தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (இரண்டாம் பகுதி) வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (இரண்டாம் பகுதி) உரையாசிரியர் : பேராசிரியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 392 = 408 படிகள் : 2000 விலை : உரு. 255 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி(EFEO)யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே 'உயர்தனிச் செம்மொழி' எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், 'உலக முதன் மொழி தமிழே' என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! "எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்" என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. "புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்" தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய 'இலக்கண வரலாறு' என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க.குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகி யோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு உயிர். உயிர்மயங்கியல் உரு. உருபியல் எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலித். கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குற். குற்றியலுகரப் புணரியல் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப்படலம் சிலப். சிலப்பதிகாரம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தொல். தொல்காப்பியம் நாலடி. நாலடியார் நூன். நூன்மரபு பட்டினப். பட்டினப் பாலை பிற். பிற்சேர்க்கை புள்ளி. புள்ளிமயங்கியல் புணர். புணரியல் புறம். புறநானூறு பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மர. மரபியல் மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. (திரு)முருகாற்றுப்படை யா.வி. யாப்பருங்கல விருத்தி வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு "தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்" இதனொடும் இணைக்கப்பட்டுளது! "வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!" அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள 'மண்' எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து 'இந்தா' என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் 'தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை'ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் பேராசிரியர் ... 154 8. செய்யுளியல் ... 1 நூற்பா நிரல் ... 381 செய்யுள் நிரல் ... 385 8 செய்யுளியல் செய்யுட்கு உறுப்பாவன இவை எனல் 313. மாத்திரை யெழுத்தியல் அசைவகை யெனாஅ யாத்த சீரே யடியாப்பு எனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே யளவியல் எனாஅத் திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅக் கேட்போர் களனே காலவகை யெனாஅப் பயனே மெய்ப்பாடு எச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறு தலையிட்ட வந்நா லைந்தும் அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து; செய்யுளிலக்கணம் உணர்த்தினமையான் அப் பெயர்த்தாயிற்று. எனவே ஓத்து நுதலியதூஉஞ் செய்யுளிலக்கண முணர்த்தலென்பது பெற்றாம். மேற் பாயிரத்துள், "வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும்" (தொல். பாயிரம்) ஆராய்தலென்று புகுந்தமையான், எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன விராய்க்கூறிப், பொருளதிகாரத்துள்ளும் இது காறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிவந்தான். அப் பொருள் பற்றிச் செய்யுள் கூறுமாதலின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக் கண மெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்தென்பது. எனவே, முற் கூறிய எழுவகையோத்தும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவென்பதூஉம் இது செய்யுட்கே உரித்தென்பதூஉம் பெற்றாம். மற்றிதனை யாப்பதி காரமென வேறோரதிகாரமாக்கி உரைப்பாருமுளர்; அங்ஙனங் கூறின் வழக்கதிகாரமெனவும் வேறு வேண்டுமென மறுக்க. அல்லதூஉம் எழுத்துஞ் சொல்லும் பொருளுமென மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகாரமொன்றற்கு ஒன்பதோத்தாகத் தந்திரஞ் செய்ததனொடு மாறு கொளலாம், இதனை வேறோர் அதிகாரமென்பார்க்கென்பது. மற்று, ஓத்து நுதலியதெல்லாம் நுதலுவதன்றே ஓத்தினுள் வைத்த சூத்திரம்; அதனான், இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வோத்தினு ளுணர்த்தப் படுகின்ற செய்யுட் குறுப்பாவன இவையெனவே, அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இக்கூறப்பட்ட முப்பத்துநான்கும் பேரிசைப் புலவரான் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென அவ்வாறு செய்தல் வன்மையான் வகுத்துக் கூறினர் புலவர் எ-று. அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை. தொகை 'ஆறுதலையிட்ட அந்நாலைந்து' மெனவும், எட்டெனவும் இருவகை யான் தோன்றக் கூறியது, ஏனைய போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோவொன்றேயும் வருமென்பதறிவித்தற்கும், அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்தவழியே பெரும்பான்மையும் உறுப்பாமென்ப தறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே, ஒழிந்த உறுப்பிருபத் தாறும் ஒன்றொன்றனை இன்றியமையா வென்பது பெற்றாம். இனி 1மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளுள் செய்யுளில் விராய்க் கிடக்கும் அளவையென்றவாறு. மாத்திரையது மாத்திரையினை ஈண்டு மாத்திரையென்றான். அது 'மாத்திரையளவும்' (314) என்றதனாற் பெற்றாம். 2எழுத்தியல் வகையென்பது, மேற்கூறிய எழுத்துக்களை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. 3அசைவகை யென்பது, அசைக்கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். 4யாத்தசீரென்பது, (360) பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்ற வாறு; எனவே, அசைபல தொடர்ந்து சீராங்கால் அவ்வசையுந் தத்தம் வகையாற் பொருள்பெற்று, நிற்றலும், அவ்வாறன்றிச் சீர்முழுதும் ஒரு சொல்லாங்கால் அவ்வசை பொருள் பெறாது நிற்றலும் அடங்கின. தேமா என்று அசை பொருள் வேறுபெற்றன; சாத்தன் எனப் பொருள் வேறு பெறாது நின்ற அசையாற் சீர்யாத்து நின்றது. பொருள்பெற நின்ற எழுத்தும் அசையுஞ் சிறப்புடைய வென்பாருமுளர்; அற்றன்று, பொருள் பெற நிற்பன எழுத்து யாண்டு மின்மையானும், பொருள் பெறநின்ற அசையானாகிய தேமாவென்னுஞ் சீரும் அவ்வசைச் சிறப்பினாற் சிறப்புடைச் சீரெனப்படாமையானுஞ் சாத்தனெனத் தன்பொருளொடு தான் துணிந்து நின்றவழி அதுவுஞ் சிறப்புடைச் சீரெனவும் படுமாத லானுமென்பது. 5அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவ தோர் உறுப்பு. 6யாப்பென்பது, அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை. 7மரபென்பது, காலமுமிடனும் பற்றி வழக்குத் திரிந்தக்காலுந் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமைச் செய்வதொரு முறைமை. மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும் மரபியலுள் உரைப் பனவற்றுக்கும் இதற்கும் வேற்றுமையென்னையெனின், இது செய்யுட்கே உரித்து, அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும்பொதுவென்பது. அல்லதூஉம், அவற்றது வேறுபாடு முன்னர் அகத்திணையியலுள் கூறிவந்தாம். 8தூக் கென்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல். தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு: அவை வரையறையுடையனவும் வரையறையில்லனவுமென இருவகைய. இப்பகுதியெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃதொக்கும். 10 நோக்கென்பது, மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். 11பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை. 12அளவியலென்பது, அப் பாவரையறை. 13திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல். 14கைகோளென்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்; அது களவுங் கற்பும். 15கூற்றுவகையென்பது, அச்செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல். கூற்றிவை யென்பது பாடமாயின், எண்ணிய மூன்றனையுந் தொகுத்தவாறே, பிறிதில்லை. 16கேட்போரென்பது இன்னார்க்குச் சொல்லுகின்ற திதுவெனத் தெரித்தல். 17களனென்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச்செய்தல். மற்றுத் தன்மை முன்னிலை படர்க்கையுமாம். 18கால வகையென்பது, சிறுபொழுது பெரும்பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின. 19பயனென்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். 20மெய்ப்பா டென்பது சொற் கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல். 21எச்சவகையென்பது, (518) சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக் கொள்ளச் செய்தல்; அது கூற்றினுங் குறிப்பினும் வருதலின் வகையென்றான். 22முன்னமென்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோருந் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுவதற்குக் கருத்துப்படச் செய்தல். 23பொருளென்பது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப் படுவதொரு பொருண்மை. 24துறைவகை யென்பது, முதலுங் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற் படுமென்று ஒரு துறைப்படுத்தற் கேதுவாகியதொரு கருவி அச்செய்யுட் குளதாகச் செய்தல்; அவையும் பலவாதலின் வகையென்றானென்பது. 25மாட்டென்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல். 26வண்ணமென்பது, ஒருபாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம். எனாவென்பன, எண்ணிடைச் சொல். யாப்பியல்வகையின் ஆறு தலையிட்ட அந்நாலைந்து மென்பது, யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறு மென்றவாறு. இவை யாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதியவென விதந்தோதவே, இனிக் கூறும் உறுப்பெட்டும் இன்றியமையாமை இல்லை யென்றவாறு. "அம்மை யழகு தொன்மை தோலே லிருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ" யென்பது, இக்கூறப்பட்ட எண்வகை வனப்பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறுந் தொகுப்ப, முப்பத்து நான்குறுப்பாமென்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்குக் காரணம் அவற்றைக் கூறும்வழிச் (547) சொல்லுதும். நல்லிசைப் புலவர் செய்யுளென்பது, இவ்வுறுப்பனைத்துங் குறை யாமற் செய்யப்படுவன நல்லிசைப் புலவர் செய்யுஞ் செய்யுளெனப்படு மென்றவாறு. நல்லிசைப்புலவர் செய்யுள் எனவே, எழுநிலத்தெழுந்த (476, 477) செய்யுளுள்ளும் அடிவரையறை யுடையவற்றுக்கே இவ்விலக்கண மென்பதூஉந், திணையே கைகோளெனக் கூறும் உறுப்பு முதலாயினவெல் லாம் ஏனை அறுவகைச் செய்யுட்கும் (476-7) உறுப்பாகா வென்பதூஉம், அவை யொழிந்த உறுப்பினுள் ஏற்பன பெறுமாயினும் ஆண்டு வரையறை யின்மையிற் கூறானென்பதூஉம், அவை செய்தாரெல்லாம் அவற்றானே நல்லிசைப் புலவரெனப் படாரென்பதூஉம், பெற்றாம். இனி நூலும் உரையுஞ் செய்தார் நல்லிசை யுடையரென்பது அவற்றை 'நூலினான உரையினான' என இதற்கு இடையின்றி வைத்தமை யிற் பெறுதுமென்பது. "வல்லிதிற் கூறி வகுத்து ரைத்தனர்" என்பது இங்ஙனம் கூறிய அந்நல்லாசிரியர் இலக்கணமே கூறியொழிந்தா ரல்லர், வல்லவற்றான் எல்லாமமையச் செய்யுஞ் சுவடுடையராகி வகுத் துரைத்தார் அவ்வத்துறை போயினார்தாமும் என்றவாறு; எனவே, இவ் வுறுப்பமையச் செய்தனவே செய்யுளெனப்படுவனவென்று சிறப்பித்த வாறு. மற்றுக், 'கூறி'யெனவும் 'உரைத்தன'ரெனவும் இருகாற்சொல்லிய தென்னை யெனின், அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தா ரென்றவாறு; என்றார்க்குச் செய்யுட்குற்றம் ஈண்டோதாரோவெனின், ஓதல் வேண்டுமே? இவ்விலக்கணத்துப் பிறழ்ந்துங் குன்றியும் வருவனவெல்லாம் வழுவென்பதறிய வைத்தானல்லனே ஆசிரியனென்பது. மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார்; செய்யுள் யாண்டோதுப வெனின், அறியாது கடாயினாய்; உறுப்பென்பன உறுப்புடைப் பொருளின் வேறெனப்படா; பொருள் எனப்படுவன உறுப்பே, அவற்ற தீட்டத்தினை முதலென வழங்குபவாகலான் உறுப்பினையே சொல்லியொழிந்தார்; முதற்பொருளதிலக்கணமென உறுப்பிலக்கணத் தினையே வேறுபடுத்துக் கூறலாவதின்மையானும், உறுப்புரைப்பவே அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலாற் பெறலாமாகலானு மென்பது. மற்று, யாத்தசீரே யடியாப் பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இவருஞ் சீரது தொழிலே தளை யென வேண்டுப, தளைத்தலிற் றளையாதலானும் வேறு பொருளென வேண்டா ரென்பது. என்றார்க்கு அசையின்றிச் சீருமில்லை, சீரின்றி அடியு மில்லையாம் பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல அவை கொள்ளப்படும். தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான். என்னை? அது குறளடியென வேறுறுப்பாயினமையின் என்பது; தளையென்றிதனைக் கோடுமேல் அதனைக் குறளடி யெனலாகா தென்பது. அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறு போல இருசீர் கூடியவழி அவ்விரண்டனையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, நாற்சீரடியினை இடைதுணித்துச் சொல்லுவதன்றி நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லை யென்க. 'யாத்தசீர்' என்றதனானே, அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம், அச்சீரான் அடியானவழி 'சீரியைந் திற்றது சீரெனவே படு' (323) மென்றத னாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படுமென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது. அற்றன்றியும், அவ்வாறு தளைகொள்வார் சீரா னடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற் றொழிலல்ல தின்மையினெனின், அற்றன்று, தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடை யென்றானல்லன், அவ்வடிக்கண் நின்ற எழுத்துஞ் சொல்லும் பிறபொருளாகலான் அவற் றானே தொடை கொண்டமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேற், சீருஞ் சீரும் இயைந்தவழி அவையிடமாக நின்ற அசையான் தளைகொள் ளாமோவெனின், கோடு மன்றே, அதனை அடி யென்னா மாயின் என முற்கூறியவாறே கூறிமறுக்க. அல்லதூஉம் அவ்விரண்டசையுங் கூடின் சீராமன்றோ என்பது. மற்று நாற்சீரடியுள் இருசீ ரியைந்தவழிக் குறளடி யென்னாமாகலின் அதனைத் தளை யென்னாமோ வெனின், அங்ஙனங் கொள்ளின் இருசீரடிக் கட்டளைவேண்டாதானாம்; ஆகவே, ஒருவழிக் கொண்டு ஒருவழிக் கொள் ளாமை (663) 'மயங்கக்கூறல்' என்னுங் குற்றமாமென்பது. அல்லதூஉம், அங்ஙனமன்றி வருமாயின் அடிக்கெல் லாம் பொதுவகையான் தளை யுறுப்பெனப்படாது. எழுத்தும் அசையும் போல யாண்டும் வருவனவெல்லாம் உறுப்பெனப்படுவன வென்றற்கு, "இணைநூன் முடிபு தன்னூன் மேற்றே" என்பதனாற் காக்கைபாடினியார் ஓதிய தளையிலக்கணம் ஈண்டுங் கோடல் வேண்டுமெனின், அதுவே கருத்தாயின் அவர்க்கும் இவன் முடிவே பற்றித் தளை களையல் வேண்டும். அல்லதூஉம், இவற்கு இளையாரான காக்கைபாடினியார் தளைகொண்டில ரென்பது இதனாற் பெற்றாம். தளைவேண்டினார் பிற்காலத்து ஓராசிரியரென்பது. என்னை? "வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்" எனக் கூறி, 'வடவேங்கடந் தென்குமரி'யெனப் பனம்பாரனார் கூறிய வாற்றானே எல்லைகொண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து, "வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்" (தொல். பொருள். 650) எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரி யாறுள்ள காலத்தா ரல்லரென்பதூஉங், குறும்பனைநாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, அவர் இவரோடு ஒரு சாலை மாணாக்கரல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது. மற்றிது முறையாயவாறென்னை யெனின், மாத்திரை எழுத்தினது குணமாதலானும் அசையுஞ் சீரும் அடியுந் தூக்கும் பாவும் வண்ணங்களு மென்று இன்னோரன்னவெல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன வாதலானும் அது முன் (314) வைத்தான். அக்குணத்திற்குரிய எழுத்தினை அதன்பின் வைத்தான். அவ்வெழுத்தான் அசையும், (315) அசையாற் சீருஞ் (324) சீரான் அடியும், (346) அவ்வடி பெற்றவழி அதனை ஆக்குமாறறியக் கூறும் யாப்பும் (390) அவ்வடியகத்தன சொல்லும் பொருளுமாகலான் அதன்பின் மரபும் (392) வைத்தான். அவ்வடியிரண்டனைத் தொடுக்குங் கால் அவற்றை ஓரடியென ஒரு தொடர்ப்படாமைத் துணிப்பது தூக்காக லான் (399) அதனைத் தொடைக்குமுன் (400) வைத்தான். அவ்வடியிரண்டு தொடுத்த வழியுங் கொள்ளப்படும் நோக்கென்பதறிவித்தற்கு (416) அதனைத் தொடைப்பின் வைத்தான். அவ்வடி இரண்டும் பலவுந் தொடர்ந்தவழி முழுவதுங் கிடப்பது பாவாகலான் அதனை அதன்பின் (417) வைத்தான். அப்பாத் துணித்த துணிவினை (501) எண்ணுதலான் அளவினை (496) அதன்பின் வைத்தான். திணையுந் திணைக்குறுப்பாகிய (497) ஒழுக லாறும் அவ்வொழுக்கத்த வாகிய கூற்றும் (506) அதன்பின் வைத்தான். கேட்போருங் (508) கேட்கும் இடனும் (510) அதுபோலப் புலப்படாத காலமும் (514) இவற்றாற் பயனும் (515) பயனது பரத்து வரும் மெய்ப்பாடும் (516) இவற்றினெல்லாம் ஒழிந்து நின்ற எச்சமும் (518) அவ் வெச்சத்தொடுங் கூட்டி யுணரப்படும் முன்னமும் (519) அம்முறைமையான் அதன்பின் வைத்தான். அவற்றிற்கெல்லாம் பொது வாகிய பொருளை (520) அதன்பின் வைத்தான். அப் பொருட் பிறழ்ச்சியை ஒருப்படுக்குந் துறையை அதன்பின் (521) வைத்தான். மேல் (523) எச்சமும் மாட்டு மின்றியும் வரூஉமென்பவாக லான் மாட்டினைத் துறைவகையின் பின் வைத்தான். அவற்றுள் எச்சத்தினை முன் ஓதினான் அது செய்யுட்கணின்றி வருஞ் சிறுபான்மை யாதலானென்பது. வண்ணம் பாவினது பகுதியுறுப்பாதலான் அதனை அவற்றுப் பின் (524) வைத்தான். வனப்பினை (525) எல்லாவற்றுக்கும் பின் (547) வைத்தான், அவற்றை ஒன்றொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டு மின்றியுஞ் செய்யுள் செய்ப வாகலினென்பது. மற்றிவ்வுறுப்பினையெல் லாம் ஆசிரியன்குறி யென்றுமோ உலகு குறி யென்றுமோ வெனின், அவ் விருதிறத்தானும் ஏற்பனவறிந்து கொள்ளப்படுமென்றொழிக. இவற்றை உயிருடையத னுறுப்புப் போலக் கொளின் உயிர் வேறு கூறல் வேண்டுவ தாம்; அவ்வாறு கூறாமையிற் கலவை யுறுப்புப் போலக் கொள்க. (1) மாத்திரைஅளவும் எழுத்தியல்அளவும் உணர்த்துதல் 314. அவற்றுள், மாத்திரை அளவும் எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன என்மனார் புலவர். இது, நிறுத்த முறையானே முதற்கணின்ற மாத்திரையும் எழுத்தியலு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மாத்திரைகள் பல தொடர்ந்து செய்யுட்கண் விராய் நிற்கும் அளவையும், எழுத்துக்க ளியற்றப்பட்டு எழுத்ததிகாரத்தின் வேறுபட்ட தொகையுமென இரண்டினமும் மேல் எழுத்தோத்தினுட் கூறப்படாதன வல்ல; அவையே; அவற்றை ஈண்டு வேண்டுமாற்றாற் கொள்க என்பான் மேற் கிளந்த வகையிற் பிறழாமற் கொள்க என்றானென்பது. அன்ன வெனவே, இம் 'மாத்திரையளவும் எழுத்தியல்வகையும்' வேறென்பதூஉம், வேறாயினும் ஆண்டுக் கூறியவற்றொடு வேறுபடாமைக் கொள்க வென்பதூஉம் உரைத்தானாம். எனவே, எல்லா வழியும் வரையாது எய்தற்பாலவாகிய மாத்திரைகள் ஒரோவழி வரையப்படுமாயினும் அவை முற்கூறாத வேறு சில மாத்திரையுமல்ல; ஈண்டுப் பதினைந்து எழுத்தென்று கூறிப் பயங்கொள்ளு மாயினும் ஆண்டை முப்பத்துமூன்றெழுத்தின் வேறு படப் பிறந்தன சில வெழுத்துமல்லவென்பான் 'மேற்கிளந்தன்ன' வென்றா னென்பது. மாத்திரையென்றொழியாது மாத்திரையள வென்றதனான் அம்மாத்திரையை விராய்ச் செய்யும் அளவை ஈண்டுக் கூறினா னென்பது கருத்து. மற்று, எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன் றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமாறென்னையெனின், எழுத்தோத்தினுட் குறிலுநெடிலும் உயிருமெய்யும் இம்மூன்றுஞ் சார் பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்புவகையான் ஆண்டுப் பகுத் தோதினான், உயிர்மெய்யும் உயிரளபெடையுந் தத்தம் வகையாற் கூடு மாறும், ஐகாரம் ஔகாரம் போலிவகையாற் கூடுமாறும், யாழ்நூலகத்து ஒற்றிசை நீளுமாறும், ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே, அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோ டொக்குமென்று உய்த்து உணர்ந்து கொள்ள வைத்தானென்பது. இவற்றொடு மகரக்குறுக்கமுங் கூட்டிப் பதினாறெழுத்து என்பாருமுளர். அதனாற் பயனென்னையெனின், பாட்டுடைத்தலைவன் கேட்டுக்குக் காரணமா மென்பர். மற்று உயிர்மெய் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென்றில னாகலான் ஈண்டு எழுத்தியல் வகையுள் எழுத்தாக்கி அடக்குமாறென்னை யெனின், ஈண்டு 'அன்ன'வெனவே, ஆண்டு இரண்டெழுத்தின் கூட்ட மெனவும் மொழி யெனவும் போலியெனவுங் கூறினானாயினும், அவற்றை 'எழுத்தியல் வகை'யெனப் பெயர் கொடுப்பவே, ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப்படு மென்பதாயிற்று. இதன் கருத்து, 'இயலெ'ன்றதனான் இயற்றிக்கொள்ளும் வகையான் எழுத்து இனைய என்றானாம். 'வகை' யென்பதனான் முப்பத்து மூன்றனைக் குறிலும் நெடிலுமென்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட் டாற் பத்து வகைப்பட இயற்றுதலுங், கூட்டவகையா னிரண்டும் போலிவகையா னிரண்டும் யாழ்நூல் வேண்டும் வகையா னொன்றுமென ஐந்துவகையா னியற்றுதலுமென, இருவகையுங் கொள்ளப்படும். அல்லதூஉஞ் செய்யுள்கள் அவ்வெழுத்து வகையான் இன்னோசையவாக விராய்ச் செய்தலுங் கொள்க. மற்றளபெடையை மேல் 'மொழி'யென் றான், ஈண்டெழுத் தென்றானாகலின், இதனை ஓரெழுத்தென்று கோடுமோ இரண்டெழுத்தென்று கோடுமோ வெனின், "நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே" (தொல். எழுத். மொழி. 8) என்று கூறியவாற்றான் ஆண்டிரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயி னும், முன்னர்ப் போக்கி, "அளபெடை யசைநிலை யாகலு முரித்தே" (தொல். செய். 17) என்றவழி எழுத்து நிலைமையும் எய்துவிக்கு மாகலான், எதிரது நோக்கி ஈண்டு ஓரெழுத்தென்று கோடுமென்பது. இனி அவற்றுட் குறிலும் நெடிலுங் குற்றுகரமும் அசைக்குறுப்பாம். மற்று, 'ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி' (தொல். செய். 3) என்பதனான், ஒற்றும் அசைக்குறுப்பாகாவோவெனின், அச் சூத்திரத் தானன்றே, அவை குறிலும் நெடிலும் அடுத்து வந்தும் வேறுபடாது நேர் நிரையாதலெய்தியது நோக்கி, அவை அசைக் குறுப்பாகா வென்றதென்க. மற்றிடைநின்று நிரையாதலை விலக்காவோவெனின், அன்னதொரு விதியுண்டாயினன்றே, இவை இடைபுகுந்து விலக்கவேண்டுவதென மறுக்க. நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஐகாரக்குறுக்கமும் ஔகாரக்குறுக்கமு மெனப் பத்துந் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடை யிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனமே வேறுபட வந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக்கோடலின் 'எழுத்தியல் வகை' யென்றானென்பது, அஃதேல், ஒற்றுங் குற்றிகரமும் ஈண்டோதிய தென்னை யெனின், ஒற்றளபெடையான் அசைநிலையுஞ் சீர்நிலையுங் கோடலின் ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றிகரமும் உயிராயி னும், ஒற்றுப்போல, எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படா தென் றற்குக் கூறினானென்பது. அஃதேல், "ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்" (320) என்பவாகலின், அதை ஈண்டுத் தழாஅற்கவெனின், அக்கருத்தினான், அவ்வாறும் அமையுமென்பது. அற்றன்று, இதனை மேற்புள்ளி பெறு மென்றிலனாதலான் புள்ளிபெறு மென்றற்கும் "ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்" என்றானென்பது. இனி, ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்ஓசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாவா யினாம். சிறுபான்மை ஒரோவழி வரினும் அத்துணையானே அஃது இன்றியமையாத உறுப்போடு எண்ணப்படாதென மறுக்க. உறுப்பன்று என்றார்க்குக் குறிப்பிசை யாண்டுப் பெறுதுமெனின், "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல். செய். 11) என்புழிப் பெறுதுமென்பது. இனி, 'எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன' வென்பதனையும் எழுத்திலக்கணத்திற் றிரியாமற் செய்யுள் செய்க வென்றவாறென்ப வெனின், அஃதே கருத்தாயிற் சொல்லோத்தினுள்ளும் எழுத்திலக்கண மாகிய மயக்கமும் நிலையும் முதலாகிய இலக்கணம் திரியாமற் சொல் லாராய்தல் வேண்டுமெனவும், இவ்வதிகாரத்துள்ளும் 'எழுத்தியல் வகையுஞ் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன' வெனவுஞ் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க. மற்று, மாத்திரை யளவைக்கும் இலக்கணங் கூறுமோ எனின், அதுவும், "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (323) என்புழி, வல்லோராறெனப் பாவொடு பொருந்தக் கூறுமென்பது. அல்லதூஉம், மாத்திரையினை அளவைப்பட நிறுத்துக என்பதோ ரிலக்கண மாதலின் இங்ஙனம் வரையறை யுடைத்தாக நோக்கிச் செய்யு ளுறுப்பென் றானா மென்பது. மற்று மாத்திரையினை அளவைப்பட நிறுத்தாக்காற் படுங் குற்றம் என்னையெனின், அற்றன்று; "வரகு வரகு வரகு வரகு" என்னும் அடியினைப் "பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு" என நிறுத்தின் அது மாத்திரைவகையாற் சிதைவுபட்டதாம். "அம்ம வாழி கேளாய் தோழீ" என்றாற், பின்னர்நின்ற இருசீரும் நெடிலாதல் இன்னாதென்றுந் தோழி யெனப் பின்னர் நின்ற சீரைக் குறுக்கினவழி இன்னோசைத்தா மென்றும் அவ்வாறே செய்யுள் செய்ப. பிறவுங் கொச்சகக்கலியுள்ளும் ஒழிந்தன வற்றுள்ளும் இவ்வாறே கண்டு கொள்க. (2) அசைவகை இவை எனல் 315. குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசிற் பெயரே. இது, நிறுத்த முறையானே அசைவகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறிலும் நெடிலுந் தனித்து வந்துங், குறில் இரண்டு இணைந்து வந்துங் குறிற்பின்னர் நெடில் இணைந்து வந்தும், அவை ஒற்றடுத்தும், முறையானே நிரனிறை வகையானே நேரசையும் நிரை யசையு மென்றாம் எ-று. "குறிலே நெடிலே ஒற்றொடு வருதலொடு" எனவும், "குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு" எனவும், வேறு நிரனிறீஇப் பொருளுரைக்க. 'மெய்ப்பட நாடி' யென்பது பொருள்பெற ஆராய்ந்து; எனவே, இப்பெயர் ஆட்சி காரணமே யன்றிக் குணங் காரணமாகலு முடைய வென்றவாறு. உயிரில் எழுத்தல்லாதன (356) தனித்து நிற்றலின், இயலசை யென்னும் பொருள்பட நேரசை யென்றாயிற்று. அவை இரண்டும் நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. அல்லதூஉம், 'மெய்ப்பட நாடி' என்றதனான் அவ்வாய்பாடே அவற்றுக்குக் காரணமென்பதூஉங் கொள்க. 'உடம் பொடு புணர்த்தல்' (665) என்பதனான் உதாரணமுங் கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டுகொள்க; அ ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும், புகர் புகார் எனவும், பிறவும் இவ்வாறு வருவன வெல்லாங் கொள்க. மற்றுக் குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல்லாயவழி அசையாகாவோ வெனின், அவை ஒற்றொடு வருத லென்றதனானே, சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இருவாற்றானும் அசையா மென்பது சீரின்றன்மைக்கண் வந்தது. "உள் ளார் தோ ழி" என நேரசை நான்கும் வந்தன. "வரி வரால் கலா வலின்" என நிரையசை நான்கும் வந்தன. (3) நேர்வு நிரைபு அசைகள் 316. இருவகை உகரமோடு இயைந்தவை வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப. இது, சொல்லாத அசைக்கூறுஞ் சொல்லுகின்றது. (இ-ள்.) இருவகை யுகர மென்பன குற்றுகர முற்றுகரங்கள்; அவற் றொடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடுபட இயைந்து வரின், நிறுத்தமுறையானே நேரசையோ டொன்றி வந்த குற்றுகர மும் அதனோடு ஒன்றி வந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரையசையோடொன்றிவந்த குற்றுகரமும் அதனோ டொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் எ-று. 'இயைந்து' என்றான், இருவகை உகரமும் இரு பிளவு படாது ஒன்றாகி வரல்வேண்டும், அங்ஙனம் அசையாங்காலென்றற்கு. இருவகை உகரமும் ஒரு காலத்து ஒன்றன்பின் வாரா; வேறு வேறு வருமென்பது. இருவகை உகரமும் இறுதிக்கண் நின்று அசையாக்குமென்ப தென்னை பெறுமாறெனின், குற்றுகரம் ஈற்றுக்கணல்லது வாராமையானும், "நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும்" (தொல். செய். 9) என்பதனானும் பெறுது மென்பது. அல்லதூஉம், நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரம் இறுதிக்கண் நேரசையல்லது நிரையசை அடுத்து வருதலின்மை யானும் அது பெறுதுமென்பது. முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசை கூறி அவற்றுப் பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டு மாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றவேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசையாகாதென்பது, "குறிலிணை யுகர மல்வழி யான" (தொல். செய். 5) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உ-ம் : வண்டு, நாகு, காம்பு எனவும், வரகு, குரங்கு; மலாடு, மலாட்டு எனவும், இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு. இனி, முற்றுகரம் இரண்டசைப்பின்னும் வருங்காற் குறிலொற்றின் பின்னும் நெடிற் பின்னுமென நேரசைக்கு இரண்டல்லதாகாது. நிரை யசைக் கண்ணுங் குறிலிணைப் பின்னுங் குறினெடிற் பின்னுமல்லதாகாது. உ-ம் : மின்னு நாணு எனவும், உருமு குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின் பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின், அவை ஆகாவென்பதூஉம் இக்காட்டிய நான்குமே ஆவனவென்பதூஉம் முன்னர், "நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும்" (தொல். செய். 9) என்புழிச் சொல்லுதும். இனி, ஒருசாரார் நேர்பசை நிரைபசை யென்பன வேண்டாவென்ப. என்னை? குற்றுகர முற்றுகரங்களை வேறாக்கி அலகிட அமையாதே? 'ஞாயிறு' எனக் குற்றுகரங் குறிலிணையாய் அலகு பெறுமேயெனக் குற்றங் கூறுப. முற்றுகரமுந் 'தேமா' வென நேரசையாயிற்று 'மின்னு' என்றவழி வேறலகுபெற அமையுமென்பது. அற்றன்று, குற்றுகரத்தினைக் குற்றெழுத் தென்ப, வேறு குற்றுகரம் வேண்டாதாரும் என்றார்க்கு வேண்டினானை யுங் குற்றங் கூறுவரவர்; என்னை? குற்றியலுகரம் அரை மாத்திரைத்தாகலின் ஒற்றுப்போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும். அற்றன்றேற் குற்றெழுத் தாக்கி அலகு வைக்கவே அமையுமென்பதாம் அவர் கருத்து. அதற்கு விடை: குற்றுகரம் ஒற்றுப் போன்று ஒடுங்கி நில்லாது; என்னை? தன்னான் ஊரப்பட்ட ஒற்றுந் தானுமாகி அரை மாத்திரைத்தாகியும் ஒடுங்கி இசையாது அகன்று இசைக்கும்; அதனான் ஒற்றென்றலுமாகாது; பின்னும் ஒரு மாத்திரைத் தாகாமையிற் குற்றெழுத் தெனலுமாகாது; மற்று அதனான் அதனை ஒற்றென அடக்கான்; குற்றெழுத்தென ஏற்று அலகு கொள்ளான்; இனி அதனைச் செயற்பாலதோர் அசையாக்குத லென்பது நோக்கி நேர்பசை நிரைபசையென வேண்டினானென்பது. அவை வண்டு தொண்டி என ஓசை யொவ்வாமை செவி கருவியாக உணர்ந்துகொள்க. அஃதேல், 'ஞாயிறு வலியது' என்றவழிக் குறிலிணையுகரமெனக் குற்றெழுத் தாக்குவது எற்றுக்கெனின், அளபெடையை ஓசையிற் சிதையாது 'நிலப்படையுள் அலகு சிதைத்தாற் போலக்' குற்றுகரத்தைக் குற்றெழுத்துப் போல அலகுபெறுமென்பது இலக்கணமில்லதொரு வழுவமைதி தானாயதனை இலக்கணமாக ஓர்த்துக்கொண்டு இலக்கண வகையாற் குற்றுகர மாதலை விலக்குவாரும் உளரோவென மறுக்க. அஃதாக, முற்றுகரம் ஒரு மாத்திரையாதலிற் குற்றெழுத்தாக்கி நேரும் நிரையுமாகப் பெறாவோ வெனிற் பெறா; என்னை? "வண்டு வண்டு வண்டு வண்டு" என நின்றவழிப் பிறந்த அகவலோசை, "மின்னு மின்னு மின்னு மின்னு" என நின்ற வழியும் பெறப்படுமாதலின், அதுவும் அது பட்டதே பட்டு அவ்வசையே பெறுமென்றா னென்பது. அல்லதூஉம் வெண்பாட்டீற்றடி வண்டு எனக் குற்றுகரவீற்றான் இற்றவழியும் கொல்லு என முற்றுகர வீற்றான் இறுமாயினும் ஒத்த வோசையாம். இனி, உகர வீறல்லாத தேமாவென்பதனான் முடியாவென்பர்; அதனானுங் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி நேர்பு நிரைபு கொண்டானென்பது. அற்றன்றியுங் குற்றுகரஞ் சார்ந்து தோன்று மாறு போல இம்முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதலொப்புமை நோக்கியும் அதனைக் குற்றுகரம்போல ஓரசைக்கு உறுப்பாம் என்றானென்பது. "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப" (தொல். செய். 43) என்பதனான் அவை அவ்வாறாதல் அறிந்துகொள்க. இவையும் ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, "நிரையவ ணிற்பி னேரு நேர்பும்" (தொல். செய். 75) எனவும், "நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும்" (தொல். செய். 74) எனவும், வருமென்பது. இருவகை யுகரமும் அடைந்து வந்த இயலசை யிரண்டும் நேர்பும் நிரைபு மென்றாலும், நேரும் நிரையுமென்னும் பொருண்மையவே யாகலான் அவற்றது பெயரான் இவற்றையும் பெயர் கொடுத்தான் ஆகுபெயராக்கி யென்பது. எனவே, நேர்நிரையின் பின் உகரம் வருதலின் நேர்பு நிரைபு எனக் குணங் காரணமாகவும் பெற்றாம். (4) நேர்புஅசை ஆகா இடம் 317. குறிலிணை உகரம்அல்வழி யான. இஃது, எய்திய தொருமருங்கு மறுத்ததாம்; எய்தாத தெய்துவித்த தூஉமாம்; வழுவமைத்த தெனினும் அமையும். தனிக்குறிலானாகிய நேரசைப் பின்னும் இருவகையுகரம் வந்து நேர்பசை யாதலை விலக்கினமை யின் எய்திய தொரு மருங்கு மறுத்ததாம். குற்றுகரங் குற்றெழுத்துப் போன்று அலகுபெறு மென்றமையின் எய்தாதெய்துவித்து வழுவமைத்த தாம். (இ-ள்.) இருவகை உகரமும் இரு குறிலாகி இணைந்த வழி நேர்பசையாகாது எ-று. கரு மழு என முற்றுகரம் நேர்பசையாகாது நிரையசையாயிற்று. என்றார்க்குக், குற்றுகரம் விலக்கியதென்னை? குறிலிணைந்தவழிக் குற்றுகரமாகாதென்பது. "நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே" (தொல். எழுத். மொழி. 3) என்றதனாற் பெறுதும் பிறவெனின், அது நோக்கிக் கூறினானல்லன்; 'ஏற்புழிக்கோடல்' என்பதனான், ஞாயிறு வலியது என ஓரசைப் பின்னர் வந்தவழி இது குற்றுகரமேயாமன்றே? ஆண்டும் அது குறிலிணை யுகர மெனவே படுமென்பது. பட்டக் கண்ணுங் குற்றுகரமேயென வழுவமைத்த வாறு. குறிலிணையெனக் குற்றுகரத்தையும் உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனாற் குற்றெழுத்தென வேண்டினானென்பது பெற்றாம். இங்ஙனம் குற்றுகரங் குறிலிணையாகியுங் குற்றுகரமாகி எழுத்தள வெஞ்சினும் அமையுமெனவே நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரமுங் குற்றெழுத் துப் போன்று அலகுபெறும், எழுத்தளவெஞ்சினுமென்பது கொள்க. இஃது 'ஒன்றினமுடித்த றன்னின முடித்தல்' (665) என்னு முத்திவகை. (5) அசைகளின் பெயர் 318. இயலசை முதலிரண்டு ஏனைய உரியசை. இது, மேற்கூறிய அசை நான்கனையும் இருகூறு செய்து அவற்றுக் கெய்தாத தெய்துவிக்கின்றது. இனி, ஆட்சியுங் குணனுங் காரணமாக வேறு வேறு பெயர் கொடுக்கின்றது இச்சூத்திரமெனவும் அமையும். (இ-ள்.) முதற்கணின்ற நேரும் நிரையும் இயற்றிக் கொள்ளப்படாது, இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பனவாம். ஒழிந்தன விரண்டும் இயற்றிக்கொள்ளப்பட்டு இயலசையாதற்கு உரியவாம் எ-று. எனவே, எய்தாத தெய்துவித்தது; இயலசை உரியசையென்று ஆளுமாகலானும், இயற்கையான் இயறலின் இயலசையெனவும், அவை செய்யுந் தொழில் செய்தற்கு உரியவாகலான் உரியசையெனவும், ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெயரெய்துவித்ததூஉ மாயிற்று. அங்ஙனம் இயற்றிக் கொள்ளுமாறு சீர்கூறும்வழிக் கூறுதும். (6) தனிக்குறில் முதற்கண் அசை ஆகாமை 319. தனிக்குறில் முதலசை மொழிசிதைத் தாகாது. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்த னுதலிற்று; உகிரி மயிரி என நின்றவழிக் குறிலிணையே யன்றி மூன்றெழுத்து நிறைந்தமையின் நிரையசையாகா, தனித்தனி நேரசையாகலும் மூன்று குற்றெழுத்தினுள் இரண்டு குறிலிணையாக ஒன்று நேரசையாவதும் அது முதற்கண்ணே கொல்லோவெனவும் ஐயம் எய்தியதனை விலக்கி விட்டிசைத்தவழித் தனிக்குறில் நேரசையாமென்பது எய்துவித்தமையின். (இ-ள்.) தனிக்குறிலானாகிய நேரசை முதற்கண் மொழி சிதைத்துச் செய்யப்படாது எ-று. இங்ஙனம் முதற்கண் வரையறுப்பவே, இடையும் இறுதியும் மேலோதிய வாற்றான் நேரசையாமென்பது. மொழிசிதைத்தலென்பது விட்டிசையாத மொழியை விட்டிசைத்து மொழிதல்; எனவே, விட் டிசைத்த மொழியாயின் அது மொழி சிதைத்த தெனப்படாது இயல்பா மென்பது பெற்றாம். கரு மழு என முதற்கண் மொழி சிதைத்து நேரசை யாகாமையுங் குறிலிணையெனப்பட்டு நிரையசையாயினவாறுங் கண்டு கொள்க. "அ ஆ விழந்தான்" (நாலடி. 9) எனவும், "அ உ வறியா வறிவி லிடைமகனே நொ அலைய னின்னாட்டை நீ" எனவும், இவை விட்டிசைத்தலின் மொழி சிதையாது தனிக்குறில் முதற்கண் நேரசையாயினவாறும் அவை குறினெடிலுங் குறிலிணையு மெனப்பட்டு நிரையசை யாகாதவாறுங் கண்டு கொள்க. இனி விட்டு இசைக்கும் இடந்தான் மூன்றென்பது உரையிற் கொள்க. அவை, "அ ஆ விழந்தான்" (நாலடி. 9) எனக் குறிப்பின்கண் வருதலும் "அ உ வறியா" (யா. வி. மேற்.) எனச் சுட்டின்கண் வருதலும் "நொ அலையல்" (யா. வி. மேற்) என ஏவற்கண் வருதலுமென விட்டிசைக்குமிடந்தான் மூன்றெனப்பட்டது. முதலசையென்பது நேரசை யென்பாருமுளர். அது விதந்தோதல் வேண்டா, தனிக்குறிலான் அசையாமெனப்பட்டது நேரசையேயென்பது பெறுது மாகலான். மற்றும், "இ உக் குறுக்கம்" (நேமி. 5) என்றவழி, விட்டிசைத்து மொழி சிதையாதாகலான் அவ்விரண்டெழுத்துங் கூட்டி நேர்பசை யென்னாமோவெனின், அவை பிளவுபட நிற்றலின் இயைந்திலவென மறுக்க. (7) குற்றியலிகரம் அலகு பெறாமை 320. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். இஃது, எய்தாத தெய்துவித்து ஐயம் அறுத்தது. (இ-ள்.) மேற்கூறிய எழுத்திலக்கண வகையானும் ஈண்டோதும் அசைக்குறுப்பா மாற்றானும் எல்லாங் குற்றியலிகரம் ஒற்றெழுத்தியற்றே யாம் எ-று. தேற்றேகாரம் அடுத்துக் கூறியவாறு. எனவே எழுத்தோத்தினுள், 'மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்' (தொல். எழுத். புண. 2) எனக் கூறிக், 'குற்றிய லுகரமு மற்றென மொழிப' (தொல். எழுத். புண. 3) எனக் குற்றுகரத்திற்குப் புள்ளிபெறுதலுங் கூறினான்; அதுபோலக் குற்றி கரமும் புள்ளிபெற்று நிற்றல் உடைத்தெனவும், ஈண்டுக் குற்றுகரம் நேர்பும் நிரைபுமாகியவாறு போலத் தானும் ஓர் அசையாகுங் கொல்லென்று ஐயுறுவது வேண்டா, ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலுற ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையு முடைத்து அது என்றவாறுமாயிற்று. எனவே, ஒற்றெழுத்தியற்றாயினுங் குற்றுகரம் இகரக் குறுக்கம் போலாது செய்யுட்கு உபகாரப்பட்டதோர் அசை வேறுபாடு தோன்ற நிற்கு மென்றவாறாயிற்று. மற்று எண்ணப்படாதென் றது ஈண்டுக் கூறல் வேண்டுமே? 'உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ' (தொல். செய். 44) என்புழிப் பெறுதுமாலெனின், அது குற்றுகரத்திற்கே கூறியதென்பது ஆண்டுச் சொல்லுதும். உ-ம்: "மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும் " (தொல். சொல். இடை. 26) எனவும், "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை" (குறள். 254) எனவும் இவற்றில் இயலசை சார்ந்து ஒற்றியற்றாகிக் குற்றிகரம் வந்தவாறு. நாகியாது வரகியாது எனக் குற்றிகரம் உரியசை சார்ந்து ஒற்றியற்றாகி வந்தவாறு. அது நிரையும் நிரைபுஞ்சார்ந்து ஒற்றியற்றாமாறு இல்லை போலும். இவற்றை யெல்லாம் 'ஒற்றெழுத் தியற்றே' யென்பதனாற் புள்ளியிட் டெழுதுக. இது சொல்லிய காரணங், குற்றுகரம் அரைமாத் திரைத் தாகியும் ஒற்றியற்றாகாது நேர்பும் நிரைபும் ஆகியவாறுபோல, அதற்கு இனமாகிய குற்றிகரமும் அரை மாத்திரைத்தாகி வேறோ ரசையாகுங் கொல்லென்று ஐயுறாமற் காத்தவாறு. மற்று ஆய்தத்தினையும் ஒற்றியற்றென்னாமோ வெனின், அஃது எழுத் தோத்தினுள், 'எழுத்தோ ரன்ன' (தொல். எழுத். 2) என்பதனாற் பெற்றாமென்பது. மற்று, "முந்தியாய் பெய்த வளைகழலும்" (யா. வி. மேற். 43) எனவும், "நினக்கியான் சொல்லிய தின்ன தின்று" எனவும் இவை ஒற்றியற்றாகாது எழுத்தியற்றாயினவென்று காட்டுவாரு முளர். முந்தியாய் என்பது இகரவீறுமாமாகலின் அது காட்டல் நிரம்பாது. அல்லதூஉம் அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க. இனி, ஒற்றும் எழுத்துமென உம்மையோடெண்ணலுமாகாது; இவ்வோத்தினுள், 'உயிரில் எழுத்து மெண்ணப் படாஅ' (தொல். செய். 44) என ஒற்றினையும் எழுத்தென்றானாகலின். (8) வருமொழியைச் சிதைந்து இருவகை உகரமும் கோடல் ஆகாது என்பது. முற்றுகரம் மொழிசிதைத்துக் கொள்ளப்படாமை 321. முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும். இதுவும், ஐயம் அறுத்தது; இருவகை யுகரமொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபுமாமென்றான், அவற்றுள் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ் சொல் உலகத்து அரிய வாயினவாதலிற் புணர்ச்சிக்கண் வந்த உகரமே ஈண்டு நேர்பும் நிரைபுமாவனவெனவும், புணர்ச்சிக்கண்ணும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும், நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப்படுவன வெனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று நிலைமொழியாகிய நேர்பு நிரைபிற்கு உறுப்பாவன கண்டு வருமொழி யுகரம் ஈண்டும் அதுபோல அவற்றிற்குறுப்பாங்கொல் லென்று ஐயுற் றானை ஐயுறற்க வெனவுங் கூறினமையின். (இ-ள்.) முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ-இருவகையுகரமு மியைந்தவை வருங்கால் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்று வாங்கிக் கொடுக்கப்படா; நிற்றலின்றே யீற்றடி மருங்கினும்- அங்ஙனம் வாங்கிக் கொடுக்கப் படாவாயின், நேரசை நிரை யசைப்பின்னர் முற்றுகரம் ஈறாகி வருஞ்சொல்லும் உலகத்தரியவா யின், முற்றுகரத்தான் நேர்பும் நிரைபும் ஆமாறென்னை யென்றார்க்கு, அடியிறுதிக்கணல்லது முற்றுகரம் புணர்ச்சிவகையான் இடைநில்லாதன வாயின கண்டா யென்ப துணர்த்தியவாறு. 'இன்று' என ஒருமை கூறினமையின் எடுத்தோதிய முற்றுகரமே கொண்டு இலேசினாற் றழீஇய குற்றுகரங் கொள்ளற்க. மற்றிதனை இலேசி னாற் கொண்டதென்னையெனின், நுந்தை யென்னும் ஒருமொழிக்கணன்றி வாராமையின், அதன் சிறுவரவுநோக்கி உம்மையாற் கொண்டானென்பது. முற்றுகரம் மொழிசிதைத்துக்கொளாவெனவே, ஒற்றூர்ந்துவரினுந் தனித்து வரினும் உடன்விலக்குண்ணு மென்பது. "நாணுடை யரிவை" (அகம். 34) என்றவழி, "நாண்" என்னும் நேரசைப் பின்னர், "உடையரிவை" யெனத் தனித்துவந்த உகரம் நேர்பசையாகாது. "வார்முரசு" என்றவழி வாரென்னும் நேரசைப்பின்னர் முரசென மகரம் ஊர்ந்துவந்த உகரமும் நேர்பசையாகாது. "வற்றுறுசெய்தி" எனவும், "பரன்முரம்பு" எனவும் வந்தவழி, வற்றெனவும் பரலெனவும் நின்ற நேரசை நிரையசைப் பின்னர் உறுசெய்தி யெனவும் முரம்பெனவும் வந்த உகரங்களும் நேர்பசை நிரைபசையாகா. "சின்னுந்தை" " இராநுந்தை" எனக் குற்றுகரம் வந்தவழியும் நேர்பசை நிரைபசையாகாவென்றவாறு, "நாணுத்தளை யாக வைகி" (அகம். 29) என்றவழி ணகாரவீறு புணர்ச்சிவகையாற் பெற்ற உகரம் நிலைமொழித் தொழிலா கலான் அது நாகு என்னுங் குற்றுகரம்போல் ஒற்றுமைப்பட்டு நேர்பசையா யிற்று. "விழவுத்தலைக் கொண்ட" (அகம். 17) என்றக்காலும் அவ்வாறே ஆகாரவீறும் உகரம்பெற்று நிரைபசை யாயிற்று. ''மின்னு மிளிர்ந்தன்ன கனங்குழை" (அகம். 158) எனவும், " முழவுமுகம் புலரா" (அகம். 206) எனவும் வருவனவும் அவை. "நாணுத்தளை" என்றாற்போல வரும் ஒற்றுப்பேறு முன்னர்ச் சொல்லுதும். "நீர்க்கு" " நிழற்கு" என்ற உருபும் நிலைமொழித் தொழிலாதலான் அவையும் நேர்பசை நிரைபசையா மென்பது இதனாற் பெற்றாம். "நிற்றலின்று" என ஒருமைகூறி முற்றுகரமே கொண்டமையிற், குற்றுகரமாயின் இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபுமாம் என்றவாறாம். அவை, "ஆட்டுத்தாள்" " சேற்றுக்கால்" எனவும், "எய்போற் கிடந்தானென் னேறு" (பு. வெ. வாகை. 22) எனவும் இடையும் இறுதியுங் குற்றுகரம் நேர்பசையாயிற்று. "களிற்றுத்தாள்" எனவும், "வேலாண் முகத்த களிறு" (குறள். 500) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் நிரைபசையாயினவாறு. மருங்கினுமென்ற உம்மையான் அடியீற்றே யன்றி மொழியீற்றும் அவற்றிறுதி கெட நின்ற மொழிக்கண் இடைநின்ற உகரம் இறுதியாகி உரியசையாகுவனவும் உளவென்பது கொள்க. அவை, "மேவுசீர்" எனவும், "கோலுகடல்" எனவும், "உலவுகடல்" எனவும், "விரவுகொடி" எனவும், "கலனளவு நலனளவு" எனவும், "சுரும்புலவு நறுந்தொடையலள்" எனவும் வரும். இவை ஈற்றுநின்ற மகரங்கெட்டு உகரவீறாயின. இவற்றுள் நிரைபசை யுகரங்களை ஆகாரவீற்றுப்புணர்ச்சி யுகரமென்னாமோ வெனின், என்னா மன்றே; வருமொழியொற்று மிகாமையினென்பது. "உலவுக்கடல்" " விரவுத்தளை" யெனின், அவ்வாறே யமையுமென்பது. மருங்கென்றதனான் ஈற்றடிக் கண்ணும் இறுதிக்கண்ணே முற்றுகரம் விலக்குண்டதெனக்கொள்க. என்றார்க்குப், "புனைமலர்த் தாரகலம் புல்லு" (யா, வி. மேற்.) எனவும், "கண்ணாரக் காணக் கதவு" (முத்தொள். 42) எனவும் வருமாலெனின் அவை மரூஉவழக்கென்க. (9) ஒற்றொடு நிற்பினும் நேர்பும் நிரைபுமே ஆதல் 322. குற்றிய லுகரமு முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. இஃது, எய்தாதது எய்துவித்தது; இயலசைகளை, " ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி" (தொல். செய். 3) என்றான், உரியசைக்கு அது கூறாதான் ஈண்டுக் கூறுகின்றமையின். (இ-ள்.) மேற்கூறி வருகின்ற குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும், அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாயின் எ-று. எனவே, அவை நிலைமொழி ஒற்றுடையவாயின் நேர்பும் நிரைபு மாகா, வருமொழி வல்லெழுத்து மிகினே யாவதென்றவாறு. அஃதென்னை பெறுமாறெனின், "வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி" (தொல்.எழுத். குற்றிய. 4) என்றதனானும், முன்னர் நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரம் வருமெனக் கூறிய அதிகாரத்தானே ஒற்றுத் தோன்றினென்றா னாகலானும் பெறுதும்; நிலைமொழியுகரம் பெற்று வருமொழி ஒற்றெய்துவது கண்டானாகலா னென்பது. உ-ம் : "சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல்" (யா. வி. மேற்.) எனவும், "நாணுத் தளையாக வைகி" (அகம். 29) எனவும், " நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை" (புறம். 125) எனவும், " கனவுகொ னீகண் டது" (கலி. 90) எனவும் இவை இருவகையுகரமும் ஒற்றடுத் துரியசையாயினவாறு. உம்மை, எதிர்மறையாகலான் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை. இங்ஙனம் வருமொழி யொற்று மிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபுமா மெனவே, " உண்ணும்" எனவும், " நடக்கும் " எனவும், நிலைமொழியொற்று நின்றவழித் தேமாவும் புளிமாவுமாவ தல்லது நேர்பசையும் நிரைபசையு மாகாஎன்பதாம். " விக்குள், கடவுள்" என்பனவும் அவை. (10) அசையும் சீரும் வகுத்தல் 323. அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோ ராறே. இது, மேற்கூறப்பட்டனவற்றுக்கும் இனிவருஞ் சீர்க்குமெல்லாம் புறனடை. (இ-ள்.) அசைகளையுஞ் சீர்களையும் ஓசையொடு சேர்த்தி வேறு படுத்து உணர்த்துவித்தலும் அச்செய்யுளிலக்கணத் துறைபோயினாரது நெறி எ-று. மேல் (313) மாத்திரை யென்பதோர் உறுப்புரைத்தான்; அதனான் அசை சீர்களது ஓசையை அளந்து கூறுபடுத்து இன்னோசையும் இன்னா வோசையு முணர்த்துக. எழுத்தியல்வகைக்கும் இஃதொக்கும். "குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு" (யா. வி. மேற். 181) எனின், வெண்பாவீற்றடி இன்னோசைத்தன்றாம். " கருப்புக் கொழுந்து கவர்ந்து" என முடிக்கின், இன்னோசைத்தாய் வெறுத்திசையின்றாமென்பது. " நிலமிசை நீடுவாழ் வார்" (குறள். 3) இதனுள், வாழ்வார் என்னும் மொழியை வகுத்து, வாரென நேரசைச் சீராக்கி வகுப்பவே அசையினை இசையொடு சேர்த்திற்றாம். இனி, 'நீடு கொடி' என்பதனை மாவருவாய் என்று அசையுஞ்சீரும் இசையிற் சேர்த்துக வென்பாருமுளர். இவற்றைப் பிறநூலார் வகையுளி யென்ப. இச்சூத்திரத்துள், ' வகுத்தன ருணர்த்தல்' என்றமையின், இனி, வெண்பாவினுள் வெண்சீரொன்றி வந்தவழியும் வேற்றுத்தளை விரவும் இடனுடைய. அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக. " மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய்" என்பது, பன்னிரண்டெழுத்தடி; " மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய்" என்பது, பதின்மூன்றெழுத்தடி; " மாசேர்வாய் மாவருவாய் மாசேர்வாய் மாவருவாய்" என்பது, பதினான்கெழுத்தடி; இவை மூன்றும், " அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய" (தொல். செய். 58) என வெண்பாவிற்கு ஓதிய அளவடியேயாயினும் இக்காட்டிய அலகிடுகை யாற் கலித்தளை தட்டுத் துள்ளலோசையும் பிறக்கும். "மாசேர்வாய் மாசேர்வாய் பாதிரி பாதிரி" எனவும், "மாசேர்வாய் பாதிரி பாதிரி காருருமு" எனவும், "மாசேர்வாய் பாதிரி காருருமு காருருமு" எனவும், முன்காட்டிய மூன்றனையுமே இவ்வாறு அலகிட்டு ஒசையூட்டக் கலித்தளை தட்டாது வெண்பாவடியேயாம். இவ்விருகூறும் ஒசையொடு சேர்த்துணர்த்துக. பதினான்கெழுத்தின் இறந்த பதினைந்து நிலனும் பதினாறு நிலனும் பதினேழு நிலனுமென இம்மூன்றும் வெண்சீர் வந் தொன்றியக்காலும் இயற்சீர்வந் தொன்றாக்காலும் ஒரு ஞான்றுஞ் செப்ப லோசை பிறவா; அவையும் ஓசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக; அவை வருமாறு: "புலிவருவாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய்" எனவும், "மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்" எனவும், "புலிவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்" எனவும், இவை வெண்சீரொன்றியுங் கலித்தளை தட்டின. இனி இவற்றை இயற்சீர்கொடுத்துச் சொல்லுங்காலுஞ் செப்பலோசை சிதையும் ; என்னை? "காருருமு காருருமு காருருமு பாதிரி" எனவும், "காருருமு காருருமு காருருமு காருருமு" எனவும், "நரையுருமு காருருமு காருருமு காருருமு" எனவும், இவை இயற்சீரான் வந்தும் வேறொரு சந்தப்பட்டுச் செப்ப லோசை சிதைய நிற்குமென்பது. அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக. இன்னோரன்ன பிறவும் பெரிதும் எஃகுசெவியும் நுண்ணுணர்வும் உடையார்க்கன்றி உணரலாகா. "ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய்" என்றக்கால், ஞாயிறு புலிவருவாயென இயற்சீரின்பின்னர் நிரையசை வந்து, "சீரியை மருங்கி னோரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும்" (தொல். செய். 56) என்பதனான், ஆசிரியத்தளையாயினும் அஃது ஆண்டுக் கலித்தளைப்பாற் படுமென்பது, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" என்பதனான் உணரப்படும். இனி, "ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய்" என்புழிப், புலிசேர்வாய் மாசேர்வாயென நேரொன்றியதேனும் அது கலித்தளை யென்பது, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" என்பதனான் உணரப்படும். இன்னோரன்ன பலவுமுள; அவையெல்லாம் வரையறுத்து இலக்கணங் கூறப்படா; அவற்றை அவ்வாறு வேறுபடுத் துணர்த்துதல் அவ்வத்துறை போயினார் கடனென அடங்கக் கூறல் வேண்டி, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே" என்றானென்பது. உம்மையான், அடியினை வகுத்துணர்த்துதலுங் கொள்க. அது, "நுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே" (அகம். கடவுள் வாழ்த்து) என்புழி, ' இகலட்டு' என்னுஞ் சீர் குறித்த பொருளை முடிய நாட்டும் யாப் பென்னும் உறுப்பினுள் அடங்காது இகலட்டுக் கையதென மேலடியோடு பொருள் கூடியும், இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தியதேயாம். இன்னும் இவ்விலேசானே எழுத்தல் ஓசையும் அசையொடுஞ் சீரொடுஞ் சேர்த்தி வகுத்துணர்த்தலுங் கொள்க. அவை, "சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை" என்றாற் போல்வன. இனி, அகவலோசை மூன்றெனவுஞ் செப்பலோசை மூன்றெனவும் அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தியென வகுத்துணர்த்துவாருமுளர். அவை இயலசை மயங்கிய இயற்சீரும் உரியசைமயங்கிய இயற்சீரும் வெண் சீரும்பற்றி ஓசை வேறுபட்டுத் தோன்றுமென்க. அங்ஙனமாயினும் அவை மும்மூன்றாக்கி வரையறுக்கப்படாமையின் ஈண்டவை கூறானென்பது. இனி, ஒருசாரார் அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத் துணர்த்த லென்பதனை இவ்வாறு முரைப்ப: என்னை? ஒரு செய்யுளுட் கிடந்த அசை சீர்களை ஈண்டுக் காட்டிய தேமா புளிமா வென்பன முதலாகிய உதாரணங்களோடு சேர்த்தி அவ்விரண்டனையும் ஒக்கும் வகையான் ஓசையூட்டிக் காட்டுப. அற்றன்று, இவ்வுதாரணஞ் சீரென்று வலித்திருந்தார்க்காம், அது செய்துகாட்டல் வேண்டுவது. எல்லாச் சொல் லிற்கும் ஏற்றவாற்றான் 'அசையுஞ்சீரும் இசையொ'டெனப் பொதுவகை யாற் கூறினமையின் அதுகாட்டல் நிரம்பாதென்பது. இனிக், "கடியாறு கடியாறு கடியாறு கடியாறு" என்பதனைத் துள்ளலாகச் சொல்லிக் கலியடியெனவுங், கடியாறு என்பது நேர்பீறாமென்பதாயினும், அது வெண்சீரே ஈற்றசை நிரையியற்றாய் நின்றதெனச் சொல்லி அதற்கு இலக்கணம். "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே" (தொல். செய். 29) எனப் பொருளுரைத்து, மற்றதனைக் கலித்தளையெனவுங் காட்டுப. அற்றன்று; ' கடியாறு' என்னுஞ் சீரின் உறழ்ந்த ஆசிரியவடியும் அதுவே வாய்பாடாக வருமாகலின். மற்றதன்கண் துள்ளலோசை பிறந்ததாலெனின், அவற்றுக்கண் ஒரோமாத்திரை கொடுப்பத் துள்ளலோசை பிறந்ததா யினும்,' அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்திச் சொல்லுக' வெனவே அங்ஙனம் மாத்திரை நீட்டிச்சொல்லாது அகவலோசைப்படச் சொல்லுக வென்பது இதனாற் பெற்றாமாகலின் அது பொருளன்றென்பது. (11) சீரும் அதன் வகையும் 324. ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்துஞ் சீரியைந்து இற்றது சீரெனப் படுமே. இது, முறையானே அசையுணர்த்திச் சீராமா றுணர்த்துவான் தொடங்கி அவை இத்துணைப் பகுதியவென்பதூஉம் அவற்றுப் பொது விலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டசையானும் மூன்றசையானும் ஓரொருசொற்கண் சீரியைந்திறுவன சீரென்று சொல்லப்படும் எ-று. "சீரியைந் திறுதல்" என்பது வழக்கியல் செய்யுளாமாற்றான், யாப்பினும் பொருள் பெறப் பகுத்துப் பதமாகியவற்றுச் சேறல். உ-ம் : "சாத்தன் கொற்றன்" எனவும், "உண்டான் தின்றான்" எனவும், இரண்டசை கொண்டு சீராயின. "கானப்பேர் சாய்க்கானம் கூதாளி" எனவும், "உண்ணாதன தின்னாதன" எனவும், இவை மூவசை புணர்ந்து சீராயின. இவை செய்யுளுள் வருமாறு : "உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு" (முருகு. 1, 2) என ஈரசைச்சீர் வந்தன. "யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானூட யானுணர்த்தத் தானுணரான்" (முத்தொள். 104) எனவும், "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும்" (பட்டின. 1, 2) எனவும் இவை மூவசைச்சீர் வந்தன. பிறவுமன்ன. மற்றுச் சீரென்ற தென்னையெனின், பாணிபோன்று இலயம் பட நிற்றலான் அது சீரெனத் தொழிற்பெயராம். என்னை? "சொற்சீர்த் திறுதல்" (தொல். செய். 123) என்புழித் தொழிற்படுத்தோதினமையின். இனி, "இயைதல்" என்பது அசைவகை ஒன்றொன்றனொடு தொடர்ந்தவழி யல்லாற் சீர்க்கு அலகுபெற லாகாதென்றவாறு; எனவே, அவ்வாறு இலயம்பட நின்றன வாயினும் புணர்ச்சியெய்து மென்பதாம். மற்று, "இற்றது" என்றதென்னை? சீரென்பது தொழிற் பெயராகலான் அது, "சீரியைந்து" எனவே பெறுதுமெனின், அங்ஙனங் கொள்ளிற் சீரியைந்த தொட ரெல்லாங் கூடி ஒரு சீராவான் செல்லுமாகலின் இடையிடை இற்றுவரல் வேண்டு மென்றற்கு அங்ஙனங் கூறினானென்பது ; இதனானே ஒரோவழிப் புணர்ச்சி விகாரம் எய்தாமையுங் கூறினானாம். "வண்டுபடத் ததைந்த கண்ணி" (அகம். 1) என்புழி, வல்லெழுத்து மிக்க புணர்ச்சிவகையானே சீரியைந்தன. "பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து" என்றவழி ஒன்றோடொன்று தொடர்ந்ததேனும், இற்றதென்பதனான் இறுதிபட நின்றமையின், "எல்லா விறுதியும் உகர நிலையும்" (தொல். எழுத். 408) என்றதனாற் குற்றுகர முற்றுகரமாகாது நாலெழுத்தடியாயிற்று. இதனை எழுத்தடியென்றதே வலியுடைத்து; வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தான் நாலெழுத்தடி வேறுண்மையின். "ஈரசை கொண்டும்" எனவும், "மூவசை புணர்ந்தும்" எனவும், கூறினமையான் ஒருசீர் பலசொல் தொடர்ந்துவரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்றவாறாம். எனவே, உலகத்துச்சொல் லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமன்றி வாராவென்பது பெற்றாம். இதனானே ஒருசொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையானே வேறு சொல்லிலக்கணம் பெறு மென்பதுங் கொள்க. அது, "மம்மர் நெஞ்சினோன் றொழுதுநின் றதுவே" (அகம். 56) என்புழி, நின்றது என்னுஞ் சீர் குற்றுகரவீற்றுச் சொல்லன்றே? அதனைப் பிரித்து அதுவேயென வேறு சீராக்கவே, அது முற்றுகரமாகி வேறுபடுதல் கண்கூடாக் கண்டுகொள்க. என்றார்க்கு, எனப்படுமென்ற தென்னை யெனின், ஓரசையே சீர்நிலை பெறுமென்றுமாயினும் அவை சீரென ஓதப்படா வென்றற்கென்பது. மற்று நாலசையானும் ஐந்தசை.யானும் உண்ணாநின்றன, அலங்கரியாநின்றானெனச் சொல் வருவன உளவாவெனின், அங்ஙனம் வருஞ் சொற்கள் சிலவாகலானும் அவைதாமும் இரண்டுசொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப் படாமையானும் அவை சீராக வருஞ் செய்யுளின்மையானும் என மறுக்க. இனி வஞ்சிப்பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச்சீர் காட்டல்வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை தூங்கலோசை யிலவாகலானும் அவை சீரியைந்திறுத லின்மையானுங் கொள்ளா னென்பது. ஈண்டு எனப்படு மென்பதே பற்றி நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச் சீர் கொண்டாரைக் கண்டிலமென்க. (12) ஈரசைச்சீர்கள் ஆவன 325. இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர். இது, நிறுத்தமுறையானே இயலசையும் உரியசையும் வேறுவேறு தம்முள் மயங்கிவரும் ஈரசைச்சீ ருணர்த்துகின்றது. (இ-ள்.) 1நேர்நேர் 2நிரைநேர் 3நிரைநிரை 4நேர்நிரை என்பன நான்கும் இயற்சீர் ; 1நேர்புநேர்பு 2நிரைபுநேர்பு 3நிரைபுநிரைபு 4நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரியவுரிச்சீர் எ-று. இவற்றுள் இயற்சீரைத் 1தேமா 2புளிமா 3கணவிரி 4பாதிரி எனவும், 1வாய்க்கால் 2வாய்த்தலை 3தலைவாய் 4துலைமுகம் எனவும் (யா.வி) பிறவும் இன்னோரன்ன வேறு வேறு காட்டுப. இனி, வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஆசிரியவுரிச்சீரை 1வீடுபேறு 2வரகுசோறு 3தடவுமருது 4பாறு குருகு எனவும் காட்டுப. அவற்றுக்குச் செய்யுள்: "அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே" (குறுந். 216) என்புழிக் ' கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை' என நான்கியற்சீரும் வந்தன. "வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப" (புறம். 35) எனவும், "வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்" (முருகு. 106) எனவும், "பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்" எனவும், "நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து" (அகம். 96) எனவும் வரும். இவற்றுள் ' வீற்று வீற்று' எனவும், ' வசிந்து வாங்கு' எனவும், ' பூண்டுகிடந்து' எனவும், ' இறவுக்கலித்து' எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. பிறவு மன்ன. இஃது, ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, "இயற்சீ ரிறுதிமு னேரவ ணிற்பின்" (தொல். செய். 19) எனவும் பிறாண்டும் ஆளுப. குணம், இயற்சீராகலானும் நான்குபாவிற்கும் இயன்று வருதலானுங் குணங் காரணமாயிற்று. இயல்பு வகையான் ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும், நான்கு பாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும், இயலசையான் வரும் ஈரசைச்சீராகலானும், இவற்றை ஒருபாவிற்குரிமை கூறுதல் அரிதாக லானும், இவற்றை இயற்சீரென்றான். எனவே, சொல்லின் முடியும் இலக்கணத்தான் நான்குபாவிற்கும் உரியவென்பதூஉம் ஈண்டுப் பெற்றாம். அல்லதூஉம், அவற்றைத் தளைகூறும்வழி மூன்றுபாவிற்கும் உரிமைகூறிக் கலிப் பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் நேரீற்றியற்சீர் வாராவென, ஒழிந்தசீர் வருமென்ப துடன்பட்டமையானும் நான்கு பாவிற்கும் இயன்றுவருமென் பது பெற்றாம். ஆசிரியவுரிச்சீர் என்றதூஉம் அவ்வாறே ஆட்சியும் குணனும் நோக்கிய பெயர். ஆட்சி, "வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர்" (335) எனவும் பிறாண்டும் ஆளுப. உரியசை மயக்கமாகலானும் ஆசிரியத்திற் குரிமையானும் இக்குறி குணங் காரணமாயிற்று. மற்றிவை இயற்சீர்போல ஓரோர் சொல்லாய் யாண்டும் நிற்றலில்லை பிறவெனின், அற்றன்று; தோன்றுவாக்கு இரங்குவாக்கு என்றாற் போல்வன உளவென்பது. இனி, இவ்வியற்சீர்தாமும் இரண்டுசொற் கூடியும் ஒன்றாகியவழியே சீரெனப் படும்; அது போல இவையும், "எல்லாத் தொகையு மொருசொன் னடைய" (தொல். சொல். எச்ச. 24) என்பதனான் ஒரு சொல்லாயினவெனினும் அமையும். மற்று ஒழிந்த இயற்சீருங் கூறாது ஆசிரியவுரிச்சீர் ஈண்டுவைத்த தென்னையெனின், இவ்விரு பகுதியவற்றை இயற்சீரென்றும் (331) ஆசிரியவுரிச்சீரென்றும் (335) ஆளுமாகலின் என்றவாறு. (13) உரியசைப் பின்னர் நிரைஅசையும் ஆசிரியஉரிச்சீர் ஆதல் 326. முன்நிரை உறினும் அன்ன வாகும். இஃது, இயலசையும் உரியசையும் மயங்கி யாவனவற்றுள் இரண்டுசீர் கூறுகின்றது. (இ-ள்.) "உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர்" (தொல். செய். 13) என மேனின்ற அதிகாரத்தான் அவ்வுரியசைப் பின்னர் நிரையசை யுறினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராம் எ-று. அவை, 1 நேர்பு நிரை 2 நிரைபு நிரை என வரும். இவற்றை 1 நீடுகொடி 2 நாணுத்தளை *3குளிறுபுலி 4 விரவுக்கொடி எனவும் பிறவாற்றானுங் காட்டுப. அவையெல்லாம் அறிந்து கொள்க. மற்று, இயலசையும் உரியசையும் விரவி இயற்சீராவன இலவோ வெனின், உள; அவையன்றே மேற்சொல்கின்றன வென்பது. அஃதேல், இவ்விரண்டும் இயற்சீராகாவோவெனின், "அன்ன" வென்று, மாட்டெறிந்த கருத்தினான் அதுவும் அமையுமென்பது. என்றார்க்கு, இவற்றை ஆசிரியவுரிச்சீரென்றல் குற்றமாம் பிறவெனின், பெரும்பான்மையும் ஆசிரியத்திற்கும் அதற்கினமாகிய வஞ்சிக்கும் உரியவாகலானும், ஒழிந்த இரண்டு பாவின்கண்ணுஞ் சிறு வரவினவாக லானும், வெண்பாவினுட் கட்டளையடிக்கண் வாரா வென்பது, "கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ" (தொல். செய். 24) என வரைந்தமையாற் பெறுதுமாகலானும் இவற்றை ஆசிரியவுரிச் சீரென்றலே வலியுடைத்தென்பது. அன்னவென்பதனை இயற்சீரொடு மாட்டுங்கால், ஈற்றது அதிகாரம்பட இறுதி நின்ற நிரையீற்றியற்சீரிரண்ட னொடுங் கொள்ளப்படும்; கொள்ளவே, அம் முறையானே நீடுகொடி என்பதனைப் பாதிரி போலவுங் குளிறுபுலி என்பதனைக் கணவிரி போலவுந் தளைகொள்ளப்படு மென்பதாம். அவை செய்யுளுள் வருமாறு: "ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ" (புறம். 55) எனவும், "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை" (புறம். 3) எனவும், "ஓங்குதிரை வியன்பரப்பின்" (மதுரைக். 1) எனவும், "நிலவுமணல் வியன்கானல்" (புறம். 17) எனவும் இவை ஆசிரியத்துள்ளும் வஞ்சியுள்ளும் வந்தவாறு. " தூங்குதிரை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டே" எனவும், "ஏடுகொடி யாக வெழுதுகோ" (முத்தொள். 50) எனவும் இவை வெண்பாவினுட் கட்டளையடி யல்லாதவழிச் சிறு பான்மையான் வந்தன. மற்றிவையுங் கட்டளையடி யென்னாமோவெனின், அற்றன்று; அது தளைவகை கொள்ளுந்துணை இன்னோசைத்தன் றென்பது, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல்.செய். 11) என்பதனானுணர்க. இப்பகுதி யறியாதார் அடி யுறழ்ந்ததனாற் பயனென்னை யென்றிகழ்ப. (14) உரியசைப்பின் நேரசை இயற்சீர் ஆதல் 327. நேர்அவண் நிற்பின் இயற்சீர்ப் பால. இஃது, இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண்டியற்சீர் உணர்த்துகின்றது. (இ-ள்.) முன்னர் உரியசைப் பின்னர் நிரையசைவரின் ஆசிரியவுரிச் சீராமென்றான். அவ்வதிகாரத்தான் உரியசையிரண்டன் பின்னும் நேரசை வரின் அவையிரண்டும் ஆசிரியப் பாலவாம் எ-று. அவை நேர்புநேர் நிரைபுநேர் என வரும். உ-ம் : 1சேற்றுக்கால் 2வேணுக்கோல் 3களிற்றுத்தாள் 4முழவுத்தாள்" என வரும். "1நீத்துநீர் 2குளத்துநீர் 3போதுபூ 4விறகுதீ" எனவும் காட்டுப. பிறவுமன்ன. இவை இயற்சீர் நான்னுள்ளும் எப்பாற்படுமெனின் அதிகாரத் தான் நீடுகொடி குளிறுபுலி என்பன போல இறுதியி னின்ற பாதிரி கணவிரிப்பாற் படும் முறையானென்பது. எனவே, போதுபூ பாதிரியாகவும் விறகுதீ கணவிரியாகவும் இயற்றப்படுமென்பது. இவ்வாறு கூறவே, இவை பாதிரி கணவிரி போல அசைதிரிந்து நிரையாமென்பது கொள்ளற்க. நேர்பு நிரைபு முதலாக நிரையீறாகிய சீர் தளைகொண்டாங்குக் கொள்ளப்படும் இவையு மென்பதாம். "தளைகோளொக்கும்" எனவே, ஏழு தளையுள்ளும் இவற்றை ஒன்றொன்றனுள் அடங்குமென்று அடக்கற்க. என்னை? இவை வேறுவேறு பட்ட அசையான் வேறு வேறு சீராயினமையினென்பது. அசைச்சீர்க்கு உரிச்சீரிலக்கணமின்மையின் இதற்கு இஃதொப்ப வாராதென்றுணர்க. "நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்" என்புழிப் போதுபூவும் விறகுதீயும் வந்தவாறு கண்டுகொள்க. இவற்றை ஆசிரியவுரிச்சீர்ப்பின் வைத்ததென்னையெனின் இவையும் அவை போல ஈண்டொருங்கியைதல் பெரும்பான்மையென்பது அறிவித்தற்கென வுணர்க. (15) இயலசைப்பின் உரியசையும் இயற்சீர் எனல் 328. இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே நிரையசை இயல ஆகு மென்ப. இது, மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் இயலசை உரியசை மயக்கத்துள் ஒழிந்து நின்ற நான்கு இயற்சீரு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயலசை இரண்டன்பின்னும் உரியசை இரண்டும் ஒன்று இரண்டு செய்து மயங்கி நான்காகுங்கால், அவ்விரண்டுரியசையும் இயலசை மயக்கமாகிய இயற்சீர்நான்கனுள் நிரையீற்ற பாதிரியுங் கணவிரியும் போல வருஞ்சீரொடு தட்கும் எ-று. அவை 1 நேர்நேர்பு 2 நேர்நிரைபு 3 நிரைநேர்பு 4 நிரை நிரைபு என வரும். வருங்கால் நேர்முதற்சீர் இரண்டும் பாதிரிபோலவும், நிரைமுதற்சீர் இரண்டுங் கணவிரிபோலவுங் கொள்ளப்படுமென்றவாறு. எனவே, இச்சூத்திரமுஞ் சீராமாறே யன்றிச் சீர்தளைக்குமாறுங் கூறியவாறாயிற்று. இவற்றைப் 1போரேறு 2 பூமருது 3 கடியாறு 4 மழகளிறு எனினும் இழுக்காது. (16) அளபெடை சீரும் அசையும் ஆதல் 329. அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி; மேல் எழுத்ததிகாரத்து ஓதப் பட்ட அளபெடையை ஆண்டு மொழியெனக் கூறினான், அவ்வாற்றானே அவை பெரும்பான்மையும் ஈண்டும் ஈரசைச்சீராகலின் ஈண்டுச் சீர்கூறிய வாற்றான் எய்திநின்றனவற்றை எழுத்து நிலைமைப்படுத்து அசைநிலை யும் வேண்டினமையின். (இ-ள்.) அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையே யன்றி ஓரசை யாய் நிற்றலும் உரித்து எ-று. உம்மையாற் சீர்நிலையெய்தலே வலியுடைத்து. "நிலை" யென்றதனான் எழுத்து நிலைமையும் நேர்ந்தானாம்; என்னை? அசையது நிலையைக் குறிலும் நெடிலுங் குறிலிணையுமென எழுத்தான் வகுத்தமையின். அவை மேற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள்ளும் என்ன சீர்ப்பாற் பட்டன வெனின், ஆசிரியவுரிச்சீராறும் போதுபூ விறகுதீ என்னும் இரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்தவியற்சீர் எட்டுமாம். அங்ஙனமாதல் ஒருமொழியகத்தே உடையவென்பது. 'ஆ அ' எனத் தேமாவாயிற்று. 'கடாஅ' (குறள். 585) எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறாம். என்னை? கடாஅ என்புழி, அளபெடையதாகாரம் பிரித்துக் குறினெடி லாயினாற்போல, ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணையெனப் பட்டமையின் (317). ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். 'ஆ அழி' என்பது மூவெழுத்துப் பாதிரியாம். 'வடா அ' என மூவெழுத்துப் புளிமாவாம். 'படா அகை' என நாலெழுத்துக் கணவிரியாம். 'ஆ அங்கு' என ஈரெழுத்துப் போரேறாம். 'ஆ அவது' மூவெழுத்துப் பூமருது. 'புகாஅர்த்து' என்பது கடியாறு. 'விராஅயது' என்பது மழகளிறு. இவை ஒரோர் சொல்லாகி நின்று எட்டியற் சீரானும் அளபெடை வந்தவாறு. "தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒரி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவலர் அடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே" என இதனுள், இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்குமாகி அளபெடை வந்தன. ஒழிந்த இயற்சீரும் மேல் நான்கனுள் அடங்குமாகலின் அளபெடை நான்கென்பாரு முளர். அவை தனிநிலை முதனிலை இடைநிலை இறுதி நிலை எனப்படுமென்ப. ஒழிந்த இயற்சீரான் அளபெடைவந்த செய்யுளுங் கண்டுகொள்க. 'வாஅழ்க' என மூவசைச்சீரான் வரும் அளபெடை மொழியுமுள. மற்றுப் படாஅகை' யெனவும் ஆஅழியெனவும் இவை மூவசைச் சீராகா வோவெனின், ஆகா; "தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது" (தொல். செய். 7) என்புழி, முதற்கணல்லது விட்டிசைத்தல் நேர்ந்திலனாகலானுங், குறிலிணைந்தனவும் குறினெடிலிணைந்தனவும் நிரையாமென்றா னாகலானுமென்பது. என்றார்க்குத், "தூஉமணி கெழூஉமணி" என, நேர்நிரைப்பின் முற்றுகரம் வந்து நேர்பும் நிரைபுமாமாகலின் அவற் றையும் ஆசிரியவுரிச்சீரென்னாமோவெனின், என்னாதவாறு: அங்ஙனம் அளபெடையான் நேர்பசை நிரைபசை கொள்வாரும் அளபெழுந்த குற்றெழுத்து வருமெழுத்தொடு கூட்டி, "முதனிலை யளபெடை நேர்நே ரியற்றே யிடைநிலை யளபெடை நிரைநே ரியற்றே" என்பவாகலின், அளபெழுந்த மொழி நேர்பும் நிரைபுமாகாவென்பது. அவ்வாறாயினும் ஓரொருகால் அளபெடையுகரத்தைக்கூட்டி நேர்பும் நிரைபு மென்னாமோ, காசு பிறப்பென்பன தேமா புளிமா வாயினவாறு போல வெனின், அவை தேமா புளிமா வாகாமையுந் தளைவகை யொக்குமத் துணை யென்பதூஉம் மேற்கூறப்பட்டதாகலின், அவைபோல இவையும் நேர்பசை நிரைபசையாகாவென்பது. அல்லதூஉம், "நீட்டம் வேண்டி னவ்வள புடைய" (தொல். எழுத். 6) எனப்பட்டது அளபெடையாகலானும், "நாணுத்தளை" (அகம். 29) என்பது போலாது இயல்பாக வந்து இயைந்த எழுத்தாகலானும், அவைபோல அளபெடை "இருவகை யுகரமொ டியைந்தவை வந்தன' (316) வெனப்படாமையானும், நேர்பசை நிரைபசை யாகாவென்பது. அற்றன்றி யும், அவை நேர்பசை நிரைபசையாதல் ஒருவகையான் நேர்ந்தானெனினும் அவை நாணுத்தளை விரவுக்கொடியென்னுஞ் சீராதற்கு இழுக்கென்னை யெனவும், "நிரையிறு காலையும் ஆசிரிய வுரிச்சீர்" என ஓதி, ஆசிரியவுரிச்சீரெட்டென்பான் போல விதந்தோதிப் பயந்த தென்னை யெனவுங் கூறி மறுக்க. இனி ஓருரை: "தூஉமணி கெழூஉமணி" என்பன, அளபெடை அசைநிலையாகியும் ஆகாதும் வருதலின் வெண் சீர்க்கும் இருநிலைமை கோடற்கென்ப. அது நீடுகொடி குளிறுபுலி என்பன வற்றிற்கும் ஒக்குமாதலானும், "அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்துங்கால்" அங்ஙனம் அசையாகாமையானும் அது பொருந்தாதென்பது. இங்ஙனஞ் சீர்நிலை யெய்திநின்ற அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவுஞ் செய்யுட்கே உரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்துகொள்ளப் படுவனவுமென இருவகைய. அவ்விருதிறத்தவும், "நீட்டம் வேண்டி னவ்வள புடைய" (தொல். எழுத். 6) என்னும் இலக்கணத்துட்பட்டு அடங்கின. இனி, அவற்றுள் வழக்குக்குஞ் செய்யுட்கும் பொதுவாகியதனை இயற்கை யளபெடை யென்றுஞ் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட தனைச் செயற்கையளபெடையென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ்விரண்ட னுள்ளும் ஈண்டு, "அளபெடை அசைநிலை யாகலும் உரித்து" எனப்பட்டது இயற்கை யளபெடையென்று பெயரிட்டு வழங்கப்படும். செயற்கை யளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறு போல இயற்கையளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே யுரியதென்பது. ஆகலுமுரித்தென்ற உம்மையான், அவையிரண்டானும் எவ்வாற் றானும் அசைநிலையாகப்படாது புணர்ச்சிவகையான் வந்த அளபெடைக் கண்ணும் பொருள் புலப்பாட்டிற்கு உரியவாகச் செய்யுள் செய்யுமிடத்தும் அவ்வாறசைநிலையாகப் படுவ தென்றவாறு. உ-ம் : "பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்தாடு கடுவன்" எனப் 'பலாஅக்கோ' டென்புழிக், "குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி" (தொல். எழுத். உயிர். 24) எனப் பெற்ற அகரமுண்டன்றே? அதுவும் அளபெடையெனப்படும். அதனைப் பலாஅ வென்புழிப் புளிமா வென்னுஞ் சீராக அலகு வையாது நிரையசை நிலைமைத்தேயாக வைக்கப்படுமென்பது. "நிலம்பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோட் கலம்போஒய்ப்போஒய்க் கெளவை தரும்" (யா. வி. மேற்.) என்புழிப், போஒய்ப் போஒயெனச் சேய்மைக்குறிப்புப்படச் செய்யுள் செய்த வழியும் அளபெடை அசைநிலையாயிற்று. இனி, இவற்றை விளியும் பண்ட மாற்றும் நாவல் கூற்றும் முதலாயவற்றுள் வருமென்பாருமுளர். அங்ஙனம் வந்தது பிற்காலத்துச் செய்யுளென்ப. அல்லதூஉம் அங்ஙனம் வரையறைப் படாமையானும், நாம் முன்னர்க் காட்டினவை ஆண்டு அவற்றுள் அடங்காமையானும் அவ்வாறும் இகந்து கூறானென்பதூஉம் படும். "உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவல்" (யா. வி. மேற்.) எனப் பண்டமாற்றின்கண் வந்ததெனக் காட்டுப. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து அசைநிலைப்பாற்படுக்க என்றார்க்கு, இவை செய்யுளுள் தம் மோசை சிதையாவாயின் அலகிருக்கையுள் அழித்துப் பயந்ததென்னை யெனின், அஃதன்றே இதனை எழுத்துநிலைப்படுமென்றற்குக் காரண மென்பது. அஃதேற், செய்யுளின் ஓசையை அழிக்கவமையும் பிறவெனின், அற்றன்று; அவ்வோசையைச் செய்யுட்கண்ணே அழிப்பது சந்தியிலக் கணத்தின் வழீஇயிற்றாம். இனிப் பிறவற்றுக்கண்ணும் அளபெடையைச் சிதைத்துச் சொல்லின் அச்செய்யுளுட் கருதிய பொருண்மை விளங்காதாம். அது நோக்கிச் செய்யுளின்பத்தைச் சிதையாது ஈண்டு நாம் வேண்டப்பட்ட அலகிருக்கைக்கட் சிதைத்துக் கொள்க என்றாமென்பது. (17) ஒற்றளபெடையும் சீரும் அசையும் ஆதல் 330. ஒற்றளபு எடுப்பினும் அற்றென மொழிப. இஃது, ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யாதலேயன்றி அசைநிலையாதலும் உரித்தென மாட்டெறிந்தமையின் எய்தாத தெய்துவித்தது. இதனை அசைப்படுத்து எழுத்துநிலையும் வேண்டு கின்றமையின் வழுவமைத்ததூ உமாம். (இ-ள்.) ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யெய்தலும் ஓரசையாய் நிற்றலும் உரித்து எ-று. "ஒற்றள பெடுப்பினும்" எனவே, ஒற்றுக்கள் அளபெடுத்து நிற்றற்கு உரியன, உரியவழி எல்லாம் வரையாது கொள்ளப்படும். அவை வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் இருவாற்றான் ஒரு சொற்கு உறுப்பாய் நின்ற ஒற்றே அளபெழினும் பின் தோற்றிக் கொள்ளப்பட்ட ஒற்றளபெழினுமென இருவகைப்படும். "அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும்" (தொல். எழுத்து. 102) என்பது சொற்குறுப்பாய் நின்றது. "ஆனா நோயொடு கான லஃதே" (குறுந். 97) என்பது பின்றோன்றிக்கொண்ட புள்ளியெனப்படும். "அற்றென மொழிப" என்றதனான், ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலத் தானுந் தன்னை யொற்றிய எழுத்துங் கூடி அளபெடை மொழியாகிச் சீர்நிலையெய்தல் பெரும்பான்மை என்பதூஉம், அவை இயற்கை யளபெடையாகியவழி அசையாதல் சிறுபான்மை யென்பதூஉம், உயிரளபெடை முதற்கணின்ற நெட்டெழுத்துப் போல ஒற்றளபெடை முதற்கணின்ற குற்றெழுத்தும், "தனிக்குறின் முதலசை மொழிசிதைந் தாகாது" (தொல். செய்.7) என்பதனான் விலக்குண்ணாது விட்டிசையாது முதற்கணின்று நேரசையா மென்பதூஉங் கூறியவாறு. வல்லெழுத்தாறும் ரகார ழகாரமும் ஒழித் தொழிந்த பதினோரொற்றுங் குறிற்கீழுங் குறிலிணைக்கீழும் அளபெய்தி நிற்கும்வழிச் சீர்நிலையாதலேயன்றி அசைநிலையாகலு முரித்துச் சிறுபான்மை யென்ற வாறு. அவை, "கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு. 352) என்றவழிக், "கண்ண்" என்பது சீர்நிலையாகித் தேமாவாயிற்று. "தண்ண்ணென" என்ற வழித் தட்பத்துச் சிறப்பு உரைத்தற்கு ணகரவொற்றினை அளபேற்றிச் செய்யுள் செய்தான். ஆண்டு அது மாசெல்சுரமென்னும் வஞ்சியுரிச் சீராவ தனைப் பாதிரியென்னுஞ் சீரேயாமென வழுவமைத்தவாறு. குற்றுகரங் குறிலொடு கூடி நிரையாவதனைக் குறிலிணையெனக் குற்றெழுத் தாக்கி ஓதினான். அதுபோல ஒற்றளபெடையும் ஒரு மாத்திரையாவதனைக் குற்றெழுத்தென் றோதானோவெனின், அங்ஙனம் ஓதின் அவ்வளபெடை குறிலாகித் தன்முன் வந்த குறிலோடும் பின்வந்த குறிலோடும் நெடிலோடுங் கூடி நிரையசையாகுவதாவான் செல்லுமென மறுக்க. மற்று, "அரங்ங்கம்" என்புழிப் புலிசெய்வாயென மூவசைச்சீருமாமாகலின் இதனை மூவசைச் சீரின்பின் வைக்கவெனின், அற்றன்று; அவ்விரண்டற்கும் பொதுவகையாக இடைவைத்தா னென்பது. அல்லதூஉம் ஈரசைச் சீராதலே பெரும்பான்மை யாதலின் ஈண்டு ஈரசைச் சீர்ப்பின் வைத்தான், இவ்விரண்டளபெடை யினையு மென்பது. மற்று, வழக்கினுள் வரும் இயற்கையளபெடையன்றே அசைநிலை யாவன? ஒற்றளபெடை வழக்கினுள் வருமோவெனின், அவையுஞ் சிறுபான்மை வழக்கினுள் வருமென்பது. அவை, "சுள்ள்ளென்றது" "புள்ள்ளென்றது" "கள்ள்ளென்றது" "துண்ண்ணென்றது," "திண்ண்ணென்றது" என வரும். பிறவு மன்ன. இவை, செய்யுளகத்தல்லது பரவைவழக்கினுள் வாரா வென்பாரு முளர். அவரறியார்; செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட அளபெடை, பின்னர் அசைநிலையாதற்கு என்னை காரணமென மறுக்க. மற்று, "அளபெடை யசைநிலை யாகலு முரித்தே" (தொல். செய். 17) என வரையாது கூறவே, இச்சூத்திரமும்அடங்குமாகலின், இது மிகையாம் பிறவெனின், அற்றன்று; எழுத்தோத்தினுள் ஒற்றளபெடுக்குமென்பது கூறாமையின் வேறு கூறினான். அல்லதூஉம் உயிரளபெடையின் வேறு பட்டதோர் இலக்கணமுடைமையின் இதனை வேறு கூறினா னென்பது. என்னை? "பனாஅட்டு" என்றவழி, உயிரளபெடை கடியாறு என்னுஞ் சீராயவாறுபோலாகாது, "கொங்ங்கு குரங்ங்கு எஃஃகு மின்ன்னு" என அளபெழுந்த இருவகையுகரவீற்றுச் சொற்கள், போரேறு கடியாறு என்னுஞ் சீரானும் ஞாயிறு வலியது என்னுஞ் சீரானுமாகாது, இருவகை உகர மொடு இயைபின்றி வருதலானும், அவை வண்டு வரகு எனவும் உரி யசைச் சீர்ப்பாற்பட்டு அசையாகுமாதலானும், இருவகை யுகரமோடியை யாதவழிக், "கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு. 352) எனவுங், "கஃஃ றென்னுங் கல்லதர்" எனவுஞ் சீர்நிலை பெறுதலானு மென்பது. எனவே, இயற்கை யுயி ரளபெடை போலச் செயற்கை யொற்றளபெடையும் ஒரோவழி ஓசை சிதைக்கப்படா தாயிற்று. இதனானே, உயிரளபெடை போல ஒற்றள பெடை வருகின்ற எழுத்தொடுகூடி அசையாகாதென்பதாம். ஈர்க்கு பீர்க்கு என ஈரொற்று நின்றவழி வேறோரசை யாகாதவாறுபோல, ஒற்றள பெடையும் ஒரோவழி அசைநிலை பெறாதென்பதூஉங் கூறினானாம். இனி, இயற்கை யொற்றளபெடை சிறுபான்மை வருமாதலின், இஃது அசைநிலையாதலே பெரும்பான்மையாதனோக்கி மாட்டெறிந் தான் எனவும் அமையுமெனக் கொள்க. (18) வெண்பா உரிச்சீர் ஆமாறு 331. இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின் உரிச்சீர் வெண்பா வாகு மென்ப. இது, நிறுத்த முறையானே ஈரசைகொண்டு சீரியைந் திறுவன உணர்த்தி இனி மூவசைகொண்டு முடிவன உணர்த்துவானெழுந்தான். அவற்றுள் இது வெண்பாவுரிச்சீருணர்த்துகின்றது. (இ-ள்.) மேனின்ற அதிகாரத்து இயலசையானாகிய இயற்சீரிறுதிக் கண் நேரசை பெறுவன நான்கும் வெண்பாவுரிச் சீராமென்று சொல்லுவர் புலவர் எ-று. 'உரிச்சீர் வெண்பா,' வெண்பா வுரிச்சீராமென மொழி மாற்றி யுரைக்க. உ-ம்: 1 நேர்நேர்நேர் 2 நிரைநேர்நேர் 3 நேர்நிரைநேர் 4 நிரைநிரைநேர் என வரும். இவற்றை, 1 மாசெல்வாய் 2 புலிசெல்வாய் 3 மாவருவாய் 4 புலிவருவாய். எனவும், * 1தேமாங்காய் 2 புளிமாங்காய் 3 கூவிளங்காய் 4 கருவிளங்காய் எனவும் வேறு வேறுதாரணங் காட்டுப. பிறவும் அவ்வாறு வருவன அறிந்து கொள்க. அவற்றுக்குச் செய்யுள்: "காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை தருவானை-யாமும் இருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண்" (சிலப். மேற்) இதனுட் 'காமன் காண்' எனவும், 'கருவூரார்' எனவும், 'இரு குடங்கை' எனவும், 'யானெதிரே' எனவும் நான்கு வெண்சீரும் வந்தன. இதுவும் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பாவிற்கும் உரிமையாதலிற் குணங் காரணமாயிற்று. ஆட்சி, "வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே" (தொல். செய். 23) எனவும் பிறாண்டும் ஆளுமென்பது. மற்று இயற்சீரென்றவழிப் பத்து இயற் சீருங் கொள்ளாமோவெனின், அதற்கு விடை முன்னர், "இயலசை மயக்கம்" (தொல். செய். 13) என்புழிச் சொல்லிப்போந்தாம். 'இயற்சீர்' எனப் பொதுவகையான் ஓதியவழி இயற்சீர் பத்துங் கொள்ளாது இயலசை மயக்கமாகிய நான்கனையுங் கோடலும் ஆசிரியவுரிச்சீரென்று பொதுவகையான் ஓதியவழி ஆறனையுங் கொள்ளாது உரியசை மயக்கமாகிய நான்கனையுமே கோடலும் வேண்டினானென்பது. அஃது இச்சூத்திரத்தானும், "வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர்" (தொல். செய். 23) என்பதனானும் பெறுதும். (19) வஞ்சி உரிச்சீர் ஆமாறு 332. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீர் அல்லா மூவசை யான. இஃது, ஒழிந்த மூவகைச்சீ ருணர்த்துகின்றது. (இ-ள்.) வஞ்சிச்சீரெனக் கூறுபடுக்கப்பட்டன மேற்கூறிய வெண் சீரல்லா மூவசைச்சீரெல்லாம் எ-று. நேர் நிரை நேர்பு நிரைபு என்னும் நான்கனையும் மூன்று படியான் இழியவைத்து, முதற்கணின்ற நான்கசையும் இடை நின்ற நான்கனோடும் ஒரோவொன்று நான்காகக் கூட்டி, இறுதி நின்ற நான்கசையோடும் ஒரோ வொன்றற்குப் பதினாறாக நாற்காலுறழ அறுபத்து நான்கு மூவசைச்சீர் பிறக் கும். அவற்றுள், இயலசைமருங்கின் நேரிறுவன நான்குசீருள. அவை முன்னர் (331) வெண்சீர்நான்கெனக் கூறப்பட்டன. ஒழிந்த மூவசைச்சீர்க ளெல்லாம் வஞ்சியுரிச்சீரெனப்படும் என்றவாறு. அவை அறுபது வகைப்படும். உ-ம்: நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்புநேர் நேர்நிரைபு நேர் எனவும், நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரை நேர்புநேர் நிரைநிரைபு நேர் எனவும், நேர்புநேர்நேர் நேர்புநிரை நேர் நேர்புநேர்புநேர் நேர்புநிரைபு நேர் எனவும், நிரைபுநேர்நேர் நிரைபுநிரைநேர் நிரைபுநேர்புநேர் நிரைபுநிரைபு நேர் எனவும் இவை நேரீற்று மூவசைச்சீர் பதினாறு. இவற்றுள் வெண்சீரென மேற்காட்டிய நான்கும் ஒழித்து ஒழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். இனி நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வருமாறு: நேர்நேர்நிரை நேர்நிரைநிரை நேர்நேர்புநிரை நேர்நிரைபுநிரை எனவும், நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நிரைநேர்புநிரை நிரைநிரைபு நிரை எனவும், நேர்புநேர்நிரை நேர்புநிரை நிரை நேர்புநேர்புநிரை நேர்புநிரைபு நிரை எனவும், நிரைபுநேர்நிரை நிரைபுநிரைநிரை நிரைபு நேர்புநிரை நிரைபுநிரைபு நிரை எனவும் நிரையீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர் நேர்பு நேர்நிரைநேர்பு நேர்நேர்புநேர்பு நேர்நிரைபுநேர்பு எனவும், நிரைநேர்நேர்பு நிரைநிரைநேர்பு நிரைநேர்புநேர்பு நிரை நிரைபுநேர்பு எனவும், நேர்புநேர்நேர்பு நேர்புநிரைநேர்பு நேர்பு நேர்புநேர்பு நேர்பு நிரைபுநேர்பு எனவும், நிறைபுநேர்நேர்பு நிரைபுநிரை நேர்பு நிரைபுநேர்புநேர்பு நிரைபுநிரைபுநேர்பு எனவும் இவை நேர்பீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நிரைபு நேர்நிரைநிரைபு நேர்நேர்புநிரைபு நேர் நிரைபுநிரைபு எனவும், நிரைநேர்நிரைபு நிரைநிரைநிரைபு நிரைநேர்பு நிரைபு நிரைநிரைபு நிரைபு எனவும், நேர்புநேர்நிரைபு நேர்புநிரைநிரைபு நேர்புநேர்புநிரைபு நேர்புநிரைபுநிரைபு எனவும், நிரைபுநேர்நிரைபு நிரைபுநிரைநிரைபு நிரைபுநேர்புநிரைபு நிரைபுநிரைபுநிரைபு எனவும் இவை நிரைபீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேரீற்று வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டும், நிரையீற்றுவஞ்சி யுரிச்சீர் பதினாறும், நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறுமாக வஞ்சியுரிச்சீர் அறுபதும் வந்தன; அவற்றுக்குச் செய்யுள்: "மேற்கோட்டுநீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமேல் வியல்விசும்புதோய்ந் தோங்குமுன்னர்க் காம்புகழியப் பாய்ந்துசென்றுசென் றாங்குநலிபுநின் றெதிர்த்துமீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுச்செய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூதூ ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துவ தெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடும்பே." இதனுள், நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள்ளும் வெண்பா வுரிச்சீர் நான்கு மொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. "தண்டண்டலைத் தாதுறைத்தலின் வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப் போதுதூங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர் நன்னா டென்னா குவகொல் பொன்னி நன்னாட்டுப் பொருந னெங்கோன் றாடோய் தடக்கை மல்ல னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே" இதனுள் நிரையீற்றுவஞ்சியுரிச்சீர் பதினாறும் வந்தன. "வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிறைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துவீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபோந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே" இதனுள் நேர்பசை யிறுதியாகிய வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. "சீற்றம்மிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவு பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசுதொலைத்து வேந்துமீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவீற்றுப்புணர்ந்து வேற்றுச்சுரும்புகிளர்ந்து களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரிந்துதூங்குகடாத்து விரைந்துமலைந்துதொலைந்து மணங்கம ழாரமொடு தயங்கச் சூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே பாடா தோடிய நாடுகெழு வேந்தே'' இதனுள், நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. (20) வஞ்சிச்சீர் ஏனைய பாவுள் வாராமை 333. தன்பா அல்வழித் தான்அடை யின்றே. இஃது, அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ-ள்.) இவ்வறுபது வஞ்சியுரிச்சீருந் தன்பாவினு ளல்லாத ஆசிரியம் வெண்பாக் கலியினுள் வாரா எ-று. சிறுபான்மையா னாவன முன்னர்ச் சொல்லுதும். இவை, ஆசிரிய வுரிச்சீர் தூங்கலோசையா னாகுமாறு போல, ஆசிரியவோசையும் ஆக்குங் கொல்லெனின் ஆக்காவென்பது இதனது பயன். (21) வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர் வருதல் 334. வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. இது, மற்றைச்சீர் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியுரிச்சீர் பிற பாக்களை ஆக்காதவாறு போலாது, ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் இவ்வஞ்சிப்பாவினை யாக்கும் எ-று. உரிச்சீர் மேலதிகாரமாகலான், 'எஞ்சிய' வென இவ்விரண்ட னையுமே கொண்டாமென்பது. வஞ்சியது பாவினை வஞ்சியென்றான் ஆகுபெயரான். மற்றுச் சீர்கூறும்வழிப் பாக்கூறுவ தென்னையெனின், அப்பாவினை யாக்குவன சீராகலிற் சீரிலக்கணம் எய்துமென்பது. அவை யாமாறு. "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவின்" (பட்டினப். 1-3) எனத் தன்சீர் வரத் தூங்கலோசை பிறந்தது. "தாழ்தாழைத் தண்டண்டலை" (பொருந. 181) என்பதும், "புட்டேம்பப் புயன்மாறி" (பட்டினப். 4) என்பதும் வெண்பாவுரிச்சீரான் தூங்கலோசை பிறந்தது. "புட்டேம்பப் புயன்மாறி" என்புழி, "வசையில்புகழ் வயங்குவெண்மீன்" எனத் தனது சீரானே தூங்கலோசை பிறந்தாங்குப் பிறந்தது. "திசைதிரிந்து தெற்கேகினும்" என இயற்சீர்நிற்பத் தன்சீரானே தூங்கலோசை பிறந்தது. 'புள்ளுந்துயின்று புலம்புகூர்ந்து' என ஆசிரியவுரிச்சீரான் வஞ்சித்தூக்காயிற்று. பிறவும் அன்ன. (22) கட்டளை ஆசிரியத்து வாராத சீர்கள் 335. வெண்பா வுரிச்சீர் ஆசிரிய வுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே. இது, கட்டளையாசிரியப்பாவினுள் அடி யுறழப்படாத சீர் இவையென் கின்றது. (இ-ள்.) வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவிற்கு ஒப்ப வரும் நிலை இல எ-று. 'இன்பா நேரடி' யென்பது ஆசிரியவடி யென்றவாறு. 'ஒருங்கு' என்றதனான் இயற்சீராகிய தன்சீரே போல வெண்சீரும் வாராதென்பதாம். இயலசை மயங்கினவே இயற்சீரெனப்படுவன எனவும், உரியசை மயங்கினவே ஆசிரியவுரிச்சீரெனப்படுவன எனவும் முன்னர்ச் (325-328) சொல்லிப் போந்தானாகலின், ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரிய வுரிச்சீரென்றான். எனவே, நீடுகொடி குளிறுபுலி என்னும் இரண்டாசிரிய வுரிச்சீரும் ஆசிரியத்து வந்து அடியுறழுமென்பது ஈண்டுக் கொள்ளப்படும். அல்லது, 'முன்னிரை யுறினு மன்ன வாகும்' (தொல். செய். 14) என்ற மாட்டேற்றான் இயற்சீர்த்தன்மை சிறுபான்மை வகையான் எய்து வித்ததூஉம் இப்பயனோக்கியாயிற்று. இக்கருத்து நோக்கிப் போலுங், 'கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ' (தொல். செய். 24) என்ற உம்மை இறந்தது தழீஇயிற்றுமா மென்பது. இனி ஒருசாரார் வெண்சீரும் ஆசிரியப்பாவினுள் வருங்கால் இயற் சீரிடையிட்டன்றி உடனியைந்து வாரா என்ப. அங்ஙனங் கொள்ளிற் கட்டளை யடிக்கண்ணும் ஆசிரியவடியுள் வெண்சீரும் வந்து உறழப்பெறு மென்றானாம். அல்லாத வடிக்காயின் அது போக்கி, 'இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய வடிக்கே' (தொல். செய். 30) என்புழிக் கூறப்படுமென்பது. ஈண்டு நேரடிக்கென்பது கட்டளை யடிக் கென்றவாறு. (23) நிரையீற்று ஆசிரியஉரிச்சீர் கலிப்பாவுள் மயங்கும் எனல் 336. கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ. இது, கலிப்பாவிற் சீர்மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் ஆசிரியவடி யுறழ்தற்கண் விலக்கப்படாத நிரையீற்றா சிரியவுரிச்சீர் இரண்டுங் கலிப்பாவின் அடங்குங்காற் கடிதலுமுடைய கொல் லெனின் ஈண்டும் அவை விலக்கப்படா எ-று. எனவே, நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டும் கலியடி யுறழ்வன வாயின. 'கடியவும்படா' வென்பது இறந்ததுதழீஇய எச்சவும்மை, ஆசிரியத்திற் கடியப்படா வாதலேயன்றி ஈண்டுக் கடிதலும் படாவென் றமையின் 'கலித் தளை மருங்கின்' என்பது வினைசெய்யிடத்துக்கண் ஏழாவது வந்தது, 'தளைத்தல்' என்பது சீர்த்தொழிலாகலின். அல்லாக்கால் இருசீரானாகியதொரு தளையிடனாகப் பிறிதொருசீர் ஆண்டு வரல் வேண்டுமென மறுக்க. மற்றுக் கலித்தளை மருங்கின் வெண்சீர் வருக வென்னானோவெனின், அது சொல்ல வேண்டுமோ? ஆசிரியத்துத் தன்சீர் வாராதன கூறுவதன்றி வருமென்பது கூறான்; வெண்பாவிற்கும் அவ்வாறே வெண்சீர் வருமென விதந்தோதான்; அதுபோல அதனியற்றாகிய கலிப்பாவிற்கும் வெண்சீர் வருமென விதந்தோதல் வேண்டுவதன்று, வஞ்சிப்பாவிற்குப் போல வேறு சீரின்மையி னென்பது. அஃதேல், 'வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய' (தொல். செய். 22) என வஞ்சிப்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் வருமென்று கூறல் வேண்டா வெனின், வேண்டுமன்றே, வெண்சீர்வருமென விதந்தோதலான், ஆசிரிய வுரிச்சீர் ஆண்டு விலக்குண்ணுமாகலினென்பது. அவற்றுக்குச் செய்யுள்: " ஓங்குவரை யடுக்கத்துப்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள்" எனவும், "விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி" எனவும், நிரையீற் றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. "வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானவனை" (யா. வி.மேற்) எனவும், "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) எனவும் இவையிரண்டும் வெண்சீரெனத் தொகுக்கப்படுதலின் வெண் சீரென்னுஞ் சொல்லின் முடியு மிலக்கணத்தான் விதந்தோதாமேயும் அவ்விரு பாவிற்கும் உரியவாயின. மற்றுக் கலிமருங்கி னென்னாது, தளை மருங்கினென்ற தென்னையெனின், இவ்வாராய்ச்சியுடையன கட்டளை யடி யென்றதென்பது. எனவே, தளையென்று ஓதுவனவெல்லாங் கட்டளை யடியே நோக்குமென்பது பெற்றாம். இங்ஙனம் வரையறை யுடையன கட்டளையடி யெனவே, அல்லாத அடிக்கண் ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வருமென்பது பெறுதுமென்பது. மற்றுக் கட்டளையடி யல்லாத ஆசிரிய வடி'ள் உரியசை மயங்கிய ஆசிரியவுரிச்சீரும் வருமென்பதூஉங் கூறுக வெனின், அவை விலக்குண்டது கட்டளையடிக்காதலின் விலக்காதவழித் தன்சீர் வருதல் விதந்தோத வேண்டாவென்பது முற்கூறியவாறே கொள்க .(24) கலிப்பாவின் கட்டளையடியுள் நேர்ஈற்று இயற்சீர் வாராமை 337. கலித்தளை யடிவயின் நேரீற்று இயற்சீர் நிலைக்குஉரித் தன்றே தெரியு மோர்க்கே. இதுவுங் கட்டளையடிக்கு எண்ணப்பட்டதொரு சீர் வரையறை. (இ-ள்.) கலித்தளை அடிவயின் கலிப்பாவினது கட்டளையடிக்கண்; நேரீற்றியற்சீர் நிலைக்கு உரித்தன்று - தேமா புளிமா என்னும் இரண்டியற் சீரும் வரப்பெறா; தெரியுமோர்க்கே- துள்ளலோசையைத் தெளிவார்க்கு எ-று. 'ஆகா'வென்றவற்றைக் காட்டலாவதில்லை, ஆகாவென்பதல்லது. கட்டளையடிக்கண் வரைந்தோதவே, அல்லனவற்றுக்கண் வருமென்ப தாம். அவை: "பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை" (கலி. 5) எனவும், "உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை" (கலி. 38) எனவும், "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்" (கலி. 39) எனவுங் கலியடியுள் வந்தன. இயற்சீர் பத்துள்ளும் இவை யிரண்னையுங் கலிக்கண் வாராவெனவே, ஒழிந்த ஆசிரியத்துள்ளும் வெண்பாவுள்ளும் பத்தியற்சீரும் வேறுவேறு வந்து அடியுறழுமென்பதூஉம், இதற்காயின் எட்டியற்சீர் அடியுறழு மென்பதுஉங் கூறினானாம். எனவே ஆசிரியம், இயற்சீர்பத்தும் ஆசிரிய உரிச்சீரிரண்டுமெனப் பன்னிரண்டுசீர் பெறுவ தாயிற்று. வெண்பாவும் இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்குமெனப் பதினான்கு சீர் பெறுவதாயிற்று. கலிப்பாவடி இயற்சீரெட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீரிரண்டுமெனப் பதினான்குசீர் பெறுவதாயிற்று. அசைச் சீருளாவன முன்னர்ச் (339) சொல்லுதும். இனி, வஞ்சிப்பாவிற்கும். 'வஞ்சி மருங்கி னெஞ்சிய உரிய' (தொல். செய். 