உரைவேந்தர் தமிழ்த்தொகை 5 சூளாமணிச் சுருக்கம் ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 5 பதிப்பாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 200 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரை வேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல் களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுது கோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாடவேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப் படுத்து வதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகை யின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்து கிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்தி களை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் முன்னுரை 3 கடவுள் வாழ்த்து 23 1. நாட்டுச் சருக்கம் 25 2. நகரச் சருக்கம் 29 3. குமார காலச் சருக்கம் 34 4. இரதநூபுரச் சருக்கம் 40 5. மந்திரசாலைச் சருக்கம் 55 6. தூது விடு சருக்கம் 75 7. சீயவதைச் சருக்கம் 91 8. கல்யாணச் சருக்கம் 110 9. அரசியற் சருக்கம் 126 10. சுயம்வரச் சருக்கம் 152 11. துறவுச் சருக்கம் 165 12. முத்திச் சருக்கம் 180 செய்யுள் முதற் குறிப்பகராதி 190  சூளாமணிச் சுருக்கம் உரைக் குறிப்புகளுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையின் பெருந் தமிழாசிரியரும் ஐங்குறுநூறு உரையாசிரியரும் வித்துவான் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தொகுத்தெழுதியது முன்னுரை நம் தமிழ்மொழிக்கண் உள்ள இலக்கியங்களின் வளர்ச்சியும், முறையும் பற்றிச் சமண்சமயச் சான்றோர் பலர், பல காலங்களில் பல துறையிலும் நல்ல தொண்டு புரிந்துள்ளனர் என்பது தமிழகத்துத் தமிழரேயன்றித் தென்னிந்திய வரலாறு காணும் பிறரும் நன்கறிந்த செய்தியாகும். சங்க இலக்கிய காலத்துக்குப் பின் உண்டாகிய தமிழ் நூல்களின் இடையே இச்சான்றோர்கள் செய்தன சிறப்புற்று விளங்குகின்றன. அற நூல்களுள் நாலடியார் அறநெறிச்சாரம் முதலியனவும், இலக்கண நூல்களுள் நேமிநாதம் நன்னூல் யாப்பருங்கலம் முதலியனவும், காவியங்களுள் சிந்தாமணி சூளாமணி முதலியனவும் முன்னணியில் நிற்கின்றன. புராண வகைக்கு மேருமந்தர புராணமும், சமயவாதத் துறைக்கு நீலகேசியும் பிறவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்மொழிக்கண் காணப்படும் எத்துறையிலும் இச்சமண முனிவரின் தமிழ்த் தொண்டு விளக்கமான இடம்பெற்று நிற்பதை யறியலாம். காவிய வகையுள் புகழ்கொண்டு விளங்கும் சிந்தாமணி முதலியவற்றுள் சூளாமணி ஐஞ்சிறு காவியங்களுள் ஒன்றாக நிலவுகிறது. அவ்வைந்தும் யசோதர காவியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயண காவியம், நீலகேசி யெனப்படும். இவற்றுள் சூளாமணி இரண்டாவதாக வைக்கப்பெற்றுள்ளது. இச்சூளாமணியை முதற்கண் அச்சிட்டு வெளியிட்ட சான்றோர் திரு. சி. வை. தாமோதரம் பிள்ளையவர் கள். காவிய நிரலில் இச்சூளாமணி இரண்டாவதாக வைக்கப்பெற்றுள்ளது குறித்துக் கூறுமிடத்து, "சூளாமணி இரண்டாவது காவியமென அதன் படிகளிலிருக்கும் குறியீட்டினால் தெரிய வருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக் கிரமம் இன்னதென்றும் விளங்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். யசோதர காவிய அச்சுப்படியைத் திருத்திக் கோடற்பொருட்டு, விழுக்கம் திரு. குப்புசாமி நயினார் கொடுத்த கையெழுத்துப் படியில் முதலாவது யசோதர காவியம் என்று குறிக்கப் பட்டிருக்கக் கண்டேன். யசோதர காவியப் பதிப்பாசிரியரும் சிறுகாவிய மைந்தனுள், அக்காவியம் முதலாவது என்றே குறித்திருக்கின்றார். இவ்வைந்தனுள், நாககுமார காவியம் இன்னும் கிடைக்காமையால் வெளிவரவில்லை. சமண முனிவர்கள் நம் இனிய தமிழ் மொழிக்கண் செய்துள்ள காவியங்களுள் தேன் மணக்கும் தமிழ் நடையும் செம்மை மணக்கும் கருத்துக்களும் கொண்டு படிப்போருள்ளத்தை உண்மைப் புலமையின் நுட்பத்தை நன்கறிந்து பேரின்பமடையச் செய்யும் பெருமை யுடையது இச்சூளாமணியேயாகும். இன்பம் வீரம் அருள் முதலிய சுவை வகைகள் எல்லாவற்றினும் இந்நூல் இணையின்றி இலங்குகிறது. எண்ணுந் தோறும் இறும்பூது பயக்கும் சொல்லாடல்கள் எம்மருங்கும் காணப்படுகின்றன. இயற்கை யன்னையின் இன்பத்தோற்றத்தை நம் உள்ளக் கிழியில் எழிலொழுக எழுதிக்காட்டும் இனிய தூரியக்கோல் இச்செந்தமிழ்க் காவியம் என்பதற்கு என் உள்ளம் ஆசைப்படுகின்றது. சொல்வன்மை சோர்வின்மை அஞ்சாமை என்ற மூன்றும் இந்நூலிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் ஒளிவிட்டுத் திகழ்கின்றன. சுருங்கச் சொன்னால், இச்சூளாமணியைச் சூளாமணி என்று பெயரிட்டது முற்றும் பொருத்தமே யென்று கூறுவது சாலும். சிறு காவியமென் பனவற்றுள் இதனை ஒன்றாக வைத்தவர் சிறுமை பெருமைகளைத் தெரிந்துணரும் மதுகையில்லாதவர் என்று கூறலாம். ஏனெனில், காவிய நெறியிலாதல், கவிநடையிலாதல், கருத்து வகையிலாதல் இதன்கண் எத்தகைய சிறுமையும் காணப்பட வேயில்லை. திருத்தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணியினும் இச்சூளாமணி உயர்வு பெரிதுடையது என்று தமிழறிஞர் கருதுவதும் வாய்த்த விடத்து எழுதிவிடுவதும் சொல்லி விடுவதுமுண்டு. சிந்தாமணிபால் உண்டாகியிருந்த விருப்ப மிகுதியால், எனக்கு அத்தமிழறிஞர் கருத்தும் எழுத்தும் சொல்லும் வாட்டத்தைத் தந்ததுண்டு. 1933-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினான்காம் நாள் யான் என் நண்பர் சிலருடன் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன். இந்நூல் முற்றும் நன்கு படித்து முடித்ததற்கு நான்கு திங்கள் சென்றன. படித்தற்குவேண்டும் வசதிகளை என் நண்பர் திருவோத்தூர், திரு. குட்டையம், ஆறுமுக முதலியார் அவர்கள் உதவினார்கள், அதன்பின், சூளாமணியைப் பற்றிய என் கருத்து மாறுவதாயிற்று. சிந்தாமணிக்குப் போல இச்சூளாமணிக்கும் உச்சிமேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் ஓர் உரை யெழுதியிருப்பாராயின், இச்சூளாமணி, தமிழ்ப்புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் மிக விளங்கியிருக்கும் என்று இனிது எடுத்து மொழியலாம். பதிப்பாசிரியராகிய திரு. சி. வை. தாமோதரம் பிள்ளைய வர்கள், யாப்பருங் கலவுரைக்கண் எடுத்தாளப்பட்ட மேற்கோள் பற்றி உரைக்குமிடத்து, சிந்தாமணியினும் சூளாமணியின்கண் தமக்கிருக்கும் நன்மதிப்பு, தெளிய விளங்குமாறு, "யகர ஆசெதுகைக்குக் காய்மாண்ட" என்னும் சிந்தாமணிச் செய்யுள் காட்டாக எடுத்து ஆளப்பட்டிருக்கின்றதாலோ வெனின், ஆண்டு உரையாசிரியர்கள் காட்டியது "வேய்காயு மென்பணைத்தோள்" (சூளா. அரசு 404) என்னும் சூளாமணிச் செய்யுளொன்றும், அஃது ஆசிரியரால் சவலை விருத்தத்திற்கு ஓர் இலக்கியமாதற் பொருட்டு வைக்கப் பட்டது உணராது, கொகுடி யென்பதோர் மரப்பெயருளதென்று அறியார், கோங்கமென்று மாற்றினாற் போல (சூளா. தூ. 4), அச்செய்யுளில் இரண்டாமடி சீர்குறைந் திருப்பது பிற்காலத்துச் சிதைவென்று கருதி, அதனை யொழித்து, அதற்குப் பதிலாகக் காய்மாண்ட என்றற்றொடக்கத்துச் செய்யுளை இக்காலத்தில் யாரோ செருகிவிட்டார்களென்றும், எழுபது எண்பது வருடத்துக்கு முந்திய பழஞ்சுவடிகளில் "வேய்காயு மென்பணைத்தோள்" என்னும் உதாரணமே இன்னும் காணலாமென்றும், ரகர ழகர ஆசெதுகை மூன்றாமெழுத் தெதுகை முதலியவைகட்குச் சூளாமணி யிலக்கியங்கொண்ட உரையாசிரியர்கள் யகர மொன்றற்கு மாத்திரம் சிந்தாமணியிற் கைவைத்தற்கோர் தேவை இருக்க மாட்டாதென்றும், சிந்தாமணியிற் புதிதாகத் தேடியெடுத்த தென்பதற்கு அஃது அக்காப்பியத்தின் முதலாவது இலம்பகத்தின் முதலிலே கிடப்பதே ஒரு சான்றென்றும் கூறிவிடுக்க. நூன் முழுவதிலும் சிந்தாமணி உதாரணம் வேறில்லையே" என்று கூறுவதைக் காணலாம். இச்சீரிய செந்தமிழ்க் காவியம் ஒரே பதிப்பு 1893-ஆம் ஆண்டு உயர்திரு. சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1921-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், சீகாழி. திரு. கோவிந்தசாமி ரெட்டியாரவர்கள் இந்நூலின் அச்சுப்படியொன்றும் ஏட்டுச்சுவடி யொன்றும் வைத்து, ஒப்பு நோக்கிப் பல திருத்தங்களும் விடுபட்ட சில பாட்டுக்களும் சேர்த்துக் கையெழுத்துப் படியொன்று ஆயத்தஞ் செய்தார்கள். ஏடு படித்தவருள் யானும் ஒருவனாயினும் அத்துணைத் தமிழ்ப் பயிற்சியில்லாமையால் அப்படியில் கருத்தூன்றாது போயினேன். பின்பு 1932-ஆம் ஆண்டுச் சென்று அப்படியைத் தேடிப்பார்த்தபோது, ஆலக்கிராமம் வெங்கடரமண அய்யரவர்கள் சென்னையிலுள்ள தம் நண்பர் பொருட்டு முப்பத்து மூன்று ரூபாவுக்கு அப்படியை விலைக்கு வாங்கிக்கொண்டு போய்விட்டார்களென்று அறிந்து மனங் கவன்றேன். சூளாமணிச் சுவடிகள் வைத்திருப்பவர்கள் தருவார்களாயின் அதனை நல்லமுறையில் பதிப்பித்துத் தமிழ் மக்கள் அதன் தமிழ் நலத்தைத் தூயநிலையில் பெற்று மிக்க இன்பமடையச் செய்யலாம். II இச்சூளாமணியை இயற்றிய ஆசிரியர் பெயர் தோலா மொழித் தேவர் என்பதாகும். இதனை இந்நூற்பதிப்பில் திரு. சி.வை.தா. பிள்ளையவர்களால் தனியாக வெளியிடப் பட்டிருக்கும் “திக்கெட்டும்” என்று தொடங்கும் செய்யுட்கண் “சொற்கெட்டாவரன் தோலாமொழி” என வரும் தொடராலும், “பொழிந்து பொருள் விளக்கும் போழ்ந்திருள்கால் சீக்கும், இழிந்தவரை யேற்றி நிறுத்தும் - செழுந்தரளத் தோளா மணியை நகும் தோலாமொழி தொகுத்த சூளா மணியகத்துச் சொல்” என்ற வெண்பாவாலும் அறியலாம். இனி, இவ்வாசிரியர் ஊர், பெற்றோர் வரலாறு பற்றிய செய்திகள் சிறிதும் தெரிந்தில. ஆயினும் இவர் பெயரைப் பற்றி மாத்திரம் அறிஞர்கள் சில குறிப்புக்களை வழங்கியுள்ளனர். தஞ்சாவூர் திரு. K.S. சீனிவாசப் பிள்ளையவர்கள் தாம் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில், “தோலாமொழி யென்பது ஆசிரியர்க்குப் பிற்காலத்துவந்த பட்டப் பெயரெனத் தோன்றுகிறது. ஸ்ரீவர்த்த தேவர் என்பது அவர் பெயராய் இருக்கலாம்” என்று கூறுகின்றார். சூளாமணி வசனம் எழுதிய திரு. ந. பலராமை யரவர்கள், தோலாநாவின் சுச்சுதன் (செய். 113) என்று தொடுத்த சிறப்பினால் இவர்க்குத் தோலாமொழி யென்ற பெயர் எய்திற்றென்று எழுதியிருக்கின்றார். மைசூர் அரசாங்கத்தைச் சேர்ந்த சிரவண பெல்கோலா என்ற விடத்துக் காணப்படும் கல்வெட்டொன்றில் சிந்தாமணி சூளாமணி என்ற இரு நூல்களின் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. (Ep Ind. Vol.III. P190=1) இவற்றைக் கொண்டு, தஞ்சைத் தமிழ் வரலாறுடையார், “இவற்றால் சிந்தாமணி சூளாமணி என்னும் இரண்டு காவியங்களும் ஜைனர்களால் பெரிதும் கொண்டாடப்படுவன என்றறியலாம். சிலர் சிந்தாமணி சூளாமணி என்று இவ்விடத்துச் சொல்லியிருப்பது வேறு புத்தகங்களைக் குறிக்கும் என்பர். இது தமிழ்ச் சிந்தாமணியையும் சூளாமணியையும் அவற்றைச் செய்த திருத்தக்க தேவரையும் தோலாமொழிப் புலவரையும் குறிக்கு மென்பது ஸ்ரீமான் கோபிநாதராயர் அவர்கள் அபிப்பிராயம் (செந்.V.99). ராயர் அவர்கள், “குணபத்திர முனிக்குப்பின் குமரசேனரென்றொருவரும் அவருக்குப்பின் சிந்தாமணியாசார்யரும் அவருக்குப்பின் ஸ்ரீவர்த்த தேவரும் இருந்தார்கள்.” (செந்.V.98) என்று உரைக்கின்றார். சரவண பெல்கோலா கல்வெட்டில் காணப்படும் இரண்டு வடமொழிச் சுலோகங்களைக் காட்டி, “இவ்வாறு, சிந்தாமணியையும் சூடாமணியையும் அடுத்தடுத்துக் கூறுவதனாலும், இரண்டுங் காவியங்களென் பதனாலும், இரண்டும் ஜைன சமயத்துக்குரியன வாதலானும், இவைகளை இயற்றியவர்கள் திரமிள சங்கத்தாரா யிருத்தலானும், இவைகள் முறையே “நான்கு புருஷார்த்தங்களையுந் தருவன” “தலைமேலணியத் தக்கன” என்று வர்ணிக்கப்பட்டிருத்தலானும் இவை தமிழ்க் காவியங்களாகிய சிந்தாமணியும் சூளாமணியுமா யிருக்கவேண்டுமென்று கொள்ளல் தகும். நன்னூற்கு உரையிட்ட மயிலை நாதர் தன்மையாற் பெயர் பெற்றன சிந்தாமணி சூளாமணி நன்னூல் முதலாயின (நன் 48. உரை) என்று எழுதியது மேலே தந்துள்ள சுலோகங்களின் கருத்தோடு பொருந்தியிருப் பதும் தமிழ்க் காவியங்களே அச்சுலோகங்களாற் குறிக்கப்பட்டன என்பதற்குப் பிறிதுமொரு சான்றாம்” என்று சீவக சிந்தாமணி மூலப்பதிப் பாசிரியரான திரு. ம. பால சுப்பிரமணிய முதலியா ரவர்கள் கூறுகின்றார்கள். இங்கே காட்டிய காட்டுக்களால் சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவர் ஸ்ரீவர்த்ததேவர் என்றும், அவரியற்றிய இத் தமிழ்ச் சூளாமணியே சிரவணபெல் கோலா கல்வெட்டில் சிறப்பாகப் பாராட்டப்பட்டிருக்கிற தென்றும் அறியலாம். இச் சிரவணபெல் கோலா கல்வெட்டில் (Epi. Car, Vol. II. Ins. 67-54. Date 1129. A.D.) சூளாமணியைப் பற்றி வரும் சுலோகம். “சூடாமணி : கவிநாம் சூளாமணி நாமஸேவ்ய காவ்யகவி: ஸ்ரீவர்த்ததேவ ஏவஹிக்ருத புண்ய: கீர்த்திம் ஆஹர்த்தும் Chudamanih Kavinam Chulmani- nama savya Kavya Kavih Sri Vardha-deva eva hi Krita- punya kirtim aharttum” என்றும் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, “A crest-jewel of poets and the author of worthy poem named Chulamani Sri Vardha Deva alone was possessed of sufficient merit to acquire fame” என்றும் இந்த ஸ்ரீவர்த்ததேவரைத் தண்டியாசிரியர் பாராட்டியிருக் கின்றாரென்றும், அதனைத் தெரிவிக்கும் சுலோகம், யாயேவம் உபஸ்லோகிடோ தண்டிநா ஜஹ்நோ: கன்யாம் ஜடாக்ரேந பாபஹர பரமேஸ்வர: ஸ்ரீவர்த்ததேவ சந்தட்சே ஜிஹ்வாக்ரேந சரஸ்வதிம் Ya evam upaslokito Dandiua Jahnoh Kanyam Jatagrena babhara Paramesvarah Sri Varha-deva Santhatse Jihvagrena Sarasvatim என்றும், இதன் ஆங்கிலமொழி பெயர்ப்பு, “He was thus praised by Dandi- `Siva bore Jahnu’s daughter (Ganga) on the top of his malted hair. Sri Vardha Dheva, you bear Sarasvati on the tip of your tongue,” என்றும் காணப்படுகின்றன. கவிஞர்கட் கெல்லாம் முடிமணியாய்ச் சூளாமணியென்னும் சீரிய காவியத்தை ஆக்கியோருமாய் உள்ள ஸ்ரீவர்த்ததேவரே புகழ்க்குரியராவர் என்பதும், “ஸ்ரீவர்த்த தேவரே, சன்னுமுனிவன் மகளான கங்கையைப் பரமசிவன் தன் சடையிலே தரித்தான்; நீ உன் நாநுனியில் சரசுவதியைத் தரித்தாய் என்று இவ்வாறு தண்டியால் புகழப்படு கின்றார்” என்பதும் இவற்றின் பொருளாகும். இவற்றை நோக்கின், ஸ்ரீவர்த்ததேவர் வடமொழித் தண்டியா சிரியர்க்கு முற்பட்டவ ரென்பதும்,* அத்தண்டியாசிரியர் ஏழாம் நூற்றாணிடினிறுதி யிலிருந்த வராதலால், இந்த ஸ்ரீவர்த்த தேவர் ஏழாம் நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்தவ ரென்பதும் தெரிகின்றன. ஆகவே தமிழ்ச் சூளாமணியென்றும், இச்சூளாமணி யாசிரியரான தோலாமொழித் தேவரே, ஸ்ரீவர்த்தக தேவரென்றும் துணியப்படுமாயின், இச்சூளாமணியாசிரியர் ஏழாம் நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்தவரென்றும், எனவே, அவர்காலம் திருத்தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணிக்குச் சற்றேறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் முற்பட்டதென்றும் துணியலாம். ஆனால், இக்கல்வெட்டில் காணப்படும் சூளாமணியென்பது தத்துவார்த்த மகா சாஸ்திரத்தின் விரிவுரையின் பெயரென்றும் கர்நாடக சப்தாநூசாசனம் என்னும் நூலின் முன்னுரையில் பட்டகலிங்கரென்பார் கூறுகின்றார். கன்னட மொழியிலுள்ள அவ்வுரை 96,000 கிரந்தங்களையுடையதென்றும் கூறுவர். **இனி, பி. லூயிரைஸ் (B. Lewis Rice) என்பார், இச்சூளாமணியென்பது ராஜா வலி கதை என்னும் நூலில் குறிக்கப்பட்டுள்ளதென்றும், அதனைக் செய்தோர் தும்பலூர் ஆச்சாரியரென்றும் அந்நூல் கூறுகிறதென்றும் உரைக்கின்றார். †ஆகவே, இப்பகுதி நன்கு ஆராயவேண்டிய தொன்றென்பது விளங்குகின்றது. இனி, இச்சூளாமணிக்கண், “திக்கெட்டும் புகழ்படைத்த திறல்விசயன் புயலனைய கையன் தெவ்வைக் கைக்கொட்டி நகைக்குமிகற் கார்வெட்டி யரையன்வள நாடற் கேற்பப் பொக்கெட்டும் பத்துமிலான் புகழ்த்தரும தீர்த்தன் மலர்ப்பதம் பூசிப்போன் சொற்கெட்டா வரன்தோலா மொழிசூளாய மணியுணர்வோர் துறைகண் டோரே” என்றொரு தனிப்பாட்டு அச்சிடப்பட்டுள்ளது. இதன்கண் கார்வெட்டி யரையன் எனப்படும் விசயன் என்பானைப் பற்றிய குறிப்பு ஒன்றும் கார்வெட்டி நகர மன்னர் குடி வரலாற்றில் காணப்படவில்லை. திருப்பதி தேவஸ்தானக் கல்வெட்டு அறிக்கையில், கார்வெட்டி என்பது காடுவெட்டியென்பதன் திரிபு என்றும், காடு களை வெட்டி நாடாக்கிய மன்னர் பல்லவரென்றும், காடு வெட்டி நகரமாகிய கார்வெட்டி நகரம் அப்பல்லவரால் ஏற்படுத்தப்பட்ட தென்றும், தொடக்கத்தே அந்நகர்க்கண் இருந்த வேந்தர் பல்லவர்களென்றும் கூறுகின்றது. வடார்க்காடு ஜில்லா கெஜட்டீயரால் கார்வெட்டி நகரத்தவரின் பிற்கால வரலாறே காணப்படுகிறது. ஒருகாலத்தே இக்கார்வெட்டி நகரவேந்தர் ஆட்சி யெல்லையில் திருத்தணிகையும் அதனைச் சார்ந்துள்ள பகுதியும் இருந்தன என்றும், அக்காலத்தே சைனச் சான்றோர் சிலர் தணிகையைச் சார்ந்த அருங்குளம் முதலிய ஊர்களில் வாழ்ந்தனரென்றும், யான் தணிகைக்குக் கிழக்கிலுள்ள வளைகுளம் என்ற ஊருக்குச் சென்றிருந்த காலத்தில் ஒருவர் சொல்லக் கேட்டேன். அந்த அருங்குளத்தில் ஒரு சைனர் கோயில் இருக்கிறதென்றும், அக்கோயில் இருபத்து மூன்றாந் தீர்த்தங்கரராகிய பார்சுவநாத தீர்த்தங்கரர்க்கே உரிய தாயினும், அதன்கண் பதினைந்தாம் தீர்த்தங்கரராகிய தருமநாத தீர்த்தங்கரர்க்கும் உருவச்சிலையும் வழிபாடும் உண்டென்று வடார்க்காடு ஜில்லா கெஜட்டீயர் (பக்.235) கூறுகின்றது. தருமநாத தீர்த்தங்கரரைச் சிரவணபெல் கோலா கல்வெட்டொன்று (254-105-Date1398 A.D.) தரும தீர்த்தங்கரர் என்று கூறுகின்றது. தோலாமொழித் தேவர் தரும தீர்த்தங்கரர்பால் அன்புற்று வழிபட்டாரென்றும் இப்பாட்டுக் கூறுவதால், இவர் அக்கோயிலில் தரும தீர்த்தங்கரர் வழிபாடு ஏற்பட்ட காலத்திலோ அதற்குப் பின்போ இருந்திருத்தல் வேண்டுமென்று அறியலாம். இக்கோயிலில் சில கல்வெட்டுக்கள் உண்டென்றும் அவை படிக்க வொண்ணாதபடி உருக்குலைந்திருக்கின்றன வென்றும் திரு. ரங்காச்சாரியாரவர்கள் (Inscriptions of he Madras Presidency Vol.1) எழுதியுள்ளார். III இனி, தோலாமொழித் தேவர், தாம் பாடிய இச்சூளாமணி, “நாம வென்வேல் தேமாண் அலங்கல் திருமால் நெடுஞ் சேந்தன் என்னும்.... கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்டது” (4) என்று உரைத்துள்ளார். இச்சேந்தன் கார்வேட்டி நகர வேந்தனான விசயனோ, அன்றி அவன் கீழ் இருந்த தலைமக்களுள் ஒருவனோ, வேறோ ஒன்றும் தெரிந்திலது. இது நிற்க, வழக்காறு (Literary tradition), இச் சூளாமணியைச் சிந்தாமணிக்குப் பின் வைத்தே பேசுகிற படியால், மேலே காட்டிய குறிப்புக்கள் ஆராயப்பெற்று முடிவாகிற வரையில், தோலாமொழித் தேவர் காலத்தைப் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னதாகக் கோடல் பொருந்துவதாம். இக்கருத்துக்குச் சான்று பகர்வதுபோல இச்சூளாமணிக் கண் சிந்தாமணியில் வரும் பல சொற்களும் சொற்றொடர்களும் கருத்துக்களும் மிகுதியாய்க் காணப்படுகின்றன. “வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னான்” (சீவக.200) என்பது “வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்” (சூளா.109) என்றும், “சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடங்கள்” (சீவக. 549) என்பது “சங்குடைந்தனைய தாழைத் தடமலர்” (சூளா.103) என்றும் சொற்றொடர்களும், சீவகனுக்குக் கல்வி கற்பித்த திறத்தை “குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்கலுற்றார்; திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே” (சீவக. 368-9) என்று திருத்தக்கதேவர் கூறிய கருத்தையே சுயம்பிரபை பெற்ற விசயன் என்னும் மகன் கல்வி பெற்றது கூறுமிடத்தே வைத்து, “அவனோடு (விசயனோடு) மையார் இன்பக் காதலி நாவின் மகளாகப் பொய்யாக் கல்விச் செல்வர்கள் தம்மால் புணர் வித்தான்” (சூளா 381) என்று கருத்துக்களும் வருவன காணலாம். இனி, “வாழ்க அந்தணர் வானவ ரானினம், வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக, ஆழ்க தீயதெல்லா மரன் நாமமே, சூழ்க வையக முந்துயர் தீர்கவே” என்ற திருப்பாசுரம் போலவே, “வாழ்கநம் மன்னவன் வாழ்க வையகம், ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம், வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம், தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே” (சூளா. 383) என்ற பாட்டு அமைந்திருப்பது, ஞானசம்பந்தர் காலத்து நிகழ்ச்சி தோலா மொழித்தேவர் மனத்தே ஊறியிருப்பதை யுணர்த்துகிறது. மணிமேகலை ஆசிரியர் திருவள்ளுவப் பெருந்தகையைப் “பொய்யில் புலவன்” என்றது போலவே, இச்சூளாமணியாசிரியர், திருக்குறளை “புகழ்ச்சி நூல்” (சூளா 214) என்று பாராட்டுகின்றார். இங்கே காட்டியவாறே நோக்கின், இச்சூளாமணிக்குச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் முதலியனவும் கருத்தும் சொற்களும் உதவியிருத் தலைக் காணலாம். இனி, திரு. பூர்ணலிங்கம் பிள்ளையவர்கள் இச்சூளாமணி வழக்காறற்று ஒழிந்த சொற்கள் பல செறிந்த பாட்டுக்களையுடைய தென்று கூறுவர். “தென்னுண் தேனில் தேக்கிய செஞ்சொற்கவி” எனக் கம்பர் வகுத்த கவியிலக்கணத்துக்கு இச்சூளாமணிச் செய்யுட்கள் நேரிய இலக்கியமாவன என யாங்கள் கருதுகின்றோம். இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவண பெல்கோலாவில் காணப்படும் கல்வெட்டுக்களெல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும் காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திர நந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது என்று கேட்க, அவர், தன் பெயர் பரவாதி மல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் “சாவாயும் வாதுசெய் சாவகர்” (147.9) என்பது காண்க. இவற்றால் சமண் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடைய ரென்பது பெறப்படும். படவே, தோலாமொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பா ரென்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித்தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண் “தோலா நாவின் சுச்சுதன்” (41), “கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு, உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. அச்சுவகண்டன் என்பான் திவிட்டன்மேல் எறிந்த ஆழிப்படை திரும்பிப்போந்து அவ்வச்சுவகண்டனையே கொன்ற செய்திக்கு ஆசிரியர் ஓர் உவமம் காட்டுகின்றார். அவ்வுவமம் சொற்போர் பற்றியதாகும். “நெறிதலை திரிவிலான்மேல் நினைவிலான் மொழியப்பட்ட, மறுதலை முடிக்கும் ஏதுவாய் வழியழிப்பதே போல்” (354) என்பது அவ்வுவமானமாகும். நகைச்சுவை பற்றி உரை நிகழ்த்த நேர்ந்தபோது இவ்வாசிரியர்; சொற்போரே பொருளாகக் கொண்டு, “வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோது கொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்” (368) என்பதும். பிறவும் இவர்க்குச் சொற்போர்க்கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. IV இனி, தோலாமொழித் தேவர் இந்நூல் வரலாற்றை *ஆருகத மாபுராணத் திலிருந்து எடுத்தோதுகின்றார். இதனை, “செஞ்சொற் புராணத்து உரையின் வழிச்சேறும் அன்றே” (6) என்று கூறுகின்றார். இந்நூல் உரைக்கும் நிகழ்ச்சியை, பதிப்பாசிரியராகிய சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் கூறியிருத்தலின் அதனையே ஈண்டுத் தருகின்றோம். “இந்நூல் ஆருகத மகாபுராணத்திற்கூறிய நலவாசுதேவப் பிரதிவாசு தேவர்களில், திப்பிரஷ்ட வாசுதேவனதும் அவ்வாசுதேவனுக்குப் பகையாய் அவதரித்த அயக்ரீவப் பிரதிவாசுதேவனதும் சரித்திரத்தை விரித்துக் கூறிப் பெரும்பாலும் சமண காவியங்கள் துறவும் முத்தியும் உணர்த்தி முடியுமாறு போல, இருபத்து நாலு தீர்த்தங் கரருள் சிரேயசுவாமி தீர்த்தகாலத்தில் சுரமை நாட்டின்கண் போதன மாநகரத்திலிருந்து அரசுபுரிந்த பயாபதியரசன் தன் குமாரனான அவ்வாசு தேவனைப் பூமியாள வைத்துத்துறந்து தன் தேவிமாரோடு முத்திபெற்ற கதையை எடுத்துச் சொல்லும். இந்நூற் சீயவதையும் வித்தியாதர விவாகமும் சேடியர் சங்காரமும் கிருஷ்ண சரித்திரத்திற் சேர்ந்தன வல்லவாயினும், திவிட்டராசன் குணாதிசயங்கள் திருமாலின் அவதாரமாகிய கண்ண பெருமானதும், திவிட்டனுக்கு மூத்தோனாகிய விசயன் குணாதிசயங்கள் கண்ணன் அண்ணன் பலபத்திரனதும் இலக்ஷணங்களோடு ஒருவாறு ஒத்திருக்கும்.” இந்நிகழ்ச்சி, பாயிரம் நீங்கலாகப் பன்னிரண்டு பகுதிகளாகப் பகுத்துக் கூறப்படுகின்றது. அவை நாட்டுச் சருக்கம் நகரச் சருக்கம் முதலாகத் துறவுச் சருக்கம் முத்திச் சருக்கம் ஈறாகப் பன்னிரண்டாகும். சமண் சான்றோர் எழுதிய காவியங்களுள் இதன்கண்தான் பிற்காலச் சைவ வைணவ நூல்களுட்போல நாடுநகரச் சருக்கங்கள்* தனித்தனியாக வைத்து உரைக்கப்படுகின்றன. இந்நூற்பாயிரம், நூற்பொருளும், நூலாசிரியருடைய அவையடக்கியலும், நூலரங் கேற்றமும், நூல்வந்த முறையும் விளங்கவுரைக்கின்றது. V தோலாமொழித் தேவர் நுண்ணிய புலமையும் அரசியல் நுட்பமும் இயற்கையழகில் ஈடுபாடும் மக்கள் மனவமைதி தேர்ந்துரைக்கும் மாண்பும் உடையவராவர். இவரது புலமை நலம் தம் மனக்கண்ணில் தோன்றும் கருத்துக்களை எடுத்துரைக்கும் திறத்தால் நன்கு புலனாகிறது. பெரியோர் தமது பெருமையினைப் பொருளாக உணர்தலும் கொள்ளுதலும் செய்யார்; பிறர் பால் காணப்படும் பெருமைகளையே பெரிதும் நினைந்து மகிழ்வர். பெரியோர், தம்பாலுள்ள பெருமையால் பிறர் பாலுள்ள பெருமை யினையே காண்பர்; சிறுமை அவர் கண்கட்குப் புலனாகாது. ஒருகாற் புலனாயினும், அதனைப் புறக்கணித்து மறைப்பதே அவர்க்கு இயல்பாகும். திருவள்ளுவரும் “அற்றம் மறைக்கும் பெருமை” என்றே கூறினர். ஒருவர்பால் குற்றமுண்டாதற்குரிய காரணங்களுள் அவர்தம் அறிவு, அவர் மனத்தெழும் இச்சை வயப்பட்டொழுகுவதும் ஒன்றாகும். தோலாமொழித் தேவர் இச் சூளாமணியைப் பாடுதல் வேண்டுமென்று காதல் கொண்டு தம் அறிவை அக்காதற்கு அடிமைப் படுத்தி விடுகின்றார். ஆகவே, குற்றமுண்டாதற்குரிய இடம் தோன்றி விடுகிறது. அதனையுணரும் அவர், “கொற்றம் கொள் நேமி நெடுமால் குணம் கூற இப்பால் உற்று இங்கு ஓர் காதல் கிளரத் தமிழ் நூற்கலுற்றேன்” என்று தம் மனநிலையை ஒளிக்காது கூறுகின்றார். இதனைக் கூறவே, குற்றம் உளதாம் என்பதையும் அவர் உணர்ந்தாராயிற்று. ஆயினும் அவர் முன் தோன்றும் பெரியோர் பெருமையை யுணர்ந்து, அப்பெருமையால், அவர்கள் தமது குற்றத்தை மறைத்துக் குணங்கொண்டு கோதாட்டுவர் என்ற குறிப்பினைக் கொண்டு, “மற்று இங்கொர் குற்றம் வருமாயினும் நுங்கள் போல்வார் அற்றங்கள் காப்பார் அறிவிற் பெரியார்கள் அன்றே” (3) என்று பாடுகின்றார். இனி, குற்றம் செய்தார் ஒருவரைக் காணுமிடத்து அவர் அக்குற்றத்துக்கு வேண்டும் கழுவாய் பல கழியவே செய்தாராயினும், காண்பார்க்கு அவரது குற்றம் நினைவில் எழுவது இயல்பன்றோ! தம் குற்றமும் அவ்வாறே காணப்படுமே என்று ஆராய்ந்து, திங்களிடத்து மறு, அதனைக் காணுந்தோறும் காணப்படினும், சிலர் அத்திங்களின் மறுவுண்மை நோக்காது அதனை வழிபடுவர்; அவ்வாறே நல்லோர் எம் குற்றம் காணாது குணமே கொண்டு பேணுவர் என்பார், “நங்கண் மறுவும் மறுவன்று நல்லார்கள் முன்னர்; அங்கண் விசும்பின் இருள் போழ்ந்து அகல்வான் எழுந்த திங்கள் மறுவும் சிலர் கைதொழச் செல்லுமன்றே” (5) என்று கூறுகின்றார். இவ்வாறே இவர் தம் நுண்மாண் புலமையை விளக்கும் பாட்டுக்கள் மிகப் பல. இதன்கண் செறிந்துள்ளன. மண்ணுலகத்தே வாழும் மக்கட்கு அரசியல் இன்றியமையாது என்றும், அவர்கட்குக் கண்போல் நலம் செய்வது அரசு என்றும் தோலாமொழித் தேவர் இந்நூற்கண் வற்புறுத்துகின்றார். மக்களுயிர்க்குப் பகை விலங்கு முதலிய வற்றால் உண்டாகும் துன்ப விருளையும், மனத்திற் படிந்திருக்கும் அறியாமையாகிய அகவிருளையும், புறத்தே படியும் புற விருளையும் கெடுத்து முறையே பாதுகாப்பு, அறிவு, பகலொளி என்ற மூன்றையும் தருவதால் உலகிற்கு நல்லரசும் கல்வியும் ஞாயிறும் கண்ணாமென்று நூலோர் சொல்லுவர்; அம்மூன்றினுள் நல்லரசாகிய கண்ணில்லையாயின் மண்ணுலகில் துன்பம் நீங்காது என்றற்கு. “எண்ணினுள் தலைக்கண் வைத்த கண் (காவலர், கல்வி, ஞாயிறு என்ற மூன்றனுள் முதற்கண் உள்ள நல்லர சென்னும் கண்) அஃது இல்லையாயின், மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறிது இல்லை மன்னா” (104) என்று விளக்குகின்றார். இவ்வாறு கண்போல் நின்று பயன் உதவும் நல்லரசுக்குத் தூதரின் இன்றியமையாமையை, “மந்திரக் கிழவர் கண்ணா மக்கள்தன் தாள்களாகச் சுந்தர வயிரத் திண்தோள் தோழராச் செவிகள் ஒற்றா அந்தர வுணர்வு நூலா அரசெனும் உருவுகொண்ட எந்திரம் இதற்கு வாயாத் தூதுவரியற்றப்பட்டார்” (192) என்று நாட்டுகின்றார். அரசியலை எந்திரம் என்று இவர் கூறுவது போல இக்கால அரசியலும் அறிஞர்களால் எந்திரமென்று* கூறப்படுவதுண்டு. அரசர்க்கெனச் சிறப்பியல்கள் சில இந்நூலில் கூறப்படுகின்றன. அரசர்கள் தாம் தம் மந்திரச் சுற்றத்தோடு ஒரு பொருளைப் பற்றி யாராயுமிடத்து ஆராய்ச்சி முடிவு விரைவில் எய்தாதாயின் அதனை நிறுத்திப் பிறிதொருகால் ஆராய்வது நன்றேயன்றி, நீட்டிக்குமாயின் விளைவு நன்றாகாது என்பது தோன்ற, “மந்திரம் நீளுமாயின் வருவன அரியலாகா” (132) என்பர். மேலும், அரசன் எத்துணை மதிநுட்பமும் தோள்வன்மையு முடையனாயினும், கற்றுவல்ல அறிஞர் கூறுவனவற்றை அசட்டை செய்யக்கூடாது என்றற்கு, அச்சுவகண்டன்மேல் வைத்து “புலவர் சொல்வழி போற்றிலன் என்பதோர், அலகில் புன்சொலுக்கு அஞ்சுவன்” (217) என்று உரைக்கின்றார். இவ்வாறு அரசியல் நலம் பற்றி இவர் கூறுவன மிக்க இன்பந்தருவனவாகும். சிறை வாழ்க்கையின் சிறுமையும் அடிமை வாழ்வின் அமைதியின்மையும் தக்காங்கு இந்நூற்கண் எடுத்துக் காட்டப்படு கின்றன. தவத்தின் சால்புணர்ந்து அதனை மேற்கொள்வோர் மறுபடியும் இவ்வாழ்க்கையை விரும்பார் என்றற்குச் சிறை வாழ்வின் சிறுமையை எடுத்துக்காட்டி, “அருஞ்சிறைப் பிணியுழந் தலைப் புண்டஞ்சுவான் பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின், கருஞ்சிறைக் கயவர் கைப்பட்டு வெந்துயர், தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ” (449) என்று ஓதுகின்றார். இவ்வாறே தவத்தின் மாண்பும் அருளறத்தின் சிறப்பும், பொருளின் இன்றிய மையாமையும் பிறவும் விரித்துக் கூறப்படுகின்றன. அடிமை வாழ்வென்பது ஒருவன் ஒருத்தனுக்குக் கீழிருந்து, அவன் கூறுவது கேட்டுச் செய்வன செய்து அவன் கொடுப்பது பெற்று வயிறு வளர்ப்பதாகும். அது மானமுடையார்க்கு வருத்தம் தருவ தொரு நிலையாகும். அந்நிலைமை ஒருவன் அடைவதற்குக் காரணம் இறைவனன்று; அவனே என்பர். இவ்வடிமை வாழ்வு டையார் “புலமை மிக்குடையரேனும் ஒருவனுக்கு ஒருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து” (223) வாழ்வது குறைவே என்பர். இதனைப் பயாபதியின்மேல் வைத்து, “ஒளியினால் பெரியனாய ஒருவனுக் குவப்பச் செய்து, அளியினால் வாழ்துமென்னும் அவாவினுள் அழுந்துகின்றோம்; தெளிய நாம் இதனைக் கண்டும் செய்வினைத் திறங்கள் ஓராம்; அளியமோ அளியம் சால அறிவினால் பெரியமே காண்” (225) என்று கூறி, நம்மனோருள்ளத்தே அடிமை வாழ்வில் அருவருப்புண்டாமாறு அறிவுறுத்துகின்றார். உழைப்பார் உழைக்க, உழைப்புப் பயனையுண்டு மகிழ்வோர் இயல்பும் உழைப்பாளிகள் நிலையும் எடுத்தோதுவதால், இத்தோலாமொழித் தேவர் ஒரு பெரிய பாட்டாளி யியக்கத் தலைவர் (A great leader of the Labour movement) என்று கூறுவதற்குத் தக்கவராகின்றார். மகளிர் திருமணம் குறித்துக் கூறுவன இக்காலக் கொள்கைகட்கு மிகவும் ஏற்றனவாக இருக்கின்றன. பெண்மக்கள் ஒரு குடியில் பிறந்து வளர்வதால் அக்குடிவிளக்கம் பெறும் என்பார், “வானகத் திளம்பிறை வளர; வையகம், ஈனகத் திருள்கெட இன்பம் எய்துமே, நானகக் குழலி! நீ வளர நம் குடி, தான் அகத்து இருள்கெடத் தயங்குகின்றதே” (91) என்று கூறுகின்றார். மகளிர் தம் பெற்றோர் தேர்ந்துரைக்கும் ஆடவரையே மணத்தற்குரியர் என்பதை, “தந்தை தாய் கொடுப்பின் தையலார், சிந்தை தாய் இலாதவர் திறத்தும் செவ்வனே, நொந்து தாம் பிறிதுரை நொடியவல்லரோ” (94) என்று உரைத்து, அவர் மனத்தெழும் காதற் பண்பையும் அதனைக் கருதிப்பார்க்க வேண்டிய கடப்பாட்டையும் விளக்குவார், “காதலால் அறிவது காமம், காதலே, ஏதிலார் உணர்வினால் எண்ணலாவதன்று” (95) என்று எடுத்தோதுகின்றார். பெண்கள் மணமின்றியிருப்பது பெண்ணுக்கும் பெண்ணைப் பெற்றோர்க்கும் பெருமை தாராது என்பதை, “பெண்ணலம் கனிந்த பேதை இருப்பதும் பெருமையன்று” (124) என்பர். மனக்கினிய மகளிரொடு கூடி மக்களும் சுற்றமும் சூழ வாழும் வாழ்க்கை ஒரு கற்பகம் போல் நின்று, வேண்டும் பயனை வேண்டியாங்கு விளைக்கும் என்பார், தலைமகனை அக்கற்பகமரத்தின் அடிப்பகுதியாகவும், மனைவியைக் கிளை களாகவும், மக்களை மலர்களாகவும், சான்றோர் சுற்றத்தை வண்டுகளாகவும் உருவகம் செய்துரைக்கின்றார் (143). இவ்வாறே, மக்கள் இன்பவாழ்வு வாழ்தற்கு வேண்டும் அரிய கருத்துக்கள் பல இந்நூற்கண் நன்கு கூறப்படுகின்றன. இனி, தோலாமொழித் தேவர் இயற்கையின் அழகில் மிக்க ஈடுபாடுடையராய்த் திகழ்கின்றார். இயற்கையில் தோன்றுவன பலவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படுவனவாகவே இவர் கண்ணுக்குக் காட்சியளிக்கின்றன. வேனிற்கால வரவில் கோங்க மரமெல்லாம் பூத்து நிற்கின்றன; அப்பூக்களில் மணமில்லை. ஆயினும் பொன்னிறமான அப்பூக்களின் மிகுதி கண்ணைக் கவர்கிறது. இதனை வயந்தமாலையென்னும் தோழி போந்து சடியரசனுக்கு உரைக்கலுற்று. “செறிகழல் மன்னர் மன்ன, பூங்குலாய் விரிந்த சோலை பொழிமதுத் திவலை தூவக், கோங்கெலாம் கமழமாட்டாக் குணமிலார் செல்வமேபோல், பாங்கெலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம்” (65) என்று கூறுகின்றாள். பொன்போலும் பூக்கள் மலர்ந்தும் கோங்கு மணமின்மையின் வண்டினம் சூழப் படாமை, ஈயும் குணமில்லா ரிடத்தே பொன் மிக நிறைந்திருந்தும் பிறர்க்குப் பயன்படாமையைக் காட்டுகிறது என்பதைக் “குணமிலார் செல்வமேபோல்” என்று இசைக்கின்றார். சோலையிடத்தேயுள்ள மாமரங்களில் இருந்த குயில்கள், மாந்தளிர் துவர்த்தலைக் கண்டு நீங்கி, முருக்கஞ் சோலைக்குச் சென்று ஆண்டுள்ள பூக்கள் உண்டு அங்கேயிருந்து பாடுகின்றன. அச்செய்கை உறின் நட்டு அறின் ஒருவி நீங்கும் மக்களையும் உற்ற பொருள் நீங்கிய செல்வரையும் நினைப்பிக்கின்றது. அதனால், தேவர் “செல்வரேனும் தாம் சுவை பிரிந்த பின்றைச் சார்பவர் இல்லை யன்றே” (67) என்று தெரிவிக் கின்றார். நல்ல அறிவும் ஒழுக்கமும் செம்மையுமுடைய நல்லோரிடையே நிகழ்ச்சிகள் சிறிதும் அவ்வறிவொழுக்க நெறிகளில் வழுவுதல் கூடாது. பயாபதியென்னும் வேந்தன் இக்குணநல மனைத்தும் உடையன், “மாறி நின்ற வரையும் வணக்கினல்லது, சீறி நின்றெ வரையும் செகுப்பதில்லை” (27). இவ்வாறே சடிவேந்தன், “வெச்செனச் சொல் ஒன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்” (56). சடிவேந்தன் தன் மகள் சுயம்பிரபையைப் பயாபதி மைந்தனான திவிட்டனுக்கு மணம் செய்துகொடுக்க வேண்டித் தன் தூதுவன் ஒருவனை விடுக்கின்றான். பயாபதி மண்ணுலக மன்னன்; சடியோ விஞ்சையர் வேந்தன். சடி விடுத்த தூதன் தன் அரசன் விரும்பும் மகட்கொடையை யுணர்த்தும் திருமுகத்தைக் கொடுக்கின்றான். பயாபதியோ மகிழ்ச்சி மிகுதியால் ஒன்றும் உரையாடமாட்டாது சிறிது போது அமைந் திருக்கின்றான். அவ்வமைதி தூதனுக்குத் தன்னரசனை யவமதிப்பது போலத் தோன்றுகிறது. உடனே அவன் கண் சிவந்து, வாயிதழ் துடிப்ப, கறுத்த சொற்கள் சில கழறிக் கூறுவான், “முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால், என்னவரேனுமாக இகழ்ந்திடப்படுபபோலாம்” என்றும், “விஞ்சையர் செல்வந்தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரலாமோ?” என்றும், “எங்கோன் விடுத்ததே ஏதுவாக எள்ளி ஓர் உரையும் ஈயாது இருந்தனை இறைவ” என்றும் கூறுகின்றான். இது கேட்கும் பயாபதி முறுவலித்து, “விரையற்க” என்பதோ, தானும் வெகுண்டு தெளிவதோ செய்யாது, தன் உள்ள நிலையை உள்ளவாறே கூறலுற்றுச் “சிவந்துரையாடல் வேண்டா உரியவாறு உரைக்க மாட்டாது ஈங்கு யான் இருந்தது” என்று கூறுகின்றான். இதனோடு அமையாது இவ்வேந்தன் மெல்லிய இனிய சொற்கள் சில கூறி அத்தூதுவனைத் தெருட்டலுற்று, “உங்களுடைய உயர்நிலைச் செல்வமெல்லாம் மேலைத் தவமுடையோர்க்கு உரியது;” “எப்படி முயறுமேனும் எங்களுக்கு எய்தலாகாது; அப்படி நீயும் முன்னர் மொழிந்தனையன்றே” என்று கூறுகின்றான். இது கேட்டதும் தூதுவன் உளம் குலைந்து நடுங்குகின்றான்; உள்ளத்தே வேந்தன் சொற்களை நினைக்கின்றான்; தன் சொற்களையும் நினைத்துப் பார்க்கின்றான்; அவன் நினைவில் பயாபதியின் பெருமையும் தனது சிறுமையும் தோன்றக் காண்கின்றான். “என்னை பாவம் பொருந்தாக் கறையவாம் மொழிகள் சொன்னேன்; காவலன் கருதியற்றோரேன்; பொறையினால் பெரியன் பூபன் சிறியன் யான்” என்று நாணி ஒடுங்குகின்றான். இத்தகைய நிகழ்ச்சி களையுடைய ஏனைத் தமிழ் நூல்களுள் காணப்படும் சொல்லாடல்கள் இத்துணை விழுப்பமில்லாதிருப்பதைக் காண்கின்ற நமக்கு இஃது எத்துணை இன்பம் தருகிறது காண்மின்! இம்மட்டோ, திவிட்டன் மகள் சோதிமாலை யென்பாட்குச் சுயம்வரம் நடக்கிறது. வேந்தர் பலர் அதற்கு வருகின்றனர். சோதிமாலை அமிததேசனுக்கு மாலையணி கின்றாள். ஏனை வேந்தர் என்ன செய்கின்றனர்? ஏனை நூல்களிற் காணப்படும் சுயம்வரங்கட்கு வரும் வேந்தர்கள் யாது செய்கின்றனர்? வறிதே மாலைபெற்றோன் பால் அழுக்காறு கொண்டு போர் தொடுத்து முதுகிட்டோடும் பேதை மாக்களா கின்றனரன்றோ? இங்கே வரும் வேந்தர்கள் “வினைகள் தாம் விளையுமாறியாம் வேண்டிய வாறுவாரா; இனையதால் வினையின் தன்மை என நினைந்து ஆறி” நீங்குகின்றனர். இவரது மனப்பெருமையைக் காண்மின்! சுருங்கச் சொல்லுமிடத்து, இச்சூளாமணியாசிரியர் நிரம்பவும் உலகியலறிவில் சிறந்திருக்கின்றார் என்பது சாலும். ஒருவன் இரு மனைவியரை மணந்து அவ்விருவர்க்கும் இனியனா யொழுகுந்திறம் அரிதென்பது உலகியலில் கண்டதொன்று; இன்னாராதலே பெரும் பான்மையாகும். பயாபதி மனைவியர் இருவரைக் கொண்டு அவர்பால் மிக இனியனாயொழுகினா னென்பார், “மங்கையர் இருவராகி மன்னவன் ஒருவனாகி, அங்கவர் அமர்ந்ததெல்லாம் அமர்ந்தருள் பெருகி நின்றான்” (34) என்றும், அம்மனைவியர் அவன்பால் அன்புற்றிருந்த இயல்பை, “இருவரும் இறைவன் உள்ளத்தொருவராயினியரானார்” (33) என்றும் உரைக்கின்றார். உலகில் சிறப்புறும் ஒருவன் எல்லார்க்கும் இனியனாயிருக்க முடியா தென்பதும் உலகியலில் காணும் உண்மை; இதனை இவர் “எங்குளர் உலகுக்கெல்லாம் ஒருவராய் இனிய நீரார்” (292) என்று கூறுவர். உயர்ந்த புலவர் ஒருவர்க்கிருக்கவேண்டும் என்று அறிஞர் கூறும் இலக்கணமுற்றும் நிரம்பியுள்ள தோலா மொழித்தேவரின் சமண் சமய நூற்புலமையும் மிக விரிந்ததாகும். அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். இவரது புலமைநலம் முற்றும் இக்காலத்து மக்கள் உள்ளப் பான்மைக் கேற்ற அறிவுகொளுத்தும் நிலையில் அமைந்திருத்தலின், இவர்தம் புலமைப் பயனாகிய இச்சூளாமணி முழுதும் பெருநலம் கனிந்து நிற்கும் பேரிலக்கியமாகும். இதன்கண் 2131 செய்யுட்கள் உள்ளன. புறத்திரட்டால் மூன்றும் வேறு சில பிரதிகளால் நான்கு மாகச் செய்யுட்கள் சில விடுப்பட்டிருப்பது தெரிகிறது. இதன் அச்சுப்பிரதி கிடைப்பது அரிதாய தொருபுறம் நிற்க, கிடைப் பதனையும் படிப்போர் மிகக் குறைந்திருக் கின்றனர். பலரும் இனிது எளிதிற் படித்து முதனூலைப் படித்து இன்புறுதற்கு வாயிலாக இச்சுருக்க நூல் தொகுத்துக் குறிப்புரையுடன் வெளிவருவதாயிற்று. சுருக்கநூல் வெளியீடுகள் முதனூல்களைப் படித்து இன்புறும் நெறிக்கு ஆக்கமா தலையும், அதனால் தமிழிலக்கியங்கள் நாட்டில் நன்கு பரவிப் பயன்படுதலையும் நன்கு தேர்ந்து இவ்வெளியீடுகளை வெளியீடு முகத்தால் நல்ல தமிழ்ப்பணி புரியும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்குத் தமிழுலகு பெரிதும் கடமைப் பட்டுள்ளது. இத்தகைய பணிகளில் என்போன்றாரை இயக்கித் தமிழன்னைக்கு வேண்டும் தொண்டு புரியப்பண்ணும் இறைவன் திருவருளை மனமொழி மெய்களாற் பரவி, “தென்தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன்றிலமே” என்று நங்கள் ஞானசம்பந்தப் பெருமான் வழங்கிய திருமொழியைக் கூறியமை கின்றேன். ஒளவை. சு. துரைசாமி. உ திருச்சிற்றம்பலம் தோலாமொழித் தேவர் மொழிந்த சூளாமணி - சுருக்கம் கடவுள் வாழ்த்து வென்றான் வினையின், தொகையாகி விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும் சென்றான், திகழும் சுடர் சூழொளி மூர்த்தியாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார். 1 பாயிரம் நூற்பொருள் கூறல் அங்கண் உலகிற்கு அணிவான் சுடராகி நின்றான், வெங்கண் வினைபோழ்ந் திருவைச் சரண்சென்ற மேனாள் பைங்கண் மதர்வைப் பகுவாய் அரியேறு போழ்ந்த செங்கண் நெடியான் சரிதம் இது செப்பலுற்றேன். 2 அவையடக்கம் கொற்றம்கொள் நேமி நெடுமால் குணம்கூற, இப்பால் உற்று இங்குஓர் காதல் கிளரத் தமிழ்நூற் கலுற்றேன்; மற்று இங்கொர் குற்றம் வருமாயினும் நுங்கள் போல்வார் அற்றங்கள் காப்பார்; அறிவிற் பெரியார்கள் அன்றே. 3 நூல் அரங்கேற்றம் நாமாண் புரைக்கும் குறையென்னினும், நாம வென்வேல் தேமாண் அலங்கல் திருமால், நெடுஞ்சேந்தன் என்னும் தூமாண் தமிழின் கிழவன், சுடரார மார்பின் கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்ட தன்றே. 4 வழுவமைதி காட்டல் செங்கண் நெடியான் திறம்பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவும் மறுவன்று, நல்லார்கள் முன்னர்; அங்கண் விசும்பின் இருள்போழ்ந்து அகல்வான் எழுந்த திங்கள் மறுவும் சிலர் கைதொழச் செல்லுமன்றே. 5 நூலின் வழிமுறை கிளத்தல் விஞ்சைக்கு இறைவன் விரைசூழ் முடிவேந்தன் மங்கை, பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பார்அடிப் பாவை, பூவார் வஞ்சிக் கொடி போல்பவள் காரணமாக வந்த செஞ்சொற் புராணத்து உரையின்வழிச் சேறும் அன்றே. 6 பாயிரம் முடிந்தது. 1. நாட்டுச் சருக்கம் (இது சுரமையென்னும் நாட்டின் நானிலவளனும் கூறும் பகுதியாகும்.) சுரமை நாட்டின் சிறப்பு மஞ்சு சூழ் மணிவரை எடுத்த மால் அமர் இஞ்சி சூழ் அணிநகர் இருக்கை நாடது; விஞ்சை நீள் உலகுடன் விழாக்கொண் டன்னது, துஞ்சு நீள் நிதியது சுரமை என்பவே. 7 சுரமை நாட்டின் நானிலவளம் வான்இலங் கருவிய வரையும், முல்லைவாய்த் தேன்இலங் கருவிய திணையும், தேறல் சேர் பானலங் கழனியும், கடலும் பாங்கு அணி நால்நிலம் கலந்து பொன் நரலும் நாடதே. 8 குறிஞ்சி வளம் குறிஞ்சி நிலத்தே, முருகனை வழிபடும் வழிபாட்டோ சையும், அருவி முழக்கும், யானையின் முழக்கமும் மிக்கிருப்ப; குன்றமெல்லாம் மலர்ந்த காந்தளும், விரிந்த வேங்கையும், சுனையிற்பூத்த நிலமும் சொரியும் நெய் வழிகின்றது. மழை முழக்கத்தைக் கேட்குந்தோறும் மயிலினம் ஆளும். சந்தனச் சாரலின் களிற்றினம் உண்பன உண்டு உறங்குகின்றன. கண்நிலாம் கழையின் கதிர்க் கற்றையும், மண்நிலாம் குரல் வார்தினை வாரியும், எண்ணில் ஆங்க விளைவன ஈட்டமும் உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே. 9 முல்லை வளம் ஆயர் ஏறு தழுவும் பணை முழக்கமும், இனிதெடுக்கும் குழலிசையும் எம்மருங்கும் இசைக்கின்றன; கொன்றை, குருந்து முதலிய மரம் செறிந்த முன்றிலில் படர்ந்து மலர்ந்த முல்லை யிடத்தே, வண்டு தாதூதலால், நறுமணமே யாண்டும் கமழ்கின்றது. கொன்றை முதலிய மரம் பூத்துத் துளிக்கும் தேன் மழையால் பசும்புல் தழைத்து ஆனிரைகட்கு நலம் செய்கின்றது. பேழ்த்த காயின பேரெள்; பிறங்குஇணர் தாழ்த்த காயின தண் அவரைக் கொடி; சூழ்த்த காய்த் துவரை; வரகு என்றிவை மூழ்த்த போன்றுள, முல்லை நிலங்களே. 10 மருத வளம் இம்மருதநில மெங்கும் மகளிர் ஆடல் முழவும், வாரணக் கம்பலையும், மணமுரசும், உழவர்ஓதையும் பிறவும் மிக்கிருக்கின்றன; நெய்தலும் தாமரையும் செறிந்து மலர்ந்து சொரியும் தேன் ஊற்றெடுத்துப் பாய்கிறது. பொய்கைகளில் புள்ளினம் ஈட்டம் குறையாது இருக்கின்றன. அள்ளிலைக் குவளைத் தடம் மேய்ந்து அசைஇக் கள் அலைத்த கவுட்கரு மேதி பால் உள் அலைத் தொழுகக் குடைந்து உண்டலால், புள் அலைத்த புனல புலங்களே. 11 மோடுகொண்டெழு மூரிக்கழைக் கரும்பு ஊடுகொண்ட பொதும்பரொடு உள்விராய்த் தோடுகொண்ட பைங்காய் துவள் செந்நெலின் காடுகொண்டுள கண்ணகல் நாடெலாம். 12 நெய்தல் வளம் கலவர் இன்னியமும், கடலச் சிறார் புலவு நீர்ப்பொரு பூண்எறி பூசலும் நிலவு வெண்மணல் நீளிருங் கானல்வாய் உலவும் ஓதமும் ஓங்கும் ஓர்பாலெலாம். 13 கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய் முண்டகத் துறை சேர்ந்த முதலைமா வண்டல் வார்கரை மாமகரக் குழாம் கண்டு நின்று கனலும் கழியெலாம். 14 சங்கு நித்திலமும், தவழ் இப்பியும் தெங்கந் தீங்குரல் ஊறிய தேறலும் வங்க வாரியும், வாரலை வாரியும், தங்கு வாரிய தண்கடல் நாடெலாம். 15 திணைமயக்கம் கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி, நெய்பகர் இடைச்சியர் கதுப்பயல் கமழும்; ஏழையங் கடைச்சியர் கனையெறி குவளை, கானல்வாய்த் தொடுத்தலர் பிணையார் குழலுள் தோன்றுமே. 16 கலவர்தம் சிறுபறை இசையின், கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே; குலவுகார்க் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே. 17 2. நகரச் சருக்கம் (இச் சருக்கத்தின்கண், முன்னே கூறிய சுரமைநாட்டின் தலைநகரமான போதனமா நகரத்தின் சிறப்பும், அதன் கண் இருந்து பயாபதி யென்னும் அரசன் செய்யும் அரசியற் சிறப்பும், அவன் ஆயிரவர்க்கு மேற்பட்ட மகளிரை மணந்து, அவருள்ளும் மிகாபதி, சசி என்ற இருவரை அரசியராய்க் கொண்டு இன்புற்றிருந்த சிறப்பும் பிறவும் கூறப்படுகின்றன.) சுரமைநாட்டுப் போதனமா நகரம் சொன்னநீர் வளமைத்தாய சுரமைநாட் டகணிசார்ந்து மன்னன் வீற்றிருந்துவைக, நூலவர் வகுக்கப்பட்ட பொன்அவிர் புரிசைவேலிப் போதனம் என்பதுஉண்டு;ஓர் நல்நகர், நாகலோகம் நகுவதொத்து இனியதொன்றே. 18 நகரத்தின் அமைதி சங்கம்மேய் தரங்கவேலித் தடங்கடற் பொய்கை பூத்த அங்கண்மா ஞாலம்என்னும் தாமரை யலரின், அம்கேழ்ச் செங்கண்மால் சுரமையென்னும் தேம்பொகுட் டகத்துவைகும் நங்கையார் படிவம் கொண்ட நலத்தது நகரம் அன்றே. 19 அகநகர்ச் சிறப்பு செஞ்சுடர்க் கடவுள் திண்தேர் இவுளிகால் திவள ஊன்றும் மஞ்சுடை மதர்வை நெற்றி வான்உழு வாயில் மாடத்து, அம்சுடர்இஞ்சி ஆங்குஓர் அகழ்அணிந்து அலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட்டன்றே. 20 புறநகர்ச் சிறப்பு இரும்பிடு தொடரின்-மாவின் எழுமுதல் பிணித்த யானைக் கரும்பிடு கவள மூட்டும் கம்பலை, கலந்த காவின் அரும்பிடை அலர்ந்த போதின் அல்லி உண்டு அரற்றுகின்ற சுரும்பொடு துதைந்து தோன்றும் சூழ்மதில் இருக்கையெல்லாம். 21 மாடங்களின் சிறப்பு அகிலெழு கொழும்புகை மஞ்சின் ஆடவும், முகிலிசை என முழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னின் தோன்றவும் இகலின மலையொடு மாடம் என்பவே. 