தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (இரண்டாம் பகுதி) வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (இரண்டாம் பகுதி) உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 336 = 352 படிகள் : 2000 விலை : உரு. 220 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி(EFEO)யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே 'உயர்தனிச் செம்மொழி' எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், 'உலக முதன் மொழி தமிழே' என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்" என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்" தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [ciuaháÇa®fŸ - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய 'இலக்கண வரலாறு' என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனி பாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகி யோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசாரா. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்பரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை வேட்டு. வேட்டுவரி வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்" இதனொடும் இணைக்கப்பட்டுளது! வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!" அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள 'மண்' எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து 'இந்தா' என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் 'தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை'ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை 3 களவியல் களவொழுக்கம் இவ்வியல்பினதெனல் 92. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே. இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியலென்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித் தென்று இரு முதுகுரவரான் கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற்கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை மறைநூல் என்றாற்போலக் கொள்க. களவெனப் படுவது யாதென வினவின் வளைகெழு முன்கை வளங் கெழு கூந்தல் முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன் விளையாட் டிடமென வேறுமலைச் சாரல் மானினங் குருவியொடு கடிந்து விளையாடும் ஆயமுந் தோழியும் மருவிநன் கறியா மாயப் புணர்ச்சி என்மனார் புலவர் இக்களவைக் காமப்புணர்ச்சியும் (தொல். பொ.498) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்திற் கூறிய நான்கு வகையானும் மேற்கூறியமாறு உணர்க. இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணை யியலுட் கூறி அதற்கினமாகிய பொருளும் அறங் கூறும் புறத்திணையை, அதன்புறத்து நிகழ்தலிற், புறத்திணையியலுட் கூறி யீண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயை புடைத்தாயிற்று. வழக்கு... நாடி என்றலின் இஃது உலகியலெனப் படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். இச்சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம்பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்னதா மெனவுங் கூறுகின்றது. இதன் பொருள்: இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு - இன்பமும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப் பொருள் களுள்; அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் - ஒருவனோடு ஒருத்தி யிடைத் தோன்றிய அன்பொடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள்; காமக் கூட்டங் காணுங்காலை - புணர்தலும், புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப்புணர்ச்சியை ஆராயுங் காலத்து; மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள் - வேதம் ஓரிடத்துக் கூறிய மண மட்டனுள்; துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு - துறை அமைந்த நல் யாழினையுடைய பிரிவின்மையோரது தன்மை என்றவாறு. அன்பாவது, அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந் - தடுமாறிக் கண்ணெதிர்நோக் கொத்தவண் காரிகையிற் கைகலந்து உண்ணெகிழச் சேர்வதா மன்பு. மன்றல் எட்டாவன: பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆகரம், இராக்கதம், பைசாசம் என்பன. அவற்றுட் பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது. கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின் நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து. பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது. அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிராசா பத்தியம். ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது. தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே ஆரிடத்தார் கண்டமண மாம் தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு அவ்வேள்வித்தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது. நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த வேள்வி விளங்கழல் முன்நிறீஇக் - கேள்வியாற் கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே தெய்வ மணத்தார் திறம். ஆசுரமாவது: கொல்லேறு கோடல், திரிபன்றியெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல். முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகைநலங் கருதுந் தருக்கினி ருளரெனின் இவையிவை செய்தாற் கெளியள்மற் றிவளெனத் தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித்து அன்னவை யாற்றிய அளவையின் தயங்கல் தொல்நிலை அசுரந் துணிந்த வாறே. இராக்கதமாவது: தலைமகள் தன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது. மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே என்ப - வலிதிற் பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோள் இராக்கதத்தார் மன்ற லியல்பு. பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும், இழிந்தோளை மணஞ்செய்தலும், ஆடை மாறுதலும், பிறவுமாம். எச்சார்க் கெளியர் இயைந்த காதலர் பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து உசாவார்க் குதவாக் கேண்மை பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே. இடைமயக்கஞ் செய்யா இயல்பினில் நீங்கி உடைமயக்கி உட்கறுத்தல் என்ப - உடையது உசாவார்க் குதவாத ஊனிலா யாக்கைப் பிசாசத்தார் கண்டமணப் பேறு. இனிக் கந்தருவமாவது: கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்ததுபோலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது. அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப - கதிர்ப்பொன்யாழ் கந்திருவர் கண்ட கலப்பு. என இவற்றானுணர்க. களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் (21) உரித்து, மாலைசூட்டுதலும் இதன் பாற்படும். வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க் குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து; வலிதிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடை மையிற் சேட்படை முதலியன உளவா மென்றுணர்க. அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளான் இன்பநுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற்கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போகமும் வீடுமென இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடு பெறுதற்குக் காரணம் முற்கூறினார். ஒழிந்த மணங் கைக்கிளையுங் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை அன்பொடு என்றார். பொருளாற்கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழித் தாமும் இயைதலின் கந்தருவப் பாற்படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப்படும். அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள். 76) என்றலின். கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் துறையமை என்றார். (1) காமக் கூட்டத்திற்குரியாரியல்பும் அவரெதிர்ப்பாட்டிற்குரிய காரணமும் இவையெனல் 93. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ஙனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது. (இ-ள்.) ஒன்றே வேறே என்ற இரு பால்வயின் - இருவர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும்; ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப் பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே, ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் (273) எதிர்ப்படுப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே - அங்ஙனம் எல்லாவாற் றானு ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினுங் கடியப்படாது எ-று. என்றிரு பால்வயிற் காண்ப எனப் பால் வன்பால் மென்பால் போல நின்றது. உயர்ந்த பாலை நோய் தீர்ந்த மருந்து போற் கொள்க. ஒரு நிலம் ஆதலை முற்கூறினார். இவ்வொழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம் ஆதலைப் பிற் கூறினார். குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப்பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கிவந்து எதிர்ப்படுதல் உளதாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன்கோடற்கு ஒரு நிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவத்தாளாயினாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் பால தாணையிற் காண்ப என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ஙனத் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பால தாணை வேண்டுமாயிற்று. இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது ஏதில் சிறுசெரு உறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே. (குறுந். 229) இஃது ஓரூர் என்றதாம். காமஞ் செப்பாது கண்டது மொழிமோ என்றது என் நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே சொல் என்றலிற் குறிஞ்சி நிலம் ஒன்றாயிற்று. இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்துகூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும் மலை வேறாயிற்று. செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைநோய் உற்றவர் காணாது கடுத்தசொல் ஒவ்வாவென்றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை. (கலி. 76) இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பௌவநீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய் தனிலத்து எதிர்ப்பட்டமை கூறியது. ஆணை விதி. கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும். பாலது ஆணையும் அவ்வாறாம். மிகுதலாவது; குலங் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி, மிகுதி. அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்று யாண்டாக அந்தணன் உயருங் கந்தருவ மணத்து; ஒழிந்தோ ராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலியவற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற்போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். கிழவன் கிழத்தி எனவே பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ஒருபாற்கிளவி (தொல். பொ. 222) என்னுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இச்சூத்திரம் முன்னைய நான்கும் (தொல். பொ. 52) எனக்கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென் றுணர்க. உ-ம்: கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா அரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும்பணைத்தோள் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தஎங் கண்ணே (புற.வெ.மாலை. கைக். 1) இக்காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறுதல் புலனெறிவழக்கன்மை உணர்க. ஐயம் நிகழுமிட மிதுவெனல் 94. சிறந்துழி ஐயஞ் சிறந்த தென்ப இழிந்துழி யிழிபே சுட்டலான. இஃது எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று, முன்னைய நான்கும் (தொல். பொ. 52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன் கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின். (இ-ள்.) சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவர் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான - அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான் எ-று. தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம், நூன் முதலியவற்றான் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடையனாதலானுந், தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். உ-ம்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு. (குறள். 1081) எனவரும். (3) ஐயநீங்கித் தெளிதற்குரிய காரணம் இவையெனல் 95. வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்(று) அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ நின்றவை களையுங் கருவி யென்ப. இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப. (இ-ள்.) வண்டே - பயின்றதன்மே லல்லது செல்லாத தாது ஊதும் வண்டு; இழையே - ஒருவரான இழைக்கப்பட்ட அணிகலன்கள்; வள்ளி - முலையினுந் தோளினும் எழுதுந் தொய்யிற்கொடி; பூவே - கைக் கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ; கண்ணே - வான் கண்ணல்லாத ஊன் கண்; அலமரல் - கண்டறியாத வடிவுகண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம்; இமைப்பே - அக்கண்ணின் இதழ் இமைத்தல்; அச்சம் - ஆண் மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம்; என்று அன்னவை பிறவும் - என்று அவ்வெண்வகைப் பொருளும் அவைபோல்வன பிறவும்; அவண் நிகழ நின்றவை - அவ் வெதிர்ப்பாட்டின்கண் முன்பு கண்ட வரையர மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை; ஆங்குக் களையும் கருவி என்ப - முந்து நூற்கண்ணே அவ்வையம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, எனக்கும் அது கருத் தென்றார். இவையெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப்பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிறறே யாயிற்று. இனி, அன்னபிற ஆவன கால் நிலந்தோய்தலும் நிழலீடும் வியர்த்தலும் முதலியன. திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த போகிதழ் உண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே (புற. வெ. மாலை. கைக். 3) என வரும். இக் காட்சி முதலிய நான்கும் அகனைந்திணைக்குச் சிறப்புடை மையும் இவை கைக்கிளையாமாறும் முன்னைய நான்கும் (தொல். பொ. 52) என்புழிக் கூறினாம். இங்ஙனம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. (4) வழிநிலைக்காட்சி இதுவெனல் 96. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். இஃது அங்ஙனம் மக்களுள்ளாளெனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்துமென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறுகின்றதாயிற்று. (இ-ள்.) அறிவு - தலைவன் அங்ஙனம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே; உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு; நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும்; குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும் - அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங் கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் எ-று. நாட்டம் இரண்டும் இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க. இங்ஙனம் இதற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தானுணர்க; அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானு முணர்க. ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார். நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும். உ-ம்: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள். 1082) என வரும். இது புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியது. (5) புணர்ச்சியமைதி இவற்றான்நிகழுமெனல் 97. குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழும் என்மனார் புலவர். இது புணர்ச்சியமைதி கூறுகின்றது. (இ-ள்.) குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கை யையே; குறிப்புக்கொள்ளுமாயின் - தலைவி கருத்துத் திரிவுபடாமற் கொள்ளவற்றாயின்; ஆங்கு - அக் குறிப்பைக் கொண்டகாலத்து; அவை நிகழு என்மனார் புலவர் - புகுமுகம் புரிதன் முதலாக இருகையுமெடுத்தல் ஈறாகக் கிடந்த மெய்ப்பாடு பன்னிரண்டனுட் (261 - 263) பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றும் முறையே நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று. அங்கவையும் பாடம். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையுமெடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் (261-263) ஈண்டுக் கூறியுணர்க. உ-ம்: கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. (குறள். 1100) கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற் செம்பாகம் அன்று பெரிது. (குறள். 1092) இதனை நான்கு வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க. உ-ம்: பானலந் தண்கழிப் பாடறிந்து தன்ஐமார் நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு. (திணை. நூற். 32) இனி முயங்கி மகிழ்ந்து கூறுவன: கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட சூகாதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாயது முயங்கற்கும் இனிதே (குறுந். 62) தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. (குறள். 1107) உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க. (6) தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரைநிகழ்தலு முண்டென்றற்குக் காரணங் கூறல் 98. பெருமையும் உரனும் ஆடூஉ மேன. இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி, இனி உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பதூஉம் இவ்விரு வகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதின் நிகழ்தலுண் டென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) பெருமையும் - அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும்; உரனும் - கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்; ஆடூஉ மேன - தலைவன் கண்ண எ-று. இதனானே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வரைந்து கோடலும், உள்ளஞ் சென்றுழியெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தானாயுந் தோன்றாமல் மறைத்தலுந், தீவினையாற்றிய பகுதியிற்சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க. சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு (குறள். 422) என வரும். பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும், அவ்வுரனான் மெய்யுறு புணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற் கூறுப. இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப் பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டும் இடை யீடு பட்டுழிப்பாங்கனாற்கூடுபவென்றும், உரைப்போரும் உளர்; அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க. (7) தலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில் நிகழ்தற்குக் காரணங் கூறல் 99. அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப. இது, மேலதே போல்வதொரு விதியை உள்ளப் புணர்ச்சி பற்றித் தலைவிக்குக் கூறுகின்றது. (இ-ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும்; நாணும் - காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கமும்; மடனும் - செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையும்; முந்துறுத்த இம்மூன்று முதலியன; நிச்சயமும் பெண்பாற்கு உரிய என்ப - எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. முந்துறுத்த என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ் சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப்பிறந்தோர் செய்கை யாதலின் அச்சமும் நாணும்போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி இவற்றை உடையளெனவே தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும் பெறுமாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியளல்லளாமாயினும் இவ்விலக்கணத்தின் திரியாது நின்றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார். இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடிபாதலின் இவ்வுள்ளப் புணர்ச்சியுங் கந்தருவமாம் ஆதலான் அதற்கு ஏதுவாகிய பெருமையும் உரனும் அச்சமும் நாணும் போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின், இக்கந்தருவம் இக்களவியற்குச் சிறப்பன்று. இனிக்கூறுவன மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்க மாதலின். (8) களவிற்குரிய பொதுவிலக்கணம் இவையெனல் 100. வேட்கை யொருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை களவென மொழிப இது முதலாகக் களவிலக்கணங் கூறுவார். இதனான் இயற்கைப் புணர்ச்சிமுதற் களவு வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் இவ்வொன்பது மெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார். (இ-ள்.) ஒருதலைவேட்கை - புணராதமுன்னும் புணர்ந்த பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை; ஒருதலை உள்ளுதல் - இடைவிடாது ஒருவர் ஒருவரைச் சிந்தியாநிற்றல்; மெலிதல் - அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல்; ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல்; நாணுவரையிறத்தல் - ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக்கோடல்; மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்; மயக்கம் - செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றொடு கூறல்; என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொமிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான் முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்க மென்று கூறுப எ-று. இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைடையின் வேட்கை முற்கூறினார். சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல். தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரைத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணுவரையிறத்தல். களவதிகாரமாதலின் அவையென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும். கையுறைபுனைதலும் வேட்டை மேலிட்டுக் காட்டுள்திரிதலுந் தலைவற்கு மறத்தல்; கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன: அணிற்பல் அன்னகொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. (குறுந். 49) நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினஞ் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர மையன் மானினம் மருளப் பையென வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப ஐயறி வகற்றுங் கையறு படரோடு அகலிரு வானம் அம்மஞ் சீனப் பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து உள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து இதுகொல் வாழி தோழி யென்னுயிர் விலங்குவெங் கடுவளி யெடுப்பத் துலங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே. (அகம். 71) இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக் கூறுதல் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடையவெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் மரபினவையெனப் பன்மை கூறினார். (9) இயற்கைப்புணர்ச்சிப்பின் தலைவன்கண் நிகழ்வனஇவையெனல் 101. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னயம் உரைத்தல் நகைநனி யுறாஅது அந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்தல் தந்நிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர். இஃது இன்பமும் இன்ப நிலையின்மையுமாகிய புணர்தல் பிரிதல் கூறிய முறையானே (14) இயற்கைப் புணர்ச்சி முற்கூறி அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப் படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவற்கு உரியவென்கின்றது. (இ-ள்.) முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல்; சொல்வழிப் படுத்தல் - அச் சொல்லாதவற்றைச் சொல்லுவனபோலக் கூறுதல்; நன்னயம் உரைத்தல் - அவை சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல்; நகைநனி உறாஅது அந்நிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவுநிலைகூறி அவள் ஆற்றுந்தன்மை அறிதல்; மெலிவு விளக்குறுத்தல் - இப்பிரிவான் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அது தீரக்கூறுதலும்; தம் நிலை உரைத்தல் - நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமது நிலை உரைத்தல்; தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்தேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல்; என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் - என்று இக்கூறிய ஏழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு எ-று. முற்கூறிய மூன்றும் நயப்பின்கூறு. இஃது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகைபற்றிக் கூறுவது. நன்னயம் எனவே எவரினுந்தான் காதலனாக உணர்த்தும். இதன்பயன் புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ இன்னும் இது கூடுங்கொல்லோ இவன்அன்புடையன் கொல்லோ என நிகழும் ஐயநீங்குதல். இது பிரிதனிமித்தம். இவன் பிரியாவிடின் இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம்; ஆண்டு யாம் இறந்துபடுதலின் இவனும் இறந்துபடுவனெனக் கருதப், பிரிவென்பதும் ஒன்று உண்டெனத் தலைவன் கூறுதல் அவட்கு மகிழ்ச்சியின் றென்பது தோன்ற நகை நனியுறா தென்றார். புணர்தல் பிரிதல் (தொல். பொ. 14) எனக் கூறிய சூத்திரத்திற் புணர்தலை முற்கூறி ஏனைப் பிரிவை அந்நிலையென்று ஈண்டுச் சுட்டிக் கூறினார். இதனால் தலைவிக்குப் பிரிவு அச்சம் கூறினார். தண்ணீர் வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றான், இதனான் உயிர் பெற்றேமெனக் கருதி அதன்மாட்டு வேட்கை நீங்காதவாறுபோலத் தலைவிமாட்டு வேட்கையெய்தி அவளை அரிதிற் கூடி உயிர்பெற்றானாதலின், இவளான் உயிர்பெற்றே மென்றுணர்ந்து, அவன்மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியுமாதலின் தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்ஙனம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென் பதனைத் தலைவிக்கு மனங்கொள்ளக் கூறுமென்றற்கு விளக்குறுத்த லென்றார். இதனானே வற்புறுத்தல் பெற்றாம். அஃது அணிந்து எம்மிடமென்றும் பிறவாற்றானும் வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம். உ-ம்: கொங்குதேர் வாழ்க்கைஅசிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. (குறுந். 2) இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல்; காமஞ் செப்பாது என்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது நட்பு என்றது தந்நிலை யுரைத்தல். பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமோடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து இருவேம் ஆகிய வுலகத்து ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே (குறுந். 57) முற்பிறப்பில் இருவேகமாய்க் கூடிப் போந்தனம். இவ்வுலகிலே இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத்துநின்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர்போவதாக, இஃதெனக்கு விருப்பமென்றான்; என்பதனான் தந்நிலையுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று. குவளை நாறுங் குவையிருங் கூந்தல் ஆம்பல் நாறுந் தேம்பொதி துவர்வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண்பஃறுத்தி மாஅ யோயே நீயே, அஞ்ச லென்றஎன் சொல்லஞ் சலையே யானே, குறுங்கால் அன்னங் குவவுமணற் சேக்குங் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலெனால் நின்னுடை நட்பே. (குறுந். 300) இது நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று. யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதுஞ் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 40) இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது. மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்து இரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே. (குறுந். 137) அறத்தா றன்றெனமொழிந்த தொன்றுபடுகிளவி யன்ன வாக வென்னுநள் போல. (அகம். 5) இவை தெளிவகப்படுத்தல். அம்மெல் ஓதிவிம்முற் றழுங்கல் எம்மலை வாழ்ந ரிரும்புனல் படுக்கிய அரந்தின் நலியத் தறுத்த சாந்தநும் பரந்தேந் தல்குல் திருந்துழை யுதவும் பண்பிற் றென்ப வண்மை அதனால் பல்கால் வந்துநம் பருவரல் தீர அல்கலும் பொருந்துவ மாகலின் ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் உயிரே. இதுவும் அணிந்து எம்மிடமென ஆற்றுவித்தது. பயின்றெனவே, பயிலாதுவரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும் மறைந்து அவட்காண்டலுங், கண்டு நின்று அவணிலை கூறுவனவும், அவளருமை யறிந்து கூறுவனவும் போல்வன பிறவுங் கொள்க. யான்றற் காண்டொறும் என்னுஞ் செய்யுளுள், நீயறிந் திலையால் நெஞ்சே யானறிந் தேனது வாயா குதலே. என மறைந்து அவட்கண்டு நின்று தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குக் கூறியது. காணா மரபிற்று உயிரென மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல வியலும் கணைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே. ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன்கண் ஆயத்துய்த்தமையும் பெற்றாம். இனி வேட்கை யொருதலை (தொல். பொ. 100) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சி மேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினாரென்றும் இச்சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங்கூறுவாரும் உளர். அவர் அறியார்; என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ஆண்டுக் கூறிய (261 - 263) மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறுபுணர்ச்சி நடத்தல் பொருந்தாமையுணர்க. இனித் தலைவியை முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின் முன்னர்க் கூட் யுரைக்குங் குறிப்புரை யாகும் (தொல். பொ. 96) எனக் கண்ணாற் கூறிக் கூடுமென்றலும் இருகையு மெடுத்தல் (தொல். பொ. 263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாவாம். அன்றியும், நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறிப் பிரியவேண்டுதலானும் அது பொருந்தாதாம். (10) இடந்தலைப்பாடு முதலியன உணர்த்தல் 102. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல் இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் தண்டாது இரப்பினும் மற்றைய வழியுஞ் சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும் அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறலுந் தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி மடன்மா கூறும் இடனுமா ருண்டே. இது மேல் இயற்கைப்புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன் வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கற் கூட்டமும் அவற்றுவழித் தோன்றுந் தோழியிற் கூட்டமும் நிகழுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் ஆற்றாமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறுமாறுங் கூறுகின்றது. இதனுள் இரு நான்கு கிளவியும் என்னுந் துணையும் இடந்தலைப்பாடும் வாயில் பெட்பினும் என்னுந் துணையும் பாங்கற் கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம். (இ-ள்.) மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் தலைவியை மெய்யைத் தீண்டிப் பயிலாநிற்கு நிலைமை: இஃது என்ன என்றால், இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ப் பெருநாணினளாகிய தலைமகள் எதிர்நிற்குமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், மறையிற் றப்பா மறையோ னொருவனைக் கண்ட மறையிற் றப்பிய மறையோன் போலவும் வேட்கைமிகுதியான் வெய்துண்டு புணர்கூர்ந்தார் போலவும் நெஞ்சும் நிறையுந் தடுமாறி இனிச் செயற்பாலதியாதென்றும், ஆயத்துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங்கூரவும் வாரான்கொல் என்னும் காதல் கூரவும், புலையன் றீம்பால்போல் மனங்கொள்ளா அனந்தருள்ளம் உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும்; சென்று நின்றாளைத் தலைவன் இவ்வொழுக்கம் புறத்தார் இகழப் புலவனாய் வேறுபட்டாள் கொல்லோ எனவும், அங்ஙனம் மறைபுலப்படுதலின் இதனினூங்கு வரைந்து கொள்ளினன்றி இம்மறைக்கு உடம்படாளோ வெனவுங் கருதுமாறு முன்புபோல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பறியு மென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார். பொய் பாராட்டல் - அங்ஙனந் தீண்டிநின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் நுதலும் நீவிப் பொய்செய்யா நின்று புனைந்துரைத்தல்: சிதைவின்றேனுஞ் சிதைந்தனபோல் திருத்தலிற் பொய் யென்றார். இடம்பெற்றுத்தழாஅல் - அவ்விரண்டனானுந் தலைவியை முகம் பெற்றவன் அவள் நோக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக் கொண்டு கூறல்: இடையூறு கிளத்தல் - அவள் பெருநாணினளாதலின் இங்ஙனங் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகச் சில நிகழ்த்தியவற்றைத் தலைவன் கூறல்: அவை கண்புதைத்தலுங் கொம்பானுங் கொடியானுஞ் சார்தலுமாம்: நீடுநினைந்திரங்கல் - புணர்ச்சி நிகழாது பொழுது நீண்டதற்கு இரங்கி இரக்கந்தோன்றக் கூறல்: கூடுதல் உறுதல் - நீடித்ததென்று இரங்கினானென்பது அறிந்தோள் இவன் ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெருநாணுக் கடிதுநீங்குதல்: சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி - தலைவன் தான் முற்கூறிய நுகர்ச்சியை விரையப் பெற்றவழி: பெற்றவழி என்பதனைப் பெறுதலெனப் பெயர்ப்படுத்தல் அக்கருத்தாறற் பெறுதும். தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்து: புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாதென்றற்கு வல்லே பெற்றுழித் தீராத்தேற்ற மென்றார். முன் தெளிவகப் படுத்தபின் நிகழ்ந்த ஆற்றாமை தீர்தற்குத் தெய்வத்தொடுசார்த்திச் சூளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று. பேராச்சிறப்பின் இருநான்கு கிளவியும் - குறையாச் சிறப்பினவாகிய இவ்வெட்டும்: தாமே கூடும் இடந்தலைப்பாடும் பாங்கனாற் குறிதலைப் பெய்யும் இடந்தலைப்பாடும் ஒத்த சிறப்பின வாதற்குப் பேராச் சிறப்பி னென்றார். எனவே இடந்தலைப்பாடு இரண்டாயிற்று. தோழியிற் கூட்டம் போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையிற் பாங்கற் கூட்டம் என்றதனைத் தலைமகன் பாங்கனைக் கூடுங் கூட்டமென்று கொள்க. உ - ம்: உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு அமிழ்தி னியன்றன தோள். (குறள். 1106) இஃது என் கை சென்று றுந்தோறும் இன்னுயிர் தளிர்க்கும்படி யான் தீண்டப்படுதலினெனப் பொருள்கூறவே மெய் தீண்ட லாயிற்று. தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த புன்கண் மடா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. (குறுந். 272) கழறிய பாங்கற்குக் கூறுந்தலைவன் இவனான் இக்குறை முடியாது. நெருநல் இடந்தலைப் பாட்டிற் கூடியாங்குக் கூடுவல், அது கூடுங் கொலென்று கூறுவான் அற்றைஞான்று மெய் தொட்டுப் பயின்றதே கூறினான். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல நண்ணார் ஆண்டலை மதில ராகவு முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே. (நற். 39) இஃது, அங்ஙனம் மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக் கொண்டு கூறின் அதனை ஏற்றுக்கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல் கூறிக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோவென நீடுநினைந்திரங்கல் கூறிப் புலியினைத் தோய்ந்து சிவந்த கோடு போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று. இனித் தனியே வந்தன: கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய் (சிலப். கானல்வரி. 17) இது பொய் பாராட்டல். கொல்யானை வெண்மருப்புங் கோள்வல் புலியதளும் நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம் ஓரம்பி னாயெய்து போக்குவர்யான் போகாமை ஈரம்பி னாலெய்தா யின்று. (திணை. நூற். 22) இஃது இடம்பெற்றுத் தழா அல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே புலம்புகொண் மாலை மறைய நலங்கே ழாகம் நல்குவ ளெனக்கே. (ஐங்குறு. 197) இது கூடுதலுறதல். வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். (குறள். 1105) இது நுகர்ச்சி பெற்றது. எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்துறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே. (குறுந். 53) இதனுள் தீராத்தேற்றத்தைப் பின்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க. இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந்தானா யினுங் காவன்மிகுதியானுங் கரவுள்ளத்தானும் இரண்டாங் கூட்டத்தினும் அவள்நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய் மேல் நிகழும் பாங்கற்கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப் பாட்டினும் ஐயுறவு உரித்தென்று மெய் தொட்டுப் பயிறன் முதலியன அதற்குங் கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடையென மூவகைப்படுதலின் அவர்க்கெல்லாம் இது பொதுவிதியாகலானும் அமையும். எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி அவ்வுறு மரபினுகர்ச்சி பெறுகென வரிவண் டார்க்கும் வாய்புகு கடா அத்த அண்ணல் யானை யெண்ணருஞ் சோலை விண்ணுயர் வெற்பினெம் அருளி நின்னின் அகலி னகலுமெ னுயிரெனத் தவலில் அருந்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப் பிரிந்துறை வமைந்தவெம்புலம்புநனி நோக்கிக் கவர்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ ஆயம் நாப்பண் வருகுவன் கொல்லென உயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே. இது வருவான்கொ லென்னும் அச்சமும் வாரான்கொலென்னுங் காதலுங் கூர்ந்து தலைவி கூறியது. இனிச் சொல்லிய வென்றதனானே இன்னும் இப்புணர்ச்சி கூடுங் கொலெனக் கூறுவனவும், இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந், தலைவியை எதிர்ப்பட்ட இடங்கண்டுழி அவளாகக் கூறுவனவுங், காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்து வனவுந், தலைவி தனித்த நிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும், அணியணிந்து விடுத்தலும், இவைபோல்வன பிறவும் இடந்தலைப்பாட்டிற்குக் கொள்க. உ - ம்: வெள்ள வரம்பி னூழி போகியுங் கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை இரும்பல் கூந்தற் கொடிச்சி பெருந்தோட் காவல் காட்டி யவ்வே. (ஐங்குறு. 281) இது கிள்ளை வாழ்த்து. நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றாள் இவள். (குறள். 1104) இது நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறியது. அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கண் பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் திருமணி புரையு மேனி மடவோள் யார் மகள் கொல்லிவள் தந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வயல் அரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சோறு தாஅய மதனுடை நோன்தாள் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் தொண்டி தன்நிறம் பெறுகவிவ ளீன்ற தாயே. (நற். 8) என்பதும் அது. ஏனையவற்றிற்குச் சான்றோர் செய்யுட்கள் வருவன உளவேற் காண்க. பெற்றவழி மகிழ்ச்சியும் - சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் மனம் மகிழும் மகிழச்சியும்; பேராச் சிறப்பி னென்றதனாற் பாங்கனான் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க. உ - ம்: ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரளாரணங் கினளே இனைய ளென்றவட் புனையளவு அறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே (குறுந். 70) என வரும். பிரிந்தவழிக் கலங்கலும் - அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியான் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடையுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும். உ - ம்: குணகடல் திரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே (குறுந். 128) இல்லோ னின்பங் காஅமுற் றாஅங் கரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்ல ளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயே (குறுந். 120) என வரும். வழி யென்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து. (குறள். 1124) இது மூன்றாங் கூட்டத்தினையுங்கருதலின் ஈண்டுவைத்தார். இது முதலாகப் பாங்கற்கூட்டமாம். கலங்கலுமெனவே அக்கலக்கத்தான் நிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம். உ - ம்: பண்டைய யல்லைநீ யின்று பரிவொன்று கொண்ட மனத்தை யெனவுணர்வல் - கண்டாயால் நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியால் பின்னுற்ற நண்பினாய் பேர்த்து. எனவும், வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென் - னெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத் தன்றென் வலங்கொண்டாள் கொண்டா ளிடம் (திணை. நூற்.9) எனவும், எலுவ சிறாஅ ரேமுறு நண்ப புலவர் தோழ கேளாய் அத்தை மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே (குறுந். 129) எனவும் வரும். நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினைஇ உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பி னென்பதனை முன்னுங் கூட்டுக: அது கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங்களை அவனை நினைப்பித்துக் கழறிக் கூறினும், அக்கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும்: உ - ம் : குன்றமுருளிற் கொடித்தேரோய் குன்றியுள் ஒன்றும் ஒழிவதுளதாமோ - நன்றறிந்து தாமுறையே செய்வார் தகவிலவே செய்தக்கால் யார்முறை செய்பவோ மற்று. எனவும், தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள் தீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும் பெயராப் பெற்றியின் திரியாச் சீர்சால் குலத்தில் திரியாகக் கொள்கையுங் கொள்கையொடு நலத்தில் திரியா நாட்டமும் உடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம் மண்திணி கிடக்கை மாநிலம் உண்டெனக் கருதி யுணரலென் யானே எனவும் இவை நிற்பனை நினைஇக் கழறின. காமங் காம மென்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே. (குறுந். 204) இதுவும் அது, நயனுந் நண்புந் நாணுநன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் நும்மினும் உடையேன் மன்னே கம்மென எதிர்த்த தித்தி யேரிள வனமுலை விதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொன் திருநுதற் பொலிந்த தேம்பாய் ஓதி முதுநீர் இலஞ்சி பூத்த குவளை எதிர்மலர்ப் பிணைய லன்னவிவள் அரிமதர் மழைக்கண் காணா வூங்கே. (நற். 160) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோம் நன்றுமன் தில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. (குறுந். 58) இவை நிகழ்பவை உரைத்தன. இப் பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - அங்ஙனந் தலைவற்கு நிகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும்: அது நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து என வினாவும். உ - ம்: பங்கய மோ துங்கப் பனிதங்கு மால்வரையோ அங்கண் விசும்போ அலைகடலோ - வெங்கோவின் செவ்வண்ண மால்வரையே போலுந் திருமேனி இவ்வண்ணஞ் செய்தார்க் கிடம். என வரும். அதுகேட்டுத் தலைவன் கழியுவகை மீதூர்ந்து இன்னவிடத்து இத்தன்மைத்து என்னும். உ - ம்: கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி யன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்க டாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவேபிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே. (நற். 95) இஃது இடங்கூறிற்று. கேளிர் வாழியோ கேளிர் நாளும்என் நெஞ்சு பிணிக்கொண்ட அஞ்சில் ஓதி பெருநா ணணிந்த சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப்புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. (குறுந். 280) இது தன்மை கூறிற்று. மீட்டுங் குற்றங் காட்டிய என்றதனானே இக்கூட்டத்திற்குரிய கூற்றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க. காயா ஈன்ற கணவீ நாற்றம் மாயா முன் வருவளி துரக்கும் ஆகோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி வேயேர் மென்றோள் விலக்குநர் யாரோ வாழிநீ அவ்வயிற் செலினே. இது பாங்கனை நீ யாண்டுச் செல்லவேண்டுமென்றது. என்னுறுநோய் தீர்த்தற் கிருபிறப்பி னான்மறையோன் தன்னுறுநோய் போலத் தளர்கின்றான் - இன்னினிய கற்றத்தின் தீர்ந்த சுடரிழையைச் செவ்வியான் தெற்றெனக் கண்ணுறுங்கொ லென்று. (பாரதம்) இது குறிவழிச்சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங் கொலென்று ஐயுற்றது. அளிதோ தானே யருண்மிக வுடைத்தே களிவாய் வண்டினங் கவர்ந்துண் டாடும் ஒளிதார் மார்பி னோங்கெழிற் குரிசிலைப் பிரியாத் துயரமொடு பேதுறுத் தகன்ற கிளிசூயார் மழலைக் கேழ்கிளர் மாதர் ஆர்ந்த கற்றமொடு தமரின் நீக்கத் தானே தமியள் காட்டிய வானோர் தெய்வம் வணங்குவல் யானே. இது குறவழிச்சென்ற பாங்கன் தலைவியை எளிதிற் காட்டிய தெய்வத்தை வணங்கியது. கண்ணென மலருங் குவளையும் அடியெனத் தண்ணெனுந் தடமலர் தயங்குதா மரையும் முலையென முரணிய கோங்கமும் வகையெழின் மின்னென நுடங்கு மருங்குலும் மணியென வயின்வயி னிமைக்கும் வாங்குபல் லுருவிற் காண்டகு கமழ்கொடி போலும்என் ஆண்டகை யண்ணலை யறிவுதொலைத் ததுவே. இஃது இவள்போலும் இறைவனை வருத்தினாளெனப் பாங்கன் ஐயுற்றது. கண்ணே, கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த அண்ணல் யானை யாரியர்ப் பணித்த விறற்போர் வானவன் கொல்லி மீமிசை அறைக்கான் மாச்சுனை யவிழ்ந்த நீலம் பல்லே, பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன் மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை ஓத வெண்டிரை யுதைத்த முத்தம் நிறனே, திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன் நலனணி யரங்கிற் போகிய மாவின் உருவ நீள்சினை யொழுகிய தளிரே என்றவை பயந்தமையறியார் நன்று மடவர் மன்றவிக் குறவர் மக்கள் தேம்பொதி கிளவி யிவளை யாம்பயந் தேமெம் மகளென் போரே. இது தலைவியை வியந்தது. பண்ணாது பண்மேல்தேன் பாடுங் கழிக்கனால் எண்ணாது கண்டாருக் கேரணங்காம் - எண்ணாது சாவார்சான் றாண்மை திரிந்திலார் மற்றிவளைக் காவார் கயிறுரீஇ விட்டார். (திணைமாலை. நூற். 47) பாங்கன் தலைவனை வியந்தது. பூந்த ணிரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக் காந்தட் கமழ்குலையாற் காதன் மடப்பிடிதன் கவுள்வண்டோச்ச வேந்தன்போ னின்ற விறற்களிற்றை வில்லினாற் கடிவார் தங்கை ஏந்தெழி லாக மியையா தியைந்தநோ யியையும் போலும். இது தலைவற்கு வருத்தந் தகுமென அவனை வியந்தது. விம்முறு துயரமொடு என்னும் செய்யுளுங் கொள்க. இனிப் பாங்கன் தலைவி தன்மை தலைவற்குக் கூறுவனவும் இடங்காட்டு வனவுஞ் சான்றோர் செய்யுளுள் வரும்வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப்பாட்டிற் கூறியவாற்றானே கூடுதல்கொள்க. அங்ஙனம் கூடிநின்று அவன் மகிழ்ந்து கூறுவனவும் பிறவுங்கொள்க. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். (குறள். 1105) எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே (ஐங்குறு. 175) இது பாங்கற் கூட்டங்கூடி நீங்குந் தலைவன் நீ வருமிடத்து நின் தோழியொடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக்கூறியது. நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமோ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென் பைத லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள் எய்தத் தந்த ஏந்தலொ டென்னிடை நற்பாற் கேண்மை நாடொறு மெய்த அப்பாற் பிறப்பினும்பெறுகமற் றெனக்கே. அங்ஙனங் கூடிநின்று தலைவன் பாங்கனை உண்மகிழ்ந்து உரைத்தது. இவன் பெரும்பான்மை பார்ப்பானாம். இத்துணையும் பாங்கற் கூட்டம். பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் - அங்ஙனம் அவனைப் புணைபெற்றுநின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு உரியாரை யாராய்ந்து பலருள்ளுந் தலைவியாற் பேணப்பட்டாள் தனக்கு வாயிலாந் தன்மையையுடைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்துபின் னிற்பலென வலிப்பினும்: மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள் இன்றியமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும். உ - ம்: தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள்போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிரன் னோளே. (குறுந். 222) இது தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாகத் துணிந்தது. அன்றித் தோழி கூற்றெனின் தலைவியை அருமைகூறினன்றி இக்குறை முடிப்பலென ஏற்றுக் கொள்ளாள் தனக்கு ஏதமாமென்று அஞ்சி; அன்றியுந் தானே குறையு றுகின்றாற்கு இது கூறிப் பயந்ததூஉ மின்று. மருந்தின் தீராது மணியின் ஆகாது அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே தான்செய்நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் நறவின் தேறல் போல நீதர வந்த நிறையழி துயரம் ஆடுகொடி மருங்குல்நின் அருளின் அல்லது பிறிதின் தீரா தென்பது பின்நின்று அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையாம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றது. ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும் - தோழியை இரந்துபின்னிற்றலை வலித்த தலைவன், தலைவியுந் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினுந், தோழி தனித்துழியாயினும், நும்பதியும் பெயரும் யாவை யெனவும் ஈண்டு யான் கெடுத்தவை காட்டுமினெனவும், அனையன பிறவற்றையும் அகத்தெழுந்ததோர் இன்னீர்மை தோன்றும் இக்கூற்று வேறொரு கருத்து உடைத்தென அவள் கருதுமாற்றானும் அமையச் சொல்லித், தோழியைத் தன் குறையறிவிக்குங் கூறுபாடும்: வினாவுவான் ஏதிலர்போல ஊரினை முன் வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினாய் அவ்விரண்டனும் மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் கூறினான். இவன் என்னினாயதொரு குறையுடைய னென்று அவள் கருதக் கூறு மென்பார் நிரம்ப வென்றார். கெடுதியாவன, யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன், அவை கண்டீரோ வெனவும் வினாவுவன பலவுமாம். பிறவு மென்றதனான் வழிவனாதலுந் தன்னோடு அவரிடை உறவு தோன்றற்பாலன கூறுதலுங் கொள்க. உ - ம்: அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி யயலது வேய்பயி லிறும்பின் ஆம்ஊறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலும் நுமதோ கோடேந் தல்குல் நீள்தோ ளீரே. (நற். 213) இஃது ஊரும் பிறவும் வினாயது. கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றேன் எல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீர் ஈங்கிதுவோ நும்முடைய வூர். இஃது ஊர் வினாயது. செறிகுர லேனற் சிறுகிளி காப்பீர் அறிகுவே னும்மை வினாஅய் - அறிபறவை அன்னம் நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர் என்ன பெயரிரோ நீர். இது பெயர் வினாயது. நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளான் உறையெதிர்ந்து வித்தியவூழ் ஏனற் - பிறையெதரிந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ ஏமரை போந்தன வீண்டு. (திணை. நூற். 1) தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கால் எங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின் வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறிரோ வன்றி படர்ந்த வழி. வன்றி - பன்றி. தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை மண்டுபு கவரு மாண்டகிளி மாற்றும் ஒண்டொடிப் பணைத்தோ ளொண் ணுத விளையீர் கண்டனி ராயிற் கரவா துரைமின் கொண்டன குழுவி னீங்கி மண்டிய உள்ளழி பகழியோ டுயங்கியோர் புள்ளி மான்கலை போகிய நெறியே. இவை கெடுதிவினாயின. மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறகுடித் தங்கின்மற் றெவனோ. (அகம். 110) எனவும், இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரின் தீது முண்டோ மாத ரீரே (அகம் 230) எனவும் வருவன, பிறவு மென்றதனாற் கொள்க. குறையுறூஉம் பகுதி, குறையுறு பகுதி எனவுமாம்; எனவே குறை யுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறையொடு சேறலுங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவரு முள்வழி இவன் தலைப்பெய்தலுடையன் எனத் தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இரு வருமுள்வழி அவன் வரவுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என் புழிக் கூறுப. மதியுடம்பாடு மூவகை யவென மேற்கூறுப. (127) தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக்கூறலும் - தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள் மேலே சேர்த்தி அதனை உண்மையென்றுணரத் தலைவன் கூறுதலும்: உ - ம். கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன் உணங்கல்புள் ளோப்பு மொளியிழை மாதர் அணங்காகும் ஆற்ற வெமக்கு. பண்பும் பாயலுங் கொண்டனள் தொண்டித் தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி ஐதமர்ந் தகன்ற வல்குற் கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. (ஐங்குறு. 176) இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறுபாடு உணர்க. குன்ற நாடன்குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சிலோதி யசையியற் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவள் தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே. (ஐங்குறு.299) இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே இவள்கண்ணது இவன் வேட்கையென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது. குன்றநாடன், முருகன்; அவள் தந்தையுமாம். உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் றமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே. (குறுந். 286) இதுவும் அது. இது முதலியவற்றைத் தலைவன் கூற்றாகவே கூறாது தோழி கூறினாளாகக் கூறி அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று பொருள் கூறின். நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என்னுஞ் சூத்திரத்துத் தோழி இவற்றையே கூறினாளென்றல் வேண்டாவாம். அது கூறியது கூறலாமாகலின். தண்டாது இரப்பினும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங்களான் அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும்: உ - ம்: கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம் வகைசே ரைம்பா றகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ணாயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணன் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉம் அருந்துய ரவலந் தீர்க்கும் மருந்துபிறி தில்லை யானுற்ற நோய்க்கே. (நற். 140) இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க. கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும் கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும் கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனைய மாகவும் செய்தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை யொளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயின் என்னென நினையுங்கொல் பரதவர் மகளே. (நற். 349) தோழி நம்வயிற் பரதவர் மகளை யென்னென நினையுங்கொலென்க. பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண் - வேலொத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ வஞ்சாயற் கேநோவல் யான். (திணை. நூற். 19) இவை பகற்குறி இரந்தன. எல்லும் எல்லின் றசைவுபெரிதுடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன் (அகம். 110:11-2) எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியவாறு காண்க. இன்னும் இரட்டுறமொழிதல் என்பதனான். தண்டாது என்பதற்குத் தவிராது இரப்பினு மெனப் பொருள்கூறிக், கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவுந், தோழி நின்னாற் கருதப்படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக்கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. உ-ம்: கவளக் களியியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லாததுபோல் - பவளக் கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (திணை. நூற். 42) நின் வாயிதழையும் எயிற்றையும் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க. நறவுக்கமழ் அலரிநாற வாய்விரிந்து நிறந்திகழ் கமழு மிணைவாய் நெய்தல் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி ஒண்கணங் கிளமுலை யொருஞான்று புணரின் நுண்கயிற் றுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி யிவ்வூர்ச் செய்தூட் டேனோ செறிதொடி யானே அறிகவளை யைய விடைமடவா யாயச் சிறிதவள்சொல் லாளிறுமென்றஞ்சிச் - சிறிதவ ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்சம் ஒல்கும்வா யொல்க லுறும் (திணை. நூற். 17) என வரும். மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப்பட்டுங் கொடுக்கப் பெற்றும் இரந்து பின்னின்றான். அங்ஙனங் குறியெதிர்ப்பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ்விடத்தும்: உ-ம்: நின்வாய் செத்து நீபல உள்ளிப் பெரும்புன் பைதலை வருந்த லன்றியும் மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம் தலைநாண் மாமலர் தண்டுறைத் தயங்கக் கடல்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற் றறல்வார் நெடுங்கயத் தருநிலை கலங்க மாலிருள் நடுநாட் போகித் தன்னையர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக் கவ்வாங் குந்தி அஞ்சொற் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான் பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னிபோல விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச் சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய கயலென அமர்த்த வுண்கட் புயலெனப் புறந்தாழ் பிருளிய பிறங்குகுரல் ஐம்பால் மின்னேர் மருங்குல் குறுமகள் பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே (அகம். 126) எனவும், மாய்கதில் வாழிய நெஞ்சே நாளும் மெல்லியற் குறுமகள் நல்லகம் நசைஇ அரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி இரவென நீயும் பெறாஅய் அருள்வரப் புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத் துள்ளவர்க் கெல்லாம் பெருநகை யாகக் காமம் கைம்மிக வுறுதர ஆனா வரும்படர் தலைத்தந் தோயே (அகம். 258: 8 - 15) எனவும் வருவன, தன்னெஞ்சினை இரவு விலக்கியன. சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பகுதியினும்: களஞ் சுட்டுக் கிளவி கிழவிய தாகும் (தொல். பொ. கள. 29) என்பதனான் தலைவியாற் குறிபெற்றுந் தோழியை இரக்கும். உ - ம்: அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கு எயிறுகெழு துவர்வாய் ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயும் அறியா மறையமை புணர்ச்சி பூசல் துடியிற் புணர்புபிரிந் திசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையின் கடும்புனன் மலிந்த காவிரிப் பேர்யாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கஞர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந் தோளே வென்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅ யோளே (அகம். 62) என வரும். அணங்குடைப் பனித்துறைத் தொண்டியன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிடைப் பொங்கரி பரந்த வுண்க ணங்கலிழ்மேனி யசைஇய வெமக்கே (ஐங்குறு. 184) வகை யென்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க. தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை குளிர்வாய் வியன்புனத் தெற்பட வருகோ குறுஞ்சுனைக் குவளை யடைச்சிநாம் புணரிய நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ இன்சொன் மேவலைப் பட்டவெ னெஞ்சுணக் கூறினி மடந்தைநின் கூரெயிறுண்கென யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து தான்செய் குறிநிலை யினிய கூறி ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட் டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப்பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. (நற். 204) இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312) என வரும். அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும் – மதியுடம் பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தே னெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையான் தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையும் கூறுதலும்: ஒள்ளிழை மகளிரோ டோரையும் ஆடாய் வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய் விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய் யாரை யோநிற் றொழுதனம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை யணங்கோ விருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை யென்றனென் அதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லிதழ் உண்கணும் பரந்தவாற் பனியே (நற். 155) தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும் கண்கலுழ் முத்தம் கதிர்முலை யுறைத்தும் ஆற்றின ளென்பது கேட்டனம் ஆற்றா வென்னினு மவளினு மிகந்த வின்னா மாக்கட்டிந் நன்ன ரூரே. தோளும் கூந்தலும் பலபா ராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் குட்டுவன் தொண்டி யன்ன வெற்கண்டு நயந்துநீ நல்காக் காலே. (ஐங்குறு. 178) எனவரும். அயர்த்தது அவள் அருமை தோன்றுதற்கு. தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனகக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து: உம்மை, சிறப்பு. இதுவே மடன்மா கூறுதற்கு ஏதுவாயிற்று. நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப் பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல வுள்ளந் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா உற்றனை நெஞ்சே என்றும் பெரிதால் அம்மநின் பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. (குறுந். 29) பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும் மற்றிவள் உருத்தெழு வனமுலை ஒளிபெற வெழுதிய தொய்யில் காப்போ ரறிதலு மறியார் முறையுடை யரசன் செங்கோல் வையத் தியான்றற் கடலின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேஇவ் வழுங்க லூரே. (குறுந். 276) உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி இறீஇயரென் னுயிரே (சிற்றெடக்கம்) என வரும். மடன்மாகூறும் இடனுமாருண்டே - அச்சேட்படையான் மடலே றுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வலெனக் கூறும் இடனும் உண்டென்றவாறு. உ - ம்: விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிழ்கவின் ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. (குறுந். 182) இது நெஞ்சொடு கிளத்தல். நாணாக நாறு நனைகுழலாள் நல்கித்தன் பூணாக நேர்வளமும் போகாது - பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமேல் நின்றேன் மறுகிடையே நேர்ந்து. (திணை. நூற். 16) இது தோழிக்குக் கூறியது. இவை சாக்காடு குறித்தன. மாவென மடலும் ஊர்ப் பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே. (குறுந். 17) இதனுட் பிறிதுமாகுப என்றது வரைபாய்தலை. இட னென்றதனான் தோழி பெரியோர்க்குத் தகா தென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவும் கொள்க. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறு மடல் (குறள். 1133) எனவரும். இனி இடனும் என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு. உரைப்பினும் பெட்பினு முவப்பினு மிரப்பினும் வகையினும் கூறும் இடனும் உண்டு. பகுதிக்கண்ணும் மற்யை வழிக்கண்ணுங் கூறும் இடனும் உண்டு. மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க. (11) இரந்து பின்னிற் புழித்தலைவன் கூற்று நிகழுமிடம் இவை எனல் 103. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே. இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ-ள்.) பண்பிற் பெயர்ப்பினும் - தோழி தலைவியது இளமை முதலிய பண்புகூறி அவ்வேட்கையை மீட்பினும்: உ-ம்: குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே. (ஐங்குறு. 256) இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது. பரிவுற்று மெலியினும் - இருவகைக் குறியிடத்துந் தலைவியை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படாநின்ற ஞான்றும் பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தானாய் மெலியினும்: உ-ம்: ஆனா நோயோ டழிபடர் கலங்கிக் காமம் கைம்மிகக் கையறு துயரம் காணவு நல்கா யாயிற் பாணர் பரிசில் பெற்ற விரியுளை நன்மான் கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி இரவலர் மெலியா தேறும் பொறையன் உரைசாலுயர்வரைக் கொல்லிக் குடவயின் அகலிலைக் காந்த ளலங்கு குலைப் பாய்ந்து பறவை யிழைத்த பல்க ணிறாஅல் தேனுடை நெடுவரைந் தெய்வம் எழுதிய வினைமாண் பாவை யன்னோள் கொலைசூழ்ந் தனளா னோகோயானே. (நற். 185) இது பகற்குறியிற் பரிவுற்றது. ஓதமு மொலியோ வின்றே ஊதையும் தாதுளர் கானற் றவ்வென்றன்றே மணன்மலி மூதூர்அகனெடுந் தெருவில் கூகைச் சேவல் குராலோடேறி யாரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறு மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட் பாவை அன்னபலராய் வனப்பின் தடமென் பணைத்தோண் மடமிகு குறுமகள் சுணங்கணிவனமுலை முயங்கல் உள்ளி மீன்கண் துஞ்சும் பொழுதும் யான்கண் டுஞ்சேன் யாதுகொ னிலையே. (நற். 319) இஃது இரவுக்குறியில் பரிவுற்றது. மழைவர வறியா மஞ்ஞை யாலும் அடுக்க னல்லூர் அசைநடைக் கொடிச்சி தானெம் மருளாளாயினும் யாந்த னுள்ளுபு மறந்தறி யேமே (ஐங்குறு. 293) களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது (குறள். 1145) எனவும் வரும். இன்னும் பரிவுற்று மெலியினும் என்றதனானே புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது கூறுவனவும், வறும்புனங்கண்டு கூறுவனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுவனவுந், தோழி இற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இரவுக்குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதன்கண் அமைக்க. என்றும் மினியள்ஆயினும் பிரித லொன்று மின்னா ளன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்கண்இளமுலைப் படுசாந்து சிதைய முயங்கும் சிறுகுடிக் கானவன்பெருமட மகளே கோடாப் புகழ்மாறன்கூடல் அனையாளை யாடா வடகினுங் காணேன்போர் - வாடாக் கருங்கொல்வேன் மன்னர்கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாண் மயிர் (திணை. நூற். 4) பெறுவதியையாதாயினு முறுவதொன்று உண்டுமன்வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள ரோரி கானந் தீண்டி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் மையீ ரோதி மாஅ யோள்வயி னின்றை யன்ன நட்பி னிந்நோ யிறுமுறை யெனவொன்றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே. (குறுந். 199) நோயு நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த வேய்வனப் புற்ற தோளைநீயே யென்னுள் வருதியோ வெழினடைக் கொடிச்சி முருகுபுணர்ந் தியன்ற வள்ளிபோலநின் உருவுகண் ணெறிப்ப நோக்கலாற் றலனே போகிய நாகப் போக்கருங் கவலைச் சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் சேறா டிரும்புற நீறொடு சிவண வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்புழீஇக் கோணாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்குஞ் சிறுகுடியானே (நற். 82) மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் - குயில்பயிலும் கன்னி யிளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு. (திணை. ஐம். 49) என வரும். அன்பு உற்று நகினும் - தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்: உ-ம்: நயனின் மையிற் பயனிது வென்னாது பூம்பொறிப் பொலிந்த வழலுமிழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகாஅது உரைமதி உடையுமென் னுள்ளம் சாரற் கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்கம் உற்றவென் பைத னெஞ்சம் உய்யு மாறே. (நற். 75) இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது. அவட் பெற்று மலியினும் - தோழி உடம்பாடு பெற்று மனம் மகிழினும். உ-ம்: எமக்குநயந் தருளினையாயின் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே. (ஐங்குறு. 175) இஃது அவட்பெற்று மலிந்து தலைவன் கூறியது. இன்னும் அவட்பெற்று மலியினும் என்றதற்கு, இரட்டுற மொழிதலென்றதனாற், றலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க. நன்றே செய்த வுதவி நன்றுதெரிந்து யாமென் செய்குவம் நெஞ்சூச காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனற் பாத்தருங் கிளியே. (ஐங்குறு. 288) இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன், அவளைப் பெற்றே மென மகிழ்ந்து கூறியது. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று. (குறள். 1144) இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது. கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்டநன்மொழி நம்பி அரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்விரை கமழுங் கூந்தல் தூவினை நுண்ணூலாகம் பொருந்தினள் வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்றநல்வாங்கு குடச்சூல் அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள்வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள்பெயர்வோள் ஆன்ற கற்பிற் சான்ற பெரிய அம்மா வரிவையோ வல்லள்தெனாஅது ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பின் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன் நேர்மலர் நிறைசுனை யுறையும் சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே. (அகம். 198) என வரும் விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற் பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி வானஞ் சூடிய திலகம் போல ஓங்கிரு விசும்பினுங் காண்டும் ஈங்குங் காண்டும் இவள்சிறு நுதலே. இதுவும் அது. ஆற்றிடை உறுதலும் - தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின இடத்தும்: என்றது, தலைவியுந் தோழியும் வருவழியருமை கூறிய வழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு. உ-ம்: குருதிவேட்கையுருகெழு வயமான் வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையும் அம்மாவரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின் ஆய்நல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே. (நற். 132) எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. இரட்டுறமொழித லென்பதனான், ஆற்றிடையுறுதற்கு வரைவிடை வைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுங் கொள்க. அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாகற்குக் கூறுவனவுமாம். ஓம்புமதி வாழியோவாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணியதுவே நெல்லி மரையின மாரு முன்றில் புல்வேய் குரம்பை நல்லோளூரே. (குறுந். 235) கவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் பொன்செய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடிதந்தை யூரே. (குறுந். 233) அவ்வினைக்கு இயல்பே - அத்தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் எ-று. (12) உலகியலாற் புணர்க்கும் பாங்கனிமித்தம் இத்துணையவெனல் 104. பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப. இது மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கன் நிமித்தங் கூறுகின்றார். வாயில் பெட்பினும் (தொல். பொ. 