தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (முதல் பகுதி) வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (முதல் பகுதி) உரையாசிரியர் : பேராசிரியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 272 = 288 படிகள் : 2000 விலை : உரு. 180 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி(EFEO)யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே 'உயர்தனிச் செம்மொழி' எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், 'உலக முதன் மொழி தமிழே' என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! "எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்" என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. "புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்" தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய 'இலக்கண வரலாறு' என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும் போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகி யோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு உயிர். உயிர்மயங்கியல் உரு. உருபியல் எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலித். கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குற். குற்றியலுகரப் புணரியல் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப்படலம் சிலப். சிலப்பதிகாரம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தொல். தொல்காப்பியம் நாலடி. நாலடியார் நூன். நூன்மரபு பட்டினப். பட்டினப் பாலை பிற். பிற்சேர்க்கை புள்ளி. புள்ளிமயங்கியல் புணர். புணரியல் புறம். புறநானூறு பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மர. மரபியல் மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. (திரு)முருகாற்றுப்படை யா.வி. யாப்பருங்கல விருத்தி வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு "தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்" இதனொடும் இணைக்கப்பட்டுளது! "வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!" அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள 'மண்' எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து 'இந்தா' என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் 'தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை'ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் தொல்காப்பியம் ... 01 பொருளதிகார இயலமைதி ... 22 பொருளதிகார வாழ்வியல் விளக்கம் ... 25 பேராசிரியர் ... 154 6. மெய்ப்பாட்டியல் ... 165 7. உவமவியல் ... 218 நூற்பா நிரல் ... 268 செய்யுள் நிரல் ... 269 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்' "தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி" என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் 'பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்' என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,'பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது' என்னும் கருத்தால், "பழைய காப்பியக்குடியில் உள்ளான்" என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு 'விருத்த காவ்யக்குடி' என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி 'காவ்ய மாதா' எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் 'பல்காயம்' என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்" ஆய்ந்து, தமிழியற்படி "எழுத்தும் சொல்லும் பொருளும்" ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்" (1006) "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்" (1336) "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" (385) எனத் தமிழமைதியையும், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் "ஆயிரம் விரித்த" என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் 'எத்துணையோ பரிபாடல்களின்' அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை களையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் 'சேமமட நடைப் பாட்டி' என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் "பாட்டி என்பது பன்றியும் நாயும்" என்றும் "நரியும் அற்றே நாடினர் கொளினே" என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ 'பாட்டி' என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் "இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது" என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! "கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் 'பூரியர்கள்' 'மற்றையவர்கள்' எனவும் கலித்தொகையில் 'ஐவர்கள்' எனவும் வழங்குகின்றது. 'அன்' ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. "தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. "தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட 'மார்', 'தோழிமார்' எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. "வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. "கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, 'அடுக்கியகோடி' என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. "சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது." இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் 'திருக்குறள்' எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், 'தண்டமிழ் ஆசான் சாத்தன்' என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' என்றும், திருக்குறளைப் 'பொருளுரை' என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். 'அறமுதலாகிய மும்முதற் பொருள்' என்பது தொல்காப்பியம். 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் 'அறம்' என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் 'ஓரை' என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல 'ஹோரா' என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். 'யவனர் தந்த வினைமாண் நன்கலம்' இவண் வந்ததும், அது 'பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)' பெயர்ந்ததும், 'யவன வீரர் அரண்மனை காத்ததும்' முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் 'தோகை' 'அரி' முதலிய சொற் களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் 'ஓரை' என்பது. அச் சொல்லை அவர்கள் அங்கு 'ஹோரா' என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை 'முழுத்தக்கால்' என்பதும், 'என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?' என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - 'நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது' என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே" என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, "நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு" உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து 'மாலியரோ' எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்னும் தொல்காப்பியர், "மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், "நில்லா உலகம் புல்லிய நெறித்தே" என 'உலகம் நிலையாமை பொருந்தியது' என்ற அளவிலேயே அமைகிறார். "காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் 'புரைதீர்காமம்' என்றும் (1027) 'காமப் பகுதி கடவுளும் வரையார்' என்றும் (1029) கூறியிரார். "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்" என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், "கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்றும் (1034), புறநிலை வாழ்த்து, "வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்" என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் 'வழிபடு தெய்வம்' என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் 'தெய்வம் உணாவே" என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், 'கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை', 'அருளொடு புணர்ந்த அகற்சி', 'காமம் நீத்தபால்' என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் 'முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த'தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல் களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். "ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்" என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறிய தாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் "தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்" என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, "அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்" என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். "உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே" (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை "கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்" (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. "அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்" (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். "எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" "மழவும் குழவும் இளமைப் பொருள" "ஓதல் பகையே தூதிவை பிரிவே" "வண்ணந் தானே நாலைந் தென்ப" ஓரியல் யாப்புரவு 'ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்' என்பது தொல்காப்பியர் வழக்கம். "வல்லெழுத் தென்ப கசட தபற" "மெல்லெழுத் தென்ப ஙஞண நமன" "இடையெழுத் தென்ப யரல வழள" சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். "அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே" என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். "அளபெடைப் பெயரே அளபெடை இயல" "தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல" என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். "வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே". "ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்". இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. "மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்". இவை அடி எதுகைகள். "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" "நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை". முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. "வயவலி யாகும்" "வாள்ஒளி யாகும்" "உயாவே உயங்கல்" "உசாவே சூழ்ச்சி" இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. "இழுமென் மொழியால் விழுமியது பயிலல்" "எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்" இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. "மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே" "ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்" என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. 'மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். "வகரக் கிளவி நான்மொழி ஈற்றது" "அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே" இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். "தாமென் கிளவி பன்மைக் குரித்தே" "தானென் கிளவி ஒருமைக் குரித்தே" "ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை" இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி 'இளையர்' உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா 'கைக்கிளை முதலா' எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. "ஏறிய மடல் திறம்" என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். 'மறம்' எனப்படும் துறையும் 'கண்ணப்பர் திருமறம்' முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. 'உண்டாட்டு' என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. 'தேரோர் களவழி' களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். 'ஏரோர் களவழி' என்பது பள்ளுப்பாடலாகவும், 'குழவி மருங்கினும்' என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்" என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். "அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்" என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் 'ஒலியன்' ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? "தொல்காப்பி யன் ஆணை" என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, 'யாப்பருங்கலம்' முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது 'புலமை இலக்கணம்' என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. "தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே" என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் 'விண்ணவர் கோமான்' விழுநூல், 'கப்பத் திந்திரன் காட்டிய நூல்' என்பவற்றையும் 'இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்' என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் "புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்" என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், "தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. "இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்" என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். 'அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ' எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், "தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை" என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?" என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். "மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!' அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! "ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி 'ஐந்திரம்' என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு 'படிமையோன்' என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி 'ஐந்திறம்' என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. 'ஐந்திரம்' எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் "தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன" என்னும் நூற்பாவை அடுத்துப் "பறழ்எனப் படினும் உறழாண் டில்லை" என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. "இக்காலத்து இறந்தன" என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் "கொல்லே ஐயம்" என்பதை அடுத்த நூற்பா "எல்லே இலக்கம்" என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத் தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக் காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. "உருவுட் காகும்; புரைஉயர் வாகும்" "மல்லல் வளனே; ஏபெற் றாகும்" "உகப்பே உயர்தல்; உவப்பே உவகை" என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி "நன்று பெரிதாகும்" என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, 'அவற்றுள்' என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. 'மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே" என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத் திற்கும் இடையே "ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான" என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய" என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், 'மரபியல்' செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். "வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் 'கிழமை' என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த 'புறக்காழ்' 'அகக்காழ்' 'இலை முறி' 'காய்பழம்' இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். "நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்" என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள 'நூலின் மரபு' பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. "அவற்றுள், சூத்திரந்தானே" என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) "சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்" என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் 'வாழ்வியல் விளக்க'த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் பொருளதிகார இயலமைதி எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொரு ளதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறை யாகும். எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப் படுத்துவர். அவற்றை வாழ்வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும். அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன. நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள. கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத்தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப்பட்டுள்ளன. ஆறாவதாக அமைந்தது மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடு என்பதன் பொருள், மெய்ப்பாடுகளின் வகை, அவை தோன்றும் நிலைக்களங்கள், அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், கைக்கிளை பெருந்திணை மெய்ப்பாடுகள், வாழ்நலத்திற்கு ஆகாக் குறிப்புகள், மெய்ப்பாட்டு நுட்பம் என்பவை முறையே இதில் கூறப்பட்டுள. பொருள் விளக்கச் சிறப்பமைந்த உவமை இயல் ஏழாவதாக இடம் பெறுகிறது. உவமையின் வகை, உவம உருபு, உவமையை உணருமுறை, உள்ளுறை உவமம், உவமை பற்றிய புறனடை என்பவை இவ்வியலில் பேசப்படுகின்றன. எட்டாம் இயல் தொல்காப்பியத்துவரும் இயல்கள் இருபத்து ஏழிலும் விரிவுடையதாகிய செய்யுள் இயல். ஈதொன்று மட்டுமே 240 நூற்பாக்களைக் கொண்டது. நூலில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்காக அமைந்தது. இதனை அடுத்ததாக 112 நூற்பாக்களை யுடையது இதனை அடுத்த மரபியல் ஆகும். இச் செய்யுளியல், "மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ" எனத் தொடங்கி முப்பத்து நான்கு வகையில் செய்யுள் உறுப்புகள் அமைதலை முதல் நூற்பாவிலேயே தொகுத்துக் கூறி, அவற்றை முறையே கூறி முடிக்கிறார். எல்லா இயல்களிலும் வைப்பு முறைச் சிறப்புண்டு எனினும் இவ்வியல் கொண்ட வைப்புமுறை நனிபெரும் சிறப்புடையதாம். பொருள் வைப்புமுறை மாத்திரை, எழுத்தியல், அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களம், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை அவை. தொல்காப்பிய நிறைவில் வருவது மரபியல். தொல்காப்பியர் முறை திறம்பா வைப்புமுறை, முறை மாற்றி வைக்கப்பட்டதில் தலைமை கொண்டது இவ்வியலாயிற்று. மாற்றரும் சிறப்பின் மரபு என மரபுமாண்பு கிளப்பதுடன் தொடங்குவது இது (1500). இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவை இவை எனச் சுட்டி முறைமுறையே கூறி, "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே" என்று நிறைவு செய்கிறார் (1525). பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி, "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என முடிபும் கூறுகிறார் (1568). இது காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமையன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை. 'இது கூறுவேம்' என்று தொடங்கி, 'இது கூறினேம்' என முடித்தபின், அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 - 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585 - 1588) கூறி, "இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்" என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590 - 1610) இடம் பெற்று நூல் நிறைகின்றது. ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக் காழ், புறக்காழ், தோடு மடல் இலை முறி காய்பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே "நூலே கரகம்" முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை. மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடையவையா? 'கவச குண்டலத் தொடு பிறத்தல் கதைக்க உதவும்' நடைக்கு ஆகுமா? மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும். - இரா. இளங்குமரன் பொருளதிகார வாழ்வியல் விளக்கம் தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பி யத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய்யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற்கியலாக் காலநிலையில் அவற்றின் முழுமை யான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றினுள்ளும் தனிப்பெரும் பேறு, தொல்காப்பியப் பொருளதிகாரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு அக் காலத்தையே, "எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப் பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, 'பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்' என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்று சொல்லா நிற்ப" என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம். வெளிப்பாடு இந் நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெருமக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகிய தாம். பொருள் வளம் இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளிலேயே வாழ்வியல் இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம். தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள், பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை. தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வர வாகிய நூல்களும், தொல்காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே. இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல்காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே. தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீச லாய்ப் புறப்பட்டவையேயாம். ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம். பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. 'அகத் திணை இயல்' என்பது அது. அக வொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம். அகம் அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு! புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம். அறம் அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்! தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு 'அறம்' எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல் காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனாலேயே வள்ளுவம் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என இல்வாழ்வில் முழங்கியது. அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார். தமிழர் கண்ட அகவொழுக்கம் 'கைகோள்' எனப்பட்டது. கை என்பதன் பொருள், ஒழுக்கம். கோள், கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள். கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, 'கைக்கிளை' எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க. (கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் 'கைம்மை' என வழங்கியமை கட்டமை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.) ஏழு திணை கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது, "கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப" (947) என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், 'நடுவண் ஐந்திணை' உண்மையைக் குறிக்கிறார் (948). நிலம் தமிழ் நிலம் 'நானிலம்' என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத்திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை அந் நிலைத்திணையின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவுமிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத்திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின. நடுவண் ஐந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே, "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியப்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும். நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்டவை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங்களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப்பட்டன. பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என மூவகைப் படுத்திக் கூறினர் (950). முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப்பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள். உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள். இம் முப் பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே - ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழுதும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப்பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற்பொருளினும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப்பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, "பாடலுள் பயின்றவை நாடுங் காலை" என்பது (949). நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார். கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது மக்கள் உள்ளத்தே கருக்கொண்டு விளங்கிய பொருள் என்பதைச் சொல்லியே பிற கருப்பொருள்களைக் கூறுகிறார் (964). மேல், கீழ் கடல் கொண்ட குமரிக் கண்டமும் சரி, எஞ்சியுள்ள தமிழகமும் சரி, இவை மேல் மலைதொட்டுக் கீழ் கடல் எனப் படிப்படியே அமைந்த வையே. மலை நிலம் உயர்ந்தது ஆதலால், மேல், மேற்கு என உயரப் பொருளால் அத் திசை குறிக்கப்பட்டது. கடல் நிலம் தாழ்வுடையது ஆதலால், கீழ், கிழக்கு எனத் தணிவுப் பொருளால் அத்திசை குறிக்கப்பட்டது. முல்லை முதல் இந் நிலையில், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என அமையும் நில அமைப்பின் படியே திணை வைப்புச் செய்யாமல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என முறைப்படுத்திக் கூறுகிறார். அம் முறையே பலரும் சொல்லிய முறை எனவும் உறுதி மொழிகிறார். அது, "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்பது (951). இனிக் காலம் சொல்லும் போதும், "காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்" (952) "பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப" (953) "வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்" (954) "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே" (955) "பின்பனி தானும் உரித்தென மொழிப" (956) என்றே வரிசைப் படுத்துகிறார். இருத்தல் "உணவின் சுவை நாவிலே இல்லை; வயிற்றிலே இருக்கிறது" என்றால், மறுதலையாகத் தோன்றும் அல்லவா. ஆனால், உண்மை அது தானே! பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் உணர்வுக்கும், பசியின்றி 'உண்ண வேண்டுமே' என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி! அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல் காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக, "ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்" என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, "உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது" என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது. நிலம், பொழுது வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ்வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை. மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கடல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா? முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்தவையா? பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா? இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களை யெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன! குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா? இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார். நாடக உயிர்ப்பு, உரையாட்டு நடிப்பு தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே! கருப்பொருள் 'கரு' என்பது 'கர்' என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும். கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு? "மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை" என்பது குறிப்பு. "நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு" என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு. வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது. ஆறு ஒழுக்கு நெறி வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதை யும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர், “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப” எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா = விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார். ‘பிறவும்’ என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்கிறார் களவியல் உரைகாரர். வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க. தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் “தெய்வம் உணாவே” என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறியாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார். உரிப்பொருள் முல்லை நிலமும், முல்லைக்குரிய கார் காலமும் முன்வைத்த ஆசிரியர், உரிப்பொருள் சொல்லும் போது குறிஞ்சியை முதற்கண் வைத்துள்ளார். அது “புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” என்பது (960). முல்லைக்குத் தந்த நில கால முதன்மையை, உரிப் பொருளுக்கும் தருதல் ஆகாது என்பது ஆராய்வார் எவர்க்கும் புலப்படும். ஏனெனில், முல்லை என்பது புணர்தலின் பின்னாக ஏற்படும், எதிப்பார்த்திருக்கும் ‘இருத்தல்’ ஒழுக்கம்; அது கூடுதல் இல்லாமல் நிகழாது; ஆதலால், குறிஞ்சி முல்லை என முறை வைத்தல் மேற் கொள்ளப்பட்டது என்பதற்காகவே, “தேருங் காலை” என்றார். தேருங் காலையாவது ஆராயும் பொழுது. கண்டாராகிய ஆடவரும் பெண்டிரும் காட்சியால் ஒருப்பட்டுக் கருத்தாலும் ஒருப்பட்டு ‘ஒருவரை இன்றி ஒருவர் இல்லை’ என்னும் அறவுணர்வு ஓங்கிய நிலையிலேயே ஒருவரை ஒருவர் மீளவும் காண எதிர்பார்த்திருத்தல் இயற்கை. ஆதலின், நடைமுறை வாழ்வறிந்த நன்முறை மாற்றமே குறிஞ்சி (புணர்தல்) முல்லை (இருத்தல்) என்னும் வைப்பு முறையாம். பிரிதல் கூடினார் இருவர் எதிர்பார்த்து இருப்பார் என்னின், நிகழ்ந்தது என்ன என எண்ணின் தெளிவு கிட்டும். அது ‘பிரிதல்’ என்பது. ஆதலால், குறிஞ்சி முல்லை என்னும் இரண்டன் இடையே பாலையை (பிரிவை) வைத்தல் முறைமையாயிற்றாம். பிரிவு என்பது வேளைப் பிரிவும், நாளைப் பிரிவும், திங்கள் முதலாம் பிரிவும் எனப் பலவகைத்தாம். இவற்றுள் வேளைப் பிரிவே முல்லைப் பிரிவு ஆகும். கூடு துறந்து செல்லும் பறவை போலவும் தொழுவம் பிரிந்து செல்லும் கால்நடை போலவும் வீடு துறந்து சென்று, வேலை முடித்து மாலையில் மீளும் வேளைப் பிரிவே இம் முல்லைப் பிரிவு. “கணவன் பிரிந்து சென்றால் அவன் மீள வரும் வரை மனைவிக்குக் கதவே காது” என்னும் பாவேந்தர் படைப்பு முல்லைப் பிரிவாகும். இந் நாளில் வேலை நிமித்தமாக வெளியே சென்று மாலையில் திரும்பி வரும் மனைவியைக் கணவன் நோக்கியிருத்தலும் இருவரும் காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் ‘ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல்’ எனத் தகும். “ஓதல் பகையே தூது இவை பிரிவே” என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து, கடற் பரப்பு வரை நீண்டு ‘நெய்தல்’ எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம் இரங்கல். வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது. கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். “கெஞ்சும் கொஞ்சும்” என்பது திருப்புகழ். கொஞ்சுத லாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப்படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும். கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம். ஊடல் இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன? உடலுக்கு ஒரு பெயர் ‘கூடு’ என்பது. “கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு” என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே! கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூடல். கூடும் கூடும் கூடாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊடல். ஆதலால் உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம். இவ் வகையால், உரிப் பொருள் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என முறைப்படுத்தப்பட்டன. நிமித்தம் புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது சார்பாவது. பெயர் இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சோழன் கரிகால் பெருவளத்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் வல்வில் ஓரி வையாவிக் கோப் பெரும் பேகன் பெருங்கோப் பெண்டு கண்ணகி இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும் பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடையவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள். பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டொழுகும் உணர்வுப் பொருள். அதனை உடையார் இவரெனக் கூறின் என்னாம்; புறப்பொருள் ஆகிவிடுமே! ஆதலால், “மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்” என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின், “புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” என்பது வரையறையான விடையாயிற்று (1001). இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுக மாகவோ குறிப்பாகவோ கூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன் இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும். இனி, அகப் பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும் “பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே” எனச் சுட்டுகிறார் (966). அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும். “செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்” என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர் அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பி னும் தன்னோடு தன்னையடுத்தவரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர். ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள், அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம். ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா? ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாதவரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார் ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணையைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத்திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர். ஏனெனில் பாடு பொருட் சிறப்புப் போலவே, பாடப்படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு. அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக் கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத்திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூடாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டியுளது. “அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்” என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை. இதனை, “புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001). பிரிவார் தகவு இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகையால் ஏற்படும், அப் பிரிவிற் குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடு கிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137). பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக்கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகையால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார். “ஓதல் பகையே தூதிவை பிரிவே” என்றும் (971) “பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே” என்றும் (979) வருவன அவை. ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது. பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு. தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப்பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகையால் சொல்லி நலம் செய்தலாகும். பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ? அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே! தெரிவு இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது. பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே செல்வர்! தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே! அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வாரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர். “மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்” ஆதலாலும், “அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்” ஆதலாலும், ஆள்வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத்தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின், “வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்” (665) என்பது வள்ளுவம். ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல்பாகும். மற்றும், “ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்” என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581). ஓதற் சிறப்பாலும் தூதுத்திற மாண்பாலும் உயர்ந்து விளங்குவார் எவரோ அவரே அதற்குரியராக விடுக்கப்படுவர். இதனால் தொல்காப்பியர், “அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (972) என்றார். இனிப் பகைதணிவினையாம் படைக்குத் தெரிவும் பயிற்சியும் முதன்மையாகக் கருதிப் பேணப்பட்டமையாலும், அவர் அணி அணியாகச் செல்வார் ஆதலாலும், அவரை இவரோடு எண்ணினார் அல்லர். அன்றியும் அவர் செல்லுதலும், தான் தேர்ந்த தலைவரொடு அவர் செல்லுதலும் தான் செல்வதாகவே ஆகும் ஆதலால் அவரைத் தனித்துக் கூறினார் அல்லர் (978). இனிப் பொருட் பிரிவுக்குரியர் இருவகையார். அவர் அரசின் சார்பில் பொருட் பொறுப்பினராய் வரிதண்டுவாரும் அறங்காப்பாருமாக இருப்பார் ஒருவகையர். மற்றொரு வகையர் குடிமை நலம் காத்தற்குப் பொருட் பிரிவு மேற்கொள்வார் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் குடிமை நலம் காக்கும் பொருட் பிரிவேயாம். இவருள் முன்னவர் முல்லை குறிஞ்சி முதலாகிய நானிலத் தலைவரும் ஆவர். ஆதலால், “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” (975) என்றார். அவர் மன்னர் கடமை என்னவோ அதனை அவர் சார்பாக இருந்து செய்கின்ற செயல் வீறு உடையவராம். அதனால் அவர், “மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப” எனச் சொல்லப்பட்டார் (976). “ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாடைங்காப் பேதையிற் பேதையார் இல்” எனப்படுபவர் போன்றாராக இல்லாமல் ஓதி உணர்ந்து ஓதவல்லாராகத் திகழ்ந்த உயர்ந்தவர் வழியிலே நெறிமுறைகள் வகுத்துப் பரப்பப்பட்டன. அதனால் “உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான” (977) என்றார் தொல்காப்பியர். “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” (1592) என்று மரபியலில் கூறுவது இவண் நோக்கத்தக்கதாகும். கடற்பிரிவு இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை, “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” (980) என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு. ஆடவர் மகளிரோடு கடல் கடந்து சென்றால், சென்ற நாட்டி லேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். மடலேறுதல் உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப்படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந்துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே ‘மடலேறுதல்’ என்னும் முறையாயிற்று. பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும். அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும். இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை, “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான” என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். “கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” என்பதை இவண் எண்ணலாம் (குறள். 1137). ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவுமிக்காராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை, “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான” என்று ஆசிரியர் கூறுவதால் அறியலாம் (1155). எண்ணிப் பார்ப்பின், கால இட தொழில் நிலைகள் மாறுபட்ட இக் கால நிலையிலும், இவ்வுளவியல் மாறிற்றில்லை என்பதை உணர முடியும். ஆடவர் வலிந்து மணங் கோடலை அன்றி, மகளிர் வலிந்து மணங்கோடல் செய்தி நடைமுறையில் இல்லாமை எவரும் அறிந்ததே. கூற்று அகவாழ்வில் இடம்பெறுவார் பேசும் இடம், பேச்சு என்பவற்றை முறையாகக் கூறும் ஆசிரியர், நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன், பிறர் என வகுத்துக் கொள்கிறார். அவர்கள் பேசுவது கூற்று எனப்படும். கூற்று = கூறுவது. கூற்று நிகழம் சூழல் ஒன்று வேண்டுமே. அச் சூழல், ‘கொண்டு தலைக்கழிதல்’, ‘உடன் போக்கு’ எனப்படுகிறது. அது இந் நாளில், ‘கூட்டிக் கொண்டு போதல்’ எனப்படுகிறது. ‘ஓடிப்போதல்’ எனப் பழிக்கவும் படுகிறது. முன்னாள் வாழ்வொடு எண்ணின், பழித்தற்கு இடமில்லை என்பதொடு, அந் நாள் மாந்தர் இதனை ஏற்றுப் போற்றிய சிறப்பும் படிப்பினையாக நமக்கு அமையும். ஒரு தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொண்ட நிலையில், தலைவியைப் பெற்றவளாகிய நற்றாய் தனித்து வருந்துதலும் பேசுதலும் முதன்மை இடம் பெறுகின்றன. தாய் தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொள்ளும் போது, நற்றாய், தன்னையும் தலைவனையும் தன் மகளையும் எண்ணிப் புலம்பு வாள், குறிபார்த்தல் தெய்வம் வேண்டல் என்பன புரிவாள், நன்மையாவதும், தீமையாவதும் அஞ்சத்தக்கதும் ஆகியவற்றைக் கூறிவருந்துவாள். தோழி யிடத்திலும் கண்டோர் இடத்திலும் வினாவுவாள் (982). செவிலி தாய் ஊரின் எல்லை வரை சென்று தேடுவாள். செவிலித் தாய் ஊரைத் தாண்டியும், வழிநடந்தும் தேடுவாள் (983). ஊரைவிட்டுத் தலைவன் தலைவியர் போகிவிடாமல் ஊரின் அயலிடத்தே இருப்பினும், அதுவும் பிரிவாகவே கொள்ளப்படும். இதனையும் இவ்விடத்தே குறிப்பிடுகிறார் (984) ஆசிரியர். தோழி தான் வேறு தலைவி வேறு என்றில்லாமல் ஒன்றியவள் தோழி. தலைவியைத் தலைவன் உடன் கொண்டு போதலே நலம் என்பதைத் தான் உணர்தலால் தலைவனிடம் எடுத்துரைப்பாள்; உடன்போக்கு ஏற்ற போது தலைவிக்கு நல்லுரை சொல்லுவாள்; உறவைப் பிரிதலால் உண்டாகும் தன் வருத்தமும் உரைப்பாள்; உடன் போக்கினரை மீட்டு அழைக்கச் செல்லும் தன் தாயைத் தடுத்து மீளுமாறு சொல்வாள்; மகளின் பிரிவை அறிந்து வருந்தும் பெற்ற தாய்க்குத், தலைவி மாறா அன்பால் பிரிந்தமை உரைத்துத் தேற்றுவாள் (985). இவை அவள் கூற்று நிகழும் இடங்கள். கண்டோர் வழிச் செல்வாரைக் ‘கண்டோர்’, வாளா பார்த்துக் கொண்டு செல்லாமல் உரையாடும் வகையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பொழுது போனமை, வழியின் தொலைவு, இடையே உண்டாம் அச்சம் என்பவற்றைக் கண்டோர், உடன் போக்கினர்க்கு உரைப்பர்; செல்லும் ஊர்த் தொலைவும் தம் ஊர் நெருக்கமும் கூறித் தம் ஊர்க்கு அழைப்பர்; உடன் போவோர் நிலைக்காக வருந்தியுரைத்து அவரூர்க்குத் திரும்பிச் செல்லுமாறும் சொல்லுவர்; அவரைத் தேடிவரும் செவிலியைக் கண்டு தேற்றித் திரும்புமாறு வேண்டுவர்; இவ்வாறு கண்டோர் உரை அமையும் (986). தலைவன் கூற்றுகளை மேலும் விரிவாகச் சொல்கிறார் (987). உள்பொருள் நிகழ்ச்சி; அந் நிகழ்ச்சி உறுப்பினர்; உறுப்பினர் உரைக்கும் உரை - இவற்றை இவ்வகத்திணையியலில் மட்டுமன்றிப் பின்னே வரும் களவியல், கற்பியல் ஆகியவற்றிலும் விரிவாகக் கூறுகிறார். இவை நாடகக் காட்சிகள் போன்றவை அல்லவா! நாடகம் என்பது நாட்டில் நிகழாததா? நிகழாத ஒன்று அல்லது இட்டுக் கட்டிய ஒன்று ஏற்றுக் கொள்ளவும் படாது; பயன் படவும் படாது. ஓரிடத்து ஒருகாலத்து ஒருசிலரிடத்து நிகழப் பெறுவனவே ஏற்ற புனைவுவகையால் நாடகமாகவும் காப்பியமாகவும் அமை கின்றனவாம். எங்கும் என்றும் எவரிடத்தும் காணலாகாப் பொருள் பற்றிப் பேசின், இல்பொருளாக ஏற்பாரின்றி ஒழியும். தொல்காப்பியர்க்கு முற்பட விளங்கிய இலக்கிய இலக்கண நூல் வழக்குகளும், அவர் கண்ட உலகியல் வழக்குகளும், ஒருங்கே தொகுக்கப் பட்டுத் தொகையாக்கியதே அவர் வழங்கிய வாழ்வியல் இலக்கணமாகும். சான்றுகள் உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது. “மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்தஎன், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே” (ஐங். 371) “மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம்” என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது இல்லையா? தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி, “இவளே நின்னலது இலளே; யாயும் குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே; மாமலை நாட மறவா தீமே!” என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை! “இதுநும் ஊரே; யாவரும் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே” கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது! “இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக” என்னும் இவ்வுரை தாய்மையுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ! உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டுகின்றதே: “எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து” (கிளவித்தெளிவு) தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம். அகவலும் வெண்பாவும் கட்டளைக் கலியும் பாவினமும் இக் கூற்றுவகையை விளக்குவனவாகப் பிற்காலத்தில் விளங்கினும், தொல் காப்பியர் நாளில் கலிப்பாவும் பரிபாவும் பெருவரவாகக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் வடித்தெடுத்த பாகாக, “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்” என நூற்பா கிளர்ந்ததாம் (999). நினைத்தல் பிரிவு, பிரிவு வகைக் கூற்று என்பவற்றை உரைத்த ஆசிரியர் அது தொடர்பான வேறு சில குறிப்புகளையும் வழங்குகிறார். நினைத்தலும் செய்தலொடு ஒக்கும் என்பது ஓர் உயர்ந்த உளவியல் ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளங்கும் வகையால், “நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்” என்று கூறி, “நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே” என்கிறார். “பிரிவுக்காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள், தலைவன் தலைவியால் நினைத்தற்கு உரியவையும் ஆகும்” என்பதுடன், “நிகழ்ந்த அது நெஞ்சில் நிலைபெற்றிருத்தலும் அப் பிரிவாகிய பாலைத் திணையே ஆகும்” என்பதும் இவற்றின் பொருள். இவ்வகத்திணையில் இணைக்கத் தக்கவை எவையும் இல்லையோ எனின், மரபு நிலை நீங்கா மாட்சியொடு இணைக்கும் பொருளை இணைத்தலும் ஏற்கக் கூடியதே என்கிறார் (991). உள்ளுறை சிந்திக்க வைக்கும் செய்தி எதுவோ அது செயலூக்கியாகத் திகழுதல் உறுதி. அதனால், அகத்திணை உரையாடல்களில் ஓர் அரிய உத்தியை வகுத்து, நூன் மரபாகப் போற்றினர். அஃது உள்ளுறை உவமை என்பது. இயல்பாக வழங்கும் உவமையொடு, இவ்வுள்ளுறை உவமையும் வரச் செய்யுள் இயற்றல் சிறக்கும் அகப்பொருளுக்கு என்று கூறும் அவர், அதன் இலக்கணத்தை, “உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிகென உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை” என்கிறார் (994). “அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப் போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே” என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து ‘காலம் நீட்டாது உடனே மணந்து கொள்’ என்று ஏவுதலாகும். இதனை, “முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப” என்கிறாள் (நற். 15). உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர். கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் ‘தெய்வம்’ என்னும் கருப்பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார். புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்டமுடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம். எழுதிணை ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார். மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப ‘மக்கள்’ எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை. இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம். கைக்கிளை “காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்பது முன்னதன் இலக்கணம் (996). “பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப் பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது” என்பது இதன்பொருள். இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளிகளிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்ட லால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர். பெருந்திணை இனிப் பெருந்திணை என்பதை எண்ணுவோம். ஆசிரியர் பெருந்திணையை, “ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” என்கிறார். மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம். இத் திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப. மாணிக்கனார், “ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக” என்பது இவண் கொள்ளத் தக்கது. “களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமையின் (ஏறியமடல் திறம்) ஐந்திணைப் படாது பெருந்திணைப்பட்டது” என்றும், “இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று” என்றும், “கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக் கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண்விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று” என்றும், “களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல்” எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257). அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். “முற்படக் கிளந்த எழுதிணை” (947) என்றவர், அவ்வெழுதிணைகளுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார். நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய ‘பொருளிய’லையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும். களவு ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து ‘கள்ளாமை’ (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர், “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்பார். “உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு” மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்து வார் உரையாசிரியர் பரிமேலழகர். அத்தகைய பழிக் களவல்லாமல் ‘உயிர் தளிர்க்கச் செய்யும்’ உள்ளங் கவர் களவு ஈதாகும். ஆதலால், வாழ்வியல் நெறிவகுத்த சான்றோர், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவர்ந்து ஒன்றுபடும் இயற்கை இயைபை, இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, ஒன்றிய பாலது ஆணை, காமக் கூட்டம், ஊழால் கூடும் கூட்டம் என்றெல்லாம் பெயரீடு செய்து பாராட்டினர். அன்றியும் களவு பிறர் அறியாவகையில் நிகழும் நிகழ்வு ஆதலால் ‘மறை’ எனவும், ‘மறைநெறி’ எனவும், ‘மறையோர் ஆறு’ எனவும் குறியீடு செய்து நம் முந்தையர் வழங்கினர். இக் களவின் முதல் நிலையாம் காட்சியை, “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே” என்கிறார் தொல்காப்பியர் (1039). “உலகியலில் ஒருவரோடு ஒருவரை இணைக்கின்ற சூழல் என ஒன்று உண்டு. அன்றி அவரை அவ்வாறு இணையச் செய்யாத சூழல் என்பதொன்றும் உண்டு. இவ் விரண்டனுள் இணையச் செய்யும் உயர்ந்த சூழல் வலிமையால், ஒத்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காணுதற்கு வாய்க்கும். அக் காட்சியால் ஏற்படும் உள்ளப் பதிவே, ‘பால்’ ஒன்றுதலாகிச் சிறக்கும். ஒத்த என்னும் நிலையில், சற்றே மிக்கோன் கிழவன் எனினும் நீக்குதற் குரியது இல்லை; ஏற்கத் தக்கதேயாம்” என்கிறார் (1039). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதன் ஒப்பு எவை எனின், “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்னும் பத்துவகை ஒப்புமாம் (1219). இவ் வொப்புகளின் அருமை போற்றின் இல்லற வாழ்வு இனிதின் அமையும். உள்ளப் பொருத்தம் இருவருக்கும் உண்டா என்பதை முதற்கண் காண வேண்டியிருக்க, இறுதிவரைகூடக் காண்பதும் கேட்பதும் இல்லை! ஆனால், பெயர் என்றும் நாள் கோள் என்றும் பார்க்க வேண்டாதன பொருத்தமெனப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் அறியாமல் தாமே மணந்து கொள்ளலும், வேற்றிடம் சென்று விடலும், தம்மைத் தாமே முடித்துக் கொள்ளலும் பெருக்கமாகி வருதல் கண்கூடு. மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர். போராடிப் பெற முடியாராய் அவர் ‘முடிந்த பின்னர்’ இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா? தொல்காப்பியர் கூறிய பத்துப் பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப்பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்டாக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம். களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர், “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” என்கிறார் (1038) இதற்கு, “உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தவர்) மணத்தினை ஒப்பதாம்” எனல் பொருளாம். களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம். தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் கூறுவாரை, உவமை காட்டுதல் ஏற்புடையதன்றாம். “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்” என்னும் தம் உவமை இலக்கணத்திற்கு மாறாம். மேலும் கண்டறியா ஒன்றைக் காட்டுதற்குக் கண்டறிந்த ஒன்றை ஒப்புக் காட்டுதலை யன்றிக் கண்டறிந்த ஒன்றை விளக்கக் காணா ஒன்றைக் காட்டுதல், “ஆகாயப் பூ நாறிற்று என்புழிச் சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்னும் உரைக்கே அது எடுத்துக்காட்டாகிவிடும். அயல்நெறி ஒன்றனை விளக்குவார், தமிழ் நெறியுள் இன்னது போல்வது என்பதே நூன்முறையாம். இந்நூற்பாவின் நான்காம் அடியாகிய, “மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்னும் ஓரடியை விலக்கிக் காணின், எப்பொருள் குறைதலும் இன்றிக் கண்ணேர் சான்றும் வாய்த்துச் சிறத்தல் கண் கூடு. ஆதலால், இவ் வோரடி உரைகண்டார் காலத்திற்கு முற்படவே மூலத்தின் இடையே சேர்க்கப்பட்ட பொருந்தாச் சேர்ப்பு என்பது புலப்படும். இப்படிச் சேர்ப்பு உண்டோ எனின், இடைச் சேர்ப்பு, இடமாற்றம், நூற்பாச் செறிப்பு, நூற்பா விடுப்பு என்பனவும் தொல்காப்பியத்துள் உளவாதல் ஆய்வார் இயல்பாகக் காணக் கூடியவையாம். ‘வைசியன்’ என்னும் ஒரு சொல் பழந்தமிழ் நூல்கள் எவற்றிலும் இடம் பெறாதது. பின்னூலார் தாமும் அயற் சொல்லென வெளிப்பட அறிந்தது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமை (1578) மேற்போக்காக நோக்குவார்க்கும் சேர்மானத்தைக் காட்டிவிடத் தவறாது. இவ்வாறாயின் இவ்வடி நீக்கிய நூற்பாவின் பொருள் என்ன? பொருந்தும் வகை என்ன? என்பவை தெளிவு பெறல் வேண்டும். “காமக் கூட்டம் என்பது, பாடுதுறைவல்லாரும் யாழ்த்திற வோருமாகிய பாணர்தம் இணைப்பை ஒப்பது. அது பிரிவு என்பது அறியா வாழ்வினது என்பதாம். பாணர் கூட்டம் என்றும் பிரிவறியாப் பெருமையது என்பது, பாணன் பாடினி அவர்தம் சுற்றம் என்பவை மண் குடிசையில் இருப்பினும் காடுகரைகளில் திரியினும் மன்னர் மாளிகைக்குச் செல்லினும் ஒன்றாகவே இருந்ததைச் சங்கச் சான்றோர் பாடல்கள் தவறாமல் சொல்கின்றன. எந்தப் புலவரும் அப்படித் துணையொடும் சுற்றத்தொடும் சென்றமை அறியுமாறு இல்லை. தள்ளமுடியாச் சான்றைத் தள்ளி, இல்லாத அயற்சான்றைத் தேடி அலைதல் தேவை அற்றதாம். தலைவன் தலைவியை ‘யாழ’ என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது. இனி இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற்பாக்களுக்குப் பொருந்தவுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்டாகின்றதாம். அதனை மேலே காணலாம். இனி இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் “அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க. மேலும், “வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து அடுவது போலும் துயர்” என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது “மும்முதல்” என்ற குறியீட்டால் விளங்கும். சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால் தான் ‘மும் முதல்’ என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம். காட்சி தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். ‘தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது’ ஆகலின், ‘இவர் தக்காரே’ என இருவரும் எண்ணுதல் ஐயம் ஆகும்; தெளிவும் ஆகும் (1040). இருவர் கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டமையால், அது நெஞ்சக் கலப்பாகிச் சிறக்கும் (1042). இவை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் ‘இயற்கைப் புணர்ச்சி’ எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை. இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்க லாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில் ஒரு சூழலில் ஒருவரும் எண்ணாமல் நிகழ்வதே இஃதெனத் தெளிய லாம். பிரிவு நெஞ்சங்கலந்த அவர்கள் பிரிந்த பின் ஏற்படும் உளப்பாடுகளை ஒன்பதாக எண்ணுகிறார் தொல்காப்பியர்: இடையீடு படாது விரும்புதல், அவ்வாறே இடையீடு இல்லாமல் எண்ணுதல், இவற்றால் உடல் மெலிவடைதல், எண்ணம் நிறைவேறுதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுதல், அடங்கிக்கிடந்த நாணம் எல்லை கடத்தல், நினைப்பவை - காண்பவை - எல்லாமும் தம் எண்ண வெளிப்பாடாகவே தோன்றல், தம்மை மறத்தல், மயக்கம் கொள்ளல், வாழ்வை வெறுத்துக் கூறல் என்பவை தலைவன் தலைவியர் இருவர் பாலும் நிகழ்வன (1046). இடம் தலைப்படல் அழைத்துப் பேசாதவற்றை அழைத்துப் பேசுதல், பேசாதன பேசுவனவாகக் கொள்ளுதல், அவற்றின் நலம் உரைத்துப் பாராட்டல், தலைவன் தான் மகிழ்வுறாமை காட்டித் தலைவி இருக்கும் நிலை அறிதல், தலைவன் தனக்குப் பிரிவால் உண்டாகும் மெலிவினை விளக்குதல், தம் இருவர்க்கும் உண்டாகிய தொடர்புநிலை உரைத்தல், தன்னைப் பற்றிய தெளிவு தலைவிக்கு உண்டாகுமாறு தலைவன் கூறுதல் என்பவை இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தோன்றுவன (1047). தலைவன், தன் குடிவரவால் அமைந்த பெருமையும் தன் அறிவாற்ற லும் பெருகி நிற்றலாலும், தலைவி, தன் குடிவரவாய பெருமையுடன் இயல்பான அச்சம் நாணம் உறுதிப்பாடு ஆயவை கொண்டு இருத்தலாலும் இருவர் தகுதியும் பேணிக் காக்கும் வகையில் உள்ளுறுதி காத்து நிற்பார் (1044, 1045). தாம் முந்துறக் கண்ட இடத்துக் காணற்கும் முந்துவர். கண்ட அவ் விடத்தில் மீளக் காணுதல் ‘இடந்தலைப்பாடு’ எனப்படும். தலைப்பாடாவது கூடுதல். ஏதாவது ஒன்றை முன்னிட்டுத் தலைவியின் உடலைத் தொடுதல், புனைந்துரை வகையால் பாராட்டுதல், தக்க இடம் பார்த்து நெருங்குதல், தலைவி நழுவிச் செல்லுதல் கண்டு வருந்துதல், அதுபற்றி நெடிது நினைத்து நைதல், நெருங்குதல், தொடுதலுறப் பெறுதல், பெற்றபின் ‘உன்னை எவ் வகையாலும் மறவேன்’ என உறுதி கூறுதல் என்பவை இடந்தலைப் பாட்டில் நிகழ்வன. “மெய்தொட்டுப் பயிறல்; பொய்பா ராட்டல்; இடம் பெற்றுத் தழாஅல்; இடையூறு கிளத்தல்; நீடு நினைந் திரங்கல்; கூடுதல் உறுதல்; சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்; உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்” என்பது இதன் தொல்காப்பிய நடை (1048). மெய் தொடல் இதில், மெய் தொட்டுப் பயிறல் முதலியவை வறிதே கூறுவனவா? வாழ்வில் நடைபெறுவனவா? காதல் உரிமையர் சந்திக்கும் படம் - கதை - காட்சி இன்னவற்றை மின்வெட்டென நொடிப் பொழுது இதுகால் நாம் பார்ப்பினும், இவற்றுள் ஒன்று புலப்படுதல் தவறாதே! மெய் தொட்டுப் பயிறல், கூடுதல், நுகர்ச்சி, புணர்ச்சி என்பன வெல்லாம், பழிப்புக்குரியவையாகவோ உடல் கலக்கும் கூட்டமாகவோ கொள்ளக் கூடியவை அல்ல. தலைவி கூந்தலில் பூ இருக்க, அப்பூவை அடுத்துவரும் வண்டை ஓட்டுதல் வழியாகத் தொடுதல் ‘வண்டோச்சி மருங்கணைதல்’ என்னும் மெய்தொட்டுப் பயிறல். இந் நாளில் இக் காட்சி அருமை அல்லது புனைவு எனத் தோன்றின், ஆலையில் வேலை பார்த்துவரும் ஒருத்தி தலையில், பஞ்சுத் துகளோ நூலோ இருப்பதாக மெய் தொட்டுப் பயிறல் கண்கூடு. புணர்ச்சி ஈராறுகள் கூடுதல் கூடுதுறை; கடலொடு ஆறு கூடுதல் கொண்டு புணரி; இரண்டு சொற்கள் கூடல் புணர்ச்சி; பூவை மணத்தல் என்பது முகர்தல்; நுகர்தல். இன்னவகையில், மெய்தொட்டுப் பயிறல் முதலிய வற்றைக் கொள்ளவே பண்டை அகப்பொருள் புலனெறி வழக்காகும். காதலித்தான் ஒருவன் ஊரறிய மனங்கொண்டு வாழாக்கால் சென்ற ஊரே முன்னின்று அறங்காட்டிய நெறி, அந்நெறி. பெற்றோரால் கரணம் முடித்தோ கரணம் பிறரால் முடிக்கப்பட்டோ ஓரிற்படுத்தல் என்னும் நிகழ்வு நேரிட்ட பின்னன்றிக் கூடுதலை ஒப்பாதது புலனெறி வழக்கம். அத்தகு மெய்யுறு கூட்டம் முன்னுற நிகழ்தலும் மகப்பேறு பெறுதலும் என்பவை, சங்கப் பாடல்களில் சான்றுக்கும் இல்லாதவை. அகப் பொரு ளும் சரி, புறப் பொருளும் சரி கறையிலாத் தூயதாகக் கொள்ளப்பட்ட தன் விளக்கமே பொருளதிகாரச் சுருக்கச் செய்தியாம். உதவலும் தடையும் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன், பிரிந்த போது கவலைப்படுத லுடன் அமையான். தலைவியை மீளவும் கண்டு அவளைத் துணையாகக் கொண்டு மனையறம் நடத்தும் வேட்கையனாக இருப்பான். தலைவியைக் காணற்கு வாயிலாக, அவள் உயிர்த் தோழியின் உதவியைப் பலவகையாலும் நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும். தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன். பாங்கன் நிமித்தம் தோழனால் உண்டாகும் கூட்டத்தைப், “பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” என்பார் தொல்காப்பியர் (1050). அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன. இவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் பெருந்திணை. இவற்றை, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” (1051) என்றும், “முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே” (1052) என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார். “மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமையால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே’ என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). “பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051-2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038). மறையோர் மணவகை இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது. பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல். ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணிகலம் பூட்டி ‘இவற்றைப் போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க’ என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது. கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது. அசுரம்: ‘கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற் குரியன்;’ ‘வில்லேற்றினான் இவளை மணத்தற்குரியன்’ எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது. இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது. பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடையாள் ஆயோரைக் கூடுதல். - இவை தமிழர் மணமல்ல என்பது, ‘மறையோர் தேஎத்து மன்றல்’ என்பதால் புலப்படும். மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் - பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப் பட்டியலாக அமைகின்றதாம். ‘பெண்ணடிமை’ என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்! ‘காதல்’ அறம்! என்னும் ஔவையுரைக்கு இவ்வெண்வகை மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ? கந்தருவம் இடம் பெறாதோ எனின், ‘கண்டதும் கூடுதல்’ என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம். தலைவன் கூற்று பகலில் சந்திக்கும் இடம் இரவில் சந்திக்கும் இடம் என்னும் ஈரிடங்களிலும் சந்திக்கத் தவறிவிட்ட போதும், பார்க்க முடியாத வகையில் நெடும் பொழுது கடந்த போதும், காணவேண்டி நின்று காணா நிலையில் வேட்கை மிகுந்து மயங்கிய போதும், தான் புகுதற்குக் கூடாத காலத்துப் புகுதலால் விருந்தினனாகிய போதும், தலைவியே விரும்பி ஏற்கும் விருந்தின் போதும், முயற்சியை முன்னிட்டுப் பிரிய நேரும் போதும், நாணத்தால் தலைவி விலக்கி நிற்கும் போதும், வரைந்து (மணந்து) கொள்ளுமாறு தோழி சொல்லும் உயர்ந்த சொல்லைக் கேட்கும் போதும், வரைதலை உடம்பட்டு ஏற்கும் போதும், வரைதலை அவர்கள் மறுக்கும் போதும், தலைவன் கூற்று உண்டாகும். இந்நூற்பாவைத் தலைவி கூற்று வகையாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், தலைவன் கூற்று வகையாகக், கொண்டார். தலைவியைப் பற்றிய சில குறிப்புகளை அடுத்துக் கூறி, அவள் கூற்றுகள் எவை என அடைவு மேலே செய்தலால், இது தலைவன் கூற்றெனலே தகுதியாம் (1055). தலைவி இயல்பு இன்ப ஒழுக்கில் நிலை பெற்றுவரும் நாணம் மடம் என்னும் உயரிய பண்புகள் தலைவிக்கு உரியவை; ஆதலால், குறிப்பினால் கருத்தை வெளிப் படுத்துவாள்; தக்க இடத்தில் மட்டுமே சொல்லால் வெளிப்படுத்துவாள்; அல்லாமல் அவள் விருப்பை வெளிப்பட உணர்த்தமாட்டாள் (1054). விருப்பத்தை வெளியிடாத கண் இல்லாமையால், அதுவே கருத்தை வெளிப்படுத்திவிடும் (1055). தலைவன் விருப்பினை ஏற்றுக் கொள்ளும் தலைவியே எனினும், (உடம்பாட்டினள் எனினும்) உடம்பாடில்லாள் போலக் கூறுதலும் உண்டு (1056). - என்பவை, ஆசிரியர் தலைவியின் நாணம் மடம் குறித்த இயற்கைச் செய்தி அறிந்து கூறும் தெளிவினவையாம். இந்நாளிலும், அன்பின் ஐந்திணைப் படும் வாழ்வினர் இத்தகையராகவே இருத்தல் வெளிப்படை. நாணம் மகளிர் நாணுதல் நயம் ‘திருநுதல் நாணு’ என்னும் இயற்கையான நாணமாகும். கற்பித்துவருவது அன்று; ‘நாணுதல் ஆகாது’ எனத் தம் முனைப்புக் கொண்டாரும், நாணாமல் இருக்க முடியாத இயற்கை நாணுதல் அஃதாதலின், “கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற” என்பது வள்ளுவம். மடம் மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப்பிடியாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் ‘மடம்’ எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், ‘சமையல் கூடம் - சாப்பாடு’ என்பவை தழுவிய ‘மடைப்பள்ளி’ நிலை யத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கியதாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி காவடி. “காவினேம் கலமே” புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல். கூற்று தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங்களையும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057, 1060, 1061). இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். தலைவி கூற்று தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறு கின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங்களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார். திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யாமல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058). “உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தினும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது”; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப்படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059). குறிப்புகள் சில அகவாழ்வியல் அறியார் போலத் தான் கொண்ட வேட்கையைத் தலைவன் முன் கூறுதல் பெரிதும் தலைவிக்கு உண்டாதல் இல்லை; புதிய மண்கலத்தில் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிவது போல அவள் மெய்ப்பாட்டால் புலப்பட்டுவிடும் (1064). இயற்கைப் புணர்ச்சி, தாமே கொண்டது ஆதலால் தோழன், தோழி என்பார் தூதர்களாக இருத்தல் அன்றித், தமக்குத் தாமே தூதாதலும் தலைவன் தலைவியர்க்கு உண்டு (1065). தலைவி தலைவனைச் சந்திக்கக் கூடும் இடத்தை அவளே கூறுவாள். அவள் வருதற்குத் தக்க இடமாக அமைய வேண்டும் ஆதலால் (1066). தலைவியை அன்றித் தான் வேறாக இல்லாத தோழி குறிக்கும் இடமும் உண்டு (1067). தலைவியைக் காணவரும் தலைவனுக்குத் தோழன் மூன்றுநாள் அளவே உடனாவன் (1068). தலைவனைப் பற்றித் தெளிந்த கருத்து வேண்டுதலால் அவன் தோழனைச் சுட்டிக் கேட்கும் முறையைத் தலைவி கொள்வாள். அவள் கேட்டல் ‘துணைச் சுட்டுக் கிளவி’ எனப்படும் (1069). தலைவி அறிந்துகொள்ள வேண்டிய நற்பொருள் பலவற்றையும் அறியச் செய்பவள் தாய் ஆவாள். தாய் எனப்படுவாள் செவிலி ஆவள் (1070). தலைவிக்குத் தோழியாக இருப்பவள் அச் செவிலியின் மகளே ஆவள். அத் தலைவியின் தாய்க்குத் தோழியாயவள், தோழியின் தாயாகிய தன் செவிலித்தாயே என்பதால் அவள் வழிவழி உரிமை புலப்படும் (1071). தலைவிக்கு வழிகாட்டும் அறிவுத் துணையாகத் தோழி இருத்தலால், அவள் தலைவியை நன்கு ஆராய்தலும் சிறப்பேயாம் (1072). தலைவியை அடைவதற்குத் தலைவன் தன்னிடம் வேண்டி நிற்றலாலும், தலைவியின் குறிப்புணர்ந்து கொள்ளலாலும், இருவரும் ஓரிடத்து இருத்தலை அறிதலாலும் அவர்கள் இருவருக்கும் உள்ள அன்புணர்வைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதற்கு, ‘மதியுடம் படுதல்’ என்பது பெயர் (1073). தோழி மதியுடம் பட்டு உணர்ந்தால் அல்லாமல், அதன்பின் நிகழ்தற்குரிய கடமைகள் நடைபெற மாட்டா என்பர் (1074). தலைவன் தலைவியர் கூடுதல் முயற்சிக்கும் வரைதல் நிகழ்வுக்கும் அவளே பொறுப்பாளியாக இருத்தலால், அவர்களைப் பற்றி அறிந்திருத்தல் கட்டாயமாம் (1075). தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் ‘குறி’ எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076). ‘இரவுக் குறி’ மனைக்கண் உள்ளார் ‘பேசும் ஒலி கேட்கும்’ அளவுள்ள மலை சார்ந்த இடமாகும். ஆனால், அது மனைக்குள்ளிடம் ஆகாது (1077). மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இடமாகவும் இருப்பதே ‘பகற்குறி’ இடமாகும் (1078). தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079). மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080). களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081). வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்ப வற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082). தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலியோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083). தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084). களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085). களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்டாகும் (1086). வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய ‘ஓதல் தூது பகை’ வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள். சிறு விளக்கம் ‘கண்டதும் காதல்’ என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது, எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். “கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல்” என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம். தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர். தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு - தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது. தோழியின் ஆய்வு - மறைப்பு - மறுப்பு - புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது. தலைவற்குத் தோழன் ‘இடிக்கும் கேளி’ராகவே இருந்தான். தலைவிக்குத் தோழி இணையில்லா ‘அறிவுத் துணை’யாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன் போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள். இத் தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித்திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பாவார் எவர்? நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது. தோழி தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம் உணர்த்துவதேயாம். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். “ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்வதாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர். கற்பினில் வரும் மழலைமகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது” என்கிறது தமிழ்க் காதல். மேலும் சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள், இன்றியமையாதவள் என்பதும் தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம்” என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப்பகுதியில் நாற்பத்து ஏழு; கற்புப்பகுதியில் இருபத்தொன்று; ஆக அறுபத்தெட்டு எனக் குறிப்பிடு கிறார் ஆசிரியர் தொல்காப்பியர். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கும் போது, பெண்ணியல்பு என்று சொல்லப்படும் பெருமைக் குணங்கள் எல்லாமும் ஓருருக் கொண்டு விளங்கும் உயரிய படைப்பே அவள் என்பது விளக்கமாகும். தலைவிக்கும் தோழிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை. அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள், இவளைத் தோழி என்கிறாள். இவள், அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக் களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை. தோழி தலைவியை ‘அன்னை’ என்பாள். தலைவி தோழியை ‘அன்னை’ என்று உரிமையாய் அழைப்பாள். நம் தாய், நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை, ஒரு தோழி சொல்கிறாள்: “தாயோ, தன் கண்ணைவிட மேலாக இவளை விரும்புகிறாள். தந்தையோ, இவள் கால் நிலத்தில் படுவதையும் பொறுக்காதவனாய் ‘உன் சிற்றடி சிவக்க எங்கே செல்கிறாய்’ என்று தடுப்பான். நானும் இவளுமோ, பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால் இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்!” என்கிறாள். எத்தகைய அரிய உவமை! தலைவன் தன் தலைவிக்கு வாய்த்த தோழியைப் பற்றிச் சொல்கிறான்: “தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி. மிதப்பின் தலைப்பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத் தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பின் அடிப்பக்கத்தைத் தோழி பிடித்தால், அவ் வடிப்பக்கத்தையே தலைவியும் பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும்” என்பது அவன் நெஞ்சார்ந்த உரை. இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், “தாங்கரும் சிறப்பின் தோழி” என்றார் போலும் (1060) ! கற்புமணம் கற்பு மணம் என்பது என்ன? எனின், “கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” என்பது (1088). கரணமாவது சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற்குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற் றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் ‘தாதா’ எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. ‘தாத்தா’ என்பது அது. முழுத்தம் திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமை யால் அதனை ‘முழுத்தம்’ என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா நடத்திவருவதுமாம். திருமணக்கரணம் மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்களைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, “கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு” என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே ‘முகூர்த்தம்’ எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதாயிற்று. திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். ‘ஓமத்தீ’ வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை. மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானால் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் ‘அரை கல்’லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா? மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், ‘மணமகளை மணக்க மாட்டேன்’ எனக் காசிச் செலவு மேற்கொள்ள லும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மணமேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்த லும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், ‘மூக்கறுத்துப் புள்ளி குத்துவது’ அல்லவா! ‘உலகம் தட்டை என்பதே இறைமொழி’ என்ற உறுதிப் போக்கின ரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித்தனத்தில் உருண்டு புரளல்தான் ‘கனமதிப்பு’ என எண்ணுவாரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ? தமிழன் தன்மானங் கெட்டுப் போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளையும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம். ‘உடன்போக்கு’ என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” என்றார் தொல்காப்பியர் (1089). “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர் மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். ‘போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர்’ என ஆசிரியரால் கூறப் பட்டவர். ‘முத்தமிழ்’, ‘முப்பால்’ என்பவை போல, ‘மூவர்’ என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம் முதற்கண் நிகழ்ந்தது. அக் கரணம் பின்னர் அவர்க்கு உட்பட்ட நானிலத் தலைவர், அரசியல் அலுவலர், ஊர்த் தலைமையர், ஊரவர் என்பார்க்கும் படிப்படியே நிகழலாயிற்று. மன்னர் குடியில் உண்டாகிய மரபுகளே பிறந்தநாள் விழா, சிறந்த நாள் விழா, பள்ளி எழுச்சி, திருவுலா, திருநீராட்டு, திருவூசல் முதலியன வாகக் கோயில் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் வழங்கின என்பதை அறியின், அடிப்படை விளங்கும். “மன்னன் எப்படி மக்கள் அப்படி” என்பது இதன் சுருக்கக் குறிப்பு. இம் மூவரை வருணப் பிரிவிற்குத் தொடர்புபடுத்திக் கீழோர் என்பதற்கு ‘வேளாண்’குடியினர் எனப் பொருள் காணற்கு இடமில்லை! பொருள், பதவி, தலைமை எனச் சிக்கல் ஏற்படும் இடங்களிலேதான், சிக்கல் தீர்வுக்கு வழியும் காணப்படும் என்பது எண்ணத்தக்கது. பல மனைவியருள் முதன் மனைவியே ஆளுரிமை வாய்ந்தவள் ‘கோப்பெருந் தேவி’ எனப்படுவதும், அவள் மக்களே ஆளுரிமையர் என்பதும் எண்ணின் இது தெளிவாம். ஐயர் இனி, “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது அடுத்த நூற்பா (1091). ஐயர் யாத்தனர் என்னும் சொல் வந்ததும் இந் நாள் ‘ஐயர்’ அந் நாளே யாம் தாம் அறநெறி அமைத்துத் தந்த மூலவர் என்று மேடையில் மட்டுமல்லாமல் நூலிலும் முழக்கமிடுகின்றனர். சாதிமைக் கொடி பிடித்தலை, மேற்கொண்டவர்கள் ‘வெறி’யை அன்றி, இந் நூற்பாவில் எள்ளளவும் அப் பொருளுக்கு இடமில்லை. சங்கப் புலவர்கள் பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பு உண்டு. அப் பெயர்களில் ஒன்றில் தானும் ‘இன்ன ஐயர்’ என ஒரு பெயரைக் காட்ட முடியுமா? ஐயர் என்பது சாதிப் பெயராயின், வேடர் கண்ணப்பரும், பாணர் திருநீலகண்டரும் உழவர் நந்தனாரும் சேக்கிழாரால் ‘ஐயர்’ எனப்பட்டிருப்பரா? போப்பையர், கால்டுவெல் ஐயர் ஐயர்சாதியினரா? இக் குடி எனப்பார்த்தலில்லா வீரசைவர் ‘ஐயர்’ என்பது சாதியா? ஐயன் - ஐயர் - ஐயா - ஐயை - ஐயாம்மா - ஐயாப்பா என்னும் முறைப் பெயர்கள் எக் குடியினர்க்காவது தனியுரிமைப் பட்டயம் கொண்டதா? தம் ஐயன் என்பதுதானே ‘தமையன்’. தமையன் என்பாரெல்லாம் ‘ஐயன்’ சாதிதானா? ‘இளமாஎயிற்றி இவைகாண் நின்ஐயர்’ என எயிற்றிக்குச் சுட்டுதல் ‘அப்பா’வா, சாதிப் பெயரா? ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘ஆசறு காட்சி ஐயர்’ சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு, “அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்” என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? ‘இவர் அவர்’ எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க. களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய்வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே ‘கரணம்’ ஆகும். “பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று” என்பது இளம்பூரணர் உரை. நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கினார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் பாடலையே எடுத்துக் காட்டினார் (136). எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக்காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் ‘சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே’ எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்! “கரணம் என்ப”, என்னும் தொடர்க்கு, “ஈண்டு ‘என்ப’ என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது” என, ‘ஆடுகளம் அமைத்துக் கொண்டு’ ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சி னார்க்கினியர். “ஒருவர் சுட்டாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம்” என்று மேற்குறிப்பும் காட்டுகிறார். நெஞ்சுதளை “கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்” என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092). “கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்!” என்பது இதற்கு வெளிப் படையான பொருள். திருமணம் முடிந்து விட்டமையால் மனம் திறந்த மகிழ்வுடையன் ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு. “இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல்” என உரை கூறுகிறார் இளம்பூரணர். “ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து, ஆன்றோராவார், மதியும் கந்தருவரும் அங்கியும். களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம்” என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, ‘இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி’ என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ளவேண்டும்! “ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன்” என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! ‘அவர் அறியாத் தமிழ்நூற் கடற்பரப்பு ஏதேனும் இருந்திருக்க முடியுமா?’ என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! ‘இவரைப் போல உரை காணற் கெனவே பிறந்தார் எவரே?’ என ஏங்க வைக்கும் அவர் ஏன், இப்படி எழுதுகிறார். இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது ‘இன்னான் எனப்படும் சொல்’ என்பது போலும்! கற்பில் கூற்றுவகை கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன்றனைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளை யும் கூறுகிறார் (1092 - 1101). “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென”த் தலைவன் தலைவியைப் பாராட்டலும், “அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும்” எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமையாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092). “உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும்” என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093). “பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்” என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096). காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்ததால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர் தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயிலோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் “அகம்புகல் மரபின் வாயில்” எனப்படுவர் (1098). இனிய ஓரியல் இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால், “காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணும் காலை கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான” என்றும் (1100) “அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே” என்றும் (1101) கூறினார். அலர் முதலியன களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் ‘அலர்’ உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109). தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110). தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவது போல வாயில்கள் கூறல் உண்டு. அது ‘முன்னிலைப் புறமொழி’ எனப்படும் (1113). வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவனுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115) தாய் போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119). பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121). புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122). தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன் முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987). தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127). ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129). பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130). பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத்தடுத்தல் இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131). தலைவன் மேற் கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்த போது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132). பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின் (1133). ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134). காவல் பிரிவு, தூதுப் பிரிவு பொருள் தேடும் பிரிவு என்பவை எல்லாம் ஓராண்டிற்கு மேல் ஆகாது (1135, 1136) தலைவன் தலைவியுடன் ஊரைக் கடந்து ஆறு குளம் கா என்பவற்றுக்குச் சென்று மகிழ்தலும் உரியவை என்பர் (1137). வினை கருதிப் பிரிந்த தலைவன், அவ்வினை முடித்ததும் இடை வழியில் தங்குதல் இல்லை; மனம் போல உரிய இடத்து உதவும் குதிரையாகிய பறக்கும் விலங்கைக் கொண்டிருத்தலால் (1140). இன்ன செய்திகளை அடைவு செய்து கற்பியலை முடிக்கும் ஆசிரியர் தமிழர் அறநெறியை அருமைப்பட மொழிகிறார். அது, “காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்பது (1138). சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் = முதுமையடைந்ததன் பயன். இறத்தல் = கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவற்றில் வரும் இறந்த என்பதைக் கருதுக. குடிநலம் சிறக்க வாழ்ந்த முதுமையின் பயன் யாதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவிப்பது இந் நூற்பா. அப்பயன் ‘சிறந்தது பயிற்றல்’ என்பதாம். ‘கமம் நிறைந்து இயலும்’ என்பது, ‘கமம்’ என்னும் சொல்லின் பொருள். பிறைமதி எனத் திகழ்வது கமம். பிறைமதி - வளர் மதியாய் - நிறைமதியாய் விளங்குவது போலக் கமம் என்னும் ‘காமம்’ விளக்கமுறும். இன்பம் என்பது, எல்லா உயிர்க்கும் பொதுமையது என்பது ஆசிரியன் உரை (1169). ஆனால், காமம் மாந்தர்க்கே சிறப்பின் அமைந்த உணர்வு - அதனாலேயே வள்ளுவ மூன்றாம் பால், இன்பத்துப் பால் எனக் குறியீடு பெறாமல் ‘காமத்துப்பால்’ எனக்குறியீடு பெற்றதும் அச் சொல்லையே 39 இடங்களில் பயன்படுத்தியதுமாம். காமம் வரும் ஈரிடங்களில் மட்டுமே இன்பமும் வந்து, அமைவுற்றமையும் அறிக. இக் காமம் நிறைவுற்ற முதுமைக் காலம், ‘காமம் சான்ற கடைக் கோட்காலை’ ஆகும். அக் காலத்தில் அவர்களுக்கும் குடிவழிக்கும் பாதுகாப்பான நன்மக்கள் தோன்றிச் சிறந்து விளங்குவர்; அவர்களை அன்றி இல்லறச் சுற்றமாகவும் உரிமை உறவுச் சுற்றமாகவும் பலர் இருப்பர்; குடும்பத் தலைவர்களால் அறவாழ்வின் அருமை அவர்கள் அறிந்து திகழ்வர்; மக்கள், சுற்றம் ஆகிய இவர்களுக்குத் தம் பிறவிப்பயனாகச் சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138). சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு - ‘செம்பொருள்’ என்பதாம். “பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் ‘சிறப்பென்னும்’ செம்பொருள் காண்ப தறிவு” என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல். “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில்” என்பது வீடுறு வழியும், “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்” என்பது வீடுபேறுமாம். தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற்கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் ‘அறம்’ என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம். மணிவிழா இனி, ‘மணிவிழா’ என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற்கொள்வதற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் ‘இரண்டாம் திருமணம்’ ‘அறுபதாம் கலியாணம்’ என்னும் பெயர்களைக் கொள்ளாதாம். ‘பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகியமை’ அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகிவிட்டதல்லவா! பொருளியல் இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், ‘எச்ச இயல்’ என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம். அசைமாறல் ஒரு தொடர் மொழியில், ஒலிமாறி ஒலிப்பினும் பொருள் பொருந்தியே வரும்; ஆனால் அசை மாறுபடுதல் கூடாது; அது வழுவாகி விடும். “ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள்” என்னும் குறள் ஊறொமை உற்றபின் ஒல்காமை என வருதல் வேண்டும். அவ்வாறு வாராக்காலும் பொருள் அவ்வாறே கொள்ளுதல் வேண்டும். ஆனால் அசையாகிய உறுப்பு மாறின் யாப்பு வழுவாகவே அமைந்து விடும். முன்னது பொருள்காண் நெறி; பின்னது இலக்கண நெறி. முன்னதில் பொருள் போற்றுதலும் பின்னதில் யாப்புப் போற்றுதலும் வேண்டும் என்பதாம் (1141). தனிமொழி நாடக உத்தியில் தனிமொழி என்பதொன்று உண்டு. தானே பேசும் பேச்சு அது. பக்கச் சொல், பாற்கிளவி, தனிமொழி என்பவை அது. நெஞ்சொடு கிளத்தல் என்னும் வகையால் தன்நெஞ்சுக்குத் தானே கூறுவது, இதில் ஒருவகை. உறுப்பு உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுத்துக் கூறுவது போலவும் கற்பித்துக் கொண்டு கூறுதல் இது. இனிச் சொல்லாடுதல் இல்லாதவற்றைச் சுட்டி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறுதலும், பிறர் கொண்ட துயரைத் தான் கொண்ட பிணிபோலச் சார்த்திக் கூறுதலும் தலைவன் தலைவியர் ஒருபாற்சொற்களாகும் (1142). நற்றாய் செவிலித்தாய் ஆயோர்க்கும் தனிச்சொல் வழக்குண்டு (1145). தலைவன் தலைவியர் காணுதற்கு அரிய நிலை உண்டாகிய காலத்து அவர்களுக்குள் கனவுக் காட்சியும் உண்டு. உடன்போக்கு நேரிட்ட காலத்து நற்றாய் செவிலித்தாய், கனவு காணலும் உண்டு (1143, 1144). வாழ்வின் உயிர் நிலையாம் அன்பு நாணம் மடம் ஆகிய மூன்றும் தலைவன் தலைவி நற்றாய் செவிலி என்னும் நால்வர்க்கும் உரியவை (1147). தன் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையடைந்து வருந்தும் போது தன் உறுப்புகளும் தலைவன் பிரிந்ததை அறிந்தன போலக் கூறலும் வழக்கம் (1148). பிரிவால் மெலிந்த போதும் இவற்றுக்கு என்ன ஆயின என்பாளே அன்றித் தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தேடி அடைவது இல்லை (1149). தலைவன் ஒரு பக்கமாக வருங்கால் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல் தலைவன் கேட்கக் கூறுவதும் உண்டு (1150). தலைவன் உண்மையை மறைக்கும் போதும், தலைவிக்கு விருப்பு மிகுந்த போதும் அல்லாமல் மற்றைப் போதுகளில், கண்டு கொள்ளாதவ ளாகவே தலைவி அமைவாள் (1151). தலைவன் தலைவியர் காதலை உணர்த்தத் தக்க பொழுது இது என அறிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலை (காதல் வெளிப்படுத் துதலை) மேற்கொள்வாள் (1152). தலைவனுக்குள்ள எளிமை, பெருமை, விருப்பமிகுதி ஆகியவற்றை உரைத்தல், பிறர் கூறுவது கேட்டு அது பற்றிக் கருத்துரைத்தல், இடையூறு உண்டாகிய போது இடைவந்து தீர்த்தல், தாமே எதிர்ப்பட்டுக் காணல், மெய்யாக நிகழ்ந்தது இதுவெனல் என்னும் ஏழுவகையாலும் தோழி களவொழுக்கத்தை வெளிப்படுத்துவாள் என்று புலமையர் கூறுவர் என்பார் தொல்காப்பியர் (1153). தக்க இடம் வாய்த்தால் அல்லாமல் தோழி சொல்லமாட்டாள் ஆதலால், செவிலி, தலைவி நிலையை உணர்ந்து கொள்ளலும் உண்டு. ஏனெனில், அடக்கம், நிலைப்பாடு, நேர்மை, கூறுவது கூறல், அறிவு, அரியதன்மை என்பவை பெண்டிர்க்கு இயல்பு என்பதால் (1154, 1155). தலைவன் தலைவியர் களவொழுக்கத்திற்கு இசைந்த தோழி, அதனைக் கற்பொழுக்கமாக்கத் திட்டமிட்டே துணிவான சில செயல் களைச் செய்வாள். தலைமகன் வரும்பொழுது, வழி, காவல்மிகுதி ஆகியவற்றைக் கூறி அவற்றால் நேரும் தீமையைச் சுட்டுவாள்; அவற்றை நோக்கித் தான் மனங்கலங்கி வருந்துதலை உரைப்பாள்; சந்திக்கும் இடத்தில் உண்டாகும் இடையூற்றை உரைப்பாள்; இரவில் வருக என்பாள்; பகலில் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வாராதே என்றும் கூறுவாள்; நன்மையாகவும் தீமையாகவும் புலப்படப் பிறிதொன்றனைக் கூறுவாள்; இவையெல்லாம் தலைவன் மேல் கொண்ட வெறுப்பாலோ காதலைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணத் தாலோ செய்வன அல்ல! காதல் வேட்கையைப் பெருக்கிக் கடிமணத்தை விரைந்து முடிக்குமாறு தூண்டுதல் குறிப்புகளேயாம் (1156). தேர் யானை குதிரை முதலியவற்றில் ஊர்ந்து வந்து தலைவன் தலைவியைக் காணலும் உண்டு (1158). உண்ணுதல் இல்லாத ஒன்று உண்டதாகக் கூறுதலும் அகத் தொழுக்க வழக்கமாகும். அது, பசலை பரவுதலைப் பசலை உண்டது என்பது போல்வது (1159). தலைவி வீட்டை விட்டு வெளியேற முடியாத காவல் மிக்க பொழுதில் (இற்சிறை) தலைவனிடம் தோழி, எங்கள் இல்லத்தார் பெரும்பொருளைப் பரிசமாக வேண்டியுளர் என்பது உண்டு. ஏனெனில், அவன் அவளைத் தேடி வராமல் இருக்கவும், மணமுடித்து மனையறம் காக்க வேண்டும் பொருள் தேடி வருதற்குத் தூண்டுதலாக இருக்கவும் ஆகும் (1160). ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லும் வழித்துயர் பற்றிச் சொல்லவும் தவறாள் (1162). வீட்டுக் காவற்பட்ட தலைவி உயிர்நிலையாகிய அன்பு, அன்பு வழிப்பட்ட அறம், அறத்தால் அடையும் இன்பம், பெண்மைக்கு இயல் பாகிய நாணம் என்பவற்றை நீங்கி ஒடுங்கிய நிலை பழிக்கப்படுவதில்லை. ஏனெனில், அவள் செயலும் உணர்வும் ஒடுக்கப்பட்டுள்ள சூழல் அஃதாதலால் அவ்வக் காலத்து வாழும் சான்றோர் தக்கநெறி என ஏற்றுக் கொண்ட(1161)வற்றைத் தழுவிச் செய்யுள் செய்தல் முறையையாம் (1163). உலக வழக்கில் பொருந்தாதது போல் தோன்றும் ஒன்று, அகப் பொருட்கு அமைவுடையதாக இருப்பின் அதனை வழக்காக ஏற்றுக் கொள்ளல் பழியாகாது (1164). ஆனால் அப் பொருள் நாணத்தக்கதாக இல்லாத நற்பொருளாக அமைதல் வேண்டும் (1165). முற்பட்ட இலக்கிய இலக்கணங்களிலும் ‘கைம்மை’ ‘கைம்மைத் துயர்’ என்பவை இடம் பெற்றுள. மகளிராகவே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும் போற்றப்பட்டது. கடுவனாம் ஆண்குரங்கு இறந்ததாக அதனைத் தாங்காத மந்தி, தன் இளங்குட்டியைச் சுற்றத்திடையே விட்டுவந்து பாறையில் மோதி இறக்க அதனைக் “கைம்மை உய்யாக் காமர் மந்தி” என்று புனைவு வகையாற் பாராட்டியதும் உண்டு. ஆனால், இந் நாளில் கைம்மை மணம் வரவேற்புக் குரியதாயிற்று. மனைவியை இழந்தான் கணவனை இழந்தாளை மணமுடித்துக் கொண்டு ‘வாழ்வு தருதல்’ ‘உயரறம்’ எனப் பாராட்டப்படுத லாயிற்று. இது காலங்கண்ட அறநெறி. இதனைப் போற்றுதல் - செய்யுள் செய்தல் (புலனெறி வழக்கம் ஆக்குதல்) புலமையாளர் கடன்! இவ் வகையில் பாவேந்தர் படைப்பும், அதன் பின்வரவாம் படைப்புகளும் பெருக்கமிக்கவை அல்லவா! ஆசிரியர் தொல்காப்பியர் வாழ்வியல் காப்புள்ளம் இத்தகைய எதிரது போற்றுதலை ஆணை யாக்கிச் சிறப்பிக்கின்றது என்க. அன்புப்பெருக்கால் அழைக்கும் சொல் ‘எல்லா’ என்பது. அச் சொல் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் உரிய பொதுச் சொல் ஆகும். இச் சொல்லே ஏலா, ஏலே, ஏழா, ஏடா என வழங்குவதாம். “எல்லே இளங்கிளியே” எனப் பறவைக்கும் ஆயது! ‘எல்லா’ ஒப்புரிமை இதுகால் பெரிதும் ஆண்பால் தழுவி நிற்கின்றது. ‘யாழ’ என்னும் சொல் இருபாற் குரியதாக இருந்து ‘ஏழா’ ஆயது என்பதும் கருதத்தக்கது (1166). பங்குரிமைச் சொத்தாக வாராதது; கொடை புரிந்தாலும் கொடுத்த வரை விட்டுச் செல்லாதது; செயல் திறனால் தங்கவைக்க முடியாதது; பிறரால் கையகப் படுத்திக் கொள்ளவும் முடியாதது; அத்தகு பொருளை ஒருவர் உரிமைப் பொருளாகக் கொள்வது போன்றது, தலைவியின் உறுப்புகளைத் தோழி தன் உறுப்புகளாகக் கொண்டு உரைப்பது; உரிமையில்லாதது அது எனினும், பொருந்திவருதல் அக நூல்களில் உண்டு. ஆதலால், அதனைப் போற்றிக் கொள்ளல் கடன் என்கிறார் (1167). “என்தோள் எழுதிய தொய்யில்” என்பது தலைவி தோளைத் தன் தோளாகக் கருதித் தோழி சொல்வதாம் (கலித். 18). ஓரிடத்துக் கூறும் தலைவி தலைவன் என்னும் சொற்கள், அவ்விடத்துள்ளாரை அன்றி, எவ்விடத்துள்ளார்க்கும் உரியவையாய் வருதலே வழக்கமாகும். இன்னான்தான், இன்னாள்தான் என்று குறித்துக் கூறப்படாமல் உலகத்துள்ள ஒருவன் ஒருத்தி என்பார் எவர்க்கும் உரிமையுடையது எனத் தெளிவித்தார் (1168). உயிர்க்கெல்லாம் பொதுப் பொருளாய் அமைந்தது இன்பம் என்பதை, “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்” என்கிறார் (1169). அமர்தல் = தங்குதல்; நெஞ்சத்துத் தங்குதல்; மேவற்று = விருப்பமுடையது. இதனால் இன்பம் உயிர்ப்பொது என்றார். ஏனை அறம் பொருள் என்பவை மாந்தர்க்குரியவை என்பது குறிப்பாகக் கூறப்பட்டது. மற்றும் காதல் காமம் என்பவையோ எனின் உயிர்ப் பொதுமை விலக்கி ஆடவர் பெண்டிர்க்கே உரிமைப்படுத்தப்பட்டது. குறிஞ்சி புணர்தல்; முல்லை இருத்தல் என்பன முதலாக ஒழுக்கம் சொல்லப்படும் என்றாலும், அவை அந் நிலத்திற்குச் சிறப்பே யன்றி, மற்றை நிலத்து நிகழாதவை அல்ல. நானிலத்திற்கும் பொதுவாக அமைந்தவையே யாம். ஆதலால், ஊடல் என்னும் உரிப்பொருள் மருதம் ஒன்றனுக்கே அமைந்தது இல்லை; மற்றை நிலத்தவர்க்கும் உண்டு; அவ்வூடல் தீர்ப்பாரும் அவண் உண்டு என்பாராய், “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர்” என்றார். நால்வர் = நானிலத்தவர். ‘நால் வருணத்தவர்க்கும்’ என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரையாசிரியர்கள் (1170). நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால் வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார். தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை “ஒருதலை உரிமை வேண்டியும்” என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171). உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், அம்பல் அலர் என்பவற் றால் களவொழுக்கம் வெளிப்பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்டாம் எண்ணங்கள் செயலூக்கியாகத் திகழும் அடிப்படையை விளக்கியது இது. எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி. வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண்டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். “துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே” என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், “வருத்த மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்” என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்ட லினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! “மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன்” என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல். கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப் பாம் என்றது இது (1174). முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது. “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. ‘பொருட்புறத்ததுவே’ என்பதற்கு ‘உரிப்புறத் ததுவே’ என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க்கினியர் பாடம். இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே” என்பார் (1176). அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப்பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும் போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் ‘வன்புறை’ எனப்படும் (1177). தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகையில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படுவனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற்கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178). தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊடல் உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179). பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின், அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180). தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181). குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்டதாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனைத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய்யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் ‘படைத்து மொழி’களாலும் நலம் பேணிக் காப்பாள் (1183). புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள்ளாள்) (1184). துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186). ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187). முன்னே கூறிய உள்ளுறை என்பது, உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொருளாகவும் உள்ளுறை வரும் (1189). மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்) தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத்தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191). தோழி தலைவியை ‘அன்னை’ எனலும், தலைவி தோழியை ‘அன்னை’ எனலும் இருவரும் தலைவனை ‘என்னை’ எனலும் பழமை யான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப்படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவதை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்ட இயலாதவையாகும். “நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப” என்பது இதன் முடிநிலை (1193). இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம். மக்கள் மொழி சொற்களாக இவை இருப்பதால் எவரும் தாம் கேட்டுணர்ந்த வகையால் பொருள் கண்டு கொள்வர். வழக்குச் சொல்லாக இருப்பவற்றை விளக்க வேண்டுவதில்லை என்பதால் ஒரு சொல் வழக்கிழந்தால் பொருள் விளக்கமும் இழந்துபோம் என்னும் மொழியியல் முறையால் இப்பொருளியலை நிறைவித்தார் ஆசிரியர். அது, “இமையோர் தேஎத்தும் எறிகடல் வைப்பினும் அவையில் காலம் இன்மை யான” என்பது (1194). புறத்திணை அகத்திணையை அடுத்து ஆசிரியரால் வைக்கப்பட்ட புறத்திணை பற்றி நாம் கருதலாம். அகம் புறம் என்பவை முரண்பட்டவை அல்ல. வாழ்வின் இருபக்கங்கள் அவை. “அகங்கை ஏழு எனின், புறங்கையும் ஏழு” என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் நற்கிழமை காட்டி உரைத்த விளக்கம் இதனைத் தெளிவாக்கும். பிறவிப் பேறு அக வாழ்வால் அமைந்தது; அதனைச் சிறப்பிக்கவே இல்வாழ்வு கொண்டது; அவ் வாழ்வுக்கு, இன்றியமையாத் துணைப் பொருளாக அமைவது புறவாழ்வு. இன்னும் எண்ணினால், அகவாழ்வு அமைந்து திகழ, அவ்வப்போது மேற் கொள்ளும் முயற்சி வாழ்வே, புறவாழ்வாகும் என்னலாம். அகவாழ்வு சிறக்க வேண்டுவதாம் பொருள் தேடல், அறம்புரிதல், காவல் கடன்புரிதல், சந்து செய்தல், கலைமேம்படுதல், துறவுமேற்கொள்ளல் என்பன வெல்லாம் புறவாழ்வுப் பகுதியேயாம். போரும் கொடையும் புகழும் போற்றலும் எதற்காக, அகவாழ்வு சிறக்கவே. அகச் சிறப்பே பாரகச் சிறப்பின் அடிமூலம் - நிலைக்களம் - எனக் கண்ட நம் முந்தையர் வகுப்பு இது. அகத்திற்கு, (வெளிப்பட அறியும் வகையில்) நான்கியல்களை (அகத்திணை களவு கற்பு பொருள்) வகுத்த ஆசிரியர், புறத்திணை என ஒன்றனை வகுத்ததை எண்ணல் சாலும். மேலும், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு என்னும் நான்கியல்களும், அகம், புறம் ஆகிய இரு பொருள்களுக்கும் பொதுமையாயவையே என்பதையும் எண்ணலாம். ஏழுதிணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணை ஏழுக்கும் முறையே, வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்னும் ஏழும் புறத்திணைகளாகும். குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. ‘பாடாண்’ என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப்படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் ‘பூப்பு’ எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் ‘அரும்புதல்’ எனவும் வழங்கும் மாறாவழக்குக் கொண்டும் உணரலாம். “மலரினும் மெல்லிது காமம்” என்பதும், “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத்தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத்தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது, பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, ‘ஆதந்து ஓம்பல்’ என்பார். வெட்சியின் இலக்கணம், “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” என்பது (1003). வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், ‘வேந்து விடு முனைஞர்’ என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், ‘ஆதந்து ஓம்பல்’ என்றார். ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்திவருதல் என்பது விளங்க, ‘ஆதந்து ஓம்பல்’ என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக. “ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு” என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப் புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். ‘மாடு’ என்பது, பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும் கொண்டமை இதனாலேயே ஆம். ‘தொழுகை’க்கு உரியதாக இருந் தமையால்தான், ஆன் உறைவிடம் தொழு ‘தொழுவம்’ என்னும் பெயர் களையும் கொண்டதாம். தமிழர் வாழ்வொடு இரண்டறக் கலந்த அப்பண்பாடே ‘பொங்கல் விழா’வெனப் பொலிவுற்றுப் போற்றப்படுவதாம் ‘மாட்டுப் பொங்கல்’ என்பது நாடறி செய்தி. ஆக்கள் உடலை உராய்வதற்காகவே, வழியில் “ஆவுருஞ்சு குற்றி” நட்ட செய்தி நயமிக்கது! ஆக்களைக் கவர்ந்து வருதல் போர்க்கு அடையாளமாவதொடு, அதனைப் பேணும் அறமுமாம் என்பதனால், போர்க்களத்தில் இருந்து அகற்றப்படுவனவற்றுள் தலையிடம் பெற்றது ஆவேயாம் (புறம். 