22 மாளிகைச் சிறப்பு காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்பு ஆவிவாய் மாளிகை அதிரக் கேட்டொறும், தூவிவான் பெடைதுணை துறந்த கொல்என, வாவிவாய் இளவனம் மயங்கும் என்பவே. 23 தெருக்களின் வனப்பு பளிங்கு போழ்ந்து இயற்றிய பலகை வேதிகை விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம் துளங்கு பூமாலையும் சுரும்பும் தோன்றலான் வளம்கொள் பூங்கற்பக வனமும் போலுமே. 24 அரசர் தெரு வழகு விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில ஊட்டிய அலத்தகக் குழம்பு தோய்ந்து அரசவீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. 25 பயாபதியின் சிறப்பு மற்றம்மா நகருடை மன்னன் தன்உயர் ஒற்றைவெண் குடைநிழல், உலகிற்கு ஓர் உயிர்ப் பெற்றியான் பயாபதி என்னும் பேருடை வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே. 26 பயாபதியின் ஆட்சி நலம் ஆறில்ஒன்று அறம்என, அருளின் அல்லது ஒன்று ஊறுசெய்து உலகினின் உவப்ப தில்லையே; மாறிநின் றவரையும் வணக்கின் அல்லது, சீறிநின்று எவரையும் செகுப்ப தில்லையே. 27 அடிநிழல் அரசரை அளிக்கும்; ஆய்கதிர் முடிநிழல் முனிவரர் சரணம் மூழ்குமே; வடிநிழல் வனைகதிர் எஃகின் மன்னவன் குடைநிழல் உலகெலாம் குளிர நின்றதே. 28 மன்னிய பகைக்குழாம் ஆறும், வையகம் துன்னிய அரும்பகைத் தொகையும் இன்மையால், தன்னையும் தரையையும் காக்கும் என்பதுஅம் மன்னவன் திறத்து, இனி மருள வேண்டுமோ! 29 மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினால் பெரியவர் நுழைந்த சுற்றமா, ஆலும்நீர் அன்னமோடு அரச வன்னமே போலநின்று உலகினைப் பொதுமை நீக்கினான். 30 அமைச்சியல் கொதிநுனைப் பகழியான் குறிப்பின் அல்லது,ஒன்று இதுநமக்கு இசைக்கென எண்ணும் எண்ணிலார்; நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர்; பின் அதுஅவன் பகுதிகள் அமைதி வண்ணமே. 31 அரசனாகிய பயாபதிக்கு உரிமை மகளிர் ஆயிரவராவர். அவர் இளமையும் வனப்பும் வளம்பெற உடையர்; கற்பினும் பொற்பினும் கற்பகநாட்டு மகளிரை யொப்பர். இவருள் அரசனுக்கு மிகச் சிறந்தவர் இருவராவர்; அவர், மிகாபதி, சசி யென்னும் பெயரினர். இருபெருந்தேவியர் இயல்பு தீங்கரும்பு அமிழ்த மூட்டித் தேன் அளாய்ப் பிழிந்தபோலும் ஓங்கு இருங் கடலந்தானை வேந்து அணங் குறுக்கும் இன்சொல் வீங்கு இருங்குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி; தாங்கரும் கற்பின் தங்கை சசி என்பாள் சசியோடு ஒப்பாள். 32 இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம் பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும், பேணிநாளும் மருவினும் புதிய போலும் மழலையங் கிளவியாலும், திருமகள், புலமையாக்கும் செல்வி என்று இவர்கள்போல, இருவரும் இறைவன் உள்ளத்து ஒருவராய் இனியரானார். 33 பயாபதியின் காதற் சிறப்பு மங்கையர் இருவராகி மன்னவன் ஒருவனாகி அங்கு அவர் அமர்ந்த தெல்லாம் அமர்ந்து அருள்பெருகி நின்றான், செங்கயல் மதர்த்த வாட்கண் தெய்வமா மகளிர்தோறும் தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகையனானான். 34 3. குமார காலச் சருக்கம் (இதன்கண், பயாபதிக்கு விசயன், திவிட்டன் என்று மக்கள் இருவர் பிறந்து சிறப்பதும், அவன் அரசவையில் இருக்கும் ஒருநாள் நிமித்திகன் ஒருவன் போந்து, அரசன் கனவுகண்டது கூறி அதன்பயன் உரைப்பதும், அதுகேட்டு மகிழும் அரசன் புட்பமா காண்டம் என்னும் பொழிலகத்தே சிலாதலம் சமைத்துத் துருமகாந்தன் என்பான் ஒருவனைக் காவலிருத்தலும் பிறவும் கூறப்படுகின்றன.) பயாபதி தன் மனைவியருடன் இனிதுறைந்து இன்புற்று வருநாளில், தேவருலகத்தை நெடிது ஆண்ட தேவர் இருவர் மிகாபதி, சசி என்ற இருவர் வயிற்றிலும் முறையே கருவாகின்றனர். மிகாபதி விசயனைப் பெறுதல். பெண்ணிலாம் தகைப் பெருந்தேவி, பேரமர்க் கண்நிலாம் களிவளர் உவகை கைம்மிகத், தண்நிலா உலகெலாம் தவழ்ந்து வான் கொள, வெள்நிலாச் சுடரொளி விசயன் தோன்றினான். 35 சசி திவிட்டனைப் பெறுதல். ஏரணங்கு இளம் பெருந்தேவி நாளுறச் சீரணங்கு அவிரொளித் திவிட்டன் தோன்றினான்; நீரணங்கு ஒளிவளை நிரந்து விம்மின; ஆரணங்கு அலர்மழை அமரர் சிந்தினார். 36 மக்கள் பிறந்ததனால் மகிழ்ச்சி மிகுந்த மன்னன் சிறப்புச் செய்தல். திசையெலாம் தெளிந்தன; தேவர் பொன்னகர் இசையெலாம் பெருஞ்சிறப்பு இயன்ற; ஏற்பவர் நசையெலாம் அவிந்தன; நலியும் தீவினைப் பசையெலாம் பறந்தன பலர்க்கும் என்பவே. 37 விசயன் சிறப்பு காமரு வலம்புரி கமழும் மேனியன்; தாமரை அகவிதழ் தடுத்த கண்ணினன்; தூமருள் இருள்துணர்ந்தனைய குஞ்சியன்; பூமரு பொலங்குழை புரளும் காதினன். 38 வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்; தாள் தவழ் தடக்கையன்; தயங்கு சோதியன்; கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்; பீடுடை நடையினன் பெரிய நம்பியே. 39 திவிட்டன் சிறப்பு பூவையம் புதுமலர் புரையும் மேனியன்; தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்; தீவிரி ஆம்பலின் சிவந்த வாயினன்; மாவிரி திருமறு அணிந்த மார்பினன். 40 சங்கியல் வலம்புரி திகிரி என்றிவை தங்கிய அங்கையன்; அடித்தண் போதினன்; மங்கல மழகளிறு அனைய செல்கையன்; இங்குமுன் மொழிந்தவற்கு இளைய நம்பியே. 41 விசய திவிட்டர் என்ற பெயர் பெற்று, கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய பொது நலமும், படைப்பயிற்சி முதலிய சிறப்பு நலமும் ஒருங்கு மிகப் பெற்று அரசிளஞ் சிறுவர் வளர்ந்து இளமைச் செவ்வி எய்துகின்றனர். அரசனும் இவர்களின் அறிவு, ஆண்மை, பெருமை முதலிய நலமிகுதி கண்டு இன்பம் சிறக்கின்றான். இவ்வாறிருக்க, பயாபதி ஒருநாள் அரசவைக்கு வருகின்றான். பயாபதி அரியணையில் இருத்தல் குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடுபோலும் அஞ்சுடர் எயிற்ற ஆளி அணிமுகம் மலர ஊன்றிச் செஞ்சுடர் அணிபொன் சிங்காசன மிசைச் சேர்ந்த செல்வன் வெஞ்சுடர் உதயத்துச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான். 42 அவன் கண்ணாலும் கையாலும் குறித்தவண்ணமே புரோகிதர், அமைச்சர், சான்றோர் முதலிய பலரும் தத்தமக்கு உரிய இருக்கையில் இருக்கின்றனர். அரசர் பலர் வந்து அவனை வணங்கித் தமக்குரிய இருக்கையில் அமர்கின்றனர். தானை வீரரும் வந்திருக்கின்றனர். தானைவீரர் சிறப்பு வழிமுறை பயின்று வந்த மரபினார்; மன்னர் கோமான் விழுமலர் அடிக்கண் மிக்க அன்பினார்; வென்ற நீரார்; எழுவளர்த் தனையதோளார்; இளையவர்; இன்ன நீரார் உழையவ ராக வைத்தான் ஓடைமால் களிற்றி னானே. 43 அரசனைப் புலவர் பாராட்டி வாழ்த்துதல் பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவல்நூற் புலவர்பாடி, “மண்அமர் வளாகமெல்லாம் மலர்ந்த நின்புகழோடுஒன்றி, விண்ணகம் விளங்குதிங்கள் வெண்குடை நிழலின்வைகிக் கண்ணமர் உலகம் காக்கும் கழலடி வாழ்க” என்றார். 44 வாழ்த்துப்பெற்ற மன்னன் வருவோர் பலரையும் ஏழு நாழிகைகாறும் வரவிடுக எனப் பணித்தல் இன்னணம் பலரும்ஏத்த இனிதின்அங்கு இருந்த வேந்தன், பொன்அணி வாயில் காக்கும் பூங்கழலவனை நோக்கி, “என்னவ ரேனுமாக, நாழிகை ஏழு காறும், கல்நவில் தோளினாய்! நீ வரவிடு, காவல்,” என்றான். 45 சிறிது போதில், அரசனைக் காண்டல் விருப்புடைய அங்கதன் என்னும் நிமித்திகன் ஒருவன் வந்து வாயிலோனை அரசன் செவ் வியறிந்து வருக என்கின்றான்; வாயிலோன் அரசன் ஆணைகூறி அவைக்கு அவனை வரவிடுகின்றான். வந்தவனுக்கு அரசன் இருக்கை காட்ட, இருந்த நிமித்திகன், தன் புலமை தோன்றக் கூறலுறுகின்றான். முன்நாள் இரவில் பயாபதி கனவு கண்டதனை அங்கதன் குறிப்பால் அறிந்து கூறல் கயந்தலைக் களிற்றினாய்!ஓர் கனாக்கண்டது உளது கங்குல்; நயந்தது தெரியின், நம்பி நளிகடல் வண்ணன் தன்னை விசும்பகத்து இழிந்து வந்துஓர் வேழம்வெண் போதுசேர்ந்த தயங்குஒளி மாலை சூட்டித் தன்இடம் அடைந்தது அன்றே. 46 அவனே அக் கனாவின் பயனும் கூறல் மல்மலர்ந் தகன்ற மார்ப! மற்றதன் பயனும் கேண்மோ; நன்மலர் நகைகொள் கண்ணி நம்பிதன் நாமம் ஏத்தி மின்மலர்ந்து இலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து தன்மகள் ஒருத்திதன்னைத் தந்துதான் போகும் என்றான். 47 மேலும், அவன், “அரசே, நாள் ஏழு சென்றால், தூதுவன் ஒருவன் நினக்கு ஓலையொன்று கொண்டு, புட்பமாகாண்டம் என்னும் பொழிலிடத்தே வந்து இழிவன்” என்று கூறுகின்றான்; இதனைக் கேட்கும் சான்றோர் அனைவரும், “திவிட்டன் இச் செயற்கு உரியனே; இது பொய்யாகாது” என்கின்றனர். இதற்குள் குறித்த நாழிகை முடிகிறது. அரசன் மந்திரக்கிழவர் தொடர, அகமந்திரசாலை யடைகின்றான். ஆங்கே, அவன் அவர்கட்குத் தான் கனவு கண்டதும் நிமித்திகன் கூறியதும் மீட்டும் கூறுகின்றான். மந்திரக்கிழவர் கூறல் சூழும்நீர் உலகெலாம் தொழுது தன்அடி நீழலே நிரந்து கண்படுக்கும் நீர்மையான், ஆழியங் கிழவனாய் அலரும் என்பது, பாழியந் தோளினாய்! பண்டும் கேட்டுமே. 48 அவர்கள் மேலும் கூறல் சங்க லேகையும் சக்கர லேகையும் அங்கை யுள்ளன ஐயற்கு; ஆதலால், சங்க பாணியான் சக்க ராயுதம் அங்கை யேந்தும் என்றும் அறையல் வேண்டுமே. 49 நிமித்திகன் கூறியவண்ணம், விஞ்சைவேந்தன் மகள் திவிட்டனுக்கு உரியளாய் வந்தால், அரசாட்சியும் இனிது நடக்கும். நாம்இனி மற்றவன் மொழிந்த நாளினால் தேமரு சிலாதலம் திருத்தித் தெய்வமாம் தூமரு மாலையாய்! துரும காந்தனைக் காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே. 50 இவ்வாறு மந்திரக் கிழவர் கூறியவற்றைக் கேட்ட அரசன், புட்பமாகாண்டப் பொழிலில் சிலாதலம் அமைக்கப் பணித்து விட்டு அந்தப்புரம் அடைகின்றான். சிலாதலம் திருத்தப் பெறுகிறது. துருமகாந்தன் காவல் செய்தல் எரிபடு விரிசுடர் இலங்கு பூணினான் திருவடி தொழுதுசெல் துரும காந்தனும் வரிபடு மதுகரம் முரல வார்சினைச் சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான். 51 4. இரதநூபுரச் சருக்கம் (இதன்கண், சேடி நாட்டின் சிறப்பும், அதன் தலைநகரான இரதநூபுரத்தின் சிறப்பும், அதன்கண் இருந்து ஆட்சி புரியும் சுவனல சடி யென்னும் வேந்தன் அரசியல் நலமும், அவன் மக்களுள் சுயம்பிரபை யென்பவரின் பெண்மை நலமும், அவன் வேனில் நுகர்வு குறித்துப் பூஞ்சோலை சென்று இன்புறுதலும், சாரணரைக் கண்டு அறம் கேட்டலும், அவன் மகள் சுயம்பிரபை சக்கரவாள மென்னும் நோன்புபெற்று நோற்று மாண்புறுதலும், அவள் மாண்பு கண்டு அவட்குக் கணவனாவான் யாவன் என வேந்தன் மனத்தே பலபட நினைத்து, அமைச்சர் முதலிய சான்றோரைத் தன் மந்திரசாலைக்கு வருமாறு ஏவலரை விடுத்தலும் பிறவும் கூறப்படுகின்றன.) மேருமலையின் தென்பகுதியில் சேடி என்னும் பெரியதொரு நாடு உண்டு. அங்கு வாழ்பவர் விஞ்சையராவர். சேடி நாட்டின் சிறப்பு பூக்களாவன பொன்மரை; பூம்பொழில் காக்களாவன கற்பகச் சோலைகள்; வீக்குவார் கழல் விஞ்சையர் சேடிமேல் ஊக்கியாம் உரைக்கின்றது இங்கு என்கொலோ. 52 இவ்வழகிய நாட்டிற்குத் தலைநகர் இரதநூபுரச் சக்கரவாள மென்பது. இரத நூபுரச் சக்கரவாளம் வரையின் மேல்மதிக் கோடுற வைகிய திருவநீள் ஒளித் தென்திசைச் சேடிமேல் இரத நூபுரச் சக்கரவாளம் என்று உரைசெய் பொன்நகர் ஒன்றுளது என்பவே. 53 நகரின் சிறப்பு தெய்வ யாறு காந்தளம் சிலம்பு தேங்கொள் பூம்பொழில் பௌவ முத்த வார்மணல் பறம்பு மௌவல் மண்டபம் எவ்வ மாடம் இன்னபோல் இடங்கள் இன்ப மாக்கலால், கவ்வை யாவது அந்நகர்க்கு மாரனார்செய் கவ்வையே. 54 சுவனலசடி என்னும் அரசன் சிறப்பு மற்றமா நகர்க்கு வேந்தன், மானயானை மன்னர்கோன்; அற்றமின்றி நின்றசீர் அழற்பெயர்ப் புணர்ச்சியான்; முற்றும் முன் சடிப்பெயர்சொல் மூன்றுலஃகும் ஆன்றெழப் பெற்று நின்ற பெற்றியான், பீடுயாவர் பேசுவார். 55 சடியரசனது பண்பு விச்சையாய முற்றினான்; விஞ்சையார்கள் அஞ்சநின்று இச்சையாய எய்தினான்; ஏந்து செம்பொன் நீள்முடிக் கச்சையானை மானவேல் கண்இலங்கு தாரினான்; வெச்செனச் சொல்ஒன்று மேவிடுத்து மெய்ம்மைமேயினான். 56 அரசியல் நலம் வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன் ஒற்றையம் தனிக்கோல் உலகு ஓம்புநாள் குற்ற மாயதொன்று உண்டு; குணங்களால் அற்ற கீழுயிர்மேல் அருளாமையே. 57 செம்பொன் நீள்முடியான் செருவின்தலை வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம் நம்பி ஆள்கின்ற நாளில் நடுங்கின, கம்ப மாடக் கதலிகை போலுமே. 58 வடிய வானவன் ஆளவும் வாய்களில் கடிய வாயின கள்ளவிழ் தேமலர்; அடியவாய்ப் பயப்பட்டு அடங்கா, அலர்க் கொடிய வாயின கொங்குஅவிழ் சோலையே. 59 சடியரசன் மனைவி வாயுவேகை என்பது மாயமாய நின்றான் வரைமார் பிடை மேய பூமகள் போல விளங்கினாள்; தூயவாம் முறுவல் துவர் வாயவள், வாயுவேகை என்பாள், வளர்கொம்பு அனாள். 60 இருவரது இன்ப நிலை கோவை வாய்க் குழல் அம்குளிர் கொம்பனாள், காவி வாள்நெடுங் கண்ணி, அக் காவலற்கு ஆவியாய், அணங்காய், அமிழ்தாய், அவன் மேவும் நீர்மையளாய், விருந்தாயினாள். 61 சடியரசனும் அவன் தேவி வாயுவேகையும் இன்ப வாழ்வு நடாத்து நாளில், அவர்கட்கு அருக்க கீர்த்தி என்று ஒரு மகனும், சுயம்பிரபை என்று ஒரு மகளும் பிறந்து சிறக்கின்றனர். சுயம்பிரபையின் பெண்மை நலம் கங்கை நீரன ஞான்ற கதிர் இளந் திங்களால் தொழப் பட்டது செக்கர் வான்; மங்கைமார் பிறப்பும் மடமாதர் இந் நங்கையால் தொழப்பாடு நவின்றதே. 62 வண்டு சூழ்மலர் போன்று அளகக்கொடி கொண்டு சூழ்ந்தது குண்டல வாள்முகம்; கொண்டைகண்; கிளரும் புருவம் சிலை; “உண்டுகொல்!” என உண்டு மருங்குலே. 63 நங்கை தோன்றியபின், நகை வேலினாற்கு அங்கண் ஞாலம் அமர்ந்து அடிமைத் தொழில் தங்க, நீள் முடியான் தலை நின்றனர், வெங்கண் யானை விளங்கொளி வேந்தரே. 64 சுயம்பிரபை பெண்மை நலம் கனிந்து மணப்பருவம் எய்து கின்றாள். அவளை மணத்தல் வேண்டி விஞ்சையர் நாட்டு அரசர் பலர் வேட்கைமிக்கிருக்கின்றனர். இங்ஙனம் இருக்க, அந்நாட்டில் வேனிற் பருவம் வருகிறது. வயந்தமாலை யென்னும் தோழி வேனில் நுகர்வு குறித்து அதனை வேந்தனுக்கு உரைத்தல் “தேங்குலாம் அலங்கல்மாலைச் செறிகழல் மன்னர் மன்ன! பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக் கோங்கெலாம் கமழ மாட்டாக் குணமிலார் செல்வமே போல் பாங்கெலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம், என்றாள். 65 வேனிற் போது கண்டு சோலை விளக்க முறுவது கூறல் அந்தழை அசோகம்பூத்த அழகுகண்டு அவாவின்நோக்கி வெந்தழற் பிறங்கல் என்று வெருவிய மறுவில்தும்பி, கொந்து அவிழ்ந்து உமிழப்பட்ட குளிர்மதுத் திவலைதூவச் செந்தழற் பிறங்கல் அன்மை தெளிந்துசென்று அடைந்த அன்றே. 66 மாஞ்சினை கறித்த துண்டம் துவர்த்தலின் மருங்குநீண்ட பூஞ்சினை முருக்கஞ் சோலைப்பூக்கள் வாயார மாந்தித் தீஞ்சுவை மிழற்றுகின்ற, சிறுகுயில்; செல்வரேனும் தாம்சுவை பிரிந்த பின்றைச் சார்பவர் இல்லையன்றே. 67 கோவைவண்டு ஊதுகின்ற குரவெனும் குரைகொள்மாதர் பாவைகொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன் ஆவிகொண்டு இவளைக்கைவிட்டு அகலுமோ? என்று தத்தம் பூவையும் கிளியும்கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம் 68 இவ்வண்ணம் வயந்தமாதிலகை கூறக்கேட்ட சடியரசன், தன் மக்களும் மனைவியும் உடன்வரத் தேரேறி மனோவனம் என்ற பூஞ்சோலைக்குச் செல்கின்றான். அவனுடைய உரிமை மகளிரும் உடன் போகின்றனர். உரிமை காப்பவர் ஒருங்கே சூழ வருகின்றனர். மனோவனம் அரசனை வரவேற்றல் கோமான்சென்று அணைதலுமே கொங்கு அணிந்த மலர்தூவித் தேமாநின்று எதிர்கொள்ளச் சிறுகுயில் போற்றிசைத் தனவே; வாமான்தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரைப் போல் தூமாண்ட இளங்கொடிதம் தளிர்க்கையால் தொழுதனவே. 69 கொடியாடு நெடுநகரக் கோமான்தன் குணம்பரவி அடிபாடும் அவர்களென அணிவண்டு முரன்றனவே; வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னம் சொரிவனபோல் கொடுவாய கிளி கோதிக் குளிர்நறும்போது உகுத்தனவே. 70 தென்றல் வரவேற்றல் குரவகத்துக் குடைந்து ஆடிக் குளிர்நறவம் கொப்பளித்து ஆர்ந்து அரவவண்டு இன்னிசைபாட அருவிநீர் அளைந்து உராய், விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல், புரவலன் திருமுடிமேல் போதுஅலர அசைத்ததே! 71 சடியரசன் சோலைக்காட்சியைத் தன் மகளிர்க்குக் காட்டி இன்புறுதல் எரியணிந்த இளம்பிண்டி இணர்ஆர்ந்த, இடமெல்லாம்; பொரியணிந்து புன்குஉதிர்ந்து பூநாறும், துறையெல்லாம் வரியணிந்து வண்டுஊத வளர்கின்ற இளவேனில் புரியணிந்த குழலீர்! நும் செல்வம்போல் பொலிந்ததே. 72 மாந்தளிர் இங்குஇவை நுமது நிறம்கொண்டு வளர்ந்தனவே; ஏந்து இளம்தீங்குயில் இவைநும் சொல்கற்பான் இசைந்தனவே; தேம்தளங்கு குழலீர்! நும் செவ்வாயின் எழில்நோக்கித் தாம்தளிர் மென்முருக்கு இனிய தாதோடு ததைந்தனவே. 73 காவியும் செங்கழுநீரும் கமலமும் கண்விரிந்து நளி வாவியும் மண்டபமும் எழில்மதனனையும் மருட்டுமே; தூவியருங் கிளிஅன்ன சொல்வீர்! நீர் துணையில்லார் ஆவியுய்ந்து உள்ளாராதல் அரிதே, இவ் விளவேனில். 74 இவ்வாறெல்லாம் சோலையில் வேனில் நுகர்ச்சியெய்தி இன்புற்ற வேந்தன், அச்சோலையகத்தே இருந்த அருகன் கோயிலை யடைந்து அதனை வலம் வருகின்றான். அப்போது மூடப்பெற்றிருந்த கதவுகள் திறக்கின்றன. வேந்தன், அருகனை வழிபடுகின்றான். சடியரசன் பாடிய பாட்டு அணியாதும் ஒளிதிகழும் ஆரணங்கு திருமூர்த்தி கணியாது முழுதுணர்ந்த கடவுள்என்று அறையுமே! கணியாது முழுதுணர்ந்த கடவுள்என்று அறைந்தாலும் அணிஞாலம் உடையாயை அறிவாரோ, அரியரே? 75 திருமறுவு வலன்அணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி ஒருமறுவும் இலையென்பது ஒழியாமல் உணர்த்துமே! ஒருமறுவும் இலையென்பது ஒழியாமல் உணர்த்துகினும் அருமறையை விரித்தாயை அறிவாரோ, அரியரே? 76 அருகனை இவ்வகையிற் பாடிப் பரவிய வேந்தன் தேவன் திருவடியில் இட்ட பூவைச் சென்னியில் சூடிக்கொண்டு தன் திருநகர்க்குத் திரும்பியேகத் தலைப்படுகின்றான். அப்போழ்து, விசும்பினின்று சகநந்தனன், அபிநந்தனன் என்ற சாரணர் இருவர் இழிந்து போந்து அருகனை வழிபடத் தொடங்குகின்றனர். *சாரணர் வழிபடுவார் பாடிய பாட்டு விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்! உரைமணந்து யாம்பரவ உள்மகிழ்வாய் அல்லை; உள்மகிழ்வாய் அல்லை; எனினும், உலகெல்லாம் கண்மகிழ நின்றாய்கண் காதல் ஒழியோமே. 77 மணம்மயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்! குணம்மயங்கி யாம் பரவக்கொண்டு உவப்பாயல்லை; கொண்டு உவப்பாயல்லை; எனினும் குளிர்ந்துலகம் கண்டு உவப்பநின்றாய்கண் காதல் ஒழியோமே. 78 அருகனை வழிபாடு செய்து முடித்த சாரணர் இருவரும், சடியரசனைக் கண்டு, அவனுக்கு அருகன் உணர்த்திய அறத்தை உரைக்க ஆர்வமுறுகின்றனர். அவர்கள் வீற்றிருந்த இடத்தைக் குறுகி, அரசன் அவர்தம் திருவடியில் வீழ்ந்து வணங்குகின்றான். அவர்கள் அவனை வாழ்த்தி, “அமர்க” என்கின்றனர். அவன் மீட்டும் அவர்களை வணங்குகின்றான். சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல் முனிவருட் பெரியவன் முகத்து நோக்கி, “ஒன்று இனிது உளது உணர்த்துவது, அடிகள்!” என்றலும், பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக் கனியமற்று இன்னணம் கடவுள் கூறினான். 79 சகநந்தனன் அரசன் கருத்து இஃது எனக் குறிப்பால் அறிந்து கூறல் “துன்னிய வினைப்பகை துணிக்கும் தொன்மைசால் இன்னுரை அமிழ்து எமக்கு ஈமின் என்பதாம், மன்ன! நின்மனத்து உளது” என்ன, மாமணிக் கல்நவில் கடகக்கை கதழக் கூப்பினான். 80 சாரணர் சடியரசனுக்கு வினை காரணமாக நிகழும் பிறவித் தொடர்பின் துன்பமிகுதி யுணர்த்தி, அருகன் உரைத்த அறங்களைத் தொகுத்துரைத்தல் காதியங்கிளைகள்சீறும் காமருநெற்றிக்கண்ணாய்ப் போதியங் கிழவர் தங்கள் தியானத்துப் புலம்கொண்டுஏத்தி ஆதியந்து அகன்றுநின்ற அடிகளே சரணம், கண்டாய், மாதுயர் இடும்பை தீர்க்கும் சரணம் எனப்படுவ, மன்னா! 81 மெய்ப்பொருள் தெரிதல், மற்று அப் பொருள் மிசைவிரிந்த ஞானம், அப்பொருள் வழாத நூலின் அருந்தகை ஒழுக்கம் தாங்கி இப்பொருள் இவைகள், கண்டாய், இறைவனால் விரிக்கப் பட்ட கைப்பொரு ளாகக்கொண்டு, கடைப்பிடி, கனபொன் தாரோய்! 82 உற்றடு பிணியும் மூப்பும் ஊழுறு துயரும் நீக்கிச் சுற்றிநின்று உலகம்ஏத்தும் சுடரொளி உருவம்தாங்கிப் பெற்றதோர் வரம்பில் இன்பம் பிறழ்விலா நிலைமைகண்டாய் மற்றவை நிறைந்த மாந்தர்பெறப்படும் நிலைமை, மன்னா! 83 நல்லுரைகேட்ட வேந்தன் விளக்கம் உறுதல் மன்னிய முனிவன் வாயுள் மணிகொழித் தனையவாகிப் பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம்கெழு மொழிகள் தம்மால் கல்நவில் கடகத் தோளான் காட்சியம் கதிர்ப்புச் சென்றான், பின்அவன் உரிமைதானும் பெருவதம் மருவிற்று அன்றே. 84 சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ளுதல் மன்னவன் மடமகள் வணங்கி மற்றவர் இன்னுரை அமுதமுண்டு எழுந்த சோதியள்; பன்னிஓர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால் பின்னது முடிப்பதோர் பெருமை எண்ணினாள். 85 பின்பு, அரசன் சாரணரை வணங்கி விடைபெற்றுச் செல்கின்றான்; அவன் சுற்றமும் உரிமை மகளிரும் மக்களும் உடன்போகின்றனர். சிறிதுபோதில், அச் சாரணர் இருவரும் அருகனை வணங்கி விசும்பிற் படர்ந்து போகின்றனர். சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல் அழற்கொடி எறித்தொறும் சுடரும் ஆடக நிழற்கொடியது என நிறைந்த காரிகைக் குழற்கொடி அனையவள் கொண்ட நோன்பினால் எழிற்கொடி சுடர்வதோர் இயற்கை எய்தினாள். 86 முகைத்தவார் முல்லையை முருக்கும் மெல்லெயிற்று அகைத்தவார் குழலவள் தன்மையாயினும் வகுத்தவாறு உயர்ந்தன நோன்பு, மாசிலா அகத்து மாண்புடையவர்க்கு அரியது இல்லையே. 87 இவ்வண்ணம் சக்கிரவாளம் என்ற பெயரையுடைய இந்நோன்பை முற்றவும் நோற்று முடித்த சுயம்பிரபை, நோன்பு முடிவில் அதற்குரிய தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து அதனை வழிபடுகின்றான். சுயம்பிரபை வழிபடும் பாட்டு ஆதியங் கடவுளை, அருமறை பயந்தனை, போதியங் கிழவனை, பூமிசை ஒதுங்கினை; போதியங் கிழவனை, பூமிசை ஒதுங்கிய சேதியஞ் செல்வ! நின்திருவடி வணங்கினம். 88 ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை; ஓர் அருளாழியை, உலகுடை ஒருவனை; ஓர் அருளாழியை, உலகுடை ஒருவனை, சீர் அருள் மொழிய நின்திருவடி தொழுதனம். 89 பின்பு, தேவனை வணங்கித் திருவடியிலிட்ட பூவினைக் கொண்டு சென்று தன் அரண்மனைக்கு வந்து, தன் தந்தையை அடிபணிந்து திருமலர்ச் சேடத்தை அவன் கையில் நீட்டுகின்றான். அவன் மிக மகிழ்ந்து உச்சிமோந்து சில சிறப்புரை பகர்கின்றான். சடியரசன் சிறப்புரை வழங்குதல் கங்கைநீர் பாய்ந்துழிக் கடலும் தீர்த்தமாம்; அங்கண்நீர் உலகெலாம் அறியப்பட்டது; நங்கைநீ பிறந்ததன் பின்னை, நம்குடி. வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே. 90 வானகத்து இளம்பிறை வளர, வையகம் ஈனகத்து இருள்கெட இன்பம் எய்துமே; நானகக் குழலி! நீவளர நம்குடி தானகத்து இருள்கெடத் தயங்குகின்றதே. 91 இவ்வகையாகத் தன் மகளது மாண்பைப் பாராட்டி மகிழ்ந்த வேந்தன் பின்பு அவளை, மனையகம் சென்று “அடிசில் உண்க” எனப் பணித்து விடுக்கின்றவன், அவளை நலமுற்றும் கண்ணாரக் கண்டு உள்ளத்தே பலவாறு நினைக்கின்றான். சுயம்பிரபை தாயுறையும் பெருமனைக்குச் சென்றடைகின்றாள் சடிவேந்தன் தன்மனத்தே நினைத்தல் மண்ணருங்கலம் எலாம் வலிதின் வல்லினும், விண் அருங்கலமெலாம் விதியின் எய்தினும், பெண் அருங்கலம் இது பெறுதல் மானுடர்க்கு எண்ணருந் தகைத்து என இறைவன் எண்ணினான். 92 சுயம்பிரபைக்குக் கணவனாவான் யாவன் என நினைத்தல் மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக் கையணி நெடுநல்வேல் காளை மார்களுள் நெய்யணி குழல் இவட்கு உரிய நீர்மையான், மெய்யணி பொறியவன் எவன் கொல், வீரனே. 93 “பெற்றோர் வழிநிற்பர் பெண்மகளிர்” என்பது குறித்து நினைத்தல் அந்தைதாம் கூறுவது கருதி ஆருயிர்த் தந்தைதாய் என்றிவர் கொடுப்பின், தையலார் சிந்தைதாய் இலாதவர் திறத்தும் செவ்வனே நொந்து தாம்பிறிது உரை நொடிய வல்லரோ. 94 காதற்பண்பு குறித்து நினைத்தல் காதலால் அறிவது நாமம்; காதலே ஏதிலார் உணர்வினால் எண்ணலாவதன்று; ஆதலால் மாதராள் திறத்தின், ஆணைநூல் ஓதினார் உரைவழி ஓட்டற் பாலதே. 95 பெரியோர்களின் அறிவுரை இன்றியமையாது என நினைத்தல் தன் உணர்பொறி, பிறர் தங்கண் கூட்டுஎன இன்னணம் இருவகைத்து இறைவர் வாழ்க்கையே; தன் உணர் பொறிப்புலம் தன்னின் ஆம்;பிறிது இன்னணம் இயற்றுக என்றுஅமைச்சர் ஏவுவார். 96 பலரோடு ஆராய்தலின் நன்மை நினைத்தல் ஒன்று நன்றென உணர்ந்து ஒருவன் கொள்ளுமேல் அன்று என ஒருவனுக்கு அறிவு தோன்றுமே; நின்றது ஒன்று உண்டு; இனி நீதி நூலினோடு ஒன்றி நின்றவர் உரை உலகம் ஒட்டுமே. 97 இவ்வாறெல்லாம் எண்ணமிட்ட சடிவேந்தன் முடிவில் ஏவலரை யழைத்து அமைச்சர் முதலிய சான்றோர் பலரையும் வருமாறு ஏவுகின்றான். அவர்களும் சென்று அரசன் அருளிப் பாட்டினை அவர்கட்குத் தெரிவிக்கின்றனர். 5. மந்திரசாலைச் சருக்கம் (இதன்கண், சடிவேந்தன் மந்திரச் சுற்றத்தாரை வருவித்தலும், அவர்பால் அமைச்சியலின் நலத்தை விதந்து கூறலும், அவர்களைச் சுயம்பிரபைக்கு ஏற்ற கணவனைத் தேர்ந்து கூறுமாறு அரசன் கேட்பதும், சுச்சுதன் என்னும் அமைச்சன் அச்சுவகண்டன் என்பானது சிறப்பெடுத்தோதி அவனே தக்கவன் என்பதும், அவனை மறுத்துப் பவச்சுதன் என்பான், கின்னரகீத நாட்டு அரசிளங்குமரனான பவனஞ்சன் முதல் இந்திர சஞ்சயத்து அருஞ்சயன் ஈறாக இளவரசர் பலரைக் கூறி இவருள் ஒருவனைத் தேர்ந்து கோடல் தகுதி யென்பதும், அவனை மறுத்துச் சுதசாகரன் என்பான் சுரேந்திர காந்தத்து விச்சுவன் என்பான் சிறந்தவன் என்பதும், இவர் அனைவரையும் விலக்கி, சுமந்திரியென்பான், சுயம்வரமும் கூடாதென மறுத்துச் சதவிந்து என்னும் நிமித்திகனை உசாவுதல் வேண்டுமென்பதும், அது கேட்டு அரசன் சதவிந்து விடம் செல்வதும், அச்சதவிந்து மாபுராணத்தினைச் சான்று நாட்டிச் சுயம்பிரபைக்குத் திவிட்டனே ஏற்ற கணவன் என்றும், அவன் சிங்கத்தை வாய்கிழிப் பான் என்றும் கூறுதலும், அரசன் திரும்பிப் போந்து மந்திரிச் சுற்றத்தார்க்கு உரைத்து, மருசி யென்பானைப் பயாபதிபால் தூதுவிடுப்பதும் அவன் சுரமை நாட்டுக்கு வருவதும் பிறவும் கூறப்படுகின்றன.) அரசன் பணிகொண்டு போந்த ஏவலர் உரைத்தது கேட்டதும், அமைச்சர் முதலியோர் திடுக்கிட்டு, அஞ்சி, நடுங்கி, மிக விரைந்து அரசனது மந்திரசாலையை அடைகின்றனர். மிக மிக இன்றியமை யாமை நிகழ்ந்தாலன்றி, இத்தகைய அழைப்பு வருவது இல்லை யாதலால், இவர்கட்கு இப்போது அச்சமும் நடுக்கமும் உளவாயின. மந்திரசாலையின் மாண்பு உள்ளுள் நின்று ஒலிபுறப்படாதது, ஒண்சிறைப் புள்ளும் அல்லாதவும் புகாத நீரது வெள்ளி வெண் விளிம்பினால் விளங்கு வேதிகை வள்ளல் தன் மந்திரசாலை வண்ணமே. 98 சடியரசன் தன்பால் மேவிய மந்திரச் சுற்றத்தை விதந்து பாராட்டுதல் வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் ஒருவனாலே தாங்கலாம் தகைமைத் தன்று; தளையவிழ் தயங்குதாரீர்! பாங்கலார் பணியச் சூழும் நூலவர் பாகமாகப் பூங்குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கும், அன்றே. 99 மன்னருக்கு மந்திரச் சூழ்ச்சியே மாண்பாம் என்றல் வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில், தோள்வலி, சூழ்ச்சியென்று ஆங்கு இருவகைத் தொகையிற்றாகும்; ஆள்வலித் தானையார்கட்கு ஆதியது அழகிதேனும் கோள்வலிச் சீயம்ஒப்பீர்! சூழ்ச்சியே குணமதுஎன்றான். 100 சூழ்ச்சியே மன்னற்குப் பேராற்றலாம் என்றல் ஆற்றல் என்று ஓதப்பட்ட, அரசர்கட்கு, அவற்றின்மிக்க ஆற்றல் தான் சூழ்ச்சி என்பது; ஆதலால், அதனைஆயும் ஆற்றலார் அமைச்சராக, அமைச்சரோடு அமர்ந்து செல்லும் ஆற்றலான் அரசனாயின் அரியதுஒன்று இல்லை, அன்றே. 101 தன்கருத்தை யுரைப்பான் புக்க வேந்தன் அமைச்சர்பால் முகம்புகுதல் மன்னும்நீர் வளாகமெல்லாம் வணக்குதல் வல்லீராய பன்னும் நூற்புலவீர்! “முன்னர்ப் பலபகர்ந்து உரைப்பது என்னை? என்னைநீர் இறைவனாக்கி இராப்பகல் இயற்ற அன்றே, இன்னீர் இன்பவெள்ளம் இயைந்துயான் உயர்ந்தது,” என்றான். 102 சுயம்பிரபைக்கு மணாளன் யாவன் கொல்? என வேந்தன் வினாதல் “கொங்குண்ட வயிரக்குன்றின் கொழுஞ்சுடர்விளக் கிட்டாங்கு, நம்குடி விளங்க வந்த நங்கைதன் நலத்திற்கு ஒத்தான், தம் குடிவிளங்க வந்த தன்மையான், எவன்கொல்?” என்றான், சங்குடைந்தனைய தாழைத் தடமலர்த் தொடையலானே. 103 சுச்சுதன் என்னும் முதல் அமைச்சன், அரசனுக்கு விடை யிறுக்கப் புகுந்து, தொடக்கத்தே, அவன் கூறிய சூழ்ச்சி நலம் குறித்துச் சில சொல்லுகின்றனவன், நூலோர் மாண்பு எய்துவதும், அவரது சூழ்ச்சி நலம் மிகுவதும், மக்கள் துன்பமின்றி இன்பமே நுகர்வதும் பிறவும் அரசனது ஆட்சி நலமே அடிப்படையாகக் கொண்டு ஓங்குவனவாம் என்கின்றான். அவனே, நாட்டு மக்கள் அறிவு நலம் பெறுதற்கும் அக் காவலரே காரணர் என்றல் “கண்ணெனப் படுவ மூன்று’ காவலர், கல்வி, காமர் விண்ணினைச் சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேர? எண்ணினுள் தலைக்கண் வைத்த கண் அஃது இல்லையாயின், மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா!” 104 அருந்தவமும் அரசாட்சியும் ஒன்றென்றல் “அருந்தவம் அரைசபாரம் இரண்டுமே அரிய;தம்மை வருந்தியும் உயிரை யோம்பிமனத்தினை வணக்கல்வேண்டும்; திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியுமாயின், பெருந்துயர் வினைக்கும், அன்றே, பிறங்குதார் நிறம் கொள்வேலோய்” 105 சூழ்ச்சியும் செயப்படு பொருளால் விளங்குவது என்றல் “உரிதினின் ஒருவன் செய்த ஊழ்வினை, உதயம் செய்து விரிதலின், அதனது உண்மை விளங்கினாற் போல, வேந்தர் கருதிய கருமம் சூழ்ச்சிப்பயத்தினால் கருதும் வண்ணம்; எரிதவழ்ந்து இலங்கும் வேலோய்! எண்ணுவது என்னை?” என்றான். 106 இனி, வேண்டுவன கூறலுற்று, இதுகாறும் தான் கூறியவற்றிற்குச் சுச்சுதன் தானே முடிப்பரை உரைத்தல். “கொற்ற வேல் மன்னர்க்கு ஓதும் குணமெலாம் குழுமிவந்து முற்று நின்று உருவு கொண்ட மூர்த்தி! நின் முன்னர் யாங்கள் இற்று என உரைக்கும் நீதி, ஓதும் நூல் எல்லை காணக் கற்றவர் முன்னை ஏனோர் கதை ஒத்துக் காட்டும், அன்றே”. 107 அச்சுச்சுதன், சுயம்பிரபைக்குரிய கணவன் இரத்தின பல்லவம் என்னும் நகரிடத்தே யிருந்து ஆட்சிபுரியும் மயூரகண்டன் என்னும் வேந்தனுக்கு அவன் மனைவி நீலாங்கனை என்பாட்குப் பிறந்த அச்சுவக்கிரீவன் என்பானாவன் என்றும், அவனுக்கு நீலரதன், நீலகண்டன், வயிரகண்டன், சுகண்டன் எனத் தம்பியர் நால்வரும் அரிமஞ்சு என்னும் அமைச்சர் தலைவனும், சதவிந்து என்ற நிமித்திகனும் துணையாக உளர் என்றும் கூறி, அந்த அச்சுவ கண்டன் சிறப்பே மேலும் கூறலுறுகின்றான். அச்சுவகண்டன் சிறப்புக் கூறல் “சுற்றமாண் புடைமையாலும், சூழ்கதிர்த் திகிரியாளும் கொற்றமாங்கு உடைமையாலும், குலத்தது பெருமையாலும் கற்றமாண் விஞ்சையாலும் கருதிய முடித்தலாலும் வெற்றிவேலவனோடு ஒப்பார் வேந்தர் மற்று இல்லை, வேந்தே”. 108 அச்சுவகண்டனது தோள்வன்மை கூறல் “குளிறும் வாள்உழுவை யன்னான் குமாரகாலத்து முன்னே களிறு நூறு எடுக்கலாகாக் கல்திரள் கடகக்கையால் ஒளிறுவாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டாட, அன்றே வெளிறிலாக் கேள்வியானை விஞ்சையர் அஞ்சியிட்டார்”. 109 அவனுக்குச் சுயம்பிரபையை மணம் செய்துதரல் வேண்டும் என்றற்குச் சுச்சுதன் மேலும் சில அமைதி கூறல் “முன்தவ முடைமையாலே மூரிநீர் உலகமெல்லாம் மற்றவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை; மன்னா! செற்று அவன் நலிதல் அஞ்சித் திறைகொடுத்து அறிவித்தன்றே. நல்தவநங்கை தோன்றாமுன்னம்நாம் ஆண்டதெல்லாம்.” 110 “ஈங்கு நம் குலக்கொம்பு ஒப்பாள் பிறந்தபின் இனியனாகித் தேங்கமழ் அலங்கல் வேலோன் திறைகொளல் ஒழிந்து செல்லும்; ஆங்குஅவன் திறங்கள் எல்லாம் அறிதியால்; ஆணை வேந்தே! தீங்குயான் உணர்த்திற்று உண்டோ? திருவடி தெளிக,” என்றான். 111 “மற்று அவற்கு உரியள் நங்கை என்பது என்மனத்தி னோடும் உற்று வந்துளது; சால உறுதியும் உடையது; ஒக்கும்; வெற்றிவேல் விஞ்சையாரும் அஞ்சுவர்; மின்செய் பைம்பூண் கொற்றவ! குறிப்புண் டாயின், கொடுப்பது குணம்கொல்,” என்றான். 112. இது கேட்டுப் பவச்சுதன் என்னும் அமைச்சன் கூறுதல் “நூலாராய்ந்து நுண்பொறி கண்ணும் நொடிவல்லான், மேலார்ஆயும் மேதைமையாலும் மிகநல்லான், தோலாநாவின் சுச்சுதன் சொல்லும் பொருள் எல்லாம், வேலார்கையாய்! மெய்ம்மைய அன்றே, மிகையாலோ.” 113 “தேனும் வண்டும் தீதிலபாடுஞ் செறி தாரோய்! யானும் கண்டேன் அச்சுவகண்டன் திறம் இஃதே; மானம் கொண்ட மாரதர் போரேறு அனையாய்!ஓர் ஊனம்கண்டேன்; ஒட்டினும்ஒட்டேன்; உரைசெய்கேன்.” 114 “நம் செல்வி சுயம்பிரபையின் சாதகக் குறிப்புணர்ந்து கண்ட சான்றோர் அவள் அரசிளங்குமரன் ஒருவற்கு அரசமாதேவி யாவளேயன்றி வேறில்லை என உரைத்திருக்கின்றனர்; அச்சுவக் கிரீவன் அன்னன் அல்லன்,” என்று பவச்சுதன் கூறுகின்றான். பவச்சுதன் அச்சுவக்கிரீவன் முதுமையும் பிறவும் கூறுதல் “ஆழிக் கோமான் அச்சுவகண்டன்; அவனுக்கே ஊழிக் காலம் ஓடின” என்னும் உரையாலும், தாழிக் கோலப்போது அன கண்ணாள் தகுவாளோ? சூழிக் கோலச் சூழ்களியானைச் சுடர் வேலோய்! 115 அச்சுவகண்டற்குக் கனகசித்திரை யெனத் தேவியொருத்தி உளள் என்றல் “கண்ணார் கோதைக் காமருவேய்த்தோள் கனகப்பேர் மண்ணார் சீர்த்திச் சித்திரை என்னும் மடமாது, இன்று எண்ணார் இன்பக் காதலியாகி இயல்கின்றாள்; பெண்ணார் சாயல்; பெற்றனள் தேவிப்பெரும் பட்டம்.” 116 அச்சுவகண்டற்கு மக்கள் ஐஞ்ஞூற்றுவர் உளர் என்றல் “வானோர் உட்கும் மக்கள்ஓர் ஐஞ்ஞூற்றுவர் தம்முன் ஈனோர் உட்கும் இரத்தின கண்டன் எனநின்றான், ஏனோர் உட்கும் இன்இள வேந்தாய் இயல்கின்றான்; ஊனோர் உட்கும் ஒண்சுடர் நஞ்சூறு ஒளிவேலோய்.” 117 “அச்சுவகண்டன் அத்தகையனாதலால், நம்நங்கைக்கு உரியான்யாவன்?” என்று சடி வேந்தன் கேட்க, அவனுக்குப் பவச்சுதன் இளவரசர் பலரையும் கூறத் தொடங்கி, பவனஞ்சன் என்னும் அரசகுமரனைப் பற்றிக் கூறுகின்றான். “கேடில் இம்மலையின் மீதால் கின்னர கீதம் ஆளும் தோடுஇலங்கு உருவத்தொங்கல் சுடர்முடிஅரசன் செம்மல், பாடல்வண்டு இமிரும் பைந்தார்ப் பவனஞ்சன் என்ப பாரித்து ஆடல் அம் புரவிவல்ல அரசிளங் குமரன்” என்றான். 118 இவ்வாறே, அமிழ்தபதி நாட்டு வேகரதன் என்னும் அரச குமரன், மேகபுரத்துப் பதுமரதன், இரத்தினபுரத்துச் சொன்னரதன், கீதபுரத்து அரிகண்டன், திரிபுரவேந்தன் மகன் அளிதாங்கன், சித்திரகூடத்து ஏமாங்கதன், அச்சுவபுரத்துக் கனகசித்திரன், சீநிலையத்து வேந்தன் செல்வன் சித்திரரதன், கனகபல்லவத்துச் சிங்ககேது என்ற அரசகுமரர் பலரையும் அவர்தம் சிற்ப்புடன் உடன் எடுத்து ஓதி முடிவில் அருஞ்சயன் என்பானைப்பற்றி மொழிகின்றான். அருஞ்செயன் என்பானது சிறப்பு “இஞ்சிசூழ் எரிபொன்மாடத்து இந்திரன் மிசைந்தநாமச் சஞ்சயம் உடையகோமான் தாள்முளை, தரணிஎல்லாம் அஞ்சுநீர் அலங்கல்வேலான் அருஞ்சயன்; அவனைநங்கள் மஞ்சுசூழ் மலைக்குஓர் சூளாமணி எனக்கருதும், மன்னா” 119 இவ்வண்ணம் பவச்சுதன் கூறி, “இவர்களுள் தக்கவரைத் தேர்ந்துகோடல் நலம்” என்று மொழிந்ததும், சுதசாகரன் என்னும் அமைச்சன் வேறு சிலவற்றைச் சொல்லுகின்றான். அச்சுவகண்டனுக்கு மாறாக நம் மங்கையை மணக்கும் அரசர் பிறர் இல்லையெனச் சுதசாகரன் சொல்லுதல் “ஆழியாள்கின்ற அச்சுவ கண்டன்மேல் பாழியாகின்ற திண்தோள் பவச்சுதன் சூழி யானையினாய்! சொலப் பட்டன, ஊழி யாரையும் ஒத்துள, கண்டாய்!” 120 “ஆயினும் சிறிதுண்டு அறி, வண்டினம் பாயினும் பனிக்கும் படர்கோதை தன் வேயினும் பணைக்கின்ற மென்றோள் பிறர் தோயினும் பகையாம், சுடர் வேலினாய்” 121 “வண்டு அவாம் முடிமன்னருள் மற்றவன் தண்டம் மாற்றுநர் தாம்இலையால்; சிறிது உண்டு யான் உரைப்பான் உறுகின்றது, விண்டு வாழுநர் மேல்நகு வேலினாய்!” 122 “சுயம்பிரபையை மணக்கு முகத்தால் அச்சுவகண்டன் பகை கொள்ளும் வேந்தர் பிறர் இல்லை எனினும், சுரேந்திரகாந்தம் என்னும் நாட்டிற்கு மேகவாகனன் என்றொரு வேந்தன் உளன்; அவன் தேவி மேகமாலினி என்பவள். அவட்கு விச்சுவன் என்றொரு மகன் உள்ளான்.” விச்சுவன் சிறப்புக் கூறுதல் “மையில் வானுலகு ஆண்டு மண்ணோர்களுக்கு உய்யும்வாயில் உணர்த்திய தோன்றிய ஐயனால் பிற ஆரஞர் நீங்கி, இவ் வையமாய தெல்லாம் வளர்கின்றதே.” 123 “இச்சிறப்புடைய விச்சுவனுக்குச் சோதிமாலையென்ற தங்கையொருத்தி உண்டு. அவளும் பெருநலமும் உயர் பண்பும் உடையன். விச்சுவனுக்குச் சுயம்பிரபையையும், அருக்ககீர்த்திக்கு அச் சோதிமாலையையும் திருமணம் புரிவித்தல் சிறப்பாகும்.” என இவ்வாறு சுதாகரன் சொல்லி முடிக்கிறான். சுமந்திரி என்னும் அமைச்சன் கூறுதல் “அண்ணல் அம் களிகொள் யானை அச்சுவகண்டன் மூத்தாற்கு எண்ணலும் தகுவதன்றால், இவன்பணி அகற்றல் ஆற்றாக் கண்நலம் கவரும்வேலோர்க்கு ஈயினும் கருமம் அன்றேல்; பெண்நலம் கனிந்த பேதை இருப்பதும் பெருமையன்றே.” 124 “சூழ்கதிர்ப் புரிசைவேலிச் சுரேந்திரகாந்தம் ஆளும் தாழ்கதிர் ஆரமார்பின் தமனியக் குழையினான்தன் போழ்கதிர்க் கடவுள்போலும் புதல்வனுக்கு உரிமை செய்தி ஆழ்கதிர் விலங்கல் ஆளும்அரச!அஃது அரிதுகண்டாய்.” 125 விச்சுவன் தவமிகுதியும் கடவுட்டன்மையும் உடையன் என்றல் “மங்கையர் முகத்தின் நீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி அங்கயல் பிறழ்வபோலும் ஐயரி அடர்த்த வாட்கண் பங்கயச் செங்கணான்மேல் படைத்தொழில் பயின்றபோழ்தும் தங்கிய மனத்தனாகித் தளர்விலன், தவத்தின்மிக்கான்” 126 “மண்கனிமுழவச்சீரும், மடந்தையர் தூக்கும், மற்றும், பண்கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான்; விண்கனிந்தனைய இன்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்; கண்கனி உருவக்காளை கடவுளர் தகையன், கண்டாய்.” 127 “விச்சுவன் இவ்வியல்பினனாய் இருப்பதைக் கண்ட அவன் தந்தையான மேகவாகனன், அருகனை வணங்கி, ஆங்கிருந்த அசோதர முனிவனை வணங்கிக் கேட்க, அம்முனிவன் விச்சுவனது பழம் பிறப்பை உணர்த்தி, அவன் அரசபோகத்தை விழையான் என்று கூறக் கேட்டு அமைதி பெற்றான். இது நாம் அறிந்த செய்தி,” என்கின்றவன் முடிந்தது முடித்தலாக விச்சுவனைப்பற்றித் தொகுத்துக் கூறுகின்றான். “அம்மையால் தவங்கள் தாங்கி அலர்ந்த நல்அறிவினாலும், இம்மையால் உடம்பு நீங்கி இகந்து போம் இயற்கையாலும், செம்மையால் கடவுட்டானம் சேர்வதே சிந்தையாற்கு மெய்ம்மையால் கருமச் சுற்றம் வேண்டுவதில்லை, வேந்தே!” 128 சுயம்பிரபைக்குச் சுயம்வரமும் கூடாது என்றல் “வாரணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்கத் தாரவர் குழாங்கள் ஈண்டச் சயமரம் அறைதுமேனும் ஆரவிர் ஆழியானை அஞ்சுதும், அறியலாகா கார்விரி தடக்கை வேந்தே! கழலவர் கருமம்என்றான்” 129 ஊழ்வினையின் வன்மை கூறல் “ஒன்று நாம்கருதிச் சூழின் ஊழது விளைவுதானே கன்றி நாம் கருதிற்றன்றி மற்றொர் வாறாக நண்ணும்; என்றுநாம் துணிந்த செய்கை இதன்திறத்து என்னமாட்டாம் இன்றுநாம் துணிதுமாயின் இனிச்சிறிது உரைப்பல்” என்றான். 130 சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்து சூழ்வாம் என்று கூறல் “வீழ்புரி விளங்கும் நூலோய்! மேலும் நம் குலத்துளார்கட்கு, ஊழ்புரிந்து உறுதி கூறும் உயர்குலம் மலரநின்றான், தாழ்புரி தயங்கும் நுண்ணூல் சதவிந்து மொழிந்தவாற்றால் யாழ்புரி மழலையாள் கண்ணா இதை அறிதும்” என்றான். 131 இதுவே தக்கது எனத் துணிந்த அமைச்சர் அரசனைக் கோயிற்கு எழுந்தருளுமாறு வேண்டுதல் “இந்திரன் அனையநீரோய்! இனிப்பிறிது எண்ணல் வேண்டா; மந்திரம் நீளுமாயின் வருவன அறியலாகா; சந்திரன் தவழ நீண்ட தமனியச் சூலநெற்றி அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கருளுக” என்றார். 132 பகற்போது உச்சியடைதலும் அரசன் கோயிற்குச் சென்று செய்வன செய்துகொண்டு சதவிந்து இருக்கும் நெடுமனைக்குச் சடிவேந்தன், காலில் அணிந்த கழல் ஒலிக்க, மெய்காவலர் புடைசூழ்ந்துவரச் செல்கின்றான். சதவிந்து வரவேற்று மகிழ்தல் எங்குலம் விளங்க இங்கு அருளி வந்தஎம் கொங்கு அலர் தெரியலாய்! கொற்றம் கொள்கஎன மங்கல உழைக்கலம் பரப்ப, மன்னனுக்கு அங்கு அலர் கேள்வியான் ஆசி கூறினான். 133 பின்னர் அரசனும் சதவிந்துவும் தனித்ததோர் மண்டபத்தை அடைகின்றனர்; அவன் குறிப்பறிந்த ஏவலரும் காவலரும் பிறரும் நீங்குகின்றனர். சடிவேந்தனும் தன் மகள் சுயம்பிரபையைக் குறித்துத் தன்மனத்தே எண்ணமிடுகின்றான். சதவிந்து அவன் கருத்து அறிந்து கூறல் “மணம்கமழ் மதுமலர் அலங்கல் மாலைபோல் வணங்கு எழில் நுடங்கிடை மாழை நோக்கி, நம் கணங்குழை கருமம்யாம் கருதிற்று,” என்றனன், அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான். 134 மன்னன் வருங்கால் கண்ட நிமித்தத்திற்குச் சதவிந்து பயன் அறிந்து கூறுதல் “வெள்நிலா விரிந்தென விளங்கு மாலையள், தண்நிலாம் கவர்தகைக் கண்ணி, மன்னனை மண்நிலாம் மறுகிடை வலங்கொண்டு எய்தினாள், எண்ணில், ஆங்கது திரு எதிர்ந்த வண்ணமே” 135 சதவிந்து சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகின்றது என்று சொல்லுதல் “ஆதிநாள் அறக்கதிர் ஆழி தாங்கிய சோதியான் திருமொழி விளக்கித் தோற்றுமால்; போதுவார் புரிகுழல் பொலம் கொம்பு அன்னஇம் மாதராள் வனமுலைக்கு உரியமைந்தனே” 136 இது கேட்டு மகிழ்ச்சி மிக்க வேந்தன் வினவுதல் “முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் மன்னிய திருமொழி யகத்து மாதராள் என்னைகொல் விரிந்தவாறு” எனலும், மன்னனுக்கு அன்னவன் ஆதிமா புராணம் ஓதினான். 137 புராணம் கூறும் செய்தியைச் சொல்லப் புகுந்த சதவிந்து, “உலக மூன்றினும் மண்ணுலகம் கரும பூமி எனப்படும்; இதன்கண், சம்புத்தீவு ஏழு மலைகளும், ஏழு பேரியாறுகளும், பதினான்கு கடல்களும், ஏழு கண்டங்களும் உடையது; கண்டம் ஏழனுள் பரத கண்டம் சிறப்புடையது. இது மூன்று ஊழிக்காலம் போக பூமியாய்த் திகழ்ந்தது. பின்பு பிரமர்கள் தோன்றி ஞாயிறு, திங்கள் முதலிய கோள்களையும் நாள்களையும் கண்டனர்; முடிவில் அருகன் தோன்றினான்; அவன் அருளால் பரதராச சக்கரவர்த்தி பரத கண்ட முழுதும் செங்கோல் செலுத்தினன். அவன் ஒருகால் அருகனை வணங்கி எதிர்கால நிகழ்ச்சியை வினவினான். அவனுக்கு அருகன், தான் முதலாக நாதர் இருபத்து நால்வரும், பரதன் முதலாகப் பன்னிருவர் சக்கரவர்த்திகளும், வாசுதேவர் ஒன்பதின்மரும், பிரதி வாசுதேவர் ஒன்பதின்மரும் தோன்றுவர்; அவருள் பரதன் மகனான மரீசியே முதல் வாசுதேவன்; அவன் போதனமா நகரத்தே இருந்து அரசுபுரிவன்; அவன் வழியில் தோன்றும் வாசுதேவன் ஒருவன் ஒரு மங்கையின் பொருட்டு அச்சுவக்கிரீவன் என்பானைக் கொன்று, அவன் கையாளும் ஆழியையும் கவர்வன் என்று கூற, பரதராசன் பெருமகிழ்ச்சி யெய்தினன்” என்று கூறி முடிக்கின்றான். புராணத்துட் கூறிய வாசுதேவனே, பயாபதியின் மகனான திவிட்டன் எனச் சதவிந்து கூறுதல் “அன்னணம் புராணநூல் அகத்துத் தோன்றிய கன்னவில் இலங்குதோள் காளையானவன் மின்னவில் விசும்பினின்று இழிந்து வீங்குநீர் மன்னிய வரைப்பகம் மலிரத் தோன்றினான்.” 138 “திருவமர் சுரமைநாடு அணிந்து செம்பொனால் பொருவரு போதனமுடைய பூங்கழல் செருவமர் தோளினான் சிறுவராகிய இருவருள் இளையவன் ஈண்டு அந்நம்பியே” 139 அவனுக்குச் சுயம்பிரபை உரியள் என்றல் “கானுடை விரிதிரை வையம் காக்கிய மானுட உடம்பினால் மறைந்து வந்தஅத் தேனுடை அலங்கலான் தெய்வ மார்பகம் தான் அடைந்து அமர்வதற்கு உரியள் தையலே. 140 திவிட்டனால் எய்தவிருக்கும் சிறப்பைக் கூறுதல் “ஆங்கு அவற்கு ஈந்தபின், ஆழிதாங்கிய ஈங்கவற் கொன்று உனக்கு இரண்டு சேடியும் தாங்கிய திருவனான் தரும்மற்று,” என்றலும், வீங்கிய உவகையன் வேந்தன் ஆயினான். 141 திவிட்டன் சிங்கத்தை வதைப்பன் என்றல் “கொங்கலர் தெரியலான் திறத்தின் கொள்குறி; இங்குயான் இசைத்ததே அமையும்; அல்லது, ஓர் திங்கள்நாள் அகவையில் திவிட்டன் ஆங்குஒரு சிங்கம் வாய் பிளந்திடும்; தெரிஇது” என்னவே. 142 இச் செய்தி முற்றும் கேட்டுப் பேருவகை பூத்த சடிவேந்தன் அந் நிமித்திகனான சதவிந்துவுக்கு மிக்க பொன்வளம் கொழிக்கும் சோதிமாலை யென்னும் பெயருடைய நாட்டை யீந்து சிறப்பித்து, அவன்பால் விடைபெற்று, தன் திருநகர் போந்து, அரண்மனை யடைந்து, தன் மனைவி வாயுவேகை என்பாளைக் கண்டு, நிகழ்ந்தது கூறி, இன்புறுகின்றான். சடிவேந்தன் வாயுவேகையைப் பாராட்டுதல் தலைமகன் தாள் தனக்காகச், சாகைய நிலைமைகொள் மனைவியா, நிமிர்ந்த பூந்துணர் நலமிகு மக்களா முதியர் தேன்களா, நலமிகு கற்பகம் குளிர்ந்து தோன்றுமே. 143 சுழிநீள் முகத்தன துளைக்கைம்மா வொடு மாழைநீள் மணிஇவை எளிய, மாண்பினால் வாழும்நீர் மக்களைப் பெறுதல், மாதரார்க்கு ஆழும்நீர் வையகத்து அரிய தாவதே. 144 வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி நலம்புரி பவித்திரமாகும்; நாமநீர் பொலம்புரி மயிலனாய்! பயந்த பூங்கொடி குலம்புரிந் தவர்க்கெலாம் கோலமாகுமே. 145 “மாவினை மருட்டிய நோக்கி, நின்மகள் பூவினுள் மடந்தை பொற்பூவை, நாளொளித் தேவனுக்கு அமிர்தமாம் தெய்வமாம் என ஓவியநூல் புரோகிதன் உணர ஓதினான்.” 146 வாயுவேகை வேந்தன் உரைத்தவற்றிற்கு விடை இறுத்தல் “மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்த!இக் கன்னிநின் அருளினே கருதப்பட்டனள்; மன்னவர் அருளிலராயின் மக்களும் பின்னவர் பெறுவதோர் பெருமை இல்லையே.” 147 “பிடிகளை மகிழ்களிற்று அரசர் பெய்மலர் முடிகளின் மணிபொர முரலும் மொய்கழல் அடிகளது அருளினால் அம்மென் சாயல்இக் கடிகமழ் குழலினாள் கலினும் எய்தினாள்.” 148 இம்மொழி கேட்ட வேந்தன் இன்பக் கடலகத்தழுந்தி, அன்றிரவு இனிது போக்கினான்; மற்றை நாளில், மந்திரச் சுற்றத்தையும், மகனையும் மகளையும் மந்திர சாலைக்கு வருவித்து, முன்னாளில் சதவிந்து கூறிய அனைத்தும் அவர்கட்குக்கூறி மகிழ்ந்தான். மந்திரச் சுற்றத்துச் சான்றோர் அனைவரும் பேரின்பம் எய்தினார். மந்திரத்தலைவர் மரீசியென்பவனைப் பயாபதிபால் தூதுவிடத் துணிந்து கூறல் “தெய்வமே திரிகுழல் சிறுமி யாவதற்கு ஐயமே ஒழிந்தனம்; அனலும் வேலினாய்! செய்யது ஓர்தூது இனித் திவிட்டன் தாதையாம் வெய்ய வேலவனுழை விடுத்தும், வேந்தனே!” 149 “கற்றவன், கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்றஉய்த்து உரைக்கும் ஆற்றலான், மற்றவன் மருசியே; அவனைநாம் விடச் சுற்றமும் கருமமும் சொல்ல வல்லனே.” 150 சடிவேந்தன் அவர் கூறியது கேட்டு அவ்வாறே மரீசியென்பானை வருவித்து, அவனைப் பயாபதிபால் தூது விடுதற்கு உடன்பட்டான். திருவோலை யொன்றும் செவ்வே எழுதித் தரப்பெற்றது. மரீசியும் அவ்வோலையுடன் புறப்பட்டு விசும்பாறாகச் சுரமை நாடு நோக்கி வருகின்றான். மரீசி சுரமை நாட்டுப் புட்பமாகாண்டப் பொழிலை வந்து அடைதல் மன்னவன் பணியொடு மருசி வானிடை மின்னவிர் முகிற்குழாம் முழங்கும் வீதிபோய்த் துன்னினன், சுரமைநாட்டு அகணிசூடிய பொன்நகர்ப் புறத்தது ஓர்பொழிலின் எல்லையே. 