைய முகமும் அது செய்யா திருந்த செம்மையினை வற்புறுத்தலாம். இயல்பாகவே இன்பத் துறையில் எளியனா யொழுகினானாதலின், அவ்வின்பச் சுற்றத்தை இப்போது விலக்கு வதால் மறைபுலப்படுதற் கேதுவாமென்று கருதி, “இன்பச் சுற்றமாயவர்கள் சூழ” வந்தானென்றார். முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவார்க்கு நன்றும் தீதும் ஆய்ந்து நலந்துணிந்து முறை செய்யுமிட மாதலின், அரசவையை, “துணிவிட” னென்றார். அமிர்தமதி பட்டத்தரசியாதல் தோன்ற, “மாமன்னன் தேவி வருமுறை மரபின் வந்து” என்றார். மெல்ல வந்தது, தன்பால் குற்றமுண்மையினைத் தானறிந்து அஞ்சுதலின்; அச்சமுடையார்க்கு விரைந்த நடையில்லை யாதலின். கற்றைவார் குழலி யென்று விசேடித்தார், அவள் தன் முகத்தைப் பலருங் காணக் காட்டாமை பற்றி; இது வெரூஉதல். மெல்ல வென்பதனை இருந்தாளென்பதனோ டியைத்து, முள்மேல மர்வாரைப் போல அச்சமிகுதியால் மெல்ல விருந்தாளென்றலு மொன்று. அரசன் விளையாட்டயர்தல் 130. நகைவிளை யாடன் மேவி நரபதி விரலி னின்றே* மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினான் மெய்யை வீழ்த்தித் திகைகமழ் நீரிற் † றேற்ற மெல்லியல் தேறி னாளே. உரை:- நரபதி - மக்கட்கு அரசனாகிய யசோதரன், நகை விளையாடல் மேவி - இன்பவிளையாட்டை விரும்பி, விரலினின்று மிகை விளைகின்ற - கைவிரலினின்று மேலெழுந்து துவண்டு வீழ்கின்ற, நீல மலரினின் - நீலமலரால், வீசலோடும் - அமிர்த மதியின்மேல் மெல்ல எறிந்ததும், புகைகமழ் குழலி - நறும்புகை யூட்டப்பட்ட கூந்தலையுடைய அவ்வமிர்தமதி, சோர்ந்து - ஆற்றாது அறிவு சோர்ந்தாள் போல, பொய்யினால் - பொய்யாக, மெய்யை வீழ்த்தாள் - இருக்கையிலே சாய்ந்தாளாக, திகைகமழ் நீரின் - நாற்றிசையும் மணம் கமழும் பனிநீர் கொண்டு, தேற்ற - உழையிருந்தார் தெளிவிக்க; மெல்லியல் - மெல்லிய இயல்பினளாகிய அவள், தேறினாள் - அறிவு தெளிந்தாள் எ-று. நரபதி - நரர்க்குப்பதி; அதுவென்னுருபு கெடக் குகரம் விரிந்தது. அரசவைக்கண்ணிருக்கும் வேந்தர் தம் கையில் தாமரை, குவளை முதலிய பூக்களை வைத்திருத்தல் மரபாதல்பற்றி, யசோதரன் கையில் நீலப்பூ விருந்தமை கூறினார். மிகை - மேல். நீலமலரினின் றெறிதலோடு மென்னாது “வீசலோடும்” என்றார். மெல்லிதாக எறிந்தமை யுணர்த்தற்கு. துவண்ட பூவினிடத்து மென்மைமிக்கு எறிந்தவழிப் புதுப்பூவின் வன்மையுமின்றி மெத்தென்றிருக்குமாதலின், அதனாலொருவர் எத்துணை மெல்லியராயினும் வருத்தமுறுவாரல்ல ராதலின், “சோர்ந்து” என்றும் “பொய்யினால் மெய்யை வீழ்த்தாள்” என்றும் கூறினார். மெய்யை வீழ்த்தாள் என அவளின் மெய்யினைப் பிரித்தோதியதனால், அதனையவள் வேண்டுமென்றே செய்தமை வற்புறுத்தினாராம். திகைகமழ் நீர், பலவேறு திசையினின்றும் கொணர்ந்த நன்னீர் என்றுமாம். மெல்லியல், சுட்டுமாத்திரையாய் இழித்தற்கண் வந்தது. அரசன் அவளோடு அசதியாடல் 131. புரைபுரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய இருநிற* மலரினாலின் றிவளுயி ரேக லுற்ற தரிதினில் வந்த தென்றென் † றவளுட னசதி யாடி விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். உரை:- புரைபுரை தோறும் - வேர் முதல் நுனிவரை யெங்கணும், நீர் சோர்பொள்ளல் - நீர் சுவர் கின்ற துவாரங்களோடு கூடிய, இவ்வுருவிற்றாய - இந்தப் புல்லிய வுருவத்தையுடைத்தான, இருநிற மலரினால் - கரிய நிறமுடைய நீலப்பூவினால், இவள் உயிர் இன்று ஏகலுற்றது - இவ்வமிர்தமதியின் உயிர் இப்போது நிங்கும் நிலையை யடைந்தது, அரிதினில் வந்தது - மிகவரிதாக மீண்டு வந்தது, என்று என்று - என்று பலமுறையுஞ்சொல்லி, அவளுடன் அசதியாடி அமிர்த மதியுடன் விளையாட்டாகப் பேசியிருந்து, விரகினில் - தந்திரமாக, விடுத்து - அரசவையினைக் கலைத்துவிட்டு, மன்னன் - வேந்தனாகிய யசோதரன், வெய்துயிர்த்தனன் இருந்தான் - தனித்ததோரிடத்தே பெருமூச்செறிந் திருந்தான் எ-று. நீலமலர் நீர்ப்பூவாதலின் அதன் வேர், தண்டு, இலை, காம்பு முதலிய உறுப்பெல்லாம் உள்ளிற் புழையுடைமைகண்டு, “புரை புரைதோறும் நீர் சோர்பொள்ளல் இவ்வுருவிற்றாகிய இருநிறமலர்” என்று விதந்து கூறினான்; இதனால், நீர்வற்றியவழி இதன்பால் வன்மை சிறிது மின்றாகவும், இதனைத் தன்மேல் வீசியது இவட்கு உயிரைப் போக்குவதாயிற்று; இவ்வாறு இவள் உயிர் நீங்கும் நிலையெய்தியது மெய்யன்று, பொய்ந்நடிப்பு என்று குறித்தானாதலின், “இன்று இவளுயிர் ஏகலுற்றது அரிதினில் வந்தது” என்று அசதியாடு வானாயினான். என்றென்று என்ற வடுக்குப் பன்மை குறித்து நின்றது. அரசவைக்கண் அசதியாடி யின்புறும் வேந்தன், விரைவில் அதனின் நீங்குவது கூடாமையின், “விரகினில் விடுத்து” என்றும், அவள் செய்கையால் அவட்குத் தன்பால் அன்பின்மையினை விளங்கக் காட்டினமையின், வேந்தன் தனித்ததோரிடத்தே, “வெய்துயிர்த்தனனிருந்தா” னென்றும் கூறினார். இது சூழ்ச்சி. வெய்துயிர்த்தான் என்றதனால், யசோதரன் மனத்தே மிக்க வருத்தம் நிகழ்வது காணப்படுகிறது. இருந்தானென்பதற்கு, அரசியையும் ஏனை அமைச்சர் முதலியோரையும் போக்கிவிட்டு அரசன் மட்டில் தனித்திருந்து எண்ணமிடலானான் என்றுரைத்தலு மொன்று. யசோதரன் சந்திரமதியிடம் சேரல் 132. ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணித் தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச் சேயிடை யிறைஞ்ச மற்றித்* திரைசெய்நீ ருலக மெல்லாம் நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள். உரை:- ஆயிடை - அவ்வாறு தனித்து வெய்துயிர்த்திருந்த போது, அரசன் - வேந்தனான யசோதரன், அரசினை விடுப்ப உள்ளத்து எண்ணி - அரசியலைத் துறந்து செல்ல மனத்தேயெண்ணி, தாய் அமர்கோயில் எய்தி - தன்தாயாகிய சந்திரமதி யிருந்த அரண்மனையை யடைந்து, சந்திரமதி தன் முன்னர் - அவள் முன் சென்று, சேயிடை இறைஞ்ச - சேய்மைக்கண்ணே வணங்கி நிற்க, இத்திரை செய்நீர் உலகமெல்லாம் - இந்த அலைபுரளும் கடல் சூழ்ந்த உலகமுழுதும், உயர்குடையின்வைகி - நீயுயர்த்திய வெண்கொற்றக் குடை நிழலில் தங்கச்செய்து, உடன் - அவற்றோடு, நீ நெடிது வாழ்க - நீ நீண்டநாள் வாழ்வாயாக, என்றாள் - என்று அச் சந்திரமதி வாழ்த்தினாள் எ-று. அரசன் தனித்திருந்தபோது அரசியலைத் துறப்பது தக்கதே என்ற எண்ணம் மறுபடியும் எழுந்தமையின், “ஆயிடை அரசினை விடுப்ப வெண்ணி” என்றார். இக்கருத்தினைத் தன் தாய்பால் உரைத்து அவள் கருத்தை யாராயக்கருதி அவளிருக்கும் அரண் மனையை யடைந்து, அவள் திருமுன்னர்ச் சென்றான் என்க, முன்னர்: அர்-பகுதிப் பொருள் விகுதி. துறவுள்ளத்தனாதலின், தேவியின் அருகு செல்லாது சேய்மைக் கண்ணின்று வணங்கினான். சேய்மை- ஐந்துவிற்கிடையில் நின்று வணங்குதல்; “ஐவிலினகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு”1 என்று பிறருங் கூறுதல் காண்க. வைகி, பிறவினைப் பொருட்டு. வைக வென்பதன் திரிபாகக் கோடலு மொன்று. துறக்கக்கருதிப் போந்தாற்கு, சந்திரமதி வாழ்த்துந் திறங்காண்க. வருஞ் செய்யுள் கூறும் மெய் வேறுபாட்டிற்கு இதுவுமோ ரேதுவாதல் உணர்க. யசோதரனுடைய முகவேறுபாடு கண்டு சந்திரமதி உற்றது வினாதல் 133. மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமும் மாறா அணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கொல் பிணியெனை யெனது* நெஞ்சிற் பெருநவை யுறுக்கு மையா துணியலென் உணரச் சொல்லாய் தோன்றனீ யென்று சொன்னாள் உரை:- அணிமுடி யரசர் ஏறே - அழகிய முடியணிந்த வேந்தர் கட்குச் சிங்கம் போல்பவனே, மணிமருளுருவம் வாடி - மாணிக்க மணிபோற் சிவந்த நின் நிறம் வாட்டமடைந்து, பங்கயவதனமும் மாறா - தாமரைபோலும் முகமும்வேறுபட்டு, அழகு அழிந்து உளது - அழகு மழுங்கியிருக்கின்றது, இது என்கொல் - இதற்குக் காரண மென்னை, ஐயா - ஐயனே, பிணி எனை - நினக்கு உண்டாகிய நோய் யாது, பெருநவை உறுக்கும் - இஃது எனக்கு மிக்க வருத்தத்தை யுண்டாக்குகிறது, துணியலென் - யானும் இன்னதென அறியகில்லேன், தோன்றல் - குலத்தின்வழி எஞ்சாதபடி பிறந்தோய், உணரநீ சொல்லாய் - யான் தெளிய வுணருமாறு சொல்வாயாக எ-று. ஏறு, ஐயா, தோன்றல் என்பன ஆர்வமொழி. உறுவென்றும் மணியென்றும் கூறினமையின், மாணிக்கமணியாதல் பெற்றாம். உருவமும் வதனபங்கயமும் அழகிற்கு ஆக்கமாதலின், வாடி, மாறா என்ற எச்சவினைகள் அழிந்தென்பதனோடு முடிந்தன. மணிமருளுருவம் என்றதற் கேற்ப, பங்கயவதனமும் என மாறுக. உம்மை-எச்சப்பொருட்டு. கொல், ஐயம். ஐயத்தால் அலைப் புண்டலின், விளங்க வுரைத்தல் வேண்டுமென்பாள், “துணியலென் உணரச் சொல்லாய்” என்றாள். குலத்தின்வழி இடையறாது தொடர்தற்குத் தோன்றுதலின், மகனைத் தோன்றல் என்ப. கான்முளை யென்பது போல; இனிப் புகழ்க்குரிய குணங்களுடன் தோன்றியோய் என்றுமாம். சொல்லுதல், ஈண்டு வினாதன்மேற்று . கனவின் மேல்வைத்து யசோதரன் உற்றதுரைத்தல் 134. விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பருதி சேரக் கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான். உரை:- இறைவி - அரசமாதேவி, விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் - வானத்தில் விளங்குகின்ற ஒளிமிக்க ஞாயிற்றினை, மதியம் தீர்ந்து - கூடியிருந்த முழுமதியமானது அதனின் நீங்கி, மழுங்க - தன்னொளியும் அந்த ஞாயிற்றி னொளியும் கெட, மண்ணிடைச்சென்று - மண்ணுலகை யடைந்து, ஓர் மறையிருள் பருதி சேர - ஒருமறை விடத்தே கிடந்த இருள் வட்டமொன்றைக் கூட, கங்குல் கனவினில் - இரவிற்கண்ட கனவிலே, கண்ணிடைக் கண்டதுண்டு - கண்ணால் பார்த்தேன், எண்ணுடை உள்ளம் தன்னுள் - பல எண்ணங்கட்கு இடமாகிய மனத்திலேயிருந்து, அஃது - அக்கனவானது, ஈர்ந்திடுகின்றது - என் நெஞ்சினை யறுக்கின்றது, இதற்கு யான் என்செய்வேன், என்றான் - என்று யசோதரன் உரைத்தான் எ-று. அரசினைத் துறந்த உள்ளத்தாற் பேசுதலின், சந்திரமதியை, “இறைவி” என்றான். காந்திமிகுகதிர் - ஞாயிறு. காந்தி - ஓளி. ஞாயிற் றொடுகூடி விண்ணிடை இயங்குவதாகலின், விண்ணின் நீங்குதல் ஞாயிற்றின் நீங்குதல் கூறப்பட்டது. பகலில் ஞாயிறும், இரவில் திங்களும் விண்ணிடத்தே யிருந்து ஒளி செய்தலின், இரண்டும் கூடி இத்தொழிலைச் செய்வதாகக்கூறினார். ஞாயிற்றை யசோதரனாகவும், திங்களை அமிர்தமதியாகவும், இருட்பகுதியை அட்டபங்கனாகவும் கொள்க. நனவுபோலக் கனவிற் கண்டேனென்பான், “கண்ணிடைக் கங்குற் கனவினாற் கண்டதுண்டு” என்றான். செய்வகை துணிய மாட்டாது தடுமாறி நிற்றல் தோன்ற, “எண்ணுடையுள்ளம்” என்றும், மானத்தால் வருத்தமிகுதலின், “ஈர்ந்திடுகின்ற” தென்றும் கூறினான். இது சண்டமாரி வழிபாட்டால் தீரத்தக்க தீமையெனச் சந்திரமதி சொல்லுதல் 135. கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா இரவினிற் கனவு தீமைக் கேதுவென் றஞ்சல் மைந்த பரவிநிற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால் விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம். உரை:- நிற்கு இறைவி தேவி - நினக்குக் குலதெய்வமாகிய சண்டமாரிதேவி, கரவினில் - மறைமுகமாக, தீமை கட்டுரைத் திட்டது - எதிர்வில் வரவிருக்குந் தீங்கொன்றினைத் தெரிவித்திருக் கின்றாள், என்னா - என்று சொல்லி மேலுஞ் சொல்லுவாளாய், இரவினிற் கனவு - நீ இரவில் கண்ட கனவானது, தீமைக்கு ஏது - தீங்குவரவுக்குக் காரணமாம், என்று - என்று நினைத்து, மைந்த - மகனே, அஞ்சல் - நீ அஞ்சாதொழிக, தேவி - அத்தேவியை, பரவிப்பணிந்தனை சிறப்புச் செய்தால் - பரவிப்பணிந்து விழாக் கொண்டாடினால், அத்தீமையெல்லாம் - அத்தீங்கு முழுதும், விரவிமிக்கிடுதலின்றி - பலவாய்க் கலந்து மிகாமல், விளியும் - முற்றவும் கெடுங்காண் எ-று. சண்டமாரிக்கும் யசோதரனுக்கும் தொடர்பு காட்டற்கு “நிற்கு இறைவிதேவி”யென்றும், கனவு நிகழ்ச்சிக்கே ஏது அத்தேவிதான் என்பாள், “கரவினில்தேவி தீமை கட்டுரைத்திட்டது” என்றும் கூறினாள். “காலமுலகம்”1 என்ற சூத்திரத்து, “பால் பரிந்திரை யாவுயர் திணைமேன” என்றதனால், தேவி கட்டுரைத்திட்ட தென அஃறிணை முடிவுகொண்டது. சிறப்பு - திருவிழா. இதற்கு முன்னும் பின்னும் வழிபாடுண்மையின், “பரவிப்பணிந்தனை சிறப்புச் செய்தால்” என்றார். துன்பம் ஒன்றாயும் தனித்துவாராது பலவாய்த் தொடர்ந்து வரும் பான்மைத்தாதலின், “விரவி மிக்கிடுதலின்றி” யென்றாள். எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டு. மீட்டும் கிளைக் காமை தோன்ற, “விளியு” மென்றாள். தெய்வம் நேரே போந்து தனக்கு வழிபாடு வேண்டு மெனக் கூறாதென்பாள், “கரவினில் கட்டுரைத்திட்டது” என்பது ஐதிகம். தேவிக்குச் சிறப்பெடுத்தற்குரிய காலமும் இயல்பும் தெரிவித்தல் 136. ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னர்* மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்† மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள். உரை:- ஐப்பசி மதியமுன்னர் - ஐப்பசி மாதத்துப் பூர்ணிமைக்கு முன்னதாகிய, பக்கம் அட்டமி பின்னர் - பக்கத்தில் எட்டாநாட்குப் பின்வரும் நாட்களுள், மைப்படல் இன்றி நின்ற - குற்றமில்லாது நிலவும், மங்கலக்கிழமை தன்னில் - செவ்வாய்க்கிழமையில், கைப்பலி கொடுத்து - சிறியதோர் உயிர்ப்பலியிட்டு, தேவி கழலடி பணியின் - தேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்குவாயாயின், காளாய் - காளைபோல்பவனே, மெய்ப்பலி கொண்டு - தனக்குப் பொருளாகிய அப்பலியினை அவள் ஏற்றுக் கொண்டு, நெஞ்சின் விரும்பினள் - மனத்தே நின்பால் விருப்ப முற்று, உவக்கும் - தீங்குவாராமைக் காத்து மகிழ்விப்பள் எ-று. “ஐப்பசி மாதத்துச் சுக்லபட்சத்தட்டமிக்குப் பின்வரும் மங்கல வாரத்தில் தேவிக்குப் பலியிட்டுப் பூசை செய்தனர்” என்ற கருத்தமைந்த வடமொழிச் சுலோகமொன்று கூறப்படுவது இக்கருத்தை வற்புறுக்கின்றது. கை - சிறுமை; ஈண்டு சிற்றுயிர் மேற்று. ஏதேனு மொரு சிறு பொருளைப் பலியாக வைத்துப் பரவி யென்றுமாம். பலியாக இடுவது எத்துணைச் சிறியதாயினும், பெரிதாகவே கருதிமகிழ்ந்து வேண்டு மருளைச் செய்யும் மிக்க அருளுடையவள் தேவி யென்பாள். “மெய்ப்பலி கொண்டு” என்றும், “நெஞ்சின் விரும்பினளுவக்கு” மென்றும் கூறினாள். காளை யென்பது, “ஐயா யாகும்”1 என்பதனால், காளாய் எனவந்தது. காளை யென்பது பாடமாயின், அண்மை விளியாகக்கொள்க. வெற்றிக் கடவுளாதலின், தேவிதிருவடியை, “கழலடி” யென்றாள். நீயே அப்பலியை அவட்குக் கொடுக்க என்று சந்திரமதி கூறுதல் 137. மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல் கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். உரை:- மண்டு அமர்தொலைத்த வேலோய் - வீரர்நெருங்கிச் செய்கின்ற போரைவென்றொழித்த வேலையுடையோனே, இது மனத்து மதித்துக்கொண்டு - யான் கூறுமிதனை நின்மனதிற் பதித்துக் கொண்டு சென்று, குறுமறி ஒன்று - சிறிய தொருமறியாட்டினை, நின் கொற்றவாளில் நீயே கொன்று - நினது வெற்றியினை யுடைய வாளால் பிறரையேவாது நீயே கொன்று, சண்டிகை மனம் தளிர்ப்ப - சண்டமாரியின் மனம் மகிழுமாறு, தகுபலி கொடுப்ப - அவட்குத் தக்க உயிர்ப்பலியைக் கொடுத்தால், அத்தையல் - அச் சண்டமாரி தேவி, கண்ட - நீ கண்டு வருந்துகின்ற, நின்கனவின் திட்பம் - உனது கனவுகாட்டிய தீமையின் வலியினை, தடுத்தனள் காக்கும் - தடுத்து உன்னையும் காப்பள், என்றாள் - என்று அச் சந்திரமதி சொன்னாள் எ-று. பல்வகைத்தானையும், வீரரும், வேந்தரும் நெருங்கிச் செய்தலின் “மண்டமர்” என்றும், பகைத்து எதிர்ப்போரை அறக்கெடுத்து வென்ற வழிப்போர் இல்லையாதலின், “தொலைத்த” வென்றும், வேல்வேறற்குக் கருவியாய்ச் சிறத்தலின், “வேலோய்” என்றும் மகனது வீரத்தை வியந்தோதினாள். “மனத்திது மதித்து” என்றலின், அவன் கூறுமாறு பலியிடுதற்கு ஒருப்படாவுள்ள முடையனாதலை அவன் முகம்காட்ட அவள் காணுமாறு பெற்றாம். அதனால், அவள் அவனே அவ்வுயிர்க் கொலையினைச் செய்தல் வேண்டு மென்பாள் “நீயே நின்கொற்றவாளிற் கொன்று” என்றும், கொன்றா வெய்தும் பயன் இதுவென்பாள், “சண்டிகை மனம் தளிர்ப்ப” வென்றும், “கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும்” என்றும், இது தவிர வேறு செயற்குரிய தில்லை யென்பாள் “தகுபலி” யென்றும் கூறினாள் எனவுணர்க. உயிர்க்கொலை கேட்டு யசோதரன் வருந்திக்கூறல் 138. ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுத லோடுந் தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி ஈங்கருள் செய்ததென்கொல் இதுபுதி தென்று நெஞ்சில் தாங்கல னுருகித் தாய்முன் தகுவன சாற்று கின்றான். உரை:- அவண் - அவ்வாறு, ஆங்கு - அவ்விடத்தே, அவள் - சந்திரமதி, அருள் ஒன்று இன்றி - அருள் சிறிதுமின்றி, மொழிந்திடு தலோடும் - சொல்லுதலும், அரசன் - வேந்தனாகிய யசோதரன், தேங்கலன் - பொறானாய், செங்கை செவிமுதல் செறியச்சேர்த்தி - தன் சிவந்த கைகளால் இருகாதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு, ஈங்கு - இவ்வாறு, அருள்செய்தது என் - உரைத்தருளியது என்னை, இதுபுதிது - இது புதுமையாக வுளது, என்று - என்று வாய்விட்டுச் சொல்லி, நெஞ்சில் தாங்கலன், தகுவன - அருளுரை பல, தாய்முன் - தன் தாய்க்கு, முன் சாற்றுகின்றாள் - சொல்லலுறு கின்றான் எ-று. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மொழிந்திடுதலோடும் என்புழி உம்மை, இசைநிறை, தேங்குதல், பொறுத்தல்; மகிழ்தலுமாம் தீமொழி கேட்கவிடாது செவியைச் செறிதலின், “செங்கை” யென்றார். உயர்ந்தாரொடு உரையாடும் மரபு பற்றி, “அருள் செய்தது என் கொல்” என்றான் கொல் - அசைநிலை. அருளின்றி யுரைப்பது என்னென்பான், வழிபாடு மாறாது குறிப்பு மொழியால் “அருள் செய்தது” என்றானென்றுமாம்; “எழுத்தொடும் பொருளொடும் புணராதாகி, பொருட் புறத்ததுவே குறிப்பு மொழி யென்ப”1 என்பது இலக்கணம். அருள்பெருகு நெஞ்சினால் தன் அன்னையொடு உரையாடுகின்றானாதலின், இச்சொற்களோடமையாது மேலும் கூறுகின்றமை தோன்றத், “தாங்கலன்” என்றும், தக்கார்க்குரிய அருளுரையைத் தான் வழங்குதல் பற்றித் “தகுவன சாற்றுகின்றான்” என்றும் கூறினார் “தகுபலி” (137) என்று தாய் கூறியதை மறுத்துத் தகுவது ஈது என்பான் தகுவன சாற்றுகின்றான் என்றாரென்றுமாம். உயிர்க்கொலை அரசர் அறத்திற்கு மாறாமெனல் 139. என்னுயிர் நீத்த வேனு மியானுயிர்க் குறுதி சூழா தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ* ரல்ல ரோதான். உரை:- இறைவி - அரசமாதேவியே, என் உயிர் நீத்தவேனும் - என்னுயிரைப் போக்கக்கூடிய தீங்குகளைச்செய்தனவென்றாலும், யான் - அரசனாகியயான், உயிர்க்கு - அவ்வுயிர்கட்கு, உறுதிசூழாது - உறுதியாவனவற்றை யாராய்ந்து செய்யாது. என் உயிர்க்கு அரணம் நாடி - என் ஒருவன் உயிர்க்குப் பாதுகாப்பானவற்றையே நினைந்து, உயிர்க்கு - என்னால் காக்கப்படும் அவ்வுயிர்கட்கு, யான் இறுதி செய்யான் - யான் கொலை செய்வேனாயின் எனக்கு - கொலை பாவியாகிய எனக்கு, இவ்வுலகு காவல் - இவ்வுலகைக் காக்குந் தொழில், என்னை - என்னை பயனைச்செய்யும், மன்உயிர்க்கு - மிகுதியான உயிர்கட்கு, மண்மேல் - நிலவுலகில், அரணம் - பாதுகாப்பாவார், மன்னவர் அல்லரோ - அரசரன்றோ, இனி கூறாய் - இப்பொழுது நீயே கூறுவாயாக எ-று. முறை செய்து உயிர்களைக் காத்தவேந்தன் தேவியாதலின், வேந்தருடைய அறம்பல அறிந்திருப்பாளென்ற அமைதி குறித்து, “இறைவி” என்றும், “கூறாய்” என்றும் இயம்பினான். “மண்ணியல் மன்னர்க்குக் கண்ணெனவகுத்த, நீதி நன்னூலோதிய நாவினள்”1 என்று பிறருங் கூறுதல் காண்க. “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது, இன்னுயிர் நீக்கும் வினை”2 என்பவாகலின் “என்னுயிர் நீத்தவேனும்” என்றும், “யான் உயிர்க்கிறுதி செய்யின்” என்றும் கூறினான். “இன்னா செய்தார்க்கும் இனியவே”3 செய்தல் வேண்டு மென்பதுபற்றி, யான் உயிர்க்கு உறுதி சூழாதென்னுயிர்க் காரணம் நாடி” யென்றும் எடுத்துக் காட்டினான். தன்னுயிரினும் தன்னாற் காக்கப்படும் உயிர்கட்கு உறுதியை நாடிச் செய்வதே அரசர்க்கு அறமாதலினாலும், அதனினும் ஆக்கம் உயிர்க்கு வேறின் மையாலும், “என்னையிவ்வுலகு காவல் எனக்கு” என்றான். மன்னு யிர்க்கு அரண்செய்வதே வேந்தர்கடன் என யாப்புறுத்தவே, “மன்னு யிர்க்கரண மண்மேல் மன்னவரல்லரோ” என்றான். உயிர்க்கொலையால் மேலுலக வின்பமில்லை யெனல் 140. யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்லின் வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி மானுயர் வாழ்வு மண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. உரை:- யான் உயிர்வாழ்வதல் எண்ணி - யான் உயிரோடி ருப்ப தொன்றையே கருதி, எளியவர் தம்மைக் கொல்லின் - எளியோர்களைக் கொல்வேனாயின், மேல் - மறுமைக் கண், வான் உயர் இன்பம் - தேவருலகில் பெறும் உயர்ந்த இன்பம், வரும் நெறி திரியும் - என்னை வந்தடைதற்குரிய நெறிமாறி நீங்கிவிடும், அன்றி - அன்றியும், ஊன்உயிர் இன்பம் எண்ணி - உடம்பொடுகூடிய உயிர்க்கு வரும் இன்பமொன்றையே கருதி, எண்ணம் ஒன்றும் இன்றி - ஏனை யுயிர்கட் குண்டாகும் துன்பத்தைச் சிறிதும் நினையாது, மண்ணில் - மண்ணு லகத்தே, மானுயர் வாழ்வு - மக்கள் வாழும் வாழ்வு, மரித்திடும் இயல்பிற்றன்றே - அழிந்து போகும் இயல்பினதாகும் எ-று. “தான் வாழ ஏனோர் தனக்கடிமையாக எனும், ஊன அறிவினனார்க்கு” விண்ணின்பம் ஒருகாலும் எய்தா தென்னும் அறவுணர்வால், “யானுயிர் வாழ்த லெண்ணி எளியவர் தம்மைக் கொல்லின், வானுயரின்பமேலால் வருநெறி திரியும் ” என்றான். மறுமைக்கண் இன்ப மின்றாயினும் இம்மைக்கண்ணாயினும் இனி திருக்கலா மெனத்தருக்கு வார்க்கு, இம்மையின்பமும் நிலையின்றிக் கெடுமென்பான், “மானுயர் வாழ்வு மண்ணின் மரித்திடும் இயல் பிற்றன்றே” என்றான். எளியவர் என உயர்திணைமேல் வைத்துக் கூறினானாயினும், அஃறிணையும் கொள்ளப்படும். “கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை”1 என்புழிப்போல. கழிந்த நாட்களைப் போல மரிக்கும் நாள் இஃது என உணரற்காகா மையின், காலங் குறியாது வாளா “மரித்திடும் இயல்பிற்றன்றே” என்றான்; “சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம், நின்றநாள் யார்க்கும் உணர்வரிது”2 என்று பிறருங் கூறுதல் காண்க. அன்றே என்புழி எதிர்மறை முற்றும் எதிர் மறை யேகாரம் கூடி ஆமென்னும் உடன்பாட்டுப் பொருள்தந்து நின்றன. வானுயர் இன்பம், தேவருலகத்தின் மேற்பட்டதாகிய முத்தியின் பமுமாம்; “மூவுலகுச்சியின்பம்”3 என்று தேவர் கூறுதல் காண்க. வானுய ரின்பம் எய்தாதென்ற கருத்தால், “வரும் நெறிதிரியும்” என்றான். ஆல் - அசை. உயிர்க்கொலையால் பாவம் மிகுமெனல். 141. அன்றியு மின்றென்* முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள் கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர் இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால் நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். உரை:- அன்றியும் - அல்லதூஉம், அன்னை - தாயே, முன்னர் - முற்காலத்தும், நின்குலத்துள்ளோர்கள் - நின்குலத்திற் பிறந்த முன்னோர் எவரும், உயிர் கொன்று கன்றும் - உயிர்களைக் கொன்றுகொன்று அடிப்பட்ட, உள்ளக்கொடுமை - மனக்கோட்டத் தால், செய்தொழிலர் - அக்கொலை வினையைச் செய்யும் செய்கை உடையவர், அல்லர் - இலர், இன்று என் - இப்போது நினக்கு மட்டில் அஃது உண்டாவது என்னை, இன்று - இப்போது, உயிர்கொன்ற பாவத்து - உயிரைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தால், மேல் - மறுமையில், இடர் பலவிளையும் - பல துன்பங்களுண்டாகு மாதலால், நீ அருளிற்றெல்லாம் - நீ சொன்னது முழுதும், நமக்கும் - மன்னுயிர்க்கேயன்றி நினக்கும் எனக்கும், நன்றி யொன்றன்று - நலம் சிறிது மின்றாம் எ-று. தன் தாய் மனத்தில் இக்கொலையுணர்வு பிறத்ததற்குக் காரணங் காணலுற்ற யசோதரன், அவள் முன்னோர் இயல்பை மனத்தாலாராய்ந்து ஒருவர்பாலும் அஃதில்லாமை யோர்ந்து, வருந்திக் கூறுவான், “நின்குலத்துள்ளோர்கள், கொடுமை செய் தொழிலரல்லர்” என்றும், அவள்பால் அஃதிருத்தற்கு ஏது பெறப் படாமையின், “இன்று என்” என்றும் கூறினான். “நலத்தின்கண் நாரின்மை தோன்றினவனைக் குலத்தின்கண் ஐயப்”1 படுவது இயல்பாதல்பற்றி, இவ்வாராய்ச்சி யுண்டாயிற்றெனவறிக. “இன்று” எனவே, தன் தந்தை அசோகன்காலத்தும் இச்செயல் நிகழாமை துணியப்படும். உயிர்க்கொலையே புரிந்து அதன்கட் கன்றிய மனமுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அச்செயலுண்டாகாதென்றற்கு, “கொன்றுயிர் கன்றும் உள்ளக் கொடுமை செய்தொழில்” என்றார். கன்றுதல் - செய்து செய்து பயிற்சி கைவரப் பெறுதல்; தீமைசெய்து பயிறற்கே இக்கன்றுதல் வினையுரித்து; சூதின்கட் கன்றினான், கொலையின்கட் கன்றினான், காமத்தின்கட் கன்றினான் எனவரும் வழக்காறுகளைக் காண்க. கொடுமை- கோட்டம்; நடுவுநிலையின்மை. தன்னுயிர்போல் ஏனையுயிரை நினையாமையின், கொடுமை யாயிற்று. உயிர்க் கொலையால் உண்டாகும் பாவம் விடாது தொடர்ந்து வந்து பல பிறப்புக்களிலும் துன்புறுத்தும் என்பான், “இடர்பல விளைக்கும் மேலால்” என்றான். ஆல் - அசை. “தீமையெல்லாம்” (135) என்புழிப்போல, எல்லா மென்பது எஞ்சாப் பொருட்டு. நன்றியொன்றன்று என்புழிச் சிறப்பும்மை தொக்கது. நன்றியன்று, ஒன்றன்று என்றியைத்து அறமுமன்று, ஒரு பொருளுமன்று. இன்பந்தருவது மன்று என்றுரைப் பினுமாம். “இன்றுயிர் கொன்ற பாவத்து” என்புழி, இன்றென்பது இம்மைப் பிறப்புக்கும் உரித்து, மேலென்றது மறுமை சுட்டி நிற்றலின். நமக்கும், என்புழி உம்மை, எச்சப்பொருட்டு; நம்மிரு வர்க்கும் என்றுமாம். இவை நான்குபாட்டாலும் உயிர்க்கொலையால் விளையுந் தீங்கு பலவகையாலும் வகுத்துரைக்கப்பட்டது காண்க. இதுகேட்டு வெகுண்ட சந்திரமதி மாவாற் கோழி யொன்று செய்து பலியிடுக என்றல். 142. என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்றே* சென்றனள் முனிவுச் சிந்தைத் திருவிலி பிறிது கூறும் கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து சென்றனை பலிகொ டுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். உரை:- என்றலும் - என்றிவ்வாறு யசோதரன் கூறியதும், முனிவுச் சிந்தைத் திருவிலி - வெகுளிபொருந்திய மனத்துடன் அறவுணர் வில்லாத சந்திரமதி, எனது சொல்லை இறந்தனை - என் சொல்வரம்பு கடந்து பேசுகின்றாய், கொடியை - நீ கொடியவன், என்று பிறிது கூறும் - என்று சினந்து பின் மேலுங் கூறுவாளாய், உயிர் கொன்று - ஓர் உயிரைக் கொன்று, களைதல் அஞ்சின் - உன் துன்பத்தைப் போக்கிக் கொள்ள நீ அஞ்சினாயாயின், கோழியை மாவின்செய்து - கோழியினது வடிவ மொன்றை மாவாற் செய்து, சென்றனை - தேவி கோயிற்குச் சென்று, பலிகொடுத்து - பலியிட்டு, தேவியை மகிழ்வி - அச்சண்டமாரி தேவியை மகிழ்விப்பாயாக, என்றாள் - என்று சொன்னாள் எ-று. எளிதில் சினக்கும் இயல்பின ளென்றற்கு “முனிவுச்சிந்தை” யென்றும், அவ்வியல்பினர்பால் அறம் பற்றுக்கோடாக நிற்கும் திருநில்லாமையின், “திருவிலி” என்றும் கூறினார். அறத்தின்வழி நிற்றல்பற்றி அதனைத் திரு வென்றார்; “சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப்படூஉம்”1 எனச் சான்றோர் கூறுதல் காண்க. திருவிலி, அமங்கலையுமாம். தான் கொண்டது விடாப்பேதை யாதலின், பிறிது கூறுகின்றாளெனவுணர்க. “கொன்றுயிர்களைதலஞ்சின்” என்றது, யசோதர னுள்ளத்தை யெழுப்பி உயிர்க்கொலைக் கண் ஊக்குங் குறிப்பிற்றாதலை யுணர்க. “மாவாலாவது மாவினாலாம்” என்னும் உலகுரை பற்றி, “கோழியை மாவிற் செய்து” என்றும், “பலிகொடுத்” தென்றும், “தேவியை மகிழ்வி” யென்றும் கூறினாள். யசோதரன் இது வினை விளைவென்று நினைதல். 143. மனம்விரி யல்குன் மாய மனத்தவை வகுத்த மாயக் கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொதாயிற்று எனைவினை யுதயஞ் செய்ய இடர்பல விளைந்த என்பால் வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். உரை:- மனம் விரி அல்குல் - ஆடவர் ஆசைபோல் அகன்ற அல்குலை யுடைய அமிர்தமதியின், மாயமனத்தவை - கள்ள நினைவும் செயலும் கொண்டொழுகுந் திறங்களை, வகுத்த - குறிப்பா யுணரு மாறுயான் தேவிக்கு வகுத்துரைத்த, மாயக் கனவுரை - பொய்க் கனவுக்கூற்று, பிறிது - வேறாக, தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று - அரசமா தேவியாகிய சந்திரமதியின் உரை வேறொன்றாயிற்று, எனை வினையுதயம் செய்ய - என்பால் வினைதோன்றி விட்டதனால், இடர் பல என்பால் விளைந்த - துன்பங்கள் பல எனக்கு உண்டாயின, வினைகளின் விளைவை - வினைகளால் உண்டாகும் பயனை, விலக்கு நர் யாவர் - விலக்கும் வன்மையுடையார் யாவருளர், என்று - என்று நினைந்து, நின்றான் - சந்திரமதி கூறிய செய்கைக்கண் நிற்கலானான் எ-று. எல்லையின்றிப் பரந்த அல்குலென்றற்கு “மனம் விரி யல்குல்” என்றான். “அவாப்போ லகன்ற தன் அல்குல்”1 என்று பிறரும் கூறுப. மனம் கணந்தோறும் பொருள்கண்மேல் அவாக்கொண்டு விரிதல் போல, அல்குலும் புணர்வார்க்குப் புணருந்தோறும் புத்தின்பம் பெருகி விரிதலின், அல்குற்கு அவாவினை உவமம் கூறினர். மாயம் - கள்ளம், பொய் முதலியன ஒரு பொருளன. மானத்தால் வெளிப்படக் கூறாது குறிப்பால் கனவுமேல் வைத்துக் கூறினமையின், “வகுத்த மாயக் கனவுரை” யென்றான். செயவெனெச்சம் காரணப் பொருட்டு, “எனைப் பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென்றடும்”2 என்பது பற்றி, “வினைகளின் விளைவை யாவர் விலக்குநர்” என்றான்; பிறாண்டும், “வெல்வதற்கரிதால் வினையின் பயன்” (170) என்பது காண்க. அல்குல் மாயமனத்தவை என்பதற்கு அல்குலையும் மனத்தையு முடையதாயாகிய சந்திரமதியென்று உரைப்பது பொருள் சிறவாமை யறிக. அவை - அவ்வை, தாய். சந்திரமதி யுரைத்தவாறு செய்தற்கொருப்பட்டுரைத்தல். 144. உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும் பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன் செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்வதற் கிசைந்த தென்றான் அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான். உரை:- உயிர்ப்பொருள் வடிவு கோறல் - உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைக் கொல்வதும், உயிர்க் கொலை - உயிர்க்கொலையேயாம், என்னும் பயிர்ப்பு - என்னும் ஓர் அருவருப்பு, உளம் உடையனேனும் - மனத்தே கொண்டிருந்தானாயினும், பற்று அறத் துணிவுஇல் மன்னன் - பசையற ஒருதலையாகத் துணியும் மனவன்மை யில்லாத வேந்தனா தலின், செயிர்த்தவள் - தன்னை வெகுண்ட தாயாகிய சந்திரமதி, உரைத்த செய்கை - சொல்லிய செயலை, செய்வதற்கு என் நெஞ்சு இசைந்து விட்டது, என்றான் - என்று யசோதரன் சந்திரமதிக்குக் கூறினான், அயிர்ப்பது என் - அவன்பால் நாம் ஐயுறுவதாற் பயனில்லை, அறத்தின் திண்மை யறிவதற்கு - அறத்தின் வலியினை யுள்ளவாறறிதற்கேற்ற, அமைவிலா தான் - மனத்திட்பமுடைய னல்லனாதலால் எ-று. உயிர், உயிரில்லது, நல்வினை, தீவினை, ஊற்று, சம்வரம், நிர்ச்சரை, கட்டு, வீடு என்ற ஒன்பதனையும் பொரு ளென்றல் சமண் சமயக்கொள்கை யாதலின், “உயிர்ப்பொருள்” என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. போலும், உரையசை; இதனை வாக்கியாலங் காரம் என்ப. பயிர்ப்பு, அருவருப்பு, துணிவுடையனாயின், தன்னறிவின் கண் அறிந்து கூறிய அறங்களை விடாது மேற்கொண்டு சந்திரமதியின் கூற்றை மனங்கொள்ளாது தள்ளியிருப்ப னென்றற்கு, “பற்றறத் துணிவில் மன்னன்” என்றார். அவனை யிசைவித்தது அச்சந்திரமதியின் வெகுளியே யென்றற்கு, “செயிர்த்தவள்” என்றும், அதற்கு அஞ்சினா னென்பார், “செய்வதற் கிசைந்த தென்றான்” என்றும் கூறினார். கொலைப்பாவமும் வினையியல்பும் பிறவும் யசோதரன் எடுத்தோதக் கண்டார், அவன் அக்கொலைவினையைச் செய்தற் கிசைந்தானெனின், கொள்ளாராதலின், “அயிர்ப்பதென்” என்றும் அதற்க ஏது இஃதென் பார், “அறத்தின் திண்மை யறிவதற் கமைவிலாதான்” என்றும் கூறினார். எனவே, “ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்கா” ப்பெரும் பேதை இவ் யசோதர னென்றாராயிற்று. மாக்கோழியைப் பலியிடுவான் அறுத்தல். 145. மாவினின் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் செய்தே ஆவயின்* தன்கை வாளா லரிந்து கொண் டருளி தென்றான். உரை:- அவ்வையாய பாவிதன்னோடு - தாயாகிய பாவியுடன், மன்னன் - வேந்தனாகிய யசோதரன், படுகொலைக்கு இடமதாய தேவி தன் இடை - மிக்க உயிர்க்கொலைக்கு இடமாகிய சண்டமாரி கோயிற்கு, மாவினின் வனைந்த கோழி வடிவுகொண்டு - அரிசி மாவாற் செய்யப்பட்ட கோழி வடிவத்தை எடுத்துக் கொண்டு, சென்றெய்தி - சென்றடைந்து, சிறப்பொடு வணக்கம் செய்து - திருவிழாவும் வழிபாடும் ஆற்றி, ஆவயின் - அவ்விடத்தே, தன்கை வாளால் - தன்கையில் வாளாள், அரிந்து - அக்கோழியின் தலையைக் கொன்றெறிந்து, இது கொண்டருள் - தேவி, இப்பலியை ஏற்றருள் வாயாக, என்றான் - என்று வேண்டினான் எ-று. “சாலியின் இடியின் கோழி” (146) என்றலின், மா - அரிசிமா வாயிற்று. யசோதரன் மனத்தே அறவுணர்வு அரும்பக் கண்டதும் அதனை வளர்க்காது, மாறாயபாவமே வலியுறச் செய்தாளாதலின் “அவ்வையாய பாவிதன்னோடு” என்றும், இக்கொலைக்கு அவளே முதலாதல்பற்றி, “பாவிதன்னோடு” என்றும், உயிர்க்கொலை நிகழ்தற்கு அத்தேவி கோயில் இடமாதலின், “படுகொலைக் கிடமதாய தேவிதன்னிடை” என்றும் கூறினார். வணக்கம் - நாளும் நடைபெறுவது; சிறப்பு - நாள் வழிபாட்டிற்றாழ்வு தீரச் செய்யப்படுவது; “சிறப்பொடு பூசனை செல்லாது”1 என்றார் பிற சான்றோரும். சுட்டு நீண்டது. மாக் கோழி கூவிக்கொண்டு மன்னன் முன் வீழ்தல் 146. மேலியல் தெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ மாலிய லரசன் தன்கை வாள்விடுத் துருகி னானே. உரை:- மேல் இயல் தெய்வம் கண்டு - மக்கட்கு மேலாக வழிபடப்படுகின்ற சண்டமாரியாகிய தெய்வத்தைப்பரவி, விரும் பினது - அது விரும்பிய பலியாக, அடையப்பட்ட - படைக்கப் பட்ட, சாலியின் இடியின் கோழி - சாலி நெல்லரிசியை யிடித்துப் பெற்ற மாவாலாகிய கோழியானது, தலையரிந்திட்டது - தலையறுக்கப் பட்டது, ஓடி - துள்ளியோடி, கோல் இயல் அரசன் முன்னர் - நீதி முறையில் ஒழுகும் இயல்பிற்றாகிய அரசினையுடைய யசோதரன் முன்னே, கூவுபு குலுங்கிவீழ - கூவித் துடித்து வீழ, மால் இயல் அரசன் - மயங்கும் இயல்பினையுடைய அவ்வரசன், தன் கை வாள் விடுத்து - தன் கையினின்றும் வாள் நெகிழ்ந்து வீழ விட்டு, உருகினான் - மனமுருகினான் எ-று. மக்கட்குரிய வினைப்பயனை வரைந்து தரும் இயல் பிற்றென்று தெய்வத்தைக் கருதுபவாதலின், “மேலியல் தெய்வம்” என்றார். சிறப்பயர்ந்து வழிபட்டுக் கண்ணாரக் காணும் செய்கை தோன்ற, “கண்டு” என்றார். விரும்பினது, சண்டமாரி விரும்பும்பலி. அடையப் படுதல், நிவேதிக்கப்படுதல். தலையரியப்படும் கோழி துள்ளி வீழ்தல் இயல்பாயினும், இம்மாக்கோழி உயிரில்லதாகவும் கூவித்துள்ளி வீழ்ந்த தென்பதாம். கோல் - அரசநீதி; அது கோல் போறலின், கோலெனப்பட்டது. கோலியல் என்னு மடை, அரசுக் குரித்து. அதனையுடைய னாதலின், அவன் முன்னர் வீழ்ந்த தென்பார், “கோலியலரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ” என்றார். கூவுபு - செய்பென்னும் எச்சம். குலுங்குதல் - துள்ளுதல். கோலியலர சினை யுடையனாயினும், யசோதரன் அதனை யுணராது மயங்கும் அரசன் என்றற்கு, “மாலியல் அரசன்” என விதந்தார். மாலியலரசற்கு வாட் படை யொருபயனும் செய்யாதாகலின், “தன் கைவாள் விடுத்து உருகினான்” என்பாராயிற்று. மனமுருகிய வேந்தன் வருந்துதல் 147. என்னை கொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல் பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுபோன் மென்றான்* உரை:- மாவின் செய்கை - மாவினால் செய்யப்பட்டதாகிய இக்கோழி வடிவமானது, இவ் - இவ்வாறு, உயிர் பெற்ற பெற்றி - உயிர்பெற்ற தன்மை, என்கொல் - என்னோ, வாள் - என் கைவாள், சென்னி எறிய - தலையை யரிய, ஓடிச் சிலம்பிய குரல் இது - துள்ளியோடிக் கூவிய இக்குரல், என்கொல் - என்னோ, பின்னிய பிறவிமாலை - ஒன்றினொன்று பின்னப்பட்டது போன்றுள்ள பிறவித் தொடர்பானது, பெருநவைதருதற்கு - எனக்கு மிக்க துன்பத்தைத் தருதற்கு, ஒத்த - ஏதுவா யமைந்த, கொன் இயல் பாவம் - அச்சத்தைச் செய்கின்ற பாவந்தான், என்னைக் கூவுகின்றது போன்ம் - என்னைக் கூவியழைப்பது போலும், என்றான் - என்று சொல்லி வருந்தினான் எ-று. “மாலியலரசன்” என்று பொதுப்படக் கூறினாராதலின், அதனை விளக்கு முகத்தால் அவன் மனமருட்சியைப் படிப்படியாகக் காட்டலுற்று முதற்கண், மாக்கோழி உயிர்பெற்றுத் துள்ளியோடியதை வியந்து, “மாவின் செய்கை இவ்வுயிர் பெற்ற பெற்றி என்னை கொல்” என்றான். இவ்வென்னும் சுட்டுப்பெயர், உயிர் பெற்ற திறத்தைச் சுட்டிநின்றது. துள்ளியதோடமையாது கூவியது உயிர் பெற்றதன் பெற்றியை வற்புறுத்தி அவன் மனத்தே சூழ்ச்சி பிறப்பித்த மையின், அதனால், அக்குரலைப் பாவத்தின் குரலாகப் பொருள் செய்து கொண்டு, “பாவ மென்னைக் கூவுகின்றது போன்” மென்றான். போலும் என்பதன் ஈற்றுமிசையுகரம் மெய்நிற்பக் கெட்டது. கொன், அச்சப்பொருட்டாய இடைச்சொல். காரணகாரியத் தொடர்ச்சியாய்த் துன்பம் பயக்கும் இயல்பிற்றாதலின், “பின்னிய பிறவிமாலை” யென்றும், “பெருநவை தருதற்கு” என்றும் கூறினான். நவை - துன்பம், நுகர்ந்தன்றிக் கழியாத பெருமை யுடைமையின், “பெருநவை” யெனப்பட்டது. ஒத்தல், “உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்”1 எனப்புழிப்போல. 148. ஆதகா தன்னைச் சொல்லா லறிவிலே னருளில் செய்கை ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் ஆதகா வினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றான். உரை:- அறிவிலேன் - நல்லறிவில்லாதயான், அன்னை சொல்லால் - தாயாகிய சந்திரமதியின் சொற்கிசைந்து, அருளில் செய்கை - இரக்கமில்லதாகிய உயிர்க்கொலை செய்தது, ஆ! - மிகவும், தகாது - தகுதியற்றதாகும், அழிந்தபுள்வாய் - பலியாய்த் தலையறுப்புண்ட கோழியின் வாயிலிருந் தெழுந்த, அரிகுரல் - அரித்த குரலோசை, நெஞ்சை அரியும் - என் நெஞ்சினையறுக் கின்றது, ஆதகாது - ஆ, இதுவும் தகுதியற்ற கொடுஞ்செயலாகும், அமிர்தமுன்னா மதியவள் களவு - அமிர்தம் என்னும் பெயர்முன் மதியென்னும் சொல் புணரவரும் அமிர்தமதி யென்னும் பெயரினை யுடையாளது கள்ளச் செயலும், கொல்லும் - என்னுயிரைக் கொல்லாநிற்கும், ஆ ! தகாது - ஆ இதுவும் தகுதியற்றதாம், வினைகள் - தீவினைகள், என்னையடர்த்து நின்று - என்னை நெருக்கி நின்று, அடுங்கொல் - கொல்லும் போலும், ஆ-ஐயோ, தகா - இவையாவும் எனக்குத் தகுதியல்ல எ-று. இயற்கை யறிவால் சந்திரமதி கூறிய செயல் தக்கதன்றென்றுணர்ந்தும், திட்பமின்மையின், அயர்ந்து அவள் சொற்கே இசைந்து கெட்ட தன்சிறுமை நினைந்து அவன் தான் வருந்துகின்றமைதோன்ற, “ஆத காது” என்றான். ஆ! என்னும் இரக்கக் குறிப்பிற்றாய இடைச்சொல், ஈண்டுக் கழிந்ததற் கிரங்கும் இரக்கமிகுதி சுட்டி நின்றது. ஏவியது அன்னை செய்கையாகவும், இயற்றியது தன்செய்கையாதலையும், அதற்கேது தன் அறிவின்மை யென்பதையும், அச்செய்கைக் கண்ணுள்ள குற்றம் அருளின்மை யென்பதையும் தெரிந்துணர்ந்து வருந்து மாறு விளங்க, “அன்னைசொல்லால் அறிவிலேன் அருளில் செய்கை” என்றான். மாக்கோழியின் செய்தியால் அதனை யுயிரென்றே கருதினானாதலின், “அழிந்த புள்” என்றான். அரிக்குரல், அரிகுர லெனவும் வரும். “அரிகுரற் கோழி”1 என்றார் பிறரும். களவு, கள்ளக்காம வொழுக்கம். இத்தீவினை காரணமாகப் பிறவியும், வினையும் பெருகுதலின், “வினைகள்” என்றும், அவை தன்னை யடர்த்து வருத்துவது ஒருதலை யென்னு முணர்வால், “அடர்த்து நின்று அடுங்கொல்” என்றும் கூறினான். தனக்குத் தகுதி வினையின் நீங்கி விளங்கிய அறிவினைப் பெற்றுச் சிவகதிபெறுவதேயாக, இக்கூறியவாற்றால் வினைகளை யீட்டித் துன்புறுவதன்மையின், “ஆ தகா” என்றான்; இனி, தகா வென்பதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக்கி வினையொடு முடிப்பினுமாம். இக்கூற்று, “காவலற் கூற்றம் கொல்லும், வளைகய மடந்தை கொல்லும் தான்செய்த பிழைப்புக் கொல்லும், அளவறு நிதியங் கொல்லும் அருள் கொல்லும்”1 என்பதனோடு கருத்தால் ஒத்து நிற்றல் காண்க. தன்மகன் யசோமதிபால் அரசினை வைத்து யசோதரன் தவவனம் படர்தற்கமைதல் 149. இனையன நினைவு தம்மால் யசோதர னகர மெய்தித் தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் அனையதை யறிந்துந் தேவி யவமதித் தெனைவி டுத்தான் எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்து வீழ்வாள். உரை:- யசோதரன் - வேந்தனான யசோதரன், இனையன நினைவு தம்மால் - இத்தன்மையான பல நினைவுகளுடன், நகரம் எய்தி - அகநர்க்கண்ணுள்ள தன்னரண்மனையையடைந்து, தனையனில் அரசுவைத்து - தன் மகன் யசோமதி பால் அரசபாரத்தை ஒப்பித்து, தவவனம் படர்தல் உற்றான் - தான் தவம்பூண்டு வனத்துக்குச் செல்லக்கருதினான், தேவி - அவன் மனைவியாகிய அமிர்தமதி; அனையதை யறிந்தும் - அதனை விளங்க அறிந்து வைத்தும், எனை அவமதித்து - என்னையிகழ்ந்து, விட்டான் - இவ்வரசன் துறந்து விட்டான், என நினைந்து - என்று தனக்குள்ளே நினைந்து, எரி நகரத்து வீழ்வாள் - நெருப்பெரியும் நரகத்தில் வீழ்பவளாகிய அவ்வமிர்தமதி, ஏது செய்தாள் - யாது செய்தாளென்றால் எ-று. ஆலுருபு ஒடுவின் பொருட்கண் வந்தது. சண்டமாரியின் கோயில் நகர்க்குப் புறத்தே யுண்மை தோன்ற, “நகரமெய்தி” என்றார். தவவனம், தவம் செய்தற்குரிய காடு. படர்தல் - செல்லுதல். உற்றான், நினைத்து அதற்கு முன்னணியாகச் செய்தற்குரியவற்றைச் செய்ய லுற்றான் என்பதுபட நின்றது. அறிந்தும் என்புழி உம்மை, சிறப்பு. தேவி,மனைவியாகிய அமிர்தமதி. யசோதரன் துறவு மேற்கொண்டது, தன்பால் பெறலாகும் காமவின்பத்தைப் புறக்கணித்ததாகக் கருதி வெகுள்கின்றாளாகலின், “அவமதித்தெனை விடுத்தான்” என நினைந் தாளென்றார். அவ்வெகுளி மிக்கதனால், துறவுபூண்டு நலமெய்தக் கருதும் அவ்யசோதரன் உயிர்க்குக் கேடுசூழ்கின்றாளென்பார், “யாது செய்தாள்” என்றும்’ அச்சூழ்வினையாலவளெய்தும் பயன் இஃதென் பார், “எரிநரகத்து வீழ்வாள்” என்றும் கூறினார்; ஆசிரியர் அவளை இகழ்ந்து கூறியதூஉமாம். அமிர்தமதி வஞ்சனையாக யசோதரனை விருந்துண்ண அழைத்தல் 150. அரசுநீ துறத்தி யாயின் அமைகமற் றெனக்கு மஃதே விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்த னோடும்* இரசநீ ரமிர்து† கைக்கொண் டருளுதற் கிசைதல் செய்வாய்‡ அரசுதா னவன தாக அவிது§ நா மடிக ளென்றான். உரை:- விரைசெய்தார் இறைவ - மணம் கமழும் மாலை யணிந்த அரசனே, நீ அரசு துறத்தியாயின் - நீ அரச போகத்தைத் துறந்து செல்கின்றாயாயின், அமைக - அவ்வண்ணமே செய்க, எனக்கும் அஃதே - எனக்கும் அதுவே இனி அமைதியாகும், என் வியன் மனை - என்னுடைய அகன்றமனைக் கண்ணே, இன்று - இற்றைநாளில், மைந்தனோடு - அரசனாகப்போகும் நின் மைந்தனுடன் போந்து, இரசநீர் அமிர்து - யான் நல்கும் சுவை பொருந்திய உணவினை, கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய் - ஏற்றுண்பதற்கு மனமிசைய வேண்டும், அரசு - இவ்வரசபோகம், அவனதாக - மகற்குரித்தாய்விடின், அடிகள் - ஐயனே, நாம் அவிதும் - பின்பு நாம் இவற்றின்மேல் செல்லும் வேட்கையவிந்தொழிவோமாதலின் எ-று. யசோதரன் துறவு பூண்பதில் தனக்கு விருப்பமின்மை யுணர்த்து வாள், “அரசு நீ துறத்தியாயின்” என்றும், தனக்குத் துறவுக் கண் விருப்பமின்றாயினும், யசோதரன் தன் வேண்டுகோட்கு இசையும் பொருட்டு “எனக்கும் அஃதே” என்றும் கூறினாள். “இரசநீர் அமிர்து” என்றாள், தான் நல்க விரும்பும் உணவின் ஏற்றமுணர்த்தற்கு. உள்ளத்தே துறவு நிகழ்ந்தவழி, தன் சொல்லையும் பிறநலங்களையும் விழையான் என்ற கருத்தால், அமிர்தமதி யசோதரனை, “மைந்தனோடு கைக்கொண்டருளுதற்கு இசைதல் செய்வாய்” என்றும், இனி, இத்தகைய வுண வினைத் தானும் அவனும் கோடற்காகாமையால், “இன்று” என்றும், அதன் பால் வேட்கை யெழினும், அதனை யவித்தொழுக வேண்டு மென்பாள், “அவிதும் நாம்” என்றும் கூறினாள். அடிகள், மகளிர் தம் கணவனை இவ்வாறு அழைப்பது மரபு. “அமுதுமுண்க வடிகள் ஈங்கென”1 எனக் கண்ணகியார் கூறுமாறு காண்க. துறவு மேற்கொள்வாரை விலக்குதல் அறமன்றாதலின், அமிர்த மதி இவ்வண்ணம் கூறினாள் என வுணர்க. யசோதரன் சந்திரமதியுடன் விருந்துண்ண வருதல். 151. ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக என்றே தாங்கல னவ்வை தன்னோ டவள்மனை தான மர்ந்தான் தீங்கது குறுகின் தீய நயமுநன் னயம தாமே. உரை:- ஆங்கு - அவ்விடத்தே, அரசன் - அரசனான யசோ தரன், அவள் அகத்துமாட்சி அறிந்தனனேனும் - அமிர்தமதியின் மனமாண்புகளை அறிந்திருந்தானாயினும், வீங்கிய முலையினாய் - பெருத்த முலைகளையுடையாய், நீ வேண்டியது அமைக - நீ விரும்பிய தனையே செய்வாயாக, என்று - என்று சொல்லி, தாங்கலன் - நீட்டியாது சென்று, அவ்வை தன்னோடு - தாயாகிய சந்திரமதியுடன், அவள் மனை - அவ்வமிர்தமதியின் அரண்மனையை யடைந்து, அமர்ந்தான் - உணவுகொள்ள விரும்பியிருந்தான், தீங்கது குறுகின் - கேடுவருமாயின், தீய நயமும் - தீதுபயக்கும் உரையும், நல்நயமதாம் - முழுதும் நலம்பயப்பதாகவே தோன்றும் எ-று. அமிர்தமதி அகத்தே கணவன்பால் வெறுப்பும் செயலில் கொடுமையும் கொண்டிருத்தலை நன்கறிந்திருப்பது தோன்ற, “அவளகத்து மாட்சி யறிந்தனன் அரசனேனும்” என்றார். “இரசநீர் அமிர்து கைக்கொண்டருளுதற் கிசைதல் செய்வாய்” (150) என்று அமிர்தமதி வேண்டிக்கொண்டதற்கு அவன் இசைந்ததனை, “நீ வேண்டிய தமைக” என்றான் என்றார். தங்கலன் என்பது எதுகை யின்பங் குறித்துத் தாங்கலனென நீண்டது. அவ்வை - தாய். உணவு கோடற்கு இசைந்தவன் - தன் தாய் மனையை யடைந்து அவளையும் உடனழைத்துக்கொண்டு போந்து இனிதிருந்தான் என்பார், “அமர்ந்தான்” என்றும், அக்காலை, அவன் அமிர்தமதி கருதிக் கொண்டிருக்கும் தீமையை நினையாது அவள் வழங்கிய உரையினைக் கேட்டு உண்மை யென்றே கருதி யொழிந்தானென்றும், அவ்வுரை கேட்டற்கு இனியவாயிருந்தனவே யன்றி, உண்மையன்பாகிய உள்ளீடு இல்லாதன வென்றற்குத் “தீயநயம்” என்றும் கூறினார். சொல் தன் இனிமைத் தோற்றத் தால் கேட்டார் மனத்தே சொல்வார்பால் அன்பும் உண்மை யுறவும் கொள்ளச் செய்தலின் “நயம்” எனப்பட்டது. கேடெய்தும் ஊழுடை யார்க்கு, அக்கேட்டினைப் பயக்கும் சொல்லும் செய்கையும் நலம் பயப்பன வாய்த்தோன்றி அவரை அவற்றையே விரும்பப்பண்ணுதல் பற்றி, “தீங்கது குறுகின் தீயநயமும் நன்னயமதாமே” என்றார். அமிர்தமதி உணவில் நஞ்சு கலந்தளித்தல் 152. நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக எஞ்சலி லட்டு கங்கள் இருவரு மருந்து கென்றே வஞ்சனை வலித்து* மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் நஞ்சொடு படாத தானு மகனொடு † நயந்து கொண்டாள். உரை:- நஞ்சொடு கலந்த - விடம் கலந்துள்ள, தேனின் நறுஞ் சுவை - தேனைக் கலந்ததனாலுண்டாகிய நறியசுவை, பெரியவாக மிகுதியாகவுடைய, எஞ்சல் இல் அட்டுகங்கள் - வேறு சுவையிலும் குறைபாடில்லாத பண்ணியங்களை, இருவிரும் அருந்துக என்று - இருவீரும் உண்பீர்களாக என்று, வஞ்சனை வலித்து - வஞ்சனையான சொற்களால் வற்புறுத்தி, மாமிதன்னுடன் வரனுக்கு - மாமியாகிய சந்திரமதியுடன் கணவனாகிய யசோதரனுக்கும், ஈந்தாள் - அளித்து உண்பித்தாள், தான் மகனொடு - தான் தன்மகன் தன்னோடு உடனிருக்க இருந்து, நஞ்சொடுபடாத - நஞ்சு கலவாத பண்ணியங்கnள, நயந்து கொண்டாள் - விரும்பியுண்டாள் எ-று. நஞ்சினைத் தேனிற் கலந்து அதனைப் பண்ணிகாரத்தோடு சேர்த்து, நஞ்சின் சுவை சிறிதும் தெரியாவகையிற் சமைத்தமை தோன்ற, “நஞ்சொடு கலந்த தேனின் நறுஞ்சுவை பெரியவாக” என்றும், இந்நஞ்சு கலப்பால் உண்டாகிய குறைபாடொழிய, வேறு வகையால் எவ்வகைச் சுவைத்திறத்தும் குறைவின்மை விளங்க, “எஞ்சலில் அட்டுகங்கள்” என்றும் கூறினார். அட்டுகம் - இனிப்புப் பண்டம்; பண்ணிகாரம் என்றலும் இதுவே. சுவைமிகுதியால் படைத்த அட்டுகங்கள் தெவிட்டியபோதும், பல்வகை நயவுரைகளால் இருவரையும் வற்புறுத்தி உண்பித்தமை தோன்ற, “வஞ்சனை வலித்து” என்றும், நஞ்சுடைய வற்றையே நாடி யுண்பித்தமையின், “வஞ்சனை” யென் றும், தன் மகனைக் கோறல் கருத்தன்மையின், அவன், தன்னொடு இருந்து நஞ்சிலாதவற்றை யுண்ணுமாறு செய்த மையின், “நஞ்சொடு படாத தானும் மகனொடு நயந்து கொண்டாள்” என்றும் கூறினார். இனி, லட்டுகம் என்றே கொள்ளினுமாம். சந்திரமதி தன் மகனோடிருந்து உண்பது குறித்துத் தான் தன் மகனொடு இருந்து உண்பது காட்டுவாளாய், அமிர்தமதி தன் கருத்தை முடித்துக் கொள்ளும் திறம் குறிக்கற்பாற்று. நஞ்சில்லாத வற்றை யுண்டலில் வெறுப்புப் பிறவாமையின் “நயந்து கொண்டாள்” என வுணர்க. யசோதரனும் சந்திரமதியும் நஞ்சுண்டதனால் இறந்து விலங்குகதியுட் பிறத்தல் 153. நஞ்சது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தங்கண் புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றித் துஞ்சினர் துயரத் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. உரை:- நஞ்சு பரந்த போழ்தின் - விடமானது உடற்குள் பரவிய காலத்தில், நடுங்கினர் மயங்கிவீழ்ந்தார் - உடல் நடுங்கி அறிவு கலங்கித் தளர்ந்து நிலத்தில் வீழ்ந்து, மரணம் அஞ்சினர் - தம் முயிர்க்குக் கேடுவருவதுணர்ந்து அஞ்சினாராக, சிந்தை யடைந்தது முதல் - பிறந்து நன்று தீது காணும் சிந்தனையுண்டாகிய நாள் முதலாக, தங்கண் புஞ்சிய தீயவினைகள் - தம்மிடத்தே மிக்குற்ற தீவினைகள், புகுந்தன - தம்பயனாகிய துன்பத்தைச் செய்யலுற்றன, பொறிகள் பொன்றித் துஞ்சினர் - பொறியைந்தும் புலங்கலங்கித் தடுமாறிக் கெட்டு உயிர் துறந்தனர். துயரம் துஞ்சா விலங்கிடை - துன்பம் குறைதலில்லாத விலங்குகதியுட் பிறப்பாராயினார் எ-று. நஞ்சு உடலிற் பரவியதும் குருதியின் தூய்மையைக் கெடுத்து அதனைக் குளிர்வித்தலின், நடுக்கமும் மயக்கமும் அடைய வெய்தியது தோன்ற, “நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்” என்றார். நலந்தீங்கினைப் பகுத் துணரும் நல்லுணர்வு பிறந்தபின்பே வினைகள் தொடர்தலின், “சிந்தை யடைந்தது முதல தங்கண் புஞ்சிய வினைகள்” என்றார். உயிர் நீங்குங்காலத்து அதற்கு முன்னாகப் பொறிகள் புலனுணர்வு கெடுதலின், “பொறிகள் பொன்றித் துஞ்சினர்” என்றார். நால்வகைக்கதியும் துன்பத்துக் கிடமாயினும், மக்கட்கதியை நோக்க, விலங்குகதி துன்பம் பெரிதுடைத்தாதலின், “துயரந்துஞ்சா விலங்கிடைத் துன்னினார்” என்றார்; பிறாண்டும், யசோதரனும் சந்திரமதியும் விலங்குகதியுள் துன்புற்றது கூறுவார். “ஒல்வதற்கரு மாதுய ருற்றனர்” (170) என்று ஒதுதல் காண்க. அமிர்தமதியை யிகழ்ந்து உழையர் தம்முட் கூறிக்கொள்ளல் 154. எண்களுக் கிசைவி லாத இறைவியா மிவள்தன் செய்கை கண்களுக் கிசைவி லாத கடையனைக் கருதி நெஞ்சின் மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். உரை:- இறைவியாம் இவள் தன் செய்கை - அரசியாகிய இவ்வமிர்தமதியின் நினைவும், சொல்லும், செய்கையும், எண்களுக்கு இசைவு இலாத - எண்ணுதற்குச் சிறிதும் பொருந்தாதவையாகும், கண்களுக்கு இசைவிலாத கடையனை - பார்த்தற்காகாத கீழ்மகனான அட்டபங்கனை, நெஞ்சின் கருதி - கள்ளமனத்தால் காதலுற்று, மண்களுக்கு இறைவனாய வரனுக்கு - மண்ணுலகமக்கட்கு வேந் தனும் தனக்குக் கணவனுமாகிய யசோதரனுக்கு, மரணம் செய்தாள் - உயிர்க் கேட்டினைச் செய்தாள், பெண்களில் கோதனாள் - பெண் பிறப்பின் குற்றமெல்லாம் திரண்டு ஓர் உருக்கொண்டாற் போல் பவளான இவ்வமிர்தமதி, பெரிய பாவத்தள் - பெரிய பாவியாவாள், என்றார் - என்று உழையர் தம்முட் கூறிக் கொள்வாராயினர் எ-று. செய்கை யெனப் பொதுப்படக் கூறினமையின், நினைவும், சொல்லும் கொள்ளப்பட்டன. எண்ணுந்திறம் பலவாதலின், “எண்களுக் கிசைவிலாத” என்றார். பார்த்தற்கு மனம்பொறாமையின், கண்மே லேற்றிக் கூறினர். தனக்கு அக்கடையன்பா லுண்டாகிய காதலும், கள்ளக் கூட்டமும் புறத்தே தோன்றாவகையிற் கரந்தொழுகுதல் பற்றி, “நெஞ்சின் கருதி” என இகழ்ந்தனர். யசோதரன் மரணத்தால் இவ்வமிர்தமதி கணவனை யிழந்ததே யன்றி நாட்டு மக்கள் வேந்தனை யிழந்தனர் என்றற்கு, “மண்களுக் கிறைவனாயவரனுக்கு மரணம் செய்தாள்” என்பாராயினர். தான் கருதிய தீயகாமவின்பம் குறித்துத் தன் கணவனைக் கொன்று நாட்டு மக்கட்கும் அரசனில்லாப் பெருந்துன்பத்தைச் செய்தமை கண்டு மிக்க அருவருப்புற்று இகழ்ந்து பழிக்கின்றார்களாதலின், “கோதனாள்” என்றும், “பெரிய பாவத்தள்” என்றும் பழிப்பாராயினர். கோது-குற்றம். பெரியோர் சிலர் தம்முட் கூறிக் கொள்ளுதல் 155. தீதகல் கடவு ளாகச் செய்ததோர் படிமை யின்கண் காதர முலகி தன்கண் கருதிய முடித்தல் கண்டுஞ் சேதன வடிவு தேவிக் கெறிந்தனன் தெரிவொன் றில்லான் ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். உரை:- தீது அகல் கடவுளாக - குற்றத்தைக்கெடுக்கும் கடவுளாகக் காண்போர் கருதுமாறு, செய்தது ஓர் படிமையின் கண் - செய்யப் பட்டதாகிய ஒரு பதுமையினிடத்தே, காதரம் - உண்டாகிய வெறுப்பும், உலகு இதன்கண் - இவ்வுலகத்தில், கருதிய முடித்தல் கண்டும் - ஒருவர்க்குத் தாம் கருதிய கருமங்களை முடித்துந் தருவதைக் கண்டு வைத்தும், தேவிக்கு - தேவிவடிவாகச் செய்யப் பட்ட அசோதன மாகிய பாவைக்கு, சேதனவடிவு எறிந்தனன் - சேதனமாகிய கோழியின் வடிவம்செய்து அதனைப் பலியிட்டான், தெரிவு ஒன்றில்லான் - ஆராய்ச்சியில்லாத இவ்வேந்தன், ஆதலால் - ஆகையினால்தான், இன்று - இப்போது, வந்தது - இக்கேடு எய்துவதாயிற்று, என்று சிலர்கள் எல்லாம் அழுங்கினர் - என்று சொல்லிச் சில அறிந்தோர் வருந் தினார்கள் எ-று. தம்மை வருத்தும் துன்பம் அகற்று மென்ற கருத்தால் மக்கள் தெய்வ வடிவு சமைத்து வழிபடுகின்றன ரென்றற்கு, “தீதகல் கட வுளாகச் செய்ததோர் படிமை” என்றும், அதன்பால் ஒருவர் செய்யும் குற்றமும் குணமாய் அவர் கருதிய கருமத்தை முடித்துத் தருவது உண்மையின், “காதரம் கருதிய முடித்தல் கண்டும் ” என்றும் கூறினர். மாக்கோழியைக் கொன்ற குற்றமே இன்று யசோதரற்குண்டாய கேட்டிற்குக் காரணம் என்று நினைந்து கூறுதலின், அக்கோழிப் பலி கொடாதிருப்பின் கேடொன்றும் நிகழ்ந்திராதென்ற கருத்தால், “சேதனவடிவு தேவிக் கெறிந்தனன்”என்றும், தேவிவடிவும் அசேதன மாதலைத் தெரிந்தில னென்றற்குத் “தெரிவொன்றில்லான்” என்றும் கூறினர். அசேதனப் பொருளாயினும், சேதனமாகக் கருதிப் பலியிட் டமையின், “சேதனவடிவு” என்றார் எனவறிக. இவ்வாராய்ச்சியினைச் செய்வோர் சிலராதலினாலும், அவரனைவரும் ஒப்பக் கருதுதலாலும், “சிலர்களெல்லாம்” என்றார். கள் - விகுதிமேல் விகுதி. நகரமாந்தர் தம்முட் கூறிக் கொள்ளுதல் 156. அறப்பொருள் நுகர்தல் செல்லா னருந்தவர்க் கெளிய னல்லன் மறப்பொருள் மயங்கி வையத் தரசியல் மகிழ்ந்து சென்றான் இறப்பவு மிளையர் போகத் திவறின னிறுதி யின்கண் சிறப்புடை மரண மில்லைச் செல்கதி யென்கொ லென்றார். உரை:- அறப்பொருள் நுகர்தல் செல்லான் - இவ்வேந்தன் அறத்தால் பொருளீட்டி நுகர்வன நுகர்வதை ஒழித்தான், அருந்தவர்க்கு எளியன் அல்லன் - அரிய தவத்தையுடைய பெரியோரைப் பார்க்க விரும்பிற்றிலன், மறப்பொருள் மயங்கி - மறத்தால் பொருள் செய்து அறிவுமயங்கி. வையத்து அரசு இயல் மகிழ்ந்து - மண்ணுலகத்தே தன்னர சியலில் வரும் போகத்தால் மதங்கொண்டு, சென்றான் - ஒழுகியதுடன், இளையர் போகத்து இறப்பவும் இவறினன் - மகளிர் போகத்தில் அளவுகடந்து பற்றுள்ளம் கொண்டான், இறுதியின்கண் - முடிவிலும், சிறப்புடை மரணம் இல்லை - சான்றோர் புகழும் சிறப்புடைய சாவும் பெறானாயினன், செல்கதி என்கொல் - இவன் சென்ற கதிதான் யாதோ, என்றனர் - என்று தம்முட் பேசிக் கொள்வராயினர் - எறு. “சிறப்புடை மரபிற் பொருளும், இன்பமும் அறத்து வழிப்படூ உம்”1 என்பவாகலின், அறமே பொருளீட்டற்கு நெறியாதல் பெற்றாம். அறத்தாற் பொருளீட்டக் கருதாமையின், “அறப்பொருள் நுகர்தல் செல்லான்” என்றார். மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. அரிய தவத்தை யுடையவர், காட்சிக் கெளியனாய வழிப்போந்து அல்லன கடிந்து அறமாவன வுணர்த்தி நன்னெறிக்கண் உய்ப்பராதலின், அவரை ஏலாமை இவற்குக் கேடாயிற்று. மறவினை புரிந்து மக்கள் மனம் வருந்தக்கண்டு அருளாது அவர் பொருளை வவ்விப் பெறும் இன்பமே இன்பமாகக் கருதி யொழுகினமையின், “மறப்பொருள் மயங்கி” என்றும், இவ்வாறு நடாத்தும் அரசியற் போகத்தால் செருக்கி, தனக்கு உறுதி நாடாது கெட்டா னென்பார், “அரசியல் மகிழ்ந்து” என்றும், கழிகாமம் “அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது”1 என்பதனை யுணரானாயினா னென்றற்கு, “இறப்பவும் இளையர் போகத்து இவறினன்” என்றும், போர்ப்புறத்தே பகைவர் வாள்வாய்ப் படாது நஞ்சூட்டப்பட்டு இறந்தமையின், “சிறப்புடை மரண மில்லை” யென்றும், இவ்வியல்பினையுடையோன் இறந்தால் விண்பு கான் என்று நூன்முகத்தால் அறிந்திருத்தலின், “செல்கதி யென்கொல்” என்றும் கூறி வருந்தினர்; “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. அமிர்தமதி மிக்க துயருற்றாள்போல நடித்தொழுகுதல் 157. இனையன வுழையர் தாமும் எழில்நக ரத்து ளாரும் நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாடக் கனைகழ லரசன் தேவி கருதிய வதுமு டித்தாள் மனநனி வலிதின் மாழ்கி மைந்தனை வருக வென்றாள். உரை:- உழையர்தாமும் - அரசியற் சுற்றத்தாரும், எழில் நகரத்துள்ளாரும் - அழகிய நகரத்துள்ள சான்றோர்களும், இனையன நினைவன - இவைபோல்வன பலவற்றை, நெஞ்சில் நினைந்து - மனத்தில் எண்ணி, நெகிழ்ந்தனர் புலம்பி வாட - உருகிப் புலம்பி வாட்ட மெய்தினாராக, கனைகழல் அரசன் தேவி - ஒலிக்கின்ற வீரகண்டையணிந்த வேந்தனுக்கு மனைவியாகிய அமிர்தமதி, கருதிய அது முடித்தாள் - தான் கருதிய கருத்தினை இனிது நிறைவேற்றிக் கொண்டாளாயினும், வலிதின் - வலிய, மனம் நனிமாழ்கி - மனம் மிக வருந்தினாள் போல் நடித்து, மைந்தனை வருக என்றாள் - மகனான யசோமதியை வருமாறு பணித்தாள் எ-று. உழையர் - அரண்மனைக்கண் இருந்து, அரசப் பெருமக்கட்குக் குற்றேவல் புரியும் பணியாளர்; அரசர்க்கு ஆவன அறிந்து அந்தப்புரம் போந்து அறிவித்தொழுகும் அரசியற் சுற்றத்தார் முதலாயினார். இவர்கள் அரசர்களின் நெஞ்சறிந்தொழுகுபவராதலின், முதற்கண் கூறினார். நகரத்துளாரென்ப பொதுப்படக் கூறினாரேனும் சிறப்புடைய சான்றோரே அரசனால் மதிக்கப் பெறுதலின், ஈண்டு அவரே கொள்ளப்பட்டனர். யசோதரனைக் “கனைகழ லரசன்” என்றார், அக்கழல்யாப்பு அவற்குச் சிறப்புடை மரணம் தாராது ஒழிந்தமை வற்புறுத்தற்கு. அது - கருத்து; அஃதாவது, அரசனைக் கொன்று தான் விரும்பிய அட்ட பங்கனொடு கள்ளக்காம வின்பம் துய்த்தல். யசோதரனாகிய கணவனும், மாமியாகிய சந்திரமதியும் இறப்பக்கண்டும் மனம் வருத்தமுறா மையின், உலகோர் இகழ்க்சி யெண்ணி, ஆற்றாது புலம்புவாள் போல் வலிய நடிக்கின்றா ளென்றற்கு, “மனம் நனி வலிதின் மாழ்கி” யென்றார். மகனை அரசனாகுக எனப் பணித்தல் 158. இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய் புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே மனநனி மகிழ்ந்தி ருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். உரை:- நீ தனிமையாகி இனையல் - மகனே, நீ தனித் தமையால் வருந்துதல் ஒழிக, இறைவனிற் பிரிந்தது - அரசனை விட்டு யாம் பிரிந்தது, என்கண் வினையினால் விளைவு - என்னிடத் துண்டாகிய தீவினையின் பயனாகும், மனத்து வெந்நோய் விடுத்திடு - நின் மனத்தில் உண்டாகிய மிக்க வருத்தத்தை விடுவாயாக, புனை முடிகவித்து - பொன்னும் மணியும் கொண்டு புனைந்த முடியினைச் சூடிக்கொண்டு, பூமி பொதுக்கடிந்து - மண்ணுலகு நினக்கே யுரித்தா மாறு, ஆள்க - ஆட்சி புரிவாயாக, என்று - என்று சொல்லி விடுத்து, மறைபதிக்கு அமுதமாவாள் - இறந்த வேந்தனான யசோதரனுக்கு அமுதம் போல் இன்பந் தந்தவளான அமிர்தமதி, மனம் நனி மகிழ்ந்திருந்தாள் - தன் மனத்தே மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வரலானாள் எ-று. தந்தை இறந்ததற்குரிய காரணத்தை யறியாது, பிரிவு நினைந்து தாய்முன் போந்த மகனுக்குத் தேறுதல் கூறலுற்றவள், “நீ தனியையாகி இனையல்” என்றாள். நீ இவ்விளமைப் போதில் நின் தந்தையை இழந்து தனித்தற்கு ஏதுவாகிய வினை என்பால் உண்டாகியது எனத் தான் செய்த தீவினையை ஒளியா துரைப்பாள், “இறைவனிற் பிரிந்தது என்கண் வினையினால் விளைவு கண்டாய்” என்றாள், அதனை யுண்மை யுரையாகக் கொள்ளாது* துன்ப மிகுதியால் ஆற்றாதுரைக் கும் சொல்லென யசோமதியும் பிறரும் கொள்வரென அவள் நன்கறி வாளாதலின். கண்டாய் - அசைநிலை. வலியார் மெலியார் அனைவர்க்கும் நிலம் பொது என்பதை விலக்கி, வலியுடை யார்க்கே யுரித்தெனத் தனக்கே புரித்தாமாறு ஆட்சி புரிதல் வேண்டு மென்றற்கு, பூமி பொதுக்கடிந் தாள்க” என்றாள். மறைபதி, யசோதரன்; கள்ளக் காதலான அட்டபங்கனுக்கும் இயையும். யசோமதி அரசாளுதல் 159. வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி ஏரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்தி சீரணி யடிகள் செல்வத் திருவற மருளல் செல்லான் ஓரணி யாக மாத ருவகையங் கடலு ளாழ்ந்தான். உரை:- வார் அணி முரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த முரசு முழங்க, மணிபுனை மகுடம்சூடி - மணிகளால் புனையப் பட்ட முடியணிந்து, ஏர் அணி ஆரமார்பன் இசோமதி - அழகிய பூணார மணிந்த மார்பினை யுடையனாகிய யசோமதி, இறைமை எய்தி - அரசு முறை எய்தியும், சீரணி அடிகள் - சிறப்புப் பொருந்திய அடிகளாகிய அருகபர மேட்டி யுரைத்தருளிய, செல்வத் திருவறம் - துறக்க வின்பமும் வீடுபேறும் தரவல்லஅறத்தை, அருளல் செல்லான் - மேற்கொண்டு உயிர்க்கு அருளறத்தைச் செய்யாமல், மாதர் அணியாக - மகளிர் கூட்டமே தனக்கு அணியாகக் கொண்டு, உவகையங்கடலுள் ஆழ்ந்தான் - காமக்களிப்பாகிய கடற்குள் மூழ்கிக் கரையேற மாட்டாது அதனுள் அழுந்தினான் எ-று. மணிகுயிற்றிச் செய்த செம்பொன் முடியாதலின், “மணிபுனை மகுடம்” என்றார். ஏர் - அழகு. அரசெய்திய பயன், அடிகள் உரைத்த அருளறம் மேற்கொண் டொழுகுதலேயாக; யசோமதி அதனைச் செய்யாமையின், “திருவறம் அருளல் செல்லான்” என்றார். மெய்ம்மை சேர்ந்த புகழாதல் தோன்ற, “சீரணி அடிகள்” என்றும், அவர் அருளிய அறம், மறுமையில் துறக்கவின்பமும் அதன் முடிவில் வீடுபேறும் பயக்கும் சிறப்புடைத் தென்பார், “செல்வத்திருவறம்” என்றும் கூறினார். “சீரணி யடிகள்” என்று சிறப்பித்த வதனால், திருவறம் பூண்டார் இம்மையில் புகழ் பெறுதலும் உரைத்தவாறாம். அறத்தைச் “செய்த” லென்னாது, “அருளல்” என்றார், செய்கை உயிர்கட்குச் செய்யும் அருளே என்றற்கு. உயிர்க்கு அருள் செய்தலை அணியாகக் கொள்ளாது, மகளிர் கூட்டமே அணியாகக் கருதினா னென்பார், “மாதர் அணியாக” என்றார். ஓர் - அசை. இனி, ஓரணியாக என்றே கொண்டு, ஒருதலையாக என்றுமாம். மாதர் தரும் காமவின்பத்திற்கு அடிமையாகி, அதனினின்றும் தன்னை மீட்டுக் கொள்ளும் மதுகை யின்றி மெலிந்தான் என்பார், “உவகை யங்கடலுள் ஆழ்ந்தான்” என்றார். அபயருசி மாரிதத்தனுக்குக் கூறல் 160. இனியன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் இனையன துணைவ ராகு மினையரின் விளையு மின்பம் இனையது தெளிவி லாதார் இருநில வரசு செய்கை வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். உரை:- வனைமலர் மகுட மாரிதத்தனே - தொடுக்கப்பட்ட மலர்மாலையும் மணிமுடியு முடைய மாரிதத்தனே, ஆயின் - ஆராயு மிடத்து, வினையினாகும் இயல்பு - செய்யும் வினைகளினா லுண்டாகும் பயன், இனையன - இத்தன்மையனவாகும், இது தெரிதி - இதனை யறிவாயாக, துணைவராகும் இளையரின் விளையும் இன்பம் - மனைவி யென்றும் தாயென்றும் துணை செய்பவராகிய மகளிரால் உண்டாகும் இன்பமும், இனையன - இக்கூறிய இயல்பினவாகும், தெளிவிலாதார் - தெளிந்த அறிவில்லா தார், அரசு செய்கை - அரசு புரியும் திறமும், இனையது - இத்தன்மைத்தாகும், இதுமதி - இதனை மனத்தே எண்ணுவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. ஒருவர் செய்யும் வினையியல்பு, அது விளைக்கும் பயனால் விளங்குதலின், “வினையினாகும் இயல்பு” என்றும், இதனைத் தெரிந்து உணராதவழி வினைகள் பெருகித் துன்பம் பயப்பித்தலின், “இது தெரிதி” என்றும், மனைவியாகிய அமிர்தமதியால் சிறப்பில் இறப்பும், தாயாகிய சந்திரமதியால் கொலைவினையும் எய்தக் காட்டியதனால், “துணைவராகும் இளையரின் விளையும் இன்பம்” என்றும், யசோமதி தெளிந்த அறிவிலனாதலின், மகளிராற் பெறும் காமவின்பமே பெரிதெனக் கருதி மயங்குதலைக் காட்டுதலின், “தெளிவிலாதார் இரு நிலவரசு செய்கை இனையது” என்றும் கூறினான். “மதியிது” என்று மாரிதத்தற்குக் கூறியது, அவனை நன்னெறிக்கட் செலுத்தும் குறிப்பின னாதலை வற்புறுத்திற்று. இரண்டாவது சருக்கம் முடிந்தது. மூன்றாவது சருக்கம் இப்பகுதிக்கண், அமிர்தமதியால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட யசோதரனும், சந்திரமதியும் விந்தமலைச்சாரலில் மயிலாகியும், உஞ்சயினி நகர்ப்புறத்துச் சேரியில் நாயாகியும் முறையே பிறந்து, அரசனாகிய யசோமதிபால் உபாயனமாக வந்து சேர்ந்து வளர்வதும், ஒருநாள் மயில் அட்டபங்கனைக் கண்டு அவன் கண்களைக் குத்தி விட்டுப் போதலும், அமிர்தமதி அதனை ஒரு கல்லாலெறிந்து வீழ்த்தலும்; வீழ்ந்தமயிலை நாய் தன் வாயாற் கவ்விச் செல்வுழி அம்மயில் இறப்பதும், அரசன் ஆராயாது நாயைக் கொல்வதும்; மயில் பின் முள்ளம் பன்றியாய்ப் பிறந்துழலுங்கால், நாய் ஒரு கருநாகமாய்த் தோன்றி வரக்கண்டு அதனைக் கொன்றேகலும், அப்பன்றியை ஒரு புலி கொன்றதும், பன்றி பின்பு ஒரு மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறந்து அரசனால் கொல்லப் படுவதும், முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்த் தோன்றி அப்பெண்ணாட்டினைக் கூடுவதும், பின்பு அதுவே அவ்யாட்டின் கருவில் தங்கிப் பிறப்பதும், தாயாடு கொல்லப் படுவதும், தகர்க்குட்டி அரண்மனையில் வளர்வதும், தாயாடு, பின்பு, கலிங்கநாட்டில் எருமையாய்ப் பிறப்பதும், தகர்க்குட்டி கொலையுண்பதும், முடிவில் இரண்டும் நகர மருங்கில் உள்ள பறைச் சேரியில் கோழிகளாய்ப் பிறந்திருப்பதும், அரசன் அவ்விரண்டையும் கண்டு விருப்பமுற்றுத் தன் அரண்மனைக்குக் கொண்டு சென்று, சண்டகன்மியிடம் தந்து வளர்க்க எனப் பணிப் பதும், அவனால் கோழி யிரண்டும் இனிது வளர்ந்து வருவதும் பிறவும் கூறப்படுகின்றன. முன்னுரை 161.மற்ற மன்னன் மதிமதி யென்றிவர் நற்ற வத்திறை நல்லறம் புல்லலாம் பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் புற்ற தாகு முரைக்குறு கின்றதே. உரை:- மன்னன் - அரசனாகிய யசோதரன், மதிமதி என்ற இவர் - சந்திரமதி என்ற இவ்விருவரும், நல் தவத்து இறை - நல்ல தவத்துக்கு முதல்வனாகிய அருகபரமேட்டியுரைத்தருளிய, நல் அறம் புல்லலாம் பற்றினோடு - நல்ல அறத்தைச் சேரும் கருத்துடன், முடிந்தனர் - இறந்தனராயினும், பல்பிறப்பு உற்றது - அவர்கள் பல பிறப்புக்களை எய்திய திறம், உரைக்கு உறுகின்றது- ஈண்டுச் சொல்லுதற்குப் பொருந்தியிருக்கின்றதாம் எ-று. மற்று - அ - அசைநிலை. என்ற என்பதன் ஈற்றகரம் விகாரத்தால் கெட்டது. பிறவியை யறக் கெடுக்கும் வீடுபேறு நல்கும் தவமாதலின், “நற்றவம்” என்றும், அதனைக் கடைபோக முயன்று முதன்மை யெய்தினானாதலின், “இறை” யென்றும், தவப்பயனாய்ப் பெற்று மன்னுயிர் அறிந்து ஆற்றி உய்யுமா றுணர்த்திய நன்மை யுடைமையின், அவனருளிய அருளறத்தை “நல்லறம்” என்றும் கூறினார். இறக்குங் காலத்தே அருகனுரைத் தருளிய அறநெறியைக் கைப்பற்ற விழைந்த விழைவின ராயினும், அதற்கேற்ற பிறவி பெறாது விலங்குகதியுட் பிறந்து அலமருதலைக் கூறலுற்றமையின், “பல்பிறப்பு உற்றது உரைக்குறுகின்றது” என்றார். எனவே, பலவாகிய தீவினைப் பயனை முன்னர் நுகர்ந்து முடிவில் நல்வினைப் பயனை நுகர்ப வென்பது பெற்றாம். இந்நல் வினைப் பயன் இவ்விருவர்க்கும் கோழிப் பிறப்பிற் கை கூடுந்திறம் நான்கு ஐந்தாஞ் சருக்கங்களிற் கூறப்படுகின்றது. ஆயினும் என்பது எஞ்சி நின்றது. ஆகும் என்பது பிரித்துக் கூட்டப்பட்டது. உரைக்கு முதனிலைத் தொழிற்பெயர்; ஒருசொல் விழுக்காடாய்க் கோடலு மொன்று. யசோதரன் மயிலாய்ப் பிறத்தல் 162.விந்த நாம விலங்கலின் மன்னவன் வந்தோர் மாமயி லின்வயிற் றண்டமாய் நந்து நாளிடை நாயொடு கண்டகன் வந்தொர் வாளியி னானது வாட்டினான். உரை:- மன்னவன் - வேந்தனான யசோதரன், விந்தநாம விலங்கலில் - விந்த மென்ற பெயரை யுடைய மலை யிடத்தே வாழும், ஓர் மாமயிலின் வயிற்று வந்து - ஓர் அழகிய மயிலின் கருவில் வந்து, அண்டமாய் நந்தும் நாள் இடை - முட்டையாய்க் கருமுற்றி வரும் நாளில், கண்டகன் - வேட்டுவனொருவன், நாயொடு வந்து - வேட்டை நாயுடன் போந்து, ஓர்வாளியினான் - ஓர் அம்பினால், அது வாட்டினான் - அம்மயிலைக் கொன்று வீழ்த்தினான் எ-று. விலங்கல் - மலை. விந்த நாம விலங்கல் - விந்தமலை. மன்னவன், யசோதரனாகிய உயிர். நந்துதல் - பெருகுதல்; ஈண்டுக் கரு முற்றுதல், கருவில் முட்டையாய்த் தோன்றி மண்ணில் பிறத்தற் குரிய காலம் வருமுன்னே தாய் மயில் கொல்லப்பட்ட தென்பார், “நந்து நாளிடை” என்றும், “வாளியினானது வாட்டினா” னென்றும் கூறினார். கருவுற்ற மயிலென்பது கருதாது நாயால் வளைத்து வாளியினால் வாட்டின வேட்டுவனது மனக்கொடுமையைக் குறிப்பால் உணர்த்துவார், “கண்டகன்” என்றார். முட்டையை வேட்டுவன் வளர்த்தல் 163.அம்பின் வாயுமி ழண்ட * மெடுத்தவன் வம்பு வாரண முட்டையின் வைத்துடன் கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென நம்பு காமர் புளிஞிகை நல்கினான். உரை:- அம்பின் வாய் உமிழ் அண்டம் - பட்ட மயிலின் வயிற்றில் தைப்புண்டிருந்த அம்பு பட்ட வாய்வழி வெளிப்பட்ட முட்டையை, அவன் எடுத்து - அவ்வேட்டுவன் எடுத்து, நம்பு - தான் விரும்புகின்ற, காமர் புளிஞி கை - அழகிய வேட்டுவிச்சியின் கையில், கொம்பனாய் - கொம்புபோல்பவளே, இது கொண்டு - இம்முட்டையைக் கைக்கொண்டு, வாரண வம்பு முட்டையின் உடன் வைத்து - நம்பால் உள்ள கோழி புதிதாக இட்ட முட்டையோடு வைத்துப் பொறிக்கச் செய்து, வளர்க்க என - வளர்ப்பாயாக என்று சொல்லி, நல்கினான் - கொடுத்தான் எ-று. அம்பு கிழித்த வாய்வழியாக, மயிலின் வயிற்றிலிருந்து முட்டை வெளிப்பட்டமையின், “அம்பின் வாயுமி ழண்டம்” என்றார். வம்பு - புதுமை. ஈன்ற அணுமைக்கண் கோழி முட்டைக்கும் மயின் முட்டைக்கும் வேறுபாடு காணப்படாமையின், “வம்பு வாரண முட்டையின் வைத்து வளர்க்க” என்று வேட்டுவன் கூறினான். வேட்டுவனைப் போலக் கொலைவினை புரியாது வளர்க்குந் தொழிலைச் செய்தல் பற்றி, அவளை, “காமர் புளிஞி” என்றார். சந்திரமதி நாயாய்ப் பிறத்தல் 164.சந்தி ரம்மதி யாகிய தாயவள் வந்து மாநக ரப்புறச் சேரிவாய் முந்து செய்வினை யான்முளை வாளெயிற் றந்த மிக்க சுணங்கம தாயினாள். உரை:- சந்திரமதியாகிய தாயவள் - சந்திரமதியாகிய தாய், முந்து செய்வினையால் - முற்பிறப்பிற்செய்த வினையின் பயனாக, மாநகரப் புறச்சேரிவாய் வந்து - பெரிய நகரமாகிய உஞ்சயினியின் புறநகர்ச் சேரிக்கண் வந்து, முளைவாள் எயிற்று - முளைபோலும் ஒளி பொருந்திய பற்களை யுடைய, அந்தம் மிக்க - அழகு மிக்க, சுணங்கமது ஆயினாள் - நாயாகப் பிறந்தாள் எ-று. சந்திரம்மதி - விகாரம். யசோதரனுக்குத் தாயாதலின், “தாயவள்” என்றார். புறஞ்சேரி - புறச்சேரி யென வந்தது. சண்டமாரிக்கு உயிர்ப் பலி கொடுத்தல் வேண்டுமென யசோதரனைவற்புறுத்திய தீவினையை, “முந்து செய்வினை” யென்றார். அரசமாதேவியா யிருந்து நாய்ப்பிறப் பெடுத்தமையின், “அந்த மிக்க சுணங்கம்” என்றார் போலும். சுணங் கன் - சுணங்கமென நின்றது. மயிலும், நாயும் அரசமாளிகை வருதல் 165.மயிலு ஞாயும் வளர்ந்தபின் மன்னனுக் கியலு பாயன மென்று கொடுத்தனர் வயிரி யாகு மிசோமதி மன்னவன் இயலு மாளிகை யெய்தின வென்பவே. உரை:- மயிலும் ஞாயும் வளர்ந்தபின் - மயிலும் நாயும் தத்தம் இடத்தே அழகுற வளர்ந்தபின், மன்னனுக்கு - வேந்தனாகிய யசோமதிக்கு, இயல் உபாயனம் என்று - கையுறையாக அமையும் பொருள் என்று, கொடுத்தனர் - வேட்டுவனும் நாயை வளர்த்தோரும் கொண்டு வந்து கொடுத்தார்களாக, வயிரியாகும் இசோமதி மன்னவன் - வினைப்பயனால் அவற்றின் பால் பகைமை கொண்ட யசோமதி வேந்தன், இயலும் மாளிகை எய்தின - இருக்கும் மாளிகையை அவை யிரண்டும் வந்தடைந்தன எ-று. காட்டிடத்து வாழும் வேட்டுவனும், புறச்சேரியில் வாழ்ந்த வரும் அரசனாகிய யசோமதியைக் காணப் போந்தவழிக் கையுறையாக இம்மயிலையும் நாயையும் கொணர்ந்து தந்தார் என்பார், ‘இயலுபாயன மென்று கொடுத்தனர்’ என்றார். உபாயனம் - கையுறை. யசோமதி வேந்தனும் உயிர்க்கொலை புரிந்தொழுகினா னென்றற்கு “வயிரியாகும் இசோமதி” யென்றாராதலின், அதற்கு ஏதுவாகிய வினைப் பயன் வருவிக்கப்பட்டது. மகளிர் போகமாகிய காமக்கடலுள் அழுந்திக் கிடக்கின்றானாதலின், அவன் உறையும் அரண்மனையை “இயலு மாளிகை” யெனப்பட்டது. இனி, யசோமதி வேந்தனே நாயை ஆராயாது புடைத்துக் கொல்கின்றமை பற்றி, “வயிரியாகுமி சோமதி” என்றா ரென்றுமாம். என்ப - அசைநிலை. மயில் வளருந் திறம் கூறல் 166. மன்ன னாகிய மாமயின் மாளிகைத் தன்னின் முன்னெழு வார்க்குமுன் றானெழாத் தன்னை யஞ்சினர் தங்களைத் தான்வெருண் டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே. உரை:- மன்னனாகிய மாமயில் - யசோதர வேந்தனாயிருந்த அழகிய மயிலானது, மாளிகை - அரச மாளிகையில், தன்னின் முன் எழுவார்க்கு முன் - தன்னைக் கண்ட மாத்திரையேயெழுந்து நின்று தன்னை வழிபட்ட ஏவலர் எழுமுன், தான் எழா - தான் இப்போது எழுந்திருந்தும், தன்னை யஞ்சினர் தங்களை - முன்பு தன்னைக் கண்டு அஞ்சிய ஏவலரைக் கண்டு, தான் வெருண்டு - தான் அஞ்சியும், இன்ன ஆற்றின் - இம்முறையில், வளர்ந்திடுகின்றது - வளரா நின்றது எ-று. மக்கட் பிறப்பில் யசோதரனாய்த் தோன்றி வேந்தனாய் அரசு புரிந்த காலத்து, தன்னைப் பிறர் கண்டு அஞ்சி வழிபாடாற்ற, இருந்தவன், அப்பிறப்பு மாறி மயிலாய்ப் பிறந்து, வேந்தனாயிருந்த அம்மாளிகை யிடத்தே வளரா நிற்பவும், அச்சிறப்புப் பெறாது, அப்பிறர்க்குத் தான் அஞ்சி வழிபாடாற்றினான் என்பதாம். எனவே, பிறப்பால் வரும் உயர்வு தாழ்வு கெடுவதும், மாறுவதும் எடுத்துக்கூறி, விலங்குகதியின் புன்மையினை யுணர்த்தினாராயிற்று. ஏழா - செய்யா வென்னும் வினையெச்சம், வெருண்டென்னும் எச்சவினை யொடு தொடர்ந்து, வளர்ந்திடுகின்ற தென்ற முற்று வினையொடு முடிந்தது; மயில், எழா, வெருண்டு, வளர்ந்திடுகின்றது என இயையும். வெருளுதல், அஞ்சுதல். மயில் உறங்குந்திறங் கூறல் 167. அஞ்சி லோதியர்* தாமடி தைவரப் பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ டஞ்சி மெல்ல அசைந்தது பூமிமேல். உரை:- அஞ்சில் ஓதியர் - அழகிய சிலவாகிய கூந்தலை யுடைய மகளிர், அடி தைவர - தன் காலடியை மெல்ல வருட, பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் - இலவம் பஞ்சியால் இயன்ற அணை பரப்பிய படுக்கைமேல் கிடந்து, துஞ்சும் மன்னவன் - கண்ணுறங்கும் வேந்தனா யிருந்த, மாமயில் - அழகிய மயிலானது, தோகையொடு - தன் தோகை யின்மேல் தலைவைத்து, அஞ்சி - பிறவுயிர்கட்கு அஞ்சி, பூமிமேல் - தரைமேல், மெல்ல அசைந்தது - மெல்ல உறங்குவதாயிற்று எ-று. தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. இவ்வடி, செந்தொடை, பஞ்சி மெல்லணை யென்று விசேடித்ததனால், இலவம் பஞ்சி கொள்ளப் பட்டது, “இலவம் பஞ்சிற்றுயில்” என்ப. பாவுதல் - பரப்புதல்; மயில் உறங்கு மிடத்துத் தன் தலையைத் தோகைமேல் கிடத்தி உறங்கும் இயல்பிற்றாதலின், “தோகையோடு” என்றும், பூனை முதலிய உயிர்களால் உண்டாகும் ஏதமஞ்சி மெல்லிய உறக்கங்கோடலின், “மெல்ல வசைந்தது” என்றும், பஞ்சி மெல்லணையிற் கிடந்துறங்கிய நிலையின் நீங்கித் தரைமீது உறங்கும் சிறுமை கண்டு இரங்கிக் கூறுதலால், “பூமிமேல்” என்றும் கூறினார். மயில் உணவு கொள்ளுந் திறங் கூறல் 168. சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் தரைய மேகலை யாரி னமர்ந்துணும் அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய் இரைஅ வாவி யிருந்தயில் கின்றதே. உரை:- சுரையபால் சுவை அடிசில் - பசுவினுடைய பால் கலந்த சுவை மிக்க சோற்றினை, பொற்கலத்து - பொற்கலத்தில் ஏந்திக் கொண்டு, அரைய மேகலையாரின் - இடையில் மேகலை யணிந்த உரிமை மகளிர் வேண்டி யுண்பிக்க, அமர்ந்து உணும் - விரும்பி யிருந்து உண்ணும், அரையன் - வேந்தனாயிருந்த உயிர், மாமயிலாய் - பெரிய மயிற் பிறப்புற்று, புறம் - வெளியே யமைந்த, பள்ளிவாய் - கூட்டிடத்தே, இரை அவாவி - தனக்கு இடப்படும் இரையை நினைந்து, இருந்து - பசித்திருந்து, அயில்கின்றது - அதனை யிட்டபின் உண்டு வளர்வதாயிற்று எ-று. சுரை, பசு, ஆகுபெயர். சுரையைப் பசுவின் மடியாக்கி, சுரையபால் என்பதனை, “சடைய வள்ளல்”1 என்புழிப்போலக் குறிப்புப் பெயரெச்சத் தொடராகக் கோடலு மொன்று. செல்வமிகுதியும் பசியின்மையும் தோன்ற, “பாலடிசிற்சுவை பொற்கலத்து, அரைய மேகலையாரின் அமர்ந்துணும் அரையன்” என்றார். பொற்கலத்து அடிசி லேந்திய மகளிர் தம் இன்சொல்லாலும் மேகலையாலும் பசியின்மையின் வேண்டானாகிய வேந்தனை விரும்பி யுண்பிக்கும் நயம் விளங்க, “அரைய மேகலையாரின் அமர்ந்து உணும்” என்றார்; மயிலாகியது மன்னனுயிரன்றி மன்னனன்மையின், “அரையன் மயிலாய் அயில்கின்றது” என அஃறிணை முடிவு தந்தார். பள்ளி, மயில், புறா முதலியவற்றை விட்டுவளர்க்கும் சிறையகம்; கூடுமாம். மயிலின் பசியறிந்து உணவு தருவாரின்மையினாலும், தான் பள்ளியிற் சிறைக்கப் பட்டிருத்தலினாலும், “இரையவாவி யிருந்தயில்கின்றது” என்றார். பிறர் தாமே வலிதின் உண்பிக்க வுண்ணும் வேந்தன், உணவு வேண்டி யிருந்து குறைவாகப் பெற்று உண்கின்றான் என இரங்கிக் கூறியவாறு. சந்திரமதியாகிய நாய் வளருந் திறம் 169. வந்து குப்பையின் மாசன முண்டபின் சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் றந்து ளும்*மக ழங்கணத் தூடுமாய்ச் சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே. உரை:- சந்திரம்மதி நாய் - சந்திரமதியாய் இருந்த நாய், குப்பையின் வந்து - குப்பைகளைக் கொட்டி யிருக்கு மிடத்தே கிடந்து, மாசனம் உண்டபின் - பெரிய மக்கள் தாம் உணவுண்ட பின்னர், சிந்தும் எச்சில்கள் - புறத்தே யெறியும் எச் சிலுணவை, சென்று கவர்ந்து தின்று - அது விழுந்த இடத்திற்கோடிப் பிற நாய்கள் கொள்ளாவகையிற் குரைத்துத் தானே கொண்டு தின்று, அந்த உளும் - அந்தப்புரத்துப் புறக்கடையிலும், அகழ் அங்கணத் தூடுமாய் - ஆழமாகவுள்ள சலதாரை யிடத்தும், தளர்கின்றது - வீழ்ந்து கிடந்து மெலிகின்றது எ-று. சந்திரம்மதி - விகாரம். நாயென அஃறிணையால் விசேடிக்கப் பட்டமையின், “தளர்கின்றது” என்று முடித்தார். குப்பை - அழுக்கின் குவியல்; ஈண்டு அஃது அக்குவியல் இருக்கும் இடத்தின் மேற்று. செல்வ மக்களென்றற்கு “மாசனம்” என்றார். உண்ட எச்சிலைக் குப்பை மேட்டி லிடுபவாதலின், நாயும் அவ்விடத்தே எச்சிலை எதிர்நோக்கி யிருப்பதாயிற் றென்க. “சென்று” எனவே, அஃதிருந்த விடத்தே எச்சில் எறியப் படாமை பெற்றாம். இதுபோல வேறே சில நாய்களும் அங்கிருந்தமையின், அவை முன்னே சென்று எச்சிலுணவைக் கவர்ந் துண்ணாதபடி வெருட்டியோட்டி விட்டுத் தானே தனித்திருந் துண்ணு மென்பார், “சென்று கவர்ந்து தின்று” என்றும், குளிர்ச்சியும் எச்சில் வீழ்தலும் பிறாண்டு மக்கள் இருக்க விடாமையும் நோக்கி, “அந்துளும் அகழ் அங்கணத் தூடுமாய்” இருந்த தென்றும் கூறினார். சிந்து மெச்சில் பசிக்க நிரம்பா மையாலும், இருக்குமிடம் உடலில் நோயை யுண்டு பண்ணலாலும் நலமெய்தாது மெலிகின்ற தென்றற்கு, “தளர்கின்றது” என்றார். வினைத்திறம் பேசல் 170. நல்வ தத்தொட றத்திற நண்ணலார் கொல்வ தற்குள முன்செய் கொடுமையான் ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். உரை:- முன் - முற்பிறப்பில், நல்வதத்தொடு - நல்ல விரதங் களுடன், அறத்திறம் நண்ணலார் - அருளறத்திற்செல்லாராய், கொல் வதற்கு - உயிர்களைக் கொல்வதற்கு - உளம் செய் கொடுமையால் - நினைவு கொண்ட தீவினையால், ஒல்வதற்கு அரும் - சுருங்குதல் இல்லாத, மாதுயர் உற்றனர் - மிக்க துன்பத்தை யடைந் தனர், வினையின் பயன் - வினைகள் பயக்கும் துன்பம், வெல்வதற்கு அரிது - எவராலும் வெல்வதற்கு முடியாதாம் எ-று. வதம் - விரதம்; “மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும்”1 என்புழிப்போல. அறத்திறம், உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் பிறவும். உளம் - ஆகுபெயர். கொடுமை, கொடுமைப் பண்பினையுடைய தீவினை. ஒல்குதல் - சுருங்குதல்; “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்”2 என வருதல் காண்க. அருமை, இரண்டிடத்தும் இன்மை குறித்து நின்றது பல பிறவியினும் பெருகித் தொடர்ந்து துன்புறுத்தலின், “ஒல்வதற் கருமாதுயர்” என்றார். “வெல்வதற்கரிதால் வினையின் பயன்” என்பது வேற்றுப் பொருள் வைப்பு. “எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்”3 என்பதனால், “வெல்வதற் கரிதால் வினையின் பயன்” என்றார். பயனால் வினையா மென்பது சமண்சமயக் கொள்கையாதலின் “வினையின் பயன்” என்று விதந்தோதினார்; “விளைவதனால் வினையாக்கும் என்பார்”4 என்பதன் உரை காண்க. மயில் அட்டபங்கனைக் காண்டல் 171. மற்றொர் நாள்மணி மண்டபத் தின்புடை அற்ற மாவிருந் தட்டபங் கன்றனை முற்று வார்முலை யாண்முயங் குந்திறம் மற்ற மாமயில் வந்தது கண்டதே. உரை:- ஓர் நாள் - ஒரு நாள், மணிமண்டபத்தின் புடை - மணியிழைத்த மண்டபத்தின் பக்கத்தே, அற்றமா இருந்து - மறைவாக இருந்து, வார்முற்று முலையாள் - கச்சு சூழ்ந்த முலையினை யுடைய வளான அமிர்தமதி, அட்டபங்கன் தனை - அட்டபங்க னென்னும் யானைப்பாகனை, முயங்கும் திறம் - புணருஞ்செயலை, மாமயில் - அழகிய யசோதரனாகிய மயில், வந்தது கண்டது - தற்செயலாக வந்து பார்த்தது எ-று. மற்று - வினைமாற்று. மணிகளால் புனையப்பட்ட மண்டப மென்றற்கு, “மணிமண்டபம்” என்றும், அம்மண்டபத்தில் இனி திருந்து இன்ப நுகர்தற்குரியளான அமிர்தமதி, அதனின் நீங்கிக் கள்ளத்தனமாய் ஒரு புல்லிய புறத்திடத்தே இருந்து இழிகாமப் புணர்ச்சி பெற்றாள் என்பார், “மணிமண்டபத்தின் புடை அற்றமா விருந்து” என்றார். கழிகாமப் பித்தேறி ஒழுகுமாறு தோன்ற, “முற்றுவார் முலையாள்” என்றார். “வந்தது கண்டது” எனவே, முயங்குந்திறத்தை முன்னறிந்து காண்டல் வேண்டி வாராது, மயில் தற்செயலாய் வந்தமை பெற்றாம். அரசனாயிருந்து மயிற்பிறப் பெய்தினமையின், “மாமயில்” என்று சிறப்பித்தார்; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க. மயில் அட்டபங்கன் கண்களை யழித்தல் 172. அப்பி றப்பி லமர்ந்ததன் காதலி ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின் தப்பி லன்னது* சாரனொண் கண்களைக் குப்பு றாமிசைக்† குத்தி யழித்ததே.‡ உரை:- அப்பிறப்பில் - தான் அரசனாயிருந்த முற்பிறவியில், அமர்ந்த - தன்னால் அப்போது காதலிக்கப்பட்ட, தன் காதலி ஒப்பில் செய்கை - காதலியாகிய அமிர்தமதியின் ஒவ்வாத செயலை, உணர்ந்தது - யசோதரனாகிய மயில் நினைந்தறிந்தது, உணர்ந்தபின் - அவ்வாறறிந்த பின்பு, அன்னது - முன்னைப் பிறவியறிவு அறிந்த அம்மயில், தப்பு இல் - குறிதவறாமல், மிசை - மேலிடத்தே யிருந்து, குப்புறா - பாய்ந்து, சாரன் ஒண் கண்களை - யானைப்பாகனான அட்டபங்கனுடைய ஒள்ளிய கண்களை, குத்தி அழித்தது - தன் கூரிய அலகினால் குத்தி யழித்து விட்டது எ-று. அமர்தல் - விரும்புதல், காதலி - மனைவி. ஒப்பு - உலகநடை; “ஒத்ததறிவான் உலகறிவான்” 1 என்புழிப்போல. பிறவி வேறுபட்ட தாயினும், முன்னைப் பிறவியில் நிகழ்ந்த தொடர்பு மறவாது நினைவு கூர்ந்ததென்றற்கு, “ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்த பின்” என்றும், அந்நினைவால் எழுந்த பொறாமை யேதுவாகப் பிறந்த வெகுளியை, முன்போல் மனவுணர்வு தோன்றி மாற்றாமையின், “சாரன் ஒண்கண்களைக் குப்புறாமிசைக் குத்தி யழித்தது” என்றும் கூறினார். மேலிருந்து கீழ் நோக்கித் தலை கீழாய்ப் பாய்ந்தமையின், “குப்புறா” என்றார். புண்ணுறுதலின்றி நலமாகவே யிருந்தன வென்றற்குக் கண்கள் “ஒண் கண்கள்” எனப்பட்டன. நலமுறாவகைக் கெடுத்த தென்பார், “அழித்த” தென்றார். அமிர்தமதி அதனைக் கல்லால் எறிதல் 173. முத்த வாள்நகை யாள்முனி வுற்றனள் கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் மத்த கத்தை மடுத்து மறித்தது தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே. உரை:- முத்தவாள் நகையாள் - முத்துப்போல ஒளி பொருந்திய பற்களை யுடையவளான அமிர்தமதி, முனிவு உற்றனள் - சினம் மிகுந்து, கைத்தலத்து ஒருகல் திரள் வீசலும் - கையில் ஒரு திரண்ட கல்லை யெடுத்து அம்மயின்மேல் எறிதலும், மஞ்ஞை மத்தகத்தை மடுத்து - அக்கல்லானது மயிலின் தலையைப் புடைத்து, மறித்தது - மேலும் செல்லாதவாறு மறிக்கவே, மஞ்ஞை - அம்மயில், தத்தி - தத்திச் சிறிது தொலைசென்று, தரைப்பட வீழ்ந்தது - மாட்டாமையால் தரையில் வீழ்ந்து விட்டது எ-று. தன்னெதிரே தன் மனக்கினிய காதலனுடைய ஒள்ளிய கண்களை அம்மயில் குத்தியழித்தது கண்டதும், சினம் மிகவுற்றுத் தன்பற்கள் தோன்ற நெறுநெறுவெனக் கடித்தமை தோன்ற, “முத்த வாணகையாள்” என்றும், “முனிவுற்றனள்” என்றும் கூறினார். உற்றனள், மிகுதற் பொருட்டாய உறு வென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை முற்றுவினை யெச்சமாய் நின்றது. திரள்கல் என மாறுக. எறிந்த கல் மயிலின் தலையைத் தாக்கிக் கீழே வீழ்த்து வலியழித்து மேலே சிறிதளவும் இனிது செல்லாவகையில் அதனை மெலிவித்த தென்பார், “மத்தகத்தை மறித்தது” என்றார். தத்திச் சென்ற மயில் சிறிது சென்றதும் மாட்டாமையால் உயிர் சோர்ந்து வீழ்ந்த தென்றற்கு, “தரைப்பட வீழ்ந்த” தென்றார். மயில் இறத்தல் 174. தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் நாய்பின் னோடி நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது தீமை செய்வினை செய்திற மின்னதே. உரை:- முன் தாய் ஆகிய - முற்பிறப்பில் சந்திரமதியாகிய தாயாயிருந்து, இறந்து பிறந்தவள் நாய் - இறந்து நாய்ப் பிறப்பில் பிறந்தவளாகிய நாய், பின் ஓடி - மயிலின் பின்னே யோடி, நலிந்தது - அதனைத் தன் வாயிற் கவ்வி யுதறியதாக, கவ்விய வாய்முன் - கவ்விய முன்வாயிலேயே, மஞ்ஞை மடிந்து உயிர் போயது - மயில் மடியவே அதன் உயிர் நீங்கி விட்டது, தீமை செய்வினை - தீய பயனைச் செய்யும் தீவினை, செய்திறம் - தீங்கு விளைக்கும் வகை, இன்னது - இத்தன்மைத் தாம் எ-று. சேய்மைக்கண் அமிர்தமதி எறிந்த கல்லால் அடியுண்டு மயில் வீழக்கண்ட சந்திரமதியாகிய நாய் அதனிடத்தே விரைந்தோடிச் சென்று தன் வாயிற் கவ்வி உதறவே, குற்றுயிரா யிருந்த மயில் இறந்த தென்பதாம். தான் கவ்வியதனை உதறுதல் நாய்க்கு இயல்பாதலின், “ஓடி நலிந்தது” என்றார். அதனால் மயிற்கு நோய் மிக்க தென்பார், “நலிந்த” தென்பாராயிற்று. மனைவி செய்த கொடுமையின் மேலும் தாயும் தீங்குசெய்ய யசோதரனாகிய மயில் இறந்த கொடுமைக்கு ஏது இஃதென்பார், அமிர்தமதி வாயிலாகப் புகுந்த தீவினை, நாயாகிய சந்திரமதியையும் உயிர் முடித்தற்கு வாயிலாகக்கொண்ட தென்பது பட, “தீமை செய்வினை செய்திறம் இன்னதே” என்றார். “தீமை செய்வினை” எனக் கிளந் தோதினமையின், “செய்திறம்” என வாளாது கூறினார். செய்திறமும் இப்பாட்டில் விளக்கினாராகலின், “இன்ன” தென் றொழிந்தார். தாய் முன்னாகி யென்பதனை “முன் தாயாகி” என்றும், “வாய்முன்” னென்பதனை முன்வாய் என்றும் மாறிக் கூட்டுக. பிறந்த வளாகிய நாய் என இயைக்க. மடிதல், ஈண்டுத் துவட்சி குறித்து நின்றது. நாய் சாதல் 175. நாயின் வாயில் நடுங்கிய மாமயில் போய தின்னுயி ரென்றன ளென்னவும்* ஆயு மாறறி யாத விசோமதி நாயை யெற்றின னாய்பெய் பலகையால் உரை:- நாயின் வாயில் - நாயினுடைய வாயினால், நடுங்கிய மாமயில் - கவ்வி வருத்தப்பட்ட மயில், இன் உயிர் போயது - இனிய உயிரை யிழந்தது, என்றனள் என்னவும் - என்று அமிர்தமதி சொல்லி விடுத்தாளாக, ஆயுமாறு அறியாத இசோமதி - ஆராயும் திறமில்லாத வனாகிய யசோமதி, நாய் பெய் பலகையால் - அது கேட்டு வெகுண்டு தான் ஆடிக்கொண்டிருந்த நாய் வைக்கும் பலகையால், நாயை எற்றினன் - சந்திரமதியாகிய நாயைச் சாவப் புடைத்தான் எ-று. நடுங்குதல் - அசைதல்; “வாயிற்கடைமணி நடுநா நடுங்க”1 என்புழிப்போல. மயில் உயிர் போயது என இயையும். தன் செயலை மறைத்தற்கு அமிர்தமதி நாயின்வாயால் மாமயில் உயிர் போயிற் றென்றான். ஆயுமாறு அறிந்தானாயின், மயில் அடியுண்டு வீழ்தற்குரிய காரணத்தையும், அதுவே வாயிலாக அமிர்தமதியின் கள்ளக் காம வொழுக்கத்தையும் அறிந்திருப்ப னென்பார், “ஆயுமாறறியாத விசோமதி” யென்றார். அமிர்தமதியின் சேடியர் யசோமதிபால் போந்தபோது அவன் சூதாடிக் கொண்டிருந்தானென்றும், அவர்கள் மயில் நாயால் கொல்லப்பட்டது தெரிவித்தவுடனே மிக்க சினங் கொண்டோடி, சூதாடு கருவியாகிய நாயினைப் பெய்தாடும் பலகையினால் அந்நாயினைப் புடைத்துக் கொன்றா னென்றும் கூறுவார், “நாயை யெற்றினன் நாய்பெய் பலகையால்” என்றார். நாய் - சூதாடு கருவி. “நரை மூதாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம் நிறைய”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. “நாயை யெற்றினனாய்பெய் பலகையால்” என்பதில், நாய் - சிலேடை. தான் பேணி வளர்த்த நாயினைத் தானே கொன்ற தீவினை யசோமதிக்கும், மயில் இறத்தற்குரிய காரணமாகிய தன் செயலை மறைத்த பொய்ம்மைத் தீவினை அமிர்த மதிக்கும் உளவாயின. மயிலாய்ப் பிறந்திருந்து இறந்த யசோதரன் முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல் 176. மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை இன்னல் செய்யுமோ ரேனம தாகிய தன்ன தாகு மருவினை யின்பயன். உரை:- மன்னன் மாமயில் - மன்னனாகிய அழகிய மயிலுடம் பின் வந்து நீங்கிய உயிர், விந்தக்கிரி துன்னும் சூழலுள் வந்து - விந்தமலையை நெருங்கியுள்ள காட்டிற்கு வந்து, சூழ்மயிர் முள்ளுடை - உடல் முழுதும் மயிரு முள்ளுமுடைய, இன்னல் செய்யும் - உயிர் கட்குத் தீங்கு செய்யும், ஓர் ஏனம் ஆகியது - ஒரு பன்றியாய்ப் பிறந்தது, அருவினையின் பயன் - தடுத்தற்கரிய வினையின் பயன், அன்னதாகும் - அத்தகைய பயனை விளைவிக்க வல்லதாகும் எ-று. மயிலுடம்பிலிருந்து நீங்கிய உயிரை, ஒற்றுமை நயம் பற்றி, மயில் என்றே யொழிந்தார். விந்தமலையை நெருங்கியிருந்த காட்டைச், “சூழல்”, என்றார், அம்மலையினை யதுசூழ்ந்து மணந்து கிடந்தமையின். உடல் முழுதும் ஒழிவின்றி நெருங்க நிறைந்திருத்தலின், “சூழ் மயிர்” என்றும், அவற்றின் இடையிடை முட்கள் செறிந்திருப் பதனால் சூழ் முள்ளென்றும் சிறப்பித்தார். தன் மெய்வன்மையாலும் முள்ளுடை மையாற் பிறந்த செருக்காலும் ஏனை யுயிர்கட்குத் தீங்கு செய்யும் இயல்பிற்றாதல்பற்றி, “இன்னல் செய்யுமோ ரேனமதாகியது என்றார்.” பிறவுயிர்கட்கு அத்துணைத் தீங்குசெய்யாத மயிலாய்ப் பிறந்த உயிர், இப்போது “இன்னல் செய்யுமோர் ஏனமதாய்” பிறத்தற்கு ஏது வினையென்றும் அதனியல்பு இஃதென்றும்,கூறுவார், “அன்னதாகும் அருவினையின் பயன்” என்றார். அருமை - விலக்குதற் கருமை. சந்திரமதி கருநாகமாய்ப் பிறத்தல் 177. சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் வந்து காரிருள் வண்ணத்த நாகமாய் அந்தி லூர்தர வார்த்துரு ளக்*குடர் வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. உரை:- சந்திரம்மதி நாயும் - சந்திரமதியாகிய நாயும், அச்சாரலின் வந்து - அவ்விந்தமலைச் சாரலையே யடைந்து, கார் இருள் வண்ணத்த நாகமாய் - கரிய இருள்போலும் நிறமுடைய கரும் பாம்பாய்ப் பிறந்து, ஊர்தர - ஊர்ந்து சென்று வாழ, பன்றி - யசோதரனாகிய முள்ளம்பன்றி, குடர் வெந்து எழும்பசி - குடரை வெதுப்பி மிகும் பசித்தீயால். ஆர்த்து உருள - சீறி யுயிர்த்துக் கொண்டு அந்நாகம் சாகும்படியாக, விட்டது - துண்டாய்க்கடித்துக் கிழித்துக் கொன்று தின்று விட்டது எ-று. காரிருள் வண்ணத்த நாகம் - கருநாகம். இருளெனவே அமையு மாயினும் கருமைப் பண்பை விசேடித்தது, மிகுதி யுணர்த்தற்கு. அந்தில் - அசைநிலை; “அந்தில் ஆங்க அசைநிலை”1 என்பது தொல் காப்பியம். பாம்பு ஊர்ந்து செல்லு மியல்பிற்றாதலின், “ஊர்தர” என்றார். உருளுதல் - துண்டுபட்டுப் புரளுதல். நாகம் உயிர்த்தலே அதற்கு ஆர்ப்பு மாதலின், “ஆர்த்துருள” என்றார். நாகத்தைத் துண்டித்து உருண்ட துண்டங்களைத் தின்று அம்முட்பன்றி தன் வெம்பசி தவிர்த்தது என்பதாம். பசிவிட்டது எனவே, அதன் நீக்கத்துக் கேது வாகிய உண்டல் வினை நிகழ்தல் பெற்றாம். பன்றி சாதல் 178. தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தனில் சீய மொன்றெனச்† சீறுளி யம்மெதிர் பாய நொந்து பதைத்துடல் வீழ்ந்தரோ போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. உரை:- தாய் கொல் பன்றி - தாயாகிய கருநாகத்தைக் கொன்ற யசோதரனாகிய பன்றி, தளர்ந்து அயர் போழ்தினில் - பசிதீர வுண்டு களைத்துக் கண்ணுறங்கும் காலத்தில், சிங்கமொன்று என - இஃது ஓர் அரிமா என்று கருதி, சீறு உளியம் - வெகுண்டு போந்த கரடி யொன்று, எதிர்பாய - எதிர்த்துப்பாய, பன்றி - பன்றியானது, நொந்து - எதிர்க்க மாட்டாது உடல் நொந்து, பதைத்து - துடித்து, வீழ்ந்து - நிலத்தில் வீழ்ந்து, உடன் பொன்றுபு - உடனே உயிர்ப்பிழந்து, இன்னுயிர் போயது - உயிர்விட்டிறந்தது எ-று. தாய் கொல் பன்றி - தடுமாறு தொழில். பிறப்பு வேறுபட்ட தாயினும் உயிரொன்றே யாதல்பற்றி, கருநாக மென்னாது, தாயென்றார். உண்ட களைப்பால் பன்றி ஓய்ந்தயர்ந்திருக்கையில், கரடி யொன்று போந்து துணையின்றித் தனித்துக் கிடப்பதோர் அரிமா வென்று கருதி ஞெரேலெனப் பாய்ந்து வலியழித்த தென்பார், “சிங்க மொன்றெனச் சீறுளியம் எதிர்பாய நொந்து பதைத்து” என்றார். வெகுண்டு பாய்ந் தமையின், “சீறுளியம்” என்றார். சீறுதல் - வெகுளுதல். சிறிய உளியமெனல் பொருந்தாமை யுணர்க. ‘எதிர்பாய நொந்த’ தென்றதனால், முகத்திற் பாய்ந்து வலியழித்தமை பெற்றாம். பொன்று தல் - உயிர்ப்படங்குதல். அரோ - அசை. பன்றி மீனாய்ப் பிறத்தல் 179. மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் உன்னி லொப்பி* லுலோகித விப்பெயர் மன்னு மீனின் வடிவின தாயிற்றே. உரை:- மன்னன் மாமயில் சூகரம் - மன்னனாகி யிருந்த பின் அழகிய மயிலாகியும் பன்றியாகியும் பிறந்திறந்த யசோதரனுயிர், வார்புனல் - நெடிதோடும் நீர்ப் பெருக்கால். இன்னல் செய்யும் சிருப்பிரையாற்றினுள் - துன்பம் செய்யும் சிருப்பிரை யென்னும் யாற்றில் வாழும். உன்னில் - நினைக்குமிடத்து, ஒப்பில் - நிகரில்லாத, உலோகித இப்பெயர் மன்னும் - உலோகிதம் என்னும் இப்பெயர் பொருந்திய, மீனின் வடிவின தாயிற்று - மீனுடம்பை எடுப்பதாயிற்று எ-று. வார்தல் - நெடிதொழுகுதல். கரைபுரண் டொழுகியும் முதலை முதலிய தீங்குசெய்யும் உயிர் வாழ்தற்கு இடனாகியும் அருகில் வாழ்வார்க்குத் துன்பம் செய்தல் பற்றி, “இன்னல் செய்யும் சிருப் பிரையாற்றினுள்” என்றார். இவ்யாறு உஞ்சயினி நகர்ப்புறத்தே ஓடுவது. மிக்க நீர்ப்பெருக்கினை யுடைய தாகலின் அதன்கண் வாழும் மீனினம் அழகியதாக இருத்தல் இயல்பாதல் கண்டு, “உன்னில்” என்றும், யசோதரனாகிய மீன் அவற்றுள் எவற்றாலும் ஒப்புயர்வற்ற தென்றற்கு, “ஒப்பில் ” என்றும் கூறினார். இம்மீன் உலோகிதம் என்ற இப்பெயருடைய தென்றார், ஏனையபெற்ற பெயர் அத்துணைச் சிறப்பின்மை யுணர்த்தற்கு. வடிவு என்றார், உடம்பினை; அப்பண்பு அதன்கண் இடம் பெறுதலின். சந்திரமதி முதலையாய்ப் பிறத்தல் 180. சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் முந்து சென்று முதலைய தாயது வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான் உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். உரை:- சந்திரம்மதி - சந்திரமதியின் உயிர், நாய் ஆய் - நாயாகப் பிறந்திறந்தும், கருநாகமாய் - கருநாகமாய்ப் பிறந்திறந்தும் அமையாது. முந்து சென்று - பன்றி யிறந்து மீனாய்ப் பிறப்பதற்கு முன்பே அச்சிருப்பிரை யாற்றினுட் சென்று, முதலைய தாயது - முதலைப் பிறப்பை எய்தி, வெந்து - பசித்தீயால் வெதும்பி, வேர்த்து - ஏனை மீனினத்தைச் சினந்து, இனமீனை விழுங்குவான் - கூட்டமாகிய மீன்களை யுண்ணல் வேண்டி, உந்தியுந்தி - முந்துறச் சென்று சென்று உளைந்திடு போழ்தினில் - எளிதிற் கிட்டாமையால் வருந்தியுறையுங் காலத்தில் எ-று. பிறப்புப் பல வெடுத்தலின், உயிர்த்தொடர்பு இடையறாமைப் பொருட்டு, அவற்றை யெடுத்து ஒதுகின்றார். பன்றியாற் கொல்லப் பட்ட கருநாகம் முன்பே இவ்யாற்றில் முதலையாய்ப் பிறந்திருப்பது தோன்ற, “முந்துசென்று முதலையதாயது ” என்றும், அஃது அவ் விடத்தே, வேண்டும் இரைபெறாது பசித்தீ நின்று வருத்த, தனக்கு அகப்படாது அகன்றோடும் மீனினத்தை வெகுண்டு நோக்கியிருந்தது என்பார். “வெந்து வேர்த்து” என்றும், அவற்றைப் பற்றுதற்காகப் பலவிடத்தும் ஓடியலைந்து நீரை உழப்பிக் கொண்டிருந்த தென்பார், “முந்துறச் சென்று சென்று” என்றும், அவ்வாறு சென்றும் வேண்டுவன பெறாமையின். “உளைந்திடுகின்றது” என்றும் கூறினார். இதனால், முதலைப் பிறப்பெய்திய காலத்தும் சந்திரமதி துன்பமே யுழந்து கொண்டிருந்தா ளென்பது கூறியவாறாம். கூனியொருத்தியை அம்முதலை விழுங்கிவிடுதல் 181. அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் வந்து வாயின் மடுத்தது கொண்டது* கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் தந்து கொல்கென மன்னவன் சாற்றினான். உரை:- அந்தரத்து - மேலிடத்தே, ஒருகூனி - அரசன் அந்தப்புரத் திற் பணிபுரியும் கூனியொருத்தி, நின்றாடுவாள் - சிருப்பிரை யாற்றின் நீரிலே நின்று விளையாடினாளாக, அது - அம்முதலையானது, வந்து - அவளறியாதபடி வந்து, வாயில் மடுத்துக் கொண்டது - வாயாற் கவ்விக் கொன்று விழுங்கி விட்டது. கொந்து வேய்குழற் கூனியை - பூங்கொத்துக்களை யணிந்த கூந்தலை யுடைய அக்கூனியை, கொல்கரா - கொன்ற முதலையை, தந்து கொல்க என - தன் முன்னே கொணர்ந்து கொல்வீராக வென்று மன்னவன் சாற்றினான் - வேந்தனாகிய யசோமதி மீன்வலைஞர்க்கு ஆணையிட்டான் எ-று. தரம் - இடம். அந்தர