9). ஆநிரை கவரச் செல்லும் படைகள் ஆரவாரித்தல், புறப்பட்டவர் ஊர்ப் பக்கத்தே கேட்ட விரிச்சி என்னும் சொல், பகைநாட்டு ஒற்றர் அறியாவாறு புகுதல், அயலார் அறியாவாறு அவர் நாட்டு நிலையைத் தம் ஒற்றரால் அறிதல், பகைவர் ஊரைச் சுற்றி வளைத்துத் தங்குதல், தம்மைத் தடுக்கவந்த பகைவரை அழித்தல், ஆநிரையைக் கவர்தல், அதனைத் தடுத்ததற்கு வந்தாரை விலக்கி மீள்தல், கவர்ந்த ஆக்களைக் கவலையின்றிக் கொண்டு வருதல், தம்மை எதிர்பார்த்திருக்கும் தம்மவர் மகிழத் தோன்றுதல், ஆக்களை ஊர்க்குக் கொண்டு சென்று நிறுத்துதல், அப் பணியில் ஈடுபட்டவர்க்குப் பங்களிப்புச் செய்தல், செயல்முடித்த மகிழ்வில் களிப்புறுதல், கலைவல்லார்க்குப் பரிசு வழங்குதல் என்னும் பதினான்கு துறைகளை உடையது வெட்சித் திணை என்பார் ஆசிரியர் (1004). மேலும் எடுத்த செயலை முடிக்கவல்ல வீரர்தம் குடிச் சிறப்பு, வெற்றித் தெய்வமாகப் போற்றப்படும் கொற்றவை வழிபாடு என்பனவும் வெட்சி சார்ந்தனவே. வேலன் வேடம் பூண்டு ஆடும் மருளாடி, காந்தள் மாலை சூடி ஆடும் வெறியாடல், இன்னாரைச் சேர்ந்த வீரர் இவர் என அறிதற்குப் பனை, வேம்பு, ஆத்தி என்னும் (சேரர் பாண்டியர் சோழர்) மாலை சூடி ஆடிய கூத்து, வள்ளி என்னும் கூத்து, புகழ்மிக்க வீரக் கழல் அணிதல், எதிரிட்டு நின்று போரிடும் வேந்தனை உன்னமரத்தொடு ஒப்பிட்டுக் கூறும் உன்னநிலை, மன்னனை மாயோனொடு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை, போரில் பகைவரை ஓட்டல், பசுக்களை மீட்டித்தருதல், வேந்தன் சிறப்பு உரைத்தல், தன்வீறு தோன்ற வஞ்சினம் கூறல் என்பவை பசுக்களை மீட்டிச் செல்வார் செயல்கள். மற்றும், வரும் படையைத் தடுத்தல், வாட்புண்பட்டு வீழ்தல் எனப்படும் பிள்ளை நிலை; வாட் போரிட்டு வென்றவனுக்குப் பறை முழங்கப் பரிசு வழங்கிய பிள்ளையாட்டு, களப்போரில் இறந்துபட் டார்க்கு நினைவாகக் கல்லெடுத்தல், அதனை நீராட்டுதல், கல் நடுதல், அதனைச் சூழக் கோயில் எடுத்தல், வழிபடுதல் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை என்பனவும் வெட்சியே. பசுக்களைக் கவர்தல் போன்றதே, மீட்டுக் கவர்ந்து செல்லலும் ஆதலால், இரண்டையும் வெட்சியாகக் கொண்டார் தொல்காப்பியர். ஆனால், பசுக்களை மீட்டுச் செல்லுதலைக் ‘கரந்தை’ எனத் தனித் திணை ஆக்கி மொழிந்தனர் பின் நூலினர் (பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை). “வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்” எனக் கொண்டனர் அவர். ஆனால், எழுதிணை என்னும் வரம்புகடத்தலும், அகப்புறம், புறப்புறம் எனப் பொருந்தாப் பிரிவுவகை காட்டலும் நேரிட்டனவாம். நிரை கவர்வார்க்கும் மீட்டுவார்க்கும் அடையாளம் வேறு காட்டவே முன்னவர் வெட்சியும், பின்னவர் கரந்தையும் (கருநிறப் பூ) - சூடியதென்க. காதல் ஒழுக்கம் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போலப் புறத்திணைக் கெல்லாம் முதலாவது வெட்சி என்றும், இரண்டு திணைகளும் களவில் நிகழ்வன என்றும், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” என்பதற்கு ஒப்புக் காட்டுவார் நாவலர் பாரதியார். இப் பகுதியில் கூறப்பட்ட வெட்சிப் போரில் இறந்து சிறப்புற்றவர் நடுகல் இந்நாளும் பலவாகக் காணலும், அவற்றில் அவர் பெயரும் பெருமையுமாகிய எழுத்துப் பொறித்திருத்தலும், ‘ஆவட்டி’ என ஊர்ப் பெயர் இருத்தலும் எண்ணத் தக்கவை. இதில் வரும் “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்” என்பனவே காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை எனச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டமாக உருக்கொண்டதாம். வஞ்சி முல்லை என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்தது வஞ்சித் திணையாகும். ஆடவர் பிரிதலும், மகளிர் அவரை எதிர் நோக்கி இல்லில் இருத்தலும் இரு திணைக்கும் பொதுவாதலால், முல்லைக்கு வஞ்சி புறனாயிற்றாம் (1007). மண்ணைக் கவரும் எண்ணமிக்குடைய வேந்தன் ஒருவனை, அவன் அஞ்சுமாறு மற்றொரு வேந்தன் படையெடுத்துச் சென்று வென்றடக்கு வதே வஞ்சித்திணையாகும். “எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே” என்பது நூற்பா (1008). துறை போரிடச் செல்லும் படையின் எழுச்சி, பகைவர் நாட்டைச் சூழ்ந்து தீயிடல், விளங்கிய படையின் பெருமை, வேந்தன் கொடுக்கும் கொடைச் சிறப்பு, பகையை நெருங்கி அழித்த வெற்றி, பெற்ற பரிசு விருது (மாராயம்) பற்றிய பெருமை, தம்மைப் பொருட்டாக எண்ணாமல் போரிட்ட திறம், பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கற்சிறைபோல (அணை போல) எதிரிட்டு வரும் படையைத் தனித்து நின்று தடுக்கும் பெருமிதம், படைஞர்க்கு விரும்பும் வகையால் உணவு வழங்கும் பெருஞ்சோற்று நிலை, வெற்றி பெற்றவரிடத்துத் தோன்றும் பொலிவு, தோற்றவர்க்கு உண்டாகிய அழிவு, பகைவர் நாட்டின் அழிவுக்கு வருந்திப்பாடும் சிறந்த வள்ளைப் பாட்டு, அழிக்க வரும் படையைத் தடுத்து நிறுத்திய வீரரைத் தழுவுதல் ஆகிய தழிஞ்சி என்னும் பதின் மூன்று துறைகளையுடையது வஞ்சித் திணை (1009). குறிப்பு காலம் மாறியது; கருவி மாறியது; கருத்தும் மாறியது; எனினும், இற்றைப் போர்களிலும் இத்துறைகள் சொல்லும் முறைகள் நிகழவே செய்கின்றன. மாராயம் என்பது வேந்தனால் பெற்ற விருது. அவ்விருதுப் பெயரே பெயராக விளங்கும் குடும்பங்கள் இன்றும் உண்டு. கற்சிறையாவது அணை. கல்லால் தடுத்து நிறுத்துதல் வழக்கமே அணைக்கட்டு; ‘கல்லணை’ கரிகாலன் வைத்துச் சென்ற புகழ் எச்சம். வள்ளை என்பது உலக்கைப் பாட்டு. வேந்தனைப் பாடும் புகழ்ப்பாட்டு; மகளிர் பாடிக் கொண்டு உலக்கை குற்றும் பாடல்; சிலம்பில் வள்ளைப் பாட்டு உண்டு. தழுஞ்சி என்பது தழுவுதல். நல்லதும் அல்லதும் நேர்ந்தபோதில் உரிமையுடையார் தழுவிக் கொள்ளுதல், ஆடல் களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் பார்வையர், ஓடிவந்து தழுவுதல் என்பன எண்ணலாம். உழிஞை உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1012). அரணை முற்றுகை இடுதலும் பற்றுதலும் என்பவை உழிஞைத் திணை. ஊடல் கொண்ட இல்லாள் கதவடைத்து ஊடியிருத்தலும், வாயில்கள் வேண்டிநின்று கதவைத் திறக்கச் செய்து உட்புகுதலும் ஆகியவை உழிஞையொடு ஒப்பதாகலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயது. உழிஞைத் திணை எட்டுவகை யுடையது. பகைவர் நாட்டைப் பற்றிக் கொள்ளுமுன்னரே வெற்றியுறுதியால் விரும்பியவர்க்கு விரும்பியதைத் தருதல், சொல்லிய வண்ணமே செய்து முடிக்கும் வேந்தன் திறம், வலிய மதில்மேல் ஏறிப் போரிடல், பகைவர் ஏவும் அம்புகளைத் தடுக்கும் தோற்படை (கேடயம்) மிகுதி, அரணின் உள்ளே உள்ளவன் செல்வச் சிறப்பு, அதனால் தன்னொடு போரிட வந்த புறத்தோனை வருந்தச் செய்தல், தான் ஒருவனாக வெளிப்பட்டு வந்து போர் அடர்த்தல், புறத்தோன் தாக்குதற்குக் கலங்க வேண்டாத மதில் வன்மை என்பவை அவை (1013). இவ்வெட்டனுள் முன்னவை நான்கும் மதிலை முற்றுவோன் பற்றியவை. பின்னவை நான்கும் மதிலைக் காப்போன் பெற்றியவை. முற்றுவோனும் காப்போனும் கொள்ளும் போர் நிலை பன்னிரு துறைகளாகக் கூறுவார் ஆசிரியர் (1014). தும்பை தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1015). இரங்குதல் இருதிணைக்கும் பொதுமையானது. களப் போர் அழிவு அத்தகையது ஆகும். வீரத்தை வெளிப்படுத்துதலே நோக்கமாகக் கொண்டு போரிட வந்தவன் திறத்தை அழிக்கும் சிறப்பினது தும்பை (1016). நிலம் கவர்தலோ, மதில் பற்றுதலோ கருத்தாகக் கொள்ளாமல் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்றே நோக்கமெனக் கொண்டு போரிட வந்தவன் ஆதலின் அவனை, “மைந்து பொருளாக வந்த வேந்தன்” என்றார் ஆசிரியர் (1016). மகனுக்கு ‘மைந்தன்’ எனப் பெயரிட்ட நோக்கு நாம் எண்ணத்தக்கது. மைந்து = வீரம். நெருங்கிச் செல்ல இயலாத வீரன்மேல் பகைவர் அயலேநின்று ஏவிய கணைகளும் வேல்களும் உடலைச் சூழ்ந்து மொய்த்துக் கிடத்தலும், உயிர் பிரிந்த பின்னரும் அவ்வுடல் நிலத்தில் படாமல் துள்ளி நிற்றலும் என்னும் இரு திறப்பட்ட சிறப்புகளையுடையது தும்பை (1017). தும்பைத் திணை பன்னிரு துறைகளை உடையது. இவற்றுள், தாக்குவானும் தாக்கப்படுவானுமாகிய தலைவர் இருவரும் களத்தில் ஒருங்கே இறந்து படுதல் என்பது ஒருதுறை. அது, ‘இருவர் தபுதி’. ‘எருமை மறம்’ என்பது ஒருதுறை. அது, மறவன் ஒருவன், தன் தலைவன் படை உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் ‘எருமை மறம்’ எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான். எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப்பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது. ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக் கொழிவே காரணமாம். இத்துறையை, “ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை” என்கிறார். கூழையாவது பின்னணிப்படை. தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது, “இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை” எனப்படுகிறது. “எவரும் வாழாமல் ஒழிவது தான் வாழப் பிறந்ததன் நோக்கமா?” என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்! வாகை வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத்திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல் போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமையானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது, “தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” என்பது. தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட - மிகுதிப்பட. தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத் திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும். வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக அமைந்துளது. அது, “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்” என்பது (1012). “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன” என்றார் இளம்பூரணர். வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் ‘பார்ப்பனப் பக்கம்’ இடம் தரவில்லை. ஓதலாவது ‘கல்வி’ என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண்பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? ‘இரவலர் புரவலை நீயும் அல்லை’ என்ற புறப்பாட்டைப் ‘பார்ப்பன பக்கம்’ என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ? ஆனால், நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா! பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக்கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்: “ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய சடங்கு கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமே யன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின், அவற்றோடு கூறப்படா தாயிற்று. ஆறங்கமாவன, உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ் விரண்டையும் உடனாயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பார்த்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம், வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சத்தமுமாம். தரும நூலாவன உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும். இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஓத்தாம் என்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பும் சிறப்பின்மையும் அறிவித்தற்கு” ‘பார்ப்பனப்பக்கத்து’ ஓதுதலுக்குத்தான், இவையெல்லாம் எழுதி னார். மேலும், “இனிப் பார்ப்பனப் பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்தே கற்பு நிகழ்வதற்கு முன்னே, களவில் தோன்றினானும், அவள் பிறர்க்கு உரியவள் ஆகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்து இருந்துழித் தோன்றினா னும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும் அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினா ருமாகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை ‘இனியர்’ வழங்கிய படையலாக்கல் தகும்தானே! இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப்பெருமை கொண்டாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா? சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய ‘இனப் பிரிவு’ என்பது ‘மரபியல்’ செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர். பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை. புலவர் ஆசிரியர் கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல், பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார். செம்பொருட் சிவம் ‘ருத்ரா’ ஆவர். அம்மை ‘அம்பா’ ஆவார். முருகன் ‘சுப்பிரமணியன்’ ஆவான்; (சுப்பிரமணியன் - பிராமணனுக்கு நன்மை செய்பவன்) முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானையையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை! விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கடமை செய்தல் வேண்டும்! அஃதறம்! அந்தண்மை! ஆனால், ‘விழித்தலே ஆகாது’ எனத் திட்டமிட்டுத் ‘தமிழே தீட்டு’ ‘தமிழினம் தீண்டக் கூடாத இனம்’ என்று கண்மூடித் தனத்தைக் கால மெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட் படாத வணங்கத்தக்க பெருமையர்! அவர் என்றும் தமிழரால் போற்றப் படுபவரே அன்றிப் புறக்கணிக்கப்பட்டார் அல்லர் என்பது வரலாற் றுண்மை. இனிப் ‘பார்ப்பனப் பக்கம்’ யாதெனப் பார்க்கலாம். பார்ப்பனர் என்னும் பெயரை எண்ணுதல் வேண்டும். பார்த்தார் - பார்க்கிறார் - பார்ப்பார். பார்த்தனர் - பார்க்கின்றனர் - பார்ப்பனர். பார்த்தல் வழியாக ஏற்பட்ட முக்காலப் பெயர்கள் இவை. இவற்றுள் பார்ப்பார், பார்ப்பனர் பெயர்களாக வழக்கூன்றின. கணியம் பார்ப்பார், குறிபார்ப்பார், ஏடு பார்ப்பார், ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்ப்பார், நாடி பார்ப்பார், கணக்குப் பார்ப்பார், சகுனம் பார்ப்பார் எனப்படுவார் வழக்கில் இல்லாமல் போய்விடவில்லையே! இப் பார்ப்பார், அறுவகைத் தொழில் பார்ப்பாராகத் தொல் காப்பியர் காலம் தொட்டே வாழ்ந்த தமிழர். அவர்கள் குருக்கள், ஓதுவார், பூசகர் (பூசாரி) பண்டாரம், பூக்கட்டி, வேளார் என்பார். குருக்கள், பூசகர் - வழிபாட்டாளர். ஓதுவார் - தேவபாணி இசைப்பார். பண்டாரம் - கோயில் பொருட்காவலர். பூக்கட்டி - நந்தவனம் பேணி, மலர் பறித்துத் தருவார்; மாலை தொடுப்பார். வேளார் - தெய்வப் படிவம் செய்வார், மண்ணீட்டாளர்; குயவர் என்பாரும் அவர். குயவர் - பார்ப்பார்; குயம் - குசம் ஆகிப் புல்லாகி, பார்ப்பாரும் ஆகியது. குசம் - தருப்பைப்புல் (அறுகு) தருப்பைப் புல்லால் வந்தவன் குசன் (லவன் குசன்). இனி, இவரையன்றித் தலைவன் களவுக்குத் துணையாய பார்ப்பனப் பாங்கன், வேள்வி செய்யாத வேளாப்பார்ப்பான், வானியல் நுணுக்கம் அறிந்த முதுகண்ணன் அல்லது கணியன் என்பாரும் அறிய வருகின்றனர். இவர்கள் எத் தொழில் செய்தாரோ, அத் தொழில் செய்த பார்ப்பார். இவருள் தொல்காப்பியர் நாளில் வாழ்ந்தவர் அறுவகைப் பார்ப்பார் ஆகலின் அவர்தம் தொழில் கருதி எண்ணினார். ஆசாரிய (கம்ம)த் தொழிலர் ஐவர் பகுப்பு இன்னும் உளதாதல் ஒப்பிட்டுக் காணத்தக்கது. ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்’ என்பது ஐவகைக் குடிவழியினராகிய அரசர் பகுதி என்பது. சேரர் சோழர் பாணடியர் என்பார் மூவேந்தரும், வேளிரும், குறுநில மன்னரும் என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப்பட்ட ஐவர், தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார். ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், ‘பதினெண்குடி வேளிர்’ எனல் அறிக. “இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம்” என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப்பட்ட பிற குடியினர் பகுதி. அவர் “அறுதொழிலோர்” எனத் திருக்குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர், “உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி” (கரும பூமி = தொழில் உலகம்) என்று கூறும் திவாகர நிகண்டு. மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற்பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடையாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை. வாகைத்திணையின் துறைகளைக் ‘கூதிர் வேனில் என்றிரு பாசறை’ எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார். அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும். “குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல்இன் பத்துள் தங்கித் தீதறு நடுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை” என்று அவ்வவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை, “உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே” என்று கூறி முடிக்கின்றது. குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக்காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றையுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந் நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும். இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை, தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப்படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம். நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க் குத் தானும் உரிமையன் ஆவனா? இதில் கூறப்படும் இன்னொருதுறை, “கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை” என்பது. கட்டாவது உறுதிப்பாடு. உரன் என்பதும் அது. “உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்” “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பொருந்தி நிற்கும் தன்மை. இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர். வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம். வாகையாவது வெற்றி: வாழ்வின் வெற்றியாவது அருள்கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறுதலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார். இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட, “காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும். “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றியுறுதல் கூறும் வள்ளுவ மும் எண்ணல் வேண்டும். காஞ்சி காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலை பெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள். “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல். நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா? உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற் குமேயாம். “மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே” என்னும் புறமும், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்” என்னும் அறமும் தெளிவிக்கும். காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந்திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடு வாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளையுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன. மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் ‘சிறப்பு’ என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர். மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை, “மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை” என்றார் ஆசிரியர். அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க்களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக, “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” எனவரும் குறளை எண்ணினால் ‘பெருமை’ ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும். நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு. பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையாமை வைக்கப் பட்டதாம். நாலடியார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்தியமை உணர்ந்து போற்றத்தக்கது. கணவன் இறக்க மனைவியும் உணர்வொன்றி இறத்தல் ‘மூதானந்தம்’. காதலியை இழந்தமை ‘தபுதாரம்’ காதலனை இழந்தமை ‘தாபதம்’ கணவனொடு மனைவி தீப்புகுதல் ‘முதுபாலை’ அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை ‘தலைப்பெயல் நிலை’ எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து ‘காடு வாழ்த்து’ இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில. பாடாண் திணை பாடாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போண்றதே, புரவலர்ப்புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று. “அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப” என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி. அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப்பட்டது. “அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப்பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம்” “போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோம சுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும்” என்பார் வெள்ளைவாரணர் (தொல் காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக். 108-9). பாடாண் துறையில் இயற்பாவொடு இசைப்பாவும் (வண்ணமும்) வரப்பெறல் உண்டு. தலைவனை முற்படுத்திப் பாடாண்பாடும் புலவர் தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, ‘வண்ணம் பாடுவம்’ என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும் என்பதை, “காமப் பகுதி கடவுளும் வரையார்” என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய் மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல்களிலும் இக் காதல் பாக்களைக் காணலாம். குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப் பாடலில் அவ்வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, “வழக்கொடு சிவணிய வகைமை யான” என்றார் (1032, 1033). கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமையாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார். “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பது அது (1034). கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள். கொடி என்பது வளைவுப் பொருளது. ஆதலால், படர்கொடி, ஆடு கொடி, பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும். கந்தழி என்பது கந்து அழி என்னும் இருசொல் இணைவு. கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி. வள்ளி என்பது வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடை யாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள். கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ளமை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம். தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை. இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத் தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்த லாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது. கொடி நிலை என்பது மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு எனலாம். கந்தழி என்பது பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம். வள்ளி, வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம். இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், ‘தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்’ என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். ‘நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே’ என்பது; எம் நூல். ஒரே ஒரு குறிப்புச் சான்று ‘அறம் முதலாகிய மும்முதற்பொருள்’ என்னும் தொல்காப்பியமே, ‘முப்பால்’ முன்னோடி. ஒரு தெளிவு புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க. உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம். முடிபுனைவிழா, மண்ணுமங்கலம். பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை. வாழ்த்துக் கூறுதல், ஓம்படை. பாடாண் திணையின் துறைகளுள் சில இவை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப்பார்க்கலாமே. மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளியலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் ‘ஆற்றுப் படை’ என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றேயாம். அது, “ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்” என்பது (1037). செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப்படை யாகும். பத்துப் பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் பட்ட வகை புலப்படும். அந் நாள் நிலநூல், சுற்றுலா நூல், வரலாற்று நூல், வழிகாட்டி நூல், மக்கள் தொடர்பு நூல், மாந்த நேய நூல் என்பனவாக ஆற்றுப் படை விளங்கியமை புலப்படும். மேலும் கலையே வாழ்வாக இருந்தவர் நிலை, அவர்தம் கருவி அமைப்பு, கலைத் திறம், வளம்பெற்றபின் வைத்து வாழத் தெரி யாமை, நிலைப்பிலா வாழ்விலும் நிலைத்த குடும்பமும் சுற்றமுமாக வாழ்ந்த வாழ்வு என்பனவும் புலப்படும். சான்றாகத் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடு கடாம்) என்பவற்றை நோக்குக. பாடுபுகழ்பெற்ற மன்னரும் தாம் பாணரும் கூத்தருமாகப் பாடினர் எனின், அவ் வாற்றுப் படையின் செல்வாக்கு தானே விளங்கும். “போக்குக் கற்றவன் ‘போலீசுக்’காரன் (போக்கற்றவன்) வாக்குக் கற்றவன் வாத்தியாயன்” (வக்கற்றவன்) என்பது புது வழங்குமொழி. இப் போக்குக் கற்றவனும் வாக்குக் கற்றவனுமாகத் திகழ்ந்தவன் ஆற்றுப்படைக் கலைவல்லான் எனல் சாலும்! மெய்ப்பாடு மெய்யின்கண் உண்டாகிய உணர்வு, பிறர்க்குப் புலப்படும் வகையால் வெளிப்படுவது, மெய்ப்பாடு ஆகும். “மெய்ப்பாடாவது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்” என்பார் பேராசிரியர். உள்ளத்து நிகழ்வது, கருத்துப் பொருள்; அது முகம், கண், காது, கால், கை, வாய், மெய் (உடல்) முதலியவற்றின் அசைவு, துடிப்பு, நடுக்கம், நிறமாற்றம், தடுமாற்றம், மயக்கம், மகிழ்வு, கிளர்ச்சி, துள்ளல் - இன்ன வற்றால் பிறர் அறியத் தோன்றும். இத் தோற்றமே அகவுணர்வின் வெளிப்பாடு ஆகும். குறிப்பறிதல், குறிப்புணர்தல், குறி கூறுதல், கோள் தாங்கி (கோடாங்கி) கூறல் என்பன வெல்லாம், மெய்ப்பாடு உணரவல்லார் தம் தேர்ச்சியினால், பிறரை ஒப்புக்கொள்ள வைப்பனவாம். காப்பியக் கவின், மெய்ப்பாட்டில் தங்கியுளது எனலாம். இயலினும் இசையும், இசையினும் கூத்தும், பொது மக்களை யன்றிப் புல மக்களையும், இளையர் முதுவர் ஆகியோரையும் ஒருங்கே கவர்தல் மெய்ப்படக் காட்டும் சிறப்பாலேயாம். ‘நாடகமே உலகம்’ என்பது மாறித் ‘திரையே உலகம்’ ‘காட்சியே உலகம்’ என ஆகிய காலம் இது. ‘ஆடுநர்க் கழியும் உலகம்’ என மெய்யியல் காட்டியது பழந்தமிழ்ப் புறநானூறு. ஆடிச் செல்வாரைப் போல-வேடமிட்டு ஆடிச் செல்வாரைப் போல-போவது உலகியல் என்பது அது. கூனியாக நடித்தவன் மீது, செருப்பை எடுத்து எறிந்தான் பார்வை யன் ஒருவன். “இதுவரை எனக்குக் கிடைத்த எப் பரிசும், இப் பரிசு போலாகாது” என்று பாராட்டி, அடையாளப் பொருளாக்கிக் கொண் டான் கூனியாக நடித்தவன். அவன் மெய்யாக உணர்ந்து நடித்ததுமன்றிப் பார்ப்பவன் தன்னையும் தன்னை மறந்துபோகச் செய்து விட்டான் அல்லவா! மெய்ம் மறந்து நோக்கச் செய்து விடுவது, மெய்ப்பாடு ஆகும் நிலை இது. மெய்ப்பாடு கலையாக இல்லாமல், வாழ்வாகி விடும் போது, எத்தனை பேரை நம்பி ஏமாறச் செய்ய - இழப்புக்கு ஆளாக்க முடிகின்றது என்பதை நாம் கேளாமலும் காணாமலும் இல்லையே. துறவர் போலிமை, கூடா ஒழுக்கமாவது இது. மெய்ப்பாட்டு விளக்கம், உயர்கலை விளக்கம்! ஆனால், அவன் வாழ்வில் மெய்யனாக இல்லாவிடில், பெருந் தீமையாம் என்க. தொல்காப்பியர், மெய்ப்பாடுகள், அவை தோன்றும் நிலைக் களங்கள், அகவாழ்வு புறவாழ்வு இரண்டிலும் மெய்ப்பாட்டின் பங்களிப்பு, ஆகாதமெய்ப்பாடுகள் இன்னவை பற்றி ஆழமாக எண்ணிக் கூறுகிறார். அவர்தம் நுண்மாண்நுழைபுலமும், கலைத்துறைக் கவினும், கட்டமை கோப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இயற்றியுள்ளார். சுவைப் பொருள், அதனை நுகரும் பொறியுணர்வு, அது உள்ளத் துப்பட்ட போது தோன்றும் குறிப்பு, அக் குறிப்பு மெய்யில் தோற்றமுறும் காட்சி என ஒரு மெய்ப்பாடு நான்காகும். மெய்ப்பாடு நூலோரால் எண்வகையாக உரைக்கப்படும். அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இவ் வெட்டையும், மெய்ப்பாட்டு நிலைக்களம் நான்கொடும் பெருக்கிக் காணின் முப்பத்து இரண்டாம்; இவற்றைச் சுவையும் சுவைப் பொருளும் ஒன்றாக்கிப் பதினாறு எனவும், உள்ளக் குறிப்பும் உடற் குறிப்பும் ஒன்றாக்கி எட்டு எனவும் கொள்வதும் உண்டு. இவற்றைக் கூறி மெய்ப்பாட்டியலை விளக்குகிறார் தொல்காப்பியர் (1195 - 1197). முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும் இறுதி மெய்ப்பாடாக உவகைச் சுவையையும் தொல்காப்பியர் கூறுதல், அவரின் பழுத்த உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் ‘நகையும் உவகையும் கொல்லும் சினம்’ என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம். ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர். “எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப” என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198). எள்ளலாவது இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல். இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு “நீ முட்டாளா, மடையனா?” என்றான் இருந்த ஒருவன். “இருவருக்கும் இடையே இருப்பவன் யான்” என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க. பேதைமை பேதைமைத் தன்மை; அறியாத்தனம். அதனைக் காணும்போது நகைச் சுவை உண்டாகும். ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்டால்... ‘யான் கண்டது இது’. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், ‘ஏதோ தோன்றியதுபோல்’ மூவரும் நகைத்தனர்.. மடமை மடமை என்பது அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானையும் அறியாதவனாகக் கருதுதல், “காணாதாற் காட்டுவான் தான்காணான்; காணாதான், கண்டா னாம் தான்கண்ட வாறு” என்பது போன்ற தன்மை (குறள். 849) அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் ‘மடம்’ ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரியதாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம். இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல்காப்பியர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங்களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள்களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மையும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும். நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாக வும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்குவர். உரிய சான்றும் காட்டுவர். அழுகை அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னிருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு - இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு - இழப்பின் வழிவரு வது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை; “பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு ‘இளி’வின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, ‘ஒப்பாரி’; ‘கையறுநிலை’ப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு! “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே” என்பது அது (புறம். 112). வறுமை அழுகைப்பிழிவு, “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம். விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர். நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்று தலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர். இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். ‘இழிவே’ என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. “இளிவரின் வாழாத மானமுடையார்” எனவும் “இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார்” எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார். இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்பவற்றால் உண்டாகும் (1200). முற்றத் தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவியும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக்காட்டும் ஒரு பாட்டு (புறம். 159). இளிவரல் விளைவு விளக்கம்: “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே” என்னும் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டும் (புறம். 74). “சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு” என்னும் குறிப்புமாம். மருட்கை “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே” என்பது மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களங்கள் பற்றியது (1201). மருட்கையாவது மயக்கம். பாராதன ஒன்றைப் பார்த்தல் மயக்கமாக்கும். எறும்பு ஒன்று எட்டடி நீளம் ஈரடி உயரத்தில் வரக்கண்டால், பூனை வடிவில் யானை ஒன்று நம் முன்வந்தால், இறந்து போனான் எனப்பட்ட ஒருவன் நம்முன் நடந்து வரக்கண்டால் மருட்கை தோன்றாமல் இராதே. “பறழுக்கு (குட்டிக்கு) வயிற்றில் பையையுடைய கங்காரு, பறக்கு மீன், சிற்றுயிர் உற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, இருதலை, முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்புடைய உயிர்கள் போல்வன” என்பார் நாவலர். அச்சம் அணங்கு விலங்கு கள்வர் தம் இறை என்பன நான்கும் அச்சச் சுவை நிலைக் களங்கள் (1202). ஒரு மரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட அதனை அறிந்தான், அவ்விடத்தை இரவில் போய்க்காண அஞ்சுதலும், சுடுகாட்டுக்குத் தனியே இரவில் சென்று மீள்வதற்கு அஞ்சுதலும், பேய் பிசாசு என்று கற்பிக்கப்பட்டவற்றை நினைத்து அஞ்சுதலும் அணங்குவழி அச்சம். மயக்கும் பெண்பேய் பற்றிய புனைவு பழமை மிக்கது; நீலி கதையோ நெடுங்கதை. இவை நூல்வல்லார் சுட்டும் அளவுக்கும் பெருக்கமாக மக்கள் வழக்கில் இருந்தமை புலப்படும். பேய் பிடித்தல் பேயோட்டல் உடுக்கடி என்பன இன்றும் மறைந்து விடவில்லையே! புலி விலங்கு ஒன்று நம்முன் நிற்பதாகக் கனவில் காணினும் உண்டாகும் அச்சத்தை நோக்கும் போது நேரில் கண்டால்! கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், இன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது. இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல். “கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று” என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது. ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; ‘கழிந்ததும்’ உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க் கேனும் நினைவில் நிற்கும். பெருமிதம் பெருமிதம் வேறு செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள். “பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்” என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம், “கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” என்பது (1203). கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கே யன்றி அவர் பெற்றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும். கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே! ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு. மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப்புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே” என்னும் புறப்பாட்டு (66). வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர்வீறு நாடறிய லாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர்களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே! கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் ‘படாம்’ வழங்கினானே பேகன்! ஏன்? “வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய” எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமித மாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே! வெகுளி “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே” என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204). காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் உறுப்பறை. குடிகோள் ஒருகுடியையே முற்றாக அழித்தல். ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல். அலை - அலைக் களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல். கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், “கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவுதல்” கலித்தொகைச் செய்தி. உவகை உவகைச் சுவை நான்கும், “செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்பது (1205) “உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும்” என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம். ‘அவன் உவகை இவன் அல்லல்’ ஆதல் ஆகாது என்பாராய் உவகையை ‘அல்லல் நீத்த உவகை’ என்றார். உவகை இருபாலும் இல்லை யேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே “உருவு, நிறுத்த காமவாயில்” என்றவர் தொல் காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219). செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் “காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்” என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம். புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு?” என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103). “உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள்” என்று உவந்து வினாவியதும் அது (குறள். 1106). உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே ‘புணர்வு’ தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும். புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். “ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள” என்பது வள்ளுவம். விளையாட்டும் இருபாற் பொது. கடலாட்டு, புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம். அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம். சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொ ருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவனவற்றாலும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல், “உள்ளப் பட்ட நகைநான் கென்ப” “விளிவில் கொள்கை அழுகை நான்கே” “யாப்புற வந்த இளிவரல் நான்கே” “மதிமை சாலா மருட்கை நான்கே” “பிணங்கல் சாலா அச்சம் நான்கே” “சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” “வெறுப்ப வந்த வெகுளி நான்கே” “அல்லல் நீத்த உவகை நான்கே” என முதலடியோடு எதுகை வருவது கருதியது அன்றி, அப் பொருள்களின் உயிர்நாடியாம் அடைமொழிகளை நடைப்படுத்தியுள்ள நயம், நினைப்பவர் நெஞ்சம் நிலைக்கவைக்கும் நீர்மை யுடையதாம். மேலும் 32 மெய்ப்பாடு மெய்ப்பாட்டு நிலைக்களங்கள் முப்பத்திரண்டு கூறிய அவர், அவை அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பானவை என வைத்து, அகத்துக்கே அவ்வாறு முப்பத்திரண்டு நிலைக்களங்கள் உண்மையைத் தொகுத்துச் சொல்கிறார். “ஆங்கவை ஒருபா லாக ஒருபால்” எனத் தொடர்கிறார். உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என்றும், கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு என்றும், முனிதல், நினைதல், வெருவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு என்றும், கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்றும், நாலெட்டாகப் பகுத்து உரைக்கும் அவற்றை முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு மெய்ப்பாடுகள் என்று கூறுவார் நாவலர். களவு மெய்ப்பாடு களவிற்குச் சிறந்த மெய்ப்பாடுகள் இவை என்பதை நான்கு நான்காக அறுவகைப் படுத்தி முறையாக அடுத்து ஓதுவார் ஆசிரியர். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் விரும்பி நோக்குதல், தலைவிக்கு நெற்றியில் வியர்வை உண்டாதல், காட்சி இன்பத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்தல், தமக்கு உண்டாகிய மாற்றத்தைப் பிறர்க்குப் புலப்படாவாறு மறைத்தல் என்பவை நான்கும் முதற்பகுதி. இவைமுறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நடுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை எனப்படும். உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன்றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர். ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமையை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்பனவாம். தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடைமுதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன. நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப் படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம்பகுதி. இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினைமறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத்தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்யமாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்தணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே. தனிமை மெய்ப்பாடு தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடுகளாக இருபதை எண்ணுவார் ஆசிரியர். இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன்றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கியிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவை யெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம். களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித்துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள். மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, “பிறப்பே குடிமை” முதலியன. ஆகாமெய்ப்பாடு காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை, “நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி, வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை, என்றிவை இன்மை என்மனார் புலவர்” என்றார் (1220). நிம்பிரி - பிழையைப் பொறுத்துக் கொள்ளாமை; கொடுமை அறனெறி அழிப்பு. வியப்பு - தன்னைப் பெருமையாகப் பாராட்டல்; புறமொழி - புறங்கூறுதல்; வன்சொல் - வடுவாக்கும் சொல்; பொச்சாப்பு - மறதி; மடிமை - சோம்பல்; குடிமை இன்புறல் - குடிப் பெருமை பேசி இன்புறுதல்; ஏழைமை மறப்பு - நிலையில் தாழ்வெனக் கருதாமை; ஒப்புமை - ஒப்பிட்டுக் காட்டிக் கூறுதல்; இன்மை என்பது இவையெல் லாம் இல்லாமை என்னும் பொருளதாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காது வீம்பு காட்டும் குடும்பம் கெட்டுத் தொலைதல் மிகுதியாதலால் அது தலைப்பட வைக்கப்பட்டது போலும். அவ்வொன்று கைவரின் மற்ற தீயவை பலவும் ஒழிதல் உண்மையாம். தற்பெருமை கொள்வார், தம்மைச் சிறுமைப்படுத்தத் தாமே கட்டியங் கூறுபவர் ஆவர். பொதுவாழ்வுக்கே தற்பெருமை ஆகாது எனின் குடும்ப வாழ்வுக்கு அதன் வாடையும் அடித்தல் ஆகாது. புறமொழியாவது புறங் கூறுதல் இழிவுமிக்கது. குடும்ப இழிவை ஊரிழிவாக ஆக்கும் கொடுமைப் பழிவழியது அது. அதனைத் “துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு” என வினாவும் குறள் (188). வன்சொல் சுடுசொல், நாகாத்தல்; குடும்ப நலங்காத்தல். தீயினால் சுட்டது ஆறினும் ஆறாதது வாயினால் சுட்டது! குடிப் பெருமை கூறுவது - பிறந்த குடிப்பெருமை கூறுவது, புகுந்த குடிப் பழியாகக் கொள்ளப்பட்டுக் கேடாதல் பெருவழக்கு. பிறந்த குடிப்பெருமை, புகுந்த குடியில் நடந்து கொள்ளும் நடையாலேயே சிறக்கப் பெற வேண்டுமேயன்றித் தான் கூறுதலால் இல்லை என்பதை உணர்தல் இல்லறச் சீர்மை. ஏழைமையாகிய நிலை சூழலால் ஏற்படுவது. நிலையில் தாழ்வு வறுமை ஏற்படல் பொதுவானது. அது குறித்து எங்கள் குடும்பம் இப்படிப் பட்டது எனத் தாழ்த்திக் கொண்டு ஒடுங்கி இருப்பதும் ஒப்புரிமை இல்லறச் சிறப்புக்கு உதவாது. மனைவியைக் கணவன் இன்னவள் போல என்று ஒப்புக்காட்டி உரைப்பதோ, கணவனை மனைவி இன்னவன் போல என ஒப்புமை காட்டி உரைப்பதோ தீமையைத்தாமே கை கூப்பி வரவேற்பது ஒப்பதாம். இவையெல்லாம் நீங்கிய ஒத்த உரிமை வாழ்வே உயர்வாழ்வு, வாழ்வாங்கு வாழும் வாழ்வு எனத் தெளிவித்தாராம். ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பாவினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள்ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கெடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்! தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்துகிறார்: “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார். “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்பதும் அவர் உரை (876). “உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று” என்பது வள்ளுவர் உரை (குறள். 718). உவமை முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், “பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது” என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் ‘பழமொழி’யாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது. மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு - இப்படிப் படைக்கப்பட்டவை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல உழைத்தல் - இன்னவையும் அப்படியே. குதிரைவாலி, காடைக்கண்ணி, வாளவரை - இவையெல்லாம் பொதுமக்கள் வழங்கியவையே. அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல - என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை. மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை. உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும். கிளிப்பச்சையில் வண்ணம் உவமை. குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை. மழைக் கொடையில் பயன் உவமை. சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால், “ஓஒ உமன் உறழ் வின்றி ஒத்ததே” எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு. புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானது மாகிய நாரையின் அலகைப் புலவர், “பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய்” என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது. புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது. மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். ‘பிரசங்கம்’ என்றும், ‘பெருஞ்சொல் விளக்கம்’ என்றும் வழங்கி வந்தவரிடையே ‘சொற் பொழிவு’ என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், ‘சொற்பொழிவாற்றுப் படை’ என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை. உவமை வகை “வினை பயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்” என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு. வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம். ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தியிருக்கலாம். உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததி லும் உயர்ந்த தன்மையே உவமையாக்கப்படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு, “நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும்” என்று உவமைப்படுத்துவது இல்லையா! அதுபோல். முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற்பொருளும், முதற் பொரு ளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு. “மலை போன்ற யானை” -முதலுக்கு முதல் உவமை “தாமரை அன்ன தண்குடை” -முதலுக்குச் சினை உவமை “பனை நெடுங்கை” -சினைக்கு முதல் உவமை “ஆடுகை கடுப்பத் திரிமருப்பு” (கடுப்ப - போல; மருப்பு - கொம்பு) சினைக்குச் சினை உவமை “பவழச் செவ்வாய்” என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது. எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் உவமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் ‘பவழவாய்’ எனினும் உவமையே. இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப்படாமல் மறைந் துள்ளது. ஆதலால் முன்னது சுட்டிக் கூறிய உவமை; பின்னது சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர். “சுட்டிக் கூறா உவமை யாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்பது அது (1228). புணர்த்து - பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229). பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர். உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர். முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும். இதில், ‘பல்’ பொருள்; ‘முத்து’ உவமை. ஆனால், இவ்வாறு அன்றிப் ‘பல் முத்து’ எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை, “பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்” என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு. பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231). உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு ‘அன்னவை பிறவும்’ எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232). “அவன் ‘கணக்காக’ இவன் உள்ளான்” “அவள் ‘கணக்காக’ இவள் பேசுகிறாள்” இவண் ‘கணக்காக’ என்னும் பொருள்தரும் உவமை உருபு. இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் ‘செத்து’ என்பது உவமை உருபாயிற்று. ‘புலி செத்து’ என்றால் புலிபோல என்பதே பொருள். செத்து > செத்திரம் > சித்திரம் ஆயது ஒவ்வியம் > ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு. செத்து என்பது பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது. சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில. புது நூல் ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன்படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழிவளர்ச்சி சேர வேண்டின், காலந் தோறும் அப்பணி நிகழவேண்டும் என்பதாம். இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று. இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். “இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே” (1243) என்கிறார். “இணை மாலை போலும் மணமக்கள்” “திருக்குறள் ஈரடி என்னிருமக்கள்” “பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு” உள்ளுறை முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றியும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார். (உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35-37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48) உவமை இயலில் உள்ளுறை ‘உவமைப் போலி’ எனவும், இறைச்சி ‘உடனுறை’ எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன. உள்ளுறை இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழிகளாக உள. ஆனால், தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை. ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே. உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடு பொருளில் கொள்ளும் திறம் இல்லாராகிவிட்டனர். ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது. உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையுமாம். உள்ளுறை என்பது என்ன? 1. உள்ளுறை உவமை சார்ந்தது. 2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது. 3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது. 4. வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும். 5. தெய்வம் தவிர்ந்த கருப் பொருள்களை இடமாகக் கொண்டு வரும். 6. இதன் இலக்கணம்; “உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்” என்பது (எடுத்துக் கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக் கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்). அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி, தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர். தலைவி, அவள் அறிந்த இடம், பொருள் கொண்டு சொல்வாள். தோழி, அவள் வாழும் நிலப்பரப்பளவும் கொண்டு சொல்வாள். தலைவன், அவன் அறிந்த விரிவாலும் அறிவாலும் சொல்வான். மற்றவர்க்கு இன்ன இடமென்னும் வரையறை இல்லை. உள்ளுறை இன்பந்தழுவியதாகவும் துன்பந்தழுவியதாகவும் உவமை வழியில் வெளிப்படும். உள்ளுறை கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலில் இருந்து முகிழ்ப்பது. வெளிப் பார்வைக்குச் செடி கொடி மரம் பறவை விலங்குகளின் இயல் செயல்களைப் புனைவதுபோல் தோன்றும். இவற்றைக் கூறுவது தாம் கூறப்புகுந்த அகப் பொருளுக்கு நயமும் நலனும் சேர்ப்பதற்கே என்பதை உட்கொண்டே துய்க்க வேண்டும். பொருளும் காணவேண்டும். இல்லாக்கால் இயற்கைப் புனைவு என்று மட்டுமே கொள்ளலாகி விடும். அது பாடுபுலவன் கருதிய பொருளுணர்ந்து ஓதுவதாக அமையாமல் ‘வாளா’ அமைந்துவிடும். “உள் ஒன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்று கூறுவர். கூறினும் அத் தொடர்பான உட்கருத்து மெய்யுள் உயிர் போல விளங்கிக் கிடக்கும்” என்பார் வ. சுப. மாணிக்கனார். “உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு” என்னும் உடலுயிர்க் காதல் (குறள். 1122) உள்ளுறையாக, உள்ளுறை இலக்கணம் அமைந்தது என்க. பொதுமக்கள் வழக்குப் போல நேரிடையாக இடித்துக் கூறாமல், அறவோர் உரைபோல் வலியுறுத்து நேராகக் கூறாமல், கனிவொடு கூறிக் காதலும் கற்பும் வாழ்வும் வளமும் சிறக்கக் கூறுவது உள்ளுறை அடிப்படையாம். ஒரு சான்று: “யாரினும் இனியன்; பேரன் பினனே; உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்; சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே.” இது, குறுந்தொகை 85. தலைவனுக்குப் பரிந்து கூறவந்த பாணனை நோக்கித் தோழி கூறியது இது. “இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே! பெட்டைக் குருவி கருக்கொண்டு முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது” என்பது இப்பாடல் திரட்டுப் பொருள். முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக் கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை. குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி இறைச்சி பற்றிக் காணலாம்: “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” “இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே” என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176). பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது. இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன. இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே. ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை ‘உடனுறை’ என்றது அறிந்தோம். மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம். உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை, உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெற வைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது இறைச்சி. “குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமைபோல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் கூடாது; இயலாது” என்பார் பெருமுனைவர் தமிழண்ணல். “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” என்பது இளம்பூரணர் பாடம். “இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள்” என்பது அவர் உரை. “ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி” எனத் தெளியலாம். “அம்ம வாழி தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே; அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குபிரிந் துறைதி என்னா தவ்வே” என்னும் இது, ஐங்குறுநூறு (333). பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடைய இப்பாட்டு, “பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ்கிறாய் என்று கேட்கமாட் டாவோ?” என்று தலைவி கூறிய இறைச்சி. இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை. கதையர் இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா? “இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் ‘அவருள் எவர் என்னவர்’ என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாத போது நீதானா கண்டு கொள்வாய்” என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம். வேறுவகை உவமை “பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே” என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா. விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்குகிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254). கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! ‘தட்டுத் தடுமாறி’ என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச் சொல், இற்றைவழக்குச் சொல்லாவது இது. “மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ” என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது. ஆதலால் “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” என்றார். இனி, “கலகவான் விழி வேலோ சேலோ மதுரவாய் மொழி தேனோ பாலோ” (திருப்புகழ்) என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும். உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் ‘மயங்கா மரபின்’ நூல் யாத்த தொல்காப்பியர், ‘உவமை இயல்’ என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன. அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிட மாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் ‘செய்யுளியல்’ என்று வகுத்தார் ஆசிரியர். செய்யுள் உறுப்பு செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார். செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கிவரப் பெறுவன. செய்யுள் செய் - விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன் செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல். பா - பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல், பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல். தூக்கு - தூக்கிப் பார்க்கும் எடை, எடைக்கல், ஆராய்தல், உயர்த்துதல், எடுத்தல் இன்னவற்றின் ஏவல். பனுவல் - பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். “பஞ்சிதன் சொல்லா பனுவல் இழை யாக” -நன். தொடை - தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு - நட்பு; தொடுக்கும் - தொடர்பு. ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யாப்பு - யா - கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடையது; யாக்கை - உடல்; யாத்தல் - கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி, பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு. செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும். நாட்டுப் பாட்டு பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழிகள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. ‘முது மொழி’ என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று. “ஆடிப் பட்டம் தேடி விதை” “சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்” இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது ‘எதுகை’! “தைப்பனி தரையைப் பிளக்கும்” “மாசிப்பனி மச்சைப் பிளக்கும்” இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை ‘மோனை’ எனப்படும். “முதலெழுத்து ஒத்தல் மோனை” “முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை” எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்! “மோனை பார்ப்பவர் முழுமூடர்; எதுகை பார்ப்பவர் ஏதுமறியார்” இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்டனவே! ‘மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே’. இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன? மாமி அடித்தாளோ மல்லிகைப்பூச் செண்டாலே! பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே! - துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு! கத்தரிக் காய் எங்களுக்குக் கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு. - இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே. தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! - இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது ‘இயைபு.’ பின்னே வரும் பெட்டியும் குட்டியும் இயைபே! நாலு மூலைப் பெட்டி நந்த வனத்துப் பெட்டி ஓடும் குதிரைக் குட்டி வீசும் புளிய ஆக்கை இது விடுகதை; கிணறு - கமலை - ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை). கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்: “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம்” இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, ‘மேற் கதுவாய்’, ‘கதுவாய்’ இப்பொழுது எப்படி வழங்குகின்றது. ‘கொறுவாய்’, உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய், இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது. இன்னும் பாருங்களேன்: “பள்ளம் மேடு பார்த்துப்போ”, “அவனுக்கு நல்லது கெட்டது புரியாது”, “எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும்”, “பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே” இவையெல்லாம் முரண்கள்; எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை. ‘ஆ’ ‘ஓ’ என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ, ஓஒ என வரும். ‘பாலோ ஒஒ பால்’ ‘தயிரோ ஒஒ தயிர்’ இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! “காயாத கானகத்தே”-எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது! ‘எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும் பாணன் துணைவிக்குப் ‘பாட்டி’ என்று பெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. ‘பாட்டாங்கால்’ எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). ‘உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே’ -பாருங்களேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரை யாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து விட்டது. அதனால், எடுத்துக்காட்டுத்தர அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பாட்டு அளவு பாட்டு என்றால் பெரிதாக - நீளமாக - இருக்க வேண்டுமா? அரும்பாடு பட்டு அமைக்க வேண்டுமா? இல்லை! இல்லை! என்கிறார் தொல்காப்பியர். ஓர் அடி சிறப்பாக அமைந்தால் போதும்; அது பாட்டு! சரி, அடி என்றால் 16-சீர், 32-சீர், 64-சீர் என நீண்டிருக்க வேண்டுமா? வேண்டாவே! இருசீர் அடி குறளடி; குறளடி ஒன்று அருமையாக அமைந்து விட்டால் அது பாட்டுத்தான். குறள் அடி என்றால் இரண்டடியுடைய குறட்பாவை அன்று; இரண்டு சீர்களையுடையது. அதனை உலகறியக் காட்டிய பாட்டி ஔவையார்: “அறஞ்செய விரும்பு” “ஆறுவது சினம்” என்றார். அரிய பாட்டுகள்தாமே இவை. செய்யுள் இனிச் செய்யுள் பற்றித் தொல்காப்பியர் சொல்வதை அறியலாம். செய்யுள் முதல் உறுப்பு மாத்திரை; அடுத்தது எழுத்து. மாத்தல் என்பது அளத்தல். மாத்தம் அளவு. ‘பா’ என்றால், அளவுக்கு முதலிடம் தருதல் வேண்டும். அவ், அளவும் எழுத்திலேயே தொடக்கமாகிவிட வேண்டும். மற்றை மற்றை உறுப்புகளிலும் அளவு பேணப்பட வேண்டும் என்னும் முற் குறிப்பினது மாத்திரை என்பதாம். அளவுடன் அமைந்தனவே எழுத்தொலிகள். ‘நா’ எழுந்து ஒலி செய்ய வேண்டும் எனின், அசையாமல் இயலாது. நா, இதழ், வாய் இன்னவை அசையும். அசையின், இசையாம். அவ் வசைகள் சில சீராக அமைவது சீர்; அச் சீர்களைக் கொண்டு அல்லது சீர்களால் அமைவது அடி; அடி தனித்து நிற்பினும் பிற அடிகளொடு கட்டுற்று நிற்பினும் யாப்பு ஆகும். இதுவரை சொல்லப்பட்ட மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு என்னும் ஆறும் செய்யுள் மாளிகையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாவன. பா - பாவு ஆடை நெய்யும் தறியைப் பாருங்கள்; அங்கே அசை, சீர், அடி, பா என்பவையும் தளை, தொடை என்பவையும் உண்டு. அவர்கள் நெய்வதும், இவர்கள் செய்வதும் ஒப்பது! ‘நூற்றல்’ என்பது நூல் இழைத்தலையும் நூல் இயற்றலையும் குறிக்கும் சொல்லாயிற்று. இவை, தமிழர் வாழ்வியல் தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். ‘கலை’ என்பது ஆடைக்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக. அடி ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி மட்டுமா? ‘இரயிலடி’ எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத்திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே. அடி ஒன்றுடையது இயக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலை யாக - இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்டன. மாந்தனும் ஒருகாலம் நான்கு அடிகள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்! வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக - அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை! ஈரடி ஈரடிப் பெருமை என்ன? தனித்தனியே நின்றால் - தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை - தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது. ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும். மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும். இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த ‘கதை.’ வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, “மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தாலும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம்” என்றார். பாரடி யெல்லாம் சுற்றிவரப் படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்! படர்ந்த அடிகள் எத்தனை? ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள், ஈரடி தானே குழந்தாய்! என ஈரடியால் உலகளந்த - அளக்கும் - விளக்கம் அறியலாம். இவை யெல்லாம் அடியும் தொடையும் ‘பா’வியக்கமாகும் வாழ்வியல் அடிக் களங்களாம். சும்மா என்ன வேலை செய்கிறாய்?-சும்மா இருக்கிறேன். எதற்குப் போகிறாய்?-சும்மா போகிறேன்! என்ன பேசுகிறீர்?-சும்மா பேசுகிறோம்! உயர் பொருட் ‘சும்மா’, உற்ற தாழ்நிலை இது. ‘சும்மா’ என்றால், நோக்க மற்ற - குறிக் கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந் நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், ‘சும்மா’ கிளம்பக் கூடாது. நோக்கு நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, “குறிக்கோள் இலாது கெட்டது” என வாக்கும் அமைதல் ஆகாது. நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். “பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள்” என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், “நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும்” என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் ‘மரபு’ என்றார். மரபு ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி நடைக்குச் ‘சாலை விதி’கள் சட்டமாக்கப் பட்டமை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’ என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல். மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் ‘பாடுவோன்’ அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்! தூக்கு பாடுவோன், தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத் தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் - என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் ‘தூக்கு’ என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது ‘தூக்கு’ என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = பாட்டு). தொடை சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால்தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கடப்பாடாம். கேட்கும் சுவை “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” எனப் பாராட்டப்படும். “அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டே பாவின் நயத்திற்குத் ‘தொடை’ என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, செந்தொடை என்பனவாம். அளவு எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் - அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், ‘அளவியல்’ என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார். கட்டடக் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட ஆறு உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட கட்டுமான உறுப்புகள் இந்த ஆறும் எனலாம். யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு? தளமென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே ‘ஏராரு மாளிகை’யாய் ஏற்றம் பெறும்! இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர். திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும். கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண்டாகப் புலவனால் படைக்கப்படும் புதுமைப் பொருள், கூறப்படும் பொருளின் துறை, ஒன்றனோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும். இவையெல்லாம் எண்ணின், உறுப்புகள் இருபத்து ஆறாம், செய்யுள் ‘வனப்பு’ எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்). பாடுவது எளிது “இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை” என்கிறீர் களா? இல்லை! இல்லவே இல்லை! “முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும்” என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதை முதலிய வற்றில் எல்லாம் ‘யாப்பியல்’ இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று ‘எளிதாகப் பாடலாம்’ என்னும் யாப்பியல் நூல். மிக எளிது மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! ‘ஆச்சு’ என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்: “ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன்” என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன், “கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட” என்கிறான். “தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம்” என்கிறான் ஒரு பெரும்புலவன். “சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா” என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று. வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளுக்கு? ஏகபாதம் என்னும் ‘ஓரடி’ பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு? பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார மூவர்! பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்! பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்! வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமையெல்லாம், எவ்வளவு எளிமை! ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்! அசையும் இசையும் அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை! “அசையும் சீரும் இசையொடு சேர்த்தி” இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர். அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார். புதுப்பா இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. ‘ஐக்கூ’ எனப்படுகிறது. ‘வசனகவிதை’ எனவும் தோன்றியது. இளங்கோ வடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றை யெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா? தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது, தமிழ்வழக்கு; தள்ளுவது அயல்வழக்கு; தொல்காப்பியம் கொள்ளுவது மொழிக்காவல் - பண்பாட்டுக் காவல். தொல்காப்பியம் தள்ளுவது மொழிக்கேடு, பண்பாட்டுக்கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது மொழித் தூய்மை. தொல்காப்பியம் தள்ளுவது மொழிக் கலப்பு. ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது. வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம். இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் - மறைநூல் - தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம். எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாதுகாத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப்பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்டளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: “கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே” பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. தடையா? மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக்குரிய ஆக்கங் களை யெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப்பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க. உரைப்பா செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டிருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக்களைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவிலேயே, “வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்” என்றார் (1336). பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, முதுசொல்யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது புதிர் (விடுகதை). அங்கதம் வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம் மேலேகாண்போம். சொல்மரபு சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், “மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று” என்கிறார் (1337). நாற் சொல்லாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை. ஓசைவகை அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் ‘ஆசிரியப்பா’ எனவும் பட்டது. நூல் இயற்றப் பயன்படுத்தியமையால் ‘நூற்பா’ எனப்பட்டது. இரண்டற்கும் வேறுபாடு, அகவற் பாவிற்குரிய அடிவரையறை, முடிநிலை என்பவை நூற்பாவிற்குக் கொள்ளுதல் வேண்டுவது இல்லை. ஓர் அடியாலும் வரலாம்; குறைந்தும் வரலாம். மிக்குப் பெருகிவரினும் அகவல் முடிவுபோல் முடியவேண்டும் என்பது இல்லை என்பவை இவற்றின் வேறுபாடாம். ஆசான், நுவல்வது > நூல் ஆயது; அதன்பா, நூற்பா எனப்பட்டது. நூல், மறை என்பன இலக்கணம் குறித்துநின்று பின்னர்ப் பொருள் விரிவும், திரிபும் கொண்டன. மறை என்பதன் பழம்பொருள் பாதுகாப்பு, களவு என்பவையாம். எ-டு: மெய்ம்மறை (கவசம்) ; மறையோர் - களவொழுக்கக் காதலர் (1442). அகவல் ஓசை இருவகையாம். அவை நேர் ஒன்றல், நிரை ஒன்றல் மா முன் நேர், விளமுன் நிரை என்பன. செப்பல் ஆசிரியர் உரைப்பது போல் ஒரு போக்காக இல்லாமல், கூற்றும் மாற்றமும் - செப்பும் வினாவும் - போல வரும் யாப்பு வெண்பா யாப்பு. “அஃதான் றென்ப வெண்பா யாப்பே” (அஃது + அன்று = அஃதான்று) வெண்பா ஓசை செப்பல். காய்முன் நேர்வரல் செப்பல். துள்ளல் கலிப்பாவின் ஓசை துள்ளல். நின்று மேலேறிக் கீழேவீழ்தல் துள்ளல் ‘துள்ளல் ஆட்டம்’ (துள்ளாட்டம்) ஆட்டங்களுள் ஒன்று. தத்து வாய்மடை, கலிங்கல் என்பவை நீர் துள்ளிவீழும் இடங்களாம். துள்ளி வீழும் நீர் துள்ளி > துளி ஆயது. மீன் துள்ளி, துள்ளம் என்பவை ஊர்ப் பெயர்கள். “தனதனனா தனதனனா தனதனனா தனதனனா” நீர் துள்ளி வீழ்தல்போல் சீர் இறுதி நெடிலாகவும் அடுத்த சீர்முதல் குறிலாகவும் இருத்தல் காண்க. “காய்முன் நிரைவரல் கலித்தளை” என்க. எ-டு. “அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்” தூங்கல் இனி “தனதனதன தனதனதன” என்னும் ஓசையுடன் வரின் வஞ்சித் தளை. அது தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் என்பது யானை. அதன் கையை இப்பாலும் அப்பாலும் அசைப்பது போலவும், தொங்கும் ஊசல், காதணி, கடிகையாரத் தொங்கல் என்பன இயங்கும் இயக்கம் போலவும் இப்பாலும் அப்பாலும் செல்வது. தூங்கல் ஓசை வஞ்சிப்பாவின் ஓசை. கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது ஒன்றிய வஞ்சி; பின்னது ஒன்றா வஞ்சி. எ-டு : “முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தது” என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை ‘அம்மையப்பன்’ போலவும் ‘நரமடங்கல்’ (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட ‘யாளி’ என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342). செந்தொடை தொடை பற்றி முன்னரே கண்டோம் தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் ‘செந்தொடை’ என்பது (1357). செம்மையாவது இயல்பு. இருபா அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து ‘ஐங்குறு நூல்’ வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது. “வாழி யாதன் வாழி யவினி” என்பதே அம் முதலடி பத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறு தலைக் காட்டும். கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பாக்குத் தும்முதலைச் சுட்டினார். வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப் பகம் தொல்காப்பியம். அது, “வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே” (1366) என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363). புறநிலை வாழ்த்து நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக! வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக! - என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367). “எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமே யன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம்” என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் ‘நிற்புறம் காப்ப’ என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது. “புறம் புறம் திரிந்த செல்வமே” என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. “தெய்வம் நின்புறம் நிற்பதாக” என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம். வாயுறை வாழ்த்து வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சி களும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம். வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை, அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று. “வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே” என்னும் இந் நூற்பாவிற்கு (1369), “முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கு மெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத் துவது வாயுறை வாழ்த்து எனப்படும்” என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல் தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியாமல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும். அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. “என்றும் பணியுமாம் பெருமை” என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க் கும் பொதுமையது ஆகலின். ‘அடங்கிப் போதல், அடக்கும் கருவி’ என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம். செவியுறை செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது. இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், “இடிக்கும் கேளிர்” என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை. “செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே” என்பது நூற்பா (1371). பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல். “எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகு வார்” என்பது வள்ளுவம் (896). புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்? வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367, 1417). சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல் அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு. அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, ‘சீ! சீ! என்ன பிறவி இது’ என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால், “கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு” “எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு” என்றார் வள்ளுவர் (819, 820). வண்ணம் வளமான இசையமைந்த பா, வண்ணப்பா, வள் > வண். வண் + அம் = வண்ணம். வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய்யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும். ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித்தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூறாகப் பாடிய வரும் உளர். பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர். “அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்” என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470) தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுகை யுடையது தாஅ வண்ணம். எ-டு: “உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை” (782) வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம். எ-டு: “மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை” (1025) மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல் மெல்லிசை வண்ணம். எ-டு: “வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்” (420) இயைபு வண்ணம்: இடையெழுத்துப் பலவாக வருதல் இயைபு வண்ணம். எ-டு: “தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும்” (985) அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம். எ-டு: “ஓரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும்” 1483) “கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும்” நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். எ-டு: “கேடும் பீடும் கூறலும் தோழி” (1048) குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். எ-டு: “புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ” (1053) சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம். எ-டு: “காமம் நீத்த பாலி னானும்” (1022) நலிவு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு: “னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு” (123) அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும். எ-டு: “மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின்” (1593) (நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க) புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம். “இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினையே முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே” -ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா). ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு வண்ணம். “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும்”... (106) ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனையும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது. “சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்” (349) எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை பொருந்தி வருவது எண்ணுவண்ணம். எ-டு: “நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்” (1589) அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு வண்ணம். அகைத்தல் = அறுத்தல். “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே.....” (1526) தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது. “முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை” (சிலம்பு) ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப்பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம். “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்” (குறள். 751) உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும். எ-டு: “எரியுரு வுறழ விலவ மலர” (கலி.33) முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற்சீரடியின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம். எ-டு: “நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ” (கலித். 39) வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து நிறைவில், “வண்ணந் தாமே இவையென மொழிப” என முடித்தார் (1490). வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங் கணக்கு என்னும் ‘அரிவரி’ வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம். பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் - இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப் பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை. இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப்பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல்காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு “இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும்” என்பதும் (131) உருட்டு வண்ணத்திற்கு, “உளவென மொழிப இசையொடு சிவணிய” என்பதும் (33) எடுத்துக்காட்டு ஆகலாம். அவ்வா றாயின், நான்கு வண்ணங்களுக்கு மட்டுமே எடுத்துக்காட்டுக் காட்ட இயலாதாயிற்று. ஏன்? ஒற்றளபெடை வருதல் இலக்கிய வழக்கிலும் அரிதானது. புறப்பாட்டு வண்ணம் நூற்பாவிற்கு ஏலாதது. தூங்கல் வண்ணம் வஞ்சியடி யுடையது; நூற்பாவோ அகவலடி யுடையது. இனி முடுகு வண்ணமோ நாற்சீர் அடியின் மிக்க அடிக்கண் வருவது; நூற்பா அடிக்குப் பொருந்தாதது. இன்னவற்றாலேயே, இவ்வண்ணங்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியத்திலே இலக்கியமும் காட்ட இயலாததாயிற்று. வண்ணம் பாடிய இசை நூலும் அன்று; காப்பியமும் அன்று; தொல்காப்பியம். இலக்கணம் கூற வந்தநூல் இவ்வளவும் கூறியது செயற்கரிய சீர்மையது அன்றோ! ஓர் இலக்கணத்தை இத்தகு சுவையும் நயமும் கமழ இயற்றல் எளிமையாமா என்பதை உணர்ந்து போற்றுவதற்கே நாம் எடுத்துக் கூறுவதிதுவாம். தொல்காப்பியர் அரிய படைப்பாளி மட்டுமல்லர்; மிக இனிய துய்ப்பாளியுமாவர் என்பதன் சான்றுகளுள் ஈதொன்று என்க. வனப்பு வனப்பு எனச் சொல்லப்பட்ட செய்யுள் உறுப்புக் கூறும் ஆசிரியர், அம்மை முதலாகக் கூறுகிறார். வனப்பு = இயற்கை எழில் (வனம் > வனப்பு). “கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு” என்பது முருகு. அம்மை: “அம்மை தானே அடிநிமிர்வு இன்றே” (1491) என்கிறார். நிமிர்தல் = மிகுதல். அடிமிகாமல் சுருங்கச் சொல்வதே அம்மை என்னும் அழகாகும். பத்துவகை அழகுகளில் சுருங்கச் சொல்லல் என்பதே முதல் அழகு (நன்). “அம்ம கேட்பிக்கும்” (61) என்பது போதுமே. அழகு : செய்யுட் சொல்லாகிய உரிச்சொல் மிகுதியாக வர இயற்றுவது அழகு என்னும் வனப்பாகும். எ-டு : “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” (813) தொன்மை : இடை இடையே உரைநடை வரப் பழமையாக வழங்கிவரும் பொருளைக் கூறும் செய்யுள்களை யுடையது தொன்மை. இதற்குத் ‘தகடூர் யாத்திரை’யைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது. பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது. தோல் : ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு. விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர். இயைபு: ‘ஞ்’ என்னும் எழுத்து முதல் ‘ன்’ என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துக்களைக் கொண்டு முடியும் பாடல்களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ்வகையின. ‘என்’ என முடிந்தவை. புலன் : எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட்டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ-டு : குடும்ப விளக்கு; இருண்ட வீடு; பாஞ்சாலி சபதம். இழைபு : வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும். எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர். வனப்பு அமைக. இனிப் ‘பா’ பற்றிச் சில காணலாம். பா, உரைப்பா பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள்வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக் காணலாம். ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம். நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை. அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் வரை யறை அடிவரையறை முடிநிலை வரையறை என்பவையும் உண்டு. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலைமண்டிலம், அடிமறிமண்டலம், இணைக்குறள் என்பன. இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற் சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம். முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள். ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக்குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவையே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது. மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப்பட்டது. வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத் திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகையில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண்பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண்பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பாவுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட்ட வெண்பாவுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட் டுளது. அது பிற்காலத்தே உரையிடையிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்! வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால் வருவது சிந்தியல். இரண்டாமடியில் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை; பன்னீரடி வரையுடையது பஃறொடை (பல தொடை); அதனின் நீண்டது கலிவெண்பா. கலிப்பா : கலிப்பா பல உறுப்புகளையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம், வண்ணகம் என்பன அதன் உறுப்புகள். கொச்சகம் சிலவாகவும், பலவாகவும் வரும். பின்வந்த தாழிசை, துறை, விருத்தம் என்னும் இனப்பாவிற்குத் ‘தாய்ப்பா’ கலிப்பா. தரவு - முற்படத் தந்து நிறுத்துவது. தாழிசை-தாழமமைந்த ஓசையுடையது; ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது. சுரிதகம் - முடிநிலை. அம்போத ரங்கம் - நீரலை போல்வது; கரைசாரச்சாரச் சுருங்கி வரும் அலைபோலச் சுருங்கிவரும் அடிகளையுடையது. கொச்சகம் என்பது கொய்சகம். மகளிர் உடுத்தும் உடை இடையில் மடிப்புடன் வருவதுபோல் வருவது. இன்றும் ‘கொசுவம்’ என வழங்கப்படுவது. விரிவுமிக்கதும் கூற்றும் மாற்றமுமாகத் தொடர வாய்த்ததும், இசை கூட்டிப் பாட வாய்ப்பதும் இது. காலப்போக் கில் அருகி வருவது இப்பா. வண்ணகம் இசை நலம்மிக்கது. வஞ்சிப்பா : வஞ்சிப்பா குறளடி வஞ்சி, சிந்தியல் வஞ்சி என இருவகையது. முன்னது இரு சீராலும் பின்னது முச்சீராலும் வருவது. வஞ்சிப்பாவும் பாடுதல் அரிதாயிற்று. அன்றியும் அப் பாவால் அமைந்த நூல் ஒன்றுதானும் இல்லை. கிடைத்தவை தனித்த பாடல்களேயாம். பரிபா : பரிபா என்பது கலிப்பாவைப் போல் பல உறுப்புகளை யுடையது (1377). 140 அடி வரை நீள்வது; 25 அடிச் சிறுமையது; அருவியும் ஆறும் பரியும் கரியும் கீரியும் முயலும் நடையிடுவது போன்ற நடையது. பண்வகுத்துப் பாடப்பட்ட பெருமைக்குரியது. இந் நாளில் அதனைப் பாடுவார் அரியர் ஆயினர். அந் நாளில் ஒரு நூலாவது கிளர்ந்தது. அதன் பெயர் பரிபாடல். 70 பரிபாடல்களில் முற்றாகக் கிடைத்தவை 22 மட்டுமே. மருட்பா : மருட்பா வெண்பாமுன்னாகவும் அகவல் பின்னாகவும் கொண்ட மயக்கப்பா என்பது முன்னரே கண்டுளோம். தனிநூலாக்கம் மருட்பா பெற்றதில்லை. அங்கதம் : அங்கதப்பாவும், தேவபாணிப் பாவும் பொருள் வழியால் பெயர் பெற்றவை. தனியாப்புப் பெற்றவை அல்ல. அங்கு = வளைவு. சொல்வதை உள்ளது உள்ளபடி நேருக்குநேர் உள்ளவாறு கூறாமல், புகழாகவும் வசையாகவும் பாடுவது அங்கதமாகும். அங்கதம், செம்பொருள் பழிகரப்பு (பழியை மறைத்துக் கூறல்) என இருவகைப்படும் (1381). செம்பொருள் என்பது வசையை வெளிப்படக் கூறும். வசையை மறைத்துக் கூறுதல் பழிகரப்பு. தேவபாணி என்பது, இறை வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது. பாடுபுகழ் : சங்க நாளில் “இன்னது பாட இவர்” என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் கபிலன்; முல்லைக்கு நப்பூதன்; மருதம் மருதனிலநாகன்; நெய்தல் நல்லந்துவன்; பாலை பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் ‘இது பாட இவர் வல்லார்’ எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது. இனி, அடி வரையறை இல்லாத உரை முதலியவற்றை எண்ணு வோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும். உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை, “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பா இன்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிப” என்பார் ஆசிரியர் (1429). இதில் வரும் உரைவகை நடை என்பதே ‘உரைநடை’ என்னும் வழக்குக்கு மூலமாகும். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை, பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட உரை, பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை, பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை உரைநடை வழக்குக்குன்றி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம். மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது ‘நகைச்’சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம். பிசி : பிசி என்பது ‘புதிர்’ என இந் நாளில் வழங்குகின்றது. ‘விடுகதை’ எனவும் படுகிறது. ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும். “அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய்காய்க்கும்.” இது, உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர். ‘பிறை கவ்வி மலை நடக்கும்’ என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர். “நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரிற்காக் கை” என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு. முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழியாகும். “கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான்” என்பதும் “பழிஓரிடம்; பாவம் ஓரிடம்” என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் : “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது இதன் இலக்கணம் (1434). சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். ‘தானே’ என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்: “ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா” எனவும், “முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்க சுவா” எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது. குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந் தாது, புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது. பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது. “குடத்தலையார் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம்” என்பது பேராசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு. இது, யானை. பண்ணத்தி : பாட்டிடையே அமைந்ததாய்ப் பாட்டாகி வருவது பண்ணத்தி (1436). நத்துதல் விரும்புதல். பண் நத்தி என்பது பண்ணத்தி. சிலம்பில் பாட்டின் இடையே பாட்டென எதுகை மோனை இயைய நடையிடும் உரைப்பாட்டு மடை இஃதாகும். இசைநய எடுப்பொடும் பாடற்கும் ஏற்றதாம். நிறைவு “சொல்லப்பட்ட இலக்கணம் பிழைத்தது போலத் தோன்றினும், தோன்றக்கூடும். அதனை வந்ததொன்றைக் கொண்டு மாறுபாடு இல்லாமல் அமைத்துக் கொள்ளுதல் தெளிந்த அறிவினர் கடமை” என்று இச் செய்யுளியலை நிறைவிக்கிறார் ஆசிரியர் (1499). மரபியல் வழக்கு : “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லானே” (1592) என வழக்கு என்பதைக் கூறுகிறார். “பண்புடையார்ப் பட்டுண் டுலகம்” என்பது இது. சட்டத்தின் ஆளுகையினும் சான்றோர் காட்டும் சால்பு ஆளுகையே உலகை - உலகியலைக் காக்கும் என்பதன் குறிப்பு இதுவாம். மரபு : சான்றோரும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபு ஆகும். மரபு மாற்றருஞ் சிறப்பினது என்கிறார். ஏனெனில், மரபுமாறின் பிறிது பிறிதாகிப் போகும் (1500, 1591). மரபு என்னும் சொல்லே, அதன் பொருள் விளக்கமாக உள்ளது. ஒரு மரத்தின் வித்து மீண்டும் மரமாகி வித்துத் தந்து, வழிவழி மாறாமை போல, மரபு என்பது மாறாதது; மாற்றக் கூடாதது; மாற்றின் பொருட்கேடாகும் என்பவற்றை எண்ணல் நலம். இளமை : மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு முறையே அவற்றை விளக்குகிறார். தொல்காப்பியர் கூறும் இளமைப் பெயர்கள் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்பவை. ஆண்மை : ஆண்பாற் பெயர்களாக ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பவற்றைக் குறிக்கிறார். பெண்மை : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார். இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும் பார்ப்பு - பறவை, தவழ்பவை, குரங்கு. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). மக - குரங்கு, மக்கள். மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). போத்து - ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது : ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. “குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே” என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். ‘இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல’ என்றும் கூறுகிறார். ஆய்வு பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப்பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் பெருவரவினது. ‘பிள்ளை யாண்டான்’ என்பதும் வழக்கு. இவ்வாறு வழக்கு உள்ளமையால், “முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே” என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568). குழந்தை என்னும் பொருளில் ‘பாப்பா’ என்பது பெருவழக்காக உள்ளது. பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்’பாவை’ எனப் பெற்றோரால் பேணப் படுவதால் ‘பாவை’ எனப்பட்டது. பார்வை > பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன. இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் ‘பாவை’ என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை. குருளை ‘சிங்கக் குருளை’ எனக் கம்பரால் ஆளப்படுகின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. ‘குட்டி’ என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப்படுதல் எவரும் அறிந்தது. அது போல் ‘குட்டன்’ ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. ‘என் மாணிக்கக் குட்டன்’ என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெருவழக்காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு. இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடைப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறு கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம். “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே” என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில், ‘செடி கொடிகளுக்கு உயிர் உண்டு’ என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாமலும் அடங்கிக் கிடப்பதாயிற்று. அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்டலும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் ‘தமிழில் அறிவியல்’ என்றோர் சுவடி வெளிப்படுத்தப்பட்டுளதாம். அறிவுவகை அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயிரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக. ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே; இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே; ஆறறி வதுவே அவற்றொடு மனனே; நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (1526) இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக் காட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “சிதலும் எறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “மக்கள் தாமே ஆறறி வுயிரே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (1527 - 1532) எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க. ஆய்வு ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க. “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லையா? ஐந்து நூற்பாக்களிலும் ‘பிறவும் உளவே’ என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா? மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப்படுத்தி யமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்டவேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப் ‘பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர்’ என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன? “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க. ‘தேவரும் நரகரும்’ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா? காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக்காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூறவேண்டுமானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார். வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் ‘கட்டமைதி’ அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர். 1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை ‘இடைப் பிற வர’ நூல் யாப்பாரா? அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா? “எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்” என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம். ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் ஏறு - பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது. ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை. களிறு - வேழம், கேழல். சே - எருது. சேவல் - மயிலலாப் பறவை, குதிரை. இரலை - புல்வாய். கலை - புல்வாய், உழை, முசு. மோத்தை - ஆடு. தகர் - ஆடு. உதன் - ஆடு. அப்பர் - ஆடு. போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன, மயில், எழால். கண்டி - எருமை. கடுவன் - குரங்கு. பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் பேடை - கோழி பெடை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெண் - மக்கள். பிணா - மக்கள். மூடு - ஆடு. நாகு - எருமை, மரை, பெற்றம், நந்து. கடமை - ஆடு. அளகு - கோழி, கூகை, மயில். மந்தி - குரங்கு, முசு, ஊகம். பாட்டி - பன்றி, நாய், நரி. பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி. பிணவு - பன்றி, புல்வாய், நாய். பிணவல் - பன்றி, புல்வாய், நாய். பிடி - யானை. ஆ - பெற்றம், எருமை, மரை. இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின், “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569) ஒட்டுவேலை இதன் மேலே தொடர்கிறது நூற்பா: “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (1570) மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். ‘இழிந்தோர்’ என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, ‘புறக்காழ்’ தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர். இவ் வியலிலேயே ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’ என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503 - 1524) உரைத்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே” என முடித்தார் (1525). அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 - 1549) நிறைத்து, “ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய; பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய; காண்ப அவைஅவை அப்பா லான” என்றார் (1550). அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி, “பிடியென் பெண்பெயர் யானை மேற்றே” (1551) எனக்கொண்டு “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என முடித்தார் (1569). கூறிய இவை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’கள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணி யும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா? மாறுவது மரபா? இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை - தன் பிறப்புரிமை - கொண்டவை. பின்னே கூறியவையோ ‘எடுத்தால் உண்டு. விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ, ஆண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு வந்தவையா? எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங்காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை - பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப்பிக்கலாம். நடைமுறை ஆகுமா? இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ! மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆகவேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆகவேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந் துள்ளமை கண்கூடாம் அல்லவோ! இனி, இடையொட்டுப் போகக் கடையொட்டையும் விட்டுவிட வில்லை. நூலின் மரபாக, “மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான” “மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்” “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” “மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின” “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்” “வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்” “வழியின் நெறியே நால்வகைத் தாகும்” “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே” இவ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது, “நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல் காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர். பின்னொட்டு இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக்களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன். உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை. செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற் றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன. தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் : “சூத்திரம் தானே, ஆடி நிழலில் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே” என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது, “மேற்கிளந் தெடுத்த யாப்பின் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகி துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகையானும் பயன்தெரி வுடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்” என்பது (1600). இரண்டு நூற்பாக்களும் ஒருவர் நூற்றவை தாமா? முன்னே கூறியதைப் பின்னேயும் கூறியதும் ஏன்? கூறவேண்டியிருப்பின், ‘மேற் கிளந்தன்ன’, ‘முற்கிளந்தன்ன’ என்று கூறுதல் அன்றோ, ‘அவர் நூன் முறை’. ஆய்ஞர் முடிபு இத் தொல்காப்பிய ஆய்வில் தலைப்பட்ட புலமைச் செல்வர் இருவர் கருத்துகளை நாம் அறிதல் இம் மரபியல் ஒட்டின் தெளிவுக்கு உதவும். “மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தால் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந் நாட்டில் பிற்றை நாளில் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப்பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற்காலத்தவரால் நுழைத்து உரைக்கப்பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் இவ்வியலில் 1 முதல் 70 வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன. ஒன்றற்கு ஒன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களின் இடையே, “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதல், “அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும், சிறிதும் தொடர்பற்ற நிலையிற் பின்வந்தவர் ஒருவரால் நுழைக்கப்பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடையார்க்கும் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ் வியலில் சேர்க்கப்பட்டனவாக ஐயுறுதற் குரியனவும் சில உள” என்பது முதுநூற் புலமையர் க. வெள்ளைவாரணனார் எழுத்து (தொல்காப்பியம் - தமிழிலக்கிய வரலாறு பக். 16). தமிழ்நெறிக் காவல் நூலாக எழுந்த தொல்காப்பியத்தை, ஆரிய வழி நூலாகக் காட்டி மாசு ஏற்றினோர் தம், மாசு துடைக்க என்றே தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தும், விரிந்த ஆய்வுரை வரைந்தும், அதனாலேயே முனைவர் பட்டம் பெற்றும் தமிழ்ப் பெருங்காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. இலக்குவனார், “மரபுகளை விளக்கும் இம் மரபியல், ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக் கோப்புக்கு உட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறைபிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச்செருகல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றது” என்கிறார் (தொல்காப்பிய ஆராய்ச்சி. 249). மெய்ம்மை காண இப் பெருமக்கள் மேலாய்வு துணையாம் என்பதால் இவண் எடுத்துக்காட்டலாயிற்று. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் தமிழர் வாழ்வியலே யன்றி அயலவர் வாழ்வியல் பற்றியதுமன்று; ஒட்டியதுமன்று என உறுதிப்படுத்துவோமாக. - இரா. இளங்குமரன் பேராசிரியர் தொல்காப்பியப் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை கிடைத்துள்ளது. பேராசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்பது வெளிப்படை. அவர் இயற்பெயர் தெரிந்திலது. பேராசிரியர் பலர் சிறப்புப் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருதல் வேண்டும் என இலக்கணம் கண்டது தொல்காப்பியம். அதன்படி பேராசிரியர் இன்னவர் என்பதில் `இன்னவர்' என்பது குறியாமல், சிறப்புப் பெயராலேயே உலகு விளங்கும் நிலைமை உண்டாயிற்று எனக் கொள்ளலாம். பாலாசிரியர், இளம்பாலாசிரியர், ஆசிரியர், கணக்காயனார் என்னும் சிறப்புப் பெயர்களை அடுத்துள்ள இயற்பெயர்கள் பல, சங்கச் சான்றோர் பெயர் வரிசையில் இடம் பெற்றிருப்பதை அறிவார், இதனைத் தெளிவார். பேராசிரியர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் தமிழ்ப் பரப்பில் பலருளர். ஒருவர், பேராசிரியரால் சுட்டப்படும் ஆத்திரையன் பேராசிரியர். அவரை, "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்" என்கிறார் (தொல். மர. 98) தொல். உரை கண்ட பேராசிரியர். இப்பாயிரத்தை முழுமையாகச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் காட்டியுள்ளார். இவ்வாத் திரையன் பேராசிரியரே பேராசிரியப் பெயருடையாருள் பழையர் எனலாம். திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் மற்றொருவர். அவர் தொல்காப்பிய உரை கண்ட பேராசிரியரின் வேறானவர் என்பது கோவையைப் பற்றி எழுதுமிடத்தும், திருக்கோவையாரைச் சுட்டாமை யாலும், எடுத்துக்காட்டாக எங்கும் காட்டாமையாலும் விளங்கும். மயேச்சுரர் என்பாரும் பேராசிரியர் என்னும் பெயருடன் விளங்கு கின்றார். யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் பாராட்டப்படுபவர் அவர். இவ்வாறே நேமிநாதரும் பேராசிரியர் எனப்படுவார். குறுந்தொகைக்கு உரை கண்ட பேராசிரியர் ஒருவர் அறியப்படு கிறார். அவருரை கிடைத்திலது. கிடையாத உரை கொண்டு ஆய்வு செய்து `அவர் இவர்' எனல் தீர்வு ஆகாது. பேராசிரியர் உரை முதற்கண், நச்சினார்க்கினியர் உரை என்றே தொல்காப்பியப் பதிப்பாளர் சி.வை. தாமோதரனாரால் குறிக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் எழுதிய அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் இயல்களுடன் இணைத்துப் பதிப்பிக்கவும் பட்டது. அவ் வுரையுள் மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு ஆகிய நான்கு இயல்களும் பேராசிரியருரை என்பதைச் செந்தமிழ் ஆசிரியர் இரா. இராகவ ஐயங்கார் ஆய்ந்து செந்தமிழ் இதழில் வெளிப்படுத்தினார். நச்சினார்க்கினியரின் செய்யுளியலுரைப் பதிப்பிலும் விளக்கினார். இவ்வாறு உரையாசிரியர் பெயரை அறிதலிலும் சிக்கலுண்டாயிற்று. பேராசிரியர் உரை பேராசிரியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரைகண்டவர் என்பது புலப்படுகின்றது. மெய்ப்பாட்டியல் 18ஆம் நூற்பா உரையில் `களவியலுட் கூறினாம்' என்கிறார். அடுத்த நூற்பா உரையிலும், செய்யுளியல் முதல் நூற்பா உரையிலும் முறையே `அகத்திணையியலுட் கூறினாம்' என்றும், `அகத்திணையியலுட் கூறிவந்தாம்' என்றும் கூறுகிறார். இவ்வாறே கற்பியல், புறத்திணையியல் ஆகியவற்றைச் சுட்டிய இடங்களும் உள. இவற்றால் பொருளதிகாரம் முழுமைக்கும் இவர் உரை கண்டார் என்பதை அறிந்து கொள்ள வாய்க்கின்றது. பேராசிரியர் வரைந்த முதலைந்து இயல்களின் உரையும் கிடையாமல் போகவே, கிடைத்த உரைப்பகுதியின் முகப்பில் உரை கண்டவர் பெயர் இல்லாது போய்விடுதல் இயல்பு. ஆனால், விழிப்புடைய சிலர் ஒவ்வோர் இயல் முகப்பிலும் `இன்னவர் உரை' என்று வரைவதுண்டு. அவ்வகையில் மெய்ப்பாட்டியல் முகப்பேட்டில் `பேராசிரியர் உரை' என்னும் குறிப்பு இருந்தமை நல்வாய்ப்பாக அறிஞர் இரா. இராகவ ஐயங்கார்க்கு வாய்த்தமை பேரறிய வைத்தது. மற்றொரு குறிப்பும் அவர்க்குத் துணையாயிற்று. மெய்ப்பாட்டியல் முதலாய நான்கு இயல்களின் தொடக்கத்திலும், “இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின்?” என்று உள்ளமை நச்சினார்க்கினியர் உரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலைக் கண்டு கொண்டார். நச்சினார்க்கினியர் உரை இவ்வாறு இயலாமை அவருரையால் தெளிவாதலைச் சுட்டிக் காட்டி நிறுவினார். காலம் பேராசிரியர் இளம்பூரணர், இறையனார் களவியலுரைகாரர், யாப்பருங்கல விருத்தியார், தண்டியலங்காரர் ஆயோர்க்குப் பிற்பட்டவர் என்பதற்கு நூற்சான்றுகள் பலவுள்ளன (மெய்ப். 25; உவம. 37.). நச்சினார்க் கினியர் இவரைச் சுட்டிக் காட்டி வரைதலானும், பரிமேலழகர் பேராசிரியர் உரையை மறுத்து எழுதுதலானும் (திருக். 632) அவர்கட்கு இவர் காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாம். ஆகலின் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் பேராசிரியர் என்க. சமயம் பேராசிரியர் கொண்டிருந்த சமயம் இன்னதென வெளிப்பட அறிய வாய்ப்பில்லை; எனினும், இவர் சிவவழிபாட்டினர் என்பது அறிய வாய்க்கின்றது. அச் சிவ வழிபாடும் நெகிழ்வுடையதாய் அமைந்துள்ள நிலைமையும் புரிகின்றது. "வாழ்த்தியல் வகையே" என்னும் செய்யுளியல் நூற்பாவில் (109) வாழ்த்தப்படும் பொருளாவன, கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன; அவற்றுட் கடவுளை வாழ்த்தும் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும்" என்று கூறி நற்றிணையிலும் அகநானூற்றிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் முன்னது திருமாலைப் பற்றியது; பின்னது சிவனைப் பற்றியது. அடுத்துவரும் "வழிபடு தெய்வம்" என்னும் புறநிலை வாழ்த்து நூற்பாவுரையில் காட்டிய "இமையா முக்கண்", "திங்கள் இளங்கதிர்" என்பன சிவனைப் பற்றியவை. இவ்விரண்டும் இவர் இயற்றியவை என்று அறியத்தக்க பாடல்கள். மேலும், கொச்சக ஒரு போகில் (செய். 