151 6. தூது விடு சருக்கம் (இதன்கண், மரீசி போதனமா நகரத்துக்குத் தூது வந்து புட்பமாகாண்டத்தில் தங்கியிருப்ப, துருமகாந்தன் கண்டு சிலாதலத்தில் அவனை இருத்துவதும், பயாபதி அறிந்து தன் மக்கள் விசய திவிட்டரை விடுத்து அவனை நகருக்கு வர வேற்றழைப்பதும், மரீசி தான் கொணர்ந்த திருவோலையைப் பயாபதிபால் சேர்ப்பதும், அவன் மகிழ்ச்சியால் உரையாடானாக, மரீசி பிறழ நினைந்து சினந்து கூறுவதும், பயாபதி சினமின்றி அமைதியோடு விடை யிறுப்பதும், மரீசி பெருவியப்புற்றுப் பயாபதியைப் பாராட்டி, சடிவேந்தனது குடிப்பெருமை கூறலும், அங்கதன் என்னும் நிமித்தி கன் பயாபதியின் குடிப்பெருமை கூறலும், கேட்டோர் மகிழ்ச்சி மிகுங்கால், மரீசி, பயாபதியின் குடிமுதல்வன், சடிவேந்தனது குடி முதல்வனுக்கு மருமகனாதலைப் புராணம் கூறுமென்று சொல்லி, மகட்கொடைக்குரிய முறைமை காட்டலும், பின்பு அவன் பயாபதிபால் ஒருநாள் தங்கித் தன் சேடிக்குச் செல்வதும், பயாபதி சடிவேந்தனுக்குத் தன் உரிமை கூறலும் பிறவும் கூறப் படுகின்றன.) புட்பமாகாண்டப் பொழிலில் உள்ள மரவகைகளின் வனப்பு மருஇனியன, மது விரிவன, மலர்அணிவன, வகுளம்; திருமருவிய செழுநிலன, செங்குழையன, தேமா; வரி மருவிய மதுகரம் உணமணம் விரிவன, நாகம்; பொரி விரிவன, புதுமலரன, புன்கு உதிர்வன, புறனே. 152 கொடி வகைகளின் வனப்பு வளர்கொடியன, மணம்விரிவன, மல்லிகையொடுமௌவல்; நளிர்கொடியன, நறுவிரையக நறுமலரன, நறவம்; குளிர்கொடியன, குழைமாதவி; குவிமுகையன கொகுடி; ஒளிர்கொடியன, உயர்திரளினோடு ஒழுகு இரையன ஓடை. 153 பொழிலில் வாழும் வண்டு புள் முதலியவற்றின் சிறப்பு மதுமகிழ்வன, மலர்குடைவன, மணிவண்டொடு தும்பி; குதிமகிழ்வன, குவிகுடையன, நுதிகோதுபு குயில்கள்; புதுமகிழ்வன, பொழில் இடையன, புணர்துணையன, பூவை; விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே. 154 பொழிலிடைப்புகுந்த மரீசி, ஆங்கிருந்ததொரு பொய் கைக்கரையை அடைகின்றான். மரீசியைப் பொய்கைக் கரையிடம் வரவேற்றல் புணர்கொண்டெழு பொய்கைக் கரை பொருதிவலைகள் சிதறா துணர்கொண்டன, கரைமாநனி துறுமலர் பல தூவா, வணர்கொண்டன மலருற்று அலைவளர், வண்டினம் எழுவா இணர்கொண்டெதிர் எழுதென்றலின் எதிர்கொண்டது அவ்விடமே. 155 அவ்விடத்திலே வெண்மணல் பரந்த ஓரிடத்தே ஒரு மேடையுளது; அதன்மேல் மாணிக்கச் சிலாதலம் அமைக்கப் பெற்றிருக்கிறது. அதன் அருகே அசோகமரம் நின்று நிழலும் ஒளியும் செய்கின்றது. அதன் அடிநிழல் நோக்கி மரீசி வந்து சேர்தலும், அவனைக் கண்ட துருமகாந்தன் அடிவணங்கி, அச் சிலாதலத்தைக் காட்ட, மரீசி, வியந்து, “இஃது என்!” என மொழிகின்றான். வியந்த மரீசிக்குத் துருமகாந்தன் கூறல் மினல்கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும் புனல்கொடி மலர்த்தொகை புதைத்தபொலிதாரோய்! “நினக்குஎன இயற்றிய நிலாநிழல் மணிக்கல் மனக்கு இனிதின் ஏறினைமகிழ்ந்து இருமின்” என்றான். 156 “இது கடவுட்கு ஆக்கிய இடமன்றோ?” என மரீசி வினவுதல் “அழற்கதிர் இயங்குஅற அலங்கு இணர் அசோகம் நிழற்கதிர் மரத் தகையதாக நினைகில்லேன்; பொழிற்கடவுள் பொன்இடம்; இது என்னை புகுமாறு?” என்று எழில்கதிர் விசும்பிடை இழிந்தவன் மொழிந்தான். 157 துருமகாந்தன் விடையிறுத்தல் “நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்து ஒளிதுளும்பும் சிலாதலம் இதற்கு உரிய, தெய்வம், எனல்வேண்டா; அலாதவர் இதற்கு உரியர்; அல்லர் அவர் ஆவிர், உலாவிய கழல்தகையினீர்”, என உரைத்தான். 158 மேலும், இச் சிலாதலத்தின் வரலாற்றினைத் துருமகாந்தன் மரீசிக்குத் தெரிவிக்கத் தொடங்கி, அங்கதன் என்னும் புரோகிதன் பயாபதிக்கு உரைத்த செய்தியை விரியக்கூறி, தன்னைக் காவலாக அமைக்கப் பெற்ற கருத்தும் விரியக் கூறுகின்றான். அதுகேட்டு மகிழ்ந்த மரீசி சிலாதலத்தில் அமர்கின்றான். இவன் வரவு பயா பதிக்கு எட்டியதும், அவன் மரீசியின் வழிவருத்தம் தீர்த்தற் பொருட்டு வயந்தமாலிகை, கலி யாணிகை, வியந்த சேனை, கமலமாலதை என்ற மகளிர் நால்வரை விடுக்கின்றான். மகளிர் வரவுகண்டு மரீசி துறக்கமோ என மருட்கை யுற்றுத் துணிதல் தகளி வெஞ்சுடர் எனத்திகழ் மணிக்குழை தயங்க, மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு உகளுமான்பிணை அனையவர் உழைச்செல, ஒளிர்தார்த் துகளில் விஞ்சையன் துணிந்தனன், “துறக்கம் ஈது”, எனவே. 159 “துறக்கமே இந்நாடு; துறக்கம் புக்கவர் பெறுவனவும் இவையே” எனத் துணிந்த நெஞ்சினனாய், மரீசி இருப்ப, அம் மகளிர் நால்வரும் சான்றோர்க்குச் செய்வது போலும் செய்கையால் விருந்தோம்புகின்றனர். மகளிர் மரீசியை நீராட்டி மலர்சூட்டி உணவூட்டிச் சிறப்புச் செய்தல் ஆட்டினார் வெறிகமழ்வன அணிகிளர் நறுநீர்; தீட்டினார் நறுஞ்சாந்தமும் சிறிது மெய்கமழ; சூட்டினார் சிலர் நறுமலர்; அறுசுவை அடிசில் ஊட்டினார்; அவன் அமரருள் ஒருவன் ஒத்து ஒளிர்ந்தான். 160 பின்பு, பயாபதி தன் மக்களான விசய திவிட்டர்களை நால் வகைப் படையும் புடைசூழப் புட்பமாகாண்டம் சென்று மரீசியை வரவேற்று அழைத்து வருமாறு பணிக்க, அவ்விருவரும் அவ்வண்ணமே சென்று புட்பமாகாண்டப் பொழிற்குட் புகுகின்றனர். பொழிலின் காட்சி தாதுநின்ற தேறல்நீர் தளித்து இவற்றின்மேல் அளி கோதுகின்ற போதுகொண்டு சிந்தி, நம்பிமார்களை மாதுநின்ற மாதவிக் கொடிகள் தம் தளிர்க்கையால் “போதுக” என்று இடங்கள்காட்டுகின்றபோல் பொலிந்தவே 161 போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால் தாதுலாயபோது அணிந்து தாழ்ந்து, தாமவார்சூழல் மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக் காதலால் வளைப்பபோன்று நாவினுள் கலந்தவே. 162 பொழில் வழங்கிய இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த அரசிளஞ் செம்மல் இருவரும், அசோகமரத்தின் நீழலில் மணிச் சிலாதலத்தில் இருந்த மரீசியை அண்மியதும், அவர்களைக் கண்ட அவன், பொருக்கென எழுந்து, அரசிளஞ் சிறுவர் கழலில் வீழ்ந்து, வணங்குகின்றான். “வணங்குவது ஏன்?” என விசயன் மரீசியை வினாவுதல் ஆங்கு அவன்இறைஞ்சலும் அலர்ந்த திங்கள் நீள்ஒளிப் பூங்கழற் பொலங்குழைப் பொலிந்து இலங்கு தாரினான், “நீங்கரும் குணத்தின்நீவிர் நீடுகுரவி ராதலின் ஈங்குஎமக்கு நீர்பணிந்தது என்னை?” என்று இயம்பினான். 163 உடனே விடையிறுக்காது மரீசி அவர்களை அடிமுதல் சென்னிகாறும் ஆர அமர்ந்து நோக்குதல் வேல்கோள் தானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்து,நீள் நூல்கொள் சிந்தைகண்கடாவ நோக்கிநோக்கி ஆர்கலான், கால்கள்கொண்டு கண்ணிகாறும் உள்மகிழ்ந்து, கண்டு கள் மால்கொள் சிந்தையர்கள் போல மற்றும் மற்றும் நோக்கினான். 164 மரீசி விசயன் கேட்ட வினாவிற்கு விடை இறுத்தல் “செம்பொன்வான் அகட்டிழிந்து தெய்வயானை உள் மறைஇ வம்புநீர் வரைப்பகம் வணக்கவந்த மாண்புடை நம்பிமீர்கள் நுங்கள்பாதம் நண்ணிநின்று இறைஞ்சுவார், அம்பொன்மாலை மார்பினீர்! அருந்தவம் செய்தார்களே.” 165 மேலும் அம் மரீசி, விசய திவிட்டர் முன் விஞ்சையராகிய தாங்கள் மேம்பாடு பெறுதல் இல்லையென மிகுத்துக் கூறுகின்றான். விசயதிவிட்டர் அரசன் பணியுரைத்து அழைத்தல் இமைகள்விட்ட நோக்கம் ஏற இன்ன போல்வ சொல்லலும் “அமைக மாற்றம்; நும்மை எங்கள் அடிகள் காண ஏகுவாம்; சுமைகொள் மாலை தொடு களிற்று எருத்த மேறுக,” என்றனர் சிமைகொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார், 166 பின்பு, மரீசியைத் தாம் கொணர்ந்த பட்டத்தியானை மேல் ஏற்றி, வேறிரண்டு களிற்றின்மேல் தாம் இருவரும் ஏறிக்கொள்ள, நால்வகைப்படையும் புடைசூழ்ந்து வர, நகரத்தைச் சேர்கின்றனர். அவர்களை ஆங்கே மகளிர் வரவேற்கின்றனர். பின்பு பல தெருக் களையும் கடந்து, அரசன் பெருங்கோயிலை நோக்கி வருகின்றனர். கோயில் வாயிலைக் குறுகுதல் தெளிமுத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீந்தேன் தளி முத்த மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டார் ஒளி முத்த முறுவலார் தம் உழைக்கலம் கலந்து மாலைக் குளிர் முத்தம் நிழற்றும் கோயில் பெருங்கடை குறுகச் சென்றார். 167 பயாபதி திருவோலக்க மிருத்தல் மற்றவர் அடைந்த போழ்தின், வாயிலோர் உணர்த்தக் கேட்டுக் கொற்றவன், அருவி தூங்கும் குளிர்மணிக் குன்றம் போல முற்றிநின்று இலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக் கற்றைகள் தவழச் சென்று ஓர்கனக கூடத் திருந்தான். 168 மரீசியை வரவேற்று இருக்கை தருதல் மன்னவ குமரரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்து இன்னருள் புரிந்த வேந்தன் இறையறிந்து இனிதின் எய்திக் கன்னவில் தோளினான் தன் கழலடி தொழுது நின்றான், அன்னவற்கு இருக்கைத் தானம் அரசனும் அருளிச் செய்தான். 169 அலகையில் தானைவேந்தன் அம்பர சரனை நோக்கி, உலகு உபசார மாற்றம் உரைத்தலுக்கு உரியகூறி விலகிய கதிரவாகி விளங்கொளிக் கடகக்கையான் மலரகம் கழுமப்போந்துமனமகிழ்ந் திருந்த போழ்தில். 170 மரீசி திருவோலை கொடுப்ப அமைச்சன் வாங்கல் விஞ்சையன் எழுந்து தங்கோன்வெள்ளி வேதண்டம்நோக்கி அஞ்சலித் தடக்கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த எஞ்சலில் ஓலைகாட்ட, இறைமகன் குறிப்பு நோக்கி, வஞ்சமில் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி. 171 திருவோலை படித்தல் போதனத்து இறைவன் காண்க; இரதநூபுரத்தை ஆளும் காதுவேல் மன்னன்ஓலை; கழலவன் தனக்கு நாளும் ஆதியஅடிசில் ஒண்கேழ் அஞ்சனம் உள்ளிட்டெல்லாம் தீதுதீர்காப்புப் பெற்றுச் செல்கஎனவிடுத்ததுஅன்றே, 172 அல்லதூஉம் கருமமாவது, அலங்குதார் இவுளித் திண்தேர் வல்லவன், இளையநம்பிக்கு உரியளா வழங்கப் பட்டாள் மல்லக மார்பினான்தன் மருமகள்; இவளைக் கூவி வல்லிதின் கொடுக்கமன்னன், வாழ்கதன் கன்னிமாதோ. 173 திருவோலைகண்ட பயாபதிமன்னன் மாற்றம் கொடாது வாளா விருத்தல் என்றுஅவன் ஓலை வாசித்து இருந்தனன், இறைவன் கேட்டு “வென்றியம் பெருமை வீச்சாதரர் என்பார் எம்மின் மிக்கார்; இன்றுஇவன் விடுத்தது இவ்வாறு என்கொலோ?” என்று சிந்தித்து ஒன்றும் மற்றுஉரைக்க மாட்டாது இருந்தனன் உரங்கொள் தோளான், 174 வேந்தன் உரையாடாதிருந்தது தங்கள் வேந்தனை அவமதித்ததாகப் பிறழக் கருதி மரீசி சினந் துரைத்தல் முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல், மனிதர் தம்மால் என்னவ ரேனு மாக, இகழ்ந்திடப் படுப போலாம்; அன்னதே உலக வார்த்தை ஆவது, இன்று அறியும் வண்ணம் மின்னவின்று இலங்கும் வேலோய்! நின்னுழை விளங்கிற்று, அன்றே. 175 வரைமலி வயங்கு தோளாய்! வியாதியால் மயங்கி னார்க்குச் சுரைமலி அமிர்தத் தீம்பால் சுவைதெரிந்து உண்ண லாமோ? விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ? 176 உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையும் மாந்தர் ஒள்ளிய ரேனும் தக்கது உணர்பவர் இல்லை போலாம்; வெள்ளியஞ் சிலம்பின் எங்கோன் விடுத்ததே ஏது வாக, எள்ளிஓர் உரையும் ஈயாது இருந்தனை, இறைவ! என்றான். 177 பயாபதி விடையிறுத்தல் ஆங்குஅவன் உரைப்பக் கேட்டே அம்பர சரனை நோக்கித், “தேங்கமழ் அலங்கல் மார்ப!சிவந்து உரையாடல் வேண்டா; ஓங்கிய ஓலை மாற்றக்கு உரியவாறு உரைக்க மாட்டாது ஈங்குயான் இருந்தது,” என்றான், எரிசுடர் வயிரப் பூணான். 178 “ஈட்டிய ஊன்செய் யாக்கை எம்முழை இன்ன வாறு வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்னன் ஓலை காட்டிநீ உரைத்த தெல்லாம் கனவுஎனக் கருதின் அல்லால் மீட்டுஅது மெய்ம்மை யாக வியந்துஉரை விரிக்க லாமோ?” 179 “மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்கு ஒப்புடைத்து உங்கள் சேரி உயர்நிலைச் செல்வம் எல்லாம்; எப்படி முயறு மேனும் எங்களுக்கு எய்த லாகாது; அப்படி நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே,” என்றான். 180 மரீசி பயாபதியின் பொறையும் செறிவும் கண்டு தனக்குள் நாணியுரைத்தல் இறைவன் ஆங்கு உரைத்த சொற்கேட்டு “என்னை, பாவம், பொருந்தாக் கறையவாம் மொழிகள் சொன்னேன்; காவலன் கருதிற்று ஒரேன்; பொறையினால் பெரியன் பூபன்; சிறியன் யான்,” என்று நாணி அறிவினால் பெரிய நீரான் அவிந்தன கதத்த னானான். 181 இவ்வாறு தன் தவற்றினை யுணர்ந்து தன்னையே கடிந்து கொண்ட மரீசி, விஞ்சையரும் மண்ணவரும் கொள்வன கொடுப்பன செய்துகொள்ளுவது பற்றி ஐயுற்ற பயாபதியின் ஐயமறுக்கக் கருதிச் சில கூறுகின்றான். விஞ்சையர்க்கும் மண்ணவர்க்கும் வேற்றுமையில்லை என மரீசி எடுத்துரைத்தல் “மஞ்சிவர் மணம்கொள் சோலை மணிவரைச் சென்னிவாழும் விஞ்சையர் விச்சை யாலே விழுமியர் என்ப தல்லால் அஞ்சலில் தானை வேந்தே! மனிதரே அவரும்; யாதும், வெஞ்சுடர் விளங்கு வேலோய்! வேற்றுமை யில்லை, கேண்மோ,” 182 இனி, மரீசி தனக்குரிய சுவலனசடி யரசனது குடி வரலாறு கூறலுற்று முதற்கண் தன் வரலாறு கூறுவானாய், பவபுரத்து வேந்தனான பவனவேகன் மனைவி வாயுவேகையென்பவள் தன் உடன்பிறந்தவள் என்றும், கற்றுத்துறைபோகிய பேரறிஞனான அஞ்சுமானுக்கும், கலைமகள் போலப் பெருங்கலை நிரம்பிய அருசிமாலையென்னும் அவன் மனைவிக்கும் பிறந்த மகனே மரீசியாகிய தான் என்றும் கூறுகின்றான். சடிவேந்தனது குடிவரலாற்றை மரீசி எடுத்து விரியக் கூறுதல் பண்டு காசி நாட்டைக் கச்சன் என்போன் ஆட்சி புரிந்து வந்தான்; அவனுக்குச் சுதஞ்சணை யென்பவள் மனைவி, இவர்கட்கு நமியென்றொரு மகன் பிறந்து, வளர்ந்து, அறிவு, ஆண்மை, பெருமை முதலியவற்றால் சிறந்து திகழ்ந்தான். அவன் ஒரு கால் அரசபோகம் வேண்டாது, அருகன் கோயிலையடைந்து வழிபட்டுப் பாடலானான். பாட்டு அலகிலா ஞானத்து அகத்துஅடங்க நுங்கி உலகெலாம் நின்னுள் ஒளித்தாயும் நீயே; ஒளித்தாயும் நீயே; உயிர்க்கெலாம் கண்ணா அளித்தாயும் காத்தாயும் நீயே! வாழி, அறவேந்தே!! 183 நிறைதரு கேவலத்தோய்! நின்னடியார்க் கெல்லாம் குறைதலில் இன்பம் கொடுப்பாயும் நீயே; கொடுப்பாயும் நீயே, எம் குற்றேவல் வேண்டாய், விடுத்தாயும் நீத்தாயும் நீயே வென்ற பெருமானே. 184 இப்பாட்டினைக் கேட்ட எவ்வுயிரும் இசையின்பத்துள் மூழ்கி அசைவற்றிருந்தன. குறிஞ்சி முதலிய மரங்கள் தாழ்ந்தன; விலங்குகள் இயக்கமற்று நின்றொழிந்தன; பறவை யாவும் பறப்ப தொழிந்து நிலத்தே வீழ்ந்தன; கின்னரர் சோர்ந்தனர்; அருகனோ தியானம் கலையானாயினன். அது போழ்து, ஆதிசேடன் ஆங்குப் போந்து; அரசன்காண; அருகனை வணங்கிப் பரவினான், பரவியவன் நமியரசனைக் கண்டான். ஆதிசேடன் நமியரசனை வினவுதல் “மாண்டதன் நிலைமை உள்ளி வருபொருள் மெய்ம்மை நோக்கித் தூண்டிய சுடரின் நின்ற தியானத்தைத் துளக்கு வாய்போல் ஈண்டுவந்து இசைக்குற் றேவல் எம்இறை யடிக்கண் செய்தாய், வேண்டுவது என்கொல்?” என்றான் மிடைமணிப் பூணினானே. 185 நமியரசன் விடையிறுத்தல் பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்து உண்மிசைத் தொடர்பு நோக்கி உறுவலி அதனைக் கேளா, “விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்கும் செல்வம் மண்மிசை பெறுவ னாகமற்று இதுஎன் மனத்தது” என்றான். 186 அவ்வாறே, ஆதிசேடனும் இமையவர் இயல்பை யெய்தும் வித்தையும் நல்ல மனைநலமும் வெள்ளிமலைக்கு அரசுரிமையும் பிறவும் நல்கி, “என்றும் வேந்தனாகவே இருப்பாயாக” என வரம் பல தந்து தன் உலகை யடைந்தனன். நமியின் வழித் தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்கு உரைத்தல் ஆங்கவன் குலத்து ளான்எம் அதிபதி; அவனோடு ஒப்பா ஓங்கிய குலமும் செல்வப் பெருமையும் உடையை நீயும், ஈங்குஇரு குலத்து ளீர்க்கும் கருமம்வந்து இசைந்த போழ்தின் நீங்கரும் நறுநெய் தீம்பால் சொரிந்ததோர் நீர்மைத்து என்றான். 187 பயாபதியின் நிமித்திகனான அங்கதன், சடியரசனது வரலாற்றை மரீசி கூறிமுடிப்ப, “பயாபதியின் முன்னோருள் வாகுவலி என்போன் சீரிய தலைவனாவான்; அவன் தன் அரசபாரத்தைத் தன் மைந்தன்பால் வைத்து, கயிலை மலையை அடைந்து நெடுந்தவம் புரிந்தான்” என்று கூறுகின்றான். வாகுவலியின் தவச் சிறப்பு கழல்அணிந்து இலங்கு பாதம் கலந்தன கருங்கண் புற்றத்து அழல்அணிந்து எழுந்த ஐவாய் அருமணி ஆடும் நாகம்; பொழில்அணிந்து எழுந்த வல்லி புதைந்தன; பூமி நாதன் குழலணிந்து எழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம். 188 வாகுவலி அமரனானது கூறல் ஓவலில் குணங்கள் என்னும் ஒளிர்மணிக் கலன்கள் தாங்கித் தேவர்கள் உலக மெல்லாம் செழுமணம் அயர்ந்து கூட்டக் கேவலப் பெண்ணென் பாள்ஓர் கிளர்ஒளி மடந்தை தன்னை ஆவியுள் அடக்கிப் பின்னை அமரர்க்கும் அரிய னானான். 189 அவ் வாகுவலியின் வழித் தோன்றலே பயாபதி என்று அவ்வங்கதன் மேலும் கூறல் எங்கள்கோன் இவன்கண் நின்று மிக்குயர் குலத்து வேந்தர் தங்கள்ஓர் புறஞ்சொல் வாராத் தன்மையால் உலகம் காத்தார்; அங்குஅவர் வழிக்கண் தோன்றி அகலிடம் வணங்க நின்ற இங்குஇவன் பெருமை நீயும் அறிதியால், ஏந்தல்! என்றான். 190 இச் செய்தி கேட்டு அனைவரும் மகிழ்ந்தபோது மரீசி மேலும் கூறல் இப்படித் தாயின் பண்டை இசைந்தது சுற்றம்; என்னை; அப்படி அரிய செய்த அடிகள்எம் அரச னாய கைப்புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று ஒப்புடை புராண நன்னூல் உரைப்பதுயான் அறிவன் என்றான். 191 மரீசியின் உலகவறிவும் வரலாற்றறிவும் பயாபதி கண்டு வியந்து பாராட்டுதல் மந்திரக் கிழவர் கண்ணா, மக்கள்தான் தாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்தோள் தோழராச், செவிகள் ஒற்றா, அந்தர உணர்வு நூலா, அரசுஎனும் உருவு கொண்ட எந்திரம் இதற்கு வாயாத் தூதுவர் இயற்றப் பட்டார். 192 மற்றிம்மாண்பு உடைய நின்னை உடைய அம்மன்னர் மன்னன் எற்றை நூற்றுஎய்த மாட்டான்; இதன்திறம் நிற்க, எம்மைச் சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப் பெற்றுயாம் பிறவி தன்னால் பெறும்பயன் பெற்றது என்றான். 193 பயாபதி சடியரசற்கு உரைக்குமாறு மரீசிபால் சில உரைத்தல் இன்றுயான் நின்னை முன்வைத்து இனிச்சில வுரைக்கல் வேண்டா ஒன்றுயான் உரைக்கற் பாலது உரையையும் உணர்தி நீயே வென்றியால் விளங்கு தானை விஞ்சையம் கிழவன் கண்ணா நின்றுயான் வாழ்வ தல்லால் நினைப்புஇனி இல்லை, மன்னோ. 194 கொற்றவன் குறிப்பு இதாயின் கூவித்தன் அடியன் மாரை உற்றதோர் சிறுகுற் றேவற்கு உரியராய்க் கருதித் தானே அற்றமில் அலங்கல் வேலோன் அறிந்தருள் செய்வ தல்லால் மற்றுயான் உரைக்கும் மாற்றம் உடையனோ, மன்னற்கு என்றான். 195 பின்பு மரீசி பயாபதிபால் விடை வேண்டி நிற்கின்றான். பயாபதியோ அவனை அற்றை நாள் இருத்தித் தன் நகர்ச் செல்வமும் இன்ப நாடகங்களும் காட்டி மகிழ்வித்து, மறுநாளில் குரவர் பலரைப் பின் செலவிடுத்து வழி விடுகின்றான். பின்னர் மரீசியும் சடியரசன் இருக்கும் இரத நூபுரத்தை நோக்கிச் சென்று சேர்கின்றான். 7. சீயவதைச் சருக்கம் (இதன்கண், தூது போந்த மரீசி திரும்பச் சடியரசன்பால் சென்று நிகழ்ந்தது கூறுவதும், அவன் தன் மந்திரச் சுற்றத்தோடு ஆராய்ந்து திவிட்டன் சீயத்தை வதைசெய்வதை யறிதற் பொருட்டு விஞ்சையரை விடுப்பதும், அச்சுவகண்டன் காமக்களிப்பில் மூழ்கி அரசியலை நெகிழ்த்திருப்பதும், சதவிந்து என்னும் நிமித்திகன் அவற்கு அரசியல் நெறியும், திவிட்டன் பகையாய்த் தோன்றியிருப் பதும் உரைத்துச் செய்வன செய்க எனக் கூறுவதும், அச்சுவகண்டன் அமைச்சரைத் தக்கது தேர்ந்து செய்க எனப் பணிப்பதும், அரிமஞ்சு என்பான் திறைபெறுமாறு பயாபதிக்கு ஓலை விடுப்பதும், பயாபதி திறைநல்குவதும், திவிட்டன் கண்டு அதனை மறுப்பதும், தூதர் சென்று அரிமஞ்சுவுக்குத் தெரிவிப்பதும், அவன் அரிகேது என்பானை மாயச்சீயமாகச் செல்கெனப் பணித்துத் திவிட்டற்குத் தூதுவர் வாயிலாகத் தெரிவித்தலும், அவன் சென்று அதனை யடர்ப்ப, அரிகேது நீங்க, உண்மைச் சீயமொன்று அகப்பட்டு மாள்வதும் பிறவும் கூறப்படுகின்றன.) சேடிநாட்டு இரதநூபுரத்துக்குத் திரும்பப் போந்த மரீசி, சடிவேந்தன் கோயிலை யடைந்து அரசனை வணங்கி நிகழ்ந்தது கூறத் தொடங்கி, முதற்கண் அரசனை வாழ்த்தித் தான் சென்ற பணியை முடித்து வந்தமையைக் குறிப்பாக முன்மொழிந்து கொண்டு, தான் புட்பமாகாண்டப் பொழிலையடைந்ததும், பொய்கையைச் சார்ந்ததும், அசோக மரத்தைக் கண்டதும், சிலாதலக் காட்சியும், துருமகாந்தன் மாண்பும், மங்கலமகளிர் செய்த சிறப்பும், அரசகுமரர் வரவேற்றதும், அரசவை யடைந்ததும், ஆங்கு நடந்தனவும் பிறவும் ஒன்றும் விடாது உரைக்கின்றான். பின் பயாபதியின் அரசியல் மாண்பும், அவன் மக்களது நலமும் கூறலுறுகின்றான். பயாபதியின் அரசியல் மாண்பு சொன்னவார்த்தை இஃது இருக்கச் சொல்லுவது இன்னம் ஒன்று உளது; அடிகள்! யான்பல மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டனன், அன்ன நீர்மையார் அரசர் இல்லையே. 196 எரியும் ஆணையால்; குளிரும் ஈகையால்; பெரியன் பெற்றியால்; சிறியன் நண்பினால்; அரியன் வேந்தர்கட்கு, எளியன் ஆண்டையர்க்கு உரியன் ஓங்குதற்கு, ஓடை யானையான். 197 வையம் இன்புறின் மன்னன் இன்புறும்; வெய்யது ஒன்றுறின் தானும் வெய்துறும்; செய்ய கோலினாய்! செப்ப லாவதன்று ஐய தாரினான் அருளின் வண்ணமே. 198 வீவிலங் கண்நீர் வேலி வாழ்பவர்க்கு ஆவி யாயவர் அரசர்; ஆதலால், காவல் ஓவும் கொல்என்று கண்படான், மாவல் தானைஅம் மன்னர் மன்னனே. 199 இனிப் பயாபதியின் மக்கள் நலத்தைப் பொது வகையாற் கூறல் மங்குல் மாமழை மாரி வண்கையான் பொங்கு காதலம் புதல்வர் தாமும் மற்று இங்கண் வேந்தர்கட்கு, ஏனை மான்கள்முன் சிங்க ஏறுஎனச் செப்பும் நீரரே. 200 திவிட்டன் நலத்தைச் சிறப்பக் கூறல் சங்க வண்ணனார் தம்பி தானும்நீர் பொங்கு கார்முகில் புரையும் மேனியன், அங்கண் இவ்வுல காள நாட்டிய மங்கலப் பொறி, மன்ன, காண்டியால்! 201 நங்கை சுயம்பிரபைக்கு ஏற்றவனே என்றல் நங்கை அங்குஅவன் நலத்திற்கு ஒப்பவள்; இங்கு இவட்குவேறு ஏந்தல் இல்லையால்; பொங்கு புண்ணியம் புணர்த்த வாறுஇது; வெங்கண் யானையாய்! வியக்கும் நீரதே. 202 பின்பு சடி வேந்தன் செய்த சிறப்புக்களைப் பெற்றுக் கொண்டு மரீசி தன் மனையகம் செல்கின்றான். மந்திரச் சுற்றம் சூழ, வேந்தன் மேலே செய்வன ஆராய்கின்றான். அமைச்சர் கூறல் செங்கண் நீள்முடிச் செல்வ, சென்றுஒரு திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்குஒரு சிங்கம் வாய்பகத் தெறுவன் என்பது தங்கு கேள்வியான் தான்முன் சொன்னதே. 203 ஆதலால் அஃது அறியும் வாயிலா, ஓதும் மாண்பினான் ஒருவன் ஒற்றனாய்த் தீதில் தானையாய்! செல்ல வைப்பதே நீதியாம் என நிகழ்த்தினார் அரோ. 204 அவர் சொல்லிய வண்ணமே சடி வேந்தன் ஒற்றன் ஒருவனைப் போதனமா நகரத்தே இருக்க வைக்கின்றான். அச்சுவ கண்டனது காமக்களிப்பு தாமமென் குழலார் தடங்கண் எனும் தேம யங்கிய செங்சுழு நீரணி காமம் என்பதோர் கள்ளது உண்டு, அரோ யாமமும் பகலும் அயர்வெய் தினான். 205 மண் கனிந்த முழவின் மடந்தையர் கண் கனிந்திடு நாடக காட்சியும், பண் கனிந்த இன் தீங்குரல் பாடலும் விண் கனிந்திடவே விழை வெய்தினான். 206 வாவியும் மது மண்டபச் சோலையும் தூவிமஞ்ஞை துதைந்த செய் குன்றமும் பாவும் வெண் மணலும் புனற் பட்டமும் மேவும் நீர்மைய னாய்விளை யாடினான். 207 மின்னும் செங்கதிர் மண்டிலம் வெய்து; ஒளி துன்னும் திங்கள் பனிச்சுடர் தண்ணிது என்னும்இத் துணையும் அறியான், களித்து அன்ன னாயினன் அச்சுவ கண்டனே. 208 பூமகள் அவன் ஆட்சியிலிருந்து நீங்க பொழுது நோக்கியிருத்தல் தோடு மல்கு சுரும்பணி கோதையார் கோடி மென்துகில் குய்யத் தடம்படிந்து ஆடித் தன் அணையாமையின் பூமகள் ஊடலுற்று இடம்பார்த்து உளளாயினாள். 209 சதவிந்து என்னும் நிமித்திகன் போந்து அச்சுவகண்டற்கு நீதி சில கூறல் மன்ன! கேள்வளை மேய்திரை மண்டிலம் தன்னை ஆள்பவர்க்கு ஓதின, தங்கணே பன்னின் ஆறு பகைக் குலமாம்; அவை முன்னம் வெல்க என்றான், முகம் நோக்கினான். 210 தன்னை வென்ற தண்தார் வயவேந்தனைப் பின்னை வேறல் பிறர்க்கு அரிதாதலால், மன்ன! மற்று அவன் ஆளும் வரைப்பகம் பொன்னின் மாரி பொழிந்திடும் நன்றரோ. 211 பெற்ற தன் முதலாப் பின் பெறாததும் சுற்றிவந் தடையும்படி சூழ்ந்து சென்று உற்றவான் பொருள்காத்து உயர் ஈகையும் கற்றவன் பிறர் காவலனா குவான். 212 அருக்கன் தன் அறிவாக அலர்ந்த நீர்த் திருக்கவின்ற செல்வச் செழுந்தாமரை செருக்கு எனப்படும் தண்பனி வீழுமேல் முருக்கும் மற்றதனை முகத் தாரினாய். 213 இகழ்ச்சியிற் கெடுவார்களை எண்ணுக; மகிழ்ச்சியுள் மதிமைந்துறும் போழ்தெனப் புகழ்ச்சி நூலுள் புகன்றனர், பூவினுள் திகழ்ச்சிசெல் பொன்மணிமுடி மன்னவனே! 214 இவற்றைக் கேட்டு அச்சுவகண்டன் சதவிந்துவை இகழ்ந்து நோக்கினானாக, சதவிந்து, நீ கேளாயாயினும், கூற வேண்டுவது என் கடனாதலின், யான் கூறக்கேள் என்று தொடங்கிப் “போதனமா நகரத்து வேந்தனான பயாபதியின் மக்களுள் இளையான் நமக்குப் பெரும்பகையாய்த் தோன்றியுளன்; நீ இதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து செய்க,” என்று கூறவே, அச்சுவகண்டன் உடனெழுந்த வெகுளியால் நகைத்துக் கைபுடைத்து இகழ்ந்து கூறுகின்றான். வேழத்தின் மருப்புத்தடம் வீறுவ வாழைத் தண்டினுள் ஊன்ற மழுங்குமோ? ஆழித் தானவர் தானையை அட்ட என் பாழித் தோள் மனித்தற்குப் பணியுமோ? 215 குலிசம் இந்திரன் கொண்டு பணிக்குமேல் மலையின் மா சிகரங்களும் வீழ்ந்திடும்; நிலைய வெஞ்சுடர் ஆழி நினைப்பனேல், தொலைவில் வானவர் தோளும் துணிக்குமே! 216 புலவர் சொல்வழி போற்றிலன் என்பதோர் அலகில் புன்சொலுக்கு அஞ்சுவன்; அல்லதேல், உலகம் ஒப்ப உடன்றெழு மாயினும் மலைவன்; மற்றதன் கண் மதிப்பில்லையே. 217 இவ்வாறு மொழிந்தவன் அமைச்சரை நோக்கி, “இது குறித்துச் செய்யத் தகுவனவற்றை ஆராய்ந்து புறக்கணித்தல் தீது” என்று கூறலும், அரிமஞ்சு என்னும் அமைச்சன் எழுந்து சூழ்ச்சி யொன்று கூறுகின்றான். அரிமஞ்சு மொழியும் சூழ்ச்சி பகைய லாதவ ரைப்பகை யாக்கலும், நகையில் தீமனத் தாரை நண்பு எண்ணலும், முகையின் வேய்ந்த மென்மொய்ம்மலர்க் கண்ணியாய்! மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே. 218 அறியத் தேறும் திறமது எவ்வாறு? எனில் திறையிற்கு என்று விடுதும்; விட்டால், திறை முறையின் தந்து முகமன் மொழிந்து எதிர் குறையிற், கொற்றவ! குற்றம் அங்கு இல்லையே. 219 இச் சூழ்ச்சியைக் கேட்ட அச்சுவகண்டன் அறிவுடன் பட்டுத் தூதர் சிலரைப் பயாபதிபால் திறை பெற்று வருக எனப் பணித்து விடுக்கின்றான். அவர்களும் போதன நகரை அடைந்து, அரசன் கோயிலைக் குறுகி, வாயில் காவலருக்குத் தம் வரவு கூறி, வேந்தன் “போதுக” என்றது கொண்டு, அவன் முன் நின்று, தாம் கொணர்ந்த ஓலையினைக் கொடுக்க, அரசன் குறிப்புணர்ந்த அமைச்சன் அவ்வோலையைப் படிக்கின்றான். அச்சுவகண்டன் பயாபதிக்குத் திறைசெலுத்துமாறு விடுத்த திருவோலை ஊடகம் ஓடி எரிந்துஒளி முந்துறும் ஆடகம் ஆயிர கோடியும், அல்லது, சூடக முன்கையர் தோடக மெல்லடி நாடகர் ஆயிர நாரியர் தம்மையும். 220 தெண்திரை சிந்திய சங்கொடு செங்கதிர் எண்தரளம் பவழக் கொடி ஈட்டமும், கண்திரள் முத்தொடு காழகில் அம்துகில் பண்தரு நீரனவும் பல பண்டமும். 221 வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு, கண்கவர் சாமரை வெண்மயிரின் கணம், தண்கதிர் வெண்குடையாய்! தரல் வேண்டும், இஃது ஒண்சுடர் ஆழியினான் உரை என்றார். 222 இச்சொற்கள் பயாபதியின் உள்ளத்தே மிக்க சினத்தை யெழுப்பின எனினும், அவன் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டு தனக்குள்ளே அடிமை வாழ்வின் கீழ்மை நினைந்து வருத்த முறுகின்றான். அடிமை வாழ்வின் கீழ்மை நினைந்து பயாபதி தனக்குள் கூறிக் கொளல் கருத்தும் மாண்குலமும் தேசும் கல்வியும் வடிவும் தம்மில் பொருத்தினால் பழிக்க லாகாப் புலமை மிக்குடைய ரேனும் ஒருத்தனுக்கு ஒருத்தன் கூறக் கேட்டுஉற்றுச் செய்து வாழத் திருத்தினான் இறைவனே?காண், செய்வினைக் கிழவன் என்றான். 223 மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித் தாம் படைக்கப்பட்ட நிதியினை நுகர்தும் என்று நினைத்து இனிது இருந்த போழ்தில் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத் தாம் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்கமாட்டா, மெலிபவால் வெளிய நீரார். 224 ஒளியினால் பெரிய னாய ஒருவனுக்கு உவப்பச் செய்துஓர் அளியினால், வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்து கின்றாம் தெளியநாம் இதனைக் கண்டும் செய்வினைத் திறங்கள் ஓராம்; அளியமோ, அளியம், சால அறிவினால் பெரியமேகாண். 225 இவ்வாறு எண்ணமிட்டவன், தனது அடிமைக்கும், அச்சுவ கண்டன் தலைமைக்கும் காரணம் செய்வினையே எனத் தேர்ந்து, தனக்கு முன்னோரும் தன்னைப் போலவே திறை செலுத்தி வாழ்ந்த திறத்தை யுட்கொண்டு அச்சுவகண்டன் விரும்பியவாறே திறை செலுத்தியிடத் துணிகின்றான். துணிபவன், திறைபெற வந்த தூதுவர்க்கும் இனிய முகமன்கூறி, “நும் இறைவனுக்கும் எம் இன்னுரையைத் தெரிவிமின்” என்கின்றான். அப்போது, தன் செயல் தன் மக்கட்குத் தெரியாவண்ணம், அத் திறையினைக் கொடுக்கின்றான். பயாபதி தன் மக்கள் தெரியாவகையில் திறை செலுத்துதல் ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்கோன் அதனைக் கூறி “வாளிவில் தடக்கை வெம்போர் மணிவரை அனைய மார்பின் காளைகள் இதனைக் கேட்பின் கனல்பவால்; இவரை இன்னே மீளுமாறு அமைப்பன்,” என்று வேண்டுவ விதியின் ஈந்தான். 226 திறை பெற்றுச் செல்லும் தூதுவரை விசய திவிட்டர் காண்டல் அஞ்சுடர் வயிரப் பூணான் அருளினன் விடுப்ப, ஆங்கண் விஞ்சையர் விமானம் தோற்ற மேல்அருங் கலங்கள் ஏற்றிச், செஞ்சுடர்த் திலகச் செவ்வாய் மகளிரை விமானம் சேர்த்திக் கஞ்சிகை மறைக்கும் போழ்தில் காளைகள் அதனைக் கண்டார். 227 ஆயிரக் கணக்கில் மகளிரும், பொன்னும் விமானத்தில் செல்வது கண்ட விசயதிவிட்டர் ஆங்கிருந்தோரை வினவ, யாவரும் அச்சத்தால் உரையாடாது வாய்வாளாதிருப்ப, ஒரு குறமகள் உரைத்தற்கு முன்வருகின்றாள். குறமகள் நிகழ்ந்தது கூறல் அறைகழல் அரவத் தானை அச்சுவ கண்டன் என்பான் நிறைபுகழ் ஆழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்; திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவெந் தானை இறைவனும் அருளிச் செய்தான்; இதுஇங்கு விளைந்தது என்றாள். 228 திறையென்ற சொல்லைக் கேட்டதும் சினம் மூண்ட திவிட்டன் களன்று கூறுதல் உழுதுதம் கடன்கழித்து உண்டு வேந்தரை வழிமொழிந்து இன்னணம் வாழும் மாந்தர்போல் எழுதிய திறைஇறுத்து இருந்து வாழ்வதேல் அழகிது, பெரிது,நம் அரசர் வாழ்க்கையே. 229 நாளினும் திறைநுமக்கு உவப்பத் தந்துநாடு ஆளுதும்; அன்றெனில் ஒழிதுமே எனில், தோளினும் தொடுகழல் வலியினாலும் இவ் வாளினும் பயன்என்னை? மயரி மாந்தர்காள்! 230 பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம் ஆழியால் வெருட்டிநின்று அடர்த்திர் போலும்; அஃது ஏழைகாள்! இனிஒழிந் திட்டுச் செவ்வனே வாழுமாறு அறிந்து உயிர்காத்து வாழ்மினே. 231 தூதர் வறிதே ஏகுதல் உட்கஆங்கு உரைத்தலும் ஒளிர்பொன் மாழையும் கட்கமழ் கோதையர் கணமும் மீண்டது; வட்கிநம் இறைவற்கு வலிது தெவ்எனத் துட்கெனும் மனத்தினர் தூதர் ஏகினார். 232 திறை யின்றி வறிது சென்ற தூதுவர் அச்சுவகண்டனைக் காண்டற்கு அஞ்சி, அமைச்சனாகிய அரிமஞ்சுவிடம் நிகழ்ந்தது கூற, அவன், “இஃது அரசற்குத் தெரியின், சிறிதும் பொறான்; பெரும் பகையே விளைவாகும்; இதனை விலக்குமாறு யாது?” எனத் தனக்குள் ஆராய்ந்து துணிகின்றான். அரிமஞ்சு தனக்குட் கூறிக் கொளல் “மின்தொடர்ந்து இலங்கு பூணான் விளைவுறா இளமைதன்னால் நன்றுதீது என்னும் தேர்ச்சி நவின்றிலன்; ஆதலால், யான் ஒன்றஓர் மாயம் காட்டி உளைவித்துக் குறுக ஓடிக் குன்றிடைச் சீயம் தன்மேற் கொளப் புணர்த்திடுவன்” என்றான். 233 என்று எண்ணியவன் அரிகேது என்னும் விஞ்சையனை அழைத்து, நிகழ்ந்ததும் இனி நிகழ்த்த வேண்டுவதும் அவனுக்கு உரைத்து மாயச் சிங்கவுரு எடுத்துச் சென்று போதனநகரத்தை அச்சுறுத்துமாறு பணிக்கின்றான். அரிகேது சிங்கவுருக் கொண்டு சென்று உரறுதல் இலைத்தடஞ் சோலை வேலி இமவந்தம் அடைந்து நீண்ட சிலைத்தடந் தோளி னார்தம் சிந்து நாடதனைச் சேர்ந்து மலைத்தடம் பிளந்து சிந்த, மண்புடை பெயர, முந்நீர் அலைத்துஉடன் கலங்கி விண்பால் அதிர, நின்று உரறியிட்டான். 234 சிந்து நாட்டவர் அஞ்சி மறுகுதல் பொடித்தலைப் புலம்பிக் கானம் போழ்ந்து,மா நெரிந்து வீழ, அடித்தலைக் கலங்கி வேழம் பீடிகளோடு அலறி ஆழப், புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க, இடித்தலின் மனித்த ரெல்லாம் எயிறுற இறுகிச் சோர்ந்தார். 235 அரிமஞ்சு இச் செய்தியைத் திவிட்டனுக்குத் தெரிவித்து வம்மின் எனப் பணிக்க, அவர் மீளவும் போந்து, வீதியில் உலாவரும் விசயதி விட்டரைக் கண்டு வணங்கி, அவருள், திவிட்டன்பால் உரைக்கின்றனர். தூதுவர் திவிட்டனுக்கு உரைத்தல் “திறையின் மாற்றமும் திறையினை விலக்கிய திறமும் குறை”என்று எங்களைக் குமர! நீ பணித்ததும் கூற, அறையும் பைங்கழல் ஆழியந் தடக்கைஎம் அரசன் நறையும் குஞ்சியான் நன்றுநன்று எனச்சொல்லி நக்கான். 236 “தளையின் விண்டுதேன் தயங்கிய தடங்கொள்தார் மார்ப இளையை என்பதும் எங்கள்வாய்க் கேட்டபின், இறைவன், ஒளியும் ஆற்றலும் தன்கண்ஒன்று உள்ளது நினையான், அளியன், பிள்ளைதான் உரைத்த என்று அழன்றிலன் அமர்ந்தான்”. 237 “அறியுமாயின் தன் அரும்பெறல் நாட்டினை அரிய எறியும் மின்உரும் எனஇடித்து இறுவரை முழையுள் உறையும் கோளரி ஒழிக்கலா நமக்கு வந்தீயும் திறையும் மீட்கிய வலித்தஅச் செருக்குடைச் சிறியோன். 238 என்று உரைக்குமாறு எம்மைப் பணித்தான்” என்று அத் தூதுவர் திவிட்டனுக்கு உரைக்கின்றனர். அது கேட்டதும் திவிட்டன்; ஆங்கு நின்ற மக்களை நோக்கி, “கோளரி யொன்று கொடிமுடியில் தங்கி உயிர்கட்கு அச்சம் விளைத்து வருகின்றதோ?” என்று வினவுகின்றான். நாட்டு மக்கள் திவிட்டனுக்கு உரைத்தல் “உளது வாழிநின் ஒலிபுனல் சிந்து நன்னாட்டில்; களைதல் யாவர்க்கும் அரியது; கனமணிக் குன்றின் உளது; கோளரி உரும்என இடித்துஉயிர் பருகி அளவிலா முழை உறைகின்றது; அடிகள்!” என்று உரைத்தார். 239 திவிட்டன் சூள் செய்து கொண்டு புறப்படுதல் ஆயின் மற்றுஅதன் அருவரைப் பிலம்என அகன்ற வாயைப் போழ்ந்து உடல் இருபிளப்பாய் வகுத்திடுவல்; ஏயிப் பெற்றியே விளைத்திலனாயின் நும் வேந்தன் பேயில் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான். 240 உலாவரும் தன்னைச் சூழப் போந்த படையை நிற்க எனத் தவிர்த்தல் இவரு மாமணிக் கொடுஞ்சிலை இவுளித்தேர் காலாள் கவரி நெற்றிய புரவிதம் காவிடம் புகுக; எவரும் என்னொடு வரப்பெறார் தவிர்கென எழில்சேர் உவரிநீர் வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான். 241 விசயன் உடன் செல்லுதல் நகர மாசனம் இரைப்பது தவிர்த்தபின் நளிநீர்ப் பகரு மாகடல் படிவம் கொண்டனையவன் படர, சிகர மால்வரை தெளிந்தனன், திருவ மார்பினன் பின்; மகர மாகடல் வளைவண்ணன் உடன்செல வலித்தான். 242 இருவரும் காலால் நடந்து அரிமா இருந்த சூழலை அடைதல் புழைக்கை மால்களிற்று எருத்திடைப் புரோசையின் பயின்ற கழல்கொள் சேவடி, கருவரை யிடைநெறி கலந்த அழல்கொள் வெம்பொடி யவைமிசை புதைய, அவ் வரிமான் தொழில்கொண்டு ஆருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார். 243 விசயதிவிட்டரைக் கண்ட அம்மாய அரிமா உரறுதல் அடைந்த வீரரைக் காண்டலும் அழலுளை அரிமா உடைந்து போகஓர் இடியிடித்தென உடன்று இடிப்ப இடிந்து போயின இறுவரை துறுகல்; அங்கு உடனே பொடிந்து போயின பொரியென நெரிவொடு புரளா. 244 திவிட்டனைக் கண்டு மாய அரிமா அஞ்சி உடைந்து ஓடுதல் காளை காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத், தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச் சூளி மாமணித் தொடர்கொண்டு சரிகுஞ்சி பிணியா ஆளி மொய்ம்பன்அங்கு ஆர்த்தனன் உடைந்தது அவ்வரியே. 245 திவிட்டன் அரிமாவைத் துரத்திச் செல்லுதல் கழல்அங்கு ஆர்த்தில; கால்களும் நிலமுறா; முடங்கா; அழலும் செஞ்சுடர்க் கடகக்கை அவையவை புடையா; குழலும் குஞ்சியும் மாலையும் கொளுவிய தொடரும் எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே. 246 அரிமா வுருக்கொண்டு போந்த அரிகேது அஞ்சியோடி ஒளிந்து கொளல் மூடியிட்டன முகிற்கணம்; முரன்றிடை நொறுங்காய்க் கூடியிட்டன கொடுமுடித் துறுகற்கள்; குளிர்ந்தாங்கு ஆடியிட்டன வனதெய்வம்; அரியுரு வுடையான் ஓடியிட்டனன் ஒளிர்வரை முழையகத் தொளித்தான். 247 திவிட்டனது ஆர்ப்பிசைகேட்டு ஆங்கே ஒரு முழையிடைக் கிடந்த உண்மையரிமா ஒன்று எழுந்து உரறி வருதல் அதிர ஆர்த்தலும் அழன்றுதன் எயிற்றிடை அலர்ந்த கதிரும், கண்களில் கனலெரிச் சுடர்களும் கனல, முதிர்வில் கோளரி முனிந்துஎதிர் முழங்கலின் நெரிந்து பிதிர்வு சென்றது பெருவரை; பிளந்தது அப்பிலமே. 248 அவ்வரிமாவைத் திவிட்டன் கிழித்தெறிதல் அளைந்து மார்பினுள் அழிதரு குருதியைக் குடிப்பான் உளைந்து கோளரி எழுதலும் உளைமிசை மிதியா வளைந்த வாள்எயிற்றிடை வலித்தடக்கையில் பிடித்தான்; பிளந்து போழ்களாய்க் கிடந்ததுஅப் பெருவலி அரியே. 249 அது கண்டு வானவர் மருளுதல் சீய மாயிரம் செகுத்திடுந் திறலது வயமா ஆய ஆயிரம் ஆயிரம் அடுதிறல் அரிமா ஏ எனா முன்இங்கு அழித்தனன் இவன்எனத் தத்தம் வாயின் மேல்விரல் வைத்துநின்று அமரர்கள் மருண்டார். 250 திவிட்டன் விசயனை யடைந்து போதன நகரத்துக்குப் புறப்படல் யாதும்மற்று அதற்கு உவந்திலன், வியந்திலன், இகலோன் ஓத நித்திலம் புரிவளை ஒளியவற் குறுகி ஏதம் மற்றுஇது கடிந்தனன்; இன்னினி அடிகள்! போதும் போதன புரத்துக்கென்று உரைத்தனன் புகழோன். 251 விசயன் மகிழ்ந்து கூறல் தம்பி ஆற்றல்கண்டு உவந்துதன் மனம்தளிர்த்து ஒளியால் வம்பு கொண்டவன் போல்நின்று வளைவண்ணன் மொழிந்தான்; நம்பி நாம்இனி நளிவரைத் தாழ்வர் கண்டல்லால் இம்பர் போம்படித் தன்றுசெங் குருதியது இழிவே. 252 அவ்வாறே திவிட்டன் இசையவே, விசயன் கானம், மலை, தாழ்வரை முதலிய இடங்கள் வழங்கிய இனிய காட்சிகளைக் காட்டித் தம்பியை மகிழ்வுறுத்திக் கொண்டு வருகின்றான். வரும் வழியில் விசயன் திவிட்டனுக்கு நீதிகள் சில கூறுதல் உரைசெய்நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் வரைசெய்தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்; திரைசெய்நீர் உலகம் காக்கும் செய்கைமேல் படைக்கப் பட்ட அரசர்தம் புதல்வர்க்கு ஐயா, அறம்பிறிது அதனின் உண்டோ? 253 கற்றவர் கடவுள்தானம் சேர்ந்தவர் களைகண் இல்லார் அற்றவர் அந்தணாளர் அன்றியும் அனைய நீரார்க்கு உற்றதோர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்தன்றாயின் பெற்ற இவ்வுடம்பு தன்னால் பெறுபயன் இல்லைமன்னோ. 254 மன்னுயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்குமாயின் அன்னவன் ஆண்மையாவது அலிபெற்ற அழகுபோலாம்; என்னையான் கொடுத்தும் வையத்து இடுக்கண்நோய் கெடுப்பன் என்னும் நின்னையே போலும் நீரார் நிலமிசை நிலவிநின்றார். 255 ஒருவனது இரண்டு யாக்கை, ஊன்பயில் நரம்பின் யாத்த உருவமும் புகழும் என்றுஆங்கு அவற்றின் ஊழ்காத்து வந்து மருவிய உருவம் இங்கே மறைந்துபோம்; மற்ற யாக்கை திருவமர்ந்து உலக மேத்தச் சிறந்துபின் நிற்கும் அன்றே. 256 இவ்வண்ணம் சொல்லாடிக் கொண்டே இருவரும் போதன நகர் நோக்கி வருகின்றனர்; பொழுதும் மறைகின்றது; நகரமக்கள் இனிது வரவேற்கின்றனர். பின்பு அரசன் பெருங்கோயிலை அடைகின்றனர். அரசன் திருவடியில் இருவரும் வீழ்ந்து வணங்கு கின்றனர். அரசன் அவர்களை எடுத்து மார்புற அணைத்து மகிழ் கின்றவன், அவர்தம் சென்னியில், கானப்பூக்களும் தளிர்களும் கிடப்பது கண்டு வியந்து நோக்குகின்றான். பயாபதி மக்களைக் காரணம் வினவல் “என்னைநும் ஈரலர்க் குஞ்சி தம்முள்இத் துன்னிய வனத்துகள் துதைந்த வாறு?” என மன்னவன் அருளலும், மகர வார்குழை மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான். 257 விசயன் விடையிறுத்தல் “போற்றிநம் புறணிசூழ் காடுபாழ் செய்வான் சீற்றமிக் குடையதுஓர் சீயம் சேர்ந்தது; வேற்றுவன் தமர்கள் வந்துஉரைப்ப, வெம்பி, இவ் ஆற்றல்சால் அடியன்சென்று அதனை நீக்கினான்.” 258 “யானும்அங்கு இவனொடும், அடிகள்! ஏகினன், வான்உயர் இமகிரி மருங்கில்” என்று பூந் தேன்உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும் தான்உயிர் தளிர்ப்பதோர் சவியன் ஆயினான். 259 8. கல்யாணச் சருக்கம் இதன்கண், திவிட்டன் சீயத்தை யடர்த்த செய்தியைக் கண்டிருந்த தூதுவர் சென்று சடியரசற்கு உரைப்பதும், அவன் தன் மகள் சுயம்பிரபையைப் போதனத்திற்குக் கொணர்ந்து மணம் முடிக்கக் கருதி விஞ்சை வேந்தர் எண்மரைத் தன் நாட்டைக் காக்குமாறு பணிப்பதும், பின் சடியரசன் தன் தம்பியும் மருமகனும் மகனும் பெரும்படை சூழ உடன்வரப் போதனம் போந்து திருநிலையகம் என்னும் பொழிலில் தங்குதலும், வேந்தன் வரவைப் பயாபதிக்கு மரீசி தெரிவிப்பதும், அவன் பட்டத்தியானையேறி மக்களும் மந்திரக்கிழவரும் புடைசூழச் சென்று சடிவேந்தனைக் கண்டு நெஞ்சு கலத்தலும், திவிட்டனும் விசயனும் அருக்ககீர்த்தியும் செல்லுங்கால் சுயம்பிரபை திவிட்டனைக் கண்டு காதலுறுவதும், சசிதேவி விடுத்த மகளிர் சென்று சுயம்பிரபையைக் காண்டலும், அவர்கட்கு அவள் விடையிறுத்தலும், அவளது உருவெழுதிக் கொண்டு வந்த உழைக்கலமகள் ஒருத்தி, அக்கிழியினைச் சசிதேவிக்குக் காட்ட, அவள் அதனைத் திவிட்டற்குக்காட்டுக எனப் பணிப்ப, அவ்வாறே அவள் செய்வதும், திவிட்டன் அது கண்டு சுயம்பிரபை பால் பெருங்காதல் கொள்வதும், மறுநாள் பயாபதி அருகற்கு விழா எடுத்தலும், பின்பு திருமணம் நிகழ்த்துதலும் பிறவும் கூறப்படு கின்றன. சடியரசன் திவிட்டன் அரிமாவைப் போழ்ந்த செய்தி கேட்டு மகிழ்தல் உற்றவான் குழவித் திங்கள் ஒளிமுறை அகட்டுப் போந்து முற்றுவான் வளைத்த போலும் எயிறுடை மூரிச் சிங்கம் அற்றமால் அழித்த தெல்லாம் வானம் ஆறாகச் சென்ற ஒற்றரால் உணர்ந்து வேந்தன் உவகையங் கடலுள் ஆழ்ந்தான். 260 சடிவேந்தன் மணவினைக் குரியவற்றைத் தொடங்குதல் கரியவாய் விலங்கி நீண்டு களிக்கயல் இரண்டு தம்முள் பொரியபோகின்ற போலும் பொங்கு அரித்தடங்கண் பேதைக்கு உரியமா லவற்குச் சென்று கொடுப்பல்என்று உலகம் காக்கும் பெரியவன் தமரோடு எண்ணிக் கடிவினை பெருக்க லுற்றான். 261 சடியரசன் சுயம்பிரபையைப் போதனமா நகர்க்குக் கொண்டுசென்று திருமணம் புரிவிக்கக் கருதினமையின், தான் சென்று வருங்காறும் தன் நாட்டினைக் காத்தற் பொருட்டு, வருத்தமானம் என்னும் விஞ்சை நாட்டு வேந்தனான பிரீதிவர்த் தனன், கந்தருவநாட்டு விருககடி, கந்தமாதனத்துத் திவாகரதேவன், சக்கிரவாளத்து வச்சிரதாடன், தேவர வணத்து இரமியதரன், விசயகூடத்து வேகமாரதன், கிருதமாதனத்துக் கருடாங்கதன், சோபனத்தையாளும் சித்திரதரன் என்ற விஞ்சை வேந்தர் எண்மரை வருவித்துத் தன் நாட்டைப் புரந்துவருமாறு செய்துதான் போதனமா நகர்க்குச் செல்வது குறித்துப் பெருந்தானையைப் பண்ணமைக் கின்றான். யானைப் படை பண்ணல் வெண்ணிலாக் குழவித் திங்கள் மேகத்துப் பதித்த போலும் ஒண்நிலா உருவக்கோட்ட ஓடைமால் களிற்றின் மேல்ஓர் பண்எலாம் அணிந்து தோன்றப் பருமித்துக் கருவி ஏற்றிக் கண்நிலாம் பதாகை சேர்த்திக் காழ்கில் கழும விட்டார். 262 குதிரைப் படை பண்ணல் கட்டிய கம்மச் செய்கைக் கதிர்மணிக் கனகச் சூலம் பட்டமொடு இலங்கப் பண்ணிப் பக்கரை பதைப்ப யாத்து மட்டுஅவிழ் அலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னால் கொட்டிய குரத்த ஆலித்து எழுந்தன குதிரைச் சேனை. 263 தேர்ப்படை பண்ணல் மணித்தொழில் வளைந்த சூட்டின் மருப்பு அறுத்து இயற்றப்பட்ட அணித்தொழில் ஆரக்கோவை ஆடகக் கொடிஞ்சி அம்பொன் துணித்திடை பதித்த தட்டில் சுடர்மணித் துரகத் திண்தேர் கணித்து அளப்பரிய நீர கல்லெனக் கலந்த அன்றே. 264 காலாட்படை பண்ணல் ஒட்டிய கலிங்கம் தாள்மேல் திரைத்துடுத் துருவக் கோடிப் பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டைய நரல வீக்கிக் கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர் மட்டுஉயர் அலங்கல் சூடி மறம்கிளர் மன்னர் சூழ்ந்தார். 265 அமரபுரத்து அரசனும் சடி வேந்தற்கு இளையவனுமான சுவலனரதனும், அரிபுரத்து வேந்தனும் சடியின் மருகனுமான வியாக்கிராதனும், சடியரசன் உடன்வரப் புறப்படுகின்றனர். சடியின் மகனான அருக்ககீர்த்தி புறப்படுதல் வாரணி முரசம் ஆர்ப்ப வரிவளை வயிரோடு ஏங்கத் தார்அணி மறவர் சூழத் தமனியக் கலங்கள் தாங்கி ஆர்அணி உருவத் திண்தேர் ஆனைமேல் அருக்க கீர்த்தி நீரணி கடலம் தானை நிலம்நெளி பரப்ப நின்றான். 266 சடியரசன் தன்மகள் சுயம்பிரபைக்கென விமானமொன்று நிருமித்தல் சேனைபண் ணமைத்துச் சென்று திருக்கடை செறிந்த போழ்தில் தானையுள் படுநர் மாண்பின் தாரவர் தொழுது கூற வேல்நவில் தடக்கை வேந்தன் விண்இயல் விமானம் ஒன்று வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித் திட்டான். 267 விமானம் ஏறுதற்குரிய நன்னாழிகை வருதற்கு முன்வேந்தன் சுயம்பிரபையைப் புறப்படச் சொல்ல, அவள் சென்று தன் தாயின் திருவடி வணங்கி அவள் வாழ்த்துப் பெற்றுத் தோழியர் சூழ வருகின்றாள். மன்னன் விமானம் ஏறுக எனப் பணித்தல் அன்னவகை தேவியர்க ளோடுஅமரும் எல்லை முன்னும்முக ஓரையொடு மூர்த்தநலம் நோக்கி மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மகள் தன்னை இன்னகை விமானதலம் ஏறுகஇனிது என்றான். 268 சுயம்பிரபை விமானத்தில் ஏறலும் தாயரும் கஞ்சுகியரும் தோழியரும் பிறரும் அதன்கண் தத்தமக்குரிய இடத்தே அமர் கின்றனர். கடல்போல் எழுந்த தானையும் உடன்வருகின்றது. இத்திருமணப்படை விசும்பாறாகப் போதனமா நகரை நோக்கி வருகின்றது. வருங்கால், சுயம்பிரபையின் உயிர்த்தோழி, வழியிடையே தோன்றிய மலைகளையும், யாறுகளையும் காட்டிவருபவள் கங்கை யாற்றைக் காட்டிப் பின் சிந்து நதியையும் காட்டிச் சுயம்பிரபைக்கு இன்பூட்டுகின்றாள். சடியரசன் முதலியோர் சிந்துநாட்டில் போதனமா நகரத்தின் புறத்தேயுள்ள திருநிலையகம் என்னும் பொழிற்கு வந்து சேர்தல் இன்ன போல்வன இளையவட்கு உழையவள் இனியன பலகாட்டிப் பன்னும் ஆயிடைப் பழனங்கள் வளாவிய படுகலிக் கெடில்நீத்தம் துன்னும் நீர்வயல் சுரமியத் தகணியுள் சுடர்அணி நகர்சார்ந்து தென்என் தேன்இமிர் திருநிலையகம் எனும் செறிபொழில் அதுசேர்ந்தார். 269 பொழில் அடைந்த சடிவேந்தன் மாளிகையும் கூடமும் கோயிலும் பிறவும் நன்கு அமைத்து, யாவரும் இனிது தங்குதற்கு வேண்டியன நிருமிக்கின்றவன், அழகிய சோலை யொன்றின் நடுவில் கன்னியர் பலர் காவல் செய்யும் கன்னிமாடம் ஒன்று சுயம்பிரபைக்கு இயற்றுகின்றான். சுயம்பிரபை கன்னிமாடத்தில் எய்துதல் மின்னின் ஆர்ந்த விமானத் தலத்திடைப் பொன்னனார் பலர் போற்ற இழிந்து, தன் மன்னன் ஆரருளால் மணி மாளிகைக் கன்னி மாநகர் எய்தினாள் கன்னியே. 270 பின்பு, சடிவேந்தன் தன் வருகையைத் தெரிவிக்குமாறு மரீசியைப் பயாபதிபால் விடுப்ப, அவன் சென்று அவ்வாறே உணர்த்தலும் உவகைக்கடலுள் ஆழ்ந்த பயாபதி நகரத்தைக் கோலம் செய்வித்து, உழைக்கல மகளிர் பல்லாயிரவரை, வந்தோரை வரவேற்றற்குரிய சிறப்புக்களுடன் செல்லுமாறு விதித்து, அமைச் சரைக் கொண்டு வேறு செய்வன உளவோ என ஆராய்கின்றான். பயாபதி அமைச்சரை வினாதல் வேண்டுப அவன்திறத்து அருளி வேந்தர்கோன் ஈண்டிய மந்திரக் கிழவர்க்கு, “என்னையாம் காண்தகு திறலவற் காணுமாறு?” என ஆண்தகைக்கு அவர்களும் அறியச் செப்பினார். 271 அமைச்சர் விடையிறுத்தல் “குலத்தினும், குணத்தினும், கொண்ட கோலமாம் நலத்தினும், நின்னொடு நிகர்க்கும் நன்மையன்; மலைத்தலில் வயத்தினும் பெரியன்; மல்லினும், உலத்தினும் பெருகிய உருவத் தோளினான்” 272 ஆதலால் அவன்திறத்து யாது செய்யினும் ஏதம் ஆங்கு இல்லை; கோல் இறைவ,” என்றனர்; கோதிலாக் குணம்புரி குன்றனார்க்கு ஒரு நீதிநூல் கடலின் நின்றனைய நீர்மையார். 