102) என்ற பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உரைத்த லன்றிக், காளையரொடு கன்னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குந் துணையே யாகலின். (இ-ள்.) அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம் எ-று. எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இரு வகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ண வெனப் படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிரண்டாம்; அவை எண் வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய ஏழுதிணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிசாபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், ஆசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியங் காத்தானெனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆகலின் இவட்கு உரியனெனவும், இவளை இன்னவாற்றாற் கொடுக்கத் தகுமெனவும், இன்னோனை ஆசாரியனாகக்கொண்டு வேள்வி செய்து மற்றிக் கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது. இனி, யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறைபற்றி முறை சிறந்து வருதலும் பெயர்கொளப் பெறாமையும் உடையவன்றே, அவ்வாறன்றி, ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையு மாயின் அவ்வந்நிலத்தியல்பானும் பிறபாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள் வழி அவ்வந்நிமித்தங்களும் வேறு வேறாகி வரும் பாங்கன் நிமித்தங்களையுடைய எனப்பட்டன. இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறு படுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போலா இவை யென்பதூஉம், அவ்வந்நிலத்தின் மக்கட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ்வாற்றான் எண் வகை மணனும் உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும் போல அகப்புறமெனப்படுமென்பதூஉங் கொள்க. இனி, அசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர் நீயுஞ் சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைநின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்தமுடைத்து. இராக்கதத்திற்கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து. பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப்பின் அதற்கும் அது நிமித்தமாம். இப் பன்னிரண்டுந் தொன்மையுந் தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன. (13) பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள்ஏழும் இன்னதிணைப்பாற் படுமெனல் 105. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே பின்னர்நான்கும் பெருந்திணைபெறுமே. மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழனை எழுதிணை யுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது. (இ-ள்.) முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - இதற்கு முன் நின்ற ஆசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்தில வேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்ததிணை பெறுமே - பின்னர் நின்ற பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வமென்னும் நான்கனையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் எ-று. மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே வாளாது பன்னிரண்டென்றார் என்பதே பற்றி, ஈண்டும் அம்முறையானே இடவகை யான் முன்னைய மூன்றும் பின்னர் நான்கு மென்றார். எனவே, இனிக் கூறும் யாழோர் மேன (தொல். பொ. 106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண் டற்கும் இடையதெனப் படுவதாயிற்று. வில்லேற்றியாயினுங் கொல்லேறு தரீஇயாயினுங் கொள்வ லென்னும் உள்ளத்தனாவான் தலைவனே யாதலின், அதனை முற்படப்பிறந்த அன்பு முறைபற்றி ஒருதலைக் காம மாகிய கைக்கிளை யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ்செய்தலா தலின் அதுவும் அப்பாற்படும்; பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாயவாறு. காமஞ்சாலா இளமையோள் வயிற் (தொல். பொ. 50) கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப் புல்லித் தோன்றும் (தொல். பொ. 50) எனக் கூறி, இதனை வாளாது குறிப்பென் றார். ஆண்டுப் பிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும்வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார். ஏறிய மடன்மா முதலியவற்றைப் பெருந்திணைக் குறிப்பே (தொல். பொ. 51) எனக் கூறி, ஈண்டுப் பெருந்திணை பெறுமே யென்றார், அவை சிறப்பில இவை சிறப்புடைய வென்றற்கு. இந் நான்கும் ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோ டொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவமன்மை யானும் அவற்றின் வேறாகிய பெருந்திணையாம். (14) பன்னிரண்டனுள் இடையதாய ஐந்தும் இவையெனல் 106. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே. இஃது அப் பன்னிரண்டனுள் இடையதாய் ஒழிந்த ஐந்துங் கூறுகின்றது. (இ-ள்.) முதலொடு புணர்ந்த யாழோர் மேன - மேற்கூறிய நடுவணைந் திணையுந் தமக்கு முதலாக அவற்றொடு பொருந்திவருங் கந்தருவமார்க்கம் ஐந்தும்; தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே - கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் எ-று. எனவே, முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றொடு பொருத்த முடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினார். இவை அப் பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும், முதலொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் யாழோர் மேன வென்றார், இவையுங் கந்தருவமே என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர் நின்று உடம்படுத்த லொப் புடையுடைய. கெடலருஞ் சிறப் பெனவே முதல் கரு உரிப்பொருளானுங் களவென்னுங் கைகோளானும் பாங்கி புணர்த்தலின்மையானும் இலக்கணங் குறைப்பட்டவேனுஞ், சுட்டியொருவர் பெயர்கொள்ளப் பட்டுக் கற்பியலாகிய இல் வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும், ஐந்நிலம் பெறு மென்றானாம். இது புலநெறியன்றி உலகிய லாகலின், உலகிய லாற் பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளவாகலிற் பாலையுங் கூறினார். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமுஞ் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின்றென்றார். (15) தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல் 107. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும் தானகம் புகாஅன்பெயர்த லின்மையின் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருந்தின்கண்ணும் வாளா ணெதிரும் பிரிவி னானும் நாணு நெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுதத்லொடு தொகைஇக் கிழவோண் மேனவென்மனார் புலவர். இது மேற் றலைவற்குரிய கிளவிகூறிப், பாங்கனிமித்தம் அவன்கண் நிகழும் பகுதியுங் கூறி, அம்முறையானே தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது. (இ-ள்.) இருவகைக்குறி பிழைப்பு ஆகிய இடத்தும் - இரவுக் குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும்: உ-ம்: முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் கருங்கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் வாரா தாயினும் வருவது போலச் செவிமுதல் இசைக்கு மரவமொடு துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே (குறுந். 301) கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே யெம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி யணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (குறுந். 138) ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையான் குறிபார்த்துக் குரல்நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன்யானாக (கலி. 46) இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட்கங்குல் எம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன்போல நின்பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே. இது தன்னுட் கையாறெய்திடு கிளவி. புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்ப முழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண்டறிதியோ (சிலம். கானல்வரி. 33) எனவும் இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் படக் கூறியனவாம். குறிபிழைத்தலாவது புனலொலிப் படுத்தலும் புள்ளெடுப்புதலும் முதலியன. குறியெனக் குறித்தவழி, அவனானன்றி அவை வேறொரு காரணத்தான் நிகழ்ந்துழி, அதனைக் குறியென நினைந்துசென்று அவை அவன்குறி யன்மையின் அகன்று மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க. காணா வகையிற் பொழுது நனி இகப்பினும் - குறிவழிச் செல்லுந் தலைவனை இற்றைஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவதோராற்றாற் பொழுது சேட்கழியினும்: என்றது, தாய்துஞ்சாமை, ஊர்துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவுவெளிப் படுதல், நாய்துஞ்சாமை போல்வனவற்றான் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம். உ-ம்: இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர் விழவின் றாயினுந் துஞ்சா தாகும் மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொல் அன்னைதுஞ்சாள் பிணிகோள் அருஞ்சிறை யன்னைதுஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் இலங்குவே லிளையர்துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் அரவவாய் ஞமலி மகிழாது மடியின் பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே திங்கள் கல்சேர்பு கனையிருண் மடியின் இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத்து அழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பும் எல்லா மடிந்த காலை யொருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால், அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந்து ஆதி போகிய பாய்பரி நன்மா நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றால் தோழிநங் களவே (அகம். 122) கருங்கால் வேங்கை வீயுகுதுறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே (குறுந். 47) வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரு போழ்தில் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழிவெண்டிங்காள். (யா.வி.சூ.87. மேற்) இதுவும் அது. தானகம் புகா அன் பெயர்த லின்மையிற் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் - அங்ஙனங் காணாவகையிற் பொழுது நனியிகந்து தலைவி குறிதப்பியக் காலுந் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரான்னபது தான் அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஒரு குறி செய்தன்றி வாளாது பெயரானன்றே? அக் குறிகாணுங் காட்சி விருப்பினாற் றலைவி பிற்றைஞான்று விடியலிற்சென்று ஆண்டைக் குறிகண்டு கலங்கி, அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்வது அறியாது மயக்கத்தோடு அவள் கையறவு எய்தும்பொழுதின் கண்ணும்: தான் என்றது தலைவனை. இரவுக்குறியினை அகமென்றார், இரவுக்குறி எயிலகத்தது என்பதனான். குறியிற்சென்று நீங்குவ னெனவே காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்றாம். குறி: மோதிரம் மாலை முத்தம் முதலியன கோட்டினுங் கொடியினும் இட்டு வைத்தனவாம்; இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழுமென்றற்குப் பொழுதென்றார்; எனவே காண்பன விடியலிற் காணுமென்றார். மயங்கும் என்றதனான் தோழியும் உடன்மயங்கும். அது, இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃதிம்முகையில் கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ - புக்குச் செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண்டு அறிந்ததொன் றன்னதுடைத்து. புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் - உண்டிக் காலத்துத் தலைவியில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப் பட்ட வழி, நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கண்ணும்: எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால் இஃதொன் றுடைத்தெனத் தேராது தாய் அவனை விருந்தேற்று நீக்கி நிறுத்தற் பகுதியுந் தழீஇயி னவாறாயிற்று. புகாக்காலமாதலிற் பகாவிருந்தென்றார். விடியற்காலமாயிற் றலைவன் புகானெனவும், புகாக்காலத்துப் புக்கஞான்றாயின் அவர் விருந்தேற்றுக் கோடல் ஒருதலையென்று புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சி யாசையிற் கலங்கிய தற்கேற்பத் தலைவர்க்குங் காட்சியாசை கூறிற்று. அது, சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடும் மணற்சிற்றில் காலிற் சிதையாஅடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும் தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு அன்னாய் இவனொருவன் செய்ததுகா ணென்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையுந் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன். (கலி. 51) இது புகாக்காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை இன்னொரு காலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. அன்னைவாழ்க பலவே தெண்ணீர் இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத் தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர் எல்லமை விருந்தின னென்ற மெல்லம் புலம்பனைத் தங்கென்றோளே. இது தோழிகூற்றுமாம். ஒன்றிய தோழி (41) யென்றனான் தோழிகூற்று வந்துழிக் காண்க. மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனறரு பசுங்காய் தின்றதன்றப் பற்கு ஒன்பதிற் றொன்பது களிற்றோ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலிஇயரோஅன்னை யொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற்றுஞ்சலோ விலளே. (குறுந். 292) இது புகாக்காலத்துத் தலைமைமிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது. வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந்தாதலே யன்றித் தலைவி வேளாண்மை செய்ய எதிர்கொள்ளக் கருதுதல் காரணத்தான் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்: உ-ம்: நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் பறிகொள் கொள்ளையர் மறுகஉக்க மீனார் குருகின் கானலம் பெருந்துறை எல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர் தேர்பூட் டயரவேஎய் வார்கோல் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்து தீங்காயினளிவ ளாயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன்றாகலும் அஞ்சுவல் அதனான் சேணின் வருநர் போலப் பேணாய் இருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின் வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையும் மான்றின்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறா யினவே எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூறத்தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல்லுறை நல்விருந் தயர்தல் ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே. (அகம். 300) இதனுள், தான் பெரிது கலுழ்ந்து தீங்காயினளெனவே, அக் குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினாள். வாளாண் எதிரும் பிரிவினானும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றியவழியும்: ஆண்டுத் தலைவிமேற்றுக் கிளவி. மூவகைப் பிரிவினும் பகை வயிற்பிரிவை விதந்தோதி ஓதலும் தூதும் வரைவிடைவைத்துப் பிரிவிற்குச் சிறந்தில என்றாராம். அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெறா; இதுவாயின் வரைவிடை வைத்துப் பிரியவும் பெறும். அரசர்க்கு இன்றியமையாத பிரிவாகலின் என்பது கருத்து. இப் பிரிவு அரசர்க்கு உரித்தென்பது தானே சேறலும் (தொல். பொ. 27) என்னும் சூத்திரத்தாற் பெறுதும். வாளாண்மைக்கு ஏற்ற பிரிவெனவே, முடியுடை வேந்தரே வலிற் பிரியும் அரசர்கண்ணது இப்பிரிவென்க. சிறுபான்மை அவ்வேந்தற்கும் உரித்து, வெளிப் படை தானே (தொல். பொ. 141) என்பதனுள் இப்பிரிவில்லை என்பராதலின். அது, பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதழ்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவென்ப னுதிபொர முற்றிய கடும்பனி. (கலி. 31) இதனுட் பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான் வாளாணெ திரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு. இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது. நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் - தலைவிக்கு இன்றியமையாத நாணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந் நாணினைக் கைவிடுத்தற் கண்ணும்; அஃது உடன்போக்கினும் வரைவு கடாவும் வழியும் வேட்கைமீ தூர்ந்து நாண்துறந்துரைத்தல் போல்வன. அளிதோ தானேநாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (குறுந். 149) இஃது உடன்போக்கு வலித்தமையிற் நாண்துறந்து கூறியது. வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் - வரைதல் விருப்பினான் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய புரைதீர் கிளவியைத் தலைவி பொருந்திநின்றே இயற்பழித்தற்கு மறுத்தாள்போல் நிற்கும் எதிர் மறையையும்: புரைதீர் கிளவி தலைவனுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி. அது, பாடுகம் வாவாழி தோழி என்னுங் குறிஞ்சிக் கலியுள், இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வானின் இலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை (கலி. 41) எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படா தாள், பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ அஞ்சலோம் பென்ற ரைப் பொய்த்தற் குரியனோ குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் திங்களுட் டீத்தோன்றி யற்று (கலி. 41) எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க. அருவி வேங்கைப் பெருவரை நாடற் கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுத னீயே. (குறுந். 96) இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. வரைவு உடன்படுதலும் - தலைவற்குத் தலைவிதமர் வரை வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும்: உ-ம்: இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பில் குலையுடைக் காந்தள் இனவ ண்டிமிரும் மலையக நாடனும் வந்தான்மற் றன்னை அலையு மலைபோயிற் றின்று. (ஐந்திணை. எழு. 3) ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமிய ருறங்குங் கெளவை யின்றாய் இனியது கேட்டின்புறுகவிவ் வூரே முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு அட்ட மள்ளர்ஆர்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மாந்தை அன்னவெங் குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. (குறுந். 34) தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் - சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கம் காரணமாக எழுந்த கெளவை கேளாது வரைந்தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும்இன்புறுக என்பதாம். ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ - அவன் வரைவு வேண்டினவிடத்து அவ்வரைவு புறத்ததாகியவழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறிய வற்றைத் தொகுத்து. அதன்புறம் எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று. தலைவி தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப், புரைபட வந்த மறுத்தல் என்றார். வாரிநெறிப்பட் டிரும்புறந் தாஆழ்ந்த வோரிப் புதல்வ னழுதன னென்பவோ புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால் வதுவை யயர்வாரைக் கண்டுமதியறியா வேழையை யென்ற கல நக்குவந் தீயாய்நீ தோழியவனுழைச் சென்று; சென்றியா னறிவேன்கூறுக மற்றினி; சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா நினக்கொரூஉ மற்றெ ன்றகலுகலு நீடின்று நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு; தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி யெருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் தனித்தே யொழிய வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த வொருமணந் தானறியு மாயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டிருக்கோவலர்ந்த விரிநீ ருடுக்கை உலகம் பெறினும் அருநெறி யாயர் மகளிர்க்கு இருமணங் கூடுத லில்லியல் பன்றே (கலி. 114) என வரும். மள்ளர் குழீஇய விழவி னானும் (குறுந். 31) என்பதுமாம். இச்சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் கிழவோண் மேன என்பதனொடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க. புல்லிய எதிரையும் உடன்படுதலையும் மறுத்தலுட் தொகுத்து. கிழவோள் மேன என்மனார் புலவர் - தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு. (16) காமப்புணர்ச்சிக்கண் நாணுமடனும் குறிப்பினுமிடத்தினும் வருமெனல் 108. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய வாதலின் குறிப்பினும் இடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான. இஃது உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறு புணர்ச்சிக் கண்ணும் நிகழுமென்ற நாணும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின், அச்சமு நாணும் (தொல். பொ. 99) என்பதற்குப் புறநடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினான், இடத்தின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென்ப தூஉம், அது கூற்றின்கண் வருமென்ப தூஉங் கூற்றுநிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின். எனவே, இது முதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று நிகழு மென்றற்குக், கூற்றுநிகழுங்கால் நாணும் மடனும் நீங்கக் கூறும் என்று அக்கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று. (இ-ள்.) அவள்வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின் - தலைவியிடத்து உளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலையுடையவாதலின்; காமத்திணையிற் கண்ணின்று குறிப்பினும் வரூஉம் - அப்பருவத்தே தோன்றிய காமவொழுக்கங் காரணமாக அவை கண்ணின்கணின்று குறிப்பினும் வரும்; வேட்கை நெறிப்பட இடத்தினும் வரூஉம் - அன்றி வேட்கை தன்றன்மை திரியாது வழிப்படுதலானே கரும நிகழ்ச்சிக்கண்ணும் வரும்; அல்லது வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா எ-று. இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்தவாறுணர்க. ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப (தொல். பொ. செய். 198) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் இடமென்றதனைக் கரும நிகழ்ச்சி என்றுணர்க: அஃதாவது இடந்தலைப்பாடும் பாங்கெடு தழாஅலுந் - தோழியிற் புணர்வுமாம். இவற்றின் கண்ணும் நாணும் மடனும் நிகழுமென்றான். இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் நாணும் மடனுந்தந் தன்மை திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (17) கரும நிகழ்ச்சிக்கண் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமெனல் 109. காமஞ் சொல்லாநாட்டமின்மையின் ஏமுற விரண்டும் உளவென மொழிப. இது கருமநிகழ்ச்சிக்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவரு மென்கின்றது. (இ-ள்.) சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின்கணின்மையின்; இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப - முற்கூறிய நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் எ-று. என்றது, தோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பதூஉம், நிகழுங்கால் நாணும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக்கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங்கெடுதலையும் முந்துநூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று. தேரேமுற்றன்று நின்னினும் பெரிதே (கலி. 74) பேரேமுற் றாப்போல முன்னின்று விலக்குவாய் (கலி.114) என்றாற் போல்வன மயக்கம் உணர்த்திற்று. இனி நாணும் மடனுங்கெட்ட கூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றான். (18) நாணும் மடனும் பெரும்பாலும் நிகழாத கூற்றுத் தலைவி தோழிக்குக் கூறுமெனல் 110. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி அவள்வயி னான. இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது. (இ-ள்.) எதிர் சொல் - அங்ஙனங் நாணும் மடனும் நீங்கிய சொல்லை; அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் - தோழி யிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்ல வாகையினானே; கூற்றுமொழி ஆன - குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின எ-று. எதிர்தல் தன்றன்மை மாறுபடுதல். ஒன்றிய தோழியொடு (தொ. பொ.41) என அகத்திணையியற் கூறுதலானுந் தாயத்தி னடையா (தொ. பொ. 221) எனப் பொருளியலிற் கூறுதலானும், அவள் வயின் நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்து மென்றான்; அவை முற்காட்டிய உதாரணங்களுட் கூடுதல் வேட்கையாற் குறி பார்த்து (கலி. 46) எனவும். வளைமன்கை பற்றி நலியத் தெருமந் திட்டு (கலி. 51) எனவும், காமநெரிதரக் கைந்நில் லாதே (குறுந். 149) எனவுங் கூறிய வாற்றானும், மேற்கூறுகின்ற உதாரணங்களானும், நாணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவா றுணர்க. சூத்திரத்துட்பொருளன்றியும்....gLnk’ (தொல். பொ. மர. 103) என்பதனான். இவ் விலக்கணம் பெறுதற்கு, இம்மூன்று சூத்திரத்திற்கும் மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம். இனிக் கூற்று நிகழுங்கால், நாணும் மடனும் பெண்மையவாதலிற், குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் கூறிற், காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ்,rன் nwர்rய்யுட்களெல்லாங்கு¿ப்பும்இlனுமன்றிப்gரும்பான்மைகூ‰றாய்வUதலானும்,ஆáரியர்தiலவன்கூ‰றுந்தiலவிகூ‰றுந்jழிகூற்றுஞ்rவிலிகூ‰றுமெனக்கூ‰றுஞ்rர்த்துநூšசெய்தலானும்அJgருளன்மையுணர்க.(19) இதுவுந் தலைவிகூற்று நிகழுமாறு கூறல் 111. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல் நிறைந்தகாதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைபட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும் இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும் நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினும் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும் உயிராக் காலத் துயிர்த்தலும் உயிர்செல வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும் நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையினுறகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணும் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் குறியி னொப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினும் களவறி வுறினும் தமர்தற் காத்த காரண மருங்கினும் வந்தனன்பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் வழுவின் நிலைஇய வியற்படு பொருளினும் பொழுது மாறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் காமஞ் சிறப்பினும்அவனளி சிறப்பினும் ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் அன்னவு முளவே யோரிடத் தான. இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான். சில கூற்றுக்களுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தை பட நிகழ்த்தவும் பெறுமென்கின்றான். அவன்வயின் எனவே தன்னென்றது தலைவியையாம்; உரிமை - களவிலே கற்புக்கடம் பூண்டொழுகல்; எனவே, புலவியுள்ளத் தாளாகவும் பெறுங் களவினென்பது கருதிப் பரத்தையுமுள என்றான்; ஊடலும் உணர்த்தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப் போலி, பரத்தை - அயன்மை. அவன்கட் பரத்தை மையின்றேனும் காதன்மிகுதியான் அங்ஙனங் கருதுதல் பெண்தன்மை. உம்மை எதிர்மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை. (இ-ள்.) மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி நின்று அங்ஙனம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுந் தோழிக்குக் கூற்றாற் கூறுதலுள: உ-ம்: கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும் வண்டற் பாவை வரிமணலயர்ந்தும் இன்புறப் புணர்ந்து மிளிவரப் பணிந்தும் தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துயர் அறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ மெல்லம் புலம்பன் செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று தகைஇய சென்றவெ னிறையி னெஞ்சம் எய்தின்று கொல்லோதானே யெய்தியும் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ உதுவ காணவர்ஊர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானும் எக்கர்த் தாழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும் பரியவூர்ப் பிழிபு சிறுகுடிப் பரதவர் பெருங்கடன்மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொடிகந்துமா யும்மே. (அகம். 330) அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு என்பது தன்வயி னுரிமை; இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தைமை. தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணாவகை நாணான் மறைந்து ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல் வேண்டுதற் கண்ணும்: அது, இன்ன ளாயினள் நன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே. (குறுந். 93) இன்னளாயினளென்றது தற்காட்டுறுதல், செப்புநர்ப் பெறினே யென்பதனாற் களவாயிற்று; கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள. நிறைந்த காதலிற் சொல் எதிர்மழுங்கல் - தலைவி காதன் மிகுதியான் தலைவன் பரத்தைமையை எதிர்கூற நினைந்து கூற்றெய்தாது குறைபடுதற் கண்ணும். உ-ம்: பிறைவனப் பிறந்த நுதலும் யாழநின் இறைவரை நில்லா வளையு மறையாது ஊரலர் தூற்றுங் கெளவையு முள்ளி நாண்விட்டு ரையவற் குரையா மாயினு மிரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முடமுதிர் நாரை கடன்மீ னொய்யு மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் காப்பவுங் கைம்மிக் குரைத்த தோழி யுண்க ணீரே. (நற். 263) இது யாம் உரையாமாயினுங்கண் உரைத்தன என்றலின் இரண்டுங் கூறினாள். வழிபாடு மறுத்தல் - வருத்தமிகுதியாற் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறுமிடத்தும்: உ-ம்: என்ன ராயினு மினிநினை வொழிக வன்ன வாக வுரையல் தோழியாம் இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் மரனா ருடுக்கை மலையுறை குறவர் அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற் றாரமுருக்கிப் பையென மரம்வறி தாகச்சோர்ந்துக் காங்கென் அறிவு முள்ளமு மவர்வயிற் சென்றென வறிதா லிகுளையென் யாக்கை யினியவர் வரினு நோய்மருந் தல்லர் வாரா தவண ராகுக காதல ரிவணங் காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே (நற். 64) உள்ளினுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தின் வான்றோய் வற்றே காமம் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே (குறுந். 102) எனவரும். நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் றனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலு மோய்வன வொழுங்கி தீயுறு தளிரி னடுங்கி யாவதுமில்லையான் செயற்குரி யதுவே. (குறுந். 388) இதுத் தோழி கூற்றே; சென்றைக்க வென்றதனான் தலைவி மறுத்தமை பெற்றாம். மறுத்து எதிர்கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும்: அது, கெளவை யஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முறிந்துநிலம் படாஅ நாளுடைய யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. (குறுந். 112) இது நாணேயுள்ளது கற்புப்போம் என்றலின் மறுத்தெதிர் கோடலாம். பழிதீர்முறுவல் சிறிதே தோற்றல் - தன் கற்பிற்கு வரும் பழி தீர்ந்த தன்மையான் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும்: தலைவனான் தோன்றிய நோயும் பசலையும் முருகனான் தீர்ந்த தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் பழி யென்றார். உ-ம்: அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங் கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென வறியா மறு வரற் பொழுதின் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக் களனன் கிழைத்துக் கண்ணிசூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் ஆரம் நார வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூவண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின்வயப் புலி போல நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே. (அகம். 22) இதனுட் பழிதீர அவன் வந்து உயிர்தளிர்ப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க: கைபட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பினன்றி எதிர்ப்பட்ட தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழிக் காட்சி விருப்பினளாயினும் அப்பொழுது அவள் கலங்கினும்: எனவே, காட்சி விருப்பினை மீதூர்ந்த கலக்கம் புலப்பட்டது தலைவன்வயிற் பரத்தைமை கருதி. கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை (கலி. 54) என்னுங் குறிஞ்சிக்கலியுள் அதனா லல்லல் களைந்தனென் றோழி எனக் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தனெ னெனத் தலைவி யுரையெனத் தோழிக்கு உரைத்தற்கட் கூறியவாறு காண்க. இவ்வுதாரணம் ஆண்டுக் காட்டுதும். உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த (அகம். 230) என்னும் பாட்டுத் தலைவன் இதனைக் கூறியது. நாணு மிக வரினும் - தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெருநாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக்கொள்ளாது நிற்பினும்: உ-ம்: விளையா டாய மொடு வெண்மண லழுவத்து மறந்தனந் துறந்த காழ்முளைய கைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்து நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கின் இறைபடு நீழல் பிறவுமா ருளவே. (நற். 172) இதனுள் அம்ம நாணுதும் எனப் புதிதுவந்ததொரு நாணுமிகுதி தோன்ற மறுத்துரைத்தலின், தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தை மையுங் கூறினாள். இட்டுப் பிரிவு இரங்கினும் - சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இரங்கினும்: கற்பினுட் சொல்லாது பிரிதலையும் இட்டுப் பிரிவென்ப, களவு போல நிகழ்பொருள் உணர்த்திப் பிரிதலருமையின். உ-ம்: யானேயீண்டை யேனேயென்னலனே ஆனாநோயொடு கானலஃதே துறைவன்றம்மூ ரானே மறையல ராகிமன்றத் தஃதே. (குறுந். 97) தம்மூரான் என்றலின் ஓதல் முதலிய பிரிவின்றி அணித்தாய வழிப் பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு காண்க. சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பைந்தோடு எறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் பனிபுலந் துறையும் பல்பூங் கானல் விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம் இன்னுயி ரல்லது பிறிதொன்று எவனோ தோழி நாமிழப் பதுவே. (குறுந். 334) இதுவும் அது. இவை களவினுட் புலவிப்போலியாம். அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப் பிரிவே யன்றித் தலைவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு தம்மை மறப்பினும்: அதுதண்டாதிரத்தலை (தொல். பொ. 102) முனிந்த மற்றையவழித் தலவன் தானும் அரியனாய்மறந்தான் போன்று காட்டினும் அவ்விரண்டுங் கூறுதலாம். உ-ம்: தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க வென்ப மாதோ வழுவப்பிண்ட நாப்ப ணேமுற் றிருவெதி ரீன்ற வேற்றிலைக் கொழுமுளை சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும் மலைகெழு நாடன் கேண்மை பலவின் மாச்சினைதுறந்த கோண்முதிர் பெரும்பழம் விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் சேணுஞ் சென்றுக் கன்றே யறியா தேக லடுக்கத் திருண்முகை யிருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரும் இன்னு மோவா ரென்றிறத் தலரே. (நற். 116) தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின் நாம் அரியே மாகியது பற்றித் தாமும்அரியராயினார் போலுமென அவ்விரண்டுங் கூறினாள். நெய்தற் படப்பை னிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலிற் கண்டநாட் போலானாற் செய்த குறியும்பொய் யாயினவாற் சேயிழாய் ஐயகொலான்றார் தொடர்பு. (திணை. ஐம். 41) இதுவும் அது. வந்தவழி எள்ளினும் - பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத் தலைவன் வந்தஞான்றும் பெறாதஞான்றைத் துன்பமிகுதியாற் பெற்ற தனையுங் கனவுபோன்று கொண்டு இகழ்ந்திருப்பினும்: உ-ம்: மானடி யன்ன கவட்டிலை யடும்பின் தார்மணியன்ன வொண்பூக் கொழுதி ஓண்டொடி மகளிர் வண்ட லயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை யுள்ளேன் றோழி படீஇய ரென் கண்ணே (குறுந். 243) வாராக் காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றனகண். (குறள். 1179) இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தாற் புணர்வு. (குறள். 1152) வரிற்றுஞ்சா வெனவும் புன்கணுடைத்து எனவும் வரவும் பிரிவும் அஞ்சி இரண்டும் நிகழக்கூறினாள். இது முன்னிலைப் புறமொழி. கண்டிரண் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப் பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டேன் எனத்தெளிந்தேன் நின்ற வுணர்விலாதேன். (ஐந். எழு. 61) இது முன்பு இன்பந் தருவனென உணர்ந்து நின்ற உணர்வு ஈண்டில் லாத யான் புணர்ச்சி வருத்தந்தருமென்று தெளிந்தேனென்றா ளென்க. விட்டு உயிர்த்து அழுங்கினும் - கரந்த மறையினைத் தலைவி தமர்க்கு - உரைத்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அக்கூறியதனையே தமர்கேட்பக் கூறாது தவிரினும்: உயிர்த்தல் - கூர்தல். உ-ம்: வலந்த வள்ளி மரனோங்கு சாரல் கிளாந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்னா விசைய பூசல் பயிற்றலின் ஏக லடுக்கத் திருளளைச் சிலம்பின் ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம் மலைகெழு சீறூர் சிலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாடன் நெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக் கறிவிப் பேங்கொலறிவியேங் கொல்லென இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபால் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை இன்னுயிர் கழிவ தாயினு நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பாதீமே. (அகம். 52) இது சிறைப்புறம். நொந்து தெளிவு ஒழிப்பினும் - வரைவு நீட்டித்துத் தலைவன் சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும்: உ-ம்: மன்றத் துறுகற்கருங்கண் முகவுகளும் குன்றக நாடன் றெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி ஒன்றுமற் றொன்று மனைத்து (ஐந்திணை எழு.9) எனவரும். எம்மணங்கினவே. (குறுந். 53) என்பது தலைவி கூறக்கேட்டுத் தோழி கூறியது. அதுவும் இதனாற் கொள்க. அச்சம் நீடினும் - தெய்வம் அச் சூளுறவிற்கு அவனை வருத்து மென்றுந் தந்தை தன்னையர் அறிகின்றாரோ வென்றுங் கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டிப்பினும்: உ-ம்: மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும் கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென்றோளே (குறுந். 87) மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன் எந்தை யறித லஞ்சிக்கொல் அதுவே தெய்ய வாராமையே (ஐங்குறு. 261) புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்தும் மணிவரி தைஇயும்நம் மில்வந்து வணங்கியும் நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூர் இளைய ளென்றெ டுத்தோதற் கனையையோநீயென வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி; செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைநோயுற்றவர் காணாது கடுத்தசொல் ஒவ்வாவென்று ணராய்நீ யொருநிலையே யுரைத்ததை: ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தரவவன்கண்டு நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக் கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை; வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித் தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய்தனைத்தற்கோ புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்த சொல் உரிதெனவுணராய்நீ யுலமந்தாய் போன்றதை; எனவாங்கு, அரிதினி யாயிழாயது தேற்றல் புரிபொருங்கு அன்றுநம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ நாஞ்செயற் பால தினி (கலி. 76) எனவரும். பிரிந்தவழிக் கலங்கினும் - களவு அலராகாமல் யான் பிரிந்துழித் தலைவி கலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலிற் பிரிவைக் கருதப்பெறாத தலைவி அவ்வாறன்றிப் பிரிந்துழிக் கலங்கினும்: உ-ம்: மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க விசும்பா டன்னம்பறைநிவந் தாங்குப் பொலம்படைப் பொலிந்தவெண்டே ரேறிக் கலங்குகடற் றுவலை யாழிநனைப்ப இனிச்சென்ற னனேஇடுமணற் சேர்ப்பன் யாங்கறிந் தன்றுகொல் தோழியென் தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந். 205) குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉங் கவின்பெறு காலை எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் ஒருங்குவரனசையொடு வருந்துங் கொல்லோ அருளா னாதலினழிந்திவண் வந்து தொன்னல னிழந்த வென் பொன்னிறம் நோக்கி யேதி லாட்டி யிவளெனப் போயின்று கொல்லோநோய்தலை மணந்தே (நற். 56) வருவது கொல்லோதானே வாராது அவணுறை மேவலினமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி யிருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே (ஐங்குறு. 295) பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை வரிப்புற வார்மணன்மே லேறித் - தெரிப்புறத் தாழ் கடற் றண்சேர்ப்பன் தாரகலம் நல்குமேல் ஆழியாற் காணாமோயாம் (ஐந்திணைஐம். 43) எனவரும். பெற்றவழி மலியினும் - தலைவி இடையீடின்றி தலைவனை எதிர்ப்படப் பெற்றஞான்று புதுவது மலியினும்: வரைவு நீட்டித்த காலத்துப் பெற்றவழி மலிவை வெளிப்படக் கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத்தா மையும் உணர்க. உ-ம்: இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇ மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை கூதிரிற் செறியுங் குன்ற நாட வனைந்து வரலிளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்து புறஞ் சுற்ற நின்மார் படைதலின் இனிதா கின்றே நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும் தண்வரல் அசைஇய பண்பில் வாடை பதம்பெறு கல்லாது இடம் பார்த்து நீடிய மனைமரமொசிய வொற்றிப் பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே. (அகம். 58) முயக்கம் இனிதென மகிழ்ந்து கூறுவாள் நும்மில் புலம்பான் வாடைக்கு வருந்தினே மென்றலின் இரண்டுங் கூறினாள். அம்ம வாழிதோழி நலமிக நல்ல வாயின அளிய மென்றோள்கள் மல்ல லிருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன் வந்த மாறே. (ஐங்குறு. 120) அம்ம வாழி தோழி பன்மாண் நுண்மண லடைகரை நம்மோடாடிய தண்ணந்துறைவன் மறைஇ அன்னை யருங்கடி வந்துநின் றோனே (ஐங்குறு. 115) இவை தோழிக்குக்கூறியன. பெற்றவழி மலியினும் எனப் பெறு பொருள் இன்னதெனவும் இன்னார்க்குக் கூறவதெனவும் வரையாது கூறவே, பிற பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுந் கொள்க. அம்ம வாழி தோழி யன்னைக் குயர்நிலை யுலகமுஞ் சிறிதால் அவர்மலை மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு காலைவந்த முழுமுதல் காந்தள் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கடியாதோட்கே. (குறுந். 361) இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங் கூறினாள். வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - தலைவன் இடை விடாது வருதற்கு, ஆண்டு நிகழும் ஏதம் பலவாற்றானும் உளதாம் அருமையை, வாயிலாகிய தோழி கூறினுந், தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள; அது, நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து இனிதடங் கினரேமாக்கண் முனிவின்று நனந்தலை யுலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. (குறுந். 6) இதனுட் பொழுது சென்றதில்லையென்றும், மாக்கள் இன்னுந் துயின்றில ரென்றும் அருமையை வாயில் கூறியவழித், தலைவி யாமமும் நள்ளென்றும் மாக்களுந் துயின்றும் வந்திலரென வருந்திக் கூறியவாறு காண்க. நாம் ஏவிய தொழில் ஏற்றுக்கொண்டு வருகின்றவன், ஒரு காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று தலைவி கொள்ளுமாறு கூறுமென்றற்குத் தொழி லென்றார். கூறிய வாயில் கொள்ளாக் காலையும் - தலைவற்குக் குறைநேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழியும் பிறவழியுந், தோழி கூற்றினைத் தலைவி ஏற்றுக்கொள்ளாத காலத்துக்கண்ணும்: வாயில், தோழி. உ-ம்: தெருவின்கட், காரணமின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில நீநின்மேற் கொள்வ தெவன் (கலி. 60) எனத் தோழி கூற்றினை மறுத்தது. தோளே தொடிநெகிழ்ந் தனவே கண்ணே வாளீர் வடியின் வடிவிழந் தனவே நுதலும் பசலை பாயின்று திதலைச் சில்பொறி அணிந்த பல்கா ழல்குன் மணியே ரைம்பான் மாயோட் கென்று வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற நாமுறு துயரஞ் செய்யல ரென்னுங் காமுறு தோழி காதலங் கிளவி யிரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடற் சின்னீர்போல நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே. (நற். 133) இது தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினாள். மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக் கலங்கி உணர்வு அழிந்தவழித், தலைவி ஆராய்ச்சியுடைத்தாகிய அருமறை யினைத் தோழிக்குக் கூறுதலும் உள. உ-ம்: கேளா யெல்ல தோழி யல்கல் வேணவா நலிய வெய்ய வுயிரா ஏமான் பிணையின் வருந்தினெ னாகத் துயர்மருங் கறிந்தனள் போல அன்னை துஞ்சா யோஎன் குறுமக ளென்றலின் சொல்வெளிப் படாமை மெல்லவென் நெஞ்சிற் படுமழை பொழிந்த பாறை மருங்கின் சிரல்வாயுற்ற தளவிற் பரலவற் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ வென்றிசின் யானே. (நற். 61) இதனுள் துஞ்சாயோவெனத் தாய் கூறியவழி, மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கென மறையுயிர்த்தவாறுங், கண் படாக் கொடுமை செய்தானெனப் பரத்தைமை கூறியவாறுங் காண்க. பொழுது மெல்லின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி அன்னாயென்னு மன்னையு மன்னோ என்மலைந் தனன்கொ றானே தன்மலை ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே (குறுந். 161) பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன் எலவென்றிணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன் புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து. (திணை ஐம். 10) இவையும் அது. இன்னும் மனைப்பட்டுக் கலங்கி யென்றதனாற் காப்புச் சிறை மிக்க கையறு கிளவிகளுங் கொள்க. சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே துறைபோகறுவைத் தூமடி யன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே எம்மூர் வந்தெம் ஒண்டுறைத் துழைஇச் சினைக்கெளிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி அனையவன் பினையோ பெருமற வியையோ ஆங்கட் டீம்புனல் ஈங்கட் பரக்கும் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே. (நற். 70) கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த ஆர லிரைகருதி நித்தலு நிற்றியால் நேரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப் பேருண்க ணீர்மல்க நின்றாண்மற் றென்னாயோ. ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய் வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிரால் பெண்டூது வந்தே மெனவுரைத்தெங் காதலரைக் கண்டீர் கழறியக்கால் கானல் கடிபவோ. இவை காப்புச் சிறைமிக்க கையறுகிளவி. உயிராக் காலத்து உயிர்த்தலும் - தலைவனொடு தன்றிறத்து ஒருவரும் ஒன்ற உரையாதவழித், தனதாற்றாமையான், தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றந் தலைவி தானே கூறுதலும் உள: தோழி மறைவெளிப்படுத்துக் கோடற்கு வாளாது இருந்துழித், தலைவன் தன்மேல் தவறிழைத்தவழி, இரண்டும்படக் கேட்போ ரின்றியுங் கூறுதலாம். உ-ம்: உறைபதி யன்றித்துறைகெழு சிறுகுடிக் கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே (குறுந். 145) தழையணி யல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் லாகநிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புட னெதிரின யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னும் அவல நெஞ்சமோ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே. (குறுந். 159) என வரும். உயிராதாள் தோழியாயினாள்; அவள் தலைவி கூறுவன கேட்டற்குப் பொய்த்துயில் கொள்ளும். உயிர்த்தலுமெனப் பொதுப்படக் கூறியவதனான் தோழிக்குக் கூறுவனவுங் கொள்க. பேணுப பேணார்பெரியோ ரென்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை யுயிரோ ரன்னசெயிர்தீர் நட்பின் நினைக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றாற் றானே கொண்கன் யான்யா யஞ்சுவ லெனினும் தானே பிரிதல் சூழான்மன்னே இனியே கான லாய மறியினும் ஆனா தலர்வ தன்றுகொல் என்னு மதனால் புலர்வது கொல்லவன் நட்பெனா அஞ்சுவல் தோழியென் னெஞ்சத் தானே. (நற். 72) என வரும். உயிர்செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் - இறந்து பாடு பயக்குமாற்றான் தன்றிறந்து நொதுமலர் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுதற்கண்ணும்: உ-ம்: அன்னை வாழிவேண்டன்னை புன்னைப் பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை யென்றும் யாமே இவ்வூர் பிறிதொன்றாகக் கூறும் ஆங்கு மாக்குமோ வாழிய பாலே. (ஐங்குறு. 110) பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் பெருவரை யடுக்கத்துக் கிழவோன் என்றும் அன்றை யன்ன நட்பினன் புதுவோர்த் தம்மவில் வழுங்க லூரே. (குறுந். 385) நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - தோழி கூட்ட முண்மை வழக்கியலால் நாடு கின்ற காலத்துக், கண்சிவப்பும் நுதல் வேறுபாடும் முதலிய மெய்வேறுபாடு நிகழ்ந்துழி, அவற்றைத் தோழி அறியாமலுஞ் செவிலி அறியாமலுந் தலைவி தான் மறைப்பினும்: உ-ம்: கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் ஒண்டொடி மகளிர் தண்டழை யல்குலும் காண்டொறுங் கவினை யென்றி அதுமற் றீண்டு மறந்தனையாற் பெரிதே வேண்டாய் நீயெவன் மயங்கினை தோழி யாயினுஞ் சிறந்தன்று நோய்பெரி துழந்தே. காதன் மிகுதியாற் கவினையெனற் பாலாய், வேறுபட்டனை யென்று எற்றுக்கு மயங்கினையெனத் தலைவி தன் வருத்தம் மறைத்தாள். துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதஎன் மம்மர் வாண்முகம் நோக்கி அன்னைநின் அவல முரையென் றனளே கடலென் பஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே. இது செவிலிக்கு மறைத்தது. ஒருமைக் கேண்மையின் உறுகுறை - தான் அவளென்னும் வேற்றுமையில்லாத நட்பினானே தோழி தனக்கு வந்து கூறிய குறையை; பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள் - முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டுவகையின் - தான் முன் அருமை அமைந்துநின்ற நிலையான் தலைவன் தன்கண் நிகழ்த்திய மெய் தொட்டுப் பயிறன் முதலிய எட்டினானே; பெருமை சான்ற இயல்பின் கண்ணும் - தனக்கு உள தாம் பெருமை கூறுதற்கு அமைந்ததோர் இயல்பின்கண்ணும்: என்றது, தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும் யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேனென்று தன் பெருமை தோழிக்குக் கூறுதலாம். உ-ம்: மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோல் பொன்னகைத் தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை இன்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதால் நினக்கொன்று கூறுவாங் கேளினி; நில்லென நிறுத்தான் நிறுத்தே வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ யைதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன்றன்று சுனையுமன்று மெல்ல வியலும் மயிலுமன்று சொல்லத் தளரும் கிளியு மன்று; எனவாங்கு அனையன பலபா ராட்டிப் பையென வலையர் போலச் சோர்பதன் ஒற்றிப் நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் தொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களிறன்னோன் தொழூஉந் தொடூஉமவன் றன்மை ஏழைத் தன்மையோ வில்லை தோழி. (கலி. 55) இதனுட் பாராட்டி யெனப் பொய்பாராட்டலுஞ், சோர்பதனொற்றி யென நெஞ்சு நெகிழந்த செவ்வி கூறுதலிற் கூடுதலு றுதலும் புலையர்போல் நோக்கி யென நீடு நினைந் திரங்கலும், தொழலுந்; தொழுதானென இடம்பெற்றுத் தழாஅலுந் தொடலுந் தொட்டானென மெய்தொட்டுப் பயிறலும், அவனிகழ்த்தியவாறுங் கூறி, மதத்தாற் பரிக்கோலெல்லையில் நில்லாத களிறுபோல், வேட்கை மிகுதியான் அறி வினெல்லையில் நில்லாதவனெனத் தீராத் தேற்றமும் ஒருவாற்றாற் கூறித், தனக்குப் பெருமைசான்ற இயல்பைப் பின்னொரு கால் தோழிக்குக் கூறியவாறு காண்க. இனித் தலைவற்குப் பெருமை அமைந்தன எட்டுக்குண மென்று கூறி, அவற்றை, இளமையும் வனப்பு மில்லொடு வரவும் வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும் தேசத் தமைதியும் மாசில் சூழ்ச்சியும் (பெருங். 1 : 36 - 89 - 91) எனப் பொருள் கூறின், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். பொ. 75) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய எண்கள் அவை கூறிய வட நூல்களில் வேறே எண்ணுதற்கு உரியன சில இல்லாமல் எண்ணினாற்போல, ஈண்டும் இளமை முதலிய எட்டும் ஒழிய வேறெண்ணுதற்கு உரியன எட்டு தலைவற்கிலவாகக் கூறல் வேண்டும்; ஈண்டு அவ்வாறின்றித் தலைவற்கு உரியனவாகப் பலவகைகளான எவ்வெட்டுளவாகக் கூறக்கிடந்தமையின் அங்ஙனம் ஆசிரியர் இலக்கணங் கூறாரென மறுக்க. அன்றியும் எட்டும் எடுத்து ஓதுபவென்றும் உதாரண மின்றென்றும் மறுக்க. இனி முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தினகறல், அவன் புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பன எட்டுமென்று (தொல். பொ. 271) அவற்றை ஈண்டுக்கொணர்ந்து பொருள்கூறிற், கூற்றுக் கூறுகின்றவிடத்து மெய்ப்பாடு கூறின் ஏனைமெய்ப்பாடுகளுங் கூற்றுக் கூறுகின்றவிடத்தே கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல்வேண்டுமென்று மறுக்க. பொய்தலை அடுத்த மடலின்கண்ணும் - பொய்யினைத் தலைக் கீடாகவுடைய மடலின் கண்ணும்: அது மடன்மா கூறியவழி அம்மடலினை மெய்யெனக் கொண்டாள் அதனைப் பொய்யெனக் கோடலாம். உ-ம்: வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும்பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே. இது மடன்மா கொள்ளத் குறித் தோனைப் பறவைக்குழாந் தம்மை மடலூர விடாவென விளையாட்டு வகையாற் பொய்யென்று இகழ்ந்தது. கையறு தோழி கண்ணீர்துடைப்பினும் - தலைவியை ஆற்று வித்துக் கையற்ற தோழி தலைவி கண்ணீரைத் துடைப்பினும்: உ-ம்: யாமெங் காமம்தாங்கவும் தாந்தங் கெழுதகை மையின் அழுதனதோழி கன்றாற்றுப் படுத்த புன்ற லைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறா திட்ட வேமப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. (குறுந். 241) இது தன் ஆற்றாமைக்கு ஆற்றாத தோழியை ஆற்றுவிக் கின்றாள் அவ்விரண்டுங் கூறியது. வெறியாட்டிடத்து வெருவின்கண்ணும் - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழித், தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்: அது பண்டேயுந் தன்பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான், இன்று நம் ஆற்றாமைக்கு மருந்து பிறிது முண்டென றறியின், வரைவு நீடுமென்று அஞ்சுதல். உ-ம்: பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன் துனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த இனியஉள்ளம் இன்னா வாக முனிதக நிறுத்த நல்க லெவ்வம் சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தன ளல்ல ளன்னை வார்கோல் செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னாரணங் கென்றலின் அதுசெத்து ஓவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறைஇக் கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத்து ஆடணி யயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர் ஐதமை பாணியிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் வெறியயர்வெங்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டின் என்னாங் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயின் இம்மறை அலரா காமையோ அரிதே அஃதா அன்று அன்றிவ ருறுவிய அல்லல்கண்டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே. (அகம். 98) இன்னாவாக்கி நிறுத்த எவ்வ மென்பது அவன்வயிற் பரத்தைமை. உயிர்வாழ்தல் அரிது என்பது தன்வயினுரிமை. அவை வெறியஞ்சிய வழி நிகழ்ந்தன. குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் - இரவுக்குறி வருந்தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனான் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி, அதனை மெய்யாக உணர்ந்து தலைவி மயங்கிய வழியும்: புனலொலிப் படுத்தன் முதலிய அவன் செயற்கையானன்றி இயற்கையான் நிகழ்ந்துழிக் குறியினொப்புமையாம். உ-ம்: மெய்யோ வாழி தோழி சாரன் மைப்பட் டடன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத்தப்ப லேற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனஎன்தடமென் றோளே. (குறுந். 121) கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முசுப்போல, நாங் குறிபெறுங் காலத்து வாராது புட்டாமே வெறித்து இயம்புந்துணையும் நீடித்துப் பின்பு வருதலிற், குறிவாயாத் தப்பு அவன்மேல் ஏற்றி, அதற்குத் தோள் பசந்தனவென்று, பின்னொருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி இவ்வரவு மெய்யோவெனவே, அவ்விரண்டும் பெற்றாம். அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட மணியரவம் என்றெழுந்து போந்தேன் - கணிவிரும்பு புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய் உள்ளுருகு நெஞ்சினேன் யான். (ஐந். ஐம். 50) இதுவும் அது. வரைவு தலைவரினும் - களவு வெளிப்பட்ட பின்னராயினும் வெளிப்படு முன்னராயினும் வரைந்தெய்துற் செய்கை தலைவன் கண் நிகழினும் ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றாமை பற்றி அவ்விரண்டுங் கூறும்: உ-ம்: நன்னா டலைவ ருமெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவார் என்னோற் றனர்கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை மூன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ (கலி. 39) என நாண் தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங், கனவிற் புணர்ச்சி கடிதுமெனவும் இரண்டும் கூறினாள். கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானின் அருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும் வாடல் மறந்தன தோள். (ஐந்திணை எழு. 2) நயனுடையன் என்பதனான் வரைவு தலைவந்தமையும், நீப்பினு மென்பதனான் அவன் வயிற் பரத்தைமையுங் கூறினாள். களவு அறிவுறினும் - தம் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகத் தலைவன் ஒழுகினும்; ஆண்டும் அவ்விரண்டுங் கூறும். உ-ம்: நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து மால்கடற் றிரையின் இழிதரு மருவி அகலிருங் கானத் தல்கணிநோக்கித் தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல் போதெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை யெவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென மெல்லிய வினிய கூறலின் வல்விரைந் துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற் காந்த ளூதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பி னிமிரும் வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே. (நற். 17) யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனாக அதனைக் கண்டு நீ எவன் செய்தனையென வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேனெனத் தாய் களவறிவுற்றவாறு கூறக் கருதி, அவன்வயிற் பரத்தைமை கூறிற்று. தமர் தற்காத்த காரண மருங்கினும் - அங்ஙனங் களவறிவுற்ற அதன்றலைச், செவிலி முதலிய சுற்றத்தார் தலைவியைக் காத்தற்கு ஏதுவாகிய காரணப்பகுதிக்கண்ணும்: ஆண்டுந் தமரை நொந்துரையாது அவன்வயிற் பரத்தைமை கூறும். காரணமாவன தலைவி தோற்றப்பொலிவும், வருத்தமும் அயலார் கூறும் அலருமாம். உ-ம்: அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனோ டொருநாள் நக்குவிளை யாடலுங் கடிந்தன்று ஐதெமக் கம்ம மெய்தோய் நட்பே (குறுந். 401) இது வேறுபாடு கண்டு இற்செறித்தமை தன்னுள்ளே கூறியது. பெருநீர் அழுவத் தெந்தை தந்த கொடுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி யெக்க்ப் புன்னைஇன்னிழ லசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற் றூச றூங்கிக் கொண்டல் இடுமணற் குரவை முனையின் வெண்டலைப் புனரி ஆயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தகப் பல்பூங் கானல் அல்கினம் வருதல் கெளவை நல்லணங் குற்றஇவ்வூர்க் கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை கடிகொண் டனளே தோழி பெருந்துறை எல்லையு மிரவு மென்னாது கல்லென வலவன் ஆய்ந்த வண்பரி நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே (அகம். 20) பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப் பனிக்கழி துழவும் பானாட் டனித்தோர் தேர்வந்து பெயரும் என்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்னை பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் இளையரு முதியரு முளரே யலையாத் தாயரொடு நற்பா லோரே. (குறுந். 246) இவை பிறர் கூற்றால் தமர் காத்தன. முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்டழை யுடையை அலமர லாயமொ டியாங்கணும் படாஅல் மூப்புடைய முதுபதி தாக்கணங் குடைய காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் பெதும் பைப் பருவத் தொதுங்கினை புறத்தென ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித் தன்சிதை வறித லஞ்சி யின்சிலை யேறுடை யினத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள் இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை அத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செய்யேன் இத்தலை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி ஒலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல் ஆய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉம் கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே (அகம். 7) என்றன தோற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ்விரண்டும் உள. தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும் - தலைவி தன்னாற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலிய காரணங்களான் இழக்கப்பட்டனவற்றை, இவை இழக்குமென முந்துறவே உணராத காலத்து, முற்கூறிய குறியிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலான், தமக்குப் பயம் படாத வறுங்களத்தை நினைந்து, அதனைத் தலைவற்கு முந்துறவ குறிபெயர்த்திடப் பெறாத தவறு தன்மேல் ஏற்றிக்கொண்டு, தோழியையும் அது கூறிற்றிலளெனத் தன்னொடு தழீஇக் கொண்டு, தலைவி தெளிதற்கண்ணும்: ஆகவே அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். தழீஇ - தோழியைத் தழீஇ. அத்தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறினாள். உ-ம்: விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற் கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி வருதல் வாய்வது வான்றோய் வெற்பன் வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைத் தாழ்வி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் றூசன் மாறிய மருங்கும்பாய்புடன் ஆடா மையிற் கலுழ்பில தேறி நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலங் கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற் குவவுப் பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து பைதலன் பெயரலன் கொல்லோஐதேய்கு அயவெள் ளருவி சூடிய வுயர்வரைக் கூஉங் கண்ணதெம் மூரென ஆங்கதை யறிவுறன் மறந்திசின் யானே. (அகம். 38) இதனுள் ஊசன்மாறுதலும் புனமுந் தன்குறி தள்ளிய இடன்; மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூஉங்கண்ணது ஊரென உணர்த்தா மையின்; இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண்டோவெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள். இது சிறைப்புறமாக வரைவு கடாயது. வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் - வழுப்படுத்த லின்றி நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும்: வழுவின்றி நிலைஇய என்றதனான் தோழி இயற்பழித்துழியே இயற்பட மொழிவதென்க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொறாது தான் இயற்பட மொழிந்ததல்லது, தன் மனத்து அவன் பரத்தைமை கருதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம். உ-ம்: அடும்பமல் நெடுங்கொடி உள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடியன் ஆயினும் ஆக அவனே தோழியென்னுயிர்கா வலனே. (ஐங். பக்கம். 144) தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் கொடுமை கூறின வாயினும் கொடுமை நல்வரை நாடற்கில்லை தோழிஎன் நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குன்ற நோக்கங் கடிந்ததூஉ மிலரே நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே எனவரும். இஃது அகன்ற உயர்ந்து தாழ்ந்தவற்றின் பெரிதாகிய நட்புடையவன் எனக் கூறியது. அவை ஒருகாலைக்கு ஒருகாற் பெருகுமென்று கூறினாளாயினும், நமது நட்புப்போல் ஒரு காலே பெருத்ததில்லையென இரண்டுங் கூறினாள். பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலை வந்த சிந்தைக்கண்ணும் - தலைவியுந் தோழியும் தலைவன் இரவுக்குறி வருங்காற் பொழுதாயினும் நெறியாயினும் இடையூறாகிப் பொருந்துதலின்மையின், அழிவு தலைத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக்கண்ணும்: ஆண்டும் அவ்விரண்டும் நிகழும். உ-ம்: மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே எவன்கால் வாழிதோழி மயங்கி யின்ன மாகவு நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட்டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானநாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம். 128) காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டுங் கூறினாள். மனைமடிந்தன் றென்பது பொழுது; சிறுநெறியென்பது ஆற்றின்னாமை. இதனைப் பொருளியலுட் (210) கூறாது தன் வயினுரிமையும் அவன்வயின் பரத்தைமையும் பற்றி ஈண்டுக் கூறினார். குறையொன்றுடை யேன்மற் றோழி நிறையில்லா மன்னுயிர்க்கேமஞ் செயல்வேண்டு மின்னே அரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பில் இரவார லென்ப துரை. (ஐந்திணை எழு. 14) வளைவாய்ச் சிறுகிளி என்னுங் (141) குறுந்தொகையும் அது. காமஞ் சிறப்பினும் - தலைவி காமஞ்சிறந்து தோன்றினும்: உ-ம்: ஒலயவிந் தடங்கி யாமம் நள்ளெனக் கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுண ரன்றில் உயவுக்குரல் கேட்டொறும் துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் நம்வயின் வருந்து நன்னுத லென்பது உண்டுகொல் வாழிதோழி தெண்கடல் வன்கைப் பரதவர்இட்ட செங்கோற் கொடுமுடி யவ்வலை பரியப் போகிக் கடுமுரண் எறிசுறா வழங்கும் நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே. (நற். 303) ஞாயிறு பட்டஅகல்வாய் வானத்து அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை இறையுற வோங்கிய நெறியயன்மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரைகொண்டயும் விரையுமாற் செலவே. (குறுந். 92) கொடுந்தாள் அலவ குறையாம்இரப்பேம் ஓடுங்கா வொலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர் கடந்த வழியையெம் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ. (ஐந்திணை ஐம். 42) முடமுதிர் புன்னைப் படுகோட்டிருந்த மடமுடை நாரைக் குரைத்தேன் - கடனறிந்து பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு நீதகாதென்றே நிறுத்து. என வரும். அவன் அளி சிறப்பினும் - தலைவிக்குக் காமமிக்க சுழிபடர் சிறந்தாற்போல்வது தலைவன்கட் சிற்துழி, அது காரணத்தான் அவன் அளி சிறந்து தோன்றினும்; இவ்வாறு அரிதின் வருகின்றான் வரைகின்றிலனென் அவ்விரண்டுந் தோன்றும். உ-ம்: இருள்கிழிப் பதுபோன் மின்னி வானம் துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள் மின்மின மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை இரும்புசெய் கொல்லெனத் தோன்று மாங்கண் ஆறே யருமரபினவே யாறே சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்க அஞ்சுவந் தமிய மென்னாது மஞ்சுசுமந் தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன் ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய்மணி விளக்கிற் புலர ஈர்க்கும் வாணடந் தன்ன வழக்கருங் கவலை யுள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி அருள்புரி நெஞ்சமோடு எஃகுதுணை யாக வந்தோன் கொடியனும் அல்லன்தந்த நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆனா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே. (அகம். 72) வந்தோ னென்பது அவனளி சிறத்தல்; தவறுடையே னென்பது தன்வயினுரிமை; கொடியனுமல்ல னென்பது அவன்வயிற் பரத்தைமை. சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின்இமைக்கும் ஓங்குமலை நாடன் சாதுபுலர் அகலம் உள்ளின் உண்ணோய் மிகுமினிப் புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய். (குறுந். 150) இதுவுமது. ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் - நால்வகைப் புணர்ச்சியான் நிகழுங் களவின்கண், எஞ்ஞான்றும் இடையீடுபடாமற் றலைவன் வந்து கூடுதல், இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவகையினைத் தலைவி எய்தியக் கண்ணும்: அஃது எஞ்ஞான்றுங் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறலாம். உ-ம்: நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில் காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும் யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கிக் கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப் புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன் என்ன மகன்கொல் தோழி தன்வயின் ஆர்வ முடைய ராகிய மார்பணங்குறுநரை யறியா தோனே. (நற். 94) மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்பவென மாறிக் கழுவாத பசிய முத்தந் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல், யாமும் புணர்ச்சியான் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப், பெண்மையாற் றகைத்துக் கொள்ளும் படியாகத், தன் மார்பான் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினாள். ஆர்வமுடையராக வேண்டி மார்பணங்குறுநரை அறியாதோ னென்க. அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலானாற்றத் தையுடைய நீர்தெறித்தரும்பிய சேர்ப்பனென்றதனான், புன்னையிடத்துத் தோன்றிய புலானாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல, வரைந்து கொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட ஒழுகுவனென்பது உள்ளுறை. இரண்டறி கள்வி (குறுந். 312) என்னும் பாட்டினுள் தோற்றப் பொலிவை மறைப்பளெனத் தலைவன் கூறியவாறும் உணர்க. மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும் விரித்து, ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை விரிக்கவேண்டுவனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்க வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் ஏனை வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்தலுளவென முடிக்க. கூற்று அதிகாரத்தான் வரும். உயிராக்காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க. ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் உள-இக்கூற்று முப்பத்தாறானுள் ஒரோவிடங்களிலே தன்னிடத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங் கூற்று நிகழ்தலுள: ஆன் ஆனவென ஈறு திரிந்தது. அன்னவும் உள - அவைபோல்வன பிறவும் உள என்றவாறு. அன்னபிற வென்றதனான் இன்னுந் தலவிகூற்றாய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க அணிமலை நாடன் வருவான்கொல் தோழி கணிநிற வேங்கை கமழ்ந்து வண்டார்க்கும் மணிநிற மாலைப் பொழுது. (திணை. ஐம்.9) இது தலைவி இரவுக்குறி நயந்து கூறியது. பெயல்கான் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே யெல்லை சேறலின்இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே. (குறுந். 