22) என முற்கூறியவாற்றான் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்து நான்கு மென எண்பதுசீருங் கட்டளையடி யல்வழி உரியவென எய்துவித்த தாம். அவற்றுள் தேமா புளிமாவென்னும் இரண்டுசீரும் ஆகாத இடம் இனிச் சொல்லுகின்றான். (25) வஞ்சிப்பாவினுள் வாராத இயற்சீர் 338. வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. இது, வஞ்சிப்பாவினுள் வாரா இயற்சீர் கூறுகின்றது. (இ-ள்.) வஞ்சி மருங்கினும்- மேற்கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப் பாவினும்; இறுதி நில்லா- ஈற்றில் நிலைமைப் படா எ-று. வஞ்சித்தளை மருங்கி னென்னாது வஞ்சி மருங்கினென வாளாது கூறினான், அது கட்டளையடிக் கல்லாமையின். வஞ்சிப்பாவினுட் சீர் வருங்கால் ஒழிந்த பாவிற்குப்போலச் சீரியைந்திறுதன் மாத்திரையன்றிச் சீர்தோறுந் தம்முள் வேறுபாடு தோன்றத் தூங்கப்படும். அவ்வாறு தூங்க லோசைப்பட நில்லா, தேமா புளிமாவென்னும் இரண்டு சீருமென்ற வாறாம். உம்மை இறந்தது தழீஇயிற்று. 'இறுதி நில்லா' வென்பது இறுதலொடு நில்லாவென்றவாறு; என்னை? இருசீரினுள் வருஞ்சீரொடு தொடருங்கால் இறுதற்றொழில் பெறுவது நின்ற சீராகலினென்பது. இதனானே ஒழிந்த இயற்சீரின் தூங்கலோசைப்பட நிற்குமென்றவாறாம். "கொற்றக் கொடியுயரிய" எனவும், "களிறுங் கதவெறிந்தன" எனவும் நேரீற்றறியற்சீர் முதற்கண் தூங்காவாயின. "அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல்" (புறம். 17) என ஒழிந்த இயற்சீர் தூங்கின வென்பது. இவையுங் கட்டளை யல்ல வென்பது. 'அசையுஞ் சீரும்' (தொல். செய். 11) என்பதனான் அறிக. இறுதிக்- கண் விலக்காமையின், "மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்" (புறம். 2) என நேரீற்றியற்சீர் வந்தன. இனி, ஈற்றுக்கண் வருதல் சிறுபான்மை யென்பாரும், யாண்டும் இறுதிக்கண் வாராவென்பாரும் இச்சூத்திரத்தை யுரைக்குமாறு: வஞ்சியடி யிறுதிக்கண் இவை வாராவெனப் பெரும்பான்மை பற்றி ஓதினானெனவும், இஃதொருதலையாக விலக்கினானெனவுஞ் சொல்லுப. அவ்வாறு கூறின் முதற்கண் அவ்விருசீரும் வருதல் பெரும்பான்மையாதல் வேண்டுமென மறுக்க. என்றார்க்குத், "தன்பால் வெங்கள்ளி னொலிவே லிலங்குதடக்கை" எனவும், "புன்காற் புணர்மருதின் போதப்பிய புனற்றாமரை" எனவும், "தேன்றாட் டீங்கரும்பின்" எனவும் வந்தனவாலெனின், அங்ஙனம் நலிந்து காட்டினவை அளபெடை வெண்சீராம்; அது செவிகருவியாக உணர்க. என்னை? "கொற்றக் கொடியுயரிய" என அளபெழாதவழித் தூங்காமையின். அல்லதூஉம், நேரீற்றியற்சீர் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்; "மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலை இயதீயுந் தீமுரணிய நீரும்" (புறம். 2) எனவும், "ஆழ்ந்துபட்ட கிடங்கி னுயர்ந்தோங்கிய வாயில்" எனவும், ஒரோ செய்யுட்கண்ணே பல வந்தமையினென்பது. 'மருங்'கென்ற தனானே நேர்நிலைவஞ்சிப்பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படும். கொள்ளவே, வியனிலைவஞ்சிக்கு (358) இவ்வரையறை யின்றென்பது. மற்று, "மண்டிணிந்த நிலனும்" என்பது நேர்நிலைவஞ்சியாகலின் அடிநிலையோடு அடிக்கூட்டத்துக்கண் அதற்குத் தூங்கலோசை கொள்ளுமாறென்னையெனின், அஃது இலக்கண அடியன்மையின் ஈண்டாராய்ச்சியின் றென்பது. நேர்நிலைவஞ்சியுள் இலக்கண அடிக்கண் இயற்சீரெல்லாம் வாராவென்பது, 'குறளடி முதலா வளவடி காறும்' (தொல். செய். 57) என்புழிச் சொல்லுதும். (26) அசை சீராகும் இடம் 339. இசைநிலை நிறைய நிற்குவ ஆயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே. இது, நான்கசையுஞ் சீராகும் இடனுமுடைய என்கின்றது. (இ-ள்.) ஓசைநிலை நிறையாமையாற் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப் பட்ட சொற்களை யெல்லாஞ் சீர்நிலை பெறுதற்கண் வரையார் எ-று. "கழறொழா மன்னர்தங் கை" என்று நேரசை சீராயிற்று. "புனனாடன் பேரே வரும்" என நிரையசை சீராயிற்று. "எய்போற் கிடந்தானென் னேறு" (பு.வெ. வாகை. 22) என நேர்பசை சீராயிற்று. "மேவாரை யட்ட களத்து" (களவழி. 25, 27, 36) என நிரைபசை சீராயிற்று. பிறவுமன்ன. இவற்றை உண்மை வகையாற் சீராமென்றான் அல்லன்; "தொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல" (தொல். எழுத். மொழி. 17) என்றாற் போலக் கூறினானென்பது. இவை இன்ன பாவினுள் வருமென்பது முன்னர்ச் (385) சொல்லுதும். இங்ஙனம் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி யென்னுமாறு இல்லையென்பது. (27) இதுவுமது 340. இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. இஃது, எய்திய தொருமருங்கு மறுத்தல் நுதலிற்று, இயலசை யிரண்டுஞ் சீர்நிலை பெறினுந் தளைகொள்ளப்படா வென்றமையின். இனி, எய்தாத தெய்துவித்ததூஉமாம்; என்னை? உரியசையான் தளைகொள்ளு மாறுணர்த் தினமையின். (இ-ள்.) இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து இயற்றப்படும், அவை தளைவகை சிதையாத் தன்மைக்கண் எ-று. 'பாற்படுத்'தெனவே அதிகாரத்தான் இறுதி நின்ற உரியசை யிரண்டும் பகுத்துக் கொள்ளப்படும். நான்கியற்சீருள் இன்ன இயற்சீர்ப்பாற் படுமென்னானோவெனின், 'கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர்' (தொல். செய். 25) என அதிகாரம் வருகின்றமையின், தேமா புளிமாவென்னுஞ் சீர்போல இரண்டசையுந் தளைகொள்ளுமென்றமையின் 'இயற்றுக' வென்றானென் பது. தானாக இயல்வதன்மையின் 'இயற்றுக' வெனப்பட்டது. 'தளைவகை சிதையாத் தன்மையான' வென்று இடம் நியமித்ததென்னையெனின், சீர்வகையான் அசைச்சீரென வேறாய் நிற்றலுடைய, தளைவகை சிதையாத் தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற் படுத்து இயற்றுகவென அடங்கக் கூறிற் றென அறிவித்தற் கெனவுணர்க. எனவே என் சொல்லப்பட்டதாம்? இவ்வுரியசையிரண்டுஞ் சீர்வகையான் வேறுவேறு எண்ணித் தொகை பெற்றுத் தமக்கு ஓதிய அடியுறழு மெனவும், அஃதெண்ணப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறு வேறெண்ணுத் தொகை பெற்றும் இயற்சீரெனவே யடங்குமெனவுங், கூறப்பட்டதாம். இன்னுந் தளைவகைக்கண் ணெனவே, கட்டளையடிக் கண்ணதே இவ்வரையறை யென்பதூஉம், அல்லாதவழி இந்நான்கசையும் வரையறை யின்மையின் தளை கொள்ளப்படா வென்பதூஉங் கூறப்பட்ட தாம். அஃது ஓரசைச்சீரல்லாத சீராயின் கட்டளையடி யல்வழியுந் தளை கொள்பவோவெனின், தளை கொள்ளிற் கட்டளையடி யெனப்படு மாதலின் அல்லாதவழி வந்த சீர் தளை கொண்டன வென்றல் பயனில் கூற்றாமென மறுக்க. "உலக முவப்ப வலனேர்பு திரிதரு" (முருகு. 1) என்றவழி, ஆசிரியத்துட் பிறதளை வந்ததென்று இலக்கணங் கூறி வழு வமைக்கல் வேண்டா. என்னை? அது பெருவரவிற் றாகலின்; அதனான், வருஞ் சீர்வகையான் வந்ததென்று ஒழிதலே அமையும், வரையறை இல்லன வற்றுக்கு வரையறை கூறல் குற்றமாகலி னென்பது. மற்று இவ்வுரியசைச் சீரிரண்டும் வரையாது கூறினமையின் மூன்று பாவிற்குஞ் செல்லும் பிறவெனின், "கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர், நிலைக்குரித் தன்று" (தொல்.செய்.25) எனக்கூறி, ஈண்டு இவற்றை இயற்சீர்ப்பாற்படு மென்றமையின் இவையுங் கலிப்பாவிற்கு விலக்குண்டனவென்பது. எனவே, ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியசைச்சீரிரண்டும் உரியவாயின. ஆசிரியத்திற்கு மேற் கூறிய (337) சீர்பன்னிரண்டும் இவையிரண்டுமென அடியுறழுஞ்சீர் பதினான்காயின. வெண்பா விற்கு முன்னரெய்தியசீர் பதினான்கும் இவை யிரண்டுமாக அடியுறழுஞ்சீர் பதினாறாயின. கலிப்பாவிற்கும் மேற்கூறியசீர் பதினான்குமே யாயின. இங்ஙனம் வகுக்கப்பட்ட சீர் நாற்பத்து நான்கினை யும் சீர்வகையான் உண்மை நோக்கித் தொகுப்ப இயற்சீர்பத்தும் ஆசிரிய வுரிச்சீரண்டும் வெண்சீர் நான்கும் அசைச் சீரிரண்டுமெனப் பதினெட்டாம். மேல் (362) ஐவகை அடியெனப்பட்ட அறுநூற்றிருபத்தைந்தடியும் இச்சீர் பதினெட்டானுந் தோற்றிக் கொள்ளப்படும். இப்பதினெட்டுச் சீரும் இரு நிலைமை யெய்துவனவும் எய்தாதனவுமாகி முப்பத்தொன்றாகி விரியு மாறு முன்னர், "எழுத்தள வெஞ்சினும்" (தொல். செய். 43) என்புழிச் சொல்லுதும். (28) கலியடியுள் இறுதிச்சீர் முதல்நேரசை நிரையசை போல்வது 341. வெண்சீர் ஈற்றசை நிரையசை யியற்றே. இது, வெண்சீராற் கலித்தளையாமாறுணர்த்துதல் நுதலிற்று. "கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ" (தொல். செய். 24) என்புழி, அவ்வாசிரியவுரிச்சீராற் கலித்தளையா மென்றான்; அவ்வதிகாரம் இடையறாது நின்றமையின் இதுவுங் கலித்தளைக்கே இலக்கணமாயிற்று. என்றார்க்கு, "வஞ்சி மருங்கினும்" (தொல். செய். 26) எனவும், "இசைநிலை நிறைய" (தொல். செய். 27) எனவும், "இயற்சீர்ப் பாற்படுத்து" (தொல். செய். 28) எனவும், இம்மூன்று சூத்திரம் இடையிட்டனவாலெனின், அற்றன்று; கலிப் பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் அதிகாரம் பற்றி இடைபுகுந்த அல்லது கலித்தளையதிகாரம் விலக்கினவல்ல வென்பது. (இ-ள்.) வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி, அவ் வெண்சீருள் ஈற்று நின்ற சீரின் முதல்வந்த நேரசை மற்றை நிரைமுதல் வெண் சீர்வந்து முன்னைய இரண்டுங் கலித்தளையாயவாறு போலக் கலித் தளையாம் எ-று. மேனின்ற அதிகாரத்தால், "தளைவகை சிதையாத் தன்மைக்கண்" (340) என்பது கூட்டியுரைக்க. எனவே, வெண்சீர்ப் பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்பதூஉம், நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒரு நிகர்த்தாமென்பதூஉங் கூறி, அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவதெனவுங் கூறினானாம். இது, "மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்றி முடித்தல்" (665) என்னும் உத்திவகை. 'வெண்சீரிறுதி', யென்பது ஏழாவதன் தொகை; என்னை? ஈறெனப்பட்டது சீராகலின், வெண்சீருள் ஈற்றுச்சீரெனவே வெண்சீர் பலவுந் தொடர்ந்து நிரை முதல் வந்தவழியன்றி இறுதிச்சீ ரொன்றியது நிரையசை யியற்றாகா தென்பதாம். இதனான் நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்குங்கால் இயற்சீர் அடிமுதற்கண் வருமென்பதூஉங் கூறப்பட்ட தாம். மற்று, ஈறென்றது ஈற்றுச் சீரினையாயின் அச்சீரினிடையும் இறுதியும் நின்ற அசையினை நிரையசையியற்றென்று கொள்வனெனின், நின்ற சீரின் ஈற்றசை வருஞ் சீரின் முதலசையொடு தட்டில் தளையாவதன்றி ஒன்றிடை யிட்ட அசையுஞ் சீரும் பற்றித் தளைகொள்வாரின்மையின் அது கடாவன் றென்பது. இனி, வெண்சீரென்பது அஃறிணை யியற்பெயராகலானும், பன்மை வினைகொண்டு பால் அறிய வந்ததன்றாயினும் அதனை, 'யானைக்கோடு', என்றாற்போல இறுதி யென்றமையானும் பன்மைப்பாற் பட உணர்க; என்னை? 'பின்னோன் முன்னோன்', என்றவழி, அவர்க்கு முன்னும் பின்னும் வேறு சிலருளரென்பது உணர்த்துமாகலின். என்றார்க்கு, வெண் சீரிறுதி நீடுகொடி குளிறுபுலி வந்தவழி அவற்று முன்னின்ற நேர்பசை நிரை பசைகளைக் கலிப்பாவினுள் கலித்தளையாக்குதற்கு 'நிரையசையியற்று', என்றா னென்னாமோவெனின், அற்றன்று; வெண்சீர்களின் இறுதி யெனவே மூன்றாஞ்சீரும் நான்காஞ்சீரும் வெண்சீராகல் கூறி, நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் (372) எனவே இரண்டாஞ்சீரும் வெண்சீர் வரல்வேண்டு மெனக் கூறி, நிரைதட்டுமெனவே இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் நிரையீறாயினவெல்லாம் முதற்கண் நிற்குமெனவுங் கூறினான். கூறவே, ஆசிரியவுரிச்சீர் இடைநில்லாவென்பதூஉம், அங்ஙனம் நிற்பிற் கலியோசை யழியு மென்பதூஉமாம் ஆசிரியன் கருத்தென்பது. அல்லதூஉம் வெண்சீர்க்கு உரியசை யின்மையானும் அற்றன்றென்பது. எனவே, ஈற்றுச்சீர் நிரைமுத லியற்சீர் வரினும் ஆண்டுத் துள்ளலோசை ஒடுங்குமென்பதாம். "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) என்பது, வெண்சீரிறுதி நிரையொடு தட்ட கலித்தளை. "அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையான்" (கலி. 11) என்பது, வெண்சீர்கள் பகைத்துவந்து ஈற்றுச்சீரின் முதற்கணின்ற நேரசை நிரையசைபோலக் கலியோசை கொண்டமையின் அது கலித்தளை யெனப் பட்டது. இனி, வெண்சீர் நான்கும் ஒன்றி வரினுங் கலித்தளையாகுமேனும், அது வெண்பாவடியெனவும் பட்டுத் திரிவுபடுதலின் அதனைக் கட்டளை யடியென்னாது இறுதிக்கண் ஒரோவழி ஒருசீர் ஒன்றி வரினும் அதன் முதற் கட் பல வெண்சீர் வந்து பகைத்தலிற் கலியோசையே காட்டுமென்றா னென்பது. அஃதேற், "பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்" (கலி.கடவுள் வாழ்த்து.) என்றவழி, இடைநின்ற சீரின் நேரசை நிரையசையியற் றென்னாமோ வெனின், அது கட்டளையடி அன்று என்பது, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல். செய். 11) என்பதனான் அறியப்படும். அல்லாதாரும் அவை செவிகருவியாக உணர்தற் கருமை நோக்கி அடியறியுந் தன்மை அரிதென்று சொல்லுப. இனி, இயற் சீரானன்றித் தளை கொள்ளாமோ வென்பார், "தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா" (தொல். செய். 55) என்பதனான், வெண்சீர்க்குத் தளை விலக்கல் வேண்டி அவ்வெண்சீரினை யும் இயற்சீராக இயற்றிக் கொள்ளப்படுமென்றற்கு ஒரு வெண்சீரின் ஈற்றசை நிரையசையியற் றென்றானெனக் கூறி, ஞாயிறென்னும் இயற் சீரினை மாசெல்வாயெனப் பின்னுமொருகால் திரிந்ததனையே திரியாமல் நிறுத்தி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்பினுங் கலியாமெனக் காட்டுப. அது ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் எனவரும். இவ்வாறே, "கலித்தளை மருங்கிற் கடியவும் படா" (தொல். செய். 24) என்று, வரும் ஆசிரியவுரிச்சீர்க்குந் திரிபு கூறாரோவெனின், அது நினைந்திலர் போலு மென்று இகழ்ந்துரைப்பாராவர். மற்று, வெண்சீரிறுதி நிரை வந்தாற் கலித்தளையாமென்பதற்கு ஓத்து வேறுண்டாயினன்றே, நேரும் நிரையுந் தட்டதனை நேரும் நிரையும் பகைத்ததெனவும், வேண்டுவ தெனவும் அங்ங னம் பொரு ளுரைப்பார்க்கு எவ்வாற்றானும் இச்சூத்திரம் ஏலாதெனவும், "தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும்" (தொல். செய்.54) என்றவழித் தன்சீரானுந் தளைகொள்ளுமாகலானும் அது பொருந்தாதென மறுக்க. இனி, வெண்சீரின் ஈற்றசை யொன்றேயாகலான் இயற்றென்று ஒருமை கூறினான். இடை நின்ற நேரும் நிரையுங் கோடு மென்னாமையின் இங்ஙனந் திரிந்த நிலைமை வஞ்சியுரிச்சீரெனப்படும். இனி, வெண்சீ ரென்பது எழுவாயாயின் ஈற்றசை நிரை யென்பது இயற்சீரின் பெயராதல் வேண்டும். அங்ஙனங் கருதினும் அசை யென்பதனை ஒருகாற் சொல்லி ஈற்றசை நிரையசையென லாகாதென்பது. அல்லதூஉம் வெண்சீரினை இயற்சீராக்கி அவ்வியற்சீரினை வெண்சீராக்குதல் வினையிலுழப்பாகி வரம்பின்றாமென மறுக்க. என்றார்க்குத் 'தன்சீருள்வழித் தளைவகை வேண்டா' னெனில், "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) என்பதூஉங் கலித்தளையன்றாகிச் செல்லுமென்பது. கலிப்பாவிற்கு ஒன் றாது வருதல் உரிமையுடைய வெண்சீரெனவே, வெண்பாவிற்கு ஒன்றாது வருதல் யாண்டுமில்லை, ஒன்றிவரினல்லதென்பது உடம்படப்பட்டது. (29) வெண்சீர் ஆசிரியப்பாவினுள் மயங்குமாறு 342. இன்சீர் இயைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய வடிக்கே. இது, கட்டளையடி யல்லாதவழிச் சீர் மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்னோசைத்தாகிய துணிவிற்றாகிவரின் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும் எ-று. "இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" (புறம். 19) எனத் 'தலையாலம்' என்றவழி ஆசிரியவடியுள் இன்சீரியைய வெண்சீர் வந்தது. முன்னர் வெண்சீரினை, "இன்பா நேரடிக் கொருங்கு நிலையில" (தொல். செய். 23) என விலக்கி, ஈண்டு வரையாரென்றமையின் அது கட்டளையடிக் கென்பதூஉம் இது கட்டளையடிக்கன்றென்பதூஉம் பெற்றாம். 'வருகுவ தாயி னென்று ஒருமை கூறினமையானும், இயைய வென்றதனானும் ஓரடிக்கண் ஒன்றே யாண்டும் வருவதெனக் கொள்க. (30) ஆசிரியஅடியுள் வஞ்சிச்சீர் மயங்குமாறு 343. அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர் ஒன்றுதல் உடைய ஓரொரு வழியே. இது, வஞ்சியுரிச்சீர் ஆசிரிய அடியுள் மயங்குமா றுணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) கட்டளையடி யல்லாதவழி இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீர்களும் ஓரொருவழி ஆசிரியத்துள் வரப்பெறும் எ-று. ஒருவழி யென்னாது 'ஓரொருவழி'யென்ற தென்னையெனின், அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் பத்துச்சீரே வருமென்பதூஉம், அவை வருங்காலும் பயின்றுவாரா வென்பதூஉம் அறிவித்தற்கென்பது. அவை: 1மாசேர் சுரம், 2புலிசேர்சுரம், 3மாசெல்காடு, 4புலிசெல்காடு, 5மாசெல் கடறு, 6புலிசெல்கடறு, 7பாம்புசேர்வாய், 8பாம்புவருவாய். 9களிறு சேர்வாய், 10களிறுவருவாய் என்பன. அவற்றுக்குச் செய்யுள் : 1"மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை" (யா. வி. மேற்) 2"குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன்" (யா. வி. மேற்) என மாசேர்சுரம் புலிசேர்சுரம் என்பன அடிமுதற்கண் வந்தன. 3"முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக்கும்" என மாசெல்காடு வந்தது. 4"அலரிநாறு துவர்வாய் அமர்த்த நோக்கின்" (யா. வி. மேற்.) எனப் புலிசெல்காடு வந்தது. 5" கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை" என மாசெல்கடறு வந்தது. 6"கரடிவழங்கு குன்று கண்டு போகி" எனப் புலிசெல்கடறு வந்தது. 7"காடுதேரா வுழிதரு கடுங்கண் யானை" எனப் பாம்புசேர்வாய் வந்தது. 8"சந்துசிதைய வுழுத செங்குரற் சிறுதினை" (யா. வி. மேற்.) எனப் பாம்புவருவாய் வந்தது. 9"மருந்துநாடாத் திருந்து சிலம்பிற் கைக்கும்" எனக் களிறுசேர்வாய் வந்தது. 10"கடறுகவரா விழிந்து கான்யாறு வரிப்ப" எனக் களிறுவருவாய் வந்தது. பிறவுமன்ன. நேர்நிரையாகியும் நேர்புநிரை பாகியும் ஈறு முதல் பெறச் சீர் வந்தது. (31) அடியெனப்படுவது அளவடியே 344. நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே. இது, முதற்சூத்திரத்துள், "யாத்த சீரே யடியாப் பெனாஅ" (தொல். செய். 1) என நிறுத்த முறையானே சீருணர்த்தி அடியுணர்த்திய வெழுந்தான்; அவற் றுள் இது நாற்சீரடி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீரடி எ-று. எனவே, 1இருசீரானும், 2முச்சீரானும், 3ஐஞ்சீரானும், 4அறுசீர் முதலிய வற்றானும் வருமாயினும் அவை சிறப்பில வென்றவாறாம். இருசீரான் வருவதனை என்ன அடியென்னுமோவெனின், அடிக்கெல்லாம் எழுத்து வகையானே மேற் பெயர் கூறும். அவ்வாறே சீர்வகையானுங் கொள்ளப்படு மென்பது. சுருங்கிய எழுத்தான் வருவன 1குறளடியென்றும், அவற்றின் ஏறிய எழுத்தான் வருவன 2சிந்தடியென்றும், இடைநின்றன 3அளவடி யென்றும், அவற்றின் நெடியன 4நெடிலடியென்றும், அவற்றினும் நெடியன 5கழிநெடிலடியென்றுங் கூறுமாகலான், அவ்வாறே இருசீரடி குறளடி யென்றும், முச்சீரடி சிந்தடியென்றும், நாற்சீரடி அளவடி யென்றும், ஐஞ்சீரடி நெடிலடியென்றும், அறுசீர் முதலியன கழிநெடிலடி யென்றுங் கொள்ளும் என்பது. இவற்றினெல்லாம் நாற்சீரடி சிறந்ததென்ற தென்னையெனின், அளவிற்பட் டமைந்தமையானும் அது பயின்று வருதலானு மென்பது. உதாரணம் : "திருமழை தலைஇய விருணிற விசும்பின்" (மலைபடு. 1) எனவும், "அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட" (நாலடி.1:1) எனவும், "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) எனவும் மூன்று பாவினும் அளவடி வந்தவாறு. இவற்றது விகற்பமெல்லாம் முன்னர்ச் சொல்லுதும். (32) நாற்சீரடிக்கண்ணேயே தளையும் தொடையும் கொள்ளப்படுதல் 345. அடியுள் ளனவே தளையொடு தொடையே. இதுவுமது. நாற்சீரடியது சிறப்புணர்த்துதல் நுதலிற்று. எதிரது நோக்கியதொரு கருவியெனினும் அமையும். (இ-ள்.) முன்னர்க்கூறிய நாற்சீரடியுள் உள்ளனவே தளையுந் தொடையும் எ-று. மற்று, மாத்திரையும் எழுத்தும் அசையுஞ் சீரும் அவ்வடியுள்ளன அல்லவோவெனின், அற்றன்று; அவ்வடிக்க ணுள்ளன வெல்லாங் கூறுகின்றா னல்லன் இதுவென்பது. என்னை? நாம் தளைப்பகுதியாற் கட்டளையடி யென உறழ்வதூஉம், அறுநூற்றிருபத்தைந்தடியென வரையறை கூறுவதூஉம், அவ்வள வடியே என்றற்கு 'நாற்சீர்க்கண்ணது தளை' யென்றானென்பது. முன்னுஞ் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடியெல்லாந் தளைவகை யுடைய வென விதந்தோதி வந்தத னானே, நாம் தளை கொள்வது நாற்சீரடிக்கணென்பான் 'அடியுள்ளது தளை' யென்றானென்பது. மற்றை யடிக்கட்டளைகொள்ளின், அது வரையறையின்றா மாகலின் ஈண்டு வரைந் தோதினா னென்பது. அது தக்கது; மற்றுப் பொழிப்பும் ஒரூஉவும் போலாத மோனை முதலிய தொடை யெல்லாம் அடியிரண்டியையத் தொடுக்கல் வேண்டுமன்றே? அவற்றை 'அடியுள்ளனவே தொடையும்' என்ற தென்னை யெனின், அற்றன்று; நாம் தொடையுறழச் சீர்கொள்வதூஉம் இவ்வளவடிக்க ணென்பது கூறினான், ஆண்டுத் தொடை கூறும்வழி வரையாது கூறுமாகலி னென்பது. எனவே, கட்டளைப் படுப்பதூஉந் தொடையுறழ்தற்கு இடனா வதூஉம் நேரடியே யெனச் சிறப்பித்தவாறு. (33) இதுவுமது 346. அடியிறந்து வருத லில்லென மொழிப. இதுவுங், கட்டளைப் பாட்டிற்குந் தொடைக்கும் ஆவதொரு கருவி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஓரடியின் இறந்து வாரா, மேற்கூறிய தளையுந் தொடையும் எ-று. என்றது, மேற்கூறிய தளைவகையே யன்றி அடியோடு அடிக்கூட்டத் துத் தளை கொள்ளுங்காலும் ஓரடிக்கண்ணே வழுவாமற் கோடல் வேண்டு மெனவும், அங்ஙனமே தொடை கொள்ளுங்காலும் வந்த வந்த அடியே வரப்பெறுவதெனவுங் கூறியவாறு. எனவே, தேமா தேமா தேமா தேமா வென்னும் அடிக்கண் தொடை கொள்ளுங்கால், "வாமா னேறி வந்தான் மன்ற" என முன் வந்த அடியே வரல்வேண்டுமென்பதூஉம், அன்றித் 'தேமாஞ் சோலைத் தீந்தே னுண்ட காமர் தும்பி யாதல் கண்டது' என வரில் தளைவழுவாகிப் பதின்மூவாயிரத்தெழுநூற்றெட்டெனப்பட்ட தொடைப்பகுதியுட் படாவென்பதூஉம் பெற்றாம். இனி வெண்பாவினுள் அவை வருமாறு : "சென்றே யறைப வொருகால் சிறுவரை நின்றே யறைப பறையினை - நன்றேகாண்" (நாலடி. 24) எனப் பன்னிரண்டெழுத்தடி ஒன்றனையும் இருகாற் சொல்லிக் கூட்டி எதுகைத்தொடை கொள்ளுங்கால் அடியோடு அடிக்கூட்டத்துத் தளை வகை சிதையாது வந்தமையின் அத்தொடை பதின்மூவாயிரத் தெழுநூற் றெட்டென வரையறைப்பட்ட தொடையுட்பட்டது. "யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் - றேனூடு" (முத்தொள். 104) என்றவழிப் பதினான்கெழுத்தடியே தொடுத்தமையின் அடியிறந்து வந்ததன்றாயினுந் தளைவகை ஒன்றாமையான் இது பதின்மூவாயிரத்தெழு நூற்றெட்டினுட் படாதாயிற்று. "வண்டு வரகு வரகு வரகு" என்கின்ற அடியினை மீட்டுந் தந்து தொடைகொள்ளுங்கால், வண்டு வரகு வரகு வரகு என்றது நேரொன்றாசிரியத்தளை தட்குமாதலான், இது வழுவெனப்படுமென்பது. கலிப்பாவிற்கு அன்னதொரு வரையறை இல்லை. இருவாற்றானும் வருமென்பது, என்னை? 'வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே' (தொல். செய். 29) என்றாராகலின், மேலைச்சூத்திரத்தானே தளைவகை சிதையாமல் அறு நூற்றிருபத்தைந்து வகைப்படுவது நாற்சீரடியே என்பதூஉங் கூறி, அந்நாற்சீரடியே நாம் முன்னர் வேண்டுந் தொடை விகற்பத்திற்குரிய வென்பதூஉங் கூறினான். இச்சூத்திரத்தானே அத்தொடை கொள்வது தம்மின் வேறாகாத இரண்டடிக்கண் என்பதூஉம், அறுநூற் றிருபத்தைந் தடியுள் ஒன்றனை இருகாற்சொல்லித் தொடை கொள்ளப்படுமென்ப தூஉம், அங்ஙனந் தொடுக்குங்காலும் அடியோடு அடிக்கூட்டத்தின் கண்ணுந் தளைவகை சிதையாமல் தொடுக்க வேண்டுமென்பதூஉங் கூறியவா றாயிற்று. இவற்றானெல்லாம் நாற்சீரடியே சிறப்புடைத் தென்பது பெற்றாம். இன்னும் அதன் சிறப்புடைமையே கூறுகின்றான். (34) நாற்சீர்அடிகளின் தொடையே பாட்டு 347. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. இது, நாற்சீரடியை விசேடித்துக் கூறி, அதனது இடத்தானே பாட்டென்பதொரு முதற்பொருள் தோன்றுமென்ப துணர்த்தியவாறு. 'எனப்படும்' என்றதனான் இவ்வடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையன வென்பதூஉஞ் சொல்லியவாறு, மாத்திரை முதலிய உறுப்புக்களான் இத்துணை மாத்திரை கொண்டது செய்யுளென்றானும், இத்துணை அசையுஞ் சீருந் தொடையுங் கொண்டது செய்யுளென்றானும், அளவியல் கூறி அவ்வுறுப்புக்களான் வரையறுக்கப்படா. moasnt கூறச் செய்யுட் புலப்பாடாமென்பது. 'எனப்படும்' என்றதனான், ஒழிந்த அடிகளானும் அவ்வாறு வருமாயினும் அவை சிறப்பிலவென்பது. (இ-ள்.) 'அடியின் சிறப்பென்பது'அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு எ-று. தலையிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும்பான்மையுஞ் செய்தார்; வஞ்சிப்பாச் சிறுவரவிற்றெனக் கொள்க "மாயோன் மார்பி னாரம் போல மணிவரை யிழிதரு மணிகிள ரருவி நன்பொன் வரன்று நாட னன்புபெரி துடைய னின்சொல் லினனே" (தொல். 390; 469. பேரா) என நாற்சீரடியான் ஆசிரியம் வந்தவாறு. "மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்" (நாலடி. 2:1) என 2அளவடியானே வெண்பா வந்தவாறு. "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) எனக் கலிப்பா அளவடியான் வந்தது. பிறவு மன்ன. (35) நாற்சீர்அடியின் பாகுபாடும், அவற்றின் பெயரும் முறையும் தொகையும் 348. நாலெழுத்து ஆதி யாக ஆறெழுத்து ஏறிய நிலத்தே குறளடி யென்ப. 349. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத்து ஏற்றம் அவ்வழி யான. 350. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே யொத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே. 351. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே யீரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. 352. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே யீரெழுத்து மிகுதலும் இவண்பெறு மென்ப. இவை ஐந்து சூத்திரமும் உரையியைபு நோக்கி உடனெழுதப் பட்டன. நாற்சீரடி இத்துணைப் பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தளவும் வந்த நில மூன்றுங் குறளடி யெனவும், ஏழெழுத்து முதன் மூன்று நிலனுஞ் சிந்தடியெனவும், பத்தெழுத்து முதல் ஐந்துநிலனும் அளவடியெனவும், பதினைந்தெழுத்து முதன் மூன்றுநிலனும் நெடிலடியெனவும் பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்து வரை மூன்று நிலனுங் கழிநெடிலடியெனவுஞ் சொல்லுப ஆசிரியர் எ-று. குறளடிநிலங்களை வகுத்தொழியாது, ஒழிந்தனவும் வகுத்துரைத் தான்; அவை முதல் இடை கடையென மூன்று கூற்றான். ஒன்றொன்றனிற் சிறப்பு இழிபுடையன வென்று கொள்ளினுங் கொள்ளலாமென்பது. அவற்றுக்குச் செய்யுள் ; "போந்து போந்து சார்ந்து சார்ந்து குறளடி நேர்ந்து நேர்ந்து மூசி நொந்து வண்டு சூழ விண்டு வீங்கி நீர்வாய் கொண்டு நீண்ட நீல சிந்தடி மூர்வா யூதை வீச ஊர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர வமையேர் மென்றோ ளாயரி நெடுங்க நேரடி ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு லணிநடை யசைஇய வரியமை சிலம்பின் நெடிலடி மணிமருள் வணர்குரல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய வணிநிலவு தயங்குநக கழிநெடில் ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு கலனளவு கலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே" என இதனுட் பதினேழ்நிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறினான். தொகை பதினேழ்நிலத்து ஐவகையடியென்பது எண்ணிப்பார்க்க. இப்பெயரெல்லாங் காரணப்பெயர். மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும், அவனினெடியானைச் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற்பட்டானென்றும், அவனினெடியானை நெடியானென்றும், அவனினெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெயரென்பது. (36 - 40) சீர்களது எழுத்து வரையறை 353. சீர்நிலை தானே யைந்தெழுத்து இறவாது. இது, மேலெழுத்தெண்ணி அடி வகுக்கப்பட்ட ஐவகை யடிக்குஞ் சீரும் எழுத்தெண்ணியே வகுக்கின்றது. (இ-ள்.) சீரது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்து வாராது எ-று. பெருமைக்கெல்லை கூறி வரையறுக்கவே சிறுமைக்கெல்லை வரையறைப்படாது ஒன்று முதலாக வருமென்பதாம். சீரிநிலை தானே யென்பது பிரிநிலையேகாரம். அதனை அசைநிலையிற் பிரித்துக் கூறியவாறு. அதனை அவ்வாறு பிரித்துக் கூறவே, அசை சீராயவழி ஐந்தெழுத் திறவாமை அவற்றுக்கில்லையென்பது கொள்ளப்படும். அஃதேல் அவற்றுக்கெல்லை கூறானோவெனின், அவை மூன்றெழுத்தி னிறவாவென்பது உரையிற்கொள்க. தானென்பதனை இலேசுப் படுத்துக் கொள்ளினும் அமையும். மற்றிவற்றையுஞ் சீர்நிலை பெறுமென்ப வாதலாற் சீரென அடக்கானோவெனின், அடக்கானன்றே, அவை. சீர்நிலை யெய்தியவழியும் அசையிரண்டாகாமையினென்பது. 'தளைவகை சிதையாத் தன்மை யான" (தொல். செய். 28) என்று ஆண்டு வரைந்தமையின் அதனைச் சீர்நிலையென வாளாது பொதுவகை யானோதான். அதுவே கருத்தாயின். அவற்றை நேர்பசை நிரைபசையெனக் கூறியதனானும், அவற்றை 'ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே' (தொல்.செய். 12) என்றதனானும் பயந்ததென்னையென மறுக்க. அல்லதூஉம், 'இயற்சீர்ப் பாற்படுத் தியற்றுக' வெனவே, இவைதா மியற்சீரல்ல, அவற்றது செய்கை இவற்றானுங் கொள்கவென்ற துணையே ஆண்டுக் கூறிய தென்பது. அல்லதூஉந் தேவரும் நரகரும் மக்கட்பாற்படுத்துத் (588) திணை கொள்ளப் படும் என்ற துணையானே, பிறப்பானும் பெற்றியானும் மக்களென வழங்கார். அதுபோல, அசைநிலைத் தளையுஞ் சீர்நிலைத் தளை யும் ஒக்குமென்ற துணையானே, அவை அசைச்சீரெனவே, அடையடுத்தே சொல்லவேண்டுவனவற்றையும் வாளாதே சீரெனப்படுவனவற்றையும் ஒருவகை யானே சீர்நிலையென மயங்கக் கூறல் (663) குற்றமாமென்பது. மயங்கக்கூறல் குற்றமன்றென்பார் உளராயின், அவர் கருத்தினான் அதுவும் அமையுமென்பது. ஒரு சாதியல்லனவற்றைச் சாதியொன்றெனவும் புகலார்; அதுபோலச் சீரிலக்கணமுடைய இயற்சீர் உரிச்சீர்களைச் சீரெனக் கூறி அவ்வினத்தவல்லாத அசைச்சீரை இலேசினாற் கொண்டானென்பது. ஓரெழுத்துச்சீர் நுந்தையென ஒன்றேயாம்; இதனோடு வண்டு என்னும் அசைச்சீர் கூட்ட இரண்டாம். ஈரெழுத்துச்சீர் நான்கு; அவை: தேமா ஞாயிறு போதுபூ போரேறு என வரும். மின்னு வரகு என்னும் அசைச்சீர் இரண்டனொடுங் கூட்ட ஆறாம். மூவெழுத்துச்சீர் பத்து; அவை: 1 புளிமா 2 பாதிரி 3 வலியது 4 மேவுசீர் 5 நன்னாணு 6 பூமருது 7 கடியாறு 8 விறகுதீ 9 மாசெல்வாய் 10 நீடுகொடி எனவிவை. அரவு என்னும் உரியசைச்சீரோடுங் கூட்டப் பதினொன்றாம். நாலெழுத்துச்சீர் ஒன்பது: அவை: 1 கணவிரி 2 காருருமு 3 பெருநாணு 4 உருமுத்தீ 5 மழகளிறு 6 மாவருவாய் 7 புலிசெல்வாய் 8 நாணுவரை 9 உரறுபுலி எனவிவை. ஐந்தெழுத்துச்சீர் மூன்று; அவை: 1 நரையுருமு 2 புலிவருவாய் 3 விரவு கொடி எனவரும். இக்கூறுபட்டனவெல்லாம் ஈண்டுக் காட்டுவாமாயிற்று, 'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப' (தொல். செய். 43) என வருகின்ற சூத்திரத்தினை நோக்கி யென்பது, 'முடவுமருது' என்பதனைக் குற்றுகரங் களைந்து ஐந்தெழுத்தென்று காட்டுவாருமுளர். அஃது உரியசைமயக்க மாகிய ஆசிரியவுரிச்சீராகலின் 'இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே' (தொல். செய். 23) என்பதனான் விலக்கப்பட்டதென்பது. இனி, நுந்தையென்பதனை ஈரெழுத்துச் சீரென்பாருமுளர். அங்ஙனங் கூறின், 'இரண்டு தலையிட்ட முதலா கிருபஃது' (தொல். எழுத். புணர். 1) என்னும் எழுத்தோத்தினொடு மாறுகொள்ளுமென்பது. அது வழக்கிற்குக் கூறியது, செய்யுட்காயினவாறு கொள்ளாமோவெனின், கொள்ளாம்; செய்யுட்கண்ணு மதனை வேறெழுத்தென்று வேண்டுமாகலின். என்னை? 'முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ' (தொல். செய். 9) எனக் குற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துக்கொள்ளப்படா வென்பது கூறினானாகலினென்பது. (41) இதுவுமது 354. நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும். இஃது, ஒழிந்த வஞ்சிப்பாவினுள் வருஞ்சீர் இத்துணை யெழுத் திறவா தென்கின்றது. நேர்நிலை வஞ்சியென்பது சமநிலை வஞ்சி. அஃது இருசீரான் வருதலிற் சமநிலை வஞ்சி யெனப்பட்டது, முச்சீரான் வருவதனை வியநிலைவஞ்சி (338) யென்பவாகலின். (இ-ள்.) இருசீரடி வஞ்சியுள் ஒருசீர் ஆறெழுத்துமாகப் பெறும் எ-று. இதற்கு, மேனின்ற அதிகாரத்தாற் பெருக்கத்திற் கெல்லை கூறினான், சுருக்கத்திற்கு வரையறையுடைமையின் அது முன்னர்ச் (358) சொல்லும். எனவே, அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் ஆறெழுத்தான் வருஞ் சீரும் கட்டளையடியாய் வரப்பெறு மென்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. 'தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே' (தொல். செய். 46) என்றதனான் ஒன்றும் இரண்டும் எழுத்தாய் வருதலொழித்து, ஒழிந்த எழுத்தான் ஆறெழுத்தளவும் வஞ்சியுரிச்சீர் வருமென்பது கொள்ளப்படும். இதனை எச்சவும்மை யென்பார் ஏழெழுத்தானும் வஞ்சியுரிச்சீர் வருமென்ப. அங்ஙனங் கொள்ளின் இரண்டுசீராற் பதினான்கெழுத் துளவாகியே செல்லும்; செல்லவே, "குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப" (தொல். செய். 57) என்பதனொடு மாறுகொள்ளு மென்பது. 'தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே' (தொல். செய். 46) என்புழி இவற்றிற்கு உதாரணங் காட்டுதும். (42) சீர்களுக்குப் பொதுவிதி 355. எழுத்தளவு எஞ்சினும் சீர்நிலை தானே குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப. இது மேற்கூறிய சீரெல்லாவற்றிற்கும் பொதுவிதி. (இ-ள்.) ஒருசீர் இரண்டு முதல் எட்டீறாகப் பல நிலைமைப் பட்டும் பல சீராகிச் செய்யுளுள் வருமாற்றாற் றத்த மெழுத்துக் குறைந்தும் மிகுந்தும் அளவிறப்பினும், அவ்வச்சீரெனப்பட்டுச் செய்யுளுள் ஒத்த ஓசையவாய் இருவகையும் ஒரு தன்மையவேயாகச் சுருங்கிற்றும் பெருகிற்றுமில்லை எ-று. எனவே, அவை எழுத்தெண்ணி அடிவகுக்குமாற்றான் இரு நிலைமையும், இரண்டிறந்த பலநிலைமையும் படுவன படும். அவ்விடத்து எழுத்திற்கல்லது சுருக்கப்பெருக்கமில்லையென்பதூஉங் கூறியவா றாயிற்று. 'தான்' என மிகுத்துச் சொல்லியவதனான் அசைச்சீர்க்கும் அவ்வாறே கொள்ளப்படும். 'தளைவகைக்குரிய'வென மேலோதிவந்த சீர் பதினாறும் அசைச்சீரிரண்டுமெனப் பதினெட்டனுள்ளும் இயற்சீர் பத்தனுட் புளிமாவும் வெண்சீர்நான்குமென ஐந்தும் ஒருநிலைமையவே யாம். ஒழிந்த சீர் பதின்மூன்றும் இருநிலைமை யெய்தி இருபத்தாறாம். ஆகச் சீர் முப்பத்தொன்றாமென்பது. அவற்றுக்குதாரணம் : 1நுந்தை, தேமா; 2 ஞாயிறு, பாதிரி; 3 வலியது, கணவிரி; 4 போதுபூ, மேவுசீர்; 5 போரேறு, நன்னாணு; 6 பூமருது காருருமு; 7 கடியாறு, பெரு நாணு; 8 விறகுதீ, உருமுத்தீ; 9 மழகளிறு, நரையுருமு; என ஒன்பதியற்சீரும் இருநிலைமையாற் பதினெட்டாயின. புளிமா வென்னும் இயற்சீர் ஒருநிலைமைத்தேயாம். அல்லாதார் வரகு என்பதனுட் குற்றுகரங் களைந்து புளிமாவிற்கு இரு நிலைமை காட்டுப; அங்ஙனங் காட்டின், வரகென்பது போலப் புளிமாவும் ஓரசையாகலானும் புளிமாவென்பதுபோல வரகு என்பது இரண்டசையாகலானும் கோடல்வேண்டும். கொள்ளவே, இச்சூத்திரத்தினொடு மாறு கோளாமென்பது; என்னை? 'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப' (செய். 355) என்றானாகலின் என்பது. நீடுகொடி நாணுத்தளை எனவும், உரறுபுலி விரவுகொடி எனவும், நிரையீற் றாசிரியவுரிச்சீரிரண்டும் இவ்விரண்டாகி இரு நிலைமை யெய்தியவாறு. இனி, வெண்சீர் நான்கும் ஒரு நிலைமையவேயாம். வண்டு, மின்னு; வரகு, அரவு; என அசைச்சீரிரண்டும் நான்காய் இரு நிலைமையவேயாம். இவ்வாற்றான் இவையெல்லாந் தொகுப்ப. இயற்சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என முப்பத்தொன்றாயின. என்றார்க்கு. மாவருவாய் புலிவருவாய் என்பவற்றையும் ஞாயிறுகொல் வலியதுகொல் எனக் குற்றுகரம் பெய்து இருநிலைமை கொள்ளாமோ வெனிற், கொள்ளாம். அவை, 'எல்லா விறுதியு முகர நிறையும்' (தொல். எழுத். குற். 3) என்பதனான் முற்றுகரமேயாமென்பது. இனி, முதற்கணின்ற குற்றுகரமுங் கொண்டு இருநிலைமை கொள்ளாம். என்னை? நுந்தையென்பது ஈரசை யாகலானும் அதனை நீநுந்தையென வேறொரு சொற்பெய்து வெண் சீரெனக் காட்டின், அது ' வந்து நின்றது' என்றது போலச் சீர்வகையான் வேறொரு சொல்லாமாகவே அது முற்றுகரமாகலானுமென விடுக்க. என்றார்க்குப் போதுபூ என்பதூஉம் இருநிலைமைத் தாகாதாம் பிறவெனின், அற்றன்று; " சேற்றுக்கால், யாட்டுத்தாள், வட்டுப்போர்" எனப் பலவும் வருமாகலின் அஃதிருநிலைமைத்தேயாமென்பது. இனி, வஞ்சியுரிச்சீர்க்கும் இடைநின்ற குற்றுகரங்களை வன்றொடராக வருவித்துக்கொள்க. இனிச், சீரிறுதிக் குற்றுகரங்கள் நிறையாது நிற்றலும் உடையவென்பது, ' சீரியைந் திற்றது சீரெனப் படுமே' (தொல்.செய். 12) என்றவழிக் கூறியவாற்றா னறிக. இனிச் சூத்திரம் வரையாது கூறினமையின் அறுபது வஞ்சியுரிச் சீருள்ளும் இருபத்துநான்குசீர் இருநிலைமையாகவும், இருபத்தெட்டுச்சீர் நான்குநிலைமை யாகவும், எட்டுச்சீர் எட்டு நிலைமையாகவுங் கொள்ளப் படும். அவற்றுள், இரு நிலைமைப்படுவன நேரீற்றுச் சீரெட்டு, நிரையீற்றுச்சீரெட்டு, நேர்பீற்றுச்சீர்நான்கு, நிரைபீற்றுச்சீர்நான்கு என இருபத்துநான்கு வஞ்சியுரிச்சீராம். அவை. 1மாபோகுவாய், 2மாவழங்குவாய், 3பாம்பு சேர்வாய், 4பாம்புவருவாய், 5புலிபோகுவாய், 6புலிவருவாய், 7களிறு சேர்வாய், 8களிறுவருவாய் எனவும் ; 1மாசேர்சுரம், 2மாவருசுரம், 3மாபோகு சுரம், 4மாவழங்குசுரம் ; 5புலிசேர்சுரம், 6புலிவருசுரம், 7புலிபோகுசுரம். 8புலிவழங்குசுரம் எனவும் ; 1மாசேர்காடு, 2மாவருகாடு, 3புலிசேர்காடு, 4புலிவருகாடு எனவும்; 1மாசேர்கடறு, 2மாவருகடறு, 3புலிசேர்கடறு, 4புலிவருகடறு எனவும் வரும். இவ் விருபத்துநான்கும் இருநிலைமையான் நாற்பத்தெட்டா மென்பது. இனி, நான்கு நிலைமைப்படுஞ் சீர் இருபத்தெட்டு வருமாறு; 1பாம்பு போகுவாய், 2பாம்புவழங்குவாய், 3களிறுபோகுவாய், 4களிறுவருவாய், எனவும், 1பாம்புசேர்சுரம், 2பாம்புவருசுரம், 3பாம்புபோகுசுரம், 4பாம்பு வழங்குசுரம் எனவும், 1களிறுசேர்சுரம், 2களிறுவருசுரம், 3களிறுபோகு சுரம், 4களிறுவழங்குசுரம் எனவும்; 1மாபோகுகாடு, 2மாவழங்குகாடு, 3புலிபோகு காடு, 4புலிவழங்குகாடு எனவும்; 1பாம்புசேர்காடு, 2பாம்புவரு காடு, 3களிறுசேர்காடு, 4களிறுவருகாடு எனவும்; 1மாபோகுகடறு, 2மாவழங்குகடறு, 3புலிபோகுகடறு, 4புலிவழங்குகடறு எனவும் ; 1பாம்பு சேர்கடறு, 2பாம்புவருகடறு, 3களிறுசேர்கடறு, 4களிறுவருகடறு எனவும் வரும். இவற்றைப் ' பாம்புபோகுவாய், பாம்புமன்னுவாய், மின்னுப்போகுவாய், மின்னுக்கோலுவாய்' என ஒன்று நான்காக வாய்பாடுகொடுத்து ஒட்டியுணர்க. இவற்றுள், உரியசை முதற்கணின்ற நிரையீற்று நான்கனையும் ஒன்று நான்குசெய்யுங்கால் ' பாம்புசேர்சுரம், பாம்புசேர்வது, மின்னுச்சேர்சுரம், மின்னுச்சேர்வது' என்றாற்போல வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க. இவையிருபத் தெட்டும் விரிப்ப, நூற்றொருபத்திரண்டு வஞ்சியுரிச்சீராம். இனி, எட்டுநிலைமைப்படுஞ்சீர் எட்டுமாவன: 1பாம்புபோகுகாடு, 2பாம்புவழங்குகாடு, 3களிறுபோகுகாடு, 4களிறுவழங்குகாடு எனவும்; 1பாம்புபோகுகடறு, 2பாம்புவழங்குகடறு, 3களிறுபோகுகடறு, 4களிறு வழங்கு கடறு எனவும் வரும். இவை மும்மூன்று உரியசையுடைமையின் முதற்கணின்ற உரியசை யிரண்டும் நான்குநிலைமை எய்தும். பின்னர் நின்ற உரியசை யொன்றனை இருநிலைமையாக்கி அவற்றொடு முன்னர்நின்ற நான்கனையும் வேறு வேறுகூட்ட எட்டாமென்பது. உதாரணம் ; 1பாம்புபோகுகாடு, 2மின்னுப் போகுகாடு, 3பாம்புமன்னுகாடு, 4மின்னுமன்னுகாடு, 5பாம்புபோகு காவு, 6மின்னுபோகுகாவு, 7பாம்புமன்னுகாவு, 8மின்னுமன்னுகாவு எனவரும். இவ்வாறே ஒழிந்தசீர் ஏழனையும் வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க அறுபத்துநான்கு வஞ்சியுரிச்சீராம். இவ்வாற்றான் இருநிலைமையும் நான்கு நிலைமையும் எட்டு நிலைமையும்பட்ட சீரெல்லாந் தொகுப்ப வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்கெனப்படும். இவற்றுள் ஏழெழுத்தும் எட்டெழுத்தும் ஒன்பதெழுத் தும் பெற்றசீர், இருபத்து மூன்றுள. அவை நேர்நிலை வஞ்சிக் காகா வென்பது, 'உறழ்நிலை யிலவே வஞ்சிக்கு' (தொல். செய். 57) என்புழிச் சொல்லுதும். இனி, ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒன்று நான்கு நிலைமைப் படுமென்பதூஉம் ஈண்டடங்கும். நீடுகொடி குளிறுபுலி என்பன இரு நிலைமைப்படும். அது மேற்கூறினாம். என்றார்க்கு அவற்றை இரு நிலைமை யென்பதென்னை? நீடுகொடி நீடுவது எனவும் நாணுத்தளை நாணுவது எனவும் ஒன்று நான்காம் பிறவெனின், அற்றன்று; நீடுவது (213) என்பதனை அலகு வைக்குங்கால், 'அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி' (தொல்.செய். 11) என்பதனான், அவ்வச்சீராய் இசையாவாகலிற் பூமருது (257) என்னுஞ் சீராக வைக்கப்படுமாகலானென்பது. (43) எண்ணப்படா எழுத்து இவை எனல் 356. உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான. இது, மேல் எழுத்தெண்ணிச் சீர்வகுத்த முறையானே ஒற்றும் ஆய்தமுங் குற்றுகரமும் ஒருங்கெண்ணப்படுத லெய்தினவற்றை விலக்கின வாறு. (இ-ள்.) உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ-தத்தம ஓசை இனிது விளங்கத் தக்க தன்மையான் ஒலித்தற்றொழி லில்லாத எழுத்துக்கள் ஈண்டெண்ணப்படா; உயிர்த்திறம் இயக்கம் இன்மையான-அங்ஙனம் எண்ணப்படாதவும் எழுத்தெனப்படுதலிற் சிறிது நாப்புடை பெயருந் துணையான் ஒலித்தலும் மொழி சார்ந்து ஒலித்தலும் உடையவன்றே? அங்ஙனம் ஒருவாற்றான் உயிர்க்குந் திறமுடையவாயினும் அவ்வுயிர்க்குந் திறம் ஈண்டுச் செய்யுட்பாற் படுங்கால் உபகாரப்பட இயங்குமாறில வாகலின் எண்ணப்படா எ-று. மேற் சீர்தளை இருநிலைமைப்படுத்த அதிகாரத்தான் ஒற்றுங் குற்றுகரமுமே ஈண்டு விலக்கினானென்பது இச்சூத்திரம் வலித்ததாயிற்று, ' ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் ' (தொல். செய். 8) எனவும் மேற்கூறினானாதலினென்பது. ' பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து' என ஒற்றுங் குற்றுகரமும் ஒழித்தெண்ணப்பட்டமையினான் நாலெழுத்தடி யாயிற்று. பிறவும் அன்ன. (44) வஞ்சியடிச் சீர் 357. வஞ்சி அடியே இருசீர்த் தாகும். இது, ' நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்' (தொல்.செய். 42) எனவும், ' தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே' (தொல்.செய். 46) எனவும், எழுத்தெண்ணி வரையறுக்கப்பட்ட சீரிரண்டு கொண்டது வஞ்சியடி யென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறளடியே வரையறையுடைய வஞ்சியடி யெனப்படுவது எ-று. ஏகாரம் பிரிநிலை. என்னை? சிறப்புடை வஞ்சியடியைப் பிரித்து வாங்கிக் கொண்டமையின். எனவே, மூச்சீரான் வரும் வஞ்சியடியும் உள ; அவை கட்டளையடியல்ல வென்றானாயிற்று. இங்ஙனம் கூறவே, வஞ்சி யடியும் ஒருவாற்றான் உறழ்ந்து கொள்ள வழிகாட்டியவாறு. இவ்வாறு கூறாக்கால் மூன்றுபாவிற்குங் கூறினான் இதற்குக் கூறியதிலனெனக் குன்றக் கூற (665) லென்னுங் குற்றமாமென்பது. இதனை மேல், " குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப" (தொல். செய்.57) என உறழ்நிலை ஒருவாற்றானே கூறுமென்பது. அச்சூத்திரத்தான் முச்சீரும் உறழ்ப வென்று கொள்ப வெனின், அஃதே கருத்தாயின் இருசீரும் முச்சீரும் வஞ்சிக்கென்ப வென்று உடனோதுவான்மன் ஆசிரியனென மறுக்க. (45) வஞ்சிச்சீர் எழுத்தின் சிறுமைக்கு எல்லை 358. தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே. இது, மேற்கூறிய வஞ்சியடிக்கண் வரும் இருசீர்க்கும் பெருமைக் கெல்லை 'நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்' (தொல்.செய். 42) என்று கூறினான்; ஈண்டு அவை மூன்றெழுத்திற் சுருங்காவெனச் சுருக்கத்திற் கெல்லை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியடிச்சீர் மூன்றெழுத்துச் சிறுமை பெறும் எ-று. சிறுமைக் கெல்லை வஞ்சிச்சீர்க்கல்லது இன்மையின் இதனை ' வஞ்சி யடியே யிருசீர்த் தாகும் ' (தொல்.செய்.45) என்றதன்பின் வைத்தானென்பது. இது முச்சீர்க்குரித் தன்மையானும் மூன்றெழுத்தி னிழிந்து வரும் வஞ்சியுரிச்சீர் பெரும்பான்மையும் முச் சீரடிக்கு உரிமையானும் இதன்பின், ' முச்சீ ரானும் வருமிட னுடைத்து' (தொல்.செய். 47) என்றானென்பது. " கொன்றுகோடுநீடு கொலைக்களிறுகடாம்" என்புழி, இருசீரடி முதற்கண் மூவெழுத்தான் வஞ்சியுரிச்சீர் வந்தது. பிறவும் அன்ன, ' நுந்தைகாடு' என ஈரெழுத்தானும் வஞ்சியுரிச்சீர் வந்தவாறு. (46) முச்சீர்அடி வஞ்சிப்பா 359 முச்சீ ரானும் வருமிட னுடைத்தே. இஃது ஒழிந்த வியநிலை வஞ்சி கூறுகின்றது. (இ-ள்.) வஞ்சியடி முச்சீரானும் வரப்பெறும் எ-று. 'இடனுடைத்து' என்றதனான் இஃது உறழும் அடிக்கண்ணதன்று என்றவாறு. மற்று இருசீரடி வஞ்சிக்கும் இத்துணையென அடிவிரியுமாறு கூறியதிலனாகலின், இதற்கே வரையறை யின்றென்றது என்னையெனின், இருசீரடிக்காயின் ஒருவாற்றான் உறழ்ச்சி கூறி வரையறுப்பதோ ராறு கூறினான் ; இதற்கு அன்னதூஉம் இன்றென்பது. மற்று உறழுமடி இல்வழி வஞ்சியடி இருசீர்த்தாகப்பெறாதோ வெனின், அதற்கன்றே முச்சீரானும், வருமென்று உம்மை கூறி இருசீரடியுந் தழீஇக் கொண்டு ' இடனுடைத்து' என வேறுபடுப்பானாயிற் றென்பது. இவ்விரண்டனையும் வஞ்சியடியென வரையாது கூறவே, அவற்றான் வேறுவேறு வருதலும் அவை மயங்கி வருதலுமுடைத்து வஞ்சிப்பாட்டென்பதும் பெறுதும். இக்கருத்தானே அவற்றைக் குறளடிவஞ்சி யெனவுஞ் சிந்தடிவஞ்சியெனவும் மயக்கடி வஞ்சி யெனவுஞ் சொல்லுப. சிந்தடியான் வருதல் சிறுபான்மையெனக் கொள்க. (47) வஞ்சியுள் அசை கூன்ஆதல் 360. அசைகூன் ஆகும் அவ்வயி னான. இதுவும், அதற்கெய்தியதொரு விதி. (இ-ள்) மேற்கூறிய வஞ்சியடி இரண்டன்கண்ணும் நான்கசையுங் கூனாகி வரப்பெறும் எ-று. எனவே, அடியெனப்பட்ட இருசீர்க்கும் முச்சீர்க்கும் அசை கூட்டிக் கொண்டு சொல்லப்படா வென்றவாறு. அவை, "வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப் போன்றன" (புறம். 4) எனவும், "அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன" எனவும். "வண்டு, மலர்சேர்ந்து வரிபாடின" எனவும், "களிறு, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டா னுயிருண்ணுங் கூற்றுப்போன்றன" (புறம்.4) எனவும் முறையே நான்கசையுங் கூனாயின. இனி, இடையும் இறுதியுங் கூனா மென்பாருமுளர். அது வஞ்சித் தூக்கு இரண்டு கொள்ள வருமாயின் அமையுமென்பது என்றார்க்கு. 'வாள் வலந்தர' என்பதனை, ஒரு சீராகக் கோடுமெனின், 'யாத்தசீர்' என்றதனான், வலந்தருதல் வாள்மேற்சென்று, வருகின்ற பயனிலை நின்று வற்றுமென்பது. (48) நேரடிக்குச் சீர் கூன்ஆதல் 361. சீர்கூ னாதல் நேரடிக் குரித்தே. இஃது, எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) தளைவகையானுஞ் சீர்வகையானும் நின்ற நேரடிக்காயின் அசை கூனாகாது சீர் கூனாகும் எ-று. "அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே" (குறுந். 216) எனவும், "உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்" எனவும், 'அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும்' (கலி. 39) எனவும் இவை மூன்று பாவினும் அளவடிக்கட் சீர் கூனாயினவாறு. என்றார்க்கு, நேர்பசை நிரைபசைகளையுஞ் சீர்நிலை பெறு மென்றானாக லின் அவற்றையுஞ், "சீர் கூனாத னேரடிக் குரித்தே" என்றதனானே கொள்வலெனின், அசைச்சீரினை வாளாது சீரென்னா னென்பது, "சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது" (தொல். செய். 41) என்றவழிக் கூறியவதனான் அறிக. அசைச்சீரினை வாளாது சீரென் னாமைக்கு மேலைச்சூத்திரமும் இச்சூத்திரமுந்தாமே கரியாயின வென்பது. என்றார்க்கு, இவற்றையும் முதற்கண்ணே காட்டியதென்னை? சூத்திரத்துள் அவ்வாறு வைத்துரைத்த தில்லையாலெனின், ஏற்புழிக் கோடலென்பத னான் 'முதற்கணின்று' என்பது கொள்ளப்படும். இக்கருத்தானே வஞ்சிப்பாவிற்கும் அவ்வாறே கொள்க. (49) ஐவகை அடியும் 625 அடிகள் ஆமாறு 362. ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்த எழுபது வகைமையின் வழுவில ஆகி யறுநூற் றிருபத் தைந்தா கும்மே. இது, முன்னர்ச் சிறப்புடைத்தென வேண்டிய நாற்சீரடியினைக் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி யென வகுத்தமையாமாறு கூறினான் (தொல்.செய். 36,37,38,39,40), இனி அறுநூற்றிருபத்தைந்தென அவை பட்ட விகற்பமுங் கூறியவாறு. (இ-ள்.) மேற்கூறிய ஐவகை யடியினையும் விரிக்குங்காலைப் பொருள் வகை யமைந்த பதினேழ்நிலத்து எழுபதுவகைக் குற்ற நீங்கி அறுநூற் றிருபத்தைந்தாம் எ-று. எனவே, பதினேழ்நிலத் தேறினும், எழுபதுவகைக் குற்றம் விரவச் செயினும் அறுநூற்றிருபத்தைந் தெனப்படா வென்பதாம். பதினேழ் நிலனும் ஆசிரியம் பெறுமென்பதூஉம், வெண்பாவுங் கலிப்பாவும் ஒரோவொன்று எட்டுநிலம் பெறுமென்பதூஉம் முன்னர்ச் சொல்லுதும். அவை மூன்றுந் தொகுப்ப முப்பத்துமூன்று நிலனாயின. வெள்ளை நிலம் பத்தென்பார்க்கு முப்பத்தைந்து நிலனாம். எழுபது கூற்று வழுவெனப்பட்டன தளைவழு. தளைவழுவாவன ஆசிரியநிலம் பதினேழனுள் வெண்டளையுங் கலித்தளையுமாகி வேற்றுத்தளை தட்ப முப்பத்துநான்கு தளை வழுவாம். வெள்ளை நிலம் பத்தினும் ஆசிரியத் தளை பத்துங் கலித்தளை பத்துந் தட்ப இருபது தளைவழுவாம். இனிக் கலிநில மெட்டனுள் ஆசிரியத்தளை எட்டுங் கலித்தளை எட்டுந் தட்பப் பதினாறு தளை வழுவாம். இவையெல்லாந் தொகுப்ப முப்பத்தைந்து நிலத்தும் ஒன்றிரண்டுசெய்து, எழுபது தளைவழுவாயினவாறு. இது வெள்ளை நிலம் பத்தென்பாருரை. அது பொருந்தாது. என்னை? ஆசிரியத்து நாலெழுத்தடியுள் இரண்டு தளைவழுவுங் காட்டுகவெனின் அவர்க்கு அவை காட்டலரிய. குறிப்பிசை செய்து காட்டின் அது கூறப்பட்ட உறுப்பினுளின் றென்றவாறு. எடுத்தோதிய எழுத்து முதல் உறுப்பினான் வந்த அடிக்கண்ணே காட்டா தொழிதலின் அது நூன்மாறுகோளாம். அல்லதூஉம், அவ்வாறு தளை கொள்ளின் முழுவதுங் குறிப்பிசையானே வரும் அடியும், ஓரெழுத்தடி முதன் மூன்றுநிலனுங் கொள்ளல் வேண்டும். கொள்ளவே, நிலம் இருபத் தொன்றாகலுங், காட்டுந் தளைவழுத் தொண்ணூற்று நான்காகலும் பெற்று, ஞாயிறு வரகுவண்டு வண்டு வண்டு என்பது கலித்தளை தட்ப ஆசிரியவடி அன்றாவான் செல்லுமெனவுங் கூறி மறுக்க. இனி, ஆசிரியத்துட் கலித்தளை தட்குங்கால் அவர்தாந் தளை வேண்டுமாற்றான் வெண்சீர், நிற்ப இறுதி நிரை வரவேண்டுமாகலானுங், கட்டளையடிக்கண் வெண்சீர் வருமென்றிலனாகலானும், "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே' (தொல். செய். 29) என்பதனான் இயற்சீரை வெண்சீராக்கிக்கொள்ளினும் அச்சூத்திரத்துக்கு அவ்வாறு பொருளுரைப்பிற் படுங் குற்றம் ஆண்டுக் கூறினாமாகலானும், அது நிரம்பாதென்பது. அற்றன்றியும், ஓரெழுத்து முதலிய நிலங்கள் ஒரோநிலத்து இரண்டும் மூன்றுந் தளைவழுக் காட்டலாமாகலின் எழுபது வகையின வழுவெனலுமாகாது என்பது, இனி, 'அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய' (370) என்றும் எடுந்தோத்துக் கிடப்ப, இலேசினுள் இரண்டு நிலன் ஏற்றி வெள்ளை நிலம் பத்து என்றும் ஆகாது; என்னை? 'அளவடி மிகுதி உளப்படத் தோன்றி இரு நெடில் அடியும் கலியிற்கு உரிய' (371) என ஓதினான், இதனினுஞ் சிறந்த வெண்பாவிற்கும் அங்ஙனம் ஓதுவான் மன் ஆசிரியன், அதுவே கருத்தாயினென்பது. அல்லதூஉங், கலிப்பாவினுள் வெண் சீரொன்றினுங் கலியோசை பிறக்குமென்று பதினேழெழுத்தடியான் வந்த வெண்பாவடியினைத் தாமுங் களைபவாகலானும் அது கூறி நிரம்பா தென்பது. மற்றென்னை தளைகொள்ளுமாறெனின், ஆசிரியத்துள் இயற்சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்குமென இருபத்தேழாகி, 'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே . குன்றலு மிகுதலும்' (தொல். செய். 48) இன்றி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்தசீர் இருபத்து மூன்றும் வெண்சீர் நான்கனொடுந் தலைப் பெய்ய அவையும் அவ்வாறே இருபத்தேழாம். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற்சீர் பதினாறும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என இருபத்து நான்காம். இவை மூன்று பகுதியுந் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள், ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கனையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கனையும் ஈண்டுத் தளைகொள்ளுங்கால், ,இயற்சீர்ப் பாற்படுத்து அடக்குகவென்று ஆண்டுக் (340) கூறினமையின், ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற் படுத்தடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ஙனங் கொள்ளப்பட்ட சீர் ஒன்றொன்றனோடு தட்குங்கால் அவ்வெழு பது வகையானு மன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி, 'எழுபதுவகை மையின் வழுவிலவாகி' யென்றானென்பது. அவை தட்குமாறு முன்னர்ச் சொல்லுதும். அங்ஙனந் தளை சிதையா அடி அறுநூற்றிருபத்தைந்தும் மூன்று பாவிற்கும் உரிய பகுதியவாம். யாங்ஙனம்? ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றும், கலியடி நூற் றிருபது மென அறுநூற்றிருபத்தைந்தாம். 'மெய்வகை யமைந்த' என்றத னான் நான்கு சீருள்ளும் உறழ்கின்ற சீரினை அடி முதற்கண்ணே வெளிப் பட வைத்து அச்சீரின் அடியாக்கி உறழப்படுமென்பது கொள்க. அல்லாக் கால் இடையும் இறுதியும் வைத்துறழின் முதற்கணின்றதொரு சீர் இரண்டான் அடியாகியும் அவ்வடி மயங்குமாகலான் அது மயங்கக் கூறலென்னுங் குற்றமாமென மறுக்க. " எள்ளற்ற முந்நூற் றிருபத்து நான்ககவல் வெள்ளைக்கு நூற்றெண்பத் தொன்றாகுந் - துள்ளல் நவையறு நூற்றிருப தாமடி நாடின் அவையறு நூற்றிருபத் தைந்து." ஆசிரியத்துள் வருமெனப்பட்ட சீர் இருபத்தேழும் ஒரோ வொன்று பன்னிரண்டாயுறழ அகவலடி முந்நூற்றிருபத்து நான்காம். இது பயனில் வெளி. " நால்வே றுரியசைச்சீர் நால்வே றசைவருஞ்சீர் பால்வேறு பட்டியற்சீர் பத்தொன்ப தாக இருபஃதேழ் சீரகவற் கீரிரண் டாதி இருப தெழுத்தளவு மேற்று" " ஆசிரியப் பாவினான் கைந்தாறே ழெட்டொன்பது ஆதி நிலமாறா மைஞ்சீரா னீறு நிரையாஞ்சீர் நேரசைச் சீர்க்கொன்றொன் றேற்ற வரையாதொன் றேறிற்றே வந்து." ஒரெழுத்துச்சீரும் ஒரெழுத்தசைச்சீருஞ் சுருக்கத்திற் கெல்லை யாகிய சீராகலான் அவை சுருக்கத்திற்கு எல்லையாகிய நாலெழுத்தடி முதற் பதினைந்தெழுத்தடி யளவும் உயரும். அவை '`நுந்தை வண்டு வண்டு வண்டு" எனவும், 'நுந்தை காருருமு நனிமுழவு நனிமுழவு' எனவும், ஒரெழுத்துத் தேமாவடி பன்னிரண்டற்கும் முதலடியும் முடிந்த வடியுங் கண்டுகொள்க. 'வண்டு வண்டு வண்டு வண்டு' எனவும், வண்டு காருருமு நனிமுழவு நனிமுழவு எனவும், இவை வண்டு முதலும் முடிவுங் காட்டிய அடி. இனி, நேரீற்று ஈரெழுத்துச்சீர் ஒன்றும் ஐந்தெழுத்தடி முதலாகவும், பதினாறெழுத்தடி யிறுதியாகவும் வரும். அது 1தேமா, 2வண்டு, 3வண்டு, 4வண்டு- எனவும், 1தேமா, 2காருருமு, 3நனிமுழவு, 4நனிமுழவு எனவும் வரும். 1மின்னு 2வரகு என்னும் ஈரெழுத்தசைச் சீரிரண்டும் அவ்வாறே யுறழும். நிரையீற் றீரெழுத்துச்சீர் மூன்றும் ஆறெழுத்தடி முதற் பதினேழெழுத்தடியளவும் உறழும். அவை, 1ஞாயிறு, 2போதுபூ, 3போரேறு என்பவற்றை முதனிறீஇ 1வரகு 2வண்டு 3வண்டு எனவும், 1நனிமுழவு 2நனிமுழவு 3நனிமுழவு எனவும் தந்து இங்ஙனமாயினவாறு கண்டு கொள்க. இனி, மூன்றெழுத்தான் வருவன ஒன்பது சீரும் அசைச்சீருமெனப் பத்து. அவை, 1புளிமா, 2பாதிரி, 3வலியது, 4மேவுசீர், 5நன்னாணு, 6பூமருது, 7கடியாறு, 8விறகுதீ, 9நீடுகொடி, 10அரவு என்பன. இவற்றுட் 1புளிமாவும் 10அரவும் ஆறெழுத்தடி முதலாகப் பதினேழெழுத் தடியளவும் உறழ்ந்து ஓரொன்று பன்னிரண்டு நிலம்பெறும். ஒழிந்தசீர் எட்டும் நிரையீறாகலின் ஏழெழுத்தாதி பதினெட்டெழுத் தடியளவும் உறழும்; அவை 1புளிமா, 2வண்டு, 3வண்டு, 4வண்டு எனவும், 1புளிமா, 2காருமுரு, 3நனிமுழவு, 4நனிமுழவு எனவும், 1பாதிரி, 2வரகு, 3வண்டு, 4வண்டு எனவும், 1பாதிரி, 2நனிமுழவு, 3நனிமுழவு, 4நனிமுழவு எனவும், உறழ்ந்தவழிப் புளிமா ஆறெழுத்து முதற் பதினேழன்காறும் உறழ்ந்தவாறும் பாதிரி ஏழுத்து முதற் பதினெட்டன்காறும் உறழ்ந்த வாறுங் கண்டுகொள்க. ஒழிந்தனவும் அன்ன. இனி, நாலெழுத்துச் சீர் எழுவகைய. அவை 1கணவிரி, 2காருருமு, 3பெருநாணு, 4உருமுத்தீ 5மழகளிறு, 6நாணுத்தளை 7உரறுபுலி என்பன. இவையெல்லாம் எட்டெழுத்தடி முதற் பத்தொன்பதளவும் உயர்ந்தே ஒரோவொன்று பன்னிரண்டடிபெறும். அவை 1கணவிரி, 2 வரகு, 3 வண்டு, 4 வண்டு எனவும்' 1கணவிரி, 2நரையுருமு, 3நரையுருமு, 4நரையுருமு எனவும் வரும். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஐந்தெழுத்துச்சீர், 1நரையுருமு, 2விரவுகொடி என இரண்டு. இவை ஒன்பது முதல் இருபதின்காறும் உயரும். அவை 1நரையுருமு, 2வரகு, 3வண்டு, 4வண்டு எனவும், "கலனளவு கலனளவு கலனளவு கலனளவு" எனவும் வரும். விரவுகொடிக்கும் இஃதொக்கும். இவ்வாற்றான் ஒரெழுத்துச் சீரிரண்டும், ஈரெழுத்துச் சீர் ஆறும், மூவெழுத்துச் சீர் பத்தும், நாலெழுத்துச் சீர் ஏழும், ஐயெழுத்துச் சீர் இரண்டுமாகச் சீர் இருபத்தேழினையும் பன்னிரண்டிற் பெருக்கிப் பெற்ற ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும் பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டுகொள்க. இனி, வெண்பாவடி நூற்றெண்பத்தொன்றும் உறழுங்கால் ஏழெழுத்தடியும் எட்டெழுத்தடியும் ஒன்பதெழுத்தடியும் பத்தெழுத் தடியும் முதலாய் நிற்பப் பதினான்கெழுத்தடியளவும் ஏறி ஒரோசீர் எட்டடி பெறுவனவும் ஏழடி பெறுவனவும் ஆறடி பெறுவனவும் ஐந்தடி பெறுவன வுமாகி முறையானே வருமென்பது. "இயற்சீ ரசைச்சீ ரிருபத்து மூன்றோடு உரிச்சீர்நான் கேற்றச்சீ ரொன்பதிற்று மூன்று மயக்கறு வெள்ளைக்க ணேழே தொடங்கி உயர்ச்சி பதினான்கென் றொட்டு.'' "நாலெழுத்துச் சீரெல்லா மேழெழுத்தா னாசிரியத்து ஆதிபெறா தொன்றேறிற் றாங்கதுபோ - dhbyG¤jh‹ வந்தசீர் வெண்பாவிற் பத்தெழுத்தான் வாராவாய் ஐஞ்சீர்க்கு நான்கா முதல்." 1நுந்தை, 2வண்டு, 3ஞாயிறு 4போதுபூ, 5போரேறு என ஐந்தும் ஏழெழுத் தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஒரோவொன்று எட்டடி யுறழப் பெற்ற அடி நாற்பதாம். "ஞாயிறு போதுபூ போரேறு நுந்தைவண்டு ஏழாதி யெட்டா மடி" 1தேமா, 2மின்னு, 3வரகு, 4பாதிரி, 5வலியது, 6மேவுசீர், 7நன்னாணு, 8பூமருது, 9கடியாறு, 10விறகுதீ, 11மாசெல்வாய் எனப் பதினொன்றும் எட்டெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் ஓரொன்று ஏழடி யுறழப்பெற்ற அடி எழுபத்தேழாம். "மின்னு வரகு வலியது மேவுசீர் நன்னாணு பாதிரிப் பூமருதே யாறுதீ மன்னாத மாசெல்வாய் தேமா வெனப்பதினோர் எண்ணாகு மெட்டாதி யேழ்." 1புளிமா, 2அரவு, 3கணவிரி, 4காருருமு, 5பெருவேணு, 6உருமுத்தீ, 7மழகளிறு, 8மாவருவாய், 9புலிசெல்வாய் என இவை ஒன்பதுசீரும் ஒன்ப தெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடியளவும் உயர்ந்து ஒரோவொன்று ஆறடி யுறழப்பெற்ற அடி ஐம்பத்து நான்காம். "அரவு புளிமா கணவிரி வேணு புலிசெல்வாய் காருருமுப் பேருருமுத் தீயே மழகளிறு மாவருவா யொன்பது மொன்பது எழுவா யிருமூன் றெனல்" 1நனிமுழவு, 2புலிவருவாய் என்னும் இரண்டுசீரும் பத்தெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஒரோவொன்று ஐந்தடி யுறழப் பெற்ற அடி பத்தாயின. "புலிவரு வாயும் நனிமுழவு மென்னுமிவை ஈரைந்தீ ரேழுற்றீ ரைந்து" இவையெல்லாந் தொகுப்ப வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றாயின. அவற்றுட் சில வருமாறு: 1நுந்தை 2வரகு 3வரகு 4வரகு எனவும், 1நுந்தை 2நனிமுழவு 3காருருமு 4காருருமு எனவும், இவை ஏழெழுத்தடி முதற் பதினான்கெழுத்தளவும் நுந்தை வந்தவாறு. வண்டென்பதற்கும் இஃதொக்கும். 1ஞாயிறு 2வண்டு 3வரகு 4வரகு எனவும், 1ஞாயிறு 2காருருமு 3மாவரு வாய் 4காருருமு எனவும், இவை ஏழெழுத்தடியும் பதினான்கெழுத்தடியு மாயினவாறு. 1போதுபூ 2போரேறு என்பனவற்றிற்கும் இஃதொக்கும். 1தேமா 2வரகு 3வரகு 4வரகு எனவும், 1தேமா 2நனிமுழவு 3காருருமு 4பாதிரி எனவும், எட்டெழுத்தடி முதலாகப் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து தேமா ஏழடிபெற்றது. ஒழிந்த பத்துச்சீர்க்கும் இஃதொக்கும். 1புளிமா 2வரகு 3வரகு 4வரகு எனவும், 1புளிமா 2புலிவருவாய் 3காருருமு 4தேமா எனவும், இவை ஒன்பதெழுத்தடி முதலாகப் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஆறடிபெற்றவாறு. ஒழிந்த எட்டுச்சீர்க்கும் இஃதொக்கும். 1நனிமுழவு 2வண்டு 3வரகு 4வரகு எனவும், 1நனிமுழவு 2காருருமு 3பாதிரி 4தேமா எனவும், இவை பத்தெழுத்தடி முதற் பதினான்கெழுத்தளவும் ஏறி ஐயெழுத்து நனிமுழவு ஐந்தடி பெற்றது. புலிவருவாய்க்கும் இஃதொக்கும். இவற்றுக்கெல்லாம் பதினான்கெழுத்தின் ஏறியக்காற் செப்ப லோசை திரிபுடையதென்பது வல்லார்வாய்க் கேட்டு உணர்க; என்னை? "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே" (தொல். செய். 11) என்றமையின். "அடியி னுட்ப மறிவருங் குரைத்தே" எனப் பிறருஞ் சொல்லுப. இனிக் கலியடிக்குரிய சீர் இருபத்துநான்கும் ஒரோவொன்று ஐந்தடி யுறழ அதன் அடித்தொகை நூற்றிருபதாம். "அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய' (தொல். செய். 59) என்பதனான், பதின்மூன்றெழுத்தும் பதினான்கெழுத்தும் பதினைந்தெழுத் தும் பதினாறெழுத்தும் முதலாக ஒரோவொன்று ஐந்தடி உறழ்ந்து கலியடியளவு பதினேழெழுத்து முதல் இருபதின்காறும் உயருமென்றது. "நிரையீற் றியற்சீர் பதினாறு மேனை நிரையீற் றகவற்சீர் நான்கு மொருநான்கு வெண்சீருந் துள்ளற்கு வெவ்வே றொருசீரான் ஐந்தா முறழ்ந்த வடி." "ஈரெழுத்துச் சீர்பதின்மூன் றாகி யிருபதின்காறு ஓதியசீர் நான்கற் குயர்வு." 1ஞாயிறு, 2போதுபூ, 3போரேறு என்னும் ஈரெழுத்துச்சீர் மூன்றும் பதின்மூன்றெ ழுத்து முதற் பதினேழெழுத்து வரை ஒரோவொன்று ஐந்தடி யுறழும். 1பாதிரி, 2வலியது, 3மேவுசீர், 4நன்னாணு , 5பூமருது, 6கடியாறு, 7விறகுதீ, 8மாசெல்வாய், 9நீடுகொடி என மூவெழுத்துச்சீர் ஒன்பதும் பதினான்கெழுத்து முதல் பதினெட்டளவும் ஒரோவொன்று ஐந்தடி யுறழும். 1கணவிரி, 2காருருமு, 3பெருநாணு, 4உருமுத்தீ, 5மழகளிறு, 6மாவரு வாய், 7புலிசெல்வாய், 8நாணுவளை, 9உரறுபுலி என நாலெழுத்துச்சீர் ஒன்பதும் பதினைந் தெழுத்து முதற் பத்தொன்பதளவும் ஒரோவொன்று ஐந்தடி யுறழும். 1நரையுருமு, 2புலிவருவாய், 3விரவுகொடி என்னும் ஐந்தெழுத்துச்சீர் மூன்றும் பதினாறெழுத்தடிமுதல் இருபதெழுத்தடி யளவும் உயர்ந்து ஒரோ வொன்று ஐந்தடி பெறும். இவ்வாற்றாற் கட்டளைக் கலியடி நூற்றிருபதாமென்பது. அவற்றுட் சில வருமாறு ; 1ஞாயிறு 2புலிசெல்வாய் 3புலிசெல்வாய் 4மா செல்வாய் எனவும், 1ஞாயிறு 2புலிவருவாய் 3புலிவருவாய் 4புலிவருவாய் எனவும் முதலும் முடிவும் பதின்மூன்றும் பதினேழுமாகி ஈரெழுத்துப் பாதிரி ஐந்தடி யுறழ்ந்தவாறு. 1 ஞாயிறு 2 புலிவருவாய் என முதற்கண் ஆசிரியத் தளை தட்டதென்னாமோவெனின், என்னாம்; 'நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்பினும் வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப' (தொல். செய். 60) என்புழி அதனைக் கலித்தளை யென்னுமாகலின்.. 3புலிசெல்வாய் 4மாசெல் வாய் என ஈற்றுக்கண் வெண்டளை வந்த தென்னாமோவெனின், என்னாம்; 'வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே' (தொல். செய்.29) என்றானாகலின். ஒழிந்த மூவெழுத்துச் சீரும், நாலெழுத்துச் சீரும், ஐயெழுத்துச்சீரும் அவ்வாறே உறழ்ந்துகொள்க. (50) நாற்சீர்அடி போல ஏனைய விரிக்கப்படாமை 363. ஆங்கனம் விரிப்பின் அளவிறந் தனவே பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை. இஃது ஒழிந்த அடி இந்நாற்சீரடி போல உறழ்க வென்றார்க்கு அவை யுறழாவென உறழாமைக்குக் காரணங் கூறுகின்றது. (இ-ள்.) அந்நாற்சீரடிபோல் மற்றையடிகளையும் விரிப்பின், அஃது இலக்கணக் கட்டளையின் இகந்துபட்டதாம், அப்பகுதியெல்லாம் அறிந்தோர் விரிக்குங் காலத்து எ-று. அளவிறந்தன, எண்ணிறந்தன. அஃது இலக்கணங் கூறுமாறன் றென்றவாறு. அஃதெற்றாற் பெறுதுமெனின், முதனூல் செய்த ஆசிரியர் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுது மென்றவாறு. எனவே என் சொல்லப்பட்டதாம், அங்ஙனம் வரையாது சிறப்புடை யனவற்றுக்குஞ் சிறப்பில்லனவற்றுக்கும் ஒருங்கு இலக்கணங் கூறின்? அவை யெல்லாம் எடுத்தோதப்பெறாத இலக்கணத்தவாம்; அதனால் வரையறை யுடையனவற்றுக்கன்றி, வாளாதே பரந்துபட்ட வகையான் இலக்கணங் கூறல் பயனில் கூற்றாமெனவும், அது கருதி இதன் முதனூல் செய்த ஆசிரியருங் கூறிற்றிலரெனவுங் கூறியவாறு வடநூலாசிரியர் ஆறுவகைப் பிரத்தியங்களான் எழுத்துக்களைக் குருவும் இலகுவுமென இருகூறு செய்து உறழ்ந்து பெருக்கிக் காட்டுவதோ ராறுமுண்டு. அவரும் இருபத்தாறெழுத்தளவும் உறழ்ந்து காட்டி, ஒழிந்தன ஞெகிழ்ந்துபோவர். அவ்வாறே சீர்களையுங் குருவும் இலகுவும் போல இருசீரடி இத்துணையெனப் பெருக்கவும் ஒழிந்தனவும் இவ்வாறே பெருக்கவுஞ் சிதைந்ததில்லை. அங்ஙனம் பெருக்குங்காலும் ஓரடிக்குரிய சீர் பத்தும் நூறும் ஆயிரமுமாக வைத்து உறழ்ந்தக்காலும் வருவதொன் றில்லை. அங்ஙனம் உறழினும், இத்துணைச் சீரான் வந்த அடிக்கே உறழ்ச்சி கூறுவதென்று ஓரெல்லை கூறிக்கொள்ளல் வேண்டும். கொள்ளவே, எத்துணையிடஞ் சென்றக்காலும், இத்துணையென வரையறைப்பாடு உடையனவல்ல. அவ்வரையறை இன்மையின் அதனை அளவில வென்பதற் கொரு காரணங் கூறல்வேண்டு மாதலான் அது நோக்கி நாற்சீரடி சிறப்புடைத்தென வேறுபல காரணங்கூறி, அதற்கே வரையறைகூறி அல்லனவற்றுக்கட் சொல்லப்படா தென்றான் இச்சூத்திரத்தா னென்பது. அஃதேல், அவை சிறப்புடைய வாயினமைக்குக் காரணங் கூறியவாற்றாற் சான்றோர் செய்யுளுட் பயின்று வரல் வேண்டும்பிறவெனின், இந்நூல் செய்த காலத்துத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்க ளாற் பெறுதுமென்பது. இதன் முதனூல் செய்த ஆசிரியனாற் செய்யப் பட்ட யாழ்நூலுள்ளுஞ் சாதியும் உவமத்துருவுந் திருவிரியிசையுமெனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப்பட்டுச் சிறப்படைவன சாதிப்பாட்டுக் களே. அவை இக்காலத்துப் பயின்றிலவெனினும் மற்றையவற்றோடு ஒக்குமெனப்படா வென்பது. அல்லதூஉம், உலகத்து மக்கட்பிறவி பலவாயினும் நால்வகை வருணமென்றே கூறுப, அவர் வரையறை யிலக்கணத்தா ராகலி னென்பது. இனி, அவருள்ளும் அந்தணரும் வேளாளரும் போல இடையிருவகை யோரும் பயின்றிலரெனினும் சிறப்பிலராகாரென்பதுமது. இனிக் கடைச்சங்கத்தார் அறுநூற்றிருபத்தைந்தடியும் பயின்றுவரச் செய்யுள் செய்திலராலெனின், கட்டளையடியாற் செய்தவல்லன வேண்டா வென்பதோர் ஆணையுடையரல்லர். உடையவரும் இவ்வாசிரிய னாற் சிறப்புடைத்தென்று சொல்லப்பட்ட அளவடியாற் செய்யுள் செய்தா ரென்பது. இனிப், பிற்காலத்தார் அளவடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்திலர்என்று, கடைச்சங்கத்தார் செய்யுள் செய்த அடியுஞ் சிறப்பில வாமோ வென்பது. வஞ்சியடிக்கும் இங்ஙனம் வரையறை யின்மைய தொக்கும். அது முன்னர்ச் சொல்லுதும். (51) ஆசிரிய அடிகள் 364. ஐவகை அடியும் ஆசிரியக் குரிய. இஃது, எய்தாததெய்துவித்தது; மேல் வகுக்கப்பட்ட அடியினை இன்ன பாவிற்குரிய அடி இவை யென்று கூறாதான் அது கூறினமையின். (இ-ள்.) நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியத்திற்குரிய எ-று. ''மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்த . . . . . அறுநூற் றிருபத் தைந்தாகும்.'' (தொல்.செய்.50) என்றான், அதனை ஈண்டுப் போத்தந்து ஆசிரியத்திற்கு எய்துவித்தவாறு. அவற்றுக்குச் செய்யுள் ஐந்தடியுங் கூறியவழிக் காட்டப்பட்டது. மற்று. 'மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்' (362) எனவே இதுவும் அடங்காதோவெனின், அடங்காது; பாத்தோன்றும் அந் நிலங்கள் பகுத்துக்கொள்ளப் பொதுவகையான் ஆண்டோதினா னென்பது. மற்றும் ஐவகையடியும் ஓராசிரியத்துக்கண் வரல்வேண்டுமோ வெனின், அன்னதொரு வரையறை யுண்டே? வரையாது கூறினமையின் அவை யெல்லா வற்றானும் வருக; வருங்கால் ஐந்தும் ஆசிரியத்துக்கு உரிய வென்பதே கருத்து. ஒழிந்த பாவிற்கும் நிலங் கூறானோவெனின், ஆசிரியம் பதினேழ் நிலனுமுடைமையின் அக்கூறிய பதினேழ்நிலனுந் தளை விரவுதலின் தளை அதற்குப் பின் கூறித் தளையதிகாரம் பட்டமையின் அவற்றின் பின் ஒழிந்த பாவிற்கு நிலனுங் கூறுமென்பது. மற்று, ஆசிரியமென்பது மகரவீறாதலின் "மஃகான் புள்ளிமுன் னத்தே சாரியை" (தொல். எழுத். உருபு. 13) என்பதனான் அத்துச்சாரியை பெறல் வேண்டுமெனின், அது செய்யுள் விகார மென்பாருமுளர். அற்றன்று, ஆண்டு நின்றது நான்காமுருபாயினன்றே அது கடாவாவது? அதனை ஏழாவதன் பொருண்மைக்கண் அக்குச்சாரியை ஈறு திரியாது வந்ததென்று கொள்ளப்படும். (52) கட்டளை அல்லா ஆசிரியஅடிக்கண் தளைவிரவி வருமாறு 365. விராஅய் வரினும் ஒரூஉநிலை யிலவே. இஃது, எய்திய திகந்துபடாமைக் காக்கின்றது. மெய்வகை யமைந்த பதினேழ் நிலமெனவும், எழுபது வகையின் வழுவெனவும், மேனிறுத்த (362) முறையானே ஆசிரியத்திற்குப் பதினேழ் நிலமாமாறு கூறினான். இனி, எழுபது வகையின் வழுவாயின், அப்பதினேழ் நிலத்து யாண்டு மாகாதென்பது பட்டதனை இகந்துபடாமைக் கூறினமையின். (இ-ள்.) தளை விரவி வரினும் ஒருவப்படா எ-று. மற்று, இதனைத் தளை விரவி வரினுங் கட்டளையடியாமெனப் புறனடுத்தானென்று கோடுமோ, தளைவிரவிற் கட்டளையடி யாகா தென்று கோடுமோவெனின், தளைமயங்கா தனவே தளைவகையடியென வும் அல்லன கட்டளையடி யாகாவெனவும் கோடுமென்பது. அஃதேல் தளை மயங்கின அடிக்கும் பதினேழ் நிலனுங் கோடுமோ வெனின், கோடு மன்றே? 'விராய்வரினும்' என்ற உம்மை இறந்தது தழீஇயிற்றாகலி னென்பது. (53) ஆசிரியத்துள் நிரையீற்று உரிச்சீர் தளை பெறுதல் 366. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இன்சீர் வகையி னைந்தடிக்கு முரிய. இஃது, எய்தாத தெய்துவித்தது; என்னை? இயற்சீராற் கட்டளை யடியா மாறெல்லாம், "ஐவகை யடியு மாசிரியக் குரிய" (தொல்.செய். 52) என்னுந் துணையும் கூறிப் பின்னும், "விராஅய் வரினும் ஒரூஉநிலை யிலவே" (தொல்.செய். 53) எனக் கட்டளையடியன்றியும் அளவடி வருமெனவும் அவை பதினேழ் நிலத்த வெனவுங் கூறி, இனி உரிச்சீரானுஞ் சீர்வரையறையடி உளவென் பதூஉம், அவ்வுரிச்சீரான் தளைவகையடி உளவென்பதூஉம் அவை பதினேழ் நிலத்தின் இகந்து வாராவென்பதூஉங் கூறுகின்றமையின். (இ-ள்.) தன்சீர்வகையினும்- ஆசிரிய வுரிச்சீரானும்; அதனை அதிகாரத்தாற் கொள்ளப்படும்; தளைநிலைவகையினும் - அவ்வாசிரிய வுரிச்சீரானாகிய தளைநிலைமைப் பகுதியானும்; இன்சீர் வகையினும் -இன்சீர்ப் பகுதியானும்; ஐந்தடிக்குமுரிய- அவையும் மேற்கூறிய ஐவகை யடிக்கும் உரியவாம் எ-று. 'ஐந்தடிக்கு முரிய'வெனவே, பதினேழ் நிலத்தின் இகந்து வாரா வென்பதாம். தன்சீரென்னாது 'வகை' யென்றது, "முன்னிரை யுறினு மன்ன வாகும்" (தொல்.செய். 326) என்பதை 'வெண்பா வுரிச்சீர் ஆசிரிய வுரிச்சீர்' என்புழி உடன்கூறாது இரு பகுதியாகக் கூறிய வேறுபாடு நோக்கியென்க. அதனது பயம், வருகின்ற தளைவகைக்காயின் ஆசிரியவுரிச்சீராறுந் தளை கொள்ளப்படா, முன்னிரையீற்ற இரண்டுமல்ல தென்றவாறு. தளைநிலை வகை சிறப்புடைமையின் அது முற்கூறுகவெனின், அங்ஙனமாயினும் அறு வகைச் சீரானுஞ் சீர்வகையடி வருதல் பெரும்பான்மையாகலானும், அவற் றுள்ளும் நீடுகொடி குளிறுபுலி என்னும் இரண்டுமே பற்றித் தளைகோடல் சிறுபான்மை நோக்கியுந் தன்சீர்வகை முற்கூறப்பட்டது. அல்லதூஉந், தளை நிலைவகை முற்கூறின் அவ்வியற் சீர்த்தளைமேற் செல்லும்; அவ்வா றன்றித் தன் சீர்த்தளையே கோடற்கும் அது பிற் கூறினானென்பது, மற்றுத் தன் சீரானாவதனை இன்சீர்வகையொடு ஐந்தடிக்கு முரித்தென்றதென்னை யெனின், ஆசிரியவுரிச்சீர் நான்கும் நிரலே நின்றுழி அகவலோசை பிறவா தென்பது அறிவித்தற்கென்பது. எனவே, ஒன்றிடையிட்டும் இரண்டிடை யிட்டும் இன்சீர் வரல் வேண்டுவதாம். 'இன்சீர்வகையின்' என, இயற்சீர்களான் உரிச்சீர்களை வகுத்து நிறீஇக் கொள்ளப்படும். உ-ம் : "ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி" எனவும், "நிவந்துதோன்று களிற்றி னிலங்குகோடு புரைய" எனவும் இவை இயற்சீரொன்று இடையிட்ட ஆசிரியவுரிச்சீரான் வந்த நேரடி. "பாம்புமணி யுமிழும் பானா ளீங்குவரல்" என்பது இயற்சீரிரண்டு இடையிட்டு வந்தது. இதுவும் "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல்.செய்.11) என்பதனான் அகவலோசை வழுவினவா றறிந்துகொள்க. இனித் தன்சீரால் தளைநிலையடி வருமாறு: "ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ" (புறம். 55) எனவும், "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை" (புறம். 3) எனவும் வரும். தளைவகை யென்னாது 'நிலை' யென்றதனான், அவற்று இரண்டா சிரிய வுரிச்சீரும் அடிமுதற்கணின்று சீராவதன்றி இடை வாரா வென்பது கொள்க. தளைநிலை யென்னாது 'வகை' யென்ற தென்னையெனின், உரிச்சீரான் தளை வழங்கின் ஓரடிக்கண் இரண்டு வரின் ஓசையுண்ணா தென்பதுணர்வித்தற் கென்பது. இவையும் இன்சீர் வகையொடு வருமெனவே தன்சீர் இயற்சீரொடு தட்குமென்பதாம், அஃதேல், 'தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா' (தொல்.செய். 55) என வருகின்ற சூத்திரத்தானே தன்சீர் பெறுதுமாகலின் ஈண்டுத் தளை நிலைவகையே கூறுகவெனின், இஃது ஆசிரியத்திற்குக் கூறினான்; அது வெண்பாவிற்குக் கூறினான். அல்லாக்கால், அது மிகையாமென்பது. எனவே, தன்சீர் வகை நாலெழுத்திற் குரித்தன்றென்பதூஉம், தளைவகை யடிக் குறளடி முதன் மூன்று நிலத்திற்கும் உரித்தென்பதூஉம் உரையிற் கொள்க. "ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து முசுக்கலை யாடு நாடற்கு உரைப்பதை யெவன்கொனந் தோளே தோழீஇ" என்பது ஐந்தெழுத்தால் தன்சீரடி வந்தது. "ஆடுகொடி நுடங்கு காடு போந்து விளங்கிழை கோயிற் சேர்ந்தனம் முழங்குக வானந் தழங்குகுரல் சிறந்தே" என்பது ஏழெழுத்தால் தளை நிலையடி வந்தது. பிறவும் அன்ன. இன்சீரென்னாது 'வகை' யென்றதனான் இயற்சீர்ப்பாற் படுத்து இயற்றிக் கொள்ளப்பட்ட அசைச்சீரும் (340) இன்சீரேயாம்; தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இடையிட்டு வந்ததென்பது. இவை மேற்காட்டியவற்றுள் காணப்படும். (54) வெண்பாவிற்குச் சீர்வகையும் தளைவகையும் ஆவன 367. தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா. இது, மேல் ஆசிரியத்திற்குத் தன்சீர் வகையுந் தன்றளை வகையுங் கூறிய வழியானே வெண்பாவிற்குச் சீர்வகையுந் தளைவகையுங் கூறுகின்றது. (இ-ள்.) தன்சீர்- வெண்சீர்; உள்வழி- வெண்சீரே வருஞ்சீராகியும் வந்த வழி; என்னை? தளைவகைக்கு இரண்டுசீர் வேண்டுதலானுந் தளை வகை வேண்டாத நிலம் இது வென்கின்றானாகலானுமென்பது; தளை வகை வேண்டா - தளைவகை நிலைமை கொள்ளப்படா மற்று அவ்வடிக் கண் எ-று. எனவே, வெண்சீர்நிற்ப இயற்சீர்வந்தொன்றின் வெண்டளையா மென்பதே கருத்தாயிற்று. இஃது உய்த்துக்கொண்டுணர்தலென்னும் உத்தி வகை (665). இதனானே வெண்சீர்க்கு வெண்சீர்வந்தொன்றுவது கட்டளை யடியெனப்படாது சீர்வகையடியாமென்பது பெற்றாம். "வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல்" "வெண்சீ ரொன்றினும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான" என்றார் காக்கைபாடினியாரும். வெண்சீ ரொன்றியது வெண்டளை யாகா தென்றற்குக் காரண மென்னையெனின், "அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான" (தொல். செய்.58) என்புழி, அளவுஞ் சிந்தும் அல்லாத ஏறிய நிலமெல்லாம் வெண்பாவுங் கலிப்பாவுந் தம்மில் தளைவகை யொக்கு மென்றானாகலி னென்பது. எனவே, வெண்சீர் நான்கும் ஒன்றிவரின் அது கலிப்பாவிற்குஞ் சீர்வகை யடியா வதாயிற்று. மற்றும் வஞ்சியுரிச்சீருந் தன்சீராகலின் இன்னவாறு தளைகொள்ளு மென்னானோ வெனின், அவை தன்சீருள்வழி ஒன்றினும் ஒன்றாவாயினும், பிறசீர் வந்துழி ஒன்றினும் ஒன்றாவாயினும், வஞ்சித்தளையாகி வரையறை யின்மையானும் வஞ்சியடி அறுநூற்றிருபத்தைந்தடியுட் படாமையானும் அவை கூறானாயினான் ஆசிரியனென்பது. (55) இயற்சீர் கட்டளைஆசிரியத்துள் தட்குமாறு 368. சீரியை மருங்கின் ஓரசை யொப்பின் ஆசிரியத் தளையென்று அறியல் வேண்டும். இது, கட்டளையடிக்கண் இயற்சீர் தட்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சீர் பத்தும் பிறிதொன்றனோடு இயையுங்கால் அவை தத்தம் ஈற்றசை ஒன்றி, வருஞ்சீரின் முதலசையோடொப்ப நிற்பின், ஆசிரிய வடிக்குத் தட்கும் முறைமை யென்றறியப்படும் எ-று. 'ஒப்பின் ஆசிரியத்தளை' யெனவே, ஒவ்வாதொழியின் வெண்டளை யென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். என்னை? 'எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே' (தொல். சொல். கிளவி. 61) என்றமையின். "அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி" (பெரும்பாண். 1) என்றவழி நேரும் நிரையும் சீரியை மருங்கின் ஓரசை ஒன்றி ஆசிரியத் தளையாயின. "மல்லர்க் கடந்தா னிறம்போ லிருண்டெழுந்து" (ஐந்திணை ஐம். 1) என்புழி முதலடி இயற்சீர் ஒன்றாது வெண்டளையாயிற்று. மற்றுச் சீரியை மருங்கின் ஓரசையே வரினென்னாது 'ஒப்பின்' என்ற தென்னையெனின், உரியசை முதலும் ஈறுமாகியவழி அவை இயலசை யோடு ஒப்புமை நோக்கித் தளைகொள்ளினல்லது தம்மொடு தாம் ஒன்றுதல் கொள்ளாரென்றற்கென்பது இதனானும் பெற்றாம். போதுபூ என்பது வருஞ்சீராயவழிப் போரேறு என்பது ஓரசை யொன்றிற்றென்று ஆசிரியத் தளை யென்னாமையென்பது. இஃது, அவை நின்ற சீராயவழி நிரையீ றாதல் 'அறியல்வேண்டு' மென்னும் மிகையானுங் கொள்க. இனி, 'ஈரசை யொப்பி' னென்பது பாடமாக உரைப்பின் நேரும்நிரையும் ஒன்றி னென்றவாறுமா மெனக் கொள்க. (56) வஞ்சிஅடி உறழுமாறு 369. குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை இலவே வஞ்சிக்கு என்ப. இது, வஞ்சியடி யுறழுமாறும் அது பெறும் நிலனும் உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) நாலெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் உறழும் நிலையில வஞ்சியடிக்கு எ-று. இனி, முதலும் ஈறும் யாவெனப்படுமோ வெனின், 'தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே' (தொல். செய். 46) என்றதனான் ஆறெழுத்தடி முதலாகவும், 'நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்' (தொல். செய். 42) என்றதனாற் பன்னிரண்டெழுத்தடி யீறாகவும் உறழுமென்றவாறு. எனவே, வஞ்சி யடிக்கு நிலன் ஏழென்பது சொல்லியவாறு. அதுவே கருத்தெனின், இச் சூத்திரம் மிகையாம்பிறவெனின், அற்றன்று; வஞ்சியுரிச்சீர் மூன்றெழுத்திற் சுருங்கா, ஆறெழுத்தின் ஏறாவெனவே, நேர்நிலைவஞ்சிக்கு மூவெழுத்துச்சீர் இரண்டு வந்த இருசீரடிக்கு ஆறெழுத்து முதலாமென்ப தூஉம், ஆறெழுத்துச் சீர் இரண்டு வரிற் பன்னிரண்டெழுத்தடி ஈறாமென்ப தூஉம், பெறுதுமால் அவ்வச் சூத்திரங்களானே யெனின், ஆண்டு வஞ்சியுரிச் சீர்க்கு எழுத்து வரையறை கூறினான்; அவ்வடி இத்துணை நிலம் பெறு மென்றற்கு இது கூறல்வேண்டு மென்பது. அல்லதூஉம், அங்ஙனம் கொள்ளின் உய்த்துணர்ச்சியாம். இஃது எடுத்தோத்தாகலின் எடுத்தோத்துக் களைந்து உய்த்துணராரென்பது. இனி, இது கூறாக்காற் கட்டளையடிக் கண் இயற்சீர் வாராவென்பதூஉம் பெறலாகாதாம். ஆகவே, 'ஞாயிறு புலிசெல்சுரம்' என்பது கட்டளையடியாகியே செல் லும். வஞ்சித் தூக்கின் அது கொள்ளாமையின் அது விலக்கல் வேண்டி இது கூறினான்; என்னை? இயற்சீர் கொள்ளின் ஓரெழுத்தானாகிய இயற்சீரும் ஆண்டே கோடல் வேண்டும்; அது கொள்ளின் இச்சூத்திரத்திற்கு ஏலாமையி னென்பது. இனி, வஞ்சியுரிச்சீர் அறுபதும் இருநிலைமைப்படுவன இருபத்து நான்கும், நான்கு நிலைமைப்படுவன இருபத்தெட்டும், எட்டுநிலைமைப் படுவன எட்டுச்சீருமாகி இருநூற்றிருபத்து நான்காய் விரியும். "இரண்டுநான் கெட்டு நிலைமைய வாகித் திரண்ட நிலைவஞ்சிச் சீர்க - ளொருங்கே இருபத்து நான்கிருபத் தெட்டுட னெட்டாய் இருநூற் றிருபத்து நான்கு" அவ்வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்கனுள்ளும் ஒன்ப தெழுத்துச் சீரொன்றும், எட்டெழுத்துச்சீரொன்பதும் ஏழெழுத்துச்சீர் முப்பத்து மூன்றுமாக நாற்பத்து மூன்று வகையான் உறழும் நிலம் இல, இச்சூத்திரத்தான் ஓதிய வாற்றானென்பது. "நாலாதி யீற்றன நான்கு பதினாறன் ஆதிய வெண்சீ ரகப்பட்ட மூவைந்து பொய்ப்பினவ் வஞ்சி யடியுறழா மோனை மூவைந்து மூன்றுமூன் றென்று." "இரண்டெட்டு மூவெட்டு நாலேழா றைந்தொன்று அகன்றநாற் பஃதுநான் காறேழைம் பத்திரண்டு நான்கைந்தெட் டொன்பா னறுபஃ தொன்றுநான்கு ஆறேழு பெற்றனமூ வைந்து" "நாலெட்டே யேழெட் டறுபத் திரண்டிவற்றான் ஏழெழுத்தா றெட்டெழு பத்துமூன் றேழாம் ஏழெழு மும்மூன்றா யெட்டெழுத்தா னோரொன்றாம் ஆறெட் டறுபஃது மூன்று" "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை யொக்கும் அசைக்கு வரையறை யின்மை யான" "வஞ்சி யுரிச்சீர் நிரையுரி யுறழ்ந்து மெல்லாங் குறைத்து மிகுத்துக் கொளாஅல்" எனவே, இவ்வாற்றான் வஞ்சியுரிச்சீர் ஏழெழுத்தும் எட்டெழுத்தும் ஒன்ப தெழுத்துமாகி வருமவை யறிந்து மாற்றுக. அவையாவன: 1 களிறுவழங்குவாய், 2புலிவழங்குசுரம், 3பாம்புவழங்குசுரம், 4 களிறுவருசுரம், 5களிறுபோகுசுரம்', 6புலிவழங்குகாடு, 7பாம்புவழங்குகாடு, 8களிறுவருகாடு. 9களிறுபோகுகாடு, 10மாவழங்கு கடறு, 11புலிவருகடறு, 12புலிபோகுகடறு, 13பாம்புவருகடறு, 14பாம்புபோகுகடறு, 15களிறுசெல்கடறு என இவை பதினைந்தும் ஏழெழுத்தாங்கால் உறழ்நிலை இல வெனப்படும். 'களிறு வழங்குவா' யென்பது அரவுவிரவுவாயென ஏழெழுத்துச் சீராம். ஒழிந் தனவும் அவ்வாறே கொள்க. இவை பதினைந்தும் ஏழெழுத்தின் இகவாதன. இனி, ஏழெழுத்துச் சீரின் இவ்விரண்டும் எட்டெழுத்துச்சீர் ஒரோ வொன்றுமாகி வருவன மூன்று சீர் உள; அவை 1 களிறுவழங்குசுரம், 2 புலிவழங்குகடறு, 3 களிறுவருகடறு என்பன. இவற்றைக் களிறுவிரவுசுரம், அரவுவழங்குசுரம், அரவுவிரவுசுரம் என்றாற் போல வாய்பாடு படுத்தொட்டிக் காணவே, ஏழெழுத்துச் சீராறும் எட்டெழுத்துச் சீர் மூன்றுமென ஒன்பதாம். களிறுவழங்குகாடு, பாம்புவழங்குகடறு, களிறுபோகுகடறு என இவை மூன்று சீரும் ஒரோவொன்று ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெ ழுத்துச் சீரொன்றுமாக முந்நான்கு பன்னிரண்டும் உறழ்நிலையில எனப்படும். அவை; களிறுவிரவுகாவு, களிறுவழங்குகுரவு, அரவுவிரவுகாடு, அரவுவிரவு காவு என ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெழுத்துச் சீரொன்றுமாயின வாறு கண்டுகொள்க. ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இனிக், களிறுவழங்குகடறு என்பது ஆறெழுத்துச்சீர் ஒன்றும், ஏழெழுத்துச்சீர் மூன்றும், எட்டெழுத்துச்சீர் மூன்றும், ஒன்பதெழுத்துச் சீரொன்றுமென அதுவும் எட்டுநிலைமைத்தாம். அவற்றுள் ஆறெழுத்துச் சீரொன்றும் ஒழித்து, ஒழிந்த வஞ்சியுரிச்சீரேழும் உறழ்நிலையில் வஞ்சிக் கெனப்பட்டன. அவை; களிறுவழங்குகுரவு, களிறுவிரவுகடறு, அரவுவழங்குகடறு என மூன்றும் ஏழெழுத்துச்சீர்; களிறுவிரவுகுரவு, அரவுவழங்குகுரவு, அரவுவிரவுகடறு என மூன்றும் எட்டெழுத்துச்சீர்; அரவுவிரவுகுரவு என்பது ஒன்பதெழுத்துச்சீர். இவையெல்லாந் தொகுப்ப, ஏழெழுத்துச்சீர் முப்பத்துமூன்றும், எட்டெழுத்துச்சீ ரொன்ப தும், ஒன்பதெழுத்துச்சீ ரொன்றும் ஒழித்து, ஒழிந்த வஞ்சியுரிச்சீர் நூற்றெண்பத் தொன்றும் உறழ்நிலையுடைய வெனக் கொள்க. ஏழெழுத்துச் சீரும் எட்டெழுத்துச் சீரும் ஒன்பதெழுத்துச் சீரும் அடியுறழ்வன வாக்கி மேன்மூன்று சீரானும் மூன்று நிலனேற்றிப் பதினைந்தெழுத்தடி யளவும் உறழும் வஞ்சியடி என்பாருமுளர். அங்ஙனம் ஒன்பதெழுத்துச் சீர் இரண்டு வந்த குறளடி பதினெட்டெனப்படுதலின், வஞ்சிநிலம் பதின்மூன்றாதல் வேண்டும், ஓசை நோக்காது சீர்நோக்கி உறழ்ச்சி கொள்ளினென மறுக்க. அவை அளவடியோடு ஒத்த சிறப்பின வன்மையானும், அவற்றுக் குத் தளைவகை யின்மையானும் எடுத்தோதித் தொகை கூறிற்றிலனாயினும், நாம் அவற்றை எண்ணி உணர்ந்து கூறுங்கால் ஒரு சீர்க்கு அடி நான்காக வஞ்சியடி எழுநூற்றிருபத்து நான்காமெனக் கொள்க. அவை யுறழுங்கால் மூன்றெழுத்துச்சீர் ஆறாதி ஒன்பது எழுத்து உயர்வும், நாலெழுத்துச்சீர் ஏழாதி பத்தெழுத்துயர்வும், ஐயெழுத்துச்சீர் எட்டாதி பதினொன்றெழுத்து உயர்வும், ஆறெழுத்துச்சீர் ஒன்பதுமுதல் பன்னிரண்டெழுத்து உயர்வும் பெற்று நின்ற சீரொடு மூன்றெழுத்துச் சீரும் நாலெழுத்துச் சீரும் ஐயெழுத்துச் சீரும் ஆறெழுத்துச் சீருந் தந்துறழ்க வென்பது, அவை: "கால்காய்ந்தது காம்புநீடி" என்பது ஆறெழுத்தடி. "நல்கூர்ந்தது வில்லோர்சுரம்" என்பது ஏழெழுத்தடி. "வான்பெய்தது மண்குளிர்ப்புற" என்பது எட்டெழுத்தடி. "தேன்பெய்தது செழுந்தரைதொறும்" என்பது ஒன்பதெழுத்தடி. இவை மூவெழுத்து மாசெல்காடு நின்றுறழ்ந்த நான்கடியும் வந்த வாறு. ஒழிந்தனவும் அன்ன. "மண்மாய்ந்தென வுள்வீழ்ந்தது" என்பது ஏழெழுத்தடி "விண்பாய்ந்தென மேற்றொடுத்தது" என்பது எட்டெழுத்தடி. "காடோங்கிய கல்கெழுசுரம்" என்பது ஒன்பதெழுத்தடி. "கோடோங்கிய குறும்பொறைமருங்கு" என்பது பத்தெழுத்தடி. இவை நான்கடியும் நாலெழுத்து மாசெல்சுரம் நின்றுறழ்ந்த அடி. "மழைபெய்தென வான்வெள்ளென்று" என்பது எட்டெழுத்தடி. "தழைபச்செனுந் தண்ணென் காவு" என்பது ஒன்பதெழுத்தடி. "கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்" இது பத்தெழுத்தடி. "இமிழ்தூங்கிசை யிசைசுரும்புவர" என்பது பதினோரெழுத்தடி. இவை நான்கும் ஐயெழுத்துப் புலிசெல்சுரம் நின்றுறழ்ந்த அடி. இனி, ஒன்பதெழுத்து முதற் பன்னிரண்டளவும் உயர மற்றையன போல நான்கடிபெறும். "அமைவிடுகொடி வஞ்சியோர்ந்து" என்பது ஒன்பதெழுத்தடி. " கனைகுரலன கானத்தளகு" என்பது பத்தெழுத்தடி. " தினைப்புனத்தித ணயற்பிரியாது" என்பது பதினோரெழுத்தடி. "மனைக்குறமகள் கடைப்புறந்தரும்" என்பது பன்னிரண்டெழுத்தடி. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்துகொள்க. மூன்றுபாவின்றுணைச் சிறப்பின்மையின் வஞ்சியடி ஈண்டுப் போதந்து கூறினானென்பது. ஒழிந்த முச்சீரடி சிறுவரவிற்றாகலின் அதற்குக் கூறியதில னென்பது. (57) வெண்பாவிற்கு உரிய நிலம் 370. அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான. இஃது, ஆசிரியவடிக்கும் அதன் நடைத்தாகிய வஞ்சியடிக்கும் உரிய நிலங்கூறி வெண்பாவிற்குரிய நிலங் கூறுகின்றது. (இ-ள்.) அளவடி ஐந்துஞ் சிந்தடி மூன்றுமென எட்டுநிலம் பெறுந் தளை விரவாதவாற்றான் வெண்பாவடி எ-று. அளவடி முதற்கூறிய தென்னையெனின், மேல் நிறுத்த முறையாற் கொள்ளாது ஈண்டுச் சொல்லும் முறைமையாற் கூறினானென்பது. "நின்று நினைந்து நெடிது பெயர்ந்து" என்பது ஏழெழுத்தடி. "அறிவறிந்தார்த் தேறியக்கா லஞ்சுவ தில்லை" என்பது பதினான்கெழுத்தடி. இதனும்பர் நெடிலடியானும் வெண்பாவடி வருவன உள. அவை கட்டளையடி யெனப்படா, செப்பிக் கூறும் பாவாகாது செய்கை தோன்றியே நிற்குமாகலினென்பது. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்து கொள்க. தளை வகை ஒன்றாமையென்பது வெண்பாவும் வெண்பா நடைத்தாகிய கலிப்பாவும் மயங்காமை காரணத்தானென்றவாறு, கலியோசை மயங்கி வருவனவும் வெண்பா வடியுளுள. அவை நெடிலடி மூன்றானும் வருமெனக் கொள்க. ஒரோவடியே வெண்பா வடியுமாய்த், துள்ளிக் கலியடியுமாகித் தளை வகை ஒன்றுமாகலான் அம்மயக்கந் தீராதென, 'அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய' என்றானென்பது. "மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்" என்றக்கால், இதனை "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல். செய். 11) என்றதனாற் கலியோசை பிறப்பவுஞ் சொல்லிக் கண்டுகொள்க. "மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் தேமா வரகு" என்றிதனையே ஓசையூட்ட வெண்பாவாயிற்று. இது, "மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாற்றினரே" எனக் கலியோசை யாயினவா றறிக. (58) கலிக்கு உரிய நிலம் 371. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி இருநெடி லடியுங் கலியிற் குரிய இது, முறையானே கலிக்குரிய நிலமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐவகையடியினும் அளவடி மிகுதியாகிய பதின்மூன்றெ ழுத்தும் பதினான்கெழுத்தும், நெடிலடியுங் கழிநெடிலடியுங் கலியடிக்குரிய எ-று. எனவே, அதுவுந் தன் முதற்கட் பாவாகிய வெண்பாப் போல எட்டு நிலம் பெறுவதாயிற்று. ஒழிந்த அடி மூன்றனோடும் ஒவ்வாது மிக்க நிலம் இரண்டனையும் மிகுதியென்றா னென்பது. இனி; 'ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே' (தொல். செய். 38) என்பதே கொண்டு பதினோரெழுத்து முதல் நான்கு நிலனும் அளவடி மிகுதி யெனப்படும் எனவும், அவை கலிக்குரிய எனவுங் கொள்வாருமுளர். அங்ஙனங் கொள்வார்க்கு, 'ஞாயிறு கடியாறு கடியாறு கடியாறு' என்றதனைப் பதினோரெழுத்தடியென்று காட்டல் வேண்டும். அஃது ஆசிரியவடியாம். ஆகலான் அற்றன்றென்பது. இனி, 'ஞாயிறு மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய்' என்பதோவெனின், அது கலிப்பாவொடு தளைவகை ஒன்றிய வெண்பாவடி யாகலானும், நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்பினன்றி ஞாயிறு என நின்ற நிரையீற் றியற்சீர்ப் பின்னர் நேர்வந்தாற் கலித்தளையாகாது வெண்டளை யாமாகலானுங் கட்டளையடிக்கு அவ்வாறுகோடல் குற்ற மென்பது. அல்லதூஉங் கலிப்பாவிற்குப் பத்து நிலங் கொள்ளிற் கட்டளை யடி அறுநூற் றிருபத்தைந் தன்றிப் பல்குமென்பது. (59) இதுவுமது 372. நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும் வரைநிலை இன்றே அவ்வடிக் கென்ப. இதுவுங், கலித்தளை விகற்பங் கூறுகின்றது. (இ-ள்.) நிரையீற்றியற்சீரும் நிரையீற்றாசிரியவுரிச்சீரும் நிற்ப நிரை முதல் வெண்சீர் வந்து நிரை யொன்றியக்காலுங் கலித்தளையாம். எ-று. "மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்" என்புழித் 'திருமார்பின்' என நிரைமுதல் வெண்சீர்வந்து "மணிபுரை' யென்னுஞ்சீர் இறுதி நிரையொடு தட்டுக் கலித்தளையாயிற்று. எனவே, நிரை முதலியற்சீர் வந்து நிரைதட்பினும் நேர்முதல்வெண்சீர் வந்து ஒன்றா தொழியினும் அது கட்டளை வகையாற் கலியடியாகா தென்றவாறு; என்னை? துள்ளாத இயற்சீர்ப்பின் நிரைமுதல் வெண்சீர் வந்து துள்ளு விக்கல் வேண்டுமாதலானும் ஞாயிறு மாசேர்வாயென்பது வெண்பாவடி யுமாம் ஆகலானுமென்பது. 'அடிக்கென்ப' என்றதனான் இதுவுங் கட்டளை யடிக்கே யென்பது கொள்க. மற்று நிரைமுதல் வெண்சீர் வருவது முதனின்ற இயற்சீர்ப்பின்னர் இடைநின்ற இயற்சீர்ப்பின்னரென்ப தறியுமா றென்னை யெனின், அங்ஙனம் வரையாது கூறினமையின் முதற் கண்ணதே இவ்விதி யென்பதாம். அல்லதூஉம் அவ்வாறு இயற்சீரினை இடையும் வருமென்று கொள்ளிற் பதின்மூன்றெழுத்திற் சுருங்கிய நிலனும் அது பெறுவான் செல்லும். செல்லவே கலியோசை இனிது பெறலாகாதென மறுக்க, என்றார்க்குப் பின்வருஞ்சீர் மூன்றும் நிரைமுதல்வெண்சீர் வருவதென்றிலனாதலின் மூன்றாஞ்சீர் நேர்முதல் வெண்சீர் வந்தும், "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே" (தொல். செய். 29) என்றதனானும் இடைநிற்பன வெண்சீரென்பது பெறுது மாகலானும் அது கட்டளையன்றென்பது. இனி முதனின்றது நிரையீற்றியற்சீ ராகலான் துள்ளலோசை பிறவாமையின் அவற்றோசை குறை தீரக் கலித்தளை பலவாகி வரல் வேண்டுமென்பது. இவ்வாற்றான் ஓசைச்சுருக்கம் பெருக்கம் உணர்தற்கு அருமை நோக்கி, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே" (தொல். செய். 11) என்பானாயிற்றென வுணர்க. இக்கருத்தினானன்றே நிரைமுதல் வெண்சீர் வருகவெனவும் நிரையீற்றியற்சீர்ப் பின்னர் மாசெல்வாய் மூன்று வரினுஞ் சிறிது கலியோசை பிறக்குமாயினும் அதனைக் கட்டளையடியென நேரா னாயிற்றுமென்பது. (60) சீர்வகைக் கலியடியில் தளை விரவுதல் 373. விராஅய தளையும் ஒரூஉநிலை இன்றே . இது, சீர்வகையான் வருங் கலியடிதளை விரவினுங் கடியப்படா தென்கின்றது; யாதனொடு விரவியோவெனின், வெண்பாவினொடு விராய்த் தட்பினுமென்றவாறு; என்னை? "தளைவகை யொன்றாத் தன்மை யான" (தொல். செய். 58) என வெண்பாவிற்குங் கூறினமையின். (இ-ள்.) வெண்சீர் ஒன்றிவருதலுங் கடியப்படா கலிக்கு எ-று. 'சீர்வகையடிக்கண்' என்பது என்னை பெறுமாறெனின், 'விராஅய தளை' யென்றமையிற் பெறுதுமென்பது. உதாரணம், "தளைவகை யொன்றாத் தன்மை யான" (தொல். செய். 58) என்புழிக் காட்டப்பட்டது. (61) ஆசிரியப்பாவினுள் இயற்சீர் வெள்ளடி வருதல் 374. இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி னிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே. இது, வெண்சீ ரொன்றிவரும் அடி கலிப்பாவிற்கும் உரித்தென்ற முறையானே, இயற்சீர் வெள்ளடியான் வரும் ஆசிரியத்திற்கு மயங்கியல் வகையான் நிலைக்குரித்தாகி நிற்கவும் பெறுமென்கின்றது. (.இ-ள்.) அம்மயங்கியல்வகைதான் அப்பாவிற்கு உரிமை பூண்டு நிற்கும், ஆசிரிய அடியொடு கூடிய கூட்டத்துக்கண் எ-று. வெண்பாவினுளாயின் ஆசிரியவடி முழுவதுந் தன்றளையொடு வாராது; என்னை? "தூஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல் பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொன் மாஅ மிசையான்கொ னன்ன னறுநுதலார் மாஅமை யெல்லாம் பசப்பு" (மலைபடு.) என்பதன் முதலடியுள்ளே 'தூஉத் தீம்புகை'யென ஓர் ஆசிரியத்தளை வர, மற்றையன வெண்டளையாகி வந்தமையின். அற்றன்றி, முழுவதூஉம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையுமாகலின், இதனையே சொல்லின் முடிவிலக்கணத்தான் வெண்பா வென்றான். எனவே, வேறோசை விராய வழித் தன்னோசை அழிதல் இதற்குப் பெரும்பான்மையாயிற்று. ஆசிரிய மாயின் அவ்வாறு அழியாதென்பது கருத்து. என்போலவோ வெனின் பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையான், பளிங்கு வேறுபடினல்லது பஞ்சி வேறுபடாதது போல வென்பது. இதனானே வெள்ளை யென்பது ஒப்பினான் ஆகிய பெயரென்பதூஉம் பெற்றாம். "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்" (குறுந்.12) இவ்வாசிரியத்துள் எல்லாவடியும் பாவேறுபட்டு இசையாமையின் முதற்கணின்ற இயற்சீர் வெள்ளடி நிலைக்குரிமரபின் நின்றதாயிற்று. "கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்நுதல் யானை நுதன்மீ தழுத்திய செங்கோற் கடுங்கணை போலு மெனாஅது நெஞ்சங் கவர்ந்தோ ணிரையிதழ்க் கண்ணே" என்பது, செய்யுள் முழுவதும் இயற்சீர் வெள்ளடியான் வந்தது. மற்று இயற்சீர்வெள்ளடியல்லது பிறவடி ஆசிரியத்துள் மயங்கப் பெறாதோவெனின், அது நிலைக்குரிமரபின் நில்லாமையின் உம்மையான் தழீஇக்கொள்ளப்படுஞ் சிறுபான்மை யென்பது. "பாஅல் புளிப்பினும் பகலி ருளினும்" (புறம். 2.) என்றாற்போல்வன. "மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது" (யா. வி. மேற்.) என்னும் ஆசிரியவடியினைக் கலிப்பா மயங்கிற்று என்பாரும் உளர். அது துள்ளச் சொல்லுங்கால் அளபெடுக்க வேண்டுமெனக் கூறி மறுக்க. (62) கலியுள் ஐஞ்சீர்அடியும் வருதல் 375. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப. இஃது, ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மேனின்ற அதிகாரத்தாற் கலிப்பாவிற்கு ஐஞ்சீரடியும் உள எ-று. 'வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்' என்றது என்னையெனின், அவ்வைஞ்சீரடி வெண்பாவொடு விராயும் ஆசிரியப்பா வொடு விராயும் வருமென்றவாறு. ஈண்டுத் தளையென்றது அப்பாக்களையாதலான் அப்பாக்களொடு விரவுமெனவே, அப்பாக்களை உறுப்பாகக் கொண்டு வரும் பிறசெய்யுட்கண்ணும் அவ்வைஞ்சீரடி வருமென்பது பெற்றாம். வெண்டளையொடு விரவுமெனவே ஐஞ்சீரடி அவற்றுக்கு உரியவல்ல வென்பதாம். எனவே, கலிப்பாவின்கண் வரும் ஐஞ்சீரடியாயின் அக்கலியோசைக்கு உரிமையுடைத் தென்பதாம். 'உள' வெனவே, ஐஞ்சீரடி கலியினுட் பயின்று வருமென்பதூஉம் அல்லனவற்றுட் பயிலாவெனவுங் கொள்க. 'விராஅய தளையு மொரூஉநிலை யின்று' (தொல். செய். 61) எனப்பட்ட கலிப்பாவினோடு இயைபுபட்ட வெண்பாவடியும் அதனோடு இயைபுபட்ட ஆசிரியவடியுங் கூறி, அம்மூன்றனையும் உடன் கூறினானா யினும், ஆண்டுச் சிறந்தவாறே ஈண்டும் அவ்வதிகாரத்ததாக நாட்டி, ஐஞ்சீரடியும் உளவென்று ஆண்டு நின்ற கலிக்குக் கூறி, அவ்வடி வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் வருமெனப் பிறவற்றுக்குங் கூறினானென்பது. 