273 பின்பு தான் சென்று சடிவேந்தனை வரவேற்றல் வேண்டி யானை முதலிய பல்வகைப் படைகளையும் பண்ணமைத்து, மரீசியைச் சீரிய வேழ மொன்றின்மேல் ஏற்றித் தன் கோயிலின் முதற் பணியாளனான சித்திரதரனை நோக்கி, “பட்டும் துகிலும் மணியும் பொன்னும் முதலிய பலவும் கொண்டு விஞ்சையர் வேந்தன் கோயில் முன் நிறைக்க,” என்று பணித்து விட்டுத் தன் மக்கள் இருவரையும் தன்னொடு வருமாறு ஏவி, பட்டத்தியானையைப் புனைந்து கொணர்வித்து, அதன்மேல் மக்களுடன் இவர்ந்து, பயாபதி திருநிலையத்துக்கு வருகின்றான். வருவானைச் சடிவேந்தன் எதிர்கொள்கின்றான். இருவரும் நெஞ்சுகலந்து இன்புறுகின்றனர். சுவலனசடியும் பயாபதியும் தம்மில் கண்டு கலத்தல். அம்மலர் அலங்கலான் தடக்கை என்னும் அம் மொய்ம்மலர் தாமரை முகிழ்க்கும் எல்லையுள் மைம்மலர் நெடுவரை மன்னன் மற்றவன் செம்மலர் அங்கையில் செறியப் புல்லினான். 274 விசயதிவிட்டர் சடிவேந்தனை வணங்குதலும், அவன் அவர்களைத் தழுவிக் கொள்ளுதலும் காமரு கவினொளிக் காளை மார்களைத் தாமரைச் செங்கணான் தழுவிப் பின்அவர் பூமரு பொன்வரை அகலம் புல்லினான் சாமரை நல்நுதல் தடக்கை யானையான். 275 அருக்க கீர்த்தி பயாபதியின் அடி வீழ்ந்து பணிய, பயாபதி அவனை எடுத்து மார்பொடு தழுவி இன்புறுகின்றான். பின்பு சடிவேந்தனுடைய தம்பியும் மருமகனும் பயாபதியின் அடிபணிந்து நிற்ப, பயாபதியின் இளையனான சீபாலனும் சடியின் அடியில் வீழ்ந்து அவன் அன்பில் திளைக்கின்றான். பின்னர் அனைவரும் திருநிலையகத்தே அமைந்த புதுநகர்க் கோயிலையடைந்து, சித்திரகூடத்தே இருந்த அரியணையில் அமர்ந்து இனிது இருக்கையில் பயாபதி சடிவேந்தனை நோக்கி இன்னுரை வழங்குகின்றான். பயாபதியின் முகமன் உரை “விண்ணிடை இழிந்துவந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய்; மண்ணிடை என்னை இங்குஓர் பொருள்என மதித்துவந்தது எண்ணிடை உணரும் மாந்தர்க்கு இடைதெரிவரிய தொன்றால் கண்ணிடை உமிழும் செந்தீக் கடாக்களிற்று உழவ!” என்றான். 276 சடிவேந்தன் விடையிறுத்தல் ஏங்குநீர் வளாகம் காக்கும் இக்குவா மன்னர் ஏறே! தூங்குநீர் மருதவேலிச் சுரமை நாடுடைய தோன்றால்! தேங்குநீர் அமிர்தின் தீர்த்தம் சென்றனர் தெளித்தல் அன்றே ஓங்குநீர் உலகம் தன்னுள் உயர்ந்தவர்க்கு உரியது என்றான். 277 வருதற்கு முதலும் முன்பே மருசிவந்து உணர்த்தக் கேட்டேன்; பொருதற்கண் அரிய வேலோய்! புராணநூற் புலவர் யாரும் கருதற்கண் அரிய கண்ணி கடல்வண்ணற்கு உரியள் என்னத் தருதற்கு மகிழ்ந்து வந்தேன் தாழம் ஈங்கு ஒழிக என்றான். 278 இவ்வண்ணம் இருவரும் பேசியிருந்தபின், “திருநிலையகத்துப் புதுநகரைக் காண்மின்” என விசய திவிட்டரைப் பணித்து அருக்க கீர்த்தியை உடன்கூட்டி விடுப்ப, அவர்கள் செல்கின்றனர். அப்போழ்தில், சுயம்பிரபையின் உயிர்த் தோழியான அமிர்த பிரபையென்பவள் அவளைக் கன்னிமாடத்தின் மேல்நிலை மாடி முற்றத்தே கொண்டு சென்று நகர் நலத்தைக் காட்டுகின்றாள், தெருவிற் செல்லும் அரசகுமரர் அவர் கண்ணிற்படுகின்றனர். அவர் ஒவ்வொரு வரையும் தோழி சுயம்பிரபைக்குச் சுட்டிக் காட்டுகின்றாள். சுயம்பிரபை திவிட்டனைக் காண்டல் தாமரை அனைய கண்ணும் தடக்கையும் பவழ வாயும் பூமரு பூவைக் கண்ணிப் புதுமலர் ஒளியும் காட்டித் தூமரு நீலமென்னும் மணி துணர்ந்தனைய குஞ்சிக் காமரு காளை கன்னி கண்களைச் சிறை கொண்டிட்டான். 279 அவள் திவிட்டன்பால் காதல் கொளல் சிறைஎன்பது இல்லைச் செவ்வே செம்புனல் பெருகுமாயின், நிறைஎன்பது இல்லைக் காமம் நேர்நின்று சிறக்கு மாயின் இறைநின்றது உளது என்பார் சென்று அரும்பெறல் இவளது உள்ளம் நறைநின்று கமழும் குஞ்சி நம்பிபால் பட்ட தன்றே. 280 அவள் வேட்கையால் மெலிதல் கோள்நின்ற மதியம் போலக் குழைமுகம் சுடரக் கோட்டித் தாள்நின்ற குவளைப் போதின் தாதகம் குழைய மோந்து வாள்நின்ற நெடுங்கண் காளை வடிவினுக்கு இவர மற்றை நாண்நின்று விலக்க நங்கை நடுவுநின்று உருகுகின்றாள். 281 இந்நிலையில் சடியரசன் அவளை அழைத்துப் பயாபதிக்குக் காட்டலும் அவள் அவன் அடிக்கண் வீழ்ந்து வணங்குகின்றாள். அவளது அழகைக் கண்ட பயாபதி பேரிறும் பூது எய்துகின்றான். பின்னர், சுயம்பிரபை தன் கன்னிமாடத்தை அடைந்து வேட்கைத் தீயால் வெதும்புகின்றாள். வேட்கை மிகுதி கூறல் தேமிடை காவல் வேலிச் செழுமணல் குவாலும் குன்றும் பூமிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரண மாகா; தாமுடை மனமும் கண்ணும் நிறையும் தம்பால ஆகா; காமுடை மனத்தி னார்கட்கு யாவரே களைக ணாவார்? 282 பயாபதியின் மனைவியாகிய சசி, வயந்தசேனை, மாதவ சேனை முதலிய மகளிரை யுள்ளிட்ட மகளிர் ஆயிரத் தெண்மரை விடுத்துச் “சிறப்புறச் சென்று சுயம்பிரபையைக் கண்டுவம்மின்” எனப்பணிக்கின்றாள். அவ்வாறே அவர் அனைவரும் சென்று சுயம்பிரபையைக் கண்களாரக் காண்கின்றனர். இவரனைவரும் திவிட்டனுடைய உழைக்கல மகளிர் என்று உணர்தலும் பேருவகை பூத்த முகத்தினளாய்ச் சுயம்பிரபை பூ வொன்றை நெறித்து மோந்து நிற்கின்றாள். அருகே நின்ற பளிக்குச் சுவர்மேல் அவள் நிழல் தோன்றக் கண்ட மாதவசேனை அவளை உடனே ஒரு கிழியில் பொறித்துக் கொள்கின்றாள். உழைக்கல மகளிர் சுயம்பிரபைக்குக் கூறுதல் பண்களை மருட்டும் இன்சொல் பாவையைப் பருக லுற்ற கண்களை மருள நீரும் கண்கள்என் கண்க ளாகப் பெண்களை மருட்டும் சாயல் பேதையைக் காண்மின் என்று மண்களை மருட்டும் சீர்நும் மாமியார் அடிகள் சொன்னார். 283 இது கேட்டுச் சுயம்பிரபை நாணி நிற்ப, மாதவசேனை யென்பவள், “எங்கட்கு உரைப்பதில் ஏதம் ஒன்றும் இல்லை; அவர்கட்கு யாம் கூறத்தக்க மாற்றம் ஒன்று உரைமின்” என்று வேண்டலும், சுயம்பிரபை முறுவலித்துத் தன் தோழியை நோக்கு கின்றாள். அமுத பிரபை யென்னும் தோழி கூறல் அங்கு அவள் குறிப்பு நோக்கி அமுதமா பிரபை என்னும் மங்கலத் தோழிகூறும் “மாமியார் அடிகள் தம்மை எங்கள் மெய்ச் செய்கையாக இணையடி பணிமின்” என்றாள் செங்கனி கனிந்த செவ்வாய்ச் சிறுநுதல் பெரிய கண்ணாள். 284 இவ்வண்ணம் சுயம்பிரபையின் தோழி கூறக்கேட்டு விடை பெற்று வருங்கால், மாதவசேனை தான் பொறித்த சுயம்பிரபை வடிவத்தை நன்கு செப்பம் செய்துகொண்டு சசிதேவிக்குக் காட்ட, அதன்கண் எழுந்த ஒளியைக் கண்டு “இஃது அணியொளியோ? அணங்கின் உருவமோ?” என வியந்து பாராட்டி மகிழ, மாதவசேனை சுயம்பிரபையின் குறிப்பு மேற்கொண்டு அமுதபிரபை உரைத்ததைச் சொல்கின்றாள். அதுகேட்டுப் பெருமகிழ்வு கொள்கின்ற சசிதேவி மாதவசேனைக்கு அவ்வோவியத்தைத் திவிட்டற்குக் காட்டுமாறு பணிக்கின்றாள். அவளும் சென்று திவிட்டனைக் காண்கின்றாள். மாதவசேனை திவிட்டற்குச் சொல்லுதல் அருங்கலம் உலகில்மிக்க அரசர்க்கே உரிய, அன்றிப் பெருங்கலம் உடைய ரேனும் பிறர்க்கவை பேணலாகா; இருங்கலி முழவுத் தோளாய்! எரிமணிப் பலகைமேல்ஓர் நெருங்கொளி உருவம் கொண்டு நின்னையான் நினைந்து வந்தேன். 285 மாதவசேனை அவ்வோவியத்தைக் காட்டக் கண்ட திவிட்டன் பெருவியப்புற்று, “வானவர்மகளோ, விஞ்சையர் மகளோ, மண்ணவர் மகளோ, இவள் யாவள்?” என்ன, அவள், “நீயே உய்த்துணர்ந் தருள்க” என்கின்றாள். திவிட்டன் இவள் இன்னளாம் எனக்கூற, மாதவசேனை ஆம்என இசைதல் மண்மிசை மகளிர் இன்ன வடிவுடை யவர்கள் இல்லை; விண்மிசை மடந்தை அல்ல ளாய்விடின், விஞ்சை வேந்தன் கண்மிசை நவிலும் காதல் கன்னியது உருவமாம் என்று எண்மிசை இவரும் போழ்தின் இதுஎன அவளும் சொன்னாள். 286 திவிட்டன் வேட்கை மிகுதல் மண்ணியல் வளாக மெல்லாம் மகிழ்ந்துடன் வணங்கும் போழ்தும் உள்நனி மகிழ்தல் செல்லா ஒளியுடை உருவக் காளை கண்ணினில் காதலாள்தன் கண்ணிய உருவம் கண்டே வெண்ணெயின் குன்றம் தீயால் வெதும்புகின் றதனோடு ஒத்தான். 287 ஞாயிறு மறைதல் விண்ணியல் உருவ வீதி மேல்நின்றும் இழிந்து வெய்யோன் கண்ணியல் விலங்கல் நெற்றி கதிரென்னும் கையின் ஊன்றி மண்ணியல் மரத்தின் சாகை நுதிபிடித்து அவையும் விட்டுப் பண்ணியல் பிறிதொன்றாகிப் பையவே மறைந்து போனான். 288 செக்கர் வானச் சிறப்பு வெய்யவன் என்னும் செந்தீச் சுடரினால் வெதும்பப் பட்டு மையொளி பரந்த போன்று கருகின திசைகள்; மற்று, மொய்யழல் மேல்அவிந்த தழல்மீள மூள்வதே போல் செய்யதோர் உருவம் மேல்பால் திசைமுகம் சிறந்த தன்றே. 289 மாலை நலம் காதலார் அகன்ற போழ்தில் கற்புடை மகளிர்போலப் போதெலாம் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க, மீதுலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறுவெள் ளாம்பல் தாதெலாம் மலர நக்குத் தம்மையே மிகுத்த, அன்றே. 290 நிலவொளி பரவுதல் செய்யொளிச் செக்கர் என்னும் செம்புனல் பரந்துதேறி வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னும் மணிகொள் பொய்கை மையிருள் என்னும் சேற்றுள் வளர்திங்கட் கதிர்கள் என்னும் மொய்யிளங் கமல நாள வளையங்கள் முளைத்த, அன்றே. 291 திங்கள் எழுதல் அங்கொளி விசும்பில் தோன்றி அந்திவான் அகட்டுக் கொண்ட திங்கள் அம்குழவி பால்வாய்த் தீங்கதிர் முறுவல் நோக்கித் தங்கொளி விரிந்த ஆம்பல்; தாமரை குவிந்த; ஆங்கே எங்குளர் உலகுக் கெல்லாம் ஒருவராய் இனிய நீரார்? 292 தென்றல் சிறப்பு மணவாய மல்லிகையின் மதுநனைந்து வண்கனிகள் மதர்ப்ப வீசி, இணர்வாய வனமுல்லை இதழ்வாரி இளந்திங்கள் கதிர்கால் ஊன்றித் துணைவாய சுரும்புஇரங்க அரவிந்த வனத்துதிர்ந்த துகளும் சீத்துத் திணைவாய கருங்குவளை திளைத்தசைக்கும் தென்றலும்ஒன்று உடைத்தே மாலை. 293 மாலைப்போது வந்தது கண்ட சுயம்பிரபை தன் ஆயவெள்ளம் சூழ அருகன் கோயிற்குச் சென்று அவன் அடிபணிந்து பரவு கின்றாள். பின்பு கன்னிமாடத் தடைந்ததும் அவளது காதற் குறிப் புணர்ந்த தோழியர், அக்குறிப்பே மிகுமாறு சொல்லாடுகின்றனர். ஒருத்தி, மனத்திற்கினியாருடன் கூடியிருப்பதே மாண்பு என்று கூறுதல் பனிவரைப் பாங்கரும் பழுச்செய் சோலையும் தனியவர்க்கு இனல்நனி பயக்கும்; தன்மனக்கு இனியவர் எவ்வழி இசைவர் அவ்வழித் துனிவரவு இல்என ஒருத்தி சொல்லினாள். 294 வேறொருத்தி காதல் வாழ்வின் நலம் கூறுதல் காதலார் காதன்மை கலந்து காதலர்க்கு ஏதிலார் அயலராய் இயல்ப வாய்விடின், சாதலும் பிறத்தலும் இலாத தானமும் கோதுஎனக் கொண்மின் என்று ஒருத்தி கூறினாள். 295 இவ்வாறு பலரும் பலவாறு சொல்லாடி யிருக்கையில் நிலவுபடுகின்றது; அனைவரும் அயர்ந்து உறக்கம் கொள்கின்றனர்; ஈங்கே சுயம்பிரபையும் ஆங்கே திவிட்டனும் வேட்கையால் உறக்கமின்றி வாடுகின்றனர். இரவுப்போது கழிகின்றது; விடியல் வருகின்றது; பாடுநர்துயிலெடை நிலை பாட, முரசம் இயம்ப, யாவரும் உறக்கம் நீங்குகின்றனர்; முடிவில் ஞாயிறெழுந்து நல்லொளி பரப்புகின்றது. திருமணத்துக்குரிய நாழிகை நெருங்குதலும், திவிட்டனையும் சுயம்பிரபையையும் முறையே அரசர்கள் யானை மேல் கொணர்ந்த புண்ணிய நீரால் நீராட்டுகின்றனர். பின்பு இருவரும் நன்கு ஒப்பனை செய்யப்பெறுகின்றனர். திவிட்டன் வேள்விச்சாலை மேவுதல் மன்னர்கள் சொரிந்தமணி நீர்அருவி ஆடிப், பின்னை, மலர் மாரிஅகல் வானினவர் பெய்ய, மின்னவிர் விளங்குசுடர் வேல்விடலை மெய்யில் பொன்னணி புனைந்துபுது வேள்விநகர் புக்கான். 296 சுயம்பிரபை வேள்விச்சாலை மேவுதல் மங்கல வனப்பினதொர் கோடிமடி தாங்கி அங்கலி விசும்பினவர் தந்தஅணி சேர்த்திப் பங்கய முகத்தவர் பலாண்டிசை பராவச் செங்கயல் நெடுங்கணவள் வேள்விநகர் சேர்ந்தாள். 297 புரோகிதன் போந்து தீயெழுப்பி மணவினை தொடங்கு கின்றான்; வேள்விச்சாலையைப் புழுகினால் மெழுகிப் பொற் சுண்ணத்தால் கோலமிட்டு வெண்மணல் பரப்பித் தருப்பையைக் கிடத்திப் பிற செய்வன செய்து எரியோம்பு கின்றனர்; கணிகள் வியாழனும் திங்களும் மேவும் திருமண வோரையை யறிந்து உரைக்கின்றனர். மங்கலவாச்சியம் ததும்புகின்றது; பெரியோர் வாழ்த்து உரைக்கின்றனர். இந்நிலையில் சடிவேந்தன் சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு நீர் வார்த்துக் கொடுத்தல் அங்குமுன் வளர்த்த அழலே கடவுளாக, மங்கையை மணக்குழுவின் முன்னைவரை வேந்தன் கொங்குவிரி தாரவற்கு நீரொடு கொடுத்தான்; நங்கையொடு நாள்மலரு ளாளையும் அடுத்தான். 298 மேலும் செய்தற்குரிய சடங்குகள் பலவும் நன்கு செய்து, திவிட்டன் சுயம்பிரபையின் கைப்பற்றி எரியை வலம் வந்து, புரோகிதற்கு வேண்டும் பொன் மிகத் தந்து அருந்ததியை அவட்குக் காட்டுகின்றான். இதற்கிடையே மணவினையில் வேள்வித்தொழில் புரிந்த வேதியர் பலரும் நிரம்பப் பொன் பெறுகின்றனர். வடமீனைக்காணும் சுயம்பிரபை மனநிலை வானநெறி எங்கும்வளர் சோதி வடமீனைக் கானமயில் அன்னவள்தன் முன்னை நனிகாட்ட “யானும் இவள்போல்உலகு காண இயல்வேனோ, ஈனமொடு நாணம்இலனோ” என இகழ்ந்தாள். 299 மணம்புணர்ந்த இருவர்தம் இன்பநிலை பருவத்தால் அரும்பிப் போதாய்ப் பையவே அலர்ந்து முற்றி மருவித்தேங் கனிகொண்டு உள்ளால் மணம்கொள வழிந்த காமத் திருவொத்த கனியின் தீஞ்சாறு ஆரவுண்டு ஆர மாட்டார் உருவத்தால் இருவ ராகி உள்ளத்தால் ஒருவ ரானார். 300 இவ்வாறு புதுமணத் தேறல் மாந்தி இன்புறுகின்ற இருவரும் ஒருநாள் பூஞ்சோலைக்குச் சென்று இன்பவிளை யாட்டயர் கின்றனர். உடன் போந்த மகளிர் இனிமை மிகப் பாடுகின்றனர். மகளிர் பாட்டு வரைவேந்தன் மடமகளை மணியேர் மேனி நிறம்கொண்டு விரையேந்து தளிர்ஈனல் விழையாய், வாழி, தேமாவே! விரையேந்து தளிர்ஈனல் வேனில் தென்றல் அலர்தூற்ற நிரையேந்து வடுநீயே படுதி வாழி தேமாவே! 301 அடிமருங்கின் அரசுஇறைஞ்ச ஆழி யாள்வான் பெருந்தேவி கொடிமருங்கின் எழில்கொண்டு குழையல், வாழி, குருக்கத்தி! கொடிமருங்கின் எழில்கொண்டு குழைவா யாயின் பலர்பறிப்பக் கடிமருங்கில் புக்கலரே காண்டி வாழி குருக்கத்தி! 302 வணங்கிவையம் தொழநின்ற மன்னன் காதல் மடமகள்போல் மணங்கள்நாறும் பூம்பாவை வளரல் வாழி நறுங்குரவே! மணங்கள்நாறும் பூம்பாவை வளர்த்தி யாயின் இளையாரால் கணங்களோடும் பறிப்புண்டி கண்டாய் வாழி நறுங்குரவே. 303 9. அரசியற் சருக்கம் (இதன்கண், இரத்தின பல்லவத்திருந்து ஆட்சிபுரிந்த விஞ்சையர் வேந்தனான அச்சுவகண்டன், திவிட்டன் சுயம்பிரபையை மணந்து கொண்டதும், திறை செலுத்த மறுத்ததும் அறிந்து சினம் கொள்வதும், அவன் சினம் தணியுமாறு அவன் இளையரும் பிறரும் போதன நகரத்தவரோடு பொருவதே தக்கதென வீரம் பேசுதலும், போர்க்குப் பண்ணமைத்தலும், ஒற்றரால் அறிந்த சடிவேந்தன் முதலியோர்முன், விசய திவிட்டர் வீரம் பேசுதலும், அச்சுவகண்டன் தூதர்போந்து சுடுசொல் சொல்வதும், திவிட்டன் பேருருக் கொள்வதும், போர் தொடங்குதலும், அருக்ககீர்த்தி பொருது வென்றி யெய்துதலும், அச்சுவகண்டனுடைய தோழரான அரிசேனன், தூமகேதனன் முதலியோரும் பின் ஆங்காரவேகன், சுவணகேது, ஸ்ரீசேனன், கனகசித்திரன் முதலியோரும் பொருது வீழ்தலும், விசயன் போர்த் திறமும், அவற்குத் தெய்வ அரிமாவும் புதிய நாஞ்சிற்படையும் வந்து எய்துதலும், அச்சுவகண்டன் போந்து சண்டவேகை என்னும் பேயை விடுத்தலும், திவிட்டன் பேருருக் கோடலும், அவனுக்குக் கருடனும் ஐம்படையும் வருதலும், அவன் அச்சண்டவேகையை வெருட்டி யுரப்புதலும், அச்சுவகண்டன், திவிட்டன்மேல் தன் ஆழிப்படையை விடுத்தலும், அது திவிட்டனை வணங்கி அவன் வலப்புடையில் வந்து அமைதலும்; அதனையே திவிட்டன் அவன்பால் விடுத்து அவனைக் கொல்வதும், அவன் இறந்தது கண்டோர் வியந்து கூறுவதும், அவன் தேவி உயிர்விடுதலும், ஏனை மகளிர் தாபதநிலை யெய்துதலும், விசய திவிட்டர் முடி சூட்டிக்கொள்வதும், திவிட்டன் ஐம்படைக்கும் கருடற்கும் கோயில் அமைத்தலும், கோடிக் குன்றத்தை எடுத்தலும், நகர்போந்து சுயம்பிரபைக்குத் தேவிப்பட்டம் அளித்தலும், பின்பு விஞ்சை வேந்தர்க்கும் பிறர்க்கும் அவன் விடையளித்து விடுத்தலும் பிறவும் கூறப்படுகின்றன.) திவிட்டன் அரிமாவைக் கொன்றதும், பயாபதி விடுத்த திறையை விசய திவிட்டர் மறுத்து இகழ்ந்துரைத்தலும் தூதுவர் அச்சுவகண்டனுக்கு உடனே உரைத்தற்கு அஞ்சிச் சின்னாள் கழித்து உரைக்கின்றனர்; அதுகேட்டதும் அவன் சினம் மிகுந்து எதிர்நின்ற வயிரத்தூண் ஒன்றை எற்ற, “அது துகள்பட்டு விழுகிறது, அதனோடமையாது, அவன் அத்தூதுவரை இகழ்ந்து அரிகேது முதலாயினாரைப் பெரிதும் வெகுள்கின்றான். அதனைக் கண்டிருந்த அரிகேது, அச்சுவகண்டனது ஆராய்ச்சி யின்மையைத் தன் மனத்தே நினைந்து இகழ்ந்தானாயினும், புறத்தே கூப்பிய கையனாய், தக்க உரைகள் சொல்லிக் கொள்கின்றான். அக்காலை, ஒருவன் போந்து சடிவேந்தன் சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணமுடித்த செய்தியைத் தெரிவிக்கின்றான். இதனால் அவனது சினத்தீ மிகக் கனன்று எழுகிறது. அவன்கீழ் வாழும் விஞ்சை வேந்தரும் அவருடைய படையினரும் வந்து குழுமுகின்றனர். இவ்வாறு, அச்சுவகண்டனது நகரமான இரத்தினபல்லவம் முழுதும் போர்ப்படையின் கூட்டம் நிரம்பிவிடுகிறது. அவரனைவரும் அச்சுவகண்டனது வெகுளியை நோக்கிப் பலப் பலப் பேசிக் கொள்கின்றனர்.” விஞ்சை வேந்தர் தம்முள் பேசிக்கொள்ளுதல் தானவர் அரக்கர் பண்டே தஞ்சமாம் இவற்கு; மண்மேல் ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கோர் துகளு மாகார்; வானவர் இவற்கு மாறாய் வருபவர், மதிப்பின், இல்லை; ஏனவர் முனிவு செய்யார்; யார்பிறர்? உரைமின் என்பார். 304 அச்சுவகண்டன் அவர்கட்கு உரைத்தல் “இரதநூ புரத்தை ஆள்வான் புதல்வியை எனைவஞ்சித்துப் புரிமனி சர்க்கு ஈவாக்கே புகன்றனன்போலும்” என்ற உரைதனக்கு உரைத்தவாறே உரைத்தனன்; உலகமெல்லாம் இரைதனக்கு என்றும் ஆற்றா எரிபடு வெகுளித் தீயான். 305 இதுகேட்ட விஞ்சை வேந்தர், இனி, போர்செய்வதே தக்கதெனப் பேசுதல் இனிஇருந் தென்னை? பாவம்! எழுமின் போய்ப் பொருதும் என்பார் முனிவன செய்த வேந்தன் முடித்தலை கொணர்தும் என்பார்; கனிவளர் கிளவி யாளைக் கைப்பற்றித் தருதும் என்பார்; பனிவரை யரசர் மாற்றம் பற்பல பகர்கின்றாரே. 306 கனகசித்திரன் என்பான் கூறுதல் தோள்களைப் புடைத்து வீக்கித் துணைக்கரம் கொட்டி ஆர்த்து வாள்களைத் துடைத்து நோக்கிவகை செய்வது எளிது; யார்க்கும் நீள்கதிர் இமைக்கும் ஒள்வாள் முகம்பெற நெருப்புச் சிந்தித் தாள்களை வெதுப்பும் வெம்போர் தாங்குவது அரியது என்றான். 307 வாளினால் செருவுண் டேனும் மாயம்மற்று ஆகுமேனும் தோளினால் ஆகு மேனும் சொல்எலாம் ஒழிக; மற்றுஅக் காளைதன் உயிரி னோடும் கன்னியைக் கொணர்ந்து தந்து தாளிலே இட்ட பின்றைத் தவிர்கநின் சீற்றம் என்றான். 308 இதுகேட்டுச் சினம் தணியும் அச்சுவகண்டற்கு வச்சிரகண்டன் கூறுதல் மகரம்மால் கடலை யல்லால் சிறுகய மதனைச் சேரா; சிகரமால் யானை வேந்தே! தானவர் செருவன் றாயின், நிகரலா நீசர் தம்மேல் நீசெலற் பாற்றன்று என்று புகர்எரி அவிக்கலுற்றான் பொழிமழை பொழிவதொத்தான். 309 இவ்வண்ணமே அச்சுவகண்டனுடைய ஏனை மக்களும் பற்பல விரிவுரை நிகழ்த்துகின்றனர். பின்பு மந்திரசாலை கூடுகின்றது. ஆங்கே இனிச் செய்யத் தகுவனவற்றை மந்திரச் சுற்றத்தார் ஆராய்கின்றனர். அரிமஞ்சு என்னும் அமைச்சன் ஏனைச் சுற்றத் தாரையும் விஞ்சை வேந்தரையும் “நீவிர் கருதுகின்றது என்னை?” என்று வினவுகின்றான். அதுகேட்ட ஏமகூடத் தரசனான தூமகேது, “மலைநாட்டின் அருங்கலமாகத் தோன்றிய சுயம்பிரபை அச்சுவ கண்டற்கே உரியள்” என்கின்றான். பின்பு அனலபுரத்து ஆங்காரவேகன், அச்சுவகண்டன் தோழனான அரிசேனன், கருடத்துவசன் முதலியோர் மண்ணுலகுசென்று, போருடற்றுவதே தக்கது எனத் துணிகின்றனர். சீபாலன் என்பான் கூறுதல் பொருபடைத் தொகையோர் மூன்று; போர்த்தொழில் தானும் மூன்றே, மருவுடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன; மற்ற வெருவுடைப் படையின் குப்பை மேலது நான்கு; ஈற்றது இருபடை; ஒழிந்து நின்ற இவையும் பாங்குஉடைய என்றான். 310 அவனே மேலும் கூறுதல் படைக்கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண் இடைப்புகுந்து உரைப்பின் சாலப் பெருகும்; அஃதிருக்க, இன்று, நடப்பது மக்க ளோடு மக்கட்போர்; நல்ல வேனும் புடைப்பில புகுதுமாயின் புறனுரை புணர்க்கும் என்றான். 311 “ஆதலால், விஞ்சையர் பொருவாராயின் விஞ்சைப் போரும், மக்களே வஞ்சனையின்றிப் பொருதால் மக்கட்போரும் ஏற்றவாறு உடற்றுதல் வேண்டும்,” என்கின்றான். அச்சுவகண்டன் சினம் தணிகின்றான். இதுகாறும் இங்கே நிகழ்ந்த அனைத்தும் ஒற்றன் ஒருவன் அறிந்து போந்து சடியரசற்கு உரைக்கின்றான். அவன், பயாபதி முதலியோரையும், தன் மருமகன், தம்பி, மகன், விசய திவிட்டர் என்ற இவர் அனைவரையும் ஒருங்குகூட்டி விளங்க உரைக்கின்றான். இது கேட்டதும், உடனிருந்த அரசர், பல வீரவுரை பகர்கின்றனர். அருக்க கீர்த்தி கூறுதல் அடுந்திறல் வெகுளிக்காற்றோடு அருக்கப்பேர் உடையமேகம் கொடுஞ்சிலை குலவக் கோலிக் குருதிநீர் வெள்ளம் ஓடக் கடுங்கணை என்னும் தாரை கலந்துமேல் பொழிய, வேந்தர் நடுங்கினர் பனிக்கும் போழ்தில் நம்மையும் அறிவது என்றான். 312 விசயன் கூறுதல் வானவர் மருள நாஞ்சில் மற்றிது மடுத்து மாற்றார் தேனமர் அகல மென்னும் செறுவுசெஞ் சால்கள் போக்கி ஊனமர் குழம்பு பொங்க உழுதிட்டு வென்றி வித்தி ஏனவர் செவிக ளார இரும்புகழ் விளைப்பன் என்றான். 313 திவிட்டன் கூறுதல் இன்னன பிறவும் ஏனை இருநிலத் தரசர் பேச, மன்னவ குமரன் மாமன் மலரடி வணங்கி வாழ்த்தி, “மின்னொடு விளங்கு வேலோய்? உளங்கொடு விளம்பி என்னை? என்னொடு படுவதன்றே, இனி இப்பால் வருவது,” என்றான். 314 திவிட்டன் சில சொற்களால் கட்டுரைத்த வீரமொழி கேட்ட சடியரசன், வியப்பும் மகிழ்ச்சியும் மிகக் கொண்டு, அவனுக்கு விஞ்சைகள் பல கற்பிக்கின்றான்; அவன் அவற்றை ஓதுதலும், அவற்றிற்குரிய தெய்வம் அவன்முன் போந்து, “பணியாது?” என்று வேண்ட, அவன் தான் வேண்டும்போது தன்னை நோக்குமாறு வேண்டி விடுக்கின்றான். பின்பொருநாள் அச்சுவகண்டனுடைய தூதுவர் இருவர் அவர்கள்பால் வந்து கூறல் “பொன்னவிர் திகிரியாளும் புரவலர் உரைப்ப வந்த மன்னவன் தமரம் யாமே; வாய்மொழி கேண்மின்; மன்னீர்! கன்னியைத் தருதிரோ? அக்கன்னியை மகிழ்ந்த காளை இன்னுயிர் தருதிரோ? இவ்விரண்டில் ஒன்று உரைமின்” என்றார். 315 இச் சொற்கள் திவிட்டன் செவியிற் புகுதலும், அவனுளத்தே சினத்தீ எழுகிறது. அவன் உருவம் பெருகிப் பேருருவாய் நிமிர்கின்றது. அமரர் அச்சுவகண்டன் முதலாயினார் “வாழ்நாட்கள் மாண்டன” எனப் பாராட்டிப் பேசிக் கொள்கின்றனர். தூதுவரைக் கோறல் அறமன்று என்பதனால் திவிட்டன் அவர்களை வெருண்டோட உரப்புகின்றான். மீட்டும் தன்னுருவத்தை எய்துகின்றான். அவன் உருவில் நல்லொளி எழுகின்றது. ஏனையரசர் அத்தூதர்க்கு உரைத்துவிடல் துன்னிவந்து இவனடி தொழுவனேல் உயிர் தன்னதாம்; அன்றெனில் தனதன்று; ஆதலால் மன்உயிர் உவக்குமோ? மானம் வேண்டுமோ? என்அவன் உவப்பதுஎன்று எண்ணி வம்மினே. 316 தூதுவர் இருவரும் சென்றதும், வானொலி ஒன்று எழுந்து, “திவிட்டனே வென்றி எய்துவன்” என்று உரைக்கின்றது. அச்சுவ கண்டன் நகரத்தே தீநிமித்தங்களும், போதனமா நகரத்தே நன்னி மித்தங்களும் நிகழ்கின்றன. தூதர் சென்று நிகழ்ந்தது கூறுகின்றனர். அச்சுவகண்டனுக்குச் சினத்தீ மிகப் பொங்கி யெழுகிறது. அச்சுவகண்டன் தன் தானைத் தலைவர்க்கும் விஞ்சை வேந்தர்களுக்கும் வெகுண்டு உரைத்தல் “மண்டணி மாநில மன்னரை மால்வரை ஒண்தொடி தாதையொடு ஊடுஉயிர் வவ்வுபு திண்திறல் பேசிய அச்சிறி யானையும் கொண்டனிர் கூடுதி ரோகடிது” என்றான். 317 அது கூறிய மாத்திரையே, விஞ்சையரது பெரும்படை யெழுகிறது. யானை, தேர், குதிரை, வீரர்படைகள் மிக்கெழு கின்றன; முரசு முழங்குகிறது; சங்குகள் முழங்குகின்றன; பறை முழக்கம் எழுகிறது; இவ்வார வாரத்தோடு இப்பெரும்படை நிலத்தின்மேல் இறங்கிப் போதனமா நகரத்தின் புறத்தே வருகிறது. சடிவேந்தன் விஞ்சைப் பெரும்படையும் பயாபதியின் பெரும் படையும் கலந்து, வந்த படையை நேர்கின்றன. படையெதிர்ந்து பொருதல் படையென் றலுமே படைபா ரதுவும் இடையின்றி எழுந்தது, இரண்டு கடல் விடையின்றி வெகுண்டெழு கின்றன போல் புடையின்றி நிரந்தன போர்த் தொழிலே. 318 போர் நிகழ்ச்சி காரொடு கார், கடலோடு கருங்கடல் நீரொடு சென்று எதிர்நேர்வன போல்வன தேரொடு தேர், கலிமாவொடு மா, பல போரொடு வந்து புகுந்தன, அன்றே. 319 அருக்ககீர்த்தி போர்செய்தல் ஆரழலான் பெயரான் அணிவெஞ்சிலை போர்அழல் வார்கணை மாரி பொழிந்தது; சீர்கெழு விஞ்சையர் செந்தடி நுந்துபு நீர்கெழு வெள்ளம் நிரந்ததை யன்றே. 320 இவன் போருக்கு ஆற்றாது விஞ்சையர் படை உடைகின்றது; ஒரு சிலரே உயிர் உய்கின்றனர்; அவர்தாமும் கரந்தோடி, அச்சுவ கண்டன் முன் படையுடைந்தது கூறுகின்றனர். அவர்கள் அருக்ககீர்த்தியால் படைகெட்டமை எடுத்துக் கூறுதல் கலையினைக் கடந்தசொல் கன்னி காதலன் அலையினுக்கு உடைந்திலர்; அருக்கன் கையதோர் சிலையினுக்கு உடைந்துதம் சிறுமை நாணிநம் மலையினுக்கு அடைந்திலர் மான மன்னரே. 321 இவ்வாறு இவர்கள் கூறியிருக்குமளவில் வில்வீரன் ஒருவன் போந்து இரதநூபுரத்தைத் தாக்குதற்குச் சென்ற படையும் கெட்டதென வெந்த புண்ணில் வேலெறிந்தாற் போல அச்சுவகண்டற்கு அறை கின்றான். அவன், “இனி இங்கிருப்ப தனால் பயனில்லை” எனத் தெளிந்து, தன் தம்பியரும் மக்களும் உடன்வரப் பெரும் படையொடு வந்து அருங்கலம் என்னும் மலையிடத்தே பாடி வீடமைத்து இனி திருக்கின்றான். முதல் தம்பியான இரத்தின கண்டன் வீரம் பேசுதல் இளையருட் பெரியவன் சொல்லும், “எம் இறை உளைவன செய்தவர் உயிரை மற்றவர் கிளையொடும் கீண்டு அரசாண்டும், அன்றெனில் வளையொடும் தலைமுடித்து இருந்து வாழ்துமே” 322 நீலமணிக்கண்டன் பேசுதல் “மாலும்ஆங்கு உடையர்கொல் மனிதர்? நம்மொடு போலும்மால் பொரலுறு கின்றது,” என்றுதன் கோலவால் வளைஎயிறு இலங்கக் கூறினான், நீலமா மணிக்கண்டன் என்னும் நேரிலான். 323 வயிரகண்டன் பேசுதல் முளைந்தவாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்துதேன் விளைந்ததார் வெறிகொள வைகும் வேற்றவர் உளைந்தபோர் நிலத்தினுள் உருள்ப என்றனன் வளைந்தவாள் எயிற்றவன் வயிர கண்டனே. 324 சுகண்டன் வீரம் பேசுதல் “ஒத்துஇலங்கு ஒண்சிறை உவணன் தன்னொடு பைத்துஇலங்கு அரவுகள் பகைப்ப போன்ம்” எனக் கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன், தொத்திலங்கு அலங்கலான் சுகண்டன் என்பவே. 325 இவர்தம் வீரவுரைகேட்டு மனம் குளிர்ந்த அச்சுவகண்டன் போர் செய்யுமாறு விடுத்தல் தம்பியர் மொழியெனும் தயங்கும் மாரியால், வெம்பிய கொடுமனம் குளிர்ந்து, வெய்யவன் “நம்பெயர் முனிந்தவர் நயந்த மண்மிசை நும்பெயர் நிறுத்துமின்,” என்று நோக்கினான். 326 அச்சுவகண்டன் தோழனான அரிசேனன் போர்க்கு வருதல் “வெறிமின்விரி கின்றவிறல் ஆழியிறை தோழன் அறிமின்பெயர்; யான்அவ்வரி சேனன்என நின்றேன்; எறிமின்எதிர் என்னொடு இகல் வல்லிர் உளிராயின், மறிமின், அது அன்றிஉயிர் வாழலுறின்,” என்றான். 327 அருக்ககீர்த்தியை மறித்து, அவன் தானை வீரனான வியாக்கிராதன் அவனை எதிர்த்தல் பொன்னைஅணி கொண்டபுனை கேடகம் எடுத்து மின்னைஉமிழ் கின்றசுடர் வாள்மிளிர வீசி, நின்னைஅறி யாதவர்கண் நின்றுஇரிய வந்தாய்; என்னைஅறி யாய்;அறி இனித்;தவிர்தி” என்றான். 328 அரிசேனன் கூறல் “நின்னை அறிவன் பெரிதும், நின் முறையுளாய கன்னியை ஓர் காளைபிறன் எய்துவது கண்டும் மன்னும் மணஇல்லுள் வயிறார அயில்கின்றாய்க்கு இன்னும் உளவோ, புதிய?” என்றுமிக நக்கான். 329 வியாக்கிராதன் விடை யிறுத்தல் “கன்னியர்தம் பான்மைவழி செல்ப;அது கண்டாய், முன்னிய மொழிப்புலவர் நூன்முறைமை; ஏடா! அன்னது அறியாதவன் அயக்கிரிவன், அன்றே; என்னை அறியாமை நினக்கு இன்னும்உளது,” என்றான். 330 பின்பு இருவரும் கடும்போர் விளைக்கின்றனர்; அரிசேனன் வியாக்கிரரதனால், தோள்துணிந்து மார்பு பிளந்து வீழ்ந்து மடிகின்றான். பின்னர், குணசேனன் இந்திர காமனாலும், வரசேனன் காமுகனாலும், அரிகேதனன் வியாக்கிராதனாலும் வீழ்ந்துபடு கின்றனர். தூமகேதனன் வீரம் பேசுதல் “மலையெடுத் திடுகோ? மாநிலம் பிளக்கோ? மறிகடல் அறஇறைத் திடுகோ? உலைமடுத்து உலகம்பதலையா ஊழித் தீமடுத்து உயிர்கள் அட்டுண்கோ? சிலையிடத் துடையார், கணைவலத் துடையார் சிலர்நின்று செய்வதுஇங்கு என்னோ? நிலையிடத் தவருள் நிகர்எனக்கு உளரேல், நேடுமின சென்று,” என நின்றான். 331. சடியரசன் தம்பியான சுவனலரதன் எதிர்ந்து விடையிறுத்தல் மலையெடுத் திடுவாய்! மாநிலம் பிளப்பாய்! மறிகடல் அறஇறைத் திடுவாய்! உலைமடுத்து உலகம் பதலையா ஊழித் தீமடுத்து உயிர்கள் அட்டுண்பாய்! நிலையிடத் துளரோ நிகர்எனக்கு என்பாய்! நின்றனை, நிகர்உனக் காகித் தொலைவிடத் தல்லால், சொல்,இவை நுங்கட்கு ஒழியுமோ? தூமகே தனனே! 332 தூமகேதனன் போர் தொடுத்தல் என்றலும் அதுகேட்டு, “எரியுடைத் தோரோன் என்பவனாம் இவன்” என்றே “நன்றுநன்று” என்று நக்கனன் நக்கே “நாண்இலர் நம்மலை வாழ்வார்; இன்றுஎனக்கு எதிராய் நீகொலோ பொருவாய்?” என்றனன், இனையன மொழியாக் குன்றினும் பெரியான், கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கைவலித்தே. 333 சுவனலரதன் போர் மலைதல் “இன்றுஎனக்கு எதிராய் நீகொலோ பொருவாய்? என்றுஇகழ்ந் துரைத்தனை, ஏடா! நின்றுஎனக்கு எதிராம் நீர்மையர் நின்போல் நிரம்பவாய் திறந்துஉரைப் பவரோ?” என்றனன்; எனலும், எதிர்தெழித்து, அவனும் எழுந்தனன்; எழுந்தனன் இவனும்; அன்றுபோர் மலைந்தார்; அதிர்ந்ததுஇவ் வுலகம்; அமரொழித்து அரசரும் நின்றார். 334 தூமகேதனன் இறந்துபட்டபின், அனலபுரத்து ஆங்காரவேகன் போர்க்கு வருகின்றான்; அவனைத் திவிட்டன் தானைவீரனான தேவசேனன் பொருது அவனெறிந்த வேலைத் துண்டித்து, அது தாங்கிய தோளையும் துண்டித்தொழிக்க, அவன் எஞ்சியதோள் ஒன்றே கொண்டுபொருகின்றான். தேவசேனன் அவனை வியந்து கூறல் நெய்யுற்ற வேலும்ஒரு தோளும் வீழ, ஒருதோளில் நீடு செருவே செய்யுற்ற போழ்தில், எதிரே விலங்கி, இது தேவசேனன் மொழியும்; “கையுற்றது ஒன்று, கவலேல்; நுனக்குஇது உறுமாறு போக” எனவும், மையுற்ற காளை வருவானை வாளின்உயிர் வவ்வினான் அம்மறவோன். 335 தூமகேதனன் வீழ்ந்தது கண்ட சுவணகேது என்பான் பெரு முழக்கம் செய்துகொண்டு பொரவருகின்றான்; அவனோடு மாறேற்க, சடியரசன் செல்கின்றான். சுவணகேது சொல்லுதல் அருவி இலங்கு மதயானை அனல்ஊன்றி அணைபோழ்தில், “குரவ ரோடு படைபொருதல் கூடிற் றன்று, குலவேந்தே! பொருவர் என்னப் படுவார்அங்கு ஒருவர் போந்து பொர, ஒருவர் ஒருவி நிற்றல் உரம்கொல்லோ?” என்றான் உவண மேந்தினான். 336 சடியரசன் கூறுதல் “குரவர் என்னும் உபசாரம் இருக்க; கோதை மிளிர்வேலோய்! பொருவ ராயின் யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர்; ஒருவி நிற்பது உரங்கொல்லோ? என்னும் உரையும் உணர்தி; இவண் இருவேம் உள்ளும் யார்பாலஃது உறுவது,” என்றான் ஒளிமுடியான். 337 சுவணகேது போர் தொடுத்தல் “ஆக, அமைக, அதுவேஅவ் வரச நீதியாகிவிடின், போக; பொருவன்,” எனப்புகைந்து பொருவெஞ் சிலையொன்றுஇடன் (ஏந்தி வேகயானை செலஉந்திச் சிறுநாண் எறிந்து வெஞ்சரங்கள் மாக மெல்லாம் உடன்நடுங்கத் தொடங்கினான் அம்மழை போல்வான். 338 சுவணகேது மாயப்போர் வகை பலவும் செய்து மாய்ந்து வீழ்தல் தொடுத்தான் தொழுத வாளியது சுவணகேது கையகத்து மடுத்த சிலையும் பகழியும்வெம் மனத்துக் கொண்ட மாயமதும் அடுத்துத் துணித்துஅப் புறமேகி அரசர் குழாங்கள் இரியப்பாய்ந்து உடுத்த தூவி தோன்றாமை நிலத்தின் உள்புக்கு ஒளித்ததுவே. 339 சுவணகேது வீழ்ந்தது கண்டதும் அச்சுவகண்டன் சேனை அஞ்சிச் சிதறி ஓட்டம் எடுக்கின்றது. அச்சேனை முழுதும் குழம்பித் தலைதடுமாறுகிறது. சிதறியோடும் வீரர் மீண்டும் போர்க்குத் திரும்புமாறு சீசேனன் வீரத் தீக்கொளுவுதல் பொன்றும் இவ்வுடலின் பொருட்டு என்றும் நிற்கும் இரும்புகழ் இன்று நீர்கழிந் தீர்களால், குன்றின் மேல்குடை வேந்திர்காள்! 340 மான மாமணி வீழ்த்துஉயிர்க்கு ஊன மாம்என ஓடுவீர்! ஈன வார்மயிர்க்கு ஏதமாம் கான மாவது காணுமே. 341 சிதர்ந்த படையினைத் தெருட்டித் திரட்டிவரும் இவனோடு பொரற்குச் சீபாலன் வருகின்றான். இருவரும் கடும்போர் புரிகின்றனர். முடிவில் ஸ்ரீசேனன் இறந்து படுகின்றான். பின்னர்க் கனகசித்திரன் வந்து பெரும் போர் விளைக்கின்றான். எண்ணிறந்த வீரர் பட்டழி கின்றனர். திவிட்டன்தானை நிலைகலங்குகிறது. கனக சித்திரனுக்குத் துணையாக அவன் தம்பியர் நால்வரும் வந்து பொருகின்றனர். சடியரசன் முதலியோரும் சலித்துவிடுகின்றனர். “இனிவாளா இருத்தல் நன்றன்று” என விசயன் போர்க்கடலுள் புகுகின்றான். பகைவர் படைக்கடல் கலங்கத் தொடங்குகிறது. விசயன் போர்த்திறம் அஞ்சலர் அமர்க்களம் என்னும் ஆர்வயல் விஞ்சையர் குருதிநீர் வெள்ளம் தேத்தெழ வெஞ்சின நாஞ்சிலால் உழுது, வெள்ளியான் தஞ்சமார் தன்புகழ் தயங்க வித்தினான். 342 கனகசித்திரன் முதலாயினார் வியத்தல் வெளியவன் மிளிர்மரை புரையும் செங்கணான் அளியினன் அமர்க்களம் கடாககொள் கின்றஅவ் இளையவன் யார்? என வினவிக் கேட்டனர், கிளையமர் கிரீவனுக்கு இளைய வீரரே. 343 அவன் இன்னான் என்று அறிந்ததும் அந்நால்வரும் விசயனைச் சூழ்ந்து பொருகின்றனர்; “விசயன் அடங்கினான்” என்றொரு பொய்யுரை போர்க்களத்தே பரவுகின்றது; சுரமை நாட்டுத் தானை கலக்க மெய்துகின்றது. அந்நிலையில் தெய்வ அரிமா ஒன்றும் நாஞ்சிலொன்றும் விசயன்பால் வருகின்றன. அவன் அதன்மேல் இவர்ந்து நாஞ்சிலைக் கைப்பற்றிக் கடும்போர் உடற்றுகின்றான். அவனோடு அந்நால்வரும் பொருது மடிகின்றனர். கனகசித்திரன் பின்பு போந்து விசயனால் வீழ்கின்றான். கனகசித்திரன் முதலியோர் மாண்டது கண்டு, இரத்தின கண்டன் என்பான் ஒரு பெருமலையைத் தன் கைகளால் எடுத்துக் கொண்டு பொரற்கு வருகின்றான். அருக்ககீர்த்தி அவனை அழித்தல் ஆங்குஅவன் அடைதலும் அருக்க கீர்த்திகை வாங்குவில் புகுந்தது; வாளிஒன்று அவன் ஒங்கிருந் தூணியில் சுடர்ந்தது; ஒல்லெனத் தாங்கரும் திறலவன் தாரித்து ஏவினான். 344 வரையொடு வரையென மறிந்து மண்ணின்மேல் விரையுடை அலங்கலான் வீழும் ஆயிடைத் திரையொடு கனைகடல் கலங்கிச் சிந்தின; புரையுடை விலங்கலும் புலம்பு கொண்டவே. 345 இச்செய்தி முற்றும் அச்சுவகண்டனுக்கு எட்டுகின்றது. அவனுக்கு அடங்காச் சினம் எழுகிறது. அவன் தன் பெருவிஞ்சையை ஓதிச் சண்டவேகை என்னும் பேய்த் தெய்வத்தை வருவித்து அதனை ஏவுகின்றான். அது பேய்க் கூட்டம் சூழ பேராரவாரத் தோடு வருகிறது. சண்டவேகை போந்து உடற்றுதல் வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செந்தீப் புரைகிளர் பொடிகளாரப் புணர்த்திடும்; புணர்த்தபோழ்தில் திரைகிளர் பாவை முந்நீர் திரைத்துக்கொண் டொழுகும்; இஃதால் உரைகிளர் உலகைத் தெய்வம் உண்ணிய உடன்றவாறே. 346 சண்டவேகை பெருவரை யொன்றை எடுத்துக் கவித்து எங்கும் இருள்பரவச் செய்கிறது. படையனைத்தும் சிதைந்து ஓடுகின்றன. இதன் வன்மையைக் கண்ட திவிட்டன் பெருவியப் புடன் அருகு நின்ற அருக்க கீர்த்தியை வினவ, அவன், “இது சண்டவேகை; இதனை விடுத்தவன் அச்சுவகண்டன்; இது நம்மைச் செகுத்து உயிர் குடித்தன்றி மீளாது; இதனை வெல்பவரும் இல்லை” என்கின்றான். உடனே, திவிட்டன், “அஞ்சினை போலும்” என நகைத்து, வான்முகடு கிழித்து மேலோங்கிச் செல்லும் பேருருக் கொண்டு நிற்கின்றான். அவன்பால், தண்டு, வில், வாள், சங்கு, ஆழி என்ற ஐம்படைகளும் வந்துசேர்கின்றன. திவிட்டன் சண்டவேகையை உரப்புதல் வலம்புரி சிலம்ப வாய்வைத்து இருஞ்சிலை வளைய ஏற்றிக் கலம்புரி கனபொன் ஆழி கைவிரல் கதிர்ப்பச் சூட்டி உலம்புரி வயிரத் தோளான் உரப்பினன்; உரப்ப லோடும் சலம்புரி தெய்வம் அஞ்சித் தன்உரு அடைந்த தன்றே. 347 அடைந்த சண்டவேகை அதனோடமையாது, திரும்பச் செல்லுங்கால் அச்சுவகண்டனது பெரும்படையை அலைத்துக் கொண்டு செல்கிறது. அதனைக் காணும் அவன், கண் சிவக்கப் பல் நெறு நெறுவெனக் கடிபட வெகுண்டு தன் பட்டத்தி யானைமேல் ஏறிக்கொண்டு அமர்க்களம் நோக்கி வருகின்றான். அவன் வரவு கண்ட தானை அலமருகின்றது. அவன் வந்து சேர்தலும், திவிட்டனுக்கு முன்தெய்வக் கருடப்புள்ளொன்று வருகிறது. திவிட்டன் அதனை வலம்செய்து ஏத்தி அதன்மீது ஏறிக்கொள் கின்றான். இருவரும் போர்க்களத்தே நேர்படுகின்றனர். அச்சுவகண்டன் திவிட்டற்குக் கூறல் “தானவர் நின்னைப் போலத் தம்திறல் அறிவி லாதார் ஈனவர் இரங்கி வீழ்ந்தார்; ஏனையர் தொழுது வாழ்ந்தார்; வானவர் என்னை யஞ்சி வானிடை மறைந்து செல்வார்; ஊனவர் தம்முள் நீயே உயிர்எனக்கு இழக்க லுற்றாய்” 348 “மண்ணுள்வாழ் சிதலை சேர்தி; மற்றவை வாழும் நாட்கள் எண்ணிஆங்கு இகந்த பின்னை இறகுபெற்றுஎழுமதேபோல், கண்ணினால் இன்று நீயும் கருடப்புள் ளதனை ஏறி விண்ணினாறு எதிர்ந்து வந்தாய், வேற்கு இரையாக,” என்றான். 349 “மாறலா மனிசர் தம்மேல் வண்சுடர் ஆழி யானும், சீறினான் என்ற போழ்தில் சிறுசொலாய் நிற்கும்,என்று, தேறினார் மொழிகள் கொண்டு செவிசுடு சொற்கள் கேட்டும் ஆறினேன்என்பது ஓராய்; அளியற்றாய், அனல்விக் கின்றாய்” 350 திவிட்டன் விடையிறுத்தல் என்றலும் அதனைக் கேட்டே இருங்கடல் வண்ணன், நக்கு, “நன்றுநன்று உரைத்தி; மீட்டும் நல்லையே பெரிதும், ஏடா! குன்றின்மேல் இருந்து நீநின் குழுவினுள் மொழிவ தல்லால், இன்றுவந்து என்முன் நின்று இதுகொலோ கருதிற்று” என்றான். 351 அச்சுவகண்டன் தான் வல்ல எல்லாவகைப் படைகளையும் விடுக்கின்றான். அவையாவும் திவிட்டன்முன் பயனிலவாய் அழிகின்றன. அச்சுவகண்டன் ஆழிப்படை விடுக்கத் துணிதல் சீற்றமொடு இரியும் செல்வத் தெய்வஅம்பு எய்த எல்லாம் மாற்றினன் மறுப்ப நோக்கி, மற்றவன் மாற்றலான்பேர் ஆற்றலை அறிந்து வெய்ய ஆழிகை யேந்தி, “இன்னும் ஏற்றனை, பொருதியோ?” என்று இலங்கெயிறு இலங்க நக்கான். 352 திவிட்டன் அவனை இகழ்ந்துரைத்தல் “தாழியாது எய்யும் தெய்வப் படைமுதல் அழிந்தும் சாலப் பாழியால் மெலிந்தும் பண்டைப் பாவனை பயிற்றி, என்னை ஆழியால் வெருட்ட லுற்றாய்; அலந்தனைபெரிதும்,” என்றான், சூழிமால் யானை வல்ல சுரமைநாட்டு இளைய கோவே. 353 அச்சுவகண்டன் ஆழியை விடுகின்றான்; அது மிக்க தீயெழுப்பி வருகின்றது. அத்தீ திவிட்டனைச் சூழ்ந்து கொள்ளவே, அவன் அதனிடை மறைகின்றான். வரும் ஆழி அவனை வணங்கி அவனது வலப்புடையில் நிற்கின்றது, அவன் அதனைத் தொழுது, அவ் வச்சுவகண்டன் மேல் விடுக்கின்றான். அது சென்று அவனைக் கொன்று விடுகிறது. ஆழி அச்சுவகண்டனைக் கோறல் நெறிதலை திரிவி லான்மேல் நினைவிலான் மொழியப் பட்ட மறுதலை முடிக்கும் ஏது வாய்வழி அழிப்பதே போல் பொறிதலை மணந்த காளை மேல்வரப் புணர்த்த நேமி செறிதலை யிலாத மன்னன் தன்னையே செகுத்த தன்றே. 354 அச்சுவகண்டன் வீழ்ந்தது கண்டோர் இரங்கிக் கூறுதல் கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான்; மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான் நிலையாமை சால நிலைபெற்றது அன்றே. 355 வலியும் அடுதிறனும் வாழ்வும் வனப்பும் பொலிவும் கடைபோகா; பூமிமேல் வாழ்வீர்! கலியன்மின் என்றுஇதனைக் காட்டுவான் போல மலிபொன் மணிமுடியான் மற்றிவனோ மாய்ந்தான். 356 அச்சுவகண்டன் தேவி உயிர் விடுதல் வண்தார் மணிமுடியான் மார்பு துணிகிடப்பக் கண்டாள் பெருந்தேவி; கண்டேதன் கைசோர்ந்து வெண்தாரை வேல்நெடுங்கண் நீர்மூழ்கி மேற்பிறழ விண்டாள் உயிர்;பின்னும் வெற்றுடல மாயினாள். 357 பின்பு ஏனை மனைவியர் அழுது புலம்புகின்றனர். அச்சுவ கண்டன், அவன் மக்கள், தம்பியர் முதலிய பலர்க்கும் ஈமக்கடன்கள் செய்யப்படுகின்றன. உரிமை மகளிர் தாபத நிலையெய்துதல் ஆவி யாய அயக்கிரீவற்கு அமிர்தம் பூத்த அஞ்சாயல் தேவி மார்கள் கலன்அழித்துச் சேணி யுலகம் சென்றெய்தி, வீவில் காமன் வருவீதி கற்பு வேலியால் விலக்கித் தாவில் நிறையின் தாழதனால் பொறியின் வாயில் தாழ்ப்பெய்தார், 358 திவிட்டன் தன்போருக்கு அஞ்சி உய்ந்து புகலடைந்த விஞ்சையர் வேந்தர்க்கு அருள்புரிந்து தத்தமக்குரிய நிலையினை யடையுமாறு பணிக்கின்றான். அச்சுவகண்டனுடைய உறவினர்க்கும் இவ்வண்ணமே அருள்புரிகின்றான். பின்னர் அவன் கருனை விட்டு இறங்கி யானைமேற் கொண்டு பாடி வீடு அடைகின்றான்; விசயனும் ஆங்கு வந்து சேர்கின்றான், இருவரும் பயாபதியின் அடியில் வீழ்ந்து வணங்குகின்றனர். பயாபதி தன் மக்கட்கு மணிமுடி சூட்ட விரும்பி யுரைத்தல் தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் தாதை யென்று இயல்உரை தவத்தின் எய்தினேன் ஆதலால் இவர்தமது அரச கோலம் எம் காதலம் கண்இவை காண லாகுமே. 359 இதனைக் கேட்டதும் சடி முதலிய வேந்தர்கள் அதுதக்கது எனத் துணிகின்றனர். முடிசூட்டு விழாவிற்குரிய சடங்குகள் யாவையும் முறையே நிகழ்கின்றன. திவிட்டற்கு முடி சூட்டுதல் விட்டெரி மணிவரை நேமி வேந்தனை அட்டுஇவன் எய்தினான் ஆழி; ஆதலால் மட்டுஇவர் அலங்கலான் வாசு தேவன்என்று ஒட்டிய ஒளிமுடி ஒன்று சூட்டினார். 360 விசயற்கு முடி சூட்டுதல் பெருகிய மிகுதிறல் பெரிய நம்பியை மருவிய வளைவணன் என்ன நீள்முடி கருவிய மரபினால் கவித்துக் காவலன் திருவமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார். 361 விசய திவிட்டர் அரசு வீற்றிருக்குங்கால், முன் போர் உடற்றுங்கால் போந்த ஐம்படையும் மறுபடியும் வந்து சேர்கின்றன. சங்கம், பதுமம் முதலிய நிதிவகை ஒன்பதும், சிந்தாமணி சூளாமணி முதலிய மணிவகைகளும் வந்து அடைகின்றன. இச்சிறப்புக்களைக் கண்டு அனைவரும் வியந்து மகிழ்கின்றனர்; திவிட்டன் ஆழி முதலிய படைகட்கெனத் தனிக்கோயிலும் கருடனுக்கொரு கோயிலும் அமைத்து நாளும் பூசனை நடைபெற ஏற்பாடு செய்கின்றான். இங்ஙனமிருக்க புராண நூற்புலவர் திவிட்டன் திருமுன் வந்து வணங்கி, அவனது வரலாறு மாபுராணத்துட் கூறப்படுகிறதென்றும், அதன்கண் திவிட்டன் கோடிக்குன்றம் என்னும் மலையைப் பெயர்த்து ஏந்துவான் என்றொரு செய்தி கூறப்படுகிறதென்றும் ஓதுகின்றனர். இதனைக்கேட்ட அவையினர் பெருவியப்புடன் திவிட்டனை நோக்குகின்றனர். திவிட்டன் நூலோர்க்கு உரைத்தல் ஆங்கவர் மொழிதலும், “அருங்கலக் குழாம் ஈங்குஇவை என்னினும் முன்னம் எய்தினார், வாங்குநீர் மணலினும் பலர்கொலோ” என வீங்கிய செருக்குஇலன், வீர னாயினான். 362 அவர்கள் கூறியது கேட்டு வியந்து நோக்கிய அவையோர் விருப்பம் உணர்ந்த திவிட்டன், அவரும் பிற அரசரும் சூழ்தர, கோடிக்குன்றத்துச் செல்கின்றான். திவிட்டன் கோடிக்குன்றத்தை எடுத்தல் எரிமணிக் கடகக்கை இரண்டும் ஊன்றிஅப் பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்து அருமணி நெடுவரை யதனை ஏந்தினான், திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே. 363 திவிட்டன் குன்றேந்தி நிற்றல் ஒன்றுதன் செறிகுறங்கு ஊன்றிக் கைத்தலம் ஒன்றினால் ஒளிவரை உயர ஏந்துபு நின்றனன் நெடியவன் நீல மாமணிக் குன்றம்ஓர் குன்றம்கொண்டு எழுந்தது ஒப்பவே. 364 அவன் அரசர் பரவச் செம்மாந்து நிற்றல் பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின் அருமா மழைபெய்து அமருலகம் ஆர்ப்பக் கருமால் நெடுவரைஓர் கைத்தலத்தில் ஏந்தித் திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான். 365 கோடிக்குன்றத்தை முன்போல் வைத்துத் தன் யானையேறித் திவிட்டன் நகர்க்குப் போதரல் கோடிக் குன்றங் கோடியல் போலும் குலவுத்தோள் கோடிக் குன்றம் கொண்டுஅது மீட்டே கொளநாட்டிக் கோடிக் குன்றம் போந்தென நின்ற கொலைவேழம் கோடிக் குன்ற மன்னவன் ஏறிக் குளிர்வித்தான். 366 திருநகர் போந்த திவிட்டனை நகரவர் மிக்க சிறப்புடன் வரவேற்கின்றனர். மறுநாள் சுயம்பிரபைக்கு மங்கல நீராட்டி அரசமாதேவி என்னும் பட்டம் அளிக்கப்படுகிறது. விஞ்சை வேந்தர்க்கும் பிறர்க்கும் அவரவர்க்குரிய முறைப்படியே சிறப்புச் செய்யப்படுகிறது. சின்னாள்கழிய, சடியரசனும் அவன் மக்களும் இளையரும் ஏனை விஞ்சை வேந்தரும் விடைபெற்றுத் தத்தம் நாட்டிற்கு ஏகுகின்றனர். திவிட்டன் சுயம்பிரபையுடன் செல்வக் களிப்பில் திளைத்து மகிழ்கின்றான். 10. சுயம்வரச் சருக்கம் (இதன்கண், சுயம்பிரபை தான் மகனாகக் கருதி வளர்த்த பாரிசாதத்துக்குக் காமவல்லிக் கொடியை மணம் செய்யக் கருதித் திவிட்டற்கு அழைப்பு விடுத்தலும், அவன் விதூடக வேதியனுடன் அசதியாடிச்சென்று பூம்பொழில் அடைவதும், மணிச்சிலாவட்டத்தில் சுயம்பிரபை வருங்காறும் விதூடகனுடன் திவிட்டன் இருந்து சொல்லாடுவதும், ஆங்கு வந்து விஞ்சையால் மறைந்திருந்த சுயம்பிரபை புலத்தலும், அவன் அவளது புலவி தீர்த்தலும், பாரிசாதக் கடிவினை முடித்தலும், பொழில்விளை யாடலும், திவிட்டன் விஞ்சையால் யானை வருவித்துச் சுயம்பிரபையை அஞ்சுவித்து அளித்தலும், நீர்விளையாடலும், சுயம்பிரபை கனாக் கண்டு வெருவுதலும், கனாப்பயன் கூறித் திவிட்டன் அவளை மகிழ்விப்பதும், அவள் விசயன், சோதிமாலை முதலிய மக்களைப் பெறுதலும், அருக்ககீர்த்தி சுரேந்திர காந்தத்து அரசன் மகள் சோதிமாலையை மணந்து அமிததேசன், சுதாரை என்ற மக்களைப் பெறுதலும், திவிட்டன் மகட்குச் சுயம்வரம் நாட்டலும், அவள் அமிததேசனுக்கு மாலையணிதலும், அருக்ககீர்த்தி தன் நகரத்தே தன்மகட்கு நிறுவிய சுயம்வரத்தில் அவன் மகள் சுதாரை விசயனுக்கு மாலையணிதலும் இருதிறத் தாரும் திருமணம் செய்து கொண்டு தத்தம் நகரடைதலும், பிறவும் கூறப்படுகின்றன.) சுயம்பிரபை தான் வளர்த்த பாரிசாதத்துக்குக் காமவல்லிக் கொடியைத் திருமணம் செய்யும் குறிப்பினளாய்த் தன் தோழி வாயிலாகத் திவிட்டனுக்குத் தெரிவிக்கின்றாள். அமிதபிரபை திவிட்டற்குக் கூறுதல் “அடிகள்முன் அடித்தி யாரால் அங்கைநீர் குளிரவூட்டி வடிவுகொள் தளிர்கள் முற்றி மகன்என வளர்க்கப்பட்ட கடிகமழ் பாரிசாதம் அதனொடு ஓர் காமவல்லிக் கொடிமணம் புணர்க்கலுற்ற குறிப்புஅறி நீசென்று,” என்றான். 367 திவிட்டன் அதற்கு இசைந்து, தன்பால் இருந்த வேதிய விதூடகன் ஒருவனை உடன் அழைத்துக்கொண்டு பூஞ்சோலைக்குச் செல்கின்றான். பூங்காவில், சுயம்பிரபை வந்து அடையுங்காறும் திவிட்டன் சோலைக்காட்சியில் இன்புற்று வருகின்றான். அவன் எதிரே விதூடகன் இனிது பாடியாடித் தன் குறுங்கையால் பெருவ யிற்றைப் பிசைந்து கொண்டு புரள்கின்றான். அதுகண்டு வியப்புற்ற திவிட்டன் அதற்குக் காரணம் வினவ, அவன் தான் மோதகம் பலவற்றை உண்டதனால், அவை வயிற்றை ஊதியூதி முழுகுகின்றன என்கின்றான். திவிட்டன் : அவற்றை நீ என்று உண்டனை? விதூ : அரசே, அரசியார் இன்று புரியப் போகும் மண வினையில் யான் மிகுதியாக உண்பேன். திவிட் : (நகைத்து) மணவினைக் காலத்தில், வேதமோதும் வேதியர்க்கே யன்றி வேதமறியாத நினக்கு ஈயமாட்டார்களா, என் செய்குவை? விதூ : வேதம் வல்ல வேதியரை யான் வென்று விடுவேன்’ அதனால் எனக்கே மோதகம் மிகுதியாகக் கிடைக்கும். என் வன்மையை அரசியார் நன்கு அறிவர். திவிட் : எவ்வாறு வெல்வாய்? விதூ : “வாதம் வெல்லும் வகையாது அதுஎன்னில், ஓதி வெல்லல் உறுவார்களை என்கை கோது கொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரைமுற்றுற” என்றான். 368 இருவரும் பேசிக்கொண்டே இனிய கனிகள் தூங்கும் பொழிற்குட் புகுகின்றனர். ஆங்கே, அவ்விதூடகன் அக்கனி களைக் கண்டு வாயில் நீரூற அவற்றை மிகுதியும் பறித்து உண்பான் போல் நடித்து அரசனை உண்ணுமாறு வேண்டுகின்றான். அரசன், “நாம் உண்ணும் கனிகள் எதிர்வில் உள்ளன, வருதி” என அழைத் தேகுகின்றான். இடையிடையே விதூடகன், அரசற்கு நகை தோன்றுமாறு அசதியாடிச் செல்கின்றான். அவர்கள் எதிரே அசோகம் ஒன்று நிற்பதை விதூடகன் காண்கின்றான். விதூ : அரசே, இவ்வசோகு முடிமிசையே யன்றி, அடியினும் தளிர் ஈன்றிருப்பது என்னையோ? திவிட் : இவ் வடியில் உள்ளன தளிரல்ல; மகளிர், இதற்கு வயவுநோய் தீருமாறு வைத்த சீறடிச் செம்பஞ்சுகள். விதூ : நன்று, நன்று. காவியால் விலங்கிய கருங்கண் வெம்முலைத் தேவியார் சீறடி சென்னி சேர்த்ததும், மேவிஆங்கு அலர்ந்திடும் நின்னை வென்றதால், ஆவியார் அசோகினது அமைதி வண்ணமே. 