149) இவர் காட்டும் எடுத்துக் காட்டுகள் பெரும்பாலும் இவர் பாடியனவே என்று அறியக் கிடக்கின்றன. அவற்றுள் பலவும் சிவபெருமான் பற்றியவை. திருமால், மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார் பற்றியும் பாடி யுள்ளார். இதே நூற்பாவுரையில் இளம்பூரணர் கலித்தொகைப்பாக் களையே எடுத்தாண்டமைகிறார் என்பது ஒப்பிட்டுக் காணற்குரியது. கடவுளை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஆவை வாழ்த்து தல், பார்ப்பாரை வாழ்த்துதல், அரசரை வாழ்த்துதல், மழையை வாழ்த் துதல், நாட்டை வாழ்த்துதல் என்பன பழந்தமிழர் வழிவழிக் கொண் டொழுகிய வழிபாட்டியல்பினவே என்பதைச் சங்கச் சான்றோர் நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் வழியே அறிந்து கொள்ளலாம். `பார்ப்பார் வழிபாடும்' அத்தகைத்தோ எனின், "பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்" என்னும் பேராசிரியர் உரையே தெளிவிக்கும் (செய். 189). `அறிவன் தேயம்' (புறத். 16) என்பதில் வரும் `அறிவன்' என்பதற்குக் `கணியன்' என உரையாசிரியர் வரைந்ததையும் அறிந்து கொள்க. ஆகலின் அறிவன் வழிபாடு அஃது என்றும், பார்ப்பான் என்னும் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதலையும், அவ்வாறே `அந்தணன்' என்னும் சொல் இருத்தலையும் எண்ணின் இவை தமிழ் நெறிய வழிபாடுகளே என்பது விளங்கும். விளங்கவே பேராசிரியர் தமிழ் நெறி வழிபாட்டாளர் என்பது உறுதியாம். ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டாக இவர் கூறுதலால் இவர் ஆரியரல்லர்; இப் பார்ப்பார் ஆரியரில் வேறாவர் என்பது தெளிவாம். மேலும் "வினையின் நீங்கி" என்னும் நூற்பாவுரையில் (மர. 94), "பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவ தென்பது" என்று இவர் வரைவதும், `சேவற் பெயர்க்கொடை' என்னும் நூற்பா (மர. 48) உரையில், "மாயிருந்தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையனவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க; எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது" என்று வரைவதும் கருதத் தக்கன. இவை கட்டாயமாக நூற்பாப் பொருள் கூறும் வகையிலோ, அந்நூற்பாத்தொடரை விளக்கும் வகையிலோ அமைந்தவை அல்ல; உரையாசிரியர் தம் பற்றுமைச் சான்றாக வெளிப்பட்டு நிற்பனவாம். `இறையனார்' என்பது நூல்யாத்தவர் பெயராகக் குறிக்கப்பட்டிருக்கவும் `பெருமானடிகள்' என்றது இவர் தம் உணர்வு வெளிப்பாடேயாம். இவையும் பேராசிரியர் சமய உட்கிடைப் பொருளாவனவாம். நூலாசிரியரை மதித்தல் ஆசிரியர் தொல்காப்பியர் குறித்தும் அவர்தம் நூல்வழி குறித்தும் சில குறிப்புகளைப் போராசிரியர் சுட்டுகிறார். `எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது (தொல்காப்பியம்) முன்னூலாதலின் இவரோடு (தொல்காப்பியரோடு) மாறுபடுதல் மரபன் றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடுதல் அஃது அவர்க்கும் மரபன்று என்பது' என்னும் உரைப்பகுதி தொல்காப்பியர் ஆணை வழிநிற்கும் இவர்தம் செவ்வியைப் புலப்படுத்தும் (செய். 140). மேலும், "நண்டிற்கு மூக்குண்டோ எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம்" என்னும் இவருரை (மர. 31) அவர்தம் ஆணையே ஆணை யெனக் கொண்டு உரை எழுதியமை காட்டும். அகத்தியமே முதனூல் என்றும், அதன் வழிநூல் தொல்காப்பியமே என்றும் அதனை மறுத்துக் கூறுவது வேதவழிப்படாத இக்காலத்தார் கூற்று என்றும், இறந்த காலத்துப் பிற பாசாண்டிகளும் (வேத வழக்கொடு மாறுபட்ட சமயத்தார்) நான்கு வருணத்தொடு பட்ட சங்கச் சான்றோரும் அது கூறார் என்றும் கூறுகிறார். மேலும் இக்கூற்றுக்குச் சான்றானவற்றை விரித்து விளக்கும் பேராசிரியர், "கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார் ஆகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோகினார் (சான்றுரைத்தார்) ஆகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராக லாற் பொய் கூறார் ஆகலானும் என்பது" என்கிறார். பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுச் சான்று களையும் இவ்விடத்தே வரிசைப்படுத்திக் காட்டித் தம் கருத்தை நிறுவுகிறார் (மர. 94). தொல்காப்பியம் முன்னூல் எனக் கூறும் பேராசிரியர், "மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ எனின், அவை வழிநூலே; தொல்காப்பியத் தின்வழித் தோன்றின என்பது" என்றுரைத்துப் பல்காப்பியம் காக்கைபாடினியம் இவைபற்றியெல்லாம் நிறுத்தி ஆய்ந்து கருத்துரைக் கிறார் (95). இத்தகைய அருமைப்பாடுகளையும், உரைநயங்களையும், தமிழ்நடை நலங்களையும் கண்ட பட்டறிவால், "பிறர்தம் உரை நெறிகளிலும் இவர்தம் உரைநெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமை யெய்தியிருக்கும்" என முனைவர் வ.சுப. மாணிக்கனார் பாராட்டுகிறார் (தொல்காப்பியத்திறன், பக். 23). செய்யுளியல் இடமாற்றம் செய்யுளியல், பொருளதிகாரத்தின் எட்டாம் இயல். இறுதியியல் மரபியல். சிலர் செய்யுளியலை இறுதியியலாகக் கொண்ட முறையும் பேராசிரியர் காலத்தில் இருந்தது என்பதை அவருரையால் அறிய வாய்க்கின்றது. "இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்கும் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித் தல்லது அவற்றைக் கூறும் இலக்கணம் கூறலாகாமையின் என்பது. இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப" என்கிறார் (மர. 93). இக்குறிப்பால், செய்யுளியல் ஒன்பதாம் இயலாக இருந்ததென்றும், அதனொடு நூல், நூல்வகை, உரை பற்றிய நூற்பாக்கள் அதன் நிறைவில் இருந்தன என்றும் எண்ணுதற்கு இடனுள்ளது. இதனை மேலாய்வு செய்தல் வேண்டத்தக்கதாம். முறை வைப்பு பேராசிரியர் ஓரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறை வைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார். `மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோ எனின்' என்று மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் விளக்குகிறார். `நகையே அழுகை' எனத் தொடங்கும் மெய்ப்பாட்டியல் நூற்பா விளக்கத்தில் மேல் வரும் எட்டு வகை மெய்ப்பாடுகளும் முறைமுறையே வைக்கப்படுதலின் அமைதியை விரித்துரைக்கிறார். ஒரு நூற்பாவொடு தொடரும் மஃறொரு நூற்பாவின் தொடர்பு காட்டுவதாக இவை அமைகின்றன. "பாராட் டெடுத்தல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 16), "புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரோடு கூற்று நிகழாமையானும், அக் கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றம் கோடலின்மையானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளாம் ஆகலானும் அம்முறையான் வைத்தான் என்பது" என்கிறார். இவ்வாறு முறைவைப்புக் கூறுதலால், நூற்சிறப்பை நன்கு வெளிப்படுத்துகிறார் பேராசிரியர். வரையறை ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் வரையறைப்படுத்திக் கூறும் நெறியை மேற்கொள்கிறார் பேராசிரியர். அச்சச் சுவையைக் கூறும் பேராசிரியர், "தன்கட்டோன்றலும் பிறன்கட்டோன்றலும் என்னும் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும்" என்பதும் (மெய்ப். 7), சமனிலை என்பது, "உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் ஈண்டு உலகியல் வழக்கினுட் சொல்லிய திலன்" என்பதும் போல்வன வரையறைச் சான்றுகள். வகைப்படுத்துதல் வகைப்படுத்திக் கூறுதலும் பேராசிரியர் மேற்கொண்ட நெறிகளுள் ஒன்று. "நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப'' என்றும் (மெய்ப். 3), "முன்னம் என்பது உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்" என்றும் (செய். 1) வரும் இன்னவை வகைப்படுத்திக் கூறற் சான்றுகள். நூற்பா அமைதி காட்டல் ஒரு நூற்பாவின் யாப்புறவை மற்றொரு நூற்பாவின் யாப்புறவுடன் இயைத்துக் கூறுதலையும் பேராசிரியர் மேற்கொள்கிறார். "தெய்வமஞ்சல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 24) "பதினொன்றனை எண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை, `ஒன்பதும் குழவியோடிளமைப்பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றியுரைக்கப்படும்" என்கிறார். உரை நூற்பா தாமே உரை நூற்பா வகுத்துக் கூறுவதுபோல் கூறும் இடங்களும் பேராசிரியர் உரையில் உள. அவற்றுள் ஒன்று: இருவகை நிலனென்பன, `உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்' அன்றோ எனின், என்று அமைத்துக் கொண்டு, அதனை விளக்குதலால் அவர் உரை நூற்பா யாத்து விளக்குதல் அறியப் பெறும் (மெய்ப். 1). இவ்வாறே `நிரனிறுத் தமைத்தல்' என்னும் நூற்பா உரையில் (உவம. 37) `அகனமர் கேள்வன்' என்றோர் நூற்பா வகுத்து `அதன்மேல்' என்றோர் சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது" என்பார். அதுவும் அது. பாடம் கூறுதல் `கூற்று வகை' என்பதற்குக் `கூற்றிவை' எனப் பாடமுண்மையைச் சுட்டும் பேராசிரியர், "இவை என்பது பாடமாயின் எண்ணிய மூன்றனையும் தொகுத்தவாறே பிறிதில்லை" என்கிறார் (செய். 1). இவ்வாறு பாடம் கூறலும் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்றாம். வேற்றுமை கூறுதல் வேற்றுமை கூறுதலையும் ஒரு நெறியாகப் பேராசிரியர் கொண் டுள்ளார். அவற்றுள் ஒன்று: "குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்" என்கிறார் (மெய்ப். 25). மறுப்புரை மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச்சிறப்புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலைநாட்டல் அவர்தம் முறைமை. தளை என்பதோர் உறுப்புக் கொள்வாரை மறுத்துரைத்தல் அதற்கொரு சான்றாம் (செய். 1). பிறருரை தாம் உரைக்கும் மரபுவழி உரைக்கு வேறுவகையாலும் உரை கூறுவாரை `இன்னொரு சாரார் இவ்வாறுரைப்ப' என்பார் பேராசிரியர் (செய். 11). ஆசிரியர் கூறும் இவ்விலக்கணம் பிறரால் இப்பெயரால் கூறப்படும் என்பதையும் சுட்டுதல் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்று. வடநூலாசிரியர் வழிமுறை இன்னதெனக் காட்டலும் உண்டு. அசையும் சீரும் இசையொடு சேர்த்துதல் என்பதை வகையுளி என்று பிறர் கூறுவதைச் சுட்டுதல் முன்னதற்கு எடுத்துக்காட்டாகும் (செய். 11). குரு, இலகு என்பவற்றைச் சுட்டிப் பிரத்தாரம் முதலாக எடுத்துக் காட்டுவது பின்னதற்குச் சான்று (செய். 51). சொற்பொருள் விளக்கம் சொற்பொருள் விளக்கம் தருதலில் பேராசிரியர் தனிச்சிறப் புடையவர். இவர் தரும் சொல் விளக்கத் தூண்டல் வழியாகவே "உரை யாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்" என்றொரு நூல் எம்மால் தொகுக்கப்பட்டது. அதன் முன்னுரையில் "மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப்பேராசிரியர் தரும் சொற்பொருள் விளக்கம் `நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து' தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே (ஆண்டு 1951) சொற்பொருள் விளக்கவித்து என்நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது" என்பது அது. அப்பேராசிரியர் உரையால் நாம் முதற்கண் பெறவாய்த்தது `மெய்ப்பாடு' என்னும் சொல்லின் விளக்கம். "மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல்" என்பது (மெய்ப். 1). "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" என்னும் நூற்பாவில் (மெய்ப். 9), "வீரத்தைப் பெருமிதம் என்றெண்ணினான். என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கென்பது. கல்வி என்பது, தவமுதலாகிய விச்சை. தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமை. இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடை என்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல்" இவ்வாறு பன்னூறு சொற்களுக்கு விளக்கம் வரைகிறார் பேராசிரியர். பேராசிரியர் சால்பு நூலாசிரியர் எண்ணத்தைத் திட்டமாகத் தெளிய முடியாத இடத்தில் தாம் பொருள் கொள்ளும் முறையால் அவர்க்குக் குறை நேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சத்தால், `நாம் பகுத்து எண்ணிக் கொண்டாம்' எனத் தம்மேல் அக்கருத்துடைமையை அள்ளிப் போட்டுக் கொள்ளுதல் பேராசிரியர், `பேராசிரியரே' என்பதை மெய்ப்பிக்கும் சான்றாம். `பிறப்பே குடிமை' என்னும் றூற்பா, ஒன்பது பொருள்களை எண்ணுகின்றது. அதனைப் பத்தாக்கிக் கொள்கிறார் பேராசிரியர். அதனால், "இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமாறு என்னை எனின், காமவாயில் எனப்பட்ட இயற்கையன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையானும் குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினான் ஆயினும், உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்து எண்ணிக்கை கொண்டாம் என்பது. என்னை? “வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு” என்புழி, `கற்றறிதல்' என்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாகலின்" என்கிறார். (மெய்ப். 24). சிறப்புப் பெயர்கள் பேராசிரியரின் பரந்த புலமை பெரிது. அதனை இவர் சுட்டும் நூற்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் காட்டும். அகத்தியர், அம்மானைப்பாடல், அவ்வையார், ஆனந்தவுவமை, இசைக்கூத்து, எழுகூற்றிருக்கை, ஏகபாதம், ஏழிற்கோவை, ஐயனாரிதனார், கட்டளைக் கலி, கடகண்டு, கடைச்சங்கத்தார், கலம்பகம், கலித்தொகை (நூற்றைம்பது கலி), களவியல், காக்கை பாடினியார், கானப்பேர், குறிஞ்சிப் பாட்டு, கைக்கிளைப் படலம், கொங்குவேளிர், கோவை, சக்கரம், சகரர், சங்கச்சான்றோர், சாய்க்காடு, சிற்றிசை, சிறுகாக்கை பாடினியார், சீத்தலைச்சாத்தனார், சுழிகுளம், தகடூர் யாத்திரை, நக்கீரர், நரிவெரூ உத்தலையார், நாடகச் செய்யுள், பட்டிமண்டபம், பதினெண்கீழ்க்கணக்கு, பரணி, பரிபாடல் (பரிபாடல் எழுபது), பாட்டும் தொகையும், பாட்டு மடை, பாவைப்பாடல், பெருந்தேவனார் பாரதம், பெருமானடிகள் (இறையனார்), பேரிசை, பொய்கையார், மாலை,. மிறைக்கவி, முத்தொள் ளாயிரம், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யாப்பதிகாரம், வஞ்சி, வசைக்கூத்து, வரி, விளக்கத்தார் கூத்து என்பனவும் பிறவும் இவர் சுட்டிச் சொல்லும் சிறப்புப் பெயர்கள். உலகியலறிவு பேராசிரியர் கொண்டிருந்த உலகியலறிவு ஆங்காங்கு அறியக் கிடக்கின்றது. ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு கிறார் (மெய்ப். 1). சாதித்தருமம் போற்றுதலைக் குறிக்கிறார் (மெய்ப். 12). காடுகெழு செல்வி (காளி) வழிபாட்டைப் பல இடங்களில் கூறுகிறார் (மெய்ப். 12; செய். 149). நான்கு வருணங்களைக் குறிக்கிறார் (மெய்ப். 25). தமிழில் மந்திரப்பாட்டு இருந்ததைச் சுட்டுகிறார் `(செய். 158; 178). `ஆரியம் நன்று தமிழ் தீது' என்றவன் சாவவும், உயிர்த்தெழவும் பாடிய பாட்டுகளை யுரைத்து, இவை "தெற்கண் வாயில் திறவாதபட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்" என்று குறிப்பு வரைகிறார் (செய். 178). சீட்டுக்கவி வரைதல் வழக்கை `ஓலைப்பாயி (சு)ரம்' என்கிறார் (செய். 149). அவ்விடத்திலேயே களம்பாடு பொருநர் கட்டுரை, தச்சு வினைமாக்கள் சொற்றொடர் என்பவற்றையும் குறிப்பிடு கிறார். "ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடியது", "சிறுகுரீஇயுரை", "தந்திரவாக்கியம்" என்பவற்றையும் (செய். 173), யானை, கமுகு, நெருப்பு என்னும் பொருள் தரும் விடுகதைகளையும் (செய். 176), குறிப்பு மொழிக்கு `யானை' என்பதையும் (செய். 179) இவர் எடுத்துக் காட்டுப் பாடல்களால் கூறுதல் அக்காலத்து மக்களிடை வழங்கிய வழக்கின் தொகுப்பு எனற் பாலன. புலவுத் துறந்த துறவோர் பொய் கூறார் என்று கூறுவதால் அக்காலத் துறவோர் சிறப்பும் (மர. 94), புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம் என்னும் உளவியல் செய்தியும் (மெய்ப். 12) கூறும் பேராசிரியர் உலகியல் திறம் பெரிதென அறியலாம். இலக்கிய வன்மை `புகுமுகம் புரிதல்' முதலாக வரும் மெய்ப்பாடுகள் அனைத்துக்கும் முறையாய் அமைந்த எடுத்துக் காட்டுப் பாடல்கள் பேராசிரியர் இயற்றியன என்றே கொள்ள வாய்க்கின்றன; இவர்தம் இலக்கியப் படைப்புச் சீர்மையை விளக்குவனவாக அமைகின்றன. அன்றியும் இவர் சில இடங்களில் வரையும் உரையே பாவாக இயலுதல் காணக்கூடியனவாம். மெய்ப்பாட்டியல் பன்னிரண்டாம் நூற்பாவில், "பார்ப்பா ராயிற், குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின், எடுத்த கழுத்தொடும் அடுத்தமார்பொடும் நடந்து, சேறலும், இடைய ராயிற், கோற்கையும் கொடுமடி யுடையும் விளித்த வீளையும் வெண்பல்லு மாகித் தோன்றலும்" என்பதும், "அடக்கம் என்பது, ........ பணிந்த மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும் வாய் புதைத்தலும் முதலாயின" "வரைதல் என்பது, காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்" என்பதும் ஆகிய இவற்றைப் பார்த்த அளவான் எதுகை மோனைத் தொடை நலம் கெழும நடைபயிலுதல் தெளிவாம். - இரா. இளங்குமரன் பொருளதிகாரம் பேராசிரியம் 6 மெய்ப்பாட்டியல் மெய்ப்பாடு பிறர் வேண்டுமாற்றான் இத்துணைப் பகுதிப்படும் எனல் 249. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் மெய்ப் பாட்டியல் என்னும் பெயர்த்து, மெய்ப்பாடென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த்தாயிற்று. இதனானே ஓத்து நுதலியதூஉம் மெய்ப்பாடு உணர்த்துதலென்பது பெற்றாம். மெய்ப்பாடென்பது பொருட்பாடு. அஃதாவது, உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங் கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் என்றாயிற்று. மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோவெனின், மேலை ஓத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாற்றிற்குங், 'காட்டலாகாப் பொருள' (தொல். பொருள். 247) என்றவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப் பாட்டியலென வேறோர் ஓத்தாக வைத்தமையானே எல்லாவற்றோடும் இயைபுடைத்தென்பது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அம்மெய்ப்பாடு பிறர் வேண்டுமாற்றான் இத்துணைப் பகுதிப் படுமென்று உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும்- முடியுடை வேந்தருங் குறுநிலமன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப விளையாட்டி னுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்; கண்ணிய புறனே நானான்கு என்ப- அவை கருதிய பொருட் பகுதி பதினாறாகி அடங்கும், நாடக நூலாசிரியர்க்கு எ-று. அது முதனூலை நோக்கிக் கூறியவாறு போலும். முப்பத்திரண்டாவன யாவை யெனின்,ஒன்பது சுவையெனப் பட்டவற்றுள் உருத்திரம் ஒழித்து ஒழிந்த எட்டனையுங் கூறுங்கால், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தான் கண்ணீர் அரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண்வரும் வேறுபாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை எட்டொடுங் கூட்டி, ஒன்று நான்குசெய்து உறழ, முப்பத்து இரண்டாமென்பது. எனவே, சுவைப்பொருளுஞ் சுவையுணர்வுங் குறிப்பும் விறலுமென நான்காயின. விறலெனினுஞ் சத்துவமெனினும் ஒக்கும். சுவைப்பொரு ளென்பன, அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் கடுவும் உப்பும் புளியும் மிளகும் கரும்பும் போல்வன. அவையாமாறு; நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந் தமிழும், குருடரும் முடவருஞ் செல்லுஞ் செலவும், பித்தருங் களியருஞ் சுற்றத்தாரை இகழ்தலும், குழவி கூறும்மழலையும் போல்வன. அச்சப்பொருளாவன, "வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ ஈற்றா மதமா ஏக பாதம் கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம்" என்று சொல்லப்பட்டன போல்வன. இவற்றைச் சுவை கோடலென்பது என்னை யெனின், நகையும் அச்சமும் முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவை யெனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியுந் தலைப்பெய்த வழியல்லது கைப்புச் சுவை பிறவாததுபோல, அப்பொருள் கண்டவழி யல்லது நகையும் அச்சமுந் தோன்றா. ஒழிந்த காமம் முதலியனவும் அன்ன. இக்கருத்தேபற்றிப் பிற்காலத்து நாடகநூல் செய்த ஆசிரியரும், "இருவகை நிலத்தி னியல்வது சுவையே" (செயிற்றியம்) என்றாரென்பது. இனி, இருவகை நிலனென்பன உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதலன்றோவெனின், சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான், வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்புஅறிவினை நாவுணர் வினான் பிற னுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர் வினான் அறிவதன்றி. அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடிவருகின்றான்ஒருவனை மற்றொருவன் கண்டவழி இவன் வள்ளெயிற் றரிமா முதலாயின கண்டு அஞ்சினான் என்றறிவதல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று. தான் கண்டானாயின், அதுவுஞ் சுவையெனவே படும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போன் உய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் இருவகை நிலமெனப்படுவன சுவைப் பொருளுஞ் சுவைத்தோனுமென்ற இருநிலத்தும் நிகழுமென்பதே பொருளாதல் வேண்டுமென்பது. குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சிபோல, அஞ்சுதக்கது கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ளநிகழ்ச்சி. விறலென்பன, அவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின்றார்க்குத் தலை நடுங்குவது போலத் தாமே தோன்றும் நடுக்கம் முதலாயின. இவ்வகையான் இந் நான்கினையும் எட்டோடும் உறழவே முப்பத்திரண்டாயின. இனி, அவை பதினாறாயினவாறு என்னையெனின், வேம்பு முதலாயின பொருளும் அவற்றொடு நாமுதலாயின பொறியும் வேறு வேறு நின்றவழிச் சுவையென்று சொல்வதே பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலானும், அவை பதினாறும் எட்டெனப் படும்; இனிக் குறிப்புஞ் சத்துவமு மென்பன உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடும் என்பவாகலின் அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவமாதலின் அவை பதினாறும் எட்டாயடங்கு மாகலின், அவை ஈரெட்டுப் பதினாறாகு மென்பது. மற்றிவை பண்ணைத் தோன்றுவன வாயின், இப் பொருளோத்தினுள் ஆராய்வதென்னை? நாடக வழக்கந் தானே, ஒருவன் செய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக்கொண்டு பின்னர்ச் செய்கின்றதாதலானும், வழக்கெனப்படாதாதலானும் ஈண்டு ஆராய்வது பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாமென்பது கடா. அதுவன்றே, இச்சூத்திரம் பிறன்கோள் கூறலென்னும் உத்திவகையாற் கூறி, அதுதானே மரபாயிற்றென்பது. (1) அவை பதினாறாதலே அன்றி எட்டாதலும் உண்டெனல் 250. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. இது, மெய்ப்பாட்டின் அடக்கங் கூறுகின்றது. (இ-ள்.) முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலேயன்றி எட்டாதலும் உண்டு எ-று. அவை வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை நடுவுநிலை யென்பன. இவற்றின் விகாரமாகிய சத்துவங்களெட்டனையும் இவற்று ளடக்கி எட்டாக்கிக் கூறியவாறிதுவென்பது. நாலிரண்டாதலு முண்டென் னாது பாலென்றதனான் எட்டாதலேயன்றி அவை ஒன்பதாதற் பகுதியு முடையவென்பது; என்னை? "உருத்திரந் தன்னோ டொன்ப தாகும்" என்பவாகலின். உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் இவையும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கெனப்பட்டன. அவற்றுப் பகுதியென இதுவும் பிறன்கோட் கூறியவாறாயிற்று. மற்றிவற்றது பய னென்னையெனின், பொருளதிகாரத்துக் கூறுகின்ற வழக்கியலே அவையுமென்பது கூறி, அச்சுவைக்கு ஏதுவாய பொருளினை அரங்கினுள் நிறீஇ, அது கண்டு குறிப்புஞ் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிற்றந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வாராக வருகின்ற முறைமையெல்லாம் நாடக வழக்கிற்கே உரிய பகுதியெனவும், அப்பகுதியெல்லாம் ஈண்டுணர்த்தல் வேண்டுவதன்றெனவுங் கூறியவாறு. இங்ஙனம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுபவோவெனின், சொல்லுபவாகலினன்றே, அதன்வழி நூல்செய்த ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாகவடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென மூன்றாக்கி வேறுவே றிலக்கணங் கூறி அவற்றை, "எண்ணிய மூன்றும் ஒருங்கு பெறுமென நுண்ணிதின் உணர்ந்தோர் நுவன்றன ரென்ப" என்று ஓதினாராயிற்றென்பது. (2) எண்வகை மெய்ப்பாடு இவை எனல் 251. நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. இது, பிறர் வேண்டுமாற்றான் அன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இச்சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் எ-று. 1. நகையென்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப. 2. அழுகையென்பது அவலம். அஃது இருவகைப்படும். தானே அவலித்தலும், பிறர் அவலங் கண்டு அவலித்தலுமென. இவற்றுள் ஒன்று கருணையெனவும் ஒன்று அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலும் உரிய என்பது. 3. இளிவரலென்பது இழிபு. 4. மருட்கையென்பது வியப்பு; அற்புதமெனினும் அமையும். 5. அச்சமென்பது பயம். 6. பெருமிதமென்பது வீரம். 7. வெகுளியென்பது உருத்திரம். 8. உவகையென்பது காமம் முதலிய மகிழ்ச்சி. இவை அவ்வெட்டு மாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும் வழங்கினும் அமையும். மற்று நகையை முன்வைத்தது என்னை யெனின், 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் (249) இவை யென்னும் இயல்பில்லன வல்ல என்றற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தா னென்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரலை அதன்பின் வைத்தான், அழுகையும் இளிவரலோடு இயை புடைமையின். தான் இளிவந்து பிறிதொரு பொருளை வியக்குமாதலின் இளிவரலின்பின் வியப்பை வைத்தான். வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்த லின் அச்சத்தை அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின் வைத்தான். அவ்வீரத்தின் பயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன் பின்னே வைத்தான். வெகுளிக்கு மறுதலை யாகலானும் எல்லாவற்றினும் ஈண்டு ஓதுதற்குச் சிறந்ததாகலானும் முதற்கண் ஓதிய நகைக்கு இயைபு உடைத்தாகலானும் உவகையை ஈற்றுக்கண் வைத்தா னென்பது. இவ்வெட்டனுள் முதல் நின்ற நான்கும் முற்கூறுதற்கும் இறுதி நின்ற நான்கும் பிற்கூறுதற்குங் காரணம் வருகின்ற சூத்திரங்களானும் பெறுதும். மற்று இவ்வெட்டனொடுஞ் சமநிலைகூட்டி ஒன்பது என்னாமோ நாடக நூலுட்போல எனின், அதற்கு ஒரு விகாரம் இன்மையின் ஈண்டுக் கூறியதில னென்பது; அதற்கு விகாரமுண்டெனின் முன்னை யெட்டனுள் ளுஞ் சார்த்திக்கொள்ளப்படும். அல்லதூஉம், அஃது உலகியல் நீங்கினார் பெற்றி ஆகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லியதிலனென்பது. ஒழிந்த எட்டும் உலகிய லாகலிற் கூறினான், 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்' (தொல். சிறப்புப்பாயிரம்) என்று புகுந்தமையினென்பது. அவை எட்டும் ஆமாறு இனிக் கூறும். (3) நகைக்குறிப்பு நான்காவன 252. எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப. இது, நிறுத்தமுறையானே நகைக்குறிப்பு நான்கென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனும் எனக் கருதப்பட்ட நகை நான்கு எ-று. இவை நான்கும் பொருளாகிச் சத்துவமுங் குறிப்பும் சுவையும் என்னும் மூன்றற்கும் முதற்கண்ண ஆகலான் மூன்றனையும் அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறுகின்றவாறு இது வென்பது. இவை நான்கும் ஒன்று இரண்டாகி எட்டாதலும் உடைய. எள்ளலென்பது தான் பிறரை எள்ளிநகுதலும், பிறரான் எள்ளப் பட்டவழித் தான் நகுதலுமென இரண்டாம். இளமையென்பது தான் இளமையாற் பிறரை நகுதலும், பிறரிளமை கண்டு தான் நகுதலுமென இரண்டு. பேதைமை என்பது அறிவின்மை. மடமையென்பது பெரும் பான்மையுங் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. இவையுந் தன் பேதைமையான் நகுதலும், பிறன் பேதைமையான் நகுதலும், தன் மடமை யான் நகுதலும், பிறன்மடமையான் நகுதலுமென இவ்விரண்டாம். எள்ளலென்பது இகழ்ச்சி. "எள்ளி நகினும் வரூஉம்" (கலி. 61) என்பது, தன்கண் நிகழ்ந்த எள்ளல் பொருளாக நகைபிறந்தது. "நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே" (அகம். 248) என்பது பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் நகைபிறந்தது; என்னை? தன்மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்கவாறு. இது வெகுளிப் பொருளாக நக்கதன்றோ வெனின், அது வீரர்க்கே உரித்தாகல் வேண்டும்; இவள் அவளை வெகுண்டு தண்டஞ் செய்வாளல்லள், அதற்கே உவப்பி னல்லது என்பது. அல்லதூஉம், "நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்" (புறம். 72) என்றாற்போல வீரத்தெழுந்த வெகுளிநகையும் எள்ளல் நகையென்றே அடக்கவேண்டும் ஈண்டென்பது. "நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே." (கலி. 13) என்புழித் தன் இளமை பொருளாக நகை பிறந்தது. "திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன்" (கலி. 86) என்பதும் அது. அங்ஙனம் மகன் சிரித்தவழித் தாய்க்கு நகை தோன்றிற்றேல் அது பிறரிளமை பொருளாக நகை தோன்றிற்றாம். "நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்" (அகம். 16) என்பது பிறரிளமை பொருளாக நகை பிறந்தது. "நகைநீ கேளாய் தோழி" (அகம். 248) என்பது, தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது; என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமை யின். "நகையா கின்றே தோழி. . . . . . . . . . . . . . . . . மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே" (அகம். 56) என்பது பிறன் பேதைமை பொருளாக நக்கது. "நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே" (குறுந். 168) என்பது தன் மடத்தான் நகை தோன்றிற்று; என்னை? நீயிர் கூறியதனையே மெய்யெனக்கொண்டு மகிழ்ந்து நக்கனம் என்றமையின். "குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்" (குறள். 1095) என்பதும் அது, "நாம்நகை யுடையம் நெஞ்சே . . . . நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி." (அகம். 121) எனப் பிறர்மடம் பொருளாக நகை தோன்றிற்று, பிறவும் அன்ன. இவ் வோதப்பட்டவற்றுக்கெல்லாம் உவகை உரித்து. 'உள்ளப் பட்ட நகை நான்கு' என்றதனான் உள்ளத்தொடு பிறவாத நகையுமுள. அவை "வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்" (அகம். 5) என்றாற்போல வருவனவெனக் கொள்க. (4) அழுகைச்சுவைப் பொருள் நான்காவன 253 இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே. இது, முறையானே அழுகை யென்னுஞ் சுவையினைப் பொருள் பற்றி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இளிவும் இழத்தலும் அசைதலும் வறுமையுமென இந்நான்குபொருள் பற்றித் தோன்றும் அவலம் எ-று. இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது தந்தையுந் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசைவென்பது பண்டை நிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். வறுமையென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமாமென்பது. எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை - கேடில் கொள்கை. அங்ஙனங் கூறிய மிகையானே அழுகைக் கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு. அதனையும் அழுகைப்பாற் சார்த்தி உணரப்படும். "எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென வுருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலுநிற் காணிய சென்மே" (அகம். 176) என்பது, பரத்தையை நீ யெள்ளினையென்று அழுது வருகின்றாளென்று தலைமகற்குச் சொல்லியதாகலின் இது தன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. "கயமல ருண்கண்ணாய் காணா யொருவன்"(கலி. 37) என்னும் பாட்டினுள் "தானுற்ற நோயுரைக்கல்லான் பெயரும்மன் பன்னாளும்" எனத் தலைமகன் இளிவந்தொழுகுவது காரணமாகச் "சேயேன்மன் யானுந் துயரு ழப்பேன்" என்றமையின் இது பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. இது கருணையெனவும்படும். "மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே." (புறம். 249) என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத்தற்கு மெழுகுகின்றாளைக் கண்ணீரே நீராக மெழுகுகின்றாளென்றமையின் இது தன்கட்டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச் சுவையாயிற்று, "ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே." (புறம். 255) என்பதும் அது. "பின்னொடு முடித்த மண்ணா முச்சி" என்னும் பாட்டினுள், "அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்நோய்த் தலையையும் அல்லை தெறுவர என்னா குவள்கொல் அளியள் தானென என்னழி பிரங்கும் நின்னொ டியானும்" (அகம். 73) என்றவழித் தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாளெனச் சொல்லின மையின், இது பிறன்கட் டோன்றிய இழவுபற்றி அவலம் பிறந்ததாம். "துளியிடை மின்னுப்போல் தோன்றி யொருத்தி ஒளியோடு உருவென்னைக் காட்டி அளியளென் நெஞ்சாறு கொண்டாள் அதற்கொண்டுந் துஞ்சேன்." (கலி. 139) எனத் தன்கட் டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. "அள்ளிலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே." (புறம். 252) என்பது பிறன்கட் டோன்றிய அசைவுபற்றிய அவலம்; என்னை? `அள்ளிலைத்தாளி கொய்யாநின்றான் இது பொழுது' என அவலித்துச் சொல்லினமையின். "இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண" (புறம். 164) என்புழி, முலைப்பசை காணாது அழுகின்றது குழவியென்பது தன்கட் டோன்றிய வறுமைபற்றி அவலம் பிறந்தது. மகமுகனோக்கி அழுகின்றாள் என் மனைவி யென்பது பிறன்கட் டோன்றிய வறுமை பற்றிய அவலம். "இன்ன விறலும் உளகொல் நமக்கென மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை" (புறம். 19) என்புழி மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதாராயிற் கூற்றுக் கண்ணோ டாது ஆகலின் அவர் உவந்தனரென்பது பெற்றாம்; அதனானே அஃது உவகைக் கலுழ்ச்சியா மென்பது. (5) இளிவரல்சுவைப் பொருள் நான்காவன 254. மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. இது மூன்றாம் எண்ணு முறைமைக்கண் நின்ற இளிவரல் கூறுகின்றது. (இ-ள்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்எ-று. வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். 'யாப்புற வந்த' என்பது திட்பமுற வந்த என்றவாறு. அங்ஙனங் கூறிய மிகையானே, வீரம் முதலாயின பற்றியும் இளிவரல் பிறக்கும் என்றவாறு. இவையும் முன்னையபோலத் தன்கட்டோன்றுவனவும் பிறன்கட் டோன்றுவனவும் பற்றி எட்டாத லுடைய வென்பது கொள்க. "தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்று இரும்இடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரே மாகிய வெமக்கே" (புறம். 243) என்பது தன்கட் டோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக்காலத்து என்றமையின். "மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல" (அகம். 6) என்பதும் அது. "மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோடு யானே போர்த்தொழில் தொடங்க நாணுவல் அதனான்" என்பது பிறன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது. "இமயமுந் துளக்கும் பண்பினை துணையிலர் அளியர் பெண்டிரிஃ தெவனோ." (குறுந். 158) என்பது தன்கட் டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது; என்னை? மலையைத் துளக்கும் ஆற்றலையுடையாய்; காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவதன்றென இளிவந்து வாடைக்குக் கூறினமை யின். "குணகடற் றிரையது பறைதபு நாரை திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே" (குறுந். 128) என்பது நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் பிறன்கட் டோன்றிய பிணி யெனப்படும். இதனுட் "சேய ளரியோட் படர்தி" என்றமையின் இது பிறன்கட் டோன்றிய வருத்தமும் வந்ததாயிற்று. "யான்ற னறிவல் தானறி யலளே" (குறுந். 337) என்பது தன்கட் டோன்றிய வருத்தம்பற்றி வந்த இளிவரல்; என்னை? அது பின்னின்ற தலைமகன் கூறியதாகலின். "ஒன் றிரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லும்" (கலி. 47) என்பது பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றி வந்தது; என்னை? அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரலாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறை நயப்பித்தமையின். "வலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன்" (புறம். 239) எனத் தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றிய மென்மை பற்றி இளிவரல் பிறந்தது; என்னை? மெலியார் இளிவந்தன கூறுவராயினும் வலியார் மீக்கூறுவராயினும் இவன் அவை செய்யானென்றலின். "தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரலால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன்." என்பது வீரம்பற்றிய இளிவரல் பிறந்தது. இது தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றாமையின் இலேசினாற் கொண்டாமென்பது. (6) மருட்கைச்சுவைப் பொருள் நான்காவன 255. புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. இது, வியப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புதிதாகக் கண்டனவும், கழியப் பெரியனவாயினவும், இறப்பச் சிறியனவும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும்பற்றி வியப்புத் தோன்றும் எ-று. 'மதிமை சாலா மருட்கை' யென்பது அறிவினை உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமற் றிரித்து வேறுபடுத்து வருவதென்றவாறு, இவையு மெல்லாம் மேலனபோலத் தன்கட் டோன்றினவும் பிறன்கட் டோன்றினவு மென எட்டாதலுடைய. "மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே." (அகம். 82) என்பது தன்கட் டோன்றிய புதுமைபற்றி வியப்புப் பிறந்தது; என்னை? தன் கருத்து வெளிப்படாது தன்மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள்போலத் தோழிக்கு அறத்தொடு நின்றமையின். "மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியின் தோன்றும் நாடன்." (அகம். 82) என்றவழிப் பண்டு ஒருகாலுங் கண்டறியாதபடி ஆடிற்று மயிலென்ற மையிற் பிறபொருட்கட் டோன்றிய புதுமையாயிற்று. "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே." (குறுந். 3) என்பது பெருமை பற்றிய வியப்பு; என்னை? கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை முறையாற் பெருகற்பாலதாகிய நட்பு மற்றவனைக் கண்ணுற்ற ஞான்றே நிலத்தினகலம் போலவும் விசும்பின் ஓக்கம்போலவுங் கடலின் ஆழம் போலவும் ஒருகாலே பெருகிற்று என்றமையின். இது தன்கட் டோன்றிய பெருமை வியப்பு. இது தலைமகன் கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறன்கட் டோன்றிய பெருமை வியப்பாமென்பது கொள்க. "மைம்மலர் ஓதி மணிநகைப் பேதைதன் கொம்மை வரிமுலை யேந்தினும் - அம்ம கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதை இடையிற் சிறியதொன் றில்" என்பது பிறன்கட் டோன்றிய சிறுமை வியப்பு. தன்கட் டோன்றிய சிறுமை வந்துழிக் காண்க. "எருமை யன்ன கருங்கல் லிடைதோறு ஆனிற் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும" (புறம். 5) என்பது நரிவெரூஉத்தலையார் தம்முடம்பு பெற்று வியந்து கூறிய பாட்டாகலின் இது தன்கட் டோன்றிய ஆக்கம் பற்றி வியப்புப் பிறந்த தாயிற்று. "உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு" (நாலடி. 28) என்பது பிறபொருளாக்கம் பற்றிய வியப்பு. இனி, 'மதிமைசாலா மருட்கை' என்றதனானே சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தலும், பெருமைப்பொருள் சிறு தொழில் செய்தலும் வியப்பாமெனக் கொள்க. "கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு" (புறம். 7) என்னும் பாட்டுச் சிறியோர் பெருந்தொழிலைச் செய்தது. "அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய்." (கலி. 47) என்பது பெரியோன் சிறு தொழில் கூறலின் வியப்பாயிற்று. புதுமையை ஆக்கத்துளடக்கி முதுமை யென்பது பாடமாகவும் உரைப்ப. அன்னதொரு வழக்கின்மையானும், புதுமை ஒன்று ஒன்றாய்த் திரியுமெனப்பட்ட அவ்வாக்கத்துள் அடங்காமையானும் அஃதமையா தென்பது. இங்ஙனம் இவை நான்கு சூத்திரப் பொருளும் நானான்கு பதினாறாகியும் முப்பத்திரண்டாகியும் விரியுமாகலின் இவற்றை ஓரின மாக்கி முதற்சூத்திரத்து முன் வைத்தானென்பது. இனி வருஞ் சூத்திரம் நான்கினும் எண்ணப்படும் பொருள், ஒன்று இரண்டாகாமையின் அவை பதினாறேயா மென்பது. அஃதேயெனின் இத்துணையுங் கூறி வந்த முப்பத்திரண்டனையும் இனிக் கூறும் பதினாறனையும் நோக்கி முதற் சூத்திரத்துள், "பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப" (தொல். மெய்ப். 1) என்றானென்னாமோவெனின், என்னாமன்றே; பதினாறு பொருளும் மேற்கூறிய முப்பத்திரண்டுமென்று படாமையினென்பது. என்றார்க்குத் தன்கட் டோன்றுதல் பிறன்கட் டோன்றுதலெனப் பகுத்துப் பொருளுரை யாது, மேலனவும் இனி வருகின்றனவும் நானான்கேயாகலாற் 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்' (249) என்றானாமெனின் அங்ஙனங் கூறின் அவை " கண்ணிய புறனே நானான் கென்ப" (249) என்றும், 'நாலிரண் டாகும் பாலுமா ருண்டே' (தொல். பொ. 250) என்றும் மடங்கக் கூறல் வேண்டாவாம்; வேண்டவே, இச்சூத்திரம் எட்டுவகை யாகியேசெல்லு மெனமறுக்க. அல்லதூஉம்இஃதுஉலகவழக்காதலிற் பண்ணைத் தோன்றிய பொருள் ஈண்டு ஆராயானென்பது. அன்றியும் இவற்றைப் பண்ணைத் தோன்றிய பொருளெனின் ஒன்றொன்றாக்கிக் கூறாது கூத்தன் அரங்கினுள் இயற்றும் வகையானே சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென வேறு வேறு செய்வான் ஆசிரியனென்பது. (7) அச்சச்சுவைப் பொருள் நான்காவன 256. அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. இது, முறையானே அச்சமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தெய்வமும் விலங்குங் கள்வருந் தமக்கு இறைவராயி னாருமென நான்கு பகுதியான் அச்சம் பிறக்கும் எ-று. அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகியனவும், பதினெண் கணனும் நிரயப்பாலரும் பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும், உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன அரிமா முதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார் தீத் தொழில் புரிவார். இறையெனப்படுவார் தந்தையாரும் ஆசிரியரும் அரச ரும் முதலாயினார். 'பிணங்கல்சாலா அச்ச'மென்றதனான், முன்னைய போல இவை தன்கட் டோன்றலும் பிறன்கட் டோன்றலு மென்னுந் தடுமாற்ற மின்றிப் பிறிது பொருள்பற்றியே வருமென்பது. உ-ம். "யானை தாக்கினு மரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை." (பெரும்பாண். 134 - 136) என்பதனுள் அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று. "ஒரூஉநீ யெங் கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணுங் கடை." (கலி. 87) இது கள்வர் பொருளாக அச்சம் பிறந்தது; என்னை? அவனைக் கள்வர்பாற் சார்த்தி உரைத்தமையின். "எருத்துமே னோக்குறின் வாழலே மென்னும் கருத்திற்கை கூப்பிப் பழகி - யெருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லாற் கடுமான்தேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறியா வேந்து." இஃது, இறைபொருளாக அச்சம் பிறந்தது. பிணங்காத அச்சமென்னாது 'சாலா அச்ச' மென்ற மிகையான், இந் நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க. "சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின் ஆணை கடக்கிற்பார் யார்." (கலி. 81) என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது, "அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக் கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை." (அகம். 236) எனவும், "அச்சா றாக வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்." (கலி. 75) எனவும் வருவனவும் அவை. பிறவும் அன்ன. (8) பெருமிதச்சுவைப் பொருள் நான்காவன 257. கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே இஃது ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கல்வியுந் தறுகண்மையும் புகழுங் கொடையுமென்னும் நான்கும் பற்றி வீரம் பிறக்கும் எ-று. இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்; என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற்கென்பது. கல்வி யென்பது தவ முதலாகிய விச்சை. தறுகண் என்பது அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை யென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல். உ-ம். "வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டி யவள்." (கலி. 141) என்பது கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கல்லாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின். "அடன்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேல் மன்றம் படர்வித் தவள்." (கலி. 141) என்பது தறுகண். "கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்." (அகம். 112) என்பது புகழ். "வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை யிரவூக்கும் இன்னா இடும்பைசெய் தாள்" (கலி. 141) என்பது கொடை. "தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக." (புறம். 43) என்பதும் அது. 'சொல்லப்பட்ட பெருமித' மென்றதனாற் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க. "பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே" (புறம். 73) என்பது காமம் பற்றிய பெருமிதம். பிறவும் வருவன உளவேற்கொள்க. இது தன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும்; என்னை? கல்வியுந் தறுகண்மையும் இசைமைவேட்கையுங் கொடைத்தொழிலுந் தன் கண்ணவாகலின். (9) வெகுளிச்சுவைப் பொருள் நான்காவன 258. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. இஃது ஏழாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வெகுளி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உறுப்பறையென்பது, கைகுறைத்தலுங் கண் குறைத்தலும் முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்; அலையென்பது, கோல்கொண் டலைத்தல் முதலாயின; கொலையென்பது, அறிவும் புகழும் முதலாயின வற்றைக் கொன்றுரைத்தல். இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும் எ-று. 'வெறுப்பின்' என்றதனான் ஊடற்கண்ணுந் தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க. "முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று" (கலி. 52) என்பது உறுப்பறையான் வந்த வெகுளி. "நின்மகன், படையழிந்து மாறின னென்றுபலர் கூற, மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇ" (புறம். 278) என்பது குடிகோள்பற்றி வந்தவெகுளி; என்னை? தன் மகன் மறக்குடிக்குக் கேடுசூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின். "நெருந லெல்லைநீ யெறிந்தோன் தம்பி யகல்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்." (புறம். 300) என்பதும் அது, "வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே " (புறம். 100) என்பதனுள், அலைபற்றிச் சினம் பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப் பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப்புண்டலை நினைந்து சினங்கொள்ளாநின்ற தென்றமையின். "உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை" (புறம். 72) என்பது கொலை பொருளாக வெகுளிச்சுவை பிறந்தது; என்னை? சிறுசொற் சொல்லுதலென்பது புகழ்கொன்றுரைத்தலாகலின். "செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய்" (கலி. 87) என்பது ஊடற்கண் தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவு மன்ன. இன்னும் அவ்விலேசானே, "நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை." (புறம். 125) என்றாற்போலச் சினமில்லதனை உடையது போலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படாது என்பது. இது பிறன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும். (10) உவகைச்சுவைப் பொருள் நான்காவன 259. செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே. இஃது ஈற்றுக்கண் நின்ற உவகை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செல்வமென்பது நுகர்ச்சி; புலனென்பது கல்விப்பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது காமப் புணர்ச்சி முதலாயின; விளையாட் டென்பது 'யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதல்' (191) முதலா யின. இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் எ-று. உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும். "உரனுடை யுள்ளத்தை செய்பொருள் முற்றிய வளமையா னாகும் பொருளிது வென்பாய்." (கலி. 12) என்புழி வளமையானாகும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின், இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம். "நன்கலம் பெற்ற வுவகையர்" என்பதும் அது. "பெண்டிர் நலம்வௌவித் தண்சாரல் தாதுண்ணும் வண்டின் துறப்பான் மலை." (கலி. 40) என்பது அறிவு பொருளாக உவகை பிறந்தது; என்னை? முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப்பதம்பார்க்கும் அறிவுடைமை காமத்திற்கு ஏதுவாமாகலின். "இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பாம்" (நாலடி. 137) என்பதும் அது. "இலமல ரன்ன வஞ்செந் நாவின்" என்னும் மணிமிடை பவளத்துள், "தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே" (அகம். 142) என்பது புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? அவள் இவ்வாறு முயங்கின மையான், "உவவினி வாழியென் னெஞ்சே" (அகம். 142) என்றமையின். "துயிலின்றி யாநீந்தத் தொழுநைஅம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ" (கலி.30) என்புழி ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான்மன் என்றமையின் இது விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது. 'அல்லல் நீத்த வுவகை' யென்றதனாற் பிறர் துன்பங் கண்டு வரும் உவகை உண்டு. அஃது உவகையெனப்படாதென்பது. இதுவுந் தன்கட் டோன்றிய பொருள்பற்றி வருமென்றார்க்குப் பிறன்கட் டோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்கும் அன்றே. அஃதெப்பாற் படுமெனின், அதுவும், 'அல்லல் நீத்த வுவகை' யென்றதனான் உவகையெனப்படும். இனித் தன்கட் டோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது பிறன்கட் டோன்றிய அச்சம் முற்கூறி இதனை ஈற்றுக்கண் வைத்தமையான், எடுத் தோதிய நான்கும் போலாது, இது பிறன்கட் டோன்றிய இன்பம் பொரு ளாகவும் வருமென்பது கொள்க. (11) மேலன போல இவையும் மெய்ப்பாடாம் எனல் 260 ஆங்கவை ஒருபா லாக ஒருபால் உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக் கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவுஉயிர்ப் பெனாஅக் கையாறு இடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ இவையும் உளவே அவையலங் கடையே. இச்சூத்திரம் மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத் திரண்டும் அவைபோல மெய்ப்பாடெனப்படுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆங்கவை ஒருபாலாக -எள்ளல் (252) முதலாக, விளையாட்டு (259) இறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒருகூறாக; ஒருபாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒரு கூறென்றவாறு; பின்னர் இவற்றையெல்லாம் எண்ணி 'இவையு முளவே அவையலங் கடையே' யென்றான். ஈண்டெண்ணப் பட்டவையே ஆண்டடங்குவனவும் உள. அப்பொருண்மைய அல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் எ-று. இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனாலெனின், ஆங்கவை ஒருபாலாக ஒருபாலென்றானாகலின் இருகூறெனப்படுவ தம்மினொத்த (`தம்முளொத்த') எண்ணாதல் வேண்டுமாகலின் அவை முப்பத்திரண் டெனவே இவையும் முப்பத்திரண்டென்பது எண்ணி உணரவைத்தா னென்பது. 1 உடைமையென்பது, செல்வம். செல்வம் நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம். இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மனம்போலச் செல்வமுடைமையான் வரும் மெய்வேறுபாடு. 2இன்புறலென்பது, அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனமகிழ்ச்சி. 3 நடுவுநிலையென்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது "செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை." அது காமவெகுளிமயக்கம் நீங்கினோர்கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் இவற்றொடு கூறினான். 4அருளலென்பது, மக்கள் முதலிய சுற்றத்தாரை யருளுதல். அஃது "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி. 11) என்றாற் போல வருவது. ஆண்டைக் கருணையினை அழுகை யென்றமையின் இஃது அதனோடடங்காது. 5தன்மையென்பது, சாதித் தன்மை. அவையாவன, பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறு நடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும். அடுத்த மார்பொடும் நடந்துசேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலு மென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க. 6அடக்கமென்பது, உயர்ந்தோர்முன் அடங்கி யொழுகும் ஒழுக்கம். அவை பணிந்த மொழியுந் தணிந்த நடையுந் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின. 7காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். அவை பார்ப்பாராயின், முத்தீ வேட்டலும் புலவுங் கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க. வரைதலென்பது தொழிலாத லான் இது தன்மையெனப்படாது. 8அன்பென்பது, அருட்கு முதலாகி மனத்தின் நிகழும் நேயம். அஃதுடையார்க்குப் பிறர்கண்துன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவை யெல்லாந் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுப்பனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்ற வற்றிற்கும் இஃதொக்கும். 9கைம்மிக லென்பது, ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றான் ஒழுகுதல். 10நலிதலென்பது, பிறர்க்கு இன்னா செய்து நெருங்குதல். அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின்கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது. சூழ்ச்சி யென்பது 11சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின். அது வெளிப்படுவதொரு குறிப்பின் அவன்கட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம். 12வாழ்த்த லென்பது, பிறரான் வாழ்த்தப் படுதல். இது பிறவினையன்றோ வெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும், அதனான் அவன் வாழ்விக்கப்படுதலின் அவ்வாறு கூறல் அமையுமென்பது. 13நாணுதலென்பது, நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி. 14துஞ்சலென்பது, உறக்கம். அது நடந்துவருகின்றான்கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப்பட்டது. 15அரற்றென்பது, அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன்குறை கூறுதல். அது காடுகெழு செல்விக்குப் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன. 16கனவென்பது, வாய்வெரு வுதல். அதனானும் அவனுள்ளத்துக்கண் நிகழ்கின்றதொன்று உண்டென் றறியப்படும். 17முனிதலென்பது, வெறுத்தல். அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்ததாதல்; 'வாழ்க்கை முனிந்தா'னெனவும் "உறையுள் முனியு மவன் செல்லு மூரே" (புறம். 96) எனவுஞ் சொல்லுபவாகலின். 18நினைத லென்பது விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும் நினைத்தேனென்பது வழக்காதலின். அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பா டாயிற்று. 19வெரூஉதலென்பது விலங்கும்புள்ளும்போல வெருவிநிகழும் உள்ளநிகழ்ச்சி. அஃது, அஞ்சவேண்டாதன கண்ட வழியும் கடிதிற் பிறந்து மாறுவதொருவெறி. 20மடிமையென்பது, சோம்பு. 21கருதலென்பது, மறந்ததனை நினைத்தல். 22ஆராய்ச்சியென்பது, ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல். 23விரைவென்பது, இயற்கை வகையானன்றி ஒரு பொருட்கண் விரைவுதொழில்பட உள்ள நிகழும் கருத்து. 