உரைவேந்தர் தமிழ்த்தொகை 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 7 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 416 = 440 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 275/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக் களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாடவேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் சிலப்பதிகார ஆராய்ச்சி 1 மணிமேகலை ஆராய்ச்சி 123 சீவகசிந்தாமணி ஆராய்ச்சி 213  சிலப்பதிகார ஆராய்ச்சி சிலப்பதிகாரம் ஆராய்ச்சி " நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக் கோடுகோ டாய்த் தோன்றுங் கொள்கைத்தே - கூடலார் கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன் தண்டா உரைமுத் தமிழ்." சிலப்பதிகாரம் என்பது செந்தமிழ் இலக்கியங்களுள் மிகத் தொன்மையும் சிறப்பும் அமைந்த பேரிலக்கியமாகும். இது, பண்டைத் தமிழ் மக்களின் நுண்மாண் நுழைபுலப் பன்மாண் பினை இனிது விளக்குவது; தமிழில் முப்பெரும் பிரிவுகளான இயல், இசை, நாடகம் என்ற மூன்றன் உயர் நிலைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகவுள்ளது; தமிழ் வேந்தரின் ஆட்சி நலனும், அவர் காலத்தே அவர்களால் தமிழ் மகளிர் கற்புநிலை நன்கு மதிக்கப்பெற்று வந்த திறனும், தமிழர்க்கு அவர்கள் ஆற்றிய தொண்டின் பெருமையும் நமக்கு உணர்த்துவது; தமிழ் மக்களிடையே நிலவிய பல்வகை வாழ்க்கைக் குறிப்புக்களையும் வாணிப நலத்தையும் அறம்பயின் றொழுகும் மனப்பாங்கையும் தெளியவுரைக்கும் சீர்மையுடையது; தமிழ் நன்மக்களின் இசை நாடகக் கலையுயர்வும், அவற்றின் கண் அவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் இப்பெற்றிய என்று காட்டும் திறத்தால் தமிழ் நாட்டின் பண்டைச் சிறப்பினை எடுத்தோதும் இனிமையுடையது; தமிழ்த் தொண்டு புரிதற்கண் உயர் நிலையோர் தாழ்நிலையோர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வேறுபாடின்றிப் பண்டை மக்கள் அனைவரும் கருத்தூன்றி யிருந்த காட்சியினை நம் கருத்திற்காட்டி மகிழ்வுறுத்துவது; மலைகளின் மாண்பும் காடுகளின் காட்சியும், வயல்வெளிகளின் வனப்பும், கடற்கானலின் கவினும் உள்ளக் காட்சிக்கு உருக்கொள வழங்கும் உயர்வுடையது; பண்டையோர் எடுத்த விழா வகையும், விழாவிடை மகிழும் மக்கள் மாண்பும், காலினும் கலத்தினும் மக்கள் வழங்கும் வரவு செலவும்; மனை மகளிர் மாலைப்போதினும் காலைப்போதினும் ஒழுகும் வாழ்க்கை நிலையும் பிறவும் உயிரோவியம் போலக் காட்டும் ஒட்ப முடையது. சுருங்கச் சொல்லின், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூா றுயாண்டு கட்குமுன் நம் ஆருயிர்ச் செந்தமிழ் நாடிருந்த செல்வ நிலையின் செம்மைக் காட்சியை இன்று நம்மனோர் இனிது கண்டு மகிழ்ந்து அந்நிலையினை யெய்தி மேம்படுதற்கு முயலுமாறு ஊக்கும் முத்தமிழ்ப் பெருங்கலை நிலையம் என்பது சாலும். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என இந்நூற் றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த தேசிய கவி, சுப்பிரமணிய பாரதியார் பாராட்டினர். பண்டைய ஆசிரியன் மாரும் இவ்விலக்கியத்தை மிக்க சிறப்பாகக் கருதியுரைத்துள்ளனர். சென்ற நூற்றாண்டில் இருந்த ஒரு சான்றோர், "சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத் தான்" என ஒரு நயந்தோன்றக் கூறியது, இன்று நாம் நினைக்குந் தோறும் நம் நெஞ்சத்தே இன்பம் நிறைவிக்கின்றது. இச்சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத் தமிழும் விரவிவரும் பேரிலக்கிய மாதல்பற்றி, இதனைப் பண்டையாசிரியன் மார், இயலிசை நாடகத் தொடர் நிலைச் செய்யுள் என்றும், நாடகக் காப்பியம் என்றும் உரைப்பர். இதன்கண் இடையிடையே உரை நடையும் விரவுதலால், இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் சான்றோர் கூறுவர். 1. நூலாசிரியர்:- இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள். இவர் சேரர்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை "ஆராத்திருவின் சேரலாதன்" என்னும் வேந்தர் பெருந்தகை; தாயார் - நற்சோணை எனப்படுவார். சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்; இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒரு நாள் மக்கள் இருவரும் தம் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகன் ஒருவன் வந்தான். வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, "இவனே அரசுரிமை பெறுவன்" என்றான். அது கேட்ட செங்குட்டுவன் சினந்து எரிதவழ நோக்கினன். மூத்தோன் இருப்ப, இளையவனான தான் அரசுரிமை யெய்துதல் ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார் அதனால், இவ்விளங்கோ, இளங்கோ அடிகள் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படுவாராயினர். இவ்வரலாறு, இச்சிலப்பதிகாரத்துக்கு உரைவிரித்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரால் பின்வருமாறு உரைக்கப்படுகிறது: " குமரியொடு வடஇமயத்து, ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலா தற்குத் திகழொளி ஞாயிற்று ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன்மகள் நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள் முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப் பின்னோன் தன்னையும் பெருநம்பி யாகஎன அன்னவர் தம்மொடு தென்னர் செம்பியர் தன்னடி போற்றத் தமனிய மண்டபத்துச் சிங்கம் சுமந்த பொங்கணை மீமிசை உவரித் திரையின் கவரி இரட்ட வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன் அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி "இன்தோள் கழியப் பொன்திகழ் உலகம் சேர்தி நீ" எனச் சேரலற்கு உரைத்தவன் மைந்தரை நோக்கி, "நந்தாச் செங்கோல் அந்தமில் இன்பத்து அரசாள் உரிமை இளையோற்கு உண்டு" என, உளைவனன் நனிவெகுண்டு அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன் கண்ணெரி தவழ அண்ணலை நோக்கிக் கொங்கவிழ் நெடுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயில் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து ஆயினன். II. நூலாசிரியரின் காலம்:- இவ்விலக்கியத்துட் கூறப்படும் கண்ணகி வரலாற்றினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத் தனார் என்னும் நல்லிசைப் புலவர், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகட்கு உரைத்தனர்; அதுகேட்ட அடிகள் இந்நூலை இயற்றி அவரைக் கேட்பித்தனர். சாத்தனார் கடைச்சங்கப் புலவராதலின், இளங்கோவடிகளும் கடைச்சங்க காலத்தவர் என்பது பெறப்படுகிறது. இனி, இலங்கைநாட்டு வரலாற்றினை விளக்கும் மகா வம்சம் என்ற நூல் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகட்குமுன் இலங்கையைக் கயவாகு என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான் என்று கூறுகின்றது. அவனுக்குப் பின் எண்Qறு ஆண்டுகள் கழிய, வேறொரு வேந்தன் கயவாகு என்னும் அப்பெயருடன் இலங்கையை ஆண்டனன் என்றொரு செய்தியும் தெரிகிறது. இச்சிலப்பதி காரமும் சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழி பட்டபோது, கயவாகு என்னும் இலங்கை வேந்தன் ஒருவன் வந்திருந்து வழிபட்டு வரம்பெற்றான் என்று கூறுகிறது. இவ்வேந் தனுடன் நூற்றுவர் கன்னர் என்னும் வடநாட்டு அரசர் பெயரும் இச்சிலப்பதிகாரத்திற் காணப்படுகிறது. அவர்கள் வடநாட்டு வரலாற்றுட் காணப்படும் சதகரணிகள் என்பர். அவர் காலம் கி.பி. 77-ம் 133 மாகும். ஆகவே, இவர் காலத்துக்கயவாகு முதற் கயவாகுவே என்பது தெற்றென விளங்குகிறது. எனவே, இளங் கோவடிகள் காலம் முதற்கய வாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது. இனி, வேறு சிலர் இச் சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறுசிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இக் கூற்றுக்களை நோக்கின், இப் பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது. இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந் துணையும், இளங்கோவடிகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத் தெண்Qறு யாண்டு கட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம். III. நூலாசிரியரின் சமயம்:- இவர் காலத்தே நம் தமிழ் நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்வி செய்தலுமாகிய வைதிக சமயமும், புத்த சமணசமயங்களும் பரவி இருந்தன. தமிழ் நாட்டிற்கே உரிய சிவ வழிபாடாகிய - இக்காலத்தே சைவம் எனப்படும் தமிழ்ச் சமயமும் இருந்து வந்தது. இளங்கோ வடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதியினைத் தக்காங்கு அறிந் திருந்தனர். அவற்றைக் கூற வேண்டு மிடங்களில், அவ்வற்றிற் குரியவர் போலவே கூறுவது கொண்டு, இவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாருமாகப் பல திறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவரென்றே துணியுமாறு டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுகின்றார். அஃதாவது: “கால்கோட்காதையில், செங்குட்டுவன் இமயம் செல்லப் புறப்பட்டபொழுது, “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதியுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு” எனவும், “ஆடக மாடத்து அறிதுயிலமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணீர் கரந்த செஞ் சடைக்கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” எனவும், செங்குட்டு வனை நோக்கி இமயத் தினின்றும் வந்த முனிவர்கள் கூறியதாகச் “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும், வரந்தருகாதையில், மாடலன் கூறியதாக “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” எனவும் இவரே (இளங்கோ வடிகளே) கூறியிருத் தலாலும், இவர் அவனுடைய (அச்செங்குட்டு வனுடைய) தம்பியாதலாலும், இவரது சமயம் சைவமென்று தோற்றுகின்றது.” IV. நூல் வரலாறு:- இளங்கோ அடிகள் துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் உறைந்து வந்தனர். அவர்பால், ஒருகால், தண்டமிழாசானாகிய சீத்தலைச் சாத்தனார் வந்திருந்தார். அப்போது குறவர் பலர் கூட்டமாக வந்து, தமது குன்றத்தே நிற்கும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கண்ணகியார் வந்து நின்று ஆங்கு அப்போது விண்ணவர் கொணர்ந்த வான வூர்தியில் ஏறி விண்ணுலகிற்குச் சென்றதைத் தாம் கண்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட அடிகள் பெருவியப்புக் கொள்ள, சாத்தனார், “யான் அறிகுவன் அதுபட்டது” என்று கூறலுற்று, கண்ணகியின் வரலாறு முற்றும் எடுத்துரைத்து, கண்ணகி மதுரையைத் தீயூட்டிய போது மதுராபதி அவள் முன் தோன்றி அவள் பழம் பிறப்பையுணர்த்தி, ‘இன்றைய பதினான்காம்நாள் நின் கணவனை வானவர் வடிவில் காண்பாய்’ என்று சொல்லிற்று; அதனை யான் கேட்டேன்” என்றார். கேட்டதும் அடிகள் மனமகிழ்ந்து. “ அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால், நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று மொழிந்தனர். அதற்கு அச் சாத்தனார் “இந் நிகழ்ச்சி முடிகெழு வேந்தர் மூவர் நாட்டினும் நிகழ்ந்த தாதலால், அவ்வேந்தர் குலத்து அடிகளாகிய நீரே இதனை அருளுக” என்றார். அவ்வாறே, அடிகள் இச்சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தைச் செய்தருளினர். பின்பு, இதனை அடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டனர். V. நூற்பொருள்:- இச்சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங் களாகப் பகுத்தோதப்பெற்றுள்ளது. கண்ணகியார் வரலாற்றுள், சோழநாட்டில் நிகழ்ந்தன புகார்க் காண்டத்தும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன மதுரைக்காண்டத்தும், சேரநாட்டில் நிகழ்ந்தன வஞ்சிக் காண்டத்தும் கூறப்படுகின்றன. புகார் என்பது காவிரிப் பூம்பட்டினம்; இது சோழநாட்டிற்குத் தலைநகர். மதுரை பாண்டி நாட்டின் தலைநகரம். வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். வஞ்சி நகரமென்பது, இப்போது கோயமுத்தூர் சில்லா விலுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக் களம் என்பாருமாகப் பலதிறத்தர் ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சிநகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை. இதனை ஈண்டு விரிப்பிற் பெருகும். 1.புகார்க்காண்டம்:- புகார் நகரத்தே, கோவலனும் கண்ணகியும் பெற்றோர் உவப்பத் திருமணம் புணர்ந்து மனையறம் செய்து வருகின்றனர். அந்நகரத்து நாடகக்கணிகையான சித்திரா பதியின் மகள் மாதவி, ஆடலும் பாடலும் வல்லளாய் அழகு மேம்பட்டுத் திகழ்கின்றாள்; அவள் தன் நாடகக் கலைத்திறத்தைச் சோழன் கரிகாற் பெருவளத் தானுக்குக் காட்டக் கருதி அரங்கேற்று கின்றாள். அவளது கலைநலங் கண்ட கரிகாலன் “ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அவட்குத் தலைவரிசை” என அருள்செய்கின்றான். அச்செய்தி யறிந்த கோவலன், அவட்கு அப்பொன்னைப் பரிசமாகத் தந்து, அவள் மனையை யடைந்து அவள் பான்மையனாகித் தன் மனையை மறந்து ஒழுகுகின்றான். மாதவி அவனொடு கூடி அந்திமாலையின் இன்பம் நுகர்ந்து நகரத்தார் இந்திரவிழா அயர, தன் ஆடல் பாடல்களால் அதனைச் சிறப்பிக்கின்றாள். விழாக் கழித்த உவாநாளில் மக்கள் கடலாடச் செல்கின்றனர். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று, புன்னை நீழற் புது மணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்; அப்போழ்து, வசந்தமாலை யென்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாடவேண்டுகின்றாள்;அவனும் தான் ஒன்றின்மேல் மனம் வைத்துக் காவிரிபற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான். பாட்டைக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினா னெனப் புலந்தாள் போல் அவ்யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக் கின்றாள். அக்குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளை நீங்கித் தன் மனையை அடைகின்றான். மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள். இதுநிற்க, கோவலன் பிரிவாற் பெருந்துயர் உழந்து, கற்புநெறி வழுவாது, மனையறம் ஓம்பிவந்த கண்ணகி, தீக்கனா ஒன்று கண்டு நெஞ்சுகலுழ்ந்து தன் தோழி தேவந்தியுடன் சொல்லாடியிருக் கின்றாள். கோவலன் அவள்பாற் போந்து, “ சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்தபொருள் ஈட்டுத லுற்றேன் மலர்ந்தசீர் மாட மதுரை யகத்துச் சென்று,” என்னோடு வருக” என்று மொழிகின்றான். “அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு அன்மையின்” கண்ணகியாரும் உடன் செல்ல இசைகின்றனர். இருவரும் விடிவதற்குள் புகார் நகர் நீங்கி, மதுரை நோக்கி நடந்து செல்கின்றனர். வழியிற் கவுந்தி யடிகளின் துணை அவர்கட்குக் கிடைக்கின்றது. அவருடன் செல்லும் இருவரும் புனல் நாடு நல்கிய இயற்கைக்காட்சியின் இன்பத்தை ஆர நுகர்ந்துகொண்டே உறையூரை அடைகின்றனர். 2. மதுரைக் காண்டம்:- உறையூரை யடைந்த மூவரும் ஆங்கிருந்த அருகன் கோயிலைச் சார்ந்து சமண முனிவர்களைக் கண்டு அன்றைய பகற் போதினைப் போக்கி, மறுநாள் மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்; வழியில் மறையவன் ஒருவனைக் காண்கின்றனர். அவன் கோவலனுக்கு மதுரைக்கு ஏகும் நெறியின் திறத்தை விரியக் கூறுகின்றான். பின்னர், தெய்வம் ஒன்று போந்து, மாதவியின் தோழிபோல் உருக்கொண்டு நின்று, கோவலனை மருட்ட முயல்கின்றது. அவன் ஒரு மறைமொழி யோதி அத் தெய்வ மயக்கைப் போக்குகின்றான். வேனில் வெப்பம் மிகுகின்றது. கோவலன் கவுந்தி யடிகட்கும் கண்ணகிக்கும் நீர் கொணர்ந்து தருகின்றான். பின்பு மூவரும் ஐயை கோட்டமடைந்து ஆங்கே ஒரு புறத்தே தங்குகின்றனர். அக்காலத்தே, அக்காட்டில் வாழ்ந்த வேட்டுவர் தமக்கு வேட்டம் வாய்த்தல் வேண்டி, ஐயைக்கு வழிபாடு செய்ய வருகின்றனர். அவருள் ஐயையின் கோலத்தில் வந்த சாலினி, தெய்வமருள் கொண்டு கண்ணகியைப் பார்த்துப் பலபடப் பாராட்டுகின்றாள். கண்ணகி நாணி நிற்ப, அவ்வேட்டுவர் பல்வகைப் பாராட்டுகளைப் பாடிக் கூத்தாடுகின்றனர். பின்னர் மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரை அடை கின்றனர். அவர்களை ஓரிடத்தே இருத்திக் கோவலன் தன் காலைக் கடன்களைக் கழிக்கச் செல்கின்றான். சென்ற விடத்தே கவுசிகன் என்னும் பார்ப்பனன் மூலம். மாதவி ஆற்றாது விடுத்த ஓலை காண்கின்றான். அதனையே தன் பெற்றோர்க்கு எழுதிய ஓலையாக விடுக்கின்றான். பின்பு அம்பணவர் என்னும் இசைப்பாணர் காட்டிய நெறியால் மதுரை அண்மையில் இருப்பதை அறிகின்றான். அன்றைப் பகற்போது கழிதலும் மூவரும் மதுரை மூதூரையண்மி, வையை யாற்றைக் கண்டு, அதன் கரை வழியே சென்று, மதுரைப் புறஞ்சேரியை அடை கின்றனர். அங்கே மாதவர் உறையும் தவப் பள்ளியில் கவுந்திபால் கண்ணகியை விடுத்துக் கோவலன் மட்டில் மதுரை நகர்க்குட் புகுந்து பல்வேறு தெருக்களையும் கண்டு பெயர் கின்றான். பின்பு, மாதரி என்னும் ஆய்ச்சியொருத்தி அங்கே வருகின்றாள். அவளைக் கண்ட கவுந்தியடிகள், கண்ணகியை அவள் பால் அடைக்கலப் படுத்த, அவள் கண்ணகியையும் கோவலனையும் தன் ஆயர் சேரிக்கு அழைத்துச் சென்று தன் மனையில் ஒரு புறத்தே இருக்கச் செய்கின்றாள். கண்ணகியார் இனிய உணவு சமைத்துக் கோவலனை உண்பிக்கின்றார். உணவு கொண்டபின் கோவலன் கண்ணகிபால் விடை பெற்றுக்கொண்டு அவரது சிலம்பொன்றை விற்கும் கருத்துடன் மதுரைக் கடை வீதியில் சென்று பொற் கொல்லன் ஒருவனைக் காண்கின்றான்; அவன் சூழ்ச்சியால் அரசன் முறைகெட, கோவலன் கொலை செய்யப்படுகின்றான். ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி நிகழக் கண்டு அவர்கள் குரவை யயர்கின்றனர்; அவர்களால் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியாருக்குத் தெரிகிறது. உடனே, திடுக்கிட்ட அவர், ஞாயிற்றை வினவிக் கோவலன் குற்ற மிலனாதலைத் தெளிந்து, கோவெனக் கதறியாற்றிக் கொண்டு ஊர்க்குட்புகுந்து, கொலைக்களம் அடைந்து அங்கே கோவலன் உடல் துணிபட்டுக் கிடப்பது கண்டு பெருவருத்த முற்றுப் புலம்பி அவ்வுடலைத் தழுவுதலும், அவன் எழுந்து “ஈண்டே இருக்க” எனப் பணித்து விண்ணகம் செல்கின்றான். தீராத் துயரத்தால் மனம் திண்ணியராகிய கண்ணகியார், பாண்டியன் கோயிலுக்கு வந்து அவன்முன் வழக்குரைத்துக் கோவலன்பால் குற்றமின்மையை மெய்ப்பிக்கப் பாண்டியன் தனது ஆராயாமை யுணர்ந்து ஆவி விடுகின்றான்; அவன் மனைவியும் உடன் உயிர் துறந்தாள். உடனே, கண்ணகியார் வெளிப் போந்து தமது இடப்பக்க மார்பைத் திருகி நகர்மீது எறிகின்றார்; மதுரை மூதூரில் பெருந்தீ எழுகின்றது. மதுரையை எரித்தும் செற்றம் தணியாது திரிந்த கண்ணகியை மதுராபதி என்னும் தெய்வம், கோவலனது பழம்பிறப் புணர்த்தி, “இன்றைய பதினாம்காம் நாளில் நீ நின் கணவனை வானவர் வடிவிற்கண்டு கூடுவை” என்று சொல்லுகின்றது. கண்ணகியார் பின்பு ஐயை கோயிலையடைந்து, தன் கை வளையை உடைத் தெறிந்துவிட்டு வையைக் கரை வழியே சென்று திருச்செங்கோடு என்னும் இடத்தை யடைந்து ஒரு வேங்கை மரத்தின்கீழ் நிற்கின்றார். பதினான்கு நாட்களும் கழிந்தன. விண்ணவர் வந்து தாம் கொணர்ந்த வானவூர்தியில் கண்ணகியாரை ஏற்றிக்கொண்டு, தம் விண்ணாடு செல் கின்றனர். 3. வஞ்சிக் காண்டம்:- கண்ணகியார் விண்ணாடு ஏகியது கண்ட வேடுவர், அவ்விடத்தே அவரைப் பரவித் தெய்வம் கொண்டாடி மகிழ்கின்றனர். இஃதிவ்வாறாக, சேரன் செங்குட்டுவன் இலவந்தி வெள்ளி மாடத்தில் தேவியோடு எழுந்தருளியிருக் கின்றான். ஒரு நாள் மலைவளம் காணவிரும்பித் தேவியும் உரிமைமகளிரும் அரசியற்சுற்றமும் உடன் வரச் சென்று பேரி யாற்றங் கரையை யடைந்து ஓரிடத்தே தங்குகின்றான். அவனைக் காணவிரும்பிய குறவர் யானைக்கோடும், அகிலும், கவரியும் பிறவும் கொணர்ந்து வழிபட்டுக் கண்ணகி விண்ணுலகு புக்க செய்தியை விளம்பு கின்றனர். அங்கே, அப்போது, உடனிருந்த தண்டமிழ்ப் புலவோராகிய சாத்தனார், கண்ணகியின் வரலாறு முற்றும் விரிவாக எடுத்தோதி வாழ்த்துகின்றனர். பின்பு, குட்டுவன், அவரும் பிறரும் கேட்ப, அரசியலின் அருமையை யுரைத்துத் தன் தேவியை நோக்கி, “பாண்டிமாதேவியோ, கண்ண கியாரோ, வியத்தற்கு உரியோர் யாவர்?” என்று வினவ, அரசமாதேவியாகிய வேண்மாள், “கண்ணகியாரைப் பரவுதலே வேண்டுவது” என்று கூறுகின்றாள். அதனைச் செங்குட்டுவன் உடன்பட்டு நோக்க, அவனுடைய அமைச்சர், “கண்ணகியின் படிமம் சமைத்தற்குப் பொதியிலிலாவது இமயத்திலாவது கல்கொணர்ந்து காவிரியிலாதல் கங்கையிலாதல் நீர்ப்படை செய்தல் தகவுடைத்து” என் கின்றனர். செங்குட்டுவன், “இமயத்துக் கல்கொண்டு கங்கையில் நீர்ப் படை செய்தல் சீரிது” எனச் செப்பலும், அமைச்சர் உடன் பட்டுத் தகுவன கூற, வடநாடு செல்வது குறித்து வஞ்சி நகர்க்கண் முரசு அறையப் படுகின்றது. இமயச் செலவு கருதிய செங்குட்டுவன் கணிகள் மொழிந்த நன்னாளில் புறப்படுகையில், வடநாட்டு அரசரான கனக விசயரென் பார் தமிழரசரை இகழ்ந்தனரென்று ஒரு செய்தி வரக் கேட்டுச் சினம் மிகுந்து, தான் கொணரக்கருதும் சிலையை அக்கனகவிசயர் தலைமேலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறிப் புறப்பட்டுச் செல்கின்றான். அவற்கு நட்பரசர்களான நூற்றுவர் கன்னர் அவனை வரவேற்றுக் கங்கையைக் கடத்தற்கு ஓடம் அமைத்துத் தருகின்றனர். கங்கையை இனிது கடந்து சென்ற செங்குட்டுவன், தன்னை யெதிர்த்த கனக விசயரை வென்று, அவர்கட்குத் துணை யாய் வந்து தோற்றோடிய பிற அரசர்களையும் பற்றி வருமாறு வில்லவன் கோதை யென்பானை ஒரு பெருஞ் சேனையுடன் செலுத்துகின்றான். தான் இமயத்திலிருந்து, வேண்டும் சிலை யொன்றை வருவித்துக் கனக விசயர் முடித்தலையில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து தன் வஞ்சினம் முடிக்கின்றான். அக்காலையில் மாடலன் என்பான் குட்டுவன்பால் வந்து, கோவலன் வரலாறும், பாண்டியனுக்குப் பின் இளங்கோ வேந்தன் நாடாளும் திறமும் கூறுகின்றான். அவற்குக் குட்டுவன் ஐம்பது துலாம் பொன்னை நிறுத்துத் தந்து, கனகவிசயரை ஏனைத் தமிழரசர் கட்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய தானைத் தலைவர்களைப் பணிக்கின்றான். சின்னாளில் தானும் புறப்பட்டு, இடையே இருந்த நாடுகளின் பல்வகை வளங்களையும் கண்டு மகிழ்ச்சியுடன் வஞ்சி மாநகர் வந்து சேர்கின்றான். கனக விசயரைக் கொண்டு சென்ற நீலன் முதலியோர் திரும்பப் போந்து, “அஞ்சியதனால் மாறுவேடம் பூண்டு ஓடிய இவரைப் பற்றிவருதல் தூய வீரமன்று எனச் சோழரும் பாண்டி யரும் இகழ்கின்றன.” ரென்று கூறுகின்றனர். அது கேட்டலும் செங்குட்டு வனுக்குச் சினத்தீ மூண்டு எழுகின்றது. அருகே, ஆங்கு வந்திருந்த மாடலன், இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை எடுத்தோதி வேள்விசெய்து உயர்நிலை யுல கத்துக்கு உறுதிசெய்து கோடலே தக்கதென மொழிந்து அவ் வெகுளித்தீயைத் தணிக்கின்றான். செங்குட்டுவன், மாடலனுக்கு வேள்விக்கு வேண்டியவற்றை உதவுமாறு ஏற்பாடுசெய்து, கண்ணகி யாருக்குக் கோயில் எடுப்பித்து, இமயத்துச் சிலையாற் செய்த கண்ணகிப் படிமத்தைக் கோயில் கொள்ள நிறுவிச் சிறப்புப் பலவும் செய்து வழிபாடு ஆற்றுகின்றான். சில நாட்கள் கழிகின்றன. கோவலன் மாண்டதை மாடலன் சொல்லக்கேட்டு அறிந்த தேவந்தியும், கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும் மதுரைக்கு வந்து, மாதரி மகளான ஐயையைக் கண்டு அவளுடன் வையைக் கரை வழியாக மலைநாடு வருகின்றனர். அங்கே கண்ணகியாரின் கோயிலைக் கண்டு, அங்கிருந்த செங்குட்டுவனுக்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாது வருந்திப் புலம்புகின்றனர். அப்பொழுது, கண்ணகியார் தெய்வவடிவிற் போந்து அவர்கட்குக்காட்சி வழங்கிச் செங்குட்டுவனை வாழ்த்தி மகிழ்விக்கின்றார். அவ்விடத்தே, கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய நற்றாயரும் மாதரியும் என்ற இவர்தம் பிறப்பு வரலாறு வெளியாகின்றது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளான மணிமேகலை துறவுபூண்டதும் அங்கே தேவந்தியால் சொல்லப்படுகிறது. அங்கே வந்திருந்த ஆரியமன்னரும் மாளவ மன்னரும், இலங் கைக் கயவாகு வேந்தனும் தம் நாட்டில் கண்ண கியைக் கோயில் கொண்டு அருளுமாறு வேண்டி வரம்பெற்றுச் செல்கின்றனர். இந்நூலாசிரியரான இளங்கோவடிகளும் கண்ணகி கோயிற்குச் செல்கின்றார். அங்கே இவர்க்கும் இவரது முன் பின் நிகழ்ச்சி தெரிவிக்கப்பெறுகிறது. முடிவில், சோழவேந்தனான பெருநற் கிள்ளியும் கயவாகு மன்னனும் தத்தம் நாட்டில் கண்ணகியாருக்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்கின்றனர். பாண்டி வேந்தனும் கண்ணகி கோயிலில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு வழிபட்டான் என்று சொல்லப்படுகிறது. VI. நூற்பயன்:- ஒரு நூலைச் செய்யும் புலவன், தான் செய்யும் நூலைப் படிப்பவர், படிப்புக்காகச் செலவிடுங் காலம் அவர் வாழ்நாளின் ஒரு பகுதி யென்பதை நன்கு உணர்ந்து, அப்பகுதி நல்லமுறையில் செலவாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் உடையவனாவான். அதனால், அவன் தான் எழுதும் நூலின் நோக்கம் இன்னதெனத் தொடக்கத்தே சுட்டிக்காட்டுதல் சிறந்த தொரு கோட்பாடாகும். இது குறித்தே, நூற்குப் பாயிரமாவன வற்றுள் நூற்பயன் என்பதை ஓர் இன்றியமையாத உறுப்பாகச் சான்றோர் வரையறுத்தனர். இந்நெறியை நன்குணர்ந்த சான்றோராதலின், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகள், தொடக்கத்தே, தாம் இந்நூலைச் செய்வதன் நோக்கம் இதுவென்பாராய், “ அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால், நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” (சிலப் - பதிகம்) என்று எடுத்தோதுகின்றார். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்” என்பதனால், இவர் தாம் பாடும் நூற்குப் பெயர், “சிலப்பதிகாரம்” என்பது என்று கூறுதல் காண்க. இவ்வாறு நன்னெறி காட்டித் தொடங்கிய இவர், தமது நூலின் ஈற்றிலும் வறிதே முடித்தாரல்லர். ஆங்கும் பல நன்னெறி களை வற்புறுத்தி யோதுகின்றார். “ தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர், பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்; தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்; அறமனை காமின்; அல்லவை கடிமின்; கள்ளும் களவும் காமமும் பொய்யும்” வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்; இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா; உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது. செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்; என்று இவ்வாறு கூறுகின்றார். இவற்றால், இவர் தமது நூல், படிப்போர்க்கு அறிவுநலமும், ஒழுக்கநலமும், அறவுணர்வும், பெருக வழங்கும் பேரிலக்கியமாய்த் திகழ்தல் வேண்டு மென்ற குறிக் கோளுடன் அதனைச் செய்துள்ளார் என்பது தெளியப்படும். VII. நூல்நுவலுந் திறம்:- தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளங்கவுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது; தான் உணர்த்தக் கருதுவன வற்றை நன்கு ஆராய்ந்து பலநெறிப் படப் பகுத்தும், தொகுத்தும், செம்மை செய்து இலக்கண வரம்பு கடவாது உரைக்கும் மாண்பே, புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர்* கூறுவர். அது நம் அடிகளார்பால் மிகச் சிறந்து நிற்கிறது என்றற்கு ஒன்று காட்டுதும். காண்டப் பிரிவு கோவலன் கண்ணகியுடன் வாழ்பவன், மாதவியொடு கூடியிருந்து, பின் அவளின் நீங்கி, தன் மனைவியுடன் மதுரை சென்று கொலையுண்டு இறத்தலும், கண்ணகி, ஆராயாது கொலை புரிவித்த பாண்டியன்முன் வழக்குரைத்துக் கோவலன் பால் குற்றமின்மை காட்டி மதுரைமாநகரைத் தீக்கிரையாக்கி, மலைநாட்டுச் செங்குன்றத்தில் தேவர் கொணர்ந்த ஊர்தியேறி விண்ணுலகு செல்லுதலும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுதலும் இச்சிலப்பதிகாரத்தின் பிண்டித்த கருப்பொருள் என்பது மேலே கூறிப் போந்த நூற்பொருளால் இனிது விளங்கும். இதனை மூன்று காண்டமாக வகுத்துச் சீரிய முறையில் பெயரிட்டு, அடிகள் உரைக்கும் திறம் ஆராய்வார்க்குமிக்க இன்பம் தருகின்றது. தொடக்கமுதல் கோவலன் கொலை யுண்பதுவரை ஒரு காண்டமாகவும், கண்ணகி கோவலனையிழந்து வருந்தி முடிவில் விண்புகுவதுவரை ஒரு காண்ட மாகவும், செங்குட்டுவன் இவ் வரலாற்றினையறிந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுவது வரை ஒரு காண்டமாகவும் வகுத்து ஓதலாம்; அவ்வாறு ஒதியவழியும், பொருட் பாகுபாடு பொலிவு குன்றாது. இனி, இதனையே, தொடக்கமுதல் கோவலன் இறப்பது வரை அவனது செயலே மிக்கு நிற்றலால், அவன் பெயரால் ஒரு காண்டமும், அவன் இறந்தது முதல் விண்புகுமளவும் கண்ணகியார் செயலே மிக்குச் சிறத்தலால் அவர் பெயரால் ஒரு காண்டமும், இவ்வரலாறு கேட்டதுமுதல் கோயிலெடுத்து வழிபடுதல்வரைச் சேரன் செங்குட்டுவன் வெற்றிச் சிறப்பும் பிறவும் மேம்பட்டு நிற்றலின் அவன் பெயரால் ஒரு காண்டமும் வகுத்தோதினும் பாகுபாட்டு நெறி பிழையுறாது. இக்காட்டிய நெறியேயன்றி வேறுதிறத்தால் பகுத்தோதினும் பகுப்பு முறையேயாகும். இவ்வாறு, நெறி பல இருக்கவும், இளங்கோவடிகள், புகார்க்கண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் எனப் பகுத்துக்கொண்டிருக்கும் முறையொன்றே அவரது உயர்வற உயர்ந்த புலமைக்குச் சீரிய சான்று பகருகின்றது. இவர் கூறியதுபோலப் புகார்க் காண்ட மென்னாது கொலைவினைக் காண்டமென்றோ, கோவலற் காண்டமென்றோ பிறிதொன்றென் றோ வகுத்துப் பெயர் கூறலுறின், அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம். மேலும், ஒரு நிகழ்ச்சி நிகழுமிடத்து, அதற்குரிய வினைமுதல், வினை, செயப்படுபொருள், காலம், இடம், முதலியன இன்றியமை யாது ஆராயப்படும். இதனோடு, இந்நிகழ்ச்சிதானும், ஏதுவும் பயனுமாக வரும் பல உள்நிகழ்ச்சிகளை யுடையதாகவும் இருக்கும். இந் நிகழ்ச்சிகளை ஒரு பெயரால் குறிக்க வேண்டின், மேற்கூறிய வினைமுதல் முதலியவற்றையும் உள் நிகழ்ச்சிகளையும் தேர்ந்து அவற்றுள் யாதேனும் ஒன்றைத் தலைமைபற்றியோ பன்மை பற்றியோ வரைந்துகொண்டு அதனால் பெயர் குறித்தல் மரபாம். அன்றியும், வினைமுதல் முதலியவற்றுள், வினைமுதல் நூற் பெயரிலாதல் பிறவாற்றாலாதல் உணரப்படுமாதலின், வினை, செயப்படு பொருள், காலம், இடம் என்ற இவையே சிறப்பாக வேண்டப்படுகின்றன. முதற்கண், புகார்க் கண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதன்கண் நிகழும் வினை, கோவலன் தன் மனையை நீங்கி, மாதவிபால் தங்கிப் பொருளிழந்து, கண்ணகியுடன் மதுரைக்கு ஏகுகின்ற செய்தியாகும். கோவலன் தன் மனையை நீங்குவது மாதவிபால் தங்குதற்கும், அவ்வாறு தங்குதல் பொருள் இழத்தற்கும், அவ் விழப்பு மதுரைக்கு ஏகுதற்கும் ஏதுவும் பயனுமாய் வரும் உள் நிகழ்ச்சிகளாகும். சுருங்கிய சொல்லால் இவ்வனைத்தும் தோன்றக் கூறுதல் ஆகாமையால், வினைவகை தேர்ந்து இக் காண்டத்திற்குப் பெயர் குறித்தல் அமையாதாகின்றது. இவ் வினைகளாற் செயப்படு பொருள், கோவலன் உயிரிழத்தலும், கண்ணகி ஆறாத் துயருழத் தலுமேயாதலின், கேடுபற்றிய முடிபால் பெயர் குறித்தல் தக்கதன்று. இந்நிகழ்ச்சிகட்குச் செலவாகிய காலமும் பலவாதலால், காலத்தாற் பெயர் குறிப்பது ஆகாது. இவ்வெல்லாத் திறங்களையும் நன்கு தேர்ந்தே, அடிகள், இந் நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்தற்கு இடனாகிய புகார் நகரத்தால், புகார்க்காண்டம் எனப் பெயர் குறித்துள்ளார். இவ்வாறே ஏனைக் காண்டங்களும் பெயர் குறிக்கப்பெற்றுள்ளன. கோவலன் புகார் நகரத்தில் இருந்து, பின் மதுரை நகரை நோக்கிச் சென்று சோழநாட்டின் நலம்பலவுங் கண்டு கொண்டே உறையூரையடைவது கூறும் பகுதி புகார்க் காண்டம். இதனை உரைக்கப்புகுந்த அடிகள் பத்துப்பகுதிகளாக வகுத்துக் கொள் கின்றார். கோவலன் கண்ணகியொடு பூண்ட திருமண நிகழ்ச்சியும், இருவருமனையறம் புரிதலும், மாதவி ஆடல்பாடல்களில் வல்லளாய் அரங்கேறுதலும், கோவலனைக் கூடியிருக்கும் மாதவியின் இன்பமும், பிரிந்துறையும் கண்ணகியின் இடும்பையும், இந்திரவிழாவும், அதன் இறுதியாய கடலாட்டும். இவற்றால் இன்புற்ற கோவலனும் மாதவியும் பிரிந்து நீங்குவதும், மாதவி படும் பிரிவுத் துயரும், கோவலன் மனமாற்றமும், கோவலன் சென்று கண்ணகியோடு கூடி மதுரைக்குச் செல்ல ஒருப்படுதலும், செல்பவர் சோழநாட்டின் நலமும் கவுந்தியடிகளின் துணையும் பெறுதலும் எனப் பல திறமாய் வரும் நிகழ்ச்சிகளை மங்கல வாழ்த்து முதலாக நாடுகாண்காதை ஈறாகப் பத்துப்பகுதிகளால் உரைக்கின்றார். மாதவி கோவலனுடன் கூடி இன்புறும் நிகழ்ச்சியை அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை என்ற மூன்று காதை களிலும், அவள் அக்கோவலனைப் பிரிந்து வருந்தும் நிகழ்ச்சியை வேனிற் காதையிலும் விரித்து உரைக்கின்றார். இஃதேபோல், கண்ணகி கோவலனையிழந்து வருந்திய வருத்தத்தை, துன்ப மாலை, ஊர்சூழ்வரி, வஞ்சினமாலை முதலிய பல பகுதிகளில் விரித்துக் கூறுகின்றார். காதை என்ற சொல்லாட்சி இப்பகுதிகளுள் பல காதை என்ற சொல்லால் பெயர் குறிக்கப் படுகின்றன. காதை யென்று பெயர் பெறுவன இருபத்திரண்டாகும். இவை பெரும்பாலும் வேற்றிசை விரவாது செந்தூக்குத் தனிப் பாட்டுக்களாகவே இருத்தலால், ஒரு தனிப்பாட்டையே காதை என்று வழங்குவது முறை யென்று தெரிகிறது. இவ்வாறே மணி மேகலையின் ஒவ்வொரு பகுதியும் காதை யென்றே பெயர் பெற்றுள்ளது. அக்காதைகள் முப்பதையும், அந்நூலாசிரியரான சாத்தனார் முப்பது பாட்டுக்களில் உரைத்தனர் என்று அம்மணி மேகலையின் பதிகம் கூறுகின்றது. “வளங்கெழுகூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலைத் துறவு, ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனனென்” என்பது அப்பதிகக் கூற்று. இனி, இச்சிலப்பதிகாரப் பதிகம், “இவ்வாறைந்தும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்றே உரைக்கின்றது. மேலும், மங்கலப் பாட்டும், வரிப்பாட்டும், குரவைப் பாட்டும் பிறவுமாய் வரும் ஏனைய எட்டனுள் பல்வகைப் பாட்டுக்கள் உரையிடையிட்டு இசையும் நாடகவுறுப்பும் விரவிவந்ததனால் அவற்றை ஆசிரியர் இளங்கோவடிகள் “காதை” என்று குறித்தாரல்லர். ஆகவே, ‘காதை’ என்பது வேற்றிசை விரவாது செந்தூக்காய் வரும் பாட்டு என்று பொருள்படுவதொரு சொல்லாக அடிகள் முதலி யோரால் வழங்கப் பெற்றுள்ளது என்பது முடிபாகிறது. இனி, நீலகேசி உரைகாரரான சமயதிவாகரவாமன முனிவர், அடிகள் கூறியவாறே காதையென்னும் சொல்லைச் செய்யுள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். “மானொத்த நோக்கி” (நீல. 117) என்னும் செய்யுளில் வரும், “உயிராதிய உள்பொருள்கள்தான் நற்கு உணர்தல் இதுவாம்” என்பதன் கருத்தை, அதனை அடுத்து வரும், “காண்டலு மல்லதே” (நீல. 118) என்னும் செய்யுளுரையில், “மானொத்த நோக்கி என்னும் காதையுள் உயிராதி பொருள் நற்குணர்தல் நன்ஞான மென்றார்” என்று கூறுதலால், செய்யுள் என்னும் பொருளில் காதை என்ற சொல்லை அவர் வழங்குவதைக் காணலாம். இனி,டாக்டர். உ. வே. சாமிநாதையரவர்கள், “காதை யென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச்சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர்” என்று கூறுகின்றார். இசையும் நாடக வுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்‘காதை’ யென்னும் சொல்லால் அடிகள் குறித்திருத்தலின், அவ்‘வட மொழியாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது கொள்ளத் தக்கதன்று. மேலும், திரு. ஐயரவர்களும், “இதனாலேயே, இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர் பெற்றன போலும்” என ஐயப்பாட்டுடன் கூறிச் சென்றனர். இனி, “வாழ்த்துக் காதை”யுள், பலவகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையொடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், ‘வாழ்த்துக்காதை’ என்பது அடிகள் இட்ட பெயரன்று ஆதலின் அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப் படும். வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது. பதிகத்துப் பொருளையும், சிலப்பதிகாரப் பகுதிகளின் பெயரையும் ஆராய்ந்து நோக்கின், காடுகாண் காதை புகார்க் காண்டத்தும், குன்றக் குரவை மதுரைக் காண்டத்தும் இருக்கற் பாலனவாம் என்பாரும் உளர். * இப்பிறழ்ச்சியை ஈண்டு விரிப்பிற் பெருகும். VIII. நூற் புணர்ப்பு:- இச் சிலப்பதிகார நிகழ்ச்சி ஆற்றொழுக் காகச் செல்கின்றதனால், இதன் புணர்ப்பு வகையில் மயங்கி நிற்பது ஏதும் இல்லை. கோவலன் கண்ணகி முதலாயினார் பிறப்பு வளர்ப்புக்களில் புனைவுரை ஏதும் இல்லை; அவ்வரலாறுகளை விடுத்து, திருமணம் புணரும் செயலையே எழுவாயாக அடிகள் மேற்கொள்கின்றார். மணத்துக்குப்பின் இருவர்க்கும் மனையறம் இனிது நடைபெறுகிறது. கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் கூட்டற்குக் காரணமான, மாதவியின் அரங்கேற்றத்தால், அவளை இலக்கியக் காட்சிக்குக் கொணர்கின்றார். மாதவி அரங்கேற்றம், பேரரசனான கரிகாற் பெரு வளத்தானை நமக்குக் காட்டி, அவனால் அவள் பரிசமாலை தரப்பெற்ற சிறப்பினை யுணர்த்துகிறது. கோவலன் “நகர நம்பியர் திரிதரும் மறுகில்” வந்துபடுகின்றான். அவ்விடத்தே மாதவியின் பரிசமாலை அவன் கண்ணுக்கு விருந்து செய்ய, அவன் நிறைபொருள் கொடுத்து வாங்கி மாதவி பால் சென்று சேர்கின்றான். ஈண்டுக் கூறற்பாலன கண்ணகியின் பிரிவுத்துன்பமும் மாதவியின் புணர்ச்சியின்பமுமே யாகின்றன. மாதவியை அரங்கேற்றி, கோவலனைக் கூடச் செய்தபின்பு, அக் கூட்டவின்பத்துக்குச் சிறப்புச் செய்வது அந்திமாலையாதலின், அதனை அடிகள் எடுத்தோதுகின்றார். ஓதுமிடத்து மாதவியின் இன்பத்தை முதற்கண் விதந்தோதி, கண்ணகி துன்பத்தைப் பிற்கூறுகின்றார். இருவர் நிலைக்கும் உரிய காலம் அந்திமாலையாதலின், அதனையே வரைந்து கொண்டு, “தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த, காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்த... மல்லல் மூதூர் மாலை வந்திறுத்தது” என்று தொடங்கி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்துக் , கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி” என்று மாதவியின் இன்பச் சிறப்புக் கூறி, கண்ணகியின் துன்ப நிலையைச் சிறிது விரித்து, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள் நுதல் திலகம் இழப்ப, தவள வாள் நகை கோவலன் இழப்ப, மையிருங்கூந்தல் நெய்யணி மறப்ப, கையறு நெஞ்சமொடு கலக்க முற்றனள்” என்று கூறுகின்றார். இதற்குப் பின், புது மணம் புணர்ந்து இன்புறுவார்க்கு அவ்வின்பத்தை மிகுவிக்கும் விழாச் செய்தி கூறுவார். ‘இந்திரவிழவூர் எடுத்த காதை’ உரைக் கின்றார். அதன் இறுதிக்கண், பின்னர் நிகழ இருக்கும் பிரிவுக்குத் தோற்றுவாயாக, “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உள் நிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன, எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன” என்கின்றார். கடலாடு காதைக்கண் கோவலன் உள்ளத்தில் தோன்றும் ஒரு சிறு மாறுதலைக் காட்டுகின்றார். அஃதாவது இந்திரவிழாவில், மாதவியின் “ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள, ஊடற் கோலமொடு ” கோவலன் இருப்ப மாதவி, அவனுவக்குமாறு தன்னை மிக்க சிறப்புடன் புனைந்து கொண்டு, அவனுடன் கடலுக்குச் செல் கின்றாள். கானற்சோலையில், இருவரும், பாடிய பாட்டு வாயிலாக இருவர்க்கும் கருத்து வேறு படுகின்றது. கோவலன் மாதவியைப் பிரிந்து நீங்குகின்றான். வேனிற் காதையில் கோவலனது மனவன்மையும் அவன் பிரிவாற்றாது துயருறும் மாதவியின் கற்பு மாண்பும் எடுத்தோதி, அவள் வரலாற்றை ஓராற்றால் முடித்துக், கோவலனைக் கண்ணகி பால், ‘கனாத்திற முரைத்த காதை’ யில் சேர்ப்பித்து மதுரைக்குப் புறப்படுவிக்கின்றார். ‘நாடு காண் காதை’யில் கவுந்தியடிகளோடு தொடர்பு எய்துவித்து அவரது தவப்பெருமையும், கோவலன் கண்ணகியிருவரது அருள் நிலையும் தெரிவித்து, உறையூரை அடைவிக்கின்றார். இவ்வாறு மதுரைக் காண்டத்து, ‘காடுகாண் காதை’க் கண், வழிகூறும் மறையோன் வாயிலாகப் பாண்டியர் குடிச்சிறப்பும், திருவேங்கடம், திருவரங்கம் முதலியவற்றில் திருமால் எழுந்தருளிய இயல்நலமும் கூறி, ‘வேட்டுவவரி’ க்கண், கண்ணகிக்குப் பின்னே விளைய இருக்கும் துயர்நிலையைக் குறிப்பாகக் காட்டி, ‘புறஞ்சேரி இறுத்த காதை’யில்’ மாதவியின் மாறாக் காதன்மையும், கோவலனுக்குப் பெற்றோர் பாலுள்ள அன்புடைமையும் உணர வைத்து வையை யாற்றின் வனப்பும் மதுரை மூதூரின் மாண்பும் கூறுகின்றார். ‘ஊர்காண் காதை’யில் கோவலன் தனக்கு நேர்ந்த வருத்தத்தை யெண்ணிமயங்க, கவுந்தியடிகள் தகுவனகூறித் தேற்றரவு செய்ய, அவன் தேறி மதுரை மூதூர் சென்று அதன் கடைத் தெரு, வாணிக வளம் முதலியன கண்டு வருகின்றான். ‘அடைக்கலக் காதையில்,’ அடிகள் கோவலனுக்கு மாதரியின் வேளாண் பகுதியின் தொடர்பு எய்துவிக்கின்றார். ‘கொலைக்களக் காதை’யில் பிரிந்திருந்து கூடியபின் கண்ணகி கோவலன்பாலும், கோவலன் கண்ணகிபாலும் கொண்டிருந்த மெய்க்காதற் சிறப்பைத் தெரிவித்து, அவனைக் கண்ணகியை விட்டு நீங்குவித்துக் கொலையுண்டு இறக்கச் செய்கின்றார். இதன்கண் பொற்கொல்லனது களவு வன்மையை அவன் கூறும் களவுநூற் குறிப்பால் இனிது விளக்குகின்றார். ‘ஆய்ச்சியர் குரவை’ தீக்குறி காட்ட, ‘துன்பமாலை’ கண்ணகியின்- கடவுளும் ஏவல் செய்யும் - கற்பு மேன்மை புலப்படுத்த, ‘ஊர்சூழ்வரி’ அவளது ஆறாத்துயர் தெரிவிக்க, ‘வழக்குரை காதை’யால் பாண்டியனது கோடிய அரசு முறைக்குக் கழுவாய் பிறப்பிக்குமாற்றால் அவனையும் வீழ்வித்து, ‘வஞ்சினமாலை’க் கண், கண்ணகியின் தீராத் துயர்ப்பட்ட நெஞ்சம் கொதிக்க அவளைச் சீறிய கற்புடையளாகத் திகழ்வித்து நகரைத் தீக் கொளுவுதல் கூறி, ‘அழற்படுகாதை’யில் அவளது சினத்தீயின் வெம்மை தெரிவித்து, ‘கட்டுரை காதை’யால் அவட்கு எய்திய துன்பத்துக்கு ஏது பழம்பிறப்பில் தோன்றிய வினையாம் என்பது காட்டி நம்மனோர் மனத்தை அமைதி பெறுவிக்கின்றார். வஞ்சிக் காண்டத்துக் ‘குன்றக் குரவை’யில், கண்ணகியின் கடவுட்டன்மைக்குரிய இயைபுகாட்டி, ‘காட்சிக் காதை’யால், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத் துப் படிமம் சமைத்தற்கு இமயம் செல்லும் செலவுக்குத் தோற்றுவாய் பிறப்பித்து, ‘கால்கோட் காதை’யில், செங்குட்டுவனது சிவபத்தியும் வட ஆரிய மன்னர்க்கும் தமிழ் வேந்தர்க்கும் உள்ள போர் மாண்பும் வெற்றிச் சிறப்பும் விளக்கி, கோவலன் நீங்கியபின் புகார் நகரத்தே நிகழ்ந்த பிறவற்றையும் தெரிவித்து, கண்ணகிப் படிமத் திற்குரிய சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்தது கூறி, ‘நடுகற்காதையில்’ கண்ணகிக்குக் கோயிலெடுப்பதும், மாடலன் வாயிலாக வேள்வி வேட்டலின் சிறப்பும் பிறவும் விளக்கி, ‘வாழ்த்துக் காதை’க் கண், மாசாத்துவான் துறவும், அவன் மனைவி இறத்தலும், காவற்பெண்டும், அடித் தோழியும், தேவந்தியும் பிறரும் வந்து கண்ணகி கோயிலைக்கண்டு பாராட்டலும் உரைத்து, ‘வரந்தருகாதை’’யில் மணிமேகலை துறவும், செங்குட்டுவன் வரப்பேறும் இளங்கோவடிகளின் வரலாறும் பிறவும் குறிக்கின்றார். இனி, இடையிடையே, அடிகள் தொடுத்திருக்கும் உரை நடைகள் மிக்க அழகுவாய்ந்தவை. ஆயினும், அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது செய்யுட் போக்கைத் தழுவி யுள்ளன. இது கருதியே இவற்றை உரைப்பாட்டு1 என்று கூறு கின்றனர். இவ்வுரைப்பாட்டுக்களைச் சில இடங்களில் கட்டுரை யென்றும் இந்நூல் வழங்குகின்றது. இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்டமென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பதுபோலச், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதன்பின் இலங்கை வேந்தனான கயவாகு என்பானும் சோழபாண்டிய வேந்தரும் வழிபட்டதும், மதுரை எரியுண்டபின் நிகழ்ந்த பாண்டிநாட்டு அரசியல் நிகழ்ச்சியும் உரைபெறு கட்டரை2 யென்னும் பகுதி உரைத்து நிற்கின்றது. இதுவும், மேலே கூறிய உரைப் பாட்டு வகையைச் சேர்ந்ததேயாகும். IX. இந்நூற்கண் வரும் பெருமக்களின் குணமாண்புகள் 1. மாசாத்துவான்: மாசாத்துவான் என்னும் பெயர் குடிப் பெயர் என்று அரும்பதவுரைகாரர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும், “மாசாத்து வான் என்பான்” என்றே கூறியிருத்தலால், அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. இம் மாசாத்துவான் கோவலனுக்குத் தந்தை; உயர்ந்த குடிப்பிறப்பும், மிக்க செல்வமும் உடையன்; சுற்றம் சூழ வாழும் பெருமாண்பினன். கண்ணகி, பாண்டியன் முன் வழக்குரைத்த போது, இவன் குடிமைச் சிறப்பையேவிதந்து, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்றனள். இவன் செல்வச் சிறப்பு, கோசிகமாணி யென்பான், “இருநிதிக் கிழவன் ” என்று கூறியதனால் விளங்கும். முடிவில் கோவலன் இறந்தது கேட்டு இவன் துறவு பூண்டுவிடுகின்றான். இனி, கண்ணகியின் தந்தை பெயர் தெரிந்திலது. மாநாய்கன் என்பது இயற்யெரன்று; குடிப்பெயர் என்றே உரைகாரர் கூறு கின்றனர். “மாகவான் நிகர் வண்கை மாநாய்கண் ” என்றே அடிகள் கூறி மொழிந்தனர். இவன் தன் மகளுற்றது கேட்டவனாய் ஆசீவகப் பள்ளியில் அறம் கேட்டுத் துறவு பூண்டான்; இவன் மனைவியும் உயிர் துறந்தாள். இவனைப் பற்றி வேறே செய்தியொன்றும் அடிகள் குறித்திலர். கண்ணகியாரின் கற்பு மாண்பே ஓராற்றால் இவன் குடிப் பெருமையை விளக்குதலால், அடிகள் வேறொன்றும் குறியா தொழிந்தார் போலும்! 2. கோவலன்: இவன் சிலப்பதிகாரத்துக்குத் தலைம களாகிய கண்ணகிக்குக் கணவன். உயர்குடிப் பிறப்பும் செல்வ மிகுதியும் வாய்த்தவன். பிறர்க்குத் தன்னால் இயன்ற உதவிபுரியும் அருளுள்ளம் நிறைந்தவன். மதயானையின் கைப்பட்ட முதுவேதியனைக் காத்ததும், பார்ப்பனியைக் கைவிட்டுச் சென்ற பார்ப்பனன் ஒருவற்கு மிக்க பொருள் தந்து இல்லிருந்து அறம் செய்யச் செய்ததும், மகனை யிழந்து தாயொருத்தியின் வருத்தம் கண்டு ஆற்றாது தன்னுயிரை இவன் கொடுக்கத் துணிந்ததும், பிறவும் இவனுடைய அருளுடை மையைப் புலப்படுத்துகின்றன. கவுந்தியடிகளால் குறுநரியாக்கப் பட்ட இருவர் பொருட்டு, அடிகள்பால், “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமை யென்றறிதல் வேண்டும்” என்று நினைந்தது இவனது ஈரநெஞ்சின் இயல்பை விளக்குகின்றது. மேலும், இக்கோவலன் இசைத்துறையிலும் கூத்து வகையிலும் நல்லபயிற்சி யுடையன். கானற் சோலையில் மாதவியுடன் இவன் வரிப் பாட்டுப் பாடியே நீங்கினான். அன்றியும், இவன், மதுரைக்குப் போம்போது இடைவழியில் கோசிகாமணி யென்பானைக் கண்டு, மாதவி தந்த ஓலையையே தன் பொற்றோருக்கும் செலுத்திவிட்டு வருபவன், ஆங்கு வந்திருந்த அம்பணவரைக் காண்கின்றான். அவர்கள் கொற்றவையின் அந்தரி கோலத்தை வியந்து பாடு கின்றனர். அவர்களைக் கண்ட கோவலற்குத் தானும் அவருடன் கலந்து பாடவேண்டும் என்ற விருப்பம் எழுகின்றது. இவன், ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின் தந்திரி கரத்தொடு திவவுறுத்து யாத்து ஒற்றுறுப் புடைமையின் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி வரன்முறை வந்த மூவகைத் தானத்துப் பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற் பாணி (சிலப். 13: 104-113) கலந்து பாடுகின்றான். இவன் கூத்து வகையில் வல்லுநன் என்பது, மாதவியைக் கடற்கானலிடத்தே பிரிந்து வந்தபின் இவன் கூலமறுகில் இருக்கையில், இவன்பால், மாதவி பிரிவாற்றாது விடுத்த திருமுகத்தை வயந்த மாலை கொணரப் பெற்று, அதனைப் படித்துப் பார்த்தவன், அம்மாதவி “ஆடல் மகளே யாதலின்,” பல்வகைக் கூத்தும் அவட்குப் “பாடு பெற்றன” என்று சொல்லி மாதவி மனைக்குவர மறுத்தபோது அவன் வரிக்கூத்து வகைகளான, கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்ற எட்டனையும் விரித் தோதுமாற்றால் இனிது விளங்குகின்றது. இன்ன நலம் பலவும் உடையனாயினும், இக்கோவலன் கண்ணகிபால் தீராக் காதற்காமம் கொண்டு அவளது நலம் புனைந்தும் பாராட்டியும் ஓதுவதை நோக்கின், பெருங் காமத்தான் என்பது புலனாகின்றது. ஒருவரையொருவர் முன்னுறக் காண்டலும், காதல் கொளலும், பின்பு கடி மணம் புணர்தலுமாகிய காதற் காமத்துறை இவன் வாழ்வில் காணப்பட வில்லை. மாதவியிடத்தும் இவனது காதல் உயிரொடு கிடந்து தொடரும் உயர்காதலாக இல்லை. மாதவியின் மாலையை விலைகொடுத்து வாங்கிக் கொண்டு அவள் மனைக்குச் சென்று, “ மணமனை புக்கு மாதவி தன்னொடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுத லறியா விருப்பின னாயினன்” என்றே அடிகள் கூறுகின்றார். மாதவியினின்று பிரிந்த போதும் இவற்கு அவளது தொடர்பு ஒரு வருத்தமும் பயக்கவே இல்லை. கருத்து வேறுளது போலத் தோன்றிய குறிப்பேதுவாக மாதவியை அறவே வெறுத்துப் பேசும் இவன் மனக்குறிப்பு, பின்னர் மாதவியைப் பற்றிப் பேச்சு நிகழுந் தோறும் முற்பட்டுத் தோன்றுகிறது. கொலையுண்டு கிடந்த போது கண்ணகியாரால் உயிர்பெற்று விண்ணுலகு சென்ற போதும், இவன், கண்ணகிக்கு, “உண் கண்ணாய், நீ ஈண்டே இருக்க” என்கின்றான்; இதனால், இவன் கண்ணகிபால் கொண்டிருந்த காதலும் உயர்ந்த காதலாகத் தோன்ற வில்லை. மாதரியின் மனையில் இருந்து, கண்ணகி சமைத்திட்ட உணவுண்டு இனி திருக்கும் போது, கண்ணகியை நோக்கி, “பொன்னே, கொடியே, புனைபூங்கோதாய்” என்பன முதலாகப் பல பாராட்டுரை களை இவன் வழங்குகின்றான். அவை முற்றும் கண்ணகியின் கற்பு மாண்பு கண்டு தெளிந்து பிறந்த வியப்புரையாமே தவிர, காதற் கட்டுரையாகா. “ குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும், அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்து என்துயர் களைந்த பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” என்ற இக் கூற்று, கோவலன் மனத்தெழுந்த வியப்பும் நன்றி யறிவும் தோன்ற நிற்றல் காண்க. ஆயினும், தான் செய்த தவற்றினை நன்கு உணர்ந்து வருந்து கின்றான். “தேற்றா ஒழுக்கத்தால் தீநெறிப்பட்டேன்” என்றும், “ இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழுவெனும் பாரேன்” என்றும் கூறுவன உருக்கமாக உள்ளன. இனி, இவன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் காவலருடைய கைப்படுத்தப்பட்ட போதாவது, கொலைக் களத்தாவது ஒன்றும் கூறவேயில்லை. காவலரிடம் பொற்கொல்லன் கள்வர் செயல் பலவும் வகுத்து விரித்து உரைக்கின்றான். அதனைக் கோவலன் அறிந்துமிருக்கலாம். அக்காலை இக்கோவலன் தன்பாற் களவின் மையை இனிது கூறியேனும் இருக்கலாம்; அஃதும் இல்லை. அப்போது தன் நிலைமை யையோ, கண்ணகியையோ, பெற்றோரையோ, கவுந்தியடிகளையோ, யாரையாவது, எதனையாவது நினைந்து சில கூறியிருக்கலாம். அவன்பால் ஒரு பேச்சும் நிகழவே இல்லை. எதிர்பாராவகையால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கண்டு அறிவு மயங்கி நினைவு, சொல், செயல்யாவும் மழுங்கிச் செயலற்று விட்டான் போலும். இன்றேல், ஏதேனும் ஒன்று மொழிந்திருப்பன்; வினைப்பயன் என்றுகூட அவன் எண்ண வில்லை; எண்ணியிருப்பின், அதனையேனும் விதந்து ஓதி யிருக்கலாமே! 2. மாடலன்: இவன் தலைச்செங்கானம் என்னும் ஊரிற் பிறந்த வேதியன்; நான்மறையும் வல்லோன்; மறை யோதி ஒழுக்கம் நிரம்பியவன். குமரியாடி வருமிடத்தே கவுந்தியடிகளுடன் இருந்த கோவலனைக் கண்டு அளவளாவி, கோவலன் தனக்கு மாதவிபாற் பிறந்த மகட்கு மணிமேகலை யென்று பெயர் வைத்த சிறப்பினை நாமறியச் செய்கின்றான். மேலும், இவனாற் கோவலன் முதுமறை யோன் பொருட்டுக் “கடக்களிறடக்கிய கருணை”யும், பார்ப்பனி யொருத்தியை அவள் கணவனுடன் கூட்டி, “நல்வழிப்படுத்த செல்வ” நிலையும், மகன் பூதத்துக் கிரையா கியதால் வருந்திய தாய் ஒருத்தியின் பொருட்டு, அம் மகனுடைய “ சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைக்கும் பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த” பண்பும் நமக்குத் தெரிகின்றன. கோவலனை இவன் தேற்றுங் கால், “ இம்மைச் செய்தன யானறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” என்று கூறுவது இவனது இனிய செஞ்சொல் வன்மையைக் காட்டு கின்றது. கோவலன் தான் கண்ட தீக்கனவு கூறிய வழி, அதற்குத் தக்க விடை கூறாது வேறு கூறுவது அவனது அறிவின் மேம்பாட்டைக் காட்டுகின்றது. இனி, செங்குட்டுவன் கங்கைப் பேரியாற்றின் தென் கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடிவீட்டில் இனிதிருந்தபோது, இம்மாடலன் வந்து அவனைக் காணும் திறம் மிக்க இன்பம் தருவது. கோவலன் மாதவியைப் பிரிந்தது முதல், செங்குட்டுவன் கண்ணகிக்குச் கிலை கொணர்வான் கங்கையிடை நீர்ப்படுத்தது ஈறாகக் கிடந்த வரலாறு முற்றும் உள்ளடக்கிக் கேட்போர் உளம் வியக்குமாறு, “ வாழ்க எங்கோ, மாதவி மடந்தை கானற் பாணி, கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது” என்கின்றான். இவனன்றோ “சொல்லின் செல்வன்.” இதனால் குட்டுவன் அவ் வரலாறு முற்றும் அறிய அவாக் கொள்ள, அவன் பின்பு விரித்துக் கூறலுறுகின்றான். இவனாற்றான், பின்பு, செங்குட்டுவன், கண்ணகியாரின் முழுவரலாறுமே யன்றி, மாதரி தீயிற் புகுந்ததும், கவுந்தி யடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததும், மாசாத்து வான் துறவு பூண்டதும், அவன் மனைவி உயிர் துறந்ததும், மாநாய்கன் ஆசீவகப் பள்ளியில் அறம் பூண்டு துறவு மேற் கொண்டதும் கண்ணகியின் நற்றாய் உயிர்விட்டதும், மாதவி புத்தசமயம் மேற்கொண்டதும் பிறவும் அறிந்து கொள்கின்றான். கோவலன் கொலையால், கோல் வழுவிற்றென உயிர் இழந்த பாண்டியற்குப் பின் வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர் ஆயிர வரை உயிர்ப்பலி யூட்டி, மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினன் என்ற சொல்லும் மாடலன், “ உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலைத் தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலில், நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவு ளேறினன்என மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் ஊழிதோ றூழி உலகம் காத்து வாழ்க எங்கோ வாழியர் பெரிது” என்பது மிக்க இறும்பூதும் இன்பமும் பயத்தல் காண்க. பின்பு அச் செங்குட்டுவன், தன் மைத்துன வளவனான கிள்ளி யென்பானது ஆட்சிமுறை எத்திறமென வினவிய போது மாடலன், “ வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும் திரிந்துவே றாகும் காலமும் உண்டோ? தீதோ இல்லை செல்லற் காலையும் காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” என்று உள்ளுதோ றினிக்கும் உரை பகர்கின்றான். அப்போது, பெரு மகிழ்வுற்ற குட்டுவன் தன் நிறையான ஐம்பது துலாபாரம் பொன்னை அம்மாடலனுக்கு அளிக்கின்றான். பிறிதொருகால், செங்குட்டுவன் சோழ பாண்டியர் மேல் ஆறாச் சினங் கொள்கின்றான். அப்போது அங்கிருந்த மாடலன், அவன் சீற்றந் தணியுமாறு தகுவன கூறி, மேலும், “ அரைச ரேறே! அமைகநின் சீற்றம்; மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் தண்ணான் பொருநை மணலினும் சிறக்க; அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி! இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்: வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோன் ஆயினை” என்று தொடங்கி, யாக்கை, செல்வம், இளமை முதலிய வற்றின் நிலையாமை விளங்கக் கூறி, “ விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;.... ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது; செய்வினை வழித்தால் உயிர்செலும் என்பது பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின்... நீ பெரிய வேள்வி செய்தல் வேண்டும்; நாளைச் செய்குவம் அறம், எனின், இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்; இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் மூதுநீ ருலகில் முழுவதும் இல்லை” என்று கூறி முடிக்கின்றான். செங்குட்டுவனும் வேள்வி செய்கின்றான். முடிவில், கண்ணகி கோயிற்கு வந்த தேவந்தி, செட்டி மகளிர் முதலியோரால் நிகழ்ந்தவற்றைக் கண்டு செங்குட்டுவன் பெருவியப் பெய்த, மாடலன் அதுவே வாயிலாக, அவனுக்கு அறமுரைக்கக் கருதி, “கோவலன் தாயும், கண்ணகி தாயும் மாதரியும் நல்லறம் செய்யாமையின் செட்டி யொருவனுக்குச் சிறுமகளாயினர்;” நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கை.” என்று தெளிவித்து, மீண்டும் அச் செங்குட்டுவனை நோக்கி, “அரசே, ஆனேறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின், செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோல் கண்டனை யன்றே என்று சொல்லி, அவனை அறத்தாற்றில் நிற்கப் பண்ணு கின்றான். 4. செங்குட்டுவன்:- இவன் வரலாறு இந்நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்தும், மாடலன் செய்தி கூறுமிடத்தும் ஓராற்றால் விளங்குகின்றன. இவன் மறம் மிக்க வேந்தன். இவன் தன் தம்பி இளங்கோவுடன் தந்தைபால் இருக்கும் போது, கணி யொருவன் போந்து, இளங்கோவுக்குள் அர சாளும் குறிப்புண்மை யறிந்து கூறக், கேட்ட மாத்திரையே கண் சிவந்தது. காய் சினம் பொங்கிற்று. தன் உடன் பிறந்து உடன் வளர்ந்து உடனொழுகும் இளங்கோவின் உள்ளப் பான்மையை உணராது இவன் சினங்கொண்டான். இதனை, “அரசாளுரிமை இளையோற் குண்டென உளைவனன் நனி வெகுண்டு அழுக்காற் றொழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன், கண் எரி தவழ அண்ணலை நோக்கும்” என அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார். இதுவேயன்றி, தான் பற்றிக் கொணர்ந்த ஆரியமன்னரை ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்க்குக் காட்டி வருமாறு விடுப்ப, அவர்களைக் கொண்டு சென்றோர் அவ்வண்ணமே காட்டித் திரும்ப வந்து, “சோழ மன்னனும் பாண்டிய வேந்தனும்” ‘ அமர்க்களம் அரசன தாகத் துறந்து தவப்பெருங்கோலம் கொண்டோர் தம்மேல் கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனர்’ என்று கூறினர். அது கேட்டலும், “தாமரைச் செங்கண் தழல் நிறம் கொள்ள” அச் செங்குட்டுவன் கொண்ட சினம் சொல்லும் தரத்ததன்று; அக்காலை மாடலன் ஆங்கிருந்து தகுவன கூறி அவன் கருத்தை மாற்றாதிருந்திருந்தால், இவ் வரலாறே வேறு வகையாகச் சென்றிருக்கும். தமிழ் வேந்தரை ஆரிய மன்னர் இகழ்ந்து பேசினர் என மாதவர் சிலர் கூறக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு உண்டாகிய சினம்; காலம் கருதி அமைந்து கிடந்து. கண்ணகிக்குக் கல் கொணர நேர்ந்தபோது எழுந்து நிற்கிறது. அப்போது அவன், “ இமையத் தாபதர் எமக்கு ஈங்குணர்த்திய, அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்.” என்று கூறி, மறனிழுக்கா மானமுடைமையைப் புலப்படுக் கின்றான். அவன், அக்காலை கூறிய வஞ்சினம், நெஞ்சிற்கு மிக்க மருட்கையைப் பயக்கின்றது. “ வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக் கடவுள் எழுத ஓர் கற்கொண் டல்லது வறிது மீளும்என் வாய்வா ளாகின், செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுக” என்பது அவ் வஞ்சின வாய்மொழியாகும். அவ் வஞ்சினமும் தப்பாமே செய்து முடித்தான் இச்செங்குட்டுவன். இவ் வஞ்சினம் மொழிந்தபோது மாடலன் ஆங்கில்லை. ஆசான் வேறொருவன் இருந்து பொருந்தாக் கூற்றொன்று புகலு கின்றான். “அது அவ்வடவாரிய மன்னர் இகழ்ந்து பேசியது நின்னையன்று; ஏனைச் சோழ பாண்டியரையே யாகும்” என்பது. “ அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல், நின் வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ? இமைய வரம்ப! நின் இகழ்ந்தோ ரல்லர்: அமைகநின் சினம்” என்பது அவ்வாசானுடைய உரை. ஆனால், அவன் உரையை இச் செங்குட்டுவன் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை வரலாறு கூறுகின்றது. இனி, இவன் பெற்றுள்ள ஏனை வெற்றிச் சிறப்புக்களை உரைக்கின் இவ்வுரை பேருரையாய் விரியும். அவை மிகப் பலவாகும். இவன் சிவனிடத்தில் மாறா அன்புடையவன். இவன் இமயம் நோக்கிப் புறப்பட்டபோது, திருமாலின் சேடம் கொணர்ந்து சிலர் கொடுப்ப, அதனைத் தன் மணிப்புயத்தே பெய்து கொண்டான். அதற்குக் காரணம் கூறப்புகுந்த இளங்கோவடிகள், “ ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையின்” சென்றான் என்று கூறுகின்றார். மாடலன் ஒருகால் இச் செங்குட்டுவனை நோக்கிக் கூறுமிடத்து, “ஆனேறு ஊர்ந் தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்ன வனாதலின் ” என்று கூறுகின்றான். இவன் அறிஞருடன் சொல்லாடுங் காலத்துப் பெருந் தன்மை பொருந்தப் பேசும் பண்பு படைத்தவன். மாடலன், கண்ணகி வரலாற்றை மிக்க சுருக்கமாகக் கூறக் கேட்டதும். “ பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா நகைத்திறங் கூறினை, நான்மறை யாள! யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு” என்கின்றான் இதன்கண், “நான் அறியாத நகை யென்னாது மன்னர் பலரும் அறியாத என்றான், இராசபாவத்தாலே” என்று உரைக்கின்றார் அரும்பத வுரைகாரர். செங்கோல் கோடிய பாண்டியன் செய்தி கேட்டதும், இச்செங்குட்டுவன் கூறும் கூற்று அவனது பெருமிதத்தைக் காட்டு கின்றது. அது, “ எம்மோ ரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் உறுபதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை, மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” என வருவதாகும். இம்மட்டில் நில்லாது, இன்னோரன்ன வழுக்கிற்கு இடனாகி, அரசரை வாட்டும் அரசியலின் தன்மையைச் செங்குட்டுவன் நன்கு உணர்ந் திருக்கின்றான். சீத்தலைச் சாத்தனார் மதுரை நிகழ்ச்சியை விரியக் கூறக் கேட்டு மனம் வருந்திய இவன், பாண்டியன் உயிர் துறந்ததை நினைந்துக் காட்டியவாறு கூறி, “ மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம், பிழைஉயி ரெய்தின் பெரும்பே ரச்சம், குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதகவு இல்” என்று கூறுகின்றான். 5. கண்ணகி* : கண்ணகியாரின் காற்சிலம்பே இப் பேரிலக் கியத்துக்குப் பெயரைத்தந்தது. இவர் வடிவில் திருமகளையும், கற்பில் வடமீனையும் நிகர்ப்பர் என அவரையொத்த மகளிரால் பாராட்டப்படுவர். நற்குண நற்செய்கை மிக உடையவர். இவரது உருநலனும் மனை மாண்பும் கோவலனுக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. அவன் இவரை, “அரும்பெறற்பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடிவாணிகன் பெருமடமகளே” எனப் பாராட்டிப் பரவுகின்றான். இவர் கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தமிழ்மகள் என்பதைப் பலவிடங்களில் இவர் கூறும் சொற்களால் இனிது தெளியலாம். கணவனாகிய கோவலன், காதலொழுக்கத்து விழுமிய நெறியால் வாராது, பெற்றோர் புணர்ப்பவந்த காதலனாயினும், அவன்பால் இவர் கொண்டொழுகிய காதலொழுக்கம் தமிழ் கமழும் காதலின்ப ஒழுக்கமாகவே திகழ்கின்றது. அவன் மாதவி வயப்பட்டு மயங்கித் தன்னைப் பிரிந்து ஒழுகிய காலத்து, கண வருவப்ப அணியும் அணிகலன்களை இவர் அணியவேயில்லை. இதனை அடிகள், “ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய, மென்துகில் அல்குல் மேகலை நீங்க, கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி அணியாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்” என்று கூறுகின்றார். மேலும் கூறியவாறு, தன்காதற் கொழுநன் பரத்தைமை பூண்டது காரணமாக நம் கண்ணகியார்க்குப் பெருவருத்த முண் டாயிற்றெனினும் அவர் அவனையாதல், பரத்தை யாகிய மாதவி யையாதல் புலந்து ஒரு மொழியும் கூறவே யில்லை. தமிழ்மக னொருவன் இல்லிருந்து நல்லறம் புரியுங்கால், பரத்தைமை யொழுக்கம் பூண்பானாயின், அதனைப் பொறாது அவன் இல்லக் கிழத்தி அவன் கேட்பவும், அவன் பரத்தையர் அறியவும் புலந்து கூறுவதுண்டு. அதனால், அவர் கற்புநெறி வழுப்படுதலும் இல்லை. புலந்து கூறுவன பலவும் “அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை” என்றே தொல்காப்பியர் முதலிய பண்டைச் சான்றோர் கருதினர். தன் கொழுநன் பரத்தை வயத்தனாய் ஒழுகிவரக் கண்ட தமிழ நன்மகள் ஒருத்தி, அவன் தன்பால் ஒருகால் வரக்கண்டதும், அவனைச் சேர மறுத்து, “ஊர, எம் நலம் தொலைவதாயினும், துன்னலம், பெரும, பிறர்த்தோய்ந்த நின் மார்பே” (ஐங். 63) என்றாள். கணவன் எதிரிலே, அவன் காதலித் தொழுகும் பரத்தையைப் பற்றிப் புலந்து கூறுவாளாய், நீ இங்கு வாரற்க; நின் வருகையை அப்பரத்தை, “செவியிற்கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள், கண்ணிற்காணின் என்னா குவள் கொல்” (ஐங்கு. 84) என்றும், “மடவள் அம்மநீ இனிக் கொண்டோளே, தன்னொடு நிகரா என்னொடு நிகரிப், பெருநலம் தருக்கும் என்ப” (ஐங்.67) என்றும். “ மாநீர்ப் பொய்கை யாண ரூர, தூயர் நறியர் நின் பெண்டிர்; பேஎய் அனையம்யாம், சேய் பயந்தனமே” (ஐங். 70) என்றும் கூறக் காண்கின்றோம். இக்குறிப்பு, கானற் சோலையிடத்தே கோவலனும் மாதவியும் பாடிய வரிப்பாட்டினும் ஒளிர்கின்றது. இக்கற்பு நெறியைக் “கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய், மங்கை மாதர் பெருங்கற் பென்று அறிந்தேன் வாழி காவேரி” என்று பாடுதலால், கோவலனும் நன்கு அறிந்திருக்கிறான் என்று அறியலாம். இதனை இக்கோவலன் அறிதற்கு இடம் யாது? மாதவியோ பரத்தை; அவள் பாட்டில், “கருங்கயற் கண் விழித் தொல்கி நடந்த எல்லாம் நின் கணவன், திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன், வாழி காவிரி” என்று கூறுதலால், காதலன் தன் காதலிபால் அன்பு கோடாதிருத்தலே வேண்டுமென்பது பெறப்படுகிறது. படவே, இக்கற்பு நெறியைக் கண்ணகியார்பால் தெரிந்து கொண்டானாம். அவர், மங்கல மொழிய ஏனைய அணிகளை அணியாதிருந்தனர். தேவந்தியிடத்திலோ பிறரிடத்திலோ தம் பிரிவாற்றாமையை வாய்விட்டுரைத்திலர்; தன் காதலனையோ, மாதவியையோ எவ்விடத்தும் இகழ்ந்தோ புலந்தோ கூறவேயில்லை. அவரது வாடிய நிலையைக் கண்ட, தேவந்தி யென்னும் தோழி, கண்ணகியார் தம் கணவனைப் பெறல் வேண்டு மென்று, வந்தாள் என்றற்கு, “வாட்டருஞ்சீர்க் கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையுண்டு என்று, எண்ணிய நெஞ்சத்து இணையளாய்” வந்தாள் என்றே அடிகள் கூறுகின்றார். கண்ணகியார் தாம் கண்ட தீக்கனவையும், அத்தேவந்தி, “பெறுக கணவனொடு” என்று உரைத்ததனால் தான் எடுத்துக் கூறுகின்றார்; இன்றேல் அதனையும் கூறியிரார்; “உரை யாடேன்” (9:51) என்றே கூறுகின்றார். இதனால், இவர் தமக்குற்ற துன்பத்தைத் தாம் பொறுத்துக் கொள்வதே தக்கதென்று கருதிப், பிறரை நோவதும் செய்யாது, தன் துன்பத்தைப் பிறர்க்குரைத்து அவரையும் தன் துன்பத்தைப் பங்கு கொள்ளச் செய்யாது ஒழுகினாரென்பது இனிது விளங்குகின்றது. அன்றியும், தன்துயர், தன் மாமன் மாமியர் அறியின் பெரிதும் வருந்துவரென்று கருதி அவர்கட்கு மறைத்து ஒழுகிய திறத்தைப் பின்னர்க் கோவலற்கு உரைக்கும்போது “முந்தை நில்லா முனிவிகந் தனனா..... எற்பாராட்டயான் அகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும், என் வாயல் முறுவதற்கு அவர் உள்ளகம் வருந்த” (16:78-80) என்று வெளிப்படுக்கின்றார். தன் வாடிய நிலைகண்டு, மாசாத்துவான் வருந்துவன் என்பது உணர்ந்து, “முந்தை நில்லா”மல் ஒழுகியதையும் அப்போதுதான் உரைக் கின்றார். இவ்வாற்றால், தமக்குறுந் துயரத்தை மகளிர் புறத்தே புலப்படுக்காது பொறுத் தாற்றுதலே பெண்மை யெனக் கருதும் பெற்றியராதல் தெரிகிறது. இதுவே, பின்பு, அவர், கோவலன் கொலையுண்டது கேட்டுப் புலம்பிக் கொண்டே மதுரை நகர்க்குட் சென்று அரற்றுமிடத்து, “ பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல் கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்” (சிலப்.99:51-53 ) என்பதன்கண் தெற்றென விளக்கப்படுகிறது. கொழுநரால் உறும் குறைகளைத் தாங்குபவரே பெண்டிர் என்று இதனால் இவர் வற்புறுத்துவது காண்க. கோவலனது பிரிவாற்றாது வருந்தி மெலிந்த கண்ணகி யார் ஒருநாள் தீக்னாக்கண்டு தன் தோழி தேவந்திக்குத் தெரிவிப்ப, அவள், “பிரிந்த கணவனைப் பெறக்கருதும் மகளிர்,” கானற் கண் உள்ள சோமகுண்டம் சூரிய குண்டமென்னும் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவர்; ‘ காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர் உலகத்துத் தையலார் போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்’ (சிலப்9:60-62) யாம் ஒரு நாள் ஆடுதும், வருக” என்கின்றாள். அவட்கு நம் கண்ணகியார், ‘கணவனையல்லது பிற தெய்வங்களைத் தொழுதல் கற்புடைய மகளிர்க்கு ஏலாது’ என்ற கருத்தால், “அது பீடன்று” என்று மறுத்துவிடுகின்றார். அக்காலை, திரும்பப் போந்த கோவலன், தன் காதற் குறிப்புத் தோன்றும் மொழிகள் சிலவேனும் கூறலாம்; கூறிற்றிலன். துவண்ட மேனியும் சோர்ந்த முகமும் கொண்டு அவர் எதிரில் நிற்பவன், கண்ணகியார் செய்யும் வழிபாட்டையும் நோக்கிற்றிலன்; அவன் உள்ளம் கண்ணகியின் “வாடிய மேனி வருத்தங் கண்டு” பெருங் கலக்கம் எய்துகின்றது. உடனே, அவன் மனத்தே மிக்க நாணம் தோன்றி அலைக்கின்றது; “ சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தரும்எனக்கு” (சிலப். 9:69-71 ) என்று சொல்கின்றான். காமக்களியாட்டில் மயங்கினார் க்கு வேறு நாணமேது; நல்ல காதலேது. பொருளின்மை யொன்றே அவரை வருத்தக்கூடியது. அவன் வருத்தத்தின் பெற்றியை யறிந்த கண்ணகியார். “ நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புள கொள்ளும்” (சிலப்.9:72-73 ) என்று மொழிகின்றார். செவிவழிச் சென்று அவன் நெஞ்சு துளைத்து வருத்தும் சுடுசரம் இதனிற்காட்டில் அக்கோவலற்கு வேறு வேண்டாவே. இவ்விடத்தே, தன்பால் வந்த கோவலன் கண்களில் காதற் குறிப்பில்லை. ஆகவே, நம் கண்ணகியார் மனத்தில் புலவி எழ வில்லை. மேலும், கோவலன் கடையகத்தான் என்று குற்றிளை யாள் ஒருத்தி போந்து சொல்லி முடித்தற்குள், அவன் உள்ளே வந்து “பாடமை சேக்கை” யடைகின்றான்; கண்ணகியாரும் சென்று அவனை யடைகின்றார். அவன்பால் உள்ள காதலால் ஈர்ப்புண்டு சென்று அவன் அருகே நிற்கும் அவரைக் கண்ட அவன் கண்கட்கு அவர்பால் உள்ள காதல் நிலை தெரிந்திலது. அவரது ‘மங்கை மாதர் பெருங் கற்பே’ புலனாகிறது. அப் பெருமை முன் அவனது சிறுமை விளங்கித் தோன்றவே, அவன் நாணம் தலைக் கொள் கின்றான். ஆயினும் கண்ணகியார், தான் அவனது புறத்தொழுக்கத்தை இகழ்ந்து வெகுண்டு புலப்பேன் எனக் கருதுகின்றான் போலும் என்று நினைந்து, “நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி” மகிழ்விக் கின்றார். ‘பின்பு, அவனுக்குக் “காசு பெரிதேயன்றிக் காதல் பெரிதன்று” என்று, ‘சிலம்புள கொள்ளும்’ என்று செப்புகின்றார். மாதவியை, அவன், “சலம்புணர் கொள்கைச் சலதி” என்று தன்முன் இகழ்கின்றபோது, கண்ணகியார், தானும் புலந்து சில கூறலா மன்றே; ஒன்றும் கூறவேயில்லை; கூற நினைக்கவே இல்லை. ஆய்ச்சியர் சேரியிற் சொல்லாடு மிடத்தும், “போற்றாவொழுக்கம் புரிந்தீர்” என்கின்றாரேயன்றி, மாதவியை மனத்திடையே சிறிதும் நினைக்கவே இல்லை. இதனால் அவர் நினைவும், சொல்லும் செயலும் யாவையும் அக்கோவலனை மகிழ்வித்தலையே நாடியிருப்பது இனிது புலனாகிறது. ஆனால், அவன், இச் சிலம்பையே முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு அழைக்கின்றான். இவ்வாறு தன் மனைவியையும் உடன் அழைத்தது இவன் வரலாற்றில் தான் புதுமையாய்க் காணப்படுகிறது. அக் கண்ணகி யாரும் அவன் சொற்படியே புறப்பட்டுவிடுகின்றார். நெடிது நடந்தறியாப் பெருஞ் செல்வத் திருமகளாகிய கண்ணகியார் அவனுடன் ஒரு காவதம் சென்று, ஆங்கிருந்த கவுந்தியடிகளின் தவப்பள்ளியை யடைந்து கோவலனை அன்பு கனிய நோக்கி, முள்ளெயிறு இலங்கமுறுவலித்து, “மதுரை மூதூர் யாது?” என வினவ, கோவலன், “ ஆறைங் காதம் அகல்நாட் டும்பர், நாறைங் கூந்தல், நணித்து” (சிலப். 10:42-43) என்று விடையிறுக்கின்றான். அவனது நயமென் மொழியினை கேட்டு உவகை நகை செய்து, கவுந்தியடிகளை வணங்கி வழிபடு கின்றார். வழியில் கோவலன் கண்ணகியார்பால் காட்டிய காதல், சான்றோராகிய கவுந்தியடிகள் உணர்ந்து, “கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ” எனப்பாராட்டப் பெறும் பேறு பெறுகின்றது. உயிரினும் சிறந்த நாணும், அதனிற் சிறந்த கற்பும் உருக் கொண்டாற்போலும் உயர்மகளாதலின், கண்ணகியார், வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் கவுந்தியடிகள்பால் தீமொழி பகரக் கேட்டதும், உடல் நடுங்கி மனங்கூசித் தம் செவி புதைத்து நிற்கின்றார். அது காணப்பொறாமையால் கவுந்தியடிகள் அத் தீயோர் இரு வரையும், “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக” எனச் சபிக்கின்றார். மேலும், வேட்டுவர் கூட்டத்துட் சாலினி தெய்வமருள் கொண்டு, கண்ணகியாரைப் பார்த்து, “இவளோ ஒருமாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறு கின்றாள். அது கேட்டதும், கண்ணகியார், “பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி” என்று கோவலற்குப் பின்னே சென்று ஒடுங்கி நிற்கும் தோற்றம் உள்ளக்காட்சியில் உவகை செய்கின்றது. கண்ணகியார் மாதரியென்னும் ஆய்ச்சி வீட்டில் இருந்து, அவள் உதவிய காய், கனி, அரிசி முதலியவற்றால் இனிய உணவு சமைத்துக் கோவலற்கு இடும் திறம் மிக்க இன்பம் தருவதாகும். கோவலனைப் பனையோலைத் தடுக்கில் அமர்வித்து, “ தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்துஈங்கு அமுதம் உண்க, அடிகள்! ஈங்குஎன” (சிலப்.16:41-43) அவர் மொழியும் மொழிகள் இற்றை நாளை மகளிர்க்கு இனிய எடுத்துக் காட்டாகும். உணவு கொண்டபின் கோவலன், கண்ணகியாரின் வழிநடை வருத்தத்திற்கு வருந்தியும் தன் பெற்றோரை நினைந்தும் சில கூறுகின்றான். அவற்குக் கண்ணகியார் தம் பேரறிவுடைமை சிறக்க ஒரு நல்லுரை கூறுகின்றார். “ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” நும் பெற்றோர், அன்பு சிறந்து அருள்மொழி வழங்கி இனிது பாராட்டி வந்தனர். என் பொய்முறுவல் கண்டு, என் உள்ளுறு வருத்த முணர்ந்து வருந்தினர். அவர் அவ்வாறு வருந்தவும் நீவிர், “ போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின், ஏற்றெழுந் தனன்யான்” (சிலப். 16:81-83) என்று கூறித் தெருட்டுகின்றார். கண்ணகியாரின் பெற்றோர் அவர்க்கு மணம் முடித்த சின்னாட்குப் பின், அவரைக் கோவலனுடன் மனையறம் படுத்து கின்றனர். அப்போது அவர்கள், கண்ணகியாருக்கு, “ மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும், விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்ற மொடு” (சிலப். 2 : 85-88) ஒரு தனியாகப் புணர்க்கின்றனர். இதன்கண், அவர்கள், அறப் பரிசாரமும் விருந்து புறந்தருதலும் பிறவும் வற்புறுத்தி யிருத்தலின், கண்ணகியார் அவற்றை வழுவாது ஆற்றலையே குறிக்கொண்டு மனையறம் புரிந்து வந்தமை தெரிகிறது. கோவலன் பிரிந்தபின், தான் தனித்திருந்து அவ்வறத்தை முட்டாது செய் தொழுகிப் போந்தாராயினும் அவரது கற்புடை யுள்ளம் அமைதி பெறவே இல்லை. கோவலுடன் மதுரைக்குப் போந்து மாதிரி மனைக்கண் தங்கி, அக்கோவலனை யுண்பித்து இனிதிருக்குங்கால், தமது இவ்வுள்ளக் குறிப்பை ஒருவாறு வெளிப் படுத்தி விடுகின்றார். “ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலப். 16:71-73) என்று ஓதுவதால், இஃது அவர் உள்ளக் கிடையாதல் தெரிகின்றது. இது “புரையறந் தெளிதல்” என ஆசிரியர் தொல்காப்பியனார் காட்டும் கற்புநெறி. இதன் கண், விருந்து புறந்தருதலைப் பெற்றோரும் கண்ணகி யாரும் பெரிதும் போற்றுதலை நோக்கின் இவர் காலத்துக் கற்பு நெறிக்கண், இப்பேரறம் பெரிதும் போற்றப் பட்டு வந்தமை தெற்றெனத் தெளிவாகிறது. இதனை வற்புறுத்திச் சிறப்பித்தற்குப் போலும், இளங்கோ வடிகளும் பிறாண்டும் கற்புடை மகளிரை, “ விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர்” (சிலப். 5:227-9 ) என்று பாராட்டியிருக்கின்றனர். இதுகாறும் காட்டியவற்றால் கண்ணகியாரின் கற்பும், நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் யாம் தெளியக் காண நிற்பது விளங்கும். கோவலனது பரத்தைமையும், பிரிவும் பெரிது ஆற்றியிருந்த இக்கண்ணகியார், கோவலன் கொலையுண்டது கேட்டதும் , ஆற்றாமையின் வரம்பு கடந்துவிடுகிறார். அவரது ஆறிய கற்பு சீறிய கற்பாக மாறுகிறது; மெல்லியற் பொறை வல்லியல்வீரமாகின்றது; மென்மொழி வழங்கிய மலர்வாயில் வன்மொழி வருகிறது; அருள்கிடந்த உள்ளத்தே மருட்கை இடம் பெறுகிறது; அழுகையும், அவலமும் அவரைக் கவர்ந்து கொள்கின்றன; பெண்மையின் வரம்பாகிய பெருநாண் நெகிழ்ந்து நீங்குகின் றது. “ பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த் திங்கள் முகிலொடும் சேண்நிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்” (சிலப். 18:30-33) என அடிகள் அழகுறக் காட்டுகின்றார். கண்ணகியார்க்கு இவ்வுலகமே புல்லிதாகத் தோன்றுகிறது; எதிர்காலம் புலனாகிறது; கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு நோற்று வாழும் காட்சி தெரிகிறது; மன்னவன் ஆட்சியில் நேர்ந்த தவறும் இனிது விளங்கு கின்றது. தன்னை நோக்குகின்றார்; “அன்பனை இழந்தேன் யான்” என வாய்விட்டு அரற்றுகின்றார்; கைம்பெண் எனத் தான் ஆவது கண்டு அருவருக்கின்றார்; அவலம் மிக மிக அவருள்ளம் திண்ணிதாகின்றது. அறிவு சிறிது அவர் வசம் வருகிறது. ஏனை மகளிர் காணத் தம் கணவனான கோவலன் கள்வனல்லன் என்பதனை, செங்கதிர்ச் செல்வனைக் கேட்டுத் தெளிகின்றார்; பிறரையும் தெளிவிக்கின்றார். மதுரை நகர்க்குட் கையிற் சிலம்பேந்திப் புகுந்து, தெருவில் தம்மைக் கண்டு வியந்து நிற்கும் நன்மகளிர் அறிய வன்மொழி சில கூறுகின்றார். “ முறையில் அரசன்தன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்!....” *** கள்வனோ அல்லன் கணவன், என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே, ஈதொன்று. (சிலப். 9: 3-8) என் கணவனைச் சென்று காண்பேன்; கண்டு அவன்வாயில் “தீதறு நல்லுரை கேட்பேன்” என்கின்றார். கோளாதொழியின், அது நன்மகளிர் எள்ளி இகழ்தற்கு இடனாகுமன்றே; அதனையுணர்ந்து, “ தீதறு நல்லுரை கேளா தொழிவனேல், நோதக்க செய்தாள் என்று எள்ளல்” (சிலப். 19:13-14) என்று இனைந்து கூறுகின்றார். பின்பு இவர் நேரே கொலைக்களம் சென்று கோவலன் உடல் கொலையுண்டு குருதி நிறைந்து பொடியாடிக் கிடப்பது கண்டு ஆறாத் துயரமுற்று அவலித் தழுகின்றார். பத்தினிப் பெண்டிர், சான்றோர், தெய்வம் என்ற இவர்களை நினைந்து நோகின்றார். கோவலன் உடலை எடுத்துத் தழீஇக் கொள்கின்றார். அவன் உயிர் பெற்று, கண்ணகியாரின் “நிறைமதி வாண்முகம் கன்றியது” என்று அவர் கண்ணீரைக் கையால் மாற்றுகின்றான். அவர் அவன் திருந்திய அடியைத் தன் வளைக்கையால் பற்றுகின்றார். உடனே, அவன், “இருக்க” என்று சொல்லிவிட்டு விண்ணுலகு சென்று விடுகின்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாகின்றது; கண்ணீர் ஆறாகச் சொரிகிறது; உள்ளம் கொதிக்கின்றது; உடல் நடுங்குகின்றது; சுற்று முற்றும் கண் களைப் பரக்க விழித்துப் பார்க்கிறார்; “போய் எங்கு நாடுகேன்” என்று புகல்கின்றார். கோவலன் கொலைக்காரணத்தை நினைக்கின்றார். அவர் முகம் சிவக்கின்றது; வாயிதழ் துடிக்கின்றது; கண்கள் சிவந்து காய் சினங் காட்டுகின்றன; கணவன் நினைவும் இடையே நிகழ்கின்றது. “ காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; தீவேந்தன் றனைக்கண்டுஇத் திறம்கேட்பல் யான்” (சிலப்.19: 70-71) என்று சொல்லிக்கொண்டு அரசன்பால் வருகின்றார். இவரது காய்சினக் கோலத்தைக் கண்டு அச்சமும், வியப்பும் அடையக்கொண்ட, அரசனது வாயிற் காவலன் அரசன்பால், “கொற்றவையோ, பிடாரியோ, பத்திரகாளியோ என்று கூறற்குரியளல்லள்; கணவனையிழந்த ஒரு நங்கை” என்கின்றான். இதுகுறிப் பறியாத, கல்லா நாடகமாக்கள், நம் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியாரை, உயிர்க்கொலை வேட்டுத் திரியும் கூளியாக்கி நடித்துத் திரிகின்றனர். இஃது அறிஞர்க்கு எத்துணை அருவருப் பையும் வருத்தத்தையும் தருகிறது, ஓர்மின். அரசன்பால் இவர் வழக்குரைக்கும் திறம் மிக்க நயமும் இலக்கிய நலமும் நிரம்பியது. தன் கணவனான கோவலன் “போற்றாவொழுக்கம் புரிந்து” ஒழுகியது குறித்து ஒரு சொல்லும் கூறாது, அவன் கொடுமைக்கு நாணி ஒடுங்கியிருந்தவர், பாண்டி வேந்தனால் கொலையுண்டது கேட்டலும், வேந்தன்பால் ஆறாச் சினங் கொண்டு எழுகின்றார். கோவலன் தவறு, அவனை அக்கண்ணகியினின்றும் பிரியச் செய்தது; பாண்டி வேந்தன் தவறு அவனை உயிர் பிரிவித்தது என்று கொண்டிலர். கோவலன் செய்த தவறு ஆடவர்க்கு இயல்பு என்றும், வேந்தன் தவறு அன்னதன்று என்றும் அவர் நினைக்கின்றார். ஓதல், காவல், பொருள், பகை தணிவினை முதலியவற்றோடு ஒப்பவைத்து ஓதப்படும் பரத்தையில் பிரிவு தவறாகக் கருதப்படவில்லை போலும். இன்றேல், அரசன் முன் வழக்குரைத்து, அவன் தவற்றினை அஞ்சாது எடுத்துக் காட்டும் உரன் படைத்த நம் கண்ணகியார், அக்கோவலனை எவ்வகையாலேனும் தெருட்டியிருப்பர். “அவன் சோர்பு காத்தல் கடன்” (தொல்) என்றும், “எள்ளின் இளிவாம் என் றெண்ணி, அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு, ”( குறள்) என்றும், “எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து” (குறள்) என்றும் வருவன சான்றோர் கூறியுள்ள பொருளுரைகளன்றோ? அவர் அவனைத் தெருட்டிக் கூறியதாக ஓர் உரையினையேனும் அடிகள் நமக்குக் காட்டினா ரல்லர். கண்ணகியாரின் கற்புமாண்பைக் காட்டுதற்கு மாதவியிற் பிரிந்து வந்த கோவலனக்கு, “ நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புள கொள்ளும்” ( சிலப். 9:72-73) என்றதும், மாதரிமனைக்கண் இருந்து, சிலம்பு பெற்றுச் செல்வது குறித்துக் கோவலன் கூறிய பாராட்டுரைக்கு விடையிறுப்பார் போல், “ போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ” (சிலப். 16:81-82) என்றதும் ஆகிய இவ் விரண்டுமே போதிய நல்லுரையாகின்றன. மாற்றாவுள்ள வாழ்க்கையேன் என்றது தன்வயின் உரிமையும், போற்றா வொழுக்கம் புரிந்தீர் என்றது அவன் வயிற் பரத்தைமையும் சுட்டி நிற்றல் காண்க. இடுக்கண் அடுக்கிவரினும் பொறுக்கும் கற்புமிடுக் குடைய கண்ணகியார், வேந்தன் செய்த தவற்றால் கோவலன் கொலை யுண்டானாயினும், அதனை வினைப்பயன் என்றாதல், அறியாமை என்றாதல்நினைந் தொழியாராகின்றார். கோவலன் தனக்குச் செய்த கொடுமையினும், பாண்டி வேந்தன் செய்தது அவர்க்கு மிகப் பெரிதாகத் தோன்றுகிறது; அஃது அவரது மென்மைத் தன்மையை மாற்றி வன்மை யெய்துவிக்கிறது; “யாவதும் மாற்றாவுள்ள வாழ்க்கையேன்” என்று அவர் கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறது. கோவலனது கொலை இரண்டு குறிப்புக்களை அவர் மனக் கண்களுக்குக் காட்டுகிறது. கோவலன் அரசன் கோயிலில் சிலம்பு கவர்ந்த கள்வனாம் என்று கேள்விப்படுவதும், தான் அக் கள்வன் மனைவி யென்பதும் ஒன்று. மானமுடைய தமிழ்க் குடியில் பிறந்த மறமகளாதலின், கண்ணகியின் கருத்தில் இக்குறிப்புப் பெரு வருத்தத்தைச் செய்கிறது. இப்பழிப்பு அவர் அறிவைப் பேதுறு விக்கின்றது. அரசன் இதனைச் செம்மையாக ஆராய்ந்திலன் என்பதை உலகத்தார்க்குக் காட்டித்தானும் செஞ்ஞாயிற்றைக் கேட்டுத் தெளிகின்றார். மேலும், கோவலன் கள்வனென அயலார் கூறியது அவர் நெஞ்சைச் சுடுகிறது. அவர், “மன்பதையலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப, அன்பனை இழந்தேன் யான்” என்று அவலங் கொண்டு உள்ளம் அழிகின்றார். ஆகவே, முதலாவது, தவறு அரசன்பால் இருப்பதை வெளிப்படுத்தி, கோவலன் கள் வனல்லன் என்பதை உலகறியச் செய்யுமாற்றால், தன் குடிக்கு நேர்ந்த பழிப்பினை ஒழிப்பதையே கடனாகக் கருதுகின்றார். இரண்டாவதாக, பண்டைத் தமிழ் மகளிர் தம் கற்பு நெறிகளுள் தம் நாட்டு அரசன் செங்கோலனாதல் வேண்டு மென்னும் வேட்கையுடையராதலை ஒன்றாகப் பேணி வந்தனர். தன் கணவன் பரத்தைமை யொழுக்கம் பூண்டொழுகுவது தன் ஒருத்திக்கே வருத்தம் தருவதாகும்; அரசு முறை கோடின், அரசன் மரபிற்கும், அவன் ஆட்சியின் கீழுள்ள நாட்டிற்கும் பெருங் குற்றமும் கேடுமாம் என்பது தமிழ் நாட்டுக் கற்புடை மங்கையின் கருத்தாகும். இக் கருத்தினை ஆசிரியர் ஓரம் போகியார், “வாழியாதன் வாழிய வினி, அறம் நனி சிறக்க அல்லது கெடுக, என வேட்டோ ளேயாயே” என்றும், “அரசு முறை செய்க களவில்லாகுக, என வேட்டோ ளேயாயே” (ஐங். 7.8) என்றும் கூறிக் காட்டுகின்றார். மேலும், “அருந்திறலரசர் முறை செயின் அல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்சிறவாது” என்று இளங்கோவடிகள் வற்புறுத்து கின்றார். இளம் பெண்ணொருத்தி செய்த சிறு பிழையைப் பொறாது, நன்கு ஆராய்வதும் செய்யாது, அவளைக் கொலை புரிந்த நன்னன் என்னும் வேந்தன், “பெண் கொலை புரிந்த நன்னன்” (குறுந்) என்று சான்றோரால் இழிக்கப்பட்டதும், அவன் வழிவந்த இளவிச்சிக்கோ என்பான், பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோரால், “நன்னன் மருகன்” என்றும் “நம் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே” (புறம். 151) என்றும் பழிக்கப் பட்டதும் நாடறிந்த செய்திகளாகும். ஆகவே, நாட்டில் நல்லரசு நிலவுதலில், பண்டைத் தமிழ்மக்கள் பேரூக்கம் கொண்டிருந்தமை விளங்கத் தெரிகிறது. பண்டைத் தமிழ் மகளிருள் முடிமணியாகத் திகழும் கண்ணகியார் இந்நெறியினை நன்கறிந்து ஒழுகிவந்தவராதலின் பாண்டி வேந்தன் முறை வழுவினான் என்பதைச் செஞ்ஞாயிற்றால் தெளிய அறிந்து கொண்டமையினாலும், அமைச்சர் முதலிய சான்றோர் அரசவைக்கண் இருந்தும் பயனின்றி யொழிந்தமையினாலும் தானே தனது வழக்கினை அரசற் குணர்த்தி அரசு முறையினைச் செம்மை செய்யக் கருதுகின்றார். தன் சிலம்பைக் கையிலேந்தி மதுரை மூதூர்த் தெருக்கண்ணே வரும் கண்ணகியார், மகளிரைப் பார்த்து, “முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும், நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்கள்” என்று கூறுகின்றார். கவுந்தியடிகள், கண்ணகியாரை மாதரியிடத்தே அடைக்கலப் படுத்த போது, “நீணில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” என அம் மாதரிக்கு உரைத்தது அவர் நினைவில் இருத்தல் இதனால் புலனாகிறது. அரசனோடு அமைச்சர் முதலியோரையும் உளப்படுத்தி வழுவுரைத்தல் கண்ணகியார் கருத்தென்பது, “என் காற்சிலம்பு; கொள்ளும் விலைப் பொருட்டால் கொன்றாரே” எனப் பன்மைச் சொல்லால் கூறுவதால் விளங்குகிறது. தன் கணவன் கள்வனல்லன் என்பதும், அவனைக் கொலை புரிவித்த பாண்டி வேந்தன் தவறுடையன் என்பதும் கண்ணகியார் நன்கறியத் தெளிதலும், அவருள்ளம் மிகத் திண்ணிதாகின்றது. அரசன்முன் சென்று, உண்மை யுணர்த்தி அவனது கொடிய அரசு முறையைச் செம்மை செய்தற்கு வேண்டும் வீரத்தீ கொழுந்து விட்டெரிகிறது. ஆடவர் மகளிர்யாவராயினும் அறம் செய்தற்கண் அஞ்சுதல் பெரும்பழியாகு மன்றோ; அஞ்சாமையல்லால் துணை வேறு வேண்டாமை யின், கண்ணகியார் அறம் கிடந்த நெஞ்சம் மறம் கிடந்த கற்பும் துணை செய்ய, அரசன் வாயிலை அடைகின்றார். அரசவை வாயிலில் வாயிலோன் கஞ்சுக மணிந்து, வாளேந்தி நிற்கின்றான். அறம் நிலவா விடத்தில் ஆயிரம் படையும் படை வீரரும் இருப்பினும் யாது பயன்? வெறும் ஆரவாரந்தானே! அவ்வாயிலோனைக் காண்டலும் கண்ணகியார் கண்கள் சிவந்து தீப்பறக்க, “வாயிலோயே, வாயிலோயே” என்றவர், “ அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே” (சிலப்.20:25-26) எனச் செவி கைக்குஞ் சொற்களைச் சொல்லிச் சீறுகின்றார். அதுகேட்டு, வாயிலோன் திடுக்கிட்டுத் திகைப்புண்டு நிற்கின் றான். கண்ணகியார், அவனை நோக்கி, “ இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே” (சிலப்.20:27-29) என்று தம் விரைவும் வெகுளியும் தோன்ற அடுக்கி யுரைக் கின்றார். அவன் நெஞ்சில், கண்ணகியாரின் கடிய தோற்றம், கொற்றவை, பிடாரி, பத்திரகாளி, காளி, துர்க்கை என்ற இவர்களை நினைப்பிக் கின்றது. அவன் இக் காலத்து நாடக மாக்களைப் போலக் காளி யென்றே துணிந்து நடிக்கக்கூடிய மடமை யுடையனல்லன்; அதனால், அவன் அரசன் முன்னே, உரிய வழிபாடும் வாழ்த்தும் செய்து நின்று, “ அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை யல்லள்” (சிலப்.20:34-36) பிடாரியும் அல்லள்; பத்திரகாளியும் அல்லள்; காளியும் அல்லள்; தாருகன் பேருரம் கிழித்த பெண்ணாகிய துர்க்கையும் அல்லள். “ செற்றனள் போலும், செயிர்த்தனள் போலும், பொற்றொழில் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே, கணவனை இழந்தாள் கடையகத் தாளே” (சிலப்.20: 41-44) என்று ஒரு முறைக்கு இருமுறை அரசனுக்கு உரைக்கின்றான். அரசன், “அவளை ஈண்டுத் தருக” என்று கூற, அவ்வாயிலோன், அதனைக் கண்ணகியார்க்கு உரைப்ப, அவரும் அவன் பின்னே சென்று, அவன் காட்ட, அரசனைக் கண்டு, குறுகச் சென்று நிற்கின்றார். அவரது கரியகுழல் அவிழ்ந்து சோர்ந்து அலைகின்றது; மேனி புழுதி படிந்திருக்கிறது; ஊதுலைபோலப் பேருயிர்ப்பு வருகிறது; உடல் நடுங்குகிறது; கண்கள் செக்கர்ச்செவேரெனச் சிவந்து ஆற்றாமையும் வெகுளியும் அடையக் காட்டுகின்றன; கண்ணீர் ஆறாக ஒழுகுகிறது. அரசர்க்குச் செய்யும் வழி பாட்டினையும் அவர் செய்கின்றிலர். அவர் நிலையினைக் காணும் அரசன் உள்ளத்தில் இரக்கம் பிறக்கவில்லை. அவர்தம் கண்ணீரொன்றே அவன் கருத்தைப் பிணிக்கின்றது. “ நீர்வார் கண்ணை, எம்முன் வந்தோய்! யாரையோ நீ, மடக்கொடியோய்!” (சிலப்.20:48-49) என்று அவன் வினவுகின்றான். அவன் மருங்கிருந்த அமைச்சர் முதலியோரும் வாய் திறந்தார் இல்லை; அவரும் அரசனேபோல அறிவு மழுங்கி விட்டனர் போலும். மேலும், அரசன், தன்பால் முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவோர் குறிப்பை யறிந்து ஆவன செய்யும் அத்துணை அறிவு நுட்பமுடையவனாகத் தோன்றுகின்றிலன். “முகம் நோக்கி நிற்க அமையும், அகம் நோக்கி யுற்றது உணர்வார்ப் பெறின்” என்றார் திருவள்ளுவனார். அவ்வாறே, அவனைக் குறுகச் சென்று “முகம் நோக்கி நின்ற கண்ணகியார், தம் அகம் நோக்கி யுற்றதை யுணரும் உணர்வு வன்மை அவன்பால் இல்லாமை அறிகின்றார். அது குறித்தன்றோ, இளங்கோவடிகளும், கண்ணகி, “கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி ” என்று குறித்தருளினர். “குறிப்பால் முன்நிற்பார் அகம் நோக்கி உற்றது தேரும் செயல் நின்பால் இல்லையே,” என்பார், “தேரா மன்னா! செப்புவது உடையேன்” என்று தொடங்கி தன்நாட்டுச் சோழவேந்தர்தம் அரசியற் சிறப்பும் அருளாட்சியும் எடுத்தோதி, தன் வரலாறும் உடன் கூறுகின்றார். முதற்கண், தான்பிறந்த ஊர் புகார் நகரம் என்பார், கண்ணகியார், எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன், அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார் என்பதியே” (சிலப்.20:51-56) என்கின்றார். இதன்கண், தன்பால் புகலடைந்த புறா ஒரு புல்லிய பறவையென எள்ளி இகழாது, அதன் பொருட்டுச் சோழவேந்தரின் முன்னோர் உடம்பரிந்து தந்தும், ஆன் கன்றைக் கொன்றது குறித்து குலத்துப் பிறந்த அருமந்த மைந்தனைத் தேராழியிற் கிடத்தி மடித்தும் செங்கோன்மை புரிந்த திறத்தைச் சுருங்கிய சில சொற்களால் பாண்டி வேந்தன் உள்ளம் கொள்ளுமாறு உரைக்கின்றார். புறாவின் புன்மை கருதி எள்ளி யிகழாமையினை, “எள்ளறு சிறப்பின்” என்றும், உடல் கொடுத்த செயலருமையோர்ந்து தேவரும் வியந்த சிறப்பை, “இமையவர் வியப்ப” என்றும் சுட்டுகின்றார். கன்றை யிழந்து ஆ, தன் அகத்துற்ற குறையை வாய்விட்டுரைக்க மாட்டாது அரசன் முக நோக்கி நின்று கண்ணீர் சொரியக் கண்டதும், அச் சோழ வேந்தன், அதன் குறையுணர்ந்து, மணம் பெரிதும் வருந்தினன்; நீயோ, என் அகத்துற்றதை யுணராது, என் கண்ணீர் கண்டு சிறிதும் இரக்கமுறாது “நீர்வார் கண்ணை” என்கின்றாய் எனக் குறிப்பால் உரைப்பாராய், “ஆவின் கடை மணி யுகு நீர் நெஞ்சு சுட ” என்கின்றார். எனவே, தன்னாட்டு வேந்தர் சிறப்பைமிகுத்தோதிய தனால், கண்ணகியார்,“குறைவேண்டி வருவோர் எளியராயினும், அரியராயினும்,கேளிராயினும், பிறராயினும் அவர்தம் தகுதி நோக்காது செங்கோலின் செம்மையே நோக்கி ஒழுகினர் எங்கள் சோழ மன்னர்; நீயோ அது செய்யாது கொலை புரிந்தனை; எளியள், புதியள், இளையள் என்று என்னை இகழ்ந்து, ‘நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய்,’ என்றும், ‘யாரையோ நீ’ என்றும், ‘மடக்கொடி யோய்’ என்றும் வினவு முகத்தால், முறைவேண்டி நிற்கும் என் தகுதியே நோக்கு கின்றனை; புதியோளாகிய யான் கண்ணீர் விடுதற்கு நேர்ந்த குறையினை நோக்கு கின்றிலை ” என இடித்துக் கூறும் குறிப்புடையராதலை யறிகின்றோம். இனி, தன் தகுதியும் இது வென்பாராய், கண்ணகியார், “ ...................................................... அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்திங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே” (சிலப். 20:26-63) என மொழிகின்றார். இங்கே, முதற்கண் தன் தகுதி விளங்க, மாசாத்துவான் சிறப்பை, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்கின்றார். பெருங்குடி வாணிகன் மகனான கோவலன் புகாரி னின்றும் மதுரை மூதூர்க்கு வந்த காரணத்தை மிகச் சுருக்கமாக, “வாழ்தல் வேண்டி” யென்றும், “ஊழ்வினைதுரப்ப” என்றும் கூறி விளக்குபவர், தான் அரசவைக்குப் போந்தது குறித்து “என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பது என் பெயரே” என்று கூறிவிடுகின்றார். “கோவலன் கள்வனல்லன்; அவன் கொணர்ந்த சிலம்பு என்காற் சிலம்பு; அவன் செய்தது நின் நகரத்துட் புகுந்து என் காற்சிலம்பை விற்க முயன்றதே” என்பது தோன்ற, “நின்நகர்ப் புகுந்து ஈங்கு, என் காற்சிலம்பு பகர்தல் வேண்டிக்” கொலைக்களப்பட்டான் என்று குறிக்கின்றார். பாண்டி வேந்தற்கு இவற்றைக் கேட்டதும் நல்லறிவு விளங்கு கிறது. கண்ணகியாரின் கற்புச் சிறப்பும் கட்டுரை வன்மையும் அவன் கருத்தைக் கவற்றுகின்றன; சிறிது அச்சமும் உண்டாகிறது. ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, “ .......................... பெண்ணணங்கே, கள்வனைக் கோறல் கடுங் கோலன்று, வெள்வேற் கொற்றம் காண்” (சிலப்.20:63-65) என்று உரைக்கின்றான். தான் தீர ஆராயாது பொற்கொல்லன் சொற்கேட்டுக் கோவலன் கள்வனென்றே கருதியிருந்தானா தலின், கண்ணகியார் கோவலன் பெயர் கூறியதும், அவனைக் கோவலன் என்னாது கள்வன் என்றே சொல்கின்றான். ஆனால், அவன் சொற்கள், கோவலன் செய்தியை நன்கு ஆராய்ந்து முடிவு செய்தான் சொற்கள் போலவே இருந்தமையின், கண்ணகியார்க்கு ஆறாப் பெருஞ் சீற்றம் எழுகின்றது. கோவலன், கள்வனல்லன், என்பதைச் செஞ்ஞாயிற்றால் தீதறவுணர்ந்து தெளிந்திருக்கின்றாராகலின், வாய்மையின் பாற்படாத அவன் சொற்களை இகழ்ந்து, “ நல்திறம் படராக் கொற்கை வேந்தே, என்காற் பொற்சிலம்பு மணியுடை யரியே” (சிலப். 20:66-67) என்று சொல்லுகின்றார். அவன் சொற்கள் வேறு வகையில் இருந் திருப்பின், கோவலனைக் கள்வனெனத் துணிந்ததற்குக் கொண்ட ஏது எடுத்துக் காட்டுகளை வினவி வழக்கினை விரிய ஆராய்ந்திருப்பர். நன்னெறியால் ஆராய்ந்து முறை செய்தான் போல், “கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று” என்றும், அது “வெள்வேற் கொற்றம் காண்” என்றும் கூறுதலால், வேறு வகையால் தெருட்ட முயலாது, அவனது மனப் புன்மையை ‘நற்றிறம் படராவேந்தே’ எனக் கண்டித்து, வழக்கு முடிபிற்கு ஏதுவாகிய தன் சிலம்பின் உள்ளீடு மணியாதல் கூறி, அவன் சிலம்பின் உள்ளீட்டினை யுரைக்குமாறு அவன் எதிர்பாரா வகையில், “என்காற் பொற் சிலம்பு மணியுடை அரியே” என்கின்றார். என்றலும், அரசற்குச் சூழ்ச்சி பிறப்பதாயிற்று; தன்னைத் தானே ஆராய்கின்றான்; தான் ஆராயாது செய்தது அவன் நினை விற்கு வருகின்றது. கண்ணகியாரின் சொற்களில் உண்மை ஒளி விட்டுத் திகழ்கிறது. மெய்யைப் பொய் வெல்லுதல் இல்லை யன்றோ? முதற்கண் சொல்லில் தோல்வி யெய்துகின்றான். தான் நற்றிறம் படராது சென்றதை எடுத்தோதி, அந்நற்றிறத்தே நிற்கப் பண்ணும் கண்ணகியாரின் நாநலத்தை வியந்து, “ தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி; யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே” (சிலப்.20:68-69) என்று சொல்லி, அதனைத் தருவித்துக் கண்ணகியார் காண, அவர் முன் வைக்கின்றான். கண்ணகியார் அதனை விரைய எடுத்து உடைக்கின்றனர். அஃது உடைந்து விடவே, அதன் கண் இருந்த மணியரி துள்ளி மன்னவன் முகத்தில் தெறிக்கிறது. அது கண்டு அரசன் பேரவலம் கொள்கின்றான்; பெரிதும் வருந்தித் தலை குனிந்து மெய்சோர்ந்து அயர்ந்து வீழ்பவன், அரசியற் சுற்றத்தா ரோடு நன்கு ஆராயாது, பொற்கொல்லன் சொல்லொன்றே கொண்டொழிந்த தன் தவற்றினை நினைந்து, “ பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்” (சிலப்.20:74-75) என வாய்விட்டு அரற்றுகின்றான். அவன் குல முன்னோர் செங்கோல் கோடாத செம்மை வேந்தராதலின், தன் குலத்துக்குத் தன்னால் உண்டான குற்றம் அவன் நெஞ்சைச் சுடுகின்றது. மானம் பொறாது, “ மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்” (சிலப்.20-76-77) என்று சொல்லிக் கொண்டே மயங்கி வீழ்ந்து உயிர்விடுகின்றான். வழக்குரை முடிவில் அரசன் இறந்ததும், கோப்பெருந் தேவிக்கு உரியன கூற அவள் இறந்ததும் கண்ட பின்னும் கண்ணகி யார்க்குக் காய்சினம் தணிந்திலது; “ மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன். பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும்” (சிலப்.21:35-37) என்று மதுரை நகரைத் தீக்கிரையாக்குகின்றார். எரிக் கடவுள் போந்து, “என்னால் விலக்கற் குரியார் யாவர்?” என்று இரந்து கேட்க, கண்ணகியார், அறத்தாறு நுவலும் பூட்கை குன்றாது, “ பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க” (சிலப். 21: 33-35) என்கின்றார் இவ்வாறு, பாண்டிவேந்தன் இறந்ததும், அவன் தேவி உயிர் துறந்ததும் கண்ணகியார் கண் முன்னே நிகழ்ந்த போதும், மதுரை மாநகர் தீக்கிரை யாகியது கண்டபின்னும், கோவலன் கொலை யுண்டதும், அதுவே வாயிலாகத் தான் வருத்த முறுவதும் முன்னை வினைப்பயன் என்று அவர் துணிந்ததாகத் தோன்றவில்லை. அவர் கோவலனுடன் மதுரைக்கு வருங்கால், சீரங்கத்துக் கருகிலிருந்த பூம்பொழிலில், சாரணர் தோன்றி, கவுந்தியடிகளைப் பார்த்து, “ கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி, காணாய், ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை, இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி, ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா:” (சிலப்.10:70-73) என்பன முதலியவற்றால் வினையுணர்வு கொளுத்த, உடனிருந்து கேட்டிருக்கின்றார். மதுரைப் புறஞ் சேரியில் தங்கி யிருக்குங்கால், கோவலன் கண்ணகியாரைக் கவுந்திபால் அடைக்கலப்படுத்தித் தான் மட்டில் முதற்கண் மதுரை நகர்க்குச் செல்ல விடைபெறும் போது; அவன் வருத்தம் கண்ட கவுந்தியடிகள், கல்லாதவர், “ தீதுடை வெவ்வினை யுருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும் பேதுறுவர்; ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்” (சிலப். 14:31-34) என்று வினையியல்பை ஓதி, காதலியைக் காட்டில் இழந்து வருந்திய இராமன் கதை, காதலியைக் கானகத்திற் கைவிட்டு நீங்கிய நளன் கதைகளைக் கூறி, நளன் தமயந்தியை, “ இடையிருள் யாமத்து விட்டு நீக்கியது வல்வினை யன்றோ, மடந்தைதன் பிழையெனச் சொல்லலு முண்டேல் சொல்லாயோ, நீ” (சிலப்.14:55-57) என்று கூறியதையும் கண்ணகியார் கேட்டிருக்கின்றார். மேலும், கண்ணகியார் தான் கற்ற நூற்களின் வாயிலாகவும் வினையுணர்வு பெற்றிருக்கின்றார். இவ்வுணர்வு, அவர் அரசன் முன் வழக்குரைக்கு மிடத்தே, கோவலனும் தானும் மதுரைக்கு வரநேர்ந்த வகையினை யுரைத்தற்கண், “வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச், சூழ்கழல் மன்னா நின்நகர்ப் புகுந்து” என்று கூறுதலால், அவர் அறிவில் படிந்திருந்தமை தெரிகிறது. இவ்வுணர்வு, பாண்டி வேந்தனும் தேவியும் இறந்தது கண்டும், கண்ணகியாரின் மனத்தை யடக்கியதாகத் தோன்ற வில்லை. நகரைத் தீக்கடவுட்கு ஒப்படைத்த பின்பே அவர் சினத்தீயும் தணிகின்றது. கொலை குறித்தது கேட்டுக் குமுறி யெழுந்த அவர் சினத்தீ, வழக்குரைக்கு மிடத்து முறுகி நின்று, இறுதியில், அவரது இயற்கை யறிவையும் கல்விகேள்வி களினாலாகிய செயற்கை யறிவையும் மறைத்து விடுகிறது. அதனால், அவர் வேந்தனும் தேவியும் இறந்த பின்னரும் சினம் தணியாது, நகரைத் தீக்கிரை யாக்கிய பின்பே தணிகின்றார். அன்றியும், “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன், உண்மையறிவே மிகும்” (குறள்) என வள்ளுவனார் கூறியாங்கு, மதுரைநகர் தீக்கிரையாவது குறித்திருந்த ஊழ், அவர் சினத்தீ வாயிலாகப் புகுந்து தன்தொழிலை முற்று வித்துக் கொள்வதாயிற்று என்றும் கருதலாம். எனினும், இச்செயல் குற்றமாகவே மணி மேகலையாசிரியரால் குறிக்கப்படுகிறது. அடிகளோ இதைப்பற்றி ஒன்றும் குறித்திலர். கோவலன் கொலையுண்டது அவன் பழவினையென மதுராபதி யுரைப்பக் கேட்டபோதும் கண்ணகியார் இச்செயல் குறித்து வினைப்பயன் எனக் கூறிற்றிலர். மணிமேகலை புத்த பிக்குணியாகி, பல்வகைச் சமய தருமம் கேட்பாளாய், வஞ்சிமாநகர்க்குப் போந்து அங்கே கோயில் கொண்டிருந்த கண்ணகியாரை வணங்கி நிற்க, அவட்குக் கண்ணகியார் கடவுள் வடிவில் “ எம்மிறைக் குற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள் மதுராபதி யெனும் மாபெருந் தெய்வம் இதுநீர் முன்செய் வினையின் பயனால்;” *** உம்மை வினைவந் துருத்தல் ஒழியாதெனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன், மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்; அவ்வினை யிறுதியில் அடுசினப் பாவம் எவ்வகை யானும் எய்துத லொழியாது” (மணி 26: 11-37) என்று உரைப்பதாக மணிமேகலை யாசிரியர் கூறுகின்றார். வீரபத்தினியாகிய நம் கண்ணகியார் பின்பு மதுரா பதியால் பழம் பிறப்புணர்ந்து, செங்கோடு அடைந்து, தன்னைக் கண்டு வினவிய வேட்டுவர்க்கு, “மண மதுரையோடு அரசு கேடுற, வல்வினை வந்து உருத்த காலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன், யான்” என்று கூறிவிட்டு, தம்பால் வந்த வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வதால் தோன்றும் நலம் பலவும் இனி விரிக்கில் மிகப் பெருகும். கண்ணகியார் வஞ்சிநாடு சென்று ஆங்கு நின்று விண் ணுலகு சென்றதனோடு அவர் வரலாறு ஒருவாறு முடிவடைகின்ற தெனினும், அவர் அவ்வஞ்சி நாடு சென்ற பயன், தமிழ் மன்னர் தம் பெருந் தன்மையும் வெற்றிச்சிறப்பும் உலகு இனிது அறிந்தும் மகிழ்தற்கு ஏதுவாகின்றது. வேட்டுவராலும், சாத்தனாராலும், அவர் வரலாறு அறிந்த செங்குட்டுவன், உரைசால் பத்தினியை உயர்ந் தோர் ஏத்தல் கடன் எனத் தேர்ந்து கோயிலெடுத்துக் கண்ணகி யாரைக் கடவுட் படுத்தக் கருதி, கல் கொணர வடநாடு செல்வதும், தமிழ்வேந்தரை இகழ்ந்துரைத்து வடவாரியரைவென்று புறங் காண்பதும், இவர்களைப் பிணித்துக் கொணர்ந்து ஏனைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி அவர் தம் அரசியல் உணர்வு அமைதிகளை விளக்குவதும் பிறவும் இலங்கை வேந்தனான கயவாகு மன்னன் முதலியோர் தமிழ்ப் பெரும் பத்தினியான கண்ணகியாரைக் கடவுள் வடிவில் வைத்துப் பரவுவதும் எல்லாம் கண்ணகியாரின் கற்பு மாண்பின் விளைவாதலை யறிகின்றோம். கண்ணகியார் தமக்கு நேர்ந்த துன்பத்துக் கேதுவாகிய பாண்டி வேந்தன் செயல், தமிழ் நாட்டிற்கே நேர்ந்த பழியாகக் கருதி, அதனை வழக்குரைத்து அவனையும் உணர்வித்து, தமிழ் மகளின் கற்பு மாண்பை நகரைத் தீப்படுத்து நிலைநாட்டி என்றும் பொன்றாத இறைமைநிலை யெய்தியது எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது பயப்ப தொன்றாம். 