369 இது கூறக்கேட்டு வெள்கிய திவிட்டன், அவனை ஒரு பூவால் மெல்லப் புடைப்ப, அவன், “யான், இதோ, சென்று ஏதிலான் ஒருத்திக்காக அரசர் என்னைப் புடைத்தார் என்று தேவியர்க்குச் செப்புகின்றேன்” என்றானாக, அவனைப்பற்றி அது செய்யாதவாறு அமைத்துக்கொண்டு, அங்கிருந்த சிலாவட்டத்தின் மேல் அமர்கின்றான். அக்காலை விதூடகன் தன் நிழலையே கண்டு வெருவி உடல் நடுங்கி, “அண்ணலே, யான் இங்கு இரேன்; இதனுள் பூதம் ஒன்று உளது; அஃது என்னைப் புடைத்துண்ணும்; இனி, இங்கு இருத்தல் கூடாது,” என்கின்றான். திவிட் : நீ சொல்லும் பூதம் இவ்விடத்தே எங்கே உளது? விதூ : இச் சிலாவட்டத்தின் கண்ணே உளது. திவிட் : அஃது எவ்வாறு இருப்பது? விதூடகன் தான் அணிந்திருந்த அணியும் தன் உருவ அமைதியும் அதன்பால் உள என்று அச்சிலாதலத்தைக் காட்டு கின்றான். அவன் கண்டு வெருவுவது அவனது மெய்ந்நிழலே எனத் தெளிந்த திவிட்டன், “இது பூதம் அன்று; நின் நிழலே” என்கின்றான். விதூ : என் நிழல் என்னோடு இருப்பதல்லது, சிலாவட்டத் தினுள் இராதே! திவிட்டன் விதூடகன் செய்கை முற்றும் அந்நிழலிடத்தே நிகழ்வது காட்டி, “இதனால் இது நின் நிழலே எனத் தெளிக” என்னலும், விதூடகன் தெளிந்து அமைகின்றான். அதுபோது, சுயம்பிரபை அங்கே வந்தவள் தன் விஞ்சையான் இவ்விருவர் கண்ணுக்கும் தோன்றாது திவிட்டன் அருகே நிற்கின்றாள். அந்நிலையில், விதூடகன் இவ்வசோக மரம் தளிர்க்கும் வண்ணம் தன் சீறடியை வைத்த மடந்தை யாவளோ என அத்திவிட்டனை வினவ, அவன் கூறுகின்றான். திவிட்டன் கூறல் செய்யன செறிந்தன திரண்டவிரல், சால ஐயதசை யார்ந்த அடியின் அழகினாலே மெய்யும் அறிவன், வினவில், விஞ்சையன் மடந்தை வைய முடையாற்குரிய மாதர்அவள் என்றான். 370 அச் சொற்களைக் கேட்டதும் சுயம்பிரபை, திவிட்டன் தன்னின் வேறேயொரு மடந்தையைப் பாராட்டுகின்றான் எனப் புலந்து, கண்சிவப்ப, நுதல் வியர்ப்ப, வாயிதழ் சிவப்ப, வெளிப் பட்டு நிற்கின்றாள். அவளைக் கண்டதும் விதூடக வேதியன் வீறிட்டோடி ஒரு புதர்க்குள் ஒளிந்து கொள்கிறான். அவள் சிவப்பாற்றுவது குறித்துத் திவிட்டன் “மன்னன் மகளே! மடந்தாய்! அன்னம் அனையாய்! அமிழ்தினும் அமிழ்தே! உற்றது என்னை?” என இரந்து கேட்கின்றான். சுயம்பிரபை புலந்துரைத்தல் “ஆங்கு அவளோடு ஈங்கு விளையாடு நனிநீயான் பூங்கமழும் மாடம்எனதே புகுவன்,” என்றாள்; தாங்கலன் எழுந்துதகை நீலமணி வண்ணன் ஓங்குமுடி சீறடியின்மேல் ஒளிரவைத்தான். 371 திவிட்டன் புலவி தீர்த்தல் மற்ற நெடுமால் மகர மாமுடி வணங்கக் “கற்றனை தவப்பெரிது கைதவமும்” என்ன, “உற்றதோர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து முற்றமுறை செய்தருளு, மொய்குழலி,” என்றான். 372 பின்பு, சுயம்பிரபை, “மன்னன் குற்றமிலன், அவ்வேதியனைத் தேடிக் கொணர்மின்” என அருகு நின்ற மகளிரைப் பணிப்ப, அவர்கள் சென்று தேடி, அவன் துகில்பற்றி யீர்த்துக்கொண்டு வருகின்றனர். அவனைக் கண்டதும் சுயம்பிரபை முறுவல்பூத்து, “இவனை இப்பூ மாலைகளால் யாத்துக் கொணர்மின்” என்று கூறிப் பொழிற்குள் செல்லலும், திவிட்டன் அவளைப்பற்றி மார்பில் தழுவி, “மாதவன் ஏதம் இலன்; ஆதலின் சீற்றம் ஒழிக” என வேண்டுகின்றான். விடுதலை பெற்ற விதூடகன் ஆடிப் பாடுதல் ஓடுமே மனம் ஓடுமே, கூடுமேதணி கோதையாய்! காடுசேர்கனி காண்தொறும் ஓடுமேமனம் ஓடுமே. 373 ஊறுமேஎயிறு ஊறுமே வீறுசேர்விரி கோதையாய்! சேறுசேர்கனி காண்தொறும் ஊறுமேஎயிறு ஊறுமே. 374 வேண்டுமேமனம் வேண்டுமே பூண்டபொன்னணி மார்பினாய்! நீண்டமாங்கனி நேர்தொறும் வேண்டுமேமனம் வேண்டுமே. 375 அவன் பாட்டைக் கேட்டு மகிழ்ந்த சுயம்பிரபை அவனுக்கு மிக்க மாங்கனிகளைத் தந்து வயிறார உண்ணவிடுத்துத் திவிட்டனுடன் பாரிசாதமிருந்த வேதிகைக்குச் சென்று, மங்கல வாச்சியம் இயம்ப, மகன் எனக் கருதி வளர்த்த பாரிசாதத்துக்குக் காமவல்லிக் கொடியை நட்டுப் பிணைத்துக் கடிமணம் இயற்றி மகிழ்கின்றாள். கன்னியங் காம வல்லிக் கனங்குழை மடந்தை தன்னை மன்னவன் தேவி மார்கள் மணவினைக் கோலம் செய்து பின்னத னோடுசேர்த்திப் பெருகிய களிய ரானார், இன்நகைப் புதல்வர் செல்வம் யாவரே இனிது என்னாதார்! 376 யாவரும் இன்புற்ற காலத்தே திவிட்டன் தன் விஞ்சையால் வேதியனுடன் மறைந்துகொண்டு மகளிர் வினையாட்டயர் தலைக் காணலுறுகின்றான். மகளிர் பலரும் பலவேறிடங்கட்குச் சென்று பூப்பறித்தும், மாலைதொடுத்தும், மயிலொடு மாறாடியும், குயிலொடு மாறுகூவியும் விளையாடுகின்றனர். திவிட்டன் தன் விஞ்சையால் சுயம்பிரபை இருந்த பாங்கரில் யானை யொன்று வருவிக்கின்றான். யானை வரக்கண்டதும் சுயம்பிரபை பேரச்சம்கொண்டு அலமரு கின்றாள். திவிட்டன் சென்று யானையை அகற்றி அவளது அச்சத்தைப் போக்கி, அணிகளைத் திருத்தி மகிழ்விக்கின்றான். பகற்போது மிகுகிறது. மகளிர் பற்பல வாவிகளிலும் புக்கு நீராடுகின்றனர். பின்பு அனைவரும் சந்திரகாந்த மண்டபம் அணைந்து இனிய போனகமுண்டு இன்பமுறுகின்றனர். அப்போழ்தில் விஞ்சையர் தூதன் ஒருவன் திருமுகமொன்று கொணர்கின்றான். அதனை மகளிருள் ஒருத்தி மன்னன் குறிப்பறிந்து பெற்றுப் படிக்கின்றாள். தூதன் கொணர்ந்த திருமுகம் சுடர்மலைத் திரண்ட சோலைச் சுரேந்திர காந்தம் என்னும் வடமலை நகரம் ஆளும் மன்னவன் தேவி பெற்ற தடமலர்ப் பெரிய வாட்கண் தையல்மற்று அவளை எங்கோன் விடம்அலைத்து இலங்கு செவ்வேல் வெய்யவன் பெயரன் வேட்டான். 377 இச்செய்தியையே அத்தூதுவன் தன் வாயாலும் எடுத்து இனிதே உரைக் கின்றான். யாவரும் பேரின்பம் எய்துகின்றனர். பின்பு அத்தூதன் பெறுதற்குரிய சிறப்பு மிகப் பெற்று நீங்கு கின்றனன். மகளிரும் திவிட்டனும் அரசப் பெருங்கோயிலை அடைகின்றனர். அன்றிரவு, சுயம்பிரபை, தன் வயிற்றில் வானத்து மதியம் வந்து புகுந்ததாகக் கனாக்கண்டு வெருவுகின்றாள். திவிட்டன் கனாப் பயன் உரைத்து அவளைத் தெளிவித்தல் வணங்கி இவ்வுலக மெல்லாம் மகிழ்ந்துகண் பருகும் நீர்மை அணங்கிலர் சிறுவன் வந்துஉன் அணிவயிற் றகத்துப் பட்டான்; கணங்குழை! அஞ்சல், என்று கருமணி வண்ணன் தேற்றப் பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள். 378 சுயம்பிரபை மகனைப் பெறுதல் கோள்நலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத் தோள்நலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன் கேள்நலம் பொலிதரக் கிளரும் சோதிய நாள்நலம் பொலிதர நம்பி தோன்றினான். 379 மகனுக்கு விசயன் எனப் பெயரிடல் திருவொடு திசைமுகம் தெளிர்ப்பத் தோன்றினான் திருவொடு வென்றியில் சேரும், ஆதலால் திருவொடு திகழ்தர விசயன் என்றரோ திருவுடை மார்பனை நாமம் சேர்த்தினார். 380 இச்செய்தியைச் சடிவேந்தற்குத் தெரிவிப்பான் இருக்கையில், இரத நூபுரத்திலிருந்து விமானமொன்று வருகிறது. அதன்கண் எண்ணெயும் சுண்ணமும் கொண்டுவந்த தூதன் ஒருவன்போந்து அருக்ககீர்த்தியின் தேவி சோதிமாலை யென்பாள் ஓர் ஆண் மகவைப் பெற்ற செய்தியைத் தெரிவித்து, அம்மகனுக்கு அமித தேசன் எனப் பெயரிட்டதும் கூறி மகிழ்விக்கின்றான். பின்பு ஐந்து யாண்டுகள் கழிகின்றன. விசயன் கல்வி பயிறல் ஐயாண் டெல்லை ஐயன் அணைந்தான்; அவனோடு மையார் இன்பக் காதலி நாவின் மகளாகப் பொய்யாக் கல்விச் செல்வர்கள் தம்மால் புணர்வித்தான், நெய்யார் செவ்வேல் நீளொளி நேமிப் படையானே. 381 சின்னாட்குப் பின் சுயம்பிரபை வேறொரு பெண்மகவைப் பயந்தாளாக, அவட்குச் சோதிமாலையெனத் திருப்பெயரிட்டுச் சிறக்கின்றனர். சோதிமாலையும் செவ்வே அழகு திகழ வளர்கின்றாள். சோதிமாலை பந்தாடுதல் கந்தாடும் மால்யானைக் கார்வண்ணன் பாவை கருமேகக் குழல்மடவார் கைசோர்ந்து நிற்பக் கொந்தாடும் பூங்குழலும் கோதைகளும் ஆடக் கொய்பொலம் துகில்அசைத்த கொய்சகம்தாழ்ந் தாட, வந்தாடும் தேனும்முரல் வரிவண்டும் ஆட மணிவடமும் பொன்ஞாணும் வார்முலைமேல் ஆட, பந்தாடும் மாடேதன் படைநெடுங்கண் ஆடப் பணைமென்தோள் நின்றாடப் பந்தாடு கின்றாள். 382 இப்பந்தாட்டத்தைத் திவிட்டன் தன் தேவியுடன் மறைந்திருந்து கண்டு, மனம் மிக மகிழ்ந்து, அருகழைத்து, நுதல் துடைத்து, மடித்தலத்தில் இருத்தி, மகள் மணப்பருவம் எய்தியதுகண்டு, மனைவிபால் விடுத்து, மணவினை குறித்து மந்திரசாலையடைந்து, மந்திரச் சுற்றத்தோடு ஆய்ந்து சோதிமாலைக்குச் சுயம்வரம் நிறுவுவதே தக்கது எனத் துணிகின்றான். அமைச்சர் முதலியோர் அதுவே தக்கதென்ன மணமுரசறையப்படுகிறது. வள்ளுவன் முரசறைதல் வாழ்கநம் மன்னவன்; வாழ்க வையகம்; ஆழ்கநம் அரும்பகை; அலர்க நல்லறம்; வீழ்கதண் புனல்; பயிர் விளைக மாநிலம்; தாழ்கமற்று அருந்துயர்; சாற்றக் கேண்மினே. 383 இன்றைநாள் உள்ளுறுத்து ஈரைஞ் ஞாள்களும் மன்றலம் சுயம்வரம் வரைந்தது; ஆதலால், ஒன்றிவாழ் அரசரோடு உலகம் ஈண்டுக என்றுதான் இடிமுரசு அறைந்தது என்பவே. 384 சுயம்வரத்திற்காக விஞ்சையரும் மண்ணவருமாக வேந்தர் எண்ணிறந்த பேர் வருகின்றனர். அவரவர்க்கும் தனித்தனியே இடங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இரதநூபுரத்திலிருந்து அருக்க கீர்த்தி, தன் மனைவி சோதிமாலை, மகன் அமிததேசன், மகள் சுதாரை என்ற இவர்களுடன் வருகின்றான். அவனைத் திவிட்டன் சென்று வரவேற்று விருந்தயர்கின்றான். இவ்வாறே ஏனையரசர் களும் திவிட்டனால் வரவேற்கப் பெறுகின்றனர். சுயம்வரநாளன்று குறித்த நாழிகையில் அரசகுமரர் அனை வரும் சுயம்வர மண்டபம் புகுந்து தத்தம் இருக்கையில் இருக்கின்றனர். இவருள் அயோத்தி வேந்தன், அத்தினபுரத்தரசன், குண்டலபுரக் கோமான், வாரணவாசி மன்னன், சூரியபுரத்து மன்னன், மதுரையரசன் முதலாயினார் சிறப்ப ஓதப்பெறுகின்றனர். அமிததேசன் வருதல் திருந்திய திலதக் கண்ணி தேவிளங் குமரன் போலும் அருந்தகை அரச நம்பி அடுதிறல் அமித தேசன் பரந்தபின் பசலை கூரப் பனிக்கதிர் வருவ தேபோல் விரிந்துஒளி சுடர வேந்தர் விளங்கொளி மழுங்கச் சென்றான். 385 எல்லோரும் சுயம்வரமண்டபம் அடைந்தபின், திவிட்டன் சோதிமாலையைக் கொணருமாறு பணிப்ப, அவள் தன் கன்னி மாடத்திருந்து, மஞ்சு இவரும் மயிலனையார் மருங்குசூழ, மெல்ல நடந்துவருகின்றாள். வந்தவள் சுயம்வரமண்டபத்தில் மன்னர் இருந்த பேரவைக்கண் வந்து தோன்றுதல் அணிதயங்கு சோபான வீதிவாய் அணங்கனையார் அடியீடு ஏந்த மணிதயங்கு மாளிகைமேல் வாள்நிலா வளர்முன்றில் மருங்கு சூழ்ந்து கணிதயங்கு வினை நவின்ற கண்டத்தின் திரைமகளிர் கையின் நீக்கத் துணிதயங்கு வேல்அரசர் மனம்துளங்கச் சுடர்ந்து இலங்கித் தோன்றினாளே. 386 அப்போழ்தில் அவள் உயிர்த்தோழி உடன்போந்து ஒவ்வோர் அரசர் பேரும் பீடும் சொல்லிக் கையில் ஏந்திய மணப் பிரம்பால் சுட்டிக் காட்டிவருகின்றாள். வருங்கால், “இவன் இங்கே யாரும் நிகரில்லா இக்குவாகு குலத்து இறைவன், இவன் இரத்தின கிரீடன், இவன் பரதன் வழித்தோன்றல், இவன் குருகுலத் தார் கோமான் என அரசர் தம் சிறப்பெல்லாம் ஓதிக் காட்டிவருங் கால், விஞ்சை வேந்தர் இருந்த வரிசையைக் காட்டுகின்றாள்.” அமிததேசனைக் காட்டுதல் அங்கவவர் வளநகரும் குலவரவும் அவயவமும் அறையும் போதில் வெங்கதிரோன் பெயரவனுக்கு இளவரசுஇவ் வேந்தன்எனா முன்னம் தானே கொங்குஇவரும் கருங்குழலி பெருந்தடங்கண் இருங்குவளை பிணையல் போலச் செங்கதிரோன் எனஇருந்த திருந்துவேல் இளையவன்மேல் திளைத்த அன்றே. 387 சோதிமாலை அவன்தோளில் மாலையணிந்து நிறையரும் காதல் நிறைதல் ஏட்டினார் குழலி னாளுக்கு உழையவள் இன்னன் என்று காட்டினா ளாவதல்லால், காரிகை தன்னின் முன்னம் ஓட்டினாள் நிறையும் கண்ணும்; உள்ளமும் களித்தது அங்கே; பாட்டினால் என்னை? போக பான்மையே பலித்ததுஅன்றே. 388 அரசர் மனம் அமைந்து மகிழ்தல் புனைவுதான் இகந்த கோதைப் பொன்னனாள் பூமி பாலர் நினைவுதான் இகந்து, காளை வடிவெனும் நிகளம் சேர, “வினைகள்தாம் விளையுமாறு, யாம்வேண்டிய வாறு வாரா; இனையதால் வினையின் தன்மை எனநினைந்து ஆறினாரே.” 389 திருமணம் நிகழ்தல் நெய்த்தலைப் பால்உக் காங்கு நெடுவரை உலகின் வந்த மைத்துன குமரன் தன்னை மடமொழி மாலைசூட்ட, இத்தலை அரசர் கோமான் எரிகதிர் ஆழிவேந்தன் கைத்தலை வேலி னாற்குக் கடிவிளை முடிவித் தானே. 390 அருக்ககீர்த்தி தன்மகள் சுதாரை பொருட்டு நாட்டிய சுயம்வரம் நிகழ்தல் சயமரம் அறைந்த நன்னாள் தமனிய மஞ்சம் பாவி இயமரம் துவைப்ப ஏறி இகல்மன்னர் இருந்த போழ்தில் பயமலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறிக் கயமலர் நெடுங்க ணாள்ஓர் காரிகை காட்டி னாளே. 391 சுதாரை விசயனுக்கு மாலை யணிதல் வரிகழல் மன்னர் என்னும் மணிநெடும் குன்றம்எல்லாம் சுரிகுழல் மடந்தை என்னும் தோகையம் மஞ்ஞை நோக்கி, எரிகதிர் ஆழி வேந்தன் திருமகன் என்னும் செம்பொன் விரிகதிர் விலங்கல் திண்தோள் குவட்டினை விரும்பிற்று, அன்றே. 392 கடிவினை முடித்தல் மாதராள் சுதாரை வாட்கண் மலரொடு மணிவண் டார்க்கும் போதுலாம் பிணையல், வீரன் பொன்வரை அகலம் சூழ, ஏதிலா மன்னர் வாட இருபுடைக் கிளைஞர் எல்லாம் காதலால் களித்துச் செல்வக் கடிவினை முடிவித் தாரே. 393 முடிவில், சோதிமாலையை மணந்த அமிததேசன் இரத நூபுரத்தையும், சுதாரையை மணந்த விசயன் போதனமா நகரத்தையும் அடைந்து அயரா இன்பத்துள் ஆழ்ந்து மகிழ்கின்றனர். 11. துறவுச் சருக்கம் (இதன்கண், பயாபதி தன் மக்களின் திருவும் மக்கட்பேறும் பிற சிறப்பும் கண்டு இன்புறுங்கால் தன் நல்வினையை வியந்து தவத்தின் மேன்மை யுணர்தலும், தவம் செய்ய நினைந்து அமைச் சரொடு அவன் ஆராய்தலும், அருகனுக்கு விழாச்செய்து பணிந் திறைஞ்சலும், முனிவரனைக் கண்டு பயாபதி அமைச்சருடன் பணிந்து அவன்பால் அறம் கேட்டலும், அவன் நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவர் கதி என்ற நால்வகைக் கதிகளின் இயல்பும் துன்பமும் உரைத்தலும், அவனே முடிவில் இவற்றின் இயல் புணர்ந்த நீ வீட்டுநெறிக்குரிய அறம் அறிக என்றலும், பயாபதி அவனை மறுவலும் பணிந்து அவனையே அவ்வீட்டு நெறிக்குரிய நெறியுரைத் தருளுமாறு வேண்டுதலும் பிறவும் கூறப்படுகின்றன. சுரமை நாட்டின் அரசனான பயாபதி தன் உரிமையுடன் மிக்க இன்புற்று இருக்கின்றான். திவிட்டனாலும் அவன் மக்களாலும் தனக்குண்டாகிய சிறப்பும் செல்வமும் கண்டு செம்மாந்து வீற்றிருக் கின்றான். ஒருநாள் திவிட்டனும் மக்களும் போந்து அவன் அடியில் வீழ்ந்து வணங்கி இன்புறுகின்றனர். செல்வக்களிப்பால் அறிவு சிதையாத பயாபதி தவத்தின்பால் உள்ளம் வைத்தல் ஆங்குஅவர் அணைந்த போழ்தில் அமிழ்துகொப் புளித்த போலும் தேங்கமழ் பவளச் செவ்வாய் முறுவல்நீர் பருகித் தேங்கி, “ஈங்குஇவை யனைய தோற்றி இன்பமே பெருக நின்ற வீங்கிய தவத்திற்கு இன்னும் வித்திடற் பாலது” என்றான். 394 தன் நல்வினையை வியத்தல் அலகுடன் விளங்கும் அம்பொன் குடைநிழல் அரசர்சூழ உலகுடன் வணங்க ஓடை உயர்களிற்று எருத்த மேலால் பலகுடை பணியச் செல்லும் பண்புஇது நமக்குத் தந்த நலன்உடைத்து; அளிய, நங்கள் நல்வினைத் தெய்வம் அன்றே. 395 தவமே சிறந்தது எனத் துணிதல் பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர் பெருகிப் பின்னை இறந்தனர் என்ப தல்லால் யாவரும் இன்று காறும் மறைந்துஉயிர் வாழா நின்றார் இல்லையால், வாழி, நெஞ்சே சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய். 396 பின்பு அவன் இளமை, யாக்கை முதலியவற்றின் நிலையா மையை நினைந்து, மந்திரசாலையடைந்து அமைச்சரைக் கூட்டிச் செய்தற்குரியவற்றை ஆராய்கின்றான். பயாபதி நிலைத்த செல்வத்துக்கு வரக்கடவ ஊனங்கள் யாவை என வினவுதல் “மலைபயில் களிநல் யானை மன்னரால் வவ்வல் இன்றாய் கலைபயில் மகளிர் கண்போல் கள்வர்கைப் படாது, நாளும் நிலையின செல்வக்கு ஊனம் நிகழ்வன உரைமின்,” என்றான் இலைபயில் மகரப் பைம்பூண் எரிமணிக் கடகக் கையான். 397 அமைச்சர் விடையிறுத்தல் “ஆள்வினை மாட்சி யென்னும் இரண்டினும் அரசு காத்துத் தோள்வினைக் களவு காவல் உள்வழித் துன்னல் செல்லா; வாள்வினைத் தடக்கை வேந்தே! வருவது மற்றும் உண்டோ, கோள்வினை பயின்ற கூற்றம் குறுகல தாயின்?” என்றார். 398 கூற்றத்தாற் கொள்ளற்பாலன யாவை எனப் பயாபதி வினாவி விடை பெறுதல் “கோள்வினை பயின்ற கூற்ற அரசனால் கொள்ளற் பால, கேள்வினை பயின்ற நூலில் கிளந்துநீர் உரைமின்” என்ன, “வாள்வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து, மாதோ, நாள்வினை புரிந்து நங்கள் உயிர்நிறை கொள்ளும்,” என்றார். 399 பயாபதி கூற்றுவனை வெல்லுமாறு உண்டோ என வினவுதல் சந்தினால் தவிர்க்க லாமோ? சார்பினால் ஒழிக்க லாமோ? பந்தியா முன்னம் தாமே பகைத்திருந்து உய்ய லாமோ? வெந்திறல் காலன் தன்னை மேற்சென்று வெல்ல லாமோ? உய்ந்துஉயிர் யாங்கள் வாழும் உபாயம்நீர் உரைமின் என்றான். 400 அமைச்சர் தாம் அறிந்திலர் என்று உரைத்தல் “பீழைமை பலவும் செய்து பிணிப்படை பரப்பி வந்து வாழுயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்துஉயிர் வாங்கி உண்ணும் கூழைமை பயின்ற கூற்ற அரசனைக் குதிக்கும் சூழ்ச்சி பாழியந் தடக்கை வேந்தே! பயின்றிலம் யாங்கள்,” என்றார். 401 கூற்றை இகந்து செல்வதற்கு வேறே புகலிடம் கூறுமின் எனப் பயாபதி அமைச்சரை வினவுதல் இன்னுயிர் அழியும் போழ்தும் இறைவனுக்கு உறுதி யல்லால் முன்னிய முகமன் மாட்டா முற்றிய அறிவி னாரை மன்னவன் மகிழ்ந்து நோக்கி, “வாழுயிர் வாங்கும் காலன் தன்னைநாம் இகந்து சேரும் சாண்பிறிது உரைமின்,” என்றான். 402 அமைச்சர் அறிவரை வணங்கி யறிக என்று கூறுதல் “இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற்கு இறுதி செய்யும் கனிபுரை கிளவி நீக்கிக் கண்ணனார் கருத்துட் கொண்டு துணிவன நினையும் காலன் துணிவன துணியும் சூழ்ச்சி முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ அடிகள்,” என்றார். 403 பயாபதியரசன் பணித்தவண்ணம் அருகன் கோயில் திருவிழாவை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தல் அருள்புரி அழலஞ்சோதி ஆழியான் ஆதியில்லான் மருள்புரி வினைகட்கு என்றும் மறுதலையாய வாமன் இருள்புரி உலகம் சேரா இயல்நெறி பயந்த பெம்மான் பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார். 404 நகர மக்கள் அனைவரும், தேர், குதிரை, யானை முதலிய ஊர்திகள் மிடையப் பெருஞ்சிறப்புடன் சென்று விழா வயர்கின்றனர்; பயாபதி யானையேறி நீர்ப்பலி, விரைப்பலி, பூப்பலி முதலிய வற்றுடன் சென்று, கோயில் வாயில் அடைந்து யானையினின்றும் இறங்கி, அக்கோயிலை வலம் வந்து நிற்கின்றான். விசயதிவிட்டரும், பிறமகளிரும் மக்களும் வந்திருக்கின்றனர். பயாபதி அருகனைப் பரவிப் பாடுதல் ஒளியாகி உலகாகி நீவிரிந்தாய் என்கோ! உலகெலாம் நின்னொளியின் உள்ளடங்கிற் றென்கோ! அளியார உலகம்நீ ஆள்கின்றாய் என்கோ! அமருலகு தான்நின்ன தடியடைந்த தென்கோ! விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தாய் என்கோ! நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ! தெளியாமல் இல்லைநின் திருவடிகள் மெய்ம்மை. தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கலாமே. 405 செங்கண் நெடுமாலே! செறிந்திலங்கு சோதித் திருமுயங்கும் மூர்த்தியாய்! செய்ய தாமரையின் அங்கண் அடி வைத்தருளும் ஆதியாய்! ஆழி அறவரசே! என்றுநின் அடிபணிவ தல்லால், எங்கண்இடர் அகலுமாறு இந்நிலைமை எய்தி இருளுலகம் நீக்கும் அருள்தருகநீ என்று வெங்கண் இருவினையை அறவென்றாய் முன்நின்று விண்ணப்பம் செய்யும் விழுத்தகைமை உண்டோ? 406 இவ்வாறு வழிபா டியற்றிப்பணிந்து வரும் பயாபதி முன், அயலதாகிய மண்டபத்தே அருகன் திருவடிசூடிய சென்னியும், மறைமொழி யோதும் வாயும், அவன் ஓதிய அறம் நினையும் உள்ளமும் கொண்ட முனிவன் தியானபரனாய் இருக்கின்றான். அவனைக் கண்டு வேந்தன், திருவடியில் வணங்கியிருப்ப, மந்திரச் சுற்றத்தார், “பிறவியறுக்கும் அறவமுது அளிமின்” என வேண்டு கின்றனர். முனிவன் வினவுதல் “வன்ன மணிமுடி மன்னன் இருந்திட இன்னியல் செல்வம் எனைப்பல எய்திய மன்னன் அறியும் திருஅற மாண்பினை; என்னை வினவியது என்னைகொல்?” என்றான். 407 செல்வம் மிக்க வேந்தனொருவன் செயல் இதுவே என அமைச்சர் கூறுதல் அடிகள்! அடிசில் அமைந்தது அயில்வான்; முடிய முயலும் முறைமை அறியான்; நெடிதின் அதுவறும் நீர்மையும் ஓரான்; வடிவமர் செல்வன் வகையும் அதுவே. 408 பின்பு முனிவன் அரசனுக்கு நால்வகைக் கதியியல்பும், வினைவகையும், வினையை வெல்லும் திறமும், வீடு பேற்றின் மாண்பும் உரைக்கலுறுகின்றான். நால்வகைக் கதியினையும் முறையே கூறத்தொடங்குகின்றான். நரகதித் துன்பம் வேவார் அழலுள் விளியார் அளற்றினுள் ஓவார் புகையுள் உகையா உழல்பவர் ஆவா அளிய நரகர் படுதுயர், ஏவார் சிலையாய்! இரங்கும் தகைத்தே. 409 இந்நரகத்தே பிறன்மனை நயப்பவர், உள்ளம் கொடியவர், உயிர்க்கொலை புரிபவர், பிறன்பொருள் கவர்வோர், நல்லறம் காய்ந்தோர், அல்லறம் ஓம்புவோர் முதலிய தீவினையாளர் பலரும் வீழ்ந்து வருந்துவர் என்கின்றான். விலங்குகதித் துன்பம் ஓரறி வாகி உழக்கும் உயிர்களைப் பேர்அறி வாரும் பிறர்இல்லை; இன்னவை, யார்அறி வார்? அழியும் திறம் யாதுஎனில், கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார். 410 உயிர்த்தொகை ஆறனுள் ஒன்றொழித்து ஏனைப் பெயர்த்தொகை பெற்ற பிறவிகள் தம்மைப் பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்பச் செயிர்த்தவர் போலச் செகுத்திடும் கண்டாய். 411 இவற்றின் துயர் அறிவார் முனிவர் என்றல் கன்னியர் வேட்கை கடவுள் அரும்பிணி துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர் என்னும் இவற்றினை எம்போல்பவர் அன்றி, மன்ன! அறிபவர் மற்றுஇல்லை, மன்னோ. 412 விலங்காய்த் துன்பமுறுவோர், தவவேடம் கொண்டு அவம் செய்பவர், மாயத்தால் பொருள் கவர்பவர், கள்ள நெஞ்சமுடை யோர் முதலியோராவர் என்று முனிவன் கூறி முடிக்கின்றான். மக்கட்கதித் துன்பம் அம்முனிவனே மக்கட் கதித்துன்பம் கூறலுறுகின்றான். மக்கள் சேகர், மிலேச்சர், மனிதர், திப்பியர் என நால்வகைப் படுவர். இவருள் சேகர் பிறப்பாலும் உருவத்தாலும் மக்கள் போல்வரேயன்றி, வாலும் உடலெங்கும் மயிரும் மூடி நலந்தீங்கு காணும் நல்லறிவு இன்றி யிருப்பர். மிலேச்சர் பூவும் பழமும் நுகர்ந்து பொழில்களில் வாழ்வர். கொடுந்தொழிலும், குதர்க்கம் பேசலும் பிறவும் செய்வோர் இப்பிறவியை அடைவர். நல்ல நிலத்தே, நல்ல வடிவுடன், நற்குடியிலே, உறுப்புக் குறைவின்றி, உணர்வு சிறக்கும் மக்கட் பிறப்பு எய்துவது அரிது. மக்கள் பெறும் இன்பம் புல்லிது என்றல் ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர் தேனின் அழிதுளி நக்கும் திறத்தது, மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ. 413 மக்கட் பிறப்புக்குள்ள நன்மாண்பு இன்ன நிலைமை இதனுட் பிறந்தவர் மன்னும் ஒன்றுஉண்டு வரத்தாற் பெறுவது; பொன்இயல் சேர்கற்ப போக நிலங்களில் துன்னு முயற்சி துணியும் திறமே. 414 முயற்சியும் துணிதிறமும் இவை யென்றல் துன்னு முயற்சி துணியும் திறம்அவை பன்னி உரைப்பின் பலவாய்ப் பெருகினும் தன்னியல், தானம், தவமொடு, பூசனை என்னும்இந் நான்குஎன எண்ணி உணர்நீ. 415 தன் இயலாகிய ஞான வொழுக்கம் தானும் அடங்கி அடங்கினர்க்கு ஏந்திய ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது ஞான வொழுக்கம் பெருகு நலத்ததை ஈனம்இல் இன்ப நிலங்கட்கு வித்தே. 416 தானப்பயன் கூறல் ஒத்த குணங்கள் அமைந்தாங்கு உறுவர்க்குத் தத்துவம் தேறி யவன்செய்த தானங்கள் முத்திறத் துள்ளும் படாது, முடிமன்ன! உத்தமத் தேவருள் உய்க்கும் உணர்நீ. 417 தவம் கூறுவார் முதற்கண் அதற்குரிய விரதத்தை விளம்புதல் எல்லா விரதம் இயல்பொக்கும் ஆயினும் அல்லா விரதம் மனையா யவர்கட்குக் கொல்லா விரதம், குடைமன்ன! ஆம்எனின் வெல்லா வகையில்லை, வீங்குஎழில் தோளாய்! 418 தவத்தின் இயல்பு கூறுதல் தம்மை யுடையவர் தாங்கும் தவத்தியல் எம்மை வினவின் எமக்கும் உரைப்பரிது; உம்மை உலகத்து ஒளிபடும் ஊக்கமொடு இம்மை இகந்தார்க்கு இசையும் அதுவே. 419 பூசனைப் பயன் கூறல் உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு அலகையில் பூசனை ஆற்ற முயன்றால், திலகம் இவரெனத் தேவர்க ளாவர், இலகும் சுடரொளி வீங்கெழில் தோளாய். 420 புண்ணிய வாயில்கள் ஏழ் என்று கூறி அவற்றை விரித்துரைத்தல் அருளும் தெருளும், குணத்தின்கண் ஆர்வமும், பொருளொன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும், மருளில் தவமும், வாலிய ஞானமும், இருளறு தியான நிகழ்வும், என்று ஏழே. 421 அருள் ஆருயிர் யாதொன்று இடர்உறும், ஆங்குஅதற்கு ஓருயிர் போல உருகி உயக்கொள்ள நேரின், அதுமுடி யாதெனின் நெஞ்சகத்து ஈர முடைமை அருளின் இயல்பே. 422 தெருள் வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் வெய்ய முனிதல், குளிர்தல், வெறுப்பொடு மையல்மும் மூடப் பகுதி, மயக் கின்மை செய்ய மனத்தோர் தெருளின் திறமே. 423 குணத்தின்கண் ஆர்வம் அறிவர் அடிமுதல் ஆர்வம் பெருக்கல் உறுவர் ஒழுக்கம் உவத்தல் முதலா இறுதியில் பல்குண நோக்கம்என்று இன்ன செறிதல்இல் ஆர்வங்கள் செல்வம் தருமே. 424 புகழ்ச்சி நிகழ்வு ஆற்றல் வகையால் அருந்தவம் மேற்கொண்டு நோற்று நுனித்தல், ஒழுக்கம் தலைநிற்றல், போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்வு; இஃது ஏற்றும் இருவிசும்பு ஈர்மலர்த் தாரோய். 425 மருளில் தவம் அற்ற துவர்ப்பின ராகும் அருநிலை உற்றவர்க்கு இவ்வாறு ஒழுக்கம் தலைநிற்றல், நற்றவம் என்றுஇங்கு நாங்கள் மொழிந்தது; மற்றுஇது வானுலகு ஆள்விக்கும் மன்னா! 426 நன் ஞானம் நூற்பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது, மாற்படை கூட்டும் மயங்கிருள் தீர்ப்பது, மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது, நாற்படை யோய்! நல்ல ஞான நிகழ்வே. 427 தியானம் சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும் ஒன்ற உரைப்பின் ஒருநால் வகைப்படும்; நன்றியின் மாற்றினை நல்குஇரண்டு; அல்லன வென்றி விசும்பொடு வீடுந் தருமே. 428 இவ்வியல்பினரான மக்களுள் தெய்வ மனிதர் இன்னோர் என்று கூறுதல் தெய்வ மனிதர் அவரைத் தெளிவுறின் ஐய விசயனும் ஆழி வலவனும் எய்த இவர்முதல் ஈரொன் பதின்மர்இவ் வையம் அருள வருநர் உளரே. 429 பிரதிவாசு தேவரைக் கூறல் ஆழி இழந்த அயகண்டன் ஆதியாப் பாழி வலவன் பகைவர்மும் மூவரும் வீழ வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள் ஊழிதோறு ஊழி உலப்பில கண்டாய். 430 பரதராச சக்கரவர்த்திகளைக் கூறல் தேய வினைவெல்லும் தெய்வ மனிதருள் நீயும் ஒருவனை நின்சூலத்து ஆதிக்கண் பாய விழுச்சீர்ப் பரதனை உள்ளுறுத்து ஆய திகிரி யவரும் அவரே. 431 போக மனிதர் இயல்பு கூறல் தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும் மக்கள்இவ ராவர்;மத யானைமற வேலோய்! புக்கவரு ளேபடுவர் போகநிலம் சார்ந்தார்; ஒக்கஅவர் தன்மையும் உரைக்க உலவாவே. 432 போகநிலத்து இயல்பு கங்குல் அவண்இல்லை; கலிஇல்லை; நலிவுஇல்லை; அங்கு அவர்கள் நாள்இடை கழித்துஅமிர் தயின்றால், எங்கும்இல இன்பவெழில் எய்தல்தரும்; ஈதால் தங்கிய தவத்தரசர்க்கு, ஈந்தபயன் தானே. 433 தேவர்கதித் துன்பம் தேவர்கள், பவணர், வியந்தரர், சோதிடர், கற்பகர் என நால்வகைப்படுவர். இவர்கள் ஒருவரின் ஒருவர் உயர்ந்திருப்பர். பவண தேவர் அருமணியின் ஒளிநிழற்றும் ஆயிரமாம் பணம்அணிந்த திருமணிசேர் முடியவரும் தீயொழுகு சிகையருமாய் பருமணிய படலஞ்சேர் பவணத்துப் பதின்மர்கள், ஒண் குருமணிகொள் நெடுமுடியாய்! கூறுபா டுடையவரே. 434 வியந்தர தேவர் கின்னரர்கள் முதலாய வியந்தரரைக் கிளந்துரைப்பின் இன்னநரர் உலகத்துள் எவ்வழியும் உளராகி மென்நரம்பின் இசைகேட்டும் வெறியயர்வு கண்டுஉவந்தும் மன்னவரை வணங்கியும்தம் மனமகிழ்வர் ஒருசாரார். 435 குலகிரியும் மலையரசும் குளிர்பொழிலும் நளிர்கயமும் பலகிரியும் தீவகமும் படுகடலும் படிநகரும் உலகிரிய வெளிப்பட்டும் ஒளிகரந்தும் உறைந்தியல்வர், அலகிரியும் பலகுணத்தோய்! அமரர்கள் ஏனைப்பலரே. 436 சோதிட தேவர் சந்திரரும் சூரியரும் தாரகையும் நாண்மீனும் வெந்திறல கோட்களுமாம் எனவிளங்கி, விசும்பாறா, மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரும் நிற்பவரும் சுந்தரஞ்சேர் மணிமுடியாய்! சுடர்பவரும் சோதிடரே. 437 கற்பக தேவர் மந்தரமா நெடுமலையின் மத்தகத்து மேற்கூற்றின் அந்தரப்பேர் உலகத்துள் அமரரைமற்று அறையுங்கால் இந்திரவில் எனவெளிப்பட்டு இமையவர்கள் தொழுதேத்தச் சுந்தரநன் மணிப்படிவம் எனச்சுடர்ந்து தோன்றுவாரே. 438 தேவர் குணஞ் செயல்கள் அணுவளவாய்ச் சிறுகுதல்மற்று அதிநுட்ப மிகப்பெருகல், நணியவர்போல் நினைத்துழியே நண்ணுறுதல், விழைதகைமைப் பணியின்அமைத் திடல்குறிப்பின் பலஉருவு நனிகோடல் துணிவமையும் நெடுவேலோய்! சுரருடைய குணங்களே. 439 அவர் எய்தும் துன்பம் அளிதருசெங் கோலுடையாய்! அமரருக்கும் அந்தரமுண்டு; ஒளியோடு பேரின்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்துளவாம்; தெளிதருநல் காட்சியது திருந்தியமேல் நெடுந்தகையோர்க்கு எளிதகவும் பெரும்பாலும் பெறல்ஏனோர்க்கு அரியவே. 440 முனிவன் அறவுரை கூறல் கதிநான்கும் கதிசேரும் வாயிலும் இவ்விவை; அதனால் விதிமாண்ட நரகமும்புன் விலங்குகளும் சேராமை மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவம்தாங்கின் நிதிமாண்ட பெருஞ்செல்வம் நீங்காத இயல்பென்றான். 441 உறுதிகளை நன்கு உரைக்குங்கால், கேட்டு மகிழ்ந்த பயாபதி, பேரின்பம் பெறுதற்குரிய நெறிகளையும் உணர்த்துமாறு அம்முனி வனை இரந்து வேண்டுகின்றான். அவனும் அவற்றை விளங்க உரைக்கின்றான். 12. முத்திச் சருக்கம் (இதன்கண், அம்முனிவரன் பயாபதிக்குப் பிறவிச் சுழற்சி, தூயவர்மாட்சி, வீடடையும் வீரர்திறம், வீட்டின் இயல்பு முதலிய வற்றை உரைத்தலும், அவன் அவற்றைக் கேட்டுத் துறவு பூணத் துணிந்து மக்களை வருவித்து அவர்கட்குத் திருமகள் இயல்பும் நிலமகள் இயல்பும் கூறித் தவத்தின்கண் நோக்கம் வைக்குமாறு கூறுதலும், தன் துறவும், அமைச்சர் துறவும், அவனே முடி முதலிய துறத்தலும், அரசரும் மக்களும் பிறரும் புலம்பக்கண்டு அவன் சலியானாக முனிவர் தேற்ற அவர்தேறி நீங்கலும், பயாபதியின் வேற்படை நீங்கலும், அவன் தவவரசு பூண்டு குற்றமறுத்துக் கேவலஞான மெய்திச் சிவகதியுள் நிற்றலும் இமையவர் இறைஞ்சிப் பாடுதலும், பயாபதி சூளாமணியாய்த் திகழ்தலும், விசயதிவிட்டர் அவனைப் பரவி வாழ்த்தலும் பிறவும் கூறப்படுகின்றன.) பயாபதியரசன் வீடுபேற்றின்மேல் மிக்க ஆர்வம் கொண்டு முனிவரனை, அதற்குரிய நெறியினை உரைத்தருளுமாறு வேண்ட, அவனுக்கு முனிவரன் அதனைக் கூறுகின்றான். வீடுபேற்றுக்கு உரியநெறி ஒன்றே என்று கூறுதல் இருவகை வினைகளும் இல்லது; இவ்வழி வருவகை இலாதது; மறுவில் மாதவர் பெருவழி யாச்செலும் பெயர்வில் சூளிகைக்கு ஒருவழி யல்லதுஇங்கு உரைப்பது இல்லையே. 442 பிறவிச் சுழற்சியின் பெற்றி யுரைத்தல் பிறந்தவன் பொறிப்புலக்கு இவரும்; அப்புலம் சிறந்தபின் விழைவொடு செற்றம் செய்திடும்; அறைந்தவை வாயிலா வினைகள் ஈட்டினான் இறந்தவன் பின்னும்அவ் வியற்கை எய்துமே. 443 தூயவர் மாட்சி பிறவிச்சக் கரம்இது பெரிதும் அஞ்சினான் துறவிக்கண் துணிகுவன்; துணிந்து தூயனாய் உறவிக்கண் அருளுடை ஒழுக்கம் ஓம்பினான் மறவிக்கண் நிலாததோர் மாட்சி எய்துமே. 444 வீட்டுலகு எய்தும் வீரர் திறம் கூறல் காட்சியும் ஞானமும் கதிர்த்துத் தன்பொறி மாட்சியை வெலீஇமனம் தூய னாயபின் நாட்செய்து நவிற்றிய தியான வீதியான் மீட்சியில் வீட்டுலகு எய்தும் வீரனே. 445 வீட்டின் இயல்புரைத்தல் கடையில்எண் குணத்தது; காம ராகர்கள் இடைநனி இல்லது; இல் லியற்கை இல்லது; மிடைவொடு விழைவுவே ரறுத்த வீரர்கள் அடைவதோர் நிலைபிறர்க்கு அறிய லாகுமோ? 446 மணிமலர்ந்து உமிழ்ஒளி வனப்பும், சந்தனத் துணிமலர்ந்து உமிழ்தரும் தண்மைத் தோற்றமும் நணிமலர் நாற்றமும் என்ன, அன்னதாம் அணிவரு சிவகதி யாவது இன்பமே. 447 பயாபதி வீடுபேற்றிற்கு முயல்வன் எனத் துணிதல் வடுவறு மாதவன் உரைப்ப, “மாண்புடை அடிகளது அறவமிர்து உண்ட ஆற்றலால் முடிவுகொள் உலகெய்த முயல்வன்,” என்றனன் விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே. 448 அமைச்சர் தொடக்கத்தே பயாபதி துறவு பூண்பதற்கு அஞ்சி, அதனை விளக்குமாறு சில கூறுகின்றனர்; அவன் ஏலாது துறவே துணிந்து நிற்கின்றான்; அத்துணிவின் திண்மை கண்டு அதற்கேற்பன எடுத்து இயம்புகின்றனர். அமைச்சர் உரைத்தல் “அருஞ்சிறைப் பிணியுழந்து அலைப்புண்டு அஞ்சுவான் பெருஞ்சிறை தனைப்பிழைத்து உய்ந்து போயபின் கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு வெந்துயர் தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ?” 449 “பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம் துணிபவன் தன்னொடு தொடர்ச்சி நோக்குமோ? அணிமுடி துறமின், எம் அடிகள்!” என்றனர் மணிமுடி மன்னவற்கு அமைச்சர் என்பவே. 450 துறவு உள்ளம் கொண்ட பயாபதி மக்களை யழைத்துத் திருவின் இயல்பெடுத்து மொழிதல் பொருள்இலார்க்கு இவ்வழிப் பொறியின் போகமும், அருள்இலார்க்கு அறத்தினாம் பயனும், நூல்வழி உருள்வுஇலா மனத்தவர்க்கு உணர்வும் போல்மனம் தெருள்இலார்க்கு இசைவிலள் திருவின் செல்வியே. 451 திருமகட்கு ஒருவர் பாலும் நிலைத்த உறவு இல்லையென்று கூறுதல் திருமகள் நிலைமையும், செல்வர்! கேட்டிரேல், மருவிய மனிதரை இகந்து, மற்றுஅவள் பொருவறு புகழினர் புதிய காமுறும்; ஒருவர்கண் உறவிலள் உணர்ந்து கொண்மினே. 452 புண்ணியம் உலர்ந்தபின், பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள்போல் எண்ணிலள் இகந்திடும் யாவர் தம்மையும்; நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே. 453 உற்றுநன்கு ஒருவர்கண் நிற்கு மாய்விடின் மற்றவர் குணங்களை மறைத்து, மாண்பிலார் செற்றமும் சினங்களும் செருக்கும் செய்திடும் கற்றவர் தம்மையும் கழற நோக்குமே. 454 ஆதலால் அவள்திறத்து அன்பு செய்யன்மின்; ஏதிலார் எனஇகழ்ந் தொழியும் யாரையும்; காதலார் ஆபவர் கற்ற மாந்தரே போதுலாம் அலங்கலீர்! புரிந்து கேண்மினே. 455 நிலமகளின் பண்பு எடுத்து மொழிதல் நிலமகள் நிலைமையும் நெறியின் கேட்டிரேல், குலமிலர் குணமிலர், என்னும் கோளிலள்; வலமிகு சூழ்ச்சியார் வழியள் மற்றுஅவள்; உலமிகு வயிரத்தோள் உருவத் தாரினீர்! 456 தன்னுயர் மணலினும் பலர்கள் தன்நலம் முன்நுகர்ந்து இகந்தவர்; மூரித் தானையீர்! பின்னும்வந் தவரொடும் சென்று பேர்ந்திலன், இன்னும்அஃது அவள்தனது இயற்கை வண்ணமே. 457 வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மொடும் உற்றதோர் உரிமைகள் இல்லள்; யாரொடும் பற்றிலள்; பற்றினார் பாலள்; அன்னதால் முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் நீர்மையே. 458 இன்னன இவள்தனது இயற்கை யாதலால் அன்னவள் பொருள்என ஆர்வம் செய்யன்மின்; மன்னுயிர் காவல்நும் மக்கள் தாங்கினால், பின்னைநும் கருமமே பேணற் பாலிரே. 459 பயாபதி தான் துறவு பூண்பதனை அவர்கட்கு மொழிதல் மீன்இவர் விரிதிரை வேலி காவல்மேல் ஊன்இவர் வேலினீர்! உங்கள் பாலதால்; யான்இனி எனக்கு அரசாக்க லுற்றனன்; தேன்இவர் அலங்கலீர்! செவ்வி காண்மினே. 460 உற்றநாள் சிலஉமக்கு என்னொடு அல்லது மற்றநாள் பல, அவை வருவ ஆதலால், கற்றமாண் சிந்தையீர்! கவற்சி நீங்குமின் இற்றையான் துணிந்ததுஎன்று இறைவன் செப்பினான். 461 அதுகேட்டு, அவன் மக்கள் தந்தையை வணங்கித் தாம் பிழை செய்ததுண்டோ என்று வினவ, அவன் ஒன்றும் இல்லை யென்று கூறி, மனைவியரை அழைத்துத் தன் கருத்தை யுரைத்து அவர் கருத்தைக் கேட்கின்றான். அவர்கள் அவன் முன்பே தவம் பூண்டுவிடுகின்றனர். அமைச்சர் துறவு மேற்கொளல் “இமைப்பதும் பெருமிகை இனிஇருந்து” என நமைப்புறு பிறவிநோய் நடுங்க நோற்கிய அமைச்சரும் அரசர்கோன் அருளி னால்தம் சுமைப்பெரும் பாரத்தின் தொழுதி நீக்கினார். 462 பின்பு பயாபதி அமரர் கொணர்ந்த பாற்கடல் அமுத நீராடி அணிந்திருந்த கலன்களை நீக்குகின்றான். பயாபதியின் மணிமுடி பாற்கடலில் எறியப்படுதல் அருமுடி துறந்தனன்; அரசன் ஆயிடைத் திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப் பருமுடி நிரையன பரவைப் பாற்கடல் “பெருமுடி! அமைக” எனப் பெய்யப் பட்டதே. 463 இவ்வாறே ஏனை அணிகள் பலவும் கழிக்கப்படுகின்றன; விசயனும் திவிட்டனும் கண்டு கண்கலுழுகின்றனர். விசயதிவிட்டர் புலம்புதல் “காதல ராயினும் காதல் கையிகந்து ஏதில ராயினம் அடிகட்கு இன்று” என ஊதுலை மெழுகின்நின்று உருகினார்; அவர் போதலர் கண்களும் புனல்ப டைத்தவே. 464 ஏனையரசரும் இவ்வாறே வருந்துகின்றனர். ஏனை உரிமை மகளிரும் இளையரும் பிறரும் பெரிதும் இணைகின்றனர். முனிவர் தேற்றுதல் நின்றிலா நிலைமையின் நீங்கி நின்றதோர் வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் இன்றுகோன் புரிந்ததற்கு இரங்கல் வேண்டுமோ என்றுதான் இளையரை முனிவர் தேற்றினார். 465 மன்னர் நீங்கி நகர்க்கு ஏகுதல் திருவுடை யடிகள்தம் சிந்தைக்கு ஏதமாம் பரிவொடு பன்னிநாம் பயிற்றல் என்றுதம் எரிவிடு சுடர்முடி இலங்கத் தாழ்ந்துபோய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார். 466 இதுகாறும் பயாபதிக்கு உறுதுணை புரிந்துவந்த வேற்படை நீங்குதல் பாற்படு செல்வமும் பரவை ஞாலமும் காற்பொடி யாகவும் கருதிற் றின்மையால் ஏற்புடைத் தன்றுநம் அடிமை ஈண்டுஎன வேற்படை, வீரனைத் தொழுது மீண்டதே. 467 பயாபதி வீட்டுநெறியாகிய தவவரசு செய்தல் வேற்படை விடுத்து வீரத் தவவரசு அதனை மேவி நூற்படை முனிவர் கண்ணால் நோக்கிய நயத்தனாகிப் பாற்படு விரதம் நோன்மைப் படைப்பெருந்தலைவர் ஐவர் மேற்படை செய்யச் செல்லும் வினைவரை விலக்க வைத்தான். 468 இவ்வரசியற்குக் குணமும் சீலமும் படைகளாய் அமைகின்றன. மூவகை யடக்கங்களும், மடலாக, ஐம்பொறியாகிய வாயில் ஐந்தையும் அடைத்து, அறிவமைந்த மனத்தை அகத்தே தொழில் புரியும் உழையராகக் கொண்டு பயாபதி தவவரசு புரிகையில், ஞானமாகிய யானையேறி, உணர்வென்னும் தோட்டிபற்றிச் சென்று வேட்கையென்னும் பகைப்புலத்தை யழித்து, வினையாகிய குறும்புகளைத் தொலைத்து, வெற்றி யெய்துகின்றான். பின்பு, தியானம் என்னும் வாளை ஏந்தி வீட்டின்பம் நல்கும் கேவலஞான மாகிய கன்னியை யடைதற்குத் தடையாக இடைமறித்து நின்ற குற்றமாகிய பகைவரைக் கொன்று வாகைபுனைந்து, மேம்படு கின்றான். அக்காலை ஞானாவரணீயம், அந்தராயம், தரிசனா வரணீயம், மோகனீயம் என்னும் பகைவர் வந்து பொருதலும், பயாபதி அவரையும் எறிந்து தீக்கொளுவி நீறாக்குகின்றான். கேவல மடந்தையைப் பயாபதி மணத்தல் நெடிதுடனாய தெவ்வர் நால்வரை நீறு செய்திட்டு அடிகள்பின் முடிவுஎன் பாளை அகப்படுத்து, அனைய ரான இடிமுரசு அதிருந் தானை அரசரோடு இங்கண் ஈண்டிக் கடிகமழ் அமரர் வீரன் கடிவினை முடிவித் தாரே. 469 அது கண்டு அமரர் பயாபதியைப் பரவிப் பாடுதல் கருமால் வினையரசு கால்தளர நூறிப் பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை ஒருவாமை வேட்டெய்தி ஊழிபெயர்ந் தாலும் வருமாறு இலாத வளநகரம் புக்கானே. 470 அலகில் பெருங் குணத்தோன் ஆவரணம் நீக்கி உலகம் அலோகம் உடனே விழுங்கிப் புலவன் முடிவென்னும் பூங்கொடியும் தானும் நிலவு சிவகதியுள் நீங்காது நின்றானே. 471 இவ்வண்ணம் கேவலக் கிழவனாகிய பயாபதியை இமையவர் வேள்வி செய்து வணங்கி வழிபட்டுத் தத்தம் இடம் அடைகின்றனர். பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல் களங்காண் வகையுடைந்து காலர் காமர் கையகல விளங்காத் திசையின்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை உளங்காண் கேவலப் பேரொளியாக இம்பர் உலகெல்லாம் துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி யானான். 472 விசயதிவிட்டர் அவனைப் பரவி வாழ்த்தல் வலம்புரி வண்ணனும் மகரமுந்நீர் மணிமேனி உலம்புரி தோளினனும் உலகமெல்லாம் உடன் வணங்கச் சலம்புரி வினைவென்ற தம்கோன் செந்தாமரை யடிக்கீழ் நலம்புரி விழாஇயற்றி நாளும் நாளும் மகிழ்கின்றார். 473 சூளாமணி முற்றும் சூளாமணிச் சுருக்கம் செய்யுள் முதற் குறிப்பகராதி \பக்க பாட்டு எண் எண் அ அகிலெழு கொழும் 30 22 அங்கண் உலகிற்கு 23 2 அங்கவவர் 164 387 அங்கு அவள் குறிப்பு 120 84 அங்கு முன் வளர்த்த 125 298 அங்கொளி விசும்பில் 122 292 அஞ்சலர் அமர்க்களம் 144 342 அஞ்சுடர் வயிர 100 227 அடிகள் அடிசில் 170 408 அடிகள் முன் 153 367 அடிநிழல் அரசரை 32 28 அடி மருங்கின் 126 302 அடுஞ்சிறைப் பிணி 182 449 அடுந்திறல் வெகுளி 131 312 அடைந்த வீரரை 105 244 அண்ணல் அம் களி 65 124 அணி தயங்கு 162 386 அணியாதும் ஒளி 48 75 அணுவளவாய் 179 439 அதிர ஆர்த்தலும் 106 248 அந்தழை அசோகம் 45 66 அந்தை தாம் உறுவது 54 94 பக்க பாட்டு எண் எண் அம்மலர் அலங்கலான் 116 274 அம்மையால் தவங்கள் 66 128 அருக்கன் தன் 96 213 அருங்கலம் உலகில் 120 285 அருந்தவம் அரைச 58 105 அருமணியின் ஒளி 178 434 அருமுடி துறந்தனன் 186 463 அருவி இலங்கு 140 336 அருள்புரி அழலஞ்சோதி 169 404 அருளும் தெருளும் 174 421 அல்லதூஉம் கரும 83 173 அலகில் பெரு 188 471 அலகுடன் விளங்கும் 166 395 அலகையில் தானை 80 170 அழற்கதிர் இயங்கு 77 157 அழற்கொடி எறித்தொறும் 51 86 அள்ளிலைக் குவளை 27 11 அளிதரு செங்கோல் 179 440 அளைந்து மார்பினுள் 108 249 அற்ற துவர்ப்பின 176 426 அறியத் தேறும் 98 219 அறியு மாயின் 103 238 அறிவர் அடிமுதல் 166 424 பக்க பாட்டு எண் எண் அறைகழல் அரவ 101 228 அன்னணம் புராண 70 138 அன்னவகை தேவி 113 268 ஆ ஆக அமைக 140 338 ஆங்கவர் மொழிதலும் 150 362 ஆங்கவன் குலத்து 88 187 ஆங்கு அவர் அணைந்த 166 394 ஆங்கு அவளோடு 156 371 ஆங்கு அவற்கு 71 141 ஆங்கு அவன் அடைதலும் 143 344 ஆங்கு அவன் இறை 79 163 ஆங்கு அவன் உரைப்ப 84 178 ஆட்டினார் 78 160 ஆதலால் அஃது 94 204 ஆதலால் அவள் 184 455 ஆதலால் அவன் 115 273 ஆதிநாள் அறக்கதிர் 69 136 ஆதியங் கடவுளை 52 88 ஆயின் மற்று அதன் 104 240 ஆயினும் சிறிதுண்டு 64 121 ஆரருள் பயந்தனை 52 89 ஆரழலான் 134 320 ஆருயிர் யாதொன்று 175 422 ஆவியாய 128 358 ஆழி இழந்த 177 430 ஆழிக்கோமான் 62 115 ஆழியாள்கின்ற 64 120 ஆள்வினை மாட்சி 167 398 ஆளிகட்கு அரசன் 100 226 ஆற்றல் என்று 57 101 ஆற்றல் வகையால் 175 425 பக்க பாட்டு எண் எண் ஆறில் ஒன்று அறம் 32 27 ஆனை துரப்ப 174 413 இ இகழ்ச்சியிற் கெடு 96 214 இஞ்சி சூழ் எரிபொன் 63 119 இந்திரன் அனைய 68 132 இப்படித் தாயின் 89 191 இமைகள் விட்ட 80 166 இமைப்பதும் 185 462 இரதநூபுரத்தை 188 305 இரும்பிடு தொடரின் 30 21 இருவகை வினைகளும் 180 442 இலைத்தடஞ் சோலை 102 234 இவரு மாமணி 104 241 இளையருட் பெரியவன் 135 322 இறைவன் ஆங்கு 85 181 இன்று எனக்கு 139 334 இன்று யான் நின்னை 90 194 இன்றை நாள் 161 384 இன்னணம் பலரும் 38 45 இன்ன நிலைமை 173 414 இன்னபோல்வன 114 269 இன்னன இவள் 184 459 இன்னன பிறவும் 131 314 இன்னுயிர் அழியும் 168 402 இனியன போன்று 168 403 இனியிருந்தென்னை 132 306 ஈ ஈங்கு நம் குலக் 60 111 ஈட்டிய ஊன்செய் 85 179 உ உட்கஆங்கு 102 232 பக்க பாட்டு எண் எண் உயிர்த்தொகை 171 411 உரிதினின் ஒருவன் 58 106 உரைசெய் நீள் 108 253 உலகங்கள் மூன்றும் 174 420 உழுது தம் கடன் 101 229 உள்ளிய மரங்கொள் 84 177 உள்ளுள் நின்று 56 98 உளது வாழி நின் 104 239 உற்றடு பிணியும் 50 83 உற்ற நாள் சில 185 461 உற்றவாள் குழவி 110 260 உற்று நன்கு 183 454 ஊ ஊடகம் ஓடி 98 220 ஊறுமே எயிறு 157 374 எ எங்கள் கோன் 89 190 எங்குலம் விளங்க 68 133 எரிபடு விரிசுடர் 40 51 எரிமணிக் கடகக்கை 150 363 எரியணிந்த 47 72 எரியும் ஆணையால் 92 197 எல்லா விரதம் 174 418 என்றலும் அதனை 145 351 என்றலும் அதுகேட்டு 138 333 என்று அவன் ஓலை 84 174 என்னைநும் ஈரலர் 109 257 ஏ ஏங்குநீர் வளாகம் 117 277 ஏட்டினார் குழலி 163 388 ஏரணங்கு 35 36 பக்க பாட்டு எண் எண் ஐ ஐயாண் டெல்லை 160 381 ஒ ஒட்டிய கலிங்கம் 112 265 ஒத்த குணங்கள் 173 417 ஒத்து இலங்கு 135 325 ஒருவனது இரண்டு 109 256 ஒளியாகி உலகாகி 169 405 ஒளியினால் பெரிய 99 225 ஒன்றுதன் செறி 151 364 ஒன்று நன்றென 55 97 ஒன்று நாம் கருதிச் 67 130 ஓ ஓடுமே மனம் 157 373 ஓரறிவாகி 171 410 ஓவலில் குணங்கள் 89 189 க கங்குல் அவண் இல்லை 177 433 கங்கை நீர் பாய்ந்துழி 53 90 கங்கை நீரன் 43 62 கட்டிய கம்மச்செய்கை 112 263 கடையில் எண் 181 446 கண்ணார் கோதை 62 116 கண்ணெனப்படுப 58 104 கண்நிலாம் கழையின் 26 9 கதி நான்கும் 179 441 கந்தாடும் மால் 160 382 கயந்தலைக் களிற்றினாய் 38 46 கரியவாய் விலங்கி 111 261 கருத்தும் மாண்குலமும் 99 223 கருமால் வினை 188 470 பக்க பாட்டு எண் எண் கலவர்தம் சிறுபறை 27 17 கலையினைக் கடந்த 134 321 கழல் அங்கு ஆர்த்தில 66 246 கழல் அணிந்து 88 188 களங்காண் வகை 189 472 கற்றவர் கடவுள் 108 254 கற்றவன் கற்றவன் 74 150 கன்னியங்காம 157 376 கன்னியர் தம் பான்மை 137 329 கன்னியர் வேட்கை 172 412 கா காட்சியும் ஞானமும் 181 445 காதல ராயினும் 186 464 காதலார் அகன்ற 124 290 காதலார் காதன்மை 123 295 காதலால் அறிவது 54 95 காதியங்கிளைகள் 50 81 காமரு கவினொளி 116 275 காமரு வலம்புரி 35 38 காரொடு கார் 134 319 காவியால் விலங்கிய 154 369 காவியும் செங்கழு 47 74 காவிவாய்க் கருங்கணார் 30 23 காளை காளொளி 106 245 கானுடை விரிதிரை 71 140 கி கின்னரர்கள் முதலாய 178 435 கு குஞ்சரக் குழவி 37 42 குரவகத்துக் குடைந்து 46 71 குரவர் என்னும் 140 337 குலகிரியும் மலையரசும் 178 436 பக்க பாட்டு எண் எண் குலத்தினும் குணத்தினும் 115 272 குலிசம் இந்திரன் 97 216 குளிறும் வாள் உழுவை 60 109 கெ கெண்டை யஞ்சினை 28 14 கே கேடில் இம் மலையின் 63 118 கொ கொங்கலர் தெரியலான் 71 142 கொங்குண்ட 57 103 கொடிச்சியர்புனத்தயல் 28 16 கொடியொடுநெடுநகர 46 70 கொதிநுனைப்பகழியான் 33 31 கொலையானை மேலோர் 147 355 கொற்றம் கொள்நேமி 24 3 கொற்றவன் குறிப்பு 90 195 கொற்றவேல் மன்னர்க்கு 59 107 கோ கோடிக்குன்றம் 150 366 கோமான் சென்று 46 69 கோவை வண்டு 45 68 கோவை வாய்க்குழல் 43 61 கோள்நலம் பொலிந்து 159 379 கோள் நின்ற மதியம் 118 281 கோள்வினை பயின்ற 167 399 ச சங்கம் மேய் தரங்க 29 19 சங்க லேகையும் 39 49 சங்க வண்ணனார் 93 201 சங்கியல் வலம்புரி 36 41 சங்கு நித்திலமும் 28 15 பக்க பாட்டு எண் எண் சந்திரரும் சூரியரும் 178 437 சந்தினால் தவிர்க்க 168 400 சயமரம் அறைந்த 164 391 சி சிறை என்பது இல்லை 118 280 சீ சீய மாயிரம் 97 250 சீற்றமொடு இரியும் 146 352 சு சுடர் மலைத் திரண்ட 158 377 சுற்றமாண்புடைமை 59 108 சூ சூழ்கதிர்ப் புரிசை 65 125 சூழும் நீர் உலகெலாம் 39 48 சூழிநீள் 71 144 செ செங்கண் நீள்முடி 94 203 செங்கண் நெடியான் 24 5 செங்கண் நெடுமாலே 170 406 செஞ்சுடர்க் கடவுள் 30 20 செம்பொன் நீள்முடி 42 58 செம்பொன்வான் 80 165 செய்யன செறிந்தன 154 370 செய்யொளிச் செக்கர் 124 291 சென்று பெருகும் 176 428 சே சேனை பண்ணமைத்து 114 267 சொ சொன்ன நீர் வளமை 29 18 சொன்ன வார்த்தை 92 196 த தக்க மிகு தானம் 177 432 பக்க பாட்டு