24உயிர்ப் பென்பது, வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையறவெய்திய கருத்து. அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றா னென்பது. 25கையாறென்பது, அவ்வுயிர்ப்புமின்றி வினை யொழிந் தயர்தல். 26இடுக்க ணென்பது, மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம் படவரும் இரக்கம். 27பொச்சாப்பென்பது, அற்றப்படுதல். அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓரிகழ்ச்சியான் இடையறவு படுதல். 28பொறாமை யென்பது அழுக்காறு. அஃதாவது பிறர் செல்வங் கண்டவழி வேண்டாதிருத்தல். 29வியர்த்தலென்பது. பொறாமை முதலாயின பற்றி மனம்புழுங்குதல். 30ஐயமென்பது, ஒரு பொருண்மேல் இருபொருட் டன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம். 31மிகையென்பது, கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ளம்மிகுதி. 32நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல். புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலென்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம்; அச்ச மென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன்வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தான் தோன்றிய நடுக்கமா மென்பது. இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடு எனக்கொள்க. இவையெல்லாம் உலக வழக்காகலான் இவ்வழக்கே பற்றி நாடக வழக் குள்ளும் கடியப்படாது என்றவாறு. மற்று இவற்றை எண்ணிய மாத்திரை அல்லது இலக்கணம் கூறுகின்றிலனாயது என் எனின், சொல்லின் முடியும் இலக்கணத்து ஆகலின் சொல்லானாயினான் என்பது. உதாரணம் இக் கூறியவாற்றான் வழக்கு நோக்கியுஞ் செய்யுணோக்கியுங் கண்டுணரப்படும். (12) தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டது முதல் களவு வெளிப்படுமளவும் நிகழும் மெய்ப்பாடுகளுள் முதற்பகுதி மெய்ப்பாடுகளாவன 261 புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே யொன்றென மொழிப. இதன் மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி வரும் மெய்ப்பாடு கூறினான்; இனி அகத்திணையுள் பெரும் பான்மையவாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி, அவற்றுள்ளுங் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பாடெனவும், புணர்ச்சிப் பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் மூன்று பகுதியவாம் அவை யெனவும், அவையாறும் ஒரோ வொன்று நந்நான்கு பகுதியான் ஒன்றன்பினொன்று பிறக்குமெனவுங் கூறுகின்றான். அவற்றுள் முதலன மூன்றினுள் முன்னர் நின்ற ஒரு கூற்றினை இந்நாற்பகுதித்து என்கின்றது இச்சூத்திரமென உணர்க. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பால தாகலான் பெரும்பான்மையும் அவள்கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது. (இ-ள்.) 1புகுமுகம்புரிதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப் பட்டவழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி. புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக் குதலை முகம் நோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றா னென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம். மற்றிது தலைமகற்கு உரித்தன்றோவெனின், அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலி னென்பது. அது, "யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்." (குறள். 1094) எனவரும், 2பொறிநுதல் வியர்த்தல் என்பது தலைமகன் தன்னை நோக்கிய வழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியர்பொறித்த நுதலளாதல். அது, "பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென" (அகம். 186) என வரும். இம்மெய்ப்பாடுந் தலைமகற்குரித்தன்று, உட்கும் நாணும் அவற்கின்மையின். 3நகுநயமறைத்தல் என்பது அதன் பின்னர்த் தலைமகன்கண் தோன்றிய குறிப்புக்களான் நகுதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்தவழியும் நகாது நிற்றல். அது, "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு." (குறள். 1274) என வரும். மடமையான் தோன்றிய நகையாகலான் இது மறைத்தலுந் தலைமகற்குரித்தன்று; எனவே அவற்காயின் நகை தோன்றப்பெறு மென்பது. மற்றுச் "சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின்" (குறுந். 169) என்னும் பாட்டினுள் "நும்மொடு நக்க வால்வெள் ளெயிறு" என நகை கூறிற்றாலெனின், அங்ஙனம் மறைக்கப்பட்ட நகை தலைமகன் அறிந்தது மெய்ப்பாடாமாகலான் அவ்வாறு கூறினாளென்பது. 4சிதைவு பிறர்க்கின்மை என்பது அங்ஙனம் நகுநய மறைத்தவழியும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல். அது, "அகமலி யுவகைய ளாகி முகனிகுத்து ஒய்யென இறைஞ்சி யோளே." (அகம். 86) எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது. இதுவுந் தலைமகற் குரித்தன்று, தன்சிதைவுணர்த்தினல்லது மறைக்குந்துணைச் சிதைவின்மை யின்; என்னை? " பெருமையு முரனு மாடூஉ மேன" (தொல். பொருள். 98) என்பவாகலின். இவை களவிற் சிறந்தனவாவதல்லது கற்பினுள் வருவனவல்ல என்று உணர்க. 'சிதைவு பிறர்க்கின்மை' யெனவே சிதைவு தலைமக னுணரு மென்றானாம். தகுமுறை நான்கு என்பது, இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த அந்நான்கும் என்றவாறு; ஒன்றென மொழிப- களவிற்கு முதற்கூறென்ப எ-று. இனி, இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் வருமாறு: "யான்தற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள் வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி மிகைவெளிப் படாஅது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் நெஞ்சே யானறிந் தேனது வாயா குதலே." இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன்னெஞ் சிற்குச் சொல்லியது. இதனுள் "தான் பெரிது மகிழாள்" என்புழிச் சிறிது மகிழுமென்றமையான் இது புகுமுகம் புரிதலாயிற்று. "வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி" என்பது பொறிநுதல் வியர்த்தல். "நகைமுகங் கரந்த" என்பது நகுநய மறைத்தல். "மிகை வெளிப்படாது" என்புழி, மேல் 'அன்ன பிறவு மவற்றொடு சிவணி' (267) என்னும் புறனடையான் தழீஇயின நகை மொக்குளும் பெற்றாம். "தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால்" என்பது சிதைவு பிறர்க்கின்மை. பிறவும் அன்ன. (13) இரண்டாம் பகுதி மெய்ப்பாடுகளாவன 262. கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலோடு ஊழி நான்கே இரண்டென மொழிப. இஃது, இரண்டாம் பகுதி மெய்ப்பாடுணர்த்துதல் நுதலிற்று, என்னை? உள்ளத்துச் சிதைவறிந்தவழியன்றித் தலைமகளிடைத் தலை மகன் சென்று கையுங்காலும் மெய்யுறத்தீண்டிக் கண்ணுறானாகலின். அங்ஙனஞ் சிதைவுபிறந்தது எழுவாயாகப், பின்னர்த் தலைமகன் மெய்யுற்ற வழி நிகழ்ந்த உள்ள நிகழ்ச்சியை இரண்டாவதென்றானென்பது. (இ-ள்.) கூழைவிரித்தன் முதலாகிய நான்கும் முறையானே இரண்டாவதெனப்படும் எ-று. இவற்றுக்குத் தலைமகன் ஏதுவாவதல்லது இவைதாம் அவற்கு நிகழாவென்பது. 5கூழைவிரித்தலென்பது, மெய்யுமெய்யுந் தீண்டியவழி மெல்லியன் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுள் முதற்கண்ணதெனப்படும். என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறுபாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறையுடையளாகலாற் கரந்தொழுகுதற்பாலளே. அங்ஙனங் கரக்குங்கால் தன்வயத்ததாகிய உடம்புபற்றி வரும் வேறுபாட்டினைத் தாங்கும். அங்ஙனந் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட தலைமயிரினது முடி, உள்ள நெகிழ்ச்சியானே தன்வயத்ததன்றி ஞெகிழும்; ஆகலின் இது முற்கூறப்பட்டது. பிறசுவை பற்றியும் உலகினுள் மயிர்க்கு வந்த வேறுபாட்டினைக் கூறுப. என்னை? ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறுவார் மயிரினைச் செவ்வனின்றனவென்பதுபோலக் கொள்க. அக்கூழை விரித்தற்கு ஏதுவாயினாள் இவளாகலின் அதனைச் சினைவினையானன்றி முதல்வினையாற் கூறினானென்பது. 6காதொன்று களைதலென்பது, உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்து வைத்தனவாகலான் தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாயின. மற்றவை வீழ்தற்கு ஏதுவாய நெகிழ்ச்சி நிரம்பத் தோன்றாது இடைநிகர்த்ததாகலின் ஒன்று நிற்ப ஒன்று வீழ்தலென்றா னென்பது. இது கூழை போலாது ஊறுணர்வுடைய உறுப்பாகலிற் காதின் வேறுபாட்டினைக் கூழைவேறுபாட்டின் பின் வைத்தான்; என்னை? கூழையிற் காது தனக்கு உறவுடைமையின். 7ஊழணி தைவரலென்பது, அக்கூழையுந் தோடும் போலாது பெய்யப்படு முறைமையவாகிய வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும் விரற்செறியினைத் திருத்தலும் முதலாயின. இவை தோடுபோலச் செறிவில்லன அன்மையின் அவற்றுப்பின் வைத்தான். 8உடைபெயர்த்துடுத்த லென்பது, உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல். அது கழறொடி போலாது செறிவுடைமையின் அவ்வுடைநெகிழ்ச்சியைத் தொடி நெகிழ்ச்சிக்குப் பின் வைத்தானென்பது. மற்றுத், "தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே" (குறுந். 239) எனப் பிரிவின்கண்வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறானோ வெனின், அவை இன்னதன் பின்னர் இன்னது தோன்றுமென்னும் முறைமைய அல்லவாகலின் ஈண்டுக் கூறான். அவை, "வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்து" (தொல். பொருள். 268) என்புழிச் சொல்லப்படுமென்பது. இவற்றுக்குச் செய்யுள்: "விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன் கண்ணி னோக்கிய தல்லது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ அவனே வரைப்பாற் கடவுளும் அல்லன் அதற்கே ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே நீயறி குவையதன் முதலே யாதோ தோழியது கூறுமா றெமக்கே" என்றது தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநின்றது. இதனுள் "ஓதி முந்துற ஞெகிழ" என்பது கூழைவிரித்தல்; "காதொன்று ஞெகிழ" என்பது காதொன்று களைதல்; "நிழலவிர் மணிப்பூ, ணெஞ்சொடு கழல" என்பது ஊழணி தைவரல்; "நெடிது நிமிர்ந்தன துகிலும் பன்முறை" என்பது உடை பெயர்த்துடுத்தலாயிற்று. இவை பாடாண்கைக்கிளையுள் இக்காலத்துப் பயின்றன. பிறவும் அன்ன. (14) மூன்றாம் பகுதி மெய்ப்பாடுகளாவன 263. அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. இது, முறையானே மூன்றாவது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அல்குல் தைவரல் முதலாகக் கூறப்பட்டன நான்கும் மூன்றாவதெனப்படும் எ-று. மேலது உடைபெயர்த்துடுத்தலாகலான் அதன்வழித் தோன்றுவது இது. உடை பெரிதும் ஞெகிழ்ந்து காட்டுதலாயிற்று; அதனைப் பாதுகாத்த லான், அவ்வற்றம் மறைக்குங் கையினை 9`அல்குல்தைவர' லென்றா னென்பது. 10அணிந்தவை திருத்தலென்பது, கடிசூத்திரமுதலாயின திருத்தல். அஃது உடைஞெகிழ்ச்சி போலப் போற்றிச் செய்வதாகலான், அதனை அல்குல்தைவரலின் பின் வைத்தான். 11இல்வலியுறுத்தலென்பது, புணர்ச்சியை வேண்டாதாள் போல் வதொரு வன்மை படைத்துக்கொண்டு செய்தல்; என்னை? இல்லாத வலியை மிகுத்தலென்றமையின் அப்பொருட்டாயிற்று. அல்குல் தைவர லும் அணிந்தவை திருத்தலுந் தன்வலியின்மை காட்டவும், வலிதோற்றிக் கொண்டு செய்வதாகலின் அதனை இல்வலியுறுத்தலென்று மூன்றாம் முறைமைக்கண் வைத்தானென்பது. இனி இற்பிறத்தலான் அதன்வலி தோற்றுவதெனவுஞ் சொல்லுப. அஃது ஆவது, முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறினென்பது. 12இருகையுமெடுத்தலென்பது, அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானுந் தடுக்கப்படாது நிறையழிதலிற் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவனபோல்வதொரு குறிப்பு. இந்நான்கும் மேலனவு மெனப் பன்னிரண்டு பகுதியும் புணர்ச்சிக்குமுன் நிகழ்வனவாம். 'சொல்லிய' வென்றதனான் இவையெல்லாஞ்சொல்லப்படுவ தல்லது ஈண்டுச் சொல் நிகழ்தல் வேண்டிலன் என்பது. எண்ணு நிலைவகை யான் தொகைபெற்ற நான்கென்னும் எழுவாய்க்கு மூன்றென் பது பெயர்ப் பயனிலையாய் வந்தது. இவை நான்குந் தலைமகற்குரியவல்ல, தான் அவற்றுக்கு ஏதுவாவதல்ல தென உணர்க. இவற்றுக்குச் செய்யுள்: "ஓதியு நுதலு நீவி யான்தன் மாதர் மென்முலை வருடலிற் கலங்கி உள்ளத் துகுநள் போல அல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலின் இம்மை யுலகத் தன்றியும் நம்மை நீளரி நெடுங்கண் பேதையொடு கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே." இஃது இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவன் தன்னிலையுரைத்தது. இதனுள் உடம்பும் உள்ளத்துகுநள் போன்றனளென்பது அல்குல்தைவரல்; என்னை? அவ்வேறுபாட்டானே அற்றப்படுதலின். "அல்குலின் ஞெகிழ் நூற் கலிங்கம்" என்பது அணிந்தவை திருத்தல்; அல்குலின் யாத்த நூலிற்கு ஞெகிழ்ச்சி கூறினமையின். "மெலிந்தில ளாகி வலிந்து பொய்த்தொடுங் கவும்" என்பது இல்வலியுறுத்தல். "யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதல்" என்பது இருகையுமெடுத்தல்; அங்ஙனம் ஒடுங்கிய வழியும் உயிர்ப்பினளல்லள் போலத் தோள்களைத் தன்வயத்தவாயின என்றமை யின். "இம்மையுலகத் தன்றியும் நம்மைக் கேளறிந்தன" என்றமையின் இருவர் அன்பும் எழுமையுந் தொடர்ந்த உழுவலன்பெனச் சொல்லித் தன்னிலையுரைத்தானாம். பிறவும் அன்ன. (15) நான்காம் பகுதி மெய்ப்பாடுகளாவன 264. பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றுஅலர் நாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப. இது நான்காம் பகுதி கூறுகின்றது. (இ-ள்.) 13பாராட்டெடுத்தல்- புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலை மகனை இயற்பட நினையுங் குறிப்பு. இது பாராட்டென்னாது எடுத்த லென்றதனான் அதனை உள்ளமெடுத்தல்மேற் கொள்க. இது தலைமகற் கும் ஒக்கும். 14மடந்தப வுரைத்தல்- விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிதறிவு தோன்றுதல்; உரைத்த லென்றதனான் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும். 15ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணல்- அங்ஙனம் அறிமடங் கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே? அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதல். 16கொடுப்பவைகோடல்- தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுந் தாருங் கண்ணியுந் தோள்மாலையும் முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்; உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப- கொடுப்பவை கோடலகப்படத் தொகுத்தோதிய நான்கும் நான்காவது எ-று. 'எடுத்த'வென்றதனான் கொடுப்பவை கொள்ளாது மறுத்தல் முதலியனவுங் கொள்க. புணர்ச்சிப்பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரொடு கூற்றுநிகழாமையானும், அக்கூற்றுக் கேட் டல்லது தமரான் ஈரமில் கூற்றங்கோடலின்மையானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன்மேற் சென்ற உள்ளத்தான் கொடுப்பவைகோடற் குறிப்பினளாமாகலானும் அம்முறையான் வைத்தானென்பது. இவற்றுக் குச் செய்யுள்: "ஒருநாள் வந்து பலநாள் வருத்தும் நின்னே போலுநின் தழையே யென்வயின் நிற்பா ராட்டியுஞ் சொற்கொளல் இன்றியும் யாயெதிர் கழறலின் பேரலர் நாணியும் மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினும் நோய்செய் தன்றால் தானே நீதொடக் கரிதலின் ஓரிடத் தானே." இது கையுறைமறுத்தது. இதனுள், "நிற்பாராட்டி" என்பது பாராட்டு எடுத்தல்; "சொற்கொளலின்றி" என்பது மடந்தபவுரைத்தல்; என்னை? கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின். "யாயெதிர் கழறலின் பேரலர் நாணி" என்பது ஈரமில்கூற்றம் ஏற்று அலர்நாணல்; "துயர் மருந்தாயினும்'' என்பது கொடுப்பவைகோடல். இத்தழை நின்கைப்பட்ட வழிக் கரிந்துகாட்டி நின்மெய் வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொருகாலத்து மறுத்தாளென்பது. (16) ஐந்தாம் பகுதி மெய்ப்பாடுகளாவன 265. தெரிந்துஉடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப. இஃது ஐந்தாங்காலத்து மெய்ப்பாடு உணர்த்துகின்றது. (இ-ள்.) மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்தவழி அவ் வொழுகலாறு புறத்தார்க்கெல்லாம் ஐயமாகலின், அதன்வழித் தோன்று வது தெரிந்து உடம்படுதலென்றானென்பது. 17தெரிந்துடம்படுதல்- தலைமகனைத் தலைமகள் கூடலின் இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றைப் பட்டாங்குணராதார் தலைமை செய்தனள் இவளெனவும் தகாத ஒழுக்கினள் இவளெனவும் பல்லாற் றானும் இவள்கண்ணே ஏதமிட்டுத் துணிந்தும் துணியாதும் உரைப்பாராக லான், அதற்கு நாணி, இனி யாதுகொல்லோ செயற்பாலதென்று ஆராய்ந்து, இவ்வொழுக லாற்றினை அறிவிப்பேங்கொல் அறிவியேங்கொலெனத் தடுமாறிப், பின் ஒரு வகையான் ஆராய்ந்து, முழுவதூஉஞ் சொல்லாது தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் வேண்டுவன தெரிந்துகொண்டு, இன்னவாறு பட்டதென்று தோழிக்கு உடம்படுதலுந், தோழியான் செவிலிக்கு உடம்படுதலுமென இன்னோ ரன்ன குறிப்பினைத் தெரிந்து உடம்படுதல்; 18 திளைப்புவினைமறுத்தல்- அங்ஙனம் தமர்க்குத் தானுடம் பட்டதன் பின்னர்த் தலைமகனொடு பகலுமிரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமும் நாணும் மடனுங் காரணமாக மறுத்தல்; உடம்பாட்டின் பின்னர் மறுக்குமாதலின் அதனைத் திளைப்பு வினை மறுத்தலென்று இரண்டாவது வைத்தானென்பது. 19கரந்திடத்தொழிதல்- அக்காலத்து இற்செறிக்கப்படுதலான் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படா தொழுகுதலை உடையளாதல்; தன்னிடத்தே தங்குதலை 'இடத்து ஒழித'லென்றான். 20கண்டவழி யுவத்தல்-அங்ஙனங் கரந்தொழுகுங் காலத்து அவனை ஒருஞான்று கண்டவழிக் கழியுவகை மீதூர்தல்; இது தலைமகற்கும் உரித்து. பொருந்திய நான்கே ஐந்தென மொழிப- இவை நான்கும் ஐந்தாங்கூறெனப்படும் எ-று. பொருந்திய நான்கென்றது, இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடைய என்பது. இதனானே, இவை நந்நான்கினொடு வருகின்றதற்குச் சிறிது இடையறவும் படுமென்பது கொள்க. புகுமுகம் புரிதன் முதலாயின நான்குந் தலைமகளனவேயாகி ஓரினத்தவாயின. அவற்றுப் பின்னர்த் தலைமகன் அவளைப் பொருந்திய வழிக் கூழைவிரித்தல் முதலாயின நான்கும் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றொடு சிறிது இடையறவுபட்டன. அல்குல் தைவரன் முதலாயின நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோ டொன்றாது வேறாயின. பாராட்டெடுத்தன் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற் சிறிது வேற்றுமை யுடைய. தெரிந்துடம்படுதன் முதலாயின களவுவெளிப்படுத்தற் குறிப்பின வாகலின் மேலனவற்றொடு தழுவாது வேறாயினவென்பது. இவற்றொடும் வருகின்ற நான்கன் வேறுபாடும் ஆண்டுச் சொல்லுதும். அவ்வாறு நோக்கியன்றே இவ் ஆறு சூத்திரப் பொருளினையும் இருபத்துநான்காக உடனோதாது வேறுபடுத்தோதிய கருத்தென்பது. இங்ஙனம் பொருத்த மின்றி வருவனவல்ல நந்நான்கு பகுதியாற் கூறியவை தம்முள் தாமென்பான் பொருந்திய நான்கென்றானென்பது. இவற்றுக்குச் செய்யுள்: "அறியாய் கொல்லோ நீயே தெறுவர நோக்குதொறும் பனிக்கும் நெஞ்சமோ டிவளே யாய்க்கறி வுறாலின் நின்னெதிர் நாணி மனைவயிற் பிரியலள் மன்னே யதற்கே நினைவிலள் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியோ வதுவே" என்பது பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து, வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவுகடாயது. இதனுள் "யாய்க்கு அறிவுறா லின்" என்பது தெரிந்துடம்படுதலென்பது; என்னை? அவள் நோக்குந் தொறும் பனித்தலின் அறிவுறுத்தாளென்றமையின். "நின்னெதிர் நாணி" என்பது திளைப்புவினை மறுத்தல்; என்னை? தமர்க்கு உரைத்தாள் இம்மறையினையென்று தலைமகன் குறிக்குமென நாணி எதிர்ப்படாமை யின். "மனைவயிற்பிரியலள்" என்பது கரந்திடத்தொழிதல்; "புனைதார் மார்ப காண்டியோ வதுவே" என்பது கண்டவழி உவத்தல்; என்னை? நிற்கண்டவழி நுதலுந்தோளும் பசலைநீங்கியவாறு கண்டிலையோ வென்னுங் குறிப்பினாற் கூறினமையின். பிறவும் அன்ன. (17) ஆறாம் பகுதி மெய்ப்பாடுகளாவன 266. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே ஆறென மொழிப. இஃது ஆறாவது கூறுகின்றது. (இ-ள்.) 21 புறஞ்செயச்சிதைதல் - பூவுஞ்சாந்தும் பூணுந்துகிலும் முதலாயினகொண்டு புறத்தே கோலஞ் செய்ய அகத்தே சிதைவுண்டாதல்; மேல்நின்றது கண்டவழி உவத்தலாகலானும் இது காணாதவழி நிகழ்கின்றதாகலானும் அதற்கினமின்றியும் அதன்வழித் தோன்றியதெனப் படுமாகலான் இதனை இச் சூத்திரத்தின் முன்வைத்தானென்பது. 22 புலம்பித்தோன்றல் - அங்ஙனம் புனைந்த கோலம் துணையொடு கழியப் பெறாமையிற் புல்லென்றழிந்த நெஞ்சினளாகலான் எல்லாச் சுற்றத்தார்க்கும் இடைநின்றேயுந் தனியளென்பது அறிவியாநிற்றல்; 23 கலங்கிமொழிதல் - கையொடுபட்ட கள்வரைப்போலச் சொல்லு வனவற்றைத் தடுமாற்றம் தோன்றச் சொல்லுதல்: அஃதாவது தன் மனத்து நிகழாநின்றன தன்னையறியாமற் சில புலப்படச் சொல்லுத லாயிற்று. 24 கையறவுரைத்தல் - கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதல்; அஃதாவது வன்புறையெதிரழிந்து சொல்லுவன போல்வன. புலம்பிய நான்கே ஆறென மொழிப- இவை நான்குந் தனிமை விகற்பமாகிய ஆறாங்கூற்று எ-று. கையறவுரைத்தலென்பதனை ஈற்றுக்கண்வைத்தான், களவொழுக் கத்தினுள் இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படாதென்றற்கு. என்னை காரணமெனின், கையறவுரை தோன்றியதன் பின்னர் நிகழ்வன கைக் கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவன அன்றி நற்காமத்துக்கு ஆகாவென்பது கருத்து. என்னை? கையறவுரைத்தலென்பது 'சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் றொழிற்படுத்தடக்குதலை' (196) எல்லையாகவுடைமையின், அதனினும் இறப்பத்தோன்றுவன, மன்றத்து இருந்த சான்றவரறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியுங் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியும் நிகழும் மெய்ப்பாடாகலான், அவை நடுவணைந்திணை யெனப்பட்ட நற்காமத்திற்கு இலக்கணவகையான் ஏலாவாகலினென்பது. கையறவு உரைத்த லென்றதனான் இம்மெய்ப்பாடு மனத்தளவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படுமென்பது கொள்க. இவை எல்லாம் முறையானே நிகழ்ந்தமை நோக்கி யாழோர் கூட்டத்தினைத் தொன்மையுந் தோலும் போலப் பொருட்டொடர்நிலையாக்கி உரைப்பாருமுளர். அஃது ஆகாமைக்குக் காரணங் களவியலுட் (101) கூறினானென்பது. இவற்றுக்குச் செய்யுள்: "இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇப் பல்கிளை நாப்பண் இல்கிளை போல மொழிவகை யறியாள் பொழிகண் நீர்துடைத்து யானே கையற வலமருங் கூறாய் பெருமநிற் றேறும் ஆறே." என்பது வரைவு கடாயது. இதனுள் "அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ" என்பது புறஞ்செயச்சிதைதல்; 'பல்கிளை நாப்பண் இல்கிளை போல" என்பது புலம்பித் தோன்றல்; "மொழி வகையறியாள்" என்பது கலங்கி மொழிதல்; "யானே கையற அலமரும்" என்பது கையறவுரைத்தல்; என்னை? தன் கண்ணீர் துடைத்தலும் ஆற்றாளென்றமையின். பிறவும் அன்ன. (18) மேற்கூறியவும் பிறவும் காமவொழுக்கத்திற்கு நிமித்தமாதல் 267. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்தம் என்ப. இது, மேலனவற்றிற்கு ஒரு புறனடை. (இ-ள்.) அன்னபிறவும்- மேற்சொல்லப்பட்ட இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும்; அவற்றொடு சிவணி- அவற்றின் வேறன்றி அவை தம்முட் பகுதியாகி வருவன பிறவும்; மன்னிய வினைய நிமித்தம் என்ப- நிலைபெறத் தோன்றுங் காமவொழுக்கத்து நிமித்தமென்று சொல்லுவர் புலவர் எ-று. 'மன்னிய வினைய' வென்பது நடுவணைந்திணைக்கேயுரிய மெய்ப் பாட்டின அவை என்றவாறு; என்னை? கந்தருவ வழக்க மல்லன வற்றை மன்னியகாமமென்னானன்றே, அஃது இடையறவுபடாதாகலின். எனவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் வரையறையின்றி வேண்டிய வாறு வரப்பெறு மென்பதாம், அவை மன்னிய வினையல்லாமையின்; என்னை? 'காமஞ்சாலா இளமையோள்வயின் - ஏமஞ்சாலா விடும்பை' யெய்துதலும் (தொல். பொருள். 50), நாற்பத்தெட்டியாண்டையானொடு பன்னீராட் டையாள் கூட்டஞ் சொல்லுதலும் ஒத்த காமமெனப்படா வாகலி னென்பது. இவ்வாறு கூறவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் இவை வைத்த முறையான் வரையறுத்துக் கூறப்படாவெனவும், அவை வருவன வந்துழிக் கொளப்படும் என்பதும் பெற்றாம். இது புலனெறி வழக்க மல்லாத கந்தருவ மணத்திற்கும் ஒக்கும். 'அன்ன பிறவு மவற்றொடு சிவணி' (267) வருவன யாவையெனின் புகுமுகம் புரிதற்கண் தலைமகன் நோக்கியவழி ஒரு வல்லிப் பொதும்ப ரானும் மற்றொன்றானுஞ் சார்புபெற்று மறைதலும், அவையில்லாதவழி இடர்ப்படுதலும் என்றாற் போல்வன புகுமுகம் புரிதலா யடங்கும். நகுநயமறைக்குங்கால் தலைமகன்கண் தோன்றிய நகை முதலாகிய குறிப்பேதுவாக நகை தோன்றியதனை மறைக்குங்கால் இதழ் மொக்குளுள் தோன்றுவது நகையெனப்படாது நகுநயமறைத்தலின் பாற்படு மென்பது. இனிச் சிதைவு பிறர்க்கின்மையின்கண்ணும், "நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்" (தொல். பொருள். 96) என்றமையான் கண்ணின் வேறுபாடுளவாமன்றே? அவை சிதைவு பிறர்க்கு அறிவிக்குமாயினும் ஆண்டுத் தான் அது மறைத்தாளென்னுங் கருத்தின ளாகலின் அதுவுஞ் சிதைவு பிறர்க்கு இன்மையாமென்பது. அவை யாவை யெனின், அமர்த்து நோக்காது அலமர நோக்குதலும் நிலங்கிளைத்தலும் போல்வன. மற்றுப் பொறிநுதல்வியர்த்தற்குப் புறனடையாற் கொள்வன யாவையெனின், புறனடையாற் கோடல் ஆணையன்றாகலான் உள்ளன வற்றிற்குக் கொண்டொழிக வென்றவாறு. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வருவன அறிந்து அடக்கங் கூறுக. மற்றும், 'பிறவும் அவற்றொடு சிவணி' யெனவே, மேற் கூறிய வற்றொடு பொருந்த வருவன கோடுமன்றே? 'அன்ன' என்றது என்னை யெனின், அதனானே தலைமகற்குரிய மெய்ப்பாடு வேறுளவாயினுங் கொள்க. அவை ஐயப்படுதலும் ஆராய்தலுந் துணிதலு முதலாயின. மற்றுத் தலைமகட்குரிய மெய்ப்பாடு போலத் தலைமகற்குரியனவும் இன்ன முறையனவென்று வரையறுத்துக் கூறாரோவெனின், அற்றன்று; தலைமகன் குறிப்புச் சிலபற்றித் தலைமகள் குறிப்புப் பல பிறக்குமாக லானும், ஐயம் முதலாயின மெய்ப்பாடு காமப்புணர்ச்சிக்கு இன்றியமை யாதன அன்மையானும், தலைமகட்குரிய மெய்ப்பாடே சிறந்தனவென்று அவற்றை வரையறுத்துக் கூறினானென்பது. மற்று, இவற்றை 'நிமித்த' மென்ற தென்னையெனின், இவைமுறையானே நிகழ்ந்த பின் புணர்ச்சி நிகழுமாகலி னென்பது. 'வினைய' என்பதன் அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மை யுருபு. இம்மெய்ப்பாட்டினுட் கைக்கிளை பெருந்திணைக்கு வருவன வருமாறு: "ஒருக்குநாம் ஆடுங் குரவையுள் நம்மை அருக்கினான் போல்நோக்கி யல்லல்நோய் செய்தல் குரூஉக்கண் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ ஆயர் மகன்." (கலி. 104) எனப் புகுமுகம் புரிதல் கைக்கிளைக்கண் வந்தது. 'முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே' (தொல். பொருள். 105) என்பதனான் இது கைக்கிளை யெனப்பட்டது. மற்றிது முல்லைத் திணைப் பாட்டதன்றோவெனின், அது நிலத்தான் முல்லையாயிற்றென்பது அகத் திணையியலுட் கூறினாம். இனித் தொன்மையுந் (549) தோலும் (550) முதலாயின வனப்புக் களுட் புகுமுகம் புரிதல் முதலாயின பெருந்திணைப் பொருள்பற்றி வருவன வருமாறு அறிந்துகொள்க. மற்றிவ்விருபத்துநான்கு மெய்ப்பாடுங் கற்பி னுள் இம்முறையானே வரப்பெறாவோவெனின், அதற்கு இம்முறையான் இவையனைத்தும் வரல் வேண்டுவதின்மையின் களவிற்கே விதந்து கூறினா னென்பது. அஃதென்னை பெறுமாறெனின், 'பல்பொருட்கேற்பின் நல்லது கோடல்' (665) என்னும் உத்திவகை. இனிக் கற்பினுன் வருவன வருமாறு: "இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." (குறுந். 167) என்பதனுள் நகுநயம்மறைத்தல் வந்தது. "மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கின் தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு." (கலி. 89) இதனுட் சிதைவு பிறர்க்கின்மை வந்தவாறு. ஒழிந்தனவும் அன்ன. "நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை நீசேர்ந்த இல்வினாய் வாராமை பெறுகற்பின்." (கலி. 77) என்பது மடந்தபவுரைத்தல். இவையெல்லாங் கற்பின்கண் வந்தன. "அன்னை சொல்லு முய்கம் என்னதூஉம் ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையும் ஒழிகம்" (அகம். 65) என்பதோவெனின், அது 'பாராட்டெடுத்தல் மடந்தபவுரைத்தல்' (264) என்புழி அடங்குமென்பது. (19) மேற்கூறிய நிமித்தங்கள் இன்றியும் புணர்ச்சி நிகழும் இடன் 268. வினையுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே. இது, மேலனவற்றுக்கே ஆவது ஒரு விதி கூறுகின்றது. (இ-ள்.) 'மன்னிய வினைய' (267) வெனப்பட்ட புணர்ச்சி, மேல் அறுவகையான் இருபத்து நான்கெனக் கூறப்பட்ட மெய்ப்பாட்டினை அம்முறையானே நிமித்தமாகக் கொண்டு வருதலின்மையும் உரித்தெனப் படும், ஆற்றாமைவந்த விடத்து எ-று. மேற்கூறிய இருபத்து நான்கினை இன்மை உரித்தென்பது அதிகாரத் தாற் கொள்க. "தன்நசை யுள்ளத்து நம்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே,' (அகம். 22) எனவும், "வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார்பு அடைதலின் இனிதா கின்றே." (அகம். 58) எனவும் இவை களவியலுள் (111) உயிர்மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்த மெனக் கூறப்பட்டவையின்றியும் புணர்ச்சி நிகழ்ந்தவாறு. என்னை? முயங்குதொறும் நகைதோன்றிற்றெனவே, பாராட்டெடுத்தன் முதலாயின வின்றியும் புணர்ச்சி நிகழ்ந்ததாம். ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை கண்டவழி யுவத்தலாகாவோவெனின், ஆண்டுத் தன்னுவகை கூறாளன்றே, கரந்திடத் தொழிந்தாளாகலி னென்பது. "தண்துளிக் கேற்ற பலவுழு செஞ்செய் மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே." (அகம். 26) என்புழிப் பாராட்டெடுத்தன் முதலாகிய பன்னிரண்டு நிமித்தமுமின்றி ஆற்றாமை நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. உம்மை, எதிர்மறை; உயிர்மெலிவிடத்து உடைமையுடைத்துமாம் அவ்வினை யென்பது. "தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே" (குறுந். 239) என்பதனுள் ஊழணி தைவரலென்னும் மெய்ப்பாடு வந்தது. பிறவும் அன்ன. இனி மேற் கூறிய ஆறுமேயன்றி இன்னும் இவற்றொடு நான்கு கூட்டிப் பத்தென் பாருமுளர். அவை இன்பமாதற்கு உரியன வன்மையின் வரையறை கூறாதொழிந்தானென்பது. (20) புணர்ச்சிக்கு நிமித்தமாகப் பிறவும் மெய்ப்பாடுகள் உளவெனல் 269. இவையு முளவே யவையலங் கடையே. இஃது எதிரதுபோற்றி இறந்தது காத்தது. (இ-ள்.) இவையு முளவே- எதிர்வருகின்றனவும் உளவாவது; அவை யலங்கடையே- இறந்தனவற்றுக்கு இடனல்லாத விடத்தே எ-று. இதனது கருத்து: மேற்கூறிய இருபத்துநான்கு மல்லாதவழி இன்பத்தை வெறுத்தல் (270) முதலாக இனிக் கூறுகின்ற மெய்ப்பாடும் உளவாம் என்றவாறு. அவையல்லாத விடத்து இவையும் உளவாமெனவே, வருகின்ற மெய்ப்பாடுங் களவிற்குங் கற்பிற்கு முரியவெனவுங், களவிற்கு வருங்கால் முதற்கூறிய இருபத்து நான்கன் பின்னுமே இவை பெரும் பான்மையின் வருமெனவுங், கற்பிற்காயிற் பயின்றுவரு மெனவுங் கூறியவாறு. அவை இனிக் கூறுகின்றான். (21) களவிற்கும் கற்பிற்கும் உரிய மெய்ப்பாடுகள் 270. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே யென்றல் ஐயஞ் செய்தல் அவன்தமர் உவத்தல் அறன்அளித் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுவத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடின் கலக்கமும் அதுவே. இது, மேல் 'இவையுமுள' (269) எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது. (இ-ள்.) எண்ணப்பட்ட இருபதும் 'மன்னிய வினைய நிமித்தம்" (தொல். பொருள். 267) என்பான் 'நலத்தக நாடின் அதுவே' யாமென்றா னென்பது, இவை புணர்ச்சிக்கு நிமித்தம் ஆகாதன போன்று காட்டினும் இவற்றை மிகவும் ஆராய்ந்து உணரின் புணர்ச்சி நிமித்தமேயாம் எ-று. 1. இன்பத்தை வெறுத்தலென்பது, யாழும் குழலும் பூவும் சாந்தும் முதலாக இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏது ஆகலின் 'மன்னிய வினைய நிமித்தம்' எனப்படும் ஆகலான், அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக்கு ஏதுஆகாது அன்றே? ஆயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் 'நலத்தக நாடின் அதுவே' என்றா னென்பது. கலக்கமுமென நின்ற உம்மை மேற்கூறிய பத்தொன்பானையுந் தழுவுதலின் இறந்தது தழீஇயிற்றாம். "நின்வலித் தமைகுவென் மன்னோ அல்கல் புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே" (அகம். 74) என்புழி, இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கேதுவாமென்பது கருத்து. "எல்லி, மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொடு கரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே" (அகம். 50) என்பதும் அது. 2. துன்பத்துப் புலம்பல் என்பது, பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக் கூட்டத் திற்கே நிமித்த மாகும் ஆராய்ந்துணரினென்றவாறு. அவை, "நின்னுறு விழுமங் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே" (அகம். 170) என வரும், 3. எதிர்பெய்து பரிதலென்பது, உருவுவெளிப்பாடு; அது தலை மகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல். அது, "வாரா தாயினும் வருவது போலச் செவிமுதல் இசைக்கு மரவமொடு துயில்மறந் தனவாற் றோழியென் கண்ணே." (குறுந். 301) என்புழி, வாராதென்றுணர்ந்தது இக்காலத்தாகலான், அதற்கு முன் இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. 4. ஏதம் ஆய்தலென்பது, கூட்டத்திற்கு வரும் இடையூறுண் டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர்கொல் எனவும், பிரிந்தோர் மறந்து இனி வாரார்கொல் எனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. அது, "வாரார் கொல்லெனப் பருவரும் தாரார் மார்பநீ தணந்த ஞான்றே" (அகம். 150) என வரும். 5. பசியடநிற்ற லென்பது. பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். "அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி" (அகம். 48) எனவும், "இனியான், உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" (கலி. 23) எனவும் வரும். 6. பசலைபாய்த லென்பது, பசலைபரத்தல். அது "கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு எனக்கு மாகாது என்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலெம் மாமைக் கவினே" (குறுந். 27) என வரும். 7. உண்டியிற்குறைத லென்பது, பசியடநிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல். அது, "தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கும் நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ ளென்னிதற் படலே" என வரும். 8. உடம்புநனி சுருங்க லென்பது, அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல். அது, "தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் கொடுமை கூறிய வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழிஎன் நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குன்ற நோக்கங் கடிந்ததூஉ மிலரே" என வரும். 9. கண்துயின்மறுத்த லென்பது, இரவும் பகலுந் துஞ்சாமை. அது, "புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே" (அகம். 82) என வரும். 10. கனவொடுமயங்க லென்பது, அரிதினின் துயிலெய்தியவழித் தலைமகனைக் கனவிற்கண்டு, பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம். "அலந்தாங் கமையலெ னென்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்" (கலி. 128) என்பது கனவொடு மயங்கிற்று. 11. பொய்யாக்கோட லென்பது, மெய்யைப் பொய்யாக்கோடல். அது, "கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெமக்குநின் மார்பு" (கலி. 68) எனவும், "வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை" (கலி. 41) எனவும், "வருதும் என்ற நாளும் பொய்த்தன அரியே ருண்கண் நீரும் நில்லா" (அகம். 144) எனவும் வரும். 12. மெய்யேயென்ற லென்பது, பொய்யை மெய்யென்று துணிதல்; அது, "கழங்கா டாயத் தன்றுநம் அருளிய பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே" (அகம். 66) என்பது. தானே தன்மகனை வாயில்கொண்டு புக்கானாயினும் அதனைப் பழங்கண்ணோட்டம் முன் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்துகோடலின் அப்பெயர்த்தாயிற்று. 13. ஐயஞ்செய்த லென்பது, "தூதவர் விடுதரார் துறப்பார்கொல் நோதக இருங்குயி லாலு மரோ" (கலி. 33) என்புழி நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென வாளாதே ஐயஞ்செய்தமையின் ஐயமாயிற்று. 14. அவன்தமர் உவத்த லென்பது, "ஊர னூரன் போலுந் தேரும் பாணன் தெருவி னானே" என்பது அவன்தமரைக்கண்டு உவந்தது. இது முனிவெனப்படாதோ வெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதொரு முனிவாயினல்லது பகைபட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டன்மை யன்றாமாகலின். "அவர் நாட்டு, மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு காலை வந்த காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே" (குறுந். 361) என்பதும் அது. 15. அறனளித்துரைத்த லென்பது, அறக்கிழவனை அன்பு செய்தல். அது, "பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி" (அகம். 9) என வரும். 16. ஆங்குநெஞ்சு அழித லென்பது, அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல். எனவே, அறனளித்துரைத்தல் அழிவின்று ஒன்றா மென்பது சொல்லினானாம். அது, "பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தேனென் னெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை யொழிய விடாதீமோ வென்று" (கலி. 143) என வரும். 17. எம்மெய்யாயினு மொப்புமைகோட லென்பது, யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல். அது, "கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப் பிணையுங் காணிரோ பிரியுமோ அவையே" (கலி. 20) என எம்மெய்யாயினும் ஒப்புமை கொண்டவாறு. 'எம்மெய்யாயினு' மென்றமையாற் கண்டபொருளும் கேட்டபொருளும் ஒப்புமை கொள்ளப்பெறு மென்றவாறு. 18. ஒப்புவழியுவத்த லென்பது, ஒப்புமையுண்டாகிய வழியே உவமம்கொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று; என்னை? எம்மெய்யாயினு மென்றமையின். "காமரு நோக்கினை யத்தத்தா வென்னும்நின் தேமொழி கேட்டல் இனிதுமற் றின்னாதே" (கலி. 80) என்பது ஒப்புவழி யுவந்தது; என்னை? 'காமரு நோக்கினை' யென்றமையின். "பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்குஒல்காக் கோல்செம்மை யொத்தி பெருமமற் றொவ்வாதி. " (கலி. 86) என வருவதூஉஞ் சொல்லுப. 19. உறுபெயர் கேட்ட லென்பது, தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல். அது, "பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப் பாடுகம் வா" (கலி. 41) எனவும், "மென்றோள் ஞெகிழ்த்தான் திறமல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற" (கலி. 142) எனவும் வரும். 20. கலக்க மென்பது, சொல்லத் தகாதன சொல்லுதல். அது, "பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து" (கலி. 142) எனவும். "பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப் புறங்காலிற் போக இறைப்பேன் முயலின் அறம்புணை யாகலு முண்டு" (கலி. 144) எனவும் வரும். 'கலக்கமும் நலத்தக நாடினதுவே' என்னாது, கலக்க மென்பதனை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின், இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே, தலைமகற்காயின் அதனி னூங்கு வருவதொரு கலக்கமும் உளதாமென்றது. அவை, மடலூர்தலே வரை பாய்தலே என்றற்றொடக்கத்தன. "மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே." (குறுந். 17) இதனுட் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டுகொள்க. இவ்வாறு கூறவே, இச்சூத்திரத்துளோதிய இருபது மெய்ப்பாடுந் தலைமகற்கும் ஏற்ற வகையானே கொள்ளப்படுமென்பது. அது, "எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத்து எல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே" (குறுந். 19) என்பது, துன்பத்துப் புலம்பலாம்; என்னை? தானே துன்புறுகின்றானாகத் தலைமகன் உரைத்தமையின். "அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சேண் ஆரிடை விலங்கு ஞான்றே" (அகம். 3) என்பது, எதிர்பெய்து பரிதல்; என்னை? முற்காலத்து எதிர்ப்பட்டமை பிற்காலத்துச் சொல்லினமையின். ஒழிந்தனவுந் தலைமகற்குரியனவாகி வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாம் அறனும் பொருளுமன்றி இன்பப்பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவருள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாயவற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டன வெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப் படுப்பன வாகலான் மெய்ப்பாடெனப்பட்டன. மேல் வருவனவற்றுக்கும் இஃது ஒக்கும். (22) வரைந்தெய்தும் கூட்டத்திற்கு ஏதுவாம் மெய்ப்பாடுகள் 271. முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்று ஆயிரு நான்கே அழிவில் கூட்டம். இது, வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடு இவை எட்டுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) 1. முட்டுவயிற் கழறல் - தலைவன் கூட்டத்திற்கு முட்டுப்பா டாகியவழிக் கழறியுரைத்தல். அது, "நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றால் தோழிநங் களவே" (அகம். 122) என்பது. இது தலைமகன் கேட்பக் கழறியுரைத்தது, 2. முனிவு மெய்ந்நிறுத்தல் - தலைமக ளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கு நிலைமை. அஃது, "இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோயெனச் செப்பா தீமே" (அகம். 52) என்புழி, வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது. 3. அச்சத்தின் அகறல் - தலைமகன்கண் வரும் ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பு. "மன்று பாடவிந்து . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்தன்ன கல்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே" (அகம். 128) என்னும் பாட்டினை முழுதுங் கொள்க. அதன் கருத்தாவது, நாம் அவர் இருளிடை வருதல் ஏதம் அஞ்சி அகன்று அவலித்திருப்பவும், என்னையும் நின்னையுங் கேளாது என்னெஞ்சு போவானேனென்றவாறாயிற்று. 4. அவன் புணர்வுமறுத்தல் - இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற் கெழுந்த உள்ள நிகழ்ச்சி. அது, தமரையஞ்சி மறுத்தமையானும், இது வரைவுகடாவுதற் கருத்தாகலானுந் திளைப்புவினைமறுத்தலோடு (265) இது வேற்றுமை யுடைத்து. "நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே" (அகம். 12) என்பது. தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன் புணர்வு மறுத்தலெனப்படும். இஃது 'ஒன்றித் தோன்றுந் தோழி மேன' (39) என்னும் இலக்கணத்தான் தோழி குறிப்பாயினுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது கொள்க. 5. தூது முனிவின்மை - புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல் லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறையானுஞ் சொல்லுதல். அது, "கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் னல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைஇ தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா லலவ" (அகம். 170) என்புழிக், கூறப்பட்டனவெல்லாந் தூதாகலின், தூது விடுதலை வெறாத தன்மை கூறியதாம் இப்பாட்டென்பது. "புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தான்மணந் தனையமென விடுகந் தூதே" (குறுந். 106) என்பதோவெனின், அது கற்பிற்கல்லது ஏலாது; என்னை? களவினுள் நெய்பெய் தீயின் வந்து எதிர்கொளலாகாமையின். 6. துஞ்சிச்சேர்தல் - மனையகத்துப் பொய்த்துயிலொடு மடிந்து வைகுதல். துஞ்சுதலெனினும் மடிதலெனினும் ஒக்கும். வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின் தலைமகனொடு புலந்தாள்போல மடிந் தொன்று மாதலின் அதனைத் துஞ்சிச்சேர்தலென்றானென்பது. எங்ஙனமோவெனின், ......................... என்மலைந் தனன்கொல் தானே தன்மலை ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே" (குறுந். 161) என்புழி, என்ன காரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச் சேர்தலாயிற்று. அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும். "ஆமிழி யணிவரை" என்னுங் குறிஞ்சிக்கலியினுட், "பின்னீதல் வேண்டும்நீ பிரிந்தோணட் பெனநீவிப் பூங்கண் படுதலு மஞ்சுவல் தாங்கிய அருந்துய ரவலந் தூக்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே" (கலி. 48) என்னுஞ் சுரிதகமும் அது. 7. காதல்கைம்மிகல் - காமங் கையிகந்தவழி நிகழும் உள்ளநிகழ்ச்சி. அது, "உள்ளி னுள்ளம் வேமே யுள்ளாது இருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமஞ் சான்றோ ரல்லர்யாம் மரீஇ யோரே" (குறுந். 102) என வரும். 8. கட்டுரையின்மை - உரை மறுத்திருத்தலும்; அதனானே அதற்குத் தோழிகண்ணாயினுந் தலைமகன்கண்ணா யினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாளென்பது பெற்றாம். அது, "யான்ற னறிவலே தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே பெருமுது செல்வ ரொருமட மகளே" (குறுந். 337) என்பது தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகன் தமரினெய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவுகடாதலாயிற்றென்பது. ஒழிந்தனவும் அவ்வாறே வரைவுகடாதற்கு ஏற்றவாறு உரையிற்கொள்க. என்று ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்- என்றெண்ணப்பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய்துங் கூட்டமென உணர்க. (23) வரைந்தெய்தியபின் தலைமகள்கண் நிகழும் மெய்ப்பாடுகள் 272. தெய்வம் அஞ்சல் புரையறம் தெளிதல் இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாக்கம் அருள்மிக வுடைமை யன்புதொக நிற்றல் பிரிவுஆற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. இஃது, அழிவில் கூட்டம் நிகழ்ந்த பின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவையென்கின்றது. (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய அழிவில் கூட்டமெனப்படும் எ-று. செப்பிய பொருளென்பது அழிவில் கூட்டமன்றே? அதற்கு முற்படும் மெய்ப்பாடெட்டனையும் அழிவில் கூட்டமென்றது போல அதற்குப் பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்டமென்பான் மேற்கூறிய அழிவில் கூட்டமே இவையுமெனக் கூறியவாறு. எனவே, வரைந்தெய்திய பின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவையென்பது கூறினானாம். 1. தெய்வமஞ்சலென்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வ மும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னாரென்பது அவனானுணர்த் தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ளநிகழ்ச்சியைத் தெய்வமஞ்ச லென்றா னென்பது. மற்றுத் தனக்குத் தெய்வந் தன் கணவனாதலான் அத் தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின், அவனான் அஞ்சப்படுந் தெய்வம் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமென வும் அஞ்சுவளென்பது. "சினைவாடச் சிறக்கும்நின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" (கலி. 16) என்பது, தெய்வத்திறநோக்கித் தெருமந்ததாம்; என்னை? அவற்கில அன்ன எனவே, தாம் வேண்டிய குறை முடியாது பிரிந்தார்மாட்டு அவை ஏதஞ்செய்யுங்கொல் என்றஞ்சி உரைத்தவாறு. "அச்சு ஆறாக வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்" (கலி. 75) என்பதும் அது. இது, "ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்" (தொல். கற். 5) தலைமகள் கருத்தின்கண் நிகழுங் குறிப்பென்பது. 2. புரையறந் தெளிதலென்பது, தனக்கொத்த இல்லறம் இன்ன தென்று தலைமகள் மனத்துப் படுதல். அது, "விரியுளைக் கலிமான் தேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும்" (கலி. 75) என வரும். இஃது அவனொடு சொல்லாடாது ஊடியிருப்பேனாயின், விருந்துகொண்டு புகுதரும்; அதனான் ஊடலை மறப்பே னென்றமையிற் புரையறந் தெளிதலாயிற்று. 3. இல்லதுகாய்தலென்பது, களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல் அது, "நற்றா ரகலத்துக் கோர்சார் மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பா டாகலு முண்டு" (கலி. 93) என வரும். இது கடவுளரையே கண்டு தங்கினானாயினும், நெட்டிருங் கூந்தற் கடவுளரையே கண்டாயென்று இல்லது சொல்லிக் காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று. 4. உள்ளது உவர்த்தலென்பது, தலைமகனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி; அது, "கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்" (அகம் 176) என்னும் பாட்டினுள், "வேப்புநனை யன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு இரைதேர் வெண்குரு கஞ்சி யயலது ஒலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல் திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் ஈர்மலி மண்ணளைச் செறியு மூர" (அகம். 176) என்புழித், தலைமகன் வாயில்வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு வந்தாயென்றமையின் இஃது உள்ளது உவர்த்தலாயிற்று. "பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும் விட்டவள் வரனோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய்" (கலி. 69) என்பதுவும் அது. 5. புணர்ந்துழியுண்மையென்பது, முற்கூறிய இல்லது காய்தலும் உள்ளதுவர்த்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன வற்றில் சென்ற உள்ளநிகழ்ச்சி. அது, "குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய் ஊடி யிருப்பினு மூர னறுமேனி கூட லினிதா மெனக்கு" (ஐந். ஐம். 30) என்பது; என்னை? புணர்ந்துழியுண்மை கூறினாள் விகாரமின்றி யாதலின். 6. பொழுதுமறுப்பு ஆக்கமென்பது, களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற்போல்வதொரு வரையறையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக் காலத்துப்பொழுது வரைந்துபட்ட இடர்ப்பாட்டினீங்கிய மனமகிழ்ச்சி ஆக்கமெனப்படும். அது, "அயிரை பரந்த வந்தண் பழனத்து ஏந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாம்நுமக்கு அரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே (குறுந். 178) என்பதனுள், தொழுதுகாண் பிறையில் தோன்றின மென்பதான் களவுக் காலத்து இடையீடு பெருகிற்றெனக் கூறி, அங்ஙனம் வரைந்த பொழுதினை மறுத்த காலத்தும் நடுங்கலானீ ரென்றமையின் இஃது அப்பொருட் டாயிற்று. 7. அருள்மிகவுடைமை யென்பது, களவுக்காலத்துப் போலத் துன்ப மிகுதலின்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல்; அது, "1நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே" (நற்.1) என வரும். 8. அன்புதொக நிற்றலென்பது, களவுக்காலத்து விரிந்த அன்பெல் லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல். "எம்போற், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே." (அகம். 176) என்புழிப், புதல்வற்பயந்து நின்இன் றுறையுங் கடத்தினம் யாமென்றமை யின் இஃது அன்புதொக நிற்றலாயிற்று. 9. பிரிவாற்றாமை யென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை; என்னை? புறத்தார்க் குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலி னென்பது. "இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிளிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள் தடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை" (கலி. 2) என்புழி, இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மான் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத்தாவது: பிரிவாற் றாமையின் இவள் இறந்துபடுவள், பின்னை அப்பொருள் கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையதெனத் தலைமகள் பிரிவாற்றாமை கூறியவாறாயிற்று. 10. மறைந்தவை யுரைத்தலென்பது, களவுக்காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக்காலத்துக் கூறுதல்; அவை, "களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ளமோ டளவிய விடத்தும்" (தொல். கற். 5) என்புழித் தோன்றிய மனக்குறிப்பு. அது, "முயங்கல் விடாஅ லிவையென மயங்கி யான்ஓம் என்னவு மொல்லார் தாமற்று இவைபா ராட்டிய பருவமு முளவே யினியே, புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத் திதலை யணிந்த தேங்கொண் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே" (அகம். 26) என்பது. முன்னிலைப் புறமொழியாகலான் மறைந்த ஒழுக்கத்துக்கண் நிகழ்ந்த பொருளைக் கற்பினுள் உரைத்தவாறாயிற்று. 11. புறஞ்சொன் மாணாக்கிளவியென்பது, தலைமகற்கு வந்த புறஞ் சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி; அவற்குவரும் பழிகாத் தலும் தனக்கு அறமாதலின் அதுவுங் கற்பின்கண்ணே நிகழுமென்பது. அது, "களிறுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே" (அகம். 96) என்றாற் போல்வன. கிளவியொடு தொகைஇ யென்பது, இதனொடுந் தொகுத்தென்ற வாறு; சிறந்த பத்தும் என்பது, விதந்தோதிய பத்தும்; செப்பிய பொருள் என்பது, அழிவில் கூட்டமெனச் செப்பிய கற்பின்கண் வரும் மெய்ப்பா டெனப்படும் இவையும் என்பது. மற்றுப் பதினொன்றனையெண்ணிச் சிறந்த பத்து இவையென்ற தென்னையெனின், அதனை, "ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே" (தொல். பொருள். 556) என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றியுரைக்கப்படும். அங்ஙனஞ் 'சிறந்த பத்தும் புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇ' யெனக் கூட்டி யுரைக்க. சிறந்த பத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப் பாடு பிறவுமுளவேற் கொள்க. (24) தலைமகள் ஒப்பினுக்குரிய மெய்ப்பாடுகள் 273. பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே. இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது; மேற் களவியலுள், "ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப" (தொல். பொருள். 93) என்றான், அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத்தென்பது உணர்த்தினமையின். (இ-ள்.) ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமுமெனப் பத்து வகைய தலைமகளொப்பினது பகுதி எ-று. இவை தலைமகற்கு மெய்ப்பாடெனப்படாவோவெனின், படுமாயினும் அஃது ஒப்பினது வகையென்றதனானே தலைமகட்கே உரிமை கொளப்படும். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமையென்றானென்பது. அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது ஆள்வினை யெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மையென் புழி ஆண்மையென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது. 4யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறி யாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஓத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும். 5'உருவு நிறுத்த காமவாயி'லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சி யின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு. இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமா றென்னை யெனின், காமவாயிலெனப்பட்ட இயற்கையன்பு வடிவுபற்றி யல்லது தோன்றாமையானுங், குணம்பற்றித் தோன்றுவன செயற்கை யன்பாகலானும், உருவினை யன்பிற்கு அடையாகக் கூறினா னாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்தெண்ணிக் கொண்டா மென்பது; என்னை? "வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு" (குறள். 632) என்புழிக் கற்றறிதலென்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாகலின். அஃதேல், 6உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடாமாறென் னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட் பிறப்பதொரு தருக்குண் டன்றே? அதனான் அது மெய்ப்பாடெனப்படும். நிறையென்பது மறைபிற ரறியாமை (கலி. 133) நெஞ்சினை நிறுத்தல். அருளென்பது எல்லா வுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல்; அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததொரு குறிப்பு. உணர்வென்பது அறி வுடைமை; அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல். 10திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி. அது வினையுள்ளுடைமை யெனவும் படும். இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவை பற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு. 