355) இஃது இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது. கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி அஞ்சல் ஓம்பி ஆர்பதங் கொண்டு நின்குறை முடித்த பின்றை என்குறை சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல் பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு நின்கிளை மருங்கிற் சேறி யாயின் அம்மலை கிழவோற் குரைமதி இம்மலைக் கானக் குறவர் மடமகள் ஏனல் காவ லாயின ளெனவே. (நற். 102) எனவும், ஓங்கல் இறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலான் நீங்கும் நெகிழ்ந்த வளை. (திணை. ஐம். 3) எனவும், மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுவந்துமந்தி முலைவருடக் - கன்றமர்ந்து ஆமா சுரக்கும் அணிமலை நாடனை யாமாப் பிரிவ திலம். (ஐந்திணை எழு.4) அவருடை நாட்ட வாயினு மவர்போற் பிரிதல்தேற்றாப்பேரன் பினவே உவக்கா ணென்று முள்ளவ போலச் செந்தார்ச் சிறுபெடை தழீஇப் பைங்குர லேனற் படர்தருங் கிளியே. இது பகற்குறிக்கண் தலைவனீட ஆற்றாது தோழிக்குக் கூறியது. (20) தலைவிகூற்று இன்னவாறுமாமெனல் 112. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந் தானே கூறுங் காலமும் உளவே. இதுவும் அதிகாரத்தான் தலைவிகூற்று இன்னவாறுமாம் என்கின்றது. (இ-ள்.) வரைவிடைவைத்த காலத்து வருந்தினும் - வரைவு மாட்சிமைப் படாநிற்கவும் பொருள்காரணத்தான் அதற்கு இடையீடாகத் தலைவன் நீக்கி வைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தமெய்தினும்: ஆண்டுத் தோழி வினவமாலும்தானே கூறுமென்றான், ஆற்று வித்துப் பிரிதல் களவிற்குப் பெரும்பான்மை இன்மையின் வைத்த வென்றது நீக்கப்பொருட்டு. வருந்துதல் ஆற்றுவிப்பா ரின்மையின் வருத்தமிகுதலாம். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் - வரையா தொழுகுந் தலைவன் ஒருஞான்று தோழியையானும் ஆயத்தையானுஞ் செவிலியை யானுங் கதுமென எதிர்ப்பினும்: உரையெனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் - நொதுமலர் வரைவிற்கு மணமுரசியம்பியவழியானும் பிறாண்டானுந் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக் கூறி அதனை நமரறியக் கூறல் வேண்டுமென்றுந் தலைவற்கு நம் வருத்தமறியக் கூறல் வேண்டுமென்றுங் கூறுதற்கண்ணும்; தானே கூறும் காலுமும் உளவே - இம்மூன்று பகுதியினுந் தோழி வினாவாமல் தலைவி தானே கூறுங் காலமும் உள எ-று. உம்மையான் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியுடைத்து. உ-ம்: அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் தகாஅன் போலத் தான்தீது மொழியினுந் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநிரை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக் கடுவனு மறியுமக் கொடியோ னையே. (குறுந். 26) யாரு மில்லைத் தானே களவன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே. (குறுந். 25) இவற்றுள் துறந்தான்போலவும் மறந்தான் போலவுங் கருதித்தான் தீதுமொழியினுமெனவும் யானெவன் செய்கோ வெனவுந் தோழி வினவாக்காலத்து அவன் தவற்றை வரைவிடை வைத்தலின் ஆற்றாமைக்கு அறிவித்தாள். பகலெரி சுடரின் மேனி சாயவும் பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவும் எனக்குநீ யுரையா யாயின்நினக்கியான் உயிர்பகுத் தன்ன மாண்பினெ னாகலின் அதுகண்டிசினால் யானே யென்றுநனி அழுத லான்றிசின் ஆயிழை யொலிகுரல் ஏனல் காவலி னிடையுற் றொருவன் கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமோ டிஃதா கின்றியானுற்ற நோயே. (நற். 128) இது தோழி வினாவிய வழித் தலைவி கூறியது. வரைவிடைவைத்த காலத்து வருந்தினும் என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் (தொல். பொ. 666) என்னுந் தந்திர வுத்தியாகக் கொண்டு அதன்கண் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே அருந்துய ருழத்தலும் ஆற்றாம் அதன்றலைப் பெரும்பிறி தாக லதனினு மஞ்சுதும் அன்னோ இன்னும் நன்மலை நாடன் பிரியா அன்பினர் இருவருமென்னும் அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் துஞ்சூர் யாமத் தானுமென் நெஞ்சத் தல்லது வரவறி யானே. (குறுந். 302) இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது. அதுகொல் தோழி காமநோயே வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன்பிரிந் தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. (குறுந். 5) என்னும் பாட்டும் அது. தோழி வாழி மேனாட் சாரற் கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று புயறொடங் கின்றே பொய்யா வானம் கனைவர லழிதுளி தலைஇ வெம்முலை ஆகம் நனைக்குமெங் கண்ணே. இது வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது. பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல வாடை வந்ததன் தலையும் நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழ் கலத்திற் றோன்றி மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே. (குறுந். 240) இது பருவங்கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது. நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண் டுரையினி வாழி தோழி புரையின் உண்ணேர் எல்வளை ஞெகிழ்த்தோன் குன்றத் தண்ணல் நெடுவரை யாடித் தண்ணென வியலறை மூழ்கிய வளியென் பசலை யாகந் தீண்டிய சிறிதே. (நற். 236) இது வரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன்வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலா மென்றது. அம்ம வாழி தோழி யவர்போல் நம்முடை வாழ்க்கை மறந்தன்று கொல்லோ மனையெறி யுலக்கையின் தினைகிளி கடியுங் கானநாடன் பிரிந்தெனத் தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே. இது வன்புறை யெதிரழிந்தது. சிறுபுன்மாலை சிறுபுன்மாலை தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச் செக்கர் கொண்ட சிறுபுன் மாலை வைகலும் வருதியா லெமக்கே ஒன்றுஞ் சொல்லாயவர் குன்றகெழு நாட்டே. இது மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறியது. இன்னும்வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனெனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன்மன்ற அளியேன் யானே. (குறுந். 30) இது வரைதற்குப் பிரிய வருந்துகின்றது என்னென்றாட்குக் கனவு நலிவுரைத்தது. ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக் கணக்கலை யிகுக்குங் கடுங்குரல் தூம்பொடு இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில் விழவுக்கள விறலியின் தோன்று நாடன் உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினாஅய் புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்கல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம். 82) அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டியவாறும் அவருள் நெகிழ்ந்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங் காண்க. தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமா னோக்கின்மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையு மடைத்தாள் கதவு. (கைந்நிலை. 59) நகைநீ கேளாய் தோழி அல்கல் வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ இளைய ரெய்துதன் மடக் கிளையோடு நான்முலைப் பிணவல் சொலிய கானொழிந் தரும்புழை முடுக்கர்ஆட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப்பகழி மடைசெலன் முன்பிற்றன் படைசெலச் செல்லா தருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென எய்யாது பெயருங்குன்ற நாடன் செறியரில் துடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந்து ஏந்துகுலவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை ஏற்றிமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர இல்வந்து நின்றோற் கண்டன என்னை வல்லே யென்முக நோக்கி நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே. (அகம்.248) இவை வந்தோன் செவி லியை எதிர்ந்துழிக் கூறியன. கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளாய் அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கென்ன நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் நறாஅவவிழ்ந்த தன்னவென் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகின் உயிர்த்தலு முயிர்த்தனன் தொய்யி லிளமுலை இனிய தைவந்து தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி யளிக்கும் மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால், அல்லல் களைந்தனென் தோழி நந்நகர் அருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்து இன்னது செய்தா ளிவளென மன்னாஉலகத்து மன்னுவது புரைமே. (கலி. 54) எனக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சி நிகழ்ந்தமை கூறி அருங்கடி நீவாமை கூறின் நன் றெனத் தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி கூறினாள். சுரிதகத்து இருகாற் றோழி யென்றாள் நாணுத் தளையாக, மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக. எரியகைந் தன்ன செந்தலை யன்றில் பிரியின் வாழா தென்மோ தெய்ய துறைமேய் வலம்புரி துணைசெத் தோடிக் கருங்கால் வெண்குருகு பயிறரும் பெருங்கடற் படப்பையெஞ் சிறுநல் லூரே. இஃது, அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது. ஐயோ வெனயாம் பையெனக் கூறிற் கேட்குவர் கொல்லோ தாமே மாக்கடற் பரூஉத்திரை தொகுத்த நுண்கண் வெண்மணல் இன்னுந் தூரா காணவர் பொன்னி னெடுந்தேர்போகிய நெறியே. இஃது, அவர் இன்னும் போவதற்குமுன்னே நம் வருத்தத்தைவெளிப்படக் கூறென்றது. என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை யன்னை முகனுமதுவாகும் - பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல நில்லென் றுறை (ஐந். எழு. 58) இவை தலைவி அறத்தொடு நிற்றற்பகுதி. தோழிக்கே உரைத்தற்குத் தோழிக் கென்றார். (21) தலைவி கூற்றிற் சிறப்பில்லனகூறி அவையும் அகமெனல் 113. உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள்வழிப் படினுந் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. இது தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி அவையும் அகப்பொருளாம் என்கின்றது. (இ-ள்.) உயிரினும் நாண் சிறந்தன்று - எல்லாவற்றினுஞ் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது; நாணினுஞ் செயிர்தீர் கற்புக்காட்சி சிறந்தன்று - அந்நாணினுங் குற்றந்தீர்ந்த கற்பினை நன்றென்று மனத்தாற் காணுதல் சிறந்தது; எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய நெஞ்சுடனே; காமக்கிழவன் உள்வழிப் படினும் - தலைவன் இருந்தவிடத்தே தலைவி தானே செல்லினும்; தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் - மனவலி யின்றிச் செல்வாமெனக் கூறும் நன்மொழியினைத் தலைவிதானே கூறினும்; பொருள் தோன்றும் - அவை அகப்பொருளாய்த் தோன்றும்; ஆவகை பிறவும்மன் பொருள் தோன்றும் - அக்கூற்றின் கூறுபாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும் அகப்பொருளாய்த் தோன்றும் எ-று. என்றது தலைவி கூற்று. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் கற்புச்சிறப்ப நாண் துறந்தாலுங்குற்றம் இன்றென்றற்குச் செயிர்தீரென்றார்; நன் மொழி யென்றார் கற்பிற் றிரியாமையின்; அவை இன்னோரன்னவழி நெஞ்சொடுகிளத்தல் போல்வன. இவள் கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவதென்க. மன்: ஆக்கம், இழிந்த பொருளும் உயரத்தோன்றலின், மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங்காணேன் மாண்தக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. (குறுந். 31) யாண்டுங் காணேனென அவனை வழிபட்டுக் கூறினமையிற் கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும் பெண்டன்மையிற்றிரியக் கருதாது நன்குமதித்தவாறு காண்க. அருங்கடி யன்னைகாவ னீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை அவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி பன்னாள் கருவி வானம் பெய்யா தாயினும் அருவி யார்க்கும்அயந்திகழ் சிலம்பின் வான்றோய் மாமலை நாடனைச் சான்றோ யல்லை யென்றனம் வரற்கே. (நற். 365) கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி யீங்கிவ ணுறைதலும் உய்குவ மாங்கே எழுவினி வாழியென் நெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணிவடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நட்பே. (குறுந். 11) இவை தோழிக்கும் நெஞ்சிற்குங் கூறியன. ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமத னழியும் பானாட் கங்குலும் அரிய அல்லமன் இகுளை பெரிய கேழல் அட்ட பேழ்வா யேற்றை பலாவமல் அடுக்கம் புலர ஈர்க்குங் கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்டு எண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத் துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே (அகம். 8) என்னும் அகப்பாட்டும் அது. இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம். இனிப் பிறவாற் கொள்வன வருமாறு: பொன்னிணர்வேங்கை கவினிய பூம்பொழிலுள் நன்மலை நாடன் நலம்புனைய - மென்முலையாய் போயின சின்னாள் புனத்து மறையினால் ஏயினார் இன்றி இனிது (ஐந்திணை. ஐம். 11) கானலஞ் சிறுகுடிக் கடன்மேம் பரதவர் நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத் தண்பெரும் பரப்பின் ஒண்பத நோக்கி அங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொடு அலரே, யன்னை யறியி னிவணு வாழ்க்கை அரிய வாகும் நமக்கெனக் கூறின் கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக் கணநிரை கிளர்க்கு நெடுநெறிச் சகடம் மணன்மடுத்து உரறும் ஒசைக் கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் இருங்கழிச் சேர்ப்பின்தம் இறைவ னூர்க்கே (நற். 4) என வரும். விழுந்த மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறும் மாதர் வண்டின நயவருந் தீங்குரன் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்வரை நாடற் குரைத்த லொன்றோ துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியு மாறி துவென உரைத்தல் ஒன்றோ செய்யா யாகலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த செயலை யந்தளி ரன்னவென் மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. (நற். 244) இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது. இன்னும் அதனானே தோழியைத் தவி ஆற்றவித்தலுங் கொள்க. ஞெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந் தளிர்வனப் பிழந்தநின் றிறனும் நோக்கி யாஞ்செய்வ தன்றிவள் துயரென அன்பிறில் அழாஅல் வாழி தோழி வாழைக் கொழுமட லகலிலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன் கேண்மை நமக்கே விழும மாக அறியுநர் இன்றெனக் கூறுவை மன்னோ நீயே தேறுவென் மன்யா னவருடை நட்பே (நற். 309) என வரும். துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன் நெஞ்சுகள னாக நீயலென் யானென நல்தோள் மணந்த ஞான்றை மற்றவன் தவாஅ வஞ்சின முரைத்தது நோயோ தோழி நின்வயி னானே. (குறுந். 36) இதுவும் அது. (22) தோழி கூற்று நிகழுமிட மிவையெனத் தொகுத்துக் கூறல் 114. நாற்றமுந் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியுஞ் செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானுங் குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் முலகுரைத் தொழிப்பினும் அருமையின் அகற்சியும் அவளறி வுறுத்துப் பின்வா வென்றலும் பேதைமை யூட்டலும் முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் அஞ்சியச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணுங் குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத் தன்னொடும் அவளொடும் முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ் செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும் என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும் ஆற்றது தீமை யறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற வரினுங் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப்பிறவும் நாடு மூரும் இல்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும் முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும் ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையுந் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. இது முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுந் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்.) நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் பெட்ட வாயில் பெற்று இரவுவலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது நிகழுமென்று அறியாது அஞ்சிக் கரந்து மதியுடம்படுப்பத் தோழி மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டமாம்; அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்தற்குக் காரணம் எழுவகைய. அவை நாற்ற முதலிய ஏழும்: நாற்றமாவது, ஓதியும் நுதலும் பேதைப் பருவத்துக்குத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச்சர்ந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல். தோற்றமாவது, நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்குங் கண்ணுந், தந்நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டுந் தோளும் முலையுமென்று இன்னோரன்ன. ஒழுக்கமாவது, பண்ணையாயத்தொடு முற்றிலான் மணற் கொழித்துச் சோறமைத்தல் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு ஏற்ப ஒழுகுதல். உண்டியாவது, பண்டு பால் முதலிய கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு வருகின்றாள், இப்பொழுது ஆசாரமும் நாணுங் காதலும் மீதூர அதன்மேல் உவப்பு ஆண்டு இன்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல். செய்வினை மறைத்தலாவது, முன்பு போலாது இக்காலத்து நினைவுஞ் செயலுந் தலைவனொடு பட்டனவே யாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்; அஃது ஆயத்தொடு கூடாது இடந்தலைப் பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம். செலவாவது, பண்டுபோல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறல். பயில்வாவது, செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறல். இன்சாரியை. புணர்ச்சி எதிர்ப்பாடு - எதிர்ப்பாட்டுப் புணர்ச்சியென மாறுக. அது கொடுப்பாரும் அடுப்பாருமின்றி இருவருந்தமியராய் எதிர்ப்பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகாது. உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - அப்புணர்ச்சி யெதிர்ப்பாடு நிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத்துள்ளே வினாவி வருகின்ற ஐயவுணர்வினை அவ்வேழனானுந் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதனை உணர்ந்த பின்றை: இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்ஙனந் துணிந்த பின்னல்லது தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தாளென்றற்குப் பின்றை யென்றார். உ-ம்: காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கணும் வீங்கிள முலையும் வேறுபட் டனவே தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற் பகலும் கங்குலு மகலா தொழுகுமே நன்றி யளவைத் தன்றிது எவன்கொன்மற்றிவட் கெய்திய வாறே. இதனுள் நாற்றமுந் தோற்றமுஞ் செலவும் வந்தன. கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும் நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் நெஞ்சே. (சிற்றெட்டகம்) தெய்வத்தி னாயதுகொல் தெண்ணீர் புடையடுத்த வையத்து மக்களின்ஆயதுகொல் - நைவுற்று வண்டார்பூங் கோதை வரிவளைக்கை வாணுதலாள் பண்டைய ளல்லள் படி. இவையும் அவை. ஏனல் காவ லிவளும் அல்லள் மான்வழி வருகுவன்இவனும் அல்லன் நரந்தங் கண்ணியிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே எம்முன் நாணுநர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி னானே. இது புணர்ச்சி உணர்ந்தது. இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே இவன்வயிற் செலினே யிவட்கு மற்றே காக்கை யிருகணி னொருமணி போலக் குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவாழ் உயிரே. இதுவும் அது. மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தானும் - அங்ஙனம் உணர்ந்தபின் தோழி தலைவியுடன் ஆராயுங்காற் றன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத்துக் கூறவேண்டுத லில் உண்மைப் பொருளானும் பொய்ப் பொருளானும் விராவிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யுந் தன்மையின் தப்பாதவற்றான் வேறுபல் கவர்பொருள் படக்கூறி ஆராயும் ஆராய்ச்சிக்கண்ணும்: நாணான் இறந்து படாமற் கூறுதற்கு வழிநிலை பிழையாது என்றார். பிறைதொழுவா மெனவுங், கணைகுளித்த புண்கூர் யானை கண்டனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறு சொற் கூறிக் குறைவுற்று நிற்கின்றான் ஒருவனுளன் அவனை நீயுங் காண்டல் வேண்டுமெனவும், அவன் என்னைத் தழுவிக் கொண்டு குறைகூறவும் யான் மறுத்து நின்றே னென்றாற் போலவும் மெய்யும் பொய்யும் விராயும் பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம். உ-ம்: முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் பெருகொளியான்மிக்க பிறை. இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறைதொழாமை அறிந்து கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர்பொருளாயிற்று. பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை யறிவன்மன் - தொண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் உதிர முடைத்திதன் கோடு. (சிற்றெட்டகம்) இது நடுங்க நாட்டம்; இஃது இறந்துபாடு பயத்தலிற் கந்தருவத்திற்கு அமையாது. தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித் தெய்வங் கமழுமால் ஐம்பாலும் - ஐயுறுவல் பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க் கென்னை இதுவந்த வாறு என வழிநிலை பிழையாமற் கவர்பொருளாக நெறிபடுநாட்டம் நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினேற்கு இங்ஙனம் ஆயிற்றென்னும். அதுகேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்பல் என்னும். உ-ம்: பையுண் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப்பறை வாவல் நோன்சிற் கேய்க்கும் மடிசெவிக்குழவி தழீஇப் பெயர்தந்து இடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ் உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங் கடுங்கண் யானை காலுற வொற்றலிற் கோவாஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புன லலைவாய்க் கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் களித்த வொண்பொறி மஞ்ஞை போல்வதோர் கண்கவர் காரிகை பெறுதலுண்டெனினே என வரும். நெருந லெல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச் சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண் குளிர்கொள் தட்டை மதனில புடையாச் சூரர மகளிரின் நின்ற நீமற் றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டு இகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் உள்ளவ னறித லஞ்சி உள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற என்னுரத் தகைமையிற் பெயர்த்துப் பிறி தென்வயிற் சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந் தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந் தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே மாசின் றாதலு மறியா னேசற் றென்குறைப் புறனிலை முயலும் அண்க ணாளனை நகுகம் யாமே. (அகம். 32) என்னும் அகப்பாட்டுங் கொள்க. எழாஅ வாகலின் எழினலந் தொலைய அழாஅ தீமோ நொதுமலர் தலையே யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரிமழைக்கண் நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற் பிதிரிற் சிறுபல தாஅய் வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி மயிலறி பறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே. (நற். 13) இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயுந் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது. நாட்டத்தானும் என்னும் உம்மை முற்று, நாட்ட மெல்லாந் தழீஇயினமையின் ஆனுருபு இடப் பொருட்டாம். அஃது இடமாக வருகின்ற எட்டனையும் இடத்தியல் பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற எட்டனையுந் தலைவற்கு உரைக்குங் காலமும் ஒருங்கு நிகழுமென்பதாம். இங்ஙனம் நாடி மதியுடம்படுக்குந் துணையுந் தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும். குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறக் தொடங்கிய தலைவனைத் தோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும்: தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்பின்மை ஒருதலையாக உடையளல்லள். உ-ம்: கல்லோங்கு சாரற் கடிபுனங் காத்தோம்பு நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த வான்றோய் குடிக்கு வடுச்செய்தல் தக்கதோ தேன்றோய்பூங் கண்ணியீர் நீர் மறுவொடு பட்டன மாமலை நாட சிறுகுடியோர் செய்வன பேணார் - சிறுகுடிக்கு மூதான் புறத்திட்ட சூடேபோல் நில்லாதே தாதாடு மார்ப பழி. தகைமாண் சிறப்பிற் சான்றோர்க் கொத்த வகையமை வனப்பினை யாகலின்உலகமொடு பாற்படற் பாலை மன்னோ காப்புடுத்து ஓங்குய ரடுக்கத்துச் சார்ந்துவளர் நனந்தலை நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர் இன்னர் என்னா தின்பம் வெஃகிப் பின்னிலை முயற்சியின் வருந்தினும் நும்மோர் அன்னோர்க்குத் தகுவதோ வன்றே. என வரும். இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு மீனெறி பரதவர் மகளே, நீயே நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே. (நற். 45) இதுவும் அது. உலகு உரைத்து ஓழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற் கரந்த தோழி உலகத்தாரைப்போல் வரைந்து கொள்ளெனக் கூறித் தலைவனை நீக்கினும்: உ-ம்: கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற் றெண்கழிச் சேயிறாப் படூஉந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ (ஐங்குறு. 196) அருமையின் அகற்சியும் - அவை கேட்டுப் பிற்றை ஞான்றும் வந்தவன்மாட்டுச் சிறது நெஞ்சுநெகிழ்ந்த தோழி அங்ஙனங் கூறாது இவள் அரியளெனக் கூறுதலும்: இருவருமுள்வழி யவன்வர வுணர்தலின் இருவருள்ளமும் உணர்ந்து அங்ஙனங் கூறனாள். நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப் புதுவை யாகலிற் கிளத்த னாணி நேரிறை வளைத்தோணின் றோழிசெய்த ஆரஞர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர் கட்காண் கடவு ளல்லளோ பெரும வாய்கோன் மிளகின் அமலையங் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும் மஞ்சுசூழ் மணிவரை மன்னவன்மகளே. (பொருளியல்) தழையொடு தண்கண்ணி தன்மையாற் கட்டி விழையவுங கூடுமோ வெற்ப - விழையார்ந் திலங்கருவி பொன்கொழிக்கு மீர்ங்குன்ற நாட குலங்கருதி வாழ்வார் மகள். அவள் அறிவுறுத்துப் பின் வா என்றலும் - தலைவனை நோக்கி நீ காதலித்தவட்கு நீயே சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வருக வென்றலும்: அவன் அறிவுறுத்து என்று பாடமோதுவாரும் உளர். உ-ம்: தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கிஃதுரைப்பின் என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய வேயேர்மென் றோளிக்கு வேறாய் இனியொருநாள் நீயே யுரைத்து விடு. இது நீயே யுரையென்றது. நாள்வேங்கை பொன்சொரியும் நன்மலை நன்னாட கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார் - கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக் கென்னையோ நாளை எளிது. (திணை. நூற். 20) இது கையுறைமறுத்துப் பின் வருக என்றது. இவை ஒரு கூற்றாக வருவன வுளவேற் காண்க. பேதைமை ஊட்டலும் - அங்ஙனம் பின் வருகவென்றுழி முன் வந்தானை அறியாமை ஏற்றிக் கூறலுந், தலைவியையும் அங்ஙனம் அறியாமை யேற்றிக் கூறலும்: உ-ம்: நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று கடுங்களிறு காணிரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனற் கிளிகடிகு வார். வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பில் வாங்கமை மென்றோட் குறவர்மகளிரேஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புறம் போந்ததில் ஐய களிறு. (திணை. ஐம். 8) இவை தலைவனைப் பேதைமை ஊட்டின. நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - எறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு. (திணை. நூற். 24) இது தலைவியைப் பேதைமை யூட்டியது. இளையள் விளைவிலள் என்பதூஉம் இதன்கண் அடங்கும். புன்றலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகாது எரியகைந் தன்ன வீததை யிணர வேங்கையம் படுசிலைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி எழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅ யவ்வயிறலைத்தலின் ஆனா தாடுமழை தவழுங் கோடுயர் பொதியின் ஓங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே (நற். 379) என வரும். முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்து உரைத்தலும் - அங்ஙனம் பேதைமை யூட்டியவழி இவள் இக்குறை முடிப்பளென்று இரந்து ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி யறிந்திலள் போற் கூறினாளென ஆற்றானாய வனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவலென்று கூறி வருத்தந் தீர்த்தலும். உ-ம்: நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை சிறுமுதுக்குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவல் எனக்கே நின்னுயிர் அன்னள் ஆயினுந் தன்னுறு விழுமங் கரத்த லானே. நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல் நீ அவட்கு உரைத்தியெனக் கருதியென்றலிற் புணர்ச்சி யுணர்ந்தமை கூறினாள். அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ஙனம் ஆற்றுவித்துங் கடிது குறை முடியாமை யைக் கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறுலும்: அஞ்சுதல் அச்சென்றாயிற்று. இவ்வச்சங் கூறவே அவன் ஆற்றும். உ-ம்: யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் கரும்பு மருண்முதல பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோ ரெஃகுவிளங்கு தடக்கை மலயன்கானத்து ஆரம் நாறு மார்பினை வாரன்மற் றைய வருகுவள் யாயே. (குறுந். 198) இவை யாயை அஞ்சியது. யானை யுழலும் அணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம் ஏனலுள் ஐய வருதன்மற் றென்னைகொல் காணினுங் காய்வர் எமர். (திணை. ஐம். 6) இது தமரை அஞ்சிக் கூறியது. உரைத்துழிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும் - ஆயத்தினீங்கித் தன்னோடு நின்ற தலைவியை அவனொடு கூட்ட வேண்டி அவளினீங்கித் தலைவற்கு இன்னுழி எதிர்ப்படுதியென உரைத்த விடத்துக் கூடுங் கூட்டத்தோடே ஒழியாமற் கிளந்த எண்வகைக் கிளவியும்: உ-ம்: நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க செல்கஞ் செலவியங் கொண்மோ அல்கலும் ஆரல் அருந்தும் வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் நுதலே. (குறுந். 114) வந்தனென் என்றும், என் மகள் என்றும் ஒருமை கூறிச் செல்கம் என்ற உளப்பாட்டுப் பன்மையான் தலைவி வரவுங்கூறி இடத்துய்த்தவாறு முணர்த்தினாள். செலவியங் கொண்மோ என்றது நீயே அவளைப் போகவிடுவாய் என்றதாம். நாட்டந் தன்மனத்து நிகழாநிற்றலும் அவன் மனத்துக் குறையுணர்த்துதல் நிகழாநிற்றலு மென்னும் இரண்டினையும் எஞ்சாமற் றழீஇநிற்கும் இவ்வெட்டு மென்றற்கு எஞ்சாது என்றார். வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங்குறித்த காலையும் - தன் முன்னர் வந்து நின்ற தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்றேயும் வாராதான்போல மாயமேற்றி அதனைப் பொறுத்த காரணங் குறிப்பினாற் கொள்ளக் கூறுங்காலைக் கண்ணும்: காரணமாவது நீ அரியையாதலின் இவள் ஆற்றாளாமென்று எதிர்கொள்கின்றே மென்றல்; கூட்டம் நிகழ்ந்தபின் தோழி இவ்வாறு கூறுதற்கு உரியளென்று அதன்பின் வைத்தார். இஃது அவன் வரவை விரும்பியது, வரைவு கடாயதன்று. உ-ம்: நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக் கடல்பா டழிய இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளைய முதியருங் கிளையுடன் துவன்றி உப்பொய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ அயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப் பெருங்களந் தொகுத்த வுழவர் போல இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ பெருமை யென்பது கெடுமோ வொருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்துநும் வண்ணம் எவனோ வென்றனிர் செலினே. (அகம். 30) இதனால் தம்மான் இடையூறெய்தி வருந்துகின்றானை ஒருநாள் வந்திலிரென மாயஞ் செப்பியவாறும், நீர் வாராமையின் வண்ணம் வேறுபடுமென ஏற்றுக் கோடுமெனக் காரணங் கூறியவாறுங் காண்க. தம்மேல் தவறின்றாகக் கூறுங்காலத்து இது கூறுவரென்றற்குக் குறித்த காலை யென்றார். புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும் - அக்கூட்டத்தின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந்தொழுகு மிடத்தும்: உ-ம்: இவளே, நின்சொற் கொண்ட வென்சொல் தேறிப் பசுநனை ஞாழல் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்த புலம்புமா ருடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவு மிருளும போலப் புலவுத்திரைக் கடலுங் கானலும் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே (குறுந். 81) வாங்கு கோனெல்லொடு என்னுங் குறிஞ்சிக்கலியுள், அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த உரவுவில் மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப் படிகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும்... (கலி. 50) எனவும், கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங் கொடுமையிலை யாவ தறிந்தும் அடுப்பல் வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே. (கலி. 50) எனவும் வரும். இத்துணையும் ஒரு கூட்டங் கூறினார். குறைந்து அவட் படரினும் - தலைவன் இரந்து பின்னின்றமை கண்டு தோழி மனம் ஞெகிழ்ந்து தான் குறை நேர்ந்து தலைவியிடத்தே சென்று குறைகூறினும்: உ-ம்: வளையணி முன்கை வாலெயிற் றின்னகை யிளைய ராடுந் தளையவிழ் கானல் விருந்தென வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே (ஐங்குறு. 198) என வரும். மறைந்தவள் அருக - நாண் மிகுதியான் தனது வேட்கை மறைந்த தலைவி அக்கூற்றிற்கு உடம்படாது நிற்றலால்; தன்னொடும் அவளொடும் முதன் மூன்று அளைஇ - தலைவனோடுந் தலைவியோடும் நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி முதலிய மூன்றனையுந் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி; பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும் - இரந்து பின்னிற்றல் பலவாய் வேறுபட்டு நடக்குமிடத்தும்: அவை பெருந்தன்மையானொருவன் யானை முதலியன வினாயுந் தழையுங் கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வாரா நின்றானெனவும், அவன் என்மாட்டுப் பெரிதுங் குறையுடைய னெனவும், அவன் குறைமுடியாமையின் வருந்தா நின்றானெனவும், அத்தழை நீ ஏற்றல் வேண்டுமெனவும், அக்குறை முடித்தற்கு இஃதிடமெனவும், யான் கூறியது கொள்ளாயாயின் நினக்குச் செறிந்தாருடன் உசாவிக் குறை முடிப்பாயெனவும், மறுப்பின் அவன் மடலேறுவனெனவும், வரை பாய்வனெனவும், பிறவாற்றானுங் கூறிக் குறைநயப்பித்தலாம். உ-ம்: புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் சாரல் தினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவல் உற்றதொன்று ண்டு. (ஐந்திணை ஐம். 14) கைதையந் தண்கானற் காலையும் மாலையும் எய்த வரினும்இதுவெங் குறையென்னான் செய்தழையுங் கண்ணியுஞ் சேர்ந்துழி வைத்திறந்தான் உய்யலன் கொல்லோ வுணரலனே யென்றியால். ஒருநாள் வாரல னிருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே. (குறுந். 176) புணர்துணையோ டாடும் பொறியலவ னோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரியைம் பாலோய் வண்ண முணரேனால். (சிலப். கானல்.31) ஓரை யாய மறிய வூரன் நல்கினன் தந்த நறும்பூந் தண்டழை மாறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து நெடுமொழி விளக்குந் தொல்குடி வடுநாம் படுத்தல் அஞ்சுதும் எனவே. இது கையுறை ஏற்பத் தலைவிக்குக் கூறியது. சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் உடுக்குந் தழைதந் தனனே யவையாம் உடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் கேளிடைக் கேடஞ் சுதுமே யாயிடை வாடுப கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை யடுக்கத்த கொயற்கருந் தழையே. (நற். 359) இதுவும் அது. இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண் வாடை கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற நாடன் உலைவுடை வெந்நோ யுழக்குமால் அந்தோ முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே. அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன செவ்வரி யிதழ சேணாறு பிடவின் நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் வளமலை நாடன் நெருநல் நம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது அல்லல் அன்றது காதலந் தோழி தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி கண்டுங் கழறொடி வலித்தவென் பண்பில் செய்தி நினைப்பா கின்றே. (நற். 25) மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி அம்மலைக் கிழவோன் நம்நயந் தென்றும் வருந்தின னென்பதோர் வாய்ச்சொல் தேறாய் நீயும் கண்டு நுமரொடும் எணணி அறிவறிந் தளவல் வேண்டு மறுத்தரற் கரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே. (நற். 32) மறவல் வாழி தோழி துறைவர் கடல்புரை பெருங்கிளை நாப்பண் மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும் - அங்ஙனந் தோழி கூறிய குறையினை அவள் அருளப் பெற்றவழி அதனைத் தலைவற்குக் கூறுதற்கு விரும்புமிடத்தும்: அவை தலைவனாற்றாமை கண்டு தோழி கையுறை யெதிர்தலும், இரவுக்குறியும் பகற்குறியும் நேர்தலுங், குறியிடங் காட்டலும், பிறவுமாம். உ-ம்: பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைகள் என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்று ரைத்தால் உண்கண்ணி வாடா ளுடன்று. (திணை. நூற். 21) இதனுட் கண்கண்ணி - குறுங்கண்ணி. நிலாவின்இலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை ஊரென வுணராச் சிறுமையொடு நீருடுத் தின்னா வுறையுட் டாயினு மின்பம் ஒருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாள் தம்பதி மறக்கும் பண்பி னெம்பதி வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப பொம்மற் படுதிரை கம்மென வுடைதரு மரனோங் கொருசிறைப் பலபா ராட்டி எல்லை யெம்மொடு கழிப்பி எல்லுற நற்றேர் பூட்டலு முரியி ரற்றன்று சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் எம்வரை அளவையிற் பெட்குவம் நும்மொப் பதுவோ உரைத்திசி னெமக்கே (அகம். 200) கடும்புலால் புன்னை கடியுந் துறைவ படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழில் ஏழைமா னோக்கி யிடம் (திணை. நூற். 44) எனவரும். இன்னும் நயம்புரியிடத்தும் என்றதனான் அவன் வரவினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. இவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழைத் திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் நிறைபட வோங்கிய முழ வுமுதற் புன்னை மரவரை மறைகம் வம்மதி பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணா அல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே. (நற். 307) இது, தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தங் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ வெனக்கூறியது. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவந் தொழுகுதற்குப் பொறாத தோழி அவன் இளிவரவு உணர்த்துங் கருத்தினளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரியவாய் வரும் ஒன்றல்லாப் பல நகை குறித்த பகுதிக்கண்ணும்: அவை என்னை மறைத்த லெவனாகியர் என்றலும், அறியாள் போறலுங், குறியாள் கூறலும், படைத்துமொழி கிளவியுங், குறிப்பு வேறு கொளலும், பிறவுமாம். உ-ம்: நிறைத்திங்கள் சேர்ந்தோடு நீண்மலை நாட மறைக்கப் படாதேனை மன்னு - மறைத்துக்கொண் டோடினா யாதலா லொண்டொடியாள் தன்பக்கங் கூடக் கிடந்ததொன்றில். மன்னேர்மன் சாய லவருண் மருடீர இன்னார்கண் என்ப தறியேனான் - மின்னூருங் கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட யார்கண்ண தாகுங் குறை. தன்னெவ்வங் கூரினும் நீசெய்த வருளின்மை என்னையு மறைத்தாளென் தோழி யதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தானாணி. (கலி. 44) இது, பழிகூறுவேனென்று தலைவி குறியாததொன்றைத் தோழி கூறினது. விருந்தின ராதலின் வினவுதிர் அதனெதிர் திருந்துமொழி மாற்றந் தருதலும் இயல்பெனக் கூறுவ தம்ம யான்ஊறுபல வருமென அஞ்சுவன் வாழிய ரைய வெஞ்சா தெண்ணில ரெண்ணியது முடிப்பர் கண்ணிலர் கொடியரிவ டன்னை மாரே. இது, நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது. நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ. இது குறிப்பு வேறு கொண்டாளென்றது. புணர்ச்சி வேண்டினும் - தலைவன் பகற்குறியையும் இரவுக் குறியையும் விரும்பிக் கூறுமிடத்தும்: தோழிமேன கிளவி. அவை பலவகைய. உ-ம்: நன்னலஞ் சிதைய நாடொறும் புலம்பப் பொன்னிணர் வேங்கை துறுகற் றாஅய் இரும்பிடி வெரூஉ நாடற்கோர் பெருங்க ணோட்டஞ் செய்தன்றோ விலமே. இது, தோழி தலைவியைப் பகற்குறி நயப்பித்தது. மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங் கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ - கானல் இடையெலா ஞாழலும் தாழையும் ஆர்ந்த புடையெலாம் புன்னை புகன்று. (திணை. நூற். 58) ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந் துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. (குறுந். 113) இவை பகற்குறி நேர்ந்து இடங்காட்டின. செங்களம் படக்கொன்றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. (குறுந். 1) இது, தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது. ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே பாடின் னருவி யாடுத லினிதே நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற் பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ யன்னை முயங்கத் துயிலின் னாதே. (குறுந். 353) இஃது இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாகப் பகற்குறி நேர்வாள்போல் இரவுக்காப்புமிகுதி கூறியது. பாடின்னருவி ஆட என்றாள் அதன்கண் உதவினானென்பது பற்றி; அல்லது களவிற்குஉடன் ஆடுதலின்று. செறுவார்க் குவகை யாகத் தெறுவர ஈங்கும் வருபவோ தேம்பாய் துறைவ சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. (குறுந். 336) இது, தலைவன் இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தது. நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப மன்றம் போழு நாடன் றோழி சுனைப்பூங் குவளைத் தொடலை தந்துந் தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுங் காலை வந்து மாலைப் பொழுதில் நல்லக நயந்துதான் உயங்கிச் சொல்லவு மாகா தஃகி யோனே. (குறுந். 346) இது, தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது. தண்ணந் துறைவன்கடும்பரி மான்தேர் காலை வந்து மாலை பெயரினும் பெரிது புலம்பின்றே கானல் சிறிது புலம்பினமால் தோழி நாமே. இது, தலைவியது ஆற்றாமைகண்டு நம் வருத்தந் தீர்தற்கு இரவுக்குறியும் வேண்டுமென்றது. ஏனம் இடந்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொல் தோழிநம் மேனி பசப்புக் கெட. (திணை. ஐம்.4) இது தலைவன் வருவனென்றது. சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலும் இரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே. (சிற்றெட்டகம்) இஃது இரவுக்குறி, தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தண்கயத் தமன்ற கூதளங் குழைய இன்னிசை யருவிப் பாடு மென்னதூஉங் கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை ஊட்டி அன்ன வெண்டளிர்ச் செயலை ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென முழுமுத றுமிய உருமெறிந் தன்றே பின்னுங் கேட்டியோ வெனவுமஃதறியாள் அன்னையுங் கனைதுயின் மடிந்தனள் அதன்றலை மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் வருவ ராயிற் பருவ மிதுவெனச் சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த நம்வயிற் படர்ந்த வுள்ளம் பழுதின்றாக வந்தனர் வாழி தோழிஅந்தரத் திமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத் தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக் கன்றுகால் ஒய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும் அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப் பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே. (அகம். 68) இது, தாயது துயிலுணர்ந்து தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற்செனற்து. சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறைபுலம் பின்றே இறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய கருங்கோட்டுப் புன்னைஇறை கொண்டனவே கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ எமரும் வேட்டம் புக்கனர்அதனால் தங்கி னெவனோ தெய்ய பொங்குபிசிர் முழவிசைப் புணரி யெழுதரும் உடைகடற் படப்பையெம் முறைவி னூர்க்கே. (நற். 67) இஃது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது. ஆம்பல் நுடங்கும் அணித்தழையும் ஆரமுந் தீம்புனல் ஊரன் மகளிவள் - ஆய்ந்தநறுந் தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரைதன்னையர் பூ (திணை. ஐம். 40) இஃது இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தினைகண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாகவென்றது. கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கானல் அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்தே முன்றில் இளமணன்மேன் மொய்த்து (திணை. நூற். 5) இஃது இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது. எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய கடவுண் முதுமரத் துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாவும் வலிமுந்து கூகை மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத் துஞ்சா தலமரு பொழுதின் அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே. (நற். 83) இஃது இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது. நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத் தன்ன விடனுடை வரைப்பில் பாவை யன்ன நிற்புறங் காக்குஞ் சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள் கெடுத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு நன்மார் படைய முயங்கி மென்மெலக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி கீழு மேலுங் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போலத் தமியன் வந்தோன் பனியலை நிலையே. (நற். 182) இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ என்றது. வேண்டாப் பிரிவினும் - தலைவன்றான் புணர்ச்சியை விரும்பாது பிரிவை விரும்பிய இடத்தும்: அப்பிரிவு தண்டாதிரத்தலை முனிந்த மற்றையவழி இட்டுப் பிரிவும் அருமைசெய் தயர்த்தலு (111) மாம்; ஆண்டுத் தலைவற்குந் தலைவிக்குங் கூறுவன கொள்க. உ-ம்: முத்தம் அரும்பு முடத்தாண் முதிர்புன்னை தத்துந் திரையலைக்குந் தண்ணங் கடற்சேர்ப்ப சித்திரப் பூங்கொடியே யன்னாட் கருளீயாய் வித்தகப் பைம்பூணின் மார்பு. (திணை. ஐம். 42) இறவுப்புறத் தன்னபிணர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பின்அன்ன அரும்புமுதிர்பு நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப இனமணி நெடுந்தேர்பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னாள் வாழ்வா ளாதல் அறிந்தனை சென்மே. (நற். 19) இது பிரிவுவேண்டியவழிக் கூறியது. சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம் இருங்கல் விடரளை வீழ்ந்தெனவெற்பிற் பெருந்தே னிறாலொடு சிதறுநாடன் பேரமர் மழைக்கண் கலுழத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய். (ஐங்குறு. 214) எனவும் வரும். வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குத் தாஞ் சில கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும்: அது தலைவி வேளா ணெதிரும் விருந்தின்கண் (107) தோழி கூறுவதாம். உ-ம்: பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து புன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வலவன் வண்டேர்இயக்க நீயுஞ் செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங் கானற் பவத்திரி யனவிவள் நல்லெழில் இளநலந் தொலைய வொல்லெனக் கழியே யோத மல்கின்று வழியே வள்ளெயிற் றரவொடு வயமீன்கொட்குஞ் சென்றோன் மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் தவலம் வீட இன்றிவண் சேப்பின்எவனோ பூக்கேழ் புலம்ப பசுமீன் நொடுத்த வெண்ணென்மாத் தயிர்மிதி மிதவை மாவார் குநவே நினக்கே வடவர்தந்த வான்கேழ் வட்டம் குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவந் திண்டிமில் எல்லுத் தொழின்மடுத்த வல்வினைப் பரதவர் கூர்வளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கட லசைவளி யெறிதொறும் வினைவிட்டு முன்றிற் றாழைத் தூங்குந் தெண்டிரைப் பரப்பினெம் உறைவின்ஊர்க்கே (அகம். 340) இதனுள் தனக்கும் புரவிக்குங் கொடுப்பன கூறித்தடுத்தவாறு காண்க. நாள்வலை முகந்த (அகம். 300) என்பதும் அது. புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலத்து அவன் தீங்கு உணராது, அவனை நன்றாக உணர்ந்த அறிவினது மடப்பங்கூறித் தங்காதற்சிறப்பு உரைத்த இடத்தும்: உ-ம்: சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் தெற்றென இறீஇயரோ வைய மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல் எமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே. (குறுந். 169) இஃது அவனொடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றியமையாமை கூறிக் காதற்சிறப்பு உரைத்தது. ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - தலைவற்குத் தலைவியைப் பாதுகாத்துக் கொள்ளெனக் கூறுங் கிளவியது பகுதிக்கண்ணும்: தோழிமேன கிளவி. பகுதியாவன வரைவிடைப்பிரிவு முதலிய பிரிவிடத்தும் புனத்திடைச் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்துங் கூறுவனவாம். உ-ம்: நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ நெய்தன் மாமலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவுநீர்ச்சேர்ப்ப தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா யென்னுங் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினளென் தோழி தன்னுறு விழுமங் கலைஞரோ விலளே (குறுந். 397) பெருநன் றாற்றிற் பேணாரு முளரே வொருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர அளிமதி யிலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சும் நன்மலை நாட நின்னல திலளே (குறுந். 115) எறிந்தெமர் தாமுழுத வின்குர லேனன் மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி மாமலை நாட மடமொழி தன்கேண்மை நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு (ஐந்திணை ஐம். 18) அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவி நீள்புனங் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. (ஐங்குறு. 284) இது, தினை அரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள்போற் சிறைப்புறமாக ஓம்படுத்தது. இன்னும் ஓம்படைக் கிளவியென்றதற்கு இவளை நீ பாதுகாத்துக் கொள்ளென்று தலைவன் கூறுங் கிளவியது பகுதிக்கண்ணுமென்றும் பொருள் கூறுக. பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்கூண் ஆயத் தோரான் தெண்மணி பைப்பய விசைக்கும் அத்தம் வையெயிற் றிவளொடுஞ் செலினோ நன்றே குவளை நீர்சூழ் மாமலர் அன்ன கண்ணழக் கலையொழிய பிணையிற் கலங்கி மாறி அன்பிலிர் அகறிர் ஆயின் என்பரம் ஆகுவ தன்றிவள் அவலம் நாகத் தணங்குடை அருந்தலை யுடலி வலனேர்பு ஆர்கலி நல்லேறு திரிதருங் கார்செய் மாலை வரூஉம் போழ்தே. (நற். 37) இது, வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்துக் கொண்டிரு என்றாற்குத் தோழி கூறியது. செங்கடுமொழியாற் சிதைவுடைத்தாயினும் - தோழி செவ்வனங் கூறுங் கடுஞ்சொற்களான் தலைவி நெஞ்சு சிதைவுடைத் தாயினும்: ஆண்டுந் தோழிமேன கிளவி. அவை தலைவனை இயற்பழித்தலுந் தலைவியைக் கழறலுமாம். உ-ம்: கெளவையும் பெரும்பழி தூற்ற னலனழிந்து பைதலஞ் சிறுநுதல் பசலை பாய நம்மிதற் படுத்த அவரினும் அவர்நாட்டுக் குன்றங் கொடியகொல் தோழி ஒன்றுந் தோன்றாமழைமறைந் தனவே. இது வரைவிடைப் பருவங்கண்டு அழிந்த தோழி இயற்பழித்தது. மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெய லுழந்த இரும் பிணர்த் துறுகல் பைத லொருதலை சேக்கும் நாடன் நோய்தந் தனனே தோழி பசலை யார்ந்தன குவளையங் கண்ணே (குறுந். 13) கேழல் உழுத கரிப்புனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந் தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி நேர்வளை நெஞ்சூன்று கோல். (ஐந்திணை எழு. 11) இஃது அவன் சூளுறவு பொய்த்ததென இயற்பழித்தது. மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர்போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. (குறுந். 73) மெய்யில் தீரா மேவரு காமமோடு எய்யா யாயினு முரைப்பல் தோழி கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே அருவி யான்ற பைங்கால் தோறும் இருவி தோன்றிய பலவே நீயே முருகு முரண்கொள்ளுந் தேம்பாய் கண்ணிப் பரிபன் நாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோடமைந்தனை யாழநின் பூக்கெழு தொடலை நுடங்க எழுந்தெழுந்து கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி ஆங்காங் கொழுகா யாயி னன்னை சிறுகிளி கடிதல் தேற்றா ளிவளெனப் பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின் உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே. (அகம். 28) என வரும். இதனானே வரையும் பருவமன்றெனக் கூறுதலுங் கொள்க. என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலை யடுத்த வன்புறைக் கண்ணும் - என்பு உருகுமாறு தலைவனாற் பிரியப் பட்ட தலைவிக்கு வழிபாடாற்றிச் சென்று தான் கூறும் மொழியை அவள்மனத்தே செலுத்தித் தலைவன் அன்பை அவளிடத்தே சேர்த்துக் கூறிய வற்புறுத்தற் கண்ணும்: அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுழிப் பிரிதலுங், காவற்குப் பிரிதலுமாம். ஆண்டு வற்புறுத்துங் கால் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் பிறவாறும் வற்புறுத்தும். முன் செங்கடு மொழியா லென்புழி இயற்பழித்தனவும் வற்புறுத்துதல் பயனாகக் கூறியன வென்றுணர்க. உ-ம்: யாஞ்செய் தொல்வினைக் கெவன்பே துற்றனை வருத்தல் வாழி தோழி யாஞ்சென் றுரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக் கடல்விளை யமிழதம் பெயற்கேற் றாஅங் குருகியல்குத லஞ்சுவ லுதுக்காண் தம்மோன் கொடுமை நம்வயி னேற்றி நயம்பெரி துடைமையிற் றாங்கல் செல்லாது கண்ணீரருவி யாக அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே. (நற். 88) இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது. தோளுந் தொல்கவின் றொலைந்தன நாளும் அன்னையும் அருந்துய ருற்றனள் அலரே பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் நேரா வெழுவ ரடிப்படக் கடந்த ஆலங் கானத் தார்ப்பினும் பெரிதென ஆழல் வாழி தோழி யவரே மாஅல் யானைமறப்போர்ப் புல்லிக் காம்புடை நெடுவரை வேங்கடத் தும்பர் அறையிறந் தகன்றன ராயினு நிறையிறந் துள்ளா ராதலோ வரிதே செவ்வேன் முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக்கொன்று சேரலர்க் கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவு ளாக்கிய பலர்புகழ் பாவை யன்னநின் னலனே. (அகம். 209) அழிய லாயிழை யிழிபு பெரி துடையன் பழியு மஞ்சும் பயமலை நாடன் நில்லாமையே நிலையிற் றாகலின் நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் தங்குதற் குரிய தன்றுநின் அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே. (குறுந். 143) என்னுங் குறுந்தொகையுங் கொள்க. பெருங்கை யிருங்களி றைவனம ந்திக் கருங்கான்ம ராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ் சுரும்பிமிர் சோலை மலைநாடன்கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து. (ஐந்திணை எழு. 12) இவை இயற்பட மொழிந்து வற்புறுத்தன. இன்னும் அன்பு தலையடுத்த வன்புறை என்றதனாற் பிறவுங் கொள்க. பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் கோல் கொண் டலைப்பப் படீஇயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுற் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பனி யரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந் தவல நெஞ்சினம் சினம்பெயர வுயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்ப னொடுதேர் நுண்ணுக நுழைத்த மாவே. (நற். 58) இது, பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது. விளையாட டாயமொ டோரை யாடா திளையோ ரில்லிடத் திற்செறிந் திருத்தல் அறனு மன்றே யாக்கமுந் தேய்மெனக் குறுநுரை சுமந்து நறுமல ருந்திப் பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண வாடுகம் வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே செல்கென விடுநண்மற் கொல்லோ வெல்லுமிழ்ந் துரவுரு முரறு மரையிரு ணடுநாட் கொடிநுடங் கிலங்கின மின்னி ஆடுமழை யிறுத்தன்றவர் கோடுயர்குன்றே. (நற். 68) இது, வரைவுநீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனங் கூறுவாரைப் பெறினெனக் கூறி வற்புறுத்தது. மறுகுபு புகலு நெஞ்ச நோயின் றிறுகப் புல்லி முயங்குகஞ் சிறுபுன் மாலை செயிர்ப்ப நாமே. இது, பிரிவிடையாற்றாத தலைவியைத் தோழி நன்னிமித் தங்கூறி வற்புறுத்தது. ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் - தலைவன் வருகின்ற நெறியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றதனானே எய்திய கலக்கத்தின் கண்ணும்: தோழிமேன கிளவி. உ-ம்: கழுதுகால் கிளரஊர்மடிந் தன்றே உருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார் வயக்களிறு பொருத வாள்வரி யுழுவை கன்முகைச் சிலம்பிற் கழூஉ மன்னோ மென்றோள் நெகிழ்ந்துநாம் வருந்தினு மின்றவர் வாரா ராயினு நன்றுமற் றில்ல உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிய பெயல்கான் மயங்கிய பொழுதுகழி பானாள் திருமணி யரவுத்தேர்ந் துழல உருமுச்சிவந் தெறியு மோங்குவரை யாறே. (நற். 255) கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு மடிசெவி வேழம் வெரீஇ - அடியோசை அஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருள் துஞ்சா சுடர்த்தொடி கண். (ஐந்திணை ஐம். 16) இவை இரவுக்குறிவரவான் தலைவி வருந்துவளென்றது. கரைபொரு கான்யாற்றங் கல்லதர் என்பதும் (யா.வி. 76) அது. கூருகி ரெண்கின் என்னும் (112) அகப்பாட்டுங் காண்க. கலக்கம் எனப் பொதுப்படக் கூறியவதானல் ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஒரு குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க. கான மானதர் யானையும் வழங்கும் வான மீமிசை யுருமுநனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதக வுடைய இரவுச் சிறுநெறி தமியை வருதி வரையிழி யருவிப் பாடொடு பிரசம் முழவுச்சேர் நரம்பி னிம்மென விமிரும் பழவிற னனந்தலைப் பயமலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ இன்றுதலை யாக வாரல் வரினே ஏமுறு துயர நாமிவ ணொழிய எற்கண்டு பெயருங் காலை யாழநின் கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்தநின் நாய்பயிர் குறிநிலை கொண்டே கோடே. (அகம். 318) என்னும் நித்திலக்கோவையுள், வரினே ஏமுறுதுயரம் நாமிவ ணொழிய, நின்னாய் பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது என்றவாறு காண்க. காப்பின் கடுமை கையற வரினும் - காத்தற்றொழிலான் உண்டாங் கடுஞ்சொற் கள் களவொழுக்கத்திடத்தே எல்லையற வருமிடத்தும்: தோழிமேன கிளவி; அவை பலவகைய. உ-ம்: கடலுட னாடியுங் கான லல்கியும் தொடலை யாயமொடு தழூஉஅணிய யர்ந்தும் நொதுமலர் போலக் கழுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே துத்திப் பாந்தட் பைத்தக லல்குல் திருந்திழை துயல்புக்கோட் டசைத்த பசுங்கழைத் தழையினு முழையிற் போகான் தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. (குறுந். 294) இது, பகற்குறிக்கட் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது. கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட வரவரிதாங் கொல்லோ புனமு மடங்கின காப்பு. (திணை. ஐம். 2) இது தினை விளைந்தமை கூறிச் செறிப்பறிவுறீஇயது. அறையருவி யாடாள் தினைவனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யாள் உறைகவுள்வேழ மொன்று ண்டென்றா ளன்னை மறையாதி வாழிய மையிருங் குன்றே. இது குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீ இயது. சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் சாந்த விதண மிசைச்சார்ந்து - சாந்தங் கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னாள் இமிழக் கிளயெழா வார்த்து. (திணை. நூற். 3) இது பிறரைக் காத்ததற்கு இடுவரெனச் செறிப்பறி வுறீஇயது. பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவுமுயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும ஒரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியாம் உயங்குதொறு முயங்கு மறனில் யாயே. (குறுந். 244) இஃது இரவுக்குறிக் காப்பின் கடுமை கூறியது. வினைவிளைச் செல்வம் விளைவதுபோ னீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண். (திணை. நூற். 5) இஃது இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக்குக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. புன்னையம் பூம்பொழிலே போற்றவே பாதுகா அன்னப் பெடையே யறமறவல் - மன்னுங் கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லூர் நெடுங்கடலே நீயு நினை. இது, புனங் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது. பண்டைக்கொ ணல்வினை யில்லேம் பதிப்பெயர்துங் கண்டற் குலங்காள் கழியருகேர் - முண்டகங்காள் நாணி யிராதே நயந்தங் கவர்க்குரைமின் பேணியவர்செறித்த லான். இது, தலைவற்குக் கூறுமினென்றது. களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப்பட (காதன் மிகுதி உளப்படக் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி) அவளிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழாநிற்க இருவகையிடத்தையும் இருவகைக் காலத்தையுந் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவியையும்; பிறவும் - கூறியவாறன்றிப் பிறவாறாக அவன் வயின் தோன்றிய கிளவியையும்; நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ - அவன் பிறந்த நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய மனையும் பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ்வருணத்துள் இன்னவழி இவனென்றலும் ஒரு வயிற்றுப் பிறந்தோர் பலருள்ளுஞ் சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வா திறந்தனவாதல் நோக்கித் தலைவனிடத்தே தோழி கூறிய கிளவியோடே கூடி; அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் - அத்தன்மைத்தாகிய நிலைமையின் கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பிய வழியும்; தோழிமேன கிளவி. பகற் புணர் களனே (தொல். பொ. 132) இரவுக்குறியே (தொல். பொ. 131) குறியெனப் படுவது (தொல். பொ. 130) என்னுஞ் சூத்திரங்ளாற் களனும் பொழுதும் உணர்க. உ-ம்: புன்னை காத்தும் அன்னம் ஓப்பியும் பனியிருங் கானல் யாம்விளை யாட மல்லலம் பேரூர் மறுகின் அல்கலு மோவாதலரா கின்றே. இது பகற்குறி விலக்கியது. நெடுமலை நன்னாட நின்வேல் துணையாக் கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிருள் இன்னா வதர்வர வீர்ங்கோதை மாதராள் என்னாவா ளென்னுமென் னெஞ்சு. (ஐந்திணை ஐம். 19) இஃது இரவுக்குறி விலக்கியது. இரவு வாரலை யைய விரவுவீ யகலறை வரிக்குஞ் சாரற் பகலும் பெறுதியிவள் தடமென் றோளே. (கலித். 49) இது பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது. திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவு பாக்கம் விளக்காக் - கரைமேல் விடுவாய்ப் பசும்புற இப்பிகான் முத்தம் படுவா யிருளகற்றும் பாத்து. (திணை. நூற். 48) இதுவும் அது. இவை வரவுநிலை விலக்கின. வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃதறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. (குறுந். 18) இது காதன் மிகுதி கூறியது. பிறவும் என்றதனான், கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாளும் பாடில கலிழ்ந்து பனியா னாவே துன்னரு நெடுவரைத் ததும்பிய வருவி தண்ணென் முழவி னிமிழிசை காட்டும் மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்க னாடநின் னயந்தோள் கண்ணே (குறுந். 365) இது யான் வரையுந் துணையும் ஆற்றுவளோ என்றாற்கு ஆற்றா ளென்றது. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉ நாட வல்லைமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்ற நீ யல்லது செயலே. (ஐங்குறு. 287) இது தலைவனைப் பழித்தது. கானற் கண்டற் கழன்றுகு பைங்காய் நீனிற விருங்கழி யுட்பட வீழ்ந்தென வுறு காறூக்கத் தூங்கி யாம்பல் சிறுவெண் காக்கை யாவித் தன்ன வெளிய விரியுந் துறைவ வென்றும் அளிய பெரிய கேண்மை நும்போற் சால்பெதிர் கொண்ட செம்மை யோரும் தேறா நெஞ்சங் கையறுபு வாட நீடின்று விரும்பா ராயின் வாழ்தன்மற் றெவனோ தேய்கமா தெளிவே. (நற். 345) இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது. குன்றக் குறவன் காதன் மடமகண் மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம்புறப் படுகிளி யோப்பலள் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. (ஐங்குறு. 260) இது புனங்காவல் இனியின்று என்றது. என்னாங் கொனீடி லினவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே மருவியாமாலை மலைநாடன் கேண்மை யிருவியா மேன லினி. (திணை. நூற். 18) இது, தினை அரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது. வெறிகமழ் வெற்பவென் மெய்ந்நீர்மை கொண்ட தறியாண்மற் றன்னோ அணங்கணங்கிற் றென்று மறியீர்த் துதிரந்தூய் வேலற் றரீஇ வெறியோ டலம்வரும் யாய். (ஐந்திணை ஐம். 20) இது வெறியச்சுறுத்தியது. இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம் நினைநீர்மை யில்லாவொழிவு. (திணை. ஐம். 44) இஃது அருளவேண்டும் என்றது. மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி இளையோ ராடும் வரிமனை சிதைக்குந் தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில்செவித் தாகிய புணர்ச்சி யலரெழ இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள் வருமுலை வருத்த வம்பகட்டு மார்பின் தெருமரல் உள்ளமொடு வருந்து நின்வயின் நீங்குக வென்றியான் யாங்ஙன மொழிகோ அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாது பெருங்கடன் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியம மாயினும் உறுமெனக் கொள்குநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிழை விலையே. (அகம். 90) இது, பொருண்மிகக் கொடுத்தல் வேண்டுமென்பது. இன்னும் வரைவுகடாவுதற் பொருட்டாய் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையோ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாதுண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேஎர் வேய்மருள் பணைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளு மினைய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண்டிங்களு மூர்கொண் டன்றே. (அகம். 2) விலங்கும் எய்து நாட வென்று அந்நாட்டினை இறப்பக் கூறி இந்நாடுடைமையிற் குறித்த இன்பம் நினக்கெவ னரிய வென வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனான் தினையறுத்தலின் இற்செறிப் புக் கூறியவாறுங், கங்குல் வருதலும் உரியை யெனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி நெடுவெண்டிங் களு மூர்கொண்டன்றே யென்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்லநாளெனக் கூறி வரைவுகடாயவாறுங் காண்க. காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயின் ஓங்கித் தோன்று முயர்வரைக்கு யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. (ஐங்குறு. 237) இஃது ஊரை இறப்பக் கூறியது. துணை புணர்ந் தெழுதரும் என்னும் நெய்தற்கலியுட், கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத்துறப் பாயான் மற்றுநின குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ (கலி. 135) என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக் கூறியன. குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும். ஏனைய வந்துழிக் காண்க. இன்னும் அனைநிலைவகை என்றதனாலே தலைவி யாற்றாமை கண்டு வரைவுகடாவவோவென்று தலைவியைக் கேட்டலுஞ் சிறைப்புறமாகவுஞ் சிறைப்புறமன்றாகவுந் தலைவி யாற்றாமை கூறி வரைவுகடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. கழிபெருங் கிழமை கூறித் தோழி யொழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய கடவுணெற்றிய கருங்கால் வேங்கை தடவுநிலைப் பலவொடு தாழ்ந்த பாக்கத்துப் பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர் பெண்யாப் பாயினு மாக வொண்ணுதல் இலங்குவளை மென்றோட் கிழமை விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே. நிலவு மிருளும் போல நெடுங்கடற் கழியுங் கானலு மணந்தன்று நுதலுந் தோளும் அணிந்தன்றாற் பசப்பே. எனவரும். ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் - தலைவிக்குக் கூட்டம் உண்டு கொலென்று தாய் ஐயுற்றவழி அவ்வையப்பட்ட செய்கையைத் தாய்க்கு எதிரேநின்று மறுத்து அதனைப் பொய்யெனவே கருதும்படி அவள் மனத்தினின்றும் போக்கிப் பொய்யல்லன சில சொற்களை மெய்வழிப்படுத்து அறிவுகொள்ளக் கொடுப்பினும்: உ-ம்; உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயலான்ற றவிந்த தூங்கிருள் நடுநாள் மின்னுநிமிர்ந் தன்னகனங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி மிடையூர் பிழியக் கன்டனென் இவளென அலையல் வாழிவே ண்டன்னைநம் படப்பைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டுருவின் அணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான் சுடரின்றி தமியளும் பனிக்கும் வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் சேரும் அதன்றலைப் புலிக்கணத் தன்னநாய்த் தொடர்விட்டும் முருக னன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும்இல்லா னாக அஞ்சுவள் அல்லளோஇவளிது செயலே. (அகம். 158) இது மிடையை ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது. இது சிறப்புறமாகக் கூறி வரைவு கடாதலின் அதன் பின் வைத்தார். வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாஞ் சேயரிக்கண்தாம். (ஐந்திணை ஐம். 15) இதுவும்அது. அவன் விலங்குறினும் - தன்னானுந் தலைவியானும் இடையீடு படுதலின்றித் தலைவனாற் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும்; அது வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்றுழியும், காவற்பிரிவுமாம். உ-ம்: செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற வினி. (கலி. 19) நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து. (ஐந். எழு. 16) களம்பெறக் காட்டினும் - காப்பு மிகுதியானுங் காதன் மிகுதி யானுந் தமர் வரைவு மறுத்ததனானுந் தலைவி ஆற்றாளாயவழி இஃதெற்றினா னாயிற்றெனச் செவிலி அறிவரைக் கூஉய்அவர் களத்தைப் பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும். களமாவது கட்டுங் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமுமாம். உ-ம்: பொய்படு பறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லாலுநம் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன் ஆண்டகை விறல்வே ளல்லனிவள் பூண்டாங் கிளைமுலை யணங்கி யோனே. (ஐங்குறு. 