எண் எண் தகளி வெஞ்சுடர் 78 159 தம்பி ஆற்றல் 108 252 தம்பியர் மொழி 136 326 தம்மை யுடையவர் 174 419 தலைமகன் தாள் 72 143 தளையின் விண்டு தேன் 103 237 தன் உணர் பொறி 54 96 தன்னுயர் மணலினும் 184 457 தன்னை வென்ற 96 211 தா தாது நின்ற தேறல் 79 161 தாமமென் குழலார் 94 205 தாமரை அனைய 118 279 தாழியாது எய்யும் 146 353 தானவர் அரக்கர் 128 304 தானவர் நின்னை 145 348 தானும் அடங்கி 173 416 தி திசையெலாம்தெளிந் 35 37 திருந்திய திலத 162 385 திருமகள் நிலைமையும் 183 452 திருமறுவு வலன் 48 76 திருவமர் சுரமை 71 139 திருவுடை யடிகள் 187 466 திருவொடு திசைமுகம் 159 380 திரையின் மாற்றமும் 104 236 தீ தீங்கரும்பு அமிழ்தம் 33 32 தீதறு மணிமுடி 149 359 து துன்னிய வினைப்பகை 49 80 துன்னி வந்து 132 316 பக்க பாட்டு எண் எண் துன்னு முயற்சி 173 415 தெண்திரை சிந்திய 98 221 தெ தெய்வ மனிதர் 176 429 தெய்வயாறு காந்தளம் 41 54 தெய்வமே திரிகுழல் 74 149 தெளிமுத்த மணலும் 81 167 தே தேங்குலாம் அலங்கல் 44 65 தேமிடை காவல் 119 282 தேய வினை வெல்லும் 177 431 தேனும் வண்டும் 61 114 தொடுத்தான் தொழுத 141 339 தோடு மல்கு 95 209 தோள்களைப் புடைத்து 129 307 ந நகர மாசனம் 103 242 நங்கை தோன்றிய 44 64 நா நாம் இனி மற்றவன் 39 50 நாமாண் புரைக்கும் 24 4 நாளினும் திறை 101 230 நி நிலமகள் நிலைமையும் 184 456 நிலாவளர் நிழற்கதிர் 77 158 நிறைதரு கேவலத்தோய் 87 184 நின்றிலா நிலைமையின் 186 465 நின்னை அறிவன் 137 329 நூ நூலாராய்ந்து 61 113 நூற்பொருள் கேட்டு 176 427 பக்க பாட்டு எண் எண் நெ நெடிதுடனாய 174 469 நெய்த்தலைப்பால் 149 390 நெய்யுற்ற வேலும் 122 335 நெறிதலை திரிவி 129 354 ப படைக்கல விகற்பும் 130 311 படையென்றலுமே 133 318 பண்களை மருட்டும் 119 283 பண்ணமை மகர 37 44 பண்மிசைப்படர்ந்த 87 186 பருவத்தால் அரும்பி 125 300 பளிங்கு போழ்ந்து 31 24 பனிவரைப் பாங்கரும் 123 294 பா பாழியான் மெலிந்தவர் 101 231 பாற்படு செல்வமும் 187 467 பி பிடிகளை மகிழ் 73 148 பிணிபடு பிறவி 182 450 பிறந்தவன் பொறி 181 443 பிறந்தனர் பிறந்து 166 396 பிறவிச் சக்கரம் 181 444 பீ பீழைமை பலவும் 168 401 பு புண்ணியம் உலர்ந்த பின் 183 453 புணர்கொண்டெழு 76 155 புலவர் சொல்வழி 105 217 புழைக்கை மால் 105 243 புனைவுதான் 163 389 பக்க பாட்டு எண் எண் பூ பூக்களாவன 40 52 பூவையம் புதுமலர் 36 40 பெ பெண்ணிலாம் தகை 34 35 பெருகிய மிகுதிறல் 149 361 பெருமகன் உருகும் 33 33 பெற்றதன்முதலா 96 212 பே பேழ்த்த காயின 26 10 பொ பொடித்தலை 103 235 பொருபடை 130 310 பொருமாலை 151 365 பொருள் இல்லார்க்கு 183 451 பொன்று இவ்வுடலின் 141 340 பொன்னவிர் திகிரி 132 315 பொன்னை அணி 136 328 போ போதனத்து 82 172 போதுலாய 79 162 போற்றி நம் 109 258 ம மகரம் மால் கடலை 109 309 மங்கல வனப்பின 124 297 மங்குல் மாமழை 93 200 மங்கையர் இருவராகி 34 34 மங்கையர் முகத்தின் 65 126 மஞ்சிவர் மணம் 86 182 மஞ்சுசூழ் மணிவரை 25 1 மண்கனிந்த 94 206 மண்கனி முழவ 66 127 பக்க பாட்டு எண் எண் மண்டணி மாநில 133 317 மண்ணருங்கலம் 53 92 மண்ணியல் வளாகம் 121 287 மண்ணுள் வாழ்சிதலை 145 349 மண்மிசை மகளிர் 121 286 மணம்கமழ் மது 69 134 மணம் மயங்கு 49 78 மணவாய மல்லிகை 123 293 மணித்தொழில் வளைந்த 112 264 மணி மலர்ந்து 182 447 மதியினை மலர 99 224 மது மகிழ்வன 76 154 மந்தரமா நெடுமலை 179 438 மந்திரக் கிழவர் 90 192 மரு இனியன 75 152 மல்மலர்ந்தகன்ற 38 47 மலைபயில் களிநல் 167 397 மலையெடுத்திடுகோ 137 331 மலையெடுத்திவாய் 138 332 மற்ற நெடுமால் 156 372 மற்றம்மா நகருடை 31 26 மற்றமா நகர்க்கு 41 56 மற்றவர் அடைந்த 81 168 மற்றிம் மாண்பு 90 193 மற்று அவற்கு உரியள் 61 112 மன்ன கேள் வளை 95 210 மன்னர்கள் சொரிந்த 124 296 மன்னவ குமரரோடும் 82 169 மன்னவன் பணியொடு 74 151 மன்னவன் மடமகள் 51 85 மன்னிய பகைக்குழாம் 57 29 மன்னிய முனிவன் 108 84 பக்க பாட்டு எண் எண் மன்னும் நீர் 45 102 மன்னுயிர் வருத்தம் 87 255 மா மாஞ்சினை கறித்த 45 67 மாண்டதன் நிலைமை 87 185 மாதராள் சுதாரை 165 393 மாந்தளிர் இங்கு 47 73 மாயமாய நின்றான் 43 60 மாலும் ஆங்கு 135 323 மாவினை மருட்டிய 73 146 மாறலா மனிசர் 145 350 மானமாமணி 141 341 மி மின்தொடர்ந்து 102 233 மின்னவிர் மணிமுடி 73 147 மின்னின் ஆர்ந்த 114 270 மின்னும் செங்கதிர் 95 208 மினல்கொடி விலங்கிய 77 156 மீ மீன் இவர் விரிதிரை 184 460 மு முகைத்தவார் முல்லை 52 87 முளைந்தவாள் 135 324 முன்தவ முடைமை 60 110 முன்னமோர் கருமம் 83 175 முன்னிய உலகுகள் 70 137 முனிவருட் பெரியவன் 49 79 மூ மூடி யிட்டன 106 247 மெ மெய்ப்புடை தெரிந்து 85 180 மெய்ப்பொருள் தெரிதல் 50 82 பக்க பாட்டு எண் எண் மே மேலவர் மெய்ப்பொருள் 32 30 மை மையணி வரையின் 54 93 மையில் வானுலகு 64 123 மோ மோடுகொண்டெழு 27 12 பக்க பாட்டு எண் எண் யா யாதும் மற்று அதற்கு 107 251 யானும் அங்கு 109 259 வ வடிய வானவன் 42 59 வடுவறு மாதவன் 182 448 வண்டு அவாம் முடி 64 122 வண்டு சூழ் மலர் 44 63 வண்தார் மணிமுடி 148 357 வணங்கி இவ்வுலகம் 159 378 வணங்கி வையம் 126 303 வரிகழல் மன்னர் 164 392 வருதற்கு முதலும் 117 278 வரைகளும் மரனும் 143 346 வரைமலி வயங்கு 84 176 வரையின் மேல்மதி 41 53 வரையொடு வரையென 143 345 வரை வேந்தன் 126 301 வலம்புரி சிலம்ப 144 347 வலம்புரி வண்ணனும் 189 473 வலம்புரி வற்றிடை 72 145 வலியும் அடுதிறனும் 149 356 வழிமுறை பயின்று 37 43 பக்க பாட்டு எண் எண் வளர்கொடியன 76 153 வன்ன மணிமுடி 170 407 வா வாடலில் கண்ணியன் 36 39 வாதம் வெல்லும் 154 368 வாரணி... முரசம் 67 266 வாவியும்மது 95 207 வாழ்க நம்மன்னவன் 160 383 வாள்வலித் தடக்கை 56 100 வாளினால் செரு 129 308 வான்இலங்கருவிய 25 8 வானகத்து இளம் 53 91 வானநெறி எங்கும் 125 299 பக்க பாட்டு எண் எண் வானவர் மருள 131 313 வானோர் உட்கும் 62 117 வி விச்சையாய முற்றினான் 42 56 விஞ்சைக்கு இறைவன் 25 6 விஞ்சையன் எழுந்து 82 171 விட்டெரி மணிவரை 149 360 விண்ணிடை இழிந்து 117 276 விண்ணியல் உருவ 121 288 விரை மணந்த 48 77 விலத்தகைப் பூந்துணர் 31 25 பக்க பாட்டு எண் எண் வீ வீங்குநீர் உலகம் 56 99 வீவிலங்கண்நீர் 92 199 வீழ்புரி புளங்கும் 67 131 வெ வெண்கதிர் முத்தகில் 99 222 வெண்ணிலாக்குழவி 111 262 வெய்யவன் என்னும் 122 289 வெள்நிலா விரிந்தென 69 135 வெளியவன் மிளிர் மரை 142 343 வெற்றி வெண்குடை 42 57 வெற்றிவேல் மணிமுடி 184 458 வெறிமின் விரிகின்ற 136 327 வென்றான் வினையின் 23 1 வே வேண்டுப அவன் 115 271 வேண்டுமே மனம் 157 375 வேல்கொள்தானை 80 164 வேவார் அழலுள் 171 409 வேழத்தின் மருப்பு 97 215 வேற்படை விடுத்து 187 468 வை வையம் இன்புறின் 92 198 வையினும் வாழ்த்தினும் 175 423 குறிப்புகள் * Page 92, Indian Antiquary for 1912, ** See footnote 5 of page 26 of the Translations Epigraphica Carnatica Vol.II. † Inscriptions at SaravanBelgola. P.44. Introduction. * “Gaihitapakshad itarah paras syat tad-vadinas to para-vadinas syuh. Tesham hi mallah para-vadi-mallas tan-nama man-nama vadanthi Santah. (The position other than the one, paravadinah; he who wrestles with them is paravadi malla: this name, good men say, my name)” (Ins. 67-54 of Epigraphica Carnatica. Vol.II). * ஆருகத மாபுராணம் என்பது ஜினசேனர் குணபத்திரர் என்ற இருவராலும் எழுதப்பட்டதாகும். ஜினசேனர் முதல் 42 அதிகாரங்களும் குணபத்திரர் பின்னைந்தும் எழுதியதாகக் கூறுவர். இவர்கள் இருந்த காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. பத்தாம் நூற்றாண்டில் (கி.பி.965) புட்பதந்தரென்பவரால் ஒரு மாபுராணம் எழுதப்பட்டுள்ளது. இவர்தான் நாககுமார காவியத்தையும் யசோதர காவியத்தையும் எழுதியவர். பதினோராம் நூற்றாண்டில் மல்லிசேன ரென்பவரால் ஒரு மாபுராணம் எழுதப்பட்டுள்ளது. இவற்றுள் எவர் எழுதிய புராணத்தைத் தோலாமொழித் தேவர் பின்பற்றினாரென்பது தெரியமுடியவில்லை. இப்புராணம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர், பன்னிரு சக்கரவர்த்திகள், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதி வாசுதேவர் ஒன்பதின்மர், ஆக அறுபத்துமூவர் வரலாறுகளையும் இயைபுடைய பிறர் வரலாறுகளையும் கூறுவதாகும் என்று மோரீஸ் வின்டர்னிஸ் (Maurice Winter nitze) என்ற ஜர்மானியர் கூறுகின்றார். A History of Indian Literature P.474, 497, 637.) *நாடு நகரங்களை வியந்தும் புனைந்தும் ஓதும் தனித் தனிப் பகுதிகள், நாட்டுச் சருக்கம், நாட்டுப் படலம், நகரச் சருக்கம், நகரப் படலம் என்ற பெயரால், காலநெறியில் வைத்து நோக்குவோமாயின், கந்தபுராணத்தும் கம்பராமாயணத்தும் முதன் முதலாகக் காணப்படுகின்றன. இவ்விரண் டிற்கும் முன்னையவற்றுள் இவையில்லை. இம்முறையே நோக்கின், இச் சூளாமணி, இவை யிரண்டிற்கும் முன்னோ பின்னோ தோன்றியிருக் கலாமென்றும், திருத்தக்கதேவர் சேக்கிழார் என்ற சான்றோர் காலத்துக்கு முற்பட்டதாகாதென்றும் நினைத்தற்கு நல்ல இடமுண்டாகின்றது. * The mechinery of Government. 1. வினையின் வென்றான் என்க. “வினையின் நீங்கி விளங்கிய அறிவன்” என்பதாம். பொருள்கள் கணந்தோறும் பங்கப்படுதலின், அவற்றை ஒருங்கே உணரும் வன்மை பற்றி, “ஒன்றாப் பரந்த உணர்வின்” என்றார். ஒழியாது முற்றும் சென்றான் - ஒவ்வொன்றிலும் சிறிதும் தவிர்வின்றி உண்மைத் தன்மையை உள்ளவாறு கண்ட காட்சிகள் முடைமையின், எப்பொருளிடத்தும் யாண்டும் நுழைந்த அறிவுடையவன், “வெம்புஞ் சுடரிற் சுடரும் திருமூர்த்தி” (சீவக) என்பவாகலின், திகழும் சுடர் குழொளி மூர்த்தியாகி நின்றான்” என்றார். வினையை வென்றான் அடிபணிந்தார் பெறும் பயனும் அதுவே யாதலின், அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்” என்றார். தொகையாய் என்றும் பாடம். வென்றானும் சென்றானுமாகிய ஆதிபகவனுடைய அடிக்கீழ்ப் பணிந்தார் நின்றார் என முடிக்க. 2. அங்கண் - இடம் அகன்ற, வான் சுடர் - பேரொளி, வெங்கண் வினை - கொடிய வினை, போழ்ம் - போழும்; பிளந்தெறியும், செய்யுமென்னும் வினை ஈற்றுமிசையுகரம் மெய்நிற்பக் கெட்டது. திரு - கேவல ஞானம் மதர்வை - செருக்கு, அரியேறு - சிங்கம், செங்கண் நெடியான் - திவிட்டன், சென்ற, போழ்ந்த என அடுக்கி நின்ற பெயரெச்சம் நெடியான் என்னும் பெயர் கொண்டன. 3. கொற்றம் - வென்றி, நேமி நெடுமால் - சக்கரத்தை யேந்திய நெடுமாலான திவிட்டன், குணம் - வரலாறு, காதல் கிளர - ஆர்வம் தூண்ட, தமிழ் நூற்கலுற்றேன்- தமிழ் நூலைச் செய்யத் தொடங்கினேன். நுங்கள் - அவையோரை நோக்கிற்று. அற்றங்கள் - குற்றங்கள், அறிவிற் பெரியார் பிறர் குற்றம் காணார் என்பதாம். 4. நாம வென் வேல் - அச்சம் தரும் வெற்றி பொருந்திய வேல், அலங்கல் - மாலை, நெடுஞ் சேந்தன் - தோலாமொழித் தேவரை யாதரித்த வள்ளல், தூமாண் தமிழின் கிழவன் - தூய மாட்சிமைப்பட்ட தமிழ்த் தலைவன், தெருண்டார் - தெளிந்த புலமை யுடையோரால். 5. பேசிய - சொல்லுதற்கு, மறு - குற்றம், போழ்ந்து - கெடுத்து, திங்கள் மறு - சந்திரனிடத்துக் களங்கம், சிலர் - இவர் பெரும்பாலும் மகளிர். 6. விஞ்சைக்கு இறைவன் - சுவலனசடியரசன், விரை - நறுமணம், மங்கை - சுயம்பிரபை, அனுங்கும் - வருந்தும், சிலம்பு ஆர் அடி - சிலம்பு அணிந்த பாதம், செஞ்சொற் புராணம் - செவ்விய சொற்களாலான ஆருகத மாபுராணம், சேறும் - செல்வேம். 7. மஞ்சு - மேகம், வரை - கோடிக் குன்றம் என்னும் மலை, மால் - திவிட்டன், இஞ்சி - மதில், இருக்கை நாடு - இருக்கையையுடைய நாடு, விஞ்சைநீள் உலகு - வித்தியாதரர் உலகு, துஞ்சுநீள் நீதி - யாவரும் செல்வராதலால் இரப்பாரின்மையின் கொள்வோர் இன்றிப் பெருகியிருக்கும் மிக்க செல்வம் உடையது. 8. வரை அருவிய - மலைகள் அருவிகளை யுடையவாம். இது குறிஞ்சி, திணை - முல்லை நிலம், தேறல் - தேன், பானல் - சுருங்குவளை, பாங்கு - பக்கல், நால் நிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலத்துக்கு அணியன்மையின் விலக்கப்பட்டது. பொன் நரலும் - பொன் கொழிக்கும். 9. கண் - கணு, கழை - மூங்கில், கதிர்க்கற்றை - மூங்கில் நெல்லின் கதிர்க்கற்றை, குரல்வார் தினை - கதிர் பெருகிய தினை, வாரி - வருவாய், தினையாகிய வருவாய் என்க. ஆங்க - அவ்விடத்து; அ. சாரியை, விளைவன ஈட்டம் - விளைபொருளின் கூட்டம்; உண்ணில் - உண்டு நுகர்ந்த போதும். உலவாமை - குறையாமல். 10. பேழ்ந்த - பிளவுபட்ட, பிறங்கு இணர் - உயர்ந்த கொத்து, துவரையின் காய் மொய்த்துக் கொத்தாய் இருத்தலின் “சூழ்த்த காயின துவரை” என்றார். மூழ்த்த போன்று உள - முற்றாப் போதிலும் முற்றின போன்றுள. 11. அள்ளிலைக்குவளை - செறிந்த இலைகளையுடைய குவளை, தடம் - நீர் நிலை, அசைஇ - தங்கி, கள்ளலைத்த கவுள் கருமேதி - தேன் படிந்த கன்னத்தையுடைய கரிய எருமை, உள் அலைத்துப் பால் ஒழுக - உள்ளத்தே கன்றின் நினைவு எழுந்து வருத்த அதனை நினைந்து பால் சொரிய, குடைந்து - படிந்து, புள் - அன்னங்கள், புனல - நீரையுடையவாம், புலங்கள், மேதியின் பால் ஒழுக, புள் உண்டலால் அலைத்த புனலவாம் என்க. 12. மோடு கொண்டு - அடி பருத்து, மூரி - வலிய, ஊடுகொண்ட - இடை யிடையே யுடைய, பொதும்பர் - சோலை, உள்விராய் - உள்ளே விரவி; தோடு கொண்ட - தொகுதி தொகுதியாகவுள்ள, பைங்காய் - பசிய நெற்கதிர், துவள் செந்நெல் - தாங்கமாட்டாது துவளும் செந்நெல், கண் அகல் நாடு - இடம் விரிந்த நாடு. 13. கலவர் - இசைக் கருவி கொண்டு இசை யெழுப்புவோர்; மரக்கலம் செலுத்தும் பரதவருமாம். கடலச் சிறார் - பரதவர் சிறுவர், நீர்பொருபூண் - கடல் நீரில் மீன் பிடிக்கும் தூண்டில், பூசல் - ஆரவாரம், கானல் வாய் - கடற் சோலையில், ஓதம் - அலை, 14. கிளர்ந்து - எழுந்து, முண்டகத் துறை - முண்டகம் வளர்ந்துள்ள நீர்த்துறை, முண்டகம் - முட்செடி; முள்ளியுமாம், முதலைமா - முதலைகள்; இளம்பூரணர் முதலாயினார் இந்நூலாசிரியர்போல முதலையை மா என்பராயினும், அடியார்க்கு நல்லார் மறுப்பர். வண்டல் வார் கரை - வண்டல் படிந்தொழுகும் கரை, கனலும்- சினக்கும். 15. நித்திலம் - முத்து, தெங்கந் தீங்குரல் - தெங்கினது குலைகள், தேறல் - தேன், வங்க வாரி - கப்பல்மூலம் வரும் வருவாய், வார் அலை - அலைகளால் கொணரப் படும், வாரி - வருவாய், தங்குவாரிய - நிலைபெற்ற வருவாயினை யுடையவாம். 16. கொடிச்சியர் - குற மகளிர், நெய் பகர் - நெய் விற்கும், கதுப்பயல் - கூந்தலிடத்தே, ஏழையங் கடைச்சியர் - ஏழைகளான உழவர் மகளிர், தொடுத்து அலர் பிணையலார் - மலரைத் தொடுத்து மாலை கட்டி யணியும் பரதவர் மகளிர். 17. கலவர் - பரதவர், இசையின் - ஒலிக்குமாயின், கைவினைப் புலவர் - கைத்தொழில் புரியும் உழவர். தேம்பிழி - வடித்த தேன், குரவை பொங்கும் - குரவைக் கூத்து மிகும். குலவுகார்க் கோவலர் - கார் வரவே விரும்பும் இடையர். கொன்றைத் தீங்குழல் - இடையர் வாய் வைத் தூதும் ஒருவகைக் குழல். அசுணமா - ஒருவகைப் பறவை. பரதவர் சிறுபறை கேட்டு உழவரும் குறவரும் குரவை அயர்வர்; கோவலர் குழலிசை கேட்டு, அசுணப் புள் உறங்கும் என்க. 18. சொன்ன - மேலே சொல்லிய, அகணி - உள்ளிடம், நூலவர் - அரண் அமைத்தற்குரிய நெறியுணர்த்தும் நூலையறிந்த புலவர். “உயர் வகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்” (குறள் 743) எனத் திருவள்ளுவனார் கூறுதல் காண்க. பொன் அவிர் புரிசை வேலி - பொன்னின் ஒளி விளங்கும் அரணை வேலியாக வுடைய, நகுவ தொத்து - இகழ்வது போன்று. நாகலோகத்தை நகுவது என்க. நாகலோகம் - தேவருலகம். 19. தரங்கவேலித் தடங்கடல் - அலையை வேலியாகவுடைய பெரிய கடல். அங்கண்மா ஞாலம் - அழகிய இடமகன்ற பெரிய நிலம். அங்கேழ்ச் செங்கண்மால் சுரமை - அழகும் செம்மையும் பொருந்திய இடம் கொண்ட பெரிய சுரமை. தேம் பொகுட்டு - தாமரையின் நடுவிலுள்ள இனிய பொகுட்டு. நங்கையார் - திருமகள், நலத்தது - அழகை யுடையது. கடல் - பொய்கை; மண்ணுலகு - தாமரைப் பூ; சுரமை - பொகுட்டு; போதனமாநகரம் - நங்கையார். 20. செஞ்சுடர்க் கடவுள் - சூரியன், இவுளி - குதிரை, திவள - சோர்வு நீங்க, மதர்வை நெற்றி - அழகிய சிகரம். மஞ்சு - மேகம், வான் உழுவாயில் - வானத்தை அளாவியெழும் வாயில். இஞ்சி - மதில், அலர்ந்த தோற்றம் - விளங்கிய தோற்றம், வேதிகை - மேடை., மீது இட்டன்று - மேலே இட்டது போலாம். 21. இரும்பிடு தொடர் - இரும்பால் இயன்ற சங்கிலி, எழுமுதல் - கம்பத்தின்கண், கம்பலை - முழக்கம், அல்லி - தாது, சுரும்பொடு துதைந்து - வண்டுகளின் ஒலியொடு கலந்து, இருக்கை யெல்லாம், கம்பலை சுரும்பொடு துதைந்து தோன்றும் என்க. 22. அகில் எழு கொழும் புகை - அகிற்கட்டையை எரித்தலால் எழும் புகை. மஞ்சின் - மேகம்போல, முகில் இசை - மேக முழக்கம், முரன்று - ஒலித்து, விம்ம - மிக, துகிலிகை - துகிற்கொடி, கொடியனார் - கொடி போலும் மகளிர், இகலின - ஒருபுடை யொத்தும் ஒவ்வாதும் மாறு கொண்டன. 23. காவிவாய் - கருங்குவளை நிகர்க்கும், கருங்கணார் - மை தீட்டிய கண்ணையுடைய மகளிர், ஆவிவாய் மாளிகை - அகிற்புகை கமழும் மாளிகை, அதிர - ஒலிக்க, தூவி வான் பெடை - தூவிச் சிறகு (Downy feathers) களையுடைய பெடையன்னம், வாலி - நீர் நிலை. 24. போழ்ந்து - பிளந்து, பலகை வேதிகை விளம்பு தோய் நெடுங்கடை - பளிங்குப் பலகை மேடையின் விளிம்புகாறும் கலந்துள்ள நெடிய கடைவீதி, துளங்கு - அசையும், கற்பக வனம் - வானுலகத்துக் கற்பகச் சோலை. 25. விலத்தகைப் பூந்துணர் - விரல்கள் பிரிவுண்ட கைகளைப் போன்ற அழகிய பூங்கொத்துக்கள், நலத்தகை - அழகு தக்கிருக்கின்ற, நவில - விளிங்க, அலத்தகம் - செம்பஞ்சி, புலத்திடை - நீரிலன்றி நிலத்திடத்தே, தோய்ந்து - தோய்தலால், கோதையர் ஊட்டிய குழம்பு தோய்தலால், தாமரை புலத்திடைப் பூத்த போலும் என்க. 26. குடைநிழல் உலகிற்கு - குடை நிழற்கீழ் உள்ள உலகத்துக்கு, உயிர்பெற்றியான் - உயிராகும் தன்மையுடையவன், பேர் - பெயர், வேலும் முடியும் உடைய வேந்தர் வேந்தன் என்க. 27. ஆறில் ஒன்று அறம் - ஆறில் ஒரு பகுதி இறையாகக் கொள்வதே அரசர்க்கு அறமாம். ஊறு செய்து - துன்புறுத்தி, உவப்பது - கொண்டு மகிழ்வது, மாறி நின்றவர் - அரசனொடு மாறுபட்ட சிற்றரசர், சீறி நின்று - சினம் கொண்டு, செகுப்பது - ஒறுப்பது. 28. அடி நிழல் - பயாபதியின் திருவடி நீழல், அளிக்கும் - அருள் செய்யும். ஆய்கதிர் - அழகிய ஒளி திகழும். சரணம் மூழ்கும் - திருவடியை வணங்கும். வடிநிழல் - வடித்த, எஃகு - வேல், உலகெலாம் குளிர - சுரமை நாட்டவர் மனம் குளிர்ப்பெய்த. 29. மன்னிய - உட்பகையாய் நிலைபெற்ற, ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம். துன்னிய - நெருங்கிய, பகைத் தொகை - நாட்டின் நலத்துக்கு ஆகாவென விலக்கியன. (குறள் : நாடு, காண்க.) மருள வேண்டுமோ - மயங்க வேண்டா என்பதாம். 30. மேலவர் - முனிவர், வீறுசால் நூல் - சிறப்பமைந்த நூல், பெரியவர் - அமைச்சர், நுழைந்த சுற்றமா - நுண்ணிய சூழ்ச்சி கூறும் மந்திரச் சுற்றமாக, ஆலும் நீர் அன்னம் - குணம் தேர்ந்து மகிழும் தன்மையினையுடைய, பொதுமை நீக்கினான் - எல்லார்க்கும் பொதுவென்பது விலக்கி, வலியுடையார்க்கே உரியது எனக் கொண்டு ஓம்பினான். 31. கொதி நுனைப் பகழி - வெதுப்புகின்ற நுனியையுடைய அம்பு, குறிப்பின் அல்லது - குறிப்பினால் அறிந்து கொள்வதல்லது. இசைக்க - சொல்லுக. எண்ணிலார் - நினைக்கும் இயல்புடையரல்லர். நொது மலர் - அயலார், நட்பும்பகைமையும் இல்லார், வெறாவுறா - அஞ்சுதல் இல்லாத, நுவற்சியாளர் - சொல்லாளர், பகுதி - அரசச் சுற்றம். 32. தீங்கரும்பு - இனிய கரும்பு, ஊட்டி - கலந்து, அளாய் - விரவி, பிழிந்த போலும் இன்சொல் என இயைக்க, ஓங்கு இருங்கடல் - உயர்ந்த பெரிய கடல் போன்ற, அணங்குறுக்கும் - வருத்தும், குவவு - திரண்ட, வீங்கு - புடை பரந்த, மிக்க தேவி - முதல் தேவி, பட்டத்தரசியாம், தாங் கரும் கற்பு - பிறரால் தாங்கமாட்டாத கற்பு நலம், சசி - இந்திராணி. 33. பெருமகன் - பயாபதி, பெண்மை மாண்பு - பெண்ணலம், கூடுந்தோறும் புத்தின்பம் கண்டு ஆராமை யெய்துதலின், “நாளும் மருவினும் புதிய போலும்” என்றார். புலமையாக்கும் - அறிவை மிகுவிக்கும் கலைமகள். 34. அமர்ந்ததெல்லாம் அமர்ந்து - விரும்பியதெல்லாம் தானும் விரும்பி, மதர்த்த - செருக்கிய, வாட்கண் - ஒளி பொருந்திய கண், சக்கரன் - சக்கரமேந்தும் திருமால், தகையன் - சிறப்பினை யுடையவன், திருமால் கண்ணாய்த் தோன்றித் தான் ஒருவனே பல மகளிர்க்கு இன்பம் அருளிய செய்தி ஈண்டு உவமம். 35. பெண் நிலாம் தகை - பெண் தன்மைக்குப் பொருந்திய நலங்கள், களிவளர் உவகை - மகிழ்ச்சி சிறக்கும் உவகை. கைம்மிக - மிகுதியுற, தண் நிலா - குளிர்ச்சி நிலவுகின்ற. வெள் நிலாச் சுடர் ஒளி - வெள்ளிய ஒளி திகழும். இதனால் விசயன் திங்கள்போல வெள்ளிய ஒளிகாலும் வெண்மையான மேனியுடையனாய்த் தோன்றியவாறு காண்க. 36. ஏர் அணங்கு - அழகு பொருந்திய. நாள் உற - நல்ல நாளும் கோளும் பொருந்த. அவிர் ஒளி - விளங்குகின்ற ஒளி. நீர் அணங்கு - நீரில் தோன்றுகின்ற. வளை நிரந்து விம்மின - சங்குகள் மிகுந்து முழங்கின. ஆர் அணங்கு அலர் மழை - அழகு பொருந்திய பூமாரி. 37. தெளிந்தன - தெளிவு அடைந்தன. தேவர்...இயன்ற; தேவரது பொன்னகரம் அதற்குரிய புகழ் முழுதும் நன்கு நிலைபெறுமாறு பெரும் விழாக்கள் செய்யப் பெற்றன. ஏற்பவர் நசை - இரப்பவர்களின் அவா; அவிந்தன - அடங்கின. நலியும் - உயிரை விடாது தொடர்ந்து வருத்தும், தீவினைப் பசை - தீவினையாகிய பற்று. 38. காமரு வலம்புரி - அழகிய வலம்புரிச் சங்கு, கமழும் - நிகர்க்கும். தடுத்த - ஒத்த, கண்ணினன் - கண்களையுடையன். தூமருள் இருள்துணர்ந்த அனைய குஞ்சியன் - தூய்மை மருளுதற்கு ஏதுவாகிய இருள் கொத்தாகத் திரண்டது போலும் தலைமயிரை யுடையன். தூய்மை வெண்மையாகலின், அதற்கு மாறாக கருமை இருளைத் “தூமருள் இருள்” என்றார். பூமரு போலங் குழை - பூத் தொழில் செய்யப்பட்ட பொற் குழை. 39. வாடலில் கண்ணியன் - வாடுதல் இல்லாத தலைமாலை யணிந்தவன். மலர்ந்த - விரிந்த. தாள் தவழ் தடக்கை - முழந்தாள்காறும் நீண்டு விளங்கும் பெரிய கை. கோடு உயர் குன்றென - உயர்ந்த உச்சியினையுடைய குன்றுபோல. பீடுடை நடை - சிங்கவேறு போலும் பெருமித நடை. 40. பூவையம் புதுமலர் - காயாம்பூ. புரையும் - நிகர்க்கும். தூவிரி தாமரை - தூய மலர்ந்த தாமரை. தொலைத்த - வென்ற; ஒத்த. தீவிரி ஆம்பலின் - நெருப்புப்போல் சிவந்த ஆம்பற்பூ. மாவிரி - அழகு பொருந்திய. திருமறு - திருவீற்றிருக்கும் மறு; “மாமறுத்த மலர் மார்பு” என்றாற் போல. 41. சங்கு இயல் வலம்புரி - சங்கின் இனமாகிய வலம்புரிச் சங்கு. திகிரி - சக்கரம். தங்கிய - சங்கு சக்கரம் என்ற இவைபோலும் இரேகை பொருந்திய. அடித்தண் போதினன் - குளிர்ந்த தாமரைப் பூப் போன்ற பாதங்களையுடையன். மழ களிறு - யானைக் கன்று. செல்கை - நடை. இளையநம்பி - திவிட்டன். 42. குஞ்சரக் குழவி - யானைக் கன்று. மதிக்கோடு - திங்களின் பிறை. எயிற்ற ஆளி - பற்களையுடைய சிங்கம். மலர ஊன்றி - விளங்கித் தோன்ற அமைத்து. செல்வன் - பயாபதி. வெஞ்சுடர் உதயத்து உச்சி - வெவ்விய ஒளியையுடைய உதயகிரியின் உச்சியில். வெய்யவன் - சூரியன். 43. வழிமுறை பயின்று வந்த மரபினார் - வழி வழியாக வந்த முதுகுடிப்பிறந்து மறத்துறை பயின்ற இயல்பினையுடையர். விழுமலர் - உயர்ந்த தாமரை மலர் போலும். வென்ற நீரார் - புலன்களை வென்ற தன்மையுடையர்; போர் பல வென்ற சிறப்புடையர் என்றுமாம். எழு - தூண். உழையவர் - பக்கத்தார். ஓடைமால் களிறு - முகபடாம் அணிந்த பெரிய யானை. 44. பண் அமை - பண்ணுக்கென அமைந்த; பாடற்கு இயைந்த. பனுவல் - பாடல். மண்ணமர் வளாகம் எல்லாம் - நிலவுலக மெங்கும். மலர்ந்த - விரிந்த.திங்கள் வெண்குடை - திங்கள் போன்ற வெண்கொற்றக்குடை. கண்ணமர் உலகம் - கண்போல் விரும்பப்படும் உலகத்தை. 45. இன்னணம் - இவ்வாறு. பொன் அணி வாயில் - பொன்னால் அணி செய்யப் பட்ட வாயில். பூங்கழலவன் - பூவேலை செய்யப்பட்ட கழலையுடைய காவலன். என்னவரேனும் - எப்படிப்பட்டவ ராயினும். கல்நவில் தோளினாய் - கல்லொடு பொருது பயின்ற தோளை யுடையவனே. 46. கயந்தலைக் கயிறு - பெரிய தலையையுடைய யானை. அது நயந்து தெரியின் - அதனை விரும்பி யாராய்ந்து பார்க்கின். நளி - பெரிய. வேழம் - யானை. வெண்போது சேர்ந்த தயங்கு ஒளி மாலை - வெள்ளிய பூக்களால் அமைந்த விளங்குகின்ற ஒளியினையுடைய மாலை. 47. மல் மலர்ந்து அகன்ற மார்ப - மற்போர் செய்தலால் விரிந்த மார்பை யுடையவனே. நகை கொள் கண்ணி - ஒளி பொருந்திய மாலை. நாமம் ஏத்தி - பெயரைப் பாராட்டி. மின் மலர்ந்து இலங்கு பைம்பூண் - ஒளி விரிந்து விளங்கும் பசிய அணிகள். 48. நீர் சூழும் உலகெலாம் - கடல் சூழ்ந்த உலக முழுதும். நிரந்து - பரத்தலால். கண் படுக்கும் - கண் துயில் கொள்விக்கும். ஆழியங்கிழவனாய் - சக்கரமேந்தும் தலைவனாய். அலரும் - விளங்குவான். பாழி - வலிமை. 49. லேகை - இரேகைகள். சங்கபாணி - சங்கேந்தும் கையையுடையவன். அறையல் வேண்டும் - சொல்ல வேண்டும். 50. தேமரு சிலாதலம் - தேன் துளித்து மணம் கமழும் பளிக்கு மேடை. திருத்தி - திருந்த அமைத்து. தூமரு மாலை - தூய மணம் வீசும் மாலை. காமரு - விருப்பம் உண்டுபண்ணுகின்ற. 51. எரிபடு விரிசுடர் - நெருப்புப்போல் ஒளி விடுகின்ற. வரிபடு மதுகரம் முரல - வரிகள் பொருந்திய வண்டினம் பாட. வார்சினை - நீண்ட சினைகளிடத்தே. சொரிபடும் - சொரியும். 52. பொன்மரை - பொற்றாமரை. வீக்கு வார்கழல் - கட்டுகின்ற நீண்ட வீரகண்டை யணிந்த. ஊக்கி - உள்ளம் மிகக் கிளர்ந்து. 53. வரை - மலை. மதிக்கோடு - திங்கட் பிறை. உற - உரிஞும் படியாக. திருவ - திரு, அகரம் சாரியை, அழகிய என்பது பொருள். உரை செய் பொன் நகர் - புலவர் புகழ்ந்துரைக்கும் அழகிய நகரம். என்ப - அசை. 54. யாறும், சிலம்பும், பொழிலும், பறம்பும், மண்டபமும் என்ற இவை முறையே தெய்வத்தன்மையும், காந்தட்பூவும், தேனும், முத்த மணலும், மௌவலும் கொண்டு இன்பமாக்குவன என்க. பௌவம் - கடல். பறம்பு - மணற் பரப்பு. மௌவல் - மல்லிகை. எவ்வமாடும் - எவ்வெவ்விடங்களும். மாடு - பக்கமுமாம். கவ்வை - கலக்கம்; அலருமாம். 55. மான யானை - பெருமை பொருந்திய யானை. அற்றம் இன்றி - குற்றமின்றி. அழற்பெயர்ப் புணர்ச்சியான் - சுவனலன் என்னும் பெயர் கூடியவன். முன்முற்றும் சடிப்பெயர் - சுவனலன் என்பதனோடு முன்னே வந்துகூடும் சடியென்னும் பெயர்; அஃதாவது சு + அநல + சடி யென்பது; இது சுவலனசடி யென்றும் வழங்கும். ஆன்று - அமைந்து. பெற்றி - தன்மை. பீடு - பெருமை. 56. விச்சை - வித்தைகள். முற்றினான் - முற்றக்கற்றவன். இச்சையாய - விரும்பிய அனைத்தும் விரும்பியவாறே. ஏந்து - உயர்ந்த. கண் இலங்கு தார் - நாண்டற்கு அழகு விளங்கும் மாலை. வெச்செனச் சொல் - கேட்டார் வெறுத்து மாறக்கூடிய சொல். ஒன்றுமே - அறவே. மெய்ம்மை - மெய்ம் மொழி. 57. வேந்தவன் - வேந்தனாகிய அவன். கோல் - செங்கோல் செலுத்தி. ஓம்பும் நாள் - ஆண்டுவரும் நாளில். குணங்களால் அற்ற கீழுயிர் - நற்குண நற்செய்கையில்லாத கீழ்மையுடைய உயிர்கள். இவ்வுயிர்கள் கீழ்மை நீங்கிக் குணங்களால் உயர்வது குறித்து அருளாது ஒறுத்தலும் அறமாதலின், “குற்றமாய தொன்றுண்டு என”ப் பழிப்பது போலப் புகழ்ந்தார். 58. செருவின் தலை - போர்க்களத்தே. வெம்பு வேலவன் - எதிர்த்தாரைக் காய்கின்ற வேலையுடையவன். மண்டிலம் - நாடு. நம்பி - விரும்பி. கதலிகை - கொடிகள். நடுங்குவன கொடிகளே யன்றிப் பிற எவையும் இல் என்பதாம். 59. வடிய வானவன் - அழகிய விஞ்சை வேந்தனான சடியரசன். கடியவாயின - மணங் கமழ்வனவாயின. கள் அவிழ் - தேன் சொரியும். பயப்பட்டு - பயன்பட்டு. அலர்க் கொடியவாயின - பூக்களையுடைய கொடிகளை யுடையவையாயின. கொங்கு - தேன் 60. மாயம் மாய - மாயச் செய்கை யனைத்தும் கெடும்படியாக. வரை மார்பு - வரி பொருந்திய மார்பு; மலைபோலும் மார்பு என்றுமாம். மேய - பொருந்திய. பூமகள் - திருமகள். துவர் வாய் - சிவந்த வாய். கொம்பு - பூங்கொம்பு. அனாள் - நிகர்த்தவள். 61. கோவை வாய் - கோவைப் பழம்போலும் வாய். காவி - நீலமலர். வாள் - ஒளி. தான் உறுவதனை அவளும் உறுதலின் “ஆவியாய்” என்றும், புலப்பது குறித்து அச்சமே நிகழ்தலின் “அணங்காய்” என்றும், அவன் உயிர் தளிர்க்குமாறு முயங்கலின் “அமிழ்தாய்” என்றும் கூறினார். புணருந்தொறும் புத்தின்பம் பயந்து மகிழ்வித்தலின், “விருந்தாயினாள்” என்றார்.. 62. கங்கை நீர் வெண்ணிறத்ததாகலின், திங்களின் கதிருக்கு உவமமாக்கினார். ஞான்ற - ஒழுகிய. செக்கர்வான் - அந்திவானம். இதனால் அந்திமாலையில் பிறை தொழப் படுமாறு பெற்றாம். “ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம், புல்லென் மாலை” (அகம்.239) என்றார் பிறரும். மடமாதர் - மடப்பம் பொருந்திய பெண்ணாகிய சுயம்பிரபை; தொழப்பாடு நவின்றது - தொழுதற்குரிய தகுதி பொருந்திற்று. 63. அளகக்கொடி - கூந்தலின் ஒழுங்கு. குண்டல வாள் முகம் - காதிலணிந்த குண்டலத்தோடு ஒளி திகழும் முகம். சிலை - வில். உண்டு கொல் என - இவட்கு இடை உண்டோ இல்லையோ என ஐயுறுமாறு நுணுகிய. 64. நகைவேல் - விளங்குகின்ற வேல். ஞாலம் அடிமைத் தொழிலில் தங்க என இயைக்க. அமர்ந்து - விரும்பி. தலை நின்றனர் - ஏவல் கொண்டு ஒழுகினர். நீள் முடியான் - சுட்டு மாத்திரையாய் நின்றது. (அவன் என்பது பொருள்). 65. தேம் குலாம் அலங்கல் மாலை - தேன் பொருந்திய அசைகின்ற மாலை. மதுத்திவலை - தேன் துளி. குணமிலார் செல்வம்போல, கோங்குகள் மலர்ந்து மணம் கமழமாட்டாவாக என்க. பொன்பூப்ப - பொன்போலும் பூக்கள் மலர. பாங்கு - பக்கம். பருவம் - வசந்த காலம். 66. அந்தழை யசோகம் - அழகிய நிறத்தையுடைய தழை பொருந்திய அசோகம். அவாவின் - ஆர்வத்துடன். வெந்தழற் பிறங்கல் - வெவ்விய நெருப்பினது மிகுதி, உயர்ச்சியுமாம், வெருவிய அஞ்சிய, மறுஇல் தும்பி - குற்றமில்லாத தும்பி. மறு - கள்ளுண்டு மயங்குதல். கொந்து - கொத்து. தூவ - சொரிதலால். அன்மை - அன்று என்பது. அடைந்த - பூத்த அசோகத்தை யடைந்தன. 67. மாஞ்சினை - மாந்தளிர். கறித்த - சுவைத்த. மருங்கு - பக்கத்தே. முருக்கஞ் சோலை - முருக்க மரம் செறிந்த சோலை. பூஞ்சிலை - பூவோடு கூடிய சிலை. தீஞ்சுவை மிழற்றுகின்ற - இனி சுவை மிக்க இசையை இசைக்கின்றன. சுவை - இனியனாய்ப் பிறர்க்குப் பயன்படுந்தன்மை. 68. கோவை வண்டு - நிரைநிரையாக வரும் வண்டினம். குரவு - குராமரம். குரை - (வண்டின்) ஒலி. பாவை - குராமலர், அதன் காயுமாம். ஆவி - மணம், உயிருமாம். குரவாகிய மாதர், பாவை கொண்டு விளையாடும் பருவத்தே, காமனாகிய காதலன் போந்து, அவன் ஆவி கொண்டு கைவிட்டு நீங்குதல் தகாதே என்று, பொழில் களாகிய மகளிர் கண்டு இரங்கி, நாம்தாம் வளர்க்கும் பூவை, கிள்ளை என்ற இவற்றோடு உரையாடிப் புலம்பினர் என்று கொள்க. 69. கோமான் - சடி வேந்தன். கொங்கு - தேன். தேமா - இனிய மாமரம். வாமான் தேர் - தாவிச் செல்லும் குதிரை பூட்டிய தேர். தூமாண்ட இளங்கொடி - தூய்மை பொருந்திய இளம் பூங்கொடிகள். தளிர்க்கை - தளிர்களாகிய கை. 70. அடிபாடும் அவர்கள் - ஏத்தாளர், அவர், குதர், மாந்தர், வேதாளிகர் முதலாயினார். வடிவாய வேலவற்கு - வடித்த வாயினையுடைய வேலேந்திய அவ்வரசனுக்கு. சின்னம் - விடுபூ. கொடுவாய கிளி - வளைந்த வாயையுடைய கிளி. 71. குரவகத்து - குரா மலரின்கண். நறவம் - தேன். கொப்பளித்து - சொரிவித்து. அரவ வண்டு - ஒலித்தலையுடைய வண்டினம். அணைந்து - கலந்து. உராய் - பரந்து. விரை - நறுமணம். துணர் - பூங்கொத்து. ஞாற - மணம் கமழ. புரவலன் - அரசன். போது அலர - திருமுடியிற் சூடிய போதுகள் மலருமாறு. 72. எரியணிந்த இளம்பிண்டி - நெருப்புப்போலத் தளிர்களை யுடையவாகிய இளைய அசோகமரம். இணர் ஆர்ந்த - பூங்கொத்துக்கள் நிரம்பின. பொரியணிந்த புன்கு - பொரி பொரித்தாற் போன்ற பூக்களையுடைய புன்க மரம். வரி - சீற்று, வரிப்பாட்டுமரம். செல்வம் - பெண்மைநலம். 73. ஏந்து - உயர்ந்த. தேம் தளங்கு - தேன் விளங்குகின்ற. தாம் - கட்டுரைச் சுவைபட நின்றது. முருக்கு - முருக்கம் பூ. ததைந்தன - நெருங்கின. 74. காவி - நீலமலர். கண்விரிந்து - நன்கு மலர்ந்து. நளி - பெரிய. மருட்டும் - நிகர்ப்பிக்கும், மயக்கும். தூவி - மெல்லிய சிறகு, நீர் துணையில்லார் - உங்களைத் துணையாக அருகில் உடையரல்லார். உய்ந்து - தப்பி. உள்ளாராதல் - நும்மை நினையாராகுதல் (மறத்தல்). 75. அணியாதும் - அணி முதலியவற்றால் ஒப்பனை செய்தலின்றியே. ஒளி - அழகொளி. கணியாது - எவற்றையும் ஓதாமலே. அறையும் - ஆகமங்கள் கூறும். அரியர் - அரிய ஆகம ஞானிகள். 76. திருமறுவு - அழகிய மறுக்கள் ஆயிரத்தெட்டு. ஒரு மறுவும் - ஒரு குற்றமும். ஒழியாமல் - விடாமல். அருமறை - அறிதற்கரிய ஆகம நுண் பொருள். *சாரணர் - சமண முனிவர். இவர் தலசாரணர் முதலாக, ஆகாச சாரணர் ஈறாக எண்வகை யினராவர். இவர்கள் இரண்டிரண்டு பேர்களாக வந்து அறம் உரைப்பர். உரைக்கு மிடத்தும், இருவருள் மூத்தவரே உரைக்கும் கடன்மையுடையர், சடியரசன், இருவருள் மூத்தோனையே, நோக்கிப் பேசுதலை, “முனிவருட் பெரியவன் முகத்து நோக்கி” என மேலே வருதல் காண்க. 77. விரை - நறுமணம். விண் - தேவர்கள். உரை மணந்து - சான்றோர் உரைத்த உரையும் பாட்டும் கலந்து. கண்மகிழ நின்றாய் - நின் கண்ணதாகிய அருள் பெற்று மகிழுமாறு நின்றாய். நின்றாய்கண் - நின்ற நின்பால். 78. மயங்கு - கலந்த. வான் - தேவர்கள். குணம் மயங்கி - நின் அனந்த குணங்களை எடுத்தோதி. கண்டு - அறிவுக் கண்ணால் கண்டு. 79. முனிவர் - சாரணர். தாமரைப் பழந நாடன் - தாமரை பூத்த பழனங்கள் பொருந்திய நாட்டரசனான சடி வேந்தனை. கனிய - மனம் களியுமாறு. 80. நுன்னிய - நெருங்கியுள்ள. வினைப்பகை - வினையாகிய பகை. தொன்மை - பழமை. என்பது ஆம் - என்பதே ஆகும். கல் நவில் - கல் விழைத்த. கதழ - விரைந்து. 81. காதியங் கிளைகள் - காதி கன்மங்கள்; ஞானாவரணீயம், தரிசனா வரணீயம், வேதரீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென இவை காதி, அகாதி என இருவகையாக வகுத்து, நூற்று நாற்பத்தெட்டாக விரிக்கப் படுதலின், இவற்றைக் “காதியங் கிளைகள்” என்றார். போதி - மகா போதி. புலம் - அறிவு. ஆதியந்து - ஆதியும் அந்தமும். அந்தம் என்பது உறுதிரிந்து நின்றது. மாதுயர் இடும்பை - மிக்க துயரத்தைச் செய்யும் கன்மநோய். 82. அருந்தகை ஒழுக்கம் - பெறுதற்கரிய விழுப்பத்தைப் பயக்கும் நல்லொழுக்கம். மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப் பரியயஞானம், கேவலஞானம் என ஐந்தாக விரிதலால், “விரிந்த ஞானம்” என்றார். இறைவன் - அருக பரமேட்டி. கைப்பொருள் - உறுதிப் பொருள். 83. உற்று அடு பிணி - பொருந்தி வருத்தும் நோய்; மிக்கு வருத்தும் பிணி யென்றுமாம். இப்பிணி , தன்னாலும் பிற வுயிர்களாலும் உறுவது, ஊழ்வினையால் வருவதனை, “ஊழ் உறு துயர்” என்கின்றார். வரம்பில் இன்பம் - கடையிலா இன்பம், பிறழ்வு இலா - கெடுவது இல்லாத, அவை : காட்சி, ஞானம், ஒழுக்கம் என்ற அவை. பெறப்படும் - பெறுதற்கு எய்தும். 84. மன்னிய முனிவன் - பெரியவனான சகநந்தனன் என்ற சாரணன். மணி கொழித்தனையவாகி - கொழிக்கப்பட்ட மணிகளைப் போன்று. பன்னிய - சொல்லிய. பவங்கள் - பிறவித் துன்பங்கள். பயம் - நற்பயன். கெழு - பொருந்திய, காட்சியம் கதிர்ப்புச் சென்றான் - நற்காட்சியாகிய ஒளியினது விளக்கத்தைப் பெற்றான். உரிமை - உரிமை மகளிர், பெருவதம் - பெரிய விரதங்கள்; அவை அனுவிரதம் முதலாக மூன்று வகையுற்றுப் பின் பலவாய் விரித்துரைக்கப்படும். 85. மடமகள் - சுயம்பிரபை, இன்னுரை அமுதம் - இனிய அறவுரையாகிய அமுதம், உண்டு எழுந்த சோதியன் - உண்டதனால் பிறந்த விளக்கத்தை யுடையளானாள். பாங்கு - இயல்பு. பின்னது - நோன்பு நோற்றல். பெருமை - பெருஞ் செய்கை. 86. அழற்கொடி - நெருப்பின் ஒழுங்கு; கனலுமாம். ஆடக நிழற்கொடி - பொன்னலாகிய ஒளி பொருந்திய கொடி, “சுடச் சுடரும் பொன்” என்பது திருக்குறள். காரிகைக் குழற்கொடி - வளையலும் கூந்தலும் கொண்ட ஓர் பூங்கொடி. எழிற்கொடி - அழகின் கொழுந்து. இயற்கை - தன்மை. 87. முகைத்த - அரும்பை யுடைத்தாகிய. வார் முல்லை - நீண்ட முல்லைக் கொடியின் நல்லரும்பு. முருக்கும் - நிகர்க்கும். அகைத்த - தழைத்த. வகுத்தவாறு - கருதிக்கொண்ட வண்ணமே. மாசிலா - குற்றமில்லாத. 88. ஆதியங் கடவுளை - ஆதி பகவனை. போதி - மகா போதி மரம். (அசோகு). பூமிசை ஒதுங்கினை - பூவின்மேல் நடந்தாய். அருமறை - ஆகமம். 89. ஆரருள் - நிறைந்த அருள். ஓர் - ஒப்பற்ற. அருளாழி - அருளாகிய சக்கரத்தை யுடையாய்; அருட்கடலே என்றுமாம். மொழிய - மொழியை யுடையாய். 90. பாய்ந்துழி - பாய்ததனால். கடலும் - உவர் நீர்க் கடலும். தீர்த்தம் - புண்ணிய நீர். அங்கண் நீர் - கடல். வங்க நீர் வரைப்பு - கடல் சூழ்ந்த நிலவுலகு. வணக்கப் பட்டது - வணங்கும் மேன்மை எய்திற்று. 91. வளர - வளர வளர. ஈன் அகத்து இருள் கெட - வையகமாகிய இவ்விடத்தே ஏனை, விண் மீன்களால் போக்க முடியாது நின்ற இருள் நீங்க, வயகம் இன்பம் எய்தும் என்க. நானகக் குழலி - கத்தூரி மணம் கமழும் கூந்தலாய். அகத்து இருள் - மலையகத்தே இருந்த மகவிலாக் குறையாகிய இருள். தயங்குகின்றது - விளங்கு கின்றது. 92. மண் அருங்கலம் - மண்ணுலகத்தே பெறுதற்கரியவாகிய உயர் பொருள்கள். வவ்வினும் - கவரப்படுவதாயினும். விதியின் - ஊழால். எண் அரும் தகைத்து - எண்ணுதற்கரிய சிறப்புடைத்து. 93. மையணி வரை - மேகம் தவழும் மலை. கையணி நெடுநல் வேல் - கையிலேந்தும் நெடிய நல்ல வேல். மெய்யணி பொறி - மெய்ம்மையமைந்த முறைமை. 94. அந்தை - அந்தம் (முடிவு), சிந்தை தாயிலாதவர் - மனம் விரும்பும் அமைதி யில்லாதவர். நொடிய - சொல்ல. 95. ஏதிலார் - அயலார். காதலர் கருதும் கருத்தினை, அயலார் தம் அறிவால் எண்ணிக் கண்டு அமைப்பதன்று என்றபடி. மாதராள் - சுயம்பிரபை. ஆணை நூல் - அற நூல். ஒட்டற்பாலது - பொருந்த ஒழுகற்குரியதாம். 96. தன் உணர் பொறி - தாமே தேர்ந்துகொள்ளும் மணம். பிறர் தங்கள் கூட்டு - பிறர் ஒரு மகளையோ மகனையோ கண்டறிந்து கூட்டுதல். இறைவர் - அரசர். வாழ்க்கை - மண வாழ்க்கை. புலம் - அறிவு (கட்புலன்). 97. அன்று என - அதுவே நன்று அன்று என. ஒன்றி - பொருந்தி. ஓட்டுமே - மேற்கொள்ளும். 98. புறப்படாதது - புறத்திலுள்ளார் கேட்க வாராதது. புகாத நீரது - புகாத தன்மையுடையது. விளிம்பு - கரை. வேதிகை - திண்ணை. வண்ணம் - இயல்பு. 99. வீங்கு நீர் - கடல். விழுதுநம் - உயரிய அரசாட்சி. தாங்கலாம் தகைமைத்து அன்று - தாங்கக்கூடிய தகுதியுடைய தன்று. தளையவிழ் தயங்கு தாரீர் - (மந்திரிகளைக் குறித்தது) முறுக்கவிழ்ந்த பூவால் தொடுக்கப்பட்டு விளங்கும் மாலையை யுடையவர்களே. பாங்கு - நட்பு. நூலவர் - அமைச்சர். பாகம் - துணை. பூங்குலாம் அலங்கல் - பூக்களால் ஆகிய மாலை, பூக்குலாம் எனற்பாலது எதுகை நோக்கி மெலிந்தது. புரவலன் - அரசன். பொறுக்கும் - அரசாட்சியாகிய விழுநுகத்தைத் தாங்கும். 100. தடக்கை - பெரிய கை. வணக்கும் வாயில் - வணங்கச் செய்யும் வழி (Means of establishing absolute supermacy on the earth), ஆள் - காலாள். ஆதியது - முதலதாகிய தோள்வலி. கோள் - கொலை. சீயம் - சிங்கம். வாயில் இரண்டனுள் தோள்வலி அழகும், சூழ்ச்சி குணமுமாம். 101. அரசர்கட்கு ஆற்றல் என்று ஓதப்பட்ட - அரசர்கட்கு அறிவு, ஆண்மை, பெருமை என்பவை ஆற்றல் என்று அரசியல் நூல்களால் ஓதப்பட்டன. அவற்றின் - அம்மூன்றினும் ஆற்றலார் - அறிவு வலியுடையார். அமர்ந்து - நெஞ்சு கலந்து. ஆற்றலான் - செய்கை யுடையவன். ஒன்று என்புழிச் சிறப்பும்மை நோக்கது. 102. மன்னும் - மிக்க. வளாகம் - நிலவுலகம். வல்லீராய - வல்லவர்களாகிய. பன்னும் - ஓதும். முன்னர் - உங்கள் முன்னே. பகர்ந்து - எடுத்து விரித்து. இயற்ற - அரசர்க்குரிய பணியினைச் செய்தலால். இன்ன நீர் இன்ப வெள்ளம் - இவ்வியல்பிற்றாகிய பேரின்பம். 103. கொங்கு - தேன். விளக்கிட்டாங்கு - விளக்கேற்றி வைத்தது போல. நங்கை - சுயம்பிரபை. ஒத்தான் - தக்கவன். சங்குடைந்தனைய தாழைத் தடமலர் - சங்கு உடைந்தாற்போலும் தாழையினது பெரிய பூ; “சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த் தடங்கள்” (சிந்தா) என்றார் திருத்தக்க தேவர். தொடையல் - மாலை. 104. கண்ணெனப் படுவ - உலகிற்குக் கண்ணென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன. காமர் - அழகு. சுழல ஓடும் - சுழன்று ஓடும். “நல்லரசு, கல்வி. செஞ்ஞாயிறு இம் மூன்றும் பிரபஞ்சத்திற்குக் கண்ணாம்” என்பர். தலைக்கண் வைத்த கண் - முதலாவதாக நிறுத்தப்பட்ட கண். அஃது - நல்லரசு. வகை - வாயில். பேரார் என்றும் பாடம். 105. அரைச பாரம் - அரசாட்சி. வணக்கல் - மனத்தின் வழியோடாது, அம் மனம் தன் வழியே வர வசமாக்குதல், இவ்வியல்பு அருந்தவம் அரசியல் இரண்டிற்கும் இன்றியமையாப் பொதுவிலக்கணம். திரியுமாயின் - கெட்டு மாறிச் செல்லுமாயின். பிறங்குதார் - உயர்ந்த மாலை, நிறங்கொள் வேல் - பகைவரது குருதிக்கறை படிந்து சிவந்த வேல். 106. உரிதினின் - உரித்தாக. உதயம் செய்து விரிதலின் - தோன்றிப் பல்வகைப் பயன்களாய் விரிந்து தோன்றுதலால். உண்மை - உளதாம் தன்மை. கருமம் - செயப்படு பொருள். வண்ணம் - வண்ணமே ஆகும். எண்ணுவது - வேறே நினைப்பது. 107. கொற்றம் - வெற்றி. குழுமி - கூடி. முற்று நின்று - சூழ நெருங்கி நின்று. இற்று - இத்தன்மைத்து. நூல் எல்லை காணக் கற்றவர் - “கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்” என்றாற்போல, ஏனோர் - கல்லாதவர். கதை - சொல்லும் கதை; பாட்டுமாம். காட்டும் - மிகையாம் என்று யாவரும் அறியப் பண்ணும். 108. கற்ற மாண்பு - நல்ல மாண்பமைந்த அமைச்சர்கள். திகிரி - ஆழிப்படை. கொற்றம் - வெற்றிச் சிறப்பு. மாண் விஞ்சை - மாட்சிமைப்பட்ட விந்தை (மந்திரம்). கருதிய - கருதிய காரியங்களை. வேந்தர் - ஏனை யரசர். 109. குளிறும் - முழங்கும். குமார காலம் - இளமைப் பருவம். உழுவை - புலி. கல் திரள் - பெரும்பாறை; ஒளிறுவாள் - ஒளி செய்கின்ற வாட்படை. வட்டு - உண்டை. “அரங்கின்றி வட்டாடியற்று” (குறள்.) வெளிறிலாக் கேள்வி - குற்றமில்லாத கேள்வியறிவு. “வெளிறிலாக் கேள்வி யானை வேறு கொண்டிதனைச் சொல்வான்” - சிந்தாமணி. அஞ்சியிட்டார் - அஞ்சினர்; துணிவுப் பொருட்டு. 110. மூரி நீர் - பெரிய கடல். ஏவல் கேளா - பணி செய்யாத. செற்று - பகைத்து. நலிதல் - வருத்துதல். நல் தவ நங்கை - செய்த தவத்தின் நற்பயனாகத் தோன்றிய நங்கையான சுயம்பிரபை. 111. குலக்கொம்பு ஒப்பாள் - குலத்தில் தோன்றிய பூங்கொம்பு போலும் சுயம்பிரபை. தேங்கமழ் அலங்கல் - தேன் பொருந்திய பூமாலை. ஆணை வேந்து - ஆக்ஞா சக்கரத்தையுடைய அரசன். தீங்கு - பொய். திருவடி - அரசனை. ஏனைப் பெரியோரைக் கூறும் உயர்சொற்கிளவி. “அடிகள் முன்னர் யானடி தொட்டேன்” (சிலப்) எனக் கோவலனை மாதவி கூறுதல் காண்க. 112. அவற்கு - அச்சுவகண்டனுக்கு, உற்று வந்துளது - பொருத்தமாய்த் தோன்றுகிறது. அஞ்சுவர் - நம்மையஞ்சி அடங்கி யொழுகுவர். மின்செய் பைம்பூண் கொற்றவ - ஒளி வீசுகின்ற பூசிய பூணாரத்தையுடைய அரசே. குறிப்பு - கொடுக்கும் கருத்து. சொல் - அசை நிலை. 113. நுண்பொறி - நுண்பொருள். கண்ணும் - காணும்; கருதும். நொடிவல்லான் - சொல் வன்மையுடையவன். மேதைமை - அறிவுடைமை. தோலாநாவின். சுச்சுதன் - சொல்லால் பிறர் தன்னை வெல்லமாட்டாத வன்மை படைத்த சுச்சுதன். அன்றே, ஏகாரம் அசை. ஆலும் ஓவும் அசைநிலை. 114. தீதில - குற்றமில்லாத பண்களை. செறி தாரோய் - பூக்கள் செறிந்த மாலையுடையாய். மானம் - பெருமை. மாரதர் - பதினாயிரம் மறவருடன் தனித்து நின்று போர் செய்யும் வீரர். ஏறு - ஆண் சிங்கம். ஊனம் - குறை. ஒட்டினும் ஒட்டேன் - இல்லை யென்போர் எத்துணை மறுத்துரைக்கினும் உடன்படேன். 115. ஆழிக் கோமான் - சக்கரப் படையை யுடையவன். ஊழிக்காலம் - ஆயுட்காலம்; வயது என்றுமாம். தாழிக் கோலப் போது - கிண்ணம்போலும் அழகு பொருந்திய குவளைப்பூ. “தாழிக்குவளை” யென்ப. சூழிக்கோல யானை - முகபடாம் அணிந்த யானை. சூழ் - பலவாய்ச் சூழ்ந்த. உரையாலும் - உலகவர் கூறும் சொல் உண்டாகி யிருப்பதனாலும். உம்மை - எதிரது தழீஇயது. 116. கண்ணார் கோதை - காட்சிக்கு இனிமை பொருந்திய மாலை. காமர் - அழகு; உ, சாரியை, மண்ணார் சீர்த்தி - மண்ணுலகத்தவர் கூறும் மிகு புகழ். எண்ணார் - மனம் பொருந்திய. பெண்ணார் சாயல் - பெண்மைக்கு அமைந்த மென்மை; சாயல் அழகுமாம். தேவிப் பெரும் பட்டம் - இராசமாதேவி யென்னும் பட்டம்; “பட்டத்தரசி” யென்ப. 117. உட்கும் - அஞ்சும். ஈனோர் - ஈண்டுள்ள வித்தியாதரர். ஏனோர் - அசுரர். தயித்தியர், இராக்கதர் முதலாயினர். ஊனோர் உட்கும் வேல் - எதிர்ந்தோரது உடல் ஊனையுண்ணும் வேல். ஓர் அசை; உண்ணும் என்பது குச் சாரியை பெற்று உட்கும் என நின்றது. இனி, ஊனோர் என்பதற்குப் பிறமக்கள் அனைவரும் என்று உரைத்தலும் உண்டு. ஆனோர், ஈனோர் என்பனபோல, ஊனோர் என நின்றதாம். 118. கேடில் - கெடாத. ஆல், அசை, கின்னர கீதம் - வித்தியாதர நாடுகளுள் ஒன்று. தோடு - பூவின் இதழ்; பூக்களின் தொகுதியுமாம். உருவத் தொங்கல் - அழகிய பூமாலை. செம்மல் - தலைமை பெற்ற மகன். இமிரும் - ஒலிக்கும். என்ப - அசையுமாம். பாரித்து - மிகுத்து. ஆடல் அம் புரவி - பதினெட்டு வகைச் சாரியைகளையுடைய அழகிய குதிரை; ஆடல் - பொருதலுமாம். அரசன் செம்மல், பவனஞ்சனாகிய அரசிளங்குமரன் என்றான் என்க. 119. இஞ்சி - மதில். இந்திரன் மிசைந்த நாமச் சஞ்சயம் - இந்திரன் என்ற பெயருக்கு மேலே சஞ்சயம் என்ற சொல் புணர்ந்த நகரம் அஃதாவது இந்திரசஞ்சயம் என்பது. மிசைந்த - மிசை .யென்னும் இசைச் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். தாள் முளை - கான் முளை; மகன். அஞ்சும்நீர் வேலான் - அஞ்சுவிக்கும் தன்மையை யுடைய வேலையுடையவன். மஞ்சு - முகில். சூளாமணி - முடிமணி. கருதும் - இவ்வுலகம் மதிக்கும். 120. பாழி - பெருமை. சூழி - பட்டம். ஊழி - முறையே. 121. பளிக்கும் - வருந்தும் (மென்மையை யுடைய) பணைக்கின்ற - பெருக்கின்ற. வேய் - மூங்கில். பகையாம் - அச்சுவகண்டனது பகைமையுண்டாகும். 122. அவாம் - விரும்பும் (மாலையணிந்த). மாற்றுநர் - எதிர்த்து (மாறுபட்டு) வெல்பவர், உரைப்பான் உறுகின்றது - உரைத்தற்குரியதாய் இருப்பது. விண்டு வாழுநர் - பகைமையால் வேறுபட்டு வாழும் பிறர் (பகைவர்). நகும் - எள்ளல் நகையினைச் செய்யும். (ஒளிரும் என்பது கருத்து). 123. மையில் - குற்றமில்லாத, வாயில் - வழி. உணர்த்திய - உணர்த்தும் பொருட்டு. ஆரஞர் - நிறைந்த துன்பம். வையம் ஆயது - வையகத்தே வாழும் உயிர்த் தொகுதி. 124. அச்சுவகண்டன் மூத்தாற்கு - அச்சுவகண்டனான வயது முதிர்ந்தவனுக்கு என்று. பணி - ஏவல். அகற்றல் ஆற்றா - விலக்க மாட்டாத நலம் கண் கவரும் - அழகால் தம்மைக் காணும் பிறர் மனத்தைக் கவரும். கருமம் அன்று - அது செய்தற்குரிய செயலாகாது. பேதை இருப்பதும் - பேதையாகிய சுயம்பிரபை மணமாகாது இருப்பதும். உம்மை - எச்சப்பொருட்டு, “தனியவராகி வாழ்தல் சாதுபரதனின் இல்லை” (சீவக. 555) என்பவாகலின், “இருப்பது பெருமையன்று” என்றான். ஏ, அசைநிலை. 125. ஆரம் - முத்துமாலை. தமனியக் குழை - பொற்குழை. “தமனியக் குழையினாய்” - சீவக. ஈண்டு, குழையினான் - மேகவாகனனைக் குறித்தது. போழ் கதிர்க் கடவுள் - இருள் போக்குகின்ற ஒளிக் கதிர்களையுடைய ஞாயிறு. விலங்கல் - மலைமேலதாகிய இரதநூபுரச் சக்கரவாளம்; தென் சேடியுமாம். அரிது - பெருமை தரும் செயலாம். கண்டாய் - முன்னிலை யசையாய் நின்றது. 126. கடை மதர்ப்ப. மைமாந்தி எனக் கூட்டுக. மதர்த்தல் - செருக்குதல். கயல் நீண்டு மதர்ப்ப, மாந்தி, பிறழ்வ போலும் கண் என்க. ஐ - மென்மை. அடர்ந்த - பரந்த. மங்கையர் முகத்தின் வாட்கண் பயின்ற போழ்தும் எனக் கூட்டுக. பங்கயச் செங்கணான் - தாமரை போலும் செங்கண்ணையுடைய விச்சுவன். படைத் தொழில் பயிறல் - படையினைச் செலுத்துதல்; அஃதாவது, பார்வையால் காமக் கிளர்ச்சி யுண்டுபண்ணுதல். தங்கிய மனத்தனாகி - தவநெறிக்கண்ணே பிறழாது நின்ற மனமுடையனாய். 127. மண்கனி முழவம் - மார்ச்சனை யமைந்த முழங்குகின்ற முழவு. சீர், தூக்கு, பாணி என்ற மூன்றும் தாளவறுதிகள். மேவான் - விரும்பான். விண் கனிந்தனைய இன்பம் - விண்ணிடத்தே பெறலாகும் இன்பம் முற்றவும் கோதின்றிப் பெற்றாற் போன்ற இன்பம். கண்களி உருவக் காளை - கண்ணிற்கு இன்பந்தரும் பேரழகு படைத்த உருவத்தையுடைய இளையோன். தகையன் - தகுதியை யுடையன். மண் கனை என்றும் பாடமுண்டு. 128. அம்மையால் - முன்னைப்பிறவியில். அலர்ந்த - விரிந்த. நல்லறிவு என்றான், கல்வி கேள்விகளினாலாகிய செய்கை யறிவோடு உண்மையறிவு கூடிய மெய்யறிவு என்றற்கு. இம்மையால் - இப்பிறப்பின்கண். இகந்து நீங்கிப் போம் - கூடியிருக்கும் உயிரைக் கைவிட்டு நீங்கிவிடும். போம். ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்ட பெயரெச்சம் இயற்கை - இயல்பு; தன்மை. தானம் - இடம். சேர்வதே சிந்தையாற்கு - சேர்வதையே சிந்தித்திருக்கும் மனமுடையவனுக்கு. கருமச் சுற்றம் - வினை செயற்குத் துணையாவார்; மனைவி, மக்கள் உறவினர் முதலாயினாருமாம். 129. வார் அணி முரசம் - வாராற் கட்டப்பட்ட முரசு. வயிர் - ஒரு வகை இசைக் கருவி; இஃது எப்போதும் வளையுடனே இணைத்துக் கூறப்படுவது; “வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல” (முருகு) என வருதல் காண்க. ஏங்க - ஒலிக்க. “ஆம்பலங் குழலின் ஏங்கி” (நற்.113) என்றார் பிறரும். தாரவர் - மாலையணிந்த அரசர். ஈண்ட - நெருங்க. சயமரம் - சுயம்வரம் என்பதன் சிதைவு. அறைதுமேனும் - தெரிவிப்பே மாயினும். ஆரவிர் ஆழியானை - நிறைந்த ஒளி வீசும் சக்கரப் படையுடைய அச்சுவகண்டனை; ஆர் ஆழி என இயைத்து வெல்லுதற்கு அரிய ஆழி யெனினுமாம். கார்விரி தடக்கை - கார் காலத்து மழைபோலக் கொடை வழங்கும் பெரிய கை. கழலவர் - வீரர். கழலவர் கருமம் அறியலாகா என்க. கருமம் பலவாதல் தோன்ற “அறியலாகா” என்றார். 130. சூழின் - கருத்து முற்றுதற்கேற்பவற்றை முற்ற ஆராய்ந்து செய்யலுறினும், தானே கன்றி - தானாகவே இயன்று. நண்ணும் - நண்ணுவிக்கும்; பிறவினைப் பொருட்டு. இதன் திறத்து என்னமாட்டாம் - இவ்வகையில் கருதியவாறே முடியுமென்று சொல்லவல்லேமல்லேம். துணிதுமாயின் - ஏதேனும் ஒன்று செய்தே யாகல்வேண்டு மென்று நினைப்போமாயின். 131. வீழ்புரி - மார்பின் குறுக்கே வீழ்ந்து கிடக்கும் பூணூா லின்புரி, (முறுக்கிய நூல்). ஊழ்புரிந்து - முறையறிந்து. மலர - தழைக்குமாறு துணைசெய்து. தாழ்புரி - பூணூாற்புரி. தயங்கும் - விளங்கும். பூணூாற் புரி நுண்ணிதாதலின், நுண்ணூால் என்றான்; “ஒன்பது கொண்ட மூன்று புரிநுண் ஞாண்” (முருகு) என்றார் பிறரும். யாழ்புரி மழலை - யாழிசை போலும் மழலைச் சொற்களை மொழியும் சுயம்பிரபை. கண்ணா - கண்ணி; கருதி. 132. நீரோய் - தன்மையுடையவனே. மந்திரம் - மந்திரிகளைக் கொண்டு செய்யும் ஆலோசனை. நீளுமாயின் - நீட்டிக்குமாயின். தமனியச் சூலம் - பொற்சூலம் (இடிதாங்கி எனப்படுவது). நெற்றி - உச்சி. அந்தரம் திவளும் ஞாயில் - வானத்தை யளாவும் மதிலுறுப்பு. 133. கொங்கலர் தெரியலாய் - தேன் சொரிகின்ற மாலையுடையவனே. கொற்றம் - வெற்றி. மங்கல வுழைக்கலம் பரப்ப - எண்வகை மங்கலப் பொருள்களைத் தந்து சிறப்பிக்க. அலர் கேள்வியான் - விரிந்த கேள்வியறிவுடைய சதவிந்து. என - என்று சதவிந்து கூற, மன்னன் கலம்பரப்ப, கேள்வியான் ஆசி கூறினான் என்க. மன்னன் கலங்களைக் கொண்டு சென்றான் எனவுணர்க; “மறுவில் மானவர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்பமதன்று” (பெருங்கதை) என்று பிறரும் கூறுப. 134. மதுமலர் - தேன் பொருந்திய பூ. அலங்கல் மாலை - அசைகின்ற மாலை; இருபெயரொட்டுமாம். வணங்கு எழில் - காணும் உலகு முற்றும் நன்கு மதித்து வணக்கம் செய்யும் அழகு. துடங்கிடை - நுண்ணிதாய் அசைகின்ற இடை. மாழை - மாவடு. கணம் குழை - கூட்டமாகிய குழை முதலிய அணிகளையுடைய சுயம்பிரபை; அன்மொழித் தொகை. எழில் - உயர்ச்சி; ஏனை அறிஞர்க்கு, “இவர்க்குநாம் எற்றே” என்று கருத்தழிவு பிற்ப்பித்தலின், “அணங்கெழில்” என்றார். அலர்ந்த நர - ஓதிப்பயின்ற சொல்; நா எனினுமாம். 135. மாலையள் - முத்துமாலையுடையள். கண்நிலாம் - கவர்தகைக் கண்ணி - பார்வையால் நிலவுலகு முற்றும் கவரும் அழகு பொருந்திய கண்ணையுடையாள் ஒருத்தி. நிலம் - நிலாம் என்றாயிற்று. மண் - மண் துகள். மறுகு - அரசவீதி. திரு நற்பயன். 136. அறக்கதிர் ஆழிதாங்கிய சோதியான் - அருகபரமேட்டிகள்; இவனை அறவாழி யந்தணன் என்றும் கூறுப. அறமாகிய ஒளிவீசும் சக்கரத்தையுடையன். சோதியான் என்றார்; முன்பே, “திகழும் சுடர் சூழொளி மூர்த்தியாகி நின்றான்” (1) என்றாராகலின், திருமொழி - திருவாய் மலர்ந்தருளிய மாபுராணம். தோற்றும்- காட்டும். போது - பூக்கள். வார் - நீண்ட. பொலம் கொம்பு - பொற்பூங்கொம்பு. திருமொழி, மைந்தனை விளக்கித் தோற்றும் என்க. இறுதிக்கண் ஐயுரூபு தொக்கது; “ஐயுங்கண்ணும் அல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகா இறுதியான” - தொல்காப்பியம், வனம் - அழகு, வனப்பு இதனடியாக வந்தது. 137. விடுத்த - துறந்த. மன்னிய - நிலைபெற்ற. மாதராள் விரிந்தவாறு - மாதராகிய சுயம்பிரபையின் வரலாறு விரியக் கூறப்பட்டது. அன்னவன் - சுட்டுமாத்திரையாய்ச் சதவிந்துவைக் குறித்து நின்றது. 138. அன்னணம் - அவ்வாறு. கல்நவில் இலங்குதோள் - கற்றூண் போன்று விளங்கும் தோள். மின்நவில் - ஒளி விளங்குகின்ற. வீங்கு நீர் - பெரிய கடல், வரைப்பகம் - நிலவுலகம். மலிர - புகழ் நிரம்ப. மலிர்தல் - நிரம்புதல்; “மணலாடு மலிர்நிறை” (ஐங், 15) என்ப. 139. திருஅமர் - திருமகள் விரும்பியுறையும், அணிந்து - அழகு செய்து, பொருவரு - ஒப்பில்லாத, போதனம் - போதனமாநகரம், செருஅமர் - போரை விரும்பும்; “செருவேட்டுச் சிலைக்கும் செங்கணாடவர்” (அகம்.157) என்ப, அந்நம்பி - அந்த மா புராணத்துட் கூறப்பட்ட நம்பி. 140. கானுடை விரிதிரை வையம் - நானமும் கடலுமுடைய மண்ணுலகம், நாக்கிய - காத்தற்கு, மானுட உடம்பு - மக்களுடம்பு 141. ஈங்கவன - இவ்வித்தியாதர வுலகத்து அச்சுவகண்டன், இரண்டு சேடி -வடசேடி, தென்சேடி இரண்டு, திருவினான் - திருவையுடைய அவன், வீங்கிய - மிக்கெழுந்த, வேந்தன் உவகையன் ஆயினான் என இயைக்க. 142. கொங்கு - தேன், தெரியலான் - மாலையணிந்த திவிட்டநம்பி, குறி - அறிகுறி, அகவையில் - கால அளவில், பிளந்திடும் - பிளந்திடுவான். 143. குலம் என்னும் கற்பக மரத்திற்கு அடி தலைமகனாகவும், மனைவி சாகை யாகவும், மக்கள் பூந்துணராகவும், முதியவர் தேன்களாகவும், கூறப்படும். சாகை - கிளை, நிமிர்ந்த - உயர்ந்த, நலம் - அறிவு, ஆண்மை முதலியன. 144. சூழி - பட்டம், துளைக்கைம்மா - துளைபொருந்திய கையையுடைய யானை, மாழை - பொன், யானைகள் தம் கோட்டிடத்தே பொன்னினும்உயர்ந்த மணியைப் பெறுவது உண்டு எனினும் அதனை அவை பெறுவதென்பது மிக அருமையாம்; மாதரார் மாண்புடைய மக்களைப் பெறுதல் அதனினும் அரிதென்பது கருத்து; ஆழும்நீர் - ஆழ்ந்த கடல். 145. வலம்புரி - வலம்புரி யென்னும் சங்கு, பவித்திரம் - உயர்வு, கற்புச் சிறப்புடைய மகளிரை யஞ்சித் தேவரும் ஏவல் கேட்டு நிற்பராதலின், அச் சிறப்புடைய வாயுவேகையை “நாமநீர் மயிலனாய்” என்றான். நாமம் - அச்சம், நீர் - தன்மை, பொலம்புரி மயில் - பொன்னாற் செய்த மயில், நடையால் மயிலும், மேனி நிறத்தால் பொன்னும் உவமமாயின. கோலம் - அழகு. 146. மா - மாவடு; மானுமாம், மருட்டிய - ஒத்த, நோக்கி - நோக்கினை யுடையாய். மடந்தையாகிய பொற்பூவையாம்; அமிர்தமாம்; தெய்வமாம். தேவன் தனது ஞானமாகிய அமிர்தத்தைப் பெய்து வைத்தற்கு இடமாகக் கொண்டன னென்பான், “தேவனுக்கு அமிர்தமாம்” என்றான். தேவனது ஞானசம்பந்தம் பெற்றமையின் “தெய்வமாம் என்றவாறு, ஓவில் நூல் - கெடாத நூல், புரோகிதன் - சதவிந்து”. 147. தன் மகளான சுயம்பிரபையை “என் மகள்” என்றவழிப்படும் தற்பெருமைக் குற்றம் எய்தாவண்ணம், தன் அறிவுடைமையும் பணிவும் தோன்ற, “இக்கன்னி” என அயன்மைப்பட மொழிந்தாள். அருளினே - அருளினால், கருதப்பட்டனள் -நன்கு மதிக்கப்பெற்றாள். அருளிலராயின் - அருளாராயின்; அருளைப் பெறாராயின்; இருபொருளும் அமைதல் காண்க. 148. முடிகளின் மணிபொர - வணங்குங்கால் முடிகள் அடிமீது படுதலால், அவற்றிற் பதித்த மணிகள் மோதுதலால், குரலும் - ஒலிக்கும், அடிகள் - ஈண்டுத் தன் கணவனை அடிகள் என்கின்றாள். அம் - அழகு, கடி - மணம், கவினும் - அழகும்; மெய்யழகு அழகன்றென்பது அவள் கருத்தாதல் காண்க. 149. திரிகுழல் - திரித்துப் பின்னலிடப்படுகின்ற கூந்தல், திரிகுழற்சிறுமி தெய்வ மாதற்கு ஐயம் ஒழிந்தனம் என்க. இனி, சிறுமி தெய்வமே; ஆவதற்கு - அவ்வாறு ஆதற்கண், ஐயம் - சந்தேகம், ஏகாரம் அசைநிலை, செய்யது - செம்மையுடையதான. வெய்ய - வெம்மை பொருந்திய, வேலவனுழை - வேலேந்திய அரசனாகிய பயாபதியின்பால், விடுத்தும் - விடுப்பேமாக. 150. கற்றவன் - “மண்ணாள் வேந்தர்க்குக் கண்ணென வகுத்த நீதி நன்னூல்” (பெருங்) முற்றும் துறைபோகக் கற்றவன். கற்றவன் - கற்றவனாகிய பிறனொருவன். கருதும் - கருதியுரைக்கும். உற்றன - தகுவன, உய்த்து - ஆராய்ந்து விரித்து, விட - விடுப்போமாயின், சுற்றம் - பயாபதியின் அரசியற் சுற்றத்தார் நன்கு அறிய; நமக்கும் பயாபதிக்குமுள்ள சுற்றத்தொடர்புமாம், கருமம் - செய்யப்படும் பொருள். 151. பணி - கட்டளை, மின்அவிர் - மின்னல் ஒளி வீசும், வீதி - வழியே, துன்னினன் - அடைந்தான், அகணி - நடுவிடம், “சுரமை நாட்டகணி சார்ந்து” (சூளா.18) என்றே முன்பும் கூறியது காண்க. புறத்தது - புறத்தே யுள்ளதாகிய, பொழில் - புட்பமாகாண்டம் என்னும் புதுப்பூம்பொழில். 152. மரு - மணம், அணிவன - பூத்திருக்கின்றன, வகுளம் - மகிழபுரம், திரு - கண்டார் விரும்பும் தன்மை, செங்குழையன - சிவந்த தளிர்களையுடையன, வரி - வரிகள், கீற்றுகள்; பாட்டுமாம், மதுகரம் - வண்டு, நாகம் - சுரபுன்னை, பொரி - பொருக்குகள், புன்கு - புன்கமரம், “பொரிப்பூம் புன்கின் அழற்றகை யொண்முறி” (நற்.9) 153. மௌவல் - முல்லை; நளிர் - குளிர்ச்சி, நறுவிரையக நறுமலரன - நறியமணத்தை அகத்தேயுடைய நறியமலர்களையுடையன. நறவம் - நறைக்கொடி, குழை - தளிர், மாதவி - குருக்கத்திக்கொடி, கொகுடி - ஒருவகைக் கொடி, ஓடை - இதுவும் ஒருவகைக் கொடி; இதனை ஓடக்கொடி, ஓடாக்கொடி என வழங்குகின்றனர். இதனை வாயிலிட்டுச் சுவைத்து நீர் வேட்கை தணித்துக்கொள்வர். விலங்குகள் இவற்றை விருப்பத்தோடு மேய்தலின், இவற்றை “ஒழுகிரையன” என்றார் போலும். “ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர” (அகம்.111) என்புழி ஓடைக்குன்றம் என்றது ஓடைக்கொடி நிறைந்த குன்றம் என்னும் பொருட்டுப் போலும். ஒழுகிசையன என்றும் பாடம், 154. மணிவண்டு - நீலமணி போலும் நிறத்தையுடைய வண்டு, குதி மகிழ்வன - குதித்து மகிழ்தலையுடையன, குவிகுடையன - குவித்த குடையை நிகர்ப்பன, நுதி கோதுபு - மூக்கின் கூரிய அலகினால் மாந்தளிர்களைக் கோதுமிடத்து, புதுமகிழ்வு - புதுமணம் புணரும் இன்பம், விதி மகிழ்பவர் - தெய்வப்புணர்ச்சி யெய்தும் காதலர், விரிவு - விரிந்த பூம்பொழில், இனி, “விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற” என்பதற்குத் தம்மையடையும் இன்பதுன்பங்கள் விதிப்படி நிகழ்வன என்று அவற்றின்பால் விருப்பு வெறுப்பின்றி யிருப்பவர் அறிவு மகிழுமாறு என்றலும் ஒன்று. 155. புணர்கொண்டு - சேர்தலையுற்று, சிதறா, தூவா, எழுவா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள், துணர் - கொத்து, கரைமா - கரையிடத்தே நிற்கும் மாமரம். துறுமலர் - நெருங்கிய பூ. வணர் - சுருள், எழுவா - எழுந்து, இணர் - கொத்து. 156. மினல்கொடி - மின்னலொழுங்கு, விலங்கல் - மேருமலை, புனல்கொடி - புனலிக்கொடி யென்னும் ஒருவகைக் கொடி, புதைத்த - தொடுத்த, நிலாநிழல் - நிலவுபோல் ஒளி செய்யும். இருமின் - ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி உயர்த்தற்கண் வந்தது. 157. அழற்கதிர் - ஞாயிறு, இயங்குஅற - இயங்குதல் ஒழியுமாறு, அலங்கு இணர் - அசைகின்ற கொத்துக்கள், தகை - அழகு, பொன் - சிறப்பு, இழிந்தவன் - மரீசி. 158. நிலா....சிலாதலம்; இதனை “நிலாநிழல் மணிக்கல்” (155) என்றல் காண்க. நிமிர்ந்து - உயர்ந்து , தெய்வம் - தெய்வங்களே, எனல் - என்று நினைத்தல், அலாதவர் - தேவரல்லாதவர்; விஞ்சையர், அல்லர் - அல்லாதவராகிய விஞ்சையர், ஆவிர் - உரியராவீர், உலாவிய - வானத்தே சஞ்சரிக்கின்ற, தகை - சிறப்பு. 159. தகளி - குழையின் அடித்தட்டு, தயங்க - விளங்க, உகளும் - பலவாய்க் கூடியுலாவும், உழை - பக்கத்தே, துகளில் - குற்றமில்லாத. 160. வெறி - நன்மணம், தீட்டினார் - பூசினார், சாந்தம் - சந்தனம், அமரர் - தேவலோகத்தவர் 161. தாதுநின்ற தேறல் - மகரந்தத் தாதுபடிந்ததேன், தேறல்நீர் - தேறலாகிய நீர், தளித்து - துளியாகச் சொரிந்து, அளி - வண்டு, மாது - அசை, தளிர்க்கையால் - தளிர்களாகிய கையால், பொலிந்த - அசைந்து காட்டின. 162. போதுலாய - போதுகள் பொருந்திய, தாது - தேன், தாமவார்குழல் - மாலையணிந்த நீண்ட கூந்தல், வல்லி - கொடிகள். 163. அலர்ந்த - கலைநிரம்பிக் கதிர்விரிந்த, திங்கள் நீள்ஒளி - திங்களின் நீண்ட ஒளியினையுடைய, நீடு - மிக்க. 164. நூல்கொள் சிந்தை - நூற்பொருளை யறிந்த மனம், கடாவ - தூண்டலால், ஆர்கலான் - அவா அடங்கானாய், கண்ணிகாறு - கண்ணி சூடிய முடிவரையில், கள்மால் சிந்தையார்கள் - கள்ளருந்தியதால் உண்டாகும் மயக்கம் பொருந்திய மனத்தையுடையவர், அடுக்குகள் மிகுதி குறித்து நின்றன. 165. வான்அகடு - வானுலகத்து நடுவிடம், மறைஇ - மறைந்து, வம்புநீர் - புதுநீர், ஏகாரம், தேற்றம். 166. இமைகள் விட்ட நோக்கம் - இமையாது நோக்கும் பார்வை, சுமைகொள் மாலை - வண்டுமொய்த்து அரற்றுவதால் ஒலி பொருந்திய மாலை, சும்மை, சுமையென நின்றது. சுமை - பொறையுமாம், எருத்தம் - கழுத்து, சிமை - உச்சி. 167. தெளிமுத்தமணல் - தெளிந்த முத்தங்களாகிய மணல், சிதர்ந்து - சிதறி, தளிமுத்தமலர் - துளியாகிய முத்துக்களையுடைய மலர், உழக்கி - கலக்கி, வண்டுஆர் - வளையலணிந்த, முத்தமுறுவலார் - முத்துப் போன்ற பற்களையுடைய மகளிர், உழைக்கலம் - மங்கலப் பொருள், பெருங்கடை - பெரியவாயில்; புறவாயிலுமாம். 168. அருவி தூங்கும் - அருவிகள் சொரியும், முற்றி - சூழ்ந்து, முத்தமாலைக் கற்றைகள் - முத்தாலாகிய மாலைகளின் திரள். கனககூடம் - பொன்னாலமைந்த கூடம். 169. இறை - இருப்பு, கல்நவில் தோளினான் - கற்றூண் போலும் தோளை யுடையன், அன்னவற்கு - மருசிக்கு. 170. அலகையில் - அளவில்லாத, அம்பரசரனை - வானத்தே இயங்குபவனான மரீசியை, மாற்றம் - சொற்கள், உரிய - உரிய சொற்கள், விலகிய கதிரவாகி - குறுக்கிட் டொளிரும் ஒளிக்கதிர்களை யுடையவாய், கழும - நெருங்க, கையான் - பயாபதி. 171. வேதண்டம் - மலை, இலச்சினை - முத்திரை, எஞ்சலில் - குறைவில்லாத, வஞ்சமில் - குற்றமில்லாத, மதிவரன் - அறிவு மேம்பட்ட அமைச்சன். 172. காதுவேல் - பகைவரைக் காய்கின்றவேல்; “காது வேலன்ன கண்ணார்” (பரஞ்சோதி, திருவிளையாடல்), கழலவன் - கழலணிந்த வேந்தனான பயாபதி,தீது தீர் காப்பு - குற்றம் நீங்கின பாதுகாப்பு, மன்னன் ஓலை காப்புப் பெற்றுச்செல்க என விடுத்தது என்க. அடிசில், அஞ்சனம் முதலிய தான் அனுப்பிய மங்கலங்களைக் காப்பாகப் பெற்றுக்கொள்க என விடுப்பது உயர்ந்தோர் தம் அருணோக்கி வாழ்வாரை வாழ்த்தற்குச் செய்யும் குறி. இக்காலத்தும் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் திருநீற்றுக் காப்பு விடுப்பது தமிழுலகு அறிந்தது. 173. அலங்குதார் - அசைகின்ற மாலை, இவுளி - குதிரை, இளையநம்பி - திவிட்டகுமரன், மல்லகமார்பினான் - மற்போர் பயின்ற மார்பினை யுடையவன்; பயாபதி, கூவி - வருவித்து, வல்லிதின் - அரசர்க்கு வல்லமுறைப்படி விரைவாக, கன்னி - சுயம்பிரபை, இவள் தன்னால் திவிட்டனுக்கு வழங்கப்பட்டமை கூறினமையின், “மார்பினான் தன் மருமகள்” என்றும், “தன் கன்னி” என்றும் குறிக்கின்றான். 174. இருந்தனன் - இருக்கையில் அமர்ந்தான், இறைவன் - பயாபதி, வென்றியம் பெருமை விச்சாதரர் - வெற்றியால் பெருமை மிக்க வித்தியாதரர்கள், மிக்கார் - மேம்பட்டவர், இவன் - சடியரசன், என்கொலோ - யாது கருதியோ, உரம் - திண்மை. 175. முன்னம் மொழிபவேல் என்று மாறுக. என்னவரேனுமாக - மொழிபவர் எத்துணை மேன்மையுடையராயினும், படுப - படுவர், போலாம் - ஒப்பில் போலி, நின்னுழை - நின்பால். 176. வரைமலி - மலைபோல, வயங்கு - விளங்கும், சுரை - பசுவின் மடிக்காம்பு, விரை - நறுமணம், நுரை - கோழை, பொள்ளல் - துளை. 177. உள்ளிய - விரும்பத்தக்க, ஒள்ளியரேனும் - அறிவினாலும் ஆண்மையாலும் புகழ்படைத்தாராயினும், தக்கது - தகுவது, சிலம்பு - மலை, எள்ளி - இகழ்ந்து. 178. தேம்கமழ் - தேன்பொருந்திய, சிவந்து - கோபித்து, ஓங்கிய - உயர்ந்த, மாற்றக்கு - மாற்றத்துக்கு; உரைக்கு; மனத்துக்கு என்பது மனக்கு என வந்தாற் போல; “மனக்கினா மொழிய வேண்டா” (சீவக). எரிசுடர் வயிரப் பூணான் - எரிபோல ஒளிவிடும் வயிரமணியிழைத்த பூணாரத்தையுடைய பயாபதி. 179. ஈட்டிய - உணவால் ஈட்டப்பட்ட, கண்ணியும் முடியுமுடைய சடியரசன், வாட்டமில் கண்ணி - வாடுதல் இல்லாத கண்ணி, உரைவிரிக்கலாமோ - வாயால் சொல்லக்கூடுமோ. 180. மெய்ப்புடை - மெய்ம்மையின்பக்கம், மேலை - முற்பிறவி, விழுத்தவம் - உயரிய தவம், ஒப்புடைத்து - எய்தும் தகுதியுடையது, முயறுமேனும் - முயன்றோ மாயினும், முன்னர்-“விஞ்சையர் செல்வந்தானும்.... மனித்தர்க்கு நுகரலாமோ” (176) என்றது. 181. கறையவாம் - குற்றம் பொருந்திய, ஓரேன் - உணரேனாயினேன், பொறை - பொறுமை, பூபன் - அரசன், அவிந்தன கதத்தன் - கோபம் தணிந்தவன். 182. மஞ்சுஇவர் - மேகம் படியும், மணிவரை - மணிகள் மலிந்தமலை; நீலநிற மானமலையுமாம், சென்னி - உச்சி, விச்சை - வித்தை, விழுமியர் - உயர்ந்தவர், அஞ்சல் - அச்சம், வெஞ்சுடர் - வெம்மை மிக்கஒளி, கேண்மோ, முன்னிலையசை. 183. அலகு - அளவு, நுங்கி - உணர்ந்து; இலக்கணை, கண்ணை - அருள் நிலையமாய், அளித்தல் - தோற்றுவித்தல், ஆக்கல், காத்தல், ஒடுக்குதல் என்ற முத்தொழிலுமுடையாய் என்றவாறு. 184. நிறைதரு கேவலத்தோய் - “தானும் பிறிதுமாகிய திவ்யகுண பரியாயங் களைப் பிரத்தியக்ஷமாக உணர்ந்த கேவலஞானமும், அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிசன கேவலவீரிய கேவலசுகமும்” உடையோய், குறைதலில் இன்பம் - கடையிலாஇன்பம், வென்ற - புலன்களை வென்ற; வினைகளை வென்ற என்றுமாம் 185. மாண்ட - மாண்புற்ற, உள்ளி - நினைந்து, தூண்டியசுடரின் - தூண்டப்பட்ட விளக்கு நன்கு ஒளிவிட்டு எரிவதுபோல, துளக்குவாய் - அசையச் செய்பவன், இசைக்குற்றேவல் - இசையாகிய திருப்பணி, மணிமிடை பூணினான் - மணிகளைச் செறிந்த பூணாகவுடையவனான ஆதிசேடன். 186. படர்ந்த - நினைந்த, பணதரன் - படத்தையுடைய பாம்பாகிய ஆதிசேடன், மாற்றத்து உள் மிசைத் தொடர்பு - சொல்லும் சொல்லுக்குக் காரணமாகிய எண்ணத்தின்மேல் நிற்கும் சம்பந்தத்தினை, உறுவலி - மிக்க வலிபடைத்த வனாகிய நமி; “மதவலி” என்பதுபோல, அன்மொழித் தொகை, விண்மிசை - தேவருலகம், மனத்தது - மனத்தின் விருப்பம். 187. ஒப்பா - ஒப்ப, பெருமை - மிகுதி, குலத்துளீர்க்கு - குலத்திற் பிறந்த உங்கட்கு, கருமம் - திருமணத் தொடர்பு, நீங்கரும் - நீக்கமுடியாத, நீர்மைத்து - தன்மையை யுடையது. 188. இலங்கு - விளங்குகின்ற, பாதம் - அடிகளில், சுருங்கண் - இருண்ட புழைகள், புற்றத்து - புற்று, அழல் - நெருப்புப்போலும் விடம், ஐவாய் - ஐந்துவாய் களையுடைய, ஐந்துதலைநாகம், வல்லி - கொடிகள், பூமிநாதன் -100 (வாகுவலி யென்னும்) அரசன், குழல் அணிந்து - கடைகுழன்று (சுருண்டு), குஞ்சி - தலைமயிர், குடைந்தன - குடைந்து கூடமைத்து வாழ்ந்தன. 189. ஓவலில் - கெடுதல் இல்லாத, அயர்ந்து - செய்து, கேவலப்பெண் - கேவல ஞானமாகிய பெண்; “கேவல மடந்தை” (சீவக) என்றார் பிறரும். கேவலம் - முத்திய நிலையாகிய முடிவுநிலை; “முடிவென்னும் பெண்ணரசி தன்னை;” “முடிவென்னும் பூங்கொடியும்” (473, 474) என்று பிறாண்டும் கூறுவர். ஆவியுள் - உயிர்க்குயிராய். 190. தங்கள் தன்மையால் புறஞ்சொல் வாராத் தன்மையால் என இயைக்க, புறஞ்சொல் - அலர், இழிப்புரை, “புறஞ்சொல் மாணாக்கிளவி” (தொல்) என்றாற்போல, அகலிடம் - விரிந்த நிலவுலகம். 191. அடிகள் என்றது வாகுவலியரசனை, கைப்புடை - கையினிடத்தே இருந்து, செவ்வேல் - பொருதுபட்ட பகைவர் குருதிபடிந்து சிவந்தவேல், ஒப்புடை - யாவரும் உடன்பட்ட, புராணம் - பழைய வரலாறு கூறும் நூல். 192. மந்திரக்கிழவர் - அமைச்சர்கள், தாள் - கால், சுந்தர வயிரத்தின் தோள் - அழகிய வயிரம்போல் திண்ணிய தோள்கள், அந்தரவுணர்வு - மேம்பட்ட மெய்யறிவு, எந்திரமிதற்கு - இவ்வெந்திரத்துக்கு; சுட்டு, “சாத்தன் அவன் வந்தான்” என்றாற் போல வந்தது, இயற்றப்பட்டார் - அரசியலில் அங்கமாக அமைக்கப்பட்டனர். கண் - அமைச்சர்; கால் - மக்கள்; தோள் - தோழர்; செவி - ஒற்றர்; உணர்வு - நீதி நூல்; வாய் - தூதுவர் என்க. 193. எற்றை - எவற்றை, நூற்று - நூலால் ஆராய்ந்து, பெற்று - பெற்றதனால். 194. உரைக்கற்பால உரை - உரைக்க வேண்டியதாகவுள்ள ஒரு சொல். கண்ணா - அருள் நோக்கி, இனி - இப்போழ்து வேறே. மன்னும் ஓவும் - அசைநிலை. 195. கொற்றவன் - சடியரசன், குறிப்பு - கருத்து, அடியன்மாரை - அடியார்களாகிய எங்களை, உற்றது - உண்டாகியது. அற்றம் - குறை, மாற்றம் - மாறாக ஒரு சொல். 196. இன்னம் - மேலும், அன்னநீர்மையார் - பயாபதியைப் போன்ற தன்மை யுடையவர். 197. அரசியலாணை செலுத்துதற்கண் இன்னார், இனியர் என்ற வேறுபாடின்றிக் கடிதோச்சி மெல்ல எறியும் இயல்புகண்டு, பயாபதியை “எரியும் ஆணையால்” என்றான். “அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்” என்புழியும் அரசராணைக்குத் தீயுவமமாதல் காண்க. பெற்றி - தன்மை, நண்பர்க்குப் பெருமை செய்தற்கண் தான் பணிந்தொழுகும் பான்மையான் என்றற்குச் “சிறியன்” என்றான். ஆண்டையர்க்கு - குடிகட்கு, எளியன் - காட்சிக்கு எளியன், ஓடை - முகப்பட்டம். 198. வெய்யது - துன்பம் தருவது, செய்ய - செம்மையுடைய, ஐய - அழகிய. 199. வீவில் - கெடாத, அங்கண் நீர் வேலி - அழகிய இடமாகிய கடல் சூழ்ந்த நிலவுலகம், ஆவி - உயிர், “மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்” (புறம்) என்றார் பிறரும். ஓவும் - கெடும், கொல் - ஐயப்பொருட்டு, கண்படான் - உறங்கான், “உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி, கறங்குவெண்டிரை வையகம் காக்குமால்” (சீவக) என்பவாகலின், “கண்படான்” என்றான். மாவல்தானை - பெரிய வலிய தானை; யானை முதலியவற்றால் வலிய தானை யென்றுமாம். 200. மங்குல் - மேகம், வண்கை - வளவியகை, காதல் - அன்பு, அம், சாரியை, இங்கண் - இவ்வித்தியாதரவுலகத்து, நீரர் - தகுதிபெற்றவராவர். 201. சங்கவண்ணனார் - சங்குபோல வெண்ணிறமுடைய விசயன், புரையும் - ஒத்த, அங்கண் - அழகிய இடத்தையுடைய, நாட்டிய - நியமித்த, மங்கலப்பொறி - திருமணத்திற்குரிய ஊழ், காண்டி - காண்பாயாக. 202. ஏந்தல் - உயர்ந்தவன், புணர்த்தவாறு - கூட்டிய முறை, வெங்கண்யானை, வெவ்விய கண்ணையுடைய யானை. 203. செங்கண் செல்வ - பயாபதியைச் செங்கண்ணன் என முன்னும் கூறியிருத்தல் காண்க, வாய்பக - வாய்பிளக்கும்படி, தெறுவன் - வதைப்பன், கேள்வியான் - சதவிந்து. 204. வாயிலா - காரணமாக, ஓதும் மாண்பினான் - பிறர் அறியாது ஒற்றிவந்து உரைக்குந் தகுதியுடையவன். தீது இல் தானை - குற்றமில்லாத தானை, நீதி - முறை. 205. தாமும் - மாலை, தட - பெரிய, தேம் மயங்கிய - தேன்பொருந்திய, கண்ணெனும் செங்கழுநீர் மலர் என்க. அணி - உண்டாக்கிய, அயர்வெய்தினான் - களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். 206. மண்கனிந்த - மார்ச்சனையமைந்த, கண் - அவிநயப் பார்வை, பண் - இசை, விண் - தேவருலக இன்பம், விழைவு - கழி காமம். 207. வாவி - குளம், மதுச்சோலை - தேன் சொரியும் பூஞ்சோலை, தூவி - தோகை, துதைந்த - நெருங்கிய, பாவும் - பரந்த, புனற்பட்டம் - நீரோடை, மேவும் - விரும்பும். 208. செங்கதிர்மண்டிலம் - செஞ்ஞாயிறு, வெய்து - வெப்பமுடையது. துன்னும் - பொருந்திய, பனிச்சுடர் - பனிபோற்குளிர்ந்த நிலவொளி, களித்து - காமக்களிப் பால் மயங்கி, அன்னன் - அவ்வியல்பினன். 209. தோடு - தொகுதி, மலரிதழுமாம், கோதை - மாலை, கோடி - ஆடை, குய்யத்தடம் - அல்குலிடம், படிந்து ஆடி - கலவியிற்கூடி, தன் அணையாமையின் - தன்னை வந்து கூடாமையால், பூமகள் - செல்வத்துக்குரிய திருமகள், ஊடலுற்று - உள்ளத்தே வெறுப்பு மிக்கு, இடம் பார்த்து - நீங்குதற் கேற்ற காலம் நோக்கி, உள்ளாயினான் - இருப்பளாயினான். 210. வளை - சங்கினம், திரை - அலைகளையுடைய கடல் (சூழ்ந்த), பன்னின் - சொல்லுங்கால், ஆறு பகைக்குலம் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மயக்கம், செருக்கு பகை என்பன. 211. தன்னைவென்ற - தன்பாலுள்ள குற்றமாகிய அறுவகைப் பகையை வென்ற, வய - வலி, வேறல் - வெல்லுதல், பிறர்க்கு - புறத்தேயுள்ள பகைவர்க்கு, வரைப்பகம் - ஆட்சியெல்லைக் குட்பட்ட நிலவுலகம், நன்று - பெரிதும். 212. பெற்ற தன் முதலா - குற்றமறப் பெற்ர தன் அறிவு முதலாக, சுற்றி வந்து - தன்னையே சூழ்ந்துவந்து வான்பொருள் - மிக்க செல்வம், ஈட்டியவற்றைக் காத்தலும் இறைமாட்சியாகலின், “வான்பொருள் காத்து” என்றார். ஈகை - காத்தவற்றை அறம் முதலிய நான்கின் பொருட்டு அளித்தல், வறியார்க் கொன்றீயும் ஈகை கல்லாமற் பாகம்படும் பிறவிக்குணமாதலின் “ஈகை கற்றவன்” என்றார். 213. தன் அறிவு அருக்கனாக, நீர் திருவாக, செல்வம் தாமரையாகக் கொள்க, செருக்கு - மதமயக்கம், முருக்கும் - கெடுக்கும். 214. “இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம், மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து” (குறள்.539), புகழ்ச்சி நூல் - திருக்குறள், மதிமைந்துறும்போழ்து - அறிவுச் செருக்கினால் கன்றும்பொழுது; இதற்குப் பரிமேலழகர் வேறு கூறுவர், திகழ்ச்சி செல்பொன் - ஒளிவிடுகின்றபொன். 215. தடம் வீறுவ - வலியினைமாய்த்து மேம்படுபவை, ஆழித்தானவர் - கடல்போன்ற தானவர்; ஆழிப்படையையுடைய தானவர் என்றுமாம். பாழித் தோள் - பெரிய தோள்கள். 216. குலிசம் வச்சிரப்படை, பணிக்குமேல் - எறிவானாயின், மா - பெரிய, நிலைய - என்பால் நிலைபெற்றுள்ள, ஆழி - சக்கரம், தொலைவில் - கெடாத. 217. போற்றிலன் - இகழ்ந்தான், அலகில் - பொருளல்லாத, ஒப்ப - ஒருங்கே, உடன்று - பகைத்து, மலைவன் - பொருதழிப்பேன், மதிப்பில்லை - கருதுதற்குரிய அருமையில்லை. 218. பகையலாதவர் - நண்பரும் நொதுமலும் கிளைஞரும், நகையில் - நம்பால் உவப்பில்லாத, தீமனம் - கொடியமனம், எண்ணலும் - எண்ணிக்கொள்வதும், முகை - அரும்பு, வேய்ந்த - தொடுக்கப்பட்ட, மிகையின் - மிக்கவழி, வெதுப்பும் - வருத்தும். 219. தேறும் - தெளியும், திறையிற்கு - திறைபெறுவதற்கு, முகமன் - நல்லுரை, எதிர் - எதிர்ப்பு, பகைமை, முகமன் மொழிந்து, திறைமுறையின் தந்து எதிர் குறையின் என்க. குறையின் - தூதுவர் முன் பணிமொழி கூறுவானாயின் என்றலுமாம். 220. ஊடகம் ஓடி - அகத்தூடு ஓடி; உள்ளெங்கும் கலப்பின்றி, எரிந்து - ஒளிசெய்து, ஆடகம் - பொன், சூடகம் - ஒருவகை வளையல், தோடகமெல்லடி - மலரிதழின் அகம்போலும் மெல்லிய அடி, நாரியர் - மகளிர். 221. சிந்திய - கரையிடத்தே ஒதுக்கிய, செங்கதிர் பவழக்கொடி - சிவந்த ஒளியைச் செய்யும் பவழக்கொடி, எண் தரளம் - நன்கு மதிக்கத் தக்க முத்து, ஈட்டம் - கூட்டம், கண் - கணு, காழ் - வயிரம், பண் - இசை. 222. ஆழியினான் - சக்கரத்தையுடைய அச்சுவகண்டன், உரை - ஆணை. 223. தேசு - புகழ், பொருத்தினால் - ஒப்புநோக்குமிடத்து, புலமையென்புழி உம்மைதொக்கது, உற்று - கூறுமாறே பணிந்து நின்று, செய் வினைக்கிழவன் - செய்யப்படும் வினைக்கீடாக இன்பதுன்பங்களை வரைந்தளித்தற்கு உரிய முதல்வன், இதுவும் இனி வருவனவும் தன்னைப் பிறன்போல் கூறும் கூற்று. 224. மதியினை மலரச் சூழ்ந்து - அறிவினைப் பரக்கச் செலுத்தி ஆராய்ந்து, நுகர்தும் - நுகர்வோம், பதியினைக்கலக்கி - தாம் வாழும் நாடு நகரத்தவரை வருத்தி, பறித்து - கவர்ந்து, மாட்டா - மாட்டாமல், வெளிய நீரார் - வெளிற்றறிவினையுடையவர்; புல்லறிவாளர் என்க. 225. ஒளி - புகழுமாம், ஓர் அளியினால் - சிறிதாய அருள் பெற்று, அவா - ஆசை, திறங்கள் - வகைகள், ஓராம் - ஆராய்வதில்லை, பெரியம் - தன்னையே இகழ்ந்து கூறியது. 226. ஆளிகட்கு - சிங்கங்களுக்கு, வாளி - அம்பு, வரை - மலை, அனைய - போன்ற, காளைகள் - மக்களான விசயனும் திவிட்டனும், கனல்ப - மிகவும் வெகுளுவர், இன்னே - இப்போதே, விதியின் - முறைப்படி. 227. அருளினன் விடுப்ப - திறைதந்து செல்ல விடுப்ப, மேல் - அவ்விமானத்தின் மேல், செவ்வாய் - சிவந்தவாய், சேர்த்தி - ஏறுவித்து, கஞ்சிகை - சட்டை; திரையுமாம். 228. அறைகழல் அரவத்தானை - கட்டப்பட்ட வீரகண்டையின் ஆரவாரத் தையுடைய சேனைவீரர், பணிய - தன்னை வணங்க, விடுதர - தூதுவரை விடுப்ப, செருவெந்தானை - களத்தே வெவ்விய போரைச் செய்யும் தானை. 229. வழிமொழிந்து - ஏவல் செய்து பணி மொழி பகர்ந்து, மாந்தர் - உழுதுண்ணும் வேளாளர், எழுதிய திறை - இத்துணை வேண்டும் என எழுதி விடுத்த திறை, இறுத்து - செலுத்தி. 230. நாளினும் - ஆண்டுதோறும், தொடுகழல் - அணியும் வீரகண்டை பூண்ட தாள், மயரி - மயக்கமுடைய; “நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை” (மணி.22:75) என்றார் பிறரும். 231. பாழியால் - (தோள்) வலியால், வெருட்டி - அச்சமுறுத்தி, அடர்த்திர் - வருத்துகின்றீர், ஏழை - அறிவில்லாதவன். 232. உட்க - அஞ்சுமாறு, மாழை - பொன், கணம் - கூட்டம், மீண்டது என்பதை மாழைக்கும் கூட்டுக. வட்கி - வணங்கி, தெவ் - பகை, என - என்று வாயாற் சொல்லுதற்கு, துட்கெனும் - அஞ்சும், மனத்தினர் - முற்றெச்சம். 233. விட்டு விளங்கும் மின்னின் நீக்குதற்கு, “மின்தொடர்ந்து இலங்கு” என்றார். விளைவுறா - உலகவறிவு நிரம்பாத, ஒன்ற - பொருந்த, உளைவித்து - வருத்தி, சீயம் - சிங்கம், தன்மேல் - திவிட்டன்மேற் செல்லுமாறு, புணர்த்திடுவன் - சூழ்ச்சி செய்வேன். 234. இலைத்தடஞ்சோலை - இலைகள் தழைத்த பெரிய சோலை, இமவந்தம் - இமையமலையைச் சார்ந்த நாடு, சிலை - வில், தோளினார் - விசய திவிட்டர், மலைத்தடம் - மலையிடம், புடைபெயர - அசைய, அலைத்து - அலைமிக வுண்டாக்கி, உரறியிட்டான் - முழக்கினான். 235. பொடித்தலை - புழுதி நிறைந்த இடம், நெரிந்து - நசுங்கி, அடித்தலை - அடித்து வருத்துதலால், ஆழ - வீழ, பதடி - பதர், துறுகல் - பெருங்கற்கள், எயிறுற இறுகி - பற்கள் பொருந்த நெருக்குண்டு. 236. திறையின் மாற்றம் - திறையின் பொருட்டு நீ பேசிய பேச்சு, நறையும் குஞ்சி - தேனொழுகும் கண்ணி சூடிய தலைமயிர், நன்று நன்று - அடுக்கு இகழ்ச்சி குறித்தது. 237. தளையின் விண்டு - முறுக்கு அவிழ்தலால் நீங்கிச் சொரியும், தயங்கிய - விளங்குகின்ற, இளையை - இளமையுடையவள், ஒன்று - சிறப்புற, உரைத்த - நீ உரைத்த சொற்களை, அழன்றிலன் - வெகுண்டானில்லை. 238. அறியுமாயின் - நீ மாறுபட்ட கருத்துக்கொண்டிருக்கின்றாயென்று அறிவானாயின், அரிய - தடுத்தற்கரிதாகிய, மின்உரும் - மின்னொடு கூடிய இடி, இறுவரை - அடிமலை, முழை - குகை, கோளரி - கொலைவல்ல சிங்கம், ஒழிக்கலா - ஒழிக்கமாட்டாமல், நமக்கு - நம்பால், உவந்து ஈயும் - அவன்தானே உவந்து கொடுக்கும், மீட்கிய - கொடாது மீட்டுக்கொள்ள, சிறியோன் கோளரி ஒழிக்கலாது, நமக்கு, உவந்து ஈயும் என்றான் என்க. செருக்குடையனாயினும், சிறியோனாதலின் கோளரி ஒழிக்கலாது உவந்து ஈயும் என்றற்கு, “திறையும்..... சிறியோன்” என்றான். 239. ஒலிபுனல் - மிக்க நீர்வளம் கொண்ட, கனம் - பருத்த, மேகமுமாம், அளவிலா முழை - ஆழம் காணமுடியாத குகை. 240. அருவரைப்பிலம் என - அரிய மலையிடத்தேயுள்ள பிலத்துவாரம் போன்ற, போழ்ந்து - பிளந்து, ஏய இப்பெற்றி - பொருந்திய இத்தன்மையாக, பேயில் பேசிய - பேய்போலக் கருதிச் சொல்லிய, ஆகு - ஆவேன். 241. இவரும் - ஊர்ந்து வரும், சிலை இவுளி - சிலைக்கின்ற குதிரை, கவரி நெற்றிய - தலையாட்டமணிந்த நெற்றியையுடைய, காவிடம் - தங்குமிடம், தவிர்க - நின்றுவிடுக, உவரிநீர் - உவர்க்கின்ற நீரையுடைய கடல், உழையவர் - பக்கத்தே குழவந்தவர். 242. இரைப்பது - விலக்கும் குறிப்பால் செய்யும் ஓசை, நளி - பெருமை, படிவம் - வடிவு, படர - செல்ல, தெளிந்தனன் - கோளரியிருக்கும் மலை யென்பதைத் தெளிய அறிந்தான். திருவமார்பினன் - திருமகள் தங்கும் மார்பையுடையவன்; அகரம் சாரியை, மகரம் - மகரமீன், வளை - சங்கு, வண்ணன் - விசயன், வலித்தான் - வற்புறுத்தினான். 243. புழைக்கை - தும்பிக்கை, எருத்து - கழுத்து, புரோசை - கயிறு, யானை செலுத்துவோர் எருத்தின்மேல் உட்கார்ந்து, அதன் கழுத்திலுள்ள கயிற்றிடையே தம் கால்களை வைத்துச் சைகை செய்பவாதலின், அது செய்யும் விசயதிவிட்டர் காலை, “புரோசையிற் பயின்ற சேவடி” என்றார். வரை - மலை, நெறி - வழியில், அழல்கொள் வெம்பொடி - நெருப்பெனச் சுடும் வெவ்விய பொடிமணலில், தொழில் - கொலைத்தொழில், செருக்கின்ற சூழல் - கொல்கின்ற இடம். 244. அழல் உளை அரிமா - நெருப்புப்போல் சிவந்த பிடரிமயிரையுடைய சிங்கம், உடைந்து போக - திண்ணிதாய் நின்றவை துகள்படும் படியாக, பொடிந்து - துகளாகி, நெரிவு - நெரித்துக்கொண்டு, புரளா - புரள. 245. காள்ஒளிமுகில் - கரிய ஒளி வீசுகின்ற மேகம்; காளம் என்பது கடைக்குறைந்து நின்றது, விசியா - கட்டி, மேற்செய - மேலேற்றி (சரியாதபடி) சூளி - ஒளி, தொடர் - கயிறு, குஞ்சி - தலைமயிர், ஆளி மொய்ம்பன் - சிங்கம் போலும் வலியுடையோன், உடைந்தது - அஞ்சி ஓடிவிட்டது. 246. ஆர்த்தில - ஒலிக்கவில்லை, புடையா - ஒன்றோடொன்று இடித்து ஒலி செய்தில. எருத்து - கழுத்து, எழிலும் தோள் - உயரும் தோள் 247. மூடியிட்டன - மறைத்துவிட்டன, முரன்று - ஒலி செய்து, நொறுங்காய் - உடைந்து பொடிகளாய், கொடுமுடித்துறுகற்கள் - மலை உச்சியில் இருந்த பெரும்பாறைகள், அரியுருவுடையான் - அரிகேது என்பவன். 248. அலர்ந்த - உண்டாகிய, கனல - நெருப்பைக் கக்க, முதிர்வு இல் கோளரி - முதுமை யடையாத சிங்கம், முனிந்து - வெகுண்டு, பிதிர்வு சென்றது பெருவரை - பெருமலை பிளந்து விட்டது. 249. அணைந்து - கிழித்து, உளைந்து - பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டு, மிதியா - பாய்ந்தேறி, போழ் - துண்டம், பெருவலி - மிக்க வன்மை. 250. சீயம் - சிங்கம், திறலது - வன்மையுடையது, வயமா - ஆளியென்னும் ஒருவகை விலங்கு, ஆய - அவ்வாளிகள், அரிமா - இச்சிங்கம், சீயம், வயமா, அரிமா - இவை சிங்கத்தின் வகை போலும். வாயின்மேல் விரல்வைத்தல் - வியப்புக்குறி, “மூக்கினுச்சிக் கூட்டுவிரல் சேர்த்தி, மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற” (நற்.149) என்றாற்போல. 251. இகலோன் - மாறுபாட்டினையுடைய திவிட்டன், நித்திலம் - முத்து, புரி - முறுக்கு, ஏதம் - உயிர்கட்கெல்லாம் தீங்கு செய்வது, இன்னினி - இப்பொழுதே; “இன்னினி வாராமாறுகொல்” (ஐங்.222) என்ப, போதும் - போவோம். 252. வம்பு - புதுமை, தாழ்வர் - மலையின் தாழ்ந்த பக்கம், இம்பர் - கீழே, போம்படித்தன்று - போதற்கேற்ற இயல்புடையதன்று. 253. உரைசெய் - புகழ்ந்தோதும், உறுகண் - துன்பம், வரைசெய் - மலைபோன்ற, வாழ்க்கை - உயிர்வாழ்வு, திரை - அலை, செய்கைமேல் - செயல் குறித்து. 254. கடவுள் தானம் சேர்ந்தவர் - துறவு பூண்ட சான்றோர், களைகண் - ஆதரவு, அற்றவர் - பொருளில்லாதவர், அனையநீரார்க்கு - அத்தகைய இயல்பினையுடைய பிறர்க்கு. 255. வலிக்குமாயின் - வற்புறுத்துவானாயின், நிலவி - நிலைபெற்று, என்னைக் கொடுத்து - என் உடல் உயிர்களைக் கொடுத்து. 256. உருவம் - அழகிய உடம்பு, ஊழ் - முறைப்படி, மற்றயாக்கை - மற்றைப் புகழுடம்பு, திருஅமர்ந்து - நன்மதிப்புற்று, பின் - பூதவுடம்பு இறந்த பின்பும். 257. ஈர் அலர்க் குஞ்சி - குளிர்ந்த பூச்சூடும் தலைமயிரில், துன்னிய - பலவகைச் செடிகொடி மரம் முதலியன நெருங்கிய, துகள் - தூசு, துதைந்தவாறு - படிந்திருப்பது, மின்இவர் - ஒளி பொருந்திய 258. புறணி - நாட்டின்புறம், சீற்றம் - வெகுளி, வேற்றுவன் தமர்கள் - அச்சுவ கண்டனுடைய தூதர்கள், வெம்பி - வெகுண்டு, சால் - நிரம்பிய 259. வான்உயர் - வானளாவிய, சிறுவன் - மகனான விசயன், சவியன் - ஒளியுடையன். 260. குழவித்திங்கள் - பிறைத்திங்கள், அகட்டுப் போந்து - உன்னிருந்து வந்து, முற்றுவான் - வட்டம் நிரம்புதற்கு, மூரி - பெருமை, அன்று அம்மால் - அன்று அந்தப் பெரிய திவிட்டன், ஆறாக - வழியாக, வேந்தன் - சடியரசன். 261. களிக்கயல் - களிப்பால் துள்ளுதலையுடைய கயல்மீன், பொரிய போகின்ற போலும் - பொருதற்குச் செல்வது போன்ற, ஒன்றோடொன்று நிகர்ப்பது குறித்துச் செல்வதுபோன்ற, மால் அவற்கு - பெரியவனான திவிட்டனுக்கு, கடிவினை - திருமணத்துக்கு வேண்டிய செயல்வகை, பெருக்கல் - பெருகச் செய்தல். 262. ஒள்நிலா உருவக்கோட்ட - ஒள்ளிய ஒளியைச் செய்யும் அழகிய கொம்பு களையுடைய, ஓடை - முகபடாம், பண் - பண்ணுதற்குரிய ஒப்பனைகள், பருமித்து - பருமம் முதலியன அமைத்து, பதாகை - கொடி, கழும - நெருங்க; புகை மிக்குப்படர. 263. கம்மச்செய்கை - தட்டாரது செய்வினை, கனகச்சூலம் - பொற்சூலம், பக்கரை - பக்கத்தே கால்வைத்தற்குத் தொங்கவிடும் வார், பதைப்ப - அசைய, மட்டு - தேன், கொட்டிய குரத்த - செல்லற்கு முன் வைத்த குளம்புகளையுடைய, கொட்டிய என்றற்குப் பொன் (லாடம்) கொட்டிய குளம்புமாம். ஆலித்து - கனைத்து. 264. சூடு - உச்சி, அணித்தொழில் - அழகிய சித்திரவேலை, ஆரக்கோவை - முத்துமாலை, கொடிஞ்சி - தேர்த்தட்டு, துணித்து - துண்டித்து, துரகம் - குதிரை, கணித்து - கணக்கிட்டு, நீர - தன்மையுடையவை. 265. ஒட்டிய - பொருந்திய, கலிங்கம் - உடை, திரைத்து - சுருக்கம்பட, பட்டிகை - துகிற்பட்டி, பதைப்ப - அசைய, பரட்டைய - செருப்பின் மேற்பட்டை, நரல - சப்திக்க, கனலும் - ஒளி வீசும், மறம் - வீரம், மள்ளர் - காலாள் வீரர். 266. வாரணி - வார்க்கட்டினையுடைய, வயிர் - ஒருவகை இசைக்கருவி, தமனியம் - பொன், ஆர் - அச்சு, நீரணி - நீர் நிறைந்த, நெளிபரப்ப - நெளிந்து விரிய. 267. பண்ணமைத்து - செப்பம் செய்துகொண்டு, திருக்கடை - திருவாயில், விண் இயல் விமானம் - ஆகாயத்தே செல்லும் விமானம், வானவில் உமிழ்ந்து மின்ன - வானவில் போலப் பல்வகை நிறத்தொடு கூடிய ஒளி செய்ய. 268. ஓரை - இராசி, புலவோர் - சோதிடர், இன்னகை - இனிய ஒளி வீசுகின்ற, விமானதலம் - விமானத்திடத்தே. 269. உழையவள் - தோழி, வளாவிய - உழக்கிய, கெடில் நீத்தம் - கெடுதல் இல்லாத நீர்ப்பெருக்கம், துன்னும் - பொருந்திய, தென்னென்தேன் இமிர் - தென் என்னும் இசை செய்யும் வண்டு ஒலிக்கும். 270. பொன் அன்னார் - திருமகளை யொத்த தோழியர், மன்னன் - சடியரசன்; அருளால் - மிக்க அன்புடன் செய்த பணிமேற் கொண்டு, கன்னி மாநகர் - கன்னிமாடம், நகர் - பேரரண்மனை. 271. வேண்டுப - வேண்டுவன, ஈண்டிய - நெருங்கிய, மந்திரக்கிழவர் - அமைச்சர், காண்தகு - நாமே சென்று காணத்தக்க, காணுமாறு என்னை - காணும் வகை யாது, என - என்று வினவ, ஆண் நகை - நல்லாண் மகற்குற்ற குணநல மனைத்தும் உடைய பயாபதி. 272. கோலமாம் நலம் - அழகும் ஒருவன் பெறற்குரிய நலங்களுள் ஒன்றாதலின், “கோலமாம் நலத்தினும்” என்றார்; “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலுமரிதே” (சீவக) என்றார் தேவரும், மலைத்தலில் வயத்தினும் - பிறர் தனக்குநேர்நின்று பொருதற்கில்லாத வன்மையிலும், உலம் - கற்றூண், உருவத்தோள் - கண்டோர் உள்ளத்தே உட்குமாறு செய்யும் தோள். 273. ஏதம் - குற்றம், கோதிலா - குற்றமில்லாத, குணம் புரிகுன்று - குணக்குன்று, குன்று சூழ்ந்த கடல்போலப் பயாபதியைச் சூழ்ந்து நீதிநூற் புலவரான அமைச்சர் இருந்தனர் என்க. 274. அம்மலர் - அழகிய பூக்கள், அலங்கல் - மாலை, அலங்கலான் - பயாபதி, மொய்ம்மலர் - பெரிய மலராகிய, முகிழ்க்கும் - குவியும், மைம்மலர் நெடுவரை - மேகம் தங்கும் நெடிய மேருமலை, செம்மலர் - சிவந்த பூ. 275. காமருகவின் - மிக்க அழகு, தழுவி - அன்புகனிய ஏற்று நோக்கி, சாமரை - சாமரை வீசும், நல்நுதல் - நல்ல நுதல்; நன்மை - மென்மை, மென்மை கண்டு சான்றோர், “பூநுதல்” என்றும் கூறுப.சாமரையும் நுதலும் தடக்கையுமுடைய யானை யென்க; அரசர் உலாவருங் காலையில் யானை சாமரை வீசுதல் மரபு. 276. விண்ணவர் கிழவன் - இந்திரன், எண்ணிடை - மனத்தின்கண், இடை - விளக்கம்; பொருளுமாம், கண்ணிடை தீயுமிழும் களிறு; கடாக்களிறு என்க, கடாக்களிறு - மதமுடைய யானை. 277. ஏங்குநீர் - முழங்குகின்ற கடல், வளாகம் - பூமி, இக்குவாமன்னர் - இட்சுவாகு என்ற மன்னர் குலத்தவர், தூங்குநீர் - நிரம்பிய நீர், தேங்கு - விளங்கும், உயர்ந்தவர் தீர்த்தம் கொண்டு சென்று தாழ்ந்தோரைத் தெளித்தல் சால்பு என்க. அமிழ்தின் - இன் அல்வழிக்கண் வந்தசாரியை. 278. முதலும் - முற்படும்; “முதலாவேன தம்பெயர் முதலும்” (தொல்) என்றாற்போல, அறிய - பகைவரால் தடுத்தற்கரிய, கண்ணி - கண்ணையுடைய சுயம்பிரபை, என்ன - என்று சொல்ல, தாழம் - தாமதம். 279. பூவை - காயாம்பூ, துணர்ந்தனைய - கொத்தாகத் திரண்டது போன்ற; “மணிதுணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி” (புறம்) என்ப பிறரும், சிறைகொண்டிட்டான் - கவர்ந்துகொண்டான்; இதனால் சுயம்பிரபைக்கு “நோக்குவவெல்லாம் அவையே போறல்” (தொல்) என்ற மனநிலை எய்துவித்தானாம். 280. சிறை - அணை, செம்புனல் - புதுவெள்ளம், சிறக்குமாயின் - மிகுமாயின்; “சிறையுமுண்டோ செழும்புனல் மிக்குழீஇ, நிறையுமுண்டோ காமம் காழ்கொளின்” (மணி. 5: 19-20) என்று பிறரும் கூறினர். உள்ளம் இறைநின்றதுஉயிரோடே உளது என்பார்க்கு அதுதானும் நம்பிபால் பட்டது என்க. இறை - சிறிது, நறை - தேன். 281. கோள்நின்ற மதியம் - இராகு கேதுக்களால் கொள்ளநின்ற முழுமதி, கோட்டி - களித்து, தாதகம் - தேன் பொருந்திய அகமலர், வாள் - ஒளி, வாட்படையுமாம், வடிவினுக்கு இவர - வடிவே காண்டற்கு விழைய, நடுவு நின்று - காட்சி வேட்கைக்கும் நாணத்துக்கும் இடையே நின்று. 282. தேமிடை காவல் வேலிச் செழுமணல் குவால் - நாற்றிசையும் செறிந்த காவலாகிய வேலியையுடைய மணற்குவியல், தேம் - திசைக்கூறு, கா - சோலை, பூமிடை தடம் - பூக்கள் நிறைந்த பெரிய பொய்கை, தாம் உடை - தாம் தமக்கு உரிமையாகவுடைய, காமம் உடை என்பது காமுடை என நின்றது. ஏகாரம், அவரால் காதலிக்கப்பட்டாலொழியப் பிறர் இல்லையென்பது படநின்றது 283. பண் - இசை, மருட்டும் - இனிமையால் வென்று மேம்படும். மருள - போல, மருட்டும் - மனம் மருளச் செய்யும், மண்களை மருட்டும் சீர் - மண்ணவரை வியப்பிக்கும் புகழ். 284. அமுதமா பிரபை - மா, அசை; “காமமாதிலகன்” (சீவக) என்றாற்போல, மெய் - உடம்பு, செங்கனி கனிந்த - கோவைக்கனி போன்ற. 285. பெருங்கலம் - பெருஞ்செல்வம், பேணலாகா - போற்றிவைத்துக் கோடற்கு உரியவல்ல, இருங்கலி - பெருமுழக்கம், நினைந்து - சேர்த்தற்கு எண்ணி. 286. அல்லளாய் விடின் - அல்லள் என்று துணியப்படின், இவரும் போழ்து - ஆராயும்போது, இது - விஞ்சை வேந்தன் கன்னியது உருவம் இது. 287. வளாகம் - இடம், உள் - உள்ளம், மகிழ்தல் செல்லா - மகிழ்ச்சி காட்டாத, ஒளி - உரம், கண்ணிய - கருதியுரைத்த, வெதும்புகின்றது - உருகுவது; “வெண்ணெய்க் குன்றெரி யுற்றாற்போல் திரிந்து வேறாவரன்றே” (சீவக) என்றார் தேவரும். 288. உருவவீதி - அழகிய வழி, வெய்யோன் - சூரியன், விலங்கல் - அத்தமனகிரி, நெற்றி - உச்சி, சாகை - கிளை, நுதி - உச்சி, பண்ணியல் - பண்ணுதற்குரிய செய்கை, பையவே - மெல்ல. 289. மையொளி - கரியஒளி, மேல் அவிந்த - மேலே கருகி அவிந்திருந்த, தழல் - நெருப்பு, செய்யது - சிவந்தது, மேல்பால் - மேற்கில். 290. போதெலாம் - தாமரைப் பூக்களெல்லாம், பொலிவு - அழகு, மீது - வானத்தே, திகிரி வெய்யோன் - ஒற்றைச் சக்கரத்தேரையுடைய ஞாயிறு, ஆம்பல் - அல்லிப்பூ, தம்மையே மிகுத்த - தம் ஒளியைத் தாமே மிக எடுத்துக் காட்டின. 291. செய்யொளி - சிவந்த ஒளி, செக்கர் - அந்திமாலை, தேறி - தெளிந்து, வெய்யொளி - வெவ்விய ஒளி, மணிகொள் பொய்கை யென்றார். விண்மீன் களோடு கூடிய வானத்துக்கு உவமம் செய்தலால், மை - கருமை, மொய் - செறிந்த, நாளவளையங்கள் - கொடித்தண்டுகளாகிய வளையம். 292. அகட்டு - அகத்தில், குழலி யென்றதற்கு ஏற்பத் திங்களின் நிலவுக்கதிரை “பால்வாய்த் தீங்கதிர்” என்றார். ஒருவராய் இருப்பினும் இனிய நீரராய் இருப்பார் இலர் என்பது தோன்ற, “எங்குளர்” என்றார். இளங்குழவி முகங்கண்டு மலர்வார் பலருமாக, குவிவாரும் சிலருளர், தாமரை போல். 293. மணவாய - நறுமணத்தையுடைய, மதர்ப்ப - மிக, இணர்வாய - பூங்கொத்துக் களையுடைய, துணைவாய கரும்பு - துணையோடு கூடிய வண்டு, அரவிந்த வனம் - தாமரைப் பூக்களின் செறிவு, துகள் - தாது, சீத்து - துடைத்து, திணை - உயர்வு. 294. பாங்கர் - பக்கம், பழுச்செய்சோலை - பழங்களையுடைய சோலை, தனியவர் - தனித்திருப்பவர், இனல் - துன்பம், துனிவரவு - துன்பம். 295. காதன்மை - காதலுடைமை, காதலர்க்கு - காதலுடையார்க்கு, ஏதிலார் - ஏதிலராய்க் காதலிக்கப்பட்ட அவர், அயலராய் - உடனிருப்பவராய், காதலர் இருவர், காதல் கொள்ளுமுன் ஏதிலராய் இருந்து, காதல் கொண்டபின் அயலராய் (அருகிடத் தவராய்) இயல்வாராயின், அவர்க்குக் கூட்டம் அடிக்கடி எய்துதலால் இன்பம் சிறத்தல் ஒருதலை, கோது - பயனற்றது, “கனிபடு கிளவியார்தம் காதலர் கவானிற் றுஞ்சின், பனியிருவிசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்” என்றார் தேவரும் 296. சொரிந்த நீர் அருவி போறலின், “அருவிநீர்” என்றார். வானினவர் - வானுலகத்துத் தேவர்கள், விடலை - திவிட்டன், வேள்விநகர் - வேள்விச்சாலை. 297. வனப்பினது - அழகையுடையது, கோடி மடி தாங்கி - புத்தாடையுடுத்து, கலி - ஆரவாரம், சேர்த்தி - புனைந்து, பங்கயம் - தாமரை, பராவ - பாடிப் பரவ, செங்கயல் நெடுங்கணவள் - சுயம்பிரபை. 298. அழல் - வேள்வித் தீ, வரைவேந்தன் - சடியரசன், கொங்கு - தேன், தாரவற்கு - மாலை யணிந்த திவிட்டனுக்கு, நாள்மல ருளாள் - தாமரைப் பூவிலிருக்கும் திருமகள். 299. வடமீனை - அருந்ததிமீனை, முன்னை - முன்பாக, ஈனம் - பலர் காணத் தோன்றுவதாகிய குறைவு, “காமனை யென்றும் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார்” (சீவக) என்பவாகலின், “இகழ்ந்தாள்” என்றார். 300. அரும்பி, போதாய், முற்றி, கனிகொண்டு வழிந்த காமம் என்க, பருவம் - பெதும்பைப் பருவம், கனிகொண்டது மங்கைப்பருவத்து என்க, உள்ளால் - உள்ளே, திரு - காமச்செல்வம், ஆரமாட்டார் - அமைதி பெறாராய். 301. மணி - மாணிக்க மணி, விரை - மணம், வேனில் தென்றல் - வேனிற் காலத்தேமெய்க்கினிதாக வீசும் தென்றற் காற்று, அலர்தூற்ற - பூக்களைப் பூப்பிக்க, நிரைந்து - வரிசையுற, வடு - மாம்பிஞ்சு, படுதி - பெறுகின்றாய். மகளை, மேனிநிறம் கொண்டு தளிர் ஈனுவதை விழையற்க; விழையின், அலர் தூற்ற, வடுப்படுவாய் எனப் பிறிதொரு பொருள் தோற்றுவித்தல் காண்க, மேல் வருவனவற்றிலும் இவ்வாறே பிறிதுபொருள் கண்டு கொள்க. 302. அரசு - ஏனையரசர்கள், ஆழியாள்வான் - இனி, அச்சுவகண்டன் போரில், அவன் விடும் ஆழியையே வாங்கி அவன்மேல் விடற்கிருக்கும் திவிட்டன், எதிரது போற்றல், குழையல் - தழைகளை ஈனுதலை விடுக, கடி - காவலிடம், காண்டி - காண்பாய். 303. வையம் - மண்ணுலகத்தவர், மன்னர் - சடியரசன், குராமரத்தின் பூ பாவை யெனப்படுதலின், “பூம்பாவை வளரல்” என்றாள். இதனை இளமகளிர் வைத்து விளையாட்டயர்தல் வழக்காதலின், “இளையரால் கணங்களோடும் பறிப்புண்டி” என்றாள். 304. தஞ்சமாம் - எளியராய் விட்டனர், ஊனவர் மனித்தர் - ஊனுடைய உடம்பு தாங்குபவராகிய மனிதர்கள், உவனுக்கு - அச்சுவகண்டனுக்கு, துகள் - தூசு; அணு, மதிப்பின் - எண்ணுங்கால், ஏனவர் - இவர்களை யொழிந்த மற்றையோர், முனிவு - வெறுப்பன. 305. புரி மனிசர்க்கு - தன்னை வணங்கி வாழ விரும்பும் மனிதருக்கு, ஈவாக்கு - மணம்புரிந்து கொடுப்பதை, புகன்றனன் - விரும்பினான், என்னும் - சிறிதும், எரிபடு - கனன்று எரியும். 306. பாவம் - இருப்பது பாவமே, வேந்தன் - சடியரசன், கிளவி யாளை - சொல்லையுடைய சுயம்பிரபையை, மாற்றம் - சொற்கள், பரிதி வேலோய் என்றும் பாடம். 307. புடைத்து - கொட்டி, வகை செய்வது - போர்க்குரிய செயல் வகைகளைச் செய்து காட்டுவது, முகம்பெற - முற்பட. 308. வாளினால் செரு - வாட்போர், மாயம் - மாயப்போர், தோள் - மற்போர், அக்காளை - அத்திவிட்டன், தாளில் - காலடியில், பின்றை - பிறகே, சீற்றம் - வெகுளி. 309. மகரம் - மகரமீன்கள், மால் - பெரிய, கயம் - குளம், சிகரம் - உச்சி, நீசர் - இழிந்த மனிதர், பாற்றன்று - பான்மை (தகுதி)யன்று, புகர்எரி - பொறிகளையுடைய தீப்போலும் வெகுளி. 310. படைத்தொகை மூன்றாவன, தாமரை, வெள்ளம், ஆம்பல், போர்த்தொழில் மூன்றாவன, மானுடப்போர், தெய்வப்போர், மானுட தெய்வப்போர் (சங்கர யுத்தம்) என்றற்கு, “மானுடம் தெய்வம் இருமையும் என்ன” என்றான். குப்பை - தொகுதி, மேலது - தேர், யானை, குதிரை என்ற மூன்றன்மேல் உள்ள படை, நான்கு - அம்பு, வேல், ஆழி, சூலம், ஈற்றது - காலாட்படை, இருபடை - வாள், கதை என்பன, இவை - மாயப்படை, பாங்கு - வகை. 311. படைக்கலம் - போர்க்கருவி, போரின்பகுதி - படைப்போர் - மற்போர் எனவும், துவந்துவப்போர், துமிலப்போர், சங்கரப்போர் எனவும் பலவகையாக உள்ளவை. இடைப்புகுந்து - இடையீடாக, புடைப்பில - பொருந்தாத செயல்கள், புறனுரை - வகை. 312. வெகுளிக் காற்றோடு - வெகுளியாகிய காற்றோடு, சிலை - வில், கோலி - வளைத்து, கணை - அம்பு, தாரை - அம்பாகிய மழைத்தாரை, நடுங்கினர் - முற்றெச்சம், மேகம் வெகுளிக்காற்றோடு சிலைகுலவக்கோலி, வெள்ளம் ஓடுமாறு தாரை யொழிய, வேந்தர் பணிக்கும் போழ்து என இயையும். 313. நாஞ்சில் இது - கலப்பைப் படையாகிய இது, மற்று, அசை, மாற்றார் - பகைவர், தேன் அமர் அகலம் - தேன் பொருந்திய மாலையணிந்த மார்பு, செறுவு - நிலம், சால் - படைச்சால், குழம்பு - குருதிக் குழம்பு, வென்றிவித்தி - வென்றியாகிய விதையை விதைத்து, ஏனவர் - ஏனையவர், இரும்புகழ் - மிக்க புகழ்; பெரிய புகழ். 314. இன்னன - இவைபோல்வன, மாமன் - சடியரசன், மின்னொடு விளங்குவேல் - மின்னலால் விளங்குகின்ற வேல், என்னொடுபடுவது அன்றே - என்னைப் படுத்துவந்த பின்னன்றோ. 315. பொன் அவிர் திகிரி - பொன்னொளி விளங்கும் நேமிவரை, தமரம் - தூதர், மன்னீர் - மன்னரே, வாய்மொழி - வாயால் உரைத்த சொல்; மெய்ம் மொழியுமாம். 316. துன்னிவந்து - நெருங்கிவந்து, இவன் - திவிட்டன், மன் - உங்கள் அரசனான அச்சுவகண்டன், உவக்குமோ - விரும்புவானா, எண்ணி - ஆராய்ந்தறிந்து. 317. மண்டுஅணி - அழகுமிக்க ஆபரணம் செறிய அணிந்த; ஒண்தொடி - ஒள்ளிய தொடியணிந்த சுயம்பிரபை, ஊடுயிர் - உடலிடத்தே நிலவுகின்ற உயிர், வவ்வுபு - கவர்ந்து, திறல் - வலி, கடிது கொண்டனிர் கூடுதிர் என்க. ஓ, அசைநிலை. 318. படை யென்றலுமோ - படை பண்ணுமின் என்று சொன்னவுடனே, படை - சேனை, இடையின்றி - இடமின்றாம்படி, விடையின்றி - விடாது; நீங்குவதின்றி, புடை - பக்கம், நிரந்தன - நிரை நிரையாய் அமைந்தன. 319. கார் - மேகம், கலிமா - கலித்தோடு குதிரை, பல போரொடு - பல்வகைப் போர்த்தொழிற்கென, அன்றே - அசைநிலை. 320. ஆரழலான் பெயரான், அருக்கன் என்னும் பெயருடைய அருக்க கீர்த்தி, வெஞ்சிலை - வெவ்விய வில், வார் கணை - நீண்ட அம்பு, மாரி - மழை, செந்தடி - சிவந்த தசைகள், துந்துபு - தள்ளிக் கொண்டு, நீர்கெழு வெள்ளம் - நீர் பெருக்குப் போன்ற குருதி வெள்ளம், நிரந்தது - பெருகிப் பரந்தது, ஐயும் அன்றேயும் அசைநிலை. 321. கலையினைக் கடந்த சொல் கன்னி - பல்வகைக் கலைகளையும் கற்றுத் துறைபோகிய சொல்வினைச் சொல்லும் சுயம்பிரபை, காதலன் - கணவனான திவிட்டன், அலையினுக்கு - அலைப்பிற்கு; அலைத்தல் - வருத்துதல்; பொருதலுமாம், சிறுமை - தோற்றதனால் உண்டாகிய வசை, மான மன்னர் - மறன் இழுக்காத மானமுடைய விஞ்சை வேந்தர். 322. இளையர் - தம்பியர், இறை - அரசன், உளைவன - வருந்தத் தகுவன, கிளை - உறவினர், கீண்டு - போக்கி, அரசாண்டும் - அரசாளுவோம், வளையொடும் - மகளிர்போலக் கையில் வளையணிந்து, தலைமுடித்தும் - தலைமயிரை மகளிர் கூந்தல்போல நீட்டி முடித்து, வாழ்தும் - வாழ்வோம், பெண்மகளிர் போல வளையணிந்து கூந்தல் முடித்து வாழ்வோம் என்பதாம். 323. மாலும் - மாயமும், மால் பொரலுறுகின்றது - மாயப்போர் செய்யத் தொடங்குவது, வால்வளை எயிறு - வெள்ளிய வளைந்த பல்; இலங்க - விளங்க, நேரிலான் - ஒப்பற்ற வீரன். 324. முளைந்த - முளைபோல் முளைத்த, தேன் விளைந்த தார் - தேன் சொரிகின்ற மாலை, வெறி - மணம், உளைந்த - வருந்திச் செய்த, உருள்ப - தலையிழந்து புரள்வர், எயிற்றவன் - எயிற்றை யுடையவனான. 325. ஒத்து இலங்கு ஒண் சிறை - இரண்டும் ஒத்துவிளங்கும் ஒள்ளிய சிறகுகள், உவணன் - கருடன், பைத்து - படத்தை யுடையதாய், பகைப்ப போன்ம் - பகைப்பது போலாம், கைத்தலம் கையோடு புடைத்து - இருகைகளையும் தட்டி, தொத்து இலங்கு அலங்கலான் - பூங்கொத்துக்களால் விளங்குகின்ற மாலையணிந்தவனான. 326. தயங்கும் மாரியால் - விளங்குகின்ற சொற்பொழிவால், வெம்பிய - வெகுட்சி பொருந்திய, வெய்யவன் - கொடியவனான அச்சுவகண்டன், பெயர், இசையுமாம், முனிந்தவர் - வெறுத்துப் பகைத்தவர், நயந்த - விரும்பி வாழ்கின்ற, நும்பெயர் - நுங்கள்புகழை, நிறுத்துமின் - நிலை நாட்டுமின். 327. வெறி மின் விரிகின்ற - ஒழுங்குபட ஒளிவீசுகின்ற; “வெறி கொண்ட புள்ளினம்” (கலி) என்றாற்போல, இறை தோழன் - இறைவனான அச்சுவகண்டற்கு நண்பன், இகல்வல்லிர் உளிராயின் - மாறுபாடு ஆற்றுதலைவல்லவர் உள்ளீராயின், மறிமின் - பெயர்த்து நீங்குமின். 328. பொன்னை அணிகொண்ட - பொன்னால் அழகுறச் செய்யப்பட்ட, மிளிர - விளங்க, கண்நின்று - முன்னே நின்று, இரிய வந்தாய் என்றான், அறிந்தார் அறியாதார் யாவர் முன்னும் தோல்வியே பெறுவோன் என்ற கருத்தால், தவிர்தி - நிற்பாயாக, மேலும் செல்வதை விடுத்து என்முன் நின்று போருடற்றுவான் தங்குக என்பதாம். 329. பிறன் - விஞ்சையனல்லாத மனிதன் ஒருவன், அயில்கின்றாய்க்கு - தின்கின்ற நினக்கு, இன்னும் - இன்னமும், உம்மை யெச்சவும்மை; முன்னும் முறைமை யிழந்த நினக்கு இன்னும் புதியவாகச் சில உள்ளன போலும் என இகழ்ந்தவாறு, 330. பான்மை - விதி, நூன்முறைமை - நூலிடத்தே வகுத்துரைத்த முறை, அதனை யறியாமை நின் தலைவற்கும் என்னை யறியாமை நினக்கும் இருப்ப, இன்னும் அறியாமையே உங்கள்பால் உளதாதலைக் காண் என்பதாம். 331. மறிகடல் - கரையை அலைக்கின்ற கடல், அற - நீரற்றுப் போமாறு, பதலை - உலைப்பானை, இடத்து - இடக்கையில், செய்வது - போர் செய்வார் போலப் பயனில் வினைசெய்வது, நிலையிடத்தவர் - போரின் கண் நிலையையுடைய தூயவீரர்; “நிலை மக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்” (குறள்.770) என்புழிப்போல, தேடுமின் - தேடிக் காண்மின், என்றது, நிகராவார் இலர் என்பது கருத்து, எடுத்திடுகு, பிளக்கு, உண்கு என்பன செய்கு என்னும் வாய்பாட்டுத் தன்மை வினைமுற்று. 332. நிலையிடத்து - போர்க்களத்து, தொலைவிடம் - தோல்வி, இவை - இவ்வாரவாரப் பேச்சு, நுங்கட்கு என்றான், தூமகேதனனையுள்ளிட்ட பகைவீரர் பலரையும் உளப்படுத்தி. 333. எரியுடையத்தேரோன், எரி - சுவனலம்; தோரோன், இரதன்; சுவனலரதன் என்பது, என்று - என்று அறிந்து, நாண் - நாணம், மொழியா - சொல்ல, பெரியானும் வெய்யோனுமாகிய சுவனலரதன் 334. நீர்மையர் - வீரமுடையர், நிரம்ப - மிகவும், தெழித்து - உக்கரித்து, மலைந் தார் - போர் தொடுத்தனர், அமர் ஒழித்து - தாம் செய்யும் போரை நிறுத்திவிட்டு. 335. நெய்யுற்ற வேல் - நெய் தடவப்பெற்ற வேற்படை, நீடுசெரு - நெடிய போர், செய்யுற்ற போழ்தில் - செய்தபோது, செய் - முதனிலைத் தொழிற் பெயர், விலங்கி - குறுக்கிட்டு, கவவேல் - கவலையுறேல், உறுமாறு போக - அமையு மாறு கொண்டு உய்ந்து போய்விடுக. மையுற்ற காளை - வலியும் வீரமும் குன்றியதனால் கறைபட்ட காளையாகிய ஆங்கார வேகன், மறவோன் - தேவசேனன். 336. அருவியிலங்கு - அருவிபோல ஒழுகுகின்ற, யானை - .யானை போல்பவனாகிய சடிவேந்தன், அனல் ஊன்றி - வெகுளித் தீப்பொங்க வந்து எதிர்த்து, கூடிற்றன்று - பொருந்துவதன்று, ஒருவிநிற்றல் - நீங்கள் நிற்றல், ஒருவர் ஒருவிநிற்றல் என்றது சுவனலரதன் தூமகேதனனை வீழ்த்தி நீங்குதலை, உரம் - வன்மை; ஈண்டு வீரமாம், உவணன் - கருடன். 337. கோதை - மாலை, உறுவது - பொருந்துவது. 338. புகைந்து - சினம் மூண்டு, உந்தி - செலுத்தி, சரம் - அம்பு, மாகம் - விண்ணிடம்; திசையுமாம், மழைபோல்வான் - சுவணகேது. 339. தொடுத்தான் தொழுதவாளி - தொழுதவாளி தொடுத்தான், சுவணகேது தன் தூணியில் உள்ள அம்பு அனைத்தையும் செலுத்தியபின், வேறே கணையின் மையால் மாயப்போர் பலவும் செய்ய, அம்மாயத்தைப் போக்குதற் கேற்ற மந்திரக்கணையைச் சடிவேந்தன் நெஞ்சால் தொழுது தொடுத்தான். மடுத்த - இருந்த, பகழி - அம்பு, மாயமதும் - மாயமும்; அது, பகுதிப் பொருள் விகுதி, இரிய - அஞ்சி இலக்குநெறியிலிருந்து நீங்கியோட, தூவி - அம்பின் பிற்கடையில் விசை குறித்துக் கட்டுவது; தூவி, தொழுதவாளி - தொழப்பட்டவாளி. 340. பொன்றும் - அழியும், நிற்கும் - அழியாது நிலைநிற்கும், இரும்புகழ் - பெரியபுகழ், கழிந்தீர்கள் - இழந்தீர்கள், வேந்திர்காள் - வேந்தர்களே. 341. மானமாமணி - மானம் என்னும் பெரியமணி, உயிர்க்கு ஊனமாம், உயிர்க்குக் கேடுவரும், என - என்று அஞ்சி, ஈனவார் மயிர் - கடைப்பட்டதாகிய நீண்டமயிர், மயிர்க்கு ஏதமாம் - மயிரின் பொருட்டுத் தன் உயிர்க்கு ஏதம் விளைத்துக் கொள்ளும், கானமா - கவரிமா; “மயிர் நீப்பின் வாழாக் கவர்மா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்” (குறள்). 342. அஞ்சவர் - அஞ்சுதலையுடைய பகைவர்; அஞ்சாது போருடற்றும் வீரர் என்றுமாம், ஆர்வயல் - அரியவினைப்புலம், தேத்தெழ - எங்கும் பரந்து எழ, தேம் - திசைக்கூறு, நாஞ்சில் - கலப்பைப்படை, வெள்ளியான் - வெள்ளிய நிறத்தை யுடைய விசயன், வித்தினான் - நிறுவினான். 343. மிளிர்மரை - விளங்குகின்ற தாமரை, புரையும் - ஓக்கும், கடாக்கொள்ளுதல் - வென்று களம் கொள்ளுதல், கிரீவன் - அச்சுவகண்டன். 344. வாங்குவில் - வளைந்தவில், வாளி - அம்பு, தூணியில் சுடர்ந்தது - தூணியினின்றும் நீங்கி ஒளி செய்தது, தாரித்து - விசைத்து. 345. வரை - மலை, மறிந்து - மறிப்புண்டு, விரை - நறுமணம், அலங்கலான் - மாலையையுடைய, கனகசித்திரன், கனை - முழங்கும், புரை - உயர்ச்சி, விலங்கல் - மலை. 346. மறித்திடும் - தகர்க்கும், செந்தீப்புரைகிளர், பொடிகள் - செந்தீயிடத்தே உயர்ந்தெழும் நுண்பொடிகளாக, புணர்த்திடும் - சேர்க்கும், பரவைமுந்நீர் - பரந்தகடல், திரைத்துக்கொண்டு - அலைதிரண்டு, உரைகிளர் - புகழ்பொருந்திய உண்ணிய - உண்டற்கு; செய்யியவென்னும் வினையெச்சம். 347. வலம்புரி - வலம்புரிச்சங்கு, சிலம்ப - முழங்க, ஏற்றி - நாணேற்றி, கலம்புரி - அணிகலனாய் விளங்கும், ஆழி - மோதிரம், உலம் - தூண், சலம் - வஞ்சனை 348. தானவர் - தானவர்களில், அறிவிலாதார் - அறிவதை இல்லாதவர், ஈன் அவர் - இவ்விடத்தே அவர், ஏனையர் - தம் வலியின்மை யறிந்து அடங்கினவர், ஊனவர் - ஊன் பொருந்திய உடம்புடைய மனிதர், எனக்கு - என்னால். 349. சேர்தி - நினைத்துப்பார், வாழும் நாட்கள் - புற்றுக்குள்ளே வாழ்தற்கு வேண்டும் நாட்கள், இகந்த பின்னை - கழிந்த பின்பு, கண்ணினான் - எண்ணு மிடத்து, விண்ணின் ஆறு - வான்வழி. 350. மாறு அலா - தனக்கு மாறு ஆகாத, மாறு - பெருமை வலி முதலியவற்றால் ஒத்தபகை, ஆழியான் - ஆழிப்படையையுடைய அச்சுவகண்டன், சிறு சொல் - வசைச்சொல், தேறினார் - தெளிந்த அறிஞர், ஆறினேன் - சினம் தணிந்தேன், ஓராய் - அறிந்தாயில்லை, அனல்விக்கின்றாய் - சினம் மூட்டுகின்றாய். 351. இருங்கடல் - கரியகடல், நக்கு - நகைத்து, நன்று நன்று - அடுக்கு மிகுதிபற்றி இழித்தற்கண் வந்தது, நின் குழுவினுள் - நின்மலையரசர் கூட்டத்துள், குழுவென்றான், இழிவுதோன்ற, கருதிற்று - கருதியது. 352. இரியும் - வில்லின் நீங்கிச் செல்லும், இரியும் செல்வத்து என்பதற்கு நில்லாது நீங்கும் செல்வம் போன்ற என்றுமாம்; “வைகல்தோறும் இன்பமும் இளமையும், எய்கணை நிழலிற்கழியும் இவ்வுலகத்து” (நற்.46) என்றார் பிறரும், மாற்றலான் - திவிட்டன், பேராற்றலை யென்றார், அச்சுவகண்டன் எய்த தெய்வ அம்பு அனைத்தையும் சிதைத்தமையின், இயல்பாகவே விளங்குகின்ற எயிறு மிக விளங்க நகைத்தான் என்றது, அவனது வெளிற்றறிவின் புன்மை புலப்படுத்து நின்றது. 353. தாழியாது - தாமதமின்றி, படைமுதல் - படைமுற்றவும், பாழி - வலிமை, சாலமெலிந்தும் எனஇயையும், பாவனை பயிற்றி - பொய்த் தோற்றமும் அதற்கேற்ற சொல்லும் புரிந்து, வெருட்டலுற்றாய் - அச்சுறுத்தப் பார்க்கின்றாய், பெரிதும் அலந்தனை - மிகவும் வருந்தினை, சூழி - முகபடாம், இளையகோ - திவிட்டன்; மூத்தவன் விசயனாதலின். 354. நெறிதலை திரிவிலான் - எடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதிக்கும் நெறிக்கண் நின்று சிறிதும் தவறுதல் இல்லாத வசதி, நினைவிலான் - சாதன சாத்திய அளவைகளை நன்கு ஆராய்ந்து வாதிக்கும் மதுகையில்லாத பிரதிவாதி, மொழியப் பட்ட மறுதலை - சொல்லும் பிரதிவாதம், முடிக்கும் ஏதுவாய் - வாதியாவான் எடுத்துக்கொண்ட மேற்கோளையே சாதித்துக்கொடுக்கும் ஏதுவாகி, வழி அழிப்பதேபோல் - பிரதிவாதியாகிய இவன் மேலும் வாதிப்பதற்கு இடனின்றி வாயடங்கித் தோல்வி யெய்துவதுபோல; இவ்வாறு, பிரதிவாதியாவான் தன் கூற்றிலே வாதிக்கு வென்றி யுண்டாமாறு பேசித் தான் வாயடங்கித் தோல்வித் தானம் எய்தும் நெறி பக்கப்போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி என வகையான் மூன்றும், ஒவ்வொன்றும் தனித்தனி ஒன்பதும், பதினாறும், பதினெட்டுமாக விரியும், இவ்வகையேயன்றி வேறு பலவாகவும் விரியும்; இவற்றின் விரிவைத் தருக்க நூல்களுள் காண்க. பொறி - வெற்றித் திரு, நேமி - ஆழிப்படை, செறிதல் - அடக்கம், மன்னன் - அச்சுவகண்டன், பிரதிவாதியின் வாதாபாசம் வாதிக்கு வென்றியும் தனக்குத் தோல்வியும் நல்குவதுபோல, அச்சுவகண்டன் விடுத்த ஆழிப்படை திவிட்டற்கு வென்றி பயந்து அவ்வச்சுவகண்டன் உயிர்செகுத்த தென்றவாறாம். 355. வெண்குடை - வெண்கொற்றக் குடை, மலையாகம் - மலைபோலும் மார்பு, போழாக - பிளவுபட, சாய்ந்தான் - மாண்டான், நிலையாமை சால நிலைபெற்றது - வாழ்க்கையின் நிலையாமை மெய்யேயென அறியாரும் அறியுமாறு மிக விளங்கித் தோன்றிற்று, அன்றே - அசை. 356. அடுதிறன் - பகைவரைக்கொல்லும் வகை, வனப்பு - மெய்யழகு, பொலிவு - அறிவு ஆண்மைகளால் உண்டாகும் விளக்கம், கடைபோகா - முற்றவும் நிலைபெறா; இடையே கெட்டழியும் என்பதாம், கலியன்மின் - இவற்றால் செருக்குக் கொள்ளற்க, பொன்மணி மணிமுடியான் - பொன்னிடையே மலிந்த மணிபதித்த முடியுடைய அச்சுவகண்டன். 357. தார் - அடையாளமாலை, துணி - துண்டம், கண்டாள் என்றவர் பின்னும் கண்டே என அனுவதித்தார், அக்காட்சி அவள், உயிர் நீங்குதற்கு ஏதுவாதலின், தாரைவேல் - நீண்ட காம்பையுடைய வேல்; “வீரவேல், தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்” என்புழிக்காண்க. மேற்பிறழ - மேலே பிதுங்கநோக்கி, விண்டாள் உயிர் எனவே, உடல் வெற்றுடலமாதல் பெறப்படினும், “சொல்லில் வழியது உய்த்துணர்வு” என்னும் இயைபுபற்றி, “வெற்றுடல மாயினாள்” என்றார். 358. அமிர்தம்பூத்த - அமிர்தத்தினால் இயன்றாலன்ன, சாயல் - மென்மை, சுழிகாமத்தால் வெதும்பி உயிரிழக்கும் அயக்கிரீவற்கு, அத்தேவிமார், தம் காமசுகத்தால் அவன் உயிரிழவாது தளிர்த்து நிலவச் செய்தனராதலின், அவரை அவற்கு, “அமிர்தம்பூத்த அஞ்சாயல் தேவிமார்” என்றார். கலன் - கடிசூத்திரம் கைவளை முதலிய மங்கல அணிகள், சேணியுலகம் - விஞ்சையருலகம், வீவில் - கெடாத, கற்பு வேலி - இருபெயரொட்டு, தாவில் - வலிகெடாத, நிறையின்தாழ்; இன், அல்வழிக் கண் வந்த சாரியை, பொறியின்வாயில் தாழ்ப்பெய்தார் - என்றது, பொறிவாயிலைந்தும் அடக்கிக் கைம்மை மேற்கொண்டனர் என்பதாம். 359. தீது - குற்றம், காளையர் தாதை - விசயதிவிட்டர்களுக்குத் தந்தை, தந்தையாம் சிறப்புத் தனக்கு முன்னைத் தவத்தின் விளைவு என்பான், “தவத்தின் எய்தினேன்” என்றான். தனது ஆராக்காதலைக் கண்மேலேற்றி, “காதலம் கண் இவை” என்றான். 360. விட்டு எரிமணி - விட்டுவிட்டு ஒளிரும் மணி, அட்டு - கொன்று, மட்டு இவர் அலங்கல் - தேன்சொரியும் மாலை, ஒட்டிய ஒளி -- மிகப் பொருந்திய ஒளி. 361. பெருகுதிறல் என்றொழியாது மிகுதிறல் என்றது, பகைவரை வென்றதுகண்டு “பெருகிய திறல்” அறிந்தோர், அது நாளும் மிகுவது தேர்ந்து பாராட்டினமை தோன்ற, “பெருகிய மிகுதிறல்” என்றார். மருவிய வளைவணன் - பண்டு கண்ணனைச் சேர்ந்தொழுகிய வெண்ணிறத்துப் பலதேவனே, என்ன - என்றெண்ணி, கருவிய மரபினால் - பலரும் தொகுதி கொண்டு செய்யும் முறைமைப்படி, திருஅமர் சேவடி - சிறப்புப் பொருந்திய சேவடியை, சிலம்ப - நாற்றிசையும் எதிரொலிக்க. 362. அருங்கலம் - பெறுதற்கரிய மணிமுடியும் பிற அணிகலன்களும் திருவும், வாங்குநீர் - வளைந்த கடல், வீங்கிய செருக்கு - மிக்க பெருமிதம், மகிழ்ச்சியால் மைந்துறும்போது அடங்கியிருப்பது வீரத்திற்கு மாண்பாதலின், “வீரனாயினான்” என்றார். 363. எரிமணிக் கடகக்கை - விளங்குகின்ற மணிசெறிந்த கடகம் அணிந்த கைகள், மணி நிலம் - அழகிய நிலம், பிலமாக - மிக்க ஆழமுண்டாக, செல்வன் - திவிட்டன், என்ப, அசைநிலை. 364. ஒன்று - ஒருகை, குறங்கு - துரை, ஏந்துபுநின்றனன் - ஏந்திக்கொண்டு நின்றான். நீலமாமணிக்குன்றம் - நீலமணியாலாகிய குன்றம், இது திவிட்டற்கு உவமை. 365. பொருமாலை வேலரசர் - பொருகின்ற தன்மையையுடைய வேலேந்தும் அரசர், பூவின் அருமாமழை - அரியபூமழை, அமருலகம் - தேவருலகத்துத் தேவர்கள், கருமால் நெடுவரை - கரிய பெரிய நெடிய மலை, திருமாமணி - அழகிய பெரிய நீலமணி, செம்மாந்து - பெருமித முற்று. 366. கோடிக் குன்றம் கோடியல்போலும் குவவுத் தோள் - கோடிக் குன்றத்தின் சிகரத்தால் ஆகியதுபோலத் திரண்ட தோளில், இது மெலிக்கும் வழி மெலித்தல், கொண்டு - ஏந்திக்கொண்டு, மீட்டே கொள் - மறுபடியும் முன்பு இருந்த நிலையிலே இருக்குமாறு, நாட்டி - வைத்து, கோடிக்குன்றம் போந்தென - கோடிக் குன்றமென்ற அம்மலை நடந்து வந்தாற்போல, கோடிக்குன்ற மன்னவன் - அக்கோடிக் குன்றத்தையுடைய மன்னவனான திவிட்டன்; கோடிக்கணக்கான குன்றுகளையுடைய மன்னவன் என்றுமாம், கோடிக்குன்றத்தை யொத்தவ னென்பது பொருந்தாது; அவனை ஒப்பதும் மிக்கதும் அன்மையின். 367. அடிகள் - திவிட்டன், கணவனையும் அடிகள் என்பது பண்டை வழக்கு, கோவலனை மாதவி “அடிகள் முன்னர் யானடி தொட்டேன்’ என்றலும், கண்ணகி “அமுத முண்க அடிகள்” என்றலும் காண்க. வடிவு - அழகு, கடி - நறுமணம், அறி - அறிவி; பிறவினைப் பொருட்டு, “அறி நீசென்று” என்றது அமிதபிரபை, தனக்குச் சுயம்பிரபை கூறியதனைக் கொண்டு கூறியது. 368. ஓதி - வாதித்து வேறற்கு வேண்டியவற்றைச் சொல்லி, வெல்லல் உறுவார்களை - வெல்பவர்களை, கோது - வளைவு, தடி - கொம்பு, உரை முற்றுற - வாயடங்கும் படியாக. 369. காவியால் - கருங்குவளையால், கண்ணும் வெம்முலையுமுடைய தேவியார் என்க. மேவி - அன்புற்று, அலர்ந்திடும் - மகிழ்ச்சி கொள்ளும். அசோகினது அமைதிவண்ணம் - அசோகமரம் தளிர்த்து விளங்கும் திறம், வென்றது - ஒத்தது. 370. செய்யன - சிவந்தன, செறிந்தன - நெருங்கியிருக்கின்றன, ஐய - மெல்லிய, மெய்யும் அறிவன் - மெய்யாகவே அறிவேன், மடந்தை - சுயம்பிரபை, மாதர் - காதலாள். 371. பூங்கமழும் மாடம் - அழகிய மணம் வீசும் மாடம், தாங்கலன் - தாங்கானாய், தகை நீலமணி - அழகிய நீலமணி, சீறடியின்மேல் - சுயம்பிரபையின் சிறிய அடியின்மேல். 372. நெடுமால் - நெடுமாலான திவிட்டன், வணங்க - வணங்கக் (கண்ட சுயம்பிரபை புலவி தீராது), தவ - மிக, கைதவம் - வஞ்சனை, பிழைப்பு - குற்றம், முறை செய்தருளு - குற்றத்திற்குத் தக்க முறையினைச் செய்து என்னை அருளுக 373. கூடும் - ஓடியமனம் சென்று கூடும், தணிகோதை - குளிர்ந்த மாலையு டையாய்; புலவி தணிந்த நங்காய் என்றுமாம். 374. வீறு - பிறிதொன்றற்கும் இல்லாச் சிறப்பு; “வீறதேறும் தமிழ்” என்றாற்போல, சேறு - தேன், ஊறும் - எயிறுநீர் ஊறும். 375. வேண்டும் - விரும்பும், நீண்ட மாங்கனி - நீண்ட மாமரத்தில் உள்ள கனி. 376. கன்னி - இளமை, காமவல்லிக் கொடியைப் பெண்ணாகக் குறித்துப் பாரிசாதத்துக்குப் புணர்த்தலின், “காமவல்லிக் கனங்குழை மடந்தை” என்று விசேடித்தார், கோலம் - ஒப்பனை, அதனோடு - அப்பாரிசாதத்தோடு. 377. சுடர்மலை - ஒளி வீசுகின்ற மலை, தடமலர் - பெரிய தாமரைப் பூப் போலும், விடம் அலைத்து இலங்கு செவ்வேல் - விடம் பூசப்பெற்று விளங்கும் சிவந்த வேல், வெய்யவன் பெயரன் - அருக்ககீர்த்தி, தையல் - சோதிமாலை என்பவள். 378. கண்பருகும் நீர்மை - கண்களாரப் பரிந்து நோக்கும் தன்மை, அணங்கு - அழகு, பட்டான் - தோன்றியுள்ளான், தேற்ற - தெளிவிக்க, பணம் - பாம்பின் படம், பரவை - பரந்த, பரிவு - வருத்தம். 379. கோள்நலம் பொலிந்து - கிரகங்கள் நன்னிலையில் நின்று விளங்குதலால், விண்குளிர - விண்ணுலகம் தட்பமெய்த, தோன்றல் - தோற்றம்; “கடல்போல் தோன்றல நாடு” (அகம்.1) எனப்பிறரும் கூறுதல் காண்க. கேள் - கேளிர், கிளரும்- பொருந்திய, சோதிய நாள் - சோதிமீனுக்குரிய நாள். 380. தெளிர்ப்ப - விளங்க, வென்றியில் சேரும் - வெற்றித்துறையிலே செல்லுவான், திருவுடை மார்பனை - திருத்தங்கிய மார்பையுடைய மகன், மகனுக்கு விசயன் என்று நாமம் சேர்த்தினார் என்க. அரோ, அசை நிலை. 381. மையார் இன்பக் காதலி - அறியாமையைக் கெடுத்து அறிவின்பம் நல்கும் காதலி, நாவின்மகள் - நாமகள், பொய்யாக் கல்விச் செல்வர்கள் - அழியாத கல்விச் செல்வத்தையுடைய ஆசிரியன்மார், மகனுக்கு நாமகள் இன்பக்காதலியாகச் செல்வர்கள் தம்மால் புணர்வித்தான் என்க, நேமிப்படையான் - ஆழிப்படை யையுடைய திவிட்டன், இவர் போலவே திருத்தக்க தேவரும் சீவகன் கல்வி பெற்றது கூறுமிடத்து, “குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்கலுற்றார்” என்று கூறினார். 382. கந்து ஆடும் - கட்டுத்தறியைச் சிதைக்கும், கார்வண்ணன் - கார்மேகம் போலும் நிறத்தையுடைய திவிட்டன், மேகக்குழல் - மேகத்தை யொத்த கூந்தல், மடவார் - சேடியர், கொந்து - பூங்கொத்து, கோதை - மாலை, பொலம் துகில் - பொன்னாடை, கொய்துகில் - அலை போலச் சுருட்டப்படும் துகில், கொய்சகம் - இதனைக் கொசுவலம் என்றும் கூறுப, தேன், வண்டு என்பன வண்டின் இனம், முரல் - இசைக்கும், வார் - கச்சு, படை - வேற்படை, பணைமென்தோள் - பருத்த மெல்லிய தோள்; பணை, மூங்கிலுமாம். 383. வையகம் - நிலவுலகம், அரும்பகை - நீக்குதற்கரிய அகப்பகையான காமம், வெகுளி முதலாகிய குற்றம்; புறப்பகை கூறிற்றிலர், அஃது இன்மையின், அலர்க - மிகுக, புனல் - மழை, பயிர் - நெல், கரும்பு முதலாயின, அருந்துயர் - செய்வினை வாயிலாய் வரும் நீக்குதற்கரிய துன்பம். 384. ஈரைஞ்ஞாள்களும் - பத்துநாட்களும், வரைந்தது - கொள்ளப்பட்டது, ஒன்றிவாழ் அரசர் - ஒற்றுமையுடன் வாழும் அரசர், ஈண்டுக - வந்து சேர்க. 385. திலதம் - மேலான, தேவிளங்குமரன் - தெய்வ இளங்குமரன், அருந்தகை - அரிய அழகுடைய, அடுதிறல் - பகைவரைக்கொல்லும் வலி, பரந்த - வான மெங்கும் பரந்த விண்மீன்கள், பசலைகூர - ஒளிமழுங்க, பனிக்கதிர் - திங்கள், ஒளிவிரிந்து சுடர என மாற்றுக. 386. அணி தயங்கு சோபான வீதி - அழகு விளங்கும் படிக்கட்டுவழி, அணங்கு - தெய்வம், அடியீடு - நடப்பவள் பாதம் நன்றாவகையில் இடும் மென்துகில்; பாதத்தி லணியும் செம்பஞ்சு மிதியடியுமாம், முன்றில் - இல்லின்முன், மருங்கு - பக்கம், கணி தயங்கு வினைநவின்ற - கொன்றை மரத்தால் அழகிய வேலைப் பாடமையச் செய்த, கண்டத்தின் திரை - கண்டத்திரை; அஃதாவது பல் வண்ணத் திரையென்பர் நச்சினார்க்கினியர், துணி - ஒளி, துணி தயங்கு மனம் என இயைப்பினுமாம், துளங்க - அசைய. 387. அங்கவவர் - அங்கே அவ்வவ்வேந்தருடைய, குலவரவு - குல வரலாறு, அவயவம் - அரசர்க்குரிய உறுப்புக்களின் சிறப்பு, கொங்கு இவரும் - தேன் சொரியும், பிணையல் - மாலை, செங்கதிரோன் - இளஞாயிறு, திளைத்த கலந்தன, பெருந்தடங்கண்ணாகிய குவளை, இளையவன்மேல் திளைத்தன என்க. 388. ஏடு - பூவிதழ்; பெருமையுமாம், உழையவள் - தோழி, காரிகை - சோதிமாலை, தன்னின் முன்னம் - தான் அவள் காட்டக்காணும் முன்பே, இவளது உணர்வு சென்று அவன்பால் ஒன்றினமையால், “உள்ளமும் களித்தது” என்றார். பாட்டினால் என்னை - இதனை இனிப் பாட்டினால் பலபடப் பாடுவது எற்றுக்கு, இது கவியின் கூற்று, பான்மையே பலித்தது - ஊழ்வினையே பயன்விளைத்தது, “கன்னியர்தம் பான்மை வழிசெல்ப” (332) என முன்னும் கூறியது காண்க. 389. புனைவு - ஒப்பனை, இகந்த - கடந்த, பூமிபாலர் - அரசர், நிகளம் - கயிறு, இனையதால் - இத்தன்மையதாம். 390. நெய்த்தலை - நெய்யிலே, உக்காங்கு - சொரிந்தாற்போல, மைத்துன குமரன் - மைத்துனனாகிய அருக்ககீர்த்தியினுடைய மகன், இத்தலை - இவ்விடத்தே, கோமானான ஆழிவேந்தன் என்க, கைத்தலை வேலினாற்கு - அமித்ததேசனுக்கு, கடிவினை - திருமணம், கைத்தலைவேல் - கையிலே ஏந்துகின்ற வேல். 391. சயமரம் - சுயம்வரம் என்பதன் திரிபு, தமனிய மஞ்சம் - பொன் அமளி, பாவி - பரப்பி, இயமரம் - இசைக்கருவி, துவைப்ப - முழங்க, இகல் மன்னர் - மாறுபடு தலையுடைய வேந்தர், வேந்தர் தமக்குச் செய்யப்படுவன மிகினும் குறையினும் விரைந்து மாறுபடுவராதலின், “இகல்வேந்தர்” எனப்படுகின்றனர். பயமலை - நல்லபயனை நல்கும் மலை, கயமலர் - பெரிய தாமரைப்பூ. 392. வரிகழல் மன்னர் - வரிந்து கட்டப்படும் கழலையுடைய மன்னர், தோகையம் மஞ்ஞை - தோகையையுடைய அழகிய மயில், ஆழி வேந்தன் - திவிட்டன், செம்பொன் விலங்கல், வீரிகதிர் விலங்கல் சிகரத்தினை, மஞ்ஞை குன்றமெல்லாம் நோக்கி, குவட்டினை விரும்புவதாயிற்றென்க. 393. மலரொடு போதுலாம் பிணையல், மணிவண்டார்க்கும் மலரொடு எனக் கூட்டுக, மலரும் செவ்வி நோக்கி வண்டார்த்தலும் உண்மையின், போதொடு கூட்டினுமாம், பிணையல் - மாலை, கண்ணும் பிணையலும் அகலம் சூழ என்க, அகலம் - மார்பு, ஏது இலா மன்னர் - அவளது மாலையைச் சூடுதற்குரிய அழகும் ஊழுமாகிய ஏது இல்லாத வேந்தர். 394. அவர் - திவிட்டனும் அவன்மக்களும், தேம்கமழ் - தேன் பொருந்திய, முறுவல்நீர் - இனிய நகையாகிய நீர், தேங்கி - தேக்கெறிந்து, இவையனைய - இவைபோலும் மக்கட்பேறு முதலிய செல்வங்கள், வீங்கிய - மேம்பட்ட. 395. அலகுடன் விளங்கும் - ஒளிக்கதிர் கொண்டு விளங்கும், அலகு - கதிர், ஓடை - முகபடாம், எருத்தம் - கழுத்து, பலகுடை - பலகுடையினையுடைய வேந்தர், பண்பு இது - பண்பாகிய இது, நல்வினைத் தெய்வம் - நல்வினையாகிய தெய்வம். 396. சாலப்பெருகினர் - இளமை, செல்வம், போகம் முதலியவற்றால் சிறந்தனர், மறைந்து - சாக்காட்டிற்கு அகப்படாது ஒளிந்து நின்று, சிறந்தது தவத்தின் - தவம்போலச் சிறப்புடையது, மிக்கது - தவத்தினும் உயர்ந்தது. 397. மலை பயில் - மலையொடு பொருது மறம் பயின்ற, களி - மதக்களிப்பு, வவ்வல் - கவர்தல், கலை - மேகலை, செல்வக்கு - செல்வத்துக்கு, இலைபயில் மகரப்பைம்பூண் - இலைத் தொழில் செய்யப்பட்ட மகரமீன் போல் அமைந்த பசிய பொன்னாற் செய்த குழை. 398. ஆள்வினை - வினைமாட்சி, மாட்சி - இறைமாட்சி, தோள்வினைக் களவு - தோளாற்றலால் செய்யப்படும் களவு, அரசு காத்துக் காவல் உள்வழி, தோள் வினைக்களவு துன்னல் செல்லா என முடிக்க, துன்னல் - நெருங்குதல், வாள்வினை - வாளாண்மை, கோள்வினை - உயிர்கொள்ளும் தொழில்; கொலைத் தொழில். 399. கேள்வினை பயின்ற நூலில் - கேட்டலாகிய தொழிலால் குற்றமறப் பயிலப் படும் நூல்களிலிருந்து, கிளந்து - எடுத்து, நாள்வினைபுரிந்து - ஆயுட்நாட்களை எண்ணி, உயிர்நிறை - உடல்முழுதும் நிறைந்து நிற்றலின் உயிரை, உயிர்நிறை யென்றார்; “நிறையுயிர்” எனப் பவணந்தியாரும் கூறுவர், இதற்குப் பிறவாறும் கூறுப. 400. சந்து - சாமம் என்னும் உபாயம், சார்பினால் ஒழித்தல் - தானமாகிய உபாயம், பந்தியாமுன்னம் - பிணிக்கும் முன்பே, பகைத்திருந்து உய்யல் - கூற்றுக்குத் துணையாகியதனைப் பேதித்து அவ்விரண்டுக்கும் பகையுண்டு பண்ணிக் கெடுத்தல்; இது “போதோபாயம்” மேற்சென்று வெல்லல் - படைகொண்டு சென்று தண்டித்து வெல்லுதல், இது தண்டம் என்னும் உபாயம். 401. பீழைமை - துன்பம், பிணிப்படை - நோய்களாகிய படை, உயிர்ப்பு - மூச்சு, வவ்வி - உயிரைக் கவர்ந்து, கூழைமை - கீழ்மை வினை புரியுந்தன்மை, குதிக்கும் - வெல்லும்; “கூற்றம் குதித்தலும் கைகூடும்” (குறள்), பாழி - வலி. 402. முன்னிய முகமன் - விரும்பியவாறு முக இச்சை மொழிதல், இகந்து - நீங்கி, சரண் - புகலிடம்; வாயிலுமாம். 403. கனிபுரை கிளவி - இவ்வுலக, இன்பத்துக்கிசைந்த கனிபோலும் சுவை பொருந்திய சொல், கண்ணனார் - கண்போல் அறிவு விளக்கும் பகவனார், கருத்து - உரைத்தருளிய ஆகமக் கருத்து, துனிவன - வெறுப்புத் தருவன, துணிவன - எண்ணிச்செய்யும் செய்கை, துணியும் - கெடுக்கும்; துண்டிக்கும், முயறுமோ - முயல் வோம், அரசற்கு அங்கமாகலின், தம்மையும் உளப்படுத்தி முயறுமோ என்றார். 404. அருள்புரி ஆழி, அழலஞ்சோதி ஆழி என இயையும், அருள்புரியாழியாவது அருளறமாகிய ஆழி, மருள்புரிவினை - பிறவிக்கேதுவாகிய மயக்கம்; அறியாமை, மறுதலை - மாறு; எதிரி, இருள்புரி உலகம் - நரகம், பெம்மாள் - பெருமான், பொருள்புரிவிழவு - நல்வினைப் பயனாக நிகழும் திருவிழா, புண்ணிய உலகம் - துறக்கம். 405. அளியார - நின்அருளை உயிர்கள் நுகருமாறு, அமருலகு - அமரர் உலகும், அமர் உலகு எனக்கொண்டு நின்னை விரும்பும் அறிஞர் உலகம் எனினும் ஆம், விளியாத - கெடாத. 406. செறிந்து - நெருங்கி, திருமுயங்கும் - கேவல ஞானமாகிய திருமகள் கூடும், எங்கண் - எம்மிடத்தே, வெங்கண் - கொடுமை, இருவினை; நல்வினையும் பிறவிக் கேதுவாதல்பற்றி இருவினை கூறினார். அற - முற்றவும், விழுத்தகைமை - பெருந்தகைமை. 407. வன்னமணி - பல்வேறு வண்ணங்களையுடைய மணிகள், இன்இயல் செல்வம் - இன்பந்தரும் இயல்பினதாகிய செல்வம், அறமாண்பினை - அறத்தின் மாட்சிமையை, என்னை வினவியது - என்னைக்கேட்டது. 408. அமைந்தது - சமைக்கப்பட்டது, அயில்வான் - தின்பவன், அதுவறும் - அது நீங்கும், ஓரான் - அறியான், வடிவமர் செல்வன் - அழகமைந்த அரசன். 409. வேவார் - வெதுப்பப்படினும் வெந்து அழிந்து போவதிலர், அளறு - நரகக்குழி, விளியார் - சாவார், ஓவார் - கெடார், உகையா - உகைத்து; செலுத்தப் பட்டு, ஏவார்சிலை - அம்பு தொடுக்கப்படும் நீண்ட வில், இரங்கும் - நினைத்த வழியும் இரங்கத்தக்க, தகைத்து - தன்மைத்தாகும். 410. பேர் அறிவார் - ஒவ்வொன்றையும் பொருள் செய்து ஊன்றி நோக்கி அவற்றின் பெயரை அறிபவர், கூர்அறிவு - மிக்க அறிவு. 411. ஏனைப் பெயர்த் தொகை - ஏனை ஐயறிவுடைய பொருளாம் தொகுதி பெற்ற, பிறவி - விலங்கு, பயிர்த்தல் - வளர்த்தல், உலகம் - அருளுடைய பெரியோர், செயிர்த்தவர் - அவ்விலங்குயிர்களை வெகுண்டவர், செகுத்திடும் - ஒன்றை யொன்று கொன்றுவிடும். 412. கன்னியர் வேட்கை - கன்னிப் பெண்களின் விருப்பம், அரும்பிணி துன்னிய துன்பவிலங்கு - நீக்குதற்கரிய நோய்கள் செறிந்த துன்முடைய விலங்குகள், கடவுள் அரும்பிணி என இயைத்து தெய்வத்தால் (ஊழ்) உண்டாகும் அரிய பிணிகள் என்று கோடலும் ஒன்று. 413. நால் நவிர் - தொங்குகின்ற பீறலுற்ற கொடி, நாநவிர் என்றும் பாடம், அழி துளி - தேனடைகிழிந்து துளிக்கும் தேன்துளி. 414. மன்னும் - பெரிதும், கற்பநிலம் - கற்பலோகம், போகநிலம் - போகபூமி, துன்னும் முயற்சி - நெருங்குதற்குரிய முயற்சி, துணியும் - தெளிந்து செய்யும். 415. பள்ளி - விரித்து, தன் இயல் தானம் - தனக்கென விதிக்கப்பட்ட ஒழுக்க வியலும் தானமும், ஓடு, என்னொடு. 416. ஏந்திய - உண்டாகிய, ஊனம் - குறை, நலத்ததை, ஐ சாரியை, ஈனம் - குற்றம், ஒழுக்கம் வித்தாம் என்க, “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” (குறள்) 417. உறுவர்க்கு - ஞானம் ஒழுக்கம் தவம் முதலியவற்றால் மிக்க பெரியோர்க்கு, தத்துவம் - மெய்ப்பொருள், முத்திறத்துள்ளும் - நரகர், விலங்கு, மக்கள் என்ற மூன்று கதியிலும் எதுகைநோக்கி, உத்தமத்தேவர் என முடிந்தது. 418. இயல்பு - பயன்தரும் வகை, முற்றும்மை தொக்கது, மனையாயவர்கட்கு - இல்லிருந்து அறம்புரியும் சாவகர்களுக்கு, வெல்லாவகையில்லை - அவ்விரதத்தால் வெல்லக் கூடாதவை எவையும் இல்லை, வீங்கு எழில் - பருத்து உயர்ந்த; மிக அழகிய. 419. தம்மையுடையவர் - தம் மனத்தைப் பொறிபுலன்களில் செல்லவிடாது அடக்கித் தம்வழியே இயலச்செய்தவர், உம்மை யுலகத்து - மேலுலகத்தில், இம்மை - இவ்வுலகப் பொய்யின்பம். 420. பெருமான் - அருகபரமேட்டி, அலகை - அளவு, திலகம் - மேலானவர், இலகும் - விளங்குகின்ற, ஈங்கு சுடரொளி இலகும் என்றுமாம். 421. ஆர்வம் - அன்பு, பொருள் ஒன்று சேரும் - மெய்ப்பொருளைச் சேர்த்தற் குரியவற்றில் ஒன்றுபடுத்தும், வாவிய - தூய, இருளறு தியானம் - அறியாமையைப் போக்கும் தியானம். 422. ஓருயிர்போல - தன்னுயிர் போலக்கருதி; உயக்கொள்ள - உயிர் காக்க, ஈரம்- இரக்கம். 423. வெய்ய முனிதல் - கொடிதாக வெகுளுதல், குளிர்தல் - எதனையும் பொருள் செய்யாதிருத்தல், மையல் - மயக்கம், மும்முடப்பகுதி - மூடப்பகுதி யெனப்படும் மூன்று; அவை உலகமூடம், பாசண்டி மூடம், தேவதா முடம் என்பன, “முந்துற்ற மூடப்புலி மூன்றும்” (நீல.122) என்று பிற சான்றோரும் கூறுவர். மயக்கின்மை - மயங்குதல் இல்லாமை. 424. அடிமுதல் - திருவடியில், உறுவர் ஒழுக்கம் - உயர்ந்தோரது ஒழுக்கநெறி, முதலா - முதலாக, இறுதியில் - முடிவில்; பல்குண நோக்கம் - பலவாகிய குணநலங்களை அன்போடு காண்டல், செறிதல்இல் ஆர்வங்கள் - அடங்காது பரந்தோடுகின்ற ஆர்வவகைகள். 425. ஆற்றல்வரை - ஆற்றும்திறம், நுனித்தல் - மெய்யுணர்வு காண்டல், போற்றி உரைத்தல் - ஆகமப்பொருளை விரும்பியோதுதல், ஈர்மலர் - குளிர்ந்த பூக்கள். 426. அற்றது - துறந்த போகம், உவர்ப்பினராகும் அருநிலை - உவர்த்து (வெறுத்து) விடுவதாகிய அடைதற்கரிய துறவுநிலை, ஒழுக்கம் தலைநிற்றல் - ஒழுக்க நெறிக்கண்ணே வழுவாது நிற்பது. 427. நுனித்தோர் - அறிவு நுண்ணிதாயினவர், மாற்படை - அவிச்சையாகிய மோகப்படை, கூட்டும் - உண்டாக்கும், மயங்கிருள் - தெளிவல்லாத மயக்கம், மேற்படை - மேம்பட்ட, நாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை. 428. ஒன்று - பொருந்த, நன்றியின் மாற்று - பிறவா நலத்துக்கு மாறாகிய வினைகள், நால்வகைக் கதியினும் பிறந்திறந்து அலமருவித்தலின், “நன்றியில் மாற்று” என்றார்; “மாற்றில் நின்றது வையக மூன்றினும் ஆற்றவும் பரியட்ட மோரைந்தினால், தோற்றம் வீதல் தொடர்ந்திடையில் வினைக், காற்றினால் கதிநான்கிற் சுழலுமே” (மேருமந்.71) என்று பிறரும் கூறுதல் காண்க. விசும்பு - துறக்கம், வீடு - நிருவாணம். 429. ஐய - தலைமையினையுடைய, ஆழிவலவன் - ஆழிப்படையை யாளும் திவிட்டன், ஈரொன்பதின்மர் - பதினெட்டுப்பேர். 430. அயகண்டன் - அச்சுவகண்டன், பாழிவல - மிக்கவன்மையுள்ள, வள்பகைவர் - கொடிய பகைவர், வியன் - அகன்ற, உலப்பில - முடிவு இல. 431. தேயவினைவெல்லும் - வினைகள் தேய்ந்து அழியுமாறு வெல்லுகின்ற, பாய விழுச்சீர் - பரந்த உயரியபுகழ், திகிரியவர் - சக்கரவர்த்திகள். 432. மிகுதானம் - மிகுதியாகச் செய்த தானம், அவருளே - அவர்களிலே, படுவர் - உண்டாவர், ஓக்க உரைக்க - எல்லாரோடும் ஒப்ப உரைக்கின், உலவா - முடியாது. 433. கலி - அங்கலாய்ப்பு, இல - இல்லாத, இன்பவெழில், உம்மைத் தொகை, ஈந்தபயன் ஈதால் என்க, தவத்தரசர் - முனிவர். 434. பணம் - பாம்பின் படம், முடியவர் - முடியையுடையவர், தீயொழுகு சிகையர் - தீயை உமிழ்கின்ற சுவாலையுடையவர், பவணத்து - நாகருலகத்தில், குருமணி - மாணிக்க மணி, கூறுபாடு - வகை. 435. நரர் - மானிடர், வெறியயர்வு - வெறியாட்டு. 436. குலகிரி - குலமலை எட்டு, மலையரசு - இமையமலை, நளிர்கயம - குளிர்ந்த நீர் நிலை; குளம், பொய்கை ஆறு முதலியன, பலகிரி குலமலையல்லாத பிறமலையும் குன்றுகளும், தீவகம் - நாற்புறமும் நீர்சூழ்ந்த தீவு, படுகடல் - முழங்குகின்ற கடல், படி - பூமி, சுரந்தும் - மறைந்தும், அலகு இரியும் - அளவுக்கு அடங்காது நீங்கும், அமரர் - தேவர். 437. தாரகை - நட்சத்திரம், நாண்மீன் - அசுவனி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்கள், திறல - வன்மையையுடைய, கோட்கள் - ஒன்பதுவகைக் கிரகங்கள், விசும்பு ஆறா - வான் வழியாக, மந்தரத்தை - மந்தரமலையை, சுந்தரம் - அழகு. 438. மத்தகத்து - உச்சியின், மேற்கூறு - மேலைப்பகுதி, அந்தரப்பேர் உலகத்துள் - அந்தரலோகத்தில், படிவம் - வடிவம், சுடர்ந்து - ஒளிவிட்டு. 439. நணியவர் - அண்மையாக இருப்பவர், நினைத்துழியே - நினைத்தவண்ணம், விழைதகை - விரும்பத்தக்க தகுதியுடைமை, சுரர் - தேவர். 440. அளி - அருள்; தலையளியுமாம், அந்தரம் - முடிவு; இறுதி, திருந்திய - திருந்தவுடைய, எளிதுஅகவும் - எளிதே எய்தற்காம், ஏனோர்க்கு - மேலோரல் லாதவர்க்கு, எளிதகைவும் என்றும் பாடம். 441. விதிமாண்ட - விதிவினையால் உண்டாகும், மதிமாண்ட - அறிவால் மாட்சி மைப்பட்ட, நிதிமாண்ட - நிதியாய் அமைந்த. 442. இருவகை - நன்மை தீமை பயத்தல், இவ்வழி - இப் பிறப்பு நெறி, பெயர்வில் - நீங்குதல் இல்லாத, குளிகை - உச்சி. 443. பொறிப்புலக்கு இவரும் - பொறிவாயிலாகச் செல்லும் புலன் ஐந்தன் மேலும் ஆசைகொள்ளும், விழைவொடும் செய்திடும் - விருப்போடு வெறுப்பையும் கொள்விக்கும்; உம்மையால் வெறுப்பும் கொள்ளப்பட்டது. ஈட்டினான் - செய்தவன், இறந்தவன் - இறந்து, அவனே என்க. அவ்வியற்கை - பொறிவாயிலைந்து ஆசையுற்று வினையீட்டிமேலும் இறப்புப் பிறப்புக்கட்கே இலக்காய்ச் சுழலுதல். 444. துறவி - துறவறம்; அளவு, அளவியென வருதல்போல - “அளவியையார்க்கும் அறிவரியோன்” (திருச்சிற். கோ.), உறவிக்கண் - மெய்யுணர்வுக்குற்ற நிலையின்கண். 445. கதிர்த்து - தோன்றப்பெற்று, வெலீஇ - வென்று, நாட்செய்து - நன்னாள் கண்டு, நவிற்றிய - தொடங்கிப் பயின்ற, விதியான் - நெறிச் செல்வோன், மீட்சியில் - மீண்டும் பிறத்தற்கில்லாத, வீரன் - வீரனாவான். 446. கடையில் எண் குணத்து - கடையிலா ஞானம் முதலாகக் கூறப்படும் குணம் எட்டும் உடையது. காமராகர் - காம இச்சைகள், இல் இயற்கை - இல்லிருந்து மனைமக்களோடு வாழும் இயல்பு, மிடைவொடு - நெருங்கிய சுற்றத்தொடர்புடன், விழைவு - பற்று, வேர் அறுத்த - வேரோடு கெடுத்த. 447. மணிமலர்ந்து உமிழ்ஒளி வனப்பு - மணியும் அதனிடை விரிந்து சுடரும் ஒளியும் போன்ற வனப்பு, துணி - கட்டைத் துண்டு, மலர்ந்து - தேய்ந்து, நணிமலர் - அப்போது பூத்தமலருமாம். சிவகதிக்கும் இன்பத்துக்கும் உள்ள தொடர்பு, மணியும் ஒளியும் போலவும், சந்தனத் துணியும் தன்மைத் தோற்றமும் போலவும், மலரும் மணமும் போலவுமாம். 448. வடுவறு - குற்றமற்ற, அறவமிர்து - அறமாகிய அமுது, ஆற்றலால் - வன்மையால், விடுகதிர்மணி - கதிர்விடுமணி என இயைக்க. 449. அருஞ்சிறைப்பிணியுழந்து - நீங்குதற்கரிய சிறைக்காவலில் பிணிக்கப்பட்டுக் கிடந்து வருந்தி, பிழைத்து உய்ந்துபோய பின் - தப்பிப்போனபின், கருஞ்சிறைக் கயவர் - இருள் நிறைந்த அச் சிறைக்கோட்டக் காவற்காரர், சிறைக்களம் - சிறைக்கோட்டம், இது பிறிது மொழிதல். 450. பிணிபடு - பிணியாய்த் துன்புறுத்தும், தொடர்ச்சி - தொடர்புடையவற்றை, நோக்குமோ - விரும்புவனோ. 451. பொறியின் போகம் - திருமகளால் உண்டாகும் செல்வ நுகர்ச்சி, நூல்வழி உருள்வு - பல நூல்களிலும் செலுத்திப் பொருளை நுண்ணிதாக ஆராய்தல், தெருள் - தெளிவு, இசைவிலன் - மனம் பொருந்துவது இல்லை. 452. மருவிய - கூடிய, பொருவறு - ஒப்பற்ற, புதிய காமுறும் - புதியவரை விரும்புவள், ஒருவர்கண்ணும் எனச் சிறப்பும்மை தொக்கது. 453. உலர்ந்த பின் - கழிந்த பின்பு, கண்ணிலர் - இரக்கமின்றி, எண்ணிலள் - சிறிதும் எண்ணாது, நண்ணிய நண்பு - செல்வக்காலத்தும் அல்லற்காலத்தும் நீங்காது தொடரும் நட்பு. 454. நன்று உற்று - பொருந்தி, மாண்பு இலா - குணமாண்பு பயவாத, செற்றம் - பகைமை, செருக்கு - மத மயக்கம், கழறநோக்கும் - எள்ளிப் பேசி இகழ்ந்து நோக்குவிப்பள். 455. ஏதிலார் - அயலார், காதலார் - (உங்கட்கு) உண்மையன்புடையராவார். போதுலாம் அலங்கலிர் - பூக்களாலான மாலையணிந்த மக்களே, புரிந்து - விரும்பி. 456. கோள் - கொள்கை, வலமிகு சூழ்ச்சியார் - வன்மையும் மிக்க சூழ்ச்சியு முடையவர், உலம் மிகு - தூணினும் வலிமிக்க. 457. தன் உயர் மணல் - நிலமகளாகிய தன்பால் மிக்குறும் மணல், இகந்தவர் - நீங்கினவர், மூரி - பெருமை, பேர்ந்திலள் - தன்மை நீங்கிற்றிலள். 458. ஓர் - ஒப்பில்லாத, பற்றினார் - தன்பால் பற்றுடையவர், பாலள் - பான்மையள், முற்றும் - சூழ்ந்திருக்கும், நீர்த்துகில் - கடலாகிய ஆடை, தொல்பெருங்காலமாக நிலந்தோன்றி நிலவுதலால் நிலமகளை “முதுபெண்” என்கின்றான், நீர்மை - தன்மை. 459. ஆர்வம் - அன்பு, மன்னுயிர் - உலகில் நிலைபெறும் உயிர்கள், நும் கருமம் - உங்கட்குரிய சிவகதிப் பேறு. 460. மீன் இவர் விரிதிரை வேலி - மீன்கள் துள்ளியேறும் விரிந்த அலைகளை யுடைய கடல் சூழ்ந்த நிலம், எனக்கு அரசு - எனக்குரிய தவ அரசு, செவ்வி - இது காலமாம். 461. கற்ற சிந்தை, மாண்சிந்தை என இயைக்க; கற்றவற்றால் மாட்சிமைப்பட்ட சிந்தையென்றுமாம், கவற்சி - மனத்துட்கவலை. 462. நமைப்புறு பிறவி - எய்தியிருக்கின்ற பிறப்பாகிய நோய், நோற்கிய - நோற்றற்கு, சுமைப் பெரும் பாரம் - அமைச்சுக்கடமையாகிய பெரிய சுமையின்பாரம், தொழுதி - கூட்டம், நமைத்தல் - சூடுதல்; “நமைத்த பூந்தாமம்” (சீவக. 2839) என்றார் தேவரும், நமைத்தல் வருத்துதலுமாம். 463. மணித்துணர் திருமுடி என இயைத்து, மணிகளைக் கொத்தாக வேலைப் பாடமைய வைத்திழைத்த அழகிய முடியெனவுரைக்க, பருமுடி - பருத்தமுடி, பரவைப் பாற்கடல் - பரந்த பாற்கடலில், பெருமுடி - பெருமை பொருந்திய முடியே. 464. காதலர் - அன்புடைய புதல்வர், கையிகந்து - பற்றற நீங்கி, ஊதுலை மெழுகின் - துருத்தியால் ஊதப்பட்டெரியும் உலைக்களத்து உருகும் மெழுகுபோல, போது அலர் கண்களும் - பூப்போலும் கண்களும். 465. நின்றிலா நிலைமையின் - நிலைபேறில்லாத தன்மையிலிருந்து, வீரியம் - வீரச்செயல், வேண்டுமோ - தகுமோ. 466. அடிகள் - பயாபதி, பரிவொடு - வருத்தத்தால், பயிற்றல் - வருந்திக் கூறுதல், இலங்க - விளங்க, தாழ்ந்து - வணங்கி, மருவு - பொருந்துதல், துள்ளினார் - சேர்ந்தார். 467. பாற்படு செல்வம் - பலவாய்ப் பகுக்கப்படுதற்கரிய செல்வம், பரவை ஞாலம் - விரிந்த நிலவுலகம், ஏற்புடைத்தன்று - பொருத்தமின்று. 468. நூற்படை முனிவர் - ஆகம நூலாகிய படையையுடைய முனிவர், கண்ணால் நோக்கிய நயத்தனாகிய - ஞானக்கண்ணால் கொண்டுரைக்கும் நெறியே பொருள் களை நுனித்தறியும் நுட்பமுடையவனாய், பாற்படு விரதம் - பலவகைப்படும் விரதம், நோன்மை - பொறை, தவ அரசனாதலின், முனிவரை அமைச்சராகவும், விரதம் நோன்மைகளைப் படைத் தலைவராகவும், நூல்களைப் படையாகவும் கொண்டு, ஐம்புலன்கள் மேற் செல்லும் ஆசை யைந்தையும் வினைக்குறும்பு புரியும் பகைவராக, அவரைப் படுக்கும் தொழில் மேற்கொண்டான் என்பது. 469. தெவ்வர் நால்வர் - பகையான ஞானவரணீயம், அந்தராயம், தரிசனாவரணீயம், மோகனீயம் என்ற நான்கு, நீறு செய்திட்டு - முற்றவும் கெட அழித்து, முடிவு - கேவல ஞானம், அனையர் - அத்தகைய இயல்பையுடையரான; பயாபதி போலவே கேவல ஞான மெய்தியோர், அரசர் என்றதற்கேற்ப, “இடிமுரசதிருந்தானை அரசர்” என்றார். இடிமுரசு - இடிபோல் முழங்கும் முரசு, அமரர் முடிவித்தார் என்க. கடி - வாசனை, கடிவினை - திருமணம்; அஃதாவது மகா நிருவாணம். 470. கருமால் வினை - பிறப்பிற் கேதுவாகிய பெரிய வினை, நூறி - கெடுத்து, ஒருவாமை வேட்டு - என்றும் நீங்கா வகையில் மணந்து, வருமாறு - இந்நிலவுலகிற்கு வரும் திறம், நகரம் - சிவபுரம். 471. ஆவரணம் - மறைப்புக்கள்; அவை மதிஞானாவரணீயம், கருத ஞானாவரணீயம், அவதி ஞானாவரணீயம், மனப்பரியய ஞானாவரணீயம், கேவல ஞானாவரணீயம், சக்குதரிசனாவரணீயம், அசக்கு தரிசனாவரணீயம், அவதி தரிசனாவரணீயம், கேவல தரிசனாவரணீயம் என்று பலவும், தானில்லாப் போக உபபோக வீரியாந் தராயங்களுமாம், அலோகம் பார்க்கப்படாத இடம். என்பர்; “உலக மூன்றும் விழுங்கியிட்டலோகம் துங்கி” (3083) என்று தேவரும் கூறினார். 472. களம் காண் வகை - இருக்கும் இடத்தைக் கண்டறியும் திறம், இழந்தென்னாது உடைந்து என்றார். காண்டற்குரிய ஆற்றல் காலனுக்கும் காமனுக்கும் இல்லாமை விளங்க, காலர், காமர் என்றது புகழ்வதுபோல இகழ்ந்ததுமாம். உளம் காண் - உள்ளத்தால் காணும் துளங்காது - அசையாமல்; கலங்காமல், சூளாமணி - முடியின் மணி, மணிமுடி கொண்டிருந்த சீவகனைச் சுதஞ்சணன் கண்டபோது, அவன் இருந்த நிலையைக் கூறலுற்ற திருத்தக்கதேவர், “சூளாமணியாய்” சுடர இருந்தான் “(சீவக 3037)” என்று உரைப்பது காண்க. 473. வலம்புரி - சங்கு, சங்கின் வண்ணம் - வெண்மை, மகரமுந்நீர் - மகரமீன் வாழும் கடல், மணி - நீலமணி, உலம் - கற்றூண், சலம் - வஞ்சனை, நலம்புரி - நல்வினைப் பயனைத் தருகின்ற.