'வகை' யென்றதனான், 'ஆண்மை பெண்மை' என்பது பிறப் பொப்புமை யெனவுங், 'குடிமைவகை' யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்க மெனவும், 'பிறப்பினது வகை' என்பது அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றும் பிறப்புவகையெனப்படுமெனவுங் கூறுக. இனி, 'ஏவன்மரபின் ஏனோர்' பாங்கினும் (24) 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' (23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்து வரினன்றி அறிவுடையார்கட் காமக் குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்று ஓதினானென்பது. அடியோர்பாங்கினும் வினைவலர்பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினாற் கொண்டான்; அவை பிறழ்ந்துவருமாகலினென்பது. உ-ம்: "அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்" (கலி. 39) என்பது பிறப்பொப்புமை. "உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே" (நற். 3) என்பது தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையிற் குடிமையாயிற்று. "கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து" (அகம். 93) என்புழி, இன்னகாரணத்திற் பிரிந்துபோந்து வினைமுடித்தனமாதலின் அவளை "முயங்குகஞ் சென்மோ" என்றமையின், தன் ஆள்வினைக்குத் தகப் பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉங் கருதிய கருத்தினாற் காமக்குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று. "என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண்" (கலி. 18) என்பது யாண்டு. "முல்லை முகையு முருந்துநிரைத் தன்ன பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணும் நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பாரியார்." (கலி. 108) என்பது உருவு. "நின்மக ளுண்கண் பன்மாண் நோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத்து அவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள்" (அகம். 48) என்பது உருவுநிறுத்த காமவாயில். "கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமன் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந்து" (கலி. 37) என்புழி முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையானென்பது தலைமகனிறை யுடைமை கூறியவாறு. "அவன்வயிற் சேயேன்மன் யானுந் துயருழப்பேன்" (கலி. 37) எனத், தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு நிகழ்ந்தவாறு. "பெண்ணன் றுரைத்தல் நமக்காயின்" (கலி. 37) என்பதும் அது. இது தோழி கூற்றன்றோவெனின், அதுவுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்(273)க் கூறினாமென்பது. " 1தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" (அகம். 4) என்பது அருள்பற்றிப் பிறந்த காமக்குறிப்பு. " 2அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதரும்" (அகம். 22) என்னும் பாட்டினுள், "தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப" என்பது இருவருணர்வும் ஒத்தவாறு, தலைமகள் குறிப்பு உணர்ந்து வந்தன னென்றமையின். இது 'செல்வம் புலன்' (தொல். பொருள். 259) என்புழிப் புலனெனப்படாது காமத்திற்கே உரித்தாகிய உணர்வாகி வேறு கூறப் பட்டது. "நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்தோள் பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற் சிலைவல்லான் போலுஞ் செறிவினான் நல்ல பலவல்லன் றோளாள் பவன்" (கலி. 143) என்பது திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு. என்னை? இனையன வல்லனாதல் செல்வக்குடிப்பிறந்தவரை அறிவிக்குமாகலின், அது காமக் குறிப்பினை நிகழ்த்துமென்பது. இது தலைமகட்கும் ஒக்கும். "உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு" (கலி. 94) என்பது பிறப்புவகையின்பாற்படும். பிறவும் இவ்வாறே கொள்க. (25) தலைமகற்கு ஆகாத மெய்ப்பாடுகள் 274. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை என்றிவை யின்மை யென்மனார் புலவர். இது, காமக்குறிப்பிற் காகாதன கூறுகின்றது. (இ-ள்.) 1நிம்பிரி- பொறாமை தோன்றுங் குறிப்பு; அவை இந்நாட் சிறிதுபொறுத்தாயென்றாற் போல்வன; 2கொடுமை- கேடுசூழ நினையுந் தீவினையுள்ளம்; 3வியப்பு- தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான் போல் வியந்தொழுகுதல்; இனிக் குணத்தின்மேற்கொண்டு தன்னை வியத்த லெனினும் அமையும். 4புறமொழி- புறங் கூற்று; 5வன்சொல்- கண் ணோட்டமின்றிச் சொல்லுஞ் சொற்கள்; 6 பொச்சாப்பு- கடைப்பிடி யின்றி ஞெகிழ்ந் திருத்தல்; 7மடிமை- சோம்புள்ளம்; 8குடிமை - இவள் இழிந்த பிறப்பினளெனத் தன்னை நன்கு மதித்தொகுழுதல்; 9இன்புறல்- ஒருவரொருவரிற்றாமே இன்புறுகின்றாராக நினைத்தல்; 10ஏழைமை- நுழைந்த வுணர்வினரன்றி வரும் வெண்மை; 11மறப்பு- மறவி; 12ஒப்புமைஇன்னாளையொக்கும் இவளென்று அன்புசெய்தல்; என்று இவை இன்மை என்மனார் புலவர் -இவையெல்லாம் இன்றி வரும் தலைமகன் கண் நிகழும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் எ-று. எனவே, அவைதம்மை வரையறுத்துக்கூறாது அவற்(றுக்)காகாதன வரையறுத்துக் கூறினானென்பது. தலைமகட்குரிய மெய்ப்பாடாயின வரை யறுத்துக் கூறினமையின் அவட்காகாதன கூறல்வேண்டுவதன்றென்பது. ஆகாதவற்றுக்கு உதாரணங் காட்டலாவதில்லை. (26) மெய்ப்பாடுகளை அறிதற்குக் கருவி 275. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. இது, மேற்கூறிய மெய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை. "எள்ள லிளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான்கு" (தொல். பொருள். 252) என்புழி, நகைக்கேதுவாகிய பொருள் கூறியதல்லது அப் பொருள்பற்றிப் பிறந்த நகையுணர்வு புலப்படுமாறு இன்னவாறென்றிலன். இனி 'உடைமை யின்புறல்' (தொல். பொருள். 260) என்றற்றொடக்கத்தனவினும் அவ்வாறு எண்ணியதல்லது அவை உணருமாற்றுக்குக் கருவி கூறியதிலன். அங்ஙனமே பிறவுங் கூறியதிலனாகலான் அதனை ஒருவாற்றான் கூறுகின்றான். (இ-ள்.) கண்ணானுஞ் செவியானும் யாப்புற அறியும் அறிவுடை யார்க்கு அல்லது மெய்ப்பாட்டுப்பொருள் கோடல் ஆராய்தற்கு அருமையுடைத்து எ-று. மற்று மனத்துநிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானுஞ் செவியானு முணர்தலென்பது என்னையெனின், மெய்ப்பாடு பிறந்தவழி, உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும் உரை வேறுபடுதலுமுடைமையின் அவை கண்ணானுஞ் செவியானுமுணர்ந்து கோடல் அவ்வத் துறை போயினாரது ஆற்றலென்பது கருத்து. "இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே" (குறுந். 312) என்பதனுள் அமராமுகத்தளாகுதலுந் தமரோரன்னளாகுதலுந் தலை மகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர் வெனப்படும். "ஒழிகோ யானென அழிதகக் கூறி" (அகம். 110) என்புழித் தலைமகன் மனத்து நிகழ்ந்த அழிவெல்லாம் 'ஒழிகோ யான்' என்ற உரையானே உணர்ந்தமையின், அது செவியுணர்வெனப்படும். இங்ஙனம் உணர்தலும் உணர்வுடையார்க்கு அன்றிப் பெரிதும் அரிது என்பான் 'எண்ணருங் குரைத்து' என்றான் என்பது. மெய்ப்பாட்டியற்குப் பேராசிரியர்உரை முற்றிற்று. 7 உவமவியல் உவமத்தோற்றம் வரும் நான்கு கூறுபாடு 276. வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உவமவியல் என்னும் பெயர்த்து. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். இதனானே இவ்வோத்து நுதலியதூஉம் உவமப்பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம்புறம் என்பனவற்றுள், இஃது என்ன பொருள் எனப் படுமோவெனின், அவ்விரண்டுமெனப்படும், மெய்ப்பாடுபோல என்பது; என்னை? "உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான" (தொல்.பொருள். 295) என மேல்வருகின்றதாகலின். மற்றிவ்விருதிணைப் பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப் படுதலானும், உவமம்பற்றியும் பொருள் கூறுகின்றானென்பது. மேல் அகத் திணையியலுள் (49) உவமத்தினை இரண்டாக்கி ஓதினான், உள்ளுறை யுவமம் ஏனையுவமமென; அவ்விரண்டனையும் ஈண்டு விரித்துக் கூறுகின்ற வாறு. அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற்கூறினான், அஃது அகத்திணைக்கே சிறந்ததன்றாயினும் யாப்புடைமை நோக்கி, உலக வழக்கினுஞ் செய்யுள்வழக்கினும் வருமாகலானுமென்பது. அஃதேல் உள்ளுறையுவமஞ் செய்யுட்கே உரிமையின் அதனைச் செய்யுளியலுட் கூறுகவெனின், உவமப்பகுதியாதலொப்புமை நோக்கி ஓரினப்பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும், வருகின்ற செய்யுளியற்கும் இயையுமாற்றான் அதனை ஈற்றுக்கண் வைத்தான், அது செய்யுட்குரித் தென்னுங் கருத்தானென்பது,. எனவே, எழுத்தினுஞ் சொல்லினும் போலச் செய்யுட்குரியன செய்யுட்கென்றே ஓதலும் ஒருவகையாற் பெற்றாம். மற்றுப் 'பாடல் சான்ற புலனெறி வழக்கம்' (53) அல்லாத வழக்கு ஆராயப் பயந்த தென்னையெனின், அப்புலனெறி வழக்கிற்கு உறுப்பாகிய வழக்கினை ஆராய்தலும் அதற்கு உபகாரமுடைத்தாதலானென்றவாறு. மற்றிது மேல் எவ் வோத்தினோடு இயைபுடைத்தோவெனின், மேற் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடைத்து; என்னை? உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றானாகலின். எங்ஙனமோவெனின், 'ஆபோலும் ஆமா' என்றக்கால், ஆமா கண்டறியா தான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமமே பற்றி ஆமா இதுவென்று அறியுமாகலானென்பது, இவ்வோத்தின் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம் கூறி அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிலும், பயனும், வடிவும், வண்ணமும் என்னும் நான் கெனப்படும் கூறுபட வரும் உவமத்தோற்றம் எ-று. 'உவமம்' என்பதனை வினைமுதலாகிய நான்கனொடுங் கூட்டி வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமமெனப் பெயர் கூறப்படும். வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்கு முன் வினை கூறப் பட்டது. அதுபோலப் பிழம்பினான் தோன்றும் நிறத்தினை அதற்குப்பின் வைத்தான். பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் அதனுடன் வைத் தானென்பது. மற்று மெய்யெனப்படுவது பொருளாதலின், அதன் புடை பெயர்ச்சியாகிய வினை பிற்கூறுக வெனின், வினையுவமம் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாகல் நோக்கி அது முற்கூறினானென்பது. அது 'புலிமறவன்' எனத் தொகாது 'புலியன்ன மறவன்' என விரிந்தே நிற்றலும், 'புலிப்பாய்த்துள்' எனத் தொக்கு வருதலும் உடைத்தென்பது. தொகை நான்கென எண்ணிக் கொடுத்தான். வரலாறு; 'புலியன்ன மறவ'னென்பது 1'வினையுவமம்,' அது பாயு மாறே பாய்வனென்னுந் தொழில்பற்றி ஒப்பித்தமையின்; அற்றன்றித் தோலும் வாலுங் காலும் முதலாகிய வடிவும் ஏனைவண்ணமும் பயனும் ஒவ்வா வென்பது. ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். "மாரி யன்ன வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே" (புறம். 133) என்பது 2'பயனுவமம்'; என்னை? மாரியான் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்குமென்றவாறு. 'துடியிடை'யென்பது 3'மெய்யுவமம்'; அல்குலும் ஆகமும் அகன்றுகாட்ட அஃகித் தோன்றும் மருங்குலான் துடி அதனோடு ஒத்தது. 'பொன்மேனி'யென்பது 4'உருவுவமம்'; பொன்னின்கண்ணும் மேனி யின் கண்ணுங் கிடந்த நிறமே ஒத்தன, பிற ஒத்திலவென்பது. இந்நான்கும் பற்றி உவமந் தோன்றுமென்பது கருத்து. 'உவமத்தோற்றம்' என்பது மூன்றாவதன் தொகை; உவமத்தாற் பொருள் தோன்றுந் தோற்றமென்றவாறு. மற்று 'அடைசினைமுதல்' (தொல். சொல். 26) என்றாற் போல அடையெனவே இந்நாற்பகுதியும் அடங்கக் கூறிப் பண்புத்தொகை யென்புழி வண்ணம் வடிவு முதலாயின அடங்கியவாறு போலப் பண் பென்று அடக்குதல் செய்யாது ஈண்டு நான்கெனப் பகுத்ததென்னை யெனின், இது பொருளாராய்ச்சியாகலாற் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் வேறாக நோக்கி வடிவினையும் உருவினையும் வேறு படுத்தான். என்னை? வடிவுபற்றிய பண்பு இரவின்கண் உற்றுணரப் படும்; வண்ணமாயின் அவ்வாறு உற்றுணரப்படாதென்பது. அல்லாக்காற் பகற்குறிக்கட் கூறப்படும் வண்ணம் முதலாயினவும் இரவுக்குறிக்கண் எய்துவான்செல்லும், வடிவும் பண்பும் ஒன்றாகக் கூறினென்பது. அல்லதூஉம், உணர்த்துகின்ற திணைப் பொருளினை எளிதிற் புலப்படுத்த லுபகாரம் நோக்கியும் அவ்வாறு பகுத்தா னென்பது. "களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல" (அகம். 22) என்புழிப் பார்வலொதுக்கமாகிய வினை பண்பெனப்படாது. என்னை? பண்பென்பது குறிப்பின்றி நிகழுங் குணமாகலினென்பது. அடையெனி னும் அதுவேயெனக் கூறி மறுக்க. எனவே, பார்வ லொதுக்க மெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுங்கி நின்றா னென்பதும், பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்குகின்றானல்ல னென்பதுஞ் சொல்லி அவன் தலைமைக்கேற்ற உவமமாதலின், அது பொருட் டோற்ற மாயிற்று. "மாரி யன்ன வண்கை" (புறம். 133) என்பதூஉம் பண்பாயின், அதன் நிறத்து மேற்கொண்டு வண்கையுங் கரிதெனல் வேண்டுமாகலின் அது பண்பென அடங்காது. "அணைத்தோள்" (கலி. 87) என்பதும் அது. "உருவுகிள ரேர்வினைப் பொலிந்த பாவை யியல்கற் றன்ன வொதுக்கினள்" (அகம். 142) என்றக்கால், வடிவுபற்றி உவமங்கொள்ளவே, உயிரில்லாதாள் போல, அச்ச மின்றி, இரவிடை வந்தாளென்னும் பொருள் தோன்றும். வடிவு பண்பெனப் படாது, பண்பி ஆகலின். "மாரிப் பீரத் தலர்சில கொண்டே" (குறுந். 98) காட்டி, "இன்ன ளாயினள் நன்னுதல்" (குறுந். 98) என்றவழிக், குறித்த பருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று. இஃது உருவுவமம். இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதி நோக்கி உவமப் பகுதி யென்றான் என்பது. என்றாற்கு, இந்நான்கு பகுதியேயன்றி அளவுஞ் சுவையுந் தண்மையும் வெம்மையும் நன்மையுந் தீமையுஞ் சிறுமையும் பெருமையும் முதலாயின பற்றியும் உவமப்பகுதி கூறாரோவெனின், அவை யெல்லாம் இந் நான்கனுள் அடங்குமென்றற்கும் இந்நான்கும் இன்ன பொருட் பகுதி உடையவென்றற்குமன்றே இவற்றை 'வகைபெற வந்த' என்பானாயிற்றென்பது. "பறைக்குர லெழிலி" (அகம். 23) என்றக்காற் பறையும் எழிலியும் ஒலித்தல் வினைபற்றி உவமம் கொள்வான் ஒன்றற்குக் குரல் கூறி ஒன்றனை வாளாது கூறினானாதலின் வினை யுமவத்தின் வகையெனப்படும். "கடைக்கண்ணாற் கொல்வான்போ னோக்கி" (கலி. 51) என்பதூஉம் அதன் வகை. 'வந்த' என்றதனான் இல்லாத வினை வருவித்துஞ் சொல்லப்படும். அவை, "விசும்புரி வதுபோல்" (அகம். 24) எனவும், "மணிவாழ் பாவை நடைகற் றன்ன" (நற். 184) எனவும், "வான்றோய் வன்ன குடிமையும்" (நற். 234) எனவும் வரும். இவை, உவமமும் பொருளும் ஆகிய வினைபற்றி வந்திலவாகலின் அதன் வகையெனப்பட்டன. 'அன்ன' 'ஆங்க' என்பன இடைச்சொல்லாக லின் வினைப்பின்னும் வந்தன. "நடைகற்றன்ன" என்புழிக் கற்று என்னும் வினையெச்சம் தன்னெச்ச வினை இகந்ததாயினும் அஃது உவமப்பகுதியாக லான் அங்ஙனம் வருதலும் வகையென்றதனானே கொள்ளப்படும். "கொன்றன்ன வின்னா செயினும்" (குறள். 109) என்பதும் அது. "இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்" (குறள். 308) என்பது வினைப்பெயர்பற்றி உவமஞ் சென்றது. 'பொன்மரம் போலக் கொடுக்கு' மென்பது பயவுவமத்தின் பகுதி யாய் அடங்கும்; என்னை? மழைத்தொழிலாகிய பெயலாற் பயந்த விளையுளுடன் இடையிட்டுப்போய் உவமங்கொள்ளாது கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்படாது, கொள்வார்க்குப் பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகையாயிற்று. நிலம்போலுங் கொடை என்பதும் அது. "தெம்முனை யிடத்திற் சேயகொல் அம்மா அரிவை அவர் சென்ற நாடே" என்னும் எல்லைப்பொருண்மை மெய்யுவமத்திற்கு வகையெனப்படும், அஃது அளவாகலினென்பது. இடைக்கிடந்த நிலம் இரண்டனையும் வடிவு பற்றி உவமஞ்செய்தானென்பது. மற்றுச் சேய்மை அண்மை குணமாம் பிற வெனின், அற்றன்று; துடியிடை என்றவழி அதன் இடைநுணுக்கமுங் குணனாகும், அவ்வாறு கொள்வார்க்கு என்பது. எனவே நிறப்பண்பு அல்லனவெல்லாம் மெய்யுவமத்தின் வகையெனப்படுவனவாயின. குணமாத லொப்புமையான் அவை நிறப்பண்பிற்கு இனமெனவும்படும். அவ்வாறு திரிபுடைமையின் அவற்றை விதந்தோதாது 'வகை'யென்றதனாற் கொண்டானென்பது. "தளிர்சிவந் தாங்குச் சிவந்த மேனி" யென்பது உருவுவமத்தின் வகையெனப்படும்; என்னை? உவமத்தாற் கொள்ளப்பட்ட பொருள் நிறமாயினும் அதனை வினைவிரித்தாங்கு விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி வகையெனப்பட்டது. பிறவும் அவ்வாறே கொள்க. இப்பகுதி யுடைமை நோக்கி 'வகைபெற வந்த' என்றானென்பது. (1) வினை முதலிய நான்கும் விரவியும் வருமாறு 277. விரவியும் வரூஉம் மரபின வென்ப. இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது; நான்கென மேல் (276) தொகை கொடுத்தமையின் அவை வேறுவேறு வருதலெய்தியதனை அவ்வாறே யன்றி விரவியும் வரும் என்றமையின். (இ-ள்.) அந்நான்கும் ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமஞ் செய்யும்வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும். அஃது அதன் மரபு எ-று. "செவ்வா னன்ன மேனி" (அகம். கடவுள் வாழ்த்து) என வண்ணம் ஒன்றுமே பற்றி உவமஞ்சென்றது. "அவ்வான், இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று" (அகம் .கடவுள் வாழ்த்து) என்றவழி வண்ணத்தொடு வடிவு பற்றி உவமஞ் சென்றது. "காயா மென்சினை தோய நீடிப் பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி கையாடு வட்டின் தோன்றும் மையாடு சென்னிய மலைகிழ வோனே" (அகம். 108) என்புழி, ஆடுதல்தொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் வந்தது. பிறவுமன்ன. 'மரபின' வென்றதனான் அவை அவ்வாறு விராய்வருதலும் மரபே; வேறு வேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க. (2) பொருளினும் உவமம் உயர்ந்துவரல் வேண்டும் எனல் 278. உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை. இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) உவமமெனப்பட்டது உயர்ந்த பொருளாகல் வேண்டும் எ-று. எனவே, உவமிக்கப்படும் பொருள் இழிந்துவரல் வேண்டுமென்பது. "அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்" (பட்டின. 298) எனவும், "மாரி யம்பின் மழைத்தோற் சோழர்" (அகம். 336) எனவும். "கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்" (அகம். 176) எனவும், "பொன்மேனி" எனவும் வரும். இவற்றுள் உவம உயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பெய்துவித்தவாறு கண்டுகொள்க. 'உள்ளுங்காலை' என்றதனான், முன்னத்தினுணருங் கிளவியான் (தொல். சொல். 459) உவமங்கோடலும், இழிந்தபொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச் செயல்வேண்டும் எனவுங் கொள்க. அவை 'என்யானை' 'என்பாவை' என்றவழி அவைபோலும் என்னுங் குறிப்புடை யான், பொருள் கூறிற்றிலனாயினும், அவன் குறிப்பினான் அவை வினை யுவமமெனவும் மெய்யுவம மெனவும்படும். இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லும், அவை பற்றாது சொல்லுதல் குற்றமாகலின். "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு" (குறள். 1081) என்பது ஐயுற்று முன்னத்தான் உவமஞ்செய்தது. தாமரையன்று முகமேயெனத் துணிந்தவழியும், மழையன்று வண்டிருத்தலிற் குழலேயெனப் பொருட்குக் காரணங்கொடுத்தவழியும், மதியங்கொல்லோ மறுவில்லை யென்று உவமைக் குறைபாடு கூறுதலும், "நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லும் நோக்குபு நினைஇ ஐதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயுமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலும் மயிலும் அன்று சொல்லத் தளருங் கிளியும் அன்று" (கலி. 55) என்பனவுமெல்லாம் அவை. இவற்றுள் மலையுஞ் சுனையும் உவமமின்மை யின் அவற்றைப் பிறையொடும் மதியொடும் உடன்வைத்து உவமம்போலக் கூறி எதிர்மறுத்தது என்னையெனின், அவையாமாறு 'முதலுஞ் சினையும்' (281) என்புழிச் சொல்லுதும். 'என்ற வியப்ப என்றவை யெனாஅ' (தொல். பொருள். 286) என மேல்வருஞ் சூத்திரத்துள் என்ற வென்பதோர் உவமவுருபு கூறின மையின், "வாயென்ற பவளம்" எனவும் "வாய் பவளமாக" எனவும் "வாய் பவளம்" எனவும் வருவனவும் அக்குறிப்புவமத்தின் பகுதியெனவேபடும். இவற்றை வேறுவேறு பெயர்கொடுத்து விரித்துக்கூறாது 'முன்னத் தினுணர்' வனவே இவையெல்லா மென்னுந் துணையே இலேசினாற் கூறி ஒழிந்த தென்னையெனின், இவற்றாற் செய்யுள் செய்வார் செய்யும் பொருட்படைப்பகுதி எண்ணிறந்தனவாகலின், அப்பகுதியெல்லாங் கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறி யொழிந்தா னென்பது. 'வாயென்ற பவள' மெனவும் 'வாய்பவளமாக'வெனவும் 'வாய்ப்பவள'மெனவும் வந்த குறிப்புவமங்களை இக்காலத்தார் உருவக மென்றே வழங்குப. இனி, 'வாய்பவளம்' (யா. வி. மேற்.) எனவும், 'கண்ண் கருவிளை' (யா. வி. மேற்.) யெனவும் பெயர்ப்பயனிலை வரின் அவற்றை ஒற்றுமைகாட்டி உருவகம் என்றாராயினும், அதுவும் உவமம் எனவே படுமென்பது. (3) உவமம் பிறக்குமிடம் நான்காவன 279. சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப. இதுவும் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) வினை பயன் மெய் உரு என்பன பற்றி உவமம் கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமம் எ-று. 'நிலைக்கள' மென்பது அவை அவ்வாறு உவமம் செய்தற்கு முதலாகிய நிலைக்களனென்றவாறு. "முரசு முழங்கு தானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிந" (பொருந. 54-57) என்பது, சிறப்பினாற் பெற்ற உவமமாகலிற் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்தது. "ஓவத் தன்ன விடனுடை வரைப்பின்" (புறம். 251) என்புழி அந்நகரினது செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் அதற்கு நிலைக்களன் நலனாயிற்று, "பாவை யன்ன பலராய் மாண்கவின்" (அகம். 98) என்புழி மகள்கட் காதல் காரணமாக உவமம் பிறந்தது. 'என்யானை' யென்பதும் அது. "அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்" (பட்டின. 298) என ஒருவன் வலிகாரணமாக உவமம்பிறந்தமையின் அதற்கு நிலைக்களம் அவன் வலியாயிற்று. இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப்பட்ட பொருள் யாதேனும் இயைபில்லதொன்று கூறலாகாதெனவும், உவமத் தொடு முழுதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோடொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டு மெனவுங் கூறி, அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும், ஒரு பொருட்கண் தோன்றிய நன்மை பற்றியவும், காதன் மிகுதியான் உளவாகக் கொண்டு உரைப்பனவும், தன்தன்மையான் உளவாயின வலிபற்றினவுமென நான்காமென்றவாறு. இவற்றுக் கெல்லாம் வினைபயன் மெய் உரு என்னும் நான்குந் தலைப்பெய்யு மென்பது. 1சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு. 2நலனென்றது அழகு. 3காதலென்பது அந்நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கியுரைப்பது; 4வலியென்பது தன்றன்மையானே உள்ளதொரு வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களமெனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். தன்மேல் வருகின்ற பகைவனைப் பகைவன் புலிபோலுமென்று அவன் வீரக்குறிப்பு அறியாமற் கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமத்துக்குத் தோற்றம் ஆண்டில்லை; தான் வினையுவம மாகலின் திரியாதாயினுமென்பது. (4) கிழக்கிடு பொருளும் நிலைக்களன் ஆதல் 280. கிழக்கிடு பொருளோடு ஐந்து மாகும். இது, மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஒரு புறனடை. (இ-ள்.) அந்நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொருளோடு ஐந்தெனவும் படும் எ-று. கிழக்கிடு பொருளென்பது கீழ்ப்படுக்கப்படும் பொருள்; "கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே" (குறுந். 337) என்புழிக் கீழ்வீழ்ந்தன என்பதனைக் கிழக்குவீழ்ந்தன என்பவாகலின். ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோற்றுவித்தலின் அதுவும் நிலைக்களமா மென்றவாறு. அவை, "உள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி" (அகம். 71) எனவும், "அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப" (அகம். 313) எனவும் வரும். இவை பொருளன்றி உவமமுங் கிழக்கிடப்பட்டனவாலெனின், அங்ஙனமாயினும் அவை பொருளொடு சார்த்தி நோக்க உயர்ந்தன வெனப்படும். (5) முதல்சினை பற்றி உவமம் வருமாறு 281. முதலுஞ் சினையுமென்று ஆயிரு பொருட்கும் நுதலிய மரபின் உரியவை யுரிய. இது, மேற் கூறிவருகின்ற உவமம் முதல்சினை பற்றி வருங்கால் இன்னவாறாக வென்கின்றது. (இ-ள்.) முதற்பொருளுஞ் சினைப்பொருளும் என்னும் அவ்விரண்டு பொருட்கும் குறித்த வகையான் மரபு படவரின் உரியவை உரியவாம் எ-று. இதன் கருத்து, முதலொடு முதலுஞ், சினையொடு சினையும், முதலொடு சினையுஞ், சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரியவெனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படு மெனவுங் கூறியவாறு: "வரைபுரையு மழகளிற்றின்மிசை" (புறம். 38) என்பது, முதற்கு முதலே வந்து உவமம் ஆயிற்று. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள்.) என்பது, சினைக்குச் சினையே வந்து உவமம் ஆயிற்று. "நெருப்பி னன்ன சிறுகட் பன்றி" (அகம். 84) என்பது, முதல் உவமமாகப் பொருள் சினையாகி வந்தது. "அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ" (கலி. 84) என்பது, சினை யுவமமாக உவமிக்கப்படும் பொருண் முதலாயிற்று. 'நுதலிய மர'பென்றதனான், "விசும்பி னன்ன சூழ்ச்சி" (புறம். 2) என்றக்கால், விசும்பென்பது முதலாதல் கருதியுணர்தல் வேண்டும், முதற் சினைப்பகுதி அதற்கு இன்மையினென்பது. இனி, "வேயமன் றன்று மலையு மன்று" (கலி. 55) என்றவழி, மலையை நோக்காது மலையுள் வேயெழும் இடங் கருதி அவ்விடமன் றென்றவாறெனக் கொள்க "பூவமன் றன்று சுனையு மன்று" (கலி. 55) என்பதற்கும் இஃது ஒக்கும். 'உரிய' என்னாது 'உரியவை' என்றதனான் திணையும் பாலும் மயங்கி வரும் உவமமுங் கொள்ளப்படும். அவை, "மாரி யானையின் வந்துநின் றனனே" (குறுந். 161) என்பது, திணைமயங்கிற்று. "கூவற், குராலான் படுதுய ரிராவிற் கண்ட வுயர்திணை யூமன் போலத் துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே" (குறுந். 224) என்பது, உயர்திணைப்பால் மயங்கிற்று. "கடம்பமர் நெடுவே ளன்ன மீளி யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்" (பெரும்பாண்.75) என்பது, ஒருமை பன்மை மயங்கிற்று. "இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று" (அகம். கடவுள்.) என்பது, அஃறிணைப்பால் மயங்கிற்று. பிறவுமன்ன. இக்கருத்து அறியார், இவற்றையுஞ் "செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு" (தொல். சொல். 16) என்புழி இலேசுகொண்டு உரைப்ப. (6) தொகைஉவமத்தின் பொதுத்தன்மையை அறியுமாறு 282. சுட்டிக் கூறா வுவம மாயிற் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்புமைக்குணம் நான்கனையும் விதந்து சொல்லி உரையாதவழி, அவ்விரண்டனையும் எதிர் பெய்து கூட்டி ஆண்டுப் பொருந்தியதொன்று பொருந்தியதுபற்றி வினை பயன் மெய்யுருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப்படும் எ-று. 'பவளம்போற் செந்துவர்வா' யென்பது சுட்டிக் கூறிய வுவமம்; என்னை? இரண்டற்கும் பொதுவாகிய செம்மைக் குணத்தினைச் சொல்லியே உவமஞ் சொல்லினமையின். அது பவளவாயென்கின்றவழிச் சுட்டிக்கூறா வுவமமாம். ஆண்டுப் பவளத்தினையும் வாயினையுங் கூட்டிப் பார்த்துச் செம்மைக் குணம்பற்றி உவமஞ் செய்ததென்று அறியப்படும்; அல்லாக்கால், வல்லென்ற கல்லிற்கும், மெல்லென்ற இதழிற்கும் உள்ள தோர் ஒப்புமை ஆண்டில்லை யென்பது பிறவும் அன்ன. (7) உவமமும் பொருளும் ஒத்துவரல் வேண்டும் எனல் 283. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். இதுவும் அது. (இ-ள்.) உவமானமும் பொருளுந் தம்மின் ஒத்தன வென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் எ-று. "மயிற்றோகை போலுங் கூந்தல்" என்பதன்றிக், "காக்கைச் சிறகன்ன கருமயிர்" என்று சொல்லின், அஃதொத்ததெனப் படாதென்றவாறு. "புலிபோலப் பாய்ந்தான்" என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதே பற்றிப் "பூசைபோலப் பாய்ந்தான்" எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகமென்றவாறு. ஈண்டு ஒத்தலென்பதனை, "ஒத்த தறிவான்" (குறள். 214) என்பதுபோலக் கொள்க. (8) பொருளும் உவமமும் தம்முள் மயங்கி வருதல் 284. பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பினஃது உவம மாகும். இது, மேற்கூறியவாறன்றி வருவதோர் உவம விகற்பங் கூறுகின்றது. (இ-ள்.) "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை" (278) என்புழி உவமம் உயர்ந்துவரல் வேண்டுமென்றான்; இனிப் பொருளினை உவமமாக்கி உவமத்தை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுங்காலும் அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படும் என்றவாறு. "வருமுலை யன்ன வண்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை" (சிறுபாண். 72, 73) என்றவழி, வருமுலையுந் திருமுகமும் ஈண்டு உவமமாகி முகையும் பூவும் பொருளாயின. ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின. இவை உவமத்தொகையாங்கால் முலைக்கோங்கம் முகத் தாமரை எனப்படும். இவற்றை வேறு உருவகமென்று பிறர் மயங்குப. சிறப்பென்றத னான், ஒப்புமை மாத்திரையன்றித் தான் புனைந்துரைக்கக் கருதிய முலை யினையும் முகத்தினையும் உயர்ந்த பொருளாகிய உவமத்தினும் உயர்ந்த வாகச் சிறப்பித்துரைத்தானென்பது. 'மருளறு சிறப்பின்' என்றதனான் அங்ஙனஞ் சிறப்பிக்குங்கால் மயக்கந்தீரச் சிறப்பித்தல் வேண்டும். அஃது உலகினுள் உயர்ந்ததென்று ஒப்ப முடித்த பொருளினையுஞ் சிறப்பித்தற்கு உவமஞ் செய்பவோ வெனிற், செய்யாரென்பது; என்னை? முகமொக்குந் தாமரை என்றால் முகத்திற்குந் தாமரைக்குஞ் சிறப்புடைமை மயங்கி வாராது, பின்னும் முகத்திற்கே சிறப்பா மென்பது கருத்து. அஃதெனப் பட்டது பொருளாகலான் 'உயர்ந்ததன் மேற்று' (278) என்னும் விதி அப்பொருட்கு எய்துவிக்க. (9) மிக்க உயர்வும் மிக்க இழிவும் உவமிக்கப்படுமாறு 285. பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய. இஃது, உவமத்திற்கு ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னா வாகச் செய்யாது சிறப்புடைமையின் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளு மாற்றான் வருதலை வழக்கு வலியாகவுடைய எ-று. "அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோர் உசாஅப்போ லுண்டே நுசுப்பு" என்றவழி, உலகத்தார் அவாப் போலப் பெரிதாகிய அல்குலெனக் கழி பெரும் பரப்பிற்றாகக் கூறினும் அது சிறப்பிற் றீராக் குறிப்பிற்றாதல் வழக்குண்டாகலின் உடம்படப்படும் என்றவாறு. "மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்'' (குறுந். 129) என்றவழிக், கடல்போன்றது கூந்தலெனவுங், கடல்நடு எழுந்த எண்ணாட் பக் கத்து மதிபோன்றது நுதலெனவுங் கூறினான். அதனாற் கடல்போலும் மயி ரென்றதும் பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதுங் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற் றீராது மனங்கொள வந்த வெனவேபடும். "சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்" ( முருகு. 43) என்பதும் அது. "சான்றோ ருசாஅப்போ லுண்டே நுசுப்பு" என்றவழி, நுண்ணுணர்வின் ஆராய்ச்சி ஒருவர்க்கும் புலனாகாததனை ஒக்கும் இடையென்றமையின் அது கழியச் சிறிதாக உவமித்தார். "யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்" (நாலடி. 213) என்பதும் அது, இவையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வந்த வழக்காதலின் அமைந்தன வென்பது. பிறவு மன்ன. இவ்வாறன்றி, மேருமால்வரை காம்பொத்து விண்முகடு குடையொத்து விண்மீன்கணம் முத்துப்போன்றன வென வடிவு பற்றி உவமங் கூறுதல் தமிழ் வழக்காகின்ற தென்பது. (முத்தொள். 45) இனி, "வள்ளத்தி னீர்கொண் டுமிழ்ந்த முலைச்சாந்து மறுகிற்பரந் தள்ளல் யானை யெல்லா மடிவழுக் கினவே" என்பதோ வெனின், அவ்வாற்றானும் இன்பங் கொள்வார்க்கு அதுவும் இழுக்கிலது என்பது. "சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி" (பட்டின. 44, 45) என்பதோ வெனின், யாறு என்ற துணையானே பேர்யாறெனக் கொண்டு உலகிறந்தனவாகாமைக்கன்றே, "ஏறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி" (பட்டினப். 46-47) என்பதாயிற் றென்பது. (10) நான்கு உவமத்திற்கும் பொதுவாக வரும் உவமவுருபுகள் 286. அவைதாம், அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப என்ன மான என்றவை யெனாஅ ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க என்ற வியப்ப என்றவை யெனாஅ எள்ள விழைய விறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப ஆங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப ஆங்கவை யெனாஅப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ ஆங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த வோடப் புரைய என்றவை யெனாஅ ஆறாறு அவையு மன்ன பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடை வருஞ் சொல் இனைய என்கின்றது. 'அவைதா' மென்பது, வினை பயன் மெய் யுரு வென்னும் நான்கு உவமமுமென்றவாறு. (இ-ள்.) இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையே போல்வன பிறவும் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பின வாகி வரும் எ-று. 'ஆறாறவையு' மென்பது அவை முப்பத்தாறு மென்றவாறு. 'பல் குறிப்பின' வென்பது, அவை இடைச்சொல்லாகித் தொக்கு வருவனவும் தொகாதே நிற்பனவும், வினைச்சொல்லாகி வேறுபட நிற்பனவு மெனப் பலவா மென்றவாறு. இவ் வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொது வென்பது ஈண்டுக் கூறி, இனி அவை சிறப்புவகையான் உரியவாறிது வென்பது மேற் கூறுகின்றான். 'பிறவும்' என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர, நோக்க, துணைப்ப, மலைய, ஆர, அமர, அனைய, ஏர, ஏர்ப்ப, செத்து, அற்று, கெழுவ, என்றற் றொடக்கத்தன பலவும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள் பற்றி வருவனவும், எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும், பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத்தோதியவற்றுள் வரையறை வகையவென மேற் கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம் அவற்றை உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும். அவை ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க, என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயினவா றென்னை? முப்பதேயாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றொடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது. அவை பொதுவகையான் வருமாறு: "வேலொன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ கோலொன்று கண்ணொன்று கொண்டு" என்பது வினையுவமம். "மழையொன்று வண்தடக்கை வள்ளியோற் பாடி" என்பது பயனுவமம். "வேயொன்று தோளொருபால் வெற்பொன்று தோளொருபால்" என்பது மெய்யுவமம். "குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை" என்பது உருவுவமம். ஒழிந்தனவும் இவ்வாறே நான்கு பகுதியும்பற்றி வருமாறு கண்டு கொள்க. "வாயென்ற பவளம்" என்றது பண்புவமைபற்றி வந்தது. இது "வாயாகிய பவளம்" என்று ஆக்கச் சொல்லானும் வரும். "மணிநிற மாற்றிய மாமேனி" என்பது உருவுவமம். "மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்" என்பது மெய்யுவமம். "வேயொடு நாடிய தோள்" என்பது நாடவென்பது வந்த மெய்யுவமம். "படங்கெழு நாகம் நடுங்கு மல்குல்" என்புழி, நடுங்கவென்பது மெய்யுவமம்பற்றி வந்தவாறு. இவ்வோதிய வாய் பாட்டோடு பொருந்த வருஞ் சொல்லெல்லாம் 'பல் குறிப்பின' வென்ப தனாற் கொள்ளப்படும். இப்பகுதி யெல்லாம் புறனடையாற் கொள்வன வற்றிற்கும் ஒக்கும். இச் சொற் பரப்பெல்லாம் நோக்கி, "உவமச் சொல்லே வரம்பிகந் தனவே" என்று ஓதி உரைப்ப. அவை அவ்வச்சொல்லுள் அடங்குமாற்றான் வரம்பு இகந்தனவாகா வென்பது. இனிப், 'பிறவு' மென்றதனான் ஓதப்பட்டன வருமாறு: "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று" (குறள். 22) என்பதனுள், துணைப்பவென்பதூஉம் அற்றென்பதூஉம் வந்தன. "குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின்" (குறள். 965) என்று அனைய வென்பது வந்தது. பிறவுமன்ன "கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்" (குறுந். 9) என, இன் வேற்றுமை உவமவுருபொடு வந்தது. "குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க" என்பது, உவமவுருபின்றி இன்னுருபு உவமப்பொருட்கண் வந்தது. "தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்" (கலி. 56) என்பது எனவெனெச்சத்தான் உவமம் வந்தது. பிறவுமன்ன. இவை எல்லாம் வரைவின்றி நான்குவமமும்பற்றி வருமாறு கண்டு கொள்க. ஐந்தாம் வேற்றுமைப்பொருளில் வந்த உவமங்களும் பிறவும் உவமத்தொகை யெனப்படா, தொகைப் படாமையினென்பது. அங்ஙனந் தொகைப்பட்டவழியும் மற்று மேலுரிமை கூறுகின்றதாமென்பது (292). "மதியொத்தது மாசற்ற திருமுகம்" என்றவழி, உவமமாயினும் உவமத்தொகை யெனப்படாது தொகைப் பாடின்மையினென்பது. (11) வினைஉவம உருபுகள் எட்டாவன 287. அன்ன ஆங்க மான விறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம். இது, மேற்பொதுவகையாற் கூறியவாறன்றி வினையுவமத்தின்கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது. (இ-ள்.) இவ்வெட்டும் வினையுவமம் எ-று. " 1எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து" (அகம். 106) எனவுங், " 2கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு" (அகம். 6) எனவுங், " 3கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்" (குறுந். 9) எனவும், " 4புலி விறப்ப வொலிதோற்றலின்" எனவும், " 5புலியென்னக் கலிசிறந் துராஅய்" எனவும், " 6மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப" (முருகு. 85) எனவும், " 7பொருகளிற் றெருத்திற் புலித்தகைப் பாய்த்துள்" எனவும், " 8மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்'; எனவும் வரும், இனிக், " 1கார்மழை முழக்கிசை கடுக்கும்" (அகம். 14) எனவும், " 2யாழ்கெழு மணிமிடற் றந்தணன்" (அகம். கடவுள்.) எனவும், " 3ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல" (அகம். 22) எனவும், " 4ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ" (அகம். 30) எனவுங், " 5குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்" ( பெரும்பாண்.13) எனவும், பிறவாய்பாட்டான் சிறுபான்மை வரும் வினையுவமம் பொதுவிதி யாற் கொள்ளப்படும். பிறவுமன்ன. (12) 288. அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும். இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது. (இ-ள்.) வினைக்கே உரிமை யெய்தியதாகக் கூறிய அன்ன வென்பது நான்குவமத்திற்கும் உரிமையொக்க வரும் எ-று. அவை: "மாரி யன்ன வண்கை" (புறம். 133) எனவும், "இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற்று" (அகம். கடவுள்.) எனவுஞ், "செவ்வா னன்ன மேனி" (அகம். கடவுள்.) எனவும் ஒழிந்த மூன்றற்கும் பெருவரவினான் வந்தவாறு வழக்கு நோக்கி உணர்க. (13) பயன்உவம உருபுகள் எட்டாவன 289. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ என்றாங்கு எட்டே பயனிலை யுவமம். இது, முறையானே பயனிலையுவமத்திற்குச் சிறந்த வாய்பாடு இவை யென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவை எட்டும் பயனிலையுவமம் எ-று. " 1எழிலி வானம் எள்ளினன் றரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்" எனவும், " 2மழைவிழை தடக்கை வயவாள் எழினி" எனவும், " 3புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல" எனவும், " 4விண்பொருபுகழ் விறல்வஞ்சி" (புறம்.11) எனவுங், " 5கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி" எனவும், " 6இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை" எனவும், " 7வீங்குசுரை நல்லான் வென்ற வீகை" எனவும், " 8விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கு முரைசா றோன்றல்" எனவும் இவை ஓதிய முறையானே பயனுவமம் பற்றி வந்தன. இவை எட்டும் 'பெருவரவின' வெனவே சிறுவரவினான், "அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்" (அகம். 1) எனவும், "மகன்றா யாதல் புரைவதா லெனவே" (அகம். 16) எனவும், "ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்" (கலி. 20) எனவும், "பல்லோ ருவந்த வுவகை எல்லாம் என்னுட் பெய்தந் தற்றே" (அகம். 42) எனவும், "யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்" (கலி. 29) எனவும், "உருமெனச் சிலைக்கு மூக்கமொடு" (அகம். 61) எனவும், "யாழ்செத்து இருங்கல் விடரளை யசுண மோர்க்கும்" (அகம். 88) எனவும், "செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை" (முருகு. 5) எனவும், "விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்து" (மலைபடு.2) எனவும் வரும். பிறவுமன்ன. மேலைச்சூத்திரத்திற் சொல்லியவாறே இதற்கும் வேண்டுவன உரைத்துக்கொள்க (14) மெய்யுவம உருபுகள் எட்டாவன 290. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பவென்று அப்பால் எட்டே மெய்ப்பா லுவமம். இது, முறையானே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது. (இ-ள்.) இவ்வெட்டும் மெய்யுவமம் எ-று. " 1நீர்வார் நிகர்மலர் கடுப்ப" (அகம். 11) எனவும், " 2மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப" (அகம். 5) எனவும், " 3வேய்மருள் பணைத்தோள் வில்லிழை நெகிழ" (ஐங்குறு. 318) எனவும், " 4உரல்புரை பாவடி" (கலி. 21) எனவும், " 5முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை" எனவும், " 6பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்" எனவும், " 7செந்தீ யோட்டிய வெஞ்சுடர்ப் பரிதி" எனவும், " 8கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை" எனவும் இவை ஓதிய முறையானே மெய்யுவமத்துக்கண் வந்தவாறு. இவற்றை உரிமைகூறிப் பெருவரவினவெனவே, ஒழிந்தனவுஞ் சிறுபான்மை வருமென்பதூஉம் அவை பொதுச் சூத்திரத்தான் அடங்கு மென்பதூஉங் கொள்க. அவை: " 1கடல்போல் தோன்றல காடிறந் தோரே" (அகம். 1) எனவும், " 2அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி" (அகம். 11) எனவும், " 3புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்" (அகம். 12) எனவுஞ், " 4சேயித ழனைய வாகி" (அகம். 19) எனவும், " 5மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரின்" (கலி. 20) எனவுங், "கண்போன் மலர்ந்த சுனையும்" எனவும், "நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த" (கலி. 22) எனவும், "முழவுறழ் தடக்கையி னியல வேந்தி" (முருகு. 215) எனவும் வரும். இவை புறனடையாற் கொண்டனவும் எடுத்தோதியனவும் பொதுவிதியான் வந்தவாறு. (15) உருஉவம உருபுகள் எட்டாவன 291. போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென்று ஒத்துவரு கிளவி யுருவி னுவமம். இது, நான்காம் எண்ணுமுறைமைக்கண் நின்ற உருவுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது. (இ-ள்.) இவ்வெட்டும் உருவுவமம் எ-று. அவை, " 1 லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே" (ஐங்குறு. 41) எனவும், " 2 மறுத்த மலர்ப்பூங் காயா" எனவும், " 3 காந்த ளொக்கும் நின்னிறம்" எனவும், " 4 காய்த்த விளங்குமணி யழுத்தின" எனவும், " 5 கொன்றைப் பொன்னேர் புதுமலர்" (அகம். கடவுள்.) எனவும், " 6 வியப்பத் தகைபெறு மேனி" எனவும் வரும். 7 8 என்பன இக்காலத்து அரியபோலும். அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச் சூத்திரத்தான் வருமெனப்பட்ட வாய்பாடு சிறுவரவின வருமாறு: "துளிதலைத் தலைஇய மழையே ரைம்பால்" (அகம். 8) எனவும், "நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம்" (அகம். 31) எனவும், "செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம்" (கலி. 15) எனவும் "மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை" (அகம். 19) எனவும், "பான்மருள் மருப்பி னுரல்புரை பாவடி" (கலி. 21) எனவும், "எரியுரு வுறழ விலவம் மலர" (கலி. 33) எனவும், "பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு" (முருகு. 2) எனவும், "பொன்னுரை கடுக்குந் திதலையர்" (முருகு. 145) எனவும், "தீயி னன்ன வொண்செங் காந்தள் தூவற் கலித்த புதுமுகை யூன்செத்து" (மலைபடு. 145, 146) எனவும் வரும். பிறவுமன்ன. (16) இன்ன உவமத்துக்கு இன்ன வாய்பாடு உரிய என்பது வரலாற்று முறையான் அறியப்படுமாறு 292. தத்த மரபின் தோன்றுமன் பொருளே. இது, நான்கு உவமத்துக்கும் ஒரோவொன்று எட்டாகக் கூறிய வாய் பாட்டிற்கெல்லாம் புறனடை. (இ-ள்.) இன்னதற்கு இன்ன வாய்பாடு உரியவென்றற்குக் காரணம் என்னையென்றார்க்கு, அவை தத்தம் வரலாற்று முறைமையானே அவ்வப் பொருடோன்ற நிற்கும் எ-று. "புலிபாய்ந்தாங்குப் பாய்ந்தா'னென வினையுவமத்திற்கு வந்த ஆங்கென் கிளவி 'தளிராங்குச் சிவந்தமேனி' யெனிற் பொருந்தாது. இனி, எள்ளவென்பது பயனுவமத்திற்கு ஏற்குமென்றான்; அது 'புலி யெள்ளும் பாய்த்து'ளெனலாகாது; என்னை? புலிக்கு வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகாதாகலா னென்பது. ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக் கண்டு எதிர்நிற்கலாற்றாது புறங்கொடுத்ததெனலும், நடுங்கிற் றெனலுங், கண் சிம்புளித்ததெனலும், அவற்குப் புகழாமென்பதே கருதிக் கூறின், கூறின உவம வெளிப்பாடுமின்றி அவற்கது புகழுமாகாதென்பது கருத்து. இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுப வன்றே? அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின். விழைய வீழ புல்ல மதிப்ப வெல்ல என்பனவும் உவமைதான் பொருளை யொத்தற் கவாவினவென்று பொருள் தோன்ற நிற்குமென்ற வாறு. கள்ளவென்பதூஉம் அதன் குணம் அதன்கண் இல்லாமற் கதுவிற்றென்னும் பொருட்டு. பொருவவென்பதூஉம் மழையினையும் ஒருவனையும் உறழுந் துணைச் சிறந்தானெனச் சொல்லுதல். இவ்வாற்றான் இவை உரிமை கூறப்பட்டன. இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ்வாறே ஒரு காரணமுடைய போலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத்திற்கும் ஏலாது; என்னை? கடுத்தலென்பது ஐயுறுதல். புலியொடு மறவனை ஐயுறவேண்டுவ தொரு காரணமின்மையானும், மழையின் விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ்செய்தல் வேண்டுவதின்மையானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமாகலானும், உருவென்பது குணமாகலாற் பொருள்வேற்றுமை அறிந்தவழி ஐயஞ் செல்லாதாகலானும், மெய்க்குரிமை கூறினானென்பது. ஏய்த்தலென்ப தூஉம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும். மருள புரைய ஒட்ட ஒடுங்க என்பனவுங் கடுத்தல்போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரையுணர்வுங் கவர்த்தலைக் காட்டுதலானும், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண்டனையும் ஒன்றென்னும் பொருண்மையவாகலானு மென்பது, நிகர்த்தலும் அவ்வினப் பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற் கேற்றது. ஓடவென்பதும் ஓடுதற்றொழில் வடிவிற் கல்லதின்மையின் அவ் வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு, ஓடிற்றெனலாகாமையின். இனி, உருவுவம வாய்பாட்டிற்குங் காரணங் கூறுங்காற் போலு மென்பது இடைச்சொல்லாகலானும், மரீஇவந்த வினைப்பாற் பட்டதாக லானும், அதற்குக் காரணங் கூறப்படாதென்பது. அஃதேல், அதனை இவ்வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, பொருளுடையவற்றைப் பிற்கூறி யெனின், அதுவும் அன்ன வென்பதுபோல மற்றை மூன்று உவமத்தும் பயின்றுவருமென்பது எய்துவித் தற்கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடைய வென்பது ஆசிரியன் பெருவரவின வாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் 'மரபிற் றோன்றும்' என்றதனான் இவையெல்லாம் மரபுபற்றி அறியல் வேண்டும் எனவே, தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுள்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலா னென்பது. (17) உவமம் எட்டாகும் எனல் 293. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே இதுவும் மேலனவற்றையே பகுக்கின்றது. (இ-ள்.) வினை பயன் மெய் உரு எனப்பட்ட நான்கும் எட்டாம் பகுதியும் உண்டு எ-று. அவை உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாதலும் உடையவென்றவாறு. அவை புலியன்ன பாய்த்துள் 'புலிப்பாய்த்துள்' எனவும், மழையன்ன வண்கை 'மழை வண்கை' எனவும், வேயன்னதோள் 'வேய்த் தோள்' எனவும், பவளத்தன்னவாய் 'பவளவாய்' எனவும் தொகைவிரிபற்றி நான்கும் எட்டாயினவாறு. சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான். அவ்வுவமந்தான் ஈண்டுக் கூறப்படுதல் பொருளினதாகலானும், இடைச்சொல்லேயன்றிப் பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலானும், அதன் விரிவினை ஈண்டுப் பெயர்தந்து கூறி அதன் தொகையொடு படுப்ப இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகை யுவமமும் என்றானென்பது. இதுவுமொரு கருத்து: முன்னர் எவ்வெட்டாகக் கூறியவை ஒவ்வொன்றும் இவ்விரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய என்றவாறு. யாங்கனமெனின், அன்ன என்னுஞ் சொல்முதலாகிய எட்டனுள், அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் வேறொரு பொருளை உணர்த்தா மையின் ஓரினமாகி ஒன்றாகவும், விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடைமையின் ஓரினமாகவும், இவ்வாறே இனம் நோக்குதற் குறிப்பின வாயின. இவ்வாற்றான் இரண்டெனவும் படும் எட்டுமென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச்சொல் எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியுமென்னும் பொருட்டு. உறழ்ச்சியுந் தன் இனமாகக் கொண்டு - மாறுதற் பொருட்டேயாம். தகுதி அது வெனப்படுவது என்னும் பொருண்மைத்தாகலின் அவற்றோடொக்கும். நோக்கென்பதூஉம் அவ்வாறே இனமாக்கி நோக்குதற்பொருட்டு. இவ்வாற்றான் இரண் டெனவும்படும் எட்டு மென்றவாறு. இதனது பயன்:-ஓதிய வாய்பாடு எண் ணான்கற்கும் இன்ன வாய்பாடும் இன்ன வாய்பாடும் ஒரு பொருளவென்று அறிதலும் அவை தத்தம் மரபிற் பொருள்தோன்ற வரும் இடைச்சொல் என்றலும், ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் உருபு ஆயினும் இடைச் சொல்லாகா, தெரிநிலைவினை ஆகும் என்பதறிவித்தலுமெனக்கொள்க. மேல்வருகின்றனவற்றிற்கும் இஃதொக்குமென்பது. இனிப், பயவுவம வாய்பாடு எட்டனுள்ளும் எள்ள பொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித்தற் பொருளவாக்கி ஒன்றா யடங்கும்; என்னை? மழையைப் பொரீஇச் சொல்லுதலும் அதனது தன்மைக்குணங் கள்ளப்படுதலும் அதனை வெல்கையும் எள்ளுதலும் போல்வன இழிவினையே காட்டுதலின். இனி விழைய புல்ல மதிப்ப வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தாமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருள் எனப்பட்டன. இவ் வாற்றாற் பயவுவமம் எட்டும் (289) இரண்டாயின வென்பது. மெய்யுவமம் இரண்டாங்கால்,ஐயப்பொருட்கண் நான்குந் துணி பொருட்கண் நான்குமென இரண்டாம். கடுப்ப மருள புரைய ஓட என்னும் நான்கும் ஐயப்பொருளவாகி ஒன்றாம். ஓடவென்பது உவமத்தின்கண்ணும் பொருளின்கண்ணும் உணர்வு கவர்ந்தோடிற்றென்னும் பொருள் தோன்றச் சொல்லலின் அதுவும் ஐயமெனப்பட்டது போலும். இனி ஏய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமமும் பொருளும் ஒன்றென உணர்வுதோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் (290) இரண்டாயின. இனி, உருவின் கண்ணும் (291) போல ஒப்ப நேர நளிய என்னும் நான் கும் மறுதலையின்றிச் சேர்ந்தனவென்றுகோடற்கு வாய்பாடாகி வருதலின் அவை ஒன்றெனப்பட்டன. 'நளியென் கிளவி செறிவு மாகும்' (தொல். சொல். உரி. 17)) என்றத னான், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டேயாயிற்று. இனி மறுப்ப காய்த்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையொடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் இரண்டாயின. நந்துதலென்பது கேடு. வியத்தலென்பது உவமையான் வியக்கத் தக்கது பொருளெனவே அதன்கண் அக்குணமின்றென மறுத்தவாறாம். காய்த்தலென்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தலென்பதன் பொருளெனப்பட்டது. இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண்டென்பது இதன் கருத்து. இவற்றுட் பலவற்றையுஞ் செயவெனெச்ச வாய்பாட்டான் ஓதியது என்னையெனின், அஃது(665)உடம்பொடு புணர்த்தலென்பதனான். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொற்போல நிற்குமெனவும், அதனானே பெயரெச்சமும் வினையெச்சமும் முற்றுமாகி நிற்குமெனவும், அவையுந் தெரிநிலைவினையுவமமாய் வருமெனவும் அறிவித்தற்கென்க. இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர்விற் றெனவுணர்க. (18) மெய்ப்பாடு எட்டன்வழிப் பெருமையும் சிறுமையும் பற்றி உவமம் தோற்றுதல் 294. பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பாடு எட்டன் வழிமருங்கு அறியத் தோன்று மென்ப. இது, மேற்கூறிய உவமம் இன்னுமொருவாற்றான் எட்டெனப்படு மென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமம் மேற்கூறிய மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென்று சொல்லுவர் புலவர் எ-று. மெய்ப்பாடு எட்டென்பன: 'நகையே யழுகை யிளிவரல் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை' (தொல் பொருள். 21) என மெய்ப்பாட்டியலுள் மேற்கூறப்பட்டன. "களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா" (அகம். 16) என்பது நகையுவமம். என்னை? தலைமகனைக் கண்டறியாதாள் போலக் கரந்தொழுகுகின்ற பரத்தை அவனோடு ஒப்புமை கண்டு தனிநின்று விளை யாடும் புதல்வனைக் கொண்டு மகிழ்கின்றாளை, வாயிற்கதவம் மறைந்து நின்ற தலைமகள் 'நீயும் அம்மகவிற்குத் தாயேகாண்' என்றவழிக், களவு கண்ட பொருளொடு கையகப்பட்ட கள்வர்போலச் செய்வதறியாது தடுமாறிப் பரத்தை முகம் வேறுபட்ட நிலைமையை உவமித்துச் சிரித்தமையின் நகையுவம மாயிற்று. "கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்" (யா. வி. மேற்.) என்பது அவலவுவமம். கலங்கவிழ்ந்த நீகாமன் போலப் புலம்பினாளென்ற மையின் அப்பெயர்த்தாயிற்று. "பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு" (முத்தொள். 88) என்பது, இளிவரலுவமம்; என்னை? தலைமகன்மாட்டு இன்ப விளையாட் டெய்துவார் பலரையுங் கண்டு நெஞ்சு தீயப் புன்கணெய்தித் தனிநின்று புகப் பெறாது இளிவந்தமையின் அப்பெயர்த்தாயிற்று. "ஈரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்துள் நீருட் குவளைவெந் தற்று" (கலி. 41) என்பது மருட்கை யுவமம்; என்னை? நிழற்கயத்தின் குவளை வேவன வின்மையின் இஃது அற்புதமாயிற்று. "சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து" (நாலடி. 126) என்பது அச்சமாகலின் அச்சவுவமம். "மல்லரை மறஞ்சாய்த்த மால்போற்றன் கிளைநாப்பண் கல்லுயர் நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள்" (கலி. 52) என்பது பெருமிதவுவமம். "கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே" (புறம். 42) என்பது வெகுளியுவமம். "பாடிச் சென்ற பரிசிலர் போல வுவவினி வாழி தோழி" (அகம். 65) என்பது உவகையுவமம் பிறவுமன்ன. இவற்றான் எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமம் எட்டெனப்படு மென்று அறிந்து கூறினான்; "பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீரா" (பொருள். 285) என்புழிப் பெற்றாமாகலின். மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென் னாது 'மருங்கறிய' வென்றதனாற் பெருமையுஞ் சிறுமையும் பற்றி வருதல் வழிமருங்கெனவும் அவைபற்றாது மெய்ப்பாடு எட்டும்பற்றி வாளாதே உவமம் வருதல் செவ்விதெனவுங் கொள்ளப்படும். "நீருட் குவளைவெந் தற்று" (கலி. 41) என்பது, பெருமை பற்றியது. என்னை? உலகநடை யிறந்ததோர் உவமம் கூறி அதனொடு தலைமகன் ஈரத்தினை ஒப்பித்தமையின். "களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா" (அகம். 16) என்பது, தனக்கு நிகராமல் இழித்துரைத்தமையிற் சிறுமைபற்றி வந்ததாம். உவமமும் மெய்ப்பாடும் பொருள்களை அறிவிப்பனவாகி அவை வேறுவேறு பொருள் அறிவித்தலின் ஓத்து வேறுபாடு உடையனவாயினுஞ் சிறுபான்மை மயங்கியும் வருமென்றற்கு இது கூறவேண்டியதென்பது.(19) உவமத்தான் பொருட்கு உற்றன அறிந்து துணிதல் 295. உவமப் பொருளின் உற்றது உணருந் தெளிமருங்கு உளவே திறத்திய லான. இஃது, எய்தாததெய்துவித்தல் நுதலிற்று; உவமத்தொடு பொருள் ஒவ்வாதெனவும் ஒப்புமை சார்த்திக் கொள்ளுமாறுணர்த்தினமையின். (இ-ள்.) உவமப்பொருளின். - உவமம் எனப்பட்ட பொருளான்; இன் உருபு ஆன் உருபின்கண் வந்தது; உற்ற துணருந் தெளிமருங்குள - உவமிக்க வரும் பொருட் குற்றதெல்லாம் அறிந்து துணியும் பகுதியுமுள; திறத்திய லான - அங்ஙனம் துணியப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கண வகையான் எ-று. அப்பகுதி பலவும் உற்றுணராமற் சொல்லியவழியும், அஃது உணர வருமென்பது கருத்து. 