மெனவே, மேலிடமாயிற்று, தேவர் கோயிலைக் குறிப்பதென்றும், ஈண்டு அஃது அரசன் அரண்மனையைக் குறித்து நிற்கின்ற தென்றும் கூறுவாரு முளர். கூனி அந்தப் புரத்தே குற்றேவல் புரியு மகளிர்; கூனும், குறளும், சிந்தும், அரசர்க்கு அந்தப் புரத்தேயிருந்து அணுக்கத் தொண்டு புரிந்தொழுகுவர்; வனப்பின்மை, அவர்க்குச் சிறப்பாக வேண்டுவதாம். கூனியென்பதை வினை யெச்சமாகக் கொண்டு உரைப்பாரு முளர். அவள் அறியவரின், அதற்ககப்படாளாதலின், கரந்து வந்தமை பெற்றாம். கொந்து - பூங்கொத்து. “கொந்து வேய்குழற் கூனி” யென்றது சுட்டு மாத்திரையாய் நின்றது. கொல்கரா - இறந்த காலம் தொக்க வினைத்தொகை. முதலையைப் பற்றிக் கொணர்ந்து கொல்லற் குரியார் அவராதலின், மீன் வலைஞர்க் கென்பது வருவிக்கப் பட்டது. “வலையின் வாழ்நரின்” (18) என வருதல் காண்க. முதலையைப் பற்றிக் கொல்லுதல் 182. வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின் சிலர்ச லாகை வெதுப்பிச் செறிந்தனர் கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் அலைசெய் தார்பலர் யாரவை சொல்லுவார். உரை:-வலையின் வாழ்நரின் - மீன் வலையே துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பரதவரால், வாரில் பிடித்த பின் - நெடியவார்களால் அமைந்த வலை கொண்டு அம்முதலையைப் பிடித்துக்கொணர்ந்த பின்பு, சிலர் - அரசன் ஆணை பெற்றோருள் சிலர், சலாகை வெதுப்பிச் செறிந்தனர் - இருப்பு நாராசத்தைப் பழுக்கக் காய்ச்சி அதன் உடற்குட்செலுத்தினாராக, கொலைவலாளர் குறைத்தனர் - கொலையாளிகள் வாளால் பிளக்க, பலர் ஈர்ந்தனர் - பலர் போழ்ந்த பகுதிகளைக் கத்தியால் அரிய, அலைசெய்தார் - இவ்வாறு அதனைப் பலரும் துன்புறுத்தினர், அவை - அவர் துன்புறுத்திய வகைகளை, சொல்லுவார் யார் - எடுத்தோதுபவர் யாவர், கொலை வல்லார்க் கன்றிப் பிறர்க்கு ஆகாதென்றவாறு. மீனினத்தினும் வன்மை மிகவுடைமையின், வாரானமைந்த வலையினைப் பரப்பின ரெனவறிக. வலையின் வாழ்நர், பரதவர், வெறிது செலுத்தின் எளிது புகாமையின், “வெதுப்பிச் செறிந்தனர்” என்றார். மரக்கட்டைகளைப் போழ்வதுபோலக் கோடரி கொண்டு பிளக்க வேண்டி யிருத்தலின் அதனைச் செய்வார். “கொலைவலாள” ராயினார். ஈர்தல் - அரிதல். உயிர்ப்பொருளாகிய இதனைத் துண்டு துண்டாக இரக்க மின்றிக் கொன்றமையின், “அலைசெய்தார்” என்றும், இக்கொலைவகையை வகுத்தும், வரித்தும், ஒதுந்திறம் கொலைத் தொழிலில் வல்லுநர்க் கன்றிப் பிறர்க்கு அருள் நிறைந்து இடையீடு செய்தலின் ஆகாதென்பார். “யாரவை சொல்லுவார்” என்றும் கூறினார். சந்திரமதி பெண்ணாடாய்ப் பிறத்தல் 183. சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்து வார்வலைப் பட்ட கராமரித் தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. உரை:- சந்திரமதி - சந்திரமதியின் உயிர், நாய் - நாயாகியும், கருநாகமாய் - கரும் பாம்பாகியும், வந்து - பிறந்திறந்து வந்து, வார்வலைப்பட்ட கரா - வாரால் இயன்ற வலையில் அகப்பட்ட முதலையாகி, மரித்து - இறந்து, அந்தில் - அந்நகரின்கண், வாழ் - வாழும், புலையாளர்தம் சேரிவாய் - புலையர் சேரிக்கண், வந்து - அடைந்து, ஓர் ஆட்டின் மடப்பிணையாவது - ஒரு பெண்ணாடாய்ப் பிறந்து வளர்வதாயிற்று எ-று. வார்வலை - நீண்ட வலையுமாம். ஆக்கத்தைக் கராவொடும் பெய்துரைக்க. அந்தில் - அவ்விடம்; அந்த இல் என்பதன் மரூஉ முடிபு. புலைத்தொழிலை யாளும் இயல்பு பற்றிப் புலையரைப் புலையாள ரென்றார். சேரி - சேர இருக்குமிடம். பிணை - பெண். மடம் - இளமை. யசோமதியால் உலோகித மீன் சிராத்தத்தில் படைக்கப்படுதல் 184. மற்றை மீனுமோர் வார்வலைரப் பட்டதை அற்றை யில்வரு மந்தணர்* கண்டனர் கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் குற்ற செய்கைக் குரித்தென ஓதினர். உரை:- மற்றை மீனும் - ஏனை. உலோகித மென்னும் பெயரை யுடைத்தாகிய மீனும், ஓர் வார் வலைப்பட்டதை - ஒரு நீண்ட வலையில் அகப்பட்டதாக, அற்றையில் வரும் - அந்நாளில் ஆங்குப் போந்த, அந்தணர் கண்டனர் - அந்தணர் சிலர் கண்டு, கொற்ற மன்னவ - வெற்றியை யுடைய வேந்தே, நின்குலத்தார்களுக்கு - நின்குலத்துப் பிறந்த முன்னோர்களுக்கு, உற்ற செய்கைக்கு - பொருந்திய சிராத்தத்துக்கு, உரித்து - இம்மீன் படைத்தற் கமைந்ததாம், என ஓதினர் - என்று சொன்னார்கள் எ-று. மற்றை யென்பது இனஞ் சுட்டிற்று. உம்மை - எச்சவும்மை. மீன் வலைப்பட்டதைக் கண்டனர் என்க. அற்றை - அந்நாள் - “அந்றைத் திங்கள்”1 என்புழிப் போல. அந்தண ரென்ற பெயருக்கேற்ப அருளுடைய ராகற்பாலார் அது சிறிது மின்றிக் கூறலின், ‘அந்தணர்’ என்று குறிப்பு மொழியாற் கூறினார். கண்டனர் என்றார், கண்களாற் கண்டும் கண்ணோட்ட மிலராயினார் என்று தாம் கருதிய கருத்தை முடித்தற்கு, குலத்தார்க்கு உற்ற செய்கை, சிராத்தம் செய்தல். அந்நாளில் இம் மீனைக் கொன்று படைத் துண்டல் வேண்டு மென்றலின், அதனைச் சொல்லாற் கூறாது உரித்து என்றனர். மறையோதும் வாயினர், அவ்வாயினால் இம்மீன் கொலையைச் சொல்லுதலின், “ஓதினார்’ என்றார். சிராத்தத்திற் படைத்த மீனை யுண்டல் 185. அறுத்த மீனி னவயவ மொன்றினைக் கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர் இறப்ப ருந்துறக் கத்தின் இசோதரன் சிறக்க வென்றனர் தீவினை யாளரே. உரை:- அறுத்த மீனின் - அறுக்கப்பட்ட மீனினுடைய, அவயவ மொன்றினை - ஓருறுப்பை, கறித்து - மென்று தின்று, இசோமதி இப்புவி காக்க - யசோமதி வேந்தன் இப்பூமியை நெடிது காப்பானாக, இறப்பு அரும் துறக்கத்தில் - அழிவில்லாத துறக்கத்தி லிருக்கும், இசோதரன் சிறக்க - யசோதர மன்னன் சிறப்பெய்து வானாக, என்றனர் தீவினையாளர் - என்று தீவினை புரியும் அவ்வந்தணர்கள் கூறினர் எ-று. அறுத்தமீனின் துண்ட மொவ்வொன்றும் அதன் உறுப்பாதலின், “அவயவம்” என்றார். அவயமெனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய தலைப்பகுதியைக் கோடலு மொன்று. கறித்தல் - மென்று தின்றல். கறித்த துண்டத்தை வாயிற்கொண்டே அரசனை வாழ்த்துதலின், “கறித்து” என்றவர் இடையீடின்றி, “இசோமதி இப்புவி காக்க” என்று கூறினார். ஓர், அசைநிலை. துறக்கத்துச் செல்வோர்க்கு இறப்புண்டே யன்றி, துறக்கவுலகிற்கு அழிவின்மையின், “இறப்பரும் துறக்கத்தின்” என்றும், துறக்கம் புக்கவர் மீட்டும் பிறப்பெய்தாது அதனிற் சிறந்த வீடுபே றடைதல் வேண்டி இச்சிராத்தம் செய்யப் படுதலின், “இசோதரன் சிறக்க” என்றும் கூறினர். சிறத்தல், மூவுலகுச் சிக்கண் இன்புற்றிருத்தல். தீவினை, கொலை வினை. தீயோம்பி யுயிர்க்கொலை புரிவது தோன்ற “தீவினையாளர்” என்ற நயம் காண்க. மீன் தன் பிறப்புணர்வு பெறுதல் 186. நின்ற கண்டத்து நீளுயிர் போயது சென்ற தன்பிறப் போர்ந்து தெளிந்தது தின்று தின்று துறக்கத் திருத்துதல் நன்று நன்றென நைந்திறந் திட்டதே. உரை:- நின்ற கண்டத்து நீளுயிர் - எஞ்சி நின்ற துண்டங்களில் நெடித்திருந்தவுயிர், போயது - முற்றவும் நீங்கியது, சென்ற தன்பிறப்பு ஓர்ந்து - அவ்வுயிர் இதற்கு முன்னெடுத்த பிறப்புக்களை நினைந்து, தெளிந்தது - தெளிவுற்று, தின்றுதின்று - உயிர் நின்ற உடம்பை பலகாலும் தின்று, துறக்கத்து இருத்துதல் - அவ்வுயிரைத் துறக்கத்தேயிருந்து இன்பம் துய்க்க என்று சொல்லுதல், நன்று நன்று என - மிகமிக நன்று என்று நைந்து - வருந்தி, இறந்திட்டது - செத்தது எ-று. உயிர் தான் நின்ற உடம்புமுழுதும் பரவியிருத்தல்பற்றி “நின்ற கண்டத்து நிளுயிர் போயது” என்றார்; கரும்பில் பரவியிருக்கும் சாறு, கண்டந்தோறும் நிற்றல்போல உயிரும் உடம்பின் கண்ட மொவ் வொன்றிலும் இருக்கு மென்ப. சென்ற தன் பிறப்பு, முன்பெடுத்த பிறவிகளும் அவற்றுள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் குறித்து நின்றது. தான் மீன்வடிவிற் கிடந்து தின்னப்படுவதும், தன்னைத் துறக்கத் திருப்பதாகப் பொய்யுரைப்பதும் அதனால் தீவினை பெருகுவதும் அறிதலின், “தெளிந்தது” என்றார். இருத்துதல், இருக்கவெனச் சொல்லுதல். இருத்துதல் எனவே இல்லாமை நன்கறிந்ததொன்று என்பதாம். அடுக்கு முன்னது பன்மையும், பின்னது இழிவும் குறித்து நின்றது. உடம்புமுழுதும் ஒழிந்ததும் உயிர்தானும் ஒழிந்தமைபற்றி, “நைந்திறந் திட்டது” என்றார். மீன் ஆணாடாய்ப் பிறத்தல் 187. மன்னன் மாமயில் சூகர மாயமீன் முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர் மன்னு மாணுரு வெய்தி வளர்ந்தபின் தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே. உரை:- மன்னன் மாமயில் சூகரம் ஆய மீன் - யசோதரனாகிய வேந்தனாயிருந்து பின்பு அழகிய மயிலாகவும் முள்ளம் பன்றியாகவும் பிறந்திறந்த மீனாகிய உயிர், முன்னை யாட்டின் - தனக்கு முன்னே தோன்றி வாழ்ந்த சந்திரமதியாகிய பெண்யாட்டின், வயிற்றில் முடிந்தது - வயிற்றில் நிரம்பிய தாகிய கருவில், மன்னும் ஆண்உரு எய்தி - பொருந்திய ஆணாடொன்றின் உடம்புற்றுப் பிறந்து, வளர்ந்த பின் - நன்கு வளர்ந்த பிறகு, தன்னை ஈன்ற - தன்னைக் கருவுயிர்த்த, அத்தாய் மிசைத் தாழ்ந்தது - அத்தாய் ஆட்டினையே காமப்புணர்ச்சி செய்தது எ-று. முதலையாயிருந்து கூனியைக் கொன்ற குற்றத்தால் மன்னனால் கொல்லப்பட்டுப் புலைச்சேரியில் பெண்ணாடாய்த் தோன்றிய சந்திரமதியின் செய்தியை முன்பு, “அந்தில்புலையாளர்தஞ் சேரிவாய், வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே” (183) என்று கூறினாராதலின், ஈண்டு முன்னையாடு என்றொழிந்தார். நிரம்பிய கருவினை, முடிந்த தென்றார். ஓர் - அசை. உருவெய்தல் - உருநிரம்பிப் பிறத்தல். விலங்கு கட்கு முறைமையும், நெறிமையுமின்மையின், “தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்தது” என்றார். பன்றிப்பிறப்பில் கருநாகமாய்த் தோன்றியிருந்த தன் தாயைக் கொன்ற வினையைச் செய்ததோட மையாது, இவ்யாட்டுப்பிறவியில் தாயைப் புணரும் பெருந்தீ வினையைச் செய்தது கூறினார். முன்னை வினையைத் “தாய்கொல் பன்றி” (178) என்றும், ஒருபிறப்பில்தாயும் பிள்ளையுமாய்த்தோன்றிய இயைபை, “தன்னையீன்றவத் தாய்” என்றும் சுட்டுதல் காண்க. தாயைப் புணர்ந்த அவ்யாடு கொல்லப்படுதல் 188. தாயி னன்னலந் தானுகர் போழ்தினில் ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர் பாய வோடிப் பதைத்துயிர் போயபின் தாய்வ யிற்றினிற் றாதுவிற் சார்ந்ததே. உரை:- தாயின் நன்னலம் - தாயின் பால் கனியும் காமவின் பத்தை, தான் நுகர் போழ்தினில் - நுகர்தற்குரிமையில்லாத அவ் வாணாடு நுகருங்காலத்தில், ஆயகோபத்து - அதன் பால் உண்டாகிய வெறுப்பினால், ஒரு வன் தகர் - ஒரு வலிய ஆட்டுக்கிடா, அடர்த்துப் பாய - தாக்கி முட்டவே, பதைத்து ஓடி - அவ்யாடு உடல் பதைத்துத் துள்ளி யோடி வீழ்ந்து, உயிர் போயபின் - உயிர் நீங்கிய பின்பு, தாய் வயிற்றினில் - தான் புணர்ந்த தாயின் கருவிலே தங்கிய, தாதுவில் - விந்துவில், சார்ந்தது - கலந்துவிட்டது எ-று. தாயாட்டின் நலத்தைத் தந்தையாகிய ஆடு நுகர்தற்குரிமை பெற்றிருப்ப, அதன் குட்டியாகிய தான் நுகர்தல் தீது என்பதை யுணராது நுகர்கின்ற தென்பார், “தான் நுகர் போழ்தினில்” என்றும், அச்செயல் கண்ட கிடா ஒன்று பொறாது வெகுண்டு அக்குட்டி சாவப் பாய்ந்தது என்பார், “ஆயகோபத்து அடர்த்து” என்றும், அதனால் இறந்த அக்குட்டியின் உயிர் சென்று, அத்தாய்க்கருவிற் கலந்து கொண்டதென்றும் கூறினார். பதைத்தோடி என மாறுக. தாயாடு இறத்தல் 189. தாய்வ யிற்கரு வுட்டக ராயது போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன் மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன் தாயை வாளியிற் றானுயிர்* போக்கினான். உரை:- தாய்வயின் - தாயிடத்தே, கருவுள் - கருவில் கலந்து, தகராயது - ஆட்டுக் கிடாவாகியது, போய் வளர்ந்துழி - கருமுற்றி வளர்ந்திருக்கையில், பூமுடி மன்னவன் - பூவும் மணிமுடியும் அணிந்த வேந்தனாகிய யசோமதி, மேயவேட்டை விழைந்தவன் - தனக்கமைந்த வேட்டை மேற்கொண்டு சென்று, மீள்பவன் - மீண்டு வருங்கால், தாயை - தாயாட்டினை, வாளியின் உயிர்போக்கினான் - தன் கையம்பினால் கொன்றான் எ-று. தகர் - ஆடு. “தகராயது போய் வளர்ந்துழி” என்பதனால் தாயாடு கருவுயிர்த்தற்கு வேண்டும் காலம் முற்றியிருந்தமை பெற்றாம். அரசர் வேட்டைமேற்சேறல் இயல்பாதலின், “மேய வேட்டை” யென்றும், அவ்வேட்டைதானும் விலங்கச்சம் போக்கும் குறிப்பிற்றன்றி விளையாட்டாய் மேற்கொண்டான் என்றற்கு, “வேட்டை விழைந்தவன்” என்றும், மீளுங்கால், தனித்து மேய்ந்து கொண்டிருந்த தாயாட்டினைத் தன் கையம்பு செலுத்திக் கொன்றான் என்பார், “தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்” என்றும் கூறினார். வாளி - அம்பு. தகர்க்குட்டியை வளர்த்து வருகென வேந்தன் புலைய னொருவனைப் பணித்தல் 190. வாளி யின்விழும் வன்றகர்க் குட்டியை நீள நின்ற புலைக்குலத் தோன்றலைத் தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. உரை:- வாளியின் விழும் வன்தகர்க்குட்டியை - வேந்தனது அம்பினால் உயிர் சோர்ந்து விழுந்த ஆட்டின் வயிற்றினின்று நெகிழ்ந்து விழும் வலிய குட்டியை, நீள நின்ற புலைக்குலத் தோன்தலை - தொலைவில் நின்று கண்டு மனம் வருந்தி நின்ற புலையனிடத்தே, தாள் வருத்தம் தவிர்த்து - முயன்று வளர்த்தது காரணமாக அவன் கொண்டு நின்ற வருத்தத்தைப் போக்கி, வளர்க்க - இக்குட்டியைப் பேணி வளர்ப்பாயாக, என - என்று, ஆளிமொய்ம்பன் அருளினன் - அரியேறு போலும் வன்மை படைத்த யசோமதி குட்டியை யருளிக் கூறினன் எ-று. வாளியால் ஏறுண்டுவிழும் ஆட்டின் வயிற்றில் கருமுற்றியிருந்த குட்டி அவ்வதிர்ச்சியால் வெளிப்பட்டு வீழ்ந்தமை தோன்ற, “வாளியின் விழும் வன் தகர்க்குட்டியை” என்றார். வன்மையைக் குட்டிக் கேற்றுக. அரசன் அம்புபட்டு வீழ்ந்து இறந்ததாயுடன் தான் உயிர் இழக்காமையின் “வன் குட்டியை” என்று சிறப்பித்தாரென வறிக. அவ்யாட்டினை விரும்பி வளர்த்தோனாதலாலும், அதனை வீழ்த்தவன் அரசனாதலாலும், அவலமிகுதியால் புலையன் கையற்று நின்றொழிந் தானாதலின், “நீள நின்ற புலைக்குலத்தோன்” என்றார். தாள் வருத்த மல்லது இயைபு வேறின்மையின், அதனைத்தக்க சொற்களால் தவிர்த்து, குட்டியை நீயே வளர்க்க என வேந்தன் அருளிக் கூறின மையின், “தாள் வருத்தம் தவிர்த்து” என்றும், “அருளினன்” என்றும் கூறினார். குட்டியை கொல்லாது வளர்க்க என்றதனால் “அருளினன்” எனல் வேண்டிற்று. ஆளிமொய்ம் பனாயினும் அதனை இடமறிந்து செலுத்தாமையின் அதன் பயப் பாடின்மை தோன்ற, ஆளிமொய்ம்பனென வேண்டாது கூறினார். என்ப - அசை. யசோமதி சண்டமாரிக்குப் பலியூட்டுதல் 191. மற்றொர் நாள்மற மாதிற்கு மன்னவன் பெற்றி யாற்பர விப்பெரு வேட்டை போய் உற்ற பல்லுயிர் கொன்றுவந் தேற்றினான் கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ. உரை:- மற்று ஓர் நாள் - வேறு ஒரு நாள், மன்னவன் - வேந்தனான யசோமதி, மறமாதிற்கு - கொற்றவை யாகிய சண்ட மாரிக்கு, பெற்றியால் பரவி - முறைப்படிப் பலியூட்டிச் சிறப்புச் செய்யக் கருதி, பெருவேட்டை போய் - பெரிய தொரு வேட்டைமேற் சென்று, உற்ற - காட்டில் வாழ்ந்த, பல் உயிர்கொன்று - பல உயிர் களைக் கொன்று, உவந்து ஏற்றினான் - அவற்றின் ஊனைக் கண்டு மனமகிழ்ந்து தேவிக்குப் பலியூட்டுவித்தானாக, ஒன்று - அவற்றுள் ஒருவகை யூன், கொற்றம் மிகு எருமைப்பலி - வெற்றி மிக்க எருமை யூனாகும் எ-று. மறவர் இடும் களப்பலியேற்று அவர்கட்கு வெற்றிதரும் அணங் காதலின், கொற்றவையை “மறமாது” என்றார். அம்மறமாதிற்கு யசோமதியும் அவன் முன்னோரும் வழிவழியாகச் சிறப்புச்செய்வது மரபாதலினாலும், சிறப்பு நிகழுங்காலத்துப் பல உயிர்களைக் கொன்று பலியூட்டுதல் வீரர்க்கு இயல்பாதலினாலும், “பெற்றியால் பரவி” என்றார். பரவி செயவெனெச்சம் திரிந்து நின்றது. இனி, பரவி யென்பதைச் செய்தெனெச்சமாகவே கொண்டு, பரவிவிட்டுப் பெருவேட்டை போனான் என்று கொள்ளினும் அமையும். “பெருவேட்டை” யெனவே, சிறப்புச்செய்தற்கு வேண்டிய சீரிய விலங்குகளையும் புட்களையும் நன்கு ஆராய்ந்து பேராரவாரத்துடன் வேட்டம் புரிவது பெறப்படும். தான் கருதியவாறே உயர்ந்த விலங்குகளும் பிறவும் தப்பாமற் கிடைத்தமையின், “உவந்த” என்றும், அவற்றை வீரர் தோள்மேலேற்றிக்கொண்டு போந்து சண்டமாரியின் திருமுன் படைத் தானென்பார், “ஏற்றினான்” என்றும் கூறினார். ஏற்றினான், ஏற்பித்தா னென்னும் பொருட்டு. மிகு எருமை - மிக்கெருமையென நின்றது; மிக்க என்பது விகாரத்தால் ஈறுகெட்டு முடிந்ததென்றுமாம். எருமை - காட்டெருமை (Bison) மிக்க மெய்வன்மை யுடைமைபற்றி, இதனை, “கொற்றமிக் கெருமை” என்று சிறப்பித்தார். அரோ - அசை. எருமையூனைச் சிராத்தத்தில் நல்கல் நன்று என அந்தணர் வேந்தற்குக் கூறல் 192. இன்றெ றிந்த எருமை யிதுதனைத் தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் நன்ற தென்றன ரந்தணர் நல்கினான்* நின்று பின்சிலர் நீதிகள்† ஓதினார். உரை:- இன்று எறிந்த எருமை இதுதனை - இன்று கொன்று வீழ்த்திய இவ்வெருமை யூனை, தின்று தின்று - மிகத் தின்று, சிராத்தம் செயப்பெறின் - குலமுன்னோர்கட்குச் சிராத்தஞ் செய்வோமாயின், நன்றது - நல்லதாம், என்றனர் அந்தணர் - என்று அந்தணர்கள் உரைக்கவே, நல்கினான் - வேந்தனும் அவ்வண்ணமே செய்க என்று அவ்வெருமையூனைக் கொடுத்தான், சிலர் பின் நின்று - அது கண்ட வேறு சில அந்தணர்கள் அரசனை வழிபட்டு நின்று, நீதிகள் ஓதினார் - சிராத்தத்திற்குரிய முறைகளை எடுத்துச் சொல்லலுற்றார்கள் எ-று. எருமையின் கொழுவிய ஊனைக் கண்டதும் அதனைத் தின்றற் கெழுந்த நயப்பினால், “தின்றுதின்று சிராத்தம் செயப்பெறின்” என்றார். வேந்தற்கும் தம்மைப்போல அதனை யுண்டற்கு விருப்ப மிருக்கு மென்ற கருத்தால், “சிராத்தம் செயப்பெறின் நன்றது என்றனர்” என்றார். அடுக்கு மிகுதி குறித்து நின்றது. அதனைக் கேட்டதும் வேந்தற்குச் சிராத்தம் செய்வதில் இருந்த விருப்ப மிகுதியால் அவன் “ஆயுமாறறியாதவ னாதலின்” (175) உடனே இசைந்தான் என்றற்கு “நல்கினான்” என்றும், முன்னே பேசிய அந்தணரைச் சிலர், ஒரு மருங்கு மறுத்துப் பிறிதொன்று விதித்துக் கூறுகின்றா ராதலின், “நின்று பின் சிலர் நீதிகள் ஓதினார்” என்றார். பின்நின்று எனற்பாலது எதுகை யின்பங் குறித்து முன்பின்னாக மாறிநின்றது. நியதி - நீதி யென மறீஇயிற்று. நியதி - ஒழுக்காறு. வழிபாடாவது - அரசற்கு ஒன்று கூறுவார் முதற்கண் அவனை வாழ்த்திக் கூறுவது. வாழ்த்து மிடத்தும் தமது வாழ்வு தோன்ற நின்று கூறலின், “பின்நின்று” என்றார். ஒரு மருங்கு மறுத்துக் கூறல் 193. ஆத பத்தி லுலர்ந்ததை யாதலால் காது காகங் கவர்ந்தன வாமெனின் தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென ஓதி னாரினி யொன்றுள தென்றனர். உரை:- ஆதபத்தில் உலந்ததை யாதலால் - இவ்வெருமையூன் அறுக்கப்பட்டபின் ஞாயிற்றின் வெயிலில் உலர்ந்த படியாலும், காது காகம் கவர்ந்தனவாம் - எருமை முதலியவற்றை வருத்தும் காக்கைகள் கவர்ந்துண்டு மிச்சிலாயினவாம், எனின் - என்று ஊன் வினைஞர் உரைப்பதனால், சிராத்தம் செயற்கு தீது - சிராத்தம் செய்தற்குரிய தகுதியிலவாயின, என ஓதினர் - என்று எடுத்தோதிய அவர்களே, இனி - இப்பொழுது, ஒன்று உளது - கழுவாய் ஒன்று இருக்கிறது என்றனர் - என்று வேந்தன் உவக்குமாறு கூறினர் எ-று. ஆதபம் - ஞாயிற்றின் வெயில். ஐ - சாரியை. எருமை, எருது முதலியவற்றின் உடலிலிருக்கும் உண்ணி முதலியவற்றைக் கவரு முகத்தால்அவற்றின் உடம்பிற் புண்செய்து அதன் வழியாக அவற்றின் ஊனையும் குத்தித் தின்பது பற்றி, “காது காகம்” என்றார். உலர்கின்ற ஊனைக் கவர வரும் தம்மை வெருட்டுவார்தலையில் சிறகாலடித்து அலகாற் குத்தி வருத்துதலும் காக்கைக்கு இயல்பாதலால் அது கண்டு இவ்வாறு கூறினா ரென்றுமாம். கவர்ந்தன - செயப்பாட்டு வினைப் பொருட்டு. எனின் - ஏதுப் பொருட்டாய இன்னுரு பேற்ற முதனிலைத் தொழிற்பெயர். தாம் - கட்டுரைச் சுவைபட நின்றது. தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. பிறிது விதியாகக் கழுவாய் கூறல் 194. தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழிச் சாத நல்ல தகர்முகத் துப்படின் பூத மென்றனர் புண்ணிய நூல்களின் நாத னாரத் துராதிகள் நன்றரோ. உரை:- புண்ணிய நூல்களின் நாதனார் - புண்ணிய முரைக்கும் மறைகளில் வல்லுநராதலால் தாமே புண்ணியத்தலைவரெனத் தருக்கியிருக்கும், அத்துராதிகள் - அக்கொடியவர்கள், தீது இது என்ற பிசிதமும் - சிராத்தத்திற்கிது தக்க தன்று என்று சொல்லப்பட்ட எருமை யிறைச்சியும், தேர்ந்துழி - நூல்களால்ஆராய்ந்தவிடத்து, சாத நல்ல தகர் முகத்துப் படின் - இளமையால் நல முடைத்தாகிய ஆடொன்றினால் மணம் நுகரப்படுமாயின், பூதம் என்றனர் - தூய்தாம் என்று மொழிந்தணர் எ-று. மறைகள் பலவும் புண்ணியப் பயனை யடைதற்குரிய விதி விலக்குகளை எடுத்தோதுதலின், அவற்றைப் “புண்ணியநூல்” என்றும், அவற்றை ஓதுதலின் நல்ல தலைமை பெற்றிருப்பது தோன்ற, “நாதனார்” என்றும், அப்புண்ணியச் செய்கை யுணர்த்தும் நூலைத்தம் தீச்செயலால் பீடழிப்பது கண்டு, “அத்துராதிகள்” என்றும் கூறினார். “நன்று பெரிதாகும்” என்பது விதி. பன்முறையும் பல்லாற்றானும் உரைத்தமை விளங்க, “நன்று” என்றார். பிசிதம் - இறைச்சி. “தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கு” (193) என்று மேலே கூறினமையின், “தீதிதென்ற பிசிதமும்” என்றார்கள். தேர்தற்குக் கொள்ளுங்கருவி அவர்தம் நூலே யாதலின், “நூல்களால்” என்பது வருவிக்கப்பட்டது. சாதம் - இளமை. நன்மை - உருநலம். முகப்படுதல் - முகத்திற் காட்டி மணம் நுகர்வித்தல். பூதம் - புனிதம். அரோ - அசை. அரசன் தான் வளர்க்கும் தகரினைக் கொணர்க என்று பணித்தல் 195. என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் நன்று நாமுன் வளர்க்க விடுத்தது சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின் நன்றி தென்று நயந்தன ரந்தணர். உரை:- என்றலும் - என்று இவ்வாறு அந்தணர்கள் கூறியதும், இணர்பெய் முடி மன்னவன் - பூங்கொத்துக்களால் தொடுக்கப் பட்ட மாலையணிந்த வேந்தனாகிய யசோதமதி, நன்று - நல்லது, நாம் முன் வளர்க்கவிடுத்தது - நாம் முன்பு புலையனொருவன் பால் வளர்க்க விடப்பட்டதாகிய ஆட்டினை, சென்று தம் என - சென்று கொணர் வீராக என்று ஒற்றர்க்குப் பணிக்க, ஒற்றர் சென்றனர் - அவ்வொற்றர்கள் புலையர் சேரிக்குச் சென்றனர், பின் - அவர் சென்றபின், இது நன்று என்று - இச்செயல் தக்கதென்று சொல்லி, அந்தணர் நயந்தனர் - அந்தணர்கள் மகிழ்வுற்றனர் எ-று. இணர் - பூங்கொத்து. மணிமுடியும், பூமாலையும் அணிதலின், “இணர்பெய்ம்முடி மன்னவன்” என்றார்; “பூமுடி மன்னவன்” (189) என்றாற்போல. நாம், தனித் தன்மைப் பன்மை. முன் - வேட்டைக்குச் சென்று மீளுமிடத்து ஓர் ஆட்டினைக் கொன்ற காலத்தைக் குறித்து நின்றது. “வளர்க்க விடுத்தது” என்றார், பண்டு அதனைத் தாள் வருத்தம் தவிர்த்து “வளர்க்க” வென அருளினா னாதலின்; விடுத்தது, கொல்லாது விடுத்தது என்பதுபட நிற்றல் காண்க. தாரும் என்பது தம்மென நின்றது; “இன்னும் தம்மென வெம்மனோரிரப்பின்”1 என்றாற்போல. ஒற்றன் முன் தமது நயப்புத் தோன்ற வுரைப்பின், தமதுரை பொய்யாமென் றஞ்சின ரென்பார், “ஒற்றர்பின் நன்றி தென்று நயந்தன ரந்தண” ரென்றார். அந்தணர் சிராத்தஞ் செய்து வாழ்த்துதல் 196. சென்று நல்லமிர் துண்டது தின்றனர் அன்று மன்னன் யசோதர னன்னையோ டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர் நான்மறை யாளரே. உரை:- நான்மறையாளர் - நான் மறை வல்ல அந்தணர்கள், சென்று - சிராத்த சாலைக்குச் சென்று, நல் அமிர்து உண்டு - நல்ல பாலும் சோறும் உண்டதோடு, அது தின்றனர் - அவ்வெருமை யூனையும் தின்றொழிந்தனர், அன்று - அப்போது, மன்னன் யசோதரன் - வேந்தனாகிய யசோதரன்; அன்னையோடு - தன் தாயாகிய சந்திரமதியுடனே, ஒன்றி - ஒருங்கிருந்து, தேவர் உலகினுள் - விண்ணுலகத்தில், வாழ்க - இனிது வாழ்வானாக, என நன்று சொல்லினர் - என்று பெரிதும் வாழ்த்துரை பல வழங்கினர் எ-று. சிராத்தம் செய்யும் அந்தணர் வயிறார இனிய உணவுண்டு ஊனைக் கறித்து மனவமைதியுடன் முன்னோர் உம்பருலகில் இனி துறைக என வாழ்த்தும் இயல்பு கருதி, “மன்னன் யசோதரன் அன்னையோடு ஒன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர்” என்றார். நல்லமிர்து, நல்ல ஆன்பாலொடு சமைத்த சோறு. இனி, நல்லமிர் துண்டது என்றற்கு, நல்ல நீரும், புல்லும், தழையுமே, தின்று வாழ்ந்த எருமையினை என்றலு மொன்று. தின்றன ரென்பது அவருண்டதன் இழிவு தோன்றக் குறித்தது. யசோதரனும், சந்திரமதியும் விலங்குகதியுட் பிறந்து இவர்களால் துன்புறுத்தப் படுவதையறியாது பொய்யே மொழிவது விளங்க, “நன்று சொல்லினர்” என்றும், அவ்வுண்மையினை யுணர்தற்கு அவர் வல்ல நான்மறை பயன் படவில்லை யென்றற்கு “நான் மறையாளர்” என்று கூறினார். ஆடு தன் பழம்பிறப் புணர்ந்து வருந்தல் 197. அத்த லத்தக ராங்கது கேட்டபின் ஒத்த தன்பிறப் புள்ளியு ளைந்துடன் இத்த லத்திறை யான விசோமதி மத்த யானையின் மன்னவ னென்மகன். உரை:- அத்தலத் தகர் - அவ்விடத்தே நின்ற ஆடு, ஆங்கு - அப்போது, அது கேட்டபின் - அவ்வந்தணர் கூறியதைக் கேட்ட பின்பு, ஒத்த - அமைந்த, தன்பிறப்பு உள்ளி - தன் பிறப்புக்களை நினைந்து, உடன் உளைந்து - அவற்றுள் அவ்வப்போது நிகழ்ந்த துன்பங்களை நினைந்து வருந்தி, இத் தலத்து இறையான இசோமதி - இந்நிலத்துக்கு வேந்தனான யசோமதி, மத்தயானையின் மன்னவன் - பெரிய தலையையுடைய யானைகளையுடைய அரசனும், என் மகன் - எனக்கு மகனுமாவான் எ-று. ஆங்கு - அப்போழ்து. தான் ஈட்டிய வினைக்கேற்பத் தோன்றிய பிறப்புக்க ளாதலின், “ஒத்த தன் பிறப்பு” என்றார்; தான் எடுத்த பிறவிக் கேற்ற உணர்வினால் உணர்ந்துரைப்பது குறித்து இது கூறினாரென்று மாம். பிறப்புக்களை நினைவு கூர்ந்தவழி, அவ்வப் போது நிகழ்ந்த துன்பமெல்லாம் தோன்றி நெஞ்சினை யுருக்குதலின், “உடன் உளைந்து” என்றார். இது முதல் ஏழு பாட்டுக்களில் அதன் நெஞ்சில் நிகழ்ந்த நினைவுகளைத் தொகுத்துரைத்துரைக்கின்றா ராதலின், இதன்கண், இவ்வேந்தன் என் மகன் என்று நினைந்த தென்றார். மத்த யானையின் மன்னவன் என்பதனை என் பதனோடேற்றி மன்னனான யசோதரனாகிய என் மகன் என்று உரைப்பினு மமையும். 198. இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் இதுவென் யானிவ ணின்னண மாயதே. உரை:- இது - இந்நகரம், என்மாநகர் - எனது பெரிய அரசநகராகிய, உஞ்சயினிப்பதி - உஞ்சயினிநகரமாகும், இது என் மாளிகை - இஃதுயான் இருந்த அரண்மனையாகும், இது எலாம் - இவையாவும், என் உழைக்கலம் - என்னுடைய உழைக்கலப் பொருளாகும். இவர் என் உழையாளராம் - இவர்கள் என் உழைப் பரிசாரகர்க ளாவார்கள், இவண் - இவ்விடத்தே, யான் இன்னண மாயது இது என் - யான் இவ்வாறாகிய இந்நிலை யாதாம் எ-று. மாநகராகிய உஞ்சயினிப்பதி யென இயைக்க, உழைக்கலம் பொன்னாலும் வெள்ளியாலு மாகிய கலங்கள். இதுவெலாம், ஒருமை பன்மை மயக்கம். உழையாளர், பரிசனத்தார்; பணியாளருமாம். இச்சிராத்த சாலையில் ஆடாய்ப் பிறவி யெடுத்துநிற்பது கண்டு தனக்குள் இனைந்து கூறுதலின், “இதுவென் யான் இவண் இன்னண மாயது” என்றார். 199. யான்ப டைத்த பொருட்குவை யாமிவை யான்வ ளர்த்த மதக்களி றாமிவை யான ளித்த குலப்பரி யாமிவை யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. உரை:- இவை - இக்குவியல்கள், யான் படைத்தபொருட்குவை யாம் - யான் ஈட்டிய செல்வத்தின் திரளாகும், இவை - இக்களிறுகள், யான் வளர்த்த மதக்களிறாம் - யான் பேணி வளர்த்த மதஞ்செறிந்த களிற்றியானைகளாகும், இவை - இக்குதிரைகள், யான் அளித்த குலப்பரியாம் - யான் புறந்தந்த குலத்திற் பிறந்த குதிரைகளாகும், யான் விளைத்த வினைப்பயன் - யான் செய்துகொண்டவினையின் பயன், இன்னது - இத்தன்மைத்தாயிற்று எ-று. பொருட்குவை, பொன்னும், மணியும், முத்தும், நிறைந்த குவியல். களிற்றி யானைகளின் வன்மை தோன்ற, “மதக்களிறாம்” என்றார். “ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்”1 நன்கமைந்த குதிரை யென்றற்கு, “குலப்பரியாம்” என்றும், இவற்றை யுடையனா யிருந்த தன்மையும், தனது பிறப் பெளிமையும் நினைந்து வருந்திக் கூறலின், “யான் விளைத்த வினைப்பயன் இன்னதே” என்றும் கூறினான். 200. இவர்க ளென்கடைக் காவல ராகுவர் இவர்க ளென்படை நாயக ராகுவர் இவர்க ளென்னிசை பாடுந ராடுநர் இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. உரை:- இவர்கள் - இங்கே பணிசெய்கின்ற காவலர், என் கடைக் காவலர் - என் வாயில் காக்கும் காவலராவர், இவர்கள் - இங்கே வாளேந்திவரும் பெருவீரர், என்படை நாயகராகுவர் - என்னுடைய படைத்தலைவராவர், இவர்கள் - இம்மாகதர் சூதர் முதலாயினர், என் இசைபாடுநர் - என்புகழை இருந்தும் நின்றும் ஏத்திப்பாடுபவராவர், இவர்கள் - இக்கூத்தர், ஆடுநர் - என் புகழைப்பாடிக் கூத்தியற்றுவோராவர், இவர் என் பரிவாரம் - இவர்கள் என் பரிசனத்தாராவர் எ-று. ஒன்று நின்றே ஏனையது முடிக்கும் என்னும் இயைபு பற்றி “படைநாயகர்” என்றதனால் வாளேந்தி நிற்கும் பெருமையும், “இசைபாடுநர்” என்றதனால், மாகதர், சூதர், வேதாளிகர், பாணர், விறலியர், புலவர் முதலாயினார் இருப்பும், “ஆடுநர்” எனவே, கூத்தருண்மையும் பிறவும் கொள்ளப்பட்டன. “இறப்பே எதிர்வே யாயிருகாலமும், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி”1 என்பதனால் இவை யமைந்தன வென அறிக. மேலே வந்த வற்றிற்கும் வருவனவற்றிற்கும் இதுவே அமைதியாகக் கொள்க. 201. என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் தன்ன மென்னடை யாளமிர் தம்மதி மன்னு தன்மறை யானொடு வைகுமோ என்னை செய்தன ளோவிவ ணில்லையால். உரை:- நஞ்சு பெய்து - யானுண்ணும் உணவில் நஞ்சு கலந்து கொன்று, என்னை இன்னணமாய் இழைத்த - என்னை இவ்வாறு பலபிறவி யெடுத்துத் துன்புறச் செய்த, அன்னமெல் நடையாள் - அன்னம்போலும் மெத்தென்ற நடையினையுடையவளான, அமிர்த மதி - அமிர்தமதியாகிய என் மனைவி, மன்னும் - எனக்குப்பின்னும் சாவாதிருந்த, மறையானொடு - கள்ளக்காதலனான அட்டபங்கனுடன், வைகுமோ - கூடியுறைகின்றாளோ, இவண் இல்லையால் - இவ் விடத்தே அவன் காணப் படாமையால், என்னை செய்தனளோ - அவனையும் என்னைக் கொன்றதுபோலக் கொன்றொழித்தாளோ அன்றி வேறு யாது செய்தாளோ, தெரிந்திலதே எ-று. தன்னை நஞ்சூட்டிக் கொன்றதே ஏதுவாகத் தான் பல்வகைப் பிறப்புக்களை யெடுத்துத் துன்புறுவதாகக் கருகின்றமையின், “என்னை நஞ்சு பெய்து இன்னணமாய் இழைத்த” என்றும், அவள் அக்கொடுமையை யிழைத்த காலத்தும் அவள் மேனி நலமும் நடையழகும் நினைவில் நின்று நிலவுதலால், “அன்ன மென்னடை யாளமிர்தம் மதி’ யென்றும் கருத்துக்கள் எழுந்தன. அமிர்தம்மதி - விகாரம். தானிறந்த பின்னரும் அட்டபங்கன் உயிரோடிருந்து அவளது தீயொழுக்கத்துக்குத் துணை செய்து வந்தமை மயிற்பிறவியில் கண்டமையால் “மன்னு தன் மறையானொடு” என்றும், அம்மயிற் பிறவிக்குப் பின் பல்பிறப்பெடுத்து அவனைக் காணாதொழிந் தமையின், மறையானொடு “வைகுமோ” என்றும், அவனை இத்தகப்பிறவிக்கண் காணக்கூடிய நிலையிற் போந்தும் காணாமை தோன்ற, “இவண் இல்லையால்” என்றும், தன்னைக் கொன்று கொலைச்சுவை கண்டதனால் அவனையும் கொன்றொழித் தனளோ என்று கருதுதலின் “என்னை செய்தனளோ” என்றும் கூறினான். மறையான், மறைந்த தீ யொழுக்கத்தை யுடையவன். ஓகாரம், ஐயம். ஆல், ஏதுப்பொருட்டு. இழைத்த வென்னும் பெயரெச்சத் தீறு விகாரத்தால் தொக்கது. 202. அசைய தாகி யரும்பட ரொன்றிலா இசைய லாதன யானுற வித்தலைத் தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் வசையின் மன்னவன் வானுல குய்க்குமோ. உரை:- அசையதாகி - இயங்குவதாகிய திணைக்கண் தோன்றி, அரும்படர் ஒன்று இலா - பொறுத்தற்கரிய துன்பம் பல வுடையனவும், இசையிலாதன - உணர்வுச் சிறப்பில்லாதனவுமாகிய பிறப்புக்களை, யான் உற - யான் அடைய, இத்தலை - இவ்விடத்தே, தசை தினாளர்கள் தங்களின் - ஊனுணவுகொள்ளும் இம்மாக்களால், இவ்வசையின் மன்னன் - இந்தப் பழிப்பினையுடைய வேந்தன், என்னை வானுலகு உய்க்குமோ - என்னைக் கொன்று விண்ணுலகு அடைவிப்பானோ தெரியவில்லையே எ-று. அசையது - அசைதலை யுடையதாகிய திணை; அஃதாவது இயங்குதிணை, நிலைத்திணை யென்ற திணைவகை இரண்டனுள் ஒன்று. இவற்றை வடநூலார் முறையே சரம், அசரம் என்ப. ஆகுதல், ஈண்டுத் தோன்றுதல், “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்”1 என்புழிப் போல. ஒன்று இலாதன வெனவே பலவாயின; ஒன்றின் மிக்கது பலவாதலின். பொருள்களின் நலந்தீங்குகளைப் பகுத்துணருஞ் சிறப் பால் ஒருவற்கு இசையுண்டாதலின், அப்பகுத்துணர் விலாதவை “இசையிலாதன” எனப்பட்டன. தசை தின் ஆளர் - ஊன் தின்றலாகிய தொழிலைச் செய்பவர். ஈண்டு இவர்கள் சிராத்தஞ் செய்யும் அந்தணர்கள் என அறிக. இவ்வந்தணர்கள் ஊனைத்தின்று தின்று யசோதரன் துறக்கத்தே இன்புறுக என்று கூறவும், இவ் யசோதரன் பல்வகைப் பிறவி யெடுத்துத் துன்புறுதலின், இப்போதும் தன்னைக் கொன்று வருத்துவனோ என்று அஞ்சுதலின், “என்னை இவ்வகையின் மன்னவன் வானுலகுய்க்குமோ” என்றான். ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கிக் கோடலை யின்றித் தன்னை அந்தணரும் வேந்தனும் வானுலகு செலுத்துவரென்பது முழுத்த பொய்யே என்பது தோன்ற இது கூறினா னென்றுமாம். அந்தணர் கூறும் பொய்ம்மொழி கேட்டு உயிர்க்கொலை புரிந்து பழியும் பாவமும் எய்துவது கண்டு, யசோமதியை “வசையின் மன்னவன்” என்றான். வசையினை யுடையானொருவன் பிறனை வானுலகில் உய்ப்ப னென்பது ஒரு காலும் கூடாதென ஒருநயந் தோன்றல் காண்க. 203. பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் யாது செய்தன னோவினை யேனிடை யாது செய்குவ னோவுண ரேனினி. உரை:- பேதை மாதர் - பேதையாகிய அமிர்தமதி, பெய்நஞ் சினில் எஞ்சி - கலந்துண்பித்த நஞ்சினால் யான் உயிரிழந்து, மேதினிப் பதியாதல் விடுத்தபின் - இந்நாட்டிற்கு அரசனாமுரிமை யினை இவற்கு விட அதனையேற்றுக்கொண்ட பின்னர், யாது செய்தனனோ - இவ்ய சோமதி எத்தகைய வினையைச் செய்தானோ, வினையேன் இடை - தீவினை பல செய்துள்ளவனாகிய என்பால், யாது செய்கு வனோ - எதனைச் செய்வானோ, இனி உணரேன் - இப்பொழுது யான் உணர்தற்கில்லேன் எ-று. கழிகாமத்தால் அறிவிழந்து தன்னைக் கொண்டவனை நஞ்சூட்டிக் கொன்ற கொலைப்பாவத்தைக் கொண்டு, அவனை வழி பட்டுத் தேவருலகமெய்தும் ஊதியத்தை யிழந்தமையின், அமிர்த மதியைப் “பேதை மாதர்” என்றார். பேதமை என்பதொன்றி யாதெனின் ஏதங் கொண் டூதியம் போகவிடல்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க, “கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த, உருவத்தின் நீங்கிக் கற்பத் துத்தம தேவராவர்” (739) என்று மேருமந்தரபுராணம் கூறுவது காண்க. தான் உயிரோடிருக்கும் போதே தன் மகனுக்கு அரசியலை நல்குதலின்றி, தான் இறந்தபின் அவன் தானே மேற் கொள்ளச் செய்தமையின், “இத் மேதினிப் பதியாதல் விடுத்தபின்” என்றும் அரசனாகித் தான் செய்த வினையின் பயனைத் தான் நுகர்ந்தறிந்து வருந்துதலின், தன் மகனும் அதனையே புரிந்து கெடுகின்றமை கண்டு அஞ்சுகின்றமை தோன்ற “யாது செய்தனனோ” என்றும், தன்னையும் கொன்றுவிடுவன் எனக் கருதுவது தோன்ற, “யாது செய்குவனோ” என்றும் கூறினான். ஓ, இரக்கப் பொருட்டு. யசோதரனாகிய ஆடு இறந்து வேறோர் ஆடாகப் பிறத்தல் 204. இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா வினையி னாகிய வெந்துயர் தந்திடத் தனையன் மாளிகை தன்னுள நோக்குமுன் சினைகொண்ட டாடுயிர் சென்று பிறந்ததே. உரை:- இனையவாகிய - இவைபோல்வனவாகிய, சிந்தைகள் - எண்ணங்கள், எண்ணிலா வினையின் ஆகிய வெந்துயர்தந்திட - எண்ணற்ற தீவினைகளால் உண்டாகிய கொடிய துன்பத்தை ஒரு பால் தந்து வருத்த, தனையன் மாளிகை - மகனாகிய யசோமதியுடைய அரண்மனை நிகழ்ச்சிகள், தன் உளம் நோக - தன் மனத்தை மற்றொரு பால் வருத்த, முன் சினை கொண்ட ஆடு - முன்னே சினைகொண்டு நிற்கும் ஆடொன்றின் கருவில், உயிர் - இத்தகரின் உயிர், சென்று பிறந்தது - போய் மீட்டும் ஆடாகப் பிறந்தது எ-று. மேற்கூறிய எண்ணங்கள் பழைய நினைவுகளை யெழுப்பி யசோதரன் மனத்தைப் புண்படுத்தினமையின், “சிந்தைகள் வெந்துயர் தந்திட” என்றும், எண்ணத்தால் பிறந்த நோயுடன் வினைகளா லுண்டாகும் துன்பமும் உடன் கூடி வருத்தினமையின், அதனையும் சேரக் கூறினார். தன் மகன் வாழும் அரண்மனையில் நிகழும் உயிர்க் கொலையும் கழிகாமச் செயலும் தகருருவில் நின்று காணும் அவனுக்குத் துன்பம் மிக வருத்துதலின், “தனையன் மாளிகை தன்னுளம் நோக” என்றார். சினை - கருப்பம்; கொண்ட ஆடு, கொண்டாடு என வந்தது. சந்திரமதியாகிய ஆடு எருமையாய்ப் பிறத்தல் 205. சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்தி டங்கரு மாகிய வாடது நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து வந்து மாயிட மாகி வளர்ந்ததே. உரை:- சந்திரமதி நாய் கருநாகமாய் வந்து - சந்திரமதியும், நாயும் கரும் பாம்புமாய்ப் பிறந்திறந்து வந்து, இடங்கரும் ஆகிய ஆடது - முதலையும் ஆடுமாகியது, பல் பொருள் நந்தும் நாடு - பல்வகைப் பொருள்களும் மிகுகின்ற நாடாகிய, கலிங்கத்து வந்து - கலிங்க நாட்டிற்கு வந்து, மாயிடமாகி - எருமையாய்ப் பிறந்து, வளர்ந்தது - வளர்ந்து வருவதாயிற்று எ-று. “பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டால், ஆற்ற விளைவது நாடு”1 என்பவாகலின், “நந்துபல் பொருள் நாடு” என்றார். மயிடம், மாயிட- மென நின்றது; இது வடசொற் சிதைவு. ஆடது - ஆடாகிய உயிர். ஆடது - வளர்ந்தது என இயையும். எருமை உஞ்சயினிக்கு வருதல் 206. வணிகர் தம்முடன் மாமயி டம்மது பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் வணிகர் வந்து மகிழ்ந்துவிட் டார்களே. உரை:- மாமயிடம் அது - அந்தப் பெரிய எருமையானது, வணிகர்தம்முடன் - அந்நாட்டி னின்றும் போந்த வணிகருடன், பணிவில் பண்டம் - குறைவில்லாத விலைப் பண்டங்களை, பரிந்து உழல்கின்ற நாள் - சுமந்து திரியும் நாட்களில், வணிகர் - அவ்வணிக மாக்கள், அணிகொள் உஞ்சயினிப் புறத்து - நாட்டிற்கு அணியாவன வற்றைக் கொண்டுள்ள உஞ்சயினி நகரின் புறத்தில் ஓடும், ஆற்றயல் - சிருப்பிரை யாற்றின் கரையில், வந்து மகிழ்ந்து - வந்து மகிழ்வுடன், விட்டார்கள் - தங்கினார்கள் எ-று. பணிவு, குறைவு. பரித்தல், தாங்குதல். நாட்டிற்கு அணியாவன, பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், காவல் என்ற ஐந்துமாம்; “பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம், அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”1 என்ப. உஞ்சயினிப் புறத்தே ஓடும் யாறு சிருப்பிரை யென்பது, “இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்” (179) என்பதனால் முன்பே கூறப்பட்டது. விடுதல் - தங்குதல். அரசற்குரிய மாவினை அவ்வெருமை கொன்றுவிடுதல் 207. தூர பாரஞ் சுமந்த துயரது தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் ஆர மூழ்கிவந் தம்மயி டங்கரை சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே. உரை:- ஓடும் சிருப்பிரை யாற்றினுள் - மிக்கோடும் நீரையுடைய சிருப்பிரை யாற்றில், தூரம் - நெடுந்தொலைவு, பாரம் சுமந்த துயரது தீர - மிக்க சுமையைச் சுமந்து வந்த வருத்தமானது நீங்க, அம்மயிடம் - அவ்வெருமை, ஆரமூழ்கி - நீரில் நன்றாகக் குளிர மூழ்கி, கரைசேரு மாவினை - கரையிடத்தே மேய்ந்து கொண்டிருந்த குதிரை யொன்றினை, சென்று - வெகுண்டு சென்று, எறிந்திட்டது - பாய்ந்து கொன்று விட்டது எ-று. எருமையினம் தமக்குண்டாம் மெய்வருத்தம் போதற்குச் சேற்று நீரில் மூழ்கிக் கிடத்தல் இயல்பாதலின், “தூரபாரம் சுமந்த துயரதுதீர” என்றும், “ஆரமூழ்கி” என்றும் கூறினார். இவ்வாறு மூழ்கியதால் மெய்வருத்தம் போக்கி, பண்டை வன்மை பெற்றுச் செருக்கித்திரியும் அவ்வெருமை, கரையிடத்தே பசும்புல்லை மேய்ந்துகொண்டிருந்த அரசனது அரசவன்னமெனப்படும் குதிரையைத் தன் கோட்டாற் குத்திப் பாய்ந்து கொன்ற தென்பார், “கரைசேரு மாவினைச் சென்றெறிந்திட்டது” என்றார். “கரைசேருமா” எனவே, அஃதொரு குற்றமும் செய்யாதிருக்க, இவ்வெருமை தானே சென்று கொன்று மேலும் தீவினை யீட்டிக்கொண்ட தென்றாராயிற்று. சென்றது மாவினை “எறிந்திட்ட” தென்றதனால், வெகுண்டு சென்றமை பெற்றாம். சுமந்ததுயர் - சுமந்துபோந்ததனால் உண்டாகிய துயர். பெயரெச்சம், காரணப்பொருட்டு. அதனை யரசற்கு உழையவர் கூறல் 208. வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் அரைச வன்ன மெனும்பெய ராகுநம் அரைச வாகன மாயது போயதென் றுரைசெய் தாரர சர்க்குழை யாளரே. உரை:- வரைசெய்தோள் மன்ன - மலை போன்ற தோள் களையுடைய வேந்தே, வணிகர் மயிடத்தால் - வணிகருடைய எருமையினால், அரைச வன்னம் எனும் பெயராகும் - அரசவன்னம் என்ற பெயரையுடையதாகிய, நம் அரைசவாகனமாயது - நம் அரசர் ஊரும் குதிரை யானது, போயது என்று - கொல்லப்பட்டு இறந்து போயிற்று என்று, உழையாளர், உழையவர் அரசர்க்கு உரை செய்தார் - அரசற்குரைத்தார்கள் எ-று. செய்தல் - உவமப்பொருட்டு. “வணிகர் மயிடத்தால்” என்றனர், சொற்பல்காமைப் பொருட்டு. அரசன்பாலுள்ள குதிரைகள் பலவாதலின், தெரித்துணர்த்தற்கு, “அரைசவன்ன மெனும் பெயராகும் அரைச வாரணம்” என்றும், கொல்லப்பட்டு இறந்ததென்று சொல்லு தற்கஞ்சி, “போயது ” என்றும் உரைத்தார்கள். அரசன் திருமுன் தடையின்றிச் சென்று உணர்த்துவோரவர்களாதலின், “உழையாளர்” என்றார். உரைத்தார் என்னாது “உரைசெய்தார்” என்றதனால், உழையாளர் செவ்வி யறிந்து அவன் தம்மை வெகுளா வகையில் எடுத்தோதினமைபெற்றாம் பெறவே, அவன்கழிசினத்த னென்று வருஞ் செய்திக்கு ஏது கூறியவாறாயிற்று. வணிகர் பொருளையும் எருமையையும் கவர்ந்து வருக என மன்னன் பணித்தல் 209. அணிகொள் மாமுடி மன்ன னழன்றனன் வணிகர் தம்பொருள் வாரிம யிடமும் பிணிசெய் தெம்முழை வம்மெனப் பேணினான் கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். உரை:- அணிகொள் மாமுடிமன்னன் - அழகுகொண்ட பெரிய முடி சூடிய வேந்தனான யசோமதி, அழன்றனன் - உழையாளர் கூறக் கேட்டு வெகுண்டு, வணிகர் தம் பொருள் வாரி - வணிகர் கொணர்ந்திருந்த பண்டங்களைக் கவர்ந்து, மயிடமும் பிணிசெய்து - எருமையையும் பிணித்துக் கொண்டு, எம் உழைவம் எனப் பேணினான் - எம்பால் வருக என்று உழையவரைப் பணித்தானாக, கணிதம்இல் பொருள் - கணக்கிட முடியாத அவ்வணிகர் பொருளை, சென்று கவர்ந்தனர் - உழையவர் சென்று கவர்ந்துகொண்டு போந்தனர் எ-று. அரசர் சென்னிக் கண் முடியாய்க் கவிந்து அழகு செய்தலின் அணிகொள் மாமுடி யாயிற்று; இனி, சீரிய வேலைப்பாட்டால் அழகு கொண்ட முடியென்றும், தோளணி, மார்பணி முதலிய அணிகட்குத் தலைமையான அணியாதல்பற்றி இவ்வாறு கூறப்பட்ட தென்றுமாம். “ஆயுமாறறியாத” மன்னனாதலின், எருமை செய்த குற்றத்துக்கு அதனையே யன்றி, அதனையுடைய வணிகருடைய பொருளையும் கவர்ந்துவருக என்பான், “வாரி எம்முழை வம்மெனப் பேணினான்” என வறிக. குதிரையின் விலையாதல் வேறு தண்டமாதல் கொள்ளாது, அவர் பொருளனைத்தையும் ஒன்று மொழியாது கவர்ந்தான் என்பது பட, “கணிதமில் பொருள் சென்று கவர்ந்தனர்” என்றார். எருமையைத் துன்புறுத்தல் 210. அரச னாணை யறிந்தரு ளில்லவர் சரண நான்கினை யுந்தளை செய்தனர் கரண மானவை யாவுங் களைந்தனர் அரண மாமற னில்லது தன்னையே. உரை:- அரணமாம் - உயிர்க்குப் பாதுகாப்பாகிய, அறனில்லது தன்னை - அறத்தின் துணையில்லாததாகிய அவ்வெருமையினை, அருள் இல்லவர் - அருள் சிறிதும் இல்லாதவராகிய ஏவலர், அரசன் ஆணை அறிந்து - வேந்தனிட்ட கட்டளையை மேற்கொண்டு, சரணம் நான்கினையும் - நான்கு கால்களையும், தளைசெய்தனர் - இறுகக் கட்டி, கரணமானவையாவும் - கருவிகளாகிய கண், காது, கொம்பு, வால் முதலியவற்றை, களைந்தனர் - ஒவ்வொன்றாக அரிந்தெறிந்து துன்புறுத்தினர் எ-று. ஏனைப் பொருளும் இன்பமும் போலாது உயிரொடுகிடந்து அது வீடுபெறுதற்கு உறுதுணையாதலின், “அரணமாம் அறன்” என்றும், அத்துணையைச் செய்து கொள்ளாது கெட்ட சந்திரமதியின் உயிரை, “அறனில்லது” என்றும் கூறினார். அரசன் நேரே ஆணை யிடாது தண்டநாயகர் வாயிலாக எருமையைத் துன்புறுத்தப்பணித் தமையின், ஆணையை “அறிந்து” என்றும், அதனை இவ்வேவலர் அருளில் செயலென ஓராது நிறைவேற்றத் தலைப்பட்டமையின் “அருளில்லவர்” என்றும் கூறினார். அவரது செயலில் அருளின்மையை, உறுப்புறுப்பாக அறுத்து வருத்துவதை வகுத்துரைக்கு மாற்றாற் புலப்படுத்தார். கண், காது, கொம்பு, வால் முதலியன புறக்கருவிக ளாதலின், அவற்றைக் “கரணமானவை” என்றார் போலும். எருமையூனைச் சமைத்தல் 211. கார நீரினிற் காய்ச்சி யுறுப்பரிந் தார வூட்டி யதன்வயி றீர்ந்தவண் சார நெய்பெய் சலாகை கடைந்தபின் கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர். உரை:- உறுப்பு அரிந்து - அவ்வெருமையின் உறுப்புக் களைச் சிறிது சிறிதாகத் துண்டித்து, காரநீரினில் - காரச்சுவைமிக்க நீரில் பெய்து, காய்ச்சி - வேகவைத்து, ஆரஊட்டி - வேண்டும் பொருள்களை நன்கு சேர்த்துச் சுவையூட்டி, அதன் வயிறு ஈர்ந்து - அதனுடைய வயிற்றைப் போழ்ந்து, அவண் - அவ்விடத்தே, சாரநெய் பெய் - ஆன்பாலின் சாரமாகிய நெய்யைப் பெய்து, சலாகை கடைந்தபின் - இருப்புச் சலாகையை நுழைத்துக் கடைந்தபிறகு, கூர்முள் மத்திகையின் - கூரிய முள்ளையுடைய மத்தினால், கொலை செய்தனர் - கொந்தினர் எ-று. மிளகும் அதற்கினமாகிய பிறவும் கலந்த சாற்றினைக் “காரநீர்” என்றும், காயமும் பிற விரைப்பொருளும் கலந்து புலால் நாற்றத்தைப் போக்குதலின், “ஆரவூட்டி” என்றும் கூறினார். வயிற்றுப் பகுதியுள் இருப்புச் சலாகை துழைத்துக் குடைந்து தூய்தல்ல தனைப் போக்கி, நெய்பெய்து தூய்மைசெய்து, முள்ளுடைமத்தால் கடைந்து மிகச் சிறுசிறு துண்டுகளாகச் சமைப்பது தோன்ற, “கொலை செய்தனர்” என்றார். சமைத்தன ரென்னாது, “கொலை செய்தன” ரென்றதனால், ஊனை வாங்கிச் சமைத்தலும் கொலையே என்பது உணர்த்தியவாறாயிற்று. அமிர்தமதி எருமையூனை யுண்டல் 212. ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி மேய மேதித் தசைமிக வெந்ததை வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள் மாயை செய்தன ளென்றனர் மற்றையார். உரை:ஆயிடை - அப்போழ்து, கொடியாள் அமிர்தம் மதி - கொடியவளான அமிர்தமதி, மேய மேதித்தசை - சுவைபொருந்திய எருமைக் கறியில், மிகவெந்ததை - குழைய வெந்த கறிகளை, வாயில் வைத்து - வாயில் வைத்துச் சுவைத்துண்டு. வயிற்றை வளர்த்தனள் - வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டாள், மற்றையார் - அவள் செய்கைகளைக் கண்டிருந்த ஏனையோர், மாயை செய்தனள் என்றனர் - இவள் தனது கொலைப் பண்பினை இதுகாறும் நாம் அறியாவாறு மாயம் புரிந்தனள் காண்மின் என்று இகழ்ந்து பேசிக்கொண்டனர் எ-று. செய்யுளாதலின் சுட்டுநீண்டு யகரமெய் பெற்றது. மேய என்றதற் கேற்ப எழுவாய் வருவிக்கப்பட்டது; தன் மனைக்குப் போந்த எருமையூ னென்றுமாம். “வாயில் வைத்து” என வேண்டாது கூறியது, ஊனுணவின் புன்மை முடித்தற்கு. மனத்தின்கண் நல்லுணர்வும் அருளும் வளராது, பெருந்தீனி கொள்ளும் இயல்பே அவள்பால் பெருகிற்றென்பார், “வயிற்றை வளர்த்தனள்” என்றார். அரசமா தேவியா யிருந்து, உயிர்கள்பால் அருள் செய்யாது பெருந்தீனி தின்னும் பெருவிலங்காகும் இயல்பு பிறர் அறியாவகை மறைத் தொழுகிய துணர்ந்து கூறலின், “மாயை செய்தனள்” என்று இகழ்ந்தனர். அமிர்தமதி ஆட்டுக்கறியுண்ண விழைதல் 213. இன்னு மாசை யெனக்குள திவ்வழித் துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது தன்னி னாய குறங்கு கடித்தது தின்னி னாசை சிதைந்திடு மென்றனள். உரை:- எனக்கு இன்னும் ஆசையுளது - எனக்கு மற்றுமோர் ஆசை யுண்டு, இவ்வழி - இவ்விடத்தே, துன்னி வாழ்தகர் ஒன்று - வந்து இனிது வளர்ந்துவரும் ஆடொன்று, உளது - இருக்கிறது, இன்று - இற்றைப்போல், அது தன்னினாய குறங்கு - அதனுடைய தாகிய துடைக் கறியினை, கடித்து - மென்று, அது தின்னின் - அதனைத் தின்பேனாயின், ஆசை சிதைந்திடும் - என் ஆசை நோய் நீங்கும், என்றனள் - என்று அமிர்தமதி தன் உழையோர்க்கு உரைத்தாள் எ-று. எருமையூனைத் தின்ற ஆசையினால் மேலும் ஊனுண்பதற்கே அமிர்மதியின் வேட்கை மிகுவதால், “இன்னுமாசையெனக்குளது” என் றும், அவ்வாசை தீர்தற்கு ஊன்தேடிச் செல்லவேண்டிய துன்பமில்லை, நம்மரண்மனைக்கண்ணே வந்துவளரும் ஆடொன்றுளது; அதன் துடையூனே என் விருப்பத்தை நிறைவுசெய்யு மென்பாள், “அது தன்னினாய குறங்கு கடித்தது தின்னினாசை சிதைந்திடும்” என்றும் கூறினாள். இவ்யாடு புலைச்சேரியில் வளராது, அரண்மனைப் புறத்தே வளர்ந்தமையின், “இவ்வழித் துன்னி வாழ்தக ரொன்று” என்றாள் அமிர்தமதியின் செயற்கொடுமை கூறல் 214. அனங்க னான பெருந்தகை யண்ணலைச் சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் மனங்கொ ளாவொரு மானுட நாயினை. உரை:- அனங்கனான பெருந்தகை யண்ணலை - காமனை யொத்த பேரழகு படைத்த பெரியோனான யசோதரனை, சினங் கொளா - வெகுண்டு, நஞ்சினில் உயிர் செற்றனள் - விடம் தந்து உயிர் கொன்றாள், கனம்கொள் காமம் கலக்க - மிகுதியுற்ற காமவேட்கை நெஞ்சினைக் கலக்கவே, மனம் கொளா - மனத்தால் சிறிதும் விரும்பப் படாத, ஒரு மானுடநாயினை - மக்களுடம்பும் நாயியல்புமுடைய இழிந்தோனொருவனை, கலந்தனள் - கள்ளத்தால் காமப் புணர்ச்சி செய்தாள் எ-று. அனங்கன், உருவமில்லாத காமன். தகை, அழகு. அண்ணல், பெருமை. பிறனொருவன்பாற் சென்ற காமவேட்கையால் இவ்வண்ணல் பால் விருப்பின்மையேயன்றிச் செற்றமும் கொண்டு நஞ்சூட்டிக் கொலை புரிந்தன ளாகலின், “சினங்கொளாவுயிர் செற்றனள் நஞ் சினில்” என்றார். கனம் - மிகுதி. கலக்குதல் - நன்னினைவு நிகழா வண்ணம் உள்ளத்தை அலைத்தல்; “காதலால் கடைகின்றதுகாமமே*” என்றார் பிறரும். மனம்கொளல் - விருப்பம் கொள்ளுதல். உருவத்தால் மக்களையும், இயல்பினால் நாயினையும் ஒத்திருத்தலின், அட்ட பங்கனை “மானுடனாய்” என்றார்; பிறிதொன்றால் காமநலம் துய்க்கப் பட்ட நாயினைத் தானும் நச்சி அவ்வின்பம் துய்க்கும் நாய்போலப் பிறனுக்குரியாளைத் தானும் நச்சி யின்பந்துய்த் தொழுகுதலின் நாயுவமம் கூறப்பட்டது. அமிர்தமதி குட்டநோயடைதல் 215. குட்ட மாகிய மேனிக் குலமிலா அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் நட்ட மாகிய நல்லெழின் மேனியள் குட்ட நோயிற் குளித்திடு கின்றநாள். உரை:- குட்டமாகிய மேனி - குட்டநோய் பொருந்திய மேனி யையுடைய, குலமிலா - நற்குடிப் பிறப்பில்லாதானாகிய, அட்டபங் கனோடு - அட்டபங்கனென்னும் யானைப் பாகனுடன், ஆடியமர்ந்த பின் - கழிகாமக் கள்ளாட்டயர்ந்ததன் விளைவாக, நல்லெழில் நட்டமாகிய மேனியள் - நலம் மிக்க தன்னழகு கெட்டழிந்த உடம் பினையுடையளாய், குட்டநோயில் - குட்டநோயுற்று, குளித்திடு கின்ற நாள் - துன்பக் கடலுள் மூழ்குங் காலத்தில் எ-று. ஏனை நோய்வகை யெல்லாவற்றினும் போக்குதற்கரிய பெரு நோயால் மேனி உருக்குலைந்ததனோடமை யாது, நற்குடிப்பிறப்பு இல்லாமையால் நற்குண நற்செய்கையும் இல்லாதவன் அட்டபங்கன் என்றார், அமிர்தமதி தன் மேனிநலம் கெட்டு உருக்குலைந்து துயருறு தற்கு அவன் ஏதுவாதலின். ஆடி யமர்ந்த பின் என்றது, கழிகாமத்தால் அவனோடு இழிந்த காமவின்பத்தைக் கள்ளத்தாற் பெற்று இனிதிருந்த காலம், அவனால் அவட்குண்டாகிய நோய் மிகமிகக், குறைந்து இன்ப நுகர்ச்சிக்கு வேண்டும் வன்மையும் கிளர்ச்சியும் இலவாகிய நிலையினைச் சுட்டி நின்றது. பின்னர் நிகழ்வதாகலின், விளைவினைப் “பின்” என்றார். நட்டம் - இழவு. துன்பக் கடற்குவாயில் குட்டநோய் செய்தமையின், அதன்கட் கிடந்து மூழ்கித் துயருறுவாளை, “குட்ட நோயில் குளித்திடு கின்ற நாள்” என்றார். குளித்திடுகின்ற என நிகழ் காலத்தாற் கூறியது, கரையேற மாட்டாது அதன்கண் கிடந்து அழுந்துவது தோன்றுதற் கென்க. குட்ட நோயால் அமிர்தமதிக்குண்டாய அழிவினைக் கூறல் 216. அழுகி நைந்துட னஃகு மவயவத் தொழுகு புண்ணி னுருவின ளாயினள் முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள். உரை:- அழுகி - புண்ணுற்று, நைந்து - தேய்ந்து, உடன் அஃகும் - உடனுக்குடன் இற்று வீழ்ந்து குறையும், அவயவத்து - உறுப்புகளுடன், ஒழுகு புண்ணின் உருவினளாயினள் - அழிநீர் கசிந்தொழுகும் புண் பொருந்திய உடம்பினை யுடையளாய், முழுகுசீயின் - உடல் முழுதும் ஒழுகும் சீயினால், முடைப்பொலி மேனியள் - முடைநாற்றம் நாறும் மேனியை யுடையளாய், தொழு - குட்டநோயின் முதிர்ச்சியால், வல் - நீக்குதற்கரிய, பல் பிணிநோய் களும் - பலவாய் வருத்தும் நோய்களையும், துன்னினாள் - அடைந்தாள் எ-று. தொழுநோய் பற்றிய உடம்பு புண்ணுற்றவிடத்து, உள்ளே யிருக்கும் தசையும், நரம்பும், எலும்பும், வலியழிந்து நீராயுருகிக் கெடுதலின், உறுப்புக்கள் ஆங்காங்குக் குறைந்து போதலின், “அழுகி நைந்துடன் னஃகும் அவயவத்து” என்றும், உருகி யிழியும் நீர் அடையறாது ஒழுகுதலின், “ஒழுகு புண்ணின் உருவினள்” என்றும், இயற்கை யானன்றிச் செயற்கையாற் பெற்றதாகலின், “ஆயின” ளென்றும், புண்ணிடந்தோறும் ஒழுகும்சீ உடல் முழுதும் வார்ந்தொழுகுதலால் “முழுகுசீ” என்றும், சாக்காடன்றிப் பிறி தொன்றானும் தீராநோய் என்றற்கு, “வல்பல் பிணிநோய்களும்” என்றும், இவற்றை இவள்தானே தேடிக்கொண்டமையின், “துன்னினாள்” என இவள்மேல் வைத்தும் கூறினார். நோயென் றொழி யாது பிணிநோய் என்று சிறப்பித்தது, நோய்க்குக் காரணமான தீவினையின் இயல்பையும், அதனின் நீங்குதற்குரிய நெறியும் முயற்சியும் அறிந்து செய்யவிடாது, தாம் நல்கும் துன்பத்தையே நோக்கி மெலியுமாறு உள்ளத்தைப் பிணித்தலாகிய இயல்பு தெரித்தற்கு என்க. “அங்கமெலாம் குறைந்தழுகு தொழு நோயராய்*” எனப் பெரியாரும் இந்நோயின் இயல்பு கூறுதல் காண்க. அயலார் அமிர்தமதியைப் பழித்துரைத்தல் 217. உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் இம்மைச் செய்த வினைப்பய னேயிவை எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல. உரை: உம்மை - முற்பிறவிகளிற் செய்த, வல்வினையால் - வலிய தீவினையால், உணர்வு ஒன்றிலள் - நல்லுணர்வு சிறிதும் இல்லா தொழிந்த இவ்வமிர்தமதி, இம்மை - இப்பிறப்பில், செய்த வினைப் பயனே - செய்த தீவினையின் விளைவுகளே, இவை - இப் பல் பிணி நோய்களாகும், இனி இவ்வினை - இப்போது செய்யுந் தீவினைகள், எம்மையும் நின்றிடும் - எப்பிறப்பிலும் நிலைபெற நின்று இவட்குத் துன்பத்தைச் செய்யும், இவள் பொன்றினும் - இவள் இவ்வுடம் பொழித்து இறந்தாலும், பொன்றல் - இவ்வினைகள் ஒழியா, பொய்ம்மை யன்று - இவ்வுரை பொய்யன்று மெய்யாம் எ-று. முற்பிறவியிற் செய்த வினைப்பயனே இப்பிறப்பில் ஊழாய் நின்று நலந்தீங்குகளைப் பயப்பதாகலின், அமிர்தமதி நல்லுணர்வு இழத்தற்கு “உம்மை வல்வினை” ஏதுவாயிற் றென்றார். “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் னுண்மை யறிவேமிகும்”1 என்று சான்றோரும் கூறினர். உண்மை, ஊழ்வினை. உணர்வின்மைக்கு உம்மை வல்வினை யேதுவாகவே, இம்மையி லெய்தும் துன்பத்துக்கு ஏது இஃ தென்பார், “இம்மைச் செய்த வினைப்பயனே யிவை” என்றார். ஏகாரம் பிரிநிலை, உம்மை வினையிற் பிரித்தமையின். குட்ட நோயுற்ற அட்டபங்கனைக் கூடியமர்ந்த வினையின் விளைவாக இவள் குட்ட நோயுறுவதைக் கண்களாற் காண்டலின், “வினைப் பயனே” என்றா ரென்றும், ஏகாரம் தேற்ற மென்றுமாம். நோயுற்றும் அமைந்தொழியாது மேன்மேலும் தீவினை பல செய்தலின், வினையின் பெருமையும் நோயின் சிறுமையும் ஆராய்ந்து “எம்மையும் நின்றிடும்” என்றார். “செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்”1 என்புழிப்போல, “நின்றிடும்” என்றார். இடும் என்பதற் கேற்பச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. செய்பவள் பொன்றினும் செய்யப்பட்ட வினை அவள் உயிரின்கட் கிடந்து விடாது தொடர்ந்து போந்து தன் பயனை யுறுவித்தலின், “பொன்றல” என்றும், அதனால் வினைக்கு உண்மை யென்ற பெயருண்மை வற்புறுத்த “பொய்மையன்று” என்றும் கூறினார். இவற்றைக் கூறுவோர், அவட்கு அயலேயிருந்து அவள் செய்கை வகைகளைக் கண்டிருந்தவர் எனவுணர்க. உழையர் தகர் கொணரக் கண்டோர் கூறல் 218. நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல் தீய வல்வினை தேடுத லேகொலோ மேய மேதிப் பிணத்தை மிசைந்தளள் மாய மற்றிது தன்னையும் வவ்வுமே. உரை:- நோயின், ஆசைகொல் - நோய் காரணமாகப் பிறந்த ஆசையாலோ, நுண்ணுணர் வின்மைகொல் - நுண்ணிய அறிவில்லா மையாலோ, தீய வல்வினை தேடுதல் கொல் - கொடிதாகிய வலிய வினையை மேலும் ஈட்டுதற்காகவோ, மேய - நம் நகர்க்குப் போந்த, மேதிப் பிணத்தினை - எருமையின் ஊனை; மிசைந்தனள் - உண் டொழிந்தாள், மற்று - அதுவேயு மன்றி, இது தன்னையும் - இத்தகரினையும், மாய - சாவக்கொன்று, வவ்வும் - இதன் ஊனையும் தின்னக் கருதுகின்றாள் எ-று. தொழுநோயுற்றார், அதனால் உடல்வலி குன்றுவது கண்டு அதனைத் தடுக்கும் விருப்பால் உடலைப் பெருக்கும் வளம்படைத்த பொருள்களையே மிகுதியும் தின்ன விழைதலின், “நோயின் ஆசை கொல்” என்றும், ஊனுணவு வேண்டிப் பிறவுயிர்களைக் கொல்லும் தீவினையால் தான் உற்றிருக்கும் நோய் குன்றாது பெருகி, எய்தும் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருத்து மென்பதை நுணுகி யறிந்த வழி, அவ்வாசையினைப் போக்குவரென்றற்கு, “நுண்ணுணர் வின்மை கொல்” என்றும் “தீய வல்வினை தேடுதல்கொல்” என்றும் கூறினார். எ,ஒ - அசைநிலை. ஊனாகக் கொள்ளுமிடத்து, உயிர் நீங்குதலின், “பிணம் ” என்றார். எனவே, அதனைத் தின்பாளைப் “பேய்மகள்” என்று பழித்தாராயிற்று. “இவ்வழித் துன்னி வாழ் தகர் ஒன்றுளது இன்றது, தன்னினாய குறங்கு கடித்தது, தின்னினாசை (213) என்றாளாக, உழையர், அவ்வாறே அதனைப் பற்றிக் கொணர்ந்து நிறுத்தக் கண்டோர் தம்முட் கூறிக் கொள்ளுதலின், “இது தன்னையும் ” என்றார். உம்மை எச்சப்பொருட்டு; இதனைச் சிறப்பும்மையாகக் கொண்டு, இத் தகர் அரண்மனையிடத்தே பெரிதும் பேணி வளர்க்கப்பட்ட தென்று முரைக்க. அறமில் செயலென்றற்கு, “வவ்வும்” என்றன ரென்க. தகர் அமிர்தமதியைக் காண்டல் 219. என்று தன்புறத் திப்படிக் கூறினர் சென்று சேடியர் பற்றிய வத்தகர் ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும் சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ. உரை:- என்று இப்படி - என்று இவ்வாறு, தன்புறத்து - அமிர்த மதியின் பின்னே, கூறினர் - கண்டோர் கூறிக் கொண்டனராக, சேடியர் சென்று - உழையவரான தோழியர் தகர் இருக்குமிடஞ் சென்று, பற்றிய அத்தகர் - பற்றிக் கொண்டு வந்த அவ்யாடு, ஒன்றும் - இவ்விடத்தே கொலை குறித்து நிகழும் (நிகழ்ச்சிகளை), முற்ற உணர்ந்து - முழுதும் கண்டறிந்து, அவள் தன்னையும் - அவ்வமிர்த மதியையும், சென்று - அருகே சென்று, சிந்தையின் நொந்து - மனம் வருந்தி, கண்டது - பார்த்தது எ-று. முதுகினைப் புற மென்பவாகலின் பின்னே என்றற்குப் “புறத்து” என்றார். முன்னின் றுரைத்தற்கு அஞ்சினர், அரசமாதேவியாதலின். பற்றியவழிக் கொணர்தல் தானே பெறப்படுதலின், “பற்றிய” என்றார். தன்னைக் கொல்வதாகிய ஒரு செயல் கருதி நிகழும் நிகழ்ச்சி, முற்றும் நன்கறிதலின் “ஒன்றும் முற்ற வுணர்ந்து” என்றார். தகரொன்றும் என்று கொண்டு, அரசமா தேவியும் உழையருமாகிய பலர் கூடித் தாம் செய்யும் செயல் கொலைவினை யென்பதை யுணராராக, தகர்தான் ஒன்றாயினும் அவர் குறிப்பையும் அதுகுறித்துச் செய்வனவற்றையும் முற்ற வுணர்ந்து கொண்ட தென்றுமாம். அவ் யாட்டின் உயிர், யசோதரனாகிய உயிராதலின், அவள் மேனியும் குறிப்பும் கண்டதும் வருத்தமுற்றமையின், ‘சிந்தையின் நொந்து’ என்றும், பிறர் செலுத்தச் செல்லாது தகர் தானே அவளருகு சென்ற தென்றற்கு, “சென்று கண்ட’ தென்றும் கூறினார். அரோ - அசை. கண்ட தகர் தனக்குள் நினைந்த நினைவுகளை மேல் இரண்டு செய்யுட்களில் விரித்துக் கூறுகின்றார். தகர் தனக்குள்ளே நினைந்து கூறல் 220. தேவி யென்னை முனிந்தனை சென்றொரு பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ பாவி நின்னுரு வின்னண மாயது பாவி யென்னையும் பற்றினை யின்னணம். உரை:- தேவி - அரசமாதேவி யாகிய அமிர்மதியே, என்னை முனிந்தனை - என்னை வெறுத்துக் கொன்றாய், ஒரு பாவிதன்னைச் சென்று மகிழ்ந்த பயன்கொல் - ஏதிலானாகிய ஒரு பாவியைச் சென்று கள்ளத்தாற் கூடி யின்புற்றதனால் உண்டாகிய பயன்போலும், பாவி - ஏடி பாவி, நின் உரு இன்னணமாயது - உன்னுடைய அழகிய மேனி இவ்வாறு குட்டநோயால் பொலிவிழந்து கெட்டது காண், பாவி யென்னையும் - பாவியாகிய என்னையும், இன்னணம் பற்றினை - இப்போது பற்றிக் கொலை செய்யக் கருதிவிட்டாய் எ-று. எனக்குத் தேவியா யிருந்தே என்னை வெறுத்துக் கொன்றாய் என்பவன், இதற்கு ஏது, நீ ஒரு பாவியாகிய அட்டபங்கனைக் கூடியுறைதற்கு இடையூறாவே னென்ற கருத்தே யென்றான். தலைக் கூட்டத்தேயே அவன் குட்ட நோயுற்று வருந்தும் பாவி யென்று அறிந்தும், அருவராது அவனை விரும்பி யென்னை வெறுத்தனை யென்பான், “என்னை முனிந்தனை” என்று எடுத்தோதி, அதற்கேது வினை, “பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொல்” என்றான். முன்பு செய்த பாவத்தால் குட்டநோயுற்று வருந்தும் தான் மீட்டும் பாவமே செய்தலின், “ஒரு பாவி” என்று அட்டபங்கனை வெகுண்டுரைத் தான். பாவிதன்னை மகிழ்ந்த பயன் கொல்” என்பது நடுநிலை விளக்காய் நின்று “பாவி நின்னுரு இன்னணமாயது” என்பதற்கும் ஏதுவாயிற்று. எனக்குத் தாயாகிய சந்திரமதியாகிய எருமையூனைத் தின்றதேயன்றி என்னையும் பற்றித் தின்னக் கருதினை யென்பதுபட நிற்றலின், உம்மை இறந்தது தழீஇயிற்று. இன்னணம் பற்றினை யென்பதற்கும், இவ்விடத்தே பற்றிக் கொணர்வித்தாய் என்றுரைப்பினுமாம். 221. நஞ்சி லன்னையொ டென்னை நலிந்தனை எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை வஞ்ச னைமட வாய்மயி டம்மது துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ. உரை:- வஞ்சனை மடவாய் - வஞ்சனையும் மடப்பமும் உடையவளே, அன்னையொடு - என் தாயாகிய சந்திரமதியுடன், என்னை - உனக்குக் கணவனாகிய என்னையும், நஞ்சில் - விடத்தினால், நலிந்தனை - கொன்றொழித்தாய், எஞ்சலில் சினம் - குறைவில்லாத நின் செற்றம், இன்னம் இறந்திலை - இப்போதும் ஒழிந்தாயல்லை, மயிடம் அது துஞ்சும் - எருமையானது இறந்து கிடக்கும், நின்வயிற்று - உன் வயிற்றின் கண், என்னையும் சூழ்தியோ - என்னையும் அவ்வாறு துஞ்சுவிக்கக் கருதுகின்றாய் போலும் எ-று. “நஞ்சில் அன்னையொடு என்னை நலிந்தனை” என்பது யசோதரனாகிய பிறப்பில் நிகழ்ந்தது நினைந்து கூறல். நல்லோர்பால் தோன்றும் சினம் தனக் கேதுவாயது ஒழிந்தவிடத் தொழியுமாதலின், எஞ்சுத லதற்கியல்பாகவும், இழிந்த நின்பால் அஃது இன்னும் ஒழியாதிருக்கின்ற தென்பான், “எஞ்சலில் சினம் இன்னம் இறந்திலை” என்றான்; முற்றவும் கடியுங்குற்றமன்மையின் எஞ்சலில் சினமெனப் பட்ட தெனினு மமையும். சினமாகிய குற்றத்தின் நீங்குதலைச் சின மிறத்தல் என்பது வழக்கு. மனத்தே யுறையும் வஞ்சத்தைப் புறத்தே தன் பெண்மையால் மறைத்து ஒழுகுதல் பற்றி, அமிர்தமதியை, “வஞ்சனை மடவாய்” என்றான். “மேயமேதித் தசைமிக வெந்ததை, வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்” (211) என்றாராகலின், ஈண்டு அவ்வயிற்கைக் குறிப்பால் சுடுகாடாக்கி†, “மயிடம்மது துஞ்சும் நின்வயிற்று” என்றும், தன்னையும் கொன்று தின்னக் கருதுவதுணர்ந்து “என்னையும் சூழ்தியோ” என்றும் கூறினான். ஓகாரம் - வினா; அறிந்தான் வினா. தகரும் கொன்று தின்னப்படுதல் 222. என்று கண்டு மொறுமொறுத் தென்செயும் ஒன்று* நெஞ்சம துள்சுட நின்றது அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் சென்ற தம்மயி டத்தொடு செல்கதி. உரை:- என்று மொறுமொறுத்து - என்று தனக்குள்ளே மொறு மொறுத்தும், கண்டும் - அமிர்தமதியைப் பார்த்தும், என் செயும் - வேறு ஒன்றும் கூறமாட்டாமையின், ஒன்றும் நெஞ்சமது - கெலைக் குடன் படும் நெஞ்சமானது, உள் சுட - துக்கத்தால் உள்ளத்தை வெதுப்ப, நின்றது - நின்ற அவ்யாடு, அன்று தேவி அலைப்ப - அப்போது அமிர்தமதியாகிய தேவியதனைக் கொல்ல, அழிந்து - இறந்து, அம்மயிடத்தொடு செல்கதி - அவ்வெருமை சென்றமைந்த பிறப்பை, உயிர் சென்றது - அதனுயிர் சென்றடைந்தது எ-று. மேலே குறித்த நினைவுகளை, யாடு, வெளியிட்டுச் சொல்லும் வாய்ப் பில்லாமையால், மொறுமொறுத்தமையின், “மொறு மொறுத்து” என்றும், வேறே தன் கருத்துக்களை வெளியிட மாட்டாமையின், “என்செயும்” என்றும் கூறினார். மொறுமொறுத்து என்பது இரட்டைக் கிளவி. உம்மை விரிக்கப்பட்டது. தன் கருத்துக் களைத் தன் கட்பார்வையால் அவ்வமிர்தமதி உணருமாறு பார்த்த போதும், அவள் கண்டறிதலோ அறிந்து மனமிரங்குதலோ செய்யாமையின், “கண்டும்” என்றார். இவ்வாறு தன் பார்வையும் மொறுமொறுப்பும் பயன்படாமையின், அவ் யாடு கொலைக் குடன்பட்டு நின்ற தென்பார், “ஒன்றும் நெஞ்சம்” என்றும், உடன்பாடு பிறந்த போதும் தன்னைக் கொல்லுவதால் உளதாகும் துன்பம் நினைவிலெழுந்து அலைத்து வருத்தத் தம்பித்து நின்றதென்பார், “உள் சுட நின்றது” என்றும், பின்னர்க் கெலையுண் டிறந்தபின் அதன் உயிர் இன்ன பிறப்பை யடைந்த தென்றற்கு, “அம்மயி டத்தொடு செல்கதி சென்றது” என்றும் கூறினார். ஒடு - அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி. அலைத்தல் - வருத்தல்; ஈண்டுக் கொலைகுறித்து நின்றது. அழிதல் - உடலழிதலால் உயிர் நீங்குதல். நின்ற அது, நின்ற தென விகாரம். “விட்புலம் போயது இறும்பூது போலும்”1 என்புழிப்போல. எருமையுந் தகருங் கோழியாய்ப் பிறத்தல் 223. மற்றம் மாநக ரத்து மருங்கினில் சிற்றிற் பல்சனஞ் சேர்பறைச் சேரியின் உற்று வாரணப் புள்ளுரு வாயின வெற்றி வேலவன் காணவி ரும்பினான். உரை:- அம்மாநகரத்து மருங்கினில் - அந்தப் பெரிய நகரமாகிய உஞ்சயினியின் அருகிலுள்ள , சிற்றில் - சிறு வீடுகளும், பல்சனம் - பல மக்களும், சேர் - வாழ்கின்ற, பறைச்சேரியின் - பறையர் சேரிக்கண், வாரணப்புள் உற்று - கோழி யொன்றின் கருவை யடைந்து, உருவாயின - அவ்விருவர் உயிர்களும் அக்கோழிப் பறவையின் உடம்பெடுத்து வளர்ந்து வந்தனவாக, வெற்றி வேலவன் - வெற்றிதரும் வேலையுடைய வேந்தனாகிய யசோமதி, காண விரும்பினான் - அவற்றின் மெய்ந் நலத்தைக் கேள்வியுற்றுத் தான் கண்ணிற் காண்பதற்கு விழைந்து தன்பால் வருவித்தான் எ-று. அம் மாநகரம் என்புழிச் சுட்டு உஞ்சயினியைக் குறித்து நின்றது. சேரி யென்றமையின் அதற் கியைய நகரத்து “மருங்கினில்” என்றார். ஆங்கு வாழும் பறையர் எளிய வாழ்க்கையர் என்றற்கு “சிற்றில்” என்றும், நிறைந்த மக்களாற் பொலிகின்றமை விளங்க, “பல்சனம்” என்றும், அவரனைவரும் ஒருங்கு திரண்டு செய்வன செய்து வாழும் சேரி யென்பார், “சேர்பறைச் சேரி” என்றும் கூறினார். சேர் - திரட்சி. “சேரே திரட்சி”1 என்பது தொல்காப்பியம். வாரணப்புள் ளென்றார், வாரணம் என்பது யானைக்குஞ் சேறலின். உருவாயின வென்றதனால், பிறந்து நன்கு வளர்ந்து சிறந்தமை பெற்றாம். காண விரும்புதற்குரிய ஏதுவும் பயனும் பெய் துரைக்கப் பட்டன. கோழி யிரண்டனையும் அரசன் கூட்டிலிட்டு வளர்த்தல் 224. கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் சண்ட கன்மியைத் தந்து வளர்க்கெனக் கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் மண்டு போர்வினை வல்லவு மாயவே. உரை:- மன்னவன் - வேந்தனாகிய யசோமதி, கண்டு - அக் கோழிகளின் மேனி நலத்தைக் கண்டு, கண்களி கொண்டனன் - மிக்க மகிழ்ச்சி யடைந்து, சண்டகன்மியை - யானைத்தலைவனைப் பார்த்து, தந்து வளர்க்க என - இவற்றை நம் அரண்மனைக்குக் கொணர்ந்து வளர்ப்பாயாக என்று பணிக்க, அவன் கொண்டுபோய் - அவன் அவற்றை யெடுத்துச் சென்று, கூட்டுள் வளர்த்தனன் - கூட்டிலிட்டு வளர்த்து வரலானான், மண்டு போர்வினையும் - நெருங்கிச் செய்யும் போர்த்தொழிலிலும், வல்ல ஆய - அக்கோழிகள் வன்மையுடைய வாயின எ-று. கண்களாற் கண்டு பெருமகிழ்ச்சி யெய்தினான் என்பது “கண்களி கொண்டனன்” என வந்தது; “கண்களி பெறூஉங் கவின் பெறு காலை”1 எனச் சான்றோருங் கூறுதல் காண்க. சண்டகன்மி, தண்டத்தலைவனு மாவன். சேரிக்கண் மீளச் சேறற் குரியவற்றைத் தான் கூட்டிலிட்டுப் பேணி வளர்க்க விரும்பினமையின், “தந்து வளர்க்க” என்றும், அவற்றைத் தன் பார்வையில் வைத்து நன்கு வளர்த்தற்குரிய இடத்திற் கெடுத்தேகிக் கூடொன்றில் வைத்து வளர்த்தா னென்பார், “கூட்டுள் வளர்த்தனன்” என்றும், வளருமவை, மேனி வனப்பு மிக்குத் தோன்ற வளர்ச்சிபெற்றதனோடு, போர்த் தொழிலிலும் சிறப்பு மிக்கன என்பார், “மண்டு போர்வினையும் வல்ல வாயவே” என்றும் கூறினார். எச்சவும்மை பிரித்துக் கூட்டப் பட்டது. கோழிகளின் மேனிநலம் கூறல் 225. தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம் போற் சிகியென்ன* மருளு மாகன சிகழிகைச்† சுடர்க்கண மணிமுடி தனையொத்த ஒளிரு பொன்னன சரணங்கள் வயிரமுள் ளொப்பில போரின்கண் தளர்வில் வீரியந் தகைபெற வளர்ந்தன தமக்கிணை யவைதாமே. உரை:- தரளமாகிய நயனத்தொடு - முத்துப் போலும் கண்களும், சாபம்போல் அஞ்சிறை - இந்திரவில் போலும் அழகிய சிறைகளும், சிகி என்ன மருளும் - காண்பார்க்கு மயிற்கொண்டையோ என மருட்கை விளைவிக்கும், சுடர்க்கண் மணிமுடி தனையொத்த - ஒளிவிடும் கூட்டமாகிய மாணிக்கமணிகள் இழைத்த முடியை யொக்கும், மாகன சிகழிகை - மிக்க பெருமை பொருந்திய கொண்டையும், ஒளிரு பொன்னன சரணங்கள் - ஒளிதிகழும் பொன் போலும் கால்களும், வயிரம் முள் - வயிரமுட்போலும் கூரிய நகங்களும் உடையனவாய், போரின்கண் ஒப்பில - போர்த்தொழிலில் நிகரில்லாதன வாய், தளர்வில் வீரியம் - குன்றாத வீரத்தால், தகைபெற - அழகுமிக, வளர்ந்தன - அக்கோழிகள் இரண்டும் வளர்ந்தன, அவை தமக்கு - அவற்றிற்கு, இணை - ஒப்பாவன, அவைதாமே - அவையேயன்றிப் பிற இல்லை எ-று. சிகியென்ன மருளும், சுடர்க்கண மணிமுடிதனை யொத்த மாகன சிகழிகை என மாறிக் கூட்டுக. ஆக்கம், ஒப்புப் பொருட்டு, சாபம் எனப் பொதுப்படக் கூறினமையின் பல்வகை வண்ணத்தாற் பொலியும் சிறப்புடைய இந்திரவில் கொள்ளப்பட்டது. கோழியின் கொண்டை சிவந்த ஒளிவிட்டுத் திகழ்வது குறித்து “மணிமுடி தனை யொத்த சிகழிகை” யென்றார். மணி - மாணிக்கமணி, உயர்ச்சியும் வனப்பும் காண்பார்க்கு அவை மயிற் கொண்டை போறலின் “சிகி யென்ன மருளும்” என்றார். மருளும்-மருட்கை விளைவிக்கும்; எனவே, இது “வேறுபடவந்த உவமத்தோற்ற” மாயிற்று. இனி, சிகியுவமம் - மெய்யுவம மென்றும், மணிமுடி நிறவுவமமென்றும் கொள்க. “போரின்கண் ஒப்பில” என்றவர், பிறவற்றால் ஒப்புக் கூறலாம் போலும் எனும் ஐயமறுத்தற்குத் “தமக்கிணை யவைதாமே” என்றார். ஏகாரம் - தேற்றம். தாம், கட்டுரைச் சுவைபட நின்றது. மூன்றாவது சருக்கம் முடிந்தது. நான்காவது சருக்கம் இப்பகுதிக்கண், வேனிற்பருவம் வந்ததும் இன்பநுகர்ச்சி குறித்து யசோமதி வேந்தன் உரிமைமகளிரும் அரசமாதேவியாகிய புட்பா வலியும் உடன்வரச் சென்று, வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து நாடக மகளிரின் ஆடலும் பாடலும் கண்டு இனிதிருந்ததும், அரசனுடன் வந்திருந்த சண்டகருமன் வனத்தின் ஒரு புடையில் யோகம் புரிந்து கொண்டிருந்த அகம்பன ரென்ற முனிவரைக் கண்டதும், அவரை யவன் வணங்கி நின்று யோகத்தின் முடிபொருள் கேட்டதும், அவர் நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்க மென்ற மூன்றையும் ஓதியதும், அணுவிரதம் ஐந்தனையும் விரித்துக் கூறியதும், அவற்றைக் கேட்ட சண்டகருமன், கொலை யொழிந்த ஏனையவற்றை மேற்கொள்வதாகக் கூறியதும், அவர் உயிர்க் கொலையால் உளவாகும் துன்பங்களைக்கூறி யசோதரனும் சந்திரமதியும் உற்ற துன்பங்களை யுரைத்ததும், சண்ட கருமன் கேட்டுச் சைனதருமத்தை முற்றவும் மேற்கொண்டு திரும்பியதும், அக்காலை அவன்பால் இருந்த கூட்டின்கண் வளர்ந்து வந்த கோழிகள் அகம்பனர் உரைத்த அறம் கேட்டுப் பழம்பிறப் புணர்ந்து மகிழ்ச்சி மிகுந்து கூவியதும், அக்குரல் கேட்ட வேந்தனான யசோதமதி வெகுண்டு தன் வில்லை வளைத்து அக்கோழிகளை அம்பெய்து கொன்றதும், அவை புட்பாவலியின் வயிற்றிற்குள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்ததும், அவர்கட்கு அபயருசி, அபயமதி என்று பெயரிட்டதும், அவர்கட்குப் பின் வேறொரு மகன் புட்பாவ லிக்குப் பிறந்ததும் அவனுக்கு யசோதர னென்று பெயரிட்டதும், அவ்வரச குமரன் அரசர்க்குரிய கலை பலவும் தொழில் பலவும் முற்றக் கற்றுத் தேர்ச்சி பெற்றதும் பிறவும் கூறப்படுகின்றன. வேனில் வரவு 226. செந்தளிர் புனைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங் கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச் செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ. உரை:- செந்தளிர் புனைந்த சோலை - செவ்விய தளிர்கள் நிறைந்த சோலையிடத்தே, திருமணிவண்டும் தேனும் - அழகிய நீலமணி போலும் வண்டினமும் தேனினமும், கொந்துகள் குடைந்து கூவும் குயிலோடு குழுமி யார்ப்ப - பூங்கொத்துக்களைக் கோதிக் குடைந்து கூவுகின்ற குயிற்பறவையுடன் கூட்டமாய்க் கூடி ஒலிக்க, செந்துணர் அளைந்து - செவ்விய பூங்கொத்துக்களிலுள்ள தாது படிந்து, தென்றல் - தென்றற் காற்றானது, திசைதிசை சென்று வீச - திசைதோறும் சென்று வீச, வளர்மதுப்பருவம் - பெருகுகின்ற இன்பத்தைச் செய்யும் இளவேனிற் பருவம், எங்கும் வந்து - எவ்விடத்தும் போந்து, உளம் மகிழ்ந்தது - உயிர்களை மகிழ்வித்தது எ-று. புதுத் தளிர் செந்நிறத்த தாதலின் “செந்தளிர்” என்றும் அதன் செறிவு சோலையை அழகு செய்தலின், “புனைந்த சோலை” யென்றும் கூறினார். நீலமணி யென்றற்குத் “திருமணி” யென்றார்; “திருமணி.... புரையுமாமெய்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. கொந்து, கொத்து. வண்டுந் தேனும் தனித்திருந்து ஒலித்தலின்மையின், “குழுமி யார்ப்ப” எனல்வேண்டிற்று. துணர் ஈண்டு ஆகுபெயராய் மலரகத் துள்ள தாதினைக் குறித்து நின்றது. எவ்விடத்தும் சென்று பரவிய தென்பார், “திசை திசை சென்று வீச” என்றார். உளம் - உயிர். மகிழ்ந்தது, பிறவினைப் பொருட்டு. வளர்பருவ மெனவே இளவேனில் என்பது பெற்றாம். பூக்கள் நிறைந்து நறுமணங் கமழும் பருவ மாதலினாலும், இன்பக் களியாட்டிற் கேற்ற காலமாதலினாலும், இளவேனிலை “மதுப்பருவம்” என்றார். மாது, ஓ - அசை. யசோமதி வசந்தமண்டபத்திருத்தல் 227. இணர்தகைப்* பொழிலி னுள்ளா னிசோமதி யென்னு மன்னன் வணர்தகைக் குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு புணர்தகை† வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டர் இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்திருந்தான். உரை:- இணர்தகைப் பொழிலின் உள்ளான் - பூங்கொத்துக்கள் செறிந்த சோலையின் உள்ளே, வணர் தகைக் குழலி - நெறித்த அழகினையுடைய கூந்தலை யுடையவளான, புட்பாவலி எனும் துணைவியோடு - புட்பாவலி யென்னும் தன் வாழ்க்கைத் துணைவி யுடன், புணர்தகை வல்லி புல்லி. வளர் - கூடற் கமைந்த கொடி தழுவி யோங்கிய, இளம் பிண்டி - இளமையான அசோகமரத்தின் கீழமைந்த வயந்த மண்டபத்தில், வண்டர் இணர்ததை தவிசின் ஏறி - வண்டு மொய்க்கும் பூங்கொத்துக்கள் நிறைந்த ஆசனத்தில் ஏறி, இனிதினின் - இன்பத்தோடு, அமர்ந்திருந்தான் - வீற்றிருந்தான் எ-று. இணர் - பூங்கொத்து. வணர் - நெறிப்பு. அரசமாதேவியாதலின், புட்பாவலியைத் “துணைவி” யென்றார். பூங்கொடிகள் பிறிதொரு கொம்பினையாதல் மரத்தையாதல் பற்றிப் படர்ந்து வளர்வ வாகலின், “புணர்தகை வல்லி’ என்றும், அது தன்னைத் தழுவிப் படர்ந்து வளரத் தான் தன் இளமைச்செவ்வி குன்றாது வளரும் நலந்தோன்ற “வல்லி புல்லி வளர் இளம் பிண்டி” என்றும் கூறினார். பிண்டியின் கீழ் புதிது சமைந்த பூம்பந்தர் வசந்தமண்டபமாகும். பிண்டி - ஆகுபெயர்; அவ்வாறு கொள்ளாது, பிண்டியின் கீழ் அமைந்த தவிசென்றே கோடலு மொன்று. வண்டு - வண்டர் என நின்றது; கொம்பு - கொம்பர் என வருதல்போல. பூக்கள் பரப்பிய இருக்கை யாதலின், “வண்டர் இணர்ததை தவிசு” என்றார். ததைதல், நெருங்குதல். இனிதினின் என்புழி, இன்சாரியை. உரிமை மகளிரும் உழையரும்அரசியற் சுற்றமும் தானைத் தலைவரும் சூழ விருந்து இன்புற்றமை தோன்ற, “அமர்ந்திருந்தான்” என்றார். இசைநாடகவின்பந் துய்த்தல் 228. பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பரவை யல்குற்* சூடக மணிமென் தோளின் தொழுதனர் துளங்கத் தோன்றி நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் பாடலி லமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான். உரை:- பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி - பாடகம் கிடந்து விளங்கும் சிவந்த நிறம் பொருந்திய சிறிய அடிகளையும், பரவை அல்குல் - பரந்த அல்குலையு முடைய, நாடக மகளிர் - நாடகப் பெண்கள், துளங்கத் தோன்றி - கண்டோர் நெஞ்சு கலங்க வந்து நின்று, சூடக மணி மெல்தோளின் - வளையணிந்த அழகிய மெல்லிய கைகளால், தொழுதனர் - அரசனைத்தொழுது, ஆடும் நாடகம் நயந்தும் - ஆடுகின்ற நாடகத்தை விரும்பிப் பார்த்தும், நல்லார் பாடலில் - பாடல் மகளிர் பாடும் பாட்டிசையின்கண், ஊறல் அமிர்தம் - சுரக்கும் இசை யமுதத்தை, பருகினன் - செவியார வுண்டும், மகிழ்ந்திருந்தான் - இன்புற்றிருந்தான் எ-று. பாடகம் - காலிலணியும் அணிவகை. கெழு வென்பது கேழ் என வந்தது. சீறடியும் அல்குலு முடைய மகளிர் தோன்றித் தொழுதனர் ஆடும் நாடகம் நயந்தும் என இயையும். ஆடல் பாடல் அழகு என்ற மூன்றாலும் நலம் நிரம்பிக் காண்போர் மனத்துள் காமவேட்கை யெழுப்பி மெலிவித்தலின், “துளங்கத் தோன்றி” என்றார்; “தோன்றி னான் முகஞ்செய் கோலம் துளக்கினாண் மனத்தை யெல்லாம்”1 என்றும், “வெண்ணெய் தீ யுற்றவண்ணம் ஆடவர் மெலிகின்றாரே”2 என்றும் பிறரும் கூறுதல் காண்க. நாடகம் - கூத்து; “அந்தரமகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்”3 என்பது காண்க. பாட்டிசையில் சுரக்கும் இசையின்பத்தை, “பாடலில் அமிர்தவூறல்” என்றார்; “செவிச் சுவையமுதம் இசைத்தலின் மயங்கி” என்றார் பிறரும். அமிர்தமாகிய வூறல் என இயைத்தலு மொன்று. இசையமுதம் பருகியவழிப் பிறக்கும் இன்பத்தால் தன்னை மறந்து கிடத்தலின், “மகிழ்ந்திருந்தான்” என்றார். இசையும் நாடகமும் காமத்தீயைக் கிளர்விக்கு4 மென்பது சமண் சமயக் கோளாதலின், “மகிழ்ந்திருந்தான்” என்றா ரென்றுமாம். சண்டகருமன் அகம்பன முனிவரைக் காண்டல் 229. வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன் தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன் போகி வளமலர் வளத்துள் தீய மனிதரோ டனைய சாதி களைபவன் கடவுள் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான். உரை:- மன்னன் - வேந்தனாகிய யசோமதி, வளையவர் சூழலுள்ளால் - வளையணிந்த மகளிர் கூட்டத்திடையில், மனம் மகிழ்ந் திருப்ப - மனங்களித் திருக்கையில், தளையவிழ்தொடையல் மார்பன் - மலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த மார்பினை யுடையவனான, சண்டமுன் கருமன் - சண்டகருமன் என்பான், வளமலர் வனத்துள் - வளவிய பூக்கள் நிறைந்த கானகத்துள், போகி - சென்று, தீய மனிதரோடு - தீவினை புரியும் கள்வரோடு, அனைய சாதி - அவரை யொத்த தீமை புரியும் உயிரினங்களை, களைபவன் - வேட்டையாடி யழித்து வருபவன், கடவுள் - முனிவனாகிய அகம்பனனை, கண்ணில் கண்டு - தன் இருகண்களாலும் நன்கு கண்டு, கைதொழுது நின்றான் - கைகூப்பி வணங்கி நின்றான் எ-று. வளை - மகளிர் கையிலணியும் வளையல். மகளிர் கூட்டத்தில் அவர் தம் இசை நாடகங்களாலும் மெய்யெழிலாலும் காம வேட்கையைக் கிளர்வித்து மன்னன் மனத்தை மயக்கினமை தோன்ற, “மன்னன் மனமகிழ்ந் திருப்ப” என்றார். மகிழ்தல் - மயங்குதல்; “மகிழ்ந்த தன்றலையும் நறவுண்டாங்கு”1 என்றாற்போல தளை அரும்பு, சண்டமுற்கருமண் அபயமுன் மதியென்பது போல நின்றது. தீமை புரி வோரைக் கடிதல் “களைகட்டதனொடு நேர்”2 என்றலின், “களை பவன்” என்றார். தீயோர் ஐயறிவுபடைத்த மாக்களேயாதலின், ஏனை விலங்கு முதலியவற்றை, தீயமனித ரோடனையசாதி ஏன்றார். தீமை களைந்து போக்குவார் நலம் பெறுதல் போல, சண்டகருமன், களைபவன், “கடவுள், கண்ணிற் கண்டு கைதொழுது நின்றான்”என்றார். கடவுள், முனிவர்; “தென்னவற்பெயரிய தொன் முது கடவுள்”3 என்று சான்றோர் கூறுப. கண்டு பயிலாமை தோன்ற, “கண்ணிற் கண்டு” என்றார். அகம்பனர் சண்டகருமனைக் காண்டல் 230. அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத் தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்தோர் பிண்டித்* தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்தான் முன்னர்† மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான். உரை:- அருவினை முனைகொல் ஆற்றல்-வெல்லுதற்கரிய வினையாகிய பகையை யழிக்கும் ஆற்றல் படைத்த. அகம்பனன் என்னும் நாமத்து ஒரு முனி - அகம்பனனென்னும் பெயரையுடைய ஒரு முனிவன், தனிய னாகி - தனித்து, ஒரு சிறை இருந்த - வனத்தின் ஒரு புடையில் இருந்த, ஓர் பிண்டித்தருமுதல் - ஓர் அசோக மரத்தின் அடியில், யோகுகொண்டு - யோகத்தை மேற்கொண்டு, தன் அளவு இறந்தான் - தன் அறிவெல்லையைக் கடந்து நின்றவன், மருவிய நினைப்பு மாற்றி - தான் யோகத்திற் கொண்டிருந்த நினைவை மாற்றி, முன்னர் - தனக்கு முன்னாக, வந்த - சண்டகருமன் வந்ததை, கண்டிருந் தான் - பார்த்துக்கொண்டிருந்தான் எ-று. வினைகள் - உயிர்கட்குப் பகையாய்ப் பிறவித்துன்பத்துள் ஆழ்வித் தலின், அவற்றை, “அருவினை முனை” யென்றார். இருந்த என்ற பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. பிண்டித் தருமுதல், அசோகமரத்தின் அடிநீழல். இயற்கையறிவும் கல்வி கேள்வியா லாகிய செயற்கையறிவும் கூடிய உண்மையறிவாலும் இனிது தேறமுடியாத நுண்பொருள் யோகத்தால் அறிந்துணரப் படுதலின், “யோகுகொண்டு தன்னள விறந்தான்” என்றார். உண்மை யறிவின் எல்லைக்குட்பட்டது தன்னளவாதலின், அதற்குமேற் பட்டது காண்டலால் “தன்னள விறந்தான்” எனல் வேண்டிற்று. நினைப்பு - துவாதசானுப் பிரேட்சை யென்ப. அவை, அநித்தியம், அசரணம் முதலாகப் பன்னிரண்டாம். இவற்றை “ஏற்ற நினைப்பு’ 1 என்று நீலகேசி கூறுதல் காண்க. இனி ஆப்தன் முதலாகக் கூறும் எட்டென்றும் கூறுவர். தன்பால் வரும் சண்டகருமன், அறம் கேட்டு நன்னெறிசேரவிருத்தலை முன் உணர்ந்தமையின் “கண்டிருந்தான்” என்றார். சண்டகருமன் முனிவனை வணங்கி வினாவுதல் 231. வடிநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி அடீகணீ ரடங்கி மெய்யி லருள்புரி மனத்த ராகி நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான் முடிபொருள் தானு மென்கொல் மொழிந்தருள் செய்க என்றான், உரை:- வடி நுனைப் பகழியானும் - வடித்த கூரிய அம்பினை யுடைய சண்ட கருமனும், மலரடி வணங்கி வாழ்த்தி - முனிவனுடைய தாமரைபோலும் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வாயார வாழ்த்தி, அடிகள் நீர்-அடிகளாகிய நீவிர், மெய்யில் அடங்கி - மெய்ம் மொழி களால் அடக்கமுற்று, அருள்புரி மனத்திராகி - அருளறத்தை விரும்பும் மனத்தையுடையீராய், நெடிதுடன் இருந்து - நெடுங்காலம் தவத்தை மேற்கொண்டிருந்து, நெஞ்சில் நினைவதோர் நினைவு தன்னால் - நெஞ்சின்கண் நினைக்கத் தகுவதொரு நினைவு கொண்டு ஆராயும், முடிபொருள் தானும் - முடிவுகாணும் பொருள், என்கொல் - யாதாகும், மொழிந்தருள் செய்க - சொல்லியருள் வீராக, என்றான் - என்று வேண்டினான் எ-று. சண்டகருமனை, வடிநுனைப் பகழியான் என்றார். அதனைக் கையிலேந்தி அம்முனிவன் திருமுன், வந்திருத்தலின். மெய்யால் வணங்கி வாயால் வாழ்த்தினமையின், “வணங்கி வாழ்த்தி” என்றார். மனத்தே அம் முனிவர்பால் நன்மதிப்பும் தன்னால் வணங்கப் படத்தக்க பெருமையும் நினைத்தமை இச்செயல்களால் விளங்குதலின், அது கூறாராயினார். அடிகள் - உயர்ந்தோரை யழைக்கும் உயர் சொற்கிளவி. தவம் புரியுமிடத்தும், மெய்யும் மொழியும் அடங்கி மனத்தில் ஒடுங்க, மனம் குறித்த பொருட்கண் ஒன்றி நிற்றலின், “மெய்யில் அடங்கி” யென்றான். உயர்ந்தோர்பாலுள்ள பெருஞ் செல்வமாதலின், அதனை விதந்து, “அருள்புரி மனத்திராகி” யென்றும், நெடிதிருந்து நெஞ்சால் ஆராயத்தக்க அந்நுண் பொருள் யாதென அறியும் ஆர்வ மிகுதியால், “நெஞ்சில் நினைவதோர் நினைவுதன்னால் முடிபொருள் தானும் என்கொல்” என்றும் வினவினான். தான் - அசைநிலை. அகம்பனன் அருள் நினைவு கோடல் 232. ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச் சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலு மென்றே பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே. உரை:- கூரறிவுடைய நீரார் - கூர்த்த அறிவினையுடைய பெரியோர், பேரறிவாகி - மிக்க அருள் நிறைந்த அறிவினை யுடையராய், தம்மில் பிறழ்வு இலா உயிரை - தம்மின் வேறுபடாத ஏனைஉயிர்களை, மனத்தினால் குறிப்பது - தமது திருவுள்ளத்தில் அருள் செய்யக் கருதுவது இயல்பாதலால், அம்முனி - அவ்வகம்பன முனிவனும், அவனை நோக்கி - அச்சண்ட கருமனைப் பார்த்து, ஆர் அருள் புரிந்த நெஞ்சின் - நிறைந்த அருளே நினையும் தன்நெஞ்சின்கண், சீர் அருள் பெருகும் பான்மைத் திறத்தன்போலும் - (இவன்) சிறப்புப்பொருந்திய அருளறத்தை மேற்கொண்டோங்கும் முறைமை யுடையன் போலும், என்று - என்று நினைத்து எ-று. இது குளகச்செய்யுள், அறிவிற்குப் பெருமை, அதனால் ஏனை மன்னுயிரைத் தன்னுயிராகக் கருதிச் செய்வன செய்தலாதலின், “பேரறி வாகி” யென்றும், உடம்பாலும் அதற்கியைந்த செயலாலும் வேறு பட்டனவாயினும், உயிர்த்தன்மையில் வேறுபாடின்மை யுணர்த்து வார், “தம்மிற் பிறழ்விலா உயிரை’ என்றும், கூரிய அறிவுடை யார்க்கன்றி, இந்நினைவு பிறவாமையின், “கூரறிவுடைய நீரார்” என்றும் கூறினார். குறிப்பது அவர்க்கியல்பாதல் தோன்ற, குறிப்ப தென்றே யொழிந்தார். அகம்பன முனிகள் இவ்வியல் பினராதலின், இதனை விரித்தோதினார். சண்ட கருமனைக் கண்டபோதே அவன் பால் அருட் பார்வை செலுத்தினரென்றற்கு, “அவனை நோக்கி” என்றும், அதன் பயனாக அவர் மனத்தில் அருள் மிகச் சுரந்தமை விளங்க “ஆரருள் புரிந்த நெஞ்சின்” என்றும், அருளறத்தைச் சீரருள் என்றும், அதனை மேற்கொண்டொழுகும் ஊழ்வயத்த னாதலைத் தன் கூரறிவால் உணர்தலின், “சீரருள் பெருகும் பான்மைத் திறத்தன் போலும்” என்றும் நினைத்தார். ஏகாரம் - அசைநிலை. போலும் - உரையசை. பெரியோர் ஏனை உயிர்கட்கருளைச் செய்யுமியல்பின ரென்பதனை, “விலங்கு வெந்நரகாதிகள் தம்முள் விளிந்தொன்றி விழுநோயொடு முற்றுக், கலங்கி யெங்குங் கண்ணிலவாகிக் கவலை என வெள்ளக்கடலிற் குளித் தாழும், நலங்களில்லாவுயிர் தங்களுக்கெல்லாம் நடுக்க நீக்கியுயர் நன்னிலையீயுஞ், சலங்களில்லாப் பெரியோன்”1 என வருதலால் அறியலாம். பொருட்டன்மை கூறல் 233. அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி நினைந்தவெண் குணங்க ளொடு நிருமல நித்த மாகிச் சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி அந்தகா லத்து நிற்ற லப்பொருட் டன்மை யென்றான். உரை:- அனந்தமாம் அறிவு காட்சி அருவலி போகம் ஆதி - கடையிலா அறிவு கடையிலாக் காட்சி கடையிலா ஆற்றல் கடையிலா இன்பம், முதலாக நினைத்த - எண்ணப்பட்ட, எண் குணங்களோடு - எண்வகைக் குணங்களுடன், நிருமலமாகி - நின்மலமாய், நித்தமாகி - நித்தியமாய், சினம் செறுஆதி இன்றி - வெகுளியும் செற்றமும் முதலிய குற்றங்களில்லாததாய், திரிவித உலகத்து உச்சி - மூவகை யுலகங்கட்கும் உச்சிக்கண், அனந்த காலத்து நிற்றல் - அழிவின்றி நிற்பதாயுள்ளது, அப்பொருள் தன்மை - யோகத்தால் நினைந்து கொண்டிருந்த அம் முடிபொருளாகிய கேவலத்தின் இயல்பு, என்றான் - என்று முனிவன் கூறினான் எ-று. கடையிலா அறிவு முதலாக வரும் குணமெட்டனுள், கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கையும் எடுத்தோதியது இந்த நான்கும் அனந்த சதுட்டயம் எனப்படும் சிறப்பு நோக்கி யென்க. ஞானாவரணீயம் தரிசனா வரணீயம் அந்தராயம் என்ற காதி கருமம் கெட்டவிடத்து இந் நாற்குணமும் தோன்றி, ஏணைத் தொடர்வுகளைக் கெடுத்துத் தூய்மையும் நிலைபேறும் எய்துவித்தலின், “நிருமல நித்தமாகி” என்றும், சினமும் செற்றமு முதலாகிய ஏனைத் தொடர்வுகளான அகாதி கன்மங்கள் கெட்டாலன்றி, “நிருமல நித்தியம்” கை கூடாமைபற்றி, “சினம் செறு வாதியின்றி” என்றும், இந்நிலை மூவுலகத்தின் உச்சிக் கண்ண தாகலின், “திரிவித வுலகத் துச்சி” யென்றும், அவ்விடத்தே திரிபின்றி எஞ்ஞான்றும் நிலை பெறுதலின் “ அனந்த காலத்து நிற்றல்” என்றும் கூறினார். “கடையிலாக் காதிகெடக் காட்சி வலியறி வின்பங் கண்ணே தோன்றி, தொடர் வெலா மறவெறிந்து தோன்றிநாற் குணத்திலுநற் சுயம்புவானார்’1 என வருதலாலறிக. இவற்றின் விரிவை மேருமந்தர புராணம், அட்ட பதார்த்த சாரம் முதலிய நூல்களுட் காண்க. செறு - செற்றம்; ஈற்று அம்முக் கெட்டது. கேவல ஞானத்தைப் பெண்ணாக்கிச் சீவகற்கு மணஞ் செய்வித்த திருத்தக்க தேவரும், அதனை, “பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்புமில்லா, அரிவையைப் பருகி’1 என்றல் காண்க. சினம் முதலியன, கேவல ஞானந் தலைப் பட்டோ ராலும், அனந்த சதுட்டயங்களை யெய்திய பின்னன்றி முற்றவும் கெடுக்கப் படாத வன்மையுடையனவாம்; வெகுளி முதலாயின முற்றவும் கடியுங் குற்றமல்லவெனப் பரிமேலழகியார் முதலிய சான்றோர் கூறுவது இக்கருத்துக்கு இயைந்திருக்கிறது. சண்டகருமன் கூறல் 234. கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்கள் தம்மை இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை பெரியதோர் சோர மென்றான்* பின்னமாச் சேதித் திட்டும். உரை:- இறைவ - இறைவனே, கேளாய் - அடியேன் கூறுமி தனைக் கேட்பாயாக, எம் அரசு அருளினாலே - எங்கள் அரசனது ஆணையால், களவு செய்தோர்கள் தம்மை - களவு முதலிய பெருங் குற்றத்தைச் செய்பவர்களை, இருபிளவாகச் செய்வன் - இரண்டு பிளவுபடுமாறு வெட்டி வீழ்த்துவேன், பின்னமாச் சேதித் திட்டும் - சிறு சிறு துண்டுகளாகச் செத்தினாலும், ஒரு வழியாலும் - ஒருவகையிலும், சீவன் உண்டு எனக் கண்டது இல்லை - சீவன் என்பது உளது என்பதைக் கண்டதே இல்லை, பெரியது ஒர் சோரம் என்றான் - அதனை உண்டென்பது பெரியதொரு கள்ளச் செயலாக இருக்கிறது என்று சொன்னாள் எ-று. நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் முதலியவற்றால் இறைமைக் குணமெய்திய முனிவனாதலின், “இறைவ” என்றான். தண்டத் தலை வனாதலின், சண்டகருமன் தான் களவு முதலிய குற்றஞ் செய்தோரை வாளால் உறுப் பரிந்தும் உடலைப் போழ்ந்தும் பயின்றுள்ளானாதலின் அச்செயல்களால் உயிர்ப் பொருளைத் தான் காணாமையால், உயிரென்பதொன்று உண்டென்பது மாயமாகவுள தென்பான், “பெரியதோர் சோரம்” என்றான். எம் அரசு அருளினால், களவு செய்தோர்கள் தம்மை, செய்வன்; சேதித்திட்டும், ஒரு வழியாலும் கண்டதில்லை, சோரம் என்றான் என இயையும். அரசன் ஆணை யிட்டாலன்றி, குற்றமுடையராயினும் அவரைக் கோறல் அவற்குக் கடமையன்மையின், “எம்மர சருளினாலே” என்றும், போழ்தல் பெரும்பான்மையும் உறுப்பரிதல் சிறுபான்மையு மாதல் தோன்ற, “இருபிளவாகச் செய்வன்” என்றும், “பின்னமாச் சேதித்திட்டும்” என்றும் கூறினான். களவு செய்தோர்கள் என்று விதந்தமையால், ஏனைக் கொலை முதலிய குற்றம் செய்தோரையும் கொள்ளல் வேண்டிற்று. கள்வர் முதலியோர் கூறும் பொய்க் கூற்றினைக் கேட்டுப் பயின்ற பயிற்சி மிகுதியால், சீவன் உண்டென் பார் கூற்று அவற்குப் பெரும் பொய்யாய்த் தோற்றியதென அறிக. சோரம் - களவு. 235. மற்றொரு கள்வன் தன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன் உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்து மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே. உரை:- இறைவனே-, மற்றொரு கள்வன் தன்னை - வேறொரு கள்வனை, வதை செய்யு முன்னும் பின்னும் - கொலை செய்வதற்கு முன்பும் செய்த பின்பும், இற்று எனநிறை செய்திட்டும் - அவன் உடல்நிறை இவ்வளவிற்றென்று நிறுத்தக் கண்டபோதும், பேதம் காணேன் - வேறுபாடு கண்டேனில்லை, ஒருவனை - ஒரு கள்வனை, உற்றது ஓர் குழியின் - தக்கதொரு குழியின்கண் இருத்தி, சிலநாள் மூடிவைத்து - சில நாள் மூடி வைத்திருந்து கண்டபோது, அவன் உயிர்போயிட்ட - அவனது உயிர் சென்ற, வழியொன்றும் - வழி சிறிதும், கண்டிலேன் - பார்த்தது கிடையாது எ-று. வதை - கொல்லுதல். கொலைக்கு முன்னும் பின்னும் நிறை செய்து கண்டபோது நிறையில் சிறிதும் வேறுபாடு தோன்றிற்றன்று என்பான், “பேதம் காணேன்” என்றான். பேதம், நிறையில் வேறுபாடு. கள்வனது உடம்பு இருத்தற் கேற்ப அளவிட்டமைத்த குழியென்பான், “உற்ற தோர் குழியின்” என்றும், காற்று நுழைதற்கும் இடமில்லாத வாறு நன்கு மூடினமை தோன்ற, “மூடி” என்றும் கூறினான். “உயிர் போயிட்ட வழி ஒன்றும் கண்டிலேன்” என்றதனால், மறுபடியும் அகழ்ந்து கண்டமை பெற்றாம். சில நாள் என்புழிச் சின்மை, இரண்டொரு நாளைக் கழிவு எனக் கொள்க. அகம்பன முனிவர் கூறல் 236. பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விறகை யூன்ற ஐயனே யங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணர்தல் வேண்டும். உரை:- ஐயனே - தண்டத்தலைவனே, காட்டம் தன்னை - விறகினை, பல பின்னம் செய்திட்ட அன்று -பல சிறு துண்டுகளாகச் செய்து கண்டபோது, வெய்எரி - அதனைக் கடையப் பிறக்கும் வெய்ய நெருப்பினை, கண்டது உண்டோ - அவ்விறகின்கண் எவரேனும் பார்த்ததுண்டோ, விறகொடு விறகையூன்ற - அவ்விறகை வேறொரு விறகு கொண்டு கடைந்த வழி, அங்கி தோன்றி - நெருப்புப் பிறந்த, அதனையும் எரிக்கலுற்றது - அவ் விறகிரண்டனையும் எரித்து விடுகிறது, இவ்வகை - இவ் வண்ணமே, காணலாகும் - உயிருண்மை யினையும் அறியலாம், என்று நீ உணர்தல் வேண்டும் - என்று நீ அறிக என ஆகமங்கள் உரைக்கின்றன எ-று. காட்டம் - விறகு. ஈண்டுத் தீக்கடையும் விறகின்மேற்று. விற கொடு விறகைக் கூட்டிக் கடைந்தபோது அதனிடைத் தீப்பிறந்தாற் போல, உடலிடத்தே அதனின் வேறாய உயிர் தோன்றும் என்பதாம். இவ்வுயிர் அனாதியென்னும் ஒருவராற் படைக்கப்பட்டதன்று என்றும் சமண் சான்றோர் கூறுப. “வெய்யெரி” எனவே, வெம்மைப் பண்பினை யுடைய தீ அஃதில்லாத விறகிடத்தே காணப்படுவதால் அதனை விறகின் காரியமென்னாது, தீயின் காரணப்பொருள் நிற்றற்குச் சார்பா மென்பதும் கூறியவாறாயிற்று, சிவஞானசித்தி பரபக்கத்து நிகண்ட வாதத்துட் காணப்படும் “அந்த வாய்மொழியினால்” என்ற திருவிருத்த வுரையில், ஆசிரியர் ஞானப் பிரகாசர், “கிரஹ்ய சரீர பரிணாமப்ரமாணாதி நின்ற பஞ்சேந்திரிய மனோவாக் காய ஸ்வாசமாகியவற்றால் ஜீவியா நிற்பன சீவனாகும்” என்று உரைப்பர். வேண்டுமென்ற தற்கேற்ப ஆகமங் களென்பது வருவிக்கப்பட்டது; படவே, இஃது ஆகமத்துக் கூறப்பட்ட தென்பதாம். 237. சிக்கென வாயு வேற்றித் தித்திவாய்ச் செம்மித் தூக்கிப் புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் னிறைசெய் தாலும் ஒக்கமே யொருவன் சங்கோ டொருநில மாளி கைக்கே திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும். உரை:- தித்திவாய் - துருத்தி யொன்றின் வாயை, செம்மி - நன்றாய் மூடி, தூக்கி - நிறுத்து நோக்கி, சிக்கென வாயு ஏற்றி - பின்பு அதன்கண் காற்றை மிக அடைத்து, புக்க அவ்வாயு நீங்கிப் போயபின் - அடைக்கப் புகுந்த காற்று நீங்கிவிட்ட பின்னர், நிறை செய்தாலும் - நிறுத்துப் பார்த்தாலும், ஒக்கும் - இருவழி நிறை யொத்திருக்கும், ஒருநிலம் - ஒரு பரந்த நிலத்தேயிருந்து, ஒருவன், சங்கொடு - சங்கினால், திக்கெனத் தொனி செய்திட்டது - திகதிகவென முழக்கஞ் செய்தது, மாளிகைக்கு - ஒரு பெரு மாளிகைக்குள்ளிருந்தே கேட்க, வந்தது - வந்தடைந்தது, எவ்வழியாகும் - எவ்வாறு வந்ததாம் எ-று. சீவனுண்மை காண்டற்குச் சண்டகருமன் கள்வனொருவனை வதை செய்யும் முன்னும் பின்னும் நிறைசெய்து பார்த்துக் காண மாட்டாமை கூறினானாதலின், அவன் கூற்றிற்கு மறுமொழி கூறுதலுற்றாராய், தித்தியுவமம் கூறினார். தித்தி காற்றடைத்த முன்னும், அடைத்த காற்று நீங்கிய பின்னும் நிறையொத் திருப்பது சீவனுண்மை காண்டற் குச் சண்டகருமன் செய்த செயலை விளக்கி நின்றது. இனி, இவ்வுடற் குள் சீவன் புகுந்து நிலவுந் திறத்தை விளக்குவார் சங்கினோசை மாளிகைக் கண் இருப்போர் செவியிற் கேட்கப் புகுந் திறத்தால் உவமித்தார். சிக்கென என்றது, அடைக்கப் படும் காற்றின்மிகுதி குறித்த குறிப்புக் சொல்; “சிக்கயாத்த”1 என்புழிப்போல இறுகி மிகுதல் மேற்று. செம்முதல் - மூடுதல். தூக்கில் வைத்து நிறுப்பதைத் தூக்குதல் என்றார். ஒக்குமே - ஏகாரம் தேற்றம். சங்கொடு - ஒடு ஆனுருபின் பொருட்டு. மாளிகைக்கு, உருபு மயக்கம். திகதிகவென என்பது திக்கென என வந்தது. 238. இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி மையலுற் றழுங்கி* நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வ† தையமில் காட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். உரை:- சீவன் இயல்புதான் இவ்வகையாகும் - சீவனது தன்மையும் இத்திறமாகும், இயல்பு வேறாம் - இச் சீவனது இயல்பு வேறா தலால் உண்டாவனவாகிய, வெய்ய தீவினைகளால் - கொடிய தீவினைக் கூட்டத்தால், வெருவுறு துயரின் மூழ்கி - அச்சந் தருகின்ற துன்பத்தில் அழுந்தி, மையல் உற்று அழுங்கி - மன மயக்கத்தால் வருந்தி - நான்கு கதிகளுள் கெழுமிச் செல்வது - நால்வகைப் பிறப்புக்களிலும் பிறந்திறந்து பிறந்துழல்வது, ஐயமில் காட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் - நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்க மென்ற மூன்றையுமுடைய சான்றோர், அறிவதாகும் - தெளியவறியும் செய்தியாகும் எ-று. பரந்த நிலவெளியில் பிறந்த சங்கோசை மாளிகையின் கண்ணுள்ள சுவர், முதலியவற்றைக் கடந்து அதனுள்ளே இனிது சென்றடைவது போலச் சீவனும் ஞானாவரணாதி கன்மத் தடைகளைத் கடந்து வீட்டினை யினிதடையும் என்றற்கு, “இவ்வகையாகும் சீவன் இயல்புதான்” என்றார். இவ்வாறு செல்லும் சீவன்களைச் சுபாவ ஞானக் காட்சிகளைப் பெற்ற சீவன்கள் என்ப. இவ்வியல்பு வேறுபட்ட வழி, உலக வாழ்விற் சென்று உழலுமாற்றால் பிறப் பிறப்புக்கட் கேதுவாகிய வினைகளைச் செய்து கோடலின், “இயல்பு வேறாம் வெய்யதீ வினைகளாலே வெருவுறு துயரின் மூழ்கி” என்றார். வேறாம் என்புழி, காரணப் பொருட்டாய பெயரெஞ்சு கிளவி ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட்டு நின்றது. இந்தச் சீவன்களைச் சம்சாரசீவன் என்ப. உலகவாழ்வு, வீட்டு வாழ்வின் மாறுபட்டதாகலின், மாற்றெனப் படும். “மாற்றினின்றது வையக மூன்றினும், ஆற்றவும் பரியட்டமோ ரைந்தினால். தோற்றம் வீதல்தொடர்ந்திடையில்வினைக், காற்றினாற் கதிநான்கிற் சுழலுமே”1 என்று பிறரும் கூறுதல் காண்க. நாற்கதியிலும் பற்பல யாக்கையினை யெடுத்து வினைகள் பயக்கும் துன்பத்தால் அறிவு மயங்குதலின், “மையலுற்றழுங்கி” என்றார். நான்கு கதிகளுள் என்புழி முற்றுமை விகாரத்தால் தொக்கது. ஐயமில் காட்சியெனவே, நற்காட்சியாதல் பெற்றாம். இம்மூன்றுமுடைமை உயர்ந்த வொழுக்க மாகும். “நன்றாய காட்சியுடனாய ஞானந்தன்னோ, டொன்றாகி யுள்ளத் தொழியாமை ஒழுக்க மென்ப”2 என்று சான்றோர் கூறுதல் காண்க. அறிவது எனவே, அறிந்து தீவினைக்கஞ்சி உயிர்கட்குத் தீங்கு செய்தல் முதலிய தீவினை யாவும் துறந்து ஒழுகுவது பெற்றாம். சண்ட கருமன் கூறல் 239. ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர் ஏகசித் தத்த ராய விறைவர்கட் கெளிது போலும் போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க் காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள என்றான். உரை:- ஆகமத்து அடிகள் - அருக பரமன் அருளிய பரமாக மத்தின் மெய்ப் பொருளை யுணர்ந்த அடிகளே, அது - நற்காட்சி முதலிய மூன்றும் கொண்டு ஒழுகுவது, எங்கட்கு - எளியவர்களாகிய எங்களுக்கு, பெரிது அரிது - மிகவும் அரிய செயலாகும், ஏக சித்தத்தராய இறைவர்கட்கு - எல்லாப் பொருளையும் ஒருங்குணரும் ஞானவான்களான தங்கள் போலும் முனிவர்கட்கு, பெரிது எளிது - மிகவும் எளிதாகும், போக சித்தத்தோடு - உலக போகந்துய்க்கும் விருப்புற்ற - மனத்துடன், ஒன்றி - அதன்கண் ஊன்றி நின்று, பொறி வழிப் படரும் நீரார்க்கு - ஐம்பொறிகளின் வழியாக ஓடியுழலும் இயல்புடைய எங்கட்கு, ஆகும் - இயைந்த, உறுதிக்கு ஏது - உறுதிப் பொருளை யடைதற்கு ஏதுவாகியவற்றை, தெருள அருளுக - விளங்க உரைத்தருள்வீராக, என்றான் - என்று சண்டகருமன் வேண்டினான். ஆகமத்தை முனிவர்க்கு உடைமையாக வுரைக்கும் இயைபு பற்றி, “ஆகமத்தடிகள்” என்றான்; “மெய்யுரை முனைவர்தம் ஆகமம்”1 என்று பிறரும் கூறுப. அடிகள் - அண்மை விளி. நற்காட்சி முதலிய மூன்றையும் “திரியோகமருந்து” என்றும், “இரத்தினத்திரயம்” என்றும் ஒருமை வாய்பாட்டாற் கூறும் மரபு பற்றி, “அது” என்றார். பெரிதரிது என்பது ஆகாததொன்றென்பதுபட நின்றது. தானும் பிறிதுமாகிய பொருள் குணம் தோற்றங்களை ஒருங்கே தெளிய வுணரும் கேவல ஞானமுடையோர் என்றற்கு, “ஏக சித்தத்தராய இறைவர்கட்கு” என்றான். ஏனைமுனிவர்களையும் உளப்படுத்தி யுரைக்கும் முன்னிலைப்புறம். போகசித்தம், போகத்தின்கண் மூழ்கி அதனையே நச்சிநிற்கும் மனம். ஏக சித்தத்தரைப் போலப் போகசித்தத்தாரும் உண்மை நெறியுணர்ந்து கடைத்தேறுதற்கு வேண்டும் எளிய நெறி யொன்று அருளல் வேண்டுமென்பான் “உறுதிக்கு ஏது அருளுக தெருள” வென்றான். நன்ஞானம் முதலிய மூன்றாலு மெய்தும் பயனைத் தொகுத்து அகம்பனர் பொதுவகையில் வைத்துரைத்தல் 240. அற்றமி லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு நீரார்க் குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும் முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமை யென்றான். உரை:- அற்றம் இல் அறிவு - குற்றமில்லாத நன் ஞானமும், காட்சி - நற் காட்சியும், அருந்தகை ஒழுக்கம் மூன்றும் - பெறுதற் கரிய தகுதியைக் கொடுக்கும் நல்லொழுக்கமும் என்ற மூன்றும், பெற்றனர் - மேற்கொண்டு, புரிந்து பேணி - மிக விரும்பி, பெருங் குணத்து ஒழுகும் நீரார்க்கு - சிரத்தை முதலிய பெருங்குணங்களுடன் ஒழுகும் இயல் புடையோருக்கு, உம்பர் இன்பம் உற்றிடும் - மறுமைக்கண் தேவருலக வின்பம் உண்டாகும், உலகு இதற்கு - இம்மைக்கண் இவ்வுலகிற்கு, இறைமைதானும் - இறைவனாந் தன்மையும், முன்னுரைத்த பேறு முற்றவும் முறைமை வந்துறும் - முன்னே உரைத்த பேறுகள் முழுதும் முறைப்படி வந்தெய்தும், என்றான் - என்று அகம்பன முனிவன் உரைத்தான் எ-று. அற்றமில் என்பதனைக் காட்சிக்குக் கூட்டுக. தகுதி - விழுப்பம். ஒழுக்கமுடையார்க்கு விழுப்ப மெய்துதல் தகுதியாதலின், “தகை” யென்றார்; அஃது அவ்வொழுக்கத்தானன்றி யெய்துத லரிதாகலின், அருந்தகை யென்றார். குணங்களாவன, “சிரத்தை, பத்தி, அலோ பத்துவம், தயை, சத்தி, க்ஷமை, விஞ்ஞானம்” என்ப. இறைமை, அரசனாந்தன்மை. “கொலையின் திண்மை”1 “தெருளுடைமனத்தின்”2 என்று தொடங்கும் செய்யுட்களில், “குவலயத் திறைமை” முதலிய பல பேறுகளை யுரைத்தலின், “முன்னுரைத்தபேறு” என்றார். முற்றும்மை பிரித்துக் கூட்டப்பட்டது. இஃது ஆத்தனுரைத்த ஆகம முடிபென்பார், “முறைமை” யென்றார். முன்னே தொகுத்துச் சொன்ன பயனை விரித்துரைத்தல் 241. உறுபொருள் நிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும் அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தெளிவு காட்சி நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்பால் இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவு மென்றான். உரை:- உறுபொருள் நிலைமை தன்னை - அறிதற் கமைந்த பொருள்களின் நிலைமையினை, உற்று உணர்வது - தூலசூக்கும மென்ற இருவழியும் பொருந்தி யறிவது, அறிவதாகும் - நன்ஞானமாகும், அறிபொருளதனின் தூய்மை - அறியப்பட்ட பொருளின் உண்மை யியல்பினை, அகத்தெழு தெளிவு - ஐயம் திரிபு முதலாக மனத்தின் கண் எழும் விகற்ப மின்றித் தெளிவது, காட்சி - நற்காட்சியாகும், நறுமலர்ப் பிண்டிநாதன் - நறிய பூக்களையுடைய அசோகமரத்தின் நீழலில் வீற்றிருக்கும் அருகபரமன் அருளிய, நல்லறப்பெருமை தன்பால் - வினையைக் கெடுத்து வீடுபேற்றினைப் பயக்கும் நல்லறங்களின் பால், இறுகிய மகிழ்ச்சி - மிக்குற்ற அன்புபூண் டொழுகுவது, இதனது பிரிவும் என்றான் - இக்காட்சியின்பாற் பட்டதேயாகும் எ-று. அவதிஞான மனப்பரியய ஞானங்களைப்போலாது, கேவல ஞானம் பொருள்களின் தூல சூக்கும நிலைமைகளை ஒப்ப அறிவ தாகலின், அதனையே விதந்து. “உறுபொருள் நிலைமை தன்னை யுற்றுணர் வறிவதாகும்” என்றார். “விதியிவை விகலந் தூலம் சகல நிச்சயமுமாமே”1 என்று பிறரும் கூறினர். இறைவன், ஆசிரியன் முதலாயினார் தன்மையும் ஆகமம் பொருள் என்ற இவற்றின் உண்மை யினையும் ஐயந்திரிபு முதலிய குற்றமின்றித் தெளிவது சம்மியதரிசனம் என்பவாகலின், அதனை, “அறிபொருளதனில் தூய்மை யகத்தெழு தெளிவு காட்சி” யென்றார்; “இறைவனு முனியு நாலு மியாது மோர் குற்ற மில்லா, நெறியினைத் தெளிதல் காட்சியாம்”2 என்பது காண்க. எத்துணை இடையீடுகளுண்டாயினும் மேற் கொண்ட நல்லறத்தின் கண் ஊன்றிய அன்புடையராய் சலியா தொழுகுதல் அக்காட்சியின் பயனென்றற்கு “நல்லறப்பெருமை தன்பால் இறுகிய மகிழ்ச்சி” என்றார். கண்டாய், முன்னிலையசை. தெளிந்த காட்சியின் பயன் அறத்தின்கண் மிக்க காதலுண்டா தலாதலின், அக்காதலை. “இதனது பிரிவு” என்றார். உம்மை- ஆக்கப்பொருட்டு. நல்லொழுக்கத்தின் இயல்பு கூறல் 242. பெருகிய கொலையும் பொய்யுங் களவொடு பிறன்ம னைக்கண் தெரிவிலாச் செலவு சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும் மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி ஒருவின புலைசு தேன்கள் ஒருவுத லொழுக்க மென்றான். உரை:- பெருகிய கொலையும் - மிக்க பாவமாகிய உயிர்க் கொலையும், பொய்யும் - பொய்யுரைத்தலும், களவொடு - பிறர் பொருளை அவர் அறியாமல் களவாடுதலும், பிறன் மனைக்கண் தெரிவிலாச் செலவும் - பிறற்குரியாளை நயந்து வரும் பழிபாவத்தை ஆராய்தல் இன்றிச் சென்றொழுகுதலும், சிந்தை பொருள்வயின் திருகு பற்றும் - மனம் பொருள்மேற் சென்று இவறி நிற்கும் கடும் பற்றும், மருவிய மனத்து மீட்சி - பொருந்திய மனத்தை அவற்றினின்று மீட்டலாகிய, வதம் இவை ஐந்தோடு ஒன்றி - இவ்வணுவிரதம் ஐந்தனோடு பொருந்தி, ஒருவின் - ஆகாவெனச் சான்றோரால் விலக்கப்பட்ட, புலைசு - புலாலுணவும், தேன் - மதுவுண்டலும், கள் - கட்குடித்தலும் ஆகிய இவற்றை, ஒருவுதல் - நீக்கியொழுகுவது, ஒழுக்கம் என்றான் - நல்லொழுக்கம் என்று அகம்பன முனிவன் கூறினான் எ-று. எல்லாப் பாவத்தினும் கொலைப்பாவம் மிகப் பெரிதாதலின், “பெருகிய கொலையும்” என்றான். ஒடு - எண்ணொடு, பிறனுக் குரியாள் ஒருத்தியின் பெண்ணலத்தைக் காதலித்தொழுகுதல் ஆராயு மிடத்து அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினுள் ஒன்றினையும் பயவாது இம்மைக்கட் பழியும் மறுமைக்கண் பாவமும் நரகமும் பயத்தலின், “பிறன்மனைக்கண் தெரிவிலாச் செலவு” என்றார். பொருள்மேற்சென்ற பற்றுள்ளத்தால் தன்பாலுள்ள பொருளை நன்னெறிக்கட் செலவிடாமையேயன்றிப் பிறர் பொருளையும் தீ நெறியால் வெஃகி யொழுகும் குற்றமும் அகப்பட, “சிந்தை பொருள்வயின் திருகுபற்றும்” என்றார். இவ்வகைக் குற்றத்தின் பாலும் செல்லும் உள்ளத்தை மீட்டலைப் பஞ்சாணு விரதம் என்றும், புலைசு தேன்கள் முதலியவற்றை ஒருவுதலை நிவிர்த்தி யென்றும் கூறுப. பஞ்சாணுவதமும் புலைசு முதலிய நிவிர்த்தியும் அறம் பலவற்றிற்கும் மூலமாதலின் மூலகுணமென்றும் வழங்கும். “பெரியகொலை பொய் களவு பிறர் மனை லொருவல், பொருள் வரைதல், மத்தமது புலை சுணலினீங்கல்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. மீட்சி - மீட்டல்; “நெறிவழி யெங்குஞ் செல்லு மீட்சி”2 என்புழிப்போல. இவற்றின் பயன் கூறல் 243. கொலையின தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும் மலைதலில் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை யாக்கும் விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும். உரை:- கூறின் - கொலை முதலியவற்றை ஒருவுதலால் உண்டா கும் பயனைக் கூறுமிடத்து, கொலையினது இன்மை - கொல்லாமையாகிய அறம், குவலயத்து இறைமை செய்யும் - இவ்வுலகத்தின் இறைவனாந் தன்மையை நல்கும், யார்க்கும் - எத்திறத்தார்க்கும், மலைதலில் வாய்மை - மாறுபாடில்லாத மெய்ம்மையானது, வாய் மொழி மதிப்பை ஆக்கும் - வாயாற் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் நன்மதிப்பையுண்டு பண்ணும், களவின் மீட்சி - களவின்கண் செல்லாத மனமுடைமை, விலையில் - மதிக்க முடியாத, பேரருளின் மாட்சி விளைப்பது - மிக்க அருளுடை மைடையாற் பிறக்கும் மாண்பினை யுண்டுபண்ணும், உலைதலில் பெருமை - கெடாத பெருமையினையும், திட்பம் உறு - மனத்திட்பம் பொருந்திய, வலி - பேராண்மையினை யும், ஒழிந்தது ஈயும் - ஏனைய பிறன்மனை நயவாமை கொடுக்கும் எ-று. இறைமை - எவ்வுயிரும் கைகூப்பித் தொழத்தக்க தலைமை. கொல்லாவறமுடையோன் மறுமைக்கண் இறைவனாய் யாவரும் வணங்கும் சிறப்பெய்துவது குறித்து, “கொலையினது இன்மை கூறின் குவலயத் திறைமை செய்யும்” என்றார்; “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லாவுயிருந் தொழும்”3 என்று சான்றோர் கூறுவது காண்க. மனத்தோடு மாறுபாடில்லாத மெய்ம்மை யென்றற்கு, “மலைதலில் வாய்மை” யென்றார். வாய்மை - யாதொன்றும் தீமையிலாதவற்றையே சொல்வதாகலின், அதனையா வரும் விரும்பி யேற்றுச் செய்வன செய்து சிறப்பிப்ப ரென்பார், “வாய்மொழி மதிப்பை யாக்கும்” என்றார்; “உலகத்தார் உள்ளத்துள் எல்லா முளன்”1 என்று சான்றோர் கூறுதல் காண்க. அருளும் செல்வமாகப் போற்றப் படுதலின், “விலையில் பேரருள்” என்றார். சிறுமைக்கு மறுதலையாதல் பற்றி பெருமையை, ‘உலைதலில் பெருமை’ யென்றும், மனத்திட்பம் செய்வினையால் விளங்குதலின், செயற்கரிய செய்யும் பெருமையை யடுத்தும், கூறினார். பிறன் மனையை நோக்காமை பேராண்மை யெனப்படுதலின், “திட்ப முறுவலி” யென்றார். “பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு, அறனொன்றோ ஆன்ற வொழுக்கு”2 என்ப. புறப்பகையை வேறலினும் அகப்பகையாய காமத்தை யடக்கும் திறலுடைமை விளங்க, “திட்பமுறுவலி” யென்று சிறப்பித்தாரென்று மாம். ஏனையது, “பிறன்மனைக்கண் தெரிவிலாச் செலவு” (242). 244. தெருளுடை மனத்திற் சென்ற தெளிந்துணர் வாய செல்வம் பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள் ஒருவிய பயனு மற்றே* யொளியினோ டழகு வென்றி பொருள்மிகு குலனோ டின்பம் புணர்தலு மாகு மாதோ. உரை:- பொருள்வயின் இறுக்கம் இன்மை - பொருட் செல்வத் தின் பால் இவறுதல் இல்லாமை, தெருளுடை மனத்தின் சென்ற - தெருண்ட மனத்தாற் கொண்ட, தெளிந்த உணர்வாய செல்வம் புணர்ந்திடும் - தெளிந்த உணர்ச்சியாகிய செல்வத்தைத் தரும். புலைசு - புலாலுண்டலையும், தேன்கள் - தேனையும் கள்ளையும், ஒருவிய பயனும் அற்றே - நீங்குதலாலுண்டாகும் பயனும் அவ்வண்ணமே, ஒளியினோடு - புகழுடன், அழகு - வனப்பையும், வென்றி - வெற்றியையும், மிகு பொருள் - மிக்க பொருளையும், மிகுகுலனொடு - குடிச்சிறப்புடன், இன்பம் புணர்தலும் - இன்ப நுகர்ச்சியையும், ஆகும் - தரும் எ-று. மனத்தில் தெருளுடைமையாற் பிறக்கும் பயன் தெளிந்த உணர்வாதல் தோன்றத், “தெருளுடை மனத்திற் சென்ற தெளிந்துணர்வு” என்றார். தெளிந்த உணர்வு, தெளிந்துணர்வென நின்றது. உணர்வு கேடில் விழுச்செல்வமாதல் பற்றி, “தெளிந்துணர்வாய செல்வம்” என்றாரென்க. “இறுகிய பற்று இறுக்கமாயிற்று; அஃதாவது கடும் பற்றுள்ளம் காரணமாகப் பிறக்கும் இவறன்மை. உலோபமின்மை அறத்தாற்றிற் பொருளைச் செலுத்தி நல்லுணர்வு முதலிய நலங்களைப் பயக்கும் துணிபுபற்றி இறுக்க மின்மை செல்வம் புணர்த்திடும் என்றார். அணுவிரதம் போலப் புலாலுணவு தேன் கள் முதலியனவும் நற்பயனையே எய்துவிக்குமென்பார், “அற்றே” யென்றும், “ஒளியி னோடழகு வென்றி, பொருள் மிகு குலனோடின்பம் புணர்தலும்” என்றும் கூறினார். மிகுதலைப் பொருட்கு மேற்றுக. மாது - ஓ- அசை. சண்டகருமன் கூறல் 245. சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம் உலைதலின் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்க என்னைக் கொலையினி லொருவ லின்றிக் கொண்டனென் அருளிற் றெல்லாம் அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிக ளென்றான். உரை:- சிலைபயில் வயிரத் தோளாய் - வில்லேந்திய வலிய தோள்களை யுடைய சண்டகருமனே, செப்பிய பொருள் இது எல்லாம் - இது காறும் சொல்லிய பொருள்களெல்லாவற்றையும், உலைதலில் மகிழ்வோடு - கெடாதவூக்கத்துடன், உள்ளத்து உணர்ந்தனை கொள்க - மனத்தே உணர்ந்து கைக்கொள்வாயாக, என்ன - என்று அகம்பனன் சொல்லவே, அடிகள் - அடிகளே, அருளிற்றெல்லாம், தாங்கள் உரைத்தவெல்லாவற்றையும், கொலை யினில் ஒருவல் இன்றி - கொலைத் தொழில் விடுவதையின்றி, கொண்டனென் - ஏனைக் குற்றங்களைக் கைவிடுதலை மேற்கொண்டேன், அலைசெய்வது ஒழியின் - உயிர்களைக் கொல்லும் கொலைத்தொழிலைக் கைவிடு வேனாயின், வாழ்க்கை யழியும் - அடியேனது வாழ்க்கை முற்றும் கெட்டழியும், என்றான் - என்று சண்டகருமன் சொன்னான் எ-று. அணுவிரத மைந்தும் - புலாலுணவு முதலிய நிவிர்த்தியும் மூல குணமென ஒன்றாயடங்குதலின், “செப்பிய பொருள் இது” என்றார். எல்லாம் என்றது. அதன் உட்பகுதி யனைத்தும் எஞ்சாமல் தழுவி நின்றது. இனி, ஒருமை பன்மை மயக்கமென்றுமாம். “அருளிற் றெல்லாம்” என்புழியும் ஈதொக்கும். மகிழ்வு, காரண மாகிய ஊக்கத்தின் மேல் நின்றது. ஊக்கத்துடன் இப்பொருள்களை ஆய்ந்துணர்வதன் பயன் அகத்துட் கோடலாதலின், “உள்ளத்து உணர்ந்தனை கொள்க” என்றார். அனுவிரத மைந்தனுள் கொல்லாமை யொன்றொழிய ஏனை நான்கையும் விடுவதாகக் கூறிய சண்டகருமன், கொலையை விடாமைக்கு ஏது இஃதென்பான், “அலைசெய்வ தொழியின் வாழ்க்கையழியும்” என்றான். மற்று - அசைநிலை. அகம்பனர் கூறல் 246. என்றடி பணிந்து சண்ட னிசைத்தது கடவுள் கேட்டு நன்றினித் தெளிந்தா யல்லை நவிலிசை யமுத நல்யாழ் ஒன்றிய செவிடு மூமும் ஒருவனாற் பெறுத லுண்டோ இன்றுநீ யுரைத்த தற்றே யியம்புவ துளது கேண்மோ. உரை:- என்று - என்பதாக, சண்டன் - சண்டகருமன், அடி பணிந்து இசைத்தது - முனிவன் அடிகளை வணங்கிச் சொன்னதை, கடவுள் கேட்டு - அவ்வகம்பன முனிவன் கேட்டு, இனி - இப்போது, நன்று தெளிந்தாயல்லை - நல்லறத்தைத் தெரிந்து கொண்டாயில்லை, செவிடும், ஊமும் ஒன்றிய ஒருவனால் - செவிடும் ஊமையுமாகிய இருதன்மையும் ஒருங்கு பொருந்திய ஒருவனாலே, நல்யாழ் நவில் இசையமுதம் - நல்ல யாழிடத்தே பிறக்கும் இசையாகிய அமுதத்தை. பெறுதல் உண்டோ - நுதர்தல் முடியாதாம். இன்று- இப்போது, நீ உரைத்தது அற்று - நீ சொன்னதும் அத்தன்மைத்தாதலின், இயம்புவது உளது - நீ அறிய உரைக்கத் தகுவதொன்று உண்டு, கேண்மோ - கேட்பாயாக எ-று. கடவுள் - முனிவன். கொல்லாவிரதம் தலையாய அறமாதலின் அதனை தெளியாதுரைத்த சண்டகருமனுக்கு, “நல்லது தெளிந்தா யில்லை” என்றான். நீரின் வருதல், நீர் நின்றிளகல், வாட்புண்ணுறுதல், உருமேறுண்டல் முதலிய குற்றமில்லாத யாழ் என்றற்கு “நல்யாழ்” என்றும், அதன்பாற் பிறக்கும் இசை அமுதம்போல் இன்பஞ் செய்தலின், “நவிலிசையமுதம்” என்றும், கூர்த்த செவியறிவும் இனித்த மிடற்றோசையு மொருங்குடையார்க்கே இசை இன்பம் செய்தலின், இரண்டுமில்லா ரென்றற்கு, “ஒன்றிய செவிடு மூமும் ஒருவனால் பெருதலுண்டோ” என்றும் கூறினான். அருளின்மையும் மடமையு மொருங்குடைய நினக்கு யாமுரைத்த நல்லற வமிர்தம் செல்லாதாயிற் றென்றானாயிற்று. ஆயினும் அச்சண்டகருமனைத் தெருட்டுவதே கருத்தாதலின், ‘இயம்புவதுளது கேண்மோ’ என்றான். 247. ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகு கண்ணால் ஓருயிர் போல நெஞ்சத் துருகிநைந் துய்ய நிற்றல் வாரியின் வதங்கட் கெல்லா மரசநல் வதம தற்கே சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான். உரை:- ஆர் உயிர் வருத்தம் கண்டால் - நிறைந்த உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் காணின், அருள் பெரிது ஒழுகுகண்ணால் - அருள் மிகப்பெருகும் கண்களோடு, ஓர் உயிர் போல - அதனுயிரைத் தன்னுயிரேபோலக் கருதி, நெஞ்சத்து நைந்து உருகி - மனம் கரைந்து உருகி, உய்ய நிற்றல் - அது தன் வருத்தத்தின் நீங்கி உய்யுமாறு உதவி செய்து நிற்பது; வாரியின் வதங்கட்கெல்லாம் - அறப்பயனுக்கு வருவாயாகவுள்ள விரதங்கள் எல்லாவற்றிற்கும், அரச நல்வதம் - நல்ல தலையாய விரதமாம், அதற்கு - அவ்விரதத்துக்கு, தகவும். செப்ப முடைமையினையும், அத்தயவும் - அதன் பயனாகிய அருளையும், சார்துணையாகக் கொள்க - பொருந்திய துணையாகக் கொள்வாயாக எ-று. ஆருயிர் - பெறுதற்கரிய உயிர் என்றுமாம். உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டால், அவற்றின் பால் மனமிரங்கி வேண்டும் உதவியினைப் புரிந்து அத்துன்பத்தினின்றும் அவற்றை உய்வித்தலே கொலைவினையை ஒருவுதற்குரிய எளிய நெறியென்பார், “நெஞ்சத் துருகி நைந்துய்ய நிற்றல்” என்றார். இரக்கமுளதாதற்கு வாயில் இது வென்றற்கு, “ஓருயிர்போல” நெஞ்சில் கருதுக என்றார். வாரி- வருவாய்; “புயலென்னும் வாரி”1 என்புழிப்போல. தலையாய விரதமென்றற்கு, “அரசநல்வதம்” என்றார். அணுவிரதம் - குணவிரதம் சிட்சாவிரதம் எனப் பலவுண்மையின், “வதங்கட்கெல்லாம்” என்றார். தகுதியை வலியுறுத்தினார், தமக்குண்டாகும் துன்பத்துக்கு ஏது தம்வினையே யன்றிப் பிற உயிர்களல்ல என்பதை யுணர்ந்து நடுநிலை வழுவாது நலம் செய்தற்கு. அந்நலம் செய்தற்கு இரக்கம் நெறியாதலின், “தயவும்” சார்துணையாகக் கொள்க” என்றார். தகவும் தயவும் துணையாகக்கொண்டு உயிர்கட்கு அருளைச் செய்க என விதித்தவாறு. 248. இறந்தநா ளென்னு* முள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க் கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் பிறந்துநீ பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுணரி னுண்டோ.† உரை:- இறந்த நாள் - இறந்த காலத்தில், உள்ளத்து - நின் மனத்தின்கண், என்னும் இரங்குதலின்றி - சிறிதும் இரக்கமுறாது, வெய்தாய் - அச்சத்தைச்செய்து, உயிர் கறந்து உண்டு - உயிரை வருத்திக்கொன்று, கன்றி - அக்கொலை வினையில் அடிபட்டு நின்று, கருவினை பெருகச் செய்தாய் - தீவினையை மிகுதியாகச் செய்தாய், நீ பிறந்து - நீ பல பிறப்பும் பிறந்து, பிறவிதோறும் - அப்பிறப்புக்கள் தோறும், பெருநவை உறுவதெல்லாம் - மிக்க துன்பமெய்துவதெல்லாம், சிறந்த நல் அறத்தின் அன்றி - சிறந்த அறங்களாலன்றி, உணரின் - ஆராயுமிடத்து, தீருமாறு உண்டோ - நீங்கும் வாயில் வேறுளதோ இல்லையன்றோ எ-று. மீட்டற்கருமை குறித்து, “இறந்தநாள்” என்றார்; “இறந்த நாள்யாவர் மீட்பார் இற்றெனப் பெயர்க்கலாமோ”1 என்று தேவரும் கூறினர். என்னும், சிறிதும். வெய்து, அச்சம். ஆக்கம் செய்தன் மேனின்றது. எளிதில் கவரலாகாமை தோன்ற, “கறந்துயிருண்டு” என்றார்; “கறந்து கூற்றுண்ணும் ஞான்று”2 என்று பிறரும் கூறுதல் காண்க. கரந்தென்பது எதுகை நோக்கிக் கறந்தென நின்ற தென்றலு மொன்று. கருவினை யென்புழிக் கருமை கொடுமை மேற்று. கருவைப் பிறப்பாக்கி, அதற் கேதுவாகிய வினையென்றுமாம். “இருளுடை நரகத் துய்க்கும் இருவினை” யென்றும், “இருள் சேர் இருவினை” யென்றும் சான்றோர் வழங்குவது பற்றிக் கருவினை யென்றா ரென்றலு மொன்று. அறவினை துன்பம் கெடுத்து இன்பம் நுகர்வித்தலின், “சிறந்த நல்லறத் தினன்றித் தீருமா றுணரி னுண்டோ” என்றார்; “திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம், பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால், வருந்தினும் அறத்தினை மறத்த லோம்புமின்”3 என்று தேவரும் கூறினார். 249. நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ லென்றிக் கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச் சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய் அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம். உரை:- நிலையிலா உடம்பின் வாழ்க்கை - நிலையில்லாத உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையை, நெடிதுடன் நிறுவல் - நெடிதிருக்குமாறு செய்வேன், என்று - என்று நினைத்து, இக்கொலை யினால் முயன்று - சான்றோரால் வெறுக்கப்பட்ட இவ்வுயிர்க் கொலையினைச்செய்து, வாழும் கொற்றவரேனும் - வாழ்கிற வெற்றி. வேந்தர் யாவராயினும், இவண் - இந்நிலவுலகத்தே, சிலபகல் நின்றார் அன்றி - சில நாட்கள் வாழ்ந்தனரே யன்றி, சிலர் முற்ற இல்லை - பல நாட்கள் வாழ்ந்தவர் பலரிலராயினும் ஒருசிலர் தாமும் கருத்து முற்ற உளரானார் இல்லை, அலைதரு பிறவி முந்நீர் - வருத்துகின்ற பிறவியாகிய கடலில், அனந்தம் காலம் - நெடுங்காலம், அழுந்துவர் - கரையேற மாட்டாது மூழ்கி வருந்துவர் எ-று. நிலையாமையே இயல்பாகவுடைய உடம்பை நிலைபெறச் செய்து கொள்ளக் கருதுதல் பேதைமையென்பார், “நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுடன் நிறுவல்” என்றும், ஊனுணவால் உடம்பை உரம் மிகுவிப்பின் நெடிது வாழலாம் என்ற கருத்தால் கொலை வினையைச் செய்து வாழ்கின்ற ரென்றற்கு, “கொலையினால் முயன்று வாழும் கொற்றவர்” என்றும் கூறினார். உயிர்க்கொலையே தமக்குக் கொற்றமாகக் கருதுவ ரென்றற்குக் “கொற்றவர்” என்றார். நெடிது வாழவேண்டி முயன்றவர் தம் முயற்சி முற்றாமையின், ஒரு சில நாட்களேனும் நெடிது இருந்தார் இல்லை யென்பது விளங்க, “சிலபகலன்றி நின்றார் சிலரிவண் இல்லை” என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்டாய், முன்னிலையசை. பிறப்பிறப்புக் களால் இடையறாது துன்புறுதலின், “அலைதரு பிறவி முந்நீர்” என்றும், முந்நீர் என்றதற் கேற்ப, “அழுந்துவர்” என்றும் கூறினார். ந+அந்தம் - அநந்தம்; அனந்தமென வந்தது; முடிவில்லாமை என்பது பொருள். நெடுங்காலம் பிறவிக்கடலைக் கடந்து கரையேற மாட்டாது மூழ்குவ ரென்பதாம். 250. இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக் கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம் பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. உரை:- ஐய - ஐயனே, இன்னும் ஈது கேட்க - மேலும் இதனைக் கேட்பாயாக, யசோமதி தந்தையாய மன்னவன் - வேந்தனான யசோமதிக்குத் தந்தையாகிய யசோதர மன்னவன், அன்னையோடு - தன் அன்னையாகிய சந்திரமதியுடன் சென்று, மாவின் நல்கோழி தன்னை - மாவால் செய்யப்பட்ட கோழி யொன்றை, கொன்நவில் வாளில் கொன்ற - உயிர்கட்கு அச்சத்தைத் தருகின்ற வாளினால் கொன்றதனாலுண்டாகிய, கொடுமையின் கடிய துன்பம் - கொடுமை பொருந்திய மிக்க துன்பம், பின் - தாம் இறந்த பின்னர், அவர் பிறவி தோறும் பெற்றன - அவர் எடுத்த பிறப்புக்கள் தோறும் அடைந்த வற்றை, பேசல் ஆமோ - சொல்ல முடியுமோ முடியாது எ-று. துன்பம் பெற்றன பேசலாமோ என இயையும். யசோதரனாகிய மன்னவ னென்னாது, “யசோமதிக்குத் தந்தையாய மன்னவன்” என்றார், இப்போது சண்டகருமனுக்கு அரசனாக இருப்பவன் அவ் யசோமதி யாதலின். “அன்னையோடு” என்றது, அவ் யசோதரதற்குத் தாயாகிய சந்திரமதியே மாக்கோழியைக் கொன்ற கொலைவினைக்கு ஏவும் வினைமுதலுமாதல் பற்றி. மாவால் செய்யப்பட்ட தாயினும், உயிருடையது போலத் தோன்றும் தொழில் நலமுடைமை தோன்ற, “மாவின் நல் கோழி” என்றார். கொன்ற - காரணப்பொருட்டாய பெயரெச்சம். இன் - அல்வழிக்கண் வந்தது. கடி, மிகுதி - ஓகாரம், எதிர்மறை. பேசின், அது கூறியது கூறலாய் வேறுபயனொன்றும் விளைவியாமையின், “பேசலாமோ” என்றார். 251. வீங்கிய வினைகள் தம்மால் வெருவரத் தக்க துன்பம் தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார் ஆங்கவர் தாங்கள் கண்டா யருவினை துரப்ப வந்தார் ஈங்குநின் னயல கூட்டி லிருந்தகோ ழிகளா யென்றான். உரை:- வீங்கிய வினைகள் தம்மால் - மிக்குற்ற வினைகளால், வெருவரத்தக்க துன்பம் - அஞ்சத்தக்க துன்பங்களை, தாங்கினர் - தாங்கி, பிறந்து இறந்து தளர்ந்தனர் - பிறந்தும் இறந்தும் மிகத்தளர்ந்து, விலங்கின் செல்வார் - விலங்குகதியுள் அவ்யசோதரனும், சந்திரமதியும் பிறந்துழல்வாராக, ஆங்கு - அவ்விடத்தும், அவர்தாங்கள் - அவர்கள், இருவினை துரப்ப - போக்குதற்கரிய வினைகள் செலுத்த, ஈங்கு - இவ்விடத்தே, நின் அயல - நின்பக்கத்தேயுள்ள, கூட்டில் இருந்த - கூட்டில் இடப்பட்டு வளர்க்கப்படுகின்ற, கோழிகளாய் வந்தார் - கோழியாய்ப் பிறந்து வந்துள்ளார்கள் எ-று. கண்டாய், முன்னிலையசை. பலவாய்ப் பெருகிய பெருக்கம் தோன்ற, “வீங்கிய வினைகள்” என்றார். வெறுக்கப்படுவதோடு எவ்வுயிராலும் அஞ்சப்படுவதுபற்றி, துன்பத்தை, “வெருவரத்தக்க துன்பம்” என்றார். பிறப்பிறப்புக்களால் உயிர்கள் இளைத்துமெலிதல் இயல்பாதலின், “பிறந்திறந்து தளர்ந்தனர்” என்றார். “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” என்று மாணிக்கவாசகப்பெருமானும் கூறியிருத் தலைக் காண்க. விலங்குகதியுட் பிறந்திறந்து துன்புற்ற அவர்களே இங்கேயுள்ள கோழிகளாய்ப் பிறந்துள்ளார்கள் என்றற்கு, “ஈங்கு நின்னயல கூட்டில் இருந்த கோழிகளாய் வந்தார்” என்றும், அப் பிறப்பின்கண்ணும் அவர்கள் ஈட்டிய வினைகள் அவர்களை விட்டில என்பார், “அருவினை துரப்ப வந்தார்” என்றும் கூறினார். 252. உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம் மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால் உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார் செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான். உரை:- அவண் உயிர் இல்லை யேனும் - மாவாற் செய்த கோழியிடத்தே உயிர் இல்லையாயினும், உயிர்க்கொலை நினைப் பினால் - உயிரொன்றைக் கொல்லுவதாகக் கருதிச் செய்த தீ நினை வால், இம்மயரிகள் - இம்மயக்கமுடையவுயிர்கள், பிறவிதோறும் வருந்திய வருத்தம் - எடுத்த பிறப்புக்கள்தோறும் எய்திய துன்பத்தை, கண்டால் - ஆராயுமிடத்து, உயிரினில் - உயிர்களிடத்தே, அருள் ஒன்று இன்றி - இரக்கம் சிறிதுமில்லாமல், உவந்தனர் கொன்று தின்றார் - விருப்பத்துடன் கொன்று வாழ்ந்தவர், செல் இடம் - இறந்தால் புகுமிடம், செயிர்தரு நரகின் அல்லால் இல்லை - துன்பந்தரும் நரகமல்லது வேறில்லை, என்றான் - என்று முனிவன் கூறினான் - எ-று. “மாவின் நல்கோழி”1 யின்பால் கோழியின் வடிவமுண்டே யன்றி உயிரில்லை யாதலின், அதனை வாளால் கொன்ற வழிக் கொலைவினை யில்லையென வெழும் ஐயக் கூற்றினை மறுத்தலின், “உயிரவண் இல்லையேனும்” என மேற்கொண்டு, உயிரில்ல தாயினும் உயிருடைய தெனக் கருதிக் கொலைசெய்தலின் கொலையே யென்பார், கொலைப் பயன்மேல் வைத்து, “உயிர்க்கொலை நினைப்பினால் இம்மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தம் கண்டால்” என்றார். ஒன்று - சிறிதென்னும் பொருள்பட நின்றது. கொலைப்பாவம் செய்தவர்க்கு மறுமைக்கண் நரகமே புகலிடம் என்று வற்புறுத்தவே, “செயிர்தருநரகின், அல்லால் செல்லிட மில்லை” என்றார். நரகின் - இன் - அல்வழிக்ண் வந்தது. சண்டகருமன் கூறல் 253. மற்றவன் இனைய கூற மனநனி கலங்கி வாடிச் செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தெளிவு காதல் பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு பெற்றன னடிகள் நும்பாற்* பெரும்பய னென்று போந்தான். உரை:- அவன் இனைய கூற - அகம்பனன் இவ்வாறு கூற, மனம் நனி கலங்கி வாடி - சண்டகருமன் மனஅமைதி மிகக்குலைந்து வாட்ட மெய்தி, செற்றமும் சினமும் நீக்கி - தன் மனத்தின்கண் குடிகொண்டிருந்த பகைமையும் வெகுளியும் போக்கி, திரு அறத்தெளிவு காதல் பற்றினன் - சைன தருமத்தின் தெளிந்த நிலையின்கண் அன்புகொண்டு, முன்னம் பகர்ந்தன - முன்னே கூறப்பட்டனவாகிய, வதங்கள் அனைத் தும் கொண்டு - விரத மெல்லாவற்றையும் விடாது மேற்கொண்டு, அடிகள் - அடிகளே, நும்பால் - தேவரீரிடத்தே, பெரும் பயன் பெற்றனன் - பெரிதாகிய ஞானப்பயனைப் பெற்றேன், என்று - என்று சொல்லி வணங்கி விடைபெற்றுக்கொண்டு, போந்தான் - தான் முன்னிருந்த இடத்திற்கு வரலானான் எ-று. எண்ணிறந்த உயிர்களைக்கொன்று வாழ்பவனாதலின், சண்ட கருமன், கொலைப்பாவப்பயனை அகம்பனன் கூறக்கேட்டலும் பேரச்சமெய்தி வருந்தத் தொடங்கினானென்பார், “மனம் நனி கலங்கிவாடி” என்றார். மனத்தினது கலக்கம் மெய் வாட்டத்தாற் புலனாதலின், “வாடி” யென்றார். சினத்தின் காரியமாய்த் தீவினை நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்கும் மனநிலை செற்றமாகும். சின மில்வழிச் செற்றம் நிகழாமையின், “செற்றமும் சினமும்” இணைத்துக் கூறினார். வதங்களை முன்பு “பெருகிய கொலையும்” (242) என்று தொடங்கும் செய்யுள் முதலாயவற்றுள் கூறினாராதலின், “முன்னம் பகர்ந்தன” என்றார். பிறவாநெறியருளும் பேரறப்பொருளை மேற் கொண்ட மகிழ்ச்சியாற் கூறுவது தோன்ற, “பெற்றன னடிக ணும்பாற் பெரும்பயன்” என்று கூறினான். கோழிகள் தம்முள் நினைத்தல் 254. கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிகள் தம்மைக் கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட் டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட பாட்டருந் தன்மைத் தன்றே பான்மையிற் பரிசு தானும். உரை:- அடிகள் வாயில் கெழுமிய மொழிகள் தம்மை - அகம்பன முனிவர் தமது வாயாற் சொல்லிய சொற்களை, கூட்டினுள் இருந்த - சண்டகருமன் அமைத்திருந்த கூட்டுக்குள் இருந்த, அக் கோழிகள் - அக்கோழிகள் இரண்டும், கேட்டலும் - கேட்டவுடனே, பிறப்பு உணர்ந்திட்டு - தம்முடைய பிறர்ப்பு வரலாற்றை நினைந் தறிந்து, ஓட்டிய சினத்தவாகி - தம் மனத்தின் கட்கொண்டிருந்த சின முதலிய குற்றங்களை அறக்கடிந்து, உறுவதம் - மிக்கனவாகிய பஞ்சாணுவிரதம் முதலியவற்றை, கொண்டு உய்ந்த - விடாது மேற்கொண்டு பிறவிக்கேதுவாய நெறியினின்றும் நீங்கி உய்தி பெற்றன, பான்மையின் பரிசுதானும் - ஊழ்வினையின் தன்மையும், பாடு அரும் தன்மைத்து - பாடுதற்கு அரிய தன்மையினையுடைத்து எ-று. கோழிகள் மொழிகள் தம்மைக்கேட்டலும் பிறப்புணர்ந்திட்டு சினத்தவாகி, கொண்டுய்ந்த எனக்கூட்டி முடிக்க. உய்ந்து கொண்ட என்பதைக் கொண்டுய்ந்த எனப்பிரித்துக் கூட்டுக. உய்ந்தன எனற் பாலது உய்ந்த என நின்றது. ஓட்டிய சினத்தவாகி என்றது “சென்று சேர்கல்லாப்புள்ள வியன்குளம்” என்பதுபோல நின்றது. அணுவிரதம் பிறவியற முயல்வார்க்கு இன்றியமையாதனவாதலின் “உறுவதம்” என்றார். திருவறம் கேட்கும் இயைபு சிறிதுமின்றிக் கூட்டினுட் கிடந்து, அவ்வறமறியான்பால் வளர்ந்த கோழிகட்கும் அதனைக் கேட்டற் கமைந்த வாய்ப்பினை ஊழ்வினை கூட்டியதுகண்டு வியந்து கூறலின், “பாட்டருந் தன்மைத்தன்றே பான்மையிற் பரிசுதானும்” என்றார். அன்றே என்புழி ஏகாரம் எதிர்மறை யாதலின், ஆம் என்னும் உடன் பாட்டுப் பொருண்மை தோன்ற நிற்பதாயிற்று. தான், கட்டுரைச் சுவை குறித்து நின்றது. உம்மை - சிறப்பு. 255. பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர் மறவியின் மயங்கி மாற்றின் மறுகின மருகு சென்றே அறவிறை யடிகள் தம்மா லறவமிர் தாரப் பெற்றேம் பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வாறே. உரை:-பெயர்ந்தன பிறவிகள் அனைத்தும் - கழிந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும், நெஞ்சில் நினைத்து - தம் நெஞ்சிலே நினைந்து மறவியின் மயங்கி - மறதியால் மயக்கமுற்று, முன்னர் - முன்பெல்லாம், மாற்றில் மறுகினம் - உடல் வாழ்க்கையில் இச்சை யுற்று அறிவிழந்துழன்றோம். அற இறை அடிகள் தம்மால் - சைன தருமத்தின் தலைவராகிய இவ்வகம்பன முனிகளால், அருகுசென்று - அவர் அருகேயிருந்து, அறவமிர்து ஆரப்பெற்றேம் - அறமாகிய அமுதத்தை நிரம்பப் பெற்றோம், பிறவியின் மறுகு வெந்நோய் - பிறவியால் எய்தும் மயக்கத்தின் பயனாக வுளதாகும் வெவ்விய துன்பத்தினின்றும், பிழைத்தனம் - நீங்கினோம், என்றவாறு - என்றபொருள் தோன்றுமாறு கூவின1 எ-று. மனவுணர் வில்லாத பிறவி யெடுத்துள்ளனவாயினும் நினைத் தலைச்செய்தன எனத் தாம் வேண்டிய கருத்தை முடித்தற்கு, “நெஞ்சில் நினைத்து” என்று கூறினார். நினைக்கப்பட்டன இவை யென்பார், “பெயர்ந்தன பிறவிகளனைத்தும்” என்றார். வீடுபேற்றிற் குரிய நெறிக்கட் செலுத்தாது, மேலும் பிறத்தற் கேதுவாய நெறிகளிலேயே உயிர்களைச் செலுத்துதலின், உலக வாழ்க்கையை “மாற்று” என்றும், அதனால் விளைவது, மயக்கமும் அதன் பயனாகப் பிறப்புமே என்றற்கு, “மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம்” என்றும் நினைத்தன. “அறியின் வீட்டதும் மாற்றதும் ஆகுமே”2 என்றும், “மாற்றில் நின்றது வையக மூன்றினும், ஆற்றவும் பரியட்ட மொரைந்தினால், தோற்றம் வீதல் தொடர்ந்திடையில் வினைக், காற்றினாற்கதி நான்கிற் சுழலுமே”1 என்றும் மேருமந்தர புராணம் கூறுதல் காண்க. அறம் கேட்ட பயன் இது வென்றற்குப் “பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தனம்” என்று கூவின. கோழியின் கூக்குரலை யரசன் கேட்டல் 256. அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக் குறைவிலா வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச் செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன் முறுவல்கொண் முகத்து நல்லார் முகத்தொரு சிலைவ ளைத்தான். உரை:- அறிவரன் சரணம் மூழ்கி - அறிவனாகிய அகம்பன முனிகளின் திருவடியை வணங்கி, அறத்தெழு விருப்பம் உள்ளா - சைன தருமத்தின்பால் எழுந்த விருப்பமானது உள்ளத்தே கிளர்ந் தெழுவதால், குறைவிலா அமுதம்கொண்டு - பெருகுகின்ற அவ்வற வமிர்தத்தையுட் கொண்டு, அகம் குளிர்ந்து மகிழ்ந்து கூவ - மனம் குளிர்ப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கெய்தவே அக் கோழிகள் கூவினவாக, செறி பொழிலதனுள் சென்று - மரஞ்செடிகள் செறிந்திருந்த சோலைக்குள் சென்று, மன்னன் செவியினுள் இசைப்ப - அங்கே யிருந்த யசோமதி வேந்தனுடைய செவியில் அக்கூக்குரல் ஒலிக்க, முறுவல் கொள் முகத்து நல்லார் - அவனைக்கண்டு முறுவலித்த முகத்தை யுடையராகிய உரிமை மகளிர் காண, முகத்து - அவர் முகத்திலுள்ள புருவத்தை யொத்த, ஒரு சிலை வளைத்தான் - தன் தனிவில்லை வளைத்து அக்கூக்குரல் வந்த திசைநோக்கி அம்பு தொடுத்து விட்டான் எ-று. முனிவரன் என்பது போல அறிஞருள் உயர்ந்தோன் என்பது பட அறிவான் என்பது நின்றது. அடிவணங்கி வழிபடுவதை அடி மூழ்குத லென்பது பெரும்பாலும் சைன நூல் வழக்கு, “அறிவனசிரண மூழ்கி”2 “அருகனைச் சரணமூழ்கி”3 என்று மேருமந்தர புராணமும் இவ்வாறே சீவகசிந்தாமணி முதலியனவும் வழங்குதலைக்கண்டு கொள்க. பிறவித் துன்பத்தால் வெந்து வருந்திய வருத்தம் நீங்குதலால். “அகம் குளிர்ந்து” கூவின எனவறிக. இருள் படப் பொதுளிய பொழில் என்றற்குச் “செறிபொழில்” என்றும், அன்னதாயினும் அதனுள்ளிருந்த வேந்தன் செவிக்குள் அக்கோழிகளின் கூக்குரல் சென்று ஒலிக்காவாறு தடுக்கும் மதுகையுடைத்தன் றென்பதற்குச் “செறிபொழிலதனுள் சென்று” என்றும் விசேடித்தார். அறத்தின்பாற் சென்ற வேட்கையாற் பிறக்கும் ஞானம் அமுதம்போல் இன்பம் செய்வதுபற்றி, அதனை அமுதம் என்றும், அது மேன்மேலும் பெருகுவதுபற்றி, “குறைவிலாவமுதம்” என்றும் கூறினார் போலும். பிறவிக்கேதுவாய நினைவு செயல்களால் மயங்கிக் கெடுவது நெறியன் றென்பதுபோல அக் கூக்குரல் மன்னன் செவிமுத லிசைத்த தென்பார், “செவியினுள் இசைப்ப” என்றும், அப்பொருண்மை தேர்ந்து நன்னெறிக்கட் செல்லும் ஊழிலனாதலின், வெகுண்டான் என்றும், அதற்கு அவனைச் சூழவிருந்த மகளிர் கூக்குரல் கேட்டுத் திடுக்கிட்டு மருண்டு நடுங்கியதே காரணமென்றும், ஆதலால் அவன் அம்மகளி ருடைய முரிந்த புருவம்போன்ற வில்லைவளைத்து அம்பு தொடுத்து அக் குரல்போந்த திசை நோக்கி விட்டான் என்றும் கூறினார். முகம் - ஆகுபெயர். தன்பால் வைத்து விடுத்த அம்பினை யுதைத்து ஓசையிட்ட கோழிகளைத் தாக்கிக்கொன்ற சிறப்புக்குறித்து, “ஒருசிலை” என்றார். வளைத்தல், விடுத்தற்காதலின், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். கோழிகள் இறந்து மனிதவுடம் பெடுத்தல் 257. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்த லோடும் நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச் சில்லறி வினைக ளேனுந் திருவறப் பெருமை யாலே வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே. உரை:- அவன் - அவ்யசோமதி வேந்தன், சொல் அறிகணையை - சொல்போல விரைந்தேகும் அம்பினை, வாங்கி - எடுத்து, தொடுத்து - வில்லில் தொடுத்து, விடுத்தலோடு - எய்ததும், நல் இறைப்பறவை தம்மை அடுத்து - நல்ல சிறகுகளையுடைய கோழிகளை யடுத்துத் தாக்கி, நடுக்கியது வீழ - கொன்று வீழ்த்தவே, சில் அறிவினை களேனும் - சிலவாகிய பொருளை யறிதலாகிய வினைகளாயினும், திரு அறப்பெருமையால் - சைன தருமங்களாகிய பெருமையுடையன வாகையால். வல்லிதின் - விரைவாக, மறைந்து போகி - அக்கோழி களின் உயிர் உடலின் நீங்கிச்சென்று, மானுடம்பாய - மக்களுடம்பைப் பொருந்தின எ-று. ஒருவரைக்குறித்து ஒரு சொல்லைச் சொல்லியவழி, அச்சொல் அவரைத் தப்பாமற் சென்று சார்தல்போல, ஒன்றைக்குறித்து எய்தவழி, அதனைத் தப்பாமற் சென்று தாக்கும் சிறப்புக்குறித்து, “சொல்லறி கணை” என்றார். இந்திரவில்போலும் சிறகு என முன்னர்ச் 1 சிறப்பித் தமையின், “ஈண்டு நல்லிறைப்பறவை” யென்றார். வீழ, பிறவினைப் பொருட்டு. சின்மை, கேட்கப்படும் பொருள் மேனின்றது. உடலினின்றும் உயிர் நீங்குவது எவர்க்கும் புலனா காமையின் “மறைந்து போகி” என்றார். மானுடம்பு, மக்களுடம்பு. அரசன் தன் கோயிலை யடைதல் 258. விரைசெறி பொழிலி னுள்ளால் வேனலில் விளைந்த எல்லாம் அரசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி முரசொலி கழுமப் புக்கு மொய்ம்மலி குழலி னாரோ டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே. உரை:- விரைசெறி பொழிலினுள்ளால் - மணம் நிறைந்த சோலைக்குள்ளே, வேனலில் விளைந்த எல்லாம் - வேனிற் பருவத்து விளையும் இன்பங்களெல்லாம், அரசனும் அமர்ந்து - வேந்தனாகிய யசோமதியும் விரும்பி நுகர்ந்து, போகி - அதனின் நீங்கிச் சென்று, அகநகர்க் கோயில் எய்தி - அகநகர்க்கண்ணுள்ள தன்னரண் மனையை யடைந்து, முரசொலி கழும - முரசொலி முழங்க, புக்கு - உட்சென்று - மொய்ம்மலர்க் குழலினாரோடு - நெருங்கிய பூவணிந்த கூந்தலையுடைய மகளிருடன், உரைசெயல் அரிய வண்ணம் - உரைத்தற்கு ஒண்ணாத வகையில், உவகையில் மூழ்கினான் - இன்பக் கடலுள் மூழ்கிக் கரைகாணாது திளைத்தான் எ-று. பூக்கள் நிறைந்த சோலை யென்பார், “விரை செறி பொழில்” என்றார். வேனலில் விளைந்த எல்லாம் என்றது வேனிற் காலத் தயரும் விளையாட்டு வகைகள். அரசன் கோயிலின் நீங்கிச் செல்லும் போதும், திரும்பப் போதரும் போதும் முரசு முழங்கு தலுண்மையின், “முரசொலிகழும” என்றும், மகளிரோடுகூட அவன் இன்புற்ற வகைகளைக் கூறல் நீர்மையன்மையின், “உரை செயலரிய வண்ணம் உவகையின் மூழ்கினான்” என்றும் கூறினார். புட்பாவலி இரட்டையரைப் பெறுதல் 259. இன்னண மரச செல்வத் திசோமதி செல்லு நாளுள் பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்கை இன்னிய லிரட்டை யாகு மிளையரை யீன்று சின்னாள் பின்னுமோர் சிறுவன் தன்னைப் பெற்றனள் பேதை தானே. உரை:- இன்னனம் - இவ் வண்ணம், அரச செல்வத்து - அரச போகத்தில், இசோமதி செல்லு நாளுள் - யசோமதி வாழ்ந்துவருங் காலத்தில், பொன் இயல் அணிகொள் புட்பாவலி யெனும் - பொன்னானியன்ற அணிகளை யணிந்த புட்பாவலி யென்னும், பொங்கு கொங்கை - பெருத்த முலைகளையுடைய அரசமாதேவி, இன்னியல் இரட்டையாகும் இளையரை - இனிய இயல்பினையுடைய இரட்டைப்பிள்ளைகளை, ஈன்று - பெற்று, சில நாள் பின்னும் - சில ஆண்டுகட்குப் பின்னரும், ஓர் சிறுவன் தன்னை - ஒரு மகனை, பேதை - பேதையாகிய அவள், பெற்றனள் - பெற்றெடுத்தாள் எ-று. நிலையில்லாதாகிய அரச போகத்தை நிலையுள்ளதாகக் கருதி அதன்கண் தோய்ந்து பிறவுயர் நினைவுகளின்றி ஒழுகினானென்பார், “அரசசெல்வத்து இசோமதி செல்லு நாளுள்” என்றார். “பொன்னி யலணிகொள்” என்றும், “பொங்க கொங்கை” என்றும் விசேடித்தார், புட்பாவலியின் செயற்கையும் - இயற்கையுமாகிய அழகுதோன்ற. முதற்கண் ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றமைதோன்ற, “இன்னியல் இரட்டையாகும் இளையரையீன்று” என்றும், அவ்விருவர்க்குப்பின்னே வேறொரு மகனைப் பெற்றா ளென்றும் கூறினவர் “பேதை”யென அவளை விசேடித்தார், அவளுடைய குணத்தைச் சிறப்பித்தற்கு. தான் என்பது கட்டுரைச் சுவை குறித்து நின்றது. ஏகாரம் - ஈற்றசை. மக்களின் பெயர்நலம் கூறல் 260. அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் இன்னிளங் குமர னாம மிசோதர னென்பதாகும். உரை:- அன்னவர் தம்முள் முன்னோன் - அம்மக்களுள் முன் பிறந்தவன், அபயமுன் உருசி - அபயமென்ற பெயர்க்கு முன் ருசியென்பது கூடவரும் அபயருசி என்னும் பெயரினனாகும், தங்கை - அவனுக்குத் தங்கையாகிய, அன்னம் மெல்நடையினாளும் - அன்னம் போலும் மெல்லிய நடையினையுடையவள், அபயமுன் மதியென் பாளாம் - அபயமதியென்னும் பெயருடையளாவாள், அவர் வளரும் நாளுள். அவ்விருவரும் பிறந்து வளர்ந்து வரும் நாட்களில், பின் பிறந்தவன் - அவர்கட்குப் பின்னே பிறந்தவனும், நிளங்கொள் பைந்தார் இன்னிளங்குமரன் - மார்பிடத்தேயணிந்த பசியமாலையினை யுடையவனும் இனிய இளமைப்பண்புடையவனுமாகிய குமரனுடைய, நாமம் - பெயர், இசோதரன் என்பதாகும் - யசோதரன் என்பதாம் எ-று. அபயருசியே இக்கூற்றினை நிகழ்த்துகின்றானாதலின், தன் தங்கையை “அன்னமென்னடையினாள்” என்றும், யசோதரனை, “நிறங் கொள் பைந்தார் இன்னிளங்குமரன்” என்றும் சிறப்பிக்கின்றான். நிறம் - மார்பு. அவர் வளரும் நாளுள் பின் பிறந்தவன் என இயைக்க. அரசகுமரன் வளர்ந்த திறம் கூறல் 261. பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும் வரிசையிற் கரிமேற் கொண்டு வாட்டொழில் பயின்று மன்னர்க் குரியஅத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும் அரசிளங் குமரன் சென்றா னடுத்தது கூற லுற்றேன். உரை:- பரிமிசைப்படை பயின்றும் - குதிரை மேலிருந்து செய்யும் போர்வினைக்குரிய படைத்தொழில் கற்றும், பார்மிசைத் தேர்கடாயும் - தரைமேல் தேர் செலுத்தியும், வரிசையின் - முறைப் படி, கரிமேற்கொண்டு - யானைமேலேறி, வாள் தொழில் பயின்றும் வாள் வினைக்குரியவற்றைக் கற்றும், மன்னர்க்கு உரிய அத்தொழில் களோடு - அரசர்க்குரிய அப்பயிற்சிகளோடு, கலைகளின் செலவை ஓர்ந்து - பலவகைக் கலைகளையும் கற்று, அரசிளங்குமரன் சென்றான் - அரசகுமரனான யசோதரன் வளர்தலுற்றான். அடுத்தது கூறுலுற்றேன் - இனி அவ்வரசகுமரற் குற்றத்தைக் கூறத்தொடங்கு கிறேன் எ-று. யானையேற்றம், குதிரையேற்றம், தேரேறுதல், முதலியன அரச குமரர் பயிறற்குரிய பயிற்சிகள். இவற்றை நெறியறிந்து செலுத்தலும் இவற்றின்மேலிருந்து படை வழங்குதலும் போர் வினைக்கு இன்றி யமையாதன. படைக்கலம் பயிறலுடன் பல்வகைக் கலைகளின் அறிவு காவற் சாகாடு கைப்போற்குக் கண்போல் வேண்டப் படுதலின் “கலைகளின் செலவை யோர்ந்தும்” என்றார். நான்காவது சருக்கம் முடிந்தது. ஐந்தாவது சருக்கம் இதன்கண், வேந்தனான யசோமதி வீரர் புடைசூழ வேட்டை மேற்செல்வதும், காட்டகத்தே சுதத்த முனிகளைக் காண்பதும், அம்முனிவனைக் கொல்லக் கருதி வாளையுருவுவதும், அவன் செயலைக் கண்ட கலியாணமித்திரனென்னும் உயிர்த்தோழன் அவனைத் தடுப்பதும், அவன் யசோமதிக்கு முனிவனுடைய சிறப்பும் வரலாறும் கூறுவதும், வேந்தன் மருண்டு தன் தலையைத் துணித்து முனிவன் திருவடியிலிடக் கருதுவதும், கலியாணமித்திரன் தடுத்துச் செய்வகை கூறுவதும், அதுகேட்ட வேந்தன் முனிவனை வணங்குவதும், முனிவன் வேந்தற்கு அசோகன் எய்திய பிறப்பு நலம் கூறுவதும், அவன் தாயாகிய அமிர்தமதி நரகத்தில் துயருறும் திறம் கூறுவதும், யசோதரனும் சந்திரமதியும் மாக்கோழிசெய்து அதனைக் கொலைசெய்த தீவினை குறித்துப் பல்வகைப் பிறப்புற்று வருந்தியது கூறுவதும், அவர்கள் இருவரும் அவ்வேந்தனுடைய இரட்டை மக்களென்பதும், அரசன் அவர்களை முனிவன்பால் வருவித்தலும், மக்கள் போந்து பழம்பிறப் புணர்ந்து வருந்துவதும், யசோமதி தனக்கு உய்தியருளவேண்டுமென முனிவனை யிரப்பதும், முனிவன் அறங்கூறக் கேட்டுத் துறவு பூண்பதும், பின்பு அபயருசி தான் ஏற்ற அரசுரிமையைத் தம்பி யசோதரற் களித்துத் தங்கையான அபய மதியுடன் துறவுமேற்கொண்டு சுதத்த முனிகளையடைந்து அவரைச் சூழவரும் உபாசகர் குழுவிலுறைவதும், அம்முனிவனுடன் இராச புரத்துக்குப் புறத்துள்ள பொழிலிற்றங்கிச் சரிதை வந்தவாறு கூறுவதும், இவற்றைக் கேட்டிருந்த மாரிதத்தன் துறவு மேற்கொள்வதும், பின்பு அவன் முனிவனாதலும், அபயருசியும் அபயமதியும் தவநெறிக் கண்ணே நின்று முற்றிச் சாசாரகற்பத்துத் தேவராயின்புறுதலும், இந்நூலைக் கேட்பதால் வரும் பயன் கூறுவதும், பயன்கொள்வார் செய்யத்தகுவன இவையென்பதும் பிறவும் கூறப்படுகின்றன. யசோமதி வேட்டைமேற் சேறல் 262. நூற்படுவ லைப்பொறிமு தற்கருவி நூற்றோ டேற்றுடையெ யிற்றுஞம லிக்குலமிரைப்ப நாற்படைநடுக்கடல்ந டுச்செய்நம னேபோல் வேற்படைபி டித்தரசன் வேட்டையின்வி ரைந்தான். உரை:- நூற்படு வலைப்பொறி முதல் - நூலாற்பின்னப்பட்ட வலையாகிய பொறி முதலாகவுள்ள, கருவி நூற்றோடு - கருவிகள் பலவற்றுடன், ஏற்றுடை எயிற்று ஞமலிக்குலம் - ஏற்றமிக்க பற்களை யுடைய நாய்க்கூட்டம், இரைப்ப - குரைப்ப, நாற்படைக் கடல்நடு - நால் வகைப் படைகளாகிய கடலின் நடுவே, நடுச்செய் நமனேபோல் - உயிர்க்கும் உடற்கும் நடுநின்று உயிரை உடலினின்றும் பிரிக்கும் நமனைப்போல, அரசன் - அரசனாகிய யசோமதி, வேற்படை பிடித்து - வேற்படையைக் கையிலேந்திக் கொண்டு, வேட்டையின் விரைந்தான் - வேட்டைக்கு விரைந்து செல்வானாயினான் எ-று. பொறிபோல உயிர்களை யகப்படுதலின், வலையைப் பொறி யென்றார்; இருபெயரொட்டு. நூறு, பலவென்னும் பொருட்டு; “நூற்றிதழ்த்தாமரை”1 போல. ஏற்றுடை யென்புழி, ஏற்றம் என்பது அம்முக் குறைந்து நின்றது. ஏற்றம், நீட்சி. படை நடுவிருந்து நமன் பொருதழியும் உயிர்களையுண்பதுபோல, வீரர் நடுவணிருந்து கானத் துயிர்களைக் கொன்று கழித்தல்பற்றி யசோமதியை “நமனே போல்” என்றார். “படைக்கடல் நடுவண், இருந்து கூற்றுயிருணச் செயு மிருஞ் சமர்” என்று பிறரும் கூறுதல் காண்க. வேந்தற்குச் சிறப்புடைய படையாதலின், வேற்படையை யெடுத்து மொழிந்தார். விரைந்தான் என்றது, உயிர்களைக் கோறற்கண் யசோமதிக் கிருந்த வேட்கை மிகுதியை யுணர்த்தி நின்றது. சுதத்த முனிவன் தவம் செய்திருத்தல் 263. இதத்தினை யுயிர்க்கினித ளித்திடுமி யற்கைச் சுதத்தமுனி தொத்திருவி னைத்துகள்து டைக்கும்* மதத்தயன்ம தக்களிறெ னப்படிம நிற்பக் கதத்தினனி ழித்தடு†க டத்திடைம டுத்தான். உரை:- உயிர்க்கு - எல்லாவுயிர்கட்கும், இதத்தினை இனிது அளித்திடும் இயற்கை - நலத்தை மிகச்செய்யும் இயல்பினை யுடைய, சுதத்த முனி - சுதத்தன் என்னும் முனிவனாகிய, தொத்து இருவினைத்துகள் - உயிரைப்பற்றி நிற்கும் இருவினைகளாகிய மாசினை, துடைக்கும் - போக்கும். பதத்து அயன் - திருவடியை யுடைய மேலோனுடைய, படிமம் - திருவுருவம், மதக்களிறு என நிற்ப - மதம் பட்ட களிற்றிணைப் போலச் சலிப்புணராது நிற்கக்கண்டு, கதத்தினன் - கோபத்தை யுடையனாகிய அரசன், இழித்து - இகழ்ந்து நோக்கி, அவனிருந்த, அடுகடத்திடை - தான் உயிர்களைக் கொல்லக் கருதி வந்த