250) இது கழங்குபார்த்துழிக் கூறியது. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி யறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமனங் கொள்குவை யனையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. (ஐங்குறு. 243) இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது. அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடானாயின் என்பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே. (ஐங்குறு. 244) இது தலைவிக்குக் கூறியது. நெய்த னறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழு மார்பன் அருந்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே. (ஐங்குறு. 182) இது வேலற்குக் கூறியது. கடவுட் கற்சுனை யடையிற் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூஉருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி வேலன்வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே. (நற். 34) இது முருகற்குக் கூறியது. அன்னை தந்த தாகுவ தறிவென் பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயின் அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே. (ஐங்குறு. 247) இது தமர்கேட்பக் கூறியது. பிறன்வரைவு ஆயினும் - நொதுமலர் வரையக் கருதிய வழித் தலைவி சுற்றத்தார் அவ்வரைவினை ஆராயினும்: தோழி தலைவற்குந் தலைவிக்குங் கூறும். உ-ம்: கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென நெடுந்தேர் பண்ணிவரலா னாதே குன்றத் தன்ன குவவுமண னீந்தி வந்தனர் பெயர்வர்கொல் தாமே யல்கல் இளைரு முதியருங் கிளையுடன் குழீஇக் கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் வலையுந் தூண்டிலும் பற்றிக் பெருங்கால் திரையெழு பௌவ முன்னிய கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே. (நற். 207) இது, நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது. பாற்பட்டனள் எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினாள். இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண்ணகன் தூமணி பெறூஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி எம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே. (குறுந். 379) இது தாய் கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது. அவன் வரைவு மறுப்பினும் - தலைவி சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழியும்: தோழி அறத்தொடுநிலையாற் கூறும். உ-ம்: அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய். (ஐங்குறு. 220) குன்றக் குறவன் காதன் மடமகள் அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயிற் கொடுத்தனெ மாயினோ நன்றே இன்னு மானாது நன்னுதல் துயரே (ஐங்குறு. 258) என வரும். தலைவிக்குக் கூறுவனவுங் கொள்க. அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்று மாக்களோடு இன்றுபெரி தென்னு மாங்கண தவையே. (குறுந். 146) இது தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது. நுண்ணேர்புருவத்த கண்ணு மாடும் மயிர்வார் முன்கை வளையுஞ் செற்றும் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி யெழுதரு மழையிற் குழுமும் பெருங்க னாடன்வருங்கொ லன்னாய். (ஐங்குறு. 218) இது, தமர் வரைவுமறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு கடிதின் வரைவரெனக் கூறியது. முன்னிலை அறன் எனப் படுதல் என்ற இருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் (அறனெனப்படுதல் இருவகைப் புரைதீர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும்) - அறனென்று சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணுங் குற்றந்தீர்ந்த எதிர்ப்பாடென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்துஞ் செலுத்தினும்: என்றது, புனறருபுணர்ச்சியும், பூத்தரு புணர்ச்சியுங், களிறு தருபுணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே, அவள் தந்தைக்குந் தன்னையர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டு வந்து தலைவிக்கு உணர்த்துதலும் பெற்றாம். அவ்வறத்தொடு நிலை எழுவகைய (207) எனப் பொருளியலுட் கூறுப. உ-ம்: காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் (கலி. 39) என்னுங் குறிஞ்சிக்கலியுள், தெருமந்து சாய்த்தார்தலை எனப் புனறருபுணர்ச்சியான் தோழி செவிலிக்கு அறத்தொடுநிற்பச் செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்ப அவள் ஏனையோர்க்கு அறத்தொடு நின்றவாறு காண்க. வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடா நீர்கொடுப்பி னல்லது - கோடா எழிலு முலையு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (திணை. நூற். 15) சான்றோர் வருந்திய வருத்தமு நுமது வான்றோய்வு அன்ன குடிமையும் நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கின் நன்றே அஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ டுள்ளி விழவின் உறந்தையுஞ் சிறிதே. இவை நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நின்றன. அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை தானு மலைந்தா னெமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே. (ஐங்குறு. 201) இது தழைதந்தமை கூறிற்று. சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகை செயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி யிதனாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதனாற் கடிந்தா னுளன். (திணை. நூற். 2) இது களிற்றிடை யுதவி கூறிற்று. வில்லார் விழவினும் வேலாழி சூழுலகின் நல்லார் விழவகத்தும் நாங்காணே - நல்லா யுவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனோ டொப்பார் சுவர்க்கத் துளராயிற் சூழ். (திணை. நூற். 62) இது, செவிலி தலைவியைக் கோலஞ்செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெறவேண்டுமென்றாட்குத் தோழி கூறியது. பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி யகமனை யீனுந் தண்ணந் துறைவ னல்கி னொண்ணுத லரிவை பாலா ரும்மே. (ஐங்குறு. 168) இது, நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி இதற்குக் காரணமென்னென்ற செவிலிக்குத் தோழி கூறியது. எந்தையும் யாயு முணரக் காட்டி யொளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப நன்றுபுரி கொள்கையி னொன்றா வின்றே முடங்க லிறைய தூங்கணங் குரீஇ நீடிரும் பெண்ணைத் தொடுத்த கூட்டினு மயங்கிய மைய லூரே. (குறுந். 374) இஃது அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறியது. வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவி தமர் வரைவுடன் படத்தானும் வரைவுடன் பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக்கற்பாலை யல்லையெனக் கடுஞ்சொற் கூறி வரைவுகடாவ் வேண்டிய இடத்தும். உ-ம்: மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை முறை எனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல் பொறை யெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் நின்தலை வருந்தியாள் துயரஞ் சென்றதனை களைமோ பூண்கநின் றேரே. (கலி. 133) இது முற்காலத்து வரைவுகடாவுமாறு போலன்றி வரைவு கடாயது. யாரை யெலுவ யாரே நீயெமக் கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பிற் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் அணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை யன்னவெம் வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே. (நற். 395) இது நலந்தொலைவுரைத்து வரைவுகடாயது. ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - அங்ஙனங் கடாவியவழி அவ்வரைந்துகோடன் மெய்யாயினமையின்வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட: தன்மை - மெய்ம்மை. எனவே, முன் பொய்ம்மையான வற்புறுத்தலும் பெற்றாம். உ-ம்: நெய்கனி குறும்பூழ் காய மாக ஆர்பதம் பெறுக தோழி யத்தை பெருங்கன் னாடன் வரைந்தெனவ வனெதிர் நன்றோ மகனே யென்றனென் நன்றே போலு மென்றுரைத் தோனே. (குறுந். 389) இது, தலைவன் குற்றேவன்மகனான் வரைவுமலிந்த தோழி தலைவிக் குரைத்தது. கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் வரிக்குந் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும் அம்ப லூரு மவனொடு மொழிமே. (குறுந். 51) எனவரும். கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணற் கொடுங்கவு ணிறைய முக்கி வான்பெய னனைந்த புறத்த நோன்பியர் தையூ ணிருக்கையிற் றோன்று நாடன் வந்தனன் வாழி தோழி யுலகங் கயங்க ணற்ற பைதரு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. (நற். 22) இதனுள், தினைவிளைகாலம் வதுவைக் காலமாயினும் வம்ப மாரி இடையிடு தலான அன்று யான்கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனரென்றாள். உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் பல்பூங் கானற் பகற்குறி வந்துநம் மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங் குன்றிற் றோன்றுங் குவவுமண லேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி தண்டா ரகலம் வண்டிமிர் பூதப் படுமணிக் கலிமா கடைஇ நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே. (நற். 235) இது, தலைவன் வரைவொடு வருகின்றமை காண்கம் வம்மோ வென்றது. பாங்குற வந்த நாலெட்டும் - பாங்கியர் பலருள்ளும் பாங்காந்தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும்; நாலெட்டுமென உம்மை விரிக்க; வகையும் - இக்கூற்றுக்களிலே வேறுபட வருவனவும்; தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன - பொறுத்தற்கரிய சிறப்பினையுடைய தோழி யிடத்தன எ-று. எனவே, ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்றென்றான். தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுந் தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் தாங்கருஞஞ் சிறப்பு என்றான். உரைத்துழிக் கூட்டத்தோடே அகற்சியும் என்றலும் ஊட்டலும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்கு கிளவியும் பாங்குற வந்த என்க. நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற் கிளந்த என்க. என்றது ஆராய்ச்சியுடனே இவ்வெட்டுங் கூறுமென்றான். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டத்தோடு எஞ்சாமற் கிளந்த என்க. ஏனைப்பொருள்கள் ஏழனுருபும் வினையெச்சமுமாய் நின்ற வற்றைப் பாங்குறவந்த என்பதனொடு முடித்து அப்பெய ரெச்சத்தினை நாலெட்டென்னும் பெயரோடு முடித்து அதனைத் தோழிமேனவென முடிக்க. இனி வகை யாற்கொள்வன வருமாறு: அன்னை வாழிவேண் டன்னை நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை யெவன்கொல் பன்னாள் வருமவ னளித்த பொழுதே. (ஐங்குறு. 109) இஃது அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித்துழி ஐயுற்ற செவிலி அவன் நும்மைத் துறந்தான் போலும் நுங்கட்கு அவன் கூறியதிறம் யாதென்றாட்குத் தோழி கூறியது. அன்னை வாழிவேண் டன்னை கழனிய முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன் எந்தோள் துறந்தன னாயின் எவன்கொன் மற்றவ னயந்த தோளே. (ஐங்குறு. 108) இஃது அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங் கொலென்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குக் கூறியது. அன்னை வாழிவே ண்டன்னை புன்னையொடு ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன் இவட்கமைந் தனனாற் றானே தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே. (ஐங்குறு. 103) இது, வதுவைநிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது. கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்னர் அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினேனஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று. இது, சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது. நொதும லாளர் கொள்ளா ரிவையே யெம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் உடலகங் கொள்வோ ரின்மையிற் றொடலைக் குற்ற சிலபூவினரே. (ஐங்குறு. 187) இது கையுறை மறுத்தது. அம்ம வாழிதோழி நம்மலை வரையா மிழியக் கோட னீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந் தண்பனி வடந்தை யச்சிரம் முந்துவந் தனர்நங் காத லோரே. (ஐங்குறு. 223) இது, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்குமுன் வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (23) செவிலி கூற்று நிகழுமாறு கூறல் 115.களவல ராயினுங் காமமெய் படுப்பினும் அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி யழிவுதலை வரினுங் காதல் கைமிகக் கனவி னரற்றலுந் தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவின் எச்சத்தும் மகணெஞ்சு வலிப்பினும் இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும் இன்னவகையிற் பதின்மூன்று கிளவியோடு அன்னவை பிறவுஞ் செவிலி மேன. இது, செவிலிகூற்று நிகழுமாறு கூறுகின்றது. அக்கூற்றுச் செவிலி தானே கூறப்படுவனவுந், தலைவியுந் தோழியுங் கொண்டு கூற்றாகக் கூறப்படுவனவுமென இருவகையவாம்; இக்கூறப்பட்ட பதின்மூன்று கிளவியும் அவைபோல்வன பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுந் தலைவியுந் தோழியும் அவள் கூற்றாய்க் கொண்டெடுத்து மொழியப் படுவனவுமாய்ச் செவிலிக் குரியவாமென்றவாறு. இன்னவகை யென்றார், தன் கூற்றுங் கொண்டு கூற்றுமாய் நிகழுமென்றற்கு. (இ-ள்.) களவு அலர் ஆயினும் - களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாய் அலர் தூற்றப்படினும்: உ-ம்: பாவடி யுரல பகுவாய் வள்ளை ஏதின்மாக்க ணுவறலு நுவல்ப அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவென் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. (குறுந். 89) இது செவிலி தானே கூறியது. அம்ம வாழிதோழி நென்னல் ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற் கூறார் பெண்டென மொழிய வென்னை யதுகேட் டன்னா யென்றன ளன்னை பைபைய வெம்மை யென்றனென் யானே. (ஐங்குறு. 113) இதனுள், பெண்டென்றதனைக் கேட்ட அன்னாயென்றனள் அன்னையென அலர்தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு காண்க. காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி கரந்தொழுகுங் காமந் தானே அக்களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப் படுப்பினும்: உ-ம்: மணியிற் றிகழ்தருநூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (குறள். 1273) இது, காமத்தான் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது. அளவு மிகத் தோன்றினும் - கண்ணுந் தோளும் முலையும் பிறவும் புணர்ச்சியாற் கதிர்த்துக் காரிகை நீரவாய் அவளிடத்து அளவை மிகக் காட்டினும்: உ-ம்: கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (குறள். 1272) இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது. பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக் கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி யெல்லிவள் பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந் தருங்கடிப் படுத்தனள்... .... .... ... ... தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. (அகம். 150) இது, தோழி கொண்டு கூறியது. தலைப்பெய்து காணினும் - இருவர்க்குங் கூட்டம் நிகழ்த லானே தலைவனை இவ்விடத்தே வரக் காணினுந் தலைவியைப் புறத்துப் போகக் காணினும்: பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது. உ-ம்: இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல் அருவி தந்த வணங்குடை நெடுங்கோட்டு அஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றிய மின்னொளி ரெஃகஞ் செந்நறி விளக்கத் தனியன் வந்து பனியலை முனியான் நீரிழி மருங்கி னாரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்ற மசைவளி பகரத் துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரு மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி யுருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட் பரவு மன்னை யன்னோ என்னா வதுகொ றானே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை யகவும் அணிமலை நாடனோட மைந்தநந் தொடர்பே. (அகம். 272) இம் மணிமிடைபவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறினாள். உருமுரறு கருவிய (அகம். 158) என்பதனுள், மிடையூர் பிழியக் கண்டனன் இவளென அலையல் வாழிவேண் டன்னை என்றது, தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் - கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டினானுங் கழங்கினானுந் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையல் தீராதென்று கூறுதலின், அவ்விருவருந் தம்மினொத்த திறம்பற்றிய தனையே செய்யுஞ் செய்தியிடத்தும்: திறம் என்றதனான் அவர் வேறு வேறாகவுங் கூறப்படும். உ-ம்: பொய்ம்மணன் முற்றங் கவின்பெற இயற்றி மலைவான் கோட்ட சினைஇய வேலன் கழங்கினா னறிகுவ தென்றால் நன்றா லம்ம நின்றவிவ ணலனே. (ஐங்குறு. 248) இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று. அறியா மையின் வெறியென மயங்கி அன்னையு மருந்துய ருழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மல ருண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. (ஐங்குறு. 242) இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. அணங்குடை நெடுவரை என்னும் (22) அகப்பாட்டினுட் கட்டுக் கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. பனிவரை நிவந்த என்னும் (98) அகப்பாட்டினுட் பிரப்புளர் பிரீஇ எனக் கட்டுவிச்சியைக் கேட்ட வாறும், என் மகட்கு எனச் செவிலிகூற்று நிகழ்ந்தவாறுங் காண்க. இதனுள் நெடுவேணல்குவ னெனினே எனத் தலைவி அஞ்ச வேண்டியது, இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான் அருளுமென்று கோடலின். இகுளை கேட்டிசின் காதலந் தோழி குவளை யுண்கண் டென்பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற் கன்னை பிறிதொன்று கடுத்தனளாகி வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி யுடலுநர்க் கடந்த கடலந் தானைத் திருந்திலை நெடுவேற் றென்னவன் பொதியில் அருஞ்சிமை யிழிதரு மார்த்துவர லருவியிற் றதும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு துருகெழு சிறப்பின்முருகு மனைத்தரீஇக் கடம்புங் களிறுங் பாடிநுடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண்டல்கலும் ஆடின ராதல் நன்றோ நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் குறிவர லரைநாட் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருள் திருமணி யுமிழ்ந்த நாகங் காந்தள் கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி நன்னிற மருளு மருவிடர் இன்னா நீளிடை நினையுமெ னெஞ்சே. (அகம். 138) என்னும் மணிமிடைபவளம் விதந்து கூறாமையின் இரண்டும் ஒருங்கு வந்தது. ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் - அங்ஙனம் வெறியாடுதல் வேண்டிய தொழின் முடிந்த பின்னுந் தலைவிக்கு வருத்தம் மிகினம்: உ-ம்: வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளிகடியாள் காந்தண் முகிழ்விரலாற் கண்ணியுங் கைதொடாள் ஏந்தெழி லல்குற் றழைபுனையா ளெல்லேயென் பூந்தொடி யிட்ட புலம்பு மறிதிரோ எனவும், புனையிருங் குவளைப் போதுவிரி நாற்றஞ் சுனையர மகளி ரவ்வே சினைய வேங்கை யொள்வீ வெறிகமழ் நாற்றமொடு காந்த ணாறுப கல்லரமகளிர் அகிலு மாரமு நாஅறுபவன் திறலரு மரபிற் றெய்வ மென்ப வெறிபுனங் காவ லிருந்ததற் றொட்டுத் தீவிய நாறு மென்மகள் அறியேன் யானிஃதஞ்சுதக வுடைத்தே எனவும் வரும். இவை ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாயின. அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி அதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாண் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலிபுலி யென்னும் பூச றோன்ற ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண் டியாதோ மற்றம்மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே அவற்கண் டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றன மாகப் பேணி ஐவகை வகுத்த கூந்த லாய் நுதன் மையீ ரோதி மடவீர்நும் வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்த்த தேரனெதிர்மறுத்து நின்மக ளுண்ணக் பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மாய் அந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள் அதனள வுண்டுகொன் மதிவல் லோர்க்கே. (அகம். 48) இது, செவிலி கூற்றினைத் தோழி கொண்டு கூறியது. காதல் கைமிகக் கனவின் அரற்றலும் - தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலான் துயிலா நின்றுழியும் ஒன்று கூறி அரற்றுதலும்: கனவு- துயில், துயிலிற் காண்டலைக் கனவிற் காண்டலென்ப. உ-ம்: பொழுது மெல்லின்று (குறுந். 161) என்பதனுட் புதல்வற் புல்லி அன்னாய் எனறு தலைவியை விளித்தது கனவின் அரற்றலாயிற்று. அரற்றல், இன்னதோர் இன்னாக்காலத்து என் செய்கின்றா யெனக் காதல்பற்றி இரங்குதல். தோழியை வினவலும் - நின்றோழிக்கு இவ்வேறுபாடு எற்றினானாயிற் றென்றாற்போலத் தோழியை வினாவுதலும்: உ-ம்: நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர் தொடுத லோம்பென வரற்றலு மரற்றும் கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த தொடலைக் கண்ணி பரியலு மென்னும் பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப் பூம்பொறிக் கழற்கா லாஅய் குன்றத்துக் குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச் சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம் வாழியெம் மகளை யுரைமதி இம்மலைத் தேம்பொதி கிளவியென் பேதை யாங்காடினளோ நின்னொடு பகலே. என வரும். இது செவிலி தோழியை வினாயது. ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி உறுபகை பேணா திரவின் வந்திவள் பொறிகிள ராகம் புல்ல தோள்சேர் பறுகாற் பறவை யளவில மொய்த்தலின் கண்கோ ளாக நோக்கிப் பண்டு மினையை யோவென வினவினள் யாயே யதனெதிர் சொல்லா ளாகி அல்லாந் தென்முக நோக்கி யோளே யன்னா யாங் குணர்ந்து துய்குவள் கொல்லென மடுத்த சாந்த ஞெகிழி காட்டி யீங்கா யினவா லென்றிசின் யானே. (நற். 55) இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள். தெய்வம் வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த பின்னர்த் தன் மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த் தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்: உ-ம்: பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறிபடை யம்பின் வல்விற் கானவன் பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன் கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப வைந்துதி வான்மருப் பொடிய வுக்க தெண்ணீர்ஆலி கடுக்கு முத்தமொடு மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச் சாந்தம் பொறைமர மாக நறைநார் வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற் கின்றீம் பலவி னேர்கெழு செல்வத் தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வாய் அம்பலூரு மவனொடு மொழியும் சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி யாயு மவனே யென்னும்யாமும் வல்லே வருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே. (அகம். 282) இதனுள் தோள்பாராட்டி யாயுமவனே என்னும் என்று யாய் தெய்வம் பராயினாளென்பதுபடக் கூறி, யாம் அத்தெய்வத்திற்குப் பலிகொடுத்து மென்றவாறு காண்க: போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் - உடன்போக்கு அறிந்த பின்னர்ச் செவிலி தோழியொடு மதியுடம்பட்டு நின்று, தலைவியது கற்புமிகுதியே கருதி உவந்த உவகைக்கண்ணும்: அது, எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) என்றாற் போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல். உ-ம்: முயங்குகம் வாராய் தோழி தயங்குபு கடல்பெயர்ந் தன்ன கானலங் கல்லெனப் பெயல்கடைக் கொண்ட பெருந்தண் வாடை வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய சென்றனள் அம்மநின் தோழி யவனோ டென்றினி வரூஉம் என்றனள் வலந்துஐர தவிர்ந்தன் றலர்ந்த வூரே. இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது. பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்: உ-ம்: தெறுவ தம்ம நும்மகள் விருப்பே உறுதுயர் அவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறந் தனள்நம் காத லோளே. (ஐங்குறு. 313) இது, பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது. இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலிமேன ஆயிற்று. மகள் நெஞ்சு வலிப்பினும் - உடன்போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும்: தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும். உ-ம்: பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளும் நாறி யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே. (குறுந். 84) என வரும். இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் - தலைவனுந் தலைவியுந் தோன்றிய இருவகைக் குடியும் நிரம்பி வருதல் இயல்பாகப் பெற்ற வழியும்: பொருள் என்றார் பிறப்பு முதலிய பத்தையுங் (273) கருதி. காமர் கடும்புனல் என்னும் (39) கலியுள், அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனி னிறாலெனவேணி யிழைத்திருக்கும் கானக நாடன் மகன்; .............................. எனவாங் கறத்தொடு நினறேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய் எனத் தோழி தான் கூறிய இருபாற் குடிப்பொருளைக் கூறிச், செவிலி அறத்தொடு நின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந்தவாறு காண்க. இன்னவகையிற் பதின்மூன்று கிளவியோடு அன்னவை பிறவும் – இத் தன்மைத்தாகிய கூறுபாட்டையுடைய பதின்மூன்று கிளவியோடே அவைபோல்வன பிறவாய் வருவனவும்; செவிலி மேன - தன் கூற்றாயும் பிறர்கொண்டு கூறுங் கூற்றாயும் கூறுங் கூற்றுச் செவிலிக்கு உரியவாம் எ-று. அன்னபிற என்றதனான், பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிப் நாலூர்க்கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழிஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந். 15) இஃது உடன்போயபின் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. இன்னும் அதனானே, வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள் (அகம். 122) என்றலுஞ், சிறுகிளி கடித றேற்றா ளிவள் (அகம். 28) என்றலுங், கண்கோ ளாகநோக்கிப் பண்டு மினையையோ (நற். 55) என்றலும் போல்வன பிறவுங் கொள்க. (24) நற்றாய்க்குரிய கூற்று உரைத்தல் 116. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே இது, செவிலிக்கு உரியன கூறி நற்றாய்க்கு உரிய கூற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) உணர்வு உடம்படின் - அங்ஙனஞ் செவிலி உணர்ந் தாங்கே நற்றாயும் மதியுடம்படில்; தாய்க்கும் வரையார் - நற்றாய்க்கும் முற்கூறிய பதின்மூன்று கிளவியும் பிறவுமாகக் கொண்டு எடுத்து மொழிதல் வரையார் எ-று. தாய்க்கும் என்றார், இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு. அது நற்றாய் இல்லறம் நிகழ்த்துங் கருத்து வேறு உடைமையின் உற்றுநோக்காள்; செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின். இலக்கண முண்மையின் இலக்கியம் வந்துழிக் காண்க. (25) நற்றாய்க்குஞ் செவிலிக்கு முரியதோர் இலக்கணம் உரைத்தல் 117. கிழவோன் அறியா வறிவினள் இவளென மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் ஐயக் கிளவி யறிதலும் உரித்தே. இஃது அங்ஙனங் களவு வெளிப்பட்ட பின்னர் நற்றாய்க்குஞ் செவிலிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக்கிளவி - நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறிவினையுடையள் இவளென்று தம் மனத்தே ஐயமுற்று பிறரோடு உசாவுங் கிளவியை; மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் அறிதலும் உரித்தே - குற்றமற்ற சிறப்பினை யுடைய அந்தணர் முதலியோரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர்கூற அறிதலும் உரித்து எ-று. என்றது, மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே (சூ.93) என முற் கூறினமையின் தலைவன் தன் குலத்தின் உயர்ந்தமை அறிந்தவிடத்து, இங்ஙனம் கூடுதல் முறையன்றென்று ஐயுற்ற செவிலியும் நற்றாயும், உயர்ந்தோரைக் கேட்டு இதுவும் கூடுமுறைமை என்றுணர்வர் என்பதாம். இலக்கணமுண்மையின் இலக்கியமும் அக்காலத்து உள வென் றுணர்க. (26) தலைவிக்குரியதோ ரிலக்கண முரைத்தல் 118. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப. இது தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) பிறநீர் மாக்களின் - வேறுவேறாகத் தம்மில் தாம் காதல்செய்து ஒழுகும் அறிவில்லாதாரைப் போல; கிழவன் அறியத் தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கு இல்லை - தலைவன் அறியும்படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை; ஆயிடை - அங்ஙனங் கூற்றில்லாதவிடத்து; எண்ணுங் காலையும் - அவள் வேட்கையை அவன் ஆராயுங் காலையும்; பெய்நீர் போலும் உணர்விற்று என்ப - அவ்வேட்கை புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினையுடைத் தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. கிழத்திக்கில்லை யெனவே தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறுதளதென்பது பெற்றாம். தலைவிக்குக் குறிப்பானன்றித் தலைவன்முன்னின்று கூறும் வேட்கைக் கூற்றின்மை முற்கூறிய செய்யுட்களுட் காண்க. தோழிமுன்னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தற்கு. உ-ம்: சேணோன் மாட்டிய நறும்புகை (குறுந். 150) ஈயற்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகம். 8) என்பனவும், இவளே நின்சொற்கொண்ட (குறுந். 81) என்றாற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினாம். கடும்புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கஞர் தீரமுயங்கி நெருநல் ஆகம் அடைதந் தோளே (அகம். 62, 9-12) என்றாற்போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பான் உணர்ந்தன. (27) தலைவனுந் தலைவியும் தாமே தூதுவராதலு முரித்தெனல் 119. காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின் தாமே தூதுவ ராதலு முரித்தே. இஃது எய்தாது எய்துவித்தது, பாங்கனுந் தோழியும் நிமித்தமாகவன்றித் தாமே தூதாகும் இடமும் உண்டென்றலின். (இ-ள்.) காமக்கூட்டந் தனிமையிற் பொலிதலின் - இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடுங் கூட்டுவாரையின்றித் தனிமையாற் பொலிவுபெறுதலின்; தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - ஒருவருக்கு ஒருவர் தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டுரித்து எ-று. அது மெய்ப்பாட்டினுட் புகுமுகம் புரிதன் (261) முதலிய பன்னிரண்டானும் அறிக. இதன் பயன் இக் கூட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதாம். (28) களங்கூறுதற்குரியாள் தலைவியெனல் 120. அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் தான்செலற் குரிய வழியாக லான. இது முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங்கூறுதற்கும் உரியாள் தலைவியென்கின்றது. (இ-ள்.) அவன் வரம்பு இறத்தல் - தலைவன் கூறிய கூற்றின் எல்லையைக் கடத்தல்; தனக்கு அறமின்மையின் - தலைவிக்கு உரித்தெனக் கூறிய தருமநூலின்மையின்; களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் - தலைமகனை இன்னவிடத்து வருகவென்று ஓரிடத்தைத் தான் கருதிக் கூறுங்கூற்று அவன் குறிப்பு வழி ஓங்குந் தலைவியதாம்; தான் செலற்கு உரியவழி ஆகலான - தான் சென்று கூடுதற்குரிய இடந் தானே உணர்வள் ஆதலான் எ-று. சுட்டுக்கிளவி என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும் வேண்டியவழி அவனை மறாது தான் அறிநத விடத்தினைக் கூற்றானன்றிக் குறிப்பானாதல் சிறைப்புறத்தானாதல் தோழி யானாதல் உணர்த்து மென்பதாம், தலைவன் களஞ்சுட்டுமாயின் யாண்டானும் எப்பொழுதானும் அக் களவொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனாய்க் குடிப்பிறப்பு முதலிய வற்றிற்குத் தகாதாம். விரியிணர் வேங்கை என்னும் (38) அகப்பாட்டுத் தலைவி களஞ்சுட்டியது: மறந்திசின் யானே என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று, பிறவும் வந்துழிக் காண்க. (29) தோழிக்குங் களஞ்சுட்டுக்கிளவி யுரித்தெனல் 121. தோழியின் முடியு மிடனுமா ருண்டே. இது. தோழிக்குங் களஞ்சுட்டுக் கிளவி உரித்தென்று எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) களஞ்சுட்டுக் கிளவி தலைவி குறிப்பான் தோழி கூறுதலன்றித் தானேயுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு. தோழி குறித்த இடமுந் தலைவி தான் சேறற்குரிய இடமாமென்பது கருத்து. உ-ம்: செவ்வீ ஞாழற் கருங்கோட் டஞ்சினைத் தனிப்பார்ப் புள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தன் மாக்கழி நிவப்ப இனிப்புலம் பின்றே கானலு நளிகடற் றிரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கிற் பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய எந்தையுஞ் செல்லுமா ரிரவே அந்தில் அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமோ டயரு நீயுந் தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக் கோங்கு முகைத்தன்ன குவிமுலை யாகத் தின்றுயி லமர்ந்தனை யாயின் வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே. (அகம். 240) எனத் தோழி களஞ்சுட்டியவாறும் காண்க. (30) துணையின்று கழியுநா ளித்துணையவெனல் 122. முந்நா ளல்லது துணையின்று கழியாது அந்நாளத்தும் அதுவரை வின்றே. இதுவும் அதிகாரத்தான் தலைவிக்கெய்தியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) முந்நாள் அல்லது துணையின்று கழியாது - பூப்பெய்திய மூன்றுநாளும் அல்லது கூட்டமின்றி இக்கள வொழுக்கங் கழியாது; அந்நாளகத்தும்அது வரைவு இன்றே - அம்மூன்றுநாளின் அகப்பட்ட நாளாகிய ஒருநாளினும் இரண்டு நாளினுந் துணையின்றிக் கழிதல் நீக்கப்படாது எ-று. அதுஎன்றது துணையின்று கழிதலை. பூப்பினான் துணையின்றிக் கழிதல் பொருந்திற்றாயினும், பூப்பின்றி ஒருநாளும் இரண்டு நாளுந் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப் புலனாம் என்று அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகா வென்றற்கு வரை வின்று என்றார். இன்னோரன்ன காரணந் தலைவற் கின்மையின் அவனான் துணையின்றிக் கழிதல் இன்றாயிற்று. உ-ம்: குக்கூவென்றது கோழி அதனெதிர் துட்கென் றற்றென்றூஉ நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. (குறுந். 157) இது முந்நாளைப் பிரிவாகிய பூப்பிடைப்பிரிவு வந்துழித் தலைவி கூறியது. இனி அல்லகுறிப்பிட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடையீடா மென்றுணர்க. பூப்புநிகழாத காலத்துக் களவொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்டதென்று உரைப்பாரும் உளர்; இவ்விதி அந்தணர்க்குக் கூறியதன்று; அரசர் வணிகராதியவர்க்குச் சிறுபான்மை யாகவும், ஏனை வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும் பான்மையாகவுங் கூறிய விதியென்றுணர்க. என்னை? பூப்பு நிகழுங் காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினார்க்கு, அந்த ரத்தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் (தொல். கற்பியல். 5) என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பாராதலின். இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால் அறத்தொடு நின்றும் வரைதல் பெறுதும். (31) தலைவி அறத்தொடு நிற்றல் 123. பன்னூறு வகையினும் தன்வயிற் வரூஉம் நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலில் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் துணையோர் கரும மாக லான. இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் - தலைவியிடத்தே தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக் கண்ணே; பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலில் - பல நூறாகிய பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புதலாலே: துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாகும் - இவள் ஒரு துணையுடையயென அவர் சுட்டுதலிடத்துக் கிளவிக்குங்கிளவி தலைவியதாம்; துணையோர் கருமம் ஆகலான - அக்கிளவி அத்தோழியானுஞ் செவிலியானும் முடியுங்காரியம் ஆகலான் எ-று. என்றது, தோழி பலவேறு கவர்பொருணாட்டம் (114) உற்றவழியுஞ் செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (115) நாட்டமுற்ற வழியுந் தலைவி அறத்தொடு நிற்குமென்று அறத்தொடு நிலைக்கு இலக்கணங் கூறியவாறாயிற்று. தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்குமென்று உணர்க. இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரையாமையும் பெற்றாம். புனையிழை நோக்கியும் (கலி. 76) என்னும் மருதக்கலியுள், வினவுதியாயின் என நாட்டம் நிகழ்ந்த வாறும், அதன் சுரிதகத்துக் கூட்டமுண்மை கூறுதலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாயவாறுங் காண்க. கொடியவுங் கோட்டவும் (கலி. 54) என்பதன் சுரிதகத்துச் செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. (32) களவின்கண் தாயென்று சிறப்பிக்கப்படுவாள் செவிலி எனல் 124. ஆய்பெருஞ் சிறப்பின்அருமறை கிளத்தலின் தாயெனப் படுவோள் செவிலி யாகும். இது முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) ஆய்பெருஞ் சிறப்பின் - தாய்த் தாய்க்கொண்டு உயிர் ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ் சிறப்புக் காரணமாக; அருமறை கிளத்தலின் - கூறுதற்கரிய மறை பொருளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்றாற் கூறத்தக்காளாதலின்; தாயெனப்படு வோள் செவிலி ஆகும் - தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் எ-று. எனவே ஈன்ற தாயினுங் களவின்கட் சிறந்தாள் இவளென்றார். கற்பிற்கு இருவரும் ஒப்பாராயிற்று. செவிலி சிறந்தமை சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. (33) சிறப்புடைத் தோழியாவாள் இவளெனல் 125. தோழி தானே செவிலி மகளே. இது தோழியது சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்.) தோழி தானே - தோழியர் பலருள்ளும் ஒருத்தியெனப் பிரிக்கப்படுவாள்; செவிலி மகளே - முற்கூறிய செவிலியுடைய மகள் எ-று. இதற்கும் அருமறை கிளத்தல் - அதிகாரத்தாற் கொள்க. தாய்த் தாய்க் கொண்டு வருகின்றமையின் உழுவலன்பு போல்வதோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று; அது சான்றோர் செய்யுளுட் காண்க. (34) தோழி சூழ்தற்குமுரியளெனல் 126. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே. இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது. (இ-ள்.) உசாத்துணை நிலைமையின் - தலைமகனுந் தலைமகளும் உசாவுவதற்குத் துணைமைசான்ற நிலைமையினாலே; சூழ்தலும் பொலிமே - புணர்ச்சி யுண்மையை ஏழுவகையானுஞ் சூழ்தற்கண்ணும் பொலிவுபெறும் எ-று. எனவே, இம்மூன்று நிலைக்குந் தோழி உரியள் என்றார். உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. (35) தோழி சூழ்ச்சி இத்துணைப்பகுதியெனல் 127. குறையுற உணர்தல்முன்னுற உணர்தல் இருவரு முள்வழி அவன்வர உணர்தலென மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே. இஃது அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது. (இ-ள்.) குறையுற உணர்தல் - தலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல்; முன் உற உணர்தல். முன்னம் மிக உணர்தல்; இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் - தலைவியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலான் தலைவன் குறிப்புந் தலைவி குறிப்புங் கண்டுணர்தல்; என மதியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தினோடு ஒன்றுபடுத்துணர்தல் ஒரு மூன்று கூற்றினையுடைத்து எ-று. எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் முன்னென நின்றது. உயிர்கலந்தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர்வாள் குறிப்புப் பெற்றுழி மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினையும் ஒன்றுபடுத்துதலின் மதியுடம்படுத்தலென்று பெயரா யிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம்படுத்த லின்றென் றற்கு மூவகைத்தென்று ஒருமையாற் கூறினார். முன்னுறவென்ற தனை முந்துற வென்றாலோ வெனின் குறையுறுதலான உணர்தல் அவன் வருதலான் உணர்தலென்று இரண்டற்குக் காரணங் கூறுதலின், இதற்குங் குறிப்பு மிகுதலான் உணர்தலெனக்காரணங் கொடுத்தல் வேண்டுமென்றுணர்க. நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை இடைவைத்தார். அவ்விரண்டி னான் உணருங்காலும் இக் குறிப்பான் உணரவேண்டு மென்றற்கு. இம் மூன்றும் முற்கூறினவேனும் ஒரோவொன்றாற் கூட்டமுணரின் தலைவியை நன்குமதித்திலளாவ ளென்றற்கு இம்மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார். உ-ம்: கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி. இது கூட்டமுணராதாள்போல நாணிற்கு மாறாகாமற் கூறலின், முன்னுறவுணர்தல். நின்னின்விடாஅ நிழற்போற் றிரிதருவாய் என்னீபெறாத திதென். (கலி.61) இது குறையுற வுணர்தல். ஏனல் காவ லிவளு மல்லள் என்பது அவன் வரவுணர்தல். (36) தோழி மதியுடம்படுத்தபின்னல்லது தலைவனிரந்து பின்னில்லானெனல் 128. அன்னவகையா னுணர்ந்தபி னல்லது பின்னிலை முயற்சி பெறானென மொழிப. இது மதியுடம்பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த்தப் பெறானென்கிறது. (இ-ள்.) அன்னவகையான் உணர்ந்தபின் அல்லது - அம்மூவகை யானுந் தோழி மதியுடம்படுத்த பின்னல்லது; பின்னிலை - இவன் ஒரு குறையுடையனென்று தோழி உய்த்துணர நிற்குமிடத்து; முயற்சிபெறான் என மொழிப - கூற்றான் அக்குறை முடித்தல் வேண்டுமென்று முடுக்குதல் பெறானென்று கூறுப ஆசிரியர் எ-று. தோழி தன்னை வழிபட்டவாறு கண்டு மதியுடம்பட்ட வாறுணர்ந்து கூற்றான் உணர்த்தும். அது நெருநலு முன்னாள் என்பதனுள் ஆரஞர் வருத்தங் களையாயோ என்றவாறு காண்க. (37) தோழி தலைவியைக் கூட்டவும் பெறுமெனல் 129. முயற்சிக் காலத் ததற்பட நாடிப் புணர்த்த லாற்றலும் அவள்வயி னான. இது தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி பிறக்குமிடங் கூறுகின்றது. (இ-ள்.) முயற்சிக்காலத்து - தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி நிகழ்த்துங்காலத்தே; நாடி அதற்படப் புணர்த்தலும் - தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக்கூட்டத்திடத்தே உள்ளம் படும்படி கூட்டுதலும்; அவள் வயின் ஆன ஆற்றல் - தோழியிடத்து உண்டான கடைப்பிடி எ-று. ஆற்றல் ஒன்றனை முடிவுபோக்கல். உம்மை, எச்சவும்மை. மதியுடம்படுத்தலே யன்றிக் கூட்டவும் பெறுமென்க. (38) குறி இவை எனல் 130. குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியத் தோன்றும் ஆற்ற தென்ப. அங்ஙனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது. (இ-ள்.) குறியெனப் படுவது - குறியென்று சொல்லப்படுவது; இரவினும் பகலினும் - இரவின்கண்ணும் பகலின் கண்ணும்; அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனுந் தலைவியுந் தானும் அறியும்படி தோன்றும்நெறியையுடைய இடம் எ-று. நெறியென்றார் அவன் வருதற்குரிய நெறி இடமென்றற்கு, அதுவென்று ஒருமையாற் கூறினார், தலைப்பெய்வதோரிட மென்னும் பொதுமைபற்றி. இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறினார். அறியத் தோன்றுமென்றதனாற் சென்று காட்டல் வேண்டா; நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க. (39) இரவுக்குறியிட மிதுவெனல் 131. இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவிகேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான. இது, நிறுத்தமுறையானே இரவுக் குறியிடம் உணர்த்துகின்றது. (இ-ள்.) அகமனைப் புகாக் காலை ஆன இரவுக்குறியே - உள்மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான இரவுக்குறியே: ஏகாரம், பிரிநிலை. இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே – இல்வரைப் பினுள்ளதாகியும் மனையோர் கூறிய கிளவி கேட்கும் புறமனை யிடத்ததாம் எ-று. அல்ல குறிப்பிட்டதனை ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன் அதுகேட்டு ஆற்றுவனென்பது கருதி, மனையோர் கிளவி கேட்கும் வழியது என்றார்; ஏகாரம் ஈற்றசை: என்றது, இரவுக்குறி அம்முயற்சிக்காலத்து அச்ச நிகழ்தலின், அகமனைக்கும் புறமதிற்கும் நடுவே புணர்ச்சி நிகழுமென்றதாம். அகமனையிற் புகாக்காலை யெனவே, இரவுக்குறி அங்ஙனஞ் சிலநாள் நிகழ்ந்த பின்னர், அச்சமின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறுமென்பதுங் கூறியதாம். உ-ம்: அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் (அகம். 198) எனவும், மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென அலையல் வாழிவேண் டன்னை (அகம். 158) எனவும், அட்டி லோலை தொட்டனை நின்மே. (நற். 300) எனவும் வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது. உளைமான் துப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக் கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென உரைத்த சந்தின்ஊர விருங்கதுப்பு ஐதுவரலசைவளி மாற்றக் கைபெயரா ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகன் மழகளிறுறங்கு நாடன் ஆரமார்பின் அணிமிஞி றார்ப்பத் தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன் காவல ரறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவ மசையினன் புகுதந் துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந் தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் தோழி இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன் நல்கா மையின் அம்ப லாகி ஒருங்குவந் துவக்கும் பண்பின் இருஞ்சூ ழோதி ஒண்ணுதற் பசப்பே. (அகம். 102) இது மனையகம் புக்கது. தலைவி புறத்துப் போகின்றாளெனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென்றுணர்க. (40) பகற்குறியிட மிதுவெனல் 132. பகற்புணர் களனே புறனென மொழிப அவளறி வுணர வருவழி யான. இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது. (இ-ள்.) அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர்களனே - களஞ்சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும்படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை; புறன் என மொழிப - மதிற்புறத்தேயென்று கூறுவர் ஆசிரியர் எ-று. அறிவு; ஆகுபெயர். உ-ம்: புன்னையங் கானற்புணர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு எனவும், பூவே புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே (அகம். 239) எனவும் வருவன பிறவுங் கொள்க. (41) அல்லகுறிப்படுதலுந் தோழிக்குரித்தெனல் 133. அல்லகுறிப் படுதலும் அவள்வயி னுரித்தே அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே. இது தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. இருவகைக் குறி பிழைப்பாகிய விடத்தும் என்புழித் தலைவி அல்ல குறிப்படுதல் கூறிற்று. (இ-ள்.) அவன் குறி - தலைவன் தன்வரவு அறிவிக்குங் கருவிகள்; மயங்கிய அமைவொடு வரின் - அவன் செயற்கையானன்றி இயற்கை வகையானே நிகழ்ந்து தோழி மயங்கிய அமைதியோடே வருமாயின்; அல்லகுறிப் படுதலும் - குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும்; அவள்வயின் உரித்து - அத் தோழியிடத்து உரித்து எ-று. வெறித்தல் வெறியாயினாற்போலக் குறித்தல் குறியாயிற்று. அக் கருவி புனலொலிப்படுத்தல் முதலியன. உ-ம்: கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ இடையு ளிழுதொப்பத் தோன்றிப் - புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி (ஐந்திணை ஐம். 49) இஃது அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது. எறிசுறு நீள்கடல் ஓத முலாவ நெறியிறாக் கொட்கு நிமிர்கடற்றண்சேர்ப்பன் அறிவுறா வின்சொ லணியிழையாய் நின்னிற் செறிவறா செய்த குறி. (திணை. ஐம். 43) இஃது அவன்மேற் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறியது. இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று - கொடுங்குழை புள்ளவரங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர் உள்ளரவ நாணுவ ரென்று. (ஐந். எழு. 59) இஃது இவன் இனி ஆண்டுவரிற் சுற்றத்தார் அறிவரென்றது. வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால் வாழுநாள் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ தாழ்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சாரல் ஊழுறு கோடல்போலொளிவளையுகுபவால். (கலி. 48) இது தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது. அன்னை வாழியோ வன்னைநம் படப்பை பொம்ம லோதி யம்மென் சாயல் மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன்னைமென்காய் போகுசினையிரிய ஆடுவளிதூக்கிய வசைவிற் கொல்லோ தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென எண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே. இது தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது. மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன் அணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போல் திணிமண லெக்கர்மே லோதம் பெயரத் துணிமுந்நீர் துஞ்சாதது. (ஐந். எழு. 60) இது தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது. திங்கள்மேல் வைத்துக் கூறுவனவும் ஓதத்தின்மேல் வைத்துக் கூறுவனவும் பிறவுங் கொள்க. அரவளை மென்றோ ளனுங்கத் துறந்து கரவல மென்றாரைக் கண்ட திலையால் இரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள். புன்னைநனைப்பினும் பூஞ்சினை தோயினும் பின்னிருங் கூந்தலென் றோழி நடையொக்கு மன்னம் நனையாதி வாழி கடலோதம் என வருவன பிறவுங் கொள்க. படுதல் எதிர்ப்படாமையை உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுதறிந்து வாராமையின் மயங்கிற்றென்று அமைவுதோன்றலின் அமை வென்றார். அது, தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென்றடமென் றோளே (குறுந். 121) என்றாற்போல வரும். இதன் பயன் தலைவி துன்பந் தனதாகத் துன்புறுத்தலாயிற்று. (42) தலைவனு மல்லகுறியால் வருந்துவனெனல் 134. ஆங்காங் கொழுகும் ஒழுக்கமு முண்டே யோங்கிய சிறப்பின் ஒருசிறை யான. இது தலைவனும் அல்லகுறியான் வருந்துவனென்கின்றது. (இ-ள்.) ஓங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமைப் பாட்டினானே பொழுதறிந்து வாராமையின்; ஒருசிறை ஆன ஆங்கு - தான் குறிசெய்வதோரிடத்தே தன்னானன்றி இயற்கையான் உண்டான அவ்வல்ல குறியிடத்தே; ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு - தலைவியுந் தோழியுந் துன்புறுமாறு போலத் தலைவனுந் துன்புற்று ஒழுகும் ஒழுக்கமும் உண்டு எ-று. முன்னர் நின்ற ஆங்கு முன்னிற்சூத்திரத்து அல்லகுறியைச் சுட்டிற்று; பின்னர் நின்ற ஆங்கு உவமவுருபு. உ-ம்: தாவி னன்பொன் றைஇய பாவை விண்டவ ழிளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால் கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத்து வர்வாய் நயவன றைவருஞ் செவ்வழி நல்யாழ் இசையோர்த் தன்னஇன்றீங் கிளவி அணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற் றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற் பெறலருங் குரைய ளென்னாய் வைகலும் இன்னா வருஞ்சுர நீந்தி நீயே யென்னை யின்னற் படுத்தனை மின்னுவசி புரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப் படைநிலா விலங்குங் கடன்மருள் தானை மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய நீர்மா ணெஃக நிறத்துச்சென்ற ழுந்தக் கூர்மத னழியரோ நெஞ்சே யானா தெளிய ளல்லோட் கருதி விளியா வெவ்வந் தலைத்தந் தோயே. (அகம். 212) வடமலை மிசையோன் கண்ணில் முடவன் தென்றிசை யெல்லை விண்புகு பொதியில் சூருடை நெடுஞ்சுனை நீர்வேட் டாங்கு வருந்தினை வாழியென் உள்ளம் சாரல் பொருது புறங்கண்ட பூநுத லொருத்தல் சிலம்பிழி பொழுதி னத்தம் பெயரிய வல்லிய மடுக்கத்தொடுங்கு நல்வரைக் கல்லக வெற்பன் மடமகள் மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே. இவை அல்ல குறிப்பிட்டு நிங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியன. (43) தலைவற்குத் தீயஇராசியினும் தீயநாளினும் துறந்த ஒழுக்கமில்லையெனல் 135. மறைந்த வொழுக்கத் தோரையும் நாளும் துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை. இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஓரையும் நாளுந் துறந்த ஒழுக்கம் - தீய இராசியின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்; கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் களவொழுக்கத் தின்கண் இல்லை; எனவே கற்பின்கணுண்டு எ-று. ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பன தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும். கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122) முற் கூறிற்று. இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப் பிராயச் சித்தம் அந்தாணர் முதலிய மூவர்க்கும் உண்மை வந்த குற்றம் வழிகெடவொழுகலும் (தொல். பொ. 146) எனக் கற்பியலிற் கூறுப. (44) தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல் 136. ஆறின தருமையு மழிவு மச்சமும் ஊறு முளப்பட அதனோ ரன்ன. இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது. (இ-ள்.) உளப்பட - நிலவும் இருளும் பகைவரும் போல் வனப்றறிச் செலவழுங்குதல் உளப்பட; ஆறினது அருமையும் - நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்த வழிக் கூறுதலும்; அழிவும் - குறைந்த மனத்தனாதலும்; அச்சமும் - பாம்பும் விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும்; ஊறும் - அக்கருமத்திற்கு இடையூறு உளவாங்கொலென்று அழுங்குதலும்; அதனோர் அன்ன - கிழவற்கு இல்லை எ-று. கிழவற்கில்லையெனவே கிழத்திக்குந் தோழிக்கும் உளவாயிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க. (45) களவினைத் தந்தை முதலியோர் இவ்வாறுணர்வரெனல் 137. தந்தையுந் தன்னையு முன்னத்தின்உணர்ப. இது தந்தையும் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) தந்தையுந் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக்கொண் டுணர்வர் எ-று. நற்றாய் அறத்தொடு நின்ற வழியும், இருவர்கண் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை (கலி. 39) என்றலின், முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டு உணர்ந்தாராயிற்று. (46) நற்றாய் இவ்வாறு அறத்தொடு நிற்பாளெனல் 138. தாய்அறி வுறுதல் செவிலியோ டொக்கும். இது தந்தை தன்னையர்க்கு நற்றாய் களவொழுக்கம உணர்த்து மாறு கூறுகின்றது. (இ-ள்.) தாய் அறிவுறுதல் - நற்றாய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந்தன்மை; செவிலியோடு ஒக்கும் - செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் எ-று. என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல, நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. அது, எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய் (கலி. 39) என்பதனான் உணர்க. இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல் உணரு மென்று பொருள் கூறில் தாய்க்கும் வரையார் (தொல். பொ. 116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம். (47) களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைவனெனல் 139. அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும் இது களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைமகனென் கின்றது. (இ-ள்.) அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் - முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத்தினை வெளிப்படுத்தலான்; அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் - அவ்விடத்து அவ்வெளிப்படை நிகழ்த்துதற்கு நிமித்தமாயினான் தலைமகனாம் எ-று. தலைவனை அறிந்தபின் அல்லது முற்கூறிய ஐயம் நிகழாமையின் தலைவிவருத்தம் நிமிதத்மாகாது. ஆண்டு ஐயம் நிகழ்தலன்றித் துணிவு தோன்றாமையின், வரைவு நீட்டிப்போனுந், தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது, நீரொலித் தன்ன பேஎர் அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே (அகம். 211) நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (கலி. 39) என்றாற்போல வருவனவும் பிறவும் வெளிப்படையாமாற்றாற் கண்டுணர்க. (48) வரைவு இருவகைப்படுமெனல் 140. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென் றாயிரண் டென்ப வரைத லாறே இதுவரையும் பகுதி இனைததென்கிறது. வெளிப்பட வரைதல் - முற்கூறியவாற்றானே களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கோடல்; படாமை வரைதல் - அக்களவு வெளிப்படுவதன் முன்னர் வரைந்துகோடல்; என்று ஆ இரண்டு என்ப வரைதல் ஆறே - என்று கூறப்பட்ட அவ்விரண்டே என்று கூறுவர் ஆசிரியர் வரைந்து கொள்ளும் வழியை எ-று. சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே. (கலி. 39) இது வெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்தது. கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானின்அருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும் வாடல் மறந்தன தோள். (ஐந்திணை எழு. 2) இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது. எம்மனை முந்துறத் தருமோ தன்மனையுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) என்றாற்போல்வன வெளிப்படுவதன்முன்னர்க் கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரணம் நிகழ்ந்தமையின், அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம். (49) ஓதல், பகை, தூது என்ற மூன்றினும் வரையாது பிரிதல் கிழவோற் கில்லையெனல் 141. வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இது முதற்கூறிய வரைவு நிகழ்த்தாது பிரியும் இடம் இதுவெனவும் பிரியலாகா இடம் இதுவெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) வெளிப்படைதானே கற்பினோடு ஒப்பினும் - முற்கூறிய வெளிப்படை தானே கற்பினுள் தலைவி உரிமை சிறந்தாங்கு அருமை சிறந்து கற்போடொத்தாயினும்; ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக - முற்கூறிய ஓதல் பகை தூதென்ற மூன்றும் நிமித்தமாக; வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை - வரைவிடைவைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை எ-று. மூன்றுமென முற்றும்மைகொடாது கூறினமையின், ஏனைப் பிரிவுகளின் வரையாது பிரியப்பெறும் என்றவாறாயிற்று. அவை வரைதற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தற்குற்றுழிப் பிரிதலுங், காவற்குப் பிரிதலுமென மூன்றுமாம். உ-ம்: பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் திணிமண லடைகரையலவ னாட்டி அசையின ளிருந்த வாய்தொடிக் குறுமகள் நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயி னறந்தெரிந்து நாமுறை தேஎ மரூஉப்பெயர்ந் தவனொ டிருநீர்ச் சேர்ப்பி னுப்புட னுழந்தும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தன மடுத்தன மிருப்பிற் றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்த் தேனிமிர் தண்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே. (அகம். 280) இதனுள் ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரியளாயின் தன்னை வழிபட்டால் தந்தைதருவனோ? அது நமக்கரிதாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைதுமெனப் பொருள் வயிற்பிரியக் கருதியவாறு காண்க. பூங்கொடி மருங்கிற் பொலம்பூ ணோயே வேந்து வினைமுடித்து வந்தனர் காந்தண் மெல்விரற் கவையினை நினைமே. இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தான் வரைவு மலிந்தமை தோழி கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. ஓதுதற்கு ஏவுவார் இருமுதுகுரவராதலின், அவர் வரையாமற் பிரிகவென்னார். பகைவென்று திறை கோடற்குப் பிரியுங்கால் அன்புறுகிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது தூதிற்கும் ஒக்கும். மறைவெளிப்படுதல் (499) கற்பென்று செய்யுளியலுட் கூறுதலின், இதனை இவ்வோத்தின் இறுதிக் கண் வைத்தார். கற்பினோ டொப்பினும் பிரிவின்றெனவே, கற்பிற்காயிற் பிரிவுவரை வின்றாயிற்று. (50) மூன்றாவது களவியற்கு ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது. 4 கற்பியல் கற்பாவது இதுவெனல் 142. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. என்பது சூத்திரம். இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோளிரண்டனுட் கற்புணர்த்தினமையிற் கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. கற்பியல் கற்பினது இயலென விரிக்க. இயல், இலக்கணம். அஃது ஆகுபெயரான் ஓத்திற்குப் பெயராயிற்று. அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெ னவும், அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின் கண் ஓரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஓத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று. களவு வெளிப்பட்ட பின்னராயினும் அது வெளிப்படா மையாயினும் உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்தவழியா யினும் வரைதல் அக் களவின் வழியாதலின் மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் கற்பிற்கெல்லாம் பொது விலக்கணங் கூறுகின்றது. (இ-ள.) கற்பு எனப்படுவது - கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது; கரணமொடு புணர - வேள்விச் சடங்கோடே கூட; கொளற்கு உரி மரபிற் கிழவன் - ஒத்த குலத்தோனும் மிக்க குலத்தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினை யுடைய தலைவன்; கிழத்தியை - ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை; கொடைக்கு உரி மரவி னோர் கொடுப்ப - கொடுத்தற் குரிய முறைமையினையுடைய இருமுது குரவர் முதலாயினார் கொடுப்ப; கொள்வது - கோடற்றொழில் எ-று. எனப்படுவது என்னும் பெயர் கொள்வது என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது; இது சிறப்புணர்த்துதல் அவ்வச்சொல்லிற்கு (தொல். சொல். இடை. 47) என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம். கொடுப்போரின்றியும் (தொல். பொ. 143) என மேல் வருகின்றதாகலின் இக் கற்புச் சிறத்தலிற் சிறந்ததென்றார். இஃது என என்கின்ற எச்சமாதலிற் சொல்லளவே எஞ்சிநின்றது. இதனாற் கரணம் பிழைக்கில் மரணம் பயக்குமென்றார். அத்தொழிலின் நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவற்கு இன்னவாறே நீ குற்றேவல் செய்தொழுகெனவும் அங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத் தொழிலைக் கற்பென்றார். தலைவன் பாதுகாவாது பரத்தைமை செய்து ஒழுகினும் பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென் றுணர்க. இக் கற்புக்காரணமாகவே பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறெல்லாம் நிகழவேண்டு தலின் அவற்றையுங் கற்பென்று அடக்கினார். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்பால் உரிமை செய்து ஒழுகலிற் கிழவனுங் கிழத்தியும் என்றார். தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு மரபினோர் என்றார். உ-ம்: உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொது செய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர்கூடிக் கற்பின் வழாஅநற்பல வதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென நீரொடு சொரிந்த வீரிதழ அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் கொடும்புறம் வலைஇக் கோடிக் கலிங்கத் தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சா துரையென இன்னகை யிருக்கைப் பின்யான் வினவலின் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர அகமலி உவகையள் ஆகிமுக னிகுத்து ஓய்யென விறைஞ்சி யோளே மாவின் மடங்கொண் மதைஇய நோக்கின் ஓடுங்கீர் ஓதி மாஅ யோளே. (அகம். 86) இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானுந் தமர் அறிய மணவறைச் சேறலானுங் களவாற் சுருங்கிநின்ற நாண் சிறந்தமையான் பின்னர்த் தலைவன் வினாவ அவள் மறுமொழி கொடாது நின்றமை யைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று. (1) உடன்போகிய காலத்துக் கொடுப்போ ரின்றியுங் கரணம் நிகழுமெனல் 143. கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே - முற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலின்றியுங் கரணம் உண்டாகும்; புணர்ந்து உடன் போகிய காலையான - புணர்ந்து உடன் போகிய காலத்திடத்து எ-று. இது புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போ ரின்றியும் வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும். இனிப் போய வழிக் கற்புப் பூண்டலே கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று. பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் செயலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந். 15) இதனுள் வாயாகின்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமை யானும் விடலை னெப் பாலை நிலத்துத் தலைவன் பெயர் கூறினமை யானும் இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது. அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோள் குறுமகள் (அகம். 195) என்பதும் அது. (2) அந்தணர் முதலிய மூவர்க்கும் புணர்த்த கரணம் வேளாளர்க்குரியவான காலமுமுண்டெனல் 144. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க் காகிக காலமு முண்டே. இது முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - வேதநூல்தான் அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம்; கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு - அந்தணர் முதலியோர்க்கும் மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர மந்திர வகையான் உரித்ததாகிய காலமும் உண்டு எ-று. எனவே, முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழிதொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉந் தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்து இன்று. (3) பொய்யும் வழுவுந் தோன்றியபின் கரணங் கட்டப்பட்டதெனல் 145. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. இது வேதத்திற் கரணம் ஓழிய ஆரிடமாகிய கரணம் பிறந்தவாறும் அதற்குக் காரணமுங் கூறுகின்றது. (இ-ள்.) பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் - ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்தந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே; ஐயர் யாத்தனர் கரணம் என்ப - இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் காட்டினாரென்று கூறுவர் எ-று. ஈண்டு என்ப (249) என்றது முதனூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது. பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலே னென்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற் செய்யத்தகுவன செய்யாது சடங்கொப்புமை கருதித் தாமும் அந்தணரொடு தலைமை செய்தொழுகுதலுங் களவொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப் பொய்யும் வழுவுந் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் மேலோர் மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக் கட்டிக் கீழோர்க்குங் களவின்றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு கட்டினார். எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம் வேதநூற்கே உளதென்பது பெற்றாம். ஆயின் கந்தருவ வழக்கத்திற்குச் சிறந்த களவு விலக்குண்டதன்றோ எனின், ஒருவனையும் ஒருத்தியையும் எதிர்நிறீஇ இவளைக் கொள்ள இயைதியோ நீ எனவும், இவற்குக் கொடுப்ப இயைதியோ நீ எனவும் இருமுதுகுரவர் கேட்டவழி அவர் கரந்த உள்ளத்தான் இயைந்தவழிக் கொடுப்பவாகலின் அது தானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம். களவொழுக்கம் நிகழா தாயினும் எனபது, கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்றாம். இதனானே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப் புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித்தாம் நூல்செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும்பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார், அக் களவழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க. உ-ம்: மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி யங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டியது கடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்குரல் வானின்தலைப்பெயற் கீன்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல்சூட்டித் தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட்டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின்பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப மறைதிறன் அறியாளாகி ஓய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே (அகம். 136) என வரும். (4) கற்பின்கண் தலைவன் கூற்றுக்கள் நிகழுமிட மிவையெனல் 146. கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத் துண்டெனத் தோழி யேமுறு கடவு ளேத்திய மருங்கினும் அல்லல் தீர வார்வமோ டளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும், ஒழுக்கத்துக் களவினு ணிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய விடத்தும் அந்தரத் தெழுதிய வெழுத்தின்மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத் தானும் நோன்மையும் பெருமையு மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினும் உறலருங் குண்மையி னூடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவி னெச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமும் தானவள் பிழைத்த நிலையின் கண்ணும் உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும் மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் காமக் கிழத்தி மனையோ ளென்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ் சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தந்நிலை கிளப்பினும் அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் ஏனை வாயி லெதிரொடு தொகைஇப் பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. இது, பார்ப்பார் முதலிய பன்னிருவருங் (501 -2) கற்பிடத்துக் கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன் கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற் கூறுகின்றது. (இ-ள்.) கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமுமென்னும் இருவகைச்சடங்கானும் ஒரு குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்தகாலத்து: ஆன்றோராவார், மதியுங் கந்தருவரும் அங்கியும். நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - களவிற் புணர்ச்சி போலக் கற்பினும் மூன்று நாளுங் கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும். அது நாலாம் நாளை யிரவின்கண்ணதாம். உ-ம்: விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கட் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. (குறுந். 101) இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி. முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே. (அகம். 86) என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது. எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - அதன் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய நுகர்ச்சிக்கட புதிதாக வந்த காலத்தினிடத்தும்: உ-ம்: அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு (குறள். 1110) என்றது பொருள்களை உண்மையாக உணர்ந்த இன்பத்தை அறியுந் தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க உணராத அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற்போலுஞ் சேயிழை மாட்டுச் செறியுந்தொறுந் தலைத்தலை சிறப்பப்பெறுகின்ற காமத்தை முன்னர் அறியப்பெற்றிலே மென்று வேறுபடுத்த லென்றவாறு. அஞ்ச வந்த உரிமைக்கண்ணும் - தலைவனும் பிறரும் அஞ்சும்படி தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும்: அவை இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாற் பலவகையாகக் காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத்தலுமாம். உ-ம்: உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் - தெள்ளிய ஆண்மகன்கையில் அயில்வாள் அனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி. 