'ஐஞ்சீரடியும்' அளவடி மூன்றுபாவிற்கும் உரித்தென்றால் அள வடியை அவ்வப்பாவிற்கு வேறுவேறாகக் கொண்டாற்போல, ஐஞ்சீரடி யையும் பாத்தோறும் வேறுபடுத்துக்கொள்க. உ-ம்: "தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக' (கலி. 39) எனக் கலிப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. "அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கா னரசவையன் றகற்றியே" எனக் கலியடி வெண்சீரான் வந்தது. "கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க வொண்செங் குருதியி னோஒ கிடப்பதே - கெண்டிக் கெழுதகை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை" (யா. வி. மேற்.) என்னும் வெண்பாவினுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. "சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே" (புறம். 235) என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி. ஆசிரியத்துள் இவ்வாறு இரண்டடி ஒருங்கு நிற்குமென்பது அறிவித்தற்கு ஐஞ்சீரடிக்குச் சிறந்த கலிப்பாவொடு வைத்தான் அதனை முறை பிறழவென்பது. எனவே, வெண்பாவிற்கு ஐஞ்சீரடி ஒன்றல்லது வாராதாயிற்று. இக் கருத்தே பற்றி, "ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாகலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல" என்றார் பிறருமென்க. உம்மையான் இருசீரடியும் கலியடியாம். "மன்று பார்த்து நின்று தாயைக் கன்று பார்க்கும் இன்றும் வாரார்" (467 - பேரா) எனக் கொச்கக்கலியுள் இருசீர் வந்தது. மூன்றுபாவிற்கும் முச்சீரடி உரித்தென்பது முன்னர்ச்சொல்லும். வரையாது கூறினமையின் கலிப்பாவிற்காயின் ஐஞ்சீரடி வருங்கால் தளைவிரவி யும் விரவாதும் வேண்டியவாறு வரப்பெறுமென்பது. (63) கலிப்பாவினுள் அறுசீரடியும் வருதல் 376. அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே. இது, முறையானே அறுசீரடியுங் கலிப்பாவிற்கு உரித்தென்கின்றது. (இ-ள்.) நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடியும் வருதலு முண்டு. அன்னது வருங்கால் தனக்குரிய வெண்டளையே யன்றி ஆசிரியத் தளையொடும் வழக்குப் பெற்று நடக்குங் கலிப்பாவினுள் எ-று. 'நெறிபெற்றுவரும்' என்றதனாற் சிறுபான்மை நேரடி இடையிட் டன்றி ஒரு செய்யுள் முழுவதூஉந் தானே வருதலுங்கொள்க. 'ஆசிரியத் தளையொடும்' என்ற உம்மையாற் கலி தனக்குரிய வெண்டளையான் வருதலும் மயங்கிவருதலும் உரியவாம். "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோதம் மூழ்கிப் பெயர அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தணந்துகுத்த வெண்முத்தம் புன்னையரும் பென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்'' என்பது, மூன்றாம் அடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீர் வந்தது. பிறவுமன்ன. "கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ' என்பதன் முதலடியுள் 'வருதி ராயின்' என்பது ஆசிரியத்தளை; ஒழிந்தன வெண்டளை. 'முன்' னென்றதனான் இடமுன்னுங் காலமுன்னுங் கொள்ளப்படும். "தொக்குத் துறைபடியுந் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோண்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருட் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க்கென்னும் பெய்கல்லார் மீண்டுகரைக் கேசொரிந்து மீள்வார் காணா ரெக்கர் மணற்கிளைக்கு மேழை மகளிர்க்கே யெறிநீர்க் கொற்கை" எனச் செய்யுள் முழுவதும் அறுசீரடியே வந்தது. "வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதல் பொருட்டு வந்தோய்" என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. மற்றுத் தளையென் றோதுவது கட்டளையடிக் கென்றீரால், ஈண்டுத் தளையென்றதென்னை யெனின், அவ்வரையறை ஒருவன் சொல்லுவது; அறுசீரடி வருங்கான் முதற்கண் நேரடி தூக்கிப் பின் இரு சீரொடு தொடுத்தல் வேண்டும் என்னும். அஃது இச்சூத்திரத்திற்கேலாது, நேரடி முன் அறுசீர் வரி னென்பது பதின்சீரடியாமாகலின். அல்லதூஉங், குறளடி தூங்கியுஞ் சிந்தடி தூங்கியும் அறுசீரடி வருதலின் அஃது அமையா தென்பது. என்னை, "வாராது நீத்தகன்றார், வருமாறு பார்த்திருந்தார், வடிக்கண் போல'' என்றவழி இருசீரான் யாத்தமைப்பின் அது தூக்கெனப்படாது; "செங்காந்தள் கைகாட்டுங் காலஞ், சேட்சென்றார் வாரார்கொல் பாவம்" என மூச்சீரான் யாத்தமைப்பின் அதுவுந் தூக்கெனப்படாது. அறுசீரடியே தூக்காகக் கொண்டமையின், நேரடி முன் இருசீரடி வந்ததென்றதூஉம் பிழைக்கு மென்பது. (64) கலியுள் முடுகியல் எழுசீரடி பெறுதல் 377. எழுசீர் அடியே முடுகியல் நடக்கும். இஃது, எழுசீரான் வரும் அடி கூறுகின்றது. (இ-ள்.) எழுசீரான் வருவனவும் அடியுள; அவை பயின்று நடப்பது முடுகியற்கண் எ-று. எனவே, முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழுசீரடி என்பதாம். பாவென்னும் உறுப்பு இடனாகும். ஏகாரம் பிரிநிலை. எழு சீரடிக்கு "தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்" (யா. வி. மேற்.) எனவும், "கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணமொடு விளையாட" எனவும், எழுசீரடி முடுகிவந்தது. இவை பரிபாடலுள்ளுங் கலியுள்ளுங் காணப்படும். முடுகாது வரும் எழுசீரடி வந்தவழிக் கண்டுகொள்க. (65) ஐஞ்சீர் அறுசீர் அடிகளும் முடுகியல் பெறுதல் 378. முடுகியல் வரையார் முதலீ ரடிக்கும். இஃது, எய்தாத தெய்துவித்தது, எழுசீரடியேயன்றி ஐஞ்சீரடியும் அறுசீரடியும் அராகந் தொடுக்குமென்றமையின். (இ-ள்.) எழுசீரடிக்கு முன்னர் இடைநின்ற ஐஞ்சீரடியும் அறு சீரடியும் முடுகியல் நீக்கார் எ-று. அவற்றுக்குச் செய்யுள்: "காரெதிர் கலியொலி கடியிடி யுருமி னியங்கறங்க . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்ப" (கலி. 105) என்பது ஐஞ்சீரடி முடுகி வந்தன. "மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ" (கலி. 102) என்பன அறுசீரடி முடுகிற்று. முதல் ஈரடிக்கும் என்ற உம்மை எச்சவும்மை. அவ்வும்மையான் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகுமென்பது. "புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின வேறு" (கலி. 103) என வரும். "இரிபெழு பதிர்பதிர் பிகழ்ந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை யிஃதொன்று" (கலி. 104) என்பதனுள் முடுகியலடி இரண்டு வந்தன. மற்று இவற்றை அராகமென்னாமோவெனின், அதனைப் பரிபாடற்கு உறுப்பென்றமையாற் பிறவடியொடு தொடராதுற்று வர வேண்டும்; இஃது அன்ன தன்றென்பது. எழுசீரடியிற் சிறுவரவினவாக லான் ஐஞ்சீரடியினையும் அறுசீரடியினையும் வரையாரென்றான். அவற்றினுஞ் சிறுவரவிற்றாகலின் இதனை உம்மையாற் கொண்டான். முற்றும்மையாகாதோ வெனின் அதுவும் எச்சப்படுதலின் அமையு மென்பது. அல்லதூஉம் முதலடியிரண்டே அன்மையின் முற்றாகா தென்பது. (66) முடுகியல் வாராப் பாக்கள் 379. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினு மூவகை யடியும் முன்னுதல் இலவே. இது, முடுகியல் இன்ன பாவிற்கு உரித்தென்கின்றது; எய்திய திகந்து படாமற் காக்கின்றதூஉமாம்: என்னை? நாற்சீரடி முதன் மூன்றும் அகவ லோசைக்குஞ் செப்பலோசைக்கும் உரியவெனவே, அவை முடுகி ஆண்டுஞ் சேறலெய்தியதனைக் கலிப்பாவிற்கல்லது ஆகாதென்றமையின். (இ-ள்.) ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டு பாவினும் முடுகியலடி மூன்றும் புகா எ-று. உம்மை. முற்றும்மை. மற்றை முச்சீரடியொடு நான்கென்னானோ வெனில், அஃது இவற்றுக்கு ஈண்டு ஒவ்வாது. முடுகி வருதல் பெரும் பான்மைத்தாகலின் 'மூவகையடி'யென அடையடுத்துக் கூறினானென்பது. அல்லதூஉம் எழுசீரடி விலக்கானன்றே, அதனை ஆசிரியமருங்கினும் வெண்பாமருங்கினும் மயங்குமென்ப தின்மையினென்பது. இனி, அறுசீரடி ஆசிரியத்தளையொடும் வருமென்றது (376) அகவ லோசைக்கு உரித்தென்றமையானும், "வெண்டளை விரவியும் ஆசிரியம்விரவியும் ஐஞ்சீரடியும் வரும்" என்றமையானும் அவற்றை அளவடியுடன் எடுத்தோதி விலக்கினான். மூவகை அடியுமென்றது ஐஞ்சீரடிமுதன் மூன்று மெனப்படுமென்பார், அளவடி முடுகுதல் ஆசிரியத்திற்கும் உரிமையின் அது வரையறையின் றென்றலும் ஒன்று. அது, "திருமழை தலைஇய விருணிற விசும்பின்" (.மலைபடு. 1) என வரும். அதற்கு முடுகியற்றன்மை இன்றென்றது கருத்து. வஞ்சிப்பாவிற்குக் குறளுஞ் சிந்தும் அல்லது இன்மையின் இவ்வாராய்ச்சி இன்றென்பது. எனவே, ஆசிரியத்தளையொடு முடுகிய வடியினைக் கலியடி யென்பதுஉம், முடுகாத அறுசீரடி ஆசிரியத்தளையொடு நெறிபெற்று கலிப்பா விற்குச் சிறுபான்மையான் வருமென்பதூஉஞ் சொல்லப்பட்டன. அல்லாதார் ஐஞ்சீரடி முதலிய மூன்றுங் கலிக்குரிய, பிறபாவிற்கு உரியவல்ல என்றற்கு வந்தது இச்சூத்திரமென்ப. அற்றன்று; அங்ஙனம் கூறின் தாம் வேண்டும் ஐஞ்சீரடி ஆசிரியத்துள்ளும் புகாதென்று மறுக்க. 'முன்னுத லில' வென்றது யாண்டுமாகா தென்றவாறு. இவ்விலக்கணமெல்லாம் மேற்காட்டிய செய்யுளுள்ளே கண்டறிந்து கொள்க. (67) ஆசிரியப்பாவினுள் ஈற்றயலடியும் இடையடியும் முச்சீரானும் வருதல் 380. ஈற்றய லடியே யாசிரிய மருங்கின் தோற்றம் முச்சீர்த்து ஆகும் என்ப. 381. இடையும் வரையார் தொடையுணர் வோரே. இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடனெழுதப் பட்டன. இவை ஆசிரியத்துட் சிந்தடிவருமென்றமையின் எய்தாத தெய்துவித்தனவாம். (இ-ள்.) ஆசிரியத்துள் எருத்தடியொன்றும் இடையடி யிரண்டுமாகி முச்சீரடி வரும் எ-று. 'முச்சீர்த்' தென்று ஒருமை கூறினமையின் அஃது ஒன்றாகலும், தொடையுணர்வோ ரென்றமையின் இடைவருவன இரண்டாகலுங் கூறினா னென்பது. 'இடையும் வரையார்' என்றமையான் ஈற்றயல் முச்சீர்த்தாதல் பெரும்பான்மை. உ-ம் : "கண்ணி கார்நறுங் கொன்றை காமர் . . . . . . . . . . . . நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" (புறம். 1) என அப்பாட்டினை முழுவதூஉங் கொள்ள ஈற்றயலடி முச்சீர்த்தாயிற்று. "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே" (யா. வி. மேற்.) என்பதனுட் 'சார னாடன் கேண்மை' எனவுஞ் 'சாரச் சாரச் சார்ந்து' எனவும் முச்சீரடி இரண்டு வந்தன. ஏகாரம் பிரிநிலை. மற்று, "நரந்த நாறுந் தன்கையாற் புலவுநாறு மென்றலை தைவரு மன்னே" (புறம். 235) என முச்சீரடி இடையும் ஒன்று வந்ததாலெனின், 'தோற்ற' மென்றதனான் எருத்தடி முச்சீராய காலத்துக் குட்டம்பட்டு இனிது விளங்கும். இடை யிடை ஒன்று வருதலும் உண்டாயினும் அத்துணை இனிதன்று அது வென்பது கொள்க. "பெரியகட் பெறினே" (புறம். 235) என இருசீரடி வந்ததாலெனின், அதனைச் சொற்சீரடி யென்று களைக. "உப்பிலாஅ அவிப்புழுக்கல். கைக்கொண்டு பிறக்குநோக்காது"(புறம்.363) எனவுங் காட்டுப. இவை வஞ்சியடி யெனப்படுமென்பது. வெண்சீரான் வஞ்சியடிவருமோவெனின், வாரா, வஞ்சிச்சீர் விரவினல்லதென்பது. "உப்பிலாஅ அவிப்புழுக்கல்" என்பதோவெனின், அது மற்றை இருசீரடியொடு கூட்டத்துக் காட்ட லானும் வஞ்சியடி போன்றது. (68, 69) கலிக்கு முச்சீரடியும் உரித்தாதல் 382. முச்சீர் முரற்கையுன் நிறையவு நிற்கும். இது, கலிப்பாவிற்கு அளவடியும் நெடிலடியும் அதனினிறந்த அடியும் உரிமை கூறி, இனிச் சிந்தடியும் உரித்தென்கின்றது. (இ-ள்.) கலிப்பாவினுள் முச்சீரடி நிரம்பவும் நிற்கும் எ-று. 'நிறைய நிற்றல்' என்பது அச்செய்யுள் முழுவதும் அவ்வடியே வருதலாம். உம்மையான், ஒரு செய்யுள்நிறைய வாராது ஒன்றும் இரண்டும் பலவுமாகி அம்முச்சீரடி வருதல் பெருவரவிற்றென்பது. தாங் குறைந்த அடியாதலிற் கலிப்பாவிற்கு உறுப்பாகிய சின்னத்திற் குறைய நிற்கும் இயல்பினவாயினும், நிறைய நிற்றலுடைய கொச்சகத்துளென்றவாறு. "செய்தானக் கள்வன் மகன்" (கலி. 51) எனவே வெண்கலியுள் இறுதிக்கணல்லது வாராது. "நின்கண்ணாற் காண்பென்மன் யான்" (கலி. 39) என்பது இடைவந்தது. எண் உறுப்பின்கண் இரண்டும் நான்கும் வருமாறு கண்டு கொள்க. "நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக் கார்வரக் கண்டனங் காதலர் தேர்வரக் கண்டில மன்னோ பீர்வரக் கண்டனந் தோளே" என முச்சீரடி ஒரு செய்யுள் நிறையவும் வந்தவாறு. (70) வஞ்சிப்பா இறுதி ஆசிரியஅடியான் முடியுமாறு 383. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே. இது, முறையானே அடியுரிமை கூறியவாற்றான் வஞ்சிப்பாவிற்குக் கூறியதிலன்; ஈண்டுக் கூறினன். எற்றுக்கு? அது, 'வஞ்சி யடியே யிருசீர்த் தாகும்.' (தொல். செய். 45) எனவும், 'முச்சீ ரானும் வருமிட னுடைத்து' (தொல். செய். 47) எனவும் மேற் கூறப்பட்டமையின். அது நோக்கி அடியுரிமை கூறப்படாத வஞ்சிப்பாவிற்கு வஞ்சியினது ஈற்றடியும் அவ்விரு சீரடியும் முச்சீரடியு மாவான் சென்றதனை விலக்கி இன்ன அடியான் முடியுமென்கின்றது. (இ-ள்.) வஞ்சிப்பாவினது இறுதியடி ஆசிரியவடி இறுதி போன்று இறுக எ-று. எனவே, ஆசிரியத்திற்கு ஓதிய சீரானுந் தளையானும் இறு மென்றவாறு. "மாக்கட னிவந்தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ வனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல வோவாது கூஉநின் னுடற்றியோர் நாடே" (புறம். 4) என மண்டிலவாசிரியத்தா னிற்றது. 'செந்தூக் கியற்றே' யென்ற மாட்டேற்றானே, 'ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப.' (தொல். செய். 68) எனவும், 'இடையும் வரையார் தொடையுணர் வோரே.' (தொல். செய். 69) எனவும் எய்திய விதி ஈண்டும் எய்துவிக்க. "அனையை யாகன் மாறே" (புறம். 4) என முச்சீரடி இடை வந்தது. " இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே யெனவாங் கொள்ளழற் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. " (புறம். 11) இஃது, ஈற்றயலடி முச்சீர்த்தாகி வந்த செந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா. பிறவும் அன்ன. ஈண்டுத் தனிச்சொல் வேண்டுமென்று பிற் காலத்து நூல் செய்தாரும் உளர். அது சான்றோர் செய்யுள் எல்லா வற்றொடும் பொருந்தாமையானும், பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்துச் செய்யுட்கெல்லாம் இலக்கணஞ் சேர்த்துதல் பயமின்றாத லானும், அஃதமையா தென்பது. வஞ்சிப்பாவின் ஈற்றடி வரைந்தோதவே, இடையாயின எல்லா அடியும் வரப்பெறுமென்பதாம். "நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை" (பட்டின. 23, 24) என ஆசிரியவடியும் வெண்பாவடியும் இடைவந்தன. (71) வெண்பா ஈறு 384. வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த் தாகும். இது, வெண்பாவிற்கு ஈறு உணர்த்துகின்றது. ஆசிரியத்துக்கோ வெனின், தனக்கோதிய அளவடியானே இறுதலின் வேறுபாடு கூற வேண்டா. எருத்தடியும் இடையடியும் முச்சீரான் வருமென வேறுபட்ட வழிக் கூறி, அல்லாதன அளவடியாதல். கொள்ளவைத்தானென்பது. (இ-ள்.) வெண்பாவின் இறுதியடி ஒன்றும் முச்சீரான் அன்றி வாராது எ-று. அவை முன்னர்க் காட்டுதும். அஃதேல், "அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்" (மூதுரை. 4) என முச்சீரடி இடையும் வந்ததால் வெண்பாவினுளெனின், முச்சீர்த்தென் னாது 'ஆகும்' என்று ஆக்கங் கொடுத்துக் கூறினமையான், அத்துணை ஆக்கமின்றி இடையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க. அல்லாதார் அதனை வெண்பா வன்றென்ப. (72) வெண்பா ஈற்றில் அசைச்சீர் வருமாறு 385. அசைச்சீர்த் தாகும் அவ்வயி னான. இது, மேலதற் கெய்தியதொரு விதி. (இ-ள்.) வெண்பாவின் இறுதி வரும் முச்சீரடியின் ஈற்றுச்சீர் வரப்பெறாது, அசைச்சீரல்லாது எ-று. மேல், 'அசைநிலை வரையார் சீர்நிலை பெறல்' (தொல். செய். 27) என்றான், அவற்றுள் உரியசைச்சீர் முதலும் இடையும் இறுதியும் வரு மென்பான், 'இயற்சீர்ப் பாற்படுத்து' (தொல். செய். 28) இயற்றுக என்றான். அவ்வாறே இயலசைச்சீரும் முச்சீரடி இறுதி வரு மென்பது ஈண்டுக் கூறியவாறு. (73) வெண்பா ஈற்றடி இரண்டாம்சீர் நேரீற்றின்பின் இறுதிச்சீர் நிரையும் நிரைபும் ஆதல் 386. நேரீற்று இயற்சீர் நிரையு நிரைபும் சீரேற்று இறூஉம் மியற்கைய என்ப. இது, மேற்கூறப்பட்ட இயற்சீர் நான்கும் வருங்கால் இன்னுழி நின்று இன்னவாறு கொள்ளப்படுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நேரிறுதி வந்த நிரையும் நிரைபுமே இறுதிச் சீராய் நிற்பன எ-று. எனவே, தனிவந்த நிரையும் நிரைபும் நிரைமுதற்சீர் போலத் தளை கொள்ளப்படு மென்பதாம். 'ஏற்றிறூஉம்' என்ற இலேசினான் இடைவந்த நிரைபசையும் அவ்வாறு கொள்க. அஃது, 'இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே' (தொல். செய். 28) என்பதனான் அடங்காதோவெனின் அடங்காது. என்னை? அசைச்சீர்தான் அடங்கு மாற்றுக்கு ஆண்டுக் கூறினான், அது பிறிதுசீர் அசைச்சீரொடு தட்குமாற்றுக்குங் கூறல்வேண்டுமென்பது. அல்லதூஉம், ஆண்டு அளவடிக்குக் கூறினான், இது சிந்தடிக்கென்பது. வரலாறு: " வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோ லேரிய வாயினு மென்செய்வ - கூரியவேற் கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை" (முத்தொள். 71) எனவும், "அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாழித்தேர் குத்தி யெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்செய்த நாவாய்போற் றோன்றிற்றே யெங்கோமான் காய்சினவேற் கோதை களிறு." (முத்தொள். 17) எனவும் இவற்றினுட் 'கொள்ளா' எனவும் 'கோதை' எனவும் நின்ற நேரீற்றியற்சீர் முன்னர் முலையெனவுங் களிறெனவும் நிரையும் நிரைபுஞ் சீரேற்றவாறும் வெண்பாட்டீற்றடி முச்சீர்த்தாயவாறும் ஆண்டு அசைச்சீர் வந்தவாறுங் கண்டுகொள்க. என்றார்க்கு, முச்சீரடியின் முதற்சீர்க்குத் தளை கூறாரோவெனின், ஆண்டுத் தளைவகையின்றியும் வருதலின், அதனை வரைந்து கூறா ரென்பது; என்னை? 'கோட்டுமண் கொள்ளா முலை' எனவுங் 'காய்சின வேற் கோதை களிறு' எனவுந் தளைவகையான் வந்தன. "உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅய் வாழியென் நெஞ்சு" (குறள். 1200) எனவும், "கலாஅற் கிளிகடியுங் கானக நாட இலாஅர்க் கில்லை தமர்" (நாலடி. 29.3) எனவும் தளைவகையின்றி வந்தன. (74) வெண்பா ஈற்றடி இரண்டாம் சீர் நிரையீற்றியற்சீராயின் இறுதிச்சீர் நேரும் நேர்பும் ஆதல் 387. நிரையவண் நிற்பின் நேரும் நேர்பும் வரைவின்று என்ப வாய்மொழிப் புலவர். இஃது, ஒழிந்த அசைச்சீர் நிரையீற்றுப் பின்னன்றி வாரா வென்கின்றது. (இ-ள்.) நேரீற்றியற்சீர் நின்றவழி நிரையீற்றியற்சீர் நிற்பினென்பான் 'நிரையவண் நிற்பின்' என்றான். ஆண்டு நிரையும் நிரைபும் வரின் தளை வழுவாமாதலான் நேரும் நேர்புமே வந்து சீரேற்று முடிதல் வரைவின்று எ-று. "கொழுநனை மைந்தன் கொணர்ந்ததற் காக முழுமுலை பாய்ந்தன பால்" எனவும், "வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு" (முத்தொள். 97) எனவும் இவற்றுட் பாய்ந்தனவெனவும் பட்டினமெனவும் வந்த நிரை யீற்றியற்சீர்ப் பின்னர் நேரும் நேர்பும் வந்தன. முன்னர், 'நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும்' (தொல். செய். 74) எனக் கூறி, ஈண்டு நிரையவண் நிற்பினெனச் சுட்டிக் கூறியவதனானே, அதுவும் நிரையீற்றியற்சீரென்பதூஉம் அஃதிரண்டாஞ் சீரென்பதூஉங் கொள்க. அல்லாதார், அதனை வெண்சீர்க்கும் பொதுவெனக் கூறி, 'வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே' (தொல். செய். 29) என்றதனான் வெண்சீரிறுதி நிரையாக இயற்றி அதன் அடிப்பின் நேர்பசை கொடுப்ப; "எய்போற் கிடந்தானென் னேறு" (பு. வெ. வாகை. 22) என்புழிக் 'கிடந்தானென்' என நின்ற 'புலிசெல்வா' யினைக் 'கணிவிரி' யாக இயற்றி, 'நிரையவ ணிற்பின் நேரும் நேர்பும்' என்றதனான் ஏறு என்னும் நேர்பசை கொடுப்பர். அஃது ஈண்டு ஆராய்ச்சி யின்றென்பது; என்னை? இது கட்டளையடியன்மையின். (75) கலிப்பா முடியுமாறு 388. எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே, 389. வெண்பா வியலினும் பண்புற முடியும். இவை இரண்டு சூத்திரமும் முறையானே கலிப்பாவிற்கு அன்ன தோர் அடி அதற்கு வகுத்திலாமையின் வகுக்கின்றது. என்றார்க்கு, முதலது நேரடியும் ஈற்றது சிந்தடியுமாகக் கொள்ளல் அவ்வெழு நிலையுமெனின், அங்ஙனங் கொள்ளாமைக்கன்றே, "ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப" (தொல். செய். 68) எனவும். "இடையும் வரையார் தொடையுணர் வோரே" (தொல். செய். 69) எனவுங் கூறிற்றென்பது. எழுசீர் இறுதி ஆசிரியமெனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராக வருமென்பது கொள்க. "அரிதாய வறன்" என்னும் (11) கலிப்பாவினுள், "இனைநல முடைய கானஞ் சென்றோர்" என்பது ஈற்றயன் முச்சீரிறுதி ஆசிரியத்தாற் கலிப்பா இற்றது. "மணிநிற மலர்ப்பொய்கை" என்னும் (70) கலிப்பாவினுள், "மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல் எல்லாந் துயிலோ வெடுப்புக நின்பெண்டிர் இல்லி னெழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால்" என வெண்பா வியலினானும் பண்புற வந்தவாறு. பண்புறவென்பது, விசேடம்; மிக முடியு மென்றவாறு. எனவே ஈண்டுக் கூறாத இருசீரடியானும் நாற்சீரான் வந்த கலிப்பாவடியானும் ஐஞ்சீரடி யானும் முடிவன கொச்சகக் கலியுள்; அவை இத்துணை விசேடமிலவென்றவாறு. ஈண்டு விதந்து ஓதியவெல்லாம் பெரும்பான்மை யும் ஒத்தாழிசைக் கலிக்கென வுணர்க. 'இயல்' என்றதனாற் கட்டளை வெண்பாவே வரல் வேண்டுவதில்லை எனக் கொள்க. 'பண்புற' என்றத னான் மூன்றடியின் இழியிற் பண்புபட வாரா வெள்ளைச்சுரிதக மெனவுங் கொள்க. (76, 77) யாப்பின் இலக்கணம் 390. எழுத்து முதலா ஈண்டிய வடியின் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர். இஃது, "யாத்த சீரே யடியாப் பெனாஅ" (தொல். செய். 1) என நிறுத்த முறையானே அடி யுணர்த்தி யாப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எழுத்து முதலா ஈண்டிய அடியிற் குறித்த பொருள்களை முடிய யாத்தல் யாப்பாவதென்று சொல்லுவர் புலவர் எ-று. அடிக்கண்ணே முடியுமெனவே, இருசீரு முச்சீருங் கிடப்ப முடிய நாட்டினும் நாற்சீர் கொண்டு முடிய நாட்டினும் அமையுமென்பது. மாத்திரை முதலாக வென்னாது 'எழுத்து' என்ற தென்னையெனின், எழுத்தும் அசையுஞ் சீருங் கொண்டியன்ற ஒரோவடிக்கண்ணே இன்பஞ் செய்யும் அது; பொருட்காய் இன்றியமையாமையின் 'எழுத்து முதலா' வென்றா னென்பது. 'ஈண்டிய வடி'யென்பது அவை மூன்றும் ஒன்றாகத் தொடர்ந்து ஈண்டிய அடியென்றவாறு. எனவே, இவற்றைப் பொருளின்றி வேறுவேறு செய்யாது, பொருட்டொடர்புபடச் செய்யவேண்டு மென்பதூஉங் கூறி, ஓரடிக்கட் பொருளாற் செய்யாது, ஒழிந்த அடிக்கண் ஒரு சொல்லினைப் பகுத்து வாங்கிக்கொண்டு போய் வைத்தலா மென்பதூஉங் கூறியவாறாயிற்று. குறித்த பொருளென்றது அவ்வடியில் தான் வைக்கக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியுங்கொண்டு கூட்டாது அமைந்துமாறச் செய்தல்: "யாப்பறி புலவர்' என்பது அவ்வாறு செய்தல் வல்ல புலவர் அது கூறினாரென்றவாறு. அஃது, இதுபோலச் சீரும் பொருண்முடிய நிற்றலின், யாத்தசீரென்றா னென்பது. "மாயோன் மார்பி லாரம் போல மணிவரை யிழிதரு மணிகிள ரருவி நன்பொன் வரன்று நாடன் அன்புபெரி துடைய னின்சொல் லினனே." என இது குறித்த பொருளை நாற்சீரடிதோறும் முடிய நாட்டினவாறு. "மண்டில மழுக மறுநிறங் கிளர வண்டின மலர்பாய்ந் தூத மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப" (அகம். 260) என்றவழி, இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானுங் குறித்த பொருளை முடிய நாட்டினவாறு கண்டுகொள்க. முச்சீரான் முடிய நாட்டுவன ஒருசார் வெண்பாட்டினுட் பயின்று வருமென வுணர்க. "முயற்கோடு சீவி முதுவிசும்பு போழ்ந்தான்" என்றவழி எழுத்தும் அசையுஞ் சீரும் பொருளிலவாகி வந்தமையின் அஃதமையாது; யாப்பெனப்படாது, சொல்லிலக்கணத்தாற் சொற்றொறும் பொருளுடையவாயினு மென்பது. "மணிவெண் ணகைவன முலைமதி முகமலர் விழியிணைச் செவ்வாய் மென்னடைப் பேதை." என்றவழியும், முதலடிக்கட் பொருட்டொடர்பினை அறுத்துங் குறைத் துஞ் செய்தமையின் அதுவும் யாப்பறிபுலவரான் யாப்பெனப்படா தென்றவாறு. (78) யாப்பின் பகுதி இவை எனல் 391. பாட்டுஉரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோடு அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர். இச்சூத்திரம் அரிமாநோக்கு, மேற்கூறிய யாப்பிற்கும் வருகின்ற மரபிற்கும் அப்பகுதி யுரிமை கூறினமையின். (இ-ள்.) பாட்டும், உரையும், (485) நூலும், (478) வாய்மொழியும், (491) பிசியும், (488) அங்கதமும், (436) முதுசொல்லு (489) மென்று சொல்லப் பட்ட அவ்வேழ்நிலத்தும் "வடவேங்கடந் தென்குமரி யாயிடை" (தொல். பாயிரம்) நாட்டார் நடாத்துகின்ற செய்யுளின் பெயரே தனக்குப் பெயராகவு முடைத்து மேற்கூறிய யாப்பு எ-று. எனவே, மேற்குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டல் யாப் பென்றான், அதுவேயன்றி இப்பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பே யென்றானாம். இவ்வேழு வகையானுஞ் செய்தல் மரபென எதிரது நோக்கிற்று. பாட்டு உரை நூல் என்பவற்றிலக்கணம் முன்னர்ச் சொல்லும். யாப்பின் வழிய தென்பது இவ்வேழ் வகைப்பட்ட யாப்பின் பெயரது மரபாகும் யாப்பாகிய உறுப்பென்றவாறு. இதனை 'நூல்யாப்புப்' போற் கொள்க. இப்பகுதிதாம் தமிழ் நாட்டு மரபாகலின் மரபென்னும் உறுப்பு மரபென எதிரது நோக்கிற்று. 'வண்புகழ்மூவர்' என்பது வளன் உடைமை யான் புகழ் பெற்றார் என்றவாறு. அஃதாவது கொடுத்துப் பெறும் புகழெனக் கொள்க. மூவரெனப்படுவார் தமிழ்நாட்டு மூவேந்தருமாயினார். 'தண்பொழில் வரைப்' பென்பது நிலத்துக்கு நிழல் செய்யும் நாவலம் பொழிலுள் வரைந்து கொள்ளப்படும் வரைப்பினை யுடைய வென்றவாறு. தண்பொழில் உடைமையின் நாவலந் தண்பொழி லெனப்பட்டது. நாற்பெயரெல்லை யகமென்பது தமிழ்நாடென்றவாறு. வட வேங்கடந் தென்குமரியன்றிக் கிழக்கும் மேற்கும் கடலெல்லை கூறினானோ வெனின், அறியாது கடாயினாய். வரையறையில வென்று கூறாதனவெல்லாங் களைந்துகொள்ளப் படுவன வல்ல. வகை கூறாமையுந் தழீஇக்கொள்ளப் படுங் கண்டாய். அவர் வழங்கும் யாப்பின் வழியதென்பது அந்நாட்டார் வழங்கும் யாப்பின் மரபுப்பகுதி அவை என்றவாறு. தமிழ்நாட்டார் வழங்கும் மரபுப் பகுதி அவையெனவே, யாப்பும் மரபுங் கருதியதாயிற்று இச்சூத்திரமென்பது இதனாற் பெற்றாம். 'வடவேங்கடந் தென்குமரி யாயிடை' யென்புழி நான்கெல்லையுங் கூறினானென்பது. (79) மரபாவது இது எனல் 392. மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன. இது, நிறுத்தமுறையானே மரபினை விளங்கக் கூறுகின்றது. (இ-ள்.) மரபேதானும்- அங்ஙனங் கூறப்பட்ட மரபு தானும்; ஏகாரம் பிரிநிலை; உம்மை இறந்தது தழீஇயிற்று. மேல் எழுவகையான் யாக்கப் படுதன் மரபென்றமையின், மரபேதானுமென்றானென்பது. நாற்சொல்- பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்; இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லெனினும் அமையும். இயலான்- நாற்சொல்லினையும் உலகத்தார் வழங்குகின்ற வழக்கு வடிவினான்; யாப்புவழிப்பட்டன- மேற்பகுத்த யாப்புவழிப் பொருத்த முடைத்தாகிக் கிடப்பது எ-று. அஃதாவது, வழக்கெனவுஞ் செய்யுளெனவும் இடைதெரியாமல், ஒரு வாய்பாட்டான் வழக்குஞ் செய்யுளுமாகி ஒரு சொற்றொடரினைச் சொல்லியது போலச் செய்யுள் செய்தலென்றவாறு. 'சாத்த னுண்டான் கொற்ற னுண்டான்' எனவும், 'சாத்த னுறங்கினான் கொற்ற னுறங்கினான்' எனவும், 'சாத்தனை யறியாதார் ஒருவரையு மறியாதார்' எனவும், 'சாத்தனிற் கொற்றன்போமே' எனவும் நின்ற வழக்கியலை முறையானே ஆசிரியமும் வெண்பாவுங் கலியும் வஞ்சியுமாகப் பரப்பப்பட்ட யாப்பு வழிப்படுத்துக் கண்டுகொள்க. "ஓதியு மோதா ருணர்விலார்" (நாலடி. 27:10) என்னுஞ் செய்யுள் வழக்கிற்றாகவுஞ் சொல்லப்படும். வழக்கு வடிவினா னெனவே சொன்மரபும் பொருண்மரபும் அடங்கக் கூறினான். என்னை? பொருளின்றி நாற்சொல்லையும் வழங்காராகலின். எனவே, சொல்லும்பொருளும் அவ்வக்காலத்தார் வழங்குமாற் றானே செய்யுள் செய்க என்பதாயிற்று. இதனது பயன், ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒருகாலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. அதோளி இதோளி உதோளி (கலி. 116) எனவுங் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை முற்காலத் துள வென்பதேகொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியன் நூல் செய்த காலத்துளவாயினுங் கடைச்சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர், அவற்றுக்கு இது மரபிலக்கணமாகலினென்பது. இனிப், பாட்டினுந் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப்போயின் முற்காலத்துளவென்பதேகொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப்பெறா என்பது. இனிப், பொருளும் இவ்வாறே காலத்தானும் இடத்தானும் வேறுபடுதலுடைய. ஒருகாலத்து அணியுங் கோலமும் ஒரு காலத்து வழங்காதனவுள. ஓரிடத்து நிகழும் பொருள் மற்றோரிடத்து நிகழாதனவு முள. அவ்வக்காலமும் இடனும் பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்ய வேண்டுமென்பது. ஒருகாலத்துக் குழை பெய்தாரென்றும் ஒருகாலத்துக் குழல்பட முடித்தாரென்றும் ஆண்மக்களை, ஒழிந்த காலத்தும் அது கூறார். பதினெண்பாடைத் தேசிகமாக்கள் அணியினையுங் கோலத்தினை யும் விரவிக் கூறாது அவ்வந்நாட்டார் பூணுமாற்றானும் புனையுமாற் றானும் ஏற்பச்சொல்லுதல் மரபு. இனி, நான்கு நிலத்தினும் ஓரிடத்துப் பொருளை ஓரிடத்தவாகச் சொல்லுதலும் உலகொடு மலைதலுஞ் சமயங்களொடு மலைதலுங் கலையொடு மலைதலும் பிறவும் இன்னோரன்னவும் பொருண்மரபின் பாற்பட் டடங்கும். இவை நாடகவழக்கின் ஆமென்பது முன்னர் அகத்திணையியலுட் கூறினாம். "புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல்" (அகம். 7) என்பது பருவத்துக்கேற்ற அணி கூறியது. "கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித் துப்பின் அன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபி னொழியப் போகி உரந்துரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறனசைஇச் சென்றஎன் நெஞ்சே" (அகம். 9) என்றவழிக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மரபினவாய் வந்தன பலவுங் கண்டுகொள்க. மற்றும் நாற்சொல்லியலென்பது வழக்காயின் அது செய்யுட்குரிய திரிசொற்கும் ஏற்றவாறென்னையெனின், அவையுஞ் சான்றோர் வழங்கின வாறன்றி வேறுபட நாட்டப்படாவென்றற்கும், அவற்றுள்ளுங் காலம் பற்றித் திரிந்தனவும் உளவாயினும் அவை தவிர்த்துச் செய்யுள் செய்யப்படு மென்றற்கும் 'நாற்சொல்லியலான்' என அடங்கக் கூறினா னென்பது. மலையென்றதனைப் பிறங்கலென்றாரென்று இக்காலத்துச் செய்யுள் செய்யுங்கால், அப்பொருண்மையானே உயரென்று செப்பவோவெனின் அது மரபன்று. இனிக் குடவாயிலென்பதனைக், "கொற்றச் சோழர் குடந்தை வைத்த" (அகம். 60) எனவும், உறையூரென்பதனைப், "பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே" (புறம். 69) எனவும் மேலையார் திரித்த வகையானே இக்காலத்துந் திரித்துக் கொள்ளப் படுவன உள. அவை "களந்தை" என்றற் றொடக்கத்தன. பிறவும் இவ்வாறு வருவனவும் அறிந்துகொள்க. "கடையாயார் நட்பிற் கமுகனையர்" (நாலடி. 216) என இதனுள் ஓரினத்தவாகிய புல்லே கூறி ஒழிந்த மரங்களொப்பன உளவாயினும் உடன்கூறாராயினார். இன்னோரன்னவுஞ் செய்யுட்கு மரபெனப்படுமென்பது. மற்றுப், 'பாட்டுரை நூலே'யென ஏழுவகை வகுத்த பகுதியையுஞ் செய்யுட்கு மரபென மேற்கூறினான்; அதனானே இவ்வேழ்வகையானன்றி, ஆரியர் வேண்டுமாற்றானும் பிறபாடைமாக்கள் வேண்டுங் கட்டளை யானுந் தமிழ்ச்செய்யுள் செய்தல் மரபன்றென்றவாறு. (80) ஆசிரியப்பாவின் ஓசை 393. அகவல் என்பது ஆசிரி யம்மே. இது, நிறுத்த முறையானே தூக்கு உணர்த்துவானெழுந்தான், அஃதாவது பாவினைத் துணிக்கப்படுவதாகலான் அப்பாவினை உணர்த்து கின்றானென்பது. நிறுக்கப்படுபொருள் பொன்னானும் வெள்ளியானும் ஒன்று பெற்றவழியன்றிக் கழஞ்சுந் தொடியுந் துலாமு மெனத் துலைக் கோலால் தூக்கி அளக்குமாறில்லை. அதுபோலப் பாவின்றித் தூக்கி யளக்கப்படும் பொருள் இன்மையானும், பாவினை எழுநிலத்தெழுந்த செய்யுளடி(391) வரையறையுடைய பாட்டிற்கு இன்னவாறு வந்ததென்றறி விப்பது தூக்காகலானும், எல்லாப் பாவினுக்குந் தூக்குப் பொதுவாக லானும், பாவொடு புணர்த்தே தூக்குணர்த்தப்பட்டது. (இ-ள்.) அகவல் என்பது ஆசிரியம்மே- வழக்கினுள் அகவலென்று வழங்கப்படும் பாவினை ஆசிரியத்திற்குரிய பாவென்ப எ-று. அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது, அஃதாவது, கூற்றும் மாற்றமு மாகி ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங்கருதியவாறெல்லாம் வரையாது சொல்லுவதோராறும் உண்டு. அதனை வழக்கினுள்ளார் அழைத்தலென்றுஞ் சொல்லுப. அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாந் தொடர்ந்துகிடந்த ஓசை அகவ லெனப்படும். அவை தச்சுவினைமாக்கள் கண்ணும், களம் பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங்கழங்கு மிட்டு உரைப்பார்கண்ணும், தம்மில் உறழ்ந் துரைப்பார் கண்ணும், பூசலிசைப்பார் கண்ணுங் கேட்கப்படும். கழங்கிட் டுரைப்பார் அங்ஙனமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா வெனப்படு மென்றவாறு. (81) வெண்பாவின் ஓசை 394. அஃதான்று என்ப வெண்பா யாப்பே. இது, வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் கூறிய அகவலோசையன்றிச் செப்பிக் கூறும் ஓசை யெல்லாம் வெண்பா வெனப்படும் எ-று. யாப்பென்றதனான் அப்பாக்கள் செய்யுண்முழுதும் ஒருங்கு தழீஇக் கிடக்குமென்பது கொள்க. அகவிக் கூறாது ஒருவற்கொருவன் இயல்புவகை யானே ஒரு பொருண்மை கட்டுரைக்குங்கால் எழும் ஓசை செப்பலோசை யெனப்படும். இவ்விரண்டுமல்லது வழக்கினுள் இன்மையான் அஃதான் றெனவே அதனிலக்கணம் பெறுவதாயிற்று. (82) கலிப்பாவின் ஓசை 395. துள்ளல் ஓசை கலியென மொழிப. இனித், துள்ளலுந் தூங்கலும் செய்யுட்கணன்றி, வழக்கினுஞ் செய்யு ளினும் ஒப்பவருவனவல்ல; அவற்றுள், துள்ளலோசை உணர்த்துகின்றது. (இ-ள்.) துள்ளல் ஓசை என்பது, வழக்கியலான் சொல்லாது முரற்கைப் படுமாற்றான் துள்ளச் சொல்லும் ஓசை; அது கலிப்பா எனப்படும் எ-று . (83) வஞ்சிப்பாவின் ஓசை 396. தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் இது தூங்கல் ஓசை உணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) அடியிற்றூங்காது சீர்தொறுந் தூங்குமோசை தூங்க லோசை யெனப்படும். அது பெறுவது வஞ்சிப்பா வாவது எ-று. (84) மருட்பா ஆமாறு 397. மருட்பா ஏனை யிருசார் அல்லது தான்இது என்னுந் தனிநிலை யின்றே. இது, மருட்பாவிற்கு வேறுபாடு இல்லை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மருட்பாவிற்கு உறுப்பாவது ஒழிந்த இரு கூறுமல்லது, தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டுந் தனிநிலை யின்று எ-று. எனவே, இரண்டன் கூட்டத்துக்கண்ணது மருட்பாவாவதென்ற வாறு. பரிபாடற்கு இருசார் இன்மையின் ஈண்டுக் கூறிற்றிலர்; அது மேற்கூறுப. 'ஏனை இருசார்' என்ற தென்னையெனின், இச்சூத்திரத்து முன்னர் அதிகாரப்பட்டு நின்ற துள்ளலோசையுந் தூங்கலோசையுமல்லது, அங்ஙனஞ் செய்யுட்கு உரியவன்றி வழக்கிற்கும் வருவனவாகி ஒழிந்துநின்ற செப்பலும் அகவலுமேயென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. அவை இரண்டுங் கொள்ளுங்கால் நிறுத்தமுறையாற் கொள்ளாது, எதிர்சென்று கொள்ளப்படும். கொள்ளவே, செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாக வும் வருவதாயிற்று மருட்பா. இனி நிறுத்த முறையானே கொள்வார், வெண்பா முதல் அகவல் பின்னாக வருவது மருட்பாவன்றெனவும், வெண்பா வொழித்து ஒழிந்தபாத் தம்முள் மயங்குவனவே மருட்பா வெனவுங் கூறுப. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியத்தொடும் வெண்பா வொடும் மயங்கி யிறினும் அவை மருட்பாவெனப் படாமையின் அது பிழைக்கு மென்பது. (85) அப்பாக்களாலேயே பாட்டு வருதல் 398. அவ்வியல் அல்லது பாட்டுஆங்குக் கிளவார். இது, மேலவற்றிற்கு ஒரு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) மேற்கூறிய நான்குபா விலக்கணத்தானல்லது பாட்டின்கண் வேறுபாக் கூறப்படாது எ-று. இது கூறிப் பயந்த தென்னையெனின், மேற்கூறிய பாக்களாற் பெயர் கூறாத செய்யுள்களும் அவை பாவாக வரினல்லது வேறு தமக்குப் பாவில வென்பதூஉம், "மருட்பா ஏனை இருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்று" (397) எனவே அவ்விரண்டன் கூட்டத்தின்கண்ணும் வேறொரு பாப் பிறக்கு மென்று கொள்ளினுங் கொள்ளற்கவென்பதூஉம், பிற்காலத்து நூல் செய்யும் ஆசிரியர் பிறவகையாற் பாவுறுப்பினை மயக்கம்பட வேண்டுவா ருளராயின் அவரை விலக்கியுங் கூறியவாறு. அல்லதூஉம், மாணாக்கன் இதன் முதனூல்செய்த ஆசிரியன் பண்ணுந் திறனும் பகுத்தானைக் கண்டு இவற்றையும் பாவும் இனமுமாகப் பகுத்தான்கொலென்று ஐயுறாமை விலக்கி, இயனூலுள் அவ்வாறு கூறிற்றிலனெனச் சொல்லினானென்பது. நான்கு பாவினையும் நோக்கி ஆங்கென்றான்; ஐந்து செய்யுளை நோக்கி அவ்வியலென்றானென்பது. (86) தூக்கு நடக்கும் இடவகை 399. தூக்கியல் வகையே யாங்கென மொழிப. இது, தூக்காமா றுணர்த்துகின்றது. (இ-ள்.) தூக்கெனப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை அச் சொல்லப் பட்ட நான்கிடமுமாம் எ-று. ஆங்கென்றது அப்பெற்றித்து என்றவாறாகக் கொள்ளற்க. அவ் விடம் தூக்கு இயலும் இடப்பகுதியென்றவாறு; என்றார்க்குத் தூக்கினது இலக்கணம் ஈண்டுக் கூறியதிலனாலெனின், தூக்கென்பது சொல்லின் முடியு மிலக்கணத்தது. தூக்கென்பது நிறுத்தலும் அறுத்தலும் பாடலு மென்று இன்னோரன்னவற்றுமேல் நிற்கும்; ஈண்டும் அவ்வாறே பாவினை இத்துணையடியென நிறுத்திக் கூறுபாடறிதலும், அவ்வத் தூக்குள்வழிச் சொல்லுவாரது உறுப்பு விகாரப்பட்டு ஓதுவது போன்று அசையுமாறுங் கண்டுகொள்க. இனி, அதுதான் இன்ன பொருளை அறுத்து நிற்கு மென்பான் பாக்கூறி, அப்பாவின்கண்ணது இவ்வறுதி யென்றான்; எனவே, இனிக் கூறாது நின்றதில்லை தூக்கிற்கு வேண்டும் இலக்கணமென்பது. இக்கருத்தினானே தூக்கினைப் பாவெனினும் அமையும். "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே" எனப் பிறருஞ் சொல்லுப. அகவலோசைக்கண் தூக்கு வருங்கால் இருசீர் முதலா எண் சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக் கொள்ள, அஃது ஆசிரியத்தூக்கா மென்றவாறு. இரு சீரான் துணிப்ப ஆசிரியவோசை யாகாது; முச்சீரான் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும், இடையும் வரையாரெனவுங் கூறினமையின். அஃதேல், அடிவகையானே அறுதி யுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யும் எனின், அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்த லாகாது; என்னை? இருசீர் முதலாப் பலசீர் தொடர்ந்தவழித் தூக்கு அறுப்புக் கொண்டன்றி இத்துணைச்சீர் கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்து பாச் சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க; அல்லாக்கால், "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்" (ஐங்குறு.) என்றவழி, 'உள்ளார்' 'முள்ளுடை' என்பன அடியெதுகையாக முச் சீரடியும் ஐஞ்சீரடியுமெனக் கொண்டு மயக்கமாமென்பது. "நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே" (புறம். 235) என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது. தூங்கலோசை அவைபோல நாற்சீரடிக்கணன்றி இருசீர்க் கண்ணுஞ் சிறுபான்மை முச்சீர்க்கண்ணுந் தூக்குக் கொள்ளப்படும். அங்ஙனங் கொள்ளாக்கால் இருசீரெனவும் முச்சீரெனவுந் தூக்கின்றி இடை தெரியப்படா வென்பது . (87) தொடைவகை இவை எனல் 400. மோனை யெதுகை முரணே இயைபுஎன நானெறி மரபின தொடைவகை யென்ப. இது, 'மரபே தூக்கே தொடைவகை யெனாஅ" (தொல். செய். 1) என நிறுத்தமுறையானே, தூக்குணர்த்தித் தொடைவகை உணர்த்துவா னெழுந்தான். அவைதாம் இவையெனப் பெயரும் முறையுந் தொகையு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மோனைத்தொடையும் எதுகைத்தொடையும் முரண் டொடையும் இயைபுத்தொடையுமென நான்கு வகைப்படும் தொடை எ-று. 'நெறிமரபு' என்பது நெறிப்பட்ட தொடையிலக்கணம் இது வென்றவாறு; எனவே, "அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும்" (தொல். செய். 89) என்றவழி, இதுபோலச் சிறந்ததன்று அளபெடைத்தொடை யென்பதாம்; என்னை? அதுவும் வழுவமைத்துக்கொண்ட எழுத்தாகலானென்பது. 'தொடைவகை'யென்பது தொடைப் பகுதி பலவுமென்றவாறு. அவை மேற்கூறுமாற்றான் மோனை நான்கும், எதுகை பதினைந்தும், முரண் ஐந்தும், இயைபு இரண்டுமென்று இவ்வகைப்படுதலும், இனி ஈண்டு எண்ணப்பட்ட தொடைப்பகுதிகளும் அறுநூற்றிருபத்தைந்தடியினையும் ஒரோவொன்றாகத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும், அவை தம்மொடு பிற வந்து தொடுப்பனவும், ஓரடிக்கண்ணே தொடுப்பனவும், அவற்றைக் கட்டளையடி யல்லனவற்றும் ஈறாய் விராய்த்தொடுப்பனவும், கட்டளை யடி யல்லனவற்றைத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும், தம்மொடு பிறவற்றைத் தொடுப்பனவுமென இன்னோரன்ன பலவுமுள. அப்பகுதி யெல்லாம் அறிவித்தற்குத் 'தொடைவகை' யென்றானென்பது. (88) இதுவுமது 401. அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) அந்நான்கேயன்றித் தொடைவகை ஐந்தெனவும்படும். அளபெடைத்தொடையொடு தலைப்பெய்ய எ-று. அளபெடை எழுத்தோத்தினுள் வேறு எழுத்தெனப்படாமைச் சிறப்பின்மைநோக்கி, ஈண்டுமதனை வேறு போதந்து கூறினானென்பது. என்றார்க்கு, மேலைச் சூத்திரத்து நானெறி மரபினவெனத் தொகை கூறினமையின், ஈண்டு அளபெடையுந் தொடையாமென அமையும்; நான்கின்மேல் ஒன்றேறியக்கால் ஐந்தாமென்பது ஈண்டுச் சொல்ல வேண்டுவதன்று பிற வெனின், அற்றன்று; நான்கினோடு ஒன்றனையே சொல்லுகின்றானாயின் அது கடாவாவது; ஐந்தெனவும் ஆறெனவும் படுமென்றதற்கு இது கூறினான்; உயிரளபெடையும் ஒற்றள பெடையுமென அளபெடை இரண்டாதலி னென்பது, அஃதே கருத்தாயின், ஆறுமாகு மென்னு மெனின், அங்ஙனங் கூறின் உயிரளபெடை யோடு ஒத்த சிறப்பிற் றாவான் செல்லும் ஒற்றளபெடையென மறுக்க. உயிரின்பின்னது ஒற்றாகலான் எடுத்தோத்துப் பெறுவது உயிரளபெடை யெனவும், உம்மையாற் பெறுவது ஒற்றளபெடை யெனவுங் கொள்க. உம்மை எச்சவும்மை. ஒற்றளபெடை மூன்றுபாவினுஞ் செல்லாது, கலிப்பாவினுள் துள்ளலோசையான் நில்லாமையினென்பது. (89) வேறும் தொடை சில உண்மை 402. பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் அமைத்தனர் தெரியின் அவையுமா ருளவே. இதுவுமது. (இ-ள்.) மேற்கூறிய ஐந்துமேயன்றிப் பொழிப்புத் தொடையும், ஒரூஉத்தொடை யும், செந்தொடையுமென இவையுமுள எ-று. செந்தொடை மரபென்பது செந்தொடையிலக்கணமென்றவாறு. 'அமைத்தனர் தெரியின்' என்றதனான் அமையுமாற்றான் அமைத்துக் கொள்ளப்படும். யாங்ஙனம்? பொழிப்பும் ஒரூஉவும் ஓரடி யுள்ளே வருமெனவும், செந்தொடை ஓரடியுள் வரினும் இரண்டடி யானன்றி அறிய வாராதெனவுங் கொள்க. இக்கருத்து நோக்கி இவை ஈண்டுப் போதந்து கூறினானென்பது. 'அவையுமா ருளவே' யென்ற உம்மையான், இவை போல ஓரடிக் கண்ணே வரும் முற்றெதுகையும், கிளைமுற்றெதுகையும் இரண்டந்தாதி யும் இருவகை விட்டிசைத்தொடையுங் கொள்ளப்படும். (90) இதுவுமது 403. நிரனிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் மொழிந்தவற்று இயலான் முற்று மென்ப. இது, நிரனிறைத் தொடையும் இரட்டைத்தொடையுமென இரண்டு தொடை கூறி, அவை முற்கூறிய தொடைப்பாற்படுமென்று அடங்கக் கூறுகின்றது. (இ-ள்.) நிரனிறைப் பொருள்வகையான் தொடுக்குந் தொடையும், வந்த சீரே நாற்கால் தொடுக்குந் தொடையும் முன்னைத் தொடைப் பாற்பட்டு அடங்கும். எ-று. யாத்த வெனினும் தொடுத்த வெனினும் ஒன்று. "அடல்வேல் அமர்நோக்கி நின்முகங் கண்டே யுடலு மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்பும் தடமதிய மாமென்று தாம்." (யா. வி. மேற்) என்றவழி உடலுங் கடலுமென நிரனிறைத்தொடைமேற் கூறுமாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும். "பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்" என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று; அஃது இயைபின் பாற்படுமென்ப. ஒழிந்தனவும் அன்ன. இரட்டைத்தொடை யென்பது ஒரு சொல்லே நான்கு சீருமாகி வருமென்பது. அஃது, "ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்." (யா. வி. மேற்.) என வரும். இது குறையீற்றிரட்டை; இயைபுத்தொடையாய் அடங்கும். "பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ" (யா. வி. மேற்.) என்பது நிறையீற்றிரட்டை; இதுவும் இயைபாய் அடங்கிற்று. செந்தொடையாய் அடங்குவன உளவேற் கண்டுகொள்க. மற்று இவை இவ்வாறு அடங்குவனவற்றை விதந்தோதுவது என்னை யெனின், இவையுந் தொடைப்பாடு கண்டு ஐயுற்றானை ஐயமறுத்தா னென்பது. எனவே, ஒழிந்த பொருள்கோள் தாமே நின்று தொடைப்பாடு காட்டி ஐயஞ் செய்யாமையின் அவை கூறானாயினா னென்பது. நிரனிறை யாயின் இனைத்தென்றெண்ணி நிறுத்த பொருட் கேற்ப எதிர்பொருளும் எண்ணி நிறுத்துச் செய்யப்படுதலின், அது வேறு தொடையாங்கொலென்று ஐயஞ்செல்லுமென்பது. 'மொழிந்தவற் றியலான்' எனவே, தனக்கு வேறியல்பில்லாத செந்தொடை நீக்கப்பட்டது. பொழிப்பும் ஒரூஉவும் போல ஓரடியுள் நின்றுந் தொடைமை செய்யினும் அவை முற்றாய் அடங்கும். ஈரடிக் கூட்டத்துத் தத்தம் வகையான் தொடைமை செய்யாவென்பது. (91) மோனை தொடை ஆமாறு 404. அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை. இது, நிறுத்த முறையானே மோனைத்தொடையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதொறும் முதற்கண் ஓரெழுத்தே வரத் தொடுப்பது மோனைத்தொடையாம் எ-று.1 "கண்டற் கானற் குருகின மொலிப்பக் கரையா டலவ னளைவயிற் செறிய" (அகம். 260) என்பது அடிதொறும் முதலெழுத்தொன்றி மோனைத்தொடை வந்தவாறு. "கோதை மார்பிற் கோதை யானுங் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்" (புறம். 48) என்பதும் அது. இனிவருந் தொடையும் இதுவுமெல்லாம் அறுநூற்றிருபத் தைந்தடிக்கு உரியவாகியும், பிறவடிக்கு உரியவாகியும், வஞ்சியடிக்குரிய வாகியும், குறளடி சிந்தடி நெடிலடி கழிநெடிலடியெனும் நால்வகை யடிக்கும் உரியவாகியும் வருமெனக் கொள்க. அற்றன்று, அறுநூற்றிருபத்தைந் தடிக்கும் மோனைத்தொடை ஒன்றொன்றாகச் சென்று பெருகி அறுநூற்றிருபத்தைந்து தொடையா மென்பது. மற்று அடியிரண்டியைந்தவழியன்றே தொடையாவது? இவை அறுநூற்றிருபத்தைந்து தொடையாங்கால் இஃது ஓரடிக்கண்ணே வரல்வேண்டும்; வேண்டவே, அடிதொறுந் தலையெழுத்தொப்பது மோனையென்றதனொடு மாறுகொள்ளும் பிறவெனின், இது நோக்கி யன்றே, 'அடியுள் ளனவே, தளையொடு தொடையே' (தொல். செய். 33) எனக் கூறி, 'அடியிறந்து வருதலில்' (தொல். செய். 34) என்பானாயிற்று. எனவே, அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஒன்றனையே இரட்டித்துத் தொடைகொள்கவென்பது பெற்றாமன்றே, ஈண்டு அடிதொறுமெனப் பன்மைகூறவே, அவற்றையே இரட்டித்தலும் பிற அடிவந்து தொடுத்தலும் எல்லாம் அடங்கக் கூறினான் ஈண்டென்பது. "மெய்பெறு மரபிற் றொடைவகை" (தொல். செய். 101) என மேல் வரையறுக்கப்படுந் தொகை பதின்மூவாயிரத்தெழு நூற்றெட்ட னுள்ளும், மோனைத்தொடை வருங்கான் மூன்று பாவிற்கும் ஓதிய எழுபத்தெட்டுச் சீரினும் வரப்பெறும்; அவ்வாறு வருங்கால், "அடியுள் ளனவே தளையொடு தொடையே" (தொல். செய். 33) என்ற தளையிலக்கணமும், "அடியிறந்து வருதலில்' (தொல். செய். 34) எனப்படுமாகலான், அவ்வடி இரண்டன் கூட்டத்துத் தளைவழுக் களையல் வேண்டும். களையுங்கால் ஆசிரியத்து நாற்பத்தொன்றும், வெள்ளை யடியுட் பதினெட்டும் ஆக ஐம்பத்தொன்பது நிலங் களையப்படும். கலிப்பாவிற்கு அவ்வாறு களையவேண்டுவதில்லையென்பது. ஆசிரியத்து நாற்பத்தொரு நிலமாவன: தனக்கு ஓதிய இருபத்தேழு சீரும் பதினான்கு நேராதியும் பதின்மூன்று நிரையாதியுமாதலான், அவற்றுள் நேராதி பதினான்கும் ஒரோவொன்று பன்னிரண்டடி உறழுங் காற் பெருகிய நிலத்தின் இவ்விரண்டடியாக இருபத்தெட்டடியும், இனி நிரையாதி பதின்மூன்றற்குஞ் சுருங்கிய நிலத்தின் ஒரோவொன்றாகப் பதின்மூன்றடியுமென நாற்பத்தோரடியுந் தம்மொடு தாம் வந் திரட்டிக்குங் கால் தளை வழுப்படுதலின், அவை தொடுக்கப்படாவென்பது. இனி, வெண்பாவடி உறழுஞ் சீர் இருபத்தேழனுள்ளும் நேராதிச்சீர் பதினான்குஞ் சுருங்கிய நிலத்துள் ஓரொன்றாகப் பதினான்கடியும், நிரையாதிச்சீர் பதின்மூன்றனுள் ஒன்பதொழித்து ஒழிந்த நான்கு சீரும் நின்றுறழ்ந்த அடியுட் பதினான்கெழுத்தடி பெருகிய நிலத்துள் நான்கு மாகப் பதினெட்டடியுந் தம்மொடு தம்மை இரட்டித்துத் தொடுப்பத் தளை வழுவுமாகலிற் களையப்படுமென்பது. நிரையாதிச்சீர் நான்குமாவன: 1 வரகு, 2 வலியது, 3 கடியாறு, 4 விறகுதீ என்பன. ஒழிந்த நிரையாதி ஒன்பது சீரும் நின்று உறழ்ந்த அடி எஞ்ஞான்றுங் களையப்படாது தொடைப்படுமென்பது. அவை ஒன்பதுமாவன: 1 அரவு, 2 புளிமா, 3 கணவிரி, 4 பெருநாணு, 5 உருமுத்தீ, 6 மழகளிறு, 7 நரையுருமு, 8 புலிவருவாய், 9 குளிறுபுலி எனவிவை. 1 வரகு, 2 நரையுருமு, 3 காருருமு, 4 பாதிரி எனவும், 1 வலியது, 2 கடியாறு, 3 காருருமு, 4 பாதிரி எனவும், 1 கடியாறு, 2 தேமா, 3 நரையுருமு, 4 காருருமு எனவும், 1 விறகுதீ 2 தேமா, 3 புலிவருவாய், 4 காருருமு எனவும். இப்பதினான்கெழுத்தடி நான்குந் தொடுக்குமாறில்லை. ஒழிந்த நேராதியும் இவ்வாறே சுருங்கின நிலத்து உறழ்ந்த வடி தொடுக்குமாறில்லை யென்ப தூஉங் கண்டுகொள்க. இனிக், களையப்படாத நிரைமுதற்சீர் ஒன்பானுள்ளுஞ் சுருங்கிய எழுத்துச்சீர் ஒன்பது. பெருகிய எழுத்துச்சீர் 1 நரையுருமு, 2 புலிவருவா யென்பன. 1 அரவு, 2 வரகு. 3 வரகு, 4 வரகு எனவும், 1 அரவு, 2 புலிவருவாய், 3 காருருமு, 4 தேமா எனவும் இவை முதலும் முடிவுங்காட்டிய அடிக்கண் அவை தம்மொடு தம்மைத் தொடுக்கப்படுதலிற் களையுநில மிலவாயின. 1நரையுருமு, 2 வண்டு, 3 வரகு, 4 வரகு எனவும், 1 நரையுருமு, 2 காருருமு, 3 பாதிரி, 4 தேமா எனவும் ஐயெழுத்துச்சீர் முதலும் முடிவுங் காட்டிய அடி களையப்படாது தொடைப்படுமென்பது. புலிவருவாய்க்கும் இஃதொக்கும். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. இவ்வாற்றான் அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஐம்பத்தொன்பது நிலங் களைந்து ஒழிந்த அடி ஐஞ்ஞூற்றறுபத்தாறானும் பெற்ற மோனைத் தொடை ஐஞ்ஞூற்றறு பத்தாறெனப்படும். இவ்வாறே தலையாகெதுகை, அடியெதுகை, எழுத்தடியியைபு, சொல்லடி யியைபு என்னும் நான்கு தொடைக்குங் களைவன களைந்து தொகை கூட்டிக்கொள்க. இவற்றுள், ஆசிரியப்பாவினுள்வரும் அடிமோனைத்தொடை இருநூற்றெண்பத்து மூன்றும், வெண்டொடை நூற்றறுபத்து மூன்றும், கலிப்பாவிற்குரிய தொடை நூற்றிருபதுமாகி மூன்று பாவிற்குந் தொகுப்பத் தொடை ஐஞ்ஞூற்றறுபத்தாறாம். ஒழிந்த நான்கற்கும் இவ்வாறே கொள்க. கொள்ளவே, இத்தொடை ஐந்தனானும் பெற்ற தொடை இரண்டாயிரத் தெண்ணூற்று முப்பதாம், இவற்றுள் அகவற்றொடை ஆயிரத்து நானூற் றொருபத்தைந்து; வெண்டொடை எண்ணூற்றொருபத்தைந்து; கலித் தொடை அறுநூறெனக் கொள்க. "அடியெதுகை மோனை தலையா கெதுகை அடியியைபு தாமிரண்டென் றைந்துங்-கடியப் படுநில மைம்பது மொன்பது மென்ப எழுபத்தெண் சீரடிக்கு மேற்று" எனவும், "ஓழிந்த நிலத்து நிரைபதின்மூன் றொல்லாது ஒழிந்த வுயர்ந்துழி யொன்றாக் - கழிந்த நிரையொன்றாய் நேரிரண்டாய் நாற்பத்தொன் றாகும் அவையகவற் காகா தன" எனவும், "வரகுவலியது வான்கடி யாறு விறகுதீ வெள்ளைக்கு மேனிலத்து ளொன்றா இழிவழி நேர்முதற்சீ ரேழிரண்டு மாக அவையைம்பத் தொன்பா னகற்று" எனவும், "ஐம்பத்தொன் பானன்றி யைஞ்ஞூற் றறுபத்தாறு ஒன்றற் குரியவா றொட்டு" எனவும், "ஐந்து தொடையா னகவற் றொடையிருநூற் றெண்பத்து மூன்றா மெனமொழிப வொன்றொன்றொ வெள்ளைத் தொடைநூற் றறுபத்து மூன்றாகுந் துள்ளற்கு நூற்றிருப தாம்" எனவும், "சொல்லி னவைதன் றொடையிரண் டாயிரத் தெண்ணூற்று முப்பஃ தெனல்" எனவும், இவ்வாறே விரித்துரைத்துக்கொள்க. (92) எதுகைத்தொடை ஆமாறு 405. அஃதொழித்து ஒன்றின் எதுகை யாகும். இஃது, இரண்டாமெண்ணு முறைமைக்கணின்ற எதுகைத் தொடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டடியினும் முதனின்ற சீர் முதலெழுத்திரண்டும் ஒழிய அல்லனவெல்லாம் ஒன்றிவருதலும் ஒரோவெழுத்தே ஒன்றிவருதலுமென இங்ஙனங் கூறியவற்றுள், அஃதொழித்து அச்சீர் முழுதொன்றின் தலையா கெதுகையென்றும், இரண்டாமெழுத்தொன்றின் அடியாகெதுகை யென்றும் வழங்கப்படும். அயலெழுத் தொன்றினென்னாது முதலெழுத் தினைச் சுட்டிக் கூறுதலென்னையெனின், இவ்வாறு எதுகையாங்கால் முதலெழுத்துக்களின் மாத்திரை தம்மின் ஒத்துவரல் வேண்டுமென்றற்குக் கூறினானென்பது. உ-ம்: "மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும்' (தொல். அகத். 5.) என்பது தலையாகெதுகை. "அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப். பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி" (பெரும்பாண். 1,2.) என்பது அடியெதுகை. இதனை இடையாகெதுகை யெனவும் அமையும். ஒழிந்தன கடையாகெதுகை யெனப்படும். பிறவும் அன்ன. அஃதேல், தலையாகெதுகை யென்றதுபோலத் தலையாகுமோனை யுங் கொள்ளாமோவெனின், அற்றன்று; ஆசிரியன், "அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை' (தொல். செய். 92) என்றானாகலின், அடிமோனையே கொண்டாமென்பது. என்றார்க்கு, "வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்" (நாலடி. 3 . 9.) என்றவழி, அடிதோறும் ஒருசொல்லே வந்து தொடையாயிற்றன்றோ வெனின், அஃது இரண்டடிக்கண்ணே வந்ததன்று, செய்யுண்முழுவதும் பயின்றுவந்து சுவைமைப்படாதாகலின் வழிமோனைப்பாற் பட்டடங்கும் என்க. இச்சூத்திரத்துக் காட்டப்பட்ட தொடை இரண்டும் மூன்று பாவிற்கும் ஓதிய அறுநூற்றிருபத்தைந்து அடியொடுங் கூட்டித் தொகை சொல்லுமாறு மேலைச்சூத்திரத் துரைக்கப்பட்டது. (93) மோனைஎதுகைகளுக்குக் கிளையெழுத்து ஒன்றி வருமாறு 406. ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. இது, மேற்கூறிய தொடைப்பாற்பட்டு வருவன வேறுபல தொடை கண்டு அவை கூறுகின்றது. (இ-ள்.) ஆயிரு தொடையென்பன மோனையும் எதுகையும்; இவை இரண்டற்கும் கிளையெழுத்துக்களும் ஒன்றிவரப் பெறும் எ-று. இதன்கருத்து: அங்ஙனங் கிளையாகி வந்த வேறுபாட்டான் எல்லாத்தொடையும் வேறு பலவாமென்றவாறு. கிளையெழுத்தென்பன வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையின மும் உயிருமெனவிவை. இவையெல்லாம் ஒரோகிளைமை யுடைமையிற் கிளையெனப்பட்டன. இனி, ஆசெதுகையும் மூன்றாமெழுத்தொன்றெதுகையும், அடியெதுகைக் குரித்தாகிய இரண்டாமெழுத்தின் முன்னும் பின்னுந் தொடர்ந்துநிற்றலின், அவையுங் கிளை யெனினும் அமையும்; அற்றன்று; அடிமோனையுந் தலையாகெதுகையும் அடியெதுகையும் வந்து நுந்தை யென்னுஞ் சீர்க்கண் மூன்றா மெழுத்தொன்றிவருதல், "மெய்பெறு மரபிற் றொடை" (தொல். செய். 101) எனப்படாமையின், ஆண்டு அது கிளையாகாது; 'மெய்த்தல் ஒத்த' லென்ற வழியன்றி, 'ஈதல் காய்த' லென்றவழி நெடின் மோனையாய்த் திரிபுபடுதலின் ஆசிடையெதுகையுங் கிளையாகாது. 'உரிய' வென்றதனானே இவை அத்துணை யுரியவலவாமெனக் கொள்க. மற்று 'நுந்தை நுந்தை' யென்றவழி, ஆண்டு முதனின்ற மோனை சிறந்ததென்னாமோவெனின், என்னாமன்றே, இரண்டாய ஈரெழுத்துத் தேமாவாகவே பெரும்பான்மை யாகலின். இதனானே, இது தலையாகுமோனையெனத் தலைமை கூறப் படாததூஉமாயிற்று; என்னை? தொடையென்பன 'பூத்தொடை' போலச் செய்யுட்குப் பொலிவுசெய்ய வேண்டுமாகலின். இக்கருத்தினானன்றே சொல்லடி யியைபினைத் தலையாகியைபெனத் தலைமை கூறாராயிற் றென்பது. அடியெதுகையாயின் தலையாகெதுகை போலச் சிறந்துகாட்டு மென்பது. செந்தொடையுஞ் செய்யுட்பொலிவு செய்யுங்காற் கொன்றையுங் கடம்பும்போல நின்றவாறே நின்று தொடைப்பொலிவு செய்யுமென்பதாம். அனுவுங் கிளையெனப்படுமோவெனின், அதுவுங் கிளைமைபற்றியல்லது அனுவாகாதென்றற்கு இவற்றொடுங் கூறினாமென்பது. ஈண்டு ஓதிய கிளை உயிரும் ஒற்றுமென இரண்டாகலின் அவ்விரு வாற்றானுங் கிளைமை பற்றி அனுக்கொள்ளப்படும். என்னை? 'அஆ வாயிரண் டங்காந் தியலும்' (தொல். எழுத். பிறப். 3) என அகர ஆகாரங் கிளையாயின. ஐகார ஔகாரம் போலிவகையான் அவையெனப்படும். இ ஈ எ ஏ என்பனவும் உ ஊ ஒ ஓ என்பனவும் உடன் பிறப்பினவாகலான் அவையுங் கிளையெனப்படும். ஒற்றுக்கிளை யென்பன தம்முன்னர்த் தாம் வருதலும் பிற வருதலுமென இரண்டு. அவற்றுள் தம்முன்னர்த் தாம் வருங்கால் வந்த உயிரே வாரா. அவ் அனுவிற்கு ஓதிய உயிரே வேறுபடவருமென்பது. இனி, ஓரடிக்கண்ணாயின் ஐஞ்சீரானும் அறுசீரானும் வந்தவழியினும் அனுவெனப்படுமென்பது. இனித் தம் முன்னாகப் பிற வருங்கால் வந்த உயிரே வரவும்பெறு மெனக்கொள்க. பிற வருங்கால் ஞகர நகரங்களும் மகர வகரங்களுஞ் சகர தகரங்களும் இனம் பற்றிக் கிளையாமென்பது. அவற்றுள் மகரவகரங்கள் இதழ்பற்றிப் பிறத்தலிற் கிளையாயின. இவ்வாறே இ ஈ எ ஏ என்பனவும் யகரமும் மிடற்றுவளியாற் பிறத்தலானும் இயல்பொப்புமையானுங் கிளையா மென்பது. ஒற்றும், உயிரும், உயிர்மெய்யும் என மூன்றுவகையாற் கிளைமை கூறி மெய்ம்மோனை உயிர்மோனை உயிர்மெய்மோனையெனவுங் கொள்ளாமோவெனின்,அவை, 'மெய்பெறு மரபிற் றொடைவகை.' (தொல். செய். 101) அன்மையிற் கொள்ளாமென்பது. அல்லதூஉம் அவையெல்லாங் கொள்ளிற் செந்தொடை இழவுபடுமென மறுக்க. எதுகைக்கும் இஃதொக்கு மாறு கண்டுகொள்க. இங்ஙனம், கிளையெனக் கூறியவற்றுள், 'ஏற்புழிக்கோடல்' (665) என்பதனான் வருக்கமென்பது மோனைக்கும் எதுகைக்கும் உரிமையான், வருக்கமோனை வருக்கவெதுகையென்று இருவகைப்படும். நெடிலும் அனுவும் மோனைக்குரிய; உயிரும் வல்லினமும் மெல்லினமும் இடையின மும் ஆசிடையிடுதலும் மூன்றாமெழுத்தொன்றுதலுமென்ற ஆறும் எதுகைக்கே உரியவாம். இவை பத்துத்தொடையுள்ளும் மோனை மூன்றும் வருமாறு; "வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி." (அகம். 24) என்பது வகரவருக்கம் முதற்கண் வந்தமையின் வருக்கமோனை யாயிற்று. "கலக்கொண்டன கள்ளென்கோ காழ்கோத்தன சூட்டென்கோ." (யா. வி. மேற்.) என்பதும் அது. இவை ஒருமெய்யின் வருக்கமாகலான் வருக்கமெனப் பட்டன. அஃதேல், உயிர்வருக்கமும் வருக்கமெனப்படாதோவெனின், அங்ஙனங் கொள்ளின் நெடிலும் அனுவும் விரவும் வருக்கமும் வருக்க மெனப்படுமென மறுக்க; அல்லதூஉம் நெடிலுங் குறிலும் ஊர்ந்த மெய்யிரண்டு இயைந்தவழித் தொடையாகல் வேண்டுமன்றோ வென்பது. என்றார்க்கு, முதற்கண் உயிர்வந்ததனையே இன்னதொடை என்னுமோ வெனின், அவை அனுவாகி வருவன வழிமோனை யெனவும் அல்லாக்காற் செந்தொடை யெனவுங் கூறுபவென்பது. இஃது, ஓர் அடிக்கண் வரினும் ஒக்குமென்ப துய்த்துணர்க. "மடவரன் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து." (நெடுநல். 39, 40) என்றவழிச் செந்தொடையாவதன்றி மோனைத்தொடைப்பா டின்றென்பது. இவ்வாறே குறிலும் நெடிலும் எதுகையாகாமையின் அவையும் வேண்டிய திலரென்பது. "வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண் மெத்தென் சாயன் முத்துறழ் முறுவல்' (நெடுநல். 36, 37) என்பது வழிமோனை. "ஓங்குதிரை வியன்பரப்பி னொலிமுந்நீர் வரம்பாக" (மதுரைக். 1, 2) என்பதும் அது. இவற்றை அனுமோனையெனினும் அமையும். அவை விகற்பங் கொள்ளாமோ வெனிற் கொள்ளாம்; "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப்போக வன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேரும்" (சிலப். கானல்.) என்னும் அறுசீரடியினும், எழுசீரடியினும் எண்சீரடியினும் நாற்சீரடி யினும் ஒப்பவருதலானும், எண்சீரடியுள் ஒருநான்கு சீர் அற்றவழி ஒழிந்த நான்கனுள் முதற்கண்ணும் இடைக்கண்ணும் இனம் வந்தால் அவை வந்தவழியெல்லாந் தொடையாகாமையானுமென்பது.பிறவும் அன்ன. எதுகைக்குப் போல யினமோனை கொள்ளா, தனிமெய் மொழிக்கு முதலாகாமையினென்பது. "கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே." (குறுந். 216.) என்பது, வருக்கவெதுகை. "அத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி (அகம். 7) என்பது, வல்லினவெதுகை. "நும்மில் புலம்பினு முள்ளுதொறு நலியுந் தண்வர லசைஇய பண்பில் வாடை' (அகம். 58. ) என்பது, மெல்லினவெதுகை. "மள்ளர் மள்ள மறவர் மறவ செல்வர் செல்வ செருமேம் படுந" (பெரும்பாண். 455,6) என்பது, இடையினவெதுகை. "புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம்'' (தொல். எழுத். உருபியல். 30) என்பதும் அது. "இமிழ்கண் முழவி னின்சீர் அவர்மனைப் பயிர்வன போலவந் திசைப்பவுந் தவிரான்' (அகம். 66) என்பது உயிரெதுகை; இஃது ஒற்றூர்ந்த உயிர் ஒன்றினமையின் உயிரெதுகையா யிற்று. "நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்" (அகம். 6) என்பது யகரவொற்றிடையிட்டு வந்த ஆசிடை யெதுகை. பிற ஒற்றிடை யிடினும், "மெய்பெறு மரபிற் றொடை" (தொல். செய். 101) யாவன கொள்க. "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற" (புறம். 3) என்பது மூன்றாமெழுத்தொன்றெதுகை. இவையும், மேற்கூறப்பட்டனவும், இனிக் கூறுவனவுமெல்லாம் நான்குபாவினும் வருமாறு கண்டுகொள்க. இனி, மூன்று பாவினும் அறுநூற்றிருபத்தைந்தடியோடும் இவற்றைப் பெருக்கி உணருங்கால் இவை பத்துத்தொடையானும் பெற்ற தொடை மூவாயிரத்தெண்ணூற்றறுபத்தேழு. இவற்றுள், வருக்க மோனையும், வழிமோனையும், உயிரெதுகையுமென இவை மூன்றும் நுந்தை யென்னுஞ் சீர்க்கு ஏலாமையின் அச்சீர் முதற்பா இரண்டினும் உறழ்ந்த அடி இருபதும் ஒழித்து, ஒழிந்த சீர் எல்லாவற்றானு முறழ்ந்த அடி அறுநூற்றைந்தனுள் ஐம்பத்தாறு நிலங் களைய ஒரோவொன்றற்குப் பெற்ற தொடை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதாம். இவ்விலக்கணமெல்லாம் இனிக் கூறும் முரணைந்தற்கும் ஒக்கும். அவற்றை அகவற்றொடை இருநூற்றெழுபத்து மூன்றெனவும், வெண்டொடை நூற்றைம்பத்தாறெனவும், கலியிற் களைவன இன்மையின் அவை நூற்றிருபஃதெனவும் பகுத்துக் காணப்படும். இம்மூன்று தொடை யும், முரண் ஐந்துந் தொகுப்பப் பெற்ற தொடை நாலாயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு. இவை பிற அடிக்கண் வருங்கால் அவ்வரையறையாற் பயிலாவென உணர்க. பிறவும் அன்ன. "வழிவருக்க மோனை யுயிர்முரணைந் தெட்டு மொழிகின்ற நுந்தை யொழிய - வழுநிலம் ஐம்பதின்மே லாறகற்ற வைஞ்ஞூற்று நாற்பதின்மேல் ஒன்பதென் றோதப் படும்" எனவும், "இருநூற் றெழுபத்து மூன்றகவல் வெள்ளைக்கு ஒருநூற்றைம் பத்தா றுரிய - வொருநூற்று இருபதாந் துள்ளற் கெனல்" எனவும், "நாலா யிரத்துமுந் நூற்றுத்தொண் ணூற்றிரண்டி- னாலீ ரிடத்து நவிற்று" எனவும், "பதின்மூன்று பாற்றொடை யேழா யிரத்தோடு இருநூற் றிருபத் திரண்டு" எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க. இனி, மூன்றாமெழுத்தொன்றெதுகைக்கு, 1 வண்டு, 2 மின்னு, 3 நுந்தை, 4 சேற்றுக்கால், 5 நீடுகொடி என்னும் ஐந்துசீரானும் உறழ்ந்த அடி அறுபஃதொழித்து, ஒழிந்தசீர் இருபத்திரண் டானும் பெற்ற அடி இருநூற்றறுபத்து நான்கனுள்ளும், ஒன்பது நேர்முதற்சீராற் பதினெட்டும், பதின்மூன்று நிரைமுதற்சீராற் பதின்மூன்று மாக முப்பத்தொரு நிலங் களைந்து கொள்ளப்பெற்ற ஆசிரியத்தொடை இருநூற்றுமுப்பத்துமூன்று. இனி, வெண்பாவினுள் நீடுகொடி வாராமையின், 1 வண்டு, 2 மின்னு, 3 நுந்தை, 4 சேற்றுக்கால் என்னும் நான்குசீரும் உறழ்ந்த அடி முப்பத்தொன்றொழித்து, ஒழிந்த சீர் இருபத்து மூன்றானும் பெற்ற அடி நூற்றைம்பதாகலின், அவற்றுள்ளும் நேர்முதற்சீர்பத்தும், வரகு, வலியது, கடியாறு, விறகுதீ என்னும் நான்கும் ஆகப் பதினான்கு சீரானும், பதினாலு நிலங் களைந்து பெற்ற வெண்டொடை நூற்று முப்பத் தாறாம். இவ்வாற்றான் இரண்டு பாவிற்குங் களையும் நிலம் நாற்பத்தைந்து. கலிப்பாவினுள்ளுஞ் சேற்றுக்கால் நீடுகொடி என்னும் இரண்டும், மூன்றாமெழுத் தெதுகைக்கு ஏலாமையின், ஒழிந்தசீர் இருபத்திரண்ட னானும் பெற்ற தொடை நூற்றொருபதாம். இவ்வாற்றான் இவை மூன்றுபாவின் தொடையுந் தொகுப்ப நானூற்றெழுபத்தொன்பதாம். இம் மூன்றாமெழுத்து ஒன்றுங்கால் இரண்டாமெழுத்து ஒன்றாது வரல்வேண்டும், அல்லாக்கால் தலையா கெதுகையா மாகலினென்பது. "வண்டுமின்னி ரண்டுநுந்தை சேற்றுக்கா னீடுகொடி என்றிரண்டு மூன்றா மெழுத்தியையா - நின்ற அறுபத்தேழ் சீரா னடித்தொடை நானூற்று எழுபத்தொன் பானு மியற்று." எனவும், "வந்த பதினான்கு மேழா யிரத்தெழுநூற்று ஒன்றென் றுரைக்கப் படும்." எனவும், "நேர்முத லொன்பா னிரட்டி நிரைபதின்மூன்று ஆசிரியப் பாமுப்பத் தொன்றகற்றி - நேர்முதற்சீர் பத்தொடு நான்குவெண் பாவகற்ற வாங்கதற்கு அற்றன நாற்பத்தைந் தாம்." எனவும், "இருநூற்று முப்பத்து மூன்றகவல் வெள்ளைக்கு ஒருநூற்று முப்பத்தா றாகு - மொரு நூற்று ஒருபதாந் துள்ள லொருங்கிவை மூன்றாம் எதுகையாற் பெற்றனவா மீண்டு" எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, வருக்கவெதுகை ஆசிரியத்துள் எழுசீர்க்கும், வெண்பா வினுள் ஐந்துசீர்க்கும் கலிப்பாவினுள் நான்குசீர்க்கும் ஏலாது. அவை, 1 வண்டு, 2 மின்னு, 3 போதுபூ, 4 மேவுசீர், 5 நீடுகொடி, 6 நாணுத்தளை, 7நுந்தை என இவை யேழும் ஆசிரியத்துள் ஆகாதன. இவற்றுள் நீடுகொடி நாணுத்தளை இரண்டும் ஒழித்து ஒழிந்த சீர் ஐந்தும் வெண்பா விற்கேலா. அவ்வேழனுள்ளும் வண்டு, மின்னு, நுந்தை ஒழித்து ஒழிந்த நான்குங் கலிப்பாவிற்காகா வென வுணர்க. இனி ஆசிரியத்துள் நேர்முதற் சீர் ஏழும், பதின்மூன்று நிரைமுதற்சீரும் உறழ்ந்த அடி இருநூற்று நாற்பதாம். இவற்றுட் களையும் நிலம் இருபத்தேழாம். ஆகவே, அகவற் றொடை இருநூற்றொருபத்து மூன்றாயின. வெண்பாவின் ஐந்துசீரானும் முப்பத்தெட்டடியொழித்து, ஒழிந்த அடி நூற்று நாற்பத்து மூன்றானும் நேர்முதற்சீரொன்பதும், நிரைமுதற்சீர் நான்குமெனப் பதின்மூன்றானுங் களையும் நிலம் பதின்மூன்றகற்றிப் பெற்ற வெண்டொடை நூற்றுமுப்ப தாம். கலிப்பாவிற் களைந்த சீர் நான்கொழித்து ஒழிந்த சீரான் அடி நூறெனப்படும். அம்மூன்றுந் தொகுப்ப வருக்க வெதுகை (443) நானூற்று நாற்பத்து மூன்றாயின. "நேர்பிரண்டு நேர்பு முதனான்கு நுந்தையுமென்று ஆகாச்சீ ரேழைந்து நான்காக- வாகாத நாற்பதும்போய் நானூற்று நாற்பத்து மூன்றாகித் தோற்றும் வருக்கத் தொடை" எனவும், "முறையா னிருநூற் றொருபத்து மூன்றோடு ஒருநூற்று முப்பதுநூ றொட்டு." எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, நெடின்மோனையும், மெல்லின வெதுகையும், இடையின வெதுகையும், ஆசிடை யெதுகையுமென நான்கற்கும், நிரைமுதற்சீரும் நுந்தையுமெனப் பதினாற்சீர் ஏலாமையின், ஒழிந்த நேராதிச்சீர் பதின்மூன்ற னான் ஆசிரியத்து ஓரோர்சீர்க்கு இரண்டு நிலங் களைந்து பெற்ற தொடை நூற்றுமுப்பதாம். வெண்பாவினுள் நேர்முதற்சீர் பதின்மூன்றும் உறழ்ந்த அடி தொண்ணூற்று மூன்றனுள் ஒருசீர்க்கு ஒருநிலமாகப் பதின்மூன்று நிலங் களைந்து பெற்ற வெண்டொடை எண்பஃதாம். கலிப்பாவிற்கு நேர்முதற்சீர் பன்னிரண்டதனாற் பெற்ற தொடை அறுபஃதாம். ஆக, மூன்று பாவிற்குந் தொடை ஒரோவொன்றற்கு இருநூற் றெழுபதாக நான்கனானும் பெற்ற தொடை ஆயிரத்தெண்பதாம். "இடையின மெல்லின மாசெதுகை யேனை நெடின்மோனை நான்காகி நின்ற - தொடைதாம் இருநூற் றெழுபஃ தொரோவொன்றற் கெய்தும் நிரைமுதலு நுந்தையு நீத்து." எனவும், "பதின்மூன் றிரட்டித் தகவலினே ராதி பதின்மூன்றே வெண்பாவிற் பாற்றி யவைதொகுப்ப மூவகை மூன்று தலையிட்ட முப்பஃது நால்வகையா னிற்க நவிற்று." எனவும், "மூவகைப் பாவின் மொழிந்த தொடைத்தொகை யாயிரத்து மேலெண்ப தாகுமாம் - பாவின முன்னூற்று முப்பதா மெண்பதாம் வெண்பாக்கு அடைய கலிக்கறுபஃ தாம்." எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, வல்லின வெதுகைக்கு நிரைமுதற்சீர் பதின்மூன்றும், 1 மின்னு, 2 நுந்தை, 3 மேவுசீர், 4 நாணுத்தளை யென நான்குமாகப் பதினேழ்சீர் தொடைகொள்ளாமையின், ஒழிந்த நேராதிச்சீர் பத்தனானுங் களைவன களைந்து பெற்ற அகவற்றொடை நூறாகவும், வெண்பாவிற்கு நாணுத்தளை வாராமையின் அஃதொழிக்கல் வேண்டுவதன்றாயிற்றாகவே, 1மின்னு, 2 நுந்தை, 3 மேவுசீர் என்னும் மூன்றொழித்து, ஒழிந்த நேராதிச்சீர் பதின்மூன்றனானுங் களைவன களைந்து கொண்ட வெண்டொடை அறுபத்தெட்டாகவும், கலிப்பாவின் நேர்முதற்சீர் பன்னிரண்டனுள் மேவுசீர் நாணுத்தளை ஒழித்து ஒழிந்த பத்தனானும் கலித்தொடை யைம்பதாகவும், மூன்றுபாவினானும் வல்லின வெதுகை இருநூற்றொருபத்தெட்டாயின வென்பது. "முற்றுகர நேர்புநேர் முன்னாகுஞ் சீரிரண்டுங் குற்றுகரத் தேமாவுங் கொள்ளாது - மற்றை நிரைமுதலுங் கூட்டாது நேர்முதலான் வல்லொற்று எதுகையிரு நூற்றொருபத் தெட்டு" எனவும், "இருப தகவல்பதி னொன்றுவெள்ளைக் காகா நிலமுப்பத் தொன்றாக நீக்கி - வலியெதுகைக் கீரைம்ப தாமகவல் வெள்ளைக் கறுபத்தெட்டு ஓரைம் பதுதுள்ளற் கொட்டு" எனவும் இவற்றை விரித்துரைக்க. இவையெல்லாங் கிழமைபற்றி வந்தமையின் 'ஆயிரு தொடைக் குங் கிளையெழுத் துரிய' என்றானென்பது. இப்பத்துத் தொடையானு முரணைந்தானும் பெற்றதொடை (6612) ஆறாயிரத்தறு நூற்றொருபத்தி- ரண்டெனப்படும். ஆறாயிரத்தறு நூற்றொருபத்திரண்டும் பெறும், கிளை முரண் ஐந்தும் மேற்கூறிய மோனை எதுகையிரண்டனோடும் இனிக் கூறும் முரணைந்தும் இயைபு இரண்டும் உடன்கூட்டித் தொடை கூறினாம், இவற்றோடு இயைந்தமையினென்பது. இத்தொடை யெல்லாந் தொகுப்ப ஒன்பதினாயிரத்து நானூற்று நாற்பத்திரண்டாயினவாறு கண்டு கொள்க. "மோனை யெதுகை முரணியைபு நான்கற்கும் ஆனவை யொன்பதி னாயிரத்து - நானூற்று நாற்பத் திரண்டாகு மோரடியே யாயினுங் கூட்டத்துக் கொண்ட குழாம்" (94) முரண்தொடை ஆமாறு 407. மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. இது, முறையானே முரண்தொடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக முரண் டொடை வரும் எ-று. அவை ஐவகைப்படும்; 1 சொல்லுஞ் சொல்லும் முரணுதலுஞ், 2 பொருளும் பொருளும் முரணுதலுஞ், 3 சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணுதலுஞ், 4 சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலுஞ், 5 சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணுதலும் என. 1"செவ்வி வாய்த்த செம்பாட் டீரத்து வெள்ளை வெண்மறி மேய்புலத் தொழிய" என்புழி, செவ்வி வெள்ளை யென்பன பொருளின்றிச் சொல்லுஞ் சொல்லும் முரணியன. வெள்ளையென்பது சாதிப்பெயர். "செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்" (யா. வி. மேற்.) என்பதும் அது. 2"நீரோ ரன்ன சாயற் றீயோ ரன்னவென் னுரனவித் தன்றே" (குறுந். 95) என்பது பொருளும் பொருளும் முரணியன. 3"தண்ணிய லற்ற தயங்கழற் கானத்து வெந்நீர்ப் பொருணசைஇ முன்னிச் சென்றோர்" என்பது சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது. 4"தீநீர் நஞ்சந் திருமிடற் றொடுக்கிய வுவரி யன்ன வுடைப்பெருஞ் செல்வர்" என்பது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. இதனைச் சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது போலப் பொய்ப் பொருளொடு முரணுதல் வேண்டுமென்று கொள்ளற்க. 5"செவ்வேற் சேஎய் திருமண மறுத்த கருவிற் கானவன் வரிலவ ரிலரே யதுபோல" என்புழி, சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணியது. பிறவும் அன்ன. இவை ஐந்துதொடையுந் தளைவகை யடிக்கண் வருங்கால் இன்னவாறு வருமென்பது மேற்கூறியவாற்றானே கொள்ளப்படும். இவை விரித்து நோக்கப் பலவாமாறும் விரித்துறழ்ந்து கண்டுகொள்க. (95) இயைபுத்தொடை ஆமாறு 408. இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. இது, முறையானே இயைபிரண்டும் உணர்த்துகின்றது. (இ-ள்.) இரண்டடியும் ஈறொத்தல் இயைபுத்தொடைக் கிலக்கணம் எ-று. வாளாதே 'இறுவாயொன்றல்' என்றானாயினும் ஆண்டு ஒன்றுவது பொருளியைபின்றி எழுத்துஞ் சொல்லும் ஒன்றியடையின் இயைபா மென்பது. எனவே, எழுத்தடியியைபும் சொல்லடியியைபும் என இத் தொடை இரண்டாயின. "அவரோ வாரார் கார்வந் தன்றே கொடிதரு முல்லையுங் கடிதரும் பின்றே" என்பது எழுத்தடி யியைபு. "பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்" (யா. வி. மேற்.) என்பது சொல்லடி யியைபு. இவையும் அடிமோனை போல எல்லா அடியொடுந் தொடுக்கப்படு மென்பதூஉம் அவற்றது விரியும் எல்லாம், 'அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை" (தொல். செய். 92) என்புழிச் சொல்லியவாற்றானே கொள்ளப்படும். (96) அளபெடைத்தொடை ஆமாறு 409. அளபெழின் அவையே யளபெடைத் தொடையே. இது, முறையே அளபெடைத்தொடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிமுதற்கண் எழுத்துக்கள் அளபெழுந்தனவாயின், அவை அளபெடைத் தொடை எனப்படும் எ-று. 'அவை' யென்றது, உயிரளபெடையும் ஒற்றளபெடையு மென் றிரண் டென்பது கோடற்கு. "பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கி" (கலி. 5) என்பது உயிரளபெடை. "கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச் சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை" (யா. வி. மேற்.) என்பது ஒற்றளபெடை. இவை கட்டளையடியொடு தொகுக்குங்கால் உயிரளபெடை முந்நூற்று முப்பத்துமூன்றாம். அவை மூன்று பாவினும் வருங்கால் உரியசைச்சீர் நான்கும், உரிமுதற்சீர் எட்டும், நிரையசையுமெனப் பதின்மூன்றும் ஒழித்து, ஒழிந்தவற்றுள் வரும். அவை ஆசிரியத்துள் நேர்முதற்சீரேழும், நிரைமுதற்சீரேழும்; வெண்பாவினுள் நேர்முதற்சீரொன்பதும், நிரைமுதற்சீரொன்பதும்; கலிப்பாவினுள்ளும் உரிமுதற் சீரெட்டொழித்து நேர்முதற்சீரெட்டும், நிரைமுதற்சீரெட்டும் எனப் பதினாறுமாக, நாற்பத்தெட்டுச் சீர்க்கண்ணும் வருமென்பது. அங்ஙனம் வருங்கால் ஆசிரியத்து நூற்று நாற்பத்தேழும், வெண்பாவினுள் நூற்றாறும், கலிப்பாவினுள் எண்பதுமாகி முந்நூற்று முப்பத்து மூன்றாம். அவை, ஆசிரியத்துள் இருபத்தொன்றும், வெண்பா வினுட் பதினொன்றுமாக முப்பத்திரண்டு நிலங் களைந்து பெறப்பட்டன. "உரியசைச்சீர் நான்கு முரிமுதற்சீ ரெட்டும் அளபெடைக்கு நுந்தையோ டாகா - வொருநாற்பத்து எண்சீரான் முந்நூற்று முப்பத்து மூன்றென்ப ரொண்சீர் பெருமுறையா னுய்த்து." எனவும், "நேரேழ் நிரையேழ் முதற்சீர் முதற்பாவிற்கு ஓரேழான் மூவேழ் நிலமிலவா - னேராதி ஒன்ப திரண்டு நிரையாதி வெண்பாவிற்கு என்றிவை முப்பத் திரண்டு." எனவும், "நூறொடு நாற்பத்தே ழாமகவ னூற்றின்மேல் ஆறு தொடைவெள்ளைக் காகுமா - லேறு துள்ளற்கு எண்பதா மீரேழீ ரொன்பஃ தெண்ணிரண்டு என்றுமாம் பாமூன் றிடத்து." எனவும் இவற்றை விரித்துக்கொள்க. ஈரொற்றளபெடை கலிப்பாவினுள் வாராது; என்னை? அது துள்ளலோசை தள்ளி நிற்றலின். அங்ஙனமாதல், "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல். செய். 11) அறிக. இனி, ஆசிரியத்துள் தேமா புளிமா வென்னும் இரண்டும், வெண்பாவினுள் தேமா, புளிமா, மாசெல்வாய், புலிசெல்வாயென்னும் நான்குமாகச் சீராறன்கண்ணும் பெற்ற தொடை நாற்பத்தைந்து. இவை, ஆசிரியத் திருபத்தொன்றும், வெண்பாவினு ளிருபத்துநான்கு மெனப்படும். இவை ஆசிரியத்துன் மூன்றும் வெண்பாவினுள் இரண்டுமாக ஐந்துநிலங் களைந்து பெறப்பட்டன. களையும் நிலம் அதனிற் சுருங்குவதில்லை. "தேமா புளிமாவே மாபுலிசெல் வாயென்றா நானாற்பத் தைந்தொற் றளபாகும் - வேறு தனித்தொலி யொன்றா களையுநில மூன்றாம் முதற்பாவின் வெள்ளைக் கிரண்டு." எனவும், "எழுமூன்றா மாசிரியத் தெண்மூன்றாம் வெள்ளைக்கு அழியாத வீரொற் றளபு" எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. ஆக அளபெடைத் தொடை இரண்டுங் கூட்டிப் பெற்றதொடை முந்நூற்றெழுபத்தெட்டு. ஆக முதற் றொடை இருபத்திரண்டனானும் பெற்றதொடை ஒன்பதினாயிரத் தெண்ணூற்றிருபஃது. "ஒன்பதி னாயிரத் தெண்ணூற் றிருபஃதாம் அந்தமில் காட்சி யளபெடைத்தே - வந்த இருபத் திரண்டு" (97) பொழிப்பு எதுகைத்தொடை ஆமாறு 410. ஒருசீர் இடையிட்டு எதுகை யாயிற் பொழிப்பென மொழிதல் புலவ ராறே இது, பொழிப்பெதுகையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு சீரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்பாம் எ-று. இடையிடினெனவே, முதற்சீர் நிற்பதாயிற்று. எதுகை யாயினெ னவே, மூன்றாஞ்சீரொடு தொடுப்பதாயிற்று. இவற்றுள் ஆசிரியம் களைவன களையப்பெற்ற தொடை நூற்றுநாற்பதெனவும், வெண்பா களைவன களையப்பெற்ற தொடை நூற்றுமூன்றெனவுங் கொள்க. "நிரைமுதற்சீர் பன்னிரண்டுங் கீழ்நிலத்துள் ஒன்ற வருகலி முந்நூற்றெட் டாம்" எனவும், "மேவுசீர் வெள்ளைக்கொன் றேற்கிளை முற்றேல் ஓரிரு நூற்றுமுப்பத் தெட்டாகு மாகல் இருநூறு நானூறொ டேழ்பத்தைந் தாக வருமுற்று மொன்றாம் வகை" எனவும் இவை முற்றெதுகைக்கு உரைச்சூத்திரம். இன்னும் 'புலவராறே' என்று மிகுத்துச் சொல்லியதனானே, அமைவன வேறுளவெனத் தழீஇப் புகுந்தவற்றுள் ஈண்டுக் கூறாத அந்தாதித் தொடை யும், மற்றை விகற்பத்தொடையாகிய ஒரூஉத்தொடையுங் கூறிக்கொள்க. (98) ஒரூஉத்தொடை ஆமாறு 411. இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப. இது. நிறுத்தமுறையானே ஒருஉத்தொடை உணர்த்துகின்றது. (இ-ள்.) நாற்சீருள்ளும் இடையிருசீரொழித்து, ஒழிந்த முதற்சீரும் நான்காஞ்சீரும் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பின் அதனை ஒரூஉவென்ப எ-று. அதிகாரத்தான் ஒரூஉவெதுகை யெனப்பட்டது. அதுவும் பொழிப்புப் போல வந்த எழுத்தே வருதலும், கிளையெழுத்து வந்து கிளையொரூஉ எனப்பட்டு இரண்டாதலு முடைத்து. "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை" (ஐங்குறு.) என்பது ஒருஉ வெதுகைத்தொடை. சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்று'' (அகம். 1) என்பது கிளையொரூஉவெதுகை. இவை, இரண்டுதொடையுங் கட்டளையடிக்கண் வருங்கால் ஒரூஉவெதுகை ஐஞ்ஞூற்றிருபத்தெட்டாம். அவை ஆசிரியத்திற்கு உரிய சீர் இருபத்தேழனுள்ளும் நேர்முதற்சீர் பதினான்கும் ஒரோவொன்று உறழ்ந்தஅடி பன்னிரண்டனுள், சுருங்கிய நிலந்தொறும் ஒன்பதொன்பதாக நூற்றிருபத்தாறும், நிரைமுதற்சீர் பதின்மூன்றும் பெருகிய நிலத்து ஒரோவொன்று பத்தாக நூற்றுமுப்பஃது மாக அகவற்றொடை இருநூற்றைம்பத்தாறு. அவற்றுண் மின்னு, மேவுசீர், நாணுத்தளை என்னும் மூன்று சீரானும் மூன்றுநிலம் முதனிலத் தகற்றிப் பெற்ற தொடை இருநூற்றைம்பத்து மூன்று. வெண்டொடை இருபத்தேழு சீருறழ்ந்த அடி அனைத்தினும் பெற்ற தொடைநிலை நூற்றெண்பத்தொன்று; இவற்றுள் மின்னு, மேவுசீர் என்னும் இரண்டனா னும் முதனிலத்து இரண்டு நிலங் களைந்து பெற்ற தொடை நூற்றெழுபத் தொன்பதாம். இனி, கலிப்பாவினுள் நேர்முதற்சீர் பன்னிரண்டாகப் பெருகிய நிலத்து ஒரோவொன்று களையப்பெற்ற தொடை நாற்பத்தெட்டும், நிரைமுதற்சீர் பன்னிரண்டும், சுருங்கிய நிலத்து ஒரோவொன்று களையப் பெற்றதொடை நாற்பத்தெட்டுமாகக் கலிப்பாவிற்குரிய தொடை தொண்ணூற்றாறாம். ஆக மூன்று பாவினும் பெற்ற ஒரூஉத்தொடை ஐஞ்ஞூற் றிருபத்தெட்டாம். கிளையொரூஉவும் இவ்வாறே ஐஞ்ஞூற்றிருபத்தெட்டாகவும், அவற்றுமேல் மின்னு, மேவுசீரென்னும் இரண்டும் வெண்பாவினுள் உறழ்ந்த முதனிலை யிரண்டுங் களையாது கொள்ளக் கிளை யொரூஉத் தொடை ஐஞ்ஞூற்றுமுப்பதாம். ஆக வொரூஉத்தொடை இரண்டனானும் பெற்ற தொடை ஆயிரத்தைம்பத் தெட்டாம் (1058). "நேராதி யாதி நிலத்தொன்ப தொன்பதாம் ஈரைந்தா மாசிரியத் தீற்றுநிரையாதி ஆக விருநூற்றைம் பத்துமுன் றாமாதி நேர்புகா மூன்றனையு நீத்து" எனவும், "மேவுசீர் மின்னுக்குண் முன்னைநிலத் தோரோவொன்று ஆகா வொரூஉவெள்ளைக் காதலா னாவன நூற்றெழுபத் தொன்பதா நோக்கு" எனவும், "முன்பினே ராதி நிரையாதி துள்ளற்கோர் ஒன்றொழியத் தொண்ணூற்றா றாகுங் கிளைவெள்ளைக்கு ஒன்றா யிரண்டா னொரூஉவிரண்டு மாயிரத்து ஐம்பான்மே லெட்டா மவை" எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க மேலைப் பொழிப்பிரண்டும் முற்றிரண்டும் இவையிரண்டுமென விகற்பத்தொடை ஆறனாலும் பெற்ற தொடை இரண்டாயிரத்தைஞ் ஞூற்றிருபத்தொன்று. இவை ஆறுதொடையும் ஓரடிக்கண்ணே வருதலின் தளை வழுவப்பட்டன வென்று களையும் நிலமில வென்பது. இன்னும் புலவராறென்றதனான், தொடையந்தாதியும் விட்டிசையும் ஒரோவொன்று இரண்டாகி, அசையந்தாதியும் சீரந்தாதியும் விட்டிசைத்தொடையுங் குறிப்புவிட்டிசையுமென நான்காம். ஓரடியுள் இறுதிச்சீருள் ஈற்றசையும் மற்றையடியின் முதற்சீரின் முதலசையும் ஒன்றத் தொடுப்பது அசையந்தாதி. அவை தொடுக்குங்காற் கட்டளையடிக்கண் உரியசைச்சீரினை அசையெனக் கொள்ளற்க, இவை பிறசீர்ப்பாற் படுத்துத் தளைகோடலின். அடியிறுதிக்கட் கடியாறு மழகளிறென வந்தவழி. யாறு களிறு என்னும் இரண்டு உரியசையும் நிரையசையாக இயற்றப்பட்டன. ஆயினும் இயற்கை நிரையசையொடு தொடுக்கப்படா, இரண்டசையும் ஒரு சொல்லாயினன்றி அந்தாதி யாகாமையினென்பது. இனி, இறுதிச்சீர் முதற்சீரொடு சேரிற் சீரந்தாதியாம். உ-ம் : "குன்றகச் சாரற் குதித்தன கோண்மா மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்" என்பது அசையந்தாதி. "தழைபூஞ் சாரற் றளிர்த்த முல்லை முல்லை சான்ற கற்பி னல்லோள்" என்பது சீரந்தாதி. இது கட்டளையடிக்கண் வருங்கால் அசையந்தாதி முந்நூற்றிரு பத்தைந்தாம். அவை ஆசிரியத்துள் இரண்டு நேர்பசைச்சீர்க்கும் ஒரெழுத்து தேமாவிற்கும் ஏலாமையின் ஒழிந்த நேர்முதற்சீர் பதினொன்றும் உறழ்ந்த அடி நூற்றுமுப்பத்திரண்டனுள் ஒருசீர்க்கு (முதனிலத்தொன்றும் இறுதிநிலத்தொன்றுமென இவ்விரண்டானும்) முதனிலமிரண்டும் இறுதிநிலமொன்றுமென மும்மூன்றாக முப்பத்து மூன்றகற்றி ஒரோசீர்க்கு ஒன்பதொன்பதாகப் பெற்ற தொடை தொண்ணூற்றொன்பது. இனி நிரைமுதற்சீருள் நிரைபசைச்சீரிரண்டு ஒழித்து ஒழிந்த பதினொன்றும் உறழ்ந்த அடி நூற்றுமுப்பத்திரண்டனுள் முதனிலத் தொன்றுவன இவ் விரண்டாக இருபத்திரண்டு நிலங் களைய ஒவ்வொன்று பத்தாகப் பெற்ற தொடை நூற்றொருபதாக ஆசிரியத்துள் அசையந்தாதி இருநூற் றொன்ப தாயின. வெண்பாவினுள் அசையந்தாதி வருங்கால் நேர்பசைச்சீரிரண்டும், ஓரெழுத்துத் தேமாவும், நிரைமுதற்சீர் பதின்மூன்று மெனப் பதினா றொழித்து ஒழிந்த நேர்முதற்சீர் பதினொன்றும் உறழ்ந்த அடி எழுபத் தெட்டனுள் ஒரோவொரு சீர்க்கு இரண்டாக முதனிலந்தோறுங் களைந்தவழி இருபத்திரண்டொழித்துப் பெற்ற வெண்டொடை ஐம்பத்தாறாம். கலிப்பாவினுள் நிரைமுதற்சீர் ஒழித்து ஒழிந்த நேர்முதற்சீர் பன்னிரண்டனானுந் தொடை அறுபதாம். ஆக மூன்றுபாவிற்கும் அசையந்தாதி முந்நூற்றிருபத்தைந் தாயினவாறு கண்டுகொள்க. "நேர்பசைச்சீர் நுந்தையொழித் தேனைப் பதினொரு நேராதி முன்பினிரண் டொன்றகற்றிச்சீராக நீங்கிய வாறாக நிரைமுதல் பத்தாக ஈங்கிரு நூற்றொன்ப தென்" எனவும், "நேர்முத லொன்ப தியற்சீ ருரிவெண்சீர் ஆகியினி யிவ்விரண் டாங்கொழிப்பநேர்பொடு வெண்பாநேர் நுந்தை நிரைமுதல் வீழ்த்தசை அந்தாதி யைம்பத்தா றாம்" எனவும், "நேரசை யந்தாதி யன்றிக் கலிக்கியையா ஆகலி னாங்கறுப தாம்" எனவும், "அவ்வகை யந்தாதி முந்நூற் றிருபத்தைந்து இவ்வகை முப்பாக் கியற்று" எனவும் இவ்வுரைச்சூத்திரங்களான் அசையந்தாதி முந்நூற்றிருபத்தைந்தும் ஆயினவாறு அறிந்துகொள்க. இனிச் சீரந்தாதி நூற்றறுபத்துநான்கு. அவை, ஆசிரியத்து வருங்கால் நேர்பசைச்சீரிரண்டுந் தேமா விரண்டுமென நான்கனானுந் தத்தம் முதனிலந் தொடங்கி ஒரோவொன்று அவ்வாறாக நாலா றிருபத்துநான்காம். இனி, நிரைமுதற்சீருள் நிரைபசைச் சீரிரண்டும் புளிமாவு மென மூன்றொழித்து ஒழிந்த பத்துச்சீரானும் வருங்கால் அவை உறழ்ந்த அடி பன்னிரண்டனுள் முதனிலம் மூன்றும் பெருகிய நிலத் திரண்டுமாக வைந்து ஒழித்து ஒரோவொன்று எவ்வேழாக எழுபதாம். ஆக, அகவற்றொடை தொண்ணூற்று நான்காம். இனி, வெண்பாவினுள் வருங்கால் நேர்பசைச்சீரிரண்டுந் தேமா விரண்டும் நிரைமுதல் வெண்சீரிரண்டும் நிரைமுதல் நிரையீறாகலிற் கணவிரி எட்டுமாகச் சீர் பதினான்கும் ஒழித்து ஒழிந்த சீர் பதின்மூன்றனா னும் பெற்ற அடி தொண்ணூறாம். அவற்றுள் வரகும் அரவும் புளிமாவும் என்னும் மூன்றும் பெற்ற அடி பத்தொன்பதாகலின், அவற்றுள் வரகிற்குப் பெருகிய நிலத்து மூன்றும், அரவும் புளிமாவுஞ் சுருங்கிய நிலத்தும் பெருகிய நிலத்தும் ஒரோவொன்றாக நான்குமாக ஏழுமொழித்து ஒரோ வொன்று நான்காகப் பெற்ற அடி பன்னிரண்டாம். காருருமு, மாவருவாய் என்னும் இரண்டனானும் பெற்ற அடி பன்னிரண்டனுள் முதனிலத்து மும்மூன்றாக ஆறொழித்துப் பெற்ற தொடை இருமூன்றாம். பாதிரி யேழும் மாசெல்வாயுமென எட்டனானும் பெற்ற அடி ஐம்பத்தொன்ப தாகலின், அவற்றுள் ஈரெழுத்துப் பாதிரி மூன்றுஞ் சுருங்கிய நிலத்து ஒரோவொன்றும் பெருகிய நிலத்து இவ்விரண்டுமாக மும்மூன்றொன்ப தும், ஒழிந்த மூவெழுத்துப் பாதிரி நான்கும், மாசெல்வாயுமென ஐந்துஞ் சுருங்கிய நிலத்து இவ்விரண்டாகப் பத்துமெனப், பத்தொன்பதுங் களைந்து பெற்ற தொடை நாற்பதாமெனக் கொள்க. ஆக, களையும் நிலம் முப்பத்திரண்டு ஒழித்து ஒழிந்த தொடை வெண்பாவிற்கு ஐம்பத்தெட் டாயின. இனிக் கலிப்பாவினுள் வெண்சீர் நான்கனானும் பெற்ற அடி இருபஃதாகலின், அவற்றுண் மாசெல்வாய் உறழ்ந்த அடி ஐந்தினும் ஏறிய நிலத்திரண்டும், புலிவருவாய் உறழ்ந்த அடி ஐந்தினுஞ் சுருங்கிய நிலத் திரண்டும், ஒழிந்த மாவருவாய் புலிசெல்வாய்கள் இரண்டும் முன்னும் பின்னும் ஒரோவொன்றாக நான்காகும்; ஆக, எட்டுங் களைய ஒரோ வொன்று மும்மூன்றாகப் பெற்ற தொடை பன்னிரண்டாம். ஆக, மூன்று பாவிற்குஞ் சீரந்தாதி நூற்றறுபத்து நான்காம். "வண்டொன்று தேமா விரண்டு வலியதுபன் னொன்றொடச்சீ ரந்தாதிக் கீரேழாம் நேராதி பத்தும் புளிமா வரகிரண்டும் வெள்ளைக்காம் ஒத்த கலிக்குரிச்சீர் நான்கு" எனவும், "நிரைநிரைபத் தெவ்வேழா மூன்று மிரண்டும் முதனில னீக்கிமூன் றாக வகவலின் நேராதி நான்கு மெழுவாய் நிலந்தொடங்கி ஆறாகு மந்தாதிச் சீர்" எனவும், "ஆக வகவற்சீ ரந்தாதி (தொண்ணூற்று) நால்வகை யாக நவிற்று" எனவும், "வரகு பெருநிலத்து மூன்றகற்றி மற்றை அரவு புளிமா வருமிரண்டு மாற்றி முதனிலத்துக் காருருமு மாவருவாய் மும்மூன்று எனவுரை யந்தாதிக் கீண்டு" எனவும், "ஈரெழுத்துப் பாதிரிமூன் றீரருகு மோரிரண்டாய் மூவெழுத்துப் பாதிரிக்கு முன்னிரண்டாய் மாசெல்வா யொன்றற்கு மவ்வா றொழித்துரைப்ப நாற்பஃதாம் வெண்டொடைச்சீ ரந்தாதி வேறு" எனவும், "விரித்தசீ ரந்தாதி வெண்டொடை யைம்பது எனப்படு மெட்டுமே லிட்டு" எனவும், "மாசெல்வா யீற்றும் புலிவருவாய் மற்றிடத்து மேனை யிரண்டு மிரண்டிடத்து மாக இரண்டிரண்டு நீக்கிச்சீ ரந்தாதி துள்ளற்கு அமைந்த தொடைநான்மூன் றாம்" எனவும், "பாத்தோறும் வந்தசீ ரந்தாதி பாற்படுப்ப நூற்றோ டறுபத்து நான்கு" எனவும் இவ்வாற்றானே சீரந்தாதி யாமா றுரைத்துக் கொள்க. "அந்தாதி யோரிரண்டு மாகத் தொடைநானூற்று எண்பான்மே லொன்பா னெனல்" இனி, விட்டிசைத் தொடை கூறுங்கால் எழுத்தினானும் எழுத்தல் ஓசையானும் விட்டிசைத்தல் இருவகைப்படும். "அ உ அறியா வறிவி லிடைமகனே நொஅலைய னின்னாட்டை நீ" (யா. வி. மேற். இடைக்காடனார்) என்ப தெழுத்தினா னாகியது. விட்டிசையின் இறுதியடி வல்லொற்றடுப்பின் விட்டிசை வல்லொற்றெதுகை யென்பாரும் உளர். ஆண்டு வல்லொற்றெதுகை யா(மா)காமையின் அது வேண்டுவதன்று; வேண்டினும் விட்டிசையெனவே அடங்குமென்பது, "என்று தாமிசைப்ப தாகியே தண்ணுமைகேட்டு எஎன் றெழுந்தார் பலர்" என்பது குறிப்புவிட்டிசை. இவை கட்டளையடிக்கண் வருங்கால் ஒரோவொன்று நூற்றறு பத்து நான்காகி முந்நூற்றிருபத்தெட்டாம். அவை வருங்கால், நேர்பசைச் சீரிரண்டும் ஓரெழுத்துத் தேமாவும் போதுபூவிரண்டும் ஒழித்தொழிந்த தேமாவும் பாதிரியிரண்டும் போரேறு இரண்டும் பூமருதிரண்டும் நேர்முதல் வெண்சீரிரண்டுமாக ஒன்பதுசீரும் பற்றி விட்டிசைக்குமெனவுங் கொள்க. அவற்றை அகவற்றொடை ஒரோவொன் றெழுபதாகவும், வெண்டொடை ஒரோவொன் றைம்பத்து நான்காகவும் கலிப்பாவிற்குத் தொடை நாற்பஃதாகவும் இரண்டு விட்டிசையுந் தொகுப்பத் தொடை முந்நூற்றிருபத்தெட் டாயினவாறு கண்டுகொள்க. இவை ஆசிரியத்துப் பதினான்கும் வெண்பாவினு ளொன்பதுமாக இருபத்துமூன்று நிலங் களைந்து பெற்றன. "நேர்பிரண்டு நேர்பு முதலிய சீர்நான்கும் ஓரெழுத்துத் தேமாவும் விட்டிசைக் கொன்றாவாம் ஏனை நிரைமுதற் சீர்களு மிவ்வாறே யாகா தனவென் றறி" எனவும், "அகவற்கேழ் நேராதி யொன்பதும்வெண் பாவிற்கு உளவென் றுரைக்கப் படும்" எனவும், "வெள்ளையு ளொன்ப தகவலி னீரேழாய்க் கொள்ள விருபத்து மூன்றாகுந்-துள்ளலுட் போரேறு பாதிரி பூமருது மாசெல்வாய் மாவருவா யெட்டும் வரும்" எனவும், "அகவற் கெழுபதா மைம்பத்து நான்காம் நிகரற்ற வெள்ளைக்குத் துள்ளல்-புகரற்ற நாற்பதாய் விட்டிசை நூற்றறு பத்துநான்கு ஏற்பதா மோரொன் றெனல்" எனவும், "இருவிட் டிசைமுந்நூற் றீரொருபத் தெட்டா வருவித்துக் கோடல் வழக்கு" எனவும் இவற்றைப் பதநெகிழ்த்துரைக்க. "விகற்பமா றந்தாதி விட்டிசைநான் கேற்றி இசைத்தவீ ரைந்து தொடையாற் றொடைத்தொகை மூவா யிரத்தொடு முந்நூற்று முப்பத்தா றாமா றறிந்து கொளல்" "இருபத் திரண்டு மிவைபத்து மாக வருவித்த முப்பத் திரண்டா-னொருபத்தின் மூவா யிரத்தொரு நூற்றைம்பத் தாறைந்நூற் றோடோரைம் பத்திரண் டேற்று" என விவை உரைச் சூத்திரம். ஆகத் தொடை முப்பத்திரண்டனாற் பெற்றன பதின்மூவாயிரத்தெழுநூற்றெட்டு (13,708) (99) செந்தொடை ஆமாறு 412. சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் சொல்லியல் புலலரது செந்தொடை யென்ப. இது, மேற் செந்தொடையாமெனக் கூறிய துணர்த்துகின்றது; எய்தாத தெய்துவித்ததூஉமாம். (இ-ள்.) மேற்கூறப்பட்ட தொடை எல்லாவற்றொடும் ஒவ்வாது வரின் அதனை இயற்கைச் சொல்லாற் செய்யுள் செய்யும் புலவரது செந்தொடை யென்று சொல்லுப ஆசிரியர் எ-று. எனவே, விகாரப்படச் செய்யுள் செய்யுஞ் செந்தொடை இன்னா தென்றானாம். அஃது, "இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத் தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையு மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன தோளே" (அகம். 270) எனவும், "சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படுதிரைப் பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும்" (அகம். 270) எனவும் வரும். "பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே" (யா. வி. மேற்.) என்பதும் அது. 'இயலின்' என்றதனான், இரண்டடியான் தொடை பெற்று நின்று இரண்டடி யெதுகையாகியவை தம்முள் தொடுக்குங்காற் செவ்வன் தொடுப்பினும் அதனைச் செந்தொடை யென்னாது இரண்டடி யெதுகை யென்றும், இனி ஓரடி இடையிட்டுத் தொடுத்தவழியுந் தொடர்ந்த அடி இரண்டுஞ் செந்தொடையாமாயினும் மூன்றாமடி எதுகைபடத் தொடுத்தன் மாத்திரையானே அதனை இடையிட்டெதுகை யென்றுங் கொள்ளப்படும். என்னை? அவ்வெதுகை ஆண்டுச் சிறந்தமையி னென்பது. அவை முன்னர்க் காட்டுதும். "முன்பொழுது முன்செல்லுந் தூரியமா மந்நிலையே பின்பொழுது பின்செல்லு நெய்தலா-னன்பிலவே கொல்யானை வேகப்போர்க் கோக்கோதை மாறேற்ற பல்யானை மன்னர் பறை" என வரும். இஃது இவ்விரண்டடிகளது கூட்டத்துக்கண்ணன்றி வாராதாயினுங் கட்டளையடிக்கு அகப்பட்ட தொடையொடுங் கூறினார். கட்டளையடிக்கண் வருந் தொடையே சிறந்தன வென்று கொள்ளினுங் கொள்ளற்க வென்பான், ஒழிந்த தொடையுள்ளுமென்று கூட்டித் தொடை கூறினானென்பது. இனி, செந்தொடை கட்டளையடிக்கண் தொடை யாங்கால், ஓரெழுத்துத் தேமா ஒழித்து ஒழிந்த சீரெல்லாவற்றினும் வருமென்பது. இம்மூவகை அடியினானும் பெற்ற தொடையெல்லாந் தொகுப்பத் தொடை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதாம். அவற்றோடும் இரண்டடி யெதுகை இரண்டும் இடையீடுங் கூட்டத் தொடை ஐஞ்ஞூற் றைம்பத்திரண்டாம். "நுந்தையில் செந்தொடை யைஞ்ஞூற்று நாற்பான்மேல் ஒன்பானை யோரிடையிட் டோரிரட்டி வந்த வெதுகை யிரண்டென வைத்தைஞ்ஞூற்று ஐம்பத் திரண்டென் றறி" என்பது உரைச் சூத்திரம். ஆக முப்பத்து மூன்று தொடையும் அறுநூற் றிருபத்தைந்து அடியுட் களைவன களைந்து பெற்ற தொடைவிரியெல்லாந் தொகுப்பப் பெற்ற தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றைந்துடன் இரண்டடி யெதுகை யிரண்டும், இடையீடொன்றும் கூட்டத் தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டாயினவாறு கண்டுகொள்க. "தொடையின் பகுதி முழுவதூஉஞ் சொன்மற்று அடியி னறுநூற் றிருபத்தைந் தாயின் அடிய திலக்கண மாமதுவென் றஞ்சிப் பிறதொடைமூன் றேற்றினார் பின்" இவ்வாறு தொடை கூறப்பட்ட தொடைப்பகுதி யெல்லாம் அவ்வச்சூத்திரங்க டோறும் எடுத்தோதாது கட்டளையடிக்கும் அல்லா வடிக்கும் பொதுவகையாற் கூறிவந்தா னாசிரிய னாயினும், "மெய்பெறு மரபிற் றொடைவகை" (தொல். செய். 101) என்னுந் தொடைச் சூத்திரத்திற் கேற்பதாம். அவற்றை அவ்வச் சூத்திரங் களுட் கூறிவந்தாமென்பது. முற்கூறிய முப்பத்துமூன்று தொடையினை யும் அறுநூற்றிருபத்தைந்தடியொடு மாறியக்கால் இருபதினாயிரத் தறுநூற்றிருபத் தைந்து தொடையாகற்பாலனவாம்; அன்னவை தொடைக்குந் தளைக்கு மாகாதன களைந்து கொள்ளப் பதின்மூவாயிரத் தெழுநூற்றைந்தாயினவென்பது. ஆயிரத்துத் தொள்ளாயிரத் திருபது நிலங் களையப்பட்டன. இங்ஙனம் இவை களைந்து பெற்ற தொடை யொடும் இரண்டடி யெதுகை இரண்டும், இடையீடொன்றுங் கூட்டத் தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டாயின. (100) தொடைகளின் தொகை 413. மெய்பெறு மரபின் தொடைவகை தாமே ஐயீ ராயிரத்து ஆறுஐஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று ஒன்பஃது என்ப உணர்ந்திசி னோரே. இது, மேற்கூறிய தொடையுள் ஒருசீரான் வரையறை யுடைமையின் அவற்றை அடிக்கட் போலத் தொகுத்தோதுகின்றது; விரித்ததூஉந் தொகுத்ததூஉமாம்; என்னை? கட்டளையடியொடு பட்ட தொடை விகற்பம் முற்கூறிய சூத்திரங்களுட் பெற்றமையானும் அவற்றையும் ஈண்டுத் தொகுத்துக் கூறினமையானுமென்பது. (இ-ள்.) மெய்பெறு மரபின் தொடைவகை - கேட்டார்க்குத் தொடைப்பாடு வெளிப்படும் இலக்கணத்தவாகிய தொடைக் கூறுபாடு; 'தாமே' என்பது பிரித்துக் கூறியவாறு; ஐயீராயிரத் தாறைஞ்ஞூற்றொடு - பதின்மூவாயிரத்தொடு; தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃது - எழுநூற்றெட்டு எ-று. தொடைப்பகுதி பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டென்று சொல்லுப ஆசிரியரென்பது இதன் பொழிப்பு. 'மெய்பெறு மரபின்' இவை யெனவே, விளங்கத் தோன்றாதனவுந் தொடையுளுள வென்பதாம். அவை, 1 இணை 2 கூழை 3 மேற்கதுவாய் 4 கீழ்க்கதுவாய் 5 கடையிணை 6 கடைக்கூழை 7 இடைப்புணர்ப்பின எனச் சொல்லுப. பிறவும் வேறுபடுத்துக் கூறுவார் கூறுவன வெல்லாம் இதனானே தழீஇக் கொள்ளப்படுமென்பது. 'தொடைவகை' யென்பது கட்டளையடியொடு வருமெனப் பட்ட முப்பத்துமூன்று தொடையும் பிறவாற்றான் வருமெனப்பட்ட இடையீட் டெதுகை இரண்டடி எதுகையென இருகூற்றனவு மென்றவாறு. 'ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு' என்பது உம்மைத் தொகை. 