6. மாதவி: காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகை யருள் சித்திராபதியென்பாட்கு மகள் இம் மாதவி, இவள், ஆடல், பாடல், அழகு என்ற இவற்றுள் ஒன்றிலும் சிறிதும் குறைபாடு இல்லாதவள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வரையில் ஆடலும் பாடலும் அறிவுமிகு கல்வியும் நன்கு பயின்றவள். திருந்திய அறிவும் பொருந்திய கல்வியும் விரிந்த மணமும் உடையவள். கரிகாற் பெரு வளத்தான் முன் ஏற்படுத்திய நாடக அரங்கில், இளங்கோவடிகள், இவளை நமக்குக் காட்டுகின்றார். அங்கே, “ பொன்னியல் பூங்கொடி புரிந்துடன்வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்” (சிலப்.3:157-158) காண்கின்ற நம் மனம் மகிழத் தன் நாடக நூற்புலமையை நன்கு காட்டுகின்றாள். மாதவி கோவலனுடைய தொடர்பு பெற்று, அவன் பால் சிறந்த காதல் கொண்டு ஒழுகுகின்றாள். இதனை, அடிகள், “ நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துத் கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்ககு எதிரிக் கோலங் கொண்ட மாதவி” (சிலப்.4:31-34) என்கின்றதனால் அறிகின்றோம். இவளோடு கூடியிருக்குங்கால் கோவலன் இன்புற்ற திறம் “ காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு” *** காமக் களிமகிழ் வெய்திக் காமர் பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து *** பூமலி கானத்துப் புதுமணம் புக்கு, புகையும் சாந்தும் புலராது சிறந்து, நகையா டாயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபின் கோவலன்” (சிலப்.5:189 - 20) என்பதனால் இனிது விளங்குகிறது. இந்திரவிழாவில் இம் மாதவி அரங்கேறி, திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பல வகைத் தேவபாணி பாடி, பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலாகவுள்ள பதினொரு வகைக்கூத்தும் ஆடி மக்களைக் களிப்பிக் கின்றாள். அவளுடைய பாடலும் ஆடலும் அழகும் மக்கள் மனத்தை இன்புறுத்தக் கண்டு கோவலன் “ஊடற்கோலம்” உறு கின்றான். இங்கேதான், அவன் மாதவியைப் பிரிதற்குத் தோற்று வாயாகிய மனப் பிளவு தோன்றுகின்றது. இதனை மாதவி தெளிய உணராது, வாளாது கூடற்குரிய ஊடலென்றே கருதி யொழிகின்றாள். அவனுவக்கு மாறு தனது கூந்தல் முதல் சீறடி ஈறாகப் பலவகையுறுப்பும் அழகு திகழப் புனைந்து கொள்ளுகிறாள். இக்கோலம் கொண்டது அவன் உவக்குமாறே யன்றித் தன்னைக் காண்பார் மகிழுமாறு அன்று என்பதை அடிகள், “ஊடற் கோல மொடு இருந்தோன் உவப்ப” (கடலாடு. 75) என்றும், “கூடலும் ஊடலும் கோவலற் களித்துப், பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்” (கடலாடு. 109-110) என்றும் நன்கு வற்புறுத்துவதனால், இம்மாதவி, நாடக மகளாயினும் குலமகட்குரிய கற்பும் பொற்பும் உடையளாய் இருந்தமை தெளிய விளங்குகிறது. கடற்கானற்குச் செல்லும் போதும் இம் மாதவி, கோவலனுடன் ஒரே ஊர்தியிற் செல்லாது, அவன் ஒரு கோவேறு கழுதைமே லிவர்ந்து வர, தானோர் வைய மேறிச் செல்லுகின்றாள். மாதவி கடற்கானற் சோலையில் இருந்தபோது, தொடக்கத்தே தன் கையிலிருந்த யாழை அவன்பால் தந்து அதனை இசைத்துப் பாடுமாறு வேண்ட, அவனே குறிப்பு வேறுடைய பாட்டுக்களை முதற்கண் பாடலுறுகின்றான். இவற்றைக் கேட்ட மாதவி, இசை யின்பத்தோடு பொருள் நலமும் தேர்ந்து, “இவன் மனத்தே வேறு குறிப்பு உளது போலத் தோன்றுகிறது; அவ்வாறு இருத்தற்கு இடமில்லை; இவன் தன்நிலை மயங்கினான்” என்று உட்கொண்டு “கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் கை வாங்கித், தானும் ஒரு குறிப்பினள் போல்” பாடுகின்றாள். இப் பாட்டுக் குறிப்பை நன்கு ஆராய்ந்து காண்டதற்குரிய கோவலன் அதனைச் செய்யாதது அவன் குற்றமே. குறிப்பு வேறு உண்மை கண்டதும், அவன் உள்ளத்தே பொறாமை குடி கொண்டுவிடுகிறது; அறிவு மழுங்கிவிடுகிறது; வெகுளி எழுகின்றது. “கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்” என்று நினைக்கின்றான். நினைத்தவன் சிறி தேனும் அங்கே இருந்தானோ எனின் இல்லை; உண்மையிலே அப்போது பொழுதும்நெடிது கழிந்தது. “பொழுது கழிந்தது; வருக செல்வோம்” என்றேனும் கூறி, அவளுடன் புறப்பட்டுத்தான் வேண்டுமாயின் தனித்தேகி யிருக்கலா மன்றோ? அஃதன்றோ ஆடவர்க்குப் பண்பு. சட்டிசுட்டது, கைவிட்டது என்பது போல, குறிப்பு வேறுபாடுகண்டதும், “பொழுது ஈங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்று உடனெழாது” சட்டெனத் தனக்குரிய ஏவலர் சூழ்வரத் தான் பிரிந்து ஏகிவிடுகின்றான். மாதவி உண்மை விளங் காளாய்க் கையற்று மனம் வருந்தித் தன் மனையை அடைகின்றாள். இதற்குக் காரணம் ஊழ்வினை என்கிறார் இளங்கோவடிகள். இதனால், கோவலன் பிரிவுக்கு மாதவி ஏதும் பிழை செய்திலள் என்பது பெறப்படுகிறது. பின்பு, அவள் கோவலன் பிரிவாற்றாது வருந்தி அவற்குத் தன் தோழி வயந்தமாலை வாயிலாகத் திருமுகம் விடுப்ப, அதனையும் அவன் மறுத்து விடுகிறான்; அவளோ மனம் வெறாது, “மாலை வாராராயினும், காலை காண்குவம்” என்று எண்ணிக் கையற்று இருந்தொழிகின்றாள். கோவலன் புகார் நகரின் நீங்கித் தன் மனைவியுடன் வேற்று நாட்டிற்குச் சென்றொழிந்தது அறிந்து கோசிகமாணி என்பான்பால் ஓலையொன்று விடுக்கின்றாள். அதனைக் கண்டபின்பே கோவலன், “அவள் எழுதிய இசைமொழியுணர்ந்து தன் தீதிலள்” எனத் தளர்ச்சி நீங்குகின்றான். முடிவில் கோவலன் கொலையுண்டது கேள்வியுற்றுப் புத்தமாதவர்பால் அறம் கேட்டுப் புத்தபிக்குணியாய் விடுகின்றாள். இவ்வரலாற்றால், அவள் முடிவு காறும் கோவலனை யன்றிப் பிற ஆடவரைக் கருதாத பெருங் கற்புடையவளாய் விளங்கினதை அறிகின்றோம். இதனை யறியாது, இக் கால நாடகமாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்பு முடைய “மாதகி” யாக்கி நடித்துத் திரிகின்றனர். 7. கவுந்தியடிகள்:- இவர் சமணசமயத் துறவிகளில் பெண்பாலருள் ஒருவராவர். இவர் சோழ நாட்டில் புகார் நகர்க்கு மேற்கில் ஒரு காவதத் தொலைவில் பள்ளியமைத்து அறம் புரிந்து வருகையில், தன்பால் வந்த கோவலனையும் கண்ணகியையும் காண்கின்றார். அவர்களைக் கண்டதும், “உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்” என்று வினவுவது இவரது நல்லொழுக்கத்தைப் புலப்படுக்கின்றது. மேலும், இவர் கோவலனை நோக்கிக் கண்ணகியின் மென்மைத் தன்மையை விதந்தோதி மதுரைக் கேகுதலை ஒழிக என விலக்கு கின்றார்; அவன் அதனைக் கேளாதொழியவே, தானும் மதுரைக்கு அவருடன் வர இசைகின்றார். வழிகாட்டிச் செல்லுமிடத்து முதற்கண் அவர் மனத்தே கண்ணகியின் அருமையும் மென்மையும் முன்னின்று வருத்தவே, அக்கண்ணகிக்கு அவலம் செய்வனவற்றையே எடுத்தோதி விலக்கிச் செல்கின்றார். ஏனையுயிர்கள்பால் அவர் கொண்டிருந்த அருள் நிலை மிகப் பெரிது. “ குறுநர் இட்ட குவளையம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்” (சிலப்.10:86-89) என்றும், “ எறிநீ ரடைகரை இயக்கந் தன்னில் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா” (சிலப்.10:10-13) என்றும் கூறுவன அவரது அருளறத்தின் இயல்பை நன்கு தெரிவிக்கின்றன. சாரணர் தோன்றி அக் கவுந்தியடிகளை நோக்கி, “ கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி, காணாய், ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை, இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி, ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா கடுங்கான் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை யுயிர்கள்” (சிலப்.10:170-175) என்று ஓதி அருகனுடைய பல மாண்புகளையும் எடுத்துரைக் கின்றனர். அவற்றைக் கேட்டதும் கவுந்தியடிகள் கூறுவன வற்றால் அவர் தம் சமய மெய்ப்பொருள்பால் கொண்டிருந்த திண்ணிய பற்று விளங்குகிறது. அவர், “ ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா; காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாம மல்லது நவிலாது என்நா; ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண்; அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதுஎன் பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது; அருகர் அறவன் அறிவோர்க் கல்லதென் இருகையும் கூடி ஒருவழிக் குவியா; மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதுஎன் தலைமிசை யுச்சி தான்அணிப் பொறாஅது; இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது மறுதர ஓதிஎன் மனம்புடை பெயராது;” (சிலப்.10: 104 -217) என்பது அதற்குத் தக்க சான்றாவதாம். வழியில் வந்து இகழ் வுரை வழங்கிய வம்பப் பரத்தையரைக் குறுநரியாகுக எனச் சபித்ததும், பிறகு சாபவிடை வழங்கியதும் அவருடைய ஆற்றலுக்குத் தக்க சான்றாகின்றன. மாடலன் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான் பிலத்தின் பெற்றியினைக் கூற, கவுந்தியடிகள், ‘நலம்புரி கொள்கை நான்மறையாள, பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை’ என்று மறுத்து, “ வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள் காமுறு தெய்வம் கண்டடி பணிய நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்” (சிலப். 11: 158-161) என்று மொழியும் திறம் அவரது விழைவின்மையைக் காட்டுகின்றது. தன்பால் கண்ணகியை விடுத்துத் தான் தனியே மதுரை மூதூர்க்குச் சென்று வரவேண்டுமென்று கூறி வருந்திய கோவலனுக்கு அவர் மனைத்தொடர்பின் துன்பமும் இராமன் நளன் முதியோர் வரலாறும் கூறி, தெருட்டுவது அவரது துறவு நெறியும் அறிவின் ஒட்பமும் நன்கு உணரக் காட்டுகின்றது. அவர் கண்ணகியை மாதரியென்னும் ஆய்ச்சிபால் அடைக் கலப்படுத்துமிடத்துக் கூறுவன மிக்க இன்பந்தரு வனவாகும். கண்ணகியைப் பேணுமாறு இது என்பார்போல், கவுந்தியடிகள் மாதரியை நோக்கி. “ மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி, “ தே மென் கூந்தல் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே யாகித் தாங்கு” (சிலப். 15:131-136) என்றும், கண்ணகியின் கற்புப் பெருமையைக் குறித்து, “ இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்; வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ” (சிலப். 15:142-148) என்றும், துறவியாகிய தான் தரும் அடைக்கலத்தைத் தாங்கின் வரும் பயன் குறிப்பாராய், “ தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினுங் மிகப்பேரின்பம் தருவது கேளாய்” (சிலப். 15:149-150) என்றும் கூறுகின்றார். இவ் வண்ணம் கண்ணகிபால் பேரன்பு செலுத்திய கவுந்தி யடிகள், கோவலன் கொலையுண்டதும் பிறவும் கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்பதிப் பெயர்க்கின்றனர். இவ்வாறே பிறர் ஒவ்வொருவருடைய குணம் செயல்களையும் தனித்தனியே காணலுறின், வரம்பின்றிப் பெருகு மாதலின், இம்மட்டில் நிறுத்தி, இவ்விலக்கியத்துள் காட்டப்படும் வரலாறுகள் சில காண்பாம். X. வரலாறுகள்:- இதன்கண் சோழவேந்தர் மரபில் தூங் கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், முசுகுந்தன், மனுவேந்தன், கரிகால்வளவன் முதலியோர் செய்த சிறப்புடைச் செய்திகள் குறிக்கப்படுகின்றன. பாண்டிவேந்தருள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தியும், இந்திரன் சென்னியில் வளையுடைத்தவன், கடலில் வடிவேலெறிதலும், இந்திரன் ஆரத்தைத் தான் பூண்டு கோடலும், மேகத்தைச் சிறை செய்தலுமாகிய செய்திகளும், பாண்டியன் கைகுறைத்துக் கோடலும் பிறவும் காணப்படுகின்றன. சேரவேந்தர் இமயத்தில் விற்பொறித்ததும், கடலில் கடம்பரை யெறிந்ததும், நேரிவாயில் என்னுமிடத்து எதிர்த்த வேந்தர் ஒன்பதின்மரை வென்றதும், முடிவேந்தர் எழுவரை வென்று, அம் முடிப் பொன்னும் மணியும் கொண்டு ஆர மொன்று செய்து சேரவேந்தர் வழிவழியாக மார்பிற் பூண்டொழுகியதும், ஆரிய மன்னரையும் பிறரையும் வென்றதும் பிறவும் விரியக் கூறப்படுகின்றன. இவையேயன்றி, இறைவன் மூவெயில் முருக்கியதும், முருகனைப் பயந்ததும், முருகன் சரவணத்தே அறுவர் பாலுண்டு வளர்ந்ததும், அவுணரை வென்றதும், வள்ளியை வேட்டதும், திருமால் வைய மளந்ததும், நரசிங்கமானதும், இராமன் சீதையை இழந்து வருந்தியதும், இராவணனை வென்றதும், கஞ்சனைக் கண்ணன் கொன்றதும், பஞ்ச வர்க்குத் தூது சென்றதும், இந்திரன் மலைகளின் சிறகை யறிந்ததும், அவன் மகன் சயந்தன் என்பான் அகத்திய முனிவனால் சாபமுற்று மூங்கிலானதும், நளன் கதையும், பிறவும் ஏற்றவிடத்து எடுத்துக்காட்டப்படுகின்றன. இவற்றோடு இடையிடையே துறவிகட்குத் தானம் செய் வோர் பெறும் பேறும், கள்வர் தொழில் வன்மையும் கற்புடைய மங்கையர் சிறப்பும் பிறவும் விளங்கும் வரலாறுகள் பல ஓதப்படு கின்றன. கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்தி முதலியோர் பிறப்பு வரலாறும், பழம் பிறப்பும் சுட்டப்படுகின்றன. XI. பேரூர் சிற்றூர்களின் நலங்கள்: இந்நூற்கண் ஆசிரியர் இளங்கோவடிகளால் காவிரிப்பூம்பட்டினம், மதுரை, உறையூர், வஞ்சி முதலிய பேரூர்களும் வேறு சில சிற்றூர்களும் ஓதப் பெறுகின்றன. இவற்றுள், காவிரிப்பூம் பட்டினம், மதுரை என்ற இரண்டுமே நன்கு விரியக் கூறப்படுகின்றன. ஏனைய சிறிதே குறிக்கப்பெறுகின்றன. இவற்றை இந்நூலிற் காணும் முறையிலே காண்பாம். 1. காவிரிப்பூம்பட்டினம்: இதனைப் புகார் என்றும் கூறுவர். இது சோழநாட்டின் தலைநகரம்; காவிரியாறு கடலொடு கலக்கு மிடத்தே இருப்பது. சிலப்பதிகாரக் காலத்தே இங்கே கரிகாற் சோழன் இருந்து வருகின்றான். இது மருவூர்ப்பாக்கம், பட்டினப் பாக்கம் என்ற இரு பெரும் பிரிவாகவுள்ளது. பட்டினப் பாக்கத்தில், அரசர், வணிகர், மறையவர், வேளாளர் முதலியோர் பெருந் தெருக்களும்; ஆயுள்வேதர், நாழிகைக் கணக்கர் முதலியோர் வீதிகளும்; முத்து, மணி முதலியவற்றால் மாலை தொடுப்போர், சங்கு, பவளம் முதலியவற்றை யறுத்துக் கடைவோர் முதலியோர் வாழும் வீதிகளும்; சூதர், மாகதர், வேதாளிகர், நாடகக் கணிகையர் முதலியோர் தெருக்களும்; பல்வகை இசைக் கருவியாளர், வேழம்பர் முதலியோரும், தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைவீரர், படை வீரர் முதலியோரும் வாழும் தெருக்களும் இருக்கின்றன. மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கத்திற்குத் கிழக்கில் இருக்கிறது. இங்கே, நகர வீதியும், அருங்கலமறுகும், கூலவீதியும், பிட்டு அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலை, நறுவிரை (Spices) முதலியவற்றை விற்போர் வீதியும் இருக்கின்றன. மேலும், “ கஞ்ச காரரும் செம்பு செய்குநரும் மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும்” (சிலப். 5: 28-32) கிழியினும் கிடையினும் சித்திரவேலை செய்து விற்பவரும், இசைப்பாணரும் பிறரும் வாழும் வீதிகள் வேறே யுள்ளன. நகர வீதியில் வேயா மாடம், பண்டசாலை, மான்கட் காலதர் மாளிகை (Palatial buildings with appropriate ventilators.) மிக்க நயமான வேலைப்பாடமைந்த யவனர் பெருமனைகளும், கடலிற் கலம் செலுத்தி வாணிகம் செய்யும் வணிகர் பெரு மனை மாடங்களும் அமைந்திருக்கின்றன. இவ்வீதிகளில், வண்ணமும் சுண்ணமும் சந்தனமும் பூவும் பிற விரைப் பொருள்களும் விற்போர் தொகை மிகுந்திருக்கும்.காருகர் வீதியில், பட்டு, எலிமயிர், பருத்தி என்ற இவற்றால் மிக நேர்த்தியான உடைகள் நெய்யப்படுகின்றன. அருங்கல வீதியில் உயரிய துணிமணிகளும், பவழம், முத்து, பல்வகை மணிகள், பொன் முதலியனவும், அகில், சந்தனம் முதலிய விரைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. கூலவீதியில் நெல், வரகு, சாமை முதலியன விலையாகின்றன. இப்பகுதி கடற்கரை யாதலின், இரவுக் காலத்தில் கானற் சோலையில், “ வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும், செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும், காழியர் மோதகத்து ஊழுறு விளக்கமும், கூவியர் காரகல் குடக்கால் விளக்கமும், நொடைநவில் மகடூஉக் கடைக்கெழு விளக்கமும், இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும், இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும், விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும், மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும், கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும் எண்ணு வரம்பறியா இயைந்தொருங் கீண்டிக்” (சிலப்.6:134-145) காண்பார் கண்கட்கு நல்விருந்து செய்கின்றன. அவ்விட த்தே, “ நிரைநிரை யெடுத்த புரைதீர் காட்சிய மலைப்பல் தாரமும் கடற்பல் தாரமும் வளம் தலைமயங்கிய துளங்குகல இருக்கை” (சிலப்.6:152-154) இனிய காட்சி வழங்குகிறது. இவ்விரு பாக்கங்கட்கும் இடையே பரந்த பெரும் பொழில் ஒன்று உளது. இதன்கண் வானளாவ உயர்ந்த மரங்கள் நிற்கின்றன. அவற்றின் அடியில் பந்தரிட்டு வணிகர் பலர் கடை வைத்து வாணிகம் செய்கின்றனர். இது நாளங்காடி எனப்படும். இவ்விடம், “கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்” மிகுந்து, இரண்டு பெருவேந்தர்தம் பொரு படையின் முனைபோலத் தோன்றும். மேலும், இந்நாளங்காடியில், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என ஐவகை மன்றங்கள் உள்ளன. காவற்பூதத்துப் பலிபீடிகையும், உயிர்ப் பலி வழங்கும் முழுப்பலி பீடிகையும் இவ்விடத்தே இருக்கின்றன. கரிகால் வளவன் வடநாடு சென்று இமயத்தில் புலி பொறித்து வருங்கால், அவற்கு வடவேந்தர் நிருமித்த மண்டப வகைகளும் இந் நாளங்காடியில் இருக்கின்றன. அவை, “ மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்” பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின, துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங்கு உயர்ந்தோ ரேத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்” (சிலப். 5:99-110) என ஆசிரியர் இளங்கோவடிகளால் விரியக் கூறப்படுகின்றன. இனி, இக் காவிரிப்பூம்பட்டினத்தில் மேற்கூறிய வீதிகளும், மண்டபங்களும், மன்றங்களுமேயன்றிப் பல்வகைக் கோட்டங்களும் கோயில்களும், குளங்களும் உள்ளன. கோட்டங்கள், வச்சிரக் கோட்டம், செங்கதிரோன் கோட்டம், நிலாக் கோட்டம், மாசாத் தன் கோட்டம், நிக்கந்தக் கோட்டம் முதலாகப் பல உள்ளன. கோயில்கள், “ பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், வால்விளை மேனி வாலியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், மாலைவெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலப்.5:169-173) எனப் பல காணப்படுகின்றன. இந் நகரத்தைச் சூழ்ந்து பெரிய மதிலொன்றுளது. அதற்கு மேற்கில் ஒரு பெரிய வாயில் உண்டு. அதனை “உலக விடைகழி” யென்பர். அதற்கும் அகநகர் மதில்வாயிற்கும் இடையே மணி வண்ணன் கோயில் உளது. அதனை வலங் கொண்டு சென்று, உலக விடைகழி நீங்கி, சிறிது தொலைவு சென்றால், இலவந்திகைப் பொழிலைக் காணலாம். இதனை அடிகள், “ கலையிலாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற் கிறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகை” (சிலப். 10:20-23) என்று புகலுகின்றார். இதற்கு ஓர் நல்ல எயில் உளது. இதனைச் சுற்றிக்கொண்டே, மேற்கு நோக்கிச் செல்லும் பெருவழி காவிரியின் வடகரையைச் சார்ந்து போகின்றது. 2. மதுரை: கேரவலன் ஒரு காவத தூரம் கண்ணகி யாருடன் சென்று, அதற்குமேல், மதுரை மூதூர் முப்பது காத தூரத்தில் இருப்பதாகக் கூறுகின்றான். இது பாண்டி நாட்டின் தலைநகரம் என்பது உலகறிந்த செய்தி. இதனைக் கவுந்தியடிகள், “தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” (10-58) என்று பாராட்டுகின்றனர். இதற்கு வடக்கே வையையாறு ஓடு கின்றது. இவ்யாற்றை அடிகள், “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை யென்ற பொய்யாக் குலக்கொடி” (13:169-170) என்பர். வடக்கண் இருந்து, இம் மூதூர்க்குச் செல்வோர் இதனைக் கடந்துதான் நகரையடைய வேண்டும். இது மிக்க நீர்ப்பெருக்கினை யுடைய தாகலின், இதனை நாவாய் ஏறியே கடக்கின்றனர். அதற்காக, “ பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும், அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கில்” (சிலப்.13:176-178) இருந்த வண்ணம் இருக்கின்றன. இப் பெருந்துறைக்குச் செல்லும் வழியில் சிறிது தூரத்தே சிறு காவற்காடு தோன்றும். அதனைச் சார்ந்து ஆழ்ந்த அகழியுளது. அதன் மருங்கில் சிறிது சுற்றிச் சென்றால் மதுரை மூதூரின் புறஞ்சேரி காணப்படும். அது, “புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கழுகும் வேய்த்திரட் பந்தரும் விளங்கிய இருக்கை” (சிலப். 13:191-194) யாகும். அவ்விடத்தே அறம்புரியும் மாந்தரன்றிப் பிறர் எவரும் சென்று தங்குவது இல்லை. இந் நகர்க்குட் செல்லும் கோவலனைப் பின்பற்றியே நாம் செல்ல வேண்டும்; புகார் நகரம் போல, இந்நகரம் அடிகளால் குறிக்கப்படவில்லை. புறஞ்சேரியிலிருந்து இம்மா நகர்க்குட் செல்லச் சுருங்கை வழி (Tunnel) யொன்றுளது. அது பெயரளவில் சுருங்கையாயினும், பெருங்களிற்றினம் தம் நிரை குலையாது இனிது செல்லற்கேற்ப உயரமும் அகலமும் வாய்ந் திருக்கிறது. அதன் முடிவில் நகரின் மதில் வாயில் இருக்கிறது. அங்கே வாளேந்திய யவன வீரர் காவல் புரிகின்றனர். செல் வோர் அவ்வீரர் கண்டு ஐயுறாவகையில் செல்ல வேண்டும்; சிறிது அயிர்ப்புண்டாயினும் செல்வோரை அவர் உள்ளே புகவிடார். வாயிலை யடுத்தே பெருஞ் செல்வம் மலிந்த பெரு வீதிகள் காணப்படுகின்றன. நக்கீரனாரும், “பொருநர்த் தேய்த்த போரறு வாயில், திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து, மாடமலி மறுகின் கூடல்” (முருகு) என்றே கூறியுள்ளார். அவ்வீதிகளும், அரசர் வீதியும், கலைமுழுதும், வல்ல கணிகையர் வீதியும், பீடிகை வீதியும், அங்காடி வீதியும் மணி வகைகளை ஆராய்ந்து காணும் வண்ணக்கர் வீதியும், பொன் வகை தெரியும் பொற்கடை வீதியும், அறுவை வீதியும், கூலவீதியு மெனப் பலதிறப்படு கின்றன. வண்ணக்கர் வீதியில் மணிவகை பலவற்றினும் காணப்படும் குற்றமும் குணமும் நன்கு ஆராயப் பெறுகின்றன. பொற்கடை வீதி நால்வகைப் பொன்னின் மாற்றும் வகையும் மதிக்கப்படுகின்றன. அறுவை வீதிகள், “ நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும், பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதி” (சிலப்.14:205-207) என்றும் கூல வீதிகள், “ நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர் அம்பண வளவையர் எங்கணும் திரிதரக் கால மன்றியும் கருங்கறி மூடையொடு கூலம் குவித்த கூல வீதி” என்றும் சிறப்பிக்கப் பெறுகின்றன. அங்காடி வீதியில் பல வகைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. அரசர் முதலா யினார்க்கு வேண்டும் வையமும் தேரும் வண்டியும், போர்க்கு வேண்டும் படைக் கருவிகளும் இங்கே செய்யப்படுகின்றன. பலவகை ஓவியக்காரர் தம் தொழிலை நடத்துகின்றனர். செம்பு, வெண்கலம் முதலியவற்றாலும் நார், மாலை முதலிய வற்றாலும் பிறவற்றாலும் பல தொழில்கள் நடக்கின்றன. “ செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும் வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும் புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்” இவ்வங்காடி வீதியில் காணப்படுகின்றன. இவ்வீதிகளே யன்றி, மன்றமும், கவலை யும், மறுகும் எனப் பலப்பல வீதிகளும் செறிந் திருக்கின்றன. இந்நகரின் மதிலிடத்தே பலவகைப் பொறிகள் இருக்கின்றன. அவற்றை அடிகள், “..... வளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்” (சிலப்.15:207-216) என்று ஒதுகின்றார். இதன் கண் வரும் கல்லுமிழ் கவண் என்பது, ஆர்க்கிமிடீஸ் (Archemedis) என்னும் யவனப் புலவன் தன்னாட்டு வேந்தற்குச் செய்துதந்த கல்லுமிழ் கவண் என்ற பொறியாக இருக்குமோ என்று நினைத்தற்கு இட முண்டாகிறது. இப்பொறிகளின் அமைப்பும், உருவமும், ஆராய்ந்து காணப்படின், உண்மை புலனாகும். 3. சீரங்கம். இது காவிரி யாற்றின் இடைக்குறை, இங்கே பல்வகை மரங்கள் செறிந்த பொழில் உளது. சாரணர் இருந்து தருமம் சாற்றும் சிலாதலம் ஒன்று காணப்படுகிறது. இதன்மேல் .இருந்து தான், காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய சாரணர், இங்கேயும் தோன்றிக் கவுந்தியடிகட்கு அறம் கூறுகின்றனர். இங்கே திருமால் எழுந்தருளியிருக்கும் கோலத்தை, மாடலன் கூற்றாக அடிகள், “ நீல மேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணம்” (சிலப்.11:35-40) என்று பாராட்டுகின்றார். கவுந்தியடிகள் இத்திருப்பதி வழியாக வந்தாராயினும், திருவமர் மார்பன் கிடந்த வண்ணத்தைத் தாமும் காணவில்லை; கோவலன் கண்ணகி என்ற இருவரையாதல் காணுமாறு செய்தாரில்லை. காண்டற்கு விரும்பிச் செல்வதாக மாடலன் கூறக்கேட்ட இக்கவுந்தி யடிகள், “ வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள்? காமுறு தெய்வம் கண்டபடி பணிய நீ போ” (சிலப்.11:158-161) என்று கூறுவதை நோக்கின், அவர்க்குச் சீரகத்துத் திருமாலைக் காண்பதில் விருப்பமில்லை யென்பது தெரிகின்றது. 4. உறையூர்: இது கோழியூர் என்றும் வாரணம் என்றும் கூறப்படுகிறது. இந் நகரை, ஆசிரியர் இளங்கோ வடிகள், “முறஞ் செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்” (10:247-8) என்கின்றார். அரும்பதவுரைகாரர், “யானையைக் கோழி முருக்கலால் கோழியென்று பெயராயிற்று. யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி அவ்விடத்து அதன் பெயராலே, சோழன் ஊர் காண்கின்ற பொழுது, சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால், புறம்பே சிறையையுடைய கோழி (புறஞ் சிறை வாரணம்) என்றாயிற்று” என்றார், அடியார்க்கு நல்லார், அரும்பத வுரைகாரரை மறுத்து, “வாரணம் - கோழி; ஆவது உறையூர். முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் தொலைத்தலால் அந்நிலத்திற் செய்த நகர்க்குக் கோழி யென்பது பெயராயிற்று. அந் நகர் காண்கின்றபொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால், புறம்பே சிறையையுடைய கோழி யென்றாயிற் றென்பாரு முளர். அற்றன்று, புறஞ்சிறை வாரணமென்பது சிலேடை; புறத்தே சிறையையுடைய கோழியும், புறஞ் சேரியை யுடைய உறையூரும். ‘புறஞ்சிறைப் பொழிலும் என்ப மேலும்’” (14:1) என்று உரைத்தார். புறஞ்சிறை - புறஞ்சேரி. இவ்வூர், சங்க காலத்திருந்தே சோழ மன்னர்க்குத் தலை நகராக இருந்திருக்கிறது. அடிகள் காலத்தும், இவ்வூரிடத்தே சோழன் பெருங்கிள்ளி யென்பான் இருந்து ஆட்சி புரிந்திருக் கின்றான். இவண் கண்ணகியார் விண்ணுலகு புக்க பின், “எத்திறத் தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும் என நங்கைக்கு (கண்ணகிக்குப்) பத்தினிக் கோட்டம்” எடுத்து நாளும் வழிபாடும் நிகழுமாறு அமைக்கின்றான். இவ்வுறையூரைச் சுற்றி அழகிய மதிலும் கிடங்கும் உண்டு. அவற்றை யடுத்துக்காவற்காடும், காட்டிற்கும் கிடங்கிற்கும் இடையே புறஞ்சேரியும், பூம்பொழில் பலவும் உள்ளன. கண்ணகி யாரும் கோவலனும் தம்முடன் வரக் கவுந்தியடிகள் வந்தபோது, தம் எதிரே போந்து இகழ்ந்துரையாடிய வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் குறுநரியாகி, பன்னிருதிங்கள் இக்காவற் காட்டிடத்தே வாழ்ந்து துயருற்று முடிவில் பழவடிவு எய்துக என்று உரைக்கின்றார். இவ்வூரில் நிக்கந்தக் கோட்டம் ஒன்றுள்ளது. அதன் கண் அசோகின் நீழலில் முக்குடைக் கீழ் அருக பரமேட்டி வீற்றிருக் கின்றார். அவ்விடத்தே சாவகர் பலர் வாழ்கின்றனர். கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியுடன் சென்று, “கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த, ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி,” சீகந்தப் பள்ளியை யடைகின்றார். அவரைச் சாவகர் பலர் வந்து வரவேற்கின்றனர். அவர்கட்கு அவர், திருவரங்கத்தே தமக்குச் சாரணர் உரைத்த தருமத்தை உரைக்கின்றார். அன்று அவ்விடத்தே கழித்து, மறுநாள் வைகறைப் போதிலெழுந்து தென் மதுரை நோக்கிச் செல்கின்றார். இவ்வூர்க்குத் தெற்கு வாயிலின்கண் சீறூர் ஒன்றுள்ளது. அதனை நேரிவாயில் என்பர். சேரன் செங்குட்டுவன், தன் மைத்துன வளவன் கிள்ளி யென்பானுக்குத் துணையாகி, எதிர்த்த ஒன்பது மன்னரையும் இவ்விடத்தே போருடற்றி வென்றி யெய்தியதாக, மாடல மறையோன், “ மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறார் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்து அவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்” (சிலப்.27:118-123) என்றும், “ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை, நேரிவாயில் நிலைச்செரு வென்று” என்றும் எடுத்து மொழிகின்றான். இவ்வூர்க் கண் பெரிய நிகழ்ச்சி யொன்றும் கண்ணகியார் வரலாற்றில் நிகழாமையின், இதனை அடிகள் விரித்துக் கூறவில்லை போலும். 5. வஞ்சிமாநகர்:- இந்நூற்கண் இளங்கோவடிகள், இந் நகரத்தை ஏனைப் புகார், மதுரை முதலியவற்றைக் கூறியது போலக் கூறவில்லை. இது சேரர் தலைநகராக இருந்த தென்பதுமட்டில் ஒரு தடையுமின்றி உணரக்கிடக்கின்றதே யன்றி, இவ்விடத்தே யிருந்த தென்பதற்குத் தக்க சான்றுகள் விளக்கமாய்த் தெரிந்தில. இதனைக் கருவூர் என்று அரும்பத வுரைகாரர் கூறுகின்றார். “பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து” (25:148) என்பதன் அரும்பதவுரை காண்க. டாக்டர், உ.வே. சாமிநாதையர் இது, “வஞ்சிக்களம், “வஞ்சிக் குளம், அஞ்சைக்களம் எனவும் வழங்கும்” எனக் குறித்துள்ளார். முன்பே கூறியவாறு, இதனைப்பற்றி யாராயப்புகின் இக் கட்டுரை விரிதற்கஞ்சி, இந் நூல் காட்டும் குறிப்புக்களை மட்டும் ஈண்டுத் தருகின்றோம். இம் மாநகரின் புறத்தே குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நான்கு நிலப்பகுதிகள் இருக்கின்றன. குறத்தியர் பாடும் குறிஞ்சிப் பாணியும், உழவர் பாட்டும், முல்லை நிலத்தே கோவல ரூதும் குழற்பாணியும், நெய்தற்பகுதியில் இருந்து பரதவர் மகளிர் பாடும் பாட்டும் இந்நகரத்தவர் இனிது கேட்கின்றனர். இங்கே இலவந்தி வெள்ளி மாடம், குணவாயிற் கோட்டம், வேளாவிக்கோ மாளிகை எனப் பல பெரு மாளிகைகள் இருக்கின்றன. இவற்றோடு, இந் நகர்க் கண், “ ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட்ட டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் வெண்கா லமளியும் விதான வேதிகைகளும்” (சிலப்.28:42-45) உள்ளன. இம் மூதூர் மதிலருகே ஆன்பொருநை என்றொரு யாறு ஓடுகிறது. “வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை, சூழ்தரும் வஞ்சி” என்று இந்நூலே யன்றி, “வஞ்சிப்புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை” என்று புறநானூறும் (387) கூறுகிறது. இந்நூலில், மாடலன் செங்குட்டுவனை வாழ்த்து மிடத்து, “மண்ணாள் வேந்தே நின்வாழ் நாட்கள், தண்ணான் பொருநை மணலினும் சிறக்க” (28; 125-126) என்றலின், ஆன்பொருநை வஞ்சி நாட்டிற்குரிய தென்பது தெரிகிறது. மேலே கூறிய பெருமாளிகையுள், இலவந்தி வெள்ளி மாடத்தே செங்குட்டுவன் தன் தேவி இளங்கோ வேண்மாளுடன் இனிதிருக் கின்றான். இம் மூதூரின் நடுவே பொன் மாளிகை யொன்று முளது. குணவாயிற் கோட்டத்தை ஓர் ஊராகவும் கூறுவர். இவ் விடத்தே இளங்கோவடிகள் அரச போகத்தைத் துறந்து துறவு பூண்டு அறம்புரிந்து வருகின்றார். இவர்பால் மணிமேகலை யாசிரியரான சாத்தனார் உடனிருக்கையில், குறவர் பலர் போந்து கண்ணகியார் விண்ணாடு சென்ற செய்தியைக் கூறுகின்றனர். உடனிருந்த சாத்தனார், “யான் அறிகுவன் அதுபட்டது” என்று, கண்ணகியாரின் இம்மை வரலாறும், முற்பிறப்புச் செய்தியும் எடுத்துரைக்கின்றார். அதுகேட்கும் அடிகள், “சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகார மென்னும் பெயரால், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று சாத்தனாரையும் உளப்படுத்திக் கூறுகின்றார். சாத்தனார், அக்குறிப் புணர்ந்து, “ முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” (சிலப். பதிகம்.61-62) என்று மொழிகின்றார். அடிகளும் இசைந்து இவ்வரிய முத்தமிழ்க் காவியத்தைச் செய்தளிக்கின்றார். இலவந்தி வெள்ளி மாடத்தின்கண் சேரன் செங்குட்டுவன் தேவியுடன் இனிதிருப்பவன், உரிமைச் சுற்றமும் படை வீரரும் உடன்வர மலைவளம் காண விரும்பி, மலைச் சாரலில் இனியதோர் இடத்தை யடைந்திருக்கின்றான். அது பேரியாற்றின் கரை. அங்கு வந்த குறவரால் கண்ணகியாரின் வரலாறு தெரிந்து, வஞ்சிக் காண்டத்துக் கூறப்படும் செயல்களை நிகழ்த்தலுறுகின்றான். இவ்வஞ்சி மூதூரின் புறத்தே வேளாவிக்கோ மாளிகை இருக்கிறது. வடநாடு சென்று வடவாரியரை வென்று அவருள் தமிழரசரை இகழ்ந்து செருக்கிய கனக விசயரைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்த செங்குட்டுவன், பின்பு சினம் தணிந்து, இயல் பாகவே உள்ள அருளுள்ளத்தால், அவர்க்குச் சிறை வீடு தந்து, தான் மாடலன் சொற்படி வேள்வி முடிக்குங் காறும் அக்கனகவிசயரை இம்மாளிகையில் அரசர்க்குரிய பெருஞ் சிறப்புடன் இனிதிருக்கச் செய்கின்றான். இந் நகர்க்கண், தமனிய மாடத்தில், செங்குட்டுவன் வடநாடு சென்று திரும்ப வரும்வரையில் இருங்கோ வேண்மாள் இருந்து வருகின்றாள். இம் மாளிகையின் இருப்பினை, அடிகள், “ படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின் றோங்கிய நெடுநிலை மேருவின் கொடிமதில் மூதூர் நடுகின் றோங்கிய தமனிய மாளிகை” (28:47-50) எனச் சிறப்பித்துக் கூறுகின்றார். இந் நகர்க்கண், பிறையணி செஞ்சடைப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தனித்தனியே பெருங் கோயில் உள்ளன. திருமால் கோயில் ஆடகமாடம் எனப்படுகிறது. செங்குட்டு வன் செஞ்சடை வானவன்பால் சிறந்த அன்புடையவன்; இவனது “இறைஞ்சாச் சென்னி” இவ்விறைவன் ஒருவன் திருவடிக்கே இறைஞ்சும். எனினும், திருமாலுக்கு ஆடக மாடம் நிறுவி அணிபெற வழி பாடாற்றி வருகின்றான். ஆனால், இவ் வாடக மாடத்தை அரும்பத வுரைகாரர், திருவனந்தபுரம் என்றும் இரவிபுரம் என்றும் கூறு கின்றார்; இஃது ஆராய்தற்குரியது. இது மலைநாட்டகத்துப் பேரூராகலின், மலைபடு பொருள்கள் இங்கே மலிந்து கிடக்கின்றன. அவற்றுள், யானைக்கோடு, அகில், கவரி, மலைத்தேன், சந்தனம், சிந்துரம், அஞ்சனப் பொருள், அரிதாரம், ஏலம், மிளகு, கூவைக் கிழங்கு, கவலைக்கிழங்கு, தெங்கு, தேமா, பச்சிலை, பலா, காயம், கரும்பு, பாக்கு, வாழைப் பழம், முதலியனவும்; ஆளி, புலி, குரங்கு, கரடி முதலியவற்றின் குட்டிகளும், யானைக்கன்று, மலையாடுகள், வருடைமான், மான்கன்று, கத்தூரிமான், கீரிப்பிள்ளை, மயில், புழுகுப்பூனை, கானக் கோழி, கிளி முதலியனவும் சிறப்பாக எளிதில் காணப்படு வனவாகும். இங்கேதான் முதன்முதலாகப் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்குக் கோயிலெடுக்கப்படுகிறது. கண்ணகியின் படிமம் சமைத்தற்கே செங்குட்டுவன் வடநாடு சென்றது மாகும். கோயி லெடுத்த செய்தியை அடிகள், “ நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப் பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை, அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச் சென்னித் தெய்வம் பரசிக் கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தக ரியற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி வேள்வியும் விழவும் நாடொறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்கென ஏவினன், வடதிசை வணக்கிய மன்னவ ரேறு” (சிலப்.28:220-234) என்று கூறியிருக்கின்றார். இக் கூறிய நகரங்களே யன்றி, இந் நூற்கண் இடும்பில், கச்சி, காப்பியக்குடி, கொற்கை, தங்கால், தலைச்செங்கோடு, திருவரங்கம், தொண்டி, நேரிவாயில், பறையூர், மாங்காடு, வயலூர், வியலூர் முதலாகப் பலவூர்களும் குறிக்கப் படுகின்றன. XII. தமிழ் வேந்தரின் அரசியல் மாண்பு: மேலே கண்டு போந்த புகார், உறையூர், மதுரை, வஞ்சியென்ற நகரங்களில் இருந்து அரசுபுரிந்த வேந்தர் முறையே சோழரும் பாண்டியரும் சேரரு மாயினும் இம் மூவேந்தரும் தமிழ்நாட்டு மூவேந்தர் களாதலின், இவர்களது அரசியல் மாண்பின் பொதுநிலை, இளங்கோவடிகள் காலத்து தமிழர் அரசியல் நிலையும் மாண்பு மாதல் தெளியப்படும். ஆகவே, அதனை ஆராய்வதும் முறையாகின்றது. மேலும், இந்நூலைப்பற்றிக் கூறுமிடத்து, சாத்தனார், இது “முடிகெழு வேந்தர் மூவர்க்குக் உரியது” என்று கூறுகின்றார். அக் கருத்தை அடிகளும் அவ்வாறே ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது, அவர் கண்ணகியார் செயலை வடித்துக் கூறுவார், நடுகற்காதையில், “ அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் ஆர்புனை சென்னி யரசற்கு அளித்து, செங்கோல் வளைய உயிர்வா ழாமை தென்புலங் காவல் மன்னவற் களித்து, வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை வடதிசை மருங்கின் மன்னர் அறியக் குடதிசை வாழும் கொற்றவற் களித்து.... ....................பொருந்திய நங்கை” (28:217-222) என்று கூறுவதால் இனிது விளங்குகிறது. இவ் வடிகளாரும் அரசிளங்கோ வாதலாலும், முற்றத் துறந்த முனிவராத லின், யாவர் செயலையும் விழைவு வெறுப்பின்றிக் கூறுதலாலும், இவர் கூறும் அரசியற் கருத்துக்கள் யாவும், பண்டைத் தமிழ் வேந்தரது அரசியல் கருத்தெனக்கொள்வதை நல்லறிவுடைய எவரும் உடன்பட மறார். தமிழ் வேந்தர் தம் கோற்கீழ் வாழும் மக்கள் நலமே தம் நலம் எனப் பேணி வாழும் தகுதிப்பாட்டை மேற்கொண்டு, தமது ஆட்சி இனிது நடத்தற்கு அரசியற் சுற்றமும் ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் நால்வகைப் படையும் கொண்டிருக்கின்றனர். அவர் அரசியற்குப் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறும் குறைவற நிரம்பியுள்ளன. ஐம்பெருங் குழுவை, “அமைச்சர், புரோகிதர், சேனாதி பதியர், தவாத் தொழில் தூதுவர், சரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப்படுமே” என்றும், எண் பேராயத்தை, “ காரணத் தியலவர் கரும காரர் கனகச் சுற்றம் கடைகாப் பாளர் நகர மாந்தர் நளிபடைத் தலைவர் யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பே ராய மென்ப” (சிலப். உ.வே. சா. பதிப்பு பக்.167) என்றும் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். எண் பேராயத் தினும் ஐம்பெருங்குழு சிறப்புடையது. அதனால், அதனை “அரசொடு பட்ட ஐம்பெருங் குழு” (3:126) என்று அடிகள் சிறப்பிக்கின்றார். அரசியற் சுற்றத்துள், “கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும்” (26:40-1) இருக்கின்றனர்; இன்றியமை யாவிடத்து, அமைச்சர், தானைத் தலைவர், அறக்களத் தந்தணர் முதலாயினாரும் அரசியற் சுற்றமாய்த் தொழிலா ராய்ச்சி புரிகின்றனர். அரசன் கீழ் வாழ்வோருள், அரசர்க்கு அடுத்த படியில் பெருந்திருவுடைய வணிகரும் பின்பு வேளாளரும், இவ் விருவர்க்கும் இடையே மறையவரும் வைத்துமதிக்கப் பெறுகின்றனர். “பெருங் குடி வாணிகர் மாடமறுக்கும், மறையோர் இருக்கையும், வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை, ஆயுள்வேதரும் காலக்கணி தரும், பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்று அடிகள் முறைப்படுத்து ஓதியிருக்கின்றமை காண்க. வணிகருள் கலத்திற் சென்று பெருவாணிகம் புரியும் திருவினரைப்பரதர் என்றும், ஏனோரை வணிகரென்றும் வகுத்திருக்கின்றனர் . ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் போல, “அரச குமரரும் பரத குமரரும்” (5:158) என்றும், “அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும், பரத குமரரும் பல்வேறாயமும்” (6:155-156) என்றும் சிறப்பிக்கப்படுதல் காண்க. மேலும், இவ்வணிகரைக் கூறும் போதெல்லாம், அடிகள், “அரைசர் பின்னோர்”, “உரைசால் சிறப்பின் அரசு விழை திருவின் பரதர்”, என்றும் இவர் இருந்து வாணிகம் செய்யும் அங்காடி வீதியை, “அரசு விழை திருவின் அங்காடி” என்றும் கூறுதலால், இவர்கள் அரசரால் நன்கு மதிக்கப் பெற்றமை தெரிகிறது. நாட்டின் செல்வ நிலைக்கு இன்றிமையாதது வாணிகம் என்பதை யுணர்ந்து அது செய் யும் வணிகரைத் தமக்கு அடுத்த வரிசையில் வைத்துப் போற்றிய இச்செய்தி, தமிழ் வேந்தரின் பொருளியலறிவின் உயர்ச்சியைக் காட்டுகிற தன்றோ! இவ்வாறு அரசரது ஆதரவு இல்லாவிடில் தமிழ் நாட்டில் பல்வகைக் கைத் தொழில்களும், அவை குறித்து அயல் நாட்டினர் வருகையும், அது வாயிலாகப் பொருட் பெருக்கமும் நிகழ்தற்கும் இடனி ன்றாம். “ கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும், கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்” (சிலப்.5:9-12) ) இலவாமன்றோ? கைத்தொழில் வகைகளைப் பின்னர்க் கூறுவாம். இவர்கட்கு அடுத்த நிலையில் மறையோர் தமிழ் வேந்தரால் பேணப்படுகின்றனர். நான்மறை பயிறலும், வேள்வி வேட்டலும் மறையோர்தம் பெருபான்மைச் செய்கைகளாயினும், சிறுபான்மை அரசனது அறங்கூறவையில் அறக்களத் தந்தணராய்த் துணைசெய் தொழுகுகின்றனர். இவர்களை, அடிகள், “அறக்களத் தந்தணர்” என்றே பல விடத்தும் கூறியிருக்கின்றார். இம்மறையோர் இச்சிலப் பதிகாரக் காலத்தே வேள்வி வேட்டலும் செய்கின்றனர். மதுரை நகரிலும் சேரநாட்டிலும் ஆகுதிப்புகையும், சேர நாட்டில் மாடலன் என்னும் அந்தணன் வேள்வி செய்வதும், அதனை அரசர் முதலாயி னோர் உடனிருந்து செய்தலும் காணப்படுகின்றன. இனி, வேளாளர்களை, “வீழ்குடி யுழவர் ” என்ப தொன்றே, அரசர் கண்முன் அவர் பெருமதிப் புடையராய் இருப்பது விளக்கும். இவர்களை, “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழ விடை விளைப்போர்” என்று பாராட்டுகின்றனர். இவர்தம் தெருக்கள் மறையோர் இருக்கையை அடுத் திருப்பது அறம் முதலாயின இனிது நிகழ்தற்குத் துணை செய்யும் பெருந் தகுதி இவர் பால் உண்மையினைத் தமிழ் வேந்தர் நன்கு தெளிந்திருத்தலையே காட்டுகிறது. தமிழ் வேந்தர் தமக்குரிய அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்திருக்கின்றனர். “ மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம், குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதகவு இல்” (சிலப்.25: 100-104) எனச் செங்குட்டுவன் கூறுவது இதனை வற்புறுத்துகின்றது. இவ் வேந்தர் நோக்கமெல்லாம் தம் செங்கோல் கோடாமையே குறிக்கொண்டு நிற்கிறது. அதன்கண் சிறிது வழுவெய்தினும் அதனாலுண்டாகும் மானம் பொறாது அப்பொழுதே உயிர் விட்டுவிடுகின்றனர். கோவலனைக் கொலை குறித்த பாண்டியன் நெடுஞ் செழியன், தன் பால் தவறுண்மை தெரிந்ததும், “ பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” (சிலப்.20: 70-77) என்று சொல்லி உயிர் விடுவதும், அச் செய்தியறிந்த சேரன் செங்குட்டுவன், “ எம்மோ ரன்ன வேந்தற் குற்ற செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” (சிலப்.25: 95-99) என்று சொல்லுவதும் இதனை விளக்கி நிற்கின்றன. தமிழ் மக்களும் இதனையே வியந்து, “செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர்” எனச் சிறக்கப் பாடி மகிழ்கின்றனர். இவ் வேந்தர், தம் அரசு முறையின் செம்மையே, நாட்டு மகளிரின் கற்பைக் காக்கும் பேரரணாவது என்ற மெய்ம்மை நெறியை இனிதறிந்து அதற்கேற்ப அரசுபுரிந் தொழுகினர். “அருந்திறலரசர் முறை செயினல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்பண்டையோருரைத்த தண்டமிழ் நல்லுரை” (28:207-209) என அடிகள் கூறுதலால், இக் கருத்துத் தமிழ்நாட்டுத் தொல்லோர் கருத்தென்பது துணியப்படும். இதுவேயன்றி, கற்புடைய மகளிர் இருக்கும் நாட்டில் அரசுமுறை கோடாது என்ற கொள்கையும் நிலவியிருக்கிறது. இதனைக் கவுந்தியடிகள் கண்ணகியை மாதரி பால் அடைக்கலப் படுத்துமிடத்து, “வானம் பொய்யாது வளம் பிழைப் பறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும், அத்தகு நல்லுரை” (5:145-147) என்று கூறுதலால் அறிகின்றோம். பாண்டியன் கோல் வளைந்தது கண்டு கண்ணகியார், “முறையில் அரசன் தன் ஊரிருந்து வாழும், நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்” (19:3-4) எனச் சினந்து இகழ்தலும், மதுரை நகரத்து நிறையுடை மகளிர், மனம் கலங்கி, உண்மை தெளியாராய்க், “ களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்? மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்? மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்?” (19:17-22) என அங்கலாய்த்து அலமருதலும், மேற்கூறிய கருத்தை வலியுறுத்து வனவாகும்.ஆகவே, நாட்டரசர் தம் நாட்டு மகளிரின் கற்பு நலத்தைப் பேணவும், நாட்டு மகளிர் தம் நாட்டரசன் செங்கோல் வளையாமையைப் பேணவும், மக்களும் அரசரும் ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் தொடர்புற்ற வாழ்க்கை நடத்தும் நயம் நினைக்குந்தோறும் இன்பமுண்டாகிறது. ஆண்மை, பெண்மைக்கு அரணாதலும், பெண்மை, ஆண்மைக்குத் துணை செய்தலும் நன்கு தேர்ந்த காவலாற்றும் நல்லரசு, நந்தம் தமிழரசு!! நாட்டின் அரசன் நல்லனாகாவிடில், அரசு முறையின் தகுதி யறிந்த நன்மக்கள் தமக்கும், பிறவுயிர்க்கும், பொருட்கும், நல்வாழ்வுக்கும், வேண்டும் பாதுகாப்பு இல்லாதொழிதலை யுணர்ந்து தலைமேல் கைவைத்துப் புலம்புவதும்; நல்லனாகிய வழியும், மக்களுள் சிலர் பகையரசரின் தீயுறவு பூண்டு அவர்க்குத் தம் நாட்டைக் காட்டிக் கொடுப்ப, அப்பகை வேந்தர் ஆட்சியில் நல்லோர் வருந்துதலும் தீயோர் களித்தலும் உண்டு: நாட்டை யிழந்த நல்லரசன் ஏனையரசர் துணைபெற்று, வேண்டும் படைப் பெருமை பெற்று வந்து, பகை வேந்தனை வெருட்டித் தீயோரை ஒறுத்து நாட்டை நாடாக்குதலும் உளது. இத்தகைய நாடுகளில் “தவமறைந் தொழுகும் தன்மையிலாளர், அவம் மறைந் தொழுகும் அலவைப் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க்கரியாளர், புறங் கூற்றாளர்” முதலாயினார் இருப்பினும், அவரும் தக்காங்கு ஒறுத்து நன்னெறிக் கண் நிறுத்தப்படுகின்றனர். பேரரசர்கீழ்ச் சிறு சிறு சிற்றரசர்கள் இருந்து அவர்க்குத் திறை செலுத்தியும், ஏவல் கேட்டும் வாழ்கின்றனர். சேர, சோழ, பாண்டிய நாடு மூன்றினும், சிறுசிறுசேரநாடும், சோழ நாடுகளும் பாண்டி நாடுகளும் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாட்டிலும் பற்பல சேரமன்னரும், சோழரும், பாண்டியரும் காணப்படுகின்றனர். உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழன் பெருங்கிள்ளியின் கீழ் ஒன்பது சிற்றரசர் இருப்ப, அவர்கள் அவ்வேந்தனது இளமையிகழ்ந்து ஏவல்கேளாது போர்தொடுக்கின்றனர். அவன் செங்குட்டுவற்கு மைத்துனனாதலின், அக்குட்டுவன் துணை பெற்று அவ்வொன்பது சோழ வேந்தரையும் வென்று தன்அடிப் படுத்துகின்றான். இச்செய்தி, இந்நூற்கண் (27:118-122; 28:116-117) விளங்கக் கூறப்படுகிறது. இவ்வரசர் பெற்ற திறைப்பொருள் வெறும் பொன்னும், மணியும் பிறவுமட்டு மல்ல. “நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசை குயிலுவக் கருவியாளரும்” கொடுஞ்சி நெடுந்தேர், கொய்யுளைப் புரவி, கடுங்களி யானை, “கண்ணெழுத்துப் படுத்தன கை புனை சகடம்” முதலிய பலவாகும். “சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும், தென்னர் இட்ட திறை” என்றுடிகள் குறிப்பது காண்க. நகரத்து மதிலுச்சியிலும் மாடங்கள்மீதும் உயரிய கம்பம் நிறுத்தி அவற்றில் தமது புலி, கெண்டை, வில் முதலிய பொறித்த கொடி களைப் பறக்க விடுகின்றனர். இக்கொடிகள் அவர்தம் வெற்றிச் சிறப்பை விளக்குவனவாதலின், இவற்றைப் “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி” என்பர். இவையேயன்றி, அங்காடி வீதியில் கடைகள் தோறும் பல்வகைக் கொடிகள் பறக்கின்றன. இவற்றின் நீழலில் நகர் சிறப்பது கண்டு, அடிகள் “ விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழற் காவலன் பேரூர்” (சிலப்.14:215-217) என்று பாராட்டுகின்றார். கொடி சிறு கொடிகள் என்றும், படாகை பெருங் கொடிகள் என்றும் உரைப்பர் அடியார்க்கு நல்லார். அரசர்கள் தங்கள் நாடுகாத்தற்கே யன்றி, வளங்காண் பதற்கும் நாட்டின் பல பகுதிகட்கும் உரிமைச் சுற்றத்துடன் தலைநகரினின்றும் போவதுண்டு. அக்காலத்தே அவ்வப் பகுதிகளில் வாழும் மக்கள் நாட்டில் கிடைக்கும் உயரிய பொருள்களைக் கொணர்ந்து அரசர்க்குத் தந்து தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்துகின்றனர். அப்போது அரசன் தேவியரும் உடன் செல்வர். நாட்டில் நிகழ வேண்டிய நிகழ்ச்சிகள் எவையேனும் இருப்பின் அரசர் அவ்விடத்தே அரசவை கூட்டித் தீர்ப்புச் செய்வர். நகர்க்காவலர், “அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சாது” காவல் புரிகின்றனர். சுருங்கையிடம், அந்தப்புரம், பண்டசாலை, மூல பண்டாரம், பாசறை, பள்ளியறை முதலிய இடங்களில் யவனரும் பிற மிலேச்சரும் காவலராகத் தொழில் செய்கின்றனர். அரசன் தனியனாகக் காணப்படினும், அரசியற் செய்கைகளைச் செய்யுமிடத்து நாட்டின் நன்மக்களைக் கலக்காது எதனையும் அவன், தான்வேண்டியவாறே செய்வதுகிடையாது. அரசியற் சுற்றம், ஐம்பெருங்குழு என்பவற்றில் உள்ள சான்றோர்கள் அரசர்க்குத் துணை செய்பவராவர். வழக்குத் தீர்த்து அறம் செய்தற்கு அறம் கூறவையத் தார் துணை செய்கின்றனர். அரசியலாராய்ச்சியவை களில் அரச குமரனேயன்றி, அரசன் தேவியும் உடனிருந்து ஆராய்ச்சித் துணை செய்வ துண்டு. கண்ணகியாரைக் கோயிலெடுத்து வழிபடற் கென் றெழுந்த ஆராய்ச்சி யவையில், செங்குட்டுவன் தேவி இருங் கோவேண்மாள் உடனிருந்து தகுவது கூறுவதும், பாண்டியன் அவையில் கண்ணகி வழக்குரைத்தபோது அவன் தேவி ஆங்கிருப் பதும் பிறவும் மேலே கண்ட உண்மைக்குத் துணை செய்வனவாகும். இவ்வேந்தர், அரசியல், பொருளியல், காப்பியல் முதலிய துறைகளில் பெரிதும் ஈடுபட்டிருக்கின்றாரெனினும், பல்வகைக் கலை வளர்ச்சியிலும் பெரிதும் கருத்தூன்றிப் பேருதவி வழங்கியிருக் கின்றனர். அரசவையில் நல்லிசைப் புலவர்கட்கு உயரிய இடம் தந்து சிறப்பிக்கின்றனர். சாத்தனார், மாடலனார் முதலியோர் சேர மன்னரால் பேணப்படுகின்றனர். இசை நாடகங்கள் இவ் வேந்தர் களிடையே மிக வளமாக இருக்கின்றன. இக்கலைகள் ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும் உரியவாயினும், அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற நால்வர்க்கும் உரிய வாயினும், சிறப்பாக நாடகக் கணிகையரே இவற்றை மிகுதியும் பயின்று வருகின்றனர். நாடக மகளிர் தாம் கற்க விரும்பும் இவ்விசை நாடகக் கலையை ஐந்தாமாண்டு தொடங்கிக் குறைந்த அளவு ஏழாண்டு கற்கின்றனர். பயிற்சி முடிந்ததும், தமது புலமையை அம்மகளிர் தம் நாட்டு அரசர்க்கு ஆடியும் பாடியும் அழகுறுத்திக் காட்டுகின்றனர். அவர்கட்கு அரசன் * ஆயிரத் தெண்கழஞ்சு முதல் ஒரு கழஞ்சு பொன்வரைத் தலைப்பரிசம் விதிக்கின்றான்; இப்பரிசத்தைப் “பூவிலை” என்றும் கூறுவர். “எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்தெண் கழஞ்சு, முட்டாவைகல் முறைமையின் வழாத் தாக்கணங் கனையார்” (14:158-160) என்று இந் நூல் கூறுகின்றது. மாதவியின் ஆடல் பாடல் அழகு என்பவற்றைக் கரிகாற் பெருவளத்தான் அரங்கேற்றத்துட் கண்டிருத்தலும், தலைப்பரிசம் விதித்தலும், செங்குட்டுவன் வடநாடு செல்பவன் நீலகிரியில் தங்கியிருந்தபோது, அவன் முன் பாடி மகிழ்வித்த மகளிர்க்கு ஆடலாசிரியன் குறித்த வரிசைப் படியே பொருள் வழங்கி யூக்குதலும், வடநாட்டிலிருந்து திரும்பிய பின், பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடிய கொடு கொட்டிக் கூத்துக் கண்டு மகிழ்தலும், பாண்டி வேந்தனான நெடுஞ் செழியன் மனைவி கோப்பெருந்தேவி ஊடுதற்கு, “கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும் பண்ணின் பயன்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன” (16:131-133) எனக் காரணம் கருதலும் பிறவும் இசை நாடகக் கலைவளர்ச்சிக்கு இத்தமிழ் வேந்தர் செய்த துணைக்குப் போதிய சான்றாகும். இந்நாடக மகளிர் கலைப்பயிற்சி முற்றி, அரங்கேறுவராயின், அவர்கட்குத் தலைக்கோலாக, இவ்வேந்தர், தாம் வென்ற பகை யரசரின் கொற்றக் குடையின் காம்புகளைத் தந்து, அவற்றிற்குக் கணுக்களில் பொற்பூண் இட்டுக் கொடுக்கின்றனர். அக் கோல் ஊர்வலம் வருதற்குத் தம் பட்டத்தி யானை, தேர் முதலியவற்றை யுதவுகின்றார். தாமும் அரசியற் சுற்றமும் பிறரும் சூழவிருந்து அரங்கேற்று விழாவினைச் சிறப்பிக்கின்றனர். இவ் வேந்தர் தம் குடியில் மூத்தோரை அழைத்துச் சென்று, குமரி, காவிரி, கங்கை முதலிய யாறுகளில் நீராட்டும் வழக்க முடையர். சேரவேந்தர்பாலும், பிறர்பாலும் இவ்வழக்கம் காணப் படுகிறது. யாறுகளில் புது வெள்ளம் வரும் போது, இவ்வேந்தர் தம் கிளைஞரும், குடிகளும் ,சூழ்வரச் சென்று புது நீராடி மகிழ்கின்றனர். வேள்வி வேட்பதும், மறையோர்க்குத் துலாபாரம் என்னும் தன்னிறைப் பொன்னைத் தானம் செய்வதும், பிறவும் காணப்படு கின்றன. இவ்வழக்கம் விசயாலயன், இராசராசன் முதலிய சோழ வேந்தர் ஆட்சிக்குப் பின்பும் இருந்திருக்கிறதென்று கல் வெட்டுக்கள் காட்டுகின்றன. இவர்கள் போர்க்குச் செல்லுமிடத்து, அதற்குரிய வெட்சி, தும்பை, வஞ்சி முதலியவற்றைத் தமக்குரிய அடை யாளப் பூவோடு தொடுத்து அணிந்து கொள்கின்றனர். போர்க்கெழுமுன், போர் வெறி கொண்டு வஞ்சினம் கூறலும், அது காப்பது குறித்துக் கடும்போர் உடற்றுதலும் வெற்றி பெற்ற வழி, வாகை மாலை சூடுதலும் வழக்கமாகும். அஞ்சிப் புறங்கொடுத்து ஓடுபவரைப் பற்றிச் சிறைப்படுத்துவதன்றித் துன்புறுத்திக் கொல்வது இவ்வேந்தர் இயல்பன்று. செங்குட்டுவன், தோற்று உயிர்க்கஞ்சி ஓடிய வட வாரிய மன்னரான கனக விசயரைப் பற்றிக் கொணர்ந்து, இவர் “தமிழரை இகழ்ந்துரைத்த தகவிலார்” என ஏனைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு ஏவுகின்றான். இவன் செயலைக் கண்ட சோழ வேந்தன், தான் இக் குட்டுவனால் துணை செய்யப் பட்டவனாயினும், அச்சம் இன்றி, “ கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை வெல்போர்க் கோடல் வெற்ற மன்றெனத் தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்.” (28:92-94) என்றும், “ தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல் கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவ தென்றனன் போர்வேற் செழியன்” (28:105-107) என்று அடிகள் கூறிக் காட்டுகின்றார். இச் செங்குட்டுவனே பின்பு மாடலனால் சினம் தணிந்து, இக்கனக விசயரைச் சிறை நீக்கி, வேளாவிக்கோ மாளிகையில் அரசர்க்குரிய சிறப்புக் குன்றாது வைத்துப் பேணுவது தமிழ் வேந்தரின் பெருந்தகைமைக்கு நல்ல எடுத்துக் காட்டாகின்றது. மேலும், போரில் தமக்காகப் போரிடும் வீரரைப்போர் முடிந்தவுடன் தம் முன்னர் ஒருங்கு கூட்டி அவர் தம் வீரத்தை அவன் முன் தனித்தனியே எடுத்துச் சொல்லிப் பாராட்டிப் பொன்னாற் செய்த வாகைப் பூவை அணிந்து கொள்ளத் தருகின்றனர். அவ் வீரருடன் ஒருங்கிருந்து உணவுண்டலும், இவ் வேந்தரின் தொன்மை நலமாகும். சேரன் செங்குட்டுவன் இவ்வாறு செய்ததனை, அடிகள், “ நிறஞ் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர் வருக தாம்என வாகைப் பொலந்தோடு பெருநா ளமையம் பிறக்கிடக் கொடுத்து” (27:41-44) என்று உரைக்கின்றார். XIII. இசை நாடகக் குறிப்புக்கள்:- இந்நூல் “இயலிசை நாடகப் பொருட் டொடர்நிலைச் செய்யுள்” எனப்பண்டை ஆசிரியன்மாரால் சிறப்பித் தோதப் படுவதென்று முன்பே கூறினோம். ஆகவே, இதன்கண் இசையும் நாடகமும் குறிக்கப் பெறும் என்பது சொல்லாமலே விளங்கும். இதன்கட் காணப்படும் மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட் டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசையும் நாடகமும் பயின்றுவரும் பகுதிகளாகும். துன்ப மாலையும், வஞ்சின மாலையும் இசைவிரவி அழுகைச் சுவை மிக்கு நிற்பனவாகும். அரங்கேற்று காதை, வேனிற் காதை முதலியவற்றுள் பண்டை இசை நாடக நூற்குறிப்புக்கள் செறிந்திருக்கின்றன. காண்டந்தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசை நாடகக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் காட்டுகின்றன. இவற்றை இப்பேரிலக்கியத்துக்கு உரைகண்ட அரும் பதவுரைகாரர், அடியார்க்கு நல்லார் என்ற இப்பெருமக்கள் வழங்கியுள்ள உரைக் குறிப்புக்களால் ஒருவாறு காண்டல் கூடும். விரிய வுணர்தற்கு ஆகாதவாறு அவ் இசை நாடக நூல்கள் பலவும் இறந்தொழிந்தன. இக் குறை அறிஞர் உலகிற்குப் பேரவலத்தைச் செய்து நிற்கிறது. இத்துறையில் சுவாமிவிபுலானந்தர், மகா மகோபாத்தியாய பண்டித மணி மு. கதிரேசன் செட்டியார், நாவலர் பெருந்தகை பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் உழைத்து வருகின்றனர். அவர் முயற்சி வெற்றி பெறுவதாக. இந் நூல் உரைப்பாயிரத்துள், ஆசிரியர் அடியார்க்கு நல்லார், “இவ்வியலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியம்” என்றும், “இசைத் தமிழ் நூலாகிய பெரு நாரை, பெருங்குருகும், பிறவும், தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறும் இவர் இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற ஐந்தையும் தாம் இந்நூற்கு உரை காண்பதற்குத் துணை கொள் கின்றார். ஆனால், இவற்றைப் பற்றிக் கூறுங்கால், அவரே, “இவ் வைந்தும் இந் நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்கள் அன்றேனும், ஒருபுடை யொப்புமை கொண்டு” தாம் மேற் கொள்வதாக எழுதுகின்றார். எனவே, இந் நூலில் அடியார்க்கு நல்லார் காட்டும் இசை நாடகக் குறிப்புக்கள் முற்றும், பண்டைத் தமிழ் இசை நாடக நலங்களை - இச் சிலப்பதி காரம் கூறும் இசை நாடகக் கருதுக்களை - முடிய உணர்த்துவன அல்லவென்பது தெளிவாகின்றது. இனி, ஆடல் பாடல் என்ற இரண்டினுள், ஆடல் நாடகத் துக்கும், பாடல் இசைக்கும் உரியவாகும். ஆடல், வேத்தியல் பொதுவியல் ஏனையோர்க்கும் ஆடுவனவாம். ஆடல் வகையுள் சிலவற்றைக் கூத்து என்றே வழங்குகின்றனர். இக் கூத்து நகைக் கூத்து முதலாகப் பலதிறப்படும். இவற்றோடு வேந்து விலக்கு, படை விலக்கு, ஊர் விலக்கு எனப் பாட்டு வகையுண்டு. இவற்றிற்கு உறுப்பாகக் கூத்தும் உண்டு. இவ்விலக்குகளுடன் பல்வகைக் கூத்துக்களைப் புணர்த்து ஆடல் செய்வர். இவ் வகை யாடலும் பதினொரு வகையாம். இவற்றிற்கேற்ற பாடல்களும் தாளங்களும் உள்ளன. ஆடல் கற்பிக்கும் ஆசிரியன், இந்த ஆடல், பாடல், பாணி, தூக்கு முதலிய நெறிகளை யுணர்ந் திருத்தல் வேண்டும். ஆடுங்கால், பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை எனக் கைகாட்டும் முறை நான்காகின்றது. இவை, கூடை, வாரம், பிண்டி, ஆடல் என்ற நான்கு இடங்களையுடைய கூத்து வரும்போது, “ கூடை செய்தகை வாரத்துக் களைதலும் வாரம் செய்தகை கூடையிற் களைதலும் பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்” வேண்டும் என்கின்றார். கைத்தொழிலோடு, குரவை, வரி என்ற கூத்துகட்குரிய காலடிகள், தம்முள் விரவுதல் கூடாது. இசைத் தமிழ், யாழ், குழல், சீர், மிடறு, தண்ணுமை, ஆடல் என்ற இவற்றோடு இசைந்திருக்கும் இயல்புடையது. சீர் என்பது வண்ணம், தாளம், பாலைநிலை, பண்ணுநிலை என்ற இவற்றைத் தூய்தாகக் காட்டுவது. மிடறு, அகத்திருந் தெழும் ஓசையைக் “கருத்தால் இயக்கி, ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மை” பிறக்குமாறு பாடல். ஆடல், மேலே கூறிய அகக்கூத்து, புறக்கூத்து, பதினொரு வகை யாடல் என்பன. வரிக் கூத்துக்கும் ஆடற்கும் உள்ள பாடல்களுக்கு இயைந்த இயக்கமும், சொற்கள் இசைக்குப் பொருந்தியிருக்கும் திறமும் இசையாசிரியன் உணர்ந்திருப்ப துடன், “ கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப் பாடலும்” (சிலப்.3:33-34) உணர்த்த வல்லவனாவான். தான் எடுத்த பாட்டின் பண்ணீர்மையை, முதல், முறைமை, முடிவு, நிறைவு, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்ற பதினொரு பாகுபாட்டால் காண்பான். தண்ணுமையாசிரியன், ஆடல், பாடல், இசை, இயற்றமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் என்ற இவற்றை நன்கறிந்து ஏனைக் கருவிகளின் குறைந்த இசையை நிரப்புதலும், மிகுந்த இசையை அடக்குதலும் நிகழுமாறு கைத்தொழில் அழகுபெறச் செய்வன். குழலிசைப்போன், இசைபாடுவோன் புணர்க்கும் சித்திரம் வஞ்சனை யென்ற இரண்டும் அறிந்து, பண்ணீர்மை நூற்று மூன்றும் தெளிய வுணர்ந்து, யாழ் நரம்போடு இனிதின் இசைந்து, “ இசையோன் பாடிய இசையின் இயற்கை வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி இசைபட வைத்து வார நிலத்தைக் கேடின்று வளர்த்து” (சிலப்.3:64-67) பாட்டின் சொல்நீர்மை தோன்ற இசைப்பவனாகும். வார நிலம், முதல்நடை, வாரம், கூடை, திரள் என்பனவாகும். இவை இசையின் இயக்கங்களாகும். இவ் வண்ணமே, யாழிடத்தே, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப்பாலை என்ற ஏழ்பாலை யினையும் இணை நரம் பாகத் தொடுத்து நிறுத்திக் காட்டி, வலிவு, மெலிவு, சமம் என்ற மூன்றும் விளங்க, நரம்பின் அடைவு கெடாமல், பண்ணீர்மை குன்றாமல் இசைக்க வல்லவனாகும். நாடக மாடற்கேற்ற ஆடரங்கும், ஆடல்மகளிர் அவ்வரங்கில் வந்து நிற்கும் முறையும், அவ்வரங்கில் அமைக்கப் படும் திரைகளும் தலைக்கோலை நீராட்டி, ஊர்வலம் செய்து, அரங்கேற்றலும், அரங்கேறுபவள் வலக்காலை முன் மிதித்தேறி நிற்பதும் பிறவும் அரங்கேற்று காதைக் கண் விரித் தோதப் பெறுகின்றன. மேற்கூறிய பதினொருவகை ஆடற்கும் தொடக்கத்தே, தெய்வத்தைப் பரவும் பாட்டுப் பாடப்பெறுகிறது. அதனைத் தேவபாணி என்கின்றனர். இயற்றமிழில் வரும் கொச்சக ஒரு போகே, பெருந் தேவபாணி, சிறு தேவபாணி யெனவும்,, ஒரு போகில் வரும் தரவையே நிலையென்று கொண்டு, முகநிலை, இடைநிலை, முரி நிலை யெனவும் கூறுவர். இசைப்பாட்டுக்கள், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறு தேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்று வரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டிலம் எனப் பத்துவகையாகவும் பிறவேறு வகையாகவும் கூறுவர். பதினொரு வகையாடலும், கொடு கொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல், துடி, குடை, குடக்கூத்து, பேடு, மரக்கால், பாவை, கடையம் என வரும். வரிக்கூத்து, கண்கூடு வரி, காண் வரி, உள் வரி, புறவரி, கிளர் வரி, தேர்ச்சி வரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்று எட்டு வகைப்படுகிறது. இவை வேனிற்காதையில், “திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்” (வரி. 74-108) என்று தொடங்கி, “எடுத்தவர் தீர்த்த எடுத்துக் கோள் வரி”என வருவது ஈறாக உள்ள அடிகளால் விளக்கப்படுகின்றன. தாளவகை, கொட்டும் அசையும் தூக்கும் அளவுமென நான்கு வகைப்படும். இவற்றுள் கொட்டிற்கு மாத்திரை அரை; அசைக்கு ஒன்று; தூக்கிற்கு இரண்டு; அளவுக்கு மூன்று. தாளவழி நிற்கும் தூக்கு, செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயில் தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு என எழுவகைப்படுகிறது. இசைக் கருவிகளுள் சிறப்புடையன நான்கு; அவை, மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லிகை என்பனவாகும். இசை எழும் இடம் எழுவகையாகும்; அவை, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம். இவற்றிற்கு மாத்திரையும் முறையே நான்கு, நான்கு, மூன்று, இரண்டு, நான்கு, மூன்று, இரண்டு என வரும். இவற்றால் எழுப்பப்படும் பண்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் என நான்கு வகைப்படும். இவை மேலும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நந்நான்காய் விரிந்து பண் பதினாறாகக் காணலாம். இவற்றிற்குப் பொதுவில் இருபத்தொரு திறம் உண்டு. இத்திறம் இருபத்தொன்றும், அகநிலை முதலிய நான்கால் உறழின் எண்பத்து நான்காகின்றன. இவற்றோடு தாரப்பண்திறம், பையுள்காஞ்சி, படுமலை என்ற மூவகைப் பண்களும் கூடப் பண்கள் நூற்று மூன்றாகின்றன. இவற்றின் விரிவை இந் நூற்கு நாவலர் ந. மு. வே. நாட்டாரவர்கள் எழுதிய உரையிற் காண்க. குரல் முதலாக வரும் ஏழிசையும் வடமொழியில் வரும் சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்ற ஏழுமாம் என்பார் கூற்றை மறுத்து, நாட்டா ரவர்கள் “இவற்றுள் இரண்டாவதும் மூன்றாவதும் நான்கா வதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க” (சிலப். பக். 77) என்பர். இனி, திரு. இராமச் சந்திர தீட்சீதரவர்கள் *“தமிழிசையின் சுத்த தாளமுறை அரிக்காம் போதி” என்று கூறுகின்றார். இந்நூற்கண் யாழ் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ் செங்கோட்டியாழ் என நால்வகைப் படுகிறது. இவை முறையே நரம்புகள் 21,19,14,7 ஆகும். இவை தவிர வேறும் உண்டு. குழல் வகையிலும் குழல், கொன்றை, ஆம்பல் என வகை பல கூறப்படு கின்றன. இசை நிலம் ஏழினுக்கும் ஒவ்வொருத்தராக நின்று, பண் ணெழுப்பி ஆய்ச்சியர் குரவையயரும் திறம் மிக்க இன்பந் தருவதாம். இது முதனூலிற் காண்க. ஈண்டு விரிக்கிற் பெருகும். XIV. சில வழக்காறுகள்:- ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தும், சங்க நூற் காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் இருந்த திருமண முறை இச்சிலப்பதிகாரக் காலத்தே மாறியிருக்கிறது. தொல் காப்பியனார் முதலியோர் காலத்தே நிலவிய களவு வழி நிகழ்ந்த காதல் மணம் இளங்கோவடிகள் காலத்தே இல்லை யென்பதை, கோவலர்ககும் கண்ணகிக்கும் நிகழ்ந்த மணவினை காட்டுகின்றது. “இரு பெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்ந்தனர்” என்பது அடிகள் உரையாகும். மேலும், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத், தீவலஞ் செய்வது” என்ற முறை இவர் காலத்தே தோன்றிவிட்டது. திருமணம் புணரும் மக்களை வாழ்த்துமிடத்தும், கடவுட் பூசை நிகழ்த்துமிடத்தும் பிறாண்டும் அரசனை வாழ்த்தும் நன் முறை, “செருமிகு சினவேற் செம்பியன், ஒரு தனியாழி உருட்டு வோன் எனவே” (மங்கல). என்றும், “பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறநாட்டுக், கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே” (வேட்டுவ.) என்றும், “உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர், வில்லெழுதிய இமயத்தொடு, கொல்லியாண்ட குடவர் கோவே” (குன்றக்.) என்றும் வருவன வற்றால் இனி துணரப்படுகின்றது. அடிகள் காலத்தே தமிழ்நாட்டு மனையறம் சீரிய நிலையில் இருந்திருக்கிறது. பெற்றோர் வழங்குவன கொண்டு மகளிர் தம் கணவனுடன் கூடி, அறவோர்க் களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களைச் செய்தனர். கண்ணகி மாதரியின் மனையில் தங்கிக் கோவலற்கு உணவு சமைத்து உண்பிக்கும் திறம், மிக்க பழங்கால நிகழ்ச்சி யாயினும் இன்று நிகழ்வது போலவே உளது. அவர் சமைத்த கறிவகை, “ கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய், வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத் தீங்கனி” (16:24-26) இப்போதும் செய்யப்படுவனவே. கணவற்கு வாழையிலையை விரித்து உணவிட்டு அமுது செய்விப்பது இப்போது நம் கண் முன் நிகழ்வது போன்று தோன்றுகிறது. பெற்றோர் கொடுப்பன பெற்று, அவர் அமைத்த மனைக்கண் இருந்து மனையறம் புரியும் இக் கொள்கை சங்க காலத்துக் கருத் தொடு மாறுபடுகிறது. சங்க இலக்கியத்துள் வரும் தலைமக்கள், “போனக மென்பது தானனுழந்துண்டல்” என்னும் கொள்கை யுடையர். “கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக், கொடுத்த தந்தை கொழுஞ் சோறுள்ளாள்”(நள் 110) எனத் தலைவியது மனைநலம் கண்டு ஆசிரியர் போதனார் என்னும் சான்றோர் கூறுவதும், “பெற்றேம் யாமென்று பிறர் செய்த இல்லிருப்பாய், கற்றதிலை மன்றகாண்” (கலி. 111) எனத் தலைவி கூற்றாகச் சான்றோர் கூறுவதும் சங்க நூற்கருத்தை வற்புறுத்துதல் காண்க. இந்நூலில், ஆங்காங்குக் குறிப்பாகக் கூறப்படும் விழாவும் வழிபாடும் கழித்துச் சிறப்பாக அடிகளால் கூறப்படும் விழாவும் விளையாட்டும் பலவல்லவாயினும் சில உள்ளன. இந்திர விழா, பங்குனி வில்விழா, வேட்டுவர் குரவை, ஆய்ச்சியர் குரவை, குன்றவர் குரவை முதலியன சிறப்புடைய னவாகும். இவற்றுள், இந்திர விழா காவிரிப்பூம் பட்டினத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாள் நடை பெறுகிறது. மணிமேகலை நூல், இவ்விழாவை நகர்க்கு அறிவித்தலும், விழா நிகழும் வீதிகளில் நடக்கும் காட்சிகளும் காட்டி நிற்ப, இந்நூல் அவ்விழாவினை மக்கள் கொண்டாடும் முறையினை இந்திர விழவு ஊர் எடுத்த காதைக்கண் விரித்துக் கூறுகிறது. காவற் பூதத்துப் பலி பீடிகைக்கு மறக்குடி மகளிர் சென்று, “ புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் பகையும் பொங்கலும் சொரிந்து பெருநில மன்னன் இருநில மடங்கலும் வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி” (சிலப்.5:68-73) வழிபடுகின்றனர். போர் வீரர், “வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க” என வேண்டித் தம் உயிர் பலியிடுகின்றனர். பின்பு பூத சதுக்கம் முதலாகவுள்ள ஐவகை மன்றங்கட்கும் அரும் பலியூட்டி, மங்கலக் கொடிகளும், தோரணங்களும், பூரண கும்பம், பொற்பாலிகளும் பிறவும் கொண்டு; நகரையும், கோயில்களையும் புனைந்து, ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும்,அரசகுமரரும், பரதகுமரரும், தேர் முதலிய நால்வகைப் படை வீரரும், பிறரும் ஒன்று கூடி, காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து, “விண்ணவர் தலைவனை விழு நீராட்டி”, பிறவாயாக்கைப் பெரியோன் முதலாகவுள்ள கோயில்கள் பலவற்றிலும் வழிபாடாற்றுகின்றனர். அறவோரும், புலவரும், பிறரும், அறநிலையங்களில் மக்கட்கு அறம் உரைக்கின்றனர். இசைப் புலவர் இசையின்பம் வழங்க, நாடக மகளிர் ஆடலும், பாடலும் காட்டி, மக்களை இன்புறுத்துகின்றனர். விழாவின் இறுதியில் உவாநாள் வருகின்றது. மக்கள் விடியற்போதே சென்று கடலாடிக் கடற் கானற் சோலையில் தங்கி இன்புறுகின்றனர். இவ்விந்திர விழா நிகழ்ச்சி குறித்து அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்பைக் கொண்டு காலக் கணக்கிட்டு ஆராய்ச்சி செய்த திரு. L.D. சாமிக்கண்ணுப் பிள்ளை யவர்கள், அடியார்க்கு நல்லார்கூறிய குறிப்பு வழுவுடைத் தென்றாராக, சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பாசிரியர், கொடைக் கானல் வானியலா ராய்ச்சியாளர் துணைகொண்டு, அக் குறிப்புக் களையே ஆராய்ந்து, “இவ் விந்திர விழா கி.பி. 174 ஆம் ஆண்டு, சித்திரைத் திங்கள் முதல்நாள் சனிக்கிழமை தொடங்கியது”* என்று குறிக்கின்றார். இவ் விழா நிகழ்ச்சியைக் காண்போர் நினைவில், கரிகால் வளவன் காவிரியில் புதுவெள்ளம் வருங்கால் கொண்டாடும் புது நீர் விழா தோன்றி மகிழ்விக்கின்றது என்று அடிகள் கூறுவதால், புதுநீர் விழாவயரும் வழக்கமும் சிலப்பதிகாரக் காலத்தே இருந்தமை தெரிகிறது. “ கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியரசு யாண்டுளன்” என்று அடிகள் கூறுவதும், இப் பகுதிக்கு அரும்பதவுரை காரர் பொருள் கூறுவதும் நோக்கின், அடிகள் காலத்தே மதுரையில் காமவேளுக்குப் பங்குனித் திங்களில் வில்விழா நடந்த செய்தி தெரிகிறது. காட்டுள் வாழும் வேட்டுவர் தமக்கு வேட்டையும் பிற வருவாயும் இன்றி வறனுற்று வருந்தும் காலமெய்தின் அவர்கள், காடுகிழாளாகிய கொற்றவைக்குப் பரவுக்கடன் செய்து, கொற்றவை, வள்ளிநாயகி முதலாயினோர் கோலம் தாங்கி வரிக்கூத்தாடி வழிபடுவதுண்டு. அவர்கள் பழங்குடியிற் பிறந்த ஒருத்தியை, தலைமயிரைப் பின்னிச் சடையிட்டு அதில் பாம்பு போலப் பொன் நாணைச் சுற்றி, பன்றிப் பல்லைப் பிடுங்கி அம் முடியில் பிறை போலச் சூட்டி, புலிப் பல்லால் மாலை யணிந்து, அதன் தோலை அவட்கு உடையாக உடுத்துக் கலைமான்மேல் ஏற்றிப் பல்வகை இயம் முழங்க ஐயைக் கோட்டத்திற்குச் சென்று வழிபடுவர். அவளும் அணங்கேறியாடுவள். அவள், அவர்கள் செய்யும் வழி பாட்டினை ஏற்றுக் கொண்டதாகக் கூறிய பின் பல வகைப் பாட்டுக்களைப் பாடி அக் கொற்றவையைப் பரவி முடிவில் தம் அரசன் வெற்றி மேம்பட்டு விளங்குமாறு வாழ்த்தி அமைவர். இடையர்சேரியில் வாழும் இடையர்கள் தம் இறைவனான கண்ணனைக் குரவைக் கூத்தாடிப் பரவுவர். பரவுதற்குரிய காலத்தே யன்றி, தங்கள் சேரியில் ஏதேனும் தீக்குறி நிகழினும் இக் குரவைக் கூத்தை யாடுவர். கண்ணகியும் கோவலனும் தங்கி யிருந்த ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி பல நிகழவே அவர்கள் குரவைக் கூத்து ஆடலாயினர். ஆயர்மகளிருள் எழுவரை வட்டமாக நிறுத்தி மேற்கிலிருந்து ஒவ்வொருத்திக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று பெயரிட்டு, குரல் என்பவளை மாயவனாகவும், இளி என்பாளைப் பலதேவனாகவும், துத்தம் என்பாளை நப்பின்னை யாகவும் கொள்வர். பின்பு, மாயவன் அருகில் பின்னையும், தாரமும் நிற்ப, பலதேவனைச் சார உழையும், விளரியும் நிற்பர். கைக்கிளை பின்னைக்கு இடப்பக்கத்தேயும், விளரி தாரத்துக்கு வலத்தும் நிற்ப, அம் முறையே இசையும் இயக்கப்பெறும். இம்முறையே இவர் கண்ணனைப் பாராட்டத் தொடங்கி, ஆடுபவரைப் புகழ்ந்து உள்வரியை வாழ்த்தி முன்னிலைப் படுத்தியும் படர்க்கையில் வைத்தும் திருமாலைப் பரவி, தமக்குற்ற, இடர் நீங்கவும் தம்நாட்டு வேந்தன் வெற்றி யெய்தவும் பாடியும் பரவியும் வாழ்த்தியும் அமைவர். சேரநாட்டுக் குறவரும் கண்ணகியார் விண்புகுந்தது கண்டு பெருவியப்புற்றுக் கண்ணகியாரைத் தெய்வமாகக் கருதி முருகனைப் பரவிச் சேர மன்னனை வாழ்த்துகின்றனர். இதனால், தம் கூட்டத் திடையே ஏதேனும் புதிய அரிய நிகழ்ச்சி நிகழினும் தம் கடவுளரை வழிபட்டுக் குரவை முதலியன அயர்வர் என்று அறிகின்றோம். நாட்டு மக்களிடையே நிமித்தம் காண்பதும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும், வழக்கமாக உள்ளன. கண்ணகி, மாதவி முதலாயினார்க்குக் கண் துடிப்பதும், கண்ணகி, கோவலன், பாண்டியன் தேவி முதலாயினார் தீக்கனாக் காண்பதும்; கோவலன் சிலம்பு விற்கச் செல்வான், வழியில் தீக்குறி காண்பதும்; சேரன் செங்குட்டுவன் நன் முழுத்தம் பார்த்துக் குடை, வாள் என்பவற்றை முதற்கட் செலுத்துவதும்; கோயிலில் கடவுளை வணங்கி ஊர்விட்டு நீங்குபவன் அக்கடவுளின் அருட்கொடை (சேடம்) பெறுவதும்; பிறவும் மேற்கூறிய வழக்காற்றுக்குச் சான்று பகர்கின்றன. உரை காரர்கள் கனாநூல் என்றொரு நூலை மேற் கொள்ளலால், கனாப் பயன் காண்டல் சிலப்பதிகாரக் காலத்தே மக்களிடையே நன்கு வேரூன்றியிருத்தல் தெரிகிறது. பூதங்கள் முதலியவற்றை நிறுவிப் பலியிட்டு வழிபடுவதும், அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற நால்வகை வருணத்துக்கும் காப்பாக நால்வகைப் பூதம் இருப்பதாகக் கருதுவதும் அக்கால வழக்கமாகும். மக்கள், தம் அரசனைத் திருமாலாகவே நினைந்து வழி பட்டிருக்கின்றனர். இது, “ தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்.” ‘ மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையான் என்பரால்’ ‘ மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில்தோ ளோச்சிக் கடல் கடைந்தான் என்பரால்’ (17; உள்வரி வாழ்த்து.1-2-3) என அடிகள் கூறுமாற்றால் உணரப்படும். இவ் வழக்குப் பற்றியே போலும், “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” எனப் பிற்காலத்துப் பெரியோர்கள் பேசலாயினர். இனி, இவ் வேந்தர்கட்கு இவர்தம் நாட்டு யாறுகளைப் பெண்ணாக உருவகம் செய்து மனைவியராகப் புனைந்து பாராட்டு வதும் வழக்கமாக உளது. இதனைக் கானல்வரியில், கோவலன், காவிரியைப் பாடுவான், “ திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” (7:) என்று பாடுவதால் அறியலாம். அடிகள் காலத்தே உழவுத்தொழிலால் நெல் முதலிய பல் வகைக் கூலங்களும் விளைக்கப்பெற்றதோடு பல வேறுகைத் தொழில்களும் நடந்திருக்கின்றன. தமிழ்மக்கள் அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என உயர்ந்தோரும், இவர் தம் ஆதரவு பெற்றுக் கைத்தொழில் புரிவோருமாய்ப் பிரிந்திருக் கின்றனர். தொழில் புரிவோர், கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், துன்னர், கஞ்சர், கூவியர், காழியர், பாசவர், வாசவர், கணக்கர், பரதவர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், பாணர், பொருநர், கண்ணுளர், அம்பணவர், ஓவர், சூதர் முதலாகப் பலவேறு வகையினர் இருந்திருக்கின்றனர். இவர்கள் மேற் கொண்டிருந்த தொழில் வகைகள் புகார், மதுரை முதலிய நகரத்திடத்தே கூறப் பட்டிருக்கின்றன. அவற்றை ஓராற்றால் கூறலுறின், தச்சுவேலை, சுதைவேலை, மட்பாண்டம் செய்தல், மணிகடைதல், சங்கறுத்தல், வளைபோழ்தல், மாலை தொடுத்தல், கயிறுபின்னுதல், மரக்கலம் சமைத்தல், கலம் செலுத்துதல், படைக்கலம் செய்தல், பொன்மாற்றுக் காண்டல், கூலமளத்தல், துணி தைத்தல், தோல் தைத்தல், ஓவிய மெழுதுதல், கூத்தாடல், பாட்டிசைத்தல், இசைக்கருவியிசைத்தல், ஒலைப்பாய் முடை தல், செம்பு வெண்கலம் பொன் இரும்பு வெள்ளி என்ற இவற்றால் பணியும் பாண்டமும் செய்தல், அரசர் முதலி யோரிடம் பணிசெய்தல், போர்செய்தல், ஆனிரைமேய்த்தல், தேன் அழித்தல், மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் பவழம்ஈட்டல் முதலிய பலவாகும். மேலும், பெருங்குடிவணிகரேயன்றி, வேறேயும் சிலர் அப்பம், பிட்டு, வேறு பண்ணியாரம் விற்பர்; சிலர் கள், மீன், ஊன் முதலியவை விற்பர்; சிலர் உப்பு, எண்ணெய் முதலியவற்றை விலை செய்வர். உள்நாட்டிலிருந்து பல்வகைக் கூலங்களும் விரைப் பொருளும் வண்டிகளிற் கொணர்ந்து விற்பர்; கடற்கரை வாழ்நர் உப்பு, மீன் முதலியவற்றை உள்நாட்டிற்கு வண்டிகளில் கொண்டு செல்வர். கூட்டம் கூட்டமாகச் செல்லும் இவர்கட்கு வாணிகச்சாத்து என்பது பெயர். மோர், நெய் முதலியவற்றை வேற்றிடம் கொண்டு சென்று ஆயர் விற்பர். பூ விற்போரும் உளர். பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் மிக நயமான உடை நெய்து விற்பர். அவற்றுள் பல வெளிநாடுகட்குச் செல்கின்றன. கடலிற் கலஞ்செலுத்தி வாழ்வோர் பலர். கடலிடத்தேயன்றி யாறுகளிலும் பல்வகை நாவாய்களைச் செலுத்துவர். கப்பல்களின் நலத்தை அடிகள் வியந்து, “நீரணி மாடம்” என்று பாராட்டு கின்றார். கடல்வாணிகத்தின் நலம், “ அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவன ரீட்ட” (சிலப்.2:5-7) என வருவனவற்றால் அறியலாம். இதன் பயனன்றோ வேற்று நாட்டு யவனர்களையும் இந் நாட்டிற்கு வருவித்து வாழ வைத்தது! இவ்வாறு ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே ஆராயலுறின், இவ்வாராய்ச்சி வரம்பின்றிப் பெருகுமாதலின், இவற்றை இம்மட்டில் நிறுத்தி, ஆசிரியர் இளங்கோவடிகளின் புலமை நலத்தைச் சிறிது காண்பாம். XV. இளங்கோவடிகளின் குணமாண் புலமை நலம். இளங்கோவடிகளின் புலமைநலம் காணும் பகுதியே இந்நூலாராய்ச்சிப் பகுதிகளுள் மிக்க அரிய பகுதியாகும். “புலமை மிக்க வரைப் புலமை தெரிதல் புலம்மிக்கவர்க்கே” உரிய தென்பது பண்டையோர் கொள்கை. அஃது எக்காலத் துக்கும் ஒப்ப முடிந்த உண்மையுமாகும். அடிகளின் பாட்டுக்களின் நலத்தைத் தம் அறிவு முழுதும் செலுத்தி ஆராய்ந்து நுகர்ந்த அடியார்க்கு நல்லார், “முழுத்தும், பழுதற்ற முத்தமிழின் பாடல்” என்று பாராட்டு கின்றார். இந்நூலெழுந்த காலம்தொடங்கி, இன்று வரை, அடிகளின் புலமைநலத்தைச் சிறிதேனும் சுவைத்தறியாத தமிழறிஞனே இத் தமிழகத்தில் இருந்ததில்லை யெனின், அது மிகையாகாது. இவர் அரச குடும்பத்திற் பிறந்து, அரசர்க்குரிய கல்வியறிவும், செல்வாக்கும் பெற்று, அற நூல்களை நன்கு பயின்று, தம் தமையன் செங்குட்டுவன் மனம் வெறாவண்ணம் துறவு பூண்டு, குணவாயிற் கோட்டத்தே அறவோரும், புலவர் பெருமக்களும் உடன் சூழ இருந்து நல்லறிவு சிறந்தவ ரென்பது, இவர் வரலாறு கூறியவிடத்தே கூறினோம். உயர் நிலை, இடைநிலை, கீழ்நிலை யெனப்படும் மக்கள் வாழ்க்கை நிலையில், அடிகள், ஏனைய பெரும்பாலார் போல இடைநிலை, கீழ்நிலைகளில் தோன்றாது உயர்நிலையில் தோன்றி, உயர்நிலையில் வளர்ந்து, உயர்நிலையில் சிறந்த உயர் வாழ்வுடையர் என்பது துணிவாகிறது. இடை நிலையர், கீழ் நிலையர் போல, மக்கள் வாழ்வில் காணப்படும் குறைகளையும், புன்னெறிகளை யும், பிறவற்றையும் நேரிற்கண்டறியும் வாய்ப்பு இவர்க்குக் கிடையாது. துறவு மேற்கொள்ளும் காலம் வரையில், உலக வாழ்விலும் உயர் நிலை வாழ்வும், உயர்ந்தோர் கூட்டுறவுமே பெற்றதனாலும்; துறவு பூண்ட பின், உலக வாழ்வில் உவர்ப்புக் கொண்டுவிட்டதனாலும், இவர் செய்யுட்களில் பலவேறு நிலை யினையுடைய மக்களின் பண்பும், செயலும், விளங்கித் தோன்ற வில்லை. அல்லும் பகலும் நூற்பயிற்சியும், ஆராய்ச்சியும் செய்தவ ராதலின்;இவர் வழங்கிய கருத்துக்கள் பலவும் நூலறிவே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கோவலன் தோற்றம் கண்டு ஐயுற்ற ஊர்காப் பாளர்க்குப் பொற்கொல்லன், கள்வர் செயல் வன்மையும் நுட்பமும் கூறுவான், களவுநூல் கருதுக்களை வகுத்தும் விரித்தும் எடுத்துக் காட்டோதியும் காவலரை மயக்குகின்றான். இவ்வாறே, கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி, மாதவி, அரசர், அந்தணர் என்று எவர் எது பேசினும், பண்டை நூற்கருத்துக் களையே எடுத்துப் பேசுகின்றனர். இவற்றால், அடிகள் மிகப் பரந்த நூற்புலமை யுடையரென்பது புலனாம். இசை நாடக நூல்களைக் காட்டுவது மிகையன்றோ. கோவலன் திருமணத்தில் மாமறை நூலும், மனை வாழ்வில் கண்ணகியைப் பாராட்டுமிடத்துப் பலவேறு புராண வரலாறுகளும், மாதவி அரங்கேறுமிடத்து இசை நாடக நூல்களும், அந்திமாலைச் சிறப்புரைக்குமிடத்து அரசியற் கருத்தும், இந்திர விழாவில், அறவோரும் புலவரும் உரைக்கும் அறநூற்கருத்தும், இவ்வாறே ஒவ்வொரு பகுதியிலும் பலப்பல நூல்களும், நூற் கருத்துக்களும் வருவன யாம் மேலே கூறிய உண்மையை வற்புறுத்து வனவாகும். அரசிளங்கோவாகிய இவர் மேற்கொண்டிருந்த துறவு மிகத் தூய்மையானது. பிற்காலத் துறவிகட்கும், இவர்க்கும் பெரியதோர் வேறுபாடு காணப்படுகிறது. பிற்காலத் துறவியர், தாம் உள்ளத்தே மிக்க தூயராய் இருந்தபோதும், பாடிய பாட்டுக்களை நோக்கின், இன்பச் சுவையில் ஈடும், எடுப்பும் இல்லையென்னுமாறு பாடியிருக் கின்றனர். திருத்தக்கதேவர் பாடிய சீவகசிந்தாமணியும், தோலா மொழித் தேவர் பாடிய சூளாமணியும், கச்சியப்பமுனிவர் பாடிய தணிகைப் புராணமும், ஏனைத் துறவிகள் பாடிய சிறு நூல்களும் இக் கருத்தை முற்றும் உண்மையே எனத் துணிவிக்கின்றன. ஆனால், இளங்கோவடிகள், இவர்கள் கையாண்ட இன்பத் துறையை எடுத்துரைக்கும் திறம் எண்ணுந்தோறும் இன்பம் பயக்கின்றது. கோவலன் இளமைச் செவ்வியும், செல்வச் செருக்கும் மிக்குக் காமுகனாய் மாதவிபால் ஒழுகும் திறம் இன்பச் சுவைக்கு இனிய இடமாகும். அதனைக் கூறும் அடிகள், இன்பச் சுவையும் கெடாது, தாம் அதனைக் கூறற்குக் கூசுகின்ற அக் குறிப்பும் மறையாது, “ மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து காமக் களிமகிழ் வெய்திக் காமர் பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து நாண்மகி ழிருக்கை நாளங் காடியில் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையும் சாந்தும் புலராது சிறந்து நகையா டாயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொடு இன்னிள வேனிலொடு மலய மாருதம் திரிதரும்” (சிலப்.5:190-203) எனத் தென்றல்மேல் வைத்து நயமுறக் கூறும் திறம் காணலாம். கானல்வரி, வேட்டுவவரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை முதலிய விடத்தும் பல பாட்டுக்கள் இன்பச்சவை குறித்து வருவன உள. அவற்றிடையே அடிகள் தோற்று விக்கும் காதலின்பம் மிகத் தூய உயரிய காதலின்ப மாதலை நன்கு காட்டுகின்றார். அழகிய சோலையிடத்தே காளை யொருவன் தன் காதலியைக் கண்டு கூடி இன்புறுகின்றான். பின்பு அவளின் நீங்கித் தனித்திருக்கும்போது, அவளைக் கண்ட காட்சியைப் பாடுகின்றான். இக்கருத்தை அடிகள் நமக்கு உரைக்கப் புகுந்து, “ திரைவிரி தருதுறையே, திருமணல் விரியிடமே, விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே. மருவிரி புரிகுழலே, மதிபுரை திருமுகமே, இருகய லிணைவிழியே எனையிடர் செய்தவையே” (சிலப்.7:12-15) என்று பாடிக்காட்டுகின்றார். இது கானல்வரி; கோவலன் பாடுவது, இதன்கண், அக்காளை சென்ற இடம் அலை யலைக்கும் நீர்த்துறை என்பதைத் “திரை விரிதரு துறை” என்றதனால் காட்டி, அவ்விடத்தே தூயவெண்மணல் விரிந்திருந்தது என்பதை, “திருமணல் விரியிடமே ” என்றும், அவ்விடம் மிக்க நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலை யென்றற்கு, “விரைவிரி நறுமலரே மிடைதருபொழிலிடமே” என்றும், மணம் விரிந்து கமழ்ந்ததே அக்காளை அப் பொழிற்குச் செல்ல ஏதுவாயிற் றென்றற்கு, “விரைவிரி நறுமலரே” என்றும், அவ்விடத்தே அவன் மனம் கவர்ந்த இளநங்கை, அவன் வரும் பக்கத்தே முதுகுகாட்டிக் குழல்தோன்ற நின்று கொண்டிருந்த தோடு, ஆங்குள்ள பூக்களைக் கொய்து தலையில் சூடி யிருந்தாளென அவள் ஆங்கு வந்ததற்குக் காரணமும் தோன்ற, “மருவிரி புரிகுழலே” என்றும், அவன் வரக்கண்டு, அவளது அழகிய ஒளிதிகழும் மதிபோலும் முகம் அவன்பக்கம் திரும்பக் கண்டான் என்றற்கு “மதிபுரை திருமுகமே” என்றும், அவள் தன் காதற் குறிப்பும் உடன் பாடும் தோன்ற அவனைக் கண்டாள், இருவர்க்கும் கருத்து ஒன்றாயிற் றென்றற்கு, “இருகயல் இணை விழியே” என்றும், அப் பார்வை அவனுக்கு என்றும் மறவாத நிலையில் நெஞ்சில்நின்று வேட்கையுணர்வைக் கொளுத்திய வண்ணம் இருந்தது தோன்ற, “எனையிடர் செய்தவையே” என்றும் சொற் சுருக்கமும் பொருள் விளக்கமும் நவில்வோர்க்கு இனிமையும் பயப்ப அடிகள் கூறியிருத்தல் காண்க. இந்நலம், அடிகள் பாட்டு முழுதும் இருப்பது தமிழ் நலம் துய்க்கும் சான்றோர் பலரும் உணர்வராதலின், இம்மட்டில் நிறுத்தி மேற் செல்கின்றாம். தாம் சொல்லக் கருதும் கருத்தை, மயங்கவைத்தல், திரிசொற் புணர்த்தல் முதலியனவின்றி, கேட்போர் இனிதுணருமாறு தெளிய வுரைத்தல் வேண்டுமென்ற குறிக்கோள் அடிகளின் சிறப்பியல் பாகும். இதனைக் கண்ணகியார் வழக்குரைத்த பகுதிக்கண் காணலாம். அவ்வழக்குரையில் சில சொற்களால் கண்ணகியார் தம் கருத்தை அரசன் அறியுமாறு உரைக்கும் முறையினை ஆண்டுக் காண்க. ஈண்டுக் கூறுவது வேண்டா கூறலாம். இனி, அடிகள் சேரர் குலத்திற் பிறந்தாராயினும், துறவு பூண்டு, அருளும் அறமும் நிறைந்த உள்ளத்தராகலின், இந்நூற்கண் வரும் அனைவர்பாலும் யாவர்க்கும் வெறுப்பும், வெகுளியும் பிறவாவண்ணம் யாவர் நலமும் ஒளியாது உரைக்கின்றார். மூவேந் தருள் சோழவேந்தர் சிறப்பை மங்கலவாழ்த்துப் பாடலில், ஞாயிறு, திங்கள், மழை முதலிய வற்றை வாழ்த்து முகத்தாலும் இந்திரவிழவூ ரெடுத்த காதையில் “கரிகால் வளவன்” வடநாடு சென்று இமையத்திற் புலிப்பொறி வைத்து வடவேந்தர் சிலரை வென்று, வச்சிர நாடு, மகதநாடு, அவந்திநாடு முதலிய நாட்டவரைப் பணி வித்து அவரால் கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் பிறவும்பெற்ற செய்தி கூறுமுகத்தாலும், கரிகாலன் கழார் முன்றுறைக்கண் புதுநீர் விழா அயர்ந்தது கூறுதலாலும், வழக்குரை காதைக்கண் கண்ணகியார் புகார் நகரத்தின் சிறப்போது மாற்றாலும் விரியக் கூறும் அடிகள், பின்னர் மாடலன் செங்குட்டுவனுக்கு இறுக்கும் விடை வாயிலாக, சோழ வேந்தரின் அரசுமாண்பினை வியந்து, “ வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில்மூன்றெறிந்த இகல்வேற் கொற்றமும், குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரும் பருந்தின் இடும்பை நீங்க அறிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும் திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? தீதோ இல்லைச் செல்லற் காலையும் காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” (சிலப்.27:164-171) என்று கூறி நம்மனோர் மனத்தே நன்மதிப்பு நிலவுவிக்கின்றார். காப்பியத் தலைமக்கள் பிறந்தநாடு சோழ நாடாதல் பற்றி அதனை அவ்வாறு புகழ்ந்து கூறல்வேண்டும் என்ற நியமமும் இன்றாதலின், உள்ளதன் உண்மை கூறும் கடப் பாட்டால் ஓதுகின்றாரென்றே கொள்ளல் வேண்டும். அடிகள், சேரர்குடிக் குரியோராதலின், அதனைப் பற்றிக் கூறுமிடத்தும் மிகைப்படுத்தியோ, புனைந்தோ அவர் கூறுகின்றாரோ எனின், அதுதான் கிடையாது. எங்கும் உண்மை கூறும் புலமைநலமே இவர்பால் மிக்கு நிற்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற்கடம் பெறிந்த தும், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாலைக் கௌத மனார்க்குத் துறக்கம் நல்கியதும், இமயவரம்பன் இமயத்தில் விற்பொறி வைத்ததும், இவ்வாறே, “ போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கஎனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும், வன்சொல் யவனர் வளநாடாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி அகப்பா எறிந்த அருந்திற லாயினும், உருகெழு மரபின் அயிரை மன்னி இருகடல் நீரும் ஆடினோ னாயினும், சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்” (சிலப்.28;139-148) எனச் சேரமன்னர் பலருடைய வெற்றி நலங்களையும், “எழுமுடி யாரம்” அணியும் சிறப்பும் பிறவும் கூறுவதும் இவர் சேர மன்னரின் சிறப்புக் கூறும் நல்லுரைகளாகும். இவற்றுட் பலவும் சங்க கால நல்லிசைச் சான்றோர்களால் அவ்விலக்கியங்களுட் கூறப் பட்டிருத் தலால் இவர் கூற்றின் மெய்ம்மை இனிது தெளிவாகின்றது. கண்ணகியாரது இவ் வரலாறு காண்போர்க்கு, அவர் கற்புச் சிறப்பாலும், அவரால் பாராட்டப்படுதலாலும், சோழ மன்னர்பாலும், அவர்க்குக் கோயிலெடுத்துச் சிறப்பிப்ப தோடு, தமிழ்வேந்தரை இகழ்ந்த வடவாரியமன்னரை ஒறுத்துப் பணிவித்தும், சிறைப் படுத்தும், பின்பு சிறை வீடு செய்து சிறப்பித்தும் போற்று வதாலும்; கண்ணகியார் வரலாற்றை நூல்வடிவில் தருவதாலும் சேரமன்னர் பாலும் வாரமுண்டாவது இயல்பேயன்றிக் கோவலனைக் கள்வன் என்ற பொற்கொல்லன் சொல் கேட்டு உண்மையாராயாது கொலை புரிவித்த பாண்டியன்பால் அண்புண்டாவதில்லை; கண்ணகியார் பாண்டியனை “இறைமுறைபிழைத்தோன்,” “தேரா மன்னன்” என்பனவும் பிறவுமே அவருள்ளத்தை மாற்றி விடுவனவாகும். அவன் அவ்வாறு செய்த குற்றத்தைக் கண்ணகியார் வாயிலாகக் கண்டித்த இளங்கோவடிகள், பாண்டியர் குடிக்குற்றம் கூற ஒருப் படாது பாண்டி வேந்தர் ஆட்சி நலத்தைப் பலவிடங்களில் பரிந்து பாராட்டுகின்றார். மாடலன் கூற்றாக, “ அடியில் தன்னளவு அரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி; திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங்காரம் பொங்கொளி மார்பில் பூண்டோன் வாழி; முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னிஎன்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க” (சிலப்.11:17-29) என்பதும், மதுரைமாநகர் புகுந்து அதன் நலம் கண்டு திரும்பிய கோவலன் கூற்றாக, நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட..... தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்” (சிலப்.13:5-10) என எடுத்து மொழிவதும், கோவலன் கூறுவதாக, “ கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா; செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே” என்பதும், மதுரையைக் கண்ணகியார் சீறியபோது மதுராபதி போந்து, பாண்டியன் சிறப்பை, “ .......................................காதில் மறைநா ஓசை யல்லது யாவதும் மணிநா ஓசை கேட்டது மிலனே; அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றும் கோலனு மல்லன்; இன்னும் கேட்டி; நன்னுதல் மடந்தையர், மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை, கல்விப் பாகன் கையகப் படாது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது” (23:30-47) என்று கூறுவதும் பிறவும், பாண்டியன்பால் நம்மனோர் உள் ளத்தே அருவருப் புண்டாகாமைப் பாதுகாத்து, துறவுணர்வுக்கேற்ப, கோவலன் தீவினையை அவன் கொலைக்கு ஏதுவாக்கி, பாண்டியனை அவ்வினைக்குத் துணையாக்கி மிக்க சதுரப்பாடமைய அடிகள் இக்காப்பியத்தை அமைக்கின்றார். அடிகள், துறவுபூண்டிருத்தற்கேற்ப, உயிர்களிடத்தே தாம் கொண்டிருக்கும் அருளைக் கவுந்தியடிகளின் வாயிலாகப் புலப் படுக்கின்றார். வயல்வழியாகச் செல்லுமிடத்து, செல்வோர் அறியா வகையில் பல உயிர்கள் அவர்தம் காற் கீழ்ப்பட்டுத் துன்புறும் என்பதை நன்கறிந்து, கவுந்தியடிகள் கோவலற்குக் கூறுமிடத்தில், “ குறுநர் இட்ட குவளையம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்; எறிநீர் அடைகரை இயக்கந் தன்னில் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழடி ஒதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா” (சிலப்.10:86-93) என்று கூறுவது அவருடைய உள்ளத்தையே யன்றி, உலகியற் பொருள்களை ஊன்றி நோக்கும் அவரது இயல்பையும் புலப் படுத்துகிறது. மேலும், அடிகள் இயற்கைக் காட்சியில் மிக்க ஈடுபாடு டையர் என்பதை, அக் கவுந்தியடிகள் கூறும், “ வெயில்நிறம் பொறா மெல்லியற் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் கையறு துன்பம் காட்டினும் காட்டும்” (சிலப்.10:66-71) என்பதும், நீர்நிறைந்த வளவயலிடத்தே பலவகைப் பறவை யினங்களைக் கண்டு, “ கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும், கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக்குரல்” பரந்து (சிலப். 10:112-119) இருப்பதை எடுத்தோதுவதும் நமக்குக் காட்டி மகிழ்விக்கின்றன. இனி, வஞ்சிமாநகரின் புறத்தேயுள்ள நானிலத்திலும் வாழும் மக்கள் பாடும் பாட்டிசையின் சிறப்பை நமக்கு அறிவிக்கின்றார். முதற்கண் குறவர் பாடும் பாணியைக் கூறுவாராய், “அருகே கானத்தே, மூங்கிலில் அமைந்த தேனை யுண்டுகளித்த குறவன் கையிற் கவண் ஏந்தி, புனம் மேயவரும் யானை ஒன்றை எய்யக் குறிவைக்கின்றான்; யானையும் வருகிறது; இவற்றை யறியாத குறமகள் ஒருத்தி பரண்மேல் இருந்துகொண்டு, திறத்திறம் என்னும் இசை கலந்து குறிஞ்சிப்பாணி பாடுகின்றாள்; அவ்விசையின்பத்தில் குறவன் மெய்ம்மறந்து கவணைக் கைவிடுகிறான்; மேயவந்த யானையும் மேய்வதை விட்டுத் தூங்குகிறது” என்பார். “ அமைவிளை தேறல் மாந்திய கானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஒங்கியல் யானை தூங்குதுயில் எய்த.... திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி” (சிலப்.27:217-224) இருக்கிற தென்கின்றார். இவ்வாறே கோவலர் தம் ஆனிரைகளை நீர்த்துறையில் படிவித்துத் தம் தீங்குழல் ஊதுவதும் பிறவும் அழகு திகழ உரைக்கின்றனர். அந்திமாலைப்போக்கில் யாவும் ஒளியிழந்து இருள் மயங்கிப் பொலி வின்றியிருத்தலைக் கண்டு, அதனை, நில மடந்தை தன் அரசனையிழந்து அலமரும் அல்லற் காலம் என்றும், இருள் நன்கு படர்வது பகைவேந்தர் போந்து கைப்பற்றிச் செய்யும் கொடு மையாகவும் கூறுபவர், அக் காலத்து நிகழ்ச்சிகளை உள்ளவாறு சொல்லோவியம் செய்து, “ தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக் சூழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத அறுகாற் குறும்பெறிந்து அரும்புபொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தது” என்கின்றார். இக்காலத்தே காதலரைப் பிரிந்த மகளிர் பொலி விழந்திருக்கும் கோலத்தை, அடிகள், கண்ணகியாரின் நிலைமை கூறுவார்போல, “ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய, மென்றுகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்; மங்கல அணியின் பிறிதணி மகிழாள்; கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்; திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரிய, செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள்நுதல் திலகம் இழப்ப, தவள வாள்நகை திலகம் இழப்ப, மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப” (சிலப்.4:47-56) என்று புனைந்து கூறுகின்றார். இனி, இவர் காலத்தே உயர்நிலை மகளிர் பலவகை உயர்ந்த அணிகளை அணிந்திருந்தனர். அவற்றுட் சிலவற்றை மாதவி செய்துகொண்ட கோலத்தைக் கூறுமாற்றால் கூறுகின்றார். காலணிகள், பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் என்பன. தொடைக்குக் குறங்கு செறியும்; முப்பத் திரண்டு வடங்கொண்ட மேகலை இடைக்கும்; தோளுக்குத் தோள்வளை, கண்டிகையும்; கைக்கு மணியிழைத்த சூடகம், பொன்வளை, பரியகம், வால் வளை, பவழவளை முதலியனவும்; கைவிரற்கு மோதிரமும், வயிரத்தாளும்; கழுத்திற்குச் சங்கிலியும், நுண்சரடும், பொற்கயிறும், ஆரமும், பின்தாலிகோத்த மணிமாலையும்; காதில் தோடு, குழை, நீலக்குதம்பை முதலியனவும்; தலைக்குத் தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் முதலியனவும் அணிந்து கொள்வர். எனவே, மூக்குத்தி, நத்து, புல்லாக்கு முதலியன அக் காலத்தில் இல்லை போலும். இனி, அடிகள் திருவேங்கடம் திருவரங்கம் முதலிய இடங் களில் கோயில் கொண்டிருக்கும் திருமாலைக் கண்டிருக்கிறார். திருவரங்கத் திருமால் தோற்றத்தை, அதைப்பற்றிக் கூறியவிடத்தே எடுத்துக் காட்டியுள்ளோம். திரு வேங்கடமுடைய திருமாலை, “ வீங்குநீர் அருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கொடியுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ராரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன்” (சிலப். 11: 41-51) என்று தான் கண்ட கோலத்தைக் கண்டவாறே கூறுகின்றார். இன்றும் திருவேங்கடம் வருவோர், நிலத்திருந்தே மலைமேற் செல்லும் வழி நோக்குவரேல், அவர் ஆழ்வார் தீர்த்தம் எனப்படும். “வீங்கு நீர் அருவி” வீழ்வதைக் காண்பர். மீமிசைச் செல்லின், பாபநாசனம், கோகருப்பம், ஆகாய கங்கை என்ற மூன்று அருவி களைக் காண்பர். இஃதொன்றே, அடிகள் “வீங்குநீர் அருவிவேங் கடம்” என்றதன் உண்மையினை நன்கு வற்புறுத்துகிறது. சங்கத் தொகை நூல்களிலும் இவ்வேங்கடம் புல்லி யென்பானுக்கு உரியதென்றும், இது மொழிபெயர் தேயத்தது என்றும் மாமூலனார் முதலிய சான்றோரால் குறிக்கப்பட்டுளது; என்றாலும், இவ் வேங்கடத்தில் திருமாலின் இருப்புக் கூறப்படவில்லை. “மழபுலம் வணக்கிய மாவண்புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்”; “கல்லா இளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”; “மா அல் யானை மறப்போர் புல்லி, காம்புடை நெடுவரை வேங்கடம்”; “நெடுமொழிப் புல்லி, தேன்தூங் குயர்வரை நன்னாட்டும்பர், வேங்கடம்” (அகம். 61, 83, 209, 393) என்று வருதல் காண்க. எனவே, இவ் வேங்கடத்தே திருமாலுக்குக்கோயிலுண்டானது, மாமூலனார் முதலிய சங்க கால நல்லிசைச் சான்றோர்கள் இருந்த காலத்துக்குப் பின்பும், இளங்கோவடிகள் காலத்துக்கு முன்புமாம் என்பது உணரப்படும். அடிகள் காலத்தே வடநூற்புராண இதிகாசக் கதைகள் தமிழ்நாட்டில் வந்திருக்கின்றன. அவை வாயிலாக வடவர் வழக்க ஒழுக்கங்களுட் பல தமிழகத்தே புகுந்திருக்கின்றன. XVI. உரைநலம்: இப்பேரிலக்கியத்துக்கு அரும் பதவுரை யொன்றுண்டு; அதன் பிற்போந்த அடியார்க்கு நல்லார் என்னும் பேராசிரியர் அழகியதொரு விரிவுரை எழுதியுள்ளார். அரும் பதவுரை நூல் முழுமைக்கும் உண்டு; அடியார்க்கு நல்லார் உரை தொடக்க முதல் வழக்குரை காதை வரையில் தான் உளது. இவற்றின் இடையே கானல் வரிக்கு இவரது உரை கிடைத்திலது. இஞ்ஞான்று, நடுக் காவேரி நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நன்காராய்ந்து நூன் முழுமைக்கும் எழுதிய நல்லுரை, தமிழ் மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கின்றது. இப்பெரு மக்களின் உரை நலத்தை முதனூலைப்படித்து இன்புறுதல் வேண்டும். எனினும், இவ்வுரைகளின் திறத்தை ஒரு சிறிது இங்கேயும் காண்பாம். இப் பழையவுரை இரண்டனுள், அரும்பதவுரையே முற்பட்ட தாகும். அடியார்க் குநல்லாரும் இந் நூற்கண்வரும் இசை நாடகப் பகுதிகட்கு இவ்வரும்பதவுரையையே பெரிதும் தழுவியும் மேற்கொண்டும் உரை வகுத்துள்ளார். இவ்வுரையாசிரியரின் பெயர், ஊர், காலம் முதலியன தெரிந்தில. அரும்பதவுரையின் தொடக்கத்தே, “கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும், விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்பவிழ்தார்ச், சேரமான் செய்த சிலப்பதி காரக்கதை யைச், சாரமாய் நாவே தரி” என விநாயகக் கடவுளை வணங்குதலால், இவ் வரும்பதவுரைகாரர் சைவசமயத்தவர் என்று துணி தற்கு இடமுண்டாகிறது. இனி, இவ் வுரையைப் பற்றிக் கூறுமிடத்து, காலஞ் சென்ற டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் தமது, பதிப்புரையில், “அடியார்க்குநல்லார் உரையிற் காணப்படாத பல மேற்கோள் களும், சில நூற்பெயர்களும் இவ்வுரையிற் காணப்படுகின்றன.... சங்கச் செய்யுட்களுடைய கருத்து முதலியவற்றை இவர் ஆங்காங்கு விளக்கியிருப்பதுடன் சில சில விடத்து மிகச் செவ்விதாகப் பதசாரமும் எழுதியிருக்கிறார்; அடியார்க்குநல்லார் உரையாற் புலப்படாத சில செய்திகள் இவ் வரும்பத வுரையில் விளங்கு கின்றன. ...” என்று கூறியுள்ளார். “எறிநீரடைகரை இயக்கந்தன்னில்” (10:90) என்ற விடத்து, அரும்பதவுரைகாரர், “எறிநீரடைகரை-நீர்க்கரை; கடற்கரை யென்பாரு முளர்” என்று கூறுவதை நோக்கின், இவர் காலத்தோ, முன்னோ, இச் சிலப்பதிகாரத்துக்கு வேறே உரை இருந்திருக்கலாமென்று எண்ணு தற்கு வாய்ப்புண்டாகிறது. கண்ணகியார் விண்ணாடு சென்றதனைக் கண்ட குறவர்கள், சேரன் செங்குட்டுவனுக்கும், இளங்கோவடிகட்கும் தெரிவித்திருக் கின்றார்கள். இளங்கோவடிகட்கு அவர்கள் எப்போது சொன்னார்கள் என்ற செய்தி விளக்கமாக இல்லை. இதனை நன்கு தெளியக்கண்டு, அரும்பதவுரைகாரர், “இளங்கோவடிகட்குக் கண்ணகி வானவர் போற்றத் தன்கணவனோடு கூடியது கண்டு, செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து, ‘எல்லா மறிந்தோய், இதனை அறிந்தருள்’ என்று கூறிப்போக, பின்பு, செங்குட்டுவனைக் கண்டுபோந்து, அடிகளுழைவந்த சாத்தன் அதுபட்டவாறெல்லாம் கூற ” என்று உரைத்துத் தெளிவிக்கின்றார். இந்நூல் மங்கல வாழ்த்துப் பாடற் பகுதியில், கண்ணகியார் கோவலனுக்கு முற்கூறப்பட்டதற்கு அரும்பதவுரைகாரர், “இவளை முன் கூறிற்று, கதைக்கு நாயகி யாதலின்” என்கின்றார். இவ்வாறே, நச்சினார்க்கினியரும், சீவகசிந்தா மணி உரையில், “சீவகனை முற்கூறினார், கதைக்கு நாயகனா தலின்” என்று எழுதுகின்றார். ஆனால், அடியார்க்கு நல்லார், இவரை மறுக்காதே, “கண்ணகியை முற்கூறினார், பத்தினியை யேத்துதல் உட்கோளாகலான்” என்று உரைக்கின்றார். இவ்வுரை விகற்பத்தை நன்கு அராய்ந்து கண்ட நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், “பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க” என்கின்றனர். “அரைசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின், உரியவெல்லாம் ஒரு முறை கழித்து” (16:44-5) என்பதற்கு அரும்பதவுரை, “அருமறை மருங்கின் உரிய வெல்லாம் - பலியிடுதல் முதலா யின; வாய்பூசல் முதலாயினவுமாம். தன்னூரிற் செய்வன எல்லாம் செய்யப் பெறாமையின் ‘ஒருமுறை கழித்து’ என்றார். என்று கூறுகிறது. அடியார்க்கு நல்லார், அருமறை யென்பதற்கு, “ஓதவும் உணரவும் அரியமறை”யென்றும், உரிய வெல்லாம் என்பதற்கு, “உரியவாய் விதித்த வாய்பூச்சுப் பலியிடுதல் முதலிய வெல்லாம்” என்றும், ஒருமுறை யென்றதற்கு, “ஒரு முறையால்” என்றும் கூறி யொழிகின்றார். இவ்வுரை வேறுபாடு களுள், அரும்பத வுரைகாரர் ஒருமுறை கழித்து என்றதற்குரைத்த விசேடத்தை நாவலர் பண்டித ரவர்கள் தாம் மேற்கொண்டிருப்பது மிக்க இன்பம் தருகிறது. ஆய்ச்சியர் குரவையில் உரைப்பாட்டு மடையில் வரும் “நான் முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும், மான்மணி வீழும்” என்றவிடத்து, “நான்முலையாயம் பசு; ஆயம் மணி வீழும்; இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திலே முடிந்தது” என்பது முதலியன அரும்பதவுரைகாரரின் இலக்கணப் புலமையின் நுட்பத்தைத் தெரிவிப்பனவாகும். அரும்பத வுரைகாரர்க்குப் பிற்பட்டவரான அடியார்க்கு நல்லார், இன்ன மரபின ரென்றும் சமயம் காலம் இவை யென்றும் விளங்கத் தெரிந்தில. இவர் காலம் நச்சினார்க் கினியர்க்கு முற்பட்டதாகலாம் என்று நாட்டார்வர்கள் குறிக்கின்றார்கள். இராமச்சந்திர தீட்சீதரவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கின்றனர். இனி, நாட்டாரவர்கள், “இவர் உரைக்குச் சிறப்புப் பாயிர மாகக் காணப்படும் செய்யுட்களால் இவருக்கு நிரம்பையர் காவலர் என ஓர் பெயருண்டென்பதும், அக்காலத் திருந்த பொப்பண்ண காங்கெயர்கோன் என்னும் தோன்றல், இவருக்கு உதவி செய்து இவ்வுரையைச் செய்வித்தான் என்பதும் விளங்குகின்றன” என்பர். டாக்டர் . உ. வே. சாமிநாதையரவர்கள், “இவருக்கு நிரம்பையர் காவலர் என்னும் பெயர் ஊரால் வந்த தென்றும், நிரம்பை யென்னும் ஊர் கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் பெருங்கதையின் ஆசிரியராகிய கொங்குவேளிர் பிறந்த விசயமங் கலத்தின் பக்கத் திலுள்ள தென்றும் கொங்கு மண்டல சதகம் தெரிவிக்கின்றது” என்று கூறுகின்றார். இவர் உரையை நோக்குமிடத்து, இவர், இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகைத் தமிழ்ப் புலமையும் நன்கு பெற்றவர் என்பது இனிது விளங்கும். இந் நூலுரையில் இசை நாடகப் பகுதிகட்கு உரை விரிக்குமிடத்து இவர் காட்டும் நூல்கள், இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியன வாகும். இந் நூல்கள் பலவும் இக்காலத்தே கிடைத்தில. இவற்றின் துணைகொண்டு இசை நாடகப் பகுதிகட்கு இவர் கூறுவனவற்றை நோக்கும் போதே, இவரது இசை நாடகப் புலமை நம் மனக்கண்ணில் மிக விரிந்து தோன்றிப் பெரு மதிப்பை உண்டு பண்ணுகின்றது. கூத்துவகை, அவிநய வியல்பு, பண்ணீர் மை முதலியனவும் பிறவும் நல்லறிவுடை யோர் ஆராய்ச்சிக்குப் பெருவிருந்து செய்வதுடன், பண்டைத் தமிழ் மக்களின் இசை நாடகப் புலமையை நமக்கு ஓர ளவு காட்டாதொழிவதில்லை. சுமார் ஐஞ்ஞூறு அறுநூறி யாண்டுகட்கு முன்பிருந்த இசை நாடக நூல்கள் இப்போது கிடைக்காமல் இருப்பது தமிழன்பர்களுக்குப் பெரு வருத் தத்தை உண்டு பண்ணு கின்றது. இவை எங்கேனும் கிடைக்குமோ என்ற ஏக்கம் இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்விசை நாடகப் பகுதிபற்றி ஆராய்ந்த திரு. நாவலர் பண்டிதரவர்கள், அரும்பதவுரைகாரர் அடியார்க்கு நல்லார் இருவரும், “பன்னிரு பாலையாவன இவையெனப் பெயர் கூறிற்றிலர்; பண்கள் நூற்றுமூன்றாதலை விளக்கிற்று மிலர்” என்றும், “அடி யார்க்கு நல்லார் வேனிற்காதையில், ‘குரல் வாய் கிளிவாய்க் கேட்டனள்’ என்பதே பற்றுக் கோடாகச் செம்பாலை முதலிய ஏழ் பெரும்பாலையும் பிறக்குமாறு கூறி ‘இவ்வேழு பெரும்பாலை யினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும்’ என்றார். மற்றும் அவர் புறஞ்சேரியிறுத்த காதையில் ‘பாய்கலைப்பாவை பாடற்பாணி, ஆசான் திறத்தின் அமைவரக்கேட்டு’ என்பதற்கு, ‘சதி பாய்ந்து செல்லும் கலையையுடைய பாவைபோல்வாளது பாடற் பண்ணை ஆசானென்னும் பண்ணியலாகிய நால்வகைச் சாதியினும் பொருந்துதல் வரச் செவிப் புலத்தான் அறிந்து’ எனப் பொருள் கூறி, “ஆசான் சாதி நால்வகையாவன ஆசானுக்கு அகச்சாதிகாந்தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்த காந்தாரமெனக் கொள்க. பண்நூற்று மூன்று; அவை நால்வகைப்படும். பண், பண்ணியல், திறம், திறத்திறமென அவற்றுள் இது திறம் கூறிற்று எனவிளக்க முரைத்தனர். இவ்வீரிடத்தும் பண்நூற்று மூன்றாதலை விளக்கிற்றிலர்” என்று கூறுகின்றார்கள். இப்போதும் இவ்விசையியல்புகளை யறிதற்குத் திரு ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம், விபுலானந்த அடிகளின் தமிழிசைக் கட்டுரை முதலியன துணை செய்கின்றன என்று திரு. நாட்டாரவர்களே விளம்பியுள்ளார்கள். இக்கூறியவாற்றால், அடியார்க்கு நல்லார் உரைப்பகுதியிலும் விளக்கம் பெறவேண்டிய பகுதிகள் பல உள்ளமை தெளியப்படும்.” அடியார்க்கு நல்லார் முத்தமிழ்ப் புலவர் என முன்பே கூறியவாறு, இனி அவர்தம் இயற்றமிழ்ப் புலமை சிறிது காணப் படுகிறது. இக்காப்பியத் தலைவியாகிய கண்ணகியை, அடியார்க்கு நல்லார்தான் முதன்முதலில் “கண்ணகியார்” என்று கூறத் தொடங்கிய வராவர்; “இக் கருத்தானன்றே, கொலைக்களக் காதையில் கண்ணகியார் அற வோர்க்களித்தலும்..... என்னை யென்றது மென்க” (2:85-6உரை) என்று கூறுவது காண்க. இவ் வண்ணமே, கண்ணகி யாரின் வரலாற்றை யுரைக்கும் இளங்கோவடிகள் பாலும் இவருக்குப் பெருமதிப்புண்டென்பதை, இவர், “இக் காப்பி யஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனி” (17: உள்வரி வாழ்த்து, உரை) என்பதனால் காணலாம். இவரது இலக்கணப் புலமை மிகப் பரந்துபட்ட தென்பது, இவர் பதிகத்து, “குணவாயில் கோட்டத்தரசு துறந்திருந்த, குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு” என்ற இரண்டடிகட்கும் பொருளெழுதிப் பின்பு, எழுத்து, சொல், பொருள் என்ற மூவகை நெறியாலும் மிக விரிவாக எழுதியுள்ள இலக்கணத்தால் தெரிகிறது. ஆங்காங்குக் காணப்படும் அணியிலக்கணமும், காதை இறுதியில் யாப்பிலக்கணமும கூறுகின்றனர். கொலைக்களக்காதையில், “செய்யாக் கோல மொடு வந்தீர்க்கு என்மகள் ஐயை காணீர்.... புனை பூங் கோதை என்னுடன் நங்கை இருக்க” (11-14) என்ற விடத்து, “வந்தீர்க்கு என்றும் காணீரென்றும் உயர் சொல்லால் ஒருவரைக் கூறும் பன்மையாற் கூறினவள் (மாதரி), ஈண்டு நங்கையென்றது, ஒருமை பன்மை மயக்கம் எனின், அற்றன்று; நம்பீயெனப் பல் லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் நங்கை யென்று புதல்வர் மனைவியரைக் கூறும் முறைப்பெயராதலின் நங்கை யென்றாள் என்க ..... இஃது அக்கால வழக்கு. கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள்” என்று கூறுவதும் பிறவும் மிக்க நயமாக இருக்கின்றன. சில தொடர்களின் ஆற்றல் நோக்கி நயவுரை காட்ட லிலும் இவர் மிக்க சிறப்புற்று விளங்குகிறார். கவுந்தியடிகளார் குறுநரியாக வெகுளப்பட்ட வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் “அறியாமையின் இன்று இழிபிறப்புற் றோர்” (10:241) எனப்படு மிடத்தே, இன்று இழிபிறப் புற்றோர் என்றதற்கு உரை விளக்கும் இவர் இன்று இழிபிறப்புற்றோர் என்றது நெடுங்காலம் தவம் செய்து பெற்ற மக்களுடம்பை ஒரு வார்த்தையின் இழந்து இழிபிறப் புற்றாரென்ற வாறு; எனவே, யாகாவாராயினும் நா காத்தல் வேண்டு மென்பதாயிற்று” என்பதும், கோவலனை மயக்க வந்த தெய்வம் வயந்தமாலை உருக்கொண்டுவந்து அவன் முன் கண்ணீரு குத்துநின்றதைக் கூறும், ‘அடிமேல் வீழ்ந்தாங்கு அருங் கணீர்ருகுத்து’ (11:175) என்பதில், அருங்கணீர் என்பதற்கு, “பொய்க்கண்ணீர்” என்று பொருளும், “அருங் கண்ணீர் - அன்பு இன்மையின் உகுத்தமை தோன்ற நின்றது” என விளக்கமும் கூறுவதும், கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும் வையை யாற்றைக் கடந்த செய்தி கூறுமிடத்து வரும் “பெருந்துறை மருங்கிற் பெயராது” (13:178) என்பதில் பெருந்துறை மருங்கில் பெயராமைக்கு ஏதுக் கூறலுற்ற இவர், “முன்னர் வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு சாபமுறுதலின் ஈண்டு மருங்கிற் பெயராது என்றார்” என்பதும், பிறவும் இவரது உரைநலத்தைப் புலப்படுத்துவனவாகும். கோவலன் காட்டிய சிலம்பைப் பொற்கொல்லன் பார்த்த பார்வையை, அடிகள், “பொய்த் தொழிற் கொல்லன்” புரிந்துடன் நோக்கி” (16:120) என்றாராக, “புரிந்துடன் நோக்கி” என்றதற்கு அரும்பதவுரைகாரர், “கொல்லன் தான் மறைத்த சிலம்போடு ஒக்கும்படியைப் பார்த்து” என்றனர். ஆனால், இவர், “பொற் கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்து நோக்க, கண்கள் சிலம்பை நோக்க, இவ் விருநோக்கும் கண்டார்க்கு ஒரு நோக்கம் போல நோக்கி யென்க” என்று கூறி, “புரிந்துடன் நோக்கி யென்பதற்குப் பணியும் விலையும் நோக்காது அவனை இடுவந்தி யிடுவதற்கு இசைந்து தான் வஞ்சித்துக் கொண்ட சிலம்போடு ஒக்கும் படியைப் பார்த்தென்பாரு முளர்” என்று உரைக்கின்றார். இவ்வாறு அரும்பதவுரையைத் தழீஇக்கொள்பவர் சில விடங்களில் அரும்பத வுரையை மறுக்கின்றார். முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம்” (10:247-248) என்றவிடத்து அரும்பதவுரைகாரரை மறுத்ததேயன்றி, ஆய்ச்சியர் குரவைக்கண், பாட்டு என்ற தலைப்பில் வரும் தாழிசைகளில் உள்ள கொன்றை, ஆம்பல், குழல் என்பவற்றிற்கு, அரும்பதவுரைகாரர், “ஆம்பல் முத லானவை சில கருவி. ஆம்பல், பண்ணுமாம்” என்றாராக, “கொன்றை, ஆம்பல், முல்லை யென்பன சில கருவி, இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண்ணில்லை யாதலானும், கலியுள் முல்லைத் திணையின்கண் ஆறாம்பாட்டினுள்,” “ கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண், இமிழிசை மண்டை உறியொடு தூக்கி ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர் வழூஉச்சொற் கோவலர் தத்தம் இனநிரை பொழுதொடு தோன்றிய கார்நனைவியன்புலத்தார்” எனக் கருவி கூறினமையானும், ‘ அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகல் கன்றின் குரலும் கறவை மணி கறங்கக் கொன்றைப் பழக்குழல் கோவல ராம்பலும் தென்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்’ என வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும், இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஒத்தாழிசை யாதலானும் இரண்டு பண்ணும், ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறலானும் அங்ஙனம் கூறுதல் அமையா தென்க” என இவர் மறுத்து விடுகின்றார். இனி, இவருக்குக் கணிதப் பயிற்சியும் சோதிடப் பயிற்சியும் உண்டு என்பது இவர் இந்திர விழவூரெடுத்த காதை, கட்டுரை காதைகளில் கூறும் குறிப்புக்களால் தெரிகிறது. ஆனால், “ஒரோ வழி இவர் கூறுவன வழுவுடையவெனத் தோன்றுகிறது; கட்டுரை காதையிற் கூறப்பட்டுள்ளபடி, ஆடித் திங்களும் இருட் பக்கத்து அட்டமியும் வெள்ளிக் கிழமையும் அழற் குட்டமும் ஒத்து வரும் காலம் யாதெனக் கணித்தறியின் இக் கதை நிகழ்ச்சியின் காலத்தை உள்ளபடி அறிந்தவாறாகும்” என்பர் நாவலர் பண்டித நாட்டார வர்கள். *திரு. இராமச்சந்திர தீட்சத ரவர்கள் இக்காலக் குறிப்பை யாராய்ந்து கயவாகு முதலிய மன்னர் காலத்தோடு படுத்து நோக்கின், இக்குறிப்பு உண்மையாகவே இருக்கிறதென்கின்றார். இவர் ஆங்காங்குக் குறிக்கும் சில குறிப்புக்களை நோக்கும் போது, இவர் இந்நூல் முழுதிற்கும் உரை யெழுதினார் என்றும், அவ்வுரையில், கானல் வரி, வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை, வஞ்சிக் காண்டம் என்ற இப்பகுதி கட்குரிய உரைகிடைப்ப தரி தாயிற்றென்றும் நாம் துணிய வேண்டியவர் களாகின்றோம். நாட்டாரவர்கள், “மதுரைக் காண்டத்தில் இறுதி நான்கு உறுப்புக்களுக்கும் வஞ்சிக் காண்டத் திற்கும் இவரால் உரை இயற்றப்பட வில்லையோ, அன்றி, இயற்றிய உரை இறந்து பட்டதோ என்பது தெரியவில்லை” என்று குறிக் கின்றார்கள். இனி, இந்நூல் முழுதிற்கும் நாவலர் பண்டித ந.மு. வேங்கட சாமி நாட்டாரவர்கள் இனிய உரை வகுத்துள்ளார்கள். “சர்க்கரைக் கட்டியான் இயன்ற ஓவியம் எப்பாலும் தித்திப்பது போல” அவர்தம் உரையின் எப்பகுதியும் இன்பந்தருகின்றது. அவர்களது இவ் வரிய உதவிக்குத் தமிழ் மக்கள் என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையர். அவ்வுரை வெளியீட்டிற்கு முதல்வரான பெருஞ் செல்வர் பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச்சங்கத் தலைவர் உயர் திரு. வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களின் பேருதவியும் தமிழ் வளர்ச்சிக்கண் அவர் கொண்டிருக்கும் பேரார்வமும் நினைக்குந்தோறும் நம்மனோர்க்கு இறும்பூது பயக்கின்றது. அவர்கள் பெருகிய செல்வமும் நீடிய வாணாளும் பெற்று நம் தமிழன்னையின் புகழொளி போல் நின்று நிலவ வேண்டுமென இறைவனை வேண்டு வதல்லது வேறு செய்தற்கில்லேம். முடிப்புரை புகார் நகரத்தே பிறந்து; சிறந்து மதுரை; நகரத்தே தம் கற்பு மாண்பை நிறுவி வஞ்சி நகரத்தே கோயில்கொண்ட மாபெரும் பத்தினியாரின் வரலாறு சேரர்வேந்தர் குலக்குரிசில் இளங் கோவடிகளால் சிலப்பதிகாரத்தே பொன்றா வைப்பாகப் புகழப் பட்டிருப்பவும்; இப் பத்தினிக் கடவுளின் வரலாறு வேறு நாடுகளில் வேறுவேறு வகையாகத் திரிந்து வழங்குகிறது. இலங்கைத் தீவில் இப் பத்தினி வழிபாடு இன்னும் நடை பெறுகிறது. கண்ணகியாரைத் துர்க்கையாகக் கருதி வழிபடுவது பெரும்பான்மையாக உளது. அவரது சிலம்பும் அங்கே வழிபடப் பெறுகிறது. கண்ணகியார் மறுபிறப்பில் தெய்வமாகத்தோன்றி, பாண்டியன் மக்கள் இருவரைக் கொண்டு சென்றார் என்றும், அப்போது அவ் விலங்கைத் தீவின் காவற் கடவுளர் நால்வரும் எதிர்த்தும் கண்ணகிக் கடவுளை மறுத்தற்கியலவில்லையென்றும், அவர்க்கென்றே தீமிதிப்புவிழா நடைபெறுகிறதென்றும் கூறுப. அங்கே இவர்தம் வரலாறு வேறு விதமாகவும் கூறப்படுகிறது. கண்ணகியார் பாண்டியற்கு மகள் என்றும், அவர் பிறந்த போது சோதிடர் அவளால் பாண்டிநாடு சீரழியுமெனக் கூறினரென்றும், அதனால் அவ்வேந்தன் அக்குழவியை ஒரு பேழையில் வைத்து ஆற்றில்விட, அது மிதந்து செல்லக் கண்ட மாநாக்கர், மாச்சாத்தர் என்ற இரு வணிகர் எடுத்து வளர்க்க, மாச்சாத்தர் மகனே பின்பு அவளை மணந்து கொண்டானென்றும் பிறவாறும் கூறுவர்.* கண்ணகியார் வரலாறுதான் நம்நாட்டில் நாளடைவில் திரிந்து திரௌபதியம்மன் திருவிழாவாக மாறியதென்றும், அவ் விழாவில் நடைபெறும் தீமிதிப்புவிழா அதன் பண்டைத் தொடர்பு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். கேரள நாட்டில் திருவஞ்சைக்களம் (Modern Cranga nore) முதலிய இடங்களில் கண்ணகியாரைக் காளியாக்கி வழிபடு கின்றனர். இவ்விடத்தில் வாழ்பவர், அக்காளியை “ஒற்றை முலைச்சி” என்று பெயரிட்டழைக்கின்றனர். இவ்வாறு கற்புடைய வணிகர் மகளாக விளங்கிய கண்ணகியாரை, காளியாகத் திரித்து வழிபடும் முறை எக்காலத்து உளதாயிற் றென்பது தெரியவில்லை என்று திரு. இராமச் சந்திர தீட்சதரவர்கள் கூறுகின்றார்கள். திரு. தீட்சதரவர்கள் கண்ணகியார் வரலாறு தக்கண நாட்டிலும் வழங்குகிறதெனவும், அதன்கண் கோவலன் கோயிலனாகவும், கண்ணகி, சந்திரையாகவும், மாதவி மவுலியாகவும் பெயர் திரிக்கப் பட்டுள்ளனர் என்றும், கோவலன் மதுரையில் கொலை யுண்டபின் சந்திரை சிவபெருமானை வழிபட்டுத் தன் கணவனது உயிரைப் பெற்றாளென்றும் திரிக்கப்பட்டிருக்கிறதெனவும் தம் சிலப்பதிகார மொழி பெயர்ப்பில் (பக். 372) குறித்திருக்கின்றார். இவற்றை நோக்கின், கண்ணகியார் வரலாறு பண்டை நாளில் வடக்கே விந்தமலை முதல் தெற்கே இலங்கை வரையும் மேற்கே சேரநாடு முதல் கிழக்கே கீழ்க் கடற்கரை வரையும் நன்கு பரவியிருந்தது தெரிகிறது. இக்காலத்துப் போல, அக்காலத்தே அச்சுப்பொறியும் பிறவும் இன்மையின், இவ்வரலாறு பல வகையாகத் திரிக்கப்படுதற்கு வழியிருந்தது. இப்போதில் கண்ணகியார் வரலாறு உண்மை வடிவில் உரைக்கப்பெற்ற காவியமும் பிறவும் கிடைத்திருப்பவும், கல்லா நாடகமாக்களும், பேசும் படக்காரர்களும் திரிந்தவற்றின் மேலும் திரிபுகள் பல தாமே தொடுத்துத் தமது மடமையின் மிகுதியை நாட்டிற்குக் காட்டுகின்றனரே! இவர்கட்குத் தம்மானமும் உண்மையறிவும் உண்டாதல் வேண்டாவா? கற்புக் கடம்பூண்ட பொற்புடைக் கண்ணகி, “வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய, பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை”யாகிய மாதவி முதலியோர் உண்மை வரலாறு இனியேனும் நாட்ட வர்க்குத் தூய நிலையில் பரவுதற் கேற்ற முயற்சிகள் நாட்டில் உண்டாகுக என வேண்டு கின்றோம். இப் பெருநூல், பண்டைத் தமிழ் வாழ்வும், தமிழறிஞர் அறிவு நுண்மையும், பிறவும் நாம் அறிந்து கோடற்கு ஏற்ற பெரு மணி யாய்த் திகழ்கின்றது. குறிப்புரை (எண்-பக்கவெண்) நிழல்-ஒளி.நிழல் காலுமண்டி லம் - ஞாயிறு. 3 செல்லல் - துன்பம். ‘சேண் நெடுந்தூரத்து’என்றது, உணர் விறந்த நிலை கருதிற்று 5 உலகுபொதியுருவத்துயர்ந்தோன்-சிவபிரான். 7 ஆடகமாடம்-திருவனந்த புரம். 7 கலுழ்ந்து - வருந்தி. 9 உலந்த - கெட்ட. ஐயை - காடுகிழாள். 10 குரவை - மகளிர் கைகோத்து ஆடுங் கூத்து. 11,12 பரிவு-கவலை.பொருள் மொழி-மெய்யுரை. பிறவோர் - அற வோரல்லாதார். வெள்ளைக் கோட்டி - அறிவிலார் கூட்டம். தேஎத்துக்கு - தேயத்துக்கு; மறுமை யுலகிற்கு. 15 கையறு நெஞ்சம் - வருத்தத்தாற் செயலற்ற நெஞ்சம். 21 தேற்றரவு- தேறுதல்.வேளாண் பகுதி - உபகாரத்திறம். 22 கோடிய -கோணிய. கழுவாய்-‘பிராயச்சித்தம்’. 22 படிமம்-உருவம். செலவு-போக்கு. 23 அம்பணவர்-பாணர் 25 அந்தரி- கொற்றவை. கூலமறுகு -தானியத்தெரு. 25 குற்றிளையோர்-குற்றேவல் செய்வோர். தேற்றா-பகுத் துணர்ந்து தெளியப்படாத சிறுமுதுக் குறைவிக்கு-சிறிய பருவத்திற் பெரிய அறிவிற் கிடமாயிருக்கும் நினக்கு; சிறுமை-துன்பம். 26 திருத்தகு மாமணிக் கொழுந்து -கண்ணகி. 28 நீர்ப்படுத்தது-நீரிற் கிடத்தியது. கடவுள்தேர்-விழுமியதேர். 28 திங்கள் வழியோன்-பாண்டியன். வெயில் - ஒளி. ஆன்பொருநை-ஓர் ஆறு. ஐயைந் திரட்டி -ஐம்பது. 29 பொற்படி - பொன்னுலகு. அற்பு-அன்பு.தொன்று இயல்-பழமையாக நடைபெறுகின்ற. படிவமும் - திருவுருவமும். 30 கணி-நிமித்திகன்.உளை வனன் - வருந்து வோனாய். புதுவது - வியப்புத் தருவது. 31 மருட்கை-புதுமை முடித்தலை- முடியில். வாய் வாள்-குறி பிழையாத வாள். நடுக்குறூஉம்-நடுக்குறுத்தும். 32 சேடம்-மாலை 33 வான் பேர்-மிகப் பெரிய. 34 நறியர் - நல்லவர். 36 முந்தை நில்லா முனிவு-நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றிய வெறுப்பு. ஏற்பாராட்ட என்னைப் பாராட்ட. வாய் அல் முறுவல் - உண்மை யல்லாத புன் முறுவல். 37 பீடு அன்று - பெருமையன்று சலம்-பொய். சலதி-பொய்யள், இலம்பாடு-வறுமை. 37 உம்பர்-அப்பால், நாறைங் கூந்தல் -கண்ணகி, நணித்து- அருகுடையது. வம்பப் பரத்தை-புதிய பரத்தைத் தன்மையுடையாள். 39 குமரி வாழை-ஈனாத இளைய வாழை மாற்றா-மறுக்காத. பரிசாரம்-தொண்டு. 40 புரையறம்-உயர்ந்த அறம். 41 எங்கணா-எவ்விடத்தாய். 42 நோதக்க-வருந்தத் தக்கன. 43 மறமகள்-வீரமகள். பேதுறுவிக்கின்றது. நிலைகலங்கச் செய்கின்றது மன்பதை- உலக மக்கள். 45 கொற்றம்-வெற்றி. 47 கஞ்சுகம் - சட்டை. அறைபோகிய-கீழற்றுப் போகிய. பொறி-அறம். இறை முறை-ஆட்சி முறை. கைக்கும்-கடுக்கும். 47 குருதி-இரத்தம். பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம்-பசிய துண்டமாகிய பிடரோடு கூடிய மயிடன் தலையாகிய பீடம். மடக் கொடியாகிய கொற்ற வை என்க. 48 வார்-ஒழுகும். குறுகினள்-அணுகி. 49 நடுங்க - அதிர. ஆவின் கடை மணி - ஆவின் கண்மணியின் கடை. ஆழியில் - தேரில். பெயர் - புகழ். 49 பகர்தல் - விலைபகர்தல் 51 கவற்றுகின்றன-வருத்து கின்றன. கோறல்-கொல்லல். 51 நற்றிறம்-அறத்தின் கூறுபாடு. படரா-செல்லா. உள்ளீடு-உள்ளிட்ட பொருள் ; அரி 51 பட்டாங்கு - உண்மையில். ஒட்டேன்-இதோடுவிட இசையேன். பூட்கை - கொள் கை. 53 ஒய்யா - போக்கமுடியாத. கையாறு வருத்தம். 54 எம்இறை - எம் தந்தை. விண் ணவர்- விண்ணவரோடு, அடு சினம் - பாண்டி மன்னனும் அவன் மனைவியும் இறக்கவும், மதுரை அழியவும் ஏதுவாகிய சினம். 55 வகுத்தென - கூத்து வகுத்தென 56 விரை-மணம். 57 வையம்-வண்டி. 58 குறுநர்-களைபறிப்பர். பொறிப்புள்ளி. வரி-கீற்று. அஞர் - வருத்தம். இயக்கம்-வழி. அலவன்-நண்டு. நந்து-நத்தை. 59 ஊழ்அடி-முறையான் அடியிடுதலின் ஒதுக்கத்து-செல் கையில் சுடர் - விளக்கு 60 ஒருமூன்றவித்தோன் - அருகன். ஐவர் - புலன்கள். கை வரை - கையகத்தே. மறுதர - திரும்பத்திரும்ப. சாபவிடை-சாப விடுதலை. பிலம்பாதலநெறி. 60 மடி-உடை. 62 கஞ்சகாரர்-வெண்கலக் கன்னார். கருங்கை-வலியகை. கண்ணுள்வினைஞர்-சித்திர காரிகள். மண்ஈட்டாளர்-சுதையாற் பாவைமுதலியன செய்வார். துன்னகாரர்-தையற்காரர்.கால் அதர் - காற்றுப் போகும் வழி சன்னல் 64 பண்ணியம்-தின்பண்டம். காழியர்-பிட்டு விற்போர். மோதகம் - ஈண்டுப் பிட்டு. கூலியர்-அப்ப வாணிகர். நொடை-விலை. திமில் - படகு தாரம் - பண்டம். நாள்அங் காடி-பகற் காலக்கடை! ஓதை-ஒசை. 65 உவந்தனன்-உவந்து. மரபின -தன்மைய பெரியோன்-சிவபிரான். மன்னவன் - இந்திரன். 66 கலையிலாளன் - உடம்பில்லா தவன்; காமன். காமர்-அழகிய இறுக்கும் - திரையிடுகின்றன இலவந்திகை-வசந்தச் சோலை. பரிமுக அம்பி-குதிரை முக வடிவாகச் செய்யப்பட்ட ஓடம், கரி- யானை. அரி-சிங்கம் 67 அயிர்ப்பு-ஐயம். வண்ணக்கர் - நாணயசோதகர் அம்பணம்-மரக்கால். 67 கறி-மிளகு. மூடை-மூட்டை. வையம்-ஒரு வகை ஊர்தி கொல்லாப்பண்டி யென்ப. 68 வேதினத் துப்ப-ஈர்வாள் முதலிய கருவிகள். கோடு-தந்தம். ஊகம்-குரங்குபோன்ற பொறி -பரிவுஉறு-துன்புறுத்துகின்ற தொடக்கு- சங்கிலி. புதை- அம்புக்கட்டு. ஐயவித்துலாம்-தலையைத் திருகும் மரங்கள் சிரல்-சிச்சிலிப் பொறி. எழுவுஞ் சீப்பு - வீழவிடு மரங்கள் 69 சிலாதலம் -கல் இடம். 69 பாயல் பள்ளி - நாகணை. துருத்தி-ஆற்றிடைக் குறை.முருக்கிய - அழித்த. 70 நிக்கந்தன் - அருகன். பிண்டி அசோகு 71 மண்ணீட்டரங்கம் - சுதை பூசிய அரங்கம். விதானவேதி கைகள்-மேற்கட்டியினையுடைய மேடைகள். 73 பூப்பலி-’அருச்சனை.’ கட வுண் மங்கலம்-’பிரதிட்டை’. 75 ஆர்-ஆத்திமாலை. வஞ்சினம் - சூள். வாய்த்தபின் அல்ல தை-நிறைவுற்றபின் அல்லது, விளியர்-நீங்கார். 76 கொற்றவற்கு - அரசற்கு. தவாத்தொழில் - பிழைத்த லில்லாத செயல். இவுளி-குதிரை. 76 பரதர்-வணிகர். அங்காடி. கடை கயவாய் மருங்கில் - புகார்முகப் பக்கங்களில். பயனறவு - பயன் தொலைதல். 77 தென்புலங் காவல் - பாண்டி நாட்டு ஆட்சி. உயிர்பதிப் பெயர்த்தமை - இறந்தமை 79 அவம்-குற்றம். அலவைப் பெண்டிர் - தீயவொழுக்க முடைய பெண்டிர். அறை போகமைச்சர்-கீழறுத்தலுடைய அமைச்சர். 81 திருகிய - வெம்மை முறுகி யோடும். பசுங்கொடி-புதிய கொடி. படாகை-பெரிய கொடி சுருங்கையிடம்-கோட்டை யிற் கள்ளவழி. 82 முட்டா முறைமையின் என்க. 83 கொல்லாக் கோலம்-தவக் கோல முதலியன. வெற்றம்-வெற்றி. 85 கவயம்- கவசம். 85 கோளி-பூவாது காய்க்கும் மரம். பாகல்-பலா போனகம்-உணவு. 91 புழுக்கல் - அவரை, துவரை முதலியவற்றின் புழுக்கல். நோலை-எள்ளுருண்டை. விழுக்கு-நிணம். மடை-சோறு. பொங்கல் - பொங்கற் சோறு. வசி-மழை. 92 கொண்டல்-கீழ்க்காற்று. 93 குருந்து - குருந்த மரம். திகிரிப் பொருபடை - சக்கரப் படை. நவில் - ஒத்த. பாசவர்-வெற்றிலை கட்டு வோர் முதலியோர். எயினர் - வேடுவர். ஓவர்-எத்தாளர். சூதர் நின்றேத்துவார். 94 கால்-வண்டி. தருவனர்-தந்து. முழுத்தும் - முழுதும். 96 மாதர் - அழகிய. மயிலை - இருவாட்சி. தாழி-பூத்தொட்டி. இளிவாய் வண்டு - இளி யென்னும் இசையைப் பாடும் வாயினையுடைய வண்டு 99 மிடைதரு-செறிந்த. மரு - மணம். 100 பொன்படுநெடுவரை-இமயமலை; மேருமலையுமாம். அகப்பா - மதில்.. அயிரை-சேரநாட்டு ள்ளதொரு மலை; இங்கே அதன்கண் உறையுந் தெய்வத்தை உணர்த்தும். மண்ணி - நீராட்டி வழிபட்டு. வாரம் - அன்பு 102 நிழல் - அருள். நேமி - ஆணை. கடம் - முறைமை. கௌரியர் - பாண்டியர். 103 கோள் வல் உளியம் - கொள்ளுதல் வல்ல கரடி. மான்கணம் மறலா - மான்கணத்தோடு மாறுபடா. சூர் - சூர்த்தெய்வம். 103 கேட்டி - கேட்பாய். 104 தண்டலை - சோலை. படர்குவம் - செல்வோம். மண் பக - நிலம் பிளக்க. பொங்கர் - பழம் பூ - போற்றா - கருதிச் செல்லாத 105 கம்புட்கோழி - சம்பங்கோழி. உள் - உள்ளான் என்னும் பறவை. ஊரல் - குளுவை யென்னும் பறவை. புள் - ஈண்டுக் கணந்துட் பறவை. புதா - பெரு நாரை. 105 அமை - மூங்கில். இதண் -பரண் 105 முல்லை - முல்லைப்பண் - மழலைத் தும்பி - இளமையுடையவண்டு. 106 எல் - ஒளி. வியர் - வியர்வை. 106 கோடி - புத்தாடை. அணங்கு - வருத்தும். தகை - அழகு. 107 மழபுலம் - மழநாடு. காம்பு - மூங்கில். 108 பாய்கலைப்பாவை - கொற்றவை 112 யா - யாவை 112 இடுவந்தி -பொய்யப்பழி. பணி - வேலைப்பாடு .114 கழு - ‘கறத்தற்கரிய பசுக்களைக் கறத்தற்கு இரண்டு தலையுஞ் சீவி மாலையாகக் கட்டிக் கழுத்தில் இடுவது’ என்பர் நச். சுடுபடை - சூட்டுக்கோல். தோல் - தோற்பை. நனை - நனைந்த. 114 பொன்றாவைப்பு - அழியாத நிதியம். பேழை - பெட்டி. 116 கேரள நாடு - சேரநாடு 117 மணிமேகலை ஆராய்ச்சி மணிமேகலை யென்பது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்பது தமிழுலகு நன்கறிந்த செய்தியாகும். பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது. இந்த அரிய காப்பிய நூல், ‘கற்பனைக் களஞ்சிய’மாக விளங்கிய துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகளால் தாம் அருளிய திருவெங்கைக் கோவையில், “கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?” என்றும் அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், “மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே” என்றும் தொனி நயம் படப் போற்றியுரைத்த அருமையுடையது; அழகிய செம்பாக மான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க, அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது; காவிரிப்பூம் பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெரு நகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது; இயற்கையழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங் களையும், பண்டை நாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்” தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவைததும்பச் சொல்லும் சீர்மையுடையதுமாகும். I.நூலாசிரியர்: 1. பெயர்; இக்காப்பிய நூலை ஆக்கிய சான்றோர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்போராவர். “வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திற மணிமேகலைத் துறவு, ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன்” என்று இந்நூற் பதிகம் கூறுகின்றது. “ஞகாரை முதலா” என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையில், ஆசிரியர் பேராசிரியர், “சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளாற் செய்யப் பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன” என்று கூறுவதும் அப்பதிகக் கூற்றுக்கு நல்ல சான்று பகருகின்றது. இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் என்றும், சீத்தலைச் சாத்தன் என்றும் அறிஞர் வழங்கியிருக்கின்றனர். இங்ஙனம் வழங்குவதை நோக்கின், இவரது பிறந்தவூர் சீத்தலை யென்பதும், வாணிகம் செய்தற் பொருட்டு மதுரையில் இருந்தவர் என்பதும் அறியப்படும். சீத்தலை என்னும் இவ்வூர், இப்போது திருச்சிராப்பள்ளிச்சில்லா பெரம்பலூர்த் தாலுக்காவில் உளது என்பர். கூலமாவது நெல், வரகு, தினை, சாமை முதலிய பதினெண்வகைப் பொருள்களின் பொதுப் பெயர். இனி, சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கொள்ளாது, ஒரு காரணம் பற்றி வந்த பெயராகக் கொண்டு காலஞ்சென்ற டாக்டர் உ.வே. சாமிநாதையர் பின்வருமாறு கூறுவர்: “சங்கத்தில் அரங்கேற்றுவித்தற் பொருட்டு வரும் நூல்களிற் பிழைகள் காணப் படுந்தோறும், ஆக்கியோர்களைக் குற்றம் கூறுதற்குத் துணியாராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று மனம் வருந்தித் தமதுதலையைக் குத்திக் கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின் சீத்தலைச் சாத்தனா ரென்பது இவர்க்குப் பெயராயிற்றென்றும் கூறுவர்; ‘வள்ளுவர் முப்பாலால், தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று மருத்துவன் தாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளில் இதனைக் குறிப்பித்திருத்தலும், ‘இய பெயர் சினைப்பெயர்’ என்பதன் உரையில், ஆசிரியர் இளம்பூரணர் முதலியோர் சினை முதற் பெயருக்கு உதாரணமாக, ‘சீத்தலைச் சாத்தன்’ என்னும் இவர் பெயரைக் காட்டி யிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதாரங்களாக அமைவது காண்க” என்பர். இனி, நற்றிணை யுரைகாரரான பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர், அந்நூலின் பாடினோர் வரலாற்றுப் பகுதியுள், நம் சாத்தனாரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “சீத்தலையென்பது ஓர் ஊர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவை போல. பெருஞ்சாத்தன், பேரி சாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவர் இயற்பெயர் ஊர்ப்பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டது. சீத்தலை யென்னுமூர் திருச்சிராப்பள்ளிச் சில்லா பெருமளூர்த் தாலுக்காவில் உள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் தாமோதரனார் பாடலில் ‘தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று இருத்தலானே அதற்கேற்பச் ‘சீத்தலை - சீப்பிடித்த தலை’ என்று கதை கட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம்; அதுபற்றிச் சீப்பிடித்தல் ஒருதலையன்மையின், சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுதல் பொருத்த மாகத் தோன்றவில்லை” என்பது. இவ்விருவர் கூறும் கூற்றுக்களை நோக்கின் நற்றிணையுரை காரர் கூறுவதே இயற்கையில் பொருந்துவதாகத் தோன்று தலால், எதிர் காலத்தே அறிஞர் ஆராய்ந்து உண்மை துலங்குங் காறும் சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கோடலே சிறப்பு என்க. இதனைத் திரு.உ.வே.சாமிநாதையரும் ஒருவாறு உடன்பட்டுச் “சீத்தலை யென்னும் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனார் என்பது இவரது இயற்பெயரென்று ஒரு சாரார் கூறுவர்” என்று உரைத்துள்ளார். 2. பிறப்பு வளர்ப்பு: இவருடைய பெற்றோர் பெயரும் பிறப்பு வளர்ப்பு வரலாறும், வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு முதலிய நலங்களும் இதுகாறும் சிறிதளவும் தெரிந்தில. 3. காலம்: இவருடைய பாட்டுக்கள் சில சங்க இலக்கிய மெனப்படும் தொகை நூல்களிற் காணப்படுகின்றன. இவர் சிலப்பதிகாரம் பாடியருளிய இளங்கோவடிகளுடன் இருந்திருக் கின்றார். அடிகள் சிலப்பதிகாரம் பாடுதற்கேற்ற வேட்கைச் சுடரைக் கொளுத்திய வரும் இவரே; அது முடிந்தபின், அதனை அடிகள் சொல்லக் கேட்டவரும் இவரே. ஆகவே, அடிகள் காலமே இவரது காலமாமென்பர். அடிகள் இற்றைக்குச் சற்று ஏறக்குறைய 1800 ஆண்டுகட்கு முன்னிருந்தவர் என்பது அறிஞர் முடிபு. திருமணக் காலத்தில் “மாமுது பார்ப்பான் மறைவழி” காட்டலும், “தீவலம் செய்தலும்” சங்க இலக்கிய காலத்தில் இல்லை. இந்நூலுட் கூறப்படும் தருக்க முடிபுகள் நான்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தன வாகத் தோன்றுகின்றன. இன்னோரன்ன வற்றைக் கொண்டு ஆராயும் அறிஞர், அடிகள் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டாகலாம் என்பர். இக்கூற்று மெய்ப்பிக்கப்படுமாயின், அடிகள் காலத்தோடு சாத்தனார் காலமும் தெளிவாகிவிடும். காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், மதுரைமாநகர் கண்ணகியாரால் எரியூட்டப் பெற்றதும் இவர் காலத்தே நிகழ்ந்திருக்கின்றன. 4. இவர் காலத்திருந்த அரசர்: இவர் காலத்தே சோழ நாட்டில் கரிகால் வளவனும், பாண்டி நாட்டில் நெடுஞ் செழியனும், சேரநாட்டில் செங்குட்டுவனும் ஆட்சி புரிந்திருக்கின்றனர் இவரால், சோழருள் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளி வளவன், இளங்கிள்ளி, நெடுமுடிக் கிள்ளி, வென்வேற்கிள்ளி என்போரும், பாண்டியருள் நெடுஞ்செழியனும், சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறனும், சேரருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனும் பிறரும் இந்நூற்கண்ணும் பிறாண்டும் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர். இவர் காலத்துப் புலவர் பெருமக்களை நோக்கின், மேலே கூறிய முடிவேந்தர் மூவரையும் பாடிய புலவர் பெருமக்கள் பலரும் இவர் காலத்துச் சான்றோர் என்பதொன்றே அமைவதாம். இவரை இளங்கோவடிகள், தமதுசிலப்பதிகாரத்தில் குறிக்க நேரும்போ தெல்லாம், “தண்டமிழ்ச் சாத்தன்” (பதி) என்றும், “தண்டமிழாசான் சாத்தன்”, “நன்னூற் புலவன்” (காட்சி) என்றும் சிறப்பித்து ஓதியுள்ளார். இவற்றை நோக்கின், இவர் அடிகட்கு ஒருகால் தமிழாசிரியராக இருந்திருக்கலாமோ என்று நினைத்தற்கும் இடமுண்டாகின்றது. 5. நன்மாறன் தொடர்பு: இவன் பாண்டியர் மரபினன். நன்மாறன் என்ற பெயரினர் பலர் இருந்தமையின் இவனை அவரிற் பிரித்துக் கூறுவார், சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன் எனச் சான்றோர் சிறப்பித்திருக்கின்றனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் பலர் இருந்திருத்தல் காண்க. துஞ்சுதல், இறத்தல். ஆகவே, நம் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பெறும் பெருமை வாய்ந்த நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தே இறந்தவன் என்பது விளங்கும். இந் நன்மாறன், இவர் புலமை நலத்தை வியந்து பெரிதும் ஆதரித்துள்ளான். இவன் இறந்தது கேட்டோ, அதற்கு முன்னர் இவன்பால் சென்றிருந்த தன்னை ஆதரித்தது கண்டோ, இவர் தன்னைப் பேணிச் சிறப்பித்த நலத்தை ஓர் அழகிய பாட்டால் இனிது உரைத்துள்ளார். அப்பாட்டுக் கையறுநிலையாக இன்மையின், நேரிற் கண்டு பாடியதாகவே கோடல் வேண்டும். அவனைக் கண்டபோது, அவனுடைய அணிகிளரும் அழகிய மார்பும் தாள்வரை நீண்ட தடக்கையும் பிற நற்பண்பும் இவர் உள்ளத்தே நன்கு பதிந்து விட்டன. அதனால். “ ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின் தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதீ!” என்று தொடக்கத்தே எடுத்தோதி இன்புற்றார். பின்பு, அவன் அளிக்கும் திறத்தை, “ வல்லைமன்ற நீ நயந்தளித்தல், தேற்றாய், பெரும, பொய்யே என்றும் காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயிறனையை நின் பகைவர்க்கு; திங்கள் அனையை எம்ம னோர்க்கே” (புறம்.59) என்று மனங்குளிரப் பாடி மகிழ்ந்திருக்கின்றார். இடையறாது பன்னாள் பகைமை செய்யினும், நன்மாறன் வலி சிறிதும் குன்றாது போருடற்றி வென்றி யெய்திய சிறப்பைக் “காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயிறனையை” என்று உவமையடையால் எய்துவித்தோதும் இயல்பும், “தேற்றாய் பெரும பொய்யே” என அவன் கொடைமடச் சிறப்பும் அழகு கனிய உரைக்குந்திறம் உன்னுந்தோறும் இன்புறுவிக்கின்றது. 6. ஏனைப்பாட்டு நலம் - பொது: இம் மணிமேகலை யொழிய, சங்க இலக்கியங்களுள் மேலே நன்மாறனைப் பாடிய புறப்பாட்டு ஒன்றும், அகத்தில் ஐந்தும், நற்றிணையில் மூன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாகப் பத்துப் பாட்டுக்கள் காணப்படு கின்றன*. புறமொழிந்த ஒன்பதும் அகனைந் திணைப் பாட்டுக் களாதலின், அவற்றை முறையே ஆராய்வது சீத்தலைச் சாத்தனாரது புலமை நலத்தைக் காண்டற்கு இனிய வாயிலாகும், அகப்பாட்டுக் களின் திணை வகுப்பு, முதற் பொருளும், அஃது இல்வழிக் கருப்பொருளும், இரண்டும் மில்லையாயின், உரிப்பொருளும் அடிப்படையாகக் கொண்டது அந்நெறியே நோக்கின், இப்பாட்டுக்கள் ஒன்பதும் குறிஞ்சித் திணையில் இரண்டும், பாலையில் மூன்றும், முல்லை மருதங்களில் தனித் தனியே ஒவ்வொன்றும், நெய்தலில் இரண்டு மாகும். ஆகவே இவர் பாலை குறிஞ்சி, நெய்தல் என்ற மூன்று நிலத்துக் கருப்பொருளையே மிகுதியாகப் பாடும் பான்மை யுடையவர் என்பது புலனாகும். உரிப்பொருள் நெறியே தூக்கியாராயின், குறிஞ்சித் திணையில் மூன்றும், முல்லையில் நான்கும், மருதத்தில் இரண்டும் அடங்குகின்றன. எனவே, பாலை நெய்தல் கட்குரிய உரிப் பொருளைப் பாடுதலில் இவர்க்கு விருப்பம் மிகுதியும் இன்மை எய்துகின்றது. இவ்வியல்பே, இம் மணிமேகலைக் காப்பியத்தும் விளங்கித் தோன்றுகின்றது. இவ்வாறு முதல், கரு, உரி என்ற பொருள் மூன்றாலும் ஆராய்ந்த வழி, முல்லைத் திணையும் இவராற் பாடப் பெற்றிருத்தல் இனிது விளங்கவும், பின்னத்தூர் திரு. அ.நாராயணசாமி அய்யரவர்கள் “இவர் முல்லை யொழிய ஏனை நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார்” என்று கூறியுள்ளார். ஒருகால், அவர், “ வானம் வாய்ப்பக் கவினிக் கானம் கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுத்தென, மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச் செம்புற மூதாய் பரத்தலின், நன்பல முல்லை வீகழல் தாஅய், வல்லோன் செய்கை யன்ன செந்நிலப் புறவின்” (அகம்.134) என வரும் சீத்தலைச் சாத்தனாரது முல்லைப் பாட்டினைக் காணாது போயினர் போலும்; கண்டிருப்பின் இவ்வாறு கூறாரன்றே! 7. குறிஞ்சித் திணை: தலைமைப் பண்பு முற்றும் நிரம்பிய ஒருவனும் ஒருத்தியும் தம்மில் தாமே எதிர்ப்பட்டுக்காதல் கொள் கின்றனர். இக்காதல், நன்கு உருக்கொள்ளும் வாயிலாகக் கூறும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்பவை நிகழ்கின்றன. தனக்கும் தலைமகட்கும் உண்டாகிய காதலன்பு முறுகிச் சிறப்பது குறித்துத் தலைமகன் விரைய வரைந்து கொள்ளாது. பகலினும் இரவினும் தலைவியும் தோழியும் குறிக்கும் குறிவழி வந்து கூட்டம் பெற்றுச் செல்கின்றான். இதனைத் தோழி நினைந்து, “இவர் தம் களவொழுக்கம் பிறர்க்குப் புலனாயின் யாவர்க்கும் இகழ்ச்சியுண்டாம்; அதனால் தலைமகற்கும் ஏதமாம்; தலைமகளும் உயிரிற் சிறந்த பெருநாணம் உடையாளாதலின் இறந்து படுவாள்” என்றெல்லாம் எண்ணி, அத் தலைமகன் தெருண்டு வரையுமாறு தகுவனவற்றைக் கூறத் தொடங்குகின்றாள். இதனை வரைவு கடாதல் என்பர். தலைமகனைக் குறியிடத் தேனும் பிறாண்டுத் தனித்தேனும் காணலுற்றால் வெளிப்படையாகவே சில கூறி, விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டுவள்; தங்கள் கடிமனையின் சிறைப் புறத்தே கண்டால், பிறர் செவிப்படினும் அவர்கள் ஐயுறா வண்ணம், மறைத்த சொற்களையே சொல்லி அவனை வரைவு கடாவுவள். ஒருநாள், தலைமகன் பகற்காலத்தே, தலைவியும் தோழியும் விளையாட்டயரும் குறியிடத்திற்கு வந்திருக்கின்றான். அவனைத் தோழி கண்டு, “எம் தலைவிக்கும் நினக்கும் உளதாகிய தொடர்பு அலராகி விட்டது; அதனால் அவள் எய்தும் வருத்தம் மிகப் பெரிது; அதனினின்றும் நீ அவளைக் காத்தல் வேண்டும் என்று யாம் பல முறையும் இரந்து நின்றோம். நீயோ எம் வேண்டுகோளை ஏற்று அருளாயா கின்றனை” என்ற கருத்துப் பட, “ கானலம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப! மலரேர் உண்கண் எம்தோழி எவ்வம் அலர்வாய் நீங்கநீ அருளாய்” என்கின்றாள். அது கேட்கும் தலைமகன், “அதற்காகத் தானே இவ்வாறு ஒழுகுகின்றேன்” என்று உரைக்கின்றான். தோழி, வருத்த முற்று, “இல்லையில்லை; அருளுதல் மெய்யாயின், இதுகாறும் நீட்டியாது இவளை வரைந்து கொண்டிருப்பாய்; அருள்வாய் போலத் தோன்றி அருளாமையே செய்கின்றாய்; இவ்வொழுக்கம் ஒருகால் புறத்தார்க்கு நன்கு தெரிந்துவிடின், அப்போழ்தும் இது போலவே பொய்ப்பாய் போலும்! நீ பொய்க்கினும், அன்று யாம் வண்டலாடுமிடத்தே அவ்வண்டல் சிதையத் தேரொடு வந்து, எம் தலைவியின் புது நலத்தை நுகர்ந்தபோது, நீ செய்த சூளும் பொய் யாகுமோ? இக் கடலே எமக்கு அறிகரியாக உளது, காண்” என்பாளாய், “ தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை நடுங்கயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்” வண்டற் பாவை சிதைய வந்து நீ தோள் புதிது உண்ட ஞான்றைச் சூளும் பொய்யோ, கடல்அறி கரியே” (அகம். 320) என்று கூறுகின்றாள். இதனைக் கேட்கும் தலைமகனோ, “இவர்கள் மெய்யாகவே ஊரவர் எடுக்கும் அலர்க்கு அஞ்சி யலமருகின்றனர்; இவர்களை இனியும் வருந்த விடுவது முறையன்று” எனத் தெருண்டு வரைந்து கொள்ளத் துணிகுவன். இதுவே தோழி கூறியதன் கருத்தும் பயனுமாகும். இனி, ஊரவர் அலரெடுத்துரைக்கும் குறிப்பும், அதனினின்றும் தலைமகளைக் காத்தற்குரிய பொறுப்பும் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்ற தோழி, உள்ளுறையால் அவன் உணர்ந்து கொள்ளு மாறு உரைக்கின்றாள், தலைமகனைக், கண்டு, “கானல் சிறு குடிப் பெருநீர்ச் சேர்ப்ப” என்பவள், ஊரவர் கூறும் அலரை உள்ளுறுத்து, “ ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத் திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழையணி யல்குல் செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகரும் கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப” என்கின்றாள். இதன்கண் திமிலோனாகிய பரதவன் கொணர்ந்த வயமீனை, அவனது செல்வத் தங்கையர் எடுத்துச் சென்று மறுகிடத்தே விற்பர் என்றது, நின்னால் இவட்கு உண்டாகிய வேறு பாட்டினை, ஏதில் மகளிர் எடுத்து ஊரிடத்தே அலர் கூறுகின்றனர் என்றதாகும். இனி, இவ்வலரால் உண்டாகிய துன்பத்தைப் போக்குதற்கு உரியவன் தலைமகனே என்றும், அதற்கு ஏற்றது உடனே செய்தல் வேண்டும் என்றும் தோழி கூறக் கருதி, அதனையும் உள்ளுறையால், “ நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம் அடும்பமர் எக்கர் அஞ்சிறை யுளரும் தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை” என்று கூறுகின்றாள். இதனால் கழி படிந்து துழவிய அன்னம், நனைந்த தன் சிறகினை எக்கரை யடைந்து உலர்த்துவது போல, தலைமகளும் இவ்வூரவர் எடுத்த அலர்மிகு வருத்தத்தை நின்னை யடைந்து போக்கிக் கொள்ளற்குரியள் என்றாளாயிற்று. வந்த போதும் வண்டற்பாவை சிதைய வந்தாயாதலின், இப்போதும் எம் புதுநலம் கெட்டு வருந்த ஒழுகுகின்றாய். இவ்வாறு பிறர்க்கு எய்தும் கேடு கருதாது ஒழுகும் நீ எம்பால் அன்று செய்த சூளும் பொய்ப்பையாயின், அதனை மெய்ப்பித்தற்கு அறிகரியாகக் கடலுண்டு என்பாள், “கடலறிகரியே” என்று கூறுகின்றாள். இவ் வண்ணம் ஒரு பணிப்பெண் தலைமகனை நெருங்கிக் கூறல் தகுமோ எனின், “உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே” என ஆசிரியர் தொல்காப்பியனார் வழுவமைத் திருக்கின்றார். இப்பாட்டு நெய்தற்குரித்தாயினும் குறிஞ்சி வந்து மயங்கிய திணைமயக்க மாகும். இனி, பகற் குறிக்கண் வந்த தலைமகனை இவ்வாறு நெருங்கிக் கூறிய தோழி, ஒரு கால் அவன் இரவுக் குறிக்கண் வந்து சிறைப் புறத்தானாதலை அறிகின்றாள்; உடனே, இரவுக்குறியிடத்தும் தலைமகள் போந்து அவனைத் தலைப் பெய்து கூடற்கு இயலாத வாறு ஊரவர் உறங்காது விழித்திருத்தலைக்காட்டி, இம்முட்டுப் பாடு நீங்க, விரைய வரைந்துகோடலே தக்கது என்று அவற்கு உணர்த்தக் கருதி, “ கல்லக வெற்பன் சொல்லில் தேறி யாம் எம்நலன் இழந்தனமே; யாமத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொ டொன்றிப் புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து ஆனாக் கௌவைத் தாகத் தான் என் இழந்தது இவ்வழுங்க லூரே?” (நற்.36) என்று கூறுகின்றாள். “யாம் வெற்பனது சொல்லைத் தேறி, நலன் இழந்தமையின் உறங்காது விழித்திருப்பேமாக, இவ்வூர் உறக்க மின்றி ஆரவாரத்துடன் இருத்தற்கு இஃது எதனை இழந்தது?” என்று சொல்லு முகத்தால், தலைப்பெய்தற்கு முடியாமை யும், அலர் மிகுதியும் குறிப்பிடுதல் காண்க. இதனோடு தலைமகற்குத் தம் தந்தை தன்னையரால் ஏத முண்டாகுமோ என அஞ்சும் அச்சமும் உடன்தோன்றி வருத்தும் வருத்தத்தை உள்ளுறையில் வைத்து, “ குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் கல்லக வெற்பன்” என்றுரைக்கின்றாள். இதன்கண், புலியேறு, பிடி புலம்புமாறு களிற்றையடும் என்றது, எம் ஐயன்மார் யாம் வருந்துமாறு தலைமகனைப் பற்றி வருத்துவரோ என்று அஞ்சுவதனைக் குறிப்பித்தாளாம். பிறிதொரு காலத்தே தலைமகன் தங்கள் கடிமனையின் சிறைப்புறத்தே வந்துநிற்கின்றான். அவனுக்குத் தலைமகள் மேனி வேறுபாடு கண்டு பெற்றோர் இற்செறித்திருத்தலும் அவள் அதனால் தலைமகனைக் கூடலருமை கண்டு வருந்தியிருத்தலும் உணர்த்தக் கருதி, தலைமகனை நோக்கிக் கூறுவாள்போல மிக்க அறிவு நலம் தோன்றக் கூறுகின்றாள். கூறுவோள் தொடக்கத்தே, தலைவியது வருத்தமும் மேனி வேறுபாட்டினைத் தாய் அறிந்தமையும் எடுத்து, “ தோலாக் காதலர் துறந்துநம் அருளார்; அலர்வ தின்றுகொல் இதுஎன்று நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை..................” என்று மொழிந்து பின் தாயின் செய்கையினை ஓதலுற்று “ .................................................................................சிறந்த சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி, நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் ஒண்ணுதற் பெதும்பை நன்னலம் பெறீஇ மின்னே ரோதி இவளொடு நாளைப் பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித் தெண்ணீர் மணிச்சுனை யாடின் என்னோ மகளிர்தம் பண்பென் றோளே” (நற்.339) என்று சொல்லி முடிக்கின்றாள். இது தாயறிவுறுதலும் காப்பு மிகுதலும் கூறி வரைவு கடாவியதாகும். இவ்வாறு பல வகையாலும் வரைவு கடாவப்பெற்ற தலை மகன் பின்பு தெருண்டு, தலைமகளை வரைந்து கொண்டு இல்லிருந்து நல்லறம் புரியத் தொடங்குகின்றான். 8. முல்லைத் திணை: இல்லிருந்து நல்லறம் செய்யும் தலைமகன், அவ்வறமும் இன்பமும் சிறத்தற் பொருட்டுப் பொருள் குறித்துத் தலைவியைப் பிரிந்து ஏகுகின்றான். அப்பிரிவுத்துயர் தலைவியைப் பெரிதும் வருத்துகின்றது. கூடியிருந்தபோது தலைமகன் தன்னை இணைம் பிரியாது இருந்து இன்புறுவித்ததை நினைக்கின்றாள்; அவன் தன்னை இன்றியமையாக் காதல்கொண் டொழுகியது அவள் நெஞ்சில் நிலவுகின்றது. அதனால் அவள் தோழியை நோக்கி, “ யாங்கு அறிந்தனர்கொல்? தோழி! பாம்பின் உரிநிமிர்ந் தன்ன உருப்பவிர் அமையத்து இரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை பொரிகால் கள்ளி விரிகாய் அங்கவட்டுத் தயங்க இருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பின் கானம் பிரிந்துசேண் உறைதல் வல்லு வோரே” (குறுந் 154) என்று வினவுகின்றாள். என்னைப் பிரிந்துறைய மாட்டாத காதலர் உடைமையது உயர்ச்சி கருதி இப்போது பிரிந்துறைய ஒருப்பட்டா ராயினும், அவர் சென்ற கானத்தில் இடயிடையேயுள்ள அருஞ் சுரத்தில், இரைவேட்டெழுந்த சேவலையுள்ளி, அதன் பெடை தனித்திருந்து புலம்பிக் கூவுமதனைக் காண்பரேல் உடனே யான் ஈண்டு அவர் பிரிவாற்றாது புலம்புதலை நினைந்து வந்துவிடுவர்; அற்றாகவும், அவர் வாராது பிரிந்து சேண் உறைகின்றார். அங்ஙனம் உறைதற்கு வேண்டும் வன்மையினை எவ்வாறு கற்றனரோ, தெரிந்திலதே என்பாள், “பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர் யாங்கறிந்தனர் கொல்” என்று கூறுகின்றாள். இப் பிரிவாற்றாது கூறலும் ஒருவாறு ஆற்றியிருத்தற்கு நிமித்த மாதலின், கருப் பொருளால் இப்பாட்டுப் பாலைக் குரியதாயினும், உரிப்பொருளால் முல்லைத் திணைக்கு உரியதாகின்றது. தலைமகனது பிரிவை ஒருவாறு ஆற்றியிருக்கும் தலைமகள், அவன் பிரிந்து நெடிது உறைதலை நினைக்கின்றாள்; உடல் மெலி கின்றாள். இதனைக் கேட்ட தோழி, “அன்னாய், நம் தலைவர் பொருளினும் அருளுடைமை பெரிதும் சிறந்தது எனக் கருதும் பெற்றியர். தாம் செல்லும் சுரத்தில், மாவும் புள்ளும் தத்தம் துணையொடு கூடியுறையும் அன்பு நிலையைக் காணுந்தோறும், அவர் உங்களையே உள்ளுவராதலின், விரைய வருவர்; வருந்தற்க” என்று தேற்றுகின்றாள். அவட்குத் தலைவி, “தோழி, அவர் காதல் நிலையை நீ அறியாய்; யான் அறிகுவன்; அவர்க்குக் காதல் பொருளே யன்றி, நம்பால் அருள் என்று தெளியேன். அருளே அவர்க்குக் காதல் என்று நீ தான் கூறுகின்றாய்” என்ற கருத்துப்பட, “ அறியாய், வாழி, தோழி........... ........... ........... .............. ............ அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும் இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்; அருளே காதலர் என்றி நீயே” (அகம்.53) என்று செப்புகின்றாள். இதன்கண், தலைவன் பொருளே காதலான தற்குக் காரணம் கூறுவாள், “என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்” என்று தலைவனது உள்ளத் தன்மையை உள்ளவாறே மொழிகின்றாள். நெஞ்சம் அவ்வாறு வலித்தலால் எழுந்த வன்மையே, கொடிய சுரத்தையும் அவரை இனிது கடந்தேகுமாறு செய்தது என்பாள், சுரத்தின் கொடுமையை விரித்து, “ ........... ........... .............. இருளற விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக் கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின் விழுத்தொடை மறவர் வில்லிட, வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை..................................” (அகம்.53) என்று, உரைக்கின்றாள். தோழி, வேறே தகுவன கூறித் தேற்றுமுகத்தால் “தலைவர் இளவேனிற் பருவ வரவின்கண் வருவதாகக் கூறியிருக்கின்றார்; அதுவும் இதோ வந்து விட்டது; நீ மேனி வேறுபட்டு வருந்தற்க; அவர் விரைய வருகுவர்” என்று வற்புறுக்கின்றாள். இவ்வாறு பன்முறையும் தோழியால் வற்புறுக்கப்பட்டுளாளா தலின், தலைவி, அவ்வன்புறைக்கு எதிரழிந்து வருத்தம் மிக்கு, “ நெடுஞ்சே ணிடைய குன்றம் போகிய பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள் நம்மின் றாயினும் முடிக வல்லென பெருந்துனி மேவல் நல்கூர் குறுமகள் நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர் பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப் பொன்நேர் பசலை யூர்தரப் பொறிவரி நன்மா மேனி தொலைதல் நோக்கி இனையல் என்றி; தோழி! சினைய பாசரும் பீன்ற செம்முகை முருக்கினப் போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன்இள வேனிலும் வாரார், இன்னே வருதும் எனத்தெளித் தோரே” (அகம்.229) என்று வருந்திக் கூறுகின்றாள். இதன்கண், அவள், தான் இறந்து படினும், தலைவன் கருதிய பொருள் முடிக்க என நினைந்து நோய்மலிந்து, கண்கலுழ்ந்து, பசலைபடர்ந்து, மேனிநலம் தொலைந் தமையும், அதுகாணும் தோழி, அவர் இளவேனில் வரவின்கண் வருவர் என்றதும், அவன் வாராமையும் கூறுதல் காண்க. இனி, இதன்கண் வேறொரு கருத்தும் புலப்படுக் கின்றாள்: அவர் குன்றங்கள் பல கடந்து சென்றுள்ளார். அவ்விடத்தே, களிற்றைப் பிரிந்த மடப்பிடி தன் குழவியுடன் கூடி உண்டற்குரிய குளகினை மறுத்து உண்ணாது உயங்கித் தோன்றுவதைக் கண்டிருப்பர். அதன் செயல், தன்னைப் பிரிந்திருக்கும் என்னை நினைவுறுத்தாது போயிராது. அற்றாகவும், பொய்வலாளராதலின், அவர் அந் “நெடுஞ் சேணிடைய குன்றம்” போயினர். காண் என்பாளாய், “ பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன் அகல்வாய் வானத் தாழி போழ்ந்தென நீரற வறந்த நிரம்பா நீளிடைக் கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன் பாழூர்க் குரம்பையின் தோன்று மாங்கண் நெடுஞ்சேண் இடைய குன்றம் போகிய பொய் வலாளர்............” (அகம். 229) என்று இனைகின்றாள். இவள் செய்கை இவ்வாறிருக்க, பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு, இவளைக் காண்டற் கெழுந்த வேட்கை பெரிதும் முடுகுதலால், விரைந்து வருகின்றான். அவன் மீளலுறுங் காலம் கார்காலம். மழை நன்கு இனிது பெய் திருக்கிறது; கானம் இனிய காட்சி வழங்குகிறது. காயாமரங்கள் நீலமலரைப் பூத்திருக்கின்றன. தம்பலப் பூச்சிகள் ஆங்காங்குப் பரந்து கிடக்கின்றன. இடையிடையே முல்லை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இவற்றைக் காணும் அத்தலைமகன், “ வானம் வாய்ப்பக் கவினிக் கானம் கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச் செம்புற மூதாய் பரத்தலின், நன்பல முல்லை வீகழல் தாஅய், வல்லோன் செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134) என மகிழ்ந்து கூறுகின்றான். அப்போது, அவன் கண்ணெதிரே மான் கூட்டம் தோன்றுகிறது. மானேறு பிணைமானைக் கூடும் காட்சியைக் காண்கின்றான். அருள் வள்ளலாதலின், தான் செல்லும் தேரிற் பூட்டிய குதிரையின் செலவு மானின் புணர்நிலைக் கூட்டத்தைக் கெடுக்குமென்று அஞ்சுகின்றான். உடனே பாகனை நோக்கி, “ வா அப் பாணி வயங்குதொழிற் கலிமாத் தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க, இடிமறந்து ஏமதி, வலவ, குவிமுகை வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழுகுலை யன்ன திரிமருப் பேற்றொடு கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை கடுமான் தேரொலி கேட்பின் நடுநாட் கூட்டம் ஆகலு முண்டே” (அகம். 134) என்று சொல்லி மெல்லச் செல்விக்கின்றான். 9. மருதத் திணை இவ்வண்ணம் பொருள் முதலியன ஈட்டலும், ஆண்மைப் பணி புரிதலும், ஈகைமேல் நிற்கும் இசை பெறுதலும் முதலிய நற்செயல் புரிந்து இன்புற்று வாழ்ந்துவரும் தலைமகனுக்குப் பரத்தைமை யொழுக்கம் உண்டாகின்றது. அதனால், அவன் தலைமகளைப் பிரிந்தேகுகின்றான். அவட்குப் பொறாமை மிகு கின்றது. அவளும் தோழியும் அப்புறத் தொழுக்கத்தை மாற்று தற்குப் பெரும்பாடு படுகின்றனர். ஒருநாள், அவன் பரத்தையிற் பிரிந்து வருகின்றான். தலை மகள், அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாள். தோழியை வாயில் வேண்டித் தலைமகளையடையத் தலைமகன் விழைகின்றான். அவனை மறுக்கும் தோழி, “ஊரனே, இனி எம்மைப் பேணாது அகன்று சென்று அவளையே பேணுக. அவள் நீ பிரிந்தமையின் இகழ்ந்தன சொல்லிக் கண்ணீர் சொரிந்து சிறு துளி கொண்டு எம் தெருவைக் கடந்து சென்றாள்; அவள் ஈங்கே இல்லை” என்பாளாய், “ பெரும் பெயர் மகிழ்ந, பேணாது அகன்மோ ....................................................................................................... .................................................................................. மாண்ட மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித் தண்நறுங் கமழ்தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள் சிறுதுனி செய்து, எம் மணல்மலி மறுகின் இறந்திசி னோளே” (அகம். 306) என்று கூறுகின்றாள். பெரும் பொருளை விரும்பும் நினக்கு இயைய ஒழுகப்பண்ணாது, இகழ்ந்த சொல் சொல்லி, நோயுற நோக்கி, தார்பரிந்து, ஊடிச் சிறு துனி செய்து மறுகிடை இறந்து திரியப் பண்ணுதல் நின் தலைமைக்கு அமைவதன்று என்று கூறி மறுப்பாள், “பெரும் பெயர் மகிழ்ந,” என்றும், “இதுவோ மற்றுநின் செம்மல்” என்றும் கூறி மறுக்கின்றமை காண்க. மேலும், பரத்தையின் இகழ்ந்த செயலைக் கூறி இகழ்கின்றாளாதலின், அவளை, “மாண்ட மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி” எனப் புகழ்வாள்போல இகழ்கின்றாள். நாளும் புதிய புதிய பரத்தையரைக் கூடி, நினக்கு வாயிலாகிய பாணன் முதலாயினார் பரவ அவர் மனைக்கண்ணே தங்குகின்றாய் எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை வெளிப்படக் கூற நாணி, உள்ளுறையால், “ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம். 306) என்கின்றாள். பொய்கை பரத்தையர் சேரியாகவும், ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ புதிய பரத்தையராகவும், மரத்தின் இளந்தளிர் வாயில்களாகவும், குருகு தலைமகனாகவும் உள்ளுறை கொள்க. நின்மனையிடத்தே விளையாட்டயரும் புதல்வன் மார்பிவர்ந்து மகிழ, அதனால் இன்புற்று இனிதிருக்க வேண்டியவனான நீ இவ்வாறொழுகல் நன்றன்று என்னும் பொருள் பயப்ப, “ கழனிக் கரும்பின் சாய்ப்புற மூர்ந்து பழனயாமை பசுவெயிற் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர” (அகம். 806) என்று தோழி உரைக்கும் திறம் மிக்க நயமாக இருத்தலைக் காண்மின். கரும்பின் சாய்ப்புறம் தலைவன் மார்பாகவும், யாமை மனையிடத்து விளையாடும் புதல்வனாகவும் கொள்க. பிறிதொருகால் தலைமகன் பரத்தையிற் பிரிந்த போது, மீளத் தன் மனையை அடையக் கருதித் தோழியின் கருத்தறிந்து வருமாறு பாணனை வாயிலாக விடுகின்றான். பாணனும் அவ்வண்ணமே போந்து தோழியைக் காண்கின்றான். அவனை வெகுண்டு வாயில் மறுக்கலுற்ற தோழி, “தலை மகன் முன்பு பரத்தையிற் பிரிந்து வந்தபோது வினாயதற்கு ‘யாரையும் அறியேன்’ என்றான்; அப்பொய்ம் மொழி இப்போது ஊரெங்கும் பரந்து நடுக்கம் செய்வதாயிற்று” என்று உள்ளுறுத்து, “ இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கத்து உவன் வரின் எவனோ? பாண...........” (நற்.127) என்று மொழிகின்றாள். இவண் அவன் வருதலால் ஒரு பயனும் இல்லை யென்பது பட, “உவன் வரின் எவனோ?” என்றது கேட்டதும் பாணன் காரணம் தெரியாது மருண்டு நிற்க, “தலை மகள் தலை மகனை யின்றியே கானற்குப் பண்டு வண்டலயரச் சென்றது போல இன்றும் செல்வாம் என்கின்றாள். எனவே தலைமகனையின்றியே தான் தனித்துச் சென்று விளையாட்டயரக் கூடிய அளவு அவட்குத் துனியுண்டாகி விட்டது; இவ்வளவிற்கும் தலைவனது புறத்தொழுக்கமே காரணம்,” என்பாள். “ .......... பேதை கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த கல்லாக் கதவர் தன்னைய ராகவும் வண்ட லாயமொடு பண்டுதான் ஆடிய ஈனாப் பாவை தலையிட் டோரும் மெல்லம் புலம்பன் அன்றியும் செல்வாம் என்னும் கானலானே. ” (நற்.127) என்று உரைக்கின்றாள். “அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின்” (தொல்.பொ) தலைமகள் தலைவனின்றியே தன் மனையின் நீங்கிச் சேறல் அறமன்றே; செல்ல ஒருப்பட்டதாகத் தோழி கூறல் வழுவே; ஆயினும், “அறக்கழிவுடையன பொருட் பயம் படவரின்” (தொல்.பொ.) அமையும் என ஆசிரியன்மார் கூறுதலின், தோழி இவ்வாறு உரைத்தல் அமையும் என்பர். இது கேட்கும் பாணன் அஞ்சித் தலைமகனைக் கொணர்ந்து கூட்டுகின்றான். தலைவன் தலைமகளோடு கூடி இன்புற்று இனிது வாழ்கின்றான். 10. இப்பாட்டுக்களின் சிறப்பராய்ச்சி: இது காறும் கூறிய வாற்றால், நம் சீத்தலைச் சாத்தனாரது பாவன்மை நன்கு தெரியக் கண்டோம். இப்பாட்டுக்களுள் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும் வறிதே செல்லாது. கூறுவோர் உள்ளத்தில் எழும் உண்மைக் கருத்துக் களையும் உடன் உணர்த்திச் செல்லும் இயல்புடையதாய் இருத் தலைக் காண்கின்றோம். பொருட் டுறையின் வரம்பு இகந்தன போலத் தோன்று வனவும் நுணுகி நோக்குமிடத்து, அவ்வரம்பு இகவாதே செல்லும் நேர்மை, நம் சாத்தனாரது புலமைத் திறத்தை இனிது காட்டிவிடுகிறது. இனி, இப்பாட்டுக்களால், இவர் இயற்கைப் பொருள் களைக் கூர்மையுடன் கண்டு, உள்ளதன் உண்மை சிறிதும் மறையாத வாறு உரைக்கும் திறத்தைச் சிறிது காண்டல் வேண்டும். இக்காட்சி, பரந்து பட்டுச் செல்லும் இம்மணி மேகலைக் காப்பியத்தை நுகர்தற்குத் துணை செய்யும். குறிஞ்சி நிலத்தே யானைகள் வாழ்வனவாகும். அவை கூட்டம் கூட்டமாகவே வாழ்வன. மேலும், அவற்றுள் களிற்றுக்கும் பிடிக்கும் உண்டாகும் காதலன்பு மிகச் சிறந்ததென்பர். தான் காதலித்த களிறு இறந்துபடின், பிடியானை பலநாள் வரையில் புலம்பிக் கொண்டிருக்குமென யானை வேட்டுவர் கூறுகின்றனர். இவ்வுண்மையை நம் சாத்தனார், “ குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்” (நற்.36) என்று கூறுகின்றார். யானை பிடிப்போரும் நீர்நிலைக் கண்ணே சென்று பதுங்குவராதலின், புலியும், யானையைத் “தாழ் நீர் நனந்தலைக்” கண்ணே இருந்து தாக்குதலை இவர் கூறுவதைக் காண்மின். இரலைமானின் கொம்பு முறுக்குண்டு கணுக்கணுவாய் இருத்தலை நாம் காண்கின்றோம். இதற்கு ஓர் எளிய உவமை காட்டி இதனைக் காணார்க்கு உரைக்க முயலின், அப்போது அதன் அருமைப்பாடு தெற்றெனப் புலனாகிறது. இதனை மிக எளிதாகக் காட்டலுற்ற நம் தண்டமிழாசானாகிய சாத்தனார், வாழைப் பூவை எடுத்து, அதனை மூடியிருக்கும் இதழ்களை நீக்க, எஞ்சி யிருக்கும் தண்டினை வேறுபடுத்து இரலைமானின் கொம் பிற்கும் உவமை கூறுவார். “ ..................................குவி முகை வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழிகுலை யன்ன திரிமருப் பேறு” (அகம். 134) என்று கூறுகின்றார் நீர்நிலையில் நின்று மீன் நாடி யுண்டிருந்த நாரைகள் கரை யிடத்திருக்கும் மரங்களில் தங்கித் தம் நனைந்த சிறகுகளை உதறும் போது, அவற்றில் ஒட்டியிருந்து உதிரும் நீர்த் திவலைகள் பனி போல் துளிக்கும் என்பதை நன்கு கண்டதனால், “ இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கம்” (நற்.127) என்று இசைக்கின்றார். அன்னங்கள் அத்துணை உயரத்தில் சென்று தங்காது, நீர் நிலையின் அருகிலுள்ள மணல் மேட்டில் இருந்து தம் சிறகுகளை உலர்த்தும் என்பார், “ நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம் அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும்” (அகம்.320) என்று உரைக்கின்றார். வயலருகே யுள்ள பரந்த ஒரு நீர்நிலையின் கரையில் பிரம்பும் ஈங்கையும் வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இடையே மாமரம் ஒன்று மிக உயரமாக நில்லாது கிளை விரிந்து தழைத்துத் தளிரொடு தாழ இருக்கிறது. மீனுண் குருகு ஒன்று ஈங்கையின் பூங்கொத்தில் இருப்ப, காற்றால் மாந்தளிர் அதன் புறத்தைத் தடவியசைய, அஃது இனிது உறங்குகின்றது. இதனைக் கண்ட சாத்தனார் இனிய சொல்லோவியம் எழுதுவாராய், “ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய, முட்கொம்பு ஈங்கைத் தூய்த்தலைப் புதுவீ ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம்.306) என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தே, பசிய அரும்பும் சிவந்த பூவும் உடைய முருக்க மரத்தில் குயிலொன்று உட்கார்ந்து அப்போது மலர்ந்த பூக்களைக் கோதி, அவற்றின் தாதினை அருந்துகிறது. பின்பு, அதனை விட்டு நீங்கி, புதுத் தளிர் ஈன்ற மாமரத்தையடைந்து, அசைகின்ற தளிர்க்கொத்தில் இருந்து கொண்டு கேட்போர் விரும்புமாறு கூவுகிறது. இஃது இளவேனிற் காலத்தின் இயல்பு. இவ்வியல்பினை நன்கு கண்ட சாத்தனார், “ ............................................................சினைய பாசரும் பீன்ற செம்முகை முருக்கின்அப் போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன்இள வேனில்” (அகம். 229) என்று பாடுகின்றார். இறுதியாக ஒன்று காட்டி இப்பகுதியினை முடிக்கின்றாம். நம் சாத்தனார் முல்லைநிலம் ஒன்றைக் காண்கின்றார். அந்நிலம் செம்மண் நிலம் மழை நன்கு பெய்திருக்கிறது. காடு தழைத்துப் பூத்து இனிதாக இருக்கிறது. காயா மரங்கள் நீலநிறமான பூக்களைப் பூப்ப, அவை தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றின் இடையிடையே செக்கர்ச்செவேரென வுள்ள தம்பலப் பூச்சிகள் மேய்கின்றன. அவற்றோடு, புதர்களில் படர்ந்துள்ள முல்லைக் கொடிகள் பூப்ப, அவற்றின் பூக்களும் உதிர்ந்து கிடக்கின்றன. செந்நிலத்தே புல்லின் பசுமையும், காயாம் பூவின் நீலமும், தம்பலப் பூச்சியின் செம்மையும், முல்லைப் பூவின் வெண்மையும் மனக் கண்ணால் கூர்ந்து நோக்கினார் நம் தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோராகிய சாத்தனார். இதனை நமக்கு வழங்க வேண்டு மென்ற அருள், அவரது உள்ளத்தைச் செலுத்த, அதன் வழி நின்று, வினை முற்றிய சிறப்பும் தன் காதலிமேற் சென்ற பேரன்புமுடைய தலைமகன் ஒருவன் கூற்றில் வைத்து, “ வானம் வாய்ப்பக் கவினிக் கானம் கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென, மணிமருள் பூவை யணிமலர் இடையிடைச் செம்புற மூதாய் பரத்தலின், நன்பல முல்லை வீகழல் தாஅய், வல்லோன் செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134) என்று தாமும் ஓர் சொல்லோவியம் தீட்டி விட்டார். இனி, இவை போலவரும் பிறவற்றையும் விரிப்பின் இம்முன்னுரை மிக விரியும் என்று அஞ்சி விடுக்கின்றாம். II.நூல் இதுகாறும், சீத்தலைச் சாத்தனார் பாடிய தொகை நூற் பாட்டுக்களை ஓராற்றால் ஆராய்ந்து அவரது புலமைச் சிறப்பைக் கண்டோம். சொற்களை வறிதே செலவிடாது, ஒவ்வொன்றும் நன்கு பயன்பட வழங்குதலும், இயற்கைப் பொருளை உள்ளவாறே எடுத்துக் காட்டுதலும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், குறிப்பாகவும், உணர்த்தற்குரிய கருத்துக்களை ஏற்றவாறு புலமை நலம் விளங்கக் கூறலும், பிறவும், அவருடைய புலமைப் பண் பாதலை இனிது தெளிந்தோம். இனி, அவர் பாடிய இம் மணி மேகலையின் நலத்தைக் காண்பது வேண்டி, முதற்கண், கதைச் சுருக்கத்தைத் தருகின்றாம். இக் காப்பியத்துக்குத் தலைவியாய மணிமேகலை, காவிரிப் பூம்பட்டினத்துப் பெருங்குடி வணிகனான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் மதுரையில் கொலை யுண்டது கேள்வியுற்று, மாதவி துறவு பூண்டு பௌத்த சங்கத்து அறவண வடிகள் என்பவர்பால் நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் கேட்டுத் தெளிந்து அவ்வறத்தை மேற்கொண்டு ஒழுகு கின்றாள். மணிமேகலையும் ஆடலும், பாடலும் அழகும் சிறந்திருந்த போதும், “தாயைப் போல மகள்; நூலைப் போலச் சீலை” என்ற பழமொழிக் கிணங்கத் தானும் அப்பௌத்த தருமங் களைப் பின்பற்றி ஒழுகி வருகின்றாள். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெறுகிறது. விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து, கொள்ளவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி, வயந்த மாலையை மாதவி பால் செலுத்தி, அவள் விழாவிற்கு வாராமையால் ஊரவர் அலர் கூறுகின்றனரென உரைத்துவரச் செய்கின்றாள். வயந்த மாலை, மாதவியையும் மணிமேகலையையும் மலர் மண்டபத்தே காண் கின்றான். அவட்கு மாதவி, “ மாபெரும் பத்தினி மகள் மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (2:55-57) என்று கூறித், தான் மாதவர் உறைவிடம் புகுந்து அறவண வடிகள் பால் வாய்மையும் சீலமும் கேட்டு அறம்பூண்டொழுகு வதைத் தெரிவித்து இதனைச் சித்திராபதிக்குச் செப்புக என்று விடுக்கின்றாள். அப்போது, மாதவி யுரைத்தவற்றைக் கேட்டிருந்த மணி மேகலை கோவலனுற்ற துயர்கேட்டுக் கண்ணீர் வடிப்ப, அந்நீர் அவள் தொடுத்திருந்த பூமாலையை நனைத்து அதன் தூய்மையைச் சிதைக்கவே, மாதவி, அவளைச் சுதமதியுடன் மலர்வனம் புகுந்து புதுப்பூக்கள் வேறே கொணருமாறு பணிக்கின்றாள். இருவரும் விழா வயரும் பல தெருக்களைக் கடந்து, உவவனம் என்னும் அழகிய மலர்ச் சோலையை அடைந்து மலர் கொய்கின்றனர். நகரத்தே காலவேக மென்னும் பட்டத்தியானை மதம் பட்டுத் திரிய, அதனை உதயகுமரன் என்னும் அரசகுமாரன் அடக்கிப் பணிவித்து, தான் ஒரு தேர் ஊர்ந்து வருகையில் மணி மேகலை மலர்வனம் சென்றிருத்தலைக் கேள்வியுற்று, ஆங்கே குறுகவர, தேரொலி கேட்ட மணிமேகலை, சுதமதியை நோக்கி, உதய குமரன் என்பாற் காதல் மிகக்கொண்டுள்ளான் என்று யான் அறிவேன். இஃது அவன் தேரொலிபோல இருக்கிறதே; இதற்கு யான் என் செய்வேன்” என்று கூறுகின்றாள். சுதமதி மனம் துளங்கி, அங்கிருந்த பளிக்கறை மண்டபத்தில் அவளை ஒளித்து விடுகின்றாள். உதய குமரன் அவளை யணுகி, “மணிமேகலை தனித்து வந்ததற்குக் காரணம் என்ன?” என்று வினவ, சுதமதி, மக்கள் யாக்கையின் புன்மையியல்புகளை விளங்கக் கூறுகின்றாள். அப்போதில், பளிக்கறையின் உள்ளேயிருந்த மணிமேகலையின் படிவம் அவன் கண்ணிற்குப் புலனாகிறது. உடனே, மணிமேகலையை யடைய எண்ணி, அவ்வறையின் வாயிலைக் கையால் தடவி நோக்கிக் காணமாட்டாது, “அவள் எத்திறத்தாள்?” எனச் சுதமதியைக் கேட்ப, அவள், “இம் மணி மேகலை, தவவொழுக்கமும் சபிக்கும் வன்மையும், காமம் கடந்த வாய்மையும் உடையள்” என்று உரைக்கின்றாள். அது கேட்கும் அவன், மணிமேகலை “செவ்வியளாயின் என் செவ்வியளாக” எனச் செப்பிவிட்டு நீங்குவோன், “இனி, இவளைச் சித்திராபதியால் சேர்வேன்” என்று சொல்லி ஏகுகின்றான். பின் வெளிவந்த மணி மேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “இதுவோ, அன்னாய், காமத்தின் இயற்கை,” என்று வியந்து, “இதன் இயற்கை இதுவாயின், இஃது என்பால் கெடுக” என்று மொழிந்து நிற்குங் கால், இந்திர விழாக்காணப் போந்த மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவிற் போந்து, பளிக்கறையில் இருந்த புத்த பீடிகையை வலங்கொண்டு உயரத்தில் எழும்பி நின்று பலவாறு ஏத்தி நிற்ப, பகற்போது நீங்குகிறது; அந்தியும் இரவும் ஒன்றன் பின்னே ஒன்றாக வருகின்றன. பின்பு, மணிமேகலா தெய்வம், சுதமதியை அவ்வனத்திற்கு இருவரும் வந்த காரணம் கேட்டறிந்து, “இது முனிவர் வனமாதலை யறிந்து உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றான்: அவற்கு மணி மேகலைபால் எழுந்த வேட்கை தணிந்திலது; இப்போது வெளியே செல்லின் அவன் அகப்படுத்திக் கொள்வன்; நீவிர் இருவரும் சக்கர வாளக் கோட்டத்திற்குச் செல்க” என்று சொல்ல, சுதமதி, “சுடு காட்டுக் கோட்டம் எனப்படும் இதனைச் சக்கரவாளக் கோட்ட மென்று கூறுதற்குக் காரணம் யாது?” என்று வினவுகின்றாள். அத்தெய்வம் காரணம் கூறுகிறது. சிறிதுபோதில் சுதமதி உறங்கவும் மணிமேகலையை மயக்கி, அத்தெய்வம் அவளைத் தழுவி யெடுத்துக் கொண்டு சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து ஆங்கே ஓரிடத்தே அவளை வைத்து விட்டுச் சென்றுவிடுகிறது. சென்ற தெய்வம் உதய குமரனை யடைந்து, அவன் முன்னே நிள்று, அரசு முறையின் இயல்பை எடுத்தோதி, “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை யொழிக” என்று கூறுகிறது. பின்பு, அத்தெய்வமே, சுதமதியை யடைந்து, அவளை யெழுப்பித் தன்னை இன்னாரென்று அறிவித்து, தான் இந்திர விழாக் காண வந்ததும் மணிமேகலை மணிபல்ல வத்தே வைத்ததும் சொல்லி, ‘மணிமேகலை தன் பழம் பிறப்புச் செய்திகளை யறிந்து கொண்டு இற்றைக்கு ஏழாம் நாள் இங்கே வருவள்; அவள் வேற்று வடிவம் கொள்ளினும் நினக்குத் தன்னை மறைக்காள்; அவட்கு என்னைத் தெரியும்; அவள் தான் பெற்ற மகட்குப் பெயரிடும் நாளில், யான், “ காமன் கையறக் கடுநவை யறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன்;” (7:36 -38) இதனையும் அவட்குக் கூறி நினைப்பூட்டுக,’ என்று சொல்லி நீங்கிவிடுகிறது. மணிமேகலையின் பிரிவாற்றாத சுதமதி வருத்தத்துடன் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள உலகவறவியின் பக்கத்தே நின்று வருந்த, அங்கிருந்த தூணிற் செய்த பாவையொன்று தெய்வச் சாயை பெற்று, சுதமதியின் பழம்பிறப்புச் செய்தியும், காவிரிப்பூம் பட்டினத்திற்கு அவள் வந்த வரலாறும் கூறி, “ இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத் தன்பிறப் பதனொடு நின்பிறப்புணர்ந்து ஈங்கு இலக்குமி யாகிய நினக்குஇளை, யாள்வரும் அஞ்சல் என்று” (7:106 - 109) உரைக்கின்றது சிறிது போதில் பொழுது விடிகிறது. அவள் மாதவி பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவட்குக் கூறுகின்றாள். இருவரும் மணிமேகலையின் பிரிவு நினைந்து வருந்தி யிருக்கின்றனர். மணிபல்லவத்தே தனித்திருந்த மணிமேகலை விழித் தெழுந்து வேற்றிடமாதலை யறிந்து மனம் மருண்டு, “உவ வனத்தின் ஒருபுறம்போலும் இது” என்று நினைந்து, பின்னர்ச் சுதமதியைக் காணாது கலங்கி, அரற்றியும், உரப்பியும் அலமருகின்றாள்; அங்கும் இங்கும் அலைந்து நோக்குகின்றாள்; கோவலனை நினைக்கின்றாள்; கோவெனக் கதறிப் புலம்புகின்றாள். அவளெதிரே, புத்தனாகிய “ பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருவறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும பீடிகை” (8:61-63) தோன்றுகிறது. அதனைக் கண்டதும், அவட்குக் கைகள் அவளை யறியாமலே தலைமேற் சென்று குவிகின்றன; கண்கள் நீர் உகுக் கின்றன. அதனை அவள் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கி யெழுகின்றாள். எழும்போதில் அவட்குப் பண்டைப் பிறப்பில், தான் அசோதர நகரத்து இரவிவன்மன் என்னும் வேந்தற்கும் அமுதபதியென் பாட்கும் இலக்குமி என்னும் மகளாய்ப் பிறந்து, அத்திபதியென்னும் அரசன் மகனான இராகுலன் என்பானை மணந்து வாழ்ந்ததும், அவனொடு வாழ்ந்து வருநாளில் பிரமதரும முனிவனை வணங்கி அறங்கேட்டதும், இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பால் இறப்பத் தான் தீப்புகுந்து இறந்ததும், அப்போது அம்முனிவன், நீ வரும் பிறப்பில் மணிபல்லவத்தில் மணிமேகலா தெய்வத்தால் இராகுலனது மறு பிறப்பை அறிவாய் என்று உரைத்ததும் பிறவும் நன்கு தெரிந்து கொள்கின்றாள். உடனே மணிமேகலை அம்மணி மேகலா தெய்வத்தை நினைந்து வருந்து கின்றாள். அபபோது, மணிமேகலா தெய்வம் அங்கே போந்து தரும பீடிகையைப் புத்தனாகவே எண்ணித்துதித்து நிற்க, அத் தெய்வத்தை நோக்கி, மணிமேகலை இராகுலனது பிறப்பை வினவுகின்றாள். அத்தெய்வம் அவள் பிறப்பும் ஏனைச் சுதமதி மாதவி முதலாயினார் பிறப்பும் கூறி, மணிமேகலைக்கு எதிர்வில் நிகழ விருப்பனவும் வேற்றுருக்கோடல், அந்தரம் திரிதல் என்ற இரண்டிற்கு முரிய மந்திரமும் கூறி நீங்குகிறது. நீங்குங்கால், ஒன்று நினைவு கூர்ந்து, “ மறந்ததும் உண்டென மறித்தாங்கு இழிந்து, சிறந்த கொள்கைச் சேயிழை, கேளாய்; மக்கள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்கும் என்று ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து” (10:88-92) சென்று விடுகிறது. மணிமேகலை,தானும் உடனே புறப்படாது, அம்மணி பல்லவத் தீவிலுள்ள மணற்குன்றம், பூஞ்சோலை, பொய்கை முதலியவற்றைக் கண்டு வருகின்றாள். அவள் எதிரே தீவதிலகை யென்பா ளொருத்திவந்து மணிமேகலையை யார் என்று வினவ, இவள் தன் பழம்பிறப்பும், இப்பிறப்பும் சேரக் கூறுகின்றாள், மணிமேகலைக்குத் தீவதிலகை தான் இந்திரன் ஏவலால் பீடிகை காவல் புரிந்துவருவதும், பீடிகையின் இயல்பும் கூறி, “இற்றை நாள், இங்கே உள்ள கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி யென்னும் பாத்திரம் வெளிப்படு நாளாகும். அது முன்நாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது நாம் அங்கே சென்றால், அப்பாத்திரம் நின்கைக்கு வரும்; “ ஆங்குஅதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துத லல்லது தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்” (11:48-50) அதன் வரலாற்றை ஊரில் அறவண அடிகள் பால் கேட்கலாம்; வருக” என்று சொல்லி அப்பொய்கைக்கு அழைத்தேகு கின்றாள். இருவரும் கோமுகியை வலஞ் செய்து நிற்ப, அமுதசுரபி யெழுந்து வந்து மணிமேகலையின் கையில் தங்குகிறது. தீவதிலகை பசிப் பிணியின் கொடுமையைப் பலபடக் கூறி அதனைத் தீர்ப்பதாகிய நல்லறத்தைச் செய்யுமாறு மணி மேகலைக்கு உரைக்க, அவளும் மகிழ்வோடு இசைந்து, “வெயிலென முனியாது புயலென மடியாது” எவ்விடத்தும் எக்காலத்தும் சென்று, பசிப்பிணியால் வாடு வோரைக் கண்டு, “ ...........................................விஞ்சைப் பாத்திரத்து அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர் முகம்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்” (11:116-118) என்று கூறுகின்றாள், தீவதிலகையும் பெருமகிழ்ச்சியுற்று, ‘இப்பாத்திரம், “ அறம்கரி யாக அருள்சுரந் தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது; ஆங்கன மாயினை, அதன் பயன் அறிந்தனை” (11:120-122) இனி, நீ செல்க’ என்று விடுப்ப, மணிமேகலை பீடிகையை வழி பட்டு, வான் வழியாகக் காவிரிப்பூம் பட்டினம் வந்து, வாடி வருந்தித் தன் வருகை நோக்கியிருக்கும் மாதவி சுதமதி என்ற இருவரையும் கண்டு, அவர்தம் பழம் பிறப்பும், அமுத சுரபியின் இயல்பும் கூறுகின்றாள்; யாவரும் மகிழ்கின்றனர். பின்பு மூவரும் அறவண வடிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கண்டு வணங்கு கின்றனர். மணிமேகலை தான் மலர் வனம் புக்கதுமுதல் நிகழ்ந்த அனைத்தும் அவர்க்கு உரைக்கின்றாள். அறவண அடிகள், “மணிமேகலைக்கு மாதவி சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பு வரலாறும், முற்பிறப்பில் தான் அவர்களைக் கண்டதும், சக்கரவாளத்துத் தேவரனைவரும் துடிதலோகம் சென்று, பிரபாபாலரை இரப்ப, அவர் அறம் செழித்தல் வேண்டிப் புத்தனாகத் தோன்றியதும், அவன் தோற்றச் சிறப்பும் பிறவும் கூறி, நின்னால் இங்கே பல நிகழ்ச்சிகள் நிகழ விருக்கின்றன; இம் மாதவியும் சுதமதியும் நின்னுடன் புத்தனை வணங்கி அவன் காட்டிய நல்வழிப் படர்குவர்; நீ பெற்ற அமுதசுரபி கொண்டு மக்களது பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்க” என்று உரைக்கின்றார். மணிமேகலையும் அப்பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொள்கின்றாள். அதைக் கண்டதும் அவ்வறவணவடிகள் ஆபுத்திரன் வரலாறும், அவன் வீடுதோறும் ஐயமேற்றுக் ‘காணார் கேளார், கால்முடப் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணியுற்றோர்’ முதலிய பலர்க்கு உணவூட்டி வந்த திறமும், அவற்குச் சிந்தாதேவி இப்பாத்திரத்தைத் தந்ததும், அவன் அது கொண்டு உணவு தரும் நல்லறம் உவந்து செய்து வந்ததும், இந்திரன் செய்கையும், அவன் சாவகநாட்டிற்குச் செல்லுங்கால் மணிபல்லவத்தில் விடப் பட்டதும், அப்பாத்திரம் பயன் படாமையின், அவன் அதனைக் கோமுகியில் எறிந்து விட்டு உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்து சென்றுசாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் பிறந்து சிறந்ததும், அவனைப் பூமிசந்திரன் என்ற அந்நாட்டு வேந்தன் தனக்கு மகனில்லா மையின் மகனாகக் கொண்டு பேணினமையும் அவன் புண்ணிய ராசனாய் அரசுரிமை யெய்தியது மெல்லாம் எடுத்துக் கூறுகின்றனர். பின்பு அவர், மணிமேகலையை நோக்கி, “இப்போது நாட்டில் வறன் உண்டாகி யிருக்கிறது. நீ இவ் வமுத சுரபியை வறிதே வைத்திருத்தல் முறையன்று” என்று சொல்லி விடுப்ப, அவள் பிக்குணிக் கோலங் கொண்டு திருவோடேந்தித் தெருவில் வருகிறாள். அவளைக் கண்டோர், “ உதய குமரன் உளங்கொண் டொளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப் பிச்சைப் பாத்திரம் கையி லேந்தியது திப்பியம்” (15:67-70) என்று வருந்துகின்றனர். காய சண்டிகை யென்னும் விஞ்சை மகள் வந்து மணிமேகலையைக் கண்டு “ஆதிரை யென்னும் கற்புடை யாளின் மனையில், முதன் முதலாக ஐயமேற்றல் நன்று” என்று கூறுகின்றாள். அவ்வாதிரையின் வரலாறறியும் குறிப்பொடு மணி மேகலை காயசண்டிகையை நோக்க, அவள், ஆதிரை கணவனான சாதுவன் வரலாறும், ஆதிரையின் கற்பு மாண்பும், சாதுவன் நாகரை நல்வழிப் படுத்தியதும், பின்பு அவள் சந்திரதத் தனென்னும் வணிகனது வங்கமேறி வந்து ஆதிரையை யடைந்து அறம் புரிய லுற்றதும் விரித்துரைத்து, “அவள்பால் பிச்சை பெறுக” என் கின்றாள். மணிமேகலை மனம் இசைந்து ஆதிரை மனையெதிரே “புனையா ஓவியம் போல” நிற்ப, அவள் அமுதசுரபி நிறைய “மாதிர மடங்கலும் பசிப் பிணியறுக” என்று உணவைப் பெய் கின்றாள். அதுகொண்டு மணிமேகலை பசித்தோர்க்கு உணவளிக் கின்றாள்; உணவோ எடுக்க எடுக்கக் குறையாது சுரக்கின்றது. காயசண்டிகை தன்னைப்பற்றி யிருந்த யானைத்தீ என்னும் நோய் கெடுமாறு உணவுண்டு, தன் வரலாறு முற்றும் கூறித் தொழுது விடைபெற்றுப் போகின்றவள், “உலகவறவியில் பசித்தோர் பலர் உளர்; அங்கே செல்க” என்று சொல்லி விட்டுப் போகின்றாள். மணிமேகலையும் அவ்வண்ணமே சென்று பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைச் செய்கின்றாள். இவள் செயல் இதுவாக, இதனை யறிந்த சித்திராபதி, மாதவியும் மணிமேகலையும் செய்வன நாடக மகளிர்க்கு அடுப்பன அல்ல எனச் சினங்கொண்டு, வஞ்சினம் மொழிந்து உதயகுமரனையடைந்து மணிமேகலையின் செய்தியைக் கூறு கின்றாள். அவன் பண்டு அவளைப் பளிக்கறையில் கண்டதும், தெய்வம் போந்து செங்கோன்மை காட்டி, மணிமேகலையை மறப்பாய் என்றதும் கூற, சித்திராபதி அவனைத் தன் மாய மொழியால், மயக்கி விடவும், அவன் மணிமேகலையைக் கண்டு, நற்றவம் பூண்டதற்குக் காரணம் நவில்க என்கின்றான். அவன் தனக்கு முன்பிறப்பிற் கணவனாதலின் அக்கருத்துடன் வணங்கி, “ பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலும் உடையது, இடும்பைக் கொள்கலம், மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்” (18:136-139) என்று சொல்லிச் சம்பாபதியின் கோயிலுக்குள் நுழைந்து காய சண்டிகையின் வடிவுடன் வெளிவருகின்றாள். அதுகண்டு திடுக் குற்ற உதயகுமரன், தானும் சம்பாபதிமுன் சென்று “மாயையால் மறைந்த மணி மேகலையைக் காட்டல் வேண்டும்; காட்டி யருளாயாயின், பன்னாளாயினும் பாடுகிடப்பேன்; மணிமேகலை யின்றியான் போகேன்; உன் அடி தொட்டேன்; இஃது என்குறை” யென்று வேண்டுகின்றான். அப்போது அங்கிருந்த பாவைகளுள் ஒன்று தெய்வமுற்று, “ ஏடவிழ் தாரோய்! எங்கோ மகள்முன் நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை,” (19:3-4) என்கின்றது. அதனால் உதயகுமரன் மனம் வருந்தி, “பின்னர்க் காண்பாம்” என்று சொல்லிக் கொண்டு போய் விடுகின்றான். பின்பு மணிமேகலை காயசண்டிகை வடிவிலேயே சிறைக் கோட்டம் சென்று ஆங்கே பசித்திருந்தோர்க்கு உணவு தருகின்றாள். சிறைக் காவலர் சென்று, அரசற்குணர்த்த, அவன் மணிமேகலையைத் தருவித்து அமுதசுரபியின் அருமை யறிந்து, “யான் செயற் பாலது யாது?” என்று கேட்கின்றான்; மணி மேகலை “சிறைக் கோட்டத்தைச் சீத்து அறவோர்க்குரிய அறக்கோட்ட மாக்குதல் வேண்டும்” என்று கூற, அவ்வாறே சிறைக்கோட்டம் அறக்கோட்ட மாக்கப்படுகிறது. இச் செய்திகளை யெல்லாம் கேள்வியுற்ற உதயகுமரன், அவளைப் பற்றித் தன் தேர்மேற் கொணர்ந்து அவள் கூறும் வித்தையும் அறிவுடை மொழியும் கேட்க மனங்கொண்டு உலக வறவியை அடைகின்றான். அப்போது, காயசண்டி கையைக் காணாத அவள் கணவன் காஞ்சனனென்பவனும் ஆங்கு வருகின்றான். காய சண்டிகை வடிவில் இருக்கும் மணிமேகலை அவனருகே செல்லாது, உதயகுமரன் பக்கலில் நின்று, நரை மூதாட்டி யொருத்தியைக் காட்டி யாக்கையின் புன்மை கூறித் தெருட்டுகின்றாள். காஞ்சனன் பொறாது, “இவன் இவட்குக் காதலனாயினன்” எனத் தவறாக வுணர்ந்து, ஆங்கே ஓரிடத்தே மறைந்திருக்கின்றான். உதயகுமரன் இடையிருள் யாமத்தே வந்து தன் கருத்தை முற்று வித்துக் கொள்ள எண்ணி, நீங்கி, இடையிருள் யாமத்தே வருகின்றான். அவனைக் கண்டதும் காஞ்சனன் அவன் பின்னே சென்று தன் கைவாள் வீசி உதயகுமரனை வீழ்த்தி, மணிமேகலையைப் பற்றிக் கொண்டு செல்லத் துணிந்து அவள் இருக்குமிடம் போகின்றான், அக்காலை, கந்திற் பாவை காஞ்சனனுக்குக் காயசண்டிகை வான்வழியே போகுங்கால் விந்தர் கடிகையின் வயிற்றில் அடங்கிய வரலாற்றைக் கூறி, “உண்மை தெளியாது நீ செய்த தீவினை நின்னை நீங்காது வந்து பற்றும்” என்று தெருட்ட அவன் வருத்தத் துடன் செல்கின்றான். மணிமேகலை உறக்கம் நீங்கி, நிகழ்ந்தது கண்டு தன் உண்மை வடிவுடன் உதயகுமரனுக்காகப் புலம்ப, கந்திற்பாவை அவளைத் தடுத்து உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தற்கேதுவாகிய பழம்பிறப்பு வரலாற்றை யுரைத்து, எதிர்காலத்தில் இனி அவட்கு நிகழ விருப் பனவும் தெரிவிக்கின்றது. அது கேட்கும் மணிமேகலை மனமயக்கம் தீர்கின்றாள்; பொழுதும் விடிகிறது. சக்கரவாளத்து மாதவர் மணிமேகலையால் உதய குமரற்கு உற்றது தெரிந்து அரசற்குரைப்ப, அவன் மந்திரியாகிய சோழிக ஏனாதியை நோக்கி, “உதயகுமரனை ஈமத்தேற்றிக் கணிகை மகளாகிய மணிமேகலையைக் காவல் செய்க,” என்று கட்டளை யிடுகின்றான்; மணிமேகலை சிறையிடப்படுகின்றாள். மணிமேகலை காரணமாகத் தன் மகன் இறந்தது கேட்டறிந்த இராசமா தேவி, அவளை வஞ்சனையால் துன்புறுத்தக் கருதி, அரசனிடம் இனிய நன்மொழி பலபேசி, மணிமேகலையைத் தன்பால் இருக்கச் செய்கின்றாள். மணி மேகலைக்கு மயக்க மருந்தளித்தும், கற்பழிக்க முயன்றும், உணவளியாது விடுத்தும் வருத்துகின்றாள்; மணிமேகலை அவையனைத்தையும் வென்று விடுகிறாள். அது கண்டு அஞ்சிய இராசமா தேவிக்கு மணி மேகலை அறம் பல கூறி, உதயகுமரன் பழம்பிறப்பு வரலாற்றைத் தெளிய உரைத்து, காமம், உயிர்க் கொலை, பொய் முதலியவற்றின் தீங்குகளைக் காட்டித் தேவியைத் தேற்றி நிற்ப, இராசமாதேவி மணி மேகலையை வணங்க, அது பொறாத மணிமேகலை அவளை வணங்குகின்றாள். அப்போது சித்திராபதி போந்து, இந்திரவிழா நடைபெறா தாயின் காவிரிப்பூம் பட்டினத்திற்கு உண்டாகக் கூடிய தீங்கும், மணிமேகலா தெய்வம் கூறியிருக்கும் கட்டுரையும் உரைத்து மணி மேகலையைத் தன்னோடு வரவிடுமாறு வேண்ட, இராசமாதேவி மறுக்கின்றாள். அதே சமயத்தில் மணிமேகலையை மீட்டற் பொருட்டு அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும், தேவியிடம் வருகின்றனர். தேவி அடிகளை வணங்க, அவர் அவட்கு நிதானம் பன்னிரண்டும் தெளியவுரைத்து, மணி மேகலையை நோக்கி, “வேற்றிடங்கட்குச் சென்று பிற அறங்களைக் கேட்டுத் திரும்பும் போது, இவ்வறங் களை விளங்க உரைப்பேன்” என்று சொல்லி விட்டுப் போகின்றார். மணி மேகலையும் வான்வழியாக ஆபுத்திரன் புண்ணியராசனாய்ப் பிறந்து ஆட்சிபுரியும் நாட்டையடைந்து, தருமசாவகன் என்னும் முனிவன் இருக்கு மிடத்தில் இருக்கின்றாள். அங்கே புண்ணியராசன் வந்து, முனிவனை வணங்கி அறங் கேட்டு, மணிமேகலையை நோக்கி, “இவள் யார்?” என்று வினவு கின்றான். அருகே நின்ற கஞ்சுகி யொருவன் தான் காவிரிப் பூம்பட்டினம் சென்றிருந்தபோது அறவணவடிகளால் சுட்டப் பட்ட மணிமேகலையே இவள் என்று கூற, உடனே மணிமேகலை அரசனை நோக்கி, “அரசே, உன் கையிலிருந்த அமுத சுரபியே என் கைப்புகுந்தது; நீ உன்னை மறந்தனை; உடனே மணி பல்லவத்துக்கு உன் பழம்பிறப்பை அறிய வருக” என்று சொல்லி விசும்பு வழியாக, மணிபல்லவம் சென்று தரும பீடிகையை வணங்கி நிற் கின்றாள், புண்ணியராசன் அரண்மனை யடைந்து, அமரசுந்தரி என்னும் தாயார் தன் பிறப்பு வரலாறு கூறக் கேட்டுத் தான் அரச போகத்தில் ஆழ்ந்து கிடந்தமை நினைந்து வருந்த, அமைச்சன், அரசற்குரிய அறம்பலவும் மொழிகின்றான். அரசன், “யான் மணி பல்லவம் சென்று திரும்புதற்கு ஒரு திங்கட்காலம் பிடிக்கும்; அதுகாறும் இந்நாட்டைக் காத்துவருக” என்று சொல்லி, பிற உரிமைச் சுற்றத்தையும் விட்டு மணிபல்லவம் வந்து சேர்கின்றான், அவனை மணிமேகலை யெதிர்கொண்டு சென்றுதரும பீடிகையைக் காட்ட, அவன் வணங்கித் தன் பிறப்பைத் தெரிந்து கொள்கின்றான். அங்கே தீவதிலகை போந்து புண்ணியராசனுக்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்த சிலவற்றைக் கூறி, மணிமேகலையைப் பார்த்துக் காவிரிப்பூம் பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், அதற்குரிய காரணமும் விரியக்கூறி, மாதவியும், சுதமதியும், அறவணவடிகளும் இதனை யறிந்து வஞ்சிமாநகர்க்குச் சென்று விட்டனர் என்று சொல்லுகின்றாள். மணிமேகலை, பிரியமாட்டாது வருந்தும் புண்ணிய ராசனைத் தேற்றி, அவனைத் தன் நாட்டிற்கேகுமாறு பணித்துத் தான் மட்டில் வான்வழியாக வஞ்சி நகரை யடைந்து, கண்ணகி கோயிலுக்குச் சென்று வணங்கி நிற்கின்றாள். கண்ணகி, தன் கணவன் கோவலனுக்குற்ற தீங்கிற்கு ஏதுவாகிய பழம் பிறப்பு வரலாற்றைத் தான் மதுராபதியிடத்துக் கேட்டதைக் கேட்டவாறே உரைத்து இனி எதிர்காலத்தில் தனக்கு (கண்ணகிக்கு) நிகழ விருப்பனவும் சொல்லி, “இனி, நீ சென்று பல்வகைச் சமயவாதிகளைக் கண்டுஅவர்தம் அறங்களைக் கேட்பாயாக; அதற்கு நீ வேற்று வடிவம் கொள்க” என்று உரைக் கின்றாள். மணிமேகலை, தனக்கு மணி மேகலா தெய்வம் தந்த மந்திரத்தால் ஒரு மாதவன் வடிவுகொண்டு, சமயக் கணக்கர் வாழும் இடம் சென்று, அவர்களுள், பிரமாண வாதி முதல் பூதவாதி ஈறாகப் பலரையும் கண்டு அவர்தம் அறங்களைக் கேட்டுக் கொண்டு, வஞ்சி நகரின் பல அழகிய இடங்களைப் பார்த்து மகிழ்வுற்று, பௌத்தப் பள்ளி யடைந்து அங்கே தவம் பூண்டிருக்கும் கோவலன் தந்தையான மாசாத்து வானைக் காண் கின்றாள். அவனுக்குத் தனக்கு நேர்ந்தது முற்றும் உரைக்கின்றாள். அவனும், தன் வரலாறு முழுதும் கூறி, “அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும் கச்சிமாநகர்க்குச் சென்று விட்டனர்; அங்கே மழைவளம் இன்மையின் மக்கள் பசியால் வாடுகின்றனர்; ஆண்டுச் செல்க” என்று உரைக்கின்றான். மணிமேகலை, தன் உண்மை வடிவுடன் கச்சிநகரை யடைந்து அதன் நடுவண் சென்றிருக்க, அவள் வருகையைக் கஞ்சுகன் ஒருவன் அறிந்து, அரசனான இளங்கிள்ளிக்கு உரைக்கின்றான். அரசன், “கந்திற்பாவை கூறியது முற்றும் உண்மையாயிற்று” என்று மகிழ்ந்து மணிமேகலையைக் கண்டு, தன் நாடு வறங்கூர்ந்ததும், தெய்வம் தோன்றி மணிபல்ல வத்துப் போலப் பொய்கையும், பொழிலும் சமைக்குமாறு பணிக்கத் தான் அவ்வாறே செய்ததும் அவட்குக் காட்டுகின்றான். பின்பு, அங்கே, தீவதிலகைக்கும் மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும், கோயிலும் நிறுவி; விழாவும், சிறப்பும், நிகழ்த்தப்படுகின்றன. மணிமேகலை பின்பு அமுத சுரபி கொண்டு பசிப்பிணியால் வருந்தும் மக்கட்குப் பேருணவு வழங்கி அவர்தம் வருத்தம் போக்குகின்றாள். அச்செய்தி நாடு முழுதும் பரவுகிறது. அறவணவடிகளும், மாதவியும், சுதமதியும், மணி மேகலையிருந்த அறச்சாலைக்கு வருகின்றனர். அவர்களை இனிது வரவேற்று நல்லுணவளித்து மணிமேகலை இன்புறுகின்றாள். பின்பு, அறவணவடிகள், காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், தாங்கள் மூவரும் கச்சி நகர்க்கு வந்ததும் கூறுகின்றார். மணிமேகலை தனக்கு நிகழ்ந்தன பலவும் கூறித் தான். சமயக் கணக்கர் பலரையும் சமயப் பொருள் கேட்டதும், அவை செம்மையாக இன்மையின் சிந்தையில் வையாமையும் சொல்லித் தனக்குப் புத்தன் சொல்லிய மெய்யறத்தை விளம்பு மாறு வேண்டு கின்றாள். அவர் புத்த சமயத்துத் தருக்க நெறியும், பிறவும் கூறுகின்றார். அதன்மேல் மணிமேகலை, “புத்தம் சரணங்கச் சாமி, தர்மம் சரணங் கச்சாமி, சங்கம் சரணங்கச்சாமி என்றவற்றை மும்முறை சொல்லி வணங்கி அடிகளை இரந்து நிற்க, அவர் அறங்குன்றிய காலத்துப் புத்தர் தோன்றி, போதியின் கண் இருந்ததும், அவர் உரைத்தருளிய பன்னிரு நிதானங்களின் தோற்றவொடுக்க நெறி களும் பிறவும் விரியக்கூறி, “நின் மனத்திருள் நீங்குக” என்று அருளுகின்றனர். மணிமேகலை ‘தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம்’ அறுவேன் என நோற்கலுறுகின்றாள். III.நூற்புணர்ப்பு இதுகாறும் கூறிய கதைச் சுருக்கத்தை வகுத்து நோக்கின், மணிமேகலை மலர்வனம் புகுதலும், மணி மேகலா தெய்வத் தால் பின்பு மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பும், அமுத சுரபியும் மந்திரமும், பெறுதலும், பின்னர் காவிரிப்பூம் பட்டினம் போந்து பசித்தோர்க்கு உணவளித்தலும், அவனைக் காதலித்த உதய குமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டலும், அது காரண மாக அவள் சிறைப்படுதலும், சிறை வீடு பெறுதலும், ஆபுத்திரன் நாட்டிற்குச் சென்று அவனை மணிபல்லவம் கொணர்ந்து பழம் பிறப்பறிவித்தலும், அவனின் நீங்கி, வஞ்சிமாநகர் சென்று சமயக் கணக்கர் தம் சமயத்திறம் கேட்டலும், காஞ்சிநகர்க்கு வந்து அறவணர் பால் புத்தரோதிய அறம் கேட்டுத் தெளிந்து “பவத்திறம் அறுப்பேன்” என்று நோற்றிருத்தலும் இக்காவியத்தின் சிறப்புடைய நிகழ்ச்சிகளாம் என்பது இனிது விளங்கும். இவற்றை நமக்கு உரைக்கப்புகுந்த இந்நூலாசிரியர், இந்நிகழ்ச்சி களுடன் சுதமதி, தீவதிலகை, காயசண்டிகை, ஆதிரை முதலியோர் வரலாறும், சக்கர வாளக் கோட்டம், தருமபீடிகை, காவிரிப் பூம்பட்டினம் கடல் கோட்படுதல் முதலியவற்றின் வரலாறும். உதயகுமரன், ஆபுத்திரன், துவதிகள், சுகந்தன், தருமதத்தன், கோவலன் முதலியோர் வரலாறும் எனச் சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட வரலாறுகளை இணைத்து, விழாவறை காதை முதல் பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை யீறாக முப்பது காதைகளாக விரித்தோதுகின்றார். பதிகம் நீங்கலாகக் காதை முப்பதும் சிறிது குறைய ஐயாயிர மடிகளில் இயன்றுள்ளன. இக்காப்பிய நிகழ்ச்சியுடன் கிளைக் கதைகள் வந்து இயைந்து செல்லும் செலவு, தொடக்கத்தே ஒரு மலையடியில் தோன்றும் யாறொன்று இடையிடையே தோன்றி வரும் சிற்றாறுகளின் சேர்க்கையால் பெருகித் தங்குதடையின்றி யேகும் காட்சியினை நினைவில் தோற்றுவிக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் கால் கொள்ளும் இக்காப்பிய நிகழ்ச்சி, மணி பல்லவம், சாவகநாடு என்ற இரண்டில் நிகழும் நிகழ்ச்சி வந்து கூட வஞ்சிக்குச் சென்று, பின்பு காஞ்சியை யடைந்து கடை நிலையெய்துகின்றது. இவ்வாறு பதினைந்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சியோடு விரவி யொழுகிய போதும், காப்பியப் பொது நிகழ்ச்சி சிறிதும் சிக்குண்டு தெளிவு படும் திறம் பெறவே இல்லை. இவையாவும் காரண காரிய முறையிலும், எடுத்துக் காட்டு வகையிலும் வந்து இயைவதால், படிப்போர்க்குக் காப்பியநிகழ்ச் சியைப்பின் பற்றிச் செல்லுதற்குச் சிறிதும் அருமை தோன்றுவது கிடையாது. ஒரு நிகழ்ச்சியைக் கண்டபின் இதன் விளைவு என்னவோ எனப் படிப்போரைத் திகைப்பித்துத் தெளிவிக்கும் புலமைத் திறம் இக்காப்பியக் காலத்தில் இல்லை. அத்திறம் இதன்கண் அமைந்திருந்திருப்பின், இதனிற் சிறந்ததோர் இலக்கியம் வேறே இல்லையென்றே துணிந்து கூறிவிடலாம். இவ்வாறு இம்மணிமேகலை வரலாற்றை நம் சாத்தனார் ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதன் நோக்கம்யாதாகும்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம்பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை; அக்காரணம் முன்னைப் பிறவியினும் தோன்றும்; இப்பிறவியினும் தோன்றும். மக்கட்கு உண்டாகும் நலந்தீங்குகள் யாவும் காரணமாகிய முன்னை வினையின் பயனே; பிறப்புப் பலமாறினும் வினைப்பயன் விடாது வந்து பற்றும் என்ற ஒன்றை வற்புறுத்துதலே இவர் நோக்கமாக உடையர் என்பது தோன்றுகிறது. இவ்வகையில் இவர் நோக்கமும் இளங்கோ வடிகள் நோக்கமும் ஒன்றாதல் விளங்கும். ஏனைச் சமயக்கணக் கர்தம் சமயப் பொருள் காட்டி புத்த சமயத்தின் கருப் பொருளை உணர்த்தல் வேண்டும் என்பது இரண்டாவதேயாகும். இனி, இக்காப்பியத்தை உரைக்கப்புகுந்த இவர், மணி மேகலையை மலர்வனத்துக்குக் கொணரக் கருதி, விழாவறை காதையால் இந்திர விழா நிகழ்ச்சி யைப் புலப்படுத்தி, ஊர் அலர் உரைத்த காதையால் மாதவியும், மணிமேகலையும், தவவொழுக் கினரானது உணர்த்தி அதுவாயிலாக மணிமேகலையை மலர்வனம் புகுவிக்கின்றார். அப்பொழுது மணிமேகலை தனித்துச் செல்லுதல் கூடாது என்பதை வற்புறுத்து முகத்தால் தனித்து வந்து கெட்ட தன் வரலாற்றைத் தோழியாகிய சுதமதியைச் சொல்லுவிக்கின்றார். இனி, மணிமேகலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகக் கருதிய சாத்தனார், உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள காதலைத் தோற்றுவித்து, அவனை அவ்வனத்திற்கு வருவிக் கின்றார். அவனது ஆண்மையை, காலவேகத்தை, அடக்கினா னென்பதாலும், மணிமேகலைக்கும் அவன்பால் காதலுண்மையை அவன் தேரொலி கேட்டு அவள் சுதமதிக்கு உரைக்கும் உரையாலும் தெரிவித்து;அவனின் நீக்குவது காரணமாக மணிமேகலா தெய்வத்தை வருவித்து, மணிமே கலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகின்றார். மணிபல்லவத்தில் மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவதிலகை வரலாறும் வந்து சேர்கின்றன. இங்கே மணிமேகலா தெய்வத்தால் கொடுக்கப் பெறும் மந்திரம், பின்பு அவள் உலகவறவியில் உதயகுமரன் கைப்படாது தப்பற்குக் காயசண்டிகை வடிவு கோடற்கும்; அரசன் தேவி கற்பழிக்க முயன்றபோது ஆணுருக்கோடற்கும்; சமயக் கணக்கர்பால் சமயப்பொருள் கேட்டதற்குத் தவத்தோன் வடிவு கோடற்கும்; அரசன் தேவி உணவு கொடாது துன்புறுத்த நினைத்த போது, உணவு துறந்திருத்தற்கும்; வான்வழியாக மணிபல்லவத் திலிருந்து காவிரிப்பூம்பட்டினம், ஆங்கிருந்து சாவக நாடு. வஞ்சி, காஞ்சி முதலிய இடங்கட்கும் சேறற்கும் பயன் படுகிறது. காயசண்டி கையின் வரலாறு உதயகுமரனைக் கொல்லுதற்கும், அதுவே வாயிலாக மணிமேகலையைச் சிறைப்படுத்தற்கும் உதவுகிறது. ஆதிரையின் வரலாறு அமுதசுரபியில் பெய்த சோறு கொடுக்கக் குறைபடா வளம் பெறுதற்கு ஓராற்றால் மதிப்புத் தருகிறது. ஆபுத்திரன் வரலாறு அமுதசுரபியோடு இணைந்து நல்வினையின் மாண்பை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறே சக்கரவாளக் கோட்டம் கந்திற்பாவை யென்ற வற்றின் வரலாறுகளும், இந்திரவிழா வரலாறும், அதனைக் காவிரிப் பூம்பட்டினத்தார் மறத்தற்கு ஏதுவாகும் வரலாறுகளும், கற்புடை மகளிரைக் காமுறுவார் எய்தும் கேட்டிற்கு வேண்டும் எடுத்துக் காட்டுக்களும் பிறவும் முன்னே கூறியவாறு இக்காப்பிய நிகழ்ச்சியில் ஆங்காங்கு வந்து சேர்கின்றன. அவற்றை ஈண்டு விரிப்பதால் பயனில்லை. எங்குச் செல்லினும் மாதவியுடன் சுதமதி பிரியாது வருதற்குக் காரணம் கூறுவார், மணிமேகலையின் பழம் பிறப்பில் உடன் பிறந்தவளாயிருந்த வரலாறும்; மணிமேகலைக்கு உதய குமரன் பாலும், அவனுக்கு மணி மேகலைபாலும் காதலுண் டாயதற்குக் காரணமாக, அவன் முன்னைப் பிறப்பில் இராகுலன் என்ற பெயருடன் கணவனாயிருந்தான் என்ற வரலாறும்; அவன் கொலையுண்ட தற்குக் காரணம், அப்பிறப்பில் அவன் தன் மடையனைக் கொன்ற வரலாறும் பிறவும் காட்டப்படுகின்றன. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குத் துணை செய்தற்கு உரிய காரணமும், கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குற்ற காரணமும் ஈங்கும் கூறப்படுகின்றன. இவ்வாறு நிகழும் நிகழ்ச்சி யொவ்வொன்றிற்கும் முன்னைப் பிறவியிற்செய்த வினையைக் காட்டுமிடத்து, காஞ்சனன் உதய குமரனைக் கொலை செய்தற்கும், கண்ணகி மதுரையை எரித்தற்கும் காரணம் அவரவர் வரலாறே காட்டுதலால், இத்தீவினைப் பயனை மறுபிறவியில் நுகரக்கடவர் என்றும் கூறி விடுகின்றார். உயிர்கள் தம் வினைப்பயன் நுகர்தற்குப் பிறந்தும், இறந்தும், மீட்டும் பிறந்தும் வரும் என்பதை நேரிற் கண்டு காட்டுதற்குச் சான்றாக அற வணவடிகள் வந்து சேர்கின்றார். IV. நூலிற்கண்ட சிலருடைய குணஞ்செயல்கள். இக்காப்பியத்தின்கண் வரும் ஆண்களும் பெண்களும் மிகப் பலராதலின், அவருள், மணிமேகலையின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையோரை மட்டில் எடுத்துக் கொள்வாம். ஆடவரில், மாவண்கிள்ளி, உதயகுமரன், ஆபுத்திரன், அறவணவடிகள், காஞ்சனன் என்போரும், பெண்மக்களில், மணிமேகலை, மாதவி, சுதமதி, காயசண்டிகை, இராசமாதேவி, சித்திராபதி என்போரு மாவர். 1. மாவண்கிள்ளி: உதயகுமரனுக்குத் தந்தையாகிய இவ்வேந்தன் பெயர் மாவண்கிள்ளி யென்றே கூறப்படுகிறது. ஒரு காலத்தே இவனைப் பகைத் தெதிர்த்தசேர பாண்டியர்களைக் காரியாறு என்னும் யாற்றின் கரையில் தன் பின் பிறந்தோனால் வென்று வாகை சூடினான். (மணி. 19:119-127) இவன் மனைவியின் பெயர் சீர்த்தி யென்பது. இவன் அரசுமுறை கோடாச் செங்கோன்மையும், மானமும் உடையன். இவன் ஓரு நாள் தன் தேவியுடன் பூங்காவில் இனிதிருக்கையில் மணிமேகலை காயசண்டிகை வடிவுடன் சிறைக் கோட்டம் புகுந்து உணவளிப் பதனைக் காவலர் போந்து கூறக் கேட்டு, அவளை உடனே தன் முன் வருவித்து, வினவ, அவள் அமுத சுரபியின் சிறப்பைக் கூறினாளாக, அதனைக் கேட்டதும், அவள் செயலை வியந்து பாராட்டி, “யான் செயற்பாலது என்?” என்று வினவுகின்றான். பின்பு அவள் விரும்பியவாறே சிறைக் கோட்டத்தை மாற்றி அறவோர்க்கு உரிய கோட்ட மாக்குகின்றான். உதயகுமரன் காஞ்சனனால் கொல்லப் பட்டதைக் கூற வந்த சான்றோர், அதனைக் கூறாது, பத்தினிப் பெண்டிரையும் தவ மகளிரையும் காமுற்றுக் கெட்ட வேந்தர் சிலர் வரலாறுகளைக் கூற, இவ்வேந்தன் அவர்தம் குறிப்பறிந்து, “ இன்றே யல்ல என்றெடுத் துரைத்து, நன்றறி மாதவிர்! நலம்பல காட்டினிர்; இன்றும் உளதோ இவ்வினை? (22:163-65) உரையும்” என்று வினவுகின்றான். அவர்கள் உதய குமரன் கொலை யுண்டது கூறுகின்றனர். மகன் தவறு செய்ததனால் அவன் பொருட்டு வருந்தாது, மந்திரியை நோக்கி, “ யான்செயற் பாலது இளங்கோன் தன்னை தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்” (22: 206-207) எனக் காஞ்சனன் செய்கையை வெறுத்துரைப்பதும், “ மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றுஎனில் இன்றால்;” (22: 208-209) என அரசு முறையின் அமைதி கூறலும், “ மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம்செவி யுறுவதன் முன்னம் ஈங்குஇவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையும் காவல் செய்க” (22: 210-14) என்பதனால் அவனுடைய மானவுணர்வும், மணிமேகலையைச் சிறை செய்யும் ஆட்சி நலனும் இனிது புலனாகின்றன. மணிமேகலை சிறையில் இருக்கும்போது அவளைத் தன்பால் கொண்டுவைத்துத் தீங்கிழைக்க எண்ணி வந்து அரசனை வேண்டிய அவட்கு அச்சோழர் பெருமான் அவளது உட்கருத்தை யுணராது. மகன்பால் குற்ற முண்மையும் மணிமேகலைபால் அஃது இன்மையும் தேர்ந்து அரசி அம் மணிமேகலையின் சிறப்புணர்ந்து அவளைத் தன்னோடு உடனிருக்க விரும்புகின்றாள் என்று வியந்து. “ சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது அறிந்தனை யாயின்இவ் வாயிழை தன்னைச் செறிந்த சிறைநோய் தீர்க்க” (23: 31-34) என்று சொல்லுகின்றான். இதனால் இவனுடைய உள்ளம் மிக்க நேர்மையுடைய தென்பது நன்கு விளக்க மெய்துகிறது. 2. உதயகுமரன்: இவன் மாவண் கிள்ளிக்கு மகன்; மிக்க ஆண்மையும், மனவன்மையு முடையவன். காவிரிப்பூம் பட்டினத்தில் விழா நிகழும் போது கால வேக மென்னும் பட்டத்தியானை மதம்பட்டுத்திரிய, அதனை இவனொருவனே அடக்கி யொடுக்கு கின்றான் (4: 44-46). மணிமேகலைபால் இவனுக்குப் பெருங் காதலுண்டு. எட்டி குமரன் ஒருவனால் அவள் மலர்வனம் சென்றிருப்பது தெரிந்து வருபவன், உவவனத்தே சுதமதியைக் கண்டு மணிமேகலை இளமை நலம் கனிந்திருக்கும் திறத்தை வெளிப்பட மொழிந்து, “ மாதவர் உறைவிடம் ஓரீஇ மணிமேகலை தானே தமியள்இங்கு எய்தியது உரை” (4: 103-104) என்று வினவ, அவள் செவ்வன் இறைமொழியாது யாக்கையின் இயல்கூற அமைதியுடன் கேட்கின்றான். பளிக்கறையில் மணி மேகலையின் உருவம் தெரியக் கண்டதும் காமத்தீ யெழுந்து அவன் உள்ளத்தைக் கடாவ, பளிக்கறையின் உள்புகக் கருதி வாயில் தேடிக் காண்கின்றான். மாட்டாமையின், சுதமதியை நோக்க, அவள் மணிமேகலை தவவொழுக்கினாள்; சாபம் தரும் வன்மையள் என்று அச்சுறுப்ப, அதனால் ஒருவாறு மனம் நீங்கிச் செல்வோன், “ சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ? நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்? செவ்விய ளாயின்என் செவ்விய ளாக” (5: 19-21) என்று சொல்லிச் செல்கின்றான். செல்கின்றவன் மணிமேக லையை வவ்விய நெஞ்சினனாய்ச் செல்கின்றான். தவவொழுக்கம் பூண்டா ளாயினும், காமச் செவ்வி முதிர்ந்த வழித் தன் செவ்வியளாவள் என்று நினைத்தலின், அவனை ஆசிரியரும், “வவ்விய நெஞ்ச மொடு அகல்வோன்” (5:22) என்கின்றார். பின்பு அவன் சுதமதியின் வரலாறு கேட்பது தோழியிற் கூட்டம்பெற முயல்வோன் கூற்றாக இருத்தலும் நோக்கற் பாலது. அற்றாக, இதன் அரும்பதவுரை காரர், “அவ்விய நெஞ்சமோடு அகல்வோன்” என்று கொண்டு, “ஒளவியம் - பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை” என்று கூறுகின்றார். அவன் அவ்வாறு நினைத்தற்கு வேண்டும் ஏது ஒன்றும் அவள் அவன்பால் நடந்து கொண்டதிலோ, அவன் கூறுவனவற்றிலோ இல்லாமையால், அவ்வரும்பதக் குறிப்புப் பொருந்தாமை யுணரப்படும். சுதமதியின் வரலாறு கேட்டதும், அவளால் மணி மேகலை யைப் பெற முடியாதென்று அவன் உணர்ந்தமை தோன்ற, “ வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டு” (5: 81-82) என்று செப்பிவிட்டுச் செல்கின்றான். இதனாலும் அவன் எப்போதும் அவ்விய நெஞ்சத்தனாகாமை தெளியப்படும். உதயகுமரன் மணிமேகலையை வவ்விய நெஞ்சினனாதலை உணர்ந்த மணிமேகலா தெய்வம் அவன்முன் தோன்றி, செங்கோன் மையின் சிறப்புணர்த்தி, “ தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” (7: 13-4) என்று உரைக்கவும், அவன் அஃது ஒழியாது, இருத்தலையும், மணிமேகலை ஓடேந்திப் பிச்சையேற்று இல்லோர்க்கு உதவு தலையும் அறிந்த சித்திராபதி அவனிடம் போந்து அவன் மயங்கத் தகுவன கூறியபோது, அவன்தான் அவளைப்பளிக் கறையில் கண்டு பாவையென்று ஒருவாறு எண்ணிவரத் தெய்வம் தோன்றி, அவள் பால் கொண்ட நினைவை யொழிக என்றதைச் சொல்லி. “ தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ எய்யா மையலேன் யான்” (18:84-85) என்று கூறுகின்றான்; அவன் “எய்யா மையலை”ச் சித்திராபதி தன்மதி நுட்பத்தால் மாற்றிவிடலும், அவன் “இடங்கழி காம மொடு அடங்கானாகி,” மணி மேகலையைக் கண்டு, “ உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்துஎன் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி! நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்? எனத்” (18: 120-123) தானே தனித்து நிற்கும்போது அவளைக் கேட்க வேண்டு மென்று நினைத்துச் சென்றவன், அவளை அவ்வாறே கண்டவிடத்துத் தான் நினைத்தபடியே வினவாது, “ நல்லாய்! என்கொல் நற்றவம் புரிந்தது? சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப” (18: 126-127) அவனது மனத்தடுமாற்றம் அறிந்து, மணிமேகலை “கேள்வி யாளரில் தோட்ட செவியை நீ யாகுவையெனில்” என்று தொடங்கிச் சில கூறுகின்றாள். அது நிற்க, இவன், அவளை நேரிற் கண்டதும், அவளது தவநிலையும், தெய்வம் கூறியதும், சுதமதி சொல்லும் நெஞ்சை அலைப்ப, அலைப்புண்டு, “கேட்கலாமோ, ஆகாதோ,” என்று, தனக்குள் தடுமாறிப் பின்பு சிறிது தேறி நயமாகக் கேட்டல் நன்று என்று துணிந்து, “நல்லாய், என்கொல் நற்றவம் புரிந்தது? சொல்லாய்” என்று துணிந்து கேட்கின்றான். இதனால், மணி மேகலையின் வனப்புக் கண்டுடைந்த மனவலி, சுதமதியும், தெய்வமும் கூறியவற்றால் கலங்கியதாயினும் சித்திராபதியின் சொல்லால் ஒருவாறு திண்ணிதாகியும் மீட்டும் அம்மணி மேகலையின் தவ வுருவால் கெட்டழிதலைக் காண்கின்றோம். மணிமேகலை காயசண்டிகை வடிவில் தோன்றலும், “மணி மேகலை மறைந்து சம்பாபதியின் கோயிலில் உள்ள சுதைப் பாவைகளுள் ஒன்றாயினாள் போலும்; இவளைச் சம்பாபதியால் பெறலாம்” என எண்ணி, அத்தெய்வத்தின் முன்நின்று, தன் வேட்கை நன்கு புலப்பட, “ மாயையின் ஒளித்த மணிமே கலைதனை ஈங்குஇம் மண்ணீட்டு யாரென உணர்கேன்; ஆங்கவள் இவள்என்று அருளா யாயிடின் பன்னா ளாயினும் பாடு கிடப்பேன் ............................................................. முதியா ளுன்றன் கோட்டம் புகுந்த மதிவாண் முகத்து மணிமே கலைதனை ஒழியப் போகேன்; உன்னடி தொட்டேன் இது குறை” (18: 155 -172) என்றுகூற, இவன்பால் மனத்தெளிவின்மை கண்ட அத் தெய்வம், ஒன்றும் கூறாதொழியப் பாவையொன்று, “எம் சம்பாபதிமுன் தகாதன மொழிந்து நல்கூர்ந்தனை” என்கின்றது. இவற்றை யெல்லாம் கேட்டுப் பெரும் கலக்கமுற்றுச் செல்லும் உதயகுமரன் தனக்குள்ளே, “ அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்; பையர வல்குல் பலர்பசி களையக் கையி லேந்திய பாத்திரம் திப்பியம்; முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்” (19: 9-14) என்று நினைத்து, “இதனைப் பின்னும் காண்பாம்,” என்று செல் கின்றான். இவற்றால் எல்லாம் மனமாற்ற முறாது மணிமேகலை பாற் கொண்ட காமத்தால் மனவலி யுடையனாய்ச் செல்லும் இவனது செலவு குறிக்கத் தக்கது; இவன் கற்ற கல்வி இப்போது துணை செய்கின்றதில்லை; “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” எனத் திருத்தக்க தேவர் கூறுவது உண்மையாதல் காண்க. மணிமேகலை வேண்டுகோட் கிசைந்து, சோழ வேந்தனான மாவண்கிள்ளி சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கியது கேள்வியுறுகின்றான் உதயகுமரன்; அவனுக்கு அவள்பால் எழுந்த காமவேட்கை அளவு கடந்து மிகுகிறது. அறிவு, ஆண்மை, நேர்மை நாணுடைமை, மானம் முதலிய நற்பண்பு பலவும் கெட்டழி கின்றன. அவளது முயக்கின்பம் கிடைக்கா விடினும், அவளுரைக்கும் விச்சையும், முதுக்குறை முதுமொழியு மேனும் கேட்டுத் தன் வேட்கையைத் தணிக்கக் கருதுகின்றான். “ .................................. தோட்டார் குழலியை மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று, பற்றினன் கொண்டுஎன் பொற்றே ரேற்றிக் கற்றறி விச்சையும் கேட்டு, அவ ளுரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன்” (20: 13-18) என்று அவன் மனம்கொண்டு செல்கின்றான். உலக வறவியில் இவன் வரவு கண்ட மணிமேகலை இவன்பால் வந்து, இவன் காதற் குறிப்புணர்ந்து, அதனை மாற்ற நினைத்து, தகுவன பல கூறுகின்றாள். அக்கூற்றால், “மணிமேகலையே காயசண்டிகை வடிவில் இருக்கின்றாள்; மாயவிஞ்சையால் என்மனம் மயக்குறுக்கின்றாள்; இவளை இடையிருள் யாமத்துப்போந்து கொண்டேகல் வேண்டும்” என்று துணிந்து மீள்கின்றான். பின்பு இடையிருள் யாமத்தே போந்து விஞ்சையனால் கொல்லப்படுகின்றான். 3. ஆபுத்திரன்: இவன் வரலாறு ஆபுத்திரன், புண்ணிய ராசன் என்ற இருகூறாய் அடங்கும்: இதனைப் பாத்திரம் பெற்ற காதையில் தோற்றுவாய் செய்து ஆபுத்திரன் திறமறிவித்த காதையில் அவன் பிறப்பும், வளர்ப்பும், அறம் செய்தலும் கூறி, பாத்திர மரபு கூறிய காதையில் அவன் சிந்தா தேவியால் அமுதசுரபி பெற்றதும், இந்திரன் சூழ்ச்சியால் அறஞ்செய்தற் கிடன் இன்றிச் சாவகநாடு செல்லுதலும், வழியில் மணிபல்ல வத்தே இறத்தலும் சாவக நாட்டில் அவன் பிறத்தலும் உரைத்து; பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதையில், அந்நாட்டு வேந்தனான பூமிச்சந்திரன் என்பானால் வளாக்கப்பெற்றுப் புண்ணியராசனாய் அரசனாதலும், ஆபுத்திரன் நாடடைந்த காதையில் மணிமேகலை அவன் அரசாளும் சாவகநாடு செல்லுதலும்; ஆபுத்திரனோடு மணி பல்லவம் அடைந்த காதையில் மணிமேகலை அவனை மணி பல்லவத்திற்கு வருவித்துப் பழம் பிறப்புணர் வித்துப் பின்பு அவன் நாட்டிற்குச் செல்லு வித்தலும் கூறப்படுகின்றன. இவற்றால், இம் மணிமேகலைக் காப்பியப் பகுதிகள் பதிகம் ஒழிந்த முப்பதனுள் ஆறு காதைகளில் இவ்வாபுத்திரன் வரலாறு கூறுவனவாதல் உணரப்படும். ஆபுத்திரன் இளம்பூதி யென்னும் அந்தணனுக்கு வளர்ப்பு மகனாய் வளர்ந்து நன்னூல் பலவும் கற்று விளங்குங் கால், மறை யோர் வேள்வியில் கொலை செய்தற்பொருட்டுக் கொணர்ந் திருந்த பசுவைக் கண்டு மனமிரங்கி அதனை இரவிற் கொண்டு போகையில் அந்தணர் வந்து அவனைப் பற்றிப் பலவாறு வைது ஏசியபோது. “நோவன செய்யன் மின் நொடிவன கேண்மின்” (13: 50) என்று கூறி, பசு மக்கட்குப் பயன் படுந் திறத்தை எடுத்தியம்புவது, அவனுடைய அருள் நிரம்பிய உள்ளத்தின் அழகையும் அறிவின் ஒட்பத்தையும் புலப்படுத்துகிறது. பின்பு அவ்வந்தணர்கள் அவனை “ஆமகனாதற்கு ஒத்தனை” என்று இகழ்ந்துகூற, அவன், “உங்கள் முனிவர் கூட்டத்தே அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன் என்பவர் முறையே பசு, மான், புலி, நரி என்ற இவற்றிற்குப் பிறந்த வரல்லரோ?” என்று அவர் களைத் தெருட்டலும், அவர்கள் தெருளாது, இவனைக் “காப்புக் கடை கழிந்து கணவனை யிழந்து” கெட்ட சாலி யென்னும் பார்ப்பனி மகன் என்று இகழ்கின்றனர். அவர்களை நோக்கி, ஆபுத்திரன் நகைத்து, பிறப்பால் உயர்வு தாழ்வில்லை யென்பதை விளக்கு முகத்தால், “ மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ; ........................................... கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்; அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்; புரிநூல் மார்பீர்! பொய்யுரை யாமோ? சாலிக் குண்டோ தவறு?” (13: 93-98) என்று சொல்லுகின்றான். இவன் மதுரைக்குச் சென்று, தெருக்கள் தோறும் ஐயமேற்றுக். காணார், கேளார் முதலிய பலர்க்கும் உணவூட்டும் அறம் செய்தலும், அவ்வூரிலுள்ள சிந்தாதேவி கோயிலில் தங்கியிருத் தலும் இவனுடைய நற்பண்புகளாகும். நெடுந்தொலை நடந்து, இளைத்தும், பசித்தும்; ஒருநாள் நள்ளிரவில் வந்து நின்றோரைக் கண்டு இவன் வருந்தவும், சிந்தாதேவி தந்த அமுதசுரபி பெற்று இவன் அவர்கட்கு உணவூட்டி மகிழ்தலும் சிந்தாதேவியைப் பரவுதலும் அறிவுக்கு இன்பந் தருவனவாகும். இவனுடைய அறச்செயற்கு மகிழ்ந்து போந்த இந்திரன் இவனைக் கண்டு, தான் இந்திரனென்றும் ‘வேண்டும் வரம் கேள்’ என்றும் உரைக்கும்போது, இவன் அவனைக் கண்டு நகைத்து, “ அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர், நற்றவம் செய்வோர், பற்றற முயல்வோர், யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக்கு இறைவனாகிய பெருவிறல் வேந்தே” (14: 40-43) என்பதும், “எனக்கு இவ்வமுதசுரபியென்னும் ஓடே அமையும்” என்பான், “ வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்துமுகம் காட்டும் தெய்வக் கடிஞை” (14: 44-45) என்பதும் பிறவும் இவனது பற்றற்ற உள்ளத்துறவை நன்கு புலப்படுக் கின்றன. சாவகநாடு வறுமையுற்றது கேள்வியுற்று, அங்கே வங்கமேறிச் செல்லும் ஆபுத்திரன், வங்கமாக்களுடன் மணிபல்ல வத்தில் இறங்கி யிருக்கையில்; அவர்கள் இவனை அங்கேயே தனிப்ப விட்டுச் சென்றுவிடுகின்றனர். இவனோ சாவகநாட்டில் உண்ண உணவின்றிப் பசிப்பிணியால் வருந்தும் உயிர்கட்கு உணவளித்து உவப்பிக்கும் நல்லறத்தைச் செய்தற்குத் தான் இயலாதிருப்பது தெளிந்து மனம் வருந்தி, மணிபல்லவத் தீவில் மக்கள் ஒருவரும் இல்லாமையால், “ மன்னுயி ரோம்பும்இம் மாபெரும் பாத்திரம் என்உயி ரோம்புதல் யானோ பொறேஎன் ..................................................... சுமந்து என்? பாத்திரம்” (14: 87 -90) என்று வருந்தி உண்ணா நோன்பிருந்து உயிர்விடுதலும், உயிர் விடுங்கால் அப்பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிபவன், “ அருளறம் பூண்டு ஆங்கு ஆருயி ரோம்புநர் உளர்எனில் அவர்கைப் புகுவாய்” (14: 93-94) என்று உரைத்தலும் அவனது தனக்கென வாழாத் தகைமை யினைக் காட்டுகின்றன. ஆபுத்திரன் பின்பு சாவகநாட்டில் பசுவயிற்றிற் பிறந்து பூமிசந்திரனால் வளர்க்கப்பெற்றும் புண்ணிய ராசனாய் அரசாளும் திறத்தை நம் சாத்தனார் சில சொற்களால் விளக்கி விடுகின்றார். அது, “ நாக புரம்இது; நன்னக ராள்வோன் பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்; ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது; மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்; உண்ணின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்” (24: 169 - 174) என வருவது. புண்ணியராசனாகிய ஆபுத்திரனை, ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் முதற்கண், தருமசாவகன் என்னும் முனிவன் தவப் பள்ளியில், “ அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும் சார்பிற் றோற்றமும் சார்பறுத் துய்தியும் ஆரியன் அமைதியும்” (25: 3-6) அமைவுறக் கேட்டு மகிழும் நிலையில் நமக்குக் காட்டுகின்றார். அங்கே மணிமேகலை பெண்ணிணையில்லாப் பெருவனப்பும், காமனோடு இயங்காக் கண்ணிணை இயக்கமும் கொண்டு நிற்கின்றாள். அப்போது அவன், “ அங்கையிற் பாத்திரம் கொண்டு அறங்கேட்கும் இங்கு இணையில்லாள் இவள்யார்?” (25: 9-10) என்று முனிவனை வினவுவது இவனுடைய மனத்தூய்மையையும் நல்லொழுக்கமும் நன்கு விளங்கத் தெரிவிக்கின்றது. அங்கே நின்ற கஞ்சுகன் ஒருவன், மணிமேகலையைப் பற்றித் தான் அறிந்தது கூறுவான். “ கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன், மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்து ஆங்கு ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன்” (25:15-18) என்கின்றமையின், அறவண அடிகளை ஆபுத்திரன் புண்ணிய ராசனாகிய பின்பு அறிந்திருத்தல் பெறப்படுகின்றது. பின்பு, மணிமேகலை அவனுக்கு அவன் பழம் பிறப்புச் செய்தியைக் குறிப்பித்து மணிபல்லவம் வருக என்று சொல்லி விட்டு வான் வழியாகச் சென்றது கண்டும், புண்ணிய ராசனாகிய தான் ஆன் வயிற்றிற் பிறந்தது அமரசுந்தரியால் அறிந்தும் ஆபுத்திரன் மனம் மாறு பட்டு, அரசபோகமும் காமக் களியாட்டும். “ தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித் தெளிந்த நாதன்என் செவிமுதல் இட்டவித்து ஏத மின்றாய் இன்று விளைந்தது மணிமே கலைதான் காரணமாக” (25: 92-95) என்று மொழிகின்றான்; சனமித்திரன் என்னும் மந்திரி, துறத்தல் நன்றன்று என்றற்கு அவன் தோன்றுதற்கு முன் இருந்த நாட்டின் நிலைமை கூறி, அதன்பின், “ நீயொழி காலை நின்நா டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம்; துயர்நிலை யுலகம் காத்த லின்றிநீ உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின் இறுதி யுயிர்கள் எய்தவும், இறைவ! பெறுதி விரும்பினை யாகுவை யன்றே; தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிர் ஓம்பும் மன்னுயிர்முதல்வன் அறமும் ஈதன்றால், மதிமாறு ஓர்ந்தனை, மன்னவ!” (25: 110-118) என்கின்றானாக அது கேட்கும் ஆபுத்திரன், அவற்கு இசைந்து, “ஒரு திங்கட் காலத்தே திரும்ப வந்து சேர்வேன்; அதுகாறும் நாடாட்சி காத்தல் நினக்குக் கடன்,” என்பவன், “மணிபல்லவம் வலம் கொள்வதற்கெழுந்த, தணியாவேட்கை தணித்தற் கரிதால்” (25:120-1) என உள்ளத்தின் நினைவை ஒளியாது உரைக்கின்றான். மணிபல்லவத்தில் ஆபுத்திரன் தன் பழம் பிறப்பும், தன் பொருட்டு, வங்கமாக்கள் திரும்பப் போந்து உயிர்விட்டதும் பிறவும் அறிந்து வருந்த, மணிமேகலை அவனைத் தேற்றி, “மன்னு யிர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் வழங்குவதே நல்லறம்” என்று தெளிவிக்கின்றாள். அவட்கு அவன், “ என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன்; என்பிறப் புணர்த்தி என்னைநீ படைத்தனை; நின்திறம் நீங்க லாற்றேன் யான்” (25: 234-235) என்று தன் நன்றியறிவும் பிரிவருமையும் புலப்படுத்துத் தன் பெருந்தகைமையை நம் நெஞ்சத்தே நிறுவுகின்றான். 4. அறவணவடிகள்: இவரை அறவணன் என்றும் அறவணர் என்றும் வழங்குதலின் இவர் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகிறது. இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி, உதயகுமரன் முதலியோரின் முற்பிறவிக்காலத்தே இருந்து வாழ்ந்துவரும் பெரு முதியோராக இருக்கின்றார். மணிமேகலை அறிவறியும் காலத்து இவர் முதியோராய் இருப்பதனை, “ நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன்” (12: 3-4) என்று இந்நூலாசிரியர் கூறுதல் காண்க. மணிமேகலையைச் சிறைவீடு செய்தற்கு இவர் இரசாமாதேவிபால் வந்தபோது, அவளும் இவரது முதுமை கண்டு, “ நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து மூத்ததிவ் யாக்கை வாழ்கபல் லாண்டு” (24: 99-100) என்று கூறுதல் காண்க. கோவலன் மதுரையில் கொலையுண்டது கேட்டு வருந்திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும் சீலமைந்தும் உரைத்துத் தவநெறிப் படுத்துகின்றார் (2: 60-69); மணிமேகலை மணிபல்ல வத்திலிருந்து அமுத சுரபியுடன் திரும்ப வந்ததும், இவரைக் கண்டு வணங்கி நிகழ்ந்தது கூற, அவட்கு இவர், மாதவியும் சுதமதியு மாகிய இருவரும் முற்பிறப்பில் தாரை வீரை என்ற பெயரினராய்க் கச்சயநாட்டு வேந்தனான துச்சயனுக்கு மனைவியராய் இருந்ததும், அவ்வேந்தனை இவ்வடிகள் கண்டு வீரையும் தாரையும் மாய்ந்த செய்தி யறிந்ததும் கூறி, “ ஆடுங் கூத்திய ரணியே போல வேற்றோ ரணியொடு வந்தீரோ” (12:51-2) என்று கூறுகின்றார். இவர் புத்தன் கூறிய நல்லறம் நாட்டிற் பெருகாமைக்கு இரங்கிக் கூறுவன இவரை அறவணவடிகள் என்பது ஏற்புடையதே என்றற்குச் சான்று பகர்கின்றது. மாதவி, சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பைத் தான் அறிந்தமை கூறுமிடத்து, புத்த தருமம் பர வாமைக்கு இரங்கி, “ தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகா தாகி இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைந்தாங்குச் செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது; தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டென வுணர்த லல்லது யாவதும் கண்டினிது விளங்காக் காட்சி போன்றது; சலாகை நுழைந்த மணித்துளை யகவையின், உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும் ஆங்கத் துளைவழி உகுநீர் போல ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச் சொல்லலும் உண்டுயான்; சொல்லுதல் தேற்றார் மல்லல்மா ஞாலத்து மக்களே” (12: 57-71) என்றும், புத்தர் பிரான் தோன்றுங் காலத்தில், “ பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல, அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி யுவகையோடு உயிர்கொளப் புகூஉம்” (12: 79-81) என்றும் கூறுதலால் அறியலாம். மேலும், இவர் புத்தரது திருவடி பரவுவதே உட்கோளாளாக வுடையரென்பது, “ போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன்” (12: 101-103) என்பதனால் விளங்குகிறது. இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி முதலாயினார்க்கு எதிர்வில் நிகழ இருப்பனவற்றையும் தெரிந்துரைக்கும் அறிவு நலம் சான்றவர். அவ்விருவரையும் கூறுமிடத்து முற்பிறவியில் துச்சய னுடன் பாதபங்கய மலையைக் கண்டு பரவிய காரணத்தால், “ ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுது வலங்கொண்டு வினை நீங்கிப் பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்” (12: 110-13) என்று உரைக்கின்றார். தீவதிலகையும் மணிமேகலா தெய்வமும் கூறியவாறே, இவ்வறவண வடிகள் மணி மேகலையின் எதிர்காலத்தை யுரைத்து, ஆபுத்திரன் வரலாற்றையும் விரியக் கூறுகின்றார். கூறுபவர், ஆபுத்திரன் மணிபல்லவத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுங்கால் தான் சென்றிருந்த தாகவும், அப்போது அவனை, இவர் “என்னுற்றனையோ?” என்று கேட்க, அவன், “தன்உற் றனபல தான்எடுத் துரைத்தனன்” (14: 67-68) என்றும் கூறுகின்றார். ஆபுத்திரன் புண்ணியரா சனாய் ‘ஆ’ வயிற்றில் தோன்றியவன்று நிகழ்ந்த நிகழ்ச்சி களைக் கண்டு, சக்கரவாளக் கோட்டத் தேவர் பலரும் கந்திற் பாவையை வினவ, அது, “ மணிபல்ல வத்திடை மன்னுயிர் நீத்தோன் தணியா உயிருயச் சாவகத் துதித்தனன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று ஈங்கென் நாவை வருத்தியது” (15: 36-39) என்று உரைக்கின்றார். இவ்வாறு உரைத்தவர் முடிவில் மணி மேகலையை நோக்கி, “இக்காவிரி நாட்டில் வறமுண்டாகி விட்டது; நீ விரைந்து சென்று இவ்வமுதசுரபியால் பசித்தோர்க்கு உணவளிப் பாயாக” என்பார் “ வெண்திரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை யொழித்து வைத்தாங்கு வறனோடு உலகின் வான்துயர் கெடுக்கும் அறனோடு ஒழித்தல், ஆயிழை, தகாது” (15:51-54) என்று சொல்லி விடுகின்றார். இதனால், உயிர்கட்கு உணவளிக்கும் நல்லறத்தில் மிக்க ஊக்கமுடையர் இவர் என்பது விளங்குகிறது, மணிமேலையைச் சிறைமீட்டற் பொருட்டு, இவ்வடிகள் மாதவி சுதமதி என்ற இருவருடன் இராசமாதேவிபால் வர, அவள் இவரை வணங்கி வழிபட்டது கண்டு, அவட்கு அறங்கூறத் தொடங்கி, முதற்கண், மகன் இறந்தது குறித்து, “ தேவி கேளாய், செய்தவ யாக்கையின் மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்; பிறந்தார், மூத்தார், பிணிநோ யுற்றார், இறந்தார் என்கை இயல்பே; இதுகேள்” (24: 101-104) என்று கூறிப் பின் பேதைமை முதல், வினைப்பயன் ஈறாகவுள்ள பன்னிருவகை நிதானங்களையும் விளக்கி, மணிமேகலையை நோக்கி, இவற்றின் பகுதிகளைத் தான் பிற்கூறுவதாகச் சொல்லி விடுக்கின்றார். கச்சிநகர்க்கண் மணிமேகலை இருந்து அறஞ் செய்தலைக் கேள்வியுற்று இவ்வடிகள் ஏனை மாதவியும் சுதமதியுமாகிய இருவருடன் அவள்பால் சென்று அவள் இட்ட உணவுண்டு, காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப் பட்டதற்குரிய காரணத்தைக் கூறுகின்றார். அது கேட்கும் அவள் இவ்வாறே தனக்குத் தீவ திலகை செப்பிய தாக வுரைத்துத் தனக்கு அறங்கூற வேண்டுமென வேண்ட அவற்றைத் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற இரண்டாலும் விரித்துரைக் கின்றார். 5. காஞ்சனன்: இவன் காயசண்டிகை யென்னும் விஞ்சை மகட்குக் கணவன். அதனோடு, உதய குமரனைக் கொன்றதனால், இக்காப்பியத்தில் ஒரு தொடர்பு பெறுபவன். இன்றேல், சுதமதியைக் கெடுத்தொழிந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் போலப் பெயர் மறைந்து போயிருப்பன். “அக்கறை தீர்ந்த பின் அக்கை மகள் சக்கை” என்று கருதும் மாருத வேகன் போலாது, இக் காஞ்சனன் தன் மனைவி காயசண்டிகைபால் கழியாக் காதல் கொண்டிருப்பவன். காயசண்டிகை தன் செருக்கினால் முனிவன் சாபத்துக்கு இலக்காயது கண்டும், சிறிதும் வெறாது, அவள்பாற் சென்ற காதலால், இக் காஞ்சனனும் மிக இரங்கி, “ ஆரணங் காகிய அருந்தவன் தன்னால் காரண மின்றியும் கடுநோ யுழந்தனை” (17: 53-54) என்று கூறுகின்றான். அவள் வானூடேகும் மந்திரம் மறந்ததும், யானைத் தீயால் வருந்துவதும் கண்டு வருந்தி, கனியும் கிழங்கும் நல்லன கொணர்ந்து தருகின்றான். அவனே, அவள் பசி வருத்தம் கண்டு ஆற்றாது, “ சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர், ஆற்றா மாக்கட்கு ஆற்றுந் துணையாகி நோற்றார் உறைவதோர் நோனகர் உண்டால்; பலநா ளாயினும் நிலனொடு போகி அப்பதிப் புகுக” (17: 62-67) என்று அருளுடன் கூறுகின்றான். இவ்வாறே ஆண்டுதோறும் காவிரிப்பூப்பட்டினத்தில் இந்திரவிழா நிகழுந் தோறும் வந்து அவள் பசித்துன்பம் கண்டு வருந்தி விட்டுச் செல்கின்றான். இத்துணைக் காதலுடைய இவன் மணிமேகலை காய சண்டி கை வடிவிலிருப்பக் கண்டு, அவளைக் காய சண்டிகையே எனக் கருதிவிடுகின்றான். உதயகுமரன் போலக் கூர்த்த அறிவில்லா மையின், அவளது புறத்தோற்றத்தையே கண்டு மயங்கி விடுகின்றான் இக்காஞ்சனன். உதயகுமரன் தொடக்கத்தே காயசண்டிகையே என்று மயங்கினும் அவள் சொல்லும் செயலும் நோக்கி உண்மை யறிந்தது போல இவ் விஞ்சையன் நோக்க வில்லை. மணிமேகலை உதயகுமரனைக் கண்டதும் அவன் பாற் செல்லவே, இவன் மனம் பொறாமையால் மூடப்படுகிறது. வெகுளி யெழுகின்றது. உண்மையறிவு கலங்கி விடுகிறது. அவன் தனக்குள்ளே, “ தற்பா ராட்டும் சொற்பயன் கொள்ளாள், பிறன் பின் செல்லும்; பிறன்போல் நோக்கும்; மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் பவளக் கடிகையின் தவளவாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்போடு வழாஅள்; ஈங்கிவன் காதல னாதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள்” (20:71-78) என்று சொல்லி, மனம் சினத் தீயால் வெதுப்பப் படுகின்றான். மணிமேகலையான காயசண்டிகையை முதற்கட் கண்டதும், அவள் அமுத சுரபி கொண்டு உணவளித்தலை வியந்து, “ இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே யாயினும் உண்போர் பலரால்; ஆனைத் தீநோய் அரும்பசி களைய, வான வாழ்க்கையர் அருளினர்கொல்?” (20; 33-36) என்று கூறுவதால் அவன் காதல்நிலை குன்றாமை பெறப்படு கின்றது. இப்பெற்றியோனுக்கு உதயகுமரன்பால் செற்ற முண்டா தலும், அவனை மறைவிருந்து கொலை செய்தலும் இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சிபோல்வனவே யாகின்றன. ஆயினும், ஓருயிரை அது நின்ற உடலினின்று நீக்குதலாகிய கொலை வினையை அரசரன்றிப் பிறர் செய்தற்கு உரியரன்மையின், இதனையுணர்ந்த அரசனான மாவண் கிள்ளி, இக்காஞ்சனனைப்பற்றிக் கூறுமிடத்து, “யான் செயற்குரிய கொலையை அவ்விஞ்சையன் செய்தமையின், அவன் தகவிலன்” என்று இகழ்ந்துரைக்கின்றான். 6. மணிமேகலை: மணிமேகலை மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளாயினும் கண்ணகிபால் சிறந்த அன்பும் தொடர்பும் கொண்டு வளர்ந்திருக்கின்றாள். இதனை மாதவி, இவளைப் பற்றிக் கூறும்போது, “காவலன் பேரூர் (மதுரை) கனையெரி யூட்டிய, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” (2: 54-55) என்று கூறுதலால் அறியலாம். ஆனால், மணிமேகலை வஞ்சிமாநகர்ச் சென்று கோயில் கொண்டிருந்த கண்ணகியைக் கண்ட போது, அக் கண்ணகிக் கடவுள், கோவலற் குற்ற துன்பத்தை “எம்மிறைக் குற்ற இடுக்கண்” (26:11) என்று சொல்லக் காண்கின்றோமேயன்றி, மணிமேகலையை, என்மகளே என்றோ, எம்மிறை மகளே என்றோ சொல்லக் காண்கிலோம். மணிமேகலை பேரழகு படைத்தவள். இதனைச் சுதமதி, “மணிமேகலையின் கண்ணிற் சொரியும் நீர்த் துளியைக் காணின் காமன் தன் படையை எறிந்துவிட்டு உடல் நடுங்குவன்; ‘ஆடவர்’, கண்டால் அகறலு முண்டோ, பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3; 20-25) என்று கூறுவதாலும், மலர்வனம் சென்ற போது மணி மேகலையின் தவ வடிவு கண்டோர், ‘அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய தாயோ கொடியவள் தகவிலள்’ (3:149-150) என்றும் கூறுவதாலும், ஆபுத்திரன் நாடடைந்தபோது அவனைக் கண்ட அவள், “பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள்” (25:27) என்றலினாலும் பிறவற்றாலும் அறியலாம். உதயகுமரன் தன்பால் காதல் கொண்டுள்ளான் என்பதை வயந்தமாலை மாதவிக்குரைப்பக் கேட்டு, அவன்பால் மணிமேகலை யுள்ளத்தே காதல் பிறக்கின்றது. அதனை யுணர்ந்து, அவன் தேரொலி கேட்டு அவன்பால் தன்னுள்ளம் சென்று ஒடுங்கு தலையறிந்து “என் செய்வேன்” என்றலும் (4; 79-84); அவன் பளிக்கறைக்கு வந்த போது அவனைக் கண்டதும் அவள் மனத்தில் காதல் எழுதலும், அதனை அவன் செய்த இகழ்ச்சிக் குறிப்பு நினைந்து கெடுக்க முயன்றும், “இகழ்ந்தனனாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போயதென் நெஞ்சம், இதுவோ அன்னாய் காமத்தி யற்கை” (5: 88-90) என்றலும்; “இதுவே வாயின் கெடுக தன்திறம்” என்றலும் பிறவும் அவள் தான்பெற்ற கல்வியறிவு, சமய நூலறிவு என்ற இரண்டாலும் தன்னையும் தன் மனத்தையும் வேறு வைத்து எண்ணி மனத்தை அறிவால் அடக்கும் திறல் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன. கோவலனுற்ற கொடுந்துயர் கேட்டு இவள் கண்ணீர் சொரிந்து புலம்புதலும், மணிபல்லவத்தே தனித்த போது, தனிமையாற்றாது சுதமதியை நினைந்து, “சுதமதி யொளித் தாய்; துயரம் செய்தனை,” “மனம் நடுக்குறூஉம்; மாற்றம் தாராய்; வல்லிருள் கழிந்தது; மாதவி நடுங்கும்; எல்வளை வாராய், விட்டகன்றனையோ?” எனத் தன் இளமைப் பண்பு தோன்ற அழுபவள், “ விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்” (8: 25-26) என்று கூறலும் பிறவும் அவளுடைய மெல்லியற் பொறையை விளக்குகின்றன. புத்த பீடிகையைக் கண்டு தன் பிறப்புணர்ந்த மணிமேகலை, உடனே, “காதலன் பிறப்பும் காட்டாயோ?” (10:66) என்று விழைதல் அவள் உள்ளத்தே காதற்குறிப்பு அறாது நிலவுதலும், அம்பலத்தே உணவு நல்கும் அறம் செய்யும்போது, உதய குமரன் போந்து “நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது?” என்று வினவ, இவள், “ என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன்னடி தொழுதலும் தகவென வணங்கி” (18: 128-129) அதனோடு நின்றொழியாது, காதல் வெள்ளத்தால் ஈர்ப்புண்டு, “ அறைபோய் நெஞ்சம் அவன்பா லணுகினும் இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும் தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல் நன்றி யன்றுஎன நடுங்கினள் மயங்கி” (18: 130-133) அவனுடன் பேசலுற்றனள் என ஆசிரியர் கூறலும், பின்பு அவ்வுதய குமரன் விஞ்சையனால் கொலையுண்டது கண்டதும் ஆறாத் துயருற்று, காயசண்டிகை வடிவு நீங்கித் தன் உண்மை வடிவுடன் தோன்றி, அவனைக் காண்டலால் எழும் காதல் தன் கருத்து முழுதும் கவர்ந்து கொள்ளவே, பழம் பிறப்பில் அவன்பால் தான் கொண்டிருந்த ஆராக் காதலால் தீயில் விழுந்து உயிர் விட்டது சொல்லி, “ பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக்கு உரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன், காதல! வாய்வாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ” (21: 19-24) என்று அரற்றிப் புலம்பி அவனைத் தழீஇக் கொள்ள நெருங்கு தலும், கந்திற்பாவை “செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்” என்று கூறித் தடுத்தலும் நோக்கின், பழம் பிறப்புணர்ந்தும் உயிரொடு தொடர்ந்து நின்ற காதல், அவள் உள்ளத்தே இருந்து, பிறகு ஓரிடத்தும் எழாமையின் பெரிதும் கெட்டமை தெரிகிறது. சிறிது நின்ற இத்தொடர்பும் இராசமாதேவி மணிமேகலையின் அடி வீழ்ந்து வணங்கிய போது, தானும் அவள் அடிவணங்கி, “தகுதி செய்திலை; காதலற் பயந்தோய்” (23: 145-147) என்று கூறு மிடத்துத் தோன்றிக் கெடுகின்றது. இக் காதற் குறிப்பு உள்ளத்தே நிலவினமையின் உதய குமரனைக் காணுந்தோறும் அவன் தன்னை விடாது நயத்தற்கு ஏற்ற குறிப்புக்கள் இவள்பால் நிகழ்ந்தன; இன்றேல் அவன் இவளை இடையிருள் யாமத்திற் போந்து எடுத்தேக நினைத்தற்கு ஏதுவே இல்லாது போயிருக்கும். இக் குற்றம், சோழவேந்தன் “கணிகை மகளையும் காவல் செய்க” என்றற்கு அமைதி செய்கின்றது. அமுத சுரபியின் இயல்பு கேட்டதும், இவட்குத் தானும் பசித்த மாக்கட்கு உணவு நல்கும் நல்லறம் புரியவேண்டும் என்ற வேட்கை மிக்கு எழுகின்றது; வறியோரின் வறுமை நிலை அவள் மனக்கண்ணில் இனிது தோன்றுகிறது; இவற்றை ஒளியாது உரைக் கலுற்று, “ துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து, வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்” (11: 109-113) என்று மொழிகின்றாள். மணிமேகலையின் பழம்பிறப் புணர்வும், எதிர்கால நிகழ்ச்சி யுணர்வும் அவட்கு வாராதிருப்பின், அவள் வாழ்க்கையே வேறு வகையில் திரும்பி யிருக்கும். இவட்கு மணிமேகலா தெய்வமும், தீவதிலகையும், அறவண வடிகளும், கந்திற் பாவையும், கண்ணகி கடவுளும், மாசாத்துவானும் பெருங்காவல் செய்வது போல இவ்வுணர்வுகளைக் கொளுத் தினமையின், இவள் தன் வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெறநேர்ந்தது. இவளுடைய இயற்கை யறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை. இதனை, மணிபல்லவத்துத் தனித்துப் புலம்பலும், உதயகுமரனைக் கண்டு உள்ளம் குழைதலும் பிறவும் இனிது விளக்கிவிடுகின்றன. வஞ்சிநகரத்தே கண்ணகியைக் கண்டு, அழுது நின்று, “ அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது அருளல் வேண்டும்” (26: 7-9) என்று வினவலும், சமயக்கணக்கர்தம் திறம் அறியப் போந்தவள், நிகண்ட வாதியை நோக்கி, ஆராய்ச்சித் திறம்பட, “ ......................................................................நீயுரை: நின்னால் புகழுந்த தலைவன்யார்? நூற்பொருள் யாவை? அப்பெருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு” (27: 167-170) என்று வினவலும், காட்சி, அனுமானம் என்ற இருவகை அளவை களையும் உடன்படாத பூதவாதியைத் தெருட்டுமுகத் தால், “ ................................................................................நின் தந்தை தாயரை அனுமானத்தால் அலது இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 283-285) எனக் கூறலும், பிறவுமாகியவற்றிற்கு அவள் மேலே கூறியவாறு கொண்ட உணர்வும் நல்லோர் துணையுமே காரணமாதல் துணியப் படும். மணிமேகலையின் சிறப்பனைத்திற்கும் தோற்றுவாயாக மாதவி இவளை இளமையிலேயே நாடக மகளிர்க்குரிய துறையில் செலுத்தாது விலக்கிய செயல் நினைக்குந்தோறும் இறும்பூது பயக்கின்றது. கச்சிநகர்க்கண் இவள் பாத பீடிகை யையும், தீவதிலகை, மணிமேகலா தெய்வம் என்ற இவர்கட்குக் கோயிலையும் அரசனைக் கொண்டு அமைத்துச் சிறப்புச் செய்தது அவராற் பெற்ற அறிவுக்கு நன்றி செலுத்தியதாகும். 7.மாதவி: இவள் காவிரிப்பூம்பட்டினத்துக் கணிகையருள் சித்திராபதி யென்பாட்கு மகள். இவள் ஆடல், பாடல் அழகு என்ற மூன்றினும் தலைசிறந்து விளங்கி, கோவலன் நட்புப் பெற்று மணிமேகலையைப் பயந்தவள். கோவலன் மதுரையிற் கொலை யுண்டிறந்தது கேட்டு வருந்தித் துறவு பூண்டு, புத்த சங்கத்தைச் சேர்ந்து அறவணவடிகள் பால் அறங்கேட்டு ஒழுகிவருகின்றாள். தன்னைப் போலவே தன் மகள் மணி மேகலையும் நல்ல கல்வியறிவும் அழகும் பெற்றிருப்பினும் இளமையிலே அறத்துறையில் ஒழுகு மாறு விடுகின்றாள். இவள் இதனால் அறச்செயலும் அருளுள்ளமும் உடையளாதல் பெறப்படும் இவள் உள்ளத்தை மாற்றி நாடகக் கணிகையர்க்குரிய செயலில் ஈடுபடுத்தற்கு முயன்ற சித்திராபதி, மாதவியின் தோழியான வயந்தமாலையை அம் மாதவி பால் விடுப்ப, அவள் போந்து கூறியவற்றைக் கேட்டு மாதவி, சிறிதும், மனம் மாற்றம் எய்தாது, “ காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன்” (2:38-41) என்றும், மணிமேகலையைத் தவநெறிப் படுத்தலே தக்கது என்றும், தான் புத்த சங்கத்தை யடைந்து அறவணவடிகளைச் சரண்புக, அவர், “ பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்; பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்; பற்றின் வருவது முன்னது; பின்னது அற்றோர் உறுவது; அறிக, என் றருளி, ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி, உய்வகை இவை; கொள்” (2: 64-69) என்று உரைத்ததையும் கூறுதலால், அவள் உள்ளம் அறநெறிக் கண் உறைத்து நிற்றலை அறிகின்றோம். தன் மகளாகிய மணிமேகலைபால் மாதவிக்கிருக்கும் அன்பு தாயன்பாயினும் மிகச் சிறந்ததாகும். மாதவி மணிமேகலையைப் பயந்து பெயரிடும் நாளிலே மணிமேகலா தெய்வத்தால், தன் மகள் மணிமேகலை, “காமன் கையறக் கடுநவை யறுக்கும் பெருந் தவக் கொடி” (7; 36-7) என்று பாராட்டப் பெற்றதைக் கனவால் அறிந்திருப்பது, அவட்குத் தன் மகள்பால் பேரன்பு கொள்ளற்குத் தக்க ஏதுவாகிறது. இதனால், மணிமேகலை மணிபல்லவத்துக்குக் கொண்டேகப் பட்டது சுதமதியால் அறிந்து; “நன்மணி யிழந்த நாகம் போன்று அவள், தன்மகள் வாராத் தனித்துயருழப்ப, இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்” (7;1 31-33)என்று ஆசிரியர் குறிக்கின்றார். மேலும், அவள், மணிமேகலை மணிபல்லவம் சென்ற ஏழாம் நாள் வந்ததும் இனியும் வாராமை கண்டு வருந்து வதனை, “ வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்தது; என்மகள் வாராள்; வழுவாய் உண்டு” (11: 128-130) என்று மயங்குகின்றாள். தன்பால் வந்த மணிமேகலை, “தாயே” என்று சொல்லித் தன்னைத் தழீஇக்கொள்ளாது, பழம் பிறப்பைச் சுட்டி, “ இரவி வன்மன் ஒருபெரு மகளே, துரகத் தானைத் துச்சயன் தேவி, அமுத பதிவயிற்று அரிதின் தோன்றித் தவ்வைய ராகித் தாரையும் வீரையும் அவ்வைய ராயினிர்; நும்மடி தொழுதேன்; வாய்வ தாக மானிட யாக்கையின் தீவினை யறுக்கும் செய்தவம் நமக்கு ஈங்கு அறவண வடிகள் தம்பால் பெறுமின்” (11: 133-140) என்று கூறலும், மாதவி அற்புதமுற்று அயர்ந்து போகின்றாள். அதற்குப் பின் அவள்பால் மிகுதியும் சொல்லாடலோ சிறப்புச் செய்கையோ உண்டாகவே இல்லை. அவள் அறவணன் கூறியது போல, முற்பிறப்பில் பாதபங்கய மலையைப் பரசிய பயனால், போதி மாதவன் திருந்தடி வணங்கி, அவன் கூறிய அறநெறிக் கண் நிற்கின்றாள். இந்நெறி நிற்கும் மாதவி அவ்வப்போது மணிமேகலை செயலை அறிந்து வருகையில் மணிமேகலை வேந்தனால் சிறை செய்யப்பட்டுப் பின் அரசமாதேவியுடன் இருப்பதை அறிகின்றாள். அவள் மனம் படாதபாடு படுகிறது. அதனைச் சீத்தலைச் சாத்தனார். “ மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத் துணிகயம் துகள்படத் துளங்கிய துபோல் தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி” (24: 83-86) துன்புற்று,- (வயிறு வருந்தச் சுமந்து பெற்றவளன்றோ! அறவணரை வணங்கி, அவரை யழைத்துக்கொண்டு அரசமா தேவிபால் வந்து சேர்கின்றாள். மணிமேகலை நீங்கிய பின், அறவணரோடே யிருந்து முடிவில் கச்சிமாநகர் போந்து, ஆங்கே மணிமேகலை அமைத் திருந்த அறச்சாலையில்அவள் அளித்த அமுதுண்டு, இனி திருந்து, அறம்புரிந்து வருகின்றாள். 8. சுதமதி: இவள் சண்பை நகரத்துக் கௌசிகன் என்னும் பார்ப்பனனுக்கு மகள்; இளமையிலேயே தாயை யிழந்தவள். தந்தையால் வளர்க்கப்பட்டு ஒருநாள் பூஞ்சோலையில் தனித்துப் பூக்கொய்திருக்கையில், மாருதவேக னென்னும் விஞ்சையனால் கவரப்பட்டுக் கற்பிழந்து காவிரிப்பூம் பட்டினத்தே அவனால் கைவிடப் பட்டவள்; இவளைத் தேடித்திரிந்து போந்த கௌசிகன் பிச்சையுண்டு வாழ்கையில், அவனைப் பசுவொன்று முட்டி வயிற்றைக் கிழித்துக் குடரைச் சரிவிக்க, அவனை யேற்று ஆதரிக்கச் சமணர் கூட்டம் மறுத்து வருத்தவே, இவளும் அவனுடன் பெருந்து யருழப்ப, பின்பு, சங்கதருமன் என்னும் புத்தமுனிவனால் அவன் ஆதரிக்கப் பெற்று உடல்நலம் பெற்றுப் புத்தனோகிய நல்லறம் கேடப் தந்தையுடன் புத்த சங்கத்தை யடைந்து தானும் அறங்கேட்டு மாதவியுடன் மணிமேகலைக்குச் செவிலி போல் இருந்து வருபவளாகும். இவள் நல்ல சொல்வன்மையும், இடமறிந்து நலமுரைக்கும் தன்மையு முடையவள். இவள், மாதவி, மணிமேகலையை மலர்வனம் செல்ல விடுத்தபோது, அவள் தனித்தேகல் கூடாதென்றற்கு, அம்மணிமேகலையை “ஆடவர் கண்டால் அகறலு முண்டோ; பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3: 24-25) என்றலும், தன் வரலாறு கூறலும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவோவனம் முதலியன வற்றின் இயல்பு கூறி விலக்கலும், செல்லுதற்குரிய உவவனத்தை, “ அருளும் அன்பும் ஆருயி ரோம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் பகவன தாணையிற் பன்மரம் பூக்கும் உவவனம் என்பதொன் றுண்டு” (3: 56-62) என்று உரைத்து, இதன் இயல்பும், அஃது ஏற்பட்ட தற்குரிய காரணமும் கூறும் வகையும் பிறவும் மிக்க நயமுடையன வாகும். உவவனத்தின் காட்சியை இச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டலுற்று, “ குழலிசைத் தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநிள்று ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவல் கனைகுரல் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்” (4: 3-13) என்பன முதலாகக் கூறிச் செல்வது இயற்கைக் காட்சியில் அவட் கிருக்கும் ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது. மணிமேகலையைத் தேடிப் பளிக்கறைக்கண் உதய குமரன் வரக் கண்டு உளம் நடுங்கிநிற்கும் இவள், அவன் மணிமேகலையைப் பற்றி வினவ, அவற்குத் தவமகளா தலின் அத் தகுதி தோன்ற, உடலின் இயற்கையைக் கூறத் தொடங்கி விடுகிறாள்; இதற்குத் தோற்று வாயாக அவள் கூறுவது அவளது நாநலத்தைப் புலப் படுத்துகிறது. “ இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலு முண்டோ? அனைய தாயினும் யானொன்று கிளப்பல்” (4: 107-111) என்பது அது. “மணிமேகலை எத் திறத்தினள்” என்று கேட்கும் அவ்வுதயகுமரனை அச்சுறுத்தி வெருட்டவும், அவன் மனம் வருந்தா வகையில் அவன் நலத்தைப் புகழவும் கருதி, முதற்கண் அவன் நலத்தை வியந்தாள் போன்று. “ குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் முருகச் செவ்வி” (5: 13-14) என்று புகழ்ந்துரைத்து, மணிமேகலையின் தவநிலையை யோது வாளாய், “ நின், முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள்; *ஆயின், பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தன்; சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்” (5: 14-17) என்று சொல்லுகின்றாள். அதற்குமேல் அவன் சுதமதி வரலாற்றைக் கேட்கின்றான். அவனுக்குத் தன் வரலாற்றைக் கூறுமுன், தன் வரலாறறிந்தால், அவன் பால் தோன்றும் காமக் கிளர்ச்சி கண்டு, தனக்கு ஏதேனும் தீங்கு நினைப்பனோ என்று அஞ்சி, முன்ன தாகவே, “ வார்கழல் வேந்தே வாழ்க நின்கண்ணி, தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (5; 28-29) என்றுரைப்பதும், தன் நிலைமையைத் தெரிவிப்பாளாய், “தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுத லல்லது யாவதும் மிகைநா இல்லேன்; வேந்தே வாழ்க” (5: 73-79) என்றுரைப்பதும் அவளது, அறிவு நுட்பத்துக்கு அமைந்த சான்று களாகும். 9. காய சண்டிகை: இவள் காஞ்சனன் என்னும் விஞ்சை யனுக்கு மனைவி. அவனோடு வருங்கால் பொதியிலின் அருகே ஒரு காட்டாற்றில், விருச்சிகனென்னும் முனிவன் உண்டற்கு வைத்திருந்த நாவற்கனியைத் தன் செருக்கினால் காலாற் சிதைத்து, அவன் இட்ட சாபத்தால் வானூடு செல்லும் மந்திரம் மறந்து யானைத்தீ யென்னும் நோயுற்று வருந்துபவள்; தன் பசித்தீயவித் தற்குக் காவிரிப்பூம் பட்டினத்தே தங்கியிருந்தவள்; கற்புடைய மகளிரின் இயல்பறிந்தவள். இவள்தான், மணிமேகலை அமுதசுரபி பெற்றுக் காவிரிப் பூம்பட்டினம் வந்த பின், அவளை, முதற்கண் ஆதிரை யென்பாளின் மனைக்கண் ஐயமேற்கச் சொல்லுகின்றாள்; ஆதிரையின் வரலாற்றை உரைப்பவளும் இவளே. மணி மேகலையை உலக வறவிக்குச் செல்க என்று சொல்லுமிவள், அதன் இருப்பை, துக்கம் துடைக்கும் துகளறு மாதவர் சக்கர வாளக் கோட்டமுண்(டு); ஆங்கு அதில் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறவியொன் றுண்டு; அதனிடை ஊரூர் ஆங்கண் உறுபசி யுழந்தோர் ஆரு மின்மையின் அரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங்கு இருப்போர் பலரால்; வடுவாழ் கூந்தல், அதன்பாற் போக (17: 75-82) என்று உரைப்பது இனிதாக இருக்கிறது. இவள் தான் வருந்திய யானைத் தீயின் கொடுமையை, “ நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரு முந்நீ ரடைந்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு இட்டது ஆற்றாக் கட்டழற் கடும்பசிப் பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால்” (17: 9-14) என்று விளக்குந் திறம் நன்றாக இருக்கிறது. இவள் செல்லும்போது விந்தாகடிகை யென்பாளது வயிற்றிற் பட்டு இறந்துபோகின்றாள். இவளது வடிவு கொண்டு, மணிமேகலை அறம் செய்ததனால் தான், காஞ்சனன் உதயகுமரன்பால் பொறாமையும் செற்றமும் கொண்டு கொலை புரிகின்றான். இதனை அவன் வரவு கண்டதும் மணிமேகலை நினைக்கவில்லை; உதயகுமரன் இறந்த பின்பே, உணர்ந்து அவ்வடிவினை அவள் உதறி நீங்குகின்றாள். 10. ஆதிரை: இவள் வரலாறு இம் மணிமேகலைக் காப்பியத்தில் நெருங்கிய தொடர்புடைய தன்று; மணி மேகலைக்கு முதற்கண் பிச்சையிடும் பேறு ஒன்றுதான் இவட்கு இந்நூலில் கிடைக்கின்றது. இவள் கற்பிற் சிறந்தவள்; கணவன் சாதுவன் என்பவனோ “வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி” கணிகை மாதரின் கூட்டத்தால் கெட்டழிந்தவன். கெட்ட பொருளைமீட்டற்குச் சென்றிருந்த போது, ஏறிச் சென்ற கலம் கெடவே, தப்பி வந்தோர் அவன் இறந்தான் என ஆதிரைக்குச் சொல்ல, அவள் தீப்புக விரும்பி, தீமூட்டி அதில் விழுகின்றாள்; தீ அவளைக் கொல்ல வில்லை. தீயில், “ விரைமலர்த் தாமரை யொருதனி யிருந்த திருவின் செய்யோள் போன்று இனிதிருப்ப” அவளே வருந்தி, “ தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன், யாது செய்கேன்!” (16: 33-36) என்று ஏங்குகின்றாள். அசரீரி தோன்றி, “சாதுவன் இறக்கவில்லை; நாகர் தீவில் இருக்கின்றான்; வந்து சேர்வான்’ என்கின்றது. அவள் வீடு போந்து, “கண்மணி யனையான் கடிதீங் குறுக” எனத் தன் கணவன் பொல்லா வொழுக்க முடையனாகிய தறிந்தும் வெறாது அவனையே நினைந்து, “ புண்ணியம் முட்டாள் பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம்” (16: 48-51) பெருமையுடன் வாழ்கின்றாள். சாதுவனும் நாகர்க்கு நல் அறம் கூறித்தெருட்டி வந்து ஆதிரையுடன், “தன்மனை நன்பல தானம்” செய்கின்றான். 11. இராசமா தேவி: இவள் சோழன் மாவண் கிள்ளியின் மனைவி; உதயகுமரனைப் பெற்ற தாய். சீர்த்தி யென்பது இவள் இயற்பெயர். இவள் மாவலியின் குலத்து வந்தவள் என்பார், நம் சாத்தனார், “ நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன் அடியில் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி யென்னும் திருத்தகு தேவி” (19: 51-55) என்று கூறுகின்றார். இவ் வரசியை முதற்கண் நமக்குக் காட்டலுற்ற சாத்தனார், சோழர் பெருமான் கண்டு உளம் சிறக்கும் விரைப்பூம் பந்தரும் பிற இனிய காட்சிகளும் அமைந்த வேனிற் பூம்பொழிற் கண் கொணர்ந்து நிறுத்துகின்றார். அப்பொழிற் சிறப்பை, “ கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட, பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய, வரிக்குயில் பாட மாமயில் ஆடும் விரைப்பூம் பந்தர்” (19: 57-60) முதலியவற்றை விரித்துரைக்கின்றார். உதயகுமரன் இறந்தது கேட்டு வருந்தும் இவட்குத் தேறுதல் கூறற்கு வந்த வாசந்தவை யென்பாள், அவன் சாக்காட்டினை இகழ்ந்து, “ தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது! மன்பதை காக்கும் மன்னவன் தன்முன் துன்பம் கொள்ளேல்” (26: 17-20) என்று சொல்லிவிட்டுப் போகின்றாள். மகன் இறந்த துயரமும் வாசந்தவை சொன்ன இகழ்ச்சி யுரையும் அரசியின் உள்ளத்தைச் சிதைக்கின்றன. மணிமேகலை பால் அவட்கு ஆறாச் சின முண்டா கிறது. மணிமேகலையின் நிலைமையைக் கெடுக்க வேண்டுமென்று ஒரு தீய நினைவு உண்டாகிறது. இதனை மறைத்துக் கொண்டு, அரசன்பாற் சென்று, முதற்கண் தன் மகனை இகழ்ந்து, “ பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு திரிந்தோன் அரசியல் தான்இலன்” என்று கூறி, “ கரும்புடைத் தடக்கைக் காமன் கையற அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும் அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச் சிறைதக் கன்று செங்கோல் வேந்து” (23: 25-30) என்று செப்புகின்றாள், அரசன் மகிழ்ந்து, சிறை வீடு செய்கின்றான். மணிமேகலையைத் தானே அழைத்துச் சென்று தீங்கு செய்யின் பழியாமென்று கருதி, அவளே தன்னோடு இருக்க வருமாறு, “ என்னோடு இருப்பினும் இருக்க; இவ் இளங்கொடி தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்” (23; 35-36) என்று சொல்வது அவளது சூழ்ச்சித் திறனைக் காட்டுகிறது. தன் மனையிடத்தே மணிமேகலைக்கு அவள், மயக்க மருந்து கொடுக்கின்றாள்; கல்லா இளைஞன் ஒருவனை யழைத்து அவளைக் கற்பழிக்க முயல்கின்றாள்; “ மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று உய்யா நோயின் ஊண்ஒழிந் தனளெனப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை” (23: 58-60) ஒன்றில் அடைக்கின்றாள். இவற்றாலெல்லாம் மணிமேகலை சிறிதும் மேனி வருந்தாது இருப்பக் கண்டு, அஞ்சி நடுங்கி, உண்மை யுரைப்பாளாய், “ செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்! என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது பொன்னே ரனையாய்! பொறுக்க” (23: 64-66) என்று வணங்குகின்றாள். அவள் வணங்குவது தகாது எனக் கருதி மணிமேகலை தானும் அவள் அடிபணிந்து தன் மாண்பினை நிறுவிக் கொள்கின்றாள். பின்பு சித்திராபதி போந்து மணி மேகலையைத் தன்பால் விடுக்க வேண்டுமென்று வேண்டியபோது, நல்லறிவு பெற்ற இராசமாதேவி, கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக்களவு மென்று உரவோர் துறந்தவை தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்; என்னொடு இருக்கும் (24; 77 - 82) என்று கூறித் தன் பெருந்தன்மையைப் புலப்படுகின்றாள். 12. சித்திராபதி: இவள் மாதவியின் நற்றாய்; நாடகக் கணிகையர்க்குள்ள நலமும் தீங்கும் திரண்டு உருக்கொண்டாற் போல்பவள். இவட்கு மாதவியும் மணிமேகலையும் அறம் கேட்டு மாதவர் உறையும் பௌத்த சங்கத்தில் இருப்பதில் சிறிதும் விருப்பம் கிடையாது. காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து கொள்ளாது புத்த சங்கத்தில் இருப்ப தனால் இவள் மிக்க வருத்த மடைகின்றாள். “ தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் மணிமே கலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர,” (2 ; 3 -5) இச் சித்திராபதி மிகமிக வருந்துகின்றாள்; ஊரவர் அலர் கூறுகின்றனரெனக் கூறி வருமாறு வயந்தமாலையைச் சங்கத்துக்கு விடுக்கின்றாள். மணிமேகலையின் நலம் புனைந்து கூறி, உதய குமரனுக்கு அவள்பால் தீரா வேட்கை யுண்டாகச் செய்தவளும் இவளே என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறும் கூற்றால் உணர நிற்கிறது. உதயகுமரனும், பளிக்கறையில் சுதமதியிடம், “வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச், சித்திராபதியால் சேர்தலும் உண்டு” (5: 81-2) என்று உரைக்கின்றான். மணிமேகலை அமுதசுரபி யேந்தி அம்பலம் புக்கது கேட்டு, இச் சித்திராபதி கொள்ளும் சினத்துக்கு எல்லையில்லை. “ மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக் கன்றே; நன்னெடும் பேரூர் இதுதக் கென்போர்க்கு எள்ளுரையாயது” (18: 8-10) என்று தொடங்கி, நாடகமகளிரின் இயல்பெல்லாம் விடாது வாய்விட்டுரைத்து, சூள் ஓன்றும் செய்துவிடுகின்றாள், அஃதாவது, மணிமேகலையை உதயகுமரனால் பற்றுவித்து அவன் பொற்றோர் மேல் அவளைக் கொணரச் செய்வது ஒன்று; இன்றேல், “ சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் அனையே னாகி அரங்கக் கூத்தியர் மனையகம் புகா மரபினன்” (18; 33-36) ஆவேன் என்பது மற்றொன்று. இவ்வாறு சூள்செய்தவள் உதய குமரனை அடைகின்றாள். அவன் தனக்குச் சுதமதி, மணிமேகலா தெய்வம் முதலியோர் கூறியதைக் கூறுகின்றான். அவனைத் தெளிவிக்குமுகத்தால் பல கூறி முடிவில், அவன் தடையின்றி முற்படுமாறு, மிக்க விரகுடன், “ நாடவர் காண நல்லரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டிச் சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப் பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு” (18; 103-11) என்கின்றாள். அவனது பேதையுள்ளம் அவள் நினைத்தவாறே பிறழ்ந்துவிடுகிறது. உதயகுமரன் இறந்ததும், மணிமேகலை சிறைசெய்யப் பட்டதும் இவள் கேள்வியுற்று, அச்சமும் நடுக்கமும் கொள்கின்றாள். இப்பொழுதேனும் மணிமேகலையைத்தான் தன்னோடு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்று ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். மாதவியால் தன் குடிக்குக் குறைவும் மணிமேகலையால் பட்டினத்துக்குத் தீங்கு முண்டாகுமென்று அரசமாதேவிக்குச் சொல்லி, அவள் மனத்தை மாற்றித் தன் கருத்தை முற்றுவிக்கக் கருதுகின்றாள்; அதனால் அவள் தேவிபால் வந்து முதலில் தனக்குண்டான குறையை, “ யானுறு துன்பம் யாவரும் பட்டிலர்; பூவிலை யீத்தவன் பொன்றின னென்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும், பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி அரங்கக் கூத்திசென்று ஐயங் கொண்டதும் நகுத லல்லது நாடகக் கணிகையர் தகுதி யென்னார் தன்மை யன்மையின்” (24; 17-24) என்று சொல்லி, மணிமேகலையால் நகர்க்குத் தீங்கு முண்டாம் என்பதை, முன்நாளில் நெடுமுடிக்கிள்ளி யென்பான், பீலிவளை யென்பாளைத் தேடிச் சென்ற போது சாரணன் ஒருவன் தோன்றி, “இந் நகரத்தே இந்திர விழா நிகழா தொழியின் கடல்கோள் நிகழும்; மணிமேகலா தெய்வத்தால் பிறந்த இந்திர சாபம் இது” என்று கூறியது சொல்லி, இப்போது, “ தன்பெயர் மடந்தை துயருறு மாயின் மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென அஞ்சினேன் அரசன் தேவி” (24;72-74) என்று உரைத்துத் தேவியை வணங்கிப் பணிவுடன் இரந்து, “ நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருக” (24; 75-76) என்று வேண்டுகின்றாள். ஈங்கும் அவள் மனத்தே மணிமேகலை ஒரு தவமகள் என்று தோன்றவில்லை; நாடகக் கணிகையென்று அவள் நவிலுதல் காண்க. ஆனால், தேவியோ மறுத்துவிடு கின்றாள். சித்திராபதி மனம் உடைந்து போய்விடு கின்றாள். V.நூலுட் காணப்படும் சில வரலாற் றுவமைகள்: இந் நூலுள் வைதிக சமயப் புராண வரலாறுகள் பல உவமை களாகக் காட்டப்படுகின்றன. இவ் வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந்நூலாசிரியர் காலத்தே, இவை மக்களிடையே நன்கு பயின்றிருந்தமை புலனாகிறது. முருகன் கிரவுஞ்ச கிரியை எறிந்த வரலாறு, “குருகு பெயர்க் குன்றம் கொன்றோ னன்ன நின் முருகச்செவ்வி” (5: 13-14) என்றும், திருமால் இராமனாய்த் தோன்றிக் கடலணையிட்ட செய்தி, “நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரு முந்நீ ரடைத்த ஞான்று, குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம், அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு” (17; 9-12) என்றும், திருமால் வாமனனாய்த் தோன்றி மாவலிபால் நிலம் பெற்றது, “நெடியோன் குறளுருவாகி நிமிர்ந்து தன், அடியிற் படியை அடக்கிய அந்நாள், நீரிற் பெய்த மூரிவார் சிலை மாவலி” (19: 51-4) என்றும், அசுரர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவு கொண்டு கூத்தாடியது, “திருவின் செய்யோள் ஆடிய பாவை” (5:4) என்றும் நெடியோன் கண்ணனாய்த் தோன்றி இடையர் சேரியில் விளையாடிய செய்தி, “மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும், ஆடிய குரவை யிஃதாம்” (19: 65-66) என்றும், இந்திரன் அகலிகைபாற் பெரு வேட்கை கொண்ட செய்தி, “மாதவன் மடந்தைக்கு வருந்துய ரெய்தி; ஆயிரஞ்செங்கண் அமரர்கோன் பெற்றது” (18: 90-91) என்றும். இந்திரன் மகன் சயந்தனை அகத்தியன் சபித்ததும், அங்கிக் கடவுள் முனிவர் மகளிர்பால் வேட்கையுற்றதும், காமன் தன் மகன் பொருட்டு வாணன் நகரில் பேடிக் கூத்தாடியதும், விசுவாமித்திர முனிவன் பசிமிக்கு நாயூன் தின்றதும் பிறவும் எடுத்துக் காட்டப் படுகின்றன. இவர் காலத்தே உதயணன் கதை நாட்டில் நன்கு பரவியிருந் திருக்கிற தென்பதற்குச் சான்றாக, உதயணனைப் பிரச்சோதனென்ற அரசன் வஞ்சனையாற் பற்றிக் கொண்ட போது, அவ் வுதயணன் மந்திரியாகிய யூகி, தன் சூழ்ச்சியால் மீட்ட வரலாறு, “கொடிக்கோ சாம்பிக் கோமகனாகிய, வடித்தேர்த் தானை வத்தவன் றன்னை, வஞ்சஞ் செய்துழி வான்றளை விடீஇய, உஞ்சையிற் றோன்றிய, யூகி யந்தணன் உருவுக்கு” (15: 61-615) என்று குறிக்கப் பெறுகிறது. திருவள்ளுவர் தம் திருக்குறளில், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யு மழை” (கு’ 55) என்று கூறியது. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப், பொய்யில்புலவன் பொருளுரை தேறாய்” (22: 59-61) என்று காட்டப்படுகிறது. கரிகால் வளவன், முதுமை வடிவு கொண்டு, தன் இளமை குறித்து இகழ்ந்தோர் வியப்ப, நீதி வழங்கிய செய்தி, ‘இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்’ (4: 107-8) என்று குறிக்கப் பெறுகிறது. இந் நூற்பதிகம் காவிரிப்பூம் பட்டினத்தின் வரலாறு கூறுகிறது. தொடித்தோட் செம்பியன் தூங்கெயி லெறிந்ததும், மனுச்சோழன் மகனை முறைசெய்ததும், சேரன் செங்குட்டுவன் ஆரிய வரசரை வென்று கண்ணகிக்குக் கோயிலெடுத்ததும் இந்நூற்கண் குறிக்கப்பெறுகின்றது. இந்நூலின் இடையிடையே வேறு பல வரலாறுகள் காட்டப் படுகின்றன; அவற்றை ஈண்டு விரித்தோதின் பெருகு மாதலின் இவ்வளவில் நிறுத்துகின்றாம். VI. இயற்கை நலம் கூறல்: விழாக் காலங்களில் மக்கட்கு விழாவைத் தெரிவிக்கும் மரபும், விழா நிகழும் நகரை மக்கள் இன்ன வகையில் புனைதல் வேண்டுமெனக் காட்டலும் விழா வறை காதையில் குறிக்கப்படுகின்றன. ஊரலர் உரைத்த காதையில் நாடக மகளிர்க் கென வகுத்த கூத்தும், இசையும், கணிதமும் ஏனைக் கலைகளும், ஓவியமும் சுருங்கக் குறிக்கப் படுகின்றன. விழாக் காலத்தே தொகுகின்ற மக்களிடையே துறவிகளும், விடரும் தூர்த்தரும், கட்குடித்தோரும், பித்தரும், பிறரும் வந்து தொகுவது இயல்பன்றோ; அவர்களை மக்கள் கூடி இகழ்ந்துரைத்து மகிழ்வது முண்டே. அவையாவும், மலர் வனம் புக்க காதைக்கண் உரைக்கப் படுகின்றன. பளிக்கறை புக்க காதையிலும், சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதையிலும் பிறாண்டும் பூம் பொழில்களின் இயற்கை யழகுகள் எடுத்தோதப்படுகின்றன. கச்சிமா நகர் புக்க காதை அந் நகரின் பல்வேறு தெரு நலங்களும் பிறவும் கூறுகின்றது. இவையே யன்றி அந்திமாலைச் சிறப்பும், விடியற் சிறப்பும், மிக அழகாகக் கூறப்படுகின்றன. மணி மேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில், அந்திமாலைப் போதினை ஒரு பெண்ணாக நிறுத்தி, “ குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோடு பொற்றோ டாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும், அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை யடக்க, பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மட லேற, அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப, பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கண் சேதா முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப, கன்றுநினை குரல மன்றுவழிப் படர, அந்தி யந்தணர் செந்தீப் பேண, பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப, யாழோர் மருதத்து இன்னரம்பு உளரக் கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள, அமரக மருங்கில் கணவனை இழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு அந்தி யென்னும் பசலைமெய் யாட்டி வந்திருத் தனளால் மாநகர் மருங்கு” (5:119-41) என்று பாடியிருக்கும் இப் பகுதியும், விடியற் காலத்தைச் சொல்லணி நயந்துறும், “ காவ லாளர் கண்துயில் கொள்ளத் தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்க புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப, பணைநிலைப் புரவி பலஎழுந் தாலப் பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப் பூப்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப் பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக் கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக் காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்” ((7; 111-126) என்று பாடியிருக்கும் இப்பகுதியும், ஒவ்வொருவரும் நன்கு சுவைக்கும் இனிய நலம் பொருந்தி யிருப்பதைக் காணலாம். VII. நூலின் பொதுநிலைக் கருத்து; இந் நூலுட் கூறப்படும் வரலாறும் பிறவமைதிகளும் பொதுவாக வைத்து நோக்கின், இந் நூலாசிரியர் பெண்மையின் அமைதியும், பெண்ணின் பத்தின் சிறுமையும் விளக்கும் கருத்தினராதலைக் காணலாம். உதயகுமரன் வாயிலாக ஆண்மகனுக்குப் பெண்ணின்பத்தை நுகர்தற்கு எழும் வேட்கையை விரித்தோதுவார் அதன் இயல்பை, “ சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்” (5: 19-20) என்றும், பிறாண்டும், “மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று, பற்றினன் கொண்டு” (20: 14-16) வருவேன் என்றும் அவனே கூறுதலால் நாம் உணரச் செய்கின்றார். மணிமேகலைக்கும் இவ்வுதயகுமரன்பால் வேட்கை யெழுந்து அவள் உள்ளத்தை அலைக்கின்றது. அவளே தனக்கு உண்டாகும் வேட்கையின் இயல்பை, “ கற்புத் தானிலள்; நற்றவ வுணர்விலள்; வருணக் காப்பிலள்; பொருள்விலை யாட்டி யென்று இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது, புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்; இதுவோ அன்னாய் காமத் தியற்கை” (5: 86-90) என்று கூறுகின்றாள், உதயகுமரன் போலாது, அறவோர் கூட்டுறவும், பழம்பிறப் புணர்வும் பிறவும் பெற்றிருந்தும், மணிமேகலை, உலகவறவிக்கண் காஞ்சனனும் உதயகுமரனும் ஒருங்கிருப்ப, அவ் வுதயகுமரன் பக்கலிலே சென்று நின்று நயமாக உரைக்குமாறு செய்துவிட்டது இவ்வேட்கையெனின், ஆண் பெண் இரு பாலாரி டத்தும் எழும் வேட்கை, இருவர் நிறையையும் ஒருங் கழிக்கும் வன்மை யுடைய தென்பதை ஆசிரியர் ஓராற்றால் நிறுவி விடுகின்றார். இதன் தோற்றுவாய் பெண்ணுடம்பில் இருக்கிற தென்று காட்டுவார், மணிமேகலை வாயிலாக, நரை மூதாட்டி ஒருத்தியின் வனப்பிழந்த மேனியை வகுத்துக் காட்டி, “ பூவினும் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத் தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே” (20: 67-9) என்று முடிவு கட்டுகின்றார். இதனால் மகளிர் தம்மைக் காத்துக் கொண்டு ஒழுகும் கடப்பாடுடையர் என்பார் போலப் பலவிடங்களில் அவர்கட்கு வேண்டும் ஒழுகலாறுகைளை வற்புறுத்து கின்றார். “ காதலர் இறப்பின், கனைபெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்தடங்காது இன்னுயி ரீவர்; ஈயா ராயின், நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு) உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து” (2: 42-48) என்றும், “ காதலன் வீயக் கடுந்துய ரெய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளியிரும் பொய்கை யாடுநர் போல முளியெரி புகூஉம் முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர்” (18: 11-15) என்றும், “ கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்னுறு கணவன் சாவுறிற் காவலும் நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்” (18: 98-102) என்றும், “ மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகார்” (22: 45-46) என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும், நன்மகளிர்க் குரிய ஒழுகலாறுகளை நன்கு பலமுறை வற்புறுத்துதலைக் காணலாம். உதயகுமரன் வரலாற்றாலும், ககந்தன் மக்கள் வரலாற்றாலும் ஆண்மகனுடைய வரம்பிகந்த காமமே கொடிதெனக் காட்டி வற்புறுத்துகின்றார். இதனை, “பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும் புத்தே ளுலகம் புகாஅ ரென்பது கேட்டும் அறிதியோ” (22: 117-9) என்று கூறுதலால் அறியலாம். பத்தினியுடன் கூடியுறைவோர் கோடற்குரிய வேட்கை, மகப்பேறு கருதியதேயன்றிப் பிறிதில்லை யென்பது ஒரு சாரார் கருத்து. அதனை மறுத்து, இந் நூலாசிரியர், பத்தினிக்கூட்டம் அறஞ்செய்தற் பொருட் டேயன்றி மகப்பேற்றின் பொருட்டன்று என்பார், “ இளமையும் நில்லா - யாக்கையும் நில்லா; வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா; புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்; மிக்க அறமே விழுத்துணை யாவது” (22: 135-138) என்று ஓதுகின்றார். இக்கருத்துக்களோடு வினையுணர்வு ஒன்று இந்நூன் முழுதும் ஊடுருவிச் சென்று நிலவுகிறது. இதனை முன்பும் கூறினாம். ஈண்டு ஒன்றே கூறுவோம். இவ்வுடல் “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது” (4: 113); “உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது” (26:32) வினைநீக்கமே வீடுபேறு என்பது. இதனை, உதயகுமரன் இறந்த செய்தியை அவன் தந்தை மாவண் கிள்ளிக்குக் கூற வந்த அறவோருள் ஒருவர் கூறு மாற்றால் அறியலாம்: “ மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன் உதய குமரன் ஒழியா னாக, ஆங்கு அவள் தன்னை அம்பலத்தேற்றி, ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்குய்த்துக் காய சண்டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி, ஆங்கவன் தன்கை வாளால் அம்பலத்து ஈங்கிவன் தன்னை எறிந்தது”(வினை) (22: 194-203) என்பது அவ்வறவோர் வினைமேல் ஏற்றிக் கூறிய கூற்றாகும். இவ் வண்ணமே, மணிமேகலை அரசமாதேவிக்கு, அவள் மகன் இறந்ததற்குக் காரணம் முன்னை வினையெனப் பழம் பிறப்புக் கூறி, “ மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல்துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வினை, நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே” (23: 82-85) என்று அறிவுறுத்துகின்றாள். VIII. இந் நூலாசிரியர் காட்டிய தருக்க முடிவு பற்றிச் சிறு குறிப்பு; இந் நூலில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் வரும் தருக்க முடிபுகளைப் பற்றி ஆசிரியர் டாக்டர். உ.வே. சாமிநாதையர் பலவாறு முயன்று விளக்கம் பெறாது விட்டு விட்டனர். ஆனால், அவர்க்குப்பின் பலர் இவற்றைத் தம்மால் இயன்றவரை முயன்று ஆராய்ந்திருக்கின்றனர். அவ் வாராய்ச்சியின் குறிப்பை இங்கே தருவது முறையாதல் பற்றிக் குறிக்கின்றோம். இத் தருக்க முடிபுகளை யாராய்ந்து கண்ட டாக்டர். திரு. S.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் இவை தின்னகர் காலத்துக்கு முற்பட்டனவாதல் வேண்டும் என்கிறார்; மகா மகோபாத்தியாய S.குப்புசாமி சாத்திரியார் அவர்களும், எச்.சாக்கோபி (Hermann Jacobi, Professor of Sanskrit, University of Bonn) என்பாரும், இந்நூன் முடிபுகள் வடமொழியிலுள்ள நியாயப் பிரவேசம் என்ற நூன் முடிபை அடிப்படையாகக் கொண்டன வென்றும், ஆகவே இம் மணிமேகலை, தின்னகர் காலத்திற்குப் பிற்பட்டதாகல் வேண்டும் என்றும்கூறுகின்றனர். தின்னகர் கி.பி.நான்காம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு; நியாயப் பிரவேசத்தை இயற்றிய ஆசிரியர் சங்கர சுவாமி என்பாரும் அந்த நான்காம் நூற்றாண்டினரே என்பர். திரு. அய்யங்காரவர்கள், “இந் நூல், ‘ஆதி சினேந்திரன் அளவை யிரண்டே, ஏதமில் பிரத்தியம் கருத்தளவு என்ன’ (29: 47-48) என்றது கொண்டு, இந் நூலாசிரியர் காட்சி, அனுமானம் என்ற இரண்டையுமே அளவையாகக் கொண்டனர்; தின்னகர் நையாயிகர் கூறும் நான்கும் கொண்டு ஆராய்ந்து இறுதி யிரண்டையும் விலக்கி முதலிற் கூறும் இரண்டையுமே கொண்டனர். பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்று ஐந்துள; அவற்றில்....... ஒட்டிய உபநயம், நிகமனம் இரண்டும். திட்டாந்தத்திலே சென்றடங்கும்” (29: 57-48; 109-110) என்றது கொண்டு, “இந் நூலாசிரியர், பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே கொண்டார்; தின்னகர் இவ்வைந்தையுமே கொண்டொழிந்தார். தின்னகர் அனுமானத்தைப் பரார்த் தானுமானம், சுவார்த்தானு மானம் என வகுத்து நெடிது ஆராய்ந்து பரார்த்தம் சுவார்த்தத்தில் அடங்கும் என்றாராக, இந் நூலாசிரியர் அனுமானத்தை அவ்வகையில் ஆராயவேயில்லை” என்று கூறினார் எனக் காட்டி, அக் கூற்றை மறுத்து, இந் நூலிற் கூறப்படும் தருக்க முடிபுகள் நியாயப்பிர வேசம் என்ற வடமொழித் தருக்க நூலையே மேற்கொண்டிருக்கிற தென்று, எங்கள் கல்லூரி வடமொழி விரிவுரையாளரான திரு. ஐயாசாமி சாத்திரியவர்கள் காட்டுகின்றார்கள்.* சாத்திரியவர்கள் இந்நூலின் இப்பகுதிக்கு எழுதி யிருக்கும் பொருள், நூலில் மூலத்தை வைத்து நோக்கிப் பெரிதும் தூய்மை செய்தற்குரித்தாயினும், இம் மணிமேகலைக்கும் நியாயப்பிரவேசத் துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காட்டியிருப்பது போற்றத்தக்கது. இப்பகுதியையே சிறிது விரிய ஆராய்ந்து வெளியிடக் கருதுகின்றேனாதலின், தருக்க முடிபு பற்றிய குறிப்பினை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்; இவ்விருவர் கூற்றுக்களின் வன்மை மென்மைகளை ஈண்டுக் காட்டலுறின், இம் முன்னுரை மிக விரியும். IX. காப்பிய நிகழ்ச்சி பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு: 1. மணிமேகலையின் தாயாகிய மாதவி, இசையும் நாடகமும் நன்கு பயின்று அரங்கேறிய காலத்தே புகார் நகரத்தேயிருந்து ஆட்சி புரிந்த வேந்தன் கரிகால் வளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மணிமேகலை அக்கலையில் வல்லுநளாய் மங்கைப்பருவம் எய்துங் காலத்தே மாவண்கிள்ளி என்பான் புகார் நகரத்தே ஆட்சி புரிகின்றான். இக் கிள்ளியைக் கரிகால் வளவனுக்கு மகனென்றாதல் பிற தொடர்பு உடையன் என்றாதல் இந்நூல் கூறவில்லை. உதய குமரனை மட்டில் “இளமை நாணி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய உரவோன் மருகன்” (4; 107-108) என்று கூறுகிறது. மணிமேகலை காலத்தில் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த கிள்ளியும் மாவண் கிள்ளியும் தமிழ்ப் பெயரே கொண்டிருப்ப, உதயகுமரன் வடமொழிப் பெயர் கொண்டிருப்பது வியப்பும் ஆராய்ச்சிக்கு இடமும் தருகிறது. 2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்குச் சேரன் செங்குட்டுவன் மகன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கண்ணகி கணவனான கோவலன் மதுரையிற் கொலையுண்டது வஞ்சிநாட்டில் அக் குட்டுவன் இருந்து ஆட்சி செய்த காலமாகும். இஃதிங்ஙன மிருக்க, மணிமேகலை கச்சிநகருள் அறம் பூண்டிருந்த மாசாத்துவானைக் கண்டபோது, அவள், கோவலனுக்கு அவன் குடியில் ஒன்பது தலைமுறைக்கு முன்பிருந்த கோவலன் என்பான் அவ் விமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு “நீங்காக் காதற் பாங்க” னாயிருந்தான் என்றும், அவ்வேந்தனொடு அவனும் கச்சிநகர்க்குப் போந்து தரும சாரணர் உரைத்த அறம் கேட்டுப் புத்த சைத்தியம் ஒன்று கட்டினான் என்றும் கூறுகின்றாள். இதனால், சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே ஒன்பது தலைமுறைக் காலம் கழிந்திருத்தல் தோன்றுவதோடு, சிலப்பதிகாரக் கூற்றுக்கு முற்றும் மாறுபடுவது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுவது போலவே, இந்நூலும் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்று வந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தியைச் சிறிதும் மாறு பாடின்றிக் கூறுகிறது. ஆகவே இப்பகுதியும் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது. X. முடிப்புரை: இனி, இவ்வாராய்ச்சி யுரையை முடிப்பதன்முன், இக் காப்பிய அமைப்பும் நடையும் பற்றிய சில குறிப்புக்களைக் கூறுவது நலமென்று தோன்றுகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் உண்டாய தொடர்பின் பயனாக மணிமேகலை பிறக்க, அவட்குப் பெயரிடும் சிறப்பு நாளில், கோவலன் ஒரு பெரிய சிறப்பினைச் செய்தான்; அவன் அளித்த கொடையைப் பெறுதற்கு மக்கள் பெருங்கூட்டமாய் வந்திருந்தனர்; அப்போது அரசனது பட்டத்தியானை மதங்கொண்டு போந்து, அக்கூட்டத்திருந்த வேதியனொருவனைப் பற்றிக் கொள்ளவே, கோவலன் அவன்பால் இரக்கமுற்று, யானையின் நெற்றியிற் பாய்ந்து அதனையடக்கி, அவ்வேதியனை மீட்கு மாற்றால் தன் ஆண்மை யினை நிலை நாட்டினா னென்று சிலப்பதிகாரம் கூறகிறது. பிறந்து பெயர் பெறும் நாளிலே தன் தந்தைக்குப் பெரும் புகழ் விளைத்த மணிமேகலையின் பிறப்பு வரலாற்றை இந்நூல் கூறவேயில்லை; மணிமேகலையின் பிறப்பு மாதவி பிறப்புப் போல்வதன்று. சித்திராபதியின் சொல்லும் செயலும் நோக்கின், மாதவிக்குப் பிறப்பு வரலாறு காண்டல் அரிதாம். அதனாற்றான் இளங்கோவடிகள், கண்ணகி கோவலன் என்ற இருவர் பிறப்புக் கூறியவர், மாதவியின் பிறப்புக் கூறாராயினார். மாதவியின் குணம் செயல்கள் கற்புடை நன்னெறிய வாதலின், அந்நெறி வழாது பிறந்த மணிமேகலையின் பிறப்புக் கூறாமைக்குக் காரணம் தெரிந்திலது. மாதவியும் மணிமேகலையும் இந்திரவிழாவிற் கலந்து தம் ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் மக்களை இன்புறுத் தாமையால், ஊரவர் அலர்தூற்றுகின்றார் எனச் சித்திராபதியால் குறிக்கும் இந் நூலாசிரியர், விழாவறை காதையில் இவ் விருவரும் போந்து மேற்குறித்த பணியை ஆற்றற்குரியர் என்பதனைக் குறிக்கவேயில்லை. ஒன்றனைச் செய்தற் குரியார் அதனைச் செய்யாதொழியின் அன்றோ அலர் பிறக்கும்? நாடகக் கலையை அக் காலத்திருந்த அரசரும் பிற சான்றோரும் நன்கு ஆதரித்தனர் என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றவே. நாடக மகளிர் தத்தம் நாடகக் கலை நுட்பத்தை மக்கட்கு நன்கு காட்டுமின் என்பதனை வெளிப்படக்கூறாது, “வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை, ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்” (1: 56-57) என விழாவறை காதை கூறுதலால் எய்துவித்தார் என்று கொள்வதாயின், மேலே காட்டிய குறைக்கு இடமின்றாம். ஆபுத்திரன் மணிபல்லவத்தில் மணிமேகலைபால் விடை பெற்றுச் சென்றவன் என்னானான் என்பதும், காஞ்சனன் உதய குமரனை வாளால் எறிந்த தீவினைப் பயனை இன்னவாறு நுகர்ந்தான் என்பதும் குறிக்கப்படவில்லை. கண்ணகி மதுரையை எரித்த தீவினைப் பயனை நல்வினைப் பயனின் இறுதியில் நுகர்ந்து முடிவில் “பிறவி நீத்த பெற்றிய”ளாவள் என்று கூறின இந்நூலாசிரியர், இவர்தம் முடிவுநிலை கூறாமை ஆராய்தற்குரியதாம். இம் முடிவு நிலையேயன்றி, சித்திரா பதியின் பிற்கால வாழ்வும் தெரிந்திலது. அறவண வடிகள் மணிமேகலைக்கு அறம் கூறுவ தோடு நின்று விடுகிறார்; அவரது முடிவும் தோற்றம்போலத் திடீரென நின்று விடுகிறது. மணிமேகலை, உதயகுமரன் கையிற் சிக்குண்டு தன் தூய்மை கெடாது நீங்கி யிருப்பளேல், இக்காப்பிய அமைதி மிக்க இன்பமாய் இருந்திருக்கும். இனி, இந்நூலாசிரியர் பாடியனவாக மேலே காட்டிய சங்க இலக்கியப் பாட்டுக்களையும் இந் நூலில் காணப்படும் பாட்டுக் களையும் ஒப்பு நோக்கின், இந் நூலில் நடைமிக எளிதாக இருப்பது புலனாகும். மேலும், இதன் கண் மிக்க வடசொற்கள் காணப்படு கின்றன. சங்க காலத்தும், அதனையடுத்து வந்த சிலப்பதிகாரக் காலத்தும் காணப்படாத சொல் வழக்குகள் இந் நூலிற் காணப்படு கின்றன. ஏது நிகழ்ச்சி, ஆங்கனம், ஈங்கனம், ஆங்கு, ஈங்கு முதலியன மிகுதியும் பயில்கின்றன, அ,இ என்ற சுட்டிடைச் சொற்கள், அந்த, இந்த எனத் திரிந்து வழங்கும் வழக்குக் கம்பர் காலத்துக்குச் சிறிது முன்னர்த்தான் பயிலுவதாயிற்று. இவ்வழக்கு, சங்க நூற்களுள்ளே கிடையாது. இந் நூலில் இஃது நன்கு வழங்கு கிறது. “முறைமையின் இந்த மூதூரகத்தே” (26:63) என்றும், “இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 285) என்றும், “ அந்த உதவிக்கு ஆங்கவன் பெயரை” (29:30) என்றும் வருதல் காண்க. மேலே கூறியவாறு, இந்நூல் நடை சங்க இலக்கியங்களிற் காணப்படும் செய்யுள் நடையின் வேறுபட்டிருந்தலாலும், சங்கச் செய்யுளிற் காணப்படாத வழக்காறு சில இந்நூலிற் காணப்படு தலாலும், இந்நூலுட் காணப்படும் அரசர் வரலாறுகள் சில வரலாற்று நெறிக்கண் நோக்கியவழி மயக்கந் தருதலாலும் இந்நூலை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாரது வரலாறு ஆராய்தற் குரியதா கின்றது. சிலப்பதிகாரம் இந்நூலாசிரியரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்காது, வறிதே சாத்தன் என்றே கூறுகிறது. இந்நூற் பதிகம் மட்டில் “மதுரைக் கூலவாணிகன் சாத்தன்” என்று கூறுகிறது. தொல்காப்பிய உரைகாரர்களும் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்கின்றனரே யன்றி, “மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்” என்று கூறவில்லை. ஆகவே, இச் செய்தி மிக ஆர அமர இருந்து ஆராய்தற்குரிய தென்பது விளங்கும். இவ்வரிய நூலுக்கு ஆசிரியர் டாக்டர். உ.வே.சாமி நாதையர் அவர்கள் அருஞ்சொற் குறிப்பெழுதி வெளியிட்டிருக் கின்றார்கள். இதற்கு விரிந்ததோர் உரை நாவலர் பண்டித. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு எழுதுவித்துப் பாகனேரி தன வைசிய புரவலர் திருவாளர் மு.காசிவிசுவநாதன் செட்டியாரவர்கள் பதித்து வருவது மகிழ்தற்குரியதாகும். முடிவாக, இந் நூலிற் காணப்படும் புத்த சமயக் கருத்து களைப்பற்றிச் சில கூறாதொழிவது குன்றக் கூறலாய் முடியும். இதனை இந் நெறி பற்றி ஆசிரியர் திரு. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் ஆராய்ந்து கூறியவற்றை ஈண்டுத் தருகின்றாம். “ஆடவரே யன்றி மகளிரும் துறவு பூண்டு தவவொழுக் கத்தை மேற்கொள்ளுதற்கும், வீடடைதற்கும் உரியர் என்பது புத்தர் கொள்கை. அது மணிமேகலையின் துறவு கூறுமுகத்தால் இந்நூலின் கண் உடம்பொடு புணர்த்து அறிவுறுத்தப் பெற்றுள்ளது. பிறப்புத் துன்பமென்பதும், பிறவாமையே இன்பமென்பதும், பிறவியானது பற்றினா லுண்டாகின்ற தென்பதும், பிறவாமையானது பற்றறுதி யினா லுளதாவ தென்பதும் அச் சமயத்தின் கொள்கைகள். இவை நான்கும் நால்வகை வாய்மை என்று கூறப்படும்.......” “பிறப்பாகிய துன்பத்தையும் அதன் காரணத்தையும் விளக்கு தற்குக் காரண காரிய முறைமையால் ஒன்றொன்றைச் சார்ந்து தோன்றுவனவாகிய பன்னிரு நிதானங்களென்னும் பெயருடைய பன்னிரண்டு தத்துவங்கள் இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பாவம், தோற்றம், வினைப்பயன் என்பனவாம்....” “இப்பன்னிரண்டில் உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு பிறப்பு என்பனவும்; பிணி, மூப்பு, சாக்காடு, அவலம், அரற்று, கவலை, கையாறு என்னும் வினைப்பயனுமாகிய ஏழும்; தோற்றமெனப்படுந் துன்பமும்; பேதைமை,செய்கை, வேட்கை, பற்று, பாவம் என்னும் ஐந்தும் அதன் காரணமுமாகும்...” “துன்ப நீக்கத்திற்குரிய நெறி நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் எட்டுமாம் என்பர். பிறவித் துன்பத்தினின்றும் நீங்குதற்கு இவற்றை யடைந்து கடைப்பிடித்தலோடு தானமும் சீலமும் உடையராதல் வேண்டும்.........” “இனி, உயிர்கள் எய்தும் பிறப்பு - மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என அறுவகைப்படும் என்பதும்; நல்வினை செய்த உயிர்கள் - மக்கள், தேவர், பிரமர் ஆகிய கதிகளிற் பிறந்து இன்புறு மென்பதும்; தீவினை செய்த உயிர்கள் - நரகர், விலங்கு, பேய் என்னும் கதிகளிற் பிறந்து துன்புறு மென்பதும்; தீவினையாவன - கொலை, களவு, காமம் என உடம்பிற்றோன்று வன மூன்றும், பொய் குறளை, கடுஞ்சொல், பயனில் சொல், என உரையிற் றோன்றுவன நான்கும், வெஃகல், வெகுளல், மயக்கம், என உளத்திற் றோன்றுவன மூன்றும் ஆகிய பத்துமாம் என்பதும்; நல்வினை யாவன சொல்லப் பட்ட பத்துவகைத் தீவினையினும் நீங்கி சீலம் தாங்கித் தானம் தலைநிற்றலாம் என்பது புத்தநூற் றுணிபு. இவை, ‘ தீவினை யென்பது யாதென வினவின் ஆய்தொடி நல்லாய்! ஆங்கது கேளாய்; கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்; பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப் பத்து வகையால் பயன்தெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயும் நரகரு மாகிக் கலங்கிய வுள்ளக் கவலையில் தோன்றுவர்; நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்’ (24: 123-140) என இந்நூலுட் கூறப்படுதல் காண்க. மற்றும், துன்பத்துக் கெல்லாம் காரணமாகிய முக் குற்றங்களில், காமத்தை உடம்பு நிலையில்லது, துன்பத்திற் குறைவிடமானது, உயிரின் வேறாயது, அருவருக்கத் தக்க அழுக்கு நிறைந்தது என்று பாவிக்கும் அகப்பா வனையாலும்; வெகுளியை எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தலும் இரக்கம் கொள்ளுதலும் அவற்றின் ஆக்கத்திற்கு மகிழ்தலுமாகிய மைத்திரி, கருணை, முதிதையென்னும் பாவனை களாலும்; மயக்கத்தைக் கேள்வி, விமரிசம், பாவனை என்னும் உபாயங்களாலும் ஒழிக்க வேண்டும் என்றும் இதிற் கூறப்பட்டுளது. காணப்படுகின்ற எல்லாப் பொருளும், உயிரும், உருவம், நுகர்ச்சி குறி, பாவனை, உணர்வு, என்னும் ஐந்தின் ஈட்டமே யென்பதும்; இவை யெல்லாம் கணந்தோறும் தோன்றியழியும் என்பதும் பௌத்தநூற் கொள்கை. இவற்றுள் உருவமென்பதில் நிலம், நீர், தீ, வளி, என்னும் நான்கு பூதங்களும், உடம்பும், புலன்களும் அடங்கும். நுகர்ச்சியாவது, இன்ப துன்ப அனுபவம்; இது வேதனை யென்றும் கூறப்படும். ஐம்பொறிகளும், மனமும் குறியென்று கூறப்படும். மனமொழி மெய்களால் உண்டாகும் நல்வினை தீவினைகள் பாவனையாகும். இது செய்கையெனவும், வாசனையெனவும் கூறவும் படும். உணர்வாவது விஞ்ஞானமாகும். உருவ முதலியவற்றோடு கூடிய விஞ்ஞானமே ஆன்மாவா மெனவும், அது நீரோட்டம் போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி யழியுமெனவும், அங்ஙனம் அழியுமேனும் முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தில் தோன்றிய வாசனை பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலால் அறிவு முதலாயின நிகழு மெனவும், இவ்வைந்தும் சந்தானமாகத் தோன்றி யழிதலே பந்தமெனவும், இவை அறக்கெடுதலே முத்தியெனவும் கூறுப. இவ்வைந்தையும் குறித்து, ‘ உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவிவை ஐங்கந்த மாவன’ (30: 189-190) என மணிமேகலை கூறுகின்றது.” இனி, இச்சமயநெறிக்கண்ணே நின்று இக் காவியத்தை நோக்கின், சாத்தனார் காலத்தே இத் தமிழ் நாட்டில், சைவம், வைணவம், பிரமவாதம், வேதவாதம் என்பனவும்; சமண சமயத் துறைகளாகிய ஆசீவகவாதம், நிகண்டவாதம் என்பனவும்; சாங்கியம், வைசேடிகம், பூதவாதம், நையாயிகம் மீமாஞ்சை, உலோகாய தம் என்பனவும் நிலவியிருந்தமை தெரிகிறது. சுதமதியின் வரலாற்றினால் சமண் சமயத்தை மறைமுகமாக இழித்துரைக்கும் சமயக் காழ்ப்பும் சிறிது புலனாகிறது. இதனை நாட்டாரவர்களும் கண்டு, *“இக்காப் பியத்திலே தான் புத்த சமயத்தை மேன்மைப்படுத்தும் பொருட்டுப் பிறசமயத்தை இகழ்ந்துரைத்தலாகிய சமய வெறுப்புச் சிறிதே அரும்பியுள்ளமை காணப்படுகிறது” என்று கூறுகின்றார்கள். இக் காழ்ப்பின் தோற்றம் விளங்கித் தோன்றா தொழிதற்குக் காரணம், மணிமேகலை ஏனைச் சமயக்கணக்கர்தம் திறம் கேட்டு ஒரு மறுப்பும் கூறாதொழிவதே யாகும். சிலப்பதி காரத்தே, சமண்சமயத் துறவிகள்பாலும் சமயவெறுப்புச் சிறிது தோன்றியிருந்த திறத்தைச் *சிலப்பதிகார ஆராய்ச்சிக்கண்உரைத் திருக்கின்றாம். புத்த சமயக் கொள்கைகளை நாம் இனிதறிந்து கோடற்குக் கருவியாகும் நூல்கள் பல இப்போது வெளியாகி யுள்ளன. அவற்றை நோக்கின், ஊனுண்டல் பாவமென்பது அச்சமயத்தின் சீரிய கொள்கையாகக் கூறப்பட்டிருப்பது இனிதுவிளங்குகிறது. அசோகனது கல்வெட்டுக்களும் இக்கருத்தை நன்கு வற்புறுத்து கின்றன. அவ்வாறு இருப்பவும், இக்காவியம் ஊனுண்டல் பாவமன்று என்று கூறுகிறது. இதனைச் சாதுவன் என்போன், நாகர் தலைவனுக்குக் கூறும் கூற்றாகவரும், “மூத்து விளிமா வொழித்து எவ்வுயிர் மாட்டும், தீத்திறம் ஒழிக” (16; 116-117) என்பதனால் அறிகின்றோம். ஒருகால், இக்கருத்து, சாத்தனார் காலத்திருந்த பௌத்தர்கள் கொண்டிருந்த கொள்கையாக இருக்கலாமோ என்று நினைத்தற்கு இடந்தருகிறது. இக்கொள்கை முற்காலத்தே மக்களிடையே நிலவி யிருந்த தென்றற்குத் திருக்குறள் உரையாசியரான பரிமேலழகர் ‡உரையும் சான்று பகர்கின்றது. இதுவும் நன்கு ஆராய்தற்குரிய தொன்றாம். சிந்தாமணிக்கண் சீவகன் வேடர் தலைவற்கு அறமுரைக்குமிடத்து, †“இறைவனூற் காட்சி கொல்லா வொழுக் கொடு ஊன்துறத்தல் கண்டாய்” (சீவக. 1242) என்று கூறுவதை நோக்கின், சமண் சமயத்தவர் ஊனுண்டல் பாவமென்னும் கருத்தேயுடையராயிருத்தல் வலியுறுகிறது மணிமேகலையாசிரியர் காலத்தும் சமண் சமயம் தமிழ் நாட்டில் இருந்திருத்தலின், அவர் கொள்கையும் ஈண்டுக் காண்டல் வேண்டியதாயிற்று. புத்த சமயத்தை விளக்கும் வேறு நூலொன்றும் மணிமேகலைக்குப் பின்னும் முன்னும் தமிழ்மொழியில் இதுகாறும் காணப் படாமையின், ஊனுண்டல் பற்றிய இக்கொள்கை மயக்கத்தைத் தந்து நிற்கிறது. ஆளுடைய பிள்ளையார் காலத்தே புறச் சமயத்தவருள் மீனும் ஊனும் உண்டல் காணப்படுகிறது. இதனை அவர் தாமே. திருவவளிவணல்லூர், “கொம்பிரிய” என்று தொடங்கும் திருவிராகப் பதிகத்துள், *“கழியருகு பள்ளியிடமாக அடுமீன்கள் கவர்வாரும் வழியருகு சாரவெயில் நின்று அடிசில் உள்கிவரு வாரும்” என்கின்றார். “ஊனொடுண்டல் நன்றென ஊனொடுண்டல் தீ தென ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் எனத் திருவானைக்காத் திருவிராகப் பதிகத்தும் குறித்தருளுவதை நோக்கின் ஊனுண்டலைப் பற்றிய வாதம் இற்றைக்குச் சுமார் 1300 ஆண்டு களாக நடந்து வருவதொன் றென்பதும் அறியக்கிடக்கின்றது. இவ்வாறு, இக்காவியத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆராயுந் தோறும் பல்வகைப் பொருளாராய்ச்சிக்கும் இடந்தந்து நிற்கும் சிறப்பு மிக்கு விளங்குவதைக் காண்கின்றோம். ஒவ்வொரு காவியத்தையும் இம் முறையே ஆராய்ந்து காண்பது மிக்க இன்பம் தரும் செயலாகும். அதுவேயன்றி, அவ்வக் காவியங்களை இயற்றிய ஆசிரியர்களின் காலத்து மக்கள் மேற்கொண்டிருந்த சமயம், வழக்கம், ஒழுக்கம் முதலியவற்றைக் காணும்பேறும் நமக்கு உண்டாகிறது. இப்பேறு, நம் தமிழகத்தின் பண்டை வரலாற்றை இனிதறிந்து முறை செய்து கோடற்கும் பேருதவியாகும். இத் துறையில் செய்யப்படும் முயற்சிகட்கு ஊக்கமும் ஆதரவும் செய்து வரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தினர்க்குத் தமிழ் நன்மக்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அவர் தம் முயற்சி பெருநலம்கொண்டு விளக்கமுறுவதாக. குறிப்புரை (எண் - பக்கவெண்.) 127. தகை - அழகு, வல்லை - வல்லவனாயுள்ளாய், வழுதி - பாண்டியன், தேற்றாய் - தெளியாய், சினம் - வெப்பம், ஊர்பு -தவழ்ந்து, 128. வானம் - மழை, கவினி- அழகுற்று, கமம்சூல் மாமழை - நீர் நிறைந்த மேகம், கார் - கார் காலம், மணி - நீலமணி, பூவை - காயாம்பூ. செம்புற மூதாய் - சிவந்த முதுகையுடைய தம்பலப்பூச்சி. வீ - பூ, கழல் - காம்பினின்று கழன்று. தாஅய் - பரந்து, செய்கை - சித்திரம், புறவு - காடு. 129. கானல் - கடற்கரை. பெருநீர் - கடல், ஏர் - போன்ற, எவ்வம் - வருத்தம், அலர்வாய் - அலர் கூறும் கூற்றிலிருந்து. தடவு நிலை - பெரிய அடிமரம். அயிர் - நுண்மணல், கொடுஞ்சி - தேர்த்தட்டு, 129-130. வண்டற் பாவை - மகளிர் கோரை முதலியவற்றால் செய்துவைத்துவிளையாடும் பாவை. ஞான்றை - நாள். அறிகரி - சான்று. விசைகொளீஇ - விசைத்துக்கொண்டு. வயமீன் - வலிய மீன். தழை - தழையாகிய உடை. மறுகு - தெரு. 130-131. கழி - உப்பங் கழி, துழைஇய - துழவிய. அடும்பு - அடப்பங்கொடி. கல்லகம் - மலைநாடு. 131. புரையில் - உயர்ச்சி யில்லாத, ஆனாக் கௌவை - அமையாத ஆரவாரம். அழுங்கல் - முழக்கம். கை - முன்கால். கோள் வல் - கொலை வல்ல. ஏற்றை - ஆண். பூ நுதல் - மெல்லிய நெற்றி. பிடி - பெண் யானை. நீர் நனந்தலை - நீர்ப்பரப்பில். 132-133. அலர்வது - அலராவது. புலரா - வாடாத. பருவரல் - துன்பம். நீர்அலைக் கலைஇய - நீர் அலைத்தலால் குலைந்த. தொடையல் - மாலை. கஞலிய - செறிந்த. வெறி - நறுமணம். மணிச்சுனை - நீலமணி போலத் தெளிந்த நீர் நிரம்பிய சுனை. உரி - தோல். உருப்பு - வெப்பம். எருத்து - கழுத்து. 133. கவடு - கிளை, தயங்க - விளங்க. அசைய என்று மாம். சுரம் - பாலைநிலம்; முரம்பு மண் பரந்த நிலமுமாம். உறைதல் வல்லுவோர் - இருக்கக்கூடிய மனவன்மை யுடையவர். 134. கவலை - கவர்த்த வழி. வலிப்ப - தூண்ட, காதல் - விரும்புவது. என்றி - என்று சொல்கின்றாய். விரைசெலல் - விரைந்து செல்லுதல். திகிரி - தேர்ச் சக்கரம். வறந்த - வற்றின. நிரம்பா - குறுகிய. வள்ளெயிறு - கூரியபல். பிணவு - பெண்நாய். உழிஞ்சில் - ஒருவகை மரம். நொள்ளை - ஒருவகை வண்டு. இயவு - வழி. விழுத் தொடை - பெரிய அம்பு. 135. பொய் வலாளர் - பொய் சொல்லுதலில் வன்மை யுடைய தலைவர், வல்லென - விரைவாக, துனி - வெறுப்பு, நொசி வரல் - நுட்பமிக்க. பாவை - கண்ணிற் பாவை. மாய்ப்ப - மறைப்ப. ஊர்தர - பரவ. மேனி - மேனியழகு. இனையல் - அழாதே. பாசரும்பு - பசிய அரும்பு. அலரி - அலர்ந்த பூ - கொழுதி - கோதி. அருந்து - ஆர்ந்து; உண்டு. அலங்கல் - அசையும் கொம்பு. நயவர - விருப்பமுண்டாக. தெளித்தோர் - தெளிவித்துச் சென்ற காதலர். 135. பருதியஞ் செல்வன் - சூரியன். கயந் தலை - பெரிய தலை. மடப் பிடி - இளமையான யானை. குளகு - தழை. உயங்கிய - வாடிய. குரம்பை - வீடு. 136. வாஅப் பாணி - நாட்டிய தாளத்திற் கேற்பத் தாவிச் செல்லுதலையுடைய. கலிமா -குதிரை. தாஅத் தாள் - தாவிச் செல்லும் கால். ஒதுங்க - நடக்க. இடி - முட்கோல். ஏமதி - ஏவுக. திரி மருப்பு - முறுக்கிய கொம்பு. நடுநாட் கூட்டம் - கூடாமை. மாண்ட - மாட்சிமைப் பட்ட. 137. மழைக் கண் - குளிர்ந்த கண். பரீஇயினள் - அறுத்தெறிந்து, இறந்திசின் - சென்றாள். பிரம்பு - பிரம்பின் புதர். வருட - தடவ. 138. சாய்ப்புறம் - சோகை. பசுவெயில் - இளவெயில் ஈர்ம் புறம் - நனைந்த முதுகு. பனிக்கும் - குளிர் செய்யும். 139. ஆர்கை - உண்டல். கதவர் - கோபமுடையவர் ஈனாப்பாவை - வண்டற்பாவை. கானலான் - கானற்கண். 143. மாபெரும் பத்தினி - கண்ணகியார். தீத்தொழில் - கணிகையர் தொழில். 145. கையற - செய்கை கெட. கடுநவை - மிக்க துன்பம். தவக்கொடி - தவத்தையுடைய கொடிபோலும் பெண். 146. இடையிருள் யாமத்து - நள்ளிரவில். முனிவன் - புத்தன். பொருவறு - ஒப்பற்ற. புரையோர் - உயர்ந்தோர். 147. மறித்து - மறுபடியும். அந்தரம் - வானத்தே. 147-148.ஆருயிர் மருந்து - உணவு. தொலைவில்லா – குறை வதில்லாத. அகன் சுரை - அகன்ற உள்ளிடம். காண்டல் வேட்கையேன் - காணும் விருப்பமுடையேன். கரி - சான்று. செவ்வனம் - செவ்வையாக. 149. மது - தேன். திப்பியம் - வியப்பாகும். 150. பிணி - நோய். இடும்பைக் கொள்கலம் - துன்பத்தைப் பெய்துவைக்கும் ஒரு பாத்திரம். 150.நா நல்கூர்ந்தனை - சொல்லால் வறியனாயினை. 158. நன்று - அறம். 159. தகவிலன் - செய்தற்குரிய தகுதியறியாதவன். மடவார் - மகளிர். மன்னவன் - மனுச்சோழன். வழி - மரபில். வேந்தர் - ஏனைச் சேர பாண்டிய வேந்தர். ஈமம் - சுடுகாடு. சிறப்பின் பாலார் - சிறப்பான பான்மை யுடையவர். ஆயிழை - மணிமேகலை. சிறை நோய் - சிறைத்துன்பம். 160. ஓரீஇ -நீங்கி. மிக்குழீஇ - மிகுந்தபோது காழ்க் கொளின் - அடக்க முடியாதபடி மிக்கதாகிய வழி. செவ்வியளாயின் - காமநுகர்ச்சிக்குரிய பருவத்தையுடைய வளாயின். என் செவ்வியளாக - என் இன்பச் செவ்விக்குரியளாகுக. 161. வஞ்சி - வஞ்சிக்கொடி. அவத் திறம் - தீய கருத்து. எய்யா மையல் - அறிவறிதற் கில்லாத மயக்கம். 161-162. நோற்றூண் - நோற்றுண்ணும். நொசி - வாடும். ஏற்றூண் - பிச்சை யெடுத்துண்டல். மண்ணீடு - மண்ணாற் செய்த பாவைகள். 162. பாடு கிடப்பேன் - உயிர் நீங்குங்காறும் வீழ்ந்து கிடப்பேன். அயர்ப்பாய் - விடுவாய். அரவல்குல் - மணிமேகலை. முத்தை முதல்வி - முதுமையும் முதன்மையுமுடைய சம்பாபதி. 163. தோடு - பூ. பொதுவில் - பொதுவிடமாகிய அம்பலம், முதுக்குறை முதுமொழி - அறிவு நிரம்பிய நற்சொற்கள். 164-165. மாமறை மாக்கள் - வேதியர்கள். கேண்மோ - கேண்மின். கடவுள் கணி - திலோத்தமை. சிறுவர் - பிள்ளைகள். இருவர் - வசிட்டர், அகத்தியர். களைந்து - நீக்கி. திருந்து முகம் - மலரும் முகம். காட்டும் - காணச் செய்யும். கடிஞை - பிச்சைப் பாத்திரம். 166. பொறேஎன் - விரும்பேன். தொட்டும் - தொடங்கி. பெயல் -மழை. பிழைப்பறியாது - பொய்ப்பது கிடையாது. உருக்கும் - மெலிவிக்கும். 167. மறன் -பாவம். புக்கில் -புகுமிடம். சார்பிற் றோற்றம் - பேதைமை முதலிய நிதானம் பன்னிரண்டின் தோற்றம் முடிப்புரைப் பகுதி காண்க) உய்தி - பிழைத்தல். ஆரியன் - ஆசிரியனாகிய புத்தன். இணை - ஒப்பு. கள் - தேன். தார் - மாலை கலம் - மரக்கலம். போகி - சென்று. 168. தூவற - பற்றற. செவிமுதல் - செவியின்கண் . வித்து - விதை. ஏதம் - தீங்கு. கூஉம் - அழும். வேட்டனை - விரும்பினாய், மதிமாறு ஓர்ந்தனை - அறிவான் மாறான செய்தியைக் கருதி விட்டாய். 171. வெண்திரை - பாற்கடல். வைத்தாங்கு - வைத்தது போல. வறன் ஓடு உலகின் - வற்கடம் பொருந்திய உலகத்தின். வான் துயர் - பெரும் பசி. அறன் ஓடு - அமுதசுரபி. வீழ் கதிர்- மறையும் சூரியன். 172. ஆர் அணங்காகிய அருந்தவன் - தடுத்தற்கரிய வருத்தத்தைச் செய்தவனாகிய அரிய தவத்தையுடைய முனிவன். பம்பம் - அசைவு. நோனகர் - பெரிய நகரம். 173. பிறன் - உதயகுமரன். பிறன் - அயலான். அலங்கல் - மாலை. கடிகை - துண்டம். தவளம் - வெண்மை. குறிப்பாடு வழாஅள் - காதற்குறிப்பில் வழுவுதல் இலள். ஒழிந்தனள் - தஙகிவிட்டாள். வான வாழ்க்கையர் - தேவர்கள். 175. விஞ்சை - வித்தை. தகவு - தகுதி. அறைபோதல் - உள்ளற்றுப்போதல். அறை -சந்து. தொன்று - பழைமை. நன்றி - நன்மை. வாய்வாள் - தப்பாத வாள். விளிந்தனை - இறந்தாய். 176. துய்ப்போர் - உண்போர். துணிச் சிதர் - கந்தைத் துணி. இரங்கி - வருந்தி. முனியாது - வெறாது. புன்கண் - துன்பம். அறங்கடை - பாவம். 177. கட்டு - பந்தம். அற்புக் கடன் - அன்புநெறி. படராது - நினையாது. 178. காதலன் - கோவலன் . நாணு- நாணம். 179. பின்னது - பேரின்பம். அற்றோர் - பற்றற்றவர். வழுவாய் - துன்பம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார். வாய்வதாக - வாய்ப்புடைத்தாக. துளங்கியது - கலங்கியது. வளி - காற்று. கொம்பின் - கொம்புபோல. 180. பூட்கை - கொள்கை, ஆணையின் - ஆணைப்படி. 181. கொளுத்தி - இசைத்து, வெயில் - ஞாயிற்றின் கதிர். பொதும்பர் - சோலை. இலஞ்சி - பொய்கை. விரை - மணம். உரவோன் - கரிகாலன். குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சம் என்னும் மலை. கொன்றோன் - முருகன். 182. முருகச் செவ்வி - இளமைப் பருவம். சாப சரத்தி - சாபம் என்னும் அம்பினை யுடையாள். காமன் - காமச் சேட்டை. தீ நெறி -தீய கருத்து, படரா - நினையாத. தகை - அழகு.மிகை - வேறு பல மிகுத்துச் சொல்லுதல். 183. துகள் - குற்றம். ஆரும் - ஆதரிப்போர் எவரும். வடு - சீவிவிடும் வடு. நெடியோன் -திருமால். அடைத்த ஞான்று - அணை கட்டியபோது. மலை - மலைக்கற்கள், அளக்கர் - கடல். 184. தீவினையாட்டி - தீவினையாளன் என்பதன் பெண் பால். முட்டாள் - குறையாதவள். 185. குறளுரு - வாமனன். படி - பூமி. மருமான் - வழித்தோன்றல். கொம்பர் - கொம்பு. பொங்கர் - சோலை. மண் - நாடு. மன்பதை - மக்கள். 186. திரிந்தோன் - வேறுபட்டவன். தட - பெரிய. பெரும் பிறிதாக்கும் - கெடப் பண்ணும். தக்கன்று - தகுதியன்று. ஓடு - பிச்சையெடுக்கும் பாத்திரம். தகைக்குநர் - தடுப்பவர். உய்யா நோய் - தீராநோய். புழுக்கறை - காற்றுப்புகாத அறை. 187. தவத்தாட்டி - தவமுடையவள். இடுக்கண் பொறாது சிறுமை செய்தேன் பொறுக்க என இயைக்க.சிறுமை -துன்பம். உரவோர் - அறிவுடையோர். புலைமை - புலைத்தன்மை. தீவகச்சாந்தி - இந்திர விழா. தணியா - நீக்க முடியாத. நகுதக்கன்று - சிரிக்கும் தகுதியுடையது. தக்கு - தகுதி, எள்ளுரை - இகழ்ச்சிச்சொல். சுடுமண் - செங்கல், சூழ் போகி - சுற்றிவந்து. வடு - பழி. தம்மோர் அனையேன் - தம்மை யொப்பாவோன். சுருப்பு - சுரும்பு (வண்டு). கருப்பு - கரும்பு. அருப்புக் கணை - அரும்பாகிய அம்பு. செருக் கயல் - செருக்கித் திரியும் கயல்மீன். 188. பயன் - பொருள். கொண்டி - கொள்ளை. படிற்றுரை - தவறான சொல். கோன்முறை - செங்கோல் முறை. பூவிலை- தலைப் பரிசம். ஈத்தவன் - கொடுத்த கோவலன். பொன்றினன் - இறந்தான். ஐயம் - சோறு. தன்மையன்மையின் - நாடகமகளிர்க்கு அது தகுதியல்லாமையால். பெருந்தெய்வம் - மணிமேகலா தெய்வம். மடந்தைக்கு: அகலிகையின் பொருட்டு. தளை - விலங்கு. உஞ்சை - உச்சயினி. 191. குணதிசை - கிழக்கு. குடதிசை - மேற்கு. மதியம் - முழுமதி. கதிர் -சூரியன். பூம்பொதி - தாமரைப்பூவின் கூம்பிய இதழ். அரிக் குரல் - அரித்த ஓசை. அழைஇ - அழைத்து. சேதா - செம்மையான பசு. துகள் - மண் பொடி. மருதத்து இன்னரம்பு - மருதப்பண். உளர - இசைப்ப. அமரகம் - போர்க்களம். மெய்யாட்டி -உடம்பினை யுடையவள். இறுத்தனள் - தங்கினாள். துயில் கண் விழிப்ப - துயில்வோர் கண் விழிப்ப. புலம்புரிச் சங்கம் - புலவர் கூட்டம். புகர் - புள்ளி. வாரணம் - யானை. கூவிளிப்ப - பிளிற. வாரணம் - கோழிச்சேவல். பணை - குதிரைப் பந்தி; மரக்கிளை - பொழில். ஆர்கைப் புள் - பொழிலிடத்தே நிறைந்துள்ள பறவைகளின் கூட்டம். கொடியார் மகளிர். கைப்புள் - கைவளை. 192. பீடிகை - பீடம். பூப்பலி - படைத்தல். கடைகொள - நன்கு படைக்க. கலம் - அணிகலம். பீடிகை - கடைத்தெரு குயிலுவர் - தோற்கருவி இசைப்போர். பண் இயம் - பண்ணிசைக்கும் இசைக்கருவி. பண்ணியம் - பண்டங்கள், உரவுநிர் அழுவம் - நீர் பரந்த கடல். மிக்குழீஇ - மிகுந்த விடத்து. வருணக்காப்பு - வருணத்திற்கேற்ற காவல், 193. பின்றை - பின்னே. தூசு - உயரிய உடை. பொத்தி - மூட்டி. ஊதுலைக் குருகின் - கொல்லன் உலைக்களத் துருத்திபோல. பொய்கையின் - பொய்கையின் மூழ்குவார் போல, நளி - மிக்க, நோற்று உடம்பு அடுவர் - கைம்மை நோன்பு நோற்று உடம்பை வதக்குவர். பரப்புநீர் - கடல். முளி யெரி - கனன்ற தீயினில். 194. மண் திணி ஞாலம் - மண் அணுக்கள் செறிந்த நிலவுலகம். பிறர் நெஞ்சு புகுதல் - பிறரால் காமுற்று நினைக்கப்படுதல். புத்தேள் - தேவர். விழுத்துணை - சிறந்த துணை. 195. மதி - திங்கள், மருள் - போன்ற, உய்த்து - செலுத்தி. கூஉய் - வருவித்து. கலக்கி - நினைப்பித்து, மடைக்கலம் - சோறு சமைக்கும் கலம். மடையன் - சோறாக்குபவன். செய்த ஆங்கு - செய்த அப்பொழுது. உருத்து - சினந்து. நஞ்சு விழி யரவு - திட்டிவிடம் என்னும் பாம்பு. 196. சினேந்திரன் - புத்தன். ஏதம் - குற்றம். பிரத்தியம் - காண்டலளவை. கருத்தளவு - அனுமான அளவை - அனுமான உறுப்புக்கள் ஐந்து; பக்கம்,ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம், அனுமானம், கருதலளவை, பரார்த்தானுமானம் - தன் காட்சி யினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். 197. இளமை நாணி - இளமை கண்டு பிறர் நாணுவதால் முதுமை எய்தி - முதுமைக் கோலங்கொண்டு. உரைமுடிவு காட்டிய - சொல்லை ஆராய்ந்து அதன் முடிவை விளக்கிய. உரவோன் - அறிவு வலியுடைய சோழன். மருகன் - வழித்தோன்றல், வியப்பு - அதிசயம். காதற் பாங்கன் - உயிர்த்தோழன். புத்த சைத்தியம் - புத்தன் கோயில். 198. அலர் தூற்றுதல் - பலருமறியப் பழிகூறல். 199. ஆறறி மரபின் அறிந்தோர் - நிருத்தம் முதலிய ஆறு அங்கங்களையும் உணர்ந்த முறையையுடைய அந்தணர். நீத்த - ஒழித்த. பெற்றியள் - தன்மையள். 201. அவலம் - துன்பம். அரற்று - புலம்பல். கவலை - மனச் சஞ்சலம். கையாறு - செயலறுகை. காமத் தீ விழைவு - காமமாகிய கொடிய விழைவு. உலைய - உலையாநின்ற; அழிதலுடைய. குறளை - கோள். பயனில் சொல் - அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்பல், வெகுளல் - சினத்தல். உருப்பன - தோன்றுவன. இத்திறம் - கொலை முதலிய தீய வழிகளில். படரார் - செல்லார். 202. சீலம் - ஐஞ் சீலம்; அவை; கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, காமமின்மை இரவாமை என்பன மகிழ்ச்சி வினை - நல்வினை. உண்குவர் - நுகர்வர். சந்தானம் - தொடர்பு, 203. நுகர்ச்சி - வேதனை. உள்ள அறிவு - விஞ்ஞானம். காழ்ப்பு - மனவைரம். சீரிய - சிறந்த. 203. மூத்து விளி மா - வயது முதிர்ந்து இறந்த விலங்கு. 204. கழி - உப்பங் கழி. அடிசில் - உணவு. உள்கி - கருதி. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி முன்னுரை சீவக சிந்தாமணி நம் தமிழ்மொழியில் விளங்கும் காவியங் களுள், காவியத் துறையில் தலைமை பெற்றது; பெருங்காவியம், சிறு காவியம் எனப்படும் காவிய நூல்களுள் முதற்கண் வைத்துப் போற்றப்படுவது; கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு நிலவிய தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பயனாகத் தோன்றியது. பாவினங் களென (ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துக்கு)ப் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் வகுத்தோதிய இலக்கணங்கட்கு நல்லஇலக்கியமாக நின்று உதவியது; உள்ளதன் உண்மை கூறும் இயல்பில் அமைந்த சங்கவிலக்கிய அகப் பொருட்டுறைகளை, இல்லது புனையும் வழக்காற்றிற்கும் பயன் படுத்திக் காட்டியது; நூலாசிரியன் தான் உணர்த்தக் கருதும் சமய நுண்பொருள்களைத் தான் செய்யும் நூலிடத்தே ஏற்றபெற்றி தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறலாம் என்ற கருத்தை வற்புறுத்திக் காட்டுவது; துறவியரும் ஏனையோர் போல இன்பத் துறைகளைத் தாம் செய்யும் நூல்களில் இன்றியமையாவிடத்து எடுத்து இனிதோதும் கடமையர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இயலுவது;அரசராயினும் யாவராயினும் ஆசை வழியுழன்று காமமே கன்றி நிற்பரேல், இறுதியில் அழிவரென்னும் உண்மையை வற்புறுத்துவது; எத்திறத்தோரும் வாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்து துறத்தற்குரிய ரென்பது; ஓரரசன் பல மனைவியரை மணக்கும் இயல்புடையன் என்பதைக் காவிய வாயிலாகக் காட்டுவது;அரசர்முதல் அனைவரும் விரும்பிப் படிக்கும் தமிழின்பம் செறிந்தது; இன்பத்துறைவிழைந்தோடும் இளையரே யன்றி, துறவு நாடும் உள்ளமுடைய தூயோரும் பெரிதும் பேணிக் கற்கும் பெருமையுடையது;புறச் சமயத்தவரும் பெரிதும் போற்றிப் படித்து இன்புறும் சமய நூலாவது; கல்லாதவரும் கற்றோர் சொல்லப் பெரிதும் காமுற்றுக் கேட்கும் கதைப் போக்குடையது;சுருங்கச் சொல்லின், அறம், பொருள், இன்பம், வீடுபறு என்ற இந்த நான்கிற்கும் இலக்கிய வாயிலாக இலக்கணமும் எடுத்துக்காட்டும் வழங்கும் இனிய தமிழ்த் தனிநூல் என்பது சாலும். இச் சீவக சிந்தாமணியைத் தமிழ் கற்றார் பலரும் “சீவக” என்ற அடையின்றியே “சிந்தாமணி” யென்றும் வழங்குவர். இச் செய்தி யொன்றே இந்நூல் தமிழகத்தே எத்துணையளவு பயின்றுளது என்பதை வற்புறுத்துவதாம். இந்நூலை நன்கு கற்றுச் சிறப்பவனே நவ்ல புலவன் என்பது தமிழ் கற்றாரிடையே நிலவும் ஒரு கொள்கையுமாகும். கற்றார் கூடும் கழகங்களிலும் இச் சிந்தாமணியைப் பற்றிச் சிறிதேனும் பேச்சு நிகழாதிராது. கலைத்துறை பற்றிய கூட்டத் தேயன்றி, சமயக் கூட்டங் களிலும் சில சொற்பொருள் காணும் நிகழ்ச்சிக்கு இச் சிந்தாமணி ஒரு சிறந்த ஆதார நூலாகவே மேற் கொள்ளப்படும். இச்சிந்தாமணியும், மணிமேகலையும் , சூளாமணியும், சமண புத்த சமயநூற் கருத்துக்களை விளக்கும் நூல்களாயினும், காவிய நலம் சிறந்து, படிப்போர்க்குத் தமிழ்க் காவிய வின்பமே பெருக நல்கும் நலமுடையவராய், அவர்தம் உளத்தே சமயக் காழ்ப்பு நிகழாதிருக்கும் நெறியைப் பயந்துவிட்டன. சமயக் காழ்ப்பே உருக்கொண்டாற் போன்ற சைவரும் வைண வரும் இத் தமிழகத்தே இல்லாமல் இல்லை. அவரனைவரும் தத்தம் சமய நூற்களை யுணர்தற்கு வேண்டும் தமிழறிவு பெரும் பொருட்டு இச் சமண நூல்களையும் தவிராது கற்கின்றனர். இக் காவியங் களிடத்தே இப் பெருமக்கட்கு எழுந்த நன்மதிப்பு ஒரு சில விடங்களில் தம் சமயக் கருத்தையும் நெகிழ்த்து விடவும் செய்து விட்டது. ஒரு சைவரையோ வைண வரையோ கண்டு, நுமது சமயநூற்படி எழுத்துக்கு என்ன இலக்கணங் கூறுவீர் என்று கேட்போ மாயின், அவர் அது தெரியாது சமண முனிவரான நன்நூல் செய்த பவணந்திமுனிவர் தம் சமண சமயக் கருத்தே பற்றி யுரைத்த எழுத்திலக்கணத்தையே எடுத் தோதுவதை இன்றும் காண்கின்றோம். இதனால், பிற்காலச் சமண முனிவர்கள் செய்த இலக்கண இலக்கியங்கள், ஏனைச் சைவ வைணவ மக்கட் கூட்டத்தே பெரிதும் நிலவி நிற்றற்கு வேண்டும் வாயில் செய்து வைத்த பெருமை, இச் சிந்ததாமணிக்கே உரியதென்பது இனிது விளங்கும். சமண முனிவர் நம் தமிழ் இலக்கியத் துறையில் செய்துள்ள நூல்கள் மிகப் பலவாயினும், சிறப்புடைய சிலவே இலக்கிய வளம் மேம்பட்டுத் திகழ்ந்தனவாகும். அவற்றுள் சிந்தாமணி, வளை யாபதி, குண்டலகேசி, சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம் என்ற இவை தமிழர் நன்கு அறிந்தனவாகும். இவற்றுள்ளும் குண்டலகேசி, வளையாபதி, யசோதர காவியம், நாககுமார காவியம் என்ற இவை ஏனைய வற்றைப் போல அத்துணைச் சீரிய இலக்கியநல முடையவல்ல; அதனாற்றான், அவை இறந்தொழிந்தன. ஏனைய போலக் கற்பார் உள்ளத்தே கவர்ச்சி தோற்றி, அறிவாராய்ச்சிக்கு இன்பம் பயக்கும் நலஞ் சிறந்திருக்குமாயின், அவை இக்காலத்தே எவ்வாற்றாலேனும் வெளிவாராமல் இருப்பதற்கு இடமில்லை. இவ்வாறு கூறியதன் பயன், பெருங்காவியம் சிறுகாவிய மெனப்படும் காவியங்கள் பத்தனுள் (சமண சமயத்துக்கு) புறச்சமயநூல்களாகிய சிலப்பதி காரமும், மணிமேகலையும், உதயணன் பெருங்கதையும் ஒழிய ஏனைய ஏழுமே தமிழ், இலக்கியச் சிறப்பு வாய்ந்தவை யென்றும், அவ்வேழனுள்ளும் சிந்தாமணியும், சூளாமணியும், நீலகேசியுமே இன்று காறும் நிலை பெறுதலால், ஏனைய அத்துணைச் சிறப்பில என்றும், இம் மூன்றனுள்ளும் சிந்தாமணியே எல்லோராலும் முதற்கண் வைத்துப் போற்றப்படும் பொறியுடையதென்றும் வற்புறுத்தியவாறு, சிலப்பதி காரத்தையும் உதயணன் பெருங் கதையையும் சமண சமயத்துக்கு உரியவை யென்பாரும் உளர். இனி, மேற்கூறிய காவியங்களுள் ஒன்றாக வைத்துப் பேசிய யசோதர காவியம், சிந்தாமணி முதலியவற்றைப் போலப் பெருமையும் தமிழ் நலமும் உடையதன்றாயினும் கதைப் போக்கில் நல்ல இலக்கிய வின்பமுடையதாகும். ஆதலாற்றான், இந்நூல், ஏனைய வளையாபதி, குண்டலகேசிகளும், நாககுமார காவியமும், இறந்து பட்ட பின்னரும் நின்று நிலவி, இவ்விருபதாம் நூற்றாண்டிலே அச்சும் ஏறிச் சில ஆண்டுகள் தமிழரிடையே தவழ்ந்து, பின் ஒடுங்குவதாயிற்று. ஒடுங்கு வதாயிற் றென்றோமேயன்றி இறந்து பட்ட தென்கின்றோ மல்லேம். ஊக்கமும வாய்ப்பு முடையோர் முயன்றால், இதனை இன்றே தமிழ் நாட்டில் நிலைபெறச் செய்து விடலாம். இனி, தமிழ் இலக்கியத் துறையுள் படிந்து, தமிழின்பம் திளைத் தாடிய புலவர் பெருமக்கள் பலரும், சிந்தாமணியைப் பொன்னே போல் போற்றிப் பரவியதன் பயனாக, புலவர் பலர், தாம் பாடிய பாக்களுள் இச் சிந்தாமணியை முடிமணியாகக் கொண்டு ஒழுகி யுள்ளனர். தணிகையுலாவைப் பாடிய கந்தப்பையர் என்பார், “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்” எனச் சிலேடை நயந்தோன்ற ஐம்பெருங் காவியங்களையும் முறையே கூறுபவர், சிந்தாமணியை முதற்கண் நிறுத்தி மொழிந் துள்ளனர். தன் பிறப்பால் தண்டமிழ் நாட்டிற்கு அழியாப் புகழை யீட்டிவைத்த கம்பன், தான் இராமாயணம் பாடிய வகையைக் கூறுமிடத்து, “சிந்தாமணியில் ஓரகப்பையும் திருக்குறளிலே ஓரகப் பையும் முகந்து கொண்டேன்” என்று சொன்னதாக ஒரு செய்தி தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது; தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, குறுந் தொகை முதலிய பண்டைத் தமிழ்ப்பெரு நூல்கட்கு உரை வகுத்த நச்சினார்க்கினியரால் நல்லுரை வகுக்கப் பெறும் சிறப்பு இச் சிந்தாமணியெய்தியிருக்கிறது. கற்றறிந்தா ரேத்தும் கலித்தொகையினையும் பத்துப் பாட்டினையும் பிற வற்றையும் ஆராய்ந்து தமிழின்பம் நுகர்ந்து, அந்நுகர்ச்சி ஆராமையால் குறுந்தொகைக்கும் உரை காண முயன்ற அந் நச்சினார்க் கினியரது உள்ளத்தைப் பிணித்து நிறுத்தக் கூடிய காவியநலம் இச் சிந்தாமணி பெற்றிருப்பதனாலன்றோ, அவர் இந்நூற்கும் இனிய தோர் உரை வகுத்துள்ளனர். மேலும், சேக்கிழார் பெருமான் காலத்தே சோழநாட்டை யாண்ட அநபாய சோழன், பிற நூல்களை ஒதுக்கி, ஒப்புயர்வற்ற தமிழ் நூல் இச் சிந்தாமணியே யென்று கொண்டு, இதனையே அல்லும் பகலும் படித்து இன்புற்றான் என்று வழங்கும் செய்தி, இச் சிந்தாமணி எவ்வெவ் வகையில் தமிழரிடையே பேணப்பெற்று வந்த தென்பதை நாமறிய உணர்த்துகின்றது. இச்செய்தி வாயிலாகவே, வேறொரு செய்தியும் நாம் உணர நிற்கின் பிணித்து இன்புறுத்தி வந்த இச் சிந்தாமணியின் இலக்கியச் சுவையே, தெய்வப் புலவரான சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணமென்னும் தீஞ்சுவைச் செந்தமிழ்த் தொடர்நிலைச் சிவநெறிச் செய்யுள் நூலைச் செய்தற்கு ஏதுவாயிற்று. இவ்வாறு, இச்சிந்தா மணியின் சிறப்பை யுரைக்கும் செய்திகள் பல உண்டு; அவற்றை யெல்லாம் விரிக்கிற் பெருகும். 1. நூலாசிரியர் சீவக சிந்தாமணியை இயற்றிய ஆசிரியர் திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவராவர். இவர் பிறந்த ஊர், குலம், பெற்றோர், முதலியன நன்கு தெரிந்தில. சைனர் மட்டில், கேள்வி வழியாகப் பெற்ற ஒரு வரலாற்றுக் குறிப்பை யுரைக்கின்றனர். அஃதாவது: “திருத்தக்க தேவர் சோழர் குலத்திற் பிறந்தவர். இளமையிலேயே தென்மொழி வடமொழி யென்ற இருமொழியிலும் நிரம்பிய புலமை பெற்றவர். அப்போதே துறவு பூண்டு சமண சமயத்துக் குரிய நூல் பலவும் கற்றுச் சீரிய சமண முனிவராய்த் திகழ்ந்தனர். இவர் காலத்தே மதுரையிலிருந்த சங்கப் புலவருடன் இவர் நட்புற்றுப் பழைய தமிழ் நூல்களை இனிது ஆராய்ந்தனர். ஒரு கால், அச்சங்கப் புலவர், ‘சமண சமயத்துப் புலவர் பலர்க்கும் துறவினை வியந்து பாடத் தெரியுமே யன்றி, இன்பச்சுவை கனியப் பாடுவது இயலாது போலும்’ என்றனர். அதுகேட்ட இவர் இச்சீவக சிந்தாமணியை யெழுதி அவர்கள் கொண்டிருந்த கருத்தை மாற்றச் செய்தனர்” என்பது. 2. நூல் பாடிய வரலாறு இனி, தேவர் சிந்தாமணியைப் பாடிய வரலாறு சமண சமயத்த வரிடையே ஒருவாற்றால் வழங்கி வருகிறது. அதற்குப் போதிய அகச்சான்று கிடைத்திலது. எனினும், சமணர் வழக்காறு, நெடுங் காலமாக இருந்து வருவது குறித்து அதனை மேற்கொள்வது தகுதியா கின்றது. அதனையும் கீழே தருகின்றோம். சமண முனிவர்கட்கு அகப்பொருட்டுறைகளை இன்பம் கனியப் பாடும் வன்மை இல்லை போலும் என்ச சிலர் இகழ்ந்து பேசக் கேட்ட திருத்தக்க தேவர், பொறாதார் போன்று, ஆருகத சமயத்தார் காதற் சுவையையும் ஏனைச் சுவைகளைப்போல இனிது பாடுவர்; ஆயினும், அக்காதற்சுவையை அவர் அறவே வெறுப்பவ ராதலின் அவர் பேச்சிலும் எழுத்திலும் அச்சுவை பொருளாக வரும் சொற்களும் கவிகளும் நீர் காண்கின்றிலீர் என்று மொழிந்தார். அதனைக் கேட்ட அப் புலவர்கள், அஃது உண்மையாயின், தேவரே ஒரு நூலியற்றிக் காட்டலாமே என்றனர் பின்பு, தேவர் தம் ஆசிரியரை யடைந்து தமக்கும் சங்கப்புல வர்க்கும் நடந்த சொல்லாடலை உரைத்து, தமக்கும் நூலியற்ற வேண்டுமென்றிருந்த வேட்கையைப் புலப்படுத்தி நின்றனர். ஆசிரியர், தேவரது புலைமை நன்கு அறிந்தவராதலின், ஆங்கே அவ்விடத்தே, அவர் கண் காணக் குறுநரி ஒன்று ஓடக்காட்டி, அவரை இந்த நரி பொருளாக ஒரு சிறு நூல் இயற்றப் பணித்தனர். தேவர் உடனே மிக விரைவில் நரிவிருத்தம் என்று பெரியதொரு சிறுநூலைப் பாடித்தம் ஆசிரியர்க்குக் காட்டினர். கண்ட ஆசிரியர் அந்நூலின் தமிழ் நலத் தைச் சுவைத்து, “உமக்கு நூலியற்றும் தகுதி நன்கு அமைந்துள்ளது; ஆகவே, நீவிர் சீவகன் வரலாற்றைக் காவியமாக இயற்றுவீராக” என்று அருளி, கடவுள் வணக்கமாக, “செம்பொன் வரைமேல் பசும்பொன்னெழுத் திட்ட தேபோல் அம்பொற் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர் அம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்” (சீவக.2) என்ற செய்யுளையும் பாடித் தந்தார். இப்பாட்டைச் சிரமேற் கொண்ட தேவர் தாமும் கடவுள் வாழ்த்தாக, “மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சே வடிசேர்து மன்றே” (சீவக.1) என்ற பாட்டைப்பாடி ஆசிரியர்க்குக் காட்டினர். இதனைப் படித்துப் பார்த்த ஆசிரியர் தாம் பாடிய பாட்டினும், தேவர் பாடியது சிறந்து நிற்பது கண்டு, தேவர் பாட்டை முதற்கண் வைத்துப் பின் தமது பாட்டை வைக்குமாறு வற்புறுத்தினர். ஆசிரியர் பாட்டை முன் வையாது தாம் பாடியதனையே தேவர் முன்வைத்ததற்கு அமைதி கூறுவாராய், நச்சினார்க்கினியர், “குருக்கள் கூறுதலானும், அருகனை வணங்குதலானும், அதனை முன்வைக்க வெனின், அவர் இது நன்று இதனை முன்னே வைக்க என்றலின் முன் வைத்தார்” என்று கூறுவதால், இவ் வரலாறு சிறிது வலியுறுகிறது. தேவர், பின்பு, இச் சிந்தாமணியைப் பாடி முடித்த பின் தம் ஆசிரியர்க்குப் படித்துக்காட்ட, அவர் பெரிதும் மகிழ்ந்து, முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து வாய்முரன்று முழங்கி யீன்ற மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ் கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ் செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தாமணி யோதியுணர்ந்தார் கேட்டார் இந்நீர ராயுயர்வ ரேந்துபூந் தாமரையாள் காப்பா ளாமே” (சீவக. 3152) என்ற ஓம்படைச் செய்யுளைப் பாடித் தந்தனர். இச் செய்யுட்கு உரைவகுத்த நச்சினார்க்கினியார், “சோழகுலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி, பிறர் குற்றம் கூறுகின்றாரென்று தளர்ந்து, அஞ்சி, முரன்று, முழங்கி ஈன்ற இருபத்தேழாகிய முத்தையும் மாணிக்கத் தையும் வடம்போலே கோக்கப்பட்டுத் திருவில் உமிழ்ந்து வீசும் சிந்தாமணி யென்னும் இச்செய்யுளை ஓதி யுணர்ந்தாரும் அவர் கூறக் கேட்டாரும் இந்திரராய்ப் பின்பு வீடுபெறுவர்; அவரை இப் பவத்துத் திருமகள் காப்பாள் என்க. இது தேவர் குருக்கள் கூறினா ரென்று உணர்க; தேவர் இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்தல் ஆகாமையின்....” என்று கூறுவதனால், இந்நிகழ்ச்சி நமக்குப் புலனாகின்றது. நூன் முடிந்தபின், தேவர் சிந்தாமணியை அரங்கேற்றற்கு ஆசிரியர்பால் விடை பெற்றுக்கொண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பாண்டியன் திருமுன் அரங்கேற்றலானார். அக்காலத்தே, சிந்தா மணியின் திட்ப நுட்பம், அழகு, அமைப்பு, நடை முதலிய பலவுங் கண்டு புலவர்கள் அனைவரும் மிக வியந்து பாராட்டினர். இதனி டையில் புலவர் சிலர், அந் நூலிலுள்ள அகப்பொருளும் அதன் இனிமையும் விரிவும் கண்டு, ‘இவ்வளவும் பாட வேண்டுமாயின், இவ்வாசிரியர் இளமையில் அந்நுகர்ச்சி நன்கு பெற்றவராதல் வேண்டும்’ என்று இழுக்குரைப்ப, அது பொறாத தேவர், அங்ஙனம் ஆகாது என்று கூறிக் கையிலே எரிமழு வேந்தித் தமது அகப்புறத் தூய்மையை அனைவரும் அறிய விளக்கினர். இதுகண்டு திடுக் கிட்ட அப்புலவோர் அவர்பால் தம் பிழை பொறுக்க வேண்டினர். தேவர், நீவிர் செய்தது பிழையன்று; அஃது என் துறவறத்தின் தூய்மையை வெளிக்காட்டிற்றாதலால்’ என்று மறுமொழி கூறினார். இவையெல்லாம் கண்ட அவையோரும் பாண்டிய மன்னனும் திருத்தக்க தேவரின் அருந்திறலை வியந்து புகழ்வாராயினர்.* இவ்வாறு சீவக சிந்தாமணியைப் பாடிச் சிறப்புற்றதனால் தேவர் சமண முனிவரிடையே “சிந்தாமணியாசிரியர்” என்று வழங்கப் பட்டனர் என்று சீவக சிந்தாமணி மூலத்தின் சைவ சித்தாந்த சமாசப் பதிப்பு முன்னுரை (பக். 20) “க்ருத்வ சித்தாமணிம் காவ்யம்” என்ற சுலோகம் ஒன்றைக் காட்டி வற்புறுத்துகின்றது. 3. நூலாசிரியர் காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சமண சமயத்தவர், இத் தமிழ்ச் சிந்தா மணியேயன்றி, சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர நாடகம், சீவந்தர சம்பு என்பன வட மொழியிலும், மகா புராணம், ஸ்ரீ புராணம் என்பன மணிப்பிரவாள நடையிலும் உள்ளன என்கின்றனர். இவற்றுள், தேவர் இயற்றிய சீவக சிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்டன இவை, பிற்பட்டன இவை என்பது நன்கு காணப்பட வில்லை. சைனருட்சிலர், தேவர் சீவக சிந்தாமணி பாடுதற்கு முதனூலாய் இருந்தது கத்திய சிந்தாமணி என்று உரைக்கின்றனர். தேவரும் தாம் இக் காவியம் பாடுதற்குத் துணை செய்த நூல்கள் இவையென்று எடுத்தோதவே இல்லை. “சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்; இதனைத் தெருண்டார் ஏற்றுக் கொண்டார்” (3144) என்றே கூறியொழிகின்றார். இந்நூற்கு உரைகண்ட நச்சினார்க் கினியாரும் இவ்வகையில் ஒன்றும் கூறிற்றிலர். இத்துறையில் கருத்தைச் செலுத்திக் கால வரை யறை காண முயன்ற ஆராய்ச்சி யாளருள், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், “திருத்தக்க தேவருடைய காலம் கி.பி. 900 அல்லது அதற்குப் பிந்தியதாக இருக்கலாம் +” என்று கூறுகின்றார். இக்காலக் குறிப்பும் பிறவும் கொண்டு ஆராயலுற்ற சென்னைச் சைவசித் தாந்த மகா சமாசக் காரியதரிசியாரான சைவத்திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். அவ்வாராய்ச்சி சிந்தாமணியின் காலமும் முதனூலும் அறிதற்கு மிக்க துணை செய்கின்றது. இவ்வராய்ச்சியில் முதற்கண், திருத்தொண்டர் புராண வரலாறு, யாப்பருங்கலவுரை, தொல்காப்பியச் செய்யுளியற்கு இளம்பூரணர் கண்டவுரை, உதயணன் பெருங்கதை வரலாறு முதலியவற்றின் துணையால்,தேவர் சிந்தாமணியைக் கி.பி. 800-1000 என்ற காலவெல் லைக்குள் செய்திருக்கவேண்டும் என முன்னெல்லை வகுத்துப் பின் வருமாறு கூறுகின்றார்:- *“சைனாசாரியர்கள் பற்பல சங்கத்தாராகப் பிரிக்கப் பட்டிருந்தார்கள். ஒவ்வொரு சங்கத்திலும் பல கணங்கள் இருந்தன. இக்கணங்கள் ஒவ்வொன்றிலும் பல கச்சைகள் அடங்கியிருந்தன. தென்தேசத்துச் சங்கங்களில் மிகப் பிரபலமா யிருந்தது திரமிள சங்கத்தில் பிரசித்தியடைந்தது நந்தி கணம்; நந்தி கணத்தில் மிகச் சிறந்தது அருங்கலான் வயம். இந்த அன்வயத்தோர் முதன் முதல் தீபங்குடியில் உள்ளோராயிந்தனர். இவர்கள் தமிழரேயாயினும், தமிழ், கன்னடம், சமக்கிருதம் என்ற மொழிகளில் புலமையுடைய ராய் விளங்கினார்கள். “இங்குக் குறித்த திரமிள சங்கத்தைச் சார்ந்தவர் குணபத்திர முனிவர். இவர், தம் ஆசிரியராகிய ஜினசேனரால் தொடங்கப் பட்டுச் செம்பாதி முடிவுபெற்ற மகாபுராணத்தின் பிற்பாகமாகிய உத்தர புராணத்தை இயற்றியவர். இவ்வுத்தர புராணம் இயற்றி முற்றியது கி.பி. 897.” “குணபத்திர முனிக்குப் பின் குமரசேன ரென்றோருவரும், அவர்க்குப் பின் சிந்தாமணி யாசாரியரும், அவர்க்குப் பின் ஸ்ரீவர்த்த தேவரும் இருந்தார்கள்.” இவருள், சிந்தாமணியாசாரியர் என்பவர் திருத்தக்கதேவர் என்றும், ஸ்ரீவர்த்த தேவர் என்பவர் சூளாமணியை இயற்றிய தோலோ மொழித் தேவர் என்றும் எய்தவைத்து. திருத்தக்க தேவர், சிந்தாமணி யெழுதிய காலம் கி.பி. 897-க்குப் பின்னதாகல் வேண்டும் என்று ஒரு குறி நிறுவி, மேலும் ஆராய்வார், சிந்தாமணியின் உரைச்சிறப்புப் பாயிரத்தில் வரும், “வண்பெரு வஞ்சிப், பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்திருத்தகு முனிவன்” என்ற விடத்தில் உள்ள “பொய்யா மொழி” என்னும் தொடர் சத்தியவாக்கியன் என்னும் வடமொழித் தொடரின் மொழிபெயர்ப்பெனக் கொண்டு, “கங்கராச்சியத்தைக் கி.பி. 908 முதல் 950 வரையில் ஆண்டவன் சத்தியவாக்கிய கொங்குணி வர்மபூதுக பெருமானடி யென்பவன். கங்கர்களிற் பலர் சைன மதாபி மானிகள். எனவே, உரைப்பா யிரத்திற் குறித்த பொய்யா மொழி இவனேயாக இருத்தல் கூடும். இவன் காலமும் மேலே ஆராய்ந்து கண்ட காலத்தோடு பொருந்தி யிருப்து கவனிக்கத்தக்கது.” “அன்றியும், இக்காப்பியத்திற்கு முதனூல் வாதீபசிம்மன் என் னும் சைனகவி வடமொழியிற் செய்த சத்ரசூடாமணியும், கத்ய சிந்தாமணியும் என்று கூறுவர். இஃது உண்மை யென்பது சிந்தாமணி யில் சிற்சில செய்யுட்கள் முற்கூறிய நூல்களின் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளமையால் தெளியலாம் ........ இதனால், வா தீபஸிம்மன் காலத்திற்குப்பின் சிந்ததாமணி தோன்றியிருத்தல் வேண்டும். வாதீப சிம்மன் காலம் 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டாகலாமென்பது கத்ய சிந்தாமணியின் முன்னுரையால் விளங்கும். ஆகவே, 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்தாமணி இயற்றப்பட்டடிருத்தல் வேண்டும்*” என்று கூறுகின்றார். 4. நூற்பொருள் சச்சந்தன் என்பவன் ஏமாங்கத நாட்டிற்கு அரசன். இவன் விதையதேசத்தரசன் மகளான விசயை என்பவனை மணந்து, கழிகாமத் தனாய், அவள் பால் பெறும் இன்பமே பெரிதாகக் கருதி யொழுகு வானாயினன். அவன் அரசியலைத் தன் தலைமை யiசன் கட்டியங் காரன் என்பவனிடத்து வைத்துத், தான் விசயை யுடன் அந்தப்புரத்தே ஒடுங்கிப், பெண்ணின்பக் களியாட்டில் மூழ்கிவிட்டான். கட்டியங் காரன் அரசுரிமையைத் தனக்கே உரிமை செய்துகொள்ளக் கருதி அவனோடு போர்தொடுத்தான். சச்சந்தன் மயிற்பொறியொன்றில் கருநிறைந்திருந்த விசயையை வெளியே போக்கிவிட்டு, தான் போர்க் கோலம் பூண்டு கட்டியங் காரனுடன் போர் செய்து மாண்டு போனான். மயிற் பொறியிற் சென்ற விசயை கட்டியங்காரனுடைய வெற்றி முழக்கம் கேட்டுச் சோர்ந்துவிடவே, மயிற்பொறி சுடுகாட்டில் இறங்கிற்று. அப்போது இரவுப்போது. அவள் ஆண்மகவு ஒன்றைக் கருவுயிர்த்தாள். அச்சமயத்தில் கந்துக்கடன் என்னும் ஒருவன் அங்கே இறந்த தன் மகனை அடக்கம் செய்ய வந்தவன், இக் குழந்தையை எடுத்துச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளர்த்து வரலானான். அவ்வாறு வளர்ந்த சீவகன் அச்சணந்தி யென்ற பெரியோன்பால் எல்லாக்கலைகளையும் கற்றான்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்நிலைத் தலைமகனாக சீவகன் விளக்க முற்றான். விசயை தெய்வ மொன்றின் துணையால் தண்டகவனத்துத் தவப்பள்ளியில் ‘தன் மகன் வாழ்க’ என நோன்பு நோற்கலுற்றான். சீவகன் கலை நிரம்பிய காளையாயபோது, ஆசிரியனால் தன்பிறப்பு வரலாறு உணர்ந்துகொண்டும், அவன் பணித்த வண்ணம் ஏற்ற காலம் வருமளவும் தான் அரசகுமரன் என்பது பிறர் அறியா வண்ணம் ஒழுகிவரலானான். தந்தையாய் வளர்த்த கந்துக்கடன் பாலும், அவன் மனைவி சுநந்தைபாலும் மாறா அன்புபூண்டொழு கினான். இச் சீவகனுக்குரிய அரசுரிமையைத் தனக்கேயாக்கிக் கொண்ட கட்டியங் காரன் என்பவனே என்பவனே நாட்டை ஆண்டு வந்தான். அந்த நகரத்தேயே சீவனும் வளர்ந்து வந்தான். சீவகன் சிறப்புற்று வரும் நாளில் இராசமாபுரத்து ஆயர் நிரை களைச் கவர்ந்து சென்ற வேடர் கூட்டத்தை அரசனுடைய தானை வீரர் வெல்லமாட்டாது முதுகிட்டோடினார்; சீவகன் தன்தோழருடன் சென்று “ஆளற்றமின்றி” வேடருடன் பொருது அவரைத் துரத்தி விட்டு, ஆனிரையை மீட்டு ஆயர்கட்குத் தந்து, அவர் தம் தலைவனான நந்தகோன் என்பவன் மகள் கோவிந்தை யென்பவளைத் தன் தோழருள் ஒருவனான பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தான். அவ்விராசமாபுரத்தே வாழ்ந்த சீதத்தன் என்னும் வணிகன், தன்பால் கலுழவேகன் என்னும் விஞ்சையர் வேந்தன் அடைக்கலப் படுத்திய அவன் மகள், காந்தருவதத்தையை இசைப்போர் செய்து வெற்றிபெறுவோனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தெரிவிப்ப, அப்போரில் அரசர் பலரும் தோற்றது கண்டு, சீவகன் சென்று, அவளை இசைத்துறையில் தோல்வியுறச் செய்து மணம் செய்து கொண்டான். இராசமாபுரத்து மாந்தர், வேனிற்காலத் தொருநாள், பொழில் விளையாட்டும் புனலாட்டும் விழைந்து ஒரு பூம்பொழிற்குச் சென்றி ருந்தபோது, குணமாலை, சுரமஞ்சரி யென்ற செல்வமங்கையர் இருவர், தாம் செய்த சுண்ணப்பொடி காரணமாகத் தம்முள் நட்பு மாறுபட்டுப் பிரிந்தேகினர். அவருள், சுண்ணத்தால் மேம்பட்ட குணமாலை, நீராடிவிட்டு வரும்போது, அசனிவேகமென்னும் அரசுவா மதம் மிக்கு அவளைக்கொல்ல ஓடிவந்தது. அதுகண்ட சீவகன் அவ்யானை யையடர்த்து அவளை உயிருய்வித்தான். பின்பு அவன் அவள் மீதும் அவள் அவன் மீதும் கருத்தைப் போக்கிக் காதலுற்று மணம் செய்து கொண்டனர். இஃதிவ்வாறாக, அரசுவா அடர்க்கப்பட்டது அறிந்த அரசன், சீவகனைப் பற்றிக்கொண்டே குங்கால், பெரும் புயலும் மழையும் வந்து மோதிப் பேதுறுப்ப, அதனிடையேவந்த சுதஞ்சணன் என்னும் நன்றி மறவாத் தேவன், சீவகனைத்தான் வாழும் மலைமுடிக்குக் கொண்டு போயினன். சீவகன் அத்தேவன்பால் சிலநாள் தங்கியிருந்து, பின்பு வேறு நாடுகளைக் காண வேட்கைகொண்டு, அவன்பால் விடைபெற்று, மலையும் காடும் இடையிட்ட நாடு பல கடந்து பல்லவ தேய்த்துச் சந்திராப மென்னும் தலைநகரை யடைந்தான். அங்கே அந் நகரவேந்தன் மகன் உலோகபாலன் என்பானுடன் நட்புற்றான். அக்காலை, அரசன் மகள் பதுமை யென்பவளைப் பாம்பு தீண்ட அவள் அறிவு சோர்ந்தாளாக, பலர் பலவாறு முயன்றும் அவள் தெளியாளாகவே, சீவகன் சென்று, அந் நஞ்சினைப் போக்கி அவட்கு நலம் செய்து அவளையும் மணந்து கொண்டான். சின்னாள் கழிந்ததும், ஒருவருக்கும் சொல்லாமல், சீவகன் வேற்றுருக் கொண்டு அந் நாட்டைவிட்டுப் போய்விட்டான். போனவன், தக்க நாட்டை யடைந்து அந்த நாட்டுக், கேமமா புரத்தில் வாழ்ந்த சுபத்திரன் என்னும் வணிகன் நாடோறும் செய்து வந்த விருந்துக்குச் சென்றான். அவ்வணிகனுக்குக் கேமசரி என்றொரு மகள் இருந்தாள். அவள் பிறந்தநாளைக் குறித்த காலக்கணக்கர், “இவட்குக் கணவனாவான் எவனோ அவனன்றிப் பிற ஆடவர் எவரும் இவள் கண்ணிற்கு ஆடவராகத் தோன்றமாட்டார்” என்று உரைத்திருந்ததனர். சீவகனைக் கண்டதும் அவள் நாணித் தலை கவிழ்ந்து நிற்ப, இவனும் அவள் பால் வேட்கை கொண்டான். இருவர்க்கும் திருமணம் இனிது நடந்தது. அவளோடு சீவகன் சிலநாட்கள் இருந்துவிட்டு, அவளிடத் தும் பிறரிடத்தும் கூறாமல், பிரிந்தேகி, எதிர்ப்பட்ட ஒருவனுக்குத் தன் அணிகலனை ஈந்து அறம் சில பகாந்து மேலே செல்வானாயினான். பின்பு, சீவகன் மத்திமதேயத்து ஏமமாபுரத்தையடைந்து, அந் நகரத்து வேந்தன் மக்கட்குப் படைக்கலம் பயில்விக்கும் ஆசிரி யனாய் அமர்ந்து வில் வாள் முதலிய படைப் பயிற்சி நல்கி வந்ததோடு, அவ்வப்பொழுது அறநெறியும் அறிவுறுத்தி வந்தான். அவ்வரசன் மகள் கனகமாலை யென்பவட்கும் சீவகனுக்கும் காதற் கலப்புண்டாகிறது. இதனையறியாத அரசன் தன் மக்கட்கு அவன் நல்கியிருந்த பயிற்சிச் சிறப்பைச் கண்டு வியந்து தன் மகள் கனக மாலையைத் திருமணம் செய்து தந்தான். அவள்பாலும் சீவகன் சில நாட்களே தங்கினான். இதற்கிடையே, இவன் உயிரோடிருக்கும் திறத்தை இராசமாபுரத்தேயிருந்த காந்தருவதத்தை தன் விஞ்சை யாலுணர்ந்து, சீவகன் தம்பியான நந்தட்டன் என்பவனை விஞ்சையால் ஏமமாபுரத்தை யடையுமாறு செய்தாள். நந்தட்டன் சீவகனைக் கண்டு அவனுடன் தானும் இருந்து வரலானான். பதுமுகன் முதலிய (சீவகனுடைய) தோழர்கள், சீவகனைத் தேடி வருங்கால், தண்டகவனத்துத் தவப்பள்ளியில் விசயையைக் கண்டு அளவளாவிக் கொண்டு, இவ் வேமமா புரத்தையடைந்து, நிரைகவர் வார்போல் போர் தொடங்கிச் சீவகனை யடைந்து தாம் விசயையைக் கண்ட செய்தியை உரைத்தனர். சிவகன், அவர் அனை வரையும் அரசனுக்கும் அவன் மக்கட்கும் கனகமாலைக்கம் அறிவித்து அவர்பால் விடை பெற்று வந்து, விசயை அடியில் வீழ்ந்து வணங் கினான். மகனைக் கண்டு மனம் மிக மகிழ்ந்த விசயை; சீவகனை, உடனே விரைந்துசென்று மாமனான கோவிந்தராசனைக் கண்டு, அவன் துணைமை பெற்றுக் கட்டியங்காரனை வெல்லவேண்டு மெனப் பணித்தாள். அப்பணியை மேற்கொண்ட சீவகன் இராசமா புரத்தை யடைந்து, தோழரை ஓரிடத்தே இருக்க வைத்துத்தான் வேற்றுருக் கொண்டு நகர்க்குள் நுழைந்து, அங்கே சாகரதத்தன் என்னும் வணிகன் ஒருவனுடைய கடையை அண்மினான். அப்போது அவ்வணிகன் மகள் விமலை யென்பவள் பந்தாடிக் கொண்டிருந்தாள். அவள் சீவகனைக் கண்டு அவன்பால் தன் கருத்தையிழந்து காதற்காம வேட்கை மிகுந்தாள். சீவகனும் அவள்பால் காதல் கொண்டான். இதற்குள், சாகரதத்தன் கடையில் விலையாகாமல் இருந்த சரக்கு விலையாகிவிட்டது. “மகட்குக் கணவன் வருங்கால் விலையாகாப் பண்டம் விலையாகி விடும்” என்று விமலையின் பிறப்புக்குறிப் பெழுதினோர் குறித்திருந்தனர். அதனால், அவன் சீவகனுக்கு விமலையை மணம் செய்து விடு கின்றான். சீவகன் அவளுடன் இரண்டு திங்கள் இருந்தான். பின்பு சீவகன் தன் தோழரை யடைந்தான். அவர்கள் குணமாலை யுடன் பிணங்கி நீங்கிய சுரமஞ்சரி, “ஆடவர் முகத்தையும் பாரேன்; அவர் பெயரையும் செவியிடைக் கேளேன்” என்று நோம்பு பூண்டிருப் பதைத் தெரிவித்து, அவளை மணந்து வருமாறு அவனைத் தூண்டினர். சீவகன் முதியவொரு வேதியன் உருக் கொண்டு சுரமஞ்சரி யிருந்த கன்னிமாடம் அடைந்து கவர்பொருள் பட இனிய சொல் லாடி, பாட்டிசைத்து, அச் சுரமஞ்சரியைக் காமன் கோட்டத்துக்குச் செல்வித் துத் தானும் உடன் சென்றான். அங்கே அவள் காம தேவனை வழிபட, தோழர் சூழ்ச்சியால் அவக்குத் தன் வடிவினை முடியக் காட்டி அவளை மணந்து கொண்டான். சுரமஞ்சரிபால் சின்னாள் இருந்த சீவகன் குதிரை வாணிகன் போல வடிவுகொண்டு விதைய நாட்டையடைந்து, ஆங்கே தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு கட்டியங்காரனை வெல்வதற்க வேண்டி யவற்றைச் சூழலுற்றான். கோவிந்தராசனும் கட்டியங் காரன் தனக்கு வஞ்சனையாக விடுத்திருந்த ஓலையைக் காட்டினான். பின்னர், திரிபன்றி யொன்றை நிறுவி, “இதனை அம்பெய்து வீழ்த்துபவர்க்கு என் மகள் இலக்கணையுரியள்” என்று கோவிந்த ராசன் அரசர்கட்கும் கட்டியங்காரனுக்கும் ஓலை விடுத்தனன். அவ்வாறே கட்டியங்காரன் தன் மக்கள் நூற்றுவரோடு வர, ஏனையரசரும் வந்து சேர்ந்தனர். வந்தோர் அனைவரும் அத்திரி பன்றியை எய்தமாட்டாராய் மெலிந் தாராக, சீவகன் அதனை வீழ்த்தி வெற்றிபெற்றான். அவன் இன்னான் என்பதைக் கோவிந்த ராசன் முடிவில் வேந்தர் பலர்க்கும் தெரிவித்தான். வானிடத்தே ஓரியக்கன் தோன்றி, “சீவகன் என்னும் அரிமா, கட்டியங் காரன் என்னும் யானையின் உயிரைச் செகுக்கும்” என்று கூறினான். உடனே கட்டியங்காரன் சினங்கொண்டு போருக்கு எழுந்தான். அவன் படை யெழுந்தது;மக்கள் எழுந்தனர்; போர் மிகக் கடுமை யாக நடந்தது;போர் முடிவில் கட்டியங்காரன் பட்டமழிந்தான்; அவன் தானை பட்டது;மக்களும் பட்டனர்; விசையை கேட்டு மகிழ்ச்சி எய்தினாள். பின்பு சீவகன் ஏமாங்க நாட்டுக்கு அரசனாய் மணி முடி புனைந்து கொண்டு, தம்பியர்க்கும், தோழர்க்கும், செய்தற்குரிய சிறப்புக்களைச் செய்தான். கோவிந்தராசன் மகள் இலக்கணை யாரையும் அரசற்குரிய முறைப்படியே திருமணம் செய்து கொண்டான். சீவகன் நாடாட்சிபுரிந்து வருகையில், விசயமாதேவி துறவுபூண்டாள். சீவகன் மனைவியரான காந்தருவதத்தை முதல் இலக்கணை ஈறாகவுள்ள மனைவியர் பலரும் முறையே நன் மக்களைப் பயந்தனர். அவர்களும் செவ்வியராக வளர்ந்து சிறப்பெய்தினர். சீவகனுக்கு முதுமை யெய்தலுற்றது. ஒரு நாள் சோலை புக்கு இனிதிருந்த சீவகன் ஆங்க நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றைக் கண்டு துறவு மேற்கொள்ளத் தொடங்கினான். தன் மூத்தமகன் சச்சந்தனை அரசனாக்கி ஏனைத் தம்பியரை அவற்கு அரசியற் சுற்றத்தவராய் உரிமை செய்தான். பின்பு முனிவர் களைக் கண்டு நல்லறம் கேட்டு நற்றுறவு பூண்டு, நோன்பு பல ஆற்றி, கடையிலா இன்பநிலையாகிய சிவகதி பெற்றான். அவன் மனைவியரும் அவன் பிரிவாற்றாராய் வருந்திப் பின்பு துறவு பூண்டனர். 5. கிளைக் கதைகள் மேலே கூறிப் போந்த வரலாற்றிற்கு உறுப்பாகச் சிறு சிறு நிகழ்ச்சிகள், இணைக்கப்பெறுகின்றன. ஆற்றொழுக்காகச் செல்லும் சீவகன் வரலாற்றில் இவை இடையிடையே விரவி நின்று படிப்போர் உள்ளத்தில் சலிப்புத் தோன்றாவண்ணம் பயன்படுகின்றன வாதலின், இவற்றையும் ஈண்டுச் சுருங்கிய அளவில் காண்டல் நலமும் முறையு மாம் என்பது பற்றிக் கீழே குறிக்கின்றோம். 1. அச்சணந்தி யாசிரியர் :- அச்சணந்தி சீவகனுக்கு இளமையில் பல்வகைக் கலைகளையும் நன்கு கற்பபித்த ஆசிரியனாகும். இவன் வெள்ளிவெற்பைச் சார்ந்த வாரணவாசி யென்னும் பேரூரிலிருந்து அரசு புரிந்த உலோகபாலன் என்னும் வேந்தனாவான். அவ்வேந்தன் தன் மகனுக்கு அரசு தந்து, தான் துறவுபூண்டு தவம் செய்கையில் பாவமொன்று வந்து அவனைப் பற்றுகிறது. அதன் பயனாக அவன் யானைத் தீயென்னும் நோயுற்றுச் சோறு வேண்டி நாடெங்கம் திரிந்தலை கின்றான். அலைபவன் இராசமாபுரம் அடைந்து கந்துக் கடன் மனையில் இடப்பெறும் சோறுண்டு, சீவகனையும் கண்டு, அவன் சொற்கேட்டு யானைத்தீ யென்னும் நோய் நீங்கி, அவற்கு ஆசிரி யனாய்க் கலை வழங்குகின்றான். சீவகன் கலைத்துறை முற்றியபின், இவ்வச்சணந்தியே அவன் தந்தை சச்சந்தன், விசயையின் பெண்மை நலமே பேணிக் கட்டியங் காரன்பால் அரசாட்சியை விடுத்து அந்தப் புரத்தே ஒடுங்கி யிருந்ததும், கட்டியங்காரன் அவனைக் கொன்றதும், விசயை மயிற்பொறியிற்சென்று சுடுகாட்டில் சீவகனைப் பயந்ததும், அவனைப் பின் கந்துக்கடன் கொணர்ந்து, வளர்த்ததும் பிறவும் எடுத்துரைக்கின்றான். சீவகன் அதுகேட்டுக் கட்டியங்காரன் பால் சினம் மிகுந்து போர்க்கெழ நினைத்தலும், அச்சணந்தி அவனைத் தடுத்து, ஓர் யாண்டுகாறும் கட்டியங்காரன்பால் வெகுட்சி யில்லா திருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறான். சீவகன் அவ்வாறே உடன்படுகின்றான். பின்பு, அச்சணந்தி துறவு மேற்கொண்டு அவன் பாலும் கந்துக்கடன் முதலாயினார் பாலும் விடைபெற்று நீங்குகின்றாள். 2. அனங்கமாலை:- அனங்கமாலை இராசமாபுரத்தே யிருந்த நாடகமகளாவாள். இவள், ஆடல் பாடல் அழகு என்ற மூன்றினும் மேம்பட்டு விளங்குவது கண்ட நாடகப் புலவர், அவளை அரங்கேற்று கின்றனர். சீவகனும் அவ் வரங்கிற்கு அழைக்கப்படுகின்றான். சீவகன் நண்பரும் அவனுடனே செல்கின்றனர். அவட்கு நெற்றிப்பட்டம், முடிக்கோதை, முத்தாரம் முதலியவற்றை அரசகுமரரோ, அவரோடு ஒருங்கு எண்ணப்படும் பரதகுமரரோ (வணிகர்) அணிதல் வேண்டும் என்னும் மரபுபற்றி, சீவகனை அவட்கு அணி திருத்துமாறு அங்கிருந்த நடையறி புலவர் நவில்கின்றனர். அவனும் அவ்வாறே செய்கிறான். அவளும் ஆடத்தொடங்கி. “செங்கதிர்ச் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்பக் கோதை பொங்கப்பொன் னோலை வட்டம் பொழிந்துமின் உகுப்பப் போர்த்த குங்குமஞ் சாந்து வேய்ந்து குண்டலந் திருவில் வீச அங்கதிராரம் மின்ன அரிவைகூத் தாடுகின்றாள்.” (சீவ.681) அவன் தனக்கு அணி திருத்தும்போதே அவள் சீவகன்பால் பெருங் காதல் கூர்கின்றாள். தனக்குள்ளே, “வளமலர் அணியப் பெற்றேன்; வால்வளை திருத்தப்பெற்றேன்;களன் எனக் கரையும் அல்கல் கையி னால் தீண்டப்பெற்றேன்....... மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்” (688) என மொழிந்து அவனையே நினைத்து உருகு கின்றாள். அவள் பார்வையும் அவன் பேரிலேயே சென்று பதிகின்றது. அரசனான கட்டியங்காரனுக்கு அவள்பால் பொல்லாக் காம வேட்கை பொங்குகின்றது. அதனால் சீவகன்பால் அவனுக்குப் பொறாமை மிகுகின்றது. எனினும், அக்கட்டியங்காரன் அவளை வலியக் கொண்டு சென்று அவள் சீவகசாமியோ என்று வாய் விட்டரற்றியும் விடாது கற்பழித்து அவளைக் கைவிட்டு விடு கின்றான். பின்பு சீவகன், கட்டியங்காரனைக் கொன்று அரசு கட்டிலேறி ஆட்சிபுரியுங் காலத்தில் வாமலேகையென்னும் தோழிபால், தன் காதற்றன்மையை இவ்வனங்கமாலை ஓலை யொன்றெழுதித் தெரி வித்து அமைந்து போகின்றான். 3. சுதஞ்சணன்:- சுதஞ்சணன் சந்திரோதயமென்னும் மலையி லுள்ள விஞ்சையனாவான். இவன் நாயாகப் பிறந்து கட்குடியன் ஒருவன்பால் வளர்ந்து வருகின்றான். ஒருகால் இராசமா புரத்து மக்கள் வேனில் விளையாட்டுக் கருதிப் பூம்பொழி லொன்றிற்குச் சென்றிருக் கின்றனர். ஒரு புறத்தே அந்தணர்க்கென்று சோறு சமைத்து வைக்கப் பெறுகிறது. அதனை இத்தேவனாகிய நாய் சென்று தீண்டுகிறது. வேதியர் அதனைக் கண்டு துரத்தித் துரத்தி யடிக்கின்றனர். அது, பின்பு தாள் ஒடிந்து அருகேயிருந்த கயத்து நீரில் விழுகிறது. நாய் அடிப்பட்டது கண்ட கட்குடியன் வெகுண்டு வேதியர் களைத் துன்புறுத்த முயல்கின்றான். அவர்கள் அஞ்சி நடுங்கு கின்றனர். சீவகன் அங்கே போந்து நாயை இழந்து நிற்கும் அவனது துயரத்தைப் போக்கி, அகற்று முகத்தால் அந்தணர்க் குற்ற இடுக் கணையும் நீக்குகின்றான். இறக்கும் நிலையில் இருக்கும் நாயின் துன்பம் சீவகன் கண்கட்கு இலக்காகின்றது. அவன் உடனே அதனையணுகி, அதன் செவியில், பஞ்சாத்தி காயமென்னும் “ஐம்பத அமுதம்” (மந்திரம்) ஓதுகின்றான். நாய், தன் உடம்பு நீங்கித் தேவ உடம்பு பெற்றுச் சுதஞ்சணனாகின்றது. தேவவுடம்பு பெற்ற சுதஞ்சணன், சீவகன்முன்னே தோன்றி, தான் இன்னான் என்பதை முனபு கூறிப் பின்பு, தன் உலகும், உலகிற் போகமும சீவகன் திருவடியில் வைப்பதாகச் சொல்கின்றான். அவ னைக் கண்டும், உரையைக் கேட்டும் வியப்புக்கொண்ட சீவகன், தனக்குப் பிறவாற்றால் ஒரு குறையும் இல்லையென்றும், ஒரு கால் தனக்கு இடுக்கண் நேரின் வந்து துணைசெய்வது அமையுமென்றும் கூறுகின்றான். “நின் நிழல்போல நீங்கேன், இடர்வரின் நினைக” (964) என்று சொல்லி விடைபெற்று நீங்குகின்றான். நீங்கினவன், சந்திரோதய நகரத்தே தன் தேவியர் சூழ இருந்து சீவகன் குணங்செயல்களை அவன் கூறக், கேட்டோர் யாழிடைப் பெய்து பாடக்கேட்டு மகிழ்ந்திருக்கின்றான். அப்போது, கட்டியங் காரன் விடுத்த வீரரால் ,குணமாலையுடன் இருந்த சீவகன் கைப்பற்றப் பட்டுச் செல்பவன் சுதஞ்சணனை நினைக்கின்றான். உடனே மழையும் மின்னலும் தோற்றி, அவற்றினிடையே தான் போந்து, சீவகனைச் சுதஞ்சணன் தன் நகரத்துக் கொண்டுசென்று சின்னாள் உடனிருத்தி ஓம்புகின்றான். சீவகன் பலவேறு நாடுகளைக் காணும் வேட்கை கொண்டு அவன் பால் விடை வேண்டியபோது, அவன் செல்லுதற்குரிய நெறி யின் இயல்பு கூறி, மலையடிகாறும் வந்து வழிவிட்டு நீங்குகின்றான். இவ்வாறு விடைபெற்றுப் போந்த சீவகன், ஏமமாபுரத்தை யடைந்து, அந்நாட்டு அரசன் மகள் கனக மாலையை மணந்து இனிதிருக்குங்கால் தன்னை யடைந்த நந்தட்டனுக்குத் தன்னைச் சுதஞ்சணன் கொண்டுபோன செய்தி கூறுவான். “பெண்ணிடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது நன்றென்று எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினால் நெருங்கப் பட்டு கண்ணிநான் இயக்கன் தன்னைச் சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி அண்ணல்வந் தழுங்கத் தோன்றி ஆங்கென்னைக் கொண்டு போந்தான்” (1759) என்று கூறுகின்றான். பின்பு சீவகன் பகைவென்று அரசுகட்டிலேறிய காலத்தில், சுதஞ்சணன் ஏனைத்தேவரும் தேவியரும் சூழப்போந்து சீவகற்கு மணிமுடி சூட்டுகின்றான். தான் அரசு நடாத்துங் காலத்தில், சீவகன் இச்சுதஞ்சணனுக்கு ஒரு கோயில் கட்டி, அதன்கண், அவனுருவத்தைப் பொன்னால் செய்தமைத்து அவன் வரலாற்றை நாடகமாக எழுதிக் கூத்தரைக் கொண்டு ஆடச்செய்து இன்புறு கின்றான். பிறிதொரு காலத்தே, சுதஞ்சணன் போந்து, சீவகன் வரலாற்றைத் தான் நாடகமாக அமைத்து ஆடிக் காட்டிச் சீவகனை மகிழ்வித்துச் செல்கின்றான். சீவகன் துறவு பூண்டபோது, அவன் தலைமயிர், பூமாலை முதுலியவற்றைச் சுதஞ்சணனே எடுத்துச் சென்று பாற்கடலில் ஏறிந்து விட்டு வருகின்றான். அவன் பின்பு சீவகனை யடைந்து அவன் துறவின் சிறப்பை வாயாரப் புகழ்ந்து திருவடியை வணங்கித் தொழுதுவிட்டுத் தன் நகரை யடைகின்றான். மறுபடியும் சீவகன் துறவு முற்றி அருகத் தன்மையெய்தியது கண்டு, பெருமகிழ்ச்சியால் பலவாறு பாடியாடிக் களிக்கின்றான். இதனைத் தேவர், “மண்ணெலாம் பைம்பொன் மாரி மலர்மழை சொரிந்து வாழ்த்தி, எண்ணிலாத் தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடிக், கண்முழுது உடம்பில் தோன்றிச் சுதஞ்சணன் களிப்புற்றானே ” (3094) என்று இயம்பு கின்றார். 4.வேடன் வரலாறு:- அச் சுதஞ்சணன் பால் விடைபெற்று, பலவேறு நாடுகளைக் காணும் வேட்கையுற்று, அவன் காட்டிய நெறியே பற்றிவரும் சீவகன், ஒரு மலைச் சாரலில் இருள்படப் பொதுளிய காடொன்றின் இடையே வந்து கொண்டிருக்கின்றான். அவ்வழிக்கு அருகே தோன்றிய மலையுச்சியில் குறவர் பலர் வாழ்கின்றனர். அவர்கள் தோலை ஆடையாக வுடுத்திருக்கின்றனர். மரவுரியும் உடுத்திருக்கின்றனர்; கையில் அம்பும், தோளில் வில்லும் உடையர். அவர்கட்குத் தலைவன் ஒருவன் உளன். அவனே சீவகனை எதிர்ப்படு கின்றான். அவனைப் பற்றிக் கூறப் போந்த தேவர், “காழக மூட்டப் பட்ட காரிருள் துணியு மொப்பான்; ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான்; வாழ்மயிர்க் கரடி யொப்பான்;வாய்க்கிலை அறிதல் இல்லான் மேழகக் குரலி னான்ஓர் வேட்டுவன்” (1230) என்று உரைக்கிறார். இவ்வேடன் தன் பெண்டாட்டியுடன் வந்தே சீவகனைக் காண்கின்றான். சீவகனும் அவனைப்பார்த்து, “நீ எம் மலையில் வாழ்கின்றாய்?” என்று கேட்க, அவன் தான் வாழு மிடத்தை ஆங்கிருந்தே சுட்டிக் காட்டுகின்றான். சீவகன், அவனை மேலும் சில வினாவத் தொடங்குகின்றான். சீவகன் : நீவிர் உண்ணும் உணவு யாது? வேடன் : (உவப்புடன்) பன்றியைக் கொன்று, அதன் இறைச்சி யைப் புழுக்கித் தேனில் தோய்த்து உண்போம்; நெல் லரிசியில் இருந்து இறக்கப்படும் தொண்டிக் கள்ளை அருந்துவோம். சீவகன் : நீவிர் இப்போது இவ் வெயினர் குடியிற் பிறந்து இழி வான வாழ்க்கை நடாத்துதற்குக் காரணம் யாது, தெரி வீரா? வேடன் : (வியப்புடன்) நீயே, சொல். சீவகன் : முன்னைப் பிறப்பில் இவ்வாறு பல உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனும், பிற தேனும், கள்ளும் உண்ட பாவமே, இப்பிறவியில் இவ்வாறு தாழ்வான நிலையில் உங்களை உழலச் செய்கிறது. வேடன் : எம்மவர் பலரும் இந்த ஊனும், தேனும், கள்ளும், மிக நல்லன் என்பார்களே. இவற்றைக் கைவிட்டால், யாங்கள் எவ்வாறு வாழ முடியும்? (இகழ்ச்சியாய்) ஐயா, இவையெல்லாம் சொல்லி எங்கள் உடம்பை வதைக்காதே; வேறு எவர்க்காகிலும் இவற்றைச்சொல். சீவகன் : (முறுவலித்து) நல்லது. ஒன்று கேட்கிறேன்: “ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ? ஊன்தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ?” (1242) இரண்டையும் ஊன்றிப் பார்த்து எது தக்கது சொல். வேடன் : தேவராய் இருப்பதுதான் நல்லது. இது தெரியாதா? சீவகன் : உனக்குத் தேவனாய் இருக்க விருப்பமா? வேடன் : எனக்கா? அப்படி ஆவதற்குத்தான் ஆசை. சீவகன் : அப்படியானால், ஊன் முதலியவற்றைத் தின்னாமல் இருக்கவேண்டாவா? வேடன் : (நகைத்து) ஆமாம். ஊன் தின்னாதிருந்தால் தேவராக முடியும். சீவகன் : அடே, நீ நன்றாய் அறிந்துகொண்டாய். நீ உயர்கதி அடைவதற்கு இதுதான் வழி. இறைவன் தன் ஆகமத்தில், “உயிர்க்கொலை செய்யலாகாது; ஊன் தின்னலாகாது”என்றுஉரைத்திருக்கின்றார். நீயும் அவ்வாறே செய்க. வேடன் : அப்பொழுது எங்களுக்கு உணவு வேண்டுமே சீவகன் : காட்டில், கிழங்கு, கனி முதலியன உண்டல்லவா? அவற்றை உண்க. இச் சொற்களைக் கேட்ட வேடன் மனம் தெளிந்து ஊனுண்டலைத் தவிர்த்து தன் மலையிடத்து மனைக்குச் சென்று இனிது வாழ்கின்றான். 5. தேசிகப் பாவை :- பல்லவதேயத்துச் சந்திராபம் என்னும் நகரத்து நாடக மகளிருள் தேசிகப்பாவை யென்பவள் ஒருத்தியாகும். இவள் நாடகக்கலை பலவும் நிரம்பி அரங்கேறிய நாளே சீவகன் அந்நகர்க்கு வந்த நாளாகும். அங்கே அவள் அரங்கேறி ஆடல் புரிகின்ற போது சீவகனும் அவ்வரங்கிற்குச் சென்று ஆடல் நலம் காண்கின்றான். அவனை இத்தேசிகப்பாவை தன் இருகண்களாலும் நிரம்பக்கண்டு தீராவேட்கை மிகுகின்றாள். ஆயினும், அவனை நேரிற் கண்டு பேசி, தன் கருத்து முற்றுவித்தற்கு வாயில் பெறாதுவாடுகின்றாள். சீவகன் பதுமையை மணந்து இனிதிருக்குங்கால் ஒரு நாள் பூங்கா விற்குத் தனியே செல்கின்றான். அவன் பாலுண்டான வேட்கையால் மெலிந்து வருந்தும் தேசிகப்பாவை தனித்துப் போந்து, அப் பூங்காவில் ஒரு புடையில் காமம் கைமிக்குச் சில பாட்டுகளைப் பாடிக் கொண் டிருக்கின்றாள். சீவகன் அப் பாட்டிசை கேட்டு, அவள்பாற் சென்று சேர்கின்றான். அவள் பெரிதும் நாணி, வேட்கைக் குறிப்புத் தோற்றி மெலிந்து நிற்கின்றாள். அதனை யுணர்ந்த அவன், “சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்ப நலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக் கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப் புலம்புபோய்ச் சாய லென்னும் புதுத்தளிர் ஈன்ற தன்றே” (1364) என வரும் செய்யுளால், தேசிகப் பாவையைக் கூடி இன்புற்ற திறத்தைத் தேவர் நமக்கு உணர்த்துகின்றார். பின்பு, சீவகன் ஏமாங்கத நாட்டிற்கு இறைவனாய் முடி புனைந்து, இலக்கணையாரை மணந்து இனிதிருக்குங்கால், இவனை யடைதற் பொருட்டு வந்த தேசிகப்பாவை, இராசமா புரத்து இருக்கும் அனங்க மாலைக்குத் தோழியாய் வாமலேகை யென்னும் பெயருடன் சீவகனைக் காண்டற்குக் காலங் கருதி யிருக்கின்றாள். ஒருநாள் அனங்கமாலை சீவகற்குத் திருமுகமொன்றை யெழுதி அவள்பால் கொடுத்து விடுப்ப, சென்ற அவளைச் சீவகன் கண்டு, தான் முன்பு கூடியிருந்த தேசிகப் பாவை யென்பதை யுணர்ந்து, அவளை அன்புடன் அழைத்து இன்பம் சிறப்பக் கூடுகின்றான். அவளோ, அவனை நோக்கி, “அடியேன், அனங்கமாலை தோழி யன்றோ; என்னை அருளுமாறு என்னை?” என்று அறியாள் போன்று வினவுகின்றாள்; சீவகன் முறுவலித்து, “நீ என் அறிவை அளத்தற் பொருட்டு இவ்வாறு மருண்டு கூறுகின்றாய்; நின்னையான் மறப்பனோ? (2602)” என்று சொல்லி மகிழ்விக்கின்றான். அவனது அருள் பெற்ற தேசிகப்பாவையும் அங்கே இருந்து தன் ஆடல், பாடல். அழகு என்பவற்றால் அவற்கு மகிழ்வூட்டி வருகின் றாள். 6. வழிப்போக்கன் :- சீவகன் கேமமாபுரத்திலிருந்து கேமசரி முதலிய ஒருவர்க்கும் சொல்லாமல் தனித்துச் செல்லும்போது வழிப் போக்கன் ஒருவனைக் காண்கின்றான். அவன் பால் சீவகன் தான் அணிந்திருந்த அணிகலன்களைக் கொடுத்துவிடுகின்றான். அது கண்டு வியப்புற்ற அவன், “எவ்வூரீர்? எப்பதிக்குப் போந்தீர்? நும் மனைவியர்தாம் எனைவர்?மக்கள் ஒவ்வாதார் தாம் எனைவர்? ஒப்பார்மற்று எனைவர்? நீர் உரைமின்” (1450) என்று கேட்கின்றான்; அவனுக்குச் சீவகன், வேறு குறிப்புத் தோன்ற, “இவ்வூரேன்; இப் பதிக்குப் போந்தேன்; என் மனைவியரும் நால்வர்; மக்கள் ஒவ்வர்தார் தாம் இல்லை; ஒப்பான் ஒருவன் என உரைத்தான் .............” (1550) இதனைக் கேட்கும் அவன் பொருளறியாது மயங்கி நோக்குகின்றான். அவனைத் தெருட்டக் கருதிச் சீகன், “தானம், சீலம், தவம், இறைவர் வழிபாடு என்ற நான்குமே மனைவியர்; நல்வினையே மகன்” என்று மொழிந்து, தான முதலிய நான்கையும் முறையே விளக்கிக் கூறினான். அதன் பின், அவனுக்கே மகனென்றுரைத்த நல்வினையின் இயல்பை விளக்கிக் கூறலுற்று, “மட்டார் பூம் பிண்டி வளங்கெழு முக்குடைக்கீழ் மாலே கண்டீர் முட்டாத இன்பப் புதாத்திறக்கும் தாளுடைய மூர்த்தி பாதம் எட்டானும் பத்தானும் இல்லாதார்க் கிவ்வுலகி லின்ப மேபோல் ஒட்டாவே கண்டீர் வினை, அவனைத் தேறாதார்க் குணர்ந்தீ” (ரன்றே.”(1556) “வேற்றுவ ரில்ல நுமரூர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல ஆற்றுணாக் கொள்ளா தடிபுறத்து வைப்பீரே யல்லீர் போலும்; கூற்றம்கொண் டோடத் தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தில் ஆற்றுணாக் கொள்ளீர் அழகலால் அறிவொன்றும் இலிரே போலும்.” (1557) என்பன முதலிய பலவும் கூறி, அறங்கேளாதாருடைய அறிவின் புன்மையும், சாக்காட்டின் கொடுமையும், அறஞ் செய்யும் இயல்பும், காமம் பிறப்பிற் கேதுவாதலும் பிறவும் கூறி அவனை விடுத்துத் தானும் மேற்செல்லுகின்றான். 7. பவதத்தன்:- இவன் மத்திம நாட்டுப் பதுமபுரம் என்னும் ஊரிடத்தே வாழ்ந்த ஒரு வணிகன். இவன் தந்தை பெயர் கீர்த்திதத்தன் என்பது, தாய் சினதத்தை யென்பாள். இவனுக்கு அநங்கவீணை யென்பவள் மனைவி. அவள் இவனுக்கு மாமன் மகளுமாவாள். ஒரு நாள் அவள் தன் ஆயத்துடன் பந்தாடிக் கொண்டிருக்கையில், அவளழகில் இவன் மிகவும் ஈடுபட்டு அறிவு மழுங்குகிறான். அதனை யுணர்ந்த அவள் இவனுடனே, ஒரு பொழிலை யடைந்து “உண்ணும் நீர் வேட்டேன், கொணர்க” என்கின்றாள்; அவளை ஓரிடத்தே இருக்கவைத்து இவன் மட்டில் செல்கின்றான். அவ்வழியே வந்த சீவகன் அப்பொழிலிடத்தே தங்குகின் றான். அங்குள்ள வனசரிதன் அழகைக் கண்டு, அவள் காம வேட்கை கொள்கின்றாள். அவன் அவள் கருத்தை யுணர்ந்து, மனத்தே அருவருப் புற்று பெண் பிறப்பின் இயல்பையே மிக வெறுத்தவனாய், மகளிர் மனம் எளிதில் வேறுபடும் திறத்தைத் தனக்குள்ளே எண்ணி இருக்கின் றான். அவன் கருத்தையுணர மாட்டாத அவள், தன் வரலாற்றையறியும் கருத்தால் வெளிப்பட வினவ மாட்டாது அவன் தடுமாறு கின்றான் எனப் பிறழவுணர்ந்து, “தோன்றலே, யான் என் தோழியருடன் வனத்திலே விளையாடு கையில், விஞ்சைய னொருவன் போந்து என்னைத் தன்பாற் படுத்திக்கொண்டு சென்றான்; ஆங்கே அவன் மனைவி என்னைப் போகவிட, யான் இங்கே வந்தடைந்தேன்; இப்போது தாயிலாக் குழவிபோல வருந்தும் யான் நின்னைக்கண்டு, துறக்கம் பெற்றே னாயினேன்; என்னை நீ அருளாதுவிட்டால், ‘தீயினுள் அமிர்தம் பெய்தாங்கு என்னுயிர் செகுப்பல்’ (1588) ” என்று சொல்லு கின்றாள். அது கேட்கும் அவன், அவள் கருத்தை மாற்றக் கருதி மக்களுடம்பின் புன்மையைப் பலவகையால் விளக்கிக்கூறி அவள் செயலில் அவட்கே அருவருப்புண்டாமாறு சில பேசிவிட்டு அவ் விடத்தினின்று நீங்குகின்றான். அங்குத் தங்கிச் செல்லும் சீவகனெதிரே பவதத்தன் வழி தவறி அவளைக் காணாமல் அரற்றிக்கொண்டு வருகின்றான். சீவகன் அவனோடு உரையாடி, அவன் பெருங்கல்வியுடையவன் என்றும், அநங்க வீணையின் காதலன் என்றும் பிறவும் அறிந்து கொள் கின்றான். “கல்வியறிவு படைத்த நீ இவ்வாறு புலம்புவது முறையன்று” என அவனைத் தெளிவிக்கும் சீவகன், தீய மகளிர், நன்மகளிர் என்ற இருதிறத்தார் இயல்பும் கூறி அவனைத்தெருட்டி, மந்திரமொன்று கற்பித்து அதன் துணையால் அப்பவதத்தன் மனைவியையும் அவ ளுடைய மெய்க்காதலையும் பெறுவித்து நீங்குகின்றான். 8. நாவிதன் கதை:- சீவகன் இலக்கணையை மணம்புணர்ந்த காலையில், நான்காம் நாள் மயிர்வினைத் திருமணம் நடக்கின்றது. மயிரொதுக்குதற்காக நாவிதன் வருகின்றான். இவன் குலமுதல்வன் ஒரு முனிவனாகும், அவன் காட்டில் சடைமுடி புனைந்து தவம் செய்கை யில் நேர்ந்த ஒரு சாபத்தால் நாவிதனாயினான் என்று தேவர் கூறுகிறார். இதனால் அவன் குடியிற் பிறந்த நாவிதன் ஆய்ந்த கேள்வியும், மயிர் வினைக்கு அலங்காரத் தொழில் பலவும் கற்றுத் துறைபோகி இருக்கின்றான்.அரசனால் களிறூர்ந்து போதரும் பெருஞ்சிறப்பு எய்தியிருக் கின்றான். “குளநெல் முன்றிற்கனி தேன்சொரி சோலைக் குளிர்மணி வளமை மல்கிஎரியம் மடமந்தி கைகாய்த்து வான் இளமை யாடி யிருக்கும்வனத் தீர்ஞ்சடை மாமுனி கிளையை நீங்கிக் கிளர்சா பத்தின் நாவித னாயினான்” (2491) என வரும் செய்யுளால் சாப வரலாறு உணர்க. இம் முனிவன் சாபம் பெற்ற வரலாறு நன்கு தெரிந்திலது. உரைகாரரும் ஒருவன் சபித்த தனால் முனிவர் சுற்றத்தின் நீங்கி நாவிதனானான் என்றே உரைக் கின்றார். 9. அசோதரன்:- தாதகியென்னும் நாட்டிற்குப் பூமிதிலகம் என்பது தலைநகரம். அங்கே பவணமாதேவன் தன் மனைவி சயமதி என்பாளுடன் கூடியிருந்து ஆட்சி புரிந்து வருகின்றான். அவன் மகனே அசோதரன். அவன் ஒருநாள் மங்கையருடன் கூடி நீர் விளையாட் டயரத் தாமரைப் பொய்கைக்குச் சென்று விளை யாடுகின்றான். அங்கே வாழ்ந்த அன்னப் பறவைகள் அஞ்சி நீங்கி விண்ணிலே பறக்கின்றன. பறந்தோடியவற்றுள், பறக்கும் வன்மை யில்லாத அன்னப் பார்ப்பொன்று அரண்மனையிலுள்ள பொய் கைக்கண் இருந்த தாமரைப்பூ வொன்றில் ஒடுங்கி ஒளிந்திருக் கின்றது. அதனைப் பொய்கைக்குப் போந்த அசோதரன் காண் கின்றான். அவனுடைய உரிமை மகளிரும் அதனைக் காண்கின்றனர். அவர்கள் விரும்பிக் கேட்டதற் கிணங்கி அசோதரன் கஞ்சுகியை விடுத்து அதனைக் கொணர்வித்து மங்கையர் பால் அளிக்கின்றான். அவர்களும் மிக்க அன்போடு அதற்குப் பாலூட்டி வளர்த்து வருகின்றனர். ஒருநாள் பவணமாதேவன், மகளிர்பால் அன்னப் பார்ப்பு இருத்தல் கண்டு. “தண் தாமரை சூழ் தடத்திற் பிரித்தார்கள் யாரே?” என்று வினவி, பிரித்தவன் அசோதரன் என வுணர்ந்து அவனை வருவித்து, அவர்க்குக் காமம் முதலிய ஐந்து குற்றங்களை விளங்க உரைக்கின்றான். பின்பு, அன்னப்பார்ப்பை அதன் கிளையினின்று நீக்கியது குற்றமென்று எடுத்துரைப்பானாய்,” “பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா யாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக் காவல்செய்து வைத்தவர்கள் தம்கிளையின் நீங்கிப் போவார்; புகழ், நம்பி, இது பொற்பிலது கண்டாய்” (2884) என்று உரைக்கின்றான். அதனைக் கேட்டதும் அசோதரன் உளம் நடுங்கி விரைந்தோடி, அன்னத்தைக் கூண்டினின்றும் எடுத்துச் சென்று, அது புண்டிருந்த தாமரைப் பொய்கையில்விட்டுவிட்டு, காமம் முதலிய தீங்கு தருவனவற்றை வெறுத்துத் தந்தையை யடைந்து, தவம் செய்யப் போதற்கு விடை நல்கவேண்டுகின்றான். அரசன் முதற்கண் விடை நல்கத்தயங்குகின்றான். அசோதரன் கூறிய கூற்றால் உண்மை யுணர்ந்து பவணமாதேவன் அசோதரனைத் தவம் செய்ய விடுக்கின்றான். தவம் செய்து சிறப்பு மிக்க அவ்வசோதரனே, பின்பு சாசார னென்னும் இந்திரனாகியிருந்து இப்போது சீவகனாகப் பிறந்துள்ளான். அசோதரன் துறவு பூண்டு தவம் கிடந்து கடவுளான பின்பு, பவணமாதேவனும் சயமதியும் துறவு பூண்டு தவ முடிவெய்து கின்றனர். 10. சேணிகமன்னன்:- சேணிகன் மகத நாட்டை இராச கிருகம் என்னும் நகரத்தே யிருந்து ஆட்சிபுரிந்து வரும் வேந்தன். ஒரு நாள் இவன் வெண்பட்டுடுத்துப் பூசனைக்குரிய பலி சுமந்து அயிரா வணமேறிச் சமவ சரணமடைந்து பிண்டிவேந்தனைப் பரவுகின்றான். எயிற்புறத்தே அறிவு ஒளி திகழவிருந்த சீவகனைக் கண்டு வியப்புற்று ஆங்கிருந்த கணதர முனிவரைக் கண்டு சீவகன் வரலாற்றைப் பழம் பிறப்பு வரலாற்றோடு அறிந்து பாராட்டு கின்றான். பின்பு அவன் தானும் சீவக முனிவனை நாத்தழும்பேற வாழ்த்தி நீங்குவான், “ திருவினோ டகன்ற மார்பிற் சீவக சாமி யென்பான் உருவினோ டொளியும் நோக்கின் ஒப்புமை உலகில் இல்லை; மருவினார் இமைத்து நோக்கின் மனம்பிறி தாகி நிற்பார், அரிதிவன் முகத்து நோக்கல் அழகொளி அன்ன என்றான்” (3067) என்று தேவர் கூறுதல் காண்க. 6. நூற்பொரு ளாராய்ச்சி தேவர் மேலே கூறிய சீவகன் வரலாற்றை நமக்குத் தமிழில் இக்காவிய வடிவில் உரைத்திருக்கும் திறத்தை ஆராய்தற்குமுன், இந் நூற்பொருளாகிய சீவகன் வரலாறு சமண சான்றோர் கூட்டத்தில் எவ்வாறு பயின்றுளது என்பதைக் காண்டல் வேண்டும். ஏனை நூல்களில் காணப்படும் பொருள், இக்காவியத்தில் எவ்வாறு காட்டப் படுகிறது என்பதைச் சிறிது காண்பதே ஈண்டைக்கு வேண்டுவதாகும். இச் சிந்தாமணிக்கு முதனூலாய் இருந்தவை சத்திர சூடாமணியும், கத்திய சிந்தாமணியுமாம் என்பர் என்று முன்பே கூறினோம். அவை வடமொழியில் உள்ளன; இக்கூற்று உண்மையே யென்று சைவத்திரும். பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள். “ஜீவா நாம் பாபவை சித்ரீம் ஸ்ருத வந்த: ஸ்ருதௌ புரா பஸ்யேயு ரதுநே தீவ ஸ்ரீகல்பா பூத கிஞ்ச நா” என்ற சுலோகம், ‘உண்டென உரையிற் கேட்பார் உயிருறு பாவமெல் லாம் கண்டினித் தெளிக என்று காட்டுவாள் போல வாகி’ (303) என்று மொழிபெயர்க்கப்பட்டடுள்ளது. இதுபோன்று பல விடங்கள் உள்ளன’* என்பதானால் உறுதிப்டுத்துகின்றார்கள். இச் சத்தி சூடா மணியும், கத்திய சிந்தாமணியும் தமிழில் இல்லை. மணிப்பிரவாள நடையிலுள்ள ஸ்ரீ புராணத்தில் “சீவக சரித்திரம்” காணப்படுகிறது. அதனை வைத்துக் கொண்டே, இக்காவியத்துக் கூறப்படும் சீவகன் வரலாற்றினை ஆராய்கின்றோம். ஸ்ரீ புராணத்துக் காணப்படும் சத்தியந்தரன், காஷ்டாங் காரிகன், கந்தோத்கடன், நந்தாட்யன், ஆர்ய நந்தி, சுதர்சனன் முதலிய பல பெயர்கள் சச்சந்தன், கட்டியங்காரன், நந்தட்டன், அச்சணந்தி, சுதஞ்சணன் என்பன முதலாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. குணமாலை, சுரமஞ்சரி என்ற இருவர் வரலாறும் தலை தடுமாறி யுளது. உருத்திரதத்தன் செய்தி முற்றும் மாறுபட்டிருக் கிறது. சீவகன் பழம் பிறப்பு வரலாறு சாதபடன் என்னும் வித்தியாதரனால் சீவகனுக்கு உரைக்கப்படுகிறது. இவ் வேறுபாடுகளுட் சிலவற்றைக் காட்டுதும், ஸ்ரீ புராணத் தோடு இப் பெருங்காவிய நூற்பொருளை வைத்து நோக்குமிடத்து, இவ்விரண்டன் ஆசிரியர்களும் ஒரு நூலைப் பின்பற்றினவர்க் ளல்லர் என்பது துணிவாகிறது. இந்தத் தமிழ்க் காவியத்துட் காணப்படாத சில செய்திகள் ஸ்ரீ புராணத்துத் காணப்படுகின்றன. ஸ்ரீ சந்த்ரை என்பாளுக்கும் நந்தாட்யனக்கும் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சிகளும், சுதர்சனயஷன், ஹரிவிக்ரமன், வனராசன் என்பவர் களைக் கட்டிக் கொண்டுவந்து ஜீவந்தரகுமரன் முன் நிறுத்துவதும் பிறவும் இக்காவியத்துட் காணப் படாதனவாகும். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொல்லக் கருதி, அமைச்சரை யழைத்து, தனக்குக் கனவில் ஒரு தெய்வந் தோன்றி அரசனை விண் போக்குமாறு வற்புறுத்துவதாக இக் காவியத்துட் கூறுகின்றான். உருத்திரதத்தன் என்னும் அமைச்சன், அரச பாரத்தை அமைச்சனிடம் வைத்தலாகாது எனச் சச்ந்தனுக்குக் கூற, அவன் கேளானாகவே, அவன் அமைச்சனும் இயல்பு துறந்து காட்டிற்குப் போய் விடுகின்றான் என்றும், அந்தப்புரத்தே யொடுங்கி யிருந்த சச்சந்தன் மயிற் பொறி செய்வித்து அதன்கண் விசயை ஊர்ந்து செல்லப் பயில்வித்து, கட்டியங் காரன் அரண்மனையை வளைத்துக்கொண்டபோது அவளை அம் மயிற் பொறியிலேற்றி விடுவித்தானென்றும் இக்காவியம் கூறுகின்றது. மற்று, ஸ்ரீ புராணம், உருத்திரதத்தன், சச்சந்தனுக்குப் புரோகித னென்றும், ஒரு நாள் அந்தப்புரத்திருக்கும் அரசனைத் தான் காணக் கூடாமையால் சினம்மிகுந்து, கட்டியங்காரன் மனத்தைக் கலைத்து, அரசனைக் கொல்லுமாறு செய்து, தானும் “அஹாத்யவியாதி பீடி தனாகி மரணமடைந்து நரகம் புக்கனன்” என்றும் கூறுகின்றது. மேலும், உருத்திரதத்தன் அரசனைக் கொலை புரியச் சொன்ன போது, கட்டியங் காரன் தன் இரு காதுகளையும் பொத்தி, “முன்பு காஷ்டபாரவாகியாகிய எனக்கு ராஜ்ய பாரம் பிரஸாதித்த ஸ்வாமிக்கு ஈ திருச துஷ்கருமத்தைச் செய்க என்று சொல்லிப் பிழை செய்தனையே” என்றா னென்று ஸ்ரீ புராணம் கூறுவது குறிக்கற்பாலது. விசயை பொருட்டுச் சச்சந்தன் செய்வித்திருந்தது கருடப் பொறி யென்றும், அதன்கண் “ஒரு யக்ஷிதேவதை, சரம தேகதர னொருவன் விஜயாதேவிக்குப் புத்திரனகு மென நினைத்து அவனுக்கு உபகாரம் செய்வேனென்று ராஜகிருகத்தில் ஒரு கருட யந்திரத்திலே ஸன்னிகித மாய் நின்றனள்” என்றும், பின்பு மயானத்திலே விசயை சீவகனைப் பெற்றபோது துணையாயிருந்து, அவள் வருத்தத்தைப் போக்கிய தென்றும் ஸ்ரீ புராணம் கூறுகிறது. இப் புராணமே சீவகனுக்குக் கல்வி கற்பித்த அச்சணந்தி யாசிரியனைப் பற்றிக் கூறுமிடத்து, “அவன் சிம்மபுரத்தரசனான ஆரியநந்தி யென்னும், தன் புத்திரனுக்குத் தன் அரசை நல்கித் துறவு பூண்டபோது ‘பஸ்மக மென்பதொரு மஹாரோகம் தோன்றுத லின்’தவவுருக் கொண்டு போந்து சீவகனை யடைந்தா” னென்றும் கூறுகிறது. அவன் கந்துக்கடன் மனையை அடைந்த வரலாறு இப்புரா ணத்துள் வேறுவகையிற் கூறப்படுகிறது. இராசமாபுரத்து ஆயர்தம் நிரைகளைக் கவர்ந்து சென்றவர் வேடர் என்று இக்காவியம் கூறுகிறது; புராணமோ, நிரை கவர்ந்தவன், “காளகூடனென்பான் ஒரு வியாதபதி” யென்றும், அந் நிரையை மீட்டுத் தந்த நிகழ்ச்சியில் சிறப்புற்று நின்ற நந்தட்டனுக்கு ஆயர்கோன் மகள் கோதாவரி யென்பாள் திருமணம் செய்து தரப்பெற்றாள் என்றும் கூறுகிறது. ஆயர்கோன் பெயர் கோபேந்திர னென்றும், மகள் பெயர் கோதாவரியென்றும் புராணம் கூறிற்றாக, இக் காவியம், அவன் பெயர் நந்தகோன் என்றும், அவன் மனைவி பெயர் கோதாவரி என்றும், மகள் பெயர் கோவிந்தை யென்றும், அக் கோவிந்தை சீவகன் தோழருள் ஒருவனான பதுமுகனுக்கு உரிமையானா ளென்றும் கூறுகிறது. காந்தருவதத்தையார் திருமண நிகழ்ச்சி குறித்துக் கூறுமிடத்து, தத்தையின் தந்தை அவளை இராசமாபுரத்துக்கு விடுத்தற்குற்ற காரணத்தைச் சிறிதே குறித்து இக்காவியம் அமைகிறது; ஸ்ரீபுராணம் தத்தையின் தந்தை மதிசாகரன் என்பானை உசாவுவதும், அவன் விடையிறுப்பதும் பிறவுமாகச் சிறிது நீட்டித்துக் கூறுகிறது. அவை முற்றும் இக் காவியத்துள் இல்லை. இசைப்போரில் சீவகன் மேம்பட்டது கண்டு கட்டியங்காரன் அழுக்காற்றுற்று ஏனையரசர்களைச் சீவகன்மேல் ஏவினான் என்று இக் காவியம் சொல்லுகிறது. ஸ்ரீபுராணம் கட்டியங்காரன் மகனான காளரங்காரகன் முதலான அரசகுமாரர்கள் பொறாது போர்க்கெழுந்து பொருது தோற்றனர் என்றும், இசைப் போர்க்குச் சீவகன் ஏறிப் பேரந்த யானையின் பெயர் சயகிரி யென்றும் குறிக்கிறது. குணமாலை, சுரமஞ்சரி யென்ற இருவர்க்கும் சுண்ணம் காரண மாக உண்டான வேறுபாடு ஸ்ரீ புராணத்தும் கூறப்படுகிற தெனினும், சுண்ணத்துள் மேம்பட்டவள் சுரமஞ்சரி யென்றும், அவள் ஏறிச் சென்ற தேரை நோக்கி அசனிவேகம் என்னும் யானை மதம் சிறந்து அழித்தற் குக் கடுகிவர, சீவகன் கண்டு, அச் சுரமஞ் சரியைக் காத்தா னென்றும் கூறுகின்றது; மற்று, இத் தமிழ்க் காவியம் குணமாலையே சுண்ணத் தால் மேம் பட்டாளென்றும், அவளையே சீவகன் அசனிவேகத்தினி ன்று காத்தானென்றும் கூறுகிறது. மேலும், குண மாலையின் தாய் தந்தையர் விநயமாலை, குபேரமித்திரன் எனவும், சுரமஞ்சரியின் பெற்றோர் சுமதி, குபேரதத்தன் எனவும் இக் காவியம் கூறாநிற்க, ஸ்ரீ புராணம் குணமாலையின் பெற்றோரைக் குமாரதத்தன், விமலை யென்றும், சுரமஞ்சரியின் பெற்றோர் வைசரவண தத்தன், சூதமஞ்சரி யென்றும் கூறுகின்றது. குணமாலையோடு கூடியிருந்த சீவகனைக் கட்டியங்காரன் ஏவலால் வீரர் அவன்பால் கொண்டு சென்ற போது, சுதஞ்சணன் மழை மின்னல்கட் கிடையே போந்து சீவகனைத் தன் மலைக்க கொண்டுபோ னான் என்பது தமிழ்ப் பெருங்காவியம், ஸ்ரீ புராணம், சீவகன், “ஸீதர்சனயக்ஷனை நினைந்தனன்” அவனும் தத்சணத்திலே வந்து விசயகிரி யென்று மதஹஸ்தியிலேற்றிக் கொண்டு போகித் தனதிட மடைந்தனன் என்கின்றது. இனி, சீவகன் கேமசரியை மணந்த வரலாறு கூறலுற்ற ஸ்ரீபுரா ணம், கேமசரியின் தந்தையான சுபத்திரன், வியைந்தர ரென்னும் தபோதனரை யடைந்து, ‘க்ஷேமசுந்தரி யாவர்க்குப் பார்யையாகும்’ என்று வினவ, அவரும் அருளிச்செய்வார்: “கந்யகா யோக்கி யனாகிய பர்த்தா ஸஹஸ்ரகூட ஜினபவனத்தை யடைதலும், சம்பக விகாஸமும் கோகில கோலாஹலமும் தடாகபூர்ணமும் தத்கத குமு தவிகாஸமும் மதுகரஸஞ்சாரமும் கோபுர கவாட் விகடனமுமாகிய அதிசயங்களுள வாகும்” என்று ஆதேசித்தனர் என்றும், சீவகன் அங்கே வந்தபோது இவை யாவும் ஒழியாதே நிகழ்ந்தன என்றும், அதுவே வாயிலாகச் சீவகனுக்கும் கேமசரிக்கும் திருமணம் நிகழ்ந்தது என்றும் கூறுகின்றது. திருத்தக்கதேவரோ வேறுவகை யாகக் கூறுகின்றார். இவ்வாறே, காந்தவருதத்தை சீவகன் சுதஞ்சணனால் கொண்டு செல்லப்பட்டதைத் தன் விஞ்சையால் அறிந்து உறவினர் வருந்தா வாறு தணித்திருந்தாளென்றும், சீவகன் ஏமமா புரத்தே இருந்த போது “காந்தருவதத்தை தனது விஞ்ஞையால் அப்ரகாசமாக வந்து ஜீவந்த ரகுமாரன் குசலவருத்தியினை யறிந்து தனது வரவினை அறிவித்துச் செல்கின்ற” வழக்க முடையவளாய் இருந்தாளென்றும் ஸ்ரீபுராணம் கூறுகின்றது. இவ்வாறு, ஸ்ரீ புராணத்துட் காணப்படும் வேறுபாடுகள் மிகப் பலவாகும். அவையனைத்தும் ஈண்டெடுத்துக் கூறாது இம்மட்டில் அமைகின்றாம். மேலும், இவ் வேறுபாடுகள், திருத்தக்கதேவர் ஸ்ரீ புராணத்தையோ அதன் முதனூலையோ பின்பற்றிலர் என்ற உண்மை யையே நன்கு வற்புறுத்துவதைக் காணலாம். 7. நூற்புணர்ப்பு சீவக சிந்தாமணி யென்னும் இப்பெருங் காவியத்துட் கூறப்பட் டிருக்கும் பொருளை நூற் பொருள் என்ற தலைப்பின் கீழ் இனிது கண்டோம். அவை யனைத்தையும் திரட்டிப் பிண்டமாகக் காணின், சீவகன் அரசன் மகனாயினும் சுடுகாட்டிற் பிறந்து கந்துக்கடன் மனையில் வளர்ந்து கலை நிரம்பியதும், வேட்டுவரை வென்று நிரை மீட்டதும், காந்தருவதத்தையை இசைப் போரில் வென்று மணந்து கொண்டதும், பின்பு பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி என்ற இவர்களை மணந்ததும், கட்டியங்கார னொடு பொருதுவென்று அரசுகட்டி லேறியபின் இலக்கணையை மணந்ததும், மக்களைப் பெற்று இனிதிருந்த சீவகன் துறவு பூண்டதும் பிறவுமே என்பது தெரிகின்றது. இச்செய்திதான் தேவரால் இனிய தொரு பெருங்காவியமாகச் செய்யப்பெற்றுள்ளது. இக் காவியம் பதின்மூன்று (13) இலம்பகங்களாக வகுக்கப் பெற்று (3345) மூவாயிரத்து நூற்றுநாற்பத்தைந்து செய்யுட்களால் இயன்றுள்ளது. சைவ சித்தாந்த சமாசப் பதிப்பில் (3154) மூவாயிரத்து நூற்றியைம்பத்து நான்கு செய்யுட்கள் காணப்படுகின்றன. இனி, இக் காவியத்து இறுதிக்கண் நிற்கும் “முந்நீர் வலம்புரி” என்று தொடங்கம் ஓம்படைச் செய்யுளில் வரும் “மெய்ந்நீர்த்திரு முத்து இருபத்தேழ” என்பதற்கு உரைவிளக்கம் கூறலுற்ற நச்சினார்க்கினியார், “இருபத்தேழ் என்றார், ஒன்றைப் பத்தாற் பெருக்கின இருநூற்றெழுபதைப் பத்தாற் பெருக்கின இரண்டாயிரத் தெழுநூற்றை. எனவே, தேவர் அருளிச் செய்த செய்யுள் (2700) இரண்டாயிரத் தெழுநூறென்றே கொள்க” என்பர். இதன் அடிக் குறிப்பாக, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், “மற்றை 445 செய்யுட்களும் கந்தியாரால் இடையிடையே பாடிச் சேர்க்கப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். அச் செய்யுட்கள் இன்னவை யென்று புலப்படவில்லை” என்று குறித்துள்ளார். ஈண்டு, இருபத்தேழ் என்பதை உரைகாரர் இரண்டாயிரத் தெழுநூறாக்கு தற்கு ஏதுவொன்றும் காணப்படாமையாலும், இடைச் செருகல் எனக் கருதப்பட்ட செய்யுட்கள் இவையெனத் தெரியக் காணப் படாமையாலும், ஈண்டை யாராய்ச்சிக்கு இம்மூவாயிரத்து நூற்று ஐம்பத்து நான்கு செய்யுட்களையுமே கொள்வோம். இனி, இக் காவியத்தை யுணர்த்தப் புக்க தேவர், கடவுள் வாழ்த்து, அவையடக்கம் என்ற இரண்டும் முதற்கண் ஓதி, பதிகத்துள் சீவகன் வரலாற்றினைத் தொகுத்துச் சுருங்கவுரைக்கின்றார். இவ்வாறு தொகுத்துரைத்தல், “தொகுத்துக் கூறல்” என ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துரைத்த உத்திவகை யாகும். பின்னர் சீவகன் பிறந்து வளர்ந்து கலை நிரம்பியது வரை ஒரு பகுதியாகக் கொண்டு அதனை நாமகள் இலம்பகம் என்று பெயரிட் டுள்ளார். இப்பகுதிக்கண், சச்சந்தன் விசயையை மணந்து அவருடைய இன்பமே பெரிதும் விரும்பி அரசியலைக் கட்டியங்காரன்பால் வைத்துத் தான் அந்தப்புரத்தே ஒடுங்கி யிருந்ததும், பின்பு அவன் சூழ்ச்சியால் இறந்துபட்டதும், சச்சந்தன் போர்க்குச் செல்லுமுன் விசயையை மயிற்பொறியில் ஏற்றிவிடுப்ப, அவள் நள்ளிரவில் சுடுகாட் டில் இறங்கிச் சீவகனைப் பெற்று, தோழி வடிவிற் போந்த தெய்வம் துணையாகத் தண்டகாரணியத் தவப்பள்ளி யடைந்தும், சீவகனைக் கந்துக்கடன் எடுத்துச் சென்று வளர்த்ததும், அச்சணந்தி யென்பவன் பால் சீவகன் கலைத்துறை பலவும் பயின்று தேர்ந்ததும் பிறவும் உரைக்கப்படுகின்றன. சீவகன் வேட்டுவர் கவர்ந்து சென்ற நிரையை மீட்டு ஆயர் கோனான நந்தகோன் மகள் கோவிந்தையைப் பதுமுகன் பொருட்டுத் தான் ஏற்றுப் பின் அப்பதுமுகற்குமணம் செய்துவைத்த பகுதி கோவிந் தையா ரிலம்பகம் என்று விரித்தோதப்படுகிறது. அதன் பின் சீவகன், காந்தருவதத்தையாரை மணந்த பகுதி காந்தருவதத்தையா ரிலம்பக மாகவும், குணமாலையின் திருமண நிகழ்ச்சி குணமாலையா ரிலம்பக மாகவும், பதுமையை அச்சீவகன் மணந்துகொண்ட செய்தி பதுமையா ரிலம்பகமாகவும், கேமசரி திருமணம் கேமசரியார் இலம்பகமாகவும், கனகமாலை திருமணம் கனகமாலையா ரிலம்பக மாகவும், விமலையை மணந்தது விமலையாரிலம்பகமாகவும், சுரமஞ்சரியின் திருமண வரலாறு சுரமஞ்சரியார் இலம்பகமாகவும், கட்டியங்காரனோடு பொருது சீவகன் வெற்றிச்சிறப் பெய்துவது மணமகள் இலம்பகமாகவும், முடி புனைந்து அரசுகட்டி லேறுவது பூமகள் இலம்பகமாகவும், இலக்கணையை மணப்பது இலக்கணை யார் இலம்பகமாகவும், சீவகன் அரசு புரிந்து மக்களோடு பொலிந்து பின்பு துறவு பூண்டு முத்திநிலை யெய்துவது முத்தி யிலம்பகமாகவும் பகுத்து ஓதப்படு கின்றன. தாம் எடுத்துக்கொண்ட காவியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இலம்பகம் என்று பெயரிட்டு ஓதுவது திருத்தக்க தேவர் ஒருவரிடத்தே தான் காணப்படுகிறது. இலம்பகம் என்ற பெயரை இவர்க்கு முன்னும் பின்னும் இதுகாறும் எந்தத் தமிழ் நூலாசிரியரும் எடுத்தாண்ட தாகத் தெரிந்திலது. இலம்பகம் என்பது வடசொல் என்பர் நச்சினார்க் கினியார்; மாலை யென்பது இதற்குப் பொருள். இந்நூற் பகுதிகளுள், நாமகள், இலம்பகம், மண்மகள் இலம் பகம், பூமகள் இலம்பகம், முத்தியிலம்பகம் என்ற நான்கினும் ஏனை இலம்பகங்களிற் போலச் சீவகன் மகளிர் எவரையும் மணந்து கொள்கிலன்; நாமகளிலம்பகத்தில் கலையறிவு பெறுகின்றான்; மண்மகள் இலம்பகத்தில் ஏமாங்கத நாட்டுக்கு உரியனாகின்றான்; பூமகள் இலம்பகத்தில் முடிபுனைந்து கொள்கின்றான்; முத்தியிலம்பகத்தில் கேவல ஞானத்தைத் தலைக்கூடுகின்றான். இந் நான்கு மொழிய ஏனை ஒன்பது இலம்பகங்களும் ஒன்பது மகளிரின் திருமணமே குறித்து நிற்றலின், இந்நான்கினும் பெறப்படுவ வற்றைத் திருமண நிகழ்ச்சியாக்கி, கலையறிவை நாமகளாகவும், ஏமாங்கத நாட்டை மணமகளாகவும் அரசுரிமையைப் பூமகளாகவும் கொண்டு, அவற்றால் பெயர் குறிப்பாராயினர். முத்திப்பேற்றுக் கேதுவாகிய கேவல ஞானத்தைப் பெண்ணாக வுருவகம் செய்து கூறுகின்றா ராதலின், அதற்கேற்ப முத்தி யிலம்பகம் என்று வழங்குகின்றார். சீவகன் கலையறிவு நிரம்பிய, திறத்தை “மயிலஞ் சாயல், குழை முக ஞான மென்னும் குமரியைப் புணர்க்கலுற்றார்” (368) என்றும், அவன் கட்டியங்காரனை வென்று ஏமாங்கத நாட்டிற்கு உரியனான செய்தியை, “குருதிக்கண்ணீர்விட்டழுது அவன் கண் ஆர்வம் மண்மகள் நீங்கினாளே” (2332) என்றும், முடி சூட்டிக் கொண்ட செய்தியை, “களிக்கய்ல் மழைக்கண், பொருவில் பூமகட் புணர்ந்தனன்” (2377) என்றும், முத்தியெய்திய சிறப்பினை, “கேவல மடந்தை யென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண், பூவலர் முல்லைக் கண்ணிப் பொன் னொரு பாகமாகக் காவலன் தானோர் கூறாக் கண்ணிமை யாது புல்லி, மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கினானே” (3126) என்றும் தேவர் கூறுதல் காண்க. இவ்வாறு இக் காவியம் முழுதும் ஒவ்வொரு பகுதியும் திரு மணமே பொருளாக அமைந்திருத்தலின் அறிஞர் இதனை மண நூல் என்பது மிகவும் பொருத்தமானதென்பது வற்புறுத்தப்படுகிறது. இனி, நாமகள் இலம்பகத்தில், “எனக்கு உயிர் என்னப் பட்டான், என்னலால் பிறரை யில்லான்” (205 என்று சச்சந்தனால் நன்கு மதிக்கப் பெற்றிருந்த கட்டிய்ங்காரன் பெரும் பாதகனாக மாறித் தன்னை நம்பியிருந்த வேந்தனைக் கொன்றுவிடுகிறான்;அவன் மனைவி விசயை தன் மகனைச் சுடுகாட்டிற் பெற்று, கந்துக்கடன் எடுத்தேகக் கண் டிருந்து, பின் தண்டாரணியத் தவப்பள்ளியடைந்து விடுகிறாள். இவ்வாறு தந்தை தாய் மகன் மூவரையும் மூலைக் கொருவராகப் பிரிந்தேகச் செய்த தேவர், சச்சந்தன் மகனான சீவகன், அவ்விலம்பகத்தேயே காளைப்பருவ மெய்திக் கலை நிரம்பித் தன் வரலாற்றினை யறிந்து கட்டியங்காரன் தனக்குப் பழம்பகை யென நினைவு கொள்ளச் செய்கின்றார். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்று முடி சூடிக் கொண்டதோடு அமைந்து போகின்றான். கோவிந்தையாரிலம்பகத்தில், அச்சீவகன், அரசனால் மீட்க மாட்டா தொழிந்த ஆனிரைகளை “ஆள் அற்றமின்றி” வெட்சியாரான வேட்டுவரை வெருட்டி, கவர்ந்து கொணருமாறு கூறி, அதுவே ஏதுவாக அவன் இராசமாபுரத்து நன்மக்கள் பெரிதும் மதிக்கத்தக்க நிலையினையடையும் செய்தியை தேவர் விளக்ககின்றார். காந்தருவதத் தையார் இலம்பகத்தால், கட்டி யங்காரனுக்குச் சீவகன்பால் அழுக்காறு பிறப்பித்து அவனது போர் வன்மையும் ஒருவாறு அக் கட்டியங்காரற்குக் காட்டி, அழுக்காற் றினைப் பகைமையாக்கி விடுகின்றார். குணமாலையார் இலம்பகம் சீவகன் அசனிவேகத்தை யடக்கிய வகையால் கட்டியங்காரன் வெளிப்படையான பகையாகி யதைத் தெரிவிக்கிறது. சீவகனும் இராசமாபுரத்தினின்றும் நீங்கிவிடு கின்றான். பதுமையார், கேமசரியார் என்ற இருவர் இலம்பகத்தும் சீவகன் நாடு காணும் வேட்கையும், நன்மகளிரை மணந்து அவர்பால் சொல்லாது நீங்கும் நெறியில் தீமையுமுடையனாய்க் காணப்படு கின்றான். கனகமாலையார் இலம்பகத்தில் தான் மீட்டும் அவன் வரலாறு உருக்கொள்கிறது. இங்கே, சீவகன் தன் தம்பி நந்தட்ட னையும் தோழர்களையும் கூடுகின்றான். பிறந்த நாளிற் பிரிந்த தாயையும் காண்கின்றான். கட்டியங்காரனைக் கொன்று ஏமாங்கத நாட்டைத் தான் ஆளும் உரிமை பெற வேண்டுமென்ற கருத்து விசயையால் சீவகனுக்கு ஊட்டப் பெறுகிறது. விமலையார் இலம்பகத்தில் சீவகன் நாடுகாண் வேட்கை நீங்கித் திரும்புவதும் விமலையை மணப்பதும், சுரமஞ்சரி இலம்பகத்தில் வேட்கை விளையாட்டால் சுரமஞ்சரியை மணப்பதும் நிகழ்த்துகின்றான். இலக்கணையார் இலம்பகத்தில் சீவகன் தன் தாய்மாமன் கோவிந்தராசனைக் கண்டு கட்டியங்காரனைச் சூழ்ச்சியாற் போர்க் கழைக்கும் திறம் நாடுகின்றான். கட்டியங்காரனது அரசியற் சூழ்ச்சியும் சிறிது காணப்படுகிறது. மண்மக ளிலம்பகத்தில் கட்டி யங்காரன் வீழ்ச்சியும், பூமகள் இலம்பகத்தில் சீவகன் அரசுகட்டி லேறி, இலக்கணையார் இலம்பகத்தில் இலக்கணையை மணந்து, ஆங்காங்கு விட்டுப் பிரிந்த மனைவியரைத் தன்பால் அழைத்துக் கொண்டு இனி திருக்கின்றான். முத்தியிலம்பகத்தில் மகப்பேறு பெற்று இன்பம் மிக நுகர்ந்து துறவு பூண்டு முத்தி யெய்துகின்றான். இனி, இக் காவிய நிகழ்ச்சிக்கண் மேலே கூறிப்போந்த கிளைக் கதைகள் தொடர்புற்றுக் காவிய இன்பத்துக்கு ஆக்கம் செய்யும் திறத்தைக் காண்டல் நலமாகும். ஒரு மலைக்குவட்டில் ஓரிடத்தே தோன்றும் சிற்றருவி, பலவற்றின் கூட்டுறவால் தானே பேரியாறாகி நாட்டவர்க்கு இன்பம் நல்குகின்றது. ஒரு பெருங்காவியத்தில் பிண்டித்து நிற்கும் தலைமக்கள் வரலாறு சிறிதே. ஆயினும், இடையிடையே வந்து சேரும் கிளைக்கதைகளே காவிய வரலாற்றுக்குச் சிறப்பும் ஆக்கமும் தருவனவாம். அச்சணந்தி யாசிரியன் வரலாறு, சீவகற்குப் பல்வகைக் கலை யறிவு நிரப்பு முகத்தால், கட்டியங்காரன் செயலைச் சீவகற்கு உணர்த்தி அவன்பால் பகைமை கொள்விக்கின்றது. ஏனெனில், அச்சணந்திதான் முதன் முதலின் சீவகற்கு அவன் பிறப்பு வரலாறு கூறுப்வன். அப்போது சினங்கொண்டெழுந்த சீவகனை அவன் ஓரியாண்டு பொறுத்தல் வேண்டுமென்று சொன்ன சொல்தான், இக் காவியத்திற்கு அச்சாணி யாகும். அவன் சீவகற்கு ஆசிரியனாய் இருந்த பயன் கலையறிவித்துப் பிறப்பு வரலாறு உணர்த்துதற் கன்று; தன் வரலாறு கேட்டுச் சினந்தெழும் சீவகனது சினம் தணித்துக் காலம் வருந்துணையும் பொறுத்திருக்கப் பண்ணுதற்கேயாகும். ஆசிரியன் ஆணையை மறுக்கும் புன்மை சீவகன்பால் கிடையாது. அனங்கமாலை வரலாற்றால் சீவகன் வளர்ந்த குடியும் கந்துக் கடனுடைய குடிமை நலமும், கட்டியங்காரனுடைய இழிசெயலும் மனப்புன்மையும் விளங்குகின்றன. அரசரோடொத்தவரே அரங் கேறும் நாடக மகளிரைக் கைசெய்யற் பாலா ரென்பதுகொண்டு, சீவகன் அவளைக் கைபுனைந்து சிறப்பிக்கின்றான். அவட்கு அவன்மீது காதல் வேட்கை மிக்கு நிற்பது தெரிந்தும், கட்டியங் காரன் அவளை வலிதிற்கொண்டு சென்று கற்பழிக்கும் காலத்து, அவள் “சீவக சாமியோ” என்று அரற்றினாளாக, அவன் , பொறாது சீவகன் மீது அழுக்காறு மிக்கச் சில கூறித் தன் மனப்புழுக்கத்தைக் கக்கிவிடுகின்றான். சுதஞ்சணன் வரலாறு சீவகனைக் கட்டியங்காரனுடைய கைப் பிடியினின்றும் விடுவித்துப் பல்லவநாடு, தக்கநாடு, மத்திம நாடு என்ற நாடுகட்குச் செலுத்துதற்கு வாயிலாகின்றது. அந்நாடு களில் சீவகன் முறையே பதுமை, கேமசரி, கனகமாலை முதலி யோரை மணம் செய்து கொள்ளுகின்றான். சுதஞ்சணன் நாயாய் இருந்து தேவனானவரலாறு சீவகனுக்கும் சுதஞ்சணனுக்கும் நட்பினை யுண்டுபண்ணுவதுடன், சீவகனது அருளுடைமை யையும், அந்தணர் கூட்டத்தின் அருளின் மையையும் புலப்படுத்து கின்றது. சீவகன் வேட்டுவர் தலைவனைக் காண்பதும், யானைத் திரளைக் காட்டுத் தீயினின்று காப்பதும், பவதத்தன் வரலாறும், வழிப்போக்கற்குச் சீவகன் அறம் உரைப்பதும், சீவகன் வரலாற்றிற்கு நேரிய நயம் பயக்கும் சிறப்புடைய வல்லவாயினும், சீவகன் குணநலம் சிறப்பிக்கும் செய்திகளாக அமைகின்றன. சீவகன் பதுமையாரை மணந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் சீவகனைக் கூத்தர் அரங்கத்தே கொண்டு நிறுத்தி தேசிகப் பாவையின் சிந்தையை நெகிழ்வித்து, அதுவே வாயிலாக, சீவகனுக்கும் உலோக பாலர்க்கும் தொடர்புண்டு பண்ணுகின்றார். அனங்க மாலை யரங்கேறிய காலத்தே அவளையணிசெய்த சீவகனை, தேசிகப் பாவையரங்கேறும்போதும் கொணர்ந்து காதலுறுவிக்கும் திறம் குறிக்கற்பாற்று. அனங்கமாலைக்குச் சீவகன் பால் உண்டாய காதற் பெருக்கைக் கட்டியங்காரன் வலிதிற் பற்றி யழித்தா னென்பவர், தேசிகப்பாவை சீவகனிடத்தே கொண்ட வேட்கையை, அவன் பதுமையை மணந் திருந்த ஞான்று, காவிற் கூடிக் களிக்கொண்டு, சீவகன் மணிமுடி சூடி யரசுபுரியும் நாளில் அனங்கமாலையின் தோழியாய்ப் போந்து கண்டு கூடித் தணித்துக்கொள்ளச் செய் கின்றார். சீவகனுடைய பழம் பிறப்பு வரலாறு, பிறந்தது முதல் அவன் விடலைப் பருவம் எய்துங்காறும் பெற்றோரைப் பிரிந்திருந்த பாவத்து க்கு ஏதுவாய்ப் பயன்படுகிறது. சீதத்தன் உடைகலப்பட்டுக் கலுழவேகனைக் காாண்பது, காந்தருவதத்தை இராசமாபுரம் போதருதற்கும், குணமாலையும் சுரமஞ்சரியும் சுண்ணங் காரணமாக மாறுபட்டு நீங்குவது சுரமஞ்சரி நோன்பு மேற்கோடற்கும், சோலையில் சீவகன் மந்திகளைக் காணும் காட்சி அவன் துறவு பூண்பதற்கும் உதவுகின்றன. இவ்வாறு இக்காவியம் பலவேறு சிறு கிளைக்கதைகளால் பெருகி யிருக்கின்றதெனினும், இவற்றால் எடுத்த வரலாற்றைச் சிக்குப்படுத்தி, படிப்படியாக அச்சிக்கலை யறுத்து முடிவெய்து விக்கும் நூற்புணர்ப்பு முறை தேவர்பால் காணப்படவில்லை. இக்காவிய காலங்களிலாதல், பின் வந்த புராண காலங்களிலாதல் இந்நெறி நம் நாட்டுப் புலவர் மனத்தே இடம் பெறவில்லை யென்பது தெரிகிறது. சங்ககாலத்திருந்த இடையீட்டுச் சிக்கல் நெறி எதனால் இவற்றுள் இல்லாது போயிற்று என்பது விளங்கவும் இல்லை. ஒருவரது இன்பவொழுக்க வரலாறு இடையீடின்றி இனிது செல்வதன்று; சுடச்சுடரும் பொன்போல் இடையீடுகளால் கலக்குண்டு தெளிவுறுவதே வாழ்க் கைக்குச் சிறப்பியல்பு. அதனை உருப்படுத்திக் காட்டும் பொற்பு காவியங்கட்குப் பண்பாதலால், அதனைச் செய்யாது ஒழிதல் காவியங் கட்குப் பெரியதோர் குறையேயாகும். 8. நூலின் நோக்கம் இனி, இக் காவியத்தைப் பாடிய தேவர், இதனைப் பாடுதற்குக் கொண்ட நோக்கம் இஃதெனக் காண்டல் வேண்டும். “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” என்பது பொதுவிதி. உலக வாழ்வே இந்நான்கினையும் அடிப்படையாகக் கொண்டது. எல்லாருடைய வாழ்விலும் அறஞ்செய்தல், பொருளீட்டல், இன்புறுதல் என்ற மூன்றும் நிகழ்கின்றன. “எல்லா வுயிர்க்கும் இன்பமென்பது, தான மர்ந்து வரூஉ மேவற்றாகும்” என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறுதல் காண்க. இன்பம் பொருளையும், பொருள் அறத்தையும் சார்ந்து நிறப்தைக் காண்கின்றோம். “இன்மும் பொருளும் அறனு மென்றாங்க, அன்பொடு புணர்ந்த ஐந்திணை” என ஆசிரியர் தொல்காப்பியர் அறிவுறுத்துகின்றார். இம்மூன்றும் சிறந்து தோன்றாத வாழ்க்கை காவியங்களில் இடம்பெறாது. ஆதலால், காவியத்தின் பயன் அற முதலிய வற்றையுணர்த்துவ தென்பது பொதுவிதியாதல் இனிது துணி யப்படும். இதனைத் தேவர் நன்கறிந்த புலவராதலின், இக்காவித்தைச் செய்யுமிடத்து, சிறப்பாக ஒரு நோக்கம் அவர் மனத்தே இருந்திருத்தல் வேண்டும். சிறப்பு நோக்கமின்றி எவரும் எதனையும் செய்யார். செய்வாருளரேல், அவர் அச் செய்கையில் வெற்றியும் சிறப்பும் எய்தார்; பித்தராகவே கருதப்படுவார். புலவராவார் காலத்தின் அருமைவியனை நன்கு கண்டவராதலின், இந் நூலைச் செய்தற்குச் செலவாகும் காலம், தாம்கொண்ட அரிய நோக்கமொன்றைச் சாதித்தற்குத் துணைசெய்வதனைக் குறிக்கோளாகக் கொண் டிருப்பர். அதனைக் காண்பதே இவ்வாராய்ச்சியின் குறியாகும். இந்நெறிமையினை பண்டைத் தமிழாசிரியன்மார் கொண்டிருந்தனர் என்பதற்கு அரிய சான்றுகள் இல்லாமல் இல்லை. இளங்கோவடிகள் தாம் சிலப்பதிகாரம் பாடுதற்குக் கொண்ட சிறப்பு நோக்கத்தை இனிது காட்டியிருக்கிறார். * சிலப்பதிகார ஆராய்ச்சியுட் காண்க. தேவர், இப் பெருங்காவியத்தைப் பாடுதற்குரிய நோக்கம், சமண் சமய முனிவர்கள் ஏனைத் தமிழ்ப்புலவர்களைப்போல அகப்பொருள் நலங்களை இனிதெடுத்துக் கூறும் வன்மை யுடையர் என்பதனை இக்காவியத்தால் வற்புறுத்துவதே என்று தேவர் வரலாறு கூறுகிறது. இதனை நூல் வரலாறு என்ற தலைப்பின்கண் கூறியுள்ளோம். இக்கருத்தினை வற்புறுத்தற்கேற்ற சான்றோன்றும் இக்காயித்தின் கண் காணப்படவில்லை. இந்நூலைத் தொடங்குங் காலத்தே, தேவர் தம் ஆசிரியர் அருள் பெற்றுப் பாடி, முடிவில் அவர்க்குக் காட்ட, அவர் இந்நூலின் சொற்பொருள் நலங்கண்டு வியந்து, “சிந்தாமணி யோதியுணர்ந்தார் கேட்டார். இந் நீரராய் உயர்வர்; பூந்தாமரையாள் காப்பாளாம்” (3152) என்று பாராட்டு கின்றார், என்றும், தேவரும், “ஐயனே , நின்பாதம் ஏத்தி ‘சிந்தா மணியின் சரிதம் சிதர்ந்தேன்; தெருண்டார்’ (3153) என்று கூறினார்” என்றும் உரைகாரர் கூறுமாற்றல் அறிகின்றோம். இவ்வுரை பாட்டாலும், தேவர் தாம் காமச்சுவை கனியப்பாடும் மதுகையுடைய ரென்பதனை வற்புறுத்தும் கருத்தினர் என்பது விளங்க வில்லை. நூற்புணர்ப்புநெறி இக்கருத்தை வலியுறுத்துகிறதோ என் பதைச் சிறது இனி ஆராய்வாம். சச்சந்தன் விசையைபாலும், கட்டியங்காரன் அனங்க மாலை பாலும், சீவகன் காந்தருவதத்தை குணமாலை முதலிய மகளிர்பாலும் துய்த்த செய்தியே இச் சிந்தாமணிக்கட் காணப்படும் காமப்பகுதி களாகும். சச்சந்தன் விசையைபால் அன்புற்று ஒழுகிய திறம் தமிழ் நெறிக் கண் ஓதப்பெறும் காதற் காமமன்று. “வாய்மொழிப் புலவீர் கேண்மின்: சிறந்தது காதற்காமம் ; காமத்துச் சிறந்தது; விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே” ( பரி.9:13-6) எனச் சான்றோர் தமிழ்நெறிக் காதற்காம வியல்பு கூறுதல் காண்க. விசயையின் மெய்ந் நலமும் பெண்மையின்பமுமே அவன் நெஞ்சைக் கவர்ந்து கொள்கின்றன. அவள்பாற் பெறலாகும் வெறுங் காமச்சுவையில் அவன் கருத்திழந்து மூழ்கிக் களித்து மெலிகின்றான். அனால் அரசியற்றும் தன் உறுதொழிலைத் தாங்கமாட்டாது அமைச்சன் பால் வைத்து உயிர்துறக்கின்றான். காதற் காமத்தாற் கூடியுறைவோர் தம் கடமைக் கண் சிறிதும் நெகிழார். “என்றும் இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல் வல்லநெஞ்சம் வலிப்ப நம்மினும், பொருளே காதலர் காதல்” (அகம். 53) என்றும், “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோரெனத் தாள் வலம்படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்” (அகம்.61) என்றும், “உள்ளியவினை முடித்தன்ன இனியோள்” (நற்.3) என்றும் காதற் காமநெறி நின்ற மகளிரும் ஆடவரும் முறையே பேசும் பேச்சுக் களால் இவ்வுண்மை துணியப் படும். அன்றியும், காதலியுடன் கூடி யுறையும் காதலன் பொருளோ, வினையோ குறித்துப் பிரிந்தேகும் போது, பிரிதற்கு மாட்டாதான் போலச் சில அழுங்கிக் கூறுவதுண்டு ஆனால், அது செல்லாது மனைக்கண்ணே மடிந்தொழிவதற்கன்று; மடிந்தவழிக் காதற்காமத்தின் சிறப்புக்கட்டழியும். இக் குறிப்பாலன் றோ ஆசிரியர் தொல்காப்பி யரும்,1 “செலவிடையழுங்கல் செல்லாமையன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்” என்று உரைப்பாராயினர். ஈண்டுச் சச்சந்தன் தன் கடமையினை நெகிழ்த்த தொன்றே இதற்குப் போதிய சான்றாயிற்று. அமைச்சனான கட்டியங் காரனை அரசனாக்குதற் கெண்ணி அவன் பால் தன் கருத்தைச் சொல்லுங்காலும், பெண்ணின்பத்தையே பெரிதும் நினைந்து தடுமாறு நினைவால் சிறிதும் நா கூசாது தன் மனைவி விசயையின் நலத்தையே விதந்து, “வசையிலாள் வரத்தின் வந்தாள்; வான்சுவை யமிர்த மன்னாள்; விசையையைப் பிரித லாற்றேன்; வேந்தன் நீ யாகி வையம் இசைபடக் காத்தல் வேண்டும் இலங்குபூண் மார்ப” (201) என்று கூறுதலைக் காண்மின். இவன் விசையையைக் கூடியிருந்த செயலை விளக்கவந்த தேவர், “இனம் தமக்கெங்கும் இல்லார் இயைந் தன ரென்ப முக்கண், சினந்திகழ் வேலினானும் செல்வியும் சேர்ந்த தொத்தே” என்றும், இன்புற்ற திறத்தை, “தன்னமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில் பொன்னனாள் அமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகி யிட்டான் மின்னவிர் பூணினானை வேற்கணார்க் கியற்றப்பட்ட மன்னிய மதுவின்வாங்கி மாதரும் பருகியிட்டாள்” (190) என்று கூறுகின்றார். இது காமக் களியாட்டே யன்றிச் செவ்விய காதற் காம இன்ப நுகர்ச்சியாகாது. இனி, கட்டியங்காரன் அனங்கமாலை யென்பவள் பால் பெற்ற இன்பம் பெருந்திணைக் கூட்டமாகும். அவன் அவளை வலியக் கொண்டு சென்று தன் கருத்து முற்றுவித்துக் கொண்ட போதும், அவள், “சிலைவலாய்! புல்லு, நம்பி, சீவக சாமியோ” (691) என்று அரற்றுகின்றாள். “பிறன் நலம் அரற்றக் கேட்டும்” (693) அக்கட்டியங்காரன் அவள் பொருட்டு உளம் உருகுகின்றான். இது விலங்கினும் இழி செயலாதல் கூறாமலே வெளியாகின்றது. இனி, சீவகன் காந்தருவதத்தையை மணந்த நெறியும் தமிழ் நெறிக் காதல் மணநெறி யன்று. இசையரங்கில் சீவகன் வந்து தோன்றக் கண்டதுமே காந்தருவதத்தை தன் கருத்தை யிழந்துவிடு கின்றாள். அப்போது அவள் தன் நெஞ்சிற் கூறிக்கொள்வது தமிழ் மகள் ஒருத்தி யின் மனவெல்லையிற் படுவதொன்றன்று. “பெருவனப்புடைய நம்பி, எண்ணின் மற்று யாவனாங் கொல்” (718) என்று முதற்கண் ஐயுற்று, உண்மை தெளியாமலே, “ யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக் காவல்என் நெஞ்ச மென்னும் கன்னிமா டம்பு குந்து நோவஎன் உள்ளம் யாத்தாய்; நின்னையும் மாலையாலே தேவரிற் செறிய, யாப்பென்; சிறிதிடைப் படுக என்றாள்” என்று தேவர் உரைக்கின்றார். இசையில் தோற்றுத் தனக்கு மாலை சூட்டி நின்ற அவளைக் கண்டதும் சீவகன் “விம்மிதப் பட்டுமாதோ விழுங்குவான் போலவாகி, மைம்மலர்த்தடங்கண் நங்கை மரை மலர்த் தேவி” (744) என்று கூறிக்கொள்கின்றான். இஃது ஐயுற்றுரைப் பதன்று; தெளிந்துரைக்கும் சொல்; இஃதொன்றே இவன் பாலும் அகப்பொருட் குரிய காதற்குறிப் பின்மைக்குச் சான்றாகிறது. இச்சீவகன் குணமாலையக் கூடிய திறம் ஒருவகையில். அகனைந் திணைக் களவின்கட் காணப்படும் களிறு தரு புணர்ச்சியை ஒத்துளது. களிற்றினின்று ஒருத்தியைக் காப்பவன், களிற்றினை யகற்றி வந்து, அவளைக் கண்டு, காதற்குறிப் புணர்ந்து, பின்பே கூடக் கருதவன். சீவகன் குணமாலையை அசனிவேகத்தினின்றும் காத்தவன் மீட்டும் அவளையடைந்து, அவள் குறிப்பறியாதே, அவளது உருவத்தை ஒரு கிழியில் எழுதி, காமப் பித்தேறிக் கலங்கு கின்றான். குணமாலை அவன் பால் உண்மைக் காதல் கொள் கின்றாள். கிளியைத் தூதுவிட்டுச் சீவகன் கருத்தறிகின்றாள். இச் செயலும் தமிழ்நெறியன்று குணமாலை தன்னைத் தன்மாமன் மகனுக்குப் பெற்றோர் மணம் செய்ய விரும்பு கின்றாரெனத் தோழியால் அறிந்து, தன் இரு காதுகளையும் பொத்தி, “மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொற் கூலியாக, அணிமதக் களிற னானுக்(கு) அடிப்பணி செய்வ தல்லால் துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்” (1056) என்பது தமிழ் நெறிக்கண் வரும் அறத்தொடு நிலை வகையைச் சார்ந்து நிற்கிறது. மேலும் குணமாலையின் கருத்தறிந்த அவள் பெற்றோர் தாமே சீவகன் பெற்றோரான கந்துக்கடன் மனைக்குச் சான்றோரை விட்டு மகட்கொடை நேருமாறு வேண்டு கின்றனர். இது தமிழ் வாழ்விற்கு முற்றும் மாறானது. ஆகவே, இப்பகுதியும் தமிழின்பத் துறை யன்றென்பது தெளிவாகிறது. சீவகன் பதுமையை மணந்த நிகழ்ச்சிக்கண் தமிழின் தூய மணம் வீசுகின்றது. இருவரும் ஒருவரை யொருவர் கண்ணுறுதலும் காதல் கொளலும் நிகழ்கின்றன. மீட்டும் பூங்காவில் இருவரும் தம்மில் எதிர்ப்படுகின்றனர். இவ்விடத்தில் திருத்தக்க தேவரும் இதனையே விதந்து, “தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென் தமிழ் மெய்ப்பொரு ளாதலின் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை புகுவல்என் றெண்ணினான்” (1335) என்று கூறுபவர், இக் காதலின்பக் கூட்டத்தைக் குறிக்கொண்டு, “தென் தமிழ் மெய்ப்பொருள்” என்று கூறதலைக் காணலாம். இங்கே இடையீடொன்று தோன்றி, அறத்தொடு நிலை பயப்பித்துத் திருமண நிகழ்ச்சிக்கு வழி செய்திருக்குமாயின், “தென் தமிழ் மெய்ப் பொருள்” என்ற கூற்று செந்தமிழ்க் கூற்றாகத் திகழ்ந் திருக்கும். இனி, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை முதலாயினார் திருமணங்களிலும் தமிழின் பத்துறைக்குரிய சீரிய நெறிகள் காணப்படவில்லை. திருமணம் என்ற சொல் செவ்விதாவது குறித்து, ஆங்காங்குச் சீவகற்கும் அம்மகளிர்க்கும் கருத்தொருமை உண்டாயிற்றென்று தேவர் கூறிச்செல்கின்றார். சுரமஞ்சரி திருமணம் காமக் கள்ளாட்டே யன்றிக் காதற்காமச் செந்நெறி யன்று. சீவகன் உளத்தில் தான் தன் நண்பரிடம் கூறியவாறு “காமதிலகன்” என்ற பட்டம் பெறவேண்டு மென்பதே கருத்தாகும். அன்னவன் பால் காதல் நலம் எவ்வாறு இடம்பெறும்! மேலும் இச் சீவகன் தேசிகப் பாவையைக் கூடி யின்புறுவதும், பதுமுகன் கோவிந்தையாரை மணந்துகொள்வதும் காமச் சுவை கனியப் பாடவேண்டும் என்று கருதிப் பாடலுறும் புலவன் மேற்கொள்ளும் புலமைத் துறை களாகா. காதற் காமமுற்ற இருவர், ஒருவரை யொருவர் காண்டலும், காதல் கொளலும், இடையீடின்றிக் கூடலும் நிகழ்த்துவரேல் அவரது காதலின்பம் அறிஞர்க்குச் சீரிய இன்பமாகத் தோற்றாது. உண்மைக் காதல் நெறி ஒருகாலும் செவ்வே இயல்வதன்று, பேரியாறொன்றில் பெருகிவரும் நீர், அதன் வழியில் உளவாகும் மேடுபள்ளங்களாலும் அணைகளாலும் கடுமை மிகுந்து முடிவு நிலையாகிய கடலை யடைந் தடங்குவதுபோல, காதற் காமமும் இருவர் மனத்தே பிறந்து கண் வழியாற் கலந்து பெருகி, இருவர்க்கும் இடையேயுளவாகும் இடையீடுகள் பலவற்றாலும் கடுமை மிகுந்து முறுகி, ஒருவரையொருவர் இன்றியமையா அளவிற் பெருகிப்பின் அவர் தம் கூட்டத்தின்கண் அயரா இன்பநிலை தருவதாகும். ஆனதுபற்றியே, காதலிருவர் தம்மில் உளம் கலந்து இன்பம் சிறத்தலும், இடையீடுபட்டுத் துயருறுதலும், பின்னர் அது நீங்கலும், முடிவில் இருவரும் கூடி இன்புறுதலும் காமச்சுவை கனியயாக்கும் நூல்யாப்புக்குச் சிறந்தன என்பது அறிஞர் யாவரும் கண்ட இன்பத் துறையாகும்; நூற்புணர்ப்பு முறையும் இதுவேயாம் என்பர். இப்பெற்றித்தாய நூற்புணர்ப்பு இப்பெருங்காவியத்துக்கண்யாண்டும் இல்லை. காதற்காம நெறியாகிய களவொழுக்கத்தே பல முட்டுப்பாடு நிகழாதவழி இன்பம் சிறவா தென்ற மெய்ம்மை நெறியைத் தமிழ் இலக்கணம் இடையீடு, இற்செறிப்பு, சேட்படை என்பன முதலிய வகைளால் வற்புறுத்துகிறது. ஓதல், காவல், வீனை, பொருள் முதலிய வற்றின் பொருட்டுப் பிரிதலும், வரைவிடை வைத்துப் பிரிதலும், உடன் போக்கும் பிறவும் இன்பநெறிக்கு இடையீடு குறித்துவரு வனவே யாம். சுருங்கச் சொல்லின், அகப் பொருட்கென்று வகுத்த புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்ற உரிப்பொருள் வகையே போதிய சான்றாதலைக் காணலாம். மேனாட்டுப் புலவர் பெருமகனாரான சான்சன் என்பாரும் பிற ஆசிரியர்களும் இன்பச் சுவை விளங்க உரைக்கும் நூல்கட்கு இவ்விடையீட்டு நெறி இன்றி யமையாதென இயம்பியிருக் கின்றனர். தமிழ் நூல் துறையும் வடநூன் முறையும் நன்குணர்ந்த தேவர்க்கு இந்நெறி தெரியாத தன்று, ஆகவே, தேவர், சமண முனிவர்க்குக் காதற்காமப் பொருட் சுவை கனியப்பாடும் திறனுண்டு என்பதை நிலைநாட்டப் பாடினார் என்னும் செய்தி சிறிதும் பொருந்துவதன்று. அஃது உண்மையாயின், அவர் காமச் சுவை கனியத் தொடர்நிலைச் செய்யுள் யாக்குந் துறையில் படுதோல்வி யெய்தினார் என்பதே துணிவாம். இத்துணிபு அவர்க்கு நூன்முடிவில் கட்டாயம் தோன்றியிருக்கும்; இருப்பின் இதனைத் தமிழுலகிற்கு வழங்கியிரார்; அவர்காலத்துச் சான்றோர் தாமும் மறுத்த தொதுக்கி யிருப்பர். அவர்கள் நக்கீரர் வழித்தோன்றல்கள்! ஆதலால் எவ்வழியே நோக்கினும், இச்சீவக சிந்தாமணியைத் தெளிந்த காதற்காம வின்பத்தைச் சிறப்பித்துப் பாடும் வன்மை தம்பால் உளது என்பதனை நாட்டுதற் பொருட்டுத் திருத்தக்க தேவர் பாடினார் என்பது முற்றும் பொருந்தாக் கூற்றாம். மேலும், திருத்தக்கதேவர் பிற சங்கப் புலவர்கள் கூறியதனை மறுத்து நிலைநாட்டுதற்கென்று தம் இனத்தவரால் அருவருக்கப் படும் பொருளைச் சிறப்பித்துப் பாடினா ரென்பது அவர் பெருந்தகை மையை ஈடழிப்பதாகும். சமண முனிவர் காமவின்பத்தை அருவருப் பவர்; அதனை அவர்கட்கு விளக்கிப் பாட முடியாது என்று பிறர் கூறின், அஃது அவர்க்குச் சிறப்பேயன்றி இழிவன்று; அதனை இழி வென்று கருதி, அவர் இதனைப் பாடலுற்றாராயின், குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொள்வாரை அவர் ஒப்பார் என்பது பட்டுக் குற்றமாய் முடியும். பின் வந்த ஆளவந்த பிள்ளை யாசிரியர் முதலாயினார் மலைபடு கடாத்துக்குக் குற்றங் காட்டினார் என்பது முதலிய வரலாறுகளைக் கண்டறிந்தோதும் இயல்புடைய நச்சினார்க் கினியர், இக்கருத்தினை யாண்டும் கூறாமையின், அவர் காலத்துக்குப் பின்னே வந்த எவரோ சிலர் இதனைக் கட்டிவிட்டனர் என்பது தவிர வேறே காரணமொன் றும் தெரிந்திலது. இனி, தேவரது நோக்கம்தான் யாதோ எனின், கூறுதும்; தேவர் காலத்தே வேத வழக்கொடுபட்ட வைதீக சமயம் தமிழ்நாட்டில் நன்க வேரூன்றி வேற்றுச் சமயங்கள் நிலைபெறா வகையில் தகைந்து கொண்டிருந்தது. மக்கள் மனத்தே அவ்வைதிக நெறி பற்றிய வரலாறுகளும், கொள்கைகளும் பதிந்திருந்தன. அவர் காலத்துக்குச் சுமார் இருநூறு யாண்டுகட்கு முன்னே திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் முதலாயினார் தோன்றி, சமண சமயத்தின் இருப்பினை நிலைகுலைத்து விட்டனர். அதன் பயனாக, புத்த சமயம் இருந்த விடம் தெரியாமல் மறைந்தே போயிற்று. சிதைந்து சிதறிக் கிடந்த சமண் சமயத்தவர் தம் சமயத் தொண்டினை வளம்பெறச் செய்தற்கு வாயில்காணாது மருண்டு நின்றனர். இஃதொருபுறம் நிற்க, அகப் பாட் டாராய்ச்சியும் இசை யாராய்ச்சியும் அவற்றின் வழிப்பெறும் இன்பமும் அறிஞர் அறிவைப் பணிகொண்டொழுகின. “சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்து மென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலினாய்ந்த வொண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி யேழிசைச் சூழல் புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந் தெய்தியதே” என்ற திருக்கோவையார் (20) திருவாக்கும், மூவர் முதலிகள் பாடியுள்ள தேவாரத் திருப்பாட்டுக்களும் அக்காலத்து இசைநலத்தின் உயர்வுக்குச் சான்று பகர்கின்றன. இவ்வாறு மருண்டுநின்ற சமண் சான்றோர்கட்குத் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை கொங்குவேள் மாக்கதை என்ற இவையும் சங்க இலக்கியங்களும் வேறு பல நூல்களுமே இருப்பது புலனாயிற்று. சிலப்பதிகாரத்தும், மூவர் முதலிகள் பாடியருளிய திருமுறையிலும் புதிய பாவினங்கள் பயின்றிருப்பதையும், அவற்றைக் கற்றவரும் மற்றவரும் நயந்து பேணுவதையும் கண்டனர். அக்காலத்தே இராமாயணம், பாரதம், கந்தபுராணம், பாகவதம் என்பன போன்ற காவிய நூல்கள் தமிழ்மொழியில் இல்லை. ஆகவே, காவியம் செய்யும் வாயிலாகத் தேவர் சமண் சமயக் கருத்துக்களை நாட்டு மக்களிடையே பரப்பக் கருதினார் என்பது துணிபாம். தேவர் இந்நூலின் முதற் கண்ணே அமைத்துள்ள “கடவுள் வாழ்த்துச் செய்யுள்” ஆசிரியர் நச்சினார்கினியரால் விருத்தக் கலித்துறை யென்று கூறப்படுகிறது. யாப்பருங்கலம் முதலிய யாப்பிலக்கண நூல்களுள், இச் சிந்தாமணிச் செய்யுளும் சூளாமணிச் செய்யுளுமே இன்னோரன்ன இலக்கணங்கட்கு மேற்கொளாகக் காட்டப் பட்டுள்ளன. இவற்றிற்கு இருநூறியாண்டு கட்குமுன்பே, இவை போலும் செய்யுட்கள் பிறந்திருக்கின்றன. அவை இவ்யாப் பிலக்கண நூல்களும் காட்டப்படவில்லை. ஒன்று காட்டுதும்: திருஞானசம்பந்தப் பெருந்தகை பாடிய திருப்பாசுரத்தின் கண், முதன் மூன்றொழிய ஏன் ஒன்பது பாசுரங்களும் இவ்விருத்தக் கலித்துறை யின்பாற் படுவனவேயாம். “ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும ஆதிமாண்பும் கேட்பான் புகில் அள வில்லை கிளக்க வேண்டா; கோட்பா லனவும் வினையும் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்” என்பது திருப்பாசுரம். இதனை இசையோடு படித்து விட்டு, “மூவா முதலா வுலகம் மொரு மூன்று மேத்தத் தாவாத இன்பம் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண் ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவனவன் சேவடி சேர்துமன்றே” என வரும் இச் சிந்தாமணிச் செய்யுளையும் இசையுறப் படித்துக் காண்மின். ஞானசம்பந்தப் பெருந்தகையார் பாடிய திருநீலகண்டத் திருப்பதிகம் முற்றும் “இவ்விருத்தக் கலித்துறை”ப் பாட்டே யாகும். மேலும், தேவர் நெடிலடி நான்கு கொண்ட பாட்டுக்கள் பலவற்றையும் எத்துணை ஓசை வேறுபடப் பாடியுள்ளனரோ, அத்துணையும் அவற்றிற்கு மேலுமாக ஞானசம்பந்தர் பாடி யிருத்தலை அவர் பாடிய அருட்பாட்டுக்களைக் காண்பார் இனிதறிவர். இவ்வாறு, யாப்பு நெறியே யன்றி, சைவத் திருமுறைகளில் வரும் சொற்களும் சொற்றொடர்களுமாக மிகப்பல திருத்தக்க தேவர் சிந்தாமணிக்கண் காணப்படு கின்றன. இவற்றைவேறு தலைப்பின் கீழ்ப்பின்னர்க் காட்டுவோம். வைதிக சமயக் கதை களையும் இவர் இச் சிந்தாமணிக்கண் பெருக வழங்கியுள்ளார். சிவபெருமான், திருமால், முருகன் முதலியயோருடைய வரலாறுகள் மிகப்பல விடங்களில் உவமைகளாக எடுத்தோதப்படுகின்றன. இவற்றை நோக்கின், நாம் மேலே கூறியவாறு சமய நுண்பொருளை மக்களிடையே பரப்புங் கருத்தால், நோக்கத்தால்தான், தேவர் இச்சீவக சிந்தாமணியை, சைவத் திருமுறைகளிற் காணப்படும் யாப்புவகையும், வரலாறுகளும், சொற் களும் பிறவும் விரவியும், இடையிடையே சமண்சமயக் கருத்தும், வெறுங்காம இன்பத்தின் புன்மையும் தோன்றவும், முடிவில் சமண் சமயத்தை நன்குரைக்கும் சமண் சமய நூலாகவிளங்கவும் இப்பெருங் காவியத்தை இயற்றி யுள்ளார் என்பதே முடிபாம். இக் காலத்திலும் சீவகசிந்தாமணியின், முத்தியிலம்பகம் மட்டில் தனியாகப் படி யெடுத்துச் சமய நூல் வகையுள் ஒன்றாகக் கொண்டு சமணச்சான்றோர் களாலும், அச்சமயக் கருத்தைக் காணவிழையும் பிறராலும் போற்றப் பட்டிருக் கிறது. முத்தியிலம்பக ஏட்டுப்பிரதி இரண்டு என்பாலுள்ளன. ஒன்று ஆம்பூர், தமிழணங்கு என்னும் திங்கள் வெளியீட்டாசிரியர் திரு. ஆ. மா. சிவஞானம் அவர்கள் வழங்கியது; மற்றொன்று ஆலக்கிராமம் திரு. துரைசாமிநயினார் அவர்களதாகும். இச்சீவக சிந்தாமணி சமண் சமய நுண்பொருளையுணர்த்தும் தகுதியுடையதாக இருப்பது சேக்கிழார் காலத்துச் சான்றோர்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது. அநபாய சோழன் இச் சிந்தாமணியை மிக விரும்பிப் படித்தொழுகியது சேக்கிழார் முதலிய பெருமக்கட்கு அச்சத்தை விளைத்திருக்கிறது. மறுபடியும் கூன்பாண்டியன் காலம் போல்வதொரு காலம் வருமோ என்ற அச்சம், அவர் உள்ளத்தை வருத்த, அவர் அவ்வேந்தன் கருத்தை மாற்றுவதற்காகத் திருத்தொண்டர் புராணத்தை எழுதியருளினர். செந்தமிழ்த் தீங்கவிகளாலியன்ற இனிய காவியமாய்த் தோன்றித் சமண்சமயக் கருத்தை நாட்டவ ரிடையே பரப்பும் குறிப்பை, நோக்கத்தை, நன்குணர்ந்தே, சேக்கிழார் புராண வரலாறு பாடிய உமாபதிசி வனார், பெருங்சினத்தராய், “கலகமிடு மமண்முருட்டுக் கையர் பொய்யே கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று) உலகிலுளோர் சிலர்கற்று நெற்குத் துண்ணா துமிகுத்திக் கைவருந்திக் கறவை நிற்க, மலடுகறந் துளம் தளர்ந்து குளிர்பூஞ்சோலை வழியிருக்கக் குழியில்விழுந்தளறு பாய்நது விலைதருமென் கரும்பிருக்க இரும்பைமென்று விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்து நொந்தார்.” (20) “வளவனும் குண்டமண் புரட்டுத் திருட்டுச்சிந்தா மணிக்கதையை மெய்யென்று வரிசை கூற, உளமகிழ்ந்து பலபடப்பா ராட்டிக் கேட்க உபயகுல மணிவிளக்காம் சேக்கிழார் கண்(டு) இளவரசன் தனைநோக்கிச் சமணர் பொய்ந்நூல் இதுமறுமைக் காகாதிம் மைக்கும் அற்றே: வளம்மருவு கின்றசிவ கதையிம் மைக்கும் மறுமைக்கம் உறுதிஎன வளவன் கேட்டு” (21) என்று கூறிச் செல்கின்றார். சமயக் காழ்ப்பினால் இவர் அக்காலத் துச் சமணர்களை வைது கூறுவது இக்காலத்து நமக்குச் சிறிது அருவருப் பாய் இருப்பினும், இவர் கூற்றுட் பொதிந்திருக்கும் உண்மையினை விடுதற் கில்லை. இவர் “திருட்டுச் சிந்தாமணி’ யென்றது, சமண்சமயக் கருத்தை இந்நூற்கண் பெருக விரவியிருப்பது பற்றியே யென்பது ஒருதலை. இவ்வாறு கூறும் இவ்வுமாபதிசிவனார் இச் சிந்தாமணியைப் படித்துப் பயின்றுள்ளவரா? சமயக் காழ்ப்பால் வெறுத்து இவ்வண்ணம் உரைப்பவரா? என்று காண்போமாயின், அவர் பாடிய கோயிற் புராணம் முதலியவற்றில் இச் சிந்தாமணியின் சொற்களும் சொற் றொடர்களும் கருத்துக்களும் பயின்று வருகின்றதைக் காண் கின்றோம். சோறு பதம் காண்பது போல ஒன்று காட்டுவோம்; சிந்தாமணிக்கண் சீவகன் மகளிரொடு நீர் விளையாடிய பகுதிக்கண், “கூந்தலை ஒருகை யேந்திக் குங்குமத் தாரை பாயப் பூந்துகி லொருகை தாங்கிப் புகுமிடங் காண்டல் செல்லார்” (2669) என்பது காணப்படுகிறது. இக்கருத்தை உமாபதிசிவனார் கோயிற் புராணத்துப் பதஞ்சலி சருக்கத்தில், “சாயவார் குழலொருகை கலையொருகை யுறத் தாங்கிப், பாயவாள் விழியருவிப் பரவசராய் எதிர் பயில்வார்” என்று தாருகவனத்து முனிவர் மகளிர்மேலேற்றிக் கூறியிருப்பது காண்க. 9. நூற்கண் வரும் தலைமக்களின் குணம் செயல்கள் இந் நூற்கண் வரும் தலைமக்கள் மிகப் பலராவர். அவருள்ளும் ஆடவரினும் மகளிரே மிக்கிருக்கின்றனர். இவர்தம் குணம் செய்கை களின் பெருக்கே இப் பெருங் காவியத்துக்கு ஆக்கந் தருகிறது. அவரவர் குணம் செய்கைகளை விளக்குமிடத்தே காவியம் பாடும் புலவனுடைய புலமை நலம் விளங்கித் தோன்றுதலால், இவ் வாராய்ச்சியும் ஈண்டு வேண்டப்படுகிறது. க.சச்சந்தன்:- சச்சந்தன் என்பான் சீவகனுக்குத் தந்தை. இவன், “தருமன் தண்ணளியால், தனது ஈகையால் வருணன், கூற்றுயிர் மாற்றலில், வாமனே அருமையால், அழ கில்கணை ஐந்துடைத் திரும கன்திரு மாநில மன்னனே” என்று பாராட்டப்படுகின்றான். இத்துணைச் சிறப்புடையனாயினும் தான் மணந்து கொண்ட விசயைபால் அவன் கொண்ட காமம் கழிபெருங் காமமாகும். “சினனே காமம் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல் கடுமையொடு பிறவுமிவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீது” (பதிற். 22) என்ற சான்றோர் கூற்றுக்கு நேரிய இலக்கிய மாதற்கு இவன் நன்கு அமைகின்றான். இவன் காமநிலையினை மேலே விரித்துரைத்தாம். இவன் காமக்களிப்பால் அறிவு மழுங்கிய காலத்தில் அமைச்சர் பலர் அறிவுரைகள் பல கூறித் தெருட்டுகின்றனர். நிமித்திகனென்னும் அமைச்சன், “நீ ஒருவன் மேல்கொற்றம் வைப்பின், நிலம் திரு நீங்கும்,” என்று உரைக்கின்றான். அவற்குக் கழிகாமுகனான இவ்வேந்தன். “எனக்குயிர் என்னப் பட்டான்; என்னலால் பிறரை யில்லான்; முனைத்திறம் முருக்கி முன்னே; மொய்யமர் பலவும் வென்றான்; தனக்குயான் செய்வ செய்தேன்; தான்செய்வ செய்க;ஒன்றும் மனக்கினா மொழிய வேண்டா வாழியர் ஒழிக........” (205) என்று கூறுகின்றான். இக்கூற்றில் அன்பு மிகவுடைமை என்னும் குற்றம் தோன்றுதல் காண்க. “நுண்கலைக்கு இடனாய்த் திருமாமகள் கண்களுக்கு இடனாம் கடிமார்பன்” (158) என்றாராகலின், அவனது நுண்கலை யறிவு இப்போது மழுங்குதற்கு ஏது கூறுவாராய், தேவர், “இனமாமென் றுரைப்பினும் ஏதமெணான், முனமாகிய பான்மை முளைத்தெழலால்” (215) என்று கூறுகின்றார். பின்பு, விசயை கனவு கண்டு கூறியது கேட்டு, “எந்திர வூர்தி இயற்றுமின்” என ஏற்பாடு செய்யும் இவனது அறிவு, கட்டியங் காரனது செயலை ஒற்றியறிதற்குச் செல்லாது போகின்றது. “திண் திறல் தெவ்வர் தேர்த்தொகை மாற்றினான்” (158) என்றும், “ஏனை மன்னர்தம் இன்னுயிர் செற்றவேல், தானை மன்னருள் தான்இமில் ஏறனான்” (161) என்றும் கூறுவதை நோக்கின் இவன் போர்வன்மை மிகுதியும், நுண்ணிய கலையறிவும் உடையனாயினும் உலகியலறிவு குறைந்தவனென்பதே துணிபாகிறது. “எனை வகையால் தேறியக் கண்ணும் வினைவகையால், வேறாகு மாந்தர் பலர்” என்ற அரசியல் நெறியும் அவன் அறிவிற்குப் புலனாகா தொழிகிறது. இதற் கெல்லாம் முழுமுதற் காரணம் அவனது காமக் களிப்பே யென்பதை மறத்தற் கில்லை. விசயை தான் கனவு கண்டதைக் கூறுமிடத்து அதற்குப் பொருள் கண்டு, வேண்டாதது மறைத்து விரும்பத்தக்கதை அவட்கு உரைப் பதும், மயிற் பொறியில் ஊர்ந்து வர அவளைப் பயிற்றுவதும் செய்பவன், கட்டியங்காரனை விலக்கவோ, தன்னைக் காத்துக் கொள்ளற்குரிய வேறு சூழ்ச்சிகளைச் செய்யவோ நினையா தொழிகின்றான். கட்டியங்காரன் வளைத்துக் கொண்ட போது விசயைக்கு இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றை விளக்கு வதை நோக்கின், அப்போது தான் அவனுக்குத் தன் செயலின் புன்மைதோன்றுகின்றது. ஆனால் அதனை நினைத்து அவன் தன் நெஞ்சிற்குள்ளும் கூறிக் கொள்கின் றானில்லை. “நங்கை நீ நடக்கல் வேண்டும்; நன்பொருட் கிரங்கள் வேண்டா” என்றும், “உரிமை முன் போக்கியல்லால் ஒளியுடை மன்னர் போகார்; கருமம் ஈது” என்றும் கூறும் கூற்றுக்களால் அவன் அறிவு தெளிந்திருத்தலை யறிகின்றோம். அதனால், அவன் தன் செயலின் தவற்றைத் தேறி யிருப்பனென்று எண்ணற்கு இடமுண்டாகிறது. தவறாயவை நிகழ்ந்தவழி அவற்றை நினைத்து வருந்துவது பயனில் செயலெனக் கருதியது குறிக்கவோ, பகைவன் வந்து வளைத்துக் கொண்ட விடத்து, அவனை வெல்வது குறித்த மறமும் வெகுளியும் நெஞ்சைக் கவர்ந்து கொண்டமை குறித்தற்கோ, தேவர் அதனைக் கூறிற்றிலர். இவனது போர்த்திறம் மிக இனிதாகச் சிறப்பிக்கப்படுகிறது. கட்டியங்காரனோடு பொருகின்றபோது, அவன் எறிந்த வேல் இவன் மார்பில் தைத்துக் கொள்ளுகிறது. கைப்படையும் முறிந்து போகிறது. எதிரே யானைப்படை வருகிறது. அதுபோது இச் சச்சந்சந்தன், நெஞ்சு தளராமல் மார்பில் தைப்புண்டிருக்கும் வேலைப் பிடுங்குகிறான். அது வளைந்துவிடுகிறது. ஆயினும் இவன் அதனை விடுகின்றானில்லை. அருகே வீழ்ந்து கிடக்கும் யானையின் மருப் பிடையே அதனை நுழைத்து வளைவு திருத்துகின்றானே யன்றி, தனக்குண்டாய புண்ணை நினைக்கின்றானில்லை. இதனைத் தேவர் வியந்து, “புண்ணிடங் கொண்ட எஃகம் பறித்தலின், பொன்னனார்தம் கண்ணிடங் கொண்ட மார்பில் தடாயின காதுவெள்வேல் மண்ணிடங் கொண்ட யானை மணிமருப் பிடையிட்டம்ம விண்ணிட மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே” (284) என்று பாடுகிறார். இச் செய்யுள், “அருஞ்சமம் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத் தனக்கிரிந் தானைப் பெயர்புறம் நகுமே” (புறம்.284) என்ற புறப்பாட்டை நினைப்பித்தல் காண்க. இவன் கட்டியங்காரனால் பட்டொழிந்த செயலைக் கூறுங்கால், இவனுடைய குலப்பெருமையும் அறச்செங்கோன்மையும் பாராட்டி. “தோய்ந்த விசும்பென்னும் தொன்னாட் டகம் தொழுது புலம்பெய்தி மைந்தர் மாழ்க், ஏந்து முலையார் இனைந்திரங்கக் கொடுங்கோல் இருள் பரம்ப ஏஎ பாவம்!” ஆய்ந்த குருகுலமாம் ஆழ்கடலினுள் முளைத்த அறச் செங்கோல் ஆய்கதிரினை வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரிமா நாக முடன் விழுங்கிற் றன்றே” என்று பரிந்தோதுகின்றார். ஈண்டும் அவர் அவனுடைய அளவிறந்த காமச்செயலை விதந்தோதுகின்றிலர். பழவினை காரணமாயின், கட்டியங்காரனை யிகழ்தலும் வேண்டாவன்றே? இவன் பட்டு வீழ்ந்தது கண்டு கண்டியங்காரனும் கண்ணீருகுத்துக் கைதொழு தான் என்பார், “வேந்தன் கிடந்தானைத்தான், கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்துகுத்தபின்” என்கின்றார். உ.