39-6) இதனுள் நலமென்றது இம்மூன்றினையும். தலைவி இல்லறப் பகுதியை நிகழ்த்துமாறு பலவகையாகக் காணும் தன்மை உணர்வுடையோன் ஓதிய நூல் விரியுமாறுபோல விரியாநின்ற தெனவும், இவள் கொடைநலம் வள்ளன்மை பூண்டான் பொருளனைத்தெனவும், இவளது கற்புச் சிறப்புப் பிறர்க்கு அச்சஞ்செய்தலின் வாளனைத்தெனவுந், தலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க. நன்னெறிப் படரும் தொல் நலப் பொருளினும் - இல்லத்திற்கு ஓதிய நெறியின்கண் தலைவி கல்லாமற் பாகம்பட ஒழுகுந் (பழ. 6: 4) தொன்னலஞ் சான்ற பொருளின் கண்ணும்: பொருள்வருவாய் இல்லாத காலமும் இல்லற நிகழ்த்துதல் இயல்பாயிருத் தற்குத் தொன்னலமென்றார். உ-ம்: குடநீரட் டுண்ணும் இடுக்கண் பொழுதும் கடல்நீர் அறவுண்ணுங் கேளிர் வரினுங் கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (நாலடி. 39-2) இஃது ஒரு குடம் நீராற் சோறமைத்து உண்ணுமாறு மிடிப்பட்ட காலத்தும் மனைக்கு மாட்சிமையுடையாள் கடல் நீரை வற்ற உண்ணுங் கேளிர் வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக் கொள்ளுமெனத் தலைவன் வியந்து கூறினான். பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் - தலைவி அங்ஙனம் உரிமை சான்ற இடத்து அவளைப் பெருமை யின்கண்ணே நிறுத்திக் குற்றமமைந்த களவொழுக்கத்தை வழுவியமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயினும் உரைப்பினும்: அது களவொழுக்கத்தையுந் தீய ஓரையுள்ளுந் துறவாது ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்டும் அதனைத் தீதென்னாமற் கூறுதலாம். உ-ம்: நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமைந்ததே இல். (நாலடி. 39-3) இதனுள் மனைவி அமைந்துநின்ற இல்நிலையே இல்லறமாவதெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இத்துணை நன்மையாயிற்று என்றானாயிற்று. இது குறிப்பெச்சம். நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் (தோழி நாமக்காலத்து ஏமுறு கடவுள் உண்டென ஏத்திய மருங்கினும்) - தோழி இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தே யாம் வருந்தாதிருத்தற்குக் காரணமாயதோர் கடவுள் உண்டு எனக்கூறி அதனைப் பெரிதும் ஏத்திய இடத்துத் தலைவன் வதுவைகாறும் ஏதமின்றாகக் காத்த தெய்வம் இன்னும்காக்குமென்று ஏத்துதலும்: அது, குனிகா யெருக்கின் குவிமுகிழ் தாமரை முகத்தியைத் தந்த பாலே. என்னுங் குணநாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலாது, நேரிழாய் நீயும்நின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள் கொண்டு நிலைபாடிக் காண். (கலி. 39) எனத் தான் பராய தெய்வத்தினைத் தோழி கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்துதலாம். உ-ம்: அதிரிசை அருவி பெருவரைத் தொடுத்த பல்தேன் இறாஅல் அல்குநர்க் குதவும் நுந்தைநல் நாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி என்வயின் நோக்கலின்போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் திருந்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே. தேன் இறாலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் நின்நோய்க்கு இயற்றிய வெறி நுமர்க்குப் பயன்படாது எமக்குப் பயன்றருமென் றோன் என்வயின் நோக்கலின் என்றது, எனக்குப் பயன் கொடுக்க வேண்டுமென்று பராவுதலிற் றோளைப் புணர்ந்து உவந்தது என்றான். இது கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன் கூறியது. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் - வரைந்த காலத்து மூன்றுநாட் கூட்டமின்மைக்குக் காரணமென்னென்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தந் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக் கூறும்: அது முதனாள் தண்கதிர்க் செல்வதற்கும், இடைநாள் கந்தருவர்க்கும், பின்னாள் அடங்கியங் கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண்டிற்று, அங்ஙனம் வேதங் கூறுதலான் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று. சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் - அமுதிற்கு மாறாகிய நஞ்சை நுகரினும் நீ கையான் தீண்டின பொருள் எமக்கு உறுதியைத்தருதலின் தேவர்களுடைய அமிர்தத்தை ஒக்கும் எமக்கெனப் புனைந்துரைத்து இதற்குக் காரணங் கூறென்று அடிசிலும் பூவுந் தலைவி தொடுதலிடத்தும்: கூற்று நிகழும். உவமை இழிவு சிறப்பு. வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி யென்ற னிர் (குறுந். 196) எனத் தலைவன் கூற்றினைத் தோழிகொண்டு கூறியவாறு காண்க. அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங்காட்டிய குறிப்பினும் - வேட்பித்த ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார் கண்ணும், முற்ற உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவில்லாச் சிறப்பினையுடைய தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைத் தான் தொழுதுகாட்டிய குறிப்பின் கண்ணும்: பிறர்பிற ரென்றார் தேவர் மூவரென்பதுபற்றி, தன்னயைன்றித் தெய்வந் தொழாநாளை இத் தன்மையோரைத் தொழல் வேண்டு மென்று தொழுது காட்டினான். குறிக்கொளுங் கூற்றான் உரைத்தலிற் குறிப்பினு மென்றார். உதாரணம் வந்துழிக் காண்க. ஒழுக்கத்துக் களவினுள்நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல் உள்ளமோடு அளவிய இடத்தும் - வணக்கஞ்செய்தும் எதிர்மொழியாது வினாயவழிப் பிறராற் கூற்று நிகழ்த்தியும் எதிர்ப்பட்டுழி எழுந்தொடுக்கி யுந்தான் அக்காலத்து ஒழுகும் ஒழுக்கத்திடத்து முன்னர்க் களவுக் காலத்து நிகழ்ந்த கூட்டத் தருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய உள்ளத்தோடே உசாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும். உதாரணம் வந்துழிக் காண்க. கவவுக் கடுங்குரையள் (குறுந். 132) என்பது காட்டுவாரும் உளர். அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் (வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட ஒழுகுதலும்) - களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய எழுத்து வழிகெடுமாறு போல வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற்கண்ணும்: அது முன்புபோலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக் கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம். பொய்யற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தால் (கலி. 15) என்றவழி மையற்ற படிவம் எனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க. அழியல் அஞ்சல் என்று ஆ இரு பொருளினம் - வந்த குற்றம் நினக்கு உளதென்று அழியலெனவும் எனக்குள தென்று அஞ்சு லெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக் கண்ணும்: இவை இரண்டாகக் கொள்ளின் முப்பத்துநான்காமாதலின் இருவர் குற்றமுங் குற்றமென ஒன்றாக்கியது. தெய்வத்தினாதலின் ஏதம் பயவாதென்றான். யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனரீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 40) இது நம்மானன்றி நெஞ்சந்த தம்மில் தாங் கலத்தலின் தெய்வத்தான் ஆயிற்றெனத் தெருட்டியது. தான் அவட்பிழைத்த பருவத்தானும் - அங்ஙனந் தெய்வத்தினான் ஆயிற்றேனுங் குற்றமேயன்றோ என உட்கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சி வேண்ட என் குறிப்பிற் கேற்ப ஒழுகினையாக லின் நினக்கொரு குற்றமின்றென்று தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும்: கூற்று நிகழும். உ-ம்: நகைநீ கேளாய் தோழி தகைபெற நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு நாணிழுக் குற்றமை யறிகுநர் போல நாங்கண் டனையநங் கேள்வர் தாங்கண் டனைய நாமென் றோரே. இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினார்போல நாங் குறித்துழி வந்தொழுகிய தலைவர் தாங்குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினாரெனத் தோழிக்குத் தலைவி கூறியவழித் தலைவன் தன் பிழைப்புக் கூறியவாறு காண்க. (நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும்) தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவனான் உளதாகிய பொறை யையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்கையினானே; பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக் கண்ணும் - வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரொடு கூடி இருத்தற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப் பாட்டின் கண்ணும்: தன்னினாகிய மெய் - கருப்பம். அவிப்பலிகொள்ளும் அங்கியங் கடவுட்கும் அது கொடுக்குந் தலைவர்க்கும் இடையே நின்று கொடுப்பித்தலின் அந்தணரை வாயிலென்றார். ஆற்றல் சான்ற தாமே யன்றியும் நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை வட்டிகைப் படூஉந்திட்ட மேய்ப்ப அரிமயி ரொழுகுநின் அவ்வயி றருளி மறைநவில் ஒழுக்கஞ் செய்தும் என்றனர் துனிதீர் கிளவிநம் தவத்தினும் நனிவாய்த் தனவால் முனிவர்தஞ் சொல்லே. இதனுள் நந்தலைவரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பந் தங்கிய நினது வயிற்றைக்கண்டு உவந்து அதற்கேற்ற சடங்கு செய்து மென்றா ரெனவும், முற்காலத்து நாங்கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவுங் கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் - அங்ஙனஞ் சிறப் பெய்திய புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை சேர்ந்த காலத்தே: நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - சுற்றக் குழாத் துடனே வாலாமை வரைதலின்றி எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து: ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்: அமரர்ச் சுட்டியும் - தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக் கருதியும்: செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் - அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற் கண்ணும்: சிறப்பாவன பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் பெயரிடுதலும் முதலியனவும், எல்லா முனிவர்க்குந் தேவர்க்கும் அந்தணர்க்குங் கொடுத்தலும். சேர்தல் கூறவே, கருப்பம் முதிர்ந்த காலத்துத் தலைவன் பிறரொடு கூட்டமுண்மையுங் கூறிற்றாம். ஆண்டுத் தோழி கூறுவனவும் ஒன்றென முடித்த லாற் கொள்க. வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கும்ஐயவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த் தவ்வரித் திதலை யல்குன் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் பன்மாண் அகட்டிற் குவளை யொற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல முகைநாண் முறுவல் தோற்றித் தகைமலர்உண்கண் கைபுதைத் ததுவே. (நற். 370) இது நெய்யணி மயக்கம்பற்றித் தலைவன் கூறியது. நெடுநா வொண்மணி கடிமலை இரட்டக் குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென வொருசார்த் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த அறுவை மெல்லவணைப் புனிநறுநாறு செவிலியொடு புதல்வன்துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த நள்ளென் கங்குல் கள்வன் போல அகன்றுறை யூரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன்பிறந்த மாறே. (நற். 40) இது, முன் வருங்காலத்து வாராது சிறந்தோன் பெயரன் பிறத்தலான் வந்தானெனத் தோழி கூறினாள். குவளை மேய்ந்த குறுந்தாள் எருமை குடநிறை தீம்பால் படூஉ மூர புதல்வனை ஈன்றிவண் நெய்யா டினளே. இதுவும் அது. பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் - தலைவி தனது ஆற்றாமை மிகுதியான் தழுவி ஆற்றுதற்குக் குளிர்ந்த பயன் கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்தற்கண்ணும்: இதனானே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை யாற்றாமை எய்திற்றல ளென்றார். இப்பிரிவு காரணத்தான் தலைவனும் நிறையழிவ னென்றார். அகன்றுறை யணிபெற என்னும் மருதக்கலியுள், என்னைநீ செய்யினும் உணர்ந்தீவார் இல்வழி முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் நிரைதொடி நல்லவர்துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால் (கலி. 73) என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. உறலருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் - தலைவற்குச் சாந்தழி வேருங் குறி பெற்றார் கூந்தல் துகளும் உண்மையின் அவனைக் கூடுதல் அருமை யினானே ஊடன் மிகுந்த தலைவியைப் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்: என்றது உலகத்துத் தலைவரொடு கூடுந் தலைவியர் மனையறத்து இவ்வாறொழுகுவரென அவர் ஒழுக்கம் காட்டி அறத்துறைப்படுததலாம். மறைவெளிப்படுத்தலுந் தமரிற்பெறுதலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் ஊடல்மிகுத் தோள் என்றார், இரத்தற் பாலினும் பெண்பால் காட்டிப் பெயர்த்தலிற் பிறபிற பெண்டிர் என்றார். புனம்வளர் பூங்கொடி என்னும் மருதக்கலியுள், ஒருத்தி, புலவியாற் புல்லாதிருந்தாள்அலவுற்று வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன் தண்டா ரகலம் புகும் (கலி. 92) எனக்கூறி, அனவகை யால்யான்கண்ட கனவுதான் நனவாகக் காண்டை நறுநுதால் பன்மாணுங் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப் பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல அரும்பவிழ் பூஞ்சினை தோறும்இருங்குயில் ஆனாதகவும் பொழுதினால் மேவர நான்மாடக் கூடன்மகளிரு மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் ஆனாவிருப்போ டணியயர்வு காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. (கலி. 92) எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி தோன்று வித்து மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார் நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க. பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் - பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே தனிமை யுற்றிருந்த தலைமகனையுந் தலைமகளையுந் தனதருளினானே தானும் பிரிவினெச்சத்துப் புலம்பி நின்றான் ஒருவன் தலைவிதனைக் கண்டருளுதற்கு அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்: பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் எச்சத்து என்றார். உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம். நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் - முன்னில்லா தொரு சிறைப் போய் நின்று நீட்டித்துப் பிரிவினான் தலைவன் அஞ்சிய நோயின்கண்ணும்: இது துனி. மையற விளங்கிய என்னும் மருதக்கலியுள், ஏதப்பாடெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவ னின் ஆணைகடக்கிற்பார் யார். (கலி. 81) எனச் சேய்நின்றென்றதனான் துனித்து நின்றவாறுஞ், சினவலென்றதனாற் பிரிவு நீட்டித்தவாறும், நின்னாணை கடக்கிற்பார் யாரென அஞ்சிய வாறுங் கூறியவாறு காண்க. பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி. (கலி. 95) என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும். (சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும்) சென்று - தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்கு அவளை அணுகச் சென்று; கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே; பெயர்த்து - அவன் ஒருவாற்றான் அவளாற் றாமையைச் சிறது மீட்கையினாலே; உள்ளிய வழியும் - அவள் கூடக்கருதிய விடத்தும்: தலைவன் கூற்று நிகழும். இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உ-ம்: முற்கூறிய பாட்டுள், அதிர்வில் படிறெருக்கிவந் தென்மகன்மேல் முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி உதிர்துகள் உக்கநின்ஆடை ஒலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்; இனிஎல்லாயாந், தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்றும் எங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத்துழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம். (கலி. 81) எனத் தலைவன் கூறியவாறு காண்க. காமத்தின் வலியும் - அவள் அதுனித்து நீங்கியவழி முற்கூறிய வாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமைவாயிலாகச் சென்று வலிந்துப் புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும்: தலைவன் கூற்று நிகழும். இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உ-ம்: யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு (கலி. 89) என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி, ஏஎ, இவை, ஓருயிர்ப் புள்ளின்இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமாறியாது. (கலி. 89) என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க. கைவிடின் அச்சமும் - தலைவி தான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும்: தலைவற்குக் கூற்று நிகழும். அஃது உணர்ப்புவயின் வாரா வூடலாம். எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. (குறுந். 19) இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் நமக்கு யாரெனப் புலத்தலன்றி ஆண்டுநின்றும் பெயர்தல் கூறாமையிற் கைவிடின் அச்சமாயிற்று. தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும் - தலைவன் தலைவியைப் பிழைத்த பிரிவின்கண்ணும்: பிழைத்த வென்றார் ஆசிரியர், இயற்கைப் புணர்ச்சி தொடங்கிப் பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின். உ-ம்: அன்பும் மடனுஞ் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்குங் கிளவியும் பிறவும் ஒன்றுபடு கொள்கையொட டோராங்கு முயங்கி இன்றே இவணம் ஆகி நாளைப் புதலிவ ராடமைத்தும்பி குயின்ற அகலா அந்துளை கோடை முகத்தலின் நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல் ஆயக்குழற் பாணியின்ஐதுவந் திசைக்குந் தேக்கமழ் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து யாத்த தூணித் தலைதிறந் தவைபோல் பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர் கழறுளை முத்திற் செந்நிலத் துதிர மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை புயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல் செறிதொடி முன்கைநங் காதலி அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே. (அகம். 225) இது நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது. வயங்கு மணிபொருத என்பதும் அது. (அகம். 166) (உடன்சேறல் செய்கையொடு அன்ன பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும்) (101) அன்னவும் பிற (102) - நீ களவில் தேற்றிய தெளிவகப் படுத்தலுந் தீராத் தேற்றமும் பொய்யாம்; செய்கையொடு உடன்சேறல் - அவை பொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க; மடம்பட வந்த தோழிக்கண்ணும் - என்று தன்னறியாமை தோன்றக் கூறிவந்த தோழிக்கண்ணும்: கூற்று நிகழும். உடன் கொண்டுபோதன் முறைமையன்றென்று அறியாமற் கூறலின் மடம்பட வென்றார். செய்கைகளாவன தலைவன் கைபுனை வல்வில் நாண் ஊர்ந்தவழி இவள் மையில் வாண்முகம் பசப்பூர் தலும் அவன் புனைமாண் மரீஇய அம்பு தெரிந்தவழி இவள் இன்னநோக்குண்கண்ணீர் நில்லா மையும் (கலி.7))பிறவுமாம். பாஅலஞ்செவி என்னும் பாலைக்கலியுள், ஓரிராவைகலுட் டாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ (கலி. 5) எனவும், அந்நாள்கொண்டிறக்குமிவ ளரும்பெறலுயிரே (கலி. 5) எனவும், உடன்கொண்டு சென்மினெனத் தோழி கூறியது கேட்ட தலைவன் இவளை உடன்கொண்டு போதல் எவ்வாற்றானும் முறைமை யன்றென்று தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறவனவும் பிறவுங் கொள்க. வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள்எம்மொ டுணீஇய வருகதில் லம்ம தானே யளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே. (குறுந். 56) இது தோழி கேட்பது கூறியது. நாண்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் வேனி னீடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடி கயந்தலை மண்ணிச் சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வாலிணர்தயங்கத் தீண்டிச் சொறிபுற முரிஞிய நெறியயன் மராஅத் தல்குறு வரிநிழ லசைஇய நம்மொடு தான்வரு மென்ப தடமென்றோளி யுறுகணை மழவர் உருள்கீண்டிட்ட ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் கல்மிசைக் கடுவளி யெடுத்தலில் துணைசெத்து வெருளேறு பயிரும் ஆங்கண் கருமுக முசுவின் கானத் தானே. (அகம். 121) இது நெஞ்சிற்குக் கூறியது. வேற்று நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ஙனம் வேற்று நாட்டிற் பிரியுங் காலத்துத் தானுறும் இடும்பையிடத்து: தலைவற்குக் கூற்று நிகழும். விழுமமாவன: பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக்கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியுமென்றலும், பிரியுங்கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குதலும் பிறவுமாம். நெஞ்ச நடுக்குற (கலி. 24) என்னும் பாலைக்கலியுள் கனவிற் கூறியவாறு காண்க. உண்ணா மையினுங்கிய மருங்கின் ஆடாப் படிவத் தான்றோர்போல வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்றம் இறந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி யழிதக வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவேல் எஃகிலை யிமைக்கு மழைமருள் பஃறோன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம்போல ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. (அகம். 123) இது போவேமோ தவிர்வேமோ என்றது. அருவி யார்க்கும் பெருவரையடுக்கத் தாளி நன்மான்வேட்டெழு கோளுகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களி றிழுக்குந் துன்னருங் கானம் என்னாய் நீயே குவளை யுண்கண் இவளீண் டொழிய வாள்வினைக் ககறி யாயி னின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா வந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையுமிவண்மாமைக் கவினே. (நற். 205) இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது. தேர்செல அழுங்கத் திருவிற் கோலி ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய யான்றொடங் கினெனா னிற்புறந் தரவே. (ஐங்குறு. 428) இஃது ஐயந் தீர்த்தது. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (குறுந். 63) இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது. மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும் - பிரிந்த தலைவன் இடைச் சுரத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்: உழையணந் துண்ட விறைவாங் குயர்சினைப் புல்லரை இரத்திப் பசுங்காய் பொற்பக் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால் அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே சேறு மடந்தை யென்றலின்தான்தன் நெய்தல் உண்கண் பைதல் கூரப் பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந் துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பின் இம்மென் பெருங்களத் தியவர்ஊதும் ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே. (நற். 113) இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது. ஒன்றுதெரிந் துரைத்திசின் நெஞ்சே புன்காற் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற் களிறுநின் றிறந்த நீரல் ஈரத்துப் பால்வீ தோன்முலை யகடுநிலஞ் சேர்த்திப் பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும் விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே யாள்வினைக் ககல்வா மெனினும் மீள் மெனினு நீதுணிந்ததுவே. (நற். 103) இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது. ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை யருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறுதரு வதுகொல் தானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்ட வென் உரங்கெழு நெஞ்சே. (ஐங்குறு. 329) இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழையர்க்கு உரைத்தது. நெடுங்கழை முளிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே யொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே. (ஐங்குறு. 322) இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம நினைந்து இரங்கியது. இன்னும் இரட்டுறமொழித லென்பதனாற் செய்வினை முற்றி மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது, என்றுகொல் எய்தும் ஞான்றே சென்ற வளமலை நாடன் மடமகள் இளமுலை ஆகத் தின்னுயிர்ப் புணர்ப்பே கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர்தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளிர் ஒக்கிய தொடிமா ணுலக்கைக் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபி னொழியப் போகியுரந்து ரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் எய்திப் பன்மாண் ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின வாணுதல் அந்தீங் கிளவிக்குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றவெ னெஞ்சே (அகம். 9) எனவரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. அவ்வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும் - பிரிந்தவிடத்துத் தான் பெற்ற, பெருக்கம் எய்திய சிறப்பின்கண்ணும் மனமகிழ்ந்து கூறும். சிறப்பாவன பகைவென்று திறை முதலியன கோடலும் பொருண் முடித்தலுந் துறைபோகிய ஒத்தும் பிறவுமாம். உ-ம்: கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும் (அகம். 93) எனவும், தாழிருள் துமிய (குறுந். 270) என்பதனுட் செய்வினை முடித்த செம்மலுள்ளமொடு எனவும், மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. முன்னியது முடித்தனமாயின் என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க. பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் - அச்சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிடத்தும்: கூற்று நிகழ்த்தும். அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார். இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்த தல்லது வந்த ஆறுநனி யறிந்தன்றோ விலனேதாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கன னெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே. (அகம். 384) இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க. மறத்தற் கரிதாற் பாக பன்னாள் வறத்தொடு பொருந்திய வுலகுதொழிற் கொளீஇய பழமழை பொழிந்த புதுநீ ரவல்வர நாநவில் பல்கிளை கறங்க நாவுடை மணியொலி கேளாள் வாணுத லதனால் ஏகுமின் என்ற இளையர் வல்லே இல்புக் கறியுந ராக மெல்லென மண்ணாக் கூந்தன்மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குரலழுத்திய அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ அவிழ்பூ முடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே. (நற். 42) இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது. ஊர்க பாக வொருவினை கழிய (அகம். 44)) செல்க தேரே நல்வலம் பெறுந (அகம் 34; 374) எனவும் வரும். தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ ... ... ... ... ... தாள்வளம் படவென்ற தகைநன்மாமேல்கொண்டு (கலி. 31) என வருவன தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு வருங்காற் பாகற்கே கூறுவனென்றார். (காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்) காமக்கிழத்தி மனையோளென்றிவர் சொல்லிய ஏமுறு கிளவி எதிரும் - இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும்: கூற்று நிகழ்த்தும். அவை அருஞ்சுரத்து வருத்தம் உற்றீரே எனவும் எம்மை மறந்தீரே எனவுங் கூறுவனவும் பிறவுமாம். எரிகவர்ந்த துண்ட என்றூழ் நீளிடை அரிய ஆயினும் எளிய அன்றே அவ வுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக் கடுமான் திண்தேர் கடைஇ நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே. (ஐங்குறு. 360) இது வருத்தம் உற்றீரே என்பதற்குக் கூறியது. தொடங்குவினைதவிரா அசைவில் நோன்றாள் கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாவி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச் செய்வினைக் ககன்ற காலை யெஃகுற்று இருவே றாகிய தெரிதகு வனப்பின் மாவி னறுவடி போலக் காண்டொறும் மேவல் தண்டாமகிழ்நோக் குண்கண் நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென் யானென் தேற்றிப் பன்மாண் தாழக் கூறிய தகைசால் நன்மொழி மறந்தனிர் போறிர் எம்மெனச் சிறந்தநின் எயிறுகெழுவர்வாய் இன்னகை யழுங்க வினவ லானாப் புனையிழை கேளினி வெம்மை தண்டாஎரியுகு பறந்தலைக் கொம்மை வாடிய இயவுள் யானை நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி அறுநீ ரம்பியின் நெறிமுத லுணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு நாணுத்தளையாக வைகிமாண் வினைக்கு உடம்பாண் டொழிந்தமை யல்லதை மடங்கெழு நெஞ் சநின்னுழை யதுவே. (அகம். 29) இது மறந்தீர்போலும் என்றதற்குக் கூறியது. உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து மருண்ட னெனல் லெனோவுலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை இறைத்துணச் சென்றற் றாஅங்கு அனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. (குறுந். 99) பிறவு மென்றதனான் இத்தன்மையனவுங் கொள்க. இவை இருவர்க்கும் பொது. இவற்றைக் காமக்கிழத்தி விரைந்து கூறுமென்றற்கு அவளை முற்கூறினார். சென்ற தேயத்து உழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தம் நிலை கிளப்பினும் - அங்ஙனம் கூறிய இருவர்க்குந் தான் சென்ற தேயத்தில் நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கக்கூறி நனவினாற் சேறலின்றிக் கனவினாற் கடத்திடைச் சென்ற தம்முடைய நிலையைத் தலைவன் கூறினும்: உ-ம்: ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந் துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின் ஆய்நலம் மறப்பெனோமற்றே சேணிகந்து ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக் காடுகவர்பெருந்தீ யோடுவயின் ஓடலின் அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத் தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன்றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி யருஞ்செல வாற்றாஆரிடை ஞெரேரெனப் பரந்துபடு பாயல் நவ்வி பட்டென இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினைநின்ற நிற்கண்டு இன்னகை இனையம் ஆகவும் எம் வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடோந்து புருவமொடு குவவுநுத னீவி நறுங்கதுப் புளரிய நன்னர் அமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே. (அகம். 39) இதனுள் வறுங்கை காட்டிய வாயல் கனவினென நனவின்றிச் சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க. இதுவும் இருவர்க்கு மாம். அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் - செயற்கு அரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்திய காலத்தே தலைவி விருந்தெதிர் கோடலோடே நீராடிக் கோலஞ் செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும்: தலைவன் கூற்று நிகழ்த்தும். உ-ம்: முரம்புதலை மணந்த நிரம்பாஇயவின் ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப உச்சிக்கொண்ட ஓங்குகுடை வம்பலீர் முற்றையு முடையமோ மற்றே பிற்றை வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் நீர்வார் புள்ளி யாக நனைப்ப விருந்தயர் விருப்பினள் வருந்துந் திருந்திழை யரிவைத் தேமொழி நிலையே. (நற். 374) என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு நல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க. மாலை எந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் - வினைமுற்றிப் புகுந்த தலைமகனை எதிரேற்றுக் கொள்ளும் மங்கலமரபினர் மாலையேந்திய பெண்டிரும் புதல்வருங் கேளிரும் ஆகலான் அக்கேளிர் செய்யும் எதிர்கோட லொழுக்கத்துக் கண்ணும்: தலைமகன் உள்ளமகிழ்ந் துரைக்கும். உம்மை விரிக்க. பெண்டிரும் மக்களுமாகிய கேளிரென்று மாம். உ-ம்: திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பின் நாணுடை அரிவை மாண்நகர் நெடுந்தேர் எய்த வந்தன்றாற் பாக நல்வரவு இளையர் இசைத்தலின் கிளையோ ரெல்லாஞ் சேயுயர் நெடுங்கடைத் துவன்றினர் எதிர்மார் தாயரும் புதல்வருந் தம்முன் பறியாக் கழிபேருவகை வழிவழி சிறப்ப அறம்புரி யொழுக்கங் காண்கம் வருந்தின காண்கநின் திருந்துநடை மாவே. எனவரும். ஏனை வாயில் எதிரொடு தொகைஇ - சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்றோடே முற் கூறிய வற்றைத் தொகுத்து: உ-ம்: நகுகம் வாராய் பாண பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாம்தன் முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப் பிறைவனப் புற்ற மாசில் திருநுதல் நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ யாரையோவென்றிகழ்ந்து நின்ற துவே. (நற். 250) இஃது ஏனைவாயிலாகிய பாணற்கு உரைத்தது. பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் - ஓதப்பட்ட இவையே இடமாக நல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்துநின்ற கூறுபாட்டை உடையவாகிய முப்பத்துமூன்று கிளவியும்: எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன - களவுபோல இழிதொழி லின்றி ஆராய்தற்கரிய சிறப்பொடு கூடிய தலைவன் கண்ண எ-று. சிறப்பாவன, வந்த குற்றம் வழிகெட ஒழுகலும், இல்லறம் நிகழ்த்தலும், பிரிவாற்றுதலும், பிறவுமாம். இன்னவிடத்தும் இன்னவிடத்தும் நிகழுங் கூற்றுக்களை வாயிலெதிர் கூறுங் கூற்றோடே தொகுத்துப் பண்ணுதற்கமைந்த பகுதியுடையவாகிய முப்பத்துமூன்று கிளவியுந் தலைவன்கண் நிகழ்வன என்று முடிக்க. எடுத்துரைப்பினுந் தந்நிலை கிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதிரொடு தொகைஇ யென முடிக்க. இவற்றுட் பண்ணிக் கொள்ளும் பகுதியாவன, யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப் புதைத்தால் தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவனென்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண்புதைத்துழித் தலைவன் கூறுவனவும், பள்ளி யிடத்து வந்திருந்து கூறுவனவும், இவள் ஊடற்குக் காரணம் என்னென்று தோழி வினாயவழிக் கூறுவனவும், பிரிந்தகாலத்து இவளை மறந்தவா றென்னென்ற தோழிக்குக் கூறுவனவும், பிறவுமாம். உ-ம்: சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன நலம்பெறு கையினெங் கண்புதைத் தோயே பாயல் இன்று ணையாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே (ஐங்குறு. 293) தாழியருள்துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி ஊழிற் கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ டிவளின்மேவலம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள்மலர்நாறும் நறுமென கூந்தல் மெல்லணையேமே (குறுந். 270) இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றோனாக் கண்ணிறை நீர்கொண்டனள் (குறள். 1315) தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரா ராகுதி ரென்று (குறள். 1319) எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய் கூந்தன் மாஅ யோளே (ஐங்குறு. 324) எனவும் வரும். இன்னும் அதனானே ஊடலை விரும்பிக் கூறுவனவுங் கொள்க. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று (குறள். 1307) ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா (குறள். 1329) என வரும். இன்னுங் கற்பியற்கண் தலைவன்கூற்றாய் வேறுபடவருஞ் சான்றோர் செய்யுட்களெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. (5) கற்பின்கண் தலைவி கூற்றுக்கள் நிகழுமிடங்கள் இவை எனல் 147. அவனறிவு ஆற்ற அறியு மாகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையின் திரியா அன்பின் கண்ணுங் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்புநனி நாட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையெனஇரத்தற் கண்ணும் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் தந்தையர் ஒப்பர் மக்களென் பதனான் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் கொடியோர் கொடுமை சுடுமென ஓடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் தன்வயின் சிறைப்பினு மவன்வயின் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப. இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது. (இ-ள்.) (அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையின் திரியா அன்பின்கண்ணும்) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் - வேதத்தையுந் தரும் நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத தலைவி மிக அறியுமாதலின்; ஏற்றற்கண்ணும் - அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும் - தத்தங் குலத்திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் - அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து; பெருமையில் திரியா அன்பின்கண்ணும் - தத்தங் குலத்திற்கேற்ற பெருமை யினின்றும் நீங்காத அன்பு செய்து ஒழுகுதற்கண்ணும்: அறியுமாகலின் அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக. என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்பதூஉம் அவர்களும் இது கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு. உ-ம்: நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்டாதூதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின்ற மையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே. (நற். 1) இதனுள், தாமரைத்தாதையும் ஊதிச் சந்தனத்தாதையும் ஊதி வைத்த தேன் போலப் புரைய என்றதனான் ஏற்றற்கண் தலைவி கூறினாள். பிரிவறியல ரென்றதும் அன்னதொரு குணக்குறையில ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம். நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந். 3) இது, நிறுத்தற்கட் கூறியது. கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்தவிடத்தும்: உ-ம்: காமந் தாங்குமதி யென்போ தாமஃ தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந். 290) இது, தெருட்டுந் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது. இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமரல் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்டஞான்று இன்பமுந், தனிப்பட்ட ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்: உ-ம்: வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறி வயிரிற் கிளிவிளி பயிற்றும் நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் புணரிற் புணருமார் எழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவென் அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால் அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமுந் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. (நற். 304) இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞசும் புன்க ணுடைத்தாற் புணர்வு (குறள். 1152) என வரும். கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் - யானைக் கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தை யுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக் கண்ணும்: தன்னை அவமதித்தானென்றற்கு இளிவரு நிலையென்றார். கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர புதல்வனை யீன்றஎம் முயங்கல் அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே. (ஐங்குறு. 65) இது, புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது. புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை - புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோடே புதுவது புணர்ந்த பரத்தையா தன்மாட்டு மனநெகிடிந்த மென்மையின் பொருட்டு அவர்க்கு அருள்செய்யப் பிரிந்து வந்தோனை; புலம்பு நனி காட்டி - தனது தனிமையை மிகவும் அறிவித்து; இயன்ற நெஞ்சந் தலைப் பெயர்த்து அருக்கி - அவன் மேற்சென்ற நெஞ்சினைச் செல்லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு அருகப்பண்ணி; எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறருள் ஒருத்தியைக் காணாளாயினுங் கண்டாள்போலத் தன்முன்னர்ப பெய்து கொண்டு வாயில் மறுத்ததனான் தோற்றிய நயனுடைமைக்கண்ணும்: எனவே, மறுப்பாள்போல் நயந்தாளாயிற்று. கிழவனை மறுத்த வெனக் கூட்டுக. உ-ம்: கடல்கண்டன்ன கண்ணகன் பரப்பில் நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண்டன்ன தூம்புடைத் திரள்கால் களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கின் கழுநிவந் தன்னகொழுமுகை இடையிடை முறுவன் முகத்திற் பன்மலர் தயங்கப் பூத்த பொய்கைப் புள்ளிமிழ் பழனத்து வேப்புனனை அன்ன நெடுங்க ணீர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல் திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் ஈர்மலி மண்ணச் செறியும் ஊர மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி அரிமலர் ஆம்பலோ டார்தழை தைஇ விழவாடு மகளிரொடு தழூஉவணிப் பொலிந்து மலரேர் உண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி தொடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலுநின் காதலி யெம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய என்னகடத்தளோ மற்றே தன்முகத் தெழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென உருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே. (அகம். 176) என வரும். எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே எதிர்பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க. கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்முள் அன்ன வெண்கால் மாமலர் பொய்தன் மகளிர் விழவணிக் கூட்டும் அவ்வயல் நண்ணிய வளங்கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ தோழி யல்கல் பெருங்கதவு பொருத யானை மருப்பின் இரும்புசெய் தொடியி னேர வாகி மாக்க ணடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற்று இவைபா ராட்டிய பருவமு முளவே யினியே. புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத் திதிலை அணிந்த தேங்கொள் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே ஆயிடைக், கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயி ரிஃதோ செல்வற் கொத்தனெம் யாமென மெல்லவென் மகன்வயிற பெயர்தந் தேனே யதுகண்டு யாமுங் காதலெம் அவற்னெச் சாஅய்ச் சிறுபுறங் கவையினன்ஆக உறுபெயல் தண்டுளிக் கேற்ற பழவுழு செஞ்செய் மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. (அகம். 26) இதனுள் ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப் பொதுவாகக் கூறிய வாறும் வேண்டினமெனப் புலம்புகாட்டிக் கலுழ்ந்ததென ஈரங் கூறியவாறுங் காண்க. தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் - பரத்தையர்மாட்டுத் தங்கிய செவ்வியை மறையாத ஒழுக்கத் தோடே வந்த தலைவனை நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்துகோடற்கண்ணு: உ-ம்: அகன்றுறை யணிபெற என்னும் மருதக்கலி (73) யுள் நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவர்இடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால் என்பன கூறி, மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தலைப் பெண்டிரைத் தேற்றிமற்றியாமெனின் தோலாமோ நின்பொய் மருண்டு (கலி. 73) எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் செல்லா னென்பது இடமுங் காலமும்பற்றி அறிந்தகாலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பெறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்று தற்கண்ணும்: உ-ம்; புள்ளிமி ழகல்வயல் என்னும் மருதக்கலியுள். பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயிற் சென்றிஅணிசி தைப்பான் ஈங்கெம் புதல்வனைத்தந்து. (கலி. 79) எனவும், சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முது பழனத்து மீனுடன்இரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமலர் ஆரும் ஊர யாரையோநிற் புலக்கேம் வாருற் றுறையிறந்து ஒளிருந் தாழிருங் கூந்தல் பிறளும் ஒருத்தியை எம்மனைத் தந்து வதுவை யயர்ந்தனையென்ப அஃதியாங் கூறேம் வாழிய ரெந்தை செறுநர் களிறுடை யருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவெம் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ. (அகம். 46) எனவும் வரும். காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்து கொண்ட காமக்கிழத்தி, தலைவி புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும்: அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அதற்கு உடன் பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ஏமுறு விளையாட்டு என்றார். இறுதி யென்றார் விளையாட்டு முடியுந் துணையுந் தான் மறையநின்று பின்னர்க் கூறுதலின். உ-ம்: நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே கூரெயிற்று அரிவை குறுகினள் யாவருங் காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங்கு இளமுலை வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து கொண்டனள் நின்றோட் கண்டுநிலைஇச் செல்லேன் மாசில் குறுமகள் எவன்பே துற்றனை நீயுந் தாயை யிவற்கென யான்தற் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலங் கிளையா நாணிநின்றோள் நிலைகண்டு யானும் பேணினேன் அல்லெனோ மகிழ்ந வானத்து அணங்கருங் கடவுள்அன் னோள்நின் மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே. (அகம். 16) என வரும். (சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்) சிறந்த செய்கை அவ்வழித்தோன்றி - காமக்கிழத்தியது ஏமுறும் விளையாட்டுப் போலாது தலைவி தன் புதல்வனைத் தழீஇ விளையாட்டை யுடைய இல் லிடத்தே தலைவன் தோன்றி; அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து - அவ் விளையாட்டு மகிழ்ச்சியாகிய மனையறத் தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன் வரவினைத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச்செய்து; பெயர்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்: தன்வரவறியாமை என்றதற்குத் தன்னைக் கண்டால் தலைவி யுழை நின்றார் தனக்குச் செய்யும் ஆசாரங்களையும் அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க. உ-ம்: மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை உருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ் சாதிடை காட்டும் உடைகழல் அந்துகில் அரிபொலி கிண்கிணி ஆர்ப்போவா தடிதட்பப் பாலோடு அலர்ந்த முலைமறந்து முற்றத்துக் கால்வல்தேர் கையின் இயக்கி நடைபயிற்றா ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் போல வருமென் உயிர்; பெரும, விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள்யாங் கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் றற்றாப் பெருந்தகாய் கூறு சில; எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி யேனாதிப் பாடிய மென்றற்றா நேர்யநாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட ஓவாது அடுத்தடுத்து அத்தத்தாவென் பான்மாண வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலும் மற்றிவன் வாயுள்ளிற் போகான் அரோ; உள்ளி யுழையே ஒருங்கு படைவிடக் கள்ளர் படர்தந் ததுபோலத் தாமெம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு; ஏதப்பாடுள்ளிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின் ஆணைகடக்கிற்பார் யார்: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி உதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்; இனி யெல்லா யாம், தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம் (கலி. 81) என வரும். தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான் அந்தமில் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும் - அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தந்தையரை ஒப்பரென்னும் வேதவிதிபற்றி முடிவில்லாத சிறப்பினை யுடைய மகனைப் பழித்து வெகுளுதற் கண்ணும்: மகனுக்கும் இது படுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழித்தென்னாது மகப்பழித் தென்றார். மைபடு சென்னி என்னும் மருதக்கலியுள், வனப்பெலா நுந்தையை யொப்பினும் நுந்தை நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி யொன்றினேம் யாமென்று றுணர்ந்தாரை நுந்தைபோல் மென்றோள் நெகிழ விடல் (கலி. 86) என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன்தலைவன்மேல் வீழ்தலின், தந்தை வியன்மார்பில் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன். (கலி. 86) எனத் தன் திறந்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க. (கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்) கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ - கொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோரை; கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுதற்கு விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய் வந்து கூறிய சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து; பகுதியி னீங்கிய கொடுமை - காவற்பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி (41) காத்தலினின்று நீங்கிய பரத்தையரைக் கூடிய கொடுமை; சுடுமென ஒடியாது தகுதிக் கண்ணும் - நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன் தவற்றைக் கூறுதலைக் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்; இன், நீக்கப்பொருட்டு; பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர் முதலியோர் புதிதிற் கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய்வேறுபாட்டொடு வந்தானைக் கண்டு அப்பகுதிகளைப் பரத்தையராகக் கூறுவாளாயிற்று. அது, இணைபட நிவந்தஎன்னும் மருதக்கலியுள், கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப் பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டொன்றானோ பேணானென்றுடன்றவர் உகிர்செய்த வடுவினான் மேல்நாள்நின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை நாடிநின்தூதாடித் துறைச்செல்லாள் ஊரவர் ஆடைகொண் டொலிக் குநின் புலைத்திகாட் டென்றாளோ கூடியார்ப் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை; வெறிது நின்புகழ்களை வேண்டாரின் எடுத்தேத்தும் அறிவுடை அந்தணன் அவளைக்காட் டென்றானோ களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல் குறிபெற்றார் குரல்கூந்தல் கோடுளர்ந்த துகளினை (கலி. 72) என்பவற்றாற் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க. ஏந்தெழின் மார்ப எதிரல்ல நின்வாய்ச்சொல் பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை சாந்தழி வேரை சுவற்றாழ்ந்த கண்ணியை யாங்குச் சென்றீங்குவந் தீத்தந்தாய்; கேளினி ஏந்தி, எதிரிதழ் நீலம் பணைந்தன்ன கண்ணாய் குதிரை வழங்கிவரு வல்; அறிந்தேன் குதிரைதான் பால்பிரியாஐங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல் மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்வுளை நீல மணிக்கடிகை வல்லிசை யாப்பின்கீழ் ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற உத்தி யெருகாழ்நூலுத்தரியத் திண்பிடி நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பல கண்டிகைத் தார்மணி பூண்ட தமனிய மேகலை நூபுரப் புட்டி லடியொட மைத்தியாத்த வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றிநீ காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை ஆய்சுதை மாடத் தணிநிலா முற்றத்துள் ஆதிக் கொளீஇ வசையினை யாகுவை வாதுவன் வாழியநீ; சேகா, கதிர்விரி வைகலிற் கைவாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட் குதிரையோ வீறியது; கூருகிர் மாண்ட குளும்பினது நன்றே கோரமே வாழிகுதிரை; வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரை யுடலணி போலநின் மெய்க்கட் சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது ந்றே வியமமே வாழி குதிரை; மிக நன்று, இனியறிந்தேன் இன்றுநீ யூர்ந்த குதிரை பெருமணம் பண்ணியறத்தினிற் கொண்ட பருமக் குதிரையோ வன்று; பெருமநின், ஏதில் பெரும்பாணன் தூதாட வாங்கேயோர் வாதத்தான் வந்த வளிக்குதிரை ஆதி உருவழிக்கும் அக்குதிரை யூரல்நீ ஊரில் பரத்தை பரியாக வாதுவனாய் என்று மற்றச்சார்த் திரிகுதிரையேறிய செல். (கலி. 96) இதனுட் பாணன் தூதாட வாதத்தான் வந்த குதிரையென்ப தனான் அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியி னின்று நீங்கியவாறுங் குதிரையோ வீறியதென்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச்சுடுகின்றவாறும் அதனை நீக்கிய பரத்தை யரைக் குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தக்குநின்றவாறுங் காண்க. கடவுட்பாட்டு (கலி. 93) ஆங்கோர் பக்கமும் யானைப் பாட்டுக் (கலி. 97) காவற் பாங்கின் பக்க முமாம். (கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும்) கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியி னீங்கிப் பரத்தையர்மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி; அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனை அதனின்மீது துனிமிக்குக் கழறி; காதல் எங்கையர் காணின் நன்றென - நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி; மாதர் சான்ற வகையின் கண்ணும் - காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும்: பொறாதாரைக் கொள்ளா ரென்பவாகலிற் கோடல் பொறுத்த லாயிற்று, காதலெங்கையர் மாதர் சான்ற என்பனவற்றான் துனிகூறினார். எனவே, யாங்கண்ட தனாற் பயனின் றென்றார். உ-ம்: நில்லாங்கு நில் என்னும் பூழ்ப்பாட்டினுள், மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகாணீ; நல்லாய், பொய்யெல்லாந் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி, அருளுகம் யாம்யாரேம் எல்லா தெருள அளித்துநீ பண்ணிய பூழெல்லாம் இன்னும் விளித்துநின் பாணனோட டாடி அளித்தி விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாம்நின்பூழ். (கலி. 95) இதனுள் அருளினி யென அடிமேல் வீழ்ந்தவாறும் அருளுகம் யாம் யார் எனக் காதல் அமைந்தவாறும் விளித்தளித்தி யென இப்பணிவை நின் பெண்டிர் கொள்வரெனவுங் கூறியவாறுங் காண்க. நினக்கே அன்றஃதெமக்குமார்இனிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினையாகி ஈண்டுநீ அருளாதாண்டுறை தல்லே. (ஐங்குறு. 46) இதுவும் அது. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணிகளை யுடைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்தவிடத்தும்: அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் கண்ணிய என்றார். பரத்தையர் சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தை யென்றார். எனவே தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று. உ-ம்: உறுவளி தூக்கும் உயர்சினை மாவின் நறுவடி யாரிற் றவைபோல் அழியக் கரந்தியான் அரக்கவுங் கைந்நில்லா வீங்கிச் சுரந்தவென் மென்முலைப் பால்பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த பொழுதினா னெல்லா கடவுட் கடிநகர் தோறும் இவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை ஈர மிலாத இவன்தந்தை பெண்டிருள் யாரில் தவிர்ந்தனை கூறு; நீருள், அடைமறை ஆயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண் டுள்ளா மகனல்லான் பெற்ற மகனென்று அகனகர் வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட்கையுறை என்றிவற் கொத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன்பெண்டிர் ஈத்தவை கொள்வானாம் இஃதொத்தன் சீத்தை செறுத்தக்கான் மன்ற பெரிது; சிறுபட்டி, ஏதிலார் கைஎம்மை எள்ளுபு நீதொட்ட மோதிரம் யாவேயாயாங் காண்கு; அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச் சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள் குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ் செறியாப் பரத்தை இவன்றந்தை மார்பின் பொறியொற்றிக் கொண்டாள்வல் என்பது தன்னை அறீஇய செய்த வினை; அன்னையோஇஃதொன்று, முந்தைய கண்டும் எழுகல்லா தென்முன்னர் வெந்தபுண் வேலெறிந் தற்றாஇஃதொன்று தந்தை யிறைத்தொடீஇ மற்று; இவன், தன்கைக் கண் தந்தார் யார்; எல்லாஅ விது இஃதொன்று, என்னொத்துக் காண்க பிறரும் இவற் கென்னுந் தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை இதுதொடுக என்றவர் யார்; அஞ்சாதி; நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த பூவெழி லுண்கண் அவளுந் தவறிலள் வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார் மேல்நின்றும் எள்ளிஇதுஇவன் கைத்தந்தாள் தான்யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடையேன் (கலி. 84) என வரும். தன்வயிற் சிறைப்பினும் - தலைவனின் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அத்தலைவன் மாட்டும் அவன் காதலித்த பரத்தையர் மாட்டுஞ் செல்லாமற் புதல்வனைத் தன்பாற் சிறை செய்தற் கண்ணும்: உ-ம்: புள்ளிமி ழகல்வயல் என்னும் மருத்தக்கலியுள், அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால் தோய்ந்தாரை அறிகுவென் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ; புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின் பூணினால் குறிகொண்டாள் புலக்குவள்அல்லளோ; கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால் நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ; எனவாங்கு, பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றி அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து. (கலி. 79) இது தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது. ஞாலம் வறந்தீர என்னும் மருதக்கலியுள், அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான்அலைக்கொரு கோல்தா நினக்கவள் யாராகும் எல்லா வருந்தியாம் நோய்கூர நுந்தையை என்றும் பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங் கொண்டாங்கே தொடியு முகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பின் சிறுகண்ணும் உட்காள் வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி அன்ன பிறவும் பெருமான் அவள்வயின் துன்னுதல் ஓம்பித் திறவதின் முன்னிநீ ஐயமில் லாதவ ரில்லொழிய எம்போலக் கையாறு டையவர்இல்லல்லால் செல்லல் அமைந்த தினிநின் றொழில். (கலி. 82) இது காதற்பரத்தையர்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது. அவன்வயிற் பிரிப்பினும் - தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனொடு சார்த்துதற் கண்ணும். என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம். உ-ம்: மைபடுசென்னி என்னும் முருதக்ககலியுள், மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்; ஆயினாயிழாய், தாவாத எற்குத் தவறுண்டோ காவாதீங் கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங் கன்றி அதனைக் கடியவுங் கைந்நீவிக் குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன் (கலி. 86) என்புழி அறனில்லா அன்பிலி பெற்ற மகன் எனவும், நின்மகன் றாயாதல் புரைவா லெனவே (அகம். 16) என்புழி நின்மகன் எனவும் பிரித்தவாறு காண்க. இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்குப் பயக்குஞ் சூளுறவினைத் தலைவன் சூளுறுவலெனக் கூறுமிடத்தும்: தலைவன் வந்தகுற்றம் வழிகெட ஒழுகிக், களவிற் சூளுற வான் வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனையுஞ் சூளுறுதலின் இன்னாத சூள் என்றார். அது களவுபோலச் சூளுறுதலின் தொல்சூள் என்றார். உ-ம்: ஒரு உக் கொடியிய னல்லார் என்னும் மருதக்கலியுள், வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை தேற்றக்கண்டீயாய் தெளிக்கு: இனித் தேற்றேம் யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு. (கலி. 88) எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளுன் வருங்கேடு வருமென மறுத்தவாறு காண்க. காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் - நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னான் நலம் பாராட்டப்படட இற்பரத்தையர் மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்: உ-ம்: மடவ ளம்மநீஇனிக்கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர்நீ ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே. (ஐங்குறு. 67) இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்து கொண்ட பரத்தை தன்னோடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுந் தன்னோடொப் பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென அவள் நலத்தைப் பாராட்டியவாறும். நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க. அணிற்பல் லன்ன (குறுந்.49) என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன்பாற்படும். (கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்) கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை - பரத்தையிற் பிரிவும் ஏனைப் பிரிவுகளும் ஆகித் தலைவன்கண் நிகழுங் கொடுமை யொழுக்கத்தில் தோழி கூறுதற்கு உரியளென மேற்கூறுகின்ற வற்றைக் கேட்டவழி; வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமை - எஞ்ஞான்றுங் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்துங் கற்பிடத்துங் திரிவு படாதபடி; காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலை யினும் - தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய நிலையின் கண்ணும்; ஆவயின் வரூஉம் நிலையினும் - அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின் கண்ணும்; பல்வேறு நிலையினும் - இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பலவேறுபட்டு வரும் நிலையின்கண்ணும்: அவள் வயினென்னாது ஆவயி னென்றார், தோழியும் பொரு ளென்பதுபற்றி. உ-ம்: இதுமற் றெவனோ தோழிது னியிடை இன்ன ரென்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் உழவன்யாத்த குழவியின் அகலாது பாற்பெய் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. (குறுந். 181) இது தோழி இன்னாக்கிளவி கூறியதனை இதுபொழுது கூறிப் பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள். பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட் டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின் ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் சேறு நாமெனச் சொல்லச் சேயிழை நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே செயல்படு மனத்தர் செய்பொருட் ககல்வ ராடவ ரதுவதன் பண்பே. (நற். 24) இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது. வண்டுபடத் ததைந்த கொடியினரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே. (குறுந். 21) இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது. யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின் உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசேணுறைதல் வல்லுவோரே. (குறுந். 154) இது, வல்லுவோர் என்னும் பெயர்கூறித் தோழி கொடுமை கூறியவழி அவளையே பிரிதல்வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம். இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வருமாறு: நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே. (குறுந். 93) இது, காய்தல் வெள்ளாங் குருகின் பிள்ளைசெத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடு பெயருந் துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே. (ஐங்குறு. 155) இது, பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற் றிற்கு உரிய காலங்கழிய ஒழுகா நின்றாயென நெருங்கிய தோழிக்கு யான் களவின் கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து கூறியது. கொடிப்பூ வேழந் தீண்டி யயல வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும் மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சாயற்றே. (ஐங்குறு. 14) இஃது, உவத்தல். புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகிற் றோன்றும் ஊரன் புதுவோர் மேவல னாகலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே. (ஐங்குறு. 17) இது, பிரித்தல், நாமவர்திருந்தெயி றுண்ணவு மவர்நமது ஏந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங் கண்சுடு பரத்தையின் வந்தோர்க் கண்டும் ஊடுதல் பெருந்திரு வுறுகெனப் பீடுபெற லருமையின்முயங்கி யோனே. இது, பெட்டது. நீர் செறுவின் (கலி. 75) என்னும் மருதக்கலியும் அது. இனிப் பல்வேறு நிலை யாவன, தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர் கூறக் கேட்டுக் கூறுவனவுந், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவுந், தூதுவிடக் கருதிக் கூறுவனவும், நெஞ்சினையும் பாணனையும் தூதுவிட்டுக் கூறுவனவும், வழி யிடத்துப் புட்களை நொந்து கூறவனவும், பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன் வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவுங் கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய சூழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறவனவுந், தலைவன் தவறில னெனக் கூறுவனவும்,புதல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கியவழிக் கூறுவனவுங், காமஞ்சாலா விளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம். அருளு மன்பு நீக்கித்துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோருரவோ ராயின் உரவோ ருரவோ ராக மடவ மாக மடந்தை நாமே. (குறுந். 20) இது, செலவழுங்கக் கூறியது. வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் மலையுடை யருஞ்சுரமென்பநம் முலையிடை முனிநர் சென்ற வாறே. (குறுந். 39) எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்பவவர் தேர்சென்ற ஆறே அதுமற்றவலங் கொள்ளாது நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. (குறுந்.12) இவை, வழியருமை கேட்டவழிக் கூறியன. நுண்ணெழின் மாமைச் சுணங்கணியாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையாரென் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொல் அறியே னென்னும். (கலி. 4) இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று. பலர்புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளிச் செலவுநீ நயந்தனை யாயின் மன்ற இன்னா வரும்படர் எம்வயிற் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாண்வெம் மறவா தீமே. (ஐங்குறு. 473) இது, தூதுவிடக் கருதிக் கூறியது. சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட் டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்சம் ஈட்டிய பொருளே. (ஐங்குறு. 317) இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவ லென்னும் நன்றாலம்ம பாணன தறிவே. (ஐங்குறு. 474) இது பாணனைத் தூதுவிட்டுக் கூறியது. புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியின் தோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் நயந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாமணந் தனையமென விடுகந் தூதே. (குறுந். 106) இது, தூதுகண்டு கூயது. ஆம்பற் பூவின் சாம்ப லன்ன கூம்பிய சிறகர்மனையுறை குரீஇ முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் தெருவின் நுண்டாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. (குறுந். 46) இது, சென்ற நாட்டு இவை இன்று கொலென்றது. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழிநீர நீலப் பைம்போதுளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் வாடையொடு என்னா யினள்கொ லென்னா தோரே. (குறுந். 110) இது, பருவங்கண்டு அழிந்து கூறியது. உதுக்காணதுவே யிதுவென் மொழிகோ நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினந் தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத் தீங்குரலகவக் கேட்டும் நீங்கிய ஏதிலாள ரிவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனையல் எம்முந் தொடாஅ தென்குவ மன்னே. (குறுந். 191) இது, காய்ந்து கூறியது. முதைப்புனங் கொன்ற ஆர்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே மெழு கான் றுதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரு மென்னு முரைவா ராதே. (குறுந். 155) இது, பொழுதொடு தான் வந்தன்றெனப் பொழுதுகண்டு அழிந்து கூறினாள். அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்படச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே. (ஐங்குறு. 334) இது, வன்புறை எதிரழிந்து கூறியது. அம்ம வாழிதோழி யாவதும் வல்லா கொல்லோதாமே யவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅந் துணைபுணர்ந் துறைதும் யாங்குப் பிரிந்துறைதி யென்னா தவ்வே. (ஐங்குறு. 333) இது, புள்ளை நொந்து கூறியது. காதல ருழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலப்பில் போலப் புல்லென் றலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. (குறுந். 41) இஃது, ஆற்றுவலெனக் கூறியது. நீகண்டனையோ கண்டார்க்கேட் டனையோ ஒன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியானை சோனைபடியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. (குறுந். 75) இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது. இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையா மென்பவ ரோரார்காண் - நம்மை எளிய ரென நினைந்த வின்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு. (திணை. நூற். 123) இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது. பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனோடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. (குறுந். 313) இது, தலைவன் தவறிலனென்று கூறியது. உடலினே னல்லேன் பொய்யாதுரைமோ யாரவள் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வௌவு யோளே. (ஐங்குறு. 66) இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது. கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே பலரொடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்டலுய்த்தென உண்கண்சிவப்ப அழுதுநின் றோளே. (ஐங்குறு. 69) இது, காமஞ்சாலா விளமை யோளைக் களவின் மணந்தமை அறிந்தே னென்றது. வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ - வாயில்தன் ஏதுவாகத் தலைவிக்கு வருங் கூற்று வகையொடு கூட்டி: வாயில்களாவார் செய்யுளியலுட் (512) கூறும் பாணன் முதலியோர். வகை யென்றதனான் ஆற்றாமையும் புதல்வனும் ஆடைகழுவு வாளும் பிறவும் வாயிலாதல் கொள்க. கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய வாம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழுந் தண்டுறை யூரன்தண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந் துடைக்குந் தொன்றுமுதிர் வேளிர் குன்றூ ரன்னவென் நன்மனை நனிவிருந் தயருங் கைதூ வின்மையி னெய்தா மாறே. (நற். 280) இந் நற்றிணை தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போ வென்ற தோழிக்கு விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலே னல்லது புலவேனோ எ-று. அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. (குறுந். 33) இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது. காண்மதி பாணநீ யுரைத்தற்குரியை துறைகெழு கொண்கன் பிரிந்தென இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே. (ஐங்குறு. 140) இது, பரத்தையிற் பிரிந்துழி இவன் நின் வார்த்தையே கேட்ப னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது. ஆடியல் விழவி னழுங்கன் மூதுர் உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா அறனில் புலத்தி யெல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வரவோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாயம் ஊக்க வூங்காள் அழுதனள் பெயரு மஞ்சி லோதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா நயனின் மாக்களொடு குழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே. (நற். 90) இது பாணனைக் குறித்துக் கூறியது. நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுநாறும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றுந் தேரோற் கொத்தனெ மல்லே மதனாற் பொன்புரை நரம்பி னின்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல் கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப் பாடுனைப் பாடல் கூடாது நீடுநிலைப் புரவியும் பூணிலை முனிகுவ விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே. (நற். 