காட்டிடத்தை, மடுத்தான் - வந்தடைந்தான் எ-று. அரசன் உயிர்களைக் கொல்லும் கருத்தினனாய் வந்தானென் பதை முடித்தற்கு, முனிவனது உயிர்க்கருளும் இயற்கையை எடுத்து விதந்தார். தொத்துதல் - பற்றி நிற்றல். நல்வினையும் துன்பமுடி விற்றாதல் பற்றி, “இருவினைத்துகள்” என்றார்; “இருள் சேர் இருவினையும் சேரா”1 என்றாற்போல. துகளெனவே, துடைத்தல் வினை கூறினார். ஐயன் என்பது அயன் என விகாரம். தவத்தால் பொறிபுலன்களை யடக்கியிருத்தல் பற்றி, முனிவன் திருவுருவைப் படிமம் என்றார். சலிப்பின்மைக்கு மதக்களிறு உவமமாயிற்று; இனி அதனை அரசன்மே லேற்றலு மொன்று. கடம் - காடு. வெள்ளம் போலத் தானை புடை திரண்டு வருதலின், மடுத்தான் என்றார். வேந்தன் சுதத்த முனிவனை வெகுளுதல் 264. கூற்றமென அடவிபுடை தடவியுயிர் கோறற் கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் பாற்றியவ னின்னுயிர்ப றிப்பலென வந்தான் மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே. உரை:- அடவி - இக்காட்டில், புடைதடவி - இடமெங்கும் சுற்றியும், கூற்றமெனக் கோறற்கு ஏற்றபடி - நமன் போலக் கொல்லுதற் கேற்றவகையில், பெற்றது இலன் - உயிரொன்றும் பெற்றேனில்லை. இவற்றை வினை முற்றும் பாற்றியவன் - இன்று எனது வேட்டை வினை முழுதும் பயனின்றிக் கெடச்செய்த இம் முனிவனுடைய, இன்னுயிர் பறிப்பல் - இனிய உயிரைப் போக்குவேன், என - என்று கூறிக் கொண்டு, மாற்றரிய சீற்றமொடு - நீக்க முடியாத கோபத்துடனே, மாதவனின் மேலே - சுதத்த முனிவன் மேல், வந்தான் - மண்டிவரலானான் எ-று. மேலேயும் “படைக்கடல் நடுச்செல் நமனே போல்” (262) என்றாராகலின், ஈண்டும் அவ்வியல்பு திரியாமையின் “கூற்றமென” என்றார். ஓரிடமும் விடாது தேடினமை தோன்ற, “அடவிபுடை தடவி” யென்றார். ஏற்றபடியாவது, பல்வகை உயிர்களையும் கொன்று குவிப்பேனெனக் கருத்துட்கொண்டு போந்த மேற்கோள். ஒருயிரும் தனக்கு அகப்படாதொழிந்ததற்குக் காரணம் அம்முனிவனது இருப்பென்று நினைத்தலின், முனிவனை, “இற்றை வினை முற்றும் பாற்றியவன்” என்றும், அது தான் மேற்கொண்ட வினைக்கு இடையூறாவது நினைந்து வெகுளி மிகக் கோடலின், “இன்னுயிர் பறிப்பல்” என்றும் கூறலானான். முனிவனது தவமும் தன் செயலினது அவமும் சிறிது எண்ணிய வழியும், உண்டாகிய சினம் தணிந்து பணிவிக்கும் என்பார், “மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே” என வற்புறுத்தினார். ஐஞ்ஞூநூறு நாய்களை அம்முனிவன் மேலேவுதல் 265. கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய் ஐந்தினொடு பொருததொகை யைம்பதி னிரட்டி செந்தசைகள் சென்றுகவர் கின்றென*வி டுத்தான் நந்தியருள் மழைபொழியும் நாதனவன் மேலே. உரை:- கொந்து எரி உமிழ்ந்து - கொத்தாகத் தீயினைக் கக்கி, எதிர் குரைத்து - எதிரே குரைத்துக்கொண்டு, அதிர்வ - ஏனையுயிர் கட்கு நடுக்கத்தைப் பண்ணுவனவாகிய, கோள் நாய் - கொலை புரியும் நாய்க்கூட்டம், ஐந்தினொடு பொருத தொகை ஐம்பதின் இரட்டி - ஐந்தாற் பெருக்கிய நூறாகவரும் ஐஞ்ஞூறும், இன்று - இப்பொழுதே, சென்று - முனிவனை யணுகிப்பற்றி, செந்தசைகள் கவர்க என - (அவனுடைய) செவ்விய தசைகளைக் கவர்க என்று, அருள் மழை நந்தி - அருளை மழைபோல மிகுத்து, பொழியும் நாதன் அவன்மேல் - பொழியும் தவமாகிய செல்வத்தையுடைய அம்முனிவன்மேல், விடுத்தான் - செலுத்தினான் எ-று. வேட்டை நாய்களின் இயல்பு கூறுவார், தீப்பறக்கும் கண்ணும், ஏனையுயிர்களை நடுங்குவிக்கும் குரைப்பும், கொலை வன்மையும் உடையவென்றார். அதிர்தல் - நடுக்கம்; ஈண்டுப் பிறவினைப் பொருட்டு. ஐம்பதின் இரட்டி தொகை - ஐம்பதின் இரட்டிப்பாகிய தொகை; நூறென்பதாம். அஃது ஐந்தொடு உறழ்ந்தவழி ஐஞ்ஞூறாயிற்று. தவத்தால் முனிவன் மேனி பொன்போல் ஒளிவிட்டுத் திகழ்வது கண்டு, “செந்தசைகள்” என்றும், நாய்களை ஏவுதல் தோன்ற, இன்று கவர்க என்றும் கூறினான், அதனைக் கண்டுவைத்தும், சுதத்த முனிவன் வெறுப்போ விருப்போ கொள்ளாது அருண்மணங் கமழ விருந்தமை விளங்க, “நந்தி யருண் மழை பொழியும் நாதனவன் மேலே” என்று விதந்தார். நாதன் என்னும் வடசொற்சிதைவு செல்வ முடையோன் என்னும் பொருட்டு. மகாமகோபாத்தியாய பண்டித மணியவர்கள், “நாதன்றாள் வாழ்க” என்பதற் கெழுதிய உரைகாண்க. நாய்க்கணம் மேற்செல்லாமைகண்டு அரசன் வாளுருவுதல் 266. அறப்பெருமை செய்தருள்த வப்பெருமை தன்னால் உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக் கறுப்புடைமனத்தெழுக தத்தரச னையோ மறப்படைவி டக்கருதி வாளுருவு கின்றான். உரை:- அறப்பெருமை தன்னால் - மேற் கொண்டிருக்கும் சைன தருமத்தின் பெருமையாலும், செய்து அருள் தவப்பெருமை தன்னால் - உயிர்கட்கு நலம் செய்தருளும் தவத்தின் பெருமையாலும், உறப் புணர்தல் அஞ்சி - முனிவனுடைய மெய்யுற அணுகுவதற் கஞ்சி, ஒருவிற்கண் - ஒரு வில்லளவு தொலைவிலேயே, அவை நிற்ப - அந்த நாய்க்கூட்டம் நின்றொழியவே, கறுப்புடை மனத்து - எப்போதும் வெகுளியே குடிகொண்டிருக்கும் மனத்தின்கண், எழுகதத்து அரசன் - எழுந்த சினமிகுதியையுடைய அரசனாகிய யசோமதி, மறப்படை விடக் கருதி - கொலைவினைக்குரிய படையைச் செலுத்த நினைந்து, வாள் உருவுகின்றான் - உறையிலி ருக்கும் வாளையுருவுவானாயினான், ஐயோ - இவன் செயலிருந்தவாறு என்னோ எ-று. தன்னால் என்பதை அறப்பெருமைக்கும் கூட்டுக. அரசனுண ரானாயினும், அவன் விடுத்த நாய்க்கூட்டம் முனிவனுடைய அறப் பெருமை தவப்பெருமைகளைத் தெளிய வுணர்ந்து கொண்டன என்பார், “உறப்புணர்தல் அஞ்சி” யென்றும், அவ்வுணர்வின் பயன் ஓரளவு விலகிநின்று வழிபடுவதாகலின், “ஒருவிற் கண் அவை நிற்ப” என்றும் கூறினார். அவனுணராமைக்கு ஏது அவன் மனவியல்பு என்பார், “கறுப்புடை மனத்து” என்றும், அதன் பயனாக, அவன் சினம் மிகுந்து வாளையுருவலுற்றான் என்பார், “எழுகதத்தரசன் மறப்படை விடக்கருதி வாளுருவுகின்றான்” என்று கூறினாரெனவுணர்க. கொலைக் குரித்தாதலின், வாள், “மறப்படை” யெனப்பட்டது. ஐயோ, நூலாசிரியர் இரங்கிக் கூறியது. கலியாணமித்திரன் அரசனைத் தடுத்தல் 267. காளைதகு கலியாண மித்திரனெ னும்பேர் ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய கேளொருவன் வந்திடைபு குந்தரச கெட்டேன் வாளுருவு கின்றதெனை மாதவன்மு னென்றான். உரை:- காளை தகு - காளைப்பருவம் தக்கிருக்கின்ற, கலியாண மித்திரன் எனும் பேர் - கலியாணமித்திரன் என்னும் பெயரையுடைய, ஆளி அடுதிறல் வணிகன் - சிங்கத்தை வெல்லும் மெய்வலியினை யுடைய வணிககுமரனும், அரசன் - வேந்தனாகிய யசோமதிக்கு, உயிர் அனைய கேள் ஒருவன் - உயிரொத்த நண்பனுமாகிய ஒருவன், வந்து - அவ்விடத்திற்கு வந்து, இடை புகுந்து - வாளுருவி வீசக்கருதும் அரசனைத் தடுத்து, அரச - வேந்தே, மாதவன் முன் - இம்மாமுனிகளின் திருமுன்னே, வாள் உருவுகின்றது எனை - தீங்கு குறித்து வாட்படை யெடுப்பது என்னையோ எ-று. கெட்டேன் - இரக்கக்குறிப்பு. கலியாணமித்திரனுடைய மதி நுட்பமும், மெய் வன்மையும் அரசன்பால் அவற்குள்ள தொடர்பும், விளக்குதற்கு, “காளை” யென்றும், “ஆளியடுதிறல் வணிகன்” என்றும், “அரசன் உயிரனைய கேள்” என்றும் கூறினார். ஒப்பற்ற துணைவன் என்பார் “ஒருவன்” என்றார்; மிகச்சிறந்தான் என்பது கருத்து; இன்றேல், இடைபுகுந்து விலக்குதல் இயலாதெனவுணர்க. அச் செயலால் விளையும் கேட்டினை அறிந்து போந்து விலக்குகின்றானா தலின், இடை புகுந்து “கெட்டேன்” என்று சொல்லெடுத்து, “வாளுருவுகின்ற தெனை மாதவன் முன்” என்று கூறுகின்றான். மாவதன் என்றது, நீ கருதியவாறு முடிக்க வொண்ணாது தடுக்கும் பெருமையும், நீ கருதும் கருத்து நின்னையேயடைவிக்கும் தவவன்மையும் உடையன் என்பதும் கருத்து விளங்கக் கூறியவாறாம். கலியாணமித்திரன் முனிவன் சிறப்பெடுத் துரைத்தல் 268. வெறுத்துடன் விடுத்தரசி னைத்துகளெ னப்பேர் அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவன டிக்கண் சிறப்பினையி யற்றலை*சி னத்தெரிம னத்தான் மறப்படையெ டுப்பதெவன்† மாலைமற வேலோய். உரை:- மாலை மறவேலோய் - மாலை யணிந்த மறம் பொருந்திய வேலை யேந்திய வேந்தே. அரசினை - அரசபோகத்தை, துகள் என வெறுத்து - அற்பப் பொருளாகக் கருதிப் பற்றறவெறுத்து, உடன் விடுத்து - அவ்வெறுப்புத் தோன்றியவுடனே ஒழித்துவிட்டு, பேர் அறப்பெருமலைப்பொறை யெடுத்தவன் - துறவறமாகிய பெரிய மலையை எடுத்துத் தாங்கியிருக்கின்ற முனிவனுடைய திருவடிக் கண்ணே, சிறப்பினை இயற்றலை - சிறப்பாகிய வழிபாட்டைச் செய்யாமல், சினத்து எரி மனத்தால் - சினத்தால் வெதும்புகின்ற மனத்தோடு, மறப்படை - வாட்படையை, எடுப்பது எவன் - கையில் எடுப்பது எற்றுக்கு, உரைப்பாயாக எ-று. வேலுக்கு மாலை யணிவதும் மரபாதலின், “மாலை மற வேலோய்” என்று கூறப்பட்டது; இதனை, “இவ்வே (இவ்வேற் படைகள்), பீலியணிந்து மாலை சூட்டிக் கண்டிரணோன் காழ்திருத்தி நெய்யணிந்து கடியுடை வியனகரவ்வே”1 என்பதனாலு மறிக. விழுமிது தெரிந்த விழுமியோர்க்கு, “நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை, முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே”2 என்று சான்றோரும் கூறுதல் காண்க. துறவறத்தின் பெருமை யும் பொறுத்தற் கருமையும் தோன்ற, “பேரறப்பெருமலை” யென்றும், அதனை மேற்கொண் டொழுகும் ஆண்மை நலம் விளங்கப் “பொறை யெடுத்தவன்” என்றும், அத்தகையோரைக் கண்டவிடத்து அரசராயினும் வழிபடுவதே உடன் செயற்பால தென்பான், “சிறப் பினை யியற்றலை” யென்றும், நீ செய்வதுதீது பயப்பதாம் என்ற குறிப்பால் “மறப்படை யெடுப்ப தெவன்” என்றும் வணிகன் கூறினான். 269. ஆகவெனின் ஆகுமிவர் அழிகவெனின் அழியும்* மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் ஏகமன ராம்முனிவர் பெருமையிது வாகும் மாகமழை வண்கைமத யானைமணி மார்போய்† உரை:- மாக மழை வண்கை - வானத்தில் உலாவும் மழை மேகம் போலும் வள்ளன்மை பொருந்திய கையினையும், மதயானை - மதம் பொருந்திய யானைகளையும், மணி மார்போய் - மணியிழைத்த மார்பணியு முடைய வேந்தே, இவர் - இம்முனிவர், ஆக எனின் ஆகும் - ஒருபொருள் ஆக்கம் பெறுக என்பாராயின் அவ்வாறே சிறிதும் பிழையின்றி ஆக்கமெய்தும், அழிக எனின் அழியும் - கேடெய்துக என்றால் அவ்வாறே அக்கணமே அப்பொருள் கெடும், இவண் மேகம் வருக எனின் - இப்பொழுது இவ்விடத்தே மழை பெய்க என்றால், விதியின் - அவர் விதிக்குமாறே, அதுவும் வரும் - அம்மேகமும் வந்து மழை பொழியும், ஏகம் மனராம் முனிவர் பெருமை இதுவாகும் - ஒரு நெறியில் பிறழ்வின்றி நிற்கும் மனமுடையராகிய இம் முனிவரது பெருமை இத் தன்மைத்தாகும், இதனை நீ நினையாதொழுகுவது கூடாது எ-று. இதனை நீ என்பது முதலியன குறிப்பெச்சம். “யானையுடைய படை காண்டல் இனி” தென்பவாகலின், நாற்படையினும் மத யானைப்படையை விதந்தோதினான். மழை வண்கை பொருட் பெருமையும், மதயானை படைப்பெருமையும் சுட்டி நின்றன. இப்பெருமைகள் ஆதற்கும் அழிதற்கு முரியவாவன; அவ்வாக்க வழிவுகள் இரண்டனையும் நினைத்த பொழுதே செய்யவல்லரென் பான், “அகவெனின்...... வருமதுவும் விதியின்” என்றான். பொறிவழி யோடிப்பஃறலைப் பட்டலைதலின்றி ஒரு நெறியே நிற்கும் சிறப்புக் குறித்து, “ஏகமனராமுனிவர்” என்றான். முனிவர் பெருமை இது வெனவே, அரசர் பெருமை பொருள் படை யென்ற இரண்டாய் வகுத்துரைக்கப்பட்டது. அரசர்க்குரிய மூவகையாற்றலுள், பெருமை, பொருள் படை என்ற இரண்டின்மேல் நிற்குமென்பது அரசியல் நெறி. 270. அடைந்தவர்கள் காதலினொ டமரரர சாவர்* கடந்தவர்கள் தமதிகழ்வின் கடைநரகின் வீழ்வர் அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே. உரை:- அடிகள் - அரசே, காதலினொடு அடைந்தவர்கள் - உள்ளன்புடன் இம்முனிவர் திருவடி யடைந்தவர்கள், அமரர் அரசு ஆவர் - தேவர்க்கரசராகிய இந்திரராகுவர், தமது இகழ்வின் கடந்தவர் - தமது மயக்கவுணர்வால் அறத்தின் வரம்பு கடந்த செயலை இவர்பாற் செய்பவர், கடைநரகின் வீழ்வர் - எல்லா நரகினும் கீழ்ப்பட்ட நரகத்தையடைவர். அடைந்த நிழல்போல் - தன்னை யடைந்தவர்க்குத் தட்பம் பயந்து விகாரமின்றியிருக்கும் நிழல் போல, அருளும் முனிவும் இலர் - யாவர்பாலும் விருப்பும் வெறுப்பும் இலராவர், கடந்தது இவண் உலகியல்பு. இவர்கள் துறந்தது இம்மைக்கண் இவ்வுலக போகத்திற் செல்லும் விருப்பேயாகும். கடவுளவர் செயல் - மேற்கொண்டது முனிவர்க்குரிய ஒன்றனை வேண்டலும் வேண்டாமையும் இல்லாத செயலே எ-று. தம்மை யடைந்தார்க்கு அறமுணர்த்தி அவரை நன்னெறிக் கண் உய்த்தலின், அவர் அந்நெறியால் அமரர் பரவும் சிறப்பெய்துவது குறித்து, “அடைந்தவர்கள்.... அமரரரசாவர்” என்றும் இவர்பால் மிக்க செயல் செய்து பிழைப்போர் நரகில் வீழ்வது கூறி, அரசனுள்ளத்தை நெறிப்படுத்தக் கருதி “கடந்தவர்கள்....நரகின் வீழ்வர்” என்றும் கூறினான். கடத்தல், முன்னது அறவரம்பு கடந்து மிக்கசெயல் செய்தல்; பின்னது துறத்தல். இகழ்தற்குக் காரணமாகிய செருக்கும் அறியாமையும் மயக்குணர்வும் எல்லா மெய்த இகழ்வின் எனக் காரியத்தாற் கூறினான். அடைந்தார் அமரரரசாதற்கும், கடந்தார் நரகில் வீழ்தற்கும் காரணராதலின், இவர் விருப்பு வெறுப்புக்கள் உளபோலும் என்னும் ஐயமறுத்தற்கு, “அருளும் முனிவும் இலர்” என்றும், அவை உலகியலாய்ப் பிறவிக்கேதுவாதல் பற்றித் துறக்கப்பட்டன என்பான் “கடந்ததி வண் உலகியல்பு” என்றும், மேற்கொண்டது விருப்பு வெறுப்பற்ற மனப்பான்மை யென்றற்குக் “கடவுளவர் செயலே” யென்றும் கூறினான். வேண்டு தலும் வேண்டாமையும் இன்மை கடவுட்டன்மையாதலின், “கடவுளவர் செய”லாயிற்று. 271. இந்திரர்கள் வந்தடிப ணிந்தருளு கெனினும் சிந்தையிலர் வெந்துயர்க ளெண்ணிலகள் செயினும்* தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார் அந்தரமி கந்தருள்த வத்தரசர் தாரோய். உரை:- தாரோய் - மாலை யணிந்த அரசே, இந்திரர்கள் வந்து - தேவருலக வேந்தர்களாகிய இந்திரர் தாமே போந்து, அடிபணிந்து - தம் திருவடியில் வீழ்ந்து வணங்கி, அருளுக எனினும் - அருள் செய்க என்று வேண்டிப் பரவினாலும், சிந்தையிலர் - தம் செயலின் விளைவை யோராமல், வெந்துயர்கள் எண்ணிலகள் செயினும் - கொடிய தீவினைகள் அளவிறந்தன செய்தாலும், தந்தம் வினையென்றும் - இருவகையாலும் வரும் இன்பத்துன்பங்கட்குக் காரணம் தாம்தாம் செய்த வினையே என்று நினைத்தும், நமர் பிறர் எனவும் - இன்பம் செய்தாரை நமக்குரியார் என்று உவத்தலும் துன்பஞ்செய்தாரைப் பகைவரென வெறுத்தலும், நினையார் - நினையாமலும், அந்தரம் இகந்து - விண்ணுலகத்தே பெறும் இன்பத்தை வெறுத்து, அருள் தவத்தரசர் - அருளும், தவமும் நல்கும் ஞானவின்பத்தை நுகர்ந் தொழுகும் தவ வேந்தராவர் எ-று. மேலே “அருளும் முனிவுமிலர்” என்று கூறியதனை விளக்கு முகத்தால் இந்திரர் பராவலும், ஏனையோர் தீமையும் எடுத்துக் காட்டி அவ்விருவினைகளையும் இம்முனிவர் கருதும் திறம் இது வென்பான் “தந்தம் வினையென்று” நினைப்பர் என்றும், “நமர்பிறர் என நினை யார்” என்றும் கூறினான். இது “செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ் சோர்ந்து நாடா நிலைமை” என்பது. சிந்தித்தவழித் தாம் செய்யும் செயலின் விளைவு புலனாமாதலின், “சிந்தையிலர்” என்றான். அந்தரம் - ஆகுபெயர். தவத்துக்கு அருள் உருவாதலின், “அருள் தவத்தரசர்” என்ப. இவர் “அந்தரமிகந்தருள் தவத்தரசர்” என்றது தம்மடி பணிவார் பெறும் அவ்விண்ணின் பத்தைக் தாம் பொருளாக மதியாமை யுணரநின்றது. முனிவனைப் பணிக என வணிகன் கூறல் 272. இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென் றவ்வியம கன்றருள்சு ரந்துயிர்வளர்க்கும் செவ்விமையின் நின்றவர்தி ருந்தடிப டிந்துன் வெவ்வினைகள் தந்தனைவி ளங்கு*விறல் வேலோய் உரை:- விறல் வேலோய் - விறல் பொருந்திய வேலையுடையாய், இவ்வுலகில் - இவ்வுலகத்தில், எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று - எத்தகையவுயிரும் எம்முடைய உயிரையே நிகர்க்கும் என்று கருதி, அவ்வியம் அகன்று - அவற்றைப் புறக்கணிக்கும் மயக்கமின்றி, அருள் சுரந்து - அருள் புரிந்து, உயிர் வளர்க்கும் செவ்விமையின் - அவ்வுயிர்களைப் புரக்கும் செம்மை நெறியின்கண், நின்றவர் - நிற்கின்ற இம்மேலோருடைய, திருந்தடி படிந்து - அழகிய சரணங்களிலே மூழ்கி, உன் வெவ்வினை கடந்தனை - உன்னுடைய தீவினையாகிய அழுக்கினைப் போக்கி, விளங்கு - சீவசுத்தியினை எய்துவாயாக எ-று. விரிந்தது தொகுத்தல் என்னும் உத்திபற்றி, மேலே விரியக் கூறிவந்தவற்றைக் தொகுத்து, மன்னுயிரைத் தன்னுயிரெனக் கருதுதலும், அவற்றிற்கு உறுகண் செய்யாது அருள் புரிவதும், அவற்றிற்கு அறமுணர்த்திச் செம்மை நெறிக்கண் நின்றொழுகு வித்தலும் இம்முனிவரர் கடன் என்றானாயிற்று. இத்தகைய பெரியோர் திருவடியில் மனமொன்றி வழிபாடாற்றியவழி நினக்கும் அவ்வியல்பே யுண்டா மென்றும், அதுவே வாயிலாக நீ உயிர்க்கொலை தவிர்ந்து அவற்றை வளர்க்கும் உயர் செயலை மேற்கொண்டு, பேரின் பத்துக்குரிய உயிர்த்தூய்மை (சீவசுத்தி) எய்துவாய் என்றும் மொழிவான், “திருந்தடி படிந்து உன் வெவ்வினை கடந்தனை விளங்கு” என்றான். திருவடி அருட்கடலாதலின், அதனை வணங்கு தலைப்படிதலென்றான். பிறாண்டும் “வென்றவர் சரணமூழ்கி” என்றவாறு காண்க. வினைமாசு நீங்கியவழி உயிர் தூய்மை பெறுவது குறித்து, “கடந்தனை விளங்கு” என்றான். கடந்தனை - முற்றெச்சம். மன்னன் முனிவனை யாவனென அறிதல் 273. என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே கன்றுசின முங்கரத லப்படையு மாற்றி இன்றிவனை யென்னைதொழு மாறனியன் யாவன் கன்றுதுகள் துன்றுகரு மேனியின னென்றான். உரை:- என்று - என்பதாக, வணிகன் இனிது கூறும் சொல் - கலியாணமித்திரனாகிய வணிகன் இனிதாகக் கூறிய சொல்லை, இகழாது - நெகிழாது மேற்கொண்டு, கன்று சினமும் - மிக்குநின்ற வெகுளியினையும், கரதலப்படையும் - கையில் உருவிப்பிடித்திருந்த வாட் படையினையும், மாற்றி - முறையே தனித்தும் உறையிற் செருகியும், இன்று இவனை தொழுமாறு என்னை - இப்போது இவனைத் தொழும் வகையாது, கன்று துகள் துன்று கருமேனியினன் - மிக்க புழுதி படிந்து கருத்தமேனியினை யுடையனாகிய, அளியன் - அளிக்கத்தக்க இவன், யாவன் - யாவனாகும், என்றான் - என்று யசோமதி அவ்வணிகனை வினவினான் எ-று. கன்று சினமும் கரதலத்திற் படையுமேந்தித் தீது குறித்த சிந்தையனாயிருந்த வேந்தன் மனத்தில் அன்பும் முனிவன்பால் நன்மதிப்பும் உண்டாமாறு பேசியது குறித்து, “இனிது கூறும் வணிகன் சொல்” என்றும், முனிவன்பால் அறங்கேட்டற்குரிய நல்லூழ் பின்னேயிருந்து ஊக்குதலால், “இகழாது’ என்றும், கூறினார். சினத்தை மாற்றுதலாவது தணிவித்தல்; வாட்படையை மாற்றுதல், மறுவலும் உறையிற் செருகிக்கோடல். சுதத்த முனிவனது மேனியினைக் கண்டு அருவருத்து நின்றமை தோன்ற, “கன்று துகள் துன்று கருமேனியன்” என்றும், “அளியன்” என்று கூறினான். மேனியின் தோற்றத்தால் தொழுதற்குத் தன் உள்ளம் செல்லாமையைக் குறிப்பாற் காட்டுவானாய், “இன்றி வனை என்னை தொழுமாறு” என்கின்றான். கன்றல் - மிகுதல். வணிகன் முனிவனது வரலாறு கூறல் 274. இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் பொங்குபுய வலியில் பொது வின்றிமுழு தாண்ட சிங்கமிவ னென்றுதெளி தேந்துணரின் வேந்தே* உரை:- தேந்துணரின் வேந்தே - தேன் பொருந்தி பூங்கொத்துக் களாலியன்ற மாலை யணிந்த அரசே, இங்கே - இங்கே எழுந்தருளி யிருக்கின்ற, உலகு தொழு முனியை - அறிவுடையோர் பரவும் இச் சுதத்தமுனிவனை, யாவன் எனின் - யாவன் என்று கேட்கின்றாயாயின், இதுகேள் - யான் கூறப்போகு மிதனைக் கேட்பாயாக, இவன் கங்கை குலதிலகன் - இவன் கங்கை குலத்திற்பிறந்த மேன்மை யுடையன், கலிங்கபதி - கலிங்க நாட்டிற்கு அரசன், அதனை - அக் கலிங்க நாட்டினை, பொங்கு புயவலியில் - உயர்ந்த தன் தோள் வன்மையால், இவன் பொதுவின்றி முழுது ஆண்ட சிங்கம் - இவன் பொதுச்சொற் பொறாது நாடு முழுதும் தானே யாட்சி புரிந்த சிங்கம்போலும் ஆற்றலுடை யனாவான், என்று தெளி - என்று தெளிவாய்; அறிவாயாக எ-று. துணர் பூங்கொத்து; ஆகுபெயர், உலகு, உயர்ந்தோர் மேற்றாதலின், உயர்ந்தோரால் தொழப்படும் முனிவனை, “உலகு தொழு முனியை” என்றான். திலகன் - மேலானவன். நிலவுலகு அரசரெல்லார்க்கும் பொது வென்னுஞ் சொல்லைக் கேட்கப் பொறாது வலியுடைய தனக்கே உரியது என்னும் ஊக்கமும் உட்கோளும் உடையனாதல் தோன்ற, “பொதுவின்றி முழுதாண்ட” என்றும், பகையரசர்க்கு அச்சத்தை விளைத்தலால் “சிங்கம்” என்றும் கூறினான். மேனியின் நிறமும் தவக்கோலமும் பிறவும் கண்டு கன்றிய சினமும் கையில் வாட்படையும் ஏந்தி மனம் மருண்டுநின்ற யசோமதிக்கு அறிவுறுத்து கின்றானாதலின், “சிங்கமிவன் என்று தெளி” என்று வணிகன் செப்பினான். அரசன்பால் வியப்பு மெய்ப்படவே, கண்ட வணிகள் மேலும் சில கூறுகின்றான். 275. மேகமென மின்னுமென* வில்லுமென வல்லே போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே† போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான். உரை:- மேகமென மின்னுமென வில்லுமென - மேகமும் மின்னும் இந்திரவில்லும்போல, போகமொடு பொருள் இளமை - முறையே போகமும் பொருளும் இளமையும், வல்லே நனி பொன்றும் என்று - விரைய மிகக்கெடும் என்று, ஆக - தெளிய வுணர்ந்தானாக, துறவு - துறவு மேற்கொண்டு, அருள் பெருகும் அறனொடு - அருள் மிகுதற்குரிய நல்லறத்தோடு, அதன் இயல் - அதனால் இயலும் பயனாகிய, போக மிகு பொன்னுலகு - இன்பம் மிகுவிக்கும் துறக்க வுலகை, புகுவன் என நினைவான் - அடைவேன் என்று அக்கலிங்கபதி நினைவானாயினன் எ-று. மேகம் முதலிய மூன்றும் முறையே போகம் முதலிய மூன்றற்கும் உவமை. ஆமிடத்து விரையவாகாது மென்மெலச் சிறிது சிறிதாய் ஆதலும் கெடுமிடத்து மிக விரைவில் இறப்பவும் மிகுதியாகக் கெடுதலும் இப்போகம் முதலிய மூன்றற்கும் இயல்பாதலின், “வல்லே நனி பொன்றும்” என்று கண்டான். அவ்வாறு கண்டாற்குத் துறவே துணிபொருளாய்த் தோன்றிய தென்பார், “என்றேயாக” என்றும் “துறவு நினைவான்” என்றும் கூறினார். அருளை வளர்க்கும் நல்லறம் சைன தருமமென் றுணர்ந்து அதனைக் கடைப்பிடித்தமை தோன்ற, “அருள் பெருகு மறனொடு” என்றும், அதனை மேற்கொண்டொழுகிய வழி யெய்தும் பயன் துறக்கவின்பம் என்றற்கு, “அதன் இயலே போகமிகு பொன்னுலகு” என்றும் நினைத்தான். இயலும் பயனை இயலென்றே யொழிந்தார்; வழக்கின் பயனை “அன்புற்றமர்ந்த வழக்கென்ப”1 என்றாற்போல. பொன்னுலகு நினைதற் கேது ஈதென் பார், “போகமிகு பொன்னுலகு” என்றாரென்க. 276. நாடுநக ரங்களுந லங்கொள்மட வாரும் ஆடுகொடி யானைஅதிர் தேர்*புரவி காலாள் சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம் ஆடைமுத லாயினவொ டகல்கஎன விட்டான். உரை:- நாடு நகரங்களும் - நாடு நகரங்களையும், நலம் கொள் மடவாரும் - அழகுகொண்ட மகளிர்களையும், ஆடு கொடி யானை யொடு - அசைகின்ற கொடியேந்திய யானைப்படையினையும், அதிர் - பகைவர்க்கு நடுக்கத்தைச் செய்யும், தேர் புரவி காலாளொடு - தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படைகளையும், சூடு முடி மாலை யொடு - தான் அணிகின்ற முடியையும் மாலையையும், குழை தோள் வளையொடு ஆரம் - காதிலணியும் குழையினையும் தோளிலணியும் வளைகளையும் மார்பிலணியும் முத்துமாலை யினையும், ஆடைமுதலா யினவொடு - பட்டினும் பருத்தியினு மியன்ற உயரிய உடை முதலிய வற்றையும், அகல்க என விட்டான் - நீக்குமின் எனத் துறந்தொழித்தான் எ-று. நாடு நகரங்களும் என்பதை உம்மைத்தொகையாக்காது வினைத் தொகையாக்கி உலகமுழுதும் திரண்டு ஒருங்குவரினும் வழங்கத் தவா வளமுடைமையின் ஏனை நாட்டவரும் நகரத்தவரும் விரும்பும் நகரங்களும் என்றுரைத்தலுமொன்று, நலம், இன்ப நுகர்ச்சிக்கு வேண்டும் பெண்மை நலம். மடவார், இளையமகளிர்,. தோள்வளை, வாகுவலயம் என்றும் கூறப்படும். ஒடுவும் உம்மையும் எண்ணுப் பொருட்டு. ஒடுவென்பது ஏனையிடத்தும் கூட்டப்பட்டது, “என்றும் எனவும் ஒடுவும் தோன்றி, ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே” என்பது தொல்காப்பியம். துறவுள்ளம் முறுகி நிற்றலின், மாலை முதலியவற்றைக் கொணர்ந்தாரை வேண்டாவென விலக்கினான் என்க. விடுதல் - பற்று விடுதல். முதலாயின என்புழி எய்துதற்குரிய சாரியை விகாரத்தால் நிலையாதாயிற்று. 277. வானவரு மண்ணின்மிசை யரசர்களு மலைமேல் தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான் ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுன்னிக்* கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான். உரை:- வானவரும் - விண்ணுலகத்துத் தேவர்களும், மண்னின் மிசை யரசர்களும் - மண்ணுலகத்து வேந்தர்களும், மலைமேல் தானவரும் - சேடி முதலிய மலைகளில்வாழும் வித்தியாதரர்களும், வந்து - தன்பால் வந்து, தொழுதவவுருவு கொண்டான் - தொழுது வணங்கும் தவவொழுக்கத்தை மேற்கொண்ட இச்சுதத்தன், மனம் ஊனம் இன்றி - மனத்திடத்தே குற்றமான நினைவு சிறிது மின்றி, உயிர்கட்கு உறுதி யுன்னி - உயிர்கட்கு உறுதியாவனவற்றையே நினைந்து, கானம் மலை நாடுகள் - காடும் மலையும் நாடும் முதலிய எல்லா விடங்கட்கும் சென்று, கலந்து திரிகின்றான் - ஓரிடத்தும் நிலைபேறின்றித் திரிந்தொழுகுவானாயினான் எ-று. சுததத்தன் மேற்கொண்டிருந்த தவக்கோலத்தின் சிறப்பும் ஒழுக்கத்தின் விழுப்பமும் கூறுவான், வானவரும் தானவரும் மண்ணிடத்து வேந்தரும் வந்து தொழும் சிறப்பினை யெடுத்துக் கூறினான். நன்னினைவே நினையும் மனமுடையனாயினும், பண்டைப் பயிற்சி வாசனையால் நெஞ்சில் நினைவுவாயிலாகக் குற்றம் சிறிது முண்டா காவாறு தன்னைக் காத்துக்கொண் டொழுகுமாறு தோன்ற, “ஊனம் மனம் இன்றி உயிர்கட் குறுதி யுன்னி” என்றும், கானம் மலை நாடு முதலிய வற்றுள் ஏதேனும்மோரிடத்தே நிலைத்திருப்பின் அதுவாயிலாக விருப்பு வெறுப்புக்கள் பிறந்துவிடு மாதலின், “கானமலை நாடுகள் கலந்து திரிகின்றான்” என்று வணிகன் கூறினான். கலந்தெனவே, ஓரிடத்தும் தங்காமைபெற்றாம். 278. யானுமல தெனதுமல திதமுமல தென்னும்* மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய் ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே† ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான். உரை:- இன்மேனி - தனக்கு இனிதாய் அமைந்த மேனியானது, யானு மலது எனது மலது - யானும் அன்று எனக்கேயுரியது மன்று, இதமும் அலது - நலம் செய்வது மன்று, என்னும் - என்று கருதும், மானமுடை மாதவன் - அறிவுப்பெருமையினையுடைய மாதவன், மகிழானாய் - அதன் பால் பற்றுச் சிறிதும் இலனாய், தனது உருவின் - தனது மேனியில், ஏனைவினைமாசு - ஏனைவினைகளாகிய குற்றத் தாலுண்டாகும் வசையினை, நிறுவாது - மேற்கொள்ளாது, ஞான வொளி நகை செய்குணம் - ஞானவொளி விளங்கச் செய்யும் நற் குணத்தாலுண்டாகும் இசையாகிய அணிகலன்களை, நாளும் அணிகின்றான் - எப்போதும் மேற்கொண்டிருப்பானாயினான் எ-று. “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலுமரிதே”1 என்ப வாகலின், “இன்மேனி” யென்றார். உடற்குண்டாகும் ஆக்கக்கேடுகளால் உயிர்க்கு இன்பமும் துன்பமும் உண்டாதலின், “எனது” என்றும், உயிர் நீங்குங்காறும் உடனிருந்து பின்பு பிரிதலின் “எனது” என்றும், உடலோடு கூடியிருக்குமளவும் உயிரைத் தன்னைப் பிரிய வொண்ணாதபடி பற்றுச்செய்தலின் “இதம்” என்றும், உடம்பு மக்களாற் கருதப்படினும், அக்கருத்தனைத்தும் பிறப்பிற் கேதுவாய்த் துன்பம் பயத்தல்பற்றி, “யானுமலது எனது மலது இதமும் அலது என்னும் மானமுடை மாதவன்” என்றும் கூறினான். உடலை நிலையில் பொருளென் றறிந்து, அதுகொண்டு நிலைத்த பயனைச் செய்து கொள்ளுதலின் பெருமை பிறிதில்லையாதலின், “மானமுடைமாதவன்” என்றார். ஏனைத் தீவினை முற்றும் பழியும் தீராவசையும் பயத்தலின், அதனை அழகு தரும் அணியாக்கி, “நாளும் அணிகின்றான்” என்றும் கூறினான். வசை என்றும் நிலைத்திருப்பது பற்றி, “நிறுவாது” என்றார். 279. ஈடின்முனி யோகினது பெருமையிஃ திறைவ* காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக் கூடுவதொ ழிந்ததுகொள்† இன்றுகொலை வேலோய் நாடுவதென் ஞமலியிவை நணுகலகண் காணாய்.‡ உரை:- இறைவ - அரசே, ஈடுஇல்முனி - ஒப்பற்ற இச்சுதத்த முனிவனது, யோகினது பெருமை - யோகத்தின் பெருமை, இஃது - இத் தன்மையாகும், கொலைவேலோய் - உயிர்களைக்கொல்லும் வேலையுடைய வேந்தே, காடுபடுகொலையினொடு - காட்டிடத்தே செய்த உயிர்க்கொலையால் உண்டாகிய, கடிய வினை - துன்பம் தரும் தீவினையானது, இன்று கூடுவதொழிந்தது கொள் - இப்போது நீ இம் முனிவனைக் கண்டதனால் நின்னை வந்தடையாது ஒழிந்ததென்று கொள்வாயாக, நாடுவது என் - இனி வேறு பல நினைவது வேண்டா, ஞமலி இவை நணுகல - நீ ஏவிய நாய்கள் இம் முனிவனை நண்ணா வாயின, கண் காண் - அவற்றை நின்கண்களாலே நன்கு காண்பாயாக எ-று. இம் முனிவன்பால் யசோமதியை ஆற்றுப்படுத்து அவன் கூறும் அறத்தால் நன்னெறிப்படுத்தும் கருத்தின னாதலின், கலியாண மித்திரன், “ஈடின்முனி யோகினது பெருமை இஃது” என்று முன் மொழிந்து கொண்டு, அவனைக் கண்ட காட்சியால் வரும் பயன் இது வென்பான், “காடுபடு கொலையினொடு கூடிய வினை நின்னைக் கூடுவ தொழிந்தது கொள்” என்றான். ஓடு - ஆனுருபின் பொருட்டு. தன் கூற்றினை யசோமதி இனிது ஏற்றுக்கோடற்கு, யான் கூறுவதைத் துணிதற்குச் சான்று வேறு விரும்ப வேண்டா என்பான், “நாடுவதென்” என்றும், தீங்கு செய்யப் போந்த நாய்க் கூட்டம் அதுசெய்ய நணுக மாட்டாது சேய்மைக்கண் நின்றொழிந் தமையே போதிய சான்றாம் என்றும் அதனை நீ நின் கண்ணெதிரே காண்கின்றாய் என்றும் கூறுவான், “ஞமலியிவை நணுகல” என்றும், “கண்காணாய்” என்றும் கூறினான். கண்காண் என்றது காட்சியளவை காட்டியவாறு. யசோமதி, முனிவன் திருவடியில் தன் தலையையரிந்து பலியிடக் கருதுதல் 280. என்றவனு ளங்கொளவி யம்பினனி யம்பச்* சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா இன்றெனது பிழைதணிய என்றலைய ரிந்தே நின்றமுனி சரணிடுவ† லென்றுநினை கின்றான் உரை:- என்று - என்பதாக, அவன் உளம் கொள - யசோமதியின் மனம் ஏற்குமாறு, இயம்பினன் - சொல்லிய கலியாண மித்திரன், இயம்ப - முனிவனை வணங்குமாறு உரைக்க, சென்று - அருகே சென்று, திருவடிமலர்கள் சென்னிமிசை யணியா - முனிவனுடைய அழகிய பாதமாகிய தாமரைப்பூவை வணங்கித் தன் தலையில் சூடிக்கொண்டு, இன்று - இப்போது, எனது பிழை தணிய - என் குற்றமெல்லாம் நீங்க, என்தலை அரிந்து - என்னுடைய தலையை யறுத்து, நின்ற முனி - தவநெறியில் சலியாது நின்ற சுதத்த முனி வனுடைய, சரண் இடுவல் - திருவடியில் வைப்பேன், என்று நினை கின்றான் - என்று யசோமதி நினைப்பானாயினான் எ-று. இயம்பினன் - வினைமுதல்மே னின்ற வினைப்பெயர். இயம்பக் கேட்டதும் யசோமதி முனிவனடிகளை வணங்க நினைத்தலின், வணங்குமா றுரைத்தானென்று வணக்கத்தைச் சென்னிமிசை யணித லென்றார். உயிர்க்கொலையே செய்து கன்றிய உள்ளமுடைய மற வேந்தனாதலின், தலையரிந்து வழிபடும் மறவர் போலவே நினைப் பான், “என்தலை யரிந்து நின்றமுனி” யெனவே, தவயோகத்தில் சுதத்தன் சலிப்பின்றி நிற்குமாறு பெற்றாம். இவ்வாறு நினைத்த வேந்தன் தன் உடைவாளை யுருவத் தொடங்குதலின், அவன் கருத்து வணிகன் நன்கு அறிந்து கொள்ளத்தக்க நிலையில் மெய்ப்பட்டமை கண்டு, அவன் மேலும் சிலகூறி அரசன் கருத்தை மாற்றுகின்றான்; அது வரும் செய்யுளிற் கூறப்படுகிறது. கலியாணமித்திரன் தடுத்துரைத்தல் 281. இன்னதுநி னைந்ததிவ னென்றுகையெ டுத்தே மன்னநின்மனத்ததுவி டுத்திடும னத்தில் தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக வானால் நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம். உரை:- இவன் நினைந்தது இன்னது - இவ் யசோமதி நினைத்தது இத்தன்மைத்தாகும், என்று - என்று வணிகனான கலியாணமித்திரன் உணர்ந்து, கையெடுத்து - கையெடுத்துத் தொழுது தடுத்து, மன்ன - வேந்தே, நின் மனத்தது விடுத்திடு - நின்மனதில் நினைத்த எண்ணத்தை விட்டொழிப்பாயாக, மன்னுயிர் - உலகில் நிலைபெறும் உயிர்களை, மனத்தில் தன் உயிரின் வளர்க்கை - மனதில் தன்னுடைய உயிர் போலக் கருதிப்பேணி வளர்ப்பது, தகவு - தகுதியாகும். ஆனால் - அவ் வாறாயின், நீ நின் உயிரைக் களையின் - நீ நின்னுடைய உயிரைப் போக்குவாயாயின், இன்னருள் அது என்னாம் - பின்பு நீ செய்தற்குரிய இனிய அருட்செய்கையானது எவ்வாறு இயலுவதாம் எ-று. யசோமதி தன் தலையை யரிந்து முனிவன் திருவடியி லிடக் கருதிய கருத்தைத் தெளிய வுணர்ந்து கொண்டமையின், “இன்னது நினைந்த திவன்” என்றும், அச்செயலைத் தடுத்தலினான் “கையெடுத்து நின் மனத்தது விடுத்திடு” என்றும் கூறினான். தான் செய்த குற்ற மெல்லாம் கெடவேண்டின், அரசன் அருளறம் மேற்கொள்வதே தக்கதென்கின்றானாகலின், “மனத்தில் தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கை தகவு” என்றும், அதனைச் செய்யும் வினைமுதல் நீ யாதலின், நீ நின்னுயிரைப் போக்கிவிடின், அருள்வினை யின்றாகி, நின்கருத்தும் நிறைவெய்தா தென்பான், “இன்னருள தென்னாம்” என்றும் கூறினான்; இரட்டுற மொழிதலால் நின்னருளது என்று கொண்டு நினக்குரிய அருட்செய்கை இன்றாதலின், அதனால் ஒருபயனும் இன்றாம் என்று உரைத்துக்கொள்க. வணிகன் மேலும் சில கூறல் 282. முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப் பின்னுமிகை பிறவுமுள* பேசுதிற நினைவுந் துன்னுவயின்† முன்னிதுது ணிந்துபிழை தூராய் பின்னுநினை கின்றவிது பீழைபெரி தென்றான். உரை:- முன்னம் உரைசெய்த பொருள் முடிந்திலது - முன்னே யான் சொல்லிய பொருள் இன்னும் முடியவில்லை, முடிய - சொல்லி முடித்தற்கு, பின்னும் மிகை பிறவும் உள - சொல்லிய அப்பொருட்கும் மிகுதியாக வேறு பலவும் உள்ளன, பேசுதிறம் நினைவும் துன்னுவயின் முன் - வாயாற் பேசும் சொல்லும் மனத்தால் நினையும் நினைவும் ஒன்றுசேரு முன்னே, இது துணிந்து - இவ்வுயிர்க்கொலையைச் செய்யக் கருதி, பிழை தூராய் - பண்டைப்பாவத்தைப் போக்காயாயினை, பின்னும் நினைகின்ற இது - பின்னரும் நீ நின் தலையையரியக் கருதும் இக்கருத்து, பீழை பெரிது என்றான் - மிகவும் துன்பம் பயக்கும் தீவினையாகும் என்று சொன்னான் எ-று. முன்பு, முனிவனது தவப்பெருமை யீது என்றும், அவனுடைய காட்சிச்சிறப்பால் அரசனுடைய தீவினை நீங்கின என்றும் அதற்கு அவனேவிய நாய்கள் முனிவனை நணுகாமை தக்க காட்சியளவை யாமென்றும் கூறி இனிச் செய்யத் தகுவனவும் பிறவும் கூறிமுடிக்கு முன்னே அரசற்குச் சூழ்ச்சி பிறந்தது மெய்ப்பட்டமை கண்டு தன் பேச்சு நெறிமாறியது கூறுவான், “முன்ன முரை .... பிறவுமுள” என்றும், இப்பேச்சு முடிவில் அரசன் தான் செய்யத்தக்க தனை வாய்விட்டுச் சொல்லிச் செயல்வகை யாராய்ந்து துணிவதுவேண்டு மென்றற்கு, “பேசுதிறம் நினைவும் துன்னுவயின் முன் இது துணிந்து” என்றும் கூறினான். எண்ணும்மை விகாரத்தால் தொக்கது. இத்துணிவு, மேலும் உயிர்க்கொலையாய்ப் பண்டு செய்திருந்த பாவத்தை மிகுதிப்படுத்துதலின், “பிழைதூராய்” என்றான். பாவம் உயிரைக் கீழ் நோக்கித் தள்ளுதலின், “தூராய்” என்றான். தூர்த்தல் - அடைத்தல். “பின்னும் நினைகின்ற இது” என்றது கூறியதுகூற லாயினும், “பெற்றதன் பெயர்த் துரை நியமப்பொருட்” டாதல் பற்றி, நியமித்த வாறு. பீழை - துன்பம். மன்னன் தெளிந்து முனிவனைப் பரவுதல் 283. மன்னவன்ம னத்ததைவி டுத்தருள்*வளர்க்குஞ் சொன்னவில்சுதத்தமுனி துணைமல† ரடிக்கண் சென்னிமுடி துன்னுமலர் சென்றுறவ ணங்கிப் பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான் உரை:- மன்னவன் - வேந்தனாகிய யசோமதி, மனத்ததை விடுத்து - தன் மனத்தில் நினைத்த எண்ணத்தை விட்டொழித்து, அருள் வளர்க்கும் சொல் நவில் சுதத்தமுனி - அருளாகிய அறத்தை மிகுவிக்கும் சொற்களையே சொல்லும் இயற்கையுடையனாகிய சுதத்த முனிவனுடைய, துணைமலர் அடிக்கண் - தாமரைபோலும் இரண்டு திருவடியிலும், சென்னி முடி துன்னுமலர் சென்றுஉற வணங்கி - தலையில் சூடிய முடியிற்கொண்ட பூவானது முனிவன் திருவடியிற் சென்று பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, இறைவ - பெருமானே, எமர் பவம் முழுதும் - எம்முன்னோரடைந்த பிறப்பு வகை முற்றும், பன்னியருள் என்றான் - உரைத்தருள்க என்று வேண்டிநின்றான் எ-று. வணிகன் கூறியவற்றை உளங்கொளக் கேட்டுத் தெளிவெய்தின மையின், “மனத்ததை விடுத்தான்” என்றார். எவ்வுயிர்க்கும் அருளே நினைதலும் செய்தலும் உடையனாதலின், முனிவனை, “அருள் வளர்க்கும் சொல் நவில் சுதத்த முனி” என்றார். சொல் மேல் வைத் தோதினாராயினும் ஏனை நினைவு செயல்களும் கொள்ளப்படும் என்க. தன் தன்மையின்றி அம்முனிவன் செய்யும் அருள் வயத்த னானமை தோன்ற, “துணைமலரடிக்கண்....... வணங்கி”னான் எனவுணர்க. அறங்கேட்கின்றமையின், “இறைவ” என்றும், தன் முன்னோர்செய்த செய்வினைப் பயனை யறிதல் வேட்கை யுடையனாதலின், “எமர் பவம் முழுதும் பன்னியருள்” என்றும் வேண்டினான். பன்னியருள், ஒரு சொல்லாய் உரைக்க என்னும் பொருள் பட நின்றது, இஃது உயர்சொல். முனிவன் அசோகன் எய்திய பிறப்பினைக் கூறுதல் 284. ஆங்குமுனி யவதியி ன றிந்தபொரு ளதனை வாங்கியவ னுணரும்வகை வைத்தருள்செய் கின்றான் ஈங்குமுனி யற்றியத வத்தினி னசோகன் ஒங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான். உரை:- ஆங்கு - அப்பொழுது, முனி - சுதத்த முனிவன், அவதியின் அறிந்த பொருளதனை வாங்கி - அவதி ஞானத்தாலே அறியப்படுவதாயிருந்த முற்பவப் பொருளையுணர்ந்து, அவன் உணரும் வகை வைத்து - யசோமதி நன்கு உணர்ந்து கொள்ளும் முறையில் வகுத்தமைத்து, அருள் செய்கின்றான் - உரைப்பானா யினான், ஈங்கு - இவ்வுலகத்தே, முன் இயற்றிய தவத்தினின் - முன்னேசெய்த தவத்தின் பயனாக, ஓங்கு புகழ் அமருலகம் ஒன்றினுள் - முதற்கண் உயர்ந்த புகழையுடைய தேவருலகங்கள் ஒன்றினுள்ளே, அசோகன் உவந்தான் - அசோகனாகிய மன்னன் இன்புற்றிருந்தான் எ-று. அவதி - சம்மியஞானவகை ஐந்தனுள் ஒன்று. அவை மதி ஞானம், சுதஞானம், அவதிஞானம், மனப்பரியயஞானம், கேவல ஞானம் என்பனவாகும். விகலம், தூலம், சகல நிச்சயம் எனவரும் வகை மூன்றனுள், இந்த அவதி ஞானம் விகலத்தின் பாற்படும் என்பர். இந்த ஞானத்தால் இறப்பில் நிகழ்ந்தனவும், எதிர்வில் நிகழ்வனவும் அறியப் படுதலால், இதனைக் காட்சியறி வென்றும் கூறுவர். பண்டை நிகழ்ச்சிகளை நிரலே எடுத்துக்கேட்கும் வேந்தன் மனம் தெருண்டு அருளறம் மேற்கொள்ளத் தக்க நெறியின்கண் வைத்து ஓதுகின்றா னென்பார், “பொருளதனை வாங்கி அவனுணரும் வகை வைத்தருள் செய்கின்றான்” என்றார். அறிந்த, அறியப்படுவதாயிருந்த வென்பது. அமருலகத்தை இந்திரபடல மென்றும், அஃது அறுபத்து மூன்று வகைப்படுமென்றும் கூறுபவாதலின், அவற்றுள் ஒன்றி லெய்திய அசோகனை, “ஒங்குபுகழமருலகமொன்றினு ளுவந்தான்” என்றார். “அந்தரத் தறுபத்து மூன்றதாகிய இந்திரப் படலமும்”1 என்று சான்றோர் கூறுவது காண்க. நல்வினை யாற்றிப் புகழெய் தினோருலக மென்றற்கு, “ஓங்கு புகழமருலகம்” என்றாரென வுணர்க. உவந்தான் என இறந்த காலத்தாற் கூறியதனால், முதற்கண் என்பது வருவிக்கப் பட்டது. அசோகன் பின்பு பிரமகற்பத்தில் இனிதிருத்தல் 285. அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப் பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்தும் திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோ டருமையில னகமகிழ்வி னமருமவன்* மாதோ. உரை:- அவன் - அசோகன், அருமணியின், ஒளி திகழும் அமரனவன் ஆகி - கிடைத்தற்கரிய மாணிக்க மணியினது ஒளி வீசும் தேவனாகி, பிரமன் உலகதனுள் - பின்பு பிரமகற்பத்தில், மிகைபெறு கடல்கள் பத்தும் - மிகுதியாகப்பெற்ற வாழ்நாட்கள் பத்துக்கடற் காலம், திருமணிய துணை முலைய தெய்வமடவாரோடு - அழகிய மணிமாலை யணிந்த இரண்டாகிய முலையினையுடைய தெய்வ மகளிருடன், அருமையிலன் - போக நுகர்ச்சிக்கண் அருமை சிறிது மின்றி மிக்க, அகமகிழ்வின் அமரும் - மனமகிழ்ச்சியோடு விரும்பி யுறைவானாயினான் எ-று. தேவர்கள் செம்மணிபோலும் நிறமுடைய மேனியராகலின், “அருமணியின் ஒளி திகழும் அமரனவனாகி” என்றார், “ஒளியுமிழ்ந் திலங்கு மேனி பரிதியி னியன்ற தொக்கும்”1 என்று தேவரும் கூறுவர். தேவருலகத்துச் சௌதர்ம கற்பமுதலாகக் கூறப்படுவனவற்றுள், நான்கு லட்சம் விமானங்களையுடைய பிரமகற்பத்தில் அசோகன் இருந்தான் என்க. மூவகை யோகங்களும் முற்றி நால்வகை ஆராதனை தியானத்தால் உடம்பு நீங்கி அமரருலகு புகுவோர் பிரமகற்பம் புகுவரென்பது2 சைனநூன் முடிபு. பிரம பிரமோத்தர கற்ப தேவர்களுக்கு ஆயுள் பத்துக்கடலாகும். கடலென்பது சைன நூல்களிற் காணும் கால அளவு. “அயனம் ஆண்டு, பணையுகம் பூவம் பல்ல பவ்வமே யனந்த மீறாக், கண்முதற் காலபேதம்”3 என வருவது காண்க. மகளி ரின்பத்தில் திளைத்துக்கொண்டிருத்தலை, “முன்செய்நல் வினையினால் முகிலின் மின்னனார், இன்செய் வாயவ ரேந்து கொங்கையர், வந்திடைச் சூழ்ந்திட வணங்க வானவர், அந்தமி லின்பத்து ளமரன் மேவினான்”4 என்று மேருமந்தர புராணம் கூறுமாறு காண்க. திருமணிய, துணை முலைய என்ப குறிப்புப் பெயரெச்சங்கள். மகளிரின்பம் எளிதிற் பெறுவதன்றாகலின், அதனை இனிது எளிதிற் பெறும் அசோகனை “அருமையிலன்” என்றார்; “அஞ்சொல் மடவார்தம் மார்வக் களிபொங்க, நெஞ்சத் தயிலேற்றும் நீள்வெங் கழுவூர்ந்தும், குஞ்சிக் களியானைக் கோட்டழ லுட்பட்டும், துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே”1 எனச் சான்றோர் கூறுவது காண்க. மாதும், ஒவும், அசை. அமிர்தமதியின் பிறப்புநெறி கூறுதல் 286. வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சின்* துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி அஞ்சின்மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள் நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய். உரை:- நாம நகை வேலோய் - அச்சம் பொருந்திய ஒளி வீசும் வேலையுடைய வேந்தே, வஞ்சனையில் - வஞ்சனையாக, மன்னவன் - வேந்தனாகிய யசோதரனை, அன்னையுடன் - அவன் தாயாகிய சந்திரமதியுடனே, நஞ்சில் துஞ்சும் வகை சூழ்ந்து - விடத்தால் இறக்குமாறு உண்பித்து, தொழுநோய் முழுதுமாகி - உடல் முழுதும் குட்டநோ யுற்று, அருநரகில் - நீக்குதற்கரிய நரகத்திலே, நஞ்சனைய வினைநலிய - தான் உண்பித்த விடத்தைப் போலும் தீவினையானது வருத்த, அம் சில மொழி யமிர்தமதி - அழகிய சிலவாய சொற்களை யுடையளான அமிர்மதியானவள், வீழ்ந்தாள் - வீழ்ந்து வருந்து வாளாயினாள் எ-று. வஞ்சனையாக நஞ்சூட்டித் தன் கணவனான யசோதரனையும் அவன்தாய் சந்திரமதியையும் கொன்றதைக் குறித்து, “நஞ்சில்” துஞ்சும் வகை சூழ்ந்து” என்றார். காரணம் காரியமாக உபசரிக்கப் பட்டது. அச்செயலின் விளைவு தொழு நோயாய் இம்மையில் வருத்திற் றென்றற்கு, “தொழுநோய் முழுதுமாகி” என்றும், மறுமையில் நர கடைந்தா ளென்றற்கு, “நஞ்சனைய வினைநலிய” “அருநரகின் வீழ்ந்தாள்” என்றும் கூறினார். “அஞ்சின்மொழி யமிர்தமதி” யென்றது குறிப்பால் சொல்லிற் சின்மையுறினும் தீய நினைவு செயல்களிற் பன்மையுண்மை தோற்றுவித்து இகழ்வு புலப்படுத்திற்று. நரக வகைகளை முனிவன் வேந்தற்குக் கூறுதல் 287. இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின் மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசைப்பத்* தெருளியெழு† வகைநரக குழிகளிவை தாரோய். உரை:- தாரோய் - மாலையை யணிந்த வேந்தே, வெருள் செய்வினை தருதுயரம் - மயக்கத்தைச்செய்யும் தீவினைகள் பயக்கும் துன்பம், விளையும் நிலம் இசைப்பத் தெருளி - வந்து வருத்தும் இடங்களை யாம் சொல்லக்கேட்டுத் தெளிந்து கொள்வாயாக, நரக குழிகள் இவை - நரகக்குழிகளாகிய இவை, எழுவகை - ஏழுவகைப் படும், இருளின் இருள் - தமத் தமப்பிரபை, இருள் - தமப்பிரபை, மணல் - வாலுகப்பிரபை, பரலின் - பரற்கற்களாகிய சர்க்கராப் பிரபை, மருள்செய் உருவின பொருளின் - கண்டார்க்கு மயக்கத்தைச் செய்யும் இரத்தினங்கள் நிறைந்த அரதனப்பிரபையென, வருபெயரும் அவை - வரும் பெயரும் அவற்றிற்கு அவையே யாம் எ-று. ஒளியாலும், வன்மையாலும், பன்மையாலும், தன்பாலடைந் தார்க்கு அரதனம் போலப் பெருமயக்கத்தைச் செய்தலின், அரதனப் பிரபையை, “மருள்செ யுருவின பொருளின்” என்றார். உருவின என்பதையே அரதனப்பிரபைக்கு ஏற்றி, பொருளின் என்பதற்கு இருளின் இருள் முதலியன தமத்தமப்பிரபை முதலியவற்றில் உள்ள பொருள் இப்பொருள்களே என்று உரைத்தலுமாம். பிரபை - வட்டம். ஒடு - எண்ணொடு. இன் - சாரியை. வெருள் - மயக்கம்; “வெருளி மாந்தர்”1 என்றாற்போல. தெருளி - முன்னிலைக்கண் வந்தது. இகரம் - விகுதி. பிறதாண்டும் “தின்னி” (293) என்றதற்கும் இதுவே கூறிக் கொள்க; இவை தெருடி, தின்றியென நிற்றற்பாலன. இங்கே கூறிய நரகவகைகளை, “ஏழுள நரக நாம மிரதனஞ் சர்க்கவாலு, வாழிய பங்கந் தூமந் தமந்தமத் தமத்தமாகும்”2 என்பதனாலுமுணர்க. இவற்றின் இயல்பை யறிந்தால் யசோமதி தீவினைசெய்ய நினையான் என்பது கொண்டு, “இசைப்பத்தெருளி” யென்றார்; பிறசான்றோரும், “மாற்று தற்கரிய துன்பம் பெரிதென்று மயங்கவேண்டா, மாற்றுதற் கெளிது கீழ்கீழ் நரகத்தவ்வியல் பறிந்தால்”1 என்று கூறுதல் காண்க. அமிர்தமதி தூமப்பிரபையில் வீழ்ந்து வருந்துந்திறத்தை முனிவன் கூறல் 288. மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்ப நீரெனவு ருக்கிடுநி லப்புரைய* வைந்தாம் ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தாள் ஆருமில ளறனுமில ளமிர்தமதி யவளே† உரை:- அமிர்மதியவள் - அமிர்தமதியாகிய அத்தீவினையாட்டி, ஓரின் - ஆராயுமிடத்து, ஆரும் இலள் - அந்நரகில் தனக்கு ஒப்பாவார் ஒருத்தருமின்றி, அறனும் இலள் - அறத்தின் துணை தானும் இன்றி, மேருகிரி யுய்த்திடினும் - மேருமலையைக் கொணர்ந்து தன்கண் இட்டாலும், வெப்பமொடு - வெப்பத்தால், தட்ப நீரென உருக்கிடும் - குளிர்ச்சியை யுடைய நீர்போல உருக்கி விடத்தக்க, நிலப்புரைய - நிலங்களாகிய புரைகளை, ஐந்தாம் புகையுறு நரகின் - ஐந்தாவதாகிய புகைமிக்க தூமப்பிரபை யென்னும் நரகில், உருகியுடன் வீழ்ந்தாள் - வீழ்ந்து வேகலானாள் எ-று. பனிமூடிக் குளிர்ச்சி மிகுந்து உறைப்புண்டு சலிப்பின்றித் திண்ணிதாயிருக்கும் மலைகட்குத் தலையாய மலையாயினும், மேருமலை நிலைபெயர்ந்து தன்கண் வீழ்ந்தால், தன் வெப்பத்தால் அதனை நீராய் உருக்கிவிடும் என்றது, தூமப்பிரபையின் வெப்பமிகுதி யுணர்த்தியவாறு. நரக மொவ்வொன்றிற்கும் பலபுரைகளுண்மையின், “புரைய” என்றார். இதனியல்பை, “மேருநே ரிருப்பு வட்டை யிட்ட வக்கணத்தினுள்ளே, நீரென வுருக்குஞ் சிதவெப்பங் கணின்ற கீழ்மேல், ஆர்வமி லறிவன்தந்த நூலின்ஐந் தாவதன்னிற், கார்முகில் வண்ண சீத வெப்பங்கணின்ற கண்டாய்”2 என்பதனால் உணர்ந்து கொள்க. அமிர்தமதிக்கு நிகராக மிக்க தீவினை செய்தார் பிறர் இலர் என்பதற்கு “ஆருமிலள்” என்றும், அறம் சிறிதேனும் இருந்திருப்பினும் அக் கொடிய நரகு புகுதற்கு ஏது இராது என்பார், “அறனுமிலள்” என்றும் கூறினார். அமிர்தமதியாகிய அவள் என்புழிச்சுட்டு, அவள் செய்த தீவினையைச் சுட்டி நின்றது. அவளெய்திய நரகவேதனையைக் கூறுதல் 289. ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச் சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார் போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார் மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ. உரை:- ஆழ்ந்த குழி வீழ்ந்தபொழுது - ஆழமான அந்நரகக் குழியில் அவள் வீழ்ந்தபோது, அருநரகர் - விலக்கற்கரிய நரகவீரர், ஓடி-ஓடிப்போய் அவளைப்பிடித்து, சூழ்ந்து - பரலாய்க்கூடி, துகையா - உதைத்துமிதித்து, எரியுள் இட்டனர்கள் சுட்டார் - நெருப்பிலிட்டுச் சுட்டார்கள். புண்பெருக போழ்ந்தனர்கள் - அவளுடலிற் புண்ணுண் டாமாறு வாளாற் பிளந்தார்கள், வன்தறி புடைத்தார் - வலிய கம்பத்தால் அவளை யடித்தார்கள், மூழ்ந்த வினை - தாம் செய்துமுற்றிய வினை, முனியுமெனின் - தம்மை வெறுத்துப் பகைக்குமாயின், முனியலரும் உளரோ - வெறாதவரும் உண்டோ, இல்லை, எ-று. ஐந்தாம் நரகமாதலின், ஆழ்ந்தகுழி யெனப்பட்டது. நரகத் துன்பம் கழியுங்காலத் தன்றிப் பிறாண்டு எவ்வழியும் விலக்குறாது ஒறுக்கும் இயல்பினராதல் தோன்ற “அருநரகர்” என்றார். தீயிட்டுக் கொளுத்தலும், வாளாற் போழ்தலும், தறியாற்புடைத்தலும் நிரலே கூறியது, அவளுற்ற துன்பம் கூறுமாற்றால் யசோமதியை நன்னெறிப் படுத்தற்கு; அவன் மனத்தை வருத்துதற் கன்று; “அருள் வளர்க்கும் சொன்னவில் சுதத்தமுனி” அது செய்யாரென வுணர்க. தம்முயிர்க்கு இன்பந் தருமெனச் செய்த தீவினை அது தாராது துன்பந்தருதலின், “மூழ்ந்த வினை முனியின்” என்றும், ஒருவற்கு அவன் செய்வினை போலப் பயன் விளைப்பதில் ஒருவரும் நிகராதல் முடியாமையின் அதனிற் சுற்றம் சீரியது பிறிதில்லை யென்றும், அச்சுற்றமில்லார்க்குச் சுற்றமென்பதே இல்லையென்றும் கூறுவார், “முனியலரும் உளரோ” என்றும் கூறினார். முழுதென்னும் சொல் மூழ்த்தென வினையாகி, எதுகைநோக்கி மெலிந்து நின்றது. உம்மை - சிறப்பு. ஓகாரம் - எதிர்மறை. 