'திறத்தியலான' எனப்பட்ட பகுதியாவன: மேற்கூறப் பட்ட மெய்ப்பாடெட்டும் பற்றி உவமங்கொள்ளுங்கால், 'உற்றதுணருந் தெளி மருங்'கெனவே உவமானவடைக்கு உவமேயவடை குறைந்து வருவனவும் யாதும் அடையின்றி வருவனவுமென்று இவ்விரண்டும் உற்றுணராமற் சொல்லியவழி, அவற்றுக்கும் உவமப்பொருளே தெளி மருங்காமெனவும், வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாதவழியும் அதுவே தெளிமருங்கா மெனவும் இன்னோரன்ன கொள்க. உதாரணம்: "களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா " (அகம். 16) என்றவழிக், கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் களவுண்டாகப் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையாவென உற்றதுணரக் கூறியதில னாயினுங் கையொடுபட்ட களவுடையார்போல நின்றாளென்னும் உவமப் பொருளானே எள்ளுதற்பொருள் தோன்றி நகை புலப்படுவதாயிற்று. "சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றென பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கு மிழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனோடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே" (புறம். 82) என்னும் பாட்டினுள், உவமப்பொருளாகிய "போழ்தூண்டூசிக்குப்" பல அடை கூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த்தொழிலினை யாதுமோர் அடையின்றி வாளாது கூறினானாயினும், உவமப்பொருளானே போர்த் தொழிற் குற்றதும் உணரக்கூறினானாம்; என்னை? உண்டாட்டுங் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக் கருத்தினான் ஒரு கணத்துள்ளே பல வேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளியப்பட்டமையின். "உழுத நோன்பக டழிதின் றாங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே" (புறம். 125) எனபதும், "மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி" (புறம். 180) என்றாற் போல்வனவும் அவை. இனி, வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாதவழித் தெளியு மாறு: "உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து" (குறள். 667) என்பதனுள், அவர் செய்கைவன்மை கூறாராயினும் அச்சாணியென்ற உவமப்பொருள் தானே அச்செய்கைவன்மை கூறிற்று. "வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்" (கலி. 84) என்பதும் அது. ஒழிந்தனவு மன்ன. இனி. உவமத்தின் உற்றதுணர்கவென்னாது 'பொரு' ளென்றதனாற் பொருட்கு அடுத்த அடையும் உவம அடைக்கு ஏற்றது உணரப்படாதன களையப்படுமென்பது. அது, "பாசடை நிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோதம் மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்" (குறுந். 9) என்றவழிப், பாசடைநிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்கு வந்த அடையிரண்டுங் கண்ணெனப்பட்ட உவமத்திற்கேற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்து கொள்க. ஒழிந்தனவு மன்ன. மற்றுப், "புறமதி யன்ன திருமுக மிறைஞ்சி" என்றவழி, அகத்துத் தோன்றும் மறுப்போலப் புறத்துமறு மதிக்கில்லை யென்பதூஉம் புறமதிபோலக் கறைதீர்ந்த முகமென்பதூஉம் உவமப் பொருளின் உற்றதுணருந் தெளிமருங் கென்றதனாற் கோடுமோவெனின், அங்ஙனங் கொள்ளாமைக்கன்றே வருகின்ற சூத்திரமென்பது. (20) உவமப்பொருள் மரபுபற்றி அறியப்படும் எனல் 296. உவமப் பொருளை உணருங் காலை மரீஇய மரபின் வழக்கொடு படுமே. இது, மேலதற்கொரு புறனடை; மேல் உவமப்பொருளானே உற்ற துணரச் செயல் வேண்டுமென்றான்; இனி அங்ஙனம் உணருமாறு இது கூறினானாதலின். (இ-ள்.) உவமப்பொருளான் உற்றதுணருங்காலை மரீஇ வந்த வழக் கொடுபடுத்து அறியப்படும் எ-று. அது வருமாறு: "களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா" (அகம். 16) என்பது களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக் காதலான், அஃது ஏதுவாக அதனையும் அறிந்து கொள்ளப்படுமென்றவாறு. எனவே, உலகத்து வழக்கினும் அடிப்படத் தோன்றும் உவமம் ஆகாமை யான் உவமப்பொருள் புலப்பாடு செய்யாது, "புறமதி போலு முகம்" என்றது போல்வது என்பது இதன் கருத்து. (21) அடையடுத்த பொருட்கு அடையடுத்த உவமமே கூறவேண்டுதல் 297. இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே. இஃது, எய்தாததெய்துவித்தது, அடையொடு வந்த பொருளொடு புணர்க்குமாறு கூறினமையின். (இ-ள்.) இரட்டைக்கிளவி - அடையும் அடையடுத்த பொருளு மென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி; இரட்டை வழித்தே - அடையும் அடை யடுத்த பொருளுமென இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமத்தின் வழித்து எ-று. "பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220) என வரும். தன் பைம்பூண் புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன் னுரையோடுங் கல்லோடும் உவமித்தமையின், இரட்டைக் கிளவி இரட்டை வழித்தாயிற்று. இரட்டைக் கிளவியெனப் பொருளினை முற்கூறியதனான், இரண்டு பொருளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமத்தினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்குமென்பது கருத்து. விகாரத்தான் தொக்கு நின்ற உம்மையான், ஒற்றைக்கிளவியும் இரட்டை வழித்தாகி வருவன கொள்க. அது, "கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை" (குறுந். 47) என வரும். இரும்புலிக்குருளை யொன்றனையே துறுகல்லொடும் வேங்கை வீயொடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தாயிற்று. (22) உள்ளுறையுவமம் தோன்றுமாறு 298. பிறிதொடு படாஅது பிறப்பொடு நோக்கி முன்னை மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே. இது மேலெல்லாம் ஏனையுவமங் கூறி, உள்ளுறையுவமம் உணர்த் துதல் நுதலிற்று. மேல் 'இசைதிரிந்திசைக்கு' (195) மெனப்பட்டவற்றின் பகுதியாயினும் இதனை ஆண்டுக் (196) கூறாது ஈண்டுக் கூறினான் உள்ளுறை யுவமமாகலானும் இவ்வோத்து உவமவியலாகலானுமென்பது. (இ-ள்.) பிறிதொடு படாது- உவமத்தொடு உவமிக்கப்படும் பொருள் பிறிதொன்று தாராது; பிறப்பொடு நோக்கி- உவமநிலங்களுட் பிறந்த பிறவிகளொடு சார்த்தி நோக்கி; முன்னை மரபிற் கூறுங்காலை- கருத்தினான் இதற்கு இஃது உவமமென்று சொன்ன மரபினாற் கூறுங் காலை; துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே- இன்ன பொருட்கு இஃது உவமமாயிற் றென்பது துணிந்து கொள்ளத் தோன்றும், அவ்வாறு துணிந்துகொள்ளும் உணர்வுடையோர் கொள்ளின் எ-று. எனவே, அஃது எல்லார்க்கும் புலனன்று, நல்லுணர்வுடை யோர்க்கே புலனென்பதூஉம், அவர் கொள்ளச் செய்ய வேண்டுமென்ப தூஉங் கூறியவாறு, இதனானே செய்யுளுட் பயின்று வருமென்பது கூறினானாம். அவற்றிற்கு உதாரணம் மேற்காட்டுதும். மற்றிதனை உவமமென்ற தென்னை? உவமமும் உவமிக்கப்படும் பொருளுமாக நிறீஇக் கூறானாயினா னெனின், அங்ஙனங் கூறானாயினும் உவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனை உவமமென்றான். அஃது ஒப்பினாகிய பெயரென்பது; என்னை? இவற்றை உவமப்போலியென்றும் கூறுமாகலின். (23) உள்ளுறை உவம வகை 299. உவமப் போலி ஐந்தென மொழிப. இது, மேற்கூறிய உள்ளுறையுவமம் ஐவகைப்படுமென்கின்றது. (இ-ள்.) உள்ளுறையுவமம் ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் எ-று. அவையைந்துமாமாறு முன்னர்ச்(300) சொல்லும். இதனது பயம் ஏனையுவமத்துக்கு நிலைக்களம் ஐந்து ஓதினான், அவ்வாறே இதற்கும் நிலைக் களம் ஓதாது (305) அவை போறலின், அவையே நிலைக்களமா மென்றலும் ஏனையுவமத்துள் ஒரு சாதியோடு ஒரு சாதியினைஉவமித்தல் வழக்கன் றாயினும் உள்ளுறை யுவமத்திற்கு அமையுமென்றலுமென்பது.(24) மேற்கூறிய உள்ளுறை ஐந்தாவன 300. தவலருஞ் சிறப்பின்அத் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉம் திறத்திய லென்ப. இது, மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது. (இ-ள்.) வினை பயன் மெய் உருவென்ற நான்கினானும் பிறப்பினா னும் வரும் மேற்கூறிய ஐந்தும் எ-று. உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பென்பவாகலானும் மெய்யுவமமெல்லாம் உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மையவாக லானும் அவ்வாறு கூறினானென்பது. 'தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின்' என்றதனான் ஏனை யுவமத்தினும் உள்ளுறை யுவமமே செய்யுட் கும் பொருளிலக்கணத்திற்குஞ் சிறந்ததென்பது. அவை வருமாறு. "கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வ னீன்றவெம் முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே" (ஐங்குறு. 65) என்பது வினையுமவப்போலி. என்னை? தாமரையினை விளைப்பதற் கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள், தானே விளைந்த தாமரை சுரும் பின் பசி தீர்க்கு மூரனென்றாள். இதன் கருத்து, காதற்பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்றமைக்கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றனம் அதுபோல வென்பதாகலான் உவமத்திற்குப் பிறிதொரு பொருள் எதிர்ந்து உவமஞ் செய்யாது ஆண்டுப் பிறந்தனவற்றொடு நோக்கிக் கருத்தினாற் கொள்ளவைத்தலின் இஃது உள்ளுறை யுவம மாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசிகளையுந் தொழிலொடு விருந்தோம்புதற்றொழில் உவமங்கொள்ள நின்றமையின் வினையுவமப்போலி யாயிற்று. இங்ஙனங் கூறவே இதனை இப் பொருண்மைத் தென்பதெல்லாம் உணருமாறென்னை யெனின், முன்னர்த், "துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே" (தொல். பொருள். 298) எனல் வேண்டியது இதன் அருமை நோக்கியன்றே யென்பது. அல்லாக்காற் 'கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்புபசி களையும் பெரும்புன லூர' என்பது பயமில கூறலா மென்பது. "கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமெம் தடமென் றோளே1" என்பது, பயவுவமப்போலி. இதனுள் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக் கேதுவாகியதொன்று விளங்கக் கூறியதிலளாயினும், இழிந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்குமெனவே, அவற்கு இழிபுயர்வாம் என்ப தொன்றில்லை; எல்லாரும் இன்பங் கோடற்குரியர் தலைமகற் கென்ற மையின் யாமும் பரத்தையரும் அவற்கு ஒத்தன மென்றமையின் அவை கூறினாளென்பது. "நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே" (ஐங்குறு. 51) என்பதும் அது. நீருறை கோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப்பெடை நினைந்தது கடுஞ்சூலான்வந்த வயாத் தீர்தற் பயத்ததாகும், அதுபோல நின்மார்பு நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளுமென்றவாறு. புளிங்காய் வேட்கைத் தென்பது, நின் மார்புதான் இவளை நயவாதாயினும் இவள் தானே நின் மார்பை நயந்து பயம்பெற்றாள் போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற் பயத்தளாகும், புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாறு போல என்பது. "ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொடு ஒன்றேன் தோழி யொன்றி னானே" (குறுந். 208) என்பது மெய்யுவமப்போலி; என்னை? மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரொடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினே னென்றமையின். " 2வண்ண வொண்டழை நுடங்க வாலிழை யொண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே" (ஐங்குறு. 73) இஃது, உருவுவமப்போலி. நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந் தாடிய புனலெல்லாந் தண்ணென்றதெனக் கூறியவழி, அத்தடம்போல இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாளென்பது கருதி யுணரப்பட்டது. அவளொடு புனல் பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றா ளென்பது கருத்து. இது நிறமன்றாலெனின், நிறமும் பண்பாகலின் அந்நிறத்தோடு நிறமல்லாத பண்புங் கொள்ளப்படுமென்பது 'வகைபெற வந்த உவமத் தோற்றம்' (தொல். பொருள். 276) என்புழிக் கூறினாமென்பது. "பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர எந்நலந் தொலைவ தாயினுந் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே" (ஐங்குறு. 63) என்பது, பிறப்புவமப்போலி. நல்ல குலத்திற் பிறந்தும் இழிந்தாரைத் தோய்ந் தமையான் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டலென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது 'பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தொடு பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன்' என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையுந் தலைவி பிறப்பு உயர்ந்தமையுங் கூறி அவன் பிறப்பின் உயர்வுங் கூறினமையின், இது பிறப்புவமப்போலி யாயிற்று. இவையெல்லாங் கருதிக் கூறிற் செய்யுட்குச் சிறப்பாமெனவும், வாளாது நீர் நாய் வாளை பெறூஉ மூரனென்றதனான் ஒரு பயமின்றெனவுங் கொள்க. 'பிறப்பொடு வரூஉந் திறத்த' வென்றது. தலைமகனான் நிகழும் இவ்வாறு திறப்பாடு வேறுமுள வென்பதூஉங் கொள்க. அவை, "தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப, அதனான் தன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே" (ஐங்குறு. 41) என்றவழித், தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை யென்பது தலை மகனது கொடுமைக்கு உவமமாயிற்று. வெண்பூம் பொய்கைத்து அவனூ ரென்பது தலைமகள் பசப்புநிறம் பற்றி உவமமாயிற்று. ஆதலான் வினை யுவமமும் உருவுவமமும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்கு வருதலும் உடையவென்பது, இன்னும் 'திறத்தியல்' என்றதனானே, இத்தன்மைத்தாகிய ஊரனையா ளெனச் சொல்லுதலுந், தலைவனூரின்கணுள்ளன சொல்லத் தலைவற்கே யன்றித் தலைவிக் கேற்ற உவமம் தோன்றச் செய்தலும் ஏனையுவமங் கூறியவழி உள்ளுறையுவமங் கோடலும், பிறவாறு வருவனவுளவாயினும் எல்லாங் கொள்க. "தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவள்" (ஐங்குறு. 55) என்பது அவனூரனையாளென வந்தது. "வெண்பூம் பொய்கைத்து அவனூர்" (ஐங்குறு. 41) எனத் தலைவனூரின் உள்ளதொன்றனான் தலைவிக் குவமம் பிறப்பித்தவா றாயிற்று. அல்லாக்கால், "வெள்ளை யாம்ப லடைகரை" (ஐங்குறு. 41) என்றதனாற் பயமின்றென்பது. (25) கிழவியும் தோழியும் உள்ளுறை சொல்ல வேண்டு முறை 301. கிழவி சொல்லின் அவளறி கிளவி தோழிக்கு ஆயின் நிலம்பெயர்ந்து உரையாது. இது, மேற்கூறிய உள்ளுறையுவமத்திற் காவதோர் இலக்கணம். (இ-ள்.) ஐந்து வகைப்பட்ட உவமப்போலியும் பிறிதொடு படாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி, அக்கூற்றுத் தலைமகட்குந் தோழிக்கும் உரித்தாங்கால், தலைவிக்காயின் அவளறியுங் கருப்பொருளானே செப்பல் வேண்டும்; தோழிக்காயின் அந்நிலத்துள்ளன வெல்லாஞ் சொல்லவும் பெறும்; பிறநிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப் பெறாள் எ-று. இதனது பயம், தலைமகள் இந்நிலத்துள்ளனவெல்லாம் அறியுந் துணைப் பயிற்சியில ளெனவும் அவளாயத்தாராயின் இந்நிலத்துள்ளன அறியச் சிதைந்த தின்றெனவும் கூறியவாறு. "ஒன்றே னல்லே னொன்றுவென்" (குறுந். 208) என்னும் பாட்டினுட், பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை மரம் படப்பையிலுள்ள தாகலானுந் தன்னாற் பூக்கொய்யப்படு மாதலானும் அஃது அவளறிகிளவி யெனப்பட்டது. "தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை" (ஐங்குறு. 41) என்பது தோழி கூற்று. என்னை? அவற்றின் செய்கையெல்லாம் அறி யாளன்றே தலைமகள், பெரும்பேதை யாதலினென்பது. அதிகாரத்தானின்ற உள்ளுறையுவம மென்பதனை அவளறி கிளவி யென்றதற்குப் பெயர்ப் பயனிலையாகவும் நிலம்பெயர்ந் துரையாதென்னும் முற்றுவினைக்குப் பெயராகவும் வேறு வேறு சொல்லிக்கொள்க. (26) தலைவன் உள்ளுறை கிளக்குமாறும் ஒழிந்தோர்க்கு இடம் வரைவுஇன்று ஆதலும் 302. கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும் ஏனோர்க்கு எல்லாம் இடம்வரைவு இன்றே. இதுவும் அது. (இ-ள்.) கிழவோன் சொல்லும் உள்ளுறையுவமந் தன்உரனுடைமை தோன்றச் சொல்லப்படும்; ஏனோரெனப்பட்ட பாங்கனும் பாணனு முதலாயினோர் சொல்லுங்காலை இடம் வரையப்படாது, மேற்கூறிய வகையானே, தாந்தாம் அறிந்த கிளவியானும் நிலம்பெயர்ந்துரையாத கிளவியானும் எந் நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமம் சொல்லப் பெறுப. எ-று. "கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் நுந்தை நும்மூர் வருதும் ஒண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே" (ஐங்குறு. 92) என்றவழித், தாய் போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க. ஒழிந்தோர்க்காயின் வரையறையின்மையிற் காட்டாமாயினாம். அவை வந்துழிக் (கலி. 69) காண்க. (27) இன்பமும் துன்பமும் தோன்ற உள்ளுறையுவமம் சொல்லப்படுதல் 303. இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் உவம மருங்கின் தோன்று மென்ப. இதுவும் மேலதற்கே யாவதொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் கூறப்பட்ட உள்ளுறையுவமம் இன்ப துன்பங்கள் தோன்றச் சொல்லவும்படும் எ-று. "கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்" (குறுந். 8) என்பது, பலவகை யின்பமும் வருந்தாது பெறுவரென்பதற்கு உவமமாகி வருதலின் இனிதுறு கிளவி யெனப்பட்டது. "தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத்து" (ஐங்குறு. 24) என்பது, தலைமகன் கொடுமை கூறினமையின் துனியுறு கிளவியாயிற்று. இவ்விரு பகுதியும் படச் செய்யப்படும் மேற்கூறிய உள்ளுறை யுவமமென்பது இதன் கருத்து. 'மருங்கு' என்னும் மிகையானே, ஏனையுவமத்தின்கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும். அவை, "மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே" (குறுந். 71) என்பது, இனிதுறு கிளவி. "காரத்தின் வெய்யஎந் தோள்" (ஐந். ஐம். 24) என்பது, துனியுறு கிளவி. (28) தலைவி உள்ளுறை கூறும் நிலம் 304. கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே. இஃது, அவ்வுள்ளுறையுவமத்தை வரையறுத்துணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகள் இரண்டிடத்தல்லது உள்ளுறையுவமம் சொல்லப் பெறாள் எ-று. இரண்டிடமென்பன, மருதமும் நெய்தலும். அந்நிலத்துப் பிறந்த பொருள் பற்றியல்லது உள்ளுறையுவமஞ் சொல்லுதல் கிழத்திக்குரித் தன்றென்பது கருத்து. இவ்விடத்து உரிமையுடைத் தெனவே குறிஞ்சிக்கண் அத்துணையுரித்தன் றென்றவாறு. "தாமரை வண்டூது பனிமல ராரு மூர யாரை யோநிற் புலக்கேம்" (அகம். 46) என்றவழி வண்டூது பனிமலரெனப் பிறர்க்குமுரிய மகளிரெனவும் அவரை நயப்பாயெனவும் உள்ளுறையுவமம் மருதத்துக்கண் வந்தது. "அன்னை வாழிவேண் டன்னை கழிய முண்டகம் மலருந் தண்கடற் சேர்ப்பன் என்தோள் துறந்தன னாயின் என்னாங் கொல்லவ னயந்த தோளே.'' (ஐங்குறு. 108) என்பது நெய்தல். இதனுட் 'கழிய முண்டகம் மலரும்' என முள்ளுடைய தனைப் பூமலருமென்று உள்ளுறுத்ததனான், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென்றாளென்பது. 'என்தோள் துறந்தனன்' என்பது, முள்ளுடைமையோடொக்க, 'என்னாங்கொல்லவ னயந்தோள் தோள்' என்றவழி அவள் அன்பிற்றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சியோ டொப்பிக்கப்படும். பிறவும் அன்ன, "குன்றக் குறவன் புல்வேய் குரம்பை மன்றா டிளமழை மறைக்கும் நாடன் புரையோன் வாழி தோழி விரைபெய லரும்பனி யளைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே'' (ஐங்குறு. 252) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற் போல வாடை செய்யும் நோய்தீர்க்க வந்தா னென்று உள்ளுறையுவமஞ் செய்தவாறு கண்டுகொள்க. இனிக், 'கிழவோட் குவமம் பிரிவிடத் துரித்து' என்பது பாடமாக உரைப்பாருமுளர். யாதானுமொரு நிலத்தாயினும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறப்பெறுங் கிழத்தியென்பது இதன் கருத்து. பெருந் தண்வாடையின் முந்துவந்தோனென்பது பிரிவன்றாகலின் ஈரிடமென்றலே வலிதென்பது. (29) தலைவன் உள்ளுறை கூறுதற்கு வரையறை இல்லை எனல் 305. கிழவோற் காயின் இடம்வரை வின்றே. மேல் 'உரனொடு கிளக்கும்' (தொல் பொருள்-302) என்றதல்லது இன்னவழிச் சொல்லப்பெறுந் தலைமகனென்றிலன், அதனான் அவற்கு எல்லா நிலனும் உரியவாமென்கின்றானென்பது. (இ-ள்.) தலைமகற்கு இடவரையறை இல்லை எ-று. வரையறையில்லனவற்றுக்கு வரையறை கூறாமே முடியாவோ வெனின், அங்ஙனமாயினுங் கிழத்திக்குந் தோழிக்கும் இடம் (301) வரையறுத்ததனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலைமகற்கும் இடம் வரையறை யுண்டுகொலென்று கருதிற் கருதற்கவென்றற்கு இது கூறினா னென்பது. (30) தோழியும் செவிலியும் உள்ளுறை கூறுமாறு 306. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. இது, தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுமிடமுணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறை யுவமங் கூறற்குரியர் தோழியுஞ் செவிலியும் (எ - று). காலமுமிடனும் பொருந்துதலென்பது வெளிப்படக் கிளவாது முன்னத்தான் மறைத்துச் சொல்லவேண்டியவழி அவ்வாறு சொல்லுவர் அவரு மென்றவாறு, இங்ஙனங் கூறவே, 'ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்று' (302) என்றவழி, எல்லாரும் உள்ளுறையுவமஞ் சொல்லற்குரியரென்பது பட்டது. அதனை, நற்றாயும் ஆயத்தாருந் தந்தையுந் தன்னையரும் உள்ளுறை யுவமம் கூறாரெனவும், தோழி கூறின் நிலம் பெயர்ந்துரையாத பொருளான் ஒருவழிக் கூறுமெனவும், செவிலிக்காயின் இடம்வரைவின் றெனப்பட்ட வகையான் பொருந்தும்வழிக் கூறுதற்குரியளெனவுங் கூறினானாம் இச்சூத் திரத்தானென்பது. 'கொள்வழி'யென்றதனான், தோழிக்குப் போல நிலம் பெயர்ந்துரையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கு முரித்தென்பது கொள்க. மற்றிவையெல்லாம் அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதிய தென்னை புறப்பொருட்கு வாராதனபோல எனின், ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினானென்பது. "வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந" (புறம். 42) என்றக்காற், பகைவேந்தரை வென்றிகொள்ளுங்கால் அவர் தாமே தத்தம் பொருள் பிறர்க்களிப்பாரென்னும் பொருள் தோன்றினும் தோன்று மென்பதல் லது ஒரு தலையாக உள்ளுறையுவமங் கோடல் வேண்டுவதன்று; என்னை? "தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர்" (ஐங்குறு. 24) என்றாற்போலக் கூறாது, அந்நாட்டுக் கருங்களமர் முதலாயினார் வருந்தா மற் பெறும் பொருள் பிறநாட்டார்க்கு விருந்துசெய்யத் தகுமென்று அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது. தோழி பொருந்தியவழிக் கூறுமாறு முன் காட்டப்பட்டன. செவிலி பொருந்துவழிக் கூறுவனவுங் கண்டுகொள்க. இலக்கணமுண்மையின் அவையும் உளவென்பது கருத்து. (31) வேறுபட வரும் உவமங்களும் கொள்ளப்படுதல் 307. வேறுபட வந்த வுவமத் தோற்றம் கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல். இது, மேலெல்லாம் இருவகையுவமமுங் கூறி இன்னும் ஏனை யுவமப் பகுதியே கூறுவான் எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) வேறுபடவந்த உவமத்தோற்றம்- வேறுபாடு தோன்ற வந்த உவமச்சாதி; தோற்றமெனினும் பிறப்பெனினுஞ் சாதியெனினும் ஒக்கும்; கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்- அங்ஙனம் வேறுபட வந்தனவா யினும் மேற்கூறிய பகுதியானே கொள்ளுமிடனறிந்து கொளுத்துக எ-று. கொளுவுதலென்பது 'கொளாஅல்' என்பதாயிற்று. வேறுபடவருதலென்பது; உவமத்துக்கும் பொருட்கும் ஒப்புமை மாறு படக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர் போல்வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோருவமம் நாட்டுதலும், 4உவமமும் பொருளும் முற்கூறி நிறீஇப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்ற லும், உவமத்துக்கு இருகுணங்கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமத்தை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாதுகூறுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங் கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமை கோடலும், உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாகிய பொருட்குச் சில அடைகூறி அவ் அடையானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத் தினை உவமேயமாக்கியும் அது விலக்கியுங் கூறுதலும், இரண்டு பொரு ளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமமென்பது கொள்ள வைத்தலும், இன்னோரன்ன வெல்லாம் 'வேறுபடவந்த உவமத்தோற்றம்' எனப்படும். இவற்றைக் 'கூறிய மருங்கிற் கொளுத்துதல்' என்பது, முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறையுவமத்தின்பாலும் படுத்து உணரப்படுமென்பது. ஏனையுவமத்தின்பாற்படுத்தலென்பது, வினை பயன் மெய் உரு என்ற நான்கும்பற்றி (276) வருதலும் அவற்றுக்கு ஓதிய ஐவகை நிலைக்களனும்பற்றி (279-280) வருதலுமெனக் கொள்க. உள்ளுறையுவமத் தின்பாற்படுத்தலென்பது, இவ்வேனையுவமம்போல உவமையும் பொருளு மாகி வேறுவேறு விளங்க வாராது குறிப்பினாற் கொள்ளவருதலின். இக்கருத்தினானே இதனை ஈண்டு வைப்பானாயிற்று. வரலாறு: "வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப வொடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறங்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே'' (புறம். 8) என்னும் பாட்டினுள், "கடந்தடு தானைச் சேரலாதனை" என்னுந் துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது. இனிப் "பொழுதென வரைதி" என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர்வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு உவமிப்பான் 'பொருளே உவமஞ்' செய்தமையா னென்பது. 'பொருளே உவமஞ் செய்தனர் மொழியினு' (284) மென்றதனாற் பொருளினை உவமமாகக் கூறாது உள்ளுறையுவமம் போலக் கொள்ள வைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள், "வையங் காவலர் வழிமொழிந் தொழுக" என்றான். வழிமொழிதலென்பது, வேற்றரசர்க்குத் தம்தன்மையென வேறின்றித் தன்னகப்படுத்தல்; ஆகலான், தத்தம் ஒளியொடு பட்டு ஒழிந்த கோளுஞ் செல்லத் தானுஞ் செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங்கூறும் குறிப்புப் பட வைத்தானென்பது. "போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது" எனவே, இன்பநுகர்வுமுற்றுச் சிறப்பில்லாக் கட்டுரை யெய்தானெனவும் அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர் மகளிரொடு போகந் துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர்மறுத்துக் கொள்ள வைத்தான். சிறப்பின்மை யென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ் செய்யாது உரோகணிமேற் கழிபெருங் காதலனெனப்படுதல் போல்வன. "இடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப" எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும் மதி மண்டில மென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். "ஒடுங்காவுள்ளம்" எனவே, அம்மதியம் தேய்ந் தொடுங்குமென்பது கொள்ளப்படும். "ஓம்பா வீகை" எனவே, நாடோறும் ஒரோவொரு கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றான் தருவ தல்லாது தானுடையதெல்லாம் ஒருகாலே கொடாத மதியமெனப்படும்."கடந் தடு தானை" எனவே, மதிக்குத் தானையாகிய தாரகையெல்லாம் பகைக்கதிராகிய பருதி மண்டிலத்துக்குத் தோற்கு மென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர் மறுத்துக் கொள்ளப்பட்டன. இனிப், பொருட்குரிய அடையும் அவ்வாறே எதிர்மறுத்துக் கொள்ளப்படுமென்றவாறு. "வீங்குசெலன் மண்டில" மெனவே, கடையா யினார் கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத் தலைவன் தலையாயி னார் கதியிற் செல்லு மென்றான். "பொழுதென வரைதி" யெனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி என்றதனான் அவன் பொழுது செய்யானெனவும், "புறக் கொடுத் திறத்தி" யெனவே, தோற்றோர் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்றாய் என்பதனான் சுடர் போல விளங்கிப் பிறர் தோற்றோடக் காயும் இவனெனவும், "மாறி வருதி" யெனவே, திங்கடோறும் மாறிப் பிறத்தி யென்பதனான் இவன் நிலைபெற்றா னெனவும், "மலை மறைந் தொளித்தி" யெனவே, மலைசார்ந்தவழித் தோன்றாயென்ப தனான் இவன் தன்னாட்டு மலை மீக்கூறுமெனவும். "அகலிரு விசும்பினானு" மெனவே, இவன் இவ்வுலகத்தும் நிலைபேறுடையனெனவும், "பகல் விளங்காய்" எனவே, இவன் இரு பொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப் படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபடுதலின் வேறுபட வந்ததாயிற்று. மற்றையவும் அன்ன. இக்கூறிய அடை யெல்லாம், வினை பயன் மெய்உருவெனக் 'கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளுமுவவமாகக்' காட்டுவனவற்றிற்கும் இஃதொக் கும். "கண்ண னவனிவன் மாறன் கமழ்துழாய்க் கண்ணி யவற்கிவற்கு வேம்புதார் - வண்ணமும் மாய னவனிவன் சேயன் மரபொன்றே ஆய னவனிவன் கோ" என்பது, பெயருந் தாரு முதலாயின பற்றி மாயனோடு உவமங்கருதி மறுத் துரைத்தவாறு. பெயரென்பது பொருளுணர்த்துதலின் அதனை வடிவின் பாற் படுத்துணர்க. "அடிநோக்கி னாழ்கடல் வண்ணன்றன் மேனிப் படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன்- முடிநோக்கித் தேர்வளவ னாத றெளிந்தேன்றன் சென்னிமேல் ஆரலங்க றோன்றிற்றுக் கண்டு" என்பதனுள், ஆழ்கடல் வண்ணனையுங் கொன்றைத்தாரோனையும் உவமம் கூறியவற்றை மறுத்துத் தேர்வளவனெனத் தெளிந்தேனெனப் பொருளையே நாட்டுதலின் அஃது, உவமம் வேறுபட வந்ததாயிற்று. "இந்திர னென்னி னிரண்டேகண் ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகமொன்றே கோதையை ஆழியா னென்றுணரற் பாற்று" என்பதனுள், இந்திரனையும் இறையோனையும் முருகனையும் ஒப்பு மறுத்து, நெடியோனை உவமங்கூறலின், ஒப்புமை மறுத்துப் பிறிது நாட்டியது. "சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமகனாங் கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார் - பொற்றொடீஇ யாழி யுடையான் மகன்மாயன்; சேயனே கோழி யுடையான் மகன்." என்பதனான், உவமமும் பொருளும் முன் ஒருங்குநிறீஇப் பின்னர் ஒவ்வாமை கூறுதலின் இதுவும் பின்னும் வேறுபட வந்ததாயிற்று. "புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையான் வேறு படுப - புனனாட னேற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன் ஏற்றிரந்து கொண்டமையா னின்று" என்பதும் அது. "ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே" (புறம். 94) என்னும் பாட்டினுள் உவமமாகிய பொருளினை யானையுங் கடாமுமென இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள் வெண்கோடுகழாலின் நீர்த் துறைபடியுமென்னும் அடைகூறி ஊர்க்குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் கடாஅத்திற்குச் சொல்லாமையின் இதுவும் வேறுபட வந்த உவமத்தோற்ற மெனப்பட்டது. "முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை" (கலி. 56) என்றவழி, முதிர்கோங்கின் முகையும் முற்றிய குரும்பையும் பெரியவாக லின் அவைபோலப் பெருத்த நின் இளமுலையென்றல் ஒத்தது, பெயறுளி முகுளஞ் சிறிதாக அவற்றோடு அதனை உடன்கூறி இப்பெயறுளி முகுளத் திற்கில்லாத பெருமைக்குணம் பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. "மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில்'' (குறள். 1071) என்பது ஒவ்வாப்பொருளை ஒப்புமைகொண்டது. என்னை? மக்களைக் கயவர் ஒவ்வாரென்னுங் கருத்தினான் மக்கள் போல்வர் கயவரென்றமை யின் அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று. "நெடுந்தோட் டிரும்பனை நீர்நிழல் புரையக் குறும்பல முரிந்த குன்றுசேர் சிறுநெறி" என்பதனுள், உவமமாகிய நிழல் பொருட்கெய்தியது வினை உவமமன்றே? அதற்கு நெடுந்தோடும் பெருமையும் அடையாகக் கூறினான்; கூறவே, பனைநிழலோடொக்குங் குன்றஞ்சேர் சிறுநெறி முடிந்தவழிச் சென்று புகும் ஊர்க்குவமம் நெடுந்தோடென்று கொள்ள வைத்தமையின், அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று. "மண்படுதோட் கிள்ளி மதவேழம் மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியுந் தன்னுருவந் தேயுந் தெளிவிசும்பி னின்று" என்பதனுள், உவமானத்தினை உவமேயமாக்கி அதனையே விலக்கினான். என்னை? வெண்குடையென்று யானை குத்துமென்று மதியினைக் குடை யுடனொப்பிப்பான், மதியினைக் குடையாகவே கூறித், 'தேயுந்தெளிவிசும் பினின்று' என்பதனாற் குடையோடு உவமம் கூறியதை விலக்கினமையின் அதுவும் வேறுபடவந்த உவமத்தோற்றமாயிற்று. "அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு" என்றவழி இரண்டு பொருள் வேறுவேறு கூறியதன்றி, அகர முதல எழுத்தெல்லாம் அதுபோல என்றானும், ஆதிபகவன் முதற்று உலகம் அதுபோல என் றானும் ஒன்றாகத் துணியுமாற்றான் உவமமும் பொருளுங் கூறாமையின், அதுவும் வேறுபட வந்த உவமமாயிற்று. பிறவும் அன்ன. இவை ஏனை யுவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம். (32) ஒவ்வாதெனக் கூறி உவமமாக்குதல் 308. ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே. இதுவும், ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரீஇக்கூறலும்- ஒக்குமெனக் கூறாது ஒவ்வாதெனக் கூறுத லும்; உம்மை இறந்தது தழீஇயிற்று; மரீஇய பண்பு-அதுவும் உவமமாதற்கு அடிப்படவந்த வழக்கு எ-று. உதாரணம்: "யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்" (புறம். 8) எனவும், "மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி" (குறள். 1118) எனவும் வரும். "நின்னோ ரனையைநீ" (பரிபாடல் 1) என்பதும் அது. இவற்றுள், யாங்ஙனம் ஒத்தியோவென்பது ஒவ்வாயென்னும் பொருட்டு. 'காதலை வாழிமதி' யென்றவழியும் யான் காதலியாமையான் மதியமே அவள் வாண்முக மொவ்வாயென்றலின் ஒரீஇக் கூறிற்று. இதுவும் மரீஇய பண்பாகலானும் உள்ளுறையுவமம்போலக் குறிப்பினான் உவமங் கோட லொப்புமையானும் ஈண்டு வைத்தானென்பது. பண்பென்றதனான் அதுவும் இலக்கணத்தோடொக்கும் என்றவாறு. இவற்றையும் வேறுபட வந்த உவமமென்னாமோவெனின், உவமமும் அவ்வழி மாறுபட வருமாறு வேறுபடவந்த உவமத்துக் கூறினான்; உவமமின்மை கூறுதலும் உவமமெனப்படு மென்றற்கு இது கூறினானென்பது. இவற்றுள்ளும் வேறுபட வந்த இலக்கணம் மேலைச்சூத்திரத்துள் அடங்கும். (33) பொருட்டுப் பெருமையும் சிறுமையும் தோன்றாமலும் உவமம் கூறப்படுதல் 309. உவமத் தன்மையும் உரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. இஃது, எய்தாதது எய்துவித்தது; மேல் ஏனையுவமங் கூறுங்கால் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பக் கூறல் வேண்டுமென்றான், அவ்வாறன்றியும் உவமம் கொள்ளப்படுமென் றமையின். (இ-ள்.) உவமத்தன்மையும் உரித்தென மொழிப- விகாரவகையாற் பெருமையுஞ் சிறுமையும் ஒருபொருட்குக் கூறாது பட்டாங்கு உவமங் கூறுதலும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர்; பயனிலை புரிந்த வழக்கத்தான- அதனானும் ஒரு பயன் தோன்றச் சொல்லுத னெறிப்பாட் டின்கண் எ-று. அது, "பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்" (புறம். 107) என்னும் பாட்டினுள் உலகளித்தற்கு மாரியும் உண்டென, மாரியை உவமித்துச் சிறப்பித்துக்கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதான் போல இயல்பினான் உவமம் கூறினானாம்; இது மாரிக்கும் பாரிக்கும் ஓரிழிவில்லையென்னுந் தன்மைப் படக் கூறவே, அவனுயர்வு கூறுதலிற் பயனிலைபுரிந்த வழக்கெனப் படுமென்பது. "கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதி னன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் . . . " (அகம். 9) என்பதும், "நீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு கருப்பை யாடாது யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தோட்டு ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" (பெரும்பாண். 83-8) என்றாற் போல்வனவும் அது. "கொல்வினைப் பொலிந்த" (அகம். 9) என்பதனுள், இந்நிலத்தின் மக்கள் அம்பினை உவமமாக்கி ஆண்டைய வாகிய இருப்பையின் பூங்கொத்தை உவமிக்கப்படும் பொருளாக்கியும், உவம நிலத்திற்கேற்ற வெண்ணெய்த்திரளொடு கழன்ற பூவினை உவமஞ் செய்தும், அந்நிலத்தியல்பு கூறினமையின், அது பயனிலைபுரிந்த வழக் கெனப் பட்டது. பிறவும் அன்ன. 'உவமத்தன்மையும்' என்ற உம்மையான் உவமத்தன்மையேயன்றி வாளாது தன்மை கூறுதலும் அந்நிலத்திற்கே பயனிலையெனப்படுவனவுங் கொள்க; அவை, "மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி யீன்பிண வொழியப் போகி நோன்கா ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்புல் லடக்கிய வெண்ப லெயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவி னீழன் முன்றி னிலவுரற் பெய்து குறுங்கா ழுலக்கை யோச்சி" (பெரும்பாண். 89-97) என்றவழி உவமஞ்செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும், உவமத் தாற் பொருட்பெற்றி தோன்றச் செய்தாற்போல அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின், உவமவிலக்கணத்துள் இதனை இலேசினாற் கொண்டாமென்பது; என்னையெனின், "மரபே தானும்" (தொல். செய். 80) என்புழி நாற்சொல்லியலெனச் சொற்றன்மையும் (பொருள் தன்மையும்) கூறப்பட்டமையின் உவமஆராய்ச்சியுள் அது (பொருள் தன்மை) கூறானென்பது. உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? உயர்ந்ததன் மேற்றன்றி உயர்பிழிபுடைத்தல்லாத தன்மையுவமமுங் கொள்க வென்றமையின். (34) தடுமாறு உவமமும் நீக்கப்படாமை 310. தடுமா றுவமம் கடிவரை யின்றே. இதுவும். உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தடுமாறுவமம்- உவமமும் பொருளும் வேறு நிறீஇ இது போலும் இதுவென்னாது அவ்விரண்டனையும் உவமமுறச் சொல்லுந் தடு மாறுவமம்; இனி அவ்வாறன்றி உவமத்தைப் பொருளாக்கியும் பொருளை உவம மாக்கியுந் தடுமாறச் சொல்லுதலுந் தடுமாறுவமமெனப்படும்; கடிவரை இன்று- அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா எ-று. "அரிமலர் ஆய்ந்தக ணம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி யையத்து நின்ற தரா" (பொய்கையார்) என்பதனுள், உவமையினையும் பொருளினையும் வேறு வேறு துணியாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது அராவென்றமையின் இது தடுமாறுவமமாயிற்று. "தளிபெற்று வைகிய தண்சுனை நீலம் அளிபெற்றார் கண்போன் மலரு- மளிபெற்ற நல்லார் திருமுகத் தோற்றத் தளிபெற்ற கல்லாரம் போன்மலருங் கண்" என்புழி, நீலத்தொடு கண்ணினையும் கண்ணினொடு நீலத்தினையும் ஒன்றற் கொன்று உவமமாக்கியும் பொருளாக்கியும் ஒருங்கே தடுமாறக் கூறினமை யின் இதுவுந் தடுமாறுவமமெனப்பட்டது. பிறவும் அன்ன. (35) உவமைக்கு உவமை இல்லை யாதல் 311. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே. இஃது, எய்தியது மறுத்தது; என்னை? வேறு ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ அப்பொருளொடு பிறிதொரு பொருளை யுவமித்தலும் உவமமென்று கொள்ளுவானாயினும் அது கொள்ளப்படாது, பொருள் விளங்காமையினெனக் கூறி விலக்கியமையின். (இ-ள்.) அடுக்கிய தோற்றம் - உவமமும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம்; விடுத்தல் பண்பு - சிறப்பிற்றாகக் கொள்ளப்படாது எ-று. "மதியத் தன்ன வாண்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை" என்றக்கால், மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரை யென்றமையின் அவை ஒன்று ஒன்றனொடு பொருந்தாவென்பது கருத்து. "இலங்குவளை யன்ன நலங்கே ழாம்பற் போதி னன்ன தாதவிழ் கைதை" என்றக்கால், ஒன்று ஒன்றனோடு ஒருவண்ணத்ததாய் உவமத்திற்கேற்பினும் ஒன்றற்கொன்று உவமமாய் நின்றது. நின்றுற மற்று அதனோடு உவமங் கொள்ளப்படாது. இது வரையறையுடைமையின் விலக்கப்பட்டது. மற்று, "ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த வோதி யோதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி" (சிறுபாண். 19 - 23) என்பதூஉம் அடுக்கியதோற்ற மெனப்படாதோவெனின், படாதன்றே; யானைக் கைபோலுங் குறங்கு; குறங்குபோலும் வாழையென அடுக்கிச் சொல்லாது குறங்கினையுடையாளென்று துணித்துக் கூறிய பின்னர்க் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை யென்றானாதலினென்பது. 'தோற்ற' மென்றதனான் உவமமும் பொருளுமாக நிறீஇ உவமவுருபு தோன்றக் கூறுங்கால் அடுக்கப்படுவதென்பது. (36) உவமம் நிரல்நிறையாகவும் வருமாறு 312. நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங் கடையே. இதுவும் எய்தாதன வரையறையுடைமையிற் கூறியவற்றோடு இனமாகலின் உவமத்திற்காவதொன் றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை- உவமத்தையும் நிரலே நிறுத்துப் பொருளினையும் நிரலே நிறுத்து ஒப்புமை கூறின் அது நிரனிறை யெனப்படும்; சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங்கடையே- சுண்ணத் தினை வரைந்த நிலைமையான் வந்த சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்று மென்னும் மூன்றுமல்லாத இடத்து எ-று. சுண்ணத்தினை வரைந்த நிலைமையான் வந்தனவெனவே சுண்ணந் தவிர மூன்றுளவோவெனின், அதனை (மூவருள்) ஒருவரை விலக்க மூவரும் வந்தில ரென்றாற்போலக் கொள்க. உதாரணம் : "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்" என வரும். நிரனிறுத்தலென்னாது 'அமைத்த' லென்றதனான் நிரனிறையன்றி அமைத்துக் கொள்வதும் உண்டு; அது, "களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே" என வரும். பிறவும் அன்ன. என்றார்க்கு, 'நிரனிறுத் தமைத்தல் நிரனிறை ஏனை, வரைநிலை வைத்த மூன்றலங் கடையே' என்னாது சுண்ணத்தினை வரைந்தோதியது என்னையெனின், அவை மூன்றுஞ் சுண்ணம் போலச் சுண்ணஞ் செய்யப் படுதலின் அவ்வாற்றாற் சிதர்ந்து கிடப்ப உவமம் கூறின் அது பொருள் விளக்காதென்பது அறிவித்தற்கென்பது. என்னை? அடிமறியுள் ஓரடியுள் உவமங் கூறி ஓரடியுட் பொருள்வைத்தால் இனிது பொருள்கொள்ளாது அடிமறிக்குங் காலைப் பிறிதுபிறிதாக லுடைத்து. இனி ஓரடியுள் உவமங் கூறிப் பின்னர் எத்துணையுஞ் சென்று பொருள்கூறி மொழிமாற்றிக் கொள்ள வைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் தோன்றாது. சுண்ணத் திற்கும் அஃதொக்கும். இனி, இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையுஞ் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுஞ் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியா மென, இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும், தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையாவழியு மென்பது. என்னை? "2நாயகர்க்கு நாய்கள்போ னட்பிற் பிறழாது கூஉய்க் குழாஅ முடன்கொட்கு - மாய்படைப் பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு" என்றவழி, நாய்போலும் நட்புடையர் படையாளரென்பது வினையுவமம்; பன்றியனையர் பகைவேந்தரென்பது நாய்க்குப் பகையாகிய பன்றிபோல வென்பது.வேற்றுவேந்தர் பகைவராதலான் அவ்வுவமை விலக்கரிது. அன்றா மாயினும் அஃதணியெனப்படாது, உவமம்தான் உயர்ந்த தன்மை யின். அது குற்றமன்றோவெனின், "பேரூ ரட்ட கள்ளிற்கு ஓரில் கோயிற் றேருமா னின்னே" (புறம். 300) என்பது குற்றமன்றாகலின் அதுவுங் குற்றமன்றெனப்படும். இனிப் பொன் மாலை போலப் பூமாலையும் பொலிவு செய்தலின் இது குற்றமாகாது; மேலதே குற்றமென்பது. அற்றன்று, இன்னசொல்லும் இன்னபொருளு முடையன பொன்மாலையெனவும் பூமாலையெனவும் வரையறுத்துக் கூறலின்மையின் அதனானும் அதனைக் குற்றமென்று இலக்கணத்தார் கூறின் நிரம்பாது. அல்லதூஉம் பொருளதிகாரத்துட் பொருட்பகுதிகளெல் லாஞ் செய்யுட்கு அணியாகலான், அவை பாடலுட் பயின்றவை யெனப் பட்டன என்றதனான் அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றா மென்பது. இனி, இரண்டு பொருளெண்ணி, அவற்றை வினைப்படுக்குங்கால் ஒருங்கென்பதொரு சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட் கணியாமென்பது அவர் கருத்து. ஒருங்கு யென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள் கூறி 'எனவாங்கு' என்பதொரு சொல்லான் முடிந்தவழி 'எனவாங்கு' என்பதொரு மொழி, 'எனவென்பது ஓரலங்கார' மெனலும் வேண்டுமாகலான் அவ்வாறு வரை யறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன. இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணியென்பவாயிற், சாத்தனையுஞ் சாத்தனானணியப்பட்ட முடியுந்தொடியும் முதலாயவற்றை யும் வேறு கண்டாற்போல அவ்வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டு மென்பது. இனிச், செய்யுட்கணி செய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக்கூறலா (663) மென்பது. அவை யாவை யெனின், "அகனமர் கேள்வ னகற்சி தீர்த்தற்கு மகனொடு புகுந்த மகவுநிலை யெனாஅ மறுக்குங் காலை மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளீஇய குறிப்புநிலை யெனாஅப் புலவிக் கண்ணும் போக்கின் கண்ணு மழுதலு மழாஅ துயங்கலு மென்றாங் கிருவகைப் பட்ட மங்கல மெனாஅப் புலம்புறு காலை யறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை யெனாஅ வின்னோ ரன்ன பல்பொருட் பகுதி நன்னெறிப் புலவர் நாட்டல்வகை யுடைய" என்றொரு சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரமெனப் படுமென்பது. அவற்றுக்கு உதாரணம் : "ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல்" (அகம். 5) என்பது, மகவுநிலை. "ஓவச் செய்தியி னென்றுநினைந் தொற்றி" (அகம். 5) என்பது, குறிப்புநிலை; என்னை? தலைமகன் போக்கினை உவக்குங் குறிப் பல்லாத குறிப்பாகலின் அஃதணியெனப்படும். "தும்முச் செறுப்ப வழுதாள்" (குறள். 1318) என்பது. புலவியுளழுத மங்கலம். "பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மோயின ளுயிர்த்த காலை'' (அகம். 5) என்பது, போக்கின்கண் அழாத மங்கலநிலை. "விளிநிலை கேளா டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற" (அகம். 5) என்பது, அறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை; என்னை? கேளாது கேட்டாள்போல் வந்தமையின். அதுவும் அலங்காரமெனப்படு மென்று சூத்திரஞ் செய்துகொள்ளல் வேண்டும், செய்யுட்கு அணி வேறு கூறினென்பது. இனி, இங்ஙனங் கூறினவெல்லாங் குற்றமென்று கொள்ளப்படா; என்னை? வேறு காரணமுணரப்பெறாது பிறழ்ந்து இடையறவுபட்ட காலை இடர்ப்பட்டுச் செய்தனவாதலான், அவையும் அவ்வாற்றானமையு மென்பது. இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தா ரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைதாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா. அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமுந் தொல் காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுள் குற்றம் வேறுபடாவென்பது. அஃதேற், செய்யுட்கு இவை யணியென்பதூஉம் இவை குற்றமென்பதூஉம் மூன்றதிகாரத்துள்ளும் இவ்வாசிரியர் யாண்டுங் கூறாரோவெனின், செய் யுளியலில் முப்பத்துநான் குறுப்புக் கூறி, அவற்றதியைபு நல்லிசைப் புலவர் செய்யுளுறுப்பெனவும் அவை தொடர்ந்த தொடர்நிலை எண்வகையான் தொடர்நிலைச் செய்யுட்கு வனப்பெனவும் பகுத்து, ஓதிய இலக்கணத்திற் பிறழ்ந்தவை எல்லாங் குற்றமென்பதூஉம் கொள்ளவைத்தானென்பது. (37) உவமவியற்குப் பேராசிரியர்உரை முற்றிற்று. நூற்பா நிரல் (எண்: நூற்பா எண்) அடுக்கிய தோற்றம் 311 அணங்கேவிலங்கே 256 அல்கு றைவரல் 263 அவைதாம், அன்ன 286 அன்ன பிறவும் 267 அன்ன ராயினும் 639 அன்ன வாங்க 287 அன்னவென் கிளவி 288 ஆங்கவை ஒருபா லாக 260 இரட்டைக் கிளவி 297 இவையும் உளவே 269 இளிவே இழவே 253 இன்பத்தை வெறுத்தல் 270 இனிதுறு கிளவியும் 303 உயர்ந்தன் மேற்றே 278 உவமத் தன்மையும் 309 உவமப் பொருளின் 295 உவமப் பொருளை 296 உவமப் போலி ஐந்து 299 உவமையும் பொருளும் 283 உறுப்பறை குடிகோள் 258 எள்ள லிளமை 252 எள்ள விழைய 289 ஒரீஇக் கூறலும் 308 கடுப்ப ஏய்ப்ப 290 கண்ணினுஞ் செவியினும் 275 கல்வி தறுகண் 257 கிழக்கிடு பொருளோடு 280 கிழவி சொல்லின் 301 கிழவோட்குவமம் 304 கிழவோற் காயின் 302 கிழவோற் காயின் 305 கூழை விரித்தல் 262 சிறப்பே நலனே 279 சுட்டிக் கூறா 282 செல்வம் புலனே 259 தடுமா றுவமம் 310 தத்தம் மரபின் 292 தவலருஞ் சிறப்பின் 300 தெய்வம் அஞ்சல் 272 தெரிந்துடன் படுதல் 265 தோழியும் செவிலியும் 306 நகையே 251 நாலிரண் டாகும் 250 நாலிரண் டாகும் 293 நிம்பிரி கொடுமை 274 நிரனிறுத் தமைத்தல் 312 பண்ணைத் தோன்றிய 249 பாராட் டெடுத்தல் 264 பிறப்பே குடிமை 273 பிறிதொடு படாஅது 298 புகுமுகம் புரிதல் 261 புதுமை பெருமை 255 புறஞ்செயச்சிதைத்தல் 266 பெருமையுஞ் சிறுமையும் 294 ...மெ 285 பொருளே உவமம் 284 போல மறுப்ப 291 முட்டுவயின்கழறல் 271 முதலுஞ் சினையும் 281 மூப்பே பிணியே 254 விரவியும் வரூஉம் 277 வினைபயன் மெய்உரு 276 வினையுயிர் மெலிவிடத்து 268 செய்யுள் நிரல் (மேற்கோள்) எண் : நூற்பா எண் அ அகமலி உவகை 261 அகர முதல 307 அகனமர் கேள்வன் 312 அச்சறாக 256,272 அஞ்சுடர் நெடுங்கொடி 290 அடன்மா மேல் 257 அடிநோக்கின் 307 அடைமரை யாயிதழ் 281 அணங்குறு 253 அணங்குடை நெடுவரை 273 அணங்குகொ லாய்மயில் 278 அணிகிளர் சாந்தின் 256 அந்தீங் கிளவி 270 அயிரைபரந்த 272 அரவு நுங்கு மதியி 280 அரிமா வன்ன 278,279 அலந்தாங் கமையலேன் 270 அவனுந்தான் 273 அவர்நாட்டு மாலைப்பெய்த 270 அவன்வயிற் சேயேன்மன் 273 அவாப்போ லகன்ற 285 அவ்வா னிலங்குபிறை 277 அழல்போல் வெங்கதில் 289 அறியாய் கொல்லோ 265 அன்னா னொருவன் தன் 255 அன்னை சொல்லு முய்கம் 267 அன்னாய் வாழி 270 அன்னை வாழி 304 ஆ ஆகத்தொடுக்கிய 312 ஆமிழி யணிவரை 271 இ இகலிலர் 259 இடனின்றி 272 இணரெரி தோய்வன்ன 276 இந்திர னென்னின் 307 இமயமுந் துளக்கும் 254 இரண்டறி கள்வி 275 இருநிதி மதிக்கும் 289 இலமலரன்ன 259 இலங்குபிறை யன்ன 271,288 இலங்குவளை யன்ன 311 இல்லி தூர்ந்த 253 இல்வழக்கு 253 இவளே யணியினும் 266 இனியா னுண்ணலு 270 இனிதெனக் கணவன் 267 இன்ன விறலு 253 இன்னுயிர் கழிவ 271 ஈ ஈரத்து ளின்னவை 294 ஈர்ந்துநிலந் தோயு 311 உ உரனுடை உள்ளத்தை 259 உரல்புரை பாவடி 290 உருமெனச் சிலைக்கு 289 உருவு கிளரோவினை 276 உருவுகண் டெள்ளாமை 295 உலவினிவாழி 259 உழுந்தினுந் துவ்வா 273 உழுத நோன்பகடு 295 உள்ளி னுள்ளம் 271 உள்ளினென் 273 உள்ளூதாவியிற் 280 உறக்குந் துணையதோர் 255 உறுதுப் பஞ்சாது 258 உறையுண் முனியும் 260 ஊ ஊர னுரன் 270 ஊர்க்குறுமாக்கள் 307 எ எம்போர் புல்லுறை 272 எரியகைந் தன்ன 287 எரியுரு வுறழ 291 எருமை யன்ன 255 எருத்துமேல் 256 எல்லி மனை சேர் 270 எவ்வி யிழந்த 270 எழிலி வானம் 289 என்மலைந்தனன் கொல் 271 என்றோ ளெழுதிய 273 என்ற வியப்ப 278 ஐ ஐயர் பாங்கினும் 272 ஐயோ வெனின் யான் 253 ஒ ஒண்செங் காந்தள் 291 ஒத்த தறிவான் 283 ஒருகை யுடைய தெறிவலோ 254 ஒருநாள் வந்து 264 ஒருக்கு நாமாடும் 267 ஒழிகோ யானென 275 ஒழுகை நோன் பகடொப்ப 287 ஒளித்தியங்கு மரபின் 287 ஒன்றிரப்பான்போல் 254 ஒன்றே னல்லே னொன்றுவென் 301 ஓ ஓதியு நுதலு நீவி 263 க கடம்பமர் நெடுவேள் 281 கடல்போற் றோன்றல 290 கடல்கண் டன்ன 272,278 கடையிற் சிறந்த 255 கடைக்கண்ணாற் 276 கணைகழி கல்லாத 270 கண்ணன வனிவன் 307 கண்யொடு நிகர்க்கும் 290 கண்போன் மலர்ந்த 290 கண்ணியன் வில்லன் 273 கண்ண் கருவிளை 278 கயமல ருண்கண்ணாய் 253 கயமூழ்கு மகளிர் 287 கயநாடி யானையின் 287 கருங்கால் வேங்கை 297 கரும்புநடு பாத்தி 300 கருங்கோட் டெருமை 302 கரைசேர் வேழம் 300 கலங்கவிழ்த்த 294 கல்லாக் கோவலர் 270 கழங்கா டாயத்து 270 கழனி மாஅத்து 303 கழியாக் காதலர் 257 களிறுகவர் 272 காக்கைச் சிறகன்ன கருமயிர் 283 காதலைவாழி 308 காமரு நோக்கிணை 270 காயா மென்சினை 277 கார்மழை முழங்கிசை 287 கார்கள்ள வுற்ற 289 கார்விரி கொன்றை 291 காலுங் கழறாது 271 கிண்கிணி களைந்த 255 குளிரும் பருவத்தே 272 குளித்துப்பொரு கயலிற் 286 குறிக்கொண்டு 252 குறுந்தொடி யேய்க்கு 287 குன்றியுங் கோபமும் 286 குன்றி னனையாரும் 286 கூவற், குராலான் படுதுயர் 281 கேள்கே டூன்றவும் 273 கொடி குவளை 312 கொன்றன்ன இன்னா 276 ச சாந்தகத் துண்டென்று 294 சாறுதலை கொண்டென 295 சினைவாடச் சிறக்கும் 272 சுரஞ்செல் யானை 261 சுரும்பு மூசா 284 சுற்றுவிற் காமனும் 307 செஞ்சாந் தெறியினும் 260 செந்தி யோட்டிய 290 செயலையந் தளிரேய்க்கு 291 செய்தவ றில்வழி 258 செவ்வா னன்ன 279,288 சேய ளரியோள் 254 சேயித ழனைய 290 சேயேன்மன் 253 சேய்நின்று 256 சோறு வாக்கிய 285 த தண்டளிர் வியப்ப 291 தண்டுளிக் கேற்ற 268 தளிர்சிவந் தாங்கு 276 தளிபெற்று வைகிய 310 தன்னகம் புக்க 257 தன்சொல் உணர்ந்தோர் 291 தன்னசை உள்ளத்து 268,273 தன்பார்ப்புத் தின்னும் 300,301 தாதுண் பறவை 273 தாமரை வண்டூது 304 தாமரை புரையும் 281 தாய்சாப் பிறக்கும் 303,306 தானுற்ற 253 திறனல்ல 252 தீம்பா லூட்டினும் 270 தீயி னன்ன வொண்செல் 291 துணிவொடு வரூஉம் 300 தும்முச் செறுப்ப 312 துளியிடை 253 துளிதலைத் தலைஇய 291 துறந்தார் பெருமை 286 தூதவர் விடுதரார் 270 தூதுணம் புறவென 286 தெம்முனை யிடத்திற் 276 தேர்வண் கோமான் 300 தொடித்தலை 254 தொடிக்கண் 259 தொடிநிலை நெகிழ 270 ந நகுதக் கனரே 252 நகைநீ கேளாய் 252 நகையா கின்றே 252 நல்லை மன்னென 252 நல்வரை நாட 271 நறுமுல்லை நேர்முகை 290 நற்றா ரகலத்து 272 நன்கலம் பெற்ற 259 நாம்நகையுடையம் 252 நாயகற்கு நாய்கள்போல் 312 நாவொடு நவிலா 252 நின்மகன் படையழிந்து 258 நின்ற சொல்லர் 272 நின்னுறு விழுமம் 270 நின்மகள் உண்கண் 273 நீருட் குவளை 294 நீருறை கோழி 300 நீர்வார் நிகர்மலர் 290 நீளரை யிலவத் 309 நுதலு முகனுந் 278 நும்மொடு நக்க 252 நெய்பெய் தீயின் 271 நெய்த னெறிக்கவும் 273 நெருப்பெனச் சிவந்த 291 நெருந லெல்லை 258 நெருப்புச்சினந் 258 நெருப்பி னன்ன 281 நொச்சிவேலி 271 நோய்சேர்ந்த திறம்பண்ணி 267 ப படங்கெழு நாகம் 286 பட்டுழி யறியாது 272 பலர்புகழ் ஞாயிறு 291 பல்லோர் உவந்த 289 பல்லிருங் கூந்தன் 257 பழிதவு ஞாயிறே 270 பறைக்குர லெழிலி 276 பாங்கர்ப்பல்லி 270 பாசடை நிவந்த 295 பாடிச் சென்ற பரிசிலர் 294 பாம்புரு வொடுங்க 290 பாரி பாரியென்று 309 பாவை மாய்ந்த 312 பாவை யன்ன 279 பிறங்கிரு முந்நீர் 270 பின்னொடு முடித்த 253 புத்தே ளுலகிற் 289 புலர்குரலேனற் 270 புலிபோலப் பாய்ந்தான் 283 புலிவிறப்ப 287 புலியென்னக் கலிசிறந்து 287 புலிசெத்து வெரீஇய 290 புல்வீ ழிற்றி 271 புனனாடர் கோமானும் 307 பூசைபோலப் பாய்ந்தான் 283 பெண்டிர் நலம் வௌவி 254 பெண்ணன் றுரைத்தல் 273 பெருஞ்செல்வ ரில்லத்து 294 பெரும்புழுக் குற்ற 261 பேரூரட்ட 312 பொய்கைப் பள்ளி 308 பொன் காண் கட்டளை 297 பொன்னுரை கடுக்குந் 291 ம மகன்றா யாதல் 289 மக்களே போல்வர் 307 மணிநிற மறுத்த 291 மணிநிறம் மாற்றிய 286 மணிவாழ் பாவை 276 மதியம் பொற்ப 286 மதியொத்தது மாசற்ற திருமுகம் 286 மதியத் தன்ன 311 மயிற்றோகை போலுங் கூந்தல் 283 மருந்தெனின் மருந்தே 303 மருந்துகொண் மரத்தின் 295 மல்லரை மறஞ்சாய்த்த 294 மழையொன்று வண்டடக்கை 286 மழைவிழை தடக்கை 289 மன்றுபா டவிந்து 271 மாக்கடல் நடுவண் 284 மாண மறந்துள்ளா 267 மாணெழில் வேய் 290 மாதர் முகம்போல் 308 மாயப் பொய்ம்மொழி 254 மாயிதழ் புரையும் 291 மாரி யன்ன 276,288 மாரிப் பீரத் தலர் 276 மாரி யம்பின் 278 மாவென மடலும் 270 மானோக்கு நோக்கும் 287 மான்றோற் பள்ளி 309 மின்உற ழிமைப்பின் 287 முகைமொக்குள் 261 முத்துடை வான்கோடு 290 முதிர்கோங்கின் முலையென 307 முயங்கல் விடாஅல் 272 முரசுமுழங்கு 279 முல்லை முகை 273 முழவுறழ் தடக்கையி னியல 290 மூத்துத்தலை இறைஞ்சிய 254 மெழுகு மாப்பி 253 மென்றேணெகிழ்த்தான் 270 மோட்டிரும்பாறை 290 ய யாங்கன மொத்தியோ 308 யாழ்கெழு மணிமிடற் றந்தணன் 287 யாழ்கொண்ட இமிழிசை 289 யாழ்செத் திருங்கல் விடரளை 209 யானையனையவர் 285 யானோக்குங் காலை 261 யான்தற் காண்டொறும் 261 யான்தன் னறிவல் 254,271 வ வயலாமைப் புழுக்குண்டு 200 வரியம் பொருத 258 வருமுலையன்ன 284 வருதுமென்ற 270 வரைவுரையு மழகளிற்றின் மிசை 281 வலியரென 254 வல்லார் முன் 257 வள்ளெயிற் றரிமா 249 வள்ளத்தினீர் கொண்டு 285 வறிதகத் தெழுந்த 252 வன்கண் குடிகாத்தல் 273 வன்புலக் கேளிர்க்கு 306 வாயென்ற பவளம் 286 வாயென்ற பவளம் 286 வாய்பவளம் 278 வாரா தாயினும் 270 வாரார் கொல்லென 270 வானி னிலங்கும் 270 வான்றோய்வன்ன 276 விசும்புரி வதுபோல் 276 விசும்பினன்ன 281 விண்பொருபுகழ் 289 விண்ணதி ரிமிழிசை 289 விண்ணுயர் விறல்வரை 262 விரியுளைக் கலிமான் 272 விளிநிலை கேளாள் 312 வீங்குசுரை நல்லான் 289 வெண்பூம் பொய்கை 300 வெயிலொளி காய்த்த 291 வேப்பு நனையன்ன 275 வேயொடு நாடிய 286 வேயொன்று தோளொருபால் 286 வேய்மருள் பணைத்தோள் 290 வேலொன்று கண்ணார்மேல் 286 வேனிற் புனலன்ன 295 வையம் புரவூக்கு 257  Foot Notes 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார்