தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் (இரண்டாம் பகுதி) வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் (இரண்டாம் பகுதி) உரையாசிரியர் : இளம்பூரணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 256 = 272 படிகள் : 2000 விலை : உரு. 170 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீ முல்க் 5வது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி ( EFEO) யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே 'உயர்தனிச் செம்மொழி' எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், 'உலக முதன் மொழி தமிழே' என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! "எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்" என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. "புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்" தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய 'இலக்கண வரலாறு' என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகியோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு ஐங்குறு. ஐங்குறுநூறு ஐந்தினை ஐந்திணையைம்பது கலி. கலித்தொகை கார்நாற். கார்நாற்பது குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிலப். ஆய்ச். சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை சிலப். கானல் சிலப்பதிகாரம் கானல்வரி சூளா. கல்யாண சூளாமணி கல்யாணச் சருக்கம் சூளா. சீயவதை சூளாமணி சீயவதைச் சருக்கம் சூளா. நகர சூளாமணி நகரச் சருக்கம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தண்டி. தண்டியலங்காரம் திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது நற். நற்றிணை நாலடி. நாலடியார் பட்டினப். பட்டினப் பாலை பதிற்றுப். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மணிமே. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை யா.வி.மேற். யாப்பருங்கல விருத்தி மேற்கோள் வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு "தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்" இதனொடும் இணைக்கப்பட்டுளது! "வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!" அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள 'மண்' எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து 'இந்தா' என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் 'தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை'ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் இளம்பூரணர் 5.பொருளியல் ... 01 6. மெய்ப்பாட்டியல் ... 33 7. உவமவியல் ... 63 8. செய்யுளியல் ... 83 9. மரபியல் .... 205 நூற்பா நிரல் ... 237 செய்யுள் நிரல் ... 243 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் ... 251 பொருளதிகாரம் இளம்பூரணருரை 5 பொருளியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளியல் என்னும் பெயர்த்து; பொருளியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்தியவாறு எனின், மேற்சொல்லப்பட்ட ஓத்துக்களினும் இனிச் சொல்லும் ஓத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம். இதனை 'ஒழிபியல்' எனினும் இழுக்காது; அகப்பொருள் புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின். தொடர்மொழிக்கண்பொருள் இயயுமாறு 193. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர். என்பது சூத்திரம். இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தொடர் மொழிக்கட் பொருள் இயையுமாறு உணர்த்திற்று. (இ-ள்.) இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை திரிந்தொலியா எ-று. என்றது, சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட்டான் தொடராது பிறிதொரு வாய்பாட்டான் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி, அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமா றாயிற்று. உ-ம்: "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரு முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே." (அகம். கடவுள் வாழ்த்து) இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலி னனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரிபோன்ற சடையினையும் திங்களொடு சுடருஞ் சென்னியையும் உடையனாய் மூவாவமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளை உடுத்த யாழ்கெழு மணிமிடற் றந்தணனது சிவானுபூதியிற் பேருலகந் தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து, அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடுபின் வாய்பாடுகள் சேராவன்றே? அவ்வழி அவ்வாய்பாட்டாற் போந்த பொருளுரைப்பச் சேர்ந்தவாறும், இசைதிரித்து இசைத்தவாறும், அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள் பட்டவாறுங் கண்டுகொள்க. "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்." (குறள். 662) இதுவும் இரண்டென்னுந் தொகைக்கு 'ஊறொராமை' எனப் பொருள் உரைத்தல் வேண்டும். (1) ஒருசார் காமப்பொருண்மை 194. நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி. என் - எனின், ஒருசார் காமப் பொருண்மை பற்றி நிகழ்வதொரு கிளவி யுணர்த்திற்று. (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப் புடையது போல், உணர்வுடையதுபோல், மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் என்பது - துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடு படுதலான் மெய்ப்பரிவு எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொடு புணர்த்துக் கூறியும் எ-று. 'காமங்கண்ணிய' என்றதனான் அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். 'இடைதெரிய' என்ப தனை, "............... இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்." (நாலடி. 54) என்றாற் போலக் கொள்க. 'தெரிய' என்னும் செயவெனெச்சம் ஏதுப் பொருண்மை குறித்து நின்றது. மெய்ப்பாடு எட்டாவன:- நகை, அழுகை, உவகை, இளிவரல், அச்சம், பெருமிதம், மருட்கை, வெகுளி; இவற்றின் பகுதி மெய்ப்பாட்டியலுட் காண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையது போலச் சொல்லப்பட்ட நெஞ்சின்கட் புலப்பட எ-று. சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற்றொழிற் படுத்தடக்கியும் என்பது - சொல்லாத மரபினையுடையவற்றொடு கெழுமி அவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல அடக்கியும் எ-று. சொல்லா மரபின ஆவன - புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின. செய்யா மரபாவன - தூதாச் சேறலும் வருதலும் உளபோலக் கூறும் அவை போல்வனவும் பிறவும். அவரவருறுபிணி தமபோற் சேர்த்தியும் என்பது - யாவர் சிலர் யாதொரு பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும் எ-று. 'அவரவர்' என்பது உயர்திணையாய்க் கூறினும் இருதிணையுங் கொள்ளப்படும், "ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப." (பொருளியல். 27) என்பதனான். அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக வுவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து என்பது - அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்து மிடத்து உவமவாயிற் படுத்தலும் எ-று. வேறுபட நிறுத்தலாவது - தத்தம் நிலைமை யொழிய எ-று. இருபெயராவது - உவமைப் பெயரும் உவமிக்கும் பெயரும். மூன்றும் உரியவாகும் என்பது - தொழிலும் பண்பும் பயனும். 'உவமம் ஒன்றிடத்து' என்றதனை மொழி மாற்றுக. இருவர்க்கும் உரிய பாற் கிளவி என்பது - தலைமகற்குந் தலைமகட் கும் உரியவொருகூற்றுக் கிளவி எ-று. அவற்றுள் நெஞ்சொடு புணர்த்தற்கு உ-ம்::- "கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்தோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே." (அகம். 9) என்பது நெஞ்சினை உறுப்புடையதுபோல உவகைபற்றி வந்தது. "சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு உழந்துபின் சென்றஎன் நெஞ்சு." (முத்தொள். 61) இஃது அவலம் பற்றி நெஞ்சினை உறுப்புடையதுபோற் கூறிய பெண்பாற் கூற்று. "உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சஞ் செல்லல் தீர்கஞ் செல்வா மென்னும்." (நற். 284) என்றவழி நெஞ்சு உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகன் கூற்று. "குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉங் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாய் ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ அருளா னாகலின் அழிந்திவண் வந்து தொன்னலன் இழந்தஎன் பொன்னிறம் நோக்கி ஏதி லாட்டி இவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே." (நற். 56) இது நெஞ்சு உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று. "நின்மொழிகொண் டியானோ விடுவ னென் மொழிகொண் டென்னெஞ்சம் ஏவல் செயின்." (கலித். 113) இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று; உவகைபற்றி வந்தது. "அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவனெஞ்சே நீயெமக் காகா தது." (குறள். 1291) இதுவும் மறுத்துரைப்பது போல் தலைவி கூற்று; இளிவரல்பற்றி வந்தது. "இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே" (அகம். 128) இஃது அச்சம்பற்றி வந்தது. பிறவுமன்ன. 'சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்' என்பதற்குச் செய்யுள்:- "கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களி சிறந்து பறைஇ தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால் அவல!" (அகம். 170) என்பது தலைவி கூற்று. தலைவன் கூற்று வந்தவழிக் காண்க. அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:- "பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்றிறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல்செய் தகன்றாரை உடையை யோநீ." (கலித். 129) பிறவுமன்ன. 'அறிவும் புலனும் வேறுபட நிறீஇ உவமவாயிற் படுத்த'ற்குச் செய்யுள்:- "ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும் காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளும் மாந்தளிர்க் கையில் தடவரு மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும் தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரற லுட்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென்று ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்." இவை, இடையுங் கையு முதலாகிய உறுப்புக்களைப் பற்றிய உவமவாயிற் படுத்தறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள்போலு மென்னாது தோளென்று தொட்டமையான் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலான் அறிவு வேறுபட்டது. பித்துங் களியும் போல் முலையெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோளெனச் சென்று வேயைத் தொட்டமை யான் உவமம் ஒன்றியவழி உவமவாயிற் படுத்தது. (2) கனவு நிகழ்விடம் 195. கனவும் உரித்தால் அவ்விடத் தான. என் - எனின், இதுவுங் காமம் இடையீடு பட்டுழி வருவதொரு பொருள் வேறுபாடு உணர்த்திற்று. (இ-ள்.) மேற்கூறியவாற்றால் காமம் இடையீடு பட்டுழிக் கனாக் காண்டலும் உரித்தென்றவாறு. இது தலைமகற்குந் தலைமகட்கும் உரித்து. "இன்னகை இனைய மாகவும் எம்வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே." (அகம். 39) என்றது தலைவன் கனாக் கண்டு கூறியது. "கேட்டிசின் வாழி தோழி அல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தரு பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனளே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியென் யானே." (குறுந். 30) இது, தலைவி கனாக் கண்டு கூறியது. (3) நற்றாய்க்கு உரியதொரு மரபு 196. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின். என் - எனின், நற்றாய்க் குரியதொரு மரபு உணர்த்திற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட கனவு தாய்க்கும் உரித்து, உடன் போக்குக் கிளக்கப்பட்டுழி எ-று. உ-ம்: "கண்படை பெறேன் கனவ" (அகம். 55) என வரும். வேறும் வந்தவழிக் காண்க. (4) எய்தியதன்மேல் சிறப்புவிதி 197. பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே நட்பின் நடக்கை யாங்கலங் கடையே. என் - எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதனுதலிற்று. (இ-ள்.) பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்து என்பது - பான்மை கெழுமப்பட்ட கிளவி பெண்பாலாராகிய நால்வர்க்கும் உரித்தென்ற வாறு. நால்வராவார் - தலைவி, தோழி, நற்றாய், செவிலி. அஃதேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ எனின் மேல் தலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வரையறுத்தல் என்பது. நட்பி னடக்கை யாங்கலங் கடையே என்பது - நட்பின் வழங்கும் வழக்கல்லாதவிடத்து எ-று. அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ்வழி யல்லாதவிடத் தென்றவாறு. அவள்மாட்டு நிகழ்வது தலைவன் தோழிக்குணர்த்தாது பிரிந்தவழி என்று கொள்ளப்படும். பாற்கிளவி என்பது பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் எனப்பட்டது. அதனைக் கெழுமிய சொல் பால்கெழு கிளவியாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள்: "கருமணற் கிடந்த பாவைஎன் அருமகளேயென முயங்கினள் அழுமே." (அகம். 165) செவிலி கூறியதற்குச் செய்யுள்:- "தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாள் மொழிகாட்டா யாயினும் முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து" (திணைமாலை நூற். 65) தோழி கூறியதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (5) நால்வருக்கு உரியன 198. உயிரும் நாணும் மடனும் என்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. என் - எனின், மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கு முரியதொரு பொருண்மை யுணர்த்திற்று. (இ-ள்.) உயிரும் நாணும் மடப்பமும் என்று சொல்லப் பட் டவை குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகட்கும் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரிய எ-று. 'செயிர்தீர் சிறப்பின்' என்றமையான், ஏனையோர் போலாது இவர் நால்வரும் ஒரு நீர்மையர் என்று கொள்க. இதனாற் சொல்லியது என்னையெனின், இந்நால்வரும் ஆக்கமுங்கேடும் ஒருவர்மாட்டு வந்துழித் தமக்குற்றபோல் நினைப்பராதலான் ஒருவரையொருவர் இன்றியமையாது ஓருயிர் போல்வர் எனவும், நாணமும் மடனும் நால்வர்க்கும் ஒக்குமாகலான் அவலமாகியவழியும் வருத்தம் ஒக்கும் எனவும் கூறியவாறு. அதற்குச் செய்யுள்:- "இவளே நின்னல திலளே யாயுங் குவளை உண்கண் இவளல திலளே யானும் ஆயிடை யேனே மாமலை நாட மறவா தீமே." என வரும். (6) தலைமகட்கு உரியதொருபொருள் 199. வண்ணந் திரிந்து புலம்புங் காலை உணர்ந்தது போல உறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. என் - எனின், தலைமகட்குரியதொரு பொருளுணர்த்திற்று. (இ-ள்.) தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமையுறுங் காலைத் தலைமகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந்தன போலப் பொருந்தும் வகையாற் கூறவும் பெறும் எ-று. உம்மை எதிர்மறை. "தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்." (குறள். 1233) "தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை." (குறள். 1277) என வரும். (7) தலைமகன்பால் நிகழாதது 200. உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. (இ-ள்.) இஃது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன எனக் கூறினல்லது, கிழவோன் உள்வழிப் படர்தல் கிழத்திக்கு இல்லை எ-று. உ-ம்: "கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து." (குறள். 1173) எனவும், "ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது." (குறள். 1176) எனவும் வரும். (8) மேலதற்கு ஒரு புறனடை 201. ஒருசிறை நெஞ்சோ டுசாவுங் காலை உரிய தாகலும் உண்டென மொழிப. என் - எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்திற்று. (இ-ள்.) தனித்து நெஞ்சோடு உசாவுங் காலத்துக் கிழவோற் சேர்தல் உரியதாகலும் உண்டு எ-று. உம்மை எச்சவும்மை யாகலால் தோழியோடு உசாதலுங் கொள்க. "கோடீர் இலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே எழுவினி வாழிய நெஞ்சே." (குறுந். 11) என வரும். "பகலே பலருங் காண வாய்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி." (நற். 365) என்றிது தோழியொடு உசாவியது. (9) தலைமகட்கு மடன் அழி இடன் 202. தன்வயிற் கரத்தலும் அவள்வயின் வேட்டலும் அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம் மடனொடு நிற்றல் கடனென மொழிப. என் - எனின், தலைமகட் கின்றியமையாத மடன் அழியும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகன் தனதொழுக்கந் தலைமகள்மாட்டுக் கரந்து உணர்த்தும்வழியும், தலைமகள்மாட்டுப் புணர்ச்சி வேட்கை தோற்றிய வழியுமாகிய அத்தன்மைப்பட்ட விடங்களல்லாதவழி யெல்லாம் தலைமகள் மடனொடு நிற்றல் கடன் என்று சொல்லுவர் என்ற வாறு. தன்வயிற் கரந்தவழி மடனழிய நின்றதற்குச் செய்யுள்:- "முத்தேர் முறுவலாய் நம்வலைப் பட்டதோர் புத்தியானை வந்தது, காண்பான் யான் றங்கினேன்." என்றவழி, அதற்குடம்படாது, "அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன்." (கலித். 97) என்றவழி, பொய்கூறினான் என்னுங் கருத்தினளாகிக் கூறுதலின் மடனழிதலாயிற்று. "கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே." (அகம். 26) என்றவழி வேட்கை தணிதலாகாதாள் அது தணியுந் துணையு முயங்காது, கவவுக் கை நெகிழ்ந்ததெனப் பெயர்தல் மடனழிதலாயிற்று. (10) அறத்தொடுநிற்கும் நிலைமரபு 203. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப. இது, அறத்தொடு நிற்கும் நிலைமரபு உணர்த்திற்று. (இ-ள்.) தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலள் எ-று. தலைவி அறத்தொடு நிற்குமாறு:- "விழுந்த மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்மலை நாடற் குரைத்தல் ஒன்றோ துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யா யாதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த செயலை அந்தளிர் அன்னஎன் மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே." (நற். 244) என வரும், தோழி யறத்தொடு நிற்றல் வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (11) தோழி அறத்தொடு நிற்குமாறு 204. எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇய ஏழு வகைய என்மனார் புலவர். என்-எனின், இது தோழி யறத்தொடு நிற்குமாறு உணர்த்திற்று. இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று உரைக்கின்றுழி உரைக்கப்பட்டது. (12) செவிலிக்கு உரியதொரு மரபு 205. உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் அப்பொருள் வேட்கைக் கிளவியி னுணர்ப. என் - எனின், இது செவிலிக்குரியதொரு மரபுணர்த்திற்று. (இ-ள்.) காமம் மிக்கவழி யல்லது சொல்நிகழ்ச்சி யின்மையின் தலைமகள்தான் கருதிய பொருண்மேல் வேட்கையைத் தலைமகள் தன்னானே யறிப எ-று. பன்மையாற் கூறினமையான், அவ்வுணர்ச்சி செவிலிக்கும் நற்றாய்க்கும் ஒக்கும் எ-று. இதனாற் சொல்லியது அறத்தொடு நிற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க. "அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி." (அகம். 48) என்றவழிச் செவிலி குறிப்பினான் உணர்ந்தவாறு காண்க. வேட்கை தோற்றத் தலைமக னில்லாதவழித் தோழிகூற்று நிகழும். அது "காமர் கடும்புனல்" (கலித். 39) என்னும் பாட்டினுள் காண்க. (13) பெண்டிர்க்கு உரியதோர் இயல்பு 206. செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான. என் - எனின், இது பெண்டிர்க் குரியதோர் இயல்புணர்த்திற்று. (இ-ள்.) செறிவு என்பது - அடக்கம். நிறைவு என்பது - அமைதி. செம்மை என்பது - மனங்கோடாமை செப்பு என்பது - சொல்லுதல் அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல். அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தன எ-று. இதனாற் சொல்லியது, மேற்சொல்லிய அறத்தொடுநிலை வகையும் இனிக் கூறுகின்ற வரைவுகடாதற் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரை வகையானும் கூறுங்கால், இவை, பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. (14) தோழிகூற்றின் சிலவற்றுப் பயன் 207. பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனூ றஞ்சலும் இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப. என் - எனின், இது தோழிகூற்றிற் கூறப்பட்ட சில கிளவிக்குப் பயன் உணர்த்திற்று. (இ-ள்.) தலைமகன் வருகின்ற பொழுதும் நெறியும் ஊரின்கட் காவலும் என்று சொல்லப்பட்டவற்றின்கண் வரும் தப்பினான் உள தாகுங் குற்றங் காட்டலும், தான் மனனழிந்து கூறலும், தலைமகற்கு வரும் இடையூறு கூறலும், தலைமகனைப் பகற் குறிவிலக்கி இரவுக் குறி நீ வா என்றலும், இரவுக்குறி விலக்கிப் பகற்குறி நீவா என்றலும், தலைமகனை வாரா தொழிஎனக் கூறலும், நன்மையாகவுந் தீமையாகவும் பிறபொருளை எடுத்துக் கூறலும், இத் தன்மையவாகிக் குற்றம் பயப்ப வந்த அத்தன்மைய பிறவும், புணர்ச்சி விருப்பமின்மையாற் கூறப்பட்டன வல்ல; வரைதல் வேண்டும் என்னும் பொருளை யுடைய எ-று. இவையெல்லாந் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோற்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது, ஒருபயன் பட வந்த வென உணர்த்துதலே ஈண்டு ஓதப்பட்ட தென்க. நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லுங் குடியும் என ஆண்டோதப்பட்டன. இவை வரைதல் வேட்கைப் பொருள வாமாறும் ஆண்டுக்காட்டப்பட்ட உதாரணத்தான் உணர்க. (15) தலைமகளுக்கும் தோழிக்கும் உரியதோர் இயல்பு 208. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் மரீஇய மருங்கின் உரித்தென மொழிப. என் - எனின், இதுவும் தலைமகட்குந் தோழிக்கும் உரியதோர் இயல்புணர்த்திற்று. (இ-ள்.) வரைதல் வேட்கைப் பொருளாற் கூறுதலை மறுத்துப் பட்டாங்கு கூறிச்சொல்லுதல் மருவிய பக்கத்தின் உரித்தென்றவாறு. மருவிய பக்கமாவது களவொழுக்கம் நீட்டித்த இடம். அவ்வழிப் பட்டாங்கு கூறுதலும் ஆம் எ-று. எனவே மேற்கூறியவாறு கூறுதல் மருவாதவழி என்றவாறாம். "கொடிச்சி யின்குரல் கிளைசெத் தடுக்கத்துப் பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக் காவலுங் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மே." (ஐங்குறு. 289) என வரும். (16) தலைமகற்கு உரியதொரு மரபு 209. தேரும் யானையுங் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. என் - எனின், இது தலைமகற்குரியதொரு மரபுணர்த்திற்று. (இ-ள்.) களவுக் காலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் எ-று. களவின்கண் என்பது அதிகாரத்தான் வந்தது. "நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர் கடுங்களிறு காணீரோ என்றீர் - கொடுங்குழையார் யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து ஏனல் கிளிகடிகு வார்." பிறவு மன்ன. 'ஊர்ந்தன ரியங்கலு முரியர்' என்றமையான் தனி வருதல் பெரும் பான்மை. இதனை எச்ச வும்மையாக்கி வையமூர்தலும் இளையரொடு வருதலுங் கொள்க. "வல்வே லிளையரொ டெல்லிச் செல்லாது." (அகம். 120) என வரும். பிறவுமன்ன. இதனான் சொல்லியது பெரியார் இவ்வாறு செய்வார் எனவுங் கூறியவாறாம். (17) ஒருசார் வழுவமைதி 210. உண்டற் குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே. என் - எனின், இஃது ஒருசார் வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) உண்டற்றொழிலுக் குரியவல்லாத பொருளை உண்டன வாகக் கூறலும் மரபென்றவாறு. 'பசலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்' (கலித். 15) எனவும், 'நீலமுண்ட துகில்' எனவும், "கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று." (குறள். 1244) எனவும் வரும். இது சொல்லின் கட் கிடந்ததோ ரொழிபு. (18) கனவில் தலைமகற்கு உரியதோர் இயல்பு 211. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக்கைம் மிகுதல் உண்மை யான அன்பே யறனே யின்ப நாணொடு துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே. என் - எனின், இது களவுக் காலத்துத் தலைமகற் குரியதோர் இயல்புணர்த்திற்று. (இ-ள்.) பொருள்வயிற் பிரிதல் வேண்டும் எனக் கூறுதலும் கடியப்படாது; தலைமகளைத் தமர் காக்குங் காவல் மிகுதியுள்ளவழி இவை நீங்கப்பெறும் எ-று. இதனாற் சொல்லியது அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் நினைத்து வருந்தப்பெறான் எனவும், நாணத்தைக் கைவிட்டுத் தமர் கொடுக்குமாறு முயலவேண்டு மென்பதூஉம் கூறியவாறாம். இவை ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன. (19) தலைமகற்கு உரியதொரு திறன் 212. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே. என் - எனின், இதுவும் தலைமகற்குரியதொரு திறன் உணர்த்திற்று. (இ-ள்.) தலைமகன் பொருள்வயிற் பிரியும்வழி உடன்போக்குக் கருதிய தலைமகட்கு யான் போகின்ற நெறி கல்லுங் கரடுமாகிய சுரம் எனக் கூறுதலும் நீக்கப்படாது எ-று. இதனாற் சொல்லியது காப்பு மிகுதிக்கண் வருத்தமுறுந் தலைமகளை உடன்கொண்டு போ தல் தக்கது என்பார்க்கு நெறியருமை கூறி விலக்கவும் பெறும் எ-று. (20) இதுவும் ஒரு வழுவமைதி 213. உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. என் - எனின், இதுவுமொரு மரபு உணர்த்திற்று. (இ-ள்.) உயர்ந்தோர் கூற்று வழக்குவழிப்படுதலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடன் எ-று. எனவே, வழக்கழிய வருவன செய்யுட்கண் வரப்பெறா என்ற வாறு. இதனானே மேலதிகாரத்திற் கூறிய சொல்லும் இவ்வதிகாரத்திற் கூறுதற் கியன்ற பொருளும் வழக்கொடு புணர்ந்தனவே செய்யுட்கண் வருவன; புணராதன செய்யுட்கண் வரப்பெறா என்றவாறாம். இன்னும் இந் நூலகத்து அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் எடுத்தோதப் பட்டவன்றி உயர்ந்தோர் வழக்கொடு பொருந்தி வருவன வெல்லாஞ் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்க என வெஞ்சிய துணர்த்தியவாறுமாம். உயர்ந்தோர் வழக்கென்றமையானும், பொருளு மின்பமும் கெடாமல் மூன்றனுளொன்று பயப்பக் கூறுதல் கொள்க. (21) மேலதற்குப் புறனடை 214. அறக்கழி வுடையன பொருட்பயன் வரினே வழக்கென வழங்கலும் பழித்த தென்ப. என் - எனின், மேலதற் கொரு புறனடை. (இ-ள்.) அறத்தின் கழிவுடையன பொருட்குப் பயன்பட வரின் அதனை வழக்கென்று வழங்குதலும் பழித்ததென்றவாறு. பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும். அறத்திற் கழிவு வரும் அகப்பொருளாவது பிறன்மனைக் கூட்டம். பொருட்பயன் வருதலாவது அவராலே பொருள் பெறுதல். அவ் விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும், அதனை வழங்குதலும் பழிக்கப்பட்டதென்றவாறு. உம்மை முற்றும்மை யாகலான் வழக்கென் றுரையற்க எ-று. "எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்." (குறள். 144) என வரும். புறப்பொருட்கண் அறக்கழி வுடையன பகைவர் தேஎத்து நிரை கோடலும் அழித்தலும் போலப் பொருட்பயன் காரணத்தான் நட்டோர் தேஎத்துஞ் செயல். இவையும் பொருள் பயப்பினும் வழக்கென வழங்குத லாகா எ-று. இதுவும் ஒரு முகத்தான் நீதி கூறியவாறு. "பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை." (குறள். 657) என வரும். (22) இதுவுமது 215. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. என் - எனின் இதுவுமது. (இ-ள்.) மிக்க பொருளாவது மேற்கூறப்பட்ட அகப்பொருள். அப்பொருட்கண்ணும் நாண் நீங்காத நல்வழிக்கட் படுத்துப் பொருள் வகை புணர்க்க எ-று. எனவே அறமுதலாயின வழுவில ஆயினும் நாணழிய வரும் பொருண்மை புணர்த்தற்க எ-று. "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறன்நாணத் தக்க துடைத்து." (குறள். 1018) என வரும். (23) வழுவமைத்தல் 216. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே. என் - எனின், இதுவும் வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) முறைப் பெயராவது - இயற்பெயர் முதலிய பெயரா னன்றி முறைமைபற்றி வருவது: அது தந்தை மகனைக் கூறும் பொழுது தம்முன், தம்பி என்பனவும் கிழவன், தோழன் என்பனவும் போல வருவன. அப்பெயரகத்து வரும் நன்றாகிய கெழுதகைப் பொதுச்சொல்லா வது - பயிற்சியாற் கூறும் 'எல்லா' என்பது. நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்பது - நிற்றற்குரிய மரபினானே யிருபாற்கு முரித்தென்றவாறு. நிற்றற்குரிய மரபின் என்பது இவ்வாறு தோற்றாமையின் எ-று. "எல்லா, இஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண்" (கலித். 61) என்றவழிப் பெண்பால்மேல் வந்தது. "எல்லா, தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று." (கலித். 62) என்றவழித் தலைமகன்மேல் வந்தது. இதுவும் ஒரு சொல்வழு அமைத்தவாறு. இச் சொற் காமப் பொருளாகத் தோற்றுதலாற் சொல்லதிகாரத்து ஓதாது ஈண்டு ஓதப்பட்டது. (24) ஒருசார்மரபு வழுவமைதி 217. தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்ல வாயினும் புல்லுவ உளவே. என் - எனின், இதுவும் ஒருசார் மரபு வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) தாயத்தான் எய்துதலாவது தந்தை பொருள் மகற்குறுதல். ஈயச் சேறலாவது ஒருவன் கொடுப்ப ஒருவன் கோடல். வினைவ யிற்றங்கலாவது உழவு முதலியனவற்றான் வருதல். வீற்றுக் கொளப் படுதலாவது வேறுபடுத்திக் கோடல். அஃதாவது பகையினான் வந்தது கோடல். இந்நான்கினும் வரும் பொருளினது உரிமைத் தோற்றமல்ல வாயினும் பொருந்துவ உள எ-று. செய்யா என்னும் வினையெச்சம் வரூஉம் என்னும் பெயரெச் சத்தொடு முடிந்தது. அன்றியும் செய்யா என்பதனைப் பெயரெச்ச எதிர்மறையாக்கி இந்நான்கினும் வருந் தகவு இல்லாத பொருள் பொருளலவாயினும் எமதென வரும் உரிமைத் தோற்றம் பொருந் துவ எ-று. 'அல்லவாயினும்' என்பதனை மாறிக்கூட்டுக. எனவே ஒரு முகத் தாற் பொருள் தேடுவார் திறன் கூறினாருமாம். இனி அக் கிழமைத் தோற்றம் ஆவது. "விரும்பிநீ என்தோள் எழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண்" (கலித். 18) என்ற வழித் தலைமகள் தோளைத் தோழி தன்னையு முளப்படுத்தி எனதெனக் கூறியவாறு காண்க. பிறவுமன்ன. (25) ஒருசார்பொருள் கொள்ளும் திறன் 218. ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப. என் - எனின், இதுவு மொருசார் பொருள் கொளுந்திறன் உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக் கண்ணும் வருவகைதாம் வழக்கு நெறி எ-று. மனையோள்மாட்டுங் காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச் சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர்மாட்டும் நிகழும். அது வருமாறு:- "அன்னை கடுஞ்சொல் அறியாதாள்" (கலித். 97) என்னுங் கலியுள், "சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த அவ்வழி என்றும்யான் காணேன்." என்பது புணர்வு குறித்து வந்தது. "உள்ளுதொறு நகுவன் தோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூர்அல கன்ன குண்டுநீர் ஆம்பல் தண்துறை யூரன் தேங்கம ழைம்பால் பற்றி என்வயின் வான்கோல் எல்வளை வவ்விய பூசற் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட் குரைப்பல் என்றலின் முனையூர்ப் பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே." (நற். 100) இஃது ஊடல் குறித்து வந்தது. இப் பரத்தையர் பொருட் பெண்டிராகலின் இன்பம் பயக்குமோ எனின், அஃது இன்பமாமாறு வருகின்ற சூத்திரத்தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொது விலக்கணம் கூறியவாறு. (26) மேலதற்கு ஒரு புறனடை 219. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும். என் - எனின், மேலதற் கொரு புறனடை உணர்த்திற்று. (இ-ள்.) எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்திவரும் விருப்பத்தையுடைத்து எ-று. எனவே, மனம் பொருந்திய வழிப் பரத்தையர்மாட்டும் இன்பமுள தாகும் எனவும், பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க. (27) பரத்தை பிரிவிற்கு உரியார் 220. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர். என் - எனின், பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பரத்தையர்மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத் தார்க்கும் உரித்து; அவ்வழிப் பிரியும் பிரிவு நிலம் பெயர்தல் இல்லை எ-று. எனவே, தன்னூரகத்துஞ் சார்ந்தவிடமுங் கொள்க. நால்வர்க்கும் உரித்து என்றமையான் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் அவனொடு ஊடப்பெறுப எ-று.மாம். "யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து." (கலித். 89) என்பது பார்ப்பனி கூற்று. "பெரியார்க் கடியரோ ஆற்றா தவர்." (கலித். 88) என்பது அரசி கூற்று. (28) களவின்கண் தலைமகட்கு உரியதொரு மரபு 221. ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் பிரித லச்சம் உண்மை யானும் அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென்று அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். என் - எனின், இது களவின்கண் தலைமகட்குரியதொரு மரபு உணர்த்திற்று. (இ-ள்.) ஒருதலையுரிமை வேண்டினும் என்பது - ஒருதலையாகத் தலைமகள் உரிமை பூண்டலை வேண்டியவிடத்து மென்றவாறு. மகடூஉப் பிரித லச்ச முண்மை யானும் என்பது - பிரிதற்கண் வரும் அச்சம் பெண்பாற்கு இயல்பாகு மென்றவாறு. அம்பலும் அலரும் களவுவெளிப்படுக்கு மென்று அஞ்சவந்த வாங்கிரு வகையினும் என்பது - களவொழுக்கத்தை வெளிப்படுக்கு மென்று அஞ்சும்படியாக வந்த அம்பலும் அலருமாகிய இருவகையின் கண்ணும் எ-று. நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் என்பது - தலைமகன் வரவு பார்த்திருந்தவழி வந்த இடையூறாகிய பொருளின்கண்ணும் எ-று. அவையாவன:- தாய்துஞ்சாமை, நிலவு வெளிப்படுதல் முதலியன. போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பது - தலைமக னுடன் போதற் குறிப்பும் வரைவுகடாதற் குறிப்பும் மனைவிமாட்டுத் தோன்றும் எ-று. உ-ம்: "சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிற் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகஇவ் அழுங்க லூரே." (நற். 149) இது போக்குக்குறித்தது. 'இரும்பிழி மகாஅர்' (அகம். 122) என்னும் பாட்டு வரைவு குறித்தது. (29) தலைவிக்கும் தோழிக்கும் உரிதொரு திறன் 222. வருத்த மிகுதி சுட்டுங் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம். என் - எனின், இது தலைமகட்குந் தோழிக்கு முரியதொரு திறன் உணர்த்திற்று. (இ-ள்.) வருத்த மிகுதியைக் குறித்தவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் உரித்தெனச் சொல்லுவர் எ-று. எனவே, வருத்த மிகுதியைச் சுட்டாதவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் இன்றெனக் கொள்ளப்படும். "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள். 1151) "அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர் அவலம் படுதலும் உண்டு." (கலித். 19) இதுவுமொரு மரபுவழு வமைத்தது. (30) கற்பில் தலைவிக்கு உரியதொரு மரபு 223. மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய. என் - எனின், கற்புக்காலத்துத் தலைமகட் குரியதொரு மரபு உணர்த்திற்று. (இ-ள்.) தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் ஆராயுங் காலத்துப் புலவிக்காலத்து உரிய வென்றவாறு. எனவே ஒழிந்த ஊடல் துனியென்பனவற்றிற் குரியவாம். "ஒரூஉக் கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய எமக்குநீ யாரைப் பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர்; கடியர் நமக்கியார் சொலத்தக்கார் மாற்று வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வா ரகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு. (கலித். 88) இதனுள் தலைமகன் பணிவுந் தலைவி யுயர்வுங் காண்க. இஃது ஈண்டுக் கூறியதென்னை? 'காமக் கடப்பினுட் பணிந்த கிளவி' (கற்பியல் 19)யென மேற்கூறப்பட்டதாலெனின், ஆண்டுக் கூறியது ஊடல் புலவி துனி யென்னு மூன்றற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க. (31) இதுவும் ஒரு மரபு 224. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. என் - எனின், இதுவு மொரு மரபுணர்த்திற்று. (இ-ள்.) கற்புக் காலத்து நிகழாநின்ற தகையின் பக்கத்து வேட்கை மிகுதியாற் புகழ்தலை நீக்கார் எ-று. களவுக் காலத்து நலம் பாராட்டிய தலைமகன் கற்புக்காலத்து மெழினலம் பாராட்டப்பெறும் எ-று. தகை என்பது அழகு. அதனைப் பற்றிப் புகழும் எனக் கொள்க. "அணைமருள் இன்றுயில் அம்பணைத் தடமென்றோள் துணைமலர் எழில்நீலத் தேந்தெழில் மலருண்கண் மணமௌவல் முகையன்ன மாவீழ்வான் நிரை வெண்பல் மணநாறு நறுந்தண் மாரிவீழ் இருங்கூந்தல் அலர்முலை யாகத் தகன்ற அல்குல் சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி." (கலித். 14) என வரும். (32) இறைச்சிப்பொருள் ஆமாறு 225. இறைச்சி தானே உரிப்புறத் ததுவே. என் - எனின், இறைச்சிப்பொருளாமா றுணர்த்திற்று. (இ-ள்.) இறைச்சிப் பொருளென்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள் எ-று. அஃதாவது கருப்பொருளாகிய நாட்டிற்கும் ஊர்க்குந் துறைக்கும் அடையாகி வருவது. "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே." (குறுந். 3) என்றவழி நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப் பூவும் தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க. (33) இறைச்சியின் பிறக்கும் பிறிது பொருள் 226. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே. என் - எனின், இஃது இறைச்சிப்பொருள்வயிற் பிறக்கும் பிறிது மொரு பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறைச்சிப்பொருள்வயிற் றோன்றும் பொருளும் உள: பொருட்டிறத்தியலும் பக்கத்து ஆராய்வார்க் கென்றவாறு. இறைச்சிப் பொருள் பிறிதுமொரு பொருள்கொளக் கிடப்பனவுங் கிடவாதனவுமென இருவகைப்படும். அவற்றிற் பிறிதொரு பொருள்பட வருமாறு:- "ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனோடு ஒன்றேன் தோழி ஒன்ற னானே." (குறுந். 208) என்பது வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு உடன்போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியதாகலின், இதனுட் 'பொருகளி' றென்றமையான், தலைமகள்தமர் தலைமகன் வரைவிற் குடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்ட தென்பது தோற்றுகின்றது. 'பொருகளிறு மிதித்த வேங்கை' யென்றதனாற் பொருகின்ற விரண்டு களிற்றினும் மிதிப்ப தொன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை யவமதித்தவாறு காட்டிற்று. 'வேங்கை நின்று கொய்ய மலரும்' என்றதனான் முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்க லாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனானே பண்டு நமக்கரிய னாகிய தலைமகன் தன்னை யவமதிக்கவும் நமக்கெளியனாகி யருள் செய்கின்றானெனப் பொருள் கொளக் கிடந்த வாறு காண்க. (34) இறைச்சியான் படுவதொரு பொருள் 227. அன்புறு தகுவன இறைச்சியிற் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே. என் - எனின், இஃது இறைச்சிப்பொருளாற் படுவதொரு பொருள் உணர்த்திற்று. (இ-ள்.) அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப்பொருட்கண் சுட்டுதலும் வற்புறுத்தலாம் எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று. "அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே." (கலித். 11) என்றது வற்புறுத்தற் குறிப்பு. (35) தலைவிக்கு உரியதோர் இயல்பு 228. செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவும் மெய்பெற உணர்த்துங் கிழவிபா ராட்டே. என் - எனின், இது தலைமகட்குரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகன் பொருள்வயிற் பிரியுமிடத்து ஆறின்னாமை யா னுளதாகிய அச்சத்தொடு வினைவயிற் பிரிவும் பிரியுங் காலத்துத் தலைவியைப் பாராட்டிப் பிரிதலினான், அப்பாராட்டினான் மெய்பெற வுணரும் எ-று. உ-ம்: "நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னுஞ்சொல் இன்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானும் இதுவொன் றுடைத்தென எண்ணி" (கலித். 24) என்றமையாற் பாராட்டினான் தலைமகள் பிரிவு உணர்ந்தவாறு அறிக. (36) இதுவுமது 229. கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும் உள்ளத் தூட லுண்டென மொழிப. என் - எனின், இதுவும் அது. (இ-ள்.) கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக் குடன்பட்டாளே யாயினும், உள்ளத்தின்கண் ஊடல் நிகழும் எ-று. (37) தலைவிக்குஉரியதோர் இலக்கணம் 230. கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். என் - எனின், இது தலைமகட் குரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகன் குறிப்பினை யறிதற்கு முரியள் எ-று. இது கற்பியலுட் கூறியதற் கிலக்கணம். "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே." (ஐங்குறு. 122) என வரும். பிறவு மன்ன. (38) தலைவிக்கு உரியதொரு மரபு 231. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்தும் தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே மலிதலும் ஊடலும் அவையலங் கடையே. என் - எனின், இது தலைமகட்குரியதொரு மரபுணர்த்திற்று. (இ-ள்.) பரத்தையர் தாமுற்ற துன்பத்தினைத் தலைமகட்குக் கூறியவழியும், அவரிடத்துத் துன்பத்தை மெய்ம்மையாக உணர்ந்து வைத்துந், தலைமகன்மாட்டுக் கழறுதல் தலைவன் எதிர்ப்பட்ட பொழுது இல்லை, மகிழ்ச்சியும் புலவியும் அல்லாத காலத்து எ-று. கூறினும் என்ற உம்மை எதிர்மறை. கூறாமை பெரும்பான்மை. அதனை ஐயப்படாது துணிதலான் 'மெய்ம்மையாக'வென்றார். அதனைத் தலைமகன் வந்தவழிக் கூறுவாளாயின், தனக்குப் புணர்ச்சியிற் காதலில்லையாம்; சொல்லாளாயின் அவள் கூறியவதனாற் பயனில்லை யாம். அதனைக் கலவியிறுதியினும் புலவியினும் கூறப்பெறும் எ-று. "நின்னணங் குற்றவர் நீசெய்யும் கொடுமைகள் என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்" (கலித். 77) எனப் புலவியிற் கூறியவாறு காண்க. கலவியிறுதியிற் கூறுதல் வந்தவழிக் காண்க. (36) தலைவிக்கு உயிதொரு வழுக்காத்தல் 232. பொழுது தலைவைத்த கையறு காலை இறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு அவைநாற் பொருட்கண் நிகழும் என்ப. என் - எனின், இது பருவம் வந்துழித் தலைமகட் குரியதொரு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) பொழுது தலைவைத்தலாவது - யாதானுமொரு பருவத்தைக் குறித்தவழி, அப்பருவம் இருதிங்களை யெல்லையாக வுடைத்தாயினும் அது தோற்றியவழி எ-று. கையறு காலை என்பது - இது கண்டு செயலற்றகாலை எ-று. இறந்தபோலக் கிளத்தலாவது - அக்காலந் தோன்றியபொழுது கழிந்தது போலக் கூறுதல். மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு அவை நாற்பொருட் கண் நிகழும் என்ப என்பது - அவ்வாறு கூறுதல் அறியாமையானாதல் வருத்தத்தானாதல் மயக்கத்தானாதல் அக்காலத்திற் குரிய பொருள் மிகத் தோன்றுதலானாதல் என இந்நான்கு பொருளானும் நிகழும் எ-று. சிறுபொழுதாயின் யாமங் கழிவதன் முன்னர்க் கூறுதல். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதன்று எ-று. உ-ம்: "பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானம் கருவிருந்து ஆலிக்கும் போழ்து" (கார்நாற். 1) இது பருவங் கண்டவழி வாரார்கொல் என்றமையான் இறந்த போலக் கிளந்தவாறாயிற்று. பிறவுமன்ன. இதுவுமொரு மரபு வழுவமைத்தல். (40) களவில் தோழிக்கு உரியதொரு திறன் 233. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. என் - எனின், களவுக்காலத்துத் தோழிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரந்து குறையுற்ற தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகை யுடைய நயத்தினாற் கூறியும் பல்வகையானும் படைத்து மொழிந்து சொல்லவும் பெறும் எ-று. உ-ம்: களவியலுட் காட்டப்பட்டனவுள்ளுங் காண்க. நல்வகையுடைய நயத்திற்குச் செய்யுள்:- "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே." இது மடலேறுவல் என்ற தலைவனைப் பழித்து அருளுடை யீராதலான் மடலேறுவது அரிது என நயத்திற் கூறியது. இதுவுமொரு மரபுவழு வமைத்தவாறு. (41) தலைவற்கும் தலைவிக்கும் உரியதொரு மரபு 234. உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே. என் - எனின், தலைமகற்குந் தலைமகட்கும் உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்குந் தலை மகட்கும் ஒத்த கிளவி; ஐயக்கிளவி, தலைமகற்கே உரித்தென்றவாறு. தலைவிமாட்டு ஐயக்கிளவி யின்றென்றவாறாம். அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும்; காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம். "அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள்." (அகம். 48) என்பது உயர்த்துச் சொல்லியவாறு. தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள்:- "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி." (குறள். 1118) பிறவுமன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது. (42) மரபு வழுக்காத்தல் 235. உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின் உரிய தாகும் தோழிகண் உரனே. என் - எனின், இது தோழிக்குரியதொரு மரபுவழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) தலைமகற் குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி இயல்பாகலின் அவட்குரியதாகும் அறிவு எ-று. அதனானே யன்றே, "பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி" என்னும் பாலைக்கலியுள், "கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும்" (கலித். 21) எனக் கூறினாள் என்று கொள்க. (43) இதுவுமது 236. உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. என் - எனின், இதுவுமது. (இ-ள்.) உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உரித்து தோழிக்கு எ-று. "தாமரைக் கண்ணியை தண்நறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே." (கலித். 52) என்பது உயர்த்துச் சொல்லியவாறு. (44) வாயில்கட்கு உரியதொரு மரபு 237. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தங் கூற்றே. என் - எனின், வாயில்கட்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தத்தங் கூறுபாட்டினான் வாயில்கள் கூறுங் கிளவி வெளிப்படக் கிளத்தல் கேடின்றி யுரிய வென்றவாறு. தத்தங் கூறாவது அவரவர் சொல்லத்தகுங் கூறுபாடு. ஆனுருபு தொக்கு நின்றது. எனவே வாயில்களல்லாத தலைமகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் எ-று. வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லும் உள்ளுறை சொல்லு கின்றாராதலின், அவ்வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. இவர் மறைத்ததனாற் குற்றமென்னை? இவர் குற்றேவல் முறைமையரா தலானும் கேட்போர் பெரியோர் ஆதலானும், வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமையானும், அவ்வாறு கூறினால் இவர் கூற்றிற்குப் பயனின்மையானும், வெளிப்படவே கூறுப என்க. (45) உள்ளுறை ஐந்து 238. உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே. என் - எனின், உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப்பும் எனக் கெடலரு மரபினை உடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் எ-று. உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்ப தொன்று. அது கருப்பொருள் பற்றி வருமென்பது அகத்திணையியலுள் (அகத். 50) கூறப்பட்டது. உடனுறையாவது உடனுறைவ தொன்றைச் சொல்ல, அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது. "விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கின் நிறைபடு நீழற் பிறவுமா ருளவே." (நற். 172) இதனுள் 'புன்னைக்கு நாணுதும்' எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னை யென்றும், 'பல்காலும் அன்னை வருவள்' என்றும் உடனுறை கூறி விலக்கியவாறு. பிறவுமன்ன. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது. "வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுந்தேன் வேட்டும் குறுகும் - நிறைமதுசேர்ந்து உண்டாடும் தன்முகத்தே செவ்வி உடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு." (தண்டி. 53 உரை) இது வண்டைக் கூறுவாள் போலத் தலைமகன் பரத்தையிற் பிரிவு கூறுதலின் உள்ளுறையுவமம் ஆயிற்று. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டப் பிறிதொரு பொருட் படுதல். "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது." (குறள். 1279) இதனுள் இப் பூப்பறிப்போமாயின் வளை கழன்று தோள் மெலிய நடத்தல் வல்லையாதல் வேண்டும் என ஒரு பொருள் சுட்டித் தந்தமை காண்க. நகையாவது நகையினாற் பிறிதொரு பொருளுணர நிற்றல். "அசையியற் குண்டாண்டோ ரேஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்." (குறள். 1098) இதனுள் நகையினாற் பிறிதொரு குறிப்புத் தோன்றியவாறு காண்க. சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவதனானே பிறிதொரு பொருள் கொளக் கிடப்பது. (46) உள்ளுறைபார்படுவதொரு பொருள் 239. அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. என் - எனின், இதுவும் உள்ளுறைப்பாற் படுவதொரு பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அந்தமிலாத சிறப்பினாகிய வின்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த இயல்பு எ-று. 'அந்தமில் சிறப்பு' என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல். "நுண்எழில் மாமைச் சுணங்கணி ஆகம்தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார்என் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொ லறியேன் என்னும்." (கலித். 4) என்றவழி, இன்பத்தின்கண்ணும் பிறிதொரு பொருள் உண்டென்பது தோற்றுகின்றது. (47) உள்ளுறைபார்படுவதொரு சொல் 240. மங்கல மொழியும் அவையல் மொழியும் மாறில் ஆண்மையின் சொல்லிய மொழியுங் கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப. என் - எனின், இதுவும் உள்ளுறைப்பாற் படுவதொரு சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மங்கல மொழி முதலாகச் சொல்லப்பட்டனவும் உள்ளுறைப்பாற் படும் எ-று. மங்கல மொழியாவது - மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றல். அவையல் மொழியாவது இடக்க ரடக்கிக் கூறுதல். அது கால் கழீஇ வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது ஒருவனைச் சிங்கம் வந்த தென்றாற்போற் கூறுவது. அவையெல்லாஞ் சொல்லாற் பொருள்படாமையின் உள்ளுறைப் பாற்படும். இன்னும் இவ்வாற்றாற் பொருள் கொள்ளுமாறு 'ஒல்லுவ தொல்லும்' என்னும் புறப்பாட்டினுள் (புறம். 196) 'நோயில ராகநின் புதல்வர்' எனவும் 'சிறக்கநின் னாளே' எனவும் வரும் மங்கலச் சொல் கெடுக என்னும் பொருள் பட்டவாறு காண்க. "இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலித். 89) என்றது தீயொழுக்கம் ஒழுகினாய் என்ற இடக்கரடக்கி அவைய மொழியான் ஒழுக்கக் குறைபாடு கூறியவாறு. (48) சிறப்பொரு வருவன 241. சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. என் - எனின், மெய்ப்பாட்டியலுள் நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்கட் காகாதன எடுத்தோதுகின்றா னாகலின், அவற்றுள் ஒருசாரன ஒரோவிடத்து வருமென்பது உணர்த்திற்று. இச்சூத்திரம் எதிரது நோக்கிற்று. (இ-ள்.) சினமும் பேதைமையும் நிம்பிரியும் நல்குரவும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு வகையும் யாதானும் ஒரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும் எ-று. "கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர்." (கலித். 88) இதனுள் 'தொடிய எமக்கு நீயாரை' என்பது சினம்பற்றி வரினும், காமக் குறிப்பினாற் புணர்ந்த தலைமகள் கூறுதலின், அவள் காதலைச் சிறப்பிக்க வந்தது. "செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று அவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய." (கலித். 19) என்பதனுள் 'யான்யாங் கறிகோ' எனப்பேதைமை பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது. "அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற இனி." (கலித். 19) என்பதனுள் தலைவி 'மகனல்லை' எனல் நிம்பிரியாகிய வெறுப்புப் பற்றி வந்தது. இதுவும் பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது. "உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழைவொடு வருதி நீயே இஃதோ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னும்இவ் ஊரே." (குறுந். 295) இதனுள் 'ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை' எனத் தலைமகன் செல்வக் குறைபாடு கூறிப் 'பெருநலக் குறுமகள் வந்தென விழவாயிற்றென்னு மிவ் ஊர்' என்றமையான் நல்குரவு பற்றித் தலைமகளைச் சிறப்பிக்க வந்தது. இச்சூத்திரத்துள் வரைந்து கூறாமையின், தலைவியுந் தலைவனுந் தோழியுஞ் செவிலியுங் கூறப்பெறுவர் என்று கொள்க. (49) ஒருசார்மரபு 242. அன்னை என்னை என்றலும் உளவே தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின என்மனார் புலவர். என் - எனின், இதுவுமொருசார் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன்னை என்னை என்று சொல்லுதலும் உள. அவை முன்புள்ளார் சொல்லிப்போந்த முறைமை. அவைதாம், சொல்லினானும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன்றாத மரபினை யுடைய எ-று. எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள் வேறுபாடு. இவை அகத்தினும் புறத்தினும் வரும். "ஒரீஇ ஒழுகு மென்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே." (குறுந். 203) என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது. "அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்." (குறுந். 33) என்பது தலைவி தோழிக்குக் கூறியது. "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்." (குறள். 771) "என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே." (புறம். 84) இவையும், 'என்றலும்' என்ற வும்மையான் இந்நிகரனவுங் கொள்க. "எந்தைதன் உள்ளங் குறைபடா வாறு." (கலி. 50) என வரும். (50) காட்டலாகப் பொருள் 243. ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா கற்பும் ஏரும் எழிலும் என்றா சாயலும் நாணும் மடனும் என்றா நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம் நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப. என் - எனின், மேற் பொருட்பாகுபாடு முதல் கரு வுரிப் பொரு ளென உணர்த்தி, அவற்றின் பாகுபாடு இத்துணையும் ஓதினான். அவற்றுட் பாகுபடுத்திக் காட்டலாகாதன சிலபொருள் கண்டு அவற்றைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒப்பு முதலாக நுகர்ச்சி யீறாக அவ்வழி வருஞ் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறு படுத்தி யாசிரியன் காட்டலாகாத பொருளையுடைய எ-று. ஒப்பாவது தந்தையை யொக்கும் மகன் என்பது. அவ்விருவர்க்கும் பிறப்பு வேறாயினவழி ஒப்பாகிய பொருள் யாதென்றார்க்கு இதுவெனக் காட்டலாகாமையின், அவ்விருவரையுங் கண்டான் அவ் வொருவ ரொருவரை ஒக்குமது பிறனொருவன்மாட்டுக் காணாமையின் தானே யப்பொருண்மையை உணரும் என்பது. உரு என்பது - உட்கு. அது பயிலாத பொருளைக் கண்டுழி வருவ தொரு மனநிகழ்ச்சி. இவருட்கினார் என்றவழி, மனத்தினான் உணரக் கிடந்தது. வெறுப்பு என்பது - செறிவு. அஃது அடக்கங் குறித்து நின்றது. அவரடக்கமுடையர் என்றவழி அதுவும் மனத்தினான் உணரக்கிடந்தது. கற்பு என்பது - மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது. ஏர் என்பது - தளிரின்கண் தோன்றுவதொரு பொலிவுபோல எல்லா வுறுப்பினும் ஒப்பக் கிடந்து கண்டார்க் கின்பத்தைத் தருவதொரு நிற வேறுபாடு. அஃது எல்லா வண்ணத்திற்கும் பொதுவா கலின் வண்ணம் அன்றாயிற்று. இது வண்ணம் பற்றி வரும். 'இவன் ஏருடையன்' என்றால் அதுவும் மனங்கொளக் கிடந்தது. எழில் என்பது - அழகு. அது மிக்குங் குறைந்தும் நீடியும் குறுகியும் நேர்ந்தும் உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இதுவும் அழகியன் என்றவழி அழகினைப் பிரித்துக் காட்டல் ஆகாமையின் ஈண்டோதப்பட்டது. சாயல் என்பது - மென்மை. அது நாயும் பன்றியும் போலாது மயி லுங் குயிலும் போல்வதொரு தன்மை. அதுவும் காட்டலாகாமையின் ஈண்டோதப்பட்டது. நாண் என்றது - பெரியோர்ஒழுக்கத்து மாறாயின செய்யாமைக்கு நிகழ்வதொரு நிகழ்ச்சி. அதுவும் காட்டலாகாது. மடன் என்பது - பெண்டிர்க் குள்ளதோர் இயல்பு. அஃது உய்த் துணர்ந்து நோக்காது கேட்டவாற்றானுணரும் உணர்ச்சி. அதுவும் காட்டலாகாது. நோய் என்பது - துன்பம். இவன் துன்பமுற்றான் என்றவழி அஃதெத்தன்மையது என்றார்க்குக் காட்டலாகாமையின் அதுவும் ஈண்டோதப்பட்டது. வேட்கை என்பது - யாதானும் ஒன்றைப் பெறல்வேண்டு மெனச் செல்லும் மனநிகழ்ச்சி. இவன் வேட்கையுடையான் என்றவழி அஃது எத்தன்மை என்றார்க்குக் காட்டலாகாமையின் ஈண்டோ தப்பட்டது. நுகர்வு என்பதும் அது. ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம் என்றதனான், அன்பு அழுக் காறு பொறை அறிவு என்பனவும் இவைபோல்வனவுங் கொள்க. இவையெல்லாம் அகத்திணை புறத்திணை இரண்டற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்பொருண்மேற் சொல் நிகழ்ந்த வென்றாலோ எனின், இது மேற்கூறப்பட்ட பொருள், பொருளென்பது அறிவித்தல். அவை உள்பொருள் என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைக்கும். (51) பொருள் இல்லாத காலம் இல்லை 244. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மை யான. என் - எனின், இதுவும் மேற்கூறப்பட்ட பொருள், பொருள் என்பது அறிவித்தலை நுதலிற்று. (இ-ள்.) தேவருலகத்தினுங் கடல்சூழ்ந்த வுலகத்தினும் மேற் சொல்லப்பட்ட பொருளில்லாத காலம் இன்மையான் உள்பொரு ளென்றே கொள்ளப்படும் எ-று. (52) ஐந்தாவது பொருளியல் முற்றிற்று. 6 மெய்ப்பாட்டியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்து; மெய்ப்பாடு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதியாதோ எனின், முன்னர்க் கூறுதும். சுவையும் சுவைக்குறிப்பும் 245. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. என்பது சூத்திரம். இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பிறர் வேண்டுமாற்றான் சுவையுஞ் சுவைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்ணைத் தோன்றிய என்பது - விளையாட்டாயத் தின்கண் தோன்றிய எ-று. பண்ணையுடையது பண்ணை என்றாயிற்று. எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப என்பது - முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் எ-று. புறத்து நிகழ்வதனைப் 'புறம்' என்றார். 'பண்ணைத் தோன்றிய' 'கண்ணிய புறன்' எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், 'எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன்' என ஒரு சொல் நடையாக ஒட்டித் 'தோன்றிய' என்னும் பெயரெச்சத் திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான் கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது. ஈண்டுச் சொல்லப்படுகின்ற பதினாறு பொருளும், கற்று நல்லொ ழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையாற், பண்ணைத் தோன்றிய என்றான்; என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்கண் தோன்றாமையின். பிறவும் அன்ன. முப்பத்திரண்டாவன - நகை முதலானவற்றிற் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன. அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலைமை என்றும், வீரக் குறிப்பு, அச்சக் குறிப்பு, இழிப்புக் குறிப்பு, வியப்புக் குறிப்பு, காமக் குறிப்பு, அவலக் குறிப்பு, உருத்திரக் குறிப்பு, நகைக் குறிப்பு, நடுவு நிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவு நிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம். வியப்பெனினும் அற்புதமெனினும் ஒக்கும். காமமெனினுஞ் சிருங்காரமெனினும் ஒக்கும். அவலம் எனினும் கருணையெனினும் ஒக்கும். உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும். நடுவு நிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும். வீரம் என்பது மாற்றாரைக் குறித்து நிகழ்வது. அச்சம் என்பது அஞ்சத் தகுவன கண்டவழி நிகழ்வது. இழிப்பென்பது இழிக்கத் தக்கன கண்டுழி நிகழ்வது. வியப்பென்பது வியக்கத் தக்கன கண்டுழி நிகழ்வது. காமம் என்பது இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது. அவலம் என்பது இழவு பற்றிப் பிறப்பது. உருத்திரம் என்பது அவமதிப்பாற் பிறப்பது. நகையென்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது. நடுவுநிலைமை யென்பது யாதொன் றானும் விகாரப்படாமை. அவை இற்றாக, மத்திமமென்பதனை ஈண்டொழித்தது என்னை யெனின், "மத்திமம் என்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப." "நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற் செத்தி யோர்க்குஞ் சாந்துபடுப்போர்க்கும் ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப." "உய்ப்போ ரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவர் அறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும் அச்சுவை யெட்டும் அவர்க்கில ஆதலின் இச்சுவை ஒருதலை ஆதலின் இதனை மெய்த்தலைப் படுக்கஇதன் மிகவறிந் தோரே." என்பது செயிற்றியச் சூத்திரம். இதனானே இது வழக்கிலக்கணம் அன்று என உணர்க. இனிச் சுவை என்பது காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதொரு விகாரம். "இருவகை நிலத்தின் இயல்வது சுவையே." என்றும், "நின்ற சுவையே ... ... ஒன்றிய நிகழ்ச்சி சத்துவம் என்ப." என்றும், "சத்துவம் என்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் சிலிர்த்தல் கண்ணீர் வார்தல் நடுக்கங் கடுத்தல் வியர்த்தல் தேற்றம் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிப சத்துவந் தானே." என்றும் சார்பொருள் உரைப்ப. அவை வருமாறு: பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமுங் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பு முளவாமன்றே? அவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு. நடுக்கமும் வியர்ப்புஞ் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவன என்று கொள்க; ஏனைய மன நிகழ்ச்சி. பிறவு மன்ன. இவற்றின் பிரிவை நாடக நூலிற் காண்க. (1) மேலதற்குப் புறனடை 246. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. என் - எனின், மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமு முண்டு எ-று. அவையாவன சுவை, குறிப்புப் பதினாறனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்த்தல். (2) மெய்ப்பாடு ஆமாறு 247. நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப. என் - எனின், மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நகை முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் எ-று. மெய்ப்பாடென்பது யாதோவென்னின், "உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே." எனச் செயிற்றியனார் ஓதுதலின் அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. அஃதேல், இவ் விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்ய வேண்டுதலின் ஈண்டுங் கூற வேண்டுமென்க. "உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்." (தொல். பொ. 505) என இவ்வாசிரியன் மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென ஓதினமை உணர்க. நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது. அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. இளிவரல் இழிப்பிற் பிறப்பது. மருட்கை வியப்பிற் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற் பிறப்பது. பெரு மிதம் வீரத்திற் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கனவற்றாற் பிறப்பது. உவகை சிருங்காரத்திற் பிறப்பது. (3) நகையும் நகைப்பொருளும் 248. எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப. என் - எனின், நகையும் நகைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எள்ளுதற் பொருண்மை முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நகைப்பொருளாம் எ-று. எனவே காரணம் பற்றி நகையும் நான்காயின. "நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கி நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே." என்பதனான் நகைபடுபொருள் கண்டதன்வழி முறுவலொடு வரும் மகிழ்ச்சிப் பொருளாமாறு நகையாவது என்று கொள்க. "உடனிவை தோன்றும் இடம்யா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும் மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும் கவற்சி பெரிதுற் றுரைப்போர் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும் மற்று மொருவர்கட் பட்டோர் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணும் மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணும் ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும் களியின் கண்ணுங் காவாலிக் கண்ணும் தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும் ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும் காரிகை யறியாக் காமுகர் கண்ணும் கூனர் கண்ணும் குறளர் கண்ணும் ஊமர் கண்ணுஞ் செவிடர் கண்ணும் ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந் தோன்றும் என்ப துணிந்திசி னோரே." என இவ்வகையெல்லாம் உளவெனச் செயிற்றியனார் ஓதுதலின், அவை நான்காகியவாறு என்னையெனின், முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மை யாயிற்று; மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப் பொருண்மை யாயிற்று; கவற்சி பெரிதுற் றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று; குழவி கூறு மழலை இளமைப் பொருளாயிற்று; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க. புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க. இப் பொருண்மை செயிற்றியத்தில் 'வலியோன் கூறும் மெலிவு' என்பதனாற் கொள்க. மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னையெனின், மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல்; பேதைமை யென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல். எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்றமையான் தன் மாட்டு நிகழும் வழியுங் கொள்க. உ-ம்: "நகையாகின்றே தோழி" என்னும் நெடுந்தொகைப் பாட்டி னுள், "தண்துறை ஊரன் திண்தார் அகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட் டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென் றிம்மனை அன்றஃ தும்மனை யென்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே." (அகம். 56) எனக் கூறி 'நகையாகின்றே தோழி' என்றமையின் எள்ளல் பற்றி நகை தோன்றியது. ஏனவும் வந்தவழிக் காண்க. (4) அழுகையும் அழுகைப்பொருளும் 249. இழிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே. என் - எனின், இஃது அழுகையாமாறும் அதற்குப் பொருளு முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மை யும் அழுகைக்குப் பொருளாம் எ-று. இழிவு என்பது - பிறர் தன்னை யெளியன் ஆக்குதலாற் பிறப்பது. இழவாவது - உயிரானும் பொருளானும் இழத்தல். அசைவென்பது - தளர்ச்சி. அது தன்னிலையிற் றாழ்தல். வறுமை என்பது - நல்குரவு. இவை ஏதுவாக அழுகை பிறக்கும் எ-று. இதுவுந் தன்மாட்டுற்றதனானும் பிறர்மாட்டுற்றதனானும் பிறக்கும். "கவலை கூர்ந்த கருணையது பெயரே அவல மென்ப அறிந்தோர் அதுதான் நிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்தி ளைத்தொ லிப்பத் தளர்ந்தவை நிறங்கிளர் அகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கோல்முனைக் கவற்சி அலைக்கண் மாறா அழுகுரல் அரவம் இன்னோர் அன்னவை இயற்பட நாடித் துன்னினர் உணர்க துணிவறிந் தோரே." "இதன்பயம் இவ்வழி நோக்கி அசைந்தனர் ஆகி அழுத லென்ப." என்பன செயிற்றிய மாகலின். இவையெல்லாம் இந் நான்கினுள் அடங்குமாறு அறிந்துகொள்க. இதற்குச் செய்யுள். "ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனென் கொளினே அகன்மார் பெடுக்க வல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்கம் நடந்திசிற் சிறிதே." (புறம். 255) இஃது இழிவுபற்றி வந்த அழுகை. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (5) இளிவரலும் இளிவரல்பொருளும் 250. மூப்பே பிணியே வருத்த மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. என் - எனின், இளிவரலாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மை யும் இளிவரலுக்குப் பொருளாம் எ-று. இவை நான்குந் தன்மாட்டுத் தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும். உ-ம்: "தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று." (நாலடி. 14) என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது. பிணி யென்பது - பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம். "மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்." (நாலடி. 41) இஃது உடம்பினை அருவருத்துக் கூறுதல். வருத்தமென்பது - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத் தானும் இழிப்புப் பிறக்கும் எ-று. உ-ம்: "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று." (குறள். 1255) இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது. உ-ம்: "தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே." (புறம். 74) இது தன்மாட்டு வருத்தத்தானே இழிப்புப் பிறந்தது. மென்மை என்பது - நல்குரவு. "அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்." (குறள். 1047) "இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்." (குறள். 1044) என வரும். இன்னும் 'யாப்புற' என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன. இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க. (6) மருட்கையும் மருட்கைப்பொருளும் 251. புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. என் - எனின், இது மருட்கை யாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் மருட்கை பிறக்கும் எ-று. மதிமை சாலா மருட்கை என்றமையான் அறிவுடையார் இப் பொருட்கண் வியவார் என்று கொள்க. புதுமையாவது - யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தி னுந் தோன்றாததொரு பொருள் தோன்றியவழி வியத்தல். அது கந்தருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன. பெருமை என்பது - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலை யும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும். சிறுமை என்பது - பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது 'கடுகின்கட் பல துளை' போல்வன. ஆக்கம் என்பது - ஒன்றன் பரிணாமங் கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின ஆகியவழி வியத்தலும், நல்கூர்ந்தான் யாதொன்று மிலாதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரண முணராதான் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங் கண்டு வியத்தலுமாம். பிறவும் உலகத்து வியக்கத் தகுவன எல்லாம் இவற்றின்பாற் படுத்திக் கொள்க. 'இருந்தவேந்தன்' என்னும் அகப் பாட்டினுள், "......... பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்த வாறு நனியறிந் தன்றோ இலனே தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே." (அகம். 384) என்றது வியந்தவாறு. "பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினிக் கமரர்க் கரசன் தமர்வந் தீண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி அவளோடெம் கட்புலங் காண விட்புலம் போயது இறும்பூது போலும்அஃ தறிந்தருள் நீயென." (சிலப். பதிகம்) என்றது புதுமை. (7) அச்சமும் அச்சப் பொருளும் 252. அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. என் - எனின், அச்சமாகிய மெய்ப்பாடும் அதன் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அணங்கு முதலாகச் சொல்லப்பட்ட நான்கினும் பிறக் கும் மாறுபடுதல் அமையாத அச்சம் நால்வகைப்படும் எ-று. பிணங்கல் சாலுமாயின் நடுக்கம் முதலாயின உளவாகா; அவை பிணங்கல் சாலாத வழியே உளவாவ வென்று கொள்க. அவை நாலச்சமும் வருமாறு:- கொலை களவு கட் காமம் பொய் யென்பனவற்றை நிகழ்த்தின வர்க்கு அரசனான் அச்சம் வருதலின் அவனும் அஞ்சு பொருளாயினான். உ-ம்: "மையல் வேழ மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனத் திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாண்மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையின் நடுங்கி" (குறிஞ்சிப். 165 - 169) என வரும். பிறவு மன்ன. (8) பெருமிதமும் பெருமிதப் பொருளும் 253. கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என் - எனின், பெருமித மாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கல்வியானுந் தறுகண்மையானும் புகழ்மையானும் கொடையானும் பெருமிதம் நால்வகைப்படும் எ-று. இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கு மகிழ்ச்சி பெருமிதம் என்று கொள்க. பெருமிதமாவது - தன்னைப் பெரியனாக நினைத்தல். "உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே நின்னொடு பாங்கலா வீரர் படை." (புறப். வெ.7:8) இது வீரம் பற்றி வந்தது. பிறவு மன்ன. (9) வெகுளியும் வெகுளிப் பொருளும் 254. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே. என் - எனின், வெகுளியாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) உறுப்பறை முதலாகச் சொல்லப்பட்ட நான்கனானும் வெகுளி பிறக்கும் எ-று. இப்பொருள் நான்குந் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க. உறுப்பறையாவது - அங்கமாயினவற்றை அறுத்தல். குடிகோளாவது - கீழ்வாழ்வாரை நலிதல். அலை என்பது - வைதலும் புடைத்தலும். கொலை என்பது - கொல்லுதற் கொருப்படுதல். ஊடற்கண்ணும் வெகுளி தோற்றுமால் எனின், அஃது இன்பத்திற்குக் காரணமாதலான் தலைமகள் புருவநெரிவும் வாய்த் துடிப்புங் கண்ட தலைமகற்கு வெகுட்சி பிறவாது உவகை பிறக்கும். தலைமகன் வெகுளுவனாயின் அதன்பாற் படும். "உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமந் ததையத் தாக்கி முரசமோ டொருங்ககப் படேஎ னாயின்." (புறம். 72) என்பது வெகுளி பற்றி வந்தது. பிறவு மன்ன. (10) உவகையும் உவகைப் பொருளும் 255. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே. என் - எனின், உவகை யாமாறும் அதன்பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செல்வ நுகர்ச்சியானும், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும், மகளிரொடு புணர்தலா னுஞ், சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகை பிறக்கும் எ-று. "ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும் ஒத்த காமத் தொருவனொடு பலரும் ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும் ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும் நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும் குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும் கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும் துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும் அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும் நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைதலும் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும் ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும் சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன் துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே." எனச் செயிற்றியனார் விரித்தோதினா ராயினும் இவையெல்லாம் இந் நான்கனுள் அடங்கும். "தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு." (குறள். 1107) என்றவழித் தம்மிலிருந்து தமது பாத்துண்ட செல்வ நுகர்ச்சி. முயக்கம். புணர்ப்பு. "வையை வருபுனல் ஆடல் இனிதுகொல் செவ்வேற்கோ குன்ற நுகர்தல் இனிதுகொல் வைவ்வேல் நுதியன்ன கண்ணார் துணையாக எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும் வழிமயக் குற்று மருடல் நெடியான் நெடுமாடக் கூடற் கியல்பு." (பரிபாடல்) என வரும். பிறவு மன்ன. (11) வேறுபட்ட சில மெய்ப்பாடுகள் 256. ஆங்கவை ஒருபால் ஆக வொருபால் உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக் கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ அவையும் உளவே அவையலங் கடையே. என் - எனின், மேற்சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடும் ஒழிய வேறுபட்டு வருவன சில மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒரு பக்கம், உடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவை யல்லாத விடத்து எ-று. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். உடைமையாவது - யாதானு மொருபொருளை உடையனா யினமையான் வருதலாகும் மன நிகழ்ச்சி. "நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சாது." (புறம். 72) என வரும். இன்புறலாவது - நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதொரு மன நிகழ்ச்சி போல்வது. "கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு." (நற். 182) ".........உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள்." (நற். 3) "விட்டகன் றுறைந்த நட்டோர்க் கண்ட நாளினும் இனிய நல்லாள்." எனக் காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறுதல். நடுவுநிலைமையாவது - ஒருமருங்கு ஓடாது நிகழும் மன நிகழ்ச்சி. "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி." (குறள். 118) என வரும். அருளாவது - எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல். "அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்." (கலித்.11) என்றாற்போல வருவது. தன்மை யென்பது - சாதியியல்பு. பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்றின்னோர்மாட்டு ஒருவரை யொருவர் ஒவ்வாமற் கிடக்கு மியல்பு. அது மெய்க்கட்டமையின்கண் வேறுபட்டு வருதலின் மெய்ப்பாடாயிற்று. "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்" (புறம். 315) என்றும், "புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழில் மார்பின் மறலி அன்ன களிற்றின்மிசை யோனே." (புறம். 13) என்றும், "காயாம்பூக் கண்ணிக் கருந்துவ ராடையை மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் ஆயனை யல்லை." (கலித். 108) என்றும், "தேனொடு நீடு மயிற்குற மாக்கள்" என்றும் வரும். அடக்கம் என்பது - மனமொழிமெய்யி னடங்குதல். அது பணிந்த மொழியும் தானை மடக்கலும் வாய் புதைத்தலும் போல்வன. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்" (குறள். 126) என்றும், "யாகாவா ராயினும் நாகாக்க" (குறள். 127) என்றும், "நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்" (குறள். 124) என்றும் வருவன. இதுவும் அடங்காமை போலாமையின் மெய்ப்பா டாயிற்று. வரைவு என்பது - செய்யத் தகுவனவும் தவிரத் தகுவனவும் வரைந்து ஒழுகும் ஒழுக்கம். அது, "பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை" (திரிகடுகம் 29) என்றாற்போல வருவன. அன்பு என்பது - பயின்றார்மாட்டுச் செல்லுங் காதல். "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு." (குறள். 79) என்பதனான் அறிக. கைம்மிகல் என்பது - குற்றமாயினுங் குணமாயினும் அளவின் மிகுதல். அது நிலையின் வேறுபடுதலின் மெய்ப்பாடாயிற்று. கையென் பது அளவுகுறித்ததோர் இடைச் சொல். "காதல் கைம்மிகல்" (தொல். மெய்ப்பாட்டியல் 23) என்றும், "குணனிலனாய்க் குற்றம் பலவாயின்" (குறள். 868) என்றும் இவ்வாறு வருவன. நலிதல் என்பது - பிறரை நெருக்குதல். அதன்கண் நிகழும் மன நிகழ்ச்சி நலிதலாயிற்று. இதுவும் மேற் சொல்லப்பட்ட எட்டும் இன்மையின் ஈண்டு ஓதப்பட்டது. "பகைமெலியப் பாசறையு ளான்." (நெடுநல். இறுதிவெண்பா.) எனவரும். பிறவும் அன்ன. சூழ்ச்சி என்பது - எண்ணம். "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்." (குறள். 445) இதுவுமொரு மன நிகழ்ச்சி. வாழ்த்தல் என்பது = பிறனை வாழ்த்துதல். அதுவும் மேற்கூறப்பட்டன போலாமையான் வேறொரு மெய்ப்பாடாக ஓதப்பட்டது. "வாழியாதன் வாழி" (ஐங்குறு. 1) என்றும், "எங்கோ வாழிய குடுமி" (புறம். 9) என்றும் இவ்வாறு வருவழி ஆண்டு வரும் மன நிகழ்ச்சி மெய்ப்பாடாம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின், அது வெகுட்சியின் முதிர்வு. இஃது அன்பின் முதிர்வாகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்காதென்க. நாணல் என்பது .... தமக்குப் பழி வருவன செய்யாமை. "பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி என்னு முலகு." (குறள். 1015) "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்." (குறள். 1017) என வரும். துஞ்சல் என்பது - உறக்கம். அதுவும் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று. "........................ முனிவின்றி நனந்தலை யுலகமுந் துஞ்சும்." (குறுந்.6) என வரும். அரற்று என்பது - உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு. அஃதும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது. "பாயல்கொண் டென்தோட் கனவுவா ராய்கோல் தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப்பி யானை விலங்குதேர்க் கோடும் நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருள் முற்று மளவு." (கலித். 24) என வரும். இது, களவியலின் பாற்படுமெனின், அரற்றென்பது ஒரு பொருளைப் பலகாற் கூறுதல்; அஃது அப்பொருண்மேற் காதலாற் கூறுதலின் அதுவுமொரு மெய்ப்பாடாயிற்றெனவுமாம். "பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்." (முத்தொள். 104) என வரும் என்பது கொள்க. கனவுநிலை நனவு போலாமையின் மெய்ப்பாடாயிற்று. கனவு - "நனாவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது" (குறள். 1215) என வரும். முனிதல் என்பது - வெறுத்தல். "காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தரீஇச் சென்ற மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவது அம்மஇத் திணைப்பிறத் தல்லே." (குறுந். 45) எனக் குடிப் பிறத்தலை வெறுத்தவாறு காண்க. நினைத்தல் என்பது - கழிந்ததனை நினைத்தல். அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோற்றுதலின் மெய்ப்பாடாயிற்று. "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்." (குறள். 1203) வெரூஉதல் என்பது - அச்சம் போல நீடுநில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது. "ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல்யாம் நின்னை வெரூஉதுங் காணுங் கடை." (கலித். 87) என்றவழி அஞ்சத் தகுவது கண்டு அஞ்சுதலின்மையும் அஞ்சினார்க்குள்ள வேறுபாடு அதன்பின் நிகழாமையும் காண்க. மடி என்பது - சோம்புதல். "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும்." (குறள். 608) என்றவழி மடி யென்பதொரு மெய்ப்பாடுண்மை யறிக. கருதல் என்பது குறிப்பு. "குறிக்கொண்டு நோக்காமை அல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்." (குறள். 1095) என்றவழிக் குறிக்கோள் என்பதொரு மெய்ப்பாடுண்மை யறிக. ஆராய்ச்சி என்பது - ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல். ஆராய்தல் எனினுந் தெரிதல் எனினுந் தேர்தலெனினும் நாடலெனினும் ஒக்கும். "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த" (குறள். 511) "ஆயும் அறிவினர்" (குறள். 918) "தேரான் பிறனைத் தெளிந்தான்." (குறள். 508) எனவும் ஆராய்த லென்பது தோற்றியவாறு காண்க. விரைவு என்பது - ஒருபொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான் கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி. "கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே." (புறம். 275) "போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ." (புறம். 82) என வரும். பிறவு மன்ன. உயிர்ப்பு என்பது - முன்பு விடும் அளவினன்றிச் சுவாதம் நீள விடுதல். "......... பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ள மின்னுந் தன்னுழை யதுவே." (குறுந். 142) எனவரும். கையாறு என்பது - காதலர் பிரிந்தால் வருந் துன்பமும் அந்நிகரன வும் வருவது. "தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ." (கலித். 24) என்றவழிக் கையாறென்பதும் ஒரு மெய்ப்பாடாயிற்று. இடுக்கண் என்பது - துன்பமுறுதல். மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னை யெனின், கையாறு என்பது இன்பம் பெறாமையான் வருந் துன்பம்; இடுக்கணாவது துன்பமாயின வந்துறுதல். "அடுக்கி வரினு மழிவிலா னுற்ற இடுக்கண் இடுக்கட் படும்." (குறள். 625) என்றவழி இடுக்கணென்பது வருவதொன்றாகக் கூறியவாறு காண்க. கையாறென்பது - மனத்தின்கண் நிகழ்வதொரு மெய்ப்பாடு. இடுக்கணென்பது - மெய்யானுந் தோற்றுவதொரு மெய்ப்பாடு. பொச்சாப்பு என்பது - மறத்தல். "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்." (குறள். 199) என்பதனாற் பொச்சாப்பு மறத்தலாயிற்று. பொறாமை என்பது - பிறர்க்கு ஆக்க முதலாயின கண்டவழி யதனைப் பொறாது நடக்கும் மனநிகழ்ச்சி. அதனை அழுக்காறு என்ப. "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்." (குறள். 168) என்றவழி அழுக்காறு என ஒரு மெய்ப்பாடு உளதாகியவாறு கண்டு கொள்க. வியர்த்தல் என்பது - தன்மனத்தின் வெகுட்சி தோன்றியவழிப் பிறப்பதொரு புழுக்கம். "பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்." (குறள். 487) இதன்கண். உள்வேர்ப்பர் என்றதனான் மன நிகழ்ச்சி ஆகியவாறு காண்க. ஐயம் என்பது - ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை. "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு." (குறள். 1081) என்றவழி, ஐயம் மனத்தின்கண் நிகழ்ந்தவாறு காண்க. மிகை என்பது - ஒருவனை நன்கு மதியாமை. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்." (குறள். 158) இதனுள் மிகுதி யென்பது நன்கு மதியாமையாம். நடுக்கம் என்பது - யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி. "கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே." (கலித். 13) என வரும். இத்துணையும் கூறப்பட்டன அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க. (12) முதல் அலத்தை மெய்ப்பாடு 257. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப. என் - எனின், மேல் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொது வாகிய மெய்ப்பாடு உணர்த்தி, இனி அகத்திற்கே யுரியன உணர்த்து கின்றான்; முற்பட்ட அவத்தை பத்தினும் முதலவத்தைக்கண் பெண்பாலார் குறிப்பினான் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புகுமுகம் புரிதல் என்பது - தலைமகன் புணர்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல். அஃதாவது. "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து." (குறள். 1085) என்றாற்போலக் கூறியவழி ஒருவாது நிற்றல். பொறிநுதல் வியர்த்தல் என்பது - அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும் வந்துழி வரும் நுதல் வியர்ப்பு. நகுநய மறைத்தல் என்பது - அதன்பின்னர்த் தலைமகன் கூறுவன கேட்டு நகை வந்துழி, நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல். சிதைவு பிறர்க்கின்மை என்பது - தன்மனனழிவு பிறர்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது. தகுமுறை நான்கே யொன்றென மொழிப என்பது - இவ்வாறு தகுதியுடையவாய் முறைப்பட வருவன நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு எ-று. (13) இரண்டாம் அலத்தை மெய்ப்பாடு 258. கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு கெழீஇய நான்கே இரண்டென மொழிப. என் - எனின், இரண்டாம் அவத்தையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கூழை விரித்தல் முதலாகச் சொல்லப்பட்ட முறைமை யுடைய நான்கும் இரண்டாம் அவத்தை மெய்ப்பாடு எ-று. கூழை விரித்தலாவது - மேல் நகுநயமறைத்தாள் காதன்மேல் வேட்கை செல்லுமாயின் வாளாது நிற்றலாற்றாது மயிரினைக் குலைத்தல். காதொன்று களைதல் என்பது - காதிலணிந்த தொன்றை வீழப்பண்ணி யதனைத் தேடுகின்றாள் போல நிற்றல். ஊழணி தைவரல் என்பது - முறைமையாக அணிந்த வணியைத் தைவருதல் எ-று. உடை பெயர்த் துடுத்தல் என்பது - ஆடையைக் குலைத்துடுத்தல். அவை நான்குங் காமத்திற் குறியிலாதார் தலைமக்கள் முன் செய்யாமையாற் றனது காமக் குறிப்பினானும் அவள் வாளாது நிற்பின் இதற்குக் காரணம் என்னையெனப் பிறர் ஐயப்படாமற் சிறிது பொழுதாயி னும் இவ்விடை நிற்கலாகும் எனவும் இவை நிகழ்த்தும் எ-று. (14) மூன்றாம் அலத்தை மெய்ப்பாடு 259. அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. என்-எனின், மூன்றாம் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அல்குல் தைவரல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் மூன்றாம் அவத்தை மெய்ப்பாடென்க எ-று. அல்குல் தைவரல் என்பது - மேல் உடைபெயர்த்துடுத்தவள் அதனைப் பேணும் மதிப்பு உள்வழித் தம்மைப் பேணுதல் பெண்டிர்க்கு அழகு. அணிந்தவை திருத்தலும் அவ்வாறே கொள்க. இல் வலியுறுத்தல் என்பது - தம் இல்லத்தோர் வலி யுறுத்தல். அது சார நினைத்தாரைத் தமது இற்பிறப்புச் சொல்லி இசைவில்லாரைப் போல மறுத்துக் கூறுதல். இருகையு மெடுத்தல் என்பது - அவ்வழி மறுத்த வாய்பாட்டாற் கூறினும் இரண்டு கையினையும் பிறிதொரு காரணம் பற்றிக் கிளர்த்தல். தலைமக்கள் முன்னர்ப் பெண்டிர் கை கிளர்த்தாராதலாற் புணர்ச்சிக் கொருப்பட்ட வுள்ளத்தான் கிளர்த்து மென்க. இதனாற் பயன் நாண் நீங்கல். (15) நான்காம் அலத்தை மெய்ப்பாடு 260. பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப. என் - எனின், நான்காம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாராட்டெடுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நான்காமவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடென்க. பாராட்டெடுத்தலாவது - தலைமகன் நின்ற நிலையையுங் கூறிய கூற்றையும் தனித்தவழியும் எடுத்து மொழிதல். மடந்தப வுரைத்தல் என்பது - பெண்டிரது இயல்பாகிய மடப்பங் கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும்வழி யதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் என்பது - ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலர் ஆயிற்றென நாணுதல். கொடுப்பவை கோடல் என்பது - கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன் பொருள் வாங்காமையின், இதுவுமொரு மெய்ப்பாடாக ஓதப்பட்டது. (14) ஐந்தாம் அலத்தை மெய்ப்பாடு 261. தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப. என் - எனின், ஐந்தா மவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழு மிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தெரிந்துடம்படுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஐந்தாம் அவத்தைக்கு மெய்ப்பாடாம் எ-று. தெரிந்துடம்படுதலாவது - தலைமகன் கொடுப்பவை கொண்ட தலைமகள் ஆராய்ந்து உடம்படுதல் எ-று. ஆற்றாமை பெருகுகின்ற காதலின் இத்துணையும் மறுத்தவள் உடம்படுதல் என்றார். அவ்வழியுந் தெரிந்துடம்படுதல் என்றமையான், ஆராய்ந்தல்லது புணர்ச்சிக்கு உடம்படாமை கொள்க. திளைப்பு வினை மறுத்தல் என்பது - விளையாட் டாயமொடு திரிவாள் வேட்கை நலிதலான் அவ்விளையாட்டு வினையை மறுத்தல் எ-று. கரந்திடத்தொழிதல் என்பது - தலைமகனைக் காண்டல் வேட்கை யான் ஒளித்துப் பார்த்தொழிதல் எ-று. கண்டவழி யுவத்தல் என்பது - தலைமகனைக் கண்டவழி மகிழ்தல் எ-று. (17) ஆறாம் அலத்தை மெய்ப்பாடு 262. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு விளம்பிய நான்கே ஆறென மொழிப. என் - எனின், ஆறாம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறஞ்செயச் சிதைதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஆறாம் அவத்தைக்கண் மெய்ப்பாடாம் எ-று. புறஞ்செயச் சிதைதலாவது - தலைமகள் கோலஞ் செய்யும் வழியதற்கு மகிழ்ச்சியின்றிச் சிதைவுடையளாதல். புலம்பித் தோன்ற லாவது - பொலிவழிந்து தோன்றல். கலங்கி மொழிதல் என்பது - கூறுங் கூற்றுக் கலக்கமுற்றுக் கூறுதல். கையறவுரைத்த லாவது - செயலறவு தோன்றக் கூறல். இச் சொல்லப்பட்ட ஆறு அவத்தையும் பெண்பாலார் எல்லார்க்கும் பொது. இவை புணராதவழித் தோன்றுதல் பெரும்பான்மை. (18) மேலதற்கு ஒரு புறனடை 263. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப. என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம் எ-று. வினை என்பது - கற்பிற்குரிய கரணமாம். இவையெல்லாங் கற்பிற்குரிய கரணத்துக்கு நிமித்தமாம் எ-று. அன்னவை பிறவுமாவன: நோக்காமை நோக்கி யின்புறுதல், தனியிடை நகுதல், நோக்குங் காலைச் செற்றார் போல் நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல். இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின், ஏழாமவத்தை நாண் நீங்கிய காதலின் தேறுதலொழிந்த காமத்து மிகுதியாகிய பெருந்திணைப் பாற்படும்; ஒத்த காமத்து நிகழாது. எட்டாவது உன்மத்தம். ஒன்பதாவது மயக்கம். பத்தாவது சாக்காடு. ஆதலான் நடுவணைந்திணைக்கண் வருவன ஆறு எனக் கூறினான் என்று கொள்க. (19) மேலதற்கு ஒரு புறனடை 264. வினையுயிர் மெலிவிடத் தின்மையும் உரித்தே. என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கரண நிகழ்ச்சி உயிர் மெலிந்தவிடத்து இன்மையும் உரித்து எ-று. எனவே, இயற்கையும் நிகழும் என்றவாறாம். உம்மை எதிர்மறை யாகலான், கரண நிகழ்தல் பெரும்பான்மை. உயிர் மெலிவிடம் என்றமை யான் ஐந்தாவது முதலாக இயற்கை நிகழும் என்று கொள்க. அதனானே யன்றே யவ்வழித் 'தெரிந்துடம்படுதல்' என ஓதுவானாயிற்றென்க. (20) கைக்கிளைக்கு உரியதொரு மரபு 265. அவையும் உளவே அவையலங் கடையே. என் - எனின், கைக்கிளைக் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள: நடுவணைந்திணை யல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் எ-று. 'அவையலங்கடை' என்றமையாற் பாடாண்பாட்டிற் கைக்கிளை யும் கொள்ளப்படும். அஃதேல், ஆண்டும் புகுமுகம் உளதோவெனின், தலைமகள் காட்சி மாத்திரத்தைத் தனது வேட்கைமிகுதியாற் புகுமுக மாய்க் கொள்ளும் என்க. பிற் கூறிய 'அவை' என்பன களவும் கற்பும்; முற் கூறிய 'அவை' என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங்கடை யவையுமுளவே என மாறிக் கூட்டுக. (21) பெருந்திணைக்கு உரியமெய்ப்பாடு 266. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே என்றல் ஐயஞ் செய்தல் அவன்தம ருவத்தல் அறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுவத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே. என் - எனின், மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக்குரிய வாமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் எ-று. அது என்பது - 'அவையு முளவே யவையலங் கடையே' என்பதைச் சுட்டி நின்றது. கலக்கமும் நாடின் என மாறுக. ஏற்புழிக் கோடல் என்பத னாற் பெருந்திணைப்பாற் கொள்ளப்படும். இது களவிற்கும் கற்பிற்கும் ஒக்கும். இவை தேறுதலொழிந்த காமத்தின்பாற் படுவனவும், மிக்க காமத்தின் மிடலின்பாற் படுவனவுமாம் (அகத். 54). இன்பத்தை வெறுத்தல் என்பது - கோலஞ்செய்தல் முதலியன வற்றை வெறுத்தலும், தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்த லும். இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் பிறர் இயல்வுஅழி மங்கல மென்றுஆம். "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கரப்பாக் கறிந்து." (குறள். 1127) "சிறுகுழல் ஓசை செறிதொடீஇ வேல்கொண் டெறிவது போலும் எமக்கு." என வரும். துன்பத்துப் புலம்ப லாவது - துன்பத்தின்கண்ணே புலம்புறுதல். "இன்பங் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது." (குறள். 1166) எனவரும். எதிர் பெய்து பரிதல் என்பது - தலைமகன் முன்னின்றி அவனின் றானாகப் பெய்துகொண்டு வருந்துதல். "கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எங் காத லவர்." (குறள். 1126) என வரும். ஏதமாய்தல் என்பது - குற்றமாராய்தல். "துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்." (குறள். 1165) என வரும். பசியட நிற்றல் என்பது - உண்ணாமை. "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து." (குறள். 1128) பசலை பாய்தல் என்பது - பசலை பரத்தல். "பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்." (குறள். 1188) என வரும். உண்டியிற் குறைதல் என்பது - உணவு சுருங்குதல். "பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு" (அகம். 48) என வரும். உடம்பு நனி சுருங்கல் என்பது - உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல். "பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்." (குறள். 1234) என வரும். கண்டுயின் மறுத்தல் என்பது - உறங்காமை. "மன்னுயிர் எல்லாந் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை." (குறள். 1168) என வரும். களவொடு மயங்கல் என்பது - கனவை நனவென மயங்குதல். "நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்னெம்மைப் பீழிப் பது." (குறள். 1217) என வரும். பொய்யாக் கோடல் என்பது - தலைவன் கூற்றுதன்னைப் பொய்யாகக் கோடல். "வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாய மருள்வா ரகத்து." (கலித். 88) மெய்யே யென்றல் என்பது - உரைத்த மாற்றத்தை மெய்யெனக் கூறுதல். "மெய்யே வாழி தோழி சாரல் மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடும் போகி யாங்கு நாடன் தான்குறி வாராத் தப்பற்குத் தாம்பசந் தனவென் தடமென் தோளே." (குறுந். 121) இதனுட் 'கூறியது' என ஒரு சொல் வரல் வேண்டும். ஐயஞ் செய்தல் என்பது - தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல். "ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் கண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும்." (கலித். 4) என வரும். அவன்றம ருவத்தல் என்பது - தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல். "செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா எம்மொடு சேர்ந்துசென் றீவாயாய் செம்மால் நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவேம் மன்." (கலித். 83) என வரும். அறனழித் துரைத்தல் என்பது - அறத்தினை யழித்துக் கூறுதல். "விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை யாற்ற நினைந்து." (குறள். 1209) என வரும். அளியின்மை யறனின்மை கூறினாளுமாம். ஆங்கு நெஞ்சழிதல் என்பது - அறனழித்துரைக்குமிடத்து நெஞ் சழிந்து கூறுதல். "பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு" (குறள். 1295) என வரும். எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல் என்பது - யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் எ-று. "புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை." (குறள். 1222) என வரும். ஒப்புவழி யுவத்தல் என்பது - தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல். "யாவருங் காணுநர் இன்மையிற் செத்தனள் பேணி" (அகம். 16) என வரும். உறுபெயர் கேட்டல் என்பது - தலைவன்பெயர் கேட்டு மகிழ்தல். "நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு." (குறள். 1199) என வரும். கலக்கம் என்பது - மனங் கலங்குதல். மேற் 'கலங்கி மொழிதல்' என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை. "பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால் எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டீமோ காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன் வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த என்னல்லல் தீரா யெனின்." (கலித். 144) "கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்." (கலித். 142) என வரும். இச் சூத்திரத்துள் 'நலத்தக நாடின்' எனக் கலக்கத்தைப் பிரித்து வைத்தமையாற் சொல்லப்பட்ட பத்தொன்பதினும் முதிர்ந்து வந்த நிலை என்று கொள்ளப்படும். இச் சூத்திரம் பொதுப்படக் கூறினமையான் தலைமகற்கு ஏற்ப வருவன கொள்க. (22) மகன் அழியாதவழி நிகழ்வன 267. முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம். என் - எனின், மேற்கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு நிகழ்ந்த - வழி நிகழ்வனவாதலின், இவை மனன் அழியாதவழி நிகழ்வன என உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடு பட்டுழி யதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் எ-று. முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது - வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்தல். அச்சத்தி னகறல் என்பது - இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்று ஒழுகல் அவன் புணர்வு மறுத்தல் என்பது - இது தலைமகன் புணர்ச்சிக்கண் வாராக் காலத்துத் தானும் மனனழியாது நிற்கும் நிலை. தூது முனிவின்மை என்பது - தூது விட்டவழி வெறாமை. 'துஞ்சிச் சேர்தல்' என்பது - கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் என்பது - அவ்வழியும் அன்பின்மை யின்றிக் காதல் கைம்மிக்கு வருதல். கட்டுரையின்மை என்பது - கூற்று நிகழ்த்துதலன்றி யுள்ளக் கருத்தினை மறைத் தமர்ந்திருத்தல். இவை நடுவணைந்திணைக்குரிய. இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டன, வரைந்தோதாமையான். (23) அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் 268. தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாதல் அருண்மிக உடைமை அன்புமிக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்த புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. என் - எனின், இஃது அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தெய்வ மஞ்சல் என்பது - தெய்வத்தினை யஞ்சுதல். "மன்ற மராத்த பேமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப" (குறுந். 87) எனவும், "நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு." (கலித். 88) எனவும் வரும். புரையறந் தெளிதல் என்பது - 'கடன்மிக் கனவே' என்றவழிப் பரத்தைமை கண்டு புலவாது, 'இதனைப் போற்றல் இல்லுறை மகளிர்க் கியல்பென்னும் அறத்தினானே' எனக் கூறியவாறு கண்டுகொள்க. இல்லது காய்தல் என்பது - தலைமகன்க ணில்லாத குறிப்பினை யவன்மாட்டு உளதாகக் கொண்டு காய்தல். "யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று." (குறள். 1314) இதனுள் சொன்ன மாற்றத்தை வேறாகப் பொருள்கொண்டு இல்லாததனைச் சொல்லிக் காய்ந்தவாறு காண்க. உள்ளதுவர்த்தல் என்பது - உள்ளதனை யுவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல். "வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின் முகையலர்ந் தன்ன முயக்கின் தொகையின்றே தண்பனி வைகல் எமக்கு." (கலித். 78) என வரும். புணர்ந்துழி யுண்மை என்பது - புணர்ந்தவழி யூடலுள் - வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல். "குளிரும் பருவத்தே ஆயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய் ஊடி யிருப்பினும் ஊர னறுமேனி கூடல் இனிதா மெமக்கு." (ஐந்திணையைம் 30) என வரும். பொழுது மறுப்பாதல் என்பது - தலைவன் வரும் பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மன நிகழ்ச்சி. "புல்லிய கேளிர் புணரும் பொழுதறியேன் எல்லியா கெல்லையென் றாங்கே பகல்முனிவேன் எல்லிய காலை யிராமுனிவேன் யானுற்ற அல்லல் களைவார் இலேன்." (கலித். 144) என வரும். இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின், ஆண்டு, 'மரபுநிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும்' (அகத்திணை. 48) விரிந்தவெனக் கொள்க. அருண்மிக வுடைமையாவது - தலைமகன்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. 'முதைச்சுவற் கலித்த' என்னும் அகப்பாட்டினுள் (88), "நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே.... ............................................... வடுவாழ் புற்றின வழக்கறு நெறியே." (அகம். 88) என வரும். அவன் போன பின்பு இடையூறின்றிப் பெயர்ந்தான் கொல்லென அருள் மிகுத்தவாறு காண்க. அன்புமிக நிற்றல் என்பது - அன்பு புலப்பட நிற்றல். "கொடிய னாயினும் ஆக அவனே தோழிஎன் னுயிர்கா வலனே." (சிற்றட்டகம்) என்றவழி, அன்பு தோன்ற நின்றவாறு காண்க. பிரிவாற்றாமை என்பது - பிரிவின்கண் ஆற்றாமை. "செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள். 1151) என வரும். மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇ என்பது - மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாத கிளவியொடு கூட எ-று. மறைந்தவை யுரைத்த புறஞ் சொல்லாவது - அலர். மாணாமை யாவது - அவ்வலர் மாட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண்டல் அன்றியும், "மாண மறந்துள்ளா நாணிலி" (கலித். 89) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என வுரைப்பினும் அமையும். அலர் மிகாமைக் கூறுங் கூற்றினுங் கற்புக்கடம் பூண்டு கூறுதல். "நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே." (நற். 149) என வரும். அலர் மிகாக் கிளவியாவது - அலர்க்கு உள்ளம் நாணுதல். "களிறுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே." (அகம். 66) என வரும். சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது - இச்சொல்லப்பட்ட பத்தும் மேற்சொல்லப்பட்ட அழிவில் கூட்டப் பொருள் எ-று. என்றவழி நடுவணைந்திணைக்குரிய பொருள் எ-று. (24) தலைவன் தலைவியர்க்கு உரிய ஒப்பு 269. பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. என் - எனின், இது களவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம். (25) தலைமக்கட்கு ஆகாதன 270. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர். என் - எனின், இது தலைமக்கட்காகாத குணம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிம்பிரி என்பது அழுக்காறு. அவ்வியம் என்பதும் அது. கொடுமை என்பது - அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. வியப்பென்பது - தம்மைப் பெரியராக நினைத்தல். புறமொழி என்பது - புறங் கூறுதல். வன்சொல் என்பது - கடுஞ்சொற் கூறல். பொச்சாப் பென்பது - தம்மைக் கடைப்பிடியாமை. அது சோர்வு. மடிமை என்பது - முயற்சி யின்மை. குடிமையின்புறல் என்பது - தம் குலத்தினானுந் தம்குடிப் பிறப்பினானுந் தம்மை மதித்து இன்புறுதல். ஏழைமை என்பது - பேதைமை. மறப்பு என்பது - யாதொன்றாயினுங் கற்றதனையுங் கேட்டதனை யும் பயின்றதனையும் மறத்தல். ஒடு எண்ணின்கண் வந்தது. ஒப்புமை என்பது - ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகின்கட் கீழ்மக்கள்மாட்டுங் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமகட்காகாதென விலக்கப் பட்டது. என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப் பட்டன இல்லையாதலும் வேண்டும், மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூட்ட எ-று. மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூடுதல் அதிகாரத்தான் வந்தது. இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு. (26) மெய்ப்பாட்டியல் புறனடை 271. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. என் - எனின், இஃது அதிகாரப் புறனடை. (மெய்ப்பாட்டதிகாரம்) (இ-ள்.) ஈண்டுச் சொல்லப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடெல்லாம் ஆராயுங்காற் கண்ணானுஞ் செவியானும் விளங்க உணரும் அறிவுடை மாந்தர்க் கல்லது கருதுதல் அரிது எ-று. (27) ஆறாவது மெய்ப்பாட்டியல் முற்றிற்று. 7 உவமவியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உவமவியல் என்னும் பெயர்த்து. ஒருபுடை ஒப்புமைபற்றி யுவமை உணர்த்தினமையாற் பெற்ற பெயர்; மெய்ப்பாடு பற்றித் தோன்றி வழங்குவது. இதனாற் பயன் என்னை மதிப்பதோவெனின், புலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும். ஆப்போலும் ஆமா என வுணர்த்தியவழி, அதனைக் காட்டகத்துக் கண்டான் முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ஆமாவென்று அறியும். "தாமரை போல் வாள்முகத்துத் தையலீர்" என்றவழி, அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயக்கும். அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழு திணையினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல் லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றி வரும். மேற்குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்பும் தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது. உவமத்தின் பாகுபாடு 272. வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம். என்பது சூத்திரம். இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத்தினை யொருவாற்றாற் பாகுபடுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் என்பது - தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபட வந்த உவமைக்கண் புலனாம் எ-று. எனவே கட்புலமல்லாதனவு முள என்றவாறாம். அவை செவியி னானும் நாவினானும் மூக்கினானும் மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விருவகையும் பாகுபட வந்த உவமையாம். அவற்றுள், கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல் முடக்கல் விரித்தல் குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும் தீமை யாகவும் பயப்பன. வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவன வெண்மை பொன்மை முதலாயின. இனிச் செவிப்புலனாவது ஓசை. நாவினான் அறியப்படுவது கைப்பு கார்ப்பு முதலிய சுவை. மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கான் அறியப்படுவன நன்னாற்றம் தீநாற்றம். மனத்தான் அறியப்படுவன இன்ப துன்ப முதலியன. உ-ம்: "புலிபோலப் பாய்ந்தான்" என்பது வினை. "மாரி யன்ன வண்கை" (புறம். 133) என்பது பயன். "துடி போலும் இடை"என்பது வடிவு. "தளிர் போலும் மேனி"என்பது நிறம். "குயில் போன்ற மொழி"செவியானறியப்பட்டது. "வேம்புபோலக் கைக்கும்"நாவினானறியப்பட்டது. "தீப்போலச் சுடும்"மெய்யினானறியப்பட்டது. "ஆம்பல் நாறுந் துவர்வாய்" (குறுந்.300) மூக்கானறியப்பட்டது. "தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு." (குறள். 1107) மனத்தானறியப்பட்டது. பிறவு மன்ன. (1) மேலதற்குப் புறனடை 273. விரவியும் வரூஉம் மரபின என்ப. என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஒரோவொரு பொருளான் வருதலன்றி, இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினையுடைய எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று. "இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று" (அகம். கடவுள் வாழ்த்து) என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தன. பிறவும் அன்ன. இன்னும் "விரவியும் வரூஉம் மரபின" என்றதனாற் பலபொருள் விரவி வந்தது, "அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ." (கலித். 84) என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும் புதல்வற்கும் உவமை யாயினும் தோற்றத்திற் கிரண்டும் ஒருங்கு வந்தமையான் வேறோதப் பட்டது. இன்னும் "விரவியும் வரூஉம் மரபின" என்றதனான் "தேமொழி" எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க. பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. (2) மேலதற்கு ஒரு சிறப்புவிதி 274. உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை என் - எனின், மேலதற்கொரு சிறப்பு விதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந்ததன் மேலன எ-று. ஈண்டு உயர்ச்சியாவது - வினைமுதலாகச் சொல்லப்பட்டன உயர்தல். "அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்" (பட்டினப். 298) என்றவழித் துப்புடையன பலவற்றினும் அரிமா உயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள் வாழ்த்து) என்றவழிச் சிவப்புடைய பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. அஃதேல், "கொங்கியர் ஈன்ற மைந்தரின் மைந்துடை உழுவை திரிதருங் காடே" என இழிந்ததன்மேல் உவமை வந்ததால் எனின், ஆண்டுக் கொங்கியரீன்ற மைந்தரின் என விசேடித்த தன்மையான் அவர் பிறநிலத்து மக்களோடு ஒரு நிகரன்மையின் அவரும் உயர்ந்தோராகக் கொள்க. "சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கும் இழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனோ டார்புனை தெரியல் நெடுந்தகை போரே." (புறம். 28) என்பது இழிந்ததன்மேல் வந்ததாவெனின் ஆணியூசியினது விரைவு மற்றுள்ள விரைவின் உயர்ந்ததாகலின் அதுவும் உயர்ந்ததாம். (3) இதுவுமது 275. சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப. என் - எனின், இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக வரும் எ-று. இவையிற்றைப் பற்றித் தோன்றுமென்பது கருத்து. "முரசுமுழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழாஅல்" (பொருந. 54.6) எனச் சிறப்புப்பற்றி வந்தது. 'ஓவத் தன்ன வியனுடை வரைப்பின்" (புறம். 251) என்பது நலம் பற்றி வந்தது. "கண்போல்வான் ஒருவனுளன்." என்பது காதல்பற்றி வந்தது. "அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்" (பட்டினப். 218) என்பது வலிபற்றி வந்தது. பிறவு மிவ்வாறே படுத்துநோக்கிக் கண்டுகொள்க. (4) எய்தியதன்மேல் சிறப்புவிதி 276. கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும். என் - எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொருளோடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப்படும்; அதனோடுங்கூட ஐந்தாம் எ-று. என்றது பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிட மும் உள எ-று. "ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செய் மாலையன்." (அகம். 48) என்றாற் போல்வன. மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங் கூட ஐந்தென்றான். (5) உவமைக்கு உரியதொரு மரபு 277. முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கும் நுதலிய மரபி னுரியவை யுரிய. என் - எனின், இஃது உவமைக்குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. ஐயம் அறுத்ததூஉமாம். (இ-ள்.) முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இரு வகைப் பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிற் கேற்பவை உரியவாம் எ-று. சொல்லதிகாரத்துட், "செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே." (சொல். 16) என்றான். அவ்வாறன்றி யுவமைக்கு நியமமில்லை என்றவாறாயிற்று. "ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்" (கலித். 26) என்பது முதற்கு முதல் உவமமாயிற்று. "அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணூஉ." (கலித். 84) என்பது முதற்குச் சினை உவமமாயிற்று. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது சினைக்குச் சினை யுவமமாயிற்று. "நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி" (அகம். 84) என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று. (6) ஒருமரபு வேறுபாடு 278. சுட்டிக் கூறா உவம மாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. என் - எனின், இதுவுமொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டிக் கூறா வுவமை என்பது - உவமிக்கப்படும் பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக் கூறாமை. அவ்வாறு வருமா யின் உவமச் சொல்லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவம வாய்பாடு கொள்க எ-று. இதனாற் சொல்லியது, உவம வாய்பாடு தோன்றா உவமம் பொருட்குப் புணராக்கண்ணும் உவமை உள என்றவாறாம். "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து." (குறள். 90) இதன்கண் 'அதுபோல' எனச் சுட்டிக் கூறா வுவமையாயினவாறு கண்டுகொள்க. (7) உவமைக்கு உரியதொரு மரபு 279. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் என் - எனின், இஃது உவமைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரட்டைக் கிளவியாயினும், நிரனிறுத்தமைத்த நிர னிறைச் சுண்ணமாய் வரினும், மிக்குங் குறைந்தும் வருதலன்றி யுவமை யடையடுத்துவரினும், தொழிற்பட்டு வரினும், ஒன்றும் பலவுமாகி வரினும், வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும் எ-று. அவ்வழி வாராது மிக்குங் குறைந்தும் வருவது குற்றம் என்ற வாறாம். (8) உவமைக்கண் வருவதொரு வேறுபாடு 280. பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பினஃ துவம மாகும். என் - எனின், இஃது உவமைக்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமிக்கும் பொருடன்னை யுவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமையாகும் எ-று. ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது என்ப; உவமை பற்றி வருதலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியன் கருத்து. "இரும்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேஎ யெற்றிய பிணம்பிறங்கு பல்போர்க் கான நரியொடு கழுகுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொருகளந் தழீஇப் பாடுநர்க் கீந்த பீடுடை யாள." (புறம். 369) என வரும். "பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாடும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்." (மணிமே. 4:8:13) என்பதும் அது. இவ்வாறு வருவனவெல்லாம் இச் சூத்திரத்தாற் கொள்க. (9) உவமைக்கு உரியதொரு மரபு 281. பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பின் தீராக் குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய. என் - எனின், இஃது உவமைக் குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமையும் பொருளும் ஒத்தன கூறலேயன்றிப் பெருகக் கூறலுஞ் சிறுகக் கூறலும் மேற்சொல்லப்பட்ட சிறப்பென்னும் நிலைக் களத்து நீங்காச் சிறப்பின் வரூஉம் வழக்கப்பாட்டினையுடைய எ-று. எனவே, வழக்கின்கட் பயின்று வாராத இறப்ப வுயர்தலும் இறப்ப விழிதலும் ஆகா எ-று. "அவாப்போ லகன்றதன் அல்குன்மேற் சான்றோர் உசாஅப்போல வுண்டே மருங்குல்" என்றவழி அல்குல் பெரிதென்பான் ஆசையோ டுவமித்தலின் இது தக்கதாயிற்று; மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோ ருசாவோடு உவமித்தலின் அதுவும் தக்கதாயிற்று. அவை சிறப்புப் பற்றி வந்தன. இனி நெறிப்பாடின்றி வருவன இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் என இருவகைப்படும். "இந்திரனே போலு மிளஞ்சாத்தன்... நாறுமிணர்." (யாப்.வி.மேற்.) இஃது இறப்பவுயர்ந்தது. வழக்கிறந்து வருதலின் இவ்வாறு வரும் உவமை கூறப்படாது. "வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் எள்ளி யிரிவதுபோ லெங்கெங்கும் - வள்ளற்கு மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை மேலாரு மேலார் விரைந்து." (யாப். வி. மேற்.) இஃது இறப்ப இழிதலின் இதுவு மாகாது. அஃதேல் 'நாயனையார் கேண்மை தழீஇக் கொளல்வேண்டும்" (நாலடி. 213) என வருமால் எனின், அது நாயின்கட் கிடந்ததொரு நற்குணம்பற்றி வருதலின் இறப்ப இழிதல் ஆகாது. (10) உவமை உணர்த்தும் சொற்கள் 282. அவைதாம். அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப என்ன மான என்றவை யெனாஅ ஒன்ற ஒடுங்க ஒட்ட வாங்க வென்ற வியப்ப வென்றவை யெனாஅ எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த ஓடப் புரைய என்றவை யெனாஅ ஆறா றுவமமும் அன்னவை பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. என் - எனின், இஃது உவமை யுணர்த்துஞ் சொற்களை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள்தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங் காலத்துப் பல குறிப்பினையுடைய எ-று. சொல்லுங்காலத்து என்றமையிற் சொல்லென்பது கொள்க. அன்னபிறவாற் கொள்ளப்படுவன: நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க. 'பல்குறிப்பின' என்றதனான் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மைய வாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச்சொல் நீர்மையவாய் வரு வனவும் எனக் கொள்க. 'புலிபோன்ற சாத்தன்' 'புலிபோலுஞ் சாத்தன்' என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான்' 'புலிபோலப் பாய்ந்தான்' என்பன வினையெச்சம். 'புலி போலும்' 'புலி போன்றனன்' என்பன முற்று. அன்ன, இன்ன: இடைச்சொல். இன்னும் 'பல்குறிப்பின' என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங் கொள்க. 'தேன் போல இனிய மொழி' இது விரிந்தது. 'தேன் போலும் மொழி.' இஃது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்கு நின்றது. 'தேமொழி' என்பது எல்லாந் தொக்கது. பிறவு மன்ன. ஈண்டு எடுத்தோதப்பட்ட முப்பத்தாறனுள் ஒன்று, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்பன வொழித்து நின்ற முப்பதும் அன்ன பிறவாற் கொள்ளப்பட்டவற்றுள் நோக்க என்பதும் நேர என்பதுஞ் சிறப்பு விதி யுடையவாதலின் அவற்றிற்கு உ-ம்: ஆண்டுக் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டுதும். "வேலொன்று கண்" "கயலென்ற கண்" "மணிநிற மாற்றிய மாமேனி" "மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்" "வேயொடு நாடிய தோள்" "படங்கெழு நாகம் நடுங்கு மல்குல்" "குன்றி னனையாருங் குன்றுவர்" (குறள். 965) "இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று" (குறள். 22) "மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி" (கலித். 15) "துணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண்" (கலித்.14) "முத்தேர் முறுவலாய்" (கலித். 93) "எச்சிற் கிமையாது பார்த்திருக்கு மச்சீர்" (நாலடி. 345) "யாழ்கெழு மணிமிடற் றந்தணன்" (அகம். கடவுள் வாழ்த்து) "கிளைசெத்து மொய்த்த தும்பி" (நற். 35) என வரும். பிறவுமன்ன. (11) வினை உவமச்சொற்கள் 283. அன்ன வாங்கு மான இறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம். என் - எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடையன உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் வினையுவமத்திற் குரிய சொல் வரையறை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன்ன முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் வினை யுவமத்திற் குரிய சொல்லாம் எ-று. "கொன்றன்ன வின்னா செயினும்" (குறள். 106) "பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு" (முருகு. 2) "புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்" (பெரும்பாணாற். 269, 270) "புலியிறப்ப வொலிதோற்றலின்" "புலியென்னக் கலிசிறந் துராஅய்" "செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை" (முருகு. 5) "பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து" "மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்" என வரும். (12) எய்தாதது எய்துவித்தல் 284. அன்னஎன் கிளவி பிறவொடுஞ் சிவணும். என் - எனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்ன என்னுஞ் சொல் ஒழிந்த பொருளொடுஞ் செல்லும் எ-று. "மாரி யன்ன வண்கை" (புறம். 133) இது பயன். "பரியரைக் கமுகின் பாளையம் பசுங்காய் கருவிருந் தன்ன கண்கூடு சிறுதுளை" (பெரும்பாணாற். 7,8) இது மெய். "செவ்வா னன்ன மேனி" (அகம் கடவுள் வாழ்த்து) "பாலன்ன மென்மொழி" இவை உரு. பிறவுமன்ன. (13) பயன் உவமச் சொற்கள் 285. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ என்றாங் கெட்டே பயனிலை யுவமம். என் - எனின், பயனிலை யுவமைக்குரிய சொல் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எள்ள என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமைக்குச் சொல்லாம் எ-று. "எழிலி வானம் எள்ளினன் தரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்" "மழைவிழை தடக்கை வாய்வா ளெவ்வி" "புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல" "விண்பொருபுகழ் விறல்வஞ்சி" (புறம். 11) "கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி" "இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை" "வீங்குசுரை நல்லான் வென்ற வீகை" "விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல்." என வரும். (14) மெய் உவமச் சொற்கள் 286. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒட்ட ஒடுங்க ஓட்ட நிகர்ப்பவென்று அப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். என் - எனின், மெய்யுவமத்திற் குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத்திற்குரிய சொல்லாம் எ-று. "விண்ணதிர் இமிழிசை கடுப்ப" (மலைபடு. 2) "அகலிரு விசும்பிற் குறைவில் ஏய்ப்ப" "வேய்மருள் பணைத்தோள் நெகிழ" (அகம். 1) "வேய்புரை மென்றோள்" (கலித். 29) "முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை, வியப்பன தழீஇ" "பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்" "செந்தீ யோட்டிய வஞ்சுடர்ப் பருதி" "கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை" என வரும். (15) உரு உவமச்சொற்கள் 287. போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி உருவி னுவமம். என் - எனின், உருஉவமத்திற்குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவுவமத்திற் குரியசொல்லாம் எ-று. "தன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யும் ஊர்கிழ வோனே." (ஐங்குறு. 41) "மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா" "ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்" "கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்" "கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்" (அகம். கடவுள் வாழ்த்து) "தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி" என வரும். நளிய நந்த என்பன வந்தவழிக் கண்டுகொள்க. (16) மேலதற்கு ஒரு புறனடை 288. தத்த மரபின் தோன்றுமன் பொருளே. என் - எனின், மேலனவற்றிற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற் றானன்றித் தத்தமரபின் தோன்றும் பொருளும் உளவாமென்றவாறு. மன் ஆக்கங் குறித்து வந்தது. ஈண்டு மரபென்றது பயிற்சியை. இதனானே, நூல் செய்கின்ற காலத்து வினைமுதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும். "முழவுறழ் தடக்கையி னியல வேந்தி" (முருகு. 215) "மாவென்ற மடநோக்கின்" (கலித். 57) "வேய்வென்ற தோள்" (கலித். 138) "மாரிவீ ழிருங்கூந்தல்" (கலித். 14) "பொன்னுரை கடுக்குந் திதலையர்" (முருகு. 145) "குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்" (பெரும்பாண்.13) "செயலையந் தளிரேய்க்கும் எழினலம்" (கலித். 15) "பாஅன்மருண் மருப்பி னுரல்புரை பாவடி" (கலித். 21) "வலம்புரி புரையும் வால்நரை முடியினர்" (முருகு. 127) "ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல" (அகம். 22) "தாமரைபோல் வாள்முகம்" (திணைமாலை. 1) "கள்வர்போ னோக்கினு நோக்கும்" (கலித். 61) "ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ" (அகம். 30) என வரும். பிறவுமன்ன. (17) எய்தியதன்மேல் சிறப்புவிதி 289. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. என் - எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலே யன்றி எட்டாம் பக்கமும் உண்டு எ-று. அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இருவகையாம். பயன் என்பது, நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்பது, நிறமுங் குணமுமென இருவகையாம். இவ்வகையினா னெட்டாயின. "பொன்னன்ன செல்வத்தன்" - இது வினைக்குறிப்பு. "ஞாயி றனையைநின் பகைவர்க்கு" (புறம். 59) இது தீப்பயன். "நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங் கடுவரற் கலுழி" என்பது அளவு. "பாலன்ன மொழி" இது குணம். ஏனைய மேற்காட்டப்பட்டன. (18) இதுவும் ஒரு மரபு 290. பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்று மென்ப. என் - எனின், இதுவுமொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெருக்கவுஞ் சிறுக்கவுங் கூறுதல் மெய்ப்பாட்டின் வழிப்பக்கம் புலப்படத் தோன்றும் எ-று. எனவே, மெய்ப்பாடு தோற்றாதவழி இப்புணர்ப்பினாற் பயனின்றாம். "அவாப்போல் அகன்றதன் அல்குன்மேற் சான்றோர் உசாஅப்போல உண்டே மருங்குல்." என்பது பெருமையுஞ் சிறுமையும் பற்றி உவகை நிகழ்ந்தது. "கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணைப் பிறிதின்றி" (யா.வி.ப. 318) என்பது துன்பப்பெருக்கம் சொல்லி யவலம் வந்தது. "பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேரும்என் நெஞ்சு." (முத்தொள். 88) இது பெருக்கம் பற்றி இளிவரல் வந்தது. பிறவுமன்ன. (19) உவமைக்கு உரிய வேறுபாடு 291. உவமப் பொருளின் உற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான. என் - எனின், இஃது உவமைக்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமப் பொருளானே சொல்லுவான் குறிக்கப்பட்ட பொருளை யுணருந் தெளியும் பக்கமும் உள, கூறுபாட்டியலான் எ-று. தெளிமருங்காவது துணிவு பக்கம். எனவே துணியாமை உவமத் தின்கண்ணே வந்தது, அவ்வாறு வரினும் இதுவேயெனத் துணிதலின் துணி பக்கமாவது. "ஐதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலும் மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று." (கலித். 55) என்றவழித் துணியாது நின்றன நுதலும் முகனும் தோளுங் கண்ணும் சாயலும் மொழியு மெனத் துணிந்தவாறு கண்டுகொள்க. இன்னும் இதனானே, "கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர்" (சிலப். கானல். 11) என்றவழிக் கண் புருவங் கூந்தலை யுவமப் பெயரான் வழங்குதலுங் கொள்க. (20) மேலதற்கு ஒரு புறனடை 292. உவமப் பொருளை உணருங் காலை மருவிய மரபின் வழக்கொடு வருமே. என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமப் பொருளை உவமிக்கப்படும் பொருளாக உணருங்காலை மருவிய மரபினானாய வழக்கொடு வரும் எ-று. எனவே மருவாதன அவ்வாறு கயல் சிலை என்றாற்போலக் கூறப்படாவென்றவாறு. (21) இதுவும் ஒரு மரபு 293. இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே. என் - எனின், இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரட்டைக் கிளவியாவது உவமை யிரண்டு சொல்லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொரு ளாகி வருதல்வேண்டும் எ-று. அவ்வழி இரண்டுசொல்லும் ஒருசொன் னீர்மைப்பட்டு வருதல் வேண்டுமென்று கொள்க. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்." (குறள். 410) இதன் வேறுபாடு அறிக. (22) ஓர் உவமை வேறுபாடு 294. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்ன மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே. என் - எனின், இஃது ஓருவமை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமைப்பொருள் தானன்மையான் உவமைப் பொருளொடு படாது பொருள் தோற்றிய இடத்தொடு நோக்கி முன்ன மரபினாற் சொல்லுங் காலத்துத் துணிவுடையோர் கொளின் அவர் துணிந்த துணிவின்கண்ணே வரும், உவமை எ-று. முன்னமாவது. "இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென்று அவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்." (தொல். செய். 199) என்பதாகலின், இடத்தொடு பார்த்து ஏற்கும் பொருட்கட் கூறுவது. மேலைச் சூத்திரத்தளவும் பிறிது பொருளொடு உவமை கூறிப் போந்தார். இனிப் பொருள் தன்னோடே யுவமை கூறுகின்றார் என்று கொள்க. "நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தர." (கலித். 119) என்றவழிக் காணப் பிறிதாகிய பொருளொடு உவமை கூறாமையிற் பிறிதொடு படாதாயிற்று. மதியினது எழுச்சியை நோக்குதலிற் பிறப் பொடு நோக்கிற்று. அவ்விடத்திற் கேற்பக் கூறுதலின் முன்னமாயிற்று. அம்மதியினது தோற்றம் இத்தன்மைத்தெனத் துணிதலின் அதன்கண் உவமைச்சொல் வந்தது. "வள்ளிதழ் கூம்பிய மணிமரு ளிருங்கழிப் பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப" (கலித். 121) என்பதும் அது. (23) ஓர் உவமை விளக்கம் 295. உவமப் போலி ஐந்தென மொழிப. என் - எனின், இதுவுமோர் உவமை விகற்பங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உவமையைப் போன்று வருவன ஐந்தென்று சொல்லுவர் எ-று. அவையாவன: இதற்குவமையில்லை எனவும், இதற்கிதுதானே யுவமை எனவும், பல பொருளினு முளதாகிய வுறுப்புக்களைத் தெரிந் தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பலபொரு ளினுமுளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்குவமையாம் எனவும், கூடாப்பொருளோடு உவமித்து வருவனவும். உ-ம்: "நின்னோர் அன்னோர் பிறரிவர் இன்மையின் மின்னெயில் முகவைக்கு வந்திசிற் பெரும." (புறம். 373) என்றும், "மன்னுயிர் முதல்வனை யாதலின் நின்னோர் அனையைநின் புகழொடு பொலிந்தே." (பரிபா. 1) என்றும், "நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள் நாங்கள் எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற் சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால் பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்த மானாள்." என்றும், "நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை." (பதிற்றுப். 14) என்றும், "வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன் ஈரத்து ளின்னவை தோன்றின் நிழற்கயத்து நீருட் குவளைவெந் தற்று." (கலித். 41) என்றும் வரும். (24) மேலதற்கு ஒரு புறனடை 296. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉந் திறத்த வென்ப. என் - எனின், மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறும்வழிச் சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க் கூறல் வேண்டும் எ-று. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல், பயனா னாதல், உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லை யெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவுமன்ன. (25) தலைவி கூறும் உவமை 297. கிழவி சொல்லின் அவளறி கிளவி. என் - எனின், மேற்சொல்லப்பட்ட உவமை கூறுவார் பலருள்ளுந் தலைமகட்குரியதொரு பொருள் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமைப் பொருளைத் தலைமகள் கூறின் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும் எ-று. எனவே, தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது எ-று. உ-ம்: தலைமகள் கூற்றுட் கண்டுகொள்க. (26) தோழி உவமை கூறுமாறு 298. தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது. என் - எனின், இது தோழியுவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தோழி உவமைசொல்லின் அந்நிலத்தினுள்ளன வன்றிப் பிறநிலத்துள்ளன கூறப் பெறாள் எ-று. உரையாது 'உவமம்' என ஒருசொல் வருவிக்க. உ-ம்: தோழி கூற்றுட் காண்க. (27) தலைவன் உவமை கூறுமாறு 299. கிழவோற் காயின் உரனொடு கிளக்கும். என் - எனின், இது தலைமகன் உவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவன் உவமை கூறுவானாயின், அறிவொடு கிளக்கப்படும் எ-று. அன்றியும், உரனொடு கிளக்கு முவமையெனப் பெயரெச்ச மாக்கிப் பெயர் வருவித்தலுமாம். உ-ம்: தலைவன் கூற்றுட் காணப்படும். (28) மற்றவர் உவமை கூறுமாறு 300. ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத நற்றாய் செவிலி முதலாயினார்க்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப்படா தென்றவாறு. (29) தலைவிக்கும் தோழிக்கும் உரியதொரு மரபு 301. இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் உவம மருங்கின் தோன்றும் என்ப. என் - எனின், இது தலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகிழ்ச்சி பயக்குங் கூற்றும் புலவி பயக்கும் கூற்றும் உவமப்பக்கத்தான் தோன்றும் எ-று. "மாரி யாம்பல் அன்ன கொக்கின் பார்வ லஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் கயிறரி யெருத்திற் கதழ்பூந் துறைவ" (குறுந். 117) என்றது தலைமகள் உவமை கூறியவழி, நின்ற பெண்டிர் தடுப்பக் கயிறரி யெருது போலப் போந்தனை யெனத் துனியுறு கிளவி வந்தது. "............................................. வானத் தணங்கருங் கடவு ளன்னோள்நின் மகன்தா யாதல் புரைவதால் எனவே." (அகம். 16) என மகிழ்ச்சி பற்றி வந்தது. பிறவும் அன்ன. (30) தலைவி உவமை கூறுமிடம் 302. கிழவோட் குவமை ஈரிடத் துரித்தே. என் - எனின், தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்டிடத்தும் உரித்து எ-று. எனவே, இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்றவாறாம். (31) தலைவற்கு உரியதொரு மரபு 303. கிழவோற் காயின் இடம்வரை வின்றே. என்-எனின், தலைமகற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணுமாம் எ-று. (32) தோழியும் செவிலியும் உவமை கூறுதல் 304. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. (இ-ள்.) தோழியுஞ் செவிலியும் உவமை கூறுங்காற் பொருந்து மிடம் பார்த்துக் கூறுதற்குரியர், கேட்டோர் கொள்ளுநெறியான் எ-று. "பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்." (மணிமே. ) என வரும். பிறவுமன்ன. மேற்காட்டினவற்றுள் கண்டுகொள்க. (33) மேலனவற்றிற்குப் புறனடை 305. வேறுபட வந்த உவமைத் தோற்றம் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல். என்-எனின், மேலனவற்றிற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறுபட்டு வந்த உவமைத் தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும்வழிக் கொளுவுக எ-று. "பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்." என வரும். பிறவுமன்ன. (34) உவமைக்கு உரியதொரு மரபு 306. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. என்-எனின், இதுவு முவமைக் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு எ-று. "கடந்தடு தானைச் சேர லாதனை யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே." (புறம். 8) என வரும். "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்." (குறள். 1120) என்பது மது. (35) இதுவுமது 307. உவமைத் தன்மையும் உரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. என்-எனின், இதுவு மது. (இ-ள்.) உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி, யுவமையது தன்மை கூறலு முவமையாதற் குரித்து, பயனிலை பொருந்திய வழக்கின்கண் எ-று. எனவே, இவ்வாறு வருவது பயனிலை யுவமைக்கண் என்று கொள்க. "பாரி பாரி யென்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனும் அல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே." (புறம். 107) இது மாரி போலும் பாரியது கொடை என்னாது இவ்வாறு கூறும் பொருண்மையும் உவமமாம் எ-று. (36) உவமைக்கு உரியதொரு மரபு 308. தடுமாறு வரலும் கடிவரை வின்றே. என்-எனின், இதுவும் உவமைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது எ-று. தடுமாறுதலாவது - ஐயமுறுதல். எனவே ஐயநிலையுவமமுங் கண்டு கொள்க. "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து." (குறள். 1085) என்றும், "ஈங்கே வருவாள் இவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல்." (கலித். 56) என்றும் வரும். பிறவும் அன்ன. (37) உவமை பல வந்தவழி வருவதொரு வேறுபாடு 309. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்றலங் கடையே. என்-எனின், உவமை பல வந்தவழி வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடுக்கிய தோற்றமாவது - உவமை பல அடுக்கித் தோற்றுதல். நிரனிறுத்தமைத்தலாவது - ஒரு பொருளொடு தோற்று தொடரை யுடைத்தாகப் பலவுவமை வருதல். நிரனிறையாவது - உவமை பலவற்றையுஞ் சேர நிறுத்தி யுவமிக்கப்படும் பொருளையுஞ் சேர நிறுத்தல். சுண்ண மென்பது - உவமையையும் பொருளையுந் துணித்து ஒட்டுதல். வரன்முறை வந்த மூன்றலங் கடையே என்பது - அடுக்கியலுவமை கடியப்படும், ஆமென்று வரையப்பட்ட நிரனிறுத்தன் முதலிய மூன்றும் அல்லாதவழி எ-று. அவற்றுள், கடியப்பட்டது உவமைக்குவமையாக அடுக்கி வருவது. "வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம் வெண்சங்கின் வண்டிலங்கு தாழை வளர்கோடு." என்றவழி, அவ்வாறு உவமைக்குவமையாகக் கூறியவதனாற் போதுவ தொரு பயன் இன்மையின் ஆகாதென்று கொள்க. நிரனிறுத்தமைத்தல் வருமாறு:- "நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே." (பதிற்று. 14) "மதிபோலுந் தாமரை போலும்" என வரும். நிரனிறை வருமாறு:- "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்." (யாப். வி. மேற்.) என வரும். சுண்ணமாவது:- "களிறும் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே." (அகத்.11. நச்.) என்றவழி, நிரனிறையன்றிக் களிறுபோலுங் கலன் எனத் துணிக்க வேண்டியவாறு கண்டுகொள்க. (38) ஏழாவது உவமவியல் முற்றிற்று. 8 செய்யுளியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், செய்யுளியலென்னும் பெயர்த்து. செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மை யெல்லாவற்றிற்கும் இஃதிடமாத லின் அவற்றின்பிற் கூறப்பட்டது. செய்யுள் உறுப்புக்கள் 310. மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ யாத்த சீரே அடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை எனாஅ நோக்கே பாவே அளவியல் எனாஅ திணையே கைகோள் பொருள்வகை எனாஅ கேட்போர் களனே காலவகை எனாஅ பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ முன்னம் பொருளே துறைவகை எனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறு தலையிட்ட அந்நா லைந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இதன் றலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யுளுறுப் பெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்து நான்குஞ் செய்யுட்கு உறுப்பென்றவாறு. பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறனொடும் ஒருநிகரன அன்மையின், வேறுதொகை கொடுக்கப்பட்டது. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும். (1) மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் 311. அவற்றுள், மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் மேற்கிளந் தனவே யென்மனார் புலவர். (இ-ள்.) என் - எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள் மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேல் எழுத்ததிகாரத்துச் சொல்லப்பட்டன வென்று சொல்லுவர் புலவரென்றவாறு. ஈண்டு வேறுபாடில்லை யென்றவாறு. அவையாவன: குற்றெ ழுத்தொரு மாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரளபெடை மூன்று மாத்திரை; குற்றிய லிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மெய்யும் ஒரோவொன்று அரை மாத்திரை; ஒற்றளபெடை ஒரு மாத்திரை; ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை; மகரக் குறுக்கங் கால்மாத்திரை; ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்களவு. எழுத்தியலாவது - உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத் தென மூவகைப்படும். உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து, அள பெடையென மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம் இடையினம் என மூவகைப்படும். சார்பெழுத்து குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தமென மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப்பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ. நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ. அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ. வல்லினம் க ச ட த ப ற. மெல்லினம் ங ஞ ண ந ம ன. இடையினம் ய ர ல வ ழ ள. குற்றியலுகரமாவது நெட்டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்த உகரம். நாகு - நாக்கு; காசு - காச்சு; காடு - காட்டு; காது - காத்து; காபு - காப்பு; காறு - காற்று என இந்நிகரன. குற்றியலிகரமாவது இவ்வுகரந் திரிந்தும் மகர மூர்ந்தும் யகரமோடியைந்து வரும். நாகியாவது - உகரந் திரிந்தது; கேண்மியா - மகர மூர்ந்தது. பிறவு மன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற் கும் வல்லெழுத்திற்கும் இடைவரும். அஃதாவது எஃகு என வரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வ ய ல ள வும் ஆய்தமும் அளபெடுக்கும். அவை மங்ங்கலம், மஞ்ஞ்சு என வரும். இனி உயிருமெய்யுங் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகரவீறாகிய இருநூற்றொருபத்தாறும். இன்னும் ஐகாரக் குறுக்கம் மகரக் குறுக்கம் என்பவுமுள. ஐகாரக் குறுக்கம் அள பெடையுந் தனியு மல்லாதவழிக் குறுகும். மகரக் குறுக்கம் ணகர னகர ஒற்றின்பின் வரும். புணர்மொழிக்கண் வகரத்தின் மேனின்ற மகரமுங் குறுகும். இவையெல்லாம் எழுத்ததிகாரத்துட் காண்க. (2) அசைவகை 312. குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையு மென்றிசிற் பெயரே. என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுந் தனியே வரினும் ஒற்றொடு வரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரை யசையுமா மென்றவாறு. இதுவு மொரு நிரனிறை. முந்துற்ற நான்கு மொருபொருளாய்ப் பின்னிரண்டாகி வரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான், கோ ழி வேந் தன், என நான்கு நேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும். (3) இதுவுமது 313. இருவகை உகரமோ டியைந்தவை வரினே நேர்பு நிரைபும் ஆகும் என்ப குறிலிணை உகரம் அல்வழி யான. இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டசையுங் குற்றியலுகரமு மல்லாத முற்றியலுகரமும் பொருந்தி வரின், நேர்பசையு நிரைபசையு மெனப் பெயராகும்; அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத விடத்தென்றவாறு. காது, காற்று, கன்று; காவு, சார்பு, கல்லு என்பன நேர்பசை. வரகு, அரக்கு, மலாடு பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு என்பன நிரைபசை. தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு, நிரைபு என்பன தாமே யுதாரணமாம். அஃதேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலரா லெனின், அவர் அதனை யிரண்டசையாக்கி யுரைத்தாராயினும், அதனை முடிய நிறுத்தாது, வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசை யூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகர வீற்றா னுதாரணங் காட்டினமையானும், சீருந் தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகு பெறா தென்றமையானும், வெண்பா வீற்றினு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமென உடன் பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத் தென்று கொள்க. அவை செய்யுளீற்றின்கண் வருமாறு: "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்." (குறள். 10) "வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பை இல." (குறள். 4) "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." (குறள். 5) "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்றல் அரிது." (குறள். 7) என வரும். பிறவு மன்ன. அலகிடுங்கால் நேரசை ஓரலகு; நிரையசை யிரண்டலகு; நேர்பசை மூன்றலகு; நிரைபசை நான்கலகு பெறும். (4) அசைக்கு வேறுபெயர் 314. இயலசை முதலிரண் டேனவை உரியசை. என் - எனின், மேற்சொல்லப்பட்ட அசைக்குப் பிறிதொரு குறியிடுதல் நுதலிற்று. (இ-ள்.) முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசையெனக் குறிபெறும். நேர்பசையும் நிரைபசையும் உரியசையெனக் குறிபெறும் எ-று. (5) அசைக்கு உரியதொரு மரபு 315. தனிக்குறில் முதலசை மொழிசிதைத் தாகாது. என் - எனின், இதுவும் அசைக்குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொடர்மொழிக்கண் மொழி சிதைத்துத் தனிக்குறில் நேரசை யாகா தென்றவாறு. மொழிசிதைத்தலாவது - ஒற்றுமைப்பட்டிருக்கின்றதனைப் பிரித்தல். அஃதாவது புளிமா என்றவழி, நிரைநேராக அலகிடாது முதனின்றதனை நேரசையாக்கி யிடை நின்றதூஉ மிறுதிநின்றதூஉம் நிரையசையாக்குதல். அவ்வழிப் புளியென்னுஞ் சொல்லைப் பிரிக்க வேண்டுதலின் நிரையசையாகவே கோடல் வேண்டுமென்றவாறு. இனி, மொழி சிதையாக்கால் நேரசையாம். அது விட்டிசைத்து நிற்றல். "அஉ அறியா... னாட்டைநீ" (யாப். வி. மேற்.) எனவும், "அஆ இழந்தானென் றெண்ணப்படும்" (நாலடி. 9) எனவும் வருவன முதலெழுத்து நேரசை யாம். (6) இதுவுமது 316. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். என் - எனின், இதுவுமது. (இ-ள்.) குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயல்பிற்று எ-று. அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேரசை என்று... எனவே அலகு பெறா தென்றவாறாம். (குற்றியலகரம் ஒலியாது; ஒற்றியல் பிற்றாக நிற்கும்.) "பேதை யென்ப தியாதென வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல்." இதன்கட் குற்றியலிகரம் அலகு பெறாதவாறு காண்க. (7) முற்றியலுகரத்துக்கு உரிய வேறுபாடு 317. முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும். என் - எனின், முற்றியலுகரத்திற் குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்றியலுகரமு மொழிசிதைத்து நேர்பசை நிரைபசை யென்றுரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கிற் றனியசையாகி நிற்றலும் இன்றென்றவாறு. எனவே, அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேர்பசை நிரைபசையெனக் காட்டப்படாது. அஃது ஈற்றடி மருங்கிற் றனியசையாகி நில்லாது என்பதூஉம், ஒற்றுமைப்படாத சொல்லின்கண் தனியசையாமென்பதூஉம், ஈற்றடிக்கண் எவ்வழியானுந் தனியசையாகா தென்பதூஉம் உணர்த்தியவாறாம். "அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென" என்றவழி அரவென்பது மொழி சிதையாமையின் நிரைபசை யாயிற்று. "பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்" (நாலடி. 200) என்றவழி 'பெரு' முன்னர்க் குறித்த சீராக்க வேண்டுமாயின் ஈண்டு மொழி சிதைத்தலின் நிரைபசை யாகாதாயிற்று. "இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன் புணைமலர்த் தாரகலம் புல்லு." (யாப். வி. மேற்.) "மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவாட் கருளு." (யாப். வி. மேற்.) என்பதனாற் கொள்ளற்க. இவை புல்லு அருளு என வருமாலெனின், "நிற்றலின்றே யீற்றடி மருங்கினும்" என்பதனான் ஈற்றடியிறுதியினு மிடையடி யிறுதியினு முற்றியலுகரம் நில்லாதெனவும் பொருளாம்; இதனானே அவ்வாறு வருதலுங் கொள்க. முற்றியலுகரமு மென்ற வும்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. (8) எய்தியது விலக்கல் 318. குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. என் - எனின், எய்தியது விலக்கல் நுதலிற்று. (இ-ள்.) இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனியசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு. உம்மை யிறந்தது தழீஇயிற்று. உ-ம்: "படுகிளி பாயும் பசுங்குரல் ஏனல் கடிதின் மறப்பித்தா யாயின் இனிநீ நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும்." (கலித். 50) இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று. "கண்ணும் படுமோ என்றிசின் யானே." (நற். 61) இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று. வகையுளி 319. அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. என் - எனின், வகையுளி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அசையையுஞ் சீரையும் ஓசையொடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள் நெறி யென்றவாறு. அஃதாவது பொருளொடு சொல்லை யறுத்தவழித் தளையுஞ் சீருஞ் சிதையின், அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக எ-று. அது வருமாறு: "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்." (குறள். 3) என்றவழி, வாழ்வாரெனப் பொருணோக்கிச் சீராமாயின் ஓசைகெடும். அதன்கண் 'வாழ்' என்பதனை முதனின்ற சீரோடொட்டக் கெடாதாம். பிறவுமன்ன. இத்துணையுங் கூறப்பட்டது அசைவகை. (10) சீர் 320. ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே. என் - எனின், நிறுத்த முறையானே சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டசை கொண்டு புணர்த்தும், மூன்றசை கொண்டு புணர்த்தும், ஓசை பொருந்தி யிற்றது சீரெனப்படும் எ-று. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள் வாழ்த்து) என்றவழி நான்குசொல்லாகி ஈரசையினான் சீராயவாறும், அவ்வளவி னான் ஓசையிற்று நின்றவாறும் கண்டுகொள்க. "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (குறள். 110) என்றவழி மூன்றசையினாற் சீராகியவாறும் அவ்வளவினான் ஓசையற்று நின்றவாறுங் கண்டுகொள்க. (11) ஈரசைச்சீர்ப் பாகுபாடு 321. இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். என் - எனின், ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீர் எனப்படும்; உரியசை மயங்கி வந்தன ஆசிரிய வுரிச்சீ ரெனப்படும் எ-று. மயங்குதலாவது ஒருங்குவருதல். நேர் நிரை நேர்பு நிரைபு: என்னும் நான்கனையுந் தம்மினுறழப் பதினாறு அசைச்சீராம். அவற்றுள் இயலசையாகிய நேரும் நிரையுந் தம்மின் உறழ நான்கு சீராம். அவை இயற்சீர் எனப்படும். உ-ம்: "தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்." என வரும். இனி உரியசையாகிய நேர்பு நிரைபு மென்றவற்றைத் தம்மினுறழ நான்கு சீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும். உ-ம்: "ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு" என வரும். (12) இதுவும் ஆசிரிய உரிச்சீர் என்பது 322. முன்நிரை இறினும் அன்ன வாகும். என் - எனின், இதுவும் ஆசிரியவுரிச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நேர்பசை நிரைபசைப் பின், நிரை யிறுதியும் ஆசிரிய வுரிச்சீரா மென்றவாறு. உ-ம்: "யாற்றுமடை, குளத்துமடை." என வரும். (13) இயற்சீர்க்கு உரியதொரு வேறுபாடு 323. நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால. என் - எனின், இஃது இயற்சீர்க் குரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உரியசைப் பின்னர் நேரசை வரின், அஃது இயற்சீ ரென வருமென்றவாறு. உ-ம்: "ஆற்றுக்கால், குளத்துக்கால்." என வரும். (14) இதுவுமது 324. இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே நிரையசை இயல ஆகு மென்ப. (இ-ள்.) இயலசைப் பின்னர் உரியசைவரின், நிரையசை வந்தாற்போலக் கொள்க வென்றவாறு. எனவே, இவையும் இயற்சீ ரென்றவாறாம். உ-ம்: "மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு" என வரும். இத்துணையுங் கூறப்பட்டது ஈரசைச் சீர் பதினாறனுள் இயற்சீர் பத்தும் ஆசிரிய வுரிச்சீர் ஆறுமா மென்றவாறு. (15) உயிரளபெடைக்கு உரியதொரு மரபு 325. அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. என் - எனின், சீர்க்கண் உயிரளபெடைக்குரியதொரு மரபுணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் எ-று. உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை. உ-ம்: "கடாஅ உருவொடு.... வல்லதே ஒற்று." (குறள். 585) இது அளபெடை யலகுபெற்றது. "இடைநுடங்க வீர்ங்கோதை பின்தாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு." இதன்கண் அளபெடை யசைநிலையாகி யலகுபெறாதாயிற்று. (16) ஒற்றளபெடைக்கு உரியதொரு மரபு 326. ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப. என் - எனின், ஒற்றளபெடைக் குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒற்று அளபெடுத்து வரினும் அசைநிலையாகலும் உரித்து எ-று. மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை. உ-ம்: "கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு. 352) என வரும். (17) வெண்பா உரிச்சீர் 327. இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின் உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. என்-எனின், வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறொடு நான் கசையுங் கூட்டி யுறழ, அறுபத்து நான்கு மூவசைச் சீராம். அவற்றுள் இயற்சீர் நான்கன்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீராம் எ-று. உ-ம்: மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான்." என்பன. (18) வஞ்சி உரிச்சீர் 328. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை என்ப. என்-எனின், வஞ்சியுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியுரிச்சீரெனப் பாகுபட்டன மேற்சொல்லப்பட்ட மூவசைச்சீர் அறுபத்து நான்கு சீரினும் வெண்சீரல்லாத அறுபது மென்றவாறு. உ-ம்: (1) 1. நேர் நேர் நிரை-மா வாழ் நெறி 2. நேர் நேர் நேர்பு-மா வாழ் காடு 3. நேர் நேர் நிரைபு-மா வாழ் பொருப்பு 4. நேர் நிரை நிரை-மா வரு நெறி 5. நேர் நிரை நேர்பு-மா வரு காடு 6. நேர் நிரை நிரைபு-மா வரு பொருப்பு 7. நேர் நேர்பு நேர்-மா போகு கான் 8. நேர் நேர்பு நிரை-மா போகு நெறி 9. நேர் நேர்பு நேர்பு-மா போகு காடு 10. நேர் நேர்பு நிரைபு-மா போகு பொருப்பு 11. நேர் நிரைபு நேர்-மா வழங்கு கான் 12. நேர் நிரைபு நிரை-மா வழங்கு நெறி 13. நேர் நிரைபு நேர்பு-மா வழங்கு காடு 14. நேர் நிரைபு நிரைபு-மா வழங்கு பொருப்பு (2) 15. நிரை நேர் நிரை-புலி வாழ் நெறி 16. நிரை நேர் நேர்பு-புலி வாழ் காடு 17. நிரை நேர் நிரைபு-புலி வாழ் பொருப்பு 18. நிரை நிரை நிரை-புலி வரு நெறி 19. நிரை நிரை நேர்பு-புலி வரு காடு 20. நிரை நிரை நிரைபு-புலி வரு பொருப்பு 21. நிரை நேர்பு நேர்-புலி போகு கான் 22. நிரை நேர்பு நிரை-புலி போகு நெறி 23. நிரை நேர்பு நேர்பு-புலி போகு காடு 24. நிரை நேர்பு நிரைபு-புலி போகு பொருப்பு 25. நிரை நிரைபு நேர்-புலி வழங்கு கான் 26. நிரை நிரைபு நிரை-புலி வழங்கு நெறி 27. நிரை நிரைபு நேர்பு-புலி வழங்கு காடு 28. நிரை நிரைபு நிரைபு-புலி வழங்கு பொருப்பு (3) 29. நேர்பு நேர் நேர்-பாம்பு வாழ் கான் 30. நேர்பு நேர் நிரை-பாம்பு வாழ் நெறி 31. நேர்பு நேர் நேர்பு-பாம்பு வாழ் காடு 32. நேர்பு நேர் நிரைபு-பாம்பு வாழ் பொருப்பு 33. நேர்பு நிரை நேர்-பாம்பு வரு கான் 34. நேர்பு நிரை நிரை-பாம்பு வரு நெறி 35. நேர்பு நிரை நேர்பு-பாம்பு வரு காடு 36. நேர்பு நிரை நிரைபு-பாம்பு வரு பொருப்பு 37. நேர்பு நேர்பு நேர்-பாம்பு போகு கான் 38. நேர்பு நேர்பு நிரை-பாம்பு போகு நெறி 39. நேர்பு நேர்பு நேர்பு-பாம்பு போகு காடு 40. நேர்பு நேர்பு நிரைபு-பாம்பு போகு பொருப்பு 41. நேர்பு நிரைபு நேர்-பாம்பு வழங்கு கான் 42. நேர்பு நிரைபு நிரை-பாம்பு வழங்கு நெறி 43. நேர்பு நிரைபு நேர்பு-பாம்பு வழங்கு காடு 44. நேர்பு நிரைபு நிரைபு-பாம்பு வழங்கு பொருப்பு (4) 45. நிரைபு நேர் நேர்-களிறு வாழ் கான் 46. நிரைபு நேர் நிரை-களிறு வாழ் நெறி 47. நிரைபு நேர் நேர்பு-களிறு வாழ் காடு 48. நிரைபு நேர் நிரைபு-களிறு வாழ் பொருப்பு 49. நிரைபு நிரை நேர்-களிறு வரு கான் 50. நிரைபு நிரை நிரை-களிறு வரு நெறி 51. நிரைபு நிரை நேர்பு-களிறு வரு காடு 52. நிரைபு நிரை நிரைபு-களிறு வரு பொருப்பு 53. நிரைபு நேர்பு நேர்-களிறு போகு கான் 54. நிரைபு நேர்பு நிரை-களிறு போகு நெறி 55. நிரைபு நேர்பு நேர்பு-களிறு போகு காடு 56. நிரைபு நேர்பு நிரைபு-களிறு போகு பொருப்பு 57. நிரைபு நிரைபு நேர்-களிறு வழங்கு கான் 58. நிரைபு நிரைபு நிரை-களிறு வழங்கு நெறி 59. நிரைபு நிரைபு நேர்பு-களிறு வழங்கு காடு 60. நிரைபு நிரைபு நிரைபு-களிறு வழங்கு பொருப்பு. ஆக அறுபதும். (19) வஞ்சி உரிச்சீர்க்கு உரிய மரபு 329. தன்பா அல்வழித் தான்நடை இன்றே. என் - எனின், வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினு ளல்லது நடைபெறாது எ-று. (20) வஞ்சிப்பாவுக்கு உரியதொரு மரபு 330. வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. என் - எனின், இது வஞ்சிப்பாவிற்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள் வரப்பெறும் எ-று. (21) வெண்பாவிற்கு உரியதொரு மரபு 331. வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை இலவே. என் - எனின், வெண்பாவிற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்பாவுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் வெண்பாவினது நேரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை எ-று. (22) கலிப்பாவிற்கு உரியதொரு மரபு 332. கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ என்-எனின், கலிப்பாவிற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கலித்தளை வரும்வழி மேற் சொல்லப்பட்ட இருவகைச் சீருமொருங்கு நிற்கவும் பெறும் எ-று. (23) இதுவுமது 333. கலித்தளை யடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. என் - எனின், இதுவுமது. (இ-ள்.) கலிப்பாவிற்குரிய கலித்தளைக்கண் நேரீற்றியற் சீர் நிற்றற்குரித் தன்று ஆராய்வார்க் கென்றவாறு. (24) வஞ்சிப்பாவுக்கு உரியதொரு மரபு 334. வஞ்சி மருங்கினும் இறுதி நில்லாது என் - எனின், வஞ்சிக் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சிப்பாவினும் அடியினீற்றின்கண் நில்லாது நேரீற்றியற்சீர் எ-று. எனவே, அடிமுதற்கண் நிற்கப்பெறும் என்றவாறாம். (25) ஓரசைச்சீர் ஆமாறு 335. இசைநிலை நிறைய நிற்குவ தாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே. என் - எனின், ஓரசைச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இசை நிற்கின்ற நிலை நிரம்பாநிற்குமாயின் அசையும் சீராந் தன்மை போல வரையார் ஆசிரியர் எ-று. உ-ம்: 'நாள், மலர், காசு, பிறப்பு' என வரும். (26) ஓரசைச் சீரில் தளைஆமாறு 336. இயற்சீர் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. என் - எனின், அவ்வோரசைச் சீர் தளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து இயற்சீரின் ஈறு போலக் கொள்க எ-று. (27) தளை வழங்கும் திறன் 337. வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. என் - எனின், இதுவுந் தளை வழங்குந் திறன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்சீ ரீற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரசை நிரையீறு போலும் எ-று. இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது. (28) ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் 338. இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே. என்-எனின், ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின், ஆசிரியவடிக்கு வெண்பாவுரிச்சீர் வரையார் ஆசிரியர் எ-று. (29) இதுவுமது 339. அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் ஒன்றுத லுடைய ஒரோவொரு வழியே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரியஅடிக்கண் வரும் எ-று. "ஈரசை கொண்டும்" (செய்யு. 11) என்பது முதலாக இத்துணையுஞ் சொல்லப்பட்டது ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைச்சீர் அறுபத்து நான்கு, ஆகச்சீர் எண்பத்து நான்கனுள் ஓர் அசைச்சீர் நான்கென வும், அது தளை வழங்கும்வழி இயற்சீரொக்கு மெனவும், ஈரசைச்சீர் பதினாறனுள் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பிலியற்சீர் ஆறும் எனப் பத்தாம் எனவும், ஆசிரியவுரிச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கின் வெண்பாவுரிச்சீர் நான்கெனவும், ஏனைய வஞ்சியுரிச்சீர் எனவும் கூறியவாறு. (30) அடி ஆமாறு 340. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. என்-எனின், நிறுத்த முறையானே அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடியென்று சொல்லப்படுமென்றவாறு. இதன் வேறுபாடு முன்னர்க் கூறப்படும். (31) தளைக்கும் தொடைக்கும் அடியே இடம் 341. அடியுள் ளனவே தளையொடு தொடையே. என்-எனின், தளைக்குந் தொடைக்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தளையுந் தொடையும் அடியின்கண்ண எ-று. (32) மேலதற்குப் புறனடை 342. அடிஇறந்து வருதல் இல்லென மொழிப. என்-எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தளையுந் தொடையும் நான்கு சீரடியின் வருதலன்றி யடியி னீங்கி வருத லில்லை யென்றவாறு. அடிவரையறை யில்லாதனவற்றிற் கொள்ளப்படா என்ற வாறாம். (33) அடிக்கு உரியதொரு சிறப்பு 343. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. என்-எனின், இதுவும் அடிக்குரியதொரு சிறப்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படு மென்றவாறு. எனவே, பாட்டென்னுஞ் செய்யுட்கு அடி யின்றியமையா தென்று கொள்க. பாட்டாவன:- வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்பன. இனி அவ்வடியினை எழுத்தளவினாற் குறியிடுகின்றான். (34) குறளடி வரையறை 344. நாலெழுத் தாதி ஆக ஆறெழுத்து ஏறிய நிலத்தே குறளடி யென்ப. என்-எனின், குறளடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத் தீறாக ஏறிய மூன்று நிலத்தை யுடைத்து குறளடியென்று சொல்லுவரென்றவாறு. எனவே, குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம். இதற்குரிய எழுத்து முன்னர்க் காட்டுதும். (35) சிந்தடி வரையறை 345. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அல்வழி யான. என்-எனின், சிந்தடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு, ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத விடத்தென்றவாறு. எனவே, ஏழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடியாம் என்றவாறாம். (36) அளவடி வரையறை 346. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே. என்-எனின், அளவடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவடி யெனினும் நேரடியெனினும் ஒக்கும். பத்தெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் அளவடியாம் எ-று. எனவே, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம் பெறும். (37) நெடிலடி வரையறை 347. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. என்-எனின், நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவு நெடிலடியாம் எ-று. எனவே பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என்றவாறாம். (38) கழிநெடிலடி வரையறை 348. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. என்-எனின், கழிநெடிலடி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடிலடியாம் எ-று. எனவே பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும். (39) சீர்க்கு எழுத்து வரையறை 349. சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்நிலை வஞ்சிக் காறும் ஆகும். என்-எனின், சீர்க்கு எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சீர்நிலை ஐந்தெழுத்தின் மிகாது நேர் இறுதியாங் காலத்து, நிரையீறாகிய வஞ்சியுரிச்சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும் எ-று. எனவே, இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடியில்லை யென்றவா றாம். வஞ்சிச்சீர் முச்சீரடியின்கண் வருதலின். (40) சீர்க்கு உரியதொரு மரபு 350. எழுத்தள வெஞ்சினும் சீர்நிலை தானே குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப. இதுவுஞ் சீர்க்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டோதப்பட்ட அடிகள் பல தொடுக்கும்வழி ஓரடிக் கோரடி எழுத்தளவு குறைந்து வரினுஞ் சீர்நிலை நான்கின் இழிதலும் மிகுதலு மில்லை எ-று. (41) அடிக்கு உரிய எழுத்து வரையறை 351. உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான. என்-எனின், மேற் சொல்லப்பட்ட அடிக்குரிய எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா, உயிர்போல இயக்கமின்மையான் எ-று. உம்மை எச்சவும்மை யாதலாற் குறுகிய வுயிர்த்தாகிய குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்படா என்று கொள்க. எனவே எண்ணப்படுவன உயிரும் உயிர்மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும். (42) வஞ்சிப்பா அடியின் சீர்கள் 352. வஞ்சி அடியே இருசீர்த் தாகும். என்-எனின், வெண்பா ஆசிரியங் கலிக்குரித்தாகிய அடியிலக்கணம் கூறினார். இனி வஞ்சிப்பாவிற்குரிய அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடைத்து எ-று. (43) வஞ்சி உரிச்சீர் குறைந்த நிலை 353. தன்சீர் எழுத்தின் சிறுமை மூன்றே. என்-எனின், வஞ்சியுரிச்சீர் குறைந்த நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியுரிச்சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப் படும். எனவே, மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத் தும் வஞ்சியுரிச்சீரெழுத் தென்றவாறாம். (44) வஞ்சி அடி முச்சீரும் பெறுதல் 354. முச்சீ ரானும் வரும்இடன் உடைத்தே. என்-எனின், இதுவும் வஞ்சியடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சியடி மூன்று சீரானும் வரும் இடனுடைத்து எ-று. எனவே வஞ்சியடி இருசீரடியானும் முச்சீரடியானும் வரும் என்றவாறாம். உ-ம்: "தூங்குகையான் ஓங்குநடைய உறழ்மணியான் உயர்மருப்பின." (புறம். 22) இதனுள் மூன்றெழுத்து முதலாக ஆறெழுத்துக்காறுஞ் சீர் வந்தவாறும், இருசீரடி யாயினவாறுங் காண்க. "தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்." (யாப். வி.மேற்.) எனவும் வரும். (45) வஞ்சி அடிக்கு உரியதொரு மரபு 355. அசைகூன் ஆகும் அவ்வயின் ஆன. என்-எனின், மேற்சொல்லப்பட்ட வஞ்சியடிக்குரிய தொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இருவகையடியினும் அசை கூனாகி வரும் எ-று. (46) சீர் கூன் ஆகும் இடம் 356. சீர்கூன் ஆதல் நேரடிக் குரித்தே. என்-எனின், இதுவுங் கூனாகுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சீர்முழுதுங் கூனாகி வருதல் அளவடிக்குரித்து எ-று. 'நேரடி' என்றதனான், வெண்பாவினும் ஆசிரியத்தினுங் கலியினுங் கொள்ளப்படும். அவரே, "கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே." (குறுந். 216) இஃது ஆசிரியத்திற் கூன். "உதுக்காண், சுரந்தானா வண்மைச் சுவர்ணமாப் பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி - இரந்தான்மாட் டின்மை அகல்வது போல இருள்நீங்க மின்னும் அளிதேர் மழை." (யாப். வி.மேற்.) இது வெண்பாவிற் கூன். "நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே." (கலித். 7) இது கலிப்பாவிற் கூன். (47) அடிகளுக்கு எல்லாம் விரி 357. ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும் எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே. என்-எனின், மேற்சொல்லப்பட்ட அடிக்கெல்லாம் விரி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐவகை அடியும் விரிக்குங்காலை என்பது - நாற்சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐந்தடியினையும் விரித்துணர்த்துங் காலத்து எ-று. மெய் என்பது - உடம்பு. அஃதாவது அசையுஞ் சீரும் தோற்றுதற் கிடமாகிய எழுத்து. மெய்வகையமைந்த பதினேழ் நிலத்தும் என்பது - எழுத்து அமைந்த நாலெழுத்து முதலாக இருபதெழுத்தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் எ-று. எழுபது வகையின் வழுவில வாகி என்பது - எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி எ-று. எழுபது வகையாவது - இரண்டுசீர் தம்முட் புணரும் புணர்ச்சி எழுபது வகையாம் எ-று. மேற் சொல்லப்பட்ட எண்பத்துநான்கு சீரினும் (தொல். பொருள். செய்யுளியல். 30. உரை.) இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரியவுரிச்சீரான் வருவதனை ஆசிரியவுரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடி எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், உரியசையீற்றான் வருவதனை உரியசையீற்று வஞ்சியடி எனவும் ஓரசைச்சீரான் வருவதனை அசைச்சீரடி எனவும் வழங்கப்படும். அவற்றுள், இயற்சீரடி நேரீற் றியற்சீரடி எனவும் நிரையீற் றியற் சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற் றியற்சீரடியாவது நேரீறு நேர் முதலாகிய இயற்சீர் வருதலும் நேர்புமுத லாசிரிய வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வெண்பா வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும் நேர்முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். நிரையீற்றியற்சீரும் இவ்வாறே நிரைமுதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். ஆசிரிய வுரிச்சீரடியும் இருவகைப்படும், நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என. அவற்றுள், நேர்பீற்றுச் சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபீற்றுச் சீரும் அவ்வாறே நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடியும் நேரீறும் நிரையீறும் என இருவகைப்படும். அவற்றுள், நேரீறு, நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். நிரையீறும் அவ்வாறே நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலு மென இருவகைப்படும். அவற்றுள், நேர்பும் நேரும் முதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்துவகைப்படும். நிரைபும் நிரை முதலாகிய சீர்களொடு உறழ்தலும் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோ டொன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள், ஒன்றி வருவது நிரைபு நிரை முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலிய சீரொடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சியடியும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும். அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழப் பத்து வகைப்படும். இவ்வகையான் தளை ஏழு பாகுபட்டன; இவை நேரொன் றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என ஏழு வகையாம். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரியவுரிச்சீருமதுவேயாம். மூவசைச் சீருள் வெண்பா வுரிச்சீ ரொழிந்தனவெல்லம் வஞ்சியுரிச்சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது நேரொன் றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன் றாசிரியத் தளையாம்; மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம்; வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம்; நிரையா யொன்றிற் கலித்தளையாம்; வஞ்சியுரிச்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்றாதது ஒன்றா வஞ்சித் தளையாம். இவ்வகையால் தளை ஏழாயின, இவ்வாறாகி வருதல் வருகின்ற சூத்திரங்களா னுணர்க. இனி அடி அறுநூற்றிருபத்தைந்தாமாறு: அசைச்சீர் இயற்சீர் ஆசிரியவுரிச்சீர் வெண்சீர் வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தனையும் நிறுத்தி இவ்வைந்துசீரும் வருஞ்சீராக வுறழும்வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ் விருபத்தைந்தன் கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந் நூற்றிருபத்தைந்தன் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிரு பத்தைந்தாம் எ-று. அடிகள் விரியுமாறு 358. ஆங்கனம் விரிப்பின் அளவிறந் தனவே பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை. என்-எனின், அடி விரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டுறழ்ந்த முறையானே ஐந்தடி முதலாக மேன் மேலும் உறழ வரம்பிலவாம் எ-று. அஃதாவது அறுநூற்றிருபத்தைந்தனோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ மூவாயிரத்தொருநூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஆறாவது இவ்வகை யைந்து சீரையும் உறழப் பதினையா யிரத்து அறுநூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஏழாவது வரும் சீரைந்தனையும் உறழ எழுபத்தெண்ணாயிரத் தொரு நூற்றிரு பத்தைந்து விகற்பமாம். இவ்வகையினா னுறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடியினை அசையானும் விரிக்க வரம்பிலவாம். (49) ஆசிரியப்பாவிற்கு ஐவகை அடிகள் 359. ஐவகை அடியும் ஆசிரியக் குரிய. என் - எனின், ஆசிரியப்பா நாற்சீரான் வரும் என்பதூஉம் அதன்கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் உரிய என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற் குரிய எ-று. ஐவகை யடியு முரியவென, அவற்றிற்கு முதலாகிய நாற்சீரடியும் உரித்தாயிற்று. உ-ம்: "தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து நேர்ந்து வாமனை நினையின் சேர்ந்த வல்வினை தேய்ந்தக லும்மே." இதன்கண் முதலடி நாலெழுத்தான் வந்தவாறு காண்க. "குன்று கொண்டு நின்ற மாடு பொன்ற வந்த மாரி சென்று காத்த திறலடி தொழுமே." இதன்கண் முதலடி ஐந்தெழுத்தான் வந்தது. "ஆறு சூடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை நினக்கே." இதன்கண் முதலடி ஆறெழுத்தான் வந்தது. "போது சாந்தம் பொற்ப வேந்தி யாதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே." (யாப். வி. 46) என்பது முதலடி ஏழெழுத்தான் வந்தது. "தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன் றளியஎன் நெஞ்சே." இது முதலடி எட்டெழுத்தான் வந்தது. "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" (குறுந். 2) என்பது ஒன்பதெழுத்தான் வந்தது. "காமம் செப்பாது கண்டது மொழிமோ." (குறுந். 2) என்பது பத்தெழுத்தான் வந்தது. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது பதினோரெழுத்தான் வந்தது. "நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை" (அகம். 61) என்பது பன்னிரண்டெழுத்தான் வந்தது. "அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி" (பெரும்பாண். 1) என்பது பதின்மூன்றெழுத்தான் வந்தது. "யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை" (அகம். 16) என்பது பதினாலெழுத்தான் வந்தது. "ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை" (புறம். 56) என்பது பதினைந்தெழுத்தான் வந்தது. "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்" (குறுந். 101) என்பது பதினாறெழுத்தான் வந்தது. "தேன்தூங்கும் உயர்சிமைய மலைநா றிய வியன்ஞாலம்" (மதுரைக். 3) என்பது பதினேழெழுத்தான் வந்தது. "கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்" (புறம். 55) என்பது பதினெட்டெழுத்தான் வந்தது. "நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்" (புறம். 55) என்பது பத்தொன்பதெழுத்தான் வந்தது. "அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின்" (புறம். 167) என்பது இருபதெழுத்தான் வந்தது. (50) ஆசிரியத்தில் அடி விரவி வருதல் 360. விராஅய் வரினும் ஒரூஉநிலை இலவே. என்-எனின், மேற்சொல்லப்பட்ட அடி விரவி வருமாறு வரை யறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஐந்தடியுந் தனித்தனி ஆசிரியப் பாவிற் குரித்தாகி வருதலே யன்றி விரவி வரினும் நீக்கப்படாது எ-று. 'ஒரூஉநிலை' என்றதனான், தனித்தனி வரினும் விரவி வரினும் ஒக்கும் என்று கொள்க. உ-ம்: "செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே." (குறுந். 1) இதனுட் பலவடியும் வந்தவாறு காண்க. (51) தன்சீருக்குத் தளைவேண்டா எனல் 361. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா. என்-எனின், இத்துணையும் அடியும் அடிக்குரிய எழுத்துக்களும் ஓதினான்; இனி அவ்வடிக்கண் ஓசை வேறுபாடுந் தளையிலக்கணமு முணர்த்துவான் அத் தளைக்கண் வருவதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தத்தஞ் சீர்நிலை வகையானுந் தளைநிலை வகையானும் இனிய ஓசை வேறுபாட்டினையுடைய ஐந்தடிக்கு முரிய தன் சீருள்வழித் தளை வேறுபாடு கோடல் வேண்டா எ-று. எனவே சீர்தானே ஓசையைத் தரும் என்றவாறாம். உரிய தன்சீர் என்றது ஐந்தடியினும் ஏற்றவழி நிலைபெறுந் தன் சீரென்று கொள்க. அஃதாவது குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச் சீரும் ஈரசைச் சீரும் வருதலன்றி மூவசைச் சீர் வாராமை. பிறவாசிரியர் கொண்ட நேரொன் றாசிரியத்தளை. நிரையொன் றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றா வஞ்சித்தளை என எழுவகையி னும், வஞ்சித் தளை நிலைமொழி வஞ்சியுரிச்சீராக வருஞ் சீர்க்கு முதலசையோடு ஒன்றியது ஒன்றிய வஞ்சித்தளை எனவும் ஒன்றாதது ஒன்றா வஞ்சித்தளை எனவும் வழங்குபவாதலின், அவ்விருவாற்றானும் தளையாற் பயனின்றி நிலைமொழியாகிய வஞ்சியுரிச்சீர் தானே ஓசையுணர்த்துதலின் வஞ்சித்தளை கோடல் வேண்டாராயினார். இனி வெண்சீர் வெண்டளையும், வெண்சீர் நிற்ப வருஞ்சீர் வெள்ளையுள் வெண்சீராதல் இயற்சீராதல் வந்து வெண்டளையாக வேண்டுதலின் நிலைமொழியாகிய வெண்சீரை "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே" (செய்யு. 28) என ஓதுதலின், அதனை நிரையீற்றியற்சீர் ஆக்கினால் வருஞ்சீர் நேர்முத லியற்சீராயின் அதுவும் இயற்சீர் வெண்டளையாம். அவ்வாறன்றி வருமொழியும் (நேர்முதல்) வெண்சீராயின் 'தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா' என்பதனான் அடங்கும். அதனான் இருவாற்றானும் வெண்சீர் வெண்டளை கொள்ளாராயினார். இனி ஒழிந்த நான்கு தளையுங் கூறுகின்றாராயின் ஆசிரியத் தளையுங் கூறல் வேண்டா, அதுவும் இயற்சீரான் வருதலின் எனின், அதன்கண்ணே இயற்சீர் வெண்டளை கூற வேண்டுதலின் ஆசிரியத்தளையுங் கூறவேண்டு மென்க. (52) ஆசிரியத்தளை ஆமாறு 362. சீரியல் மருங்கின் ஓரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும். என்-எனின், ஆசிரியத் தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சீர்கள் தம்முட் பொருந்தும்வழி, நிலைமொழியாகிய இயற்சீரினீறும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையாம் எ-று. இரண்டையும் ஆசிரியத்தளை என வேண்டுதலின் பொதுப்படக் கூறினார். அவ்வழி வருஞ்சீர் இயற்சீராயிற் சிறப்பிற் றெனவுங் கொள்க. (53) மேலதற்குப் புறனடை 363. குறளடி முதலா அளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. என்-எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறளடிமுதலாக அளவடியளவும் வஞ்சியுரிச்சீர் வந்து உறழுநிலையில், இவ்வடிகள் இயற்சீரும் ஆசிரியவுரிச்சீருமாம் எ-று. எனவே பதினைந்தெழுத்து முதலாக நெடிலடியினுங் கழிநெடி லடியினுமே மெய் யுறழப் பெறுவ தென்றவாறாம். எடுத்தோத்துப் பெரும்பான்மை. அளவடிக்கண் வஞ்சியுரிச்சீர் மயங்குபவுளவேல் மேற்கொள்க. (54) வெண்பாவிற்கு அடியும் தளையும் 364. அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை ஒன்றாத் தன்மை யான. என்-எனின், வெண்பாவிற்குரிய அடியுந் தளையும் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற் குரிய தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் எ-று. எனவே ஒன்றுந் தன்மைக்கண் நெடிலடியும் சில வரும் என்று கொள்க. இச்சூத்திரத்தான் வெண்பாவிற் குரிய தொரு தளை உணர்த்தி னாராம். சிந்தடியாவது ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகிய அடி. அளவடியாவது பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தீறாகிய அடி. தளைவகை ஒன்றாமையாவது நிலைமொழியும் வருமொழியும் ஆகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையாயொன்றுவதுமன்றி மாறுபட வருவது. அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற் றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளையாம். இனி ஒன்றுந் தன்மை யாவது வெண்சீர் நிற்க வருஞ்சீர் முதலசையோ டொன்றுவது வெண்டளை யாம். இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையாமென்று கொள்க. உ-ம்: "மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டுக் களியானை கொண்டுவா வென்றான் - அளியார்முன் யாரோ வெதிர்நிற் பவர்." (யாப். வி. மேற்.) இஃது ஏழெழுத்தான் வந்த அடி. "இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது" (நாலடி. 36) இஃது எட்டெழுத்தான் வந்த அடி. "சென்று முகந்து நுதல்சுட்டி மாறோர்த்து வென்று வியர்த்தானென் கோ." (யாப். வி. மேற்.) இஃது ஒன்பதெழுத்தான் வந்த அடி. "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு" (குறள். 12) இது பத்தெழுத்தான் வந்த அடி. "ஏரி னுழாஅர் உழவர் புயலென்னும்" (குறள். 14) இது பதினோரெழுத்தான் வந்த அடி. "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்" (குறள். 3) இது பன்னிரண்டெழுத்தான் வந்த அடி. "இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்" (குறள். 5) இது பதின்மூன்றெழுத்தான் வந்த அடி. "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்" (குறள். 2) இது பதினான்கெழுத்தான் வந்த அடி. "முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் அகமறைந்தான் வாழுமென் றார - மகமறையா மன்னைநீ வார்குழை வையெயிற்றா யென்றோமற் றென்னையும் வாழு மெனின்." (யாப். வி. மேற்.) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி. "படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்" (குறள். 606) இது பதினாறெழுத்தான் வந்த அடி. இவையிரண்டும் நெடிலடி. (55) கலிப்பாவிற்கு அடி ஆமாறு 365. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி இருநெடில் அடியுங் கலியிற் குரிய. என்-எனின், இது கலிப்பாவிற்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின்காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாம் எ-று. இவ்விலக்கணங் கலித்தளை வருமிடத்தே கொள்க. கலியடி யென்னாது கலித்தளையடி என்றதூஉம் இவ்வேறுபாடு குறித்தென்க. "மரல்சாய மலைவெம்ப மந்தி உயங்க" (கலித். 13) இது பதின்மூன்றெழுத்தான் வந்தது. "வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட" (கலித். 66) இது பதினான்கெழுத்தான் வந்த அடி. "அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்" (கலித். 11) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி. "அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்" (கலித். 11) இது பதினாறெழுத்தான் வந்த அடி. "முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையென" (கலித். 56) இது பதினேழெழுத்தான் வந்த அடி. "அறனின்ற விதையொழியா னவலங்கொண் டதுநினையான்" (யாப்.வி.மேற்.) இது பதினெட்டெழுத்தான் வந்த அடி. "உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிபொல்லாய் செலவலித்தல்." (யாப். வி. மேற்.) இது பத்தொன்பதெழுத்தான் வந்த அடி. "நிலங்கிளையா நெடிதுயிரா நிறைதளரா நிரைதொடியாள்" (யாப். வி. மேற்.) இஃது இருபதெழுத்தான் வந்த அடி. (56) கலித்தளை ஆமாறு 366. நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்டல் வரைநிலை இன்றே அவ்வடிக் கென்ப. என் - எனின் கலித்தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட அடி கலித்தளை தட்டவழியே கொள்ளப்படுவது என உணர்த்தியவாறாம். வெண்பா வுரிச்சீர் நிற்ப நிரைமுதல் வெண்சீர்வந்து அதன்கண் நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு வரைநிலையில்லை எ-று. 'நிரைதட்டல்' என்றதனான் பிறிதாகி வருஞ்சீர் முதலாகிய நிரையொடு தளைப்பினுங் கலித்தளையாம் என்று கொள்க. நிரைமுதல் வெண்சீர் என்பது உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது. உ-ம்: மேற்காட்டிய அடிகளுட் காண்க. (57) கலிப்பாவில் தளை மயங்குதல் 367. விராஅய தளையு மொரூஉநிலை யிலவே. என்-எனின், இதுவுங் கலியடிக் குரியதொரு தளை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பிறவாகி விரவிய தளையும் நீக்குதலில்லை எ-று. அஃதாவது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவுதல். "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந் துயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான்." (கலித். 38) இதன்கண் முந்துற்ற இரண்டு சீரும் வெண்சீர் வெண்டளை ; இரண்டாஞ் சீரோடு மூன்றாஞ் சீர் இயற்சீர் வெண்டளை. நாலாஞ் சீரோடு ; மற்றையடி முதற்சீர் நிரையொன்றாசிரியத்தளை; அரக்கர் கோமான் நேரொன்றாசிரியத்தளை. அஃதேல், நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறா தென்றதென்னை? ஈண்டுக் 'கோமான்' வந்ததால் எனின், அவ்விலக்கணங் கலித்தளையான் வரும் அடிக்கென்க. சிறுபான்மை வஞ்சித்தளை வருதலும் கொள்க. (58) ஆசிரியப்பாவில் வெண்பா அடி மயங்கல் 368. இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்பவும் உளவே. என்-எனின், இஃது ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்கு மாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சீர் வெண்டளையா னாகிய வெண்பாவடி ஆசிரியப் பாவின்கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவுமுள எ-று. 'உள' என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க. வெண்டளை என்னாது 'அடி' என்றதனான், தளை விரவுதல் பெரும் பான்மை; அடி விரவுதல் சிறுபான்மை என்றுகொள்க. உ-ம்: "நெடுங்கயிறு வலந்த" என்னும் பாட்டினுள், "கடல்பா டொழிய இனமீன் முகந்து" (அகம். 30) என்றது இயற்சீர் வெண்டளையடி. பிறவு மன்ன. (59) ஆசிரியப்பாவிற்கு உரியதொரு மரபு 369. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப. என்-எனின், இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள எ-று. 'உண்டு' என்னாது 'உள' என்றதனான் ஒருபாட்டிற் பல வருதலும் கொள்க. ஆசிரியமென்பது அதிகாரத்தான் வந்தது. உ-ம்: முன்னர்க் காட்டுதும். (60) ஆசிரியத்தில் அறுசீரடி 370. அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) அறுசீரடி யாசிரியத் தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் எ-று. ஆசிரியப்பா என்ப ததிகாரத்தான் வந்தது. "சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே" (புறம். 235) என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது; இரண்டாமடி ஆசிரியத் தளையொடு பொருந்தி யறுசீரடியாகி வந்தது. 'பொருந்தி' என்றதனான் அத்தளை சில வருதல் கொள்க. ஏனையவை புணருஞ் சீரான் வந்தன. (61) எழுசீர் அடிக்கு உரியதொரு மரபு 371. எழுசீ ரடியே முடுகியல் நடக்கும். என்-எனின், எழுசீரடிக் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுசீரான் வரும் முடுகியலடி எ-று. உ-ம்: முன்னர்க் காட்டுதும். (62) எய்தியதன்மேல் சிறப்புவிதி 372. முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும். என்-எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஐஞ் சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் நீக்கப்படாதென்றவாறு. உ-ம்: முன்னர்க் காட்டுதும். (63) எய்தியது விலக்குதல் 373. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் மூவகை யடியு முன்னுதல் இலவே. என்-எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) முடுகியலாகி வரு மூவகை யடியும் ஆசிரியப்பாவினும் வெண்பாவிலும் நிற்றல் இல எ-று. எனவே கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்றவாறாயிற்று. உ-ம்: முன்னர்க் காட்டுதும். 'நாற்சீர் கொண்டதடி' என வோதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஓதி, ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான், அடியாவது இரண்டுசீர் முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும் அறுசீர் முதலாக வரும் அடியெல்லாங் கழிநெடிலடியா மெனவும் பிற நூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு உடம்பாடென்று கொள்க. அறுசீர் முதலான அடிகளின் எழுசீர் எண்சீர் சிறப்புடை யன எனவும், எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரிய ருரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை 'ஆங்கனம் விரிப்பின் அளவிறந் தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை' (செய்யுளியல் 49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவுங் கலிப்பாவும் அவ்வடியினான் வருதலின் என்று கொள்க. (64) ஆசிரியப்பாவிற்கு உரியதொரு வேறுபாடு 374. ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின் தோற்ற முச்சீர்த் தாகு மென்ப. என்-எனின், இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆசிரியப்பாவின் ஈற்றயலடி தோன்றுமிடத்து முச்சீர்த்தாகவும் பெறும் எ-று. உ-ம்: "முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே." இதனுள் ஈற்றயலடி முச்சீரான் வந்தது. (65) இதுவுமது 375. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட முச்சீரடி ஆசிரியப்பாவினுள் இடையும் வரப்பெறும் எ-று. "நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே." இதனுள் மூன்றாமடியும் நான்காமடியும் முச்சீரான் வந்தவாறு கண்டுகொள்க. (66) கலிப்பாவிற்கு ஈற்று வேறுபாடு 376. முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். என்-எனின், கலிப்பாவிற்கு ஈற்று வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈற்றயலடி முச்சீரென வோதப்பட்டது கலிப்பாவின்கண் நாற்சீர் ஆகியும் வரும் எ-று. இச்சூத்திரம் எதிரது நோக்கிக் கூறப்பட்டது, 'எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே' (செய்யுளியல். 72) என ஓதுகின்றானாதலின். உ-ம்: "அரிமான் இடித்தன்ன" என்னும் பாலைக் கலியுள், (சுரிதகம்) "முளைநிரை முறுவல ர் ஆயத்துள் எடுத்தாய்ந்த இளமையுந் தருவதோ இறந்த பின்னே." (கலித். 15) என ஈற்றயலடி நாற்சீரான் வந்தது. (67) வஞ்சிப்பாவிற்கு ஈறு 377. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே. என்-எனின், வஞ்சிப் பாவிற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இயல்பிற்று எ-று. தூக்கெனினும் இறுதியெனினும் ஒக்கும். செந்தூக்கெனினும் ஆசிரிய ஈறு எனினும் ஒக்கும். 'செந்தூக் கியற்று' என்றமையான் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலுங் கொள்க. உ-ம்: "தொடியுடைய தோள்மணந்தனன்" என்னும் பாட்டுள், "இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் தலையே." (புறம். 239) இதனுள் ஈற்றயலடி நாற்சீரான் வந்தது. "பூந்தாமரைப் போதலமர" என்னும் பாட்டுள், "மகிழு மகிழ்தூங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே." (யாப். வி. மேற். 74) இதனுள் ஈற்றலயலடி முச்சீரான் வந்தது. (68) வெண்பாவிற்கு இறுதி அடியும் சீரும் 378. வெண்பா ஈற்றடி முச்சீர்த் தாகும் அசைச்சீர்த் தாகும் அவ்வழி யான. என்-எனின், வெண்பாவிற்கு இறுதி யடியும் இறுதிச் சீரும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்பாவி னீற்றடி மூன்று சீரை யுடைத்தாகும்; அதன்கண் இறுதிச்சீர் அசைச்சீரான் வரும் எ-று. உ-ம்: முன்னர்க் காட்டுதும். (69) மேலதற்குப் புறனடை 379. நேரீற் றியற்சீர் நிரையும் நிரைபும் சீரேற் றிறூஉம் இயற்கைய என்ப. என்-எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்பாவி னிறுதிச் சீரின் அயற்சீர் நேரீற் றியற்சீராயின், நிரையசையும் நிரைபு அசையுஞ் சீராந்தன்மையைப் பெற்று முடியும் இயற்கையை யுடைய எ-று. "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை." (குறள். 9) "தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது." (குறள். 7) என வரும். (70) இதுவுமது 380. நிரையவண் நிற்பின் நேரு நேர்பும் வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) வெண்பாவி னீற்றயற்சீர் நிரையீற் றியற்சீராயின் நேரசையும் நேர்பசையும் முடிபாம் எ-று. உ-ம்: "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்." (குறள். 1021) "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று." (குறள். 108) என வரும். "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே." (செய்யுளியல் 28) என்பதனான் ஈற்றயற்சீர் முதலசையான் வரினும் நேரும் நேர்பும் முடிபாகக் கொள்ளப்படும். உ-ம்: "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்." (குறள். 10) "இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." (குறள். 5) என வரும். (71) கலிப்பாவிற்கு முடிபு 381. எழுசீர் இறுதி யாசிரியங் கலியே. என்-எனின், கலிப்பாவிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கலிப்பாவிற்கு ஈற்றயலடி முச்சீரான் வரும் ஆசிரிய முடிபாகும் எ-று. உ-ம்: "தொடங்கற்கட் டோன்றிய" என்னுங் கலியுள், சுரிதகம் "தொல்கவின் தொலைதல் அஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காத லோரே." (கலித். 2) என வந்தது. ஈற்றயலடி நாற்சீரான் வருமென்பது மேற்கூறப்பட்டது. (72) இதுவுமது 382. வெண்பா இயலினும் பண்புற முடியும். (இ-ள்.) கலிப்பா வெண்பாச் சுரிதகமாகவும் முடியும் எ-று. உ-ம்: "அறனின்றி அயல் தூற்றும்" என்னும் கலியுள், சுரிதகம் "யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை ஆனா திவள்போல் அருள்வந் தவைகாட்டி மேனின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங் கானந் தகைப்ப செலவு." (கலித். 3) என வெண்பாவினியலான் இற்றவாறு காண்க. இத்துணையும் அடியிலக்கணம். (73) யாப்பு 383. எழுத்து முதலா ஈண்டிய அடியிற் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர். என்-எனின், யாப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்து முதலாக அசைசீர் அடி என ஈண்டோதப்பட்ட அடியினாற் றான் குறித்த பொருளை யிறுதியடி யளவு முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பென்று சொல்லுவர் புலவர் எ-று. இது சொல்ல வேண்டிய தென்னை? செய்யுட் பாடுவார்க்கு இயல்பன்றோ எனின், ஈண்டுச் செய்யுளுறுப்புள் ஓதுகின்றாராதலின் யாதானு மொருபொருட்கட் பலசொற் றொடுத்து வழங்குங்கால் குறித்த பொருளை முடித்தல் வேண்டுஞ் சொல்லே சேர்த்துக் கூறல் வேண்டும் எனவும், அது மிகாமற் குறையாமற் கூறல் வேண்டும் எனவும், இலக்கணங் கூறல் வேண்டும் என்க. அதன் வகை முன்னர்க் காட்டுதும். (74) யாப்பின் பகுதி 384. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர். என்-எனின், இதுவும் அதன் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாட்டு முதலாக முதுசொல் லீறாகச் சொல்லப்பட்ட எழுநிலத்தினும், வளவிய புகழையுடைய சேரன் பாண்டியன் சோழன் என்னும் மூவரது தமிழ்நாட்டகத்தவர் வழங்கும் தொடர்மொழிக்கண் வரும் மொழி யாப்பாவது எ-று. எனவே யாப்பாவது:- பாட்டியாப்பு, உரையாப்பு, நூலியாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, பழமொழியாப்பு என எழுவகைப்படும். மேலைச் சூத்திரத்துள், 'குறித்த பொருளை முடிய நாட்டல்' என்றமையானும், இச் சூத்திரத்துள், 'நாற்பேரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது' என்று ஓதினமையானும், குறித்த பொருள் முடியுமாறு சொற்றொடுத்தல் என்று கொள்ளப்படும். உ-ம்: "தாமரை புரையுங் காமர் சேவடிப் பவளத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே." (குறுந். கடவுள் வாழ்த்து) இதனுட் குறித்த பொருள்,முருகவேள் காப்ப உலகங் காவற்பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு எழுத்து முதலாகி வந்து ஈண்டிய அடிகளெல்லாவற்றானும் நாட்டியவாறு கண்டு கொள்க. (75) மரபு 385. மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று. என்-எனின், மரபு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மரபாவதுதான் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நாற்சொல்லின் இயற்கையானே யாப்பின் வழிப் பட்டது எ-று. குறித்த ஒருபொருளை முடியச் சொற் றொடுக்குங்கால் இயற் சொல்லாகிய பெயர் வினை யிடை யுரியானும், ஏனைத் திரிசொல் திசைச்சொல் வடசொல்லானும், எழுவகை வழுவும் படாமல் புணர்ப்பது என்றவாறாம். அவற்றுள், இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்தும் பலவகை நாட்டினும் தத்தமக்குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொன் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொன் மரபாவது திரிந்த வகையாகிய சொல்மரபு. யாதானும் ஒரு செய்யுட் செய்யுங் காலத்துப் பொருளுணர்த்துஞ் சொற்கள் இவையாதலின், இவை ஒரு பொருட்குரித்தாகிய ஆண் பெயரும் பெண்பெயரும் குழவிப்பெயரும் முதலாயின பிற பொருட்கண் வாராமையான் அவற்றை அவ்வம் மரபினாற் கூறுதலும் ஒருமை பன்மை மயங்காமையும் பெயரும் வினையும் முடிவுபெறக் கூறுதலும் வேண்டுதலின், இவ்விலக்கணமுங் கூறல் வேண்டிற்று. (76) தூக்கு - அகவல் ஓசை 386. அகவ லென்ப தாசிரி யம்மே. என்-எனின், இது தூக்காமாறு உணர்த்துவான் அவற்றுள் ஆசிரியத்திற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அகவல் என்னும் ஓசை ஆசிரியத்திற் குறித்து எ-று. தூக்கெனினும் ஓசையெனினு மொக்கும். அகவல் என்பது ஆசிரியன் இட்டதொரு குறி. அது வருமாறு: "செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட் டியானை கழல்தொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே." (குறுந். 1) இதனுள் எழுத்தளவு மிகாமற் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஓசையான் ஆசிரியம் வந்தவாறு காண்க. (77) வெண்பா ஓசை 387. அஃதன் றென்ப வெண்பா யாப்பே. என்-எனின், வெண்பாவிற் குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசை யன்று எ-று. எனவே, அகவுதலில்லாத ஓசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பலோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் 'அஃதன்று' என்றார். உ-ம்: "பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ மனனொடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்." (முத்தொள். 104) இது மேற்சொல்லப்பட்டது போல இசைகுறித்து வருதலின்றிச் செப்புதலாகிய வாக்கியம் போன்ற ஓசைத்தாகி வந்தவாறு காண்க. (78) கலிப்பா ஓசை 388. துள்ளல் ஓசை கலியென மொழிப. என்-எனின், கலிப்பாவிற்கு ஓசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) துள்ளலோசை கலிப்பாவிற் காம் எ-று. துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை யுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற் போலக் கொள்க. உ-ம்: "அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி" (கலித். 11) என்றவழி 'அரிதாய வறன்' என நின்றவழிச் செப்பலோசைத்தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக் கேற்ற சொல்லொடு புணராது ஆண்டெழுந்த ஓசை துள்ளி வந்தமையான் துள்ளலோசையாயிற்று. (79) வஞ்சிப்பா ஓசை 389. தூங்கல் ஓசை வஞ்சி யாகும். என்-எனின், வஞ்சிப்பாவிற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தூங்கலாவது அறுதியுற்ற ஓசை; அவ்வோசைத்தாகி வரும் வஞ்சி எ-று. "சுமறிவன துறையெல்லாம் இறவீன்பன இல்லெல்லாம் மீன்திரிவன கிடங்கெல்லாந் தேன்தாழ்வன பொழிலெல்லாம், எனத் தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே." (யாப். வி. மேற். 63) இதனுட் சீர்தோறும் ஓசை யற்றவாறு கண்டுகொள்க. (80) மருட்பா ஓசை 390. மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுந் தன்மை யின்றே. என்-எனின், மருட்பாவிற்கு ஓசை இதுவென உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மருட்பாவிற்கு ஓசை இதுவென்னுந் தன்மை இல்லை; அதற்கு வெண்பாவும் ஆசிரியப்பாவும் உறுப்பாக, அவ்விரண்டன் ஓசையே அதற்கு ஓசை எ-று. "திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலனுஞ் சேவடி யெய்தும் - அரிபரந்த போகிதழ் உண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே" (பு.வெ.கைக்கிளை. 3) என்பதனுட் கண்டுகொள்க. (81) பாக்களுக்கு உரியதொரு மரபு 391. அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார். என்-எனின், பாக்கள் எல்லாவற்றிற்கும் உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஓசை வகையானல்லது பாட்டாங்குக் கூறார் எ-று. பாட்டாங்குக் கூறுதலாவது, ஓசை ஒழித்துச் சீருந் தளையும் அடியும் படக் கூறுதல். அவ்வாறுபடக் கூறுதலான் பாட்டாங்கு ஆகா தென்பதூஉம், அடியுந் தொடையும் பெற வந்ததாயினும் நூலின்பாற் படுதல் உரையின்பாற் படுதல் என்பதூஉம் கூறியவாறாம். அது வருமாறு: "ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும் எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே" (செய்யுளியல் 48) என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசை யின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப்படும் என்று கொள்க. (82) ஐயம் அறுத்தல் 392. தூக்கியல் வகையே ஆங்கென மொழிப. என்-எனின், ஐயமறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் அதிகாரப்பட்ட தூக்கியலும் வகை சொல்லப் பட்ட நாலுமே எ-று. எனவே, இன்னும் உளவோ எனக் கருதற்க வென ஐயந் தீர்த்தவாறு. இங்கு ஓதப்பட்ட தூக்குச் செவிப்புலனாதலின் அதனானே ஓர்ந்துணர்ந்து பாகுபாடறிக. (83) தொடைவகை 393. மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப. என்-எனின், தொடைப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மோனை எனவும் எதுகை யெனவும் முரணெனவும் இயைபெனவும் நான்கு நெறிப்பட்ட மரபினையுடைய, தொடையினது பாகுபாடு எ-று. உதாரணந் தத்தஞ் சிறப்புச் சூத்திரங்களுட் காட்டுதும். (84) இதுவுமது 394. அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) அளபெடைத் தொடையோடே கூட ஐந்தென்று சொல்லவும் பெறும் எ-று. (85) இதுவுமது 395. பொழிப்பும் ஒரூஉஞ் செந்தொடை மரபும் அமைந்தவை தெரியின் அவையுமா ருளவே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) பொழிப்பெனவும் ஒரூஉ வெனவும் செந்தொடையாம் எனவும் அமைந்தன ஆராயின் அவையுந் தொடைப் பாகுபாடாம் எ-று. (86) இதுவுமது 396. நிரனிறுத் தமைத்தலும் இரட்டை யாப்பும் மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) நிரலே நிறுத்தி யமைத்துக் கோடலும் இரட்டைத் தொடையும் மேற்சொன்னவாற்றான் முடியவும் பெறும் எ-று. நிரனிறைத் தொடையாவது பொருளைச் சேர நிறுத்திப் பயனை யுஞ் சேர நிறுத்துதல். இரட்டைத் தொடையாவது ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வருதல். இத்துணையுங் கூறப்பட்டது அடிதொறும் வருவன ஐந் தொடை எனவும் அடிக்கண் வருவன ஐந்தொடை எனவும் அவ்வைந் தும் மூன்றாகி அடங்குமெனவும் கூறியவாறாம். (87) மோனை ஆமாறு 397. அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை. என்-எனின், மோனை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதோறும் தலையெழுத்து ஒப்பது மோனைத் தொடையாம் எ-று. அஃதேல் 'அடியுள் ளனவே தளையொடு தொடையே' (செய்யு ளியல் 32) எனவோதி, ஈண்டும் அவற்றை யடியினும் வருமென்றல் பொருந்தாதெனின், ஆண்டு மற்றையடியில் வாராதென்றாரல்லர்; அடியல்லாத உரை முதலாயினவற்றில் தளையொடு தொடையில்லை என்பார் 'அடியுள்ளனவே தளையொடு தொடையே' என்றார். "மாவும் புள்ளும் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடையும் மாயோய் நின்வயின் புறத்திறுத் தற்றே." (யாப்.வி.மேற்) என வரும். (88) எதுகை ஆமாறு 398. அஃதொழித் தொன்றின் எதுகை ஆகும். என்-எனின், எதுகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதொறும் முதலெழுத் தொன்றாமல் இரண்டா மெழுத்து ஒன்றின் எதுகை யாகும் எ-று. அஃதேல், முதலெழுத்தும் ஒன்றி இரண்டாமெழுத்தும் ஒன்றின் யாதாகு மெனின், முந்துற்ற மோனையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்க. உ-ம்: "அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே." (கலித். 11) என வரும். (89) எய்தியதன்மேல் சிறப்புவிதி 399. ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. என்-எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த வெழுத்தே வருதலன்றி வருக்க வெழுத்தும் உரிய எ-று. "பகலே பல்பூங் கானற் கிள்ளை ஓப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇய பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படக் கருதி" (யாப். வி. மேற்) என்பது வருக்க மோனை. "ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேள்இனி." (கலித். கடவுள்வாழ்த்து) என்பது வருக்கவெதுகை. பிறவு மன்ன. (90) முரண் ஆமாறு 400. மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. என்-எனின், முரணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதொறும் வந்த சொல்லினா னாதல் பொருளினா னாதல் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் தொடையாம் எ-று. சொல்முரணாவது சொல்லானன்றிப் பொருளான் மாறுபடாமை. பொருள்முரணாவது மாறுபாடுடைய பொருளைச் சொல்வது. "இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன நுண்தா துறைக்கும்." (யாப்.வி. மேற்) என்பது, இரும்பும் பொன்னும் மாறுபாடுடைய வாதலிற் பொருள்முரண் ஆயிற்று. "சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே." (யாப்.வி.மேற்) என்றவழிக் குடியுங் கண்ணுமாகாது சிறுமை பெருமை என்னும் சொல்லே மாறுகோடலிற் சொன்முரணாயிற்று. (91) இயைபுத்தொடை ஆமாறு 401. இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப. என்-எனின், இயைபுத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதோறும் ஈற்றெழுத்து ஒன்றி வரின் அஃது இயைபுத்தொடை என்று சொல்வர் எ-று. "இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே அரிமதர் மழைக்கணும் அணங்கே திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே." (யாப்.வி.மேற்) என வரும். அசை சீரென வரையாது கூறினமையான், ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம் என்று கொள்க. (92) அளபெடைத்தொடை ஆமாறு 402. அளபெழின் அவையே அளபெடைத் தொடையே. என்-எனின், அளபெடைத் தொடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிதொறும் அளபெழத் தொடுப்பின் அஃது அளபெடைத் தொடையாம் எ-று. "ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது." (குறள். 1176) என வரும். (93) பொழிப்புத்தொடை ஆமாறு 403. ஒருசீ ரிடையிட் டெதுகை யாயின் பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே என்-எனின், பொழிப்புத் தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு சீரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்புத் தொடை யாம் எ-று. எதுகையென ஓதினார் ஆயினும், 'வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என்பதனான் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாம் என்று கொள்ளப்படும். உ-ம்: "அரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி." (யாப்.வி.மேற்.) இது பொழிப்பு மோனை. "பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி" (யாப்.வி.மேற்.) என்பது பொழிப்பெதுகை. "சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கி" (யாப். வி.மேற்.) என்பது பொழிப்பு முரண். "கடலே, கானலங் கழியே கைதையந் துறையே" என்பது பொழிப்பியைபு. "பூஉங் குவளைப் போஒ தருந்தி" (யாப்.வி.மேற்.) என்பது பொழிப்பளபெடை. (94) ஒரூஉத்தொடை ஆமாறு 404. இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப. என்-எனின், ஒரூஉத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு சீர் இடையிட்டு மோனை முதலாயின வரத் தொடுப்பது ஒரூஉத் தொடையாம் எ-று. "அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி" (யாப்.வி.மேற்.) என்பது ஒரூஉமோனை. "மின்னிவர் ஒளிவடந் தாங்கி மன்னிய" (யாப்.வி.மேற்.) என்பது ஒரூஉ வெதுகை. "குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து" (யாப்.வி.மேற்.) என்பது ஒரூஉ முரண். "நிழலே இனியதன் அயலது கடலே" (யாப்.வி.மேற்.) என்பது ஒரூஉ வியைபு. "காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்" (யாப்.வி.மேற்.) என்பது ஒரூஉ அளபெடை. (95) செந்தொடை ஆமாறு 405. சொல்லிய தொடையொடு வேறுபட் டியலின் சொல்லியற் புலவர்அது செந்தொடை என்ப. என்-எனின், செந்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம் எ-று. "பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே." (யாப்.வி.மேற்.) என வரும். இனி நிரனிறுத் தியற்றலும் இரட்டை யாப்பும் மொழிந்தவற் றியலான் (செய்யுளியல் 87) வருமாறு: "அடல்வேல் அமர்நோக்கி நின்முகங் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழலரும் பார்க்குங் கடலுங் கனையிருளும் ஆம்பலும் பாம்புந் தடமதி யாமென்று தாம்." (யாப். வி.மேற்.) இது பொருளான் வேறுபட்ட துணையல்லது எழுத்தான் வேறுபடாமையின் எதுகைத் தொடையாயிற்று. இனி, இரட்டைத் தொடை வருமாறு: "ஒக்குமே ஒக்குமே ஒக்குமே யொக்கும் விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்." (யாப்.வி.மேற்.) இதுவுஞ் சொல்லிய தொடைப்பாற் பட்டவாறு காண்க. இணை மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை முதலாயினவும் அந்தாதித் தொடையுங் கூறாத தென்னையெனின், 'தெரிந்தனர் விரிப்பின் வரம்பில வாகும்' என வருகின்ற (98) சூத்திரங் கூறுகின்றாராதலின், அச்சூத் திரத்தின்காறும் பாட்டிற் கின்றியமையாத தொடை யுணர்த்தினா ரென்று கொள்க. (96) தொடைகளின் விரி வகை 406. மெய்பெறு மரபின் தொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. என்-எனின், மேற்சொல்லப்பட்ட தொடை யெல்லாம் விரிவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வடிவு பெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது எ-று. அவையாமாறு: மொழிமுதலாகிய எழுத்து உயிர் பன்னிரண்டு. இதன் கிளையெழுத்து ஒரோவொன்றிற்குப் பதினொன்றுளவாகலின் அவற்றை உறழ, நூற்று முப்பத்திரண்டாம். 'கதநபம' என்பவற்றை உயிர் பன்னிரண்டோ டுறழ அறுபதாம்; அவ்வறுபதையும் முதற் றொடை யாக்கிக் கிளையெழுத்தோ டுறழ அறுநூற்றறுபதாம். சகரத்தின் முதலா கெழுத்து ஒன்பது; அவற்றைக் கிளையெழுத்தோ டுறழ எழுபத்தி ரண்டாம். வகரத்தின் முதலாகெழுத்து எட்டு; அவற்றைக் கிளை யெழுத்தோ டுறழ ஐம்பத்தாறாம். யகரத்தின் முதலாகெழுத்து ஒன்று; கிளையெழுத்தில்லை. ஞகரத்தின் முதலா கெழுத்து மூன்று; அவற்றைக் கிளையெழுத்தோ டுறழ ஆறாம். இவ் வகையினான் முதலெழுத்துத் தொண்ணூற்று மூன்றுங் கிளை யெழுத்துத் தொளாயிரத்திருபத்தாறும் ஆக மோனைத்தொடை ஆயிரத்தொருபத் தொன்பதாம். எதுகை யாமாறு: உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர் மெய்யெழுத்து இருநூற்றொருபத்தாறில் ஙவ்வருக்கம் ஒழிந்த எழுத்து இருநூற்றுநாலினையும் முதலெழுத்தினொடும் கிளையெழுத்தினொடும் உறழ இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டாம். இதனோடு ஒற்றுப் பத்தொன் பதுங் குற்றுகரம் ஆறுங் கூட்ட எதுகைத் தொடை இரண்டாயிரத்து நானூற்று எழுபத்து மூன்று பாகுபாடாம். முரண்தொடை சொன்முரண் பொருண்முரண் என இரண்டாம். இயைபுத்தொடையாமாறு: உயிரெழுத்து மொழியீற்றின்கண் உயிர் மெய்யாகி வருதலின் அவையாகா. உயிர்மெய் இருநூற்றொ ருபத்தாறில் இறுதிக்கண் வாராத ஙகரவுயிர்மெய் பன்னிரண்டும் அகரம் பதினேழும் இகரம் பதினாலும் உகரம் இரண்டும் எகரம் ஒன்றும் ஒகரம் ஒன்றும் இவை ஒழிந்து நின்ற எழுத்து நூற்றறுபத்தைந்தும் ஞண நமனயரலவழள என்னும் புள்ளியிறுதி பதினொன்றும் குற்றுகர வீறு ஆறும் ஆக இயைபுத்தொடை நூற்றெண்பத்திரண்டு பாகுபாடாம். அளபெடைத் தொடை யாமாறு: மொழிமுதலாகு முயிரள பெடை ஏழாம். கதநபம என்னும் உயிர்மெய்யளபெடை முப்பத்தைந்து. சகர அளபெடை ஐந்து. வகர அளபெடை ஐந்து, யகர அளபெடை இரண்டு. இவை ஐம்பத்து நான்கில் உயிரளபெடை தனிநிலையாம். ஏனைய வற்றை முதனிலை இடைநிலை இறுதிநிலை என வுறழ நூற்று நாற்பத் தொன்றாம். ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் மகரமும் ழகரமும் ஒழித்து ஏனைய பதினொன்றும் அளபெடுக்க ஒற்றளபெடை பதினொன்றாம். இவ்வகையினான் அளபெடைத் தொடை நூற்றைம்பத்தொன்பது வகையாம். இவ்வகையினோடு இத்தொடை மூவாயிரத்தெண்ணூற்று முப்பத்தைந்து வகையாம். பொழிப்புத் தொடையிற் கிளையெழுத்து வாராது. மோனைப் பொழிப்புத் தொண்ணூற்று மூன்று, எதுகைப் பொழிப்பு இருநூற்றிருபத்தொன்பது, முரண் பொழிப்பு இரண்டு, இயைபுப் பொழிப்பு நூற்றெண்பத்திரண்டு, அளபெடையுள் ஒற்றள பெடை பொழிப்பாகி வாராமையின் உயிரளபெடைப் பொழிப்பு நூற்று நாற்பத்தெட்டு. இவையெல்லாங் கூட்டப் பொழிப்புத் தொடை அறுநூற்றைம்பத்துநாலு வகையாம். ஒரூஉத் தொடையும் இவ்வகையினால் அறுநூற்றைம்பத்து நாலாம். இனிச் செந்தொடையாமாறு: மொழிமுதலாகும் எழுத்துத் தொண்ணூற்று மூன்று. மற்றையடியினு மொத்து வருங்கால் அவை மோனையுள் அடங்குதலின், அவற்றை ஒழித்து ஏனை யெழுத்துத் தொண்ணூற்றிரண்டோடும் உறழ எண்ணாயிரத்தைந் நூற்றைம்பத் தாறு வகையாம். இவ்வகையினால் தொடைவிகற்பம் பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதாம். (97) எய்தியதன்மேல் சிறப்புவிதி 407. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும். என்-எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட தொடையினை ஆராய்ந்து விரிப்பின் வரம்பிலவாகி விரியும் எ-று. அவையாவன: மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவற்றின்கண் இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க்கது வாய், கடை, கடையிணை, கடைக்கூழை, இடைப்புணரென வேறு படுத்துறழ்ந்தும், எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி அடியந்தாதி எனவும், உயிர்மோனை உயிரெதுகை நெடில்மோனை நெடிலெதுகை வருக்கமோனை வருக்க எதுகை இனமோனை இனவெதுகை ஆசெதுகை எனவும், மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட் டெதுகை எனவும், இவ்வாறு வருவனவற்றை மேற்கூறிய வகையினான் எழுத்து வேறுபாட் டினா னுறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப் பாக்களானும் உறழவும், வரம்பிலவாகி விரியும். அவற்றுட் சில வருமாறு: இணையாவது முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. கூழையாவது முந்துற்ற மூன்று சீரினும் வந்து இறுதிச்சீரின் வாராதது. "அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி" (யாப். வி.மேற்.) இஃது இணைமோனை. "பொன்னின் அன்ன பொறிசுணங் கேந்தி" (யாப்.வி.மேற்.) இஃது இணையெதுகை. "சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு" (யாப்.வி.மேற்.) இஃது இணை முரண். "மொய்த்துடன் தவழு முகிலே பொழிலே" (யாப்.வி.மேற்.) இஃது இணையியைபு. "தாஅட் டாஅ மரைமல ருழக்கி" (யாப்.வி.மேற்.) இஃது இணையளபெடை என வரும். இனிக் கூழை வருமாறு: "அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்" (யாப்.வி.மேற்.) இது கூழை மோனை. "நன்னிற மென்முலை மின்னிடை வருத்த" (யாப்.வி.ப.134). இது கூழையெதுகை. "சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்" (யாப்.வி.மேற்.) இது கூழைமுரண். "மாதர் நகிலே வல்லே இயலே" (யாப்.வி.மேற்.) இது கூழையியைபு. "மாஅத் தாஅண் மோஒட் டெருமை" (யாப்.வி.மேற்.) இது கூழையளபெடை என வரும். முற்றாவது நான்கு சீரும் ஒத்து வருவது. "அயில்வேல் அனுக்கி அம்பலைத் தமர்த்த" (யாப்.வி.மேற்.) இது முற்றுமோனை. பிறவுமன்ன. இனி மேற்கதுவா யாவது நான்கு சீரினும் இரண்டாம் சீரொழிய ஏனைய வருவது. "அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்" (யாப்.வி.மேற்.) இது மேற்கதுவாய் மோனை பிறவுமன்ன. கீழ்க்கதுவாயாவது மூன்றாஞ் சீரொழிய ஏனைய வருவது. "அவிர்மதி அனைய திருநுதல் அரிவை" (யாப்.வி.மேற்.) இது கீழ்க்கதுவாய் மோனை பிறவுமன்ன. அந்தாதித்தொடைக்குதாரணம்: "உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை ஆசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தரஃ தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே." (யாப்.வி.மேற்.) என வரும். இவ்வகையினான் ஒருபாட்டிறுதி மற்றைப்பாட்டி னாதிச்சீராகி வருதல் கொள்க. இத்துணையுங் கூறப்பட்டன சிறப்புடையவென ஒரு நிகராகக் கூறுப. இனி, "மீன்தேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு" (யாப்.வி.மேற்.) இது கடையிணைமுரண். பின் முரணாவது நாலாஞ் சீரும் இண்டாஞ் சீரு மொன்றத் தொடுப்பது; அது "கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து" (யாப்.வி.மேற்.) என வரும். கடைக்கூழை முரணாவது முதற்சீரொழித்து மூன்றுசீரும் ஒத்து வருவது. உ-ம்: வந்தவழிக் காண்க. இடைப்புணர் முரணாவது இடையிரு சீரும் ஒன்றத் தொடுப்பது; அது "போதுவிடு குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையில் தாழ்ந்த ஓங்குவெள் அருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் பெருமலைச் சீறூர் இழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின இனியோர் மாட்டே." (யாப்.வி.மேற்.) என வரும். மோனை எதுகை இயைபு அளபெடையினும் இவ்வாற்றான் வருவன வந்தவழிக் காண்க. இனி, உயிர்மோனை யாவது முதலெழுத்தாகி வந்த உயிரெழுத்து மற்றை யடியினும் வருவது; அது "கயலேர் உண்கண் கலுழ நாளுஞ் சுடர்புரை திருநுதல் பசலை பாய" (யாப்.வி.மேற்.) என வரும் (இது வல்லின மோனையாம்). எதுகைக்கும் இதுதானேயாம். நெடின் மோனையாவது நெட்டெழுத் தொத்து வருவது: "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்." (குறள். 399) என வரும். நெடிலெதுகையாவது: "ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்." (யாப்.வி.மேற்.) என வரும். இனவெதுகை மூன்று வகை. "தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்." (குறள். 114) இது வல்லினவெதுகை. "அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு." (குறள். 74) இது மெல்லினவெதுகை. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு." (குறள். 296) இஃது இடையின வெதுகை. மோனையும் இவ்வாறு வருவன பாகுபடுத்துக் கொள்க. ஆசெதுகையாவது இடையினவொற்று இடைவரத் தொடுப்பது. "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால்திசை போய துண்டே. (சீவக.31) என வரும். இதன்கண் யகரம் ஆசாகி வந்தது. பிறவுமன்ன. இனி இரண்டடியெதுகை யாவது முதலிரண்டடியு மோரெதுகை யாய்ப் பின்னிரண்டும் ஓரெதுகையாகி வருவது. "உலக மூன்றும் ஒருங்குட னேத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவுந் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்" (யாப்.வி.மேற்.) என வரும். இடையிட் டெதுகையாவது ஓரடி யிடையிட்டுத் தொடுப்பது. "தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழப்ப வாடா வவ்வரி புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைபயப் பெருகின நீடார் அவரென நீமனங் கொண்டார் கேளார் கொல்லோ காதலர் தோழீஇ வாடாப் பவ்வ மறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே." (யாப்.வி.மேற்.) என வரும். இவ்வகையினான் மோனை வருவனவுங் கொள்க. பிற தொடையும் இவ்வகையினான் வருவனவும் கொள்க. மூன்றா மெழுத்தொன் றெதுகையாவது இரண்டா மெழுத்து ஒன்றாது மூன்றாம் எழுத்து ஒன்றுவது. இதுவும் அவ்வாறே உ-ம்: வந்தவழிக் காண்க. இவையெல்லாம் மேலெடுத் தோதப்பட்ட தொடைக்கட்படும். நாற்சீரடியொழிந்த அடிக்கண்ணும் இப்பாகுபாடெல்லாம் விரிப்பின் வரம்பிலவாகும். (98) தொடைக்கு உரியதொரு மரபு 408. தொடைநிலை வகையே யாங்கென மொழிப. என்-எனின், இதுவுந் தொடைக் குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொடைநிலைவகை மேற்சொல்லப்பட்ட பாகுபாட் டின எ-று. எனவே, வகுத்துணர்த்துவார்க் கெல்லாம் இடனுடைத்து என்ற வாறாம். அஃதாவது எழுத்தான் வேறுபடுதலும் சொல்லான் வேறுபடுதலும் பொருளான் வேறுபடுதலுமாம். இத்துணையுந் தொடை கூறப்பட்டது. (99) நோக்கு என்னும் உறுப்பு 409. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே. என்-எனின், இது நோக்கென்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மாத்திரை முதலாக அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் எ-று. காரணமெனினுங் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரண மென்பதனை உண்டற்றொழில் என்றாற் போலக் கொள்க. அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அதுதன்னையே நோக்கி நிற்கு நிலை. 'அடிநிலைகாறும்' என்றதனான், ஓரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒருநோக்காக ஓடுதலும், பலநோக்காக ஓடுதலும், இடையிட்டு நோக்குதலும், என மூன்று வகைப்படும். "அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று." (நாலடி. 1) இஃது ஒரு நோக்காக ஓடிற்று. "அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மைஎஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல்." (நாலடி. 172) இது பல நோக்காகி வந்தது. "உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாட் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்" (முருகு. 1-6) என்றவழி 'ஒளி' என்பது அதனயற் கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின் இடையிட்டு நோக்கிற்று. பிறவுமன்ன. (100) பாவகை 410. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே. என்-எனின், நிறுத்தமுறையானே பாவாமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டான். அவை யினைத்தென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆசிரியமெனவும் வஞ்சியெனவும் வெண்பா வெனவும் கலியெனவும் நான்கியல்பினையுடைத்து என்று சொல்வர், பாவினது வகையை விரிக்குங் காலத்து எ-று. அஃதேல் ஒருசாராசிரியர் வெண்பா ஆசிரியங் கலி வஞ்சி என ஓதினார்; யாதெனின், அவரும் ஒரு பயனோக்கி யோதினார். இவனும் ஒருபயன் நோக்கி ஓதினான் என்க. என்னை? வெண்பாவாவது பிற தளையொடு மயங்காமை யானும் மிக்குங் குறைந்தும் வாராத அடியான் வருதலானும் அந்தணர் நீர்மைத் தென முற்கூறினார். அதன்பின், அந்நிகர்த்தாகிப் பிறதளையும் வந்து இனிய ஓசையை யுடைத்தாய்ப் பரந்து வருதலின், அரசத் தன்மையது என்பதனான் ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின், அந்நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன்பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண் மாந்தரியல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். இவ்வாசிரியனும் பதினேழ் நிலத்தினும் வருதலானும், இனிய ஓசைத்தாகலானும், அடிப்பரப்பி னானும், ஆசிரியப்பா முற்கூறினான்; அதன்பின், ஆசிரிய நடைத்தாகி இறுதி யாசிரியத்தான் இறுதலின் வஞ்சிப்பாக் கூறினான்; இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஓசைத்தாகலான் வெண்பா அதன்பின் கூறினான்; அதன்பின் வெண்சீர் பயின்றுவருதலானும், வெண்பாவுறுப்பாகி வருதலானும், கலிப்பாக் கூறினானெனவறிக. (101) பாக்களின் பொருள் 411. அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப. என்-எனின், மேற்கூறப்பட்ட பாக்கள் பொருட்குரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அப்பாக்கள் நான்கும் பொதுப்பட நின்றவழி அறம் பொருளின்ப மென்னும் மூன்று முதற்பொருட்கும் உரிய எ-று. முதற்பொருள் என்றது, பாகுபாடல்லாத பொதுமை குறித்த பொருள். சில பொருள்களை எடுத்து விளக்குகின்றானாதலின், இவ்வாறு கூறப்பட்டது. அப்பொருட்கண் உரியவாகியவாறு சான்றோர் செய்யு ளகத்துக் கண்டுகொள்க. (102) பாக்களின் தொகை 412. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. என்-எனின், மேற்சொல்லப்பட்ட பாக்களைத் தொகைவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட நான்கு பாவும் ஆசிரியப்பா வெண்பா என இரண்டாய் அடங்கும் எ-று. அவை யடங்குமாறு மேலே வருகின்ற சூத்திரத்தான் உரைக்கும். (103) வஞ்சியும் கலியும் 413. ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. என்-எனின், மேல் அடங்குமெனக் கூறப்பட்ட பாக்கள் அடங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி; வெண்பாப் போன்ற நடையை உடைத்து கலி என்றுரைப்ப எ-று. நடையென்றது அப்பாக்கள் இயலுந் திறம். (104) வாழ்த்தியற்கு உரிய பாஆமாறு 414. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. என்-எனின், வாழ்த்தியற் குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாழ்த்தியலின் வகை நான்கு பாவிற்குமுரித்து எ-று. வகையென்றது, தேவரை வாழ்த்தலும் முனிவரை வாழ்த்தலும் ஏனையோரை வாழ்த்தலும். செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. (105) புறநிலை வாழ்த்திற்கு உரிய பாக்கள் 415. வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. என்-எனின், இது புறநிலை வாழ்த்திற்குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந் தீர்ந்த செல்வத்தொடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்துக் கலிப்பாவகையினும் வஞ்சிப்பா வகையினும் வரப்பெறாது எ-று. எனவே வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் புணர்ந்த மருட்பாவினும் வரப்பெறும் என்றவாறாம். (106) ஒருசார் பொருட்குரிய மரபு 416. வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉஎன அவையும் அன்ன. என்-எனின், ஒருசார் பொருட்குரிய மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறி வுறுத்தற் பொருளுங் கலியினும் வஞ்சியினும் வரப்பெறா எ-று. எனவே, முன்னையவொப்ப ஏனையிரண்டினும் மருட்பாவினும் வரப்பெறும் என்றவாறாம். (107) வாயுறை வாழ்த்து ஆமாறு 417. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. என்-எனின், வாயுறை வாழ்த்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாயுறை வாழ்த்தை விளங்க ஆராயின், வேம்பினையுங் கடுவினையும் போல, வெஞ்சொ லடக்காது பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாவற் கிளவியானே மெய்யறிவித்தல் எ-று. உ-ம்: "இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே ஆண்ட ஏமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ அன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே." (புறம். 363) என்னும் பாட்டு. (108) அவையடக்கியல் ஆமாறு 418. அவையடக் கியலே அரில்தபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. என்-எனின், அவையடக்கியல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவையடக்கியலைக் குற்றமற ஆராயின், அறியாதன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல்வேண்டும் என எல்லா மாந்தர்க்குந் தாழ்ந்து கூறல் எ-று. உ-ம்: வந்தவழிக் கண்டுகொள்க. (109) செவியறிவுறூஉ வருமாறு 419. செவியுறை தானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே. என்-எனின், செவியறிவுறூஉ வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்துதல் எ-று. "அறிமி னறநெறி... பெரியார் வாய்ச்சொல்" (நாலடி. 172) என வரும். இத்துணையும் பாக்கட் குரிய பொருளுணர்த்தியது. (110) சில செய்யுட்களின் அடி வரையறை 420. ஒத்தா ழிசையும் மண்டில யாப்புங் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. என்-எனின், சில செய்யுள்களின் அடி வரையறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகிய ஒத்தாழிசையும், ஆசிரியப்பாவின்கண் நிலைமண்டிலம் அடிமறிமண்டிலம் என்பனவும், ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் பொதுவாகிய குட்டமும் நாற்சீரடிக்குப் பொருந்தின எ-று. மேல் ஆசிரியப்பாவின் ஈற்றயலினும், இடையினும், முச்சீரும் இரு சீரும் ஐஞ்சீரும் அறுசீரும் வரும் என்றதனானே, எல்லாவடியும் ஒத்து வருவனவு முள வென மண்டிலம் கூறவேண்டிற்று. கலிப்பாவிற்குச் சுரிதகம் ஈற்றடி முச்சீரானும் ஈற்றயலடி முச்சீரானும் வரும் என்றமையான், தாழிசையுந் தரவும் நாற்சீரா னல்லது பிறவாற்றான் வாராவெனக் கூறல் வேண்டிற்று. குட்டமெனினும் தரவெனினும் ஒக்கும். இனிக் கலிக்குறுப்பாகிய சின்னங்கள் இருசீரானும் முச்சீரானும் வருதலானும், தனிச்சொல் ஒருசீரானும் வருதலானும் வேறு ஓத வேண்டிற்று. உ-ம்: முன்னர்க் காட்டுதும். (111) மேலதற்கு ஒரு புறனடை 421. குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். என்-எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தரவு ஈற்றயலடி முச்சீரான் வரவும் பெறும் எ-று. எருத்தடியுடைத் தென்றதனானே ஈற்றயலடி முச்சீர் எனப் பொருள் படுமோ எனின், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரான் வருதல் பெருவழக்காதலானும், இனி வருகின்ற சூத்திரம் தூக்கிய லென ஓதுகையானும், இவ்வாறு பொருள்படுமென்று கொள்க. உ-ம்: முன்னர்க் காட்டுதும். இன்னும் குட்டம் என்பதனைத் தரவு கொச்சகமாகிய கொச்சக வொருபோகிற்குப் பெயராக வழங்கினும் அமையும். அவ்வழி, ஒத்தாழிசை என்பதனை ஒத்தாழிசைக்கலி என்க தரவெனத் தரவையுங் கூட்டிப் பொருளுரைக்கப்படும். (112) மண்டிலம், குட்டம் - ஓசைவேறுபாடு 422. மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டும் செந்தூக் கியல என்மனார் புலவர். என்-எனின், மேற் சொல்லப்பட்டவற்றுள் மண்டிலம் குட்டம் என்பவற்றிற் குரியதோர் ஓசை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை இயல எ-று. உ-ம்: முன்னர்க் காட்டுதும். இனி நான்குபாவினும் வெண்பாவுங் கலிப்பாவும் முன்னெடுத் தோதுகின்றானாதலானும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இத்துணை யும் ஓதிய இலக்கணத்தான் முடித்தலானும், அவையிற்றிற்கு உ-ம்: ஈண்டே காட்டுதும். ஆசிரியப்பாவாவது பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் ஆசிரியத் தளையானும் அகவ லோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது. அவ்வாறாதல் மேற்கூறப்பட்ட சூத்திரங்களான் உணர்க. இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத்துணர்த்தாமையின் எல்லா வீறுமாம். எற்றுக்கு? "அகவல் இசையன அகவல் மற்றவை ஏஓ ஈஆ என் ஐ என் றிறுமே." (யாப்.வி.மேற்.) என்று வரைந்தோதினார் உளரால் எனின், "கோள்மா கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க் கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வழுதி கூடல் அன்ன குறுந்தொடி அரிவை ஆடமை மென்றோள் நசைஇ நாடொறும் வடியமை எஃகம் வலவயின் ஏந்திக் கைபோற் காந்தட் கடிமலர் கமழும் மைதோய் வெற்பன் வைகிருள் வருமிடம்." (யாப்.வி.மேற்.) எனப் பிறவாற்றானும் வருதலின், ஈறு வரையறுக்கப்படா தென்று கொள்க. இனி இவ்வாசிரியப்பாவினை அடிநிலையாற் பெயரிட்டு வழங்கப்படும். அஃதாமாறு: ஈற்றயலடி முச்சீரான் வருவதனை நேரிசையாசிரியம் என்ப. உ-ம்: "முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே." (யாப்.வி.மேற்.) என வரும். இடையிடை முச்சீர் வரின் இணைக்குறளாசிரியம் என்ப. உ-ம்: "நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே." (யாப்.வி.மேற்.) என வரும். எல்லா அடியும் ஒத்துவருவதனை நிலைமண்டில ஆசிரியம் என்ப. இதற்கு இலக்கணம் முன்னர்க் காட்டுதும். "வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே." (குறுந். 18) என வரும். இனி எல்லா அடியும் ஒத்து வரும் பாட்டினையே அடிமறிமண் டில ஆசிரியம் என்றும் வழங்குப. இதற்கிலக்கணஞ் சொல்லதிகாரத்துள் 'நிரனிறை சுண்ணம்' (எச்சவியல் 8) என்னும் சூத்திரத்தாற் கொள்க. "சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் எனினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே." (யாப்.வி.மேற்.) என வரும். இதனுள் யாதானும் ஓரடியை முதலு முடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருதலின் அடிமறி யாயிற்று. இனி முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடிமயங்காசிரிய மெனவும், வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியமெனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சியஅடி மயங்காசிரிய மெனவும் வழங்கப்படும். இதற்கு இலக்கணம்: "வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப." (தொல். செய். 60) "அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே." (தொல். செய். 61) "இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே." (தொல். செய். 59) எனவும், "ஆசிரிய நடைத்தே வஞ்சி." (தொல். செய். 404) என ஒற்றுமைப்படுத்துதலானுங் கொள்க. உ-ம்: "சிறியகட் பெறினே யெமக் ... தவப்பலவே." (புறம். 235) இப்பதினேழடியாசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டாமடியும் முச்சீரான் வந்தன. மூன்றாமடி முதலாக ஆறாமடி யீறாக நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சீரான் வந்தன. இரண்டாமடியும் பதி னொன்றாமடி யும் அறுசீரான் வந்தன. ஏனைய நாற்சீரான் வந்தன. இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியம் ஆயிற்றாம். "எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்ப அவர் தேர்சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமல கழறுமிவ் அழுங்க லூரே." (குறுந். 12) இதனுள், முதலடி இயற்சீர் வெள்ளடியாதலின் வெள்ளடி விரவிய ஆசிரியமெனப்படும். "இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட ஏமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ அன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கலனாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே" (புறம். 363) இதனுள், "உப்பிலாஅ அவிப்புழுக்கல்" என்பது முதலாக மூன்றடியும் வஞ்சியடி. இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச் சீரானும் இரு சீரடியானும் முச்சீரடியானுந் தூங்கலோசையானும் வந்து தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் இறுவது. இதற்கு இலக்கணம்: "வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை யென்ப." (தொல். செய். 19) "தன்பா வல்வழித் தானடை வின்றே." (தொல். செய். 20) "வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய." (தொல். செய். 21) "வஞ்சி யடியே இருசீர்த் தாகும்." (தொல். செய். 43) "முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே." (தொல். செய். 45) "வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே." (தொல். செய். 68) "தூங்கல் ஓசை வஞ்சி யாகும்" (தொல். செய். 80) என்பனவற்றாற் கொள்க. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும். "பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசமும் வயற்கம்பலைக் கயலார்ப்பவும், வயற்கம்பலைக் நாளும் மகிழின் மகிழின் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே." (மேற்.வி.ப.336) இது குறளடியான் வந்து தனிச்சொற்பெற்று ஈற்றயலடி முச்சீரான் வந்து, ஆசிரியச் சுரிதகத்தானிற்ற இருசீரடி வஞ்சிப்பா. தனிச்சொற் பெறுதல் எடுத்தோதிற்றிலராயினும் 'உரையிற் கோடல்' என்பதனாற் கொள்க. "கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயில்நடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன், புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே." (யாப்.வி.மேற்) இது முச்சீரடி வஞ்சிப்பா. இனி, "வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய." (தொல். செய். 21) என்றோதிய வதனான் ஆசிரியவடியோடும் வெண்பாவடியோடுங் கலியடியோடும் மயங்கி வருவன கொள்க. பட்டினப்பாலையுள், "நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்" (அடி 22) என்பதுஆசிரியவடி. "கோழி எறிந்த கொடுங்காற் கணங்குழை" (அடி 23) என்பது வெண்பாவடி. "வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து." (145) என்பது கலியடி. இனி வெண்பாவாமாறும் கலிப்பாவாமாறும் முன்னர்க் காட்டுதும். (113) வெண்பா ஆமாறு 423. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோ டொத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. என்-எனின், வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெடுவெண்பாட்டு முதலாக அங்கதச் செய்யுள் ஈறாகச் சொல்லப்பட்டவையும் அளவொத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பினையுடைய எ-று. வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண் டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீ ரீற்றடியானும் வருவது. இவற்றிற்கு இலக்கணம் மேலோதப்பட்டது. ஈண்டு ஓதப்பட்டன வெல்லாம் இவ்வாறு வரும் எ-று. இவையெல்லாம் ஓசையான் ஒக்குமாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடு கின்றார் என்று கொள்க. நெடுவெண்பாட்டாவது அளவடியி னெடிய பாட்டு. குறுவெண்பாட்டாவது அளவடியிற் குறிய பாட்டு. கைக்கிளை யென்பதூஉம் அங்கத மென்பதூஉம் பொருளானாகிய பெயர். பரிபாட்டாவது பரிந்த பாட்டாம். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களொடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது. 'ஒத்தவை' என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியான் வருவன, இவ்வாசிரியன் நான்கினை அளவென்றும் ஏறினவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவனாகலின். இவை வேற்றுப் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண்பாட்டும் என மூவகையானும் வரும். குறுவெண் பாட்டாவது இரண்டடியானும் மூன்றடியானும் வரும். உ-ம்: "அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை." (குறள். 37) இஃது இரண்டடியும் ஒரு தொடையான் வருதலின் குறள்வெண்பா என்ப. "உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடைத்து." (குறள். 667) இது விகற்பத்தொடையான் வருதலின் விகற்பக் குறள்வெண்பா என்ப. மூன்றடியான் வருவதனைச் சிந்தியல் வெண்பா என வழங் கப்படும். உ-ம்: "நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டப் பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி." (யாப்.வி.மேற்.) இஃது ஒரு தொடையான் வருதலின், இன்னிசைச் சிந்தியல் வெண் பாவாம். "நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண்டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான் பாலைநல் வாயில் மகள்." (யாப்.வி.மேற்.) எனவும், "சுரையாழ அம்மி மிதப்ப- வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை." (யாப்.வி.மேற்.) எனவும் இவை வேறுபட்ட தொடையான் வருதலின் நேரிசைச் சிந்தியல் வெண்பாவாம். இனி நான்கடியான் வருவன சமநிலை வெண்பா வெனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரூஉத் தொடை பெற்று வருவனவற்றை நேரிசை வெண்பா எனவும், ஒரூஉத்தொடை பெறாது வருவனவற்றை இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஒரூஉத்தொடை வருக்கவெதுகையாகியும் வரும். இவை யெல்லாம் 'உரையிற்கோடல்' என்பதனாற் கொள்க. "அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று." (நாலடி. 1) இது நேரிசை வெண்பா. "கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை எல்லுறு போழ்தின் இனிய பழங் கைக்கொண் டொல்லொலை யோடு மலைநாடன் தன்கேண்மை சொல்லச் சொரியும் வளை." (கைந்நிலை. 7) இஃது இன்னிசை வெண்பா. "வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்." (நாலடி. 103) நான்கடியாயும் மூன்றாமடிக்கண் தனிச்சொற் பெற்று வருதலின் நேரிசைப்பாற்படும். பிறவுமன்ன. ஐந்தடி முதற் பன்னிரண்டடிகாறும் வருவன பஃறொடை வெண்பா எனப்படும். இதனுள்ளும் ஒரூஉத்தொடை பெற்று வருவன வற்றை நேரிசைப் பஃறொடை எனவும், ஒரூஉத் தொடையின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும். "சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேற் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றந் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே யொத்தன மாவடர் ஆற்றுக்கா லாட்டியர் கண்." (யாப்.வி.மேற்.) இஃது இன்னிசைப் பஃறொடை. "பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னொடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே - பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் - யானை யெருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்." (யாப்.வி.மேற்.) இஃது ஆறடியான் வந்து ஒரூஉத்தொடை பெறுதலின் நேரிசைப் பஃறொடை வெண்பா. "சிற்றாறு பாய்ந்துகளுஞ் சேயரிக் கண்ணினாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கு மதிலும் படுகிடங்கும் ஒப்ப வுடைத்தா ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேருந் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்துணரும் வண்ண முரைத்தி யெனக்கூறக் கட்டலர் தாமரையுள் ஏழுங் கலிமான்றேர்க் கத்திருவர் ஐவருங் காயா மரமொன்றும் பெற்றவழி தேர்ந்துண்ணும் பேயின் இருந்தலையும் வித்தாகா நெல்லின் இறுதியும் பெற்றக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப்பேர் போலென்றாள் வானவன்கை விற்பொலிந்த வெம்புருவத் தாள்." (யாப்.வி.மேற்.) இது பன்னிரண்டடியான் (பெருவல்லத்தைக் கூற) வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா. ஏனையவும் வந்தவழிக் கண்டு கொள்க. இவற்றுள், "ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபின்றி நடப்பது கலிவெண்பாட்டே." (தொல். செய். 147) என ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானும் ஒருபொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பா வினைக் கலிவெண்பா எனவும், குறள்வெண்பா முதலாகிய எல்லா வெண்பாக்களுங் கொச்சகக் கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாட லெனவுங் கொள்ளப்படும். கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை. மேற்சொல்லப் பட்ட வெண்பாக்கள் இப்பொருள்மேல் வரிற் கைக்கிளை வெண்பா எனப்படும். "பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ மனனொடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்." (யாப்.வி.மேற்.) கைக்கிளை வெண்பா யாப்பினான் வரும் எனவே, ஆசிரியப் பாவினான் வரப்பெறாதென்பதும், வந்ததேயாயினும் பாடாண்பாட்டுக் கைக்கிளையாகுமென்பதும் கொள்ளப்படும். பரிபாட்டும் அங்கதமும் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் சொல்லும். (114) எய்தியதன்மேல் சிறப்புவிதி 424. கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. என்-எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினான் வருதலன்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகிய இருபாவினாலும் வரும் எ-று. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல், "மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுந் தன்மை இன்றே." (தொல். செய். 81) என ஓதினான் என்று கொள்க. அது, "உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமங் கனல - இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிணகை வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே." (பு.வெ.கைக்கிளை.9) என வரும். (115) பரிபாடல் ஆமாறு 425. பரிபா டல்லே தொகைநிலை வகையின் இதுபா என்னும் இயனெறி இன்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப. என்-எனின், பரிபாடலாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பரிபாடலாவது, தொகைநிலை வகையாற் பா இஃது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி, எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கு முரித்தென்று சொல்லுவர் எ-று. உம்மை எச்சவும்மையாகலான் இலக்கணங் கூறவும்படும். அது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். பொதுவாய் நிற்றலாவது, "ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி யென" (செய். 101) என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடைத்தாதல். (116) இதுவுமது 426. கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டுப் பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்குந் தனக்குறுப்பாகக் காமங் கண்ணிய நிலைமையை உடைத்து எ-று. எனவே, அறத்தினும் பொருளினும் வாராதாம். "வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே" (தொல். செய். 105) எனச் சிறப்புவிதி யோதினமையான், நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலிற் கடவுள்வாழ்த்தாகியும் வரப்பெறும். கொச்சகமென்பது ஐஞ்சீரடுக்கியும், ஆசிரியவடி, வெண்பா வடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகியும், வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது. இதனுட், "சொற்சீ ரடியும் முடுகியல் அடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்." (செய். 118) என வேறு ஓதுதலின், ஏனை நான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும். "தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே." (செய். 148) என்றாராகலின், இவ்விலக்கணத்தானே பரிபாடலுட் கொச்சகம் வரும். வழித் தரவுஞ் சுரிதகமும் இடையிடை வருதலுங் கொள்க. 'வெண்பா வியலான்' என்றதனான், தன்தளையானும் பிறதளையானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவன வெல்லாங் கொள்க. அராகமென்பது ஈரடியானும் பலவடியானுங் குற்றெழுத்து நெருங்கிவரத் தொடுப்பது. பெருமைக்கெல்லை ஆறடி; என்னை? "அராகந் தாமே நான்காய் ஒரோவொன்று வீதலும் உடைய மூவிரண் டடியே." "ஈரடி யாகு மிழிபிற் கெல்லை." என அகத்தியனார் ஓதுதலின். சுரிதகம் என்பது ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது. எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோருறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானுங் கால் சுரிதக மாதலானும் இடைநிலைப் பாட்டாகத் தாழிசையுங் கொச்சகமு மராகமுங் கொள்ளக் கிடத்தலின், எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க, "தரவே எருத்த மராகங் கொச்சகம் அடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே." என்பது அகத்தியமாதலின். தரவென்பதோன்ருறுப்புங் கோடல் வேண்டுமெனின், இவ்வாசிரியன் 'கொச்சகம்' என ஓதியவதனானே தரவும் அவ்விலக்கணத்திற் படுமென்பது ஒன்று. எருத்து என்பது இவ்வாசிரியன் கருத்தினான் தரவென்பது போலும். பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும், "அதுதான், மலையே யாறே யூரென் றிவற்றின் நிலைபெறு மரபி னீங்கா தாகும்." என்றாராகலின். இனிச் சுரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப்பெறும், "கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் அடக்கிய லின்றி அடங்கவும் பெறுமே." என அகத்தியனார் ஓதுதலின். (117) இதுவுமது 427. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரியவாகும் எ-று. சொற்சீரடியாவது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானுங் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது. (118) சொற்சீர் ஆமாறு 428. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே. என்-எனின், சொற்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கட்டுரையாவது - பாட்டின்றித் தொடுக்கப்பட்டு வருவது. எண்ணென்பது - ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பலவாகியும் வருதல். பல வருதலின் எண்ணென்றார். முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் என்பது - நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இருசீரடியானும் வருதல். ஒழியசையாகியும் என்றது - ஒழிந்த அசையினை யுடைத்தாகியும் எ-று. எனவே, இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறையப்பெறும் என்றவாறாம். வழியசை புணர்த்தலாவது - ஒரு சீரின்கண்ணே பிறிதொருசீர் வரத் தொடாது ஓரசை வரத் தொடுப்பது. சொற்சீர்த்திறுதல் என்பது - சொற்றானே சீராந்தன்மையைப் பெற்று நிற்றல். சொற்சீர்க் கியல்பே என்றது - இப்பெற்றியை யுடைத்துச் சொற்சீரின தியல்பு எ-று. இவ்விலக்கணம் பரிபாடற் செய்யுட்கண் வருமாறு: "ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர மாவுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனி சேயுயர் பனைமிசை எழில்மேழி ஏந்திய வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை; இது தரவு. எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பின் தெரிமணி விளங்கும் பூணினை மால்வரை எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயின் நிறுத்து மேவ லுழந்தமை கூறு நாவ லந்தணர் அருமறைப் பொருளே; இஃது எருத்து இணைபிரி யணிதுணி பணியெரி புரைய விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர் நெரிகிட ரெரிபுரை தனமிகு தன முரண்மிகு கடறரு மணியொடு முததியா கத்தொன்றி நெறிசெறி வெறியுறு முரல்விறல் வணங்கணங்குவில் தாரணி துணிமணி வியலெறு மெழில்புக ழலர்மார்பி னெரிவயிர நுதியெறி படையெருத்து மலையிவர் நவையினில் துணிபட விலமணி வெயிலுற ழெழினக் கிமையிரு ளகலமுறு கிறுபுரி யொருபுரி நாண்மலர் மலரில கினவளர் பருதியி னொளிமணி மார்பணி மணமிநாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை உடுவுறு தலைநிரை யிதழணி வயிறிரிய அமரரைப் போரெ ழுந் துடன் றிரைத் துரைஇய தானவர் சீரழிப் புனல்மொழி பிழந்துர முதிர்பதி ரப்பல புலவந் தொடவமர் வென்றகணை; இவை நான்கும் அராகம். பொருவ மென்ற மறந்தபக் கடந்து செருவிடம் படுத்த செயிர்தீர் அண்ணல் இருவர் தாதை யிலங்குபூண் மாஅன் றெருள நின்வர வறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிது; இஃது ஆசிரியம். அன்ன மரபி னனையோய் நின்னை யின்னனென் றுரைத்த லெமக்கெவன் எளிது; இது பேரெண். அருமைநற் கறியினுமாய நிற்பயில் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅது வெறாஅ தல்லியந் திருமார்ப நீயருளல் வேண்டும்; இதுவும் ஆசிரியம். விறல்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும் அறனு மார்வலர்க் கருளுநீ; திறனிலோர்த் திருத்திய தீதுதீர் கொள்கை மறனு மாற்றலர்க் கணங்கு நீ; அங்கண் வானத் தணிநிலாத் திகழ்தருந் திங்களுந் தெறுகதிர்க் கனலியுநீ; ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனு மடங்கலும்நீ; நலமுழு தளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமுநீ; வலனுயர் எழிலியும் மாக விசும்பும் நிலனு நீடிய இமயமும்நீ; இவை யாறும் பேரெண்; அதனால்; தனிச்சொல். இன்னோர் அனையை இனையை யாலென அன்னோர் யாமிவட் காணா மையிற் பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய மன்னிய முதல்வனை யாகலின் நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே; இது சுரிதகம். அன்றெனின், நின்னொக் கும்புகழ் நிழலவை பொன்னொக்கு முடையவை; புள்ளின் கொடியவை புரிவளை யினவை எள்ளுநர்க் கடந்திட்ட இகனேமியவை; மண்ணுற்ற மணிபா யுருவினவை; எண்ணிறந்த புகழவை எழின்மார் பினவை; இவை சிற்றெண்ணும், இடையெண்ணும், அளவெண்ணும். ஆங்கு; தனிச்சொல். காமரு சுற்றமொ டோருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் தாள்நிழல் தொழுதே." (பரிபா.1) இது சுரிதகம். இது கடவுள் வாழ்த்து. ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் மிக்குங் குறைந்தும் வருதல் இப்பாவிற் கியல்பென்று கொள்க. பிறவும் பரிபாடலகத்துக் கண்டுகொள்க. "மாநிலந் தோன்றாமை மலிபெய னிலைஇ ஏமநீ ரெழில்வான மிகுத்தரும் பொழுதினான் நாகநீள் மணிவரை நறுமலர் பலவிரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல்; நீரணி கொண்டன்று வையை யெனவிரும்பித் தாரணி கொண்ட உவகை தலைக்கூடி ஊரணி கோலம் ஒருவர் ஒருவரிற் சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு நீரணி கொண்ட நிறையணி அங்காடி ஏரணி கொண்டார் இகல்; கைபுனை தாரினர் கண்ணியர் ஐயெனு மாவியர் ஆடையர் நெய்யணி கூந்தலர் பித்தையர் மெய்யணி யானை மிசைக்கொண் டொய்யெனத் தங்காச் சிறப்பில் தளிரியலார் செல்லப் பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர் வையமுந் தேரும் அமைவோரும் எவ்வாயும் பொய்யாம்போ யென்னாப் புடைபடைகூட் டிப்போவார் மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக் கூடுவார் ஊட லொழிப்பார் உணர்குவார் ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார்நக் கோடுவார் ஓடித் தளர்வார்போ யுற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாருங் கல்லா தவருங் கயவரும் பெற்றாரும் பெற்றார்ப் பிழையாத பெண்டிரும் பொற்றேரான் தானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை; துறையாடுங் காதலர் தோள்புணை யாக மறையாடு வாரை அறியார் மயங்கிப் பிறையேர் நுதலியர் எல்லாருந் தம்முன் நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே இகலுவ செல்வ நினைத்தவட் கண்டிப்பால் அகலல்கும் வையைத் துறை; காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி ஏதிலாள் கூந்தல் இடக்கண்டு மற்றது தாதாவென் றாட்குத் தானே புறன்தந்து வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது நோதலே செய்யேன் நுணங்கிழையா யச்செவ்வி போதலுண் டாங்கொல் அறிந்து புனல்புணர்த்த தோஒ பெரிதும் வியப்பு; கயத்தகப் பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும் முயக்குக்குச் செல்வல் முலையும் முயக்கத்து நீரு மவட்குத் துணைக்கண்ணி னீர்விட்டோய் நீயு மவட்குத் துணை; பணிவில் உயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல் மணியெழில் மாமேனி முத்த முறுவல் அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர் மணியணி தம்முரிமை மைந்தரோ டாடத் தணிவின்று வையைப் புனல்; புனலூடு போவதோர் பூமாலை கொண்டை எனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை புனலூடு நாடறியப் பூமாலை அப்பி நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடியதிறங் கூடினால் ஊடாளோ வூர்க்கலர் வந்து; எனவாங்கு, ஈப்பா யடுநறாக் கொண்டதிவ் வியாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு; மைந்தர் மகளிர் மணவிரை பூசிற்றென் றந்தணர் தோயலர் ஆறு; வையைத் தேமொழி வழுவழுப் புற்றன ஐயர்வாய் பூசுறார் ஆறு; விரையுரி விரைதுறை கரையழி பிழிபூர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர்தருநுரை நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல்கரை புரளிய செலமறிகடல் புகுமள வளவிய லிசைசிறை தணிவின்று வெள்ளமிகை; வரைபல புரையுயர் கயிறணி பயிறொழில் மணியணி யானைமிசை மைந்தரும் மடவாரும் நிரைநிரை குழீஇயினர் உடன்சென்று குருமணி யானை இயறேர்ப் பொருநன் திருமருத முன்றுறை முற்றங் குறுகித் தெரிமருதம் பாடும் பிணிகொள்யாழ்ப் பாணர் பாடிப் பாடிப் பாய்புனல் ஆடி யாடி யருளியவர் ஊடி யூடி யுணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபுசிதைபூச் சூடிச் சூடிக்கை தொழுது தொழுதும் இழுதொடு நின்ற புனல் வையை விழுதகை நல்லாரு மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றதிந் நீர்குணக்குச் சான்றீர் முழுவது மிச்சிலா உண்டு; சாந்தும் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமுங் கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற் சிறிதானு நீர்நிறந்தான் தோன்றா திவ்வையை யாறு; மழைநீர்க் குளத்து வாய்பூசி யாடுங் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலக்கல் வழிநீர வீழுநீ அன்று வையை வெருவரு கொல்லியானை வீங்குதோள் மாறன் உருகெழு கூட லவரொடும் வையை வருபுன லாடிய தன்மை பொருவுங்கால் இருமுந்நீர் வையம் படித்தென்னை யானூர்க் கொருநிலையு மாற்ற இயையா வருமரபின் அந்தர வான்யாற் றாயிரங் கண்ணினான் இந்திரன் ஆடுந் தகைத்து." இது காமப் பொருளாகி வரும் வெண்பா மிக்குவந்த பாட்டு. (பரிபா.திர. 2) அங்கதச் செய்யுள் ஆமாறு 429. அங்கதந் தானே அரில்தபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. என்-எனின், அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-.ள்) அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொருளெ னவும், கரந்ததெனவும் இருவகைப்படும் எ-று. அவை முன்னர்க் காட்டுதும். (120) செம்பொருள் அங்கதம் 430. செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. என்-எனின், செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும் எ-று. (121) மறைபொருளாகிய அங்கதம் 431. மொழிகரந்து மொழியின்அது பழிகரப் பாகும். என்-எனின், மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பெனப் பெயர்பெறும் எ-று. (122) செய்யுள் இரண்டு 432. செய்யுள் தாமே இரண்டென மொழிப. என்-எனின், மேற் சொல்லப்பட்டன தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டு, தம்மாற் சொல்லப்பட்ட செய்யுள் இரண்டு வகை என்று சொல்லுவர் எ-று. அவை முன்னர்க் காட்டுதும். (123) செய்யுளின் பாகுபாடு 433. புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். என் - எனின், செய்யுளைப் பாகுபடுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புகழொடும், பொருளொடும் புணர வரிற் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர் எ-று. (124) இதுவுமது 434. வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப் பெயர் பெறும் எ-று. எனவே, இருவாற்றானும் செய்யுட் செய்யப்பெறும் எ-று. (125) கலிப்பா பாகுபடுமாறு 435. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே. என்-எனின், இனிக் கலிப்பாப் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்தாழிசைக் கலியும் கலிவெண்பாட்டும் கொச்சகமும் உறழ்கலியும் என நான்கு வகைப்படுங் கலிப்பா எ-று. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். "இருவயின் ஒத்தும் ஒவ்வா இயலினுந் தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங் கலப்பே யாயினும் புலப்பே யாயினும் ஐந்திணை மரபின் அறிவுவரத் தோன்றிப் பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும்." என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும். (126) ஒத்தாழிசைக்கலி இருவகை 436. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும். என்-எனின், ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும் எ-று. அவை முன்னர்க் காட்டுதும். (127) ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு 437. இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப. என்-எனின், ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாழிசையுந் தரவுஞ் சுரிதகமும் அடைநிலைக் கிளவியும் என நான்கு உறுப்பினை யுடைத்து ஒத்தாழிசைக் கலி எ-று. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடக்கை முறையாற் கூறாது தாழிசை முற்கூறிய வகையான் இப்பாவிற்கு ஒத்தாழிசை சிறந்ததாகலின் முற்கூறினான். முற்கூறுகின்றவழியும், 'இடைநிலைப் பாட்டே' எனக் கூறுதலின் முந்துற்றது தரவு என்றவாறாம். இடை நிலைப் பாட்டெனினும் தாழிசையெனினும் ஒக்கும். போக்கெனி னும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினு மொக்கும். அடை எனினும் தனிச்சொல் எனினும் ஒக்கும். தனிச் சொல்லைப் பின் எண்ணியவதனான் தாழிசைதோறுந் தனிச்சொல் வரவும் பெறும் என்று கொள்க. (128) தரவிற்கு அடிவரையறை 438. தரவே தானும் நாலடி யிழிபாய் ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே. என்-எனின், தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தரவு நாலடி யிழிபாகப் பன்னிரண்டடி யுயர்பாக, இடை வரும் அடியெல்லாவற்றானும் வரப்பெறும் என்று கொள்க. (129) தாழிசைக்கு அடி ஆமாறு 439. இடைநிலைப் பாட்டே தரவகப் பட்ட மரபின என்ப. என்-எனின், தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாழிசைகள் தரவிற் சுருங்கி வரும் எ-று. 'தரவகப்பட்ட மரபின' என்றதனான், தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாதென்பதூஉம், மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் "ஒத்து மூன்றாகு மொத்தா ழிசையே" (செய்யு. 137) எனக் கூறுதலானும் இப் பாவினை ஒத்தாழிசைக்கலி யெனக் கூறுதலானுந் தாழிசை ஒருபொருண் மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க. (130) தனிச்சொல் ஆமாறு 440. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகும் ஆங்கென மொழிப. என்-எனின், தனிச்சொல் லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகும் எனச் சொல்லுவர் எ-று. ஆங்கு அசை. தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகு மெனவே, தாழிசைக்கு முன்னர் வருதலும் சிறுபான்மை உளதென்று கொள்க. (131) சுரிதகம் ஆமாறு 441. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே தரவியல் ஒத்தும் அதனகப் படுமே புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே. என்-எனின், சுரிதக மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். அது தரவோ டொத்த அளவிற்றாகியும் அதனிற் குறைந்த அளவிற்றாகியும் குற்றந் தீர்ந்த பாட்டி னிறுதி நிலையை உரைத்த தென்றவாறு. தரவிய லொத்தலாவது சிறுமை நான்கடி யாகியும் பெருமை பன்னிரண்டடி யாகியும் வருதல். அதனகப்படுதலாவது சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல். இச்சூத்திரங்கள் ஓதின முறை யானே பாட்டு வருமென்று கொள்க. மேல் துள்ளலோசைத் தாகியும், நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் மிக்கும், சுரிதகம் ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல் வருமெனவுங் கூறிய இலக்கணங்களும் அறிந்து கொள்க. உ-ம்: "பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர ஆடெழில் அழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கால் நினைப்பதொன் றுடையேன்மன் அதுவுந்தான்; இது தரவு. தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார் துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை உருப்பறக் கனைதுளி சிதறென இன்னிசை யெழிலியை யிரப்பவும் இயைவதோ; புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய ஆரிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ; ஒளியிழாய் ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின் அளியொரீஇக் காதலர் அகன்றேகு மாரிடை முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ; இவை தாழிசை. எனவாங்கு, தனிச்சொல். செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமரல் தேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினாள் நிறனோடிப் பசப்பூர்த லுண்டென அறனோடி விலங்கின்றவர் ஆள்வினைத் திறத்தே" (கலி. 16) இது சுரிதகம். இது நான்கடித் தரவும் நான்கடியான் மூன்று தாழிசையுந் தனிச்சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் வந்த ஒத்தாழிசைக் கலிப்பா. இதனை நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா என்ப. "வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தான் நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன் ஏனையான் அளிப்பான்போல் இகலிருள் மதிசீப்பக் குடைநிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருண்மாலை; இது தரவு. மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தஎன் எழினலம் எள்ளுவாய் ஆய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போல் தளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலம் கடிகல்லாய்; மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்; இவை தாழிசை. ஆங்க, தனிச்சொல். மாலையு மலரு நோனா தெம்வயின் நெஞ்சமும் எஞ்சுமற் றில்ல எஞ்சி உள்ளா தமைந்தோர் உள்ளும் உள்ளில் உள்ளம் உள்ளுள் உவந்தே." (கலி. 118) இது சுரிதகம். இது தாழிசைதோறுந் தனிச்சொற் பெற்று வந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 'வயக்குறு மண்டிலம்' என்னும் (கலி. 25) கலிப்பாவில் தரவு பன்னிரண்டடியான் வந்தது. 'இலங்கொளி மருப்பிற் கைம்மா' என்னுங் (கலி. 23) கலிப்பாவி னுள் இரண்டடியால் தாழிசை வந்தன. 'உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனும்' என்னுங் (கலி. 22) கலிப்பாவில் தாழிசை மூன்றடியான் வந்தன. 'ஆறறி யந்தணர்' என்னும் கடவுட்பாட்டினுள் மூன்றடிச் சுரிதகம் வந்தது. இனி, ஏனையடிகளால் வரும் தரவுந் தாழிசையும் சுரிதகமும் கலித்தொகையுட் கண்டுகொள்க. (132) சொல்லாது ஒழிந்த ஒத்தாழிசைக்கலிப்பா 442. ஏனை யொன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே. என்-எனின், சொல்லாதொழிந்த ஒத்தாழிசைக்கலிப்பா உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்தாழிசைக் கலிப்பா முன்னிலை யிடத்துத் தேவரைப் பராவும் பொருண்மைத்து எ-று. (133) அதன் இருவகை ஆமாறு 443. அதுவே, வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே. என்-எனின், மேற்சொல்லப்பட்ட முன்னிலைப் பரவலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான் வண்ணகமெனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும் எ-று. (134) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு 444. வண்ணகம் தானே, தரவே தாழிசை எண்ணே வாரமென் றந்நால் வகையின் தோன்று மென்ப. என்-எனின், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணக ஒத்தாழிசையாவது தரவும் தாழிசையும் எண்ணும் சுரிதகமும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுப்பினையும் உடைத்து எ-று. (135) வண்ணகத் தரவிற்கு அடிவரையறை 445. தரவே தானும், நான்கும் ஆறும் எட்டும் என்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். என்-எனின், தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குத் தரவு நான்கும் ஆறும் எட்டுமாகிய அளவடியினாலே வரும் எ-று. ஈண்டு நேரடி என்றது கொச்சகத் தரவு போல வாராமைக்கு என்று கொள்க. சொல்லப்பட்ட ஒன்பதடியினும் மூன்றடியே இதற்கு வருவனவென்றவாறாயிற்று. (136) வண்ணகத்தாழிசைக்கு அடிவரையறை 446. ஒத்துமூன் றாகும் ஒத்தா ழிசையே தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. என்-எனின், தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. இச் சூத்திரம் இறந்தது காத்தது என்று கொள்க. (இ-ள்.) தாழிசையுந் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகி வரும். அவை தரவிற் சுருங்கித் தோன்றும் எ-று. (137) சுரிதகம் ஆமாறு 447. அடக்கியல் வாரம் தரவோ டொக்கும். என்-எனின், சுரிதகம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடக்கியலாகிய சுரிதகம் தரவோடொத்த இலக்கணத்த தென்றவாறு. (138) எண் ஆமாறு 448. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. என்-எனின், எண்ணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப் பின்றொடுக்கும் உறுப்புச் சுருங்கி வரும் எ-று. அதனை இரண்டடியான் வருவன இரண்டும், ஓரடியான் வருவன நான்கும், சிந்தடியான் வருவன எட்டும், குறளடியான் வருவன பதினாறும் எனப் பிற நூலாசிரியர் உரைப்பர். இவ்வாசிரியற்கு வரையறை யிலவாம். (139) மேலதற்குப் புறனடை 449. எண்ணிடை ஒழிதல் ஏதம் இன்றே சின்னம் அல்லாக் காலை யான. என்-எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட எண் ஒரோவொன்று இடை யொழிந்து வருதல் குற்றமாகாது, தனிச்சொல் இல்லாதவழி யென்றவாறு. எனவே, சொல்லப்பட்ட உறுப்புக்கள் தனிச்சொல் வருவழி இடையொழியாமல் வருதல் வேண்டுமென்றவாறு. தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்புடைத்தாயிற்று. இனித் தனிச்சொல் லின்றி எண்ணிடை யிட்டவழி ஒருபோகெனப் பெயர்பெறும். உ-ம்: "கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய அழல்வளை சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்; இது தரவு. முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோட் போர்மலைந்த மறமன்னர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலம்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; கலியொலி வியனுலகங் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்பொடு மறம்பிதிர எதிர்கலங்கிச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ; படுமணி இனநிரை பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவில் இறுத்ததுநின் இகலாமோ; இவை மூன்றுந் தாழிசை. இலங்கொளி மரகதம் எழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம்; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை; இவை பேரெண். கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுடர் உறுபகை தணித்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய அடியினை; இவை அளவெண். போரவுணர்க் கடந்தோய் நீஇ புணர்மருதம் பிளந்தோய் நீஇ நீரகலம் அளந்தோய் நீஇ நிழல்திகழ்ஐம் படையோய் நீஇ இவை இடையெண். ஊழி நீஇ, உலகு நீஇ, உருவு நீஇ, அருவு நீஇ, ஆழி நீஇ, அருளும் நீஇ, அறமும் நீஇ, மறமும் நீஇ; இவை சிற்றெண். எனவாங்கு, இது தனிச்சொல். "அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வேல் அச்சுதன் தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன் ஒன்றுபு திகிரி உருட்டுவோ னெனவே." இஃது ஆறடிச் சுரிதகம். இவ்வாறு வருவதனை ஒருசாராசிரியர் அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவெனக் கூறுப. (140) ஒருபோகு பாகுபடுமாறு 450. ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும். என்-எனின், ஒருபோகு பாகுபடுமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு போகென்னும் கலி இரண்டு வகைப்படும் எ-று. (141) இதுவுமது 451. கொச்சக ஒருபோ கம்போ தரங்கமென்று ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். என்-எனின், இதுவுமது. (இ-ள்.) ஒருபோகென்னும் கலி கொச்சகவொருபோகு எனவும் அம்போதரங்கமெனவும் பொருந்த நாடியறிதல் வேண்டும் எ-று. (142) கொச்சக ஒருபோகு ஆமாறு 452. தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகும் என்ப. என்-எனின், நிறுத்த முறையானே கொச்சகவொருபோகு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது - தரவு முதலாயின உறுப்புகளுள், தரவின்றித் தாழிசை முதலிய வுறுப்புகள் பெற்றும் எ-று. 'தாழிசை பெற்றும்' என்றதனான், தரவு தானே வரினும் கொச்சகவொருபோகு ஆகுமென்று கொள்க. தாழிசையின்றித் தரவுடைத்தாகியும் என்பது - தாழிசையின்றித் தரவு முதலியன உடைத்தாகியும் எ-று. 'தரவுடைத்தாகியும்' என்றதனான் தாழிசை தாமே வரினும் என்று கொள்க. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது - எண்ணாகிய உறுப்புக்களை யிடையிட்டுத் தனிச்சொல் வாராதொழியினும் எ-று. 'சின்னம்' என்றதனான் எண்ணின்கண் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் என்றுமாம். அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது - சுரிதகமின்றித் தரவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும் எ-று. யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது - ஒத்தாழிசையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்குரித்தாக ஓதப்பட்ட கடவுள்வாழ்த்துப் பொருண்மை யின்றிக் காமப் பொருளினும் வரினும் எ-று. கொச்சகவொருபோகாகும் என்ப என்பது - இவ்வகையினாற் சொல்லப்பட்டன கொச்சக வொருபோகெனக் குறி பெறும் எ-று. எனவே, ஒத்தாழிசைக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர் பெறும் என்று கொள்க. அவற்றுள் தரவின்றாகித் தாழிசை பெற்று வந்ததற்குச் செய்யுள்:- "நிரைதிமில் களிறாகத் திரையொலி பறையாகக் கரைசேர் புள்ளினத் தஞ்சிறை படையாக அரைசுகால் கிளர்ந்தன்ன வுரவுநீர்ச் சேர்ப்பகேள் இது நான்கடியாகி வாராமையின் தாழிசை யாயிற்று. கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றதன் எச்சத்துள் ஆயினுமஃ தெறியாது விடாதேகாண்; கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமாற் சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன் வாள்வாய்நன் றாயினும்அஃ தெறியாது விடாதேகாண்: இவை யிரண்டும் தாழிசை. ஆங்கு, இது தனிச்சொல். "அனைத்தினிப் பெரும அதனிலை நினைத்துக்காண் சினைஇய வேந்தன் எயிற்புறத் திறுத்த வினைவரு பருவரல் போலத் துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே." (கலி. 149) இது சுரிதகம். தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்குச் செய்யுள்: "செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுர முள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற வினி; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர் அவலம் படுதலும் உண்டு. (கலி. 19) இது சுரிதகம். தாழிசையுந் தனிச்சொல்லு மில்லை. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியவதற்குச் செய்யுள்: "மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்அல்குந் துறைவகேள்; இது தரவு. ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; இவை எண். ஆங்கதை அறிந்தனிர் ஆயினென் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் நின்தலை வருந்தியாள் துயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் தேரே." (கலி. 133) இது சுரிதகம். அடக்கிய லின்றி யடிநிமிர்ந்தொழுகல் வருமாறு: "பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் அருளில் சொல்லும் நீசொல் லினையே நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி நின்னிற் பிரியலென் அஞ்சலோம் பென்னும் நன்னர் மொழியும் நீமொழிந் தனையே அவற்றுள், யாவோ வாயின மாஅன் மகனே கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும் அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாள் மடவோள் அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே." (கலி. 21) என வரும். (143) மேலதற்குப் புறனடை 453. ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே. என்-எனின், மேலதற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட கொச்சகவொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் எ-று. (144) அம்போதரங்க ஒருபோகு 454. அம்போத ரங்கம் அறுபதிற் றடித்தே செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. என்-எனின், அம்போதரங்க வொருபோகுக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம்; நடுவாகிய நிலை சிறுமைக் கெல்லையாம் எ-று. செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம்; முப்பதடிச் சிறுமை எ-று. (145) அம்போதரங்க உறுப்புக்கள் 455. எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே. என்-எனின், அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டு எருத்து என்பது தரவு. கொச்சகமும் அராகமும் மேற்சொல்லப்பட்டன. எண்ணினுட் பேரெண்ணிற் சிற்றெண் வரப்பெறுமாயினும் இனிச் சொல்லப்பட்ட உறுப்பு முறையான் வருதலும் மயங்கி வருதலுங் கொள்க. பரிபாடற்கும் இவை தாமே உறுப்பாயின் அதனோடிதனிடை வேறுபாடு என்னையெனில், அறுபதிற்றடியிற் குறைந்து பரிபாடல் வரின் முறை பிறழ்ந்து வருமெனவும் உறுப்பு ஒத்து வரின் அறுபதின் மிக்கு வருமெனவுங் கொள்ளப்படும். உ-ம்: "கண்ணகன் இருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற தண்நறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும் வண்ணவண் தோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும் அன்னவை பிறவும் பன்மலர் துதையத் தழையுங் கோதையும் இழையும் என்றிவை தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி யாயத் தவருள் இவள்யார் உடம்போ, டென்னுயிர் புக்கவ ளின்று; இது தரவு. ஓஒ இவள், பொருபுகல் நல்லேறு கொள்பவ ரல்லால் திருமாமெய் தீண்டலர் என்று கருமமா எல்லாருங் கேட்ப அறைந்தறைந் தெப்பொழுதுஞ் சொல்லால் தரப்பட் டவள்; சொல்லுக, பாணியேம் என்றார் அறைகென்றார் பாரித்தார் மாணிழை யாறாகச் சாறு; சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லாம் மிடைபெறின் நேராத் தகைத்து; இவை கொச்சகம். தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன் எதிரெதிர் சென்றார் பலர்; கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந் துருத்தெழுந் தோடின்று மேல்; இவை அராகம். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்; இவை சிற்றெண். அவருள், மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றி வருத்தினான் மன்றஅவ் வேறு; இது முடுகியலடி வந்த கொச்சகம். ஏறெவ்வங் காணா எழுந்தார் எவன்கொலோ வேறுடை நல்லார் பகை; மடவரே நல்லாயர் மக்கள் நெருநல் அடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்றும் உடலேறு கோட்சாற்று வார்; இவையுங் கொச்சகம். ஆங்கினி, இது தனிச் சொல். தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித் திண்தோள் திறலொளி மாயப்போர் மாமேனி அந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த முறுவலாள் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்த துரை." (கலி. 102) இது சுரிதகம். பிறவும் இந்நிகரன கொள்க. யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகவொருபோகை அதன்பி னோதினமையான் இதற்குங் காமப்பொருளே பெறப்பட்டது. (146) கலிவெண்பா ஆமாறு 456. ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே. என்-எனின், கலிவெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈற்றடி யளவும் ஒரு பொருளைக் குறித்து வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண்பாட்டாம் எ-று. கலிவெண்பாட்டெனினும் வெண்கலிப்பாட்டெனினும் ஒக்கும். வெள்ளடியியலா னென்றமையான் வெண்டளையான்வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும் பிறதளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவுங் கொள்க. உ-ம்: "மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் என்னீர் அறியாதீர் போல இவைகூறல் நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடின் அதுவல்ல தின்பமும் உண்டோ எமக்கு." (கலி. 6) என வரும். இது வெண்டளையான் வந்த வெண்கலிப்பா. அஃதேல் இது நெடுவெண்பாட்டிற்கு ஓதிய இலக்கணத்தான் வருதலிற் பஃறொடை வெண்பாவாம், வெண்கலிப்பா வென்ற தென்னை யெனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவுங் கைக்கிளை பெருந்திணை யெனவுஞ் சொல்லப்பட்ட பொரு ளேழனுள்ளும் யாதானு மொருபொருளைக் குறித்து, ஏனைக் கலிப்பாக்கள் போலத் தரவுந் தாழிசையுந் தனித்தனிப் பொருளாக்கிச் சுரிதகத்தாற் றொகுத்து வரு நிலைமைத்தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலிவெண்பா வெனவும், புறப்பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடை வெண்பா வெனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாடலெனவும், கொச்சகக் கலிப்பாவிற் குறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களை கொச்சகக் கலிப்பாவெனவும் கூறுதல் இவ்வாசிரியன் கருத்தென்று கொள்க. அன்னதாதல் 'நெடுவெண்பாட்டே குறுவெண் பாட்டே' (செய்யுளியல் 114) என யாப்பினானே வேறுபடுத்தானாகிக் 'கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுள்' எனப் பொருளானும் இனத்தானும் வேறுபடுத் தோதினமையானுங் கொள்க. "தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி இருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் தையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்." (கலி. 111) என்னும் முல்லைக்கலி அயற்றளையான் வந்த கலிவெண்பா. (147) கொச்சகக்கலி ஆமாறு 457. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே. என்-எனின், கொச்சகக் கலியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் என்பது - தரவாகிய உறுப்புஞ் சுரிதகமாகிய உறுப்பும் முதலு முடிவும் வருதலின்றி இடையிடை வந்து தோன்றியு மென்றவாறு. உம்மையாள், இயற்கை வழாமற் றோன்றியு மென்று கொள்ளப் படும். ஐஞ்சீரடுக்கியும் என்பது - ஐஞ்சீரடி பல வந்தும் எ-று. உம்மையான் வாராது மென்று கொள்க. ஆறுமெய் பெற்றும் என்பது - தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகஞ் சொற்சீரடி முடுகியலடி யென்னும் ஆறுறுப்பினையும் பெற்றும் எ-று. உம்மையாற் பெறாது மென்று கொள்க. வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகை என்பது - மேற்சொல்லப்பட்ட வுறுப்புகளை யுடைத்தாகியும் இலதாகியும் வெண்பாவி னியல்பினாற் புலப்படத் தோன்றும் பாநிலை வகை யென்றவாறு. புலப்படத் தோன்றுதலாவது ஏனை யுறுப்புகளின் வெண்பா மிகுதல். இன்னும் அதனானே பிற பாவடிகளும் வந்து வெண்பாவியலான் முடிதலுங் கொள்க. கொச்சகக்.... அறைந்தனரே என்பது - கொச்சகக் கலிப்பா வென்று இலக்கணமறிந்த புலவர் கூறினா ரென்றவாறு. ஆறுமெய் பெற்றும் என்பதற்கு அராகமென்னும் உறுப்பைக் கூட்டி முடுகியலென்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் ஒன்று. உ-ம்: குறிஞ்சிக் கலியுள், "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீள்நாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே; இது தரவு: இதனுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்குங் கானகல் நாடன் மகன்; இதனுள் முதற்கணின்றது கூன். சிறுகுடி யீரே சிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்; இதன் முதல் அடி ஆசிரியவடி. காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்தோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; இவை மூன்றுங் கொச்சகம். எனவாங்கு, தனிச் சொல். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; இது வெள்ளைச் சுரிதகமாகி இடை வந்தது. அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; இவை யிரண்டுங் கொச்சகம். நல்லாய், தனிச் சொல். நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; இது பேரெண். புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ; விண்டோய்கன் னாடனும் நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ; பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; இவை யிரண்டுந் தாழிசை. மைதவழ் வெற்பன் மணஅணி காணாமற் கையாற் புதைபெறூஉங் கண்களும் கண்களோ; இது பேரெண். என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான் நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண்மன்; இதுவுங் கொச்சகம். எனவாங்கு, இது தனிச் சொல். நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவர் இனமாக வேய்புரை மென்றோட் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே." (கலித். 39) இது சுரிதகம். இதனுள் முதலடி அறுசீர் முடுகியல்; இரண்டாவது ஐஞ்சீர் முடுகியல். இவ்வாறு வருவன கொச்சகக் கலிப்பா வெனப்படும். ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க. இனி ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் குறைந்தும் மயங்கியும் மிக்கும் வரப்பெறும். அவை கலித்தொகையுட் கண்டுகொள்க. (148) உறழ்கலி ஆமாறு 458. கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே. இது உறழ்கலி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உறழ்கலிப்பாவிற்கு இலக்கணங் கூற்று மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடித லென்றவாறு. இதனைக் கொச்சகக்கலியின்பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பி னொப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும். உ-ம்: "யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு; இது தலைமகள் கூற்று. என்னிவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமா றியாது; இது தலைவன் கூற்று. ஏஎ, தெளிந்தேம்யாங் காயாதி எல்லாம்வல் எல்லா பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு வருந்தல்நின் வஞ்ச முரைத்து; இது தலைமகள் கூற்று. மருந்தின்று, மன்னவன் சீறில் தவறுண்டோ நீநயந்த இன்னகை தீதோ இலேன்; இது தலைமகன் கூற்று. மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே - உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎம் எனநெருங்கில் தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு." (கலி. 89) இப்பாட்டுச் சுரிதகமின்றி வந்தவாறு கண்டுகொள்க. எற்றிற்கு? இறுதியின்கண் வந்தது சுரிதக மாகாதோ வெனின், சுரிதகமாகாது. சுரிதகமாவது ஆதிப் பாட்டினும் இடைநிலைப் பாட்டினுமுள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது. இஃது அன்ன தன்றென்க. (149) ஆசிரியப்பாவிற்கு அளவு 459. ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபுமூன் றடியே. என்-எனின், ஆசிரியப்பாவிற்கு எல்லை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆசிரியப்பாவின் அளவிற்கு எல்லையாவது: சுருங்கினது மூன்றடி, பெருமை ஆயிரமடியாக இடைப்பட்டன எல்லா வடியானும் வரப்பெறும் எ-று. சுருங்கின பாட்டிற்கு உதாரண மேற் காட்டப்பட்டன. பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும், மணிமே கலையுள்ளுங் கண்டுகொள்க. 'ஆசிரிய நடைத்தே வஞ்சி' (செய்யுளியல் 104) என்றதனான், வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமை யாகக் கொள்ளப்படும். (150) வெண்பாவிற்கு அடிவரையறை 460. நெடுவெண் பாட்டே முந்நான் கடித்தே குறுவெண் பாட்டிற் களவேழ் சீரே. என்-எனின், வெண்பாவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறு வெண்பாட்டிற்கு அடி அளவடியுஞ் சிந்தடியுமாகிய இரண்டடியும் எ-று. எனவே இடையுள்ள அடிகளெல்லாம் உரிய. உ-ம்: மேற் காட்டப்பட்டது. (151) அங்கதப்பாட்டிற்கு அளவு 461. அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும். என்-எனின், அங்கதப் பாட்டிற்கு அளவுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி எ-று. உ-ம்: (சில காட்டப்பட்டன; ஏனைய) வந்தவழிக் கண்டு கொள்க. (152) பாட்டுள் அடிவரையறை இல்லன 462. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை என்றிவை தொகைநிலை மரபின் அடியில என்ப. என்-எனின், அடியளவு வரையறை யில்லாத செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கலிவெண் பாட்டும், கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாவும், செவியுறை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், புறநிலை வாழ்த்தும் என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரை யறுக்கப்படா; பொருள் முடியுங்காறும் வேண்டிய அடிவரப் பெறும் எ-று. (153) மருட்பாவிற்கு உரியபொருள் 463. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதின் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப. என்-எனின், மேலனவற்றுட் சில பொருட்குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூவும் மருட்பாவினான் வரப்பெறும் எ-று. எனவே மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறாதாயிற்று. உ-ம்: வந்தவழிக் காண்க. (154) பரிபாடலுக்கு அடிவரையறை 464. பரிபா டல்லே நாலீ ரைம்ப துயர்படி யாக ஐயைந் தாகும் இழிபடிக் கெல்லை. என்-எனின், பரிபாடற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பரிபாடற் செய்யுள் நானூறடி யுயர்பாக, இருபத்தைந்தடி இழிபாக வரும் எ-று. எனவே, இடையெல்லா அடியானும் வரப்பெறும் எ-று. கலிப்பாவினுள் ஒத்தாழிசைக்கு அளவு மேற்கூறப்பட்டது. கலிவெண்பாட்டுக்கு வரையறை யில்லை யெனப்பட்டது. கொச்சகக்கலிக்கு வரையறை கூறாமையாற் பொருண் முடியுங் - காறும் வரப்பெறும் என்று கொள்க. அவ்வழிப் பலவுறுப்பாகி வருதலின் அதற்குறுப்பாகிய செய்யுளளவிற்றாதல் வேண்டும். உறழ்கலியுங்கொச்சகக் கலிப்பாற் படும். (155) பாடலடிவரையறையைத் தொகுத்தது 465. அளவியல் வகையே அனைவகைப் படுமே. என்-எனின், மேற்சொல்லப்பட்டவை தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவ்வதிகாரத்துள் ஈண்டு அதிகரிக்கப்பட்ட அளவியல் ஈண்டுச் சொன்ன வகை பெறும் எ-று. (156) அடிவரையறை இல்லாச் செய்யுள் 466. எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப. என்-எனின், அடிவரையறை யில்லாதன வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு. (157) இதுவுமது 467. அவைதாம் நூலி னான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. என்-எனின், மேற் சொல்லப்பட்ட அறுவகையு மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாய்மொழி யெனினும் மந்திர மெனினும் ஒக்கும். அங்கதமாவது 'செம்பொருள் கரந்ததென விருவகைத்தே' (செய்யுளியல் 120) என்றதனாற் கரந்த வங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (158) நூல் ஆமாறு 468. அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே. என்-எனின், நூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொரு ளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்துநின்றும் விரிந்த வுரையொடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு எ-று. அகன்ற வுரையொடு பொருந்துதலாவது சொல்லாத பொருண் மையெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லாம் இடனுண்டா தல். (159) நூல் பாகுபடுமாறு 469. அதுவே தானும் ஒருநால் வகைத்தே. என்-எனின், நூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட நூல் நான்கு வகையை யுடைத்து எ-று. அவையாமாறு முன்னர்க் கூறப்படும். (160) மேற்கூறிய நான்கும் ஆமாறு 470. ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஓத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கனை மரபின் இயலும் என்ப. என்-எனின், மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது - ஆசிரி யன் யாதானு மொருபொருளைக் குறித்துக் கூறுஞ் சூத்திரத்தானும் எ-று. இனமொழி கிளந்த ஓத்தினானும் என்பது - இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் எ-று. பொதுமொழி கிளந்த படலத்தானும் என்பது - மேற்சொல்லப் பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் எ-று. மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது - இம்மூன் றனையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் எ-று. ஆங்கனை மரபின் இயலு மென்ப என்பது - அம்மரபினான் இயலும் நூலென்ப எ-று. அவற்றிற்கு இலக்கண முன்னர்க் கூறப்படும். (161) சூத்திர இலக்கணம் 471. அவற்றுள், சூத்திரம் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே. என்-எனின், சூத்திரத்திற்கு இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சூத்திரமாவது கண்ணாடியி னிழற்போல விளங்கத் தோன்றி ஆராயாமற் பொருள் நனி விளங்குமாறு யாப்பின்கண்ணே தோன்ற யாப்ப தென்றவாறு. ஆடிநிழலி னறியத் தோன்றுவதாவது - சூத்திரம் படித்த வளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோற்றல். நாடுதலின்றிப் பொருணனி விளங்க யாத்த லாவது - அதன்கண் யாக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமற் புலப்படத் தோன்றுமாறு யாத்தல். உ-ம்: "வேற்றுமை தாமே ஏழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே." (தொல். வேற்றுமையியல் 1) என்றவழி, யாப்பின்கண்ணே பொருடோன்ற யாத்தவாறுங் கண்ணாடி நிழற்போலக் கருதிய பொருள் தோற்றியவாறுங் கண்டுகொள்க. (162) ஓத்திற்கு இலக்கணம் 472. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர். என்-எனின், ஓத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்த வினத்ததாகிய மணியை ஒருங்கே கோவைப்பட வைத்தாற் போல ஓரோரினமாக வரும் பொருளை ஓரிடத்தே சேர வைத்தல் ஓத்தென்று பெயராம் எ-று. எனவே அவ்வினமாகிச் சேர்ந்த நிலைக்கு ஓத்தென்று பெயரா யிற்று. அது 'வேற்றுமையோத்து' என்பதனானறிக. (163) படலத்திற்கு இலக்கணம் 473. ஒருநெறி இன்றி விரவிய பொருளான் பொதுமொழி தொடரின்அது படலம் ஆகும். என்-எனின், படலத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓரினமாகிய நெறியின்றிப் பலநெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற் றொடர்வுபடின் அது படலமெனப் பெயராம் எ-று. அது கிளவியாக்க முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்ப தோத்தும் வேறுபாடுடையவாயினும், சொல்லிலக்கணம் உணர்த்தினமை யாற் சொல்லதிகாரம் எனப் பெயர் பெறுதல். அதிகாரம் எனினும் படலமெனினும் ஒக்கும். (164) பிண்டத்திற்கு இலக்கணம் 474. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம் என்ப. என்-எனின், பிண்டமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றுறுப்பினையும் அடக்கின தன்மைத்தாயின் அதனைப் பிண்டமென்று சொல்லுவர் எ-று. மூன்றுறுப் படக்குதலாவது, சூத்திரம் பல வுண்டாகி ஓத்தும் படலமுமின்றாகி வரினும், ஓத்துப் பலவுண்டாகிப் படலமின்றி வரி னும், படலம் பலவாகி வரினும், அதற்குப் பிண்டமென்று பெயராம் எ-று. அவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம். அதிகாரத்தாற் பிண்ட மாயிற்று இந்நூலென்று கொள்க. இவற்றைச் சிறுநூல் இடைநூல் பெருநூல் என்ப. (165) உரை பாகுபடுமாறு 475. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்என்று உரைவகை நடையே நான்கென மொழிப. என்-எனின், உரை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாட்டிடை வைத்த குறிப்பாவது - பாட்டினிடை வைக்கப்பட்ட பொருட் குறிப்பினானும் உரையாம் எ-று. பலசொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீஇயவற்றைப் பாட்டென்றான். ஓசையின்றிச் செய்யுட் டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது. அவ்வகையுமன்றி வரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப் பட்டது. அவையாமாறு: 'ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்' என்னுங் குறிஞ்சிக் கலியுள், "இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து" (கலித். 56) என்றது உரைக் குறிப்பு. 'ஒரூஉ, கொடியியல் நல்லார்' என்னும் மருதக் கலியுள், "கடியர்தமக் கியார்சொலத் தக்கார் மாற்று" (கலித். 88) என்றதுமது. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள், "கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பார் அரசாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலுட் காலை முரசம் கனைகுரல் இயம்பு மாதலின் நெய்ம்முறை நமக்கின்றாகுமென ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங்கொண் டிடைமுதுமகள் வந்துதோன்றுமன்..." (சிலப்.ஆய்ச்சியர் குரவை.) என்றது மது. பாவின்றெழுந்த கிளவியானும் என்பது - பாக்களை யொழியத் தோற்றிய சொல்வகையானும் உரையாம் எ-று. அஃதாவது, வழக்கின்கண் ஒரு பொருளைக் குறித்து வினவுவாருஞ் செப்புவாருங் கூறுங் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒரு பொருளைக் குறித்துச் செய்யப்படுதலானுஞ் செய்யுளாம். இதனைக் குறித்தன்றே 'செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்' (தொல். கிளவி யாக்கம். 13) என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க. பொருள்மரபில்லாப் பொய்ம்மொழியானும் என்பது - பொருளியல்பில்லாப் பொய்மொழியானும் உரைவரும் எ-று. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது - பொருளைப் பொருந்திய நகைவழி மொழியாய் வருகின்றது எ-று. நகைமொழியாவது - மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தாதென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் உரை வருமென்றான். என்று உரைவகை நடையே நான்கென மொழிப என்பது - இவ்வகையினான வுரை நான்கு வகைப்படும் எ-று. (166) மேலதன் இருவகை 476. அதுவே தானும் இருவகைத் தாகும். (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் எ-று. அது மைந்தர்க்கு உரைப்பனவும், மகளிர்க்கு உரைப்பனவுமாம். (167) இருவகைக்கும் உரியார் 477. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. என்-எனின், மேல் இருவகைப்படும் என்ற உரையை யுரைத்தற் குரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகளிர்க்கு உரைக்கு முரை செவிலிக்குரித்து. மைந்தர்க்கு உரைக்கு முரை யெல்லார்க்கு முரித்தென்றவாறு. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்றவுரையும், பாட்டி லுரைக்கின்ற வுரையும் கூறுவளோ வெனின், அவ்விடங்களில் வரும் உரை பொருள்பற்றி வருதலின் அப்பொருள் கூறுவளென்க. அன்றியும், 'அதுவே தானும்' என்பது பொருளொடு புணர்ந்த நகைமொழியைச் சுட்டிற்றாக்கி, அம் மொழி யிரண்டு கூறுபடுமெனப் பொருளுரைப்பினும் அமையும். (168) பிசி ஆமாறு 478. ஒப்பொடு புணர்ந்த உவமத் தானுந் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே. என்-எனின், பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒப்போடே புணர்ந்த உவமை நிலையானும் பிசியாம்; தோன்றுவதனைச் சொன்ன துணிவினானும் பிசியாம் எ-று. 'அச்சுப்போலே பூப்பூக்கும்; அமலே யென்னக் காய்காய்க்கும்' என்பது பிசி. இது உவமைபற்றி வந்தது. (169) முதுமொழி ஆமாறு 479. நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியு முடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப. என்-எனின், முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளி யுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதின பொருளை முடித்தற்கு வரும் ஏது வைக் குறித்தன முதுமொழி யென்று சொல்லுவர் எ-று. (170) மந்திரம் ஆமாறு 480. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும் மறைமொழி தானே மந்திரம் என்ப. என்-எனின், மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாவ தென்றவாறு. அது வல்லார்வாய்க் கேட்டுணர்க. (171) குறிப்பு மொழி 481. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே. என்-எனின், குறிப்புமொழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிச் சொல்லினா னுணரப்படும் பொருளின் புறத்ததுவே குறிப்புமொழி எ-று. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி யென்றத னான் இச்சொல் வசை குறித்து வருமென்று கொள்க. புகழ் குறித்து வந்தாற் குற்றமென்னை யெனின், அதனை வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாற் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப்படும். (172) பண்ணத்தி ஆமாறு 482. பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத் திய்யே. என்-எனின், பண்ணத்தி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் இத்துணையும் பாவும் பாவின்றி வழங்குவனவும் எடுத்தோதினான். இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவின மாமாறு உணர்த்துதலின் இது... பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்பது - பாட்டின்கட் கலந்த பொருளை யுடைத்தாகி யென்றவாறு. எனவே, அவ்வடி பாவிற்குரிய பொருள் கொள்ளப்படும். பாட்டினியல பண்ணத்திய்யே என்பது - பாட்டுக்களின் இயல்பை யுடையவாம், பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுள்கள் எ-று. பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்றார். அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத்தமிழில் ஓதப்படுவன. அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (173) அதற்கு ஓர் உதாரணம் 483. அதுவே தானும் பிசியொடு மானும். என்-எனின், மேற்சொல்லப்பட்டதனுள் ஓர் உ-ம்: உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடொத்த அளவிற்று எ-று. பிசியென்பது இரண்டடி அளவின்கண்ணே வருவதாயின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப்படும். உ-ம்: "கொன்றை வேய்ந்த செல்வன் அடியை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே." இது பிசியோடு ஒத்த வளவிற்றாகிப் பாலையாழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமையிற் பண்ணத்தியாயிற்று. பிறவுமன்ன. (174) பண்ணத்தி பாகுபடுமாறு 484. அடிநிமிர் கிளவி ஈரா றாகும் அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே. என்-எனின், இதுவும் பண்ணத்தி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பண்ணத்தி யெனினும் பாவினமெனினு மொக்கும். 'நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே' (செய்யுளியல் 31) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. (இ-ள்.) நாற்சீரடியின் மிக்கு வரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் எ-று. இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லாவடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம். பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல் லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள் தாழிசை யாவது:- ஆசிரியத் தாழிசை, வஞ்சித் தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது:- ஆசிரியத் துறை, வஞ்சித் துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது: ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம், வெளி விருத்தம், கலி விருத்தம் என நான்காம். அவற்றுள் ஆசிரியத் தாழிசையாவது மூன்றடி யொத்து வருவது. "நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி நிறைமலர்சாந் தொடுபுகையும் நீரு மேந்தி வீடற்குந் தன்மையின் விரைந்து சென்று விண்ணோடு மண்ணிடை நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்குந் தக்க தொல்சீர்ப் பகவன்ற னடியிரண்டும் பணிதும் நாமே" (யாப்.வி.மேற்.) என வரும். அவ்வழி ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைத் தென ஒரு சாரார் உதாரணங் காட்டுமாறு:- "கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ." (சிலப். ஆய்ச்.) இவை மூன்றடியான் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை யென்றவாறு. இவை அளவடியான் வருதலானும் ஒத்து மூன்றாகி வருதலானும் இவ்வாசிரியன் மதத்தான் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சகவொரு போகெனப்படும். மேற்காட்டியதே ஆசிரியத் தாழிசை. இனி, வஞ்சித் தாழிசையாவது குறளடி நான்கினான் ஒரு- பொருள் மேன் மூன்றடுக்கி வரும். "மடப்பிடியை மதவேழந் தடக்கையான் வெயில் மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்; இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்; பேடையை இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண்." (யாப்.வி.மேற்.) என வரும். அஃதேல் இவை மூன்றடுக்கி வருதலிற் கொச்சக வொருபோகாதல் வேண்டுமெனின், அளவடியான் வாராமையான் ஆகாதென்க. இனி, வெண்டாழிசையாவது மூன்றடியான் வந்து வெண்பாப் போல இறும். அது "நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்." (யாப்.வி.மேற்.) என வரும். சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவதனை வெள்ளொத் தாழிசை யென்ப. அது, "அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்; ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்; பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்." (யாப்.வி.மேற்.) என வரும். கலித்தாழிசையாவது அடிவரையின்றி ஒத்து வந்து ஈற்றடி சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது. அது "வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தின் எழால் வாழி வெண்திங்காள் கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்." (யாப்.மேற்.) என வரும். இத் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரினுங் கொச்சக வொருபோ கெனப்படா; கலித்தாழிசை யெனப்படும், ஈற்றடி மிக்கு வருதலான். இனி ஆசிரியத் துறையாவது நான்கடியாய் இடையிடை சீர் குறைந்து வரும். அது, "கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்உள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையர மங்கையர் வௌவுதல் அஞ்சுதும் வார லையோ." (யாப்.வி.மேற்.) என வரும். வஞ்சித் துறையாவது குறளடி நான்கினான் தனித்து வரும். அது, "முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் குருந்தீன்றன மல்லல்வான் மழைமுழங்கின செல்வர்தேர் வரவுகாண்குமே" (யாப்.வி.மேற்.) என வரும். இனி வெண்டுறையாவது மூன்றடிச் சிறுமையாக ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்து வரும். "குழலிசைய வண்டினங்கள் கோளிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்." (யாப்.வி.மேற்.) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. கலித்துறையாவது நெடிலடி நான்கினான் வருவது. அஃதாவது, ஐஞ்சீரான் வருவதும், பதினாறும் பதினேழும் எழுத்துப் பெற்று நான்கடியான் வருவனவுமாம். "யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையும் எல்லாங் கரியன்றே" (யாப்.வி.மேற்.) "நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுர மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 20) இது நேரசை முதலாகிப் பதினாறெழுத்தான் வந்தது. "கனிய நினைவொடு நாடொறுங் காதல் செயுமடியார்க் கினிய னவனொரு வின்னாங் கிலமெவ ரும்வணங்கப் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே." (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 6) இது நிரையசை முதலாகிப் பதினேழெழுத்தான் வந்தது. இனி, ஆசிரிய விருத்தமாவது அறுசீரடி முதலாகிய மிக்க அடியினான் நான்கடியு மொத்துவரும். அது, "இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ நுரைக்க ளென்னுமக் குழம்புகொண் டெதிர்ந்தெழ நுடங்கிய விலயத்தான் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே." (சூளாமணி கல்யாண. 51) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. இனி வஞ்சிவிருத்தமாவது முச்சீரடி நான்காகி வரும். அது "இருது வேற்றுமை இன்மையான் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேல்தடங் கையினாய்" (சூளாமணி. சீயவதை. 170) என வரும். இனி, வெளிவிருத்தமாவது நான்கடியானாயினும் மூன்றடியானாயி னும் அடிதொறுந் தனிச்சொற் பெற்று வரும். அது "ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார்" (யா.வி.மேற்.) என வரும். இது நான்கடியான் வந்தது. மூன்றடியான் வருவது வந்தவழிக் காண்க. இனி, கலிவிருத்தமாவது நாற்சீரடி நான்கினால் வரும். "தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளித்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே" (சூளாமணி. நகர. 14) என வரும். இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனானும், பிறநூல் முடிந்தது தானுடம்படுத லென்பதனானுங் கொள்க. (175) மேல்சொல்லப்பட்டன தொகுத்துக் கூறல் 485. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே அனைவகைப் படுமே. என்-எனின், மேற்சொல்லப்பட்டன தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டுச் சொன்ன வகையினாற் சொல்லப்பட்டனவற்றை யாராயுங் காலத்து அவ்வியல்வகை யத்துணைப் பாகுபடும் எ-று. இதனாற் சொல்லியது: செய்யுளாவது அடிவரையுள்ளனவும் அடிவரையில்லனவுமென இருவகைப் படுமென்பதூஉம், அடிவரை யுள்ளன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனவும், தாழிசை, துறை, விருத்தமெனவும், வகைப்படும் என்பதூஉம் அடிவரையில்லன, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம் குறிப்புமொழி என அறுவகைப் படுமென்பதூஉம் உணர்த்தியவாறு. அஃதேல் மேல் 'அளவியல் வகையே அனைவகைப்படுமே' என்ற சூத்திர மிகையாதல் வேண்டுமெனின், அது பாவிற்கு அடி, வரையறுத் துக் கூறப்பட்டது; இது செய்யுள் இனைத்தென வரையறுத் துணர்த்திற்று. திணை ஆமாறு 486. கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும் முற்கிளந் தனவே முறையி னான. என்-எனின், நிறுத்தமுறையானே திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுதிணையாவன கைக்கிளை முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் பெருந்திணை யென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன எ-று. முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண் பாட்டினைக் கைக்கிளைப்புறமெனவும், வஞ்சியை முல்லைப்புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற் புறமெனவும், காஞ்சியைப் பெருந்திணைப்புறமெனவும் ஓதிய நெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகி யடங்குமாயின. (177) கைகோள் வகையின் களவு ஆமாறு 487. காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே. என்-எனின், கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்கு வகையானும், அவற்றைச் சார்ந்து வருகின்ற கிளவியானும், வருவன களவென்று கூறுதல் வேதமறிவோர் நெறி எ-று. இதனுள் களவென்னாது 'மறை' யென்றதனான் இது தீமை பயக்குங் களவன்மை கொள்க. இன் : ஆன் பொருள்பட வந்தது. ஒடு : எண். (178) கைகோள் வகையின் கற்பு ஆமாறு 488. மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. என்-எனின், கைகோள் வகையிற் கற்பாகிய கைகோள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) களவொழுக்கம் வெளிப்படுதலுங் களவொழுக்கமின் றித் தமரானே பெறுதலு மென்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியிற் றப்பாது மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல், தீர்தலும், பிரிதலுமென்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடிவருவது கற்பென்று சொல்லப்படுவது எ-று. 'இயனெறி' என்றதனாற் கரணத்தின் அமைதல் இன்றியமையா தென்று கொள்க. (179) கைகோளைத் தொகுத்துக் கூறல் 489. மெய்பெறும் அவையே கைகோள் வகையே. என்-எனின், மேற் சொல்லப்பட்டவற்றைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருள்பெற வந்த மேற் சொல்லப்பட்ட களவு கற்பென்னும் இருவகையே கைகோள் வகையாவன எ-று. ஏகாரந் தேற்றம். (180) களவின் கிளவிக்கு உரியார் 490. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு அளவியல் மரபின் அறுவகை யோருங் களவினிற் கிளவிக் குரியர் என்ப. என்-எனின், இனிக் கூறப்படுவாரை உணர்த்துவான் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பார்ப்பான் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற் குரியரென்றவாறு. ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற் குடம்படுவாரென்று கொள்க. பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன். பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன். (181) கற்பின் கிளவிக்கு உரியார் 491. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். என்-எனின், கற்பின்கட் கூறத் தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற் சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவருங்கூடப் பன்னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் எ-று. 'தொன்னெறி மரபிற் கற்பு' என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க. (182) கைகோளுக்கு உரிய மரபு 492. ஊரும் அயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும். என்-எனின், மேற்சொல்லப்பட்ட இருவகைக் கைகோளிற்கும் உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஊரினுள்ளாருஞ் சேரியினுள்ளாரும் அயன்மனை யுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினானறிவாருந் தந்தையுந் தமையனும் இருவகைக் கைகோளினும் பட்டதனையுட்கொண்டு பிறிதொன்றை யெடுத்து மொழியினல்லது, பட்டாங்குக் கூறுதலின்மை வலியுறுத்தத் தோன்றும் எ-று. எனவே, வலியில்வழிச் சிறுபான்மை நிகழவும் பெறும். "எந்தையும், நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்." (அகம். 12) இது தந்தையை யுட்கொண்டு கூறியது. பிறவுமன்ன. (183) நற்றாய்க்கு உரியதொரு மரபு 493. கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. என்-எனின், நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத் தோன்றாது எ-று. எனவே, ஏனையோர்க்கே கூறும் என்றவாறாம். உ-ம்: வந்துழிக் காண்க. (184) கண்டோர்க்கு உரிய மரபு 494. ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. என்-எனின், கண்டோர்க்குரிய தொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலி யும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது எ-று. எனவே ஏனையோர் கேட்பக் கூறிற்றில்லை என்றவாறாம். (185) தலைமகனுக்கு உரியதொரு மரபு 495. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையிற் கிளத்தற்கும் உரியன். என்-எனின், இது தலைவற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவியை யுடன்கொண்டுபோம் இடைச்சுரத்தின்கண் தலைவியைத் தலைவன் வழக்குநெறி யாணையானே கூறுதற் குரியன் எ-று. உம்மை எதிர்மறை. ஆணையென்பது ஆக்கினை; வடமொழித் திரிபு. மெல்லிய காம நிகழுமிடத்து ஆக்கினை கூறப் பெறானாயினும் அவ்விடத்து வேண்டுமென்பது எடுத்தோதப்பட்டது. உ-ம்: "நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே." (நற். 362) என்பதனுட் கண்டுகொள்க. மெல்லிய மகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழுவமைத்தவாறு. (186) தலைவன் தலைவி அல்லாதார்க்கு உரிய மரபு 496. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தின் எடுத்தே. என்-எனின், இது தலைவனுந் தலைவியும் அல்லாதார்க் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மரும் அத்தலைவனொடுந் தலைவியொடுஞ் சொல்லிப்போந்த மரபினாற் சொல்லப்பெறுவர், இடமுங் காலமுங் குறித்து எ-று. 'மொழிந்தாங்கு' என்பதனை வழக்கியலாணை யெனினு மமையும். முன்னமாவது:- "இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரித்தென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது." (தொல். செய்யுளியல் 199) எடுத்தென்பது அறம்பொருளின்பங்கட்குத் தகாத சொற்களை யெடுத்துக் கூறுதல். அஃதாவது தலைவனைப் பார்ப்பானும் பாங்கனும் கழறலும், தோழி இயற்பழித்தலும், தலைவியைச் செவிலி யலைத்தலும், பாணர் கூத்தர் பாசறையிற் சென்று கூறுதலும், தோழி தலைமகனை வற்புறுத்த லும் முதலாயின. (187) இதுவுமது 497. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குநர் அவரே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) தலைவியுந் தலைவனுங் கூறக் கேட்போர் மேற் சொல்லப்பட்ட பதின்மரும் எ-று. இது முதலாகக்கேட்போரைக் கூறுகின்றது. (188) பார்ப்பாரும் அறிவரும் கூறுவ கேட்போர் 498. பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. என்-எனின், பார்ப்பாரும் அறிவருங் கூறுங் கூற்றுக் கேட்போரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பார்ப்பார் அறிவரென்று சொல்லப்பட்ட இருவர் கூற்றும் எல்லாருங் கேட்கப்பெறுவ ரென்றவாறு. (189) ஒருசார் கூற்றிற்கு உரியார் 499. பரத்தை வாயில் எனவிரு வீற்றுங் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பயனிலவே. என்-எனின், இதுவு மொருசார் கூற்றிற்குரியா ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பரத்தையென்று சொல்லப்படும் வேறுபாட்டினும் வாயிலென்று சொல்லப்படும் வேறுபாட்டினுந், தலைமகளைச் சுட்டாத கூற்றுப் பயனில்லை எ-று. (190) வாயில்களுக்கு உரியதொரு மரபு 500. வாயில் உசாவே தம்மு ளுரிய. என்-எனின், வாயில்கட்குரிய தொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாயில்கள் உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முள் உசாவுதலுரித்து எ-று. உ-ம்: வந்தவழிக் கண்டுகொள்க. (191) கழிபடர் பொருண்மைக்கு உரிய மரபு 501. ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவு நுதலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர். என்-எனின், இதுவுங் கேட்டற் பொருண்மைக்கண் வருவதொரு மரபுவழு வமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஞாயிறு முதலாக நெஞ்சு ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் அத்தன்மைய பிறவுமாகிய மக்களல்லாத பொருள்கள் தாங் கருதிய நெறியினானே சொல்லுவன போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லி யமையப்பெறும் எ-று. ஆங்கு - அசை. "பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவென் வந்தேனென் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று." (கலித். 143) "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேற் காதலை வாழி மதி." (குறள். 1118) "உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை." (நற். 284) "நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே." (சிலப். கானல்) இதனுட் கடலுங் கானலும் புள்ளு மரனுங் கூறப்பட்டன. "மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்." (கலித். 108) "வருந்தினை வாழிய நெஞ்சே." (அகம். 79) பிறவு மென்றதனான், "மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ மென்தோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற." (கலித். 142) எனவும் இந்நிகரன கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது கேட்போ ரியல்பு. (192) இடன் ஆமாறு 502. ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங் கரும நிகழ்ச்சி இடமென மொழிப. என்-எனின், நிறுத்த முறையானே இடமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர் எ-று. நிகழ்ச்சி, நிகழ்ந்த விடம். ஒருநெறிப் படுதலாவது - அகமாயினும் புறமாயினும் ஒரு பொருண்மேல் வருதல். ஓரியல் முடிதலாவது - அகத்தின்கட் களவென்றானும் கற்பென் றானும் அவற்றின் விரிவகையின் ஒன்றானும் பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானு மீட்டலானு மேற்செலவானும் எயில்வளைத்தலானும் யாதானு மோரியல்பு பற்றி வருதல். கருமம் நிகழ்தலாவது - அப்பொருளைப் பற்றி யாதானு மொரு வினை நிகழுமிடம். இன்னுங் கருமநிகழ்ச்சி என்றதனான், தன்மை முன்னிலை படர்க்கை யென்பனவுங் கொள்ளப்படும். "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள். 951) என்றவழிப் பிரிவுப் பொருண்மை நிகழும் இடமாயிற்று. முன்னின் றானைக் கூறுதலின் முன்னிலை யென்னும் இடமாயிற்று. யாதானுமொரு கருமம் நிகழ்வுழி அதற்காகும் இடத்தொடுங் கூட நிகழ்தல் வேண்டுமென்று இப்பொருள் கூறப்பட்டது. ஒருநெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம், அஃதாவது, தலைமகளொடு புணர்தல் வேண்டித் தோழியை யிரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்க வுரை கூறாது தன்னாற்றலும் பிறவுங் கூறுதல். "மெல்லியல் நல்லாருள் மென்மை அதுவிறந் தொன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை யெல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல்." (நாலடி. 188) இதனானு மறிக. அன்றியும், "நெடும்புனலுள் வெல்லு முதலை அடும்புனலுள் நீங்கி னதனைப் பிற." (குறள். 495) இதுவும் இடனறிதல். "உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார்." (குறள். 922) இது தன்மையானையும் முன்னின்றானையும் ஒழித்துப் படர்க் கையானைத் தொழிற்படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச் சொல் படர்க்கைப் பெயரொடு முடிந்தது. பிறவுமன்ன. (193) காலம் ஆமாறு 503. இறப்பே நிகழ்வே எதிர தென்னுந் திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணரப் பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும். என்-எனின், நிறுத்த முறையானே காலமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமெனக் கூறப்பட் டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்குமாறு பொருணிகழ்ச்சியைக் கூறுவது காலமாகும் எ-று. "முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே." இஃது இறந்தகாலத்தின்கட் புணர்ச்சியுண்மை தோன்ற வந்தது. இனி, "அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர." (நற். 10) என்றவழி நிகழ்காலம் இளமைப் பருவமென்பது தோன்றவந்தது. இதனுள், 'நீத்தலோம்புமதி' யென்பது எதிர்காலங் குறித்து நின்றது. இவ்வகையினாற் காலமு மிடமும் எல்லாச் செய்யுளின்கண்ணும் வருமென்று கொள்க. (194) பயன் ஆமாறு 504. இதுநனி பயக்கும் இதன்மா றென்னுந் தொகுநிலைக் கிளவி பயனெனப் படுமே. என்-எனின், நிறுத்த முறையானே பயனாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி, இதன் பின்பு மிதனைப் பயக்கு மென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக் கூறுதல் பயனெனப்படும் எ-று. "சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே." இதனாற் பயன் வரைந்துகோடல் வேண்டும் என்பது. "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று." (குறள். 323) இதனாற் பயன் நன்மை வேண்டுவார் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றல். இவ் வகையினான் யாதானு மொரு செய்யுளாயினும் பயன்படக் கூறல் வேண்டுமென்பது கருதிப் பயனென ஒரு பொருள் கூறினார். (195) மெய்ப்பாடு ஆமாறு 505. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். என்-எனின், நிறுத்த முறையானே மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானுமொன்றைக் கூறியவழி யதன்கட் பொருண் மையை விசாரித்துணர்தலின்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பா டென்னும் உறுப்பாம் எ-று. "ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனென் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்கம் நடத்திசிற் சிறிதே." (புறம். 255) இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறு கண்டு கொள்க. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டு மென்பது கருத்து. (196) இதுவுமது 506. எண்வகை இயனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே என்-எனின், மெய்ப்பாடாவது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது நகை முதலாகிய எட்டு மெய்ப்பாட்டு நெறியையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடைத்து எ-று. அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க. (197) எச்சவகை ஆமாறு 507. சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சம் ஆகும். என்-எனின், நிறுத்த முறையானே எச்சவகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பிறிதொரு சொல்லொடும் பிறிதொரு குறிப்பொடும் முடிவு கொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும் எ-று. எனவே, சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகையாயின. அஃது எச்சவியலுட் 'பிரிநிலை வினை' யென்னுஞ் சூத்திரத்துள் (தொல். சொல். எச்ச. 34) பிரிநிலையென்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகை யானும் வருவன சொல்லெச்சமாம். குறிப்பென்று ஓதப்பட்டது குறிப் பெச்சமாம். (198) முன்னம் ஆமாறு 508. இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென்று அவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். என்-எனின், நிறுத்த முறையானே முன்னமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத் தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை யுரைப்பது முன்னமாம் எ-று. எனவே, இடமுங் காலமு முணர்ந்து கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலுஞ் செய்யுளுறுப்பாம் எ-று. வந்தது கொண்டு வாராதது முடித்த லென்பதனாற் காலமுங் கொள்க. (199) பொருள்வகை ஆமாறு 509. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப. என்-எனின், நிறுத்த முறையானே பொருள்வகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்பமுந் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு மென்று சொல்லப்பட்டவை வழுவுநெறி யின்றி, இத்திணைக்குரிய பொருள் இப்பொரு ளென்னாது, எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் எ-று. (200) துறை ஆமாறு 510. அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப் பிறவவண் வரினுந் திறவதின் நாடித் தத்தம் இயலான் மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே. என்-எனின், நிறுத்த முறையானே துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அகப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப் பொருளாகிய ஏழு பெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்துபட்ட மாவும் புள்ளும், உம்மையான் மர முதலாயினவும், 'பிற வவண் வரினு' மென்றதனான் நிலம் நீர் தீ வளி முதலாயினவும் செய்யுட்கண் வரு மிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்பொடும் பொருந்திய மரபொடும் முடியின், அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் எ-று. (201) மாட்டேறு ஆமாறு 511. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். என்-எனின், நிறுத்த முறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று. (202) அதற்குப் புறனடை 512. மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி உடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே. இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (203) வண்ணம் இருபது என்பது 513. வண்ணந் தாமே நாலைந் தென்ப, என்-எனின், இனி நிறுத்த முறையானே வண்ணம்ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணமாவன இருபதாம் எ-று. அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (204) அவற்றின் பெயர்கள் ஆமாறு 514. அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று ஆங்கென மொழிப அறிந்திசி னோரே. என்-எனின், வண்ணத்திற்குப் பெயர் கூறுதல் நுதலிற்று. இதுவுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (205) பாகவண்ணம் ஆமாறு 515. அவற்றுட் பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் என்-எனின், பா வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாஅ வண்ணமாவது சொற்சீரடியாகி நூலின்கட் பயின்றுவரும் எ-று. 'அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு.' (தொல். எழுத். நூன்மரபு. 31) 'கொல்லே ஐயம் எல்லே இலக்கம்.' (தொல். சொல். இடை. 20) என வரும். (206) தாக வண்ணம் ஆமாறு 516. தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும். என்-எனின், தாவண்ண மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் எ-று. உ-ம்: "தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல கலுழ வாடா அவ்வரி ததைஇப் பசலையும் வைக றோறும் பைபையப் பெருக நீடார் இவணென நீமனங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழீ வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே." (யாப்.வி.மேற்.) என்னும் பாட்டு. (207) வல்லிசை வண்ணம் ஆமாறு 517. வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. என்-எனின், வல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வல்லெழுத்து மிக்கு வருவது வல்லிசை வண்ணமாம் எ-று. "வட்டொட்டி யன்ன வனமுடப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத் தொட்டிட்டுக் கொள்ளுங் கடற்சேர்ப்பன் நின்னொடு விட்டொட்டி யுள்ளம் விடாது நினையுமேன் ஒட்டொட்டி நீங்காதே ஒட்டு." (யாப்.வி.மேற்.) (208) மெல்லிசை வண்ணம் ஆமாறு 518. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. என்-எனின், மெல்லிசை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து மிக்கது மெல்லிசை வண்ணமாம் எ-று. "பொன்னின் அன்ன புன்னை நுண்தாது மணியின் அன்ன நெய்தலங் கழனி மனவென உதிரு மாநீர்ச் சேர்ப்ப மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய மம்மர் மாலை வாநீ நன்மா மேனி நயந்தனை எனினே." (யாப்.வி.ப.382) என வரும். (209) இயைபு வண்ணம் ஆமாறு 519. இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. என்-எனின், இயைபு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடையெழுத்து மிக்கு வருவது இயைபு வண்ணமாம் எ-று. "வால்வெள் ளருவி வரைமிசை இழியவும் கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும் வாளுகிர் உளியம் வரையகம் இசைப்பவும் வேலொளி விளக்கி வரினே யாரோ தோழி வாழ்கிற் போரே." (யாப்.வி.மேற்.) என வரும். (210) அளபெடை வண்ணம் ஆமாறு 520. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். என்-எனின், அளபெடை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் எ-று. "தாஅட் டாஅ மரைமலர் உழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஒட் டெருமை." (யாப்.வி.மேற்.) என வரும். (211) நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு 521. நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். என்-எனின், நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெட்டெழுத்துப் பயின்றுவருவது நெடுஞ்சீர் வண்ணமாம் எ-று. "நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாப் பூவீ யாவே காரூர் பானா மாவே யானே யாரோ தாமே வாழா மோரே. ஊரூர் பாகா தேரே பீரூர் தோளாள் பேரூ ரானே." (யாப்.வி.மேற்.) என வரும். (212) குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு 522. குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். என்-எனின், குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம் எ-று. "உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை பொரிதளை யவிழக் குறிவரு பருவம் இதுவென மறுகுபு செறிதொடி நறுநுதல் அழியல் அறியலை அரிவை அவர் கருதிய பொருளே." (யாப்.வி.மேற்.) என வரும். (213) சித்திர வண்ணம் ஆமாறு 523. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே. என்-எனின், சித்திரவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சித்திர வண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்துவரும் எ-று. "ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார்." (குறுந். 231) என வரும். (214) நலிபு வண்ணம் ஆமாறு 524. நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். என்-எனின், நலிபுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆய்தம் பயின்று வருவது நலிபுவண்ணமாம் எ-று. "அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்." (குறள். 178) என வரும். (215) அகப்பாட்டு வண்ணம் ஆமாறு 525. அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. என்-எனின், அகப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அகப்பாட்டு வண்ணமாவது முடியாத் தன்மையான் முடிந்ததன்மேல தென்றவாறு. "பன்மீன் உணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண்தாது நம்மொடு தொடுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி தோனின் நீங்காமை சூளில் தேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்து புறமாறி இனைய னாகி ஈங்குனைத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலங்கொடி மகளிர் கோடுயர் மென்மணல் ஏறி ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி." (யாப்.விமேற்.) என வரும். (216) புறப்பாட்டு வண்ணம் ஆமாறு 526. புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். என்-எனின், புறப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறப்பாட்டு வண்ணமாவது முடிந்தது போன்று முடியாதாகி வரும் எ-று. உ-ம்: "நிலவுமண லகன்துறை வலவ னேவலின் எரிமணிப் புள்ளின மொய்ப்ப நெருநலும் வந்தன்று கொண்கன் தேரே இன்றும் வருகுவ தாயின் சென்று சென்று தோன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு தண்பொழில் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அல்கலும் படர்மலி உள்ளமொடு மடல்மா வேறி உறுதுயர் உலகுட னறியநம் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே." (யாப்.வி.மேற்.) என வரும். (217) ஒழுகு வண்ணம் ஆமாறு 527. ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும் என்-எனின், ஒழுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓசையான் ஒழுகிக் கிடப்பது ஒழுகுவண்ணமாம் எ-று. உ-ம்: "அம்ம வாழி தோழி காதலர் இன்முன் பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நலிய உய்யலள் இவளென உணரச் சொல்லிச் சொல்லுநர்ப் பெறினே செய்ய வல்ல இன்னளி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே." (யாப்.வி.மேற்.) என வரும். (218) ஒரூஉ வண்ணம் ஆமாறு 528. ஒரூஉ வண்ணம் ஒரூஉத்தொடை தொடுக்கும். என்-எனின், ஒரூஉ வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரூஉ வண்ணமாவது நீங்கின தொடையாகித் தொடுப்பது எ-று. அது செந்தொடையாம். உ-ம்: "தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய முள்ளிற் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா லிளமழை துவைப்ப மணிநிலா விரியுங் குன்றுகிழ வோற்கே." (யாப்.வி.மேற்.) என வரும். (219) எண்ணு வண்ணம் ஆமாறு 529. எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். என்-எனின், எண்ணுவண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணுப் பயின்று வருவது எண்ணுவண்ணமாம் எ-று. உ-ம்: "நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை" (பதிற்றுப். 14) என வரும். (220) அகைப்பு வண்ணம் ஆமாறு 530. அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும். என்-எனின், அகைப்பு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அறுத்தறுத்தியலுவது அகைப்பு வண்ணமாம் எ-று. உ-ம்: "தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தைட அடைய அசைத்த வாரமலைப் பட்டூ அண்ணலென்பான் இயன்ற சேனை முர சிரங்குந் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலி னவனே." (யாப்.வி.மேற்.) என வரும். (221) தூங்கல் வண்ணம் ஆமாறு 531. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். என்-எனின், தூங்கல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தூங்கல் வண்ணமாவது வஞ்சியுரிச்சீர் பயின்று வரும் எ-று. உ-ம்: "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்" (பட்டினப். 1) என வரும். (222) ஏந்தல் வண்ணம் ஆமாறு 532. ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். என்-எனின், ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் எ-று. உ-ம்: "கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங் - கூடல் அரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு." (யாப்.வி.மேற்.) என வரும். (223) உருட்டு வண்ணம் ஆமாறு 533. உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும். என்-எனின், உருட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் எ-று. உ-ம்: "தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்." (யாப்.வி.மேற்.) என வரும். (224) முடுகு வண்ணம் ஆமாறு 534. முடுகு வண்ண முடிவறி யாமல் அடியிறந் தொழுகி அதன்ஓ ரற்றே என்-எனின், முடுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் எ-று. உ-ம்: "நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ." (கலித். 39) (225) வண்ணத்தைத் தொகுத்துணர்த்தல் 535. வண்ணந் தாமே அவையென மொழிப. என்-எனின், மேற்கூறப்பட்ட வண்ணமெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணங்களாவன மேற் சொல்லப்பட்டன எ-று. இதனாற் பெற்றது என்னை? இப்பொருண்மை மேலே பெறப்பட்டதால் எனின், ஒரு பயன் கருதிக் கூறினார் என்க. வண்ணம் பாகுபடுகின்றது தொடையினான் அன்றே? இன்னும் வேறொரு வாற்றாற் பாகுபடுப்பப் பலவாம் என்பது அறிவித்தல். அது குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் என நிறுத்து அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனொடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடுறழ நூறாம். அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற்றூங்கிசை வண்ணம் முதலாக ஒரு சாராசிரியர் பெயரிட்டு வழங்குப. (226) அம்மை ஆமாறு 536. சின்மென் மொழியான் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் வின்றே. என்-எனின், நிறுத்த முறையானே அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக்கப் பட்ட அடி நிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் எ-று. உ-ம்: "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை." (குறள். 315) என வரும். (227) அழகு ஆமாறு 537. செய்யுள் மொழியான் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே. என்-எனின், நிறுத்த முறையானே அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுட்குரிய சொல்லினாற் சீரைப் புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு எனப்படும் எ-று. உ-ம்: "துணியிரும் பரப்பகங் குறைய வாங்கி மணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென இழிதருங் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே." (யாப்.வி.ப. 377) என வரும். (228) தொன்மை ஆமாறு 538. தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. என்-எனின், நிறுத்த முறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்தப் பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராமசரிதமும், பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வருஞ்செய்யுள். (229) தோல் ஆமாறு 539. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்னெறிப் புலவர். என்-எனின், நிறுத்த முறையானே தோலாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இழுமென் மொழியான் விழுமிய பொருளைக் கூறினும் பரந்த மொழியினான் அடி நிமிர்ந்து ஒழுகினும் தோல் என்னுஞ் செய்யுளாம் எ-று. உ-ம்: "பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின் இம்மை யில்லை மறுமை யில்லை நன்மை யில்லை தீமை யில்லை செய்வோ ரில்லை செய்பொரு ளில்லை அறிவோர் யாரஃ திறுவழி இறுகென." (மார்க்கண்டேயனார் காஞ்சி) என்றது இழுமென் மொழியால் விழுமியது நுவல வந்தது. "திருமழை தலைஇய இருள்நிற விசும்பு" (மலைபடுகடாம் 1) என்னுங் கூத்தராற்றுப்படை பரந்த மொழியான் அடி நிமிர்ந்து வந்தது. (230) விருந்து ஆமாறு 540. விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. என்-எனின், நிறுத்த முறையானே விருந்தென்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது எ-று. புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழியின்றித் தானே தோற்றுவித்தல். அது வந்தவழிக் காண்க. இது பெரும்பான்மையும் ஆசிரியப்பாவைக் குறித்தது. (231) இயைபு ஆமாறு 541. ஞகார முதலா னகார ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே. என்-எனின், நிறுத்த முறையானே இயைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபென்னுஞ் செய்யுளாம் எ-று. உ-ம்: வந்தவழிக் காண்க. (232) புலன் ஆமாறு 542. தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. என்-எனின், நிறுத்த முறையானே புலன் என்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம் எ-று. உ-ம்: "பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்ச்செறி முரசின் முழங்கி ஒன்னார் மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச் சென்றவள் திருமுகங் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி பாக உதுக்காண் மாவொடு புணர்ந்த மாஅல் போல இரும்பிடி புடைய தாகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே." (யாப்.வி.மேற்.) என வரும். (233) இழைபு ஆமாறு 543. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். என்-எனின், நிறுத்த முறையானே இழைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது ஆசிரியப் பாவிற் கோதப்பட்ட நாலெழுத் தாதியாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத் தொடுப்பது இழைபு என்னும் செய்யுளாம் எ-று. உ-ம்: "பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்ட நீலம் நீண்ட ஊர்வாய் ஊதை வீச ஈ ர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர அமையேர் வளைத்தோள் அம்பரி நெடுங்கண் இணையீர் ஓதி ஏந்திள வனமுலை இரும்பன் மலரிடை எழுந்த மாவின் நறுந்தழை துயல்வருஞ் செறிந்தேந் தல்குல் அணிநகை நசைஇய அரியமை சிலம்பின் மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்ப ஒழிகுவ தன்றே." (யாப்.வி.மேற்.) என வரும். (234) இவ்வோத்தின் புறனடை 544. செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம் பிழைத்தன போல வருவன உளவெனினும் வந்தவற் றியலான் திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே. என்-எனின், யாப்பிற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (235) எட்டாவது செய்யுளியல் முற்றிற்று. 9 மரபியல் இவ்வோத்து இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான், மரபியல் என்னும் பெயர்த்து. இளமைப் பெயர் 545. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென் றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே. இவ்வோத்தினுள் இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், இளமைப்பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குழவியொடு இவ்வொன்பதும் இளமைப்பெயராம் எ-று. இதன் பொருள் மேல் விரிக்கின்றான். (1) ஆண்பாற் பெயர் 546. எருதும் ஏற்றையும் ஒருத்தலுங் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும் மோத்தையுந் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப. என்-எனின், ஆண்பாற்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் பிறவுமாம் எ-று. 'பிறவும்' என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவன போல்வன கொள்க. (2) பெண்பாற் பெயர் 547. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகுங் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. என்-எனின், பெண்பாற்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இக்கூறப்பட்ட பதின்மூன்றும் பெண்பாற்பெயராம் எ-று. (3) பார்ப்பும் புறமும் 548. அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. என்-எனின், மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ் சிறப்பு விதியுடையன இச்சூத்திர முதலாக வருகின்ற சூத்திரங்களாற் கூறப்படுகின்றன. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளை யென்னும் இரண்டும் பறவையி னிளமைப்பெயர் எ-று. இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவனவற்றிற்கு உரை யெழுதுகின்றிலம். (4) இதுவுமது 549. தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன. (இ-ள்.) என்றது, ஊர்வனவற்றிற்கு மேற் சொல்லப்பட்ட இருவகை இளமைப்பெயரும் ஆம் எ-று. (5) குட்டி 550. மூங்கா வெருகெலி மூவரி அணிலோடு ஆங்கவை நான்குங் குட்டிக் குரிய. (இ-ள்.) என்றது, இவை நான்குங் குட்டி என்று சொல்லப்படும் எ-று. மூங்கா என்பது கீரி. (6) பறழ் 551. பறழெனப் படினும் உறழாண் டில்லை. (இ-ள்.) என்றது, மேற்சொல்லப்பட்ட நால்வகை யுயிர்க்கும் இளமைப்பெயர் பறழ் எனினும் உறழ்ச்சியில்லை எ-று. எனவே, இரண்டுமாம் என்றவாறாம். (7) குருளை 552. நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை என்ப. (இ-ள்.) என்றது, நாய்முதலாகச் சொல்லப்பட்ட நான்கன் இளமைப் பெயர் குருளை யென்று வழங்கும் எ-று. (8) இதுவுமது 553. நரியும் அற்றே நாடினர் கொளினே. (இ-ள்.) என்றது, நரியின் இளமைப் பெயரும் ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் எ-று. இது மேலனவற்றோடு ஒருநிகராக ஓதாமையிற் சிறுபான்மை வருமென்று கொள்க. (9) எய்தாதது எய்துவித்தல் 554. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். என்-எனின், எய்தாத தெய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஐவகையுயிர்க்குங் குட்டி பறழ் என்பனவும் ஆம் எ-று. (10) இதுவுமது 555. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) மேற்கூறியவற்றுள் நாயன்றி ஒழிந்தவை பிள்ளை என்னும் இளமைப்பெயர்க்கும் உரிய எ-று. பன்றிக்குருளை பன்றிக்குட்டி பன்றிப்பறழ் பன்றிப்பிள்ளை எனவுமாம். ஏனையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. (11) மறி 556. யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே. (இ-ள்.) என்றது, யாடு முதலாகச் சொல்லப்பட்ட ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் எ-று. நவ்வி - புள்ளிமான். (12) குட்டி 557. கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுப. (இ-ள்.) கோடு வாழ் குரங்கென்பது ஊகமு முசுவுங் கொள்ளப் படும். உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. (13) குரங்குக்கு உரியதோர் இயல்பு 558. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான. என் - எனின், இதுவுங் குரங்குக் குரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகவு முதலாகிய நான்குங் குரங்குச் சாதி இளமைப் பெயராம் எ-று. குரங்குக் குட்டி, குரங்கு மகவு, குரங்குப் பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப் பார்ப்பு. (14) கன்று 559. யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும் ஆனோ டைந்துங் கன்றெனற் குரிய. (இ-ள்.) என்றது, யானை முதலாக மானீறாகச் சொல்லப்பட்ட ஐந்தனது இளமைப்பெயர் கன்று என்று வரும் எ-று. (15) இதுவுமது 560. எருமையும் மரையும் வரையார் ஆண்டே (இ-ள்.) என்றது, கன்றெனக் கூறும் இளமைப்பெயர் எருமைக்கும் மரைக்கும் உரித்து எ-று. (16) இதுவுமது 561. கவரியும் கராகமும் நிகரவற் றுள்ளே. (இ-ள்.) என்றது, கவரி என்று சொல்லப்படுவதும் கராகமென்று சொல்லப்படுவதும் கன்றென்னும் பெயர் பெறும் எ-று. கராகமென்பது கரடி. (17) இதுவுமது 562. ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும். (இ-ள்.) என்றது, ஒட்டகமென்று சொல்லப்படுவதுங் கன்றென்னும் பெயர் பெறும் எ-று. (18) குழவி 563. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. (இ-ள்.) என்றது, குழவி யென்னும் இளமைப்பெயர் யானை பெறும் எ-று. (19) இதுவுமது 564. ஆவும் எருமையும் அதுசொலப் படுமே. (இ-ள்.) என்றது, ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறும் எ-று.(20) இதுவுமது 565. கடமையும் மரையு முதனிலை ஒன்றும். (இ-ள்.) என்றது, கடமாவும் மரையுங் குழவி எனப் பொருந்தும் எ-று. (21) இதுவுமது 566. குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய. (இ-ள்.) என்றது, குரங்கு முதலிய மூன்றும் ஆராயுங் காலத்துக் குழவிப்பெயர்க்குரிய எ-று. (22) குழவி - மக 567. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே. (இ-ள்.) என்றது, குழவி மகவென்று சொல்லப்பட்ட இரண்டு இளமைப்பெயரு மல்லாத ஏனையவை மக்கட்குரியவல்ல எ-று. (23) ஓரறிவுயிர் - இளமைப்பெயர் 568. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே. (இ-ள்.) என்றது, ஓரறிவுயிராகிய புல்லும் மரனும், இளமைப் பெயர் பிள்ளை முதலாகச் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் எ-று. உம்மை எதிர்மறையாகலான் , கன்றென்றதே பெரும்பான்மை. (24) எய்தியது விலக்கல் 569. நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. என்-எனின், எய்தியது விலக்கல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்ட நான்கன் இளமைப்பெயரும் கொள்ளார், நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்க்கு எ-று. உம்மை எதிர்மறையாதலின் மேற்சொல்லப்பட்ட இளமைப் பெயர் கூறப்பெறார் எ-று. (25) இளமைப் பெயரை வரையறுத்தல் 570. சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே. என்-எனின், இளமைப் பெயரை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லிப் போந்த மரபுடையனவன்றிச் சொல்ல வேண்டு மரபுடையனவற்றிற்குஞ் சொல்லுமிடத்து இவைதாமே இளமைப்பெயர் எ-று. என்பது என் சொன்னவாறோ வெனின், பரந்துபட்ட வுயிர்த் தன்மை யெல்லாம் ஈண்டு ஓதப்பட்டனவல்ல, எடுத்தோதாதனவற்றிற்கு ஈண்டு ஓதப்பட்ட இளமைப்பெயரல்லது பிற பெயரின்மையின், இவற்றுள் ஏற்பனவற்றொடு கூட்டியுரைக்க என்றவாறாம். இத்துணையும் கூறப்பட்ட சூத்திரத்திற்கு, உ-ம்: "பறவைதம் பார்ப்புள்ள" (கலித். 119) "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே." "யாமைப் பார்ப்பின் அன்ன" (குறுந். 152) "தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை." (ஐங்குறு. 41) பார்ப்பு, பிள்ளை பிறவும் பறப்பன ஊர்வனவெல்லாம் இவ்வகையினாற் கூறுப. நடப்பனவற்றுள், மூங்காக் குட்டி, மூங்காப் பறழ்; வெருகுக் குட்டி, வெருகுப் பறழ், எலிக் குட்டி, எலிப் பறழ்; அணிற் குட்டி, அணிற் பறழ்; நாய்க் குட்டி, நாய்க் குருளை; நரிக் குட்டி நரிக் குருளை; நரிப் பறழ், நரிப் பிள்ளை; பன்றிக் குட்டி, பன்றிக் குருளை பன்றிப் பறழ், பன்றிப் பிள்ளை; புலிக் குட்டி, புலிக் குருளை, புலிப் பறழ், புலிப் பிள்ளை; குரக்குக் குட்டி, குரக்கு மக, குரக்குப் பிள்ளை, குரக்குப் பார்ப்பு, குரக்குப் பறழ், குரக்குக் குழவி; ஊக முசு வென்பனவும் இவ்வாறே கொள்க; யாட்டுமறி; குதிரைமறி, குதிரைக்கன்று; நவ்விமறி; உழைமறி; புல்வாய்மறி; யானைக்கன்று, யானைக்குழவி; கழுதைக்கன்று; கடமைக்கன்று, கடமைக் குழவி; ஆன் கன்று, ஆன் குழவி; எருமைக் கன்று, எருமைக் குழவி; மரைக் கன்று, மரைக் குழவி; கவரிக் கன்று; கராகக் கன்று; ஒட்டகக் கன்று; மக்கட் குழவி, மக்கண் மக; தெங்கம் பிள்ளை; கமுகங் கன்று; கருப்பம் போத்து. ஓரறிவுயிர்க்கட் குழவியென்பது வந்தவழிக் கண்டுகொள்க. இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின், ஒன்றற் குரியவற்றை ஒன்றற்குரித்தாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும். கழுதை மறியெனவும் 'பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி' (குறுந். 17) என்றாற் போலவும் சான்றோர் செய்யுளகத்து வருவன கடியப்படா வென்றவாறு. எடுத்தோதாதன பெரும்பான்மை. இனி எடுத்தோதாதன: சிங்கம் புலிப்பாற்படும்; உடும்பு, ஓந்தி, பல்லி அணிற் பாற்படும்; நாவியென்பது மூங்காவின்பாற்படும். பிறவும் இவ்வகை யின் ஏற்பன கொள்க. (26) உயிர்களைக் கூறுபடுத்தல் 571. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. என்-எனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பி னானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணி னானும் செவியினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம் பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தி னானும் அறிவது. இவ்வகையினான் உயிர் ஆறு வகையின ஆயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினான் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினாற் கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறியும். மூக்கினான் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினான் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினான் ஓசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும். மனத்தினானறியப்படுவது இது போல்வன வேண்டு மெனவும், இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மை யெனவும் அனுமானித்தல், அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும், அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமா னித்தல். இவ்வகையினான் உலகினுள்ள வெல்லாம் மக்கட்கு அறித லாயின. இனி அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறும். (27) ஓரறிவுயிர் 572. புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (இ-ள்.) ஓரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினானறியும்; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள எ-று. பிற ஆவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன. புல்லென்பன புறவயிர்ப்பு உடையன; மரமென்பன அகவயிர்ப் புடையன. அவை யாமாறு முன்னர்க் கூறப்படும். (28) ஈரறிவுயிர் 573. நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்-எனின், ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு. நந்து என்றதனான் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனான் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க. (29) மூவறிவுயிர் 574. சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்-எனின், மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சிதலும், எறும்பும், மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவு முள எ-று. பிற ஆவன அட்டை முதலாயின. (30) நாலறிவுயிர் 575. நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்-எனின், நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நண்டும், தும்பியுமென்பன நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவு முள எ-று. பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க. (31) ஐயறிவுயிர் 576. மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்-எனின், ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள எ-று. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும், நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும். (32) ஆறறிவுயிர் 577. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. என்-எனின், ஆறறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு பிறவு முள எ-று. பிறவாவன தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர் பிறப்புக்கள். (33) இதுவுமது 578. ஒருசார் விலங்கும் உளவென மொழிப. என்-எனின், இதுவுமது. (இ-ள்.) விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. மேல் ஓரறிவுயிர் முதலாகத் தோற்றுவித்தார்; அதனானே இச்சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன. (34) களிறு 579. வேழக் குரித்தே விதந்துகளி றென்றல். என்-எனின், நிறுத்த முறையானே ஆண்பாற்குரிய பெயர் கூறுதல் நுதலிற்று, இச்சூத்திர முதலாயின வற்றான். (இ-ள்.) களிறென்று விதந்து கூறுதல் யானைக்குரித்து எ-று. (35) இதுவுமது 580. கேழற் கண்ணுங் கடிவரை இன்றே. (இ-ள்.) பன்றியின்கண்ணும் ஆண்பாலைக் களிறென்றல் கடியப்படா தென்றவாறு. (36) ஒருத்தல் 581. புல்வாய் புலிஉழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும். (இ-ள்.) புல்வாய் முதலாயின அறுவகை யுயிரும் ஒருத்தலென்ன ஆண்பெயர் ஒன்றும் எ-று. (37) இதுவுமது 582. வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன. (இ-ள்.) யானையும் பன்றியும் ஒருத்த லெனப்படு மென்றவாறு. (38) இதுவுமது 583. ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும். (இ-ள்.) எருமையினும் ஆணினை ஒருத்தலென்று கூறப்படும் எ-று. (39) ஏறு 584. பன்றி புல்வாய் உழையே கவரி என்றிவை நான்கும் ஏறெனற் குரிய. (இ-ள்.) பன்றி முதலாகிய நான்கன் ஆணினை ஏறென்று கூறலா மென்றவாறு. (40) இதுவுமது 585. எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (41) இதுவுமது 586. கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே. (இ-ள்.) கடல் வாழ் சுறாவின் ஆணினையும் ஏறெனலாகு மென்றவாறு. (42) போத்து 587. பெற்றம் எருமை புலிமரை புல்வாய் மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே. (இ-ள்.) பெற்ற முதலாகிய ஐந்தனுள் ஆணினையும் போத்தெனலாகு மென்றவாறு. (43) இதுவுமது 588. நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய. (இ-ள்.) நீருள் வாழும் முதலை முதலாயினவற்றுள் ஆண்பால் போத்தெனக் கூறுதற்குரிய எ-று. (44) இதுவுமது 589. மயிலுள் எழாஅலும் பயிலத் தோன்றும். (இ-ள்.) மயிலுள்ளும் ஆணினைப் போத்தென்றல் பெரும் பான்மை எ-று. (45) இரலை - கலை 590. இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. (இ-ள்.) இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெயரும் புல்வாயின் ஆண்பாற்குரிய எ-று. (46) இதுவுமது 591. கலையென் காட்சி உழைக்கும் உரித்தே நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். (இ-ள்.) கலை என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரித்தென்றவாறு. (47) யாட்டின் ஆண்பாற் பெயர் 592. மோத்தையுந் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே. (இ-ள்.) மோத்தை முதலாகச் சொல்லப்பட்டன யாட்டின் ஆணிற்குரிய வென்றவாறு. (48) சேவல் 593. சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே. (இ-ள்.) மயிலல்லாத புள்ளின்கண் ஆண்பெயர் சேவலென்று கூறப்படு மென்றவாறு. சிறகு என்றது ஆகுபெயர். (49) ஏற்றை 594. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப. (இ-ள்.) ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றை யென்னும் பெயர் உரித்தென்றவாறு. ஏற்புழிக்கோடல் என்பதனான், அஃறிணைக்கண்ணும் கொள்ளப் படும். (50) ஆண், பெண் - புறனடை 595. ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய காண்பவை அவையவை அப்பா லான. (இ-ள்.) ஆண்பா லுயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்; பெண்பா லுயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்; அவ்விரு வகைக்கும் அறிகுறி காண்டலான் எ-று. வேழக்குரித் தென்னும் சூத்திர (35) முதலாக இத்துணையும் ஆண்பெயர் கூறினார். இனிப் பெண்பெயர் கூறுகின்றாராகலின், அதிகாரப் பட்ட பொருள், சே, கடுவன், கண்டி என்பன சிறப்புச் சூத்திரத்த ஆகலின் அவற்றிற்குரியவெனக் கூறிற்றிலராலெனின், அவற்றுள் கடுவனும் கண்டியும் முன்னரெடுத்தோதப்படும். சே என்பது ஆவினுள் ஆணையே குறித்து வழங்கலின் ஓதாராயினார். ஈண்டு ஓதப்பட்டன பல பொருள் ஒரு சொல்லும் ஒரு பொருட் பல சொல்லும் என்று கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது: வேழத்துள் ஆண், களிறு, ஒருத்தல், ஏற்றை எனப்படும்; பன்றியுள் ஆண் ஒருத்தல் ஏற்றை எனப்படும்; புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போத்து, இரலை, கலை எனப்படும்; புலியுள் ஆண், ஒருத்தல், போத்து, ஏற்றை எனப்படும்; உழையுள் ஆண், ஒருத்தல், ஏறு, கலை, ஏற்றை எனப்படும்; மரையுள் ஆண், ஒருத்தல், ஏறு, போத்து, ஏற்றை எனப்படும்; கவரியுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; கராத்துள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; எருமையுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை, கண்டி எனப்படும்; சுறவில் ஆண் என்பன ஏற்றை எனப்படும்; பெற்றத்துள் ஆண், போத்து, ஏறு, ஏற்றை எனப்படும்; 'எருது காலுறா திளையர் கொன்ற' (புறம். 327) என வருதலின் எருதும் ஆம்; அதிகாரப் புறனடையாற் கொள்க. நீர்வாழ் சாதியுள் ஆண், வராற்போத்து வாளைப்போத்து என வரும். முசுவில் ஆண், கலை எனப்படும்; குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும்; கடுவன் எனவும் வரும். ஆட்டினுள் ஆண், மோத்தை, தகர், உதள், அப்பர் என வரும்; புள்ளினுள் மயிலாண், எழால், சேவல், போத்து, ஏற்றை எனப்படும்; புள்ளினுள் ஆணெல்லாவற்றினும் வரும் மயிலல்லாதன வெல்லாம் சேவல், ஏற்றை எனப்படும். ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை என வரும். (51) பிடி 596. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இனிப் பெண்பெயர் உணர்த்துகின்றார் இச்சூத்திர முதலாக. (இ-ள்.) பிடி என்னும் பெண்பெயர் யானையின் மேலது எ-று.(52) பெட்டை 597. ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய. (இ-ள்.) பெட்டை என்னும் பெயர் ஒட்டக முதலாகச் சொல்லப் பட்ட நான்கனது பெண்பாற்குப் பெயராம் எ-று. (53) இதுவுமது 598. புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப. (இ-ள்.) பெட்டை என்னும் பெயர்க்குப் புள்ளிற் பெண்பாலு முரிய எ-று. (54) பேடை, பெட்டை 599. பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். (இ-ள்.) பேடை என்னும் சொல்லும் பெடை என்னும் சொல்லும், ஆராயுமிடத்துப் பெட்டை என்பதனோடு ஒன்றும் எ-று. இது புள்ளில் வைத்தமையாற் புள்ளின்பின் வருதல் பெரும். பான்மை. (55) அளகு 600. கோழி கூகை ஆயிரண் டல்லவை சூழுங் காலை அளகெனல் அமையா. (இ-ள்.) கோழியுங் கூகையும் அளகெனப்படும். (56) இதுவுமது 601. பெண்பா லான அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே. (இ-ள்.) அளகென்னும் பெண்பாற் பெயர் மயிலினது பெண்பாற்கும் உரித்து எ-று. (57) பிணை 602. புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே. (இ-ள்.) புல்வாய் முதலாகிய நான்கற்கும் பிணை என்னும் பெண்மைப்பெயர் வழங்குதற்குரித்து எ-று. (58) பிணவு 603. பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை. (இ-ள்.) பன்றி முதலாகிய மூன்றற்கும் பெண்பாற்குப் பிணவு என்னும் பெயர் பொருந்திற்று எ-று. (59) பிணவல் 604. பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. (இ-ள்.) பிணவல் என்று சொல்லினும், மேற்சொல்லப் பட்டவற்றின் மேல எ-று. (60) ஆ 605. பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. (இ-ள்.) ஆ என்னும் பெண்பெயர் பெற்றம் முதலாகிய மூன்றற்கு முரித்து எ-று. (61) பெண், பிணா 606. பெண்ணும் பிணவு மக்கட் குரிய. (இ-ள்.) பெண்ணென்னும் பெயரும், பிணவு என்னும் பெயரும், மக்களிற் பெண்பாற் குரிய எ-று. (62) நாகு 607. எருமையும் மரையும் பெற்றமும் நாகே. (இ-ள்.) எருமை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றற்கும் நாகு என்னும் பெண்பெயர் உரித்து எ-று. (63) இதுவுமது 608. நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. (இ-ள்.) நீர்வாழ்வனவற்றுள் நந்தென்பதூஉம் நாகு என்னும் பெண்பெயர் பெறும் எ-று. (64) மூடு - கடமை 609. மூடுங் கடமையும் யாடல பெறாஅ. (இ-ள்.) மூடும் கடமையும் யாட்டின் பெண்பால வென்றவாறு. (65) பாட்டி 610. பாட்டி என்ப பன்றியும் நாயும் (இ-ள்.) பாட்டி என்னும் பெயர் பன்றியினதூஉம் நாயினதூஉம் பெண்பெயர்க்குரிய எ-று. (66) இதுவுமது 611. நரியும் அற்றே நாடினர் கொளினே. (இ-ள்.) நரியும் பெண்பாற்குப் பாட்டி என்னும் பெயர் பெறும் எ-று. (67) மந்தி 612. குரங்கு முசுவும் ஊகமும் மந்தி. (இ-ள்.) குரங்கு முதலாயின மூன்றன் பெண்பால் மந்தி என்னும் பெயர்பெறும் எ-று. இத்துணையுங் கூறப்பட்டன பெண்பாற் பெயராவன: யானையுட் பெண் பிடி; ஒட்டகம் - பெட்டை; குதிரை - பெட்டை; கழுதை - பெட்டை; மரை - பெட்டை; ஆ- நாகு ; புள்ளு - பெட்டை, பேடை, பெடை; கோழி - அளகு, கூகை; மயில் - அளகு; புல்வாய் - பிணை, பிணா, பிணவு, பிணவல்; நவ்வி - பிணை; உழை, கவரி-பிணை; பன்றி-பிணவு, பிணவல், பாட்டி; நாய் - பிணவு, பிணவல், பாட்டி; பெற்றம் - ஆ, நாகு; எருமை-ஆ, நாகு; மக்கள் - பெண், பிணவு; நந்து - நாகு; யாடு - மூடு, கடமை; நரி - பாட்டி; குரங்கு - முசு, ஊகம், மந்தி என வரும். இதனுள் எடுத்தோதாதன சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. வழக்கினுள்ளும் வந்தவாறு கண்டுகொள்க. (68) அதிகாரப் புறனடை 613. குரங்கினுள் ஏற்றைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த வழக்கின் உண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. இது அதிகாரப் புறனடை. (இ-ள்.) குரங்கு முதலாகச் சொல்லப்பட்டவற்றை இப்பெயரான் உலகத்தார் வழங்குதலின், ஈண்டோதிய இலக்கணத்தின் மாறுபட்டு வருவன வழக்கினுஞ் செய்யுளினும் அடிப்பட்டு வரின் வழுவென்று கடியப்படா வென்றவாறு. (69) இதுவுமது 614. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. (இ-ள்.) பெண்ணும், ஆணும், பிள்ளையும் பற்றி வருஞ் சொல் மேலெடுத்தோதினவை எ-று. இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர் முதலியோர்க்குரியன கூறப்படுகின்றன. (70) அந்தணர்க்கு உரியன 615. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. (இ-ள்.) நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங்காலத்து அந்தணர்க்கு உரிய எ-று. (71) அரசர்க்கு உரியன 616. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய. (இ-ள்.) படை - கருவி. படை முதலான ஒன்பதும் செங்கோலும் 'பிறவு' மென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய எ-று. (72) எய்தியதன்மேல் சிறப்புவிதி 617. அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. (இ-ள்.) அவை நான்கு தொழில்: ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதல். (73) இதுவுமது 618. பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழமைப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே. (இ-ள்.) இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து எ-று. (74) மக்களிடையே ஒருமரபு 619. ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே. (இ-ள்.) நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப் பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவையவை வருதல் பெறும் எ-று. (75) தலைமைச்சொல் நிகழுமாறு 620. தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரிய நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப. (இ-ள்.) தலைமைக் குணமுடையராகக் கூறுதலும் தத்தமக் கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப எ-று. எனவே, இறப்பவுயர்தல் இறப்பவிழிதல் ஆகாவென்றவாறாம். (76) படைக்கலத்துக்கு உரியார் 621. இடையிரு வகையோர் அல்லது நாடிற் படைவகை பெறாஅர் என்மனார் புலவர். (இ-ள்.) அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக்கல வகை கூறப்பெறார் எ-று. (77) வைசியன் செயல் 622. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை. (இ-ள்.) வைசியன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் எ-று. (78) இதுவுமது 623. மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான. (இ-ள்.) எண்வகை உணவாவன: நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை. இவையிற்றை உண்டாக்குகின்ற உழவுத்தொழிலும் வாணிகர்க்கு வரையா ரென்றவாறு. (79) இதுவுமது 624. கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே. (இ-ள்) வைசியர்க்கும் கண்ணியுந் தாரும் சொல்லப்பெறு மென்றவாறு. (80) வேளாளன் தொழில் 625. வேளாண் மார்ந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (இ-ள்.) என்றது, வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே எ-று. (81) எய்தியதன்மேல் சிறப்புவிதி 626. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே. எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) வேந்தரான் ஏவப்பட்ட தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தர்க்கும் உளவாகு மென்றவாறு. (82) அந்தணர்க்கு சிறப்புவிதி 627. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. (இ-ள்.) அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவின்று எ-று. அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒரு தன்மையராகி யிருத்தல். (83) வைசியர் வேளாளர் சிறப்புவிதி 628. வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் ஆரமுந் தேரு மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய. (இ-ள்.) வில்லு முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனாற் பெற்ற மரபினான் வைசியர்க்கும் வேளாளர்க்கு முரிய எ-று. (84) மேலதற்குப் புறனடை 629. அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை. (இ-ள்.) அன்னர் தாமிழிந்தோராயின், மேற்சொல்லப்பட்ட மன்னனான் வில்லு முதலாயின பெற்ற மரபினராய நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப்படா வென்றவாறு. எனவே, அவரவர்க் குரியவாற்றாற் கூறப்பெறு மென்றவாறு. (85) புறக்காழன 630. புறக்கா ழனவே புல்லெனப் படுமே. (இ-ள்.) ஓரறிவுடையன புறவயிர்ப்பு உடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் எ-று. அவையாவன: தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின. (86) அகக்காழன 631. அகக்கா ழனவே மரமெனப் படுமே. (இ-ள்.) உள்வயிர்ப்பு உடையனவற்றை மரமெனப்படு மென்றவாறு. (87) புல்லின் உறுப்புக்கள் 632. தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். (இ-ள்.) தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெய ரெல்லாம் புல்லாகிய உறுப்பின்கண்ணே வருமென்றவாறு. இதனானே, புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பு மில்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வகைப்பட்ட உறுப்புப் பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் எ-று. அவையாவன: வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன. (88) மரத்தின் உறுப்புக்கள் 633. இலையே முறியே தளிரே தோடே சினையே குழையே பூவே அரும்பே நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம் மரனொடு வரூஉங் கிளவி என்ப. (இ-ள்.) இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப் பெயர் மரத்துக்கு அங்கமாம் எ-று. இதனானே, புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வுறுப்புப் பெயர் உடையன மரமெனப்படுமென்று கொள்க. அவையாவன: முருக்கு தணக்கு முதலாயின. (89) புல் மரம் - பொது உறுப்புக்கள் 634. காயே பழமே தோலே செதிளே வீழோ டென்றாங் கவையும் அன்ன. (இ-ள்.) இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறலின் காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப் பெயர் அவ்விரு வகைக்கும் பொதுவெனப்படுமென்றவாறு. தாழை பூவுடைத் தாகலானும் கோடுடைத் தாகலானும் மரமெனப் படுமாயினும் புறவயிர்ப்பு இன்மையான் புல் என்றல் பெரும்பான்மை. (90) ஒருமரபு வழுவமைதி 635. நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். என்-எனின், இதுவுமொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்க மாதலான், மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் எ-று. கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவி னாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றாதல் போறல். உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது, முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானாற் போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ் விரண்டனையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கமென்றார். இப்பொருள் எல்லா வுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான், மேற்கூறிப்போந்த முறையினான் வேறுபடுத்து இருதிணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம். உ-ம்: சாத்தன் சோற்றை உண்டான் என்பது. இது உண்டற் குரியானெனக் கூறுதலின் மரபாயிற்று. அஃதேல் வழாமை தழால் வேண்டுமெனக் கருதிய பொருள் முடியும் 'திரிவில்சொல்' என்றது மிகையெனின், ஒக்கும். குழவி என்பது உயர்திணைக்கண் வரின் அதற்குரிய பாலாற் கூறாது அஃறிணைக்குரிய பாலாற் கூறப்படுதலின், அவ்வகையான் வருவது வழுவாயினும் திரிவில்சொல் என்றதனான் அதுவும் அடக்கிக் கூறினான். (91) செய்யுட்கு உரியதொரு மரபு 636. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப்பட்ட சொல்லினான. என்-எனின், செய்யுட் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டுச் சொல்லப்பட்ட மரபுநிலையிற் றிரிதல் செய்யுட் கில்லை, மரபு வழிப்பட்ட சொல்லினாற் செய்யவேண்டுதலின் எ-று. எனவே யாதானும் ஒரு செய்யுளும் ஈண்டோதிய மரபினாற் செய்ய வேண்டும் என்றவாறாம். 'செய்யுட்கில்லை' எனவே வழக்கினுட் சில திரியவும் பெறும். அவை வழக்கினுள் ஆணினைப் போத்தென்றல் போல்வன. (92) மரபு வழுவாமாறு 637. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும். (இ-ள்.) மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகு மென்றவாறு. எனவே வழுவென்றவாறாம். (93) ஐயம் அறுத்தல் 638. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான. என்-எனின், ஐயமறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர்மேலது, நூலின் நிகழ்ச்சி அவர்மாட்டாதலான் எ-று. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை யெனவும் அதனானே வழக்கிற் சிறுபான்மை வருமெனவும் செய்யுள் மரபு ஒழியவரின் அது வழுவாமெனவும் கூறினானாயின் பாயிரத்துள் 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலினெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி' என்றதனொடு மாறுகொள்ளுமோவென ஐயுற்றார்க்கு, ஆண்டு வழக்கென்று சொல்லப் பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழக் கெனப்படா தெனவும் கூறியவாறு. (94) நூல் வகை 639. மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை நிலைய முதலும் வழியுமென நுதலிய நெறியின. என்-எனின், மேற் செய்யுளியலுள் தோற்றுவாய் செய்த நூலை இலக்கண வகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ் வியல்பு திரியாத மரபுடையவாகி உரைக்கப்படும் நூல்தாம் இரு வகைய, முதனூல் எனவும் வழிநூல் எனவும் எ-று. உரைக்கவென்பது விகாரத்தான் தொக்கது அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. சார்புநூல் என்பதும் ஒன்றுண்டாலெனின், அஃது இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழிநூலென அடங்கும்; எதிர்நூல் என்பதும் ஒன்றுண்டு. அதுவும் ஒரு முனைவனாற் செய்யப் படின் முதனூலாம்; பிறர் செய்யின் வழங்காது. (95) முதல் நூல் 640. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். என்-எனின், நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (96) வழி நூல் 641. வழியெனப் படுவ ததன்வழித் தாகும். என்-எனின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது எ-று. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (97) வழிவகை நான்கு 642. வழியின் நெறியே நால்வகைத் தாகும். என்-எனின், வழிநூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும் எ-று. அது முன்னர்க் கூறுதும். (98) இதுவுமது 643. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோ டனைமர பினவே. என்-எனின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகை யினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் எ-று. இது வழிநூலா னாய பயன். (99) நூற்கு இலக்கணம் 644. ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர். என்-எனின், நூற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இனி, ஒத்த சூத்திரத்தானும் காண்டிகையானும் பொருண்மேற் கூறிய வகையுடைத்தாகிப் பத்துக் குற்றமும் இன்றி நுண்ணிதாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தந்திர வுத்தியொடு புணருமாயின் நூலெனச் சொல்லுவர் புலவர் எ-று. உரைப்பின் என்பதனை முன்னே கூட்டி நூலுரைப்பின் எனப் பொருளுரைக்க. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். (100) இதுவுமது 645. உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விதித்தலும் விலக்கலும் எனவிரு வகையொடு புணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே. இதுவுமது. (இ-ள்.) சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத் துஞ் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்குமிடத்தும், ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல் வேண்டுமென விதித்தலும் இப்பொருள் இவ்வாறு கூறப் பெறானென விலக்கலுமாகிய இருவகையோடே கூடப் பொருந்தின அவை ஆராய்ந்து புணர்க்கவும் ஆம் எ-று. இதனாற் சொல்லியது ஆசிரியன் சொன்ன சூத்திரத்தினைக் குறைபடக் கூறினானென்றல் அமையாமையானும் அவன் கூறுகின்ற பொருளினை நிலைபெறுத்தற்குப் பிறிதொன்றை விரித்தோதிய நெறியை விலக்கியும் பொருள் உரைத்துக் கொள்ளப்படு மென்றவாறு. செய்யுளியலுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே. (செய்யுளியல் 159) என்று கூறுதலின் இதுவும் இலக்கணமாகக் கொள்க. (101) சூத்திரத்திலக்கணம் 646. மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித் துளக்கல் ஆகாத் துணைமை யெய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்தெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். என்-எனின், நூற்கு அங்கமாகிய சூத்திரத்திலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என நால்வகையினும் சொல்லப்பட்ட பொருளொடு, சிலவெழுத்தினான் இயன்ற செய்யுட்டாகி, உரைக்குங் காலத்து அவ்வுரை யிற் பொருளெல்லாம் தன்னகத்தடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்கமுடைத்தாகி, கெடுக்கலா காத துணைச் சூத்திரங்களை யுடைத்தாகி வரையறுக்கப்படாத அரிய பொருளையுடைத்தாகிப் பலவாற்றானும் பயனையாராய்தல் உடையது சூத்திரம் எனக் கூறினார் புலவர் எ-று. அளக்கலாகா அரும்பொருளாவது பலமுகத்தானும் பொருள் கொள்ளக் கிடத்தல். செய்யுளியலுள், சூத்திரந் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்கி யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே. (செய். 162) என்பதூஉம் இதற் கிலக்கணம். (102) காண்டிகை ஆமாறு 647. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். என்-எனின், காண்டிகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றமில்லாத சூத்திரஞ் சொன்ன இயல்பினான் மறைவின்றி விளக்குவது காண்டிகையா மென்றவாறு. (103) இதுவுமது 648. விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே. இதுவுமது. (இ-ள்.) சூத்திரத்திற் படுஞ் சொற்பொருளை விட்டு நீங்குத லின்றி விரிவோடே பொருந்திக் குறித்த சூத்திர முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக் காட்டினானும் பொருந்தி, ஆங்கமையும் பொருணெறியை யுடைத்துக் காண்டிகை யென்றவாறு. 'விட்டகல்வின்றி விரிவொடு பொருந்த'லாவது மிக அகலாமை. இம்மனை நெருப்புடைத் தென்றது சூத்திரப்பொருள்; புகையுடைத் தாதலானென்பது ஏது; அடுக்களை போலவென்பது எடுத்துக்காட்டு. இவ்வகையினாற் சூத்திரப் பொருளுரைக்க வென்றவாறு. (104) உரை ஆமாறு 649. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே. உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றியமையாதனவெல்லாங் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு. (105) இதுவுமது 650. மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூ லானும் ஐயமு மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) உரையாவது, 'மறுதலைக்'கடாஅ மாற்றமு முடைத்தாக', ஐயப்பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல் அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளிய வொரு பொருளை யொற்றுமைப்படுத்துதல், இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு. மாற்றமுமுடைத்தாகி யென்ற வும்மையான் விடையு முடைத் தாகி யென்க. (106) நூற்கு உரியதொரு மரபு 651. சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலை யாயின் மற்றது சிதைவே. (இ-ள்.) மேலவற்றிற் கோதலான நூற்குரியதொரு மரபு முதனூலாயிற் சிதைவில்லை யென்றவாறு. என்னை? ஆவன கூறியது, விரியகலாதன சிதைவது வழிநூ லென்றவாறாம். (107) முதல்நூற்குச் சிதைவின்மை 652. சிதைவில என்ப முதல்வன் கண்ணே. (108) வழிநூற்கு உரியதொரு மரபு 653. முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புனையா வாரம் போன்றே. வழிநூற் குரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதனூலின் வழிச்செய்யினும் அந்நூல் யாப்பினுட் சிதையும், வல்லவன் புனையாத வாரம் போல வென்றவாறு. கோவை வாசியா னென்றவாறாம். (109) சிதைவுகள் இவை எனல் 654. சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். மேலதிகாரப்பட்ட ஈரைங் குற்றமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கூறியது கூறலாவது, ஒருகாற் கூறியதனைப் பின்னுங் கூறல். மாறுகொளக் கூறலாவது, ஒருகாற் கூறிய பொருளொடு மாறுகொள்ளுமாறு பின்கூறல். அஃதாவது 'தவம் நன்று' என்றவன்றான் 'தவந்தீதெ'ன்று கூறல். குன்றக் கூறலாவது, தானதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல். மிகைபடக் கூறலாவது, அதிகாரப் பொருளன்றிப் பிற பொருளுங் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவா னெடுத்துக் கொண் டான் வடமொழியிலக்கணமும் கூறல். பொருளில கூறலாவது, முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக் கொப்பின்றிப் பயனில்லாதன கூறல். மயங்கக் கூறலாவது, கேட்டார்க்குப் பொருள் விளங்குமா றின்றிக் கூறல். கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதலென்பது, பொருள்யாக்கப் பட்ட சூத்திரஞ் சந்தவின்பமின்றி யிருத்தல். பழித்தமொழியான் இழுக்கக் கூறலாவது தானொரு பொருளை யொரு வாய்பாட்டாற் றெரித்துப் பிறிதொரு வாய்பாட்டாற் கூறுதல். அக்குறிப்பு உலகவழக்கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனான் அதுவுங் குற்றமாயிற்று. என்ன வகையினும் மனங்கோள் இன்மையாவது, எழுத்தினானுஞ் சொல்லினானும் பொருளினானு மனங் கொள்ளுமாறு கூறாமை. (110) இதுவுமது 655. எதிர்மறுத் துணரினத் திறத்தவும் அவையே. இதுவுமது. நூற்குற்றம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர்மறுத்து உணர்வராயின், அத்திறத்தவும் குற்றமா மென்றவாறு. உ-ம்: பாவஞ் செய்தான் நிரையம் புகு மெனக் கருதிக் கூறுவான் தவஞ் செய்வான் சுவர்க்கம் புகுமென்றல். இவ்வாறு கூறிச் சுவர்க்கம் பெறு மென்னும் பொருட்கண் நிரையம் புகுமென்ற பொருள் தோன்றாமையிற் குற்றமாயிற்று. (111) உத்திவகை இவை எனல் 656. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவாம் என்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல் சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிறவவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. தந்திர வுத்தி யாமா றுணர்த்துதல் நுதலிற்று. இதன் பொழிப்பு: நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவுந் தந்திர உத்தியாம் எ-று. தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதொரு பொருள் வேறுபாடு காட்டுவது. (இ-ள்.) ஒத்த காட்சி உத்திவகை விரிப்பினென்பது நூற்குப் பொருந்திய காட்சியினா னுரைக்கும் உத்திவகையை விரிக்குங்காலத் தென்றவாறு. நுதலிய தறிதலாவது - சூத்திரத்திற் சொற்ற பொருளுணர்த்த லன்றி, இதன் கருத்திதுவென உணர்த்தல். அஃதாவது 'எழுத்தெனப்படுப' (நூன்மரபு 1) என்னுஞ் சூத்திரத் துள் 'எழுத்து இனைத்தென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று' என்றல். அதிகார முறையாவது - முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல். அஃதாவது உயர்திணை யஃறிணையென அதிகரித்து 'ஆடூஉ வறிசொல்' (கிளவியாக்கம் 2) என்னுஞ் சூத்திரத்தான் நிறுத்தமுறை பிறழாமல் உயர்திணை கூறல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துள் ஓதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந் துரைத்தல். அஃதாவது, 'அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்' (உயிர்மயங்கியல் 1) என்னுஞ் சூத்திரத்திற் 'கசதபத் தோன்றி' னென வோதி வினையெஞ்சு கிளவியு' (உயிர் மயங்கியல் 2) மென்னுஞ் சூத்திரத்துள் ஓதிற்றிலராயி னும் அதிகார முறைமையினான் வல் லெழுத்து வருவழியென வுரைத்தல். தொகுத்துக் கூறலாவது - வகைபெறக் கூறல் வேண்டுமாயினும் அதனைத் தொகுத்துக் கூறல். 'எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப' (நூன்மரபு 1) என்றாற்போல்வன. இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத்துணையுங் கூறப்பட்டதிதுவெனக் கூறலுமாம். 'தூக்கியல் வகையே யாங்கென மொழிப.' (செய்யுளியல். 83) என்பதனாற் கொள்க. வகுத்து மெய்ந் நிறுத்தலாவது - தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல். அஃது 'அ, இ, உ, எ, ஒ' (நூன்மரபு 3) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. இன்னுமதனானே, தொகைபடச் சூத்திரஞ் செய்தவழி, அவற்றுள் ஒரோவொன்று பொதுவிலக்கணத்தான் முடியாதவழிப் பெரும்பான்மை சிறுபான்மைகொண்டு வகுத்துப் பொருளுரைத் தலுமாம். இன்னுமதனானே தொகைபடக் கூறியவதனை வகுத்துப் பொருளுரைத்தலுமாம். மொழிந்த பொருளோ டொன்ற வைத்தலாவது - சூத்திரத்துட் பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத்திற் கொக்கும் பொருளுரைத்தல். அன்றியும் முற்பட்ட சூத்திரத்தினான் ஒரு பொருளோதியவழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோ டொன்ற வைத்தலுமாம். மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது - எடுத்தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை 'உரையிற்கோடல்' என்ப. இக்கருத்தினானே சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே. (மரபியல். 105) என ஓதுவானாயிற்றென்க. வாராததனான் வந்தது முடித்தலாவது - ஒருங்கெண்ணப்பட்ட பொருளொன்றனைப் பகுத்துக் கூறியவழி ஆண்டு வாராததற் கோதிய விலக்கணத்தை இதன் கண்ணும் வருவித் துணர்த்துதல். வந்தது கொண்டு வாராதது முடித்தலாவது - ஒருங்கெண்ணப்பட்ட வற்று ளொன்றைப் பகுத்து இலக்கணங் கூறியவழி வாராததன்கண்ணும் இவ்விலக்கணத்தைக் கூட்டி முடித்தல். முந்துமொழிந்ததன் தலைதடுமாற்றாவது - முற்பட அதிகரித்த பொருளை யவ்வகையினாற் கூறாது முறைபிறழக் கூறுதல். இவ்வாறு கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும். அது புள்ளி மயங்கியலுட் கண்டுகொள்க. ஒப்பக்கூற லென்பது - ஒரு பொருளெடுத்து இலக்கணங் கூறிய - வழி அது போல்வனவற்றையும் அவ்விலக்கணத்தான் முடித்தல். ஒருதலை மொழியாவது - ஏகாக்கர மென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனு ளொன்றனைத் துணிந்து கூறல். தன்கோட் கூறலாவது - பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டான் கூறுதல். அது வேற்றுமை எட்டென்றல். உடம்பொடு புணர்த்தலாவது - இலக்கண வகையான் ஓதுதலன்றி யாசிரியன் ஒரு சூத்திரத்தின்கண்ணே யொரு சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல். ஒற்றீற்றுச் சொல்லை யுகரங்கொடுத்துக் கூறுகவென விலக்கணங் கூறிற்றிலராயினும் 'ஆரும் அருவும் ஈரொடு சிவணும்' (விளிமரபு 21) என ஓதுதலின், 'அர்' என்பது 'அரு' என உகரம் பெற்றது. இதனைப் பிறாண்டுங் கோடல். பிறனுடம் பட்டது தானுடம்படுதலாவது - பிற நூலாசிரியன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல். அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமெனப் பாணினியார் ஓதினார்; அஃது இவர்க்கும் உடம்பாடு. இறந்தது காத்தலாவது - மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தா னமைத்தல். எதிரது போற்றலாவது - முன் கூறப்பட்ட சூத்திரத்தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல். மொழிவாமென்றலாவது - சில பொருளைக் கூறி அவற்று ளொன்றனை யின்ன விடத்துக் கூறுவாமென வுரைத்தல். 'புணரிய னிலையிடைக் குறுகலும்' (மொழிமரபு 2) என்பதனாற் கொள்க. கூறிற்றென்றலாவது - பல பொருளா யதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லப்பட்டன வென்றல். 'மாத்திரை வகையும் எழுத்தியல் வகையு மேற்கிளந்தன்ன' (செய்யுளியல் 2) என்றதனாற் கொள்க. தான் குறியிடுதலாவது - உலகின்கண் வழக்கின்றி யொரு பொருட்கு ஆசிரியன்றான் குறியிடல். அஃது உயர்திணை யஃறிணையென்பன. ஒருதலையன்மை முடிந்தது காட்டலாவது - ஒரு பொருளை யோதியவழிச் சொல்லுவதற்கே யுரித்தன்றிப் பிறபொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல். ஆணை கூறலாவது - ஒரு பொருளைக் கூறும்வழி ஏதுவினாற் கூறலன்றித் தன் னாணையாற் கூறல். வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறினமையின் அவர் விளியை முதல்வேற்றுமையி லடக்கினார். அதற்குத் திரிபு கூறாது அதனை எட்டாம் வேற்றுமையென்றல் ஆண்டுக் கடாவப்படாது. பல்பொருட் கேற்பின் நல்லது கோடலாவது - ஒரு சூத்திரம் பல பொருட் கேற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல். தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடலாவது - தொகுத்துக் கூறிய சொல்தன்னானே பிறிதுமொருபொருள் வகுத்துக்காட்டல். 'அது குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின்' (மொழி மரபு 9) என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங் கோடல். சொல்லின் முடிபின் அப்பொருண் முடித்தலென்பதும் அது. மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தலாவது - பிற நூலாசிரியன் கூறின பொருண்மையைக் கெடுத்துத் தன்றுணிவு கூறுதல். அஃதாவது நெட்டெழுத்தேழ் அளபெடை யென்பன குற்றெழுத் தின் விகாரமென்பாரை மறுத்து வேறோரெழுத்தாக வோதுதல். பிறன்கோட் கூறலாவது - பிற நூலாசிரியன் கொண்ட கோட் பாட்டைக் கூறுதல். அஃது 'வேற்றுமை தாமே யேழென மொழிப' (வேற்றுமை. 1) என்றல். அறியா துடம்படலாவது - தானறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றா னுடம்படுதல். அஃது ஏழாம்நரகம் இத்தன்மைத்தென வொருவன் கூறியவழி, அது புலனாகாதாதலின், அவன் சொன்னதற் குடம்படுதல். இது வழி நூலாசிரியர்க் குரித்து. பொருளிடை யிடுதலாவது - ஒருபொருளை யோதியவழி, யதற்கினமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல். 'அஃது பெண்மை சுட்டிய' (கிளவி. 4) வென்னுஞ் சூத்திரமோதி அதன் பகுதியாகிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி (கிளவி. 12) யென்பதனை இடையிட்டு வைத்தல் போல்வன. எதிர்பொரு ளுணர்த்தலாவது - இனிக் கூறவேண்டுவதிது வெனவுணர்த்தல். சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தலென்பது - பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்குச் சொல்லிய வாற்றாற் பொருள்கோடல். தந்துபுணர்ந்துரைத்தலாவது - முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தினுங் கொணர்ந்து புணர்த்துரைத்தல். ஞாபகங் கூறலாவது - இரட்டுற மொழிந்து இரண்டு சொற்கும் பொருள்கோடல். உய்த்துக்கொண் டுணர்தலாவது - ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதியவழி, அதற்குப் பொருந்தாமை யுளதாகத் தோன்றின், அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல். பனியென்னுஞ் சொல்லுக்கு அத்தும் இன்னுஞ் சாரியையா மென்றாராயினும் (உயிர்மயங்கியல் 39), அவற்றுள் ஏற்பதொன்றாதலின் இன்ன ஈற்றதாயவாறு வருவன வுய்த்துணர்தலாம். இவை முப்பத்திரண்டுந் தந்திரவுத்தியாவன. மெய்ப்பட...நூலென்பது - மேற்சொல்லப்பட்டவற்றொடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய வல்லாதனவாகிய பிற அவண் வரினுஞ் சொல்லிய நெறியினாற் சுருங்க வாராய்ந்து மனத்தினா னோர்ந்து குற்றமறத் தெரிந்து சொல்லிய வினத்தொடு பாகுபடுத் துரைத்தல் வேண்டுமது நுண்மை தகப் புலவர் கூறிய நூலினை யென்றவாறு. பிறவாறு கொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னின முடித்தலென்பன. இவற்றுள் மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலுமென்றல். அஃதாவது 'உகர விறுதி அகர வியற்றே' (உயிர் மயங்கியல் 52) என வரும். சொற்பொருள் விரித்தலாவது - பதந்தோறும் பொருள் விரித்துக் கடாவும் விடையுங் கூறுதல். ஒன்றென முடித்தல் தன்னின முடித்தலென்பது சொல்லப்பட்ட வாற்றான் வருமுத்தரமேயாகத் தொகைப்பட முடியும். எனவுஞ், சில வாசிரியர் மதம் பலவுத்திக்கும் ஏற்கும் ஒருசூத்திரம்; இந்நூலகத்துள்... பொருள் கொண்டாமாயினும் ஈண்டுரைத்த பாகுபாடெல்லாவற்றிற்கும் இந்நூலகத் துதாரணமே கண்டுகொள்க. இன்னுஞ் 'சொல்லியவல்ல பிற' வென்றதனான், யாற்றொழுக்கு அரிமாநோக்கு தவளைப்பாய்த்துள் பருந்து விழுக்காடென்னுஞ் சூத்திரக் கிடக்கையும், ஆதிவிளக்கு மத்திம தீபம் இறுதிவிளக்கு என்னும் பொருள் கோணிலையுங், கொள்ளப்படும். யாற்றொழுக்கா வது கருதிய பொருளை வழுவாமற் சூத்திரம் ஒருங்குபடக் கிளத்தல். அரிமாநோக்காவது முன்னும் பின்னுங் கூறுகின்ற விரண்டு சூத்திரத்தினையு மிடைநின்ற சூத்திரம் நோக்குதல். தவளைப் பாய்த்துளாவது இடையறுத்தோடுதல். பருந்து விழுக்காடாவது அவ்வதிகாரத்துட் பொருத்தமில்லாத பொருள் யாதானு மொரு காரணத்தான் இடை வருதல். ஆதி விளக்காவது சூத்திரத்தினான் ஆதியின் அமைத்த பொருள் அந்தத்தளவு மோடுதல். மத்திம தீபமாவது இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதி விளக்காவது இறுதி நின்ற பொருள் இடையும் முதலும் நோக்குதல். (112) ஒன்பதாவது மரபியல் முற்றிற்று. பொருளதிகாரம் மூலமும் இளம்பூரணர் உரையும் முற்றிற்று. நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அஃதன் றென்ப 387 அஃதொழித் தொன்றின் 398 அகக்கா ழனவே 631 அகப்பாட்டு வண்ணம் 525 அகவ லென்பது 386 அகன்று பொருள் 511 அகைப்பு வண்ணம் 530 அங்கதந் தானே 429 அங்கதப் பாட்டளவு 461 அசைகூன் ஆகும் 355 அசையுஞ் சீரும் 319 அடக்கியல் வாரம் 447 அடிஇறந்து வருதல் 342 அடிதொறுந் தலையெழுத்து 397 அடிநிமிர் கிளவி 484 அடியின் சிறப்பே 343 அடியுள் ளனவே 341 அடுக்கிய தோற்றம் 309 அடைநிலைக் கிளவி 440 அணங்கே விலங்கே 252 அதுவே... இருவகை 476 அதுவே... ஒருநால் 469 அதுவே... பிசியொடு 483 அதுவே, வண்ணகம் 443 அந்த ணாளர்க் கரசு 627 அந்த ணாளர்க் குரியவும் 617 அந்தமில் சிறப்பின் 239 அந்நிலை.. அறமுத 411 அந்நிலை...வஞ்சி 339 அம்போ தரங்கம் 454 அல்குல் தைவரல் 259 அவற்றுட், பாஅ 515 அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி 436 அவற்றுள், சூத்திரம் 471 அவற்றுள், நூலெனப்படுவது 468 அவற்றுள், பார்ப்பும் 548 அவற்றுள், மாத்திரை 311 அவைதாம், அன்ன 282 அவைதாம், நூலி னான 467 அவைதாம், பாஅ 514 அவையடக் கியலே 418 அவையும் உளவே 265 அவ்வவ மாக்களும் 510 அவ்வியல் பல்லது 391 அளபெடை அசைநிலை 325 அளபெடை தலைப்பெய 394 அளபெடை வண்ணம் 520 அளபெழின் அவையே 402 அளவடி மிகுதி 365 அளவியல் வகையே 465 அளவுஞ் சிந்தும் 364 அறக்கழி வுடையன 214 அறத்தொடு நிற்குங் 203 அறுசீர் அடியே 370 அன்புறு தகுவன 227 அன்னஎன் கிளவி 284 அன்ன பிறவும் 263 அன்ன ராயினும் 629 அன்ன வாங்கு 283 அன்னை என்னை 242 ஆங்கவை, ஒருபால் 256 ஆங்கனம் விரிப்பின் 358 ஆசிரிய நடைத்தே 413 ஆசிரியப் பாட்டின் 459 ஆசிரிய மருங்கினும் 373 ஆசிரியம் வஞ்சி 410 ஆண்பால் எல்லாம் 595 ஆயிரு தொடைக்கும் 399 ஆவும் எருமையும் 564 ஆற்றலொடு புணர்ந்த 594 இசைதிரிந் திசைப்பினும் 193 இசைநிலை நிறைய 335 இடைச்சுர மருங்கிற் 495 இடைநிலை... தரவகப் 439 இடைநிலை... தரவு 437 இடையிரு வகையோர் 621 இடையும் வரையார் 375 இதுநனி பயக்கும் 504 இமையோர் தேஎத்தும் 244 இயலசை ஈற்றுமுன் 324 இயலசை மயக்கம் 321 இயலசை முதலிரண்டு 314 இயற்சீர் இறுதிமுன் 327 இயற்சீர் பாற்படுத்து 336 இயற்சீர் வெள்ளடி 368 இயைபு வண்ணம் 519 இரட்டைக் கிளவியும் 293 இரந்து குறையுற்ற 233 இரலையுங் கலையும் 590 இருசீர் இடையிடின் 404 இருவகை உகரமோடு 313 இலையே முறியே 633 இவ்விடத் திம்மொழி 508 இழிவே இழவே 249 இழுமென் மொழியான் 539 இறப்பே நிகழ்வே 503 இறுவாய் ஒப்பினஃது 401 இறைச்சி தானே 225 இறைச்சியிற் பிறக்கும் 226 இனிதுறு கிளவியும் 301 இன்சீ ரியைய 338 இன்பத்தை வெறுத்தல் 266 இன்பமும் இடும்பையும் 509 இன்பமும் பொருளும் 89 ஈரசை கொண்டும் 320 ஈற்றயல் அடியே 374 உடம்பும் உயிரும் 300 உடனுறை உவமம் 238 உண்டற் குரிய 210 உயர்ந்ததன் மேற்றே 274 உயர்ந்தோர் கிளவி 213 உயர்மொழிக் கிளவியும் 236 உயர்மொழிக் கிளவி 234 உயிரில் லெழுத்தும் 351 உயிரும் நாணும் 198 உய்த்துணர் வின்றித் 505 உருட்டு வண்ணம் 533 உரையெடுத் ததன்முன் 445 உவமப் பொருளின் 291 உவமப் பொருளை 292 உவமப் போலி 295 உவமமும் பொருளும் 279 உவமைத் தன்மையும் 307 உறுகண் ஓம்பல் 235 உறுப்பறை குடிகோள் 254 உற்றுழி யல்லது 205 ஊரும் அயலுஞ் 492 ஊரும் பெயரும் 619 எண்ணிடை ஒழிதல் 449 எண்ணு வண்ணம் 529 எண்வகை இயனெறி 506 எதிர்மறுத் துணரின் 655 எருதும் ஏற்றையும் 546 எருத்தே கொச்சகம் 455 எருமையும்...அன்ன 585 எருமையும்...நாகே 607 எருமையும்...வரையார் 560 எல்லா உயிர்க்கும் 219 எழுசீ ரடியே 371 எழுசீர் இறுதி 381 எழுத்தள வெஞ்சினுஞ் 350 எழுத்து முதலா 383 எழுத்தொடுஞ்சொல்லொடும் 481 எழுநிலத் தெழுந்த 466 எளித்தல் ஏத்தல் 204 எள்ளல் இளமை 248 எள்ள விழையப் 285 ஏந்தல் வண்ணம் 532 ஏழெழுத் தென்ப 345 ஏற்புடைத் தென்ப 583 ஏனை யொன்றே 442 ஏனோர்க் கெல்லாம் 300 ஐவகை...ஆசிரியக் 359 ஐவகை...விரிக்குங் 357 ஒட்டகங் குதிரை 597 ஒட்டகம் அவற்றோடு 562 ஒண்தொடி மாதர் 494 ஒத்த காட்சி 656 ஒத்த சூத்திரம் 644 ஒத்தா ழிசைக்கலி 435 ஒத்தா ழிசையும் 420 ஒத்துமூன் றாகும் 446 ஒப்பும் உருவும் 243 ஒப்பொடு புணர்ந்த 478 ஒரீஇக் கூறலும் 306 ஒரூஉ வண்ணம் 528 ஒருசார் விலங்கும் 578 ஒருசிறை நெஞ்சோடு 201 ஒருசீ ரிடையிட்டு 403 ஒருதலை உரிமை 221 ஒருநெறி இன்றி 473 ஒருநெறிப் பட்டாங்கு 502 ஒருபாற் கிளவி 218 ஒருபான் சிறுமை 453 ஒருபொருள்...சூத்திரத் 470 ஒருபொருள்...வெள்ளடி 456 ஒருபோ கியற்கையும் 450 ஒழிந்தோர் கிளவி 496 ஒழுகு வண்ணம் 527 ஒற்றள பெடுப்பினும் 326 ஒற்றெழுத் தியற்றே 316 ஒற்றொடு புணர்ந்த 543 ஒன்றறி வதுவே 571 ஒன்றே மற்றுஞ் 477 கடமையும் மரையும் 565 கடல்வாழ் சுறவும் 586 கடுப்ப ஏய்ப்ப 286 கட்டுரை வகையான் 428 கண்ணியுந் தாரும் 624 கண்ணினுஞ் செவியினுந் 271 கலித்தளை மருங்கிற் 332 கலித்தளை யடிவயின் 333 கலிவெண் பாட்டே 462 கலையென் காட்சி 591 கல்வி தறுகண் 253 கவரியும் கராகமும் 561 கற்புவழிப் பட்டவள் 229 கனவும் உரித்தால் 195 காமப் புணர்ச்சியும் 487 காயே பழமே 634 கிழக்கிடும் பொருளோடு 576 கிழவன் தன்னொடும் 493 கிழவி சொல்லின் 297 கிழவோட் குவமை 302 கிழவோள் பிறள்குணம் 230 கிழவோற்... இடம் 303 கிழவோற்...உரனொடு 299 கிளரியல் வகையின் 485 குஞ்சரம் பெறுமே 563 குட்டம் எருத்தடி 421 குட்டியும் பறழுங் 554 குரங்கினுள் ஏற்றைக் 613 குரங்கு... ஊகமும் 612 குரங்கும்... மூன்றும் 566 குழவியும் மகவும் 567 குறளடி முதலா 363 குறிலே நெடிலே 312 குறுஞ்சீர் வண்ணங் 522 குற்றிய லுகரமும் 318 கூழை விரித்தல் 258 கூற்றும் மாற்றமும் 458 கேழற் கண்ணும் 580 கைக்கிளை தானே 424 கைக்கிளை... ஏழ்பெருந் 486 கொச்சக ஒருபோகு 451 கொச்சகம் அராகஞ் 426 கோடுவாழ் குரங்கு 557 கோழி கூகை 600 சிதலும் எறும்பும் 574 சிதைவில என்ப 652 சிதைவெனப் படுபவை 654 சித்திர வண்ணம் 523 சிறப்பே நலனே 275 சினனே பேதைமை 241 சின்மென் மொழியான் 536 சீரியல் மருங்கின் 362 சீர்கூன் ஆதல் 356 சீர்நிலை தானே 349 சுட்டிக் கூறா உவம 278 சுரமென மொழிதலும் 212 சூத்திரத் துட்பொருள் 649 செம்பொரு ளாயின் 430 செய்பொரு ளச்சமும் 228 செய்யுள் தாமே 432 செய்யுள் மருங்கின் 544 செய்யுள் மொழியான் 537 செல்வம் புலனே 255 செவியுறை தானே 419 செறிவும் நிறைவும் 206 சேவற் பெயர்க்கொடை 593 சொல்லப் பட்டன 651 சொல்லிய தொடையொடு 405 சொல்லிய மரபின் 570 சொல்லொடுங் குறிப்பொடும் 507 சொற்சீ ரடியும் 427 ஞகார முதலா 541 ஞாயிறு திங்கள் 501 தடுமாறு வரலும் 308 தத்த மரபின் 288 தம்முறு விழுமம் 231 தரவின் றாகித் 452 தரவும் போக்கும் 457 தரவே தானும் நாலடி 438 தரவே தானும் நான்கும் 445 தலைமைக் குணச்சொலுந் 620 தவலருஞ் சிறப்பினத் 296 தவழ்பவை தாமும் 549 தனிக்குறில் முதலசை 315 தன்சீர் எழுத்தின் 353 தன்சீர் வகையினுந் 361 தன்பா அல்வழித் 329 தன்வயிற் கரத்தலும் 202 தாஅ வண்ணம் 516 தாய்க்கும் உரித்தால் 196 தாயத்தின் அடையா 217 துள்ளல் ஓசை 388 தூக்கியல் வகையே 392 தூங்கல் ஓசை 389 தூங்கல் வண்ணம் 531 தெய்வம் அஞ்சல் 268 தெரிந்த மொழியான் 542 தெரிந்தனர் விரிப்பின் 407 தெரிந்துடம் படுதல் 261 தேரும் யானையுங் 209 தொகுத்தல் விரித்தல் 643 தொடைநிலை வகையே 408 தொன்மை தானே 538 தோடே மடலே 632 தோழிக் காயின் 298 தோழியும் செவிலியும் 304 நகையே அழுகை 247 நண்டுந் தும்பியும் 575 நந்தும் முரளும் 573 நரியும் அற்றே 553, 611 நலிபு வண்ணம் 524 நாயே பன்றி 552 நாலிரண் டாகும் 246 நாலிரண்டாகும் பாலுமா 289 நாலெழுத் தாதி 344 நாற்சீர் கொண்டது 340 நிகழ்தகை மருங்கின் 224 நிம்பிரி கொடுமை 270 நிரனிறுத் தமைத்தலும் 396 நிரைமுதல் வெண்சீர் 366 நிரையவண் நிற்பின் 380 நிலம்தீ நீர்வளி 635 நிறைமொழி மாந்தர் 480 நீர்வாழ் சாதியும் 588 நீர்வாழ் சாதியுள் 608 நுண்மையுஞ் சுருக்கமும் 479 நூலே கரகம் 615 நெடுஞ்சீர் வண்ணம் 521 நெடுவெண்... குறுவெண் 423 நெடுவெண்... முந்நான் 460 நெல்லும் புல்லும் 569 நேரவண் நிற்பின் 323 நேரின மணியை 472 நேரீற் றியற்சீர் 379 நோயும் இன்பமும் 194 படையுங் கொடியுங் 616 பண்ணைத் தோன்றிய 245 பத்தெழுத் தென்ப 346 பரத்தை... எனவிரு 499 பரத்தை... நால்வர்க்கும் 220 பரிசில் பாடாண் 618 பரிபா...தொகைநிலை 425 பரிபா...நாலீரைம்பது 464 பழிப்பில் சூத்திரம் 647 பறழெனப் படினும் 551 பன்றி...உழையே 584 பன்றி...நாயென 603 பாட்டி என்ப 610 பாட்டிடைக் கலந்த 482 பாட்டிடை வைத்த 475 பாட்டுரை நூலே 384 பாணன் கூத்தன் 491 பாராட் டெடுத்தல் 260 பார்ப்பார் அறிவர் 498 பார்ப்பான் பாங்கன் 490 பால்கெழு கிளவி 197 பாவிரி மருங்கினைப் 412 பிடியென் பெண்பெயர் 596 பிணவல் எனினும் 604 பிள்ளை குழவி 568 பிள்ளைப் பெயரும் 555 பிறப்பே குடிமை 269 பிறிதொடு படாது 294 புகழொடும் பொருளொடும் 433 புகுமுகம் புரிதல் 257 புதுமை பெருமை 251 புல்லும் மரனும் 572 புல்வாய் நவ்வி 602 புல்வாய் புலிஉழை 581 புள்ளும் உரிய 598 புறக்கா ழனவே 630 புறஞ்செயச் சிதைதல் 262 புறநிலை வாயுறை 463 புறப்பாட்டு வண்ணம் 526 பெண்ணும் ஆணும் 614 பெண்ணும் பிணவு 606 பெண்பா லான 601 பெருமையுஞ்...சிறப்பின் 281 பெருமையுஞ்...மெய்ப்பாடு 290 பெற்றமும் எருமையும் 605 பெற்றம் எருமை 587 பேடையும்...நாடின் 599 பேடையும்...பெட்டையும் 547 பொருளென மொழிதலும் 211 பொருளே யுவமஞ் 280 பொழிப்பும் ஒரூஉம் 395 பொழுது தலைவைத்த 232 பொழுதும் ஆறுங் 207 போக்கியல் வகையே 441 போல மறுப்ப 287 மகவும் பிள்ளையும் 558 மக்கள் தாமே 577 மங்கல மொழியும் 240 மண்டிலங் குட்டம் 422 மயிலும் எழாஅலும் 589 மரபுநிலை திரிதல் 636 மரபுநிலை திரியின் 637 மரபுநிலை...உரைபடு 639 மரபே தானும் 385 மருட்பா ஏனை 390 மறுதலைக் கடாஅ 650 மறைவெளிப் படுதலும் 488 மனையோள் கிளவியுங் 497 மனைவி உயர்வுங் 223 மாட்டும் எச்சமும் 512 மாத்திரை முதலா 409 மாத்திரை யெழுத்தியல் 310 மாவும் புள்ளும் 576 மாற்றருஞ் சிறப்பின் 545 மிக்க பொருளினுள் 215 முச்சீ ரானும் 354 முச்சீர் முரற்கையுள் 376 முடுகியல் வரையார் 372 முடுகு வண்ணம் 534 முட்டுவயிற் கழறல் 267 முதலுஞ் சினையுமென்று 277 முதல்வழி யாயினும் 653 முதற்றொடை பெருகிச் 448 முற்றிய லுகரமும் 317 முன்நிரை இறினும் 322 மூங்கா வெருகெலி 550 மூடுங் கடமையும் 609 மூப்பே பிணியே 250 மூவா றெழுத்தே 348 மூவைந் தெழுத்தே 347 மூன்றுறுப் படக்கிய 474 மெய்தெரி வகையின் 623 மெய்பெறு மரபின் 406 மெய்பெறும் அவையே 489 மெல்லிசை வண்ணம் 518 மேற்கிளந் தெடுத்த 646 மொழிகரந்து மொழியின் 431 மொழியினும் பொருளினும் 400 மோத்தையுந் தகரும் 592 மோனை எதுகை 393 யாடுங் குதிரையும் 556 யாறுங் குளனுங் 559 யானையுங் குதிரையுங் 559 வசையொடும் நசையொடும் 434 வஞ்சி அடியே 352 வஞ்சிச் சீரென 328 வஞ்சித் தூக்கே 377 வஞ்சி மருங்கின் 330 வஞ்சி மருங்கினும் 334 வண்ணகம் தானே 444 வண்ணந் திரிந்து 199 வண்ணந்...அவையென 535 வண்ணந்...நாலைந்து 513 வருத்த மிகுதி 222 வல்லிசை வண்ணம் 517 வழக்கெனப் படுவது 638 வழிபடு தெய்வம் 415 வழியின் நெறியே 642 வழியெனப் படுவது 641 வாயில் உசாவே 500 வாயிற் கிளவி 237 வாயுறை...அவையடக்கு 416 வாயுறை...வயங்க 417 வார்கோட்டி யானையும் 582 வாழ்த்தியல் வகையே 414 விட்டகல் வின்றி 648 விரவியும் வரூஉம் 273 விராஅய தளையு 367 விராஅய் வரினும் 360 விருந்தே தானும் 540 வில்லும் வேலுங் 628 வினைபயன் மெய்உரு 272 வினையின் நீங்கி 640 வினையுயிர் மெலிவிடத்து 264 வெண்சீர் ஈற்றசை 337 வெண்டளை விரவியும் 369 வெண்பா இயலினும் 382 வெண்பா ஈற்றடி 378 வெண்பா உரிச்சீர் 331 வேட்கை மறுத்துக் 208 வேந்துவிடு தொழிலின் 626 வேழக் குரித்தே 579 வேளாண் மாந்தர்க்கு 625 வேறுபட வந்த 305 வைசியன் பெறுமே 622 செய்யுள் நிரல் (எண் : நூற்பா எண்) அ அஃகாமை செல்வத்துக் (குறள். 178) 524 அகலிரு விசும்பிற் (பெரும்பாண். 1) 286, 359 அகவல் இசையன (யாப். வி.ப. 69) 422 அகனகர் கொள்ளா (கலித். 19) 241 அகன்ற அல்குல் (யாப். வி.ப. 130) 407 அசைஇயற்கு உண்டாண்டோர் (குறள். 1098) 238 அடல்வேல் அமர்நோக்கி (யாப். வி.ப. 182) 405 அடிதாங்கும் அளவின்றி (கலித். 11) 227, 365, 398 அடுக்கி வரினு (குறள். 625) 256 அடைமரை யாயிதழ்ப் (கலித். 84) 273, 277 அணங்குகொல் ஆய்மயில் (குறள். 1081) 256 அணிமலர் அசோகின் (யாப். வி.ப. 130) 407 அணைமருன் இன்றுயில் (கலித். 14) 224 அண்ணாந் தேந்திய (நற். 10) 503 அதுதான் மலையே 426 அமர்காணின் அமர் (புறம். 167) 359 அம்பொற் கொடிஞ்சி (யாப். வி.ப. 130) 404 அம்ம...காதலர் (ஐங்குறு. 221) 527 அயில்வேல் அனுக்கி (யாப். வி.ப. 130) 407 அராகந் தாமே (அகத்தியம்) 426 அரிக்குரற் கிண்கிணி (யாப். வி.ப. 130) 403 அரிதாய அறன்எய்தி (கலித். 11) 256, 365, 388 அரிமான் அன்ன (பட்டினப். 298) 274, 275 அரிமான் இடித்தன்ன 376 அருமைநற் கறியினும் 428 அரும்பிய கொங்கை (யாப். வி.ப. 131) 407 அவருள் மலர்மலி 455 அவர்நெஞ் சவர்க்காதல் (குறள். 1291) 194 அவரே கேடில் 356 அவன்மறை தேஎம் (அகம். 48) 234 அவாப்போ லகன்றதன் 281, 290 அவிர்மதி அனைய (யாப். வி.ப. 131) 407 அவ்வியானை வனப்புடைத் (கலித். 97) 202 அழுக்கா றெனவொரு (குறள். 168) 256 அறஞ்சாரா நல்குரவு (குறள். 1047) 250 அறனின்ற விதையொழியா (யாப். வி.பக். 468) 365 அறிமி னறநெறி (நாலடி. 172) 409 அறிவினான் ஆகுவ (குறள். 315) 536 அறுசுவை உண்டி(நாலடி. செல்வம். 1) 409, 423 அனைத்தினிப் பெரும (கலித். 149) 452 அன்பீனும் ஆர்வம் (குறள். 74) 407 அன்ன மரபி 428 அன்னாய் அறங்கொல் (யாப். வி.ப. 244) 484 அன்னாய் இவனோர் (ஐங்குறு. 33) 242 அன்னாய் வாழிவேண்டு (அகம். 48) 205 ஆ ஆங்கதை அறிந்தனிர் (கலித். 133) 452 ஆம்பல் நாறுந் (குறுந். 300) 272 ஆயிரம் விரித்த 428 ஆயும் அறிவினர் (குறள். 918) 256 ஆவா என்றே (யாப். வி.ப. 136) 407, 484 ஆறறி அந்தணர்க் (கலித். 1. வாழ்த்து) 399, 441 ஆறுசூடி நீறுபூசி 359 ஆற்றுத லென்பதொன் 452 இ இடுக ஒன்றோ (புறம். 239) 377 இடைநுடங்க வீர்ங்கோதை 325 இணை பிரியணி 428 இதன்பயம் 249 இந்திரனே போலும் (யாப். வி. ஒழி) 281 இமையவில் வாங்கிய (கலித்.38) 367 இருங்கடல் உடுத்தஇப் (புறம். 363) 417, 422 இருது வேற்றுமை (சூளாமணி.கீய.170) 484 இருநிதி மதிக்கும் 285 இருந்த வேந்தன் (அகம். 384) 251 இரும்புமுகஞ் செறித்த (புறம். 369) 280 இரும்பின் அன்ன (யாப். வி.ப. 146) 400 இருவகை நிலத்தின் 245 இருவயின் ஒத்தும் (அகத்தியம்) 435 இருளிடை மிதிப்புழி (அகம். 128) 194 இருள்சேர் இருவினை (குறள். 5) 313, 364, 380 இறைக்கும் அஞ்சிறைப் (சூளாமணி. கல். 51) 484 இலங்குபிறை யன்ன (அகம். கடவுள் வாழ்த்து) 273 இலங்கொளி மரகதம் 449 இலங்கொளி மருப்பின் 441 இவளே நின்னல 198 இவளைச் சொல்லாடிக் (கலித். 56) 475 இறந்தாரை யெண்ணிக்கொண் (குறள். 22) 282 இற்பிறந்தார் கண்ணேயும் (குறள். 1044) 250 இனமலர்க் கோதாய் (யாப். வி.) 317 இன்பம் இடைதெரிந் (நாலடி. 54) 194 இன்பம்கடல்மற்றுக் (குறள். 1166) 266 இன்றுகொல் அன்று (நாலடி. 36) 364 இன்னகை இனைய (அகம். 39) 195 இன்னகைத் துவர்வாய்க் (யாப்.வி. ப. 113) 401 இன்னோர் அனையை 428 ஈ ஈங்கே வருவாள் (கலித். 56) 308 ஈரடி யாகு (அகத்தியம்) 426 உ உகுபனிகண் (யாப். வி.பக். 468) 365 உடனிவை தோன்றும் (செயிற்றியம்) 248 உடுத்துந் தொடுத்துந் (குறுந். 295) 241 உண்கடன் வழிமொழிந் (கலித். 22) 441 உண்ணற்க கள்ளை (குறள். 922) 502 உதுக்காண், சுரந்தானா (யாப். வி. பக். 356) 356 உய்ப்போ ரிதனை 245 உய்ப்போன் செய்தது (செயிற்றியம்) 247 உரவொலி முந்நீர் (பு. வெ. கைக்கிளை. 9) 424 உருவுகண் டெள்ளாமை (குறள். 667) 423 உலக முவப்ப (திருமுருகாற். 16) 409 உலக மூன்றும் (யாப். வி.ப. 139) 407 உலகுடன் விளங்கும் (யாப். வி. ப. 185) 407 உள்ளுதொறு நகுவன் (நற். 100) 218 உறுசுடர் வாளோ (புறம். வெ. 7 : 8) 253 உறுதி தூக்கத் (நற். 284) 501 உறுதுப் பஞ்சா (புறம். 72) 254 உறுபெய லெழிலி (யாப். வி. ப. 176) 521 ஊ ஊர்க்கால் நிவந்த (கலித். குறிஞ்சி. 20) 475 ஊழிநீஇ உலகுநீஇ 449 ஊறொரால் உற்றபின் (குறள். 662) 193 எ எச்சிற் கிமையாது (நாலடி. 345) 282 எந்தைதன் உண்ணம் 242 எந்தையும், நிலனுறப் (அகம். 12) 492 எந்நன்றி கொன்றார்க்கு (குறள். 110) 320 எல்லா, இஃதொத்த (கலித். 61) 216 எல்லா தமக்கினி (கலித். 62) 216 எல்லா விளக்கும் (குறள். 299) 407 எழிலிவானம் 285 எழுந்தது துகள் 455 எறும்பி அளையிற் (குறுந். 12) 422 எனைத்துணைய ராயினும் (குறள். 144) 214 என்ஐமுன் நில்லம்மின் (குறள். 771) 242 என்னை, புற்கை யுண்டும் (புறம். 84) 242 ஏ ஏரினுழா அர் (குறள். 14) 364 ஏறெவ்வங் காணா 455 ஏற்றுவலன் உயரிய (புறம். 56) 359 ஐ ஐதேய்ந் தன்று (கலித். 55) 291 ஐயோ எனின்யான் (புறம். 255) 249, 505 ஒ ஒக்குமே ஒக்குமே (யாப். வி. பக். 180) 405 ஒண்செங் கழுநீர்க் (அகம். 48) 276 ஒண்செங் காந்த 287 ஒண்ணுதல் நீவுவர் (கலித். 14) 266 ஒத்தகாமத் தொருவனும் (செயிற்றியம்) 255 ஒரீஇ ஒழுகு (குறுந். 203) 242 ஒருகுழை ஒருவன்போல் (கலித். 26) 277 ஒருமையுள் ஆமை (குறள். 126) 256 ஒரூஉக், கொடியியல் (கலித். மருதம். 23) 223, 475 ஒரூஉநீ எங்கூந்தல் (கலித். 87) 256 ஒழுகை நோன்பகடு (அகம். 35) 288 ஒளித்தியங்கு மரபின் (அகம். 22) 288 ஒன்றாக நல்லது (குறள். 323) 504 ஒன்றேன் அல்லென் (குறுந். 208) 226 ஓ ஓஒஇவள் பொருபுகல் 455 ஓஒ இனிதே (குறள். 1176) 402, 200 ஓங்கெழிற்கொம்பர் 194 ஓவத் தன்ன (புறம். 251) 275 க கடந்தடு தானைச் (புறம். 8) 306 கடலே, கானலங் 403 கடல்பா டொழிய (அகம். 30) 368 கடாஅ உருவொடு (குறள். 585) 325 கடுஞ்சினத்த கொல்களிறும் (புறம். 55) 359 கணைக்கால் நெய்தல் 287 கண்கவர் கதிர்முடி 449 கண்டிகும் அல்லமோ (ஐங்குறு. 122) 230 கண்ணுங் கொளச்சேறி (குறள். 1244) 210 கண்ணும் படுமோ (நற். 61) 318 கண்ணுள்ளார் காத (குறள். 1127) 266 கண்ணுள்ளிற் போகார் (குறள். 1126) 266 கண்ணொடு நிகர்க்குங் 286 கண்ண் டண்ண் (மலைபடு. 352) 326 கண்படை பெறேன் (அகம். 55) 196 கண்போல்வான் ஒருவ 275 கதுமெனத் தாநோக்கித் (குறள். 1173) 200 கயலெழுதி வில்லெழுதிக் (சிலப். கானல். 11) 291 கயலெழுதிய இமய (சிலப். ஆய்ச்சி) 475 கயலேர் உண்கண் (யாப். வி. ப. 136) 407 கருமணற் கிடந்த (அகம். 165) 197 கரைபொரு கான்யாற்றங்(யாப். வி. ப. 225) 484 கலங்கவிழ்த்த நாய்கன் (யா.வி.ப. 318) 290 கல்வரை ஏறிக்கடுவன் (கைந்நிலை. 7) 423 கவலை கூர்ந்த (செயிற்றியம்) 249 கவவுக்கை நெகிழ்ந்தமை (அகம். 26) 202 களிறும் கந்தும் (அகத். 11. நச்) 309 களிறுகவர் கம்பலை (அகம். 66) 268 கற்பித்தாள் நெஞ்சழுங்கப் 452 கற்றதனா லாய (குறள். 2) 364 கனிய நினைவொடு (மூத்திருவிரட் ம. மாலை 6) 484 கன்றமர் கறவை (புறம். 275) 256 கன்று குணிலாக் (சிலப். ஆய்ச்சி) 484 காஅய்ச் செந்நெற் (யாப். வி. ப. 158) 404 காமம் செப்பாது (குறுந். 2) 359 காமரு சுற்றமொ 428 காமர் கடும்புனல் (கலித். 39) 457 காய்மாண்ட தெங்கின் (சீவகசிந். 31) 407 கார்கள்ள உற்ற 285 கார்விரி கொன்றைப் (அகம். கடவுள் வாழ்த்து.) 193, 287 காலை எழுந்து (குறுந். 45) 256 கானலுங் கழறாது (அகம். 170) 194 கிழவர் இன்னோர் (கலித். 21) 235 கிளைசெத்து (நற். 35) 282 குணனிலனாய்க் குற்றம் (குறள். 868) 256 குவிந்துசுணங் கரும்பிய (யாப். வி. ப. 147) 404 குழலிசைய வண்டினங்கள் (யாப். வி. ப. 246) 484 குளிரும் பருவத்தே(ஐந்திணையைம். 30) 268 குறிக்கொண்டு நோக்காமை (குறள். 1015) 256 குறுநிலைக் குரவின் (நற். 56) 194 குறுந்தொடி எய்க்கு (பெரும்பாண். 13) 288 குன்றி னனையாரும் (குறள். 965) 282 குன்று கொண்டு 359 கூடுவார் கூடல்கள் (யாப். வி. ப. 88) 532 கூற்றமோ கண்ணோ (குறள். 1085) 308 கெடலரு மாமுனிவர் 449 கெடுத்துப்படு நன்கலம் 256 கேடில் விழுப்பொருள் (குறுந். 216) 356 கேட்டிசின் வாழி (குறுந். 30) 195 கேள்கேடு ஊன்றவும் (அகம். 93) 452 கைகவியாச் சென்று (அகம். 9) 194 கொங்கியர் ஈன்ற 274 கொங்குதேர் வாழ்க்கை (குறுந். 2) 359 கொச்சக வகையின் 426 கொடிகுவளை கொட்டை (யாப். வி. பக். 359) 309 கொடிச்சி யின்குரல் (ஐங்குறு. 289) 208 கொடிய னாயினும் (சிற்றொட்டகம்.) 268 கொடியியல் நல்லார் (கலித். 88) 241 கொடிவாலன கருநிறத்தன (யாப். வி. பக். 337) 422 கொடுங்குழாய் துறக்குநர் (கலித். 13) 256 கொய்ம்மலர் குவிந்து (யாப்.வி.ப. 148) 407 கொன்றன்ன வின்னா (குறள். 109) 283 கொன்றை வேய்ந்த 483 கோடீர் இலங்குவளை (குறுந். 11) 201 கோடுவாய் கூடாப் (கலித். 142) 266 கோழி எரிந்த 422 கோளில் பொறியிற் (குறள். 9) 379 கோள்மா கொட்குமென் (யாப். வி. ப. 262) 422 ச சத்துவம் என்பது 246 சமன்செய்து சீர்தூக்கும் (குறள். 118) 256 சாறுதலைக் கொண்டெனப் (புறம். 82) 274 சிலரும் பலருங் (நற். 149) 221 சிறியகட் பெறினே (புறம். 235) 370 சிறிய பெரிய (யாப். வி. ப. 147) 407 சிறுகுடிப் பரதவர் (யாப். வி. ப. 146) 400 சிற்றாறு பாய்ந்துகளுஞ் (யாப். வி. ப. 237) 423 சீறடிப் பேரகல் (யாப். வி. ப. 147) 407 சுருங்கிய நுசுப்பிற் (யாப். வி. ப. 147) 403 சுரையாழ அம்மிமிதப்ப (யாப்.வி.ப. 229) 423 சுறமறிவன துறையெல்லாம் (யாப். வி. ப. 63) 389 சூரல் பம்பிய (யாப். வி. ப. 259) 422, 504 சூழ்வார்கண் ணாக (குறள். 445) 256 செங்களம் படக்கொன்று (குறுந்.1) 386, 360 செந்தீ யோட்டிய 286 செயலையந் தளிரேய்க்கும் (கலித். 15) 288 செய்பொருட் சிறப்பெண்ணிச் (கலித். 16) 441 செய்வன சிறப்பிற் (கலித். 83) 266 செல்லாமை உண்டேல் (குறள். 1151) 222, 502, 345 செல்லினிச் சென்றுநீ (கலித். 19) 452 செவ்வா னன்ன (அகம். கடவுள் வாழ்த்து.) 284 செவ்விய தீவிய (கலித். பாலை. 18)241, 440, 452 செறுநர்த் தேய்த்த (திருமுருகாற். 5) 283 செற்றார்பின் செல்லாப் (குறள். 1255) 250 சென்றதுகொல் போந்தது (முத்தொள். 61) 194 சென்று முகந்து (யாப். வி. ப. 464) 364 சேற்றுக்கால் நீலம் (யாப். வி. ப. 236) 423 ஞ ஞாயி றனையைநின் (புறம். 59) 289 த தகைவகை மிசைமிசைப் 455 தக்கார்தகவிலர் (குறள். 114) 407 தணந்தமை சால (குறள். 1033) 199 தண்ணந் துறைவன் (குறள். 1277) 199 தண்ணுமைப் பாணி (கலித். 102) 455 தண்துறை ஊரன் (அகம். 56) 248 தம்மி லிருந்து (குறள். 1107) 255, 272 தரேவே எருத்த (அகத்தியம்) 327 தனக்குவமை இல்லாதான் (குறள். 7) 313, 379 தன்சொ லுணர்ந்தோர் (ஐங்குறு. 41) 287 தன்தோள் நான்கின் 359 தன்பார்ப்புத் தின்னும் (ஐங்குறு. 41) 370 தாஅட் டாஅ (யாப். வி. ப. 138) 407, 520 தாதுறு முறிசெறி (யாப். வி. ப. 299) 533 தாமரை புரையுங் (குறுந். கடவுள் வாழ்த்து.) 279, 277, 320, 359, 384 தாமரைபோல் வாள்முகம் (திணைமாலை. 1) 289 தாமின் புறுவ (குறள். 399) 407 தாழாத் தளராத் (நாலடி. 14) 250 தான் தாயாக் கோஙகம் (திணைமாலை நூற். 65) 197 திருநுதல் வேரரும்புந் (பு. வெ. கைக். 3) 390 துணியிரும் பரப்பகல் (யாப். வி. ப. 377) 537 துணைமல ரெழினீலத் (கலித். 14) 282 துப்பார்க்குத் துப்பாய (குறள். 12) 364 துப்பின் எவனாவர் (குறள். 1165) 266 தூங்குகையான் (புறம். 22) 351 தேம்பழுத் தினியநீர் (சூளா. நகர. 13) 484 தேரான் பிறனைத் (குறள். 508) 254 தேர்ந்து தேர்ந்து 359 தேனொடு நீடு 256 தேன் தூங்கும் உயர் (மதுரைக். 3) 359 தொடங்கற்கட் டோன்றி 381 தொடர்ப்படு ஞமலியின் (புறம். 74) 250 தொடிநிரை முன்கையாள் (கலித். 24) 256 தொடிநெகிழ்ந் தனவே (யாப். வி. ப. 386) 528 தொடிநோக்கி (குறள். 1279) 238 தொடியுடைய 377 தொடுத்த வேம்பின் (யாப். வி. ப. 387) 530 தொல்கவின் தொலைதல் (கலித். 2) 381 தொன்னலத்தின் (யாப். வி. பக். 108) 354 தோடார் எல்வளை (யாப். வி. ப. 381) 407, 516 ந நகையா கின்றே (அகம். 56) 248 நகையெனப் படுதல் 248 நசைஇயார் நல்கார் (குறள். 1199) 266 நடுங்குதுயர் களைந்த (அகம். 86) 268 நடுநாள் வரூஉம் (நற். 149) 268 நண்பி தென்று (யாப். வி. ப. 244) 484 நல்லார்கள் நல்ல 295 நல்லார் பழிப்பில் (மூத்த நாயனார் திருவிரட்டை மணி மாலை. 20) 484 நறுநீல நெய்தலும் (யாப். வி. ப. 226) 423 நற்கொற்ற வாயில் (யாப் வி. ப. 226) 423 நனவினாற் கண்டதூஉ (குறள். 1215) 256 நன்மையும் தீமையும் (குறள். 511) 256 நன்றி மறப்பது (குறள். 107) 380 நன்னிற மென்முலை (யாப். வி. ப. 134) 407 நாணால் உயிரைத் (குறள். 1017) 256 நாயுடை முதுநீர்க் (அகம். 16) 359 நாள்கோள் திங்கள் (பதிற்றுப். 14) 295 நிரைதிமில் களிறாகத் 452 நிலங்கிளையா (யாப். வி. பக். 468) 365 நிலத்தினும் பெரிதே (குறுந். 3) 225 நிலவுக்காண் பதுபோல (கலித். 119) 309 நிலவுமண லகன்துறை (யாப். வி. ப. 385) 526 நிலையில் திரியா (குறள். 124) 256 நிழலே இனியதன் (யாப். வி. ப. 159) 404 நினைப்பவர் போன்று (குறள். 1203) 256 நின்மொழி கொண்டியானோ (கலித். 113) 194 நின்ற சுவையே 245 நின்னணங் குற்றவர் (கலித். 77) 231 நின்னொக் கும்புகழ் 428 நின்னொர் அன்னோர் (புறம். 373) 295 நீடற்க வினையென்று (யாப் வி. ப. 264) 484 நீயுறும் பொய்ச்சூள் (கலித். 88) 268 நீயே, வினைமாண் (கலித். 7) 356 நீரின் தண்மையுந் (யாப். வி. ப. 257) 375, 422 நீரூர் பானா (யாப். வி. ப. 383) 521 நீலமுண்ட துகில் 210 நீவிளை யாடுக (நற். 362) 495 நுண்எழில் மாமைச் (கலித். 4) 239 நெஞ்சத்தார்க் காத (குறள். 1128) 266 நெஞ்சு நடுக்குறக் (கலித். பாலை. 23) 228 நெடுங்கொடிய (புறம். 55) 359 நெடுநல் யானையுந் (புறம். 72) 256 நெடுந்தேர் கடாஅய்த் 209 நெடும்புனலுள் வெல்லு (குறள். 495) 502 நெடுவரை மிசையது (ஐங்குறு. 287) 289 நெடுவரை மிசையிற் 289 நெருப்பின் அன்ன (அகம். 84) 277 நெறியறி செறிகுறி (கலித். 39) 534 நேரிழை மகளிர் 422 நேர்ந்தநங் காதலர் (சிலப். கானல்) 501 நோயிலராக 240 ப பகலே பலருங் (நற். 365) 201 பகலே பல்பூங் (யாப். வி. ப. 135) 398 பகைமெலியப் பாசறையு (நெடுநல். இறுதி வெண்பா.) 256 பசந்தாள் இவளென்ப (குறள். 1188) 266 பசலையால் உணப்பட்டுப் (கலித். 15) 210 படங்கெழுநாகம் 282 படியுடையார் பற்றமைந்தக் (குறள். 606) 364 பணைநீங்கிப் பைந்தொடி (குறள். 1234) 266 பரியரைக் கமுகின் (பெரும்பாண். 7-8) 284 பருதியஞ் செல்வன் 304, 305 பலர்புகழ் ஞாயிறு (திருமுருகாற். 2) 283 பழிமலைந் தெய்திய (குறள். 657) 214 பன்மாடக் கூடல் (யாப். வி. ப. 237) 423 பன்மீன் உணங்கற் (யாப் வி. ப. 285) 525 பன்னருங் கோங்கின் (யாப். வி. ப. 134) 403 பாஅன்மருண் மருப்பி (கலித். 21) 288 பாசடைப் பரப்பிற் (மணிமே. 4-8-13) 280 பாடின்றிப் பசந்தகண் 441 பாம்புரு வொடுங்க 286 பாயல்கொண் டென்தோட் (கலித். 24) 256 பாயிரும் பரப்பகம் (மார்க்கண்.காஞ்சி) 539 பாய்திரை பாடோவாப் (கலித். 129) 194 பாரி பாரி (புறம். 107) 307 பார்ப்பார்க்கு அல்லது (பதிற்றுப். 63)284, 289 பாலும் உண்ணாள் (அகம். 48) 266 பாலொடு தேன்கலந் (குறள். 1021) 380 பாற்கடல் முகந்த (யாப். வி. ப. 379) 542 பானாட், பள்ளி யானையி (குறுந். 142) 256 பிறவிப் பெருங்கடல் (குறள். 10) 313, 380 பிறர்நாணத் தக்கது (குறள். 1018) 215 பிறர்பழியுந் தம்பழியும் (குறள். 1015) 256 புத்தே ளுலகிற் 285 புலவுநுனைப் (பெரும்பாண். 271) 383 புலிநிறக் கவசம் (புறம். 13) 256 புலியிறப்ப 383 புலியென்ன 383 புல்லார் புகழொடு (வெண்பா. உழிஞை. 10) 268 புறத்துறுப் பெல்லாம் (குறள். 79) 256 புன்கண்ணைவாழி (குறள். 1222) 266 பூஉங் குவளைப் (யாப். விரு. ப. 158) 403 பூத்த வேங்கை (யாப். வி. ப. 179) 405 பூந்தாமரைப் போதலமரத் (யா. வி. பக். 336) 377, 422 பெரியார்க், கடியரோ (கலித். 88) 220 பெருஞ்செல்வர் இல்லத்து (முத்தொள். 88) 290 பெருந்தேர் யானும் (அகம். 284) 251 பெருமுத்தரையர் (நாலடி. 200) 317 பெறாஅமை அஞ்சும் (குறள். 1215) 266 பேதையென்ப 316 பேர்ந்து பேர்ந்து (யாப். வி. ப. 380) 543 பொங்கிரு முந்நீர் (கலித். 144) 266 பொருகடல் வண்ணன் (கார்நாற். 1) 232 பொருகளிற் 283 பொருவ மென்ற 428 பொருள் தீர்ந்த (குறள். 199) 256 பொலம்பூ வேங்கை (சிலப். பதிகம்.) 251 பொள்ளென வாங்கே (குறள். 487) 256 பொன்னார மார்பிற் (யாப். வி. பக். 62) 256, 387, 423 பொன்னின் அன்ன (யா. வி. ப. 134-382) 407, 518 பொன்னுரை கடுக்குந் (திருமுரு. 145) 288 போது சாந்தம் பொற்ப (யாப். வி. 49) 359 போதுவிடு குறிஞ்சி (யாப். வி. 149) 407 போழ்தூண் டூசியின் (புறம். 82) 256 ம மகிழு மகிழ்தூங் (யாப். வி. ப. 74) 377 மஞ்சுசூழ் சோலை (யாப். வி. பக். 219) 317 மடப்பிடியை மதவேழந் (யாப். வி. பக். 341) 484 மடிமை குடிமைக்கண் (குறள். 608) 256 மட்டுத்தா னுண்டு (யாப். வி. பக். 463) 364 மணிநிற மறுத்த 287 மணிநிறம் மாற்றிய 282 மதிபோலுந் தாமரை 309 மதியம் பொற்ப 282 மதியும் மடந்தை (குறள். 1116) 245 மரல்சாய மலைவெம் (கலித். 13) 365 மருப்பிற் றிரிந்து (கலித். 15) 282 மரையா மரல்கவர (கலித். பாலை. 5) 456 மலர்மிசை ஏகி (குறள். 3) 319, 364 மழைவிழை தடக்கை 285 மன்றப் பனைமேல் (கலித். 142) 501 மன்னுயிர் எல்லாந் (குறள். 1168) 268 மன்னுயிர் முதல்வனை (பரிபா. 1) 295 மாஅத் தாஅண் (யாப். வி. ப. 158) 407 மாக்கேழ் மடநல்லாய் (நாலடி. 41) 249 மாண மறந்துள்ளா (கலித். 89) 268 மாதர் நகிலே (யாப். வி. ப. 153) 407 மாதர் முகம்போல் (குறள். 1118) 234, 501 மாநிலந் தோன்றாமை 428 மாமலர் முண்டகந் (கலித். 133) 452 மாரியன்ன வண்கை (புறம். 133) 272, 284 மாரியாம்பல் (குறுந். 117) 301 மாரிவீ ழிருங் கூந்தல் (கலித். 14) 288 மாலைநீ, தையெனக் (கலித். 108) 501 மாவும் புள்ளும் (யாப். வி. ப. 130) 397 மாவென்ற மடநோக்கின் (கலித். 57) 288 மிகுதியான் மிக்கவை (குறள். 158) 256 மின்னிவர் ஒளிவடந் (யாப். வி. ப. 134) 404 மீன்தேர்ந் தருந்திய (யாப். வி. ப. 148) 407 ழகமறியார் மூதுணர்ந்தார் (யாப். வி. பக். 415) 364 முதிர்கோங்கின் (கலித். 56) 365 முத்துடை வான்கோ 286 முத்தேர் (கலித். 93) 282 முரசு முழங்குதானை (பொருந. 54-6) 275 முல்லைவாய் முறுவலித்தன (யாப். வி. ப. 341) 484 முளைநிரை முறுவல் (கலித். 15) 376 முனிவின்றி, நனந்தலை (குறுந். 6) 256 மெய்யே வாழி தோழி (குறுந். 121) 266 மெல்லியல் நல்லாருள் (நாலடி. 188) 502 மையல் வேழ (குறிஞ்சிப். 165-9) 252 மொய்த்துடன் தவழு (யாப். வி. ப. 153) 407 மோப்பக் குழையும் (குறள். 90) 278 ய யாகாவா ராயினும் (குறள். 127) 256 யாரிவன் எங்கூந்தல் (கலித். 89) 220, 458 யாரினும் காதலம் (குறள். 1314) 268 யாவருங் காணுநர் 266 யாவரும் விழையும் (அகம். 16) 359 யாழ்கெழு மணிமிடற் (அகம். கட. வாழ்த்து.) 282 யானுந் தோழியும் (யாப். வி. ப. 332) 484 வ வசையில் புகழ் (பட்டினப். 1) 531 வட்டொட்டி யன்ன (யாப். வி. ப. 382) 517 வயலைக் கொடியின் (புறம். 305) 256 வருந்தினை வாழிய (அகம். 79) 501 வலம்புரி புரையும் (திருமுருகாற். 127) 288 வல்வே லிளையரொ (அகம். 120) 209 வளம்பட வேண்டாதார் (நாலடி. 103) 423 வள்ளிதழ் கூம்பிய (கலித். 121) 294 வள்ளெயிற்றுப் (யாப். வி. ஒழி.) 281 வாயல்லா வெண்மை (கலித். 88) 266 வாரா தமைவானோ (கலித். 41) 295 வால்வெள் ளருவி (யாப். வி. ப. 383) 519 வாள்வரி வேங்கை (யாப். வி. ப. 330) 484 வானத் தணங்கருங் (அகம். 16) 301 விட்டகன் றுறைந்த 256 விண்ணதிர் இமிழிசை (மலைபடு. 2) 286 விண்பொருபுகழ் (புறம். 11) 285 விரிதிரைப் பெருங்கடல் (குறுந். 101) 359 விரிபுனற் பேரியாறு 285 விரும்பிநீ, என்தோள் (கலித். 18) 217 விலங்கொடு மக்கள் (குறள். 410) 293 விளியுமென் இன்னுயிர் (குறள். 1209) 266 விளையாடாயமொடு (நற். 172) 283 வீங்குசுரை நல்லான் 285 வீங்குநீர் அவிழ் (கலித். 66) 365 வெண்திங்கள் 309 வெய்யாரும் வீழ்வாரும் (கலித். 78) 268 வெல்புகழ் மன்னவன் (கலித். 118) 441 வெள்ளாங் குருகின் (குறுந். 152) 233, 530 வெறிகொள் இனச்சுரும்பு (தண்டி. 53 உரை) 238 வேண்டுதல் வேண்டாமை (குறள். 4) 313 வேயொடுநாடிய 282 வேய்புரை மென்றோள் (கலித். 39) 286 வேய்மருள் பணைத்தோள் (அகம். 1) 286 வேய்வென்ற தோள் (கலித். 138) 288 வேரல் வேலி (குறுந். 18) 422 வேலொன்றுகண் 282 வையை வருபுனல் (பரிபாடல்) 255 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எ. கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எ. வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எ.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாதிரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எ. வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாதிரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாதிரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாதிரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 