'தொண்டு தலையிட்ட' என்பது ஒன்பானை யகப்படும் மொழியாக வுடைய வென்றவாறு. அது செய்தவென்னும் பெயரெச்சமாகலின் எழுநூற்றொன்பதென்னும் பெயர்கொண்டு முடியும். எனவே, எழுநூற் றொருபத்தெட்டா மென்றஞ்சிப் பத்துக்குறை எழுநூற்றொன்பது என்றா னென்பது. எனவே, ஆண்டு நின்ற ஒன்பானொடுந் தொண்டு தலையிட்ட ஒன்பானையுங் கூட்ட எழுநூற்றெட்டாயின வென்றவாறு. அஃதே கருத்தெனின், "பதின்மூ வாயிரத் தெழுநூற் றெட்டென மொழியப் பட்டன தொடைதெரி வகையே" என அமையும்; இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திரஞ் செய்த தென்னையெனின், அங்ஙனமே அதனை ஞாபகப்படச் செய்தான் ஆசிரியன் (666) ஒரு காரணம் நோக்கி; என்னை? இத்தொடைகளை அடியொடு மாறுங்காற் குறைக்கப்படுவன உளவென்பதூஉம், அவை தொண்டு தலையிட்ட ஐந்துபத்தளவும், ஆறு முதலாகக் களையப்படு மென்பதூஉங் கோடற்கென்பது, 'ஒன்பது' என்று இருகாற் சொல்லிய வதனான் அங்ஙனங் குறைக்கப்படு நிலங்கள் ஒன்பது பகுதியவாமெனக் கொள்க. அவையாவன: 1 ஐம்பத்தொன்பது 2 ஐம்பத்தாறு 3 நாற்பத்தைந்து 4 நாற்பது 5 முப்பத்தொன்பது 6 முப்பத்திரண்டு 7 முப்பத்தொன்று 8 இருபத்துமூன்று 9 ஆறு என ஒன்பது பகுதியாற் குறைவன வாயின. இங்ஙனம் ஐம்பத்தொன்பது நிலத்தின வாகலான் 'தொண்டு தலையிட்ட பத்து' என்றானெனவும், ஒன்பதுந் தொண்டுமென இருகாற் கூறியவதனான் அங்ஙனங் களையுநிலம் ஒன்பஃதெனவுங் கொள்ளப்பட்டன. "பாய பதினா யிரமென் றிலனையீர் ஆயிர மென்றா னதனானுந்- தூயதன்றிப் பத்துங் குறைத்த பயத்தானும் ஒன்பதென்று உய்த்துக் கொளற்பாற் றொருங்கு" எனவும், "ஓரொன்ப தேற்றியு மோரொன்ப திட்டுரைத்தும் ஈரொன் பதுமிகுத்தா னீங்கிவற்று - ளோரொன்பது ஐம்பான்மே லேறவு மைந்தந்த மாய்க்குறைதல் ஒன்பான் வகைத்தென்று மோர்ந்து" எனவும், "ஆறென்றான் மூவா யிரமென்னா தாங்கதனான் ஆறந்த மாங்குறையு மாறு" எனவும், "ஐம்பத்தொன் பானேழெட் டையொன் பதுநாற்பஃது ஒன்பா னுடைமுப்பத் தெண்ணான்கு முப்பத்தொன்று என்பா லிருபத்து மூன்றா றெனக்குறைப்ப ஒன்பான் பகுதி யுள." எனவும், இவ்வுரைச்சூத்திரங்களான் அவை குறைக்கப்படுமாறறிந்து குறைக்க. இவற்றுள் ஒன்பது நிலங் களையப்படும். மோனை முதலாயின தொடை ஐந்தற்கும் ஓரெழுத்துத் தேமா உரித்தென்றிராயின், அதனை நுந்தை நுந்தை யென்று இருகால் தொடுக்கவேண்டும்; தொடுத்தவழி அடிமோனையுந் தலையாகெதுகையும் அடியெது கையும் மூன்றா மெழுத் தொன்றெதுகையுமென நான்குதொடை பெறப்படுமாகலின். அவற்றுள் அதனை என்ன தொடையென்றுமோ வெனின், செய்யுள் செய்த ஆசிரியன் பல தொடைப்படச் செய்து வைத்தவழி, அவற்றுட் சில களைந்து ஒன்று கோடற்குக் காரணமின்மையினான் அவையனைத்துங் கோடு மென்பது. அல்லாதார் முதனின்ற தொடையே கொண்டொழிகவென்ப. அது குற்றம்; என்னை? "செங்காற் பைந்தினை யிதண மேறிப் பைங்காற் சிறுகிளி கடிவோ டந்தை" என்றவழி எதுகையும் முரணும் வந்தவழி இவற்றுள் முதற்கண் இன்ன தொடை யென்று துணியலாகாமையின் அது நிரம்பாதாகலான். அது வந்த தொடை யெல்லாவற்றானும் விரித்துத் தொடை கூறுதல் அமையு மென்பது; என்போலவோவெனின், எழுத்தும் அசையுஞ் சீரும் அடியும் அங்ஙனம் முதல் வந்ததனான் எண்ணுந் தொகையும் பெயருங் கொடுத்து வழங்காதவாறு போல வென்பது. அல்லதூஉந், தொடைகளெல்லாந் தம்மை யுணரும் மாத்திரையானே தனித்தனி வருதல் இலக்கணமென்ப தூஉம் இல்லையென உணர்க; என்னை? பல உறுப்புக் கொண்டது ஒரு செய்யுளென்றமையின், இனி, ஓரெழுத்துத் தேமா முதற்கணிற்ப அடியிறுதிக்கண்ணும் இயைபு வருதலின் அச்சீர் நின்றுறழ்ந்த அடிக்கண் இயைபு வருதற்கு ஆராய்ச்சியின் றென்பது. ஒழிந்த தொடைக் குரியவல்ல வெனப்பட்ட சீருள் அவை வாராமையும், உரியவெனப்பட்ட அவற்றுள் அவை வருமாறும் முறையிற் கொண்டு உதாரணங் கண்டுகொள்க. இனி, இக்காலத்துள்ள ஆசிரியருள் ஒருசாரார், "தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்றும் என்ப" எனப் பாடந் திரிப்பாரும், இன்னொரு சாரரார் "எழுநூற் றொன்றும்" எனப் பாடந் திரிப்பாரும் உளர். ஒரு பகுதியார் ஒன்றுமென்பது முற்றுவினை யென்ப. "மெய்பெறு மரபிற் றொடை வகை... பத்துக்குறை யெழுநூறு" என்னும் எண்ணினோடு ஒன்றுமெனக் கூட்டுப. பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணூற்றொன்பது என்பது அவர் கருத்து. ஒன்றுமென்ப தனை எண்ணுப்பெயர் முற்றும்மைப்படுத்த தென்பாரும் அதுவே கூறுப. அவரறியார். அவ்வாறு சூத்திரஞ் செய்வது ஆசிரியர் கருத்தன்று. அல்லதூஉம், "ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே" என்பது பழம்பாடமாகலானும் அஃதமையா தென்பது. அவ்வாறு கொள்வார்க்குத் தொடை பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற் றொன்பதாகலும் பிழைக்குமென மறுக்க; என்னை? அறுநூற்றிருபத்தைந் தடியினையுந் தமக்குப் பொருந்துமாற்றான் இருபத்திரண்டு தொடை யோடும் பெருக்குங்கால் அவர்க்கும் ஓரடிக்கண்ணே தொடை கோடல் வேண்டுமாகலானும், அங்ஙனங் கொள்ள இரட்டைத்தொடை முதலாயின அறுநூற்றிருபத்தைந் தாகாமையானு மென்பது. (101) தொடைகளுக்குப் புறனடை 414. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும். இது, மேற்கூறிய தொடைக்காவதொரு புறனடை. (இ-ள்.) அறுநூற்றிருபத்தைந்து அடியொடு மாறிப் பெற்ற தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டெனப்பட்டன மேல்; இனி, அவ்வடி ஒன்றன்கண்ணேயன்றி ஒன்று நிற்ப நின்றவடி அறுநூற்றிருபத்து நான்கனையுந் தந்து தந்து தடுமாற வந்து தோன்றுந் தொடை விகற்பமும் இருசீரடி முதலாக எண்சீரடி யீறாகக் கிடந்த அடி வேறுபாட்டின்க ணெல்லாம் இத்தொடைகளைக் கூட்டவும் பிற விகற்பத் தொடைகளைக் கூட்டவும் வருந் தொடைப்பகுதி வரையறை யின்றிப் பலவாம் எ-று. வரையறை உடையனவற்றுக் கன்றி வரையறை கூறுதல் பயமின் றாகலின் ஒழிந்த விகற்பமெல்லாங் கூறிய நிலங் கூறிற்றிலேனென்பதூஉம், "மெய்பெறு மரபிற் றொடைவகை" (தொல். செய். 101) எனப்பட்டன வரையறையுடைமையின் அதுகூறினே னென்பதூஉஞ் சொல்லினான் இச்சூத்திரத்தானென்பது. இனி ஐந்து தொடை, விகற்பத்தொடை பலவற்றொடுங் கூட்டவும் பிறவாற்றான் விரிப்பவும் வரம்பிலவா மென்பாருமுளர். அவை எவ்வாறு விரிப்பினும் வரம்பிலவல்லன வென மறுக்க. வரம்பில வென்பதற்கு வரையறை கூறப்படா வென மேலுரைத்ததே உரை. (102) தொடைப்பகுதி 415. தொடைவகை நிலையே யாங்கென மொழிப. இதுவுமது. மேல் ஒரு சாரன வரையறையுடைமையிற் கூறப்பட்டன வென்புழி, ஒழிந்தன வரையறையின்மையிற் கூறப்படாவெனவுங் கூறி னானைக் கண்ட மாணாக்கன், வரம்பில்லன தொடுக்கப்படா கொல்லென ஐயுற்றானை அவையுந் தொடுக்கப்படுங் கண்டாயெனக் கூறியமையின் ஐயம் அறுத்ததெனவும் அமையும். (இ-ள்.) தொடையது பகுதி வழக்கே அவ்விரண்டுமென்ப எ-று. எனவே, அப்பகுதியுளொன்று தெரித்திலமென்பது இதன் கருத்து. ஆங்கு என்றதனான் மேற்பகுத்த இரண்டிடமுங் கொள்க. (103) நோக்காவது 416. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே. இது, நிறுத்த முறையானே நோக்குணர்த்துகின்றது. நாற்சொல் வழக்கினையும் பாவிற் படுப்பது மரபென்றான். எனவே, ஆண்டு நோக்கி யுணரப்படுவதொன்றின்றிச் செய்யுளுள்ளும் வழக்கியல்பினவாகி வெள்ளைமையாய்க் காட்டுவன வாயின; அவ்வாறன்றி நோக்கென்பதோர் உறுப்புப் பெற்றவழியே அது செய்யுளாவதாகலான் அது கூறுகின்றா னென்பது. (இ-ள்.) மாத்திரையும் எழுத்தும் அசைநிலையுஞ் சீரும் முதலாகக் கொண்ட அடி நிரம்புந்துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது எ-று. கேட்டார் மறித்து நோக்கிப் பயன்கொள்ளுங் கருவியை நோக்குதற் காரணமென்றானென்பது. 'அடிநிலைகாறு' மென்பது, ஓரடிக்கண்ணே யன்றியுஞ் செய்யுள் வந்த அடி எத்துணையாயினும் அவை முடிகாறு மென்றவாறு. வரலாறு: "முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே'' (அகம். 4) என வரும். இப்பாட்டின் ஓசை முதலியன வெல்லாங் கேட்டோரை மீட்டுந் தன்னை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை தெரிந்து கொள்க. இனி, 'அடி நிலைகாறும்' என்றதனாற் செய்யுண் முழுவதும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும். முல்லை யென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற்சொல்லியலான் யாப்பு வழிப்பட்ட தாயினும் பருவங்காட்டி வற்புறுக்குந் தோழி பருவந் தொடங்கிய துணையே காணென்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தா னென்பது. 'உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்' என்னுந் துணையும் தலைமகனது காதன் மிகுதி கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணரவைத்தான். ஒழிந்த அடிநிலைகாறும் பிரிந்த காலம் அணித்தெனக் கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தா னெனப்படும்; என்னை? முல்லை யென்னாது வைந்நுனை யென்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லெனுமாகலின். இல்லமுங் கொன்றையும் மெல்லென்ற பிணி யவிழ்ந்தன வென்றாள், கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை 'இரும்பு திரித்தன்ன மருப்பு' என்றதூஉம், நீர்தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந் தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்டவழியும் வெப்பம் மாறாது விட்டவாறு போல வெம்பாநின்றன வின்னு மென்றவாறு. 'பரலவ லடைய விரலை தெறிப்ப' எனவே, பரல்படு குழிதோறும் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர்பருகியும் அப்பரல் அவலினது அடைகரையை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கி னமை கூறியவாறாயிற்று. 'கருவி வானங் கதழுறை சிதறி' என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்குநின்ற மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளிசிதறினவென அவற்றையும் புதுமை கூறினாள். எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித் தென்றமை யின் வற்புறுத்துதற்கு இனமாயின. 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்யவேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு. எனவே, தனது மனப் புகற்சி கூறியவாறு. அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான், அங்ஙனம் மாட்சிமைப் பட்ட மான்றேரனாதலானென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், 'துணையொடு வதியுந் தாதுண் பறவை' எனவே பிரிதலஞ்சி யென்றவாறு. மணிநாவொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தேரனாகி வாராநின்றானென இவையெல்லாந் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. 'கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்': தெய்வமலை ஆகலான் அதனு ளமன்ற காந்தளைத் தெய்வப் பூவெனக் கூறி அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள், அவை அலராகி விரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங் குறைபட்ட துணையேகாண், அவர் பிரிந்தது சேய்த்து அன்மையினென இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடிநிலைகாறுமென அடங்கக் கூறி, நோக்குதற்காரணம் நோக்கென்றானென்பது. மாத்திரை முதலாயி னவுந் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின், அவையும் அவ் விலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன் கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டு கொள்க. 'எனப்படு' மென்றதனான், இவ்வாறு முழுவதும் வந்தன நோக்குதற்குச் சிறப்புடைய வெனவும், இவை யிடையிட்டு வந்தன சிறப்பில வெனவுங் கொள்ளப்படும். பிறவும் அன்ன. (104) பாவகையும் அவற்றின் பெயரும் 417. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற்று என்ப பாவகை விரியே. 'நோக்கே பாவே' (313) யென நிறுத்தமுறையானே நோக்குணர்த்திப் பாவுணர்த்திய வெழுந்தான், அதனை இத்துணைப் பெயர் வேறுபாட்ட தெனவும், பொருட்குரிமையவும் அடிக்குரிமையவு மாமாறுஞ் செய்யுட்கு வரையறை வகையான் உரியவாமாறும் ஒரோசெய்யுட்கண் ஒரோவுறுப்புப் பற்றி வருங்கால் அவ்வுறுப்புக்கள் இத்துணையடிய வாகு மெனவும் எல்லாங் கூறுவான் தொடங்கினமையின். அவற்றுள் இது, பெயர்வேறு பாடும் அஃது இனைத்தென விரியும் உணர்த்துகின்றது. இவ்வுறுப்பு வேறுபாட்டானே, உறுப்பியாகிய செய்யுளும் இவ்வாறு பெயர்கொள்ள வைத்தானென்பது. (இ-ள்.) ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவுங் கலிப்பாவு மென நாற்கூற்றது, பாக்களவற்று விரி எ-று. 'வகை' யென்றதனான் உறுப்பி ஆகிய செய்யுளின் வேறுபட நோக்கி உணரப்படும் இவ்வுறுப்பெனவும், இவற்றுள் வழக்கிற்குரியன செய்யுட்கு வந்தனவும் செய்யுட்கே யுரியவாகிக் கூறுபடுவனவும், ஒன்றொன்றனொடு விராய்ப் பிறக்கும் பகுதியுமெல்லாங் கொள்ளப்படும். பாக்கூற்று விரி நான்கெனவே, பாவினை உறுப்பாகவுடைய செய்யுட்கு வரையறை கூறிற்றில னென்பது பெற்றாம்; என்னை? அவற்றுப் போதுங்கால் அவற்றது பெயர் வேறுபாடும் அச்சூத்திரங்களான் அறிதுமென்பது; என்றார்க்கு இவை நான்கேயன்றிப் பாவாமாறு கூறானோவெனின், இவையின்றித் தூக்குப் பிறவாமையின் இப்பாவிலக்கணமும் தூக்கோத்தி னுட் கூறினானாகலான் ஆண்டோதியவாறே அமையுமென்பது. இக்கருத்தே பற்றிப், "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே" (யா. வி. மேற்.) என்றார், இந்நூலின் வழிநூல் செய்த ஆசிரியருமென்பது. உ-ம் : "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கும் அகில்படு கள்ளியங் காடிறந் தோரே" (ஐங்குறு.) என்பது, ஆசிரியப்பா உறுப்பாகி வந்த செய்யுள். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்" (பட்டினப். 1,2) என்பது, வஞ்சிப்பா உறுப்பாகி வந்த செய்யுள். "வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய வாயினு மென்செய்வ - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை" (முத்தொள். 71) என்பது, வெண்பாவுறுப்பு வந்த செய்யுள். "அரிதாய வறனெய்தி" (கலி. 11) என்பது, கலிப்பாவுறுப்பு வந்தது. பிறவும் அன்ன. இவை இன்ன அடியான் வந்தன வென்பது என்னை யறியுமா றெனின், அதுவன்றே தூக்குப் பயம் படுகின்ற இடமென்பது. மூன்று பாவினை நாற்சீரானும், வஞ்சிப்பாவினை இருசீரானும் முச்சீரானுந் தூக்குக்கொண்டு இத்தூக்காமாறு உணர்ந்து கொள்க. ஆசிரியம் வெண்பாக் கலி வஞ்சியெனச் சிறப்புமுறையாற் கூறாத தென்னை யெனின் அது, "முந்து மொழிந்ததன் றலைதடு மாற்றே" (தொல். மர. 110) என்பாருமுளர். வஞ்சிப்பா முதற் கூறாமையின் அற்றன்றென்பது. மற்றென்னை கருதியதெனின், ஆசிரியம் வெண்பாவென்று ஓதினவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் உரிமையின், அவையே போறலுஞ் சிறப்புடைய வென்று கொள்வானாயினும், அற்றன்று; இவை செய்யுளிலக்கணமாகலான் அவை நான்கும் ஒத்த இலக்கணத்த செய்யுளென்றற்கு இம்முறையான் ஓதினானென்பது. இனி ஒருசாரார் இந்நான்கனையும் ஒன்று மூன்றாக விகற்பித்துக் கூறுப; என்னை? ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை என்றாற் போல. அற்றன்று; ஓரெழுத்து முதல் ஐயெழுத்துச் சீரளவும் உயர்ந்த சீரான். வரும் செய்யுட்கு ஒன்று ஒன்றனின் வேறுபட்டொலிக்கும். அவ்வேறு பாடுதோறும் பா வேறுபடா; என்னை ? "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப" (தொல். செய். 43) என்றமையினென மறுக்க அல்லதூஉம் அங்ஙனம் வேறுபாடு கொள்ளின் ஒரோவொன்று ஐந்தாகலுந் தூங்கலோசை ஆறும் ஏழுமாகலுமுடைய வென்பது. (105) பாக்கள் மும்முதற்பொருட்கும் உரிய ஆதல் 418. அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப. இது, பாவினைப் பொருட்குரியவாற்றான் வரையறை கூறுவான் தொடங்கிப் பொருட்குரிமை பொதுவகையான் உணர்த்துகின்றது. இது பொருளதிகாரமாகலின் இங்ஙனங் கூறுகின்றான். (இ-ள்.) அந்நிலை மருங்கின் - அம் மேலைச்சூத்திரத்துத் தோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளினிடத்து; அறமுதலாகிய மும்முதல் - அறம்பொருளின்பமென்பன; அறமுதற் பொருளெனவே அவையும் அவற்றது நிலையின்மையும் அடங்கும். பொருட்கும் உரிய வென்ப - அப்பொருட்கெல்லாம் உரிய நான்குபாவும் எ-று. 'அந்நிலைமருங்கின்' எனவே, அவை மும்முதற்பொருட்கு உரிய வாங்காற் செய்யுளிடத்தன்றித் தாமாக உரிமை பூணாவென்பது. வீடென்பது செய்யுளுள் வாராதோவெனின், அறமுதலென்பது புறப்பாட் டெல்லையாகக் கூறினா னென்பார் நான்குபொருளுந் தழீஇயுரைப்ப. இனி யொருசாரார் 'மும்முதற் பொருட்கும் உரிய வென்பதனை எச்சப்படுத்திக் கொள்ப. அற்றன்று; உலகிற் பொருள் மூன்றனையுங் கூறுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான்; அவையின்றி வீடு பெறுமாறு வேறின்மை யின் வீடும் ஆண்டுக் கூறினானென்பது. அல்லாதார் வீடென்னும் பொருண்மை செய்யுட்கண் வாராமையின் அதுகூறானென்ப. அங்ஙனங் கருதின் அறமுதற்பொருளுஞ் செய்யுட்கண் வாராவென மறுக்க. (106) முதற்பாக்களும் அவற்றுள் அடங்குவனவும் 419. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. 420. ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடனெழுதப் பட்டன. மேற் பாவினது விரி நான்கென்றமையின் தொகையுமுண் டென்பது பெற்றாம். அவை தொகுக்குங்கால் இரண்டாகித் தொகுமென்ப தூஉம், அங்ஙனம் இரண்டாமிடத்தும், யாதானும் ஒன்றடக்கி இரண் டாகா, முதற்பாவென நாட்டப்படுவன இவை யெனவும், அவை முதலாகத் தோன்ற ஆண்டடங்குவன இவை யெனவும் உணர்த்துகின்றது. (இ-ள்.) மேற் பாக்கண் விரிந்த பகுதியை உண்மைத்தன்மை நோக்கித் தொகுப்பின் ஆசிரியமும் வெண்பாவுமேயாம். அவற்றுள் ஆசிரியத்து விகற்பமாகி வஞ்சிப்பா தூங்லோசை விரிந்தடங்கும்; வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும்; அங்ஙனம் அடங்கி இரண்டாகும் பாவின்றொகை எ-று. "வீடுபேறு மிகவிழைந்து, நீடுநினைந்து நெடிதிருந்து" என அகவற்சீரான் வஞ்சித்தூக்குப் பிறந்தது. 1 மாசேர்வாய் 2 மாசேர்வாய் 3 மாசேர்வாய் 4 மாசேர்வாய் என வெண்பாவினுட் கலிப்பா பிறந்தது. பிறவும் அன்ன. இனி, ஒரு சாரார் வஞ்சிப்பாவினுங் கலிப்பா பிறக்குமாதலின் அதுகூறி நிரம்பாதென்ப (யா. வி.) என்னை? "விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று" (யா. வி. மேற்.) என்னும் இரண்டு வஞ்சியடியும் ஒரு கலியடியாகச் சொல்லப்படுமென்பது அவர் கருத்து. அற்றன்று; அவையிரண்டு மாதற்கொரு கட்டளையிலவாம். கட்டளை யழிந்த கலிப்பாவே யெனினும், வஞ்சியடியாதற்கு ஒரு காரணம் இல்லை, தலைகுலுக்கி வலியச் சொல்லினுந் தன் சீரின்மையினென மறுக்க. அல்லதூஉம் ஒன்று ஒன்றனோடு ஒக்குங்காற் பிறப்பித்ததனொடு, பிறந்ததொப்ப வேண்டுமென மறுக்க. "வயலாமைப் புழுக்குண்டும் வறளடம்பின் மலர் மலைந்தும்" (பட்டினப். 64,65) என்றக்காற் கலிப்பாவாகச் சொல்லியவழியும் அத்தூங்கலோசையோடு ஒத்தல் வேண்டும், அதனின் அது பிறந்ததாயினென மறுக்க. அல்லதூஉம் அவ்விரண்டடியுங் கூட்டியவழி அகவலோசையாதலே வலிது; என்னை? தன்றளை விராய் வந்தமையின். 'பண்புற'வென்றதனான் ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும், ஒழிந்தன விகாரமெனவுங் கொள்க. ஏனை வெண்பாவென்றதனான் மூன்றுபாவினுந் துள்ளிய கலியோசையும் ஒருவகையான் வெண்பாநெறித்தேயாம், இலக்கணக்கலியோசையன் றாயினுமென்பது கொள்க. (107, 108) வாழ்த்து நாற்பாவிற்கும் உரித்து ஆதல் 421. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. இது, மேற்கூறிய 'மும்முதற் பொருட்கண்' (தொல். செய். 106) ஒரு சாரனவற்றை வாழ்த்துதல் என்பதோராறும் உண்மையின், அப்பகுதி நான்கு பாவிற்கும் உரித்தென்கின்றது. நால்வகைப்பட்டது பாவாகலின் அப்பாவினை நான்கென்றான். வாழ்த்தியலென்னாது 'வகை' யென்றதனான் மேற்கூறிய மும்முதற் பொருளின்கண் வரும் அறுவகையும் பெரும்பான்மை யெனப்படு மென்பதூஉம், அங்ஙனம் வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப்பொருட்குப் பயன்படுதலுமென இருவகையான் வாழ்த்து மென்பதூஉம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இருவகைப்படு மென்பதூஉம் எல்லாங் கொள்க. அங்ஙனம் வாழ்த்தப்படும் பொருளாவன: கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடுமென்பன. அவற்றுட் கடவுளை வாழ்த்துஞ் செய்யுள் கடவுள்வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த்தெனப்படு மென்பது. "மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே" (நற். கடவுள்.) என்பது தெய்வவாழ்த்து, "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே'' (அகம். கடவுள்.) என்பதும் அது. முன்னையது தனக்குப் பயன்பட வாழ்த்தியது, பின்னையது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. பிறபாவினும் மருட்பாவினும் பிற பொருட்கண் வந்த வாழ்த்து வந்துழிக் கண்டுகொள்க. வாழ்த்தென்பது அறமாகலின், அறமுதலாகிய மும்முதற் பொருள்கள் (தொல். செய். 106) என்புழி அடங்கும்பிற, இச்சூத்திரம் மிகையாலெனின், அற்றன்று; புறநிலை வாழ்த்து முதலியன உள; அவை நீக்குதற்கு இது விதந்தோதினானென்பது. 'வாழ்த்தியல்' என்றதனான், இயற்கை வாழ்த்தெனப்படுவன இவை யெனவும், இனி வரும் புறநிலை வாழ்த்து முதலியன இயற்கைவாழ்த்தெனப்படா, ஒருவகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுவதல்லதெனவுங் கொள்க. (109) புறநிலை வாழ்த்துக்கு உரிய பாக்கள் 422. வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. இது, நாற்பாக்கும் உரித்தன்றி வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்.) நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறம்காப்ப, இல்லறம் முதலிய செல்வத்தாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு புதல்வர்ப் பயந்து, புதல்வரும் இப்பெற்றியராக, எல்லீரும் நீடுவாழ்வீராமினென்று தெய்வத்தைப் புறநிறுத்தி வாழ்த்துவது புறநிலைவாழ்த்து. அங்ஙனம் வாழ்த்திய அச்செய்யுள் கலிப்பா உறுப்பாகவும் வஞ்சிப்பாவினும் வருதலில்லை எ-று. தெய்வத்தைப் புறம்நிறுத்தி வாழ்த்துதலிற் புறநிலை வாழ்த்தாயிற்று. "வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப" என்றோதினமையின் வழிபடுதெய்வம் உள்வழியே புறநிலை வாழ்த்தெனப் படுவ தென்பது. எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய கடவுள் நிற்ப, அக்கடவுளாற் பயன்பெற நின்றானொரு சாத்தனை முன்னிலையாக்கி அவற்குக் காரியங் கூறுதலின் இது புறநிலையாயிற்று. 'கலிநிலை வகை' யென்றதனாற் கலிவகைத்தாகிய பரிபாடற்கும் இஃதொக்கும். இனிக் கடவுளாற் காக்கப்படச் சாத்தன் வாழ்த்தப்படா னெனவுஞ் சொல்லுப; அற்றன்று, கடவுள் வாழ்த்தென்றால் அவ்வாறு பொருள் படாமையி னென்பது. இவற்றுக்குச் செய்யுள்: "இமையா முக்க ணிலங்குசுடர் வாய்ந்த வுமையொரு பாகத் தொருவன் காப்பநின் பல்கிளைச் சுற்றமொடு நல்லிதி னந்தி நீபல வாழிய வாய்வாட் சென்னிநின் ஒருகுடை வரைப்பி னீழல் பெற்றுக் கிடந்த வெழுகட னாப்பண் அகலிரு விசும்பின் மீனினும் பலவே" எனவும், "திங்க ளிளங்கதிர்போற் றென்திங்க ளூர்த்தேவ மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து-திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ" எனவும் வரும். இனி, கலிப்பாவினுள் வருங்காற் கடவுள் முன்னிலையாக வரும்; என்னை? 'தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே' (தொல். செய். 138) என்றமையின். அது 'வாழ்த்தியல் வகை' யென மேலே யடங்கிற்று. வஞ்சிப்பாவிற்கும் அவ்வாறு கொள்ளப்படும். இச்சூத்திரம் பாவென்னும் உறுப்பிற்குப் பொருள் வரையறுத்தது. மற்று 'நிற்புறங் காப்ப' வென ஒருமை கூறிப் 'பொலிமின்' எனப் பன்மை கூறிய தென்னையெனின், "வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப" வென்றமையிற் புதல்வரொடுங் கூட்டிப் பாட அமையுமென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. (110) வாயுறைவாழ்த்து முதலிய மூன்றும் அன்ன ஆதல் 423. வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே செவியறி வுறூஉஎன அவையு மன்ன. இதுவும் பாக்களை மூன்றாக வரையறுக்கின்றது. வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉவும் என மூன்றும், மேலைப் புறநிலைவாழ்த்துப் போல் வாழ்த்துப்பகுதிய வாகலுங் கலிநிலைவகையும் வஞ்சியும் பெறாமையு முடைய வென மாட்டெறிந்த வாறு. அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். (இ-ள்.) வாய் - வாய்மொழி; உறை-மருந்து; வாயுறையென்பது, சொன்மருந் தெனப் பண்புத்தொகையாம். இனி வாய்க்கட் டோன்றிய மருந்தென வேற்றுமைத்தொகையுமாம்; மருந்து போறலின், மருந் தாயிற்று. அவன் சிறப்புக் கூறி வழுத்தி ஒரு சாத்தற்குப் பயன்படச் சொல்லினமையின் வாயுறைவாழ்த்தெனப்படு மென்பது. மற்று, 'நிற்புறங் காப்ப' வெனப் புறநிலை வாழ்த்திற்கு இடம் நியமித்தாங்கு இதற்கும் இடநியமங் கூறாரோவெனின், அது மாட்டேற்றானே அடங்குமென்பது. அவையடக்கியல் - அவையை வாழ்த்துதல், அவையடக்குத லென்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை; அடக்கியலென்பது, வினைத்தொகை. தானடங்குதலாயின் அடங்கியலெனல் வேண்டும். அஃதாவது, அவையத்தாரடங்குமாற்றான் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல். செவியறிவுறூஉ - ஒரு சாத்தற்குச் செவியறிவுபடுத்து அவனை வாழ்த்துதல்; என அவையும் அன்ன - என்ற இம்மூன்றும் அத்தன்மைய வேயாம் எ-று. தெய்வத்தொடு பட்டமையிற் புறநிலை வாழ்த்து முற்கூறி இவை பிற்கூறினான். இவற்றுள் வாயுறை வாழ்த்து முன்னிலைக்குரிமையின் அதன்பின் வைத்தான்; முன்னிலைக்கே உரித்தாயினுஞ் செவியறிவுறூஉ வினை ஈற்றுக்கண் வைத்தான், பயம் பெறுவானையே நீ இன்ன குணத்தை யாவா யென்று புகழ்பட வாழ்த்திச் சொல்லப்படுதல் வேறுபாடுடைமையி னென்பது. இங்ஙனம் வரையறுக்கின்றது நால்வகைப்பாவாகிய உறுப்பினை நோக்கியாகலின், அவற்றுள் இவ்வுறுப்புடைய நால்வகைச் செய்யுட்கும் இவ்வுறுப்பினதிலக்கணம் எய்துவித்துக் கொள்ளப்படும்; கொள்ளவே, ஆசிரியப்பாட்டும் வெண்பாட்டும் மருட்பாவும் எல்லா வாழ்த்திற்கும் உரியவென்பதூஉங் கலிப்பாட்டும் வஞ்சிப்பாட்டும் புறநிலை முதலிய நால்வகைப்பொருட்கும் உரியவல்ல வென்பதூஉம் பெற்றாம்; என்னை? "மருட்பா வேனை யிருசார் அல்லது தான்இது என்னும் தனிநிலை இன்றே' (தொல். செய். 85) என்றமையின். (111) வாயுறைவாழ்த்து ஆமாறு 424. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும்என்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. இது, முறையானே வாயுறைவாழ்த் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்புங் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்குங் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்தெனப்படும் எ-று. 'வாயுறை' யென்பது மருந்தாகலான் 'வேம்புங் கடுவும் போல' என்றானென்பது. அதற்குச் செய்யுள்: "இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே யதனால், நீயும் கேண்மதி யத்தை வீயாது உடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்காது இழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விளங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புறம். 363) பிறவும் அன்ன. (112) அவையடக்கியல் ஆமாறு 425. அவையடக் கியலே யரில்தபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. இது, முறையானே அவையடக்கியலுணர்த்துகின்றது. (இ-ள்.) வல்லாதன சொல்லினும் அவற்றை ஆராய்ந்து கொண்மி னென அவையகத்தாரெல்லார்க்கும் வழிபடு கிளவி சொல்லுதல் அவை யடக்கு எ-று. 'வல்லுத' லென்பது ஒன்று வல்லனாதல்; ஒருவன் வல்லனவற்றை 'வல்ல' வென்பவாகலான் வல்லாதனவற்றை 'வல்லா' வென்றானென்பது. அதற்குச் செய்யுள்; "திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போல் உரைத்த வுரைபோகக் கேட்டு - முரைத்த பயன்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர்" இது. பூதத்தார் அவையடக்கு. 'அரில்தபத் தெரியின்' என்றத னானே, யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய கொச்சக வொரு போகினும் அவையடக்கியல் சிறுபான்மை தொடர்நிலைக்கண் வரு மெனக் கொள்க. (113) செவியுறை ஆமாறு 426. செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே. இஃது, இறுதி நின்ற செவியுறை யுணர்த்துகின்றது. (இ-ள்.) செவியுறை - செவிமருந்து. அதுவும் ஒப்பினாகிய பெயர்; தானேயென நின்ற ஏகாரம் பிரிநிலை. பொங்குதலின்றி - பெருக்கமின்றி; புரையோர் நாப்பண் அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே - பெரியோர் நடுவண் அடங்கி வாழ்தல் கடப்பாடெனச் சொல்லிச் செவிக்கணறி வுறுத்துவது செவியறிவுறூஉ எ-று. அஃது அடங்கி வாழ்வார்க்குப் புகழாதலான் வாழ்த்தின்பாற் பட்டது. அதற்குச் செய்யுள்: "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்" (புறம். 6) என்பதனுள், "பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முதல்வ ரேந்துகை யெதிரே" எனவும், "என்றும், இன்சொல் எண்பதத்தை யாகுமதி பெரும" (புறம். 40) எனவும், "பணிவுடைய னின்சொல னாத லொருவற்கு அணியல்ல மற்றுப் பிற" (குறள். 10:5) எனவும் வரும். இத்துணையும் பாவினது பெயரும் முறையும் எண்ணும் பொருட்கு உரியவற்றுக்கண் வரையறையுங் கூறியவாறு. (114) குட்டம் இன்ன பாவுள் இவ்வாறு வரும் எனல் 427. ஒத்தா ழிசையும் மண்டில யாப்புங் குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப. இதுவும், மேனின்ற அதிகாரத்தாற் பாவிலக்கணமே கூறுகின்றது. பாவென்பது அதிகாரத்தாற் கொள்ளப்படும். ஒத்தாழிசைக்கலி அளவடியுஞ் சிந்தடியும் குறளடியும் விராய் நிற்குமாயினும், அளவல்லா வடியேனும் அளவடிக்குப் பொருந்துமாற்றாற் பாக் கொளுத்தப்படு மென்பது. " அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) என அளவடிக்கண் துள்ளலோசை வந்தது; "போரவுணர்க் கடந்தோய்நீ புணர்மருதம் பிளந்தோய்நீ" (விளக்கத்தனார் பாடல்) எனக் குறளடிக்கண்ணும் அவ்வாறே துள்ளலோசை வந்தவாறு கண்டுகொள்க. "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே" (யா. வி. மேற்.) என இஃது இடையடி குறைந்தமையிற் குட்டமெனப்பட்டது. நாற்சீரடி யாத்து வருவன மண்டிலயாப் பெனப்படும். அவை போலக் குட்டமும் நேரடிக்குப் பாப் பொருந்தின எ-று. ஈற்றின் மண்டில மோதிய தென்னையெனின், அது சொல்லாக்காற் குட்டமே நேரடிக்கு ஒட்டுவதாவான் செல்லுமாகலினென்பது. மண்டில மென்பன, "மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே." (யா. வி. மேற்.) என்றற் றொடக்கத்தன. ஒத்தாழிசை முன்வைத்த தென்னை யெனின், மண்டிலம் போல் வனவுங் குட்டம் போல்வனவுங் கலிப்பாவினுட் சிறுபான்மைய என்றற் கென்பது, அவை அளவடிக்குரிமை யாண்டுப் பெறுதுமெனின், அவை தம்மை உறழுங்கால் ஓதிய நிலவகையானும், " இன்சீர் வகையி னைந்தடிக்கு முரிய" (தொல். செய். 54) என்னுஞ் சீர்வகையானும் பெறுது மென்பது. இதனது பயம், குறளடி, வஞ்சிப்பாப் போலப் பா வேறுபடா வென்பது. ஒட்டியென்றதனான், இத்துணை போகாது சிறுவரவிற்றாய் வரும் வெண்பாக்கண்ணு மென்பது கொள்க. (115) குட்டம் கலியிலும் ஆசிரியத்திலும் வருதல் 428. குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். இது குட்டத்திற்கொரு சிறப்புவிதி. (இ-ள்.) ஒத்தாழிசைக்கலியின்கண்ணும் மண்டிலயாப்பின்கண்ணுங் குட்டம் வருங்கால் அளவடிக்குப் பொருந்தி வரும் தத்தம் பாக்கள் எ-று. (இ-ள்.) குட்டம் எருத்தடியின்கண்ணும் வரும் எ-று. மேல் ஆராய்ச்சிப்பட்ட குட்டம் இடைவருதலன்றி ஒருபாட்டின் ஈற்றயலடிக் கண்ணே வந்தொழிதலும் உண்டன்றே? அதுவும் பாவிற் கேற்பக் குறைக்கப்படு மென்பான், " குட்டம் எருத்தடி யுடைத்து மாகும்" என்றான்; குறைத்தற்குக் கூறினானல்ல னென்பது, இதனை இவ்வாறு கூறவே மேற்கூறிய குட்டம் ஒத்தாழிசைக்கட்போல இடையிடை வருமென்பது பெற்றாம். "உடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல்போற் றோன்றல காடிறந் தோரே" (அகம். 1) என, ஈற்றயலடி முச்சீரான் வந்தது. பிறவும் அன்ன. (116) மண்டிலமும் குட்டமும் வரும் இடம் 429. மண்டிலம் குட்டம் என்றிவை இரண்டுஞ் செந்தூக்கு இயல என்மனார் புலவர். இது, மண்டிலமுங் குட்டமும் வருமிட னுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய மூன்றனையும் இன்ன பாவென்பது உணர்த்தி னான்; அவற்றுள், இறுதி நின்ற மண்டிலமுங் குட்டமும் ஆசிரியப்பா வினை உறுப்பாகவுடைய எ-று. எனவே, ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப்பாகவுடைத் தென்பது பெறுதும்; என்னை? " ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே" (தொல். செய். 130) என்ப வாதலான். மேற்கூறிய மண்டிலவாசிரியத்தினை, நிலைமண்டிலமெனவும் அடிமறிமண்டிலமெனவும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் (யா. வி. சூ. 73,4). நின்றவாறு நிற்றலும், அடிமறித்துக் கொள்ளினும் பொருள் திரியாது நிற்றலுமுடைய வென்பது போலும் அவர் கருத்து. அடிமறித்தல் பொருள்கோட் பகுதியாகலான் அஃதமையும்; அங்ஙனங் கொள்ளின் நிரனிறை முதலிய பொருள் கோட்பகுதியானுஞ் செய்யுள் வேறுபடுமென மறுக்க. இனிக், குட்டமும் இருவகைத் தென்ப, இணைக்குறளாசிரி யப்பா நேரிசையாசிரியப்பாவென. அவை அவ்வாறு கொள்ளின் (யா. வி. சூ. 71,2) இழுக்கென்னை? " குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்" (தொல். செய். 116) என்று இருவகையாற் கூறினமையி னென்றலுமொன்று. இனி ஒன்றாக வழங்குதலே வலியுடைத்து. "குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்" என ஒருமை கூறியவதனான் ஒழிந்தவழி இரட்டித்துக் குறைய வேண்டு மென்பது கொள்க. மற்று, " ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும்"' (தொல். செய். 115) என்றவழிக் கலிப்பா முற்கூறியதென்னையெனின், குட்டம் ஆண்டுப் பயின்று வருதலின் ஆசிரியத்திற்கும் அதனை முற்கூறினான்; இனி, முறையானே வெண்பாக் கூறுமென்பது. குட்டமென்பது வழக்குச்சொல்லாற் செய்த செய்யுளென்பாரு முளர். நாற்சொல்லானு மன்றிச் செய்யுள் செய்யப்படாமையின், அது குட்டமென்றல் நிரம்பாது. ஒத்தாழிசையென்பது எல்லாச் செய்யுள் மேலுஞ் செல்லுமெனவும் உரைப்ப. பாவும் இனமுமெனப் பகுத்துரைப் பார்க்காம் அது பொருளாவதென மறுக்க; அல்லதூஉம், ஒரோவொன்றே வருவது ஒத்தாழிசையெனப்படா வென்பது. செந்தூக்கென்பது ஆசிரியப்பா வென்றவாறு. பாவினைத் தூக்கெனவுஞ் சொல்லுப (305). 'இயல' வென்பது அப்பாவானே நடக்குமென்றவாறு. இதுவும் இன்ன செய்யுட்கு உரித்தெனப் பாவினை வரையறுத்ததேயாம். (117) வெண்பாயாப்புச் செய்யுள் ஆவன 430. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளோடு ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின. இது, வெண்பாவென்னும் உறுப்பினை இன்னுழிப் பாவாமெனப் பொருளுஞ் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது. (இ-ள்.) நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக்கிளையும் பரிபாடலும் அங்கதச் செய்யுளுமென ஐந்துந் தம்மின் ஒத்து வெண்பா வென்னும் உறுப்பினானே வகுக்கப்படும் எ-று. நெடுவெண்பாட்டென்பன: தாமுடைய பன்னீரடி உயர்பு, இழிபு ஏழடியாக வருவனவென்பது; எனவே, நாற்சீர், அளவடியாயினாற் போல நாலடியான் வருதலே அளவிற்பட்டதாகலான் ஐந்தடி முதலாக வருவன வெல்லாம் நெடுவெண் பாட்டென்றலே வலியுடைத்து. குறுவெண்பாட் டென்பன: இரண்டடியான் மூன்றடியான் வருவன. குறள்வெண்பா சிந்தியல்வெண்பா வெனப்படலும் ஒன்று. எனவே நான்கடியான் வருவன அளவியல் வெண்பா வெனப்படும். கைக்கிளைப் பொருண்மைத்தாகலின் மருட்பாவினையுங் 'கைக்கிளை' யென்றான். பரிபாடலென்பது பரிந்து வருவது; அஃதாவது கலியுறுப்புப்போலாது பலவடியும் ஏற்று வருவது. அங்கதமென்பது, முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பாகியும் பிறவாற் றானும் வசை பொருளாக வருவது. 'ஒத்து' என்பது இலக்கணத்தின் திரியாதென்றவாறு. இதனது பயம்: கைக்கிளை வெண்பாவினான் வரினுங் கலிப்பாவின்பாற் படுமென்பது. பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையான் ஒப்புமையுடைய வென்பது கொள்க. அல்லதூஉங் குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் பலவாகியும் ஒன்றாய் அடங்குமென்பதூஉமாம். இனி, அல்லாதார் வெண்பாவினை ஐந்தெனவுஞ் சொல்லுப. அவை தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமெனவும் அவ்வாறு வருங்கால் ஈற்றடி ஒழித்து எல்லாந் தனிச்சொற் பெறுதலும் அவற்றை ஒன்றொன்ற னொடு பரிமாற்றித் தனிச்சொற் கொடுத்து உறழ்வனவுமாகிப் பலவா மென்பது. அங்கதச்செய்யுளென்பது பண்புத்தொகை. உம்மைத் தொகை யென்பார், செய்யுளென்பதும் வேறென்ப; அதற்கு விடை முன்னர்ச் சொல்லுதும்(439). 'எல்லாம் வெண்பா யாப்பின' என்பதனை, செயற் படுத்து அவற்றுள் அங்கதமுங் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வருமென்பது படும். (118) கைக்கிளைச் செய்யுள் நிகழுமாறு 431. கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்பா உறுப்பாகி வருமென்றான், அற்றன்றி வெண்பாவி னோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் கைக்கிளைக்கு வரும் எ-று. அங்ஙனம் வருவது மருட்பாவாகலாற் கைக்கிளைப் பொருளே மருட்பாவிற் குரித்தென்பது பெற்றாம்: பெறவே, "கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா" (தொல். செய். 110) என்புழி விலக்கப்படாத ஆசிரியப்பாவும் வெண்பாவும் உறுப்பாக வருதலின், வாழ்த்தியல் வகையும் புறநிலைவாழ்த்து முதலாயின வாழ்த்துங் கைக்கிளையும் பொருளாக வரும் மருட்பாவென்பது பெற்றாம். கைக்கிளையதிகாரப்பட்டது கண்டு அதனை ஈண்டுக் கூறினான். ஒழிந்த புறநிலை வாயுறை செவியறிவுறூஉக்களும் பொருளாக மருட்பா வருமென்பது முன்னர் அளவியலுள் (472) சொல்லும். இவற்றுக்கெல்லாஞ் செய்யுள் ஆண்டுக் காட்டுதும். (119) பரிபாடல் நிகழுமாறு 432. பரிபா டல்லே தொகைநிலை விரியின் இதுபா என்னும் இயல்நெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப. இது, பரிபாடற் காவதொரு புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பரிபாடல் வெண்பாவுறுப்பாக வரினும், இன்னபா வென்ப துணரப்படாமைப் பொதுப்பட நிற்றற்கும் உரித்து எ-று. "மண்ணார்ந் திசைத்த முழவொடு கொண்டதோள் கண்ணோ டுடன்விழூஉங் காரிகை கண்டார்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு" (கடவுள் வாழ்த்து) எனப் பரிபாடல் வெண்பா உறுப்பாக வந்தது. "ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை யணவர" (பரி. 1) என்பது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைபடச் சொல்லவும்படுதலின், "இதுபா வென்னும் இயனெறி யின்றிப் பொதுவாய் நின்றது" எனப்படும். உம்மை இறந்தது தழீஇயிற்று. மற்று இது கலிப்பாட்டிற்கும் ஒக்கும் பிறவெனின், ஒவ்வாதாகாதே, ஆசிரியன் இவ்வாறு கூறினமையினென்பது. அல்லதூஉங் கலிக்கு ஓதிய இலக்கணமின்மையானும் பரிபாடலெனவே படும் பெரும்பான்மையுமென்பது. தொகுத்து விரித்த பாநான்கனுள்ளும் அடங்காது வேறாங்கால் அது வெண்பாவினான் யாக்கப்படாது பொதுவகையான் யாக்கப்படும் எ-று. (120) பரிபாடல் உறுப்புக்கள் ஆவன 433. கொச்சக மராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இது, மேற்கூறிய வகையாற் பரிபாடற் கேற்ற பாவுறுப்பினை யெடுத்து விரி கூறி இத்துணை உள்ளுறுப்புடைத் தென்கின்றது. உள்ளுறுப் பெனக் கூறவேண்டுவ தென்னை, பண்பு பற்றி நான்குறுப்பான் எண்ணப் படாவோ வெனின், அவை எல்லாச் செய்யுட்கும் பொதுவாக லான் அவற்றோ டெண்ணாது, இவற்றை இப்பாவிற் குறுப்பாகக் கூறினா னென்பது. மேல் வருகின்ற கலியுறுப்பிற்கும் இஃதொக்கும். (இ-ள்.) செப்பிய நான்குறுப்புங் கலிக்குறுப்பாகச் சொல்லப்பட்ட வகையானே வரும் அவை ஈண்டும் எ-று. 'தனக்'கென்றதனான் அவை யல்லா உறுப்பு முள வென்பது முன்னர்ச் சொல்லுதும்; "சொற்சீரடியும்" (தொல். செய். 122) என்புழிக் காண்க. கொச்சகமென்பது ஒப்பினாகிய பெயர். ஓராடையுள் ஒரு வழியடுக்கியது கொச்சகமெனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பல குறள் அடுக்கப்படுவது கொச்சகமெனப்பட்டது. குறிலிணை பயின்ற அடி அராகமெனப்படும். சுரிதகமென்பது அடக்கியலெனப்படும். எருத் தென்பது தரவு. இவை நான்குறுப்பாக வருவது பரிபாடலென்ற வாறு. பெரும்பான்மையும் கொச்சகவுறுப்புப் பயின்று வருதலின் அதனை முன் வைத்தான். அராகம் எழுவாயாகாமையின் அதனை இடை வைத்தான். சுரிதகமென்பது எஞ்ஞான்றும் ஈற்றதாகலான் அதனை அதன்பின் வைத்தான். எருத்தினை ஈற்றுக்கண் வைத்தான் அதனை யின்றியும் வரும் பரிபாடலென்றற்கும் அஃது இடையும் வருமென்றற்கு மென்பது. உ-ம்: "வானா ரெழிலி மழைவள நந்தத் தேனார் சிமய மலையி னிழிதந்து நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய விருந்தையூ ரமர்ந்த செல்வநின் றிருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுதே" (இது தரவு) "ஒருசார், அணிமலர் வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; ஒருசார், தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை வண்ண மரையிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்வீற் றிருக்குங் கயம். ஒருசார், சாறுகொ ளோதத் திசையொடு மாறுற் றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல். ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி யறத்திற் றிரியா பதி'' (இவை நான்குங் கொச்சகம்) "ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனைமறு கொருசார். விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறசார் ஆங்க, அனையவை நல்ல நனிகூடு மின்ப மியல்கௌ நண்ணி யவை" (இது கொண்டுநிலை.) "வண்டு போரேரென வெழ வண்டு போரேரென வெழுங் கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர மிளிர்மின் வாய்த்த விளங்கொளி நுதலா ரூர்களிற் றன்ன செம்ம லோரும் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யோங்கிய வொண்ணுத லோரும் புலத்தோ டளைஇப் புகழணிந் தோரும் நலத்தோ டளவிய நாணணிந் தோரும் விடையோ டிகலிய விறனடை யோரும் நடைமட மேவிய நாணணிந் தோரும் சுடனிரை திரையிற் கருநரை யோருஞ் சுடர்மதிக் கதிரென தூநரை யோரு மடையர் குடையர் புகையர்பூ வேந்தி யிடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் விளைவின் விழுப்பயன் றுய்க்குந் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையு மிகுகே ழுத்தி யணிந்த வெருத்தின் நனைகெழு செல்வ னகர். வண்டொடு தும்பியும் வண்டொடையா ழார்ப்ப விண்ட கடகரி மேகமோ டதிரத் தண்டா வருவியோ டிருமுழ வார்ப்ப வரியுண்ட கண்ணாரோ டாடவர் சுடிப் புரிவுண்ட பாடலோ டாடலுந் தோன்றக் கூடு நறவொடு காமமகிழ் விரியக் கூடா நறவொடு காமம் விரும்ப வினைய பிறவு மிவைபோல் வனவு மனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர்." (இவையும் கொச்சகம்) "மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி யவிர்நிமிர் புகழ்சுந்தற் பிணிநெகிழ் துணைணிணை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரி மதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயிற் றொழிலெழி லிகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ டணிமிக வந்திறைஞ்ச வல்லலிகப்பப் பிணிநீங்க நல்லவை யெல்லா மியைதருந் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர்." (இது முடுகியல்) திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கு மமிழ்ந்து கடைய விருவயி னாணாகி மிகாஅ விருவட மாழியான் வாங்க வுகாஅ வலியி னொருதோழங் கால மறாஅ தணிந்தாருந் தாம். மிகாஅ மறலிய மேவலி யெல்லாம் புகாஅ வெதிர் பூண்டாருந் தாம். மணிபுரை மாமலை ஞாறிய ஞால மணிபோற் பொறுத்தாருந் தாம்; பணியுறுசீர்க், கல்லுயர் சென்னி யிமயவி னாணாகத் தொல்புகழ் தந்தாருந் தாம்" (இவையுங் கொச்சகம்) "அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி நல்லடி யேத்திநிற் பரவுது மெல்லேம் பிரியற்கவெஞ் சுற்றமொ டொருங்கே" (என்பது ஆசிரியச் சுரிதகம்.) "அறவோ ருள்ளா ரருமறை காப்ப" என்னும் பரிபாடலுள், "செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு." இது, வெள்ளைச்சுரிதகத்தான் இற்றது. "காமங் கண்ணிய நிலைமைத் தாகும்" என்பது, காமப்பொருள் குறித்து வருமென்றவாறு. கண்ணியவென்ற அதனானே, முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட் டினும் புனல் விளையாட்டினும் பிறவுமெல்லாங் காமங் கண்ணியே வருமென்பது; என்னை? "எல்லேம் பிரியற்கவெஞ் சுற்றமோ டொருங்கே" எனத் துணைபிரியாமை காரணமாகத் தொழுதே மென்றலின். "காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் றாணிழ றொழுதே" (பரி. 1: 62 - 5) என்பதும் அது. இனிச் 'செப்பிய நான்கு' என்றது, எண்ணப்பட்ட நான்கனையு மன்று; அன்னவற்றொடு மேற்கூறிய நான்கு பாவும் இடைவந்து விரவு மென்பது. அதுவும் நோக்கிப்போலும் பரிபாடல் என்றது. "எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமிர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி விளங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்தும் ஏவலும் பணிந்தனம் கூறும் நாவ லந்தண ரருமறைப் பொருளே" (பரி. 1: 6 - 13) என ஆசிரியம் வந்தது. "நின்னொக்கும் புகழ்நிழலவை" (பரி. 4. 55) என்பது வஞ்சித்தூக்கு. பிறவும் அன்ன காட்டுப. அது பொதுவாய் நிற்றலும் உரித்தென்றதனான் அடங்கும். இனிச், செப்பிய நான்கென்றதனான் அராகமின்றி வருதலும், கொச்சகம் ஈற்றடி குறைந்து வருதலும், அவ்வழி அசை சீராகி இறுதலும் மேற்கலிப்பாவிற்குச் செப்பிய சுரிதகமாதலுங் கொள்க. (121) இதுவுமது 434. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக்கு உரிய வாகும். இதுவும் பரிபாடலுறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்.) எண்ணப்பட்ட இரண்டும் பரிபாடற்குள்ள உறுப்பாய் வரும் எ-று. சொற்சீரும் முடுகியலுமென்னாது அடியென்றதனான் மேற்கூறிய அடியொடு தொடர்ந்தல்லது வாராவென்பதாம். சொற்சீரடியாமாறு முன்னர்ச் சொல்லுதும். முடுகியலடியென்பது முடுகியலொடு விராய்த் தொடர்ந்தொன்றாகிய வெண்பாவடி. அராகமென்பது தாமே வேறு சில அடியாகி வருவன. இவையன்றிக் குறிலிணை பயில்வன முடுகியலெனவுங் குறிலிணை விரவி வருவன அராகமெனவுஞ் சொல்லுவாரும் உளர். "முடுகு வண்ண மடியிறந் தோடி யதனோ ரற்றே" (தொல். செய். 233) என்பவாகலின் மேலதே யுரை. 'உரிய' வென்றதனான் இத்துணை பயின்றுவாரா. இவ்விரண்டுங் கலிப்பாவினு ளென்பது கொள்க. எனவே, அராகவுறுப்புத் தேவபாணியி னல்லது அக்கலிக்கண் யாண்டும் வாராதாயிற்று. (122) சொற்சீரடி ஆமாறு 435. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ் சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. மேலெண்ணப்பட்ட சொற்சீரடியாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொற்சீரடி இக்கூறிய நான்கு வகையானும் வந்து பயிலும் எ-று. கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்தது: "வடவேங்கடந் தென்குமரி, யாயிடை" (தொல். பாயிரம்) எனவும், "அஇஉ, எஒ என்னு மப்பா லைந்தும்" (தொல். எழுத். நூன். 3) எனவும், இவை கட்டுரைக்கட் சொல்லுமாறு போல எண்ணினமையிற் கட்டுரை வகையான் எண்ணொடுபுணர்ந்தன. இனி, முட்டடியின்றிக் குறைவுசீர்த்தாகும் இயல்பாய் வருமாறு: "நின்னொக்கும் புகழ்நிழலவை" (பரி. 1: 55) எனவும், "கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையினவை" எனவும் வரும். 'முட்டடியின்றி' என்ற இவை தூக்குப்பட்டு முடியுமடியல்ல எ-று. மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள், 'ஒருசார்' என்பது ஒழியசை; என்னை? அது சீராகலின் அதனொடு சில அசை கூடியன்றி அசையெனப் படாமையின். 'ஆங்கு' என வருந் தனிச்சொல் வழியசை யெனப்பட்டது; என்னை? அஃது, அசையாய் நின்று சொற்சீரடியாகலின். மற்றுச் சொற்சீரடியினை அசை யென்றதென்னையெனின், இயலசை தானேயும் ஒழியசையாய் நிற்குமென்றற்கென்பது. "ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்கு அடியரோ வாற்றா தவர்" (கலி. 88) என்புழி 'ஒரூஉ' வெனநின்ற இயலசைதானே ஒழியசையாய் நின்றது. "உகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில்" (கலி. 33) என்பது, வழியசைபுணர்ந்த சொற்சீரடி; என்னை? 'எள்ளி' என நின்ற சீரின்வழித் 'தொகுபு' என வந்த அசை உகுவது போலுமென்னுந் தொடையொடு பொருந்தி, "உகுவது போலுமென் னெஞ்செள்ளித் தொகுபுடன்" எனப் புணர்ந்து நின்றாற் போல்வதொரு சுவைமை செய்து நின்றமையின். கொச்சகம் இடைநிலைப் பாட்டெனப்படாமையின், "தொகுபுடன் ஆடுவ போலு மயில்" என நாற்சீரடியானும் வருவதாயிற்று, வரையறையின்மையின். இங்ஙனம் வந்தமையின் சொற்சீரடிமேல் எண்ணவும் படும். இவை கலிக்கண் வருங்கால் ஒத்தாழிசைக்கண் முடுகியலடி வாராதென்பதூஉஞ், சொற்சீரடி வருஞான்று தனிச்சொல்லாகி யன்றி வாராது என்பதூஉம் உறழ்கலிக் கண்ணும் முடுகியலடி உரித்தன்றென்பதூஉங் கொள்க. சொற்சீர்த்திறுதலென்பது, ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்களெல்லாம் அடியிறுதிக்கண் அடிப்பட முடிந்து அடியாத லிலக் கணத்த அவை யென்றவாறு. இனி, ஒழியசையினையும் வழியசையினையும் கூன் என்னாமோ வெனின், "சீர்கூ னாத னேரடிக் குரித்து" (தொல். செய். 49) என்றமையின் ஈண்டு அசை கூனாகாது; அல்லதூஉம் ஆண்டுக் கூனெனப் பட்டதும் ஈண்டுச் சொற்சீரடி யெனப்பட்டு அடங்கு மென்பது. இவை யெல்லாம் பரிபாடற் கண்ணவே கூறினானாயினும் ஒழிந்த பாவினுட் சொற்சீரடி வருமென விதந்தவழி, இதுவே இலக்கணமாக வரும் ஆண்டு மென்பது. 'இயல்பு' என்றதனானே யாண்டு வரினும் அஃதிலக்கணமென் பது பெற்றாம்; அல்லதூஉந், "தொகைநிலை விரி" (தொல். செய். 120) என்ற மிகையாற் பரிபாடற்கு உரியவாகக் கண்டுகொள்க. அவை யாவை யோவெனின், முடுகியலடிக்கு மேற்காட்டிய பரிபாடலுள் "மணிமருடகை" என்பது முதலாகக் "குளவா யமர்ந்தா னகர்" என்ப தீறாகக் கண்டுகொள்க. (123) அங்கதச் செய்யுளின் வகை 436. அங்கதம் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்தது எனஇரு வகைத்தே. இது, முறையானே அங்கதச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது செம்பொருள் கரந்தது என்று இரு வகைத்தாம் எ-று. அங்கதமென்பது வசை; அதனை இருவாற்றாற் கூறுக வென்பான் இது கூறினான். அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். 'அரிறப' வென்ற தென்னையெனின், அவை புகழ் போன்று வசையாதலும் பட்டுத் தோன்றும் மயக்கமுடையவாதலின் மயக்கமறத் தெரியினென்றவாறு. "நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான்" (கலி. 52) என்பது புகழ் போன்று வசையாயிற்று; என்னை? கொன்றானாயினுங் குறங்கினகத்துத் தண்டுகொண்டு எற்றுதல் குற்றமாதலின் என்பதறிக. கொடைமடங் கூறுதல் வசை போன்று புகழெனப்படும். அஃது அங்கத மாகாதென்பான் 'அரிறப' வென்றானென்பது. பிறவும் அன்ன (124) செம்பொருள் அங்கதம் 437. செம்பொரு ளாயின் வசைஎனப் படுமே. இது, முறையானே செம்பொருளங்கத முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம் பொருளங்கத மெனப்படும் எ-று. அஃது, "இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்றம்-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண்டு ஓட்டைச் செவியு முள" என்பது ஏழிற்கோவை, அவ்வை முனிந்து பாடியது. "எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே யெம்மிக ழாதவர் தம்மிக ழாரே தம்புக ழிகழ்வோ ரெம்புக ழிகழ்வோர் பாரி யோரி நள்ளி யெழினி யாஅய் பேகன் பெருந்தோண் மலையனென் றெழுவரு ளொருவனு மல்லை யதனால் நின்னை நோவ தெவனோ அட்டார்க் குதவாக் கட்டி போல நீயு முளையே நின்னன் னோர்க்கே யானு முளனே தீம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே'' எனவும் வரும். கலிப்பாட்டினான் வருவன வசைக்கூத்தினுட் கண்டுகொள்க. "அறச்சுவையினன் வையெயிற்றினன் மயிர்மெய்யினன் மாசுடையினன் பொய்வாயாற் புகழ்மேவலன் மைகூர்ந்த மயலறிவினன் மேவருஞ் சிறப்பி னஞ்சி யாவரும் வெரூஉ மாவிக் கோவே." என்பது வஞ்சிப்பாட்டு. இது, வெண்பாவினான் வருதலே பெரும்பான்மை. (125) பழிகரப்பு அங்கதம் 438. மொழிகரந்து சொல்லினது பழிகரப்பு ஆகும். இது, பழிகரப்பங்கதம் உணர்த்துகின்றது. (இ-ள்.) வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பங்கதம் எ-று. மாற்றரசனையும் அவனிளங்கோவினையும் வசைகூறுமாறு போலாது, தங்கோனையும் அவனிளங்கோனையும் வசைகூறுங்கால் தாங்கி யுரைப்பர்; அவை போலப் பழிப்பன வென்றவாறு; அது, "நன்றாய்ந்த செங்கோலாய் நாடிய நின்னிளங்கோக் குன்றெறிந்த சேந்த னெனமதியா-வன்றிறத்து நின்றொலிக்குந் தானையோ டெல்லா நிகர்த்தார்மேல் வென்றெறியும் வேலே விடும். " என வந்த வெண்டொடைச் செய்யுளுட் கண்டுகொள்க. இதனுள், "வென்றெறியும் வேலே விடும்" என்பது, 'முனையகத்துப் படையோடு' மென வசைகூறுவான் 'குன்றெறிந்த சேந்தனைப்' போல எறிந்தானெனப் புகழ்ந்தான் போலக் கூறினானென்பது. "இன்றுள னாயி னன்றும னென்றநின் னாடுகொள் வரிசைக் கேற்பப் பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே." (புறம். 53.) என்பதும் அது. (126) அங்கதம் பிறபெயரினும் வருமாறு 439. செய்யுள் தாமே இரண்டென மொழிப. மேற்கூறிய இரண்டனையும் இவ்வகையானும் வகுக்கப்படு மென்கின்றது. (இ-ள்.) செம்பொருட்செவியுறை, செம்பொருளங்கதம், பழிகரப்புச் செவியுறை, பழிகரப்பங்கதமென நான்கு கூறுபடும் மேற்கூறிய அங்கத மிரண்டும் எ-று. "பாய்த்துள், விக்குள்" என்றாற்போலச் 'செய்யுள்' என்பதூஉந் தொழிற்பெயர். அவையாமாறும் அவற்றது வேறுபாடும் முன்னர்ச் சொல்லுதும். இனி, ஒருவனுரை: இவற்றுள் தொகைச்சூத்திரத்துட், "கைக்கிளை பரிபாட் டங்கதஞ் செய்யுள்" (தொல். செய். 118) என்று ஓதிச் செம்பொருளங்கதமுஞ் செய்யுளுமென இரண்டாக நிறுத்தான்; நிறுத்தமுறையானே அங்கதமுணர்த்திச் செய்யுளுணர்த்திய விதந்தானென்பது; அற்றன்று, எல்லாப் பாட்டுஞ் செய்யுளெனப்படுதலின் ஒன்றனையே செய்யு ளெனலாகாது; அல்லதூஉம், "அங்கதச் செய்யு ளென்மனார் புலவர்" (தொல். செய். 129) என வருகின்ற சூத்திரத்து ஓதுமாதலான் இவையும் அங்கதச் செய்யுளே. மேலைச் சூத்திரத்துள்ளும் (430) அங்கதச் செய்யுளென்பதே பாடமென்ப தூஉம் அதனாற் பெறுதுமென்பது. அல்லாத பாடம் ஓதினும் அங்கதச் செய்யுள் செய்கைமேலென அதனைத் 'தாய்க்கொலை'யென்றது போல் இரண்டாவதன் பொருண்மைப்படுத்துக் கொள்க. (127) செவியுறை அங்கதம் 440. துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயிற் செவியுறைச் செய்யுள் அதுவென மொழிப. இது, மேற்கூறிய அங்கதச்செய்யுட்பகுதி இரண்டனுள் ஒன்று கூறுகின்றது. (இ-ள்.) மேற் செம்பொருளும் பழிகரப்புமெனப்பட்ட இரண்டும் அங்கதச்செய்யு ளெனப்படுதலேயன்றி, அதனானே அரசர்க்குப் பொருள் வருவாயாகச் செய்தானேயெனினும் அது செவியுறையங்கத மெனவும்படும் எ-று. துகளாவது : படை குடி கூழமைச்சு நட்பரணாறும் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தல். 'அரசியல்' என்பனவற்றானே தங்கோன் அறியாமல் வகுத்தவை வருமாயின், அவற்றை உள்ளவா றுரைத்தலு மொன்று. மாற்றரசன் நமரது ஊரடுகின்ற நாட்டவர் யாதிவை நுதலியன வேதுவாகப் போய்ச் சார்ந்து அவற்கு நாட்டழிவு கூறுதலு மொன்று. அன்ன பிறவும் அவற்கு உறுவகையாகலான், அவற்றை உள்ளவாறு உணர்த்திப் பொருள்செய அவர்க்குப் பொருள்செயல்வகை கூறினமை யின், அது செவியுறைப்பாற்படு மென்பது. அஃது "அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே" (புறம். 44) என இது செம்பொருட்செவியுறை. பிறவும் அன்ன. இவை முகவிலக்கி னுட் பயின்று வருமென்பது. இனி, மொழி கரந்து சொல்லினும் இஃதொக் கும். இனிப், "புகழொடும் பொருளொடும்" என்பதூஉம் பாடமாக உரைப்ப. புகழும் பொருளும் புணர்ப்பது அங்கதமாயின் அஃதமையும்; அற்றன்றாயின் ஈண்டாராய்ச்சியின் றென்பது; என்னை? "வசையொடும் நகையொடும் புணர்ந்தன் றாயி னங்கதச் செய்யுள்" (தொல். செய். 129) என மேலோதுமாதலின் இவனென்பது. (128) ஏனை அங்கதம் இது எனல் 441. வசையொடும் நகையொடும் புணர்ந்தன்றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். இஃது, ஒழிந்த அங்கதச்செய்யு ளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய அங்கதச்செய்யுள் வசையே யன்றி அவ்வசை யானே நகைதோன்றச் செய்வது செவியறிவுறை யெனப்படாது அங்கதச் செய்யுளெனவே படும் எ-று. எனவே, இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாகச் செய்யினும் அங்கதச் செய்யுளெனப்படும் என்றவாறு, அவை, விலக்கியற்செய்யுளுட் கண்டுகொள்க, இதுவுஞ் செம்பொருளாகியும் பழிகரப்பாகியும் வருமென வுணர்க. எனவே, கூறப்பட்டன வெல்லாம் வெகுளியும் பொருளும் நகையும் பயப்பனவாயின. (129) கலிப்பா வகை 442. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே. இது, கலிப்பா வெனப்பட்ட உறுப்பினை இத்துணைப் பகுதியான் வருமென்பது வருஞ்செய்யுள்பற்றி விரி கூறுகின்றது. (இ-ள்.) ஒத்தாழிசை - ஒத்தாழிசையென்னும் உறுப்புடைச்செய்யுள். ஒத்து ஆழ் இசையை ஒத்தாழிசையென்றான்; அது வினைத்தொகை யாகலின் மருவிய வகையான் முடியுமென்பது. தாழிசை யென்பது தானுடைய துள்ளலோசைத்தாம். இது முறைமையிற் பெற்ற பெயர்; எனவே, தரவுவேறுபடினும் வேறுபடா தென்பதூஉங், கொச்சகக்கலி போல்வனவற்றுள் வரும் இடைநிலைப்பாட்டுக்கள் அவ்வாறு தாழ முடையவன்றியும் வருமென்பதூஉங் கொள்க. இது பன்மைபற்றிப் பெற்ற பெயர், தாழிசையின்றியும் ஒத்தாழிசை சிறுபான்மை வருதலின். இனி, ஒழிந்த உறுப்புநோக்கத் தாழிசை சிறந்தமையின் தலைமையாற் பெற்ற பெயரெனவும் அமையும். "வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய ரற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி" (கலி. 4) என்பது தாழ்ந்த ஓசைத்தன்றி ஒத்தாழிசைக் கலியுள் தரவு வந்தது. எனவே, இவ்வேறுபாடு கட்டளைக்கலி அல்லாதவழி யென்பது பெற்றாம். அதுவன்றே, இதன் றாழிசையுள்ளும் நேரீற்றியற்சீரும் வந்ததென்பது; என்னை? "காழ்விரி கவையார மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமன் முயங்கியு மமையாரென் தாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வதை யெவன்கொ லறியே னென்னும்" (கலி. 4) என்புழி "அறியே னென்னும்" என ஆண்டைத் தாழிசைதோறும் இரண்டு நேரீற்றியற்சீரும் வந்தன. பிறவும் அன்ன. "நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே; இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்க ணீர்நில் லாவே" (கலி. 7) எனக் கொச்சகக்கலியுள் இடைநிலைப்பாட்டுத் தாழிசையின்றி வந்தது. பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டுகலிப்பாவாகிய வெண்பாட்டு. இது பண்புத்தொகை யானே முன்மொழிப் பொருட்டாயிற்று. கொச்சக மென்பதும் உறுப்பினாற் பெற்ற பெயர். உறழ்கலியென்பது பொருள்பற்றி வந்த பெயர். ஒத்தாழிசையென்பது தம்மினொத்துவருதற் கட்டளை யுடைமையானுங் கலிப்பாவிற்குச் சிறந்து வருமாகலானும் முன்வைத்தான். என்னை இது கலிப்பாவிற்குச் சிறந்தவாறெனின், நூற்றைம்பது கலியுள் ளும் ஒத்தாழிசை அறுபத்தெட்டு வந்தனவாகலின் அது பெருவரவிற்று எனப்பட்டுச் சிறப்புடைத்தாயிற்று. அது நோக்கி முன்வைத்தான், இதுபா வென்னும் உறுப்பிலக்கணங் கூறுகின்ற இடமாகலின். கலிவெண்பாட் டினை ஒத்தாழிசைக்குங் கொச்சகத்திற்கும் இடைவைத்தான். அதுபோல உறுப்புடைத்தாகியும் வருமென்றற்கு அதன்பின் கொச்சகப்பா வைத்தான், அது தரவும் போக்குஞ் சிறுபான்மையின்றியும் வருதலின். எல்லாவற்றுப் பின்னும் உறழ்கலி வைத்தான், அவை போலாது சுரிதகமின்றி வருதலே பெரும்பான்மயாகலானென்பது. அஃதேல், உறழ்கலியுங் கொச்சகக்கலியுள் அடங்காதே? அதுவும் அடக்கியலின்றியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடைத்தாய் வருமாலெனின்,அற்றன்று; அடக்கியலின்றி வரின், அடி நிமிர்தலும் ஒழுகிசைத்தாகலும் வேண்டும்; உறழ்கலியாயின் அடிநிமிராதும் ஒழுகிசையின்றியும் வருமென்பது. அத்துணையான் இதனை வேறென்பதென்னை? ஒன்றாக ஓதுக வெனின்,அற்றன்று; மேற்கூறி வருகின்ற செய்யுளெல்லாஞ் சீரும் அடியும் பாவும் பொருளு மெனச் சிலவுறுப்பு வகையான் வேறுபடுகின்றதன்றிப் பிறிதின்மையின், அவ்வேறுபாடுஞ் சிலவாக நோக்கி ஒன்றென்னானாகலின் அது கடாவன் றென்பது. அல்லதூஉம், நூல்செய்யுங்கான் மரபென்பது வேண்டும்; என்னை? "மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூல்தா மிருவகை யியல" (தொல். மர. 93) என்பதனான், முதனூற்காயினும் மரபுவேண்டுதலின். அதுவன்றே நிலம் நீர் தீ வளி விசும்பென்னும் ஐம்பெரும்பூதங்களும் அவற்ற தியைபாகிய பொருள்களும் அஃறிணையான் வழங்கினும், பொருளின் இயைபாகிய மக்களுந் (644) தேவரும் முதலாயினாரை உயர்திணைவாய்பாட்டான் வேறுபடுத்து வழங்குகின்றதென்பது. மற்று உறழ்கலி யென்னும் வழக் குண்டாயினன்றே மரபொடு மாறுபடுவதெனின், மரபென ஆசிரியர் வழக்கும் அடங்குமாகலின் அது கூறினான்; அல்லாக்கால் ஒழிந்த செய்யுளும் வேறுபாடிலவாமன்றோ வென்பது. இனிப், பரிபாடலுங் கலிப்பாவினுள் அடங்குமென்பாரும் உளர். கலியும் பரிபாடலுமென எட்டுத் தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின் அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதாரென்பது. அல்லதூஉம், அராகவுறுப்பில்லாத முடுகியலடியுங் கொச்சகக்கலி யல்லாத கலிப்பாவினுள் உண்டாவதாகலுங் கொச்சகக்கலி யுறழ்ந்து வருதலும் உடையவாம், அவ்வாறு கூறினால் என மறுக்க. (130) ஒத்தாழிசைக்கலி வகை 443. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும். இது, முறையானே ஒத்தாழிசைக்கலி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்தாழிசைக்கலி இரண்டு கூற்றதாம் எ-று. இதனது பயம்:அவை இரண்டுந் தம்முட்பகுதியுடைய வென்பது. அவையாமாறு முன்னர்ச் சொல்லும். (131) ஒத்தாழிசை உறுப்புக்கள் 444. இடைநிலைப் பாட்டொடு தரவுபோக்கு அடையென நடைபயின்று ஒழுகும் ஒன்றென மொழிப. (இ-ள்.) மேற்கூறிய ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையுந் தரவுஞ் சுரிதகமுந்தனிச்சொலுமெனநான்குஉறுப்பாகப்பயின்றுவரும் எ-று. 'பயின்று வரும்' எனவே இவ்வாறன்றிப் பயிலாது வருவனவும் இதன் பகுதியாயடங்குவன உள வென்பது. அவை தாழிசைப் பின்னர் எண்ணுறுப்பு வருங்கால் ஐந்துறுப்புப் பெறுதலும், அவற்றிடை அராகம் பெறின் ஆறுறுப்பு வருதலு மென இவை யென்ப; அற்றன்று, நூற்றைம் பது கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலியின் அராகவுறுப்பும் அம்போத ரங்கவுறுப்பும் பெற்று வருவன இன்மையின் அவை பொருளல்ல என்பது. மற்று 'நடைநவின்றொழுகு' மென்ற தென்னையெனின் இத்துணை பயின்றுவாராது ஏனை யொன்றும் என்றற் கென்பது. தாழிசையினை இடைநிலைப் பாட்டென்பவோ வெனின்,அவ்வாறுஞ் சொல்லுப, அச்செய்யுள் இடைநிற்றலா னென்பது. இனி இடைநிலைப் பாட்டென்பது தாழிசையினை நோக்காது; என்னை? தாழம்பட்ட வோசையல்லாதனவும் இடைநிலைப்பாட்டாய் வருமாதலினென்பது. அது. "காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே" (கலி. 123) என்பது; தாழிசையெனவும் இடைநிலைப்பாட்டெனவும் படும். "இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பால் பின்னொடு கெழீஇய தடவர வல்குல் நுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ" (கலி. 125) என்றாற்போல்வன தாழிசை யல்லாத இடைநிலைப்பாட்டு. இவ்விரு பகுதியுங் கூட்டித் தாழிசை யென்னாது இடைநிலைப்பாட்டென்பது இங்ஙனந் தம்முட் பகுதியுடைமையானு மாயிற்று. ஒத்தாழிசைக்கலி இருவகைத் தென்றதற்குப் பயனாந் தோற்றுவாய் செய்து போந்தது இஃது என்பது. தரவு என்றதன் பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவ தென்ப; அதனை எருத்தெனவுஞ் சொல்லுப; என்னை? உடம்புந் தலையுமென வேறுபடுத்து வழங்கும் வழக்குவகையான், உடம்பிற்கு முதல் எருத்தென்பதாகலின். இனி, இசைநூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம் நிலை கொச்சகம் முரியென வேண்டுப. கூத்தநூலார் கொச்சக முள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரியென மூன்றாக வேண்டுப. அவரும் இக்கருத்திற்கேற்ப முகத்திற்படுந் தரவினை முகமெனவும், இடை நிற்பனவற்றை இடைநிலை யெனவும் இறுதிக் கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரியெனவுங் கூறினாரென்பது. செந்துறைச் செய்யுள் அடைநிலை பயப்ப தின்மையின் அது சிறந்த தன்றென்று அடக்கி மொழிப. உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகை யான் அடக்கு மியல்பிற்றாகலின் அடக்கியலெனவுங், குறித்த பொருளை முடித்துப் போக்குதலிற் போக்கெனவும், அவையெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பெனவுங், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரமெனவும் எல்லாம் ஒன்றொன்றனை ஒத்தே பெயராயின. அடை நிலையென்பது முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை அடைந்தன்றி வாராது; அது, தனி நின்று சீராதலின் தனிச் சொல்லெனவும்படும். இடைநிலை யுறுப்பென்னாது 'பாட்'டென்ற தென்னையெனின், அவை தாமே பாட்டாயும் வருமிடனுடைய; வருங்கால் அவை ஒன்றும் இரண்டும் பலவுமாய் வருமென்பது. இடைநிலைப் பாட்டினைத் தரவிற்கு முற்கூறி னான், அது பெயர் பெறுதலின். எனவே தரவு முன்வைத்தலே மரபாயிற்று. ஒத்தாழிசை கூறிய முறையானே தரவு தாழிசை போக்கென்னும் மூன்றுறுப் பானுஞ் சிறுபான்மை வந்து தனிச்சொலின்றி வருதலின் தனிச்சொல்லினை இறுதிக்கண் வைத்தானென்பது. இவை போக்கிச் சொல்லுதும். (132) தரவின் அடியளவு 445. தரவே தானும் நாலடி யிழிபாய் ஆறிரண்டு உயர்புஎன்று ஏறவும் பெறுமே. இது, தரவின் அடியள வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்ட தரவுதானும் நான்கடிமுதலாய்ப் பன்னிரண் டடிகாறும் வரப்பெறும் எ-று. எனவே, ஒன்பது நிலம் பெறுந் தரவென்றவாறாயிற்று. "உயர்பென் றேறவும் பெறும்" என்றதனாற் பன்னிரண்டடியின் இகந்து வரவும் பெறும் சிறுபான்மை யெனக் கொள்க. இதனை எடுத்தோதாது இலேசினாற் கொண்டான், பன்னிரண்டடியின் இகந்தன துள்ளலோசையான் வாராமையின். அது "நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார்" (கலி. 75) என்னும் மருதத்திணைக் கலிப்பாட்டினுட் கண்டுகொள்க. (133) இடைநிலைப்பாட்டின் அடியளவு 446. இடைநிலைப் பாட்டே, தரவுஅகப் பட்ட மரபினது என்ப. இது, தரவிற்குச் சுருங்கியன்றித் தாழிசை வாராதென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தரவின் அகப்பட்டது தாழிசை எ-று. 'அகப்படுதல்' என்பது அகம் புறமென் றிருகூறு செய்தவழி முற்கூற்றினுட் படுதல். முன்னென இடவகையுங் காலவகையும் பற்றிய இருகூற்றினுள் யாதானுமொன்று கொள்க. எனவே பதினோரடி முதல் இரண்டடிகாறும் இழிந்துவரப்பெறும் என்றவாறாயிற்று; அது, "சுருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறும் சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற் பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்; காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே; கொல்லேற்றுச் சுறவினங் கடிகொண்ட மருண்மாலை யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மடநெஞ்சே; வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினாற் செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனைநீ யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே; எனவாங்கு, எல்லையு மிரவுந் துயிறுறந்து பல்லூழ் அரும்பட ரவலநோய் செய்தான்கட் பெறனசைஇ யிருங்கழி யோதம்போற் றடுமாறி வருந்தினை யளியையென் மடங்கெழு நெஞ்சே'' (கலி. 123) என இது தரவகப்பட்ட மரபிற்றாகித் தாழிசை வந்தது. தரவிற் சுருங்கு மென்னாது அகப்படுமென்றான், தரவோடு ஒத்து வரும் தாழிசை யென்பதூஉங் கோடற்கு; என்னை? மக்களகத்துப் பிறந்தா னென்றவழி அச்சாதியோடொக்கப் பிறந்தானென்பது படுமாகலின். "ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; ஊரல ரெடுத்தார்ப்ப வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் றுணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி யணிவனப் பிழந்ததன் அணைமென்றோ ளல்லாக்கால்; இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல மிழந்தினி நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்; அதனால், பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளைக் கலிமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே'' (கலி.124) எனவரும். பன்னிரண்டியின் இகந்த தரவிற்கும் இவ்வாறே தாழிசை கொள்ளப்படும். மற்று மேற்கூறிய வரையறையின் தாழிசை கூறுக வெனின், ஆண்டு முறை பிறழ வைத்ததற்குக் காரணங்கூறிப் போந்தாமென விடுக்க. இனி வருஞ் சூத்திரத்திற்கும் இதுவே விடை. 'மரபின' வென்றதனான் மேலைக்கொண்டும் அடிப்பட வந்த மரபினாற் சுருங்குமென்பது. எனவே, நான்கடியின் உயர வாராவென்பது கொள்க. இன்னும் மரபினென்றதனாற் சிறுபான்மை ஐந்தடியானும் வருவனவும் உள. "அரிதே தோழி நாணிறுப்பா மென்றுணர்தல்" (கலி.137) என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டினுள், " நகைமுத லாக நட்பினு ளெழுந்த தகைமையி னலித லல்ல தவர்நம்மை வகைமையி னெழுந்த தொன்முரண் முதலாகப் பகைமையி னலிதலோ விலர்ம னாயிழை பகைமையிற் கடிதவர் தகைமையி னலியுநோய். என ஐந்தடியான் தாழிசை வந்தது. ஆறடியின் வருவன வந்த வழிக் கண்டுகொள்க. மற்று நான்கடியின் இழிந்தோரடியானுந் தாழிசைவருமாலெனின் வாராதன்றே, 'இடை நிலைப் பாட்டே' என்றாராகலின்; என்னை? பாட்டெனப்படுவன ஓரடியான் வாராமையின். (134) தனிச்சொல் ஆங்கு என்பது 447. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின்று றொழுகும் ஆங்கென் கிளவி. இஃது, ஆங்கென்னுஞ் சொல் தனிச்சொல்லெனப்படுமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாழிசைப் பின்னர் ஆங்கு, தனிச்சொல்லாய் நின்று பயிலும் எ-று. ஆங்கென்னுஞ் சொல்லினை எடுத்தோதினான், அது நடைநவின் றொழுகுமாகலின். ஆங்கென்னுஞ் சொல் பயின்று வருமெனவே அல்லாதனவும் உள, இத்துணைப் பயிலாதனவென்பது கொள்க. ஆங்க என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் தோன்ற நின்ற சொல்லாகலின் அஃதெல்லாச் செய்யுட்கண்ணுந் தன் பொருண்மைக் கேற்பச் செய்யல் வேண்டும்பிற வெனின், அற்றன்று; அதனை அசைநிலையாகக் கொள்க; அல்லதூஉம், எல்லாச் செய்யுளும் இதன் பொருண்மைக் கேற்பச் செய்யல் வேண்டுமென்று மிகைகூறிப் பயந்ததின்மையானென்பது. அசைநிலை பெய்து செய்யுள் செய்தன் மரபாகலின் அஃதமையுமென்பது. நடைநவி லாதன பொருள்பெற வருமென்பது. அவை முன்னர்க் காட்டுதும். (135) சுரிதகம் ஆமாறு 448. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே. இஃது, ஒழிந்த சுரிதகம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) போக்கின திலக்கணப்பகுதி வைப்பென்று சொல்லப்படும் எ-று. இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியலெனவும் வாரமென வுஞ் சொல்லுப. அடக்கியல் வாரந் தரவோடு ஒக்கச் சொல்லப்படு மென்றவாறு. என்றதென் னோக்கி யெனின்,போக்குதலும் வைத்தலுமென்னும் இரண் டிலக்கணமுடைத்து; வாரமெனச் சொல்லின் முடியுமிலக்கணமே கூறுவான் போலப் போக்கி னிலக்கணப்பகுதி வைப்பென்றதனைச் சுட்டிக் கூறப்படுமாகலின். (136) இதுவுமது 449. தரவியல் ஒத்தும் அதனகப் படுமே புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே. இதுவுஞ் சுரிதக முணர்த்துகின்றது. (இ-ள்) தரவியலொத்தும் அதனகப்படும் - சிறுபான்மை தரவுகளோ டொத்து, உம்மையான் ஏறிய வருமாயினும் பெரும்பான்மை தரவின்பாகம் பெறுதலை இலக்கணமாகவுடைத்து மேற்கூறிய சுரிதகம்; புரைதீர் இறுதிநிலை உரைத்தன்றே - இடை நிலைப்பாட்டுப் பொருளினை முடிபு நாட்டி நிற்கும் அதுதான் எ-று. 'அகப்படும்' என்று அதற்கும் உம்மை கொடுத்தமையின் அஃதிலக் கணமாயிற்று; ஆகவே, அவ்விலக்கணத்திற்கேற்ற தரவின்கண்ணே ஒத்தலும் உயர்தலும் கொள்க. சுருங்கியவெல்லை, ஆசிரியத்திற்கு இழிந்த வெல்லையாகிய மூன்றடிச்சிறுமையிற் கூறாமையிற் (அதிற்) சுருங்காது வருவதாயிற்று. ஈண்டும் 'அகப்படு'மெனவே பன்னீரடித்தரவின் பாக மாகிய ஆறடியே சுரிதகத்திற்கு உயர்விற்கு எல்லை என்பதூஉம், இழிந்த வெல்லை கூறாமையின் பன்னீரடித்தரவிற்காயின் ஈற்று மூன்றடிச் சுரிதகம் வருதலும் ஒழிந்த கலி நாலிற்கும் அவ்வாறே வருதலுங் கூறினானென்பது, இனி, வெள்ளைச் சுரிதகத்துக்கும் இஃதெல்லா மொக்கும். இனித் தரவியலொத்தல் ஈற்றயலடி முச்சீராகாது மண்டிலமாகி வருதலுஞ் சிறுபான்மையெனக் கொள்க. 'இறுதிநிலை' யென்பதனை 'நுனிவிரல்' என்றாற் போலக் கொள்க. நிலையெனப்பட்டது இடை நிலைப்பாட்டு. அதனிறுதியைக் கூறுமெனவே அவற்றுப் பொருளினை முடித்துவிடுக்குமென்பதாம். "போக்கியல் வகையே வைப்பெனப் படும்" என்றவழி உள்ளுறுப்பின் பொருளினைத் தன்கண் வைக்கப்படுவது சுரிதகமென்ற தன்றி இன்ன உறுப்பின் பொருள் வைக்கப்படுமென்றி லாதான் முற்கூறியது பொதுவிதிமாத்திரையேயன்றி இடைநிலைப்பாட் டின் பொருளே பெரும்பான்மையும் வைக்கப்படுமென்பதூஉம் பொது விதியாற் சிறுபான்மை தரவின் பொருண்மை வைத்தலு முடைத்தென்ப தூஉங் கூறினான். ' தரவியல்' என்றதனான் தரவோடொத்த பொருட் கேற்றனவுங் கொள்க. " நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல்" (கலி.8) என்பது, தாழிசைப்பொருண்முடிவு தன்பால் வைக்கப்படுதலின் இறுதி யுரைத்தது. ' புரைதீ ரிறுதி' யென்றதனான் அத்தாழிசைப் பொருளையன்றி அவற்றொடு போக்கியற் பொருள் வந்தக்கால் அவ்விரண்டனையும் புரைபடாமற் பொருந்தச்செய்கவென்பது. அது, " தன்னகர் விழையக் கூடின்" (கலி.8) எனப் போக்கியற் பொருளொடு புரை தீர்ந்திற்றது; பிறவும் அன்ன. " இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன்" (கலி. 38) என்னுங் குறிஞ்சித்திணைப் பாட்டினுட் " கோடுபுய்க் கல்லா துழக்கு நாடன்" என்று உள்ளுறையுவமத்தான் தலைவியது விழுமங் கூறினமையின் அதனையு முட்கொண்டு போந்து, சுரிதகத்து, " நின்னுறு விழுமங் கூறக் கேட்டு வருமே தோழி நன்மலை நாடன்" என வைத்தமையின் அது தரவியலொத்ததாயிற்று; இனி, " ஞாலமூன் றடித்தாய" (கலி. 124) என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டு அளவியலாற் சுரிதகமொத்தது. " கருங்கோட்டு நறும்புன்னை" (கலி. 123) என்பது, தரவிற்கு அடியைந்தாகச் சுரிதகம் நான்கடியாய்ச் சுருங்கி வந்தது. அஃதேல் தரவகப்பட்டதெனச் சுருங்குதலன்றி ஒத்தற்பொருளும் படுமா யின் தரவகப்படும் போக்கென்னாது 'தரவிய லொத்தும்' என்ற தென்னை யெனின், தரவுமென்ற உம்மையாற் சிறுபான்மை மிக்கு வரவும்பெறும் போக்கென்பது கொள்க. " பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்" (கலி. 16) என்னும் பாலைப்பாட்டுத் தரவுந் தாழிசையும் நான்கடியாகி ஒத்தவழிச், " செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வர்மாட் டினையன தெய்வத்துத் திறநோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே" (கலி. 16) எனச் சுரிதகம் ஐந்தடி யாயிற்று. (137) ஏனை ஒத்தாழிசைக்கலி வருமாறு 450. ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே. இஃது, ஒழிந்த ஒத்தாழிசை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து எ-று. எனவே, இஃது அகநிலைச் செய்யுளாகா தென்றான். இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை யெனப்படும். மற்றிது, " வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே" (தொல்.செய்.109) என்றவழிச் சொல்லப்பட்டதாமெனின், அஃது உறழ்கலிக்கும் வெண் கலிக்குங் கொச்சகக்கலிக்கும் பொதுவாகலின் அவற்றுக்குத் தேவபாணி விலக்கினானென்பது. மற்று முன்னிலைக்கணென்ற தென்னையெனின்,தெய்வத்தினை முன்னிலை யாகச் சொல்லப்பட்டனவன்றி அல்லன தேவபாணியெனத் தகாவென்பது; என்னை? 'யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வ'மென்று தன்னைத் தான் புகழ்ந்து கூறி 'நின்னைக் காப்பேன்; நீ வாழிய'வெனத் தெய்வஞ் சொல்லிற்றாகச் செய்யுள் செய்தலும் ஆகாது, வழக்கினுள் அவ்வாறுண்டாயினென்பது. இதனானே படர்க்கையும் விலக்கினானாம். ஆகவே, தெய்வம் படர்க்கையாயவழிப் (புறம். 35) புறநிலைவாழ்த்தாவதன்றித் தேவர்ப் பராயிற்றாகாது, பாட்டுடைத் தலைவனொடு கூட்டிச் சொல்லினு மென்றானாம். இங்ஙனங் கூறவே, பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாக்காலுந் தேவர்ப் பராயிற்றேயாம், முன்னிலையாயினென்பது பெற்றாம். மற்றிவை பாடல் சான்ற புலனெறிவழக்கிற் கன்றித் தேவர்ப் பராயதற்கும் உரியவோவெனின்,ஆண்டு அகப்பொருட்குரிமையுடையன கலியும் பரி பாடலுமென்றத னானே, அத்துணையன்றிக் கடவுள் வாழ்த்துப் பொருள்படவும் வருமென்பது ஈண்டுக் கூறினானா மென்பது. அதுவன்றே 'ஏனையது' எனச் சிறுமை தோன்றப் பிற்கூறியதென்பது. (138) அதன் வகை 451. அதுவே, வண்ணகம் ஒருபோகு எனஇரு வகைத்தே. இஃது, அதன்வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) 'ஏனையொன்' றெனப்பட்ட ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசையெனவும் ஒருபோகெனவும் இரண்டாம் எ-று. இதன் பயன்:ஒத்தாழிசை யெனப்படாது இவற்றுளொன்றென்பது அறிவித்தவாறா யிற்று. அஃதென்னை பெறுமாறெனின், மேல் ஒத்தாழிசைக் கலி இருவகைத்தாகுமென்றான்; பின்னர் அவ்விரண்டனுள் ஒன்றற்கு வண்ணகம் ஒருபோகென வேறுபெயர் கூறவே, முன்னரதே ஒருதலையாக ஒத்தாழிசைச்கலி யெனப்படுவதென உய்த்துணர வைத்தமையானும், 'ஏனையொன்'றென வேறுபடுத்தமையானும், அப்பெயரும் உடன்கூறாது போத்தந்து வைத்தமையானும், அதனோடு ஓரினத்த வல்லவென்பது பலவாற்றானுங் கொள்ளவைத்தானென்பது. அஃதேல், வண்ணகமும் ஒத்தாழிசை யெனப்படாதாம் பிறவெனின்,அது மாற்றுதற்கன்றே வண்ணகம் முற்கூறி அதிகாரம்பட வைப்பானாயிற்றென்பது. இக்காலத் தார் ஒருபோகினையும் ஒத்தாழிசையென்று தாழிசைபெய்து காட்டுப. "எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே" (தொல். செய். 153) என்புழித் தாழிசையுறுப்பு ஓதாமையின் அது பொருந்தாது. (139) வண்ணகத்து உறுப்புக்கள் 452. வண்ணகந் தானே, தரவே தாழிசை எண்ணே வாரமென்று அந்நால் வகையின் தோன்றும் என்ப. இது, முறையானே வண்ணக வொத்தாழிசை யுணர்த்துகின்றது. (இ-ள்.) தரவுந் தாழிசையும் எண்ணும் வாரமுமென்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணக வொத்தாழிசையாம் எ-று. அது, "முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே" (தொல். செய். 145) என்றவழிக் காட்டுதும். வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப் படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர்த் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின். ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினுஞ் சிறந்த உறுப்பு இதுவென்க. எனவே, அகநிலைச் செய்யுட்டாழிசை வண்ணித்து வாராவென்பதாம். எண்ணுறுப்பாமாறு முன்னர்ச் சொல்லும். அவ் வெண்ணுறுப்புத்தான் நீர்த்திரைபோல வரவரச் சுருங்கிவருதலின் அம்போ தரங்கமெனவும் அமையுமாகலின் அதனை அம்போதரங்க வொத் தாழிசைக் கலிப்பாவெனவுஞ் சொல்லுப. இனி வண்ணகமென்பது, அராகமென உரைத்து அவ்வுறுப் புடையன வண்ணகவொத்தாழிசை யெனவுஞ் சொல்லுவாரும் (யா.வி. செய்.சூ. 31) உளர். எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது முன்னூ லாதலின் இவரொடு மாறுபடுதன் மரபன்றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடின் அஃது அவர்க்கும் மரபன்றென்பது. மற்று இதற்குத் தனிச்சொல் ஓதியதில்லையா லெனின் அதனை அதிகாரத்தாற் கொள்க. (140) வண்ணகஒத்தாழிசைத் தரவின் அளவு 453. தரவே தானும், நான்கும் ஆறும் எட்டும் என்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். இஃது, ஒத்தாழிசையுள் ஏனையொன்றற்குத் தரவு வேறுபட்ட இலக்கணத்திற்றாகலான் அது கூறுகின்றது. (இ-ள்.) இது நான்கு முதல் பன்னிரண்டடி யீறாக வாராது; தேவபாணிக்காயின் எட்டும் ஆறும் நான்குந் தரவடியாம் எ-று. இதனானே தலையளவும் இடையளவுங் கடையளவு மென்பன கூறினானாம். இங்ஙனங் கூறவே, ஒழிந்தவுறுப்பிற்குந் தலையிடை கடையென்பது கொள்ளப்படும். "நேரடி பற்றிய நிலைமைத் தாகும்" என்பதனை அளவடியான் வருமென்றற்குக் கூறினானென்பாருமுளர். அற்றன்று; பிற அடி மயங்குவனவும் அளவடியுரியவென்பதும் முன்னர்க் கூறப்பட்டமையின். மற்றென்னை கருதியதெனின்,சமநிலையின்றி வியநிலை வாராவென்பது. இனிப் 'பற்றிய' வென்ற மிகையானே, முற்கூறிய தரவுந் தாழிசையும் நேரடியான் வருதலில்லையென்பது கொள்க. வருகின்ற ஒத்தாழிசைக்கும் பேரெண்ணிற்குஞ் சிற்றெண்ணிற்கும் இஃதொக்கும். (141) வண்ணகத்தின் ஒத்தாழிசை வருமாறு 454. ஒத்துமூன்று ஆகும் ஒத்தா ழிசையே. இது, முறையானே ஒத்தாழிசை உணர்த்துகின்றது. (இ-ள்.) தம்மின் ஒத்த அளவினவாகலும் ஒத்த பொருளவாகலுமு டைய தேவபாணிக்கண் மூன்றாக வரும் ஒத்தாழிசை எ-று. இவை பொருள் ஒக்குமெனவே, முன்னை அகநிலை யொத் தாழிசைக்கண் வரும் இடைநிலைப்பாட்டிற் பொருள் ஒவ்வாது வருதலுஞ் சிறுபான்மையுண்டென வறிக. அவை, "கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ" (கலி. 5) என இடத்தியல் பொருளொழிய இடப்பொருளோடு உவமங் கூறினான். "ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ" என இடப்பொருளொழிய இடத்தியல் பொருளோடு உவமங் கூறினமை யின் வேறுபட்டன. ஒத்து வருவன முன்னர்க் காட்டினாம். (142) இதுவுமது 455. தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. இஃது, ஐயம் அறுத்தது; அகநிலை யொத்தாழிசைகட்குப் போலத் தரவோடொத்து வருங்கொலென்றையுறாமைத் தரவிற் சுருங்கித் தோன்று மென்றமையின். (இ-ள்.) மூவகை வண்ணத்தின் தாழிசையுஞ் சமநிலைத் தரவிற் சுருங்கித் தோன்றும் எ-று. வாளாதே தரவென்றமையின் இடையளவின்மேற் செல்லும் அடி யென்றவழி, 'அளவடிமேற்றாயது' போல வென்பது. 'தோன்று'மென்ப தனான் இடைநிலையாகிய நான்கடியானும் மூன்றடியானுமன்றி ஐந்தடியானாகாதென்பது கொள்க. எண்ணொடு தொடர்தலின் இரண்டடி யானாகாதென்பது பெற்றாம். இடையளவு தரவிற் சுருங்குமெனவே கடையளவு தரவினுந் தாழிசை சுருங்குமென்பது உய்த்துணரப்படும். தோன்றுமென்றதனாற் கடையளவினை ஒழித்து மற்றைத் தரவிரண்டள வாகக் கொள்வாமெனக் கொள்க. இங்ஙனம் கூறாக்கால் ஓரடி முதலாகத் தாழிசைகோடல் வேண்டுமஃதன்றோ வென்பது. (143) வண்ணகச் சுரிதகம் ஆமாறு 456. அடக்கியல் வாரந் தரவோடு ஒக்கும். இது, சுரிதக விலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தரவோடு ஒத்து வரும் அடக்கியல் வாரம் எ-று. அடக்கியல் வாரமென்பது அடக்கும் இயல்பிற்றாகிய வாரமென்ற வாறு. நிறுத்த முறையானே எண்ணுறுப் புணர்த்தாது மயங்கக் கூறியத னானே தனிச்சொல் வருஞான்று எண்ணீற்றினுஞ் சுரிதகத்து முன்னும் புணர்க்க. அடக்கியலென்றான், முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத் தடக்கி நிற்றலின். வாரமென்றான், தெய்வக்கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலினென்பது. (144) வண்ணக எண்உறுப்பு ஆமாறு 457. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. இஃது, எண்ணுறுப்பாமா றுணர்த்துகின்றது. (இ-ள்.) முதல் பெருகியவழி முதலெண் எ-று. 'தொடை'யென்றதனான் தலையெண் இரண்டு அளவடியான் ஒரு தொடையாகி வருமெனவும், 'பெருகி' யென்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்ட, அதுவே பற்றி முதல் பெருகிய வென்றதனான் ஒழிந்த எண்ணுத்தொடை பெறுதலும் நேர்ந்தானாம். இதனை 'முத'லெனவே, வழிமுறை வருவனவும் எண்ணளவென்பது பெற்றாம். அவை இத்துணை யென்பது அறியுமாறென்னை? 'முதற்றொடை பெருகி'யென்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்டி, அதுவே பற்றிச் 'சுருங்கு'மென் றமையின் ஈரடியிற் சுருங்கி ஓரடியாதலும், ஓரடியிற் சுருங்கி இருசீராதலும், இருசீரிற் சுருங்கி ஒருசீராதலும் கொள்ளப்படும். முதலடி இன்னதென்றில னாயினும், அளவடியே கொள்ளப்படும், " நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே" (தொல். செய். 32) என்றானாகலின். ஆகவே, இருசீரெனப்பட்டது குறளடியாயினும் இவை இரண்டு தொடர்ந்தன்றி எதுகையாய் அமையாமையிற் குறளடி யென்னா னாயினா னென்பது. ஒருசீர்க்கும் அளவடிப்படுத்துத் தொடைகோட லொக்கும்; என்னை? 'போரவுணர்க் கடந்தோய்நீ புணர்மருதம் பிளந்தோய்நீ நீரகல மளந்தோய்நீ நிழறிகழும் படையோய்நீ' எனவும், " ஊழிநீ; யுலகுநீ; யுருவுநீ; யருவுநீ; யாழிநீ; யருளுநீ; யறமுநீ; மறமுநீ" (யா. வி. மேற்.) எனவும் அளவடிப்படுத்தே தொடை கொள்பவாகலின். அஃதேல், ஒருசீரினுஞ் சுருங்கப்பெறாதோவெனின், கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாராவாகலின் இவனும், "பிறநூன் முடிந்தது தானுடம் படுதல்' என்னும் உத்திவகையான் ஒருசீரிற் சுருங்குதல் நேரானென்பது. மற்று, வழிமுறையாற் பாகஞ் சுருங்குதல் பெறுமாறென்னை யெனின், "வகார மிசையு மகாரங் குறுகும்" (தொல். எழுத். புள்ளி. 35) என்றாற்போல மேலைக்கொண்டும் வருகின்றவாற்றாற் பாகமே சுருங்குதல் பெறலாமென்பது. மன்னென்பது, ஆக்கத்தின்கண்ணும் வந்ததாகலிற் சுருங்கிப் பலவாமென்பது கொள்க. எனவே, இரண்டடி யிரண்டும், ஓரடி நான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகி எண் பல்குமென்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும். ஆகவே, ஒழிந்த எண் மூன்றும் தலையெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணுமென மூன்றுங் கூட்டி எண்ணி நிற்றற்குரியவாயின. இது நோக்கிப் போலும் எண்ணென்று அடக்காது, " சின்ன மல்லாக் காலை" (தொல். செய். 146) என ஒருசீரினை வேறுபடுத்து மேற்கூறுகின்றதென்பது.இனி, அளவடி யினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்குமென்றமையின், அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்னமெனப்படும். இனி, அல்லாதார் ஈரடி யிரண்டினைப் பேரெண்ணெனவும், ஓரடி நான்கினைச் சிற்றெண்ணெனவும், கடையெண்ணினை இடையெண்ணெனவும், ஒருசீரான் வருவனவற்றை அளவெண்ணெனவுஞ் சொல்லுப. அளவடியாக நோக்கிப் பேரெண் சிற்றெண்ணென்றலுஞ், சின்னம்பட்டவழி இடை நின்றது இடையெண்ணாதலும், எல்லையளவைத்தாகிய சின்னம் அளவெண்ணாதலும் அமையும். அவற்றுள் இருசீரினை முச்சீராகவும், ஒருசீரினை இருசீராகவும் அலகுவைப்பினும் அதனை, " அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி" (தொல்.செய்.11) என்பதனான் மறுக்க. இதற்குச் செய்யுண் முன்னர்க் காட்டுதும். (145) எண்ணுக்குப் புறனடை 458. எண்ணிடை யொழித லேத மின்றே சின்ன மல்லாக் காலை யான. இது, மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று; சின்னவெண்ணொன்று மொழிந்து நில்லாவிடத்து எ-று. எனவே, சின்னவெண் ணொழியாது மூவகையெண்ணும் ஒழிதலி னும், சின்னவெண் ணொழிய மூவகையெண்ணும் பெறுதல் பெரிதும் சுவையுடைத் தென்றவாறாயிற்று. இதனானே ' எண்ணொழிதல்' என்னாது, 'இடை'யென்றதனான் தலையெண்ணும் இடையெண்ணு மல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியுங் குறைந்து வருமென்பதுங் கொள்க. மூவகை யெண்ணுஞ் சின்னமும் பெற்று வருதல் சிறப்புடைமை, 'ஏதமின்'றென்றதனாற் பெறுதும். அவை வருமாறு: உ-ம் : மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப் பணிதயங்கு நேமியும் பானிறத்த சுரிசங்கு மிருசுடர்போ லிருகரத்தி லேந்தியமர் மாயோனும் பங்கயத்தி லுறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர் செந்தழற்கண் ணுதலோனுந் தேருங்கா னீயென்பார்க் கவரவர்த முள்ளத்து ளவ்வுருவா யல்லாத பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயா யளப்பரிய நான்மறையா னுணர்த்துதற் கரியோனே (எட்டடித்தரவு) எவ்வுயிர்க்கு முயிரேயா யியங்குதனின் றொழிலாகி யவ்வுயிர்க்க ணடங்கியே யருளாது நிற்றலினால் வெவ்வினைசெய் தவையிழந்து வெம்பிறவிக் கடலழுந்த வவ்வினையை யகற்றாம னிற்பதுநின் னருளன்றே; பல்லுயிரும் படைப்பதுநின் பண்பன்றே பகலினால் வல்வினையின் வலைப்பட்டு வருத்தங்கூ ருயிர்தம்மை நல்வினையே பயில்வித்து நடுக்கஞ்செய் தவைநீக்கி யல்லல்வா யழுந்தாம லகற்றுவது மருளன்றே; அழிப்பதுநின் றொழிலன்றே யறைந்தாலு முயிரெல்லா மொழித்தவற்றுள் ளுணர்வுகளை யொருவாம லுடனிருத்திப் பழிப்பின்றிப் பலகாலு மிப்பரிசே பயிற்றுதலி னழிப்பதுவு மில்லையா லாங்கதுவு மருளன்றே (நான்கடித்தாழிசை) வேள்வி யாற்றி விதிவழி யொழுகிய தாழ்வி லந்தணர் தம்வினை யாயினை; வினையி னீங்கி விழுத்தவஞ் செய்யு முனைவர் தமக்கு முத்தி யாயினை (ஈரடியிரண்டு) இலனென விகழ்ந்தோர்க் கில்லையு மாயினை; யுளனென வுணர்ந்தோர்க் குளையு மாயினை; யருவுரு வென்போர்க் கவையு மாயினை; பொருவற விளங்கிய போத மாயினை (ஓரடிநான்கு) பானிற வண்ணனீ ; பனிமதிக் கடவுணீ ; நீனிற வுருவுநீ ; நிறமிகு கனலிநீ ; யறுமுக வொருவனீ ; யானிழற் கடவுணீ ; பெறுதிரு வுருவுநீ ; பெட்பன வுருவுநீ (இருசீரெட்டு) மண்ணுநீ ; விண்ணுநீ ; மலையுநீ ; கடலுநீ ; யெண்ணுநீ ; யெழுத்துநீ ; யிரவுநீ ; பகலுநீ ; பண்ணுநீ ; பாவுநீ ; பாட்டுநீ ; தொடருநீ ; யண்ணனீ ; யமலனீ ; யருளுநீ ; பொருளுநீ " (ஒருசீர்பதினாறு) ஆங்க (தனிச்சொல்) இனியை யாகிய விறைவனின் னடியிணை சென்னியின் வணங்கிப் பன்னாள் பரவுதும் மலர்தலை யுலகின் மன்னுயிர்க் கெல்லாம் நிலவிய பிறவியை நீத்தல் வேண்டி முற்றிய பற்றொடு செற்ற நீக்கி முனிமை யாக்கிய மூவா முத்தியை மயலற வளித்தநின் மலரடி யரிய வென்னா யுரிதினிற் பெறவே (சுரிதகம்) இஃது, எட்டடித்தரவும், தரவின் பாகம் பற்றிய நான்கடித்தாழிசை மூன்றும், ஈரடியிரண்டும், ஓரடிநான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகிய நால்வகை யெண்ணுந், தனிச் சொல்லும், எட்டடிச் சுரிதகமும் பெற்ற தலையளவு வண்ணகப் பெருந்தேவபாணி பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்திப் புலியுரிமேற் பைத்தலைதாழ் பூங்கச்சை விரித்தமைத்துக் கண்கவருந் திருமேனி வெண்ணூலின் கவின்பகைப்பத் தண்கமழ்பூந் தாரிதழித் தலைமலைந்து பிறைதயங்க மொழிவலத்தான் மயங்காதே முறுவலாற் றோலாதே விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுணர்வழியக் கலிகெழு கடற்கச்சிக் கமழிளந் தேமாவி னொலிதளிரு முலைச்சுவட் டுடன்சிறப்ப வுலவுங்கால்" (எட்டடித்தரவு) "நீறேறுந் திருமேனி நெடும்பகலே நிலவெறிப்ப ஏறேறிக் கடைதோறு மிடுபலிக்கு வருதிரால் ஏறேறி யிடுபலிக்கு வரும்பொழுது மிடைபிரியாக் கூறேறும் பசும்பாகங் கொள்ளுமோ கொள்ளாதோ; நாணாக மடந்தையர்பாற் பலிக்கென்று நடந்தக்காற் பூணாகந் தழீஇக்கொளினும் பொங்காது போலுமாற் பூணாகந் தழீஇக்கொளினும் புகையுயிர்த்துப் பொங்காத கோணாகம் யாந்தருபால் குடிக்குமோ குடியாதோ; பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீர்வருங்காற் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ (இவை தரவின் பாகம் பற்றிய நான்கடித் தாழிசை) எரிகல னிமைக்கு மிடவயிற் றொடிக்கை பரிகல மேந்தும் பரிசிறந் ததுகொல்; உமையவள் விலக்கவு மொலிகட னஞ்ச மிமையவர் தம்மை யிரந்துகொண் டதுகொல் (ஈரடி இரண்டு) இடையெழு பொழில்கட்கு மிமைப்பளவிற் கொல்லேறே ; கடைதொறு மவைநிற்பக் கற்பித்த வாறென்கொல் ; இரப்புநீர் வேட்டதுகேட் டிமையவரென் பட்டனரே ; பரப்புநீர்க் கங்கையோர் படர்சடையிற் கரந்ததே ; (ஓரடி நான்கு) பூண்டன வென்பு ; புனைந்தது தும்பை ; ஆண்டன பூதம் ; அறைவது வேதம் ; இசைப்பன பல்வேய் ; எழீஇயது வீணை ; அசைப்பன வேணி ; அதிர்வன பொற்கழல் (இருசீரெட்டு) என வாங்கு (தனிச்சொல்) எல்வளை மகளி ரிடுபலி நசைஇப் பல்கடை திரிதருஞ் செல்வநிற் பரவுதுங் கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப வடதிசை வாகை சூடித் தென்றிசை வென்றி வாய்த்த வன்றாள் வளவ னிமிழிசை வேங்கடம் போலத் தமிழகத்து நாவலொடு பெயரிய ஞாலங் காவல் போற்றி வாழிய நெடிதே (சுரிதகம்) இஃது எட்டடித் தரவுந், தரவிற் சுருங்கிய ஒத்தாழிசை மூன்றுஞ், சின்னமல்லா மூவகை எண்ணுந், தனிச்சொல்லுந், தரவோடொத்த அடக்கியல் வாரமும் பெற்று வந்தது. ஆயிரங் கதிராழி யொருபுறந்தோன் றகலத்தான் மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த மனக்கமல மலரினையு மலர்த்துவான் றானாத லினக்கமல முணர்த்துவபோன் றெவ்வாயும் வாய்திறப்பக் குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக் கடவுளர்த முறங்காத கண்மலரே கரிபோக வாரிருளும் புலப்படுப்பா னவனேயென் றுலகறியப் பாருலகத் திருள்பருகும் பருதியஞ் செல்வகேள் (தரவு) மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய் விண்டலத்திற் கடவுளரை வெவ்வேறு வழிபடுவா ராங்குலக முழுதுபோர்த் திருவுருவி னொன்றாக்கி யாங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்; மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய் நின்னுருவத் தொடுங்குதலா னெடுவிசும்பிற் காணாதா ரெம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவா யம்மீனை வெளிப்படுப்பாய் நீயேயென் றறியாரால் ; தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைக டலைத்தேய்ந் துவாமதிய நின்னொடுவந் தொன்றாகு மென்றுணரார் தண்மதியி னின்னொளிபுக் கிருளகற்றாத் தவற்றாற்கொ லம்மதியணம் படைத்தாயு நீயேயென் றறியாரால் ; (தாழிசை) நீராகி நிலம்படைத்தனை ; நெருப்பாகி நீர்பயந்தனை ; ஊழியிற் காற்றெழுவினை ; ஒளிகாட்டி வெளிகாட்டினை ((இருசீர் நான்கு) கருவாயினை; விடராயினை; கதியாயினை; விதியாயினை; யுருவாயினை; அருவாயினை; ஒன்றாயினை; பலவாயினை; (ஒரு சீரெட்டு) என வாங்கு (தனிச்சொல்) விரிதிரைப் பெருங்கட லமிழ்தத் தன்ன வொருமுதற் கடவுணிற் பரவுதுந் திருவொடு சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித் துன்பந் தொடரா வின்ப மெய்திக் கூற்றுத்தலை பனிக்கு மாற்றல் சான்று கழிபெருஞ் சிறப்பின் வழிவழி பெருகி நன்றறி புலவர் நாப்பண் வென்றியொடு விளங்கி மிகுகம்யா மெனவே. (சுரிதகம்) என்பது, எட்டடித்தரவுந் தாழிசையும் இருவகைச் சின்னமுந் தனிச் சொல்லுந் தரவொடொத்த சுரிதகமும் பெற்று வந்த தலையளவு வண்ணகப் பெருந்தேவபாணி. சின்னமெனவே இருசீரெட்டும் ஒருசீர் பதினாறும் அடங்கு மென்றாராகலின், இது சின்னமல்லாக்கால் எண்ணிடையிட்டு வந்த வண்ணக வொத்தாழிசை யாயிற்று. இனி, இருசீருமன்றி ஒருசீர் பதினாறாகிய சின்னவெண் பெற்று வரும். அது வருமாறு: உறைபதியி னுடனயனை யுந்தியாற் படைத்தோயு மறைகடல்சூழ் நிலமுதலா யனைத்துலகும் புரப்போயுந் திருநிறமே கரிபோகத் திருமேகம் பயந்தோயு மொருநிறமே நிறமாக வொள்ளெரியை யுயிர்த்தோயு மறுவத்து மார்பென்ன மலர்மகளை வைத்தோயு நிறத்தோடு நெஞ்சொத்த நிலமடந்தை கணவனுநீ (தரவு) பின்னமா யொன்றாகும் பெருமாயை யியற்றுவா யின்னமா யந்தெளிய வெமக்கருளி யிமையவர்க்கு மன்னமாய் முன்னொருகா லறம்பயந்த வரனுநீ ; குறியாதும் பிழையாத குறிமறைய மதன்மயக்கி வெறியாதி மலரோற்கு வெளிப்படுத்து வேறுபடுத் தறியாத மறையெமக்கு மறிவித்த வறிவனீ மாணாத மதிகொடுத்து வானவரை மயக்கியுங் கோணாத மதிவாங்கிக் கொடுத்தருளி யிமையவர்க்குக் காணாத மதிகாட்டுங் கருணைகூர் காட்சியைநீ ; (மூன்றுந் தாழிசை) வானுநீ ; நிலனுநீ ; மதியுநீ ; விதியுநீ ; தேனுநீ ; யமிழ்துநீ ; திருவுநீ ; யருவுநீ ; யன்புநீ ; யருளுநீ ; யாதிநீ ; யந்தநீ ; யின்பநீ ; துன்பநீ ; யின்மைநீ ; யுண்மைநீ, (ஒருசீர்ச்சின்னம்) எனவாங்கு, (தனிச்சொல்) நால்வகை யுருவிற் பால்வே றாகிய கோல முதல்வநிற் பரவுது ஞாலத்து நல்லவை யல்லவை யெல்லா நினாஅது செல்வ நோக்கி னெய்தி(ய) வல்லிதிற் றுயரொடு தொல்வினை நீங்கிப் பெயராச் சுற்றம் பெறுகம்யா மெனவே (சுரிதகம்) எனவரும், இதனுள் தரவுந் தாழிசையும் ஒருசீர்ச்சின்னமுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் வந்தவாறு கண்டுகொள்க. கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய வழல்வளை சுழல்செங்கண் ணரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய் (தரவு) முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ ; கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோவு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலக்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ ; படுமணி யினநிரை பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்த்துநிறம் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ (மூன்றுந்தாழிசை) இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம் ; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை; (ஈரடியிரண்டு) கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை யொலியிய லுவண மோங்கிய கொடியினை வலிமிகு சகட மாற்றிய வடியினை (ஓரடிநான்கு) போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ; (இருசீர் நான்கு) ஊழிநீ; யுலகுநீ; யுருவுநீ; யருவுநீ; யாழிநீ; யருளுநீ; யறமுநீ; மறமுநீ; (ஒருசீரெட்டு) எனவாங்கு (தனிச்சொல்) அடுதிற லொருவனிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வே லச்சுதன் தொன்றுமுதிர் கடலுலக முழுதுடன் ஒன்றுபு திகிரி யுருட்டுவோ னெனவே. (சுரிதகம்) (விளக்கத்தனார் யா. வி. மேற். பாடல்) இது நால்வகை எண்ணினுள் இறுதி நின்ற எண்ணிரண்டுஞ் சுருங்கி வந்தது. பிறவும் அன்ன. (146) ஒருபோகின் வகை 459. ஒருபோகு இயற்கையும் இருவகைத் தாகும். இஃது, ஒத்தாழிசை இரண்டனுள், ஏனை யொன்றனை வண்ணக வொத்தாழிசை ஒருபோகென இருவகைத் தென்றான்; அவற்றுள் ஒருபோகின் வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபோகும் இருவகைத்தாகும் எ-று. உம்மை, இறந்ததுதழீஇய எச்சவும்மை. இதனது பயம்: ஓருறுப்பு இழத்தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும் நிகழ்கின்ற உறுப்புத் தம்மின் வேறாதல் அறிவித்தலென்பது. அது முன்னர்ச் சொல்லுதும். (147) அவையாமாறு 460. கொச்சக வொருபோகு அம்போ தரங்கம்என்று ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். இது, மேல்வகுக்கப்பட்ட இரண்டற்கும் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) கொச்சகவொருபோகும் அம்போதரங்கவொருபோகுமென இரண்டாக உணரப்படும் அவை எ-று. கொச்சகம் இழத்தலிற் கொச்சக வொருபோகாயிற்று. 