380) இது பாணனுக்கு வாயின் மறுத்தது. புல்லேன் மகிழ்ந புலத்தலு மிலனே கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுள்வாயோடிப் பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி னணைமுதற் புரளும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே ரெல்வளை ஞெசிழ்த்த நும்மே. (நற். 340) இஃது, ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தலைவி கூறியது. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனனெங் காத லோனே. (ஐங்குறு. 157) இது, வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது. கூன்முண் முள்ளி என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூறியவாறு. மாறாப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப் பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் நோமென் னவும் ஒல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க. பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி (கலி. 79) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க. நாடிநின்றுதாடித் துறைச்செல்லா ளூரவர் ஆடைகொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை. (கலி. 72) இஃது, ஆடை கழுவுவாளை வாயிலென்றது. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க. கிழவோள் செப்பல் கிழவது என்ப - இப்பத் தொன்பதுங் கிழவோளுக்கு உரிமையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், என்றவாறு. முன்னர் நின்ற ஏழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன்கண்ணுந் தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ என மாறுக. (6) தலைவி கூற்றின்கட்படுவதோ ரிலக்கணமுணர்த்தல் 148. புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந் திடைச்சுரத திறைச்சியும் வினையுஞ் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக் கச்சமாகும். இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக்காலத்து இல்லின்கண் இருந்து; இடைச்சுரந்து இறைச்சியும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே - தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப் பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத்தக்க கருப் பொருளின் தொழில்களையும் கருதிக் கூறுதல்தானே; கிழவோன் செய் வினைக்கு அச்சம ஆகும் - தலைவன் எடுத்துக்கொண்ட காரியத் திற்கு முடித்தலாற்றான்கொலென்று அஞ்சும் அச்சமாம் எ-று. எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப்பொருள்கள் தம்மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று. கானயானை தோல்நயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை அலங்க லுலவை யேறியொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லே மென்ற தப்பல் சொல்லா தகறல் வல்லு வோரே. (குறுந். 79) புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருத்தங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க. அரிதாய வறனெய்தி என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவு கருதிக் கூறியவாறு காண்க. இதனுள் ஆற்றவிக்குந் தோழி வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறலின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க. புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன (கலி. 3) என்றாற் போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன் கண் அடக்குக. (7) தோழி முதலிய வாயில்கட்கு எய்தாததெய் துவித்தல் 149. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும் ஆவயின்நிகழு மென்மனார் புலவர். இது தோழி முதலிய வாயில்கட்கு எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் - தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து அவனைச் செலவழுங்குவித்தற்குத் தோழி யுள்ளிட்ட வாயில்களைத் தலைவி போகவிட்ட அக்காலத்து அவர் மேலன போலக் கூறும் கூற்றுக்களும்; ஆவயின் நிகழும் என்மனார் புலவர் - தலைவி அஞ்சினாற்போல அவ்வசத்தின் கண்ணே நிகழு மென்று கூறுவர் புலவர் எ-று. அறனின்றி யயல்தூற்றும் (கலி. 3) என்னும் பாலைக் கலியுள் இறைச்சியும் வினையுமாகிய பூ முதலியன கூறியவாற்றான் தலைவிக் கிரங்கி நீர் செலவழுங்கு மெனக் கூறுவாள் யாமிரப்பவு மெமகொள்ளா யாயினை எனப் பிற வாயில்களையுங் கூட்டி உரைத்தவாறு காண்க. (8) கற்பின்கண் தோழிக்குரிய கூற்றுக்கள் நிகழுமிடமிவையெனல் 150.பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின்வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் அற்றமழி வுரைப்பினும் அற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ் சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ் சூள்நயத் திறத்தாற் சோர்வுகண்டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயின் உறுதகை யில்லாப் புலவியுள் மூழ்கிய கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணும் உணர்ப் புவயின் வாரா வூடலுற் றோள்வயின் புணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்னின்று பெயர்ப்பினும் பிரியுங் காலை யெதிர் நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக் குரிய வென்மனார் புலவர். இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) (பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின்கண்ணும்) பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த - தலைவனுந் தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச் சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய; தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் - தனது தெறுதற்கரிய மரபுகாரணத்தான் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தோழி கூற்று நிகழும். தலைவியையுந் தலைவனையும் வழிபாடாற்றுதலின் தெறற்கரு மரபின் என்றார். தெறுதல் - அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அவை எம்பெருமானே அரிதாற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளான் இவள் ஆற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம். அயிரை பரந்த அந்தண் பழனத் தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடாள் ஆம்பல் குறுநர்நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக் கரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே. (குறுந். 178) இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரென யான் நோவாநின்றேன். இங்ஙனம் அருமை செய்தலான் தேற்றுதற்கு உரியோனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க. பொங்குதிரை பொருத வார்மணலடைகரைப் புன்கானாவற் பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்ததும்பி பழஞ்செத்துப் பல்காலலவன் கொண்டகோட் கூர்ந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூசல் இரைதேர் நாரையெய்திய விடுக்குந் துறைகெழு மாந்தை யன்ன விவள்நலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய உழையிற் போகாதளிப்பினுஞ் சிறிய ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட்கழி செருக்கத்தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே. (நற். 35) இதனுள் தலைவி கனியாகவுந் தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல் தவறிழைக்குந் தமராகவுந் தலைவன் இரைதேர் நாரையாகவும் உள்ளுறை யுவமங் கொள்வுழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகினேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க. பண்டும் இற்றே என்றது பண்டையில் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண் நீங்காது அளியாநிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள்அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போங் காம வேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே, இஃது ஓர் அமளிக்கண் துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ? இதனை இவளே ஆற்றுவதன்றியான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென்க. அற்றம் அழிவு உரைப்பினும் - களவுக்காலத்துட்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினும்: ஏக்கர்ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழுந் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே (ஐங்குறு. 148) எரிமருள் வேங்கை யிருந்த தோகை யிழையணிமடந்தையிற் றோன்றுநாட இனிது செய்தனையால் நுந்தை வாழியார் நன்மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே (ஐங்குறு. 294) என வரும். அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் - களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும்: உ-ம்: நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுவது தீர்க்க வெமக்கெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்றம் மறைந்துநின்றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே. கிழவோற் சுட்டிய தெய்வக்கடம் என்று பாடம் ஓதி வாழி யாதன் வாழி யவினி வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக எனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக எந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே (ஐங்குறு. 6) என்பது உதாரணங் காட்டுவாரும் உளர். சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் - தலைமை யுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்தகாலத்துத் தலைவன் அறஞ்செயற்கும் பொருள் செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்குந் தலைவியை மறந்து ஒழுகினும்: உ-ம்: கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந் தேர்வண் கோமான் தேனூ ரன்னவிவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே (ஐங்குறு. 55) இதனுள், துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் அற முதலிய வற்றைக் கருதுதலின். அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் - புறத்து ஒழுக்கத்தை உடையனாகிய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப் புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலையுடைத்தாகிய பொருளின்கண்ணும் உ-ம்: செந்நெற் செறுவிற்கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற் கெல்வளை ஞெகிழச் சாஅய் அல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய். (ஐங்குறு. 27) இதன் உள்ளுறையாற் பொருளுணர்க. பிழைத்து வந்த இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும் - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின் கண் ஊடல்நீங்குந் தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும்: உ-ம்: நகைநன்றமம் தானேஇறைமிசை மாரிச் சுதையின் ஈரம்புறத் தன்ன கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல் வெள்ளி வெண்டோ டன்னகயல் குறித்துக் கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர் காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை மென்கழைக் கரும்பினன்பல மிடைந்து பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வ லிருக்கும் பயங்கே ழூர யாமது பேணின்றோ விலமே நீநின் பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி மண்ணார் முழவின் கண்ணதிர்ந் தியம்ப மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி யெம்மனை வாரா யாகி முன்னாள் நும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக் குறுந் தொடி மடந்தை யுவந்தனள் நெடுந்தேர் இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறு புலத்திறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வௌவி ஏதின் மன்னர் ஊர்கொளக் கோதை மார்ப னுவகையிற் பெரிதே (அகம். 346) கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மைய னெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யானினி யிவட்குமருந் தன்மை நோமெ னெஞ்சே (ஐங்குறு. 59) என வரும். வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும்- தாழும் இயல்பினை யுடைய சொற்களான் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக் கண்ணும்: உ-ம்: உண்துறைப் பொய்கை வராஅல் இனமிரியுந் தண்துறையூர தகுவகொல் - ஒண்டொடியைப் பாராய் மனைத்துறந்தச் சேரிச் செலவதனை யூராண்மை யாக்கிக் கொளல் (ஐந். எழு. 54) என வரும். பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன இவணலம் புலம்பப் பிரிய அனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே. (ஐங்குறு. 57) இதுவும் அதன் பாற்படும். புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தை யரிடத்தே உண்டாம் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக் கண்ணும்: விளையாட்டாவது யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலாம். பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரைதுற்றி ஆம்பன் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந் தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறடு கதச்சேப் போல மதமிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத் திருமரு தோங்கிய விரிமலர்க் காவின் நறும்பல் கூந்தற் குறந்தொடி மடந்தையொடு வதுவை யயர்ந்தனையென்ப அலரே கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத் தகன்றலை சிவப்பச் சேரலன் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி நாரரி நறவி னெருமை யூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென் றெழுவர் நல்வல மடங்க வொருபகன் முரசொடு வெண்குடை யகப்படுத்துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர்ஆர்ப்பினும் பெரிதே. (அகம். 36) இதனுள் வென்றி கொள்வீர ரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க. சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் - யாரினும் சிறந்த புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமையான்தலைவன் வருந்தினும்: உ-ம்: பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித் தன்மார்பு நனைப் பதன்றலையு மிஃதோ மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்பக் காணா யாகலோ கொடிதே கடிமனைச் சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை நீயிவ ணேராவாயிற்கு நாணுந் தந்தையொடு வருவோள் போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே என வரும். மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும் - இவள் இழந்த மாட்சிமைப் பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறு படுத்தற்கண்ணும்: உ-ம்: யாரை யெலுவ யாரே நீயமக்கு யாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பின் கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் அணிந்திடு பல்பூமரீஇ யார்ந்த ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை யன்னவெம் வேட்டனை யல்லையானலந்தந்து சென்மே (நற். 395) என வரும். நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து. (ஐந். எழு. 66) இதுவும் அதன் பாற்படும். பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவியைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின் கண்ணும்: தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும். உ-ம்: பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து வாளை நாளிரை தேரும் ஊர நாணினென் பெரும யானே பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி யெதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணைய னாணியாங்கு மறையினள் மெல்ல வந்து நல்ல கூறி மையீ ரோதி மடவோ யானுநின் சேரி யேனே அயலி லாட்டியேன் நுங்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத் தொடுமணிமெல்விரல் தண்ணெனத் தைவர நுதலுங் கூந்தலு நீவிப் பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. (அகம். 385) இதனுள், யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தவி நாணியது கண்டு நான் நாணினே னென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க. இன்னுந் தலைவனது பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின்கண்ணுமெனவுங் கூறுக. யாயாகியளே மாஅ யோளே மடைமாண் செப்பில் தமியள் வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் கரப்பா டும்மே (குறுந். 9) என வரும். இவை இரண்டும் பொருள். (சூள் நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும்) நயத் திறத்தாற் சூள் சோர்வு கண்டு அழியினும் - கூடுதல் வேட்கைக் கூறுபாட்டான்தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித் தலைவி வருந்தினும்: தோழிக்குக் கூற்று நிகழும். உ-ம்: பகல்கொள் விளக்கோடி ராநா ளறியா வென்சேற் சோழர் ஆமூர் அன்னவிவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப எவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே. (ஐங்குறு. 56) இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல்லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப்பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க. கோடுற நிவந்த (அகம். 266) என்னும் மணிமிடை பவளத்தைத் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர். (பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பினும்) பெரியோர் பெறுதகை இல்லாக் கிளந்து - நன்மக்கள் பெறுந்தகைமை இல்லறமாயிருக்குமென்றுஞ் சொல்லி; பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பிழைப்பினும் - நன்மக்கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்குமென்றுஞ் சொல்லித் தான் தலைவனை வழிபாடு தப்பினும்: தோழிக்குக் கூற்று நிகழும். பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. உ-ம்: வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயினுடங்க மீன்சினை யன்னவெண்மணற் குவைஇக் காஞ்சி நீழல் தமர்வளம் பாடி ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த இறால் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினையுறங்குந் தண்டுறையூர விழையா வுள்ளம் விழைவ தாயினுங் கேட்டவை தோட்டி யாகமீட்டாங் கறனும் பொருளும் வழாஅமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோ ரொழுக்க மதனால் அரிய பெரியோர்த் தேருங் காலை நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண்டுளதோவிவ் வுலகத் தானே. (அகம். 286) இதனுள் அற னென்றது இல்லறத்தை; தற்றகவுடைமை நோக்கி யென்றது தன்னான் அவ்வறனும் பொருளுந் தகுதிப் பாடுடையவாந் தன்மையைநோக்கி என்றவாறாம்; முன்னிய தென்றது புறத்தொழுக்கத்தை; பெரியோரொழுக்கமனைய வென்றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென்றவாறு. இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாயிந்தன வெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமா றுணர்க. அவ் வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய புலவியின்கண் அழுந்திய தலைவிபக்கத்தாளாய் நின்று அவள் புலவியைத் தீர்த்தற்கண்ணும்: உ-ம்: மானோக்கி நீயழ நீத்தவ னானாது நாணில னாயி னலிதந் தவன்வயின் ஊடுத லென்னோ வினி. (கலி. 87) உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீளவிடல் (குறள். 130-2) காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்மரீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவதம்மவித் திணைப்பிறத் தல்லே. (குறுந். 45) (உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் - தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக்கணில்லாத ஊடல் மிகுத்தோளிடத்து: உணர்ப்புப் புணர்ப்புப் போல் நின்றது. உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று - ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தாளாய் நின்று; தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும் - தான் தவியைக் கழறி அவள் சற்றம் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும்: உ-ம்: துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப் பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன் தேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோள் ஊர்கொள் கல்லா மகளிர்த் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல் வல்லியோரே செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர்திரங்குமுலை சுவைப்ப வைகுந ராகுதல் அறிந்தும் அறியா ரம்மவஃதுடலு மோரே. (அகம். 316) இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க. (அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மை காலத்து இரக்கதானும்) எண்மைக்காலத்து - தாம் எளியராகிய கற்புக்காலத்திலே; அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும் - களவுக்காலத்துத் தமது பெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும்: உ-ம்: வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி யென்ற னிர்இனியே பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே. (குறுந். 196) என வரும். பாணர் கூத்தர் விறலியர் என்று - பாணருங் கூத்தரும் விறலியரு மென்று சொல்லுகின்ற இம் மூவரும்; பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - விரும்பிக்கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும்: கூற்று நிகழும். எதிரு மென்றது அவர் வாயில்வேண்டிய வழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம். உ-ம்: புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரி காணின் அகல்வய லூரன் நாணவும் பெறுமே. இது பாணர்க்கு வாயின் மறுத்தது. உ-ம்: விளக்கின்அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர்இரியக் குண்டுநீர் வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் சொல்லலை கொல்லோநீயே வல்லைக் கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல உள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே. (நற். 310) இது விறலிக்கு வாயின் மறுத்தது. மறுப்பாள்போல் நேர்வ வந்துழிக் காண்க. (நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்) நீத்த கிழவனை - பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை; நிகழுமாறு படீஇ - தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டி; காத்த தன்மையின் - புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினானே; கண் இன்று பெயர்ப்பினும் - கண்ணோட்டமின்றி நீக்கினும்: உ-ம்: மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின் மாலை யுற்றெனப் புகுமிடன் அழியாது தொகுபுடன்குழீஇப் பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல் வாழியர் ஐயவெம் தெருவே. (குறுந். 139) இதனுள் அம்பலொடு வார லெனவே பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டாரென்றலிற் புறம்போயும் பயமின் றெனக் காத்த தன்மை கூறிற்று. (பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்) பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய - தலைவன் கற்பிடத்துப் பிரியுங்கால் தெய்வத் தன்மையின்றி முன்னின்று வெளிப்படக் கூறிய; மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் - முறையுடைத்தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண்ணும்: எதிரும் என்ற உம்மை, எச்சவும்மை. பிற ஆவன - தலைவன் வரவுமலிந்து கூறுவனவும் வந்தபின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவுந் தூது கண்டு கூறுவனவுந், தூது விடுவனவுஞட சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டிக் கூறுவனவும், உடன்சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம். பாஅலஞ்செவி என்னும் (5) பாலைக்கலியுள், பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு எந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வது அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே. (கலி. 5) இதனுட், புரிந்தனை யென இறப்பும் இறக்கு மென எதிரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க. வேனில் திங்கள்வெஞ்சுரம் இறந்து செலவயர்ந் தனையா னீயே நன்றும் நின்னயந் துறைவி கடுஞ்சூல் சிறுவன் முறுவல் காண்டலின்இனிதோ இறுவரை நாடநீ விரைந்துசெய் பொருளே. (ஐங்குறு. 309) இஃது எதிரது நோக்கிற்று. புறவணிநாடன் காதன் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலில் தெண்ணீர்ப் போதவிழ் தாமரை யன்னநின் காதலம் புதல்வ னழுமினி முலைக்கே. (ஐங்குறு. 424) இதுவும் அது. இனிப் பிற வருமாறு: பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி சுரஞ்செல் கோடியர்கதுமென விசைக்கும் கடும்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண் கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்திநம்வயின் வந்தனர்வாழி தோழி கையதை செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன் கவவுக்கொள்இன்குரல் கேட்டொறும் அவவுக்கொள் மனத்தே மாகிய நமக்கே. (நற். 212) இது தலைவிக்கு வரவுமலிந்தது. நீலத் தன்ன நீர்பொதி கருவின் மாவிசும் பதிரமுழங்கி ஆலியின் நிலந்தண் ணென்று கானங் குழைப்ப இனந்தேர் உழவர்இன் குரலியம்ப மறியுடை மடப்பிணைதழீஇப் புறவின் திரிமருப் பிரலை பைம்பயிர்உகள ஆர்பெயல் உதவிய கார்செய் காலை நூனெறி நுணங்கிய கானவில் புரவிக் கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன் வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் ஈர்ம் புறவுஇயங்குவழி யறுப்பத் தீந்தொடைப் பையு ணல்யாழ் செவ்வழி பிறப்ப இந்நிலை வாரா ராயின் தந்நிலை எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக் கடவுட் கற்பின்மடவோள் கூறச் செய்வினை யழிந்த மைய னெஞ்சின் துனிகொள் பருவரல் தீரவந்தோய் இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி வேலி சுற்றிய வால்வீ முல்லைப் பொருந்திதழ் கமழும் விரிந்தொலி கதுப்பின் இன்னகை யிளையோள் கவவ மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே. (அகம். 314) இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது. மடவ மன்ற தடவுநிலைக்கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. (குறுந். 66) இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது. எனநீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண்யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்று அவர் வாய்மொழித் தூதே. (கலி. 26) இது, தூதுவந்தமை தலைவிக்குக் கூறியது. கைவல் சீறியாழ்ப் பாணநுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மின் உணரா ராயினுந் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யா ராகுதல் நோகோ யானே. (ஐங்குறு. 472) இது, குறித்த பருவத்துத் தலைவன் வாரா தவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. தூதுவிட்டது வந்துழிக் காண்க. பதுக்கைத்தாய ஒதுக்கருங் கவலைச் சிறுகண் யானை யுறுபகை நினையாது யாங்கு வந்தனையோ பூந்தார்மார்ப அருள்புரி நெஞ்சம் உய்த்தர இருள்பொர நின்ற இரவி னானே. (ஐங்குறு. 362) இது சேணிடைப்பிரிந்து இரவின்வந்துழிக் கூறியது. ஆமாசிலைக்கு மணிவரை ஆரிடை ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சரஞ் சென்றார் வரக்கூறும் வாய்மாண்ட பல்லி படும். (கைந்நிலை. 18) இது நிமித்தங் காட்டிக் கூறியது. இன்னும் அதனானே நமர் பொருள்வேண்டு மென்றார் அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தார் ஏந்திழாய் - பின்னர் அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினேன்அஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று. இன்னுந் தோழிகூற்றாய்ப் பிறவாற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. அன்னை வாழிவேண் டன்னைநம்மூர்ப் பலர்மடி பொழுதி னலமிகச் சாஅய் நள்ளென வந்த இயல்தேர்ச் செல்வக் கொண்கன் செல்வனஃதூரே. (ஐங்குறு. 104) இது புதல்வற்பெற்றுழித் தலைவன் மனைக்கட்சென்ற செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன் ஊர்காட்டிக் கூறியது. வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர் - தோழி கூற்றாய்த் தலைவி கூற்றினுள் அடங்குவதன்றித் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாந் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் எ-று. இச் சூத்திரத்துக்கண் ஏழனுருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரியவென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத்தும் இன்னவிடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. (9) காமக்கிழத்தியர் கூற்றுக்கள் நிகழுமிட மிவை எனல் 151. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும் இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் மறையின்வந்து மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும் இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும் மனையோ ளொத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் எண்ணிய பண்ணையென்றி வற்றொடுபிறவுங் கண்ணிய காமக் கிழத்தியர் மேன. இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது; காமக்கிழத்தி யராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக் கிழமைபூண்டு இல்லற நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற் கூடி முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்பருவத்தோரும் இடைநிலைப் பருவத்தோருங், காமஞ்சாலா இளமை யோரு மெனப் பல பகுதியராம். இவரைக் கண்ணிய காமக்கிழத்திய ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடைய ராகிவருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம். இனிக் காமக்கிழத்தியரைப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார்: என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்திய ரென்று ஆசிரியர் சூத்திரஞ் செய்யின் மயங்கக் கூறுலென்னுங் குற்றந் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றோர் பலருங் காமக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்று வாய்செய்து கூறுமாறும் உணர்க. (இ-ள்.) புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும் இடைவிட்டு மயக்குதலான் தலைவிக்கண் தோன்றிய புலவியிடத்தும்; காமக்கிழத்தியர் புலந்து கூறுப. உ-ம்: மண்களை முழவொடு மகிழ்மிகத் தூங்கத் தண்டுறை யூரனெஞ் சேரி வந்தென இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை அவைபுகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில் கச்சினன் கழலினன் தேந்தார்மார்பினன் வகையமை பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென ஆதி மந்தி பேதுற் றினையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும் அந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே. (அகம். 76) இதனுள் எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென முன்னை ஞான்று புல்லுதன் மயக்குதலான் தலைவி புலந்தவாறும் அதுகண்டு காமக்கிழத்தி கொண்டுகைவலிப்பலெனப் பெருமிதம் உரைத்தவாறுங் காண்க. இது, பெருமிதங் கூறலின் இளமைப்பருவத்தாள் கூற்றாயிற்று. ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து கொண்டனை யென்பவோர் குறுமகள் (அகம். 96) எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று. இரட்டுற மொழிதலென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப்பட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக் கிழத்தி யர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று நிகழுமெனவும் பொருள் கூறுக. உ-ம்: கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா (கலி. 90) என்னும் மருதக்கலியுட் காண்க. இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - இல்லிடத்திருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக் கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும்: உ-ம்: கழனி மாஅத்து விளைந்து தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. (குறுந். 8) நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப் பன்னா ளரிததகோஓய் உடைப்பின் மயங்குமழைத்து வலையின் மறுகுடன் பனிக்கும் பழம்ப னெல்லின் வேளூர் வாயில் நறுவிரை தெளித்த நாறிணர் மாலை பொறிவரி யினவண் டூதல கழியும் உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பி னீகடுத் தோள்வயின் அனையே னாயி னணங்குக என்னென மனையோள் தேற்றும் மகிழ்ந னாயின் யார்கொல் வாழி தோழி நெருநை தார்பூண் களிற்றிற் றலைப்புணைதழீஇ வதுவை யீரணிப் பொலிந்த நம்மொடு புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர்நிறை யாடி யோரே (அகம். 166) என வரும். இவையும் இளையோர் கூற்று. பிறவும் அன்ன. பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ்வேறாகிய புதல்வரைக் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்: வேறுபல புதல்வ ரென்றார் முறையாற்கொண்ட மனைவியர் பலரும் உளராதலின், ஞாலம் வறந்தீர என்னும் மருதக்கலியுள், அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் மருப்புப் பூண்கையுறை யாக அணிந்து பெருமா நகைமுகங் காட்டென்பாள் கண்ணீர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்ற. (கலி. 82) இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது. மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளும் மயங்கு நோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே நினைக்கியாம் யாரே மாகுது மென்று வனப்புறக் கொள்வனநாடி யணிந்தனள். (கலி. 82) இதனுள் நோய் தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினானும் வழி முறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று. அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான். (கலி. 82) என்றவழிப் புத்தே ளென்றது தலைநின்றொழுகும் இளையோளைக் கூறியது. தந்தை யிறைத்தொடி மற்றிவன் றன்கைக்கண் தந்தாரியா ரெல்லாஅ விது இஃதொன்று. (கலி. 84) என்றாற்போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க. (மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய பருவரற்கண்ணும்) மறையின் வந்த - தலைவற்கு வேறொரு தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டான் தமக்குப் புலப்பட வந்த; மனையோள் செய்வினை - மனையோளாதற்குரியவள் தமர்பணித்தலிற் றைந்நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும் - இவள் தோற்றப்பொலிவான் தலைவன் கடிதின் வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின்கண்ணும்: உ-ம்: வாளை வாளிற் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்குங் கைவண் கிள்ளி வெண்ணிசூழ்ந்த வயல்வெள் ளாம்ப லுருவ நெறித்தழை யைதக லல்கு லணிபெறத் தைஇ விழவிற் செலீஇயர்வேண்டு மன்னோ யாணரூரன் காணுந னாயின் வரையா மையோஅரிதே வரையின் வரைபோல் யானைவாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்றோள் அளிய தோழி தொலையுந பலவே. (நற். 390) இதனுள், விழவிற் செல்கின்ற தலைவியைக் கண்டு காமக்கிழத்தி இவள் தோற்றப் பொலிவொடு புறம்போதரக் காணின் வரைவனெனவும், அதனான் இல்லுறை மகளிர் பலருந் தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க. (காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்) காதற் சோர்வில் - தானுங் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும்: கடப்பாட்டாண்மையின் சோர்வில் - அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மை யானும்; தாய்போல் தழீஇக் கழறி - தலைவியைச் செவிலிபோல உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி; அம்மனைவியைக் காய்வின்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும் - அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்: இது, துனிநிகழ்ந்துழிக் தலைவனது தலைவளரிளமைக்கு ஒருதுணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ஙனங் கூட்டுமென்றார். உ-ம்: வயல்வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றாதின்ற மிச்சில் ஓய்விடு நடைப்பகடு ஆரு மூரன் தொடர்புநீ வெஃகினையாயின் என்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா யெய்தித் தண்கமழ் புதுமல ரூதும் வண்டென மொழிப மகனென் னாரே. (நற். 290) இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றெனவும், அவனொடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்தவேண்டும் நீ அவள் அவனொடு கட்டில்வரை எய்தியிருக்கின்றா ளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே; கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப் பாட்டாண்மை அதுவென்றுங் கூறினாள். இனி, என்சொற்கொள்ளன்மாதோ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில்யான் கூறுகின்ற தனைக் கொள்க எனவும் பொருள் கொள்க. ஈண்டுபெருந் தெய்வத் தியாண்டுபல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி யலைத்தலிற் புடைகொண்டு மூத்துவினை போகிய முரிவாயம்பி நல்லெருது நடைவளம் வைத்தென வுழவர் புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு நறுவிரை நன்புகைக் கொடாஅர் சிறுவீ ஞாழ லொடு கெழீஇய புன்னையங் கொழுநில் முழவுமுதற் பிணிக்குந் துறைவ நன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறுநன் கறியா யாயின் எம்போல் ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் மலர்தீய்ந் தனையர் நின்னயந் தோரே. (நற். 315) இதனுள் மூத்துவினை போகிய அம்பிபோலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது இவள் இப்பருவத்தே இனைய ளாகற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போலவெனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க. (இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும்) இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து - கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத்துப் பொலங்கலத்தாற் புனைந்துகொண்டு; பின்னர் வந்த வாயிற்கண்ணும் - பல வாயில்களையும் மறுத்த பின்னர் வாயிலாகக் கொண்டு புகுந்த வாயிலின்கண்ணும்: உ-ம்: என்குறித் தனன்கொல் பாணநின் கேளே வன்புறை வாயி லாகத் தந்த பகைவரும் நகூஉம் புதல்வனை நகுவது கண்டு நகூஉ மோரே. இதனுள் வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு நகுவாரைத் தனக்கு நகுவாரைப் போல நகாநின்றானெனக் காமக்கிழத்தி கூறி வாயில்நேர்ந்தவாறு காண்க. பகைவரும் நகூஉ மெனவே தான் புலக்கத்தகுந் தலைவியர் புதல்வனென்றாளாயிற்று. (மனையோள் ஒத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்) மனையோள் ஒத்தலில் - தானும் உரிமை பூண்டமைபற்றி மனையோளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின்: தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் - தன்னை ஒக்கும் ஏனை மகளிரின் தன்னை விசேடமுண்டாகக் குறித்துக்கொண்ட கோட்பாட்டின் கண்ணும்: உ-ம்: புழற்காற் சேம்பின் கொழுமட் அகலிலைப் பாசிப் பரப்பிற் பறழொடும் வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் வாளையோடு டுழப்பத் துறைகலுழ்ந் தமையின் தெண்கள் தேறல் மாந்திய மகளிர் நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க் காஞ்சி நீழற் குரவை யயருந் தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் தேர்தர வந்த நேரிழை மகளிர் ஏசுப என்பவென் நலனே அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற் றியானை நல்கல் மாறே தாமும் பிறரும் உளர்போற் சேறல் முழ விமிழ் துணங்கை தூங்கும் விழவின் யானவண் வாரா மாறே வரினே வரினிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி போல என்னொடு திரியேன் ஆயின் வென்வேல் மாரி யம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைகவென நேரிறை முன்கை வீங்கிய வளையே. (அகம். 336) இதனுள் யான் அவண் வாராமாறே எனத் தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி யாண்டுச்செல்லிற் சுடரொடு திரியும் நெருஞ்சி போல என மகளிரை யான் செல்வுழிச் செல்லுஞ் சேடியர்போலத் திரியும்படி பண்ணிக் கொள்வலெனக் கூறியவாறு காண்க. எண்ணிய பண்ணை - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்த யாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வனபோல் வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும்: உ-ம்: கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாமஃதயர்கஞ் சேறுந் தானஃ தஞ்சுவதுடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் ஏழினி முனைஆன் பெருநிரை போலக் கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே. (குறுந். 80) இதனுள் யாமஃதயர்கஞ் சேறும் என விளையாட்டுக் கூறினாள். என்ற இவற்றொடு பிறவும் - இக்கூறியவற்றின் கண்ணும், புதல்வற் கண்டு நனியு வப்பினுங் கூற்று நிகழுமென்று கூறப்பட்ட இவ்வெட்டோடே பிற கூற்றுக்களும்; கண்ணிய காமக்கிழத்தியர் மேன - இக்கருதப்பட்ட காமக்கிழத்திய ரிடத்தன எ-று. கூற்றென்பது அதிகாரத்தான் வருவிக்க; ஒடுவென்றது உருபை; கண்ணுதல் - ஒரு மனைத் தெருவின்கண் உரிமை பூண்டு இல்லற நிகழ்த்துவரென்று சிறப்புக்கருதுதல். பிறவு மென்றதனான் தலைவனை என்னலந் தாவெனத் தொடுத்துக் கூறுவனவும், நின் பரத்தைமை யெல்லாம் நின் றலைவிக்கு உரைப்பலெனக் கூறுவனவுஞ், சேரிப் பரத்தையொட புலந்துரைப்பனவுந், தலைவி கூற்றோடொத்து வருவனவும் பிறவாறு வருவனவுங் கொள்க. தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப் பொலம்பூண் நன்னன் புனைடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி ஆங்கண் அஞ்ச லென்ற ஆஅய் எயினன் இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந் தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின் மார்புதரு கல்லாய்ப் பிறனா யினையே இனியான் விடுக்குவென் அல்லேன் மந்தி பனிவார் கண்ணள் பல புலந்துறையக் கடுந்திறல் அத்தி ஆடணிநசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின் மனையோள் வௌவலும் அஞ்சுவல் சினைஇ ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே. (அகம். 396) இது காமக்கிழத்தி என்னலந் தாவென்றது. உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூரல கன்ன குண்டுநீ ராம்பல் தண்டுறை யூரன் தேங்கம ழைம்பால் பற்றி யென்வயின் வான்கோல் எல்வளை வௌவிய பூசல் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட்குரைப்பல் என்றலின் முனையூர்ப் பல்லா நெடுநிரை வில்லின் ஓய்யுந் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணி னதிரும் நன்ன ராள னடுங்கஞர் நிலையே. (நற். 100) இது, மனையோட்கு உரைப்பலென்றலின் நடுங்கினா னென்றது. கண்டேனின் மாயம் என்னும் மருதக்கலியுள். ஆராக் கவவின் ஒருத்திவந் தல்கற்றன் சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் போரார் கதவ மிதித்த தமையுமோ ஆயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிர் தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ மாறாள் சினைஇ யவளாங்கே நின்மார்பின் நாறிணர்ப் பைந்தார் பரிந்த தமையுமோ தேறிநீ தீயே னலே னென்று மற்றவள் சீறடி தோயா இறுத்த தமையுமோ. (கலி. 90) எனச், சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனொடு கூறியவாறு காண்க. இன்னும் இதனானே, நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த வாளை வெண்போத் துணீஇய நாரைதன் அடியறி வுறுதல் அஞ்சிப் பைப்பயக் கடியிலம் புகூஉங் கள்வன் போலச் சாஅய் ஒதுங்குந்துறைகேழ் ஊரனொ டாவ தாக இனிநாணுண்டோ வருகதி லம்மவெஞ் சேரிசேர அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் தாருந் தானையும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற் றிரந்தோர்க் கீயாதீட்டியோன் பொருள்போற் பரந்து வெளிப்படாதாகி வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே. (அகம். 276) இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியனவுங் கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. (10) அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று இவை எனல் 152. கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறத் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்னகிழவோள் மாண்புகள் முகம்புல் முறைமையிற் கிழவோற் குரைத்தல் அகம்புல் மரபின் வாயில்கட் குரிய. இது, விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. (இ-ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும்; காமமும் - அன்பும்; நற்பால் ஒழுக்கமும் - எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும்; மெல் இயற்பொறையும் - வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப் போலாது ஒரு தலையாக மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும்; நிறையும் - மறை புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும்; வல்லிதின் விருந்து புறந்தருதலும் - வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும்; சுற்றம் ஓம்பலும் - கொண்டோன் புரக்கும் நண்புடை மாந்தருஞ் சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களம் பல படை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்ட பின் உண்டலும்; அன்னபிறவும் கிழவோள் மாண்புகள் - அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமை களை; முகம்புகன் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல் - அவன் முகம்புகுதும் முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறுதல்; அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய - அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினையுடைய வாயில்களுக்குரிய, என்றவாறு. அன்னபிறவாவன, அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ் வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு மதிக்கப்படுதலும் போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம்புகன் முறைமையின்மையின். உ-ம்: கடல்பா டவிந்து தோணிநீங்கி நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினும் மாணிழை நெடுந்தேர் பாணிநிற்பப் பகலு நம்வயின் அகலா னாகிப் பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்பன் இனியே, மணப்பருங் காமந் தணப்ப நீந்தி வாரா தோர்நமக் கியாஅரென் னாது மல்லன் மூதூர் மறையினை சென்று சொல்லி னெவனோ பாண எல்லி மனைசேர் பெண்ணை மடல்வாய் அன்றில் துணையொன்று பிரியினுங் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொடு கரக்கும் ஒண்ணுதல் அரிவையா னென்செய்கோ வெனவே. (அகம். 50) இதனுட் காமமிகுதியாற் கண்தாமே அழவுங் கற்பிற்கரக்கு மெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. இனி என்றதனாற் கற்புப் பெற்றாம். தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க. வாயி லுசாவே தம்முள முரிய (தொல்.பொ. 512) என்பதனால் தலைவற்கு உரையாமல் தம்முட் டாமே உசாவு வனவும் ஈண்டே கொள்க. அணிநிற வெருமை யாடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வூரன் பாயலின் றுணையே. (ஐங்குறு. 96) இது, கற்புக் கூறியது. முளதயிர் பிசைந்த (குறுந். 167) என்பது அடிசிற் றொழிலின்கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது. கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ பழைமை பயனோக்கிக் கொல்லோ - கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாருட் கேளா அடிநாயேன் பெற்ற வருள். (திணை. நூற். 134) பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமை தோழிக்கு விறலி கூறியது. (11) செவிலி கூற்று இவை எனல் 153. கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப. இது, செவிலி கூற்று உணர்த்துகிறது. (இ-ள்.) கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள - மூன்றுகாலத்துந் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக; நல்லவை உரைத்தலும் - முற்கூறிய கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும்; அல்லவை கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்; செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்தாய்க்கு உரியவாகு மென்று கூறுவர் புலவர் எ-று. கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி இடனறிந்து ஊடிஇனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். (நாலடி. 384) கட்கினியாள், இது காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடை யாள், இஃது ஒழுக்கம்; ஊராண்மை, இது சுற்றமோம்பல்; ஊடியுணர்தல், அல்லவை கடிதல். நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறும் மேலுரைசோரினும் - மேலாய வல்லாளாய் வாழுமூர்தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே யில். (நாலடி. 383) என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம். இனி ஆகு மென்றதனானே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவுங் கொள்க. கானங் கோழிக் கவர்குரற் சேவல் நுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ் சேந்துவரலறியாது செம்மல் தேரே. (குறுந். 242) மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவண னாக நன்றும் இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே. (ஐங்குறு. 401) வாணுதல் அரிவை மகன்முலை ஊட்டத் தானவள் சிறுபுறங் கவையினன் நன்றும் நறும்பூந் தண்புறவு அணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. (ஐங்குறு. 404) இவை உவந்து கூறியன. பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்தொழியப் பந்தர் ஓடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்துண்ணுஞ் சிறுமது கையளே. (நற். 110) இது மனையறங் கண்டு மருண்டு உவந்து கூறியது. அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை - அடிவருடிப் பின்தூங்கி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்றூங்கும் கண்கள் எனக்கு என்னும் பாட்டுச் செவிலி கூற்றன்றாயினுந் தலைவன் மனையறங் கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க. (12) அறிவர்க்குரிய கூற்று இவை எனல் 154. சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய இஃது அறிவரது கூற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய நல்லவை யுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்கு முரிய எ-று. என்றது, அறியாத தலைவயிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொரு ளின்பங்களாற் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம். உ-ம்: தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள். 55) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (குறள். 56) மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (குறள். 51) இவை நல்லவையுணர்த்தல். எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. (நாலடி. 363) தலைமகனின் தீர்ந்தொழுகல் தான்பிறரில் சேறல் நிலைமையில் தீப்பெண்டீர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு. (அறநெறி. 94) இவை அல்லவைகடிதல். இவை அறிவர் கூற்றாதலின் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க. (13) அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி 155. இடித்துவரை நிறுத்தலு மவரதாகுங் கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். இஃது அறிவர்க்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் - தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச்செய்து நிற்பராத லின்: இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஓரெல்லை யிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் எ-று. அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப. உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரிஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தனெ இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (குறுந். 295) இது, தலைவனைக் கழறியது. மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை யெனை மாட்சித் தாயினு மில். (குறள். 52) இது, தலைவியைக் கழறியது. (14) தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல் 156. உணர்ப்புவரை இறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலுங் கிழவோற் குரிய. இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது. (இ-ள்.) உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனளாயினும்; செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந் தலைவற்குரிய எ-று. எனவே, கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய வென்றார். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரியவென்கின்றார், அவை களவிற்குஞ் சிறுபான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி. எவ்வவழி யிழந்த வறுமையாழ்ப் பாணர். (குறுந். 19) இது கற்பிற் புலந்தது. தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தரவு இல்லாயின் (கலி. 81) என்பது ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்து கொள்க. கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின் புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை. (கலி. 46) என்பது குறிபிழைத்துழிப் புலந்தது. குணகடற் றிரையது பறைதபு நாரை. (குறுந். 128) என்பதனுள் நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட்டாற்போல் நமக்கரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற் குறி பிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க. (15) தலைவன் புலக்குமிடத்துத் தோழிகூற்று நிகழ்த்துமெனல் 157. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய இது, முன்னர்த், தலைவன் புலக்குமென்றார், அவ்விடத்துந் தோழியே கூற்றுநிகழ்த்துதற்கு உரியளென்கிறது. (இ-ள்.) புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையுந் தோழியையும் அச்சுறுத்தற் செய்கையாகச் செய்து கொண்டு புலத்தலும் அது நீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்திய வழியும்; சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - சொல்லத்தகும் பணிமொழி தோழிக்கு உரிய எ-று. எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெறாளென்றவாறு. எனவே பாடாண்டிணைக் கைக்கிளை யாயின் தலைவி கூறவும் பெறுமென்று கொள்க. உம்மை சிறப்பும்மை. உ-ம்: தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவன் நரிதின்று பரிக்கும் ஊர யாவதும் அன்புமுதல் உறுத்த காதல் இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே. அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (குறள். 1303) என வரும். இவை கற்பில் தலைவி குறிப்பினான் தோழிகூற்று வந்தன. புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை (கலி. 46) என்று களவில் தோழி கூறினாள், தலைவி குறிப்பினால். கனைபெயல் நடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன் புனையிழாய் என்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்தன் அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக (கலி. 46) எனத் தோழி சொல்லெடுப்பதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும் ஈண்டு உரிய வென்பதனாற் கொள்க. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் - தேனூறுங் கொய்தார் வழுதிக் குளிர்சாந்த தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. (முத்தொள். 104) இதனுள் யானுணர்த்தத் தானுணரானெனப் பாடாண்திணைக் கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க. (16) தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல் 158. பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை உடைமை யானும் அன்பிலை கொடியை என்றலும் உரியள். இது, சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்தகாக் கிளவியுந் தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது. (இ-ள்.) பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும்; கிழத்தி மடத்தகு கிழமை உடைமையானும் - தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக் கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமையுடையளாகிய எண்மையானும்; அன்பிலை கொடியை என்றலும் உரியள் - தலைவனை அன்பிலை யென்றலுங் கொடியை யென்றதலுமுரியள் தோழி எ-று. கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உ-ம்: கண்டவ ரில்லென உலகத்துள் உணராதார் தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகலின் வண்பரி நவின்ற வயமான்செல்வ நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தால் அன்பிலை யெனவந்து கழறுவல் ஐயகேள்; மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய முள்கிய தொடர்பவ ளுண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ; இலங்கேர் எல்வளை யேர்தழை அல்குல் நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ; எனவாங்கு, அனையளென்ற றளிமதி பெரும நின்னின் றிறைவரை நில்லா வளையள் இவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் பசலை மறையச் செல்லும்நீ மணந்தனை விடினே. (கலி. 125) என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டற்குங் கொள்க. (17) தலைவி தலைவனொடு அயன்மைகூறவும் பெறுவளெனல் 159. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிளவி அகன்மலி ஊட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது, தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனாங்கொல்லோ வென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும்; அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும் - தனது நெஞ்சில் நிறைந்துநிறை ஊடல் கையிகந்து துனியாகிய வழி இஃது அவற்கு எவனாங்கொல்லென அஞ்சிய வழியும்; கிழவி வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெறும் - தலைவி தலைவனொடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும் எ-று. உ-ம்: நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ புலவிய தெவனோ அன்பிலங் கடையே. (குறுந். 93) இதனுள் அவரை அன்பிலை கொடியையொன்னாதி, அன்பில் வழி நின் புலவி அவரை என்செய்யும் அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோவென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க. (18) தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல் 160. காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவேற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது, தலைவி வேற்றுமைக் கிளவி தோற்றிய பின்னர்த் தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) காமக் கடப்பினுட் பணிந் கிளவி - அங்ஙனத் தலைவி கண்ணுந் தோழிகண்ணும் வேறுபாடு கண்டுழித் தனக்குக் காமங் கையிகந்துழித் தாழ்ந்துகூறுங் கூற்று; காணுங் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயும் காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை அவட்கு இயலான - அவனை எஞ்ஞான்றும் வழிபட்டொழுகுதல் தலைவிக்கு இல்லறத்தொடு பட்ட இயல்பாகலான் எ-று. உ-ம்: ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்க ணெவனோ தவறு (கலி. 88) கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று (கலி. 88) நின்னாணை கடக்கிற்பா ரியார் (கலி. 81) என்றாற்போல்வன கொள்க. காணுங்காலை என்றதனான் தலைவன் தலைவியெதிர் புலப்பது தன்தவறு சிறிதாகிய இடத்தெனவும், இங்ஙனம் பணிவது தன் தவறு பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க. (19) தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல் 161. அருண்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது. (இ-ள்.) அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - பிறர் அவலங் கண்டு அவலிக்கும்அருள் முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக் கரந்து சொல்லுங் கிளவி; பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றாது வேறொரு பொருள் பயப்பக்கூறுதல் தலைவிக்கும் உரித்து எ-று. வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து அவன் ஏவலைச் செய்ததென்றாற்போலக் கூறுதலுமாம். இது தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் (தொல். பொ. 11) எனப் பொருளியலுள் வழுவமைத்தற்கு இலக்கணம். இணையிரண்டு என்னும் மருதக்கலியுள், மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல் வீசேர்ந்து வண்டர்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன் நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை நீசேர்ந்தஇல்வினாய் வாராமற் பெறுகற்பின் (கலி. 77) எனக் கூறிய தலைவி, கடைஇய நின்மார்பு தோயலம் என்னும் இடையு நிறையும் எளிதோநிற் காணின் கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன்வாழ் பகையுடை யார்க்கு. (கலி. 77) என்புழி நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேறொரு பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க. கூன்முண் முள்ளி (அகம். 26) என்பதனுட் சிறுபுறங் கவையினன் என அவன் வருந்தியது ஏதுவாகத் தான் மண்போன் ஞெகிழ்ந்தே னென அருண் முந்துறுத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உளவென அன்பு பொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சறைபோகிய அறிவினேற் கெனத் தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க. (20) தலைவியுந் தோழியு மலரெழுகின்றதெனக் கூறற்கு முரியரெனல் 162. களவும் கற்பும் அலர்வரை வின்றே. இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) களவின்கண்ணுங் கற்பின்கண்ணும் அலரெழுகின்ற தென்று கூறுதல் தலைவிக்குந் தோழிக்கும் நீக்குநிலைமையின்று எ-று. வரைவின்றெனப் பொதுப்படக் கூறினமையான் இருவரையுங் கொண்டாம். தலைவன் ஆங்குக் கூறுவனாயிற் களவிற் கூட்டமின்மை யுங் கற்பிற் பிரிவின்மையும் பிறக்கும். ஒப்பக்கூற (666) லென்னும் உத்திபற்றிக் களவும் உடனோதினார் சூத்திரஞ் சுருங்குதற்கு. களவலராயினும் (தொல். கள. 24) எனவும், அம்பலு மலரும் (தொல். கள. 48) எனவுங் களவிற் கூறியவை அலராய் நிகழ்ந்தவழி வேறுசில பொருண்மை பற்றிக் கூறுதற்கு வந்தன. அவை அலர்கூறப் பெறுப என்றற்கு வந்தன வல்லன உணர்க. உ-ம்: கண்டது மன்னு மொருநாள்அலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண்டாற்று. (குறள். 1146) இது களவு, வேதின வெரிநி னோதி முதுபோத் தாறுசென்மாக்கள் புட்கொளப் பொருந்துஞ் சுரனே சென்றனர்காதலர் உரனழிந் தீங்கியான் தாங்கிய எவ்வம் யாங்கறிந் தன்றிவ் அழுங்கல் ஊரே. (குறுந். 140) இது கற்பு. கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிறுந் தேர்வண் கோமான் தேனூர அன்னஇவள் நல்லணி நயந்து நீ துறத்தலிற் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே. (ஐங்குறு. 55) இது, தோழி அலர் கூறியது. (21) அலராற்றோன்றும் பயனிதுவெனல் 163. அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே. இஃது அலர் கூறியதனாற் பயன் இஃது என்கின்றது. (இ-ள்.) அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே - இருவகைக் கைகோளினும் பிறந்த அலரான் தலைவற்குந் தலைவிக்குங் காமக்கிடத்து மிகுதிதோன்றும் எ-று. என்றது, களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ்சிறத்தலுங் கற்பினுட் பரத்தைமையான் அலர்தோன்றிய வழிக் காமஞ்சிறத்தலுந் தலைவன் பிரிவின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உ-ம்: ஊரவர் கெளவை யெருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் (குறள். 1147) நெய்யா லெரி நுதுப்பே மென்றற்றாற் கெளவையாற் காம நுதுப்பே மெனல் (குறள். 1148) என்றாற்போல்வன கொள்க. (22) இதுவுமது 164.கிHnth‹ விளையாட்ட டாங்கும் அற்றே. இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது. (இ-ள்.) கிழவோன் விளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று - அப்பரத்தையரிடத்தும் அலரான் தோன்றுங் காமச் சிறப்பு எ-று. ஆங்கும் என்ற உம்மையான் ஈங்கும் அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாதவழி யென்றுமாம். பலரறிந்தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காமச்சிறப்புடையராம். தலைவன் அவரொடு விளையாடி அலர் கேட்குந்தோறுந் தலைவிக்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து காமச் சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச் சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்தியரல்லாத பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினார். காமக் கிழத்தியர் ஊடலும் விளையாடலுந் தலைவி ஊடலும் விளை யாடலும் யாறுங் குளனும் (தொல். பொ. 191) என்புழிக் கூறுப. அஃது அலரெனப் படாமையின் விளையாட்டுக் கண்ணென விரித்த உருபு வினைசெய்யிடத்து வந்தது. உ-ம்: எஃகுடை எழினலத் தொருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே பொய்புறம் பொதிந்தயான் கரப்பவுங் கையிகந் தலரா கின்றால் தானே. (அகம். 116) எனவும், கோடுதோய் மலிர்நின்ற ஆடி யோரே. (அகம். 166) எனவும் தலைவியும் பரத்தையும் பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங் காலுந் தலைவன் காமச்சிறப்புக் காண்க. (23) வாயில்கள் தலைவிமுன்கிழவோன் கொடுமை கூறாரெனல் 165. மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை தம்முள ஆதல் வாயில்கட் கில்லை. இது, வாயில் கட்டு உரிய இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) மனைவி தாட்டலை - தலைவி எத்திறத்தானும் புலந்துழி அவளிடத்து; கிழவோன் கொடுமை - தலைவன் கொடுந்தொழில்களை; தம் உள ஆதல் - தம் உரைக்கண் உளவாக்கி உரைத்தல்; வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில் களுக்கில்லை எ-று. தாட்டலையென மாறுக. அது பாதத்திடத்தென்னுந் தகுதிச் சொல். அது வாயில்கள் கூற்றாய் வந்தது. உதாரணம் வந்துழிக் காண்க. (24) வாயில்கட்கு எய்தியதிகந்துபடாமைக் காத்தல் 166. மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி உள்வழி யுண்டே. இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது; இன்னுழியாயிற் பெறுமென்றலின். (இ-ள்.) மனைவி முன்னர்க் கையறு கிளவி - தலைவிமுன்னர்த் தலைவன் காமக்கடப்பினாற் பணியுந்துணையன்றி நம்மைக் கையிகந்தா னெனக் கையற்றுக் கூறுங்கூற்று; மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - புலந்துவருந் தலைவிக்கு மருந்தாய் அவன் கூடுவதோர் ஆற்றான் உறுதி பயக்குமாயின் அவ்வாயில்கட்கு உளதாம் எ-று. உ-ம்: அறியா மையின் அன்னை யஞ்சிக் குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை நொதும லாளன்கது மெனத் தாக்கலிற் கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்றென யாணது பசலை யென்றனள் அதனெதிர் நாணிலை எலுவ என்றுவந் திசினே செறுநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுதல் அரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே. (நற். 50) இதனுள், என்னறியாமையாலே அன்னாய் நின்னையஞ்சியாங் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப் படுப்பேமாகச் செல்லா நிற்க, அவன் குழை முதலியவற்றை உடையனாய்த் தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப் பட்டானாக, அவ்வருளாமையின் யாணது என்கட் பசலை யென்றானாக, அவனெதிரே எஞ்சிறுமை பெரிதாகலான் ஆராயாதே துணிந்து நாணிலை எலுவ என்று வந்தேனெனத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்த வாறு காண்க. ஏனைய வாயில்கள் கூற்று வந்துழிக் காண்க. இங்ஙனந் தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின (தொல். பொ. 179) என்புழிக் கூறுதும். (25) வாயில்கட்கு முன்னிலைப் புறமொழி பின்னிலைக்கணுரித்தெனல் 167. முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்றும் என்மனார்புலவர். இது, வாயில்கட்கு உரியதொரு பகுதி கூறுகின்றது. (இ-ள்.) முன்னிலைப் புறமொழி - முன்னிலையாய் நிற்கின்ற தலைவனை நோக்கிப் பிறரைக் கூறுமாறுபோலக் கூறுதல்; எல்லா வாயிற்கும் - பன்னிரண்டு வாயில்களுக்கும்: பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர் - குறைவேண்டி முயலுங்கால் தோன்றுமென்று கூறுவர் புலவர் எ-று. உ-ம்: உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே புலனுடை மாந்திர் தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார்மொழிக்கண் தாவார்தாந் தந்நலந் தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கால் ஏதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை (கலி. 22) எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக் கூறிற்று. (26) கூத்தர் கிளவி இவையெனல் 168. தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி யேற்றலும் பல்லாற் றானும் ஊடலின் தணித்தலும் உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும் ஏதுவின் உணர்த்தலுந் துணிவு காட்டலும் அணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. இது, கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ-ள்.) தொல்லவை உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும்; நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும்; பல் ஆற்றானும் ஊடலின் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்றாயினும் இஃது அன்பின்மையா மென்றாயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும்; உறுதிகாட்டலும் - இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே நினக்குப் பொருளென்றலும்; இனிக் கூறுவன தலைவற்குரிய: அறிவு மெய் நிறுத்தலும் – புறத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின்கண்ணே நிறுத்தலும்; ஏதுவின் உணர்த்தலும் - இக் கழிகாமத்தான் இழிவு தலைவருமென்ற தற்குக் காரணங் கூறலும்; துணிவு காட்டலும்; அதற்கேற்பக் கழிகாமத்தாற் கெட்டாரை எடுத்துக்காட்டலும்; அணிநிலை உரைத்தலும் - முலையினுந் தோளினும் முகத்தினும் எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறலும்; கூத்தர் மேன - இவ்வெட்டுங் கூத்தரிடத்தன. எ-று. கூத்தர், நாடகசாலையர், தொன்றுபட்ட நன்றுந் தீதுங் கற்றறிந்த வற்றை அவைக்கெல்லாம் அறியக்காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையும் கூறுபவென்றார். இலக்கியம் இக்காலத் திறந்தன. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். (குறள். 914) இஃது, அறிவு மெய்ந்நிறுத்தது. (27) கூத்தர்க்கும் பாணர்க்குமுரிய கிளவிகூறல் 169. நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய. இஃது, அதிகாரப்பட்ட கூத்தரொடு பாணர்க்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்தல் - தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக வரைந்து மீளும் நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய எ-று. யாப்பமைதலாவது, தோழியைப்போலச் செலவழுங் குவித்தல் முதலியன பெறாராகலின், யாழெழீஇக் கடவுள் வாழ்த்தி அவளது ஆற்றாமை தோன்றும்வகையான் எண்வகைக் குறிப்பும்பட நன்னயப் படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன. உ-ம்: அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன்மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத் திரிமருப் பிரலை புல்லருந் துகள முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கி னறும்பூ வயரப் பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு மாலையு முள்ளா ராயிற் காலை யாங்காகுவங்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும்பல்லார் நேமிக் கார்மழை முழக்கிசை கடுக்கும் முனைநல் லூரன் புனைநெடுந் தேரே. (அகம். 14) இதனுள், தலைவி இரக்கந் தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர் மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க. கூத்தர் கூற்று வந்துழிக் காண்க. (28) இளையோர்க்குரிய கிளவி இதுவெனல் 170. ஆற்றது பண்புங் கருமத்து விளைவும் ஏவல் முடிவும் வினாவுஞ் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி யென்ப. இஃது, உழைக்குறுந் தொழிற்குங் காப்பிற்கும் (தொல். பொ. 171) உரியராகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலராகிய இளை யோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும்; கருமத்து விளைவும் - ஒன்றாகச் சென்றுவந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுதலும்; ஏவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும்; வினாவும் - தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும்; செப்பும் - தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காக வாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறிவு கூறுதலும்; ஆற்றிடைக் கண்ட பொருளும் - செல்சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவர்க்குந் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும்; இறைச்சியும் - ஆண்டுமாவும் புள்ளும் புணர்ந்து விளையாடு வனவற்றை அவ்விருவர்க்குமாயினுந் தலைவற்கே யாயினுங் காட்டியும் ஊறு செய்யுங் கோண்மாக்களை அகற்றியுங் கூறுவனவும்; தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் - அங்ஙனம் அவற்குத் தோற்றுவித்தற்கமைந்த அவைபோல்வன பிற கூற்றுக் களும்; இளையோர்க்கு உரிய கிளவி என்ப - இளையோர்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் எ-று. தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும். ஏவன் முடிவிற்கும் இஃதொக்கும். சான்ற வென்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால் இது பொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக்கலுங் கருமங்கூறுங் காற் சந்துசெய்தல் அமையுமெனக் கூறுதலும் போல்வன அமையாவாம், அவர் அவை கூறப்பெறா ராகலின். பிறவாவன, தலைவன் வருவனெனத் தலைவி மாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலை கூறுதலும், மீளுங்கால் விருந்து பெறுகுவள் கொல்லெனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் காண்க. உ-ம்: விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை தளிரியற் கிள்ளை யினிதி னெடுத்த வளராப் பிள்ளைத் தூவி யன்ன வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் ணன்னநிறைச்சுனை தோறுந் துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த வண்டுண் நறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள் நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புக லாய்ந்தே. (அகம். 324) அவைகள் தங்களுக்கு வளராப்பிள்ளை யென்றலுமாம். இது பெறுவளென்றது. ஆற்றது பண்பும், ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் உடன்போக்கிலுங் கற்பிலுங் கூறுவனவாதலின் இச்சூத்திரங் கைகோள் இரண்டற்கும் பொதுவிதி. (29) இது இளையோர்க்குரிய இயல்புகூறல் 171. உழைக்குறுந் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம் அவர்கட் படுமே. இது முற்கூறியவற்றிற்கு உரியார் இங்ஙனஞ் சிறந்தாரென மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம் - அவரிடத்து நின்று கூறிய தொழில் செய்தலும் போற்றீடு முதலிய பாதுகாவலும் பிறவும் உயர்ந்தோர்க்குச் செய்யுந் தொழிற்பகுதி யெல்லாம்; அவர்கட் படும் - முற்கூறிய இளையோரிடத்து உண்டாம் எ-று. என இவ்விரண்டற்குமுரியர் அல்லாத புறத்தினர் முற் கூறியவை கூறப்பெறாரென்பது பொருளாயிற்று. (30) தலைவன் பரத்தைமை நீங்குமிடமிவை எனல் 172. பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட் கலங்கலு முரியன் என்மனார் புலவர். இது, மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற் பிரிவொடும் பட்டதாகலின் அதுகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடங் கூறுகின்றது. (இ-ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்து கொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை; தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் - பழைதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்; இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண்களை யணிந்து தொன்முறை மனைவி புதல்வனைக் கோலங்காட்டிய செல்வான் போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும்; கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனம் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து; ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் எ-று. உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று;என்னை; இளமைப் பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளாதாகலின். பெரும்பொரு ளென்றார், வேதநூல் அந்தணர்க்குப் பின்முறை வதுவை மூன்றும் அரசர்க் கிண்டும் வணிகர்க்கொன்றும் நிகழ்தல் வேண்டு மெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு. இனி, மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ஆக்கிய வென்றதனானே வேளாளர்க்கும் பின்முறை வதுவை கொள்க. தொன்மனைவி யென்னாது முறை யென்றதனானே அவரும் பெருஞ் சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இங்ஙனந் தொன்முறையார் பின்முறையாரை மகிழ்ச்சி செய்தமை கண்டு இத்தன்மையாரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பின்முறையார் அவர் புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் நேர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பரத்தைமை நீங்குவனென்றார். புகினு மெனவே பிறர்மனைப் புதல்வரென்பது பெற்றாம். தொன்முறை மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க. இனிப், பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்ததற்கு, உ-ம்: மாத ருண்கண் மகன்விளை யாடக் காதலிற் றழீஇ யினிதிருந் தனனே தாதார் பிரச முரலும் போதார் புறவின் நாடுகிழ வோனே. (ஐங்குறு. 406) இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க. (31) தலைவி புலவி நீங்குங்கால முணர்த்தல் 173. தாய்போற் கழறித் தழீக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப கவவொடு மயங்கிய காலை யான. இது, தலைவி புலவி கடைக்கொள்ளும் காலம் உணர்த்துகின்றது. (இ-ள்.) தாய்போற் கழறித் தழீஇக் கோடல் - பரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொள்ளு மாற்றான் மேல்நின்று மெய்கூறுங் கேளிராகிய தாயரைப்போலக் கழறி அவன் மனக் கவலையை மாற்றிப் பண்டுபோல மனங்கோடல்; ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப - ஆராய்ந்த மனையறம் நிகழ்த்துங் கிழத்திக்கும் உரித்தென்று கூறுப; கவவொடு மயங்கிய காலையான - அவன் முயக்கத்தான் மயங்கிய காலத்து எ-று. என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன் மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இனையை யாகலெனத் தழீஇக் கொண்டமை கூறிற்று. தலைவன் தன் குணத்தினும் இவள் குணம் மிகுதிகண்டு மகிழவே தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடையளென்பதூஉங் கொள்க. (32) தலைவி குணச்சிறப்புரைத்தல் 174. அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் மகன்தாய் உயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி இயல்பாக லான. இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தான் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலான், மகன்தாய் உயர்பும் தன் உயர்பும் ஆகும் - மகன் தாயாகிய மாற்றாளைத் தன்னின் இழிந்தாளாகக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான - தலைவன் இவ்வாறொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி நூலிலக்கணத்தான் ஆன மொழியாகலான் எ-று. ஈண்டு மகன்றா யென்றது பின்முறை யாக்கிய வதுவை யாளை. இன்னும் அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்படுதலானே முன்முறையாக்கிய வதுவையாளைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின்முறை வதுவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்த மொழியானென்றவாறு. ஈண்டு மகன்றா யென்றது உயர்ந்தாளை, உய்த்துக்கொண்டுணர்தல் (666) என்னு முத்தியான் இவை யிரண்டும் பொருள். செல்வ னென்றார், பன்மக்களையுந் தன்னாணை வழியிலே இருத்துந் திருவுடைமை பற்றி. இவை வந்த செய்யுள்கள் உய்த்துணர்க. (33) பாசறைக்கண் தலைவியரொடும் போகான் எனல் 175. எண்ணரும்பாசறைப் பெண்ணொடு புணரார். இஃது எய்தியது விலக்கிற்று; முந்நீர் வழக்கம் (தொல். அகத். 34) என்பதனாற் பகைதணி வினைக்குங் காவற்குங் கடும்பொடு சேறலாமென்று எய்தியதனை விலக்கலின். (இ-ள்.) எண் அரும் பாசறை - போர் செய்து வெல்லுமாற்றை எண்ணும் அரிய பாசறையிடத்து; பெண்ணொடு புணரார் - தலைவிய ரொடு தலைவனைக் கூட்டிப்புலநெறி வழக்கங் செய்யார் எ-று. இரவும் பகலும் போர்த்தொழின் மாறாமை தோன்ற அரும்பாசறை யென்றார். நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. (பத்து. நெடுநல். 186,188) எனவும், ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து (பத்து. முல்லை. 75,76) எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு காண்க. இனிக் காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்றுதலை எண்ணு மெனப் பொருளுரைக்க. (34) அகப்புறத் தலைவற்குரிய விதி கூறல் 176. புறத்தோர் ஆங்கண்புரைவ தென்ப. இஃது எய்திய இகந்துபடாமற் காத்தது. (இ-ள்.) புறத்தோர் ஆங்கண் - அடியோரும் வினைவல பாங்கி னோருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத் தாயின்; புரைவது என்ப- அவரைப் பெண்ணொடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்தல் பொருந்துவது என்ற கூறுவர் ஆசிரியர் எ-று. இப்பாசறைப் பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவு களுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு வரைவின்றா யிற்று. (35) பார்ப்பார்க்குரிய கூற்று இவையெனல் 177. காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செல்வழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ-ள்.) காமநிலை உரைத்தலும் - தலைவனது காமமிகுதி கண்டு இதன்நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும்; தேர்நிலை உரைத்தலும் - அங்ஙனங் கூறி அவன் தேருறு ஏதுவும் எடுத்துக்காட்டுங் கூறலும்; கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் - தலைவன் தாழ்ந்தொழுகிய வற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும்; ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும் - வேள்விக்கபிலை பாற்பயங்குன்றுத லானுங், குன்றாது கலநிறையப் பொழிதலானும் உளதாய நிமித்தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும்; செலவுறு கிளவியும் - அவன் பிரியுங்கால் நன்னிமித்தம்பற்றிச் செலவு நன்றென்று கூறுதலும்; செலவு அழுங்கு கிளவியும் - தீயநிமித்தம்பற்றிச் செலவைத் தவிர்த்துக் கூறுதலும்; அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும்; பார்ப்பார்க்கு உரிய - அந்தணர்க்கு உரிய எ-று. தேர்நிலை யென்றதனான் தேர்ந்து பின்னும் கலங்கினுங் கலங்காமல் தெளிவுநிலை காட்டலுங் கொள்க. அன்னபிறவும் என்றதனான். அறிவர் இடித்துக் கூறியாங்குத்தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று கூறுவனவுந், தூதுசென்று கூறுவனவுங் கொள்க. மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல் (666) என்பதனாற் களவியலிற் கூறாதனவும் ஈண்டே கூறினார். அஃது இப்பேரறிவு உடையையாயின் இனையை யாகற்பாலை யல்லையெனக் காமநிலை யுரைத்தலுங் கற்பினுள் இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழே எனத் தலைவன் நினையுமாற்றாற் காமநிலை யுரைத்தலும் அடங்கிற்று. ஏனையவற்றிற்கும் இருவகைக் கைகோளிற்கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. பார்ப்பான் பாங்கன் என உடன் கூறினமையிற் பாங்கற்கும் ஏற்பனவுங் கொள்க. இவையெல்லாந் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்த பாடலுட் பயின்றபோலும். இக்காலத்தில் இலக்கியமின்று. பாங்கன் கூறுவன நோய்மருங் கறிநரு ளடக்கிக்கொண்டு எடுத்து, மொழியப்படுதலன்றிக் (503) கூற்று அவண் இன்மை உணர்க. அது, வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும் நீட்டித்தா யென்று கடாங்கடுந் திண்டேர் பூட்டு விடாஅ நிறுத்து (கலி. 66) எனவும் வரும். இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில் இதுபோல வருவன பிற அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க. (36) வாயில்கட்குரியதோர் இலக்கணங்கூறல் 178. எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) எல்லாவாயிலும் - பார்ப்பான் முதலிய வாயில்களெல்லாம்; இருவர் தேஎத்தும் புல்லிய - தலைவன் கண்ணுந் தலைவிகண்ணும் பொருந்திய; மகிழ்ச்சிப் பொருள என்ப - மனமகிழ்ச்சிப் பொருளினை நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாக வுடைய எ-று. எனவே, மகிழ்ச்சி கூறப்பெறாவாயிற்று. புல்லிய என்றதனானே விருந்தும் புதல்வரு ஆற்றாமையும் வாயிலாகுப என்று கொள்க. வாயில்கள் தோழி தாயே (தொல். பொருள். 193) என்பதனுட் கூறுப. உதாரணம் வந்துழிக் காண்க. (37) வாயில்கட்கு எய்தியநிகந்து படாமற் காத்தல் 179. அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர். இது, மகிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறுகூறப் பெறுவர் என்றலின் எய்திய திகந்துபடாமற் காத்தது. (இ-ள்.) அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் - அன்பு இருவரிடத்தும் நீங்கிய கடுஞ்சொல் அவ்வாயில்களிடத்துத் தோன்றுமாகில்; சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர் - ஒருவர்க்கொருவர் சிறைப்புறத்தாராகக் கூறல்வேண்டுமென்று கூறுவர் புலவர் எ-று. தோன்றி னென்பது படைத்துக்கொண்டு கூறுவரென்பதா மாகலின், குறித்தன்று என்பது போயின்று என்பது போல றகரம் ஊர்ந்த குற்றியலுகரம். அறியாமையின் என்னும் (50) நற்றிணைப் பாட்டும் உதாரணமாம், அது சிறைப் புறமாகவுங் கொள்ளக் கிடந்தமையின். (38) தலைவி தலைவன்கண் தற்புகழ் கிளவி முற்கூறிய இரண்டிடத்தல்லது கூறாள் எனல் 180. தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் எத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே. இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் - தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல்; எத்திறத்தானுங் கிழத்திக்கு இல்லை - நனிமிகு சீற்றத்துனியினும் தலைவிக்கு இல்லை; முற்பட வகுத்த இரண்டலங்கடையே - முன்பு கூறுபடுத்தோதிய தாய்போற் கழறித் தழீஇக் கோடலும் (173) அவன் சோர்புகாத்தற்கு மகன்றா யுயர்பு தன்னுயர் பாதலும் (174) அல்லாதவிடத்து எ-று. கிழத்திக்கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துந் தனது குணச்சிறப்பைக் குறிப்பான் தலைவன்முன்னே புகழ்வாள்போல ஒழுகினாளென் றுணர்க. இனி முற்படவகுத்த இரண்டு என்பதற்கு இரத்தலுந் தெளித்தலும் (தொல். அகத். 41) என அகத்திணையியலுட் கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம். உ-ம்: பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னொடு புரையுந ளல்லள் தன்னொடு புரையுநர்த் தானறி குநளே. எனப் பதிற்றுப்பத்தில் வந்தது. (39) தலைவன் தன்னைப் புகழுமிட மிதுவெனல் 181. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயின் உரிய என்ப. இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது. (இ-ள்.) கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி - தலைவி முன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று; வினைவயின் உரிய என்ப - காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் எ-று. அக்காரணமாவன, கல்வியுங், கொடையும், பொருள் செயலும், முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலுமாகிய காரியகளை நிகழ்த்துவலெனக் கூறுவன. இவ் வாள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று. இல்லென இரந்தோர்க்கொன்றீயாமை யிளிவென (கலி. 2) என்றவழி யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானெனக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க. (40) பாங்கற்கு எய்திய தொருமருங்கு மறுத்தல் 182. மொழியெதிர் மொழிதல் பாங்கற்கு குரித்தே. இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்குமா மென எய்து வித்ததனை ஒருமருங்கு மறுக்கின்றது. (இ-ள்.) மொழியெதிர் மொழிதல் - பார்ப்பானைப் போலக் காமநிலை உத்தல்போல்வன கூறுங்கால் தலைவன் கூறிய மொழிக்கு எதிர்கூறுதல்; பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரித்து எ-று. இது களவிற்கும் பொது: அது பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகாமற் கூறுவன வந்துழிக் காண்க. உரித் தென்றதனான் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க. (41) இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறல் 183. குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும். இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) குறித்து எதிர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல், அஃகித் தோன்றும் - சுருங்கித் தோன்றும் எ-று. அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே காமநிலை யுரைத்தல் (தொல். பொ.177) என்னுஞ் சூத்திரத்தின்கட் கூறிய ஆவொடு பட்ட நிமித்தம் ஆயின் பார்ப்பான் கூறக்கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும்; ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும் பெறுமெனவுங் கூறியவாறா யிற்று. (42) தலைவன் வற்புறுத்திப் பிரிவனெனல் 184. துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேறல் இல்லை. இது முன்னர்க் கிழவிமுன்னர் (தொல். பொ. 181) என்பதனாற் குறிப்பினான் ஆற்றுவித்துப் பிரிதல் அதிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக் கூறி வற்புறுத்துமென்கின்றது. (இ-ள்.) துன்பு உறு பொழுதினும் - உணர்த்தாது பிரியத் தலைவி துன்பம் மிக்க பொழுதினும்; உம்மையான் உணர்த்திப் பிரியத் துன்பம் மிகாத பொழுதினும்; எல்லாம் - சுற்றமுந் தோழியும் ஆயமுந் தலைமகள் குணமாகிய அச்சமும் நாணமும் மடனுமாகிய வற்றையெல்லாம்; கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் எ-று. எனவே, இவற்றை முன்னர் நிலைபெறுத்திப் பின்னர்ப் பிரியுமாயிற்று. சொல்லாது பிரியுங்கால், போழ்திடைப் படாமன் முயங்கியும் அதன்றலைத் தாழ்கதுப் பணிந்து முளைஎயிற் றமிழ்தூறும் தீ நீரைக் கள்ளினு மகிழ்செய்யு மெனவுரைத்தும் (கலி. 4) இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்துவன ஆயின. இனி உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருத்தலுமுடையரென உலகியலாற் கூறலும் பிரிவுணாத்திற்றேயாம். இனிப் பிரிவினை விளங்கக்கூறி ஆற்றியிரு வென்றலும் அவற்றை வற்புறுத்தலாம். யாந்தமக் கொல்லேம் என்ற தப்பற்குச் சொல்லாதகறல் வல்லு வோரே. (குறுந். 79) இது சொல்லாது பிரிதல். அரிதாய வறனெய்தி (கலி. 11) இது சொல்லிப் பிரிதல். (43) தலைவன் செலவிடையழுங்கால் இன்னதன்பொருட்டெனல் 185. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும். இது செலவழுங்கலும்பாலையா மென்கின்றது. (இ-ள்.) செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே - தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக் கன்று; வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும் - தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும் எ-று. செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப் பிரிவிற்கு நிமித்தமாதலிற் பாலையாயிற்று. மணியுரு விழந்த அணியிழை தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி உழைய மாகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. (அகம். 5) களங்காய்க் கண்ணிநார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம்பெரிது பெறினும் வாரலென் யானே. (அகம். 199) இவை வன்புறைகுறித்துச் செலவழுங்குதலிற் பாலை யாயிற்று. (44) பாசறைப்புலம்பல் இன்னுழியாகாதெனலும் இன்னுழியாமெனலும் 186. கிழவிநிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். இஃது அகத்திணையியலுட் பாசறைப் புலம்பலும் (தொல். அகத். 41) என்றார் ஆண்டைப் புலம்பல் இன்னுழி யாகாது இன்னுழியா மென வரையறை கூறுகின்றது. (இ-ள்.) கிழவி நிலையே வினையிடத்து உரையார் - தலைவியது தன்மையை வினை செய்யா நிற்ற லாகியவிடத்து நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப் பெறார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் - வெற்றி நிகழுமிடத்துந் தான்குறித்த பருவம் வந்துழியுந் தூதுகண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்றாகச் செய்யுள் செய்ப எ-று. உரையாரெனவே நினைத்தலுள தென்பதூஉம், அது போர்த் திறம்புரியும் உள்ளத்தாற் கதுமென மாயுமென்பதூஉங் கொள்க. வினையிடம் - வினைசெய்யிடம். காலத்து மென்னும் எச்சவும்மை தொக்கு நின்றது. அன்றி அங்ஙனம் பாடங்கூறலும் ஒன்று. உ-ம்: வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணியவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலில் தொடிபிளந்து நுதிமுக மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா ஒண்மணி கழிபிணிக் கறைத்தோல் பொழிகணையுதைப்பத் தழங்குகுரன் முரசமொடு மயங்கும்யாமத்துக் கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யேமே (அகம். 24) இதனுட் கணையுதைப்ப முரசொடு மயங்கும் யாமத்துத் துயின் மடிந்து வாளுறைசெறியாத் தானையையுடைய வேந்த னெனவே வென்றிக்காலங் கூறியவாறுங் தம்மூரோளே பாசறையேமே என கிழவிநிலை உரைத்தவாறுங் காண்க. பருவங்கண்டுந் தூதுகண்டுங்கூறியவை பாசறைப் புலம்பலும் (தொல். அகத். 41) என்புழிக் காட்டினாம். (45) பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்கும் தலைவிக்குமாவதோ ரிலக்கணமுரைத்தல் 187. பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. இது, பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்குந் தலைவிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) பரத்தையிற் பிரிந்த காலை யான - பரத்தையிற் பிரிந்த காலத்தின்க ணுண்டான; பூப்பின் நீத்து - இருதுக்காலத்தின்கட் சொற் கேட்கும் அணுமைக்கண் நீங்கியிருந்து; புறப்பாடு ஈராறு நாளும் அகன்று உறையார் என்மனார் புலவர் - அவ் விருதுக்காலத்தின் புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும் இருவரும்பிரிந்துறையாரென்று கூறுவர் புலவர் எ-று. என்றது பூப்புத்தோன்றிய மூன்றுநாளுங் கூட்டமின்றி அணுக விருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளுங் கூடியுறைப என்றதாம். தலைவியுந் தலைவனுந் தனித்தும் இருத்தலிற் பிரிந்துறையா ரெனப் பன்மையாற் கூறினார். இனிப், பூப்பின் முன்னாறுநாளும் பின்னாறு நாளுமென்றும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளுமென்றும், நீத்தல் தலைவன் மேல் ஏற்றியும் அகறலைத் தலைவிமேல் ஏற்றியும் உரைப்பாருமுளர். பரத்தையிற் பிரிந்த காலத்துண்டான பூப்பெனவே, தலைவி சேடியர் செய்ய கோலங்கொண்டு பரத்தையர் மனைக்கட் சென்று தலைவற்குப் பூப்புணர்த்துதலுங் கொள்க. இது, அரத்தம் உடீஇ யணிபழுப்புப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப் - பரத்தை நினைநோக்கிக் கூறினு நீமொழியல் என்று மனைநோக்கி மாண விடும். (திணை. நூற். 144) தோழி செவ்வணியணிந்து விட்டமை தலைவன் பாங்காயி னார் கூறியது. இக்காலத்தின்கண் வேறுபாடாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. பூப்புப்புறப்பட்ட ஞான்றும் மற்றைநாளுங் கருத்தங்கின் அது வயிற்றில் அழிதலும், முன்றாநாள் தங்கின் அது சில் வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளுங் கூட்டமின்றென்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத்தலிற் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தலும் அகலும். அகல வாய்க்குங் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று. இதனாற் பரத்தையிற் பிரியுநாள் ஒரு திங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்துழிக் காண்க. குக்கூ (குறுந். 157) என்பதனைக் காட்டுவாரு முளர். (46) ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யிதுவெனல் 188. வேண்டிய கல்வியாண்டுமூன்றிறவாது. இஃது ஓதலுந் தூதும் (தொல். அகத். 26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யின்றென்பதூஉம் அவ்வோத்து இது வென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) கல்வி வேண்டிய யாண்டு இறவாது - துறவறத்தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; மூன்று இறவாது - அக்கல்வியெல்லாம் மூன்றுபதத்தைக் கடவாது எ-று. இறவாதென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மூன்று பதமாவன அதுவென்றும் நீயென்றும் ஆனாயென்றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாதலும் ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக்கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்துகொள்க. இது மூன்று வருணத்தார்க்குங் கூறினார். ஏனைய வேளாளரும் ஆகமங்களானும் அப்பொருளைக் கூறிய தமிழானும் உணர்தல் உயர்ந்தோர்க் குரிய (தொல். அகத். 31) என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூறாராயினார். முன்னர்க் காட்டிய அரம்போ ழவ்வளை (அகம். 125) என்னும் பாட்டினுட் பானாட் கங்குலின் முனிய வலைத்தி - கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் - சென்றோர் வல்வரின் ஒடுவை என்றது, இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க. (47) பகைவயிற் பிரிவிற்குக் காலவரையறை இதுவெனல் 189. வேந்துறு தொழிலே யாண்டின தகமே. இது, வரையறையுடைமையிற் பகைவயிற் பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்துருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரிவும்; யாண்டினது அகமே - ஓர் யாண்டினுட்பட்டதாம் எ-று. வேந்துறுதொழி லென்பதனை இரட்டுற மொழிதலென்பதனான் வேந்தனுக்குகு மண்டிலமாக்களுந் தண்டலத்தலைவரு முதலியோர் உறும் பிரிவும் யாண்டின தகமெனவும் பொருளுரைக்க. தொழி லென்றது அதிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை. அது, நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு (தொல். அகத். 9) என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற் கணின்ற சித்திரை தொடங்கித் தையீறாகக் கிடந்த பத்துத் திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென்றதனாற், பின்பனி தானும் (தொல். அகத். 10) என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசிதொடங்கித் தையீறாக யாண்டுமுழுவதூஉங் கொள்ளக் கிடந்ததேனும் அதுவும் பன்னிரு திங்களுங்கழிந்த தன்மையின் யாண்டின தகமாமா றுணர்க. இதற்கு இழிந்த எல்லை வரைவின்மையிற் கூறாராயினார்: அது, இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக (குறுந். 189) எனச் சான்றோர் கூறலின். நிலநாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலநாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால் சுடரிழாய் நமக்கவர் வருதுமென்று ரைத்ததை (கலி. 35) இது, பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்தலின் இருதிங்கள் இடையிட்டது. கருவிக் காரிடியிரீஇய பருவ மன்னவர் வருதுமென்றதுவே. (அகம். 139) இது, கார்குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடை யிட்டது. வேளாப் பார்ப்பான் (அகம். 24) என்பது தைஇ நின்ற தண் பெயர் கடைநாட் பனியிருங் கங்குல் என்றலின் யாண் டென்பதூஉம், அது கழிந்ததன்மையின் அஃது அகமெனவும் பட்டதென்பதூஉம் தலைவன் வருதுமென்று காலங் குறித்ததற் கொத்த வழக்கென்றுணர்க, காவற்பிரிவும் வேந்துறு தொழிலெனவே அடங்கிற்று, தான்கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகையுளதாங்கொ லென்று உட்கொண்டு காத்தலின். (48) ஏனைப் பிரிவுகளுக்குக் காலவரையறை இதுவெனல் 190. ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் இஃது எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்த நின்ற தூதிற்கும் பொருளிற்கும் பிரிந்து மீளும் எல்லையும் யாண்டினதகம் (எ-று) உ-ம்: மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல் பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை நெடுங்குலைப் பிடவமோ டொருங்குபிணி யவிழக் காடே கம்மென்றன்றே யவல கோடுடைந் தன்னகோடற் பைம்பயிர்ப் பதவின் பாவை முனைஇ மதவுநடை யண்ண னல்லே றமர்பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே யனையகொல் வாழி தோழி மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவன் மாச்சினை காட்டி அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே. (அகம். 23) இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறுதிங்கள் இடையிட்டது. நெஞ்சுநடுக்குற (கலி. 24) என்னும் பாலைக்கலியுள் நடுநின்று செய்பொருண் முற்றுமள வென்றார் என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லைவந்த செய்யுள் வந்துழிக் காண்க. (49) தலைவன் முதலியோர்க்குரிய மரபு கூறல் 191. யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய வென்ப இது, தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரியதொரு மரபு கூறுகின்றது. (இ-ள்.) யாறும்குளனும் காவும் ஆடி - காவிரியுந் தண்பொருனையும் ஆன்பொருனையும் வையையும் போலும் யாற்றிலும், இருகாமத்திணையேரி (பட்டினப். 39) போலுங் குளங்களிலுந், திருமருதந் துறைக் காவே (கலி. 25) போலுங் காக்களிலும் விளையாடி; பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப - உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சியெய்து தலுந் தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவி யர்க்கும் உரிய எ-று. ஏற்புழிக்கோடலால், தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க. கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையிற் கதழ்வுநெறி தந்த சிறையழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடுங் கொண்மோவெந் தோள்புரை புணையே. (ஐங்குறு. 78) இது, காமக்கிழத்திநின் மனைவியோடன்றி யெம்மொடு புணைகொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது. வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத் திதலை யல்குற் றுயல்வருங் கூந்தல் குவளை யுண்க ணேஎர் மெல்லியன் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துறை யாயினள் எமக்கே. (ஐங்குறு. 72) இது, தலைவி புலவிநீங்கித் தன்னொடு புனலாடல்வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக் குரைத்தது. வண்ண வொண்டழை (ஐங்குறு. 73) விசும்பிழி தோகை (ஐங்குறு. 74) இவையும் அது, புனவளர்பூங்கொடி என்னும் மருதக்கலியுள். (92) அன்ன வகையால்யான் கண்ட கனவுதான் நன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப் பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில் ஆனாதகவும் பொழுதினான் மேவர நான்மாடக் கூடன்மகளிரும் மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு (கலி. 92) என்னுஞ் சுரிதகத்துக் காவிற் புணர்ந்திருந்தாடநீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியவாறு காண்க. (50) தலைவனும் தலைவியும் இல்லற நிகழ்த்தியபின் துறவறமும் நிகழ்த்துவர் எனல் 192. காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. இது, முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனுந் தலைவியும் பின்னர்த் துறவறம் நிகழ்த்தி வீடுபெறுப என்கின்றது. (இ-ள்.) கிழவனும் கிழத்தியும் - தலைவனுந் தலைவியும்; சுற்றமொடு துவன்றி அறம்புரி மக்களொடு - உரிமைச் சுற்றத் தோடே கூடிநின்று இல்லறஞ்செய்தலை விரும்பிய மக்களோடே; சான்ற காமங் கடைக்கோட் காலை - தமக்கு முன்னரமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத்திலே; சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல் - அறம்பொருளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல்; இறந்ததன் பயனே - யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் எ-று. சான்றகாமம் என்றார் நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் கடை யென்றார். ஏமஞ்சான்றவாவன, வானப் பிரத்தமுஞ் சன்னியாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின்கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடுபெறுப என்றார். இவ்வீடு பேற்றினை இன்றியமையாது இவ்வில்லற மென்பது இதன் பயன். இது காஞ்சியாகாதோ வெனின் ஆகாது; (தங்குறிப்பினானன்றி நிலையாமை தானே வருவதுதான், சிறந்து நிலைபெற்று நிற்குமெனச் சான்றோர் கூறுதலும், அது தானே வந்து நிற்றலுங் காஞ்சி; இஃது அனதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையான் தாமே எல்லாவற்றையும் பற்றறத் துறத்தலின் அகப்பொருட் பகுதியாம்) இதனானே, இவ்வோத்தினுட் பலவழியுங் கூறிய காமம், நிலையின்மை யின்மேல் இன்பத்தை விளைத்தே வருதலிற் காஞ்சியாகாமை யுணர்க. உ-ம்: அரும்பெறற் கற்பின் அருந்ததி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெறுநசையாற் பின்னிற்பார்இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. (நாலடி. 381) இதனுள், அருந்ததியைப்போலுந் தமக்குப் பெரும் பொருள்களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து, அவர்க்கு வேண்டுவன கொடுக்கும் மகளிர், நாஞ்செல்கின்ற வானப்பிரத்த காருகத்திற்குத் துணையாவரெனத் தலைவன் கூறவே தலைவியும் பொருள்களிற் பற்றற்றாளாய் யாமுந் துறவறத்தின்மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க. (51) வாயில்களாவார் இவர் எனல் 193. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. இது, வாயில்களைத் தொகுத்து அவருந் துறவிற்கு உரியராவர் என்கின்றது. (இ-ள்.) தோழி - அன்பாற் சிறந்த தோழியும்; தாய் - அவளே போலுஞ் செவிலியும்; பார்ப்பான் - அவரின் ஆற்றலுடைய பார்ப்பானும்; பாங்கன் - அவரேபோலும் பாங்கனும்; பாணன் - பாங்குபட்டொழுகும் பாணனும்; பாடினி - தலைவி மாட்டுப் பாங்காயொழுகும் பாடினியும்; இளையர் - என்றும் பிரியா இளையரும்; விருந்தினர் - இருவரும் அன்பு செய்யும் விருந்தினரும்; கூத்தர் - தலைவற்கு இன்றியமையாக் கூத்தரும்; விறலியர் - தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும்; அறிவர் - முன்னே துறவுள்ளத்தராகிய அறிவரும்; கண்டோர் - அவர் துறவு கண்டு கருணைசெய்யுங் கண்டோரும்; யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப - இந்தத் தலைவனுந் தலைவியும் பெற்ற துறவின்கண்ணே மனம் பிணிப்புடை சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் எ-று. என்றது, இவர் அத்துறவிக்கு இடையூறாகாது முன்செல்வர், தாமும் அவரைப் பிரிவாற்றாமையி னென்பதாம். இதனைக் கற்புங் காமமும் (தொல். கற். 11) என்னுஞ் சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தல் பொருத்த முடைத்தேனும் யாத்த சிறப்பினென்று துறவுநோக்குதலின் இதன்பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் எ-று. (52) வினைவயிற்பிரிந்துமீளுந் தலைவற்குரியதோ ரிலக்கணமுணர்த்தல் 194. வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருங் காலை இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை உள்ளம் போலஉற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான. இது பிரிந்து மீளுங்காற் செய்யத் தகுவதோர் இயல்பு கூறுகின்றத. (இ-ள்.) வினைவயின் பிரிந்தோன் மீண்டு வருகாலை - யாதானு மோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டுவருங்காலத்து; இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை - எத்துணைக்காதம் இடையிட்ட தாயினும் அவ் விடையின் கணுண்டாகிய வருவழியிடத்துத் தங்கிவருத லில்லை; உள்ளம்போல உற்றுழி உதவும் - உள்ளஞ் சேட் புலத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோலத் தலைவன் மனஞ் சென்றுற்ற விடத்தே ஒரு கணத்திற் சென்று உதவிசெய்யும்; புள்இயல் கலிமா உடைமையான - புட்போல நிலந்தீண்டாத செலவினை யுடைய கலித்த குதிரையை யுடையனாதலான் எ-று. தேருங் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இஃது இடையில் தங்காது, இரவும் பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின்பின் வையாது, ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து அதன்மேல் இன்பமெய்துகின்ற நிலையாமை நோக்கியும், மேலும் இன்பப் பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்கு மென்றுணர்க. உ-ம்: வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந் தினவண்டார்க்குந் தண்ணம் புறவின் வென்வேல் இளையர் இன்புற வலவன் வள்புவலித் தூரின் அல்லதை முள்ளுறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் வாங்குசினை பொலிய ஏறிப் புதல பூங்கொடி யவரைப் பொய்யதள்அன்ன உள்ளில் வயிற்ற வெள்ளைவெண்மறி மாழ்கி யன்னதாழ்பெருஞ் செவிய புன்தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக் கவையிலை யாரின்இளங்குழை கறிக்குஞ் சீறூர்பல்பிறக் கொழிய மாலை இனிதுசெய் தனையால் எந்தை வாழிய பனிவார் கண்ணள் பலபுலந்துறையும் ஆய்தொடி யரிவை கூந்தல் போதுகுரல் அணிய வேய்தந் தோயே. (அகம். 104) இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செவ்விக்கேற்ப ஊராது கோலூன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத்தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை இனிதுசெய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க. இருந்த வேந்தனருந்தொழில் முடித்தென என்னும் அகப்பாட்டினுள். புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்த தல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ விலனே இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளியூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட் டினையோ வுரைமதி வாழிநீ வலவ. (அகம். 384) என உள்ளம்போல உற்றுழி உதவிற்றெனத் தலைவன் கூறியவாறு காண்க. (53). நான்காவது கற்பிற்கு ஆசிரியர் பாரத்துவாசி நச்சினாக்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது. 5 பொருளியல் வழுவமைதி இருவகையவெனல் 195. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசைதிரிந் தியலா என்மனார் புலவர். இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருளிய லென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஒத்துக்களும் பொருளதிலக்கண மன்றே உணர்த்தின, இதற்கிது பெயராயவா றென்னை யெனின்; சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பாலியனெறி வழாமைத் திரிபல் சொல்லென்பாராதலின் அவை ஈண்டுத் தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளா மெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளுந் தொடர் மொழியுணர்த்தும் பொருளும்ஒருங்கே கூறலிற் பொருளிய லென்றார். இச் சூத்திரம் இவ்வோத்தின்கண் அமைக்கின்ற வழுவமைதிகளெல்லாஞ் சொற்பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியுமென இருவகைய என்கின்றது. (இ-ள்.) இசை திரிந்து இசைப்பினும் - சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப்பினும்; அசை திரிந்து இயலா இசைப்பினும் - இவ்வதிகாரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து இயன்றிசைப்பினும்; மன் பொருள் இயையும் என்மனார் புலவர் - அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர் எ-று. அதனால் யானும் அவ்வாறு கூறுவலென்றார். சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறி வுறுக்கும் ஓசையாதலின் அதனை இசையென்றார்; இஃது ஆகுபெயர். அசைக்கப்பட்டது - அசையென்பதும் ஆகுபெயர். நோயுமின்பமும் (தொல் பொ. 196) என்பதனுள் இருபெயர் மூன்று முரியவாக என்பதனான் திணை மயங்குமென்றும், உண்டற்குரிய வல்லாப் பொருளை (தொல்.பொ. 213) என்றும் பிறாண்டுஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப்பொருண் முதலியன நாடக வழக்கின் வழீஇயவாறுந், தேரும் யானையும் (தொல். பொ. 212) அறக்கழிவுடையன (தொல். பொ. 218) தாயத்தி னடையா (தொ. பொ. 221) என்னுஞ் சூத்திர முதலியன உலகியல்வழக்கின் வழீஇயவாறுங் கூறி, அவ்வழு அமைக்கின்ற வாறு மேலே காண்க. புறத்திணை யியலுட் புறத்திணை வழுக்கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்றுணர்க. இயலா என்றதனான் என்செய்வா மென்றவழிப் பொன் செய்வா மென்றாற்போல வினாவிற் பயவாது இறைபயந்தாற் போல நிற்பனவுங் கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொடர்பொருளாற் பொருள் வேறுபட இசைத்தலுங்கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்றா னுணர்க. (1) முற்கூறிய இருவகையானும் பொருள்வேறுபட்டு வழீஇயமையுமாறு கூறல் 196. நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன்பகுதியும் விளங்க வொட்டிய உறுப்புடையது போலு ணர்வுடையதுபோல் மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபினவற் றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் அவரவ ருறுபிணிதமபோலச் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமமோடு ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி. இது, முற்கூறிய இருவகையானும் பொருள்வேறுபட்டு வழீஇ யமையுமாறு கூறுகின்றது. (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய - துன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக் களத்துங் காமங் கருதின வரலாற்று முறைமையிடம் விளங்க; எட்டன் பகுதியும் விளங்க - நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற; அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும் பொறியறிவும் வேறுபட நிறுத்தி அஃறிணை யிருபாற்கண்ணும் உயர்திணை மூன்றுபொருளு முரியவாக; அவரவர் ஒட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் - கூறுகின்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும் உணர்வு உடையது போலவும் மறுமாற்றம் தருவது போலவும் தந்நெஞ்சொடு புணர்த்துச் சொல்லியும்; சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத்து அடக்கியும் - வார்த்தை சொல்லா முறைமை யுடையன வாகிய புள்ளும் மாவும் முதலியனவற்றோடே அவை வார்த்தை கூறுவனவாகப் பொருந்தி அவை செய்த லாற்றாத முறைமையினை யுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும்; உறுபிணி தமபோலச் சேர்த்தியும் - அச்சொல்லா மரபினவை உற்ற பிணிகளைத் தம் பிணிக்கு வருந்தின போலச் சார்த்திக்கூறியும்; உவமம் ஒன்றிடத்து உவமவாயிற் படுத்தலும் - அம்மூவகைப் பொருளை உவமஞ்செய்தற்குப் பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக் கூறுதலும்; இருவர்க்கும் உரிய பாற் கிளவி - அத்தலைவர்க்குந் தலைவியர்க்கு முரிய இலக்கணத்திற் பக்கச்சொல் எ-று. தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இவ்விருவர்க்குமுரிய பாற்கிளவியென முடிக்க. அவரவ ரென்கின்றார் அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவரையுந் தலைவியரையும். இருவ ரென்றதும் அவரென்னுஞ் சுட்டு. நெஞ்சென்னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும்வழி உயர்திணையாண்பாலாகவுந் தலைவி கூறும்வழி உயர்திணைப் பெண்பாலாகவும் பன்மையாற் கூறும்வழிப் பன்மைப்பாலாகவுங் கொள்க. என்றுஞ்சொல்லா மரபினவற்றையும் உயர்திணைப் பாலாக்கியும் அவற்றைத் தமபோலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர்திணை முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார். இருவகை நிலைக்களத்து எட்டனை யுஞ் சேர்க்கப் பதினாறாம். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப்பலவாமென்றுணர்க. உண்ணாமையின் என்னும் (123) அகப்பாட்டினுள், இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஓதம் போல ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. என்றவழி அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே என்றதனான் நிலையின்றாகுதி யென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி நன்குரைத்தவாறும் ஓதத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவமவாயிற் படுத்தவாறுங் காண்க. கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை அன்னபின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றஎன் நெஞ்சே. (அகம். 9) இஃது, உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது. அன்றவ ணொழிந்தன்று மிலையே என்னும் (19) அகப்பாட்டினுள், வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம் எம்மொடிறத்தலும் செல்லாப் பின்னின்று ஒழியச் சூழ்ந்தனை யாயின் தவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம். என அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று. பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே. (குறுந். 19) என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று. ... ... ... ... ... ... ... ... உள்ளம் பிணிக்கொண்டோள்வயி னெஞ்சஞ் செல்லல் தீர்க்கஞ் செல்வாமென்னும் செய்வினை முடியாதெவ்வஞ் செய்தல் எய்யா மையோ டிளிவுதலைத தருமென உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய உடம்பே. (நற். 234) இஃது, உணர்வுடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது. ஈதலுந் துய்த்தலும் இல்லோக்கு இல்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி யவ்வினைக்கு அம்மாஅரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (குறுந். 63) இது, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது. பின்னின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய் வாய்போல் பொய்ம்மொழி எவ்வமென்களைமா (அகம். 3 என்பதும் அது. விசும்புற நிவந்த (அகம். 131) என்பதனுள், வருக வென்னுதியாயின் வாரேன் நெஞ்சம் வாய்க்கநின் வினையே. என்பது, மறுத்துரைப்பதுபோற் றறுகண்மைபற்றிய பெருமிதங் கூறிற்று. ஏனை அச்சமும் மருட்கையும் பற்றியன தலைவன் கூற்று வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. மன்றுபாடவிந்து (அகம். 128) என்பதனுள் நெஞ்சம்... தளரடி தாங்கிய சென்ற தின்றே என்பது உறுப்புடையது போல் அழுகைபற்றிக் கூறியது. குறுநிலைக் குரவின் (நற். 56) என்பது உறுப்பும் உணர்வுமுடையது போல இளிவரல்பற்றிக் கூறியது. அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே. (கலி. 123) இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது. கோடெழி லகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே. (கலி. 67) இது மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகாதது. (குறள். 1291) இஃது, இளிவரல் பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங் கண்ணிய மரபிடைத் தெரிய வந்தன. கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநீ அல்லது பிறிதுயாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்தா தூதிய வண்டினம் களிசிறந்து பறைஇ தளரும் துறைவனைநீயே சொல்லல் வேண்டுமால் அலவ. (அகம். 170) இது சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர்திணையுமாயிற்று. கொங்குதேர் வாழ்க்கை... (குறுந். 2) என்பது உவகைபற்றிக் கூறியது. போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ. (கலி. 120) இது, செய்கையில்லாத மாலைப்பொழுதினைச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கி உவமவாயிற்படுத்தது. தொல்லூழி தடுமாறி (கலி. 129) என்பதனுள், பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன்துறைவனென்றவன்திறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையையோநீ; மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில் நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய என்துயர் அறிந்தனைநரறியோ எம்போல இன்றுணைப் பிரிந்தாரை யுடையையோநீ; பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் இனிவரின் உயருமன், பழியெனக் கலங்கிய தனியவர் இடும்பைகண்டினைதியோ எம்போல இனியசெய் தகன்றாரையுடையையோநீ; எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி உயர்தணையாக்கி உவம வாயிற்படுத்தவாறு காண்க. ஒன்றிடத் தென்றார் வேண்டியவாறு உவமங்கோட லாகா தென்றற்கு. பகுதியைப் பால்கெழு கிளவி (தொல். பொ. 5) என மேலும் ஆளுப. காமங்கண்ணிய என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க. சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்துபின் சென்றவென் னெஞ்சு. (முத்தொள்.) இது, கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவலம்பற்றி நெஞ்சினைக் கூறியது. ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங் காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளும் மாந்தளிர்க் கையில் தடவரும் மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவனபின்செல்லும் தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரறல் உட்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென் றாள்வலி மிக்கான்அஃதறிகல்லான் என்றாற்போல் உயர்திணையாக உவமவாயிற்படுத்த பெருந்திணை யாய் வருவனவுங் காண்க. இஃது அவலம். (2) முற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணு நிகழுமெனல் 197. கனவும் உரித்தால் அவ்விடத் தான. இது, மேற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணும் நிகழு மெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது. (இ-ள்.) அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த நிலைமை யின் கண்ணே வந்தன; கனவும் உரித்தால் - கனவும் உரித்தாயிருந்தது முந்து நூற்கண் எ-று. எனவே, யானுங் கூறுவலென்றார். அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும்; முலையிடைத் துயிலும் மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுறு முன்னடிப் பணிவான் போலவும். (கலி. 128) இவற்றுள், தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகச் செய்யா மரபின செய்ததாகக் கூறியவாறும், அவை உயர்திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க. இன்னகை யினைய மாகவு மென்வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் (அகம். 39) என வருவனவுங் கொள்க. (3) கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தெனல் 198. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின். இது முற்கூறிய கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தென வழுவமைக்கின்றது. (இ-ள்.) உடன்போக்குக் கிளப்பின் - உடன்போக்கின் கட் கூறின்; தாய்க்கும் உரித்தால் - அக்கனவு செவிலிக்கும் உரித்தாயிருந்தது முந்து நூற்கண் எ-று. தோழி உடன்பட்டுப்போக்குதலானும் நற்றாய் நற்பாற் பட்டனள் என்று வருதலானுந் தாயெனப்படு வோள் செவிலி யாகும் (124) என்பதனானுஞ் செவிலியைத் தாயென்றார். தலைவி போகாமற் காத்தற்குரியளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று. காய்ந்து செலற் கனலி (அகம். 55) என்பதனுட் கண்படை பெறேன் கனவ என்றவாறு காண்க. (4) பக்கச்சொல் தோழி முதலிய நால்வர்க்குமுரித்தெனல் 199. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே. இஃது, எய்தாத தெய்துவித்து வழுவமைக்கின்றது. (இ-ள்.) பால்கெழு கிளவி - இலக்கணத்திற் பக்கச் சொல்; நால்வர்க்கும் உரித்து - தோழியும் செவிலியும் நற்றாயும் பாங்கனு மென்னும் நால்வர்க்கும் உரித்தாம் எ-று. மேல் இருவர்க்கு முரிய பாற்கிளவி (196) என்றலின் தலைவனையுந் தலைவியையும் ஆண்டே கூறலின் ஈண்டு இந்நால் வருமென்றே கொள்க. தருமணற் கிடந்த பாவையென் அருமகளேயென முயங்கினள் அழுமே. (அகம். 165) இது, நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தழீஇக் கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று. தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை யிருங்குரவே - ஈன்றாள் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாயீதென்று வந்து. (திணை. நூற். 65) என்பது செவிலி குரவை வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவியாயிற்று. ஏனையிரண்டும் மேல்விலக்குப. (5) இறந்தது காத்தல் 200.நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே. இஃது, இறந்தது காத்தது. (இ-ள்.) ஆங்கு - அந்நால்வரிடத்து; நட்பின் நடக்கை அலங்கடை – நட்பின் கண்ணே ஒழுகுதலல்லாத அவ்வீரிடத்தும் பால்கெழு கிளவி உரித்து எ-று. எனவே, நட்புச்செய் தொழுகுந் தோழிக்கும் பாங்கனுக்கும் பால்கெழு கிளவி (199) இன்றென்றார், எனக் கொள்க. (6) தலைவிக்கு வேறுபாடு தோன்றியவிடத்து அதனைப் பரிகரித்தற்குரியாரிவரெனல் 201. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. இது, தலைவிக்குத் தலைவனாற் பிறப்பதொரு வேறுபாடு தோன்றியவழி அதனைப் பரிகரித்தற் குரியோர் இவரென வழுவமைக்கின்றது. (இ-ள்.) உயிரும் நாணும் மடனும் என்றிவை - உயிரும் நாணும் மடனுமென்று கூறப்பட்ட இவை மூன்றும்; செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய - குற்றந் தீர்ந்த தலைமையினை யுடைய நற்றாய்க்குஞ் செவிலிக்குந் தோழிக்குந் தலைவற்கு முரிய எ-று. உம்மை ஐயமாதலின் தலைவனை யொழிந்த மூவர்க்கு முரிய என்றாராயிற்று. என்றது தலைவன் இவற்றைக் களவிலுங் கற்பிலுங் காத்தலும் வரைவிடைவைத்துப் பிரிந்தும் பரத்தையிற் பிரிந்துங் காவாமையுமுடைய னென்பது கூறிற்று. அவை எழுவகையான் (207) தோழி அவற்றைக் காத்து அறத்தொடு நிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக் காத்து நற்றாய்க் கறத்தொடு நிற்ப, அவளும் அவற்றை உட்கொண்டு காத்தற்கு அறத்தொடு நிற்றலும் உடன்போயது அறனென நற்றாய் கோடலுஞ் செவிலி பிறரை வரகின்றானோ வெனத் தோழியை வினவலும் பிறவுமாம். உதாரணம் முன்னர்க் காட்டியவாற்றுட் காண்க. இனி உம்மையை முற்றும்மையாக்கி உயிர் முதலிய தலைவி யுறுப்பினை உறுப்புடைத்தாகவும் மறுத்துரைப்பதாகவும் கூறப்பெறா தென்றார். (7) தலைவி வருத்தமிக்கவழி இவ்வாறு புணர்க்கவும் பெறுமெனல் 202. வண்ணம் பசந்து புலம்புறு காலை உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே. இது, வருத்தமிக்கவழி இவையுமா மென்கிறது. (இ-ள்.) வண்ணம் பசந்து புலம்பு உறுகாலை - மேனி பசந்து தனிப்படருறுங் காலத்து; கிழவி உறுப்பினை உணர்ந்த போல - தலைவி தனது உறுப்பினை அறிந்தனபோல; புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே - பொருந்தின கூற்றாற் சொல்லவும் பெறும் எ-று. கேளல மைக்கவன் குறுகன்மி னெனமற் றெந் தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம் (கலி. 68) நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு ............... பிரிந்திசினோர்க் கழலே. (குறுந். 35) தணந்த நாள் சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் (குறள். 1233) என வரும். காதும் ஓதியும் முதலிய கூறப்பெறா; கண்ணுந் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்தவகை யென்றார். இதனானே இவற்றைத் தலைவன்பாற் செலவுவர வுடையன போலக் கூறலுங்கொள்க. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று (குறள். 1244) எனக் கண்ணினைச் செல்வனவாகக் கூறினாள். (8) தலைவனொடு வேறுபட்டவழித் தலைவி இவ்வாறு கூறுவள் எனல் 203. உடம்பும் உயிரும் வாடியக் காலும் என்னுற் றனகொல் இவையெ னின்அல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. இது, தலைவனொடு வேறுபட்டுழிப் பிறப்பதொரு வழுவமைதி கூறுகின்றது. (இ-ள்.) உடம்பும் உயிரும் வாடியக்காலும் - தன் உடம்பும் உயிருந்தேய்ந்து கூட்டமினிற் இருந்தகாலத்தும்; இவை என் உற்றனகொல் எனின் அல்லது - இவை என்ன வருத்தமுற்றனகொலென்று தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறினல்லது; கிழத்திக்குக் கிழவோற் சேர்தல் இல்லை - தலைவிக்குத் தலைவனைத் தானேசென்று சேர்தல் இருவகைக் கைகோளினுமில்லை எ-று. இது, காதல்கூரவுங் கணவற்சேராது வஞ்சம்போன் றொழுகலின் வழுவாயினும் அமைக்க எ-று. எற்றோ வாழி தோழி முற்றுபு கறிவளர் அடுக்கத்து இரவின்முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி யருவி உண்துறைத் தரூஉங் குன்ற நாடன் கேண்மை மென்றோள் சாய்த்துஞ் சால்பீன்றன்றே. (குறுந். 90) என்பதனுட் கேண்மை தோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைதியைத் தந்தது; யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந்தாதது எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை யருவி பின்னும் பயன்படுத்து நாடன் என்றதனானே அலரால் நஞ்சுற்றத்திற் பிரிந்தேமாயினும் அவன் நம்மை வரைந்துகொண்டு இல்லறஞ் செய்வித்துப் பயன்படுத்துவ னென்பதாம். கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. (குறள். 1173) இதுவும் அது. ஓஓஇனிதே யெமக்கிந்நோய் செய்தகண் தாஅ மிதற்பட்டன. (குறள். 1176) இதுவும் இதன்பாற்படும். இனி, இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கெயிறு உறாஅலின் நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அலற்காணில் தனித்தே தாழுமித் தனியில் நெஞ்சே. (கலி. 67) இதனுள், யான் துனித்தல்வல்லேன், என் நெஞ்சிற்குத் தன்றன்மை யென்பதொன்றில்லை, ஈதென்னென்றலின் அவ்வாறு காண்க. (9) இதுவுமது 204. ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை உரிய தாகலும் உண்டென மொழிப. இதுவும் அது. (இ-ள்.) ஒருசிறை - தன் உள்ளத்து நின்ற தலைவ யொழியப் போந்துநின்றது; நெஞ்சமொடு உசாவுங் காலை - தானுந் தன் நெஞ்சமும் வேறாக நின்ற கூட்டத்திற்கு உசாவுங் காலம்; உரியதாகலும் உண்டென மொழிப - தலைவிக்குரியதாகலும் உண்டென்று கூறுவர் புலவர் எ-று. உம்மையான் தோழியுடன் உசாவுங்காலமும் உண்டு என்று கொள்க. உம்மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத்துத் தானும் நெஞ்சமும் ஒன்றாய் நின்று உசாவுதலின் வழுவாயமைந்தது. இது யாண்டு நிகழுமெனின் இவனொடு கூடாமையின் இவன் ஆற்றானாவனென்றானும் உணர்ப்புவயின் வாரா வூடற் கட் (தொல். பொ. 150) புலக்குமென்றானும் பிறவாற்றானு மென்றானும் உசாவும். மாணமறந்து ள்ளாநாணிலிக் கிப்போர் புறஞ் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கின் தப்பினேன் என்றடி சேர்தலு முண்டு. (கலி. 89) என வரும். பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர்வினவிச் சென்மோ வாழி தோழி. (நற். 365) இது, தோழியோடு உசாவியது. (10) மடமை அழியுமிடமிவை எனல் 205. தன்வயின் கரத்தலும் அவன்வயின்வேட்டலும் அன்னஇடங்கள் அல்வழி யெல்லாம் மடனொடு நிற்றல் கடனென மொழிப. இது, பெண்டிர்க்கியல்பாகிய மடமை யழிவதொரு வழுவமைக் கின்றது. (இ-ள்.) தன்வயின் கரத்தலும் - தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்க மின்றென்று பொய்கூறலும்: அவன் வயின் வேட்டலும் - அங்ஙனங் கரந்து கூறிய தலைவன்கட் டலைவி விரும்புதலும்; அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் - ஆகிய அவைபோலும் இடங்களல்லாத இடத்தெல்லாம்; மடனொடு நிற்றல் கடன் என மொழிப - தலைவி மடமையுடையளாகி நிற்றல் கடப்பாடென்று கூறுவர் புலவர் எ-று. எனவே, இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழுவமைத்தார். அது குதிரை வழங்கிவருவல் (கலி. 96) என்று அவன் கரந்தவழி, அதனை மெய்யெனக் கோடலன்றே மடமை, அங்ஙனங்கொள்ளாது அறிந்தேன் குதிரை தானெனப் பரத்தையர்கட் டங்கினாயெனக் கூறுதலின் இது மடனழிந்த வழுவமைதியாயிற்று. கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்த னிர்நீயிர்இஃதோ செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே. (அகம். 26) என்றவழி, மனத்து நிகழ்ந்த வேட்கையை மறைத்து வன்கண்மை செய்து மாறினமையின் அதுவும் மடனழிந்து வழுவாகியமைந்தது. அன்ன இடமென்றதனான், யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. (குறள். 1314) என்றாற்போல மடனழிய வருவனவுங் கொள்க. (11) தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி அறத்தொடு நில்லாள் எனல் 206. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி யென்ப. இது, தலைவியான் தோழிக்கு வருவதொரு வழுவமைக் கின்றது. (இ-ள்.) அறத்தொடு நிற்குங் காலத்தன்றி - தலைவி இக்களவினைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத்தன்றி; தோழி அறத்தியன் மரபிலளென்ப - தோழி அறத்தினியல் பாகத் தமர்க்குக்கூறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர் எ-று. காலமாவன நொதுமலர்வரைவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம் பூண்டு ஒழுகுகின்றாளை நொதுமலர் வரைவைக் கருதினார் என்பதூஉம், இற்பிறந்தார்க்கேலாத வெறியாட்டுத் தம்மனைக்கண் நிகழ்ந்த தூஉந் தலைவிக் கிறந்துபாடு பிறக்குமென்று உட்கொண்டு அவை பிறவாமற் போற்றுதல் தோழிக்குக் கடனாதலின் இவை நிகழவதற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ஙனம் அறிவியா திருத்தலின் வழுவாயமைந்தது. இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் தூமணி பெறூஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் சிறுதொடி யெம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதிநீவி யோனே. (குறுந். 379) இது, நொதுமலர் வரைவுகூறிஉசாவி அறத்தொடு நின்றது. கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த. (நற். 34) இது, வெறியாட்டெடுத்தவழி அறத்தொடு நின்றது. அகவன் மகளே அகவன் மகளே. (குறுந். 23) இது, கட்டுக்காணிய நின்றவிடத்து அறத்தொடு நின்றது. அதுவும் வெறியாட்டின்கண் அடங்கும். தலைவிக்குக் குறிப்பினு மிடத்தினுமல்லது வேட்கை நெறிப்பட வாராமையிற் சின்னாள் கழித்தும் அறத்தொடு நிற்பாளாகலானுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டபொழுதே அறத்தொடு நிற்பராகலானும் ஆண்டு வழுவின்று. (12) அறத்தொடு நிற்கும்வகை இவையெனல் 207. எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய என்மனார் புலவர். இது அவ்வறத்தொடு நிலை இனைத்தென்கின்றது. (இ-ள்.) எளித்தல் - தலைவனை எளியனாகக் கூறுதல்; ஏத்தல் - அவனை உயர்த்துக் கூறல்; வேட்கை உரைத்தல் - அவனது வேட்கை மிகுத்துரைத்துக் கூறல்; கூறுதல் உசாதல் - தலைவியுந் தோழியும் வெறியாட்டிடத்தும் பிறவிடத்துஞ் சில கூறுதற்கண்ணே தாமும் பிறருட னேயும் உசாவுதல்; ஏதீடு - ஒருவன் களிறு புலியும் நாயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டானெனவும் பூத்தந்தான் தழைதந்தா னெனவும் இவை முதலிய காரமிட்டுணர்த்தல்; தலைப்பாடு - இருவருந் தாமே எதிர்ப்பட்டார் யான் அறிந்திலே னெனக் கூறுதல்; உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ - என்று அவ்வாறனையும் படைத்து மொழியாது பட்டாங்கு கூறுதலென்னுங் கிளவியோடே கூட்டி; அவ் எழுவகைய என்மனார் புலவர் - அத்தன்மைத்தாகிய ஏழு கூற்றை யுடைய அறத்தொடு நிற்றலென்று கூறுவர் புலவர் எ-று. அவ்வெழுவகைய என்றதனான் உண்மை செப்புங்கால் ஏனையாறு பொருளினுட் சில உடன்கூறி உண்மைசெப்பலும் ஏனைய கூறுங்காலுந் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலுங் கொள்க. உ-ம்: எல்லும் எல்லின்றசைவுபெரி துடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ எனமொழிந் தனனே யொருவன் (அகம். 110) என்பது எளித்தல். பகன்மாயந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎநோக்கி மற்றிவன் மகனே தோழி என்றனள் (அகம். 48) என்பது ஏத்தல். பூணாக முறத்தழீஇப் போதந்தான். (கலி. 39) என்பது வேட்கையுரைத்தல். முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே. (குறுந். 362) இது வேலனொடு கூறுதலுசாதல். கூறுதற்கண் உசாதலென விரிக்க. வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுத்த தல்லது - கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (திணை. நூற். 15) இதுவும் உசாதலாய் அடங்கும். உரவுச் சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் முளைவாள் எயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியாம் இடும்பைகூர் மனத்தேம் மருண்ட புலம்படர மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலந்து ஆகாண் விடை அணிபெற வந்தெம் அலமரலாயிடை வெரூஉதல் அஞ்சி மெல்லிய இனிய மேவரக் கிளந்தெம் ஐம்பால் ஆய்கவின் ஏத்தி யொண்தொடி அசைமென் சாயல் அவ்வாங் குந்தி மடமதர் மழைக்கண் இளையீர்இறந்த கெடுதியும் உடையேன் என்றனன் (குறிஞ்சிப். 130-142) என நாய் காத்தவாறும், கணைவிடு புடையூக் கானங் கல்லென மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெயல் உருமிற் பிளிறிச் சீர்த்தக இரும்பிணர்த் தடக்கை இருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு மையல் வேழம் மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியே மாகி யொய்யெனத் திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோல் உடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை அண்ணல் யானை அணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்து புறங் கொடுத்த பின்னர் நெடுவேள் அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திண்ணிலைக் கடம்பின் திரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடேஎம் நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத்திரை அருங்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை அஞ்சில் ஓதியசையல் எனைய தூஉம் அஞ்சல் ஓம்புநின் அணிநலங் காக்கென மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கனன்.... (குறிஞ்சிப். 160-183) எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க. புலிபுலி யென்னும் பூசல் தோன்ற ... நிற்றந் தோனே. (அகம். 48) இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டு ரைத்தது. அன்னாய் வாழிவேண்டன்னை என்னை தானு மலைந்தான் எமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே. (ஐங்குறு. 201) இது, தோழி தழைதந்தானென அறத்தொடு நின்றது. சுள்ளி சுனைநீலஞ் சோபாலிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணாற் கடிந்தான் உளன். (திணை. நூற். 2) இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறினாள். பிறிதொன்றின்மை யறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் தருகுவல் நினக்கே. (அகம். 110) இது தலைப்பாடு. நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மணம் அயர்கஞ் சின்னாள் கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென ஈர நன்மொழி தீரக் கூறித் துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண் டன்றை அன்னவிருப்போ டென்றும் இரவரன் மாலையனேவரு தோறுங் காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும் நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்தோள் இன்துயில் என்றும் பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன் இளமையின் இகந்தன்றும் இலனே. (குறிஞ்சிப். 231 - 244) எனவும், வளமையில் தன்நிலை திரிந்தன்றும் இலனே. (குறிஞ்சி. 245) எனவும், கன்மழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழும் அன்னாய் (ஐங்குறு. 220) என வருவன உண்மைசெப்பல். காமர் கடும்புனல் (கலி. 39) என்பதனுள் இரண்டு வந்தன. பிறவுமன்ன. (13) தோழி அறத்தொடு நிற்றல் தலைவி விருப்பத்தான் நிகழுமெனல் 208. உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் அப்பொருள்வேட்கைக் கிழவியின் உணர்ப. இது, மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் - தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழியா அவ்வாறு மறை புலப்படுத்துக் கூறாராதலின்; அப்பொருள் வேட்கைக்கிழவியின் உணர்ப - அம்மறை புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவியர் காரணத்தான் தோழியர் உணர்வர் எ-று. உணர்ப என்று உயர்திணைப் பன்மையாற் கூறவே தலைவியருந் தோழியரு பலரென்றார். கிழவி யென்றாரேனும் ஒருபாற் கிளவி (தொல். பொ. 222) யென்பதனாற் பன்மையாகக் கொள்க. உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் (113) இது புலப்படுத்தற்கு உடம்படுதலின் வழுவாயமைந்தது. மற்று இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மலர்உண்கண் பசலை காம நோயெனச் செப்பாதீமே. (அகம். 52) என்றாற்போல்வனவே இலக்கணமென்பது மேலிற் சூத்திரத்தாற் கூறுப. (14) அறத்தொடு நிற்றல் வழுவென்றதற்குக் காரணங் கூறல் 209. செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான. இது, மறைபுலப்படாமல் ஒழுகுதல் இலக்கணமென்றற்கும் மறுபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் காரணம் கூறுகின்றது. (இ-ள்.) செறிவும் - அடக்கமும்; நிறைவும் - மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளமும்; செம்மையும் - மனக் கோட்ட மின்மையும்: செப்பும் - களவின்கட் செய்யத தகுவன கூறலும்; அறிவும் - நன்மைபயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிவித்தலும்; அருமையும் - உள்ளக்கருத்தறிதலருமையும்; பெண்பாலான - இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள் எ-று. இவையுடையளெனவே மறைபுலப்படுத்தற்கு உரியளல்ல ளென்பதுஉம் அதனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழுவமைத்தன வுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் சிங்கநோக்கு. (15) வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல் 210. பொழுதும் ஆறுங் காப்புமென்றிவற்றின் வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனூற ஞ்சலும் இரவினும் பகலினும் நீவரல் என்றலுங் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப. இதுவும் தோழிக்குந் தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக்கின்றது. (இ-ள்.) பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் - இராப்பொழுதும் அக்காலத்துவழியுங் கண்ணுறும் இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை மூன்றனது பழையமுறையிற் பிறழுதலாற் தலைவன்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்: இவை தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுதலும் உடையனவாயிற் றேனும் அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழுதிற்றலை வனது செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க. மன்றுபாடவிந்து....... (அகம். 128) என்பது பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது. ஈர்ந்த ணாடையை எல்லி மாலையை சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின் ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென ஆர்ப்பவர் ஏனல்காவலரே. (கலி. 52) இது, காப்பினான் வழுவுணர்த்தியது. தன்னை அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே வருதற்கு யான் ஏதுவாயினேன் எனத் தன்னை அழிவு படுத்துரைத்தலும்: நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆனா அரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே. (அகம். 72) அவன் வரவினை உவவாது துன்பங்கூர்தல் வழுவாயினும், அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார். அவண் ஊறு அஞ்சலும் - அவ்வழியிடத்துத் தலைவற்கு வரும் ஏதமஞ்சுதலும்: அஞ்சுவல் வாழி யைய ஆரிருள் கொங்கியர்ஈன்ற மைந்தின் வெஞ்சின உழுவை திரிதருங் காடே. இஃது, அவனைப் புலிநலியுமென்று அஞ்சியது. ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லளென் றோழி (அகம். 18) என்பதும் அது. ஆறின்னாமையாவது விலங்குமுதலியவற்றான் வரவிற்கு இடையீடு நிகழுமென் றஞ்சுதல். ஏத்தல், எளித்தலின் வேறாயிற்று. இது நன்குமதி யாமையின் வழுவாயினும் அன்பு மிகுதியான் அமைத்தார். இரவினும் பகலினும் நீ வரல் என்றலும் - இராப்பொழுதின் கண்ணும் பகற்பொழுதின் கண்ணுந் தலைவனைக் குறியிடத்து வருகவெனத் தோழி கூறலும்: வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவதுண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே (அகம். 120) எனவும், பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே (அகம். 240) எனவும் வரும். களவு அறிவுறுமென்று அஞ்சாது வருகவென்றலின் வழுவேனுந் தலைவி வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார். கிழவோன்றன்னை வாரல் என்றலும் - தோழியுந் தலைவியுந் தலைமை செய்து கொண்டு தலைவனை வாரற்க என்று கூறுதலும்: தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார். இரவு வாரல் ஐய விரவுவீ அகலறை வரிக்குஞ் சாரல் பகலும் பெறுதியிவள் தடமேன் றோளே. (கலி. 49) இஃது, இரவுவாரலென்றது. பகல்வரிற் கவ்வையஞ்சுதும் (அகம். 118) என்றது பகல்வாரலென்றது. நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே. (அகம். 112) இஃது, இரவும் பகலும் வாரலென்றது. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் - பிறிதொரு பொருண்மேல் வைத்து நன்மையுந், தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்: கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகம். 111) எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தினமையின் வழுவாயமைந்தது. பழியொடு வரூஉ மின்பம் வெஃகார் எனவே புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம். புரைபட வந்து அன்னவை பிறவும் - வழுப்படவந்த இவை போல்வன பிறவும்: அவை ஊடற்கணின்றியுந் தலைவனைக் கொடிய கொடியனென்றலும் நொதுமலர் வரைகின்றாரென்றலும் அன்னை வெறியெடுக்கின்றா ளென்றலும் பிறவுமாம். பகையில் நோய் செய்தான் (கலி. 