290. செந்தசைகள் வெந்தனகள் தின்றனைமு னென்றே கொந்தழலில் வெங்துகொது கொதுவெனகொ திக்கும் செந்தழலி னிந்திரர்கள் செம்புகள்தி ணிப்ப வெந்தழலி னைந்துருகி* விண்டொழுகு முகனே. உரை:- முன் - இறப்பதற்கு முன்னே, செந்தசைகள் வெந்தனகள் தின்றனையே என்று - செவ்விய வூன்களை வேகவைத்துத் தின்றா யன்றோ என்று சொல்லி யிகழ்ந்து, செந்தழலின் இந்திரர்கள் - சிவந்த நெருப்பைப்போலும் தலைவர்கள், கொந்தழலில் வெந்து - கொத்தாக மிக்கெழும் நெருப்பில் வெந்து, கொது கொது வெனக் கொதிக்கும் - கொது கொது வென்று கொதிக்கின்ற, செம்புகள் திணிப்ப - செப்புத் துண்டங்களையெடுத்து அவள் வாயிலிட்டுத் திணித்தார்களாக, வெந்தழலின் - அவற்றின் மிக்குற்ற வெப்பத்தால், நைந்து உருகி விண்டு முகன் ஒழுகும் - அவளுடைய முகம் வெந்து நீராயுருகித் தலையினின்றும் ஒழுகுவதாயிற்று எ-று. நரகவீரர்கட்குத் தலைவர் நெருப்புப்போலும் நிறமும் வெம் மைப்பண்பும் உடையாராதல் தோன்ற, “செந்தழலின் இந்திரர்கள்” என்றார். இந்திரர் - தலைவர்; இவர்கள் நரகலோகத்தே வாழும் நரகவீரர்கட்குத் தலைவர்போலும். செப்பு தடிகள் ஊன் தடிபோல இருத்தலின் அவட்கு ஊனுணவாக இவர்கள் அவற்றைக் கொதிக்கக் கொதிக்க வேகவைத்து வாயில் திணித்தார்கள் என்க. அவ்வெப்ப மிகுதியை யாற்றாமையால் முகம் உருகி நைந்தாள் என்பார், “வெந்தழலின் நைந்துருகி விண்டொழுகும் முகனே” என்றார். என்றே யென்புழி ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. முகனே என்புழி யஃது ஈற்றசை. 291. கருகருக ரிந்தனள்க வின்கொளொரு* பாவை பெருகெரியி னிட்டுருக விதுபெரிது மினிதென்† றருகணைய நுந்துதலு மலறியது தழுவிப் பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம். உரை:- கருகரு கரிந்தனள் - நரகத்தீயால் மிகக் கருகருத்துத் தீய்ந்தவளான அமிர்தமதியை, கவின்கொள் ஒரு பாவை - அழகு கொள்ளச் செய்த ஒரு ஆண் பாவையைக் காட்டி, பெருகு எரியின் இட்டு - அதனை மிக்கெழுந்தெரிந்த தீயிலிட்டுக் காயவைத்து, உருக - உருகி நெகிழும் பதத்தில், இது பெரிதும் இனிது என்று - இது தழுவுதற்கு உனக்கு இனிதாயிருக்குமாகலின் தழுவுக என்று சொல்லி, அருகு அணைய நுந்துதலும் - அதனருகே சென்று தழுவுமாறு நரகவீரர் அவளைத்தள்ளவும், அலறி - ஓலமிட்டழுது, அது தழுவி - அதனை யவர் சொல்லியபடியே தழுவி, உடலம் எல்லாம் - அவள் உடம் பெல்லாம், பொரு பொரு பொரிந்து - பொரு பொரு வெனப் பொரிந்து, பொடியாம் - பொடியாய் விழுகின்றாள் எ-று. முன்பே, “எரியுள் இட்டனர் சுட்டார் ” (289) களாதலின், வெந்து கரிந்துகிடந்த அவள் நிலையினை, “கருகரு கரிந்தனள்” என்றார். பிறனை விழைந்து அறம் பிழைத்தாளாதலின், அப்பாவங் குறித்து ஒறுப்பார், அழகிய ஆடவனொருவனைப்போல உருவமைத்து நெருப்பிலிட்டுச் சிவக்கக் காய்ச்சி அதனைத் தழுவுக என்று நரகவீரர் உரைத்தபோது, அவள் அஞ்சிநின்றளாக அதுகண்டு வெகுண்டு அதனை. அவளைத் தழுவுமாறு வற்புறுத்தியது தோன்ற, “இது பெரிதும் இனிதென்று அருகணைய நுந்துதலும்” என்றார். அட்ட பங்கனது கூட்டத்தை விரும்பி யொழுகிய நினக்கு இது மிக இனிதா மென்பார், “இதுபெரிதும் இனிது” என்று நரகவீரர் சொல்லிப் பழித்தார் என்றார். அதனைத் தழுவியதன் பயனாக, அவளுடலம் முழுதும் வெந்து பொடியாயிற் றென்பார், இத்துணை யொறுத் தலுக்கும் அவளுடல் உயிரின் நீங்காது ஒன்றியிருத்தலின், அவ் வொற்றுமை குறித்து “பொடியாம்” என்றார். கருகரு, பொரு பொரு, என்பன இரட்டைக்கிளவிகள்; முன்னே கொது கொது வென்றது மது. அவளை நஞ்சுண்பித்தமை கூறல் 292. நாவழுகி வீழமுழு* நஞ்சுணம டுத்தார் ஆவலறி யதுவுருகி யலமரினு மன்னோ சாவவரி திவணரசி தகவில்வினை தருநோய் யாவும்விளை நிலமதனி லினியவுள வாமோ. உரை:- நா அழுகி வீழ - நா முதலிய உறுப்புக்கள் அழுகி வீழ, முழுநஞ்சு உண - அவற்றைக் கலப்பில்லாத கொடிய நஞ்சு கலந்து உண்பிப்பாராய், அது உருகி அலறி அலமரினும் - அதனைக் கண்டு மனங்கலங்கிக் கதறி யழுது நாற்புறமும் சுழன்றோடினும், மடுத்தார் - அவளைவிடாது பற்றி உண்பித்தார்கள், அன்னோ - ஐயோ, இவண் அரசி - இந்நரகத்தே பண்டு இந்நிலத்தே அரசியா யிருந்த அமிர்தமதி, சாவ அரிது - சாதல் இன்றி நஞ்சினால் விளையும் துன்பத்தை நுகர்ந்துறையலானாள், தகவில் வினை தரும் நோய் யாவும் விளைநிலம் - தகுதியில்லாத தீவினைகள் யாவும் பயக்கும் துன்பமெல்லாம் வந்து வருத்தும் இடமாகிய இதன்கண், இனிய உளவாமோ - இனிய இடங்கள் உண்டோ, இல்லை யன்றோ எ-று. எனவே அவள் நாற்புறமும் ஒடி அலமருவது எற்றுக்கு என இரங்கியவாறு. ஆ - இரக்கக் குறிப்புணர்த்தும் இடைச்சொல். அவளுடலினின்று அழுகி வீழ்ந்தவற்றை அவளையே உண்ணச் செய்யும் கொடுமையுடன், அவற்றைத் தூய நஞ்சிற் கலந் துண் பிக்கும் கொடுமைகண்டு, அவள் வருந்தும் திறத்தை, “ஆ அலறியது வுருகி யலமரினும்” என்றார். தீயிலிட்டும், வாளாற் போழ்ந்தும், நஞ்சுண்பித்தும் வருத்திய காலத்தும் அவள் உயிர் துறவாமைக்கு ஏது கூறுவார், “சாவவரிது” என்றும், இவ்வுலகில் அரசியாயிருந்தாளாயினும், நரகில் பெருந்துன்பம் உறுவது ஒருதலை யென்றற்கு “இவணரசி’ என்றும் கூறினார். “எறிவெம் படையா லிவர்வீழ்ந்தெழலால், உறுவெந் துயரல்ல துடம்பு விடார்”1 என்று சான்றோர் கூறுதலால் சாதல் அரிதாதல் காண்க. தான் செய்த வினைப்பயனை நுகருமிட மாதலின், “இனிய வுளவாமோ” என்றார்; “வினையே துயரத்தை விளைப்பதலால், நினைவார் செயல் மற்றிலை”2 என்று கூறப்படுவதும் ஈண்டு அறியத்தக்கது. அவளுற்ற துன்பங்களை மேலும் கூறல் 293. முன்னைநுமர் தந்தசைமுனி ந்திலைநு கர்ந்தாய்க் கின்றுமினி துன்னவய வங்கள்தின லென்றே தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத் தின்னியென நொந்தவைகள் தின்னுமிகை திறலோய். உரை:- மிகை திறலோய் - மிக்கதிறலுடைய அரசே, முன்னை நுமர்தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு - முன்னே நின் கணவனும் மாமியுமாகியோருடைய ஊனை வெறாதுண்ட உனக்கு, உன் அவயவங்கள் தினல் - உன்னுடைய உறுப்புக்களையே நீ தின்பது. இன்னும் இனிது - இப்பொழுதும் இனிதாகவே யிருக்கும், என்று - என்று சொல்லி, தன் அவயவம் பல உழலத் தடிந்து வைத்து - அவளுடைய உறுப்புக்களை அவள் துடிதுடிக்க அறுத்து எதிரே வைத்து, தின்னி என - தின்பாயாக என்று ஒறுக்கவே, நொந்து - மனம் வருந்தி, அவைகள் தின்னும் - அவற்றைத் தின்பாளாயினாள் எ-று. யசோதரனும் சந்திரமதியும் மீனாகவும், தகராகவும், பிறவாகவும், பிறந்துழன்றபோது அவற்றைக்கொன்று அவற்றின் ஊனைத் தின்றா ளாதலின், அதனைச் சுட்டி, “முன்னை நுமர்தம் தசை முனிந்திலை தின்றாய்க்கு” என்றும், அவரூனும் நின் உடலூனும் ஒன்றேயாதலின், அப்போது அதனையுண்ட நினக்கு இப்போதும் இவை இனிய வாகவே யிருக்குமாதலின் உண்க என்பார், “இன்னும் இனிது உன்னவயவங்கள் தினல்” என்றும் கூறினார், அவயவங்களைத் துண்டு துண்டாக அறுத்தெடுத்த காலத்து ஆற்றாமையால் அவள் வருந்தினமை தோன்ற, “உழலத்தடிந்து” என்றும், அவற்றைக் கண்டு அருவருப்பு மிகக் கொள்ளுமாறு, “வைத்து” என்றும், அவர் கூறுமாறு உண்டற்கு அவட்கு உள்ளம் செல்லாமை தோன்ற, “தின்னியென” என்றும், “நொந்தவைகள் தின்னும்” என்றும் கூறினார். 294. திலப்பொறியி லிட்டனர்தி ரிப்பவு நெருப்பின் உலைப்பெருக ழற்றலையு ருக்கவு முருத்துக் கொலைக்கழுவி லிட்டனர்கு லைப்பவு முழக்கும் உலைப்பருவ ருத்தமது ரைப்பரிது கண்டாய். உரை:- திலப்பொறியில் இட்டனர் திரிப்பவும் - எள்ளை யாட்டும் எந்திரமாகிய செக்கிலிட்டு அவ் வமிர்தமதியைத் துன்புறுத்தியும், நெருப்பின் உலை - நெருப்பில் வைக்கும் உலைப் பானையில் ஏற்றி, பெருகு அழல்தலை உருக்கவும் - மிக்கெழும் நெருப்பினிடத்தே வைத்து உருக்கியும், உருத்து - வெகுண்டு, கொலைக்கழுவி லிட்டனர் குலைப்பவும் - கொலை புரியும் கழுமரத்திலேற்றி அவளுருவை யழித்தும் வருத்த, உழக்கும் - வருந்தும், உலைப்பரு வருத்தமது - போக்குதற்கரிய அவளுடைய துன்பமானது, உரைப்பரிது - சொல்ல வொண்ணாததாம் எ-று. எள்ளைப்பெய்து ஆட்டி எண்ணெய் எடுக்கும் பொறி, செக்கு. நெருப்பில் வைத்து உருக்குதற்கென்றே சமைந்துள்ள உருக்குப் பானைகளை, “நெருப்பின் உலை” என்றார். கொலைத்தொழிற் கென்றமைந்தமையின் கழுவைக் “கொலைக்கழு” என்பாராயிற்று; அதனால் உருச்சிதைந்து போதலின், “குலைப்பவும்” எனல் வேண்டிற்று. உலைப்பு - கெடுத்தல், நீக்குதல். கண்டாய், அசை. 295. ஒருபதினொ டொருபதினை யுந்தியத னும்பர் இருபதினொ டைந்தினிலு யர்ந்தபுகை யென்னும் பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும் ஒருபதினொ டெழுகடல்க ளளவுமொளி தாரோய். உரை:- ஒளி தாரோய் - ஒளிபொருந்திய மாலையினையுடைய வேந்தே, ஒருபதினொடு ஒருபதினை யுந்தி - ஒருபத்தோடு ஒருபத் தினைப் பெய்து பெருக்கி, அதன் உம்பர் இருபதினொடு ஐந்தினில் - வரும் நூறுடன் அதன்மேல் இருப்பத்தைந்துகூட உண்டாகிய நூற்றிரு பத்தைந்தாக, உயர்ந்த புகையென்னும் அளவு - உயரிய புகையென்று சொல்லப்படுகின்ற அளவில், பொருவரிய துயரினவை - ஒப்பிலாத துன்பவுடம்புகளைப் பெற்று, ஒருபதினொடு எழுகடல்கள் அளவும் - பதினேழு கடல்கள் காலம், பொங்கி உடன்வீழும் - உயர்ந்து வளர்ந்து வீழ்வாளாயினாள் எ-று. என்றது, இவ்வைந்தாம் நரகத்தில் புரைதோறும் தான்பெற்ற நரகவுடம்பு உயர்ந்து முடிவில் நூற்றிருபத்தைந்து புகை யென்னும் அளவுகொண்ட உயரம் உயர்ந்து மடிவாள் என்றும், அதன்கால எல்லை பதினேழு கடல்கள் என்றும் கூறியவாறாம். புகை யென்பது நீட்டலளவையில் ஒன்று; புகை - யோசனையுமாம். கடல் - கால அளவைகளுள் ஒன்று. முதலாம் நரகத்தில் நரகரது உடம்பு ஏழேமுக்காலே வீசம் புகை யென்றும், அஃது நரகந்தோறும் இரட்டித் துயர்ந்து ஐந்தாம் நரகத்திறுதியில் நூற்றிருபத்தைந்து புகையுயரம் உயருமென்றும் கூறுப. “ஒன்று மூன்றைந்து மேழு மொன்பதும் பத்தோ டொன்றும், நின்ற மூன்றோடு பத்தும் நிரையத்துப் புரைகள் மேன்மேல் ஒன்று மூன்றேழுபத்தும் ஒருபத் தேழ் இருபத்தீரின், நின்றமூன்றோடு முப்பா னாழிகீழ் புரைதோறாயு”1 என்பதனால், ஐந்தா நரகில் வாழ்நாளளவு பதினேழு கடல்களாத லுணர்க. 296. தொல்லைவினை நின்றுசுடு கின்றநர கத்துள் அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவள் எல்லையில யிதுவிதென வெண்ணியொரு நாவிற் சொல்லவுல வாவொழிக சுடருநெடு முடியோய். உரை:- சுடரும் நெடு முடியோய் - ஒளிர்கின்ற நெடிய முடியையுடைய அரசனே, தொல்லைவினைநின்று சுடுகின்ற நரகத்துள் அல்லல் இவை - பண்டைவினையானது விடாது பற்றி வருத்தும் நரகத்தில் துன்பங்கள் இவைகளாகும். அல்லனவும் அமிழ்தமதியுறுவள் - அமிழ்தமதி யிவையேயன்றி இவையல்லாத வேறுபிற துன்பங்களையும் அடைவாள், எல்லையில - எல்லை யில்லாதனவாகிய அவற்றை, இது இது என எண்ணி - ஒவ்வொன்றாக இஃது இத்தன்மைத்து என்று எண்ணி, ஒருநாவில் சொல்ல உலவா - ஒருநாவாற் சொல்வதற்கு இல்லை, ஒழிக - இனி அவற்றைக் கேட்டலை யொழிக எ-று. முன்னைப் பிறப்பிற் செய்த தீவினைப் பயனை நரகத்திடத் தேயிருந்து நுகர்வது குறித்து, “தொல்லைவினைநின்று சுடுகின்ற நரகத்துள்” என்றார். சுடுகின்ற தென்றது, துன்பம் செய்வதுபற்றி; “தீயவை தீயினு மஞ்சப்படும்” என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறியது காண்க. மக்கட் பிறப்பில் வினைப்பயன் கணந்தோறும் மாறிவருதல் போலாது நரககதியில் மாறுதலின்றி ஒருபடித்தாய் நின்று வருத்துவதுபற்றி, “நின்று சுடுகின்ற நரகம்” என்றாரென வுணர்க. இதுகாறும் கூறிய துன்பங்களேயன்றி, இவற்றின் வேறாகப் பல துன்பங்களுண்டென்றற்கு “அல்லனவும் அமிழ்தமதி யுறுவள்” என்றார். அவை ஓரெல்லைக் குட்படுவன வல்லவாதலின், “எல்லையில” எனப்பட்டன; அதனால் அவற்றை வகுத்தும் விரித்தும் ஓதுவது எளிதன்றென்றும், பயனில் செயலென்றும் கூறுவார், “இதுவிதுவென்று ஒருநாவிற் செல்லவுலவா” என்றும், “ஒழிக” என்றும் கூறினார். யசோதரனும் சந்திரமதியும் பிறந்து வருந்திய திறத்தைக் கூறுதல் 297. எண்ணமிலி சோதரனொ டன்னையிவர் முன்னாள் கண்ணியவு யிர்க்கொலைவி னைக்கொடுமை யாலே நண்ணியவி லங்கிடைந டுங்கஞர்தொ டர்ந்த வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய். உரை:- வளர் ஒளிய பூணோய் - பெருகுகின்ற ஒளியினையுடைய அணிகளையணிந்த வேந்தே, எண்ணம் இல் இசோதரனோடு அன்னை யிவர் - பின்விளைவு நினையாத யசோதரனும் தாயாகிய சந்திரமதி யுமாகிய இவ்விருவரும், முன்னாள் கண்ணிய உயிர்க் கொலை வினைக் கொடுமையால் - முன்னை நாளில் உயிர்ப்பலி யீடாகக் கருதிச் செய்த உயிரைக் கொல்வதாகிய தீவினையின் தீமையால், நண்ணிய விலங்கிடை - உண்டாகிய விலங்குகதிக் கண்ணே, நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம் இது - நடுங்கத்தக்க துன்பம் வந்து பற்றி வருத்திய வகை யிதுவாகும், வடிவம் இவை - எடுத்த உடம்புகளும் இவையாகும் எ-று. “அயிர்ப்பதென் னறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (144) என்று முன்பு கூறியிருத்தலின், ஈண்டு, “எண்ணமில் இசோதரன்” என்றார். சந்திரமதியையும் இவ்வாறே “திருவிலி” (142) என்றும், “அவ்வையாய பாவி” (145) என்றும் இகழ்ந்தமையின், ஈங்கு வாளா “அன்னை” யென்றொழிந்தார். உயிர்க்கொலையாகிய வினையைச் செய்தற்கண், யசோதரன் இயற்றும் வினைமுதலாயின மையின், அம்மிகுதி குறித்து, ஒடுவினை யவன் மேல் வைத்துரைத்தார். ஒடு - எண்ணுப்பொருட்டு. “முன்னே துஞ்சா விலங்கிடைத் துன்னிணார்” (153) என்றமையின், இங்கே, “வினைக்கொடுமையாலே நண்ணிய விலங்கிடை” யென்றும், அக்கதி, “துயரம் துஞ்சா விலங்கு” (153) என்றதற் கேற்ப, “நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம்” என்றும், அதன் வகையும் பிறவும் இனிக் கூறலுறுதலின், “வண்ணமிது வடிவமிவை” என்றும் கூறினார். இது தொகுத்துச்சுட்டல். யசோதரனுற்ற பிறப்பு வகையைக் கூறுதல் 298. மன்னமயி லாய்மயிரி முள்ளெயின மீனாய் பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி மன்னுசிறை வாரணம தாகிவத மருவி மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான். உரை:- மன்னவ - வேந்தே, மன்னன் - அரசனான யசோதரன், மயில் - மயிற்பறவையாகவும், மயிரி முள் எயினம் - மயிர் மிக்க முள்ளம் பன்றியாகவும், மீனாய் - மீனாகவும், பின் இருமுறைத் தகருமாகியவன் - பின்னர் இரண்டுமுறை ஆடாகவும் பிறந்து வருந்தினவனாய், ஏகி - புள்வகையுட்சென்று, மன்னுசிறை வாரணம தாகி - பெரிய சிறகுகளை யுடைய கோழியாகி, வதம் மருவி - பன்னிருவகை விரதங்களையும் கேட்டு, நின்மகன் அபயனாகி வளர்கின்றான். நின்மகனாகிய அபயருசி யாகப் பிறந்து வளர்ந்து வருகின்றான் எ-று. மயிற்பிறப்புக்குப்பின், “சூழ்மயிர் முள்ளுடை யின்னல் செய்யு மோர் ஏனம தாகி” (176)ப் பிறந்தமையின், “மயிரி முள்ளெயினம்” என்றார். மயிரையுடையது, மயிரி. ஏனமென்பது எயினமென நின்றது. மீன் பிறப்புக்குப் பின்னொரு முறையும், அப்பிறப்பிற் கூடிய மறியாட்டின் வயிற்றிலே கருவாய் மறுமுறையும் ஆடாய்ப் பிறந்தமையின், “பின்னிரு முறைத் தகரு மாகி” என்றார். மன் - பெருமை. வதம் - விரதம், பன்னிருவகையுமாவன, குண விரதம் மூன்று, அணுவிரதம் ஐந்து, சிக்கைவிரதம் நான்கு; “வதங்கள் பன்னிரண்டு மேவி”1 என்று ஏனைச் சான்றோரும் கூறுதல் காண்க. கோழியாய்ச் சண்டகருமன் கூட்டில் வளர்ந்து வருங்கால், அகம்பன முனிவன் அச்சண்டனுக்கு அவ்வதங்களைக் கூறக்கேட்ட செய்தியை, “வதம் மருவி’ யென்றார். சந்திரமதியின் பிறப்பு வகையைக் கூறல் 299. சந்திரமுன் மதிஞமலி நாகமொடி டங்கர் வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள். உரை:- சந்திர முன்மதி - சந்திரமதி, ஞமலியொடு - நாயாகவும், நாகமொடு - பாம்பாகவும், இடங்கரொடு - முதலை யாகவும், வந்து - பிறந்து, மறியுடன் மயிடமுடன் - பின்பு ஆடாகவும் எருமையாகவும் பிறந்து, வாரணமுமாகி - பின்னர்க் கோழியுமாய்ப் பிறந்து, முந்தை வினை நெகிழ முன்னைவினைகள் நீங்குமாறு, முனிமொழியும் வதம் மருவி - அகம்பன முனிவன் உரைத்த விரதங்களைக் கேட்டு, வந்த - மக்கட்கதியில் வந்து பிறந்து, உன்மகள் அபயமதியாகி வளர்கின்றாள் - உனக்கு மகளான அபயமதியாய் வளர்ந்து வருகின்றாள் எ-று. சந்திரமுன்மதி, சந்திரமதி; அபயமதியை “அபயமுன்மதி” (21) என்றாற்போல. எண்ணொடு ஏனையவற்றோடும் கூட்டப் பட்டது. உடன், ஒடுவின் பொருட்டு. முனிமொழிந்த மொழியின் பயனால், முன்னை வினையின் தொடர்பு நீங்குதலின், “முந்தை வினை நெகிழ” என்றார். யசோமதி மனம் மருளுதல் 300. இதுநுமர்கள் பலவினைதன் விளைவுமியல்* பிதுவென் றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா விதுவிதுவி திர்த்தகநெ கிழ்ந்துமிகச்† சோரா மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன்ம ருண்டான். உரை:- நுமர்கள் பவம் இது - உன்னுடைய முன்னோர்களின் பிறப்புவகை இதுவாகும், வினைதன் விளைவும் இது - அப்பிறப்புக்கு ஏதுவாகிய வினையின் பயனும் இதுவாகும், இயல்பும் இது - அவ் வினைப்பயனாகவரும் கதியின் இயல்பும் இதுவாகும், என்று - என்பதாக, முனி எதுவின் அருளும் - முனிவன் ஏதுவோடு உரைத்த, மொழி அவையவைகள் நினையா - மொழிகளின் பொருளை அவ் வவ்வகையில் எண்ணி, விது விது விதிர்த்து - மெய் மிகவும் நடுங்க, அகம் நெகிழ்ந்து - மனம் கரைந்து, மிகச்சோர - மிகவும் சோர்வுற்று, மது மலர்கொள் மணிமுடிய மன்னவன் - தேன் பொருந்திய பூமாலை யணிந்த மணிமுடியினையுடைய யசோமதி, மருண்டான் - செய்வகை தெரியாது மருளுவானாயினன் எ-று. இதுவென்பதனை விளைவுக்கும் கூட்டுக. இயல்பு - ஆகுபெயர். ஏது - எதுவெனக் குறுகி நின்றது. ஏது கூறவே - அதனோடியை புடைய எடுத்துக்காட்டும் கொள்க; சொற்பல்குதல் பற்றி அவற்றைக் கூறா ராயினார். வினைவகையும், அவை காரணமாகவரும் கதிவகையும், கதிதோறும் உளவாகும் துன்பவகையும், “அவை யவைகள் நினையா” என்றும், நினைந்தவழி, தான்செய்த வினைகளும், அவற்றால் விளையக் கடவ துன்பங்களும் தோன்றவே, யசோமதிக்குப் பேரச்சம் தோன்றி, அவன் மனத்திண்மையை யழித்தமையின், உடல் நடுங்கி உளம் கரைந்து நினை விழந்து மயங்கலுற்றான் என்பார், “விது விது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகச்சோரா..... மருண்டான்” என்றார். “விது விது விதிர்த்து” என்ற இரட்டைக்கிளவி அவனத நடுக்கத்தின் மிகுதி யுணர்த்தி நின்றது. விதிர்ப்பு - நடுக்கம். முடிய - குறிப்புப்பெயரெச்சம். மருண்டதனாற் பயன், முனிவன் திருவடி வணங்கி அவனருளும் விதம் மருவித் தெருளுவானாவது. மக்கள் இருவரும் முனிவன்பால் வருதல் 301. இன்னவகை மன்னன்முனி யியம்பியது கேளாத் தன்னருகு நின்றவொரு சண்டனைவி டுப்ப மன்னபய வுருசியொடு மதியவளும் வந்தே சொன்னவில ருட்குரவன் துணையடிப ணிந்தார். உரை:- முனி இன்னவகை இயம்பியது - சுதத்த முனிவன் இவ்வாறு சொல்லியதை மன்னன் கேளா - வேந்தனான யசோமதி கேட்டு, தன் அருகு நின்ற ஒரு சண்டனை - தனக்கு அண்மையில் ஒருவனாய் நின்ற சண்டகருமனை, விடுப்ப - தன்மக்களைக் கொணருமாறு விடுத் தானாக, அபய உருசியொடு மதியவளும் வந்து - அபயருசியும் அபயமதியாகிய அப்பெண் மகளும் அவ்விடத்திற்கு வந்து, சொல் நவில் அருள் குரவன் - அறவுரைகளையே சொல்லும் அருளுடைய வனான சுதத்த முனிவனுடைய, துணையடி பணிந்தார் - இரண்டு திருவடிகளையும் வணங்கினார்கள் எ-று. மனமருண்டு நின்ற வேந்தன் தெளிவெய்திய காலத்து முனிவன் உரைத்தவற்றை ஐயவினாக்கள் பல தொடுத்து மறுபடியும் நன்கு உளம் தெளியக் கேட்டமை தோன்ற, “இன்னவகை மன்னன் முனியியம் பியது கேளா” என்று பெயர்த்தும் கூறினார் போலும். கேட்டவன், யசோதரனும் சந்திரமதியும் தனக்கு மக்களாய்ப் பிறந்திருப்பது தெளிந்ததோடமையாது அவர்களும் அச்செய்தியை முனிவன்பால் கேட்டல் வேண்டுமென்ற விருப்பால், அவர்களை யழைத்துவருமாறு சண்டகருமனை விடுத்தானென்க. மன் - அசை. அபயருசி மூத்தோனாதலின், ஒருவினையொடு உயர்பின் வழித்தாய் வந்தது. வந்து என்னும் சிறப்புவினை பணிந்தாரென்னும் பொது வினையொடு முடிந்தது; “இவளும் இவனும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப” என்றாற்போல. சொல்லெனப் பொதுப்படக் கூறினமையின், புகழும் புண்ணியமும் பயக்கும் அறவுரையென்பது வரு விக்கப்பட்டது. மக்களிருவரும் முற்பிறப்புணர்தல் 302. ஆங்கபய வுருசியுட னபயமதி தானும் தாங்கலர்கள் நின்று* தவ அரசனரு ளாலே நீங்கியப வங்களைநி னைந்தனரு ணர்ந்தார் ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார். உரை:- ஆங்கு - அவ்விடத்தே, அபயவுருசியுடன் அபயமதி தானும் - அபயருசியும் அபமதியுமாகிய இருவரும், தாங்கலர்கள் நின்று - மிக்கெழும் அன்பினைத் தாங்கமாட்டாது தொழுது நின்று, தவ அரசன் அருளால் - தவவேந்தனான சுதத்த முனிவன் அருளிய அருண் மொழியால், நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார் - கழிந்த பிறப்புக்களை நினைந்து அவற்றிற் கேதுவாகிய தம் வினையையும் உணர்ந்து, அவர்கள் உறு கவலை - அவ்வுணர்வால் அவர்கள் உற்ற வருத்தத்தை, ஆங்கு - அப்பொழுது, பிறர் யாவர் அறிவார் - அவரை யன்றிப் பிறர் எவரும் அறிய மாட்டார் எ-று. முனிவனைக்கண்ட மாத்திரையே அவர்தம் உள்ளத்தெழுந்த அன்பு அவரால் தாங்கமாட்டாவகையிற் பெருகியது தோன்ற, “தாங்கலர்கள்” என்றும், அவர் பின்பு அன்பின் ஆராமையால் மறுபடியும் கைதொழுது நின்றாராக, முனிவனருளால் முன்னைப் பிறப்புணரும் ஞானம் பிறக்க அதன் துணையால் அவற்றை நினைந் தறிந்த நீர்மையினை, “நின்று தவ வரசனருளாலே நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்” என்றார். தவமுடையோர் எல்லோர்க்கும் தலைமைநிலைமை யுடைமை பற்றிச் சுதத்தனை, “தவவரசன்” என்றார். இனி, வேந்தனாயிருந்து தவமேற்கொண்டு மாமுனிவனானது பற்றித் தவவரசன் என்றாரென்றும் கூறுவர்; பொருளன் றெனத் துறந்த அரசினைத் துறவாது அந்நிலைமையும் தோன்றக் கூறுவதிற் பயனின்மையின் அது பொருளன்மை யுணர்க. தாங்கலர்கள், நினைந்தனர் என்பன முற்றெச்சம். இருவரும் வருந்துதல் 303. *மக்களு விரட்டை யாக மாறினம் பிறந்த யாமுன் மிக்கதீ வினையா லுற்ற விளைவினை யுணர்ந்தே மைய துக்கமே தொடர நோற்றுத் துணையறத் துறந்த பெற்றி இக்கதி துன்னிக் கண்டே மினிக்கதிக் கென்செய் வோமே. உரை:- ஐய-ஐயனே, மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்தயாம் - மக்களிலே இரட்டையராக மாறிப் பிறந்துள்ளயாங்கள், மிக்க தீவினையால் உற்ற விளைவினை - மிகுதியாய்ச் செய்த தீவினையால் உண்டாகிய துன்பங்களை, உணர்ந்தேம் - இப்போது; தெளிய அறிந்தோம், துக்கம் தொடரநோற்று - துன்பம் பிறவி தோறும் தொடர்ந்து வந்து வருத்துமாறு தீவினை செய்து, துணையறம் துறந்த பெற்றி - உயிர்க்குத் துணையாய் இன்பம் பயக்கும் அறவினையைச் செய்யா தொழிந்த குற்றத்தை, இக்கதி துன்னிக் கண்டோம் - இப் பிறப்பை யெய்தி யறிந்துகொண்டோம், இனிக் கதிக்கு இனி வரக்கடவ பிறப்புக்கு, என் செய்வோம் - யாது செய்வோம் அரருளுக எ-று. புள்ளும் விலங்குமாய்ப் பல பிறவிகளிலும் பலவாறு மாறிப் பிறந்த இருவரும் இப்போது அபயருசியும் அபயமதியுமென்ற இரட்டையராய்ப் பிறந்திருப்பதை யுணர்ந்து கூறலின், “மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம்” என்றும், தவமுனிவன் அருளால் இறந்த பிறப்பின் துன்பங்களை யுணர்ந்து வருந்துவார், “முன்மிக்க தீவினையால் உற்ற விளைவினை யுணர்ந்தேம்” என்றும் கூறினர். விளைவு - துன்பம்; தீவினையின் விளைவு அதுவே யாதலின். துக்கத்துக் கேதுவாகிய தீவினையே கன்றிச்செய்த திறத்தைப் பழித்துரைத்தலின், “துக்கமே தொடர நோற்று” என்றார். “மிக்க நல்லறம் விழுத்துணையாவது”1 என்பவாகலின், அது துணையறம் எனப்பட்டது. பெற்றி, ஈண்டுக் குற்றத்தின்மேல் நின்றது. தமக்கு அறமுணர்த்தி நன்னெறிப் படுத்துமாறு வேண்டும் குறிப்பினராதலின், “இனிக்கதிக் கென் செய்வோமே” என்றார். 304. தந்தையுந் தந்த தாயு மாகிய தழுவு காதல் மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு கொந்தெரி யழலுள் வீழ்ந்த கொள்கைய னானான் மன்னன். உரை:- தந்தையும் - தந்தையாகியும், தந்த தாயுமாகிய - தன்னைப் பெற்றுத்தந்த தாயாகியும், தழுவு காதல் - பிறத்தற் கேது வாயிருந்த உழுவலன்புடைய, மைந்தனும் மடந்தைதானும் - அப யருசியும் அபயமதியும், மாற்றிடைச் சுழன்ற பெற்றி - பிறப்பு வகையில் பிறந்து வருந்திய திறத்தை, சிந்தையில் நினைந்து நொந்து - தம்மனத்தே யெண்ணி வருந்தி, தேம்பினர் புலம்ப - தேம்பியழவே, மன்னன் கண்டு - வேந்தனாகிய யசோமதி பார்த்து, கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையனானான் - கொத்தாக மிக்கெழுகின்ற தீயிடை வீழ்ந்து வருந்தும் வருத்தத்தை எய்தினான் எ-று. யாடாய்ப் பிறந்த காலத்தில் சந்திரமதியும் ஆடாய்ப் பிறந்து உழலுவாளைக் கூடியதனால், அபயருசியைத் “தந்தையாய்” என்றும், அக்கூட்டத்தா லுண்டாகிய கருவின்கண் தானே கலந்து அதன் குட்டியாய்ப் பிறந்ததனால் அவனுக்குத் தாயாயினமையின் அபய மதியைத் “தந்த தாயும்’ என்றும் கூறினார். “தன்னையீன்ற வத்தாய் மிசைத் தாழ்ந்ததே” (187) என்றும், “தாய் வயிற் கருவுட் டகராயது”(189) என்றும் வருதல் காண்க. இருவரும் இரட்டையராய்ப் பிறத்தற்குக் காரணம் இருவர்பாலும் இருந்த காதலன் பென்பார், “தழுவு காதல் மைந்தனும் மடந்தை தானும்” என்றார். மடந்தை - பெண்பாற் பெயர்; பருவப்பெயரன்று. மாற்று; பிறவிநெறி. முத்தி நெறியை நோக்க, இது மாறுபடுதலின், மாற்று எனப்பட்டது. பெற்றி - தன்மை. முன்னைப் பிறவிகளில் தாமுற்ற துன்பங்களையும், செய்த வினைகளையும் நினைந்து வருந்தியழுதன ரென்றற்கு, “தேம்பினர் புலம்ப” என்றும், சிந்தையில் நினைந்தவழி முன்னைப் பிறவி வரலாறு தோன்றி ஆண்டு நிகழ்ந்தவற்றை மனக்கண்ணில் காட்டி அதனை நெகிழ்வித்தலால், “சிந்தையில் நினைந்து நொந்து” என்றும் கூறினார். தன் மக்களிருவரும் மனம் சோர்ந்து தேம்பிப் புலம்பக் கண்ட யசோமதியின் கருத்தில் அவன்செய்த தீவினைகளும் பிறவும் தோன்றி யச்சுறுத்தவே அவன் பெரிதும் வருந்தலுற்றா னென்பார், “கொந்தெரி யழலுள் வீழ்ந்த கொள்கையனானான்” என்றார். யசோமதி புலம்புதல் 305. எந்தையும் எந்தை தாயும் எய்திய பிறவி தோறும் வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ அந்தமி லுயிர்கண் மாய வலைபல செய்து நாளும் வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய் கேனோ. உரை:- எந்தையும் - என் தந்தையாகிய யசோதரனும், எந்தை தாயும் - அவன் தாயாகிய சந்திரமதியும், எய்திய பிறவிதோறும் - அடைந்த பிறப்புக்களிலெல்லாம், வெந்துயர் விளைவு செய்த வினையினேன் என் செய்கேன் - வெவ்விய துன்பமுண்டாக்கும் தீவினைகளைச் செய்தேனாதலின் யான் இனி என் செய்வேன், அந்தம் இல் உயிர்கள் மாய - அளவில்லாத உயிரினங்கள் இறக்குமாறு, அலைபல நாளும் செய்து - துன்பங்கள் பலவற்றையும் நாடோறும் செய்து, வெந்து உயா நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன் - தீயில் வெந்து நீங்கியுய்ய முடியாத நரகத்திற் செலுத்தும் தீவினை செய்தேனாதலின், என்செய்கேன் - இவ்வினைகளினால் வரக்கடவ துன்பத்தின் பொருட்டு யான் என் செய்வேன் எ-று. யசோதரன் ஆடாய்ப்பிறந்து வளர்ந்து வருகையில் வேட்டை மேற்சென்ற யசோமதி கொன்றதும், சந்திரமதி எருமையாய்ப் பிறந்த காலத்தில் தன் குதிரையைக் கொன்றது குறித்துக் கொலை செய்ததும் பிறவும் நினைந்து வருந்துதலின், “பிறவிதோறும் வெந்துயர் விளைவு செய்த வினையினேன்” என்றும், இவ்வாறே தான் பலவுயிர் களை வேட்டையாடிக் கொன்றதை நினைந்து “அந்தமில் உயிர்கள் மாய அலைபல செய்து” என்றும், இத்தகைய தீவினைகளால் தனக்கு மீளா நரகமே கிடைக்குமென்று அஞ்சி, “வெந்து உயா நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன்” என்று கூறிப்புலம்பினான். இவ்வினை மிகுதியால் விளையும் நரகத்துன்பத்தினின்றும் தன்னைக் காத்துக் கொள்வது கருதி இதுபோது எண்ணத் தொடங்கினமை தோன்ற, “என் செய்கோனோ” என்றா னென்கின்றார். உய்யா நரகம் - மீளாநரகம். துன்பத்தை யுண்டுபண்ணுதலின், வினையையே வினைமுதலாக்கிக் கூறினார். 306. அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே பொருளொடு போக மேவிப் பொறியிலே னென்செய் கோனோ அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந் தெருளலன் நினைந்த தீமைச் சிறியனே னென்செய் கோனோ. உரை:- அருளொடு படர்தல் செய்யாது - உயிர்கள் மாட்டு அருள் செய்ய நினையாது, ஆர் உயிர்க்கு - பெறுதற்கரிய அவ்வுயிர் கட்கு, அழிவு செய்து - கேட்டினை விளைவித்து, பொருளொடு போகம் மேவி - பொருளும் அது வாயிலாகப் பெறும் போகமுமே விரும்பி, பொறியிலேன் - நல்வினைப் பேற்றுக்குரிய அறிவின்றி யொழிந்த யான், அருளினது உருவமாய - அருளறமே உருவாக வுடைய, அடிகள் நும் அடிகட்கேயும் - சான்றோராகிய தங்கட்கும், தீமை நினைந்த - தீங்கு செய்ய நினைந்த, தெருளலன் - தெருண்ட அறிவிலேனாய், சிறியேன் - சிறுமையுற்றேனாதலின், என் செய்கேன் - இக்குற்றங்கட் கெல்லாம் பரிகாரம் யாது செய்ய வல்லேன் எ-று. பொருள்மேலும் போகத்தின்மேலும் சென்ற எண்ணமிகுதியால் எவ்வுயிர்க்கும் தீங்கே செய்தொழுகினே னென்பான், “அருளொடு படர்தல் செய்யாது” என்றும், “பொருளொடு போகம் மேவி” யென்றும் கூறினான். “யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல, அருளும் அன்பும் அறனும்”1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. படர்தல் - நினைந்தொழுகல். ஆருயிர் என்றான், உயிர்களின் அருமையினை முன்னர் உணராதிருந்து இப்போது உணர்ந்து கூறுமாறு தோன்ற. தன்பால் அருளில்லாமையின் மிகுதிக்கு எல்லையிதுவென்றற்கு, “அருளுருவாய அடிகட்கும் தீங்கு நினைந்தேன்” என்றான். யான் அருளாதொழியினும் அருளுருவாய தங்கட் கேனும் தீமை நினையாதிருக்கும் சிற்றறிவும் பெற்றிலே னென்பான், “தெருளலன் தீமை நினைந்த சிறியனேன்” என்றான். அடிகளாய நுங்கட்கு என்றற்கு, “அடிகள் நும் அடிகட்கு” என்றது நற்சீலம். சால்புடைமையாற் பெரியராயினாரை முன்னிலைப் படுத்தி நீவிர் முதலிய சொற்களால் சொல்வது சீலமன்று என்பர். இது வழக்கினாகிய உயர்சொல். என்செய்கேனோ எனப் பன்முறையும் கூறியது, அவனது கையறவினைப் புலப்படுத்தி நின்றது. முனிவனை வேண்டல் 307. மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதேல் ஆவினி* யளிய னேதும் அஞ்சிலே னவதி யென்கொல் காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ மாவல அஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான். உரை:- காவல - உயிர்கட்கு அருளைச்செய்து அறத்தைக் காக்கும் தவவேந்தே, மா இயல் வடிவு தன்னை வதை செய்தார் வண்ணம் - மாவாற் செய்யப்பட்ட தொரு கோழி வடிவினைக் கொன்றவர் அடைந்த துன்பம், ஈதேல் - இத்தன்மைத் தாகுமாயின், அளியன் - அளிக்கத்தக்க யான், ஏதும் அஞ்சிலேன் - சிறிதும் அஞ்சாது தீமை புரிந்தேனாதலின், இனி அவதி என்கொல் - இப்போது எனக்கு எய்தவிருக்கும் துன்பத்துக்கு எல்லை யாதோ அறியேன், அருளுக - அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும், என்ன - என்று, அரசன் கலங்கினன் வீழ - அரசனான யசோமதி உணர்வு கலங்கி முனிவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினானாக, அம் மாதவன் - அவனைக் கண்ட அம்முனிவன், மாவல - குதிரை செலுத்தவல்ல வேந்தே, அஞ்சல் - இனி நி அஞ்சற்க, என்று உரை வளர்த்தான் - என்று சொல்லலுற்றான் எ-று. மாஇயல்வடிவு - மாவால் செய்யப்பட்ட கோழியின் உருவம்; “மாவினில் வனைந்த கோழி வடிவு” (145) என்றே முன்பும் கூறினர். மாக்கோழியை யசோதரன் தன் கைவாளால் அரிந்த போது, அதன் தலை கூவிக்கொண்டு சென்று வீழ்ந்தமையினாலும், அவ்வாறு செய்யுமாறு செய்வித்தவள் சந்திரமதி யாதலாலும் இருவரையும் முறையே செய்தோரும் செய்வித்தாருமாகிய வினை முதலாக்கி “வதை செய்தார்” என்றார். உயிர்க்கோழி போலக் கூவி வீழ்ந்தமையால் அதன் கொலையினை “வதை” யென்றார். அக் கொலைவினை காரணமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து இருவரும் துன்புற்ற செய்தியைச் சுதத்த முனிவன் கூறக் கேட்டானாதலின், “வண்ணம் ஈதேல்” என்றான். உயிரில் பொருளொன்றனை உயிருடையதாகக் கருதிச்செய்த கொலை வினையே இத்துணைத் துன்பத்தைப் பயக்குமாயின், உயிருள் பொருள் களையே கொலை புரிந்த தன்னுடைய தீவினைகளை நினைந்து வருந்தும் யசோமதி, உயிர்க்கொலையைத் தவிர்த்தல் கருதி மாவால் கோழி செய்து கொன்ற அவரினும், கொலை வினையின் தீமையை நினையாதே செய்த தனக்கு எத்துணைத் துன்ப மெய்துமோவென அஞ்சி நடுங்கி, “ஆ! இனி அளியன் ஏதும் அஞ்சிலேன் அவதி யென் கொல்” என்றான். ஆ - இரக்கக்குறிப்பு. உயிர்கட்குச் செய்தற்குரிய அருளறம் மேற்கொண்டொழுகுவது கருதி, சுதத்தனை, “காவல்” என்றும், தனக்கு அக் கொலைவினையைப் போக்குதற்குக் கழுவாய் அருளுமாறு வேண்டும் கருத்தினால், “அருளுக ” என்றும் கூறினான். மாவலன் - குதிரை, யானை, முதலிய படைகளைச் செலுத்தும் வன்மையுடையன் “மாவலோன்” (19) எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. இனி, இவையிரண்டற்கும் மிக்க வெற்றியையுடையவன் என்றலுமொன்று. உரைவளர்த்தார் னென்பது வாளா உரைத்தா னென்பது படநின்றது. சுதத்தன் வேந்தனைத் தெருட்டுதல் 308. அறிவில ராய காலத் தறிவில செய்த எல்லாம் நெறியினி லறிவ தூற நின்றனர்* விலகி நிற்பர் அறியலர் வினைக ளாலே யருநவை படுநர் கையாற்† சிறியநல் வதங்கள் செய்தே தீவினை யகல்வர் காணாய்.‡ உரை:- அறிவிலராய காலத்து - நல்லறிவு பிறவாத இளமைக் காலத்தில், அறிவில செய்த எல்லாம் - அறியாமையாற் செய்த தீமைகளெல்லாம், அறிவது நெறியினில் ஊற நின்றனர் - நல்லறிவானது நெறிப்படி உண்டாகப் பெற்றவர், விலகி நிற்பர் - அத் தீமையினின்றும் விலகி நன்னெறிக் கண்ணே நிற்பார்கள், அறியலர் வினைகளாலே அருநவை படுநர் - நலந்தீங்கு அறியாராய்ச்செய்த - வினைகளால் நீக்குதற்கரிய துன்பப்படுபவர், கையால் - தம் செய்கைகளால், சிறிய நல் வதங்கள் செய்து - எளிய விரதங்கள் பலவற்றை மேற்கொண் டொழுகி, தீவினை அகல்வர் - தீவினையினின்றும் நீங்குவார்கள் எ-று. அறிவில்லாக் காலத்தே செய்யும் தீவினை பலவும் அறிவில் செய்கைகளாகவும், நல்வினையும் ஏரலெழுத்துப போல்வதோர் விழுக்காடென நல்லோரால் கொள்ளப்படாமையாலும் இருவகையும் சேர “அறிவிலசெய்த வெல்லாம்” என்றார். நெறி - கல்வி கேள்வி நெறி. நல்லறிவு பிறத்தற்கு இவையிரண்டும் நெறியாதலின், “நெறி” யென்றார். அறிவது; அது - பகுதிப்பொருள் விகுதி. ஊறுதல், உண்டாதல்; “கற்றனைத் தூறு மறிவு”1 என்று சான்றோரும் கூறுதல் காண்க. நல்லறிவு பிறந்தவழித் தீவினை தவிர்த்து நல்வினையே நாடிச் செய்யப் படுதலின், “விலகி நிற்பர்” என்றார். இனி அறிவு பிறவாக்காலத்தே செய்த வினைப் பயன் தீர்தற்குக் கழுவாய் கூறுவார், நல்லொழுக்கமும் எளிய விரதமும் மேற் கொள்வதென்பார், “சிறியநல் வதங்கள் கையால் செய்தே தீவினை யகல்வர்” என்றார். சிறுமை - எளிமை மேற்று. அறியாமையாற் செய்தன வாயினும் தீவினைப்பயனாய் வரும் துன்பம் நீக்குதற்கரிது என்பார், “அருநவை” என்றும், எனவே, வினைப்பயனை எவ்வாற்றானும் நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்றும் கூறினாரென, வறிக. அறிவிலாக் காலத்துச் செய்த குற்றம் அறிவறியும்போது அறிவுடையோரால் விலக்கப்படு மென்பதும், அக்காலத்துச்செய்த வினைப்பயன்கள் அறிவறிவார் மேற்கொள்ளும் வதங்களால் வெல்லப்படும் என்பதும் கூறியவாறாம். இறைவன் அறத்தின் ஏற்றத்தைக் கூறுதல் 309. அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யிவை புறக்க ணித்திட் டிருள்புரி வினைகள் சேரா திறைவன தறத்தை யெய்தின் மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால். உரை:- அருள்புரி மனத்தராகி - அருளே நினையும் மன முடையவராய், ஆர் உயிர்க்கு - நிறைந்த உயிர்கட்கெல்லாம், அபயம் நல்கி - ஆதரவு செய்து, பொருள் கொலை களவு காமம் பொய் இவை புறக்கணித் திட்டு - பின் பொருளை விரும்புதலும் கொலையும் களவும் காமமும் பொய் கூறலும் என்ற இவையிற்றைச் செய்யாராய், இருள்புரி வினைகள் சேராது - அறியாமையாற் பிறக்கும் வினைகளைச் செய்வதின்றி, இறைவனது அறத்தை எய்தின் - அருகபரமன் அருளிய அறத்தை மேற்கொண் டொழுகு வராயின், வானவர் இன்பமல்லால் - தேவருலக வின்பமன்றி, மருள் செயவருவது - ஒருவர்க்கு மயக்கமும் அது காரணமாக வரும் நரகத்துன்பமும் செய்ய வருவதொன்று இல்லையாம் எ-று. அருகன் அருளிய அறங்களுள் தலையாயது அருளாதலின், அதனை விதந்து, “அருள்புரி மனத்தராகி” யென்றும், அதற்குரிய செயலாதலின், “ஆருயிர்க்கபயம் நல்கி” யென்றும், அவ்வறத்தைக் கெடுப்பனவாதலின் பொருள் வெஃகல் முதலியவற்றைப் “புறக் கணித்திட்டு” என்றும் கூறினார். “இருள் சேர் இருவினை”1 என்றாராகலின், அஃது இச் சமண் சமயத்துக்கும் ஒத்த கருத்தாதல் பற்றி, “இருள்புரி வினைகள் சேராது” என்றும், வினைப்பகை வீயாது பின்சென் றடுவது பற்றி அதற்கு அரண் இஃது என்பார், இறைவன தறத்தை அரணாகவும் கூறினார்; “எய்தின்” என்றது எய்தினா லெய்தும் பயன் கூறுதற்கு அவாய்நிலை பயப்பித்தது. மருள் - பிறவிக் கேதுவாய மயக்கம். யசோமதி திருவறம் மேற்கோடல் 310. என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக் கன்றிய வினைகள் தீரக் கருணையி னுருகி நெஞ்சிற் சென்றன னறிவு காட்சித் திருவறத் தொருவ னானான் வென்றவர் சரண டைந்தார் விளைப்பது வென்றி யன்றோ. உரை:- என்றலும் - என்று சுதத்தமுனிவன் சொன்னதும், அடிகள் பாதத்து - அவருடைய திருவடியின்கண், எழில்முடி மலர்கள் சிந்த - அழகிய தன் முடியிற் சூடிய பூக்கள் விழுமாறு வீழ்ந்து வணங்கி, கன்றிய வினைகள் தீர - மிகச்செய்த தன் தீவினைகள் நீங்குமாறு, கருணையின் உருகி - உயிர்கண்மேற் சென்ற அன்பினால் உருகி, நெஞ்சிற் சென்றனன் - நெஞ்சினால் நல்லொழுக்கம் மேற்கொண்ட யசோமதி, அறிவு காட்சி - ஏனை நன்ஞானமும் நற்காட்சியும் பெற்று, திருவறத்து - அருகன் அருளிய சைன தருமத்தவருள், ஒருவனானான் - நிகரற்றவனானான், வென்றவர் சரண் அடைந்தார் - வினைப் பகையை வென்ற முனிவரருடைய திருவடியே புகலாக அடைந்தவர், விளைப் பது - அடைந்து பெறுவது, வென்றியன்றோ - வினையை வெல்வதே யாகும் எ-று. என்றலும் - விரைவுப்பொருட்டாய வினையெச்சம். முனிவர் திருவடியில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கியது தோன்ற, “அடிகள் பாதத்து எழில்முடி மலர்கள் சிந்த” என்றார். வினைப்பகை நீங்குதற்குரிய மனப்பக்குவம் பிறந்துவிட்ட தென்பார், “கன்றிய வினைகள் தீரக் கருணையினுருகி” என்றும், சைனதருமத்தில் வேந்தன் உளஞ்சேர்ந்து அதற்குரிய நல்லொழுக்கத்தை மேற் கொண்டேமை தோன்ற, “நெஞ்சிற் சென்றனன்” என்றும், அதற்குரிய நன்ஞானம் நற்காட்சிகளை யறிந்தமை உய்த் துணரவைத்து, இம்மூன்றாலும் அவன் ஒப்பற்ற அறவோனானது கூறுவார், “திருவறத் தொருவனானான்” என்றும் கூறினார். இதுகாறும் தீவினையே கன்றி நின்ற அவன் இத்துணை விரைவில் நல்லறம் மேற்கொண்டு சிறந்தமைக்கு ஏது கூறுவாராய், “வென்றவர் சரணடைந்தார் விளைப்பது வென்றி யன்றோ” என்றார். யசோமதி மக்கட்குக் கூறுதல் 311. வெருள்செயும் வினைகள் தம்மை வெருவிய மனத்த னாகி மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத் தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான். உரை:- வெருள் செயும் வினைகள் தம்மை வெருவிய மனத் தனாகி - மயக்கத்தைச் செய்யும் வினைகட்கு அஞ்சிய மனமுடைய வனாய், மருள் செய்யும் உருவமாட்சி மகனொடு மங்கை தன்னை - கண்டார்க்கு வியப்பினை யுண்டாக்கும் அழகு மாட்சிமைப்பட்ட மகனையும் மகளையும் பார்த்து, அருள் பெருகு உவகை தன்னால் - அன்பு மிகுதியாற் பெருகிய மகிழ்ச்சியினால், அமைவிலன் - அமையானாகிய யசோதமதி, அளியன் - அளிக்கத்தக்க யான், உம்மைத் தெருளலன் - உங்களை இன்னாரென்று அறியாது, முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க - முற்பிறப்புக்களிற் செய்த தீமைகளைப் பொறுத்தருள் வீர்களாக, என்றான் - என்று வேண்டினான் எ-று. வினைகளால் மயக்கமும் துன்பமும் உண்டாதலின், “வெருள் செயும் வினைகள்” என்றார்; “வெருள் செய்வினை தருதுயரம் ” (287) என்று முன்பும் கூறியது காண்க. வினைக்கு அஞ்சும் செயல் அறிவறிந் தார்கண்ண தாகலின், “வெருவிய மனத்தனாகி” என்றார். மருள் - மருட்கை; இது பிறர்கட் டோன்றிய ஆக்கம் பொருளாகப் பிறப்பது. தொடர்புடைமை கருதாது எல்லா வுயிர்கண் மேலும் செல்லும் பேரன்பு அருளெனப்படுதலின், அருள் பெருகு வகை யென்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. உவகை மேன்மேலும் மிகுவதால் அமை விலனானா னெனவுணர்க. தீமை யென்னாது “சிறுமை” யென்றது தன்னைப் பொறுத்தல் வேண்டும் என்றற்கு. கலியாணமித்திரற்குக் கூறதல் 312. ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகன் றன்னை ஆருயிர்க் கரண மாய* அடிகளோ டைய நீயும் நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப் பாரியற் பொறையை நெஞ்சிற் பரிந்தனன் மன்னன் மன்னோ.† உரை:- ஓருயிர்த் தோழனாகி - உயிரால் ஒருவனே என்று கூறத்தக்க நண்பனாய், உறுதிசூழ் வணிகன் தன்னை - மன்னனாகிய தனக்கு உறுதியாவனவற்றை நினைந்துசெய்த வணிகனான கலியாண மித்திரனைப் பார்த்து, ஐய - ஐயனே, ஆருயிர்க்கு அரணமாய அடிகளோடு - எனது அரிய உயிருக்கு அரணாகிய அறம் உரைத்த இச் சுதத்த முனிகளோடு, நீயும் எனக்கு இறைவனாக நேர் என நினைவல் என்று - நீயும் எனக்கு ஞானாசிரியனாதற்கண் ஒப்பாவாய் எனநினைக்கின்றே னென்று, இனியகூறி - இனிய சொற்கள் பல சொல்லி, மன்னன் - வேந்தனாகிய யசோமதி, பார்இயற் பொறையை - நிலத்தையாளும் அரசபாரத்தை, நெஞ்சில் பரிந்தான் - மனத்தின் கண் பற்றின்றித் துறந்தான் எ-று. உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரே யென்பார், “ஓருயிர்த் தோழனாகி” யென்றார், “எனக்குயி ரென்னப்பட்டான் என்னலாற் பிறரையில்லான்”1 என்று தேவரும் கூறுவர். செய்கையில் வழிச் சூழ்ச்சி பயன்படாமையின், சூழ் வணிகண் என்பதற்கு இவ்வா றுரைக்கப்பட்டது. அற முரைக்குமுகத்தால் முனிவன் அரசனுயிர் நரகு புகாவகையிற் காத்தமையின், அவனை, “ஆருயிர்க்கரணமாய அடிகள்” என்றான். வணிகன் காட்டித் தெருட்டத்தெருண்டு அறம் நல்கப் பெற்றமையின், “நீயும் நேர் எனக்கிறைவனாக நினைவல்” என்றும், அறக் கேள்வியால் ஞானம் பெற்று அரசிய லின்பத்தையும் பெரும் பொறையாகக் கருதி உள்ளத்தே அதனை வெறுத்துத் துறத் தலின், “பாரியற் பொறையை நெஞ்சிற் பரிந்தனன்” என்றும் கூறினான். மன்னும், ஓவும், அசை. யசோமதி துறவு 313. மணிமுடி மகனுக் கீந்த மன்னவன் தன்னோ டேனை அணிமுடி யரசர் தாமும் அவனுயிர்த் துணைவ னான வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித் துணிவினர் துறந்து மூவார் தொழுதெழு முருவு கொண்டார். உரை:- மகனுக்கு மணிமுடி ஈந்த - மகனாகிய அபயருசிக்குத் தன்மணியுடன் யிழைத்த முடியைக் கொடுத்து நீங்கிய மன்னவன் தன்னோடு - வேந்தனாகிய யசோமதியுடன், ஏனை அணிமுடி யரசர்தாமும் - ஏனை அழகிய முடிசூடிய வேந்தர்களும், அவன் உயிர்த்துணைவனான வணிகனும் - அவனுடைய உயிர்த்தோழனான கலியாணமித்திரனும், மற்றுளாரும் - மற்றைய நண்பர்களும் சுற்றத் தாரும், மாதவத்திறையை வாழ்த்தி - பெரிய தவத்தையுடைய முனிகளாகிய சுதத்தனை வணங்கி வாழ்த்தி, துணிவினர் துறந்து - உலகியற் போகத்தின் தன்மையை யுணர்ந்து துறந்து, மூவார் தொழு தெழும் உருவு கொண்டார் - மூத்துக்கெடுதலில்லாத தேவரும் முனிவரும் தொழும் ஞான நிலையினை யடைந்தார்கள் எ-று. அரசியற் போகத்தைப் பொறையாகக் கருதி மனத்தே துறந்த மையின், அதனைத் தன் மகன்பால் வைத்தற்கண் நிகழும் இன்ப நிகழ்ச்சிகளைப் பொருளாக நினையாமை தோன்ற, “மணி முடிமகனுக் கீந்த மன்னவன்” என்றொழிந்தார். யசோமதிக்குத் துணையாய வேந்தரும் பிறரும் அவன் துறவுக்காலத்தே யுடன் வந்தாராக, அவனுக்கு அத்துறவு நிலை வருதற்குக் காரணனாயிருந்த கலியாண மித்திரன், “ஒருயிர்த் தோழனாகி யுறுதி சூழ்” (312) பவனாதலின், அவனும் உடனே துறவு மேற்கொண்டு வேந்தனைச் சூழவந்ததை விதந்து, “அவனுயிர்த் துணைவனான வணிகனும்” என்றார். துறவுக்குத் துணிவு இன்றியமை யாமையின், “துணிவினர் துறந்து” என்றும், பிறப்பிறப்புக்கட் கேதுவாகிய வினையை வென்ற ஞானிகள் என்றற்கு “மூவார்” என்றும் கூறினார். முனிவரர் - கணதராதி மாமுனிவரென வுணர்க; “இமையவரு மாதவரு மிறைஞ்சியேத்தப் பணிவரிய சிவகதியி னமர்ந்ததிருந்தா ரற வமிர்த முண்டா ரன்றே”1 என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. அபயருசி துறவு 314. தாதைதன் றுறவு முற்றத்* தானுடன் பட்ட தல்லால் ஓதநீர் வட்டந் தன்னை யொருதுகள் போல வுள்ளத் தாதரம் பண்ணல் செல்லா னபயனு மரசு தன்னைக் காதலன் குமரன் தம்பி கைப்படுத் தனன்வி டுத்தான். உரை:- அபயனும் - அபயருசியும், தந்தைதன் துறவுமுற்ற - தன் தந்தையாகிய யசோமதிக்குத் துறவு நெறி முற்றிப் பயன் தருதல் வேண்டி, ஓத நிர்வட்டம் அரசு தன்னை - கடல் சூழ்ந்த நிலவுலக அரசியற் போகத்தை, தான் உடன் பட்டது அல்லால் - தான் மேற் கொள்ள இசைந்தானே யன்றி, ஒருதுகள் போல - மேற்கொண்ட அதனைப் பயனில் பொருளாகக் கருதி, உள்ளத்து ஆதரம் பண்ணல் செல்லான் - மனத்தில் சிறிதும் விரும்பானாய், தன்னை - அவ்வரசியற் போகத்தை, காதலன் குமரன் தம்பி - அன்பும் இளமையுமுடைய தம்பியாகிய யசோதரன்பால், கைப்படுத்தனன் விடுத்தான் - வைத்து விட்டுத் தானும் துறவு பூண்டான் எ-று. யசோமதியின் துறவு முற்றுங்காறும் அரசபோகத்தை மேற் கொண்டிருந்த அபயருசி, அவன் அது முற்றியதும் துறத்தலின், மேற்கொண்டிருந்ததற்கு ஏது இஃதென்பார், “தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்டதல்லால்” என்றும், அவ்வாறிருந்த காலத்தும் அவ்வரசியற் போகத்தை விரும்பாதிருந்தமை தோன்ற, “ஒருதுகள் போல வுள்ளத் தாதரம் பண்ணல் செல்லான்” என்றும், தான் இளையனாயினும் தன்னினும் இளையனான யசோதரற்கு அரசியலைத் தந்த செயலைக் கூறுவார், “காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான்” என்றும் கூறினார். தன்னையென்பது சுட்டு மாத்திரையாய் நின்றது. 315. மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய பேதையம் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர் ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சின் எஞ்சா மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே. உரை:- மைந்தனும் - அபயருசியும், மங்கையாய பேதை அம்பிணையனாளும் - மங்கையாகிய இளமையான மான் பிணையை யொத்த அபயமதியும், மாதவன் மலர்ந்த சொல்லால் - பெரிய தவத்தையுடையவனான சுதத்தமுனிகள் உரைத்த அறவுரையால், பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் - தங்கள் பழம்பிறப்பை யுணர்ந்த பிறகு, போகத்து நெஞ்சின் ஆதரம் பண்ணல் அஞ்சி - உலகியல் இன்பத்தை நெஞ்சால் விரும்புதற்கு அஞ்சி, எஞ்சா மாதவன் சரணமாக - குன்றாத பெரிய தவத்தையுடைய சுதத்தன் திருவடிகளையே துணையாகக்கொண்டு, வனமது துன்னினார் - முனிவனுடன் வனத்தை யடைந்து தவம்செய்யக் கருதினார்கள் எ-று. மாதவனாதலின், உரைத்தானென்றல் சீல மன்மை நோக்கி, “மலர்ந்த” என்றார். அவனுரைப்பன யாவும் அறமாதலின், “சொல்லால்” என்றார். நூல் வாயிலாக வுணர்த்துதலினும் சொல்லாலுப தேசித்த சிறப்புக்குறித்து இவ்வாறு கூறினாரென்றுமாம். மங்கை யென்பது - பெண்பாற் பொதுப்பெயர்; பருவப்பெயரன்று. பேதை - இளமை. பிணை - மான். பழம்பிறப் புணர்ந்து, போகத்தில் வேட்கை செய்தால் வரக்கடவ துன்பத்துக்கு அஞ்சுதலின், “ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர்” என்றார். பண்ணல் என்புழி - நான் கனுருபு விகாரத்தாற்றொக்கது. போக வேட்கையாலெய்தும் பிறவித்துன்பத்தை நினைந்து நெஞ்சில் மிக்க அச்சம் உறுதல் தோன்ற, “நெஞ்சின் அஞ்சினர்” என்றார். எத்துணையும் தான் மேற்கொண்ட தவத்தின்கண் குன்றாது ஒழுகுதல்கண்டு, “எஞ்சாமாதவன்” என்றும், அவன் திருவடித் துணையால் எவ்வகையிடையூறும் எய்தாதென்னும் துணிபுபற்றி அவனுடன் சென்றன ரென்பார் “மாதவன் சரணமாக வனமது துன்னினார்” என்றும் கூறினார். வனமது - அது பகுதிப் பொருட்டு. வனமடைந்த இருவரும் முனிவன் பால் அறங்கேட்டல் 316. வினைகளும் வினைகள் தம்மால் விளைபயன் வெறுப்பு மேவித் தனசர ணணைந்து ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார். உரை:- வினைகளும் - ஞானாவரணம் முதலிய வினைகளின் உணர்வும், வினைகள்தம்மால் விளைபயன் வெறுப்பும் - அவற்றா லுண்டாகும் இன்ப துன்பங்களில் வெறுப்பும் மேவி - பொருந்தி, தனசரண் - தன் திருவடிகளே புகலாக, அணைந்துளார்க்கு - அடைந்துள்ள அனைவருக்கும், தவவரசு அம்முனிவன் அருள - தவத்துக்குரிய அறத்தையுரைக்கும் குறிப்பினனாக அதுகண்டு, அடிகள் - அடிகளே, வினையின விளைவு தம்மை - வினைகளால் உண்டாகும் பயனை, வெருவினம் - அஞ்சினோமாதலின், சினவரன் சரணம் மூழ்கி - சினேந்திரனாகிய அருகபரமன் திருவடியை யடைந்து, செறிதவம் படாதும் - கேவல ஞானவின்பம் செறிதற் கேதுவாகிய தவத்தைச் செய்யக் கருதுகின்றோம், என்றார் - என்று தெரிவித்தார்கள். ஞானாவரணீய முதலிய வினைகளாவன ஞானாவரணீயம் தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம் என்பனவும், வேதனீயம், நாமிகம், கோத்திரிகம், ஆயுட்கம் என்பனவுமாகிய இருவகை களாகும்; இவற்றுள் ஞானாவரணீய முதலிய நான்கும் காதி கருமம் என்றும், ஏனை நான்கும் அகாதி கருமமென்றும் வழங்கும். காதி கருமத்தால் துன்பமும் அகாதிகளால் இன்பமும் விளை பயனாகும். இவற்றின் இயல்பும் விளைபயனும் உணர்ந்தாலன்றி இவற்றின்பால் வெறுப்பு உண்டாகாமையாலும் வெறுப்புளதா யினல்லது வீடுபேற்று நெறி வாயாமையாலும், “வினைகளும் வெறுப்பும் மேவி” யென்றார். புவியரசு துறந்து தன் திருவடி யடைந்து அறத்தின்வழி நிற்பார்க்குத் தான் அருளக்கருதுவது தவமாதலின், அதனைத் “தவவரசு அருள” என்றும், அக்குறிப்புத் தோன்றக் கண்டதும் இருவரும் வணங்கின மையின், “தாழ்ந்து” என்றும் கூறினார். வினைக்கஞ்சும் அச்சமே ஞானப் பேற்றுக்கு வேண்டும் மனப்பக்குவத்தைப் பயத்தலின், “வினையின விளைவு தம்மை வெருவினம்” என்றும், எமக்குப் புகலளிப்பது சினவரன் சரணமாதலின் அதனை யடைதற்கு வேண்டும் தவ நெறியை அருளவேண்டும் என்பார், “செறிதவம் படர்தும்” என்றும் கூறினார். கேவலஞான வின்பத்துச் செறிவிக்கும் சிறப் புடைமையின் தவத்தைச் “செறிதவம்” என்று. சிறப்பித்தார். சுதத்த முனிகள் கூறல் 317. ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்ம்மின் சாற்றிய வகையின் மேன்மேற் சையமா சைய மத்திற் கேற்றிநின் றின்மை* தன்னை யிதுபொழு துய்ம்மி னென்றான் ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார். உரை:- ஆற்றலது அமையப் பெற்றால் - உங்கள்பால் தவத்துக்கு வேண்டும் ஆற்றல் அமைந்திருக்குமாயின், அருந்தவம் அமர்ந்து செய்ம்மின் - சோறும் நீரும் சுருக்கிச்செய்யும் அந்த அரிய தவத்தை அவ்வாற்றலுக் கேற்றவாறு பொருந்தச் செய்வீர்களாக, சாற்றிய வகையின் - பரமாகமம் சொல்லும் முறைப்படியே, மேல் மேல் - உணவு முதலியவற்றைக் குறைத்துப் பல்வகை ஆராதனை களை மேற்கொண்டு, சையம் - சம்மியங்களில், மா சையமத்திற்குத் தன்னை ஏற்றி நின்று - மேலான சம்மியத்திற்குத் தன்னை ஏற்று வித்துப் பிராணி சம்மியமம் விடய சம்மியமங்கள் நிறைந்து நின்று, இது பொழுது - இந்நிலையிலேயே, இன்மையுய்ம்மின் - இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பு இல்லாமையாகிய நல்லறத்தைக் கடைபோகச் செய்வீர்களாக, என்றான் - என்று சுதத்த முனிவன் உரைத்தான், ஆற்றலுக்கு ஏற்ற வாற்றால் - அவர்களும் தங்களுடைய ஆற்றலுக் கேற்றவாறு, அவ்வழி ஒழுகு கின்றார் - அம்முனிவன் கூறிய நெறியிலேயே ஒழுகலானார்கள் எ-று ஆற்றல் - மனவலியும் மெய் வலியுமாம். ஆற்றல் அமையா விடத்து உண்டிசுருக்கிச் செய்யும் இத்தவம் வெற்றி தருதல் அரிது என்றற்கு “அருந்தவம்” என்றும், அதனால் உண்டாகும் விளைவு பேரின்பமாதலின் “அமர்ந்து செய்ம்மின்” என்றும், உண்டி சுருக்கத்தை மேன்மேல் படிப்படியாகச் செய்யுமாற்றால் “ஆத்ம பாவனை யாகிய ஞானாராதனை, தரிசனாராதனை, சாரித்திராராதனை என்னும் இக்குணங்களில்” நிலைபேறுண்டாக அது வாயிலாகச் “சுத்தாத் மதியான” முண்டாகுமென்று பரமாகம் கூறுதலின், “சாற்றிய வகையின்” என்றும் கூறினார். சையம், சம்மியம். முதன் மூன்று குண நிலையில் சம்மியத்துவமில்லை யெனவும் நாலாங்குண நிலையிலும் அதன் மேலும் மேலும் சம்மியத்துவங்கள் உண்டாமென்றும், எல்லாவற்றிற்கும் மேலான சம்மியமத்தில் பிராணி சம்மியமம் விடயசம் மியங்கள் தோன்றி நிறைவு செய்யு மென்றும் மேருமந்தரம், பதார்த்தசாரம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இன்மை - இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பில்லாமை. இவ்வாறியலும் இத்தவ நெறியின் இயல்பினை, “ஈற்றிலா ராதனை விதியி லேந்தல்தான், ஆற்றலுக் கேற்றவாறன்ன பானமும், சாற்றிய வகையினாற் சுருக்கிச் சையமேல், ஏற்றினான் தன்னைநின் றிலங்குஞ் சிந்தையான்,” “சித்தமெய் மொழிகளிற் செறிந்து யிர்க்கெலாம், மித்திர னாயபின் வேத னாதியின், ஒத்தெழு மனத்தனா யுவகை யுள்ளுலாய்த், தத்துவத் தவத்தினாற்றனுவை வாட்டினான்”1 என வருவனவற்றாலறிக. சுதத்த முனிகள் இருக்குமிடத்தை மாரிதத்தனுக்குக் கூறுதல் 318. அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப் பெருங்குழு வொருங்கு சூழப் பெறற்கருங் குணங்கள் தம்மாற் சுருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னின்னாட் டருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான். உரை:- அருங்கலம் மும்மை தம்மால் - நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கமாகிய மூவகை யரிய மணிகளையுடையனாதலிலும், பெறற்கு அருங்குணங்கள் தம்மால் - பெறுதற்கு அரியவாகிய உயர் குணங்களை யுடையனாதலிலும், சுருங்கல் இல் - குன்றாத, சுதத்த னென்னும் துறவினுக்கு அரசன் - சுதத்தனென்னும் பெயரையுடைய துறவியர் தலைவன், அதிசயமுடைய நோன்மைப் பெருங்குழு - காண் போர்க்கு மனத்தே வியப்பை விளைவிக்கும் இயல்புடைய தவ விரதங் களையுடைய பெரிய துறவியர் கூட்டம், சூழ - தன்னைச் சூழ்ந்துவர, நின் நாட்டு - நின்னுடைய நாட்டிலுள்ள, அருங்கடி கமழும் சோலை யதனுள் வந்து - அரிய மணம் கமழும் சோலைக்கு வந்து, இனிதிருந்தான் - இனிது எழுந்தருளியிருந்தான் எ-று. நற்காட்சி முதலிய மூன்றும் சம்மிய தரிசனம், சம்மிய ஞானம், சம்மிய சாரித்திரம் என்று பெயர் கூறப்பட்டு இரத்தினத்திரயம் என்று வழங்குதலின், “அருங்கல மும்மை” யென்றார். “இதற்குபாயம் இரதனத் திரயம்”2 என்று சான்றோர் ஓதுதல் காண்க. குணங்களென் பதற்குக் குணவிரதங்களென்றலுமாம். நற்காட்சி முதலியவற்றை யுடைமை யாலும் குணங்களின் மிகுதியாலும் காண்போர்க்கு வியப் புண்டாதலின், “அதிசயமுடைய நோன்மைப் பெருங்குழு” என்றார். தவவிரதங்களைக் கடைபோகச் செய்தற்கு ஆற்ற லின்றியமை யாமையின், “நோன்மைப் பெருங்குழு” என்று சிறப்பித்தார்; பெருமை - மிகுதி மேற்று. முனிவன் வந்து இனிதிருத்தற்கு ஏது கூறுவான், “அருங்கடி கமழும் சோலை” யென்றான். தாம் இன்னாரென அபயருசி மாரிதத்தற்குக் கூறுதல் 319. அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோம திக்குத் தனயர்கள் தம்மை நோக்கித் தரியலீர் சரிதை போமின் எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார் அனையவ ராக எம்மை யறிகமற் றரச என்றான். உரை:- அனசனம் அமர்ந்த சிந்தை யருந்தவன் - உண்ணா நோன்பை விருப்பத்துடன் மேற்கொண்ட மனமுடைய அரிய தவத் தோனாகிய சுதத்த முனிவன், இசோமதிக்குத் தனயர்கள் தம்மை நோக்கி - யசோமதிக்கு மக்களாகிய அபயருசி அபயமதி யிருவரையும் பார்த்து, தரியலீர் - அனசன நோன்பை நீவிர் தாங்கவல்லீரல் லீராதலின், சரிதை போமின் - தெருவிற்சென்று உணவேற்று உண்டு வருக, என - என்று பணிக்கவே, அவர் - அவ்விருவரும், மெல்ல இறைஞ்சி - மெதுவாக அவரை வணங்கி விடைபெற்று, இந் நகரத்து வந்தார் - இந்த இராசபுர நகரத்துக் குள்ளே வந்தார்கள். அரச - அரசனே, எம்மை அனையவராக அறிக - எங்களை அவ் விருவருமாக அறிவாயாக, என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. “அந்தில் ஆசனங்கொண் டண்ணல் அனசனத் தவமமர்ந்தான்” (24) என்று முன்னே கூறியது கடைப்பிடித்து ஈண்டு அபயருசியின் கூற்றில் வைத்து “அனசன மமர்ந்த சிந்தை யருந்தவன்” என்றார். தன்னைப் பிறன்போற் கூறும்1 முறையிற் கூறுதலின், “இசோமதிக்குத் தனயர்கள் தம்மை” யென்றான். “பசியின் வாடி வருந்திய மெய்யரானீர், எம்முட னுண்டி மாற்றாது இன்றுநீர் சரிதைபோகி நம்மிடை வருக (26) என்று முன்னே முனிவர் கூறியதனை ஈண்டு அபயருசி கொண்டு கூறுதலால், “தரியலீர் சரிதை போமின் என” என்றான். அனையவர் என்றது அவரென்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. மற்று - அசை. மெல்ல என்பதனை வந்தார் என்பதனோ டியைத் துரைப்பினு மமையும். அபயருசி மேலும் அரசற்குக் கூறுதல் 320. இனையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின் இனையது வினைகள் பின்னா ளிடர்செய்த முறைமை தானும் இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின் இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான். உரை:- எமரது பிறவி மாலை இனையது - எம்மைச் சேர்ந் தோருடைய பிறவித் தொடர்ச்சி இத்தன்மைத் தாகும், எமதும் எண்ணின் இனையது - எம்முடைய பிறப்பு வரலாறும் ஆராயுமிடத்து இத்தன்மைத்தே, பின்நாள் வினைகள் இடர்செய்த முறைமைதானும் இனையது - பிற்காலத்தே, வினைகள் துன்பம் விளைவித்த இயல்பும் இத்தன்மைத்தே வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் இனையது - சினம் காமம் முதலியவற்றா லுண்டாகிய துன்பத்தை யாராயுமிடத்து அவற்றின் இயல்பும் இத்தன்மைத்தாகும், இறைவன் அறத்தது பெருமை தானும் - அருகபரமன் உரைத்த அறத்தின் பெருமையும், இனையது - இத்தன்மைத்தாகும் எ-று. பிறவி மாலையும், வினைகள் இடர் செய்யும் முறைமையும் வெகுளி காமத்து இயல்பும் இதுகாறும் கூறியவாற்றால் விளக்கினமையின் ஒவ்வொன்றையும் தனித்தனியாக “இனையது” என்று முடித்தான். இவற்றின் சிறுமைபோல இறைவன் அருளிய அறத்தின் பெருமையும் நிலவுவதென்பான், “பெருமைதானும் இறைவனதறத்த” தென்றான். “தோன்றி மாய்ந்துலக மூன்றிற் றுயரெய்து முயிர்கடம்மை, ஈன்றதாய் போல வோம்பி யின்பத்து ளிருத்திநாதன், மூன்றுலகிற்கு மாக்கி முடிவிலாத் தன்மை நல்கும், ஆன்ற நல்லறத்தைப் போலு மரியதொன் றில்லை யென்றான்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. “எண்ணின்” “நாடின்” என்றதனால் இவை காட்சியளவையானன்றிக் கருதல், உரையென்னும் அளவைகளால் உய்த் துணரப்படுவன என்றானாயிற்று. வேறு 321. செய்த வெந்தியக்* கொலையொரு துகள்தனிற் சென்றுறு பவந்தோறும் எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே. மையல் கொண்டிவண் மன்னுயி ரெனைப்பல வதைசெய வருபாவத் தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின் றனமென்றான். உரை:- செய்த வெந்தியம் - வெந்தியச் சம்பா வரிசி மாவாற் செய்யப்பட்ட கோழியினது, கொலை - கொலை வினையானது, ஒரு துகள்தனில் - ஒரு குற்றமாய், சென்று உறுபவம்தோறும் எய்து மாயிடின் - சென்றடையும் பிறப்புத் தோறும் இடையறாது வந்து வருத்துமாயின், தீர்ந்திடாக்கொலை இஃது - எத்துணைப்பிறவி யெடுப்பினும் ஒழியாத உயிர்க்கொலையாகும் இத்தீவினை, இரு நில முடி வேந்தே - இந்தப் பெரிய நிலவுலகமாளும் அரசே, இவண் - இவ்விடத்தே, மையல் கொண்டு - மயக்க முற்று, எனைப்பல - எத்துணையோ பல உயிர்களை, வதைசெய வருபாவத்து எய்தும் வெந்துயர் - கொலை செய்வதால் வரும் தீவினையால் விளையும் கொடிய துன்பம், எப்படித்து - எத்தன்மைத்தாம், என்று உளைந்து - என்று வருந்தி, இரங்குகின்றனம் - யாங்கள் இருவரும் துயர்கின்றோம், என்றான் - என்று அபயருசி கூறினான் எ-று. வெந்தியம் - வெந்தியச்சம்பா என்னும் ஒருவகை நெல். “சாலியின் இடியின் கோழி” (146) என்று முன்பு பொதுப்படக் கூறினாராதலின், ஈண்டு அதன் வகையுள் இன்னதெனத் தெரித் தோதினார். யசோதரனாய்ப் பிறந்து வாழ்ந்த காலத்துத் தான் செய்த தீவினைப் பயனைத் தான் நுகர்ந்து துன்புற்றதற்குத் தானே கரியாதலின், அதனை யெடுத் தோதி, அதன் கொடுமையினை வற்புறுத்துவான் “தீர்ந்திடாக்கொலை இஃது” என்றான்; எனவே, இப்போது தான் கொலையுண்டற்கும் அத்தீவினையே காரணம் என்றானாயிற்று. மாக்கோழியின் கொலையே இத்துணைத் தீவினையாய்த் தொடர்ந்து துன்புறுத்து மாயின், எண்ணிறந்த உயிர்களைக் கொலையுரியும் நின் தீவினை நின்னை எத்துணைத் துயருறுக்கு மோவென்று நின் பொருட்டு இரங்கு கின்றனம் என்றானென வறிக. கொலைப்பாவம் மையலறிவு காரணமாக வருதல் பற்றி, “மையல் கொண்டு” என்றார். பாவம் - தீவினை, வதை - கொலை. மாரிதத்தன் மனம்தெருண்டு கூறல் 322. ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந் தெய்தும் வெந்துய ரெனைப்பல கோடிகோ டியினுறு பழிதீர்ந்தேன் பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக மையின் மாதவத் தொருகட லாடுதல் வலித்தன னினியென்றான். உரை:- ஐய - ஐயனே, புரவல குமர - அரச குமரனே, நின் அருளால் - நீ அருள்செய் துரைத்த உரையால், உயிர்க்கொலையினில் அருவினை - உயிர்களைக் கொல்வதாகிய அரிய தீவினையால் எய்தும், நரகத்து ஆழ்ந்து - நரகத்தில் வீழ்ந்து, எய்தும் வெந்துயர் - நுகரக்கடவ மிக்க துன்பங்கள், எனைப் பல கோடி கோடியின் உறுபழி - எத்துணையோ கோடிக்கணக்காய்ப் பொருந்தும் துன்பத்தினின்று, தீர்ந்தேன் - நீங்கினேனாயினேன், இது பொய்யது அன்று - இது பொய்யன்று மெய்யே, நின் புகழ்மொழி புணையாக - நின் புகழை நிறுத்துதற்குக் காரணமாகிய நின் வாயிற் சொற்களையே புணையாகக்கொண்டு, மையில் மாதவத்து ஒருகடல் - குற்ற மில்லாத பெரிய தவமாகிய ஒப்பற்ற கடலை. ஆடுதல் - நீந்திக் கரையேறுதற்கு இனி வலித்தனன் - இப்பொழுது உறுதிசெய்து கொண்டேன், என்றான் - என்று மாரிதத்தன் கூறினான் எ-று. ஐய, புரவல, குமர என்பன மாரிதத்தற்கு அபயருசிபால் உள்ள ஆர்வத்தைப் புலப்படுத்து நின்றன. அபயருசி இத்துணையும் கூறுதற்குத் தன்பால் கொண்ட அருளே காரணமென்று கருதுதல் தோன்ற, “அருளால்” என்றும், உயிர்க்கொலையால் வரும் தீவினை எத்துணையும் எஞ்ஞான்றும், எவ்விடத்தும், நீங்குதலின்மையினைத் “தீர்ந்திடாக் கொலையிஃது” (321) என்றதனால் உணர்ந்தமையின், “அருவினை” யென்றும், அது கொண்டுய்க்கும் இடம் நரகமாதலின், “நரகத் தாழ்ந்தெய்தும் வெந்துயர்” என்றும், அதனினின்றும் உய்தற்கு மாதவம் மேற்கோடல் துணிந்தமை தோன்ற, “உறுபழி தீர்ந்தேன்” என்றும், அதற்கு உறுதி கூறுவானாய், “நின்புகழ்” மொழி புணையாக மாதவத் தொரு கடலாடுதல் வலித்தனன்” என்றும் கூறினான். இவனுரையினை அபயருசி யயிராமைப் பொருட்டு, “பொய்யதன்றிது” என்றதனோ டமையாது, “புரவல” என்றும், “குமர” வென்றும் கூறுகின்றான். பொய்யது - அது - பகுதிப்பொருட்டு. புகழ் உண்டாதற்கும், புகழுடைமை புலப்படுத்தற்கும் புகழும் மொழியும் ஏதுவாமாகலின், “புகழ்மொழி” எனப்பட்டது. தவத்தைக் கடலென்றது அதனது அருமையும் பெருமையு முணரநின்றது. மாரிதத்தன் துறவு பூண்டு முனிவனாதல் 323. இன்சொன் மாதரு மிளங்கிளைச் சுற்றமும் எரித்திர ளெனவஞ்சிப் பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந் தற்கிது பொறையென்றே மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல் விடுத்தவ ருடன்போகி முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற் றொழுதுநன் முனியானான். உரை:- இன்சொல் மாதரும் - இனிய சொற்களைப் பேசும் மகளிரையும், இளங்கிளைச் சுற்றமும் - இளையாரும் மைந்தரும் மைத்துனரும் பிறருமாகிய சுற்றத்தாரையும், எரித்திரள் என அஞ்சி - நெருப்பின் கூட்டமென்று கருதியஞ்சி மனத்தால் நீங்கி, புதல்வருள் புட்பதந்தற்கு - தன் மக்களுள் மூத்தோனான புட்பதந்தன் என்பானுக்கு, இது பொறை என்று - இவ்வரசியல் சுமையாகும் என்றெண்ணி, பொன்செய் மாமுடி - பொன்னாற்செய்த அழகிய முடியினைச் சூட்டி, அரசியல் வெறுத்தனன் விடுத்து - அரசியற் போகத்தைத் தான் விரும்பாது அவன்பால் ஒப்படைத்து விட்டு, அவருடன் - அவ் வபயருசி அபயமதி யென்ற இருவருடன், போகி - சென்று, முன் சொல் - முன்னே “நகர்ப்புறத்தோர் வளமலர்ப் பொழில்” (24) என்று சொல்லப் பட்ட, மாமலர்ப் பொழிலினுள் - அழகிய பூக்கள் நிறைந்த சோலைக் குள்ளே எழுந்தருளியிருந்த, முனிவரன் தொழுது - முனிபுங்க வனாகிய சுதத்த முனிகளை வணங்கி அறங்கேட்டு, மின்செய்தாரவன் நன்முனி யானான் - ஒளி விளங்கும் மாலை யணிந்தவனான மாரிதத்தன் நற்காட்சி முதலிய நன்மைபெற்ற முனிகளாயினான் எ-று. இளையராய உடன் பிறந்தார், மக்கள், மைத்துனர் முதலா யினாரை “இளங்கிளைச்சுற்றம்” என்றார்; “எழுமையும் பெறுக லின்ன விளங்கிளைச் சுற்றம் என்றாள்”1 என்று தேவரும் கூறுதல் காண்க. புதல்வராகிய சுற்றத்தை, “இளந்துணைப் புதல்வர்” “இளந்துணை மகாஅர்”2 என்பது பண்டையார் வழக்கு. நெருப்பு, தன்னைச் சேர்ந்தாரை வெதுப்புதல்போல இம்மாதர் முதலிய சுற்றமும் தன்னை வினைசெய்வித்து மறுமைக்கண் தீவாய் நரகத்து வீழ்வித்து வருத்துதலின், “எரித்திரள் என அஞ்சி” நீங்கினானென்றார். பொன்னாற் செய்யப் பட்டதாயினும், மணிமுடியும், விரும்பா விடத்துப் பொறையாய் வருத்துமாதலின், “பொன் செய் மாமுடி” யென்றும், “இது பொறையென்றே மின்செய் தாரவன் வெறுத்தனன்” என்றும், முறை வழுவாமைச் செய்தல்அறமாதலின் “புதல்வருட் புட்பதந்தற்கு அரசியல் விடுத்து” என்றும், அபயருசியின் “புகழ் மொழி புணையாக”ச் செல்கின்றமையின், “அவருடன் போகி” யென்றும், முனிவர் பால் அறங்கேட்டு சைன தீக்கைபெற்று நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் உணர்ந்து முனிவரனானனென்பார், “நன் முனியானான்” என்றும் கூறினார். சைன தீக்கையாவது ஆடையணிகளையும் தலை மயிர் முதலிய வற்றையும் நீக்குதல்; “அறிவன தடிமுத லைம்ப தஞ்சொலா, நெறிமையின் நீக்கினார்”3 என வருவதனாலும் அதனுரையாலு மறிக. நன்முனியாகிய மாரிதத்தன் வானவனாதல் 324. வெய்ய தீவினை வெருவுறு மாதவம் விதியினின் றுதிகொண்டான் ஐய தாமதி சயமுற வடங்கின னுடம்பினை யிவணிட்டே மையல் வானிடை யனசனர் குழாங்களில் வானவன் றானாகித் தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியின் மகிழ்வுற்றான். உரை:- வெய்ய தீவினை வெருவுறும் மாதவம் - வெவ்விய துன்பத்தை விளைவிக்கும் வினைகள் அணுகுதற்கு அஞ்சி நீங்கும் பெரிய தவத்தை, விதியின் நின்று - தவத்திற் கோதிய நன்னெறிக் கண்ணே பிறழ்வின்றி நின்றொழுகி, உதிகொண்டான் - எய்தப் பெற்ற வனான மாரிதத்த முனிவன், அதிசயமுற - கண்டோர் வியக்குமாறு, ஐயதாம் உடம்பினை இவண் அடங்கினன் இட்டு - மெல்லிதாகிய உடம்பினை இம்மண்ணுலகில் உயிர்ப்படங்கினனாய் விட்டொழித்து, மையல் வானிடை - முகிற் கூட்டம் சஞ்சரிப்ப தல்லாத மேல் நிலை வானமாகிய விண்ணுலகத்தில், அனசனர் குழாங்களில் - அனசனத் தவம் பூண்டோரைப் போல, வானவன் தானாகி - தேவனாகி, தொய்யில் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியில் - தொய்யி லெழுதிய பெரிய முலையினையுடைய தேவ மகளிர் கூட்டத்தில், மகிழ்வுற்றான் - தேவபோகத்தில் திளைப்பானாயினன் எ-று. “அஞ்சொலார் நெறிமையை யறநெறி நினைப்ப நீக்கும்”1 என்பவாகலின், மாதவமாகிய அறநெறி வெவ்வினையஞ்சி நீங்குதற்கு ஏதுவாயிற்று. தவநெறியும் வழுவா தொழுகினன்றிப் பயன் தாராமையின், “விதியினின்று உதிகொண்டான்” என்றார். உதிகோடல் - உதித்தல்; அஃதாவது எய்துதல். “உதிதர வுணர்வல்யானும்”2 என்புழிப் போல ஐயதாம் என்பதை உடம்பிற் கேற்றுக; தவ முதிர்ச்சிக்கண் உடம்பு வாடி மெலிவதாதலின், உடம்பு மெலிய சினம் முதலிய குற்றங்கள் அடங்கிக்கெடுதலின், முன்னை நிலையும் இப்போதைய நிலையும் கண்டார்க்கு வியப்புத் தோன்றுதல் பற்றி, “அதிசயமுற வடங்கின” னென்றார்; “தவம் பெருக நாடொறும் காயமும் கசாயமும் கரிசமானவே”3 என்றார் பிறரும். மையல் வானம் - விண்ணுலகிற்கு வெளிப்படை; செருப்பு மலையை “மிதியல் செருப்பு”4 என்பதுபோல. தேவருலகிற் பெறும் பயன் அது வாதலின், “தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் தொகுதியின் மகிழ்வுற்றா” னென்றார். அபயருசியும் அபயமதியும் வானவராதல் 325. அண்ண லாகிய வபயனுந் தங்கையு மாயுக மிகையின்மை நண்ணி நாயக முனிவனி லறிந்தனர் நவின்றனர் குணமெல்லாங் கண்ணி னார்தம துருவின துடலங்கள் கழிந்தன கழிபோகத் தெண்ணின் வானுல கத்திரண் டாவதி னிமையவர் தாமானார். உரை:- அண்ணலாகிய அபயனும் - பெரியவனாகிய அபயருசியும், தங்கையும் - அவன் தங்கையாகிய அபயமதியும், ஆயுகம் மிகை இன்மை-ஆயுள் மிகவும் இல்லாமையை, நாயக முனிவனில் நண்ணி யறிந்தனர் - தலைமை பொருந்திய சுதத்த முனிகளை யடைந்து அறிந்து கொண்டு, குணமெல்லாம் நவின்றனர் - ஞான வின்பத்துக் குரிய குணங்களை நல்கும் அறவொழுக்கங்களை மேற்கொண்டொழுகி, தமது உருவினது உடலங்கள் கழிந்தன கண்ணினார் - ஜீவபுற்கலமாகிய தமக்கு வந்து கழிந்துபோன பிறப்புக்கள் பலவற்றையும் தெரிந்து, எண்ணின் வானுலகத்து - எண்ணுதற் கினிய விண்ணுலகத்து, இரண் டாவதின் - இரண்டாவது பகுதியில், கழி போகத்து இமையவர்தாம் ஆனார் - மிக்க இன்ப நுகர்ச்சியினையுடைய தேவராயினர் எ-று. அபயன் மூத்தோனாதலின், “அண்ணலாகிய அபயனும்” என்றார். “ஆயுகம் மிகை இன்மை” யென்றதனால் ஏனைச் செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும் கொள்ளப்படும். அறிந்தனர், நவின்றனர், கண்ணினர் என்பன முற்றெச்சமாய் “தாமானார்” என்பதனோடு முடிந்தன. குணமாவது அறமாதலின், அதனைக் “குணமெல்லாம்” என்றார்; இனி இதற்குக் குணவிரதம் முதலாயின என்றுரைப்பினுமாம். கழியென்னும் உரிச்சொல் மிகுதிப்பொருட்டு. வானுலகத்து இரண்டாவது சாசார கற்பமென்னும் தேவலோகம். வானவராகிய இவர்தம் உருவநலம் கூறல் 326. அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரம் செம்பொன் மாமணி தோள்வளை கடகங்கள் செறிகழன் முதலாய நம்பு நாளொளி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே. உரை:- அம்பொன் மாமுடி - அழகிய பொன்னாலியன்ற பெரிய முடியும், அலர்கதிர்க் குண்டலம் - விரிந்த ஒளிக்கதிர் களையுடைய குண்டலங்களும், அருமணி திகழ் ஆரம் - கிடைத்தற்கரிய மணிகளின் ஒளி விளங்கும் அரதன மாலையும், செம்பொன் மாமணி தோள்வளை - செவ்விய பொன்னாலும் அழகிய மணியாலும் இயன்ற வாகு வலயங்களும், கடகங்கள் - கடகங்களும், செறி கழல் முதலாய - கட்டுகின்ற வீரகண்டையும் முதலிய, நம்பும் - விரும்புகின்ற, நாள் ஒளி நகு கதிர்க் கலங்களின் - இளஞாயிறுபோல ஒளிவிடும் ஒளிக்கதிர்களை யுடைய அணிகலன்களால், நலம் பொலிந்து - நலம் மிகுந்து, அழகு ஆர்ந்த - அழகு நிறைந்த, வம்புவான் இடுதனுவென - வானம் இடுகின்ற புதிய வில்லைப்போன்ற, வடிவுடை வான வரானார் - உருவத்தையுடைய தேவராயினர் எ-று. முடிமுதல் அடிகாறும் அணியும் அணிகளை நிரலே தொடுத் தோதுவார் “அம்பொன் மாமுடி” என்றும், “செறிகழல்” என்றும் கூறி, ஒவ்வோ ருறுப்புக்கும் இக்கூறிய இவையே யன்றி, இவற்றிற் கினமா யவை பல வுள்ளன என்றற்கு “முதலாய” என்று மிகுத்தும் ஓதினார். “நம்பு நாள் ஒளி” என்றதனால், இளஞாயிற்றின் பேரொளி கொள்ளப் பட்டது. பொலிதல் - மிகுதல், வம்பு - புதுமை. “வெம்பும் சுடரிற் சுடரும் திருமூர்த்தி”1 என்றார். தேவரும். இவ்வாறு இத்தேவர் பல்வகை யணிகலனுடையராதலை, “கனை கதிரா” “செழுந்திரட்பூந்” என்று தொடங்கும் செய்யுட்களில் தோலாமொழித் தேவரும் 2 கூறுதல் காண்க. தேவமகளிரது இன்பம் துய்த்தல் 327. வந்து வானவர் திசைதொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்மாரி மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மறுகெங்கும் அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம் வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந்தார். உரை:- திசைதொறும் வானவர் வந்து வணங்கினர் வாழ்த்தினர் - எட்டுத்திக்கிலும் உறையும் தேவரனைவரும் வந்து வணங்கி வாழ்த் தினார்கள், மந்த மாருதம் மலர் மாரி துந்துபி வளரிசை மருங்கெங்கும் மலிந்தன - பக்கமெங்கணும் தென்றலும் பூமழையும் துந்துபியின் மிகுகின்ற இசையோசையும் நிரம்பின, அருகு எல்லாம் - அருகிட மெல்லாம், விரும்பிய அரம்பையர் - இவர்களை விரும்பிய தேவரம் பையர், ஆடினர் பாடினர் - ஆடியும் பாடியும் மகிழ்வித்தார்கள், மன்மத வாளியின் மகிழ்ந்து - மன்மதன் எய்த அம்பினால் மோக முற்று, தேவியர் வந்து புடைசூழ்ந்தார் - தேவராய இவர்க்கு மனைவி யராவார் வந்து பக்கத்தே சூழ்ந்து கொண்டார்கள் எ-று. அபயருசியும் அபயமதியும் தேவருலகத்தை யடைந்த காலையில், இவரைத் தேவர்கள் வரவேற்று இன்புறுத்த திறம் கூறுவார், “வானவர் திசைதொறும் வணங்கினர் வாழ்த்தினர்” என்றும், தெருக்கள் புனையப் பெற்றிருந்த சிறப்பை, “மலர் மாரி மந்த மாருதம் துந்துபி வளரிசை மலிந்தன மறுகெங்கும்” என்றும், அருகே அரம்பையர் ஆடலும் பாடலும் செய்தனரென்றும் கூறினார். மன்மத வாளியால் காமவேட்கை யுற்று வந்த தேவியர், மெய்யுறு புணர்ச்சியின்மையின் காட்சியின்பம் குறித்து அருகே சூழ்ந்து கொண்டாராதலின், “தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந்தார்” என்றார். “முன் செய்நல் வினையினால் முகிலின் மின்னனார், இன்செய்வாயவ ரேந்து கொங்கையர், வந்திடைச் சூழ்ந்திட வணங்க வானவர், அந்தமி லின்பத்து ளமரன் மேயினான்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. இணையில் இன்பத்துள் இருவரும் இருத்தல் 328. மாசின் மாமணி மேனியின் வாசமோ ரோசனை மணநாறத் தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னணையார்கள் ஆசி லெண்குண னவதியொ டமைந்தன ரலைகட லளவெல்லாம் ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்றார். உரை:- மாசில் மாமணி மேனியின் வாசம் - குற்றமில்லா அழகிய மாணிக்க மணிபோலும் நிறமமைந்த அவருடம்பின் கண் எழும் மணமானது, ஓர் ஓசனை மணம் நாற - ஒரு யோசனை தூரம் தன் மணத்தைப் பரப்ப, தேசு - உடம்பி னொளியானது, ஓர் ஓசனை திளைத்திட - ஓர் யோசனை தூரம் ஒளியினைச் செய்ய, முளைத்தெழு தினகரன் அனையார்கள் - கீழ்த்திசையில் முளைத்து எழுகின்ற இளஞாயிற்றை யொக்கும் இருவரும், ஆசு இல் எண்குணன் - கடையிலா அறிவு முதலிய எண்குணங்களும், அவதியொடு - அவதி ஞானம் முதலிய பல்வகை ஞானவுணர்வும், அமைந்தனர் - பொருந்தி, அலைகடல் அளவெல்லாம் - அலைகளையுடைய கடலென்னும் காலவளவையாலாகிய வாழ்நாட்கால முற்றும், ஏசுஇல் - பழிப் பில்லாத, வானுலகு - விண்ணுலகத்தில், இணையில் இன்பத்து இனிது இசைந்து - நிகரற்ற பேரின்பத்தில் இனிது தோய்ந்து, உடன் இயல் கின்றார் - பிரியாதிருக்கின்றார்கள் எ-று. “முளைத்தெழு தினகரன் அனையார்” என்றமையின், மாமணி யென்றது மாணிக்க மணியாயிற்று. இவர்தம் மேனி நலத்தை, “வாசமோ ரோசனை நின்று நாறிடும் தேசுமோ ரோசனை சென்றெறித்திடும், தூசணி மாசெய்தா மேனி யின்குணம், பேசலாம் படியஃ தன்று பீடினால்”1 என்பதனாலு மறிக. மாணிக்க மணிக்குப் பதினாறுவகைக் குற்றம் உண்டென்ப வாகலின் “மாசில் மாமணி” என்றார். ஆசில் எண்குணமெனவே, அவை கடையிலா அறிவு முதலிய எட்டாதல் பெற்றாம். அவதி ஞானத்தை, “பவப்பிரத்தியய அவதி ஞானம்” என்பர்; இதனால் பண்டைப் பிறப்பு முற்றும் தெளியவுணரப்படும். இத்தேவர்கட்குக் காலவெல்லை பதினெட்டுக் கடற்காலம் என்பர். நூற்பயன் 329. வெருவரு வினைவலி விலக்கு கிற்பது தருவது சுரகதி தந்து பின்னரும் பொருவரு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே. உரை:- திருவற நெறியது - அருகபரமேட்டி யுரைத்த சைன தருமத்தின், செவ்வி - இயல்பினை யுணர்த்தும் இந்நூல், வெருவரு வினைவலி விலக்குகிற்பது - அறிவுடையோர் யாவரும் அஞ்சத்தக்க வினையினது வன்மையால் விளையும் துன்பத்தைப் போக்குமாற்ற லுடையது, சுரகதி தருவது - தேவகதியினைத் தருவது, தந்து - அவ்வாறு தந்தும் அமையாது, பின்னரும் - அதன்மேலும், பொருவரு சிவகதி - ஒப்பற்ற கேவல ஞானவின்பம், புணர நிற்பது - பொருந்தச் செய்வ தாகும். காண்மின் - இவ்வியல்பை இந்நூற் கண்ணே காண்பீர்களாக எ-று. யசோதரன், சந்திரமதி, அமிர்தமதி என்போர் வரலாற்றால் வினையின் வலியையுணர்த்தி, யசோமதி, சண்டகருமன், மாரிதத்தன் முதலாயினார் தாம் செய்த வினைகள் தம்மைத் தொடராவாறு நோற்றுயர்ந்ததனால் “வினை வலி விலக்குகிற்பது” என்றதும், யசோமதி முதலிய அரசர்களும் அபயருசி அபயமதி யென்பாரும் தேவகதி யெய்திய வரலாற்றால், “தருவது சுரகதி” யென்றதும், அபயருசியும் அபயமதியும் தேவகதி பெற்றும் அமையாது எண் குணமும் அவதி ஞானமும் பெற்றதனால் சிவகதி பெறச் சமைந் திருத்தலின், “பொருவரு சிவகதி புணர நிற்பது” என்றதும் இனிது விளங்குதலின், “காண்மினே” என்றார். ஆசிரியர் அறங்கூறல் 330. ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக போக்குவ தேதெனில் வெகுளி போக்குக நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக காக்குவ தேதெனில் விரதம் காக்கவே. உரை:- ஆக்குவது ஏது ஏனில் - மேலிற் செய்யுளிற் கூறியவாறு கண்டோர் இனி யாம் செய்யத்தகுவது யாதென்றால், அறத்தை ஆக்குக - அறத்தைச் செய்வாராக, போக்குவது ஏது எனில் - நீக்கத் தகுவது யாதென்றால், வெகுளி போக்குக - சினத்தை அறவே நீக்குவாராக, நோக்குவது ஏதெனில் - ஆரயாத்தக்கது யாதென்றால், ஞானம் நோக்குக - ஞானநூல்களை நன்கு ஆராய்வார்களாக, காக்குவது ஏதெனில் - நீங்காமற் காக்கக்கடவது யாதெனில், விரதம் காக்க - பல் வகை விரதங்களையும் காப்பாராக எ-று. இருவினையும் துன்பவிளைவின வாதலின் எவ்வினையைச் செய்யக்கடவோம் என்றார்க்கு அறவினையே செய்க என்பார், “அறத்தை யாக்குக” என்றார்; ஒளவையாரும் “அறஞ் செயவிரும்பு” என்றல் காண்க. அறவினையைச் செய்யுமிடத்து, முற்றவும் கடியலாகாத வெகுளி ஒரோவழித் தோன்றலு முண்மையாலும், அவ் வெகுளி, தீவினை பிறப்பதற்கு வாயிலாதலாலும், “வெகுளி போக்குக” என்றார். முற்றத் துறந்த முனிவர்பாலும் “வெகுளி கணமேயும் காத்தலரிது”1 என்பதனால் உண்மை யறியப்படுதலும் “தீயபிறத்தல் அதனால் வரும்”2 என்பதனால் வெகுளி தீவினைக்கு வாயிலாதலும் அறியலாம். துறவோரும் அறவோராதலின், அவர் பாலும் அஃதிருத்தல் கூடாதென்பார், “வெகுளி போக்குக” என்றார்; ஒளவையார், “ஆறுவது சினம்” என அறச்செயலை அடுத்துக் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு அறச்செய்கையும் வெகுளியின்மையு முடையார் தம் அறிவால் ஆயக்கடவன இவை யென்பார் “ஞானம் நோக்குக” என்றார்; பிறவெல்லாம் அறிவு மயக்கமும் வினைத்தொடர்பும் பயக்கு மென்பது கருத்து. வீடுபெற விரும்பினோர் செய்யத்தகுவதிது வென்பார் “வித்தை விரும்பு” என்ற ஒளவையார், பிறாண்டுக் “காப்பது விரதம்” என்றதனையுட் கொண்டே இவரும் “விரதம் காக்கவே” யென்றார் போலும். இனி அறத்தை யென்றதற்குச் சைனதருமத்தையே யென்றும், ஞானமென்றதற்குச் சம்மிய ஞான மென்றும், விரதம் என்றதற்குச் சம்மிய சாரித்திரம் என்றும் கூறுப. யசோதர காவியம் மூலமும், ஒளவை சு. துரைச்சாமிப்பிள்ளையவர்கள் இயற்றிய உரையும் முற்றும். யசோதர காவியம் செய்யுள் முதற்குறிப்பு அகராதி செய்யுள் எண் அங்கநூலாதி 55 அங்கவளகத்து 99 அங்குலியயங்கம் 38 அசையதாகி 202 அஞ்சிலோதியர் 167 அஞ்சினமெனினும் 33 அஞ்சுதலிலாது 87 அடைந்தவர்கள் 217 அண்டலரெனினுங் 29 அண்ணலாகிய 326 அண்ணனீ யருளிற் 45 அணிகொள் மாமுடி 209 அத்தலத்தக 197 அந்தரத்தொரு 181 அப்பிறப்பி 172 அம்பின் வாயுமி 163 அம்பொன் மாமுடி 326 அம்முனி யவர்கள் 26 அரசவை விடுத்து 117 அரசனாணை 210 அரசன் மற்றவன் 9 அரசுநீதுறத்தி 150 அருங்கல மும்மை 318 அருமணியி 285 அருவினை முனைகொ 230 அருவினை விளையு 46 அருள்புரி மனத்த 309 அருளுடை மனத்த 66 செய்யுள் எண் அருளொடு படர்தல் 306 அரைசநின் னகத்து 69 அல்லது மன்னை 34 அழுகிநைந்துட 216 அற்றமிலறிவு 240 அறப்பெருமை 266 அறப்பொருள் நுகர்தல் 156 அறப்பொருள் விளைக்குங் 73 அறிவரன் சரண 256 அறிவிலராய 308 அறிவொடா 50 அறுத்த மீனி 185 அன்றியுமின்றென் 141 அன்னணம் அண்ணல் 67 அன்னவர் தம்முள் 216 அனங்கனான 214 அனசன மமர்ந்த 319 அனந்த மாமறிவு 233 ஆக்குவ தேதெனி 330 ஆகமத்தடிக 239 ஆகவெனின் 269 ஆங்கபய 302 ஆங்வளகத்து 151 ஆங்கவ ளணைந்த 91 ஆங்கவ ளருளொன் 138 ஆங்குமுனி 284 ஆடவ ரன்றி 110 ஆடைமுன்னசைஇய 44 ஆதகாதன்னை 148 ஆதபத்தி 193 ஆயிடைக்கொடி 212 ஆயிடைச் சுதத்த 23 ஆயிடை யத்தி 94 ஆயிடை யரச 132 ஆரருள் புரிந்த 232 ஆருயிர் வருத்தங் 247 ஆழ்ந்தகுழி 289 ஆற்றல தமைய 317 இங்குலகு 274 இஞ்சி மஞ்சினை 7 இடுக்கண்வந்துறவும் 62 இணர்தகைப்பொழிலி 227 இதத்தினையுயிர்க்கினி 263 இது நுமர்கள் 300 இதுவென் மாநக 198 இந்திரர்கள் 271 இந்துவோ ரிளம்பிறை 76 இருமுழ மாதி 40 இருளினாலடர்க்க 120 இருளினிரு 287 இவ்வகை மொழிவோன் 114 இவ்வகை யாகுஞ் 238 இவ்வுலகி 272 இவர்களென் கடை 200 இளங்களிற் றுழுவை 77 இளமையினியல்பிது 81 இளையவள் எழில்நலம் 78 இறந்தநாளென்னு 248 இன்சொன் மாதரு 323 இன்றிவண் ஐய 48 இன்றெறிந்த 192 இன்னண மரச 259 இன்னது நினைந்த 281 இன்னரிச் சிலம்புந் 93 இன்னவகை 391 இன்னு மாசை 213 இன்னுமீதைய 250 இனையது பிறவி 320 இனைய வாகிய 204 இளையன நினைவின் 57 இனையன நினைவு தம் 149 இனையன நினைவுறீஇ 83 இனையன பலவுஞ் 125 இனையன வினையி 160 இனையன வுழையர் 157 இனையனீ தனியை 158 ஈங்குநம் இடர்கள் 52 ஈடின் முனி 279 உம்மைவல்வினை 207 உயர்ந்த சோலைகள் 13 உயிர்ப்பொருள் வடிவு 144 உயிரவணில்லை 252 உருவினொடழகு 127 உலகமூன்றும் 1 உள்விரிந்த 3 உளங்கொள மலிந்த 25 உறுதியைப் பெரிது 51 உறுபொருள் நிலைமை 241 எண்களுக்கிசைவி 154 எண்ணமதலாமை 126 எண்ணமிலி 297 எந்தையும் எந்தை 305 எரிமணி யிமைக்கும் 85 எவ்வள விதனை 70 என் மனத்திவரு 100 என்றடி பணிந்து 246 என்றலும் மிணர் 195 என்றலு மடிகள் 310 என்றலுமிவற்றி 107 என்றலு மெனது 142 என்றலு மேய 123 என்றவனுளங்கொள 280 என்றினிது 273 என்று கண்டு 222 என்று கூறலும் 17 என்று தன்புறத் 219 என்றும் இப்பரு 15 என்னுயிர்க்கரணம் 102 என்னுயிர் நீத்த 139 என்னை கொல்மாவின் 147 என்னைநஞ்சு 201 என்மனத்தெண்ணி 30 ஐப்பதிசிமதிய 136 ஐயநின்னரு 322 ஐவகையொழுக்க 54 ஒருபதினொ 295 ஒன்றியஉடம்பின் 49 ஓரினோர் முழங்கை 39 ஓருயிர்த்தோழ 312 கடையனக்கமல 119 கண்டுமன்னவன் 224 கண்ணினுக்கினிய 64 கந்தடு களிமத 75 கரவினிற்றேவி 135 கருகருகரிந்தனள் 291 கருமனுமிறைவ 234 கறங்கெனவினையி 35 காரநீரினிற் 211 காரியம் முடிந்த 108 காளைதகு 267 கானுலாவியும் 14 குட்டமாகிய 215 குரைகழலசோகன் 84 கூற்றமென 264 கேட்டலு மஞ்சு 112 கேட்டலுமடிகள் 254 கொந்தெரி 265 கொலைக்களங்குறுகி 59 கொலையின தின்மை 243 கோங்குபொற்குடை 11 சண்டகோபி 18 சந்திரம்மதிநாய்...முந்து 180 சந்திரம்மதிநாய்...வந்தி 205 சந்திரம்மதிநாய்... வந்து 183 சந்திரம்மதிநாயு 177 சந்திரம்மதியாகிய 164 சந்திரமுன்மதி 299 சிக்கெனவாயு 237 சிலம்பொடுசிலம்பி 90 சிலைபயில்வயிரத் 245 சுரைய பாலடி 168 செந்தசைகள் 290 செந்தளிர்புனைந்த 226 செய்த வெந்திய 321 சென்றுநல்லமிர் 196 சொல்லறிகணையை 257 தந்தையுத்தந்த 304 தரளமாகிய 225 தவளவாள்நகை 98 தணிவயினிகுளை 116 தாதைதன்றுறவு 314 தாய்கொல்பன்றி 178 தாய்முன்னாகி 174 தாய்வயிற்கரு 189 தாயினன்னலந் 188 திசையுலாமிசை 6 திருத்தகுகுமரன் 86 திலப்பொறியி 294 தீதகல்கடவு 155 தீதிதென்ற 194 துயிலினையொருவி 118 துன்பகாரண 41 துன்னியஇரவு 97 தூரபாரஞ் 207 தெருளுடைமனத்திற் 244 தேவிநீகமலை 209 தேவியென்னை 220 தையலாள்மெல்ல 121 தொல்லைவினை 296 தோடலர்கோதை 88 நகைவிளையாடன் 130 நங்கைநீயஞ்சல் 32 நஞ்சதுபரந்த 153 நஞ்சிலன்னை 221 நஞ்சொடுகலந்த 152 நரம்புகள்விசித்த 105 நல்லவதத்தொட 170 நாடுநகரங்களு 276 நாதன்நம்முனி 2 நாயின்வாயில் 175 நாவழுகி 292 நிலையிலாவுடம்பின் 259 நின்றகண்டத்து 186 நின்றவர்தம்மை 61 நூற்படுவலைப்பொறி 262 நெரிந்த நுண்குழல் 10 நோயினாசைகொல் 218 நோவுசெய்திடும் 16 பட்டதுநலங்கா 115 பண்ணினுக்கொழுகு 95 பண்பெற்றமொழி 113 பரிமிசைப்படை 261 பாடகமிலங்கு 228 பாரிதத்தினை 8 பாவமூர்த்தி 19 பிறந்தநாம்பிறவி 36 பிறந்தவர் முயற்சி 72 பிறவிகளனைத்து 255 புரைபுரைதோறு 131 பூதிகந்தத்தின் 106 பெண்ணுயிரளிய 47 பெருகியகொலையும் 242 பெருமலையனைய 53 பேதுறுபிறவி 56 பேதைமாதர் 203 பைம்பொன் 5 பையவே 236 பொற்பகங்கழுமி 122 மக்களிற்பிறவி 43 மக்களுளிரட்டை 303 மடங்கனிந்தினிய 92 மண்டமர்தொலைத்த 137 மண்ணியன்மடந்தை 128 மணிமருளுருவம் 133 மணிமுடிமகனுக் 313 மயிலுஞாயும் 165 மருவுவெவ்வினை 4 மலமலிகுரம்பை 71 மலர்ந்த பூஞ்சிகை 12 மழுகிருளிரவின் 103 மற்றம்மாநக 223 மற்றமன்னன் 161 மற்றவன் இனைய 253 மற்றைநாள் மன்னன் 129 மற்றைமீனுமோர் 184 மற்றொர்நாள்மணி 171 மற்றொர்நாள்மற 191 மற்றொர்நாள்மன்னவன் 79 மற்றொர்நாள்மன்னர் 89 மற்றொருகள்வன் 235 மறவியின் மயங்கி 60 மன்னவன் மனத்ததை 283 மன்னன் ஆணையின் 20 மன்னன்மயிலாய் 298 மன்னன்மாதேவி 104 மன்னன்...சூகரம் 179 மன்னன்...சூகரமா 187 மன்னன்... வந்து 176 மன்னனாகிய 166 மன்னனும் அதனை 65 மனம்விரியல்குன் 143 மாசின்மாமணி 328 மாதராரெனைய 124 மாதவன்மலர்ந்த 315 மாளவப்பஞ்ச 101 மாவியல்வடிவு 307 மாவினின் வனைந்த 145 மின்னினுநிலையின் 96 மின்னொடு தொடர்ந்து 68 முடைப்படுநாற்ற 111 முத்தவாள்நகை 173 முந்துசெய் நல்வினை 82 முழமொருமூன்றிற் 37 முன்னமுரை 282 முன்னுயிருருவிற் 63 முன்னைநுமர் 293 முனைத்திறமுறுக்கு 58 மேகமென 275 மேருகிரி 288 மேலியல்தெய்வங் 146 யான்படைத்த 199 யானிவ்வாளினின் 21 யானுமல 278 யானுயிர்வாழ்த 144 வஞ்சனையி 278 வடிநுனைப்பகழி 225 வண்டளிர்புரைதிரு 83 வணிகர்தம்முடன் 20 வந்துகுப்பையின் 173 வந்துடன் வணங்கும் 41 வந்துமாநகர் 3 வந்துவானவர் 319 வரைசெய்தோண் 204 வலையின்வாழ்நரின் 184 வள்ளியமலருஞ் 26 வளவயல்வாரி 79 வளையவர்சூழ 223 வன்சொல்வாய்மறவர் 30 வாடலொன்றிலர் 20 வாரணிமுரச 164 வாளியின்விழும் 189 வானவரு 269 விண்ணிடைவிளங்குங் 139 விந்தநாம 168 விரைசெறிபொழிலி 251 வில்லினதெல்லை 27 வினைகளும்வினைகள் 306 வீங்கியவினைகள் 245 வெய்யதீவினை 315 வெருவருவினை 321 வெருள்செயும்வினை 302 வெறுத்துடன் 261 * இந்த அறுபத்து மூவர் வரலாறுகள் மகா புராண மெனப்படுவது நோக்கியும், தமிழில் திருத்தொண்டர்புராணம் பெரியபுராணமெனப்படுவது பற்றியும் இவர் களுடன் அறுபான்மும்மை நாயன்மார்களை ஒப்புநோக்கி மயங்குதல் நேரிதன்று. Hirlal Catalogue pp. xxiii. 644, 651. * 1930 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி திரு. கா. நமச்சிவாய முதலியார் காவிரிப் பாக்கம் திரு. வச்சிரவேல் முதலியார் பெரு மனையில் தங்கியிருந்தபோது இதைச் சொன்னார்கள். வித்துவான் சண்முகம் பிள்ளையவர் கள் பிரதியிலும் இது காணப்படுகிறது. (1) Music is the fourth great material want of our nature, - first food. then Raiment. then shelter, then Music - N.Bovee. (2) Music Washes away from the soul the dust of every day life - Auerbach. * “Next to theology I give to music the highest place and honour. And we see low David and all the saints have wrought their godly thoughts into verse, rhyme and sone” - M. Luther. * குறிஞ்சி, புன்னாகவராளி, நாதநாமக் கிரியை முதலிய தமிழ்ப் பண்க (இராகங்க)ளின் ஆரோசை அமரோசைகளை முடிவுறக்காட்டாமல் ஒரு தானத்துக்குரிய முழுப் பகுதியையும் புலப்படாமல் மறைத்து விடுவது என்று இசை வாணர் கூறுவது உலகறிந்த செய்தி. 1. நீலகேசி, செய்யுள். 1 1. சீவக. 3 2. சீவ. 2846. 1. அஷ்ட பதார்த்தசாரம், பக். 3 1. யசோதர. 309. 2. யசோதர. 322. 3. யசோதர 329. (பாடம்) * தௌதயம். 1.மேருமந்தா. 571. (பாடம்) * திருவுன்னிலாய். † போகமஃது. 1. சீவக. 31. 2. குறள், 738. 3. சீவக. 201. 1. நீல. 17. 1. யசோதர. 82. 2. சீவக. 2369. 3. புறம்.103. (பாடம்)* மன்னகர். 1. நீல. 171. 2. சூளா. துறவு. 221. 3. நீல. 86. (பாடம்)* விரிந்த. 1. கலி. 97,33. 2. குறள், 1302,1109. (பாடம்) * சாய்மரை. 1. கலி.29. 2. சூளா. தூது. 5. 3. வீர. திருக்கலம். 15. 4. சீவக. 2691. (பாடம்) * யலர்ந்த. (பாடம்)* ஊடெதிர். † வந்தனனென்றலும். 1. சிலப். 8:7-9. 1. கலி.36. 2. யசோ. 14. (பாடம்)* கானும் வாவியும். (பாடம்) † வொன்றலா. 1. யசோ. 130. (பாடம்) * தகவில, தகவிலர் 1. குறள். 114 2. பழ.5 (பாடம்) * ஆற்றென. (பாடம்)* ஒன்றிலன், ஒன்றில. (பாடம்)* குணக்குன்றென்ன. 1. மேரு. 411 2. அஷ்ட பதார்த்தசாரம் 3. மேரு. 1097 4. சீவக. 821. 5. நீல. 661 6. மேரு.1096 7. குறள் 29. * ந+அசனம்; அந்+அசனம்-அநசனம்; உணவு உண்ணாமை. உண்ணாநோன்பு 1. மேரு.429 2. மேரு. 423. (பாடம்) * உளமதில் † யபயமுன் ருசியுந்தங்கை ‡ ளபயமுன் மதியென் பாளும். (பாடம்) * மனத்தராகி - நற்றவற்றொழுது * அஷ்டபதார்த்த சாரம் - சாரித்ரம் * (பாடம்) ஏற்றணு முளத்தராகி 1. தொல் மெய்ப் - 4. 2. சீவக. 3060. 3. சூளா. சித்தி 7. 4. நீல. தரும. 118. (பாடம்)* கண்டு 1. அகம் 66. (பாடம்) * திரங்கிய. † தின்றென. * (பாடம்) கொண்டு, கொன்று, கின்ன. (பாடம்) * பயநமைக்கதுவும். 1. குறள் 831. 1. சீவக. 2765 2. சீவக. 2796 (பாடம்)* பிறவிதோறும் பெற்றன + தெய்திற் பின்னும் 1. நீல 575 மேற் கோள் (பாடம்)* செய்யத்தாமே ‡ இறந்தனம் 1. குறள், 61. 1. குறள், 22. 1. மேரு. 939 2.மேரு. 945 3. மேரு.958 (பாடம்)* அங்குலி யங்க மாதி யணு; அங்குலி யங்கம் பாக மணு. 1. மேரு. 101 2. மேரு.94 3. குறள், 202 1. சீவக. 270 2. மேரு. 102 (பாடம்)* வரிசிலை 1. மேரு. 1007 1. மேருமந் 942 * (பாடம்) பொன்றித் தளர்ந்தன ரனந்த ரன்றோ 1. சீவக. 2811 2. மேருமந் 934. * “அன்று தொட்டின்றுகாறு மருளும்பிற் பெற்றுவந்த ” - மேரு. 204. 3. சீவக 2752. 1. மேரு 918. (பாடம்) * னடிய, னொழிய. † புதிதின்வாழ்க, வதிதலொன்றோ. 1. மேரு. 116. 2. மேரு. 116 1. மேருமந். 106. (பாடம்)* வெருவிநாம். 1. மேருமந். 112. 2. மேரு 469. 3. மேருமந். 118. (பாடம்)* ரெளிய. 4. குறள். 1124. 1.மேருமந். 462 2. இறை. அ.பொ.மேற். 3. சீவக. 1597 4. குறள், 822 5. மேரு.117 1. மேருமந். 709. 2. யசோ.256. 3. மேரு. 739. (பாடம்)* டுயிருடம்பின்; டியலுயிரின். மல்ல 1. மேரு. 93. 2. மேருமந். 89. 3. மேரு. 88. 4. மேரு.88. 5. மேரு. 81. 1. மேரு. 1195 2. மேருமந். 790. 1. மேருமந். 811. 2. மேருமந். 70. 1. மேருமந். 1383. 1. மேரு. 346. * இப்பாட்டு அச்சுப்பிரதியில் இல்லை. 1. புறம் 186... 2. குறள். 241. 3. மேரு. 968. (பாடம்)* நிலைதளர்ந்திட்ட † தென்னான் ‡ நின்றவர் (பாடம்) * மிக்காம். 1. மேரு. 81. 2. சீவக. 571 (பாடம்)* அருளில செய்து. 1. ஐங். 222.... 1. யசோ. 260....... (பாடம்)* டுயர்தி † மார்பன். ‡ கேட்டிதென்றான் 1. குறள். 146. 2. மேருமந். 97. 3. மேருமந். 775. 4. மேரு. 99. 5. மேரு. 100. 1. மேரு. 639. 2. மேரு. 70. 1. நல்வழி, 7. (பாடம்) *னடைவதல்லால். †அறைந்தவ. 1. குறள், 674 (பாடம்)* இளங்களிறுழுவையின், இளங்களிற்றொருத்தலின். 1. தொல். பொ. 557. (பாடம்)* சென்றநாள். (பாடம்)* பற்றிவானடிதொழ. 1. முருகு. 143 - 4. (பாடம்)* வாயவென்னினி. 1.2 நற். 126. (பாடம்)* முயன்று † மெய்தற்பாற்றெனா; மெய்தற்பாலதே. 1. சீவக. 2762. (பாடம்)* லருந்தவத். 1. குறள். 261. (பாடம்)* னிருநிலத்தார்க்கு, னிருநிலத்துக்கு, † வேந்தன். 1. கம்ப. பால. 1. சூளா. முத்தி. 15. 2. சூளா. முத்தி. 21. 1. சீவக. 921. 2. குறள். 573. 3. சீவக.2004. (பாடம்)* நலங்கவன்றினிய. 1. சீவக. 897. 2. கோவை.1. 1. சீவக. 11. (பாடம்)* படங்கடந் †பாவையே. 1. குறள். 1121. 2. மணி. 18:119. (பாடம்)* மதனராகத்தின், 3. பரி. 20:20 † சிந்தையின். (பாடம்)* விழைந்தவாறே † மனத்தின். (பாடம்)* தவழுமாமதியாய், தவழுமாமதிசெய். †துடங்கினானோவ; துடக்கினான்றுவள. 1. குறள். 287. (பாடம்)* ளல்லவேபோல். † பிறிந்து. ‡ டனையென். 1. தொல். பொருளியல் 44. (பாடம்)* மென்னோ. † நினைந்தருளிற்று 1. குறள் 1182. (பாடம்)* வொண்கண். † மொழியலென்றாள் (பாடம்) * யுணர்த்த † வென்ன, தாழ்வின். ‡மென்றா, மென்றே. § டெண்ணி. (பாடம்)* வன்னை. (பாடம்)* வழங்கு. † யென்றிஃதிசைக்கலன். (பாடம்)* சீரிற். † யனைய. (பாடம்) வடிவுங் (பாடம்)* கனையனாக. (பாடம்)* மேனாளருந்தவத். † தனங்கனாரை, தனங்கனாரும், தணங்கனாரும். ‡துறந்து. §றுள்ளே 1. சீவக 1057. *இதுமுதல் ஐந்து பாட்டுக்கள் அச்சுப்பிரதியில் இல்லை. 1. சீவக 557. 1. குறள் 77 2. சீவக 1676. 1. குறள். 210. * (பாடம்) மயிலுழை. *(பாடம்) டைய, டையோ. (பாடம்)* பவருமுண்டோ. 1. சீவக. 1639. (பாடம்)* மேனை. (பாடம்) † துணர்வது (பாடம்)* மண்ணிய புகழை மாய்க்கும். 1. குறள் 320. 2. குறள் 204. ‡ “காமத்திற்குக் கண்ணில்லை;” “Never was owl more blind than a lover” எனவரும் பழமொழிகளைக் காண்க. (பாடம்)* சீறிற். †செய்து. (பாடம்)* லதுவதன்றோ. 1. சூளா. முத்தி. 21. (பாடம்)* துனிவிலன்; தொல்லவை. 1. குறள் 481. (பாடம்)* விரகினின்றே. † மிகைகமழ் நீரிற். (பாடம்)* இருணிற. † தின்றென். (பாடம்)* யிறைஞ்நிற்ப, யிறைஞ்சிமற்றித் 1. சீவக 1711. (பாடம்)* பிணியென வெனது. 1. தொல். சொல். 58 (பாடம்)* பக்கந்தன்னின். (பாடம்.) † காளை. 1. தொல். சொல் 121. 1. தொல். பொருள். 491. 1. பெருஞ். 4: 10: 13-4 2. குறள். 327. 3. குறள். 987. 1. குறள். 15 2. அறநெறி. 69 3. சீவக. 3117. 10 (பாடம்)* மின்றி. 1. குறள். 158. (பாடம்)* யேடவென்றே. 1. புறம். 31. 1. யாப். விரு. மேற் 2. குறள். 207. (பாடம்)* யாவவன். 1. குறள். 18. (பாடம்)* போலென்றான் 1. தொல். பொ. 283. 1. சீவக. 1755. 1. சீவக. 260. (பாடம்)* வந்தெனனோடும் † அரசநீயமிர்து. ‡உரிமை செய்தால். § விடுது. 1. சிலப். 16: 43, (பாடம்)* மஞ்சனை விலக்கி. † பிறரொடு 1. புறம். 31. 1. பதிற். 22. 2. அகம். 61. *உண்மையுரையாகக் கொள்வானால், “இறைவன் நிற்பிரிந்து என் (நஞ்சூட்டிய) வினையினால் விளைவு” என்று கொள்ளற்பாலன். (பாடம்)* வாய்விழுமண்ட. (பாடம்)* தஞ்சவோதியர். 1. சீவக. 600. (பாடம்)* அந்துணும் 1. நீல. 417. 2. குறள். 137. 3. குறள். 207. 4. நீல. 592. (பாடம்)* வல்லது. † மிகை. ‡யெழுந்ததே. 1. குறள். 214. (பாடம்)* பொன்றின மன்னவன். 1. சிலப். 20:53. 2. புறம். 52. (பாடம்)* வேர்த்துருள. †மன்றென. 1. தொல். சொல். இடை. 19. (பாடம்)* உன்னுமொப்பில். (பாடம்)* கொன்றது. (பாடம்)* அற்றமில்லரு ளந்தணர். 1. புறம். 112. (பாடம்)* வாளிற் றன்னுயிர். (பாடம்)* நல்கினார். † சில நீதிகள். 1. புறம். 203. 1. பு.வெ. மா. 12:13 1. தொல்.சொல். வினை. 50. 1. திருவா. சிவபு. 26. 1. குறள். 831. 1. குறள். 732. 1. குறள். 738 * சீவக. 1315. திருநாவுக். தேவாரம். பதி. 309, செ. 10. 1. குறள். 373. 1. குறள். 167. (பாடம்.) * நின்று. † நாலடி . 121. 1. சிலப். பதி.8.9. 1. தொல். சொல். உரி. 65. 1. நற். 61. (பாடம்)* சவியன்ன. † மாசனம் வளர்விழிச் 1. பரிபா. 4. (பாடம்)* தழை. † தலை. (பாடம்)* பைம்பொற். 1. சீவக. 679. 2. சீவக. 1262. 3. சீவக. 1260 4. சீவக. 2607. 1. குறுந். 165. 2. குறள் 550. 3. மதுரை. 40-41. (பாடம்)* யிருந்து முன்னர். † விறந்த பின்னர். 1. நீலகேசி. 125. 1. நீல கே. 417 1. மேரு. 1399. 1. சீவக. 3127. (பாடம்)* சோரன்றன்னை 1. சீவக. 16. (பாடம்)* றழுந்தி. † செல்வ. 1. மேருமந். 71. 2. நீலகே. 124. 1. நீல. 119. 1. யசோ. 243. 2.யசோ. 244. 1. மேருமந். 1320. 2. மேரு 355. (பாடம்)* துனிவிலன்; தொல்லவை. 1. மேரு. 356. 2. மேரு. 785. 3.குறள். 260. 1. குறள். 294. 2. குறள். 148. (பாடம்)* மஃதே. 1. குறள். 14. (பாடம்)* ளென்று. + றுளது முண்டோ. 1. சீவக. 2625. 2. சீவக. 2625. 3. சீவக. 2944. 1. யசோ. 250 (பாடம்)* நும்மால். 1. யசோ. 256. 2. மேரு. 69. 1. மேரு. 71. 2. மேரு. 970. 3. மேரு. 739 1. யசோ. 225. 1. புறம். 27. (பாடம்)* ளுடைக்கும். † கதத்துடனிழித்தடு. 1. குறள். 5. (பாடம்)* கென்றென; கின்னென (பாடம்)* யியற்றிலை † யெடுப்பது மென். 1. புற.95. 2. புறம். 75. (பாடம்)* னாகவிவரழியவெனிலழிக † முடியோய். (பாடம்)* காதலி னமரரச ராவர் (பாடம்)* சிந்தையிலர் வெந்துயர்கணின்னனர்கள் செயினும். (பாடம்)* கடந்துயிர் விளங்கும் (பாடம்)* தேர்ந்துணர் வின் வேந்தே; தேர்ந்துணரின் வேந்தே (பாடம்)* மின்னினொடு. † னயலே. 1. குறள். 75. (பாடம்)* யணிந்தேர். (பாடம்)* யுள்ளி. (பாடம்)* னியலாதே. 1. சீவக. 2752. (பாடம்)* யெனிலிறைவ. † தொழிந்தது கொல். ‡ யிவனல்லுறவு காணாய்; யிவை நணுகலர்கள் காணாய். (பாடம்)* வியப்ப. † சரணினிட. (பாடம்)* பிறவுமுரை. † துன்னுயிரின். (பாடம்)* விரித்தருள் † தொன்மலர், துனைமலர். 1. மேரு. 91. (பாடம்)* மகிழ்வின் மருவுமன். 1. சீவக. 2800. 2. மேருமந். 375. 3. மேரு. 94. 4. மேரு. 511. 1. சீவக. 2792. (பாடம்)* யெஞ்ச (பாடம்)* மிசையத். † தெருளினெழு. 1. சீவக. 73. 2. மேரு. 936. 1. மேரு.935. (பாடம்)* நிவப்புடைய. † யன்றே. 2. மேரு. 945. (பாடம்)* துருகும். (பாடம்)* ளுருவினொரு; கவினுரு, கருவினொரு. † பெரிதுமினிதே யென்று, மிதுவுமினிதே யென்று. (பாடம்)* வீழ்முழுது 1. மேரு. 942. 2. மேரு. 943 1. மேரு. 937. 1. மேரு. 346. (பாடம்)* வினைகள் வினையுமியல்பு. † மிகை. (பாடம்)* சென்று *இவ்வடி நன்னூலுரையில் சங்கர நமச்சிவாயரால் மேற்கோளாகக் காட்டப்பட்டது. 351. 1.மணி. 22:138. 1. பரி.5. (பாடம்)* ஆவிநீ. (பாடம்)* நின்றவை. † படுநர்க்கையா ‡ செய்த திருவினை நுமர்கள் காணாய். 1. குறள். 396. 1. குறள். 5 (பாடம்)* சரணமாய † மன்னே; மன்னனானான். 1. சீவக. 205. 1. மேருமந். 1400. (பாடம்)* முந்த (பாடம்)* கேற்றவனின்மை. 1. மேருமந். 544, 545. 1. மேரு. 790. 1. தொல். சொல். நூ. 448. 1. மேரு. 117. (பாடம்)* வெந்திரியக், வந்தய. 1. சீவக. 1730. 2. பதிற் 70 71. 3. மேரு. 1203. 1. மேரு, 1203. 2. சீவக. 1340. 3. மேரு. 543. 4. பதிற். 21. 1. சீவக. 2. 2. சூளா. துறவு. 219, 220. 1. மேரு. 511. 1. மேரு. 510. 1. குறள், 29. 2. குறள், 303.