'வண்ணக மொருபோ' கென்றவழி (451) ஒன்றேயாகி நின்ற கொச்சகம் ஒருவழி வாராமையின், அது கொச்சக வொருபோகாம். இனி 'ஏனையொன்றெ' னப்பட்ட ஒன்றனுள் வண்ணகப் பகுதிக்குரிய எண்ணுறுப்பு ஒருவழியின்றி வருவது அம்போதங்க ஒருபோகு. ஒரு போகு பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இடையீடில்லாத நிலத்தினை ஒருபோ கென்பவாகலின், அஃது ஒப்பினாகிய பெயர். ஒருபோகென்பதனைத் திரிகோட்டவேணியென்றது போலக் கொள்க. (148) கொச்சகவொருபோகு வருமாறு 461. தரவுஇன் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுஉடைத் தாகியும் எண்இடை யிட்டுச் சின்னம் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது கொச்சக வொருபோகு ஆகும் என்ப. இது, முறையானே கொச்சகவொருபோ குணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணிய இந்நாற்பகுதியான் வந்தும் அமையாது, பின்னரும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைத்தாகி வருவது கொச்சக வொருபோகாம் எ-று. 'தரவின் றாகித் தாழிசை பெற்றும்' என்பது - தனக்கு இனமாகிய வண்ணத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசைபெற்று மென்றவாறு. அவை பரணிப் பாட்டாகிய தேவபாணி முதலாயின எனக் கொள்க. என்றார்க்கு, அவை தாழிசையாயன்றி வாராமையின் தாழிசையாயு மென்றெழுஞ் சூத்திரமெனின், அங்ஙனங் கூறில் தரவொடு வருந் தாழிசையிலக்கணத்த வாம் இவையுமென்றஞ்சித் தரவொடுபட்ட தாழிசையன்றிப் புறத்துள்ளன என்றற்கு அது விலக்கினானென்பது; எனவே, இவை ஒத்து மூன்றாதலும் ஒருபொருள்மேல் வருதலுந் தாழம்பட்ட ஓசையவேயாதலும் பயிலு மென்பதூஉஞ் சொல்லினானாயிற்று. அங்ஙனஞ் சொல்லிய வதனானே பரணியுளெல்லாம் இரண்டடியானே தாழம்பட்ட ஓசை அல்லன விராய் வருதலும் முடுகி வருதலும் பெறுதும். இனித் தாழிசை மூன்றாகியவழி மூன்றடியானும் நான்கடியானும் வரும். இனிப், பத்தும் பன்னிரண்டுமாகி ஒருபொருள்மேல் வரும் பதினொன்றும் அகப்பட்டு நான்கடியின் ஏறாது வருதலும், அங்ஙனம் வருங்கால் தாழ்ந்த ஓசை பெற்றும் பெறாதும் வருதலும், அவையும் இருசீர் முதலாக எண்சீரளவும் வருதலு மென்றி னோரன்ன பகுதியெல்லாம் அவ்வரையறையின்றித் தழுவப்பட்டன. அஃதேல், அவற்றைத் தாழிசை யென்ற தென்னையெனின், பெரும்பாலும் தாழம்பட்ட ஓசையவாகலி னென்பது. என்றார்க்குத் தரவு விலக்கியதனான் எண்ணுஞ் சுரிதகமும் விலக்குண்ணாவாம்பிற வெனின்,அற்றன்று; தாழிசைப்பேறு விதந் தோதவே, ஒழிந்தன விலக்குண்ணுமென்பது. மற்றுத் தாழிசை பெறுவதி யாதோவெனின்,கொச்சக வொருபோகெனப் பொதுவகையாநின்ற செய்யுளெனக் கொள்க. அது நோக்கிப்போலும் பலவுமெண்ணி, "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது" என்று ஒருமை கூறுவானாயிற்றென்றுணர்க. அஃதேல், இரண்டடியான் வருந் தாழிசை பேரெண் ணாகாவோவெனின், ஆகாவன்றே முதற்றொடை பெருகினன்றி எண்ணெனலாகாமையினென்பது. இவை வருமாறு: உளையாழி யோரேழு மொருசெலுவி னொடுங்குதலான் விளையாட நீர்பெறா மீனுருவம் பராவுதுமே என்றாற் போலப் பரணிச்செய்யுளுட் பயின்று வருமென்பது. இவ்வாறு பல தாழிசை தொடர் பொருளவாகலின், அவற்றைப் பல அடுக்கி வரினுந் தாழிசையாமெனவே, இதற்கு வாரா வெனப்பட்ட கொச்சகந் தாழிசையின்றி வெண்பாவாகி வருமென்பது உய்த்துணரப் படும். என்னை? வெண்பாவினான் கலி பரிபாடலுட் கொச்சகம் வருமென்ற மையின். பஃறாழிசைக் கொச்சகமெனவும் அமையும். அவை சில வருவன சிஃறாழிசைக் கொச்சகமெனப்படும். பிறவும் அன்ன. மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய் வருதலின், அது தேவபாணியா மென்ற தென்னையெனின், அவையெல்லாங் காடுகெழு செல்விக்குப் பரணிநாட்கூழுந் துணங்கையுங் கொடுத்து வழிபடுவ தொரு வழக்குப் பற்றி அதனுட் பாட்டுடைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன வாதலான் அவை யெல்லாவாற்றானுந் தேவபாணியேயா மென்பது. என்றார்க்கு, ஒரு தாழிசையோ பல தொடர்ந்தவழியோ கொச்சக வொருபோகாவதெனின், வரையறையின்மையின் இருவாற் றானுமா மென்பது. இனித் தாழிசை மூன்றடுக்கியவழி மூன்றடியான் வருமாறு: கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ னெல்லைநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ'' (சிலப். ஆய்ச்சியர் குரவை) என வரும், இனி, நான்கடியான் வருதல் சிறுபான்மை. அவை வந்தவழிக் கண்டுகொள்க. 'தாழிசை யின்றித் தரவுடைத்தாயும்' (461) என்பது - மேற்கூறிய தாழிசையின்றித் தரவே பெற்று வருதலுமென்றவாறு, பொதுவகையா னின்ற கொச்சக வொருபோகு இரண்டு தரவுடைத்தெனப்பட்டது. மேல் 'தரவின்றாகி' யென்றது போல ஈண்டுந் தாழிசையின்றி யென்றதனான், தாழிசையொடு பட்ட தரவிலக்கணத்தின் திரிந்து வரும் இத்தரவெனக் கொள்க. அது தரவுகொச்சகமுந் தரவிணைக்கொச்சகமு மென இரண்டாய் வருதலும் நான்கும் ஆறும் எட்டுமாய் வருதல் கடப்பாடின் றென்பதூஉங் கொள்க. 'உடைத்'தெனப்பட்டது தரவெனவே, ஒழிந்த உறுப்பு விலக் குண்டன. 'ஆகியு' மென்ற மிகையான், இரண்டு வருதலே பெரும்பான்மை யெனவுந், தரவோடொக்கு மெனப்பட்ட சுரிதகம் பெரும்பான்மையும் பெறுஞான்று பெறுவது அதுவே யெனவுங் கொள்க. சுரிதகம் பெறுவன சுரிதகத் தரவிணையென்று வழங்குப. மேல் தனிச்சொற்கு வரையறை யின்மையின் அது பெற்றும் பெறாதும் வருமென்பது. மற்றுத் தரவிலக்க ணம் இழந்ததாயின் அதனைத் தரவென்று பயந்த தென்னையெனின், தாழம்பட்ட ஓசையின்றி அது வருதல் பெரும் பான்மை யென்றற்கென்பது. எனவே, யாண்டுந் தரவென்பது தாழம்பட்ட ஓசைக்கு ஒரு தலைமையின்றி வருமென்பது நேர்ந்தவாறாயிற்று; அது, "நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்ததுபோற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையோ குறிசெய்ய வேறணிந்த சுவடெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த வேறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே." என்பது தரவு கொச்சகம். "பூணாக வென்பணிந்தான் பூதத்தான் வேதத்தான் கோணாகக் கச்சையான் கோடேந்து கொல்லேற்றான் மாணாக வெண்ணூலான் வாணுதலாள் பாகத்தான் ஊணாரும் பிச்சையா னுண்ணாத நஞ்சுண்டான் வானாறு தோய்ந்த சடையான் மழுவலத்தான் யானார்வஞ் செய்யு மிறை; எனவாங்குப் பாடி யிறைஞ்சுவோர்க் கெல்லாம் வினைமாசு தீரும் விளக்காகுந் தோற்றத் தனையோய் மறலிக்கு மச்சம் பயந்த புனைபூங் கழற்கான்மேற் பூவொடு நீர்தூஉ மனைமாண்ட பாக முளப்பட வாழ்த்தி யெனைநாளு மேத்துது மெந்தையே நின்னை நினையா தொழியற்க நெஞ்சு." என்பது தரவிணைக் கொச்சகம். இது சுரிதகம் பெற்று வருவனவுந் தனிச்சொற் பெற்று வருவனவும், வந்தவழிக் கண்டுகொள்க. மற்றுத் தேவபாணியல்லாத தொடர்பொருட் செய்யுட்கண் தரவின்றித் தாழிசை வந்ததென்றுமோ தாழிசையின்றித் தரவுடைத்தாய தென்றுமோவெனின்,அவை, "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது" (461) என்றதனானே ஒன்றற்கொன்று தரவெனப்பட்டுத் தரவு கொச்சகமா மென்பது; என்னை? ஆறும் எட்டுமெனப்பட்டு வாராமையானும், மூன்றடித் தாழிசையாய் வாராமையானுந் தாழிசை யெனப்படாமையின். அவை தம்பொருளொடு தாம் முடியாமையின் தரவுகொச்சகமாயின. இனி, அத்தொடர்நிலையின் முதற்கண் நின்ற தேவபாணி தன்பொருளொடு தான்முடிதலின் அது விதந்தோதிய தரவு கொச்சகமாம். என்னை? எருத்தென்பது உடம்பிற்கு முதலாகலினென்பது. 'எண் இடையிட்டுச் சின்னங் குன்றியும்' (461) என்பது - வண்ணகத்திற்கு ஓதிய எண்ணுஞ் சின்னமுமின்றி ஒழிந்ததாம். தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகமென்னும் நான்கு உறுப்புடையதுங் கொச்சகவொரு போகாமென்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பே கூறி, உள்ளது கூறிலன், அல்லாத உறுப்பினையெல்லாம் அவற்றானே நிற்றலை வேண்டியென்பது; உ-ம் : ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி; படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குல் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ; மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ; கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரளத் தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கான் முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ; எனவாங்கு, பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை மாணிழை யரிவை காப்ப ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி (கலி. கடவுள் வாழ்த்து.) என வரும். இஃது, 'ஏனையொன்று' எனப்பட்ட தேவபாணி ஒத்தாழிசை யாகலான் உறுப்பொன்றியும் முதனிலை யொத்தாழிசையாகாது, ஏனை ஒத்தாழிசையின் உறுப்பிழத்தன் பற்றி, "ஒப்ப நாடி யுணர்தல் வேண்டும்" (தொல். செய். 148) என்பதனாற், சின்ன எண் நிற்பவும் எண் இழந்ததெனப்பட்ட அம்போத ரங்க வொரு போகு போலக், கொச்சகமேயன்றி எண்ணுறுப்பு இழந்ததூஉங் கொச்சகவொருபோ கெனப்பட்ட ஒருபோகாமென்றா னென்பது. "அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகியும்" (461) என்பது - அடக்கும் இயல்பிற்றல்லாத ஈற்றதாகி ஒருதொடையான் அடிநிமிர்ந் தொழுகியும் என்றவாறு. 'ஒழுகும்' எனவே அற்று வாராது ஒன்றேயாகி வருமென்பது. 'அடி நிமிரு'மென்றதனான் மேல் அடிவரை யறுத்துச் சொல்லப்பட்ட தரவு தாழிசை முதலிய உறுப்பு இதற்கில்லை யென்றவாறாம். அடக்கியல் வாரத்தினை அடக்கும் இயல்பின்றெனவே, இதற்கு வாரம் நேர்ந்தானா மாகலின், ஒழுகுமென்றதனொடு மாறுகொள் ளும் பிறவெனின், அங்ஙனம் படுமாயினும், ஒருகாரணம் நோக்கி அவ்வாறு நேர்ந்தானென்பது; என்னை? அடி நிமிர்ந்தொழுகுங்கால் 'எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே' (388) எனவும், 'வெண்பா வியலினும் பண்புற முடியும்' (389) எனவும் ஓதியவாற்றானே இறுதி நிற்ப ஏனையடியெல்லாங் கலியடியாகி ஒழுகி வாரம்பட்டு நிற்குமென்று கோடற்கென்பது. ஈதறியாதார், வெண்பா வியலாற் பண்புற முடிந்த கலியடியுடையதனை வெண்கலியென்ப. வெண்கலியாமாறு முன்னர்ச் சொல்லுதும், உ-ம் : மழைதுளைத்துப் புறப்பட்ட மதியமு ஞாயிறும்போ லுழைமுழங்கு வலம்புரியுந் திகிரியு மொளிசிறப்பப் பச்சென்ன வானிட்ட வில்லேபோற் பசுந்துழாய் கச்சென்னக் கனல்கின்ற கதிர்முலைமேற் கவின்செய்ய வம்மேகத் திடைப்பிறந்த நரையுருமே றதிசயிப்ப மைம்மேனி மருங்கதிர நகத்தரியே வால்புடைப்ப விண்டோயு மணிநீல வெற்பினிடை வேய்மிடைந்தாங் கெண்டோளு மிடுநீழ லிளங்கிளிகள் களிகூரக் கொதியாது கொதித்தெறிந்த கோடெருமைத் தலையின்மிசை மிதியாத சீறடி மிதித்தன போற்றோன்றத் தாங்கிய புகர்வாளும் கேடகமுந் தனித்தனி வாங்கிய கோளரவு மதியமும் போன்றிலங்க மைதொடுத்த கடற்புறஞ்சூழ் மலையென்ன மணியல்குல் கொய்துடுத்த பொற்றுகிலின் கொழுஞ்சோதி கொழுந்தோட்ட நீனின்ற படிவத்தா னெடியோனை முதற்பயந்த தாயென்று முதுமறை பரவினும் யாயென் றல்ல தியாந்துணி யலமே என வரும். வெண்பாவினான் முடியுங் கொச்சகவொருபோகு தேவபாணி யாய் வந்தன கண்டுகொள்க. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது (461) எனவே, யாப்பின் வேறுபடுவனவும் பொருளின் வேறுபடுவனவுமென இரண்டாம். அவற்றுள், யாப்பின் வேறுபடுதலென்பது மேற்சொல்லினவாறும், இனி வருகின்றவாறு மின்றி யாப்பிலக்கணத்தின் வேறுபடுதல். அவை இருசீர்முதலாக எண்சீர்காறும் வந்த அடி மேற்கூறியவாறன்றி நந்நான்கே பெற்று வருதலும், அவற்றுட் பிற அடி விராய் வருதலும் பா மயங்கி வருதலும், இரண்டும் மூன்றும் நான்கும் ஆகிய அடியுள் ஈற்றடி குறைத லுங், குறையாதவழி இயலசைச்சீர் வருதலும், மூன்றடியாயிற் குறையாது வருதலும், நான்கடிச் செய்யுள் முடியவும் அடியிரண்டு மிகுதலும், இனவியலின் வேறுபடுதலுங், கடவுட்டொடர்நிலைகள் பல தரவுந் தாழிசையுமாகி இடையிடைச் செய்வனவும், அடக்கியலின்றி அடி நிமிர்ந்தொழுகுமெனப்பட்டன அடக்கியலுடைத்தாகலு மென்று இன்னோரன்ன பல பகுதியுங் கொள்ளப்படும். இப்பகுதியெல்லாம் பொருள் வேறுபட்டவழியும் நிகழுமென்பது, இரண்டனையும் உடன்வைத் தோதியதனாற் கொள்ளப்படும். என்றார்க்கு, வரையறை யின்மையிற் களம் பாடு பொருநர் கட்டுரையுந் தச்சுவினை மாக்கள் சொற்றொடரும் ஏற்று இக்காலத்து உரை நிகழ்ந்தனவும், ஓலைப்பாசுர மும் முதலாயின வெல்லாங் கொச்சகமாகற்கு இழுக்கென்னையெனின்,அவையே அடிவரையறையில்லன ஆறென்றவழி உரையெனப் பகுத் தோதார்க்கன்றே அது கடாவாவ தென மறுக்க. இவ்வாறு வந்த கொச்சகங்களை ஒருவரையறைப் படுத்துப் பாத்தோறும் இனஞ்சேர்த்தலும் பண்ணிற்குத் திறம் போலப் பன்னிரு பகுதியவா மென்பார் உரைக்குமாறு: விருத்தந் துறை தாழிசையென மூன்றனையும் நான்கு செய்யுளோடும் உறழ்ந்துரைப்பப் பன்னிரண்டா மென்பது. மருட்பாவும் பாரிபாடலுமோவெனின், அவற்றுக்கு அஃதாராய்ச்சியன் றெனவும் அவற்றை ஒப்பன வெல்லாம் ஒப்பென மொழிய அடங்குமென்பதூஉம் அவர் கருத்து. இனி, நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலுமெனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள் ஒன்றனை யில்லை யென்றார். அஃதிக்காலத்தினும் வீழ்ந்ததின்மையின் அவரிலக்கணத்தினை வழுப்படுத்ததென்பது. இனி, விருத்தமுந் துறையுந் தாழிசையுமன்றி ஒப்புந் திறனு மென்றாற் போல்வன சிலகூட்டி அறுவகைச் செய்யுளோடுறழ முப்பதாம்; இனி, அவற்றை விகற்பித்து நோக்க எண்ணிறந்த பகுதியவாம்; என்னை? சீரும் அடியுந் தொடையும் பாவும் முதலாயவற்றொடு குறளடி முதலாயவற்றை வைத்துறழவும் அவ்வடி தம்மொடு தம்மைப் பரிமாற்றவுந் தம்மொடு பிறவற்றை மயக்கவும் பல்குமாகலின். "கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே" (கொன்றைவேந்தன். காப்பு) என்பது இரண்டடியாகலின் வெண்பாவினுள் ஒரு சாரனவற்றுக்குங் கலியுள் ஒரு சாரனவற்றுக்கும் இனமென்பது படும். இனிச் சீருந் தளையும் நோக்க ஆசிரியத்திற் கினமெனப்படும். இங்ஙனம் பலவற்றுக் கினமாயினும் இரண்டடியானே ஒரு செய்யுள் வருவது வெண்பாவென்பது நோக்கி அதற்கினமாக்கி வெண்செந்துறை யென்ப. இரண்டடியும் ஒத்து வருதலானும், ஒழிந்த காரணங்களான் நேர்ந்த பாக்கட்கினமாகலை விலக்குதல் அரிதாகலானும், அங்ஙனம் இனஞ் சேர்த்து தற்கு வரையறையின்றென்பது. இனிச், சந்தஞ் சிதைந்தனவும் புன்பொருள வாய் வருவனவுஞ் செய்யுளென்பார் அவற்றைத் தாழிசை யென்ப; அதற்குக் காரணமின்றென்பது. அல்லதூஉந் தாழ்ந்த ஓசையல்லா ஒன்றைத் தாழிசையெனில் தரவு தாழிசைகளுள் தாழிசையுஞ் சந்தம் அழியல் வேண்டுமென்பது. இனி விழுமிய பொருளல்லாதனவற்றைத் தாழிசை யென்றற்கு என்னை காரணமெனவும் மறுக்க; அல்லதூஉங், "கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ" (சிலப். ஆய்ச்சியர் குரவை) என மூன்றும் மூன்றடியான் முடிந்ததனை ஆசிரியத்தாழிசையெனின் அதனுட்கிடந்த வெண்டளை அதற்கொன்றாதென்று மென்பது. இனி இதுவே நான்காகி வரிற் கலிவிருத்தமென்ப. அது, "நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த மார னருப்புக் கணையா னடப்பட்டார் மாதர் விருப்புச்செய் நின்னை விரும்புகின் றாரே" என்றவழி, இது நான்கடியாசிரியத்திற்குத் தாழிசையாங்கால் இழுக் கென்னை யெனவும், வெண்டளைதட்டு வெண்டாழிசையாதற்கு இழுக் கென்னை யெனவுங், கலித்தளையில்லது கலிப்பாவிற் கினமாயவா றென்னையெனவுங் கூறி மறுக்க. இனிக், குறளடியானுஞ் சிந்தடியானும் வருவனவற்றை வஞ்சிப்பா விற்கு இனமாமென்ப. சீரளவொப்பினும் அடி நான்காதலானும், வருஞ்சீர் இயற்சீராதலானும், பா வேறுபடுதலானும் அதற்கிவை இனமாகாவென் பது. இனிக் குறளடிச்செய்யுள் மூன்றுவரின் தாழிசையெனவுஞ் சிந்தடிச் செய்யுள் மூன்று வாராவெனவுங் கூறின் அதற்கும் ஒரு காரணங் கூறல் அரிதென்க. ஒழிந்தனவும் இவ்வாறே இனஞ்சேர்த்தின் பிறிதொரு காரணத்தாற் பிற பாவிற்கும் அவையே இனமாதல் காட்டி மறுக்க. என்றார்க்கு, இங்ஙனம் ஒன்றற்கு இனஞ் சேர்த்தல் அரியனவற்றைக் கலிப்பா வென்ற தென்னையெனின், பெரும்பான்மையுங் கலிப்பாவிற் கேற்ற ஓசைய வாகலின் அவையெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங் கொடுத்துச் சூத்திரத்தினுள் அடக்கினான் இவ்வாசிரியன், முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (தொல். பாயிரம்) என்பது. இது மேலைக்கொண்டும் அடிப்பட வந்த மரபு. இவையெல்லாம் நான்கடியுள் வருதலே பெரும்பான்மையெனக் கொள்க. எனவே, சிறுபான்மை பாவைப்பாட்டும் அம்மனைப்பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன வாயின. இனி, அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியது. ஒழித்து, ஒழிந்த கொச்சக வொருபோகு முப்பகுதியுந் தம்முறுப்புவகையானே அளவை கொள்ளப்படும். இப்பகுதி பலவாயினும் மரபுபட்டு வந்த வகையானே செய்யுள் செய்யப்படும். இனி, யவற்றுட் சில வருமாறு: 'நெய்யொடு தீயொக்கச் செய்யானைச் சேர்வார்க்குப் பொய்யாத வுள்ளமே மெய்யாகல் வேண்டுமே' எனக் குறளடி நான்காக வந்தது. இது குட்டம்பட்டு வாராதென்பது மேற் கூறப்பட்டது. "மையணி கண்டனை வானோர் ஐயனை யாயிரம் பேழ்வாய்ப் பையர வம்பல பூணு மெய்யனை மேயது வீடே என்பது முச்சீரடியான் வந்த கொச்சகம். இஃது இயலசைச் சீராகி வந்த வாறுங் கண்டுகொள்க. பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடுமே மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே (யா. வி. மேற்.) என்பது, சிறுபான்மை மூன்றடியான் வந்து இடையடி குட்டம் பட்டது. பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடுமே நீண்ட சடையா னாடுமென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே இது கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கி நான்கடியாதலும் ஈற்றடி ஒருசீர் மிகுதலு முடைத்தென்பது. ஒரு வான்யா றொடுச டாடவிப் பெரு நாகமே பூணும் பெருமா னரு வாயினா னாயினு மன்பர்க் குரு வாயினா னுள்ளத்தி னுள்ளே என்பது நிரையசைச்சீர் முதற்கண் வந்த அளவடி நான்கான் வந்தது. அசைச்சீரின்றி அளவடி நான்கான் வருவதுந் 'தாழிசை யின்றித் தரவுடைத் தாகியு' மென்றவழித் தரவுகொச்சகமாயடங்கு மென்பது. "வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போற் பண்டணி யாகப் பலர்தொழுங் கங்கை நீர்வைத்தா னுண்டணி கொண்ட நஞ்சுண்பார்க் கமிழ்தாமே" என நாற்சீரடியிரண்டும் ஐஞ்சீரடியிரண்டுமாய் வந்தது. இனி, அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே (தொல். செய். 64) என்றதுபோல வரும் இலக்கணங்கள் கொச்சக வொருபோகிற்கே உரியவாகவும் இன்னும் வேறுபட்டவாகவும் வரும்; அது, கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கல்வித் துறைபயந்த காமர் காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத் தானை யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாதார்க் கெல்லாந் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர் என வரும். இவ்வாறே ஒழிந்தன வெல்லாம் பரிமாற்றுப்படுப்பப் பலவாகி வரும். அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, நான்கடியும் ஒத்தவழி மயங்கி வருமாறு; தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு படந்தாழ் கச்சைப் பாம்பொடு தழீஇ வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே என வரும். "புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்த னிணையடி பரவுதும் யாம்" என்பது இரண்டடியான் ஈற்றடி குறைந்து வந்தது. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்) என்பது, இரண்டடியுள் ஈற்றடி குறையாது அடிதோறும் மயங்கச் சீர் இயலசையான் வந்தது. ஒழிந்த மூன்றடியும் நான்கடியும் ஈற்றடி குறைதலுங் குறையாதவழி இயலசைச் சீராதலுங் வந்தவழிக் கண்டுகொள்க. "வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிறைகழ றொழுதனம்" (யா. வி. மேற்.) என்பது, மூன்றடியான் தரவு வாராமையின் யாப்பு வேறுபட்ட கொச்சக மாயிற்று. "கடாமுங் குருதியுங் கால்வீழ்ந்த பச்சைப் படாமும் புலித்தோலுஞ் சாத்தும் பரம னிடாமுண்ட நெற்றியா னெஞ்ஞான்றுங் கங்கை விடாமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந்தோன் மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை யையுறு நெஞ்சில்லை யாகாத தொன்றில்லை" என நான்கடியும் முடிந்தவழி இரண்டடி வேறு வந்த கொச்சகம். ஒழிந்தன வும் பிற வேறுபாட்டான் வருவனவுமெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. இச் சொல்லப்பட்டன வெல்லாந் தரவு கொச்சகத்தின்பாற் சார்த்திக் கொள்ளப்படுவன வென்ப. வேறும் உள; அவையும் அவ்வாறாத லறிந்துகொள்க. மற்று அங்ஙனங் கூறின் இரண்டடியான் வருவன தாழிசையாகலின், கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்) எனவும், ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி) எனவும். வருவன தாழிசையாம்பிற வெனின், தாழிசை இலக்கணஞ் சிதைய வரினுந் தாழிசைக்கொச்சகமெனவே படுமன்றே, தரவிலக்கணம் அழிந்து தரவிரட்டித்துச் சுரிதகம் பெற்றதூஉந் தரவு கொச்சகமாயிற்றுப் போல வென்பது. அல்லதூஉம், "ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை" என்பது, இரண்டடியின்றி முதுமொழி யாகலானும், "ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்" என்பது, பலவற்றுக்கும் பொதுவாகலானும் அஃது இரண்டடி வரையறையுடைய பாட்டெனப்படாது. "கொன்றை வேய்ந்த செல்வ னடி" என்பது, கந்தருவ மார்க்கமாதலின் ஈண்டையிலக்கணமெல்லாம் பெறுதல் சிறுபான்மையெனக் கொள்க. இனிப், பொருளினும் வேற்றுமையென்பது - முற்கூறிய வகை யானும், யாப்பு வேற்றுமையானும் ஏற்ற வகையான் வந்து பொருள் வேறுபடுதல்; அஃதாவது, தேவரை முன்னிலையாக்கி நிறீஇச் சொல்லாது படர்க்கையாகச் சொல்லுதலும், மக்களை நாட்டி வெட்சிமுதற் பாடாண் டிணை இறுதியாகிய புறப்பொருளான் வந்து அதனுக்குரித் தென்று கூறப்பட்ட பொருளின் வேறுபடுதலுமெனக் கொள்க. ஏற்ற வகையாற் பொருள் வேறுபாடு கொள்க வெனவே, முன்னிலை படர்க்கையான் வரும் பொருள்வேறுபாடே இஃது ஓதிய நான்கு மாமாறு. வேறுபட்டவற்றுக்குமெல்லாம் பொதுவொழிந்த வெட்சி முதற் பாடாண்டிணை இறுதியாகிய பொருள் வேறுபாடு வரையறை யுடைய வென்பது; என்னை? எடுத்தோதிய நான்கனுள், "எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும்" வரும் பகுதி யொழிந்து வருமாகலின். இப்பொருள் வேறுபாடு பரணிச் செய்யுளுள் இடையிடை விரவி வரினல்லது வேறு வாராதெனக் கொள்க. இவ்வாற்றாற் கொச்சகக் கலிப்பாவினை வரைந்தோதவே ஆசிரியப்பாவும் வெண்பாவும் ஒருபொருண்மேற் பல தொடர்ந்தவழி மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதுமாகி வருதலும் பிறவாற்றான்வருதலும் வரையறையில வாயின. தேவபாணி யல்லாத தொடர்நிலைச் செய்யுளெல்லாம் யாப்பு வேறுபாட்டொடு பொருள்வேறுபாடுமுடைய எனக் கொள்க. அவை யெல்லாம் அவ்வச்செய்யுளுட் காணப்படும். "புகலிரும் பனிச்சோலைப் பொன்மலைபோற் பொலிந்திலங்கி யகல்விசும்பிற் சுடர்மாட்டி யைம்பூத மகத்தடக்கி மண்ணக மிருணீங்க மன்னுயிர் படைத்தக்கா லண்ணலேற் றெழிலூர்தி யருமறை முதல்வனுந் தண்ணறுங் கமழ்துழாய்த் தாமரைக் கண்ணனும் வண்ணம்வே றுடம்பொன்றாய் வானவில் லனையரே" எனப் படர்க்கையவாய்த் தெய்வம் பராஅதலிற் பொருள் வேறுபட்டது. "வெண்பலிச் சாந்த முழுமெய்யு மேற்பூசி யுண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக் கண்பலிக் கென்று புகுந்த கபாலிமுன் னெண்பலித் தாளிவள் யாதுவாய் வாளே" என்பது, "காமப் பகுதி கடவுளும் வரையார்" (தொல். புறத். 28) எனப்பட்ட பாடாண்டிணையாகலிற் பொருள் வேறுபட்டது. "கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்" என்பதோவெனின், அது முல்லை நிலத்துக்குத் தெய்வமாகலானும், முல்லை நிலத்தார் தந்தெய்வத்தினை அவ்வாறு அன்பு செய்து முன்னிலைப் புறமொழியாகக் கூறுதலானும் அது கைக்கிளை யெனப்படாதென்பது; ஒழிந்தனவும் இவ்வாறு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. மற்று இவற்றையெல்லாங் கொச்சக வொருபோகென்ற தென்னை? மற்றையுறுப்புப் பல விழந்தனவாலெனின்,அங்ஙனமாயினுங் கொச்சக வொருபோ கென்னும் பொதுவிதி விலக்குண்ணாமையின், இது பொது வகையா னெய்திய பெயரெல்லாவற்றுக்கு மாகு மென்று எய்துவித்தா னென்பது. இனிக், கொச்சகவொரு போகென்னாது 'ஆகு' மென்றதனான் ஒருபோகென்னாது கொச்சகமென்றே வழங்கினும் அமையுஞ் சிறுபான்மையென்பது கொள்க. (149) கொச்சகஒருபோகின் அளவு 462. ஒருபான் சிறுமை இரட்டிஅதன் உயர்பே. இஃது, அதிகாரத்தான் மேல்நின்ற நான்கனுள் (461) இறுதிநின்ற கொச்சகவொருபோகிற்கு அளவுணர்த்துகின்றது; ஒழிந்தவற்றுக்கெல் லாம் உள்ளுறுப்புப் பற்றி இரண்டளவை கூறி அங்ஙனங் கூறப்படாத தற்கும் அவற்றோடு இனம் பற்றி ஈண்டை அளவு கூறினமையின். (இ-ள்.) பத்தடியிற் சுருங்காது இருபதடியினேறாது வரும், அடக்கிய லின்றி அடிநிமிர்ந்தொழுகுமெனப்பட்ட கொச்சகவொருபோகு எ-று. முன்னர் நால்வகையாற் பகுத்து நிறீஇ, அதற்கிடையின்றி 'அது' வென்று ஒருமையாற் சுட்டிக்கூறினமையானும், மேல் 'நிமிர்ந்தொழுகும்' என்றக்கால் அடி எத்துணையும் பலவாமென்று ஐயுறுதலை விலக்கல் வேண்டுவதாகலானும் 'ஏற்புழிக்கோடல்' என்பதனானுமெல்லாம் அதுவே கொள்ளப்பட்டது. அவற்றுக்குச் செய்யுள்: "தடங்கடற் பூத்த தாமரை மலராகி யடங்காத முரற்சியா னருமறை வண்டிசைப்ப வாயிர வாராழி யவிரிதழின் வெளிப்பட்ட சேயிழை யெனத்தோன்றுஞ் செழும்பகலி னிரவகற்றிப் படுபனிப் பகைநீங்கப் பருவத்து மழையானே விடுமழை மறுத்திடினு மென்மலரின் மதுமழையா னெடுநிலங் குளிர்கூர நீர்மைசா னிழனாறி யண்டங்கள் பலபயந்த வயன்முதலா மிமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாகலின் ஓங்குயர் பருதியஞ் செல்வநின் னீங்கா வுள்ள நீங்கன்மா ரெமக்கே" என்பது, பத்தடியிற் சுருங்காது இருபதடியி னேறாது வரும். "அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகும்" (தொல். செய். 149) எனப்பட்ட கொச்சகவொருபோகென்றவாறு. இருபதடியான் வருவது வந்தவழிக் கண்டுகொள்க. (150) அம்போதரங்கஒருபோகின் அளவு 463. அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை. மேனின்ற அதிகாரத்தான் இதுவுங் கடவுள் வாழ்த்துப் பொருட் டாகிய அம்போதரங்க வொருபோகிற்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்.) அம்போதரங்கவொருபோகுந் தன் உறுப்பெல்லாங் கூடி அறுபதடித்தாகி யும், அதன் செம்பாலாகிய முப்பதடித்தாகியும், அதன் வாரமாகிய பதினைந்தடித்தாகியுஞ் சிற்றெல்லை பெறும். எ-று. எனவே, இது தலையள வம்போதரங்கவொருபோகும் இடையள வம்போதரங்க வொருபோகுங் கடையள வம்போதரங்க வொருபோகுமென மூன்றற்குஞ் சிற்றெல்லை கூறியவாறாயிற்று. அவற்றுக்குப் பேரெல்லை கூறுமா றென்னையெனின், அறுபதிற் றடித்தெனத் தலையளவிற்கு வேறு கூறி அவ்வளவைப் பற்றி அதன் செம்பாலும் அதன் வாரமுமெனப் பாகஞ்செய்து வந்தானாகலாற் கடையள வம்பேதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாம். கடையள வம்போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாகியவழிப் பேரெல்லை முப்பதின்காறும் உயருமெனவும், இடையளவிற்குச் சிற்றெல்லை முப்ப தாகியவழிப் பேரெல்லை அறுபதின்காறும் உயருமெனவும், தலையள விற்குச் சிற்றெல்லை அறுபதாகியவழி அதனையும் இவ்வாறே இரட்டிப்ப அதன் பேரெல்லை நூற்றிருபதாமெனவும் கொள்ளவைத்தா னென்பது. அங்ஙனம் நூற்றிருபதாங்கான் மேனின்ற அதிகாரத்தான் தரவிற்கெல்லை இருபஃதாகவும் அதனோடொப்ப வருதலிலக்கணத்த தாகிய அடக்கியல் இருபதடியாகவும் நாற்பதடி பெறப்படும். இனிச், சிற்றெண் பதினாறும் அராகவடி நான்குமாக இருபதடி பெறப்படுங் கொச்சகம் இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபது அடிபெறுமென்றவாறாயிற்று. இனிப், பதினைந்தாங்கால் தரவு இரண்டடி யும், கொச்சகம் மூன்றாகி ஆறடியும், அராகவடி ஒன்றும், சிற்றெண் நான்கும், அடக்கியல் இரண்டுமெனப் பதினைந்தடியாம். ஒழிந்த இடையளவிற்குந் தலையளவிற்கும் இவ்வாறே வருமென்றறிந்துகொள்க. இவ்வுறுப்புக்கள் மேற்கூறுகின்றானாகலின் ஈண்டு அளவை கூறினா னென்பது. கலிப்பாவின் உள்ளுறுப்பிற்கெல்லாம் ஈண்டே வேறுவே றளவை கூறி வருகின்றானாகலின் இவற்றுக்கும் அவ்வாறே ஈண்டளவை கூறினான் அளவியலுட் கூறாதென்பது. "சூத்திரத் துப்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே" (தொல். மர. 103) என்பதனான் இதனுள்ளுறுப்பிற்கு அடிவரையறை உய்த்துணர்ந்து காட்டினாம் என்பது. (151) அம்போதரங்கஒருபோகின் உறுப்புக்கள் 464. எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோடு அந்நிலைக்கு உரித்தே. இது, முன்னர்க் கூறிய அம்போதரங்கவுறுப்பு இவை ஐந்துமெனக் கூறியவாறு. (இ-ள்.) தரவும், கொச்சகமும், அராகமும், சிற்றெண்ணும், அடக்கியல் வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்க வொருபோகு எ-று. தரவெனினும் எருத்தெனினு மொக்கும். இனிக், கொச்சகமென்பது ஒப்பினாகிய பெயர்; என்னை? பலகோடு பட அடுக்கி யுடுக்கும் உடையினைக் கொச்சகமென்ப; அது போலச் சிறியவும் பெரியவும் விராயடுக்கியுந் தம்முளொப்ப அடுக்கியுஞ் செய்யப் படும் பாட்டுக்களைக் கொச்சகமென்றானாகலினென்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியுங் கொய்சகமென்று சிதைத்தும் வழங்குப. இவை வெண்பாவாகல் பெரும்பான்மை. வழிமுறை சுருங்கி வரையறை யெண்ணுப் பெறும் எண்போலாது பாவினுந் தளையினும் வேறுபட்டுப் பலவாகியும் வருங் கொச்சகமென்பது. அராகமென்பது அறாது கடுகிச்சேறல். பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டுந்துணைச் செய்வதாகிய பொன்னினை அராகித்த தென்ப வாகலின், அதுவும் ஒப்பினாகிய பெயராயிற்று; என்னை? மாத்திரை நீண்டுந் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுத லின். சிற்றெண் என்பது நால்வகை யெண்ணினும் இறுதியெண்ணான மையின் அப்பெயர்த்தாயிற்று. அவ்வுறுப்புக்களிற் கூறிய பொருளை அடக்குமியல்பிற்று வாரமாகலின் அதனை அடக்கியல் வாரம் என்றான்; அதற்குச் செய்யுள்: "செஞ்சுடர் வடமேரு விருமருங்கின் திரிகின்ற வெஞ்சுடரு மதியமும்போல் வேலொடுகே டகஞ்சுழல மாயிரு மணிப்பீலி மயிலெருத்திற் றோன்றுங்காற் சேயொளி கடற்பிறந்த செந்தீயிற் சிறந்தெறிப்ப மறுவருந்தம் மனத்துவகைக் கலுழ்ச்சியான் வளர்த்தெடுத்த வறுவருந்தம் முலைசுரந் தகடிருந்தூ றமுதூட்ட வாருருவத் தெயின்மூன்று மொருங்கவித்தோன் வியப்பெய்த வீருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய் (தரவு) ஆங்க, வினையொழி காலத்து வெவ்வெயிற் கோலத் தனைவரும் தத்த மறம்புரிந் தாங்கு முனையடு கொற்றத்து முந்நான் குருவிற் கனைகடல் சுட்டன கண்; தேவரு மக்களுஞ் சீற்றத்தா னஞ்சாமைக் காவல் புரியுங் கதிர்மதி போலுமே மூவிரு தோன்றன் முகம்; மடமகள் வள்ளி மணிக்கம் பலம்போல விடையிடை சுற்றுத லின்றுந் தவிரா தொடையமை தார்க்கடம்பன் றோள்; அவ்வழி, அடியிணை சேரா தவுணர் நுங்கிப் பொடிபொடி யாகிய போர்ப்பொடு மாய விடியுமிழ் வானத் திடைநின்றுங் கூஉங் கொடியணி கோழிக் குரல். விழுச்சீ ரமரர் விசும்பிடைத் தோன்றிப் பழிச்சிநின் றார்த்தார் பலர்; (தாழிசை) உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்; பெருகள வருமறை பெறுநெடு மொழியொடு பொருகள வழியிசை புகல்வன சிலகுறள்; (அராகம்) சிவந்தன திசை ஆர்த்தனமறை சிலம்பின மலை ஆடினர்பலர்; நிவந்தன தலை போர்த்தனதுகள் நிரம்பினகுறை பொழிந்தனமலர்; (சிற்றெண்) ஆங்கனந் தோற்றிய வடுபோர் வென்றியின் வீங்கிருந் தொடித்தோள் விடலை நினக்கே யாமறி யளவையிற் றமிழ்புனைந் தேத்துகம் நின்னீ தக்க தாயினு நின்னெதிர் நாணில மாகல் வேண்டும் யாணர்க் கடம்புங் களிமயிற் பீலியுந் தடஞ்சுனை நீரொடு நின்வயின் அமர்ந்த வாராப் புலமை வருகமா ரெமக்கே'' (அடக்கியல்) என்பது இடையள வம்போதரங்கவொருபோகு. இவ்வுறுப்புக்களின் அளவு வேறு வேறு கூறானானாயினும், அவற்றுக்கு ஏற்றவாறறிந்து செய்யப்படும். இது, நாற்பத்து நான்கடியான் வந்தது. ஒழிந்தனவும் இவ்வாறே வரும். இவையெல்லாம் இக்காலத்து வீழ்ந்தன போலும். மற்றுக் கொச்சகவொருபோகினை முற்கூறி அதற்கு அளவை பிற்கூறினான், இதற்காயின் அளவை முற்கூறிய தென்னையெனின்,அங்ஙனம் அளவை பெற்ற அம்போதரங்க வொருபோகின் அளவை இனிக் கூறாநின்ற கலிப்பா மூன்றற்கும் அளவென்ப தறிவித்தற்கென்பது. அஃதேல் இதனையும் அம்போதரங்கத்திற் களவென வரைந்தோதிய தென்னை யெனின்,அது தலை இடை கடையென மூன்றளவுபெறு மென்றற்கென் பது. இவ்வதிகாரத்தான் வருகின்றவற்றோடு இதற்கு வேற்றுமையிலக்க ணம் ஒப்பன அறிந்துகொள்க. வருகின்ற கலிவெண்பாட்டிற்கு, "வெள்ளடி யியலாற் றிரிபின்றி வரும்" (தொல். செய். 153) என்றமையின் அதற்கு இவ்வளவை ஒவ்வாதென்பது. (152) கலிவெண்பா ஆமாறு 465. ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபுஇன்றி வருவது கலிவெண் பாட்டே. இது, நிறுத்தமுறையானே கலிவெண்பா வாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருளைக்கருதி மற்றொரு பொருள்படவுஞ் சொற் றொடர்ந்து கிடப்பத் தொடுக்கப்பட்ட வெள்ளையடியான் திரிபின்றி வருவது கலிவெண்பாட்டாம் எ-று. 'இயல்' என்றதனான் வெண்பாவிலக்கணஞ் சிதையாதவற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவதெனவும் அவ்வாறன்றித் திரிந்து வருவன வெல்லாம் ஒருபொருள் நுதலா வென்னுங் கலிவெண்பாவாமெனவுங் கூறியவாறு. வெண்பாவிலக் கணமென்பது கட்டளையாகி வருதலுந் தளைவகை யொன்றி வருதலும் பன்னிரண்டடியின் இகந்து வாராமையு மென இவை யென்பது மேற்கூறினாம். அவ்வாறன்றித் திரிந்துவருங்கால் வாளாதே 'அசையுஞ் சீரு மிசையொடு சேராதன' (323) பாவகை சிதைந்து கலித்தளையோசை எனப்படும். அற்றன்றியும் தனக்கோதிய சீருந் தளையுஞ் சிதைந்தவழியும் பன்னிரண்டடியின் இகந்தவழியுங் கலிவெண்பாவாதற்கு வரைந்து கூறல் வேண்டுவ தன்றென்பதூஉம் அவை ஒரு பொருள் நுதலாது வரினுங் கலிவெண்பாட்டா மெனவுங் கூறினானாம் என்னை? ஒரு பொருள் நுதலியதனைத் திரிபின்றி முடிந்த கலிவெண்பாட்டெனவே, ஒருபொருள் நுதலாது ஈண்டுக் கூறிய வேறுபாட்டான் வருவன வெல்லாந் திரிபின்றி முடியாத கலிவெண்பாட்டென்பது கொள்ள வைத்தமையி னென்பது. இன்னுந் 'திரிபின்றி முடியும்' என்றதனானே ஒரு பொருளன்றிப் பலவுறுப்புடைத்தாகித் திரிபுடையதூஉங் கலிவெண்பாட்டுளதென்று கொள்ளவைத்தானாம். அது முன்னர்ச்சொல்லுதும். உ-ம் : "அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்ப பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு" (கலி. 18) என்பது, பன்னிரண்டடியான் வந்து பல பொருணுதலி வந்தமைதலிற் கலிவெண்பாட்டாயிற்று. 'ஒரு பொருள்' நுதலிய எனவே, சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைத் தென்பதூஉம் பெற்றாம். என்னை? இப்பாட்டினுட் பெண்டன்மைக் கேலாத நுண்பொருளினைத் தலைமகனெதிர்நின்று உணர்த்துவாள், செவ்வனஞ் சொல்லாது தலைமகன் பண்டு கூறியன சிலவற்றை வாங்கிக்கொண்டு சொல்லி, அவன் மறந்தானென்பது உணர்த்துகின்ற பொருண்மை கருதி உணரவைத்தமையின் அவ்வாறாயிற்று. ஒழிந்த பாக்களும் அவ்வாறு ஒரு பொருணுதலுமாயினும், அங்ஙனம் நுதலிய பொருள்பற்றிச் செய்யுள் வேறுபடாமையின், ஆண்டாராய்ச்சி யின்றென்பது. வெண்பாவிற் குறித்த பொருளினை மறைத்துச் சொல்லாது செப்பிக்கூறல் வேண்டுமாகலானும், இஃது அன்னதன்றி ஒருபொருணுதலித் துள்ளினமையானுங் கலிவெண் பாட் டெனப்பட்ட தென்பது. "மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறல் நின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு" (கலி. 6) என்பது, பதினோரடியான் ஒருபொருணுதலிவந்த கலிவெண்பாட்டு. நூற்றைம்பது கலியுள்ளுங் கலிவெண்பாட்டு எட்டாகலின் அவற்றுள் ஒரு பொருணுதலி வருவன பிறவும் உள. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. இனிப், பன்னிரண்டடியின் இகந்து ஒருபொருணுதலாது வருமாறு: "தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிதும் மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்" (கலி. 111) என வரும். பிறவும் அன்ன. இனிப் பாவகை சிதைந்தனவுந் தளைவகை சிதைந்தனவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாங் காமப்பொருண்மேலனவாம். எனவே, கட்டளை வகையானுந், தளைவகை யொன்றியும் வரும் வெண்பாவாயிற் காமத்திற்கே உரியவெனப்படாவாயின. பிறவும் அன்ன. இனி, அம்போதரங்கவொருபோகிற்கு இடையின்றிக் கலி வெண்பாட்டு வைத்தமையான், "வானூர் மதியம்" போலும் ஒருசார்த் தேவபாணியுங் கலிவெண்பாட்டேயாம், ஒருபொருணு தலி வருதலின் என்பது; இதனுள், "ஆட்சிய னாக வென்கோ" என்பது வியங்கோளாயினும், அரசன் வாழ்க்கையும் அரங்கிற்கும் ஆடற்கும் இடையூறின்மையுஞ் சொல்லுவாயாக வென்று தெய்வத்தினை வினாஅய் வாய்ப்புள் வேண்டி நின்றமையின் அது குறித்துணரப்பட்டு ஒருபொரு ணுதலியதாயிற்று. கந்திருவ மார்க்கத்து வரியுஞ் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் செந்துறைப்பகுதிக்கே உரியவாகி வருவனவுங், கூத்தநூலுள் வெண்டுறையும் அராகத்திற்கே யுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள்போல வேறு பாடப்பெறும் வழக்கியல என்பது கருத்து. இக்கருத்தானே அவற்றை இப்பொழுதும் இசைப்பாவென வேறுபெயர் கொடுத்து வழங்குப. இனி, யாப்பிலக்கணத்திற் கொப்பவே இசைநூலுட் சொல்லப் பட்ட செய்யுளும் உள; என்னை? "வெண்பா வியலான் விரவுறுப் பின்றித் தன்பா வகையொடு பொருந்திய பொருளே ஒன்றுவிளைந் திற்ற விறுதித் தாகும்" என்றவழி, விரவுறுப்பின்றி யென வேண்டா கூறி விரவுறுப்புடையது பொருளொன்று விளையாதெனவும், விரவுறுப்பில்லது 'பொருளொன்று விளைந்திற்ற இறுதித் தாகு' மெனவுங் கூறினமையின். எனவே, ஈண்டு ஒரு பொருணுதலி வருமெனப்பட்ட கலிவெண்பாட்டுப் பொருள் வெளிப்படா தெனவும், விரவுறுப்புடையது 'வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும்' பொருட்டெனவும் நேர்ந்தானாம். அது நோக்கியன்றே வருகின்ற சூத்திரத்து 'வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று' (466) மெனக் கலிவெண்பாட்டினையே கருதி ஓதுவானாயிற்று மென்பது. (153) விரவு உறுப்புடைய கலிவெண்பா 466. தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும். இது, மேல் 'வெளிப்படு பொருட்' டெனப்பட்ட வெண்கலி விரவுறுப்புடைமையின் அதனை வேறு கூறுகின்றது. (இ-ள்.) தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் - தரவிற்கும் போக்கிற்கும் இடையன பாட்டாகிப் பயின்று வருதலும்; எனவே, தரவும் போக்கும் முன்னர் ஓதிய வகையானே முன்னும் பின்னும் நிற்குமென்ப தூஉஞ், சுரிதகமாயின் வெள்ளையும் அகவலுமாய்ப் பாவொடு வந்துழிப் போலத் தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமென்பதூஉங் கொள்க. 'தரவும் போக்கு' மெனப் பாட்டிறுதி நின்ற போக்கினை முன்வைத்தான், அவை ஓரினத்தவாகலின்; என்னை? தரவிறுதி, சீரான் இறுமாறு போல வெள்ளைச்சுரிதகவிறுதியும் ஒரோவழிச் சீரானே இறுதலின். அது, "தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய கோதைபரி பாடக்காண் கும்" (கலி. 80) என நான்கசையானுமின்றித் தேமாவா னிற்றது. இனிப், பாட்டினைப் போக்கின் பின் வைத்ததனான், போக்குப் போல நாற்சீரான் இறுவனவும் அப்பாட்டுள் சிறுபான்மை யென்பது. அது, "கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு" (கலி. 141) என்றாற்போல வரும். இங்ஙனம் வைப்பவே, வருகின்ற 'ஐஞ்சீரடுக்கலும் ஆறுமெய் பெறுதலும்' (466) அவற்றுக்கன்றி ஏலாவாயின. அல்லதூஉம், இதனை இறுதி வைத்தான் இதனோடொக்குமென முற்கூறப்படுங் கொச்சகம், தரவும் போக்குமின்றிப் பாட்டு மிடைந்தே வருமென்பது இவ்வதிகாரத்தாற் கோடற்கென்பது. அது முன்னர்க் காட்டுதும். ஐஞ்சீரடுக்கியும் -வேறுநின்றதொரு சீரினை அளவடியுடன் அடுக்கிச் சொல்ல ஐஞ்சீராகியும்; ஆறு மெய்பெற்றும்- அவ்வாறே இருசீரடுக்க ஆறுசீர்பெற்றும்; 'மெய்' யென்றதனான் அடுக்குஞ்சீர் முதலும் இறுதியும் வருமென்பது கொள்க; வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்- வெண்பாவென்னும் உறுப்பினியற்கை சிதையாமற் பொருள் புலப்படத் தோன்றும் எ-று. இயற்கை சிதையாமல் தோன்றுமெனவே, கட்டளையும் கட்டளை யல்லதும் எனப்பட்ட வெண்பாவிலக்கணம் இரண்டுஞ் சிதையாமை வருமென்றானாம். தரவும் போக்குமென நின்ற உம்மை எண்ணும்மை. 'பாட்டிடை மிடைந்' தென்பது முதலாக வந்த உம்மை மூன்றும் இறந்தது தழீஇய எச்சவும்மை; என்னை? மேற்கூறிய தனிநிலை வெண்பாட்டேயன்றித் தரவுறுப்பாகப் பாட்டிடை மிடைந்தும் என்றமை யின். இவ்வாறன்றி, அவ்வனைத்தும் எண்ணும்மை கொள்ளின் உறுப்பி னையே எண்ணல் வேண்டும்; அல்லாக்கால், வினையொடு பெயரெண் ணின் அதன் உறுப்பினையே எண்ணினானல்லனாகலானென்பது. அல்லதூஉந், தரவும் போக்கும் முதல் வந்தும் இறுதிவந்துமென அவையும் தம் வினையான் எண்ணவும் படுமன்றோவென மறுக்க. அவற்றுக்குச் செய்யுள் கூறுங்கால், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து தோன்றும்; அதுவே ஐஞ்சீரடுக்குப் பெற்ற தொன்றும், அறுசீரடுக்குப் பெற்றதொன் றும், அவையிரண்டும் உடன்பெற்ற தொன்றுமென்றும் இங்ஙனம் விகற்பித்துக் கூறப்படுமென்பது. அவை கட்டளை வெண்பாவான் வருதலும் ஒழிந்த வெண்பாவான் வருதலுமென விகற்பிக்கப்படாவோ வெனின்,அவ்விகற்பம் அடிக்கல்லது பாவிற்கின்மையானும் ஈண்டுப் பா வேறுபடாமையானும் அங்ஙனம் பகுத்ததனாற் பயந்ததென்னையென மறுக்க. வரலாறு: "சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பேன் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தாணையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா. அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா னுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்தவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே'' (கலி. 139) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச்சுரிதகத் தான் வந்தது. இனி, வெள்ளைச்சுரிதகத்தான் வந்தனவும் கண்டுகொள்க. "கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே பண்டறியா தீர்போல நோக்குவீர் கொண்டது மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி நெடியோன் மகனயந்து தந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச மிடிய விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக் கடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி னன்னே னொருவனேன் யான்; என்னானும், பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக நன்னுத லீத்தவிம் மா; திங்க ளரவுறிற் றீர்க்கலா ராயினுந் தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய லொண்டொடி நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாதிவ் வூர்; தாங்காச் சினத்தொடு காட்டி யுயிர்செகுக்கும் பாம்பு மவைப்படி லுய்யுமாம் - பூங்கண் வளர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம முணர்ந்து முணராதிவ் வூர்; வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா ரஞ்ச லென்றாலு முயிர்ப்புண்டா - மஞ்சீர்ச் செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம மறிந்து மறியாதிவ் வூர்; ஆங்க, என்க ணிடும்பை யறீஇயினெ னுங்கட் டெருளுற நோக்கித் தெரியுங்கா லின்ன மருளுறு நோயொடு மம்ம ரகல விருளுறு கூந்தலா ளென்னை அருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே'' (கலி. 140) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச்சுரிதகத்தா லிற்றதாகலின், இதனுள், "என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே" என்னும் அடி ஐஞ்சீரடுக்கியும் வந்தது; என்னை? "பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ" என்னும் அளவடியிரண்டும் எதுகையாய் அமைந்தவழி, 'என்னானும்' என வேறு நின்ற சீரொடுங்கூடி ஐஞ்சீரடுக்கினமையின். இதனுள் 'ஆங்க' வெனத் தனிச்சொல் வந்தது. "காராரப் பெய்த" (கலி. 109) என்னும் முல்லைப்பாட்டு ஐஞ்சீரடுக்கி வெள்ளைச்சுரிதகத்தா னிற்றது. "அரிதினிற் றோன்றிய யாக்கை புரிபுதாம் வேட்டவை செய்தாங்குக் காட்டிமற் றாங்கே யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன் றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன் றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் பாடி வரற்கு; ஓரொருகா லுள்வழிய ளாகி நிறைமதி நீரு ணிழற்போற் கொளற்கரியள் போரு ளடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன் மன்றம் படர்வித் தவள்; வாழி சான்றீர், பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள்; அம்ம சான்றீர், கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு; இடியுமிழ் வானத் திரவிருள் போழுங் கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டி யவள்; வாழி சான்றீர்; என்றாங்கே, வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை போலக் கொடுத்தார் தமர்'' (கலி. 141) என்பதனுள், "வாழி சான்றீர்" "அம்ம சான்றீர்" என ஐஞ்சீரடுக்கியாங்கு அடுக்கிச் சொல்ல அறுசீராயின. இதற்கும் ஐஞ்சீர் அடுக்கியுமென்றது போல அறுசீரடுக்கியு மென்று அடுக்குதற்றொழில் கொள்ளப்படும், ஈண்டு இரண்டளவடி தொடைப்படச் செய்தமையினென்க. இதனுள்ளும் 'என்றாங்கே' என்பது தனிச்சொல். "புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது" (கலி. 142) என்பதனுள், "இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள்" என, இயற்சீர் நிரையொன்றியும் பா வேறுபடாமையின் இதுவும் கலிவெண்பாட்டாயிற் றென்பது கொள்க. இங்ஙனம் பா வேறுபடாமையினன்றே, "உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅய் வாழியென் னெஞ்சு" (குறள். 1200) என்பதனை வெண்பா என்பாமாயிற்றென்பது. இனி, "எல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல" (கலி. 142) என வெள்ளைச் சுரிதகத்துள் ஐஞ்சீரடியும் வந்தது. வெண்பாவிற்கு முன்னர், "வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முள" (தொல். செய். 63) என்றானாகலின், மேற்கூனெனவுஞ் சொற்சீரெனவுங் கூறப்பட்டனவே ஈண்டு ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றுங் கூறப்பட்டன என வுணர்க. இதற்கு ஐஞ்சீரும் அறுசீரும் விதந்தோதவே, மேற் சிறுபான்மை பொது வகையாற் கலிக்கு நேரப்பட்ட சொற்சீரடி ஒத்தாழிசைக்கும் முற்கூறிய கலிவெண் பாட்டிற்குமாயின் எஞ்ஞான்றும் வாராதென்பதூஉம், அதுதானும் இதற்கு வருங்கால் இருசீரின் இகந்துவாரா தென்பதூஉங் கூறினானாம். இங்ஙனஞ் சொற்சீரடி விலக்கவே அதற்கினமாகிய முடுகியலும் ஒத்தாழிசைக்கு வாராதென்பதாம். அது வெண்கலிக்கோ வெனின், "வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" எனவே விலக்குண்டதன்றோ வென்க. இனித், தரவிற்கும் போக்கிற்கும் பாட்டிற்கும் இவ்வளவைத் தென்பது அம்போதரங்கத்திற்கு ஓதிய வகையாற் கோடுமென்றமையின், அதற்கேற்ற வகையான் வருவதன்றி வேறு வேறு வரையறை யிலவென்க. 'பாட்டிடை மிடையின்' என்றமையின் ஈண்டுப் பாட்டென்றது கொச்சகத் திற்கே யுரித்தென்பது. மற்று, "வெண்டளை தன்றளை யியற்றளை விரவியும் வெண்பா வுடையது வெண்கலி யாகும்" எனத் தளை விரவியும் வெண்பாச் சிதையாதவழிக் கலிவெண்பாட் டாமென்று ஓர் சூத்திரஞ் செய்யாரோ பலவுறுப்பு வந்த வழியும் இது புறனடையாகவெனின்,அற்றன்று; "வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" எனவே, இவையெல்லாம் அடங்குதலின் அது வேறு கூறானென்பது. இனிப் பலவுறுப்பின்றி அவ்வாறு ஒரு பாட்டேவரின் அதனை வெண்கலி யென்பாரும் உளர். நூற்றைம்பது கலியுள்ளும் அன்னதொரு கலிவெண் பாட்டின்மையின் அது சான்றோர் செய்யுளொடு மாறுகோளாமென மறுக்க. மற்றுப், 'பாட்டிடை மிடைந்' தென்றவழிப் பாட்டெனப்பட்டது, இடைநிலைப்பாட்டென்றுமோ கொச்சகமென்றுமோ வெனின்,எஞ்ஞான்றுந் தாழம்பட வாராமையின் இடைநிலைப் பாட்டென்னாம். துள்ளலுஞ் செப்பலு மென்னும் இருவகைக் கொச்சகமும் ஒருங்கு வாராமையிற் கொச்சகமென்னாம். கொச்சகமென்னும் பொதுப் பெயரான் அது கூறாராயினும், "வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" என்றதனான் வெள்ளைக் கொச்சக மெனப்படும் அவையென்பது. அஃதேற் கொச்சகமென்று ஓதுகவெனின்,அங்ஙனம் ஓதின் இது கொச்சகக்கலியாமென்று கருதினுங் கருதற்கவென்பான் வாளாதே 'பாட்டு' என்றான். இதனாலும் பெற்றாம், இது கொச்சகக்கலி யல்லாமை. (154) கொச்சக்கலிப்பாவின் இலக்கணம் 467. பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றுஅறைந் தனரே. இது, நிறுத்தமுறையானே அகநிலைக் கொச்சகக்கலி யுணர்த்து கின்றது. 'பாநிலை வகை'யென்பது உம்மைத்தொகை; பாநிலையும் வகையுமென விரியும். பாநிலை யென்பது ஆறாம் வேற்றுமைத்தொகை. (இ-ள்.) மேற் பாவினின்ற வகையானே கொச்சகக்கலியாமென்று நூலாசிரியர் கூறித் துணித்தனர் எ-று. அறைதலெனினுந் துணித்தலெனினும் ஒக்கும். என்னை? துணித்த கரும்பினை, "அறைக்கரும்பு" (பொருந. 193) என்பவாகலின். 'பாநிலை' யென்றது யாதனை நோக்கியெனின், இது கொச்சகமாதலான் அதுவும் மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப்பா நிலை யெனக் கொள்க. அதனைத் துணித்தன ரென்றதனான், "தரவின் றாகித் தாழிசை பெற்று" (தொல். செய். 14) வருமென்ற கொச்சகத்தினை இதற்கு இயைபின்றாக முன்வைத்துச் சேட்படுத்தமையின் அஃதொன்றனையுந் துணித்து மாற்றி அல்லாத கொச்சகப்பாவினின்ற வகையான் இவ்வகநிலைக் கொச்சகம் வரும். பரணிப் பாட்டுப் போல அகநிலைக் கொச்சகம் வாரா வென்றானாம். 'வகை' யென்றதனான் அதிகாரத்தானின்ற வெண்கலிப்பாவினது பாநிலையுங் கொள்ளப்படும். அஃதேல், அதனைப் பாநிலை யென்னாது 'வகை' யென்ப தெற்றுக்கெனின்,வெண்கலிப்பாத், "தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து . . . . . . . . . . . . . . . வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" (தொல். செய். 154) என்றதனான் வெண்பாவியலிற் சிதையாது வருமென்று உறுத்துக் கூறினானென்பது. எனவே, பாவொழிந்த உறுப்பெல்லாம் பொருணுதலாது வெளிப்படத் தோன்றுங் கலிவெண்பாட்டின் உறுப்பு வகையான் வருதலும் உடைத்தென்றவாறு. அங்ஙனம் வருங்கால் இடைநின்ற கொச்சகங்களை, "ஐஞ்சீ ரடுக்கியும்" (தொல். செய். 154) என்ற கலிவெண்பாவிற்கு ஓதியவாறே கொள்க. மற்று 'நூலறி புலவர்' என வேண்டியதென்னையெனின், தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒரு தரவே கொச்சகமாதலுந், தரவிணைந்தவழிச் சுரிதகம் பெறுதலும், அவை தனிச்சொல்லுஞ் சுரிதகமும் உடன்பெறுதலுமெல்லாம், 'யாப்பின் வேறுபட்டன' வென்ற லும், ஒத்தாழிசை மூன்றடுக்கினும் அவற்றின் வேறுபாடறிந்து கொச்சக மெனக் கோடலுந், தேவபாணியாகாதவழிக் காமப்பொருளே பற்றி வாராது. அறம்பொருளின்பம் வீடென்னும் நான்கும் பற்றிப் பொருள் வேறுபட வருதலும், பா வேறுபட வருதலும் கொச்சகக்கலி யென்று உணர்வோர் நூலறி புலவரெனவும் அல்லாதார்க்கு அது புலனாகா தெனவும் எல்லாம் அறிவித்தற்கு, "நூலறி புலவர் நுவன்றறைந் தனர்" என்றானென்பது. கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை இனமென்று வேண்டுவராயின் அவை அவ்வப்பாவின் இனங்கட்கு இவ்வகையே கொச்சகமென வேறுபடு மென்றவாறாயிற்று. உ-ம் : "செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு . . . . . . . . . . . . . . . மகனல்லை மன்ற வினி" (கலி. 19) எனவும், "செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி . . . . . . . . . . . . . . . அவலம் படுதலு முண்டு" (கலி. 19) எனவுந், தரவிரண்டு அடுக்குதலின் தரவிணைக் கொச்சக மெனப்படும். இது நூற்றைம்பது கலியுளொன்றாகலின் வெண்பாவாகியுந் தனித்து வரும். வருங்காற் கலிவெண்பாட்டென்றாயிற்று. ஒரு பொருணுதலி இவ்வாறு வரினும் இஃதொக்கும். இது தாழிசையோடு கோடாத் தரவாகலின் வெண்பாவாகியும் வந்தது. "மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் . . . . . . . . . . . . . . . சென்றனை களைமோ பூண்கநின் தேரே" (கலி. 133) என்பது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம்பெற்ற தரவிணைக் கொச்சகம். "மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோல் . . . . . . . . . . . . . . . யேழைத் தன்மையோ வில்லை தோழி" (கலி. 55) இது, தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவிணைக் கொச்சகம். இனிப், பல அடுக்கிப் பொருட்டொடராய் வருந் தரவுகொச்ச கங்களும் பொருட்டொடர்நிலையுள் அறம் பொருளின்பம் விராய் வருந் தரவுகொச்சகங்களும் வந்தவழிக் கண்டுகொள்க. "வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தான்" (கலி. 118) இது, தரவுந் தாழிசையும் போக்கும் முறையானே வந்ததாயினும், "அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி" (தொல். செய். 135) என்னும் இலக்கணஞ் சிதையத் தாழிசைகடோறுஞ் சொற்சீர் பல வருதலான் ஒத்தாழிசையெனப்படாது அதன் வகைத்தாய் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகமென்பதூஉ மாயிற்று. "அருடீர்ந்த காட்சியா னறநோக்கா னயஞ்செய்யான்" (கலி. 120) "நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்" (கலி. 130) என அடக்கியலின்றி அடி நிமிர்ந்தொழுகியது போலுங் கொச்சகம் வருங்கால் ஒத்தாழிசையும் வண்ணகமும்போலத் தனிச்சொற்பெற்றும் பெறாதும் வரும். நெய்தற்றிணைப் பாட்டுக்கும் (119) இஃதொக்கும். அது வருமாறு: "கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதை" (கலி. 54) என்னுங் கலியுள் 'அதனா' னெனத் தனிச்சொற்பெற்று அடக்கிய லில்லாச் சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தோடிற்று. "பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி . . . . . . . . . . . . . . . அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே" (கலி. 21) என்னுங் கலிப்பாட்டுத் தனிச்சொல்லும் அடக்கியலு மின்றி அடிநிமிர்ந் தொழுகிற்று. "எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போல்" (கலி. 32) என்னும் பாலைப்பாட்டும், "அகன்ஞாலம் விளக்குந்தன் பல்கதிர் வாயாக' (கலி. 119) என்னும் நெய்தற்றிணைப் பாட்டும் அங்ஙனமாமாறு கண்டு கொள்க. இனி, யாப்பின் வேறுபட்ட கொச்சகவொருபோகோ டொப்பன வற்றுட் சில வருமாறு: "மன்று பார்த்து நின்று தாயைக் கன்று பார்க்கு மின்றும் வாரார்" (375 - பேரா.) என்பது, இருசீர் நான்கடித் தரவுகொச்சகம். "தஞ்சொல் வாய்மை தேற்றி யஞ்ச லோம்பென் றகன்ற வஞ்சர் வாரா ராயி னெஞ்ச நில்லா தேதான்" என்பது முச்சீர் நான்கடித் தரவுகொச்சகம். "நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல் வாரல ராகி யவரோ வலித்தமைந்தார் ஆரலார் நாரைகா ளன்றில்கா ளன்னங்காள் ஊரலர் தூற்றயா னுள்ள முகுவேனோ" என்பது, நாற்சீர் நான்கடித் தரவுகொச்சகம். "கன்னி ஞாழற் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றோ ரில்லை போலுமான் மன்னன் காக்கு மண்மேற் கூற்றம் வரவஞ்சி யின்ன தொன்று படைத்த தாயி னெவன்செய்கோ." இஃது, ஐஞ்சீர் நான்கடித் தரவுகொச்சகம் இனி, கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற்படுத்துச் செப்பினும் அவையே யாம். "காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவா நிற்ப வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே" என்பது, அறுசீர் நாலடித் தரவுகொச்சகம். பிறவும் அன்ன. "இலங்கொளி வெண்மருப்பி னிட்டகை தூங்கவோ ரேந்தல் யானை கலங்கஞ ரெய்திக் கைகுலையக் கலுழிநீர் கடைவாய் சோரச் சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய்." இஃது, அறுசீர் மூன்றடித் தரவுகொச்சகம். "தண்ணந் துறைவன் றார்மேற் போன வண்ண வண்டு வாரா தற்றே வண்ண வண்டு வாரா தாயிற் கண்ணீர் நில்லா தேகாண்" என்பது, நான்காசிரிய வடியுள் இறுதியடி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டது. "நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள் ளோப்புத றலைக்கீ டாகக் கணங்கொள் வண்டார்த் துலாங்கன்னி நறுஞாழல் கையி னேந்தி மணங்கமழ் பூங்கானன் மன்னிமற் றாண்டோர் அணங்குறையு மென்ப தறியே னறிவேனே லடையேன் மன்னோ" (சிலப். கானல். 9) என்பது இடையடி குறைந்து வந்தது. இஃது, "அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே" (தொல். செய். 64) என்றோதப்பட்டதாயினும் பாமயங்கி வரும் பகுதிபற்றி வேறு காட்டப்பட்டது. "புன்னை நீழ னின்றார் யார்கொ லன்னை காணின் வாழாள் தோழி" எனவும், "மல்ல லூர விவ்வி லன்றாற் பல்பூங் கோதை யில்" எனவும், இவை இரண்டடியான் ஈற்றடி குறையாதுங் குறைந்தும் வந்தன. இன்னும் மேற்கூறிய கொச்சக வொருபோகின் பகுதியுள் ஒழிந்தனவும் இவ்வாற்றான் வருவன வெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. இனி, 'வகை' யென்றதனான் வெண்கலியுறுப்பு நிலைஒத்துப் பா வேறுபடுங் கொச்சகம் வருமாறு: "ஒன்று, இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் . . . . . . . . . . . . . . . மற்றவன் மேஎவழி மேவாய் நெஞ்சே" (கலி. 47) என்பது, தரவுகொச்சகமுஞ் சுரிதகமும் முறையானே வந்து ஆசிரியச் சுரிதகத்தான் இற்றது. இதனுள் 'ஒன்று' எனவும் 'அவனை' எனவுஞ் சொற்சீருந் தனிச்சொல்லும் வந்தன. இப்பாட்டு மூன்றனுளொன்று ஓரடிமிக்கு மற்றைய நான்கடியாயே வருதலின் மூன்றும் ஒரு பொருண்மேல் வரினும் நூலறிபுலவரான் ஒத்தாழிசை யெனப்படாக் கொச்சகமாயிற்று. பிறவும் இன்னோரன்னவற்றாற் ஒத்தாழிசைக் கலியோடு இதனிடை வேறுபாடு தெரிந்து உணரப்படும், அஃதறியாதார்க்கு ஒன்றுபோலக் காட்டினு மென்பது. "வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு . . . . . . . . . . . . . . . முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே" (கலி. 7) என்னும் பாட்டுத், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து ஐஞ்சீரடுக்கி வந்தது. இதனுள் தரவடி நான்கும் வெண்பாவாயினும் அச்செய்யுள் முழுதும் வெண்பாவன்மையிற் கொச்சகமாயிற்று. இனி, அறுசீரான் வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்" (கலி. 39) என்னுங் கொச்சகக் கலியுள், "ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானகல் நாடன் மகன்" என இடைநின்ற கொச்சகம் ஈற்றடி குறைந்தது. "புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ" எனக் கொச்சகம் ஈற்றடி குறையாது வந்தது. இவை யிரண்டும் வெண்பா. இதனுள் ஒழிந்தபா மயங்கிவாறு கண்டுகொள்க. "கொடுமிட னாஞ்சிலான் றார்போன் மராஅத்து" (கலி. 36) என்னும் பாட்டினுள், "பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்" என முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடி வந்தது. "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்" (கலி. 104) என்னும் முல்லைப்பாட்டினுள், "இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடல்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை . . . " எனவும், "தாளெழு துணிபிணி யிசைதவிர் பின்றித் தலைச்சென்று" எனவும் முடுகியலடி வந்தது. இவற்றுளெல்லாஞ் சொற்சீரடி வந்தன. ஒழிந்த கொச்சகப் பகுதியும் இவ்வாறே வந்தவழிக் கண்டுகொள்க. இனித், தரவும் போக்குமின்றிக் கொச்சகம் பல தொடர்ந்திற்றது வருமாறு; "காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு" (கலி. 85) என்னும் மருதக்கலி உறழ்பொருட்டு அன்மையிற் கொச்சகக்கலியாயிற்று. இவையெல்லாம் பாநிலையெனப்பட்ட கொச்சகமாமெனின்,அற்றன்று; "அம்போ தரங்கம் அறுபதிற் றடித்து" (463) என்றவழி, அளவை முதற் கூறிய மயக்கினான் இனியெல்லாந் தன்னள வெனப்படுமென்று புகுந்தமையின். இதற்குக் கொச்சகவொருபோகின் அளவை கொள்ளப்படாது, பாநிலைவகைத் தென்னாமையின். பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டெனக் கூறிய உறுப்புடைக் கலிவெண் பாட்டும் ஈண்டுப் பாநிலை யெனப்பட்ட கொச்சகப் பகுதியுமென இரண்டுங் கொச்சகவுறுப் புடைமையிற் கொச்சகக்கலியென ஒன்றேயா மென மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக வகுப்ப. அற்றன்று; மேல் ஒரு பொருள் கரவாது வெளிப்படத் தோன்றின், ஒரு பொருணுதலியது போலக், கலிவெண்பாட்டாதற்கும் வாளாது கலிப்பாவாகாமைக்குங் காரண மென்னையெனின்,பிறிது மொருபொருள் கூறுவது கலிவெண் பாட்டென்றதற்கு இடையின்றியே, "வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" (தொல். செய். 154) கரந்த பொருட்டன்று இஃது என்றமையின் இதுவும் வெண்கலியாம்; அல்லதூஉம், "வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்" என வேறொரு பாவினை உறுப்பாகக் கூறுதல் மற்றொரு பாவிற் கேதுவாகக் கூறுதலாமோவென மறுக்க. ஒரு பொருணுதலிய வெண்பாட் டாயின், ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டென மற்றையவற்றோ டொத்த பரப்புடையது போல உடனோதானாகலின், இதுவும் அவ்வாறு பரப்புடைத்தாகல் வேண்டுமாகலானும் அஃதமையா தென்பது. இங்ஙனம் மயங்குவாரை நோக்கியன்றே நூனவின்றோர்க்கே இவ்வேறுபாடுணரலாவ தென்று ஆசிரியன் ஓதுவானாயிற்றென்பது. மற்று இதற்கு அளவைகொள்ளுமாறென்னை? மேற் கொச்சக வொருபோகின் அளவு இன்னதென்றிலனாலெனின்,அற்றன்று; வண்ணகத்திற்கு ஓதிய உறுப்பு அமைய வாராமையின் அது கொச்சகமே யாமெனவும் எண்ணுஞ் சின்னமும் இழந்ததே பற்றி அதுவும் ஒருபோகே யாமெனவும், "அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியது" வெண்பாவும் ஆசிரியமுமாகி இறுதலின் அடக்கியலில்லாச் சுரிதகம் பெற்றுத் தரவுபோல வருமெனவும், இவ்வாறன்றி ஒப்பழிய வருமெனவும் மேற்கூறினானன்றே? அங்ஙனங் கூறவே அவ்வுறுப்புக்கள் அவ்வவ்வள வின வென்பதூஉம், அவற்றிற் சிறிய வேறுபட்டு வருமென்பதூஉம் அங்ஙனம் வேறுபடுங்கால் அடிநிமிர்ந்தொழுகியதன் இழிந்த வெல்லை யின் ஒன்றிற்றென்பதூஉந் தெரித்தானாம்; என்னை? அடிநிமிர்ந்தொழுகிய தற்கு இழிந்த எல்லை பத்து அடியென்றமையின். இனி, அடிநிமிர்ந்தொழுகிய தொவ்வாமையின் அதற்களவை இத்துணையென்று, "ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பு" (தொல். செய். 150) என விதந்தோதினான். இங்ஙனம் பல்வேறு வகைப்பட்ட அளவின் வேறுபட்டவற்றையும் யாப்பின் வேறுபட்டு வருமென்றான். எனவே ஈரடியானே தாழிசைக் கொச்சகம் வருமெனவும் அடிநிமிர்ந் தொழுகியதன் சிற்றெல்லையாகிய பத்தடியளவும் பாவைப்பாடலும் அம்மனைப்பாட லும் போலுந் தரவுகொச்சகம் வருமெனவும், அவையும் இரண்டடியின் இழியாவெனவும், "எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியது" வேறுபட்டு ஏழடியும் ஐந்தடியுமாகித் தரவு வரினும் வருமெனவும், எட்டடிப் பாகமாகிய நான்கடியின் உயரா தாழிசையெனவும், எல்லாம் ஆண்டே கொள்ளப்படுமாகலின் அவற்றுக்கு அளவை கூறியதிலனென்று கடாவருவதென்னையென மறுக்க. அஃதேல், தாழிசைக் கொச்சகமாகிய பரணிச்செய்யுளும் தரவு கொச்சகமாகிய தொடர்நிலைச் செய்யுளும் முழுவதும் ஒன்றாக நோக்கியக்கால் உயர்ந்த எல்லை கூறானோவெனின்,அஃது அடிவரையறையின் ஒரு செய்யுளாக்கியே அளவை கூறினான், அவை கொச்சகமாயினுந் தரவுகொச்சகமெனப் பெயர் பெறுதலா யினமையி னென்பது. அஃதேல் அகநிலைக் கொச்சகத்திற்கும் அவையே அளவாம்பிற வெனின்,அற்றன்று; "அம்போ தரங்கம் அறுபதிற் றடித்து" (463) என்றவழி, அளவை முற்கூறிய மயக்கினான் இனிக் கூறும் உறுப்புடைக் கலிப்பாவிற்கெல்லாம் அதனள வெனப்படு மென்று புகுந்தமையின் இதற்குக் கொச்சக வொருபோகின் அளவை கொள்ளப்படாது; பாநிலை வகைத் தென்னாமையின் இவற்றைத் தொகு நிலையளவின் அடியுடைய வென்பது, "தொகுநிலை யளவி னடியில" (தொல். செய். 160) என்புழிச் சொல்லுதும். அஃதேல், 'பாநிலைவகையே கொச்சகக்கலி' யென்றவழிக் கொச்சகவொருபோகோடு ஒப்பது அளவொழித்தே யென்பதும் வரைந்தோதுக வெனின்,ஒருவழி யொப்பனவும் உளவாகலின் அங்ஙனங் கூறினானென்பது. அவை இரண்டடி முதலாகப் பத்தடியளவும் வருவன தரவுகொச்சகமென மேற்காட்டிய செய்யுளுட் காணப்படும். (155) உறழ்கலி ஆமாறு 468. கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின்று ஆகல் உறழ்கலிக்கு இயல்பே. இது, முறையானே உறழ்கலி யுணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் நின்றது உறழ்கலி எ-று. 'போக்கின்று' எனவே தரவுபெறுதலும் பாட்டிடைமிடைதலும், ஐஞ்சீரடுக்கலும், ஆறு மெய்பெறுதலும், ஒழிந்த சொற்சீரடி பெறுதலும், பா மயங்கி வருதலும், அம்போதரங்கத்திற் கோதிய அளவை பெறுதலுமெல்லாம் வெண்கலிப்பாட்டிற்குப் போல மேனின்ற அதிகாரத்தாற் பெறப்படுவதாயிற்று. 'போக்கின்றாகல் இயல்பு' எனவே இயல்பின்றி விகாரவகையாற் சில போக்குடையவுமா மென்றானாம்; அதுவும், "பல்பொருட் கேற்பி னல்லது கோடல்" (665) என்பதனான் வெள்ளைச்சுரிதகம் ஒழித்து ஆசிரியச்சுரிதகமே கொள்ளப் படும்; என்னை? வெள்ளைக் கொச்சகம் பல வந்தவழி ஒன்றனைச் சுரிதகமென லாகாமையானும், அச்சுரிதகம் இரண்டும், "போக்கியல் வகையே வைப்பெனப் படும்" (தொல். செய். 136) எனக் கூறப்பட்ட இலக்கணத்த அல்லவாயினும், "எழுசீ ரிறுதி யாசிரியங் கலியென" (தொல். செய். 76) நின்றவழி அப்பாட்டு முடிந்து காட்டி நிற்றலானும், அதுவே கொண்டாஞ் சிறுபான்மை யென்பது. மற்றுத் தரவின்றி வருவனவும் உளவாலெனின், இதற்குத் தரவு முதலாயின உறுப்பு விதந்தோதிய திலனாகலின் அஃது ஆராய்ச்சியின் றென்பது. அற்றன்று; தரவும் போக்கும் உடன் கூறியதனாற் 'போக்கும் பாட்டிடை மிடைந்தும்' என்னும் அதிகாரம் பற்றி ஈண்டுப் போக்கு விலக்கினமையின் அது பொருந்தாது; மற்றென்னை கருதியதெனின்,இதற்கு அதிகாரம்பட நிறீஇய கலிவெண்பாட்டு ஓதிய சூத்திரத்திற் பாட்டினை இடை கூறாது தரவும் போக்கும் உடன் கூறியதனாற் போக்கின் இலக்கணத்தனவும் பெறுமென்றானாம். அதனானே ஈண்டு விலக்குண்ட போக்குப் போலச் சிறுபான்மை தரவின்றியும் வருமென்பது. இக்கருத்தினா னன்றே, இதனைப் பாநிலையோடு கூறாது தரவு வகைப்படுங் கொச்சகத் தின் பின்னர் வைப்பானாயிற்றென்பது. இனிப், போக்குடையன தரவின்றி வாரா, அவை ஓரினமென்று ஓதப்பட்டமையினென்பது. மற்று இதற்குப் போக்கின்மையும் இலக்கண மாகலின் அது பற்றியும் பெயர்கொள்ளாமோவெனின்,போக்கின்மை சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரிமையின் அவ்வகை யுரியதோர் இலக்கணம் பற்றிப் பெயர் கூறானென்பது. மற்றிதனையுங் கொச்சக மென்றக்கால் இழுக்கென்னையெனின்,நாடகச் செய்யுட் போல வேறு வேறு துணிபொருளவாகியும் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபா டுடைமை நோக்கியும் இது பொருளதிகாரமாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் வேறுசெய்யு ளென்றா னென்பது. என்னை? "மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான" (தொல். மர. 90) எனவும் மரபியலுள் ஓதுகின்றமையினென்பது. அல்லாக்காற் கைக்கிளை யுஞ் செவியறிவுறூஉவும் வாயுறையும் புறநிலையுமென்னும் நான்கும் மருட்பாஎன ஒன்றேயாகியே செல்லுமன்றோ வென மறுக்க. அவற்றுக்குச் செய்யுள்: "அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம்" (கலி. 91) என்னும் பாட்டினுள், தரவும் பாட்டும் உடைத்தாகிய பாட்டுத்தாம் ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்து போக்கின்றி நின்று முடிந்தது. என்றார்க்குக், "காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல்" (கலி. 91) என்பது, வெள்ளைச்சுரிதகமாகாதோவெனின்,ஆகாதன்றே, "போக்கியல் வகையே வைப்பெனப் படும்" (தொல். செய். 136) என்ற இலக்கணத்தான் முற்கூறியவற்றையெல்லாந் தொகுத்து இதன்கண் வைத்திலாமையினென்பது; அல்லதூஉம், அவ்வாறு முடிதலேயன்றி இன்னும் ஒரு கொச்சகம் பெய்து சொல்லி உறழ்ந்தவழியும் அஃதேற்பதாக லான் அஃது ஒருதலையாக அமைந்ததெனப்படாது; என்னை? "அன்னதே யாயினு மாகமற் றாயிழாய் நின்னகை யுண்கம் முயங்குவாய்நின்னெஞ்ச மென்னொடு நின்ற தெனின்" என்றாற்போலப் பின்னுமொன்று தலைமகன் உரைத்தற்கு இடம் பட்டு நின்றமையின் அது, போக்கியல் வகைத்தாகிய வைப்பெனப்படாது என்க. இனி, அவ்வாறன்றி ஆசிரியச்சுரிதகம் வந்தவழி அக்கலிப்பாட்டு முடிந்து காட்டுதலின் அதுவும் அடக்கியலன்றாயினும் அதனைச் சிறுபான்மை நேர்ந்தான், இது வழிநூலாகலின் முதனூல்பற்றி யென்பது. "நலமிக நந்திய நயவரு தடமென்றோள்" (கலி. 113) என்னும் முல்லைக்கலி (113) போக்கிலக்கணமில்லாத ஆசிரியச் சுரிதகம் பெற்று வந்த உறழ்கலியாயிற்று. "வாரி நெரிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த" (கலி. 114) என்னும் முல்லைப்பாட்டும், "சுணங்கணி வனமுலைச் சுடர்கொண்ட" (கலி. 60) என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. "ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல்யாம் நின்னை வெரூஉதுங் காணும் கடை; தெரியிழாய் . . . . . . . பனியானாப் பாடில்கண் பாயல் கொள" (கலி. 87) என்பது தரவும் போக்குமின்றி வந்த உறழ்கலி. இவற்றுள் ஐஞ்சீரும் அறுசீரும் வந்தன. ஒழிந்த சொற்சீரடி வந்தன பிறவுங் கண்டுகொள்க. (156) ஆசிரியப்பா அடியளவு 469. ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை ஆயிர மாகும் இழிபுமூன் றடியே. இத்துணையும் பாவுறுப்புக் கூறி, இனி அப்பாவின் உள்ளுறுப் பாகிய அடியளவை கூறுவானெழுந்தான், முறையானே ஆசிரியப்பாவிற்கு அளவு கூறுகின்றானென்பது. (இ-ள்.) ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கெல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்கெல்லை மூன்று அடி எ-று. "நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே" (ஐங்குறு. கடவுள்.) என்னும் ஆசிரியப்பா மூன்றடியான் வந்தது. "மாயோன் மார்பி னாரம் போல" என்பது நான்கடியான் வந்தது, "வேரல் வேலி வேர்க்கோட் பலவின் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே." (குறுந். 18) என்பது, ஐந்தடியான் வந்தது. தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைக லெய்தின்றா லுலகே (குறுந். கடவுள்.) என்பது, ஆறடியான் வந்தது. "மாநிலஞ் சேவடி யாக" (நற். கடவுள்.) என்பது ஏழடியான் வந்தது. பிறவும் அன்ன. ஆயிரம் அடியான் வருவனவும் உளவேற் கண்டுகொள்க. ஆசிரியப் பாட்டி னெல்லை யென்னாது 'அளவு' என்றதனான் அதனியற்றாகிய வஞ்சிப்பாவிற்கும் இவ்வாறே கொள்ளப்படும். இனி, வெண்பா நெறித்தாகிய கலியளவை அதனின் வேறுபடுதலின் அதற்கு வேறு விதந்து கூறுமென்பது. (157) வெண்பா அடியளவு 470. நெடுவெண் பாட்டே முந்நா லடித்தே குறுவெண் பாட்டின் அளவுஎழு சீரே. இது, முறையானே வெண்பாவின் அடியளவு கூறுகின்றது. (இ-ள்.) வெண்பாவிற்கு இரண்டும் பன்னிரண்டும் இழிபும் ஏற்றமுமாம் எ-று. மற்று இவற்றையும், "ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை" (தொல். செய். 157) என்றாற்போலக் கூறாது, குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டுமெனப் பெயர் கொடுத்ததனாற் பயந்ததென்னையெனின், - குறுமையும் நெடுமையும் அளவியலொடு படுத்துக் கொள்ளப்படுதலின் அளவியல் வெண்பாட்டும் உளவென்றற்கும், அதுவே சிறப்புடையதென்றற்கும் அங்ஙனங் கூறினானென்பது. இனி, அவற்றைத் தத்தம் வகையாற் சுருக்கப் பெருக்கம் உணருங்கால் 'உய்த்துக்கொண்டுணர்தல்' என்பதனான் உணரப்படும். என்னை? நெடுவெண்பாட்டிற்கு உயர்ந்த அளவை பன்னிரண் டடியெனவே, அதன் பாகமாய ஆறு அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்தவெல்லை ஏழடியென வும், அளவியல் வெண்பாவிற்கு இழிந்தவெல்லை நான்கடியெனவுங் கொள்ளவைத்தமையி னென்பது. இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதனோக்கிப் பதினெண்கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளா யிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோருமெனக் கொள்க. இக்கருத்தினானே, "அம்மை தானே யடிநிமிர் பின்று" (தொல். செய். 235) எனக் கூறி நெடுவெண்பாட்டு நேர்ந்திலன் ஆசிரியன் அதற்கென்பது. அஃதேல், அவ்வளவியல் வெண்பாவுள்ளும் ஆறடியானும் ஐந்தடியானும் வருதல் சிறுவரவினவாலெனின்,அங்ஙனமே செப்பிக்கூறும் மரபிற்றாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல்பன்றாகலின் அவற்றுள்ளுஞ் சுருங்கிய நான்கடியே சிறந்ததென்று அதனையே பற்றிப் பெரும்பான்மை யுஞ் செய்யுள் செய்தாராவரென்பது. அஃதேல், குறளடி வெண்பா அதனினுஞ் சிறந்ததாம் பிறவெனின்,-அற்றன்று; செப்பிக்கூறுங்கால் தெரியக்கூறல் வேண்டுமாகலின் அளவியல் வெண்பாவே பயின்ற வென்பது. நெடுவெண்பாட்டுப் போலச் சிறப்பின்றாம் குறுவெண்பாட்டுமெனின், "சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல்" என்பதனான், அவ்விரண்டினுள்ளும் அதனைப் பிற்கூறியது அச்சிறப்பு நோக்கியன் றோவென்பது. உ-ம்: அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள். 259) எனவும், அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச்சிறந்தார் செறிந்தமை யாராய்ந்து கொண்டு (யா. வி. மேற்.) எனவும், இவை குறுவெண்பாட்டு. துகடீர் பெருஞ் செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்கால் போல வரும் (நாலடி. 1. 2) எனவும், "நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து முற்பக லெல்லாங் குழம்பாகிக் - பிற்பகற் றுப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து (களவழி. 1) எனவும், நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த விடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைந் தூறெறிந் தற்றே யெரிமணிப்பூ ணேந்தெழின் மார்பத் தியறிண்டேர்ச் செம்பியன்றெவ் வேந்தரை யட்ட களத்து (களவழி. 6) எனவும், இவை அளவியல் வெண்பாட்டு. பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவி லென்னோடு நின்றா ரிருவ ரவருள்ளும் பொன்னோடை நன்றென்றா ணல்லளே - பொன்னோடைக் கியானைநன் றென்றாளு மந்நிலையள் - யானை யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருத்தார்நன் றென்றேன் றியேன்" (யா. வி. மேற்) என்பதும் அது. நெடுவெண்பாட்டு வந்தவழிக் கண்டுகொள்க. (158) அங்கதப்பாட்டு எல்லை 471. அங்கதப் பாட்டுஅவற்று அளவோடு ஒக்கும். அங்கதப் பாட்டிற்கும் வெண்பாவே உறுப்பாகலான் ஈண்டு வைத்தான். இதுவும் மேற்கூறிய இரண்டெல்லையும் பெறுமென்றவாறு. "இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற - மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள" என்பது, நான்கடியான் வந்த அங்கதம். பிறவும் அன்ன. இது, மந்திரத்தின் வேறுபட்டு அடிவரைத்தாயினமையின் இதுவும் வெண்பாட்டுப் போன்று அமைந்து வரல்வேண்டுமென்றற்கும், இது வேறு பாட்டெனப்படாமையின் அடிவரை யின்றுகொலென்னும் ஐயந் தீர்த்தற்கும் இதற்கே ஈண்டு அளவை கூறி, அதனோடும், "கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுள்" (தொல். செய்.118) என்று ஓதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும் அவற்றுக்கு அளவையும் வெண்பாவின் அளவே யென்று அடக்கினானென்பது. நூற்பாவாக அடிவரைப்படுவன உளவாயி னவற்றுக் கும் இஃதொக்குமென்பது மேற் கூறுதும். (159) கூறாதவற்றின் அளவு 472. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை என்றிவை தொகுநிலை அளவின் அடியில வென்ப. இஃது, எய்தாததெய்துவித்தது, அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின். (இ-ள்.) இவை ஐந்தும் பெருமைக்கெல்லை இத்துணையெனத் தொகுத்துக் கூறுந் தன்மையுடைய அளவான் வரும் அடியையுடைய அல்ல எ-று. கலிவெண்பாட்டென்பது ஒரு பொருள் நுதலுதலான் திரிபின்றி நடப்பதன்றிப் பன்னிரண்டடியின் இகந்துவந்து, "தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து" (466) வாராது ஒன்றேயாகி வருவதெனக் கொள்க. கைக்கிளைச் செய்யுளென்பது, கைக்கிளைப் பொருட்கு உரித் தாய்வரும் மருட்பா வென்றவாறு. அஃதேல், ஈண்டோதிய கலிவெண்பாட் டும் ஒழிந்த கைக்கிளைப்பொருள்மேல் வாராவோவெனின்,வருமென்பது, "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" (தொல். அகத். 53) என்புழிக் கொண்டாமென்பது. எனவே, வெண்பாட்டல்லாதன கலிப்பாட்டுக்கள் கைக்கிளைப்பொருள்மேல் வந்தவழியும் அவற்றுக்கு அளவை மேற்கூறியவாற்றானே அடங்குமென்பதாயிற்று. செவியறி, வாயுறை, புறநிலையென்பன மேல், "கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ" (தொல். செய். 110) எனவே, ஒழிந்த பாவான் வருமெனப்பட்ட பொருண்மேல் வருஞ் செய்யுள். ஆண்டோதியவற்றிற்கு ஈண்டு அளவை கூறானோ வெனின்,அஃது ஆசிரியமும் வெண்பாவுமாகி வேறு வருதலின் முற்கூறிய வகையானே அடங்குமென்பது. மற்றுக் கொச்சக வொருபோகாகியுந் தொடர்நிலைச் செய்யுட்கண் வருமால் அவையடக்கெனின், அஃது, "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய" (தொல். செய். 149) கொச்சக வொருபோகென்றொழிக. "தொகுநிலை யளவின் அடியில" என்பது, விரவுறுப்புடைய வெண்கலியுங் கொச்சகக்கலியும் உறழ்கலியு மென்றிவற்றிற்கு மேல் அம்போதரங்கம் பெற்ற அளவினை முதலாக நாட்டிக்கொண்ட தொகுநிலையள வெனப்பட்ட அடிமேல் அடியிகந் தோடா வென்றவாறு. 'தொகுநிலையள' வென்பது, தலையளவு இடை யளவு கடையளவெனப்பட்ட அம்போதரங்கம் மூன்றற்கும் பெருகிய வெல்லையாகிய அளவின் விரியாது அவற்றுக்குச் சுருங்கிய வெல்லை யாகிய அறுபதும் முப்பதும் பதினைந்து மெனத் தொக்குநிற்கும் அளவினவாகிய அடிமேலேறா வென்றவாறு. தொகுமளவென்னாது 'தொகுதிநிலை'யென்றான், மூன்று தொகையினும் முப்பஃதாகிய இடை நிலைத்தொகையே கோடற்கென்பது. இன்னென்னும் ஐந்தாமுருபு நீக்கத்தின்கண் வந்தமையின் முப்பஃதடியின் இகந்துவரும் அடி இலவென்றவாறு. இனி, அம்முப்பஃதாகிய தொகுநிலை இவ்வைந்தற்கும் நீண்ட வடிக்கெல்லையாதலின், தொகுநிலை யென்னாது 'அளவு' என்றானென்பது, 'நீண்டதனை அளவுடைத்' தென்பவாகலின். மற்றிங்ங னம் இவை முப்பஃதடியின்மேல் வாராவென்று பெருக்கத்திற்கெல்லை கூறவே, சுருக்கத்திற்கெல்லை வரையறையில வென்றானாம்; ஆகவே, இரண்டடியானும் வருமென்றானாம்பிற வெனின், அற்றன்று; ஒரு பொருள் நுதலிவருங் கலிவெண்பாட்டாயிற்' பன்னீரடி இகவாதென்பது, "திரிபின்றி வருவது கலிவெண் பாட்டு" (தொல். செய். 153) என்றவழிப் போதுமாகலின், ஈண்டு ஓதிய கலிவெண்பாட்டுப் பதின் மூன்றடியிற் சுருங்காதென்பது பெற்றாம். இது கைக்கிளைப் பொருள் மேல் வந்ததாயினும் ஒக்கும். ஒழிந்த நான்கும் மருட் பாவாதலான், "வெண்பா வாகி யாசிரிய வியலான் முடியவும்பெறும்" (தொல். செய். 119) என்றானாகலானும், "வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும்" (தொல். செய். 161) என வருகின்ற சூத்திரத்தானும், அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடி யான் வாரா வாகலானும், அவையும் நான்கடியிற் சுருங்காவென்பது உய்த்துக்கொண் டுணரவைத்தானென்பது; என்னை? கைக்கிளைப் படலத்துள், "போற்றி வெண்பா வாகி மற்றத னிறுதி அஞ்சீ ராசிரி யம்மே" என்றாராகலின். மற்று மூன்றடியிற் சுருங்காது ஆசிரியமாதலானும் இரண்டடியிற் சுருங்காது வெண்பாவாதலானும் இவ்வைந்தடியிற் சுருங்காவென்று கொள்க. இது, "பண்புற முடியும் பாவின" (தொல். செய். 161) என மேற்சொல்லும். அவற்றுக்குச் செய்யுள்: "நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடும் நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயின் நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர்" (கலி. 24) என்பது, பதினேழடியான் வந்த கலிவெண்பாட்டு. "சுடர்த்தொடீஇ கேளாய்" (கலி. 51) என்பது, ஒரு பொருணுதலிப் பதினாறடியான் வந்தது. "திருந்திழாய் கேளாய்" (கலி. 65) என்பது, இருபத்தொன்பதடியான் வந்த கலிவெண்பாட்டு. ஒழிந்தனவும் அன்ன. நூற்றைம்பது கலியுள்ளுங் கைக்கிளை பற்றி இவ்வாறு வருங் கலிவெண்பாட்டுக் காணாமாயினமையிற் காட்டாமாயினாம். இலக்கண முண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கண்டுகொள்க. "கனவினிற் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலக்கு நாணு- மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று" (முத்தொள். 69) இது, கைக்கிளை பற்றி வந்த கலிவெண்பாட்டென்னாமோவெனின், என்னாமன்றே, அது பாடாண்டிணைப் புறப்பொருளாகலானும் ஒருபொருணுதலுதல் ஐந்திணைக்கண்ணதே யாகலானும் பன்னிரண் டடியின் இகந்ததன்றாகலானும் வெண்பாவேயாமென்பது. இப் பொருட் பகுதி யுணராதாரும் இது மரபென்பதறியாதாரும், நூற்றைம்பது கலியுள்ளும் இவை கோப்புண்டனவென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருணுதலியன ஒழிந்தன வெல்லாம் வெண்பாவென்று அடிவரை கூறாதொழிப. அங்ஙனம் மரபழியக் கூறின் ஒரு சாத்தனை நாட்டி அவனைக் காமுற்று இவள் இன்னவாறாயினாளென ஆசிரியத் தானும் வஞ்சியானும் பொருள் வேற்றுமையுடைய ஒருசார்க் கொச்சக மல்லாத கலிப்பாவினானுஞ் செய்யுள் செய்தலும், இனி அதனிலையாகிய ஆண்பாற் கைக்கிளை ஆசிரியத்தானும் வஞ்சியானும் வருதலும் பிறவும் இன்னோரன்னவெல்லாம் புலனெறி வழக்கினுட் காட்டல்வேண்டு மென மறுக்க. என்றார்க்கு வரைவு கடாதற்கண்ணுந் தலைவனை அன்பிலனாகச் சொல்லுவன பாடாண்டிணைக் கைக்கிளை யாகாவோவெனின், அவை "சுட்டி யொருவர் பெயர்" (தொல். அகத். 54) கொள்ளாமையின் ஆகாவென்பது. அஃதேல், "விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை" (கலி. 45) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், "கால்பொர நுடங்கல கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை" எனவும், "நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும்" (கலி. 99) என்னும் மருதப்பாட்டினுள், "அறனிழ லெனக்கொண்டா யாய்க்குடை யக்குடைப் புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை" எனவும் இவை சுட்டியொருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை வந்தனவா லெனின், - அற்றன்று; தலைமக னன்பின்மையே மெய்யாயினன்றே அன்னதாவது; இவை அன்னஅன்றி வரைவு கடாவலும் ஊடலுங் காரண மாக அன்பிலனென்று இல்லது சொல்லினமையின் அவை ஒருதலையன் பாகா வென்பது. மற்று, "என்னை, புற்கை யுண்டும் பொருந்தோ ளன்னே . . . . . . . . . . . . . . . உமணர் வெரூஉந் துறையன் னன்னே" (புறம். 84) v‹D« òweh}‰W¥ gh£L« bg©gh‰ if¡»isahjÈ‹ mjid MáÇa¤jh‹ thuhbj‹w bj‹idbaÅ‹.- "ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின" (தொல். செய். 118) என்புழிச், சிறுபான்மை தலைவி கூற்றாகியே வருவன அமையுமென்று போதந்தாமாகலின் அதுவே பெருவிதி யாகாதென்பது. இனிக் கைக்கிளை வருமாறு: "திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலஞ் சேவடியுந் தோயு- மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே" (பு. வெ. கைக். 3) இது, நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லினது, நற்காமமன்றா மாகலின். இக்கருத்தினானே, இதனைப் புறத்திணையுட் கொண்டாருங் கைக்கிளைப் படலத்து, "நெஞ்சிற் குரைத்தலுங் கேட்போ ரின்றி யந்தர மருங்கிற் கூறலு மல்லது சொல்லலுங் கேட்டலு மில்லை யாக அகத்திணை மருங்கி னைவகை யானு மிகத்த லென்ப விவ்வயி னான" என்றாரெனக் கொள்க. பாடாண் கைக்கிளைக்கும் ஈண்டே அளவு கூறுகவெனின், கலி வெண்பாட்டினைக் கைக்கிளை யென்னாமாயினன்றே அது கடாவாவது. மருட்பாவிற்குக் கைக்கிளைப்பகுதி வரைந்தோதல் வேண்டுவதின்மையின் அதற்கும் இதுவே அளவாமென்பது. ஒழிந்த மருட்பா மூன்றற்கும் உதாரணம் மேற்காட்டுதும். இக் காலத்தார் 'ஏறிய மடற்றிற (51)' மென்னும் பெருந்திணைப் பொருண்மேலுங் 'காமஞ்சாலா விளமையோளை' ஒழிந்த மகளிரொடுங் கூட்டி யுரைக்குங் கைக்கிளைப்பொருண்மேலுங் கலிவெண்பாட்டெனப் பெயர் கொடுத்துச் செய்யுள் செய்பவால், அவை அவ்வாறு செய்தற்கும் அவை முப்பதிற்றடியின் இகந்து எத்துணையடி யாயினும் ஏற்குமென்றற்கும் என்னை ஓத்தெனின், அவ்வாறு வருமென்பது இந்நூலுட் பெற்றிலமாயினும் இரு பதின்சீர்க் கழிநெடிலடியானும் இதுபொழுது செய்யுள் செய்யுமாறு போலக் காட்டலான் அமையும். அவை புலனெறி வழக்கிற்குச் சிறந்திலவாகலிற் சிறுவரவின வென்றொழிக. (160) புறனிலை முதலியன மருட்பாவான் வருதல் 473. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதின் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின வென்ப. இது, கைக்கிளை மருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போல வெண்பா முதலாக ஆசிரியம் பின் வந்து முடியுமென்று ஈண்டு அவற்றுக்கு இடம்பட்டது கண்டு கூறியவாறு. என்னை? "மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே" (தொல். செய். 85) என்றவழி, ஆசிரியம் முன்னர் நிறீஇப் பின்னர் வெண்பாவினைக் கூறி, "வெண்பா வியலினும் ஆசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின" என்றமையின், இங்ஙனம் எண்ணப்பட்ட மூன்று பொருட்கும் இலக்கணம் முன்னர்ப் பாவிரியோத்தினுட் கூறினவற்றுக்கு இன்னவாறு செய்யுள் செய்க வென்றற்கு இது கூறினானென்பது. (இ-ள்.) இம்மூன்றும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வரும் எ-று. 'திறநிலை மூன்று' என்றான், முற்கூறியனவெல்லாம் அகத்திணை யாகலின் இவை புறத்திணையுளல்லது வாரா வென்றற் கென்பது. 'திண்ணிதிற் றெரியி'னென்பது இவை மூன்றுங் கைக்கிளை மருட்பாப் போல் ஆண்பாற் கைக்கிளையும் பெண்பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒருதலையாகவே புறத்திணையென்று தெரியப் படுவன வென்றவாறு. இதன் பயம்: கைக்கிளை மருட்பாப் புறத்திணை யானும் வருமென்பது. 'இயல்' என இருகாற் சொல்லியவதனான் இயற்சீர் வெள்ளடியான் வெண்பா வருதல் சிறந்ததெனவும், அதற்கேற்ற வகையான் ஆசிரியம் இயற்சீரான் வருதல் சிறந்ததெனவுங் கொள்க. 'பண்புற முடிதல்' என்பது மேற்சிறுமைக்கெல்லை கூறாமையின் வெண்பாவிற் கிழிபாகிய எழுசீரன்றி எண்சீரான்வரினும் ஆசிரியத்திற் கிழிபாகிய மூன்றடி வரினும் எருத்தடி குட்டமாகி வரினும் அங்ஙனம் மூன்றடி வந்தவழி வெண்பா நான்கு முதல் பன்னிரண்டளவும் உயரினும் அவையெல்லாம் பண்பெனப் படுவன வெனவும், அல்லன சிறப்பிலவெனவுஞ் சொல்லினவாறு. இக்கருத்தி னான் வெண்பாவடி வரையில வாயினும் ஆசிரியவடி மூன்றிகவாவென்பது கைக்கிளைப்படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்னை? "முச்சீ ரெருத்திற் றாகிமுட் டின்றி யெச்சீ ரானு மேகாரத் திறுமே" (கடியநன்னியார் - யா. வி. மேற்.) என்றாராகலின். 'பாவின'வென்றதனான் இவ்விரு பகுதியுந் தத்தம் பாக்கள் வேறு வேறு பெற நிகழுமென்பது. எனவே, இயற்சீர் வெள்ளடி யாசிரியந் தொடுக்குங்கால், "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறி" (குறுந். 12) எனப் பாவினை ஒன்றாகத் தொடுத்தாற்போலத் தொடுத்தல் ஈண்டு அமையாதென்றானாம். இவை மூன்றற்கும் உதாரணங் காட்டுங்கால் மேற்காட்டாது நின்ற பாடாண்டிணைக் கைக்கிளை மருட்பாவிற்கு உதாரணங் காட்டியே காட்டப்படும். (161) பரிபாடல் அடியளவு 474. பரிபாட் டெல்லை நாலீ ரைம்பது உயர்படி யாக ஐயைந்து ஆகும் இழிபடிக் கெல்லை. இது, பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறுகின்றது. (இ-ள்.) பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பாவுக்கு நானூறடி பெருக்கத்திற் கெல்லையாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற் கெல்லை யாகவும் பெறும் எ-று. அவை பரிபாடலுட் கண்டுகொள்க. (162) அளவியலுக்குப் புறனடை 475. அளவியல் வகையே அனைவகைப் படுமே. இது, மேற்கூறிய அளவினை வரையறுக்கின்றது. (இ-ள்.) இத்துணையும் அளவியலான் ஒரு கூறே சொல்லப்பட்டது எ-று. 'எழுநிலத்தெழுந்த செய்யுள்' களுள் (476) அடிவரையறையுடையன வற்றுக்குக் கூறினான் ஆண்டில்லாதன அடிவரையின்றி வரும் இலக் கணத்த வென்பதூஉம் இனிக் கூறுவலென்பதூஉம் இதனது பயம். (163) அடிவரை இல்லன 476. எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறுஎன மொழிப. மேலைச் சூத்திரத்தான் அளவியல் வகையை வரையறைப் படுத்தான்; அடிவரையறையின்மையும் அளவியலென்பதுங் குறிப்புக் கருத இலக்கணமாகிய செய்யுள் கூறினான் இச்சூத்திரத்தானென்பது. (இ-ள்.) அகமும் புறமுமாகிய எழுநிலத்துந் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தளவு ஆறாம் எ-று. இதனானே ஆறென்பதூஉம் ஓரளவியலாயிற்று. (164) இதுவுமது 477. அவைதாம், நூலி னான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. இது மேற்கூறி நிறுத்த ஆறற்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிவரையில்லன ஆறெனப்பட்டவை தாம்1 நூலின் கண்ணவும்2 உரையின் கண்ணவும்3 நொடிதல் மாத்திரை யாகிய பிசியின் கண்ணவும்4 ஒரு மொழிக்கேதுவாகி வரும் முதுமொழிக் கண்ணவும்5 மறைத்துச்சொல்லுஞ் சொல்லாற் கிளந்த மந்திரத்தின்கண் ணவுஞ்6 சொல்லுகின்ற பொருளை இடைகரந்து சொல்லுங் குறிப்பின்கண் ணவுமென அறுவகைப்படும் எ-று. அவற்றுக்கிலக்கணம் போக்கிச் சொல்லும். நூலின் கண்ணவு மென்றது சூத்திரச் செய்யுளை நோக்கிக் கூறியவாறு, அதனுள்ளும் அடிவரையுடைய ஆசிரியம் போல் அளவைபெற்று மேலே அடங்கு மென்பது. இனி அச்சூத்திரப் பொருளும் உரையின் கண்ணதாகி வருவதூஉம் ஒரு செய்யுளாம். அதனது விகற்பம் முன்னர்க் கூறுதும். 1நொடியொடுபுணர்ந்த பிசியும், 2ஏது நுதலிய முதுமொழியும், 3மறைமொழி கிளந்த மந்திரமுங், 4கூற்றிடைவைத்த குறிப்புமென நான்கும் வழக்குமொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யு ளையே கோடற்கு அவற்றுக்கு 'அளவில' வென்றானென்பது. இவை இத்துணையெனவே மேலைச்சூத்திரமும் அளவியலே கூறியவாறாயிற்று. இனி, அவை படும் பகுதி யாவையுங் கூறுகின்றான், 'நொடியொடு புணர்ந்த' வென்ற மிகையான் இதுவன்றி இதுபோல்வது பண்ணத்தி யென்பதும் ஒன்று உண்டென்பது கொள்க. அது முன்னர்ச்(492) சொல்லுதும். (165) நூலாவது 478. அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோள் இன்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின்று அகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுஅதன் பண்பே. இது, நூலினது பொதுவிலக்கண முணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) நூலென்று சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறு படாது தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி அடங்கிநின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டுப் பருப்பொருட்டாகாது நுண்பொருட்டாகப் பொருள் விளக்கல். அதற்கிலக்கணம் அது எ-று. இதன் அகலம் உரையிற் கொள்க. (166) நூலின் பகுதி 479. அதுவே தானும் ஈரிரு வகைத்தே. அதன் வகை உணர்த்துகின்றது. (இ-ள்.) அந்நூற் பகுதி நான்குவகையாம் எ-று. அவை முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம்: மேல் 'தொகையி னும் வகையினும்' (478) என்றதனானே, தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு (652) என்னும் நால்வகை யாப்பிற்குந், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டுதல் ஒக்குமென அவையிரண்டும் நான்காதலுமுடைய வென்பது. அவை எழுத்து முப்பத்துமூன்றெனத் தொகுத்தவழிக் குறிலும் நெடிலும் மெய்ம் மூவினமுஞ் சார்ந்துவரும் மூன்றுமென வகுத்தலும், "இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறு" (தொல். எழுத். புணர். 1) என வகுத்தலு மென்றாற் போல்வன. உயர்திணை அஃறிணையெனத் தொகுத்து ஐம்பாலென வகுத்தலும் அது. ஒழிந்த மூவகை நூலிற்கும் இவ்வாறே ஒருவழித் தொகுத்தலும் வகுத்தலுங் கொள்க. (167) இதுவுமது 480. ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஓத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப்பு அடக்கிய பிண்டத் தானுமென்று ஆங்குஅனை மரபின் இயலு மென்ப. இஃது, அந்நான்கனுக்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நூலுள் ஒருபொருளையே நுதலிவருவது சூத்திரமெனவும், இனமாகிய பொருளினையே தொகுப்பது ஓத்தெனவும், பலபொருட்கும் பொதுவாகிய இலக்கணங் கூறுவது படலமெனவும், மூன்றுறுப்பினையு முடையது பிண்டமெனவுங் கூறிய மரபினான் இயலும் நூல் எ-று. (168) சூத்திர இலக்கணம் 481. அவற்றுட், சூத்திரம் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்துஅமைப் பதுவே. இது, முறையானே சூத்திர இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் ஓதியவற்றுள் ஒருபொருள்நுதலிய எனப்பட்ட சூத்திரம், பொருள் நுதலுங்கால் ஆடி சிறிதாயினும் அது அகன்றுபட்ட பொருளையும் அறிவித்தல் போலத் தேர்தல் வேண்டாமை அகன்ற பொருள் அடங்குமாற்றான் அச்செய்யுளுள் தோன்றச் செய்து முடிக்கப் படுவது எ-று. (169) ஓத்து இலக்கணம் 482. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர். இஃது ஓத்திலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல், 'இனமொழி கிளந்த ஓத்து' என்றான். அங்ஙனம் இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்து கிடப்பப் பல ஓத்தாகச் செய்யாது நேரினமணியை நிரலே வைத்தாற்போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தாவது எ-று. 'நேரினமணி'யெனவே, ஒருசாதியாயினுந் தம்மின் ஒத்தனவே கூறல்வேண்டு மென்பதாம். வேற்றுமையோத்தும் வேற்றுமை மயங்கிய லும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரின மென்று ஓரோத்தாக வையாது வேறு வேறு வைக்கப்படுமென்பது. உயர் மொழிப் புலவரென்பது, அங்ஙனம் நூல்செய்தல் உயர்ந்தோர் கடனென்ற வாறு. (170) படல இலக்கணம் 483. ஒருநெறி இன்றி விரவிய பொருளான் பொதுமொழி தொடரின்அது படல மாகும். இது, மேல் (480) 'பொதுமொழி கிளந்த படல' மெனப்பட்டதற்கு இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு நெறிய அன்றிப் பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லா வற்றிற்கும் வேறு வேறு இலக்கணங்கூற நுதலின், அவற்றுக்குப் பொது வாகி வருவது படலம் எ-று. 'பொதுமொழி கிளந்த படலம்'(480) என்றவழி, ஒருநெறிப் பொருட்குப் பொதுவாகப்பட்டதனை விலக்கி, ஈண்டு விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதே படலமென்றா னென்பது. அவை அதிகாரங்க ளாமெனக் கொள்க. (171) பிண்டம் எனப்படுவது 484. மூன்றுறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின் தோன்றுமொழிப் புலவர்அது பிண்ட மென்ப. இது பிண்டங் கூறுகின்றது. வாளாதே 'மூன்றுறுப்படக்கிய பிண்ட'மென்றான் மேல் (தொல். செய். 168); ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமுங் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனையும் அடக்கிநிற்பது பிண்டமென்கின்றா னென்பது. (இ-ள்.) அம்மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் எ-று. அம்மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பன தாம் உறுப்பின வென்பது பெற்றாம். தொல்காப்பியமென்பது பிண்டம்; அதனுள், எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம்பொருளதிகாரமென்பன படலம் எனப்படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் ஒழிந்த இருகூறு மெனப்படும். "தோன்றுமொழிப் புலவர்அது பிண்ட மென்ப " என்றதனாற் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டமுள தென்பது. அது முதனூலாகிய அகத்தியமேபோலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென்னு மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (172) உரைவகை நான்கு ஆமாறு 485. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று உரைவகை நடையே நான்கென மொழிப. இஃது, உரையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உரைப்பகுதி வழக்கு இந்நான்காகு மென்று சொல்லுவர் புலவர் எ-று. 'பாட்டிடைவைத்த குறிப்பினானு மென்பது, ஒரு பாட்டு இடை யிடைகொண்டு நிற்குங் குறிப்பினான் வருவன வெனப்படும்; என்னை? பாட்டு வருவது சிறுபான்மையாகலின். அவை தகடூர்யாத்திரை போல்வன. மற்றுப், பிறபாடை விரவியும் வருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின எல்லாம் ' பாட்டிடைவைத்த குறிப்பு' என ஈண்டடங் கும், பிறபாடைக்காயின், ஈண்டு ஆராய்ச்சியின்றென்பது. ' பாவின் றெழுந்த கிளவி யானும்' என்பது, பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப்படாவோ வெனின், படா. பாட்டும் உரையும் நூலுமென (391) வேறோதினமையின். அல்லதூஉம், சூத்திரத்தாற் சொல்லாத பொருளினை உரையாற் சொல்லித் தொடர்பு படுப்பது பாட்டிடைவைத்த குறிப்பாவது. இஃது அன்னதன்று, வேறொருவன் சூத்திரத்திற் கூறிய பொருளையே மற்றொருவன் கூறுகின்றானாதலா னென்பது. ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே பொருளெழுதின் அஃதொக்கும். அவை பாரதம், பருப்பதம் முதலாயின. ' பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்' என்பது, ஒருபொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்வன. அவை ஓர் யானையுங் குரீஇயுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்ன வாறு செய்தன வென்று அவற்றுக் கியையாப் பொருள்படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்றுமுறையான் வருகின்றன. 'பொருளொடுபுணர்ந்த நகைமொழியானு'மென்பது, பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கேதுவாகுந் தொடர்நிலை. அதுவும் உரையெனப்படும். அவையாவன சிறுகுரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வனவெனக் கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது. உலகியலாகி நகை தோற்றுமென்பது. இவ்வகையான் உரை நான்கெனப்படு மென்றவாறு. 'உரைநடை' யென்னாது 'வகை'யென்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிதும் ஒன்றுண்டு. அது மரபியலுட் பகுத்துச் சொல்லுதும். (173) உரையின் தொகை 486. அதுவே தானும் ஓரிரு வகைத்தே. இஃது அவற்றின் தொகை கூறுகின்றது. (இ-ள்.) அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய இரண்டும் ஒன்றாகவுந் தொகுக்கப்படும், அவ்வாற்றாற் பயங்கொள் ளுங்கால் எ-று. அவையாவன கூறுகின்றான். (174) இதுவுமது 487. ஒன்றே மற்றுஞ் செவிலிக்கு உரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. இஃது அவற்றது இயல்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இதுவும், மேனின்ற அதிகாரத்தான் இறுதி நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கே உரித்து; ஒழிந்த இரண்டானுமாகிய ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து எனவுங் கூறியவாறு. தலைமகளை வற்புறுத்துஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது இதன்கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற சான்றோருஞ், " செம்முது செவிலியர் பொய்ந்நொடி பகர " என்றாரென்பது. பிறவும் அன்ன. 'மற்றும்' என்றதனான் அவையன்றி வருகின்ற பிசியுஞ் செவிலி யர்க்கு உரித்தென்பது கொள்க. இனி, " பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் " (485) யாருக்கும் வரைவின்றி வருமாறு அவ்வச்செய்யுளுட் காணப்படும். (175) பிசியின் இருவகை 488 ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே. இது, முறையானே பிசி இரண்டெனப்படு மென்கின்றது (இ-ள்.) ஒப்பொடு புணர்ந்த வுவமமென்பது - தன்கட் கிடந்த ஒப்புமைக் குணத்தொடு பொருந்தி வரும் உவமப்பொருளானும் ; மற்று, இனி ஒன்று சொல்ல ஒன்று தோன்றுந் துணிவிற்றாகச் சொல்லுஞ் சொல் லானு மென்று இவ்விருகூற்றதாகும் பிசி கூறுபடும் நிலைமை எ-று. அவை " பிறைகவ்வி மலை நடக்கும் " என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம். இஃது யானை யென்றாவது. " முத்துப்போற் பூத்து முதிரிற் களாவண்ண நெய்த்தோர் குருதி நிறங்கொண்டுவித்துதிர்த்து " என்பதுமது; இது கமுகின் மேற்று. " நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னீராடி லூராடு நீரிற்காக் கை" என்பது, 'தோன்றுவது கிளந்த துணிவினான்' வந்தது. இது நெருப் பென் றாவது. 'வகைநிலை' யென்ற மிகையான் இவையுஞ் செவிலிக் குரித்தென் பது கொள்க. (176) முதுமொழி ஆமாறு 489 நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப. இது, முதுமொழி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கூரிதாய்ச் சுருங்கி விழுமிதா யெளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்த தனைப் பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது ஆகிய முதுமொழி யென்ப புலவர் எ-று. "உழுத வுழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால்-வழுதியைக் கண்டன கண்க ளிருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு." (பழமொழி) என்றவழி, மற்று வழுதியைக் கண்ட கண் இருப்பத் தோள் பசந்தன என்றக்கால் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்ததென்புழிக் குறித்த பொருளியைபின்மை கூறுதலாயிற்று. அதனைச் சொற்றொடர் இனிது விளக்கிற்றன்றாயினும் முற்கூறிய முதுமொழி முடித்ததென்பது; என்னை? அதன்கண்ணே அது முடித்தற் கேதுவாகிய இயைபின்மை கிடந்தமையி னென்பது. இது பருப்பொருட்டன்றி நுண்ணிதாகிச் சொற்சுருக்க முடைத்தாய் விழுமிதாகி எளிதிற் பொரு டோன்றியவாறு கண்டுகொள்க. எனவே, இதுவும் அந்நாற்பகுதித் தென்றவாறு. (177) மந்திரம் ஆமாறு 490. நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. இது, மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிறைமொழி மாந்தரென்பார், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடைய ராவார்; அவர் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும் எ-று. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. 'தானே'யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திரமென்றற்கும் பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க. அவை, "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா." எனவும், "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி- யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா." எனவும், இவை தெற்கண் வாய்திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற்'பாட்டுரை நூல்'என்புழி அங்கத மென்றோதி னான், இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்னவாற்றாற் பெரும் பான்மையுஞ் சபித்தற் பொருட்டாகலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும், "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்." (குறள். 28) என்றாரென்க. அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை, "அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும்." (471) என மேற்கூறினானென்பது. (178) குறிப்புமொழி ஆமாறு 491. எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப் பொருள்புறத் ததுவே குறிப்புமொழி யென்ப. இது, முறையானே 'கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துதல்' நுதலிற்று. (இ-ள்.) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொல் தொடர்ந்தவாற்றானும் சொற்படு பொருளானுஞ் செவ்வன் பொருளறியலாகாமையின், எழுத்தொடுஞ் சொல்லொடும் புணராது பொருட்குப் புறத்தே பொரு ளுடைத்தாய் நிற்பது குறிப்பாவது எ-று. இதனைப் 'பாட்டுரை நூல்' என்றவழி 'வாய்மொழி' என்றோதி னான், கவியாற் பொருள் தோன்றாது பின்னர் இன்னதிதுவெனச் சொல்லி உணர்த்தப்படுதலின். இனி, அதனை இதன் தொகைச்சூத்திரத்துக் 'கூற்றிடை வைத்த குறிப்' பென்று (477) ஓதினான், பாட்டிடைப் படுபொருள் பெரிதாகி அதனிடையே குறித்துக்கொண் டுணரினல்லது மெய்ப்படா தென்றற் கென்பது. பிறர் அவற்றைப் பொருளிசை யென்று சொல்லுப. "குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கின ராம். " என வரும். இதனுட் குடமே தலையாகப் பிறந்தாரெனவுங் கொம்பெழுந்த வாயினரெனவுங் கையுட்கொண்ட மூக்கினரெனவுங் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பிலவாதலுங் குறிப்பினான் அதனைக் குஞ்சரமென்று கொண்டவாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. மற்றிது பிசியெனப்படாதோவெனின்,-இது பாட்டுவடிவிற்றாகலின் அற்றன்றென்பது. அஃதேற் பாட்டெனப்படாதோவெனின்,குறித்த பொருண் முடிய நாட்டாமையின் யாப்பழிந்து, நாற்சொல்லியலான் யாப்பு வழிப் படாமையின் மரபும் அழிந்து, பிறவுறுப்புப் பலவுங் கொண்டமை யிற் பாட்டெனவும் படாதென்பது, இஃது எழுத்து முதலாக ஈண்டிய அடியெனப்படாமையின் இதனையும் அடிவரை யில்லனவற்றோடு ஓதினா னென்பது. அல்லாதார் குறிப்பிசை வந்த செய்யுளெல்லாங் குறிப்பெனப் படுமென்ப. அங்ஙனங் கூறிற் குறிப்பிசை யுடையன பாட்டினுள் வாரா வாகியே செல்லுமென மறுக்க. (179) பண்ணத்தியின் இயல்பு 492. பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப் பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே. இது, பண்ணத்தி கூறுகின்றது. (இ-ள்.) பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி எ-று. மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி யென்ப. இஃது எழுதும் பயிற்சி யில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச்செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டுங் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினார், நோக்கு முதலாயின உறுப் பின்மையி னென்பது. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. (180) இதுவுமது பண்ணத்தி பிசியோடு ஒத்தல் 493. அதுவே தானும் பிசியொடு மானும். இதுவுமது. (இ-ள்.) மேற்கூறப்பட்ட பண்ணத்தி பிசியோடொக்கும் எ-று. அதனை ஒத்தலென்பது அதுவுஞ் செவிலிக்குரித்தென்றவாறு. 'பிசியொடும்' என்ற உம்மையான், 'பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகையொடும்' (தொல். செய். 173) ஒக்குமென்றுணர்க, 'தானும்' என்ற மிகையாற் பாட்டு மடை வசைக் கூத்திற்கே உரித்தென்பது கொள்க. (181) பண்ணத்தியின் அடிப் பெருக்கம் 494. அடிநிமிர் கிளவி ஈராறு ஆகும். இதுவுமது. (இ-ள்.) அப்பண்ணத்தியின் அடிப்பெருக்கங் கிளக்குங்காற் பன்னிரண்டாம் எ-று. 'ஆகும்' என்றதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறுமென்பது. 'ஈராறாகும்' என்றதனான் இது நெடுவெண்பாட்டாகி வருமெனவும் அதுபோல ஆறடியின் இழிந்து வாராதெனவுங் கொள்க. (182) இதுவுமது 495. அடிஇகந்து வரினுங் கடிவரை யின்றே. இதுவுமது. (இ-ள்.) அது முழுதும் அடியாகி வாராது. இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும் எ-று. அவை, முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையிற் காட்டா மாயினாம். இக்காலத்துள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மை யின் இலக்கியங் காணாமாயினும் அமையுமென்பது. (183) அளவியற்பகுதி இரண்டே எனல் 496. கிளரியல் வகையின் கிளந்தன தெரியின் அளவியல் வகையே அனைவகைப் படுமே. இதுவும் மேலவற்றுக்கெல்லாம் புறனடை. (இ-ள்.) எடுத்தோதிய வகையாற் சொல்லியன ஆராயின் அளவியற் பகுதி அக்கூற்றதாம் எ-று. எடுத்தோதியவகையானென்பது, நூலும் உரையும் நந்நான்கென வும், பிசி இரண்டெனவும், முதுமொழியும் மந்திரமுங் கூற்றிடை வைத்த குறிப்பும் ஒரோவொன்றெனவுங் கூறிவந்த வகையான், அவற்றை இனைத் தென்றெண்ணி அளந்த பகுதியும் அளவியலேயாமாக லின் அவ் வளவியல் அடி வரையறை கூறியவாற்றானும் அடி வரையறை யிலவற்றுக்குக் கூறிய வாற்றானும் இருவகைப்படும் என்றவாறு. (184) திணைகள் ஆவன 497. கைக்கிளை முதலா எழுபெருந் திணையும் முற்கிளந் தனவே முறைநெறி வகையின். இது, பதின்மூன்றாம் முறைமைக்கணின்ற திணையுறுப் புணர்த்து (313)கின்றது. (இ-ள்.) கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் ஏழும் முன்னர்க் கிளக்கப்பட்டன எ-று. 'முறைநெறி வகையான்' என்பது அவற்றுக்கு முறைமையாற் புறமெனப்பட்ட வெட்சி முதல் பாடாண்பகுதி யீறாகிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொதுவாகிய முறையாற் கரந்தை யுள்ளிட்டுப் பதினைந்து திணையுள் ஒன்று செய்யுட்குறுப்பாகி வரல் வேண்டுமெனவும், முன்னோதியவாறே கொள்ளப்படுமெனவுஞ் சொல்லி னானாம். இது சொல்லாக்கால் அவை வரினும் வரும், வாராதொழியவும் பெறுமென்பதுபடுமென்பது. இது மேல் வருகின்ற கைகோள் முதலியன வற்றுக்கும் ஒக்கும். (185) கைகோளுள் களவு ஆமாறு 498. காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வும் என்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே. களவு கற்பென்பன காமத்திணையின் ஒழுகலாறு ஆகலான் ஆண்டுப் பரந்துபட்டன வெல்லாந் தொகுத்துக் கூறுகின்றான், அவை செய்யுட் குறுப்பா யடங்கலின். அவற்றுள் இது களவென்னுங் கைகோளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) 1காமப்புணர்ச்சியும், அது நிகழ்ந்த பின்னர் 2இடந்தலைப் பாடும், அதற்குப் பின்னர்ப் 3 பாங்கற்குச் சொல்லி அவனாற் கூடுதலும், அதன் பின்னர்த் 4 தோழியைப் பின்னின்று குறைமுடித்துக் கோடலுமென அந்நாற்பகுதிக்கண்ணும் பொருந்திய சார்பினாற் களவொழுக்கம் இதுவென்று கருதுமாற்றாற் செய்யுள் செய்தல் கந்திருவ வழக்கம் எ-று. கந்திருவவழக்கம் மறையோ ரொழுகிய நெறி யதுவாகலான் 'மறையோராறு' என்றானென்பது. எனவென்பது வினையெச்சம். எனவே, பாங்கனுந் தோழியும் உணர்ந்தவழியும் அது மறையோர் வழித்தென்றவாறு. காமப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந்தலைப்பாடு நிகழாதெனவும் அவ்விடந்தலைப்பாடு பிற்பயத்த லரிதென்பது அவள் ஆயத்தோடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலுந், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யா னாகலின் அதன்பின்னர்த் தோழியாற் குறைமுடித்துக் கோடலுமென இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம் எ-று. 'வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல் ஆக்கஞ் செப்ப னாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை...... (தொல். கள. 9) என்பனவுங் கைகோளாகாவோவெனின், ஆகா; கைகோளென்பது ஒழுகலாறாகலான். அவை அவற்றுட் பிறந்த உள்ள நிகழ்ச்சி ஒன்றொன்ற னிற் சிறந்து பெருகியக்கால் அவ்வப்பகுதியாகுமெனக் கொள்க. மற்றுக் களவியலுள், "ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் குறிதலைப் பெயலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலும்" (இறையனார். 3) எனப் பாங்கற்கூட்டம் முற்கூறியதாலெனின்,இது கைகோள் கூறிய இடமன்மையின் முற்கூறினும் அமையுமென்பது. மற்று, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகனைப் பாங்கன் கண்டு இவ்வேறுபாடு எற்றினானாயிற்றென்று வினாவுமன்றே? அதனாற் பாங்கற்கூட்டம் நிகழ்ந்த பின்னரன்றி இடந்தலைப்பாடு நிகழாதாம் பிறவெனின்,அற்றன்று; யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்ல தன்றாமாகவே, உலகத்தார் நிறையுடையாராகி மறை வெளிப்படாமல் ஒழுகுவாரும், மறை வெளிப்படுத்து விளம்பும் பாங்கனையுடையாரும், இல்லாதாருமெனப் பலவகையராதலின் வினாதல் ஒருதலையன்றென்பது. அல்லதூஉம் இடந்தலைப்பாடு நிகழாதாயினன்றே துணைவேண்டுமென் பது; என்னை? துணையின்றி நிகழுங் களவு சிறப்புடைத்தாகலானும், பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத்தொழுகுமாகலானு மென்பது. களவொழுக்கமெல்லாம் இந்நான்கு வகையானும் அடங்கும். அவற்றுக்குச் செய்யுள்: "கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே" (குறுந். 2) என்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள். "சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல நண்ணா ரரண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே" (நற். 39) என்பது இடந்தலைப்பாடு. "இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோம் நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே" (குறுந். 58) என்பது பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது. "தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி னாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே" (குறுந். 222) என்பது தோழியிற் கூட்டம். பிறவும் அன்ன. (186) கற்பு ஆமாறு 499. மறைவெளிப் படுதலும் தமரின் பெறுதலும் இவைமுத லாகிய இயல்நெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. இது, கற்பென்னுங் கைகோளுணர்த்துத னுதலிற்று. (இ-ள்.) மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும், அதன்பின் தமர் கொடுப்பத் தான் அவ்வகையாற் பெறுதலுமென்னும் இவ்விரண்டும் முதலாகிய வழக்குநெறி திரியாது, மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் உணர்தலுமென்னும் நான்குடன் பிரிவுளப்பட ஐந்தும் புணர்ந்தது கற்பென்னுங் கைகோளாம் எ-று. 'இவை முதலாகிய' வென்றதனான், 'கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான' (தொல். கற். 2) என்றவழிக் கூடிய வதுவை போல்வன கொள்க. அவைதாம் கற்பெனப்படுவ தல்லது ஒழுகலாறெனப்படா; என்னை? இவரொழுக்கமன்றி வேள்வியா சான் முதலாயினார் செய்விக்கும் ஒழுக்கமாகலான். அங்ஙனமாயினும் அவற்றையுங் கைகோளின்பாற் சார்த்தியுணரப்படு மென்றற்கு ஈண்டுக் கூறினானென்பது. இனிக் கூறும் ஐந்துந், தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலா றெனவே படும். முன்னைய இரண்டும் போலப் பிறர் கொடுக்கப்பட்டன அல்ல வென்பது. மலிதலென்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றான் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ளநிகழ்ச்சி. ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியானன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய பொருளின்மை யுணர்வித்தல் உணர்வெனப்படும். இல்லது கடுத்த மயக்கந் தீர உணர்த்து தலான் உணர்த்துதலெனவும் அதனை உணர்தலான் உணர்வெனவும்படும். புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா, அது குளிர்ப்பக் கூறலுந் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின். அம்முறையானே கூறி அவற்றுப்பின் பிரிதல் கூறினான். அஃது இவை நான்கனொடும் வேறுபடுத லின். அதனை ஊடலொடு வைக்கவே அவ்வூடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற் படுமென்பதூஉங் கொள்க; என்னை? காட்டக் காணாது கரந்துமாறுதலின். இவற்றுக்குச் செய்யுள்: "எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே" (அகம். 195) என்பது மறைவெளிப்பாடு. "தமர்தர, வோரிற் கூடி யுடன்புணர் கங்குல்" (அகம். 86) என்பது தமரிற் பெறுதல். "கேள்கே டூன்ற" (அகம். 93) என்னும் பாட்டினுள், "நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே" என்பது மலிதல். "நாணுக்கடுங் குரைய ளாகிப் புலவி வெய்யள்யா முயங்குங் காலே" என்பது புலவி. "நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த இல்வினாய் வாராமற் பெறுகற்பின்" (கலி. 77) என்பது ஊடல். "விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவும் அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி" (கலி. 75) என்பது உணர்தல். "திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன்" (கலி. 86) என்பது துனி. துனித்தலென்பது வெறுத்தல். அறுவகைப்பிரிவும் பிரிவெனவே அடங்கும். அவை மேற்காட்டப்பட்டன. (187) கைக்கோள் வகை இவை எனல் 500. மெய்பெறு வகையே கைகோள் வகையே. இது, புறத்திணைக் கைகோளுணர்த்துகின்றது. (இ-ள்.) பொருள்கள் பெற்ற கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே எ-று. கைகோளென்பது, ஒழுக்கங்கோடல். எனவே, அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா; பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடுமென இரண்டாகி அடங்கும் அவையுமென்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காட்டப்பட்டன. (188) களவினில் கூற்றுக்கு உரியார் 501. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு அளவியன் மரபின் அறுவகை யோருங் களவினின் கிளவிக்கு உரியர் என்ப. இது, கூற்றென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எண்ணப்பட்ட அறுவருங் களவொழுக்கினுள் (107) நிகழ்ந்தன கூறினாராகவல்லது, ஒழிந்தோர் கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறார் எ-று. 1பார்ப்பானென்பான், நன்றுந் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவா னெனப்படும்.. 2பாங்கனென்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகி வருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். 3தோழி அவன் போன்றும் பெண்பாலாகலின் அவளைப் பின் வைத்தான். 4செவிலி மாற்றஞ் சிறுவரவிற்றாதலின் அவளை அவளின்பின் வைத்தான். அவரிற் சிறந்தமையிற் சீர்த்தகு சிறப்பிற் 5கிழவனையுங் 6கிழத்தியையும் அவர்பின் வைத்தான். அவ்விருவருள்ளுந் தலைமகளது கூற்றே பெருவரவின தாகலின் அவளை ஈற்றுக்கண் வைத்தானென்பது. உ-ம் : "சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை . . . . . . . . . . . . . . . தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே" (கலி. 9) என்பது, பார்ப்பான் கூற்று. "காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே" (குறுந். 204) என்பது, பாங்கன் கூற்று. "ஏனல் காவ லிவளு மல்லள் . . . . . . . . . . . . . . . சொல்லு மாடுப கண்ணி னானே" என்பது, தோழி கூற்று. "பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தன னென்றனள் . . . . . . . . . . . . . . . ஆம்பல் மலரினும் தான்றண் ணியளே" (குறுந். 84) என்பது, செவிலி கூற்று. "பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி" (அகம். 48) என்பதும் அது. "கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் . . . . . . . . . . . . . . . அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே'; (குறுந். 280) என்பது, கிழவன் கூற்று. "விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்றி நின்மார் படைதலி னினிதா கின்றே" (அகம். 58) என்பது, கிழத்தி கூற்று. பிறவும் அன்ன. (189) கற்பினில் கூற்றுக்கு உரியார் 502. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணம் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபின் கற்பிற்கு உரியர். இதுவுமது. (இ-ள்) இவ்வெண்ணப்பட்ட எல்லாருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் எ-று. 'முன்னுறக் கிளந்த கிளவி' யென்பது, பொருணோக்கிற்று. இசையின் பின்னரது நாடகமாகலிற் பாணன் பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன் பின்வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன்பின் வைத்தும், பொருட்குச் சிறந்தாராகலின் நற்பொருள் உணரும் அறிவரை அவர்பின் வைத்தும், எதிலராகிய கண்டோரை அவர்க்குப்பின் வைத்துங் கூறினானென்பது. இவ்வாற்றான் இவரொடு முன்னர்க் களவொழுக்கத்திற் கூறிய அறுவருங் கூறப்பெறுவரென்றவாறு. ' தொன்னெறி மரபின்' என்றதனாற் பாகனுந் தூதனுங் கூறவும் அமையும். அவை புறப்பொருட்குச் சிறந்துவரும். அவற்றுக்குச் செய்யுள்: செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்நிறுத் தவர் திறஞ் செல்வன் கண்டனென் யானே (அகம் . 14) என்பது, பாணன் கூற்று. ஆடலிற் பயின்றனை யென்னா தென்னுரை யூடலிற் றெளிதல் வேண்டும் என்பது, கூத்தன் கூற்று. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து . . . . . . . . . . . . . . . நறுங்கண் ணியன்கொ னோகோ யானே (நற் . 394) என்னும் நற்றிணைப்பாட்டுக் கண்டோர் கூற்று. விதையர் கொன்ற முதையற் பூழி . . . . . . . . . . . . . . . மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் வோயே (நற் . 121) என்னும் நற்றிணைப்பாட்டுப் பாகன் கூற்று. ஒழிந்தனவுங் கற்பியலுட் கூறியவாற்றான் அறிக. (190) கூற்றுக்கு உரியர் அல்லாதார் 503. ஊரும் அயலும் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும். (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட அறுவகையோருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறார் எ-று. இவை, களவிற்குங் கற்பிற்கும் பொது. ' கொண்டெடுத்து மொழியப் படுதலல்ல'தென்பது இவர் கூற்றாகப் பிறர் சொல்லினல்லது இவர் தாங் கூறாரென்றவாறு. அவை, ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கு மறனி லன்னை" (குறுந் . 262) எனவும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிச் .................... சாய்த்தார் தலை (கலி . 39) எனவும் வருவன போல்வன. 'யாப்புறத் தோன்றும்' என்றதனான் அகத்திணைக்கண் இவ்வாறு நிலைபெற்றதென்பது; எனவே, புறத்திணைக்கண் அவர் கூறவும் பெறுவரென்பது. இது நோக்கிப்போலுங் கூறாதாரையுங் கூறுவானா யிற்றென்பது. ' நோய்மருங் கறிநரை' இடைவைத்தான் முன்னைய மூன்றும் பெண்பாலெனவும் ஒழிந்தன ஆண்பாலெனவும் அறிவித்தற்கென்பது. எனவே, நோய்மருங்கறிநர் பெண்பாலும் ஆண்பாலுமாயினா ரென்பது. (191) 504. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. இஃது, எய்தாத தெய்துவித்தது; விலக்கியல் வகையான் விதித்த தெனவும் அமையும். (இ-ள்.) கிழவனொடுங் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத் தோன்றாது எ-று. 'நற்றாய் ' என்று ஒருமை கூறியவதனான் தலைமகள் தாயே கொள்ளப்படும். இதனானே தந்தை தன்னைய ரென்பன போல் வனவற்றுக் கும் இஃதொக்கும். 'முற்ற' வென்றதனான் தானே தலைவனாதலான் தலைவன்தமர் யாவருங் கூறார், முற்கூறப்பட்டார் அல்லதென்பது கொள்க. முற்றாதென்னாது 'தோன்றாது' என்றதனாற் புறத்திணைக்கண் இவை வரைவின்றி வழக்கினொடு பொருந்துமாற்றாற் கொள்ளப்படுமென்பது. 'கிழவன் றன்னொடும் கிழத்தி தன்னொடும் கூறாள்' எனவே, அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாயென்பதாம் ; அஃது, " எம்வெங் காம மியைவ தாயின் . . . . . . . . . . . . . . . செறிந்த சேரிச் செம்மன் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல . . . . . . . . . . . . . . . மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே " (அகம் . 15) எனவரும். (192) கண்டோர் கூற்று நிகழிடம் 505. ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. (இ-ள்.) தலைமகனொடும் தலைமகளொடும் இடைச்சுரத்துக் கண்டோர் மொழிதல் (40) அறியப்பட்டது எ-று. 'ஒண்டொடி மாதர் கிழவன் ' எனவே அவ்விருவர் கூட்டத்துக் கண்ணுமன்றி அவ்விருவரொடும் தனித்துக் கூற்றில்லையென்றவாறு. 'கண்டது' என்ற மிகையான் இடைச்சுரத்துக் கண்டோர் செவிலிக் குரைப்பனவுங் கொள்க. அவை, " இளையள் மெல்லியள் மடந்தை யரிய சேய பெருங்கான் யாறே" (சிற்றட்டகம்) எனவும், " அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேர்ந்தனை சென்மே" எனவும் வரும். இதனுள், ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந் தோன்றக் கூறியது தலைமகனையாதலின், " வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே" (குறுந் . 7) என்பது செவிலிக்குக் கண்டோர் கூறியது. (193) இடைச்சுரத்துத் தலைவன் கூற்று 506. இடைச்சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன். இதுவும் கூற்றுவிகற்பமே கூறுகின்றது. (இ-ள்.) இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடு கிழவன் நீதிநூல் வகையாற் கிளத்தற்கு முரியன் எ-று. நீதிநூல் வகையாற் கிளத்தலென்பது கிழத்திதன் தமர் இடைச் சுரத்துக் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் வழக்கியல் கூறுதலு முரிய னென்பது. ' வழக்கியலாணை' யென்றதனான் நீதிநூல் விதி பிறழக்கூறின் அஃது இராக்கதம் போன்று காட்டுமென்பது. உம்மையாற் கிழத்தியொடு வழக்கியலாணை யானன்றி மருட்டிக் கூறவும் பெறுமென்பது. "அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே" (நற் . 9) என்பதனுள், 'வருந்தா தேகுமதி' யெனவே, 'வழிபடு தெய்வங் கட்கண்டால்' விடுவார் இல்லாதது போல, நின்னை விடுதல் எனக்கு அறனன்றெனக் கூறி மெல்லெனச் செல்கவென மருட்டிக் கூறியவாறு காண்க. (194) கண்டோரும் வழக்கியல் ஆணையின் கிளத்தல் 507. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு உரியர் முன்னத்தி னெடுத்தே. இதுவுங் கண்டோர் கூற்று. (இ-ள்.) மேலைச்சூத்திரத்துக் கூறிய தலைமகனையுந் தலைமகளை யும் ஒழித்து ஒழிந்தோரெனப்படுவார் கண்டோரெனப்படுப. அவர் கூற்றுங் கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு வழக்கியலாணை (506)யிற் கிளத்தற் கும் உரியர் என்பான் முன்னத்தி னெடுத்துக் கூறுப என்றானென்பது. முன்னத்தினெடுத்த லென்பது அதிகாரத்தான் அறநூற்குத் தக ஓத்தினா னெடுத்துரைப்ப வென்றவாறு ; அவை, " பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையனே" (கலி . 9) என்றாற் போல்வன. இவ்வாறு வழக்கியலாணையாற் கிளவாது வாளாதே அவரைக் கண்டனமெனவும் அவரின்னுழிப் புகுவரெனவுஞ் சொல்லுவன, " கண்டோர் மொழிதல் கண்ட தென்ப" (தொல். செய். 193) என்புழிக் கூறினாம். (195) கேட்போர் இவர் எனல் 508. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குந ரவரே. இது, கேட்போரென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) முன்னர்க் கூற்றிற்குரிய ரெனப்பட்ட பன்னிருவருட் கேட்டற்குரியார் தலைமகனுந் தலைமகளும் ஒழித்து ஒழிந்த பதின்மரும் எ-று. அவர் கேட்பனவும் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கேளாரெனவுங் கூறியவாறு. 'மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு' மென்பதனை மேற்போயின கூற்றிற்குங் கூட்டியுரைக்க. உரைக்கவே கூறுவனவுங் கேட்பனவுமெல்லாம் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கூறவுங் கேட்கவும் பெறாரெனவுங் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கப்பட்டனவற்றுள் வேறுபட வருவனவும் மேற்கூறு கின்றான். மற்றுக் கூற்றுக்கு உரியரெனப்படுவார் கூற, அவ்வயின் தலைவியுந் தலைவனுங் கேளாரோவெனின், அவை தங் கிளவியாகலின் தாங்கேட்டல் விதந்தோத வேண்டுவதன்றென்பது. 'நினையுங்காலை' யென்றதனான் தலைமகள் சொல்லக் கேட் போருந் தலைமகன் சொல்லக் கேட்போருந் தலைவனுந் தலைவியுந் தம்முட் கேட்டனவற்றுக்குரியனவும் ஆராய்ந்து கொள்ளப்படும் மேற் கூறிய வகையானென்பது. எனவே, தலைமகன் கூறப் பரத்தை கேட்டலுந் தலைமகள் கூறப் பரத்தை கேட்டலும், முதலாயின புலனெறி வழக்கிற் கெய்தாதன விலக்கப்பட்டன. ஒழிந்தனவற்றுட் சில வருமாறு : " விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே" (அகம் . 58) என்னுந் தலைமகள் கூற்றுத் தலைமகன் கேட்டது. " வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே" (நற் . 9 ) என்பது, தலைமகன் கூற்று, தலைமகள் கேட்டது. " நின்கேள், புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி" (கலி . 24) எனவும், " மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண" (அகம் . 14) எனவும், " உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ'" (அகம். 17) எனவும், "ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே" (குறுந். 362) எனவும், " எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ" (கலி . 142) எனவும் இன்னோரன்னவெல்லாந் 1தோழியும் 2பாணனுஞ் 3செவிலியுங் 4கண்டோரும் 5அறிவருங் கேட்பத் தலைமகள் கூற்று வந்தன. பிறவும் அன்ன. "இடிக்குங் கேளிர் நுங்குறையாக . . . . . . . .. . . பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே" (குறுந். 58) எனவும், " எலுவ சிறாஅ ரேமுறு நண்ப . . . . . . . .. . . புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே" (குறுந். 129) எனவும் " ஊர்க பாக வொருவினை கழிய" (அகம். 44) எனவும், " பேரமர் மழைக்கணின் றோழி யுறீஇய ஆரஞ ரெவ்வங் களையா யோவென" எனவும், " சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்" (கலி. 139) எனவும் இவை 1பார்ப்பானும் 2பாங்கனும் 3பாகனுந் 4தோழியுங் 5கண்டோரும் கேட்போராகத் தலைமகன் கூற்று நிகழ்ந்தன. பிறவும் அன்ன. இனி, " ஒன்றித் தோன்றுந் தோழி " (தொல். அகத். 39) என்றமையின், தோழி கூற்றுந் தலைமகள் (225) கூற்றேயா மென்பது. (196) பார்ப்பார் அறிவர் கூற்று யாவரும் கேட்பர் எனல் 509. பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இதுவுமது. (இ-ள்.) இது மேற்கூறிய பார்ப்பாரும் அறிவரும் கூறிய கூற்றுக் கேட்போரை இன்னாரென்று வரையப்படாது எ-று. என்றவழி, 'யார்க்கும்' என்றது அகத்திணையோர்க்கும் புறத்திணை யோர்க்கு மென்றவாறு. 'யார்க்கும் வரையா' ரென்றதனை, எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படுமென்பது கொள்க. என்னை? பார்ப்பார் கூற்று, தலைமகனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது, பிறர் கேட்டற்கேலா. அறிவர் கூற்று, தலைமகளுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற் குரியர். புறத்திணைக்கண்ணும் பொதுவியற் கரந்தையோர்க்கும் பார்ப்பார் கிளவி ஏலாவெனவும், அறிவர் கிளவி ஏற்குமெனவும், பிறவு மின்னோ ரன்ன கொள்க. 'யாப்பொடு புணர்ந்து' என்பது அகப்பொருளும் புறப்பொருளு மாக யாக்கப்படுஞ் செய்யுளெல்லாவற்றொடும் பொருந்து மென்றவாறு. இவர் கிளவி வரையப்படாதெனவே, இவர் வாயிலாகியவழித் தலைமகள் வாயில் மறுத்த லிலளென்பதூஉம், புறத்திணைத் தலைவர்க்கும் அவ்வாறே வழிநிற்றல் வேண்டுமென்பதூஉங் கூறியவாறாயிற்று; என்னை? அறிவ ரெனப்படுவார் மூன்றுகாலமுந் தோன்ற நன்குணர்ந்தோரும் புலனன் குணர்ந்த புலமையோரு மாகலானும், இனிப் பார்ப்பாரும் அவ்வாறே சிறப்புடையராகலானும், அவர்வழி நிற்றல் அவர்க்குக் கடனாகலானு மென்பது. (197) இடம் இது எனல் 510. ஒருநெறிப் பட்டாங்கு ஓர்இயல் முடியும் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப. இது, களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை இடமென்று கூறுப எ-று. இடமெனினுங் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுள் கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற்கேதுவாகியதோர் உறுப்பினை இடமென்றானென்பது. ஒரு நெறிப்படுதலென்பது, ஒருவழிப் பலவுந் தொகுதல்; ஓரியலென்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணமொன் றாதல். அஃதாவது, காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுமென்று இன்னோரன்ன எல்லாம் ஒருநெறிப் பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சி யென்பது காமப்புணர்ச்சி யென்னுஞ் செயப்படுபொரு ணிகழ்ச்சி. அஃது இடமெனப்பட்டது. இது வினைசெய்யிடம். நிலமாயின முன்னர்த் திணையெனப்பட்டன. காலம் முன்னர்ச் சொல்லுதும். "எலுவ சிறாஅ ரேமுறு நண்ப" (குறுந். 129) என்னும் பாட்டும், " கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் னெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சில் லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே." (குறுந். 280) என்னும் பாட்டும் பாங்கற்கூட்டமே இடனாக ஒருவழிப்பட்டன. என்னை? நின் வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினவிய பாங்கற்கு, இதனினா னாயிற்றென்று உரைத்ததூஉம், அதற்குப் பாங்கன் கழறினானை எதிர் மறுத்ததூஉமென இரண்டும் பாங்கற்கூட்டத்துப் பட்டு ஓரியலான் முடிந்தன. அவை மேற்கூறிய வகையானே கண்டுகொள்க. (198) பயனில் கூற்று 511. பரத்தை வாயி லெனஇரு வீற்றுங் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய னிலவே. இது, பயனில் கூற்றுணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) பரத்தையும் வாயில்களு மென்னும் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் எழுந்த கிளவி கிழத்தி கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்காற் பயனில எ-று. கிழத்தியைச் சுட்டுதலெனவே, பாங்காயினார் கேட்பச் சொல்லி னும் அமையுமென்பதாயிற்று. செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவ ணுலமந்து வருகஞ் சென்மோ தோழி, (அகம். 106) என்றக்கால், இது பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக் கூறல் வேண்டுமென்பது. வாயில்களுந் தலைமகளை ஊடல் காப்பஅல்லது சொல்லாராகலான் தலைமகள் கேட்பாளாகச் சொல்ல வேண்டுமென்பது. 'சுட்டாக் கிளப்புப் பயனில' வென்றதனான் வாயில்கள் கூறுவனவுங் கிழத்திக்குப் பாங்காயின தோழி கேட்பச் சொல்லினும் அமையும். அவற்றுக்குச் செய்யுள் : ஓருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனள் மன்னே என்பது கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது; தோழி கேட்பச் சொல்லியதூ உமாம். (199) தலைமகட் சுட்டி வாயில்கள் கூற்று 512. வாயில் உசாவே தம்முளும் உரிய. இதுவுமது, (இ-ள்.) மேனின்ற அதிகாரத்தான் தலைமகளைச் சுட்டி ஒருவர்க் குரைப்பார் போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும், அவையுந் தலைமகள் கேட்பன எ-று. அதற்குச் செய்யுள் : " தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே" (குறுந். 9) என்பது, பாடினி பாணர்க்குரைத்தது. 'தம்முளும்' உம்மை எதிர்மறை யாகலான், கேட்குநள் அவளெனப்பட்டவாறன்றித் தம்முள் தாங் கேட்டல் சிறுபான்மையெனக் கொள்க. (200) கூறாதன கூறுவனவாகவும் கேளாதன கேட்பனவாகவும் கூறவும் படுதல் 513. ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுவலிய நெறியான் சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர். இது, கேளாதன சில பொருள், கேட்பனவாகப் பொருளியலுள் வழுவமைக்கப்பட்டனவற்றை இலக்கணவகையாற் கூறுவனவும் கேட்குநவும் ஆகற்கண்ணும் ஆராய்கின்றானென்பது. (இ-ள்.) ஞாயிறுந் திங்களும் அறிவும் நாணுங் கடலுங் கானலும் விலங்கும் மரனும் பொழுதும் புள்ளும் நெஞ்சும் இன்னோரன்ன பிறவும் மேற் பொருளியலுள், " செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்" (தொல். பொருள். 2) என்று பொதுவகையாற் கூறியவாற்றான், அவைதாம் சொல்லுவன போலவுங் கேட்பன போலவுஞ் சொல்ல அமையும் எ-று. ஈண்டுக் கூற்றும் உடன் கூறினான், மேலிவற்றை வரையறுத்துக் கூற்றிற்கு உரிய வென்றிலனாகலின். புலம்புறு பொழுதென்பது மாலையும் யாமமும் எற்பாடும் காரும் கூதிரும் பனியும் இளவேனிலும் போல்வன. 'பிறவு'மென்றதனான் புல் புதல் முதலியன கொள்க. அவற்றுட் சிலவருமாறு: " கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ" (கலி . 142) என்றாற் போல்வன கண்டுகொள்க. (201) காலம் ஆவது 514. இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளப் பொருள்நிகழ்வு உரைப்பது கால மாகும். இது, காலமுணர்த்துகின்றது. (இ-ள்.) மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச்செய்யுளுட் டோன்றச் செய்யிற் காலமென்னும் உறுப்பாம் எ-று. பொருணிகழ்ச்சியைக் காலமென்றதென்னை? காலமென வேறு பொருள் இல்லது போல வெனின், அஃது ஈண்டாராய்ச்சியின்று; நியாய நூலாராய்ச்சி யென்க. " வில்லோன் காலன கழலே தொடியோள் . . . . . . . .. . . வேய்பயி லழுவம் முன்னி யோரே" (குறுந் . 7) என்னும் பாட்டினுள் வில்லோனுந் தொடியோளும் பொருளெனப்படும்; "வேய்பயி லழுவம் முன்னி யோரே" என்பது அப்பொருணிகழ்ச்சியான் இறந்தகால மெனப்படும். அப்பாட் டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினாரென்பது. " மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே" (குறுந் . 71) என்பது நிகழ்காலம். " பகலும் பெறுவையிவ டடமென் றோளே" (கலி . 49) என்பது எதிர்காலம். புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையாதென்பது. பெரும்பொழுது சிறுபொழுதென்பன ஈண்டுத் திணையெனப்பட் டடங்கின; என்னை ? முதலும் கருவும் உரிப்பொருளுங் கூட்டித் திணையாகலின். (202) பயன் ஆவது 515. இதுநனி பயக்கும் இதனான் என்னும் தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே. இது, முறையானே பயனென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துச் சொல்லப் படும் பொருள் பயனென்னும் உறுப்பாம் எ-று. " மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே" என்னும் பாட்டு, தோழியைத் தூதுவிடுவாளாதற் பயன்பட வந்தது. இவ்வா றெல்லாப் பாட்டும் பயனுறுப்பாகவன்றி வாராவென்க. இவை புறத்திற்கும் ஒக்கும். (203) மெய்ப்பாடு ஆவது 516. உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். இது, மெய்ப்பாட்டுறுப் புணர்த்துகின்றது. (இ-ள்.) உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்துச் சொல்லப்படும் பொருள் தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் எ-று. கவிப்பொரு ளுணர்ந்தால் அதனானே சொல்லப்படு பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென்றான். அது தேவருலகங் கூறினும் அதனைக் கண்டாங் கறியச்செய்தல் செய்யுளுறுப் பாம் என்றவாறு. அவை, " மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தர" (கலி . 81) என்றாற்போல வருவன. ' தலைவரு பொருளா'னெனவே, நோக்குறுப்பான் உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் 'கவி கண்காட்டும்' எனவுஞ் சொல்லுப. (204) இதுவுமது 517. எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே. இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ-ள்.) இதுவும் மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே; பிறிதிலக்கணத்த தென்று கொள்ளற்க எ-று. எனவே, " நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை" (தொல். மெய்ப் . 3) என அவை நந்நான்காமெனவும் மெய்ப்பாட்டியலுட் கூறியவாறெல்லாம் பிறவாற்றான் வேறுபடுவனவுங் கொள்ளப்படுமென்றவாறு. (205) எச்சம் ஆவது 518. சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும். இஃது, எச்சங் கூறுகின்றது, (இ-ள்.) கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத் தொடு பொருந்திய கிளவி, எச்சமென்னும் உறுப்பாம் எ-று. 'முடிவுகொள் இயற்கை' யெனவே, செய்யுளின்கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடிக்கப்படு மென்பது பெற்றாம். உ-ம் : "செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே" (குறுந் . 1) எனச் செய்யுண் முடிந்தவழியும், 'இவற்றான் யாங்குறையுடையம் அல்லே மென்று தலைவற்குச் சொன்னாளேல் அது கூற்றெச்சமாம்; என்னை? அவ்வாறு கூறவுஞ் சிதைந்ததின்மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? அது காண்பாயாகிற் காண் எனத் தலைமகளை இடத்துய்த்து நீக்கிய குறிப்பினளாகி அது தான் கூறாளாகலி னென்பது. (206) முன்னம் ஆவது 519. இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரியவென்று அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம். இது, முன்னமென்று கூறப்பட்ட உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) யாதோரிடத்தானும் யாதானுமொரு மொழி தோன் றியக்கால், இம்மொழி சொல்லுதற்குரியாருங் கேட்டற்குரியாரும் இன்னாரென்று அறியுமாற்றான், அங்ஙனம் அறிதற்கு ஓரிடம் நாட்டி அவ் விடத்துக் கூறுவார்க்குங் கேட்பார்க்கு மேற்ற செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் எ-று. 'இவரிவர்க் குரியவென்று' அறிவான், செய்யுட் கேட்டானெனவும், அவ்விடத்தவரவர்க் குரைக்க வென்றான் ஆசிரியனெனவுங் கொள்க. என்றென்பது எனவென்பது போலச் சொல்லினெச்சமாதலும் வினை யெச்சமாதலும் உடைமையின் இஃது, " எனவெ னெச்சம் வினையொடு முடிமே" (தொல். சொல். எச்ச. 42) என்பதொரு வினையெஞ்சி நிற்கும். அவ்வினைதான் எச்சமாகலான் உரைப்பதென்னும் வினைகொண்டு முடியுமென்பது. " யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலி. 89) என்றக்கால் இம்மாற்றஞ் சொல்லுகின்றாள் தலைவியெனவுஞ் சொல்லப் பட்டான் தலைமகனெனவும் முன்னத்தான் அறியப்படுத்தலின், இது முன்னவுறுப்பாயிற்று. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். இவையெல்லாம், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றானென்பது. (207) பொருள்வகை ஆவது 520. இன்பமும் மிடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை யிழுக்கு நெறியின்றி இதுவா கித்திணைக்கு உரிப்பொருள் எனாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. இது, பொருள்வகை கூறுகின்றது. (இ-ள்.) இன்பமுந் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமு மெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத்திணைக்கு இது பொரு ளென்று ஆசிரிய னோதிய உரிப்பொருளன்றி அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும் எ-று. 'வகை'யென்றதனாற் புலவன் தான் வகைந்ததே பொருளென்று கொள்க. அஃதன்றிச் செய்யுள் செய்தலாகாதென்பது இதன் கருத்து. அவை, "கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே'' (அகம். 9) என்றாற் போலச் செய்யுள் செய்தவன் தானே வகுப்பன வெல்லாங் கோடல். இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும், முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமை என்பது எல்லா வுரிப்பொருட்கும் ஏற்கப் பலவேறு வகையாற் செய்தல். (208) துறை ஆவது 521. அவ்வம் மாக்களும் விலங்கும் அன்றிப் பிறஅவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயலின் மரபொடு முடியின் அத்திறம் தானே துறையெனப் படுமே. இது, துறையென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) ஐவகை நிலத்திற்கும் உரியன வெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறன்றிப் படைத்துச் செயினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்கமெனப்படும் எ-று. மார்க்கமெனினும் துறையெனினும் ஒக்கும். " ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்கால்" (கலி. 56) என்னுங் கலியினுள், " கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை" என, நெய்தற்றலைமகள் போலக் கூறி, அவளை மருதநிலத்துக் கண்டான் போல " ஊர்க்கா னிவந்த பொதும்பருள்" எனவுஞ் சொல்லிப் பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தலுரிப் பொருளான் முடித்தான். இவ்வாறு மயங்கச்செய்யினுங் குறிஞ்சித் துறைப் பாற்படச் செய்தமையின் அத்துறையுறுப்பான் வந்ததென்பது. இதுவும் மேலைப் பொருள்வகை போலப் புலவராற் செய்து கொள்ளப்படுவ தாகலான் அதற்குப் பின் வைத்தானென்பது. மற்று, " எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்" (தொல். அகத். 19) என்றதனான் இது முடியாதோவெனின், அது கருப்பொருண் மயங்குதற்குக் கூறினான்; இது மக்களேயன்றித் தலைவனுந் தலைவியும் மயங்குமாறும் நான்கு திணையும் ஒன்றொன்றனொடு மயங்குமாறுங் கூறி அது புலவராற் செய்துகொள்ளுவதோர் உறுப்பெனவும், ஓதிவந்த இலக்கணத்த தன்றாயினும் அது பெறுமெனவும், கூறினானென்பது. (209) மாட்டு ஆவது 522. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருண் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். இது, மாட்டென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) பொருள் கொள்ளுங்கால், அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும், இருவகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றான் கொணர்ந்துரைப்பச் செய்தலை மாட்டென்னும் உறுப்பென்று சொல்லுவர், செய்யுள் வழக்கின் எ-று. இதுவும் நால்வகைப் பொருள்கோளன்றிப் புலவரது வேறு செய்கை. அது; " முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே" (பத்துப். பட்டின. 218 - 20) என நின்றது, பின்னர், "வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே" (பட்டின. 300, 301) எனச் சேய்த்தாகச் சென்று பொருள்கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருண் முடியத் தந்து உரைத்ததாம். " திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம்- உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு" (முத்தொள். 42) என்பது, அணுகிய நிலை யெனப்படும். பிறவும் அன்ன. மாட்டுதலென்பது கொண்டுவந்து கொளுத்துதல் . (210) மாட்டும் எச்சமும் இன்றியும் செய்யுள் அமைதல் 523 மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே. இது, மேற்கூறியவற்றுள் ஒரு சாரனவற்றுக்குப் புறனடை.. (இ-ள்.) மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் அச்செய்யுளுட் கிடந்தவாறே அமையச் செய்யவும்பெறுஞ் செய்யுள் எ-று. எச்சமும் மாட்டும் என்னாது மாட்டு முற்கூறியதென்னை யெனின் எச்சம் முதலாகிய ஐந்து உறுப்பும் இவ்விதி பெறுமென்று எதிர்சென்று தழீஇயினானென்பது. உ-ம் : "வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையொடு என்னா யினள்கொ லென்னா தோரே" என்பது, எச்சமின்றி வந்தது. " தாமரை புரையுங் காமர் சேவடி." (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது, முன்னமின்றி வந்தது. " மருந்தெனின் மருந்தே" (குறுந் . 71) என்பது, பொருளின்றி வந்தது. " ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த" (அகம் 8) என்பது, துறைவகையின்றி வந்தது. " யானே யீண்டை யேனே" (குறுந். 54) என்பது, மாட்டின்றி வந்தது. இடைநின்ற மூன்றனை இலேசினாற் கொண்டு இரண்டனை எடுத்தோதினான். இவை இரண்டும் அவற்றது துணை இன்றியமையாச் சிறப்பினவல்ல என்றற் கென்பது. (211) வண்ணம் இருபது பகுதித்து ஆதல் 524. வண்ணந் தாமே நாலைந் தென்ப. இது, முறையானே ஈற்று நின்ற வண்ணம் இத்துணைப் பகுதித்து என்கின்றது. (இ-ள்.) வண்ணம் இருபது வகைப்படும் எ-று. வண்ணமென்பது, சந்தவேறுபாடு. நூறும் பலவுமாகி வேறுபடினும் அவை ஈண்டடங்குமென்பதூஉம்., அவ்வேறுபாடெல்லாஞ் சந்த வேற்றுமை செய்யாவென்பதூஉங் கூறியவாறு. அது நுண்ணுணர் வுடையார்க்குப் புலனாமென்பது. (212) இதுவுமது 525. அவைதாம், பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ண மியைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் மொரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் தூங்கல் வண்ணம் மேந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணம்என்று ஆங்கனம் மொழிப அறிந்திசி னோரே. இது, மேற்கூறப்பட்ட வண்ணங்களது பெயர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) மேற்சொல்லிய நாலைந்து வண்ணமும் இவ்விருபது பெயர் வேறுபாட்டின வென்று சொல்லுப, அவற்றை உணர்ந்த ஆசிரியர் எ-று. இது, முறையாயினவாறென்னையெனின், இது வரலாற்று முறைமை யென்றற்கு 'ஆங்ஙனம் மொழிப அறிந்திசினோ' ரென்றா னென்பது. அவை யாமாறு சொல்லுகின்றான். (213) பாஅ வண்ணம் 526. அவற்றுள், பாஅ வண்ணஞ் சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். இது, நிறுத்த முறையானே பாஅ வண்ண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாஅவண்ணமென்பது, நூற்பாவண்ணம் எ-று. எற்றுக்கு? ' நூற்பாற் பயிலு' மென்றமையின். இது சொற்சீரடித்தாகி வருமென்பது. இதனுட் 'பயிலு' மெனவே அந்நூற்பாவினுளல்லது அகவலுள் இத்துணைப் பயிலாதென்பது. இது " வடவேங்கடந் தென்குமரி" (தொல். பாயிரம்) எனவும், " எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப" (தொல். எழுத்து. நூன்.1) எனவும், " அவற்றுள், அஇஉ, எஒ என்னு மப்பா லைந்தும்" (தொல். எழுத். நூன். 3) எனவும் பயின்று வரும். " பெரியகட் பெறினே" (புறம். 235) என்பது சொற்சீராகி அகவலுட் பயிலாது வந்தது. சொற்சீரடி யென்னாது 'சொற்சீர்' என்றான் அடியொடு தொடராதுஞ் சொற்சீர் வருமாதலி னென்பது. அவை, " நன்றுபெரி தாகும்" (தொல். சொல். உரி. 45) என்றாற் போல வேறாகி நிற்பன. கலியுள்ளும் பரிபாடலுள்ளுஞ் சொற்சீர் வருமென மேற்கூறினா னாகலின் அவற்றுள்ளுஞ் சந்தவேற்றுமைப் பட்டன பாஅவண்ணமேயா மென்பது. (214) தாஅ வண்ணம் 527. தாஅ வண்ணம் இடையிட்டு வந்த வெதுகைத்து ஆகும். (இ-ள்.) இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் எ-று. அவை பொழிப்பும் ஒரூஉவு மாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது. அடி யிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவ தல்லது வண்ணவேற்றுமை யாகாதென்பது. ஒருசெய்யுளுட் பலஅடி வந்தால் அவைஎல்லாம் இடையிட்டுத் தொடுத்தல் வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅ வண்ணமெனப்படுமென்பது. எனவே, இவ்வண்ணவகைக ளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக் கிடந்தனவல்ல; இவற்றை உறுப்பென்ற தன்மையாற் கந்திருவ நூலார் வண்ணங் கூறியவாறு போல ஒரு செய்யுளுட் பலவும் வரப்பெறு மென்பதாம். அவை. " உலக முவப்ப வலனேர்பு திரிதரு" (முருகு. 1) எனவும், " உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை" (ஐங்குறு. பிற். 143) எனவும் வரும். பிறவும் அன்ன. (215) வல்லிசை வண்ணம் 528. வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். (இ-ள்.) வல்லிசைவண்ணம் வல்லெழுத்துப் பயின்று வரும் எ-று. வல்லெழுத்துப் பயின்று வருதலான் அப்பெயர்த்தாயிற்று. " முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்" (பட்டினப். 218) எனவும், " முட்டாட் டாமரைத் துஞ்சி" (முருகு. 73) எனவும் வரும். பிறவும் அன்ன. (216) மெல்லிசை வண்ணம் 529. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. (இ-ள்.) மெல்லெழுத்து மிகுவது மெல்லெழுத்து வண்ணம் எ-று. ஒரு செய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச்செய்தல் இன்னாதாதலின் இவை உறுப்பெனப்பட்டு இடையிட்டு வருமென்றா னென்பது. அவ்வாறு செய்யின் அவை மிறைக்கவி யெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும். " பொன்னி னன்ன புன்னைநுண் டாது" (யா. வி. மேற்.) என மெல்லெழுத்துப் பயின்றவாறு. (217) இயைபு வண்ணம் 530. இயைபு வண்ணம் மிடையெழுத்து மிகுமே. (இ-ள்.) இடையெழுத்து மிகுவது இயைபுவண்ணம் எ-று. " அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்" என இடையெழுத்து மிக்கு வந்தமையின் இயைபு வண்ணமாயிற்று. மென்மை வன்மைக்கு இடைநிகரவாகிய எழுத்தான் வருதலின் இயைபு வண்ண மென்றார் (218) அளபெடை வண்ணம் 531. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். (இ-ள்.) இரண்டளபெடையும் பயிலச் செய்வன அளபெடை வண்ணமாம் எ-று. " மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்" (அகம். 99) என்பது அளபெடைவண்ணம். " கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு. 352) என்பதும் அது. (219) நெடுஞ்சீர் வண்ணம் 532. நெடுஞ்சீர் வண்ண நெட்டெழுத்துப் பயிலும். (இ-ள்.) நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எ-று. அது, " மாவா ராதே மாவா ராதே." (புறம் . 273) என்பது. நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது. (220) குறுஞ்சீர் வண்ணம் இது எனல் 533. குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். (இ-ள்.) குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் எ-று. " குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (அகம். 4) என வரும். (221) சித்திர வண்ணம் 534. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே. (இ-ள்.) சித்திரவண்ணம் நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது (எ -று). அது, " சார னாட நீவர லாறே" என வரும். சித்திரவண்ணமென்பது பலவண்ணம் படச் செய்வதாகலின் அப்பெயர்த்தாயிற்று. (222) நலிபு வண்ணம் 535. நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். (இ-ள்.) ஆய்தம் பயின்று வருவது நலிபு வண்ணமாம் எ-று. அஃது, "அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை" (குறள். 178) எனவும், " னஃகான் றஃகா னான்க னுருபிற்கு" (தொல். எழுத். 123) எனவும் வரும். நலிபென்பது ஆய்தம். (223) அகப்பாட்டு வண்ணம் 536. அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. (இ-ள்.) அகப்பாட்டு வண்ணமென்பது இறுதியடி இடையடி போன்று நிற்பது எ-று. அவையாவன முடித்துக் காட்டும் ஈற்றசை ஏகாரத்தானன்றி, ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன. அவை :- " தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன" (தொல்.மர. 5)) எனவும், "உண்கண் பசப்ப தெவன்கொ லன்னாய்" (ஐங்குறு. 21) எனவும், "கோடுயர் வெண்மண லேறி யோடுகலன் எண்ணுந் துறைவன் றோழி" எனவும், " ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி" (கலி. கடவுள் வாழ்த்து) எனவும், " சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ." (அகம். 46) எனவும், இவை ஆசிரிய ஈற்றன. " குளிறு குரலருவிக் குன்றத் திதண்மேற் களிறு வருவது கண்டு- - வெளிலென்ன லாயினான் பின்னை யணங்கிற் குயிரளித்துப் போயினான் யாண்டையான் போன்ம்" என இதனுள் இறுதியடி முடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. " கொடி யுவணத் தவணரோ" எனக் கலிப்பாவுள் அரோ வந்து பின் முடியாத் தன்மையின் முடிந்தது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பனவற்றான் ஆசிரியம் இறுமென வரை யறுப்பா ருண்மையின், அவ்வச்சொல்லானே அவை முடிந்தன வென்று கொள்வலெனின், அங்ஙனம் வரையறையில வென்பது மேற் காட்டிய உதாரணங்களான் அறிந்தாமாகலின், அக்கடா வரையறுப்பார் மேற்றென விடுக்க. (224) புறப்பாட்டு வண்ணம் 537. புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். (இ-ள்.) புறப்பாட்டு வண்ணமென்பது, இறுதியடிப் புறத்ததாகவுந் தான் முடிந்தது போல நிற்றல் எ-று. " இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புறம். 363) என்புழி, ஈற்றயலடி 'முன்னிய வினையே' யென முடிந்தது போன்று முடியாதாயிற்று. (225) ஒழுகு வண்ணம் 538. ஒழுகு வண்ண மோசையி னொழுகும். (இ-ள்.) முற்கூறிய வகையானன்றி ஒழுகிய லோசையாற் செல்வது ஒழுகுவண்ணம் எ-று. ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறு வேறிலக்கணமுடையன என்பது. " அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவள்" (யா. வி. மேற். 638) என வரும். ஒரூஉ வண்ணம் 539. ஒரூஉ வண்ண மொரீஇத் தொடுக்கும். (இ-ள்.) யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன் றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉவண்ணம் எ-று. ஒரீஇத் தொடுத்த லென்பது எல்லாத் தொடையும் ஓரீஇய செந்தொடையான் தொடுத்தலென்பாரும் உளர். செந்தொடையுந் தொடையாகலான் அற்றன்றென்பது; அது, "யானே யீண்டை யேனே யென்னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே" (குறுந். 97) என வரும். " சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே" (புறம். 235) என்பதும் அது. யாப்புப் பொருணோக்கியவாறுபோல இது பொருணோக்காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது.(227) எண்ணு வண்ணம் 540. எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். (இ-ள்.) எண்ணுப் பயில்வது எண்ணுவண்ணம் (எ -று). இஃது, அடி யெண்ணுப் பயிறலான் எண்ணுவண்ணமெனக் காரணப்பெயராயிற்று. அவை, " நன்னன் ஏற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி" (அகம் . 44) என்றாற் போல்வன. " நுதலுந் தோளுந் திதலை யல்குலும்" (அகம் . 119) என்பதும் அது. (228) அகைப்பு வண்ணம் 541. அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். (இ-ள்.) அறுத்தறுத்துப் பயில்வது அகைப்பு வண்ணம் எ-று. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்பு வண்ணமென்னும் பெயர் பெற்றது. " வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி" (குறுந்.110) என்புழி, ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத் தொழுகிய அகைப்புவண்ணமாம். (229) தூங்கல் வண்ணம் 542. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். (இ-ள்.) தூங்கல்வண்ணந் தூங்கலோசைத்தாகி வருவது எ-று. வஞ்சி யென்பது வஞ்சித்தூக்குப் போல, இதுவும் அற்றுச் சேறலுடைத்தென்பது. அது. " யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான்" (முத்தொள். 104) என்ற நின்ற தொடர்நிலைக்கண்ணே அத்தூங்கல் கண்டுகொள்க. இக் கருத்தறியாதார் கலிப்பாவினுள் வஞ்சிப்பாப் பிறக்குமெனவும் வஞ்சியுட் கலிப்பாப் பிறக்குமெனவும் மயங்குப. (230) ஏந்தல் வண்ணம் 543. ஏந்தல் வண்ணஞ் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். (இ-ள்.) சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல்வண்ணம் எ-று. ஏந்தலென்பது, மிகுதல்; ஒரு சொல்லே மிக்கு வருதலின் ஏந்தல் வண்ண மென்றாயிற்று. அது, " வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்" (நாலடி. 3 : 9) எனவரும். (231) உருட்டு வண்ணம் 544. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும். (இ-ள்.) உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகந் தொடுப்பது உருட்டு வண்ணமாம் எ-று. " உருமுரறு கருவிய பெருமழை தலைஇய" (அகம். 158) எனவும், " எரியுரு வுறழ விலவ மலர" (கலி. 33) எனவும் வரும். இது நெகிழாது உருண்ட வோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டு வண்ணமெனப்படு மென்பது. (232) முடுகு வண்ணம் 545. முடுகு வண்ணம் அடியிறந்து ஓடி யதனோ ரற்றே. (இ-ள்.) முடுகுவண்ணமென்பது, நாற்சீரடியின் மிக்கு ஓரடி அராகத்தோ blh¡F« எ-று. அது, " நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும்" (கலி. 39) என வரும். இவற்றைக் கொச்சகம் அராகமெனவுஞ் சொற்சீரடியும் முடுகிய லடியுமெனவும் பரிபாடற்கு வேறுபடுத்தோதினான் இவ்வேறுபாடு நோக்கி யென்பது. (233) (ghl«) அராகந்தொடுத்த அடியொடு பிறஅடி தொடர்ந் தோடுவது. புறனடை 546. வண்ணந் தாமே யிவையென மொழிப. இது புறனடை. (இ-ள்.) வண்ணமென்பன சந்தமாதலான் அச்சந்த வேற்றுமை செய்வன இவையல்லதில்லை எ-று. எனவே, என் சொல்லப்பட்டதாம்? நான்கு பாவினோடும் இவற்றை வைத்துறழவும் அவை மயங்கிய பொதுப்பா இரண்டனொடும் உறழவும் நூற்றிருபதாகலும், உயிர்மெய் வருக்க மெல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் சில பெயர் நிறீஇ அவற்றான் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயி னும், இவ்விருபது வகையானல்லது சந்தவேற்றுமை விளங்காதென்பது கருத்து. (234) வனப்பினுள் அம்மை ஆமாறு 547. வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியான் தாய பனுவலோடு அம்மை தானே யடிநிமிர் பின்றே. இது தொகைச் சூத்திரத்துள், "ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்" (தொல். செய். 1) எனக் கூறுசெய்து நிறீஇப், பின்னர் எட்டுறுப்புக் கூறினானன்றே, இவை அவற்றோடொத்த இலக்கணத்த அன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஓதிய உறுப்பாகலானும் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெண்வகையும் பற்றித் தொடுக்கப்படுமெனக் கூறப்பட்ட தாகலானு மென்பது. இவற்றை வனப்பென்று கூறப்படுமாறென்னை? அச்சூத்திரத்துப் பெற்றிலமாலெனின், வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப் பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்பதென்பது. அஃதேல், இவ்வெட்டுந் தனிவருஞ் செய்யுட்கண் வந்தால் அழகு செய்யாவோ வெனின், அவை போல் இவை தனிவரும் செய்யுட்குமாகும் என்றற்கன்றே அவ்விருபத்தா றுறுப்போடும் இவற்றை ஓரினப்படுத்து ஓதியதென்பது. அஃது, இயைபிற் கொப்ப வாராதென்பது முன்னர்ச் (552) சொல்லுதும். இதனானே முன்னை யுறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பதூஉங் கொள்க. அல்லாக்கால், மாத்திரை முதலாகிய ஒரோவுறுப்பான் அழகு பிறவா தாகியே செல்லும், இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளினென்பது. இங்ஙனம் இருபத்தாறும் எட்டுமென வகுப்பவே அவை அகமென்பன, தனிநிலைச் செய்யுட்கு முற்கூறப்படா, இத்தொடர் நிலைச் செய்யுட்கு முற்கூறப்படுமென்பது. இனி, இவற்றைச் சூத்திரத்தான் வனப்பென்னுங் குறி யெய்துவிக்க வேண்டுவானாகச் சூத்திரத்தை, "வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின்" என்பது பாடமாக உரைத்தானென்க; அதுவும் அறிந்தவாறே கொள்க. (இ-ள்.) சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம்மையாம் எ-று. 'அடிநிமிராதெனவே, அம்மை யென்பது முழுவதும் ஒரு செய்யு ளாகல் வேண்டும்; வேண்டவே, அஃது உறுப்பன்றாகியே செல்லும்; அதனை உறுப்பெனல் வேண்டுமாதலான், அடிநிமிரா தெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளா மென்பது. சிலவாக வென்பது, எண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடி நிமிராதென்றது, ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாய பனுவலோடென்றது, அறம்பொருளின்பமென்னும் மூன்றற் கும் இலக்கணஞ் சொல்லுவ (போன்று) வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச் செல்வதென்றவாறு, அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள், இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம்பொருளின்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறுங் அவ்வாறன்றிக் கார்நாற்பது, களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டுகொள்க. "பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல்" (குறள். 675) என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான். "மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று" (குறள். 1112) என இஃது இலக்கியமாகலாற் றாய பனுவ லெனப்பட்டது. இவை தனித்து வரினும் அவ் வனப்பெனப்படும்; தாவுதலென்பது, இடையிடுதல். இவ்விருவகையுஞ் செய்யுளெனப்படும். அம்மையென்பது, குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்றாயிற்று. அதனுள் உறுப்பாகிய பாட்டுக்கடோறும் மாத்திரையுறுப்பு முதலாகிய உறுப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும், இவ்வனப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும் அறிந்துகொள்க. (235) அழகு ஆமாறு 548. செய்யுள் மொழியான் சீர்புனைந்து யாப்பின் அவ்வகை தானே யழகெனப் படுமே. இஃது, இரண்டா மெண்ணுமுறைமைக்க ணின்ற அழகுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தெரிசொற் பயிலாது செய்யுளுட் பயின்று வரும் மொழிக ளாற் சீரறுத்துப் பொலிவுபட யாப்பின், அப்பொருள் அழகு எ-று. 'அவ்வகை' யென்றதனான் அவை வேறுவேறு வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றவாறு. அவையாவன: நெடுந்தொகை முதலாகிய தொகையெட்டு மென்றவாறு. அழகு செய்யுண்மொழி யென்ற தென்னை யெனின், அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழி யானே, இடைச்சங்கத்தாருங் கடைச்சங்கத்தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார். இக்காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடிமுப்பது முதலாயின அம்மை யெனப்படுமோ அழகெனப்படுமோ வெனின், தாய பனுவலின்மையின் அம்மை யெனப்படா வென்பது. இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்றவகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். (236) தொன்மை ஆமாறு 549. தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. இது, தொன்மை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொன்மையென்பது உரை விராஅய்ப் பழமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது எ-று. அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. (237) தோல் ஆமாறு 550. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்மொழிப் புலவர். இது, முறையானே தோலென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்: கொச்சகக்கலியானும் ஆசிரியத்தானுஞ் செய்யப் படுவன. "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது." என்றவழித் தேவபாணியும் காமமும் பொருளாகவன்றியுங் கொச்சகக் கலி வருமென்றானாகலான், அவைமேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது. (இ-ள்.) இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் - மெல் லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச் செய்வன. அவை செய்த காலத்துள்ளன கண்டிலம்; பிற்காலத்து வந்தன கண்டுகொள்க. பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் - ஆசிரியப்பாட்டான் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்டன; அவை பொருட்டொடர்நிலை. தோல் என மொழிப தொன்மொழிப் புலவர் - தோலென்று சொல்லுப புலவர் எ-று. 'தொன்மொழி'யென்றார், பழைய கதையைச் செய்தல் பற்றி. இது முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும். (238) விருந்து ஆமாறு 551. விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. (இ-ள்.) விருந்துதானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலை மேற்று எ-று. 'தானு' மென்ற உம்மையான், முன்னைத் தோலெனப்பட்டதூஉம் பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறந்தது தழீஇயினானென்பது. 'புதுவது கிளந்த யாப்பின் மேற்று' என்றதென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப. (239) இயைபு ஆமாறு 552. ஞகாரை முதலா னகாரை யீற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே. இஃது, இயைபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள வென்னும் பதினொரு புள்ளி யீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யுஞ் செய்யுள் பொருட்டொடராக வுஞ், சொற்றொடராகவுஞ் செய்வது இயைபெனப்படும் எ-று. இயைபு என்றதனானே பொருளும் இயைந்து, சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேக லையுங் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச்செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக் கும் ஈண்டிலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தனபோலும். பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகிய தோலோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அவை உயிரீற்றவாதல் பெரும்பான்மை யாகலான் வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலுமுடைய வென்பது. சொற்றொடரென்பது, அந்தாதி யெனப்படுவது; என்றதனான், உயிரீற்றுச் சொற்றொடர் சிறுபான்மை யென்பது கொள்க. (240) புலன் ஆமாறு 553. சேரி மொழியான் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. இது, புலனாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சேரிமொழி யென்பது பாடிமாற்றங்கள். அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் எ-று. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க. (241) இழைபு ஆமாறு 554. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது குறளடி முதலா வைந்தடி யொப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். இஃது, இறுதி நின்ற இழைபிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது - ஒற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாது; குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து - இருசீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து; ஒப்பித்த லென்பது, பெரும்பான்மையான் நாற்சீரடியாகப் பகுக்கப்பட்டென்ற வாறு; ஓங்கிய மொழியான் - நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப் போல் ஓசை எழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல்லான்; ஆங்ஙனம் ஒழுகின் - இவையும், "சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது" (513) பொருள் புலப்படச் சென்று நடப்பின்; இழைபின் இலக்கணம் இயைந்த தாகும் - இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது எ-று. அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன வென்பது. இவற்றுக்குக் காரணந் 'தேர்தல் வேண்டாது, பொருள் இனிது விளங்கல் வேண்டுமென்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி யென்பது. மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்குமுன் வைப்பினென்னெனின், இஃதிசைப்பாட்டாகலின் இனி வருகின்றது இசைத்தமிழாகலின் அதற்குபகாரப்பட இதனை இறுதிக்கண் வைத்தா னென்பது. (242) ஓத்துப் புறனடை 555. செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த விலக்கணம் பிழைத்தன போல வருவஉள எனினும் வந்தவற்று இயலான் திரிவின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே. இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) செய்யுளிடத்துப் பொருள் பெற ஆராய்ந்து தந்திரம் செய்யப்பட்ட இலக்கணத்தின் வழீஇயின போன்று பின் தோன்றுவன வுளவேல் முற்கூறப்பட்ட இலக்கணத்தொடு திரியாமல் முடித்துக்கோடல் அறிவுடையோரது கடன் எ-று. அவை எண்சீர் முதலாயின வரிற் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும், ஏது நுதலிய முதுமொழியொடு, பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர்பு படுப்பனவும் யாப்பென்னும் உறுப்பின்பாற் கோடலும், பிறவும் ஈண்டோதாதன உளவெனின் அவையுமெல்லாஞ் செய்யுளிலக்கண முடிபாகு மென்றவாறு. (243) செய்யுளியல் முற்றிற்று. 9 மரபியல் மரபு பற்றி வரும் இளமைப்பெயர் 556. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று ஒன்பதுங் குழவியோடு இளைமைப் பெயரே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், மரபிய லென்னும் பெயர்த்து. இதனானே ஓத்து நுதலியதூஉம் மரபு உணர்த்துத லென்பது பெற்றாம். மரபென்ற பொருண்மை என்னையெனின், கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலுள் (செய்யுளியல் 1-உரை.) மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி, இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவைபற்றிவரும் உலகியல் மரபும், நூன்மரபுமென இவையெல்லாம் மரபெனப்படுமென்பது. மற்றுப் பொருள்களின் இளமைபற்றி வரும் மரபு கூறினான், மூப்புப்பற்றி வரும் மரபு கூறானோவெனின், - அது வரையறை யின்மையிற் கூறானென்பது. மற்று, மேலை ஓத்தினோடு இவ்வோத்திடை இயைபென்னை யெனின், முன்னர் வழக்கிலக்கணங் கூறியதன்பின் செய்யுளிலக்கணம் செய்யுளியலுட் கூறினான், அவ்விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயைபு உடைத்தாயிற்று. மற்று, வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இங்ஙனம் இரண்டற்கும் பொதுவாகிய மரபினையும் செய்யுளியலின்முன் வைக்க வெனின், - அவ்வாறு வழக்கும் செய்யுளுமென்ற இரண்டுமல்லாத நூலிற் கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வோத்தின் முதற்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் எல்லாப் பொருளின்கண்ணும் இளமைக்குணம்பற்றி நிகழுஞ் சொல் இவையென்று வரையறுத்துக் கூறுகின்றது. (இ-ள்.) மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் - விலக்கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணங்கூறின்; பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப்பெயர் - குழவியோடு இவையொன்பதும் இளமைப்பெயர் எ-று. மேலன எட்டுங் குழவியுமென இளமைப்பெயர் ஒன்பதாயின. குழவியோடொன்பதென்னாது 'ஒன்பதுங் குழவியோ' டென மயங்கக் கூறியதனாற் போத்தென்பதும் இளமைப்பெயரெனவும் பிறவும் வருவன உளவாயினுங் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல்வரையறுத்து இன்ன பொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது சொல்லுதும். "மாற்றருஞ் சிறப்பின்" என்றதனானே, இவை ஒருதலையாகத் தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படுமென்பதூஉம், ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடு பட்ட மரபு பிறழவும் செய்யுளின்பம் படின் அவ்வாறு செய்பவென்பதூஉங் கூறியவாறாயிற்று. அவை, "அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி" (பெரும்பாண். 1, 2) எனவும், "நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது சிறப்பே" (நற். 172) எனவும் வரும். அவற்றுள் பரிதியஞ் செல்வனைப் 'பருகும்' 'காலும்' என்றலும், புன்னைமரத்தினை 'நுவ்வை'யென்றலும் மரபன்மையின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியவாமென்பது கருத்து. "நிலவுக் குவித்தன்ன வெண்மணல்" (குறுந். 123) எனவும், "இருடுணிந் தன்ன வேனங் காணின்" (மலைபடு. 247) எனவும், "இருள்நூற் றன்ன விரும்பல் கூந்தல்" எனவும் வருவனவும் அவை. (1) மரபு பற்றி வரும் ஆண்பாற்பெயர் 557. ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறுஞ் சேவும் சேவலும் இரலையும் கலையும் மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிப. (இ-ள்.) ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் எ-று. 'பிறவும்' என்றதனான் ஆணென்றும் விடையென்றும் வருவன போல்வனவுங் கொள்க. இவற்றை வரையறை கூறும்வழி (589 - 605.) உதாரணங் காட்டுதும். 'யாத்த ஆண்பாற்பெயர்' என்றதனாற் போத்தென்பது இளமைப்பெயரா மாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது அதற்கென்பது கொள்க. (2) மரபு பற்றி வரும் பெண்பாற் பெயர் 558. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடூம் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. (இ-ள்.) கூறப்பட்ட பதின்மூன்று பெயரும் பெண்மைப் பெயர் எ-று. கடமையென்பதொரு சாதிப்பெயர் உண்டேனும் அதுவன்று, ஈண்டெண்ணப்பட்டது பெண்மை மேற்றென்று கொள்க. 'அந்தஞ் சான்ற' என்பது, முடிபமைந்தன இவை யென்றவாறு. எனவே, ஆ என்பது பெண் பெயராதலும் பெண் ஆணென்பன ஒருசார் புல்லிற்கும் நேர்தலுங் கொள்க; என்னை? ஆனேறென்பது ஆவினுள் ஏறெனப்படுதலின், ஆவென்பது ஆண்பாற்கும் பொதுவாகலின் அது முடிபமையாதெனப்பட்டது. அது மேற்காட்டுதும். ஆண்மை பெண்மை புல்லிற்கின்மையின் அவையும் முடிபுடையன ஆகாவாயினுங் காயாப் பனையை ஆண்பனை யென்றுங் காய்ப்பன வற்றைப் பெண்பனை யென்றும் வழங்குப. இவையெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்துகொள்ளப்படும். இவற்றுக்கு மேல் வரையறை கூறும்வழி (நூற்பா 606- 22) உதாரணங் காட்டுதும். (3) இளமைப்பெயருள் பார்ப்பும் பிள்ளையும் 559. அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. இது, நிறுத்த முறையானே இளைமைப்பெயருள் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமை கண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது. (இ-ள்.) இவ்விரண்டும் புள்ளிளமைக்குரிய எ-று. இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலிற் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; அல்லன வழக்கின்மேற் காட்டுதும். 1"மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு" (அகம். 31) எனவும், 2"இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்" (குறுந். 46) எனவும், 3"பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு" (குறுந். 139) எனவும் இவை 1 பருந்தும் 2 ஊர்க்குருவியும் 3 கிளியுமென்னும் பறவைமேல் வந்தன. பிறவும் அன்ன. புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் அடங்கிய மரபு எத்துணையும் பலவாதல் நோக்கி முதற் சூத்திரத்துட் பார்ப்பினை முற்கூறினானென்பது. (4) இதுவுமது 560. தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன. (இ-ள்.) பார்ப்பும் பிள்ளையுந் தவழ்பவற்றிற்கும் உரிய எ-று. அவை, ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலாயின. ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தியங்குங்கால் தவழ்பவை யெனப்படும். உ-ம் : "யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே" (குறுந். 152) எனவும், "தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை" (ஐங்குறு. 41) எனவும், "தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர்" (ஐங்குறு. 24) எனவும் வரும். 'தாமும்' என்றதனான் ஊர்வன நடப்பனவுஞ் சிறுபான்மை பிள்ளைப்பெயர்க்கு உரியன கொள்க. அது, பிள்ளைப்பாம்பென ஊர்வன மேல் வந்தது. "பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி" (குறுந். 107) என நடப்பனமேல் வந்தது. 'மூங்காப்பிள்ளை' என்பதும் ஈண்டே கொள்ளப்படும். பார்ப்பும் அவ்வாறே வருவன உளவேற் கொள்க. இதுவுந் தவழுஞ் சாதிக்கெல்லாம் பொதுவாகிய பரப்புடைமையின் இரண்டாவது வைத்தானென்பது. (5) குட்டி என்னும் பெயர்க்கு உரியன 561. மூங்கா வெருகுஎலி மூவரி யணிலோடு ஆங்கவை நான்குங் குட்டிக் குரிய. இது, மேல் எடுத்தோத்தானும் இலேசானும் அதிகாரப்பட்ட தவழ்வனவும் நடப்பனவும் பற்றிக் குட்டியென்னும் பெயரினையும் முறையன்றிக் கூறுகின்றது. (இ-ள்.) குட்டியெனப்படுவன இவை நான்கும் எ-று. அவை, மூங்காக்குட்டி, வெருக்குக்குட்டி, எலிக்குட்டி, அணிற் குட்டியெனவரும். 'மூவரி யணி' லென்றதனான் ஒழிந்த மூன்றுந் தம்முள் ஒரு பிறப்பினவாம். இவை ஒருநிகரனவே என்பது கொள்க. 'ஆங்கவை நான்கும்' என்றதனால் தத்துவனவற்றுக்கும் குட்டிப் பெயர் கொடுக்கப்படும்; தவளைக்குட்டி யெனவரும். மேல் ஊர்வனவற் றுக்குந் தவழ்வனவற்றிலக்கணம் எய்துவித்தமையாற் பாம்புக்குட்டி யென்பதுங் கொள்க. மற்றுக் கீரியும் நாவியும் போல்பவற்றையுங் குட்டியென்னாரோ வெனின், என்னார், அவற்றைப் பிள்ளையென்றலே பெரும்பான்மையாக லின். 'உரிய' வென்றதனாற் சிறுபான்மை குட்டியென்பதுங் கொள்க. மூங்காவின் விகற்பமென்பாரு முளர். (6) பறழ் என்னும் பெயர்க்கு உரியன 562. பறழெனப் படினும் உறழ்ஆண் டில்லை. (இ-ள்.) மேற்கூறிய நான்கும் பறழெனவும்படும் எ-று. இவை இக்காலத்து வீழ்ந்தன. மற்று முற்கூறிய நான்கினையும் இப்பெயரானே முற்கூறுக, முதற்சூத்திரத்துள் ஓதிய முறைமைக் கேற்பவெனின்,- அற்றன்று; அவற்றுக்கு இப்பெயர் சிறுபான்மை யென்பான் பிற்கூறினானென்பது. 'உறழாண்டில்லை'யென்ற மிகையானே, "கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி" (குறுந். 69) என்பதுங் கொள்க. (7) குருளை என்னும் பெயர்க்கு உரியன 563. நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப. இது, முறையானே நான்காம் எண்ணு முறைமைக்கணின்ற குருளையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாயும் பன்றியும் புலியும் முயலும் என நான்குங் குருளை யென்று சொல்லப்படும் எ-று. "திறவாக் கண்ண சாய்செவிக் குருளை" (சிறுபாண். 130) எனவும், "விழியாக் குருளை மென்முலை சுவைப்பக் குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி" எனவும், "இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை" (குறுந். 47) எனவும், "குருளை கோட்பட லஞ்சிக் குறுமுயல் வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப" எனவும் வரும். 'ஆயுங்காலை' யென்றதனால், "சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை" (குறுந். 119) என்பதுங் கொள்க (8) இதுவுமது 564. நரியு மற்றே நாடினர் கொளினே. (இ-ள்.) நரியுங் குருளையெனப்படும் எ-று. "பிணந்தின் பெண்டிர்க்குக் குருளை காட்டிப் புறங்காட் டோரி புலவுத்தசை பெறூஉம்" எனவரும். 'நாடினர் கொளினே' யென்றதனானே, "வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங் குன்ற நாடன் கேண்மை" (குறுந். 38) என்றாற்போல முசுவிற்குங் குருளைப்பெயர் கொடுக்க. (9) மேற்கூறியவற்றிற்குக் குட்டியும் பறமும் உரியவாதல் 565. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். (இ-ள்.) மேற்கூறிய ஐந்தனையுங் குட்டியென்றும் பறழென்றுங் கூறுதல் வரையார் எ-று. அவை 1 நாய்க்குட்டி 2 பன்றிக்குட்டி 3 புலிக்குட்டி 4 முயற்குட்டி 5நரிக்குட்டி என வழக்கினுள் வந்தன. "பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய்" (அகம். 336) எனவும், "வயநா யெறிந்து வன்பறழ் தழீஇ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தறுகட் பன்றி" (அகம். 248) எனவும், "புலிப்பற ழன்ன பூஞ்சினை வேங்கை" எனவும், "பதவுமேயல் பற்றி முயற்பற ழோம்புஞ் சீறூ ரோளே நன்னுதல்" எனவும், "நரிப்பறழ் கவர நாய்முதல் சுரக்கும்" எனவும் முறையானே வந்தன. நாயெனச் செந்நாய் நீர்நாய் முதலாயினவும் அடங்குமென்பது. 'மூவரியணி' லென்றவழிச் (561) சொல்லப்பட்டவாறும் உய்த்துணர்க. பிறவும் அன்ன. (10) மேற்கூறியவற்றுள் நாய் ஒழிய நான்கற்கும் பிள்ளையும் உரித்தாதல் 566. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. (இ-ள்.) மேற்கூறிய ஐந்து சாதியுள்ளும் நாயொழித்து ஒழிந்த நான்கற்கும் பிள்ளையென்னும் பெயர்க்கொடையும் உரித்து எ-று. இவை செய்யுட்கண் வருவன கண்டுகொள்க. 'கொள்ளுங்காலை' யென்றதனான் முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி நரிப்பிள்ளை யென்பதே கோடலும் ஒன்று. (11) மறி என்ற பெயர் உரிமை 567. யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே. (இ-ள்.) இவ்வைந்து சாதியின் இளமைப் பெயர் மறியெனப்படும் எ-று. அவை, "மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்" (அகம். 94) எனவும், "உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி" (அகம். 104) எனவும் யாட்டின்மேல் வந்தன. மறிக்குதிரையெனவும் மறி நூக்கிற்றெனவுஞ் சொல்லுதலின் இது குதிரைக்கும் உரித்தாயிற்று. "நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும்" (குறுந். 282) எனவும், "மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித் தெள்ளறல் தழீஇய . . . . . . " (அகம். 34) எனவும், "தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி" (குறுந். 213) எனவும் இவை, நவ்வியும் உழையும் புல்வாயும் முறையானே மறியென்னும் பெயர் எய்தியவாறு அவ்வச்செய்யுளுட் கண்டு கொள்க. நவ்வியும் உழையும் புல்வாயுள் அடங்குமன்றே? அவற்றை மூன்றாக ஓதியதென்னை? நாயென்றதுபோல அடங்காதோவெனின், மானென்பது, குதிரையும் யானையும் புலியுஞ் சிங்கமும் முதலாயவற்றுக்கெல்லாம் பெயராகலின் அவ்வாறு ஓதானென்பது. 'ஓடும் புல்வா'யென்றதனானே மடனடையன நவ்வியெனவும் இடைநிகரன உழையெனவுங் கொள்க. எட்டாம் முறைமைக்கண் ஓதிய மறியினை ஐந்தாம்வழிக் கூறியதனானே, "செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி" (குறுந். 187) என்றது போல்வன கொள்க. (12) குட்டி என்ற பெயர் உரிமை 568. கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப. (இ-ள்.) கோட்டினையே வாழ்க்கையாகவுடைய குரங்குங் குட்டியென்று கூறப்படும் எ-று. 'கோடுவாழ் குரங்கு' எனவே குரங்கின் பிறப்புப் பகுதியெல்லாங் கொள்க. அவை குரங்குக்குட்டி முசுக்குட்டி ஊகக் குட்டியென்பன. உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் மேற்கூறிய யாடு முதலாகிய ஐந்துசாதிக்குங் குட்டியென்னும் பெயர் கூறப்படுமென்பது. அவை யாட்டுக்குட்டி குதிரைக் குட்டி நவ்விக்குட்டி உழைமான்குட்டி புல்வாய்க்குட்டி எனவரும், (13) குரங்கிற்குப் பிற இளமைப்பெயரும் உரிமை 569. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன வப்பா லான. (இ-ள்.) மேலைச் சூத்திரத்தெடுத்தோதிய குரங்கிற்குக் குட்டியென் னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர் போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம் எ-று. . . . . . . . . . . . . . "உயர்கோட்டு, மகவுடை மந்தி போல" (குறுந். 29) எனவும், "குரங்குப் பிள்ளை" எனவும், "வரையாடு வன்பறழ்த் தந்தை" (குறுந். 26) எனவும், "ஏற்பன வேற்பன வுண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே" (குறுந். 278) எனவும் வரும். 'அன்ன' வென்பதனான் முன்னையவற்றோடொக்கும்; மிகுதி குறைவு இலவென்பதாம். "வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்" (குறுந். 38) என (564) இலேசினாற் கொள்ளுமாறுகூறிப்போந்தமையின் ஈண்டு அது கூறானாயினான்; அன்றி, அஃது இத்துணைப் பயிலாமையானுமென்க. ஏழாமுறை நின்ற மகவினை ஈண்டு வைத்தான், அதிகாரப்பட்ட பெயர்க் குரிமையானென்பது. (14) கன்று என்ற பெயர்க்கு உரிமை 570. யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் ஆனோடு ஐந்துங் கன்றெனற் குரிய. (இ-ள்.) ஐந்தாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற கன்றென்னும் பெயர்க்கு இவை உரிய எ-று. அவை, யானைக்கன்று குதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக் கன்று ஆன்கன்று என வரும். "கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும்" (அகம். 68) என்பது, யானைக்கன்று. "கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி" (அகம். 9) என்பது ஆன்கன்று, பிறவும் அன்ன உளவேற் கொள்க. இனி, உரியவென்ற தனானே மான்கன்று குதிரைக்குட்டி யென்பனவுஞ் சொல்லுப. (15) இதுவுமது 571. எருமையும் மரையும் வரையா ராண்டே. (இ-ள்.) எருமையும் மரையுங் கன்றெனப்படும் எ-று. அவை, எருமைக்கன்று, மரையான்கன்று என்பன வழக்கு. "கன்றுடை மரையா துஞ்சும்" (குறுந். 115) "கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குன்ற நாடற் கண்டவெங் கண்ணே" (குறுந். 241) எனவரும். 'வரையா' ரெனவே அவையெல்லாம்போலாது இவை சிறுவரவின என்பது பெற்றாம். (16) இதுவுமது 572. கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே. இஃது. அவற்றொடு மாட்டெறிந்தது. (இ-ள்.) கவரியுங் கராமுங் கன்றெனப்படும் எ-று. கவரிமான்கன்று கராக்கன்று எனவரும். 'அவற்றுள்ளே' யென்பது முற்கூறிய ஏழனுள் முதனின்ற யானையோடொக்கு மென்றவாறு. இதன் பயம், "குஞ்சரம் பெறுமே குழுவிப் பெயர்க்கொடை" (தொல். மர. 19) என வருகின்ற பெயரும் இவற்றுக் கெய்துவித்தலாயிற்று. அது முன்னர்ச் சொல்லும். இவையெல்லாந் தம்மினொத்த வரவின அன்மையின் வேறுவேறு சூத்திரஞ் செய்கின்றவாறாயிற்று. (17) இதுவுமது 573. ஒட்டக மவற்றோடு ஒருவழி நிலையும். (இ-ள்.) சிறுபான்மை ஒட்டகமுங் கன்றெனப்படும் எ-று. அஃது, ஒட்டகக்கன்று எனவரும். 'ஒருவழி'யென்றதனானே, எவற்றினும் இது சிறுபான்மை யெனவுணர்க. (18) குழவிப்பெயர்க்கு உரிமை 574. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. (இ-ள்.) ஒழிந்துநின்ற குழவிப்பெயர் குஞ்சரத்திற்கு உரியது எ-று. அது, "ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி" (அகம். 165) எனவரும். நிகரவற்றுள்ளென மேற் குஞ்சரத்தோடொக்கு மெனப்பட்ட கராத்தின் குழவியுங் கவரிக் குழவியும் வந்தவழிக் கண்டுகொள்க (19) 575. ஆவும் எருமையும் அவைசொலப் படுமே. (இ-ள்.) ஆவும் எருமையும் அவைபோலக் குழவிப் பெயர்க் கொடைபெறும் எ-று. குஞ்சரம், ஆணும்பெண்ணுமென இருகூற்றனவாகலான் 'அவை' யென்றான். மக்கள்மேல் வருங்காலும் இஃதொக்கும். "மடக்கட் குழவி யணவந் தன்ன நோயே மாகுத லறிந்துஞ் சேயர் தோழி சேய்நாட் டோரே" (குறுந். 64) என்பது ஆன்குழவி. "மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழற் றுயில்வதியும்" (பட்டினப். 14) என்பது, எருமைக்குழவி. (20) இதுவுமது 576. கடமையும் மரையும் முதனிலை யொன்றும். (இ-ள்.) இவையும் அப்பெயர்க்கு உரிய எ-று. குஞ்சரம்போலக் குழவிப்பெயர் பெறுமென்பான் 'முதனிலை யொன்று'மென்றானென்பது. அவை வந்துழிக் கண்டு கொள்க. (21) இதுவுமது 577. குரங்கு முசுவும் ஊகமும் மூன்றும் நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய. (இ-ள்.) இம்மூன்றுங் குழவியென்னும் பெயர்க்கு உரிய எ-று. 'நிரம்ப நாடின்' என்பது, மூன்றுபெயரும் ஒருபிறப்பின் பகுதியாக லின் அம்மூன்றற்கும் ஒப்பவருமென்றவாறு. இக்கருத்தானே "கோடுவாழ் குரங்கு" (தொல். மர. 13) என்றவழி இம்மூன்றுங் கொண்டாமென்பது. இவற்றுக்கு உதாரணங் காணா மையிற் காட்டாமாயினாம். இலக்கணம் உண்மையின் அமையு மென்பது. (22) மக்கட்கு உரியன 578. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே. (இ-ள்.) குழவியும் மகவுமென்னும் இரண்டுமல்லது மக்கட்கணின்ற இளமை தமக்கு வேறுபெயருடையவல்ல. எ-று. ஆணிளமையும்பெண்ணிளமையுமென இரண்டாகலின் 'அல்லவை' யெனப் பன்மை கூறினான். "காவல், குழவி கொள்பவரி னோம்புமதி" (புறம். 5) எனவும், "மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி" (பெரும்பாண். 89) எனவும் வரும். 'கிழவ வல்ல' என்ற மிகையானே, ஆண்பிள்ளை பெண்பிள்ளை யெனப் பிள்ளைப்பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க. (23) ஓரறிவுயிர்க்கு உரியன 579. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே. (இ-ள்.) பிள்ளை குழவி கன்று போத்தென்னும் நான்கும் ஓரறி வுயிரின் இளைமைப்பெயர் எ-று. ஓரறிவுயிரென்பன முன்னர்ச் (583) சொல்லப்படும் ஓரறி வுயிரென்பது, பண்புத்தொகை. 'கமுகம்பிள்ளை' 'தெங்கம்பிள்ளை' எனவும், "வீழி றாழைக் குழவித் தீநீர்" (பெரும்பாண். 357) எனவும், 'பூங்கன்று' எனவும், 'போத்துக்கால்' எனவும் வரும். வீழிறாழை யெனப்பட்டது தெங்கு. போத்துக்காலென்பது கரும்பு. ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும். அவை, 'குழவிவேனில்' (கலி. 36) எனவும், 'குழவித்திங்கள்' (கலி. 103, சிலப். 2: 38) எனவும், 'குழவிஞாயிறு' (பெருங். 1: 33: 29) எனவும், "பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்து" (அகம். 36) எனவும், "புலிப்போத் தன்ன புல்லணற் காளை" (பெரும்பாண். 138) எனவும் இவையும் இளமைக்குறிப்பினவாகலிற் காணப்பட்டன. மற்று, ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியதென்னையெனின், குழவிப் பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும் மரனும் உயிரெனப் படுமோவெனின், - அவற்றை யுயிரென்றல் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், 'மரம் உய்ந்த'தென்பவாகலின். (24) நெல்லும் புல்லும் அவை பெறாமை 580. நெல்லும் புல்லும் நேரா ராண்டே. இஃது, எய்தியது விலக்குகின்றது. (இ-ள்.) அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல்லப்படா எ-று. மற்றுப், "புறக்கா ழனவே புல்லென மொழிப" (தொல். மர. 85) எனுமாகலான், மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும் பிறவெனின்,-அற்றன்று; புல்லென்பது பல பொருளொரு சொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் புல்லென்பது (புறம். 