40) என்பது ஊடற்கணின்றிக் கொடிய னென்றது. தினையுண் கேழ லிரியஎன்னும் (119) நற்றிணையுள், யாவதும் முயங்கல் பெறுகுவ னல்லன் புலவி கொளீஇயர்தன்மலையினும் பெரிதே. இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது. கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண்டல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ? (அகம். 137) என்பது தலைவற்கு வெறியாட்டுணர்த்தியது. வரைதல் வேட்கைப் பொருள என்ப - தலைவன் வரைந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய என்றவாறு. என்றது, வழுப்டக் கூறினும் வரைவுகாரணத்தாற் கூறலின் அமைக்க வென்றவாறாம். (16) கைக்கிளைபெருந்திணைக்கட்படுவதொரு வழுவமைக்கின்றது 211. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் மரீஇய மருங்கின் உரித்தென மொழிப. இது, நடுவணைந்திணையல்லாத கைக்கிளை பெருந்திணைக் கட்படுவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) வேட்கை மறுத்து - தம் மனத்து வேட்கையை மாற்றி; ஆங்குக் கிளந்து உரைத்தல் - இருவரும் எதிர்ப்பட்ட விடத்துத் தாம் ஆற்றின தன்மையைப் புலப்படக் கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்தல்; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப - புலனெறி வழக்கஞ்செய்து மருவிப்போந்த கைக்கிளைப் பெருந்திணைக்கண் உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத்.1) என அவை இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கென்றார். தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (கலி. 62) இஃது, அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத்துணர்த்தியது. எறித்த படைபோன் முடங்கி மடங்கி நெறித்துவிட் டன்ன நிறையேரால் என்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் நீநல்கின்உண்டென்னுயிர் (கலி. 94) உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு. (கலி. 94) இவை, அடியோர் தலைவராக வேட்கை மறுத்துணர்த்தியது. பெருந்திணை. ஏனை வினைவலவபாங்கினோர்க்கு வந்துழிக் காண்க. இவை கைகோளிரண்டன்கண்ணும் வழங்குதல் சிறுபான்மையுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ஒன்றென முடித்த லான் மரீஇயவாறு ஏனையவற்றிற்குங் கொள்க. புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயிறுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின்மார்புந் தவறாதல் சாலாவோகூறு (கலி. 88) எனவும், குதிரையோவீறியது (கலி. 96) எனவும் வருவனவும் பிறவும் இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன; அவையும் அமைத்துக் கொள்க. (17) இது களவொழுக்கத்தின்கண்தேர் முதலியவற்றை ஊர்ந்துந் தலைவன் செல்லுவன்எனல் 212. தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) தேர் முதலியவற்றையும் பிற ஊர்திகளையும் ஏறிச்சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் எ-று. பிற வாவன கோவேறுகழுதையுஞ் சிவிகையும் முதலியன வாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது. குறியின்றிப் பன்னாள்நின் கடுந்திண்டேர் வருபதங்கண் டெறிதிரை யிமிழ்கானல் எதிர்கொண்டா ளென்பதோ அறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச் செறிவளை தோளுர இவைநீ துறந்ததை (கலி. 127) நிலவுமணற் கொட்குமோர் தேருண்டெனவே (அகம். 20) எனவும், கடுமான் பரிய கதழ்பரிகடைஇ நடுநாள் வரூஉம் (நற். 149) எனவும், கழிச்சுறா வெறிந்த புண்தாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ (அகம். 120) எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க. உம்மையான், இளையரொடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க. வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ (அகம். 120) என்றாற்போல்வன கொள்க. இதனானே உடன்போக்கிலும், கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுரமிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசென் மாக்கள் நற்றோள் நயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே (ஐங்குறு. 385) எனத் தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க. (18) இது ஒரு சொல்வழுவமைத்தல் 213. உண்டற் குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே. இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின்றது. (இ-ள்.) உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற்றொழிலை நிகழ்த்துதற்குரிய அல்லாத பொருளை; உண்டன போலக் கூறலும் மரபே - அத்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறி வழக்கஞ் செய்தலும் மரபு எ-று. அது, பசலையாலுணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால் (கலி. 15) எனவரும். இதன்கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற் றொழிற் படுத்து அடக்கலும் அமைத்தார். இன்னும் உய்த்துக்கொண்டுணர்த (666) லென்பதனான் உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கூறலும் மரபாமென்பது பொருளாகக் கொள்க. அவை, தோள்நல முண்டு துறக்கப் பட்டோர் வேள்நீர் உண்ட குடையோ ரன்னர்; நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர் அல்குநர் போகிய வூரோ ரன்னர்: கூடினர்புரிந்து குணனுணப் பட்டோர் சூடினரிட்ட பூவோ ரன்னர். (கலி. 23) எனவரும். பிறவுங் கொள்க. உம்மையாற் பிற தொழில்பற்றி வருவனவுங் கொள்க. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னும் அவர்க்காண லுற்று (குறள். 1244) புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு (குறள். 1187) வருத்தி வான்றோய் வற்றே காமம் (குறுந். 102) என்றாற் போல்வனவுங் கொள்க. (19) வரைவு நேராமைக்குக் காரணம் பொருள்வேண்டி எனத் தோழி கூறல் 214. பொருளென மொழிதலும் வரைநிலையின்றே காப்புக் கைமிகுத லுண்மை யான. இது களவின்கண் தோழிக் குரியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே - எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று, காப்புக் கைம்மிகுதல் உண்மையான - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம் கைகடத்த லுண்டாகையான் எ-று. உம்மையாற் பொருளேயன்றி ஊருங் கடும் மலையும் முதலியன வேண்வரென்றலுங் கொள்க. சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கின் நன்றே யஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ டுள்ளி விழவின் உறந்தையுஞ் சிறிதே. (நற்.) இதனுட் பொருள் விரும்பியவாறுங் குன்றம் விரும்பிய வாறுங் காண்க. அடைபொருள் - இவள் நும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென்க. (20) மேலதற்கொரு புறனடை 215. அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே. இது, தோழிபொருளென மொழிதற்குத் தலைவியும் உடன்பட்டு நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) காப்பினுள் - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து; அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம் - தலைவன்கண் நிகழும் அன்புங் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனுந் தமக்கின்றியமையா இன்பமும் நாணும் அகன்ற ஒழுகலாறு; பழித்தன்று ஆகலின் ஒன்றும் - பழியுடைத்தன்று ஆகையினாலே புலனெறிவழக்கிற்குப் பொருந்தும்; வேண்டா - அவற்றை வழுவாமென்று களையல் வேண்டா எ-று. எனவே, பொருளென மொழிதல் தலைவிக்கும் உடன்பாடென்று அமைத்தாராயிற்று. (21) தலைவன் பிரியக்கருதின் இவ்வாறுங் கூறுவரெனல் 216. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே. இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதொரு வழுவமைக் கின்றது. (இ-ள்.) தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும் நீ போகின்றவிடம் எவ்வாற்றானும் போதற்கரிய நிலமெனக் கூறி விலக்குதலும் நீக்குநிலைமையின்று எ-று. உ-ம்: இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவை ஆராற் றறுசுனை முற்றி உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய் உரனுடை யுள்ளத்தை (கலி. 12) எனச் சுரமெனக் கூறினாள். தலைவியுந் தோழியாற் கூற்றுநிகழ்த்தும். சூத்திரம் பொதுப் படக் கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவனுஞ் சுரமெனக் கூறுதல் கொள்க. எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறின்அவ்வடி கறுக்குந வல்லவோ (கலி. 13) என வரும். (22) உலகவழக்கு செய்யுட்குமாமெனல் 217. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே இது, முன்னர் உலகியல் வழக்கென்றது செய்யுட்காமென்று அமைக்கின்றது. (இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த மக்கள் கூறுங்கூற்றும் வேதநெறியொடு கூடுதலின்; வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே - அவ்வழக்கினது நெறியிலே நடத்தல் செய்யுட்கு முறைமை எ-று. வழக்னெப் படுவது (தொல். பொ. 648) என்னும் மரபியற் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர் கண்ணதாயிற்று. அவர் அகத்தியனார் முதலியோரென்பது பாயிரத்துட் கூறினாம். அவை சான்றோர் செய்யுளுட் காண்க. இதனை மேலைச் சூத்திரத்திற்கும் எய்துவிக்க. (23) உலகியலல்லாதனவும் பயன்படவரின் புலனெறி வழக்கிற்கூறல் வழுவன்றெனல் 218. அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. இஃது உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைக வென்றது. (இ-ள்.) அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாத கூற்றுக்கள்; பொருட்பயம் படவரின் - அகப்பொருட்குப் பயமுடைத்தாக வருமாயின்; வழக்னெ வழங்கலும் - அவற்றை வழக்ன்றே புலனெறி வழக்கஞ் செய்தலும்; பழித்தன்று என்ப - பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் எ-று. தலைவன் குறையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்கால் தன்னை அவன் நயந்தான்போலத் தலைவிக்குக்கூறுவனவும், பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின் (கலி. 37) எனப் படைத்து மொழிவனவுந், தலைவி காமக் கிழவ னுள்வழிப் படுதலும் தாவினன்மொழி கிழவி கிளத்தலும் (தொல். பொ. 115) போல்வன பிறவும் அறக்கழிவுடை யனவாம். தலைவி தனக்கு மறை புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அறக் கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன்றந் தனவாம். நெருந லெல்லை யேனற் றோன்றி (அகம். 32) என்பதனுட், சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் உள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ எனத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கொண்டாள் கொல்லெனத் தலைவி கருதுமாற்றான் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று. கயமலருண்கண்ணாய்... அங்க ணுடைய னவன் (கலி. 37) என்பதனுள் மெய்யறியா தேன்போற் கிடந்தேன் என்புழி முன்னர் மெய்யறி வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழுவேனும் இவளுந் தலைவனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவி யென்பது பயனாம். மள்ளர் குழீஇய விழவி னானும் (குறுந். 31) அருங்கடியன்னை (நற். 365) பாம்பு மதனழியும் பானாள் கங்குலும், அரிய வல்லமன் இகுளை (அகம். 8) என்பனவற்றுள் தலைவி தேடிச் சென்றதுஞ் செல்வாமென்றதுஞ் சிறைப்புறமாக வரைவுகடாயது. பொருட்பயன் றருதலின் அறக்கழிவுடைய வேனும் அமைந்தன. இது, பல்வேறு கவர்பொரு ணாட்டத்தான் (தொல். பொ. 114) அறக்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை. இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க. (24) மேலதற்கொரு புறனடை 219. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. இது, மேல் அறக்கழிவுடைத்தாயினும்அது பொருட் பயம்படு மென்றார், அப்பொருளினை இது வென்றலின் மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) மிக்க பொருளினுள் - முன்னர் அகப்பொருட்குப் பயம் படவரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே; நாணுத்தலைப் பிரியா நல்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க - தலைவியது நாண் அவளிடத்து நின்று நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறியாகிய பொருட்கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக் கூறுக எ-று. நெருந லெல்லை (அகம்.32) என்பதனுள், நெருநல் யான் காக்கின்ற புனத்து வந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற் சொல்லித் தன்னை யான் வருத்தினேனாகக் கூறி என்னை முயங்கினான்; யான் அதற்கு முன் ஞெகிழ்ந்தே மனநெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற்சொல்லி நீங்கினேன், அவ்வழி என் வன்கண்மையாற் பிறிதொன்று கூறவல்லனா யிற்றிலன், அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத் தன்மையின்மை யினின்றும் இளிவந்தொழுகுவன், தனக்கே நந்தோள் உரியவாகலும் அறியானாய் என்னைப் பிறநிலை முயலுங் கண்ணோட்டமு முடையவனை நின் ஆயமும் யானும் நீயுங் கண்டு நகுவோமாக, நீ அவன் வருமிடத்தே செல்வாயாக, எனக் கூறியவழி; எம் பெருமானை இவள் புறத்தாற்றிற் கொண்டாள் கொல்லோவெனவும், அவன் தனக்கு இனிய செய்தன வெல்லாம் என் பொருட்டென்று கொள்ளாது பிறழக்கொண்டாள் கொல்லோவெனவுந் தலைவி கருமாற்றானே கூறினாளெனினும் அதனுள்ளே இவளெனக்குச் சிறந்தாளென்ப துணர்தலின் என் வருதத்ந் தீர்க்கின்றில்லை யென்றான் எனவும், அதற்கு முகமனாக இவளைத் தழீஇக் கொண்டதன்றி இவள் பிறழக்கொண்ட தன்மை அவன் கணுளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ்வொழுகலாறு சிறிதுணர்தலில் இக்குறைமுடித்தற்கு மனஞெகிழந்தாளெனவும், அவனை என்னோடு கூட்டுதற்கு என்னை வேறுநிறுத்தித் தானும் ஆயமும் வேறுநின்று நகுவே மெனக் கூறினாளெனவுந், தலைவி நாண் நீங்காமைக்குக் காரணமாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க. இதனுள் அறக்கழிவான பொருள் புலப்படவும், ஏனைப்பொருள் புலப்படாம லுங் கூறாக்கால் தலைவியது மறையை வெளிப்படுத்தினாளாமாதலின் அதனை மிக்கபொரு ளென்றார். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவாறு ணர்ந்து பொரு ளுரைத்துக் கொள்க. (25) எல்லா என்னுஞ்சொல் இருபாற்குமுரித்தெனல் 220. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின்இருவீற்றும் உரித்தே. இது, கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய சொற்பற்றிப் பிறந்ததொரு வழுவமைக்கின்றது; (இ-ள்.) முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல் - முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியையுடைய எல்லா வென்னுஞ் சொல்; நிலைக்கு உரிமரபின் இருவீற்றும் உரித்தே - புலனெறிவழக்கிற்குரிய முறைமையினானே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் எ-று. கெழுதகை யென்றதனானே தலைவியுந் தோழியுந் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்றுந் தலைவன் தலைவி யையும் பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதியென்றுங் கொள்க. உ-ம்: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி உதிர்துகள் உக்கநின் ஆடையொலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்; இனி யெல்லா (கலி. 81) எனத் தலைவியைத் தலைவன் விளித்துக் கூறலின் வழுவாயமைந்தது. எல்லாநீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை நின்னின் விடாஅநிழல்போல் திரிதருவாய் என்நீ பெறாத தீதன். (கலி. 61) எனத் தோழி தலைவனை விளித்துக்கூறலின் வழுவாயமைந்தது. எல்லா விஃதொத்தன் (கலி. 61) என்பது பெண்பால் மேல் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க. பொதுச்சொல் லென்றதனானே எல்லா எலா எல்ல எலுவ எனவுங் கொள்க. எலுவ சிறாஅர் (குறுந். 129) என வந்தது. யாரை யெலுவ யாமே (நற். 395) எனத் தலைவனைத் தோழி கூறினாள். எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படாது. (26) தோழி தலைவியுறுப்பைத் தன்னுறுப்பாகவுங் கூறுவளெனல் 221. தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்லா வாயினும் புல்லுவ உளவே. இது, தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென வழுவமைக்கின்றது. (இ-ள்.) தாயத்தின் அடையா - தந்தையுடைய பொருள்களாய் மக்களெய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய்; ஈயச் செல்லா - அறமும் புகழுங் கருதிக்கொடுப்பப் பிறர்பாற் செல்லாதனவுமாய்; வினைவயின் தங்கா - மைந்தரில்லாதார்க்கு மைந்தர் செய்வன செய்து பெறும் பொருளில் தங்காதனவுமாய்; வீற்றுக் கொளப்படா - வேறு பட்டா னொருவன் வலிந்து கொள்ளப்படாதனவுமாய்; எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் - எம்முடையனவென்று தோழி கூறப் புல னெறி வழக்கிற்குப் பொருந்திவரும் உரிமையை யுடைய உறுப்புக்கள்; அல்லாவாயினும் புல்லுவ உளவே - வழுவாயினும் பொருந்து வனவுள எ-று. உறுப்புக் கட்புலனாதலின் தோற்றமென்றார். எனவே, உறுப்பொழிய இந்நான்கும் எம்மெனக் கூறலாகாவென்றார். ஒருநாளென், தோள்நெகிழ் புற்ற துயரால் துணிதந்து (கலி. 37) எனவும், என்தோள் எழுதிய தொய்யிலும் (கலி. 18) எனவும் தலைவி தோளினை என்தோள் என்றாள். தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள் இவைகாண் தோறும் நோவாம் மாதோ, (நற். 12) நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண்மன் (கலி. 39) என்பனவும் இதன்கணடங்கும். உள வென்றதனாற் சிறுபான்மை தலைவி கூறுவனவுங்கொள்க. அவை, என்னொடும் நின்னொடுஞ் சூழாது (அகம். 128) எனவும், நின்கண்ணாற் காண்பென்மன் யான் (கலி. 39) எனவும் வரும். (27) பால்வழுவமைத்தல் 222. ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப. இஃது, ஒன்றே வேறே (தொல். பொ. 93) என்னுஞ் சூத்திரத்து ஒத்த கிழவனுங் கிழத்தியும் என்ற ஒருமை பன்மைப்பாலாய் உணர்த்துக வென வழுவமைத்தது. (இ-ள்.) ஒருபாற்கிளவி - ஒத்த கிழவனுங் கிழத்தியும் என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தி நின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாரேனும் அவ்வொருமைச் சொற்கள்; எனைப்பாற்கண்ணும் வருவகைதானே - நால்வகைக் குலத்துத் தலைவரையுந் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச் சொற்கண்ணே நின்று பன்மைப் பொருள் உணர்த்திவருங் கூறுபாடு தானே; வழக்கென மொழிப - உலக வழக்கென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. இதனாற் பயன்; உலகத்து ஒரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணுந் தலைவருந் தலைவியரும் பலரேனும் அவர்களை யெல்லாங் கூறுங்காற் கிழவனுங் கிழத்தியுமென்று ஒருமையாற் கூறுவதன்றி வேறொரு வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்ஙனஞ் சூத்திரஞ் செய்தலின், யானும் அவ்வாறே சூத்திரஞ் செய்தேனாயினும், அச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்தாராயிற்று. ஒருவனொடு பலர் கூட்டமுங் கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற் கூறாது எனைப்பா லெனப் பன்மையாற் கூறினார். இதனால் சொல்வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். ஒத்த கிழவனுங் கிழத்தியும் (93) என்ற ஒருமையே கொள்ளின் அன்னாரிருவர் இவ்வுலகத்துள்ளாரன்றி வேறாக நாட்டிக் கொள்ளப்பட்டா ரென்பதுபட்டு இஃது உலக வழக்கல்லாததொரு நூலுமாய் வழக்குஞ் செய்யுளும் (தொல்.பாயிரம்) என்பதனொடு மாறுகோடலேயன்றிப் பரத்தை வாயினால்வர்க்கு முரித்தே (தொல். பொ. 224) என்றாற்போல்வன பிற சூத்திரங்களும் வேண்டாவாமென் றுணர்க. (28) எல்லாவுயிர்க்கும் இன்பமுரித்தெனல் 223. எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும். இது, மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) இன்பம் என்பது தான் - அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான்; எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரூஉம் - மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும்; மேவற்றாகும் - ஆணும்பெண்ணுமென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் எ-று. மேவற்றாகு மென்றார்; என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின். ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா ரெனப் படாது அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பதூஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்ந்துமென்பதூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்றாராயிற்று. (29) ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும் பரத்தையிற்பிரிவு ஒரே நிலத்தின் கண்ணதெனலும் 224. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றாஃ தென்மனார் புலவர் இது தலைவற்குரிய தலைவியர் பலருந் தலைவன் பரத்தைமை காரணமாக ஊடற்குரியரென்பதூஉம் அவரிடத்து வாயில் சேறற்குரியர் என்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது. (இ-ள்.) பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து - தலைவன் பரத்தைமையால் தலைவிக்குத் தோன்றிய ஊடல் தீர்த்தற்குரிய வாயிலை அவன் பாற்செலுத்தல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து; அஃது நிலத்திரிபு இன்று என்மனார் புலவர் - அவ்வொழுக்கம் பெரும்பான்மை மருத நிலத்தினின்றுந் திரிந்து வருதல் இன்றென்று கூறுவர் புலவர் எ-று. பரத்தைவாயி லென்றது குதிரைத்தேர்போல நின்றது. இதனாற் பயன் அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்குரியரென்பதூஉம் அவர்பால் தத்தந் தலைவர் ஊடறீர்த்தற்குரிய வாயில் விடுவ ரென்பதுஉம், அவர் வாயின் மறுத்தலும் நேர்தலும் உடைய ரென்பதூஉம், ஏனைப் பரத்தையர்க்கு வாயில் விடுதல் இன்றென் பதூங் கூறியவாறாயிற்று. ஒருபாற் கிளவி (தொல். பொ. 222) என்பதனான் ஒரோவோர்குலத்துத் தலைவருந் தலைவியரும் அடங்கு மாறுணர்க. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. ஒருவனும் ஒருத்தியுமாகி இன்பநுகர்ந்து இல்லற நிகழ்த்துதலே சிறந்ததென்றற்கு இங்ஙனம் பலராதல் வழுவென்று அதனை அமைத்தார். (30) களவின்கண் தலைவிகண் நிகழும் வழு அமைதி அவை எனல் 225. ஒருதலை உரிமை வேண்டியும் மகடூஉப் பிரித லச்சம் உண்மை யானும் அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென்று அஞ்சவந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். இது, களவின்கட் டலைவியின்கண் நிகழ்வதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) உரிமை ஒருதலை வேண்டியும் - இடைவிடாது இன்ப நுகர்தலோடு இல்லற நிகழ்த்தும் உரிமையை உறுதியாகப் பெறுதலை விரும்புதலானும்; பிரிதல் அச்சம் மகடூஉ உண்மையானும் - ஆள்வினைக் குறிப்புடைமையின் ஆண்மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம் மகளிர்க் குண்டாகையினாலும்; ஆங்கு அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்சவந்த இருவகையினும் - அக்களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்களவைப் புலப்படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவகைக் குறிப்பானும்; நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் - பிறர் தன்னை அயிர்த்துநோக்கும் நோக்கங்காரணமாக வந்த கூட்டம் இடையூறுற்ற காரியத்தினாலும்; மனைவிகண் போக்கும் வரைவும் தோன்றும் - தலைவியிடத்தே உடன்போக்கும் வரையக் கருதுலுந் தோன்றும் எ-று. வழையம லடுக்கத்து (அகம். 328) என்பதனுண் முகந்து கொண்டடக்குவம் என இடைவிடாது இன்பநுகர விரும்பிய வாறும் உள்ளுறையான் இல்லற நிகழ்த்த விரும்பியவாறு காண்க. உன்னங் கொள்கையொடு (அகம். 65) என்பது அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன்பட்டது. ஆனாதலைக்கு மறனில் அன்னை தானே யிருக்க தன்மனை. (குறுந். 262) இஃது இடையூறு பொருளின்கட் போக்குடன்பட்டது. ஏனைய முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல். போ. 39) என்பதனான் தோழிக்கும் இவையுரிய வென்று கொள்க. உடன்போக்குக் கருதுதலுந் தலைவன்தான் வரையாமல் தலைவி விரும்புதலும் வழுவாய் அமைந்தன. (31) கற்பினுள் தோழிக்கும் அறிவர்க்குமுரிய வழு அமைதி இவையெனல் 226. வருத்த மிகுதி சுட்டுங் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள்இரக்கம். இது, கற்புக்காலத்துத் தோழிக்கும் அறிவர்க்கும் உரியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) வருத்தமிகுதி சுட்டுங்காலை - தோழியும் அறிவரும் பரத்தையிற் பிரிவான் தலைவர்க்குந் தலைவியர்க்குந் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக் கருதிக் கூற்று நிகழ்த்துங்காலத்து; வாழ்க்கையுள் இரக்கம் உரித்தென மொழிப - அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே தமக்கு வருத்தந்தோன்றிற்றாகக் கூறுதலும் உரித்தென்று கூறுவராசிரியர் எ-று. நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்குந் தணந்தனை ஆயினெம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞர் எவ்வங் களைந்த வெம்மே. (குறுந். 354) இதனுள் இல்லறத்தினை நீ துறந்தாயாயின் எம்மை எம் மூர்க்கண்ணே விடுக வெனத் தனக்கு வருத்தந்தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க. உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு நின்றாய் நீயே யிஃதோ ஓரா வல்சிச் சீரில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (குறுந். 295) இதனுள் ஒரா வல்சி யொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவன் வந்தானாகப் புறத்து விளையாடும் விழவுள தாயிற்றென்று. இவ்வூர் கூறாநிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க. துறைமீன் வழங்கும் (அகம்.316) என்பதனுள், அதுபுலந் துறைதல் வல்லி யோரே எனப் புலவியான் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க. இன்னும் உய்த்துக்கொண்டுணர்தலென்பதனான் ஏனைப் பிரிவான் நிகழும் வருத்தமிகுதியைக் குறித்தவிடத்து உயிர் வாழ்க்கையின் இரக்க முரித்தென மொழிப என்றும் பொருள் கூறிச், செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை (குறள். 1151) எனவும், அன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோர் அவலம் படுதலும் உண்டு (கலி. 19) எனவும் வருவன பிறவுங் கொள்க. (32) புலவியுள் தலைவற்குந் தலைவிக்குமுரிய நிலைமைகூறல் 227. மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியு ளுரிய. இது, கற்பினுள் தலைவற்குந் தலைவிக்கும் எய்தியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) புலவியுள் மனைவி உயர்வும் - புலவிக் காலத்துத் தலைவன் பணிந்துழி உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுக் கோடலும்: கிழவோன் பணிவும் - தலைவன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும்; நினையுங்காலை உரிய - ஆராயுங் காலை இருவர்க்குமுரிய எ-று. உ-ம்: வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும் கோதை கோலா விறைஞ்சி நின்ற ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் (கலி. 128) இது, முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவிலுங் கண்டாளென்றுணர்க. தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு. (கலி. 89) என்பதும் அது. நினையுங்காலை யென்றதனான் தோழியுயர்வுங் கிழவோன் பணிமொழி பயிற்றுலுங் கொள்க. ஒன்று, இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன் அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொல் கேட்டீ சுடரிழாய் பன்மாணும். (கலி. 47) இதனுள் தலைவன் இரந்துரைத்தவாறுந் தான் அதனை ஏற்றுக் கொண்டவாறுங் காண்க. இச்சூத்திரம் புலவிக்கே கூறினார். ஊடற்குந் துனிக்குங் காமக்கடப்பின் (தொல். பொ. 160) என்பதனுட் கூறினாரென வுணர்க. (33) கற்புக்காலத்து வேட்கை மிகுதியான் தலைவனுந் தலைவியும் ஒருவரை ஒருவர் புகழ்வர் எனல் 228. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. இது, கற்பக்காலத்துத் தலைவற்குந் தலைவிக்கும் உரியதொரு வழுவமைக்கின்றது: (இ-ள்.) கற்பினுள் - கற்புக்காலத்து; தகைநிகழ் மருங்கின் - ஒருவர்க்கொருவர் காதல் மனத்து நிகழுமிடத்து; வேட்கை மிகுதியிற் புகழ் தகை வரையார் - வேட்கைமிகுதியானே அதனைப் புகழ்ந்துரைக்குந் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார் கொள்வர் எ-று. ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி. (அகம். 6) இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது. அணைமருள் இன்துயில் அம்பணைத் தடமென்றோள் துணைமலர் எழில்நீலத் தேந்தெழின் மலருண்கண் மணமௌவல் முகையன்ன மாவீழ்வான் நிரைவெண்பல் மணநாறும் நறுநுதன் மாரிவீழ் இருங்கூந்தல் அலர்முலை ஆகத்து அகன்ற அல்குல் சிலநிரை வால்வளைச் செய்யாயோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி இனிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப தினியறிந் தேனது துனியா குதலே. (கலி. 14) இது போக்கின்கண் தலைவன் புகழ்ந்தது. அரிபெய் சிலம்பின் (அகம். 6) என்பதனுள் ஏந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய என்பது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது. நிரைதார்மார்பன் நெருநல் ஒருத்தியொடு (அக். 66) என்பதும் அது, தகை எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலுங் கொள்க. நாலாறு மாறாய் (நாலடி. 383) எனவும், நின்ற சொல்லர்நீடுதோன்றினியர் (நற். 1) எனவும் வரும். குற்றேவனிலையளாகிய தலைவியைத் தலைவன் புகழ்தலாலும் பெருநாணின ளாகிய தலைவி கணவனைப் பிறரெதிர் புகழ்தலா னும்வழுவாயிற்று. (34) இறைச்சிப்பொரு ளிதுவெனல் 229. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே. இது, தலைவிக்குந் தோழிக்கு முரியதொரு வழுவமைக்கின்றது. இறைச்சியாவது உள்ள பொருள் ஒன்றனுளளே கொள்வதொரு பொருளாகலானுஞ் செவ்வன் கூறப்படாமை யானுந் தலைவன் கொடுமை கூறும்வழிப் பெரும்பான்மை பிறத்தலானும் வழுவாயிற்று. (இ-ள்.) இறைச்சிதானே - கருப்பொருட்கு நேயந்தான்; பொருட் புறத்ததுவே - கூறவேண்டுவதொரு பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையதாம் எ-று. இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை. (கலி. 41) சூளைப் பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து நீர்திகழவா னென்னென இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன. (35) கருப்பொருளிற் பிறக்கும் பொருளுமுளவெனல் 230. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே. இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது. (இ-ள்.) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே - கருப்பொருள் பிறிதொரு பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலே யன்றி அக் கருப்பொருடன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; திறத்து இயல் மருங்கின் - அஃது உள்ளுறையுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து; தெரியுமோர்க்கு - அவ்வுள்ளுறையுவமமன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடை யோர்க்கு எ-று. கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் தினைபிடி யுண்ணும் பெருங்கல்நாட கெட்டிடத் துவந்த உதவி கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன்போல நன்றி மறந்தனையாயாயின் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்னவிவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே. (குறுந். 225) இதனுள் தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரசவுரிமை யெய்திய மன்னன் மற்நதாற்போல நீ இரந்து துயருற்ற காலத்து யான் தலைவியை நின்னொடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாது இன்று நீ வரைந்துகொள்வையாயின் இவள் கூந்தல் நினக்குரிய வென்றவழி உவமையும் பொருளும் ஒத்து முடிந்தமையின் முன்னின்ற நாடவென்பது உள்ளுறையுவம மன்றாய் இறைச்சியாம். என்னை? தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக்கொடுக்கின்ற தினையைத் தான் உண்டு அழிவுசெய்கின்றாற் போல, நீ நின் கருமங் சிரைதயாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகா தென்று உவமை யெய்திற்றேனும், பின்னர் நின்ற பொருளோடியையாது இவ்வுவமம் உள்ளுயுற்றுப் பொருள்பயவாது இறைச்சியாகிய நாடென்பதனுள்ளே வேறொரு பொருள் தோற்றுவித்து நின்றதேயாமாதலின். முலைமாந்த என்றது தன் கருமஞ் சிதையாமற் பார்த்தென்னுந் துணையன்றி உள்ளுறையுவமப் பொருளை முற்ற உணர்த்தாமை யுணர்க. வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத் தேந்து மருப்பின் இனவண்டிமிர்பூதுஞ் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் ஐவனவெண்ணெல் அறையுரலுட் பெய்திருவாம் ஐயனையேத்துவாம் போல அணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவாம் நாம். (கலி. 43) இதனுட் புலவுநாறியும் பூநாறியுந் தீதும் நன்றுமாகிய இறைச்சியாகிய உலக்கைகளான் தலைவனைப் பாடும் பாட்டோடே கலந்து கூறத்தகாத தெய்வத்தையும் பாடுவாமென்னும்பொருள் பயப்பச் செய்த இறைச்சியிற் பொருளே பயந்தவாறும் இரண்டுலக்கையானும் பயன் கொண்டாற்போல் ஐயன் பெயர் பாடுதலாற் பயன்கொள்ளாமையின் உள்ளுறையுவமன்மையுங் காண்க. உள்ளுறையுவம மாயின், தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து அவனூ ரென்ப (ஐங்குறு. 41) என்றாற்போலத் தலைவன்கொடுமையுந் தலைவி பேதைமை யும் உடனுவமங் கொள்ளநிற்கும். இதுபற்றித் தெரியு மோர்க்கே யென்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று. (36) பிரிவின்கண் இறைச்சியுள் அன்புசெய்தற்குரியவற்றைத் தோழிகூறல் தலைவியை வற்புறுத்தற்கெனல் 231. அன்புறு தகுநஇறைச்சியுட் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே. இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபடவருமென் கின்றது. (இ-ள்.) வருந்திய பொழுதே - பிரிவாற்றாத காலத்து; இறைச்சியுள் அன்புறு தகுந சுட்டலும் - தோழி கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறலும்; வன்புறை ஆகும் - வன்புறுத்தலாகும் எ-று. நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினையாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர்சென்ற வாறே. (குறுந். 37) இதனுண் முன்பே நெஞ்சகத்தன்புடையார் அதன் மேலே களிறு தன் பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்தூட்டும் அன்பினையுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பர்கண் என்று அன்புறுதகுந கூறிப் பிரிவாற்றாத வளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற்பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது. அரிதாய வறன் (கலி. 11) என்பது தோழி கூற்றன்மைஉணர்க. (37) தலைவன்தலைவியைப் பாராட்டிய வழி அஃது அவன்பிரிவை யுணர்த்துமெனல் 232. செய்பொருள்அச்சமும் வினைவயின் பிரிவும் மெய்பெற வுணர்த்துங் கிழவிபாராட்டே. இது, தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) கிழவி பாராட்டே - தலைவன்தலைவியைப் பாராட்டிய பாராட்டு; செய்பொருள் அச்சமும் - யாஞ் செய்யக் கருதிய பொருட்கு இவள் இடையூறாவள் கொலென்று தலைவன் அஞ்சிய அச்சத்தையும்; வினைவயின் பிரிவும் - தான் பொருள் செய்ததற்குப் பிரிகின்றதனையும்; மெய்பெற உணர்த்தும் - ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் எ-று. அப்பாராட்டுக் கிழவிய தாகலிற் கிழவி பாராட்டென்றார். நுண்ணெழின் மாமை (கலி. 5) என்பதனுட் கழிபெரு நல்கலால் தலைவன் செய்பொருட் கஞ்சியவாறும் அவன் பிரியக்கருதியதூஉந் தலைவியுணர்ந்தாள் அப்பாராட்டினானென் றுணர்க. அன்பானன்றிப் பொருள் காரணத்தாற் பாராட்டினமையானும் அதனைச் செவ்வனங்கொள்ளாது பிறழக் கோடலானும் இருவர்க்கும் வழுவாமென்றமைத்தார். (38) தலைவி பரத்தையைப் புகழினும் உள்ளத்தூடல் உண்டெனல் 233. கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும் உள்ளத்தூட லுண்டென மொழிப. இது, தலைவிக்கட் டோன்றியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) கற்புவழிப்பட்டவள் - கற்பின் வழிநின்ற தலைவி; பரத்தை ஏத்தினும் - பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும்; உள்ளத்து ஊடல் உண்டென மொழிப - உள்ளத்துள்ளே ஊடினதன்மை உண்டென்று கூறுவர் புலவர் எ-று. பரத்தையை ஏத்தவே தலைவன்கட் காதலின்மைகாட்டி வழுவாயிற்றேனும் உள்ளத்தூடலுண்மையின் அமைக்க வென்றார். நாணிநின்றோள் நிலைகண்டியானும் பேணினென் அல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோள்நின் மகன்தாயாதல் புரைவதாங் கெனவே. (அகம். 16) எனவரும். ஏத்தினும் என்ற உம்மையான் ஏத்தாமற் கூறும்பொழு தெல்லாம் மாறுபடக் கூறலுளதென்பது பெற்றாம். என்னொடு புரையுந ளல்லள் தன்னொடு புரையுநர்த் தானறி யுநளே. (பதிற்றுப்.) எனவரும். (39) கிழவன் குறிப்பை அறியக் கிழவி பிறள்குணத்தைப் புகழ்தலுமுரியள்எனல் 234. கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினையுணர்தற்கும் உரியள். இஃது, எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது; உள்ளத்தூடலின்றியும் பிறளொருத்தியைத் தலைவி புகழுமென்றலின். (இ-ள்.) கிழவோள் பிறள் குணம் இவையெனக் கூறி - தலைவி வேறொரு தலைவியுடைய குணங்கள் இத்தன்மையவென்று தலைவற்குக் கூறி; கிழவோன் குறிப்பினை அறிதற்கும் உரியள் - அவள்மாட்டு இவன் எத்தன்மையனா யிருக்கின்றானென்று தலைவன் குறிப்பினை உணர்தற்குமுரியள் எ-று. பரத்தை யென்னாது பிறள் என்றதனான் தலைவியே யாயிற்று; அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறனன் றாகலின் உள்ளத்தூடல் நிகழ்தல் வேண்டும். தோழி கூறுங்கால் தலைவியரைக் கூறப்பெறா ளென்பதூஉம் பரத்தையரைக் கூறின் அவர்க்கு முதுக்குறைமை கூறிக் கூறுவளென்பதூஉங் கொள்க. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே. (ஐங்குறு. 122) இது, தலைவன் வரையக் கருதினாளொரு தலைவியை இனையளெனக் கூறி அவள்மாட்டு இவன் எத்தன்மையனென்று விதுப்புற்றுக் கூறியது. இது தலைவன் கூற உணராது தான் வேறொன்று கூறி அவன் குறிப்பு அறியக் கருதுதலின் வழுவாயமைந்தது. இது கைக்கிளைப் பொருட்கண் வழுவமைக்கின்றது. (40) தலைவி மலிதலு மூடலுமல்லாதவிடத்துத் தலைவன்முன் கழற்றுரைகூறாள் எனல் 235. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்து தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே மலிதலும் ஊடலும் அவையலங் கடையே. இது, பரத்தையர்க்குந் தலைவிக்குந் தலைவற்கும் படுவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் - தலைவனான் தாம் உற்ற வருத்தத்தைத் தலைவிக்குப் பரத்தையர் கூறினும் ஏனைத் தலைவியர் கூறினும்; அவர்வயின் மெய்ம்மையாக உணர்ந்து - அவர் கூறியவாற்றானே அவ்வருத்தததை அவரிடத்து உண்மையாக உணர்ந்து; தலைத்தாட் கழறல் - தலைவன் முன்நின்று கழறுங் கழற்றுரை: தம் எதிர்ப்பொழுது இன்று - தம்மைப் பரத்தையர் எதிர்ப்பட்ட பொழுதின்கண் இல்லை; மலிதலும் - அவர் துயருறநின்றுழிக் கவலாது நீங்கினானென மகிழ்தலும்; ஊடலும் - அவன் பிரிவிற்கு இவர் இரங்கினாரென்ற காரணத்தான் ஊடுதலும்; அவை அலங்கடை - அவ்விரண்டும் நிகழா விடத்து எ-று. என்பது வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே, மலிதலும் ஊடலும் நிகழுமிடத்தாயின் தலைத்தாட் கழறு மென்பது பெறுதும், தலைத்தாள் - தகுதிபற்றி வழக்கு. பொன்னெனப் பசந்தகண் போதெழில் நலஞ்செலத் தொன்னல மிழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன் நின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைகள் என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின். (கலி. 77) இது, பரத்தையர் முன்னரின்மையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து தலைத்தாட் கழறியது. கழறாது கூறியது வந்துழிக் காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தையர் தலைவிக்குக் கூறுதலாற் பரத்தையர்க்கும், அவர் கூறத்தான் எளிவந்தமையின் தலைவிக்கும், இவரிங்ஙன மொழுகலின் தலைவற்கும் வழுவமைந்தது. உம்மை இறந்தது தழீஇயிற்று. (41) இது பெருந்திணைக்குரியதொரு வழுவமைக்கின்றது 236. பொழுது தலைவைத்த கையறு காலை இறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு அவைநாற் பொருட்கண் நிகழு மென்ப. இது பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே, (தொல். பொ. 105) என்ற சிறப்புடைப் பெருந்திணையன்றிப் பெருந்திணைக் குறிப்பாய்க் கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ஏறிய மடற்றிறம் (தொல். பொ. 51) முதலிய நான்கினுள் ஒன்றாய் முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழீஇவந்த தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் (தொல். பொ. 51) ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. ஓதலுந்தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாணெதிரும் பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரேவலிற் பிரியும் அரசர்க்கும் இன்றியமை யாமையின், அப்பிரிவிற் பிரிகின்றான் வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும் (தொல். பொ. 185) என்பதனாற் கற்புப்போல நீ இவ்வாறொழுகி யான் வருந் துணையும் ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண மன்மையின் வாளாபிரியுமன்றே; அங்ஙனம் பிரிந்துழி அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்குந் தோழிக்கும் ஆற்றுவித்தலரிதாகலின்,அவட்கு அன்பின்றி நீங்கினானென்று ஆற்றாமை மிக்கு ஆண்டுப் பெருந்திணைப்பகுதி நிகழுமென்றுணர்க். (இ-ள்.) பொழுது - அந்திக்காலத்தே; கையறு காலை - புறஞ் செயச் சிதைதல் (தொல். மெய்ப். 18) என்னுஞ் சூத்திரத்தின் அதனினூங் கின்று எனக் கூறிய கையறவுரைத்த லென்னும் மெய்ப்பாடெய்திய காலத்தே; தலைவைத்த - அந்த வாற்றாமையின் இகந்தவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியோடு மடனே வருத்தம் மருட்கை நாற்பொருட் கண் நிகழும் - தன் வனப்புமிகுதியுடனே மடப்ப மும் ஆற்றாமையும் வியப்புமாகிய நான்குபொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்தபோலக் கிளக்குங்கிளவி என்ப - அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளுங் கூற்றுநிகழுங்கால் தன்னைக் கைகடந்தன போலக் கூறுங் கூற்றாய் நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று. தலைவைத்த மெய்ப்பாடாவன - ஆறாமவதியினும் இகப்பத் தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகி மன்றத்திருந்த சான்றோரறியத் தன்றுணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையுந் தோன்றக் கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலிய வற்றொடு கூறத்தகான கூறலும் பிறவுமாம். உ-ம்: புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை அருகுவித் தொருவரை அகற்றலின் தெரிவார்கண் செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள் கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும் ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும் முள்நுனை தோன்றாமை முறுவல்கொண்ட டக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பல் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்னபுகழ்சால் எழிலுண்கண் ஆயிதழ் மல்க வழும்; ஓஓ, அழிதகப் பாராதே அல்லல் குறுகினம் காண்பாங் கனங்குழை பண்பு; என்று, எல்லீரு மென்செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லாநீ, உற்ற தெவனொமற் றென்றீரேல் எற்சிதை செய்தான்இவனென வுற்ற திதுவென வெய்த வுரைக்கும் உரனகத் துண்டாயின் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தன் மலரன்னகண்; கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான்திரிதருங் கொல்லோமணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே வள்ளியை யாகென நெஞ்கை வலியுறீஇ உள்ளி வருகுவர்கொல்லோ உளைந்தியான் என்ளி யிருக்குவென் மற்கொலோ நல்லிருண் மாந்தர்கடிகொண்ட கங்குல் கனவினால் தோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான்தன்னைப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து; கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின் அவரைநினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயின்தவிருமென் நெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ; மையில் சுடரேமலைசேர்தி நீயாயின் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராயென் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு; சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை நயந்து நலஞ்சிதைத் தான்; மன்றப் பனைமேன் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோள் நெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற; நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயித ழுள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு; மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ் வலிதில் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு; எனப்பாடி, இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீ டுயிர்த்தனள் எல்லையும் இரவுங் கழிந்தனவென் றெண்ணி எல்லிரா, நல்கிய கேள்வன்இவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங், கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து. (கலி. 142) இதனுள் அந்திக்காலத்தே கையற வெய்திப் பின்னர்ச் சான்றோரை நோக்கிக் கூறுகின்றவள் புல்லாரா மாத்திரையென அவனோடு புணர்ச்சி நிகழ்ந்தமையும் யாவருங் கேட்ப நக்கழுது அல்லலுறீஇயானெனப் பெயரும் பெற்றியுங் கூறிப், புல்லிப் புணரப்பெறின் ஈதிகழ்ச்சியன்றா மெனக் கூறத்தகாதன கூறலான் மடன் தன்னை இறந்தாவறுந், தெள்ளியே மென்றதனானும் எள்ளி யிருக்குவ னென்றதனானும் வருத்தமிறந்த வாறுங், கோடுவாய் கூடா என்பது முதலாகக் கொன்றையவன் என்னுந் துணையுந் தான் செய்ததனை வியவாமையின் மருட்கை யிறந்த வாறும், நெய்தன் மலரன்ன கண்ணெனத் தன்வனப்பு மிகுதி கூறலின் மிகுதி யிறந்தவாறுங் காண்க. எல்லிரா நல்கிய கேள்வனிவனெனவே கந்தருவத்தின் வழுவிப் பெருந்திணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு நிகழ்ந்தவாறுங் காண்க. இதற்குப் பொருளுரைக்குங்காற், கேட்பீருக இவள் நக்கு, நக்க அப்பொழுதே யழும், இங்ஙனம் அழுமாறு காமத்தை ஊழானது அகற்றலின் அஃதறுதியாக நரம்பினும் பயனின்றாயிருந்தது. ஓஓ, இதனையுற்ற இவள் அல்லற்பண்பைப் பாராதே அழிதக யாங் குறுகினேம், குறுகி யாம் இதனை முடிவு போகக் காண்பேமென்று வந்து எல்லீரும் என்செய்தீர்? என்னை யிகழ்கின்றீரோ? இவ்வருத்தத்தை எனக்குறுத்தினவனது மாயஞ் செய்த மலர்ந்த மார்பை யான் முயங்கிக் கூடின் இகழ்ச்சியின்றாம் என்றற் றொடக்கமாய் வரும். நிகழும் என்பதனான் வளத்திணைக் கண்ணும் வனப்பு மிகுதி கூறல் கொள்க. (எ-டு) கலி - 4. (42) இரந்துகுறையுற்ற தலைவனைத் தோழி நீக்கி நிறுத்தலன்றிப் படைத்துக் கூறவும் பெறுமெனல் 237.இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. இது, தோழி தலைவனைக் கூறுவனவற்றுள் வழுவமைவன கூறுகின்றது. (இ-ள்.) இரந்து குறையுற்ற கிழவனை - இரந்துகொண்டு தன் காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை; தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றியும் - தோழி அகற்றுற ஏத்துமுறைமையின் தாழ்வின்றாக அகற்றி நிறுத்தலேயன்றியும்; வாய்மை கூறலும் - நுமது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக் கூறலையும்; பொய்தலைப் பெய்தலும் - அப் புணர்ச்சியில்லையென்று பொய்த்ததுணைத் தலைவன் மேற் பொய்யுரை பெய்துரைத்தலையும் அவன் வரைந்து கோடற் பொருட்டுச் சில பொய்களைக் கூற வேண்டுமிடங்களிலே பெய்துரைத்தலையும்; நல்வகையுடைய நயத்திற் கூறியும் - நல்ல கூறுபாடுடைய சொற்களை அசதியாடிக் கூறியும்; பல்வகையானும் படைக்கவும் பெறுமே - இக்கூறியவாறன்றி வேறுபடப் புனைந்துரைக்கவும் பெறும் எ-று. தோழி நீக்கலன்றியுங் கூறலையுந் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும். பல்வகையானும் படைக்கவும் பெறுமென வினைமுடிக்க. தோழி தலைவனொடு நயங்கருதுமாற்றான் அவனை நீக்குதல் ஏனைய வற்றோடெண்ணாது அன்றியுமெனப் பகுத் துரைத்தார். ஏனைக்குறை முடித்தற்கு இடையூறின்மை கூறியனவும் வரைவு கடாய்க் கூறியனவுமாம். நெருநலு முன்னா ளெல்லையு... ....................................... மகளே. இது சேட்படுத்தது. எமக்கிவை யுரையல் மாதோ நுமக்கியான் யாரா கியரோ பெரும வாருயிர் ஒருவிர் ஒருவிர்க் காகி முன்னாள் இருவீர் மன்னும் இசைந்த னிர்அதனால் அயலே னாகிய யான் முயலேன் போல்வன் நீமொழி பொருட் டிறத்தே. இது வாய்மை கூறியது. யாந்தன்னை மறைத்தலிற்போலும் இவள் குறை முடியாளாயதென அவன் கருதக் கூறினாள். அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறும் நறியோள் கூந்தல் நாறுநின் மார்பே தெய்யோ. (ஐங்குறு. 230) இதுவும் அது, நீயே, பொய்வன்மையிற் செய்பொருண்மறைத்து வந்துவழிப் படுகுவை யதனால் எம்மை யெமக்கே வில்வலனே தகாது சொல்லப் பலவும் பற்றி யொருநீ வருதல் நாடொறும் உள்ளுடைந் தீர்மா மழைக்கண் கலுழ்த மதனால் நல்லோர் கண்ணு மஃதல்ல தில்லை போலுமிவ் வுலகத் தானே. இது பொய்தலைப் பெய்தது. திருந்திழாய் கேளாய் (கலி. 65) என்னுங் குறிஞ்சிக் கலியுள் வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்தது. அன்னையு மறிந்தனள்அலரு மாயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும் இன்னா வாடையும் மலையும் நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ. (ஐங்குறு. 236) இது, நல்வகையுடைய நயத்திற் கூறியது. வீகமழ் சிலம்பின் வேட்டம் போந்து நீயே கூறினு மமையுநின் குறையே. இதுவும் அது. அஃதன்றியும் நீயே சென்று கூறென்றலும் அறியாள் போறலுங் குறியாள் கூறலுங் குறிப்புவேறு கூறலும் பிறவும் நயத்திற்கூறும் பகுதியாற் படைத்தது பல வகையாற்படைத்த துறைவகையாம். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனானமைக்க. இவை நாடகவழக்காகவும் உலகியல் வழக்காகவும் புனைந்துரைத் தமையானுந் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறலானும் வழுவமைந்தது. (43) உறழுங் கிளவி தலைவி முதலியோர்க்கும் ஐயக்கிளவி தலைவற்கு முரியஎனல் 238. உயர்மொழிக் குரிய உறழுங் கிளவி ஐயக் கிளவிஆடூஉவிற் குரித்தே. இது, தோழிக்குந் தலைவிக்குமுரியதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) உயர்மொழிக்கு உறழுங் கிளவியும் உரிய - இன்பம் உயர்தற்குக் காரணமான கூற்றுநிகழுமிடத்திற்கு எதிர்மொழியாக மாறுபடக் கூறுங் கிளவி நிகழ்தலுமுரிய; ஐயக்கிளவி ஆடூஉவிற்கு உரித்தே - கூறுவே மோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ் சொல் தலைவற்குரித்து எ-று. உறழுங்கிளவியைப் பொதுப்படக் கூறினார், தோழி உயர்மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுந், தலைவன் உயர்மொழி கூறிய வழித் தோழி உறழ்ந்து கூறலுந், தலைவன் உயர்மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுந், தலைவி உயர்மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலுங் கோடற்கு. சுணங்கணி வனமுலை (கலி. 60) என்னுங் குறிஞ்சிக் கலியுள், என்செய்தான் கொல்லோஇஃதொத்தன் தன்கண் பொருகளிறு அன்னதகைசாம்பி யுள்ளுள் உருகுவான் போலும் உடைத்து எனத் தோழி கூறியவழித், தெருவின்கட், காரணமின்றிக் கலங்கவார்க் கண்டு... எவன் எனவும், அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப் பேரம ருண்கணின்தோழி உறீஇய ஆரஞர் எவ்வ முயிர்வாங்கும் மற்றிந்நோய் தீரு மருந்தருளாய் ஒண்டொடீ; நின்முகங் காணும் மருந்தினேன் என்னுமால் நின்முகந் தான்பெறின் அல்லது கொன்னே மருந்து பிறிதியாது மில்லேன் திருந்திழாய் என்செய்வாங் கொல்லினி நாம்; பொன்செய்வாம் (கலி. 60) எனவுந் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க. இது தலைவன் வருத்தங்கூற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ்தலின் வழுவாய் நாண்மிகுதியாற் கடிதின் உடம்படாமையின் அமைந்தது. எல்லாவிஃதொத்தன் (கலி. 61) என்னுங் குறிஞ்சிக் கலியுள், ஈதலி ரந்தர்க்கொன்றாற்றாது வாழ்தலிற் சாதலுங் கூடுமா மற்று (கலி. 61) எனத் தலைவன் கூறியவழி, இவடந்தை, காதலின்யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டியது; (கலி. 61) எனவும், மண்டமர் அட்ட களிறன்னான் தன்னையொரு பெண்டிர் அருளக் கிடந்த தெவன்கொலோ (கலி. 61) எனவும் தோழி யுறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவும் அவன் வருத்தத்திற்கு எதிர்கூறத்தகாதன கூறலின் வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்பட வேண்டுமென்று கருதுதலின் அமைந்தது. அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும் மணிமுக மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண் விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி அரவுக்கண் அணியுறழ் ஆரன்மீன் தகையொப்ப அரும்படர் கண்டாரைச் செய்தாங் கியலும் விரிந்தொலி கூந்தலாய் கண்டை யெமக்குப் பெரும்பொன் படுகுவை பண்டு; ஏஎ! எல்லா, மொழிவது கண்டை இஃதொத்தன் தொய்யில் எழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் முழுவதுடையமோ யாம்; உழுதாய், சுரும்பிமிர்பூங்கோதை அந்நல்லாய் யான்நின் திருந்திழை மென்றோள் இழைத்தமற் றிஃதோ கரும்பெல்லா நின்னுழவு அன்றோ ஒருங்கே துகளறு வாண்முகம் ஒப்ப மலர்ந்த குவளையு நின்னுழவு அன்றோ இகலி முகைமாறு கொள்ளும் எயிற்றாய்இவையல்ல என்னுழுவாய் நீமற் றினி; எல்லா, நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீகூறு முற்றெழி னீல மலரென வுற்ற விரும்பீர் வடியன்ன வுண்கட்கு மெல்லாம் பெரும்பொன்னுண் டென்பா யினி; நல்லா யிகுளை கேள், ஈங்கே தலைப்படுவ னுண்டான்தலைப்பெயின் வேந்து கொண் டன்ன பல; ஆங்காக வத்திற மல்லாக்கால் வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம் பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றீமோ முத்தேர் முறுவலாய் நீபடும் பொன்னெல்லாம் உத்தியெறிந்து விடற்கு. (கலி. 64) இது, தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்துகூறியது. இது நகையாடிக் கூட்டத்தை விரும்பிக் கூறியமொழிக்கு உறழ்ந்து கூறலின் வழுவாய் அவளும் நகையாடிக் கூறலின் அமைந்தது. மறங்கொளிரும்புலி (கலி. 42) என்னுங் குறிஞ்சிக் கலியுள், ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஓர்வுற் றொருதிற மொல்காத நேர்கோல் அறம்புரி நெஞ்சத் தவன் (கலி. 42) எனத் தலைவி கூறலும், தண்ணறுங் கோங்க மலர்ந்த வரையெல்லாம் பொன்னணி யானைபோல் தோன்றுமே நம்மருளாக் கொன்னாளன் நாட்டு மலை (கலி. 42) எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவுந் தலைவி கூற்றிற்கு மாறாதலின் வழுவாய்ச் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனாதலின் அமைந்தது. சொல்லின் மறாதீவாண் மன்னோ விவள் (கலி. 61) எனவும், கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது (அகம். 198) எனவும் ஐயக்கிளவி தலைவிக்கு முரித்தென்றாற் சிறந்துழியையம் (தொல். பொ. 94) என்பதற்கு மாறாம். அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள் (அகம். 48) என்பதனை ஐயத்துக்கண் தெய்வமென்று துணிந்தாளெனின் அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க. (44) தோழி அறிவுடையளாகக் கூறலும் அமையுமெனல் 239. உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின் உரிய தாகுந் தோழிகண் உரனே. இது, தோழி அறிவுடையளாகக் கூறலும் அமைகவென் கின்றது. (இ-ள்) உறுகண் ஓம்பல் தன்இயல்பு ஆகலின் - தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின், தோழிகண் உரன் உரியதாகும் - தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும் எ-று. உ-ம்: பான்மருண் மருப்பின் (கலி. 21) என்னும் பாலைக் கலியுட், பொருள்தான் பழவினை மருங்கின் பெயர்பு பெயர்புறையும் அன்னபொருள்வயின் பிரிவோய் (கலி. 21) எனத் தோழி அறிவுடையாளாகக் கூறியவாறு காண்க. பிண்ட நெல்லின்அள்ளூ ரன்னஎன் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ. (அகம். 46) என்பது உறுகண் காத்தற்பொருட்டாகத் தலைவி வருந்தினும் நீ செல்லென்றாள், தலைவன் செல்லாமை அறிதலின். ஒன்றென முடித்தலான் தலைவி உரனுடையளெனக் கூறலுங் கொள்க. (45) தோழிக்கு உயர்மொழிக் கிளவியு முரித்தெனல் 240. உயர்மொழிக் கிளவியு முரியவால் அவட்கே. இதுவுந் தோழிக்குரியதொரு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அவட்கு - தோழிக்கு; உயர்மொழிக் கிளவியும் உரிய - தலைவியையுந் தலைவனையும் உயர்த்துக் கூறுங்கூற்றும் உரியவாம் ஒரோவோரிடத்து எ-று. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாண ரூரநின் மாணிழை அரிவை காவிரி மலிர்நிறை யன்னநின் மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. (ஐங்குறு. 42) இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறென்னையெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க. காலையெழுந்து (குறுந். 45) என்பதும் அது. உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் (கலி. 47) எனவும், தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே. (கலி. 52) எனவுந் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க. (46) தலைவியும் தோழி வாயில்களோடு கூறுவனவற்றை வெளிப்படக் கிளப்பரெனல் 241. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தங் கூற்றே. இது, தலைவியுந் தோழியும் வாயிலாகச் சென்றாருடன் கூறுவன வற்றுட் படுவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) தத்தங் கூற்றே - தோழிக்குந் தலைவிக்குமுரிய கூற்றின்கண்; வாயிற் கிளவி - வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத் தலைவனது பழிகளைக் கூறுங்கிளவிகளை; வெளிப்படக் கிளத்தல் - மறையாது வெளியாம்படி கூறுதல்; தாவின்று உரிய - இங்ஙனம் கூறுகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றியே உரியவாம் எ-று. அவை தலைவிக்குந் தோழிக்குமுரியனவும் காமக்கிழத்திற்கு உரியனவும், தோழிக்கே யுரியனவுந் தலைவிக்கே யுரியனவுமாம். வாயில்களாவார் ஆற்றாமையுந் தோழி முதலியோருமாம். நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ. (கலி. 69) இஃது, ஆற்றாமை வாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி வெளிப்படக் கூறியது. இது தோழிக்கும் உரித்து. எரியகைந் தன்னதாமரை யிடையிடை யார்ப்பினும் பெரிதே. (அகம். 116) இதனுள் நாணிலை மன்ற எனத் தோழி கூறி அலராகின்றாலென வெளிப்படக் கிளத்தலின் வழுவாயமைந்தது. அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே. (கலி. 70) இது தலைவி கூற்று. உரிய வென்றதனான் தோழி வாயிலாகச் சென்றுழித் தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க. அஃது இம்மை யுலகு என்னும் (66) அகப் பாட்டினுட் காண்க. இவை இங்ஙனம் வெளிப்படக் கிளத்தலின் வழுவாய் அமைந்தன. (47) உள்ளுறை ஐந்துவகைப்படும் எனல் 242. உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை யைந்தே. இது, மேல் வெளிப்படக் கிளப்பன கூறிப் பின் வெளிப்படாமற் கிளக்கும் உள்ளுறை இனைத்தென்கின்றது. (இ-ள்.) உடனுறை- நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத்துடனுறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும்; உவமம் - அக் கருவாற் கொள்ளும் உள்ளுறையுவமமும் ஏனையுவமமும்; சுட்டு - உடனுறை யுவமமும் அன்றி நகையுஞ் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும் அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டிவருவனவும்; நகை- நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும்; சிறப்பென - ஏனையுவமம் நின்று உள்ளுறை யுவமத்தைத் தத்தங் கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று; கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே - கெடுத லரிதாகிய முறைமையினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் எ-று. ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையாமென்றார். இறைச்சி தானே (தொல். பொ. 229) இறைச்சியிற் பிறக்கும் (தொல். பொ. 230) என்பனவற்றுள் இறைச்சிக்குதாரணங் காட்டினாம். உவமம் உவமவியலுட் காட்டுதும். பெருங்கடல் முகந்த பல்கிளைக் கொண்மூ இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரித் தறநெறி பிழையாத் திறனறி மன்னர் அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்தெறி வாளின் அழிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி நாளுங் கொன்னே செய்தியோ அரவம் பொன்னென மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப் பொலிந்த ஆயமொடு காண்டக இயலித் தழலை வாங்கியுந் தட்டை யோப்பியும் அழலேர் செயலை யந்தளிர் தஇயுங் குறமகள் காக்கு மேனற் புறமுத் தருதியோ வாழிய மழையே. (அகம். 188) இதனுட் கொன்னே செய்தியோ அரவமென்பதனாற் பயனின்றி அலர்விளைத்தியோவெனவுங் கூறி ஏனற்புறமுந் தருதியோ என்பதனான் வரைந்து கொள்வையோ வெனவுங் கூறித் தலைவனை மழைமேல் வைத்துக் கூறலிற் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றதனான் வழுவாயினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின் அமைந்தது. அன்புறு தகுந (தொல். பொ. 231) என்பதனுள் ஏனையதற்கு உதாரணங் காட்டினாம். விளையா டாயமொடு பிறவுமா ருளவே. (நற். 172) இதனுட் புன்னையை அன்னை நுவ்வையாகுமென்றதனான் இவளெதிர் நும்மை நகையாடுத லஞ்சுதுமென நகையாடிப் பகற்குறி யெதிரே கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார். உள்ளுறை யுவம மேனை யுவமம் (தொல். பொ. 46) என்னுஞ் சூத்திரத்து விரிகதிர் மண்டிலம் (கலி. 71) என்னும் மருதக்கலியுட் சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம். அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங் கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற் கெடலரு மரபின் என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கி யுணர்க. (48). உள்ளுறை யைந்தானும் தலைவியுந் தோழியுமாக்கிய வின்பம் தலைவன்கண்ணும் நிகழ்ந்து இன்பஞ்செய்யுமெனல் 243.அந்தமில் சிறப்பின் ஆக்கிய இன்பந் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. இது, முற்கூறிய உள்ளுறைபற்றித் தலைவற்கு வருவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பம் - முற்கூறிய உள்ளுறை ஐந்தானும் அவர்களுண்டாக்கிய முடிவிலாத சிறப்பினை யுடைய இன்பம்; தன்வயின் வருதலும் வகுத்த பண்பு - தலைவன் கண்ணும் நிகழ்ந்து இன்பஞ் செய்தலுங் காமத்துக்கு முதலாசிரியன் வகுத்த இலக்கணம் எ-று. தலைவன் தன்மை என்ப தொன்றின்றி நந்தன்மையெனக் கருதுதலின் யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்ப மெனக் கொள்வனெனக் கூறியவற்றை அவன் இவை இன்பந்தரு மென்றே கோடலின் வழுவமைக்கப்பட்டன. உதாரணம் முற்காட்டிய வற்றுட் காண்க. (49) எய்தாததெய்துவித்தல் 244. மங்கல மொழியும் வைஇய மொழியும் மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியுங் கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப. இது, மேன் மூன்றுபொருளும் வழுவாயமைக என்றலின் எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) மங்கலமொழியும் - தலைவற்குத் தீங்கு வருமென்றுட் கொண்டு தோழியுந் தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்துதலும்; வைஇய மொழியும் -தலைவன் தம்மை வஞ்சித்தானாகத் தலைவியுந் தோழியுங் கூறலும்; வைஇய மொழி; தீங்கைவைத்த மொழியுமாம், மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் - மாறுபாடில்லாத ஆளுந் தன்மை யிடத்தே பழிபடக் கூறிய மொழியும்; கூறியன் மருங்கிற் கொள்ளும் என்ப - வழுவமைதியாகக் கூறிய இலக்கணத்திடத்தே கொள்ளுமொழி யென்று கூறுவர் ஆசிரியர் எ-று. நோயிலராக நங்காதலர் (அகம். 114) எனவுங் தாந்தஞ் செய்வினை முடிக்கத் தோழி எனவுங் கூறுவன நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்குவரு மென்றஞ்சி வாழ்த்தியது. நம்பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தலின் வழுவாயமைந்தது. வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலின் (கலி. 134) என்பது வஞ்சித்மை கூறிற்று. இதுவுமோ - ரூராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி. 89) என்பது ஆணமையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழீஇ அமைந்தது. (50) சினம் முதலியன ஒருபொருளைச் சிறப்பித்து வருமாயின் அமைக்கப்படுமெனல் 245. சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. இது, மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைக வென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறலின் தலைவிக்குந் தோழிக்குங் கொள்க. (இ-ள்.) சினனே - கோபம் நீடித்தலும்; பேதைமை - ஏழைமையும்; நிம்பிரி - பொறாமைதோன்றுங் குறிப்பும்; நல்குரவு - செல்வமின்மையும்; அனைநால்வகையும் - என்ற அத்தன்மையன வாகிய நாற்கூறும்; சிறப்பொடு வருமே - ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறுதல் காரணத்தான் வரும் எ-று. சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினார். நாணு நிறையும் நயப்பில் பிறப்பிலி (கலி. 60) எனவும், தொடிய வெமக்குநீ யாரை (கலி. 88) எனவுஞ் சினம்பற்றிவரினும் அவை தன்காதலைச் சிறப்பித்தலின் அமைந்தன. செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்றஇனி (கலி. 19) எனக் கழிபெருங் காதலான் நின்னை உள்ளவாறறிந்திலே னெனத் தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது. உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென்றறையுந ருளராயின். (கலி. 39) இது நிம்பிரி; அவரோடும் விளையாடுவானெனப் பொறாமை கூறியும் அவன் ஈண்டையானாக வேண்டுமெனக் காதலைச் சிறப்பித்த லின் அமைந்தது. பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇ மெலிந் தொழியப் பந்தர் ஓடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (நற். 110) இது, குடிவறனுற்றென நல்குரவு கூறியுங் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது. இது, மெய்ப்பாட்டியலுள் விலக்காமையின் அதனைச் சார ஈற்றிலே வைத்தார். (51) முறைப்பெயர்பற்றிய வழுவமைத்தல் 246. அன்னை என்ஐ என்றலும் உளவே தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந் தோன்றா மரபின என்மனார் புலவர். இது, முறைப்பெயர் பற்றி வருவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்.) சொல்லினும் எழுத்தினுந் தோன்றாமரபின - சொல் லோத்தினும் எழுத்தோத்தினுஞ் சொல்லப்படாத இலக்கணத் தனவாய; தொல் நெறி முறைமை - புலனெறி வழக்கிற்குப் பொருந்திய பழைய நெறிமுறைமையானே; அன்னை என்ஐ என்றலும் உள என்மனார் புலவர் - தோழி தலைவியை அன்னை யென்றலும் தலைவி தோழியை அன்னை யென்றலும் இருவருந் தலைவனை என் ஐ யென்றலும் உளவென்று கூறுவர் புலவர் எ-று. அன்னாய் இவனோர் இளமா ணாக்கன். (குறுந். 33) புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். (குறுந். 150) இவை தோழியைத் தலைவி அன்னாயென்றன. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. (ஐங்குறு. 202) அன்னாய் வாழிவேண் டன்னையுவக்காண் மாரிக் குன்றத்துக் காப்பா ளன்ன தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண்பனி வைகிய வரிக்கச் சினனே. (ஐங்குறு. 206) இவை தோழி தலைவியை அன்னை யென்றன. எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது (குறுந். 27) ஒரீஇயினன் ஒழுகும் என்ஐக்குப் பரியலென் மன்யாண் பண்டொரு காலே. (குறுந். 203) இவை தலைவி தலைவனை என்ஐ யென்றன. தோழி கூறியது வந்துழிக் காண்க. தலைவன் தலைவியை அன்னை யெனக் கூறலும் உளதென்பாருமுளர். எழுத்தினுஞ் சொல்லினு மென்னாத முறையன்றிக் கூற்றானே புறத்திற்கும் இவை கொள்க. என்னை மார்பிற் புண்ணுக்கு என்னைக் கூரிஃதன்மை யானும் என்னைக்கு நாடிஃதன்மை யானும் (புறம். 85) என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ஐ முன்னின்று கன்னின் றவர் (குறள். 781) என்ஐ மார்பிற் புண்ணும் வெய்ய (புறம். 280) என்பன கொள்க. ஏனைய வந்துழிக் காண்க. இனி, உம்மையாற் பிறவுமுள வென்பது பெறுதலின், எந்தைதன் னுள்ளங் குறைபடாவாறு (கலி. 61) என்றாற்போல வருவன பிறவுங் கொள்க. (52) கட்புலனாகக் காட்டலாகாப் பொருளிவையெனல் 247.ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா கற்பும் ஏரும் எழிலும் என்றா சாயலும்நாணும் மடனும் என்றா நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப. இது, கட்புலனாகக் காணப்படாத பொருண்மேலும் கட்புலனாகக் காணப்பட்டாற்போலப் பொருள் கோடல் வழுவமைக்கின்றது. (இ-ள்.) 1. ஒப்பாவது: ஒத்த கிழவனுங் கிழத்தியுமென்றவழி அவரொப்புமை மெய்வேறுபாடு பற்றி மனனுணர் வானுணர்வதன்றிப் பொறியா னுணரலாகாதென்றது; தந்தையரொப்பர் மக்க ளென்பதும் அது. 2. உருவாவது: உட்கு; அதுவும் பொறிநுதல் வியர்த்தல் போல்வன வற்றானன்றிப் பிழம்புபற்றி உணரலாகாது; 3. வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட்குணமாய் இசையாத தொரு மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணரலாகாது; 4. கற்பாவது: தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்; 5. ஏராவது: எழுச்சி; அது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே குறித்து நிற்கும். 6. எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பதுபோன்ற காட்டுதல்; 7. சாயலாவது: ஐம்பொறியான் நுகரும் மென்மை; 8. நாணாவது: செயத்தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்; 9. மடனாவது: கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை; 10. நோயாவது: நோதல்; 11. வேட்கையாவது: பொருள்கண்மேல் தோன்றும் பற்றுள்ளம்; செய்யுண் மருங்கின் வேட்கை (தொல். எழுத். உயிர்மயங். 86) என்புழி அவாவிற்கு வேறுபாடு கூறினாம்; 12. நுகர்வாவது: இன்பதுன்பங்களை நுகருநுகர்ச்சி; என்றா வென்பன எண்ணிடைச்சொல்; என்று வருங்கிளவி - ஒப்பு முதல் நுகர்வு ஈறாகப் பன்னிரண்டென்று அகப்பொருட்கண் வருங் கிளவிகளும்; ஆவயின் வருங் கிளவி - அப்பண்னிரண்டின் கண்ணே புறப்பொருட் குரியவாய் அவ்வாசகத்தான் வருங் கிளவிகளும்; ஆங்கு - ஈண்டு உவமவுருபு, அவை போல்வன கிளவி என்பதாம்; எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது - ஏனையவும் நாடகவழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே நெஞ்சு உணர்ந்து கொள்ளினன்றி; காட்டலாகாப் பொருள என்ப - உலகியல் வழக்கான் ஒருவர்க்கொருவர் கட்புலனாகக் காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய என்று கூறவர் புலவர் எ-று. இவை மேல்வரும் மெய்ப்பாடுபற்றி உணர்தலிற் கட்புலனாகா வோவெனின், மெய்ப்பாடாவது மனக்குறிப்பாதலின் அதன் குறிப்பிற்குப் பற்றுக்கோடாகிய பொருளின இவை யென்றுணர்க. இனி, இவை புறப்பொருட்கண் வருமாறு: வரைபுரையு மழகளிற் றின்மிசை (புறம். 38) எனவும் உருகெழு முரசம் (புறம். 50) எனவும் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் (புறம். 53) எனவும் நிலைகிளர் கூட னீளெரி யூட்டிய, பலர் புகழ் பத்தினி (சிலப். பதிகம். 35-36) எனவும் வரும். இவ்வாறே ஏனைய வற்றிற்கும் ஒட்டிக்கொள்க. இனி எல்லாமாவன, ஒளியும் அளியுங் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிறவுமாம். 1. ஒளியாவது: வெள்ளைமையின்மை; 2. அளியாவது: அன்பு காரணத்தான் தோன்றும் அருள்; 3. காய்தலாவது: வெகுளி; 4. அன்பாவது: மனைவியர்கண்ணுந் தாய் தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின்கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்; 5. அழுக்காறாவது: பிறர் செல்வம் முதலியவற்றைப் பொறாமை; 6. பொறையாவது: பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல்; 7. நிறையாவது: மறைபிறரறியாமல் ஒழுகுதல்; 8. அறிவாவது: நல்லதனலனுந் தீயதன்றீமையும் உள்ளவாறுணர்தல். இவை கண்டிலம் மென்று கடியப்படா, கொள்ளும் பொருளென்றார். இவை ஆசிரியராணையன்றென்பது மேற்சூத்திரத் தாற் கூறுகின்றார். (53) காட்டாலாகப் பொருள்களும் உள்பொருளாதலின் பொருளே எனல் 248. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மை யான. இஃது, இவையுங் காட்லாகப் பொருள்கள் ஆசிரியராணை யாற்கொண்டன அல்லவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது. (இ-ள்.) இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும் - தேவருலகத்தின்கண்ணுந் திரையெறியுங் கடல்சூழ்ந்த நிலத்தின் கண்ணும்; அவைஇல் காலம் இன்மையான - அறம் பொருளின்பங்களின் நுகர்வு இல்லாததொரு காலம் இன்றாகையான் அவற்றைப் பொருளென்றே கொள்க எ-று. தமிழ்நடக்கும் எல்லை கூறாது தேவருலகையும் மண்ணுலகையுங் கூறினமையின் இவை யாண்டும் ஒப்ப முடிந்தனவெனவும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியாயிற்று. இமையாக் கண்ணராகலின் இமையேர் என்றான். இடையூறில்லாத இன்பச் சிறப்பான் இமையோரை முற்கூறினார். (54) ஐந்தாவது பொருளிற்கு ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை யுரை முடிந்தது. பருவ ராலுகள் வாவிசூழ் மதுரையாம் பதிவாழ் பொருவ ராநச்சி னார்க்கினி யானுரை புணையாம் கருவ ராநெறி யுதவுதொல் காப்பியக் கடற்கே வெருவ ராதுநின்றன மகிழ்ந் தேகுவன் விரைந்தே. தொல்காப்பியனார் திருவடி வாழ்க.