கந்துக்கடன்:- கந்துக்கடன் இராசமாபுரத்தில் வாழ்ந்த சீரிய வணிகருள் ஒருவன். அரசரால் சிறப்பிக்கப்படும் சீர்மையுடையவன். இவன் “நகர்க்கு ஆதிநாயகன்” (655) என்று தேவரால் குறிக்கப்படு வதுடன், கந்துகன் என்றும், கந்துநாமன் என்றும் குறிக்கப்டுகின்றான். இவன் சச்சந்தன்பால் பேரன்புடையன். சீவகனாகிய குழந்தையைச் சுடுகாட்டில் கண்டு மோதிரத்தால் அரசன் மகன் என்று தேர்ந்தவுடன், இவன் உளத்தே சச்சந்தன்பால் அன்பு மிகுகிறது; அவன் பொருட்டு அவலிக்கின்றான். “என்பெழுந்து உருகுபு சோர ஈண்டிய, அன் பெழுந்து அரசனுக்கு அவலித்து” (324) என்று தேவர் கூறுதல் காண்க. இவன் கட்டியங்காரனிடத்தும் தக்கவாறு நடந்துகொள்கின்றான். இறந்த தன் மகனை யடக்கம் செய்யச் சுடுகாடு போந்தவன், சீவகனை யெடுத்துச் சென்று தன் மனைவி பால் தன் மகன் உயிரிழக்க வில்லை என்று சொல்லிக் கொடுத்துத் தன் மகனே எனக் கருதி வளர்த்து வருவது அவனது பெருந்தன்மையைக் காட்டுகிறது. கட்டியக்காரனும் சீவகனைக் கந்துக்கடன் மகனென்றே கருதிச் சிறப்புச் செய்கின்றான். தன் மனைவிக்கு உண்மை யுரையாத இவன் பிறரிடத்து வெளிப்படுக் கானாதலின், கட்டியங்காரன் முதலாயினார் அறியாவகையில் வளர்ப் பதில் வியப்பில்லை. சீவகன் கலைநிரம்பிக் காளைச்செவ்வி யடைந்து காந்தரு வதத்தை யின் யாழ்ப்போருக்குச் செல்லக் கருதியது அறிந்து, “ஐயனுக் கமைந்த நீரார் அறுபத்துநால்வர், அம்பொன் வையகத் தமிர்த மன்னார் வாக்கமை பாவை யொப்பார், எய்திய இளமை மிக்கார் இயைந்தனர்” (671) என்று கூறுவது அவன் சீவகனை யாழ்போருக்கு விடுத்தற்கு விழை யாமையை விளம்புகிறது. அனங்கமாலை விடுத்த ஒலையைக் காட்டி, வேறொன்றும் கூறாது “படையமைத்தெழுமின்” (693) என்று கூறுவது, சீவகன் முதலாயினார் யாழ்ப் போருக்குப் போவதே கருமமாக ஒருப் பட்டிருப்பதையும், தடுப்பின் சீவகன் வருந்துவ னென்று கருதியதையும் நாமுணரச் செய்கிறது. தேவர் இச் செய்தியை எடுத்து மொழிகின்றிலர். காந்தருவதத்தையை இசைப்போரில் வென்று, சீவகன் தத் தையை யடைதற் குரியனாகிய காலத்தில், அழுக்காறுற்று எதிர்த்த அரசர்க்கும் அவனுக்கும் நல்ல போர் நடக்கிறது. அதன் கண்ணும் அவன் வெற்றி பெறுகின்றான். பின்பு தத்தையை மிக்க சிறப்புடன் மணம் செய்துகொள்கின்றான். இந்நிகழ்ச்சி யனைத்தும் கண்டிருந்த கந்துக்கடனைப்பற்றி ஒரு கூற்றும் தேவரால் குறிக்கப்படவே யில்லை. கட்டியங்காரன் வெருட்சிக்கு இலக்காகலாகாது என அஞ்சி அமைந் தொழிந்தான் போலும். பின்பு, குணமாலைக்கும் சீவகற்கும் திருமணம் செய்விக்கச் கருதி அவள் பெற்றோர் தாமே ஏறட்டுக் கொண்டு கந்துக்கடன் விருப்பறிவாராய், “யாம் மகள் ஈதும்; நீர் மகட் கொண்மின் என யாரும், தாம் மகள் நேராராயி...னும் பொற்கன்றனையானுக்கு, யாம் மகள் நேர்ந்தேம் இன்று” (1056) என்று சொல்லக் கேட்டலும், கந்துக்கடன், மிக்க பணிவு தோன்ற, “ சுற்றார் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்குக் குற்றேல் செய்தும் காளையும் யானும்; கொடியாளை மல்சேர் தோளான் தன்மரு மானுக் கருள்செய்யப் பெற்றேன்” (1064) எனப் பெரிதும் பேசி மகிழ்கின்றான். மேலும், கட்டியங்காரன் பணிப்பப் போந்த வீரர், தன்னை அரசன்பால் கொண்டுசெல்லக் கருதிய துணர்ந்த சீவகன் வெகுள்கின்றான். இக் கந்துக்கடன் சீவகற்குக் கட்டியங்காரன் பணியை மறுத்தலாகாது என்பானாய், “வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும்; காய்ந்தடு வெகுளிநீக்கிக் கைகட்டி இவனை (சீவகனை) உய்த்தால், ஆய்ந்திடும்; அழற்சி நீங்கும்; அது பொருள்” (1089) என்று நினைத்து, மனைவி யுடன் ஆராய்ந்து, “கோன்புறம் காப்பச்சேறல் குணம்” (1090) என்று அவளுடன் தானும் சொல்கின்றான். சீவகன் வீரர்கைப்பட்டு அடங்கிச் செல்லும்போது ஏனைமகளிரும் பிறரும் வருந்திப் புலம்பு கின்றனர். அவர் செய்கை கந்துகனுக்கு மிக்க அச்சத்தையே பயக் கின்றது. அதனால் அவன் அவர்களை நோக்கி, “மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னின், பொன்மழை பொழியின் நந்தும்; அன்றெனில் புகைந்து பொங்கித், துன்னினார் தம்மை யெல்லாம் சுட்டிடும்” (1117) என்று கூறுகின்றான். இங்கே இவனுடைய நினைவும் சொல்லும் ஒரு சிறந்த வணிகன் என்பதை மெய்ப்பிக் கின்றன. கந்துக்கடன் நல்ல சொல்வன்மையு முடையவனாக விளங்கு கின்றான். கட்டியங்காரன்பால் சென்று பன்னிருகோடி செம்பொன் கொடுத்துச் சீவகனை விடுவிக்க வேண்டி. “மன்னவ, அருளிக் கேண்மா; மடந்தையோர் கொடியை மூதூர் நின்மதக் களிறு கொல்ல நினக்கு அது வடுஎன் றெண்ணி என்மகன் அதனை நீக்கி இன்னுயிர் அவளைக் காத்தான்; இன்னதே குற்றம்? ஆயின் குணம் இனி யாது? வேந்தே!” “நாண்மெய்க்கொண்டு ஈட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல் ஆண்மக்கள் கடன்என் றெண்ணி அறிவின்மை துணிந்த குற்றம் பூண்மெய்க்கொண்டகன்ற மார்ப! பொறுமதி யென்ற பின்னும்” (1126) பலகோடி பொன் கொடுக்கின்றான்; முடிவாக, “வாழியர், இறைவ, தேற்றான், மாநிரைபெயர்த்த காளை பிழை தான் பொறுக்க” (1120) என்று வேண்டுகின்றான். இதன் கண் இவன் கூறுவன எத்துணை நயமும் இடிப்பும் பொருந்தி யிருக்கின்றன காண்மின். தன் முயற்சி பயன்படாமை கண்டு வருந்திய உள்ள முடைய னாய்த் திரும்பிவரும் அவனைச், சுநந்தையும் குணமாலையும் பிறரும் கண்டு வருந்த, ஒரு நாள் முனிவன் ஒருவன் போந்து நிகழவிருப்பன இவையென்று சில சொன்னான் என சுநந்தைக்குத் தனியேயுரைக்கின்றான். குணமாலையை உடன் இருத்தி, தனக்கு அம்முனிவன், “கொல்வான் அருளினான் கொண்டபோழ்தில், குலவிய புகழினானைக் கொண்டுபோம் இயக்கன்; அஞ்சல்; சில பகல் கழித்துக் காண்டி; சிந்தி ஈது, என்றான் என்று உரைத்துத் தேற்றுகின்றான். சீவகன் சுரமஞ்சரியை மணந்தபின் வந்து தன்னைக் காணும் போதும், அவன் வரவு, சுற்றத்தாரால் எங்கே புறத்தார்க்குப் புலனாகுமோ என்றே இக்கந்துக்கடன் அஞ்சுகின்றான். இவன் சீவகன் கட்டியங்காரனை வென்று மணிமுடி சூடிச் சிறப்புறுவதைக் காண்கின்றான். சீவகனால் அரசுரிமையும் எய்துகிறான். இவன் இறக்கும் செய்தியைத் தேவர் கூறாது விடுகின்றார். இதற்குக் காரணம் காணப்போந்த உரைகாரர், “கந்துக்கடன் இறந்தமை இத்தொடர் நிலைச் செய்யுளில் தேவர் கூறிற்றிலர், தகுதியன்றென்று கருதி; இத்துறவால் உய்த்துணர வைத் தார்” (2627.உரை) என்று கூறுகின்றார். சீவகன் கந்துகன் மனையை யடைந்தபின், அக்கந்துகனுக்குப் பிறந்த மகன் நந்தட்டன். நபுல விபுல ரென்போர் சச்சந்தனுடைய காமக்கிழத்தியர் மக்கள். இவருள் நந்தட்டன் முன்னோன். அவன் குணம் செயல்களை இனி ஆராய்வாம். 3. நந்தட்டன்:- இவன் நந்தனென்றும் அழைக்கப்படு கின்றான்; சீவகன்பால் உண்மை உழுவலன்புடையன். சீவகன் குணமாலையுடன் இருந்தபோது கட்டியங்காரன் வீரர் போந்து அவனை அழைத்தது கண்டு வெகுண்டு, முதற்கண் நந்தனையே நோக்கிப் படை பண்ணு மாறு பணிக்கின்றான். உடனே நந்தன் காற்றுப்போல அவ்விடத்தின் நீங்கித் தோழரை யடைகின்றான். அங்கே அவர்கள் சீவகனை மீட்டற் பொருட்டுச் சூழ்ச்சிகள் பல செய்கின்றனர். அக்காலை, பதுமுகன் என்பான் நந்தட்டனை யழைத்து, நீ கந்துக்கடன் முதலியோருடன் இருந்து பிறிதொன்று நிகழுமாயின் நீர்க்கடன் செய்தல்வேண்டும் என்கின்றான். அதற்கு, இந்நந்தன் உடன்படாது. “ஒம்படை சாற்றற் பாலது உள்ளவர்க் காகும் அன்றே: ஆம்புடை என்கண் இல்லை; அங்கையென் கண்களாகத் தேம்படு தாரி னீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்; காம்படு காட்டுத் தீயிற் கனன்றுடன் எழுக” ....... (1745) என்று மொழிந்து தன் மனநிலையை வெளிப்படுக்கின்றான். தோழர் பலருடனும் நந்தட்டன் சீவகனைப் பல விடங்களிலும் தேடிக் காணாது மறுபடியும் இராசமாபுரம் அடைகின்றான்; குண மாலையைக் காண்கின்றான்; அவள் மேனி வாடிச் சாம்பிப் புலம்பி மெலிவுற்றிருக்கின்றாள். தத்தை நந்தட்டனைக் கண்டதுமே, அவனை வரவேற்று, “இருக்க” எனப் பணிக்க, அவன் அவளை முறைப்படி வணங்கி, ஐந்து விற்கிடையிருந்து சொல்லாடுவது அவனுடைய உயர்ந்த ஒழுக்க நெறியைப் புலப்படுத்துகிறது. பின்பு அவன் அவளைப் பணிந்து, “எங்குளார் அடிகள்” என்று கேட்ப, அவள் தனது விஞ்சையால் ஏமமாபுரத்தை அடைவிக்கின்றாள். அவன் குணமாலையைப் பார்த்து, அவள் மெலிவினை யுணர்ந்து. “செல்வனை இன்று நாடிச் சேவடி தொழுத லொன்றே அல்லது இவ்வுடம்பு நீங்க வேற்றுலகு அடைத லொன்றே, எல்லைஇவ் விரண்டி னொன்றை இப்பகல் முடிப்பல் (1752)” என்று நெடுமொழிகூறித் தேற்றுவது மிக்க நயமாகவுளது. ஏமமா புரத்தே கனகமாலையுடன் சீவகன் இருந்த அரண்மனைக்கண் விஞ்சையால் கொணரப்பட்ட நந்தட்டன் விழித்தெழுந்து மருள் கின்றான். வினவிய யாவர்க்கும் ஒரு மொழியும் கொடாதிருக் கின்றான். அவன் செய்தி சீவகற்கு எட்டுகிறது. அவர் சொன்ன குறிப்பால், வந்தவன் நந்தட்டனே எனத் துணிந்து அவனிருந்த இடத்துக்குச் சீவகன் வரக் கண்டதும், நந்தட்டன், “தருமனை யரிதிற்கண்ட தனஞ்சயன் போல” (1731) இருகையும் குவித்து அவன் சேவடி தொழுது வீழ்கின் றான். சீவகன் வருந்திப் புலம்பு கின்றான். அவனுக்குத் தேறுதல் கூறுவான்போல நந்தட்டன், அன்பு மிகத்தான் முன்பு தேர் முதலியன பண்ணிவந்து கண்டதைக் குறித்துரைக்கக் கேட்ட சீவகன் கலங்குவது கண்டு, அவனுக்குத் தான் ஆற்றுவன சில கூறுவான், “ஆக்கமும் கேடு முற்றீர் அடிகளே யல்லீர், மேலைப், பூக்குலாம் அலங்கல் மாலைப் புடகொடி யாற்கு முண்டே” (1734) என்று கூறி வணங்ககின்றான். சீவகனுடன் நந்தட்டனும் ஏமமாபுரத்தில் இருக்கையில், வேந் தனான தடமித்தனுக்குத் தமது நாடும், ஊரும் கூறுகின்றான். பின்பு, சீவகனை அரச குமரன் என்று அறிந்தபின், தோழரை நோக்கித் தாம் அவனைக் காக்கவேண்டிய நெறிபற்றிக் கூறுவன அவனுடைய பரந்த உலகிய லறிவைப் புலப்படுத்துகின்றன. “பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாய ரொத்தும் அருந்தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும் திருந்து வேல் தெவ்வர் போலத் தீதற எறிந்தும், இன்ப மருந்தினால் மனைவி யொத்தும் மதலையைக் காமின்”..... (1903) என்று அவன் கூறுதலைக் காண்மின். இவனுடைய அன்பும் ஆற்றலும் துணைமையும் கேட்டுப் பெரு மகிழ்ச்சி கொண்ட விசயை இவனை யழைத்துத் தழுவி உச்சி மோந்து இன்பவுரை பகரக்கேட்ட இந் நந்தட்டன் அன்பும் மகிழவும் இறப்ப மிக்கு ஒன்றும் உரையா தொழிகின்றான். சீவகன், அரசுரிமை யெய்தியபின் இந்நந்தட்டனுக்கு “இளவுடையான்” என்ற பட்டமளித்துச் சிறப்பிக்கின்றான். விசயை துறவு பூண்டபோது, வந்து அடிபணிந்த நந்தட்டனுக்கு அவள், “நொந்திட்டு முனியவேண்டா, துறந்திலம் நும்மை” யென்று கூறுவது இவனுக்குப் பேரின்பத்தைக் தருகிறது. சீவகன் துறக்கக் கருதியபோது, நந்தனையழைத்து அரசுரிமையினை ஏற்குமாறு வேண்டுகின்றான். அவற்கு இந் நந்தட்டன், “கரும்பலால் காடொன்றில்லாக் கழனிசூழ் பழன நாடும் சுரும்புலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்; அரும்புலா யலர்ந்த அம்மென் தாமரை யனைய பாதம் விரும்பியான் வழிபட்டன்றோ வாழ்வதென் வாழ்க்கை”..... (2911) என்று கூறுகின்றான். இவ்வுள்ளமே மிக்கு நின்றதனால், முடிவில் இவனும் நோற்று உயர்நிலை பெறுகின்றான். 4. பதுமுகன்:- இவன் தனபாலன் என்னும் வணிகனுடைய மகன். அவன் தனக்குக் கட்டியங்காரன் தீங்கு செய்வானென்று அஞ்சி, தன் மகனைக் கந்துக்கடன் மனையில் சீவகனுக்குத் தோழனாய் வளர்த்துவர விடுகின்றான். சீவகன் கோவிந்தையாரை இவன்பொருட்டு நந்தகோன் கொடுப்பப் பெற்று மணம் செய்விக் கின்றான். கோவிந்தைபால் இவன் அன்புற்றொழுகிய திறத்தைத் தேவர், “தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர் தாம்பாற் படுத்த அமுதோ, தட மாலை வேய்த்தோள் ஆம்பாற் குடவர் மகளோ என்று அரிவை நைய ஓம்பா ஒழுக்கத்து உணர்வொன்றில னாயி னானே” (494) என்று கூறிக் காட்டுகின்றார். காந்தருவதத்தையைச் சீவகன் யாழிசையில் வென்ற கொண்டது கண்டு வேந்தர் பொரவந்தபோது அத் தத்தையைக் காத்து நின்ற இப் பதுமுகன் போரின் கடுமை மிக்கதும், தத்தையைச் சேமமான இடத்தில் நிறுத்தி யானையொன்றிலிவர்ந்து போர் செய்கின்றான். அப்போது இவன் அம்புகளைச் சொரிந்தவன், சீவகன் விடுத்த அம்புகளும் வந்து கலப்பது கண்டு, பெருமகிழ்ச்சியுற்று, “நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சிலல்லால், அம்பொன் யணிப்பூண் அரசும் இலை” (814) என்று நகுகின்றான். இவன் பால் சிலை யொன்றே உளது; இவர்ந் திருப்பதும் ஒரு களிறே. மார்பில் பகைவர் எறிந்த வேல் தைத்து நிற்கிறது அக்காலையும் அச்சமும் தளர்ச்சியு மின்றி, “இன்னம் பொரு வரோமன்னர்” (815) என்கின்றான். அது கண்டு பகைவர் அஞ்சி நீங்குகின்றனர். இதனால் இவன் போர் வன்மை விளங்குகின்றது. (சீவகன் சுதஞ்சணனுடன் சென்றது தெரியாது ஏனைத் தோழ ருடன் அவனைத் தேடப் புறப்படுமுன்) அவன் கட்டியங்காரன் வீரரால் கைப்பற்றப்பட்டது தெரிந்து வெகுண்டு கூறுவது, பதுமுக னுடைய வீரச்சிறப்பைப் புலப்படுத்துகிறது. வீரரால் கைப்பற்றப் பட்டான் சீவகன் என்பது கேட்டதும், பதுமுகன் சினத்தீ கண்களிற் பறக்க, “கட்டியங்காரனென்னும் கழுதை நம் புலியைப்பாய” ஓட்டி யிஃது உணரலாமே, உரைவல்லை அறிக” (1141)என்று மொழிந்து சீவகளை நினைக்கின்றான். நெஞ்சம் துடிக்கிறது. “சிலையொடு செல்வன் நின்றால் தேவரும் வணக்க லாற்றார்; முலையுடைத்தாயோ டெண்ணித் தந்தைஇக் கொடுமை செய்தான்; கலைவல்லீர் இன்னும் கேண்மின்” (1142) என்று சில கூறலுறும்போது ஒற்றன் ஒருவன் போந்து, சீவகன் வீர ரிடையே வளைப்புண்டு நின்றதைக் கூறுகின்றான். கேட்கும் இப் பதுமுகன், ஆறாச் சினத்தனாய், தோழரைச் சுற்றி முகம் நோக்கி, “ஒத்ததோ என் சொல்?” என்று தொடங்கி, “உற்ற இவ்விடரைத் தீர்க்கும் உபாயம் நீர் உரைமின்” என்று வினவுகின்றான். அவருட் புத்திசேனன் கூறியது கேட்ட இப்பதுமுகன் “ஒரு சிலர் கட்டியங் காரனை வளைத்தல் வேண்டும். அப்போது யான் சென்று மதனனைக் கொன்று மள்ளரை வெருட்டி யோட்டுவேன்; நீவிர் சீவகனைக் காவற்காட்டிற்குக்கொண்டு செல்லல்வேண்டும். யான் எஞ்சி நின்று எதிர்க்கும் வீரரை “வேற்றுலகேற்றி நும்பின் விரை தருவேன்” என்றும், “உலகிற்கெல்லாம் ஆற்றிய நட்புவல்லே வலிப்புறீஇ இடுமின்” (1150) என்றும் உரைக்கின்றான். அக்காலை ஆங்கு வந்தடைந்த நந்தட் டனைப் பார்த்துப் பதுமுகன், அவனை மனை யகத்தே இருந்து பெற்றோர்க்கு நீர்க்கடன் செய்யுமாறு பணிப்பது அவனுடைய உலகியலறிவின் உயர்ச்சியைக் காட்டுகிறது. சீவகன் மறைந்ததும், பிறவும் உணர்ந்து சிலநாட்கழித்தபின், தத்தையை அடைந்து சீவகன் ஏமமாபுரத்தே இருப்பது அவள் விஞ்சையால் அறிந்துரைப்ப அறிந்து, தண்டாரணியத் தவப் பள்ளியில் விசயையைக் கண்டுகொண்டு ஏமமாபுரத்தையடைந் திருக்கையில், சீவகன் இருப்பதையுணர்தற்கு இப்பதுமுகனே ஓர் உபாயம் கூறுவானாய், “முதற்கண் நாம் இந்நகரத்து ஆநிரையைக் கவர்வோம்; போர் தொடரும்; அதன் கண் சீவகனைக் காண்டல் கூடும்” என்கின்றான். பிறர் அதன்கண் உளதாகும் குறையையும் குறிக்கின்றனர். ஒற்றர் போந்து சீவகன் ஏமமமாபுரத்தே மதம்பட்டுத் திரிந்த வளைய சுந்தரமென்னும் யானையை அடக்கிய செய்தி யறிந்து, போர்க்கண் அவனைக் காண்டல் நலமென்று துணிந்து ஆனிரைகளைப் பதுமுகன், தோழருடன் கவர்கின்றான். போர் உண்டாகிறது. சீவகன் போர்க்கு வருகின்றான். அவனுக்கத் தமது வரவைத் தெரிவிக்கவேண்டி, இப்பதுமுகன், “குடைநிழற் கொற்ற வேந்தன் ஒருமகற் காணக் குன்றா அடிநிழ லுறைய வந்தேம் அடியம் யாம்” என்றோர் ஒலை யெழுதி அம்பொன்றிற் கட்டிச் சீவகன் தேர்த் தட்டின் முன்னே விழுமாறு வில்லில் தொடுத்து விடுகின்றான். அதுவே வாயிலாகச் சீவகனைக் காண்கின்றான். சீவகன் சச்சந்தன் மகன் என்பதைத் தெரிந்தபின் நந்தட்டன் அவனைக் காத்தொழுகும் திறங்களை வகுத்துக் கூறுகின்றபோது, பதுமுகனை நோக்கி, “பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் ஆய்ந்தளந் தியற்றப்பட்ட அடிசில்நீர் இன்னவெல்லாம் மாந்தரின் மடங்க லாற்றல் பதுமுகன் காக்க” (1904) என்று பணிக்கின்றான். இதனை நோக்கின், பதுமுகன் இவற்றின் நலம் தீங்குகளை யறியும் மதிநுட்பம் உடைய னென்பது நன்கு தெரிகிறது. பின்பு விசயையிருந்த தவப்பள்ளிக்குச் சீவகனை அழைத்துச் சென்று பதுமுகனே வணங்கி நின்று, “நம்பி வந்தணன், அடிகள்” (1917) என்று உரைக்கின்றான். விசயை அவரவர் நலங்களை யறிந்து மேலே செயற்பாலது நினைந்தபோது “ஒன்னார், ஆழிவாய்த் துஞ்சமற்றெம் ஆற்றலால் நெருங்கி வென்று மாழைநீள் நிதியம் துஞ்சும் மாநிலக் கிழமை யெய்தும் பாழியாற் பிறரை வேண்டேம், பணிப்பதே பாணி” (1937) என்று பகர்கின்றான். இக் கூறியவாறே கட்டியங்காரனொடு சீவகன் போர்நிகழ்த்திய காலையில் இப் பதுமுகன், காமுகன், கோமுகன், என்பாரைப் பொருதழித்து மேம்படுகின்றான். கோமுகனையழிக்கும் காலத்தில் “கோவிந்தன் வாழ்க” என்று கூறிக்கொண்டு பொருது வீழ்த்தல் அவனுடைய உள்ளத்தின் உயர்வைக் காட்டுகிறது. 5. புத்திசேனன்:- இவன் தந்தை அசலன் என்பவனும் சச்சந்தன் நண்பர்களுள் ஒருவனாகும். இப்புத்திசேனனும் சீவகனுக்குத் தோழன். இவன் பெயருள் வரும் புத்தியை மதியாக்கி, மதிசேனன் என்று இயைத்து அதனையும் பின்னர், “திங்கள் விரவிய பெயரினான்” என்று அமைத்துத் தேவர் பாடுகின்றார். இவன் வேதியனாவான். சீவகன் தத்தையொடு இசைப்போர் செய்தற்குத் தான் விரும்பி யதைக் கந்துகற்குத் தெரிவிக்குமாறு இவனையே தூது விடுகின்றான். இவன் போர் செய்தலிலும் வல்லுநன். காந்தருவதத்தையின் திருமணத்தின்போது எதிர்த்த வேந்தருடன் நிகழ்ந்த போரில், இவன் அம்பு செலுத்திய திறத்தை, தேவர், “ நீல்நிறப் பௌவம் மேய்ந்து சூல்முற்றி நீல மேகம் வால்நிற விசும்பின் நின்ற மாரியின் மறைவ லாளன் போல்நிறப் புத்திசேனன், பொன்னணி பகழி சிந்தி வேல்நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்” (794) என்று கூறுகின்றார். சீவகன் கட்டியங்காரன் வீரரால் கைப்பற்றப்பட்டது தெரிந்து செய்வன சூழலுற்ற தோழன்மாருக்க இப்புத்திசேனன், “நாம் நகர்க்குத் தீ வைப்பின், தீயையவித்தற்பொருட்டு வீரர் கடுகுவர்; மக்களும் குழுமுவர்; அக் காலை நாம் சீவகனைக் கொண்டுவந்து விடலாம்” (1147) என்றும், பிரிதொருகால் “நாம் சீவகனைக் காண்கிலோமாயின், கட்டியங்காரனைக் கொன்று இராசமா புரத்தையும் அழித்தல் வேண்டும்” என்றும் கூறுவன அவனது மறப்பண்பை விளக்குகின்றன. ஏமமாபுரத்தில் சீவகன் இருப்பை யறிதற் பொருட்டுப் பதுமுகன் முதலாயினார் ஆராயும்பொழுது பதுமுகன் “நகரத்தவர் ஆனிரை கவர்ந்து போர் துவக்குவோம்” என்றது கேட்டு இப்புத்தி சேனன், “சீவகன் இந்நகர்க்கண் இல்லையாயின், நம் செயல் குற்றமில்லாத பலர் உயிர்க்குக் கேடாய் முடியும்; இதனை நன்கு ஆய்ந்து செயல் வேண்டும்” என்பானாய், “வஞ்சமில் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதி, உள், குஞ்சரம் குளிப்பதோர் நீத்தமாம்; ஆதலால், எஞ்சலில் கொள்கையீர் எண்ணிச் சூழ்மின்கள்” (1835) என்கின்றான். இது புத்திசேனன் என்ற பெயர்க்குப் பொருத்தமான கூற்றாக உளது. அது கேட்கும் ஏனையோரும் தக்கதே என உடன்படுகின்றனர். இவனது அருளுள்ளத்தின் அழகும் இனிது புலனாகிறது. சீவகன் சுரமஞ்சரியை மயக்கிப் பேதுறுத்துக்காமன் கோட்டம் செல்வித்துத் தானும் அவளுடன் போந்திருக்கையில், அக்கோட்டத்துக் காமனை சிலையின் பின்னேயிருந்து, அச்சிலை பேசுவது போல. இப்புத்சேனனே மறைவிருந்து, “மட்டவிழ் கோதை! பெற்றாய் மனமகிழ் காதலானை” இட்டிடை நோவ நில்லாது எழுக” எனப் பட்டிமை (2067) யுரைத்துக் கூட்டுவிக்கின்றான். போரில் இவன் மறம் சிறந்து நிற்கும் இயல்பினை, “கணையெரி அழலம் யெத் கண்ணுதல் மூர்த்தி யொத்தான்” (2258) என்ற உவமையால் தேவர் விளக்குகிறார். 6. தேவதத்தன்:- சச்சந்தன் நண்பருள் ஒருவனான விசயதத்தன் மைந்தன் தேவதத்தன். இவனும் சீவகனுக்குத் தோழனாவான். காந்தரவதத்தை பொருட்டு நிகழ்ந்த போரில் இவன் குதிரை யிவர்ந்து போர்க்களத்தில் சுற்றித்திரிந்து பகைவரை வென்ற செய்தியை, “கூட்டுற முறுக்கிவிட்ட குயமகன் திகிரிபோல... திரியுமன்றே” (791) என்று மொழிகின்றார். இவன் ஏறிய குதிரை யானையின் மத்தகத்திற் காலை வைக்கிறது; வேற்படையைப் போழ்க்கிறது; வேந்தருடைய கண்ணியும் முடிமணியும் சிந்துகிறது. சீவகன் தோழர், கட்டியங்காரனைச் செகுக்கக்கருதுங் காலத்தில், இவன் முதற்கண் சீவகன் உண்மையை யாராய்ந்தறிதல் வேண்டுமென் பானாய், “மாற்றலன் உயிரை யுண்டல், இலையுடைக் கண்ணியீர்க்கு இஃது எளிது; நம் குரிசில் உண்மை உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணிமின்” (1742) என்கின்றான். பின்பு, விசயையை முதற்கண் கண்டபோது இவனே முற்பட்டு வணங்கி நின்று தங்களுடைய வரலாறும் சீவகன் வரலாறும் கூறுகின் றான். தாங்கள் சீவகற்குத் தோழரான திறத்தை, “எங்கள் வினை யால் இறைவன் வீடியஅஞ் ஞான்றே எங்களுயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேமா; எங்கள்தமர் நம்பிக்கிவர் தோழரென ஈந்தார்; எங்கெழிலன் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்” (1800) என்றும், சீவகன் சிறப்பை, “சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன்” (1804) என்றும் கூறுவது இவனது சொற்றிறத்தின் மாண்பைச் சிறப்பிக்கின்றது. முடிவில் இவன் கட்டியங்காரற்குத் துணையாய்ப் பொருத மகதநாட்டு வேந்தனைப் பொருதழித்து மேம்படுகின்றான். இவனுக்கு அடுத்த வரிசையில் சீதத்தன் என்பானொருவன் நிற்கின்றான். இவன் சாகரன் என்னும் மந்திரிக்கு மகனாவான். இவனைப்பற்றிக் கூறவந்த தேவதத்தன், “மன்நடுங்க வீங்குதிரள் தோள் மடங்கல் அன்னான்” (1796) என்று பாராட்டு கின்றான். இவன் கலிங்கர் வேந்தனை வென்று சிறக்கின்றான். 7. கோவிந்தராசன்:- இவன் விந்தையநாட்டரசன்; விசயமா தேவிக்குத் தமையன்; சீவகற்குத் தாய் மாமன்; அரிஞ்சயன் குலத்திற்கு வழித்தோன்றல். இவன் சீவகன்பால் பேரன்புடையவன். இதனை விசயை தவப்பள்ளியில் தன்னைக்கண்டு பணிந்த சீவகனுக்குக் கூறுமிடத்து, “முல்லை கார் தோன்ற மலரும்; அதுபோல நின்சீர் தோன்றிய விடத்து, மனம் மலர்வன்” (1931) என்கின்றதனால் உணரலாம். சீவகன் தன்பால் வரக்கண்டதும், இவன், “மருமானை விடாது புல்லித், தன் அன்புகூரத் தடந்தாமரைச் செங்கண் முத்தம், மின்னும் மணிப்பூண் விரைமார்பம் நனைப்ப நின்றான்” (2145) என்று தேவர் கூறுதலாலும் இவன் அன்புடைமை வலியுறுகின்றது. இவன் தன் மகன் சீதத்தற்கு அரசு நல்குங் காலத்துச் சீவகன் தோழர்க்குச் சிறப்புச் செய்கின்றான். அச்சிறப்பு, “மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில்” (2151) செய்வது, அவன் கட்டியங்காரனுடன், போர் செய்தற்குரியவற்றைத் தன் நெஞ்சின்கண்ணே சூழ்ந்து வரத லைப் புலப்படுத்துகிறது. கட்டியங்காரன் தனக்கு விடுத்த ஓலையைக் கண்டு, கோவிந்த ராசன், அமைச்சரோடு ஆராய்ந்து, “கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான்; நாமும் தன்னைக் கள்ளத்தால் உயிரை யுண்ணக் கருதினேம்; இதனை யாரும் உள்ளத்தால் உமிழ வேண்டா” (2158) என்று ஏற்பாடு செய்து படைதிருட்டுகின்றான். இந்நிலையில் இவன் அக் கட்டியங்காரன்பால் தனக்குப் பகையுண்மையினை அவன் தெரிந்து கொள்ளா திருக்கவேண்டி, அவன் நாட்டிற்கும் தன் நாட்டிற்கும் இடையே வாணிகம் இனிது நடைபெறுக. என்று முரசறைவிக்கின் றான். (2151) இச்செயல் இவனது அரசியலறிவின் மிகுதியினை வெளிப்படுகின்றது. இவனை மெய்யனென்று கொண்டு கட்டியங் காரன் கையுறை விடுப்பப்பெற்று, இவனும் அவனுக்குக் கையுறை விடுக்கின்றான். இந்நிகழ்ச்சிகட்கிடையே, திரண்டெழுந் தமைந்த படையினைச் சீவகனுக்குக் காட்டி, யானைமீதேறிப் படைசூழ இராசமாபுரத் தெல்லையடைந்து நகரொன்ற மைத்து இனிதிருக்கின்றான். கட்டியங் காரன் அறியாவண்ணம், அன்பு மிகவுடைமை வெளியாகத் தோன்ற வாரிமணாளன் என்னும் யானையும் பவன வேகமெனும் குதிரையும் பிற பொன்னும் பொருளும் நிரம்பக் கூட்டிக் கட்டியங்காரனுக்கு அனுப்பி அவன் மகிழுமாறு செய்வது மிக்க சூழ்ச்சியின் மேம்பா டுணர்த்துகிறது. இலக்கணையின் திருமணம் குறித்து நிறுவிய, திரிபன்றி எய்து வீழ்க்கும் செயற்குக் கட்டியங்காரனை யுள்ளிட்ட அரசர் பலர் கூடியிருக்கின்றனர். அவர் அனைவரும் மாட்டாராகவே, சீவகன் அதனை எய்து வீழ்த்த போது, அவ்வரசர் அனைவரும் கேட்டு இனிதுணருமாறு சீவகன் பிறப்பை இக்கோவிந்தராசன் எடுத்தோது வது, கட்டியங்காரனுடைய தீச்செய்கையினையும், சீவகனது அரசுரி மையையும் உலகவேந்தர் அனைவருக்கும் ஒருங்கே தெரிவிக்க வேண்டிச் செய்த தூய சூழ்ச்சியாகப் பயன்படுகின்றது. அச் சோலையில் வானிடத்தே இயக்கனொருவன் தோன்றிச் சீவகன் கட்டியங் காரனைக் கொல்வான் என்று கூறுவது கேட்டதும் கட்டியங்காரன் கோவிந்தராசனுடைய சூழ்ச்சிகளை எண்ணியறிந்து, நெஞ்சின் கண்ணே மிக்கெழுந்த வெகுளியால், கோவிந்தராச னையும் சினந்து, “வஞ்சன்” (2216) என்று மொழிகின்றான். முடிவில், கட்டியங்காரனொடு துணையாய்ப் போந்து பொருத மராட்ட வேந்தனைக் கொன்று சிறந்த இவனுக்கச் சீவகன், கட்டியங் காரன் தனக்கெனவுடைய எல்லாவற்றையும் கொடுத்துச் சிறப்பிக் கின்றான். இவனுடைய குடியிற் பிறந்து தன் நல மிகுதியால் சச்சந்தன் கெட்டழிய விளங்கிய விசயமாதேவிக்குப் பின் தன் மகளாகிய இலக்கணை, சீவகன் குடிக்கு விளக்காகச் சிறந்து விளங்க மணம் செய்து கொடுத்து அவனை மகிழ்விக்கின்ற மாண்பு இவன்பால் நிற்பது இக்காவியத்துக்கு ஒரு சிறப்பைத் தந்து நிற்கிறது. 8. கட்டியங்காரன்:- இப்பெருங் காவிய நிகழ்ச்சிக்கு எதிர்நிலைத் தலைவனாகும் இக் கட்டியங்காரன் தீப்பண்பும், தீச் செய்கையும் உருக்கொண்டவனாகக் காணப்படுகின்றான். இவன் தான் செய்தற்குரியவற்றைச் செவ்வையாக எண்ணிச் செய்யும் மனப்பண்பிலும் குறைபட்டவனாகவே உள்ளான். தொடக்கத்தில் இவன் சச்சந்சந்தனுடைய முதலமைச்சனாகத் தோன்றுகின்றான். அப்போது இவன் சச்சந்தனுக்கு உயிர்த்துணைவனாய் இருந்து அவனுக்குண்டாய சிறப்பனைத்திற்கும் காரணமாக இருந்தான் என்பது, “எனக்குயிர் என்னப்பட்டான் என்னலால் பிறரையில்லான்” என்று சச்சந்தனால் பாராட்டப்படுவதால் வலியுறுகிறது. இவன், “கரிமாலை நெஞ்சினான்” எனத் தேவரால் குறிக்கப் படினும், “வெளிறிலாக் கேள்வி” யுடையவனாகவே சச்சந்தனால் மதிப்படுகின்றான். சச்சந்தன் பெண்ணின்ப நுகர்ச்சி வேட்கை மீதூர்ந்து தன் அரசியற் கடமையினை நெகிழ்க்கக் கருதியகாலை, கட்டியங்காரன், அரசியலின் பெருமையும் தனது சிறுமையும் தோன்ற, “அடுகளிற் றெருத்தின் இட்ட வண்ணப் பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்ட தொக்கும், கண்ணகன் ஞாலம் காத்தல் எனக்கு” (202) என்பதும், “மறுத்து நீ மொழியல்” என்று சச்சந்தன் கூறவே, அவன் சொல்லேதிர் மறுக்கும் மதுகை யில்லாதான்போல, பணிவும் இசைவும் தோன்ற, “...................................................... துன்னலர்த் தொலைத்தவேலோய் கழிபெருங் காதலாள்கண் கழிநலம் பெறுக வையம் பழிபடா வகையில் காக்கும் படுநுகம் பூண்பல்” (203) என்பதும், சச்சந்தன் “ வெளிறிலாக் கேள்வியான்” என்று கருதியதற்கு நல்ல ஆதரவு தருகின்றன. விசயை “ கழிபெருங்காதலாள்” ஆதலின், அவள் நல்கும் இன்பம் “கழிநலம்” ஆகும்; அதனை நீ நுகர்தலே தக்கது என்பான் “கழிநலம் பெறுக” என்ற கருத்து பிறரால் சச்சந்தன் தனது கருத்தை மாறா வண்ணம் திண்ணி தாக்ககின்றது. கழிகாமத்தனாகும் சச்சந்தனை, அரசியற் கடமையை நெகிழ்த்தல் குற்றமெனக் கழறித்தெருட்டாது போய தற்குக் காரணம், அவன் எத்துணைத் தெருட்டினும் தெருளான் என்பதனைக் கட்டியங் காரன் தெளிய அறிந்து கொண்டதேயாகும். மேலும் இவ்வாறு இவன் அரசுரிமைபெற்ற திறத்தைத் தேவர் கூட ஒருவாறு தேர்ந்தே, “காதி வேல்வல கட்டியங்காரனும் “நீதியால் நிலம் கொண்டபின்” (240) என்று கூறுகின்றார். “நீதியால் நிலம்கொண்ட” கட்டியங்காரன், அந்நிலத்தைத் தனக்கே உரிமை செய்து கொள்ளக் கருதிச் செய்யும் சூழ்ச்சி அத் துணைச் சீரிதாகத் தோன்றவில்லை. அரசியல் முறைப்படியே, “நீதிநூல் ஓதிய” அறிஞர்களைக் கூட்டி அவர் முன், “மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வம் என்னை வந்திடம் கொண்டஃ திராப்பகல் தன்னி நின்று ‘செகுத்திடு நீ’ எனும்; என்னை யான் செய்வ, கூறுமின்”...... (241) என்று உரைக்கின்றான். “மன்னற்குப் பகையாகிய தெய்வம், அவன் துணைவனான கட்டியங்காரற்கும் பகையாதலின், அதன் சொல்லை யேற்றல் நெறியுமன்று; நீர்மையுமன்று” என்று ஆங்கிருந்த அறிஞர் கூறற்பாலர். ஆனால் ஒருவரும் அதனைக் கூறுகின்றார்களில்லை. இது நிற்க அக் கட்டியங்காரன் தன் கருத்தும் இது வென்பான் “மன்னவன் பகையாயதோர் மாதெய்வம் வந்து என்னை இடம் கொண்டது” என்று வெளிப்படக் கூறு கின்றான். மன்னற்குப் பகையாயது என்னை இடமாகக்கொண்ட தென்பது, அஃது இடம் கொள்ளு தற்கேற்ற பகைமைக் கருத்தும் தன் மன்தே உளது என்பது அவன் குறிப்பாதல் காண்க. அப் பகைத் தெய்வத்தின் கூற்று கொள்ளற் பாலதன்று என்று அறிஞர் கூறுவரென்பதை உட்கொண்டு “மா தெய்வம்” என அதன் தடுத்தற்கரிய வன்மையும் தோன்ற உரைக்கின்றான். அவனை மறுத்துரைக்கும் மதிவன்மை இன்மையின், ஆங்கிருந்த அமைச்சர் பலரும் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் உண்டாகப் பேசித் தோல்வி யெய்துகின்றனர். அமைச்சர் பால் இவ்வன்மையின்மை கண்டே, கட்டியங்காரன் தெய்வப்பகை யொன்றினைப்படைத்து மொழிந்தான் போலும், ஒரு நாட்டின் அரசைத் தனக்கே உரிமை செய்துகொள்ளக் கருதும் தலைமை யமைச்சன், அதற்குக் காட்டலுறும் ஏது இவ்வாறுதான் இருக்கு மோ, காண்மின். இவ்வண்ணம் அரசுமுறையைக் கைக்கொண்ட கட்டியங் காரன், சச்சந்தனைக் கொல்ல, அவன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு கைதொழுது கண்ணீர் விடுகின்றான். அதுபோது, அவன் நினைவில் சச்சந்தன் தன் பால் கொண்டிருந்த கெழுதகைமையும், பெருமையும் பிறவும், தோன்று கின்றனபோலும்; அன்றி, தன்னைக் காணும் நாட்டு மக்கள், “அரசன் பால் இத்துணை அன்புடையான் இப்போரைச் செய்தற்குக் காரணம் வேறு ஒன்று இருத்தல் வேண்டும்” என நினைந்து அமைந்தொழுகுவர் என்பது கருதினான் போலும். ஆனால், ஈண்டு உரைகாரர், “வழி பாட்டிற்படுதலின் மனம் தன் வழித்தன்றிக் கலங்கி” யதனால், கட்டியங் காரன் கண்கலுழ்ந்தான் என்றும், அவன் “அழுத்து உவகைக் கலுழ்ச்சி; விளிவில் கொள்கை” (தொல்-மெய். 5) என்றதனால், இதுவும் அழுகைப் பாற்படும்!” (294 உரை) என்றும் கூறுகின்றார். அரசுரிமை தனக்கே உரித்தாகக் கொண்ட பின்பு, கட்டியங் காரன் சச்சந்தன் மனைவியான விசயமாதேவியைப்பற்றிச் சிறிதும் நினைக்கின்றானில்லை. வேந்தன் இறந்த பின்பு அவனை எரிவாய்ப் பெய்து அவன் நீங்குதலால், விசையை ஆங்கு இல்லாமை கண்டிருப் பனன்றோ. “உரிமை முன் போக்கியல்லால் ஒளியுடை மன்னர் போ கார்” என்பது அவனுக்குத் தெரிந்த செய்தியாதலின், விசயையை எவ்வாறு போக்கினா னென்பதனையும் ஆராய்கின்றானில்லை. இவன் நாடாட்சி புரிதலில் மிக்க திறம் படைத்து விளங்கு கின்றான். எடுத்த பொருளொன்றுபற்றி வாதிப் பிரதிவாதம் நிகழு மிடத்து, அமைச்சர் தம்முள் வன்சொற்கள் நிகழ்தல் இயல் பாதலின், அவ்வாதத்தின் முடிவில் அவ்வன் சொல் குறித்து அவர் தம்முள் செற்றம் கொள்வது சீர்மையன்று என்பது அறிஞர்க்கு எல்லாம் ஒப்ப முடிந்த உண்மை. அதனைத் தலைமையமைச்சுக் கடம் பூண்டிருந்த கட்டியங்காரன் நன்கறிந்திருந்த சிறப்பால், தருமதத்தன் உரைத்தவற்றைக் கேட்டதும், மனத்தே சினம் பிறந்த தாயினும்,“என்னலால் பிறர்கள் யாரே இனையன பொறுக்கும் நீரார்” (259) என்று கூறுகின்றான். அத்தருமதத்தன் கூறியவற்றிற்குத் தக்க விடையும் உடன் இறுப்பானாய், மண்ணிடத்தே மகளிர் போகமே பெரிதெனக் கருதிக் கிடக்கும் வேந்தற்கு, விண்ணிடத்தே தேவமகளிர் போகம் பெரிதும் எய்தச் செய்வது அவனுக்கு இன்பம் மிகுவிக்கும் நற்செயலாக அவனைத் தேவருலகு அனுப்புவது குற்றமெனக் கருதியுரைக்கும் நீ அவற்கு மனமொவ் வாத செய்கையை எண்ணுகின்றாய் என்பான், “உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார், மன்னன் போய்த் துறக்க மாண்டு வானவர்க் கிறைவனாக,” (259) என்கின்றான். பின்பு, கந்துக்கடன், சீதத்தன் முதலியயோருக்குப் பல சிறப்புக்களைச் செய்து வருகின்றான்; ஏனை நாட்டு அரசர் பலரும் அவனுக்கு நண்பராய் ஒழுகுகின்றனர். காந்தரு வதத்தையைச் சீவகன் கைப்பற்றியபோது நடந்த போரிலும், முடிவில் கோவிந்தராசன் சீவகன் என்ற இருவரோடு செய்த போரிலும் பல வேந்தர் அவனுக்குத் துணைசெய்திருக் கின்றனர். இவ்வாறு அரசியல் நடத்திவந்தபோதும் இவன் மனத்தில் இருந்த புன்மை அவ்வப்போது வெளியாகிறது. அங்கமாலை என்பாளை வலிதிற்பற்றிக் கற்பழித்தபோது அவன் “சீவகசாமியோ” என்று அரற்றுகின்றாள். அது கேட்டும் அவன் சிறிதும் நாணு கின்றானில்லை. அக்காலத்தே அவனக்குச் சீவகன்பால் பொறாமை அரும்புகிறது. ஏனையோரைப் பார்த்து, “கந்துகன் மகன் என நலம் கலந்து உரைக்கு மால் இந்நன்னகர்க்கு மன்னனோ” (694) என்றும் அவளையே நோக்கி, “இந்நகர் தனக்கு மன்னன் யார் எனக்கு இயம்பு, மாதே, மன்னிய வணிகன் மைந்தன் சீவகன்தானோ” (692) என்றும் உரைக்கின்றான். இக்கூற்றுக்களால், அவன் உள்ளத்தே தன் அரசுரிமை எங்ஙனமேனும் பறிக்கப்படுமோ என்றோரச்சம் குடிகொண்டிருத்தல் புலனாகிறது. “அச்சமே கீழ்களது ஆசாரம்” (குறல் 1075) என்பவாகலின், அவன் மனதே அச்சம் கிடந்து அவலம் செய்து வருவதில் வியப்பில்லை யன்றோ! சீவகன்பால் அவன் மனத்தே அரும்பிய பொறாமை, அச் சீவகன் வேட்டுவரை வெருட்டி அவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்ட போது சிறிது பெருகுகிறது. சீவகன் காந்தருவதத்தையை இசைப் போரில் வென்றது கண்டதும், அவ்வழுக்காறு ஏனையர சரைப் போர்க்கு ஏவுமுகத்தால் சிறிது வெளியாகிறது. அசனிவேக் ததை அச் சீவகன் அடர்த்து வென்றது கேட்ட காலையில், அவனுளத் திருந்த பொறாமை முறுகிப் பகைமையாகித் தன் வீரரைக்கொண்டு சீவகனைக் கொலைபுரிதற்கு ஏவுமாறு செய்துவிடுகிறது. “மாண்டதில் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே ஆண்திறம் களைவன் ஓடிப்பற்றுபு தம்மின்”(1086) என்று கூறகின்றான். இதனால் இவன் மனதே சிறிதும் இரக்கமின்மை பயந்துவிடுகிறது என்பது கந்துகன் வேண்டிக்கொண்ட தற்கு விடுக்கும் விடையில். “ ஆய்களிற் றசனி வேகம் அதன்மருப் பூசியாகச் சீவகன் அகன்ற மார்பம் ஓலையாத் திசைகள் கேட்பக் காய்பவன் கள்வ ரென்ன எழுதுவித் திடுவல் இன்னே நீபரிவு ஒழிந்து போய்நின் அகம்புகு; நினையல்”.... (1128) என்று கூறுதலால் தெரிகிறது. சீவகனைத் தான் கொன்றுவிட்டதாக மதனன் கூறக் கேட்டதும், கட்டியங்காரன் சீவகனுடைய, “அருள், வலி, ஆண்மை, கல்வி, அழகு, அறிவு, இளமை, ஊக்கம், திருமலிஈகை, போகம், திண்புகழ், நண்பு, சுற்றம்,” முதலியவற்றைப் பாராட்டி “ஒருவர் இவ்வுலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்” (1179) என்பதும், அவனைக் கொல்வது பெரிதும் அரிதென்று சொல்லி, மதனனுக்குச் சிறப்புச் செய்வதும், அவனுக்குச் சீவகன்பாலிருந்த மதிப்பும் பொறாமை காரணமாகப் பிறந்த செற்றமும் விளங்கக் காட்டுகின்றன. இச் செயல், ஒரு பெருங் காவியத்தின் எதிர்நிலைத் தலைவனாகும் பண்பு இவன் பால் இருத் தலை நன்கு வற்புறுத்துகிறது. இனி, இவன் கோவிந்தராசனுக்குச் சச்சந்தன் இறந்தது குறித்து ஒரு திருமுகம் விடுக்கின்றான். அதன் கண், அசனிவேகம் மதம் பட்டுப் பாகர் நூற்றுவரைக் கொன்று ஓடியகாலை, சச்சந்தன் அதனை அடக்கிக் கந்திற் பிணிக்க முயலும்போது அவ் யானை யால் குத்துண்டு இறந்தான் என்பவன், “இனி, நீயே இந்நாட்டிற்கு இறைவனாதல் வேண்டும்; யான் உயிரும் ஈவேன்; நீ வரின் பழியும் நீங்கும்; வருக” என்று எழுதுகின்றான். அதனால் அவன் மனத்தே, கோவிந்தராசன் ஒரு கால் தன்னை அழிப்பனென்று அஞ்சி யிருப்பதும் அவனையும் ஒழித்து விட வேண்டுமெனக் கருதுவதும் தெரிகின்றன. இவன் சீவகனோடு பொர நின்றபோது, அவனது சினமிகுதியும், தன் மக்கள் மாண்டதும் கண்டு அறிவு தெளிவுற்றவன் போல, “நல்வினையுடைய நீரார்நஞ்சுணின் அமுதமாகும்; இல்லையேல் அமுதும் நஞ்சாம்; இன்ன தால் வினயினாக்கம்” (2323) என்றும், “அகப்படுபொறியினாரை ஆக்குவர் யாவர் அம்மா; மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ” (2324) என்றும், “இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார்” (2325) என்றும் கூறுவது, சச்சந்தன் கட்டியங் காரனால் வளைப்புண்டபோதும் விசயமாதேவியை மயிற்பொறி யேற்றி விடுக்கும்போதும் உரைக்கும் உரைகளை நினைப்பிக்கின்றது. வினையறிவும் பிற நன்னெறிகளும் ஒருவற்குத் துன்பம் போந்து சுடும்போது நன்கு விளங்கும் என்னும் பொரு ளுரைக்க இக்கூற்றுக்கள் நல்ல எடுத்துக்காட்டுக்களாகின்றன. எனினும், இவை, துன்பம் வருமுன் முன்னரே உள்ளப்படாது ஒழிந்த வழி, அறிஞரால் எள்ளி நகைக்கப்படும் என்பதற்கேற்ப, சீவகன் கட்டியங்காரன் இவற்றைக் கூறக்கேட்டு, நகைத்து, “நீ அஞ்சினாய்” என்கின்றான். அவன் கூறுவது உண்மை தானே? 9. அமைச்சர்:- இனி, சச்சந்தனுக்கு அமைச்சராய் இருந்து சூழ்ச்சித் துணை புரிந்தோருள் கட்டியங்காரனை ஒழியத் தருமதத்தன், மதனன், நிமித்திகன், உருத்திரதத்தன் எனப் பலர் காணப்படு கின்றனர். இவருள் நிமித்திகன் என்பான் சச்சந்தன் கட்டியங்காரன் பால் அரசுமுறை வைப்ப, அவன் அதனை ஏற்றபின்னரே தெரி கின்றான்; சச்சந்தன் அது செய்தற்குக் காரணம் அவனது கழி காமமே யென்பதை யுணர்ந்து அதனால் வருந் தீங்கினைப் பல எடுத்துக் காட்டுக்களால் வற்புறுத்துகிறான். சச்சந்தனை யொத்த அரசரைக் காட்டாது, வைதிக சமயக் கடவுளரையும் புத்த சமயத்துப் புத்த தேவனையும் அவன் எடுத்துக் காட்டுவது சமயக் காழ்ப்பு அவன் பால் உண்மையினை நமக்கு விளக்குகிறது. உருத்திரதத்தன் என்பானும் இவனையே வழி மொழிகின்றான். இவர்கட்குச் சச்சந்தன் “அருந்தவ முடைய நீரார்க்குப் போகமெல்லாம் முன்பே அளந்தன; அற்றை நாளே அவரவர்க்கு வாழ்நாட்களும் அளந்தன; அது எனக்கு உரையல்”(213) என்று சொல்லவே, நிமித்திகன் துறவு மேற்கொண்டு நீங்குகின்றான்; உருத்திர தத்தன் செய்தி ஒன்றும் கூறப்படவில்லை. ஏனையோர், கட்டியங்காரன் சச்சந்தனைக் கொலைபுரியச் சூழும் சூழ்ச்சிக்கண் வருகின்றனர். தருமதத்தன் “மாண்ட தன்று நின் வாய்மொழித் தெய்வம்” (250) என்று கூறுபவன் அதனை சாதித்தற்குக் காட்டும் ஏது பொருந்துவதன்று. மதனன் கட்டியங்காரற்கு மைத்துனன்; அதனால் அவன் பக்கமே நின்று மொழிகின்றான். அவன் பால் அரசியலுணர்வினும் போர்வெறியே மிக்கு நிற்கின்றது. அவன் சீவகனைக் கைப்பற்றிக் கொணருங்கால் அவன் மறைந்தது கண்டு வேறொருவனைக்கொன்று கட்டியங் காரனிடம் பொய் கூறிச் சிறப்பெய்துகின்றான். திரிபன்றி யெய்த விடத்துச் சீவகன் தோன்றக் கண்டதும் நாணம் சிறிதும் எய்தாது, “பெய்ம் முகிற்கார் இடிபோல (2217) கனலுகின்றான். இனிப் போரே நிகழவேண்டியிருத்தலின், இவனைக் கட்டியங்காரன் ஒறுக்கா தொழிதல் அவனுடைய அறுந்திறத்தையே வற்புறுத்துகிறது.” 10. சீவகன்:- இவன் இப்பெருங் காவியத்தின் தலைவன்; சச்சந்தனது கழிகாமக் கள்ளாட்டின் பயனாகத் தோன்றியவனன்; இவன் தாயின் கருவிலிருக்கும் போதே, தந்தைக்கு உயிர்க்கிறுதி எய்து விக்கும் ஊழுடையவன். இராசமாபுரத்தே கந்துக்கடன் என்னும் சீரிய தலைமை சான்ற வணிகனால் வளர்க்கப்படுகின்றான். “கலையினது அகலமும் காட்சிக்கின்பமும், சிலையின தகலமும் விணைச் செல்வமும், ” பெற்று மலையினின் அகலிய மார்ப (411) னாய் விளங்குகின்றான். சுண்ண நலங்காண்டல், விடமருத்துவம், சமய நிறைமொழி நுண்பொருள் முதலியவற்றிலும் மேம்பட்டிருக் கின்றான் இவனைப் பலவிடத்தும் தேவர் “விணை வித்தகன்,” “வீணைக் கிழவன்,” “வீணை வேந்து” என்று பராட்டுவர். இவனது பல்கலைப் புலமையும் வினைத்திட்பமும் கண்டு கட்டியங் காரன் பொறாமை கொண்டானாயினும்” ஒருவர் இவ்வுலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்!” (1172) என்று வியந்து கூறுவன் “தந்தையர் ஒப்பர் மக்கள்” என ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கும் உண்மையுரைக்கு ஓர் எடுத்துக் காட்டாக இவன் வரலாறு முழுதும் காமக்கூத்தே பெரிதும் நடைபெறுகிறது. சீவகனை வளர்த்த கந்துக்கடன் இவனுக்குக் கல்வி கற்பித்த செய்தியைக் கூறப்போந்த விடத்தும் தேவர், “குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்க்கலுற்றார்” என்று கூறுகின்றார். கலைத்துறை முற்றி முதற்கண் காந்தரு வதத்தையை மணந்து இன்புற்றதை, “அலமரல் இலாத இன்பக் கடலகத் தழுந்தினான்” என்கின்றார். இவ்வாறு “அழுந்தினவன்” குணமாலையை அசனி வேகத்தினின்றும் காத்து, தன் மனைக்கேகி அவளது உருவத்தைக் கிழியொன்றில் எழுதிக் காமக்கனலால் வெதும்புகின்றான். ஆண்டுப் போதரும் தத்தை அவ்வுருவுகண்டு புலந்தபோது, “பாவை நீ புலவியில் நீடல், பாவியேற்கு ஆவியொன்று இரண்டுடம் பல்லது” (1024) எனப் பொய்யும் கவர்பொருளும் எய்தப் பேககின்றான். பின்பு பதுமை யென்பவள் விட நோயுற்றுச் சோர்ந்தது காட்டக் கண்டு அதனை நீக்கி, நலம் செய்தவன் அவள் பார்வையால் காமக் கொதிப் பெய்திப் “போதுலாம் சிலையோ, பொருவேற்கணோ; மாதுலா மொழியோ, மடநோக்கமோ; யாதும் நான் அறியேன்; அணங்கன்னவள் காதலால் கடைகின்றது காமமே” (1315) என்று தன்னுட் கதறுகின்றான். இவ்வண்ணமே சென்ற இடமெங்கும் பல மகளிரை மணந்து கூடலுறும் இச்சீவகன், சுரமஞ்சரி யென்பவளையும் தன் தோழரால் காமதிலகன் என்ற சிறப்புப் பெயரைப் பெறுவதற்காக வேதியன் வடிவு கொண்டு சென்று காமம் சிறந்து கடிமணம் செய்து கொள் கின்றான். முடிவில் இச் சீவகன் பரிநிருவாண மென்னம் கேவல ஞானத்தை யெய்திய செய்தியையும், தெவர், கேவல ஞானமென்னும் பெண்ணைக் “கண்ணிமையாது புல்லி மூவுலகுச்சியின்பக் கடலினுள் மூழ்கினானே” (3126) என்று கூறுகின்றார். இவ்வாறு காமமே கன்றிய உருவினனாக வரும் சீவகன்பால் அறம்திறம்பிய காமம் சிறிதும் இல்லை. மணவினையோ, போர் வினையோ எவ்வகை வினையும் புரியாது புத்திளங்காளையாகப் பொலியும் நாளில், அநங்கமாலை யென்னும் நாடகக்கணிகையைத் தொட்டும் தைவந்தும் அணி செய்கின்றான். அவட்கு அவன்பால் ஆராக்காதல் தோன்றுகிறது;ஆயினும் இவனுக்கு அவள் உரல் பள்ளம் நெகிழவில்லை. கோவிந்தையின் நலத்தை நந்தகோன் பலவாகப் புனைந்தோதக் கேட்டும், அவளைச் சீவகன் தன் தோழன் பதுமுகற் பொருட்டு ஏற்று மணம் செய்விக்கின்றான். காட்டில் பவதத்தன் காதலியான அனங்கமாவீணை யென்பாள், வேடனைக் கண்டு காமவேட்கை மிகுதலையறிந்து அவளை அருவருத்து பவதத்தனே அவளை யெய்துமாறு செய்யும் திறமும், தேசிகப் பாவையைக் கண்டு அவள்பால் தன் கருத்துச் செல்லு தலையும் அவளும் தன்பால் வேட்கையுடையளாதலையும் உணர்ந்து, வேறு முயற்சியின்றி அமைந் திருந்து, பதுமையை மணந்து இனி திருக்குங் கால், பூஞ்சோலைக்கண் அவளைக் கண்டு கூடியும், அதனோடமை யாது அரசு கட்டிலேறிய பின் அனங்கமாலையின் தோழியாய் அவளேவந்தபோது அவளைக் கூடியும் இன்புறும் திறமும் பிறவும் அவனுடைய அறம் திறம்பாக் காம வாழ்விற்குச் சான்று பகர்கின்றன. பல நன்மகளிரை மணந்து கூடியும் வேட்கையமையாது தேசிகப் பாவையாகிய நாடகக்கணிகை யொருத்தியையும் தலைக் கொண்டொழுகிய இவன் செயல் அறிஞர்க்கு அருவருப்பைத் தருவ தொன்றே;ஆயினும், தேவர் இதனை விதந்து கூறுதலால், அவர் கண்ட அரசர்பால் இதுபோலும் செயல்கள் அறமாகக் கருதப்பட்டு வந்தனபோலும். இனி, இவன் தான் மணந்துகொண்ட மகளிர்பால் இன்புற்ற திறத்தை நோக்குமிடத்து இவன் காமக் கூட்டத்தில் மிக எளியனாய் இயலும் திறம் விளங்குதல் ஒரு புறம் நிற்க, அம் மகளிரின் காதல் நலமே பெரிதும் விளங்கித் தோன்றுதலின், அதனை அவர் நலம் காணுமிடத்துக் காண்பாம். இனி, இவன் ஏனையோரிடத்து ஒழுகும் திறம் மிக்க இறும்பூது பயக்கின்றது. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன்பால் பேரன்பும் பணிவும் பூண்டு, அவர் பணித்த பணியைத் தலைமேற்கொண் டொழுகுகின்றான். ஆசிரியன், சீவகனை நோக்கி, “ஓராண்டு எல்லை கட்டியங்காரன்பால் பகைமை தோன்றாவகை ஒழுகுக” என்றதை உட்கொண்டு, இவன் மதனன் முதலியோரால் கைப்பற்றப் பட்ட காலத்து, “இன்னுயிர் இவனையுண்ணும் எல்லை நாள் வந்ததில்லை” (1161) என்று நினைக்கின்றான். தேவரும், இவன் சினம் தணிந்து கட்டுண்டு நிற்பதற்குக் காரணம் கூறுவாராய், “ஊன் பிறங்கொளிறும் வேலான் ஓர்த்துத் தன் உவாத்தி சொல்லால், தான்புறம் கட்டப்பட்டுத் தன் சினம் தணிந்து நிற்ப” (1097) என்று கூறுதல் காண்க. இவனுடைய அறிவுநூற் பயிற்சி, சித்திர கூடத்தைச் சாரவிருந்த தாபதப்பள்ளி யடைந்து, அவர்க்கு உரைக்கும் உரைகளாலும், கேமசரியைப் பிரிந்து செல்பவன் வழிப்போக்கன் ஒருவனுக்கு உரைக்கும் உரைகளாலும் பிறவற்றாலும் நன்கு விளங்குகிறது. இராசமாபுரத்துச் சோலையில் வேதியர் கூடி நாயொன்றைச் சாவ அடித்தபோது, அதற்குரிய களிமகன்போந்து, அவரை அச்சுறுத்தக் கண்ட சீவகன் அவ்விடத்தையடைந்து அவனை விலக்கி அந்தணரை யோம்புகின்றான். அப்போது அவன் கூறியவை இன்னவை யென்னாது, “அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான்” (946) என்றே தேவர் கூறியொழிகின்றார். பவதத்தன் தான் பெருங்கல்வி யுடையன் எனக் கூறக் கேட்டதும் சீவகன் கல்வியின் நலத்தை யுரைப்பதும், நற்பெண் டிர் தீப்பெண்டிர் என்ற இருதிறத்தார் இயல்பு இஃது என்பதும் பிறவும் அவன் கல்வியறிவின் மாண்பிற்குப் போதிய எடுத்துக் காட்டுக்களாகும். பிரியக் கருதும் காதலன் ஒருவன், தன் பிரிவுக்கேதுவாவது, காதலின்பப்ப பயனிலம் மிக்க பயன் தருவதாயின், தன் காதலி தன் பிரிவினைத் தடுப்பளென்று அவள் பால் சொல்லாதே பிரிவது முறையாகும். அப்போதும் வெளிப்படையாக இன்றாயினும் குறிப் பாகவேனும் வற்புறுத்திப் பிரிவதே தமிழ் தலைமக்கட்குப் பண்பு. “துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன், வன்புறுத் தல்லது சேறல் இல்லை” (பொருள் 184) என்று, ஆசிரியர் தொல்காப்பியனார் கூறு தலால், இவ்வுண்மை துணியப்படும். இப்பண்பு சீவகன் பதுமை முதலிய மகளிர்களைப் பிரிந்தேகுங்கால் அவன்பால் காணப்படுகிறது. பதுமையைப் பிரிந்தேகுங்கால் சீவகன் பிரிதற்கு ஏதுவாக இருந்த வினை யொன்றும் காணப்படவில்லை; பிறமகளிரைக் கூடக் கருதி யேகினானாயின், அஃது அவற்குச் சீரிய வினையாகாது. ஆயினும், அவன் அவட்கு. “வினைக்கும் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரம் நினைத்து நீங்குதல் ஆண்கடன்; நீங்கினால், கனைத்து வண்டுணும் கோதையர் தம்கடன் மனைக்கண் வைகுதல் மாண்பொடு”.... (1407) என்று மொழிகின்றான். இதன் கண் அவன் வினையொன்று கருதித் தான் பிரிய நினைத்தலைக் குறிப்பாய்ப் பதுமைக்கு உரைப்பது தமிழ்த் தலைமக்கட்குரிய பண்பு, ஆயினும், இச்சீவகன் அவட்கே, “விரை செய் தாமரை மேல் விளையாடிய, அரைவன்னம் அமர்ந்துள வாயினும் நிரைசெய் நீலம் நினைப்பில்” (1408) என்பது பிற மகளிரைக் கூடக் கருதிச் செல்லும் கருத்துண்மையை வற்புறுத்துவதால், தமிழ் நன்மக்களின் பண்பன்றாம். பரத்தையிற் பிரிந்தொழுகு மிடத்துத் தமிழ் மகளிர்க்குத் தம் காதலர் பால் புலவி நிகழுமாயின், அஃது ஆடவர்க்கு இயல்பென ஏனையோர் புலவி தீர்ப்பது குறித்துக் கூறும் கூற்றின்கண் தான் காணப்படும்; தலைவன் தான் பரத்தைமை கருதிப் பிரிவதாக ஒருகாலும் எவ்வாற்றாலும் கூறான்; ஈண்டுச் சீவகன் தானே கூறு தலைக் காண்மின். “கங்கை தன்னைப் புணர்ந் தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய், மங்கை மாதர் பெருங் கற்பென்றறிந்தேன் வாழி காவேரி” என்ற கோவலன் பாடிய பாட்டின்கட் காணப்படுகிறதெனின், அவன் கருத்தின் கண் பிரியக் கருதும் கருத் தில்லை; அதன் ஆண்டுக் காண்க.” இங்ஙனம் தமிழ்நெறிக் கொவ்வாத நெறியே பற்றி, இச் சீவகன், கேமசரியைப் பிரிந்தேகும் குறிப்பை அவட்குணர்த்து மிடத்து, “மணிவண்டு! இம் மாதர் கோதை மதுவுண வந்த போழ்தின், இணைவண்டு அங்கு இறந்து பாடின்று இருக்குமே? இரங்கல் இன்றாய்த் துணைவண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை யென்று நின்கண் டணிகொண்ட தின்மை யால்தான் பரிவொடும் இருக்கும் அன்றே” (1509) என்று குறிக்கின்றான். இதன் கண்ணும் “மதுவுணவந்த” வண்டினையே எடுத்து மொழிதலால் வேறு மகளிரைக் கூடும் குறிப்பே விளங்கி நிறப்து காண்க இனி, இவன் சில மகளிர்பால் தன் பிரிவை விளங்கக்கூறி விடைபெற்றேகு கின்றான். அக்காலையில் இவன் நிகழ்த்தும் கூற்றுக்கள் அறிவு நலம் மிக நிரம்பியுள்ளன. கனகமாலையைப் பிரியுமிடத்து அவன் சச்சந்தன் மகன் என்பது வெளியாகிவிடுதலின், அவளை நோக்கி, “வேந்தன் காதல் மடமகளே, கள்ளாவி கொப் புளிக்கும் கமழ்பூங்கோதாய், என் மனத்தின் உள்ளாவி உள்ளாய், நீ ஒழிந் தாயல்லை’ (1895) என்று சொல்லி விடைபெறுகின்றான். விமலையிற் பிரியுமிடத்துத் தன் பிரிவுக்கு எதுவாக, “மாவினுள் தாழ்தளிர் மருட்டு மேனியாய், காவினுள் தோழரைக் கண்டு போதர் வேன், ஏவினுள் தாழ்சிலை ஏறிந்த கோலினே” (2001) என்று கூறுகின்றான். சிலை யெறிந்த அம்பு, இலக்கிற்பட்டு மீள எய்த வில்லிடத்தே வந்தடைதல் இல்லை * யென்பதும், எனவே தானும் அவ்வாறு வருதற்கில்லை யென்பதும், அவ்வம்பினை வேண்டும் வில்லி அது கிடக்கும் இடத்தே சென்று கோடல்போல, நீயே போந்து கூடல் வேண்டும் என்பதும் இவன் கூறும் உவமைக் கண் எய்தக் கிடக்கின்றன. சுரமஞ்சரியிடத்தே, “கருமம் நீ கவல வேண்டா, கயற்கணாய்! பிரிவல்சின்னாள்;அருமை நின் கவினைத் தாங்கல்; அது பொருள்” (2102)என்று வெளிப்பட இனிது கூறி விடைபெறுகின்றான்; இச் சீவகனது போர்வன்மை மிக்க சிறப்பாகக் கூறப்படுகிறது. நிரை கவர்ந்த வேட்டுவரைச் சீவகன் தோழருடன் சென்று பொருது நிரை மீட்டவிடத்து. அவ்வேட்டுவருள் ஒருவர்க்கும் ஒரு தீங்கு முண்டாகாதவாறு வென்றி யெய்துகின்றான். இதனைத் தேவர், “ஆளற்ற மின்றியலர் தாரவன்தோழரோடும், கோளுற்றகோவன் நிரைமீட்டனன்” (457) என்று குறிப்பிடுகின்றார். இந்நிகழ்ச்சிக்கு முன்பே, வேறு சில ஆண்மைச் செயல்களைச் சீவகன் புரிகின்றான்; மறவர் ஆயிரவர் எடுக்கலாற்றாத கற்றூணொன்றை இச் சீவகன் தான் ஒருவனே எடுத்துக் காட்டுகின்றான்; யானையால் எடுக்க முடியாத கல்லொன்றை மிக இலேசாக எடுத்தெறிகின்றான். இவை கட்டியங் காரன் மனத்தே பொறமையால் கூறுதலால் உணரப்படுகின்றன. சீவகன் அசனிவேகத்தை யடக்கிய நலத்தைத் தேவர், “மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள் கொல்ல வோடிய குஞ்சரம் போன்றது, அச் செல்வன் போன்றனன் சீவகன்; தெய்வம்போல் பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே” எனக் கண்ணனைக் கோறற்கு வந்த குவலயாபீடம் என்ற களிற்றை அவன் வென்ற செய்தியால் உவமித்துக் காட்டுகின்றார். விசயன் என்பான், சீவகன் வில் வன்மையை வியந்து, “மராமர மேழுமெய்த வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது இசையலால் கண்டதில்லை; உராமனம் இவன்கண் இன்றி உவக்குமா செய்வல்” (1650) என்று தனக்குள் கூறிக்கொள்வதனாலும், கட்டியங்காரனை “மையார் விசும்பின் மதிவீழ்வது போல்” (2331) வீழ்த்தாலும் சீவகனது விற் போர்த் திறம் விளக்கப்படுகிறது. ஒரு காலத்தே கட்டியங்காரன் திரண்ட சுற்றத்தோடு ஓரிடத்தே மிகப் பசித்திருப்ப, சீவகன் அவர் கட்கு வேண்டும் உணவு நல்கி மெலிவு தீர்க்கின்றான். இதனைக் கட்டியங்காரனே கூறுகின்றான். வேட்டுவரை ஆளற்றமின்றி வெல்கின்றான்; காட்டில் தீயிடைப் பட்டயானைத்திரளைப் பாதுகாக்கின்றான்; வேட்டுவர் தலைவன் ஒருவனை ஊனுண்டல் ஒழிந்து நன்னெறிப்படச் செய்கின்றான்; நாய்க்கு மந்திரமோதி நற்கதி யெய்துவித்தல் முதலாக உள்ள இச்செயல் பலவற்றாலும் சீவகன் தலை மக்கட் குரிய அருள் இரக்கம் முதலிய நற்குணம் உடையவனாதல் பெறப்படுகிறது. சுண்ணநலம் காண்டல், விடநோய் தீர்த்தல் முதலியவற்றிற்கு ஏற்ப வண்டினங்களின் இயல்பும் பாம்புகளின் வகையும் சீவகன் நன்கு அறிந்திருக்கின்றான். இசைப்போரில் தத்தையொடு பொருது மேம் படுவதொன்றே இவனது இசைப் புலமைக்குச் சான்று பகர்கிறது. அவ் வன்மை தத்தையையே யன்றிச் சுரமஞ்சரியை மணத்தற்கும் துணை செய்கிறது. இவன் ஒவிய மெழுதுவதிலும் வல்லுநன். இச்சீவகன், அரசுரிமை யெய்திக் காந்தருவதத்தை முதல் இலக்கணையீறாக உள்ள மகளிர் பலருடன் இன்பவாழ்வு நடத்தத் தொடங்கியதற்கும் துறவு பூண்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் இவன் இசையும் கூத்துமாகிய இன்பத்துறைகளில் மிக எளியனாய் இருந்து வருகின்றான். இதனைத் தேவர், “இளமையங்கழனிச் சாயல் எருழுது எது எரிபொன் வேலி, வளைமுயங்குருவ மென்றோள் வரம்பு போய் வனப்பு வித்திக், கிளை நரம்பிசையும் கூத்தும் கேழ்த்தெழுந்து ஈன்ற காம, விளைபயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ” (2598) என்று குறிப்பிடுகின்றார். இறுதியாக ஒன்று கூறி இவனுக் குரிய பகுதியை முடிக்கின்றாம். இவன் இயற்கை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கும் நுண்ணோக் குடையவன். வண்டினத்தையழைத்துக் குணமாலையின் சுண்ணத்தை அவற்றிற்கெதிரே தூவுவதோடு ஏமமாபுரத்தே நீர்நிலை யொன்றில் அன்னப்பெடை யொன்று தன் சேவலொடு ஊடலும், அதன் சேவல் அதன் ஊடல் தீர்த்துக் கூடலும் கண்டு தான் தன் மனக்கினிய தத்தையை நினைத்து நெஞ்சு கலுழ்கின்றான். ஆங்கே பின் பதுமை யொடு கூடியிருக்கும்போதும் தன் குறிப்பை அன்னப்புள்ளியின் இயல்பு கூறுமாற்றால் குறிக்கின்றான்; கேமசரியிடத்தே தன் குறிப்பை வண்டின் இயல்பு கூறுவானாய்க் கூறுகின்றான். சீவகன் தனக்குரிய நாட்டைப்பெற்று, ஆங்காங்கு மணந்த மகளிரை வருவித்து, அவரோடு இனிதிருந்து இன்புற்று மகப்பேறு சிறந்து வருகின்றனன். அக்காலை, சோலையில் மந்தியும் கடுவனும் ஊடியும் கூடியும் பலாக்கனியின் தீஞ்சுளை உண்ண விருக்கும் போது, சோலைக்காவலன் அவற்றை வெருட்டி யோட்டி அக்கனியைத் தான் கவர்ந்து கொள்வதுகண்டு சீவகன் துறவு மேற்கொள்கின்றான். சீவகன் தண்டாரணியத் தவப்பள்ளியில் விசயமா தேவியைக் கண்டு பெருமகிழ்வுற்று, அவள் பணித்த வண்ணம் கோவிந்தராசன் துணைமையால் கட்டியங்காரனை வென்று ஏமாங்கத நாட்டிற்கு அரசனாகிய பின்பு, அவள்பால் கொண்ட அன்பினும் சுநந்தை பால் கொண்ட அன்பு மிக்குற விளங்குகின்றான். தவப் பள்ளியில் விசையை யைக் கண்டபோது அவளைத் தேற்றுவானாய், “கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவு மன்றி, நடலையுள் அடிகள் வைக, நட்புடை யவர்கள் நைய இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்பக் கடலகத் தழுந்த வேண்டா; களைகஇக் கவலை யென்றான்.” அது கேட்ட விசயை ஒருவாறு தேறி, அவற்குத் தாய் சுநந்தையே யென்றும், தந்தை கந்துகனே என்றும் பரிவு கூர்ந்து பேசிப் பாராட்டு கின்றாள். பின்பு அவள் துறவு பூண்ட காலத்தில் , தன்னை வணங்கி நின்ற சீவகனுடன் ஒன்றும் பேசாளாக, பம்மை முதலிய தவமகளிர் வற்புறுத்தற்கியைந்து கண்திறந்து நோக்குகின்றாள். அது கண்டு உளம் உடைந்த சீவகன் சுநந்தையை நோக்கி, “விசயமாதேவி யாரினும் நீவிர் சிறந்தனிராதலின், என்னோடு நீவிர் பேசாதொழிதல் கூடாதென்பான்.” “அடிகளோ துறக்க; ஒன்றும் உற்றவர் யாது மல்லர்; சுடுதுய ரென்கண் செய்தாய்; சுநந்தைநீ ஒளவை யல்லை; கொடியைநீ கொடிய செய்தாய்; கொடியையோ கொடியை” என்று கூறி வருந்திப் புலம்பி நீங்குகின்றான். (2655) இவன் துறவு பூண்டு பரிநிருவாணம் எய்தும் துறைக்கண் சமயநூல் கூறும் முறையைக் கடைப்பிடித்துச் சென்று முத்தி எய்துகின் றான். 11. விசயை:- சச்சந்தன் மனைவியாகிய விசயை இளமை யிலேயே நல்ல அறிவு நூல்களை ஆராய்ந்துள்ளாள். சமண் சமய நூல்கள் பலவும் கற்றிருக்கின்றாள். அழகில் இணையற்றவள். இவளது அழகும் பெண்மை நலமுமே இப்பெருங்காவிய நிகழ்ச்சிக்குத் தோன்று நிலையாகும். அறிவு, ஆண்மை, பெருமை என்ற அரசியற் பண்பு முற்றும் நிரம்பியிருந்த சச்சந்தன் நிiசொல் செயல் அனைத்தும் ஒடுங்கி ஒருமுகப்பட்டு இவள் நலத்திலேயே தோய்ந்து கிடந்தான வெனின் இவள் சிறப்பு முற்றும் எஞ்சாமைக் கூறிவாறாம். சச்சந்தனுடன் அந்தப்புரத்தே இருந்த காலத்தே இவள் கனா வொன்று கண்டு மனம் நடுங்கிச் சச்சந்தனிடம் கூற வருகின்றாள். வருபவள், வாமனை வணங்கிச் செல்வது அவளது சமய வொழுக் கத்தைப் புலப்படுத்துகின்றது. கட்டியங்காரன் படையொடு வந்து வளைத்துக் கொண்டது கண்டு, அவன் அவளை மயிற்பொறியேறிச் செல்லப் பணித்தபோது அவள் உடல் நடுங்குகின்றாள். அப்போது அவன் அவளது கல்வி யறிவை விதந்து “வாமனால் வடித்த நுண்ணூால், உண்டுவைத் தனைய நீயும் உணர்விலா நீரையாகி” (271) வருந்துதல் நேரிதன்று என்று கூறித் தெருட்ட அவளும் தெருண்டு நீங்குகின்றாள். வானத்தே மயிற்பொறியிற் செல்லுங்கால், கட்டியங்காரனுடைய வெற்றி முழக்கங் கேட்டு மயிற்பொறியிற் சாய்ந்து, அதன் துணையால் சுடுகாட்டை யடைகின்றாள். ஆங்கே இவள் சீவகனைக் கருவுயிர்க் கின்றாள். தெய்வமொன்று துணைசெய்கிறது. அறிவு சிறிது தெளிந்த தும், அக்குழந்தையைக் கண்களாற் கண்டு அவள் புலம்பும் திறம் மிக உருக்கம் வாய்ந்தது. முதற்கண், அக்குழந்தை அரண்மனையிற் பிறந்திருப்பின் நிகழும் நிகழ்ச்சிகள் அவள் நினைவிற்கு வருகின்றன; அவற்றை வாய்விட்டுச் சொல்லி, முடிவில், “வினை செய்தேன் காண இஃதோ பிறக்குமா” (308) என்கின்றாள். சுடுகாட்டைச் சுற்று முற்றும் காண்கிறாள்; ஒருபுறம் நரியின் கூக்குரல்; ஒரு புறத்தே பிணம் சுடும் தீ கொழுந்துவிட்டெரிகிறது; ஒரு பால் பேய்கள் கூத்தாடுகின்றன; கூகைகள் குழறுகின்றன. இவற்றை நினைப்பாள், “வெவ்வா யோரி முழவாக, விளிந்தா ரீமம் விளக்காக, ஒவ்வாச் சுடுகாட்டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப்பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ? இதுவோ மன்னர்க் கியல் வேந்தே.” (309) என்று புலம்புகின்றாள். உடனே தான் இருக்குமிடமும், தன் நிலையும் நினைத்து மாழ்கி, உயிர் நீங்கிற்றிலதே எனப் பெரிதும் நொந்து, “பற்றாமன்னன் நகர்ப்புறமால்; பாயல் பிணஞ்சூழ் சுடுகாடால் உற்றார் இல்லாத் தமியேனால்; ஒதுங்க லாகாத் தூங்கிருளால் மற்றுஇஞ் ஞால முடையாய்! நீ வளரு மாறும் அறியேனால்; எற்றே, இதுகண் டேகாதே இருத்தி யால்என் இன்னுயிரே” (310) என்று இனைகின்றாள். விசயை தண்டாரணியத்துத்தவப்பள்ளியுள் இருக்கையில் சீவகன் தோழர், அவனை ஒருநாள் கட்டியங்காரன் “தோள் இறுக யாத்து, மகளிர்மனம் கசிந்து கரியநகர்க் கண் கொல்ல முயன்றான் என்று கூறுவார், கொல்ல என்ற ‘சொல்லைச் சொல்லி’” முடித்தவுடனே, விசயை அறிவு மழுங்கி, சீவகன் இறந்தான் எனக் கருதிக் கொண்டு அலறி வீழ்ந்து சோர்ந்து விடுகின்றாள். பின்பு சிறிது தேறி, சீவகன் பிறப்பும் வளர்ப்பும் கூறிப் புலம்புகின்றவள், “கோவமா வாகிக் குடியோம்பி நின்குடைக் கீழ்ப் பாவமே செய்தேன், பரிவெலாம் நீங்கினால் போஅம்மா என்றுரைப்பப் போவேன்முன் போயினாய்; ஆஅம்மா அம்மா என் அம்மா அகன்றனையே” (1811) “கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை வந்தார்வாய்த் தீதின்மை, கேட்டு மறைந்திருந்து நொந்தேன் பலகால்இந் நோயேடே வீகின்றேன்; அந்தோ, அறனேமற்று ஆற்றேனால், ஆற்றோனால்” (1813) எனப் பல கூறிப் புலம்புகின்றாள். சீவகன் பிறந்தபோது அழுத அழுகையை நோக்க, இங்கு அழுவது அத்துணை உருக்கமில்லா திருப்பதைக் காணலாம். ஆண்டையமன நிலையினும் ஈண்டைய நிலை சிறிது வலிதாயிருத்தல் புலனாகிறது. இரண்டற்கும் இடையே பதினாறு யாண்டுகட்கு மேல் காலம் கழிந்து இருக்கிறது. தவமகளிரின் கூட்டுறவும், சீவகன் வளர்ந்து வருதலை வந்தார் வாய்க் கேட்பதும் பிறவும் அவள் உள்ளத்தை வலிதாக்கி விட்டிருக்கின்றன. எனினும் தாய்மையன்பு மிக வலிதாதலின், ஈண்டு இவ்வாறு இவளைப் புலம்புவித்தது. உடனே இவள் தன் பிறப்பு வரலாற்றை யெண்ணி, தெய்வங்களை நோக்கி, “தெய்வங்களே, பெண் பிறப்பின் அவலத்துக்கு யான் ஒருத்தியே யமையும்; இவ்வுலகில் இனி வேறெயும் என் போல்வாரைத் தோற்றுவிக்க வேண்டா” என்பாளாய், “என் ஒப்பார் பெண் மகளிர் இவ்வுலகில் தோன்றற்க” (1814) என்கின்றாள். சீவகன் தோழரால் அவன் உண்மை யறிந்து, அவன் வருகை நோக்கி யிருக்கும் அவள் மனநிலை விரியக் கூறப்படவில்லை யாயினும் சில சொற்களால் தேவரால் குறிக்கப்படுகின்றது; ‘எல்லிருட் கனவிற் கண்டேன், கண்ணிடனாடும் இன்னே; பல்லியும் பட்ட பாங்கர்: வருங்கொலோ நம்பி’ (1917) என்பது மனநிலை யுணர்த்தும் பகுதி. சீவகன் வந்ததை யுணர்த்த வந்த பதுமுகன் “நம்பி வந்தனன், அடிகள்” என்றாலும், “எங்கணான் ஐயன்” என்று அவள் வினவு கின்றாள்; “அடியன் யான் அடிகள்” என்று சீவகன் வந்து அவள் அடியில் வீழ்கின்றான். சீவகன் வரலாற்றுள் இப் பகுதி மிகச் சிறப் புடையதாகவும், இதனைத் தேவர் மிகச் சுருங்கக் காட்டி நம்மை ஏமாற்றிவிடுகின்றார். சீவகன் வரக் கண்டதும் அவனை விசயை தழுவிக்கொண்ட செய்தியைக் கூறுமிடத்து, “காளையாம் பருவம் ஓராள் காதல் மீக்கூர்தலாலே, வாளையாம் நெடிய கண்ணாள் மகனை மார்பொடுங் கப் புல்லி”க் கொண்டாள் என்கின்றார்; இது வேண்டா கூறலாம். பிறந்தவன்றே தன்னைப் பிரிந்த மகனை நெடிது நாள் கழித்துக் காண்கின்ற தாயின் கண்கட்கு, அம் மகனுடைய காளைப் பருவமாவது முதுமைப் பருவமாவது ஒன்றும் புலப்படாதன்றோ. “சிறுவனைக் கண்டபோதே, வருபனி சுமந்த வாட்கண்; வன முலை பொழிந்த தீம்பால், .... வருக என்களிறு என்றேத்தி வாங்குபு தழுவிக் கொண் டாள்” (1919) என்றதே அமையும். வாட்டிறற் குரிசில் தன்னை வாளமரகத்து நீத்து, காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்” (1921) என்றும், “யான் அலன் ஒளவையாவள், சுநந்தையே ஐயற்கு என்றும், கோன் அலன் தந்தை கந்துக்கடன்” (1923) என்றும் கூறுவன தாயன்பின் சால்புரைகளாகும்”. பின்பு, அவள் சீவகன் பிறந்த சுடுகாட்டை அறக்கோட்ட மாக்குகின்றாள்; தத்தை முதலாயினாரை நோக்கி “சிறுவர்ப் பயந்து இறைவற் றெளிவீர்” என்கின்றாள்; கூனியாய்த் துணைசெய்த தெய்வத்துக் கோயிலெடுக்கின்றாள்; இவையெல்லாம் ஒருபுறம் நிற்க, தன் வாழ்க் கையில் கண்ட உண்மையொன்றை ஒளியாது உரைப்பதால் விசயை மிக்க மேம்பா டெய்துகின்றாள். தான் துறவு பூணக் கருதித் தன் மகனை உடன் இருத்திச் சச்சந்தன் கெட்டதற் குரிய காரணத்தை விளங்கவோதி அவனைத் தெருட்டுகின்றாள். “கற்சிறை யழித்து வெள்ளம் கடற்கவா யாங்குக் கற்றோர் சொற்சிறை யழித்து வேந்தன் துணைமுலை துறத்தல் செல்லான் விற்சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேற்கண் நற்சிறைப் பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான்:” “பிளிறுவார் முரசத்தானைப் பெருமகன் பிழைப்பு நாடிக் களிறுமென் றுமிழப்பட்ட கவழம்போல் தகர்ந்து நில்லாது ஒளிறுவேல் சுற்றமெல்லாம் உடைந்தபின் ஒருவ னானான் வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ?” (2621-2) என்று உரைப்பது அவட்குக் கடனாதலையும் உணர்த்திக் காட்டுகிறது. இக் கூற்றினைக் கூர்ந்து நோக்கின், சச்சந்தன், தன் “புருவத்து விளங்க வேற்கண் நற்சிறைப்பட்டு” மெலிந்த காலை அவனையும் நன்கு தெருட்டியிருப்பள் என்பதும், சீவகன் பல மகளிரை மணந்து காமக் களிப்புடையனா யொழுகுவதை யெண்ணியிருப்பள் என்பதும் உணரக்கிடக்கின்றன. இக்காலத்தே, விசயை, சீவகற்கு, இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையினை, விளக்கியுரைத்தலும், அறம் செய்தலை வற்புறுத்தலும் நோக்கின், அவளது பரந்த கலையறிவும், உலகியலுணர்வும், துறவு பூண்டு நன்னெறி நாடி நிற்கும் மனத் தெளிவும் நாம் நன்கு தெளியத் தோன்றுகின்றன. அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும். 12. காந்தருவதத்தை:- காந்தருவதத்தை கலுழவேகன் என்னும் விஞ்சையன் மகள்; திருமணத்தின் பொருட்டு இராசமா புரத்துச் சீதத்தன்பால் அடைக்கலப் படுத்தப்பட்டவள். அழகும் இசைப் புலமையும் மறவுணர்வும் மான மிகுதியும் பெருந்தகைமையும் உருக்கொண்டாற்போலும் ஒட்ப முடையவள். அழகிற்கும் இசைப் புலமைக்கும் இவள் வரலாறே போதிய சான்று பகர்கிறது. இவளது நலங்கண்டார் கருத்திழந்து வாய்வெருவிக் கூறுவனவும், கின்னரப் புள்ளினம் இசை நலம் காட்டலும், வனப்பும் இசை நலமும் இவள்பால் நன்கு வாய்த்திருத்தலை விளக்குகின்றன. இவள் இசைப் போரில் ஏனை யரசரை வென்ற திறம். “மாதர்யாழ் தைவர வந்த; மைந்தர்கைக் கீதத்தால் மீண்டன கேள்விக் கின்னரம்; போதரப் பாடினாள் புகுந்த; போயின தாதலர் தாரினார் தாங்கள் பாடவே.” (664) என்று கூறப்படுகிறது. இவள் பாட்டிசைத்த நலத்தைத் தேவர் வியந்து, “கருங்கொடிப் புருவம் ஏறா; கயல்நெடுங் கண்ணும் ஆடா; அருங்கடி மிடறும் விம்மாது; அணிமணி எயிறும் தோன்றா; இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடினாளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்,” (662) என்று ஒதுகின்றனர். சீவகன் பாட்டுப் பாடிய திறம் கூறலுற்ற தேவர், “விண்ணவர் வியப்ப, விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த, மண்ணவர் மகிழ, வான்கண் பறவை மெய்ம்மறந்து சோர, அண்ணல் தான் அனங்கன் நாணப் பாடினான்” (734) என்றும் “பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும், திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தன” (735) எனக் காந்தருவதத்தை யெண்ணினாள் என்றும் கூறுகின்றார். இனி, காந்தருவதத்தை சீவகனைக் கண்டதும் அவன் அழகில் ஈடுபட்டு உள்ளம் இழந்து, அவனை மாலைசூட்டி மணக்கும் வேட்கை யுடையவளாய் விடுகிறாள். இதனைத் தேவர், “நோவ என் உள்ளம் யாத்தாய்; நின்னையும் மாலையாலே தேவரிற் செறிய யாப்பென் சிறிதிடைப்படுக” (719) என்றும், “கழித்த வேலேறு பெற்ற கடத் திடைப் பிணையின் மாழ்கி, விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கி” (720) மெலிகின்றாள் என்றும் கூறுகின்றார். பின்பு “பாட்டும் எழாலும் சீவகற்கே அமைந்திருக்கின்றன என்றெண்ணி, வீணைதான் தோற்பான் இருந்தாள்” (735) என்றும் தேவரே கூறுதலால், தத்தை சீவகனுடன் இசைப் போர் தொடங்குங் காலத்தில் புலமை மெலிந்து நிற்பது பெற்றாம். மனம் அவன்பாற் சென்று விட்டமையின், வெற்றியுண் டாயின் அவனைப் பெறலரிது ஆதலின் “தோற்பான் இருந்தாள்” என்பது தெளிவாகிறது. ஆகவே, அவள் யாழிசைக்கும்போது செவ்வே பாடாளென்பது துணிவாதலின், “பண்ணொன்று, பாடலது ஒன்று; பல்வளைக்கை மண்ணொன்று மெல்விரலும் வாள் நரம்பின் மேல் நடவா” (740) ஆயின. இருவரும் கருத்தொருமித்துச் செய்த இசைப் போர் அன்றாயினும், தத்தை கருத்தொன்றா தொழிந்தது அவள் குற்றமேயாதலின், அவட்குத் தோல்வி எய்துவதாயிற்று. அவள் கருத்தை யீர்க்கும் மெய்ந்நலம் சீவகன்பால் உண்டாதற்கு ஏது, தவப்பயன் என்பார். தத்தையின் செயல்மேல் வைத்து, தேவர், தத்தை மணமாலையை எடுத்து, சீவகற்குச் சூட்டுவாள், “ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர், எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்த்தனளே” (742) என்கின்றார். இனி, கட்டியங்காரன் ஏவலால் வீரர் போந்து சீவகனைக் கைப் பற்றிக் கொண்டு சென்றபோது, காந்தவருதத்தை தன் மனையின் மாடிமீதிருந்து அவனை நோக்குகின்றாள். வீரரிடையே சீவகன் செல்கின்றான். நந்தட்டன் படை பண்ணிவரச் சென்றிருக்கிறான். அப்போது அவள் மனத்தில் சினத்தீ யெழுந்து கண்களில் பொறி பறக்க முகம் சிவப்பக் கனலுகின்றது, அதனைச் சீவகன் காண்கின்றான். இதனை அவன் பின்பு நந்தட்டனுக்குக் கூறுமிடத்து “கேடகம் வாளோடேந்திக் கெடுக இந்நகரம் என்னா, மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே, ஆடவர்க்கு உழுவை யொப்பாய் அஞ்சினேன் அதன்கண்” (1758) என்று கூறுகின்றான். தான் வெகுண்டு சில செயல்களைச் செய்யின், சீவகன் ஆண்மைக்கு மாசு செய்யும் என்று அவள் கருதுவது அவளது பெருந்தன்மையைக் காட்டுகின்றது. சீவகன் தேவன் துணைபெற்று நீங்கியபின் தெய்வம் துணையாக இருப்பவள், அவன் பல விடங்கட்குச் சென்று மகளிர் பலரை மணம் செய்வதனை மந்திர வன்மையால் தெரிந்து வாட்டமின்றி யிருக்கின்றாள். வாட்டமின்மைக்குக் காரணம் வினவிய நந்ந தட்டனுக்கு, “குரிசிலோ, நம்மையுள்ளான், விதிமுக மணங்கள் எய்திவீற்றிருந்து இன்பம் உய்ப்ப, மதிமுகம் அறியும் நாமே வாடுவ தென்னை” (1715) என்கின்றாள். அதனோடு அந்நந்தட்டனையும் சீவகன்பால் செலுத்து கின்றாள். பின்பு அவள் சீவகற்கு அவன் தோழன்மார் மூலம் விடுக்கும் திருமுகத்தில் எழுதுவன அவளுடைய மானவுணர்ச்சியைப் புலப் படுத்துகின்றன. சீவகன் பகைவர் கைப்பட்டுக் கட்டுண் டகன்றான் என்பது பழியென்றும், அது தன் மலைநாட்டினை யடையின் மான மரம் என்றும் கருதி. “பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித் தொட்டுவிடுத் தேன் அவனை தூதுபிற சொல்லி; பட்டபழி காத்துப் புகழே பரப்பி னல்லால் விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ” (1883) என்று எழுதுகின்றாள். பழிதீர்த்துப் புகழ் பரப்புவது தகுதியே யன்றி, மகளிர் பலரை மணந்து சேறல் விழுப்பமன்று என அவள் எழுதுவது அவளது உள்ள மாண்பும் வாழ்க்கைத்துணையாம் சிறப்பும் சிறப்பிக்கிறது. ஆனால் அவள் கூற்று அச் சீவகனுக்குப் புலவிச் சொல்லாகவே தோன்றுகிறது. அத் திருமுகத்தில் குணமாலை பிரிவாற்றாது புலம்பி மெலிதலையும் குறித்தது “விட்டலர்ந்த கோதையவரால் விளைவதுண்டோ” என எழுதிய குறிப்பினை வற்புறுத்தி நிற்றல் காண்க. சீவகன் இக்காந்தருவதத்தைபால் ஏனை மகளிரைக் காட்டிலும் சிறிது மிகுதியான காதலே கொண்டுள்ளான். சீவகன் பதுமை முதலிய பல மகளிரை மணந்து அவரிற் பிரிந்து வருபவன் ஏமமா புரத்தையடைந்து சோலை யொன்றையணுகி, அங்கிருந்த பொய்கை யொன்றைக் காண்கின்றான். அதன்கண் பெடையன்ன மொன்று தன் சேவலொடு ஊடுதலைக் கண்டு, அவன் காந்தருவதத்தையை நினைக் கின்றானேயன்றி, குணமாலை முதலிய மகளிரையன்று. அவ்விடத்தே அவன் காந்தருவதத்தை தன் பிரிவாற்றாது இறந்து படுவளோ என்று அஞ்சி, “பரிவுற்றாற் பயனின்றியும் பாவைமார் முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவால்; பிரிவில் தோன்றிய பேரன்பெனப் படும் எரியின்மூழ்கி இறந்து படுங் கொலோ” (1634) என்று ஐயுற்று வருந்தி, பிறகு அவள் இறந்திலள் என்று துணிவான், “காதலாள் உடல் உள்ளுயிர் கைவிடின் ஏதம் என்னுயி ரெய்தி இறக்கம்; மற்று ஆதலால் அழிவொன்றிலள்; அல்லதூஉம் மாதர் விஞ்சையும் வல்லவள் அல்லளோ” (1638) என்று எண்ணி யமைகின்றான். ஆயினும் ஒருகாலத்தே சீவகன் இவள் மென்மை யறியாது கல்லாக் கழிகாமுகனாக ஒழுகு கின்றான். குணமாலையை யானையினின்றும் காத்துத் தன் மனைக்குச் சென்று அவளுருவினை யெழுதிக் காமப்பித்தேறி மயங்கியிருக்கும் இவனை, அப்போது காண்பது கருதி வந்த காந்தருவதத்தை அவன் செய லுணர்ந்து ஊடுகின்றாள்; அவளை இவன் உணர்த்தக் கருதிச் சில சொல்லியும் செய்தும் பார்க்கின்றான். அவள் உணர்ப்புவயின் வாரா ஊட்லுறுகின்றாள். அக் காலையில், அவன் தோழியர் முதலாயினாரைக் கொண்டோ, வேறு எவ்வாற்றாலோ உணர்ப் பித்துக் கூடுதலே அவனுக்குரிய அறமாகும், “ஊடியவரையுண ராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று” (குறள் 1304) என்பது தமிழ்மறையின் விதியாகும். உணர்த்தற்கண் ஆண்மகன் தன் காதலியின் காலடியில் வீழ்ந்து வணங்குவது நேரினும் அது வழுவன்று என்பதற்காகவே ஆசிரியர் தொல்காப்பியனாரும் “மனைவி யுயர்வும் கிழவோன் பணியும் நினையுங்காலைப் புலவியுள் உரிய” என்று ஓதுவாராயினர். சீவகனோ, அவள் ஊடி நீங்கக் கண்டு அவளை உணர்த்துதற்குரிய முயற்சி நாடாது குணமாலையை நினைந்து உளம் குலைகின்றான். பின்பே, அக் குணமாலை தூது விட்ட கிளிக்கு விடையிறுத்து அதனைச் செலுத்திய பின் வந்து தத்தையின் வருத்தம் போக்கிக் கூடுகின்றான். இதனாலும் சீவகன் தமிழ்நெறி கூறும் இன்பத்துறையின் நயமறியாதவன் என்பது உணரப்படும். சீவகனுக்கு இவள் விடுத்த ஓலைக்கண் குணமாலையின் ஆற் றாமையினைக் குறித்ததோடு நில்லாது. சுரமஞ்சரியிற் பிரிந்து சீவகன் தன் மனையகம் போந்து தன்னை (தத்தையைக்) கண்ட போது, மனம் மகிழ்பவள், “எங்கையைச் சென்று காண்மின் அடிகள்” (2107) என்று அவனுக்கு இரந்து கூறுகின்றாள். இச் செயல் அவளது பெருந்தன் மையை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சீவகன் அரசு கட்டிலேற, இக் காந்தருவதத்தை அரசமா தேவியாகி இனிதிருக்குங்கால் சீவகனோடு நீர் விளையாடச் செல்கின் றாள். ஏனை மகளிரும் உடன் செல்கின்றனர். அந் நீர்விளையாட்டில், ஏனைமகளிரும் சீவகனும் ஒருபுறம் நிற்ப, தான் மட்டில் கட்டியங் காரனாகப்பொருது அம்மகளிரை அலமரச் செய்கின்றாள். இவட்குப் பிறந்த மகன் சச்சந்தன் என்ற பெயர் சூட்டப்பட்டுச் சீவகனால் பின்பு அரசனாக்கப்படுகின்றான். 13. குணமாலை :- குணமாலை தன் பெயருக்கேற்ப உயரிய குணம் படைத்தவள்; அறன்கடை நில்லாத அறிவினாள்; பழியஞ்சும் பண்பு மிக்கவள்; இவற்றால் எய்திய மனத்தூய்மை யோடு செய் வினைத் தூய்மையும் சிறக்க வுடையவள். இவட்குத் தந்தை குபேரமித் திரன்; தாய் வினயமாலை யென்பவள். குணமாலையும் சுரமஞ்சரியும் வேனிற்காலத் தொரு நாள் பொழிலகம் சென்று தாம் தாம் செய்து கொணர்ந்த சுண்ணங்கனை ஒப்பு நோக்குகின்றனர். அப்போது சுரமஞ்சரி தனதே உயர்ந்தது என்னும் செருக்கால் குணமாலை நெஞ்சு வருந்துமாறு “நின் சுண்ணம் தீது” என்று சொல்லி விடுகிறாள். இருவர் சுண்ணங்களும் சீவகனுக்கு அனுப்பப்படுகின்றன. அவன் குணமாலை சுண்ணமே சிறந்ததெனத் தக்கவாறு மெய்ப்பித்துக் காட்டிவிடுகிறான். மேதக்க சுண்ணமே செய்திருந்தாளாயினும், அதனை இழித்துரைத்த சுரமஞ்சரியை வெகுண்டு ஒன்றும் கூறாது, “பைம் பொன் நீளுலகன்றியிப் பார்மிசை, இம்பர் என் சுண்ணம் ஏய்ப்பவுள எனின், செம்பொற் பாவை யன்னாய் செப்பு நீ” (882) என்கின்றாள். சுரமஞ்சரி பொறாது குணமாலையின் நீங்கிப் போய்விடுகின்றாள். குணமாலை, தன் சுண்ணமே சிறந்ததென்பது தெளிவாகிய பின்பும் மகிழ்வுறாது, சுரமஞ்சரி கண்ணற்று நட்புநீங்கியேகிய தனால் பெருவருத்தமுற்று, இதற்கு ஏது தீவினையே என்று கருதி, அருகன் கோயிலை யடைந்து வழிபாடு செய்கின்றாள். இதற்கிடையே, சுரமஞ்சரி தன் சுண்ணம் தீதென்று தெளிவித்த சொல் கேட்டதும் பெருவாட்ட முற்று வரையாடாது வாளாவிருக்க, அவளைக் குண மாலை, “நங்கை என்னொடு உரையாய் நனிஒல்லே, இங்கண் என்று அடிவீழ்ந்து” இரக்கின்றாள். சுரமஞ்சரி முகம் வாடிச்சோர்வுற்ற நிலையினைக் கண்டு மனம் இரங்கி, “திங்களங்கதிர் செற்றுழக்கப் பட்ட, பங்கயப்படு ஒத்துளைபாவாய்” (903) என்று குறிக்கின்றாள். குணமாலை அசனி வேகத்தால் அலைக்கப்பட்ட போது சீவகன் போந்து அவளை உயிருய்வித்து நீங்குகின்றான். அதுவே வாயிலாக அவள் அவன் பால் காதல்கொண்டு தீராவேட்கை கொண்டு மெலி கின்றாள். தான் வளர்த்த கிளியைச் சீவகன்பால் தூது விடுகின்றாள். கிளி சென்றதும் அதனைக் குறித்து இவள் பல நினைந்து. “தன்துணைவி கோட்டியினில் நீங்கித் தனியிடம்பார்த்து இன்துணைவற் சேர்வான் இருந்ததுகொல்; போந்ததுகொல்; சென்றதுகொல்; சேர்ந்ததுகொல்; செவ்வியறிந்து உருகும் ‘என் துணைவி மாற்றம் இஃது, என்றதுகொல், பாவம்,” (1042) என்று சொல்லி வருந்துகின்றாள். இதன்கண், தன் துணைவி யென்றது சீவகன் துணைவியாகிய காந்தருவதத்தையை; துணைவன், சீவகன், என் துணைவி, கிளிக்குத் துணைவியாகிய தன்னையே, வேட்கை காரணமாகத் தன் நெஞ்சின் கண் எழுந்த நினைவுகளால் அலைப் புண்டிருக் கும் குணமாலை, கிளியை நினைந்து, அதுவும் இருத்தல், போதல், செல்லுதல், சேர்தல் முதலிய செயல்களால் அலைகின்ற தெனக் கருதி, “அலைப்புண்டல் வினையேனாகிய எனக் கமையும், என்னால் பேணப்படுவது என்ற இயைபொன்று தவிர வெறொன்றும் இல்லாத இக்கிளி இவ்வாறு என்பொருட்டு அலைதல் கூடாதே; இஃதென்ன பாவம்” என்பாள் “பாவம்” என்கின்றாள். இவ்வாறு வேட்கையுற்றாளை இவள் மாமன் மகனுக்கு மணம் செய்து தரப் பெற்றோர் கருதுகின்றனர். அதனை யறிந்ததும் இவள், “ மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொற் கூலியாக அணிமதக் களிறனானுக்கு அடிப்பணி செய்வ தல்லால் துணிவதென்? சுடு சொல் வாளால் செவிமுதல் ஈரல்” (1056) என்கின்றாள். பெற்றோர் கருத்து நிறைவேறுவதாயின், “யான் இறத்தலே வேண்டும்; இன்றேல் சிந்தனை பிறிதொன்றாகியச் செய் தவம் முயறல் வேண்டும்; இவ் விரண்டனுள் ஒன்று என்கிறநாளையே நிகழ்வது”என்கின்றாள். இவள் கருதியவாறே திருமணம் நடைபெறு கிறது. இவள் சீவகனைக் கூடியிருக்குங்கால், சீவகன் பெருநயப் பினால் “சுரமஞ்சரி அன்று வாய் காவாது கண்ணறச் சொல்லிய சொல் நன்றோ தீதோ” என்கின்றானாக, அவன் மனதில் சுரமஞ்சரியைப் பற்றி நினைவு எழுந்தது பொறாது. “நற்றோளவள் சுண்ண நலம் சொலுவான் உற்றீர் மறந்தீர், மனத்துள் உறைகின்றாள்; செற்றால் அரிதால்; சென்மின், போமின், தீண்டாது; எற்றே அறியாத வொர் ஏழையெனோ யான்” (1077) என்று புலக்கின்றாள். இவளது இவ்வரிய செயல் நலத்தைக் கண்ட மாதவச் சிவஞான யோகிகள், பெரிதும் வியந்து, “சீவகன் மஞ்சரியைத் தாழ்த்துரைப்பச் சீறினளே, தூவாய்க் குணமாலை சோமேசா - ஆவகையே, தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர், இந்நீராகுதிர் என்று” (132) தாம் பாடிய சோமேசர் முதுமொழி வெண்பாவினுள் அழகுற எடுத்து ஓதுவது காண்மின். குணமாலையுடன் சீவகன் இருக்கும்போது போந்து கட்டியங் காரன் விடுத்த வீரர் சீவகனைப் பற்றிக்கொள்வது கண்டு, இவள் ஆற்றாது, “ஏலாது ஏலாது எம்பெரு மானுக்கு இஃது” என்று புலம்பு வதும், நந்தட்டனைப் பின்பொருகால் கண்டவிடத்து, “அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லிரானீர்; கடியிர் நீர் ஐயன் நீரே” (1744) என்று கழறுவதும் அவளுடைய காத லன்பின் மாட்சிக்குச் சான்று களாகும். பிரிவாற்றாது இவள் எய்தும் மெலிவினைக் காந்தரு வத்தையே பரிந்து தான் சீவகற்கு விடுத்த ஓலையில் குறிக்கின்றா ளென்னின், இவளுடைய குணநலம் புலத்தற்குரிய மகளிரும் புலத்தல் நீங்கி அன்பு செய்விக்கும் திறம் படைத்தது என்று தெரிகிறது. சீவகன் சுரமஞ்சரியை மணந்து தன் மனைக்கு வருபவன் தத்தையைக் கண்டு அவள் குறித்த வண்ணம் இவள் மனைக்கு வருகின்றான். அவனைக் கண்டதும் இவள் வருந்திக் கூறுவன மிக்க உருக்கம் வாய்ந்தவையாகும். தன்னைக் கூடித் தன் மனைக்கண் இருந்ததன் பயனாக, அவன் காவலர் கைப்பட்டான்; தன்னைத் தொடாதிருப்பின் அவற்கு அத்தீமை நேர்ந்திராது என்று கருதும் கருத்தால், அவள் அவனை வணங்கி, “தீவினையுடைய யென்னை தீண்டன் மின் அடிகள்; வேண்டா; பாவியேன்” (2108) என்று நொந்து புலம்புகின்றாள். சுண்ணம் காரணமாகச் சுரமஞ்சரி பிரிந்த தற்கே தீவினைப்பயன் என்று வருந்தி அருகனை வழிபட்டவள், இப்போது இவ்வாறு கூறுவது வியப்பன்றன்றோ. 14.பதுமை:- இவள் தனபதியென்னும் வேந்தன் மகள். இவள் பாம்பு தீண்டப்பெற்று அறிவு சோர்ந்து பின் சீவகனால் நலம் செய்யப் பட்டவள். விடம் தீர்ந்தபோது சீவகனைக் கண்களாற் கண்டு காதல் கொள்பவள் ஒரு நாள் காமநோய் மிக்கு ஆற்றாளாய், சோலைக்குப் போகின்றாள். இவளேபோல் சீவகனும் வேட்கைமிக்கு அச் சோலைக்கு வருகின்றான்; ஓரிடத்தே தனித்து நின்ற பதுமையைக் கண்டு அவளைக் கூடி யின்புறுகின்றான். சீவகன் இவளை மணந்திருந்து சொல்லாது நீங்கிய காலத்து இவள் புலம்வுன பலவாகும். “மிகவாயதொர் மீளிமை பலவாகும். உகவாவுன துள்ள முவர்த்ததுவோ இகவாவிடர் என்வயி னீத்திடநீ தகவா தகவல்லது செய்தனையே” (1389) என்பது அவளது மென்மைப் பண்பைப் புலப்படுத்துதல் காண்க. இவட்கு இவளுடைய தோழியும் நற்றாயான திலோத்தமையும் தகுவனவற்றைக்கூறிக் தேற்றுகின்றனர். பதுமையும் “நஞ்சினை யமுதமென்று நக்கினும் அமுதமாகாது, அஞ்சிறைக் கலாபமஞ்ஞை யணங்கர வட்டதேனும் அஞ்சிறைக் கலுழனாகு மாட்சி யொன்றானு மின்றே வஞ்சனுக்கு இனையநீரேன் வாடுவ தென்னை” (1412) என்று தேறியிருக்கின்றாள். 15. கேமசரி:- இவள் தக்கநாட்டுக் கேமமாபுரத்துச் சுபத்திரன் என்னும் வணிகன் மகளாவாள். இவள் திருமணத்துக் குரிய பருவம் எய்தியும், மணத்தற்குரிய ஆண்மகன் வரவு நோக்கிப் பெற்றோர் தாமும் இருக்கின்றனர். அத்தகையோன் ஒருவனைக் காண்டல் வேண்டி அவர்கள் நாடோறும் வருவார்க்கு விருந்து செய்கின்றனர். விருந்திற்கு வரும் ஆடவரனைவரும் கேமசரி கண்ணுக்குப் பேடிகளாகவே தோன்றுகின்றனர். சீவகன் ஒருவனே ஆடவனாகத் தோன்றுகின்றான். பெற்றோர் அவன் உடம்பாடு பெற்று மணம்புரிவிக்கின்றனர். சீவகனை முதற்கண் காணுமிடத்து இக் கேமசரி அருகதேவ னைப் பாடிக்கொண்டிருக்கின்றாள். அவள் தாயும் அவளுடன் அத் தேவனைப் பரவித் தன் மகட்குரிய கணவன் விரைய வருதல் வேண்டி வழிபடுகின்றாள். அந் நிலையில் சீவகன் கண்களும் கேமசரி கண்களும் தம்முள் நோக்கிக் காதற்கலப்பினைச் செய்து கொள்கின்றன. இதனைத் தேவர், “கொடியன ஏழை நோக்கமும்,...... உறுவலி நோக்கும் ஒத்தவே” (1478) என்கின்றார். சீவகன் இவளிடமும் வெளிப்படச் சொல்லாது பிரிந்து போகின்றான். இவளும் பலவாறு புலம்பி அவன் குறிப்பாகச் சொன்ன சொற்களைத் தேறியிருக்கின்றாள். ஏனை மகளிரினும் சிறப்புடைக் குண மாண்பொன்றும் இவள் பால் காணப்படாமையின் இம்மட்டில் நிறுத்தி மேற்செல் கின்றாம். இவள் நிலையினைத் தேவர், வாசமிக்குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்பாசத்தாலாக்கப்பட்ட ஆவியள், அல்லதெல்லாம், பேசினோர் பிணையல்மாலை பிசைந்திடப்பட்ட தொத்தாள்” (1546) என்று கூறுகின்றார். 16. கனகமாலை:- சீவகன் மத்திய நாட்டு ஏமமாபுரத்து அரசன் தடமித்தன் மக்கட்குப் படைப் பயிற்சி நல்கும் ஆசிரியனாய் அமர்ந்து அவர்கட்கு அதனைக் கற்பித்து வருகின்றான். அவ்வரசன் மகளே கனகமாலையென்பாள். ஒரு நாள் சீவகன் பொழிலிடைப் பூத்த பல்வகை மலர்களைக்கொண்டு பாசுரமாலை ஒன்று தொடுக் கின்றான். அங்கப்போந்த கூனி அதனை அவன் பால் பெறுகின்றாள். அக்கூனி கனகமாலைக்குத் தோழி. அவள் கொடுப்பக் கனகமாலை அதனை யேற்றுப் பாசுரப் பொருளைப் படித்துச் சீவகன்பால் வேட்கை கொள்கின்றாள். வேட்கை மீதூர்ந்து அவள் மருண்டுரைப்பனவற்றுள், இயற்கை யழகு மிகச் சிறந்து நிற்கிறது. காமவேட்கை மிக்கார்க்குக் குயிலின் குரல் அதனை மிகுவித்தலால் வருத்தம் மிக்கு அதனைப் பார்த்து அங்கலாய்த்துக் கொள்ளும் இக் கனகமாலை. “வருந்தி ஈன்றாள் மறந்தொழிந்தாள், வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்; முருந்தின் காறும் கூழையை முனிவார் நின்னை யென்முனிவார்; பொருந்திற் றன்னால் இது என்னாய்;என்னாய் பொன்றும், அளித்து இவ்வுயிர் என்னாய்; திருந்து சோலைக் கருங்குயிலே! சிலம்ப இருந்து கூவுதியால்” என்று கூறுகின்றாள். இதன்கண், குயிற்பெடை தன் முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு வைப்பதும், அதனை அக் காக்கை வளர்த்துக் குயிற்குஞ்சு வளர்ந்து தன் குரல் காட்டியதும், வெருட்டி யோட்டிவிடுவதும் முதலிய செய்திகள் குறிக்கப்படுதல் காண்மின். பின்பு இவள் சீவகனைப் பெற்றோர் மணம்புரிவிக்க மணந்து இனி திருக்கையில் நந்தட்டன் காந்தருவதத்தையின் விஞ்சையால் வந்தடைகின்றான். அவனுக்கு இவள் “எழுமையும் பெறுக இன்ன இளங்கிளைச்சுற்றம்” (1730) என்று மகிழ்வுரை கூறி விருந்து செய்வதும், பதுமுகன் முதலிய தோழர் நிலை கவர்பவர்போலத் தோன்றிச் சீவகனை அடைய, அவரை இன்னாரென வுணர்ந்து விருந்துசெய் பவள், “தொறுக்கொண்ட கள்வர் இவரோ எனச்சொல்லி நக்காங்கு, ஒறுக்கப்படுவார் இவர் என்று அங்க அசதியாடி” (1878) இன்புறுகின்றாள். இவை தவிர, இவள் பால் சிறப்புடைச் செய்திகள் வேறு காணப்படவில்லை. இவளை மணந்து கொண்டதும் சீவகன் தன் பிறப்பு வரலாறு அறிகின்ற சிறப்பு நிகழ்கின்றது. இவ்வகையில் இவட்கு இச்சிறப்பு உண்டாகிறது. 17. விமலை:- இவள் இராசமாபுரத்துச் சாகரதத்தன் என்னும் வணிகன் மகள். இவள் நலத்தைச் சீவகன் தன் தோழருக்குக் கூறு மிடத்து, “வீடுபெற்ற வரும் வீழும் விமலை” என்றும், “ஊடினும் புணர்ந்த தொத்தினியவள்” (2004) என்றும் பாராட்டி யுரைக்கின்றான். சீவகன் வேற்று வடிவங்கொண்டு இந் நகர்க்குட் சென்று சாகரதத்தன் கடையில் தங்கி, அங்கே பந்தாடியிருக்கும் இவ் விமலையைக் காண்கின்றான்; பந்தாட்டத்திடையே அவளும் இவனைக் காண்கின் றாள். இவளை இவனுக்கு மனம் செய்தற்கு வாயிலாகச் சாகரதத்தன் செய்யும் வாணிகம் அன்று சிறப்பெய்துகிறது. இவளை இவன் மணந்து கொள்ளும் முன்னும் பின்னும் இவள் பால் எழும் நினைவும் சொல்லும் மிக்க இறும்பூது பயப்பனவாகும். பந்தாடுங்கால் இவனைக் கண்டதும் இவட்குண்டாகும் காமக் கருத்து இவட்கு நன்கு புலனாகிறது. அதனை விதந்து, “இது போலும் இவ் வேட்கை வண்ணம், சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக் கலாவது அன்றாய், அரிதாய், அகத்தே சுட்டு உருக்கும் வெந்தீ; ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது” (1970) என்றும், “நிறையாது மில்லை, நெருப்பின் கடும் காமம், உண்டேல் குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை, பறையாய் அறையும் பசப்பு,” இஃது என் (1971) என்றும் கூறுகின்றாள். சீவகன் இவளைக் கூடி யின்புறுவான் பெறும் புலவியின்பம் மிக்க சுவையுடையது. ஒரு நாள் பூம்பள்ளியில் இருவரும் இருக்குங் கால், “நீ கங்குல்பால் புகுந்த கள்வன்” என்று சீவகன் கைகளைத் தன்கூந்தலிற் கிடந்த மாலையால் பிணித்து, “நீ வந்தது எற்றுக்குச் சொல்” என்று வினவுகின்றாள்; அவன், “நங்கை, யான் பசித்து வந்தேன்” என்கின் றான்; “நீ நயப்பது எப்பொருள்?” என்று விமலை கேட்ப, “அங்கலுழ் மேனியாய், நின் அணி நல அமிழ்தம்” (1996) என்று சொல்கின்றான். உடனே அவட்கு நெஞ்சில் எண்ணம் தோன்றுகிறது. புலவியை மறந்து விடுகின்றாள்; தன்பால் பெறக்கடவ நலத்தைத் தான் வேண்டியபோது வேண்டியாங்குப் பெறற்குரிய னாகவும், இவ்வாறு கேட்பதால் தன்னை அயன்மைபடக் கருதினான் என்று துணிகின்றாள். முகம் சிவக்கின்றது; கண்களில் சினத்தீ தோன்றுகிறது. அதுகண்டு சீவகன் வருந்தி அவள் அடியில் வீழ்ந்து, “அயிர்ப்பது ஏன்? பணி செய்வேனுக்கு அருளிற்றுப் பொருள்” (1997) என்று இரக்கின்றான்; அவள் புலவி தீர்ந்து, “ஒன்றும் உரையலையாகிப் பூம் பள்ளி வைகுக” என்றுரைத்துக் கூடுகின்றாள். 18.சுரமஞ்சரி:- சுரமஞ்சரி இராசமாபுரத்துவாழ்ந்த குபேரதத்தன் என்னும் வணிகன் மகள்; பேரழகு படைத்தவள்; பெருஞ் செல்வமுடைமையால் அரசகுமரிபோலும் அட்டகாச முடையவள்; பாட்டில் விருப்பம் மிக்கவள்; சிறிது பிடிவாதமும் உடையவள். பின் விளைவு கருதிச் செய்வன செய்யும் திறப்பாடு குறைந்தவள். தன் செயலே சிறந்தது என்று கருதும் தருக்குடையவள். குணமாலைiன் தோழி அவள் செய்த சுண்ணத்தைக் காட்டிய போது, தனதே உயர்ந்ததென்னும் தருக்கினால், குண மாலையின் மனம் வருந்த, “சுண்ணம் என்பதோர் பேர்கொடு, சோர்சூழல் வண்ணமாலை, நுசுப்பு வருத்துவான் எண்ணிவந்தன; கூறு இவையோ” (881) என்று இகழ்ந்து நகுகின்றாள். தன் சுண்ணம் தாழ்ந்ததென்று கூறப்பட் டது கேட்டு, இச் சுரமஞ்சரி, சீவகனைப் புலந்து, “ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் தோற்று, வந்து என் சிலம்படி கைதொழ நோற்பன்” (904) என்றும் குணமாலை நோற்றனள் என்றும் கூறுவது அவள் தருக்கினைப் புலப்படுத்துகிறது. இத் தருக்குரையில் இவளுடைய மணவுணர்வொன்று புலனா கிறது: குணமாலை சுண்ணத்தினும் தன் சுண்ணமே உயர்ந்த தாகவும், அதனை நோக்காது சீவகன் மாறிக் கூறியதற்குக் காரணம் குணமாலை யின் நோன்புடைமையே என்பது சுரமஞ்சரிக்குக் கருத்தாதல் விளங்கு கிறது. தான் நோலாமையே தன் தோல்விக்குக் காரணம் என்பதைத் தெளிந்து கொண்டாள் என்பது இவள் கூற்றே வற்புறுத்துகிறது. இவ்வாற்றால், இவள் மனத்தே வினையுணர்வும், நோன்பும் முதலியன நன்கு பதிந்திருத்தலைக் காண்கின்றோம். குணமாலையைப் பிரிந்து சென்ற இச் சுரமஞ்சரி தன் கன்னி மாடம் அடைந்து நோன்பு புரியலுற்று, மணந்தால் சீவகனை மணப் பேன்; இன்றேல் என் நிறையழிப்பார் பிறர் இலர் என்ற கருத்தால், “சென்று காலம் குறுகினுஞ் சீவகன் பொன்துஞ்சு ஆகம் பொருந்திற் பொருந்துக; அன்றி என்நிறை யார் அழிப்பார்” (913) எனத் துணிந்து காமதேவனை வழிபட்டு வருகின்றாள். சீவக்னைக் காய்ந்தேகிய கசுரமஞ்சரி அவனையே மணக்க நினைத்தற்குக் காரணம் என்ன? ஒரு பெண் மகள் வேறோர் ஆடவனை வெல்வது வேண்டின் அவனை மணந்து தன்னைப் பணியுமாறு செய்து கோடல் ஒன்று; இருபாலார்க்கும் பொதுவா யுள்ள விஞ்சை யொன்றில் வெல்வது ஒன்று; இவற்றுள் யாதெனும் ஒன்றினைச் செய்வதே சாலும். பொதுவாய விஞ்சை இசையே யாகும். அதன்கண் சீவகன் நிகரற்றவன். ஆகலின், அதனை விடுத்து, அவனை மணத்தலையே சுரமஞ்சரி கருதுகிறாள். அப்போதுதான் அவள் குணமாலையறியத் தன்னைச் சீவகன் பணியச் செய்யவும் முடியும். இச் செயலால், இவளுடைய காமநிலை இயற்கையாகாது செயற்கையாமாறு விளங்குகிறது. குணமாலை, தன்னைச் சீவகன் உயிர் தப்புவித்த நன்றி கண்டு எழுந்த அன்பு வயப்பட்டு, அவன் வடிவு கண்டுற்ற வேட்கை மிகுந்து இயற்கைக் காமம் எய்துகின்றாள். அவனம் அவளுடைய சுண்ண நலத்தால் கண்ட நல்லறிவும், மேனி கண்டதனாற் பிறந்த காமமும் எய்தி இயற்கைக் காதலுற்றுக் கடிமணம் புணர்ந்து கூடுகின்றான். சுரமஞ்சரிபால் சீவகன் கொள்ளும் வேட்கையும் இயற்கையன் றென்பது இவளை மணக்கும் திறத்தால் அறிகின்றோம். சுரமஞ்சரி ஆடவர் குறுகா அருங்கடி யமைத்து நோன்பாற்றி வருகின்றாள். சீவகன் வயது முதிர்ந்த வேதியனுருக் கொண்டு செல்கின் றான். அவனைச் சேடியர் விலக்குகின்றனர்; சுரமஞ்சரியும் வந்து அவனைக் காண்கின்றாள். அவன் முதுமை கண்டு சுரமஞ்சரி இரக்கம் கொண்டு, அவனை நோக்கி, “நீவிர் வந்த வரவு என்ன?” என்று வினகின்றாள். அவனோ கவர்த்த நினைவால், “என் சிந்தையிலே நின்று என்னை வருத்துகின்ற அழகிய நீர்மையையுடைய குமாரியாகிய நின்னைக் கூடவந்தேன்’ என்றும், சித்தத்தே நலிகின்ற தீர்த்த நீராகிய குமரியாற் றில் மூழ்கி யாட வந்தேன் என்றும் பொருள்பட, “சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட” (2029) வந்தேன் என்கின்றான். அதனையுணர மாட்டாத அவள், பிற்கூறிய பொருளே அவன் கருதுவதாகக் கொண்டு, “அதனால் உண்டாகக் கூடிய பயன் என்ன?” என்று வினவ, “முந்தி நலிகின்ற முது மூப்பொழியும்” என்கின்றான். “தான் வருவதற்குரிய காலத்தில் வாராது அதற்கு முன்பே வந்து வருத்தும் மூப்பும் போம்” என்று அவள் நினைக்கின்றாள். “நின்கண் முன்னே காண என்னை வருத்தும் மூப்பும் போம்” என்று அவன் கருதுகின்றான். அதன் மேல் சுரமஞ்சரி, நின் போல் குமரியாடி மூப்பொழிந்தவர் வேறு எவரேனும் உண்டோ என்பாள், “பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக” என்று கேட்கின்றாள். அவட்கு அவன், “துறையறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல்” என்று உரைக்கின்றான். இதனால், அவன், “நின்னைக் கூடுதற்குரிய துறை இவ்வாறு வேற்றுருக் கொண்டு போதருவதே என்றறிந்து நின்பாற்போந்து நின்னைத்தொழுது கூடுவோர் பிறர் இல்லை” என்று கருதுகின்றான். அவளோ, “மூப்பொழிக்கும் குமரித் துறையின் உண்மையறிந்து அதனையடைந்து மூழ்குவோர் பிறர் இலர்” என்றானாக நினைக்கின்றாள். அதனால், “அற்றேல், அதனை நீவிர் அறிதிர் போலும்” என்பாளாய், “அறிதிர் பிற நீவிர் என முறுவலிக் கின்றாள்: அவன் சிறிதும் இடையீடின்றி “ஐயம் இலை” என்கின்றான். இதனைக் கேட்டு அமைந்து உள்ளே அவனை அழைத்துச் சென்று உணவு நல்கி இனிதிருக்கச் செய்கின்றாள். அப்போதும் அவள்பால் அவன் கவர்பொருளெய்தும் சொற்களே சொல்லிச் சீவகனை நினைப்பித்துக் காமக்கோட்டம் செல்லுமாறு அவள் மனத்தைக் கலைத்து விடுகின்றான். கள்ளமறியா வெள்ளை யுள்ளம் படைத்த இச் சுரமஞ்சரி அவனால் எளிதில் உளம் கலங்கி, அவனையும் அழைத்துக் கொண்டு காமன் கோயிலுக்குப் போகின்றாள். காமன் கோயிலில், அவள் சீவகனை ஒரு புடையில் இருத்தி, உள்ளே சென்று, “தாமரைச் செங்கண் செவ்வாய் தமனியக் குழையினாய்! ஓர் காமமிங் குடையேன்; காளை சீவகன் அகலம் சேர்த்தின், மாமணி மகரம்அம்பு வண்சிலைக் கரும்பு மான்தேர் பூமலிமார்ப, ஈவல் ஊரொடும் பொலிய” (2066) என்று கூறிப் பரவுகின்றாள். அங்கே சீவகன் தோழருள் ஒருவனான புத்திசேனன் முன்னே செய்துகொண்ட ஏற்பாட்டிற் கேற்ப, காமக் கடவுளின் பின்னே மறைந்து நின்று, “நின் மனம் மகிழ் காதலானை நீ பெற்றாய்; இனி நில்லாது எழுக” என்கின்றான். அதனைக் காமன் கூற்றாகவே கருதி, அவளும் ஏமாந்துவிடுகிறாள். சீவகன் இயற்கை வடிவொடு தோன்றி அவளைக் கூடுகின்றான். இருவர்க்கும் மணம் நிகழ்கிறது. மணம் நிகழ்ந்த பின், சுரமஞ்சரி அவன் மனம் மகிழத் தகுவனவே நினைந்தும் சொல்லியும் ஒழுகுகின்றாள். அவள் தருக்கும் பிறவும் இருந்த இடம் தெரியாவகை மறைந்து போகின்றன. நன்மகளிர்க்கு வேண்டும் நலம் முழுதும் அவள்கண் பொலிகின்றன. அவளைக் கூடியிருந்த சீவகன் விதைய நாட்டிற்குச் செல்ல வேண்டிய வனாகின்றான். அதனால் தன் பிரிவை அவட்குச் சொல்வானாய், “கருமம் நீ கவலவேண்டா; கயற்கணாய் பிரிவல்; சின்னாள் அருமை நின் கவினைத் தாங்கல், அது பொருள்” என்று கூறுகின்றான். அவனக்கு அவள் தன் கற்பின் பொற்பு விளங்க, “பெருமநீ வேண்டிற் றல்லால் வேண்டுவ பிறிதொன் றுண்டோ? ஒருமைநின் மனத்திற் சென்றேன்; உவப்பதே உவப்பது” (2102) என்று மொழிகின்றாள். இனி, இவள் குணமாலைபால் சொல்லிய சூளை எவ்வாறு முற்றுவித்துக் கொள்கின்றாள் என்பதைக் காண்போம். ஒரு நாள் இரவு பள்ளியறையில் சுரமஞ்சரி நிற்கிறாள். அருகே நிற்பது பளிக்குச் சுவர். அதன் கண் அவளுடைய அழகுடைய வடிவம் தோன்றுகிறது. அதனழகைச் சீவகன் இமை கொட்டாது பார்க்கின்றான். அது கண்டு பொறாது அவள் புலக்கின்றாள். அவன் அவளடியில் வீழ்ந்து புலவி தீர்க்க முயலுகின்றான் அவள் முகஞ் சிவந்து வாயிதழ் துடிப்ப, புருவம் நெரித்து, “கிழவனாய்ப் பாடி வந்தென் கீழ்ச்சிறை யிருப்பக் கண்டேன்; எழுதிய பாவை நோக்கி இமையவித் திருப்பக் கண்டேன்; ஒழிக இக்காமம்; ஓரூர் இரண்டஃகம் ஆயிற்று என்றாங்கு” (2096) அழத் தொடங்குகின்றாள். அவன் மனம் குழம்பி, மறுபடியும் அவள் அடிவீழ்ந்து வணங்கி, “சிறியவர் செய்ததீமை புலம்பலர் பொறுப் பரன்றே பெரியவர்” (2097) என்று இரந்து கூறி அவள் புலவி தீர்த்துக் கூடி மகிழ்கின்றான். இவ்விரப்புரை அவள் செய்த சூள் நிறைவுறு தற்குத் தக்கதாகிறது. ஆனால் இச்செய்தியைப் பற்றித் தேவர் ஒன்றுமே கூறாதொழி கின்றார். மறுபடியும் சுரமஞ்சரி குணமாலை முதலாயினாருடன் கூடியிருந்தபோதும் பேசுகின்றளில்லை. சீவகன் மறைவும், வெளிப் பாடும், கூட்டமும் என்ற இவற்றால் தான் குணமாலையொடு செய்த சூளை மறந்தொழிந்தாள் போலும். 19. இலக்கணை:- இலக்கணை கோவிந்தராசன் மகள்; சீவ கனுக்கு அம்மான் மகளாகும் முறைமையினள். பேரழகும் நுண் ணறிவும் படைத்தவள். இவளது திருமணத்தின்போது இவள் மெய்ந் நலம் கண்ட வேந்தர், வியந்து, சீவகனைப் பாராட்டி, “நோற்றான் திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன், நாங்களெல்லாம் தரித்திலோம் தவத்தை” (2468) என்று தம்முட் கூறிக்கொள்கின்றனர். விதையநாட்டுத் தலைநகர் வீதியில் சென்றுகொண்டிருக்கும் போது, அரசனேவலால் அவனை வரவேற்று நிற்கும் மக்கட் கூட்டத் திடையே, அரசன் கோயிலிலுள்ள பட்டத்தரசியார் ஆயமகளிருடன் கோயில் மாடத்தே மிடைந்திருக்கின்றனர். அவரோடு இலக்கணையும் இருந்து சீவகன் மெய்ந்நலம் கண்டு கருத்திழந்து காதலுறுகின்றாள். சீவகனும் அவளைக் கண்டு காதற் கருத்துடைய னாகின்றான். இவ்வாறு இருவர்க்கும் கருத்தொருமை உண்டாகிறது. பின்பு அவன் ஏமாங்கத நாட்டிற்கு அரசனாய் மணிமுடி சூடி அரசுகட்டி லேறித் தன் மனைவியர் பலரையும் வருவித்து அவரோடு இனி திருக்கின்றான். கோவிந்தராசன் இலக்கணையைச் சீவகற்குத் திருமணம் செய்து கொடுப்ப ஏற்பாடு செய்கின்றான். திருமணமும் இனிது நடைபெறுகிறது. சீவகன் இலக்கணையுடன் கூடியிருக்குங்கால் புலவியொன்று நிகழ்கிறது. சீவகன் இலக்கணையின் மெய்ந்நலத்தை முடிமுதல் அடிகாறும் உற்றுநோக்குகின்றான்; அதனால் அவன் கண் கரிந்து நீர் சொரிகின்றான். அது கண்ட இலக்கணை, பிற மகளிரின் நலத்தோடு தன் நலத்தை ஒப்பு நோக்கி, அவரை நினைந்து கலுழ்கின்றா னென்று கொண்டு, “அம்ம! பேதைமை பிறரை யுள்ளி அழுபவர்ச் சேர்தல்” (2515) என்று வெகுண்டு உரைக்கின்றாள். அவள் அடியில் வீழ்ந்து புலவி தீர்க்கக் கருதிய சீவகன், அவள் அது தீராமை கண்டு, உண்மை கூறி, வண்டினத்தை நோக்கி, “தேன்காள், வண்டுகாள், வருடி நங்கை வரந்தர மொழிமின்” (2518) என்கின்றான். இவர் செய்கை அவ் விடத்தே வளரும் கிள்ளையும், பூவையும், கண்டு, இலக்கணை இரும்பு நெஞ்ச முடையள் என்றும் சீவகன் தவறிலன் என்றும், மனமிரங்காத அவளை இரந்து புலவி தீரச்செய்வோம் என்றும் தம்முள் பேசிக் கொள்கின்றன. அவற்றுள், பூவை, கிளியை நோக்கி, இது குறித்துப் பேசின் இலக்கணை சினந்து அடிசிலூட்டா ளெனக் கூறி அதன் வாயை அடக்க, கிளியோ அடங்காது, “ஈன்றதா யானுமாக இதனைக் கண்டு உயிரை வாழேன்; நான்று யான் சாவல்” (2522) என்று கூறுகிறது. அது கேட்டு இலக்கணை நகைப்ப, சீவகன் புலவி தீர்ந்தாள் எனக் கருதித் தழுவி இன்புறுகின்றான். இந் நிகழ்ச்சிக்கண், கிளியை வாயடக்கத் தொடங்கிய பூவை. “பேதாய், முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள்” (2520) என்பதனால் இலக்கணை விரைவில் வெகுளும் இயல்பினள் என்பது தெரிகிறது. புலவிக் காலத்துக் காதலன் செய்கையை நுண்ணிதின் எண்ணிச் சிவப்பது மகளிரின் பொதுவியல்பு என்று கொள்வதாயின், இவள் குண நலம் காண்டதற்கு வேண்டும் செயலொன்றும் தேவர் குறித்திலராம். 10. அறமுதல் நாற்பொருள் ஆராய்ச்சி தமிழ் மொழியின்கண் வழங்கும் நால்வகைப் பாக்களும் புலவ ராற் பாடப்படுமிடத்து அறம் பொருள் இன்பம் என்பவை பொருளாக நிகழவேண்டுமென்பது தமிழ்நெறியாகும். ஆசிரியர் தொல்காப்பிய னாரும், “அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப” (தொல், செய். 106) என்று கூறினர். எண்வகை வனப்புக்களைப் பற்றி வகுத்துரைக்கமிடத்து, அவ்வாசிரியரே, தோல் என்பது இஃதென்பார், “இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிந் தொழுகினும், தோலென மொழிபதொன்மொழிப் புலவர்” (தொல்.செய். 238) என்று கூறுகின்றார். இதன் கண், விழுமியது என்றது, “அறம் பொருள் இன்பம் வீடு என்னும் விழுமிய பொருள்” என்று பேராசிரியர் உரைக்கின்றார். இவற்றால் ஒரு புலவன் பா வியற்றுமிடத்துத்தன் புலமை நலத்தை இவ்வற முதலிய விழுமியபொருளை யுணர்த்து தற்கே பயன்படுத் தற்பாலன் என்பது தொல்லாசிரியர் கருத்தாதல் துணியப்படும். இக் கருத்தே பற்றிப் பின் வந்த இலக்கணவாசிரியர் பலரும், “நூலெழுதப் புக்கவிடத்து இவற்றைத் தக்கவாறு இடையிடையே வற்புறுத்தத் தொடங்கினர். வற்புறுத்துமிடத்தும், அறம் பொருள் இன்பம் என்ற மூன்றுமே விளங்க வுரைக்கப்படும்; வீடு பேறு துறவு கூறும் வாயிலாக வுணர்த்தப்படும் என்பது பண்டையாசிரியன்மார் கண்ட நெறியாகும். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என ஆசிரியர் தொல்காப்பியனாரும், “வடுவிலாவையத்து மன்னிய மூன்று” எனச் சமண முனிவரும் இன் மூன்றனையும் விதந்தோதுதல் காண்க. திருத்தக்க தேவரும், வீடுபேற்றினைச் சீவகன் முத்தி யெய்திய வரலாறு கூறுமுகத்தால் விரியக் கூறுகின்றார். அது முற்றும் சமண் சமயப் பொருளை எடுத்துரைக்கும் திறத்ததாகலின், அதனைப் பிறிதொரு தலைப்பின்கண் ஆராய்வாம். ஈண்டு அறம் முதல் மூன்றி னையும் தேவர் கூறும் திறத்தைக் காண்பாம். முதற்கண் அறத்தின் இயல்பினைப் பலவிடத்தில் பற்பலர் கூற்றில் வைத்துத் தேவர் வற்புறுத்துகின்றார் எனினும், சீவகன் கூற்றாகத்தான் சிறிது விரியக் கூறுகின்றார். அது முற்றும் சமண் சமயப் பொருளை எடுத்துரைக்கும் திறத்ததாகலின், அதனைப் பிறிதொரு தலைப்பின்கண் ஆராய்வாம். ஈண்டு அறம் முதல் மூன்றினையும் தேவர் கூறும் திறத்தைக் காண்பாம். முதற்கண் அறத்தின் இயல்பினைப் பலவிடத்தில் பற்பலர் கூற்றில் வைத்துத் தேவர் வற்புறுத்துகின்றார் எனினும், சீவகன் கூற்றாகத் தான் சிறிது விரியக் கூறுகின்றார். சீவகன் கேமசரியை மணந்து கூடி இனி திருந்து பின்பு அவளை விட்டு நீங்கிச் செல்கின்றான். வழியில் வழிப்போக்கன் ஒருவனைக் காண்கின்றான். அவனுக்கு அறத்தின் சிறப்பை வலியுறுத்தத் தொடங்கி, தானம், சீலம், தவம், அறிவர்க்குச் சிறப்புச் செய்தல் என்ற நால்வகை யறங்களையும் தொகுத்துரைக் கின்றான். பின், தானம் என்பது துறவு பூண்டு நோன்பு மேற்கொண்டு ஐம்பொறியும் வென்றவர்க்கு வேண்டுவன ஈதலாம் என்றும், தேனும், கள்ளும், ஊனும், உண்ணாமை சீலமென்றும், “ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத்தவம்” (1554) என்றும், அருகன் பாதத்தைப் பூவும் புகையும் சாந்தமும் சுண்ணமும் கொண்டு வழிபடுதல் சிறப்பு என்றும் விளக்குகின்றான். இவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்துவான், “எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பம்” (1566) இல்லாதவாறு போல, இந்நால்வகையறங்களையும் செய்யா தார்க்கு மேலுலகில் இன்பம் இல்லை யென்கின்றான். இவ்வறம் வழிச்செல்வார்க்குக் கட்டுச் சோறுபோல மேலுலகு செல்வார்க்குத் தணைசெய்யும் என்ற கருத்துப் பட, “வேற்றுவரில்லா நுமரூர்க்கே செல்லினும் வெகுண்டீர்போல ஆற்றுணாக் கொள்ளாது அடிபுறத்து வைப்பரோ? அல்லீர்போலும்; கூற்றங் கொண்டோடத் தமியேகொடு நெறிக்கண்செல்லும் போழ்தில் ஆற்றுணாக் கொள்ளீர் அழகலால் அறிவொன்றும் இலிரே போலும்,” (1557) என்று மொழிகின்றான். பின்பு, இவ்வறத்தை உடலோடு கூடியுலகில் உணர்வுடன் வாழும் நாட்களுக்குள்ளேயே செய்தல் வேண்டும்; பின்பு செய்வோம் எனின், சாக்காடு வரும்; அது வருங்கால் வாயடை பட்டு அறிவு மழுங்கிவிடும்; அக்காலத்தே உனக்கச் சிறந் தோராய் இருப்பவரும் உனக்குத் துணை செய்யார் என்று வற்புறுத்து வான், “கையாற் பொதித் துணையே காட்டக் கயற்கண்ணாள் அதனைக் காட்டாள், ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கதற்குப் பருவம் அன்றுஎன் செய்கோ? எனச் சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம், பொய்யே, பொருளைரையா முன்னே கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்” (1560) என்று விளக்குகின்றான். பொருளின் இயல்பினை அரசியல், பொருளியல் என இருகூறு படுத்து ஆராய்வது நலம். போர் முறையும் வாணிபமும கைத் தொழிலும், பிறவும் இத் தலைப்பில் அடங்குமாயினும், இவற்றைத் தனித்தனியே மேலே ஆராய்கின்றாமாதலின் ஈண்டு, பொருட் பொருளையே தேவர் காட்டும் நெறிபற்றிக் குறிக்கின்றோம். பொருளே அறம் செய்தற்கும் இன்பம் நுகர்தற்கும் வாயிலாவது; பொருளை எய்தினோர் ஏனை அறத்தையும் இன்பத்தையும் இனிது பெறுவர், என்பது சான்றோர் வழக்காலும் உலகியலாலும் நாம் அறிகின்றோம். இராசமாபுரத்து வணிகனாக சீதத்தன் என்பவன் பொருளீட்டக்கருதிக் கடலிற் கலம் செலுத்திச் செல்லத் தொடங்கு கின்றான். அவன் கருத்தில் வைத்துத் தேவர் பொருளின் சிறப்பை வற்புறுத்துவார். “செய்க பொருள்யாரும்; செறுவாரைச் செறுகிற்கும் எஃகு பிறிதில்லை; இருந்தே உயிரும் உண்ணும்; ஐயம்இலை; இன்பம் அறனோடு எவையும் ஆக்கும்; பொய்யில் பொருளே பொருள்; மற்று அல்ல பிறபொருளே” (499) என்று மொழிகின்றார். பொருள் ஈட்டுங்கால், அதன் வரவு சிறிது சிறிதாக இருப்பினும், அதனைக் கண்ணும் கருத்துமாகப் போற்றி ஈட்டி வரின், அது திரண்டு பெருகி, தன்னைச் சேர்க்குமவன் மிக எளியனாயினும் குடைநிழலிருந்து குஞ்சரமூரும் பெருஞ்செல்வனா வான் என்று உணர்த்துவாராய், “இம்மியன நுண்பொருள்கள் ஈட்டி நிதியாக்கி, கம்மியிரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி” (497) என்று உரைக் கின்றார். செல்வம் ஈட்டக் கருதுபவர்க்கு ஊக்கமே இன்றியமையாது வேண்டப்படும்; ஊக்கமுடையார்க்குப் பெருஞ் செல்வம் எளிதிற் சேரும் என்னும் கருத்து, “உள்ளமுடையான் முயற்சிசெய்ய, ஒரு நாளே வெள்ளநிதி வீழும்; விளையாதது அதனின் இல்லை” (498) என்பதனால் அறிவுறுத்துகின்றார். பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்வில் இன்பமில்லை யென்பதை “எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல்” (1556) என்று சீவகன் கூறும் கூற்றால் வற்புறுத்தி யுள்ளார். இனி இன்பமாவது ஒருவனும் இருத்தியும் தம்முட்கருத்து ஒருமித்து அன்புற்று நுகரும் நுகர்ச்சியாகும். இந்நுகர்ச்சியின்றி வறிதே வாழும் வாழ்வு சீரியதன்று; இரக்கமின்றி வாழும் வேடர் வாழ்வு போல்வதாம். இதனைத் தேவர் சீவகன் கூற்றில் வைத்து, மகளிருடைய “வேல் தடங்கண்தாம் ஆடும் நாடகம் கண்டு வாழாதவர் வாழ்க்கை யெல்லாம் சவரர் வாழ்க்கையே” (1662) என்றும், அவர் தம் கூட்டம் “இயைவதன்றேல், ஆகநோற்றிட் டடங்கல் ஆண்மைக்கு அழகு என்ப” (1664) என்றும் கூறிக் காட்டுகின்றார். மேலும், இதன் கண், இத்தகைய இன்பம் ஒரு பிறப்பில் எய்தாதாயின், மேலைப் பிறப்புக்களிலேனும் எய்தும் பொருட்டுத் தவம் செய்தல் வேண்டும் என்பாராய் “இயைவதன்றேல், ஆக நோற்றல்” வேண்டும் என்றும், இது சான்றோர் கருத்தென்றற்கு “என்ப” என்றும் கூறுதல் காண்க. இவ்வண்ணமே “விண்ணினோட மிர்தம் விலைச் செல்வது, பெண்ணின் இன்பம் எனப் பெரிது” (244) எனச் சச்சந்தன் கூறுவது ஈண்டு ஆராய்ச்சிக்குத் தகுவதன்று; அவன், இவ்வின்பத்தைத் தனக் குரிய அறத்திற்குத் துணையாகக் கொள்ளாது, அதற்கு அடிமை யாகிக் கெட்டவன். பொருட்கும் இன்பத்துக்கும் அடிமையாகி அவையே உறுதியென உழல்பவர்க்கே அவற்றின் நிலையாமையும் புன்மையும் பண்டைத் தமிழ்ச் சான்றோர்களால் வற்புறுத்தோதப் பட்டன. அதுவே தேவர்க்கும் கருத்தாதல் இதுகாறும் கூறியவாற்றால் இனிது துணியப்படும். ஆயினும், தேவர், இக்காவியத்தின்கண், அறத்தின் சிறப்பும் பொருள் இன்பங்களின் நிலையாமைப் புன்மைகளும் வீடுபேற்றுக்கு வாயிலாகிய துறவும் பெரிதும் பேசுகின்றனரேயன்றி, பொருள் இன்பங்களை வீடு பேற்றுக்குத் துணையாக்கிப் பயன்கொள்ளும் நெறியினைக் கூறிற்றிலர். துறவு நெறிக்கு இந்நிலையாமையுணர்வு இன்றியமையாதிருப்ப தொன்றே அவர் கருத்து முழுதும் கவர்ந்து விட்டது. நல்லாற்றில் நின்ற பொருளின் பங்கள் வீடுபேறு நல்கும் திறத்தை ஆய்ந்திருப்பரேல், இப் பெருங்காவியம் மிகப்பெருங் காவியமாக மேன்மையுற்றிருக்கும்!! சீவகன் வாழ்க்கை பொருள் இன்பங்களைத் துணையாகக் கொண்டியன்ற வாழ்க்கையாயினும் இன்பத்துறையில் இறப்பத் தோய்ந்து நிற்றலின் சீரிதன்றாம். “காமஞ்சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என ஆசிரியர் தொல்காப்பியனார் காட்டிய தமிழ் வாழ்வின் பகுதிகளாகிய காமச் சால்பும், மக்கட்பேறும், சிறந்தது பயிற்றலும் அவன் வாழ்வில் காணப்படுகின்றன; கிழத்தியைத் துறந்து போதலும், இன்பத் துறையில் இறப்பத் தோய்தலும் தமிழ் வாழ் வல்ல. பொருளின் பங்களின் நிலையாமை, இக்காவியத்தில் பல விடங்களில் விரித்துக் கூறப்படுகிறது சச்சந்தன் விசயையை மயிற் பொறியிலேற்றி விடுக்கும்போதும், சீவகன் காட்டில் கண்ட தாபதர்க்கு அறம் உரைக்கு மிடத்தும், வழிப்போக்கற்கு விடை கூறுமிடத்தும், பதுமை கேமசரி என்பாரைப் பிரிந்தேகிய விடத்தும், விசயை துறவு மேற் கொண்ட போழ்தும், சீவகன் துறவு பூண்ட விடத்தும், பிறாண்டும் பெரிதும் பொருள், யாக்கை, இன்பம் முதலியவற்றின் நிலையாமைகள் பல படியாக விளக்கப்படுகின்றன. இந் நிலையாமை யுரையோடு சமண் சமய நெறிபற்றிய துறவு நெறியும் நோன்பும், பரிநிருவாணப் பேறும் வீடுபேற்றுக்கு உரியன வாம். ஆகவே, இக் காவியம் அறம் பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை உறுதிப் பொருள்களைப் பயக்கும் நெறிமையினை யுடையது என்பது காணப்பட்டதாம். 11. சமண் சமய நுண்பொருள் கூறல் இப்பெருங் காவியத்தின் இறுதிப் பகுதியாகிய முத்தி யிலம்பத்துள் தேவர் சமண் சமய நுண்பொருளை முறைப்படுத்தித் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் அழகுறக் கூறுகின்றார். சீவகன் ஏமாங்கத நாட்டு க்கு அரசனாய் மனைவி மக்களுடன் இருந்துவரும் நாளில், ஒருநாள் உண்பன உண்டு உடுப்பன வுடுத்து, பூசுவனபூசி அருகபரமேட்டியின் திருக்கோயிலையடைந்து வழிபாடு செய்கிறான். ஆங்கே சாரணர் இருவர் எழுந்தருளுகின்றனர். அவர்களைக் கண்டு சீவகன் அன்பு கெழுமப் பணிந்து, “தெருளலேன் செய்த தீவினை யெனும் இருள்” (2754) நீங்குமாறு நல்லறிவு வழங்குக” என்று வேண்டுகின்றான். அவர்களுள் இரத்தினப்பிரபையென்பவன் சமணசமய நுண்பொருளைச் சுருங்கவுரைக்கின்றான்: முதற்கண் யாக்கையின் பெறுதற் கருமையை உரைக்கலுற்று, “உலகில் நிலவும் பலவகைப் பிறப்புக்களுள் மக்கட் பிறப்பு பெறற் கரிய தொன்றாம்; அப்பிறப்பினும் கானவர் மறவர் முதலியோர் வாழும் நிலங்களிற் பிறவாது நீர் வளம் சிறந்த நாட்டில் உயர் குடியிற் பிறப்பது அரிது; பிறப்பினும், அழகு திகழும் உடம்போடு பிறத்தல் அதனினும் அரிது; உயர்குடிப் பிறப்பும் கண்கவரும் கவின் நிறைந்த உடலழகும் பெற்றுத் திகழுமிடத்து, அருகபரமேட்டி யருளிய அறத்தைக் கடைப் பிடித்தொழுகு வதென்பது மிக மிக அரிது” என்று கூறுகின்றான். இவ்வாறு மக்கட் பிறப்பு எய்துவது அரிதென்றதற்குக் காரணம் கூறுவான் போன்று, கருத் தோன்றியபோதிலிருந்து உண்டாகும் இடங்களைக் கூறுகின்றான். தாய் கருவில் இருக்கும்போதே, மக்கட் கரு கெட்டழிந்து போதற்குப் பல்வகைத் தீங்குகள் உள்ளன. அழகு திகழும் உடம்பொடு பிறக்கும்போதே இறப்பு நிகழ்வது முண்டு. இவற்றினால் கெடாது பிறந்து வளர்ந்து, செயற்கரிய செய்து, புகழ் நிறுவுங்காலத்தே ஒருவன் இறந்து போவன்; இவ்வாறு குழவிப்பருவம், பிள்ளைப்பருவம், இளமைப்பருவம், காளைப்பருவம், முதுமைப் பருவம் முதலாகவுள்ள பருவங்களுள் எக்காலத்தும் ஒருவன் இறந்து போதற்குரியன். இவ்விடர்ப்பாட்டின் இடையே வாழ்வுற்றுலவும் ஒருவன், தீவினை செய்யின் நரகததியை அடைவன். இப்பகுதிக்கண், பல்வகைத் தீவினைகளைச் செய்தவர் நரகத்தில் எவ்வாறு துன்புறுவர் என்பது கூறப்படுகிறது. முடிவில், கொலைபுரிபவர், பல கொடுமை களைச் செய்பவர் என்ற இவர்களேயன்றி, “தவமும் இல்லை; தானமும் இழவு என்பாரும்” நரகதியேயடைந்து துன்புறுவர் என்று அச்சாரணன் கூறுகின்றான். தீவினை செய்த மக்களுள் ஒரு சாரார், விலங்கு, புள் முதலியன வாய்ப் பிறப்பரென்றும், அவை, வேட்டஞ்செய்தல், ஊனுண்டல், வேள்வி செய்தல், உயிர்ப்பலியிடுதல் முதலிய செயல்களாலும் பிறவாற்றாலும் துன்பமெய்தும் என்றும் அச்சாரணன் கூறுகின்றான். மக்கட் பிறப்பும் துன்பம் தருவதே என்று கூறக் கருதி, அச் சாரணன், துன்பம் பயக்கும் செயல் பலவும் ஒழுங்காக உரைக் கின்றான். உடலே நோய்க்கு உறைவிடமானது; பொருளீட்டு மிடத்துப் பெருந்துன்பம் உண்டு; அரசர் நாடு, கவரும் வேட்கை யாலும் பிறவற்றாலும் தொடுக்கும்; துன்பங்கள் பல; மகளிரது வேட்கையால் மிகுந்துன்பம் பல உண்டு.; இவ்வாறு எம்மருங்கும் மக்கட்குத் துன்பமேயன்றி இன்பமில்லை என்கின்றான். தேவகதியைப் பற்றிக் கூறலுறும் அச்சாரணன் முதற்கண் தேவர் களின் இயல்பு கூறி, பிறகு அவர்தம் வாழ்வும் அதன் முடிவும் கூறுகின்றான். தேவர்கருவிடைத் தோன்றுவதிலர்; கால் நிலத்தில் தோயார்; ஒளி திகழும் மேனியுடையர்; அவர் அணியும் கண்ணியும் மாலையும் வாடுவதில்லை; ஊணும் அமிர்தமும் வேண்டின், அவற்றை அவர் மனதாலே நுகர்வர். இவர் தேவருலகத்தே கற்பக மர நிழலிலே தேவமகளிரின் போக நுகர்வதும், அவர்தம் இன்னிசை யமுது சுவைத்து ஆடல் கண்டு மகிழ்வதும், அருகபரமேட்டியின் அடியிணை யில் பூவிட்டு வழிபாடாற்றி “வீடேமுடிக இப்பிறவி வேண்டேம்” என்று வேண்டுதலும் செய்வர். அவர்கட்கு முடிவு, பதினைந்து நாள் எல்லையில் உள்ளபோது, கண்கள் இமைக்கும்; மாலை வாடும்; தாம் துய்த்த இன்பம்பழுதெனக் கசந் திருப்பர். இவர் தேவராயினும் பிறதேவரால் தெழிக்கப் படுவதும் அடிமைப் பணி செய்வதும், வருந்துவதும் உண்டாதலின், இத்தேவகதியும் துன்பவியல்பினதே. யாக்கைகொண்டவர் யாவராயினும் துன்பம் எய்துவது ஒருதலை. அருகபரமேட்டி எயில் மூன்றும், குடை மூன்றும், வையம் மூன்றும், படை மூன்றும், அதிசயம் மூன்றும் ஆகமம் மூன்றும், குணம் பலவும் உடையர். அவர் திருவடி பரவிப் பெறக்கூடிய தெளிபொருள்கள் ஐந்து என்றும், ஆறென்றும், ஒன்பதென்றும் அறிஞர் கூறுவர். இருவகை வினையின் இயல்பையும் பயனையும் நன்கு உணர்ந் தொழுகுவதே இறைவன் நூலணர்வுக்குப் பயனாகும். “உறுவர்ப் பேணல், உவர்ப்பின்மை உலையா இன்பம் தலைநிற்றல், அறிவர் சிறப்பிற் கெதிர் விரும்பல், அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல், சிறியா ரினத்துச் சேர்வின்மை சினம் கைவிடுதல், செருக்கவித்தல், இறைவன் அறத்துளார்க் கெல்லாம் இனியராதல் இது தெளிவே.” (2816) பொறிவாயில் ஐந்தவித்தல் முதலிய நல்லொழுக்கங்களும், கள்ளுண்டல், ஊனுண்டல் முதலியன இல்லாமையும் சீலம் எனப் படும். இச்சீலமுடைய சான்றோர்வரின் அவரை அன்போடு வர வேற்றுச் செவ்விய முறையில் பருந்திய உணவூட்டி வேண்டுவன நல்கி விடுத்தல் தானம் எனப்படும். உயர்ந்தோர்க்குத் தானம் செய்வோர் தேவராய்ப் பெரும்போகம் துய்ப்பர்; இடையாவர்க்குச் செய்வோர், இக் கருமபூமியில் செல்வச் சிறப்புடைய வாழ்வு பெற்று இன்புறுவர்; கடையாயவர்க்குச் செய்பவர், கடல் நடுவண் உள்ள தீவுகளில் விலங்குகளாய்ப் பிறந்த கனி முதலியன உண்டு வாழ்வர். சீலம் குன்றாத சிறப்புடையோர் இந்திரர்களாய் இன்புறுவர்; இறைவனது நூலைக் கற்ற தெளிவும் ஞானமுமுடையோர் மண்ணுல கத்தே அரசர்க் கரசராய் விளங்குவர். இனி, அச்சாரணன் வீடுபேற்றின் திறத்தைச் சீவகற்கு உணர்த்து கின்றான். வீடு பேறு கருதுவார்க்கு வேண்டுவன ஞானம், காட்சி, ஒழுக்கம் என்ற மூன்றுமாகும். “உள் பெர்ருள் இதுவென உணர்தல் ஞானமாம்; தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்; விள்ளுற இருமையும் விளங்கத் தன்னுறே ஒள்ளிதிற்றரித்தல் ஒழுக்கம்.” (2844) இம்மூன்றாலும் வினைத்தொடர்பு அறுத்துக் கோடலே வீடுபேறு. “வீடெனப் படுவது வினை விடுதல்” (2845); வீடு பெற்றவர் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்ற நான்கும் பிறவும் பொருந்த நற்குணங்களோடு ஓங்குவர். சமண் சமயத்து அறங்கள் தாமும் இல்லறம் துறவறம் என இருவகையவாகும். இக் காவித்தின்கண் இல்லறம் மிகச் சுருக்கமாக இலைமறை காய்போலவும், துறவறம் பலவகையால் விரிவாகவும் கூறப்படுகின்றன. இல்லிருந்து அறம்புரியும் ஆடவரே யன்றி மகளிரும் அருகன ரைத்த ஆகமப் பொருள்களை நன்கறிந்திருக்கின்றனர். “பிண்டி வாமனால் வடித்த நுண்ணூால் உண்டுவைத்தனைய நீயும்” (271) என்று சச்சந்தன் விசயைக்கு உரைக்கும் உரையால் இது நமக்குத் தெரிகிறது. சாதி வேற்றுமையின்றி எப்பாலார்க்கும் எவ்வுயிர்க்கும் சமண் சமய மந்திரமும் பொருளும் உரைக்கப்படுகின்றன. சீவகன் நாய்க்கும், வேட்டுவனுக்கும், வழிப்போக்கனுக்கும் மந்திரமும் பொருளுரையும் வழங்குவது காண்க. விசயை கனாக்கண்டு விழித்தெழுந்தவள் உடனே சென்று அருகனை வழிபட்டாள் என்றும், “திங்கள் முக்குடையான் திருமா நகர் எங்கும் எங்கும் இடந்தொறும் உண்மையால்” (139) என்றும் தேவர் கூறுவதனால், அருகபரமேட்டிக்குத் திருக்கோயில் ஊர்தொறு மேயன்றி, மனைதொறும் இருந்தமை தெரிகிறது. இத்திருக்கோயிற்கு மக்கள் தமக்கு இடுக்கண் நேரினும், இன்பம் புணரினும் அன்புற்ற மனத்தோடு சென்று வழிபாடாற்றுகின்றனர். குணமாலை சுரமஞ்சரியைக் கண்ணற்று நீங்கியதும் அருகனை வழிபடுவதும், சீவகன் உண்பன உண்டு முடிப்பன முடித்து இன்புறு போழ்தினும் அருகன் கோயிற்குச் சென்று வழிபடுவதும் இக் குறிப்பைப் புலப்படுத்துகின்றன. ஊனுண்ணாமை, துறவு என்ற இரண்டறங்களும் சமண் சமயத் தில் மிக்க சிறப்புடைய அறங்களாக வற்புறுத்தப்படுகின்றன. ஊனுண் போர்நரகத்துக்கு உரியர் எனப் பன்முறையும் வற்புறுத்தப் படுகிறது. ஒழுக்கம் பற்றிய பேச்சு நிகழுமிடங்களில் எல்லாம் ஊனுண்ணாமை முன்னணியில் நிற்கிறது. ஒருவர்க்குப் பிறர், நலம் செய்யினும் தீது செய்யினும் இரண்டானும் விருப்பு வெறுப்பின்றி யிருத்தல் வேண்டும் என்ற கொள்கை முற்பட்டு நிற்கிறது. இப்பெருங்காவியத்தால், சமண் சமயத்தவர்க்குத் துறவே உறுதி பயக்கும் முடிவு நெறி யென்று தாம் அறிகின்றோம். இத் துறவு ஆடவர் மகளிர் என்ற இருபாலார்க்கும் உரியது. மேலும் இந் நூற்கண் துறவு மேற்கொள்பவர் அனைவரும் இல்வாழ்வில் வாழ் வாங்கு வாழ்ந்து மகப்பேறு முதலியவற்றால் சிறப்பெய்திய பின்பே துறவு மேற்கொள் கின்றனர். இது பண்டைத்தமிழர்தம் பெரு நெறி. இளமைக்கண் துறவு பூணும் நெறி தமிழ் நெறி யன்று. நாலடியார் முதலிய சமண் சமய நூல்களில் இளமைக்கண் துறத்தல் கூறப் பட்டிருப்பவும், திருத்தக்க தேவர், இந்நூற்கண் துறவினைக் “காமஞ் சான்ற கடைக்கோட்காலை” யையே வற்புறுத்துகின்றார். துறவுபூணும் கருத்துடையார் அதனைத் தம் உறவினர்க்குத் தெரி விப்பின், அவர் அதனைத் தடுத்தல் அறமன்று என்பது ஒரு கொள்கை. அச்சணந்தி ஆசிரியர் சீவகற்கு அவன் பிறப்பு முதலிய வற்றைத் தெரிவித்த பின் துறவுபூணக் கருதி அவற்கும் பிறர்க்கும் தெரிவிப்ப, பிரிவாற்றாமையால் நெஞ்சு கலுழதல் நிகழினும், துறவறத்திற் சேறலை ஊக்குவதே வேண்டும் என்னும் கருத்துப்பட, “மறுவற மனையின் நீங்கி மாண்தவம் செய்வல்என்றால் பிறவறம் அல்ல பேசார் பேருணர் வுடைய நீரார் துறவறம் புணர்க்” (146) என்றே சீவகன் உரைக்கின்றான். விசயை துறவு பூண்ட போதும், பிரிவாற்றாத சீவகன், “ஒள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க் குன்றுபோல் யாதும் இன்றிக் குழைந்து மெய்ம்மறந்து (2636) சின்னாள் தன் கண்காண நகர்க் கண்ணே உறைதலையே வேண்டினான். அவள் “வேண்டிய வேண்டினேம் ” என்று கூறக் கேட்டு உளம் குளிர்ந்து விடுகின்றான். துறவு பூண வேண்டும் ஒருவர், மனைவாழ்க்கைத் தொடர்பின் நீங்கிப்போதல் வேண்டுமேயன்றி, மனைவி வழிபடக் காட்டிடத்தே யிருந்து துறவறம் காத்தல் கூடாதென்பது சமண் சமயத்துக் கொள்கை யாகும். சீவகன் தன்னோடு சொல்லாடப் போந்த தாபதருக்கு உரைக்குமிடத்து இக் கருத்தை விளக்கிக் கூறுகின்றான். சடை வளர்த்தல், கூறையுடுத்தல், ஓடு கொள்ளுதல், நீர் பாலகால்மூழ்கல், தோலுடுத் தல், காய்கனியுண்டல், அல்லியும் புல்லும் தின்றல் முதலிய விரத வொழுக்கங்கள் சமண் சமயத் துறவிகட்கு அத்துணை உடன் பாடல்ல. சமண் சமயத் துறவியருள் மகளிர் துறவு, விசயமாதேவி துறவின் கண்ணும், ஆடவர் துறவு சீவகன் துறவின் கண்ணும் விரித்துக் கூறப்படுகின்றன. துறவு, முடிவில் சீவகன் முனிவனாய்ப் பின், கேவல ஞானத்தைக் கூடி யின்புற்றானாக. அவன் தோழர் இந்திரர்களாய்த் துறக்க இன்பம் துய்த்தார் என்றும், சீவகன் தேவிமார்துறவு பூண்டு முடிவில் பெண் பிறப்பு நீங்கி இந்திரர் களாகித் துறக்க இன்பம் துய்த்தார் என்றும் தேவர் கூறுகின்றார். ஆனால் விசயமா தேவியாரின் துறவின் முடிவு விளங்கவில்லை. ஒருவன் பெறுதற்கரிய மக்கட் பிறவியில் திருந்திய கற்பும், பொருந்திய பொற்பும், சான்ற பிறப்பெய்திய வழியும், வறுமை முதலிய சிறுமையின்றி உடைப்பெருஞ் செல்வத்துயர்ந்த பொழுதும், சைவமாம் நல்லறத்தைச் சார்தல் அரிது என்னும் கருத்துப்பட, “வாழ்வெனும் மையல் விட்டு” வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மையோடும் சைவமரம் சமயம் சாரும், ஊழ்பெறல் அரிது” (சி.சித்தி.சுபக். 2: 91) எனச் சித்தாந்த சைவ நூல்கள் கூறுதல் போலவே சமண் சமயம் சார்தலும் அரிது என்னும் கருத்துப் படத்தேவரும். “காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினும், நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி, வாமன் நூல் நெறி வழுவறத் தழுவினர் ஒழுகல், ஏமவெண் குடை இறைவ! மற்று யாவதும் அரிதே” (2762) என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கதாம். 12. நூல்யாப்புக்குத் துணை செய்த நூல்கள் தேவர் இப் பெருங் காவியத்தைத் தமிழில் செய்தற்கு முன்னர், இக்காவியத் தலைவனான சீவகன் வரலாறு, தமிழில் இருந்ததெனக் காண்டற்கும் கருதுதற்கும் வழியில்லை. வடமொழியில் சீவகன் வரலாறு கூறும் நூல்கள் பல இருந்திருக்கின்றன. அவற்றையும் இச்சீவக சிந்தாமணியையும் ஒப்பவைத்து நோக்கிய அறிஞர், தேவர் சீவகன் வரலாற்றை வடமொழியில் வாதீப சிம்மன் என்பவர் எழுதிய சத்திர சூடாமணியும், கத்திய சிந்தாமணியும் முதலாகக் கொண்டு உரைத்துள் ளார் என்கின்றனர். தேவர் இவ்வட நூல்களிலிருந்து சீவகன் வரலாற்றை எடுத்துக் கொண்டு தமிழில் விருத்தயாப்பில் காப்பிய வடிவில் இந்நூலை இயற்றியபோது, இவர்க்கு வழி காட்டியாகத் தமிழில் இம்முறையில் காவியங்கள் இல்லையென்றே கூறலாம். அக்காலத்தே நிலவிய சிலப்பதிகாரம், மணிமேகலை கொங்குவேளிர் பெருங்கதை என்ற மூன்றும் இக்காவியம் போலப் பாவினத்தால் இயன்றனவல்ல. சிலப்பதிகாரத்துட் காணப்படும் சில பாட்டுக்கள் இசைத் தமிழ் நாடகத்தமிழ் என்ற வகையைச் சேர்ந்த வரிப்பாட்டுக் களாகும். பாவினத்தால் இசைக்குரிய பண்முறையில் திருஞான சம்மந்தர் முதலிய மூவரும் பாடிய பாட்டுக்களே நாட்டில் எங்கும் பரவி, கற்றறிவுடைய நன்மக்களால் பெரிதும் பயிலப்பட்டு வந்தன. இப் பெருங் காவியத்துள் காணப்படும் பாவினம் பலவும் திருஞான சம்பந்தர் முதலியோர் பாடியவற்றின் யாப்பு நெறியும் ஒசைநெறியுமே பின்பற்றி நிற்கின்றனவாதலால், இத் திருமுறைகளைத் தேவர் நன்க பயின்றிருப்பதோடு தாம் இயற்றும் இக் காவியத்துக்கும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று அறிகின்றோம். இதனை ஆராய்தற்குமுன், இவர் வேறு தமிழ் நூல்களுள் எவ்வெவற்றைப் பெரிதும் பயின்றுள்ளார் என்பதைச் சிறிது ஆராய்கின்றாம். இவர் பாடிய பாக்களுள் சமயச் சார்பான சிலவும் வரலாறு கூறுதற்கு இயைந்தன சிலவும் போக, எஞ்சி நிற்பன அனைத்தும் ஒருமுறை படிக்கும்போதே, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டுக்களையும், சிலப்பதிகாரம் முதலிய தொடர்நிலைச் செய்யுட்களையும் நெஞ்சில் எழுப்புகின்றன. திருக்குறள், நாலடியார், பழமொழி என்பனவற்றைத் தேவர் நன்கு பயின்ற, “மன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்” என்று நன்னூலாசிரியரான பவணந்தியார் கூறியது போலப் பண்டை நூற் சொற்களும் சொற்பொருள்களும் கருத்துக் களும் மேற்கொண்டு இக் காவியத்தைப் பாடியிருக்கின்றார் என்பது தெற்றெனத் தெரிகிறது. முதற்கண் சங்க நூல்களுள் எட்டுத் தொகையில் ஒன்றாகிய புறநானூற்றை எடுத்து இச் சிந்தாமணியுடன் ஒப்புநோக்குவோம். 1. புறநானூறு செய். 2: “நடுக்கின்றி நிலியரோ வத்தை...... பொற் கோட்டிமயமும் பொதியமும் போன்றே” (20-4) இது வாழ்த்துதற்கண் கூறப்படும் உவமம். இக் கருத்தையே தேவர், “மின்னுமிழ் வயிரக் கோட்டு விளங்கொளி இமய மென்னும் பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமேல் நிலவி வையம் நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வனாகி மன்னுவாய் திருவோடென்று வாழ்த்திநெய் யேற்றினாரே.” (2426) எனத் தாமும் வாழ்த்துமிடத்து அமைத்துக் கூறுதல் காண்க. 2. புறம். 13: புலிநிறக்கவசம் பூம்பொறி சிதைய. (2) சீவக. 266: புலிப்பொறிப் போர்வை நீக்கி. 3. புறம். 13: சுறவினத்தன்ன வாளோர் மொய்ப்ப. (7) சீவக. 1852: தூத்திரைச் சுறாவினம் தொக்க போல் மறவரும். 4. புறம். 23: ஞாலம்நெளிய ஈண்டிய வியன்படை. (15) சீவக. 433: நீர்விளை சுரிசங் கார்ப்ப நிலம்நெளி பரந்த வன்றே. 5. புறம். 27: தேய்தலுண்மையும் பெருகலுண்மையும் மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும் அறியாதோரையும் அறியக்காட்டித் திங்கட்புத்தேள் திரிதரும். (11-4) சீவக. 2941: மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேங்தலு முடைமையைத் திங்கள் செப்புமால். 6. புறம். 30: களிறுகவு ளடுத்த வெறிகற் போல ஒளித்த துப்பினை. சீவக. 2919: காய்ந்நெறி கடுங்கல் தன்னைக் கவுட்கொண்ட களிறுபோல, ஆய்ந்தறி வுடையராகி அருளொடு வெகுளி மாற்றி, வேந்தர்தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய். (13-14) 7. புறம். 73: மகளிர், ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே. சீவக. 2043: செழுந்தார் குழையச் சேர்ந்தார். 8. புறம். 77: வாழ்க வவன் கண்ணி. சீவக. 1898: வாழ்கநுங் கண்ணி மாதோ. (6) 9. புறம். 143: குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே. (15) சீவக. 2954: குழலேங்கு மாறேங்கி யழுதார் கோதை மாடவாரே. (15) 10. புறம். 152: உரற்றலைக் கேழற் பன்றி. (3-4) சீவக. 2211: உரற்றலை யுருவப் பன்றி இடம் வலம் திரிய. 11. புறம். 155: நெருஞ்சிப் பசலை வான்பூ. ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாங்கு. (4-5) சீவக. 463: நீள்சுடர் நெறியை நோக்கும் நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல். 12. புறம். 161: தாணிழல் வாழ்நர். (30) சீவக. 409: வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின். 13. புறம். 172: ஒளிதிகழ் திருந்துமணி நளியிரு ளகற்றும். (7) சீவக. 169: ஆனாதே இருள்பருகும் அருமணி. 14. புறம். 184: காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட்காகும்; நூறுசெறு வாயினும் வதனினும் கால் குணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும். (1-4) சீவக. 2916: வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளும் காய்த்தநெற் கவளந்தீற்றிற் களிறுதான் கழனி மேயின் வாய்ப்பட லின்றிப் பொன்றும். 15. புறம். 185: கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் றாகி ஆறினிது படுமே உய்த்தல் தேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே. (1-6) சீவக. 2918: ஆர்வலம் சூழ்ந்த ஆழி யலைமணித் தேரை வல்லான் நேர்நிலத் தூருமாயின் நீடுபல் காலஞ் செல்லும்; ஊர்நிலமறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்னதாமே. 16. புறம். 186: நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்; அதனால், யானுயிர் என்ப தறிகை, வேன்மி குதானை வேந்தற்குக் கடனே. (1-4) சீவக. 2917: நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டும் செப்பின் புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழ லிலங்கு வாட்கை மல்லலங் களிற்றுமாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர் ஞாலந்தன்னுள் நாமவேல் நம்பி என்றான். 17. புறம். 193: அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ னாட்டும் புல்வாய் போல ஓடி யுய்தலும் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (1-4) சீவக. 2939: காட்டகத் தொருமகன் துரக்கு மாக்கலை ஓட்டுடைத் தாமெனின் உய்யும், நங்களை ஆட்டியிட் டாருயிர் அளைந்து கூற்றுவன் ஈட்டிய விளைமதுப் போல உண்ணுமே. 18. புறம். 249: மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே. (14) சீவக. 2993: மைப்பொலி கண்ணின் நீரால் மனையகம் மெழுகி வாழ. 19. புறம். 260: உரிகளை யரவம் மானத் தானே அரிது செல் லுலகிற் சென்றனன். (20-21) சீவக. 1553: படநாகம் தோலுரித்தாற் போற்றுறந்து. 20. புறம். 260: பாம்பின், வையெயிற்றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிலையொடு வந்த உரையன். (16-19) சீவக. 456: தோள்வாய்ச் சிலையின் ஒலியால் தொறுமீட்டு மீற்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான் 21. புறம். 284: ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருந்தா. (6-7) சீவக. 284: மார்பில் தடாயின காதுவெள்வேல், மண்ணிடங் கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம, விண்ணிடை மள்ளர் கொள்ள மிறைக் கொளி திருத்தினானே. 21. புறம். 337: பாரி பறம்பிற் பனிச்சுனை போலக் காண்டற் கரியள். (6-7) சீவக. 1210: கன்னிய மகளிரிற் காண்டற் கரியன, நன்மணி புரித்தன வாவி நான்குள. 22. புறம். 358: வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது. (3-4) சீவக. 2992: நற்றவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம் அற்றமில் தவத்திற் கென்றும் ஐயவி யனைத்தும் ஆற்றாது. இவ்வாறே ஏனை அகநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல் என்பவற்றின் சொற்களும் சொற்றொடர் களும் கருத்துக்களும் மிகப்பல தேவர்க்குத் துணை செய்துள்ளன. இனி, பத்துப்பாட்டின் கண் உள்ள பாட்டுக்கள் பத்தும் தேவர்க் குத் துணைசெய்துள்ள முறையினைச் சிலவே எடுத்துக் காட்டுகின் றாம். 1. சீவக. 34: இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும் குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. முருகு 295 பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி 315 ..... இழும் என இழிதருமருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே. 2. சீவக. 35: இந்திரன் மார்பின் மேல், விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை. சிறுபாண் 1-3: மாநில மடந்தை யணிமுலைத் துயல்வரும் ஆரம்போலச் செம்புனல் உழந்த. 3. சீவக. 54: வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும். மதுரை. 247: களிறுமாய்க்கும் கதிர்க்கழனி. 4. சீவக. 89: பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம் நற்சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ உற்றவர் கோழிமேல் எறிந்த ஒண்குழை மற்றத்தேர் உருள்கொடா வளமை சான்றவே. பட்டி. 22-5: நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும். 5. சீவக. 100: தாய்முலை தழுவிய குழவி போலவும் மாமலை தழுவிய மஞ்சு போலவும். பட்டி. 95-6: மாமலை யணைந்த கொண்மூப் போலவும் தாய்முலை தழுவிய குழவி போலவும். 6. சீவக. 340: முழுமெய்யும் சிலம்பி வலந்ததுபோல் போர்வை போர்த்து. பெரும்பா.236: சிலம்பி வானூல் வலந்த மருங்கின். 7. சீவக. 420: வெள்ளி வள்ளியின் விளங்கதோள் நலார். நெடுநல். 36: வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள். 8. சீவக. 2174: ஆலும் கடல் தூர்த்தல் மலையகழ்தல் இவை வல்லார். பட்டி. 271: மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே. 9. சீவக. 2563: முலைமுதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளியானைத் தலைநிலம் புரள வெண்கோ டுண்டதே போன்று. பொருந. 139-42.ஆளி நன்மான் அணக்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் களிறட் டாங்கு. 10. சீவக. 2592: வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச் சிலையவர் குரம்பை யங்கண் மானினம் சென்று சேப்ப நிலைதிரிந் தூழி நீங்கி உத்தர குருவும் ஆகிக் கொலைகடிந் திவற லின்றிக் கோத்தொழில் நடாத்து மன்றே. பட்டி. 197-9: வலைஞர் முன்றில் மீன்பிறழவும் விலைஞர் குரம்பை மாவீண்டவும் கொலை கடிந்தும் களவு நீக்கியும். இனி, பதினெண் கீழ்க்கணக்கினுள் தலையாயதும் உலகு புகழும் பெருநூலுமாகிய திருக்குறள் இக் காவியத்தில் மிகுதியும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறளைப் பயன்படுத்திக் கொண் டிருக்கும் நெறியை நோக்கின், இவருக்கு முன்னிருந்த சான்றோர் களுள் எவரும் இத்துணையளவு பயன் கொண்டிலர் என்று திண்ண மாக உரைக்கலாம். இத்துறையில் இவர்க்கு வழி காட்டியவர் கொங்குவேளிர் என்றற்கு இடமுண்டாயினும், திருக்குறளை எடுத்தாளுவதில் இவர் அவரை விஞ்சிவிடுகின்றார். திருக்குறளும் சிந்தாமணியும் என்று தலைப்பிட்டு இவர் எடுத்துக் கொண்ட திருக்குறள்களையும், அவற்றைத் தம் செய்யுளில் அமைத் தொழுகும் நிறத்தையும் ஆராய்ந்து காண்போமாயின், அவ்வாராய்ச்சி ஒரு தனி நூலாக அமையும் அளவுடைய தாகும் என்பதற்கு ஐயம் சிறிதுமில்லை. எடுத்துக்கொண்ட பொருட் கேற்பச் சிலவற்றை ஈண்டு தருகின்றாம். சீவ. 499: செய்க பொருள்யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகு பிறிதில்லை இருந்தே உயிரும் உண்ணும் ஐயமிலை இன்பம் அறனோ டெவையு மாக்கும் பொய்யில் பொருளே பொருள் மற்றல்ல பிறபொருளே. குறள் 759: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். 754: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். 2. சீவக. 1005: எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லை. குறள் 1137: கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். 3. சீவக. 1556: இன்பப்புதாத் திறக்கும் தாளுடையை மூர்த்திபாதம், எட்டானும் பத்தானும் இல்லாதார்க் கிவ்வுலகில் இன்பமே போல் ஒட்டாவே கண்டீர். ..... ...... குறள் 247: அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. 4. சீவக. 1633: தன்னையான் முகத்தை நோக்கின் தான்முலை முகத்தை நோக்கும், பின்னையான் பலவும் பேசின் தான்ஒன்று மிழற்றும். குறள் 1094: யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும். 5. சீவக. 1899: தொழுத தம் கையி னுள்ளும் துறுமுடி யகத்தும் சோர அழுத கண் ணீரி னுள்ளும் அணிகலத் தகத்தும் ஆய்ந்து பழுது கண் ணரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும். குறள்: தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரு மனைத்து 6. சீவக. 2467: கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினைக் காமர் செவ்வாய் ஒண்ணுதல் உருவக் காலத் தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல் வண்ணித்த லாவ தில்லா வருமுலை மதர்வை நோக்கின். பெண்ணுடைப் பேதை நீர்மைப் பெருந்தடங் கண்ணிற் றம்மா. குறள். 1083: பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன். பெண்டகையாற் பேரமர்க் கட்டு. இனி, இவர் காலத்துக்கு முன்னுள்ளனவாகிய காவியங்களுள் தலையாயதும், “நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்” எனத் தமிழ் மக்கள் விரும்பிப் பரவுவதுமாகிய சிலப்பதிகாரத்தைத் தேவர் எவ்வளவிற் பயன் கொண்டுள்ளார் என்று காண்போம். இந் நூற்களிற்பயிற்சி இல்லையாயின், தேவர், இக் காவியத்தைப் பாடியிரார் என்பது தானே எய்துகின்றது. இவ்வாராய்ச்சி, ஒருவன் உடல் நலத்துக்கு அவன் உடலோடும் குருதி எவ்வளவு பயன்படுகிற தென்று காண்பதனோடு ஒக்குமாயினும், முறைமையாதல் பற்றிச் சிற்சிலவே காட்டுகின்றாம். 1. சீவக. 107: ஒன்றாதி யாக ஆயிரத் தோரெட்டீறாச், செப்பித்தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும், உப்பமை காமத் துப்பி னவரிடம். சிலப்.14:158-60: எட்டுக்கடை நிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு. முட் டாவைகல் முறைமையின் வழாஅத் தாக்கணங் கனையார். 2. சீவக. 219: துஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றலின், அஞ்சு நடுங்கினள் ஆயிழை ஆயிடை, வெஞ்சுடர் தோன்றி விடிந்ததையன்றே. சிலப்.15. 105-6: நனவு போல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதீங் குறுமென. 3. சீவக. 1105: நன்மணி யிழந்த நாகர் நல்லிளம் படியர். சிலப். 13; 57-8: இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி யிழந்த நாகம் போன்றதும். 4. சீவக. 1298: .....அமருள் ஆனாது ஓக்கிய முருகன் எஃகம் ஓரிரண்டனைய கண்ணாள். சிலப். 2:51-2. அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின்முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டாவீத்தது. இவ்வாறே, மணிமேகலை, பெருங்கதை முதுலிய நூல்களைத் தேவர் நன்கு பயின்றுள்ளார் என்பதற்கேற்ற சான்றுகள் பல காட்டலா மாயினும், விரிவஞ்சி விடுத்து, சைவத் திருமுறைகளைத் தேவர் படித்துப் பயன் கொண்டிருக்கின்றார் என்ப தனைச் சிறிது காட்டு கின்றாம். 1. ஞானசம்.பதி. 67-10: கண்தான் கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியையுண்டு. சீவக. 220: கண்கழூஉச் செய்து கலைநலதாங்கி. 2. ஞானசம். 139-3: செம்படுத்த செழும்புரிசைத் தெளிச்சேரியீர் சீவக. 439: செம்புகொண்டன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ. 3. ஞானசம்.பதி. 67-6: வீளைக் குரலும் விளிசங் கொலியும் விழவின் ஒலியோவா மூளைத் தலைகொண் டடியா ரேத்தப்பொடி யா மதிளெய்தார். சீவக. 449: எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் கடத்திடைமுழங்க. ஞானசம். 223-3: தோடதமா யொர்காதும் ஒரு காதி லங்கு குழை தாழ வேழவுரியன். சீவக. 701: திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோர் ஓலை சேர்த்தி எரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான். 5. ஞானசம். 985: சிராப்பள்ளித் தலைவரைநாளும் தலைவரல்லாமை யுரைப்பீர்காள், நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே. சீவக. 2011: கொடியினைக் கொணர்ந்து நீல முண்டது காற்றி ஆண்பேர் ஊட்டுவல். 6. ஞானசம். 264-1: கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர். சீவ. 2584: கொட்டமே கமழும்குளிர்தாமரை. 6. ஞானசம். 246-3: குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலைவாரி. சீவக. 2412: கூந்தலேந்திய கமுகங் காய்க்குலை. திருநாவுக்கரசர் பாடிய திருமுறையிலும், சுந்தரர் திருமுறை யிலும் உள்ள பல சொற்களும் சொற்பொருள்களும் சிந்தாமணிக் கண் காணப்படுகின்றன. தீர்த்தம், துளக்குதல், நமைத்தல் முதலிய சொற் களை முறையே ஆகமம், வணங்குதல், பொருந்துதுல் என்ற பொருளில் வழங்கும் அரிய வழக்குகள் சைவத் திருமுறைகளில் முதற்கண் காணப்படுகின்றன. இவற்றை இப்பொருளமையத் திருத்தக்க தேவர் சிந்தாமணிக்கண் வழங்கியுள்ளார். சீவக. 1247: தீராவினை தீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து வாராக் கதியுரைத்த வாமன்தான் யாரே. ஞானசம். 304-10: போர்த்த மெய்யினர்போதுழல்வார் கள் சொல் தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின். சீவக. 2366: முனைவற்றொழுது முடிதுளக்கி முகந்து செம்பொன் கொளவீசி. திருநா. 77-3: துளக்கி நன்மலர் தொடுத்தால் தூயவிண்ணேறலாகும். சீவக. 282: குஞ்சி நமைத்த பூந்தாமந் தோய நகைமுக விருந்து பெற்றான். திருநா. 241-3: நும்மால்நமைப்புண்ணேன்கமைத்து நீர்நடமின்களே. இனி, சீவக சிந்தாமணிப் பராட்டுக்களைப் படித்து வருங்கால் திருவாசகமும் நம் நினைவுக்கு வருகிறது. அதன் கட் காணப்படும் சில சொற்றொடர்களும் இச் சிந்தாமணிக்கண் உள்ளன. ஆதலால், தேவர் திருவாசகத்தையும் நன்கு பயின்றுள்ளார் என்பது இனிது தெளிவாகிறது. ஆயினும், திருவாசகம், மூவர் முதலிகள் அருளிய சைவத்திருமுறைகட்குக் காலத்தாற் பிற்பட்டதென்னும் கருத்துடை யாரும் உளராதலின், அவர்கள், அக் கருத்தினால், திருவாசகம் இச் சீவக சிந்தாமணிக்கும் காலத்தாற் பிற்பட்டது என்று கருதாமைப் பொருட்டு, ஒன்று ஈண்டுக் கூற வேண்டிளது. சைவத்திருமுறை களை முறை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள் பத்தாம் நூற்றாண்டில் இறுதியில் இருந்தவரென்பது முடிந்த முடிபாகும். அவர் தாம் பாடிய கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தின்கண். “வருவாச கத்தினில் முற்றுணர்ந் தோனைவன் தில்லைமன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே” (58) என்று திருவாதவூரரைப் பாராட்டியிருக்கின்றார். திருவாசகமும் திருக்கோவையாரும், குறைந்தது ஒரு நூற்றாண்டேனும் நம்பியாண் டார் நம்பிக்கு முற்பட்டிருக்குமென்பது ஒரு தலை. சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்பது முன்பே கூறப்பட்டது. ஆகவே, திருவாசகம் சீவக சிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்ட தென்பது தெளிவாம். மூவர் முதலிகள் பாடிய சைவத் திருமுறை சமண் சமய வொடுக் கத்திற்குக் காரணமாயிருந்தவை. சமண முனிவர், தம் சமயவொடுக் கத்திற்குக் காரணமாகிய அவற்றின் தகுதி காண்பது வேண்டியாதல் அவற்றைப் படித்திருப்பர் என்றற்கு அமைதியுண்டு. திருவாசகத்தைப் படித்தற்குக் காரணம் யாது? எனின், ஜி. யூ. போப் என்பவர் அதனைப் படித்துத் தமது மொழியில் மொழி பெயர்த்துக் கோடற்குக் காரணமாயிருந்தது யாதோ அதுவே, திருத்தக்க தேவர்க்கும் இருந்தது எனத் தெளிக. திருத்தக்க தேவர் மொழி பெயர்க்க வேண்டிய நியதி இலராதலால் தாம் இயற்றிய இச் சிந்தாமணிக்கண் திருவாசகத்து “வாசகங்கள்” சிலவற்றைப் பொன்னே போல் போற்றிக் கொள்ளாராயினர். 1. திருவாசகம் திருவெம்பாவை.19. ‘எங்கெழில்என் ஞாயிறெமக்கேலாாரெம்பாவாய் சீவக. 1800: *எங்கெழிலென் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம். 2. திருவா. சதகம்.21: உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால். சீவக. 2562: உடம்பெலாம் கண்களாயின் ஒருவர்க்குமின்றி யேற்ற அடங்கவாய் வைத்திட் டாரப் பருகியிட் டீமின். 3. திருவா.நீத்தல். 6: பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே. சீவக. 2097: சிறியவர் செய்த தீமை, புலம்பலர் பொறுப்பரன்றே பெரியவர். இனி, திருத்தக்க தேவர் பதினோராந் திருமுறையிற் காணப் படும் நூல்கள் பலவும் நன்கு பயின்றுள்ளாரென்பதற்குச் சான்று இல்லாமல் இல்லை. “இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை யெல்லாரும் செய்வர் சிறப்பு” என்பது திருக்குறள். இத் திருக்குறண் மணியைச் சேரமான் பெருமாள் தாம் பாடிய ஆதியுலா வின் கண், அரிவை யொருத்தி தன்னை ஒப்பனை செய்து கொண்ட பகுதி யினைத் கூறு மிடத்து வைத்து இழைத்து, “இல்லாரை யெல்லாரு மெள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னுஞ்-சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து-நல்கூர் இடையிடையே யுள்ளுருகக் கண்டாள்” (137-141) என்று பாடியுள்ளார். இக் கருத்தையும் “கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சே நீ பெட்டாங் கவர்பின் செலல்” என்ற திருக்குற ளின், “கெட்டார்க்கு நட்டாரில்” என்ற கருத்தையும் கூட்டி, பெண் ணொருத்தியின் ஒப்பனை கூறுமிடமே நோக்கி, “செல்வர்க்கே சிறப்புச் செய்யுந் திருந்துநீர் மாந்தர் போல அல்குற்கு முலைக்கு மீந்தா ரணிகல மாய வெல்லாம் நல்கூர்ந்தார்க் கில்லை சுற்ற மென்னுநுண் ணுசுப்பு நைய ஒல்கிப்போய் மாடஞ்சேர்ந்தார் ஒரு தடங்குடங் கைக்கண்ணார்” (சீவக. 2544) என்று திருத்தக்க தேவர் பாடியிருத்தல் காண்க. மேலும், “ஓரூர் இரண்டகம் காட்டல் கூடாதென்னும் வழக்கொன்று, இச் சேரமான் பாடிய பொன்வண்ணத் தந்தாதிக்கண். “அடிக்கண்ணி கைதொழு தார்க்ககல் ஞாலங் கொடுத்தடி நாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண் கொன்றைக் கடிக்கண்ணி யாய்எமக் கோரூ ரிரண்டகங் காட்டினை யால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.”(73) என்ற திருப்பாட்டிற் காணப்படுகிறது. இக் கருத்தையே சீவக சிந்தா மணிக்கண் சுரமஞ்சரிக்கும் சீவகற்கும் நடந்த புலவியிடத்தே தேவர், “ கிழவனாய்ப் பாடிவந்தென் கீழ்ச்சிறை யிருப்பக் கண்டேன் எழுதிய பாவை நோக்கி யிமையவித் திருப்பக் கண்டேன் ஒழிக விக்காம மோரூர் இரண்டக மாயிற் றென்றாங் (கு) அழுதக்கண் ணீர்கள் மைந்த னாவிபோழ்ந் திட்ட வன்றே” என்று கூறியிருத்தலைக் காண்மின், (சீவக. 2096) இதுகாறும் கூறியவாற்றால் தேவர்க்குச் சைவத் திருமுறை களில் நிரம்பிய பயிற்சியுண்மை வெளிப்படுவதேயன்றி, சைவ சமயத்து வைதிக புராணங்களிலும் பரந்த அறிவுடைமையுண் டென்பது அவர் இப்பெருங்காவியத்தின்கண் எடுத்தாளும் உவமை களால் வற்புறுத்தப் படுகிறது. அவ்வுவமைகளின் இயல்பைச் *“சமண முனிவர் தமிழ்த் தொண்டு” என்ற கட்டுரைக் கண் காட்டி யிருக்கின்றோமாயினும் ஏற்புடைத்தாதல் பற்றிச் சிறிது ஈண்டும் காட்டுகின்றாம். தேவர், “சிவபெருமானைக் கூறுமிடத்துப் “போக மீன்ற புண்ணியன்” (362) என்றும், “காரியுண்டிக் கடவுள்” (674) என்றும், அறவாழியண்ணல் என்றும் பிறவாறு கூறியும் பாராட்டுகின்றார். சிவபெருமான் தன் நுதற்கண்ணால் காமனை யெரித்த செய்தியை, ‘கண்ணுதற்கடவுள் சீறக் கனையெரி குளித்த காமன்’ (700) என்பதனாலும், புரமெரித்த வரலாற்றினை, ‘கடிமதில் மூன்று மெய்த கடவுள்’ (1094) என்பதனாலும், “கனையெரி யழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி” (2258) என்பதனாலும் மங்கைபங்கினனாய் நிற்கும் நிலையினை, “பிறையணி கொண்ட அண்ணல் பெண்ணொர் பால் கொண்ட தொத்தார் ” (2546) என்பதனாலும் பிறவற்றாலும் புகழ்ந் துள்ளார். “முருகன் தாமரைப் பூவில் தோன்றியவன் என்றும, அவன் மலைநாட்டுக்குரிய கடவுள் என்றும் அவன் ஏந்திய வேல் வலி சிறந்ததென்றும், அவன் ஆடவரிற்பேராற்றலிலும் பேரழகிலும் மேம்பட்டவனென்றும்” வைதிக சமயப் புராணங்கள் கூறும். இச் செயல்களைத் தேவர், “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” (316) என்றும், “தாமரையமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” (1001) என்றும், ‘மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ’ (1318) என்றும், “அமருள் ஆனாது, ஓக்கிய முருகன் வைவேல் ஓரிண்டனைய கண்ணாள்” (1298) என்றும், ‘செம்பொற் கடம்பன் செவ்வேலும், (1671) என்றும், ‘கதம்பனே முருகன் வேற்போர்’ (1688) என்றும், ‘திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன்’ (817) என்றும், ‘வள்ளல் மாத்தடிந்தானன்ன மாண்பினான்’ (1036) என்றும், ‘முந்துசூர் தடிந்த முருகன் நம்பி என்பார்’ (2557) என்றும் இவை போலப் பிறவாறும் கூறிச் சிறப்பித் திருக்கின்றார். இதுகாறும் கூறியவாற்றால் திருத்தக்கதேவர் இச் சீவக சிந்தா மணியைச் செய்தற்கு வடமொழியில் சத்திர சூடாமணி கத்திய சிந்தா மணி என்னும் நூல்களையும், தமிழில் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைகளையும், சைவத் திருமுறைகளையும், வைதிக சமய வரலாறுகளையும் துணையாகக் கொண்டிருக்கின்றமை விளக்கிய வாறாம். 13. தேவரது அரசியல் நெறி இப்பெருங் காவியத்தின்கண், தேவர், அரசியலைப்பற்றிப் பொதுவாக நிலவிய கருத்துக்கள் சிலவற்றை வெளியிடுகின்றன ரேயன்றி, தமிழ் நாட்டில் தம் காலத்தே நிலவிய அரசியல் முறையைப் பற்றி ஒன்றும் விதந்தோதுகின்றாரில்லை. இவர் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பது * ஆராய்ச்சியால் துலக்கப்பட்டு விட்டது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவர் இருந்திருக்கலாம் என்பாரும் இடையிலோ, இறதியிலோ இருந்திருக்கலாம் என்பாரும் பல திறத்தர் உளர். இப்பத்தாம் நூற்றாண்டில் சோணாட்டில், முதல் ஆதித்தியன், முதற் பராந்தகன், முதல் இராசராசன் ஈறாகப் பல சோழ வேந்தர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவர் காலத்து அரசியல் முறையினை யறிதற்கேற்ற கல்வெட்டுக்கள் பட்டயங்கள் முதலியன சான்று களாக உள்ளன. இச் சான்றுகளால் உணரப்படுவன வற்றுட் சிறிதேனும் இக் காவியத்தின் கண் காணப்படவில்லை. என்றாலும், இவர் வற்புறுத்தும் அரசியல் முறையினைமட்டி லாகிலும் ஈண்டு ஆராய்தல் வேண்டியிருத்தலின், அதனைக் காண்பாம். அரசன் தனக்குரிய அரச முறையினை அமைச்சர் துணைக் கொண்டு ஆட்சி புரிகின்றான். அவன் எது செய்யினும் அமைச்ச ரோடு ஆராய்ந்தே செய்தல் வேண்டும். “நாவலர் சொற் கொண் டார்க்கு நன்கலால் தீங்கு வாரா” (206) என்றும், “கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும், சுற்றம் சூழ்ந்து பெருக்கலும்” (1929) அரசர்க்குரிய செயல் என்று வருதல் காண்க. “ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்” (1929) அரசுமுறை. “வேந்தன் நீயாகி வையம் இசைபடக் காத்தல் வேண்டும்” (201) என்று சச்சந்தன் கட்டியங் காரனுக்கு உரைப்பதால், புகழ் விளைக்கும் அரசுமுறை அவர்களால் விரும்பப்பட்டது தெரிகிறது. அரசர் தமக்கு இறுதி நேருமாயின், முதற்கண் தம் உரிமை மகளிரை வெளியேற்றி விடுவர்; “உரிமை முன் போக்கியல்லால் ஒளிமுடி மன்னர் போகார்” (272) எனச் சச்சந்தன் விசயைக்குக் கூறுதல் காண்க. அரசர், படைப் பயிற்சியுடன் அறநூல்களை நன்கு பயின்றிருக்கின்றனர். இது சச்சந்தன் விசயைக்குக் கூறுவனவற்றாலும், சீவகன் வேடர், தாபதர், வழிப்போக்கர், மக்கள் முதலாயினார்க்குக் கூறுவனவற் றாலும், விசயை சீவகனுக்குக் கூறுவனவற்றாலும் விளங்குகிறது. அரண்மனையில் குப்பாய மிலேச்சர் (431) பணி புரிகின்றனர். அரசர் தம்மை நெருங்கி ஒழுகுபவரிடத்து மிக்க எச்சரிப் போடு இருப்பர்; அவர் பல மகளிரைக் கூடும் இயல்பினர். பிறமகளிரைக் கூடல் வேண்டின், அவர் அணிந்திருக்கும் ஆடையணி கலன்களை நீக்கி, நீராட்டி, புத்தாடையும் அணியும் அளித்து அணிவித்தே கூடுவர்; தாம் அணியும் ஆடையணிகலன்களையும் நன்கு ஆராய்ந்து தூய்மை கண்ட பின்பே அணிவர். உண்ணும் உணவு வகையினையும் பல் வகைப் புள்ளினங்கட்கும் குரங்ககட்கும் முன்னே உண்பித்துத் தூய்மை கண்ட பின்பே உண்பர். சாதி வேற்றுமையின்றியே எவ்வகை மகளிரை யும் விரும்புவரேல் அரசர் மணம் செய்து கொள்கின்றனர். அவர் வேண்டுவதெல்லாம், தாம் கொள்ளக் கருதும் மகளிர்க்கு உரியார் வலி மிக்கவராயிருத்தல் வேண்டும் என்பதே. இதனை விசயமாதேவி, சீவகனுக்கு. “நலிவில் குன்றொடு காடுறை நன்பொருள் புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகட் கோடலும் நிலைகொள் மன்னர் வழக்கென நேர்பவே” (1927) என்று உரைப்பது காண்க. மன்னர்க்குப் பொருளீட்டமே பெரிதாகக் கூறப்படுகிறது. வெற்றி, மேதகவு, கல்வி, படை, நாடு முதலிய பலவும் அரசர்க்கு மிக்க பொருளி ருந்தால் தான் நன்கு கைகூடும் என்று விசயை சீவகற்கு உரைப்பதும், “மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காணமின்னி பொன்மழை பொழியின் நந்தும்” (1124) என்று கந்துக் கடன் கருதுவதும் இக்கருத்தை வற்புறுத்துகின்றன. அரசர் அரசு வீற்றிருக்கையில் மகளிர் கவரி வீசுகின்றனர். அரசரும் இடையில் உயரிய ஆடையும், காதில் மகரக் குழையும், மார்பிலும் தோளிலும் பல்வகை யணிகளும் அணிந்திருக்கின்றனர். அரசு கட்டிலில் ஏறியிருக்கும்போது, கையில் செங்கழுநீர் பிடித் திருப்பர் (429) முடி சூடுமிடத்து, அரசரை நீரும்பாலும் கொண்டு நீராட்டி, பூவும் பொன்னும் பெய்து “அபிடேகித்து,” நறும் புகை யூட்டி, சுண்ணம் தூவிப் பல்வகை இன்னிசை முழங்க, அவையிற் கூடுபவருள் உயர்ந்தோர் முடி சூட்டுகின்றனர். முடியணியும் அரசன் பற்பல கொடைகளைச் செய்கின்றான் இறை தவிர்த்தல் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இவ்வாறு மணிமுடி யணிந்து மாண்பெய்தும் அரசர் தேவர் களாகவே கருதப்படுகின்றனர். “பலவும் மிக்கனர் தேவரிற் பார்த்திவர்” (246) என்று தேவர் கூறுகின்றார். அரசுமுறை கோடுமானால், நாட்டில் மழையின்றாம்; வறுமை மிகும்; உயிர்கள் நோயுற்று அழியும்; நன்மகளிர் கற்பை இழந்து விடுவர். இவ் வேந்தர் எவர் பாலேனும் விருப்புக் கொள்வாராயின், அவரைக் குலத்தோடும் மேன்மையுறச் செய்வர்; வெறுப்புறுவரேல், வேரொடும் கெடுத் தழிப்பர். அரசன் வழியொழுகுபவர் நெடும் புகழ் பெறுவர் (254). கந்துக்கடன் கட்டியங்காரனாகிய அரசன் பால் அன்புடையனாய் ஒழுகியதால், சீவகனை அவன் தன் மகனென்று சொல்லிச் சிறப்புச் செய்வது கண்டு தானும் மகிழ்ந்து, அவனுக்கு, “எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் கழிபெருங் காதலான்” (330) என்றுரைத்து “உமிதருபெருநிதி” அவன் உவக்குமாறு அளிக்கின்றான். சச்சந்தன் கட்டியங் காரனுக்கு அரசு நல்கியதும் இவ்வகையே யாகும். இவ் வேந்தர்கள், தமக்கு உயிர்த்துணை புரிபவர்க்குப் பிறர் வகையில் சிறப்புச் செய்கின்றனர். இவ்வியல்பால் கோவிந்தராசன் சீவகன் தோழர்க்குப் பிறர் அறியாவகையில் சிறப்புச் செய்வது காண்க; இவ் வேந்தரிடம் அன்பு பூண்டொழுகும் அமைச்சர் முதலாயினார் அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதைப் பேரறமாகக் கருகின்றனர். அமைச்சருள் அரசர்க்குக் கேடு செய்பவர் நரகம் புகுவர் என்பது பல்வகைக் கொள்கைகளுள் ஒன்று. அரசர் தம் மக்கட்கன்றிப் பிறர் மேல் தமது அரசுரிமையை வைப்பின், நாடு நலம் குன்றும்; இவை யெல்லாம் கருதி நன்மக்கள் அரசன் வெறுக்கத் தகுவனவற்றை மனத்தாலும் நினையார். “உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்கும்,” (248). அரசன் ஆணைபெற்றே நாட்டு மக்கள் நாம் செய்யக்கருதும் சிறப்புடைச் செயல்களைச் செய்வர்.சீதத்தன், தத்தை இசைப்போர் நிகழ்த்துவது குறித்து, அரசனை யடைந்து, “பால்வரை மணியும் பொன்னும் பற்பல” தந்து தெரிவிப்ப, அவனம் “வேண்டுவ விதியின் நேர்ந்தான்” (590) என்று தேவர் கூறுகின்றார். இவ்வாறே குபேரதத்தன் தன் மகள் சுரமஞ்சரிக்கு ஆடவர் குறுகாக் காவல் அமைந்த கன்னி மாடம் அமைக்கும்போதும், அரசனாணை பெறுகின்றான். “ஐயென மன்னன் ஏவ ஆள் வழக்கற்ற தென்ப” (912) என வருதல் காண்க. அரசரைக் காணச் செல்வோர்; “வெறிது சேறல் விழுப்பமன்று” என்னும் கொள்கை தோன்ற, கந்துகனும், சீதத்தனும், குபேரதத்தனும் கட்டியங்காரனைக் காணச் செல்லும் பேதெல்லாம் பொன்னும் மணியும் முத்தும் பிறவும் நிரம்பக் கொண்டு செல்கின்றனர். அரசர் நெடுநாள் ஆட்சிபுரிந்து மக்களொடு சிறந்து இனி திருந்து பின் தம் அரசுரிமையைக் தம்மக்கட்களித்துத் துறவு பூண்கின்றனர். வேற்றரசரோடு நட்புற்றொழுகுதற்கு அறிகுறியாக இருவர் நாட்டிற் கும் “நெல்லும் பொன்னும் வழங்குமின்” (2159) எனத் தெரிவித்துக் கொள்கின்றனர். மாதவி யரங்கேறிய காலத்துக் கரிகாலன் வந்திருந்து சிறப்பித்தது போல, இக்காவியத்துக் காணப்படும் வேந்தரும் நாடகமகளிர் அரங்கேறும் காலத்தில் வந்திருந்து சிறப்பிக்கின்றனர். அக்காலத்தே அம்மகளிர் ஆடல், பாடல், அழகு என்பவற்றைக் கண்டு காம வேட்கை கொள்வாராயின், அஃது அவர்க்கு இழிவு தரும் என்பது தமிழ் நூற் கொள்கை; “காவல் வேந்தன் இலைப்பூங்கோதை இயல்பினின் வழமை” (சிலப் 3: 159-60) என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரைக்கும் உரை காண்க, அனங்கமாலை யரங்கேற்றத்து இருந்த கட்டியங்காரனும், தேசிகப்பாவை அரங்கேற்றத்துச் சீவகனும். காமவேட்கை யெய்துகின்றனர். மேலும், அரசகுமரரும் அவரொடு ஒப்பவைத்துப் போற்றப்படும் பரத குமரரும் அம் மகளிரைத் தொட்டு அணிபுனைவதும் வழக்கமாக இந்நூல் கூறுகிறது. இது. “திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை உருவுகொள் மதிய மன்ன ஒளி முகம் சுடரவாக்கிப் பரியகம் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதம் சேர்த்தி அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்க னன்னான்” (678) என்று தேவர் கூறுதலால் அறியப்படும். தமிழ் நாட்டில், தாம் பகைப் புறத்துப் பெற்ற அணிகலன்களும் கொற்றக் குடையின் காம்பும் நாடக மகளிர்க்கு அரங்கேற்றத்தின்போது அரசர் சிறப்பென்ற முறையில் நல்கும் வழக்காறு, சீவகன் வரலாறு குறிக்கும் நாட்டில், இவ்வாறு திரிந்து காணப்படுகிறதுபோலும், இனி, சீவகன் தத்தையொடு புரிந்த இசைப்போர்க்குப் பல அரசகுமரர் வந்திருப்பதை நோக்கின், அரசர் பலரும் இசைப்பயிற்சி யும் நன்கு உடையர் என்பது தெரிகிறது; சீவகன் இலக்கணை பொருட்டுத் திரிபன்றி யெய்தபோது பல வேந்தர் வந்திருக் கின்றனர். இவர் பலரும் தாம் தோல்வி பெறுவதேயன்றி, அறிவறை போகிச் சீவகனுடன் பொருதழிவது நோக்கின், இவர்கள் திருந்திய அறிவில்லாப் பேதைகளா கவே காணப்படுகின்றனர். அவர் செயல் முற்றும் அறிவில் செயல் என்பதைப் பதுமுகன் கூற்றில் வைத்துத் தேவரே, “வசையுடைத்தரசர்க்கெல்லாம் வழிமுறை வந்தவாறே, திசை முகம் படர்க” (753) என்று கூறிக்காட்டுகின்றார். இசைப்போர்க்கு வந்திருந்த வேந்தர் பலரைக் கூறலுற்ற தேவர், அத்தினபுரம், காம்பீலி நாடு, வாரணவாசி, அவந்தி, அயோத்தி முதலிய இடங்களில் இருந்தே வேந்தர் வந்தனர் என்பர். இலக்கணை பொருட்டுத்திரிபன்றி யெய்த செயற்கு, வினிதை வேந்தன், அத்தினபுரத்தரசன், காம்பீலி மன்னன், கோசலத் திறைவன், அவந்தி வேந்தன், மகத வேந்தன், கலிங்கர்வேந்தன், வாரணவாசி மன்னன், போதனபுரத்து வேந்தன், தென்னவன் என்று பல வேந்தர் வந்திருக்கின்றனர். இவருட் காணப்படும் தென்னவன் தமிழ் வேந்தருள் ஒருவனான பாண்டியன் என்பதற்கு, “மலையச்செஞ் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும், இலைவைத்த கோதை நல்லார் இளமுலைப் பொறியும் ஆர்ந்து, சிலைவைத்த மார்பின் தென்னன்” (2199) என்று குறிக்கின்றார். சோழ வேந்தன் எவ்விடத்தும் காணப்படவில்லை. இவ் வேந்தருள் ஒருவனாக வைத்துரைத்து வில்வன்மையில் குறைவுடைமை தோன்றப் பாண்டியனைக் குறைத்துக் கூறுதலால், தேவர் பாண்டி நாட்டவரல்ல ரென்பது நன்கு உணரப்படும். இவர் சோழர் குலத்தவரென்று நன்கு உணரப்படும். இவர் சோழர் குலத்தவரென்று கேள்வி வழியாக வரும் வரலாறு கூறுவது நோக்கின், பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்பே தேவர் இந்நூலைச் செய்துள்ளார் என்று உணரலாம். பத்தாம் நூற்றாண்டில் சோழர்க்கும் பாண்டியர்க்கும் *பன்முறை போர் நிகழ்திருக்கிறது. சோழன் முதலாதித்தன் காலத்தில் பொருது தோற்ற பாண்டியன் வரகுணன் என்பானாவன்; சோழன் முதற்பராந்தகன் காலத்தில் அவனோடு மும்முறையும் பொருது தோற்றவன் இராசசிம்ம பாண்டியனாவான்; இரண்டாம் பராந்தக சோழன் காலத்திலும் ஆதித்திய கரிகாலன் காலத்திலும் பொருது தோற்றோடிய பாண்டியன் வீர பாண்டியனாவான். இவ்வாறு பன்முறையும் தோற்றோடிய செய்கை கண்டே தேவர், இவ்வேந்தர் கூட்டத்திடையே தென்னவனையும் உடன் வைத்துக் கூறினாராதல் வேண்டும். இனி, இந்நூற்றாண்டின் இறுதியில் இருந்த பரகேசரி வர்மன் மதுராந்தக உத்தம சோழன் (கி.பி. 969-985) ஆட்சி முடிவுகாறும் சோழ வேந்தருக்கும் சேரநாட்டவருக்கும் நட்புரிமைiய நிலவியிருந்தது. முதலாதித்தியனுக்குச் சேராமான் தாணுரவி யென்பான் நண்பனாய்ப் பல்லவருடன் பொருதற்குத் துணை செய்துள்ளான். மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரிவர்மனான பராந்தகனுக்குக் கேரளவரசன் பழு வேட்டரையன் மகட்கொடை புரிந்துள்ளான். இன்ன இயைபு கண்டே தேவர், இக்காவியத்து வந்து சிறப்பிழக்கும் வேந்தர் வரிசையுள் சேர மன்னரைக் கூறாராயினர் போலும். இந்நூற்கண், சச்சந்தன் தேவியும், சீவகன் தாயுமான விசயமா தேவியின் பிறப்பு நலம் கூறுமிடத்து உயரிய குலத்திற் பிறந்தவள் என்பார், “அவைவிலாப்புரவி வெள்ளத் தரிஞ்சயன் குலத்துள் தோன்றி, வசையிலாள்” (201) என்று சோழன் அரிஞ்சயனையும் உடம்பொடு புணர்த்து ஓதுகின்றார். இவன், கண்டராதித்த சோழ தேவர்க்குப் பின்னே சோழ நாட்டை அரசு புரிந்தானாதலின், தேவர் காலமும் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகலாம் என்று கருதற்கு இடமுண்டாகிறது. இச் சீவகன் வரலாறு கூறும் ஸ்ரீபுராணப் பகுதி விசையையின் தந்தை பெயரைக் குறித்திலது. உரைகாரர் மட்டில், அரிஞ்சயன் என்பது தேவி பாட்டன் பெயர் என்று குறிக்கின் றார். 14. வாணிபம் சிலப்பதிகாரம் போல இப் பெருங் காவியம் தன் காலத்தே நம் தமிழகத்து நிகழ்ந்த வாணிப நலத்தை நன்கு எடுத்தோதும் சிறப்புடையதன்று. சீவகனும் கந்துக்கடன் என்னும் வாணிகனுடைய மனையிலே வளர்கின்றான். சீதத்தன், குபேரமித்திரன், குபேரதத்தன், சாகரதத்தன் முதலிய பலரும் வணிகரே. எனினும், இவர் செய்த வாணிபத்தின் இயல்பினைத் தேவர் எடுத்து ஓதுகின்றாரில்லை. இராசமாபுரத்துக் கடைத்தெருவைப்பற்றி சில கூறலுற்றவிடத்தும், கடைகளின் நலத்தை இறப்பப் புனைந்து கூறுகின்றாரேயன்றி, கடைத்தெருக்களிற் காணப்படும் பல்வகைப் பண்டங்களையும் இயம்புவதில். கொள்வோரும் கொடுப்போருமாய் நிரம்பும் மக்கட் கூட்டத்தின் பேரோசையே தேவரால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. கடைத் தெருவையுடைய பெருநகரம், “முட்டிலா மூவறு பாடைமாக்களால், புட்பயில் பழுமரப் பொலிவிற்றாகிய, மட்டிலா வளநகர்” (93) என்பதனால் தேவர் காலத்தில் வாணிபம் குறித்துப் பல மொழியினைப் பேசும் மக்கள் செறிந்திருப்பது அறிகின்றாம். யவனப் பேழையும், யவனர் கைவினைச் செப்பும் பிறவும் தேவர் குறித்தலால், யவனர் வாணிபம் அவர் காலத்தும் நடந்தமை காணலாம். இவர் கூறிச்செல்லும் முறை பெரிதும் புனைந் துரையாகவே இருத்தலின், நாட்டு வரலாறு, காலவரலாறு முதலியவற்றிற்கு இப்பெரு நூல் ஏமாற்றத்தையே தருகிறது. இதனை நோக்கும்போது, ஒரு குறிப்பினை நாம் மிக்க வருத்தத்துடன் நினைக்க வேண்டி யுள்ளது. சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற பெருங்காவிய ஆசிரியர்களைப் போலத் தேவரும் இக் காவியத்துக்கு இத் தமிழ்நாட்டை இடமாகக் குறித்துக்கொண்டு, ஆங்காங்குக் காணப் படும் சிறப்புக்களை யெடுத்தோதும் உண்மை நெறித் துறையை மேற்கொள்ளாதொழிந்தது, தேவர்காலத்து நாட்டு நிலையை நாம் அறிந்து கோடலைத் தடைசெய்து விட்டது. இவர்க்குப் பின் வந்த புலவர் பலரும் இவர் மேற்கொண்ட புனைந்துரை நெறி யையே மேற்கொண்டு உள்ள தன் உண்மை கூறும் ஒள்ளிய நெறியினை நெகிழ்ப்பாராயினர். கடை வீதியினைக் கூறவரும் நம் திருத்தக்க தேவர். “விழுக்கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா ஒழுக்கின ரவர்கள் செல்வம் உரைப்பரிது, ஒழிக, வேண்டா பழுக்குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசம் பொனாலும் எழிற் பொலி மணியினாலும் கடைதொற மியற்றினாரே” (115) என்று புனைந்து கூறுவாராயின், இவர்பால் இவ்வாணிபம் குறித்து எத்தகைய வரலாற்றுண்மையினை நாம் அறிதல் கூடும்? சீதத்தன் என்பான் கடலில் வங்கம் செலுத்தி வேற்றுநாட்டிற்கு வாணிபம் செய்யப் போகின்றான் பல தீவுகட்குச் சென்று வாணிபம் செய்து பொருளீட்டு கின்றான். அவன் கொண்டு சென்ற பொருள் வகையோ, ஈட்டிப் போந்த பொருள் வகையோ எவற்றையும் குறியாது, “கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதிக்குப்பை யெல்லாம், உணர்ந்து தன் மதலையேற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்” (507) என்று கூறி யொழிகின்றார். ஆயினும் இவர் கூற்றினால் கடல் வாணிபம் செய்வோரது இயல்பொன்று அறியப் படுகிறது கடல் வணிகர் ஒரு நாட்டினை யடைவரேல் முதற்கண் அந்நாட்ரசனிடம் உயரிய பொருளொன்று கையுறையாகக் கொண்டு சென்று கண்டு, அவன் அருள்பெற்று, அங்கே வாணிபம் செய்வர். அந்நாட்டினின்றும் பிரியும் போதும் அரசனைக் கண்டு விடை பெறுவர். ஒவ்வொரிடத்திலிருந்தும் போம்போது நன்னாளும் நல்லோரையும் குறித்து அக்காலத்தே நீங்கிப் போகின்றனர். கடலிடத்தே புயல் வந்து மோதும் திறத்தை, “முகில்கள் ஈண்டித் தூங்கிருள் மயங்கி யான்று; விளித்தலைப் போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்றும் ஒளித்து உலைந்தொழிய வெம்பி உரறி நின்று, இடிப்பதும், “எண்திசை வளியும், ஈண்டி எதிரெதிர் கலாவிப் பவ்வம் கொண்டுமேல் எழுவ தொப்பக் குளறிநின்று அதிர்ந்து மேகம் தண்துளி பளிக்குக் கோல்போல்” தாரை தாரையாய்ச் சொரிவதும் உரைத்துக் காட்டுகின்றார். “குருமித்து மதலை பொங்கக் கூம்பிறப் பாய்ந்து வல்லே, நிருமித்த வகையன் ஓடி நீர் நிறைந்து மூழ்கும்” என மரக்கலம் உடைந்து கெடும் திறத்தை விளக்குகின்றார். அக்காலத்தே, அக்கலத் தில் இருப்பவர்க்குத் தேறுதல் கூறுதற்கு உரியது யாக்கை நிலையாமை, இடுக்கணழி யாமை முதலியன நினைந்து இறைவனைப் பரவுதல் என்பார்போல இவற்றை விரித்தோதுகின்றார். உடைகலப்பட்டு உலமருவோர் செயலைக் கூறும் நூல்கள் ஆங்கிலத்தில் மிகப் பல காண்கின்றோம். தமிழ் நூலுள் இன்னோரன்ன செய்திகளை யுணர்த் தும் நூல்கள் மிக மிகச் சிலவேயாகும்; அவற்றுள் தலையாயது இச் சீவக சிந்தாமணி. இவ்வாறு, தம் காலத்தே வாணிபம் நிகழ்ந்த நெறியினைக் கூறாராயினும், தாம் பாடும் பாட்டிடையே அழகுற அவ்வாணிபச் சொற்பொருளை யமைப்துப் பாடுகின்றார். காந்தருவதத்தையின் பொருட்டு மன்னர் செய்த போரின்கண் சீவகனை நோக்கி, இகழ்வார் போல, “வாணிகம் ஒன்றும் தேற்றாய், முதலொடுங் கேடு வந்தால் ஊணிகந் தீட்டப் பட்ட ஊதிய வொழுக்கின் நெஞ்சத்து ஏணிகந் திலேசு, நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் சேண் இகந் துய்யப் போநின் செறிகொடி ஒழியஎன்றார்” (775) அவ் விகழ்ச்சிக் குறிப்பையே மாற்றி, சீவகன் அவர்கட்கே விடை யிறுப்பானாய், “தம்முடைப் பண்டம் தன்னைக் கொடுத்தவ ருடைமைகோடல் எம்முடை யவர்கள் வாழ்க்கை; எமக்கும் அஃது ஒக்கம் அன்றே; அம்முடி யரசிர்க் கெல்லாம் என்கையில் அம்பு தந்து நும்முடைத் திருவும் தேசும் நோக்குமின் கொள்வல்” (776) என்று கூறுகின்றான். கேமசரியோடு கூடியிருக்குங்கால் ஒருநாள் சீவகன் அவளுடன் ஒரு குன்றைச் சார்ந்த மலர்க்கா வொன்றிற்குச் செல்கின்றான். அதனருகே தினைப்புனம் ஒன்று உளது. தினைகொய்தற்குக் கிளிகள் வருகின்றன. அவற்றைக் கேமசரி தன் இனிய குரலெடுத்து ஓச்ச அவை அவள் குரலைத் தம் இனத்தின் குரலென்று கருதி நீங்காவா கின்றன. அவள் தான் அணிந்திருந்த பொன்னரிமாலையைக் கழற்றி அவற்றை ஒப்பத் தொடங்குகின்றாள். உடனே சீவகன் தானே சென்று அவற்றை ஓப்புகின்றான். அவன் தன்னின் நீங்கிச் சிறிது தொலைவு சென்றது கொண்டு அவள் அவனைப் புலந்து நோக்குகின்றாள். அப்புலவி தீர்க்கக் கருதித் தகுவனவற்றை அவன் கூறுகின்றான். அவள் புலவி தீர்ந்து அவனைக் கூடுகின்றாள். அவள் புலவி தந்து கூட்டம் பெற்றதை விதந்து, அச் சீவகன், “வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும்தேனும் பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல் வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர்” .... (1507) என்று பாராட்டிக் கூறுகின்றான். “ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்” (குறள் 463) என்றும், “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப், பிறவும் தமபோற் செயின்” (120) என்றும் திருவள்ளுவர் வழங்கிய பொருளை முதலாகக் கொண்டு, மேற்காட்டிய பாட்டுக் களால் நம்பால் வாணிபம் செய்யும் தேவர், வாணிபம் செய்யு மிடத்து வாணிக மகளிரும் செவ்விய முறையில் வாணிகம் செய்வர் என்ற உண்மையை வற்புறுத்துகின்றார். 15. கைத்தொழில் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களிற் காணப்படும் கைத்தொழில் பலவும் இக் காவியத்துட் காணப்படுகின்றன. நகரின் மதிற்கண் பல்வகை எந்திரப் பொறிகள் உள்ளன. அவை யவனர்களால் செய்யப்பட்டவை என்பார், “தம் புலங்களால் யவனர் தாட்படுத்த பொறியே” (103) என்று தேவர் கூறுகின்றார். இந்நூற்கண் பொற்பணி செய்பவரும், சங்கறுப்பவரும், மணி கடைபவரும், பொன், வெள்ளி முதலியவற்றால் கலம் செய்பவரும், ஆடை நெய்பவரும், பூத்தொடுப்போரும் பிறரும் காணப்படு கின்றனர். தேவர் காட்டும் உவமைகளால், வேறு நாடுகளிலிருந்து ஆடையும் அணிகளும் இறக்குமதியும் ஏற்றுமதியும் ஆவது (967) தெரிகிறது. சிலப்பதிகாரத்திற் காணப்படும் நீரணிமாட மென்னும் நாவாய்களும் இந்நூலுட் காணப்படுகின்றன. நிலத்தே பல்வகை வண்டிகள் இயங்குகின்றன. பல்வகைச் சித்திரவேலை யமைந்த அணிகளும் உடைகளும், விதானங்களும், நெடுமாட வீடுகளும் இந் நூற்கண் பலவிடத்தும் குறிக்கப்படுகின்றன. “பாலாராவிப் பைந்துகில்” களும், எலிமயிர்க் கம்பளங்களும், பட்டும் பஞ்சும் இயன்ற உடைகளும் பிறவும் குறிக்கப் படுகின்றன. கற்களிலிருந்து மணிகள் கடையப்படுகின்றன. சுரமஞ்சரிக்குக் கன்னிமாடம் சமைக்குமிடத்தும் பிறாண்டும் சிற்ப நயங்கள் காட்டப்படுகின்றன. பூக்களை மாலையாகத் தொடுப் பதில் பல்வகை வேலைப் பாடுகள் கூறப்படுகின்றன. பூக்களைத் திருமுகம்போலத்தொடுத்து, அதன்கண் செய்திகள் பல தெரிவிக்கப் படுகின்றன. சீவகன் திருமுகமாலை தொடுத்துக் கனகமாலையின் தோழிக்கு விடுப்பது இதனை உணர்த்துகிற தென்றாலும், இச் செய்தி பெருங்கதையில் காணப்படுவதும் நினைவு கூரற்பாற்று. (பெருங். 4:13:56-161) கரும்பினை எந்திரத்திட்டுச் சாறிறக்கிக் குழைபாகு செய்வது சங்க காலத்துக் கண்டதேயாகும் ஓவியம் எழுதுதலும், பிறவும் பண்டை நூல்களுட் காணப்படுவனவே. சுருங்கச் சொல்லின், சங்க இலக்கியங் களிலும் சிலப்பதிகாரம் முதலியவற்றிலும் காணப் படாத புதிய கைத்தொழிலொன்றும் தேவரால் குறிக்கப்பட வில்லை. கைத்தொழில் வகையில் அடங்காதாயினும், உழவுத்தொழில் ஒன்று தேவரால் இந்நூற்கண் காட்டப்படுகிறது. உழவர் எருமை யினத்தை ஏரிற் கட்டி உழுகின்றனர்; வயலை நன்கு சேறு செய்தபின் நெல் விதைக்கின்றனர். விதைக்குமிடத்து, “வீறொடு விளைக” (45) எனத் தெய்வம் தொழுது விதைக்கின்றனர். விதைப்ப எழுந்த நாற்றுக் களை நாள் பார்த்துக் கழனியில் நடுகின்றனர். தக்க காலத்தே களை யெடுத்து, விளைந்த காலத்தே அறத்துக் களத்தே சேர்த்து, வையும் பதரும் களைந்து நெல்லை வண்டியிலேற்றி மனைக்குக் கொண்டு போகின்றனர். நெல் அறுவடை செய்யலுறும் தமிழ் வேளாளருடைய சிறப்புப் பண்பொன்றைத் தேவர் குறியாதொழிகின்றார். நெல்விளை வயல் களுள் பல்வகைப் புள்ளினமும் வாழ்வது இயல்பு. அவற்றை உழவர் இனிதறிந்திருப்பாராதலின், அவற்றிற்குத் தீங்கு நேரா வண்ணம், தாம் நெல்லை அறுக்கப் புகுமுன் வயலருகே தண்ணுமை முதலிய வற்றை முழக்குவர். அம்முழக்கிசை கேட்கும் புள்ளினம் வெருவி அவ் வயலை விட்டு ;நங்கிப்போம். இது சங்க காலத்தும் இன்றும் நிலவும் நற்பண் பாகம். “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப்பல்புள் இரிய” (நற் 350) என்றும், “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக், கண்மடற்கொண்ட தீந்தேன் இரிய” (புறம். 348) என்றும் “வெண் ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை” (அகம். 40) என்றும், “வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ளோப்பும்” (அகம். 204) என்றும் சங்கச் சான்றோர் கூறுதல் காண்க. இந் நற்பண்பின் சீர்த் தொழிலைத் தேவர் எக்காரணத்தாற் குறித்திலரோ? தெரிந்திலது. பத்து, பதினோரம் நூற்றாண்டில் எழுந்த கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் மேலே கூறிய உழவர் ஒழுக்கத்துக்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் தேவர் காலத்தும் இந் நல்லொழுக்கம் உழவர்பால் இருந்திருக்கிறது. அவ்வாறிருப்பவும் தேவர் இதனைக் குறிக்காமலே போயிருக்கின்றார். 16. போர் முறை இனி, தேவர் தம்முடைய காவியத்திற் கூறும் போர் முறையைக் காண்டல் வேண்டும். இக் காட்சி, பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படாத முறை யொன்றையும் நமக்குக் காட்டுகிறதில்லை. காணப்படும் சிலவும், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தொன்னூல்களுட் காணப்படும் மறத்துறைகளுட் சிலவற்றை அடிப்படை யாக வுடையன. தேவர் கலத்துப் போர் வீரர் பண்டைத் தமிழ் வீரர்களின் வழித் தோன்றல்களாதலின், இவர்பால் அவர்களிடத்துக் காண நிற்கும் மறநெறியே மேம்பட்டிருக்கு மாயினும், அவர்கள் காலத்தினும் இவர்கள் காலத்தே வேற்று நாட்டவர் கூட்டுறவும் ஒழுகலாறுகளும் மிகப் பலவாய்க் கலந்து விட்டமையின் அக் கலப்பின் பயனாக இம்மறத் துறையில் வேறுபாடு சிறிதேனும் தோன்றியிருக்கம் என்பது யாவரும் எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் அங்ஙனம் எதிர்ப்பார்க்கும் அறிஞர் பலரையும் தேவர் பெரிதும் ஏமாற்றி விடுகின்றார். “பெரிதும்” என்றதானால், சிறிது காணப்படுகிற தென்பது பெறப்படும். அஃதாவது மறத்துறையில் மந்திரம் புணர்க்கும் புனைந் துரை நெறியொன்று தேவர் காலத்தே புதிதாகப் புணர்க்கப்பட் டிருக்கிறது. அது, பின் வந்த புராணங் களிலும் இதிகாரசங்களிலும் “ஈர் பேனாகிப் பேன் பெருமாளாகி விட்டது” என்பதுபோல மறத்துறை முழுதும் பெருகி முதலிடம் பெறத் தொடங்கிவிட்டது. தனிவீரனது மறவியல்பு தலைமையிடம் பொறாது, தலைதடுமாறிவிட்டது. சான்றோரல்லாத இழிந்தோரும் போரில் மந்திரவலிபெற்று மேம்பாடு எய்துகின்றனர்; இது புராண இதிகாச நூற்புணர்ப்புக் களால் பெறப் படுவது. இது தேவர் காட்டிய நெறியின் பயன். ஆனால், தேவர் சீவகன்பால் மந்திரவலியுண்மை காட்டினர்; இவரைப் பின்பற்றி வந்த புலவர் அவ்வன்மையைச் சீவகன் போல் வார்க்கே யன்றிக் கட்டியங்காரன் போல்வார்க்கும் ஏற்றிக் கூறலா யினர். இதன் நன்மை தீமைகளை ஆராய்வது ஈண்டைக்குப் பொருளன்று. இனி, இப் பெருங் காவியத்தில் அரசரேயன்றி வணிகரும் சீரிய மறவராதலும் வீரர் பலரை யுடையராதலும் உண்டென்பது தோன்று கிறது. இதுவும் பதிற்றுப்பத்திற் காணக்கூடிய செய்தியே; எனினும் ஆங்கு உய்த்துணர நின்ற இதனைத் தேவர் ஈங்கு நன்கு விளக்கமுறச் செய்தனர். இனி, இப் பெருங் காவியத்தில் போர்முறை காண்டற்குரிய மறத்துறைகள் கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம், கனகமாலையாரிலம்பகம், மண்மகள் இலம்பகம் என்ற நான்கிலும் நன்கு காட்டப்படுகின்றன; குணமாலையார் இலம்பகத்தும் நாமகளிலம்பகத்தும் சிறிது காட்டப்படுகிறது. இவற்றை முறையே சுருங்கக் காண்பாம். கோவிந்தை யாரிலம்பகத்திலில், இராசமாபுரத்து ஆயர் நிரை களை வேட்டுவர் கவர்ந்து கொள்கின்றனர். சீவகன் தன் தோழருடன் சென்று அவற்றை மீட்டு வருகின்றான். இவருள் வேட்டுவர் வெட்சியா ராகவும், சீவகனும் தோழரும் கரந்தையாராகவும் மறம் புரிகின்றனர். வெட்சித் திணைக்குரியதாக ஆசிரியர் தொல் காப்பியனார் காட்டும் நிமித்தம் காணும் துறை சிறப்பாகக் கூறப்படுகிறது. நிரை கவரக் கருதம் வேடர் கூட்டத்துள், ஒருவன் புள் நிமித்தம் கண்டு, “ஆனிரை ஈண்டுவரும்; நாம் இன்று கை கொள்ளலாம்” என்பவன். “அடைதும் நாம் நிரை; அடைந்த காலையே குடையும் பிச்சமும் ஒழியக் கோன்படை உடையும்; பின்னரே ஒருவன் தேரினால் உடையதும்; சுடுவில் தேன் உடைந்த வண்ணமே” (416) என்கின்றான், இவ்வாறே கரந்தையாராகிய ஆயர்க்கும் வள்ளுவன் ஒருவன், பிள்ளையுள் புகுந்து அழித்த தாதலால், எள்ளன் மின் நிரை’ (420) என்று கூறுகின்றான். இந் நிமித்தக் கூற்றால் வேடர் ஒருபால் ஊக்கம் மிகுகின்றராயினும் “ஒருவன் தேரினால் உடைதும்” என்றதை உட்கொண்டு, உள்ளம் குறையாது “ஒருவன்தானே வரப் போகின்றான்; அவனை வெல்வது அரிதன்று” என்ற கருத்தால். “................. ஏழை வேட்டூவீர்! ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே என்று கூறினும், ஒருவன் என் செய்யும்? இன்று கோடும் நாம் எழுக” (417) என்று எழுந்து ஆயரொடு பொருது நிரைகளைக் கவர்ந்தேகு கனிற்னர். இவ்வெட்சித் திணைக்கு இன்றியமையாத சிறப்புத் தரும் நிகழ்ச்சி யொன்றைத் தேவர் குறியாதொழிகின்றார். நிரை கவர்ந்து செல்லும் வெட்சி வீரர், அவற்றிற்கு ஒரு சிறு தீங்கும் நேராவகையிற் பாதுகாத்து, நீருள்ளவிடத்தே உண்பித்து, நீழலுள்ளவிடத்தே தங்கவித்து, புல்லுள்ளவிடத்தே மேயவிட்டுப் பெரிதும் பாது காப்பர். இதனைத் தொல்காப்பியனார், “வேற்றுப் புலக்களவின், ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்” என்று கூறியுள்ளார். இச் செய்தியைத் தேவர் கூறாது, நிரையிழந்தது கேட்டு ஆயர் புலம்பு வதனை விவரித்துக் கூறுகின்றார். வெட்சியார்பால் கட்டியங்காரனுடைய வீரர்தோற்றோடிய பின், சீவகன் தோழருடன் கரந்தை வீரனாகப் புறப்படுகின்றான். அக்காலத்தே அவன் மறத்துறைக்குரிய வஞ்சின மொன்று கூறுகின் றான். அதனை ஆசிரியர் தொல்காப்பியர், “தலைத்தாள் நெடு மொழி தன்னொடு புணர்த்தல்” என்பர். இவன் கூறும் நெடுமொழி பின்னர் காட்டப்படும். இவன் வரவு காணும் வேடர், மறங் குன்றாது, “நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின், நீங்கின் அதனைப் பிற” (495) என்ற திருக்குறளையுட் கொண்டு, “மோட்டும் முதுநீர் முதலை க்கு வலியதுண்டேல், காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம்” (448) என்று கூறிக்கொண்டு பொரவெழுகின்றனர். இவரோடு பொருது வெல்லும் சீவகன், பல்வகை இசைக் கருவிகளால் பெரு முழக்கதையும், தானும் தோழரும் ஏறிப்போந்த தேர்களைப் பலவகையாகச் செலுத்திப் பெருந்துகளை யெழுப்பி, மிகப் பெருங் கூட்டம் திரண்டு வருவது போலும் தோற்றத்தை யுண்டாக்கி, அவர் விட்ட அம்புகளை யறுத்து, அவ்வேடர் தாமே மருண்டு ஓடிப் போமாறு செய்துவிடுகின்றான். காந்தருவதத்தையார் இலம்பகத்தில் இசைப்போரில் தத்தைக்குத் தோற்ற வேந்தர் பலரும் கட்டியங்காரன் தூண்டுதலால் சீவகனுடன் பொர்க்கெழுகின்றனர். அக் காலத்தே சீவகன் தோழரது மறப்பண்பும் சிறிது காட்டப்படுகிறது. போர்க்கெழுந்த அரசரை நோக்கிச் சீவகன் தோழனான பதுமுகன்’ “தண்ணிய சிறிய வெய்ய தழற் சொல்லால்” சாற்றுவானாய், தத்தையைச் சார்ந்து நின்ற சீவகனைச் சுட்டி, “இளவள நாகு புல்லி இனத்திடையேறுநின்றால், உளவளம் கருதி யூக்கல் உழவெரு துடைய தாமே” என்றும், “எழுந்து விண் படரும் சீயம் பெட்டையை இவர்ந்து நின்றால், மழுங்கமேற் சென்று பாய்தல் மறப்புலி தனக்கும் ஆகா” என்றும், “மத்தரிப் புடைய நாகம் வாய் நிறை கடாத்ததாகி, உத்தமப் பிடிக்கண் நின்றால், உடற்றுதல் களபக் காமே” என்றும் கூறுகின்றான். இங்கே இவன் நினைவன எல்லாம் ஆற்றல் மிக்க விலங்குகளேயாக இருப்பது. அவன் ஆண்மையினை நமக்குத் தெரிவித்து விடுகிறது. ஆண்மையும், கூர்த்த அறிவுடன் கூடிய வழியே மாண்பெய்தும் என்பதற்கேற்ப, அவனுடைய மதிநுட்பமும், கட்டியங்காரன் கருத்தை வேறாகத் திரித்து, ஏனை வேந்தர் மனத்தைப் பேதுறுத்துப் பிரிக்கம் சூழ்ச்சி மேற்கொண்டு, அவ்வரசரை நோக்கிக் கூறுவதால் விளங்கத் தோன்றுகிறது. அரசர் பலர் கூடிய கூட்டத்தே அவரால் செய்ய மாட்டாத செயலொன்றை வணிகச் சிறுவன் ஒருவன் செய்து வெற்றி சிறந்தான் என்பது அரசர்க்கு வசைதருவதாம்; அவனைப் போரில் வென்று விடின், அவ்வசை இல்லையாம் என்று கருத்துத் தோன்றக், கட்டியங் காரன் அரசரைத் தூண்டினானாக அதனை யுணர்ந்து கொண்ட பதுமுகன், அவன் கருத்தைத் திரித்து, அவ்வேந்தரை அக்கட்டியங் காரனிற் பிரிக்கக் கருதி, ‘நீவிர் அறிவு மயங்கினீர் போலும்’ என்பான், “எழுமுற்றீர் இன்றும் கேண்மின், இரதியைப் புணர்தும் என்று, காமத்தாற் கெழுமினார்க்குக் காமனிற் பிரிக்கலாமே” என்று தொடங்கி, “எம்மைநீர் வெல்லப் பெற்றீர், வென்றபின் இருந்த வேந்தன் உமையும் வேறு செய்து, நும்முளே பொருது வீந்தால், வெம்மை செய் துலக மெல்லாம் ஆண்டிட விளைக்கும், நீதி அம்ம, மற் றதனை ஓரீர், அவன் கருத்தன்னது”..... (760) என்று மொழிந்து, தன்வன்மை தோன்ற ஒரு கற்றிரளை நோக்கி அம்பு விடுகின்றான். அஃது அக் காற்றிரளைத் துளைத்துச் சென்று மண்ணுள் ஊடுருவிச் சென்று புதைந்து மறைந்துவிடுகிறது. சீவகன் பதுமுகனைக் காந்தருவதத்தையைக் காக்குமாறு நிறுத்தித் தன் தோழருடன் போர்க்களம் புகுகின்றான். அப்போது அவன் வேந்தருடன் செய்யும் சொல்லாட்டினை “வாணிபம்” என்ற தலைப் பின் கட் காட்டினாம். சீவகன் நந்தட்டன் குதிரைகட்கு மந்திரம் சொல்லி அவை பறவைபோல் போர்க்களத்தில் பறந்து திரியச் செய்துவிட்டுத் தான் தன் வில்லை வளைத்து, “நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னாள்தன், வெங்களித் தட்டங்கண் கண்டீர், விருந்தெதிர் கொண்மின்” (803) என்று கூறி அம்பு விடுகின்றான். பதுமுகன் செய்த போர்நலத்தைப் பகைவர் கூற்றில் வைத்து, “ஒருவனே, சிலையும் ஒன்றே; உடையதோர் களிற்றின் மேலான்; அருவரை மார்பிற் சென்றது அறிந்திலன் எஃகம்;” இன்னும் வேந்தர் பொர விருவரோ என்கின்றான் (815) என்று தேவர் கூறுகின்றார். இப்போரின் கண் சீவகனும் அவன் தோழரும் செய்த போர்த்திறத்தால், பகைவர் யாவரும், “ஒருவரோடு ஒருவர் கூடாவண்ணமே உடையலுற்றார்” (817) என்று தேவர் குறிக்கின்றார். போரின்கண் பகைவர் ஒன்று கூடிப்பொராவகையில் அவரைச் சிதறி நீங்குமாறு போருடற்றல் வேண்டும் என்னும் முறையினைத் தேவர் வற்புறுத்துமாறு உணரப் படுகிறது. இவ்விடத்தே தேவர் ஒரு சிற்றராய்ச்சி செய்கின்றார். சீவகனும் தோழரும் ஒரு பக்கம் நிற்க, வேந்தர் பலரும் அவர் படையும் திரண்டு பெருகி மறுபக்கம் நிற்க, சிறு படையினனான சீவகற்குப் பெரும்படை, “உப்புக் குன்றம் ஊர்புனற்கு உடைந்ததே போல்” (818) உடைந் ததற்குக் காரணம் கூறுவாராய், “உறுபடை மன்னர் தம்மை யுடற்றி ஒன்றானு மின்றிச் சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா; செறியெயிற்று ஆளி, வேழப் பேரினம் செகுத்த தன்றே; உறுபுலியொன்று தானே கலையினம் உடற்றிற் றன்றே” (819) என்று எடுத்துக் காட்டுவகையால் அமைதி கூறுகின்றார். இதனைக் கூறும்போதே அவர் மனத்தில் வேறோர் எண்ணம் எழுகிறது. ஒருவன் எய்தும் வெற்றி தோல்விகட்கு அவனுடைய மெய் வன்மையும் மதிநுட்பமும் காரணமாயினும், யாவற்றினும் சிறப்பாய் இருப்பது அவரது முன்னை ஊழ்வினையே என்று வற்புறுத்தக் கருதுகின்றார். நல்லவை புரியு மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா; அல்லவை புரியு மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா; வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்; இல்லையே வென்றி தீமை யிடங்கொண்ட மனத்தினார்க்கே (820) என்பது தேவர் கூறும் உரையாகும். கட்டியங்காரனோடு சீவகன் பொருமிடத்தும் இக் கருத்தையே தேவர் வற்புறுத்துகின்றார். கட்டியங்காரனுடைய மக்களும் வீரரும் பிறரும் மாய்ந்தொழிகின்றனர். அதனை யுட்கொண்டு, அவன் சீவகனை நோக்கி, வெற்றியும் தோல்வியும் வினைவயப்பட்டனவே என்ற கருத்துத் தோன்ற. “நல்வினை யுடைய நஞ்சுணின் அமுதமாகும், இல்லையேல் அமுதும் நஞ்சாம்; இன்னதால் வினையின் ஆக்கம்;” (2323) “அகப்படு பொறியினாரை நீரார் ஆக்குவார் யாவர் அம்மா மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ?” (2324) “இருவிணை சென்று தேய்ந்தால், பரிவுற்றுக் கெடாமற் செல்வம் பற்றியார் அதனை வைப்பர்” (2325) என்று கூறிகின்றான். இதனால் அவன் தோல்வி மனப்பான்மை தோன்றக் கண்டு சீவகன் நகுகின்றான்; அவற்கு அக்கட்டியங் காரன், “வெல்வது விதியினாகும்” (2326) என்ற அக்கருத்தையே வற்புறுத்து கின்றான். சீவகனையுடைய மறச்சால்பு முற்றும், அவன் கூறும் வஞ்சினங் களாலும், பகைத்து எதிர்ந்தவர் வீழ்ச்சியாலும் உய்த்துணர வைக் கின்றார். வேட்டுவர் கவர்ந்து சென்ற நிரையை மீட்டற்குப் புறப்படுங் கால், சீவகன், “தன்பால் மனையாள் அயலான்தலைக் கண்டு பின்னும் இன்பால் அடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாம்; நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை யோம்பே னெனின்யான்அவ னாவன் என்றான்” (445) என்றும், தத்தையைக் கைப்பற்றியபோது எதிர்த்த வேந்தரோடு பொருங்காலத்தில். “பொருபடை மன்னர் நுங்கள் புறக்கொடை கண்டு மற்றிம் முருகுடைக் குழலினாள் தன் முகிழ்முலை கலப்பல் அன்றேல் இருசுடர் வழங்கும் வையத் தென்பெயர் கெடுக”... (778) என்றும், ஏமமாபுரத்தில் கனகமாலையை மணந்து இனி திருக்குங் கால், அவன் தோழர் போந்து அவனைக் காண்பது குறித்து நிரைகவர்ந்து கொண்டனராக, அவரைப் பிறரெனக் கருதிச் சீவகன், நந்தன் தேர் செலுத்த நிரை மீட்டற்குச் சென்றபோது, “மன்னவன் நிரைகொண்டாரை வளநகர்த் தந்து மன்னன் பொன்னவிர் கழலில் தங்கள் புனைமுடி யிடுவி யேனேல் இன்னிசை புயலகந் தன்னுள் என்பெயர் சேற லின்றாய்க் கன்னியர் மகளிர் நெஞ்சிற் காமம்போல் கரக்க என்றான்” (1868) என்றும் கூறுவன சீவகனுடைய உள்ள மிகுதி உணர்த்துவனவாகும். சீவகன் ஆண்மையிடத்தே பெரு நோக்கம் உடைய வனென் பதை, அவன் ஆசிரியன் சொல்லால் கட்டியங்காரனுடன் வெளிப் படையாகப் பகைமை காட்டாது உள்வேர்த்து ஒழுகுவதும், குண மாலை அசனிவேகத்தால் உயிரிழக்கும் நிலையெய்தி அலமருவது கண்டு, “பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல்” (984) எண்ணுதலும், மதனன் முதலியnரால் கைப்பற்றப் பட்டுக் கந்துக்கடனும் சுநந்தையும் கூறியவற்றால் அடங்கி; “ஈன்ற தாய் தந்தை வேண்ட இவ்விடர் உற்றதென்றால், தோன்றலுக் காண்மை குன்றாது என்ற சொல்” (1098) நினைந்தமைதலும் பிறவும் வற்புறுத்துகின்றன. இச் சீவகன் தந்தையான சச்சந்தனும் “பேரெனில் புகலும் மறவ” னாகவே விளங்குகின்றான். அவன், தன் அரசுரிமையைக் கட்டியங்காரன்மேல் வைத்தற்குக் கூறும் காரணங்களுள், கட்டியங் காரன், “முனைத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென் றான்.” (205) என்று கூறுவதால் அஃது இனிது விளங்குகிறது, அவன் கட்டியங்காரனுடன் பொருதுபட்டபோதும். அக்கட்டியங் காரனைச் சேர்ந்த வீரர் எறிந்த படைகள் தன் முகத்தினும் மார்பினும் பட்ட போதும், கண்ணிமையாது நின்று பொருது, நிலத்திற்கு முதுகும், வீரர்க்கு முகமும், காட்டியே வீழ்ந்திருக்கின்றான். இந்நூல் கூறும் போர்நிகழ்ச்சிகளில் கண்ணிமையாமை முதலிய சில மறக் குறிப்புக்கள் நன்கு வற்புறுத்தப்படுகின்றன. “விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின், ஓட்டன்றோ வன்க ணவர்க்கு” (775) என்பது திருவள்ளுவர் உரைத்த மறநெறியாகும். இதனைச் சச்சந்தன், “வீரரெறி வெம்படைகள் வீழஇமை யானாய்ப், பேரமருள் என்று” (288) நின்றான் என்றும், நபுலன், மகதையார் கோனோடு போர் செய்யுமிடத்து, தான் எறிதற் கோச்சிய படைகண்டு அவன் “கண்கள் வெய்ய இமைத்திட”க்கண்டு நாணி, “நீ அஞ்சல் கண்டாய்; காய்நதிலேன்” (2267) என்று நீங்கினான் என்றும், நந்தட்டனுடைய சேவகன் எறிந்த வேலை ஏற்றுநின்ற கட்டியங்காரனுடைய சேவகன் “கட்டழல் நெடுங்கண் யாதும் இமைத்திலன்” (2300) மகிழ்ந்து பொருது வீழ்ந்தான் என்றும், தன்னைக் கண்டு நகைத்த சீவகற்குக் கட்டியங்காரன், “வெல்வது விதியினாகும்; வேல்வரின் இமைப் பேனாயின் சொல்லி நீ நகவும் பெற்றாய்” (2326) என்றான் என்றும் தேவர் கூறுகின்றார். “என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின்றவர்” (771) என்று திருக்குறட்கருத்தை, “புலவர்கள் புகழக் கன்மேல் நிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி” (2311) என்றும், இது போலப் பலவும் கூறி வற்புறுத்துவர். வீரர்தம் மார்பிற்பட்ட வேலைப் பிடுங்குமிடத்து அது வளையக் கண்டு அதனை வீழ்ந்து கிடக்கும் களிறுகளின் கோட்டுக் கிடையே தொடுத்து வளைவு திருத்திப் பொருவர் என்னம் மறச்செயலை, சச்சந்தன் வீழ்ச்சிக் காலத்தே, “புண்ணிடங் கொண்ட எஃகம் பறித்தலின் பொன்ன னார்தம் கண்ணிடங் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் மண்ணிடங் கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம விண்ணிடை மள்ளர்கொள்ள மிறைக்கொளி திருத்தினானே” (284) என்றும், சீவகன் வீரனான சலநிதி யென்பான், “நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்துவான் புண்ணுள் நீட்டி, வெஞ்சமம் நோக்கி நின்று மிறைக்கொளி” (2302) திருத்தினானாக, அவனைக் கண்டு பகைவர் அஞ்சியோடினர் என்றும் கூறிக் காட்டுகின்றார். இவ் வீரர் போர் தொடங்குங்கால் தத்தம் தலைவர் திருப் பெயரைச் சொல்லி வாழ்த்திக்கொண்டே போர் தொடங்கு கின்றனர். “சீவகன் கழல்கள் வாழ்த்தி” (3031) “கோவிந்தன் வாழ்க” (2294), “நந்தன் வாழ்க்” (2297) என வருதல் காண்க. இனி, போர்வீரர் போருக்குச் செல்லுமுன் கடவுள் வழிபாடுசெய்து கொண்டு செல்கின்றனர். இதனை; “தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட்டு எய்கணைப் படுமழை சிதறி யெங்கணும் மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச் செய்கழற் சீவகன் வாழ்க என்னவே” (783) என்று தேவர் கூறுதலால் அறிகின்றோம். மேலும், இதன்கண், போரிற்பட்டுத் துறக்கம்புகும் கருத்தால் செம்பொன்னைத் தம் வாயுட் பெய்துகொள்ளும் வழக்கொன்றும் காணப்படுகிறது. பிறாண்டும், “கச்சையும் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு..... அம்பு தின்ன நாளிரை யாகலுற்றார்” (2312) என்று கூறுதல் காண்க. போரிடை வெற்றிபெற்றுத் திரும்பிய வீரர்க்குப் புண்ணாற்றிப் பொற்கிழி யளித்தலும் பிற சிறப்புச் செய்தலும் உண்டு. மெல்லிய துகிலில் நெய்தடவிப் புண்கட்குச் சீலையிடுதலும், அப் புண்ணிற் காற்றுப் புகாதவாறு எலிமயிர்க் குப்பாயம் அணிதலும் அக்காலத்துப் புண்மருத்துவ முறையாகும். போரில் வெற்றி பெறுவோர், பலரையும் பலவுயிர்களையும் கொலைபுரிதலின், அக் கொலைப்பாவம் தீரக்கொடை பல புரிகின் றனர். இந் நூற்கண் அருகனுடைய உருவத்தைப் பொன்னாற் செய்து திருவிழாச் செய்கின்றனர். “செய்தவப் பாவமெல்லாம் தீர்த்திடும் தீர்த்தன்பாதம் எய்திய சேடங்கூவித் திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி மையறு மணியிற் செய்த வலம்புரி யதனீர் கொண்டான் வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே” (826) என்று சீவகன் தன் கொலைப்பாவம் தீர்த்துக் கொண்ட திறத்தைக் கூறுகின்றார். இம்முறை தமிழ் நாட்டிற்குப் புதிதாகத் தோன்றிய ஒன்றாகும். பண்டைத் தமிழ் நூல்கள் வெற்றிபெற்ற வீரர், விருந்துண்டு மகிழ்தலும், புண்ணாற்றுதலும், சிறப்புடன் வரவேற்கப்படுதலும், அரசனால் சிறப்புப் பெறுதலும் பிறவுமே உண்டென்பவேயன்றி, இவ்வாறு “சடங்கு ஒன்றும்’ செய்வதாகக் கூறுவதில்லை. பண்டைத் தமிழாசிரியன்மார், பகைவரைக் கொல்வது, அறத்தைக் கெடுக்கும் களையினைக் களைவது என்னும் கருத்தால் அறமென்றே கருதி யொழுகினர். 17. தேவர் குறிக்கும் சில வழக்காறுகள் தேவர் தாம் எழுதும் இக் காவியத்தின்கண் அரசர், வணிகர், வேளாளர், அந்தணர் முதலியோர் பால் கண்ட சில வழக்காறுகளை இலைமறை காய்போலக் கூறுகின்றார். இவர் ஏனை இளங் கோவடிகள், சீத்தலைச் சாத்தனர், கொங்குவேளிர் போலும் உள்ள தன் உண்மை கண்டு நம்மனோர் உவப்பக் கூறும் ஒட்பம் உடையவர் அல்லராதலின், இவர்பால் அத் துணைச் சீரிய நிலையில் இவர் காலத்து மக்களி டையே நிலவிய வழக்காறுகள் விளக்கமாகக் காணப்படவில்லை. மன்னர் முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் சீவகன் முடியணிந்து கொண்ட செய்தியால் குறிக்கப்படுகிறது. முடி சூடுங்கால் மக்களுள் உயர்ந்தோர் போந்து பாற்கடலில் இருந்து நூற்றெட்டுக் குடத்தில் பால் முகந்து வந்து அரசனை நீராட்டுகின்றனர். பூவும் பொன்னும் மழை போலச் சொரியப்படுகின்றன. அரண்மனையில் முடிசூட்டு வினையும் அரசிருக்கை மண்டபமல்லாத பிறிதொரு சீரியவிடத்தே நடை பெறுகிறது. முடிசூடிக்கொள்ளும் அரசன், பலவகை இயம் இயம்ப, ஆடல் மகளிர் தம்முடைய ஆடல் பாடல் அழகுகளைக் காட்ட, சிற்றரசர் காணிக்கையிட்டு வணங்க வீற்றிருக்கின்றான். முடிசூடியபின் வேந்தன் திருவோலக்க மண்டபம் புகுகின்றான். உயரிய ஆடையணிகள் அவன் மேனிமுழுதும் கிடந்து அழகு செய் கின்றன. சங்க இலக்கியங்களிலும் ஏனைக் காவியங்களிலும் காணப்படாத புதிய அணிவகை ஒன்றும் அரசன்பால் காணப் படவில்லை. மண்டபம் புகுங்கால் சிற்றரசர் அடியீடேந்துகின்றனர்; பொற்கடை நிழல் செய்கின்றது. மகளிர் சாமரை இரட்டுகின்றனர்; அரசனுடைய ஒரு கையில் கழுநீர், குவளை முதலியவற்றால் தொடுத்த பூச்செண்டும் இருக்கின்றன. திருவோலக்க மண்டபத் திருக்கங்கால் முடியணிந்து கொள்ளும் வேந்தன் தனக்குத் துணை செய்த சான்றோர்க்கும், வீரர்க்கும், நாட்டு மக்கட்கும் சீரிய நலங்கள் பல செய்கின்றான். சீவகன், தன் தம்பி நந்தட்டனுக்கு “இளவுடை யான்” (2577) என்று பட்டம் அளிக்கின்றான். ஏனைத் துணைவர்க்கு ஏனாதி என்னும் பட்டமும் கணையாழியும் நல்குகின்றான். அரசற்குச் செலுத்தப்படும் கடமை சிலயாண்டுகட்கு விடப்படுகிறது. இவ்வேந்தர் இளையராயிருக்கும் போதே, பல்வகைக் கலை யறிவும், வில் வாள் முதலிய படைப்பயிற்சியும், இசைநூற் புலமையும், பிறவும் சிறக்கப் பெற்றிருக்கின்றனர். அரசர்க்குரிய அறநூல் அரசியல் நூல்களே; யன்றி, இசை நூலில் மிக்க புலமையுடைய ராயிருப்பது நமக்கு மிக்க வியப்பைத் தருகிறது. சீவகன் “வீணை வித்தகன்”, “வீணைச் செல்வன்” எனப் பலவிடங்களிலும் பாராட்டப் பெறுகின்றான். காந்தருவதத்தையுடன் அரசிளங் குமரர் மிகப் பலர் போந்து வீணைப் போரில் கலந்துகொள்வது இறையறிவு அரசர்க்கு இன்றியமையாதது எனக் கருதப்பட்டிருத்தலைக் காட்டுகிறது. அரசகுமரர் இளைஞரா யிருக்கும்போதே பெருங்காமுகராய் ஒழுகுகின்றனர். சச்சந்தன் விசயையை மணத்தற்கு முன்பே அந்தப் புரத்திலும், செய்குன்று, இளமரக்கா முதலிய இடங்களிலும், காமக் குறிப்புணர்த்தும் ஓவியங்களும் சிற்பங்களும் அமைத்திருக் கின்றான். நாடக மகளிர் தமக்குரிய கலைநலம் நிரம்பி அரங்கேறும் காலத்தில், அவர்களை ஒப்பனை செய்து நாடகமேடைக்குக் கொணர்வதிலும் அரசிளங்குமரரும் வணிக குமரரும் ஈடுபடு கின்றனர். நாடக மகளிர்க்கு விலைப்பரிசம் வகுப்பதும் அரசர் செயலேயாக இருக் கின்றது. காந்தருவதத்தையின் வீணைப் போரில் தானும் கலந்து கொள்ள விரும்பிச் சீவகன் கந்துக்கடனுக்குத் தெரிவித்தபோது, சீவகன் மனமாகாமலே இருக்கின்றான். இருப்பவும், அப்போருக்கு அவனைச் செலுத்துவதில் தனக்கு மனமில்லாமையைக் குறிப்பிப் பானாகக் கந்துக்கடன், “ஐயனுக் கமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன், வையகத் தமிர்த மன்னார் வாக்கமை பாவை யொப்பார், எய்திய இளமை மிக்கார் இயைந்தனர்” (671) என்று கூறுவது தேவர்காட்டும் மக்கட் கூட்டத்தே காமத் துறையில் யாவரும் மிக எளியராய் ஒழுகின ரென்பது தெரிகிறது. திருமணக் காலத்தும் விலங்கின் கூட்டம் போல, நூற்றுக்கணக்கான மகளிரையும், மணமகனுக்கு மணமகளோடு அவள் பெற்றோர் அளிக்கின்றனர். இவ்வழக்காறு தமிழ் நாட்டில் எக் காலத்தும் நிகழாத ஒன்றாகும். இக் காவியத்தின்கண் சிறப்பாக ஒதப்படும் மக்கள் அனைவரும் சமண் சமய ஒழுக்க முடையராகவே உள்ளனர். உயர்ந்தோர் பால் மதுவுண்டல், தேனுண்டல் முதலியன காணப்பட்டில. வீடுகளில் கிளி, பூவை, புறா முதலிய புள்ளினங்கள் வளர்க்கப்படுகின்றன. கோழி, ஆடு முதலியவற்றை வளர்த்து ஒன்றையொன்று போர் செய்வித்து மகிழ்கின் றனர். கோழிச்சண்டை, தகர்ப்போர் முதலிய வற்றைச் செய்து மகிழும் இளைஞர் கூட்டம் இடந்தோறும் காணப்படுகிறது. மகளிர் ஆடவர் என்ற இருபாலாரும் பூத்தொடுக்கும் செயலில் வல்லுநராய் இருக்கின்றனர். சீவகனுக்குக் கல்வி கற்பிக்கும் துறையைக் கூறுமுகத்தால் தேவர் காலத்தே இளஞ்சிறார்கட்குக் கல்வி கற்பிக்கும் செயல் வகை விரித்துக் கூறப்படுகிறது. பொன்னும், முத்தும், மணியும், கூடை களிலே நிரப்பி வைப்பர்; ஆசிரியன் உயரிய இருக்கையில் இருந்து கொண்டு, பொன்னோலையில் பொன்னூசியால் எழுத்துக்களை எழுதித் தந்து கல்வி கற்பிக்கின்றான் என்பார், தேவர், “அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணியாகப் பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி னுச்சி இருந்துபொன் னோலை செம்பொன் ஊசியால் எழுதி யேற்பத் திருந்துபொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே” (369) என்று கூறுகின்றார். தேவர்காலத்துக்குச் சிறிது அண்மையில் வாழ்ந்த சேக்கிழார்பெருமான் திருநாவுக்கரசர் கல்வியறிவு பெற்ற வரலாறு கூறுவார், “பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மனமுகிழ்த்த, சுருள்நீக்கி, மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கு வித்தார்” (20) என்று மொழிவதை நோக்கின், தேவரினும் சேக்கிழார் இளைஞர் பெறும் கல்வியின் நோக்கத்தை இனிது தெளிந்து விளங்க உணர்த்துவதை நாம் நன்கு காணலாம். கல்வியின் நோக்கம் இதுவே யாதல் வேண்டுமென்பதைச் சேக்கிழார் சண்டேசுர நாயனார் வரலாற்றிலும் “முகை க்கு மலரின் வாசம்போல், சிந்தை மலர உடன் மலரும் செவ்வியுணர்வு சிறந்ததால்” (13) என்று வற்புறுத்துவதால் அறியலாம். “கலையின தகலமும், காட்சிக் கின்பமும், சிலையின தகலமும் வீணைச் செல்வமும், மலையினி னகலிய மார்ப னல்லதிவ், வுலகினில் இலையென ஒருவனாயினான்” (411) என்பதனால் கற்கப் படும் கல்வித்துறையும் ஒருவாறு உணரப்படுகிறது. குடியிற் பிறந்த ஆண்மக்கள் நன்கு உழைத்துத் தாம் பிறந்த குடியை உயர்த்துவதில் கண்ணோக்குடையராய் இருத்தல் வேண்டும். அவரது தீயொழுக்கமும் மடிமையும் குடிக்குத் தீச்சொல் பிறப்பிக்கு மாதலின் அது பிறவாவகை ஒழுகுதல் அவருடைய பிறப்புக் கடனாம் என்பது (500) தேவரால் தெளிய வற்புறுத்தப்படுகிறது. இடுக்கண் வந்தபோது மனம் அழியாமை ஆண் மக்கட்கு ஆண்மைச் செயலாம். இடுக்கண் அழியாமை குறித்துத் திருவள்ளுவர் குறித்த கருத்திணைத் தேவர் மேற்கொண்டு (511) நம்மைத் தெருட்டு கின்றார். “அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே, என்று இரண்டில்லை கண்டாய் இது நினதில்ல மென்றான்” (546) எனக் கலுழவேகன் கூறுவதை நோக்கின், தேவர், செய்தொழிலால் மக்கட்கு வேறுபாடு உண்டேயன்றிப் பிறப்பு வகையால் சாதி வேறுபாடு இல்லை யென்று வற்புறுத்துவதைக் காணலாம். அக் கலுழவேகன் தன் மகள் காந்தருவ தத்தையை மணம் செய்து கொடுத்தற்கண்ணும் சாதி சமய வேறுபாடு கருதுதல் வேண்டா என்பான், “நின் மகள் இவளை நீயே நின்பதி கொண்டு போகி, இன்னிசை பொருது வெல்வான் யாவனேயானுமாக, அன்னவற்கு உரியள என்னக்” (554) கடிமணம் செய்து தருக என்பதும் இக்கருத்தை யாப்புறுத்து நிற்றலைக் காண்கின்றாம். வலம்புரி யீன்ற முத்தம் மண்மிசை யவர்கட்கல்லால், வலம்புரி பயத்தை யெய்தாது; அனையரே மகளிர்” (565) என்பது முதலியன கலித்தொகை முதலிய தொகை நூல்களுட் காணப்படும் கருத்துக்களேயாகும். “ஒருவனுக்கு ஒருத்திபோல உளமகிழ்ந் தொளியின் வைகி” (2386) இன்புறுதலே வாழ்க்கைநலம் தருவதென்பதைத் தேவர் கூறுகின்றராயினும், சீவகன் முதலாயினோர் வாழ்வில் பல மகளிரை மணந்து வாழும் இயல்பு விரித்துக் காட்டப்பெறுகிறது. அரசர் அனைவரும் பல மனைவியரை யுடையராய் இருக்கின்றனர். இனி, இக்காவியத்துட் கூறப்படும் அரசரைத்தேவர் என்றே மக்கள் கருதிப் போற்றுகின்றனர். அரசன் ஆணையைக் கடத்தல் அறனன்று; அவர் வெறுப்பன வற்றை நாட்டு மக்கள் நெஞ்சாலும் நினைப்பதிலர். அரசுமுறை கோடுமாயின் நாட்டில் மழையின்மையும் வறுமையும் நோயும் உண்டாகம். அரசர் மனைக்கண் மகப்பேறு, திருமணம், முடீசூட்டல் முதலிய சிறப்பு நிகழுங்கால் இறைதவிர்த்தல், சிறை வீடு செய்தல் முதலிய செயல்கள் நிகழ்கின்றன. இவ் வேந்தர் ஒறுக்குமிடத்துச் சிறு குற்றத்துக்கும் பெருந் தண்டம் செய்கின்றனர். நடைவிளக்கெரித்தல் என்றொரு கடுந்தண் டம் இந்நூற்கண் கூறப்படுகிறது. “இன்னது பட்டதென்றால் எரிவிளக் குறுக்கும் நம்மை” (1169) என்று அரசனுடைய ஏவலர் கூறிக்கொள்ளுதலால் இதன் கடுமை யுணரப்படுகிறது. கைவிரல் முதலிய உறுப்புக்களை எண்ணெயில் தோய்த்துத் தீ வைத்து எரிவிப்பது இந்நடைவிளக் கெரிக்கும் தண்டமாகும். இவ்வேந்தர் பொன்னாசை மிகக் கொண்டவராகக் தோன்று கின்றனர். எத்தகைய வேந்தனையும் பொன்னால் வென்று விடலாம் என்னும் கொள்கை தேவர்காலத்தே நிலவுகின்றது. சீவகனைக் கட்டியங்காரனது வெகுளித் தீயினின்று மீட்கக் கருதிய கந்துக்கடன் “மன்னர் தம்வெகுளி வெந்தீ மணிமுகில் காணமின்னிப் பொன்மழை பொழியின் நந்தும்” (1124) என்று நினைத்துக்கொண்டு பொன்னும் மணியும் கொண்டு அரசனை அடைவதால் இதனை அறிகின்றோம். இனி, சீவகன்போலும் அரசிளங்குமார் பிற நாடு நகரங்கட்குச் சென்று ஆண்டைய இயற்கை நலங்களைக் காண்பது தமக்குரிய சீரிய செயலாக மேற்கொண்டிருந்தமை அவன் கூற்றால் இனிது தெரிகிறது. இக்காலத்தே கல்வித் துறையின் வண்மைக்கும் ஆக்கத்துக்கும் வெளி நாடுகட்கு இளைஞர்கள் சென்று காண்பன கண்டு அறிவு திருந்துதல் வேண்டுமென்ற கொள்கை கல்வித் துறையில் தலைமையிடம் பெற் றிருக்கிறது. இக்கருத்தின மெய்ம்மைப் பயனைத் திருத்தக்கதேவர் இனி துரைப்பாராய்ச் சீவகன் கூற்றில் வைத்து, “மண்மிசைக் கிடந்தன மலையும் கானமும் நண்ணுதற் கரியன நாடும் பொய்கையும் கண்மணி குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு எண்ணமொன்றுள தெனக்க இலங்கு பூணினாய்!” (118) “ஊற்றுநீர்க் கூவலுள் உறையும் மீனனார் வேற்றுநாட் டதன்சுவை விடுத்தல் மேயினார் போற்றுநீ போவல்யான் என்று கூறினாற்கு ஆற்றின தமைதியங் கறியச் செப்பினான்.” (1183) என்று கூறுகின்றார். இனி இவ் வேந்தர் திருமணம் செய்துகொள்ளும் திறம் மிக அழகாகக் கூறப்பெறுகிறது. சீவகன் இலக்கணையை மணந்து கொண் டபோது, காப்புநாண் கட்டல் மணவேள்வி செய்தல், அருந்ததி காட்டல் முதலிய சடங்குகள் தேவர் காலத்தே சமண் சமூகத்தில் இடம் பெற்றுவிட்டன. நான்காம் நாள் மணமக்களை ஓர் அணையி லிருத்தி மயிரொதுக்கும் திருமணம் நடைபெறுகிறது. மணமக்களை நாவிதன் நல்லோரையில் மயிரொதுக்குகின்றான். அக்காலை அவன் மண மகளைத் தீண்டிப் புருவமொதுக்கும் முறை தமிழர்க்கப் புதுமை யாக இருக்கிறது. சமண சமயத்தவர் துறவு பூணலுற்ற வழி, ஒருவரும் அவரைத் தடுத்தலாகாது. துறவு நெறி ஆடவர் மகளிர் இருதிறத்தார்க்கும் உரித்தாம். மகளிர் தாம் அணிந்திருக்கும் அணிகளைத் துறந்து பின்பு தம் கூந்தலைக் களைக்கின்றனர். அவர்கட்குத் துறவு நெறியில் நிற்கும் மகளிர் பலர் துணைசெய்கின்றனர். அக்கூந் தலையும் அவர் தம் கைகளாலேயே பறித்தெடுத்து நீக்குகின்றனர். துறவு முற்றி நல்லுணர்வு தலைக்கொள்ளும் போது இம் மகளிர் தம் பெண்பிறப்பு நீங்கி ஆண் பிறப்பு எய்தியே பரிநிருவாணத்தை எய்தும் தகுதியைப் பெறுகின்றனர். * ஆண்மக்கள் நேரே துறவு நெறியால் பரிநிரு வாணத்தை எய்துகின்றனர். சீவகன் தன் தலைமயிரைப் பறித்து வெள்ளித் தட்டொன்றில் இடுகின்றான். அதனைச் சுதஞ்சணன் என்னும் தேவன் எடுத்துச் சென்று பாற்கடலில் எறிகின்றான். இக் காவியத்தில் தேவர் சமண் சமய நெறி நின்றோர் பலரும் முடிவில் துறவுநெறியைக் கடைப்பிடித்தே பரிநிருவாணம் எய்துதல் வேண்டும் என்பதைவற்புறுத்தும் நோக்கமுடையராதலின், அச் சமய நெறிக்குரிய துறவறத்தையே ஆங்காங்குப் பல வேறு நிலை யாமைகளை விளக்கியுரைக்குமாற்றால் குறித்துச் செல்கின்றார். அதனால், சமண் சமயத் துறவிகள் பால் மக்கட்கு நன் மதிப்பு எய்தத் தகுவனவற்றையே விதந்து ஓதுகின்றார். வையத்து வாழ்க்கையும் தவத்தையும் ஒப்ப நோக்கின் தவமே சிறந்ததென்றற்கு, “நற்றவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம், அற்றமில் தவத்திற் கென்றும் ஐயவி யனைத் தும் ஆற்றாது” (2992) என்று கூறிக், காந்தருவதத்தை சீவகற்கு மாலை யிட்ட செய்தியால் தவத்தின் பெருமைக்குச் சான்று கூறுவாராய், “ஒல்லென் உயர்தவமே செய்ம்மின் உலகத்தீர், எல்லீரும் என்பாள் போல் எந்தல்மேல் வீழ்த்தினளே” (742) என்று உரைக்கின்றார். தவத்தால் மேம் பட்டாரது உள்ளம் மிக்க தூயது என்பார் அதனை ஓர் உவமையாக வைத்து மாசுமறுவின்றி விளங்கும் விசும்பிற்குக் காட்டு வாராய், “காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தைபோல மாசறு விசும்பின்” (856) என்று விளக்குகின்றார். இத்துறவியரின் இனிய தோற்றத்தை, “படநாகம் தோல் உரித்தாற் போல் துறந்து கண்டவர் மெய்பனிப்ப நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்” (1553) என்று எடுத்தோதுகின்றார். தாபதர் வரின் அவரை முன் சென்று வரவேற்று நீராட்டி உடையும் முப்புரி நூலும் வழங்கி இனியன கூறி அன்புடன் உணவளித்தல் வேண்டும். அவர் அவ்வுணவை வண்டு தாதுண்பது போல (1132) உண்பர்.இவ்வண்ணம் தவத்தால் மேம்பட்ட சான்றோர் பொன்னுடம்பு பெறுவர் (325) என்று தேவர் கூறுகின்றார். இவ்வண்ணம் சமயச் சிறப்புடைய ஒழுகலாறுகள் சிலவற்றை உணர்த்திய தேவர், மிக்க வறிய நிலையில் உள்ள மக்களே மட்கலத்தில் நீர் முகப்பர் என்றும், வணிகர் தம் கடைகளிலே கடவுள் வழிபாடு இயற்றுவர் என்றும், உயர்ந்தோரும், தாழ்ந்தோரும், இளையரும், முதியரும், வெற்றிலைப் பாக்கு மெல்லுவர் என்றும், தூங்கி விடியலில் எழுபவர் காலைக் கடன் முடித்து, வெந்நீரால் வாயலம்பிப் பட்ட மணிந்து அருகனை வழிபடுபவர் என்றும், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கேற்றி விழா வயர்தல் உண்டென்றும், யானை வெகுண்டு மேல் வருங்கால், வழியில் இரும்பினால் நெருஞ்சி முள் வடிவிற் செய்த கப்பணத்தை யெறிந்து அதனைத் தடுப்ப ரென்றும், பிணம் சுடுபவர் அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சுடுவர் என்றும், நிரைகவரச் செல்லும் வேடரும் மீட்கச் செல்லும் கரந்தை யாரும் தத்தமக்குரிய கடவுளை வழிபட்டு நிமித்தம் கண்டு செல்வ ரென்றும், தேரைச் செலுத்துவோர் செலுத்துமுன் அதற்கப் பூசையும் பலியும் கொடுத்த பின்பே செலுத்துவரென்றும், தன் தோழன் பொருட் டுச் சீவகன் கோவிந்தையை மணந்தது நோக்கின், நண்பன் பொருட்டு ஒருவன் ஒருத்தியை மணந்து கொள்வனென்றும், கம்மியர் எப்போதும் வறியராகவே இருப்பரென்றும், தேவர் காலத்தே சோதிடநூற்கு மிக்கதலைமை கொடுக்கப்பட்டிருந்த தென்றும், முரசறைவோர் தொடக்கத்தே நாட்டவர்க்கு அறம் பொருள் இன்பத்திறங்களின் நன்னெறி எடுத்தோதி முரசறைவ ரென்றும், அரண்மனை அந்தப் புரங்களில் மகளிர் ஆணுடை தரித்துவாளேந்திக்காவல் புரிவதுண் டென்றும், கணிகையர் வயிற்றில் பிறக்கும் ஆண் மக்கள் சிறப்புடை யராகார் என்றம், வேனில் நுகர்ச்சி குறித்து நகரத்தவர் சோலை யிடத்தே தங்கி இன்புற்று நீராடியும் உண்டாடியும் இன்புறுவர் என்றும், விரும்பினார் பக்கல் கண்ணோடலும், வெறுக்கப்பட்டரர் பக்கல் நலம் காணாமையும் உலகியல் இயற்கை யென்றும், ஒருவருக்குப் பெண் கொடுக்க இசைந்த பெற்றோர் பெண் கேட்க வந்தார்க்கு விருந்து செய்வரென்றும் எவரும் தம் மகளைத் தாமே வலியச்சென்று தாரார் என்றும், புகழும், பழியும், பெறுதற்கு மக்களேயன்றித் தேவரும் உரியர் என்றும், பல்லிசொல் கேட்டலும், கண்ணிடனாடக் காண்டலும், கூடலிழைத்து நோக்கலும், கிள்ளை முதலியவற்றைக் காதலர்பால் தூது விடலும் உண்டென்றும், முல்லைக்கொடி வளர்த்து அது முதற்கண் பூத்தவழி அதற்குச் சிறப்புச் செய்தல் உண்டென்றும், வீடுகளில் சிறு குழவிகள் இருக்குமிடத்தே விளக்கேற்றி அதனை அக்குழந்தைக்குக் காவற்கடவுளாகக் கருதுவது வழக்கமென்றம், சான்றோர் வாயால் தகாத சொற்கள் கூறலாகாதென்றும், பொழுது மறைதற்குள் உணவு உண்டலும், அண்ணனும் தம்பியும் நேர் நேரே இருந்து உணவு கோடலும் வேண்டும் என்றும் இவ்வாறு மிகப் பல வழக்காறுகளை எடுத்தோதியும் தேவர் இப்பெருங்காவியத்தில் ஆங்காங்குச் சுட்டியும் குறித்தும் உரைத்தேகுகின்றார். 18. தேவரும் மகளிரும் இச் சீவக சிந்தாமணி முழுதும் மகளிரைப் பற்றிய பேச்சே நிரம்பியிருத்தலின் தேவரும் மகளிரும் எனப் பிரிவது ஆராய்வது வியப்பாக இருக்கும். ஆயினும், தேவர் மகளிரைப் பற்றிச் சில அரிய செய்திகளை இந் நூற்கண் வற்புறுத்தியுள்ளாராதலின், அதனைப் புலப்படுக்கும் கருத்தால் ஈண்டுச் சிறிது ஆராய்கின்றாம். இக்காப்பியத்துக்குரிய சிவகனுக்குக் காந்தருவதத்தை முதலிய பல மகளிர்பாலும், சச்சந்தனுக்கு விசயைபாலும் தொடர் புண்டாகும் செய்தி மேலே கூறிய காப்பிய வரலாற்றால் விளங்கி நிற்கிறது. இக்காப்பிய நிகழ்ச்சிக்கு ஆக்கமும், இன்பமும், பயப்பவர் மகளிரே. இதனைத் தேவர் தொடக்கத்தையே ஏமாங்கத நாட்டு மலையுச்சியிற் பெய்த மழை நீர் திரண்டு புரண்டு சென்று சரயு நதியில் கலக்க, பொன்னம் பூவும், பிறவும் சுமந்தேகும் அந்நதி யினைப் பெண்ணாக்கிக் கடலை அதற்குக் கணவனாக்கிக் கூட்டு வித்தலாகிய திருமணத்தைச் செய்விக்கின்றார். “திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல் நுரையெனும் மாலையை நுகரச் சூட்டுவான் சரவெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே” (39) என்ற இப்பாட்டுத் தேவர் கருத்தில் மகளிரொடு இயைந்த மணக் குறிப்பே நிகழ்தலைக் காட்டுமாறு காணலாம். இவ்வண்ணம் தொடக்க முதலே மகளிரின் இயல்பு கூற எழுந்த கருத்துடையராய தேவர், மகளிரைக் கன்னியர், கற்புடை மகளிர், விலை மகளிர் என மூவகையினராகப் பகுத்துக் கொண்டு அவர் மனப்பான்மை, ஒழுகலாறு முதலியவற்றை விளங்க உரைத் தேகுகின்றார். இவருட் கன்னியரைப் பற்றிக் கூறுமிடத்து இவர் மனத்தே வேட்கையை யெழுப்பிப் பின் கைவிட்டு நீங்கும் ஆடவர் குட்டநோய் நரகத்துட் குளித்துக் கெடுவர் என்கின்றார். செல்வர் மனைகளில் வாழும் இக்கன்னியர் பிறரால் எளிதிற் காணப்படு வாரல்லர். இதனைச் சுதஞ்சணன் சீவகற்கு வழியியல்பு கூறுதலுற்று வழியில் காண்பதற்கரிய வாவிகள் நான்கு உள; அவற்றை விரும்பி நோக்காதே செல்க என்பவன், “பொன்னணிதிகிரியஞ் செல்வன் பொற்புடைக், கன்னிய மகளிரிற் காண்டற் கரியன, நன்மணி புரித்தன வாவி நான்குள” (1210) என்று உரைக்கின்றான். அம்மகளிர் மனத்தே வேட்கைக் குறிப்பு எழுவதும் உண்டு. ஆயினும் அஃது எவ்வாற்றானும் வெளிப்படாது, அவரால் நன்கு மறைக்கப்படும் என்று தேவர் தெரிவிக்கின்றார். சீவகன் கனகமாலையை மணந்து அவளுடன் இனிதிருக்குங்கால் அவனைத் தேடிக் காண்டற்குப் போந்த அவன் தோழன்மார் அந்நகரத்து ஆயரது நிரையைக் கவர்வார் போல் வளைத்துக் கொள்ள, அவர் தன் தோழரென்று அறியாது அவர் மேல் போர்க்கு எழும் சீவகன் நிரை கவர்ந்தாரைப் பற்றி அரசன் திருவடிக்கண் கொணர்ந்து நிறுத்தா தொழியின் தன் பெயர் கன்னியர் மனத்தே எழுந்த வேட்கை இருந்த விடம் தெரியாமல் மறைக்கப்படுவது போல் மறைந்து கெடுக என வஞ்சினம் கூறுவானாய், “இன்னிசை யுலகந்தன்னுள் என்பெயர் சேறலின்றாய்க், கன்னிய மகளிர் நெஞ்சிற் காமம்போல் கரக்க” (1868) என்று கூறுமிடத்துக் கன்னியர் வேட்கையை உவமம் செய்தல் காண்க. இக் கூறியவாறு கன்னியர் தம் மனத்தெழும் வேட்கை சிறிதும் புலப்படாவாறு மறைத்துக் கொண்டவழி, அவர் விரும்பும் கண வனைக் காண்டல் அரிதாதலின், திருமணமும் அவர்க்கு விரைய நடவாதாம். மகளிரை மணம்புரியாது வைத்திருத்தல் பாவம் என்று தேவர் கூறுகின்றார். அப்போது பெற்றோர் யாவர் வந்து கேட்பினும் தடையின்றி மகட்கொடை புரிந்து தமது பொறையினைக் கழித்துக் கொள்ளற்குரியார் ஆவர் என்ற கருத்துப்பட, “........கன்னியம் மடந்தைமார் அணிநலம் முற்றினாரை நீடுவைப்பின் மூள்கும் வந்து பாவமும்; குற்றமற்று மாகுமென்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு உற்றடுத்து அயாவுயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்குமே” (2006) என்று கூறுகின்றார். இவ்விடத்தே, சீவகனுடைய தோழர் கூற்றில் வைத்துத் தேவர் ஒரு கருத்தை வெளியிடுகின்றார். மகளிர் தம் பெற்றோர் தமக்குத் தேடிக் கொணரும் கணவன் தமக்குப் பிடித்தமில்லாதவனாயினும், அவர் விருப்பத்திற்கு மாறாக அவனை வெறாதே தம் நெஞ்சு நேர்ந்து மணம் செய்துகொள்ள உடன்படுவர் என்கின்றார். இவ்வாறு கூறுதற்குப் பண்டைத் தமிழ் நூல்களுள் சான்று ஒன்றும் கிடைத்திலது. மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதது இம் மணவினை யென்பது திருவள்ளு வனார் அறியாததன்று. மகளிர் மணமின்றியிருத்தல் நன்றன்று என்பது தமது கருத்தென்பார் திருவள்ளுவர். “அற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிக நலம், பெற்றாள் தமியள் மூத்தற்று” (1007) என்பவர், ஆணும் பெண்ணுமாய் மக்கள் தம் பெற்றோர் தேடிக் கொணரும் பெண்ணையும் ஆணையுமே மணத்தல் வேண்டு மென விதியாமையே, தேவர் காட்டும் இக்கருத்துத் தமிழ்க்கருத்து அன்று என்பதற்குச் சான்றாகும். இம் மகளிரின் விளையாட்டு வகைகளுள் நீர்விளையாடல், பந்தாடல், கழங்காடல் முதலியன தேவரால் புனைந்து கூறப்படு கின்றன. நீர்விளையாடும் மகளிர் கையில் சிவிறிகொண்டு நீரை உறிஞ்சி ஒருவர்மேல் ஒருவர் எறிந்து விளையாடுவது பெரும் பான்மை. “சிந்துரப் பொடிகளும் செம்பொற் சுண்ணமும் சந்தன நீரொடு கலந்து தையலார் பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை இந்திர வில்லெனக் கிடந்த வீதியே” (86) எனப் பொதுப்படக் கூறிய தேவர், இராசமாபுரத்தவர் வேனில் விருப்பால் பொழில் விளையாடி நீராடலுற்ற செயலை விரித்துரைக்கு மிடத்தே, “சிவிறியின் மாறுதூயும் குங்குமம் எறிந்தும் தேங்கொள், உவறுநீர் உழக்கி யோட்டியுடைபுறங் கண்டும் நக்குத், தவறெனத் தாமம் பூட்டித் தருதிறை கொண்டும்” (971) விளையாடினர் என்றும், பந்துகளில் இங்குலிகங் கலந்த நீரைப் பெய்து ஒருவர்மேலொருவர் எறிந்து மகிழ்ந்தன்ர் என்றும் கூறி, முடிவில் சீவகன் தன் மகளிரொடு நீராடிய விடத்து இச்செய்தியை விரியக் கூறிவிடுகின்றார். அந் நீராட்டில், “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி ஆயிரம் தாரை செல்லப் பரப்பினாள் பாவை தத்தை பைந்தொடி மகளிர் ரெல்லாம் தரிக்கில் ராகித் தாழ்ந்து தடமுகிற் குளிக்கு மின்போல் செருக்கிய நெடுங்கண் சேப்பச் சீதநீர் மூழ்கி னாரே” (2666) என்றும், “கூந்தலை யொருகை யேந்திக் குங்கமத் தாரை பாயப் பூந்துகில் ஒருகை தாங்கிப் புகுமிடங் காண்டல் சொல்லார்” என்றும் (2669) கூறுவன போதிய சான்றாம். இம் மகளிர் பந்தாடும் திறத்தைத் தேவர், “வைத்தபந் தெடுத்தலும் மாலையுட் கரத்தலும் கைத்தலத்தி னோட்டலும் கண்ணினெற்றி தீட்டலும் பத்தியிற் புடைத்தலும் பையரவ்வி னாடலும் இத்திறத்த பந்தினோடின்ப மெல்லை யில்லையே” (151) என்று தொகுப்பாய்க் கூறி, விமலை பந்தாடிய செய்தி கூறுமிடத்து. “அங்கையந் தலத்தகத்த ஐந்து பந்தமர்ந்தவை மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன் பொங்கிமீ தெழுந்துபோய்ப் பிறழ்ந்து பாய்தலின்றியே செங்கயற்கண் புருவம் தம்முள் உருவஞ் செய்யத் திரியுமே.” “மாலையுட் கரந்தபந்து வந்து கைத்தலத்தவாம் ஏலநா றிருங்குழல் புறத்தவாண் முகத்தவாம் நூலினேர் நுசப்புநோவ வுச்சிமாலை யுள்ளவாம் மேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே” (1961-2) என்று விரிதோதுகின்றார். இவ்வாறே ஊசலாடல், கழங்காடல் முதலிய பல விளையாட்டுக்கள் தேவரால் குறிக்கப்படுகின்றன. குணமாலை, சுரமஞ்சரி என்ற இருவர் வரலாற்றாலும் சுண்ணம் இடித்துச் செய்தலும்; இளைய மகளிர் செயலாதலை அறிகின்றோம். மகளிர் சுண்ணம் செய்து மகிழ்ச்சியுறும் செய்தியைத் திருவாசகத்தில் மணிவாசகப் பெருந்தகையார், “காசணிமின்கள் உலக்கை யெல்லாம் காம்பணிமின்கள் கரையுரலை நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித் திருவே கம்பன் செம்பொற் கோயில்பாடி பாசவினையைப் பறித்துநின்று பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.” என்பது முதலிய பல பாசுரங்களால் விரித்தோதுகின்றார். அவர்க்குப் பின் தேவர் தான் தம் காவியத்தில் இச்செய்தியைக் குறிப்பிடக் காண்கின்றோம். இனி, இம் மகளிரின் இயல்பினை யெடுத்து விரியக் கூறலுற்ற தேவர், மகளிர்க்கு உயிரினும் நாணமே சிறந்ததென ஆசிரியர் தொல்காப்பியர் உரைத்த உரையினைத் தாம் அவ்வாறே மேற் கொண்டு, பெண்பாலவர் கட் கணியாய்ப் பிரியாத நாணும், திண்பால் நிறையும் திருமாமையும் சேர்ந்த சாயல், கண்பால், கவினும்’ (1969) என்று உரைக்கின்றார். பிறாண்டும், நான் மெய்க்கொண்டீட்டப் பட்டார்” (1126) என்று மகளிர்க்குத் தாமே ஒரு பெயர் கூறுகின்றார். “நாண் சுமக்கலாத நங்கை,” “நாண் முதற்பாசம் தட்ப நடுங்கினர்” என்றெல்லாம் மகளிர்க்கு நாணத்தைப் பெரிதும் விதந்து பேசுகின்றார். இங்ஙனம் நாணமே உருவாக உடைமையால் சில நன் மகளிர் பால் இனிய நிகழ்ச்சிகள் சில கண்டு தேவர் நமக்கு உணர்த்து கின்றார். இந்நாண்மிக்க மகளிர், ஏதேனும் தம் கண்ணைக் கவரும் பொருளொன்றைக் காணவேண்டின், அதனைத் தாம் நேரே நின்று காண விழையார். தம்மை மறைத்துக் கொண்டு ஒற்றைக் கண்ணால் ஒரு பாகமே தோன்ற நின்று காண்பர். சீவகன் பிறந்து கிடந்த சுடலையில் கந்துக்கடன் போந்து அவனைக் கண்டு எடுத்துச் சென்றதைப் பார்த்திருந்த விசயையின் இயல்பு கூறுமிடத்துத் தேவர், ‘புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்ததே போல், ஒல்கியோர் கொம்புபற்றி ஒருகணால் நோக்கி நின்றாள்’ (319) என்றும், சிவகன் வேடர் கவர்ந்து சென்ற நிரையை மீட்டுவரக் கண்ட காட்சியில் ஈடுபட்ட மகளிரின் இயல்பு கூறுமிடத்து, “பாகமே மறையநின்ற படைமலர்த்தடங்கண் நல்லார், நாகம் விட்டெழுந்து போந்த நாகர்தம் மகளிர் ஒத்தார்” (462) என்றும் கூறுகின்றார். கேமசரியார் தம் மனையில் நடந்த விருந்தில் சீவகனைக் கண்ட திறத்தைக் கூறும்போதும், “தாழ் தரு பைம்பொன்மாலைத் தடமலர்த் தாமமாலை வீழ்தரு மணிசெய்மாலை யிவற்றிடை மின்னின் நின்று சூழ்வளைத் தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும் ஊழ்படு காதலானை ஒருபிடி நுசுப்பி னாளே” (1459) என்று தேவர் இப்பெண்மையியல்பு குன்றாமற் கூறுவது மிக்க இன்பம் தருகிறது. “சிலம்பின்மேல் பஞ்சியார்ந்த சீறடி வலத்த தூன்றி நலந்துறை போய் நங்கை தோழியைப் புல்லிநின்றாள்” (2141) என்பது முதலாகத் தேவர் மகளிர் நிற்கும் திறம், இருக்குந்திறம் நடக்குந்திறம் முதலிய பல திறங்களையும் மிக இனிமை தோன்றக் கூறுகின்றார். அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகுமென்று அஞ்சி விடுகின்றாம். தேவர் இங்கே காட்டியவாறு மகளிரின் புறநலம், செய்கை முதலிய நலங்களை வியந்து கூறுவதுபோல, அவர்களைப் பற்றி வேறேயும் சில கருத்துக்களை வழங்குகின்றார். இம் மகளிர் மணம் செய்துகொள்ளா திருத்தல் தீது என்று வற்புறுத்துகின்றார். கலுழ வேகன் தன்மகள் காந்தருவதத்தை மணமின்றியிருப்பது குறித்துக் கூறுமிடத்து, “முனிவரும் போகபூமிப் போகமுட்டாது பெற்றும் தனியவராகி வாழ்தல் சாதுயர் அதனின் இல்லை; கனிபடு கிளவியார்தம் காதலர் கவானில் துஞ்சின் பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்றுசொன்னான்” (555) என்று கூறுகின்றார். பின்பும் சீவகன் தன் பகைவனான கட்டியங் காரனை வென்று ஏமாங்கத நாட்டிற் குரியனாகிய வழித் தான் ஆங்காங்கு மணந்த மகளிரை வருவிப்ப, அவர் வந்து அவனைக் கூடி இன்புற்ற திறத்தை விளம்பும் தேவர், “மாட மாமணிச் சிவிகையின் மயிலென இழிந்தார் வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடியனையார்” (2388) என்று கூறுமிடத்தும், நன்மகளிரொடு கூடி யுறையும் இன்பம் வீட்டுலக இன்பமாமென்று விளம்புகின்றார். இக்கருத்தையே பிறாண்டும் தேவர் ‘சீவகன் தன் மனைவியருடன் கூடியின்புற்றிருந்த நலம் கூறுமிடத்தும்,’ “வீடுமலியுலகினவர் போல விளையாடும், தோடும் மலி கோதையொடு துதைந்த வரை மின்போல், ஆடுகொடி யணிந்த வுயர் அலங்கல் வரை மார்பன்” (2492) என் பதனால் வற்புறுத்துகின்றார். இக்கருத்து, “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர்சா லாவே ..... குறுமகள், தோள் மாறுபடூஉம் வைகலோ டெமக்கே” (குறுந். 101) என்ற சான்றோர் கருத்தோடு ஒத்திருத்தல் காண்க. இனி, நன்மகளிர் திருமணக் காலத்தில் தம்மேனிக்கண் ஒருவகை நன்மணம் கமழ விளங்குகின்றனர் எனத் தேவர் பலவிடங் களில் குறிப்பிடுகின்றார். “புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மதம் மணமகள் கதுப்பெண் நாறும்” (1628) என்றும், “ஒரு நாளவன் போகிப்பொழிலின் மிக்க தனிற்புக்கான் மனணமகளிர் போற் பொலிந்ததே” (1655) என்றும், “நானமண்ணிய நன்மண மங்கையர், மேனி போன்றினிதாய் விரை நாறியகானம்” (858) என்றும் தேவர் கூறுதல் காண்க. இனி, கற்புடைய நன்மகளிரின் நலத்தைப் பலவகையால் தேவர் எடுத்தோது கின்றார். அவர் தம் இயல்பை எடுத்தோதுவதும் உவமை யால் உரைப்பதும் என்ற இரு திறத்தாலும் அவர் தம் நன்னெறி நாட்டு மகளிர்க்கு நலம் செய்யும் என்னும் கருத்தால் அவர் கூறுவது அவரது பரந்த மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது. ஆற்றிற்பெருகிப் போந்த நீர் சிறு கால்களின் வழியே சென்று பரந்த வயல்களிற் பாய்ந்து அடங்கித் தெளிந்திருக்கும் செயற்குக் கற்புடை மகளிரின் அடக்கத் தையே விதந்து, “குலத்தலை மகளிர் தம் கற்பிற் கோட்டகம், நிலைப்டா நிறைந்தன பிறவும் என்பவே”( 41) என்று கூறுகின்றார். இம் மகளிரது கற்பின் திண்மையினை மலையின் திண்மைக்கு உவமை யாக்கி, “குலத்தலை மகளிர் தம் கற்பின் திண்ணிய அலைத்துவீழருவிகள் ஆர்க்கும் சோலை சூழ், வலத்தது வனகிரி” (1217) என்று இயம்புகின்றார். இக் கற்புடை மகளிர் தம் கணவன் பரத்தையரைக் கூடி வரு வானாயின் அவனைத் தீண்டுவதின்றி, நீராடி வந்தாலன்றி அவ னைத் தாம் சேர ஒருப் படுவர்ரல்லர் என்ற கருத்தொன்றைத் தேவர், மந்தி யொன்றின் செயல் மேல் வைத்து, “பரத்தையர்த் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார், திருத்தகைத் தன்று தெண்ணீர் ஆடி நீர் வம்மின் என்ன உறைத்தது” (2731) என்கின்றார். இவ்வாறு ஊடுதலைச் செய்யும் இவர் ஊடலுணராது கழிவதும் அறமன்று என்று வற்புறுத்து கின்றார். இம் மகளிர் பிற ஆண்மக்களின் அறிவு ஆண்மை பெருமை முதலியவற்றைக் காணின் மணம் மகிழ்ந்து அவரை வாழ்த்து கின்றனர். சீவகன் இலக்கணையாரை மணந்து வீதியுலாப் போந்த போது கற்புடை மகளிர் அவனைக் கண்டு மனம் மிக மகிழ்ந்து, “முந்நீர் மண் பெற்ற ஆயுள் பெற்று மண்ணுவாய் மன்ன!” (2555) என்று வாழ்த்திப் பூமழை பொழிகின்றனர். கற்புடை மகளிர் மகப் பெற்ற போது அம்மகவுக்கு நீராட்டி மருந்தூட்டி வளர்க்கும் திறம் தேவரால் இனிது காட்டப்படுகிறது. சீவகன் மனைவியர் மக்களைப் பெற்று சிறக்கின்றனர். அக் குழந்தை களை நீராட்டி; மருந்தூட்டி நாவழித்து மூக்குயர்த்திச் சீராட்டுந் திறத்தை, “காடி யாட்டித் தராய்ச் சாறுங் கன்னன் மணியும் நறுநெய்யும் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீ இப் பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த் தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்” (2712) என்று விரித்துக் கூறுகின்றார். பின்னர் இக் குழந்தைகளைத் தம் மடியிற் கிடத்தி, அவர் தம் குறங்கைத் தட்டி உறங்க வைக்கும் செயலைத் தேவர் மிகக் குறித்து நோக்கி நமக்கு அறிவுறுத்துகின்றார். தாமரைப் பூவில் அன்னப்பிள்ளை கிடப்ப, நீரலைகள் அதனை அசைப்ப, அப்பிள்ளையுறங்கும் காட்சியை நமக்கு உணர்த்து முகத் தால் தாயர் தம் குழந்தைகளை உறங்குவிக்கும் செயலை உவமமாக நிறுத்தி, “தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கின் எறிய ஆய்பொன் அமளித் துஞ்சும் அணியார் குழவிபோலத் தோயுந் திரைகள் அலைப்பத் தோடார் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் வெள்ளை யன்னம் காண்மின்” (935) என்ற அழகிய செந்தமிழ்ப் பாட்டால் தெரிவிப்பது காண்க. இவ்வாறு மகளிர் செயலை நுணுகி நுணுகி நோக்கித் தாம் பாடிய இவ்வரிய நூலுள் தேவர் நமக்குத் தெரிவித்து இன்புறுத்தும் செயல் நினைக்குந்தோறும் இறும் பூது பயப்பதாகும். கற்புடை மகளிரின் பொது இயல்பை மேலும் கூறுவார், இவர்கள் தம் கணவன் இறப்பின் உடனே தாமும் இறப்பர்; அவன் பிரிந்தானாயின், பூவும் பிறமங்கல அணிகளும் புனையார்; கணவனைத் தவிர வேறு எத் தெய்வத்தையும் வழிபடார் என்பாராய், “சாமெனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றும் சொல்லார் கணவற் கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்” (1605) என்று வகைப்படுத்திக் கூறுகின்றார். இக் கருத்தைச் சீவகனைத் தேடிப் போந்த நந்தட்டன் கூற்றிலும் வைத்துத் தேவர் உரைக் கின்றார். நந்தட்டன் சீவகனைக் காணாது வருந்திக் காந்தருவதத் தையை யடைந்தகாலை, அவள் தன் ஞானத்தால் சீவகன் உண்மை தெரிந்து இனி திருப்ப, அக் கருத்தறியாது, அவன் நன்மகளிர்க்கு உள்ள பண்பை எடுத்துக் காட்டி, “ பொறிகுலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல் வெறிகுலாய்க் கிடந்த மாலை வெள்வளை முத்தம் நீக்கி நெறியினால் நோற்றல் ஒன்றோ, நீள்எரி புகுத லொன்றோ அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணிசுமந் திருப்பது” (1713) என்ற கேட்கின்றான். இவ்வாறு கற்புடை மகளிர் கணவன் பிரிந்த விடத்துக் கொள்ளும் கருத்துக்களைக் கூறியதேவர், “சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்” (1605) என்ற கருத்தை மட்டில் சீவகன்பால் சிதறிப் போமாறு செய்கின்றார். தேர்ந்தவன் செல்லல் தீர்க்கும் வாய்ப்பினை மகளிர்க்குத் தருவது ஆண் மக்களின் புகழ்க்கு மாசாகக் கருதப் படுகிறது. சீவகன் குணமாலை மனையில் கட்டியங் காரன் விடுத்த வீரரால் கைப்பற்றப்பட்டபோது காந்தருவத்தையின் விச்சை துணை யாகத் தன்னை விடுவித்துக் கொள்ளச் சீவகன் நாணுகின்றான். அவன் நந்தட்டனுக்குக் கூறுவானாய், “பெண்ணிடர் விடுப்ப வாழ்விற் காதலே பெரிதும் நன்று என்று எண்ணினேன்” (1759) என்று கூறுகின்றான். சீவகன் அரசனது வீரர் கைப்பட்டது கண்டதும் காந்தரு வதத்தையின் கருத்திலும் “சேர்ந்தவன் செல்லல் தீர்த்தல்” நன்மகளிர்க்கு இயல்பே என்ற எண்ணமும் எழுகின்றது. எனினும், அவ்வெண்ணம் வேறொரு கருத்தால் கெடுமாறு தேவர் சூழ்ச்சி செய்து விடுகின்றார். சீவகனை அவன் மனைவி சிறை மீட்டாள் எனின், அஃது அவனுடைய ஆற்றற்கும் கல்விக்கும் மாசு பயக்கும் என்றும், வையகமும் பழிதூற்றும் என்றும் அவள் நினைக் கின்றாள். நன் மகளிர் தம் கணவற்கு அது செய்வது பழியாகாது என்ற எண்ணமும் உடனே அவள் நினைவில் எழுகிறது. அப்போது அவள், “செல்வனுற்ற சிறை செய்யவள் நீக்குமன்றால் பழி இல்லையாயின், அவள் யான் எனும் வேற்றுமை யில்லையே! சொல்லின் வெள்ளிம்மலை; தோடவிழ் தாமரைப் பொன்மலர் எல்லையாகும்; பொதுப்பெண் அவள்; யான்குல மங்கையே” (4157) என்று தனக்கும் திருமகட்கும் உள்ள வேறுபாட்டை நினைக் கின்றாள். மீட்டும் தான் சீவகற்குத் துணை செய்தலைக் கருது கின்றாள். “ஆவதாக, புகழும் பழியும் எழுநாள் அவை, தேவர் மாட்டும் உள; மக்களுள் இல்வழித்தேர்கலேன்; நோம் என் நெஞ்சம்” (1158) என்று நினைக்கின்றாள்; நினைத்து ஏங்கி நின்றோழி கின்றாள். இவ்வாறு அவள் நெஞ்சம் அலைப்புண்டு செயலில் இறங்காது, தெய்வங்களின் துணையால் தன்னைக் காத்துக் கொள்வ தாகிய ஒரு செய்கைக் கண்ணே ஒன்றி நின்று விடுகிறது’ இவளது செய்கையால் மகளிர் எத்துணை விஞ்சை வன்மை யுடையராயினும் எளிதில் மனம் பேதுறவெய்திவிடுவர் என்ற முடிவு நமக்குப் பிறந்துவிடுகிறது. “மகளிர் மனம் போல வேறுபடும்” (குறள், 822) என்ற திருவள்ளுவர் கருத்து உண்மையாதல் விளங்கு கிறது. பெண் மனத்தை ஒருப்படுத்தல் எவர்க்கும் ஆகாது என்ற கருத்துப்பட, “பெண் மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்” என்று கூறுவதும் இதற்கு ஆதரவு நல்குகிறது. இக்கருத்தெல்லாம் உட்கொண்டே, மகளிர் மனத்தின் பீடின்மை யினைப் பலவிடங்களில் தேவர் குறிக்கின்றார். “பெண்ணெனப் படுவ கேண்மோ யீடில பிறப்பு நோக்கா, உள்நிறையுடைய வல்ல ஓராயிரம் மனத்த வாகும் ” (1604) என்றும், நங்கைமார்க்குப் பின்செலும் பிறர்கண் உள்ளம்” (1603) என்றும், “பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும், வகைகொள் மேகலை மங்கையர் நெஞ்சமும், மிகைசெல் மேகத்து மின்னும் செந்நில்லலா” (1823) என்றும் தேவர் கூறுதல் காண்க. கொங்கு வேளிரும் “மாரியும் திருவும் மகளிர் மனமும், தக்குழி நில்லாது பட்டுழிப் படூஉம்” (1:35:156-7) என்கின்றார். இனி, இம் மகளிரை மணக்கக் கருதுமிடத்து இவர் உயர் குடியினராதல் வேண்டுமெனத் தேவர் வற்புறுத்துகின்றார். இழிந் தாரை மணத்தல் ஆகாது (185). பெண் கொடுப்பவர் ஆண்மையும், மிக்க வன்மையும் உடையராதல் வேண்டும் (1919). இனி, மகளிர் தம் மனத்துக்கினிய காதலரை மணந்து இனிது கூடியிருக்கும்போது பேறும் மகிழ்ச்சியும் பிரிந்தபோது வாடி யிருக்கும் மெலிவும் தேவரால் பெரிதும் விரித்துக் கூறப்படுகின்றன. இவர்கள் தம்மனையில் கிளிபூவை முதலியவற்றை வளர்த்துத் தம் மக்கள் போலப் பேணி வளர்க்கின்றனர். குணமாலை போலும் மகளிர் அவற்றைத் தூது விடுகின்றனர். முல்லைக் கொடி வளர்த்தலும் அது முதன் முதல் பூக்கத் தொடங்குகையில் அதற்குச் சிறப்புச் செய்தலும் அவர்கட்கு இயல்பு. இவ்வண்ணம் தேவர் மகளிர் மனப்பான்மையும் ஒழுக்கமும் சொன்முறையும் பிறையும் மிக விரியக் கூறுகின்றாராகலின், சிறப் புடைய சிலவே ஈண்டு விரிவஞ்சிச் குருங்க உரைக்கப்பட்டன. ஏனைய நலத்தை முதனூலுட் காண்க. 19. தேவரது புலமை நலம் இவ்வராய்ச்சி முற்றும் ஆசிரியர் திருதக்கதேவரது புலமை நலத்தை நமக்கு அறிவுறுத்துவதே யாயினும், மேலே கூறிய ஆராய்ச்சி வகைகளில் அடங்காது விஞ்சி நிற்கும் அவரது புலமை நலத்தை ஒருவாறு சுருங்கிய அளவில் காணும் கருத்தால் இப் பகுப்பு ஈண்டுக் கொள்ளப்பட்டு ஆராய வேண்டுவதாகின்றது. தேவர் இக் காவியத்தை எழுதிய நோக்கம் இக் காவியத்தின் இலக்கிய இன்பத்தைத் தமிழ் நன்மக்கட்கு ஊட்டு முகத்தால், சமண சமயக் கருத்தையும் மக்கட்கு அறிவுறுத்துவதென்று முன்னமே கூறினாம். அக்கருத்தைப் பல விடங்களில் அருக பரமேட்டியை வணங்கும் வணக்கப் பகுதிகளாலும், அறவுரைகளாலும், முத்தியிலம் பகத்தில் சமண சமயக் கருத்துக்களை விரித்துரைக்கும் பகுதியாலும் நிறைவு செய்துகொள்கின்றார். இவற்றாலும் அமையாது வினையின் இயல்பும், அது தன்னைச் செய்யும் வினைமுதலை விடாது தொடர்ந்து தன் பயனை நுகர்விக்கும் திறமும், இடையிடையே தொடுத்து தாம் மேற்கொண்ட சமயத் தொண்டினைச் சிறப்பித்துக் கொள்ளுகின்றார். கடலில் வங்கம் செலுத்திச் சென்ற சீதத்தன் என்னும் வணிகன், தன் வங்கம் கடலில் அழுந்தும்போது, அதன்கண் இருந்தார்க்கு வினையின் இயல்பு கூறுவானாய், “வினையது விளைவின் வந்த வீவருந் துன்பம் முந்நீர்க் கனைகட லழுவம் நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா; நனைமலர்ப் பிண்டி நாதன் நாண்மலர்ப் பாதமூலம் நினைமின்கள் நீவிரெல்லாம் நீங்குமின் அச்சம்” (513) என்று கூறுதும், பிறவும் இக் கருத்தை வலியுறுத்தும். இந்நூற்கண் இடையிடையே தேவர் அறிவுரைகள் பல பொது நிலையில் நின்று உணர்த்துகின்றார். இன்பம் வேண்டுபவர் இடையில் எய்தும் துன்பங்கட்கு உள்ளம் உடைதலாகாது. “துன்பமுற்றவர்க் கலால், இன்பமில்லை” என்பதனால் இதனைக் கூறித் தெருட்டு கின்றார். நல்லவை புரிபவர்க்கே வெற்றியும் திருவும் எய்தும் என்றும், ஏனையார்க்கு அவை எய்தா என்றும் தேவர் பலவிடங்களில் இடை விடாது உரைத்துச் செல்கின்றார். துன்பத்தைப் பொறுத்து அதனை இன்பமென்று கருதித் தாங்குவது அரிய செயலாம் என்பார். “அன்பினின் அவலித் தாற்றா தழுவதும் எளிது; நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது; சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பட்டார் துகைத்தவத் துன்பம் தாங்கி இன்பமென் றிருத்தல் போலும் அரியதிவ் வுலகில் என்றாள்” (1399) என்பது முதலிய நல்லுரைகளால் துன்புற்று மெலிவார்க்குத் தேற்றரவு கூறித் தெளிவிக்கின்றார். இவ்வாறே பொய், கொலை, கள், களவு, காமம், ஊனுண்டல் முதலிய தீவினை செய்தால் வரும் கேடுகளைப் பலவிடத்தும் பலவகையாலும் இடையிடையே உரைப்பது அவரது சான்றாண்மையை நன்கு நிலைநாட்டுகிறது. “அல்லித்தாளற்ற போழ்தும் அறாதநூல் அதனைப் போலத் தொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப் புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்று எல்லையில் துன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்கள் அன்றே.” “அறவிய மனத்தராகி ஆருயிர் கருளைச் செய்யின் பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரோ டாடி மறவியொன் றானுமின்றி மனத்ததே சுரக்கும் நல்லான் கறவையிற் கறக்கும் தம்மால் காமுறப்பட்ட வெல்லாம்” (2885-6.) என்பன போன்ற கருத்துக்கள் இந்நூற்கண் மிகப் பெரிதும் மிடைந்து கிடத்தலின் இப்பகுதியை இம்மட்டில் நிறுத்தி, தேவர் இயற்கைப் பொருள்களை எவ்வாறு கண்டு நமக்கு உணர்த்துகின்றார் என்றும், அவற்றால் அவரது புலமை நமக்கு எவ்வகையில் இன்பம் தருகிறது என்றும் சிறிது காண்பாம். தேவரது சொல்லோவியங்களும், சொல்லாடும் நயப்பாடுகளும், பேரின்பம் தருவனவாதலின் அவற்றை அதன்பின் காண்பாம். தேவர் இயற்கையின் காட்சி நலத்தைக் கண்டு இன்புறும் மிக்க ஈடுபாடுடையவர் என்பது அவர் இயற்கை நலங்களை எடுத்தோதும் திறத்தால் நாம் இனிது அறிகின்றோம். சீவகன் தக்கநாடு நீங்கி மத்திமநாடு நோக்கிச் செல்கின்றான். வழியில் குன்றங்களும், காடுகளும் மண்டியிருக்கின்றன. காட்டிடத்தே காயா மலர்ந்து மயிலின் கழுத்துப் போல் நிறஞ்சிறந்து தோன்று கின்றன. கோங்கமரங்கள் பூத்திருக் கின்றன. குன்றின் உச்சியில் வெண்மழை தவழ்கிறது. அதன் தோற்றம் மலையின் குறுக்கே ஒரு மலைப்பாம்பு வீழ்ந்து கிடந்து தன் தோலை உரிப்பதுபோ லுளது. மலையுச்சியி லிருந்து ஒழுகும் வெள்ளிய அருவிகள் உரிந்த தோல் போலக் காட்சியளிக்கின்றன. வீழும் அருவியின் முழக்கம் முழவுபோல் எழுகிறது. அதற்கேற்ப வண்டுகள் பாடுகின்றன; மயில்கள் ஆடி நாடகவின்பத்தை விளைக்கின்றன. இக் காட்சியை மனக்கண்ணிற் கண்ட தேவர், “கலவமாமயில் எருத்திற் கடிமலர் அழிந்தன காயா;” “பலவும் பூத்தன கோங்கம்;” “வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும் பாம்பு ஊழ்ந்து தோலுரிப்பன போல் ஒத்த; மற்றவற் றருவி, தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக்குறுத் தனவே” (1567) என்று பாடிக் காட்டுகின்றார். பின்பு அச் சீவகன் அந்நாட்டின் கண் உள்ள ஏமமாபுரத்தே தங்கியிருக்குங்கால் மலர்ச்சோலை ஒன்றிற் குள் நுழைகின்றான். அங்கே ஒரு பால் முல்லை அரும்பியுளது; செங்காந்தள் மலர்ந்துளது; குரவம் அரும்பீன்று நிற்கிறது; கொடி முல்லை செம்முகையரும்பித் திகழ்கிறது. இதனைத் தேவர் வியந்து, வெருகு வேட்பச் சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய அரவு பைந்தாவித் தன்ன அங்காந்தள் அவிழ்ந்தலர்ந்த; குரவங் கொண்ட குறும்பூழ்போல் கொழுங்கால் முகைசுமந்த குருதிக் கூரெயிறு கூத்தியர்கண் கொண்ட கொடித் தளவமே” (1658) என்று அழகுதிகழக் கூறுகின்றார். சீவகன் சுதஞ்சணன் பால் விடைபெற்று வேறு நாடுகளைக் காண வெண்ணி வந்து கொண்டிருக் கின்றான். வழியில் ஒரு காட்டில் களிறும் பிடியும் ஊடிநிற்கும் செயலைக் காண்கின்றான். களிற்றின் செயல் பரத்தையிற் பிரிந்து போதரும் ஆண்மகனொருவன், தன் பரத்தைமை யறிந்து புலக்கும் காதலியைத் தெருட்டுவதுபோலத் தோன்றுகிறது. அக் குறிப்பைத் தேவர் தேர்ந்து, “தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தல் தொடேல்எம்மில் பீடேந்து அரிவையர் இல்பெயர்க என்று ஊடும் மடவார்போல் கோடேந்து குஞ்சரங்கள் தெருட்டக் கூடா பிடிநிற்கும் காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலில் கழலானே” (1236) என்று சிறப்பிக்கின்றார். காந்தருவதத்தை விணைப்போர் செய்தபோது இசைப் பாட்டு ஒன்று பாடுகின்றாள். அப் பாட்டின்கண் தேவர் இயற்கைநலத்தை இனிது தோன்ற அமைத்துப் பாடுகின்றார். காஞ்சிமரத்தில் குயிற்சேவ லொன்று தன்பெடையுடன் இருக்கிறது. காஞ்சிப்பூவினை அச் சேவற்குயில் கோதுகிறது. அதன் பசிய தாது குயிலின் மீது படிந்து விடவே, குயில் பசந்து நிறம் வேறுபடுகிறது. அதுகண்ட குயிற்பெடை அதனை வெறுத்து நீங்க, அச்சேவல் அப்பசும் பொடி உதிருமாறு சிறகை உதறிச் சென்று பெடையை வணங்கி அதன் ஊடலைத் தீர்க்கிறது என்ற கருத்தமைய, “குறுத்தாள குயிற் சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக்கொளத் தேற்றி உறுப்பினால் அடிபணியத் தலைவந்த திளவேனில்.” (654) என்று பாடுகின்றார். காவியங்களில் வரும் பெருமக்களின் செயல்கண்டு இயற்கைப் பொருள்கள் இரக்கங் கொள்வதும், இயற்கைப் பொருள்களின் நிகழ்ச்சி கண்டு மக்கள் மனம் திரிபு எய்துவதும் உயரிய காவியங் களில் காணப்படும் ஒண்பொருள் என்பர். அத்துறையிலும் தேவர் சிறிதும் பின்னடைகின்றார் இல்லை. விசயை நிறைந்த கருப்பமுற்ற இராசமா புரத்துச் சுடலையில் நடுநிசியில் மயிற்பொறியில் வந்து இறங்கிச் சீவகனைச் கருவுயிர்க்கின்றாள். அவளை அந்நிலையில் காணும் கல்லும் புல்லும் கண்டு உருகும் என்பது வெறுஞ் சொல்லளவே யாகாது உண்மையே யாயிற்று என்பார்போலத் தேவர், விசயையைக் கண்ட மரங்கள் உயிருடையவாதலின் மனத்தே எண்ணி நீர் சொரிந்தன என்பாராய், “அந்தோ விசயை பட்டனகொண்டு அகங்கை புறங்கையானால் போல் கந்தார் களிற்றுத் தங்கோமான் கழிய மயிலோர் மயிலூர்ந்து வந்தாற் போலப் புறங்காட்டுள் வந்தாள் தமியே எனமரங்கள் சிந்தித் திரங்கி யழுவனபோல் பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே” (312) என்று பரிந்துரைக்கின்றார். மரங்கட்கு உயிருண்டென்பது தமது கருத்தென்பதைத் தேவர், “அவர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிரில்லை யென்பார், பீத்தலராயின் பேய்கள் என்றலால் பேசலாமோ” (1915) என்பதனால் வெளிப்படுக்கின்றார். சீவகன் சுதஞ்சணனின் நீங்கித் தனித்து வரக்கண்ட குன்றங்களும் பிறவும். அவனது தனிமைக்கு இரங்கி அழுதன என்பார் தேவர், “வாளுழலை பாய்ந்திளைய வளநாகிட் டினமென்னும் தாளொழியப் போரேறு தனியேபோந்த தெனவெண்ணி, நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணம் கரிந்துருகிக் கோளுழுவை யன்னாற்குக் குன்றமும்நின் றழுதனவே” (1233) என்று மனம் குழைந்து மாழ்குகின்றார். இவ்வண்ணமே, இயற் கை நிகழ்ச்சிக்கண்டு விசயை தன் மகனை நினைந்து புலம்பும் திறத்தை, அழகிய நிகழ்ச்சி ஒன்றால் விளக்குகின்றார். விசயை தண்டா ரணியத் துத் தாபதப்பள்ளியில் இருக்குங்கால் ஆமான் கன்றொன்று அங்கே பசித்து நிற்கிறது. அருகே அதன் தாயில்லை. கவரிமா ஒன்று நிற்கிறது. ஆமான் கன்று அக் கவரிமாவின் பாலையுண்டு பசி தீர்கிறது. அதனைக் காணும் விசயை தன்மகனும் தன் அருகில்லாமையின் பிறர் பாலை யுண்பன் என்று நினைந்து கதறிப் புலம்புகின்றாள். இச் செய்தியைத் தேவர், “மெல்விரல் மெலியக் கொய்த குளநெல்லும் விளைந்தஆம்பல் அல்லியும் உணங்குமுன்றில் அணில்விளித் திரிய, ஆமான் புல்லிய குழவித் திங்கள் பொழிகதிர்க் குப்பைபோலும் நல்லெழில் கவரி யூட்ட நம்பியை நினைக்கும் அன்றே” (355) என்கின்றார். சீவகன் ஒரு நாள் தன் மனைவியருடன் சோலைக்குச் செல்கின்றான். ஆங்கே அவருடன் இனிதிருக்கையில் மந்தியின் ஊடல் தீர்க்கும் கடுவன் ஒன்று பலாப்பழம் ஒன்றைக் கொணர்ந்து அதனைக் கீறிச் சுளையை யெடுத்து மந்திக்குக் கொடுக்க, அதுவும் அதனை வாங்கி உண்iயில், சோலையின் காவலன் சென்று அவற்றை வெருட்டியோட்டிவிட்டு, அக் கனியைத் தான் கவர்ந்து செல்கின்றான். அந் நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் உள்ளத்தே துறவுள்ளம் பிறந்து விடுகிறது. அவன், “கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது; இப்பழம் துரந்துகொண்ட சிலதனும் என்னை யொத்தான்; இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று மெய்ப்பட உணர்வுதோன்றி மீட்டிது கூறினானே;” “மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வௌவி வலியவர் கொண்டு மேலை வரம்பிகந் தரம்பு செய்யும் கலியது பிறவி கண்டாம்; காலத்தால் அடங்கி நோற்று நலிவிலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான்” (2735-6) என்று தேவர் கூறி, இயற்கை நிகழ்ச்சியால் மக்கள் அறிவு திருந்தும் நெறியினை விளக்குகின்றார். இனி, தேவர் இயற்கை நிகழ்ச்சிகளைக் கொண்டே பல அரிய அறங்களை மக்கட்கு உணர்த்துகின்றார். யாறுகளில் வரும் நீர் சிறு சிறு கால்வாய்களின் வழியாக வயல்கட்குச் சென்று பாயும் நெறிக்குத் தேவர் தெங்கின் இலையை உவமை காட்டி, “பழங்கொள் தெங்கிலை யெனப் பரந்து பாய்புனல்” (40) என்பது நமக்குப் பெரியதோர் இறம்பூதினைப் பயக்கின்றது. கடைசியர் வார்த்த கள்ளைக் கடைஞர் உண்டபோது, ஒழுகிய அக்கள் அங்கிருந்த குழியிலே தேங்கி நிற்ப, அதனை இளவன்னம் ஒன்று உண்டு மயங்கி நாரையைத் தழுவ முயல்கின்றது; இனமல்லாத நாரையைத் தன் இனமென அன்னம் கள்வெறியால் மயங்குவதைக் காணும் பெடை மயில் தன் சேவலுக்குக் காட்டி அதனைத் தெருட்டுகின்றதெனக் கள்ளுண்டலால் வரும் கேட்டைத் தேவர், “வளைக்கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தெற்றுழிக் களிப்பவுண் டிளவனம் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே” (50) என்று நமக்குக் காட்டுகின்றார். கீழ் மக்கட்குச் செல்வம் வந்தால் அவர் தலை நிமிர்ந்து நிற்றலும், மேலோர்க்காயின் அவர் அடங்கி வணங்கி யொழுகுதலும் உண்டென்னம் உண்மையை, தேவர் நெற் பயிர்மேல் வைத்து, “சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” (53) என்று இன்புறக் கூறுகின்றார். இவ்வாறு வருவன பல. இவ்வண்ணமே எளிய உவமங்களைக் கொண்டு அரிய பொருள் களை விளக்கும் புலமை நலம் தேவர்பால் சிறந்து நிற்பக் காண்கின் றோம். உப்புக் கலந்தவுடனே சமைக்கப்பெறும் உணவுப் பண்டம் சுவை நிரம்பி விடுகின்றது. இதனை உவமையாக நிறுத்திச் சீவகன் போரில் இறங்கியவுடனே போர்ச் செயல் மறங்கிளர்ந்து சிறப்பதாயிற் றென்பார், “கடல்விளை யமிழ்தம்கண்ட பொழுதின் நெய் கனிந்த தீஞ்சோற்று, அடிசில் அஞ் சுவையில் மிக்காங்க அண்ணலங்குமரன் ஒன்னார், உடலின்மேல் திரியும் திண்தேர் காண்டலும்” (810) போர் சிறப்பதாயிற்று என்கின்றார். பகைவர் திரள் அழிந்தோடியதற்கு, “ஒளிநல உப்புக் குன்றம் ஊர்புனற் குடைந்ததே போல்” (818) என்று உவமம் காட்டிக் “களிநல மன்னர் தங்கள் கடற்படை உடைந்தது” என்று குறிக்கின்றார். நிரை மீட்டு வந்த சீவகன் தெருவழியே சென்ற போது, அவன் சென்ற நெறியே மகளிர் கண்களும் தொடர்ந்து சென்றன என்பதற்கு நெருஞ்சிப் பூவை உவமித்து, “..... அணிமலர்த் தடங்கண் எல்லாம் நீள்சுடர் நெறியை நோக்கும் நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல் காளைதன் தேர்செல் வீதி கலந்துடன் தொக்க அன்றே” (463) என்று இயம்புகின்றார். கோவிந்தையாரின் மெய்ந்நலம் கூறலுற்ற விடத்தும் தேவர் ஆயர்க்கு எளியனவாயுள்ள பொருளையே எடுத்து உவமமாக ஆளுவார். “வெண்ணெய்போன் றூறினியள் மேம்பால் போல் தீஞ்சொல்லள், உண்ணவுருக்கிய ஆன் நெய்போல் மேனியள் ” (482) என்று கூறுகின்றார். சீவகன் காட்டகத்தே கண்டு தெருட்டிய வேட்டு வன் ஒருவன் இயல்பைக் கூறவந்த விடத்தும், தேவர், அவன் கருத்த மேனியும் ஆழ்ந்த மார்பும் கரடிபோல் மயிர்செறிந்த மெய்யும் உடையன் என்று கூறுவார், “காழகம் ஊட்டப் பட்ட காரிருள் துணியு மொப்பான்; ஆழளை உடும்பு பற்றிப் பறித்து மார்பொடுங்கி யுள்ளான்; வாழ்மயிர்க் கரடியொப்பான்” (1237) என்று உரைக்கின்றார். உவமிக்குமிடத்து உவமம் பொருளைவிட உயர்ந்ததாக இருப் பதே சிறப்பென்பதும், அவ்வுவமமும் அறிஞர் தக்கதேயென உடன் படும் தகையதாய் இருத்தல் வேண்டும் என்பதும் தமிழ் மாண்புலவர் கள் கண்ட சால்புரைகளாகும். தேவர் பலவிடங்களில் இவ்வரம்பு கடந்து நாய்நரி முதலிய இழிந்த பொருள்களையும் உவமமாக வழங்குகின்றார். சச்சந்தன் தன் அரசு முறையை ஏற்று வையத்தைக் காத்தல் வேண்டுமெனக் கட்டியங் காரனை வேண்டிக்கொண்ட போது, அவன், உடன்படும் குறிப்பும் சிறுமையும் தோன்ற. “........ அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்டதொக்கும் கண்ணகன் ஞாலங்காத்தல் எனக்கு” (202) என்று கூறுகின்றான். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்று அர சுரிமை யெய்திய செய்தியை, “செங்கட் குறுநரியோர் சிங்கவேற் றைச் செகுத்தாங்கு அதன் அடியைச் சேர்ந்தால் ஒப்பச்” (297) சேர்ந்தான் என்றும், சீவகனைச் சூழ்ந்துகொண்ட வீரரை, “சிங்கவேறு எள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்” (1090) என்றும், “கட்டியங் காரனென்னும் கழுதை நம்புலியைப் பாய” (1141) என்றும், “எரியொடு நிகர்க்கு மாற்றல் இடைககுரற் சிங்கம் ஆங்கோர், நரியொடு பொருவதென்றால் சூழ்ச்சிநிலை துணையொடு என்னாம்.” (1933) என்றும் தேவர் கூறுவது காண்க. தேவர் தாம் சொல்லும் காவிய நிகழ்ச்சிக்கண் இடையிடையே அரிய நிகழ்ச்சிகள் நிகழுமாயின் அவற்றிற்குரிய காரணத்தையும் உடன்கூறிச் செல்லும் திறம் மிகவும் நன்றாயிருக்கிறது. சீவகன் நாய்க்கு மந்திரம் கற்பித்தவுடன், அது தேவனாகிச் செல்கின்றது. அஃது எவ்வாறாகும் என்றொரு கடாவினை யெழுப்பித் தேவர் அதற்கு ஒரு விடையும் கூறுவாராய், “சொல்லிய நன்மையில்லாச் சுணங்கன் இவ்வுடம்பு நீங்கி எல்லோளித் தேவனாகிப் பிறக்குமோ,என்னவேண்டா; கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதம் குத்த எல்லையில் செம்பொனாகி எரிநிறம் பெற்றதன்றே” (965) என்று உரைக்கின்றார். இவ்வாறே சீவகன் காந்தருவதத்தையை மணந்த காலத்து எதிர்ந்த பெரும்படை வேந்தரை வென்ற செய்தி பற்றியும் கடாவிடை நிகழ்த்தி, “உறுபடை மன்னர்தம்மை யுடற்றியொன்றானு மின்றிச் சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ, என்னவேண்டா செறியெயிற் றாளி வேழப் பேரினம் செகுத்ததன்றே உறுபுலி ஒன்றுதானே கலையினம் உடற்றிற்றன்றே” (819) என்று முடிக்கின்றார். “ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய, வழுக்கியும் வாயாற் சொலல்” என்ற திருக்குறள் தமிழறிஞர் அனைவரும் நன்குணர்ந்த ஒன்றாகும். இதனைத் தேவர் பொன்னேபோல் போற்றி ஒழுகுகின்றார் என்பதனை இக்காவியம் நமக்குக் காட்டுகின்றது. உயர்ந்தோர் பிறர்க்குற்ற வருத்தத்தைக் காண நேரின், வருத்தமுறுவார் உறுதற்கு ஏது அவர் செய்த வினையும் அவ் வினைக்கு முதலாய அவருமே யாதலின் அவரை நோதற்கு வழியின்மை தெளிந்து, தாம் செய்த பாவமாகக் கூறிக்கொள்ளுவது ஒழுக்க நெறியாகும். விசயை சுடலையில் தனித்து இருக்கும்போது தெய்வமொன்று கூனி வடிவிற் போந்து அவளைத் தேற்றுமுகத்தால், “எம்மனை! தமியையாகி இவ்விட ருற்றதெல்லாம், செம்மலர்த்திருவின் பாவாய், யான் செய்த தீமை” (315) என்று உரைப்பதும், அச்சணந்தியாசிரியன் சீவகன் வரலாறு கூற, அது கேட்டு அவன் வருந்துதலும், அவ்வச்சணந்தி, “இனையை நீயாயதெல்லாம் என்மனோர் செய்த பாவம் நினையல் நீ, நம்பி” (391) என்பதும், சீவகன் நிரைமீட்டு வந்த சிறப்பைக் கண்ட நன்மகளிர் வியந்து, “செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவம் உடையள் என்பார், எம்மலைத் தவஞ்செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார்” (467) என்பதும், இவை போல்வன பிறவும் மேற்கூறிய கருத்துக்குப் போதிய சான்று பகர்கின்றன. இனி, அவ்வக்கால நிலைகளை எடுத்துக் காட்டுவதில் மிக்க சிறப்பும் மேன்மையுமுடையவராய்த்தேவர் திகழ்வதை ஓரிரண்டு எடுத்துக்காட்டுக்களால் உரைத்து விடலாம். ஞாயிறு எழுவதும் மாலைப்போதும் திங்கள் நிலவும் வேனில் முதலிய பெரும் பொழுதும் பிறவும் ஓதுமிடத்துப் பெறப்படும் தெளிவும் காட்சியும் புலவர் புலமைக்கு அழகு தருவனவாகும். நிலைத்தை ஒரு மகளாகவும் இருளை அவள் போர்த்திருக்கும் போர்வையாகவும் நிறுத்தி, ஞாயிறு* கதிர்கள் என்னும் தன் கையை நீட்டி அப்போர்வையை நீக்கி அம் மகளின் கோலத்தைக் காண்ப தாகவும் கூறும் கருத்தினராய்த் தேவர், ஞாயிறு காலையில் எழும் காட்சியை நாம் கண்டு இன்புறுமாறு. “பொய்கையுள் கமலத் தங்கண் புள்ளெனும் முரசம் ஆர்ப்ப வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கொளித் தடக்கை நீட்டி மையிருட் போர்வை நீக்கி மண்ணக மந்தை கோலம் பையவே பரந்து நோக்கிப் பனிவரை bறி சேர்ந்தான்” (1413) என்று அழகு திகழக் கூறுகின்றார். இவ்வாறு எழுந்த ஞாயிறு மேற்றிசை யில் மறையும் திறத்தைக் கூறுவார், மக்கள் குழவியாய்ப் பிறந்து குமரராய் ஒளிமிகுந்து கிழவராய் மேனிதளர்ந்து சாம்பும் குறிப்பை உட்புகுத்தி, “குழவியாய்ப் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால, விழைவுதீர் கிழவ னாகி விழுக்கதிர் உலந்து வீழ” (1510) என்று உரைக்கின்றார். இவ்வாறே திங்கள் எழும் காட்சியை. “காழகச் சேற்றுள் தீம்பால் கதிர்மணிக் குடத்தின் ஏந்தி வீழ்தரச் சொரிவ தேபோல் விளங்கொளித் திங்கட் புத்தேள் சூழ்இருள் தொழுதி மூழ்கத் தீங்கதிர் சொரிந்து நல்லார் மாழைகொள் முகத்தின் தோன்றி வளைகடல் முளைத்த தன்றே” (1548) என்று பாராட்டிக் கூறுகின்றார். மாலைப்போதின் நலங்கூறலுற்ற தேவர், காதலனைப் பிரிந்து வருந்தியிருக்கும் ஒருத்தியின் நிலையில் வைத்து, “அவிழ்ந்தேந்து பூங்கோதை ஆகத் தலர்ந்த முகிழ்ந்தேந்து பூண்முலைமேல் பொன்பசலை பூப்பப் பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப அன்புருகு நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை” (2060) என்று இன்பம் கனிய இசைக்கின்றார். இளவேனிற் பருவத்தின் எழில்நலம் கூறக் கருதிய தேவர், சீவகன் தன் மனைவியருடன் இள வேனிற் சோலைக்கண் இருந்து இன்புற்ற செய்கை மேல்வைத்து, “குரவம் பாவை கொப்புளித்துக் குளிர்சங் கீர்ந்த துகளேபோல மரவம் பாவை வயிறாரப் பருகி வாடை யதுநடப்ப விரவித் தென்றல் விடு நூதா வேனி லாற்கு விருந்தேந்தி வரவு நோக்கி வயாமரங்கள் இலையூழ்த் திணரின் றலர்ந்தனவே.” (2699) “இளிவாய்ப் பிரசம் யாழாக இருங்கண் தும்பி குழலாகக் களிவாய்க் குயில்கள் முழவாகக் கடிபூம் பொழில்கள் அரங்காகத் தளிர்போல் மடவார் தணந்தார்தம் தடந்தோள் வளையும் மாமையும் விளியாக் கொண்டிங் கிளவேனில் விருந்தா ஆடல் தொடங்கினான்” (2700) என்று கூறுகின்றார். இவ்வாறே இக்காவியத்துள் ஏனைப் பெரும் பொழுதுகளும் சிறு பொழுதுகளும் ஆங்காங்குத் தேவரால் அழகாக விரித்துக் கூறப்படுகின்றன. அவற்றையெல்லாம் எடுத்தோதின் பெருகுமென் றஞ்சி மேற் செல்லுகின்றாம். சிலவாய சொற்களால் நம் உள்ளக்கிழியில் அழகிய சொல்லோவிம் எழுதுதலில், தேவர் மிக்க நயங்கொண்டு விளங்குகின்றார். ஓவியக் காரரும் காவிக்காரரும் உருவங்களை அறிவுக்கண்ணுக்கு வழங்கிக் காட்சியின்பம் தருதலில் ஒத்தவரே என்று அறிஞர் கூறுவது தேவரால் நன்கு மெய்ப்பிக்கப்படுகிறது. மேலே காட்டிய இயற்கைக் காட்சிகளையுணர்த்தும் செய்யுட்களே இவ்வுண்மையை உணர் தற்குச்சாலும்; எனினும், மகளிர் இருவரது உருவவோவியத்தைச் சொல்லால் தேவர் காட்டும் திறத்தை எடுத்துக்காட்டுவது ஈண்டைக்கு ஏற்புடையதாக இருக்கிறது. சீவகன் திருமுகவடிவில் தொடுத்த பூமாலையைக் கனக மாலை யின் தோழி அவளிடத்தே தர, அவள் அதனைப் பார்த்துத் திருமுகக் கருத்தை யுணர்ந்து சீவகன் பால் கருத்தைப் போக்கிச் செயலற்றிருக் கின்றாள். அவள் இருந்த நிலை இயக்கி யொருத்தி இறைவனை மனக்கண்ணால் எண்ணி இன்புறும் காட்சியை ஒத்திருக்கிறது. இவ்வாறு கூறிவிடின் சொல்லோவியம் நிரம் பாமையுணர்ந்து, தேவர், அவளது புறவடிவத்தையும் தம் மனத்தே கண்டு நமக்கு அறிவிப் பாராய், பின்னி விட்ட பிடித்தடக்கை இரண்டு போன்று திரண்டழகார் கன்னிக் கலிங்கம் அகிலார்ந்து கவ்விக் கிடந்த குறங்கினாள்; மின்னுக் குழையும் பொற்றோடும் மிளிர எருத்தம் இடம்கோட்டி என்னும் இமையாள் நினைந்திருந்தாள் இயக்கி யிரந்த எழில் ஒத்தாள் (1665) என்று உரைக்கின்றார். கனகமாலை இரு கால்களையும் வளைய நீட்டிப் பின்னிக் கிடத்தி, வலக்காதினும் இடக்காதினும் அணிந்த குழையும் தோடும் நமக்கத் தோன்ற, இடந்தோட் புறத்தே கழுத்தைச் சிறிது சாய்த்து இமையாது எண்ணமிட்டிருக்கும் நிலையினைத் தேவர், “பிடித்தடக்கை இரண்டுபோன்று கலிங்கம் கவ்விக்கிடந்த குறங் கினாள்” என்றும், “எருத்தம் இடம்கோட்டி” என்றும், “என்னும் இமையாள் நினைத்திருந்தாள்” என்றும் வரும் தொடர்களால் நம் உள்ளக்கிழியில் உயிரோவியம் செய்தலைக் காண்மின். இவ்வாறே சுரமஞ்சரி யென்பாள் காமன் கோட்டம் சென்று தான் சீவகனைப் பெறவேண்டுமென்னும் கருத்தால் வழிபட்டு அவன் உருவே நிலவும் நெஞ்சுடன், வேற்று வடிவம் கொண்டு தன்னோடு வந்த சீவகமுதியோன் இருந்த அறைக்கு வருகின்றாள். அங்கே சீவகன் தன் உண்மை வடிவுடன் நிற்கின்றான். அவள் மருட்கையும் தெளிவும் அளவிறந்த காதலும் படிப்படியே எய்தப் பெற்று நாணிக் கொடிபோல வளைந்து நிற்கின்றாள். அவளுடைய மெய்ந்நிலையைத் தேவர் மனக்கண்ணிற்குக் கொணர்தற்கண் சிறந்த சொல்லோவியம் தொடுக் கின்றார். நாணி நிற்கும் அவள் முகம் சிறிது சாய்ந்திருக்கிறது; அக் காலை அவள் காதில் அணிந்த பொன்னோலை முகத்தே ஒளிவிட்டுத் திகழ்கிறது; அவள் அணிந்த மாலை துவள்கிறது; குழல் சோர்கிறது; மற்றொரு காதிலிருந்து குழை வில்போல ஒளிவீசுகிறது; சாய்ந்த அவள் முகத்து நின்று விழிகள் காதற் குறிப்புடன் அவன்பால் அழகிய பார்வையைச் செலுத்துகின்றன. இக் காட்சியைத் தேவர், “இலங்குபொன் னோலை மின்ன இன்முகம் சிறிது கோட்டி அலங்கலும் குழலம் தாழ அருமணிச் குழையோர் காதில் கலந்தொளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச நலங்கனிந் துருகி நின்றாள் நாமவேற் காமர் கண்ணாள்.” (2069) என்று புகைப்படம் பிடித்தாற் போலக் காட்டுகின்றார். இவ்வாறு தேவர், ஆடவர், மகளிர், முதலாயினார் செயல் களையும், அன்னம், கிளி, பூவை முதலிய புள்ளினத்தின் செயலையும், பிறவற்றின் செயல் களையும் எடுத்துக் காட்டும் திறங்களைக் காணலுறின் பேரின்பமே கனிந்து நிற்கும். தேவர் பாவன்மை, நாவன்மை என்ற இரண்டுமேயன்றிச் சீரியபுலமையுடையவ ரென்பது இக்காவியத்தால் தெற்றென விளங்கு கிறது. புலமையாவது கல்வி, கேள்விகளினாலாகிய செயற்கை யறிவும், இயற்கையறிவும், சிறந்து பொருள்களின் உண்மைத் தன்மையை ஒரு சிறிதும் குன்றாது காணவல்ல திறமையாகும். இத் திறமை வெளியா தற்குப் பாவன்மையும், நாவன்மையும், வாயிலாக அமை கின்றன. புலமை பெறுவது அரிது; ஏனை இரண்டும் பயிற்சிமிகுதி யால் எளிதில் கைவரப் பெறுவனவாம். இதனாற்றான் இக்காலத்தே பாவலரும் நாவலரும் மல்கித் தோன்றுகின்றனர். புலவர்பால் பாவன்மையும் நாவன்மையும் சிறந்திருப்பது அரிது; ஏதேனும் ஒன்றுதான் சிறந்திருக்கக் காண்கின்றோம். நம் தமிழ் உலகில் புலமையும் பாவன்மையும் கலந்தவர் பெரிதும் இருந்திருக் கின்றனர். நாவன்மையின் அருமை பெருமைகளை யுணர்ந்தே திருவள்ளுவர் முதலிய சான்றோர் சொல் வன்மை யெனத் தனிப்பட வரைந்து கொண்டு அதன் இன்றியமை யாமை யினைப் பல படியாலும் வற்புறுத்தினர். அவர் தம் முயற்சியின் பயனே திருத்தக்க தேவர் முதலிய சான்றோர் உளராதற்கு ஏதுவாயிற்று. ஆதலால், தேவர்பால் சிறந்த பாவன்மையும் நாவன்மையும் தெளிந்த புலமையும் இருப்பக் காண்கிறோம். இவ்வுண்மையை மெய்ப்பித்தற்கு காட்டியவை அமையுமாதலின், அவர் மக்கள் மனத்தே நிகழும் நிகழ்ச்சிகளை உண்மைத்தன்மை குன்றாவாறு கண்டுரைக்கும் திறத்தைச் சிறிது காட்டுகின்றாம். மனத்தின்கண் நிகழும் நிகழ்ச்சிகளை ஒரு புலவன் தானே யுணர்ந்து உரைக்கவேண்டின், அவன் முதற்கண் தன்னையே வேறாக நிறுத்தி, தன் மனத்தையும் உடலையும் தனித்தனிக் கூறுபடுத்தி, மனத்து நிகழும் கருத்துக்கள் உடலிடத்தே மெய்ப்பட்டுத் தோன்றும் வகை யினை அறிந்து கோடல் வேண்டும். பின்பு, அவற்றைப் படிப்படியாக வெளியிடுதல் வேண்டும். இது சொல்லற்கு எளிதே; ஆயினும் வேறுபடுத்திக் காண்டலும் கண்டவற்றை ஒழுங்கு செய்து ஆராய்தலும் மிகவும் அரியவாகும். இந் நெறிகளை மேனாட் டறிஞர் பல்வேறு வகையாக ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். அவர் காட்டிய நெறியே பற்றி நாம் தேவரையும் ஆராய்ந்து காண்கின்றோ மாகலின், அவருடைய புலமைத் திறம் நம் ஆராய்ச்சிக்கு இந்த எண்ணங்களை எண்ணுமாறு எழுப்புகின்றது. கேமசரியுடன் கூடியிருந்த சீவகன் ஒரு நாள் திடீரென்று அவளுக்கு வெளிப்படையாகச் சொல்லாது பிரிந்துவிடுகின்றான். இருவரும் உயிரொன்றிய காதற்கலப்பால் ஒருவரை யொருவர் இன்றியமையாது ஒழுகுகின்றனர். சீவகன்பால் கேமசரிக்கு உண் டாகிய காதல் அவளுடைய உயிரையும் உணர்வையும் விழுங்கி விடுகிறது. சீவகற்கு அவள்பால் உண்டான காதல் அவன் அறிவுக்கு அடங்கி அவன் ஏவல்வழி நிற்கிறது. அதனால் அவன் பிரிந்து போகின் றான். கேமசரியோ அப்பிரிவாற்றாது பெரிதும் புலம்பி நைகின்றாள். பிரிவுத் துன்பம் அவள் நெஞ்சை வெதுப்பிப் பேதுறு விக்கின்றது. அவள் கருத்தில் நுழைந்து தேவர் அவளாகவே மாறி அப்பிரிவால் பிறக்கும் நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக வகுத்தோது கின்றார். சீவகன் பிரிவால் எழுந்த துயரம் அவள் நெஞ்சு முழுதும் நிரம்பிவிடுகிறது; அதனால் அதன்கண் நினைத்தலாகிய தொழில் நிகழாது போகிறது; அதனை யுணரும் அவள், “கழலும் நெஞ்சு” என்று உரைக்கின்றாள். உடனே தன் உடம்பை நோக்குகின்றாள். உடல் மெலிந்திருக்கிறது; செறிய அணிந்திருந்த வளைகள் தாமே கழன்று விழுகின்றன. அதுகண்டு “கைவளை சோருமால்” என்கின்றாள். மெலியும் உடல் தளிர்த்தல் வேண்டின் சீவகன் கூட்டமே வேண்டுவதாம். அவன் சென்ற நெறியும் இடமும் தெரிந்தில; அவனை மீட்டுப் பெறல் அரிது என்னும் உணர்வு பிறக்கிறது; தலை சுழலுகிறது; கண்களும் சுழல்கின்றன. இதனை, “சழலும் கண்களும் ” என்று இயம்புகின்றாள். உடலில் குதியோட்டம் மிகுகிறது. துயர் மிகதியால் உள்ளம் கொதிக்கிறது; உடலெங்கும் ஒரே வெப்பம் கவிந்து கொள்கிறது. அதனையறியும் தான், “சூடுறு பொன்னெனஅழலும் மேனியும்” என்கின்றாள். அவட்கு, இனித்தனக்கு ஆற்றும் வன்மை யில்லை யென்பது புலனாகிறது. “ஆற்றலென் ஐயவோ” என்று கதறுகின்றாள். சீவகன் நினைவு மீண்டும் எழுகிறது. அவனது வடிவம் மனக்கண்ணில் தோன்றுகிறது. அதனைப் பார்த்தலும், “நீங்காத காதலையும் நீத்துச் செல்கின்றனையோ” என்று கூறுவாளாய் “நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ” என்று எதிர்பெய்து பரிகின்றாள். இக்கருத்துக்களை இம் முறையே நிறுத்தித் தேவர், “கழலும் நெஞ்சொடு கைவளை சோருமால்; சுழலும் கண்களும்; சூடுறு பொன்னெ அழலும் மேனியும்; ஆற்றலென், ஐயவோ, நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ” (1518) என்று பாடி மகிழ்வுறுத்துகின்றார். இவ்வாறு கேமசரியின் உள்ளத்தில் நுழைந்து அவள் மயமே யாகிய தேவர், அவள் துயர்மிகுந்துமேலும் சொல்லாடும் வன்மை யிழந்து சோர்ந்து வீழ்ந்துவிடும் நிலையினைத் தாமும் எய்திவிடு கின்றார். சீவகனைக் காணாத வருத்தத்தால் அறிவு கலங்கிய அவள் தன்னொடு பேசக்கூடியன இவை, கூடாதன இவை யென்று அறி யாளாய், மயில், குயில், அன்னம், கிளி முதலியவற்றை நோக்கி, “மடமா மயிலே குயிலே மழலை, நடைமான் அனமே நலமார் கிளியே” என்று அழைத்து, என்னோடு உடனிருந்து இன்ப விளை யாட்டயரும் என் ஐயனை என்று ஏதோ சொல்ல நாவெடுத்தாள். சீவகன் வடிவம் மனக்கண்ணில் தோன்றிற்ற. உடனே நெஞ்சுருகிச் சோர்ந்து விழுந்தாள். சொல்ல எடுத்த சொற்றொடரும் குறை யாகவே நிற்றொழிந்து விட்டது. இதனைத் தேவரும் அக்குறைபாடு தோன்ற, “உடனாடும் என் ஐயனை என்று உருகாத், தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே” (1533)என்று முடித்துவிடுகின்றார். இது நிற்க, தேவர் தம் காலத்தும் அதற்கு முன்பும் வழங்கிய பழமொழிகள் பலவற்றை இக்காவியத்துள் வைத்து அழகு செய் கின்றார். ஒருவர் ஒரு செயலைச் செய்ய அஃது உலகத்தார்க்கு நன்கு விளங்கித் தோன்றி நிற்குமாயின், அதனைக், குன்றின்மேல் இட்ட விளக்குப்போல அது நிலவுகின்றதென்பர். இதனைக் கட்டியங் காரன் செயலில் வைத்து, “ஊன்றிய நாட்டையெல்லாம் ஒரு குடை நிழல் செய்து தோன்றினான் குன்றத் துச்சிச் சுடர்ப்பழி விளக்கிட்டன்றே” (262) என்று உரைக்கின்றார். “கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல்” என்ற பழமொழியை, “கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத் தொடு முடியுமென்பார்” (1116) என்றும், “முள்ளினால் முட்களையுமாறு” என்னும் பழமொழியை “மோதி முள்ளோடு முட்பகை கண்டிடல், பேது செய்து பிறந்திடல் பெட்டதே” (1928) என்றும், “ஆகாதே உண்டது நீலம் பிறிது” என்னும் பழமொழியை, காமன் “கோட்டந்தன்னுள் கொடியினைக் கொணர்ந்து நீலம் உண்டது காற்றி ஆண்பேர் ஊட்டுவல்” (2011) என்றும், கரிக்குருவிக்குக் காக்கை பொன்னிறமாய்த் தோன்றும் என்ற பழமொழியை, “பிள்ளையார் கண்ணுட் காக்கை, கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால்” (1591) என்றும், இவ்வாறே பிறவும் தேவர் கூறிச்செல்வதை இக்காவியத்துள் பல விடத்தும் காணலாம். “இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை, யெல்லாரும் செய்வர் சிறப்பு” என்ற திருக்குறளைச் சீவகன் இலக்கணையை மணந்து வீதியுலா வருங்காலத்தில் அவனைக் காணப் போந்த மகளிர் செய்து கொண்டிருந்த ஒப்பனைகண் வைத்து இன்பமுறக் கூறுகின்றார். மகளிர் உறுப்பினுள் அல்குலும் கொங்கையும் செல்வ முடைய என்று அவற்றை உயரிய அணிகளால் சிறப்பித்தனர்; இடை மெலிந்து நுணுகிக் கிடந்தமையின் அது செய்திலர் என்பார், “செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர்போல அல்குற்கும் முலைக்கு மீந்தார் அணிகல மாய வெல்லாம்’; நல்கூர்ந்தார்க்க இல்லைச் சுற்றம் என்று நுண்ணுசுப்புநைய ஒல்கிப்போய் மாடஞ் சேர்ந்தார் ஒருதடங் குடங்கைக் கண்ணார்’ (2544) என்று உரைக்கின்றார். இங்கும் “கெட்டார்க்கு நட்டாரோ இல்” என்னும் பழமொழியை, “நல்கூர்ந்தார்க்கு இல்லைச் சுற்றம்” என்பதில் வைத்து அமைத்திருக்கும் நயம் காணலாம். நகைச்சுவை காட்டுவதில் தேவர் குறைகின்றார் இல்லை. காந்தருவதத்தையை வீணையில் வென்றபோது சீவகனைப் போரில் வென்று அத் தத்தையைக் கவர்தற்கு வேந்தர் பலரும் படையுடன் சூழ்ந்து கொள்ளக் கண்டதும், தத்தையின்உழை மகளிராய் வாட்படை ஏந்தி நின்ற பெண்கள், “எங்கள் பெண்மையும் ஈர்ம் மலர்த்தார் மன்னர், தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும்” (768) என்று கருதி அவளைச் சூழ்ந்து நிற்கின்றனர். அப்போது அங்கே இருந்த கூன்களும் குறள்களும் அஞ்சி, அங்கே இருந்த பொற் பெட்டி களிலும், சாந்திருந்த பரணிகளிலும் நுழைந்து பதுங்கக் கருதின என்பார், “கூன்களும் குறளு மஞ்சிக் குடர் வெந்து கொழும் பொற் பேழை, தான் கொளப் பாய வோடிச் சாந்துக்கோய் புகிய செல்வ” (769) என்று நகை தோன்றக் கூறுகின்றார். தேவர் இக்காவியத்தின் இடையிடையே மிகப் பல பொதுக் கருத்துகளும் நன்னெறிகளும் உரைக்கின்றார். அவை யனைத்தும் திரட்டிக் காண்பதும் நற்செயலேயாம். அறிஞர்வழிச்செல்லும் அரசர் ஆக்கமுறுவர் (2543) என்பதும், ஆவதும் அழிவதும் அவரவர் பொறியின் வண்ணம் என்பதும், வெற்றித் திருவுடையான் வெற்றிலை யெடுத்து எறிந்தாலும் அது வேலாய் வென்றி விளைக்கும் (820) என்பதும், செல்வமீட்டுவான் திரைகடலோடினும், “திருமுயங்கல் இல்லையெனின் பொருள் ஈட்டம் இல்லை” (2924) என்பதும் பிறவும் தனித் தனியே கண்டு இன்புறற்கு உரியனவாம். ஆண்மக்கள் மிக்க பொருள் கொடுத்தேனும் கற்றல் வேண்டும் என்பதும், பொருளுடையார்க்கே அறமும் பொருளும் இன்பமும் எய்துமாதலின், பொருளீட்டற்கண் அவர் கருத்துடையராய் இருத்தல் வேண்டும் (1930) என்பதும், பெண்மக்கட்கு இடர் உண்டாயின், அதனைக் காணும் ஆண் மக்கள் அவர் இடர் நீக்குவதே பெருந் தகைமையென எண்ணுதல் வேண்டும் என்றற்கு, “நாண் மெய்க் கொண் டீட்டப்பட்டார் நடுக்குறு நவையை நீக்கல், ஆண் மக்கள் கடன்” (1126) என்பதும், நன்மகளிரை மணந்து இன்புற்று வாழும் வாழ்க்கை வாழ்வு; அஃதில்லாத வாழ்வு கானவர் வாழ்வே (1662) என்பதும், பிறவும் மிக்க உறுதி பயக்கும் பொருண் மொழிகளாகும். காந்தருவதத்தையின் வரலாறு கூறுமிடத்துத் தேவர், யாழ், பண் முதலியவற்றின் இயல்புகளை எடுத்தோதுவதை நோக்கின், அவர் இசை நூற் புலமையும் மிக வுடையர் என்பது புலனாகிறது. அவள் இருந்து இசையிசைத்த அரங்கில் பல்வண்ணத் திரைகள் இடப்பட்டிருக்கின்றன. பல்வகைப் பூமாலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. அரங்கின் நிலத்தைச் சாந்தினால் மெழுகி மலர்களைத் தூவி அழகு செய் திருக்கின்றனர். திரையிட்ட அரங்கிற்குள்ளே யிருந்து காந்தருவதத்தை யாழ் வாசிக்கின்றாள் (651). இவ்வாறு திரைக்குள் இருந்து அவைப் பரிசாரம் என்னும் பாட்டைப் பாடிவிட்டுத் திரைநீக்கி, இசைப் போருக்கெனத் தனியே அமைத்திருக்கும் அரங்கிற்குக் காந்தருவதத்தை வந்திருந்து யாழிசைத்துப் பாடுகின்றாள். பாடுவார்க்குள்ள குறை சிறிதும் அவள்பால் காணப் பட்டில. புருவம் ஏறுதல், கண்ணாடுதல், கழுத்து விம்மல், பல் தோன்றல் முதலியன குற்றமாகும் (662). ஈண்டுத் தேவர் கூறுவன பலவும் இசைமரபு என்னும் இசைநூல் கருத்தையே தழுவி யிருக்கின்றன. தத்தை வழங்கிய வீணைகளில் சீவகன், இது “நரம்பு தேனார்த்தது” (722) என்றும், இது நீர் நின்று இளகிற்று; இது நீரின் வந்தது; இது வாட்புண் உற்றது; இஃது உருமேறுண்டது; இது கொல்லையுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்தது; இது களிறு புல்ல முரிந்தது (723-724) என்றும் குற்றங் காட்டுவதும், நல்லதன் நலங்கண்டு கூறலும் யாழ்த்துறையில் தேவர்க் குள்ள புலமையை விளக்குகின்றன. “நரம்பையாய்ந்து மணிவிரல் தவழ்ந்தவாறும், பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும்” (732), “மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பும், ஊழ்மணி மிடறும் ஒன்றாய்ப் பணி செய்தவாறும்” (733) இசைப் புலவர்க்கு உரிய இயல்புகளாகும். சுரங்கச் சொல்லின், “பாட்டும் எழாலும் பருந்தும் நிழலும் போல்” (735) இயைந்து நிற்க வேண்டுமென்னும் இசைநூல் நலம் தேவர் நன்கு அறிந்திருத்தலை அவர் கூறும் இக் குறிப்புக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இனி, தேவர்க்கு ஆடற்றுறையிலும் நல்ல புலமையுண்மை இடையிடையே அவர் கூறும் ஆடற் பகுதிகளால் தெரிகிறது. அனங்க மாலையின் ஆடல் நலமும், தேசிகப் பாவையின் கூத்தும் தேவரால் ஆடற்குரிய இலக்கணமும் நெறியும் தோன்ற விரியக் கூறப்படுகின்றன. அனங்கமாலையின் கூத்தை, “தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலும் ஏங்கக் காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாள் முகம்செய் கோலம் துளக்கினாள் மனத்தை யெல்லாம்” (679) என்றும், தேசிகப் பாவையின் ஆடல் நலத்தை, “நரம்புமீ திறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலு மேங்கக் கிண்கிணி சிலம்போ டார்ப்பப் பரந்தவாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல அரங்கின்மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித் தாளே” (2605) என்றும், தேவர் நாடகத் தமிழ்ப் புலமையும் நன்கு தோன்றக் கூறுதல் காண்க. இடையிடையே தேவர் சோதிடம், விடமருத்துவம், மணியிலக் கணம், குதிரையிலக்கணம் முதலிய பல கலைகளையும் பற்றிச் சிற்சில கூறுகின்றார். தேவர் செய்துள்ள பாட்டுக்களில் சில அரிய சொல் வழக்குகள் காணப்படுகின்றன. முரித்து என்னும் சொல்லை இரட்டைக் கிளவி யாக்கி, “சிவந்த சீவக சாமிகண்; புருவமும் முரிமுரிந்த வே” (2319) என்று வழங்குகின்றார். நும் மென்னும் முன்னிலைச் சொல்லை நீயிர் எனத் திரிக்காது, நீம் எனத் திரிந்து, “நீமே வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டும் என்றான்” (1940) என்றும், தோஷம் என்னும் வட சொல்லைத் தோடம் எனச் சிதைக்காது தோசம் எனத் திரித்து, “தோசமறத்துதிகண் மனத்தோதித் தொழுதிருந்தாள்” (1791) என்றும் பிறவும் தேவர் தாமே சொற்களைப் படைத்துக் கொண்டு செல் கின்றார். இவ்வாறு தனி மொழிகளையே யன்றித் தொடர் மொழிகள் சிலவற்றையும் தாம் கருதும் கருத்துக்கேற்பத் திரித்து வழங்கு கின்றார். கோட்டு மண் கோடல் என்பதொரு தொடர் மொழி. மதஞ் செருக்கம் களிறுகளும், காளைகளும் தம் கோட்டால் மண்ணைக் குத்தித் தம் கோட்டில் அம்மண் ஒட்டிக்கொள்ளப் பெருமிதத்தோடு திரிவது தோன்ற அவற்றைக் கோட்டு மண் கொண்ட வேழம் என்றும், கோட்டு மண் கொண்ட காளை என்றும் வழங்குவது இயற்கையாகும். கோட்டாற் குத்தி, குத்தப் பட்ட பொருள் கோட்டின்கண் ஒட்ட வரும் இவ் வியைபினைத் தேவர், மகளிர் மார்பொடு முயங்கும் ஆடவர் மார்பைக் “கோட்டு மண் கொண்ட * மார்ம்” என்று அமைத்துக் கூறுவாராய்க் “கோட்டுமண் கொள்ள நின்றான் குரிசில் மண்கொள்ள நின்றான்” (2303) என்று “தன் குறி வழக்கும் மிக எடுத்துரைத்தல்” என்னும் உத்திபற்றி அடுத்தடுத்து மொழிகின்றார். இவ்வாறு தேவர் வழங்கும் சொல் வழக்குகளும் மக்கள் பாலும், விலங்கினம், புள்ளினம் முதலியவற்றின் பாலும் ஏனைச் செடிகொடி கள் பாலும் காணப்படும் வழக்குகளும் நிகழ்ச்சிகளும் கண்டுரைப் பனவும் பிறவும் மிகப் பல வுள்ளன. அவற்றையெல்லாம் விடாது எடுத்து மொழியலுறின் இவ்வாராய்ச்சி நூல் வரம்பின்றிப் பெருகு மென்றஞ்சி இம்மட்டில் நிறுத்தி இந்நூற்கு உள்ள உரை நலத்தை ஒரு சிறிது காணப்புகுகின்றாம். இப்பகுதியில் கூறப்படாது எஞ்சி நிற்கும் நலங்களை அறிஞர் கண்டு தாமே இன்புறுவார்களாக. 20. உரைநலம் காண்டல் இக்காவியத்துக்கு நல்லுரைகண்ட பெரியார் இற்றைக்குச் சுமார் ஏழுநூ றியாண்டுகட்குமுன், மதுரையில் இருந்து தமிழ்ப்புலமை நடாத்திய ஆசிரியர் நச்சினார்க்கினியார் என்று கூறப்படும் சான்றோர் ஆவர். இவரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்று சான்றோர் பாராட்டிக் கூறுவது வழக்கம். இவர் பாரத்துவாச கோத்திரத்துத் தமிழ்ப் பார்ப்பனராவர். இவருடைய பெயரான நச்சினார்க்கினியார் என்பது சிவபெருமானுக்குச் சான்றோர் வழங்கிய பெயர்களுள் ஒன்றாகும். “இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும், தம்மை, நச்சுவார்க்கினியர் போலும் நாகவீச்சர வனாரே” எனத் திருநாவுக்கரசர் சிவபெருமானi பரவுதலும், பின் வந்த காஞ்சிப் புராண முடைய சான்றோர் “நச்சினார்க்கினியாய் போற்றி” எனச் சிவபெருமானை இப் பெயரே கூறி வழிபடுதலும் காண்க. இவர் தொல்காப்பியம், சிந்தாமணி, பத்துப்பாட்டு, கலித்தொகை முதலிய செந்தமிழ்த் தொன்னூல்கட்கு உரையெழுதியுள்ளார். அவை முற்றும் அச்சாகி வெளிவந்திருக் கின்றன. இவர், குறுந்தொகை, திருக்குறள், திருக்கோவையார் என்ற நூல்கட்கும் உரையெழுத்தினார் என்று கூறுவதுண்டு. ஆயினும் அவற்றைப்பற்றிய தகவ லொன்றும் இதுகாறும் கிடைத்திலது. மேலே கூறிய உரைகளே இப்போது தமிழுலகில் பயில வழங்கு கின்றன. இவ்வுரையுள்ளும் இச் சிந்தாமணிக்கு இவர் வகுத்துள்ள உரையினைத் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் வியந்து பாராட்டி, “சிந்தாமணி யும் திருக்கோவையும் எழுதிக் கொளினும், நந்தாவுரையை எழுதலெவ்வாறு நவின்றருளே” என்று உரைக் கின்றார். பாண்டி மண்டல சதகமும், “கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமும், தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியும் தமிழ்ச்சங்கத்தின் நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை உரைநச்சி னார்க்கினி யன்ஐயன் பாண்டிய மண்டலமே” என்று கூறுகின்றது. உரைச்சிறப்புப் பாயிரம், இவரை, “வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருளாகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன்” என்று பாராட்டிக் கூறுகின்றது. இனி, நச்சினார்க்கினியார் இக்காவியத்துக்கு இரண்டு முறை உரையெழுதினார் என்று கேள்வி வழியாக வரும் வரலாறொன்று கூறுகின்றதென டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் கூறுகின்றார்கள்: “இவர் இந்நூலுக்கு முதன் முறை ஓர் உரையெழுதி, அக்காலத்திற் புகழ்பெற்றிருந்த சைன வித்துவான்கள் சிலருக்குக் காட்டமற்றைப் பகுதிகள் போலத் தங்கள் சமயக் கொள்கைகள் முறையே யறிந்து எழுதப்படவில்லை யென்று அவர்கள் அவ்வுரையை அங்கீகரிக்க வில்லை யென்றும், அப்பால் இவர் ஆருகத நூல்கள் பலவற்றையும் அறிந்தோரிடம் முறையே கற்றறிந்து, நலமுற ஆராய்ந்து இரண்டா முறை இவ்வுரையை எழுதி அவர்களுக்குக் காட்ட, அவர்கள் உற்று நோக்கி, மகிழ்ந்து பாராட்டி, இதனை அங்கீகரித்தார்கள் என்றும் சைனர்களுள்ளும் ஏனையோருள்ளும் கர்ணபரம்பரையில் ஒரு வரலாறு வழங்குகிறது” என்பது அது. மேலும், டாக்டர் ஐயரவர்கள், இக்காவியத்து உரைப்பகுதிகள் சில வற்றை யாராய்ந்து, இரு பகுதியாக வகுத்து, “முதற் பகுதி, இவர் தொல்காப்பியத்திற்கு உரையியற்றுமுன் சிந்தாமணிக்கு முதன்முறை உரை இயற்றியதையும், இரண்டாவது பகுதி, இவர் அந்நூலுக்கு உரை இயற்றியபின் இதற்கு இரண்டாமுறை உரையியற்றி யதையும் ஒருவகையாகப் புலப்படுத்தி மேற் கூறிய வரலாற்றை வலியுறுத்தி நிற்றல் காண்க” என்று கூறுகின்றார். இவர் உரைத்திறங்களில் நுழைந்து ஆராய்ந்து இன்புற்ற டாக்டர் ஐயரவர்கள், * “வெளிப்படையாகக் கூறப்படாமலிருந்தும், சிற்சில குறிப்பைக்கொண்டு மிக ஊகித்தறிந்து இன்ன காலத்தில் இன்ன செய்தி நிகழ்ந்ததென்று இந்நூலுள் அவ்வவ் விடத்துக் கதை நிகழ்ந்த காலத்தை விளக்கிக்கொண்டே போவர்” என்றும், “நூலின் சமயத்தையும், நூலாசிரியருடைய கொள்கையையும் அவர் கருத்தையும் அறிய வேண்டிய அளவு உழைத்தறிந்து அவற்றிற் கேற்பவே உரையெழுதுவது இவருக்கு இயல்பு” என்றும், இவர் உரைகாணும் திறம், வடமொழி யாசிரியர்களுள் ஒருவரான ஸ்ரீமல்லிநாத சூரி என்பவரின் திறம் போல்வ தென்றும், வடமொழிப் புலமையும் இவருக்கு உண்டென்றும், உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்த பிள்ளையாசிரியர் முதலிய உரை காரர்கட்குப் பிற்பட்டவ ரென்றம் உரைக்கின்றார். இனி, இவரது உரையை ஆராயுமிடத்து, இவருக்கு முன்பே சிலர் இச் சீவகசிந்தமணிக்கு உரையெழுதியிருந்தமை புலனாகிறது. “வேல் தைவந் தன்ன நுதிவெம்பரற்கான முன்னி நூற்றைவரோடு நடந்தாள்” (1933) என்பதன் உரையில், “நடந்தான் என்று பாடமோதி, முன்பு படையோடே அதர்முன்னினவன் மாமிசையிலுள்ளாரைத் தேவிக்குக் காவலாக ஓம்பித் தான் நூற்றைவரோடும் போனான் என்பாருமுளர்” என்றும், “அழுது நுண்ணிடை நைய” (1317) என்றவிடத்து, “அழுது என்றதற்குப் பாம்பு கடித்தவிடத்தே போகவிடா நின்றேம் என்று அழுதார் என்றும் உரைப்ப” என்றும், “விண்ணாறு செல்வார் மனம் பேதுறப் போந்து” (2137) என்புழி, போந்து என்பதற்கு அமிர்தகலசம் போந்து என்று பிறர் உரை கூறினார்களாக, இவர், “இனி அமிர்தகலசம் போந்து என்றால்.... கண்டு தேவர் வருந்தினாரென்றே பொருள் தருதலின் குற்றமாம்” என்று மறுத்தும் உரைக்கும் உரைப்பகுதிகளாலும் பிறவற்றாலும் இவர் உரை வகுக்குமுன்பே இக்காவியத்துக்குப் பழையதோர் உரையுண்மை தெளிய விளங்குகிறது. இவர் உரையை நோக்க, அவ்வுரை அத்துணைச் சிறப்புடைய தல்லாமையால், அஃது இறந்தது என்றே நாம் துணிய வேண்டியுள்ளது. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியாரது உரை நலம் காண்ப தென்பது இந்நூலின் பொருளையும் அதனை இவர் விளக்கும் திறத்தையும் காண்பதேயாகும். ஆயினும், அச்செயல் மிகப் பரந்துபட்ட தாகலின், இயைபுப்பற்றி மிகச் சிலவே காட்டு கின்றாம். கட்டியங்காரன் படையுடன் வந்து தன் அரண்மனையை முற்றுகையிட்டதைக் காவலனால் அறிந்த சச்சந்தன், வெகுண்டு, “காவலர் அடைக” என்று பணிக்கின்றபோது, அவனைத் தேவர், “விண்ணுறும் ஏறுபோன்று வெடிபட முழங்குஞ் சொல்லான்” (265) என்றாராக, அதற்கு விளக்கம் கூறப்போந்த நச்சினார்கினியார் “இஃது இராசதத்தாற் கூறினான்” என்கின்றார். கடுஞ் சொல்லினை யுடையனாதல் இறைமாட்சியன்மையின், உரைகாரர் இவ்வாறு கூறுகின்றார். சீவகன் கல்வி கற்கத் தொடங்குங்கால் சுநந்தை அவனை நோக்கி, “பூமகள் புலம்பி வைக, மதலைமை யாடுக” (367) என்று உரைப்பதற்கு, “திருமகள் சிறிது நாள் தனித்து வைக மதலைமை யாடுக என்று உரைத்தாள்” என உரை கூறிய இவர், “பிற்றை நிலை முனியாது கற்றல் வேண்டும்” என்ற கருத்தை யுட்கொண்டு, “செல்வச்செருக்கின்றி வழிபாட்டோடு கற்றலின், திருமகள் புலம்ப என்றார் என விளக்கம் செய்கின்றார். குணமாலை அசனி வேகத்தின் முன் நின்று அலமரக் கண்ட சீவகன், ஞெரேலெனப் பாய்ந்து கோட்டிடைப் புடைப்ப, அஃது அவன் மேல் ஓட, அவன், “அஞ்சான் கோற்றொடிப்பாவை தன்னைக் கொண்டுய்யப் போமின்” (981) என்கின்றான். அஞ்சாமைக்குக் காரணம் கூறலுற்ற உரைகாரர், “சேடிமேலும் குணமாலை மேலும் செல்கின்றதென்று அஞ்சினவன், (அவ்யானை) தன்னை நோக்கின்மையின், அஞ்சானாயினான்” என்று உரைக் கின்றார். அவன் உட்கோள், “பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல் எண்ணினன்” (978) என்று தேவர் முன்பே கூறியிருக்கின்றார். “கொற்றொடிப் பாவை” யெனக் குணமாலையைக் குறித்தோதின சீவகன், சேடியையும் கொண்டு போமின் என்று உரை யாமைக்கும் ஏது கூறுவார், “தலைமைபற்றிக் குணமாலையைக் கொண்டு போமின் என்றான்” என்று உரைக்கின்றார். சீவகன் குண மாலையை மணந்த செயலைக் கூறலுற்ற தேவர், “விரைசென்றடைந்த குழலாளை வேட்டான் அவ்வேனிலானே” (1063) என்றவிடத்துச் சீவகற்குக் காமனை உவமமாகக் கூறினாராக, உருவத்தாற் சிறந்து விளங்கம் சீவகனுக்கு உருவமில்லாத அக்காமனை உவமம் செய்தல் சீரிதன்றெனக் கருதிய இவ்வுரைகாரர், “அவ்வேனில் தான்-நுதல்விழிக்கு அழியாத காமன்” என்று உரைக்கின்றார். இனி, “மன்னாவுலகம் மறுத்தோய் நீ” (1243) என்ற விடத்து உலகம் நித்தியம் என்பது சமண் சமயக்கொள்கை யாதலின், அதனை உட் கொண்டு, “மன்னாவுலகம் சுவர்க்கம்; மறுத்தல், அதில் போகத் தைத் தவிர்த்தல்” என்று உரை கூறுகின்றார். சீவகன் பதுமையுடன் கூடியிருக்கையில், அவட்கும் தனக்கும் உண்டாகிய இயைபினை, “திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது நங்கள் அன்பு” (1334) என்று உரைத்தானாக, தேவர், முன்பு, “பிறையதுவளரத் தானும் வளர்ந் துடன் பெருகிப்பின்னாள், குறைபடு மதியந்தேயக் குறுமுயல் தேய்வதே போல்’ (254) என்ற கருத்தை யுட்கொண்டு, “உடன் தேய்ந்து உடன் வளர்தலின் மறு உவமை” என்று உரை விளக்கம் செய்கின்றார். சீவகன் பதுமைபாற் சொல்லாதே பிரிந்தது கூறலுற்ற தேவர், “நயங்கிளர் உடம்பு நீங்கி நல்லுயிர் போவதே போல்” (1360) இருளின்கண் சீவகன் ஏகினான் என்றார். இதற்கு உடம்பை விட்டு உயிர் நீங்கினாற்போல என்று உரைகூறின், நீங்கிய நல்லுயிர் மறுவலும் அவ்வுடம்பை வந்து கூடுதலின்றாம்; ஆனால் சீவகன் மறுபடியும் இப்பதுமையைக் கூடுகின்றானாதலின், இதனை ஆராய்ந்து உரை கூறும் இவர், “நல்லுயிர் ஆன்மா; அது கனவிடைப் போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறுபோல, இவனும் பலரையும் நுகர்ந்து பின்பு கூடுவன் என்று உணர்க என்று உரை விளக்கம் உரைக்கின்றார். சீவகன் அரசனாகி யிருக்கையில் அவன் உணவு கொள்ளச் செல்லும் மண்டபத்துக்குச் ... சென்றது கூறிய தேவர், அவன் “நூற்றலா மண்பத்துக் காவிக்கண் மகளிர் போற்றி.... ஏத்த இனிதினின் ஏறினானே” (2734) என்றாராக, அதற்கு உரைகண்ட நச்சினார்க் கினியார், நூற்றுலா மண்டபம் என்பது நூறடியுலாவுதலையுடைய மண்டபம் என்று உரை கூறி, நூறு என்பது ஆகுபெயர் என்றும், “உண்டால் நூறு அடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவ நூல் கூறியதனைக் கூறினார்” என்றும் உரைக்கின்றார். அவன் அருகனை வணங்குமிடத்து, “விண்ணில் இன்பமே விழைந்த வேட்கையான்” (2742) என்று தேவர் கூறவும், இவ்வுரைகாரர், விண்ணில் இன்பம் துறக்கவின்பமே என்னின், அதனை முன்பே சீவகன் உணர்ந்து “மன்னா வுலகம்” என்று உரைத் திருத்தல்பற்றி, வீட்டின்பம் என்று உரை கூறலுற்று,விண் இல் இன்பம் எனப் பிரித்து, “தேவருலகில் இல்லாத வீட்டின்பத்தையே விரும்பின வேட்கையையுடையவன்” என்று உரை கூறுகின்றார். இவ்வாறு இவர் சொற்களைத் தூக்கியறிந்து பலவகைப் பொருளையும் நன்கு ஆராய்ந்து தக்கதையே தேர்ந் துரைக்கும் சதுரப்பாடுடையராய் இருத்தலைக் காணக் காண இன்பமே பெருகிநிற்கும். இவ்வின்பத்தை ஆர நுகரும் வேட்கை யுடையார் அவர் உரையை அமைதி கூர்ந்து படித்தலே வேண்டுவ தாம். இனி, இவர் சொற்களுக்குப் பொருளாராய்ச்சி செய்யுந் திறமும் அறிஞர் அறிவுக்குப் பேரின்பம் தருவதாகும். சீவகன் தன் மனைவி யருடன் ஒருகால் அருகன் கோயிலையடைந்து அவன் திருவடியை வணங்கி நிற்கையில் சாரணர் இருவர் தோன்று கின்றனர். அவரையும் அவன் வணங்கியபோது, அவருள் முன்னவன் சீவகனுடைய பழம் பிறப்பைச் சுட்டி, “அன்னம் மேனாள் மன்னா! பிரித்தாய், பிரிந்தாய் சிறைவைத்ததனால், பொன்னார மார்ப, சிறைப்பட்டனை போலும் என்றான்.” இதன்கண் சிறைப்பட்டனை என்னும் சொல்லைப்பற்றி நச்சினார்க்கினியர் இனியதோர் ஆராய்ச்சி செய்கின்றார்: அது வருமாறு: சீவகற்குச் சிறைப்பட்ட தன்மையின்மை ‘விலங்கி வில்லுமிழும் பூணான்’ (1167) என்னும் கவியிற் கூறினார். ஈண்டுச் சாரணர் சிறை வைத்ததனால் சிறைப்பட்டனை போலும் என்று கூறிய சிறை யென் னும் சொல்லும், முன்னர்க் கூறிப் போந்த கட்டென்னும் சொல்லும் பரியாயச் சொல்லன்றி வேறு வேறு பொருள் தரும் சொற்களாம்; என்ன? இத்தமிழ் (மொழியில்) உலக வழக்காகிய இயற்சொற்களில் ஒரு வினையை உணர்த்துதற்கும் ஒரு சொல் வழங்குதலன்றி இரு சொல் வழங்காமையின், சிறை யென்பது தடுத்துக் காத்தலை யுணர்த்தும்; முன்னர் ‘அருஞ்சிறை’ (2867) என்றதற்குப் பின்னர், ‘காவல் செய்து வைத்தவர்கள்’ (2875) எற்மையால், அன்றியும் ‘சிறை காக்கும் காப்பெவன் செய்யும்’ (குறள் 57). ‘சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கண்’ (குறுந். 86), ‘கொலைச் சிறை யுய்ந்து போகு மொருவனை’ (2884) என்றாற் போல்வன பிறவற்றானும், சிறைக்கால், நீர்ச்சிறை யென்னும் வழக்கானு முணர்க. இஃது ஆகுபெயராய்ச் சிறை வைத் தானென்றால் சிறைக் கோட்டத்தை யுணர்த்துமாறு முணர்க. இதற்குக் கோலுதல், அகப்படுத்தல், தகைத்தல் என்றாற் போல, ஆசிரியன் முழுவதூஉம் திரித்த திரிசொற்கள் பரியாயச் சொற்களாம்; இதற்குச் சிக்கல் என்பது திசைச்சொல். “இனி, கட்டினான் என்னும் சொல், உண்டான், வந்தான், போனான் என்பன போலப் புடை பெயர்ச்சித் தொழிலுணர்த்தும் சொற்கு வேறொரு சொல்லின்றி நிற்கும்; இதற்கு வீக்கினான், பிணித்தான், யாத்தான் என்றாற்போல ஆசிரியன் முழுவதூஉம் திரித்துக் கொண்ட வினைத் திரிசொற்கள் பரியாயச் சொற்களாம். இது பசுவை முலையைக் கட்டினான்; பாம்பை வாயைக் கட்டினான் என்றாற்போலப் புடைபெயர்ச்சித் தொழில் புலப்படாமலும் நிற்கும்; இவ்விரண்டு சொல்லும் வேறு வேறு பொருள் தருதலின், ஒன்றற் கொன்று பரியாய மாகாமையின் சாரணர் கூறிய சிறை யென்னும் சொல்லிடத்துக் கட்டென்னும் சொல்லின் பொருள் பிறத்தல் இன்மையின், முன்னர்க் கட்டென்று கூறியது ஈண்டைக்குப் பொருந்தாதாயிற்று. ஈண்டு இவர் கூறிய பாவம் காரணமும், ஆண்டுச் சிறைப்பட்டது காரியமுமாகவே கோடல் வேண்டலின் சிறைப்பட்டானென்றே யாண்டும் (15,1131,1133, 1149,1166,1167, 1748,1798,2890,முதலிய கவிகள்) பொருள் கூறுவதன்றிக் கட்டுண்டானென்று பொருள் கூறலாகாமை யுணர்க.” ஒரு நூலுக்கு உரையெழுதும் புலவன் நூலாசிரியன் கருத்தை யுணர்ந்து அக்கருத்துக் கெடாவகையிற் பொருளறிந்து உரைக்க வேண்டு மென்பது உரைமரபாகும். அம் மரபு திரியாது பொருள் உரைக்க வேண்டுமென்ற கருத்தால் நச்சினார்க் கினியார் சில இடங்களில் நூலாசிரியர் கருத்துக்கு மாறுபாடு தோன்றும் திறத்தை எடுத்துக் காட்டி உரையெழுதுகின்றார். சீவகன் ஏமமாபுரத்தை நோக்கி வருகையில் வழியில் வனகிரியைக் கண்டு அதனைக் கடந்த அளவிலே ஒரு கவின்பொழில் கண்டு, அதன்கண் ஓரிடத்தே தங்குகின்றான். ஆங்கே, ஒருத்தி, “வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள், நானமும் பூவும், சாந்தும், நாற வந்து, அருகு நின்றாள்” (1567) என்று தேவர் கூற, இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியார், அவனை ஒரு வனசரிதன் என்று கருதி அவன் கவினைக் கண்டு, “நானம் முதலியன நாறத் தானே வந்து அருகே நின்றாள் என்க” என்று உரை குறிப்பவர், “இங்ஙனம் கூறாது, சீவகன் கவினைக் கண்டு அவள் எய்தினாள் என்று கூறின், மேல், இவற்க இவள் வேட்கை விளைத்தலின், இவன் நெஞ்சு தன் தன்மை திரிந்ததனை இவன் தேற்றினான் என்று கூறுவர்; அங் ஙனம் கூறவே, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாற் செய்து கொள்ளும் பாவங்களில் சிறந்த மனத்தாற் செய்துகொள்ளும் பாவமும் சீவகற்கு எய்திற்றா மாதலானும், உழுவலன்போடு தோன்றிய மகளிரிடத் தல்லது, இவற்கு வேட்கை நிகழாதென்பது இத் தொடர்நிலைச் செய்யுட்குக் கருத்தாதலானும், அது மாறுபடக் கூறிற்றாம். என்று உணர்க்” என்று விளக்கம் கூறுகின்றார். சீவகன் சுதஞ்சணனிடம் விடைபெற்று நாடுகாணும் வேட்கை யுடையனாதலைத் தெரிவிப்ப, அவன் சீவகற்குச் செல்லுதற் குரிய நெறிகளை யுரைக்குமிடத்து, வழியில் இருக்கும் தாபதப்பள்ளி யொன்றின் இயல்பை அச் சுதஞ்சணனே கூறுகின்றான். அப்போது, அத்தாபதர் பள்ளியின் இயல்பு இது வென்பான். “வருந்தும் நீர்மையும் மாதவர் பள்ளியுள் குருந்த மேறிய கூரரும் பார்முல்லை பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே.” (1202) என்று இயம்புகின்றான். இதற்கு உரைகண்ட நச்சினார்க் கினியார், “தாபதர் பள்ளியில் குருந்தத்தையேறிய அரும் பார்ந்த முல்லை, தம் மனம் பொருந்திய கணவரைத் தழுவிய மகளிர் வடிவு போலே மிக்க அழகினைக் கொண்டதென்க” என்று உரை கூறிவிட்டு, “இது நின்னைக் கடைப்பிடித்து ஏகவிடும் என்பது கருத்து” என்றொரு குறிப்பினை வழங்குகின்றார். காற்றால் அலைப் புண்டும் தான் பற்றிய குருந்த மரத்தை விடாது புல்லி அதன் மேற் படரும் முல்லை, “ஒருமை மகளிரின்” உள்ளப் பான்மை யைக் காட்டி, நினக்கும் நீ மேற்கொண்ட செந்நெறியே செல்லுதற்குரிய ஊக்கத்தை எழுப்பும் என்ற கருத்துப் பெறப்படுதலின், அதனை, “இது நின்னைக் கடைப் பிடித்து ஏகவிடும் என்பது கருத்து” என்பதனால் உய்த்துணர வைக்கின்றார். இவ்வாறே, அச்சுதஞ்சணன் சீவகற்குக் காடும் நாடும் காட்டி, அதனைக் கடந்து சென்றால் யாறொன்று குறுக்கிடக் காணலாம் என்பவன், “அங்கதன் தனதிடம் கடந்து போம்வழிப் பொங்கபூஞ் சண்பகப் போது போர்த்துராய் அங்கணாட் டரிவையர் கூந்தல் நாறித்தேன் எங்கமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே” (1199) என்று கூறுகின்றான். இப்பாட்டின் உரைக்குறிப்பில், “கடந்து எனவே கேமசரியைக் கொள்கின்றதும் கூறினனாம்” என்று குறிக்கின் றார். இதனால் உரைகாரர் உய்த்துணர வைக்கும் பொருள், பகைவரைக் கடந்தான் என்றவிடத்துப் பகைவரது திருக்கொள்ளப் படுவது போல நாடு கடந்தான் எனவே அந்நாட்டித்துத் திருமகள் போல விளங்கும் கேமசரியை மணந்து கொள்வதென்பது தானே பெறப்படுகிறது. இவ்வாறு, சில உரைகாரர்கள், தாம் உரைத்தற் குரிய சில கருத்துக் களைக் கற்பார்க்கு உணர்வு பெருகல்வேண்டி உய்த்துணர வைப்பது, தொல்காப்பியம் முதலிய பண்டைய நூல்கட்கு உரைகண்ட உரையா சிரியர் முதலாயினார்பால் காணப் படுகிறது. ஆசிரியர் சேனாவரையர், “உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே” (சொல்.1) என்ற தொல் காப்பியச் சூத்திரத்து என்மனார் என்பது செய்யுண் முடிபென்று தாம் கூறி, இதனை உரையாசிரியர் கூறாமைக்குக் காரணம் கூறுவாராய், “மாணாக்கர்க்கு உணர்வு பெருகல்வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க் கியல்பாகலான், செய்யுண்முடிபென்பது கூறாரா யினார்” என்று உரைப்பது காண்க. மேலும், இப்பாட்டிற்கு முற்பாட்டிலும் “கடந்து” (1198) என்ற சொல் வந்திருப்பவும், அதன்கண் வாளையும் வராலும் தேனை ஒருங்கு சுவைத்துத் தம்முள் மறலுவது உள்ளுறைக்கு நயந்தராமை கண்டு, இப்பாட்டிலே அதனை உய்த்துணரவைத்த உரைத்திறத்தை உள்ளுந்தோறும் இன்பம் உவட் டெடுத் தொழுகுகின்றது. இனி, விசயை தாபதப்பள்ளியில் உறையுங்காலத்தில் தாபதர்க்குக் குல முதலியன கூறலாகாதென்றிருந்தவள், சீவகன் தோழர் போந்து அவன் வரலாற்றில் ஒரு பகுதியைக் கூறின அளவில், மெய்ம்மறந்து, “கோமான் மகனே, குருகுலத்தார் போரேறே, ஏமாங்கத்தார் இறைவ” (1805) என்றும், “கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை, வந்தார்வாய்த் தீதின்மை கேட்டு மறைந்திருந்து நொந்தேன்” (1806) என்பன முலாகச் சொல்லி அரற்றுகின்றாள். இது வழுவாதலை யுணர்ந்து நச்சினார்க்கினியார் அமைதி கூறலுற்று, தாபதர்க்குக் கல முதலியன கூறலாகாதென் றிருந்தவள், தன்னுணர் வழிந்து அரற்றி னமையின், குலனேயன்றி, மறைபொருளெல்லாம் கூறினாள்” என்றும், “தோழர் நல்வினை அங்ஙனம் நிகழ்த்திற்று” என்றும் கூறுகின்றார். இவ்வாறே, விசயை கணவன் பட்டதையறிந்து, கூனி வடிவிற் போந்த தெய்வத்துடன் தாபதப் பள்ளியடைந்து மாதவ மகளிர் நல்லணி நீக்க இருப்பவளைத் தேவர் “வாளுறை நெடுங்கணாள்” (348) என்று கூறுகின்றார். பிறாண்டும் “படைமலர்க் கண்ணாய்” (335) என்றும், “வாளையாம் நெடிய கண்ணாள்” (1911) என்றும் தேவர் விசயை கண்கட்கு வாளையே உவமித்துக் கூறுகின்றார். இங்கெல்லாம் உரைகாரர் வழுவமைத்துரைக்கும் திறம் இறும்பூது பயக்கின்றது. வாளுறைநெடுங்கண் என்பதை இறந்தகாலம் தொக்க வினைத் தொகையாக அமைத்து, “வாளின் தன்மை முன் தங்கிய கண்ணாள்” என்பதும், எனவே இப்போது அத்தன்மை இல்லை யென்பதும், “அரசனைக் கோறலின் வாளையொக்கும் நெடிய கண்ணாள் என்று அவட்குப் பெயராயிற்று” என்பதும் பிறவும் உரைகாரருடைய உரை வீறுபாட்டை உணர்த்துகின்றன. சில இடங்களில் இவ்வுரைக்காரர் வருந்திப் பொருள் கொள்ளும் செயல் நமக்கு மிக்க வருத்தத்தைச் செய்து விடுகிறது. சீவகன் சுதஞ் சணன்பால் விடைபெற் றேகுமிடத்துத் தான் தன் மனைவியரைச் சென்று கூடும் காலம் யாதோ என்று எண்ணுவான், “மனுப்பெருங் கிழத்திமாசில் மலைமகள் தன்னை யான் சென்று, எனைத்தொரு மதியினாங்கொல் எய்துவது என்று நெஞ்சில் நினைத்தலும்” (1220) அவன் அதனை யுணர்ந்து, “பனைத்திரண்டனைய தோளாய் பன்னிரு மதியின்” என்று மொழிகின்றான். இவ்விடத்தே உரைகாரர் சீவகனால் நெஞ்சில் நினைக்கப்பட்ட மகளிர் காந்தருவதத்தையும் குணமாலை யும் என்ற இருவருமே என்று கருதிக்கொண்டு, அக்கருத்துக் கேற்ப “மலைமனைப்பெருங் கிழத்தி தன்னை, மாசில் மகள் தன்னை ” எனப் பிரித்துக் கூட்டி, மலை மனைப் பெருங்கிழத்தி தன்னை யென்பதற்கு “வெள்ளி மலையில் தோன்றிவந்த மனைப் பெருங்கிழத்தி தன்னை” என்றும், மாசில் மகள் தன்னை” என்பதற்கு, “மாசில்லாத மகள் தன்னை” என்றும் உரைகாட்டுகின்றார். இவ்வாறு இவர் வலிந்து பொருள் கோடற்குக் காரணம், இக்காலத்தே, சீவகன் மணந்திருக்கும் மகளிர் தத்தையும் குண மாலையுமேயாதலின் இருவரையும் அவன் ஒப்பக் கருதி நினைத் தான் எனச் சீவகன்பால் ஓரமின்மை யுணர்த்துவதே. இவர் கருதுவதே சீவகற்குக் கருத்தாயின், பிறாண்டும் அவன் இருவரையும் நினைத்தல் வேண்டும். அதுதான் கிடையாது. ஏமமாபுரத்துச் சொலையில் தங்கியிருக்கும்போது அவற்குத் தத்தையின் நினைவே உண்டாயிற் றென்பார், தேவர், “முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்” (1626) என்றே கூறியிருக்கின்றார். பின்பு அவன் சுரமஞ்சரியை மணந்து அவளின் நீங்கி வரும்போது, நேரே தத்தை பாற் சென்று, அவள் தெருட்டத் தெருண்டு, பின்பே குண மாலையைக் கண்டு கூடி மகிழ்கின்றான். தத்தை சீவகற்கு எழுதிய திருமுகத்திலும் குணமாலையின் குணநலத்தையே அவள் முதலில் எழுதி, பின்பே அவன்பால் தனக்குள்ள அன்பையும் தோற்று விக்கின்றாள். இவ் வாற்றால் சீவகன் மனக்கருத்தில் தத்தையே முதலிடம் பெற்று நிற்பது விளங்குதலால், “மனைப்பெருங் கிழத்தி மாசில் மலை மகள் தன்னை” (1220) என்பது தத்தையையே குறித்து நிற்றல் பெறப்படும். இவ்வாறு கொள்ளினும் அமையும் என்பார், நச்சினார்க்கினியார், உரைவிளக்கப் பகுதியில், “இனி, தத்தையையே நினைந்தானென்னில், குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்துப் புணராமையின் அவளையே நினைந்தான் என்க.” என்று உரைக்கின்றார். இவ்வுரையும் பொருத்த மன்று; சீவகன் குணமாலையை மணந்தது குறித்துத் தத்தை ஒருபோதும் ஊடியதே இல்லை. அவளை அவன் வரைந்து கொண்டதும் தானும் அவளைத் தனக்கு உடன்பிறந்தாளாகக் கருதி, “எங்கை குணமாலை யவள் ஆற்றாள்” (1877) என்றும், சீவகன் பின்பு தன் பால் வந்தபோது, (தத்தையும் மகிழ்ந்து) “தீஞ்சொல் எங்கையைச் சென்று காண்மின் அடிகள்” என்றும் (2097) இரந்து கூறுகின்றாள். இது “கற்பு வழிப்பட்டவள் பரத்தையேத்தி” (தொல்) மொழிவதன்று. ஆதலால், நச்சினார்க் கினியார் தத்தைக்குச் சீவகன் குணமாலையை வரைந்தது குறித்து ஊடல் பிறந்ததென்றல் பொருந்தாமை காண்க. அன்றியும், சீவகன் குணமாலையின் வடிவெழுதி மயங்கியிருக்கையில் தத்தை போந்து அவன் செயல் கண்டு புலந்து, நீங்கினாளாக, அச்சீவகன் பின்பு அவள்பால் சென்று அவள் ஊடலைத் தீர்த்துக் கூடி மகிழ் வுறுத்தினான் என்று தேவர் குணமாலையார் இலம்பகத்தே கூறியிருக் கின்றார். அதனையும் இவ் வுரைகாரர் நினைந்து, “குணமாலையால் தத்தைக்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்தனை நினைந்தான், ஒழிந்தோர்க்கு அங்ஙனம் நிகழ்ந்த ஊடல் இன்மையின்” (1626. உரை) என்று உரைக்கின்றார். இதனாலும், இவர் “மனைப் பெருங்கிழத்தி மாசில் மலைமகள்” என்றது தத்தையையே குறித்தது என்று கோடற்கு ஒருவாற்றால் இயையு மென்பது பொருந்தாமை தெளியப்படும். இவ்வாறே இவர் காட்டும் இலக்கணக் குறிப்புக்களும் சில இடங்களிற் பொருத்தமாக இல்லை. “பன்னிருமதியின்” (1220) என்று கூறிய சுதஞ்சணன் கூற்றில் வரும் மதியின் என்றவிடத்து இன் என்பதனை ஏழனுருபாக்கி, அஃது ஏழனுருபாதல் இல்லாமை கண்டு, “இன், ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க” என்று இவ்வுரைகாரர் கூறுகின்றார். “ஐயுங் கண்ணும்” (தொல்சொல். 105) என்னும் விதியால், ஏழனுருபு இறுதிக்கண்தொகுத லுண்மையின் மதியின் என்ற விடத்து ஏழனுருபு விகாரத்தால் தொக்கதென்றலே சிறப்புடைத்தாகும். மேலும், “மெல்லெபத்து மிகுவழி” (தொல். எழுத்து. 157) என்ற சூத்திரத்தில், “தன்னின முடித்தல் என்றதனால், ஏழாவதற்குத் திரிபுண்டு எனக்கூறி, அதன்கண், “மெய்பெற என்ற தனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும் உறழ்ந்து முடிவனவும் கொள்க,” என்று இவரே கூறினமையின், “பன்னிருமதியின்” (1220) என்புழி, இன் சாரியை என்றும், சாரியை நிற்ப ஏழனுருபு நிலையா தாயிற்று என்றும் கூறுதலே அமைவுடைத்தாதல் தெளியப்படும். இவ்வாறே, “மலரேந்து சேவடியமால் என்ப” (1610) என்ற விடத்து வரும் சேவடிய என்புழி, “சேவடிய, அ. அசை; சுட்டுமாம்” என்று இவ்வுரைக்காரர் கூறு கின்றார். உரையின்கண், குறிப்புப் பெயரெச்சமாகக் கொண்டு, “அடியையுடையமால்” என்று உரை வகுக்கின்றார். கூறிய பொருட்கேற்ப இலக்கணம் ஆதரவு செய்தல் வேண்டு மேயன்றி, பொருளும் இலக்கணமும் வேறுவேறாக நிற்றல் உரைமரபு அன்று. சேவடிய என்பது, “மாடமது வார்சடைய வள்ளலையும் ஒக்கும்” (598) என்றவிடத்துச் சடைய என்பதுபோலும் குறிப்புப் பெயரெச்சமாகும். சேவடிய என்புழி அகரத்தை அசையாக்கலும் சுட்டாக்கலும் பொருந்துவன வல்ல. இவ்வண்ணமே பொருளி லக்கணப் பகுதிகளிலும் சில விடங்களில் இவ்வுரைகாரர் கூறுவது பொருத்தமாக இல்லை. நிற்க, இவ்வாறு சில இடங்களில் இவர் கூறும் பொருளும் இலக்கண வமைதிகளும் பொருந்தாதன வாய்த் தோன்றினும், பொதுவகையால் நோக்கின் இவர் உரையை “நந்தா உரை” என்றும், “நிசவுரை” என்றும் சான்றோர் பாராட்டிக் கூறியன மிகவும் பொருத்தமாகவே உள்ளன. நூலைக் கற்பார் அறிவுக்கும் பணிதந்து, இன்றியமையாவிடத்து விளக்கங் காட்டி, பாட்டுக்களின் சொன் முடிபைத் தூய்மையாக இயைத்துப் பொருள் கூறும் இவரது உரைச் சிறப்புச் சாலவும் போற்றத்தக்கதாகும். இவர் உரை நலத்தைக் கண்டு, இக் காலத்தே, கம்பராமாயணம், பாரதம் முதலிய நூல்கட்கு வகுக்கப் பெற்று நிலவும் உரைகளைக் காணு மிடத்து, “பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற, சில சொல்லல் தேற்றாதவர்” என்ற திருக்குறட்கு வேண்டும் சான்றுகளாக இவைகள் நிலவுகின்றன என நாம் கருததற்கு இடமுண்டாகிறது. இச்சிந்தாமணிக்கு உண்டாயது போலும் “நந்தா உரை” ஏனைக் காவியங்கட்கும் உண்டாக அருளுமாறு இறைவனை வேண்டிக் கொள்வதையன்றி வேறொன்றும் செய்தற்கில்லேம். முடிப்புரை இதுகாறும், இச்சீவக சிந்தாமணி ஆராய்ச்சிக்கண் நூலாசிரியர் வரலாறு, நூல் வரலாறு, அவருடைய காலம், நூற்பொருள், கிளைக் கதைகள், நூற்பொருளாராய்ச்சி, நூற்புணர்ப்பு, நூலின் நோக்கம், நூற்கண் வரும் மக்களின் குணம் செயல்கள், அறமுதல் நாற்பொருளா ராய்ச்சி, சமயப்பொருள் கூறல், நூல் யாப்புக்குத் துணை செய்த நூல்கள், தேவர் காட்டும் அரசியல், வாணிபம், கைத்தொழில், உழவு, போர் முறை, வழக்காறுகள், மகளிர் மனப்பண்புகள், தேவரது புலமைநலம், நச்சினார்க் கினியரது உரைநலம் எனப் பலவகைப் பொருள்களையும்; பலவகையாலும் ஆராய்ந்து இந் நூற்கண் பொதிந் திருக்கும் காவியநலம், செந்தமிழ்நலம், அறிவு நலம் முதலியவற்றையும் இனிது நுகர்ந்தோம். இவ்வாராய்ச்சிக்கண் குறிக்கப் பட்டனவேயன்றி, குறிக்கப்படாத பொருள்கள் மிகப் பல இன்னமும் இந்நூற்கண் செறிந்து கிடக்கின்றன. மழை பொழிதலும், ஆறு பெருகுதலும், உழவுத்தொழில் நிகழ்த்தலும், நெல் முதலிய பயிர்களை விளைத்தலும், நெல்லை மனைகட்கு உய்த்தலும், இடையிடையே உழவர் முதலாயினார் ஒழுகலாறு காட்டலும் எடுத்துக் கொண்ட நூலின் தொடக்கத்தே கூறல் வேண்டுமென்ற முறை இக் காவியத்தின் கண்ணேதான் கால்கொள் கின்றது. இம்முறையே, பின்புவந்த நூல்களுள் ஆற்றுச் சிறப்பு, நாட்டு நலம் கூறல், நகர நலம் கூறல் முதலிய உறுப்புக்களாகப் பிரித்தும் விரித்தும் கூறப்படுவதாயிற்று. செய்யுள் செய்யுமிடத்தும் இயற்கையொடு பொருந்தாத புனைந் துரைகளும், மகளிர் இன்பத்துறைகளை வரம் பிறப்பப் புனைந் துரைக்கும் வகைகளும், பொன் மணி முதலியவற்றை எண்பொருளாகப் புனைதலும், பொழில், மலை, ஆறு, முதலியவற்றின் இயற்கை நலத்தைப் புனைந்துரை வகையால் இறப்பப் புகழ்ந்துரைத் தலும், கைத்தொழில் வாணிபம் அரசியல் முதலியவற்றை உள்ளதன் உண்மை தோன்றக் கூறாது இறப்ப உயர்த்திக் கூறலும், பொருள் களின் வண்ணம், சுவை, அளவு, வடிவு, தன்மை முதலியவற்றை நன்கு ஆராய்ந்து திட்பமுறக் கூறாது பொதுவகையால் புனைந்துரை நெறி ஒன்றே பற்றிக் கூறலும், எடுத்த காவியத்தின் இடையே சமயக்காழ்ப்பு, சாதிவேற் றுமை, பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டல் முதலிய சமூக வேற்றுமையைச் சிதைக்கும் புல்லிய கருத்துக்களைப் புணர்த்துரைத்தலும் இன்னோரன்ன பிறவும் இக்காவியத் தோற்றத்துக்குப் பின்னே நம் தமிழ் நாட்டுத் தமிழ் நூல்களுள் பெருக இடம்பெறத் தலைப்பட்டன. இவரே கணிகையர் வயிற்றிற் பிறந்தோர் அறிவுடையராயினும் அறிஞரால் இகழப்படுவர் (723) என்றும், இருபிறப்பாள ரல்லார்க்கு வில்வன்மை யுண்டாகாது (1689) என்றும் இவைபோல்வன பிறவும் கூறுதலை இந்நூற்கண் காணலாம். இக்காவிய வளர்ச்சிக்குப் பின்பு, நாட்டில் இசையும் நாடகமும் கலைவகையாம் என்ற கருத்து வீழ்ந்தது; காமக் களியாட்டிற்கு இசையும் நாடகமும் ஆக்கம்தருவன (2607) என்று குறை கூறியும், இசை நாடகக் கலையில் மேம்பட்டிருந்த மகளிரை இழித்துரைத்தும், இக்கலைகள் ஒங்குதற்கு இடந்தராத மனப்பான்மை இடைக் காலத்தே மக்கட்கு உண்டாவதாயிற்று. தேவர் முதலாயினோர் இசை நாடகங் கள் பால் காழ்ப்பின்றி ஆதரவுற்றுச் சீரிய முறையில் வளர்க்கக் கருதியிருப்பரேல், ஆ! நம் தமிழகம் தமிழிசைக்கும் தமிழ் நாடகத் திற்கும் போராடவேண்டிய நிலை எய்தியிராதன்றோ! காவிய யாப்பில் புதிய புதிய பாவினங்களும், கருத்துக்களும், அணிகளும், புனைந்துரைகளும் புகுத்த முயன்ற, இவர்கள் அறிவு, தாம் கற்றுத் தேர்ந்திருந்த இசை நாடகங்களில் மழுங்கியது நினைக்குந் தோறும் நெஞ்சம் மாழ்குகின்றது. இனியாகிலும், இக்கலைகட்கு ஆக்கமுண்டாகும் காலமுண்டாயிற்றே என்று நினைக்கும்போது நம்மனோர்க்குச் சிறிது ஆறுதல் உண்டாகிறது. இந் நூற்கண் தேவர் இசை நாடகங்களைக் கூறியிருக்கின்றாரன்றோ! இவரே இவற்றைக் காமம் விளைப்பன என்பாராயின் என்னென்பது! எய்தவன் இருக்க அம்பை நோவது அறிஞர் செயலாகுமா? “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” (1639) என்று தேவர் கூறியது இயற்றமிழ்க்கே என்ற வரையறை யுண்டா? இவ்வாறு கூறிய இவரே இசையும் நாடகமும் காமம் விளைக்கும் என்பது முறையுமன்று; நெறியுமன்று. ஒருவர் பிறரால் துன்புறுத்தப்பட்டபோது, துன்பம் செய்தார் பால் வெறுப்புற்று, மேலும் பகை வளர்தற்குரியவற்றைத் தாம் செய்து கெடாது அரண் செய்தல் வேண்டி, அவரால் தமக்குற்ற துன்பத்துக்குக் காரணம் தமது பண்டை வினையே என அமைதல் வேண்டும் என்றற் கெழுந்தவினையுணர்வுக் கொள்கையை, (Theory of Kharma) எல்லாச் செயற்கண்ணும் புகுத்தி அதன் வீறுபாடு நாட்டு மக்கள் மனத்தில் வேரூன்றி நிற்பித்தற்கு இக்காவியமும் இதனைப் பின்பற்றியெழுந்த நூல்களும் காரணமாயின்; இதன் பயனாக, மக்கள் மனத்தில் தமக்கென இறைவன் அருளிய மனவுணர்வு வன்மையொன்று உளது; அதனால் செயற்குரியவற்றைத் தீதற்ச் செய்து ஒருவர் நலமடைதல் கூடும் என்ற தன்நம்பிக்கை (Trust in one’s own self) குன்றுவதாயிற்று. கனாப் பயன் காண்டல், நிமித்தம் பார்த்தல், வாய்ச்சொல் கேட்டல் முதலிய வற்றில் அழுந்திய நம்பிக்கையுண்டாதற்கு இக் காவியம் துணைசெய்வதாயிற்று. இக் காவியத்தில், தேவர், மகளிர் சிறிதே உணவு கொள்ள வேண்டும் (2042) என்றும், அவர் மனம் பொன்னுக்கும் பொருளுக்கும் எளிதில் மாறிவிடும் என்றும், தம்மை கொண்டவன் எத்துணைத் தீது செய்யினும் தாம் அவனைத் தெருட்ட முற்படுவதைவிட அடங்கி யொடுங்கி அமைதல் வேண்டும் என்றும் பிறவும் வற்புறுத்திச் செல்வது இக்காலத்து நம்மனோர்க்கு வியப்புத் தருகிறது. முடிவாக, தேவர் இக்காவியத்தில் உரைக்கக்கூடாத சில கருத்துக்களை விரித்தோதிக் கற்றறிந்தோர் மனத்தில் அருவருப்பை உண்டுபண்ணுகின்றார். உயிரோவியங்களை அமைக்கும் இயக் காளரும் (Directors of Cinema pictures), காவியப் புலவர்களும் பல துறையிலும் ஒத்தவராவர். காவியப்புலவர் மனக் கண்ணிற்கும், இயக்காளர் புறக்கண்ணிற்கும், காவியக்கதை நிகழ்ச்சிகளாகக் காட்டுபவராவர். எவ்வப் பகுதிகளை இவ்வியக்காளர், காண்பவர் உய்த்துணருமாறு காட்டாதொழிகின்றனரோ, அவ்வப் பகுதிகளைக் காவியப் புலவரும் குறிப்பாற் சுட்டிவிட்டுச் செல்லும் கடமை யுடையராவர். ஒருவனும் ஒருத்தியும் மணம் புணர்ந்து மணவறையில் இன்புறுந் திறங்களைச் சொல்லால் ஓவியம் செய்தலும், இயக்காளர் வெண்டிரையிற் காட்டலும் பொருந்தாச் செய்கைகளாம். இயக்காளர் செய்கைகளை ஆராய்ந்து தகுவன தேர்ந்து காட்டற்குக் கழகங்கள் (Board of Consot) இருத்தல் போல, காவியக் கவிகளின் கருத்துத் திறங்களை ஆராய்ந்து கொள்ளுவன தள்ளுவன செய்தற்குரிய கலைக்கழகங்கள் இல்லாமையால், இக்காவியத்தும் பிற நூல்களிலும் வரம்பிறந்த முறையில் இன்னோரன்ன பொருள்கள் கூறப்படுவ வாயின. சீவகனும் அவன் தோழரும் தமக்கு இனிய மகளிரை மணந்து இன்புறற்ற திறங்களைத் தேவர் பலவாறு விரித்தோதுவது, இக்காவி யத்தை இளைஞர் கையில் தந்து படிக்கச் செய்தற்கு அச்சத்தை விளைத்துவிடுகிறது. இவ்வாறு கூறியது, தேவர் செய்த காவியத்தின் செந்தமிழ் நலத்தையோ பிற நலங்களையோ குறைகூறுவதாகாது; இக்காவியத் தையும் இதனைப் பின்பற்றி வந்த பிற நூல்களையும் படிப்பவரும் கற்பவரும் மேற்கொண்டு இனிய காவியங்களை இக்காலத்துக்கு ஏற்ற முறையில் செய்தல் வேண்டும் என்பதை வற்புறுத்துவதற் கேயாகும். தேவர் இக்காவியத்தில் இடையிடையே அருகக் கடவுளைப் பரவிப் பாடுவனவும், அவரைப் பரவுதல் குறித்து வகுக்கும் ஒழுக்கங் களும் இக்கால இளைஞர்கட்கு நன்கு அறிவுறுத்தற்குரியன வாகும். அருகனை வணங்குமிடத்தும் ஏனை வைதிக சமயக்கடவுளர் பெய ராலே நான்முகனென்றும், திருமால் என்றும் பிறவுமாகக் கூறுவது சமயப் பூசல் நிகழாது தடுத்தற்கு அரண்செய்கிறது. இசைப்பாட்டுக்களைப் பாடுமிடத்தில், இளவேனில் முதலிய பருவங்களையும், குயில் முதலிய பறவைகளையும், அறநெறிவழா தொழுகும் காதலரையும் தேவர் பாடியிருப்பது, இக்காலப் பாவலர் கட்குப் பெருவிருந்தாகும். அவர்களும் வெறிதே காதற்பாட்டும், இரட்டைமணி. மாலை, அந்தாதி, கலம்பகம் முதலிய பாட்டுமே யன்றி, வானம், ஞாயிறு, திங்கள், விண்மீண், காடு, மழை, காற்று, கடல், மலை, மயில், கிளி, குயில், புறா முதலியவற்றின் இயல்பும் நல்லொழுக்கமும் பிறவும் விளக்கும் இனிய பாட்டுக்களைப் பாடி நாட்டுமக்களின் கலையுணர்வை விரிவு செய்தல் கூடும். இவ்வண்ணம் இற்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்குமுன், தமிழ்ச் செய்யுள் உலகில் தோன்றி, காவிய நலத்தை வெளிப்படுத்தி, பின்னெழுந்த இராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பிற தலபுராணம் முதலிய தமிழ் நூல்கட்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்த இச் சீவக சிந்தாமணி, இக்காலத்தும் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு காட்டும் உண்மைநெறிக்காவியங்கள் பல தோன்றுதற்குப் பெருந்துணையாய் நின்று நிலவுக என நம் தண்தமிழ்த்தாயின் வண் மலர்த்திருவடிகளை மனமொழி மெய்களால் வணங்கியமைகின்றாம். “இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.” தமிழ்த்தாய் வாழ்க! Lord Macaulay. * இச்சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம் இளங் கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாருமாகப் பலதிறத்து ஆராய்ச்சியாளர் உளர்:- History of the Tamils by P.T.S. Ayyengar. 1. இதனை டிரைடன் (Dryden), என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர். 2. இதனை இக் கட்டுரைக்குப் பின் காண்க. 38. * கண்ணகியென்னும் பெயர் பண்டைத் தமிழ் மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுன் ஒன்று. வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது. ஒருகால், இக் கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில் கிழார், கபிலர், பாணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப்பட்டனர். இனி, நம் கண்ணகியார் தம் மார்பொன் றைத் திருகியெறிந்த செய்தி போல்வ தொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனிளநாகனாரால் குறிக்கப் பெறுகின்றது. “இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுத்த திருமா வுண்ணிக், கேட்டோ ரனைய ராயினும், வேட்டோரல்லது பிறர் இன்னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகி யாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராய்தற்குரியது. * “ஆயிரம் பரிசத்துக்கும் எண் கழஞ்சு மெய்ப்போகத்துக்கும்” என்பர் அடியார்க்கு நல்லார். (3:162-3 உரை) * The Silapadikaram pp. 362. *Astronomical date and the date of the Silappadikaram pp. 354-9. * “In pressing into service the astronomical data, though not in a way warranted by the original. the Commentator shows himself an able astronomer and we may add an astrologer too” (Introduction to Silappadikaram in English) * Ancient Ceylon by P.H. Parker. * திருவள்ளுவமாலையில் இவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது. * ஆயின் - ஆராய்ந்து நோக்கின். *The Journal of Oriental Research, Madras, Vol. XI. part II page 118-128 கரந்தை கட்டுரை. பக். 226.8 *கரந்தைக் கட்டுரை.பக்.224 *சிலப்பதிகார ஆராய்ச்சி. பக்.81. ‡குறள். புலால் மறுத்தல். †சீவக.1242 *சம்பந்தர் தேவாரம் *சீவக சிந்தாமணி - சமாசப்பதிப்பு, முன்னரை, பக். 27. + Ancient India PP. 375. * சிவக. சிந்தாமணி, சமா. பதிப்பு பக்-19. * Ibid - pp.21,22 * சீவக சிந்தாமணி - சமாசப் பதிப்பு. முக. பக். 22. *சிலப்பதிகார ஆராய்ச்சி, பக். 19. 1 தொல்-கற். 44. * “Four things turneth not back; a spoken word, a sped arrow, neglected opportunity and past life” - என ஆங்கிலேயர் கூறுப. * “சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள் பற்றி இந் நூலாசிரியர் செய்துள்ள சொற்பொழிவினைச் “சித்தாந்தம்” Vol. 15. பக். 206,211,250 காண்க. * “எங்கெழிலன் ஞாயி றெளியோமல்லோம்” (6:95-2) எனத் திருநாவுக் கரசரும் கூறியிருத்தல் காண்க. * கரந்தைக் கட்டுரை பக். 57-67. * The Cholas by K.A, Nilakanta Sastri. Vol. II. Part I. P. 516. * The Cholas. Vol. PP. 134,135: 147,149:185-7. * Journal of the S.V. Oriental Institute Vol. 1 (Tamil p.1.1) * “பைந்தொடி மகளிராவார் பாவத்தாற் பெரிய நீரார்” (738), “காரிகையார்கள் (வீட்டைச்) செல்லார்” (737), “கணவற் பேணுங் கற்புடைமகளிர் இந்த உருவத்தின் நீங்கிக் கற்பத்துத்தம் தேவராவர்” (739). “மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி, ஏதமொன் றின்றி வீடு எய்துவர்” (740) என்று மேருமந்தரபுராணம் கூறுகிறது. பிராப்பிரதத் திரயம், பிரசுவ சனசாரம் முதலிய சமண்சமய நூல்களும் பெண்கட்கு வீடு பேறு கிடையாது என்கின்றன. * ஈண்டுக் காட்டிய ஞாயிற்றின் செய்கை, சங்ககாலத்தமிழ் மகனொரு வன் தன் மனக்கினிய தமிழ்மகளை மணம் செய்து கொண்ட பிற்றை நாள், தன்னையும் அவளையும் மணவறையில் தமர் விட்டகாலை, “ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல், கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப” (அகம். 86) தாகிய செய்கையை நினைப்பிப்பது காண்மின். தமிழ் மகன் தமிழ்மகளின் “முகம்புதை”திறக்குங்கால் மணமுரசு மழங்குமென வறிக. * கொண்ட - கொள்ளுதற்கு இடமாகிய மார்பம், என்று பொருள் கொள்க. * இப் பகுதிக்கண் வரும் செய்யுளெண்கள், சாமிநாதையரவர்களின் உரையோடு கூடிய பிரதி யெண்களாகும். * சீவக சிந்தாமணி மூலமும் உரையும், 3-ஆம் பதிப்பு, முன்னுரை பக்.1,22.