248) உணவின்மேற்கொள்க. (25) இளமைக்குப் புறனடை 581. சொல்லிய மரபின் இளைமை தானே சொல்லுங் காலை அவையல விலவே. இது, புறனடைச் சூத்திரம். (இ-ள்.) சொல்லிய மரபின் இளைமை- "பாடலுட் பயின்றவை நாடுங் காலை" (தொல். அகத். 3) எனவும், "பாடல் சான்ற புலனெறி வழக்கு" (தொல். அகத். 53) எனவும், அகத்திணையியலுட் கூறிய புலனெறி வழக்கிற்றாகிய இளமை; சொல்லுங்காலை அவையல இல- அவற்றுக்கு இலக்கணங் கூறுங் கால், வேறு பலவின்றி வரும், இங்ஙனம் வரையறைப்பட்டன அன்றி எ-று. 'இளமையும் அவையல இல'வெனவே, அதற்கு மறுதலையாகிய முதுமையாயின், அவையலதிலவென்பதொரு வரையறைப்படுத்து அவை இலக்கணங் கூறப்படாவென்பது கருத்து. 'சொல்லுங்காலை' யென்றதனாற் சொல்லாத இளமைப் பெயருங் கொள்க. அவை, "நன்னாட் பூத்த நாகிள வேங்கை" (அகம். 85) எனவும், "நாகிளவளை" (புறம். 266) எனவும், "கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு (குறுந். 164) எனவும், "எருமை நல்லான் கருநாகு பெறூஉம்" (பெரும்பாண். 165) எனவும் வரும். இவற்றுள் ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிரளவும் நாகென் னும் இளைமைப்பெயர் வரையறையின்றிச் சென்றது; வண்டென்பதற்கும் ஒக்கும், அது விரவுப் பெயராகலின். (26) ஓரறிவு முதலியன 582. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே யிரண்டறி வதுவே அதனொடு நாவே. மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே யைந்தறி வதுவே அவற்றொடு செவியே யாறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. இது, மேல் அதிகாரப்பட்ட ஓரறிவுயிர் உணர்த்தும்வழி அவ்வினத் தனவெல்லாங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றறிவதென்பது ஒன்றனையறிவது; அஃதாவது உற்றறிவ தென்பதும்: இரண்டறிவதென்பது அம்மெய்யுணர்வினொடு நாவுணர் வுடையதெனவும், மூன்றறிவுடையது அவற்றொடு நாற்றவுணர்வுடைய தெனவும், நான்கறிவுடையது அவற்றொடு கண்ணுணர்வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற்றொடு செவியுணர் வுடையதெனவும், ஆறறிவுடை யது அவற்றொடு மனவுணர்வுடையதெனவும், அம்முறையானே நுண்ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் எ-று. இது முறையாதற்குக் காரணமென்னையெனின்,-எண்ணுமுறையாற் கூறினானென்பது; அல்லதூஉம், எல்லா உயிர்க்கும் இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுகளென்றற்கு அம்முறையாற் கூறினானென்பது. என்னை அது பெறுமாறெனின்,- நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தினரென்பதனாற் பெறுதும். மற்று, ஒன்றுமுதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியதென்னையெனின், - ஓரறிவுயிர்க்கு மனமின்மையின் அங்ஙனங் கூறினாரென்பது. அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோவெனின்,- உயிருடையவாகிய நந்து முதலாகியவற்றுக்குச் செவி முதலாய பொறியின்மை கண்டிலையோவென்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மனவுணர்வில்லை யென்பாரும் மனமுண்டென்பாரு மென இருபகுதியர். அவையெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. அல்லதூஉம் பொறியுணர்வென்ப தாமே உணரும் உணர்ச்சி; அங்ஙனம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ்சென்று கொள்ளு மென்பதென்னையெனின்,- மனம் ஒன்றனை நினையாநிற்க மற்றொன்று கட்புலனாயக்கால் அதனைப் பொறியுணர்வுகொள்ள அதன்வழியே மனந்திரிந்து செல்லுமாகலின்; என்னை? மனனுணர்வு மற்றொரு பொருட்கண் நின்றகாலத்துப் பிறபொருட்கட் சென்றதெனப் படாதன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர்வாகலான் அவை தம்மின் வேற்றுமையுடையன வென்பது. அல்லதூஉந் தேனெய்யினை நாவின்பொறி உணர்ந்தவழி இன்புற்றுங், கண்ணுள் வார்த்து மெய்யுணர்வுணர்ந்தவழித் துன்புற்றும், நறிதாயின மான்மதத்தினை மூக்குணர்வுணர்ந்தவழி இன்புற்றுங், கண்ணுணர்வுணர்ந்தவழி இன்பங்கொள்ளாமையும் வருதலின் அவை பொறியுணர்வெனப்படும். மனவுணர்வும் ஒருதன்மைத்தாதல் வேண்டுமா லெனின், - ஐயுணர்வின்றிக் கனாப்போலத் தானே யுணர்வது மனவுணர் வெனப்படும். பொறியுணர்வு மனமின்றிப் பிறவாதெனின்,-முற்பிறந்தது மனவுணர்வாமாகவே பொறியுணர்வென்பது ஓரறிவின்றாகியே செல்லு மென்பது. அற்றன்றியும், ஒருவனுறுப்பிரண்டு தீண்டியவழி அவ்விரண்டும் படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப்பிரண்டற் கும் ஊற்றுணர்வு கெடாது கவர்ப்ப வாங்கிக் கைக்கொண்டு மீளு மென்பது காட்டலாகாமையானும் அஃதமையாதென்பது. (27) ஓரறிவு உடையன 583. புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இது, முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மரனும் ஓரறிவுடைய; பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன எ-று. 'கிளைப்பிறப்' பென்பது கிளையும் பிறப்புமென்றவாறு. கிளை யென்பன, புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடியும் போல்வன. பிறப்பென்பன, மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி ஓரறிவின ஆகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவேயாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க. மற்று இவற்றுக்கு அறிவில்லை பிறவெனின், பயிலத் தொடுங்காற் புலருமாகலின் ஓரறிவுடையவென வழக்கு நோக்கிக் கூறினான், இது வழக்கு நூலாதலின். அஃதேல், இவை உணர்ச்சியாயின் இன்பதுன்பங் கொள்ளு மோ வெனின், அதற்கு மனமின்மையின் அது கடாவன்றென்பது. (28) ஈரறிவு உடையன 584. நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இது, முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நந்தும் முரளும் ஈரறிவாகிய ஊற்றுணர்வும் நாவுணர்வு முடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள எ-று. இரை சுவைகோடலும் பிறிதொன்று தாக்கியவழி அறிதலு முடைமையின் மெய்யுணர்வொடு நாவுணர்வு முடையன வென்றவாறு. இவற்றுக்குக் கிளையென்பன கிளிஞ்சிலும் முற்றிலும் (மட்டிச் சுண்ணாம்பு) முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவுமெனக் கொள்க. பிறப்பென்பன முற்கூறியவாறே கொள்ளப்படும். (29) மூவறிவு உடையன 585. சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இது, மூவறிவின கூறுகின்றது. (இ-ள்.) சிதலும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வு முடைய; அவற்றுக் கிளையும் பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய எ-று. இவை உற்றுணர்ந்து மீடலும் நாச்சுவை கோடலும் நெய்யுள்வழி மோந்தறிதலுமென மூன்றறிவினையுடையவாறு கண்டுகொள்க. இவற்றுக் குக் கண்ணுஞ் செவியுமின்மை எற்றால் அறிதுமெனின்,- ஒன்று தாக்கிய வழியன்றி அறியாமையிற் கண்ணிலவென்பதறிதும், உரப்பியவழி ஓடாமை யிற் செவியிலவென்பதறிதும். இவற்றின் கிளையென்பன ஈயன்மூதாய் (அகம். 14) போல்வன. பிறப்பென்பன, முற்கூறியவாறே மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் இம்மூன்றுணர்வாகிய பருவத்தனவும் அட்டை முதலாகியவுமெல்லாங் கொள்க. (30) நான்கறிவு உடையன 586. நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. நண்டுந் தும்பியும் நான்கறிவினவெனவும், அந்நாலறிவினையுடைய கிளையும் பிறப்பும் வேறுளவென்பதூஉங் கூறியவாறு. (இ-ள்.) நண்டிற்குந் தும்பிக்குஞ் செவியுணர்வொழித்து ஒழிந்த நான்கு உணர்வும் உள; அவற்றுக் கிளையும் பிறப்பும் பிறவும் உள எ-று. மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நாவுணர்வும், நாற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையிற் கண்ணுணர்வு முடையவாயின. நண்டிற்கு மூக்குண்டோவெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம். இவற்றுக்குக் கிளையென்பன வண்டுந் தேனீயுங் குளவியும் முதலாயின. பிறப்பென்பன நான்கறிவுடைய பிற சாதிகளென முற்கூறியவாறே கொள்க. (31) ஐயறிவு உடையன 587. மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இஃது, ஐயறிவுடையன கூறுகின்றது. (இ-ள்.) ஐயறிவுடையன விலங்கும் அவை போல்வன ஒருசார் மானிடங்களுமாம். அக்கிளைப்பிறப்புப் பிறவும் உள எ-று. மாவென்பன - நாற்கால்விலங்கு. மாக்களெனப்படுவார் - மன வுணர்ச்சியில்லாதார். கிளையென்பன - எண்கால் வருடையுங் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கிளை யாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளையாயிற்று. பிறப்பென்பன - கிளியும் பாம்பும் முதலாயின. மற்றுப் பாம்பிற்குச் செவியுங் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவி யெனப்படுமாகலின் ஐயறிவில்லை பிறவெனின், - பொறியென்பன வடிவு நோக்கின அல்லவாகலின் ஒன்றே இரண்டுணர்விற்கும் பொறியாமென்பது. கிளியென்பது பறவையாகலின் அதனை வேறோதுகவெனின், முன்னைய வற்றிற்கும் பறவையென்றோதிய திலனாகலான் அவ்வச்சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது. மற்றுப் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பெடுத்தோதி ஒழிந்தனவற்றையெல்லாம் பிறவுமுளவெனப் புறனடுத்ததென்னை யெனின்,- அவை வரையறையிலவாகலின் அங்ஙனங்கூறினான்; அல்லதூ உம், மக்களும் புள்ளும் விலங்கும் முதலாயின ஓரறிவினவென்றும் ஈரறி வினவென்றும் எண்ணி வரையறுக்கப்படாமையாலும் அவ்வாறு கூறினா னென்பது. (32) ஆறறிவு உடையன 588. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இஃது, ஆறறிவுயிர் கூறுகின்றது. (இ-ள்.) மக்களெனப்படுவோர் ஐம்பொறியுணர்வேயன்றி மன மென்ப தோர் அறிவும் உடையர்; அக்கிளைப் பிறப்பு வேறும் உள எ-று. முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்களெனப்படுப. அவ்வாறுஉணர்விலுங் குறைவு பட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக்கொள்ள வைத்தானென்பது. அவை, ஊமுஞ் செவிடுங் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் - தேவருந் தானவரும் முதலாயினார். பிறப்பென்றதனாற், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராயடங்குமென்பது. 'தாமே'யெனப் பிரித்துக் கூறினமை யான் நல்லறிவுடையரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்க. (33) களிறு என்ற பெயர்க்கு உரியன 589 வேழக்கு உரித்தே விதந்துகளிறு என்றல் கேழல் கண்ணும் கடிவரை யின்றே. 'மக்கடாமே ஆறறிவுயி'ரெனப் பிரித்துக் கூறினமையான் ஆண்பால் அதிகாரப்பட்டதுகண்டு மற்றை விலங்கினுள் ஆண்பாற்குரியன கூறிய தொடங்கியவாறு. நிறுத்தமுறையாற் கூறாது களிற்றினை முற்கூறினான் அப்பொருள் விலங்கினுட் சிறந்தமையானென்பது. ஏறும் ஏற்றையும் பயின்ற வரவினவாகலின் முதற்சூத்திரத்துள் (556) முற்கூறினானென்பது. (இ-ள்.) யானைக்கு விதந்து களிறென்ற லுரித்து; கேழற்கண்ணுஞ் சிறுபான்மை வரும் எ-று. 'விதந்'தென்ற விதப்பினாற் களிறென்பது சாதிப்பெயர் போலவும் நிற்குமென்பது; அஃதாவது, யானையென்னுஞ் சாதிப் பெயரினைக் களிறென்னும் பெயர்வந்து குறிப்பித்தாற் "கடுங்களிற் றொருத்தல் " (கலி. 2) என்றும் ஆகுமென்பது. " இரலைமா னேறு" என்பதும் அதனாற் கொள்க. பன்றிக்கும் அவ்வாறு வருவனவுளவேற் கொள்க. " கேழற் பன்றி" (புறம் . 152) என்பதனைக் களிற்றுப்பன்றியென்றுஞ் சொல்லுப. (34) ஒருத்தல் என்ற பெயர்க்கு உரியன 590. புல்வாய் புலிஉழை மரையே கவரி சொல்லிய கராமோடு ஒருத்தல் ஒன்றும். 591. வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 592. ஏற்புடைத்து என்ப வெருமைக் கண்ணும். இவை, உரையியைபு நோக்கி உடனெழுதப்பட்டன. (இ-ள்.) இவை ஒன்பதுபெயரும் ஒருத்தலென்னும் பெயருக்கு ஒன்றும் எ-று. இவற்றைப் பெரும்பான்மை சிறுபான்மை பற்றி மூன்று சூத்திரத்தான் ஓதினானென்பது. உதாரணம், " காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்" (அகம் . 65) என யானை ஒருத்தலென்றாயிற்று. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. (35 - 37) ஏறு என்ற பெயர்க்கு உரியன 593. பன்றி புல்வாய் உழையே கவரி யென்றிவை நான்கும் ஏறெனற்கு உரிய. 594. எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 595. கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே. இம்மூன்று சூத்திரத்தான் ஓதிய எட்டுச்சாதியின் ஆண்பாலும் ஏறெனப்படும் எ-று. "காற்றுச்சுவ டொற்றிக் கடிபுனங் கவரு மேற்றிளம் பன்றியி னிருளை வெரூஉம்" எனவும், "வெருளேறு பயிரு மாங்கண்" (அகம். 121) எனவும், "பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான் திரிமருப் பேறொடு தேரறேர்க் கோட" (கலி . 13) எனவும், "ஏற்றினங் கவரி யெரியென வெருவப் பூத்த விலவத்துப் பொங்க ரேறி" எனவும், "ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு" (கலி. 103) எனவும், "வரிமரற் பாவை மரையேறு கறிக்கும் " எனவும், "புலம்பயி ரருந்த வண்ணலேறு " (குறுந். 344) எனவும், " சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள் " (கலி. 84) எனவும் வரும். பிறவும் அன்ன. (38 - 40) போத்து என்ற பெயர்க்கு உரியன 596. பெற்றம் எருமை புலிமரை புல்வாய் மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே. 597. நீர்வாழ் சாதியுள் ளறுபிறப்பு உரிய 598. மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். (இ-ள்.) போத்தென்னும் பெயர் இப் பதின்மூன்று சாதியின் ஆண்பாற்கு முரியது எ-று. 'மற்றிவை யெல்லா' மென்றதனாற் பன்றியும் ஓந்தியும் முதலாயின வுங் கொள்ளப்படும். நீர்வாழ்சாதியுள் அறுபிறப்பென்பன 1சுறாவும் 2முதலையும் 3இடங்கருங் 4கராமும் 5வராலும் 6வாளையுமென இவை. 'பயிலத் தோன்று' மென்றதனானே நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத்தோன்றுமெனிற் சூத்திரம் வேறு செய்ததென்னை? முதற்சூத்திரத்துள் எண்ணுக பிறவெனின், இவை பறவையுட் பயிலத் தோன்றுமாகலின் வேறோதினா னென்க. ' எறிபோத்து,' ' உழுபோத்து.' ' எருமைப் போத்து' எனவும், " புலிப்போத் தன்ன புல்லணற் காளை" (பெரும்பாண். 138) எனவும், ' மரைப்போத்து' எனவும், " கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி . . . . . . . . . . . . . . . . . தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகும் " (குறுந். 213) எனவும் வரும். 'எல்லா' மென்றதனாற் பன்றிப்போத்தெனவும் வரும். " முதலைப் போத்து முழுமீ னாரும்" (ஐங்குறு. 5) எனவும், " பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து" (அகம் . 36) எனவும், " வாளை வெண்போத் துணீஇய" (அகம் . 276) எனவும், நீர்வாழ்சாதியுட் சில வரும். " மயிற்போத் தூர்ந்த வயிற்படை நெடுவேள்" எனவும், " போத்தொடு வழங்கா மயிலு மெழாலும் " எனவும் வந்தவாறு. 'பயில' என்றதனான், " நாரை நிரைபோத் தயிரை யாரும்" (குறுந் . 166) எனவும், ஒழிந்தனவும் இவ்வாறே கண்டுகொள்க. மற்று முதலையும் இடங்கருங் கராமுந் தம்மின் வேறெனப்படுமோ வெனின், " கராஅங் கலித்த குண்டுகண் ணகழி யிடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி" (புறம் . 37) என வேறெனக் கூறப்பட்டன வென்பது. இனிச், செம்போத்தென்பதும் ஈண்டுக் கொள்ளாமோ வெனின், அது பெண்பாற்கும் பெயராகலின் ஒரு பெயரே; பண்புகொள் பெயரன் றென்பதுணர்க. (41 - 43) இரலை கலை என்ற பெயர்க்கு உரியன 599. இரலையும் கலையும் புல்வாய்க் குரிய. 600. கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே. 601. நிலையிற்று அப்பெயர் முசுவின் கண்ணும். இவை மூன்று சூத்திரமும் எண்ணிய மூன்று சாதிக்கும் இரலையுங் கலையுமென்னும் ஆண்பாற் பெயர் இன்னவா றுரிய வென்கின்றன. (இ-ள்.) இரலையுங் கலையுமென்பன புல்வாய்க்குரிய; அவற்றுட் கலையென்பது உழைக்குமுரித்து; அக்கலையென்பது முசுவிற்கு வருங்கால் உழைக்குப்போலச் சிறுவரவிற்றன்றி வரும் எ-று. ' புல்வா யிரலை நெற்றி யன்ன' (புறம் . 374) எனவும், " கவைத்தலை முதுகலை காலி னொற்றி" (குறுந் . 213) எனவும், " கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை" (அகம் . 97) எனவும், "மைபட் டன்ன மாமுக முசுக்கலை" எனவும் வரும். முசுவிற்கு நிலைபெற்றதெனவே அத்துணை நிலைபேறின்றிக் குரங்கிற்கு வருவனவுங் கொள்க. அது, " கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென" (குறுந் . 69) என வருமாற்றான் அறிக. (44 - 46) யாட்டின் ஆண்பாற்பெயர்கள் 602. மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே. (இ-ள்.) இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய எ-று. அவை, " வெள்யாட்டு மோத்தை" எனவும், " தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த' (அகம் . 101) எனவும், " உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்" (பெரும்பாண். 151, 2) எனவும் வரும். அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்தது போலும். யாத்த வென்றதனாற் கடாயென்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க. அது, " நிலைக்கோட்டு வெள்ளை நரல்செவிக் கடாஅய்" (அகம். 155) என வரும். இனிக் குரங்கினை அப்பரென்றலுங் கொள்க. (47) சேவற்பெயர்க்கு உரியன 603. சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே. (இ-ள்.) பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாஞ் சேவற்பெயர் உரித்து; அவற்றுள் மயிற்காயின் அஃதாகாது எ-று. "காமர் சேவ லேமஞ் செப்ப" (அகம். 103) எனவும், "வளைக்கட் சேவல் வாளாது மடியின்" (அகம். 122) எனவும், "தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்" (குறுந். 107) எனவும், "கானக் கோழிக் கவர்குரற் சேவல்" (குறுந். 242. புறம். 395. மலைபடு. 510) எனவும், "உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்" (குறுந். 85) எனவும் வரும். பிறவும் அன்ன. 'மாயிருந் தூவி மயில்' என்றதனான் அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலுஞ் சாயலவாகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க. எனவே, செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அது நேரவும்படு மென்பது. (48) ஏற்றைக்கு உரியன 604. ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப. (இ-ள்.) ஏற்றை யென்னுஞ் சொல் ஆற்றலொடு கூடிய ஆண்பாற்கெல்லாம் உரித்து எ-று. அவை "குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை" (ஐங்குறு. 216. நற். 36. குறுந். 141) எனவும், "செந்நா யேற்றை கம்மென வீர்ப்ப" (அகம். 111) எனவும், "கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை" (குறுந்.324) எனவும் வரும். இக் கருத்தினானே, "பிணர்மோட்டு நந்தின் பேழ்வா யேற்றை" (அகம். 246) எனவும், "புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை" (அகம். 133) எனவுங் கூறினார். அவையும் அப்பெயரானே வழங்குதல் ஆற்றலுடைய வாகத் தோன்றும். 'எல்லா' மென்றதனாற் சிறுபான்மை ஆற்றல் இல்லாதன வுங் கொள்க. அது, "இடுகாட்டு ளேற்றைப் பனை" (நாலடி. 96) என்பது போன்று வருவன. பிறவும் அன்ன. (49) சிங்கநோக்கிற் புறனடை 605. ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான. இது, மேற்கூறிய ஆண்பாற் பெயர்க்கும் இனிவரும் பெண்பாற் பெயர்க்கும் புறனடை. (இ-ள்.) ஆணென்னுஞ் சொல் எல்லாச் சாதியுள்ளும் ஆண்பாற்கு உரித்து; பெண்ணென்னுஞ்சொல் எல்லாச்சாதியுள்ளும் பெண்பாற்கு உரித்து; வழக்கினுள் அவ்வாறு காணப்படும் அவை எ-று. அவை ஆண்யானை, பெண்யானை, ஆண்குரங்கு, பெண்குரங்கு; ஆண்குருவி, பெண்குருவி என்றாற்போல்வன. இவை காணப்படும் எனவே, இத்துணை விளங்கவாராது சிறுவரவினான் வருவனவுமுள இருபாலு மல்லாதனவென்பது. ஆணலி பெண்ணலி எனவும், ஆண்பனை பெண் பனை எனவும் வரும். பிறவும் அன்ன. (50) பிடி என்ற பெயர் 606. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இது முறையானே மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற பெண்மைப்பெயர் கூறிய தொடங்கி ஆண்பாலிற் களிறு முற்கூறியவாறு போலப் பிடியினை முற்கூறியது. (இ-ள்.) பிடியென்னும் பெயர் யானைக்கண்ணது எ-று. "பிடிபடி முருக்கிய பெருமரப் பூசல்" (அகம். 8) என வரும். 'பெய'ரென்றதென்னையெனின், அவை தொடங்குகின்றன என்பது அறிவித்தற்கென்பது. (51) பெட்டைக்கு உரியன 607. ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. (இ-ள்.) ஒட்டகமுங் குதிரையுங் கழுதையும் மரையாவும் பெட்டை யென்னும் பெயர்பெறும் எ-று. ஒட்டகப்பெட்டை குதிரைப்பெட்டை கழுதைப்பெட்டை மரையான்பெட்டை என வரும். (52) இதுவுமது 608. புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப. (இ-ள்.) எல்லாப்புள்ளும் பெட்டை யென்னும் பெயரான் வழங்குதற்குரிய எ-று. அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை யென வரும்; பிறவும் அன்ன. (53) பேடை, பெடைக்கு உரியன 609. பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். (இ-ள்.) பேடையும் பெடையுமென்னும் இரண்டும் முன்னர் நின்ற புள்ளிற்கு ஒன்றும் எ-று. அவை குயிற்பேடை அன்னப்பெடை என வரும். 'நாடின்' என்றத னாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலாதென்பது. (54) அளகுக்கு உரியன 610. கோழி கூகை ஆயிரண்டு அல்லவை சூழுங் காலை அளகெனல் அமையா. (55) 611. அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. (இ-ள்.) கோழியுங் கூகையும் மயிலுமென்பனவற்றுக்கு அளகென் னும் பெயர் உரியது எ-று. "மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்" (பெரும்பாண். 256) என்பது, கோழி. பிறவும் அன்ன. (56) பிணைக்கு உரியன 612. புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடின் பிணையெனப் படுமே. (இ-ள்.) பிணையென்னும் பெண்பெயர்க்குரியன இவை நான்கும் எ-று. "அலங்கல் வான்கழை யுதிர்நென் னோக்கிக் கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண்," (அகம். 129) எனவும், "சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை" (புறம். 2) எனவும். "சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்டு இரலை மான்" (குறுந். 183) எனவும், "கவரி மான்பிணை நரந்தங் கனவும்" (பதிற். 11) எனவும் வரும். "சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே" என்பது பிணையென்னுஞ் சொற்பொருளினை உண்மை நோக்கிற் பிரியாது பிணையும் பிற சாதிக்குஞ் சேவற்குஞ் செல்லுமாயினும், மரபுநோக்கப் பிணையென்றதற்குச் சிறப்புடையன இவை என்றவாறு. (57) பிணவுக்கு உரியன 613. பன்றி புல்வாய் நாய்என மூன்றும் ஒன்றிய என்ப பிணவுஎன் பெயர்க்கொடை. (இ-ள்.) இவை மூன்று சாதியும் பிணவென்னும் பெயர்க்குரியன எ-று. "நெடுந்தாட் செந்தினைக் கெழுந்த கேழல் குறுந்தாட் பிணவொடு குறுகல் செல்லாது" எனவும், "குறியிறைக் குரம்பைக் குறத்தி யோம்பிய மடநடைப் பிணவொடு கவர்கோட் டிரலை" எனவும், "நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை" எனவும், "மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பசுங்கட் செந்நா யேற்றை கேழ றாக்க" (அகம். 21) எனவும் வரும். 'ஒன்றிய' என்றதனான், "ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய" (அகம். 72) எனப் புலிக்குங் கொள்க. பிறவும் அன்ன. (58) பிணவலுக்கு உரியன 614. பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. (இ-ள்.) பிணவலென்பதூஉம் அம்மூன்றற்கும் உரித்து எ-று. "இரியற் பிணவ றீண்டலின்" (அகம். 21) என்பது பன்றி. "நான்முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து" (அகம். 248) என்பதுவும் அது. ஒழிந்தனவும் அன்ன. (59) ஆ - என்பதற்கு உரியன 615. பெற்றமு மெருமையும் மரையும் ஆவே. இது, மேல் 'அந்தஞ் சான்ற' (558) வென்னும் இலேசினானே ஆவென்பது தழீஇக்கொண்டமையின் அஃது இன்னுழி அல்லது ஆகாது என்கின்றது. (இ-ள்.) ஆவென்னும் பெயர் பெற்றமும் மரையும் எருமையும் பெறும் எ-று. அவை, "புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி" (அகம். 56) எனவும், "சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்" (அகம். 46. குறுந். 261) எனவும், "மரையா மரல்கவர மாரி வறப்ப" (கலி. 6) எனவும் வரும். (60) மக்கட்கு உரியன 616. பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய. (இ-ள்.) பெண்ணும் பிணாவும் உணர்திணைப் பெண்மைக்குரிய எ-று. பெண்ணென்பது, "பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய" (தொல். மர. 50) என்றமையின், ஈண்டுக் கூறுதல் மிகையாம் பிறவெனின், அற்றன்று; அச்சூத்திரம் அஃறிணையதிகாரமாகலின், ஈண்டு விதந்தோதினானென்பது. ஒன்றெனமுடித்த (665) லென்பதனான், உயர்திணை ஆணென்பதும் ஈண்டே கொள்ளப்படும். "பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி" (அகம். 112) எனவும், "ஈன்பிண வொழியப் போகி" (பெரும்பாண். 90) எனவும் வரும். "ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய" (புறம். 201) என ஆணென்பது உயர்திணைக்கண் வந்தது. பிறவும் அன்ன. பிணா வென்னும் ஆகாரவிறுதி வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம்பெறாது நின்றது. 'மக்கட்குரிய' வெனவே, உரியவன்றித் "துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தென" (அகம். 146) எனப் புலி முதலியனவற்றிற்குங் கொள்க. (61) நாகு என்பதற்கு உரியன 617. எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 618. நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. (இ-ள்.) இந்நான்கற்கும் நாகெனும் பெயர் உரித்து எ-று. "எருமை நல்லான் கருநாகு பெறூஉம்" (பெரும்பாண். 165) எனவும், "உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ யூர்வயிற் பெயரும் பொழுதின்" (அகம். 64) எனவும், "நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம்" (புறம். 266) எனவும் வரும். (62, 63) யாட்டின் பெண்பாற் பெயர்கள் 619. மூடுங் கடமையும் யாடல பெறா. (இ-ள்.) இவ்விரு பெயரும் யாட்டிற்கேயுரிய பெண்மைப் பெயர் எ-று. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய. (64) பாட்டி என்ற பெயர் 620. பாட்டி யென்பது பன்றியும் நாயும். 621. நரியும் அற்றே நாடினர் கொளினே. (இ-ள்.) பாட்டியென்று சொல்லப்படுவன பன்றியும் நாயும், நரியும் எ-று. பிறவும் அன்ன. (65, 66) மந்தி என்ற பெயர் 622. குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. (இ-ள்.) இம்மூன்று சாதிப் பெண்பாலும் மந்தியென்னும் பெயர் பெறும் எ-று. "கைம்மை யுய்யாக் காமர் மந்தி" (குறுந். 69) எனவும், "கருமுக மந்தி செம்பி னேற்றை" எனவும் வரும். ஊகத்துக்கும் இஃதொக்கும். (67) மருவி வந்த முடிபு 623. குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலுஞ் செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலுங் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலு மிருள்நிறப் பன்றியை யேனம் என்றலு மெருமையுள் ஆணினைக் கண்டி என்றலு முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடியல் ஆகா கடனறிந் தோர்க்கே. இது. மரீஇவந்து முடிந்த மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்குரங்கினைக் கடுவனென்றலும், மரப்பொதும்பினுள் வாழுங் கூகையைக் கோட்டானென்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தையென்றலும், வெருகினைப் பூசையென்றலும், ஆண்குதிரையைச் சேவலென்றலும், இருணிறப் பன்றியை ஏனமென்றலும், எருமையேற் றினைக் கண்டியென்றலும், அவ்வாறு முடிந்த வழக்குண்மையிற் கடியப்படா கடப்பாடு அறிந்தோர்க்கு எ-று. "கடுவனு மறியுமக் கொடியோ னையே" (குறுந். 26) இஃது ஆண்குரங்கு, இதனைக் 'கடியலாகா'தெனப்பட்ட இழுக் கென்னையெனின், மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றன போலுமாதலின். கூகையைக் கோட்டானென்றலும் வழக்காகலான் அமையும்; 'மரம்பயில் கூகை' யென்ற தென்னையெனின், மரக்கோடு விடாமையிற் கோட்டானென்னும் பெயர்பெற்றதென்றற்கு. தத்தை யென்பது பெருங்கிளியாதலிற் சிறுகிளிக்கும் அப்பெயர் கொடுத்த லமையு மென்றவாறு. 'செவ்வாய்க் கிளி' யென்றதனைச் சிறுகிளிமேற் கொள்க. 'வெவ்வாய் வெரு' கென்றதனாற், படப்பை வேலியும் புதலும் பற்றி விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும் வெருகினை, 'இல்லுறை பூசையின்' பெயர்கொடுத்துச் சொல்லலும் (புறம். 117, 326) அமையுமென்றவாறு. குதிரையைச் சேவலென்றல் இக்காலத்தரிதாயிற்று. அதுவுஞ் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பதுபோலச் சொல்லுதல் அமையுமென்பது கருத்து. எருமையேற்றினைக் கண்டி யென்பபோலும். அது காணலாயிற் றில்லை. அதனை, இலக்கணைவகையானுடைய பெயரென்றலுமாம்; இதுபொழு தின்றென்பது. 'கடனறிந்தோ' ரென்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்றவாறு. இன்னும் இப்பரிகாரத்தானே கோழியை வாரணமென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங் கொள்க. அவை, "கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே." (புறம். 52) எனவும், "வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ" (முருகு. 219) எனவும், "வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை." (புறம். 324) எனவும் வரும். (68) இதுவுமது 624. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. இதுவுமது. பெண் ஆணென்பன இருதிணைப்பெண்மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன முற்கூறினான்; மேல் ஒன்றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்காயவழியுங் கடியலாகாதென நின்ற அதிகாரத்தான் இவையும் அவ்வாறே திரியினுங் கடியலாகாதென்றவாறு. (இ-ள்.) பெண்ணும் ஆணும் பிள்ளையுமென வாளாது சொல்லிய வழி உயர்திணைக்கேற்றன மரீஇவந்த மரபு எ-று. மக, குழவியென்பனவோவெனின், அவை அத்துணைப் பயின்றில உயர்திணைக்கென்பது; எடுத்தோதிய மூன்றும் ஆயின. வாளாதே 'பெண்வந்த' தென்றவழி அஃறிணைப்பொருளென்பது உணரலாகாது; 'பெண்குரங்கு வந்தது' என விதந்தே கூறல்வேண்டுமென்பது. 'பெண் பிறந்தது' 'ஆண் பிறந்தது' 'பிள்ளை பிறந்தது,' என அடையடாது சொல் லியவழி உயர்திணைக்கேயாம். அஃறிணைக்காயின் அற்றன்றென்பது. (69) அந்தணர்க்கு உரியன 625. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய. இஃது, உயர்திணை நான்குசாதியும் பற்றிய மரபு உணர்த்துவான், முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டுவருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முந்நூலுங் குண்டிகையும் முக்கோலும் யாமைமணையும் போல்வன அந்தணர்க்கு உரிய எ-று. 'ஆயுங்காலை' யென்றதனாற் குடையுஞ் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க. உ-ம் : "எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்" (கலி. 9) எனவும், "தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே" (குறுந். 156) எனவும் வரும். இன்னும் 'ஆயுங்காலை' யென்றதனான், ஒருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படா ரென்பது. முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண் டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந் தோதினானென்பது. மற்று அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலினை ஈண்டு வரைந்தோ தினதென்னையெனின், ஒருகோலுடையான் நூல் களைவானாகலின் அவனுஞ் சிறுபான்மை அந்தணனெனப்படுமென்பது கோடற்குங் கரக மும் மணையும் உடைய னென்றற்குமென்பது. நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுஞ் சிறப்பு முறையானுமென்பது. இனிக் குடுமியுங் குசையும்போல்வன கூறிற்றிலன், அது முன்னரும் பின்னரும் வருதலானும், மன்னரும் வணிகரும் பெறுதலானுமென்பது. (70) அரசர்க்கு உரியன 626. படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய. இது, முறையானே அரசர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்.) கொடிப்படையுங் கொடியுங் குடையும் முரசுங் குதிரையும் யானையுந் தேருந் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய எ-று. "பிறவும்' என்றதனாற் கவரியும் அரியணையும் அரண்முதலாயின வுங் கொள்க; 'தெரிவுகொள் செங்கோல் அரச' ரென்றதனானே செங்கோல் கொளப்பட்டது. 'தாரெ'னவே போர்ப்பூவுந் தார்ப்பூவும் அடங்கின. 'படை' யென்புழி 'நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்' அடங்காவோ வெனின்,அடங்கும். அவைநோக்கிக் கூறினானல்லன்; அவை பட்டஞ் சாத்திய வாதல் நோக்கிக் கூறப்பட்டன. அஃதேல், தேர்கூறியதென்னையெனின்,அதுவும் அவைபோல அரசர்க்கே உரிய தென்றுளதென்றற்கும், அது பூண்ட குதிரையும் அவர்க்கே யுரியவென்றுள வென்றற்குங் கூறினானென் பது. இக்கருத்தினாற்போலும் நடைநவில் புரவியெனச் சிறப்பித்து அதனை முற்கூறியதென்பது. எல்லாவற்றினுஞ் சிறந்ததாதலான் முடிபிற் கூறப்பட்டது. 'தெரிவு கொள் செங்கோல்' அரசரென்பதனான் அரசரெல்லாந் தந்நாட்டு நன்றுந் தீதும் ஆராய்ந்து அதற்குத் தக்க தண்டஞ் செய்தற்கு உரிமையும் அது வெனக் கொள்க. (71) புறனடை 627. அந்த ணாளர்க்கு உரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. இது, மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) அந்தணாளர்க்கு உரியவென மேல் (625) ஓதப் பட்டன வற்றுள் முந்நூலும் மணையும்போல்வன அரசசாதிக்குரியவாகியும் வரும் எ-று. 'பொருளுமாருள' வென்றதனான், அந்தணாளர்க் குரியனவற்றுள் வேள்விக் கலப்பை யொன்றிவருதல். பெரும்பான்மையென உணர்க. ஈண்டு அவற்றை விதந்தோதினான், ஒழிந்த, புலனெறிவழக்கினுட் பயிலாமையி னென்பது. 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்.' (தொல். புறத். 20) பற்றி வாகைப்பொருள் பிறத்தலின் அவற்றைப் புறத்திணையியலுட் கூறினானாயினும், ஈண்டுத் தழீஇக்கொள்ளப்படும், மரபுவகையானென்பது; என்போலவெனின், 'அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.' (தொல். எழுத். நூன். 31) என நூன்மரபினுள் ஓதிய மூவகைச்சுட்டினை இடைச்சொலோத்தினுள் ஓதானாயினான், அது போலவென்பது. "கொன்றுகளம் வேட்ட ஞான்றை" (அகம். 36) எனவும், "அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய.' (புறம். 26) எனவும் அரசர்க்கு வேள்வி கூறினவாறு. பிறவும் அன்ன. (72) ஐயம் அறுத்தல் 628. பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றுஇவை பிறவும் பொருந்தச் சொல்லுத லவர்க்குஉரித்து அன்றே. இஃது, ஐயம் அறுத்தது; அந்தணாளர்க்குரியன அரசர்க்கு முரியன உளவெனக் கேட்ட மாணாக்கன் 'அரசர்க்குரியனவும் அந்தணர்க் குரியகொல்'லென்று ஐயுறாமற் காத்தமையின், இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதியெனினும் அமையும்; என்னை? ஈண்டு ஓதப்பட்டவை அரசர்க்குரியவென்பது கொள்ளவைத்தமையின். (இ-ள்.) பரிசில் - பரிசில்கடாநிலையும், பரிசில்விடையும் போல்வன; பாடாண்டிணைத்துறைக்கிழமைப்பெயர் - பாடாண்டிணைக்குரிய கைக்கிளைப்பொருள் பற்றியுங் கொடைத்தொழில் பற்றியும் பெறும் பெயர்; அவை காளை இளையோன் என்பன போல்வன. அவையும், நெடுந்தகை செம்மலென்பன முதலாயினவும், இவைபோல்வன பிறவும் புனைந்துரை வகையாற் சொல்லினல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க்குரித்தன்று எ-று. பரிசில்கடாநிலையும் பரிசில்விடையும் போல்வன கூறியுங், கைக்கிளைப்பொருள் கூறியுங், கொடைத்தொழில் கூறியும், அவற்றுக் கேற்ப எடுத்தோதிய பெயர்கூறியும், அந்தணரைத் தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறாவென்பது கருத்து. புனைந்துரை வகையான் அவையாமாறு: "எண்நாணப் பலவேட்டு மண்நாணப் புகழ்பரப்பியும்." (புறம். 166) என வரும். கொடுத்தற்றொழில் வேள்விக்காலத்ததென வரையறுத்தலிற் பொருந்தக் கூறுதல் அவர்க்குரித்தன்றென்றானென்பது. பாடாண்டிணைத் துறைப்பெயரென்னாது, கிழமைப்பெயரென்ற தென்னையெனின், அவை, ஐந்திணைப்பெயராகி வருங்காலும் அவர்க் குரியவல்ல வென்றற்கு. எனவே, அரசர்க்காயின் இவையெல்லாம் உரியவென்ப வாயிற்று. மற்றுப் பாடாண்டிணைக்குரியவல்லவென மற்றைத்திணைக் கிழமைப்பெயர் உரியவாம் பிறவெனின், -அஃது, 'இடையிரு வகையோர் அல்லது நாடிற் படைவகை பெறாஅர்.' (தொல். மர. 76) என மேற்கூறி விலக்குமென்பது. (73) நாற்பாலார்க்கும் பொதுவான செய்தி 629. ஊரும் பெயரும் உடைத்தொழில் கருவியும் யாருஞ் சார்த்தி அவையவை பெறுமே. இது, மேற்கூறிய அந்தணர்க்கும் அரசர்க்கும் உரியனவற்றோடு ஒழிந்த சாதியோர்க்கும் ஒப்பன உடன்கூறுகின்றது. (இ-ள்.) நான்கு சாதியாரும் பிறந்த ஊரும், அவர்தம் பெயரும், அவர்சாதிக்கு உரித்தென்றற்கேற்ற கருவியும், யாருஞ் சார்த்தப்பட்டு அவை அவை பெறுப எ-று. இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க் கும் ஒப்பச்செல்லுமென்பது கருத்து; எற்றுக்கு? இவை சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின். ஊரும் பெயருமென்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூ ருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன: உறையூர்ச் சோழன், மதுரைப் பாண்டியன் என்பன அரசர்க்குரியன; காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க்குரியன ; அம்பர்கிழான் நாகன், வல்லங் கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன. இனி, 'உடைத்தொழிற் கருவி'யென்பன, அந்தணாளர்க்குச் சுருவையுஞ் சமிதைகுறைக்குங் கருவியும் முதலாயின; அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலுஞ் சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. அவையெல்லாம் அவரவர் செய்யுட்குரியவென்பது. (74) நால்வர்க்கும் தலைமைக் குணச்சொல் 630. தலைமைக் குணச்சொல்லுந் தத்தமக்கு உரிய நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துக வென்ப. இதுவுமது. (இ-ள்.) அந்நான்குசாதியார் தலைமைக்குணம்படச் சொல்லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கேற்ப நிகழ்த்தவும்படும் எ-று. அந்தணர் தலைமைக்குணங் கூறுங்காற் பிரமனொடு கூறியும், அரசரை மாயனொடு கூறியும், வணிகரை நிதியின்கிழவனொடு கூறியும், வேளாண்மாந்தரை வருணனொடு கூறியுந், தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். அவையெல்லாம் அவரவர் செய்யுளுட் கண்டு கொள்க.(75) படை பெறுவோர் 631. இடைஇரு வகையோர் அல்லது நாடின் படைவகை பெறாஅர் என்மனார் புலவர். மேல் நான்கு வருணத்தாரையுந் உடன் கூறிவந்தான், இது முதலும் கடையும் ஒழித்து இடைநின்ற இருவருணத்தார்க்கும் ஆவதொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அரசரும் வணிகருமல்லது படைப்பகுதி பெறார் எ-று. படைப்பகுதி யென்பன, வேலும் வாளும் வில்லும் முதலாயின. 'நாடி'னென்பதனான், ஒருசார் அந்தணரும் படைக்குரியா ரென்பது கொள்க. அவர் இயமதங்கியாருந் துரோணனும் கிருபனும் முதலாயினா ரெனக் கொள்க. வேளாண்மாந்தர்க்கும் இஃதொக்கும். இவை விகார மெனவும் எடுத்தோதிய வருணங்கட்கே இஃதியல்பெனவுங் கொள்க. (76) வைசியன் மரபு 632. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை. இது, வணிகர் மரபு கூறுகின்றது. (இ-ள்.) வணிகர்க்குத் தொழிலாகிய வாணிகவாழ்க்கை உள்ளுறை யாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையுமாம் (எ- று). அவையும் அவர் செய்யுளிற் காணப்படுமாறு அறிந்துகொள்க. (77) இதுவுமது 633. மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான. இன்னும் வணிகர்க்கே உரிய தொழில் கூறுகின்றது. (இ-ள்.) பொருள் தெரிந்த வகையான் எண்வகைக் கூலமுஞ் செய்யில் விளைத்தலும் அவர்கடன் எ-று. அவையும் அவர் பண்டத்தோடு உபகாரப்படுமாகலின் வரையப் படாதென்றானென்பது. எண்வகையுணவென்பன 1பயறும் 2உழுந்துங் 3கடுகுங் 4கடலையும் 5எள்ளுங் 6கொள்ளும் 7அவரையுந் 8துவரையுமாம். (78) இதுவுமது 634. கண்ணியும் தாரும் எண்ணின ராண்டே. இதுவுமது. (இ-ள்.) இவையும் வணிகர் திறத்தன எ-று. கண்ணியென்பது, சூடும்பூ. தாரென்பது, ஒருகுடிப் பிறந்தார்க்குரித் தென வரையறுக்கப்படுவதாயிற்று. எண்ணப்படுமெனவே, அவரவர்க்குரிய வாற்றாற் பலவாகிவரும். அவை வந்தவழிக் கண்டுகொள்க. (79) வேளாளர் மரபு 635. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. இது, வேளாண்மாந்தர்க்குக் கூறப்படுந் தொழில் கூறுகின்றது. (இ-ள்.) வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதன் மரபு எ-று. ' உழுதுண்டு வாழ்வார்.' (குறள் . 1033) என்பது, இதன் பொருளாயிற்று. மற்றுப் பார்ப்பியன் முதலாகிய நால்வகைத் தொழிலும் வாகையுட் கூறினமையின் இச்சூத்திரமும் மேலைச் சூத்திரங்களும் மிகையாம் பிறவெனின், அற்றன்று; பார்ப்பியலும் அரசியலும் வாணிகத்தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமுமென்பன அவற்றின் ஒத்த சிறப்பின வன்றி அவற்றுள்ளும் ஒரோவொன்று ஒரோவருணத்தார்க்கு உரியதாமாக லானும் ஈண்டு அவை விதந்துகூறினானென்பது. நிரைகாவலும் உழவுத் தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல்போலாது, வாணிக வாழ்க்கை வேளாண் மாந்தர்க்குச் சிறுவரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக்கூலத்தொடு பட்டதே பெருவரவிற்றெனவுங் கூறினான் இச்சூத்திரங்களானென்பது. இதனது பயம் : புலனெறிவழக்கினுள் இவர்க்கு இவை சிறந்த மரபென்றலாயிற்று.(80) பொதுப் புறனடை 636. வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப வவர்பெறும் பொருளே. இது, நான்காம் வருணத்தார்க்கொரு புறனடை. (இ-ள்.) வேந்தர் கொடுப்பின் வேளாண்மாந்தர்க்குப் படைக்கலமுங் கண்ணியும் பெறும்பொருளாகச் சொல்லப்படும் எ-று. 'வேந்து விடுதொழி'லென்பது, வேந்தனாற் கொடுக்கப்படும் தண்டத்தலைமை யாகிய சிறப்புக் காரணத்தா னென்றவாறு; அகத்திணை யியலுள், " உயர்ந்தோர்க்கு உரிய வோத்தி னான." என்புழிக் கூறப்பட்டதெனின், வேளாளரை யொழித்து ஒழிந்தோரை நோக்கிற்று அச்சூத்திரமென்பது. மேற்கூறியவற்றையும் மரபுபற்றி ஈண்டு வரையறை கூறுகின்றவாறெனக் கொள்க. அவையும் அவரவர் பாட்டுக்க ளுட் கண்டுகொள்க. (81) இதுவுமது 637. அந்த ணாளர்க்கு அரசுவரை வின்றே. இஃது, எல்லாவற்றிலுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க்குரியவாகலின் ஈண்டுப் போதந்து கூறுகின்றது. (இ-ள்.) அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது எ-று. மக்களைத் தின்ற மன்னவர்க்குப் பின்னை மறையோரான் அரசு தோற்றப்பட்டாற்போலக் கொள்க. (82) இதுவுமது 638. வில்லும் வேலும் கழலும் கண்ணியுந் தாரும் மாலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. இது, முடியுடைவேந்தரல்லாக் குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்.) இவ்வெண்ணப்பட்டன வெல்லாங் குறுநிலமன்னர்க்கும் உரியன எ-று. 'மன்பெறு மரபின் ஏனோ' ரெனப்படுவார் அரசுபெறுமரபிற் குறுநிலமன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற் றுள்ளுங் காணப்படும். (83) இதுவுமது 639. அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை. இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ-ள்.) மன்னவர் போலுஞ் செல்வத்தாராகிய இழிகுலத்தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது (எ- று). " மன்பெறு மரபி னேனோர்.' (தொல்.மர. 83) எனவே, அரசர் வைசியரன்றிக் கீழ் அமையாவாயிற்று, (84) புல்லும் மரனும் 640. புறக்கா ழனவே புல்லென மொழிப அகக்கா ழனவே மரனென மொழிப. இது, மக்களை வழங்குமாற்றுக்கண் மரபுகூறி இனி ஓரறிவுயிர்க்கு இன்னவாறு சொல்லுதன் மரபென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறத்துக் காழ்ப்புடையனவற்றைப் புல்லெனவும் அகத்துக் காழ்ப்புடையனவற்றை மரமெனவுஞ் சொல்லுப எ-று. ' புறக்காழன'வெனவே,அல்வழி வெளிறென்பதறியப்படும், அவை. பனையுந் தெங்குங் கமுகும் முதலாயின புல்லெனப்படும். இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத்துங் கொடி முதலாயின காழ்ப்பின்றி யும் அகின்மரன் போல்வன இடையிடை பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின், இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமை யானும் ' எனமொழிப' என்று இருவழியுஞ் சிறப்பித்து விதந்தமையானுஞ் சிறுபான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்குமென்பது. " இரும்பனம் புல்லின் பசுந்தோட்டுக் குடம்பை" எனவும், " யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவின்." (குறுந். 198) எனவும் வரும். " நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை." (அகம். 200) எனப் புறக்காழும் அகக்காழும் இல்லன புல்லெனப்பட்டன வென்பது. அது பனையோலையுமாகலிற் புறக்காழுடைய பனையுமாமென்பது. உதி மரக் கிளவியுமாமென்பது சிறுபான்மை. பிறவும் அன்ன. (85) புல்லின் உறுப்புக்கள் 641. தோடே மடலே ஓலை யென்றா ஏடே இதழே பாளை யென்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். இது, முறையானே புறக்காழனவற்றுறுப்பினைச் சொல்லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணப்பட்ட வாய்பாடும் பிறவும் புல்லுறுப்பினைச் சொல்லும் வாய்பாடு எ-று. 'பிறவு' மென்றதனாற் குரும்பை நுங்கு நுகும்பு போந்தையென்றற் றொடக்கத்தனவுங் கொள்க. "இரும்பனை வெண்டோடு மிலைந்தோ னல்லன்" (புறம். 45) எனவும், "மாவென மடலு மூர்ப" (குறுந். 17) எனவும்? "துகடபு காட்சி யவையத்தா ரோலை" (கலி. 94) எனவும் வரும். ஒழிந்தனவுங் கொள்க. "வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க" (நெடுநல். 22) என்பதும் அது. 'நேர்ந்தன பிறவும்' என்பது கேட்டாரை உடம்படுவிப்பன பிறவுமென்றவாறு. "வண்கோட் பெண்ணை வளர்ந்த நுங்கின்" (சிறுபாண். 27) எனவும், "பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொடு" (புறம். 249) எனவும் வரும். பிறவும் அன்ன. (86) மரத்தின் உறுப்புக்கள் 642. இலையே தளிரே முறியே தோடே சினையே குழையே பூவே அரும்பே நனைஉள் ளுறுத்த வனையவை யெல்லாம் மரனொடு வரூஉங் கிளவி யென்ப.. இஃது, அகக்காழனவற்றுறுப்பினைச் சொல்லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணப்பட்டனவும் பிறவுமெல்லாம் மரத்துறுப்பினைச் சொல்லும் வாய்பாடு எ-று. 'அனையவை யெல்லாம்' என்ற புறநடையானே புல்லுந் தழையும் பொங்கரும் முதலாயின கொள்க. அவை "தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇ" (பெரும்பாண். 104) எனவும், "முறிமே யாக்கை" (மலைபடு. 313) எனவும், "யாஅ வொண்டளி ரரக்கு விதிர்த்தன்ன" (அகம். 166) எனவும், "தோடுதோய் மலிர்நிரை யாடி யோரே" (அகம். 166) எனவும், "மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை" (குறுந். 26) எனவும், "கொய்குழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர" (கலி. 74) எனவும், "நனைத்த செருந்தி" (அகம். 150) எனவும், "அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல" (அகம். 59) என்றாற்போல வருவனவுமெல்லாங் கொள்க. மேலைச் சூத்திரத்துப் "புல்லொடு வருமெனச் சொல்லினர்" (தொல். 641) எனவும், இச்சூத்திரத்து "மரனொடு வரூஉங் கிளவி" (தொல். 642) யெனவும் மிகைபடக் கூறியதென்னையெனின்,- அம்மிகையானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றொடு தழீஇக் கொள்ளப்படுவனவுமெல்லாம் இவற்றுக் குரிய வென்பது கொள்க. அவை, ஊகம்புல்லுஞ் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும், புழற்கால் ஆம்பல் முதலியனவும் புல்லெனப் பட்டடங்கி, யவற்றின் பெயரும் பெறுமென்பது. பிடாவுங், காயாமுதலிய புதலும், பிரம்பு முதலாகிய கொடியும் மரமெனப் பட்டவற்று உறுப்பின் பெயர் பெறுமென்பது. அவை ஊகந்தோடு சீழகந்தோடு எனவும், பிடவிலை காயாம்பூ முல்லைப்பூ எனவும் வரும். பிறவும் அன்ன. மற்றுப் பிறப்பு முறையான் தளிர் முற்கூறாது இலை முற் கூறிய தென்னையெனின்,- புல்லினுள் ஒருசாரன இலையெனவும் பூவெனவும் படுமென அதிகாரங்கோடற்கென்க. அவை, "ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" (பெரும்பாண். 88) எனவும், 'ஆம்பலிலை, தாமரையிலை' எனவும், "ஆம்பற்பூ, தாமரைப்பூ" எனவும் வரும். பிறவும் அன்ன கொள்க. இன்னும் இவ்விலேசானே, புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவுங் கொள்க. அவை, "ஈன்றவள் திதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும்" (கலி. 32) என ஈர்க்கென்பது மாவிலைமேல் வந்தது. பிறவும் அன்ன. (87) இரண்டற்கும் பொதுவுறுப்புக்கள் 643. காயே பழமே தோலே செதிளே வீழோடு என்றாங்கு அவையு அன்ன. இது மேற்கூறிய இரண்டற்கும் பொதுவுறுப்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவையும் அவ்விருதிறத்தோ டொக்கும் எ-று. உ-ம்: தெங்கங்காய் கமுகங்காய் எனவும், வேப்பங்காய் மருதங்காய் எனவுங், காயென்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்ப தற்கும் இஃதொக்கும். பனந்தோல் வேப்பந்தோல், பனஞ்செதிள் வேப்பஞ் செதிள், தாழைவீழ் இத்திவீழ் என இவையும் இருபாற்குமுரியவாயின. மற்று இவையெல்லாம் வரையறையின்றிச் செல்லுமாயிற் புறக்காழன அகக்காழனவென வரையறுத்துப் பயந்ததென்னையெனின்,- அவ்விரு பகுதியுள் அடங்கக் கூறிய வெல்லாம் புல்லெனவும் மரமெனவும் படாவென்றற்கும் அவற்றுறுப்பு ஓதியவாற்றாற் புல்லின்கண்ணும் மரத்தின் கண்ணும் பெருவரவினவா மென்றற்கு மென்பது. (88 மரபு திரியாமைக்குக் காரணம் 644. நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். இஃது, உலகிலெல்லாம் மரபிற்றிரியாமையின் அதன் சிறப்புணர்த்தி அதற்குக் காரணமுங் கூறுகின்றது. (இ-ள்.) நிலனுந் தீயும் நீருங் காற்றும் ஆகாயமுமென்னும் ஐம்பெரும் பூதமுங் கலந்த கலவையல்லது உலகமென்பது பிறிதில்லாமையின், அவற்றைச் சொல்லுமாறு சொல்லாது, இருதிணைப்பொருளென வேறுபடுத்தும் ஐம்பாலென வேறுபடுத்தும் வழங்குகின்ற வழக்கெல்லாம் மரபில் திரியாத சொல்லொடு தழீஇ வரல்வேண்டும் எ-று. இதன் கருத்து; "நிலம்வலிது, தீவெய்து, நீர் தண்ணென்றது, வளியெறிந்தது, விசும்புஅகலியது," என அஃறிணை வழக்கினவாயினும், இவை கலந்த வழியும் அவ்வாய் பாட்டான் வழங்காது, உயர்திணை வாய்பாடு வேறாகவும், அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவைதம்முட் பகுதியாகிய ஐந்துபாற்சொல்லும் வெவ்வேறாகவும் வழங்குகின்ற வழக்கிற்குக் காரணம் மரபல்லது பிறிதில்லை யென்றவாறு. எனவே, மரபினை வலியுறுத்தவாறு. மற்று, நிலம் நீர் தீ வளி ஆகாயமென ஒன்று ஒன்றனுள் அடங்கு முறையாற் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியதென்னையெனின்,- அவை கலக்குங்கால் ஒரோபொருளின்கண்ணும் அம்முறையானே நிற்குங்கொ லென்று கருதினுங் கருதற்க, மயங்கிநிற்குமென்றற்கு அவ்வாறு கூறினா னென்பது. (89) மரபு திரியாது வருதற் சிறப்பு 645. மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான. இது, மரபினையே வற்புறீஇயது. (இ-ள்.) வழக்கினகத்து வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்கது, மற்றுச் செய்யுள்செய்த சான்றோர் அதற்கேற்ற வகையாற் செய்யப்பெறுவராகலின் எ-று. அவர்க்கு இம்மரபு வேண்டுவதன்றுகொலென்று கருதினுங் கருதற்க, "மரபேதானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று" (தொல். செய். 80) என்றதனான். மரபுவழிப்படுங்காலென்பான் "மரபு வழிப்பட்ட சொல்லி னான" என்றானென்பது. ஆண்டுக் கூறிய மரபு உலகியலாகலான் அவ்வுலகியல் அவ்வாறாதற்குக் காரணம் ஈண்டுக் கூறிச் செய்யுட்கும் அதுவே காரண மெனக் கூறினானென்பது. இதனது பயன்: 'செஞ்ஞாயி' றென்பது வழக்கன்றாயினும் உண்மைநோக்கி அதனைச் செய்யுள்செய்யுஞ் சான்றோர் (புறம். 38) அவ்வாறு வழங்கினாற்போல, உயர்திணைப் பொருளையும் ஐம்பெரும்பூதங்கள் அஃறிணையான் வழங்குதலுண்மை நோக்கி அவ்வாறுஞ் சொல்லப்பெறுபகொலென்று ஐயுற்றானை ஐயம் அறுத்த வாறு. அஃறிணைப் பாற்கும் இஃதொக்கும். அல்லதூஉம் இன்னசெய்யுட்கு இன்னபொரு ளுரித்தெனவும், இனைப்பகுதியாற் பெயர்பெறுமெனவும், மரபு பற்றியே சொல்லப்படுமென்றற்கும், இனி 'நிறைமொழி மாந்தர் மறைமொழி' போல்வன சில மிறைக்கவி பாடினாருளரென்பதே பற்றி அல்லாதாரும் அவ்வாறு செய்தல் மரபன்றென்றற்கும் இது கூறினா னென்பது. அவை: சக்கரஞ், சுழிகுளங், கோமூத்திரிகை, ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று என்றாற்போல்வன. இவை மந்திரவகை யானன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகனைந்திணைக்கும் மரபன்றென்பது கருத்து. அல்லாதார் இவற்றை எல்லார்க்குஞ் செய்தற் குரியவென இழியக் கருதி அன்ன வகையான் வேறு சில பெய்துகொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணையென்று வரையறுக்கலாகா; என்னை? "ஒற்றை இரட்டை புத்தி வித்தார" மென்றாற் போல்வன பலவுங் கட்டிக்கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின், அவற்றிற்கு வரையறை வகையான் இலக்கணங் கூறலாகா வென்பது. "ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னைம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையால்" எனவுங், "கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை யாடா வடகினுளுங் காணேன்." (திணை. நூற். 4) எனவுஞ் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறையின்மை யின், அவற்றுக்கு இலக்கணங் கூறார், பண்ணத்திப்பாற் (492) படுப்பினல்ல தென்பது. (90) மரபு திரியின் வரும் இழுக்கு 646. மரபுநிலை திரியின் பிறிதுபிறிது ஆகும். இது, மேற்போன வழக்கிற்குஞ் செய்யுட்கும் வருகின்ற இலக்கணத் திற்கும் பொது. (இ-ள்.) மரபினை நிலை திரித்துச் சொல்லுபவெனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிதுபிறிதாகும் எ-று. செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாய பொருளுணர்வதெல் லாம் மரபு பற்றாக அல்லது மற்றில்லையென்றவாறு. (91) வழக்காவது இஃது எனல் 647. வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டு ஆக லான. இது, வழக்கினுள் மரபினைப் பிழைத்துக் கூறுவனவும் உளவென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே; என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமை யின் எ-று. அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு. எனவே, உயர்ந்தோரெனப் படுவார் (509) அந்தணரும் அவர்போலும் அறிவுடையோருமாயினாரென்பது. (92) நூலின் இருவகை 648. மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூல்தாம் இருவகை யியல முதலும் வழியும்என நுதலிய நெறியின. இது, மேற்கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக்கணஞ் செய்வார்க்கும் வெண்டுமெனவும் அவ்விலக்கணம் இனைப்பகுதித் தெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) மரபுநிலையின் திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாரானும் உரைக்கப்படும் நூல் இரண்டிலக்கணத்தவாகும், முதனூலென வும், வழிநூலெனவுங் கருதிக் கொள்ளும் அடிப்பாட்டான் எ-று. "மரபுநிலை திரியின் பிறிதுபிறிது ஆகும்." (தொல். மர. 91) என்பதனை இதற்குமேல் எய்துவித்தானன்றே, அதனான் மரபு நிலை திரியாமையே தமக்குத் தகுதியாவதெனவும் இவ்விருவாற்றானும் ஒன்றனாற் செய்தலே மரபெனவுங் கூறியவாறு. 'நுதலியநெறி' (648) யென்றதென்னையெனின், இன்னதே முதனூல் இன்னதே வழிநூலென்பதோர் யாப்புறவில்லை; ஒரு நூல் பற்றி ஒருவன் வழிநூல் செய்தவழி அவ் வழிநூல் பற்றிப் பின்னொருகாலத்து ஒருநூல் பிறந்ததாயின் அது வழிநூலெனப் பட்டு முன்னை வழிநூலே முதனூ லெனப்படுமென்றற்கென்பது. இதனைச் சார்புநூலென்னாமோ வெனின்,- வழிநூலுஞ் சார்புநூலுமாகலின் அங்ஙனங் கூறானாயினான். எற்றுக்கு? சார்புநூலினைப் பற்றி ஒருநூல் பிறந்தவழிச் சார்பின் சார்பெனக் கூறல் வேண்டுவதாகலானும் ,அதனைச் சார்ந்து தோன்றிற் சார்பென்னுஞ் சொல்லை மும்முறை சொல்லியும் அதன்பின் தோன்றிய நூற்கு நான்முறை சொல்லியும் எண்ணிகந்தோடுதலானுமென்பது. மற்று இரண்டாமெண்ணுமுறைமைக்கணின்ற நூலினையே வழிநூலெனக் கொண்டு மூன்றாவது தோன்றிய நூலே சார்பு நூலாகவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறாரெனவும் கொள்ளாமோவெனின், முதனூலிற் கிடந்த பொருளை ஓர் உபகாரப்பட வழிநூல் செய்த ஆசிரியன் செய்தக்காற் சார்புநூலெனப் பின்னர் ஓர் ஆசிரியன் நூல் செய்ததனாற் பயந்ததென்னையென்க. என்றார்க்கு, வழிநூலும் பிற்காலத்தரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்தலன்றே இதனாற் பயந்ததெனின், அதுதானும் பின்னொருகாலத்து அரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்வா னல்லனோவென்று மறுக்க. இவ்வாராய்ச்சி வேண்டா வென்றற்கன்றே இவ்விருவகையானும் வருதலே மரபென்பானாயிற்றென் றொழிக. ஒன்றன்வழியே யன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானும் நூல்செய்யப் பெறாரோவெனின், அது மரபன்று; அதுநோக்கியன்றே, "மரபுநிலை திரியின் பிறிதுபிறிது ஆகும்" (646) என்ற விதி நூலிற்கும் எய்துவித்துப் புகுந்ததென்பது. என்னை? பிறிது பிறிதாகுமாறெனின், - ஒரு பொருட்கண்ணே மாறுபட்ட இலக்கணங் கூறின் அவ்விரண்டும் அதற்கிலக்கணமாகாது; என்போல? மாணிக்க மணியினைச் செவ்வண்ணம் முதலாயின சில இலக்கணங் கூறிய நூல் கிடப்பக் கருவண்ண முதலாயினவும் அதற்கிலக்கணமென்று ஒருவன் எதிர்நூலென்பதொரு நூல் பிற்காலத்துச் செய்யுமாயின், அஃது அதன் இலக்கணமெனப் படாதாகலானென்பது. மற்றுக் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்குநூலும் வேறுபட அமையும்பிற எனின்,- "வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டு ஆக லான." (தொல். மர. 92) என்றமையானும், அங்ஙனம் காலந்தோறும் ஓரோர்நூல் செய்யின் வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின்றாகியே செல்லுமாகலானும் அது பொருந்தாதென்பது. அல்லதூஉம், முற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைபவாயினன்றே, பிற்காலத்துப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீஇக்கொள்வதென்க. இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் 'வழக்குஞ் செய்யுளு'மென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது, அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென்பது. இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப. அல்லதூஉம் இந்நூலிலக்கணம் வழக்கிற்குஞ் செய்யுட்குமேயன்றி, அங்ஙனமாகப் பொருண்மேவும் பண்டம் முதலாயவற்றிற்கு இலக்கணஞ் செய்யுங்காலும் நியாயஞ்செய்யினுந், தமிழ்நூலதற்கிலக்கணம் எவ்வாற் றானும் இதுவே யென்றற்கும் ஈண்டுக் கூறினானென்பது, எனவே, பிறபாடை நூல்களாயின் இம்மரபு வேண்டுவதன்றாயிற்று. மற்று முதனூலினை இன்னதென்பது துணிந்து உரையாரோவெனின், - அதுவன்றே இனிக் கூறுகின்றதென்பது. (93) முதல்நூல் ஆமாறு 649. வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். மேல் ஒன்றற்கு முதனூலாகியும் ஒன்றற்கு வழிநூலாகியும் வந்து தடுமாறுமென்றான், இனி அவ்வாறன்றி ஒன்றே முதனூலாகலுஞ் சிறுபான்மை உண்டென்கின்றது. (இ-ள்.) செய்வினையின் பயன் துவ்வாது மெய்யுணர்வுடையனாகிய முன்னோனாற் செய்யப்பட்டதே ஒருதலையாக முதனூலாவது எ-று. எனவே, மேலைச்சூத்திரத்து முதனூலும் வழிநூலுமெனப்பட்டன முதலுஞ் சினையும் போலத் தடுமாறுமென்பதூஉம் இதுவாயின் தடுமாறாது எஞ்ஞான்றும் முதனூலாமென்பதூஉம் பெற்றாம். வினையென்பன இருவினை; இன் நீக்கத்துக்கண் வந்தது. 'விளங்கிய அறி' வென்பது. முழுதும் உணரும் உணர்ச்சி. 'அறிவி'னென நின்ற இன் சாரியை. இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவ னெனப்படும். முன்னோனை முனைவனென்பது ஒருசொல் விழுக்காடாம். முன்னென்பதனை முனையென்பவாகலின். மற்று 'வினையி'னென்ற வேற்றுமை நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமுங் கூறுமாகலின் ஒருகாலத்து வினையின்கணின்று ஒருகாலத்து நீங்கினான்போலக் கூறியதென்னையெனின், அற்றன்று; வினைப்பயந் தொடரற்பாற்றுள்ளம் இலனென்பதன்றி அவர்க்குச் சில செய்கையுள வென்பது பல்லோர்க்கும் உடம்பாடாகலின், அவ்வினைக்கணின்றே, போகமும் பாவமும் மெய்யுணர்வு பற்றித் தெறப்பட்ட வித்துப்போலப், பிறப்பில் பெற்றியனாகி நீங்குமாகலின் அவ்வாறு கூறல் அமையுமென்பது. என்னை? 'குற்றங் கெடுத்து முற்ற உணர்ந்தோருங்,' 'கெடுப்பதொரு குற்றமின்றி முழுதுணர்ந்தோரும் எல்லாம் பிறர்க்குறுதியாகிய ஆகமஞ் செய்யினுந் துறக்கம் முதலாகிய பயன்றுய்ப்பாரல்லராகலின். இனி முனைவனாற் செய்யப்படுவதொரு நூலில்லையென்பார் அவன்வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்த தொரு மொழியைப் பற்றி அனைத்துப் பொருளுங் கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல்செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்புநூலுமெனப் பலவும் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவைதேறப்படா; அல்லதூஉம் அவை தமிழ்நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது. மற்று, மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமா மெனவே, எல்லார்க்கும் முதல்வனான் செய்தது முதனூலேயாமென்பது பெறுதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின், தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிப்பட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவ தெனின், அற்றன்று: தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின், தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனாற் செய்யப்பட்ட தும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென் பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையி னீங்கி விளங்கிய அறிவினான்' முதனூல் செய்தானென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம். என்றார்க்கு முந்துநூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தனவெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழவும் அவற்றுவழி நூல் செய்தாரென்றக்கால் இழுக்கென்னையெனின், - அது வேத வழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும், இறந்த காலத்துப் பிற பாசாண்டிகளும் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடு பட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார்மகனார் நக்கீரர் "இடைச்சங்கத்தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம்" என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினாராக லானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையாராகலாற் பொய்கூறாராக லானுமென்பது. இங்ஙனங் கூறாக்கால் இதுவும் மரபுவழு வென்று அஞ்சி அகத்தியர்வழித் தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவோவென்பது. எங்ஙனமோ வெனின், "கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே." இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். "வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" என்பதனான் அகத்தியர் செய்த அகக்தியத்தினை முதனூலெனவும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப்பெருமை யுடையா ரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனாரெனவும், பன்னிரு படலத்துப் புனைந்துரைவகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப் பட்டது. இனிப், பன்னிரு படலம் முதனூலாக வழிநூல் செய்த வெண்பா மாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை? "மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த." எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையினென்பது. இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அதுதானும் பனம்பாரனார், "வடவேங்கடந் தென்குமரி" (தொல். பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ்செய்தமையிற் சகரர் வேள்விக்குதிரை நாடித் தொட்ட கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டொடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம், அவ்வழக்குநூல் பற்றியல்லது ஈண்டு மூன்றுவகைச் சங்கத்தாருஞ் செய்யுள் செய்திலரென்ப தூஉம், ஆசிரியரும் அவர் போல்வாரும் அவர்வழி ஆசிரியருஞ் செய்யுள்செய்த சான்றோருஞ் சொல்லாதன சொல்லப்படாவென்பதூஉம், அவருடம்படாதன சொல் உளவென்று எதிர்நூலென ஒருவன் பிற்காலத்து நூல்செய்யுமாயின் தமிழ்வழக்கமாகிய மரபினோடுந் தமிழ்நூலோடும் மாறுபட நூல்செய்தானாகுமென்பதூஉம், இனித் தமிழ்நூலுள்ளுந் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறிவந்த வகையான் அறியப்படு மென்பதூஉம், பாட்டுந் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு மற்று அவையுஞ் சான்றோர்செய்யுளாயின வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத்துள்ளும் ஒருசாரார்க் கல்லது அவர் சான்றோ ரெனப்படா ரென்பதூஉம், இங்ஙனங் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபட வந்த அழிவழக்கும் இழிசினர் வழக்கும் முதலாயினவற்றுக் கெல்லாம் நூல்செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இகந்தோடுமென்பதூஉம், இறந்தகாலத்து நூலெல்லாம் பிறந்த பிறந்த வழக்குப் பற்றிக் குன்றக்கூறலென்னுங் குற்றந்தங்குமென்பதூஉம், ஒன்றாகப் புறனடுத்து ஒரு சூத்திரமே செய்துபோத அமையுமன்றி ஒழிந்த சூத்திரங்க ளெல்லாம் மிகையாமென்பதூஉமெல்லாம் படுமென்பது. (94) வழிநூல் ஆமாறு 650. வழியெனப் படுவது அதன்வழித் தாகும். இது, வழிநூலாமா றுணர்த்துகின்றது. (இ-ள்.) நுதலிய நெறியான் வழிநூலென்றற்குச் சிறப்புடையது அம்முதனூல்வழிப் பிறந்த வழிநூல் எ-று. அது தொல்காப்பியம். மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ வெனின், - அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றின வென்பது; என்னை? "கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின்று உணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையின் தமிழறிந் தோர்க்குக் கடனே." என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர் பல்காயனார் முதலாயி னாரை அவ்வாறு கூறாராகலானுமென்பது. என்றார்க்குத், தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல்செய்த தெற்றுக்கெனின், அவரும் அவர்செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளுமெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனை இவ்வாசிரியர் சுருங்கச்செய்தலின் அருமைநோக்கிப் பகுத்துக் கூறினாராகலானும், அவர் தந்திரத்துக்கேற்ப முதனூலொடு பொருந்த நூல்செய்தாராகலானும் அமையுமென்பது. பிற்காலத்துக் காக்கைப்பாடினியாருந் தொல்காப்பிய ரொடு பொருந்தவே நூல்செய்தாரென்பது. மற்று, "வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம் நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே." எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகியகாலத்துச் சிறு காக்கைப்பாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூலென்றுமோ வெனின்,- ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவுமாற்றாற் செய்தாராயின், அது வழிநூலாதற்கு இழுக்கென்னையென்க. இனிச், சில குன்றக் கூறினார் தொகுத்து நூல்செய்தாராகலி னென்பாரும் உளர். ஒழிபொருளவாயினது தொகையெனப்படாமையின். அங்ஙனங் கூறுதல் வழிநூலிலக்கணமன் றென்பது. (95) வழிநூல் வகை 651. வழியின் நெறியே நால்வகைத்து ஆகும். இது, வழிநூல் இனைத்து வகைத்தென்கின்றது. (இ-ள்.) மேல், வழிநூலெனப்பட்டது நான்குவகையாற் செய்யப் படும் எ-று. இதன்பயன்: ஒரு நூலுள் ஒன்றல்லது பல வாராவெனவும், அதனானே நான்குவகைய வழிநூலெனவும், முதனூலாயின் ஒன்றேயா மெனவுங் கூறியவாறாயிற்று. அவையாவன மேற் கூறுப. (96) இதுவுமது 652. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே. இந்நான்கு வகையுங் காரணமாக மேற்கூறிய நால்வகை வழிநூலும் பெறலாம் எ-று. தொகுத்தலென்பது முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக்கூறல்; விரித்தலென்பது முதனூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்றதனை விளங்கு மாற்றான் விரித்துக்கூறல். தொகைவிரியென்பது அவ்விருவாறும் பற்றித் தொகுத்து முன்னிறீஇ அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். மொழிபெயர்த்தென்பது பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ்நூலாகச் செய்வது. அதுவுந் தமிழ்நூலுள் வழிநூற்கு மரபாமென்ற வாறு. அதர்ப்படவென்பது, நெறிப்படவென்றவாறு. நெறிப்படுதலென்பது, அவ்வாறு மொழிபெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத்தும் விரித்துந் தொகைவிரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லைத் தமிழர்க்கும் ஆரியர்க்குமென்பது. மொழிபெயர்த்தெனவே, பொருள் பிறழாமை பெற்றாம். வழக்குநூலுள்ளும் மொழிபெயர்த்து யாக்கப்படுவன உளவோவெனின், அது வேண்டுமே? வேதப்பொருண்மை யும் ஆகமப்பொருண்மையும் நியாயநூற் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால், அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினானென்பது. இனிப், பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூத புராணமென்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமை யின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்குநூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (97) நூல் இலக்கணம் 653. ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர். இஃது, எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டின வழிப் பிறந்த காண்டிகையும், அக்காண்டிகையானும் விளங்காத காலத்து அதனையும் விளங்கக்கூறும் உரைவிகற்பத்ததுமாகிப், பத்துவகைக் குற்றமுமின்றி, நுண்பொருளவாகிய முப்பத்திருவகை உத்தியொடு பொருந்திவரின், அதனை நூலென்று சொல்லுப நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் புலவர் எ-று. 'ஒத்த சூத்திர' மென்றதனான் நூலின் வேறாகிய இருவகைப் பாயிரமுஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்தவென்பது கொள்க. 'உரைப்பி'னென்றதனான், " உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி " (தொல். செய். 166) வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளியலுட் கூறிப்போந்தான்; அங்ஙனம் வேறாகிப் பொருந்திவருமெனப்பட்ட உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம். இதனது பயம் : உரையுங் காண்டிகையுமின்றிச் சூத்திரத்தானே சொற்படுபொருள் உரைத்தலுமுண்டு; அஃது அவற்றை யொழிய ஆகாது இக்காலத் தென்றலாயிற்று. 'உரைப்பி'னென்னும் வினையெச்சங் 'கிளத்த'லென்பதனொடு முடியும். 'வகை' யென்றதனான் உரையெனப்பட்டதுதானும் அக் காண்டிகையின் மெய்ப்படக் கிளந்ததே யாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிவந்த உரைவிகற்பமே யென்பதுணர்த்தியவாறு. அஃதேற் காண்டிகை யென்றாற்போல இதற்குப் பெயர் வேறு கூறானோவெனின்,-வேண்டியார் வேண்டியவாறு, " மறுதலைக் கடாஅ மாற்றமும்" (தொல். மர. 104) எல்லையின்றி இகந்துவருவனவெல்லாம் உரையுள் எழுதப்படாமையின், அதுவுங் காண்டிகைப் பகுதியேயென்பது அறிவித்தற்கு வேறுபெயர் கூறாது 'மெய்ப்படக் கிளந்த வகை'யென்றே போயினானென்பது. மற்று இல்லதற்கும் இலக்கணஞ் சொல்லுவார் போல 'ஈரைங் குற்றமுமின்றி' யென்றதென்னையெனின்,-அவற்றை எதிர் மறுத்துக்கொள் ளும் பத்துவகைக் குணமுங் கோடற்குத் தந்து கூறினானென்பது. அவை, " எதிர்மறுத்து உணரின் திறத்தவும் அவையே" (தொல். மர. 109) என்புழிச் சொல்லுதும். அல்லதூஉம் இவை கூறியவதனானே, பிறிதொரு பொருள் கொள்ளப்படும் இடங்களும் உள; அவை நோக்கி அங்ஙனங் கொள்ளாதனவுந் தொகுத்து உடன்கூறினானென்பது. அவையும் அவற்று விரிச்சூத்திரத்துட் கூறுதும். " ஈரைங்குற்றமு'மென்ற உம்மையை எச்சப்படுத்துப் பிறவுங் குற்றம் உளவென்பதுங் கொள்க. அவை முதனூலொடு மாறுகோடலும் யாப்பினுட் சிதைதலும் போல்வன. அவை முன்னர்ச் சொல்லுதும். 'நேரிதி'னென்றதனான் முதல்வன் செய்த நூலாயினும் வழி நூலாயினும் அவ் வழிநூலின் முழுவதூஉந் தெரிந்துணரும் நுண்ணுணர்வி னார்க்கே முப்பத்திருவகை உத்தியும் புலனாவதெனக் கொள்க. அவையும் முன்னர்ச் சொல்லுதும். 'வகையதாகி'யென்பது 'புணரி'னென்பதனொடு முடிந்தது. 'புணரி'னென்பது 'மொழிப' வென்பதனொடு முடிந்தது. ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டிற் காண்டிகைப் பொருளினை விளங்கச்சொல்லும் உரைவிகற்பத்ததாகியெனவே 'சூத்திரமுங் 2காண்டிகையும் 3உரையுமென மூன்றும் அவற்றொடு 4குற்றமின்மை யும் 5உத்திவகையுங் கூட்ட நூலிலக்கணம் ஐந்தாயின. இதனது பயம் : இவற்றது விரிச்சூத்திரங்களான் உய்த்துணர்வான் எடுத்தோதித் தொகுத்துக் காட்டலாயிற்று. மற்றுக் குற்றத்தினை இடைவைத்து உத்திவகையினை ஈற்றுக்கண் வைத்த தென்னையெனின், ஈரைங்குற்றமுமின்றி வரும் இலக்கணம் முதனூற்கண் இல்லையென்பது 'முதல்வன் கண்' (தொல். மர. 106) என்புழிச் சொல்லுமாகலின், அவை போல முதனூற்கண் உத்திவகையும் வாரா, சிறுவரவின வென்றற்கென்பது. இனி, 'ஒத்த'வென்றதனாற் பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் சூத்திரமும் தம்மின் வேறென்றலும், அவ்விருவகைப் பாயிரவுரையும் சூத்திரவுரையும் வேறெழுதப்படுமென்றலும், சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கிவருவன உளவென்றலும், அவ்விருவகை யுரைக்கும் வேறாயினும் அவ்வுரைசெய்தான் பெயர் கூறுதல் முதலாகிய பாயிரவுரை கூற அமையுமென்றலுஞ், சூத்திரந்தானே பாயிரமில்லாதவழிப் பாயிரம்போல நூன்முகத்து நிற்குமென்றலும், அங்ஙனம் நின்றவழிப் பொதுப்பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமும் உரைவகைத்தாற் பெய்துரைத்தலும், அவ்விருவகைப் பாயிரமுஞ் செய்தார் இன்னாரென்றலுமென்று இன்னோரன்ன கோடலாயிற்று. இவையெல்லாஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணமே யாதலின் 'ஒத்த'வென்னும் மாட்டேற்றா னடங்கின. அவை வருமாறு : " வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்" என்னும் பொதுப்பாயிரமும், " வடவேங்கடந் தென்குமரி" (தொல். பாயிரம்) என்னுஞ் சிறப்புப்பாயிரமும், ஒழிந்த சூத்திரங்கள் போல நூற்பா வகவலாகி நூலின் வேறாகி இன்றியமையாவாயின. அவற்றிற்குச் சூத்திரவுரையொடு மயங்காமல் வேறுரையும் ஆண்டெழுதப்பட்டன. ' எழுத்தெனப் படுப' (தொல். எழுத்.1) என்னுஞ் சூத்திரத்தினை நிறீஇ, என்பது சூத்திரமெனவும், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனவும், இவ்வதிகாரம் யாதனை நுதலியதெனவும், அவற்றிற்கு விடைகூறலும், இவ்வதிகாரம் எனைப்பகுதியான் உணர்த்தினா னெனவுங்கூறி ஒழிந்த ஓத்திற்கும் இவ்வாறே சூத்திரவுரையொடு பாயிரவுரை மயங்கச் சொல்லியவாறும், அவற்றவற்றுட் கண்டுகொள்க. இனி, இவ்வுரைசெய்தார் யாரோ(வெனின்), என்றவழி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரென உரையெழுதினான் பெயர் கூறுதலுஞ் சூத்திரஞ்செய்தான் பெயர் கூறுதலோடு ஒத்த இலக்கணத்த தாயிற்று. " அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்" (இறையனார். 1) என்பது பாயிரமின்றித் தானே நூன்முகத்துநின்று இருவகைப் பாயிரவுரையும் பெய்து உரைக்கப்பட்டது. 'வடவேங்கடந் தென்குமரி' என்னுஞ் சிறப்புப்பாயிரஞ் செய்தார் பனம்பாரனாரெனவும், " வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்" என்னும் பொதுப்பாயிரஞ்செய்தான் ஆத்திரையன் பேராசிரியனெனவும் பாயிரஞ்செய்தான்பெயர் கூறியவாறு. 'என்பது பாயிரம் ; என்னுதலிற்றோ(எனின்)'எனப் பாயிரவுரைக்கு முகவுரைவந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. (98) ஐயம் அறுத்தல் 654. உரையெடுத்து அதன்முன் யாப்பினும் சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே. இஃது, ஐயம் அறுத்தல் நுதலிற்று ; என்னை? மேற்கூறிய சூத்திரம் உரைபெறுங்காற் காண்டிகையும் உரையும் வேறுவேறு பிறக்கக் கண்ட மாணாக்கன் ஒழிந்தனவும் ஒன்றொன்றனை ஒழித்துவருங்கொலென்று ஐயுற்றாற்குக் காண்டிகையும் உரையுமே கண்டாய் ஒன்று ஒன்றனை ஒழிந்துவருவன வென்று ஐயம் அறுத்தமையின். மேலதற்கே புறனடை யெனவும் அமையும். (இ-ள்.) உரையெடுத்து அதன்முன் யாப்பினும் - காண்டிகையினை விளக்குங் கருத்தினாலும் அக்கருத்தின்றியும் அச்சூத்திரத்திற்கு உரைதொடர்ந்தெழுதினும் ; சூத்திரத்தினை அதுவென்று சுட்டினான். ' முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்து' (தொல். சொல். 39) என்பதனா னெனவுணர்க. சூத்திரம் புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் - அச்சூத்திரத்திற்கு இடையின்றிக் காண்டிகை பொருந்தச்செய்யினும் 'புரைதப' என்பதனான் மேல் இடைபுகுமெனப்பட்ட பாயிரவுரையின்றிச் செய்தல் காண்டிகைக்கும் பெரும்பான்மையெனக் கொள்க. 'உடன்பட' என்பதனாற் காண்டிகையல்லாத முகவுரைக்கண்ணே முன்னும் பின்னுங் காண்டிகைபெய்து உரைத்தலுங் கொள்க. கொள்ளவே, முற்கூறிய ஐந்தும் ஒருங்கு வருதலும் இவ்வாறே பெற்றாம். விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு- கடாவிற்கு விடைகூறுவாரும் போலி மறுப்பாருஞ் சொல்லுஞ் சொற்பகுதியோடு ; 'வகை' யென்றதனான் அவ்விருபகுதியுங் காண்டிகைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ளவருமெனவும், உரைக்கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவருமெனவுங் கொள்க. அஃதேற் கூற்றினாற் கோடல், "மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்" (தொல்.மர. 104) என வருகின்ற சூத்திரத்திற் பெறுதுமெனின், அற்றன்று ; அது பிறன்கோள் பற்றி மறுதலைக் கடாஅ மாற்றமுங் கூறுதற்குச் சொல்லினான்; இஃது அன்னதன்றி அறியாது வினாவுந் துணையேயாகலின் வேறென்பது. விடுத்தலெனவே வினாவினை விடுத்தல் பெற்றாம். விலக்கலெனவே அஃதல்லாப் போலியை விலக்குதலென்பது பெற்றாம். புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே- காண்டிகையிரண்டும் உரையிரண்டுமென்று வருகின்ற நான்கன்கண்ணும் இடைஅந்தரமின்றிப் புணர்க்கவும்படும் அவ்விருபகுதியும் எ-று. அஃதாவது, காண்டிகைப்பகுதி இரண்டற்கும் விடுத்தலும் விலக்கலும் உடையோர் குறிப்பினாற் கொள்ளவைத்தலும், ஒழிந்த உரையிரண்டன் கண்ணும் அவை கூற்றினாற் கொள்ள வைத்தலுமென உணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று ; என்னை? காண்டிகையும் உரையும் ஒன்று ஒன்றனை ஒழித்தும் வருமென்றமையின். ஒழியாதுவருதல் 'உடன்பட'வென்றதனான் தழுவப்பட்டது. இவற்றிற்கு உதாரணமாமாறு தத்தம் விரிச்சூத்திரத்துட் சொல்லுதும். (99) சூத்திர இலக்கணம் 655. மேற்கிளந்து எடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை எய்தி யளக்க லாகா வரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்றெரிபு உடையது சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர். இது, நிறுத்த முறையானே சூத்திரமாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் கிளந்து எடுத்த யாப்பின் உட்பொருளொடு......... " அவற்றுட் சூத்திரந் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே" (தொல். செய். 169) என மேற் செய்யுளியலுள் விதந்தோதிய இலக்கணமுடைத்தாய், எனவே, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்து முதற்கண்ணே வினையியலுட் கூறப்படும் இலக்கணத்தினை ஆண்டு ஓர் உபகாரப்படக் கூறியதுபோல, அடிவரையின்மைக்கு ஆண்டுக் கூறியதல்லது, இச் சொல்லப்பட்ட இலக்கணம், ஈண்டு இனிக் கூறுகின்ற இலக்கணத்தொடு கூடி மரபெனவே படும் என்றானாம். ஆண்டுப் பொதுவகையாற் கூறிய நூலிற்கும் இஃதொக்கும் ; என்னை ? பல சூத்திரந் தொடர்ந்து நூலாகி ஈண்டே மரபு கூறப்படுதலின். உரையாயின், அன்னதன்றி நால்வகையுரை யுள் ஏற்பது பகுதி வேறுபடும் மரபு கூறுகின்றமையின், அது செய்யுளிய லுட் கூறியவாறு போலாது, வேறெனவே படும் ஈண்டென்பது. இனி, முற்கூறிய பாயிர இலக்கணத்தினை இன்றியமையாது சூத்திரமென்றற்கும் இதுவே ஓத்தாகக் கொள்க; என்னை? மேற்புறத்து நின்று 'மேற்கிளந் தெடுத்த யாப்பென'வேபடுமாகலி னென்பது. இதனது பயம் : பாயிர இலக்கணங்களொடு பொருந்தச் சூத்திரஞ் செய்த லென்பதாயிற்று : இஃது ஒப்பக்கூற (665) லென்னும் உத்திவகை. 'மேற்கிளந்தெடுத்த' இலக்கணமாவது, ஆடிநிழற் போல் பொரு ளானுந் தேர்தல் வேண்டாமற் பொருட்பெற்றி உணர்கின்றாங்குச் சூத்திரத்தொடருள் இலக்கியமின்றாயினும் அதனை இதுகேட்டான் காணுமாற்றாற் செய்தலாயிற்று. இனி, மேற்கிளந்தெடுத்த பாயிர இலக்கணம் சூத்திரத்தொடு பொருந் துங்காற் பொதுப்பாயிர இலக்கணம் பொருந்தா, சிறப்புப்பாயிர இலக் கணம் எட்டுமே பொருந்துவனவெனக் கொள்க. அஃதென்னை பெறுமா றெனின், மேற்கிளந்த யாப்பென்னாது எடுத்த யாப்பென்றதனானே ஒரு நூற்குச் சிறப்பு வகையான் இன்றியமையாதாகி எடுத்துக் கொள்ளப்படுவது ' வடவேங்கடந் தென்குமரி' (தொல். பாயிரம்) என்றாற்போலும் சிறப்புப்பாயிரமாகலானும், பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுமென்றற்கும் அங்ஙனங் கூறப்பட்டது ; சில்வகை எழுத்தின் செய்யுட்டாகி- ஆடிநிழலின் அறியச் செய்யுங் கால், அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடைகிடப்பச் செய்யப்படாது, பொருட்கு வேண்டுஞ் சில சொல்லாற் செய்யுஞ் செய்கைத்தாகி; செய்யுளென்றான், அறுவகைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட்டிற்றாகிய அடிவரைப்பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத் தானும் வெண்பாவானும் செய்யவும்படுஞ் சூத்திரமென்றற்கென்பது ; என்னை? மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தமையானுஞ், " சின்மென் மொழியிற் றாய பனுவல்" வெண்பாட்டாகியும் வருமாதலானு மென்பது. சொல்லுங் காலை உரையகத்து அடக்கி- பொருளானும் போலி யானுஞ் சொல்லுவார் சொல்லுங்கால் அவ்வுரையெல்லாந் தன்னகத் தடக்கி; நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி- பருப்பொருட்டாகிய பாயிரம்போலாது நுண்பொருட்டாகிய பொருள் கேட்டார்க்கு வெள்ளி தன்றி உள்ளுடைத்தாகி; துளக்கலாகாத் துணைமை எய்தி- முன்னும் பின்னுங் கிடந்த சூத்திரங்களானே தன்னுட்பொருள் இன்றியமையாததாகலெய்தி ; எனவே, ஒன்றொன்றனை இன்றியமையாத உறுப்புப் போலச் செய்யல் வேண்டு மென்றவா றாயிற்று. அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி - அளத்தற்கரிய பெரும் பொருட்டாகி ; பல்வகையானும் பயன் தெரிபுடையது - பலவாற்றானும் பொருள் விளங்க வருவது : சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர் - இவையெல்லாம் சூத்திரத் திலக்கணமென்று முதனூல்செய்த ஆசிரியராற் சொல்லப்பட்டன எ-று. இஃதியல்பெனவே இவற்றிற் சிறிய வேறுபட்டன விகாரமென்றா னாம். "உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமும் உயிரும் வருவழி யியற்கை" (தொல். எழுத். தொகை. 21) என்றவழி, யகரமும் உயிரும் வருவழியெனவே, இது நிலைமொழித் தொழிலென்பது, ஆடிநிழலின் அறியத் தோன்றிற்று. இனி, நிலைமொழித்தொழில் வேறு கூறினமையின், " மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி" (தொல். பாயிரம்) எனப் பாயிர இலக்கணத்துடன் பொருந்துவதாயிற்று. இனி, எண்வகையாற் பரந்துபட்ட புள்ளியீற்றுச் சொல்லினை யெல்லாம் 'உகரமொடு புணரும் புள்ளி'யென அடக்கினமையிற் சில்வகை யெழுத்தின் செய்யுளு மாயிற்று. 'யகரமும் உயிரும் வருவழி இயற்கை'யென வருமொழிப்பரப்பெல்லாம் அடக்கினமையின் அதற்கும் இஃதொக்கும். இதனைப்பற்றி யெழுந்த பொய்ப்பொருளும் மெய்ப்பொருளும் பலவாக லின் உரையகத் தடக்கலும் உடைத்தாயிற்று. தொகைமரபினுள்ளும் உயிர்மயங்கியலினுள்ளும் புள்ளி மயங்கிய லினுள்ளுங் குற்றியலுகரப்புணரியலினுள்ளும் பரந்து பட்ட பொருளினை நுழைந்து வாங்கிக் கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததூஉ மாயிற்று. இச்சூத்திரம் பொருளுரைத்தவழியும் வெள்ளிதன்றி உள் ளுடைத்தாகலின் நுண்மையுடைத்தெனவும் பட்டது. " குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் " (தொல். எழுத்து. தொகை. 18) என்பதூஉம் " ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர்" (தொல். எழுத்து. புள்ளி. 1) என்பதூஉம் முதலாயவற்றிற்கு இஃது இன்றியமையாததாகலும் இதற்கு அவை இன்றியமையாவாகலும் உடைமையின், துளக்கலாகாத்துணைமை யெய்தியதூஉமாயிற்று. இருபத்துநான்கீறும் இருபத்திரண்டு முதலும்பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் இருமொழித் தொழிலும் ஒருவகையான் தொகுத்துக் கூறினமையின் அளக்கலாகா அரும்பொருட்டாதலும் பெற்றாம். இங்ஙனம் வருதல் இயல்பெனவே சிறிய வேறுபட்டுவருவன உளவாயின் அவையும் அமையு மென்றானாம். அவை, " அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே" (தொல். சொல். வினை. 11) என்றாற்போல்வனவும் பிற இலேசுச் சொல்லும் இயல்பின்றி விகாரமெனப் படும். (100) காண்டிகையுரை 656. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். இது, முறையானே காண்டிகை யாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றமில்லாத சூத்திரம் தனதுட்பட்ட இலக்கணத்துள் ஒன்றுங் கரவாது முடியச்செய்வது காண்டிகையாம். எ-று. 'பழிப்பில் சூத்திர'மென்றதனாற், காண்டிகை செய்யத்தகாதென்று இகழ்ச்சிப்படப் பரந்தன உளவாயின் மறுத்துச் செய்க வென்பதாம். இதனை வருகின்ற காண்டிகைக்கும் அகலவுரைக்கும் ஏற்பித்துக் கொள்க. உ-ம் : " எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமுத, னகர விறுவாய் முப்பஃது என்று சொல்லுவார். ஆசிரியர், சார்ந்து வரலிலக்க ணத்த மூன்று மல்லாத இடத்து" (தொல். எழுத்து. சூ : 1) எனவரும். பிறவும் அன்ன. இனி மறுத்துச் செய்யுங்கால், " வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்" (தொல். புறத். 5) என்பது தெய்வச்சிறப்பினை அறியுஞ் சிறப்பொடு வெவ்வாயுடைய வேலனது வெறியாட்டினை ஆடிய காந்தளுமென்றாற்போல வருவன பலவுங் கொள்க. இங்ஙனங் கூறி உதாரணங்காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்க ளென்பது கருத்து. அஃதேல், உதாரணத்தொடுவருங் காண்டிகையிலவோ வெனின், அது வருகின்ற சூத்திரத்துட் சொல்லுதும். கரப்பில்லதென்னாது முடிவதென்றான், அதனாற் பரந்துபட்ட சூத்திரத்தினை அங்ஙனம் மறுத்துச் செய்யாது தொகுத்துக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்துசெய்தலும் உண்டென்பது கொள்க; அது, " வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்" என்பது முதலாக இக் கூறப்பட்ட இருபத்தொரு துறையுங் கரந்தையெனப் படுமென்றாற்போல மாட்டென்னுஞ் செய்யுளுறுப்பினைத் தோற்றுவாய் செய்துவிடுதல். பிறவும் அன்ன. (101) இதுவுமது 657. விட்டகல்வு இன்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங்கு அமைந்த மெய்ந்நெறித்து அதுவே. இது, மேலதற்கொரு புறனடை ; எய்தியதன்மேற் சிறப்பு விதியுமாம்; என்னை? காண்டிகையை மேலதனோடு இருவகைய என்றமையின். (இ-ள்.) விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தி - சொற்படுபொருள் சொல்லுங்கால் தொடர்மொழிகளைத் தொகைநிலை பயனிலை முதலாயவற்றாற் பகுத்துக்கூறாது, பகுத்துக்கூறும் உரைவிகற்பம் போன்று மற்றப் பொருள் தோன்றி; விடுத்தலென்பது, கண்ணழிவு; அக்கண்ணழி வான் அகன்றுபடுதல் விட்டகல் வெனப்பட்டது. அங்ஙனம் அகன்றுபடுத லின்றி யெனவே, 'இஃது இன்ன வேற்றுமைத்தொடர், இஃது இன்ன பயனிலைத்தொட'ரென்றாற்போலச் சொன்னிகழ்ச்சியுடைத்தாயின் அஃது உரையெனப்படுமென்றானாம். சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா- இது நியமச்சூத்திரம் அதிகாரச்சூத்திர மென்றாற்போல முதற்கட் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வாறாகி முடிந்த முடிபு சொல்லுதல் பொருட்டாக; ஏது நடையினும் - நியமச் சூத்திரமென்றானும் பிறிதொன்றென்றானும் மேற்கொண்டக்கால் இன்னது காரணத்தினெனக் காரணங் கூறும் வழக்கினானும்; எடுத்துக் காட்டினும்- அங்ஙனங் காரணங் கூறியக்கால் அதற்கேற்பது ஒன்றாயினும் உதாரணமாயினும் வழிநூற்காயின் முதனூல் எடுத்துக் காட்டுதலாயினும் ஒன்றுபற்றியும்; மேவாங்கமைந்த மெய்ந் நெறித்து அதுவே- சூத்திரஞ் செய்த ஆசிரியன் வேண்டியதே சொல்லிவிடும் பொருளிலக்கணத்திற்று மேற் கூறிவருகின்ற காண்டிகை எ-று. இது, 'மெய்ந்நெறி' யென்பது சூத்திரத்துச் சொல்லிற் கருதிய பொருளிலக்கணம். அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பி னல்லது, சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல்லாராய்ச்சியும் எழுத் தாராய்ச்சியும் அறியவேண்டுவன வெல்லாஞ் சொல்லாரென்பது கருத்து. இதனை ஈற்றுக்கண் வைத்ததனானே வருகின்ற உரையும் இங்ஙனம் விட்டகல்வின்றி வருதலுடைத்தெனக் கொள்க. உ-ம் : ' இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்' (தொல். சொல். கிளவி. 19) என்பது தன்றன்மையான் நிகழ்பொருளை இன்னதன்மைத்தென்று சொல்லுக வென்ற வாறு. அது 'நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி யுளரும்'என்றாற்போல்வன. இதற்குக் கருத்தோதுதல் பாயிரவகையாற் பெறுதுமென்பது, 'உரைப்பிற் காண்டிகை' (தொல். மர. 98) என்புழிக் கூறிவந்தாம். மற்று, 'உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட் டின்கண், அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற் றுக்கண், அவ்விருதிணைப் பொருள்மேலும் இசைக்குஞ் சொல் லினை'(தொல். சொல்: 1) யென்றக்காலும், 'வேற்றுமை யெனப்பட்ட பொருள் ஏழு' என்றக்காறும் உதாரணங் காட்டுமாறென்னை? அவற்றவற்றுப் பின் வேறு சூத்திரங்களான், 'ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி" (தொல். சொல். 2) எனவும், " ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று" (தொல். சொல். 3) எனவும், " அவைதாம், பெயர்ஐ யொ டு கு இன் அது கண்" (தொல். சொல். வேற். 3) எனவும் உதாரணங் கூறுமாலெனின், - அவை துளக்கலாகாத் துணைமை யெய்தி நின்றமையின் அவ்வாறு உதாரணம் ஆண்டுக் காட்டாக்காலும் அமையும், அவற்றைப் பிற்கூறுமாகலினென்பது. அல்லதூஉம் எதிரது நோக்கி உயர்திணைச்சொல் மூன்றும் அஃறிணைச் சொல் இரண்டுங் காட்டியக்காலும் இழுக்கன்றென்பது. ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். (102) உரை இலக்கணம் 658. சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே. இது மேல், " ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி" (தொல். மர. 98) என நிறுத்தமுறையானே காண்டிகையினை மெய்ப்படக் கிளந்த வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல், " பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்" (தொல். மர. 101) வருதலும், அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும் உடைத்தாகி வருதலுமென இருவகையும் உடைத்தென்றான். இனிச் சூத்திரத்துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்துவனவெல்லாம் அதனொடு கூட்டிச் சொல்லுதல் உரையெனப்படும் எ-று. அவை, "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்." (தொல். சொல். கிளவி. 19) என்றவழி, எடுத்தோத்தின்றி 'நிலம் வலிதாயிற்'றென்னும் வழுவமைதி கோடலும், 'ஒத்த சூத்திரம்' (தொல். 653) என்றவழிப் பாயிரம் ஒத்த சூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க. எல்லாமென்றதனாற் சூத்திரப்பொருளேயன்றி எழுத்துஞ் சொல்லும் பற்றி ஆராயும் பகுதியுடையதாதல் வேண்டும் அவ்வுரை யென்பது கொள்க. இனி, மேற் காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற்கேற்பன வெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை ஏது நடையும் எடுத்துக் காட்டுஞ் சூத்திரஞ் சுட்டுதலுமென்று இன்னோரன்ன கொள்க. இவையெல்லாந் தழுவுதற்குப் போலும், " இன்றி யமையா தியைபவை யெல்லாம்" என்று எடுத்தோதுவானாயிற் றென்பது. (103) உரைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி 659. மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்த நூலானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத்தென்பது அறியுமாற்றான் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்- மறுதலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை கூறுதலும் உடைத்தாய்; தன் நூலானும்- உரையெழுதுவானாற் கூறப்படுகின்ற உரை தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும்; இதனானே உரையின்றிச் சூத்திரமே நூலெனப்படுவதூஉமாயிற்று; முடிந்த நூலானும் - அதன் முதனூலானும்; முடிந்தநூலென்பது இணைநூலென்பாரும் உளர்; இணைவன கூறத் தான் கூறானாயின் அது குன்றக் கூறலென மறுக்க. அங்ஙனங் கொள்ளும் பொருண்மையுளவாயின் அவை, " சூத்திரத் துட்பொரு ளன்றியும்." என்பதனான் அடங்கும். மற்று, முதனூலாற் கூறிய பொருள் சில குன்றக்கூறினான் போல முடிந்த நூலாற் கொள்க என்ற தென்னையெனின், அற்றன்று; இப்பொருண்மை முடிந்த நூலினும் உண்டென்று எடுத்துக்காட்டப்படு மென்றானென்பது; இது, மேல் " ஏது நடையினு மெடுத்துக் காட்டினும்." (தொல். மர. 102) என்றவழிப் பெறுதுமாயினும் முதனூலல்லது எடுத்துக்காட்டப்பெறாஅ ரென்றற்கு ஈண்டு வரைந்து கூறினானென்பது; எனவே, இணைநூலும் அவற்றின் வழிநூலும் எடுத்துக் காட்டுங்கால் தனக்கு முதல்வராயினாரை நாட்டி அவர் கருத்தே பற்றிப் பிறர் செய்தாரெனினல்லது பிறர்மேல் தலைமை நிறீஇ அவர் கருத்துப் பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ஙனங் கூறின் அவர் நூற்கே உரையெழுதுவா னல்லனோவென மறுக்க. இனி, " வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவ" (தொல். மர. 94) னாற் செய்யப்பட்ட முதனூற்காயின் முடிந்தநூல் எடுத்துக் காட்டுத லென்னும் இவ்விலக்கணமின்றென்பது கொள்க, ஒரு தலையன்மை யென்னும் உத்திவகைபற்றி யென்பது. ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கி- ஐயவுணர்வும் பொய் யுணர்வுஞ் செம்பொருளினான் நீக்கி; தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ- அச்செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றெனவும் இரட்டுறுதனீக்கி ஒற்றுமை கொளுத்தியும்; துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்- கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்துமாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரையிலக்கணம் எ-று. மறுதலையும் மாற்றமுமென்பது கடா விடை; ஐயமும் மருட்கை யும், ஒருபுடை யொப்புமையுடைய போலியும் அதற்கு ஒன்றும் இயைபில் லாத பொய்ப்பொருளுமெனப்படும். " பிறிது பிறிதேற்றலு முருபுதொக வருதலும்" (தொல். சொல். வேற். மர. 21) என்றவழிப் பிறிதென்று ஒருகாற் சொல்ல ஆறாமுருபெனவும் பின்னொரு காற் பிறிதென ஒழிந்த உருபெல்லாந் தழுவுமெனவுஞ் சொல்லுதல் போலியெனப்படும்; என்னை? அவ்வாறாவதனோடு ஏழாமுருபும் பிறவுருபேற்கும் வழக்குள்வழி ஒன்றனைக் கொண்டமையின், அஃது ஒருபுடை யொப்புமை யுடைத்தாகி அப்பொருளன்றெனவும் படாது மற்றொன்றினைக் கோடல் பொருளெனத் துணியவும் படாது ஐயவுணர்வு செய்தமையின் அது போலியாயிற்று. இனிப், " பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்." என்னும் இரண்டும்மையும் பொருளிலவென்று பிறிது பிறிதேற்றல் உருபுதொக வருவதற்கண்ணென்று பொருள்கூறுதல் போல்வன சூத்திரத் தின் கருத்தறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கை யெனப்படும். இவ்விரண்டனையும் நீக்கி உண்மை உணர்த்துதல் உரை யெனப்படுவதாயிற்று. நிற்றலென்பது நிற்க அவ்வுரை யென்றவாறு. தன் நூலானும் முதனூலானும் ஐயமும் மருட்கையும் நீங்குங்கால் அவற்றுட் கிடந்த செம்பொருளானே நீக்கப்படுமென்பது ' இரண்டு கண்ணானுங் கூர்மையாற் பார்த்தா'னென்பதுபோலக் கொள்க. (104) முதனூலொடு மாறுகோடல் வழிநூற்குச் சிதைவாதல் 660. சொல்லப் பட்டன வெல்லா மாண்பும் மறுதலை யாயினு மற்றது சிதைவே. இது, வழிநூற்கே ஆவதொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய சூத்திரமுங் காண்டிகையும் உரையுமென்னும் மூன்றற்குஞ் சொல்லப்பட்ட இலக்கணமெல்லாஞ் சிதையாது மாட்சி மைப்படினும், முதனூலொடு மாறுகொள்ளின் அவற்றான் எல்லாஞ் சிதைந்ததெனவேபடும் அந்நூல் எ-று. ' மறுதலையாயினு'மென்ற உம்மை எதிரது தழீஇயிற்று; மேற்கூறும் பத்துவகைக் குற்றமே (653) யன்றி வழிநூற்கு இதுவுங் குற்றமாமென்றமை யின். ' ஈரைங் குற்றமு மின்றி' என்பதனை நோக்க இறந்தது தழீஇயிற்றுமாம். இதனானே, பிற்காலத்து நூல்செய்வார் நூலிலக்கணம் பிறழாமற் செய்யினும் முற்காலத்து நூலொடு பொருள் மாறுபடச் செய்யின் அது மரபன்று வழிநூற்கென விலக்கியவாறாயிற்று. ஆகவே, முதனூற்காயின் இவ்வாராய்ச்சியின்றென்பது கருத்து; என்னை? முதல்வனூல் மாறுபடுவ தற்கு அதன் முன்னையதொரு நூல் இன்மையினென்பது. அல்லதூஉம் 'மற்றது' என்று ஒருமை கூறினமையானும் இது வழிநூற்கே விலக்கிற் றென்பது கொள்க. மற்றுமேல், " முதலும் வழியுமென நுதலிய நெறியின." (தொல். மர. 93) எனவே, முதனூலின் வழித்து வழிநூலென்பதூஉம் மறுதலையாயிற் சிதைவென்பதூஉம் பெறுதுமாதலின் இச்சூத்திரம் மிகையாம் பிற வெனின்,- அற்றன்று; முதல் வழி யென்பன முன்னும் பின்னும் காட்டினன்றி மாறுபடாமைக் கூறல்வேண்டுமென்பதூஉம் பெறுதுமாயின் அது கூறல்வேண்டுமென்பது. பெறாமாகலின் இது கூறல்வேண்டுமென்பது. அல்லாக்கால், " முன்னோர் நூலின் முடிபுஒருங் கொவ்வாமைப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுவான்" செல்லுமென்பது. (105) முதல்நூலின் சிறப்பு 661. சிதைவில வென்ப முதல்வன் கண்ணே. இது, மேற்கூறிய வழிநூற்குப் போல முதனூற்கே ஆவதொரு வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் பொதுவகையாற் கூறப்பட்ட நூலிலக்கணம் ஐந்தனுள் ஈரைங்குற்றமுமின்றியென முன்னே ஓதிய இலக்கணம் ஒன்று; முதனூற் காயின் அம்மரபின இலக்கணம் வேண்டுவதன்று எ-று. சிதைவிலக்கணத்தைச் சிதைவென்று ஓதினான் ஆகுபெயரானென உணர்க. மற்று, " வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவற்கு." (649) சிதைவிலவென்பது அறிவானே உணர்வலெனின், - எடுத்தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லதூஉம் முதனூற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப் பெறினன்றே முதல்வன்றான் நூலிலக்கணஞ் செய்வது? மற்று அன்னதொரு நூலின்மையின் அவன் செய்யாத நுலிலக்க ணம் யான் செய்தேனெனவும், அவற்றுள் சிதைவே முதனூற்கண் இல்லை யெனவும், ஒழிந்த நான்கும் முதல்வனூற்கண்ணே உளவாகலின் அவற்றை இலக்கணங் கூறினேன் எனவும், இனிக்குற்றங்களும் பிற்றோன்றுங் கொலென்று அஞ்சி இங்ஙனம் அவற்றை வரையறுத்து யான் பாதுகாக் கின்றேனெனவும், அங்ஙனம் பாதுகாத்து இவ்விலக்க ணங்கள் ஓதிற்றும் அவன்முதனூலே இலக்கியமாகப் பெற்றெனவுங், 'கூறியது கூறல் (663) போல்வன வேறொரு பொருள் விளக்குமாயிற் குற்றமன்'றென்பதனையும் யானே கூறியதன்றி முதல்வனாயிற் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகவே அவற்றை வேறுவேறு விதித்துப் பரந்துபடச் செய்யுமெனவும், இவை யெல்லாம் அறிவித்தற்குச், " சிதைவில வென்ப முதல்வன்கண்" (661) என்றானென்பது. மற்று, முதல்வன் யாப்பே கூறுமாயின் அந்நூற்குத் தந்திரவுத்தியும் வேண்டுவதன்றாம் பிறவெனின்,-அங்ஙனமே முதனூற்காயின் முப்பத்திருவகையுத்தி வாராது சிறுபான்மையான் வருமென்றற்கன்றே, "ஈரைங் குற்றமு மின்றி நேரிதின், முப்பத் திருவகை யுத்தியொடு புணர்ந்தது." (653) என ஈண்டு விலக்கப்பட்ட குற்றத்தின் பின்னர் அவ்வுத்தியை வைத்த கருத்தென்பது ஆண்டுங் கூறினாமாயிற் றென்பது. மற்று, முதனூலினான் நூல் இலக்கணங் கூறானோவெனின், கூறினானே யன்றோ? தான் ஒருவகையான் நூல்செய்து மற்று அதுவே நூலிலக்கணமெனப் பிற்காலத்தார்க்கு அறியவைத்தமையினென்பது. மற்றுச் சிதைவிலவென்பார், யாரோவெனின், - நிகழ்காலத்தாசிரியரும் எதிர்காலத்தாசிரியருமென உணர்க. (106) வழிநூற்குக் குற்றம் 662. முதல்வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் வல்லோன் புணரா வாரம் போன்றே. இது, முதனூலொடு மறுதலைப்படுதல் வழிநூற்குக் குற்றமென் கின்றது. (இ-ள்.) முதல்வழி யாயினும் யாப்பினுட்சிதையும் -அதிகாரத்தானே முதனூலினைக் குற்றமின்றி வருவதென்று ஈண்டு இலக்கணங்கூறல் வேண்டுவதன்றென்றான். இனி அம்முதனூலினை மாறுபடாமல் ஆண் டோதிய பொருண்மை கூறுமாயினும் நால்வகையாப்பினுள் முதனின்ற மூன்றும் பற்றி வழிநூற்குக் குற்றம்பிறக்கும் ; மற்று மொழிபெயர்த்த லொழியக் கொள்ளுமாறென்னையெனின், 'யாப்பினுட் சிதையு'மென்று இடமும் இடத்தியல் பொருளுமாக ஓதினானாகலின் அஃதொழிக்கப்படும். மற்று அஃதொழிக்குமா றென்னையெனின், - தமிழ்நாட்டு வழக்கிற்கு முதனூலாகிய அகத்தியத்துண் மொழிபெயர்த்துச் செய்யவேண்டும் பொருளிலவாகலானும், பிறபாடைக்கும் பொதுவாயின பொருளவாயின் அவையுந் தமிழ்வழக்கு நோக்கியே இலக்கணஞ் செய்யப்படு மாகலானும், அவர்க்கும் மொழிபெயர்த்தல் வேண்டுவதன்றாகலின் அதுவே ஒழிக்கப் படும். இக்கருத்தினானன்றே, "வழியி னெறியே நால்வகைத் தாகும்" (தொல். மர. 96) என வழிநூலையே விரித்து நால்வகை யாப்பிற்கும் உரிமை கூறியதென்பது. அங்ஙனம் முதனூற்கு மொழிபெயர்த்தலின்மையின் யாப்பொன்றும் பற்றிச் சிதைவுபிறவாது, ஒழிந்தனபற்றி வழிநூற்குச் சிதைவுண்டாமென்பது கருத்து. வல்லோன் புணரா வாரம் போன்றே - வாரம் புணர்ப்பான் வேறொருவ னாயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற்றொடு பொருந்தச் செய்யாதவாறு போல எ-று. வாரமென்பது கூறு; என்னை? ஒரு பாட்டினைப் பிற்கூறு சொல்லுவாரை, "வாரம் பாடுந் தோரிய மகளிரும்" (சிலப். ஊர்காண். 14.) என்பவாகலின். யாப்பினுட் சிதைதலென்பது, முதனூலும் வழக்குநூலாயின் இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோவெனக் கூட்டி விரித்து யாத்துச் செய்தலும், அழான் புழான் (தொல். எழுத். 193) என்பன போல்வன இக்காலத்திலவென்று களைந்து தொகுத்து யாத்துச் செய்தலுந், தொகை விரியும் மயங்குமாற்றான் விரிந்தது தொகுத்தலென்னும் நூற்புணர்ப் பினைத் தொகைவிரியெனும் யாப்பெனக் கூறியதல்லாதவழித் தொகுத்து யாத்தே செய்தலும் இம்மூவகை யாப்பினொடு மெய்த்திறங் கூறுவலென மொழி பெயர்த்தலை மயக்கிக் கூறுதலுமெல்லாம் யாப்பினுட் சிதைவே யாம். அது பண்ணும் பாணியும் முதலாயின ஒப்பினும் வல்லோன் புணர்த்த இன்னிசையதன் நீர்மைப்படக் காட்டாது, வாரம் புணர்ப்பான் புறநீர தாகிய இசைபடப் புணர்த்தல் போல்வதாயிற்று. மற்று இழிந்தோர் வழக்கினைப் பிற்காலத்து உயர்ந்தோருந் தகுதி பற்றி வழங்குபவாகலான் அவையும் அமையாவோவெனின், அவை சான்றோர் செய்யுட்குதவா; கற்றுணர்ந்தாருங் கற்றுணராதாரும் மற்று அவை கேட்டே மனமகிழ்வாரைப் பற்றி நிகழ்ந்தனவாயினும், ஒற்றுமைப் பட்டு ஒருவகை நில்லா. பெற்ற காலந்தோறும் பிறிதுபிறிதாகிக் கட்டளைப் படுத்து நூல்செய்வார்க்குங் கையிகந்து, வரையறை யின்றாமாகலின் அஃது இலக்கணமெனப்படாதென்பது. (107) பத்துவகைக் குற்றம் 663. சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில மொழிதல் மயங்கக் கூறல் கேட்போர்க்கு இன்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கங் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை யன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். இது, நிறுத்த முறையானே ஈரைங் குற்றமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சிதைவு எனப்படுபவை வசையற நாடின் - குற்றமென்றற்குச் சிறப்புடையனவற்றைக் குற்றந்தீர ஆராயின்: இவற்றை எனப்படுப வென்பதென், குற்றமாதற்குச் சிறந்திலவாம் பிறவெனின், இவ்வாசிரியர் எஞ்ஞான்றுங் குற்றத்திற்கு இலக்கணங் கூறாராகலான் இலக்கணத்தொடு கூறுந்துணைப் பயம்படுதலும் ஒருவாற்றாற் சிறப்பெனவேபடுமென்பது. அல்லதூஉம், ஒழிந்த செய்யுட்காயின் இவையனைத்தும் ஆகாவென்பது ஈண்டே தழாஅல் வேண்டுமாகலானுஞ், செய்யுட்காயின் அவை அமையாச் சிறப்பு உடைமையானும், இது வழக்குஞ் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபடச் செய்யப்படும் நூலிலக்கணமாகலானும், எழுவகை வழுப்போல அமைவனவே கூறாது நூலுள் வரப்பெறாதனவும் வரைந்து கூறினானென்பது. அமைவனவற் றினஞ்சார்த்தி, ஒழிந்தனவுங் கூறினான்; அல்லாக்கால், அவையே குற்றமாகி ஒழிந்தன புகுதப்பெறுவான் செல்லுமென்றஞ்சியென்பது. 'வசையற நாடின்' என்றதனான் இங்ஙனங் குற்றமென்று வரையப் பட்டனவற்றைக் கொண்டு புகுந்து மற்றொரு பொருள் கொள்ளின் அவை வசையற்றனவாமென்பது. அவை 1கூறியது கூறன், 2மாறுகொளக்கூறல், 3மிகைபடக்கூறல், 4பொருளில மொழிதன் 5மயங்கக்கூறல் என்னும் ஐந்துமாயின. 1கூறியதுகூறல் முன்னொருகாற் சொல்லிய பொருள் பின்னு மொருகாற் சொல்லுதல். அது, "உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்து" (தொல். புறத். 1) எனவும், "வந்த வீரேழ் வகையிற் றாகும்" (தொல். புறத். 3) எனவும் இருகாற்சொல்லி ஒருகாற் பயன்கொண்டவாறு. 2மாறுகொளக்கூறல் "மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை" (தொல். எழுத். குற். 10) என்றவழிப் புல்லினையும் மரமென அடக்குதல். இக்கருத்து நோக்கி(யே) போலும் ஆண்டு, "ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல்" என்பதனாற் புல்லினையும் மரமென்று தழீஇயினது அக்கருத்தென்பது. 3குன்றக்கூறல் சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப்போதல்; இஃதொரு பயன்படாக் குற்றம். 4மிகைபடக்கூறல் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகச் செய்யாது சூத்திரத்துட் சிலசொல் மிகையாகச் செய்தல் போல்வன; அவை, "ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டு" (தொல். எழுத். புண. 5) என்றாற்போல்வன. இங்ஙனம் மிகைபடச் செய்யுங்கால் முன்னின்ற சொல்லிற்கு ஒன்றும் இயைபில்லன கூறலாகா. என்னை? "முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன" (தொல். எழுத். நூன். 2) என்றவழி, 'அவைதாம் முப்பாற் புள்ளியு'மெனப் பயனிலை கொண்டு மாறிப் பின்னர் 'எழுத்தோரன்ன' என்றது ஆண்டு இயைபில்லதொரு சொல்லென்று இலேசுபடாது தான் சொல்லுகின்ற பொருட்கும் இயைபுபடச் சொல்லியே மிகைப்படுத்தல் வேண்டுமென்பது, என்னை? "எழுத்தெனப்படுப" (தொல். எழுத். 1) என்பதனுள் மூன்றுமே சிறப்புடையவென்பது கொண்டானாயிற் பின்னர் அம்மூன்றினையுஞ் சிறப்பில்லா முப்பதினோடும் ஒக்குமென உவமிக்க லாகாதெனவும் மாட்டேற்றுச் சூத்திரங்களானெல்லாம் ஒப்புமை பெறுவதல்லது சிறப்பின்மை காட்டப்படாதாகலானும், முப்பஃதுமே சிறந்தனவென்னுங் கருத்தினனாயின் மூன்றுஞ் சிறப்பிலவென்பது முதற் சூத்திரத்துட் பெறப்படுமாகலின் பின்னர் இவ்விலேசு கூறிச் சிறப்பழித்தல் வேண்டாவாகலானும், 'பலபொருட் கேற்பினல்லது கோடல'ன்றி ஐயுறற்றோறுஞ் சூத்திரஞ் செய்யானாகலானும், "எழுத்தோ ரன்ன" (தொல். எழுத்து. 2) வென்பது ஆண்டு இயைபில்லதொரு சொல்லென்று அதனை ஆண்டுப்பெய்து இலேசுகொண்டானெனல் ஆகாதென்பது. 5பொருளிலமொழிதல் - நூனுதலிய பொருளன்றி, "என்மனார் புலவர்" என்றாற் போல வழிநூல் வாய்பாட்டு மாத்திரையே பயனாகச் செய்வன. 6மயங்கக்கூறல் - நிறுத்தமுறையானன்றி, "அத்தி னகர மகரமுனை யில்லை" (தொல். எழுத். புண. 23) என மயங்கக் கூறிப் பிறிதொன்று கோடல்; 7கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதல் - சூத்திரச்செய்யுள் கேட்போர்க்கு இன்னாதிசைப்பச் செய்தல். 8பழித்தமொழியான் இழுக்கங்கூறல் - முடிவில்லாத சொல் லானும் இழிந்த சொல்லானும் எடுத்து முடிப்பனவற்றை மறு முடிவுபற்றி இழுக்கங் கூறலாயிற்று. 9தன்னானொருபொருள் கருதிக்கூறல் - முன்னோராற் கூறவும் படாது வழக்கினுள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒருபொருள் படைத்துக் கூறுதல். தன்னானென்பது ஒரு சொல்லெனத் தானென்பதொரு சொற்றாய் மெய்யினுள் உணரநின்றது. தன்னாற் றானொரு பொருள்படைத்துக் கூறுதன் மூன்றாவதெனினும் இழுக்காது, என்னை? நுதலிக்கூறலென்னும் பயனிலைக்குத் தானென்னும் பெயர் வெளிப்படா நின்றது வெளிப் படுத்துக்கொளப் பெறுதுமாகலின். 10என்னவகையினு மனங்கோளின்மை - எவ்வாற்றானும் பொரு ளறிதற்கு அரிதாகச் செய்தல். இவைநான்குங் குன்றக் கூறலொடு கூட்ட ஐந்தும் எஞ்ஞான்றும் பயன்படாதனவாயின. அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும் - அவை போல்வன பிறவும் ஈரைங்குற்றமென்னப்பட்ட தொகை எண்ணிற்கு (853) அவ்வாறு தொகுத்தற்கேற்ற விரியெண்ணாம், எ-று. 'விரிந்தது தொகுத்த'லென்பதனான், எதிரது நோக்கி ஆண்டுத் தொகுத்தானாதலின் (853) ஈண்டு அவற்றைத் தொகை கூறாது விரித் தெண்ணினானென்பது. 'பிறவும்' என்றதனான் 'வெற்றெனத் தொடுத்தன், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை' என்றாற்போல்வன கொள்க. இவை மேல் ஈரைங்குற்றமுமென உம்மையால் தழுவியவற்று விரியாயின. முதனூலொடு மாறுபடுதலும் யாப்பினுட் சிதைதலும் இவை போல ஒரோவழி வாரா; அந்நூலின் முழுவதூஉங் கொள்ளக் கிடந்தமை யின் ஈண்டவை புறனடையால் தழுவப்பட்டவாறென்பது. இவையெல் லாங் குற்றமென்று களையப்படுவனவாயினும், ஈரைங் குற்றமுமின்றியென முதற்சூத்திரத்துள் ஓதிப்புகுந்தான், அல்லாக்கால் இவற்றுட் சில நூலுட் புகுதுமாறும் அவற்றாற் பயன்கொள்ளுமாறும் இன்மையினென்பது. பயன்கொள்ளப்படுவன ஐந்தென்பது மேற்காட்டினாம்; இனி, அப்பதினான்குங் குற்றமேயாகி வருமாறு: "தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யெனாஅ" எனவும், "உருவக முவமை வழிநிலை மடக்கே விரிசுடர் விளக்கென மரீஇ வருவன" எனவுஞ் சில சூத்திரங்களை முதனிறீஇப் பின்னரும் அவ்வாய்பாட்டானே, "தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யென்றாங் கெண்வகை யியல செய்யுட் கணியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே" என்றாற்போலப் பின்னரும் அவ்வாறே சூத்திரஞ்செய்தல் 1கூறியது கூறலாய்ப் பயன்படாதாயிற்று. என்னை? இவற்றது வேறுபாடு தொகைச் சூத்திரத்துத் துணித்தெண்ணியதனானே பெற்றவழிப், பின்னும் அவ்வாறே மற்றொரு சூத்திரஞ் செய்ததனாற் பயந்ததின்மையி னென்பது. "அன்றென வொருதலை துணிந்த குற்றம் நன்றறி புலவர் நாட்டுதற் குரிய" என்றாற் போல்வன வரையாது குற்றமென்றதனையே சான்றோர்க்காயிற் குற்றமாகாதென்றல் 2மாறுகொளக்கூறலாம், செய்யுட்கெல்லாம் அணி யிலக்கணங் கூறுவான் குற்றங் கூறும்வழி வரைந்து கூறுதலின். செய்யுட்குரிய பொருட்படை யெல்லாவற்றுள்ளும் நல்லனவுந் தீயனவும் இவையென்று சொல்லப் புகுந்தான் அவற்றுட் சில சொல்லி யொழிதலும், வழக்கொடு மெய்ப்பொருளும் ஆராய்வலென்று புகுந்தான் அவற்றுள் வழக்கிற்கு வேண்டுவ கூறி மெய்ப்பொருள் ஆராய்ச்சி முழுவதூஉஞ் சொல்லாது நெகிழ்ந்து போதலும், எடுத்துக்கொண்ட நூலுட் காட்டும் இலக்கியங்களைச் சூத்திரத்தான் அடிவரை செய்வ லென்று புகுந்து சில அறுத்துச் செய்து சிலவற்றுக்குச் செய்யாது போதல் போல்வனவுங் 3குன்றக்கூறலாம். அவை முடிந்த நூலிற் கண்டுகொள்க. "இடையிடை திரியா தியனெறி மரபி னுடைய கருப்பொரு ளொரோவழித் துவன்றவு மியற்கை மரபி னுரிப்பொரு டோன்றவும் பன்னிரு காலமும் நால்வகை யிடத்தொடுந் தொன்னெறி மரபிற் றோன்றினர் செயலே." எனச் சூத்திரஞ்செய்து நாற்பத்தெட்டினும் நாற்பத்தெட்டுக் காலமுந் தொக்க சூத்திரத்தான், "துடைப்பன துடைத்துச் செயற்கை போல வழியிட னொழித்துக் காலங் கூறுவல்' என்று புகுந்து, அக்காலத்துள்ளுஞ் சிறுபொழுது கூறாது இட இலக்கணமே கூறி இடத்திற்குச் சுருங்க வேறு சூத்திரஞ் செய்தவாறு போலாது அதற்கு இன்றியமையாதன வெல்லாங் குன்றாமற் கூறாது, சென்றுபட்ட பரப்பிற்றாகச் சூத்திரஞ் செய்தல் போல்வன 4மிகைபடக் கூறலாம். அஃதாவது இன்னிளவேனி லென்பது "தண்ணிழ லறல்யாற் றடைகரைத் துறைதொறு மிலங்கு முலைக்க ணேய்ப்பக்கோங் கவிழ்ந்து வண்டுதா தூதுந் தண்டளிர்க் காவிற் பருமல ருதிர்ந்து முருகுகமழ் பரப்பின் மண்வயிறு குளிர்க்குந் தண்ணறுங் கயத்து நிழலிருள் நடுவ ணழலவிர் தாமரைத் தாள்கறித் தருந்தும் வாளெயிற் றிளமீன் புள்ளுக வெறிய வெள்ளென்று பிறழும் பளிங்கு நெகிழ்ந்தன்ன துளங்காத் தெண்ணீர் தளிர்குடைந்து தெவிட்டிய குயில்குனிந்து குடிப்ப மரவந் தாழ்ந்த கரைமரச் சாரற் றேனாறு தேறல் வேனிற் கண்ணும் வாரார் கொல்லென நீர்வார் கண்ணொடு புலம்புடை மகடூஉக் கலங்கஞ ரெய்த யாறுங் குளனுங் காவு மாடி யோருயிர் மைந்தரு மகளிருங் களிப்பக் காம விழவொடு கன்னியர் நோற்ப நிலவுஞ் சாந்தும் பலவயிற் பயன்படத் துன்பக் காலந் துடைத்தனர் பெறூஉ மின்பக் கால மென்மனார் புலவர்." என்றாற்போலக் காலம் பற்றிக் கூறிப் பெருஞ்சூத்திரஞ் செய்தவழியும் பருவத்திற்கு வரையறையிலக்கணம் போதுதலின்றி விடுதலாயிற்று. இனி, "அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே." (தொல். சொல். இடை. 4) எனவும், "அப்பா லெட்டே யும்மைச் சொல்லே." (தொல். சொல். இடை.7) எனவும், "ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன" எனவும் இன்னோரன்ன பலவும் மிகைபடச் செய்தார் இவ்வாசிரியராகலிற் பிற்காலத்து நூல்செய்தார்க்கும் மிகைபடச்செய்தல் அமையு மென்பாரு முளர். அற்றன்று; "யாவயின் வரினுந் தொகையின் றியலா." (தொல். சொல். இடை. 42) எனப்பட்ட எண்ணாகலின் தொகைகூறினமையானும் வழக்காதலானும் அதுமுதலாக அல்லது சூத்திரச்செய்யுளுஞ் செய்யாராகலானும் அங்ஙனந் தொகைதொடராக்கால் இடர்ப்பட்டு விகாரவகையான் தொகுத்தனனா மெனவும் அவை பலசொல்லாகலான் தொகுக்கப்படுவனவல்ல வெனவுஞ் சொல்லி மறுக்க. அல்லதூஉம், மன்னென்பது ஓர் இடைச்சொல்; அது தானடைந்த சொற்பொருளன்றித் தனக்கு வேறுபொருளின்மையிற் பொருள்பற்றி மூன்றெனலாகாது, பலபொருளொருசொல் எனப்படுவ தன்றி; அதனான் அதனை நோக்கி மூன்றென்றானல்லன், அஃது அடுத்த சொல்லினை மன்னைச் சொல்லென்றான், அவை மூன்றன்றி எத்துணையும் பலவாயினும் ஒன்றாய் இம்மூன்று பகுதிப்படு மென்று கோடற் கென்பது. ஒழிந்த இடைச்சொல்லாயினும் அவற்றிற்கும் இஃதொக்கும். மன்னைச் சொல்லென்பது வேற்றுமைத்தொகையே யன்றிப் பண்புத் தொகையாகலு முடைத்து. மன்னடுத்த சொல்லினையும் மன்னென ஆகுபெயராற் கூறினானென்பது. "வழக்கு வழிப்பட்ட சொல்லீறு திரியினும் படைத்துக் கொண்ட சொல்லொடு சிவணித் திரிசொல் லென்றே செப்பினர் புலவர் வரிவளைப் பணைத்தோண் மடநல் லோயே." என்றாற்போல இயைபில்லன கூறுதல் 5பொருளிலமொழிதலாம். இவை ஒழிந்த செய்யுட்காயின் 'தடங்கண்ணாய்' (நாலடி. 216) என்றாற்போல் வரப்பெறுமென்றற்கு ஓத்தென்னையெனின்,-அது செய்யுள் செய்வார் வேண்டியவாறு செய்பவாகலின், ஈண்டுச் 'சில்வகையெழுத்தின்' (655) செய்யுட்டாகச் செய்யுநூற்கே இது விலக்கினமையின் அதன்திறத்துக் கடாவின்றென மறுக்க. 6மயங்கக் கூறலென்பது, "மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டுவல்" (தொல். பாயிரம்) என்று புகுந்தாற்போல இன்னது சொல்லுவலென்று புகுந்தான், மெய்ந் நூலும் வழக்குநூலும் உடனாராய்தலும் ஆரியமுந் தமிழும் போல்வன உடனாராய்தலும் போல்வன. 7கேட்போர்க்கின்னா யாப்பாவது, "கதந பம" "சஞயவ" "உயிர்முன் பின்வல்லினம்" "லரயநதா மென" என்றாற்போலச் சூத்திரச்சுருக்கமும் மொழிக்கு முதலாமெழுத்தும் ஈறாமெழுத்தும் பொதுவகையான் அடங்க ஓதுதற் பயனோக்கி இங்ஙனம் இன்னாவோசைத்தாகச் சூத்திரஞ் செய்தல் போல்வன. 8பழித்தமொழியா னிழுக்கங்கூறல், "விளாமெ னிறுதி பழமொடு புணரிற் றளாவியற் றன்றி யியற்கை யாகும்" என்றாற்போல விளாமென்பதொரு வழுச்சொல்லாற் சூத்திரஞ்செய்தல். ஒன்றற்கொன்றென்பதனை, "ஒன்றினுக் கொன்று" எனச் சூத்திரஞ் செய்தலும் அது. 9தன்னானொருபொருள் கருதிக் கூறலென்பது, மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற்காலத்தா னொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், பதமுடிப் பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் (நன்னூல்) போல்வன. 10என்னவகையினு மனங்கோளின்மை வருமாறு : "இருதிணைப் பிறந்த வைம்பாற் கிளவிக்கும்" (தொல். சொல். பெயர். 7) என்னுஞ் சூத்திரத்திற்கும், "எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி" (தொல். எழுத். 128) என்பதற்கும் வேறுபொருள் உரைப்பா ருரைக்குமாற்றான் அறியப்படும். 11இனி மற்றொன்று விரித்தலென்பது, ஆறுறுப்பும் பாவினமும் கூறுவலென்று புகுந்து பொருளாராய்ச்சி பலவுங் கூறுதல். இதுவும் இன்னோரன்னவும் மிகைபடக் கூறலாய் அடங்குமெனினும் அமையும். 12நின்றுபயனின்மை யென்பது, பிற்காலத்துத் தோன்றிய வழக்கே பற்றி அவற்றிற்குங் குற்றந் தீர இலக்கணங் காட்டியவழி, அது சான்றோர் செய்யுட்குப் பயன்படாது தம்மோரன்னோர் செய்யுட்குப் பயன்பட்டொழியச் செய்தல். அவை வந்தவழிக் கண்டுகொள்க. பாட்டியன்மரபெனக் காட்டுவனவும் அவை. 13இனி வெற்றெனத்தொடுத்தலென்பது, கேட்போர்க்கின்னா யாப்பின்பாற் பட்டு அடங்கும். 14சென்றுதேய்ந்திறுதலென்பது, சொல்லப்புகுந்த தொருபொருள் எல்லாவிடத்துஞ் சொல்லப் படுவதாகவும் ஈற்றுக்கண் மாய்ந்து மாறுவது. அதுவுங் குன்றக்கூறலாய் அடங்கும். ஒழிந்தனவும் அன்ன. மற்றுக் கூறியதுகூறன் முன் வைத்ததென்னையெனின், அது நூலுட்போலச் செய்யுட்கண்ணும் பயன்படவரின் அமையுமென்றற் கென்பது. அவை, "வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்" (நாலடி. 4: 9) எனவும், "வஞ்சியாய் வஞ்சியார் கோ" (யா. வி. மேற்.) எனவுஞ் சொல்வகையான் இரட்டித்தவாறு. இனி யமைவனவற்றிடையே குன்றக்கூறல் வைத்தான் அவற்றுத்துணைச் சிறப்பிலவென்று ஐயுறாமை யென்பது. இவ்வாசிரியன் யாண்டும் இலக்கணமேகூறி இவ்விலக்கணத்திற் பிறழ வருதலைக் குற்றமென்று கொள்ள வைப்பினன்றி இல்லாத குற்றங்கட்கு இலக்கணங் கூறாதான் இது கூறினான்; "எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவை" (தொல். மரபு. 664) என வருகின்ற சூத்திரத்தான் இவையும் இலக்கணத்திற்கு உபகாரப்படுதலி னென்பது. (108) பத்துவகைக் குணம் 664. எதிர்மறுத் துணரின் திறத்தவு மவையே. இது, மேற் குற்றம் பத்துங் கூறி இனிக் குணமும் பத்துள வென்கின்றது. மேலெல்லாம் இவ்வாசிரியன் இலக்கண வழக்கினையே விதந்தோதி அதனிற் பிறழ்ந்தது குற்றமென்று கொள்ளவைத்தான்; இவ்வோத்தினுள் 'ஈரைங்குற்றமு'மென்பன சில குற்றங் கூறினான். இது மாறுகொளக்கூறலாங் கொல்லோவெனின், அற்றன்று; இவையும் இலக்கணமே கூறினனென்பான் இவற்றை யெதிர்மறுத்துக் கொள்ள வென்றானென்பது. இதனது பயன், உள்ளது சொல்லுதலேயன்றி இல்லது சொல்லுதலும் நூலிலக்கணமென்றறிவித்தலாயிற்று. அவை, "பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா" (தொல். சொல். வேற். 9) எனவும், "வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது" (தொல். சொல். வினை. 1) எனவும் வரும். எனவே, 'கூறியது கூறாமை'யும் 'மாறுகொளக் கூறாமையு'ங் 'குன்றக்கூறாமை'யும் போல்வனவும் பத்து உள நூலிலக்கணமென்றானாம். மேல், "ஈரைங் குற்றமு மின்றி" என்றதல்லது அவற்றை நாட்டிக்கொண்டு எதிர்மறுத்துக் கோடல் பெறாமையின் இது கூறினானென்பது. (109) முப்பத்தீர் உத்தி வகைகள் 665. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராத துணர்த்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல் தன்கோட் கூறல் முறைபிற ழாமை பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவா மென்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பி னல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை யிடுதல் எதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகங் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய வல்ல பிறவவண் வரினும் சொல்லிய வகையான் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. இது முறையானே இறுதிக்கணின்ற முப்பத்திருவகை யுத்தியுங் கூறி மற்றும் இந்நூலுள் அதிகாரம் மூன்றற்கும் வேண்டும் புறனடையுங் கூறுத னுதலிற்று. (இ-ள்.) ஒத்த காட்சி யுத்திவகை விரிப்பின் முற்கூறிய குற்றங்களோடு ஒப்பத்தோன்றுந் தோற்றத்தினை உடையவாகிய உத்திக் கூற்றினை விரித்துச் சொல்லின்: பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்துவருமெனவே இவையும் நூற்கணன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும், முற்கூறிய குற்றம்போல இவையும் வேறு சில பொருள் படைத்தலுமுடையவாயின. 'காட்சியுத்தி' யென்று இவற்றைக் கூறியவதனான் நூலுட்காணப்படு மென்ற ஐந்து குற்றத்தோடும் ஒத்தல் கொள்ளப்படும், அவ்வந்நூற்குப் பயம்படவரும் பகுதியானென்பது. உத்தி யென்பது நூல்செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் செவ்வனஞ்சொல்லுதல் ஒண்மை யுடைத்தன்றாம் பிறவெனின், அற்றன்று; அவ்வாறு செய்தக்கால், "நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகல் வேண்டும்." (655) என்பது முன்னர்ச்சொல்லினான். ஈண்டுச்செவ்வனஞ் சொல்லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடையவாமென்பது கருத்து; என்றார்க்குச் செவ்வனஞ் செய்தலை உத்தியென்னானோவெனின்,- அது சொல்லாமை முடிந்ததாகலினன்றே உத்தியென்னாது இவற்றை உத்திவகை யென்பானாயிற்றென்பது. அஃதேல், இவற்றை முன் தொகுத்தான்போல விரிப்பினென்ற தென்னையெனின், முன்னர் எதிரதுநோக்கி (மர. 98) முப்பத்திரண்டெனத் தொகைகூறிப் பின்னர், "மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும்," என்கின்றானாகலான், அங்ஙனம் இனம் பற்றி அவற்றோடு அடங்குவன வெல்லாம் அவற்று விரியாகுமென்னுங் கருத்தினாற் கூறினானென்பது. "அவனிவ னுவனென வரூஉம் பெயரும் அவளிவ ளுவளென வரூஉம் பெயரும் அவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான்யா நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே." (தொல். சொல். 164) என்பதனுள், "ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்" எனத் தொகுத்துக் கூறியவழி அது மிகைபடக் கூறலாகாது; என்னை? உம்மையெண்ணாகலின் தொகையின்றியுஞ் சில்வகையெழுத்திற் செய்யுட்டாக வழக்கியலானே சுருங்கச்செய்வதோர் ஆறுளதாயினும் அப்பதினைந்துமெனத் தொகுத்துக் கூறல் உத்திவகையான் அமையுமாகலி னென்பது கருத்து. இங்ஙனந் தொகைகூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகல்; அவை, பதினைந்து பெயருமே ஒருநிகரன வென்பது அறியலாகுமென்பது. இனி, "மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே" (தொல். செய். 100) என்னுஞ் சூத்திரம் போல்வன பிறிதொருபொருள் பயக்குமென்றலும் அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது. இவ்வாற்றான் இவ்வுத்திவகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின. மற்று, வகையெனப்படாது செவ்வனஞ்செய்யும் உத்தியாவன யாவையெனின், "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" (தொல். சொல். 19) என்றாற்போலச் சொல்லியொழிவன. பிறவும் அன்ன. 'விரிப்பி'னென்ற வினையெச்சஞ் 'சேர்த்தி யுணர்த்தல் வேண்டு' மென்ற முற்றுவினைகொண்டு முடிந்தது. 'மெய்ப்படநாடி' யென்பன போல்வனவற்றுக்கும் இதுவே முடிபு; அதற்கு நூலென்னும் பெயர் கொடுத்து முடிக்க. நூலையென்று ஐகாரம் விரிப்பின், வேண்டுமென்பது தன்பாலானும் பிறன்பாலானும் பெற்றதொரு பெயர்கொண்டு முடியும். (1) நுதலியதறிதல்:சூத்திரத்துள் ஓதிய பொருளாற் சொல்லப்படும் பயன் இல்லதுபோலச் சொல்லி, யதனானே அதற்கேற்றவகையாற் கருதியுணரப்படுபொருள் இன்னதென்று கொள்ளவைத்தல்; அது, "வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார்" (தொல். சொல். 46) எனவும், "சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்" (தொல். சொல். 41) எனவும் இவை 'வழுவற்க' 'வழுவமைக்க' என்னும் இருபகுதியுள் வழுவமைத்தற்கெழுந்தனவென்பது கருதினான் ஆசிரியனென்பது அறிய வந்தன. இதனை முதற்கண்வைத்துப்போய் இறுதிக்கண்ணே உய்த்துக் கொண்டுணர்தலை வைத்தான்; இதுவுமதுபோல் உய்த்துக் கொண் டுணர்தல் ஒருவகையானுடைத்தாயினும் அதனாற் பெற்றபயன் பிறிது மொன்று உளதாதல் வேற்றுமையுடைமையினென்பது. அது முன்னர்ச் சொல்லுதும் (பக். 378). இனி, மூவகைத் தமிழ்வழக்கமும் நுதலியதும், அவற்றுள் இயற்றமிழே நுதலியதும், அதிகாரம் நுதலியதும், அதிகாரத்துள் ஓத்து நுதலியதும், ஓத்தினுட் சூத்திரம் நுதலியதுமெனவும் இவை நுதலியதறிதற் பகுதியாய் அடங்குமென்பான், "மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும்" என்கின்றானென்பது. மேல்வருகின்றவற்றுக்குமொக்கும். அஃதேல். இதனை ஆண்டுவைத்து மற்றதனை ஈண்டுவைப்பினும் இஃதொக்கும் பிறவெனின், - அற்றன்று; நூலின்வேறாகிய பாயிரத்துள்ளாயினும் இந் நுதலியதறிதல் வருதலும் உத்திவகையென்றற்கு இதனை முன்வைத்தா னென்பது. (2) அதிகாரமுறைமைஎன்பது: முன்னின்ற சூத்திரப் பொருண்மை பின்வருஞ் சூத்திரத்திற்கும் பெறற்பாலன பெறவைத்தல்; அவை, "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" (தொல். சொல். 19) என்றவழி இற்றெனக் கிளத்த லுரிமைபூண்டதன்றே, அதனைச், "செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்" (தொல். சொல். 20) என்புழியுங் கொள்ள வைத்தலும்; "குற்றிய லிகர நிற்றல் வேண்டும்" (தொல். எழுத். 34) என்பதனைக், "குற்றிய லுகரம் வல்லா றூர்ந்து" (தொல். எழுத். 36) நிற்றல் வேண்டும் என்று கொள்ள வைத்தலும் போல்வன. இனி, வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச்செய்யுளின்றி அமையாத இசையிலக்கணம் இசைத்தமிழெனப்பெயரெய்தி அவ்வியற் றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்டதெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணங் கூறிய நாடகத் தமிழ் அவற்றுப் பின்னர்த்தா மென முறைமை கூறுதலும், இனி இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத் தொடு சொல்லதிகாரத்திற்குஞ் சொல்லதிகாரத்தொடு பொருளதிகாரத்திற் கும் இயைபு கூறுதலும், அதிகாரத்துள் ஓத்துப் பலவாகலின் அவை ஒன்றன்பினொன்று வைத்தற்கு இயைபு கூறுதலும், அவ்வாறே சூத்திரத் திற்கு இயைபு கூறுதலுமெல்லாம் அதிகாரமுறைமைக்கு இனமென்று சேர்த்தியுணரப்படும். பிறவும் அன்ன. அதிகாரமென்ற பொருண்மை யென்னையெனின், முறைமையென வும், இடமெனவுங், கிழமையெனவுங் கொள்ளப்படும். அவற்றுள், ஈண்டு அதிகாரமென்றொழியாது முறைமையெனவுங் கூறினமையின், அதிகார மென்பது முறைமைப் பொருட்டன்றி முன் ஓரிடத்து நிறுத்தியதனை வழிமுறையாற் பொருள்கோடல் கொள்க; என்னை? முன்னும் பின்னும் நின்ற சூத்திரம் இரண்டனையும் ஓரிடத்தனவாகக் கருதல் வேண்டும்; அங்ஙனங் கருதலியைபுகொண்டன்றி ஒன்றன் பொருண்மை ஒன்றற்கு வருவித்தல் அரிதாகலானும், அங்ஙனம் இடம் பற்றாக்கால் ஒருவன் செய்த நூலொடு பிறிதொருநூற்கு இயைபு கூறாதவாறுபோல எழுத்ததிகாரத் தொடு சொல்லதிகாரத்திடை இயைபு கூறல் வேண்டுவதன்றாவான் செல்லுமாதலானுமென்பது. எனவே, இடமெனப்பட்டதுதானே முறைமைப் பொருளும் படுமாயினும் இச்சூத்திரத்துள் அதிகாரமெனவும் முறைமையெனவுங் கூறினமையின் ஈண்டு இடமுறைமை யென்பதே கருத்தாயிற்று. இதனானே உடன்பிறந்தாருள் ஒருவற்குரியது வழித் தோன்றினார்க்கும் ஒருவழி உரியவாறுபோல, முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படுமென்பது உத்திவகையாயிற்று. இனியொருசாரார், இங்ஙனம் வரைந்துகொண்ட இடத்துள்ளே யாற்றொழுக்குப் போலவன்றி இடையிடையும் பெறுமென்பது நோக்கி அரிமா நோக்குந், தேரைப் பாய்த்துளும், பருந்து விழுக்காடும் ஆகி வருமெனவுஞ் சொல்லுப; அவையும் இனத்திற் சேர்த்தி யுணர்த்தவேபடு மென்பது. (3) தொகுத்துக் கூறல்: தொகுத்தியாத்த நூலுள்ளுந் தொகுத்துக் கூறுதல்; அவையாவன: எழுத்து முப்பத்துமூன்று, சொல்லிரண்டு, பொருளிரண்டு என ஆசிரியன்றானே தொகை கூறுதல் போல்வன. "இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்" (தொல். சொல். 10) எனப் பல சூத்திரத்து விரிந்தன தொகுத்தலும், "ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயர்" (தொல். சொல். 164) என ஒரு சூத்திரத்து விரித்துத் தொகுத்தலும் போல்வனவும் அதன் பகுதியாய் அடங்கும். (4) வகுத்து மெய்ந்நிறுத்தல்: அங்ஙனந் தொகுத்துக் கூறியவழி எழுத்து முப்பத்துமூன்றென்ற தொகையினைக் குற்றெழுத்தும் நெட் டெழுத்தும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடை யினமுமென்றாற் போலவும், உயர்திணை அஃறிணை யென்ற தொகை யினை ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்றாற்போலவும் வகுத்தல் : "உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும்" (தொல். சொல். 162) எனவும், "இயற்சொ றிரிசொ றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே" (தொல். சொல். 387) எனவும் வருவனவும் அவை. இவற்றுள் இருதிணையெனக் கூறிப்பெயர் மூன்று, வினை மூன்றென்றலும், இனி அகத்திணை புறத்திணையெனக்கூறி, அகம்புறமெனக் கோடலும் இனமென்றது, அவை குற்றெழுத்து நெட்டெழுத்தென முற்கூறியனவே மற்றொரு பெயர் பெற்றாற் போலாது சொல்வகையான் மூன்றாவதொரு சொல் வேறு பெற்றிலாமையினென்பது. இங்ஙனங் கொள்ளாக்கால் இருதிணைப் பெயரும் வினையும் மும்மூன்றெனல் ஆகாதன்றோவென்பது. "சொல்லெனப் படுப பெயரே வினையென்று ஆயிரண் டென்ப வறிந்திசி னோரே" (தொல். சொல். 160) என்றவழி, "இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப" (தொல். சொல். 161) என வகுத்தலும், இனி ஆராய்ந்த இயற்சொல்லொடு வேறு மூன்று சொற்கூட்டி நான்கென்றலும் அவ்வாறே இனமெனப்படும். என்னை? ஒழிந்த மூன்று சொல்லும் இயற்சொல்லின் வேறுபட்டமை கூறுமாகலி னென்பது. அஃதேல், எழுத்து முப்பத்துமூன்றெனக் கூறிப் பின்னர் இருநூற்றொருபத்தாறுயிர் மெய்க் குப்பை கோடலும் வேற்றெழுத்தாகி வருமென்பது 'வகுத்து மெய்ந்நிறுத்த'லென்பதனாற் கொள்ளாமோ வெனின், கோடுமன்றே, "புள்ளி யில்லா வெல்லா மெய்யும்" (தொல். எழுத். 17) என்புழி, "உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும்" என ஆசிரியன் இரண்டெழுத்தின் கூட்டமாகச் சூத்திரஞ் செய்தி லானாயினென்பது. 'மெய்'யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயற்சீர் பத்தெனவும் ஆசிரியவுரிச்சீரா றெனவும் வகுத்தவற்றை, "இயற்சீ ரிறுதிமுன் நேரவ ணிற்பின் உரிச்சீர் வெண்பா வாகு மென்ப" (தொல். செய். 19) என இயலசைமயக்கமாகிய நான்கனையே இயற்சீரெனவும், "வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே" (தொல். செய். 23) என்றவழி, ஆசிரியவுரிச்சீர் ஆறனுள் இரண்டனை ஒழித்து உரியசை மயக்கமாகிய நான்கனையே ஆசிரியவுரிச்சீரெனவும் வகுத்து நின்றமையி னென்பது. 'மெய்'யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? "இயலசை மயக்க மியற்சீ ரேனை உரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்" (தொல். செய். 13) என்று பகுத்தோதியவாற்றானென்பது; அக்கருத்தினானன்றே ஒழிந்த இரண்டனையுங், "கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ" (தொல். செய். 24) என இறந்ததுதழீஇ உரைப்பானாயிற்றென்பது. (5) மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று: முடித்தல்எடுத்தோதிய பொருண்மைக்கு ஏற்ற வகையான் அப்பொருண்மைக்கட் சொல்லாததொன்று கொள்ளவைத்தல். 'முட்டின்றி முடித்த'லென்றதனான் எடுத்தோதாததும் எடுத் தோதியதனோடு ஒக்குஞ் சிறப்பிற்றென்றவாறாம். அது போல்வன அதற்கு இனமெனப்படும். மற்று இதனை அருத்தாபத்தி யென்னாமோ வெனின், என்னா மன்றே, "பிறசீ ருள்வழித் தன்றளை வேண்டுப" என்னும் பொருட்டன்றித் தன்சீரொடு இயற்சீர் வந்து தளை கொள்ளுமென மொழியாதொரு பொருள்கோடலினென்க. இனி, "ரஃகா னொற்றும் பகர விறுதியும்" (தொல். சொல். 7) என்றவழி ஒழிந்த நான்கெழுத்தும் ஈற்றினிற்குமென்று கோடல் போல் வனவும் அதன் இனமெனப்படும். என்னை? ஒன்றெனமுடித்தல் தன்னின முடித்த'லெனினும் இழுக்காது. இனிச், "சீரியை மருங்கி னோரசை யொப்பின்" (தொல். செய். 56) என்றவழி, ஒன்றாதது இயற்சீர்வெண்டளை யென்றுகோடல் அருத்தாபத்தி யாகி, "எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்து" (தொல். செய். 61) என்ற வழக்கியலானே வழுவன்றி அடங்குமென்பது. (6) வாராததனான் வந்தது முடித்தல்:ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததொரு சூத்திரத்தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச்செய்தல்; அது, "தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே" (தொல். எழுத். 214) என அகரத்திற்குக் கேடு வாராத சூத்திரத்தானே லகரம் றகரவொற்றாய் வருமெனப் பிரித்துத் திரிபு கூறியதே பற்றாக அகரம் ஆண்டு நில்லாது கெடுமென்று கொள்ளவைத்து அதனானே 'சிற்சில வித்திப் பற்பல கொண்டா'ரென்று வந்த புணர்ச்சி முடித்தவாறு கண்டுகொள்க. "எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும்" (தொல். எழுத். 189) என்றவழி, எல்லாமென்னும் விரவுப்பெயருள் உயர்திணை கூறின் வற்றுச்சாரியை பெறாமையான் அது பெற்றுவந்த அஃறிணைக் கூறே முடித்தலும் அது; பிறவும் அன்ன. இனி, இங்ஙனம் முடிபுகோடலன்றி, ஆண்டுக் குறியிடுதலும், ஆட்சியுங் குறியீடும் ஒருங்குநிகழ்ந்தது பின்னர்ஆட்சிக்கண் வாராமையும் வந்தவழிப் பிறவற்றொடு கூறுதலும் அதற்கு இனமெனப்படும். அவை, "அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி" (தொல். சொல். 230) என முடிந்ததனை மீண்டும், "நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி" (தொல். சொல். 430) எனக் குறியிடுதல் எச்சவியலுள் வந்ததாயினும் முன்னர் அக்குறியீடு வந்ததின்மையின் அது வாராததெனப்படுமாகலின் அஃது ஈண்டுக் குறியிடுத லாயிற்று. வினையியலுட் பெயரெச்சமென்று ஆளுதலும் அது. 'வண்ணச்சினைச்சொல்' 'முற்றுச்சொல்' என்பனவுங் குற்றிய லிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தன வாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது. இனிப், புள்ளியெனமேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற்றொடு மயக்கங் கூறுதலென்பது, "அவைதாங், குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன" (தொல். எழுத். 2) என்புழிக் குற்றியலிகரம் புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன்கூறுதலாயிற்று. இங்ஙனம் உடன்கூறாக்காற் 'புள்ளியுங் குற்றிகரமு'மெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவதாவான் செல்லுமென்பது. இனி, "ஆ ஏ ஓ அம்மூன்றும் வினாஅ" (தொல். எழுத். 32) எனவும், "மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும்" (தொல். எழுத். 290) எனவுங் கூறுவனவும் அவை; என்னை? இடைச்சொல்லோத்தினுள் வினாவென் றோதாத ஆகாரம் வாராததுடன் ஆண்டு வினாவென்று ஓதிய ஏகார ஓகாரங்கள், "ஆ ஏ ஓ அம்மூன்றும் வினாஅ" என்று உடன் கூறினமையானும், அவ்வாறு இடைச்சொல்லோத்தினுள் எடுத்தோதாத மாறுகொளெச்சத்தோடும் ஐயத்தோடும் ஆண்டோதிய வினாவினையும் எண்ணினையும் எழுத்தோத்தினுள் விதந்துடன் கூறினமையானுமென்பது. இது நோக்கிப் போலும், "ஈற்றசை யிவ்வைந் தேகாரம்" (தொல். சொல். 259) என இடைச்சொல்லினை எழுத்துச்சாரியை பெய்தோதிய கருத்தானே இப்பொருண்மைகொள்ள வைப்பானாயிற்றுமென்பது. மற்று இவை எதிரது போற்றலாகாவோவெனின்,அது பொருட் படைக் கண்ணதெனவும், இவை ஆட்சியுங் குறியீடும் பற்றியதொரு பகுதி யெனவுங் கூறி விடுக்க. அஃதேற், குறியீட்டான் ஈண்டாராயானோவெனின், - இவை உத்திவகையாகலானும், அதுதானே உத்தியெனப் படுமாதலானும், அதனை ஈண்டு ஆராயானென்பது. (7) வந்ததுகொண்டு வாராததுணர்த்தல்: பின்னொருவழி வந்தது கொண்டு முன்வாராததொரு பொருள் அறியவைத்தல்; அது, "ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்" (தொல். எழுத். 204) என்பது. "எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப" (தொல். சொல். 439) என, வந்தது கொண்டு மேற்கூறப்பட்ட ஏழெச்சத்திற்கும் மேல் வந்து முடிக்குஞ் சொல் வாராததனை வருமென்றுணர்ந்து கொள்ளவைத்தமை யின் இதுவுமதுவேயாயிற்று. "ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே" (தொல். சொல். 1) என்றவழித் திணையென்னும் பெயர் எப்பொருட்கும் எய்துவித்தல் ஒரு சூத்திரத்துள்ளே கோடலின் அதனை அதற்கு இனமென்று கொள்ளப் படும்; பிறவும் அன்ன. (8) முந்து மொழிந்ததன் றலைதடுமாற்று:முன்னொருகாற் கூறிய முறையன்றிப் பின்னொருகால் தலை தடுமாறாகக் கூறுதல்; அது, "பன்னீ ருயிரு மொழிமுத லாகும்" (தொல். எழுத். 49) எனவும், "உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா" (தொல். எழுத். 50) எனவும், உயிரும் மெய்யும் நிறுத்தமுறையானன்றிக், "கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லாவுயிரொடுஞ் செல்லுமார் முதலே" (தொல். எழுத். 51) எனவும் மெய்பற்றி வரையறை கூறுதலும்,. "எல்லா மொழிக்கு மிறுதியு முதலு மெய்யே யுயிரென் றாயீ ரியல" (தொல். எழுத். 103) என முற்கூறிய முறைபிறழக் கூறுதலுமாயின. மெய்யும் உயிரும் பற்றி விதந்து வரையறுப்பினும் அஃது இரண்டற் குஞ் செல்லுமென்று கோடற்கும், இனி இயல்புவகையான் ஈறாதல் ஒருதலையாக உடையன மெய்யென்றற்கும் அவ்வாறு கூறினானென் னாமோவெனின், அங்ஙனமே அக்கருத்தினானன்றே 'ஒத்தகாட்சி'யெனக் குற்றத்தோடு ஒப்புமைகூறி மற்றுப் பொருள் பயத்தலின் அமையுமென்று கொள்வாமாயிற்றென்பது. இனி, "மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின்." (தொல். எழுத். 103) என்றாற்போல்வன இனமெனப்படும். "புள்ளி யில்லா வெல்லா மெய்யும்.;' (தொல். எழுத். 17) என்பது மெய் முற்கூறினமையின் இதுவும் இதற்கு உதாரணமெனப்படும். மற்று, மயங்கக்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், - அஃது, " இன்னே வற்றே," (தொல். எழுத். புண. 17) என நிறுத்தமுறையாற் கூறாது மற்றதுவே பற்றாக மற்றொரு பொருள் கொள்ளப் படும். இஃது அன்னதன்றி அங்ஙனம் மயங்கக்கூறல்வேண்டும் பொருண்மைத்தாகி வருமென்பது; அஃதேல், இது மாறுகொளக்கூற லென்னுங் குற்றமாகாதோ வெனின், ஆகாது; என்னை? இது முற்கூறிய பொருளினை மாறுபடாமையானும் நிறுத்தமுறை தலைதடுமாற வைக்குந் துணையாகலானுமென்பது. (9) ஒப்பக்கூறல் :ஒன்று கூறுங்கால் இருபொருட்குறித்ததென்று இரட்டுறச்செய்தல். அது, "இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும்." (தொல். எழுத். 120) என்றாற்போல்வன. "வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும்" (தொல். எழுத். 204) எனவும், " அன்ன வென்னு முவமக் கிளவியும்." (தொல். எழுத். 204) எனவும் இனமல்லனவற்றை உடனெண்ணுதலும், " மாமரக் கிளவியு மாவு மாவும்." (தொல். எழுத். 231) என மாட்டெறியுங்கால் வேறுவேறு விதியுடையனவற்றை ஒருங்கு மாட்டெறிதலும், ஆண்டு நான்கு வல்லெழுத்தினையும் உடன்கோடலும், நிலைமொழித்தொழிலொடு வருமொழித் தொழிலும் ஒப்பக்கொண்டு மாட்டெறிதலும் போல்வன ஒப்பக்கூறலென்பதன் பகுதியாய் அடங்குமென்பது. (10) ஒருதலை மொழிதல்: ஓர் அதிகாரத்திற் சொல்லற்பாலதனை வேறு அதிகாரத்துச் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டுங் கொள்ள வைத்தல் ; அது, " அ இ உஅம் மூன்றும் சுட்டு." (தொல். எழுத். 31) எனவும், " ஆணும் பெண்ணு. மஃறிணை யியற்கை." (தொல். எழுத். 303) எனவும் இவை எழுத்ததிகாரத்துக் கூறியவாற்றானே சொல்லதிகாரத் துள்ளும் அவ்விலக்கணங் கொள்ள வைத்தமையின் அப்பெயர்த்தாயிற்று. உடம்பொடுபுணர்த்துச் சொல்லுவன அதற்கு இனமெனப்படும். என்னை? விதியல்லாதது விதிபோல மற்றொருவழிச் சேறலின். (11) தன்கோட்கூறல்:சொல்லாதன பிறவுளவாயினும் அந்நூற்கு வேண்டுவதே கொள்வலென்றல்; அது. " அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே." (தொல். எழுத். 102) எனவும், " சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐ ஔவெனு மூன்றலங் கடையே." (தொல். எழுத். 61) எனவும், " குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே." (தொல். எழுத். 44) எனவும், " பாடலுட் பயின்றவை நாடுங் காலை." (தொல். அகத். 3) எனவும் வரும். இவ்வாற்றானே, " அளபிற் கோட லந்தணர் மறைத்து." (தொல். எழுத். 102) ஆயினும் அது கூறிலேனெனவும், இயற்சொல்லிற்கல்லது நிலைமொழி யாக்கங் கூறேனெனவும், " வழக்குஞ் செய்யுளும் ஆராய்வல்" என்று புகுந்தான் பாடலுட் பயின்ற வழக்கே கூறவலெனவுங் கூறுதலின் அவை தன்கோட்கூறுதலாம். இனி, ஒன்பதுமயக்கத்துண் மெய்ம்மயக்கங்கூறி ஒழிந்தன கூறாமையும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் எடுத்தோதி முடியாமையும், " நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்." (தொல். அகத். 53) பற்றிப் பொருளிலக்கணங் கூறுவலென்றலும், பெரும்பான்மைய இலக்கண வழக்கென்ப என்றலும், அதனானே சிறுபான்மைய மயக்கமென்றலும், அம் ஆம் எம் ஏம் என்பன முதலாயவற்றை அங்ஙனம் பகுத்தோதுதற் பயனும், அவை வினையின்றி அவ்வினைசெய்தான்மேல் நிகழ்கின்ற கூறாதலே பற்றி, " வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்." (தொல். சொல். 252) என்று இடைச்சொல்லோடு ஓதுதலும் போல்வன அதற்கு இனமெனப் படும்; என்னை? இவை தான் கூறுவலென்று புகுந்தவற்றுள்ளும் ஒரு பொருளானவற்றை வரைந்துகொண்டமையின் அவற்று இனமெனப் பட்டன. (12) முறைபிறழாமை:காரணமின்றித் தான் சில பொருள் எண்ணி நிறுத்தியபின்னர் அம்முறை பிறழ்ந்தாலுங் குற்றமில்வழியும் அம் முறையினையே இலக்கணமாகச் சொல்லுதல் ;அது, " பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி யென்னு மீற்ற." (தொல். சொல். வேற். 3) என நிறுத்த முறை பற்றி எழுவாய்வேற்றுமை இரண்டாவது மூன்றாவ தெனப் பெயர்கொடுத்தல். " அகரமுத னகர விறுவாய்." (தொல். எழுத். 1) எனவுங், " கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்" (தொல். அகத். 1) எனவும், வழக்கியலானும் இலக்கணவகையானும் உள்பொருளை விதந்தே எண்ணி நிறுத்தாதவழியும், "அவற்றுள், அ இ உ எ ஒ" எனவும், " அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழிய." (தொல். அகத். 2) எனவும் முறைபிறழாமற்கோடல் அதற்கு இனமெனப்படும். (13) பிறனுடம்பட்டது தானுடம்படுதல்:உள்பொருள் அன்றாயி னும் வழக்கியலாற் கொள் பொருள் இதுவெனக் கூறுதல் ; அது, " பண்டியன் மருங்கின் மரீஇய மரபு " (தொல். சொல். 91) என்றாற் போல்வனவற்றான் அறிக. இனி, " மீயென மரீஇய விடம்வரை கிளவியும்" (தொல். எழுத். 250) என்புழி மேலென்பது இலக்கணமென்று எடுத்தோதியதனை உட்கொண்டு மீஎன்றதனை மரூஉவென்றமையின் அஃது இனம் எனப்படும்; என்னை? முதனூலுட் கொண்டவாறறிந்து மற்று அதனைத் தான் இச்சொல் இன்னவாறாயிற்றென்று இலக்கணங் கூறாது உடம்படுதலின். மற்று அதனை இனமென்ப தெற்றுக்கு? இதுதானே பிறனுடம்பட்டது தானுடம்பட்டதாகாதோ, முதனூலாசிரியன் உடம்பட்ட தாகலினெனின், - அற்றன்று; முதனூலாசிரியனைப் பிறனென்னாமையானும், முதனூலின் வழித்தாகிய நூலுள் அவன் உடம்பட்டதொன்று உடம்படுவலென்று உத்திவகையாற் கொள்ளாது முழுவதூஉங் கொள்வனாகலானும் அவ்வாய்பாடு கூறலாகாதென்பது. இனி, முதனூலுள்மேலென்பது மீயென மரீஇயிற்றென்று விதந்தோதப்பட்டதனை அங்ஙனங் கூறாது மீயென மரீஇயிற்றென்று வாளாது கூறினமையின், அதனை இனமென்று கொண்டாமென்பது. எனவே, ஈண்டுப் பிறனென்றது வழக்கினுள்ளோரை நோக்கியாயிற்று; என்றாற்கு, ஒழிந்த வழிநூலாசிரியரைப் பிறனென்றானென்னாமோ வெனின், அவருடம்பட்டது உடம்பட்டதனாற் பயந்ததென்னை? முதனூலிற் பிறழாமை நூல்செய்யுமாயினென மறுக்க. அல்லதூஉம் இசைநூலுங் கூத்தநூலும் பற்றிப் பிறன்கோட்கூற லென்பதனாற் பிறனென்னினன்றி, இயற்றமிழ்க் கண்ணே முதனூலாசிரி யனைப் பிறனென்னானென்பது. அஃதேல், வழக்கு நூல் செய்வான் அவ்வழக்கினை வழங்குவாரைப் பிறனென்னுமோ வெனின்,-இலக்கண மும் வழக்குமென இரண்டனுள் இஃதிலக்கணமாதலின் அவ்வழக்கினுள் வழங்குவாரைப் பிறனென்றல் அமையுமன்றோவென்பது; என்றாற்கு, அவருடம் பட்டது உடம்படுதல் உத்திவகையென்ப தெற்றுக்கு? அஃது இயல்பேயன்றோ வெனின். அங்ஙனம் மரீஇயினும் இலக்கணமென்பது திரிபில்லாதாகலிற், றிரிபுபடும் வழக்கினை உடம்படுதல் இலக்கணமன் றாயினும், அது வழக்கினுள்ளார் வேண்டுமாற்றான் இலக்கணமேயா மென்பது கருத்து ; அல்லாக்கால், எள்ளேபோல எட்குப்பையுந் தன்தன்மையான் உள்பொருளாகலும் வேண்டுமன்றோவென்பது. (14) இறந்தது காத்தல்என்பது: முற்கூறியவொரு சூத்திரப்பொருண் மையைப் பின்னொரு சூத்திரத்தான் விலக்குதல் ; அது, " பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே" (தொல். பொரு. 5) எனக் கூறிய பின்னர். " நட்பி னடக்கை யாங்கலங் கடையே" (தொல். பொரு. 6) என்றாற்போல விலக்குதல். நூற்புறனடையும் ஒத்துப்புறனடையும் அதிகாரப்புறனடையும் போல்வன அதற்கு இனமெனப்படும். அவை, " ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே" (தொல். எழுத். 171) எனவும், " புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம்" (தொல். எழுத். 202) எனவும் வருவன போல்வன. (15) எதிரதுபோற்றல்:வருகின்ற சூத்திரப் பொருண்மைக்கேற்ப வேறொருபொருள் முற்கூறுதல் ; அது, " ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்" (தொல். எழுத். 161) என வருகின்றதனை நோக்கி, " ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்" (தொல். எழுத். 115) எனக் கூறுதலும், " பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை" (தொல். சொல். 222) என வருகின்றதனை நோக்கித், "தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்" (தொல். சொல். 43) என வழுவமைத்தலும் போல்வன. இனி, ஒரு சூத்திரத்துள்ளே, " ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் " (தொல். எழுத். 161) என வருவதனை நோக்கிக் கூறிய, " குற்றொற் றிரட்ட லில்லை (தொல். எழுத். தொகை. 19) என்றல் அதற்கு இனமெனப்படும். '(16) மொழிவாமென்றல்:ஒருபயனோக்கி முற்கூறுவ லென்றல்; அவை, " உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்" (தொல். எழுத். 35) எனவும், " கடப்பா டறிந்த புணரிய லான" (தொல். எழுத். 37) எனவும், "அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப" (தொல். சொல். 121) எனவும் வரும். இங்ஙனங் கூறியதனாற் பயன் : குற்றுகரவீற்றுக்கணன்றிப் புணர் மொழிக் குற்றிகர மின்றென்பதூஉம், இனிப் புணர்மொழிக் குற்றிகரம் பெருவரவிற்றென்பதூஉம் அறிவித்தலாயிற்று. " அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்ப்பெறக் கிளப்ப" (தொல். சொல். 121) என்பதூஉம், 'தாம் விளி கொள்ளா' (சொ. 126) என்றதூஉம் அவ்விளியிலக்கண மென்றற் பயம் பட வந்தன; ஈற்றுப் பொதுவினான் விளியேற்குமென்று ஓதப்பட்ட பெயருள் இவை விளியேலாவென விளிவிலக்கல் வேண்டுத லானும், நீ வாராயென்பது இயல்புவிளியன்றென விலக்குதலும் விளியிலக்கணமே யாதலானு மென்பது. இனி, " மெய்ப்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப" (தொல். எழுத். 157) எனவும், " மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே" (தொல். எழுத். 143) எனவும் வருவன இனமெனப்படும். என்னை? அவையும் முன்னர்ப் போய் மொழிவனவற்றை அவாவி நின்றமையி னென்பது. (17) கூறிற்றென்றல்:முற்கூறியதோர் இலக்கணத்தினை மற்றொரு பொருட்கும் விதிக்கவேண்டியவழி, அவ்விலக்கணத்தினை மீட்டுங்கூறாது மேற்கூறியவாற்றானே கொள்கவென்பான் அவை கூறினேனென்று நெகிழ்ந்து போதல்; அவை, " கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு முற்கிளந் தனவே முறைநெறி வகையின்" (தொல். செய். 185) எனவும், "எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே" (தொல். செய். 205) எனவும் வரும். இவை அகப்பொருட்கும் புறப்பொருட்கும் ஓதிய இலக்கணஞ் செய்யுளுள்ளும் அவ்வாறெய்துவித்தவாறாயிற்று. "முதலெனப் படுவ தாயிரு வகைத்தே" (தொல். அகத். 17) எனவும், "மெய்பெறு வகையே கைகோள் வகையே" (தொல். செய். 188) எனவும், "மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்" (தொல். செய். 2) எனவும் வருவன அதற்கு இனமெனப்படும் ; என்னை? கைக்கிளை பெருந்திணைக்கும் இவையே முதலென்றலானுந், திணையுங் கைகோளும் போல்வன புறப்பொருட்குங் கோடற்பயன்பட வைத்தமையானும், முற்கூறிய மாத்திரையும் எழுத்தும் பிறவாற்றாற் செய்யுட்குப் பயன்படு மாற்றான் வேறுபட்டவல்லது அவை மேற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்றமையானுமென்பது. (18) தான் குறியிடுதல்:உலகுகுறியின்றித் தன்னூலுள்ளே வேறு குறியிட்டாளல் ; அவை, உயர்திணை அஃறிணையெனவும், கைக்கிளை பெருந்திணை யெனவும், சொல்லிற்கும் பொருளிற்கும் வழக்கியலானன்றி ஆசிரியன் தானே குறியிடுதல். வண்ணச் சினைச்சொன், முற்றுவினைச்சொல் லென ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவும், வினையெஞ்சுகிளவியும் பெயரெஞ்சுகிளவியுமென்று ஆண்டு, "... ஆயீ ரைந்தும் நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி" (தொல். சொல். 430) எனக் குறியிடுதலும் அது. "இரண்டாகுவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி" (தொல். சொல். 72) எனவும், " மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி" (தொல். சொல். 93) எனவும் பெயர் கொடுத்தல் அதற்கு இனமெனப்படும். (19) ஒருதலையன்மை: உறுதி அல்லாத நிலை. "வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும்" (தொல். எழுத். 225) என விரித்தாற் போலாது, இலக்கணங் கூறியொழிதல் : அது, " குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே" (தொல். எழுத். 38) என்றக்கால் யாண்டும் ஒருதலையாக வாராது, வருஞான்று வருவது ஆண்டென்று கொள்ளவைத்தல். இனிச், சொல்லோத்தினுள் வேற்றுமையென்று ஓதப்பட்ட எட்டனுள் எழுவாய் வேற்றுமையினையும் விளிவேற்றுமையினையும் 'வேற்றுமை'யென்னாது எழுத்தோத்தினுள் 'அல்வழி'யென்றல் போல்வன அதற்கு இனமெனப்படும். (20) முடிந்தது காட்டல்:சொல்லுகின்ற பொருட்கு வேண்டுவன வெல்லாஞ் சொல்லாது தொல்லாசிரியர் கூறினாரென்று சொல்லுதல். அஃது 'ஒன்றறிவது உற்றறிவ'தென்றற்கும், ' இரண்டறிவது உற்றுஞ் சுவைத்தும் அறிவது' என்றற்கும் முறைமையாற் சூத்திரஞ் செய்வான் அவை அவ்வாறாதற்குக் காரணங் கூறாது, " நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே" (தொல். மர. 27) என முடிந்தது காட்டல். ' நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே' (தொல். எழுத். 7) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். (21) ஆணை கூறல்:இவ்வாசிரியன் கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல் : அது, " அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும்" (தொல். எழுத். 129) எனக் கருவியோத்தினுட் சாரியை மகரம் பகர வருமொழிக்கண் திரியா தென்று போய்ச் செய்கையுள் வல்லெழுத்தினது இயற்கை மெல்லெழுத் தாதல் அறிவித்தற்கு 'அல்வழி யெல்லா மெல்லெழுத்தாகு'மெனச் சொல்லுதல் போல்வன. ஙஞந ஆதற்கும் இஃதொக்கும். " ஒம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர்" (தொல். சொல். 396) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். மற்றுத் தன்கோட்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், அது தந்திரஞ் செய்யும் பகுதிக்கண்ணது ; இஃது அன்னதன்றிப் புணர்ச்சிக்கட் சிறப்புடைய நிலைமொழி வருமொழித் திரிபு போலா தென்று கருவியாகிய இடைச்சொற்காயின் இத்துணை யமையுமென்று ஆணை செய்தலின் அப்பெயர்த்தாயிற்று. (22) பல்பொருட்கேற்பின் நல்லது கோடல்ஒரு சூத்திரத்துட் பயந்த சொற்றொடர் பலபொருட் கேற்றதாயினும் நல்லது கொள்கின்றாரெனக் கருதி அவ்வாறு செய்தல் : அவை, " ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை" (தொல். சொல். 193) என்றவழி, ஒருவரென்பதொரு சொல் தன்கண்ணே இருபாலாரையுந் தழீஇ நிற்குமெனவும், அது கருவியாக இருபாலாரையுஞ் சொல்லப்படுமெனவும் கவர்த்தவழி, " தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்" (தொல். சொல். 194) என்பதனொடு படுத்துநோக்க இருபாலாரையும் ஒருசொல் தன்கட் டழீஇ நிற்றலே நல்லதென்று கொள்ளவைத்தல். " நும்மெ னிறுதி யியற்கை யாகும்" (தொல். எழுத். 187) என்புழி, எழுத்து விகாரமுடையதனைக் களைந்து சாரியைக்கண்ணே இயற்கை கோடல் அதன்பாற்படும். இதனை ஏற்புழிக் கோடலெனவும் ஒருபுடைச் சேறலெனவுஞ் சொல்லுப. (23) தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்:ஒரு வாய்பாடு எடுத்தோதப் பலவாய்பாடு அதற்கு வந்து பூணுமென்று வகுத்துக் கொள்ளவைத்தல் ; அது, "செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி" (தொல். சொல். 230) எனவும், "காப்பி னொப்பி னூர்தியி னிழையின்" (தொல். சொல். 73) எனவும் ஒரு வாய்பாடு தொகுத்து ஓதியவாற்றானே பல வாய்பாடு வகுத்துக் கொள்ளவைப்பதென்பது, செய்தென்பதனை நக்கு வந்து கண்டு நின்று பாடிப் போய் எனப் பலவாக்குதலும் செய் என்னும் முதனிலையான் முற்றுவாய்பாடு பலவுமாக்குதலும், இனிக் 'காப்பி' னென்றவழிப் "புரத்தல் புறந்தர லோம்புதல் போற்றல்" எனப் பலவாக வகுத்தலுங் கண்டுகொள்க. " உருவென மொழியினும்" (தொல். சொல். 24) என்றலும், " இதன திதுவிற்று" (தொல். சொல். 111) என்றலும் போல்வன அதற்கு இனமெனப்படும். (24) மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல்:ஒரு பொருளினை ஒருவன் வேறுபடக்கொள்வதோர் உணர்வுதோன்றியக்கால் அவ் வேறுபாட்டினை மாற்றித் தான் துணிந்தவாறு அவற்கும் அறிவுறுத்தல். இது மறுதலை சிதைத்தலுடைமையின் வாளாது தன்கோட் கூறலின் அடங்காதாயிற்று. " மூவள பிசைத்த லோரெழுத் தின்றே" (தொல். எழுத். 5) எனவும், " நீட்டம் வேண்டி னவ்வள புடைய" (தொல். எழுத். 6) எனவும், " குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்" (தொல். எழுத். 41) எனவும் மூன்று மாத்திரையான் ஓரெழுத்து உண்டென்பாரை விலக்கி வழக்கியலான் இல்லையென்று தன்றுணிபு உரைத்தவாறு. உயிர்மெய் வேறெழுத்தன்றென்பான், " புள்ளி யில்லா வெல்லா மெய்யு உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும்" (தொல். எழுத். 17) எனவும், "மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே" (தொல். எழுத். 18) எனவும் வேறுபடாது கூறுதலும் அது. வழக்கினுள் அறியாதார்மாட்டு வேறுபோல் இசைப்பனவாயினும் அன்றென்று கூட்டமுணர்த்தினமையின், " மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்திய றிரியா" (தொல். எழுத். 53) என்றலும் இனமென அதன்பாற் சார்த்தி உணரப்படும். பிறவும் அன்ன. (25) பிறன்கோட்கூறல்:தன்னூலே பற்றாகப் பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கொள்ளுமாறு கூறுதல் ; அது, "அரையளபு குறுகன் மகர முடைத்தே இசையிட னருகுந் தெரியுங் காலை" (தொல். எழுத். 13) எனவும், "அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் . . . . . . . . . . . . . . . . . . நரம்பின் மறைய வென்மனார் புலவர்" (தொல். எழுத். 33) எனவும், " பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப" (தொல். மெய்ப். 1) எனவும், இவை அவ்வந் நூலுட் கொள்ளுமாற்றான் அமையுமென்றவா றாயின. " அளபிற் கோட லந்தணர் மறைத்து" (தொல். எழுத். 102) என்பது அதற்கு இனமெனப்படும்; என்னை? அவர் மதம்பற்றி இவன் கொள்வதொரு பயனின்றாகலினென்பது. (26) அறியாதுடம்படல்:தானோதிய இலக்கணத்தின் வேறுபட வருவன தான் அறிந்திலனாகக் கூறி அதன்புறத்துச் செய்வதொரு புறனடை; அவை, " கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே" (தொல். சொல். 119) எனவும், " வருவ வுளவெனினும் வந்தவற் றியலான் திரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே" (தொல். செய். 243) எனவும் வரும். இறந்தது காத்தலோடு இதனிடை வேற்றுமையென்னையெனின், இறந்ததென்பது தான் துணிந்து சொல்லப்பட்ட பொருளாகல் வேண்டும். இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருண்மேற்றாகி அதுவுந் தான் துணியப்படாத பொருளாகித் தான் நூல்செய்த காலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினுங் கொள்க வென்பான், 'வேறுபிற தோன்றி னும்' எனவும், 'வருபவுளவெனினும்' எனவுந் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந்தாற்கல்லது பழுதறச் சொல்லலாகாமையின் அஃது அவையடக்கியல் போல்வதோர் உத்தியெனக்கொள்க. " குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப" (தொல். எழுத். 160) எனவும், " செல்வழி யறிதல் வழக்கத் தான" (தொல். எழுத். 312) எனவும் வருவன அதற்கு இனமென வுணர்க. (27) பொருளிடையிடுதல்:வேற்றுமைப் பொருளினைச் சொல்கின்ற பொருண்மைக்கிடையே பெய்து சொல்லுதலும், சொல்கின்ற பொருட்கு இயைபுடைய தனை ஆண்டுச் சொல்லாது இடையிட்டுபோய்ப் பிறிதொருவழிச் சொல்லுதலும் போல்வன; அவை, " முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே" (தொல். சொல். 138) என்றாற்போலச் சொல்கின்ற உயர்திணைப் பெயரிடை விரவுப் பெயர் பெய்துரைத்தலும், வழுவமைக்கின்ற கிளவியாக்கத்துள் ஓதாது எச்சவியலுட் போக்கி, " அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்" (தொல். சொல். 443) எனச் சொல்லுதலும் போல்வன. "தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே" (தொல். சொல். 139) என்றவழித், தானென்னும் விரவுப் பெயரினை இடைப்பெய்து விலக்குதலும், வேற்றுமைக் கிளவியோத்தினுட் கூறாது எஞ்சி நின்ற வேற்றுமைத் தொகை முதலிய தொகைகளை எச்சவியலுட் சொல்லுதலும் போல்வனவும் இனம் என அதன்பாற் சார்த்தி யுணர்க. (28) எதிர்பொருளுணர்த்தல்தான் கூறிய இலக்கணத்திற் சில பிற்காலத்துத் திரிபுபடினும் படுமென்பது, முதற்கால முதனூலுங் கொண்டுணர்ந்த ஆசிரியன், எதிர்காலத்து வருவது நோக்கி அதற்கேற்றதோர் இலக்கணங் கூறிப்போதல் : " மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன" (தொல். எழுத். 82) என்று ஓதிய இலக்கணத்துச் சில பிற்காலத்துக் குறைய வருதல் எதிர்பொரு ளெனப்படும். அதனைத் தான் உணர்ந்து, " கடிசொ லில்லைக் காலத்துப் படினே" (தொல். சொல். 453) என்று கூறவே முற்கூறிய பொருளினை வற்புறுத்தலாம் அதுவென்பது. இங்ஙனந் திரிபுபடுதல் அறிந்தே கூறுதலானும், எதிர்பொருளாகலானும், இஃதறியாது உடம்படுதலினடங்கா தாயிற்று. " பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்" (தொல். கற். 4) என்பதூஉம் அதன்பாற் படும். (29) சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல்சொல்லி னாற்றலாற் பெறப்படும் பொருளினையும் எடுத்தோதியாங்குக் கொள்ள வைத்தல்; அஃது, " எஞ்சிய வெல்லா மெஞ்சுத லில" (தொல். எழுத். 77) என்புழி, எல்லா மென்பதனை எச்சப்படுத்து அதற்காகாதன இருபத்தாறு கொண்டவழியும் அதனை எடுத்தோதிற் சிறப்பின்றென்று கொள்ளற்க என்பது இதன் கருத்து. எச்சவியலுட் கூறிய பொருள் அகத்தோத்துக் கூறிய பொருளோடு ஒப்பக் கூறுதலும் இனமென அதன்பாற்படும். 'மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்த'லோடு இதனிடை வேற்றுமையென்னையெனின், அஃது எடுத்தோதப்பட்ட பொருட்கண்ணதெனவும், இஃது எடுத்தோத்தி னோடு ஒப்ப எச்சப்பட வைத்துக்கொள்ளும் இலக்கணம் எனவும் அதனோ டிதனிடை வேற்றுமையுணர்க. (30) தந்து புணர்ந்துரைத்தல்: உள்பொரு ளல்லதனை உளது போலத் தந்து கூட உணர்த்தல் ; அவை, " அளபெடை யசைநிலை யாகலு முரித்தே" (தொல். செய். 16) எனவும், " குறிலிணை யுகர மல்வழி யான" (தொல். செய். 4) எனவுங் கூறுங்கால் அளபெடையினை எழுத்துப் போலவுங் குற்றுகரத்தினைக் குற்றெழுத்துப் போலவும் ஓதுதல் போல்வன. " மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்" (தொல். எழுத். 104) எனவும், " மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் " (தொல். எழுத். 139) எனவும் மேற்கூறிய புள்ளியினையே ஒருபயனோக்கி மீட்டும் புள்ளி பெறுமெனக் கூறுதல் அதற்கு இனமெனப்படும். " குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல" (தொல். எழுத். 50) என்பதேபற்றி, " நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும்" (தொல். எழுத். 160) என்புழித் தொடர்மொழியை நெட்டெழுத்தாக்கிக் கோடலும் அது. (31) ஞாபகங்கூறல்சூத்திரஞ் செய்யுங்கால் அதற்கு ஓதிய இலக்கண வகையானே சில்வகையெழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருணனி விளங்கவுஞ் செய்யாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றும் அதனானே வேறுபல பொருளுணர்த்தல் : அது, " மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே . . . உணர்ந்திசி னோரே" (தொல். செய். 101) என வருதல். இதனாற்கொண்ட பொருண்மையெல்லாஞ் செய்யுளியலுட் காட்டப்பட்டன. " எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே" (தொல். எழுத். 128) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். பிறவும் அன்ன. (32) உய்த்துக்கொண்டுணர்தல்ஒருவழி ஒரு பொருள் சொல் லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளினையுங் கொணர்ந்து கொண்டறியுமாறு தோன்றச் செய்தல் : அவை, " நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே" (தொல். எழுத். 36) என இடனும் பற்றுக்கோடும் கூறி, அதனான் ஈறு ஆக்கங்கோடலுங், " குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்" (தொல். எழுத். 67) என முதலாக்கங் கூறி, அதனானே இடனும் பற்றுக்கோடும் அதுவேயெனக் கோடலும் போல்வன. பெயர்வினைக்கு ஓதிய இலக்கணம் ஒழிந்த சொற்குஞ் செவ்வனஞ் செல்லுமென்று கோடல் அதற்கு இனமெனப்படும்; பிறவும் அன்ன. மற்று நுதலியதறிதலோடு இதனிடை வேற்றுமையென்னை யெனின்,- அது வாளாது பயமில கூறியது போலக் கூறியவழி இவ்வாறு கூறியது இன்ன கருத்துப் போலுமென்று அறிய வைத்தலும், உரைவகை யானும் நுதலியதறியச் சொல்லுதலுமாம்; இஃது அன்னதன்றி, அச்சூத்திரந் தன்னான் ஒருபொருள் பயந்ததன்றலையும் பின்னொருபொருள் பெற வருதலின் இது வேறென்பது. மற்று ஞாபகங் கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், - பயமில்லது போலவும் அரிதும் பெரிதுமாகவும் இயற்றி எளிதுஞ் சிறிதுமாக இயற்றாது சூத்திரஞ் செய்தல் வேறுபாடே நிமித்த மாகத் தோற்றிக் கொள்வதொரு பொருள்பெற வைத்தலின் இதுவும் வேறெனப்படுமென்பது. மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிற அவண் வரினும் - உய்த்துக் கொண்டுணர்தலொடு மேற்கூறிய முப்பத்திரண்டும் இச்சூத்திரத்துள் எடுத்தோதிய பொருள்வகையான் ஆராய்ந்து சொல்லப்பட்டனவன்றே? அங்ஙனஞ் சொல்லாதன பிறவும் இந்நூலுள் வரினும்; சொல்லிய வகையாற் சுருங்க நாடி - உத்திவகையென வகுத்துக்கொண்டு ஓதிய முப்பத்திரண்டு பகுதியான் அடங்குமாறு ஆராய்ந்து; மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்டு- ஓதப்பட்ட உத்தி பலவும் ஒருங்கு வரினும் உள்ளத்தான் தெள்ளிதின் ஆராய்ந்து மயக்கந் தீர வேறு வேறு தெரிந்து வாங்கிக் கொண்டு; இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்- முப்பத்திரண்டாகும் ஏற்ற வகையான் இனஞ் சார்த்தி மற்றவற்றை இன்னதிதுவெனப் பெயர் கூறல்வேண்டும், அங்ஙனந் தொகநின்ற வழியும் வேறுவேறு கொண்டு; நுனித்தகு புலவர் கூறிய நூலே - தலைமை சான்ற ஆசிரியராற் கூறப்பட்ட நூல் எ-று. எண்ணிய முப்பத்திரண்டு மல்லன தோன்றினும் அவற்றுள் அடக்கி, அவைதாம் ஒருங்கு வரினும் வேறு தெரிந்து இனந்தோறுஞ் சேர்த்துதலை அவாவி நிற்கும் ஈண்டு ஓதியநூலென்பது கருத்து. சொல்லிய அல்ல பிற அவண் வருமாறும், அவை சொல்லியவகை யாற் சுருங்க நாடி இனத்திற் சேர்த்துமாறும் மேற் காட்டப்பட்டன. இனி, ஒருங்கு பலவுத்தி வந்தவழி உள்ளத்தான் தெள்ளிதி னெண்ணித் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்துதல் வருமாறு : " அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து ஓம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர்" (தொல். சொல். 396) என்றவழி, " அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல்" என்பது, இறந்தது காத்தலாம்; என்னை? இசையுங் குறிப்பும் பண்புமே யன்றிச் சீர்த்தியும் புனிறும் போல்வன வேறும் உள எடுத்தோதப் பட்டன எனவும், எடுத்தோதாது இசையுங் குறிப்பும் பண்புமன்றிச் சேணென்றுந் தொறுவென்றும் வருவன உளவெனவுங் கூறினமையின், " வரம்புதமக் கின்மையின்" என்பது எதிர்பொரு ளுணர்த்தலும் அறியாதுடன்படலுமாம். " ஓம்படை யாணை" என்பது ஆணை கூறலாம். இங்ஙனம் ஒரு சூத்திரத்துட் பல வந்தவழி, ஒன்றே உத்தியென்றுணராது, மனத்தினெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இவ்வாற்றான் இனத்திற் சேர்த்துக என்றான் ஆசிரியனென்பது. " மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை இயல" (தொல். மர. 93) என்பது முதலாக இத்துணையும் வழக்குநூலிலக்கணங் கூறினான், எழுநிலத்தெழுந்த செய்யுளின் (தொல். செய். 476) இதுவும் ஒன்றாகலின் இதனைச் செய்யுளியலிற் கூறினான். ஈண்டு மரபு கூறும்வழி ஒழிந்த செய்யுட்குப் போலாது, நூலிற்குப் பொருட்படையாகிய யாப்புக் குற்றங்க ளும் உத்திவகையுங் கூறல் வேண்டுதலிற் கூறினானென்பது. அங்ஙனங் கூறாக்காற் ' பாட்டின் மரபு' கட்டுரை போலவுங், "கட்டளை அரங்கின்றி வட்டா டியது" போலவும், வரம்பின்றி வேண்டியவாறு நூல்செய்தல் விலக்கின்றாவான் செல்லும் ; செல்லவே, எழுசீரானாகிய முடுகியலடியானும் எத்துணையும் நீண்டதொரு வஞ்சிப்பாட்டானும் பிறவும் வேண்டியவாறுஞ் சூத்திரஞ் செய்தலும், ஒருவன் பெயரினை அவ்வச் சூத்திரச் செய்யுளுட் சார்த்து வகையாற் பெய்து கூறலும், உணர்த்தப்படும் பொருளினை முதனூலுட் கிடந்தவாறு போலாது மரபுநிலை திரியச் செய்தலும், நால்வகை யாப்பொடு மாறுபடச் செய்தலும், வேண்டியவர் வேண்டியவாற்றாற் சில பொருள்களை வேறு தோற்றிக்கொண்டு நூல்செய்தலும் விலக்கின்றாகல் படுமென்பது. இனி உத்திவகையும் அவ்வாறே இன்றியமையாதன வெனப்படும். என்னை? உணர்த்தப்படும் பொருள் இதுவென்று அறிவித்தலும், எழுத்துச் சொற்பொருளெனப் பகுத்துக் கொண்டு அதிகாரஞ் செய்தலும், உணர்வு புலங்கொள்ளுமாற்றான் தொகுத்துக் காட்டலும், மற்று அவற்றை வகுத்துக் காட்டியவழிப் பயமில கூறலென்று கருதாமல் அதுதன்னா னொரு பயம்படச் செய்தலும், முதனூலாயின வெல்லாம் நூற்பொரு ளுணர்தற்குக் கருவியாகலுஞ் சூத்திரச்சுருக்கத்துக் கேதுவாகலும் உடைமையின் அவையும் வேண்டப்பட்டன வென்பது. இனி, அவற்றை இத்துணையென வரையறாக்கால், எத்துணையும் பலவாகி இகந்தோடுதலும், வழிநூன் முதனூல் வழித்தன்றாகலும் படும்; முப்பத்துமூன்றெழுத் தென்றானாயினும், அப்பெற்றித்தன்றி அறுபத்தா றாகக் கொள்ளவைத்தானென்று உத்தி கூறலும் உடம்படுவானாதல் செல்லுமென மறுக்க. இனி, " நுனித்தகு புலவர் கூறிய நூல்" என்றதனானே, பாயிரச்செய்யுளுஞ் சூத்திரச்செய்யுளும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் பெற்று வருதலும், அவ்விருபாவும் பெற்று வருதற்கண், பாட்டுப்போல எல்லாவுறுப்பும் பெறுதற்குச் செல்லா வென்பதூஉம், மாத்திரை முதலாகப் பாவீறாக வந்த பதினொன்றும் வண்ணங்களுள் ஏற்பன கொள்ளினுங் கொள்ளுமெனவும், யாப்புறுப்புக் கொள்ளுங்கால் ஈண்டோதிய மரபுங் கொள்ளப்படுமெனவுங் கொள்க. உரைக்குங் காண்டிகைக்கும் இவற்றுள்ளும் ஏற்பன அறிந்து கொள்க. இன்னும் ' நுனித்தகு புலவர்' என்றதனானே, தந்திரமுஞ் சூத்திரமும் விருத்தியுமென மூன்றும் ஒருவரேயன்றி ஒன்று ஒருவர் செய்தலும், இரண்டு செய்தலும் பெறப்படுமென்றலும், ஒருசாலை மாணாக்கருந் தம்மாசிரியருந் தம்மிடை நூல் கேட்ட மாணாக்கரும் பாயிரஞ் செய்யப்பெறுப வென்றலும், பொதுப்பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமுமென அப்பாயிரந்தாம் இரண்டாமென்றலும், ஈவோன்றன்மையும் ஈதலியற்கை யுங் கொள்வோன்றன்மையுங் கோடன்மரபுமென்ற நான்குறுப்புடையது பொதுப் பாயிரமென்றலும், அதன்வழியே கூறப்படுஞ் சிறப்புப் பாயிரந்தான் எட்டிலக்கண முடைத்தென்றலும், அவை ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளுங் கேட்போரும் பயனு (நன்னூல் 47) மெனப்படுமென்றலும், அவைதாம் நூற்கின்றியமையாவெனக் கொள்ளப்படுதலுங் கூறி முடிக்க. சிறப்புப்பாயிரத்தானே நூலிலக்கணம் ஒருவகையான் உணரப் படும்; பொதுப்பாயிரத்தானே ஆசிரியரும் மாணாக்கரும் நூலுரைத்தலும் நூல்கேட்டலும் மாசறவறிந்து உரை நடாத்துவாராக. அதனானே இவை நூன்முகத்தினின்று நிலாவுமென்பது. (110) " நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் மண்மாண் புனைபாவை யற்று" (குறள் . 407) " ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுது மெழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே" மரபியல் முற்றிற்று. மரபியற்குப்பேராசிரியருரை முற்றிற்று. நூ ற்பா நிரல் (எண்: நூற்பா எண்) அஃதான் றென்ப 394 அஃதொழித்து ஒன்றின் 405 அகப்பாட்டு வண்ணம் 536 அகவல் என்பது 393 அகன்று பொருள் 522 அகைப்பு வண்ணம் 541 அங்கதந் தானே 436 அங்கதப் பாட்டு 471 அசைகூன் ஆகும் 360 அசைச் சீர்த்தாகும் 385 அசையுஞ் சீரும் 323 அடக்கியல்வாரம் 456 அடிதொறும் தலையெழுத்து 404 அடிநிமிர் கிளவி 494 அடியிகந்து வரினும் 495 அடியிறந்து வருதல் 346 அடியின் சிறப்பே 347 அடியுள் ளனவே 345 அடைநிலைக் கிளவி 447 அதுவே...ãábahL 493 அதுவே...ஈரிரு 479 அதுவே...ஓரிரு 486 அதுவே வண்ணகம் 451 அந்தணாளர்க் கரசு 637 அந்தணாளர்க்கு 627 அந்நிலை...வஞ்சி 343 அந்நிலை...அறம் 418 அப்பெயர்க் கிழமை 611 அம்போ தரங்கம் 463 அவ்வம் மக்களும் 521 அவ்விய லல்லது 398 அவற்றுட், சூத்திரம் 481 அவற்றுட், பாஅவண்ணம் 526 அவற்றுட், பார்ப்பும் 559 அவற்றுள், நூலெனப் 478 அவற்றுள், மாத்திரை 314 அவற்றுள், ஒத்தாழிசை 443 அவைதாம், நூலி னான 477 அவைதாம், பாஅ வண்ணம் 525 அவையடக் கியலே 425 அளபெடை தலைப்பெய 401 அளபெடை யசைநிலை 329 அளபெடை வண்ணம் 531 அளபெழின் அவையே 409 அளவடி மிகுதி 371 அளவியல் வகையே 475 அளவுஞ் சிந்தும் 370 அறுசீ ரடியே 376 ஆங்கனம் விரிப்பின் 363 ஆசிரியப் பாட்டின் 469 ஆசிரியநடைத்தே 420 ஆசிரியம் வஞ்சி 417 ஆசிரிய மருங்கினும் 379 ஆண்பால் எல்லாம் 605 ஆயிரு தொடைக்கும் 406 ஆவு மெருமையும் 575 ஆற்றலொடு புணர்ந்த 604 இசைநிலை நிறைய 339 இடைச்சுர மருங்கின் 506 இடைநிலை...டொடு 444 இடைநிலை...டே 446 இடையிரு வகையோர் 631 இடையும் வரையார் 381 இதுநனி பயக்கும் 515 இயலசை...மயக்கம் 325 இயலசை முதலிரண்டு 318 இயலசை யீற்றுமுன் 328 இயற்சீர்ப் பாற்படுத்து 340 இயற்சீர் வெள்ளடி 374 இயற்சீ ரிறுதிமுன் 331 இயைபு வண்ணம் 530 இரலையுங் கலையும் 599 இருசீர் இடையிடின் 411 இருவகை உகரமோடு 316 இலையே தளிரே 642 இவ்விடத் திம்மொழி 519 இழுமென் மொழியான் 550 இறப்பே நிகழ்வே 514 இறுவாய் ஒன்றல் 408 இன்சீர் இயைய 342 இன்பமும் இரும்பையும் 520 ஈரசை கொண்டும் 324 ஈற்றய லடியே 380 உய்த்துணர் வின்றி 516 உயிரில் எழுத்தும் 356 உருட்டு வண்ணம் 544 உரைஎடுத்து அதன்முன் 654 ஊரும் பெயரும் 629 ஊரு மயலும் 503 எண்ணிடை ஒழிதல் 458 எண்ணு வண்ணம் 540 எண்வகை இயல்நெறி 517 எதிர்மறுத் துணரின் 664 எருத்தே கொச்சகம் 464 எருமையு...அன்ன 594 எருமையு...நாகே 617 எருமையு...வரையார் 571 எழுசீ ரடியே 377 எழுசீ ரிறுதி 388 எழுத்தளவு எஞ்சினும் 355 எழுத்து முதலா 390 எழுத்தொடும் சொல் 491 எழுநிலத் தெழுந்த 476 ஏந்தல் வண்ணம் 543 ஏழெத்தென்ப 349 ஏற்புடைத் தென்ப 592 ஏறு மேற்றையும் 557 ஏனை ஒன்றே 450 ஐவகையடியும் 364 ஐவகை...விரிக்குங்காலை 362 ஒட்டகங் குதிரை 607 ஒட்டக மவற்றோடு 573 ஒண்டொடி மாதர் 505 ஒத்த காட்சி உத்தி 665 ஒத்த சூத்திரம் 653 ஒத்தா ழிசைக்கலி 442 ஒத்தா ழிசையும் 427 ஒத்துமூன் றாகும் 454 ஒப்பொடு புணர்ந்த 488 ஒருசீ ரிடையிட்டு 410 ஒருநெறிப் பட்டாங்கு 513 ஒருநெறி யின்றி 483 ஒருபான் சிறுமை 462 ஒருபொரு...சூத்திரந் 480 ஒருபொரு...வெள்ளடி 465 ஒருபோ கியற்கையும் 459 ஒரூஉ வண்ணம் 539 ஒழிந்தோர் கிளவி 507 ஒழுகு வண்ணம் 538 ஒற்றள பெடுப்பினும் 330 ஒற்றெழுத் தியற்றே 320 ஒற்றொடு புணர்ந்த 554 ஒன்றறி வதுவே 582 ஒன்றே மற்றும் 487 கட்டுரை வகையான் 435 கடமையும் மரையும் 576 கடல் வாழ் சுறவும் 595 கண்ணியுந் தாரும் 634 கலித்தளை மருங்கின் 336 கலித்தளை யடிவயின் 337 கலிவெண் பாட்டே 472 கலையென் காட்சி 600 கவரியுங் கராமும் 572 காமப் புணர்ச்சியும் 498 காயே பழமே 643 கிழவன் தன்னொடும் 504 கிளரியல் வகையின் 496 குஞ்சரம் பெறுமே 574 குட்டம் எருத்தடி 428 குட்டியும் பறழும் 565 குரங்கி னேற்றினை 623 குரங்கு...மந்தி 622 குரங்கு...மூகமும் 577 குழவியும் மகவும் 578 குற்றிய லுகரமும் 322 குறளடி முதலா 369 குறிலிணை உகரம் 317 குறிலே நெடிலே 315 குறுஞ்சீர் வண்ணம் 533 கூற்றும் மாற்றமும் 468 கைக்கிளை தானே 431 கைக்கிளை முதலா 497 கொச்சகம் அராகம் 433 கொச்சக வொருபோகு 460 கோடுவாழ் குரங்கும் 568 கோழி கூகை 610 சித்திர வண்ணம் 534 சிதலும் எறும்பும் 585 சிதைவில என்ப 661 சிதைவெனப் படுவது 663 சீர்கூ னாதல் 361 சீர்நிலை தானே 353 சீரியை மருங்கின் 368 சூத்திரத் துட் பொருள் 658 செம்பொரு ளாயின் 437 செய்யுட் டாமே 439 செய்யுள் மருங்கின் 555 செய்யுள் மொழியான் 548 செவியுறை தானே 426 சேரி மொழியின் 553 சேவற் பெயர்க்கொடை 603 சொல்லப் பட்டன 660 சொல்லிய தொடையொடு 412 சொல்லிய மரபின் 581 சொல்லொடுங் குறிப்பொடும் 518 சொற்சீ ரடியும் 434 ஞகாரை முதலா 552 ஞாயிறு திங்கள் 512 தரவியல் ஓத்தும் 449 தரவிற் சுருங்கி 455 தரவின் றாகி 461 தரவும் போக்கும் 466 தரவே... நாலடி 445 தரவே... நான்கும் 453 தலைமைக் குணச்சொலும் 630 தவழ்பவை தாமும் 560 தன்சீர் வகையினும் 366 தன்சீ ருள் வழி 367 தன்சீ ரெழுத்தின் 358 தன்பா அல்வழி 333 தனிக்குறில் முதலசை 319 தாஅ வண்ணம் 527 துகளொடும் பொருளொடும் 440 துள்ள... கலி 395 தூக்கியல் வகையே 399 தூங்கல் வண்ணம் 542 தூங்க லோசை 396 தெரிந்தனர் விரிப்பின் 414 தொகுத்தல் விரித்தல் 652 தொடை வகை நிலையே 415 தொன்மை தானே 549 தோடே மடலே 641 நண்டுந் தும்பியும் 586 நந்து முரளும் 584 நரியும் அற்றே 564 நரியும் அற்றே 621 நலிபு வண்ணம் 535 நாயே பன்றி 563 நாலெழுத்து ஆதியா 348 நாற்சீர் கொண்டது 344 நிரனிறுத் தமைத்தலும் 403 நிரைமுதல் வெண்சீர் 372 நிரையவண் நிற்பின் 387 நிலந்தீ நீர்வளி 644 நிலையிற் றப்பெயர் 601 நிறைமொழி மாந்தர் 490 நீர்வா...ணந்தும் 618 நீர்வாழ்...ளறுபிறப்பு 597 நுண்மையும் சுருக்கமும் 489 நூலே கரகம் 625 நெடுஞ்சீர் வண்ணம் 532 நெடுவெண் பாட்டே 430 நெடுவெண்... முந்நால் 470 நெல்லும் புல்லும் 580 நேர்நிலை வஞ்சிக்கு 354 நேரவண் நிற்பின் 327 நேரின மணியே 482 நேரீற் றியற்சீர் 386 படையும் கொடியும் 626 பத்தெழுத் தென்ப 350 பரத்தை வாயில் என 510 பரிசில் பாடாண்திணை 628 பரிபாட் டெல்லை 474 பரிபா டலே 432 பழிப்பில் சூத்திரம் 656 பறழெனப் படினும் 562 பன்றி புல்வாய் 593 பன்றி...நாய் என மூன்றும் 613 பாட்டிடைக் கலந்த 492 பாட்டிடை வைத்த 485 பாட்டி யென்ப 620 பாட்டுரை நூலே 391 பாணன் கூத்தன் 502 பாநிலை வகையே 467 பார்ப்பார் அறிவர் 509 பார்ப்பான் பாங்கன் 501 பாவிரி மருங்கினை 419 பிடிஎன் பெண்பெயர் 606 பிணவல் எனினும் 614 பிள்ளை குழவி கன்றே 579 பிள்ளைப் பெயரும் 566 புல்லும் மரனும் 583 புல்வாய் நவ்வி உழையே 612 புல்வாய் புலி உழை 590 புள்ளும் உரிய 608 புறக்கா ழனவே 640 புறநிலை வாயுறை 473 புறப்பாட்டு வண்ணம் 537 பெண்ணும் பிணாவும் 616 பெண்ணு மாணும் 624 பெற்றமு மெருமையும் 615 பெற்ற மெருமை 596 பேடையும் பெடையும் 558 பெடையும் பெ...நாடின் 609 பொழிப்பும் ஒரூஉவும் 402 போக்கியல் வகையே 448 மக்கள் தாமே 588 மகவும் பிள்ளையும் 569 மண்டிலங் குட்டம் 429 மயிலும் எழாஅலும் 598 மரபுநிலை திரிதல் 645 மரபுநிலை திரியா 648 மரபுநிலை திரியின் 646 மரபே தானும் 392 மருட்பா ஏனை 397 மறுதலைக் கடாஅ 659 மறை வெளிப் படுத்தலும் 499 மனையோள் கிளவியும் 508 மாட்டும் எச்சமும் 523 மாத்திரை முதலா 416 மாத்திரை யெழுத்தியல் 313 மாவும் மாக்களும் 587 மாற்றருஞ் சிறப்பின் 556 முச்சீர் முரற்கையுள் 382 முச்சீ ரானும் 359 முடுகியல் வரையார் 378 முடுகு வண்ணம் 545 முதல்வழி யாயினும் 662 முதற்றொடை பெருகி 457 முற்றிய லுகரமும் 321 முன்னிரை உறியும் 326 மூங்கா வெருகெலி 561 மூடுங் கடமையும் 619 மூவா றெழுத்தே 352 மூவைந் தெழுந்தே 351 மூன்றுறுப்பு 484 மெய்தெரி வகையின் 633 மெய்பெறு மரபின் 413 மெய்பெறு வகையே 500 மெல்லிசை வண்ணம் 529 மேற்கிளந் தெடுத்த 655 மொழிகரந்து சொல்லின் 438 மொழியினும் பொருளினும் 407 மோத்தையுந் தகரும் 602 மோனை எதுகை 400 யாடும் குதிரையும் 567 யானையும் குதிரையும் 570 வசையொடும் நகையொடும் 441 வஞ்சிச் சீரென 332 வஞ்சீத் தூக்கே 383 வஞ்சி மருங்கினும் 338 வஞ்சி மருங்கின் 334 வஞ்சியடியே 357 வண்ணகந் தானே 452 வண்ணந் தாமே 524 வண்ணம்...இவை 546 வல்லிசை வண்ணம் 528 வழக்கெனப் படுவது 647 வழிபடு தெய்வம் 422 வழியி னெறியே 651 வழியெனப் படுவது 650 வனப்பியல் தானே 547 வாயில் உசாவே 511 வாயுறை...யவை 423 வாயுறை...வயங்க 424 வார்கோட்டி யானை 591 வாழ்த்தியல் வகையே 421 விட்டகல் வின்றி 657 விராஅய் வரினும் 365 விராய தளையும் 373 விருந்தே தானும் 551 வில்லும் வேலும் 638 வினையின் நீங்கி 649 வெண்சீர் ஈற்றசை 341 வெண்டளை விரவியும் 375 வெண்பாட் டீற்றடி 384 வெண்பா வியலினும் 389 வெண்பா வுரிச்சீர் 335 வேந்துவிடு தொழிலின் 636 வேழக்கு உரித்தே 589 வேளாண் மாந்தர்க்கு 635 வைசியன் பெறுமே 632 செய்யுள் நிரல் (மேற்கோள்) எண் : நூற்பா எண் அ அ விழந்தான் 319 அஉ அறியா 319 அஃகாமை செல்வத்திற்கு 535 அகல்வயல் 338 அகலிரு விசும்பின் 368,556 அகலிரு விசும்பு 405 அகன்ஞாலம் 467 அடல்வே லமர் 403 அடிதாங்கு மளவு 341 அடியதர் 360 அடுகளம் வேட்ட 627 அட்டாலும் 384 அணித்தாத் தோன்றுவது 505 அண்டர் மகளிர் 642 அத்தக் கள்வர் 406 அமைவிடு கொடி 369 அம்ம வாழி தோழி 538 அயிற்கதவம் 386 அரவணிந்த 375 அரிதாய அறனெய்தி 336, 341, 344, 347, 388, 389, 417, 427 அரிதே தோழி 446 அரிதினிற் றோன்றிய 466 அரிநீரவிழ் நீலம் 468 அருளல்ல தியாதெனில் 320 அரும்பொருள் வேட்கை 465 அருடுர்ந்த காட்சி 467 அலரிநாறு 343 அலங்கல்வான் கழை 612 அவரே கேடில் 325, 361 அவரோ வாரார் 408 அவற்றுள் அஇஉ 466 அவிசொரிந் தாயிரம் 470 அழிவிலர் முயலு 506 அறச்சுவையிலன் 437 அறவை யாயின் 440 அறிந்தானை ஏத்தி 470 அறிவறிந்தார் 370 அறுசுவை யுண்டி 344 அனையை யாகன் மாறே 383 அன்னை வாழி 304 அன்னதே யாயினு மாக 468 ஆ ஆடலிற் பயின்றனை 502 ஆடுகொடி 336 ஆணமில் பொருள் 536 ஆண்கட னுடைமையின் 616 ஆயிரம் விரித்த 432 ஆரிய நன்று 490 ஆர்கலி யுலகத்து 461 ஆழ்ந்துபட்ட 338 ஆறறியந்தணர் 461 ஆனா நோயொடு 330 இ இடிக்குங் கேளிர் 498, 508 இடுகாட்டு ளேற்றை 604 இமிழ்கடல் 342 இமிழ்தூங்கிசை 369 இமிழ்கண் முழவு 406 இமையாமுக்கண் 422 இமையவில் வாங்கிய 449 இரிபெழுபதிர் 378 இரியற் பிணவ றீண்டலின் 614 இருள்கழி 415 இருங்கடலுடத்த 424 இருங்கழி மலர்ந்த 412 இருடீர்மணி 437, 471 இருடுணிந்தன்ன 556 இருணூற் றன்ன 556 இரும்புலிக் குருளை 563 இரும்பனம் புல்லின் 640 இரும்பனை வெண்டோடு 641 இலங்காழி வெண் 467 இல்லிறைப் பள்ளி 559 இழைபெற்ற பாடினி 383 இலை யண்மெல்லியள் 505 இன்றுள னாயின் 438 இன்மணிச் சிலம்பு 444 இன்னா வைகல் 537 ஈ ஈத்திலை வேய்ந்த 642 ஈயற்புற்றத் தீர்ம்புறம் 523 ஈருயிர்ப் பிணவின் 613 ஈன்பிண வொழிய 616 ஈன்றவடி தலைபோல் 612 உ உகுவதுபோலுமென் 435 உடைதிரைப் பிதிர்விற் 428 உண்கண் சிவப்ப 536 உதளநெடுந்தாம்பு 602 உதுக்காண்சுரம் 361 உப்போவென 329 உப்பிலா 381 உயங்கின்றன்னை 508 உயர்கோட்டு மகவுரை 509 உருமுரறு கருவிய 544 உலக முவப்ப 324, 340, 527 உவவுமதி யுரு 326, 366, 406 உழுத போத்து 596 உள்ளார் கொல்லோ 399, 411, 417, 527 உள்ளில வயிற்ற 567 உள்ளூர்க் குரீஇ 603 உறாஅர்க் குறுநோய் 386, 466 உறுபுலி யுரு 337 உறைபதியி 458 ஊ ஊர்க்குறுமாக்கள் 307 எ எண்ணாணப் பல்வேட்டு 628 எம்மிகழ்வோரவர் 437 எம்மனை முந்துற 499 எம்வெங் காமம் 503 எய்போற் கிடந்தான் 321, 387 எரியுரு வுறழ 544 எரிமலர் சினைஇய 433 எருமை நல்லான் 581, 617, 618 எருமைப் போத்து 596 எலுவரே சிறாஅ முறு 508, 510 எல்லீரு மென்செய்தீர் 508 எல்லோம் பிரியற்கெம் 433 எழுத்தெனப்படுப 526 எறித்தரு கதிர்தாங்கி 625 எறிபோத்து 596 எறும்பி யளையின் 394, 473 என்னை புற்கை 472 ஏ ஏடு கொடியாக 326 ஏற்பன ஏற்பன 569 ஏற்றிளங் கவரி 594 ஏற்றெருமை நெஞ்சம் 594 ஒ ஒக்குமே யொக்குமே 403 ஒண்டா ரகலமும் 508 ஒய்யென வெழுந்த 574 ஒருவான் யாறொடு 461 ஒரூஉநீ யெங்கூந்தல் 468 ஒரூக் கொடியியல் 435 ஒன்றே னல்லெ னொன்றுவென் 301, 350 ஒன்றிரப்பான் போல் 467 ஓ ஓங்குகோட்டு 366 ஓங்குதிரை 326, 336, 406 ஓங்குமலைப் பெருவில் 366, 396 ஓதியு மோதார் 391 ஓரிரா வைகலுட் 456 ஓருயிர் மாத ராகலின் 511 க கடறுகவரா இழிந்து 343 கடாமுங் குருதியும் 461 கடுவனு மறியுமக் 623 கடுங்களிற் றொருத்தல் 589 கடையாயார் 392 கணைக்கோட்டு வாளை 581 கண்ணாரக் காணாக் கதவு 321 கண்ண் டண்ண்ணென 330 கண்போல் 343 கண்டகம் பற்றி 375 கண்டற் கானல் 404 கதிர்பகா ஞாயிரே 513 கரடி வழங்கு 343 கரந்தாங்கே இன்னா 466 கராஅங் கலித்த 598 கருப்புக் கொழுந்து 323 கருங்கோட்டு நறும் 446, 449 கருங்கட் டாக்கலை 601 கருமுக மந்தி 386, 622 கரைபொரு கான்யாற் 376 கலக்கொண்டன 406 கலாஅ கிளிகடியும் 386 கல்லெனக் கவின் 456 கல்லாலந் தண்ணிழல் 461 கவிரிதழ் கதுவிய 377 கவைத்தலை முதுபோத்து 598 கழறொழா 339 கள்ளியங் காட்ட 601 கனவினிற் காண்கொடா 472 கன்று குணிலா 461 கன்றுகாலொய்யும் 570 கன்றுபுகு மாலை 570 கன்றடை மரையா 571 காடுதேரா 343 காடுமீக் கூறும் 592 காடோங்கிய 369 காணாமை யிருள் 444 காண்பா னவாவினால் 467 காமரு சுற்றம் 433 காமன் கடும்புனல் 337, 467 காமன் காணென்று 331 காமங் காம மென்ப 501 காமர் சேவல் 603 காய்சின வேற் 386 காரெதிர் கலிஒலி 378 கார்விரி கொன்றை 421 கால்காய்ந்தது 369 காவல்குழவி கொள்பவரின் 578 காழ்விரி கவையாரம் 442 காற்றுச் சுவடொற்று 593 கானங் கோழிக் 603 கானவாரண மீனும் 623 குரங்குளைப் பொலிந்த 533 குரங்குப் பிள்ளை 569 குருளை கோட்படல் 563 குழவி வேனில் 579 குழவித் திங்கள் 579 குழவி ஞாயிறு 579 குளிறுகுர லருவி 536 குறுங்கை யிரும்புலி 684 குன்ற நாடன் கண்ட 571 கேடில் விழுப்பொருள் 406 கேழற் பன்றி 589 கேளிர் வாழியோ 501, 510 கேள்கே டூன்றவும் 499 கைகவியாச் சென்று 520 கைம்மை யுய்யாக் காமர் 562, 622 கொங்குதேர் வாழ்க்கை 498 கொடியவுங் கோட்டவும் 467 கொடியுவணத் தவனரோ 536 கொடுமிடல் நாஞ்சில் 467 கொய்குழை யகைகாஞ்சி 642 கொல்வினைப் பொலிந்த 392 கொலைநவில் வேட்டுவன் 374 கொழுநனை 387 கொற்றக் கொடி 338 கொற்றச் சோழர் 392 கொன்றுகோடு 358 கென்றைவேய்ந்த 461 கொன்றுகளம் வேட்ட 627 கோடுயர் வெண்மணல் 536 கோட்டுமண் 386 கோதை மார்பின் 404 ச சந்து சிதைய 343 சார னாட நீவர லாறே 534 சான்றவிர் வாழியோ 466, 508 சிறியட் பெறினே 539 சிறுசோற்றானு 375 சிறுவெள்ளாவின் 563 சிறுதலை நவ்வி 612 சீர்கெழு வெண்முத்தம் 501 சீற்றமிகுபு 332 சுஃஃ றென்னுந் தண்டோட்டு 323 சுடர்தொடீஇ 472 சுரும்புலவு நறுந் 321 சுறவே றெழுதிய 594 சூரலங் கடுவளி 411 செங்களம் படக்கொன்றவுணர் 518 செங்காந்தள் கைகாட்டும் 376 செங்காற் பைந்தினை 413 செஞ்சுடர் வடமேரு 464 செந்தொடைப் பகழி 407 செந்நா யேற்றை 604 செய்தானக் கள்வன் 382 செல்லினிச் சென்று 467 செவ்வேற் சேய் 407 செவ்விய தீவிய 467 செவ்வழி நல்யாழ் 502 செவ்வரைச் சேக்கை வருடை 564 செறிதொடி 511 செறுநர்விழையா 433 சென்றே 346 சென்றீ பெரும 563 சேயிறா முகந்த 412 சேற்றுக் கா னீலஞ் 322 சொல்லிற் சொல்லெதிர் 498 த தஎன்று தாமிசைப்ப 412 தகர்மருப் பேய்ப்ப 602 தகைமிகு தொகைவகை 375 தஞ்சொல் வாய்மை 467 தடந்தாட் கொத்த 461 தடங்கடற் பூத்த 461 தண்டண்டலைத் 332 தண்ணிய லற்ற 407 தண்ணந் துறைவன் 467 தண்டொடு பிடித்த 625 தமர்தர வோரில் 499 தலைப்புணை கொளினே 498 தவழ்பவை தாமும் 536 தழைபச்சென்னும் 369 தழைபூஞ் சாரல் 411 தன்பார்ப்புத் தின்னும் 560 தன்பால் வெங்கன்னின் 338 தாதுசேர் வண்டின் 466 தாதுறு முறிசெறி 377 தாமரை புரையும் 469, 523 தாய்சாப் பிறக்கும் 560 தாழ்தாழைத் 335 திங்களங்கதிர் 422 திருமழை 344 திருமழை தலைஇய 379 திருந்திழாய் கேளாய் 472 திருநுதல் வேரரும்பும் 472 திரைத்த விரிக்கின் 425 திறனல்ல 499 திறந்திடுமின் தீயவை 522 திறவாக் கண்ண சாய்செவி 563 தினைப்புனத் திதண் 369 தீநீர் நஞ்சம் 407 தீம்பால்கறந்த 465 துகடீர் பெருஞ் 470 துகடபு நாட்சி 641 துறுகல் விடாளை 616 தூஉத் தீம்புகை 374 தூஉமணி கெழூஉமணி 329 தூங்குசிறை 326 தெய்வ மடையிற் 642 தெரிகணை நோக்கி 503 தெறித்து நடை மரபின் 567 தேஎந் தேரும் 329 தேமாஞ் சோலைத் 346 தேன்றாட் டீங் 338 தேன்பெய்தது 369 தொக்குத் துறை படியும் 376 தொழுசெந்நெற்றி 603 தொடி ஞெகிழ்ந்தனவே 365 தோடுதோய் 642 ந நச்சல் கூடாது 449 நயனும் வாய்மையும் 467 நரந்த நாறும் 380, 381, 399 நரிப்பறழ் கவர 565 நலமிகநந்திய 468 நல்கூர்ந்தது 369 நவ்வி நாண்மறி 567 நறவினை வரைந் 472 நறவுண் மண்டை 325 நனைத்த செருந்தி 642 நன்னாட் பூத்த நாகிள 581 நன்றாய்ந்த செய்கோலாய் 438 நன்ன னேற்றை 540 நாகிளவ்ளையொடு 617 நாகிளவளை 581 நாணுத் தளையாக வைகி 321, 322 நாணுடை அரிவை 321 நாணுத் தளை 329 நாணுக் கடுங்குரை 499 நாண்ஞாயி றுற்ற 470 நாய்ப்பிண வொடுங்கிய 613 நாரை நிரைபோத்து 598 நானாற் றிசையும் 470 நான்முலைப் பிணவல் 614 நிணங்கொள் புலால் 467 நிலவுச் குறித்தன்ன 556 நிலமிசை நீடுவாழ்வார் 323 நிலவுமணல் 326 நிலம் பாய்அய் 329 நிலாவி னிலங்கு மணல் 640 நிலைக் கோட்டு வெள்ளை 602 நிவந்து தோன்று 366 நிறைமொழி மாந்தர் 490 நினக்கியான் சொல்லிய 320 நின்றுநினைந்து 370 நின்கண்ணாற் காண்பென் 382 நின்னொக்கும் புகழ் 433, 435 நின்கேள் புதுவது 508 நீத்துநீர்ப் பரப்பு 327 நீயே வினைமாண் 442 நீரற வறியா 380, 381 நீரலர் தூற்ற 467 நீரார் செறுவின் 445 நீரின் றண்மை 380, 381 நீரின் றண்மையும் 427 நீரோ ரன்ன 407 நீர்வரக் கண் 382 நீலமேனி வாலிழை 469 நீளரை யிலவத் 309 நீறணிந்த திருமேனி 461 நுதலுந் தோளும் 540 நுதல திமையா நாட்டம் 323 நும்மில் புலம்பின் 406 நும்மினுஞ் சிறந்தது 556 நும்மொடு நக்க 252 நூற்றுவர் தலைவனை 436 நெஞ்சு நடுக்குற 472 நெஞ்சிற் குரைத் 472 நெடுந்தாட் செந்தினை 613 நெய்த்தோர் மீமிசை 406 நெய்யொடு தீயொக்க 461 நெருப்புச்சினந் தணிந்த 322 நெருப்புக் கிழித்து 461 நெறியறி செறிகுறி 545 நேரிழை மகளி 383 நொஅலையல் 319 நோய்சேர்ந்த 499 ப பகலும்பெறுவை 514 பகுவாய் வராஅற் 579, 598 பணியுடையன் 426 பண்டரங்கம் 341 பதவுமேயல் பற்றி 565 பரவை மாக்கடல் 403, 408 பலவுறு நறுஞ்சாந்தம் 507 பலாஅக் கோட்டு 329 பலியுருவிற் கேலாத 458 பனைநுகும் பன்ன 641 பன்மாடக்கூடல் 470 பாஅலஞ்செவி 337, 409 பாஅல்புளிப்பினும் 374 பால் மருண்மருப்பின் 467 பாசிப் பரப்பிற் பறழ் 565 பாடின்றிப் பசந்த 449 பாடுகோ பாடுகோ 403 பாம்புமணி 366 பாரி பாரி யென்று 309 பாலு முண்ணாள் 501 பிடிபடி முருக்கிய 606 பிணர்மோட்டு நந்து 604 பிணந்தின் பெண்டிர்க்கு 564 பிள்ளை வெருகிற்கு 560 பிறங்குநிலை மாடத் 392 புகலிரும் பனிச்சோலை 461 புட்டேம்ப 335 புரிபு புரிபு 378 புரிவுண்ட புணர்ச்சி 466 புலம்பயி ருந்த 594 புலிப்பற் கோத்த 392 புலிப்பற ழன்ன 565 புலிப்போத் தன்ன 596 புல்வா யிரலை 599 புள்ளி யிறுதியும் 406 புனனாடன் 339 புனிற்றாய் பாய்ந்தென 615 புனைமலர்க் கடம்பின் 461 புன வேங்கைத் தாது 467 புன்னை நீழ 467 புன்றாள் வெள்ளெலி 604 புன்காற் புணர்மருதின் 338 பூணாக வென்பணி 461 பூண்ட பறையறைய 461 பூண்டு கிடந்து வளரும் 325 பூத்த வேங்கை 412 பெண்கோ ளொழுக்கம் 616 பெயர்த்னென் முயங்க 501 பெரியகட் பெறினே 381, 526 பேரமர் மழைக்கண்ணின் 508 பேர்ந்து சென்று 324 பைதற் பிள்ளைக் கிளி 559 பொரிமலர்ந் தன்ன 594 பொருள்கருவி காலம் 547 பொன்னி னன்ன புன்னை 529 போத்தொடு வழங்கா 598 ம மக்கள் குழவி 575 மடவரன் மகளிர் 406 மணிவிளங்கு திரு 458 மணி மருடகை 435 மணி நிறமலர்ப் 388, 389 மணிபுரை திருமார்பு 372 மணிவெண்ணகை 390 மண்டிணிந்த 338 மண்மாய்ந்தனெ 369 மண்டில மழுங்க 390 மண்ணார்ந் திசைத்த 432 மம்மர் நெஞ்சினோன் 324 மயிற்போத் தூர்ந்த 598 மரந்தலை மணந்த 502 மராஅ மலரொடு 531 மருந்தெனின் மருந்தே 514, 523 மருந்து நாடாத் 343 மரைப்போத்து 598 மரையா மரல்கவர 465, 615 மலர்காணின் மையாத்தி 532 மலர்மலி புகலெழ 378 மலிதிரை யூர்ந்துதன் 467 மலைமிசைத் தோன்று 347 மல்லர்க் கடந்தான் 368 மல்லலூர 467 மழைபெய்தென 369 மழைதுளைத்துப் புறப் 461 மறியாடு மருங்கின் 567 மறித்துருத் தொகுத்த 567 மனைக்குறமகள் 369 மனைவா ழளகின் 610 மன்று பார்த்து 375, 467 மாநிலஞ் சேவடி 469 மாமலர் முண்டகந் 467 மாயோன் மார்பில் 390, 469 மாயோன் மேய 405 மாயோன் மார்பு 347 மாலையும் உள்ளா ராயின் 508 மாவழங்கு பெருங்காட்டு 374 மாவா ராதே 532 மாவென மடலும் 642 மாறாக் காதலர் 427, 515 மான்றோற் புள்ளி 309, 578 மின்னுமிளிர்ந் தன்ன 321 மின்னொளி 467 முட்டாச் சிறப்பிற் 522 முந்தியாய் பெய்த 320 முயற்கோடு சீவி 390 முரணில் பொதியிற் 490 முல்லை வைந்நுனை 416 முழவுமுகம் புலரா 324 முறிமே யாக்கை 642 முன்றிலாடு 343 முன்னத்தஞ் 376, 406 முன்பொழுது 412 மென்புனிற் றம்பிணவு 613 மேக்கெழு பெருஞ்சினை 642 மேற்கோட்டு நீர் 332 மேற்கவட் டிருந்த 559 மைபட் டன்ன மாமுகம் 601 மையணி தண்டனை 461 மையற விளங்கிய 516 ய யாஅங்கொன்ற 640 யாஅ வொண்டளிர் 642 யாரிவ னெங்கூந்தல் 519 யாமைப் பார்ப்பி னன்ன 560 யானூடத் தானுணர்த்த 324, 346 யானேயீண்டையேனே 523, 539 வ வசையில்புகழ் 335, 417 வஞ்சியேன் என்று 336 வடவேங்கடம் 391, 526 வடாஅது பனிபடு 426 வண்டனிகொண்ட 461 வண்டொன்று 387 வண்டுமலர் 360 வண்புகழ் நிறைந்து 325 வண்டோட்டு நெல்லின் 641 வயங்குகதிர் 406 வயலாமைப் புழுக்குண்டு 419 வயநா யெறிந்து 565 வரிமரற் பாவை 594 வருந்தாதேகுமதி 508, 569 வரைவுரை திரை 324 வலிமுன்பின் 452 வளைக்கட் சேவல் 603 வாமா னேறி 346 வாரணக் கொடியொடு 623 வாரா ராயினும் 523, 541 வாராது நீத்தகன்றார் 376 வாரிய பெண்ணை 385 வாரி நெறிப்பட 468 வாளைவெண்போத்து 598 வாள்வலந்தர 360 வானாரெழிலி 433 வானுற நிமிர்ந்தனை 461 வானூர்மதியம் 465 வான்பொய்யாது 332 வான்பெய்தது 369 விடியல் வெங்கதிர் 472 விண்பாய்ந்தென 369 விதையர் கொன்ற 502 விருந்தெதிர் கொள்ளவும் 499 வில்லோன்காலன் 505, 514 விழவுத்தலைக் கொண்ட 321 விழியாக் குருளை 563 விளங்குமணி 336 விளங்குதொடி முன்கை 501, 508 வீழில்தாழைக் குழவித்தீநீர் 579 வெண்பலிச் சாந்த 461 வெல்புகழ் மன்னவன் 469 வெயிலாடு முசுவின் குருளை 569 வெருக்கு விடையன்ன 564, 623 வெளிற்றுப்பனந் 325 வெள்ளி வள்ளி 406 வேய்பயி லழுவம் 514 வேரல் வேலி 469 வேலாண் முகத்த 321 வேனிலுழந்த 467 வைகலும் வைகல் 405, 543